Wednesday, June 17, 2026
முகப்பு பதிவு பக்கம் 789

புதிய ஓய்வூதியத் திட்டம்: சட்டபூர்வ வழிப்பறிக் கொள்ளை!

ற்பொழுது நடைபெற்றுவரும் குளிர்கால நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்பொழுது, இரண்டு முக்கியமான துறைகளை அந்நிய மூலதனத்திற்குத் திறந்துவிட எத்தணித்தது, காங்கிரசு கூட்டணி அரசு.  அதிலொன்று, நாடெங்கும் பரவலான எதிர்ப்பைச் சந்தித்த சில்லறை வணிகத் துறை; மற்றொன்று, அரசு, பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள்  தொழிலாளர்களின் ஓய்வூதிய நிதியைக் கையாளுவதில் அந்நிய நிறுவனங்களை அனுமதிப்பது.  காங்கிரசு கூட்டணி அரசு தனது இந்த இரண்டு முடிவுகளையும் நடைமுறைப்படுத்துவதைச் சற்று தள்ளி வைத்திருக்கிறது.  இவை போன்ற சீர்திருத்தங்களைக்  கால தாமதமின்றி நடைமுறைப்படுத்துவதற்கு இந்திய ஜனநாயகம் தடையாக இருப்பதாக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி புலம்பியிருக்கிறார்.  தனியார்மயம் பெயரளவிலான ஜனநாயகத்தைக்கூடச் சகித்துக் கொள்வதில்லை என்பதற்கான ஒப்புதல் வாக்குமூலமாக பிரணாப் முகர்ஜியின் புலம்பலை எடுத்துக் கொள்ளலாம்.

சில்லறை வர்த்தகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைவதை எதிர்ப்பதாக நாடகமாடி வரும் பா.ஜ.க. கும்பல், ஓய்வூதிய நிதித் துறையில் அந்நிய நிறுவனங்கள் நுழைய அனுமதிப்பதை வரவேற்று உள்ளது.  மைய அரசின் முழுக் கட்டுப்பாட்டில் இருந்துவந்த ஓய்வூதியத் துறையைத் தனியார்மயமாக்குவதற்கும், அதில் அந்நிய மூலதனத்தை அனுமதிப்பதற்கும் ‘பிள்ளையார் சுழி’ போட்டுக் கொடுத்ததே பா.ஜ.க.வின் தலைமையில் இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிதான் என்பதை இச்சமயத்தில் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

புதிய ஓய்வூதியத் திட்டம் : சட்டபூர்வ வழிப்பறிக் கொள்ளை !இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கும் நடைமுறை ஆங்கிலேயர்களின் ஆட்சியிலேயே தொடங்கிவிட்டது.  1935-இல், காலனிய ஆட்சிக் காலத்திலேயே அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் அளிப்பது சட்டபூர்வமாக்கப்பட்டது.  1947க்குப் பின், ஓய்வூதியம் என்பது தொழிலாளர்களின் சட்டபூர்வ உரிமை என்பதை உறுதிசெய்து, உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்தது.  எனினும், ‘சுதந்திர’ இந்தியாவில் இந்திய உழைக்கும் மக்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் அளிக்கும் கொள்கையோ, சட்டங்களோ நடைமுறையில் இருந்ததே இல்லை.  மைய மற்றும் மாநில அரசு ஊழியர்கள், ரயில்வே துறை, இந்திய ரிசர்வ் வங்கி, இந்திய அரசு வங்கி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த ஊழியர்கள்  தொழிலாளர்கள் ஆகியோருக்கு மட்டும்தான் ஓய்வூதியம் அளிக்கும் நடைமுறை பல ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வந்தது.  1990  களில்தான் அரசு வங்கிகள், எல்.ஐ.சி., பாரத மிகுமின் நிறுவனம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவன ஊழியர்கள்  தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கும் திட்டம் நடைமுறைக்கு வந்தது.

தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களை எடுத்துக் கொண்டால், அவற்றுள் சில நிறுவனங்கள் மட்டும்தான் தமது தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கும் நடைமுறையைப் பின்பற்றி வருகின்றன.  ஆனால், அந்நிறுவனங்களின் ஓய்வூதியத் திட்டத்தைச் சட்டபூர்வ உரிமையாகக் கோர முடியாது.  சிறுசிறு தொழிற்சாலைகளைச் சேர்ந்த அமைப்புசாரா தொழிலாளர்களை எடுத்துக் கொண்டால், அவர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் எதுவும் கிடையாது என்பது ஒருபுறமிருக்க,  அவர்களுக்கு முதலாளிகள் தம் பங்காக அளிக்க வேண்டிய வருங்கால வைப்பு நிதியைக்கூட முறையாகச் செலுத்துவது கிடையாது.  உதிரித் தொழிலாளர்கள், விவசாயக் கூலிகள், கடைச் சிப்பந்திகள் போன்ற அடிமட்டத் தொழிலாளர்களின் எதிர்காலத்திற்கான எந்தவிதமான சமூக நலத் திட்டங்களும் நடைமுறையில் இருந்ததில்லை.  பல கோடிக்கணக்கான இந்திய உழைக்கும் மக்கள் தங்களின் முதுமை காலத்தில் எவ்வித சமூகப் பாதுகாப்பும் அற்ற அவல நிலையில் இன்றும் இருத்தி வைக்கப்பட்டிருக்கும் சித்திரம் இதுதான்.

புதிய ஓய்வூதியத் திட்டம் : இருப்பதையும் பறிக்கும் சாத்தான்!

இருப்பதையும் பறிப்பது என்பதையே நோக்கமாகக் கொண்ட தனியார்மய  தாராளமயக் கொள்கைகளை அமல்படுத்தி வரும் இந்திய அரசு, ஏற்கெனவே ஓய்வூதியம் பெற்று வரும் அரசு ஊழியர்களிடமிருந்து அந்த உரிமையை 2003 ஆம் ஆண்டின் இறுதியில் ஒரேயொரு நிர்வாக உத்தரவின் மூலம் பறித்தது.  ஜனவரி 1, 2004 க்குப் பிறகு மைய அரசுப் பதவிகளில் சேரும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது.  அதற்குப் பதிலாக அந்த ஊழியர்களின் சம்பளத்திலிருந்து பிடிக்கப்படும் 10 சதவீத வருங்கால வைப்பு நிதிக்கு இணையான தொகையை அவர்களின் வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் மைய அரசு தன் பங்காகச் செலுத்தும் என்ற புதிய ஓய்வூதியத் திட்டத்தை பா.ஜ.க.வின் தலைமையிலிருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவித்தது.

எனினும், இப்புதிய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து இந்திய இராணுவத்துக்கும், துணை இராணுவப் படைகளுக்கும் விலக்கு அளிக்கப்பட்டு, அவர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டம் தொடரும் எனச் சலுகை காட்டப்பட்டது. தனியார்மயம் என்ற கொள்ளையைப் பாதுகாக்கும் சட்டபூர்வ குண்டர்படைக்கு எஜமானர்கள் வீசியெறிந்துள்ள எலும்புத் துண்டுதான் இந்தச் சலுகை.  மைய அரசைப் பின்பற்றி பெரும்பாலான மாநில அரசுகளும் ஜனவரி 1, 2004க்குப் பிறகு சேரும் தமது ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க முடியாது எனக் கைவிரித்தன.

ஓய்வூதியத் திட்டத்தில் மட்டுமின்றி, அரசு மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி மற்றும் ஓய்வூதிய நிதியைக் கையாளுவதிலும் சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்பட்டன.  அரசு மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களிடமிருந்து மாதாமாதம் பிடிக்கப்படும் வருங்கால வைப்பு நிதியை நிர்வகிக்கும் பொறுப்பு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வாரியம் என்ற மைய அரசு நிறுவனத்திடமும், அந்த நிதியை முதலீடு செய்யும் பொறுப்பு இந்திய அரசு வங்கியிடமும் இருந்து வந்தது.  இந்நிறுவனங்கள் இந்த நிதியைத் திறம்பட முதலீடு செய்யும் ஆற்றல் கொண்டதாக இல்லை என்ற காரணத்தைக் கூறி, வருங்கால வைப்பு நிதியை முதலீடு செய்யும் பொறுப்பில் ஐ.சி.ஐ.சி.ஐ., கோடக் மஹிந்திரா வங்கி, ரிலையன்ஸ் கேபிடல், ஹெச்.டி.எஃப்.சி. ஆகிய தனியார் முதலீட்டு நிதி நிறுவனங்களையும் நுழைய அனுமதித்தது, பா.ஜ.க. கூட்டணி அரசு.

புதிய ஓய்வூதியத் திட்டம் : சட்டபூர்வ வழிப்பறிக் கொள்ளை !இந்தியாவில் ஏறத்தாழ 46 கோடி தொழிலாளர்கள் அமைப்புசாரா துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.  இதோடு ஒப்பிடும்பொழுது அரசுத்துறை மற்றும் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றிவரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை சுண்டைக்காய்தான்.  2004 ஜூனில் ஆட்சிக்கு வந்த தேசிய முற்போக்கு கூட்டணி அரசு, இந்தப் பல கோடிக்கணக்கான அமைப்புசாரா தொழிலாளர்களையும் புதிய ஓய்வூதியத் திட்டத்தில்  இழுத்துப் போடும் நோக்கத்தோடு அத்திட்டத்தை விரிவுபடுத்தி, அதற்குத் தேசிய ஓய்வூதியத் திட்டம் என்ற கவர்ச்சிகரமான பெயரையும் சூட்டியது.  மைய  மாநில அரசு ஊழியர்கள் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்து கொள்வது கட்டாயமென்றும், மற்ற துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் தம் விருப்பப்படி இதில் இணைந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியை அரசின் பத்திரங்கள் மற்றும் முதலீட்டுத் திட்டங்களில் மட்டும்தான் முதலீடு செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடும் தளர்த்தப்பட்டது.  இதன்படி, தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணையும் அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனத் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியை அரசு நிறுவனங்கள் மற்றும் பத்திரங்களில் மட்டுமின்றி, பங்குச் சந்தையிலும், தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் வெளியிடும் பத்திரங்களிலும் முதலீடு செய்யும் தாராளமயம் சேமநல நிதி நிர்வாகத்தில் புகுத்தப்பட்டது.

இப்புதிய ஓய்வூதியத் திட்டத்தைச் சட்டபூர்வமாக்கும் நோக்கத்தோடு, ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது.  இம்மசோதாவை நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக முன்வைக்க முயன்று வரும் மன்மோகன் சிங் கும்பல், இன்னொருபுறம் இத்துறையில் தற்பொழுது 26 சதவீத அளவிற்கு அந்நிய முதலீட்டை அனுமதிக்கவும்; நாடாளுமன்றத்தின் ஒப்பதலைப் பெறாமலேயே, ஒரு நிர்வாக ஆணை மூலம் அந்நிய முதலீட்டு வரம்பை அதிகரித்துக் கொள்ளவும்;  இத்துறையில் அந்நியக் கூட்டோடு நுழையும் தனியார் நிதி முதலீட்டு நிறுவனங்கள் பல்வேறு விதமான ஓய்வூதியத் திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.  இவையனைத்தும் நிறைவேறும்பொழுது, தொலைபேசித் துறையில் தனியாரை அனுமதித்த பிறகு அரசின் தொலைபேசி நிறுவனத்திற்கு எந்தக் கதி ஏற்பட்டதோ, அதே போன்ற நிலை  தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டங்களையும், அவர்களின் வருங்கால வைப்பு நிதியையும் பாதுகாத்து வரும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வாரியத்திற்கும் ஏற்படும்.

 

பற்றாக்குறை என்ற பழைய பல்லவி

மக்களுக்கு வழங்கப்படும் மானியங்களை வெட்டுவதற்கு என்ன காரணத்தை அரசு முன்வைத்து வருகிறதோ, அதே காரணத்தைத்தான், அதாவது அரசின் நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பது என்பதைத்தான் பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிடுவதற்கும், ஓய்வூதிய நிதித் துறையில் தனியார்மயத்தைப் புகுத்துவதற்கும் காரணமாக அரசு முன்வைத்து வருகிறது.  ஆனால், ஆறாவது ஊதியக் கமிசனின் சார்பாக அமைக்கப்பட்ட காயத்ரி கமிட்டி, “மைய அரசினால் வழங்கப்படும் மொத்த ஓய்வூதிய நிதியில் 54 சதவீதம் இராணுவச் சிப்பாய்களுக்கும் அதிகாரிகளுக்கும் செல்லுகிறது.  அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கும்பொழுது, அரசின் ஓய்வூதியச் செலவு எப்படிக் குறையும்?” என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.  மேலும், இந்தியாவிலேயே மிகப் பெரும் எண்ணிக்கையில் தொழிலாளர்களைக் கொண்டுள்ள இந்திய ரயில்வே, தனது தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் அளிப்பதற்கு ஒவ்வொரு ஆண்டும் தனது பட்ஜெட்டிலேயே தனியாக நிதி ஒதுக்கீடு செய்து வரும்பொழுது, அரசிற்கு ஓய்வூதிய நிதிச் செலவு கட்டுக்கடங்காமல் அதிகரித்துச் செல்வதற்கு வாய்ப்பில்லை; அரசு தனது ஊழியர்களுக்கு வழங்கி வரும் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் 1960  இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.7 சதவீதமாக இருந்தது.  இது, 200405  இல் 1.8 சதவீதமாகக் குறைந்துவிட்டது.  பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்திவந்தால்கூட, இச்செலவு 202728  இல் 0.54 சதவீதமாகக் குறைந்துவிடும் என்றும் காயத்ரி கமிட்டி சுட்டிக்காட்டியிருக்கிறது.

எனவே, அரசின் பற்றாக்குறையை குறைப்பது என்பது புதிய ஓய்வூதியத் திட்டத்தின் நோக்கமல்ல.  அரசு தனது சட்டபூர்வ பொறுப்பைக் கைகழுவுவதும்;  தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து மாதாமாதம் பிடிக்கப்படும் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புமிக்க வருங்கால வைப்பு நிதியைப் பங்குச் சந்தையில் போட்டுச் சூதாடத் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உரிமை அளிப்பதும்தான் இதன் பின்னுள்ள காரணம்.

வருங்கால வைப்பு நிதி சேமிப்பு பறிபோகும் அபாயம்

இப்புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்கப்படும் ஒவ்வொரு தொழிலாளியின் சம்பளத்திலிருந்தும் பிடிக்கப்படும் வருங்கால வைப்பு நிதி தனியார் முதலீட்டு நிறுவனங்களிடம் செலுத்தப்படும்.  அந்நிறுவனங்கள் இச்சேமிப்பை அரசின் பத்திரங்களில் மட்டுமின்றி, பங்குச் சந்தையிலும், கார்ப்பரேட் நிறுவனங்கள் வெளியிடும் பத்திரங்களிலும் முதலீடு செய்யும்.  இதன் மூலம் கிடைக்கும் இலாபமோ/நட்டமோ, அது ஒவ்வொரு தொழிலாளியின் சேமிப்புக் கணக்கிலும் சேர்க்கப்படும்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தில் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியை எந்தெந்த திட்டங்களில் முதலீடு செய்வது என்பது குறித்து கருத்துக் கூறும் உரிமை தொழிற்சங்கங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.  புதிய ஓய்வூதியத் திட்டத்திலோ ஓய்வூதிய நிதியை நிர்வகிக்கும் தனியார் முதலீட்டு நிறுவனங்கள் அறிவிக்கும் முதலீட்டுத் திட்டங்களில் ஏதாவதொன்றைத் தொழிலாளி தானே தீர்மானித்துக் கொள்ள வேண்டும்; அல்லது, அவர்களின் சார்பில் முதலீட்டு நிறுவனங்களே முதலீடு செய்து கொள்ளும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.  அதாவது, தன்னுடைய ஓய்வூதிய நிதியைக் கொள்ளையிடும் உரிமையை எந்த முதலாளிக்கு வழங்குவது என்று தீர்மானிக்கும் உரிமை தொழிலாளிக்கு வழங்கப்பட்டுள்ளது.  இந்தக் கொள்ளையிலிருந்து தப்பிக்கும் உரிமையோ, தனது ஓய்வூதிய நிதியை வேறுவிதமாகப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமையோ தொழிலாளிக்கு கிடையாது.

இலாபம் கிடைத்தாலும், நட்டமடைந்தாலும், ஒவ்வொரு தொழிலாளியும், தான் ஓய்வு பெறும் வரை மாதாந்திர நிதியைச் செலுத்திக் கொண்டேயிருக்க வேண்டுமே தவிர, இத்திட்டத்திலிருந்து விலகிச் சென்றுவிட முடியாது.  திட்டத்திலிருந்து விலகுவது மட்டுமல்ல, ஒருவர் தனக்குத் தேவைப்படும் நேரத்தில் தனது வருங்கால வைப்பு நிதி சேமிப்பிலிருந்து பணத்தை எடுப்பதுகூட அவ்வளவு எளிதான விவகாரமல்ல. மேலும், ஒரு தொழிலாளி வேலையிழந்து, அதனால் மாதந்தோறும் செலுத்த வேண்டிய சந்தா தொகையைச் செலுத்தத் தவறும் பட்சத்தில் அவரின் சேமிப்பு முழுவதையும் கம்பெனியே முழுங்கிவிடும் அபாயமும் இத்திட்டத்தில் உள்ளது.

தொழிலாளர்கள் ஓய்வுபெறும்பொழுது, அவர்களின் சேமிப்பு சந்தையில் முதலீடு செய்யப்பட்டு ஈட்டித் தந்திருக்கும் வருமானத்திலிருந்து 60 சதவீதம் மொத்தமாகத் திருப்பித் தரப்படும்; மீதி 40 சதவீதம் அவர்களுக்குக் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியம் வழங்குவதற்காக காப்பீடு நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும்.  அதேசமயம், ஒரு தொழிலாளி தான் ஓய்வு பெறுவதற்கு முன்பாக இத்திட்டத்திலிருந்து விலகிக் கொள்ள நேர்ந்தால், அவரது சேமிப்பிலிருந்து 80 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு, காப்பீடு நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும்.  இந்தக் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியம் என்பது சந்தை நிலவரத்தைப் பொறுத்து மாறக்கூடியதே தவிர, உத்தரவாதமானது அல்ல.  சந்தை நிலவரம் குறைந்தபட்ச ஓய்வூதியம் தரக்கூடிய நிலையில் இல்லை என்றால், ஓவ்வொரு தொழிலாளியும் தனக்குக் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியம் அளிப்பதற்காகப் பிடிக்கப்படும் முதலீட்டை அதிகரித்துக் கொண்டே செல்ல நேரிடும்.

இவையெல்லாம், பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களைச் சந்திக்காமல் நிதானமாக வளர்ந்து கொண்டிருந்தால்தான் கைக்குக் கிட்டும்.  பங்குச் சந்தை தலைகுப்புறக் கவிழ்ந்துவிட்டாலோ, பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்ட தொழிலாளியின் வருங்கால வைப்பு நிதி கடலில் கரைத்த பெருங்காயமாகக் காணாமல் போகும்.  இப்படிப்பட்ட அபாயம் நடக்குமா என்ற கேள்விக்கே இங்கு இடமில்லை.  இப்படி நடப்பது தவிர்க்க முடியாதது என்பதைத்தான் முதலாளித்துவத்தின் குருபீடமான அமெரிக்காவின் அனுபவங்கள் நிரூபித்திருக்கின்றன.

அமெரிக்க முதலீட்டு நிறுவனங்கள் ஓய்வூதிய நிதியைப் பங்குச் சந்தையில் கொட்டியதால்,  1980க்கும் 2007க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் அமெரிக்கப் பங்குச் சந்தை எக்குத்தப்பாக வீங்கியது.  இந்த வீக்கத்தால், தொழிலாளி வர்க்கத்தைவிட, வேலியிடப்பட்ட நிதி நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் தரகு நிறுவனங்கள் போன்றவைதான் பலனடைந்தன.  குறிப்பாக, தனியார் முதலீட்டு நிறுவனங்கள் மட்டும் 2000 க்குப் பிந்தைய பத்து ஆண்டுகளுக்குள் ஓய்வூதிய நிதியைப் பயன்படுத்தி 1,700 கோடி அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமாக (85,000 கோடி ரூபாய்) இலாபம் ஈட்டின.  சப்  பிரைம் நெருக்கடியால் அமெரிக்கப் பங்குச் சந்தையின் வீக்கம் வெடித்தபொழுது, ஏறத்தாழ 3 இலட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் (ஒரு கோடியே ஐம்பது இலட்சம் கோடி ரூபாய்) பெறுமானமுள்ள அமெரிக்கத் தொழிலாளி வர்க்கத்தின், நடுத்தர வர்க்கத்தின் ஓய்வூதியச் சேமிப்பு சுவடே தெரியாமல் மறைந்து போனது.

இது போன்ற நிலைமை இந்தியாவிலும் உருவாகும் என்பதை எதிர்பார்க்கும் ஆளும் கும்பல், அதற்கேற்றபடியே புதிய ஓய்வூதியச் சட்டத்தில், “தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச உத்தரவாதமான மாதாந்திர ஓய்வூதியம் வழங்க முடியாது; சந்தையில் திடீர் இழப்புகள் ஏற்பட்டால், சேமிப்புத் தொகையில் ஒரு சிறு பகுதியைத் திருப்பித் தருவதற்குக்கூட உத்தரவாதம் தர முடியாது” என நிபந்தனைகளை விதித்திருக்கிறது.

தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து வருங்கால வைப்பு நிதியைப் பிடித்தம் செய்து, அதனை அரசிடம் கட்டாமல், அந்நிதியில் பல்வேறு முறைகேடுகளையும் கையாடல்களையும் தனியார் முதலாளிகள் செய்துவருவது ஏற்கெனவே அம்பலமாகிப் போன உண்மை.  இனி இப்படிப்பட்ட மோசடிப் பேர்வழிகளும் தனியார் முதலீட்டு நிறுவனங்களும் கூட்டுக் களவாணிகளாகச் செயல்படுவதற்கான வாய்ப்பை இந்தப் புதிய ஓய்வூதியத் திட்டம் திறந்துவிட்டுள்ளது.

இத்தனியார் முதலீட்டு நிறுவனங்கள் கணக்கு வழக்குகளை ஒழுங்காக வைத்திருப்பார்களா, தொழிலாளர்கள் ஓய்வு பெறும்பொழுது அவர்களின் சேமிப்பை முறையாகத் திரும்ப ஒப்படைப்பார்களா எனக் கேட்டால், அவர்களைக் கண்காணிப்பதற்குத்தான் ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணையத்தை உருவாக்கியிருப்பதாகக் கூறுகிறார்கள்.  வேலிக்கு ஓணாண் சாட்சியாம்.  தொலை தொடர்புத் துறையிலும் காப்பீடு துறையிலும் மின் துறையிலும் அமைக்கப்பட்டுள்ள ஒழுங்காற்று ஆணையங்கள் அத்துறைகளில் நுழைந்துள்ள தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளையைச் சட்டபூர்வமாக்கும் திருப்பணியைத்தான் செய்து வருகின்றன.  ஒவ்வொரு தொழிலாளியிடமிருந்தும் மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்பு நிதியை ஒரு இருபது, முப்பது ஆண்டுகளுக்குத் தானே வைத்துக் கொண்டு, தமது விருப்பம் போலப் பயன்படுத்திக் கொள்ளத் தனியார் முதலீட்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளித்திருப்பதை, 2 ஜி  ஐ விஞ்சும் ஊழலாகத்தான் சொல்ல முடியும்.

ஓய்வூதியம்: முதலாளியின் கொடையா, தொழிலாளியின் உரிமையா?

அரசும் முதலாளிகளும் தமது ஊழியர்களுக்கு வழங்கும் ஓய்வூதியம் உள்ளிட்ட பிற பணச் சலுகைகளை, தாங்கள் மனமுவந்து அளிக்கும் கொடையாக, தங்களின் இலாபத்தின் ஒரு பகுதியைத் தொழிலாளர்களுக்குத் தருவதாகக் காட்டிக் கொள்கிறார்கள்.  இதன் காரணமாகவே, அரசும் முதலாளிகளும் தங்களுக்கு ஏற்படும் பற்றாக்குறை அல்லது நட்டம் போன்ற காரணங்களைக் காட்டி, தொழிலாளிகள் போராடி பெற்ற இந்த உரிமைகளைப் பறித்துவிட முயலுகிறார்கள்.

ஒரு தொழிற்சாலையிலோ அல்லது அலுவலகத்திலோ எட்டு மணி நேரம், பத்து மணி நேரம் என வேலை பார்க்கும் தொழிலாளிகளுக்கு, முதலாளிகள் அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளும் முழு உழைப்புச் சக்திக்கு உரிய கூலியை ஒருபோதும் தருவதில்லை.  தொழிலாளிகள் வாழ்வதற்குப் போதுமான, அதாவது தொழிலாளி வர்க்கம் தம்மை மறுஉற்பத்தி செய்து கொள்ளுவதற்கு எவ்வளவு தேவைப்படுமோ, அதனை மட்டுமே கூலியாகத் தருகிறார்கள்.  ஒரு தொழிற்சாலையில் நாளொன்றுக்கு எட்டு மணி நேரம் வேலை செய்யும் தொழிலாளி தன்னை மறு உற்பத்தி செய்து கொள்வதற்கு தேவையான கூலியை இரண்டு மணி நேர உழைப்பின் மூலம் பெற்றுவிட முடியும் என்றால், மீதி ஆறு மணி நேரமும் அத்தொழிலாளி இலவசமாக முதலாளிக்குத் தனது உழைப்புச் சக்தியை வழங்குமாறு நிர்பந்திக்கப்படுகிறார்.  முதலாளிக்குக் கிடைக்கும் இலாபம், நில வாடகை, வரிகள் இத்தியாதி என்னும் எல்லாவிதமான உபரி மதிப்பும் கூலி கொடுக்கப்படாத இந்த உழைப்பிலிருந்துதான் முதலாளி பெற்றுக் கொள்கிறான் என மார்க்ஸ் முதலாளித்துவச் சுரண்டலின் பின்னுள்ள இந்த இரகசியத்தை நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பே அம்பலப்படுத்தியிருக்கிறார்.

எனவே, ஓய்வூதியம் என்பது தொழிலாளிகளுக்குத் தரப்படும் தானமல்ல.  அது அவனிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பறிக்கப்பட்ட கொடுபடா கூலியின் ஒரு பகுதிதான்.  இதனைத் தர மறுப்பதென்பது முதலாளித்துவப் பயங்கரவாதம்தான்.  புதிய ஓய்வூதியச் சட்டத்தைக் கொண்டு வந்து அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதிய உரிமையைப் பறித்ததன் மூலம், தனியார் கார்ப்பரேட் முதலாளிகளும் இன்ன பிற முதலாளிகளும் தொழிலாளிகளுக்கு ஓய்வூதியம் கொடுக்கும் சட்டபூர்வமான பொறுப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள வழியேற்படுத்திக் கொடுத்திருக்கிறது, மன்மோகன் சிங் கும்பல்.  ஓடிஓடித் தேய்ந்து போன இயந்திரங்களைக் கழித்துக் கட்டிக் குப்பையில் வீசியெறிவது போல, உழைத்து உழைத்து இளைத்துப் போகும் தொழிலாளர்களை, அவர்களின் முதுமைக் காலத்தில் எவ்விதச் சமூகப் பாதுகாப்பும் அற்ற நிர்க்கதியான நிலையில், அபாயத்தில் தள்ளிவிடும் முதலா ளித்துவ வக்கிரம்தான் இப்புதிய ஓய்வூதியத் திட்டம்.

போலி கம்யூனிஸ்டுகள் தவிர்த்த பிற எதிர்க்கட்சிகள் அனைத்தும் இப்புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக வாயளவில்கூட எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.  போலி கம்யூனிஸ்டுகளின் எதிர்ப்போ நாடாளுமன்றம் என்ற நான்கு சுவற்றுக்குள்ளேயே முடங்கிவிட்டது.  நாடெங்குமுள்ள அக்கட்சிகளின் தொழிற்சங்கங்களோ ஆலை வாயிலில் ஒழிக கோஷம் போடுவதற்கு அப்பால் தாண்டிச் செல்லவில்லை.  இந்த சம்பிரதாயமான எதிர்ப்புகளால் தனியார்மயம்   தாராளமயத்தை வீழ்த்த முடியாது என்பதை கடந்த இருபது ஆண்டு கால அனுபவம் உணர்த்தியிருக்கிறது.  எனவே, தொழிலாளி வர்க்கம் ஒரே அணியாகத் திரண்டு போலிகளின் இந்தச் சடங்குத்தனமான எதிர்ப்பை மீறி, சம்பிரதாயமான, சட்டத்திற்கு உட்பட்ட போராட்ட முறைகளை மீறிப் போராடினால் மட்டுமே, புதிய ஓய்வூதியத் திட்டம் என்ற இந்த முதலாளித்துவப் பயங்கரவாதத்தைத் துரத்தியடிக்க முடியும்.

– புதிய ஜனநாயகம், ஜனவரி – 2012

குஜராத்: மோடியின் கொலைக்களம்!

மகாராஷ்டிரா மாநிலம்  மும்பய் நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான், அவரது நண்பர் ஜாவேத் ஷேக் என்ற பிரானேஷ் பிள்ளை மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று குஜராத் போலீசாலும், மைய உளவுத்துறையாலும் குற்றம் சாட்டப்படும் அம்ஜத் அலி, ஜிஷன் ஜோஹர் அப்துல் கனி ஆகிய நால்வரும் கடந்த ஜூன் 15, 2004 அன்று குஜராத் மாநிலத் தலைநகர் அகமதாபாத் நகரின் புறநகர்ப் பகுதியில் துப்பாக்கி குண்டுகள் துளைக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தனர். “இந்நால்வரும் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ  தொய்பா அமைப்பினைச் சேர்ந்தவர்கள்; அவர்கள் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைக் கொல்லும் பயங்கரவாத நோக்கத்தோடு குஜராத்துக்கு வந்துகொண்டிருந்தபொழுது அகமதாபாத் நகரக் குற்றப்பிரிவு போலீசாரால் வழிமறிக்கப்பட்டனர்.  அப்பொழுது நடந்த மோதலில்தான் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக” குஜராத் மாநில அரசு அறிவித்தது.  அச்சம்பவம் நடந்து ஏழாண்டுகள் கழிந்துவிட்ட நிலையில், அது ஒரு போலிமோதல் கொலைதான் என்பதனை குஜராத் உயர்நீதி மன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு கடந்த நவம்பர் மாதம் அறிவித்திருக்கிறது.

குஜராத்: மோடியின் கொலைக்களம்!இம்‘மோதல்’ கொலை சம்பவம் நடந்தவுடனேயே, அதன் உண்மைத் தன்மை குறித்து மனித உரிமை அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பினர்.  “தனது மகள் தீவிரவாதி கிடையாது; ஏழ்மையில் வாடியபோதிலும் படித்து ஆசிரியராக வேண்டும் எனக் கனவு கண்ட பெண்; குடும்பத்தின் வறுமை காரணமாகக் கல்லூரியில் படித்துக்கொண்டே வேலைக்கும் போய்க்கொண்டிருந்த அப்பாவிப் பெண்” என அன்றே கதறினார்  இஷ்ரத் ஜஹானின் தாய் ஷமிமா.

செப். 2009இல் இவ்வழக்கை விசாரித்த அகமதாபாத் பெருநகரக் குற்றவியல் நீதிமன்றம், இறந்துபோன அந்நால்வரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் தடயவியல் அறிக்கை ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு, “இதுவொரு போலிமோதல் கொலை; அந்நால்வரும் மோதல் நடந்ததாகச் சொல்லப்படும் நாளுக்கு முதல்நாளே மிகவும் அருகாமையிலிருந்து சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர்” என்று தீர்ப்பளித்தது. மோடி அரசோ அந்நீதிமன்றம் தனது வரம்பை மீறி நடந்துகொண்டுள்ளதாகக் கூறி, அந்நீதிமன்ற முடிவை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டது.

இதனிடையே இஷ்ரத் ஜஹானின் தாய் ஷமிமாவும், இஷ்ரத் ஜஹானோடு சேர்த்துக் கொல்லப்பட்ட ஜாவேத் ஷேக் என்ற பிரானேஷ் பிள்ளையின் தந்தை கோபிநாத் பிள்ளையும் இப்படுகொலை குறித்து சி.பி.ஐ. விசாரணை கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்று இது உண்மையான மோதல் கொலைதானா என்று ஆராய்வதற்காக, தனது கண்காணிப்பின் கீழ் ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்தது, குஜராத் உயர் நீதிமன்றம்.

குஜராத்: மோடியின் கொலைக்களம்!இச்சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்படுவதை ரத்து செய்யக் கோரி மோடி அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது; அதனை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. குஜராத் உயர் நீதிமன்றம் நியமித்த புலனாய்வுக் குழு இம்‘மோதல்’ கொலை தொடர்பாக 240 சாட்சிகளை விசாரித்தது. அந்நால்வரும் ‘மோதலில்’ கொல்லப்பட்ட விதம் குறித்து குஜராத் போலீசு கூறியிருந்தவற்றை மூன்று முறை அப்படியே நிகழ்த்திப் பார்த்து, இது போலி மோதல் கொலைதான் என ஒருமனதாக முடிவுக்கு வந்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் இப்படுகொலையைத் திட்டமிட்டு நடத்திய 21 போலீசு அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யவும், இப்படுகொலையின் மற்ற பின்னணிகள் குறித்து விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளது, குஜராத் உயர் நீதிமன்றம்.

இஷ்ரத் ஜஹான் படுகொலை பற்றிய சிறப்புப் புலனாய்வுக் குழுவின் இந்த அறிக்கை, மோடி அரசை  மட்டுமல்ல, மத்திய அரசையும் அம்பலப்படுத்தியிருக்கிறது. ஏனென்றால், “அந்நால்வரும் லஷ்கர்  இ  தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள்; குஜராத்தில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த வருகிறார்கள்” என மோடி அரசுக்கு உளவுத் தகவல் கொடுத்தது ஐ.பி என்ற மைய அரசின் உளவுத்துறைதான். தற்போது இது போலி மோதல் கொலை என்று நிறுவப்பட்டுவிட்ட போதிலும், “நடந்ததது போலி மோதல் கொலையாக இருக்கலாம். ஆனால், கொல்லப்பட்டவர்கள் நால்வரும்  தீவிரவாதக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்ற மத்திய உளவுத்துறையின் தகவலை உயர் நீதிமன்றம் மறுத்துவிடவில்லை” என்று கூறி மோடி அரசுக்கு முட்டுக் கொடுக்கிறார், மைய அரசின் முன்னாள் உள்துறைச் செயலர் ஜி.கே.பிள்ளை.  அது மட்டுமின்றி, “இஷ்ரத் ஜஹான் பல விடுதிகளில் வெவ்வேறு ஆண்களோடு சேர்ந்து தங்கியிருந்ததாக”க் கூறி அப்பெண், ‘நடத்தை கெட்டவள்’ என்று சித்தரிப்பதன் மூலம் உளவுத்துறையை நியாயப்படுத்த நரித்தனமாக முயன்றுள்ளார்.

இஷ்ரத் ஜஹானின் குடும்பம் இப்பொழுது தானே மாவட்டத்திலுள்ள மும்ப்ரா பகுதியில் குடியிருந்து வருகிறது.  இஷ்ரத்தின் சகோதரன் அன்வரைத் தவிர, அவரின் குடும்பத்தைச் சேர்ந்த யாரும் பள்ளிப்படிப்பைக்கூட முடிக்க முடியாமல் இடையில் நின்றுவிட்டார்கள்.  அதற்கு அக்குடும்பத்தின் வறுமை மட்டும் காரணமில்லை.  குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கு முன்பாகவே, இஷ்ரத் முசுலீம் தீவிரவாதி என முத்திரை குத்தப்பட்டுவிட்டதால், அக்குடும்பம் சமூகத்துக்கு அஞ்சி ஒதுங்கி வாழும் நிலை ஏற்பட்டுவிட்டது. இஷ்ரத் சுட்டுக் கொல்லப்பட்ட பின் அவரது குடும்பம் கடந்த ஏழாண்டுகளில் ஐந்து முறை வீடு மாற வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகியிருக்கிறது.  “இத்தீர்ப்பு வரும் வரை நாங்கள் நரக வேதனையை அனுபவித்தோம்” என்கிறார், இஷ்ரத்தின் தாயார் ஷமிமா. வறுமையோடு அக்குடும்பம் போராடுவதைப் பார்த்தாலே, இஷ்ரத்தின் மீது அவதூறு செய்வதற்கு யாருக்கும் நா எழாது.

குஜராத்தில் நடக்கும் மோடியின் ஆட்சியை அலசிப் பாரத்தால்தான் இஷ்ரத் ஜஹான் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் பின்னணியையும், அதன் பரிமாணத்தையும் புரிந்துகொள்ள முடியும்.  குஜராத் இனப்படுகொலை நடந்துமுடிந்த அடுத்த ஆண்டு, மார்ச் 26, 2003 அன்று மோடிக்கு நெருக்கமானவராக இருந்தவரும், அவரது அரசில் வருவாய்த்துறை இணை அமைச்சராக இருந்தவருமான ஹரேன் பாண்டியா மர்மமான முறையில் நடுவீதியில் காருக்குள்ளே இறந்துகிடந்தார்.  ஹரேன் பாண்டியா முசுலீம் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாகப் பீதி கிளப்பிய மோடி அரசு, இவ்வழக்கு விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்து நடுநிலை நாடகம் ஆடியது.  இப்படுகொலை தொடர்பாகக் கைது செய்யப்பட்ட 12 முசுலீம்களையும் கீழமை நீதிமன்றம் பொடா சட்டப்படி தண்டித்தது.  எனினும், குஜராத் உயர் நீதிமன்றம், அந்த 12 பேர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை எனக் கூறித் தண்டனையை ரத்து செய்துவிட்டது.

குஜராத்: மோடியின் கொலைக்களம்!ஹரேன் பாண்டியாவைக் கொன்றது யார் என்ற மர்மம் இன்னும் விடுவிக்கப்படவில்லை என்றாலும், மோடி கும்பலுக்கு நெருக்கமானவனும் இராசஸ்தானிலுள்ள கிரிமினல் கும்பலைச் சேர்ந்தவனுமான சோராபுதீனுக்கும் பாண்டியாவின் கொலைக்கும் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகம் வலுவாக எழுந்துள்ளது.  2005 ஆம் ஆண்டில் இந்த சோராபுதீன் குஜராத்திற்குக் கடத்தி வரப்பட்டு, அம்மாநில போலீசாரால் போலி மோதலில் கொல்லப்பட்டான்.  சோராபுதீனோடு சேர்த்துக் கடத்தப்பட்ட அவரது மனைவி கவுசர் பீ விஷ ஊசி போட்டுக் கொல்லப்பட்டார்.  ஹரேன் பாண்டியா கொலையில் தொடர்புடையவனும்; சோராபுதீன், அவரது மனைவி கவுசர் பீ கொலைகளின் சாட்சியாகக் கருதப்படுபவனும் சோராபுதீனின் கூட்டாளியுமான துளசிராம் பிரஜாபதி 2006  ஆம் ஆண்டு குஜராத் மாநில எல்லையருகே போலி மோதலில் கொல்லப்பட்டான்.  சோராபுதீன் மற்றும் பிரஜாபதி கொலைகளைப் பற்றி அறிந்திருந்த மற்றொரு சாட்சி அஜம் கானைச் சுட்டுக் கொல்ல நடந்த முயற்சியில் அவன் நல்வாய்ப்பாகத் தப்பிவிட்டான்.  அதன் பின் அஜம் கான் உயிர் பயம் காரணமாக சோராபுதீன் கொலைவழக்கில் பிறழ்சாட்சியாக மாறினான்.  இந்தப் பின்னணியில்தான் இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நால்வரின் படுகொலையையும், அவர்கள் தீவிரவாதிகளாகச் சித்திரிக்கப்படுவதையும் வைத்துப் பார்க்க வேண்டும்.

இஷ்ரத் ஜஹான் படுகொலையைப் போலவே, சோராபுதீன் கொலையும் போலி மோதல்தான் என்பது நிரூபணமாகி, அதில் தொடர்புடைய டி.ஐ.ஜி. டி.ஜி. வன்சாரா, உதவி ஆணையர் நரேந்திர அமின் உள்ளிட்ட போலீசு அதிகாரிகள் விசாரணைக் கைதிகளாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  இந்த போலீசு அதிகாரிகள் கும்பல்தான் இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நால்வரையும் போலி மோதலில் கொன்றொழித்தது.  சோராபுதீன் கொலையில் தொடர்புடைய, மோடி அரசில் அமைச்சராக இருந்த அமித் ஷா பிணையில் வெளியே வந்துவிட்டாலும், அவர் குஜராத்திற்குள் நுழையக் கூடாது என உச்ச நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

ஹரேன் பாண்டியாவின் கொலையில் அரசியல் பின்னணி உள்ளது என்று அவரது தந்தையே குற்றம் சாட்டி வந்தார்.  ஹரேன் பாண்டியா, குஜராத் இனப்படுகொலை தொடர்பாக மக்கள் நீதிமன்றம் என்ற அமைப்பு நடத்திய விசாரணையில், அப்படுகொலையில் மோடிக்கு உள்ள பங்கு குறித்து சாட்சியம் அளித்ததுதான் பாண்டியாவின் கொலைக்கான அரசியல் பின்னணி.  இது போலவே, குஜராத் இனப்படுகொலை வழக்குகளுள் ஒன்றான நரோடா பாட்டியா வழக்கின் முக்கிய சாட்சியான நதீம் அகமது சையதும் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.  குஜராத் இனப்படுகொலையில் மோடி மற்றும் அவரது அரசின் பங்கு குறித்து அம்பலப்படுத்த முன்வந்துள்ள போலீசு அதிகாரிகளான சஞ்சீவ் பட், ராகுல் சர்மா உள்ளிட்ட பலரை, சாமானியர்களைப் போலப் போட்டுத் தள்ள முடியாததால், அந்த அதிகாரிகளைத் தற்காலிகமாகப் பதவி நீக்கம் செய்வது, பொய் வழக்குப் போடுவது என மிரட்டி வருகிறது, மோடி கும்பல்.

குஜராத்: மோடியின் கொலைக்களம்!குஜராத்தை ஆண்டு வரும் மோடியின் தலைமையிலான கிரிமினல் கும்பல் எத்தனை கொடூரமானது என்பதை இந்த விவரங்களிலிருந்து யாரும் புரிந்து கொள்ளலாம்; அக்கிரிமினல் கும்பலின் தலைவனான நரேந்திர மோடியை அப்பழுக்கில்லாத உத்தமனாகவும், பிரதமர் பதவிக்குத் தகுதியுள்ளவனாகவும் முன்னிறுத்து கின்ற பத்திரிகைகள், தரகு முதலாளித்துவக் கும்பலின் யோக்கியதையையும் புரிந்து கொள்ளலாம்.

இஷ்ரத் ஜஹான் என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டுவிட்டாள். அவள் தீவிரவாதியா, இல்லையா என்று விசாரணை நடக்கிறது.  மோடி என்ற இந்து மதவெறிக் கொலைகாரனைத் தண்டிப்பதற்குத் தேவைக்கும் அதிகமான ஆதாரங்கள் குவிந்து கொண்டிருக்கின்றன. தண்டனைதான் தள்ளிப்போய்க் கொண்டிருக்கிறது.

– புதிய ஜனநாயகம், ஜனவரி – 2012

இந்துத்வா கும்பலின் சுதேசிப் பித்தலாட்டம்!

ஒரே வகை வணிகமுத்திரை கொண்ட சில்லறை வர்த்தக நிறுவனங்களில் 100 சதவீதமும், பல்வேறு வணிகமுத்திரைகள் கொண்ட பொருட்களை விற்கும் சில்லறை வர்த்தகத்தில் 51 சதவீதமும் அந்நிய

நேரடி மூலதனத்தை அனுமதிப்பது எனக் கடந்த மாதம் மைய அமைச்சரவை முடிவெடுத்தது. இந்த முடிவை பா.ஜ.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, திருணாமுல் காங்கிரசும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கவே ஓரடி பின்வாங்கியிருக்கிறது, ஐ.மு.கூ. அரசு.

அனைத்துக் கட்சிகளும் ஒரே புரிதலுக்கு வரும் வரை, தனது முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக நாடாளுமன்றத்தில் அறிவித்த போதிலும், தற்போது ஒரு இடைத்தேர்தலை நாங்கள் விரும்பவில்லை என்பதுதான் முடிவைத் தள்ளி வைக்க காரணம் என்று வெளிப்படையாகக் கூறினார், பிரணாப் முகர்ஜி. இந்திய  அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தைப் போல, இதுவும் ஒரு வாக்கெடுப்புக்குப் போனால், எம்.பி.க்களைக் கொள்முதல் செய்து தந்துவிட்டு, சிறைக்கும் போவதற்கு இன்னொரு அமர்சிங் இல்லையென்பதுதான் இந்தப் பின்வாங்கலுக்குக் காரணம்.

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் காங்கிரசின் முடிவு, ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜ.க பெற்றெடுத்த குழுந்தையாகும்
கூட்டுக் களவாணிகள்

இம்முடிவைத் தள்ளிவைத்த சில நாட்களுக்குப் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மன்மோகன் சிங், உ.பி. உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் முடிந்த பிறகு, எல்லாக் கட்சிகளும் ஒன்றாக அமர்ந்து பேசி அதன் பின்னர் இதனை அமல்படுத்துவோம் என்று உறுதிபடக் கூறியிருக்கிறார். தனியார்மய, தாராளமயக் கொள்கைகளை அமல்படுத்தும் விசயத்தில், ஆளும் கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் மாறி மாறி நடத்தும் நாடகங்கள் அவர்களுக்கே புளித்துப் போகும் அளவுக்குப் பழகிவிட்டதால், ஒளிவுமறைவுக்குக்கூட இடமில்லாமல் போய்விட்டது. எனவேதான், தேர்தல் முடிந்தவுடன் அமல்படுத்துவோம் என்று தேர்தலுக்கு முன்னாலேயே அறிவிக்கிறார், மன்மோகன் சிங்.

இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, இன்னொருபுறம் அந்நிய மூலதனத்தைச் சில்லறை வணிகத்தில் அனுமதிப்பதன் சாதகங்கள் குறித்த பிரச்சாரம் பெரிய அளவில் நடந்து வருகிறது. இந்த விவாதமே பொருளற்றது. சாதக பாதக அம்சங்களைச் சீர்தூக்கிப் பார்த்து, அந்நிய மூலதனத்தை அனுமதிக்கலாமா, வேண்டாமா என்ற முடிவை அரசு எடுக்கப் போவதில்லை. அந்நிய நேரடி முதலீட்டினால் நன்மையை விடத் தீமைகள்தான் அதிகம் என்பதை நிறுவிவிட்டால், மன்மோகன் சிங் இதனை நிறுத்திவிடப் போவதும் இல்லை. உலக வர்த்தகக் கழகத்தின் நிபந்தனைக்குக் கட்டுப்பட்டு இந்த முடிவு அமல்படுத்தப்படுகிறது என்பதுதான் இப்பிரச்சினையின் மையப்பொருள். அது குறித்த கேள்வியை எழுப்பாமல் தவிர்த்துக் கொண்டே, பா.ஜ.க., போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கட்சிகள், சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு என்பதைத் தனியொரு பிரச்சினை போல விவாதிக்கின்றனர். இது மிகப்பெரும் மோசடியாகும்.

மைய வணிகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மாவே சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இந்த உண்மையைப் போட்டுடைத்துள்ளார். “இந்தியா உலக வர்த்தகக் கழகத்தில் உறுப்பினராக உள்ளதால், அதன் முடிவுகளுக்கு நாம் கட்டுப்பட்டுத்தான் தீரவேண்டும். அதுமட்டுமின்றி, இது போன்ற கேந்திரமான தொழில்களில் மேலை நாட்டு நிறுவனங்களை இந்தியா அனுமதிக்காவிட்டால், பொருளாதாரச் சிக்கலிலிருந்து அவர்கள் விடுபட முடியாது. அவர்களுடைய பொருளாதாரத்தைச் சார்ந்திருக்கும் நாமும் வளர முடியாது. சில்லறை வணிகத்தில் அந்நிய மூலதனத்தை அனுமதிப்பது குறித்த முடிவை ஏற்கெனவே எடுத்தாகி விட்டது. எந்தத் தேதியில் இருந்து நடைமுறைப்படுத்துவது என்பதில் மட்டுமே ஒத்த கருத்தை எட்டவேண்டியிருக்கிறது” என்று விளக்கினார்,  ஆனந்த் சர்மா.

உண்மை இவ்வாறிருக்க, பா.ஜ.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அந்நிய முதலீட்டைத் தடுப்பவர்கள் போல நடிக்கிறார்கள். ஆனால், தாராளமயக் கொள்கையில் பா.ஜ.க.வின் யோக்கியதையை ஊரறியும். 1998இல் இருந்து 2004 வரை ஆறாண்டுகள் அக்கட்சி ஆட்சி செய்தபோதுதான், இந்தத் தாராளமயத்துக்கான வலுவான அடித்தளங்கள் எல்லாம் போடப்பட்டன. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுதான் ஒரே வகை வணிகமுத்திரை கொண்ட சில்லறை வர்த்தகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைய அனுமதி தருவதற்கு முன்னோடியாக இருந்தது. அந்நிய மூலதனத்தை ஈர்ப்பதற்காக மாபெரும் “மால்கள்” உருவாக்கப்பட வேண்டி, அதற்குத்தக்கபடி நகர்ப்புற நில உச்ச வரம்பை தளர்த்தியதும் பா.ஜ.க.தான்.

பா.ஜ.க.வின் அமைச்சரவையில் வணிகத்துறை அமைச்சராயிருந்த முரசொலி மாறன் சில்லறை வணிகத்தில் அந்நிய மூலதனத்தை 100 சதவீதம் வரை அனுமதிக்க வேண்டும் என்ற திட்டத்தை முன்வைத்தார். 2004 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது தனது தேர்தல் அறிக்கையிலேயே, சில்லறை வணிகத்தில் 26% அந்நிய மூலதனத்தை அனுமதிக்க இருப்பதாகக் கூறியது பா.ஜ.க. ஒருபக்கம் எதிர்ப்பு நாடகம் நடந்து கொண்டிருக்கும் இவ்வேளையிலும் கூட மோடியும், பா.ஜ.க. வின் கூட்டாளியான நவீன் பட்நாயக்கும் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டுக்குத் தமது ஆதரவை தெரிவித்திருக்கின்றனர்.

பா.ஜ.க. இன்று அந்தர்பல்டி அடித்தாலும், நடித்தாலும் அக்கட்சியின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பது காங்கிரசு கும்பலுக்கு நன்றாகவே தெரியும். “சில்லறை வணிகத்தில் அந்நிய மூலதனம் என்பது நீங்கள் பெற்ற குழந்தை. நாங்கள் அதை வளர்க்கிறோம். அவ்வளவுதான்” என்றார் பிரணாப் முகர்ஜி.

அரசியல் ஆதாயத்துக்காகத்தான் என்றாலும், பா.ஜ.க. கொஞ்சம் வரம்பு மீறிச் செல்வதாக ஆளும் வர்க்கங்கள் கருதுவதால், ஊடகங்கள் பா.ஜ.க.வை ‘கொள்கை இல்லாத கட்சி’ என்றும், ஓட்டுக்காகத் தேசத்தின் நலனை அடகு வைப்பதாகவும், தொலைநோக்குள்ள சிந்தனையை இழந்துவிட்டதாகவும் வசைபாடுகின்றன. பா.ஜ.க. தலைவர்களிடம்  அவர்கள் கடந்த காலங்களில் தாராளமயத்துக்கு ஆதரவாகப் பேசியதையெல்லாம் சுட்டிக்காட்டி விளக்கம் கேட்கின்றன. ஊடகங்களின் கிடுக்கிப்பிடியில் சிக்கி பா.ஜ.க.வினர் திணறுகிறார்கள்.  ஆளும் வர்க்கத்தை அதிகமாகப் புண்படுத்திவிட்டோமோ என்ற அச்சமும் பா.ஜ.க. வைப் பிடித்தாட்டுகிறது. அதனால்தான் ‘வால்மார்ட்டைக் கொளுத்துவேன்’ என்று உமாபாரதி கொக்கரித்ததும், அதில் தமக்கு உடன்பாடில்லை என்று பா.ஜ.க. தலைமை அவசரமாக தனது நிலையைத் தெளிவுபடுத்தியது.

காங்கிரசின் கூட்டணிக் கட்சியான திருணாமுல் காங்கிரசின் யோக்கியதையோ தனிக்கதை. எஃப்.ஐ.சி.சி.ஐ. என்ற தரகு முதலாளிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும், சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டைத் தீவிரமாக ஆதரித்தவருமான அமித் மித்ராவை நிதி அமைச்சராக வைத்துக்கொண்டு, மேற்கு வங்கத்தில் தாராளமயத்தைத் தாராளமாக அனுமதித்து வரும் மம்தா, சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை தீவிரமாக எதிர்ப்பதாக நடிக்கிறார். ஜெயலலிதாவைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை.

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதா, வேண்டாமா என்று முடிவு செய்து கொள்ளும் உரிமையை மாநிலங்களுக்கு வழங்கியிருப்பதால், விருப்பமில்லாத மாநிலங்கள் தடை செய்து கொள்ளலாம். ஆனால், அந்நிய மூலதனத்தை விரும்பும் மாநிலங்களும் அதனைப் பெற முடியாமல் தடுப்பது என்ன நியாயம் என்று வாதாடுகிறது காங்கிரசு கட்சி.

மாநிலங்களின் உரிமை மீது காங்கிரசுக்கு எழுந்துள்ள இந்த திடீர்க்காதல், மாநிலப் பட்டியலில் இருந்த பல அதிகாரங்களையும் மத்திய அரசு பிடுங்கிய போது எழவில்லை. கூடங்குளம் அணுமின் நிலையம் வேண்டாம் என முடிவெடுக்கும் உரிமை தமிழகத்துக்கு இல்லை எனக் கூறும் இவர்கள்தான், சில்லறை வணிகப் பிரச்சனையில் மாநிலங்களுக்கு உரிமை வழங்கியிருப்பதாகப் பேசுகிறார்கள். ஒட்டகம் தலை நுழைக்க இடம் கொடுத்துவிட்டால், அது உடலை நுழைத்துக் கொள்ளும் என்ற நம்பிக்கைதான் மாநிலங்களுக்கு வழங்கப்படும் இந்த உரிமைக்கு அடிப்படையாகும்.

அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் பொருளாதார நெருக்கடியில் இடுப்பொடிந்து போய்க் கிடக்கையில், அவற்றைத் தூக்கி நிறுத்த வேண்டுமானால் அந்நாடுகளின் நிதிமூலதனத்தை இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளின் சந்தையில் தடையின்றி அனுமதிக்க வேண்டும். அதற்காகத்தான் வால்மார்ட்டின் கையாளான ஹிலாரி கிளிண்டன் நேரடியாக இங்கு வந்து இந்திய அரசையும், ஆளும் வர்க்கத்தையும் நிர்பந்தித்துவிட்டுச் சென்றுள்ளார்.

இந்தியாவில்  சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு இந்த ஆண்டு 49 சதவீதம் மட்டுமே அனுமதிக்கப்படும் என வால்மார்ட்  நினைத்திருந்தது. ஆனால், அவர்களேகூட எதிர்பார்க்காத வகையில் மன்மோகன் அரசு 51 சதவீதமாக அதனை உயர்த்தியது. அமெரிக்கப் பொருளாதாரம் நன்றாக இருந்தால்தான் இந்தியப் பொருளாதாரம் நன்றாக இருக்கும் என ஆண்டையின் நலன் குறித்துக் கவலைப்படும் அடிமையாக இந்திய ஆளும் வர்க்கம் இருப்பதால்தான் அந்நிய முதலீட்டை இவ்வளவு மூர்க்கத்தனமாக ஆதரிக்கிறது.

சட்டமன்றத் தேர்தல்கள் முடிவதற்காகத்தான் எல்லோரும் காத்திருக்கின்றனர். பா.ஜ.க., தான் பெற்ற பிள்ளையை கைவிட்டு விடுமா, என்ன?

– புதிய ஜனநாயகம், ஜனவரி – 2012

கிழக்கு பதிப்பகம் வழங்கும் டயல் பார் ஷிட்! கார்டூன்!!

30
கிழக்கு பதிப்பகம் கார்டூன்

கிழக்கு பதிப்பகம் வழங்கும் டயல் பார் ஷிட்! கார்டூன்!!கிழக்கு பதிப்பகம் கார்டூன்(படத்தை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்)

நான் புத்தகங்களை வெறும் பண்டமாகத்தான் பார்க்கிறேன். இதை வெளிப்படையாகச் சொல்வதில் எனக்கு வெட்கமே இல்லை. தமிழின் இலக்கிய வானில் சில பதிப்பாளர்கள் அற்புதமான பணியாற்றி, சிறந்த இலக்கியத்தை வெளியே கொண்டுவர உதவுகிறார்கள். நான் அப்படிப்பட்டவன் அல்லன். புத்தகம் உருவாக்கி விற்பது எனக்கு ஒரு தொழில் மட்டுமே. நான் ஒரு வணிகன். எல்லாவிதமான புத்தகங்களையும் பதிப்பிக்க விரும்புகிறேன். அவை நன்றாக விற்கும் என்றால். நன்றாக விற்பனை ஆகாது என்றால் அவற்றைப் பதிப்பிக்க நான் விரும்புவதில்லை. சில புத்தகங்களை என் சொந்த ஆசைக்காகப் பதிப்பிப்பதும் உண்டு. கமெர்ஷியலாகப் பார்க்கும்போது அவை தவறான முடிவுகள் என்று நன்கு தெரிகிறது. வரும் காலங்களில் இந்தத் தவறைக் குறைத்துக்கொள்வேன். எங்கள் புத்தகங்களை மட்டும் விற்பனை செய்வதற்காக என்று நான் உருவாக்கியுள்ள கட்டுமானத்தை இப்போது அனைவருடைய புத்தகங்களையும் விற்பனை செய்ய என்று பயன்படுத்த ஆரம்பித்துள்ளேன்.

– பத்ரி சேஷாத்ரி, தொழிலதிபர் (கிழக்கு பதிப்பகம் – நியூ ஹொரைசன் மீடியா) கட்டுரையிலிருந்து

பாக்கிஸ்தான் கொடி ஏற்றி கலவரத்திற்கு முயன்ற இந்துமத வெறியர்கள்!

25

இந்திய நாட்டை உடைக்க வேண்டுமா? மதக் கலவரங்களை தோற்றுவித்து அப்பாவி இஸ்லாமிய மக்களை கொன்று குவிக்க வேண்டுமா?  அவர்களது பொருட்களை சூறையாட வேண்டுமா? இரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடி, மதக் கலவர பூமியாக குறிப்பிட்ட ஒரு பகுதியை அரசே அறிவிக்கும்படி செய்ய வேண்டுமா? இதன் வழியாக ஓட்டை பொறுக்கி ஆட்சியாளர்களாக மாறி, நாட்டின் வளங்களை கொள்ளையிட வேண்டுமா?

அப்படியானால், பார்ப்பன, பாசிச, இந்துத்துவா கருத்துகளை உங்கள் சிந்தனையின் ஒவ்வொரு துளியிலும் விதைக்க வேண்டும். அப்போதுதான் பொய் பேச முடியும். ஒரு பொருளை தானே திருடிவிட்டு, அந்தப் பழியை இஸ்லாமியர்கள் மீது சுமத்த முடியும். திட்டமிட்டு மக்கள் குவியும் இடத்தில் தாங்களே குண்டு வைத்து விட்டு, இந்தக் ‘படுபாதக’ செயலை நிகழ்த்தியது இஸ்லாமிய அமைப்புதான் என்று குற்றம்சாட்ட முடியும்.

சமீபத்தில், கர்நாடக மாநிலத்தில் இப்படித்தான் இந்துத்துவா சக்திகள் வெறியாட்டம் நிகழ்த்த முயன்றுள்ளன.

கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி, கர்நாடக மாநிலம் சிந்தகியில் உள்ள தாசில்தார் அலுவலம் பக்கமாக வந்தவர்கள் திடுக்கிட்டார்கள். அங்கிருந்த கொடிக் கம்பத்தில் பாகிஸ்தானின் தேசிய கொடி, பட்டொளி வீசி பறந்துக் கொண்டிருந்தது. இந்திய நாட்டில், பாகிஸ்தான் கொடியை ஏற்றி, புத்தாண்டு கொண்டாடுபவர்கள் யார் என்று கேள்வி அனைவரது மனதிலும் எழுந்தது.

ராம் சேனா
ஸ்ரீ ராம் சேனாவின் முத்தாலிக்

சரியாக, அப்போது பார்த்து, ‘இது இந்தப் பகுதியிலுள்ள இஸ்லாமியர்கள் செய்த செயல்…’ என்ற நச்சு தூவப்பட்டது. ஒளியை விட வேகமாக இந்த வாசகம் மக்களின் செவியை அடைந்தது. முதலில் நம்ப மறுத்தவர்கள் கூட, அடுத்தடுத்து வெவ்வேறு வார்த்தைகளுடன் இதே அர்த்தம் பொதிந்த சொற்களை எதிர்கொள்ள நேர்ந்ததும், ஒருவேளை அப்படி இருக்கலாமோ என நினைக்க ஆரம்பித்தார்கள். விளைவு, சில மணி நேரங்களில், சிந்தகி பகுதியில் வசிக்கும் இஸ்லாமியர்கள் அனைவருமே குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டார்கள்.

ஆனால், இந்த அயோக்கியதனத்தை நிகழ்த்தியது, எந்த இஸ்லாமிய குழுக்களும் அல்ல; தனிப்பட்ட இஸ்லாமியரும் அல்ல. பதிலாக ஒரு மதக் கலவரத்தை உண்டாக்குவதற்காக அந்தப் பகுதியில் உள்ள ராம் சேனா குண்டர்கள் நிகழ்த்திய நாடகம் இது. ராகேஷ் மத், என்ற ரவுடியின் தலைமையில் இந்தப் பித்தலாட்டத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள்.

இப்படி இந்து வெறியர்களே பாகிஸ்தானின் தேசிய கொடியை இரவோடு இரவாக ஏற்றிவிட்டு, அந்தப் பழியை இஸ்லாமியர்கள் மீது சுமத்தியது அம்பலப்பட்டு போனதும், விழித்துக் கொண்ட காவல்துறை, ராகேஷ் மத் உட்பட ஆறு ராம் சேனா குண்டர்களை கைது செய்து பிஜப்பூர் சிறையில் அடைத்தது. ஆனால், அந்த சிறையில் இருந்த மற்ற கைதிகள், ‘தேசத்தை துண்டாட முயற்சிப்பவர்களை எங்களுடன் அடைக்க வேண்டாம்’  என கோஷமிட்டதுடன், இந்த இந்துத்துவ பாசிஸ்ட்டுகளை நையப் புடைந்துள்ளனர். இதில், ராகேஷ் மத்துக்கு ‘பூசை’யும், மற்றவர்களுக்கு வெறும் ‘தீபாராதனையும்’ காட்டப்படவே, வேறு வழியின்றி இந்தக் கும்பலை பெல்லாரி மாவட்ட சிறைக்கு கடந்த ஞாயிறன்று (08.01.12) மாற்றியிருக்கிறார்கள்.

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை (10.01.12) இந்த சம்பவத்தில் ஈடுப்பட்ட இன்னொருவரை கைது செய்து பெல்லாரியில் அடைத்திருக்கிறார்கள். இதன் மூலம், கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்திருக்கிறது.

இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த ராம் சேனா அமைப்பினர், ‘ராகேஷ் மத் உள்ளிட்டவர்கள், எங்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள். ஆனால், காவல்துறை திட்டமிட்டு ஆர்.எஸ்.எஸ். பெயர் வெளியில் வராதபடி பார்த்துக் கொள்கிறது. வேண்டுமென்றே எங்கள் அமைப்பை களங்கப்படுத்த முயற்சிக்கிறது…’ என்று கூறியதுடன், இதற்கு ஆதாரமாக ஏராளமான புகைப்படங்களையும் செய்தியாளர்களிடம் கொடுத்திருக்கிறார்கள்.

அதாவது, ராம் சேனா அமைப்பில் இருப்பவர்கள் ‘ரொம்ப’ நல்லவர்களாம். ஆர்.எஸ்.எஸ். ‘பாய்ஸ்’ மட்டுமே கெட்டவர்களாம். கேழ்வரகில் நெய் வடியும் கதையாக கதறுகிறார்கள் ராம் சேனா அமைப்பினர். கலாச்சார காவலர்களாக தங்களைத் தாங்களே அறிவித்துக் கொண்டு, இவர்கள் நிகழ்த்திய – நிகழ்த்தும் வெறியாட்டங்கள் அனைத்தையுமே மக்கள் அறிந்திருக்கிறார்கள். ஊடகங்களும் அதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கின்றன. எனவே ராம் சேனா – ஆர்.எஸ்.எஸ். என பெயர்கள்தான் வேறு வேறே தவிர, மதக் கலவரங்களை நிகழ்த்துவதில் இருவருமே ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்தான்.

என்ன… இந்திய அதிகார வர்க்கத்தில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் ஊடுருவி இருப்பது போல் ராம் சேனா உறுப்பினர்கள் நுழையவில்லை. அதனால் ராம் சேனா செய்யும் அராஜகங்கள், உடனே வெளிச்சத்துக்கு வருகின்றன. ஆனால், ஆர்.எஸ்.எஸ். செய்யும் வெறிச் செயல்கள் முடிந்தவரை அமுக்கப்படுகின்றன. உண்மை அறிந்து மக்கள் போராடத் தொடங்கியதும் வேறு வழியின்றி, ஆர்.எஸ்.எஸ். நிகழ்த்திய பித்தலாட்டங்கள் ஊடகங்களாலும், காவலர்களாலும் ஒப்புக் கொள்ளப்படுகின்றன.

மாலேகான் (குண்டு வைத்த சுவாமி அசீமானந்தாவின் வாக்குமூலம்) உள்ளிட்ட பேர்வாதி குண்டு வெடிப்புகளை செய்தவர்கள் ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள்தான் என்பது இப்படித்தான் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன. இப்படி எசகுபிசகாக தொண்டர்கள் மாட்டிக் கொண்டதும், ‘அவர்களுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை’ என கையை விரிப்பதும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் நரித்தந்திரங்களில் ஒன்றுதான்.

இதையேதான் இப்போது ராம் சேனாவும் ‘ராகேஷ் மத் உள்ளிட்டவர்கள் எங்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் அல்ல…’ என்று சொல்வதன் வழியாக கடைபிடிக்கிறது. பிரதான ‘தாதா’வுக்கும், பகுதி ‘தாதா’வுக்கும் இடையில் அவ்வப்போது ஏற்படும் ‘பங்கீடு’ குறித்த முரண்பாடு போன்றதுதான் இவர்கள் இருவருக்கும் இடையில் இருப்பதும். மற்றபடி பார்ப்பன பாசிச இந்துத்துவா கொள்கை உடையவர்கள் அனைவருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.

இப்போது சிந்தகி பகுதியில் பேரணி நடத்தவும், போராட்டங்கள் நிகழ்த்தவும் மாவட்ட ஆட்சியர் தடை விதித்திருக்கிறார். சட்டம் ஒழுங்கை நிலை நாட்டவாம். அதற்கு பார்ப்பன பாசிச இந்துத்துவா சக்திகளை அல்லவா ஒட்டுமொத்தமாக சிறையில் அடைக்க வேண்டும்?

விலைவாசி உயர்வு, உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு, வேலையில்லா திண்டாட்டம், கல்வி கட்டண கொள்ளை… என நாட்டு மக்கள் இந்த அரசியல் அமைப்பின் மீது அவநம்பிக்கை கொண்டிருக்கும் நிலையில் – அதை திசை திருப்பி அறுவடை செய்வதற்காக இந்துத்துவா சக்திகள் காய் நகர்த்தி வருகின்றன. அதன் ஒரு வடிவம்தான் இந்த பாகிஸ்தான் கொடியை ஏற்றியிருப்பது.

அடுத்து பாகிஸ்தான் கொடியை ஏற்றினால் இந்துக்கள் மத்தியில் ஒரு பதட்டத்தையும் துவேஷத்தையும் கிளப்பி விடலாம் என்று இந்துமதவெறியர்கள் தீர்மானகரமாக இருக்கிறார்கள் என்றால் ‘இந்துக்கள்’ அத்தகைய பலவீனத்தை கொண்டிருப்பது குறித்தும் நாம் கவலைப்பட வேண்டும். இந்தியாவில் அமெரிக்க கொடியெல்லாம் பட்டொளி வீசி பறக்கும் போது பாகிஸ்தான் கொடி பறந்தால் என்ன குடி முழுகிவிடப் போகிறது? பாகிஸ்தான் மீதான வெறியை வளர்த்து போலி இந்திய தேசபக்தியை கிளப்பிவிட்டு ஆதாயம் அடையும் இந்திய ஆளும் வர்க்கங்களின் ஒரு பிரிவுதான் சங்க பரிவாரம். எனவே இந்த கொடி முத்திரை தேச வெறியிலிருந்து மக்களை விடுவிப்பதும் நம் பணியாக இருக்கிறது.

எண்ணெய் வளங்களை அமெரிக்க முதலாளிகள் கைப்பற்றுவதற்காக, இரசாயன ஆயுதங்கள் இருப்பதாக பொய்யாக சொல்லி ஈராக்கையே சுடுகாடாக மாற்றியது அமெரிக்க இராணுவம்.

அமெரிக்காவின் அல்லக்கையாக திகழும் இந்துத்துவா சக்திகள், இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற பொய்யை சொல்லி, நாட்டில் மதக் கலவரங்களை நிகழ்த்த முயன்று வருகிறது.

உண்மையில் ‘உடையும் இந்தியா?’வுக்கு காரணம் பார்ப்பன பாசிச இந்துத்துவ பயங்கரவாதிகள்தான். ஆர்.எஸ்.எஸ். பொறுக்கிகள்தான்.

– அறிவுச் செல்வன்

மே 17 இயக்கத்தினை கண்டிக்கும் கருத்துரிமைக் காவலர்களின் பித்தலாட்டம்!

46

“நினைவின் குட்டை, கனவு நதி” என்ற சுந்தர ராமசாமி, ஜெயமோகன், காலச்சுவடுகளது அற்பவாத இலக்கியத்தை விமரிசிக்கும் புதிய கலாச்சாரம் வெளியீடாக வந்த நூலின் ஆரம்பத்தை இங்கே குறிப்பிடுவது பொருத்தமானது. அதில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மார்க்சிய லெனினிய இயக்கத்தைச் சேர்ந்த தோழர் கேரளா வழியாக தமிழ்நாட்டின் முதுபெரும் முற்போக்கு எழுத்தாளராக சுந்தர ராமசாமியை வந்தடைந்து அவர் மூலமாக தமிழகத்தில் கலை இலக்கிய பண்பாட்டு முயற்சியில் கம்யூனிஸ்ட்டுகள் என்ன செய்தார்கள், இல்லையில்லை என்ன செய்யவில்லை  என்பதை விபரீதமாக கண்டறிகிறார். பின்னர் தற்செயலாக ம.க.இ.க தோழர்களை சந்தித்து உண்மையை சுய விமரிசனத்துடன் அறிகிறார்.

இப்படி தமிழகத்தை பற்றி பிற மாநிலத்தைச் சேர்ந்த பத்திரிகைகள், எழுத்தாளர்கள், அறிவு ஜீவிகள் அறிய வேண்டுமென்றால் அது எப்படி நடக்குமென்று நினைக்கிறீர்கள்? இந்தியா டுடே, டைம்ஸ் நௌ, சிஎன்என் – ஐபிஎன் போன்ற தேசிய ஊடகங்களெல்லாம் தமிழகத்தின் பிரதிநிதிகளாக துக்ளக் சோ, சுப்ரமணிய சுவாமி, சிவசங்கரி, வாஸந்தி, மணிரத்தினம், சுகாசினி போன்ற பார்ப்பனக் குலக் கொழுந்துகளை நியமித்திருக்கின்றார்கள். இவர்களின் மூலமாகத்தான் நமது பிரச்சினைகள் பலவும் இந்திய ‘மக்களை’ சென்றடைய வேண்டுமென்றால் நமக்கு யாரும் ஆதரவு தரத் தேவையில்லை என்று வங்களா விரிகுடாவில் ஒட்டு மொத்தமாக குதித்து தற்கொலையே செய்து கொள்ளலாம்.

இதற்கு அடுத்தபடியாக கொஞ்சம் இடதுசாரிகள், அறிவாளிகள் என்றால் ஹிந்து ராம், சி.பி.எம் பார்ப்பனர்கள், ரவிக்குமார் போன்ற கருப்பு பார்ப்பனர்களை தொடர்பு கொள்வார்கள். இவர்கள் தத்தமது அரசியல் பிழைப்புவாதங்களுக்காக முழு தமிழகத்தை நாடி பிடித்தது போல காட்டிக் கொள்வார்கள். முற்போக்கு என்ற பெயரில் நாசுக்காக ஆளும் வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துவார்கள். சாரு நிவேதிதா போன்றோரெல்லாம் பேஜ் 3 பாணி கேளிக்கையின் ஊடாக காமடி கலகக்காரர்களாக முன்னிறுத்தப்படுகிறார்கள். பத்திரிகையாளர் ஞாநி இந்த அமைப்பினை ஏற்றுக் கொண்டு வழுவாமல் செயல்படும் அறிஞர் என்பதால் கொஞ்ச நஞ்சம் வாய்ப்பளிப்பார்கள். அவரும் நடுத்தர வர்க்கத்தின் மனம் நோகாமல் வேகாமல் சில பல ‘முற்போக்கு’ கருத்துக்களை உதிர்ப்பார்.

ஆக இந்திய அளவில் ஊடகங்களை வைத்து தமிழகத்தை அறிய நினைப்போருக்கெல்லாம் உண்மையில் தமிழகத்தின் பிரச்சினை என்னவென்றே தெரியாது. அந்த வகையில் பெரும்பான்மை தமிழக மக்களின் நலன், கருத்துக்கள் எதுவும் இந்திய ஊடகங்களில் வரவே வராது. இதனால் மற்ற மாநில ஏன் ஒட்டு மொத்த இந்திய  மக்களின் பிரச்சினைகளெல்லாம் இந்த ஊடகங்களில் சரியாக வருவதாக பொருளில்லை. அது தனிக்கதை.

இப்படித்தான் காஷ்மீர், நர்மதா அணை, மாவோயிஸ்டுகள் போராட்டம் முதலான பிரச்சினைகளில் இந்திய அரசையும், கார்ப்பரேட் நிறுவனங்களையும், இந்துத்வா வெறியர்களையும் பகிரங்கமாகக் கண்டித்து போராடும் அருந்ததி ராய் தமிழகத்தில் உள்ள பிரச்சினைகளை அறிந்து கொள்ள ரவிக்குமார், காலச்சுவடு போன்றோர் மூலம் மட்டும் போதும் என்று நம்பியிருப்பார் போலும். இது அருந்ததி ராயின் பிரச்சினை என்பதை விட இந்த அமைப்பு முறை இப்படித்தான் தகவல் வலைப்பின்னலை உருவாக்கியிருக்கிறது என்றும் சொல்லலாம்.

மேலும் காலச்சுவடு போன்ற கம்யூனிச எதிர்ப்பு இலக்கியவாத நிறுவனங்கள் மற்றும் ஏகாதிபத்திய நலனுக்காக மக்களை காவு கொடுக்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் கைகளில்தான்  இத்தகைய அறிவுத்துறை வலைப்பின்னல் இருக்கிறது. இதில் அருந்ததி ராய் மட்டுமல்ல, சில மாக்சிய லெனினிய குழுக்களும் கூட பலியாகியிருக்கிறார்கள். அதைத்தான் இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டோம்.

அருந்ததி ராய் - மே 17 இயக்கத்தினை கண்டிக்கும் கருத்துரிமைக் காவலர்களின் பித்தலாட்டம்!
அருந்ததி ராய்

அந்த வகையில் காலச்சுவடு நடத்திய நூலறிமுகக் கூட்டத்திற்கு அருந்ததி ராய் வந்து கலந்து கொண்டார். இலக்கியத்தை படித்து உண்டு களித்திருப்போர் பாவனையில் உள்ள சுமார் 150 நபர்கள் அதில் கலந்து கொண்டார்கள். அதில் அருந்ததி ராய் மொத்தம் பேசியது அதிக பட்சம் இருபது நிமிடம் கூட இல்லை. இப்படி ஒரு பிராண்டு வேல்யூக்காக மட்டும் தன்னைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது அருந்ததி ராய்க்கு தெரிந்திருக்கவில்லை.

காலச்சுவடு வெளியிட்ட நூலில் அருந்ததி ராயின் உடைந்த குடியரசு என்ற நூல் இருக்கிறது. அதை வைத்து அந்த பதிப்பகம் முற்போக்கானதென்று அவர் அப்பாவி போல நினைத்திருந்தால் அது பரிதாபத்திற்குரியது. உண்மையில் அவர் அரசியலுக்கு பொருத்தமாக ஆயிரக்கணக்கான தோழர்களும், மக்களும் இருக்கையில் அவர்களது மேடையில் ஏறாமல் ஒரு ரோட்டரி கிளப் கனவான்களது கூட்டத்தில் சிக்கிக் கொண்டது மிகவும் ஏமாற்றமளிக்கிறது.

இனி, அருந்ததி ராய் இந்தக் காலச்சுவடு கூட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்று மே 17 இயக்க நண்பர்கள் இணையத்தில் விரிவான பிரச்சாரத்தை மேற்கொண்டார்கள். அதில் காலச்சுவடு என்ற இசுலாமிய எதிர்ப்பு, ஆர்.எஸ்.எஸ் ஆதரவு, தமிழின எதிர்ப்பு கூட்டத்தில் ராய் கலந்து கொள்ளக்கூடாது என்று குறிப்பிட்டிருந்தனர். பாபர் மசூதியை இடித்தது நியாயம் என்று பேசுபவர்களுக்கும் கண்டிப்பாக இடமளிக்க வேண்டுமென்றும், குஜராத் இனக் கலவரத்தின் போது இந்து மதவெறி என்று கூடக் கூறாமல் கனிமொழியை வைத்து காசு வசூலித்து கூட்டம் நடத்திய கனவான்களது ஆழ்மனதை மட்டுமல்ல மேல் மனதை நோண்டினாலே இவர்களது முற்போக்கு அரசியலுக்கு எதிரான அரசியலை அறிந்து கொள்ள முடியும். காஞ்சி கிரிமினல் ஜெயேந்திரன் அம்பலப்பட்ட போதும் இழுத்து மூட வேண்டிய காஞ்சி மடத்தை சீர்திருத்தி காப்பாற்ற எண்ணிய பூணூலிஸ்டுகள்தான் இந்த காலச்சுவடு அம்பிகள். அப்போது கருப்பு பார்ப்பனர் ரவிக்குமாரும் அவர்களுடன் இருந்தார்.

இது போக காலச்சுவடின் கம்யூனிச எதிர்ப்பு, தமிழன எதிர்ப்பும் உலகறிந்த உண்மைகளே. இத்தகைய கூட்டத்தில் ராய் கலந்து கொள்ளக்கூடாது என்று மே 17 கோரியதில் என்ன தவறு? அடுத்து ராய் கலந்து கொண்ட காலச்சுவடு கூட்டத்தில் மே 17 இயக்க நண்பர்கள் மேற்கொண்ட கோரிக்கையை பேனரில் பிடித்தவாறு முழக்கமிட்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தார்கள். இதை காலச்சுவடு கண்ணன் ஏற்கனவே போலிசில் சொல்லியிருப்பார் போலும், அதன்படி போலீசார் அவர்களை உடன் அப்புறப்படுத்தினர்.

அருந்ததி ராயின் கவனத்திற்கு இந்தக் கோரிக்கைகளை நியாயமான முறையில்கொண்டு சென்றதைத் தாண்டி இந்த எதிர்ப்புக்கு வேறு என்ன நோக்கமிருக்க முடியும்?

ஆனால் இந்த எதிர்ப்பை காலச்சுவடு அறிவாளிகள் அருந்ததிராயிடம் வேறு மாதிரி திசை திருப்பியிருக்கிறார்கள். அதன்படி அருந்ததிராய் இதை எப்படிப் பார்க்கிறார்?

காலச்சுவடு வெளியிட்ட நூல்களில் இலங்கையில் ஐ.நா செய்தித் தொடர்பாளராக இருந்த கோர்டன் வெய்ஸ் என்பவர் எழுதிய தி கேஜ் என்ற நூலும் உண்டு. இதில் இலங்கை அரசின் போர்க்குற்றங்களை குறிப்பிட்டிருப்பதோடு விடுதலைப்புலிகளின் மீதான விமரிசனங்களும் கராறாக வருகிறதாம். இதற்காகத்தான் மே 17 இயக்கம் ராயை கலந்து கொள்ளக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்திருப்பதாக அருந்ததி கருதுகிறார். அல்லது கருத வைக்கப்பட்டிருக்கிறார்.

புலிகளை ஆதரிக்கும் மே 17 இயக்கம் அதற்காகத்தான் இந்த எதிர்ப்பை தெரிவித்தது என்றாலும் கூடவே காலச்சுவடு நிறுவனத்தின் ஆர்.எஸ்.எஸ் ஆதரவு, தலித் எதிர்ப்பு, காஷ்மீர் எதிர்ப்பு, இசுலாமிய எதிர்ப்பு, தமிழின எதிர்ப்பு போன்றவற்றை பட்டியலிட்டு பயன்படுத்திக் கொண்டதாக ராய் கருதுகிறார். மற்றபடி காலச்சுவடு அப்படிப்பட்ட நிறுவனம் அல்ல என்பதற்கு சேரனின் கவிதைகள், தலித்தும் தண்ணீரும் என்ற நூல், பஷ்ரத் பீர் எழுதிய காஷ்மீர் நினைவுகள் என்ற நூல், ராய் எழுதிய உடைந்த குடியரசு போன்ற நூல்களெல்லாம் இல்லையா என்று ராய் கேட்கிறார்.

இவையெல்லாம் காலச்சுவடு வெளியிட்டதற்கு காரணம் விற்பனை நோக்கம் தவிர வேறு இல்லை. இந்த நூல்களெல்லாம் படிக்க வேண்டிய நூல்கள்தான், அதை வினவிலும் கூட வெளியிட்டிருக்கிறோம். ஆனால் ஒரு பதிப்பகம் அதன் முழுமையான அரசியல் பார்வை, நடத்தையில்தானே என்ன அரசியல் சார்பு கொண்டிருக்கிறது என்று பார்க்கப்படவேண்டும் ராய் அவர்களே? நாளைக்கே பாபர் மசூதி இடிப்பின் இனிய நினைவுகள் என்று அரவிந்தன் நீலகண்டன் எழுதி, குஜாரத்தில் இசுலாமியர்களை கொன்றொழித்த இனிய நினைவுகள் என்று ஜடாயு எழுதி அவற்றினை காலச்சுவடு வெளியிடாது என்று யாராவது உறுதி மொழி அளிக்க முடியுமா?

காலச்சுவடு-கண்ணன் - மே 17 இயக்கத்தினை கண்டிக்கும் கருத்துரிமைக் காவலர்களின் பித்தலாட்டம்!
காலச்சுவடு-கண்ணன்

மே 17 புலிகளை மிகத்தீவிரமாக ஆதரிக்கும் ஒரு இயக்கம்தான். அதைத் தாண்டி மற்ற பிரச்சினைகளிலும் அவர்கள் கருத்தே கொண்டிருக்க கூடாது என்று எப்படி கூறமுடியும்? எனில் மே 17  தலித்துக்களுக்கு ஆதரவாக, தமிழின உரிமைகளுக்கு ஆதரவாக, இசுலாமியர்களுக்கு ஆதரவாக, காஷ்மீருக்கு ஆதரவாக பேசியிருந்தாலும் அவர்களை புலி ஆதரவு என்று மட்டும் பார்க்கும் நீங்கள் பல கோணத்தில் தோற்றமளிக்கும் காலச்சுவடையும் அப்படி சாரத்தில் இந்துத்தவா ஆதரவு என்று ஏன் பார்க்கவில்லை?

ஐ.நா சபை அறிவாளி இலங்கை அரசையும், புலிகளையும் விமரிசனம் செய்வது இருக்கட்டும். முதலில் அவர் தனது சர்வதேச நிறுவனம் அமெரிக்காவின் கைப்பாவையாக இருந்து ஈராக்கிலும், ஆப்கானிலும் பல இலட்சம் மக்கள் கொல்லப்பட்டதை வேடிக்கை பார்த்தது குறித்து சுயவிமரிசனம் செய்து கொண்டாரா? அந்த விமரிசனம் முள்ளி வாய்க்கால் படுகொலையின் போது வெறுமனே வேடிக்கை பார்த்ததற்கும் பொருந்துமே? இன்று வரை இலங்கை அரசை போர்க்குற்றவாளிகள் என்று ஏன் தண்டிக்க முடியவில்லை? அந்த வகையில் இந்த குற்றத்தில் அவர்களே சொல்வது போல இலங்கை அரசு, புலிகள் தவிர ஐ.நா, இந்தியா, அமெரிக்காவும் உள்ளன என்றும் சொல்லலாமே?

மேலும் இதில் எதிலும் புலிகள் தீர்மானிக்கும் இடத்தில் இல்லையே? இந்த போரை நிறுத்த வேண்டியிருந்தால் அது இலங்கை அரசு, இந்தியா, ஐ.நா மூலமாகத்தானே நடந்திருக்க வேண்டும்? அது நடக்கவில்லை எனும் போது இந்த போரை நடத்தியது இலங்கை அரசா இல்லை புலிகளா?

நாங்களும் விடுதலைப்புலிகளை கடுமையாக எதிர்ப்பவர்கள்தான். அவர்களது பாசிச நடவடிக்கைகளையும், இந்திய அரசின் தயவில் விடுதலையை பெறலாம், அமெரிக்காவை லாபியிங் செய்து ஈழத்தின் நலனை பெற்று விடலாம் என்று சந்தர்ப்பவாதமாய் செயல்பட்ட போதும் பலமுறை அம்பலப்படுத்தியிருக்கிறோம். ஆனால் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு காரணம் என்று இலங்கை அரசையும், புலிகளையும் சமப்படுத்தி பார்ப்பது தவறு என்பதையும் பல முறை விளக்கியிருக்கிறோம். ஏனெனில் இது இந்தியாவின் ஆசியோடு இலங்கை அரசு மட்டும் தொடுத்த போர். அதில் புலிகள் தவறு செய்தார்கள் என்று இரண்டையும் சமப்படுத்தி பார்ப்பது பாரிய பிழை.

அடுத்து புலிகள் எல்லா இடங்களிலும் பயங்கரவாத இயக்கமென்று தடை செய்யப்பட்ட பிறகு இந்தப் போரில் அவர்களை ஏன் குற்றம் சொல்கிறீர்கள? ஒரு வேளை உங்கள் வாதப்படியே புலிகள் அவர்களது தவறுகளுக்காக முற்றிலும் அழிக்கப்பட்ட பிறகு இலங்கை அரசு மட்டும் எந்த தண்டனையும் இல்லாமல் இருப்பதற்கு என்ன காரணம்? இதிலிருந்தே புலிகளையும், இலங்கை அரசையும் சமமாக பார்ப்பது தவறு என்பதை உணரலாமே?

இறுதியாக ராய் கூறுவது என்னவென்றால் விமரிசனங்களை கொல்வது, விவாதங்களை மறுப்பது, கருத்துரிமையை தடை செய்வது, எல்லாம் மொத்தத்தில் அரசியலையே அழிப்பது என்பதாகும். இதுதான் புலிகளின் தோல்விக்கு காரணம் என்கிறார் ராய். சரி இதை ஒத்துக் கொள்வதில் பிரச்சினை இல்லை. ஆனால் இதே விசயங்களை இன்று இலங்கை அரசு அட்சரம் மாறாமல் இராணுவ பலத்தோடு செய்து வருகிறதே அதற்கு என்ன காரணம் ராய் அவர்களே?

ஒருவேளை இலங்கை சிங்கள இனவெறி அரசை இப்படி அடக்குமுறை அரசாக மாற்றியது புலிகளின் வன்முறைதான் என்று கூட காலச்சுவடு அறிவாளிகள் ராயிடம் எடுத்துக் கூறலாம். எனில் இந்த சூட்சுமத்தை நாம் சும்மா கிடந்த அமெரிக்கவை ஆக்கிரமிப்பு செய்யுமாறு தூண்டியது ஈராக் மற்றும் ஆப்கான் மக்களது தவறுதான் என்று கூடக் கூறலாமே? இதையே காஷ்மீருக்கு பொருத்தினால் இந்தியா இராணுவத்தின் பாவச்செயல்களையும் மன்னிக்கலாமே? மன்னிப்பாரா அருந்ததி ராய்?

ஞாநி - மே 17 இயக்கத்தினை கண்டிக்கும் கருத்துரிமைக் காவலர்களின் பித்தலாட்டம்!
ஞாநி

மே 17 நண்பர்கள் முழுமையாக எல்லாப் பிரச்சினைகளையும் அறிந்தவர்கள் அல்லர். முள்ளி வாய்க்கால் அழிவுப் போருக்கு இந்தியாதான் பிரதானமான காரணம் என்பதைக் கூட அவர்கள் முழுமையான அரசியல் பொருளில் புரிந்து கொண்டிருக்கவில்லை. சில வேளை இந்திய அரசு மெச்சும் விதமாக சீனா, பாக்கிஸ்தான்தான் இலங்கை அரசின் அழிவுப்போருக்கு காரணமென்று கூட சொல்லியிருக்கிறார்கள். புலிகளின் தவறுகளையும் அவர்கள் சுய விமரிசனமாக பார்த்திருக்கவில்லை. இது போக ஜெயலலிதாவை ஈழத்தாயாக மற்ற தமிழார்வலர்களைப் போல இவர்களும் பாராட்டியிருக்கிறார்கள். இருப்பினும் இந்த தவறுகள் காலச்சுவடை சரி என்று ஆக்கிவிடாது. அதே போல காலச்சுவடு கூட்டத்தை அருந்ததி ராய் புறக்கணிக்க வேண்டுமென்று மே 17 இயக்கம் கூறியதையும் தவறு என்று சொல்ல முடியாது.

மேலும் தமிழகத்தை பொறுத்த வரை புலி ஆதரவு என்பது இந்திய அரசுக்கெதிரான, பிரிவினை வாத, பயங்கரவாத கோரிக்கையாகத்தான் சித்தரிக்கப்படுகிறது. புலி என்று மட்டுமல்ல ஈழ ஆதரவு என்றாலே இப்படித்தான் திரிக்கப்படுகிறது. அதற்காகத்தான் கடந்த இருபது வருடங்களாக பலரும் அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். புலி ஆதரவை வைத்து தமிழகத்தில் உள்ள இன ஆர்வலர்களை இல்லாமல் ஆக்குவது என்ற செயல் பல ஆண்டுகளாக இங்கு அமலில் இருப்பதை ராய் அறிந்திருக்க வில்லை. அத்தகைய அரச பயங்கரவாத கொடுமையின் ஒரு துளியைக் கூட அருந்தியிருக்காத காலச்சுவடுதான் மாபெரும் கருத்துரிமை இயக்கமென்று அருந்ததி ராய் கருதியிருப்பது விமர்சனத்திற்க்குரியது.

அடுத்து ஈழப்பிரச்சினை தொடர்பாக காலச்சுவடுக்கென்று ஒரு அரசியல் நிலைப்பாடு என்பது அதன் வணிக நலன்களோடு தொடர்புடைய ஒன்று. புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களிடம் தனது சந்தையை கொண்டிருக்கும் காலச்சுவடு அதற்காக மட்டுமே ஈழம் குறித்து பேசுகிறது. அதுவும் இந்திய ஆட்சியாளர்கள் மனம் கோணமல் பேச வேண்டும் என்பதைத் தாண்டி வெறு எதுவுமில்லை. இலக்கியவாதத்தில் ஆர்வம் கொண்ட ஈழத்தமிழர்கள் பலர் அரசியலற்ற முறையில் ஈழத்தை பேசுவார்கள் அல்லது பேசாமல் இருப்பார்கள். காலச்சுவடின் தகுதியும் அதுவே.

இதில் சில இணைய அறிவாளிகள் அருந்ததி ராய் ஈழத்தை குறித்து பேசவில்லை என்று குறை கூறுகிறார்கள். ஆனால் சென்ற ஆண்டு இலண்டன் கூட்டம் ஒன்றில் அருந்ததி ராய் இதைப் பற்றி பேசியிருக்கிறார். ஈழ ஆர்வலர் கூட்டம் ஒன்றிலும் பேசியிருக்கிறார். ஆனால் அருந்ததி ராயின் பொதுக்கூட்டத்திற்கு சென்ற ஈழத்தமிழ் தலைகள் மொத்தம் நான்கைந்து இருந்தால் அதிகம் என்று லண்டன் இனியொரு நண்பர்கள் கூறினார்கள். இப்படி தன்னைத்தவிர வேறு எதனையும் பார்க்கமாட்டேன் என்று அடம்பிடிக்கும் ஈழ தமிழ் மக்களின் தரம் இப்படி இருக்கையில் அருந்ததி ராயை குற்றம் கூறி என்ன பயன்?

அடுத்து ஈழம் குறித்து ராய் அதிகம் பேசவில்லை என்றால் அது குறித்து நாம் அவரிடம் தொடர்பு கொண்டு பேச வேண்டுமென்று கோருவதுதான் சரியாக இருக்குமே அன்றி அவர் பேசும் மற்ற முக்கிய பிரச்சினைகளை ஒன்றுமில்லை என ரத்து செய்வது அகங்காரம் கலந்த அறிவீனம்.

_________________________________

மலையாள-மனோரமா -மே 17 இயக்கத்தினை கண்டிக்கும் கருத்துரிமைக் காவலர்களின் பித்தலாட்டம்!
மூடப்பட்டுள்ள மலையாள மனோரமா அரங்கு

அடுத்து மே 17 நண்பர்கள் சென்னை புத்தகக் கண்காட்சியில் மலையாள மனோரமா பத்திரிகை நிறுவனத்திற்கு எதிராக போராடியது குறித்து சில கருத்துரிமை காவலர்கள் தெரிவித்திருக்கும் பித்தலாட்டத்தை பார்ப்போம்.

நிலநடுக்கம் வந்தால் முல்லைப் பெரியாறு அணை இடிந்து விடும் என்றொரு புரளியை 1970ஆம் ஆண்டுகளில் கிளப்பி விட்ட மலையாள மனோரமா பத்திரிகை இன்றும் மலையாள இனவெறியை பற்ற வைப்பதோடு, முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையை மறுக்கும் வண்ணம் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருவதால் அவர்களை சென்னை புத்தகக் கண்காட்சியிலிருந்து அகற்ற வேண்டுமென்று மே 17 இயக்கம் ஜனநாயக முறையில் போராடியிருக்கிறது. இதில் என்ன தவறு இருக்கிறது?

மலையாள மனோரமா என்பது கேரளத்தின் தினமலர். தினமலர் தமிழ் பத்திரிகை என்பதாலேயே அதை இங்கு அரசியல் ஆர்வலர்கள் யாரும் மதிக்க வில்லை என்பதோடு  புறக்கணிக்க வேண்டுமென்று தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள் ( இத்தகைய விஷக்கிருமி தினமலர்தான், அருந்ததி ராய் போற்றும் காலச்சுவடு நிறுவனத்தின் நிரந்தரப் புலவர்). இது மலையாள மனோரமாவுக்கும் பொருந்தக் கூடிய ஒன்றுதான். இரு மாநில மக்களிடையே பகைமையை உருவாக்கி மோதவிடும் வேலையை கேரள ஒட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகளும், மலையாள வணிக பத்திரிகையுலகும்தான் செய்து வருகின்றன. இவர்களை குறிவைத்து எதிர்ப்பதில் என்ன தவறு இருக்க முடியும்? இதில் கருத்துரிமைக்கு என்ன பங்கம் இருக்க முடியும்?

அந்த எதிர்ப்பில் மே 17 நண்பர்கள் பிடித்திருந்த பதாகையும், முழக்கங்களும் இதைத்தாண்டி வேறு எதனையும் சொல்லவில்லை. ஆனாலும் இதை ஏதோ காட்டுமிராண்டி நடவடிக்கை போல ஹிந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகைகள் சித்தரித்திருக்கின்றன. கிழக்கு பதிப்பக அதிபர் பத்ரி இதை ரகளை, கலாட்டா என்று எழுதி விட்டு இவர்களை கைது செய்து அப்புறப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டு விட்டு பின்னர் எதிர்ப்பு வந்ததும் இந்த வார்த்தைகளை மட்டும் அடித்து விட்டு கருத்தில் மாற்றமில்லை என்று கூறியிருக்கிறார்.

கேரள சி.பி.எம்மை கண்டிக்க துப்பில்லாத தமிழக சி.பி.எம்மின் பாரதி புத்தகலாயமும் இந்த எதிர்ப்பை கண்டித்திருக்கிறது. மலையாள தோழர்கள் அவதூறு செய்யும் உரிமையை ஆதரிக்கும் தமிழகத் தோழர்கள் மலையாள மனோரமா பத்திரிகை அவதூறு செய்யும் உரிமையையும் ஆதரிப்பதில் வியப்பில்லை. காலச்சுவடு பதிப்பகம் மற்ற மாநிலங்களில் நடக்கும் புத்தகக் கண்காட்சியில் கலந்து கொள்கிறதென்றும், நாளைக்கே அதை தமிழ்ப் பதிப்பகமென்று தடை செய்தால் என்ன செய்வதென்று காலச்சுவடு கண்ணனும் தனது வணிக நலன்சார்ந்து மே 17 இயக்கத்தினை கண்டித்திருக்கிறார்.

இது போக தமது பாசிச நடவடிக்கைகளை செயல்படுத்துவோம் என்று பேசும் சங்க பரிவாரங்களின் கருத்துரிமைக்கும் இந்த நாட்டில் இடம் வேண்டும் என்ற கொள்கையை கடைபிடிக்கும் பத்திரிகையாளர் ஞாநியும் இதை கண்டித்திருக்கிறார். கருத்துரிமை என்பதை வர்க்கம் கடந்த தூய கருத்தியலாக மட்டும் பார்ப்பதால் ஞாநி அப்படித்தான் சொல்வார் என்பதால் பிரச்சினை இல்லை.

வெறுமனே எதிர்ப்பு மட்டும் காண்பித்தால் பிரச்சினை இல்லை என்று கூறும் பத்ரி மலையாள மனோரமாவின் ஸ்டாலை மூட வேண்டும் என்று கூறுவது பாசிச நடவடிக்கை என்கிறார்.  மேலும் மலையாள நூல்களை தமிழில் கொண்டு வருவதையும் எதிர்ப்பீர்களா என்று அவதூறும் செய்கிறார். மே 17 இந்த எதிர்ப்பில் குறிப்பான முழக்கத்தை அளித்திருப்பதைத் தாண்டி அதற்கு மேல் அதை திசை திருப்புவது பத்ரியின் மோசடியான நடவடிக்கை.

இதைத் தனித்தனியாக பார்ப்பது நீண்டு விடும் என்பதால் இந்தக் கருத்துரிமையின் அரசியலை மட்டும் குறிப்பாக பார்த்து விடுவோம்.

எல்லாக் கருத்துக்களும் தமது கருத்துக்களை அமல்படுத்தும் ஒன்றிற்காக மட்டும் கருத்தாக தோன்றுகின்றன. பின்னர் அதை மக்களிடம் ஆதரவு தேடி பேசுகின்றன. அதிகாரம் வந்த பிறகு தனது உரிமையை அதாவது அந்த கருத்திற்கு எதிரான மற்றவற்றை தடை செய்து நிறுவுகின்றன. இது எல்லா இயக்கங்களுக்கும், அரசியல்களுக்கும் பொருந்தும். இதைத்தாண்டி தூய கருத்தியல் உரிமை என்று எதுவும் இல்லை.

ஆக ஒரு கருத்தை ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது என்பது அது அமலுக்கு வருவதோடும் சேர்ந்தே இருக்கின்ற ஒன்று என்பது இந்த போலி கருத்துரிமை காவலர்களுக்கு தெரியாத ஒன்று. ஏனெனில் இவர்கள் நிலவும் மக்கள் விரோத கருத்து அதிகாரத்தின் தயவில் வாழ்பவர்கள். அதை ஏற்றுக் கொண்டேதான் பொதுவில் கருத்துரிமை வேண்டும் என்று பேசுகிறார்கள். ஆனால் அந்தந்த ஆளும் வர்க்கம் அவர்களுக்கு பிரச்சினை இல்லாத பட்சத்தில் அனுமதிக்கும் அளவைத் தாண்டி உலகில் எங்கும் கருத்துரிமை என்று ஒன்று இல்லவே இல்லை.

அப்துல் கலாமை அரசவைக் கோமாளி என்று சுவரில் எழுதியதற்காகவும், தாமிரபரணி ஆற்றை உறிஞ்ச வரும் கோகோ கோலா என்று பிரச்சாரம் செய்ததற்காக கூட எங்கள் தோழர்கள் சிறையில் இருந்திருக்கிறார்கள். இவையே இப்படி எனில் இன்னும் நேரடியாக அரசு எதிர்ப்பு இயக்கங்களுக்கு என்ன கதி என்பதையும் அதற்காக பல தோழர்கள் தடா, பொடாவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதையும் பார்த்திருக்கிறோம்.

பத்ரி-சேஷாத்ரி
பத்ரி சேஷாத்ரி

அது போல தமிழகத்தில் ஈழ உரிமை என்று பேசியதற்காக பல இயக்கத்தினரும், தலைவர்களும் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். இது காஷ்மீரிலும், வட கிழக்கிலும், பினாயக் சென்னை ஆண்டுக்கணக்கில் சிறை வைத்த சட்டீஸ்கரிலும் இன்னும் அதிகம். இவையெல்லாம் கருத்துரிமை என்பதின் இந்திய இலட்சணத்தை பறைசாற்றும் சான்றுகள்.

இந்தியாவில் ஆளும் வர்க்கத்தின் நலனுக்கு மட்டும்தான் அனுமதி உண்டு. சான்றாக காஷ்மீர் மக்களது விடுதலை போராட்டத்தை கொச்சைப்படுத்தி மணிரத்தினம் எடுத்திருக்கும் ரோஜா படத்திற்கு ஆளும் வர்க்கங்கள் அளித்த இமாலாய வரவேற்பை பாருங்கள், இன்றும் கூட குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற நாட்களில் அரசு தொலைக்காட்சிகள் இந்தப் படத்தை திரையிடுகின்றன. ஆனால் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் யாசின் மாலிக் பேசினால் மட்டும் சிறையில் அடைத்து விடுவார்கள். அல்லது ஆர்.எஸ்.எஸ் குண்டர்களை அனுப்பி ரகளை செய்வார்கள்.

அண்ணா ஹசாரேவுக்காக மீடியாக்களும், அரசு அமைப்புகளும் எப்படி சேவகம் புரிந்தன என்பதறிவோம். ஆனால் புரட்சிகர ஜனநாயக அமைப்புகள் சிறு போராட்டம் அறிவித்தாலும் அரசு அமைப்புகள் கடித்து குதறுகின்றன.

இனி கருத்துரிமை காவலர்களின் சட்டவாத முறைப்படியே ஒன்றை விளங்க வைப்போம். முல்லைப் பெரியாறு அணை பலமாக இருக்கிறதென்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்று  கூறியிருக்கிறது. இதை மறுத்து மலையாள மனோரமாக கூறி வருகிறது. இந்தப் பிரச்சினையில் ஆளாளுக்கு கருத்து தெரிவித்தாலும் நீதிமன்றம் கூறினால் கடைபிடிப்போம் என்று பல கட்சிகளும் கூறுகின்றனர். அதாவது நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்பு தங்களது கருத்துரிமையை வலியுறுத்த மாட்டோம் என்றுதான் இதற்கு பொருள்.

ஆனால் இதை மலையாள மனோரமா மதிக்கவில்லை. ஆக நீதிமன்ற உத்திரவை மதிக்காத மலையாள மனோரமாவை கருத்துரிமையின் பேரில் ஏன் மதிக்க வேண்டும்? கருத்துரிமையை மிதித்திருப்பவன் அவன்தானே? உடனே நமது கருத்துரிமை காவலர்கள் என்ன சொல்வார்கள்? வேண்டுமென்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடுங்கள் என்று  கூறுவார்கள். ஏதோ வக்கீல் வண்டு முருகனை வைத்து சினிமா கோர்ட்டில் வாதாடி நீதி கிடைத்து விடுவது போல அவர்களுக்கு ஒரு நினைப்பு.

இங்கே மலையாள மனோராமாவோடு பிரச்சினை முடிந்து விடவில்லை. உச்சநீதிமன்றமும், மத்திய அரசும் கூட நீதியின் பாலோ, நீதிமன்ற உத்திரவை அமல்படுத்தும் வண்ணமோ செயல்படவில்லை. எனில் இவர்களுக்கு எதிராக எங்கே யாரிடம் கருத்து தெரிவிப்பது? நமது கருத்துரிமை காவலர்கள் அணி சேர்ந்து உச்சநீதிமன்ற நீதிபதி வீட்டின் முன் ஆர்ப்பாட்டம் செய்யலாம் என்றால் ஒத்துக் கொள்வார்களா?

தீண்டாமை வேண்டும், உடன் கட்டை ஏறுதல் வேண்டும், தலித்துகளுக்கு தனிக்குடியிருப்பு வேண்டும் என்று இந்துத்தவவாதிகள் கருத்து தெரிவிக்கும் உரிமையை கருத்துரிமை என்று ஆதரிக்க முடியுமா? ஒரு பெண்ணை சுலபமாக வண்புணர்ச்சி செய்வது எப்படி என்பதை கருத்துரிமை என்ற பெயரில் கிழக்கு பதிப்பகம் புத்தகமாக போடுமா? கேட்டால் இதெல்லாம் கூடாது என்பார்கள்.

எனில் ஒரு கருத்தில் சரி அல்லது தவறென்று இரண்டுதான் இருக்க முடியுமே அன்றி அந்த சரிக்கும் தவறுக்கும் தாண்டிய கருத்துரிமை என்ற ஒன்று அந்தரத்தில் தொங்க முடியாது. அந்த வகையில் மலையாள மனோரமாக பல ஆண்டுகளாக இந்த புரளியைக் கிளப்பி இருமாநில மக்களிடம் முரண்பாட்டை வளர்த்து வந்திருக்கிறது. இதை கருத்துரிமை என்ற பெயரில் அனுமதிப்பதா, இல்லை எதிர்ப்பதா? ஒரு கருத்தை மக்கள் நலன் நோக்கிலோ இல்லை பொதுவான நீதியின் பால் மதிப்பிட்டோ சரி என்றோ தவறு என்றோ முடிவு செய்கிறோம். முடிவு செய்வதை நாம் அமல்படுத்தும் போது அந்தக் கருத்தை அழிக்கும் மற்ற கருத்துக்களை நாம் மறுக்க வேண்டியிருக்கிறது. ஒரு கருத்தை ஆதரிப்போர் எவரும் மறைமுகமாக அந்தக் கருத்தின் எதிர் கருத்துக்களை மறுக்கத்தான் முடியும். இதைத்தாண்டி கருத்துரிமை என்பது தூய ஒழுக்க வியலாக இருக்க முடியாது. மலையாள மனோரமா பத்திரிகையை இருமாநில மக்கள் நலனுக்காகவே நாம் எதிர்க்க வேண்டியிருக்கிறது. இந்த எதிர்ப்பு என்பது வாய்ப்புகள் இருக்குமிடத்தில் செயலுக்கு அதாவது மலையாள மனோரமாவை முடக்குவது என்று காட்டுவதில் எந்தத் தவறுமில்லை.

எது சரி என்பதை சம்பந்தப்பட்டவர்கள் பதிலளிக்கட்டும்.

பத்ரி-கண்ணன்-சிபிஎம்-தினமலர்-கார்டூன்

இதற்கு மேல் மே 17 இயக்கத்தை குறை கூறுபவர்கள் இந்த நாட்டில் சரியான கருத்துரிமை உள்ளது, இல்லையென்றால் அதற்காக போராட வேண்டும் என்று பிலிம் காட்டினாலும் உண்மையில் பினாயக் சென் போல உள்ளே போவதற்கு தயாரில்லாத காரியவாதிகள். அதைத் தாண்டி இவர்களிடம் கருத்தோ- உரிமையோ எதுவுமில்லை.

இறுதியாக இவர்களது பித்தலாட்டத்தின் முத்தாய்ப்பாக தினமணி ஆசிரியர் வைத்தி மாமாவின் குத்தாட்டத்தைப் பார்க்கலாம். நேற்றைய தினமணி தலையங்கத்தில் மாட்டுக்கறி மாமி என்று நக்கீரன் எழுதியதை ஏதோ மாபெரும் பத்திரிகை தர்ம மீறல் என்று சுதந்திரப் போராட்டம், அரசியல் சட்ட சாசனம் என்று எங்கெங்கோ சுற்றி வரும் மாமா இறுதியில் நக்கீரன் பத்திரிகையை தனிமைப்படுத்தி அகற்றி  நிறுத்த வேண்டும் என்று சாமியாடாத குறையாக சாபம் கொடுக்கிறார். அதாவது பத்திரிகை தர்மத்தை கேடாக பயன்படுத்தினால் அந்த பத்திரிகையை மூட வைப்பதுதான் பத்திரிகை தர்மமாம்.

இதே கட்டுரையின் இறுதியில்  சென்னை புத்தகக் காண்காட்சியில் மலையாள மனோரமா அரங்கத்தை மூட வேண்டுமென்று ஒரு கும்பல் ஆர்ப்பாட்டம் செய்வதும் அதனால் அந்த அரங்கம் மூடப்படுவதும் என்ன விதத்தில் நியாயம் என்று கேட்கிறார். அதுவும் இதுமாதிரி வன்முறைக் கும்பல்கள் சட்டம் ஒழுங்கை கையிலெடுத்துக் கொள்வதை அனுமதிப்பது கண்டனத்திற்குரியது என்று வசைபாடுகிறார்.

மருமகள் உடைத்தால் பொன்குடம் மாமியார் உடைத்தால் மண்குடம் என்ற பழமொழியின் தகுதியிலேயே இன்னும் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் இந்த அறிவாளிகள்தான் கருத்துரிமை குறித்து நமக்கு பாடம் எடுக்கிறார்கள். கேட்க மறுத்தால் கம்பை எடுக்கிறார்கள். அந்தப்படிக்கு இனி நமக்கு கருத்துரிமை தேவையில்லை. கம்புரிமைதான் வேண்டும்.

அறிவாளிகளின் அந்தரங்கம் – லெனின்

94

மார்க்சியத்தை ஏற்கிறேன்; ஆனால் கட்சியில் இருக்க மாட்டேன் என்று ஒருவர் கூறினால் அவர் வேறு எதுவாகவோ இருக்க முடியுமே தவிர கம்யூனிஸ்ட்டாக இருக்க முடியாது. தொழிலாளி வர்க்கத்தின் உயிரே கட்சி அமைப்புதான் என்றார் லெனின். பல்வேறு போக்குகள் கொண்ட குழுக்களாக இருந்த ரசிய சமூக ஜனநாயகக் கட்சியின் இரண்டாவது மாநாடு 1903-இல் நடந்தது. அதில் கட்சி கட்டுவது குறித்த பாட்டாளிகளின் கண்ணோட்டம், செயல்முறை, அமைப்புமுறை பற்றி உறுதியுடன் வழக்காடிய லெனின் அதையெல்லாம் தொகுத்தளித்த நூல்தான் ‘ஓரடி முன்னால் ஈரடி பின்னால்’. கம்யூனிஸ்ட் கட்சிக்குள் அறிவாளிகள் வழியா? பாட்டாளிகள் வழியா? எது சரி என்பதை சுவைபட விவரிக்கிறது இந்நூல்.

மாநாட்டில் லெனினின் வழியை ஏற்ற பெரும்பான்மையினர் போல்ஷ்விக்குகள் என்று பிரிந்தது அப்போதுதான். அன்று மட்டுமல்ல, இன்றும் உண்மையான கம்யூனிஸ்ட் கட்சிகளும், அறிவாளி வர்க்கமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டு நிற்கிறது, இனியும் அப்படித்தான். ஏன்? அறிவாளிகளின் சமூக, உளவியல் பின்னணியை ‘காவுட்ஸ்கி’யின் கட்டுரையின் மூலம் விளக்கி பதில் தருகிறார் லெனின்.

அறிவாளிகளின் பண்புகள் ‘மண்ணுக்கேற்றபடியெல்லாம் மாறுவதில்லை’, உலகெங்கிலும் ஒரே மாதிரிதான். தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு சமூக நடவடிக்கையில் இருப்பதாகக் காட்டிக்கொள்ளும் பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் ஏராளம் இருக்கிறார்கள். புரட்சிகரக் கம்யூனிஸ்டுக் கட்சிகளை எதிர்ப்பதில் மட்டும் இவர்கள் ஒன்றுபடவில்லை. தமது கத்துக்குட்டி அறிவின் மூலம் சமூகத்தை ஏளனமாகப் பார்க்கும் இவர்களது சிந்தனைமுறை, வாழ்க்கை பற்றிய பாதுகாப்பு உணர்வு, தன்னகங்கார தனித்துவம் இன்னும் ஏராளமானவற்றில் ஒன்றுபடுகிறார்கள்.

பெரும்பான்மை மக்களோ, கட்சியோ, சமூகமோ இவற்றுடன் முரண்பட்டு தன்னை உயர்வாய் நினைத்துக் கொள்ளும் அறிவாளிகளின் பாத்திரத்தை ‘அதே அறிவைக்’ கொண்டு ஆய்கிறார் லெனின். இனி அவரது வார்த்தையிலேயே பார்ப்போம்.

_________________

அறிவாளிகளின் அந்தரங்கம் - லெனின்.இந்தச் சந்தர்ப்பத்தில், இங்குமில்லாமல் அங்குமில்லாமல் ஊசலாடும் அறிவாளியின் பண்பு பற்றி கார்ல் காவுட்ஸ்கி அண்மையில் கூறிய சிறப்புமிக்க சமூக, உளவியல் வரையறையை நினைவுக்குக் கொண்டுவராமல் இருக்க முடியாது. பல்வேறு நாடுகளின் சமூக ஜனநாயகக் கட்சிகள் அண்மைக் காலங்களில் இப்படிப்பட்ட குறைபாடுகளுக்கு அடிக்கடி ஆளாகின்றன.

எனவே இத்தகைய நோயின் குணம் பற்றியும் அதிக அனுபவமிக்க தோழர்கள் வாயிலாகக் கற்றுக் கொள்வது நமக்கு மிக மிகப் பயனுள்ளதாக இருக்கும். எனவே குறிப்பிட்ட சில அறிவாளிகள் குறித்த காவுட்ஸ்கியின் வரையறை நாம் எடுத்துக் கொண்ட பொருளிலிருந்து விலகிச் செல்வது போன்று மேற்பார்வைக்குத் தோன்றலாம்.

”இன்றைக்கு நமது கவனத்தை மிகுந்த அளவு ஈர்க்கிற பிரச்சனை அறிவாளிகளுக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கும் இடையே உள்ள பகை முரண்பாடாகும். (ஜெர்மன் சொற்களான லிட்டராட் மற்றும் லிட்டராடென்டம் ஆகிய சொற்களை மொழி பெயர்த்து அறிவாளி, அறிவுத்துறையினர் என்று நான் பயன்படுத்துகிறேன்). நான் இந்த முரண்பாட்டை ஏற்றுக் கொள்வதால் எனது நண்பர்கள் அநேகமாக என்மீது கோபமாக இருப்பார்கள். (காவுட்ஸ்கியே ஓர் அறிவாளி, ஓர் எழுத்தாளர், ஓர் பத்திரிகையாசிரியர்- லெனின்) ஆனால் உண்மையிலேயே அந்தப் பகை முரண்பாடு இருக்கிறது.

ஏனைய விஷயங்களைப் போலவே, இதனை மறுப்பதன்மூலம் வெல்ல நினைப்பது பேதமையான தந்திரமாகும். இம்முரண்பாடு சமூகப் பண்பாகும்; அது வர்க்கங்கள் சம்பந்தப்பட்டது; தனி நபர் சம்பந்தப்பட்டதல்ல. ஒரு தனிப்பட்ட அறிவாளி, ஒரு தனித்த முதலாளியைப் போல, பாட்டாளி வர்க்கப் போராட்டத்தில் பாட்டாளிகளோடு தன்னை இணைத்துக் கொள்ளலாம். அவ்வாறு செய்யும் போது, அவர் தனது குணாம்சத்தையும் மாற்றிக் கொள்கிறார். கீழே பிரதானமாக நான் பேசப்போவது இப்படிப்பட்ட வகை மாதிரியான அறிவாளிகளைப் பற்றி அல்ல. காரணம், அவர்கள் ஒரு சில விதி விலக்கானவர்கள்.

முதலாளித்துவச் சமுதாயத்தின் நிலைப்பாடுகளையே தனது நிலைப்பாடுகளாக ஏற்றுக் கொண்ட பரவலாகக் காண கிடைக்கிற அறிவாளிகளைக் குறிப்பிடவே நான் அறிவாளி என்ற சொல்லைப் பயன்படுத்துகிறேன். அறிவுத்துறையினர் என்ற வகையில் ஒரு தனி வர்க்கத்தின் குணாம்சத்தை அவர்கள் பிரதிபலிக்கிறார்கள். இந்த வர்க்கம் பாட்டாளி வர்க்கத்திற்கு ஒருவகையில் பகை முரண்பாடு கொண்டதாக இருக்கிறது.

”எனினும், இந்த முரண்பாடு முதலுக்கும் உழைப்புக்குமான முரண்பாட்டிலிருந்து வேறுபடுகிறது. அறிவாளி ஒரு முதலாளி அல்ல. அவரது வாழ்க்கைத்தரம் முதலாளித்துவத்தன்மை உடையது என்பது உண்மையே; தான் ஒரு ஓட்டாண்டியாகாமல் தடுக்க அத்தகைய வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது; ஆனால் அதே நேரத்தில் தன் உழைப்பின் விளைபொருளை அவர் விற்கும்படி கட்டாயப்படுத்தப்படுகிறார். பெரும்பாலும் உழைப்புச் சக்தியை விற்கும்படி ஆகிறது. அடிக்கடி அவர் முதலாளியால் சுரண்டப்படுகிறார்; அவமதிப்புக்குள்ளாகிறார்.

எனவே, அறிவாளிக்குப் பாட்டாளி வர்க்கத்தோடு பொருளாதாரப் பகை முரண் ஏதுமில்லை. ஆனால் அவரது வாழ்க்கை நிலையும், உழைப்புச் சூழலும் பாட்டாளி வர்க்க ரீதியாக இல்லை. இதுவே உணர்வுகளிலும் கருத்துக்களிலும் பகை முரண்பாட்டைத் தோற்றுவிக்கிறது.

”தனிப்படுத்தப்பட்ட ஒரு தனிநபராக இருக்கும் பாட்டாளி ஒரு பொருட்டேயல்ல. அவரது சக்தி அனைத்தும், அவரது முன்னேற்றம் முழுவதும், அவரது நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள் எல்லாமும் அமைப்பிலிருந்தும் அவர் தமது தோழர்களோடு சேர்ந்து எடுக்கும் திட்டமிட்ட நடவடிக்கையிலிருந்தும் பெறப்பட்டவை. பெரியதும் வலிமை மிக்கதுமான அமைப்பின் ஓர் அங்கமாக அவர் விளங்கும்போது அவர் பெரியவராக வலிமை மிக்கவராக விளங்குகிறார். இந்த அமைப்புதான் அவருக்குப் பிரதானமானது; இதனோடு ஒப்பிடும்போது தனிநபர் பொருட்டாக மாட்டார். முகம் தெரியாத மிகப் பெரும் மக்கள் திரளின் பகுதியாகப் பாட்டாளி மிகப் பெரும் ஆர்வத்தோடு போராடுகிறார். இதில் சுயநலனுக்கோ, தனிப்பட்டவர் புகழுக்கோ இடமில்லை. தாம் நியமிக்கப்படும் எந்த ஒரு நிலையிலும் சுயகட்டுப்பாட்டோடு அவர் கடமையாற்றுகிறார்; அது அவரது உணர்வுகள் எண்ணங்கள் முழுமையையும் தழுவிக் கொண்டுவிடுகிறது.

”அறிவாளிகளின் விஷயமோ முற்றிலும் வேறானது. தனது சக்தியை வைத்துப் போரிடாமல் வாதங்களை வைத்துப் போரிடுகிறார். அவரது ஆயுதங்களோ அவரது சொந்த அறிவு, சொந்ததிறமை, சொந்த நம்பிக்கைகள் மட்டுமே; எந்த ஒரு பதவியையும் கூட அவர் தனது சொந்தப் பண்புகளால் மட்டுமே அடையமுடியும். எந்த ஒரு வெற்றிகரமான நடவடிக்கைக்கும் தனது தனித்துவத்தைக் கட்டவிழ்த்து விடுவதே அவருக்கு முக்கிய நிபந்தனையாகப்படுகிறது. முழுமைக்குத் தம்மைக் கீழ்ப்படுத்தி ஒரு பகுதியாக விளங்குவதற்கு அவர் மிகுந்த சிரமத்தின் பேரில்தான் ஒப்புக் கொள்கிறார். அதுவும் கூட அவசியத்தினால் ஏற்றுக் கொள்கிறாரே தவிர, ஆர்வத்தினால் அல்ல. ஒழுங்கு கட்டுப்பாடு மக்கள் திரளுக்கு மட்டுமே அவசியம் என்று அவர் அங்கீகரிக்கிறார்; ஆனால் தேர்ந்த உள்ளங்களுக்கல்ல. தம்மை பின்னதாகச் சொல்லப்பட்டவர்களோடு சேர்த்துக் கொள்கிறார்.

நீட்சேயின் தத்துவமே அறிவாளியின் உண்மைத் தத்துவமாகும். அதி மனிதன் கோட்பாட்டையும் சேர்த்து அத்தத்துவத்தில் தனிமனித ஆளுமையை நிறைவு செய்வதே எல்லாம்; இப்படிப்பட்ட தனித்துவத்தை பெரியதொரு சமூக நோக்கத்திற்குக் கீழ்ப்படுத்துவது இழிவானது, கேவலமானது. இத்தத்துவமே அறிவாளியை பாட்டாளிகளின் வர்க்கப் போராட்டத்தில் பங்கேற்க முடியாதபடி ஆக்கி விடுகிறது.

”நீட்சேவுக்கு அடுத்து, அறிவுத் துறையினரின் உணர்வுகளுக்கு விடையளிக்கத்தக்க ஓர் தத்துவத்தை எடுத்து விளக்கியவர் அநேகமாக இப்சனாகத்தான் இருக்க வேண்டும். அவரது ‘மக்களின் எதிரி’ என்ற நாடகத்தில் வரும் டாக்டர் ஸ்டாக்மான், பலர் சொல்வது போல, சோசலிஸ்டு அல்ல; பாட்டாளி வர்க்கத்தோடு நிச்சயம் மோதலுக்கு வரப்போகும் அறிவாளி வகையைச் சேர்ந்தவரே. பாட்டாளி வர்க்க இயக்கத்தோடு மட்டுமல்ல, பொதுவில் வேறு எந்த வகையான மக்கள் இயக்கமாக இருந்தாலும் அதற்குள் அவர் வேலை செய்ய ஆரம்பித்ததுமே அதற்கெதிராக மோதத் தொடங்கி விடுவார்.

பாட்டாளி வர்க்க இயக்கம், ஏன் ஒவ்வொரு ஜனநாயக இயக்கத்தின் அடித்தளமாக விளங்குவது, ஒருவர் தனது சக தோழர்களின் பெரும்பான்மைக்கு மதிப்புக் கொடுப்பதாகும். ஆனால் ஸ்டாக்மன் வகையைச் சேர்ந்த அறிவாளியோ ‘திட்டவட்டமான பெரும்பான்மை’யை தூக்கி எறியப்பட வேண்டிய ஓர் அரக்கனாகவே கருதுகிறார்….

”பாட்டாளி வர்க்க உணர்வுகளோடு ஊறிப்போன ஓர் அறிவாளிக்குச் சிறந்த எடுத்துக்காட்டு ஜெர்மானிய லீப்னெக்ட் ஆவார். இவர் சிறந்த எழுத்தாளராக இருந்தும் அறிவாளியின் குறிப்பான தனிப்பட்ட குணாம்சத்தை இழந்துவிட்டார்; அவர் பாட்டாளிகளின் படை அணிகளோடு மகிழ்ச்சியோடு நடை போட்டவர்; தான் நியமிக்கப்பட்ட எந்த ஒரு பதவியிலும் அவர் பணிபுரிந்தார். நமது மாபெரும் லட்சியத்திற்கு முழுமனத்தோடு தன்னைக் கீழ்ப்படுத்தினார். இப்சனிலும் நீட்சேவிலும் பயிற்சி பெற்ற அறிவாளிகள் தமது தனித்தன்மை ஒடுக்கப்படுகிறது என்று தீனமான குரல் ஊளையிட்டதை அவர் வெறுத்து ஒதுக்கினார்.

சிறுபான்மையில் தங்களைக் காண நேர்ந்த அறிவாளிகள் இப்படிப்பட்ட பண்புகளை வெளியிடக்கூடும். லீப்னெக்ட், சோசலிச இயக்கத்திற்குத் தேவையான அறிவாளி வகையின் எடுத்துக்காட்டாக விளங்குகிறார். காரல் மார்க்சையும் கூட இங்கே நான் குறிப்பிடலாம். அவர் தன்னை முன்னுக்குத் தள்ளிக் கொண்டதேயில்லை; சர்வதேச அகிலத்தில் பலமுறை சிறுபான்மையாக இருந்த போதும் அவர் கட்சிக் கட்டுப்பாட்டோடு நடந்து கொண்டது மிக மிக அசாதாரணமானது.

(மூலம்: ஆங்கிலம். ஓரடி முன்னே ஈரடி பின்னே – லெனின்: தொகுப்பு நூல்கள்  தொகுதி 7, பக்கம் 322 – 4)

– புதிய கலாச்சாரம், ஜூலை 1998

கருத்துரிமைக்குக் கல்லறை!

பொய்க்குற்றம் சாட்டி மரண தண்டனை விதிக்கப்பட்டுச் சிறையிடப்பட்டிருந்த புரட்சிகரக் கலைஞரான தோழர் ஜிதேன் மராண்டி, மரணத்தின் பிடியிலிருந்து விடுதலை பெற்றுள்ளார்.

தோழர் ஜிதேன் மராண்டி ஜார்கந்த் மாநிலத்தின் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடும் மக்கள் கலைஞராவார். பழங்குடி இனத்தைச் சேர்ந்த அவர், அரசியல் கைதிகள் விடுதலைக்கான கமிட்டியின் செயலர்களில் ஒருவர். அவரது பாடல்கள் கார்ப்பரேட் கொள்ளையையும் ஜார்கந்த் அரசின் கட்டாய நிலப்பறிப்பையும் எதிர்த்து முழங்குகின்றன; இதனாலேயே, அவரது குரல்வளையைத் தூக்குக் கயிறால் இறுக்கி அழிக்கத் துடித்தது, ஜார்கந்த் மாநில அரசு.

கடந்த 2007ஆம் ஆண்டு அக்டோபர் 26ஆம் நாள் ஜார்கந்தின் கிரிதி மாவட்டத்திலுள்ள சில்காரி கிராமத்தில், அம்மாநில முன்னாள் முதல்வரான பாபுலால் மராண்டியின் மகனாகிய அனுப் மராண்டி உள்ளிட்டு 19 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இப்படுகொலையை மாவோயிஸ்டுகள் நடத்தியதாக ஆட்சியாளர்கள் கூறிவருகின்றனர். ஜிதேன் மராண்டி என்பவர் தலையிலான 10 பேர் கொண்ட குழு இப்படுகொலையை நடத்தியதாகக் குற்றம் சாட்டி, இந்த 10 பேரின் முகவரியோ, பெற்றோர் பெயரோ இல்லாமல் முதல் தகவல் அறிக்கையை போலீசு  பதிவு செய்தது.

தோழர் ஜிதேன் மாரண்டி : கருத்துரிமைக்குக் கல்லறை!மறுநாள் அக்.29 அன்று ராஞ்சியைச் சேர்ந்த “பிரபாத் கபர்” என்ற நாளேடு, நாட்டுப்புறக் கலைஞரும் அரசியல் கைதிகள் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்தவருமான ஜிதேன் மராண்டி ஒரு மாவோயிஸ்டு தீவிரவாதியாவார் என்று கதை கட்டி, அவரது புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டது. மனித உரிமையாளர்களும் புரட்சிகர ஜனநாயக சக்திகளும் இப்பொய்ச்செய்திக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்ததும், மறுநாள் அக்.30 அன்று  தவறுக்கு வருத்தம் தெரிவித்து, புகைப்படத்திலுள்ள ஜிதேன் மராண்டி வேறு என்றும், தாக்குதல் நடத்திய மாவோயிஸ்டு ஜிதேன் மராண்டி வேறு என்றும் இந்த நாளேடு மறுப்புச் செய்தியை வெளியிட்டது.

இந்நிலையில், கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராகப் போராடிவரும் தோழர் ஜிதேன் மராண்டியையும் புரட்சிகர ஜனநாயக சக்திகளையும் ஒடுக்கும் நோக்கத்துடன் இந்த விவகாரத்தை போலீசு பயன்படுத்திக் கொண்டது.

ஜார்கந்த் மாநிலத்தில் கார்ப்பரேட் முதலாளிகளின் கட்டாய நிலப்பறிப்புக்கு எதிராக கடந்த 2008ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி நடந்த விவசாயிகள் போராட்டப் பேரணி  பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ஜிதேன் மராண்டி மீது கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியதாகப் பொய்க்குற்றம் சாட்டிய போலீசு, அவரைக் கைது செய்து சிறையிலடைத்தது.

2008 ஏப்ரல் 12ஆம் தேதியன்று அவர் பிணையில் வெளிவரும்போது,  2007ஆம் ஆண்டில் சில்காரியில் நடந்த படுகொலையைத் தலைமையேற்று நடத்திய மாவோயிஸ்டு பயங்கரவாதி இவர்தான்  என்று மீண்டும் பொய்க்குற்றம் சாட்டிக் கைது செய்தது, போலீசு. அவரோடு பழங்குடியின ஏழை விவசாயிகளான மனோஜ் ராஜ்வார், சத்திரபதி மண்டல், அனில்ராம் ஆகியோரும் இக்கொலையில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டனர். கடந்த ஜூன் 2009 இல் ஜார்கந்த் மாநிலக் கீழமை நீதிமன்றம் தோழர் ஜிதேன் மராண்டி உள்ளிட்ட நால்வருக்கும் மரண தண்டனை விதித்தது.

ஜிதேன் மராண்டி என்ற பெயரில் ஒரு மாவோயிஸ்டு புரட்சியாளர் தலைமறைவாக இயங்கி வருகிறாராம். அதே பெயரில் உள்ள நாட்டுப்புறப் பாடகரான ஜிதேன் மராண்டியைக் கைது செய்து, இவர்தான் அந்த மாவோயிஸ்டு தீவிரவாதி என்று கணக்கு காட்டியது ஜார்கந்த் போலீசு.

தோழர் ஜிதேன் மராண்டி மீது பொய்க்குற்றம் சாட்டி மரணதண்டனை விதிக்கப்பட்டதைப் பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் எதிர்த்து ஆர்ப்பாட்டங்களை நடத்தின. ஜார்கந்த் விகாஸ் மோர்ச்சா என்ற அமைப்பின் துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான டாக்டர் சவா அகமது, போலீசார் குற்றவாளியைக் கைது செய்துவிட்டதாகக் கணக்குக்காட்டுவதற்காக நாட்டுப்புறக் கலைஞரான ஜிதேன் மராண்டியைக் கைது செய்துள்ளனர் என்று வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார்.

தோழர் ஜிதேன் மராண்டி மீது பொய்க்குற்றம் சாட்டி ஆட்சியாளர்கள் மரண தண்டனை விதிக்கக் காரணம் என்ன? எங்கெல்லாம் கார்ப்பரேட் கொள்ளையும் நிலப்பறிப்பும் தொடர்கிறதோ, அங்கெல்லாம் தோழர் ஜிதேன் மராண்டி தனது  குழுவினருடன் கலைநிகழ்ச்சிகள் நடத்தி மக்களுக்குப் போராட்ட உணர்வூட்டினார்.  மக்களின் போராட்டத்தை எதிரொலிக்கும் அவரது பாடல் ஒலிப்பேழைகள் ஜார்கந்த் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களிலும் உழைக்கும் மக்களிடம் பிரபலமடைந்துள்ளன. அவர் ஜார்கந்த் மக்களின் போராட்ட அடையாளமாகத் திகழ்ந்தார். இதுதான் அரசின் வன்மத்துக்குக் காரணம்.

தோழர் ஜிதேன் மாரண்டி : கருத்துரிமைக்குக் கல்லறை!தோழர் ஜிதேன் மராண்டி மீதான கொலைக்குற்ற வழக்கு கடந்த ஈராண்டுகளாக நடந்துவந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது அவர்கள் குற்றம் செய்தார்கள் என்று நிரூபிக்க வலுவான ஆதாரங்கள் இல்லை என்று கூறி, ஜிதேன் மராண்டி உள்ளிட்ட நால்வரும்  நிரபராதிகள் என்று அறிவித்து, கடந்த 2011 டிசம்பர் 15ஆம் தேதியன்று ஜார்கந்த் உயர் நீதிமன்றம் அனைவரையும் விடுதலை செய்துள்ளது. புரட்சிகர இயக்கத்தின் மீது அடக்குமுறையை ஏவி முடமாக்கும் நோக்கத்துடனும், பழிவாங்கும் வன்மத்துடனும் போலீசார் அவசர கோலத்தில் அடிமுட்டாள்தனமாக சோடித்த பொய்வழக்கு புஸ்வாணமாகிப் போனது. அதேசமயம், ஜிதேன் மராண்டி மற்றும் பழங்குடியின விவசாயிகள் மீது பொய்க்குற்றம் சாட்டப்பட்டு இன்னும் பல்வேறு வழக்குகள் போலீசாரால் சோடிக்கப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து இப்போராளிகளை விடுவிக்கவோ, பொய் வழக்கு சோடித்த போலீசு அதிகாரிகளைக் கைது செய்து தண்டிக்கவோ நீதிமன்றம் முன்வரவில்லை.

இது, ஜார்கந்தில் நடந்த ஏதோ விதிவிலக்கான விவகாரம் என்று ஒதுக்கிவிட முடியுமா? காஷ்மீர் மனித உரிமை குறித்த மக்கள் நீதிமன்றம் என்ற அமைப்பின் கூட்டத்தில் பேசவந்த அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் ரிச்சர்டு ஷாப்ரியோ, காணாமல் போனவர்கள் பற்றிய ஆசியக் கூட்டமைப்பின் சார்பில் காஷ்மீருக்கு வந்த மே அகினோ, காஷ்மீருக்குச் சென்ற மனித உரிமை செயல்வீரரான கௌதம் நாவ்லகா  என அனைவருமே டெல்லி, சிறீநகர் விமான நிலையங்களிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டனர். இந்தியாவுக்கு அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்களின் அதிபர்களும் இயக்குனர்களும் தாராளமாக வந்து போகலாம். ஆனால், காஷ்மீரின் மனித உரிமை பற்றிப் பேசுவதற்கு உள்நாட்டினரோ, வெளிநாட்டினரோ எவரும் வரக்கூடாது என்பதுதான் இந்திய அரசின் எழுதப்படாத விதியாகிவிட்டது.

சட்டிஸ்கரின் தண்டேவாடாவைச் சேர்ந்த பழங்குடியின இளைஞரான லிங்கராம் கோடோபி, மாவோயிஸ்டுகளுக்கு எஸ்ஸார் நிறுவனத்தினமிருந்து பணம் வாங்கிக் கொடுத்தார் என்று பொய்க்குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்து வதைக்கப்பட்டார். ஆட்கொணர்வு மனு மூலம் அவர் விடுவிக்கப்பட்ட போதிலும், அவரது வயதான தந்தை உள்ளிட்டு அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அவரது வீடு  எரிக்கப்பட்டு அவரது கிராமத்தினர் வதைக்கப்பட்டனர். அவரது உறவினரும் பள்ளி ஆசிரியையுமான சோனி சோரி என்பவர் மாவோயிஸ்டுகளுக்குப் பணப்பட்டுவாடா செய்யும் தொடர்பாளராக இருந்தார் என்று பொய்க்குற்றம் சாட்டப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

மனித உரிமை ஜனநாயக உரிமை பற்றியோ, காஷ்மீர் பற்றியோ, கார்ப்பரேட் கொள்ளையைப் பற்றியோ, மாவோயிஸ்டுகள் சார்பாகவோ யாரும் எதுவும் பேசக் கூடாது என்பதுதான் இப்போது இந்திய அரசின் அறிவிக்கப்படாத கொள்கை. மறுகாலனியாதிக்கத்தின் கீழ் மனித உரிமைஜனநாயக உரிமைகள் எத்தகையதாக இருக்கும் என்பதற்கு, தொடரும் கைதுகளும் பொய்வழக்குகளும் மோதல்கொலைகளும் அடக்குமுறைகளுமே இரத்த சாட்சியமாக உள்ளன.

– புதிய ஜனநாயகம், ஜனவரி – 2012

முல்லைப் பெரியாறு: புரட்சிகர அமைப்புகளின் போராட்டம்

“இரட்டை வேடம் போடும்
‘தேசிய’க் கட்சிகளைத் தோலுரிப்போம்!

தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட
ஓரணியில் திரள்வோம்!”

– தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டம் மறியல் போராட்டங்கள்!

முல்லைப் பெரியாறு நீரின் நியாயவுரிமைக்காக தமிழக மக்கள் தன்னெழுச்சியாகப் போராடிவரும் நிலையில், இப்போராட்டங்களுக்கு வலுசேர்த்து புரட்சிகர அரசியல் திசைவழியைக் காட்டி, தமிழகமெங்கும் தாங்கள் செயல்படும் பகுதிகளில் ம.க.இ.க; வி.வி.மு; பு.மா.இ.மு; பு.ஜ.தொ.மு; பெ.வி.மு; ம.உ.பா.மையம் ஆகிய புரட்சிகர அமைப்புகள் தமது தோழமை அமைப்புகளுடன் இணைந்து, “முல்லைப் பெரியாறு அணையை இடித்து, சட்டவிரோதமாக புதிய அணையைக் கட்டத் துடிக்கும்கேரள அரசின் சதியை முறியடிப்போம்! உழைக்கும் மக்களே, கேரள அரசின் அடாவடித்தனத்துக்குத் துணை நிற்கும் மத்திய அரசை எதிர்த்துப் போராடுவோம்! இரட்டை வேடம் போடும் தேசியக் கட்சிகளைத் தோலுரிப்போம்! தமிழகத்தின் நியாயவுரிமையை நிலைநாட்ட ஓரணியில் திரள்வோம்!” என்ற முழக்கத்துடன் விரிவான பிரச்சாரத்தையும் ஆர்ப்பாட்டங்களையும் மறியல் போராட்டங்களையும் நடத்தி வருகின்றன.

காங்கிரசு, பா.ஜ.க; சி.பி.எம்; ஆகிய தேசிய கட்சிகளின் முகத்திரையைக் கிழிக்கும் விதமாகவும், தமிழகத்துக்குத் தொடர்ந்து துரோகமிழைக்கும் மத்திய அரசை எதிர்த்தும், கேரள உழைக்கும் மக்கள் தமிழனுக்கு எதிரி அல்ல என்பதை உணர்த்தியும் 12.12.2011 அன்று சென்னை சைதாப்பேட்டை பனகல் கட்டிடம் அருகே இவ்வமைப்புகள் இணைந்து ஆர்ப்பாட்டத்தை நடத்தின. கேரளத்தின் அச்சுதானந்தன், உம்மன் சாண்டி, பா.ஜ.க. இந்துவெறிக் கும்பல், காங்கிரசு துரோகிகள் ஆகியோரின் உருவப்படம் கொண்ட முகமூடியணிந்தவர்கள் வெறியூட்டி குதூகலிப்பது போலவும், தமிழக விவசாயி தண்ணீரின்றித் தத்தளிப்பதைப் போலவும் காட்சி விளக்கத்துடன் நடந்த இந்த ஆர்ப்பாட்டம், உழைக்கும் மக்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றது.

இதேநாளில்,  செங்கொடிகளுடன் இப்புரட்சிகர அமைப்புகள்  திருச்சி, மதுரை, கடலூர், தருமபுரி, நாமக்கல், உடுமலை, சீர்காழி ஆகிய இடங்களில் விண்ணதிரும் முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டங்களை நடத்தின.  உடுமலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில்,  தமிழக பொதுப்பணித்துறையின் ஓய்வுபெற்ற பொறியாளர்களால் தயாரிக்கப்பட்டுள்ள “முல்லைப் பெரியாறு: பிரச்சினையும் தீர்வும்” என்ற உண்மை நிலையை விளக்கும் குறுந்தகடு பரபரப்பாக விற்பனையாகியது.  டிசம்பர்14 அன்று ஓசூரிலும், 16 அன்று வேதாரண்யத்திலும், 28 அன்று கரூரிலும் இப்புரட்சிகர அமைப்புகளின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. உசிலம்பட்டியில், 9.12.2011 அன்று காலை 10 மணி முதல் மாலை வரை வி.வி.மு; பு.ஜ.தொ.மு; அமைப்புகள் இணைந்து தொடர்முழக்க ஆர்ப்பாட்டத்தை நடத்தின. இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சியினரும் அமைப்பினரும் பங்கேற்று தேசிய ஒருமைப்பாடு பற்றிப் பேசும் காங்கிரசு, பா.ஜ.க; சி.பி.எம்;  கட்சிகளை தமிழகத்திலிருந்து விரட்டியடிக்க அறைகூவினர்.

விருத்தாசலத்தில் “தமிழகத்தின் நியாயவுரிமையை மறுக்கும் மத்திய அரசைப் புறக்கணிப்போம்! இரட்டை வேடம் போடும் தேசியக் கட்சிகளான காங்கிரசு, பா.ஜ.க; சி.பி.எம்; ஆகியவற்றைத் தோலுரிப்போம்! தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களே, பதவி விலகுங்கள்!”, என்ற முழக்கத்துடன் ம.உ.பா.மையத்தினர் “முல்லைப் பெரியாறு: பிரச்சினையும் தீர்வும்” என்ற குறுந்தகட்டை பொதுமக்கள் மத்தியில் ஃப்ரொஜக்டர் வைத்து ஒளிபரப்பி தெருமுனைப் பிரச்சாரத்தை வீச்சாக நடத்தினர். அதன் தொடர்ச்சியாக, 21.12.2011 அன்று காலை 10 மணியளவில் விருத்தாசலம் தொடர்வண்டி நிலையத்தில் ம.உ.பா.மையத்தின் தலைமையில் கேரளா செல்லும் குருவாயூர் விரைவுவண்டியை  மறித்து போராட்டம் நடத்தப்பட்டது. சபரிமலைக்குச் செல்ல மாலை போட்டிருந்த ஐயப்ப பக்தர்கள் உள்ளிட்டு, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், உழைக்கும் மக்கள்  என நூற்றுக்கும் மேற்பட்டோர் இப்போராட்டத்தில் உணர்வோடு கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது மாலையைக் கழற்றி எறிந்த ஐயப்ப பக்தர் ஒருவர்  உட்பட 50 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

திருவண்ணாமலையில் ம.உ.பா.மையத்தினர் துண்டுப் பிரசுரங்களுடன் வீதியெங்கும் பிரச்சாரம் செய்து, அதன் தொடர்ச்சியாக 22.12.2011 அன்று தலைமை அஞ்சலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர். முன்னணியாளர்கள் 30 பேரைக் கைது செய்த போலீசு, பின்னர் விடுவித்தது.

திருச்சி ம.உ.பா. மையத்தினர் 22.12.2011 அன்று திருவரங்கம் தொடர்வண்டி நிலையத்தில் முன்னறிவிப்பின்றி குருவாயூர் விரைவு வண்டியை மறித்து போராட்டம் நடத்த முயன்றனர்.  இதையறிந்த போலீசு, திருவரங்கத்துக்கு முந்திய ரயில் நிலையத்திலேயே விரைவு வண்டியை நிறுத்திவிட்டது. ரயில்வண்டி  வராத நிலையில் முழக்கமிட்டபடியே ம.உ.பா.மையத்தினர் மறியலில் ஈடுபட்டபோது, போலீசு அனைவரையும் சுற்றிவளைத்துக் கைது செய்தது. பின்னர், குருவாயூர் விரைவுவண்டி ஒருமணிநேரம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது.

மதுரையில் ம.உ.பா.மையத்தினர் டிசம்பர் 24 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக முழக்கங்கள் எங்கும் எதிரொலிக்க கேரள முதல்வர் உம்மன் சாண்டி, முன்னாள் சி.பி.எம். முதல்வர் அச்சுதானந்தன், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரின் உருவப் படங்களைத் தீயிட்டுக் கொளுத்தி,  ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

போராட்டத்தின் குவிமையமான தேனி மாவட்டத்தில் டிசம்பர் தொடக்கத்திலிருந்து தன்னெழுச்சியாகப் பெருகிய மக்கள் போராட்டத்தை விரிவுபடுத்தி முன்னெடுத்துச் செல்ல அறைகூவியும், இரட்டை வேடம் போடும் தேசியக் கட்சிகளைத் திரைகிழித்தும் சுவரொட்டிப் பிரச்சார இயக்கத்தை வி.வி.மு. மேற்கொண்டது. போராடிவரும் பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைத்து “முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்புக் குழு”வைக் கட்டியமைத்த வி.வி.மு, இக்கூட்டமைப்பின் சார்பில் கூடலூரில் டிசம்பர் 15ஆம் தேதியன்று மறியல் போராட்டத்தை நடத்தியது. பத்தாயிரக்கணக்கில் துண்டுப் பிரசுரங்களுடன் பிரச்சாரம் செய்து, டிசம்பர் 16 முதலாக தொடர்ந்து 5 நாட்களுக்கு தொடர்முழக்க ஆர்ப்பாட்டத்தை இக்கூட்டமைப்பின் சார்பில் வி.வி.மு. முன்னெடுத்துச் சென்றது. முல்லைப் பெரியாறு அணையை நோக்கி  ஊர்வலமாகச் சென்ற மக்கள் மீது  தடியடி நடத்திய தமிழக போலீசின் அடக்குமுறையை எதிர்த்து துண்டுப் பிரசுரங்களுடன் பிரச்சார இயக்கத்தை நடத்திய வி.வி.மு, தமிழகம் வந்த பிரதமரை எதிர்த்து “மன்மோகன் சிங்கே திரும்பிப் போ!” என்ற முழக்கத்துடன் சுவரொட்டிப் பிரச்சாரத்தை மேற்கொண்டது. மன்மோகன் வருகையை எதிர்த்து தேவாரத்தில் பல பகுதிகளில் கருப்புக் கொடிகள் ஏற்றப்பட்டன. போடியிலிருந்து கேரளாவுக்கு உணவுப் பொருட்களைக் கொண்டுசெல்லக் கூடாது எனப் பிரச்சாரம் செய்து சாலை மறியல் போராட்டத்தை வி.வி.மு. தொடங்கிவைத்தது. இதையொட்டி வி.வி.மு. தோழர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டனர். இப்போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்த மக்கள், மறுநாளிலிருந்து தன்னெழுச்சியாக மறியல் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். புரட்சிகர அமைப்புகளின் அரசியல் முழக்கங்களே மக்களின் முழக்கங்களாக எங்கும் எதிரொலித்தன.

காவிரி நீர் உரிமை, முல்லைப் பெரியாறு நீர் உரிமை, பாலாற்று நீர் உரிமை, தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமை, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு உரிமை  என தமிழகத்துக்கு இழைக்கப்படும் அநீதியை எதிர்த்தும், இரட்டை வேடம் போடும் தேசியக் கட்சிகளை அம்பலப்படுத்தியும் போர்க்குணத்துடன் நடந்த இந்த ஆர்ப்பாட்டங்களும் மறியல் போராட்டங்களும் எதிரி யார், துரோகிகள் யார் என்பதை உழைக்கும் மக்களின் நெஞ்சங்களில் ஆழமாகப் பதியவைப்பதாக அமைந்தன.

——————————————————-

போராட்டக் காட்சிகள் சில

– புதிய ஜனநாயகம், ஜனவரி – 2012

நக்கீரன் – மாட்டுக்கறி ! மயிலாப்பூர் மாமி V/S கிசுகிசு மாமா !!

197

“போயஸ் தோட்டத்தில் ஞாயிறு நள்ளிரவில் ஒரு வயலெட் நிற பி.எம்.டபிள்யூ கார் வந்தது. அதில் சிறிய சூட்கேசுடன் இறங்கிய மர்ம மனிதர் ஒரு மணிநேரம் இருந்து விட்டு திடீரென்று மறைந்தார்.” இப்படி துணுக்கு மூட்டையில் குடிகொண்டிருந்த சினிமா கிசு கிசு வடிவத்தை அரசியலுக்கும் கொண்டு வந்து அதில் ஒரு புது பாணியையே உருவாக்கியது ஜூனியர் விகடன். சினிமா கவர்ச்சியில் நீந்திக் கொண்டிருக்கும் தமிழகத்திடம் அரசியல் செய்திகளையும் இப்படி கிசுகிசு பாணியில் கொண்டு போனால் கல்லா கட்டலாம் என்று ஜூவி வெற்றியடைந்த பிறகு பல புலனாய்வு பத்திரிகைகள் புற்றீசல் போல தோன்றின.

அதில் வெற்றியடைந்த பத்திரிகை நக்கீரன். ஆரம்பத்தில் ஜெயா ஆட்சியில் நக்கீரன் தண்டிக்கப்பட்டதும், அதை எதிர்த்து போராடியதும் உண்மை என்றாலும் அப்போதே அந்த பத்திரிகை கிசு கிசு இதழியலில் கொடி கட்டிப் பறந்தது. இந்த வடிவத்திற்கு பொருத்தமாக இருந்த படியால் வீரப்பன் கதையும், கடைசியாக வந்த நித்தியானந்தா கதையும் அதற்கு கிடைத்த அட்சய பாத்திரங்களாக இருந்தன. இது போக பாலியல் ரீதியில் வாசகனை தூண்டி விடக்கூடிய கதைகள், தொடர்கள், செய்திகள் ஏராளமாய் வரும். இதற்கும் ஜூ.விதான் முன்னோடி.

மாட்டுக்கறி சாப்பிடும்- மாமி- நான்ஈழப்பிரச்சினையின் போது கூட பிரபாகரன் படத்தையும் பொய்ச் செய்தியையும் போட்டு ஏராளமாக கல்லா கட்டிய நக்கீரன் அதற்கு தோதாக பாதிரி ஜகத் கஸ்பரின் புரட்டு தொடரைப் போட்டு ஏமாற்றியது. இப்படி இழவு வீட்டிலும் ஆதாயம் பார்ப்பதற்கு அவர்கள் வெட்கப்படவில்லை.

கடந்த தி.மு.க ஆட்சியின் போது நக்கீரன் பத்திரிகை அடித்த ஜால்ராவினாலேயே அதன் நம்பகத்தன்மை இழந்து விட்டிருந்தது. அதன் விநியோகமும் வெகுவாகக் குறைந்திருந்தது. தற்போது நக்கீரனை பிடிக்காத ஜெயா ஆட்சிக்கு வந்திருந்தாலும் முன்பு போல அதன் வீச்சு பொது மக்களிடம் எடுபடவில்லை.

இந்நிலையில்தான் சசிகலா நீக்கம் நடக்கிறது. இதையும் அரசியல் ரீதியாக பார்க்காமல் போயஸ் தோட்டத்து படுக்கையறை இரகசியம் போல கடந்த ஒரு மாதமாக எழுதிக் குவித்து வருகிறது நக்கீரன். இதில் சசிகலாவே நேரடியாக நக்கீரனுக்கு விளக்கமளிப்பது போல அட்டைப்படத்திலேயே போட்டு ஏமாற்றியது. ஜூவியும் கூட சசிகலா நீக்கத்தை அரசியல் அற்ற மர்மக் கதை போல சொல்லி வந்தாலும், நக்கீரன் மட்டும் போட்டி கருதி இன்னும் மலிவாக எழுதி வந்தது.

நக்கீரன் பத்திரிகைக்காக கொழும்பிலிருந்து எழில், தில்லியிலிருந்து சிந்துஜா, தென் ஆப்பிரிக்காவிலிருந்து ராகவன், அண்டார்டிகாவிலிருந்து ஆண்டியப்பன் என்ற பெயர்கள் போட்டு எழுதப்படும் கட்டுரைகளும் சரி, எல்லா அரசியல் தலைவர்களது வீட்டுக்குள்ளிரிருந்தும் நக்கீரன் பத்திரிகை நிருபர்கள் நேரில் பார்த்து எழுதுவது போன்ற பாவனைகளும் சரி, இந்த டூப்பு மேட்டரில் நக்கீரனை விஞ்சுவதற்கு ஆளில்லை.

தாக்கப்பட்ட நக்கீரன் அலுவலகம்

அப்படித்தான் சசிகலா நீக்கம் பற்றி ஏராளமாய் எழுதிக் குவித்தார்கள். உண்மையில் சசிகலா நீக்கம் குறித்து எப்படி பார்க்க வேண்டும் என்று வினவில் இரு கட்டுரைகள் வந்திருக்கின்றன. அதையும் நக்கீரன், ஜூவி கட்டுரைகளையும் ஒப்பிட்டு பார்த்தீர்களேயானல் இவர்களது தரத்தையும், விற்பனை நோக்கத்தையும் புரிந்து கொள்ளலாம்.

சசிகலா நீக்கம் குறித்து ஏராளமான திகில் செய்திகளையெல்லாம் வெளியிட்ட போது ஏதாவது அ.தி.மு.கவிலிருந்து மிரட்டல், அடிதடி வரும், அதை வைத்து இமேஜை தூக்கி காசாக்கலாம் என்று நக்கீரன் திட்டமிட்டே செயல்பட்டது. அப்படி ஒன்றும் வரவில்லை என்பதால் இப்போது மாட்டுக்கறி மாமி மேட்டரை எம்.ஜி.ஆர் சொன்னதாகவும், அதை நக்கீரனது இன்றைய நிருபர் டைம் மெஷினில் பின்னோக்கி சென்று கேட்டு எழுதியதாகவும் தெரிகிறது.

மற்ற எதனையும் பற்றி கவலைப்படாத ஜெயாவின் மயிலாப்பூர் கும்பல் இந்த மாட்டுக்கறி மேட்டரை பார்த்து ‘கொலவெறி’ அடைந்ததில் ஆச்சரியமில்லை. ஜெயலலிதா மாட்டுக்கறி சாப்பிடுபவர் என்று ஒரு செய்தியைப் பார்த்தால் துக்ளக் சோவும், சு.சாமி மாமாவும் எவ்வளவு வெறியுடன் கோபம் அடைந்திருப்பார்கள் என்று நாமே யூகித்து தெரிந்து கொள்ளலாம். அந்த கோபம்தான் அ.தி.மு.க குண்டர் படை வரை வந்து ஜானி ஜான் கான் ரோட்டிலிருக்கும் நக்கீரனது அலுவலகத்தை தாக்கியிருக்கிறது. நக்கீரன் அலுவலகத்திற்கு அருகில் இருக்கும் ஒரு புகழ்பெற்ற கடையில்தான் மாலையில் மாட்டுக்கறி வருவல் விற்பனை செய்யப்படும். இங்கு வந்து விரும்பிச் சாப்பிடுபவர்களில் அ.தி.மு.கவினரும் அடக்கம். இவர்கள்தான் இப்போது வந்து அட்டாக் பாண்டி போல ஆடியிருக்கிறார்கள்.

பார்ப்பன விழுமியங்களில் கொழுத்து திரியும் ஜெயாவின் மயிலாப்பூர் கும்பலுக்கு வெறியை வர வைத்து ஆதாயமடைய வேண்டும் என்று நக்கீரன் கவனமாகத்தான இதை வெளியிட்டிருக்கிறது. இப்போது இந்த அடிதடியை வைத்து எப்படியும் ஒரு மாதம் ஓட்டி விடுவார்கள். தற்போது அ.தி.மு.கவும் இதற்காக நக்கீரனது மேல் வழக்கு போட்டிருக்கிறது. தமிழகத்தில் எதெல்லாம் அரசியல் என்று பேசப்பட்டும், எழுதப்பட்டும், வருகிறது பாருங்கள்!

பாசிச ஜெயாவின் காட்டு தர்பாரை அம்பலப்படுத்தி மக்களது பிரச்சினைகளை எழுத வேண்டிய பத்திரிகைகள் இப்படி கிசுகிசு செய்திகளை வைத்து எழுதி கல்லா கட்டும் போது நாம் என்ன செய்வது?

பாசிச ஜெயாவை நாம் எதிர்த்துப் போராடும் போது, இந்த கிசுகிசு பத்திரிகைகளையும் புறக்கணிக்குமாறு மக்களிடம் பரப்புரை செய்ய வேண்டியிருக்கிறது. வேறு வழி?

ஒலிம்பிக்கில் டௌ: நாய் விற்ற காசு குரைக்காது!

2012 ஆம் ஆண்டு ஜூலைஆகஸ்டு மாதங்களில் இலண்டனில் நடைபெற உள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் புரவலராகக் கொலைகார டௌ கெமிக்கல்ஸ்  நிறுவனம் சேர்ந்துள்ளது. விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் மைதானத்தை அலங்கரிக்க டௌ கெமிக்கல்ஸிடமிருந்து 370 கோடி ரூபாயை நன்கொடையாகப் பெற இலண்டன் ஒலிம்பிக் அமைப்புக் கமிட்டி முடிவு செய்துள்ளது.

போபால் படுகொலையை நடத்திய யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தற்போதைய உரிமையாளரான  டௌ கெமிக்கல்ஸை ஒலிம்பிக்கிலிருந்து வெளியேற்றக் கோரியும், இலண்டன் ஒலிம்பிக் அமைப்புக் கமிட்டியின் தலைவரான செபஸ்டின் கௌ மற்றும் இந்திய ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் விஜயகுமார் மல்ஹோத்ரா ஆகியோரது உருவ பொம்மைகளை எரித்தும் தங்கள் எதிர்ப்பைக் காட்டி போபால் மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இலண்டன் ஒலிம்பிக்கை “டௌ ஒலிம்பிக்” எனக் கூறும் போபால் மக்கள், டௌ வெளியேற்றப்படாவிட்டால், இலண்டன் ஒலிம்பிக்கை இந்தியா புறக்கணிக்க வேண்டும் எனக் கோருகின்றனர். போபாலைச் சேர்ந்த முன்னாள் ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களும் இலண்டன் ஒலிம்பிக்கைப் புறக்கணிக்குமாறு இந்திய விளையாட்டு துறையையும் இந்திய ஒலிம்பிக் கமிட்டியையும் கேட்டுக் கொண்டுள்ளனர். ஆனால் இந்திய ஒலிம்பிக் கமிட்டி, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு கடிதம் எழுதும் கண்துடைப்பு வேலையை மட்டுமே இதுவரை செய்துள்ளது.

ஒலிம்பிக்கில் டௌ : நாய் விற்ற காசு குரைக்காது !டௌவுக்கு எதிராக எழுதப்பட்ட இந்தக் கடிதத்தைக்கூட அதன் ஆதரவாளர்களால்  சகித்துக் கொள்ள முடியவில்லை.  டௌவை ஆதரித்துத் தலையங்கம் எழுதிய தினமணி, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு கடிதம் எழுதியதற்காக இந்திய அரசைக் கடுமையாகச் சாடியுள்ளது. இந்தியாவில் எழுந்துள்ள எதிர்ப்புகளுக்குப் பதிலளித்த இலண்டன் ஒலிம்பிக் அமைப்புக் கமிட்டியின் தலைவர் கௌ, டௌ கெமிக்கல்ஸை ஒலிம்பிக்கிலிருந்து வெளியேற்றும் பேச்சுக்கே இடமில்லை எனத் திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.

டௌ கெமிக்கல்சுக்கு ஆதரவாகப் பேசும் கௌ முதல் தினமணி வரை எல்லோரும் வைக்கும் வாதம், போபால் படுகொலைகளுக்கு டௌ கெமிக்கல்ஸ் பொறுப்பாளியாக முடியாது என்பதாகும். அவர்களது வாதப்படி, 1984ஆம் ஆண்டு போபாலில் யூனியன் கார்பைடு நிறுவனத்தில் விபத்து நடந்தது; ஆனால், டௌ கெமிக்கல்ஸ் யூனியன் கார்பைடை வாங்கியதோ 2001இல் தான்; அதாவது, விபத்து  நடந்து 17 ஆண்டுகளுக்குப் பிறகுதான். இதனால் போபால் படுகொலைக்கும் டௌவுக்கும் சம்பந்தமே இல்லை என்கிறார்கள்.

மேம்போக்காகப் பார்த்தால் நியாயம் போலத் தோன்றும் இந்த வாதம் மிகவும் வக்கிரமானது. ஒரு நிறுவனத்தை மற்றொரு நிறுவனம் வாங்கும் போது அதன் சொத்துக்களை மட்டும் வாங்குவதில்லை. நிறுவனத்தின் பொறுப்புக்களையும் சேர்த்துத்தான்   வாங்குகிறது. யூனியன் கார்பைடு நிறுவனத்தை வாங்கும்போது, போபால் படுகொலை பற்றி தெரிந்துதான் டௌ கெமிக்கல்ஸ்  அதனை வாங்கியது. அதுமட்டுமல்லாமல், போபால் படுகொலைக்கு 19 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணம் தரக் கோரி இந்திய அரசே டௌ கெமிக்கல்ஸ் மீதுதான் வழக்குத் தொடர்ந்துள்ளது. உண்மை இவ்வாறிருக்கையில், போபால் படுகொலைக்கு டௌ கெமிக்கல்ஸ் பொறுப்பில்லை என இவர்கள் வாதிடுகிறார்கள் என்றால், ஒன்று டௌவிடமிருந்து இவர்கள் பணம் பெற்றிருக்க வேண்டும்; அல்லது  நாட்டு மக்கள் குறித்தும், அவர்களது துன்ப துயரம் குறித்தும் கடுகளவும் கவலைப்படாத வக்கிரப் பேர்வழிகளாக இருக்க வேண்டும். செபஸ்டின் கௌ , டௌவை ஆதரிக்க முன்னது காரணம் என்றால், தினமணிக்குப் பின்னது காரணம்.

ஒலிம்பிக்கில் டௌ : நாய் விற்ற காசு குரைக்காது !போபால் படுகொலையை விடுத்துப் பார்த்தால்கூட, டௌகெமிக்கல்ஸ் ஒன்றும் சொக்கத் தங்கமில்லை. இரண்டாம் உலகப் போர் தொடங்கி இன்றுவரை அமெரிக்கா நடத்திவரும் பல படுகொலைத் தாக்குதல்களுக்கு ஆட்கொல்லி நச்சு இரசாயனங்களை உற்பத்தி செய்து தருவது இந்த நிறுவனம்தான். வியட்நாம் போரில் அப்பாவி மக்கள் மீது வீசப்பட்ட “நாபாம்” இரசாயன குண்டுகளை இதே டௌ நிறுவனம்தான் தயாரித்துக் கொடுத்தது. இத்தகைய கொலைகார நிறுவனத்தைத்தான் இவர்கள் மகா யோக்கிய சிகாமணியாகச் சித்தரிக்கிறார்கள்.

இவர்கள்தான் இப்படி என்றால், இந்திய விளையாட்டு வீரர்களின் யோக்கியதையோ அருவருக்கத்தக்கதாக உள்ளது. இந்தியா ஒலிம்பிக்கைப் புறக்கணித்துவிட்டால் போட்டிகளில் பங்கெடுக்கத் தங்களுக்குக் கிடைத்துள்ள வாய்ப்பு எங்கே பறிபோய்விடுமோ என அஞ்சும் அவர்கள் போட்டியைப் புறக்கணிக்கத் தேவையில்லை என்கின்றனர்.  காமன்வெல்த் போட்டி நாயகன் என ஊடகங்களால் போற்றப்படும் ககன் நரேங் (துப்பாக்கிச் சுடுதல்), ஒலிம்பிக்கைப் புறக்கணிப்பது தவறென்றும் ஒலிம்பிக்குக்குப் பணம் கொடுத்ததன் மூலம் ‘டௌ’ தனது தவறுகளுக்குப் பிராயச்சித்தம் செய்து கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார். ரிஷ்வி எனும் முன்னாள் ஹாக்கி வீரர் கையில் கறுப்பு பட்டை அணிந்து செல்லலாம் என யோசனை சொல்கிறார். நாட்டுப்பற்றோ மக்கள் நலனோ மயிரளவும் இல்லாமல்,  தனது நலனை மட்டுமே பார்க்கும் அற்பவாத அடிமைகளாகக் கிடக்கும் இந்த ‘வீரர்’கள்தான், அர்ஜூனா, கேல் ரத்னா  என நாட்டின் உயர்ந்த விருதுகளைப் பெற்றிருக்கிறார்கள்.

ஒலிம்பிக் போட்டியை ஏதோ புனிதமான நிகழ்வாகவும், அதில் கலந்து கொள்வது ஏதோ மிகப்பெரிய பொறுப்பாகவும் முதலாளித்துவ ஊடகங்களால் சித்தரிக்கப்படுகிறது. உண்மையில் ஒலிம்பிக் என்பது, மிகப்பெரிய அளவில் உலக முதலாளிகள் நடத்தும் வியாபாரம். இதன் காரணமாகத்தான், அதனை நடத்தும் வாய்ப்புக்காக எல்லா நாடுகளும் போட்டி போடுகின்றன. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு, 370 கோடி ரூபாய் என்பது பெரிய தொகையே இல்லை. டௌ கெமிக்கல்சுக்கு இத்தொகையைத் திருப்பிக் கொடுத்து வெளியேற்றிவிடுவதில் அதற்குப் பொருளாதார ரீதியில் எந்தச் சிக்கலுமில்லை. ஆனால், அவ்வாறு செய்தால்  அந்த நிறுவனத்தைக் கொலைகாரன் என முத்திரை குத்தித் தனிமைப்படுத்துவதாகிவிடும். அதாவது ஒரு பன்னாட்டு நிறுவனத்தை, தங்களில் ஒருவனை, கொலைகாரன் என முத்திரை குத்தித் தனிமைப்படுத்துவதை உலக முதலாளித்துவம் தனக்கு ஏற்பட்ட அவமானமாகவே கருதுகிறது.  எனவேதான், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி டௌவை ஆதரிக்கிறது. கார்ப்பரேட் முதலாளிகளைப் பகைத்துக்கொள்ள விரும்பாத இந்திய அரசும் டௌவை ஆதரிக்கிறது.

– புதிய ஜனநாயகம், ஜனவரி – 2012

பார்ப்பன சிவச்சாரியர்களுக்கு ஆப்பு வைத்த போராட்டம்!

டலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருதகிரீஸ்வரர் கோவிலில் கடந்த 5 வருடங்களாக ஆருத்ரா தரிசனம் உள்ளிட்ட விழாக்காலத்தின் போதும், தினசரி இரவு 8.30 மணி அர்த்த ஜாம பூஜையின் போதும் பழம்பெரும் இசைக்கருவிகளான உடன், கொம்பு, சங்கு, நெடுந்தாரை, எக்காலம், உடுக்கை  போன்ற கைலாய இசைக்கருவிகளை வாசித்து சிறுவர்கள் இளைஞர்கள் ஆன சிவனடியார்கள் இறைவனை வழிபட்டு வந்தனர்.

இந்த இசையின் காரணமாக இரவில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. சாதாரண உழைக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. இது அர்ச்சகர்களான  கோயில் சிவாச்சாரியார்கள் கண்ணை உறுத்தியது. ஊர் பெரிய மனிதர்கள் சிலரின்  மூலம் கோயில் நிர்வாக அதிகாரியிடம்  அதிக சத்தமாக இருப்பதால் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கிறது என்று கொடுத்த  புகாரின் மூலம் மேற்படி சிவனடியார்கள் இசைக்கருவிகளை வாசிக்க கூடாது என 13.07.2011 தடை விதிக்க பட்டது.

நிர்வாக அதிகாரியின் உத்தரவுக்கு எதிராக சிவனடியார்கள் விழுப்புரம் இணை ஆணையரிடம் முறையீடு செய்தனர். ஆறு மாதமாக சிவனடியார்கள் அலைந்தது தவிர  எந்த பலனும் ஏற்படவில்லை. மனம் தளராத சிவனடியார்கள் இறுதியில் மனித உரிமை பாதுகாப்பு மையத்திடம் வந்து சேர்ந்தனர். ஆறு மாதமாக கோயிலில் இசைக்காமல் சிவனடியார்கள் சோர்வுற்றுள்ளனர். மனுவைத் தூக்கிக் கொண்டு இனிமேலும் எங்களால் அலைய முடியாது. ஆருத்ரா தரிசனம் அன்று (08.01.2012) சாமி புறப்படும் முன்பு நாங்கள் வாசிக்க வேண்டும். காவல் துறை கைது செய்தாலும் பரவாயில்லை. நாங்கள் இறை தொண்டிற்காக சிறை செல்லவும் தயார்.  மனித உரிமை பாதுகாப்பு மையம் எங்களுக்கு பாதுகாப்பும் ஆதரவும் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். ஆதரவு கொடுத்தோம்.

நேற்று ஆருத்ரா தரிசனத்தின் போது சிவாச்சாரியார்கள் சாமி பல்லக்கை தூக்கி புறப்பட்டனர். சிவனடியார்கள்  இசைக்ருவிகளை வாசிக்க துவங்கியவுடன் ஆத்திமடைந்த சிவாச்சாரியார்கள் நடராஜர் சாமியை கோவில் உட்பிரகாரத்தில் செல்லும் வழியிலேயே அப்படியே கீழே இறக்கி வைத்து விட்டு, சிவனடியார்கள் வாசிப்பதை நிறுத்தினால்தான் சாமி புறப்பாடு என கூறி தரையில் அமர்ந்து கொண்டனர். சிவனடியார்களும் பல்லக்கு புறப்பட்டால் வாசிப்போம் என உறுதியாக நின்றனர்.

போலீசார், கோவில் நிர்வாக ஊழியர்கள், சிவாச்சாரியார்களுக்கு ஆதரவான ஜால்ராக்கள் நடத்திய பேச்சு வார்த்தையில் சிவனடியார்கள் பின்வாங்காமல் உறுதியாக இருந்தனர். நின்றிருந்த பொதுமக்கள் சிவனடியார்கள் வாசிக்கலாம் எனவும் பிரச்சனை வேண்டாம் சாமிக்கு வழிவிடுங்கள் எனவும் இரண்டாக பிரிந்தனர். பிரித்தது மனித உரிமை பாதுகாப்பு மையம். சுமார் இரண்டு மணி நேரம் நடராஜர் என்ன செய்வது என்று தெரியாமல் சிவாச்சாரியார்களுக்கு பின்பு பல்லக்கிலே காத்திருந்தார்.

அ.தி.மு.க நகர செயலாளர்கள் பா.ம.க கவுன்சிலர், ஒயின்ஷாப் ஓனர் ஆகியோர் சிவனடியார்களை பலவந்தமாக அப்புறப்படுத்த முயன்ற போது மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்கள் புஷ்பதேவன், செந்தில், காசி விசுவநாதன், மற்றும் நிர்வாகிகள்  தடுத்தனர்.  வேடிக்கை பார்க்கும்  போலீசாரிடம் வாக்கு வாதம் செய்தனர். நிருபர்கள் புகைப்படம் எடுக்க முயற்சித்ததால் கைகலப்பு கட்டுப்பாட்டோடு நின்றது. திராவிட கழக நகர செயலாளர் இளந்திரையன் ஆகியோர் வந்தவேலை முடிந்ததா என அ.தி.மு.க வை கண்டித்தனர். சிவனடியார்கள் இசைக்கருவிகளை வாசிக்கவும் தங்களை பலவந்தமாக அப்புறப்படுத்திய அ.தி.மு.வினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெடுஞ்சாண்கிடையாக படுத்து போராட்டம் நடத்தினர். இச்சூழலில்தான் பல்லக்கு புறப்பட்டு சென்றது.

மனித உரிமை பாதுகாப்பு மையம், காவல் துறை அதிகாரியிடம் இசைக்கருவிகளின் மூலம் இறைவனை வழிபட யாருடைய அனுமதியும் தேவையில்லை. அதற்கு யாரும் தடையும் விதிக்க முடியாது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இதே கருவிகள் வாசிக்கப்படுகிறது அதற்கு அரசு சம்பளமும் கொடுக்கிறது. அதுபோல் சிதம்பரம் நடராஜர் கோவிலிலும் வாசிக்கப்படுகிறது. அங்கெல்லாம் பொதுமக்களுக்கு ஏற்படாத இடையூறு விருத்தாசலம் கோவிலில் மட்டும்  இடையூறு என்று நிர்வாக அதிகாரியின் உத்தரவு ஒருதலைபட்சமானது உள்நோக்கம் உடையது. சிவனடியார்கள் செய்வது தவறு என்றால் காவல் துறை கைது செய்யட்டும். அ.தி.மு.க வினர் தலையீடை அனுமதிக்க முடியாது  என வாதிட்டனர்.

அருகிலிருந்த சிவாச்சாரியார்கள்  இந்த கோயிலின் ஆகமபடி இந்த இசைகருவிகள் வாசிக்க கூடாது என வாதிட்டனர். ஆறு வருடங்களாக தடுக்காத ஆகமம் இன்று ஏன் தடுக்கிறது. நீங்கள் ஆகமத்தை மீறிவிட்டார்கள் என  புகார் கொடுங்கள் அதையம் பார்த்து விடுவோம் என வழக்கறிஞர்கள் பேசினர். காவல் துறையினரும், கோயில் நிர்வாகிகளும், சிவாச்சாரியார்களும் ஊர் முக்கியஸ்தர்கள் சிலரும், செய்வதறியாது நின்றனர். விழித்துக் கொண்ட காவல் துறை சிவனடியார்கள் பிரச்சனையை சுமுகமாக தீர்க்க உதவும் படி வழக்கறிஞர்களை கேட்டுக் கொண்டது. இசைக்கருவிகளுடன் சிவனடியார்களின் உள்ளிருப்பு போராட்டம் மனித உரிமை பாதுபாப்பு மையத்தின் ஆதரவுடன் இரவு 8.30 மணி வரை தொடர்ந்தது.

விருத்தாசலம் நகர் மன்ற தலைவர் அ.தி.மு.க வை சேர்ந்த ஆர்.டி.அரங்கநாதன் கோயில் நிர்வாகிகள், சிவனடியார்கள், என பல தரப்பில் பேசி இன்றைக்கு  வாசிக்க வேண்டாம்,  நாளை கோட்டாச்சியர் தலமையில் அமைதி பேச்சு வார்த்தை மூலம் முடிவு செய்வோம். மீறி இசைத்தால் கோயில் நிர்வாகம் எதிராக போகும் என எச்சரித்தார். அவர் ஒரு கோயிலுக்கு சொந்தக்காரர். அதோடு கரகாட்டம் ஆடும் பூசாரியும் ஆவார்.  சிவனடியார்களோ சிறுவர்களாக இருந்தாலும் இசைக்காமல் இங்கிருந்து போகமாட்டோம் என உறுதியுடன் வாசித்த பிறகுதான் கோயில் சாத்தப்பட்டது.

சிவனடியார்கள் மனித உரிமை பாதுகாப்பு மையம் இல்லையென்றால் எங்களை இன்று தூக்கி வெளியே போட்டிருப்பார்கள் என மனம் நெகிழ்ந்தனர். போராட்ட செய்தி கேள்விபட்டு அருகாமை ஊரில் உள்ள சிவனடியார்கள் 50 க்கும் மேற்பட்டோர் நேற்று  இரவு பூஜைக்கு வந்து சேர்ந்தனர். இறைவனை வழிபடும் உரிமையை போராடி பெற்ற மகிழ்ச்சியை அனைத்து சிவனடியார்கள் முகத்திலும் பார்க்க முடிந்தது. தொடந்து விருத்தாசலம் கோவிலில் இசை்கருவிகளை வாசிக்கும் உரிமையை நிலைநிறுத்திட  போராடும் சிவனடியார்கள் முதியவர்கள் அல்ல, இளைஞர்கள். எனவே விரைவிலேயே இந்தப் போராட்டம் வெற்றிபெறும்.

இந்த இசைக்கருவிகளை வாசிப்பதில் தலித், மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதியினர் உள்ளனர். இவர்களையும், இவர்களது இசைக்கருவிகளையும் பார்ப்பன சிவாச்சாரியர்கள் இழிவாகவும், மட்டமாகவும் கருதுவதில் வியப்பில்லை. ஏதாவது ஒரு சாக்கினைச் சொல்லி தடுத்து விடலாம், நடப்பது மயிலாப்பூர் மாமியின் ஆட்சி என்று அவர்கள் நினைக்க அது போலவே மாமியின் அடியாட்படையான அ.தி.மு.கவும் உதவிக்கு வந்தது. ஆனால் இளைஞர்கள் உறுதியாக இருக்கவே அந்த உறுதிக்குப் பின்னால் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் அரணாக இருக்கவே பார்ப்பன சூழ்ச்சி பலிக்கவில்லை.

ஆனால் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த இந்த ஆத்திகர்கள் நாத்திகர்களின் உதவியை ஏன் நாடுகிறார்கள் என்பதிலிருந்தே இந்து மதம் என்பது பார்ப்பன ஆதிக்க சாதியினரது மதம் என்பதையும், இதே உதவியை ஆர்.எஸ்.எஸ் இடம் கேட்டால் கிடைத்திருக்காது என்பதையும் இங்கே பொருத்திப் பார்க்க வேண்டும்.

அந்த வகையில் ஒடுக்கும் இந்துக்களுக்கு ஆர்.எஸ்.எஸ் என்றால் ஒடுக்கப்படுபம் ‘இந்துக்களுக்கு’ நாம்தான் பாதுகாப்பு!

—————————-

படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்

– மனித உரிமைப் பாதுகாப்பு மையம், விருத்தாச்சலம்

சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்க வேண்டிய நூல்களின் பட்டியல்!

43

டதுசாரி – முற்போக்கு – சமூக அக்கறை கொண்ட அரசியலில்ஆர்வமும், துடிப்பும் மிக்க தோழர்களுக்காகவும், நண்பர்களுக்காகவும் இந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் அவசியம் வாங்கி படிக்க வேண்டிய நூல்களின் பட்டியலை பதிப்பகம் வாரியாக இங்கு தந்திருக்கிறோம். ஆனால், இந்தப் பட்டியல், இறுதியானவை அல்ல. ஏனெனில், பல பதிப்பகங்கள் இன்னமும் விலைப்பட்டியலை கொண்டு வரவில்லை. சிலர் அச்சுக்கு சென்றிருப்பதாக குறிப்பிட்டார்கள். வேறு சிலர், விலைப்பட்டியலை கொண்டு வரும் எண்ணம் இல்லை என்றார்கள். ‘நீங்களாக பார்த்து விவரங்களை எழுதிக் கொள்ளுங்கள்…’ என்பதே பல பதிப்பகங்களின் பதிலாக இருந்தது.

இந்த நடைமுறை சிக்கலுடனேயே இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டிருப்பதால், விடுப்பட்ட நூல்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. தவிர, பாதுகாக்க வேண்டிய சில நூல்களை கொண்டு வந்த பதிப்பகங்கள், பொருளாதாரம் அல்லது வேறு காரணங்களால் இந்தக் கண்காட்சியில் தனியாக ஸ்டால் போடவில்லை. பதிலாக, தாங்கள் வெளியிட்ட நூல்களை பிற பதிப்பகங்களில் வைத்து விற்க முடிவு செய்திருக்கிறார்கள். முடிந்தவரை அப்படி விற்கப்படும் நூல்களின் விவரங்களையும் இந்தப் பட்டியலில் சேர்த்திருக்கிறோம்.

இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டே இந்தப் பட்டியலை படிக்கும்படி தோழர்களிடமும், நண்பர்களிடமும் கேட்டுக் கொள்கிறோம். விடுப்பட்ட நூல்கள் குறித்த விவரங்களை மறுமொழியில் தெரியப்படுத்தினால், அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்க வேண்டிய நூல்களின் பட்டியல்!கண்காட்சி நடக்கும் இடம், மொத்தம் 10 சாலைகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு சாலையின் தொடக்கத்திலும், முடிவிலும் எண்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. எனவே, இந்தப் பட்டியலும் சாலைகளின் எண்கள் அடிப்படையிலேயே அமைந்திருக்கின்றன. அதேபோல் அரசியல், வரலாறு, தத்துவம், கலை இலக்கியங்கள், அறிவியல்… என்றெல்லாம் பிரித்து வகைப்படுத்தாமல், பதிப்பகம் அல்லது விற்பனையகம் சார்ந்தே நூல்களின் விவரங்களை தந்திருக்கிறோம்.

இந்தப் பட்டியலில் உள்ள நூல்களில் 90%, ‘கீழைக்காற்றுஅரங்கில் கிடைக்கும்.

இனி –

———————-

சாலை எண்: 1

. அலைகள் (எண்: 22)

1. சியாங் சிங்: ஒரு கம்யூனிஸ்ட் தலைவரின் புரட்சிகர இலட்சியம் – ஜாஃபியா ராயன் – ரூ. 70/- (இந்த சியாங் சிங், தோழர் மாவோவின் துணைவியார்)

2. தத்துவத்தின் வறுமை – காரல் மார்க்ஸ் – ரூ. 135/-

3. மதம் பற்றி – லெனின் – ரூ. 70/-

4. சோசலிசமும் போரும் – லெனின் – ரூ. 50/-

5. மகாத்மா புலே – தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் (தமிழில்: சிங்கராயர்) – ரூ. 100/-

6. காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு – தமிழில் ஆ.சீனிவாசன் – ரூ. 750/-

(இதே நூலை நியூ செஞ்சுரி புத்தக நிலையமும் வெளியிட்டுள்ளது. கடைசி இரு அத்தியாயங்கள் மட்டும் குருசேவ் கால திரிபுவாத கருத்துக்களை கொண்டவை. எந்தெந்த காலகட்டத்தில் மார்க்ஸ், என்னென்ன நூல்களை, எந்தச் சூழலில் எழுதினார் என்பதை புரிந்து கொள்ள இந்த நூல் உதவும்)

7. இந்தியத் தொழிலாளி வர்க்கம் உருவாகி வளர்ந்த வரலாறு – சுகுமால்சென் (தமிழில்: வீ.பா.கணேசன்) – ரூ. 450/-

8. கறுப்பு அடிமைகளின் கதை (UNCLE TOM’S CABIN) – ஹேரியட்பீச்சர் ஸ்டவ் (தமிழில்: வான்முகிலன்) – ரூ. 280/-

9. அம்பேத்கருக்குப் பிந்தைய தலித் இயக்கங்கள் – ஆனந்த் டெல்டும்ப்டே (தமிழில்: மயிலை பாலு) – ரூ. 50/-

10. வரலாற்று நோக்கில் ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும் – எம்.ஆர்.அப்பன் (தமிழில்: மயிலை பாலு) – ரூ. 230/-

11. இந்திய மக்கள்: மதம் – பழக்க வழக்கங்கள் – நிறுவனங்கள் – அபே.ஜெ.எ.துபுவா (தமிழில்: வி.என்.ராகவன்) – ரூ. 260/-

12. இந்தியத் தத்துவ மரபும் மார்க்சிய இயக்கவியலும் – நா.வானமாமலை – ரூ. 100/-

13. தமிழகத்தில் சாதி சமத்துவ போராட்டக் கருத்துகள் – நா.வானமாமலை – ரூ. 30/-

14. பண்டைய வேதத் தத்துவங்களும் வேத மறுப்புப் பெளத்தமும் – நா.வானமாமலை – ரூ. 35/-

15. இந்திய நாத்திகமும் மார்க்சிய தத்துவமும் – நா.வானமாமலை – ரூ. 25/-

16. மார்க்சிய அறிவுத் தோற்றவியல் – நா.வானமாமலை – ரூ. 35/-

17. விஞ்ஞானத் தொழில்நுட்பப் புரட்சி – நா.வானமாமலை – ரூ. 40/-

18. வரலாறும் வக்கிரங்களும் – ரொமிலா தாப்பர் (தமிழில் நா.வானமாமலை) – ரூ. 35/-

19. கற்பனை செய்யப்பட்ட சமயச் சமூகங்களா? – ரொமிலா தாப்பர் (தமிழில்: வான்முகிலன்) – ரூ. 25/-

20. ஆளும் வர்க்கமாக அறிவுஜீவிகள் – அசோக்ருத்ரா (தமிழில்: வான்முகிலன்) – ரூ. 30/-

21. பெளத்தத்தின் சமூக தத்துவமும் சமத்துவமின்மைப் பிரச்னையும் – உமா சக்கரவர்த்தி (தமிழில்: வான்முகிலன்) – ரூ. 25/-

22. அறிவியல், தத்துவம், சமுதாயம் – தேவிபிரசாத் சட்டோபாத்யாயா (தமிழில்: அ.குமரேசன்) – ரூ. 35/-

23. இந்தியாவின் தேசிய இனச்சிக்கலும் ஆளும் வர்க்கங்களும் – சுனிதி குமார் கோஷ் (தமிழில்: திருமலை) – ரூ. 35/-

24. உலகை குலுக்கிய பத்து நாட்கள் – ஜான் ரீடு (தமிழில்: ரா.கிருஷ்ணையா) – ரூ. 250/-

(இதே நூலை நியூ செஞ்சுரி புத்தக நிலையமும் வெளியிட்டிருக்கிறது)

25. இந்தியத் தத்துவ இயல் – ஓர் எளிய அறிமுகம் – தேவிபிரசாத் சட்டோபாத்யாயா (தமிழில்: வி.என்.ராகவன்) – ரூ. 150/-

26. மாப்ளா கிளர்ச்சியும் அதன் தோற்றுவாயும் – கான்ராட் உட் (தமிழில்: மு.இக்பால் அகமது) – ரூ. 130/-

27. இந்தியாவில் பெண்கள் இயக்கம் 1940 – 1950 – ரேணு சக்கரவர்த்தி (தமிழில்: நா.தர்மராஜன்) – ரூ. 50/-

28. பிரெடெரிக் எங்கெல்ஸ் – டாக்டர் ஸ்தெபானாவா (தமிழில்: வ.சண்முகசுந்தரம்) – ரூ. 100/- (எங்கெல்சின் வாழ்க்கை வரலாறு)

29. இந்தியப் பெருமுதலாளி வர்க்கம் – சுனிதிகுமார் கோஷ் (தமிழில்: வெ.கோவிந்தசாமி) – 125/-

30. உழைக்கும் மக்களின் முன்னணிப் படை – ஏ.ஷாஜின் (தமிழில்: வி.என்.ராகவன்) – ரூ. 30/-

31. தொழிற்சங்கங்களைப் பற்றி காரல் மார்க்ஸ் – ஏ.லாவோவஸ்கி (தமிழில்: எஸ்.ராமகிருஷ்ணன்) – ரூ. 70/-

32. சீன வானில் சிவப்பு நட்சத்திரம் (RED STAR OVER CHINA) – எட்கர் ஸ்நோ (தமிழில்: வீ.பா.கணேசன்) – ரூ. 375/-

33. மாயையும் எதார்த்தமும் – டி.டி.கோசாம்பி (தமிழில்: வி.என்.ராகவன்) – ரூ. 110/-

34. நேரில் கண்ட ரஷ்யப்புரட்சி – ஆ.ரைஸ்வில்லியம்ஸ் (தமிழில்: பூ.சோமசுந்தரம்) – ரூ. 140/-

35. வரலாறு என்றால் என்ன? – ஈ.எச்.கார் (தமிழில்: நா.தர்மராஜன்) – ரூ. 80/-

36. ஆதிசங்கரரின் மக்கள் விரோதக் கருத்துக்கள் – கன்னடம்: பகவான் (தமிழில்: முனைவர் சி.சண்முகம்) – ரூ. 55/-

37. மாவோவின் நெடும்பயணம் (THE LONG MARCH) – DICK WILSON (தமிழில்: நிழல் வண்ணன்) – ரூ. 175/-

38. மார்க்ஸ் – எங்கெல்ஸ் மேற்கோள்கள் – தொகுப்பு: சி.இளங்கோ – ரூ. 40/-

39. சென்னை பெருநகர தொழிற்சங்க வரலாறு – தே.வீரராகவன் (தமிழில்: ச.சீ.கண்ணன், புதுவை ஞானம்) – ரூ. 150/-

40. இளமையின் கீதம் (சீன நாவல்) (THE SONG OF YOUTH) – YANG MO (தமிழில்: மயிலை பாலு) – ரூ. 300/-

41. சூறாவளி (சீன நாவல்) (THE HURRICANE) – CHO LI – P0 (தமிழில்: மயிலை பாலு) – ரூ. 200/-

42. சீனா: ஒரு முடிவுறாத போர் – வில்லியம் ஹிண்டன் (தமிழில்: கி.இரமேஷ்) – 100/- (கலாச்சார புரட்சி குறித்த வரலாறு)

43. இராணுவமும் அரசியலும் (ஜாக் வோடிஸ் எழுதிய நூலின் சுருக்கம்) – நா.தர்மராஜன் – ரூ. 50/-

முதல் பாதையின் முடிவில் திராவிடர் கழக பதிப்பகத்தின் கடை உள்ளது. இங்கு தந்தை பெரியாரின் நூல்களை வாங்கலாம்.

———

சாலை எண்: 2

. கீழைக்காற்று (எண்: 404 / 405)

1. ஈழப்போராட்டத்தின் எனது பதிவுகள்: பிரபாகரனோடு புலிகள் அமைப்பை ஆரம்பித்த நாட்கள்… – கணேசன் (அய்யர்) – ரூ. 130/-

2. பகத்சிங் சிறைப் போராட்டமும் அரிய ஆவணங்களும் – ஆவணங்கள் தொகுப்பு: சமன்லால் (பேராசிரியர், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்) தமிழில்: எஸ்.சம்பத் – ரூ. 15/-

3. படிப்பும் விடுதலைக்கான அறிவும் – தோழர் மருதையன் – ரூ. 15/-

4. நக்சல்பாரி புரட்சியின் இடிமுழக்கம் – ரூ. 12/-

5. தெராய் பிராந்திய விவசாயிகள் இயக்கம் பற்றிய அறிக்கை செப்டம்பர், 1968 – தோழர் கனுசன்யால் – ரூ. 15/-

6. மக்களிடையே நமது பணிகள் – கதீப் அன்சாரி – ரூ. 12/-

7. ஹூனான் விவசாயி இயக்கப் பரிசீலனை பற்றிய அறிக்கை – மாசேதுங் – ரூ. 50/-

8. கட்சி அமைப்பு பற்றி – ஸ்டாலின், காகனோவிர், டிமிட்ரோவ், மாவோ – ரூ. 50/-

9. ஐந்து அரங்குகளில் தேர்வை எதிர்கொள்வோம் – செள என் லாய் – ரூ. 10/-

10. முரண்பாடு பற்றி – மாவோ – ரூ. 40/-

11. கம்யூனிசக் கொடியின் கீழ் – ஜூலியஸ் ஃபூசிக் – ரூ. 7/-

12. போராடும் தருணங்கள் – தோழர் மருதையன் – ரூ. 40/-

13. லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் – ஸ்டாலின் – ரூ. 75/-

14. சினிமா: திரை விலகும்போது… – புதிய கலாச்சாரம் இதழில் வெளிவந்த சினிமா விமர்சனங்கள் – ரூ. 70/-

15. மீண்டும் தொழிலாளி வர்க்கம் (வினவு, புதிய கலாச்சாரம் கட்டுரைகள்) – ரூ. 80/-

16. அருந்ததிராய் – கரண்தபார் விவாதம் – தமிழில்: அனாமதேயன் – ரூ. 10/-

17. விடுதலைப் போரின் வீரமரபு – (புதிய கலாச்சாரம் காலனியாதிக்க எதிர்ப்பு சிறப்பிதழ் கட்டுரைகளின் தொக்கு) ரூ. 65/-

18. ஈராக் வரலாறும் அரசியலும் – கலையரசன் – ரூ. 15/-

19. நினைவின் குட்டை நதி (சுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம்) – ரூ. 70/-

20. நிஜத்தின் உரைகல்லில் சினிமா (வினவு, புதிய கலாச்சாரம் இதழ்களில் வெளிவந்த திரை விமர்சனங்கள்) – ரூ. 110/-

21. ஆகஸ்டு 15, 1947: அதிகாரமாற்றம்: உண்மையா… சடங்கா? – சுனிதிகுமார் கோஷ் – ரூ. 25/-

22. பரமக்குடி துப்பாக்கிச் சூடு செப்.11, 2011, உண்மை அறியும் குழு அறிக்கை – ரூ. 15/-

23. நான் நாத்திகன் ஏன்? – பகத்சிங் – ரூ.

24. ’பாரதி’ய ஜனதா பார்ட்டி – வே.மதிமாறன் – ரூ.50

25. பாரதி பக்தர்களின் கள்ள மெளனம் – தோழர். மருதையன் – ரூ.40

26. ஆப்பிரிக்கர்கள் கண்டு பிடித்த இருண்ட ஐரோப்பா – கலையரசன் – ரூ. 50/-

27. காஷ்மீர் யாருக்கு சொந்தம்? – ரூ. 25/-

28. அமெரிக்க நெருக்கடி முதலாளித்துவத்துக்கு சவுக்கடி! (அமெரிக்கப் பொருளாதார நெருக்கடியும் இந்தியாவில் அதன் பாதிப்புகளும் – ரூ.30/-

29. கம்யூனிஸ்டு அறிக்கையின் கதை – ரூ. 7/-

30. கடவுள் கைது பக்தன் விடுதலை – வினவு – புதிய கலாச்சாரம் கட்டுரைகள் ரூ. 25/-

31. இட ஒதுக்கீடு – ஒரு மார்க்சிய லெனினிய பார்வை – புதிய ஜனநாயகம்- ரூ. 30/-

32. சட்டக்கல்லூரி கலவரம்: சாதியம் ஒழிப்போம்! தமிழகம் காப்போம்! – வினவு – ரூ. 35/-

33. ஜீன்ஸ் பேண்டும் பாலியல் வன்முறையும் – வினவு – ரூ. 25/-

34. ஐ.டி.துறை நண்பா… – வினவு – ரூ. 35/-

35. மும்பை 26/11 விளக்கமும் விவாதமும் – வினவு- ரூ. 35/-

36. ஜெயமோகன், சாரு நிவேதிதா, காலச்சுவடு, சுகுமாரன், உயிரோசை, சோல்சனிட்சின் இலக்கிய மொக்கைகள் – வினவு – ரூ. 25/-

37. எண்டோசல்பானையும் பி.டி.கத்திரிக்காயையும் விரட்டி அடிப்போம்! – ரூ. 10/-

38. பெண் எப்போது பெண்ணாக இருந்தாள்? – வினவு -ரூ. 55/-

39. இமாலய சாகசம்: 1962 இந்திய சீனப் போர்: காரணங்களும் விளைவுகளும் – சுனிதிகுமார் கோஷ் – ரூ. 30/-

40. இசை: போதை பொழுதுபோக்கு போராட்டம் – புதிய கலாச்சார கட்டுரைகள் – ரூ. 40/-

41. இந்தியாவில் சாதிகள் (பாவை வெளியீடு) – அண்ணல் அம்பேத்கர் – ரூ. 30/-

. தோழமை (எண்: 385)

1. மார்க்சியமும் மொழியியல் தேசிய இனப் பிரச்னைகளும் – ஸ்டாலின் – (தொகுப்பு: மகாராசன்) – ரூ. 130/-

2. ஒரு கோப்பை தண்ணீர் தத்துவமும் காதலற்ற முத்தங்களும் – லெனின், க்ளாரா ஜெட்கின் உரையாடல் – (தொகுப்பு: மகாராசன்) – ரூ. 100/-

. பொன்னி (எண்: 397)

1. வீரத்தெலங்கானா ஆயுதபோராட்டமும் அதன் படிப்பினைகளும் – சுந்தரய்யா (தமிழில்: தியாகு) – ரூ. 400/-

2. சிறைக் கடிதங்கள் (கம்பிகளுக்குள்ளிருந்து இயற்கையை நேசிக்க வைக்கும் கடிதங்கள்) – ரோசா லக்சம்பர்க் – ரூ. 50/-

3. இந்துமதக் கொடுங்கோன்மை வரலாறு (புரோகித ஆதிக்கத்தில் புதையுண்ட இந்திய வரலாறு) – தர்மகீர்த்தி அடிகள் (தமிழில்: வெ.கொ.பாலகிருஷ்ணன்) – ரூ. 120/-

4. அம்பேசிவம் (கூர்மைப்படுத்தப்பட்ட நாத்திகவாதக் கட்டுரைகள்) – குத்தூசி குருசாமி – ரூ. 50/-

5. வால்மீகி இராமாயணம் (மறைக்கப்பட்ட உண்மை இராமாயணம்) – குருவிக்கரம்பை வேலு – ரூ. 100/-

6. பூமணியின் 5 நாவல்கள் (பிறகு, வெக்கை, நைவேத்தியம், வாய்க்கால், வரப்புகள்) – ரூ. 300/-

7. அம்பாரம் (பூமணியின் 51 சிறுகதைகள் அடங்கிய பெருந்தொகுப்பு) – பூமணி – ரூ. 225/-

—————-

சாலை எண்: 3

. அம்பேத்கர் ஃபவுண்டேஷன்ஸ்

1. அண்ணல் அம்பேத்கரின் அனைத்து ஆக்கங்களும் 37 தொகுதிகளாக தமிழில் கிடைக்கிறது. கைவசம் பிரதிகள் இல்லாததால் தொகுதி 8, 11, 22 ஆகிய மூன்றும் விற்பனைக்கு இல்லை. மீதமுள்ள 34 தொகுதிகளையும் ரூ. 1400/-க்கு வாங்கலாம். ஒருவேளை சில தொகுதிகள் பேப்பர் பேக் ஆக இருந்தால், இந்தத் தொகை உயரும்.

. காலச்சுவடு (எண்: 11 / 12)

1. கிறிஸ்தவமும் தமிழ்ச்சூழலும் – ஆ.சிவசுப்பிரமணியன் – ரூ. 100/-

2. நொறுங்கிய குடியரசு – அருந்ததி ராய் (தமிழில்:க.பூர்ணச்சந்திரன்) – ரூ. 145/-

3. அறியப்படாத தமிழகம் – தொ.பரமசிவன் – ரூ. 100/-

4. மணல்மேல் கட்டிய பாலம் – சு.கி.ஜெயகரன் – ரூ. 100/-

5. கோவில் – நிலம் – சதி – பொ.வேல்சாமி – ரூ. 90/-

6. பொற்காலங்களும் இருண்ட காலங்களும் – பொ.வேல்சாமி – ரூ. 180/-

7. பண்பாட்டு அசைவுகள் – தொ.பரமசிவன் – ரூ. 150/-

8. மந்திரமும் சடங்குகளும் – ஆ.சிவசுப்பிரமணியன் – ரூ. 150/-

9. குமரி நிலநீட்சி – சு.கி.ஜெயகரன் – ரூ. 100/-

10. தமிழகத்தில் அடிமைமுறை – ஆ.சிவசுப்பிரமணியன் – ரூ. 80/-

————

சாலை எண்: 4

. விடியல் (எண்: 306 / 307)

1. இந்திய வரலாறு ஓர் அறிமுகம் – டி.டி.கோசாம்பி (தமிழில்: சிங்கராயர்) – ரூ. 350/-

2. இந்தியா ஒரு வல்லரசு: வேடிக்கையான கனவு – அருந்ததிராய் – ரூ. 30/-

3. ஏகாதிபத்தியத்தின் கிடுக்கிப்பிடியில் இந்திய வேளாண்மை – சுனிதிகுமார் கோஷ் (தமிழில்: நிழல்வண்ணன்) – ரூ. 70/-

4. வனம் எழுதும் வரலாறு (மாவோயிஸ்ட் கெரிலாக்களுடன் பஸ்கர் காட்டில் தங்கிய அனுபவம்) – சத்நாம் – ரூ. 130/-

5. இந்திய வரலாற்றில் பகவத் கீதை – பிரேம்நாத் பசாஸ் – ரூ. 500/-

6. கோபுரத்தை உலுக்கிய காற்று மற்றும் அதிகாலை பெருவெள்ளம் – ஹேன்சூயின் – (இரு நூல்களும் சேர்த்து) ரூ. 1000/-  (எட்கர் ஸ்நோ எழுதிய நூல்கள் மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆவணங்கள் அடிப்படையில் எழுதப்பட்ட தோழர் மாவோவின் வாழ்க்கை வரலாறு. அதன் வழியாக சீனாவின் வரலாறு)

7. நீண்ட புரட்சி – எட்கர் ஸ்நோ – ரூ. 175/- (‘சீனவானில் சிவப்பு நட்சத்திரம்’ என்ற புகழ்பெற்ற நூலை ஸ்நோ, 1930களின் இறுதியில் எழுதினார். அதன் பிறகு அவர் மாவோவை 1970களில் சந்தித்தபோது எழுதிய நூல் இது)

8. மார்க்ஸ் முதல் மாசேதுங் வரை – ஜார்ஜ் தாம்சன் (தமிழில்: எஸ்.வி.ஆர்.) – ரூ. 80/-

9. மனித சாரம் – ஜார்ஜ் தாம்சன் (தமிழில்: எஸ்.வி.ஆர்.) – ரூ. 100/-

10. முதலாளியமும் அதன் பிறகும் சரக்கு உற்பத்தியின் தோற்றமும் வீழ்ச்சியும் – ஜார்ஜ் தாம்சன் (தமிழில்: எஸ்.வி.ஆர்.) – ரூ. 75/-

11. சமயம் பற்றி – ஜார்ஜ் தாம்சன் (தமிழில்:  ) – ரூ. 25/-

(ஜார்ஜ் தாம்சனின் இந்த நான்கு நூல்களையும் வாசித்தால் ஓரளவு மார்க்சியத்தின் அடிப்படைகளை தெரிந்து கொள்ளலாம்.)

12. மாஓ சேதுங்: தேர்ந்தெடுக்கப்பட்ட இராணுவப் படைப்புகள் – ரூ. 200/-

13. இந்தியாவும் பிரிட்டிஷ் ஆட்சியும் 1919 – 1947 (1) – சுனிதிகுமார் கோஷ் (தமிழில்: சிங்கராயர்); இந்தியாவும் பிரிட்டிஷ் ஆட்சியும் 1919 – 1947 (2) – சுனிதிகுமார் கோஷ் (தமிழில் நிழல்வண்ணன்) – இரு தொகுதிகளும் சேர்த்து ரூ. 600/-

14. தத்துவம்: பேக்கன் முதல் மார்க்ஸ் வரை – தேவிபிரசாத் சட்டோபாத்யாயா (தமிழில்: மு.வசந்தகுமார்) – ரூ. 35/-

15. சீனாவின் வரலாறு – வெ.சாமிநாதசர்மா – ரூ. 150/-

16. ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும் – ஆனந்த் டெல்டும்ப்டெ (தமிழில்: எஸ்.வி.ஆர்.) – ரூ. 135/-

17. மனிதன் – ஆர்.இராமநாதன் – ரூ. 65/- (62 ஆண்டுகளுக்கு முன் தமிழில் எழுதப்பட்ட நூல் இது. மனித குலத்தின் வளர்ச்சியை மார்க்சிய நோக்கில் எழுதப்பட்ட நூல் இது)

18. ஹோசிமின் – யெவ்கனி கொபலெவ் (தமிழில்: க.விஜயகுமார்) – ரூ. 150/-

19. சீனாவும் சோஷலிசமும்: சந்தை சீர்திருத்தமும் வர்க்கப் போராட்டமும் – மார்ட்டின்ஹார்ட் – லேண்ட்ஸ்பர்க் பால்பர்க்கட் (தமிழில்: க.செங்கோடன்) – ரூ. 100/-

20. 1942 ஆகஸ்ட் புரட்சி: மறைக்கப்பட்ட உண்மைகள் – சு.துரைசாமி – ரூ. 100/-

21. ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் – ஜான் பெர்கின்ஸ் (தமிழில்: இரா.முருகவேள்) – ரூ. 150/-

22. உயிரினங்களின் தோற்றம் (சுருக்கப்பட்ட வடிவம்) – சார்லஸ் டார்வின் (தமிழில்: ராஜ்கெளதமன்) – ரூ. 65/-

23. என் நினைவுகளில் லெனின் – கிளாரா ஸெத்கின் – ரூ. 50/-

24. உலகமயமாக்கல்: அடிமைத்தளையில் இந்தியா – அரவிந்த் (தமிழில்: வசந்தகுமார் – நிழல்வண்ணன்) – ரூ. 175/-

. அடையாளம் (எண்: 322 / 323)

1. எண்ணெய் அரசியல் – கேர்ரி ரீச் (தமிழில்: நா.தர்மராஜன்) – ரூ. 170/-

2. காக்கி உடையும் காவிக் கொடியும் – தபன் பாசு (தமிழில்: நா.தர்மராஜன்) – ரூ. 80/-

3. இஸ்லாத்தின் தோற்றமும் வளர்ச்சியும் – அஸ்கர் அலி எஞ்ஜினியர் (தமிழில்: ஐ.இசக்கி) – ரூ. 150/-

4. ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் – சி.புஸ்பராஜா – ரூ. 425/-

5. நான் ஏன் இந்து அல்ல – காஞ்சா அய்லய்யா – ரூ. 120/-

6. பதி பசு பாகிஸ்தான் – எஸ்.வி.ராஜதுரை – 80/-

7. இந்து இந்தியா – எஸ்.வி.ராஜதுரை – ரூ. 115/-

. பாரதி புத்தகாலயம் (எண்: 18 / 19)

1. இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு: ஆரம்ப ஆண்டுகள் (1920 – 33) தொகுதி 1 – ரூ. 180/-

2. மா சே துங்: ஒரு மனிதர், கடவுளல்லர் – குவான் யான்சி (தமிழில்: மிலிட்டரி பொன்னுசாமி) – ரூ. 140/-  (Foreign Languages Press, Beijing, China, 1992ல் வெளியிட்ட  MAO ZEDONG MAN, NOT GOD, By Quan Yanchi என்ற நூலின் தமிழாக்கம். மாவோவின் மெய்க்காப்பாளராக பல ஆண்ட்கள் பணிபுரிந்த லீயின் கியாயோவின் நினைவு கூர்தல்களை அடிப்படையாகக் கொண்ட நூல் இது. ஆனால், தவறான தமிழாக்கம், ஏராளமான எழுத்துப் பிழைகள். இதை பொறுத்துக் கொண்டுதான் இந்த நூலை வாசிக்க வேண்டும்)

3. ஒரு டிரில்லியனுக்கு எத்தனை ஜீரோ? குற்றவாளிக் கூண்டில் ஐ.எம்.எப் – உலக வங்கி – சூசன் ஜார்ஜ் – ரூ. 130/-

4. மார்க்சின் மூலதனம் பற்றி… – எங்கெல்ஸ் – ரூ. 70/-

5. சூறாவளியாய் தாக்கும் உலக நிதிமூலதனம் – என்.எம்.சுந்தரம் (தமிழில்: இலக்குவன்) – ரூ. 60/-

6, நிதி நெருக்கடி ஒரு புரிதல் – அமானுல்லாகான் (தமிழில்: இரா.இயேசுதாஸ்) – ரூ. 50/-

———-

சாலை எண்: 6

. சிலிக்குயில் (எண்: 277)

பிற பதிப்பகங்களின் நூல்கள் இங்கு கிடைக்கின்றன. குறிப்பாக மனிதன் பதிப்பகம்சார்பில் வெளிவந்த தோழர் கிஷன்ஜி‘, ‘தோழர் ஆசாத்உட்பட மாவோயிஸ்ட்டுகளின் நூல்களை இங்கு வாங்கலாம்.

தவிர, முகம் பதிப்பகம் வெளியிட்ட வரலாற்றில் கிறிஸ்தவம் (புரூனோ பெள்வரும் பழைய கிறிஸ்தவமும், பழைய கிறிஸ்தவத்தின் வரலாறு பற்றி, பின் இடைக்கால ஜெர்மனியில் திருச்சபை சீர்திருத்தமும் திருச்சபை எதிர்ப்பும் ஆகிய கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு) – பிரெடரிக் எங்கெல்ஸ் – நூலும் இங்கு கிடைக்கிறது. இதன் விலை: ரூ. 65/-

———–

சாலை எண்: 8

. தமிழ்ப் புத்தகாலயம் (எண்: 209 / 210)

1. வால்காவிலிருந்து கங்கை வரை – ராகுல்ஜி – ரூ. 350/-

2. பொதுவுடமை என்றால் என்ன? – ராகுல்ஜி – ரூ. 35/-

3. கலையும் இலக்கியமும் – மாசேதுங் – ரூ. 12/-

4. யுத்தம் வேண்டாம் – மாக்ஸிம் கார்க்கி – ரூ. 25/-

5. லெனினுடன் சில நாட்கள் – மாக்ஸிம் கார்க்கி – 24/-

6. அமெரிக்காவிலே… – மாக்ஸிம் கார்க்கி – ரூ. 45/-

7. எது நாகரீகம்? – மாக்ஸிம் கார்க்கி – ரூ. 30/-

8. தூக்கு மேடைக் குறிப்பு – ஜூலிஸ் பூசிக் – ரூ. 55/-

. நியூ செஞ்சுரி புத்தக நிலையம் (எண்: 53 / 54)

1. உலகாயதம் பண்டைய இந்தியாவின் ஆரம்பகால பொருள்முதல்வாத சிந்தனைகள் – தேவிபிரசாத் சட்டோபாத்யாயா (தமிழில்: சிங்கராயர்) – ரூ. 500/-

2. மதமும் சமூகமும் – தேவிபிரசாத் சட்டோபாத்யாயா (தமிழில்: சிசுபாலன்) – ரூ. 100/-

3. தமிழகத்தின் பொருளாதார வரலாறு – தேவ.பேரின்பன் – ரூ. 55/-

4. என் வாழ்க்கை – கே.என்.பணிக்கர் (தமிழில்: நா.தர்மராஜன்) – ரூ. 150/-

5. நவீனத்துவம் – தமிழ் – பின்நவீனத்துவம் – கார்த்திகேசு சிவதம்பி – ரூ. 130/-

6. மனித சமுதாயம் (வரலாற்று பொருள்முதல்வாதம் குறித்த எளிமையான விளக்கம்) – ராகுல் சாங்கிருத்யாயன் (தமிழில்: ஏ.ஜி.எத்திராஜுலு) – ரூ. 150/-

7. இந்துத் தத்துவ இயல், பெளத்தத் தத்துவ இயல், இஸ்லாமியத் தத்துவ இயல், ஐரோப்பியத் தத்துவ இயல், விஞ்ஞான லோகாயத வாதம்… ஆகிய ராகுல்ஜியின் நூல்கள் ரூ. 50/- முதல் ரூ. 70/-க்குள் தனித்தனியாக கிடைக்கின்றன.

8. மார்க்சிய மெய்ஞானம் – ஜார்ஜ் பொலீட்ஸ்கர் (தமிழில் ஆர்.கே.கண்ணன்) – ரூ. 55/-  இவை தவிர முன்னேற்ற பதிப்பகம் வெளியிட்ட பழைய ரஷ்ய நாவல்களில் பல, இப்போது நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடாக வந்துள்ளன. பல முக்கிய நூல்களை தேடித்தான் எடுக்க வேண்டும் என்பது இங்குள்ள குறை.

———

சாலை எண்: 10

. கருப்புப் பிரதிகள் (எண்: 119)

1. காசு ஒரு பிசாசு – கலையரசன் – ரூ. 75/-

2. குழந்தைப் போராளி – சைனா கெய்ரெற்சி – ரூ. 180/-

————

இவை தவிர –

சோவியத் கம்யூனிஸ்ட் (போல்ஷ்விக்) கட்சியின் வரலாறு (ரூ. 180/-), நிரஞ்சனா எழுதிய நினைவுகள் அழிவதில்லைநாவல் (விலை: ரூ. 60/-) உட்பட சவுத் விஷன் பதிப்பகம் வெளியிட்டுள்ள முக்கியமான நூல்கள் அனைத்தும் கீழைக்காற்றுமற்றும் பாரதி புத்தகாலயம்அரங்குகளில் கிடைக்கும்.

அதுபோலவே –

அருணன் எழுதி மதுரையிலுள்ள வசந்தம் வெளியீட்டகம் வெளியிட்டுள்ள –

1. தமிழரின்  தத்துவ மரபு (1) – ரூ. 170/-

2. தமிழரின் தத்துவ மரபு (2) – ரூ. 100/-

3. காலந்தோறும் பிராமணியம் (வேதகாலம் முதல் சோழர் காலம் வரை) (1) – ரூ. 150/-

4. காலந்தோறும் பிராமணியம் (சுல்தான்கள் + முகலாயர்கள் காலம் (2 & 3) – ரூ. 350/-

5. காலந்தோறும் பிராமணியம் (கிழக்கிந்திய கம்பெனி காலம்) (4) – ரூ. 150/-

6. காலந்தோறும் பிராமணியம் (பிரிட்டனின் நேரடி ஆட்சிக் காலம்) (5) – ரூ. 350/-

7. காலந்தோறும் பிராமணியம் (நேரு காலம்) (6) – ரூ. 250/-

ஆகிய நூல்களும் கீழைக்காற்றுமற்றும்பாரதி புத்தகாலயம்அரங்குகளில் கிடைக்கும்.

முடிவாக,

இங்கு வெளியிடப்பட்டுள்ள நூல்களின் பட்டியில் வாயிலாக பொதுவான இடதுசாரி அரசியல், பொருளாதாரம், இந்திய, தமிழக வரலாறு, சமூகம், சாதி, மதம் குறித்த ஆரம்ப அடிப்படைகளை கற்றுக் கொள்ளலாம். ஆசான்கள் தவிர்த்த நூல்களில் சில கராறான அரசியல் பார்வை இல்லாமல் இருந்தாலும் ஒரு அறிமுகம் என்ற வகையில் படிக்கலாம் என்பதால் அதையும் சேர்த்துள்ளோம்.

முல்லைப் பெரியாறு: சி.பி.எம்மின் துரோகம் – ஆதாரங்கள்!

11

முல்லைப் பெரியாறு பிரச்சனையில் கேரள அரசின் அடாவடித்தனத்துக்கு காரணமாகவும் துணையாகவும் இருப்பவர்கள் ‘தேசிய’ கட்சிகள் என்று அழைக்கப்படும் காங்கிரசு, பாஜக, மற்றும் சிபிஎம்.

காங்கிரசு, பாஜகவின் தேசிய முகமூடி காவிரி நதி நீர் பிரச்சனையிலேயே கிழிந்து விட்டது. கர்நாடகாவில் ஓட்டுப் பிடிக்கும் போட்டியில், வெளிப்படையாகவே கன்னட இனவெறி முழக்கங்களை முன் வைத்து காவிரி பிரச்சனையில் குட்டையைக் குழப்பியவர்தான் எடியூரப்பா. 2008ம் ஆண்டு கர்நாடக சட்டசபை தேர்தல் நேரத்தில் ஒகனேக்கல்லில் படகு விட்டு தனது தைரியத்தை கர்நாடக மக்களுக்கு நிரூபித்து ஆட்சிக் கட்டிலில் ஏறினார். ரெட்டி சகோதரர்களை அட்ஜஸ்ட் செய்து கொண்டது போல இதையும் நெகிழ்ந்து ஏற்றுக் கொண்டார்கள், இந்து தேசிய பாஜகவினர்.

இன்றைக்கு வெளியுறவுத் துறை அமைச்சராக இருப்பவரான ஐநா சபையில் வேறு நாட்டு அமைச்சரின் உரையைப் படித்துப் புகழ் பெற்ற எஸ் எம் கிருஷ்ணா, 1980களில் டெலிபோன் ஒட்டுக் கேட்பு தில்லுமுல்லு புகழ் இப்போதைய மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி, சமீபத்தில் இறைவன் அடி சேர்ந்த பங்காரப்பா என்று பலவகையான காங்கிரசு முதலமைச்சர்கள், காவிரி பாசனப் பகுதி விவசாயிகளின் நியாயமான உரிமையை மறுப்பதில் தீவிரத்தைக் காட்டிதான் கர்நாடகாவில் தேர்தல் அரசியல் நடத்தினார்கள். அதற்கு அகில இந்திய காங்கிரசு தலைமையின் ஆசீர்வாதமும் முழுமையாக இருந்தது.

“காங்கிரசும் பாஜகவும் பிற்போக்கு கட்சிகள், அவர்கள் அப்படித்தான் அரசியல் செய்வார்கள், சிபிஐ(மார்க்சிஸ்டு) என்ற பெயரில் இயங்கும் கட்சி அறிவியல் பூர்வமாக நியாயத்தின் சார்பாக பேசும்” என்று சிலர் எதிர்பார்த்திருக்கலாம். “88 வயதிலும் மக்கள் பணி ஆற்றி வரும் வி எஸ்  அச்சுதானந்தனைப் போல, அவருடன் உட்கட்சி லாவணி நடத்தும் பினரயி விஜயனைப் போல ‘மார்க்சிசத்தைக்’ கரைத்துக் குடித்த காம்ரேடுகள், ‘நம்ம மாநிலம், நமக்கு ஓட்டு’ என்ற குறுகிய பார்வையை விடுத்து, அறிவியல் நோக்கில் உண்மைகளை ஆராய்ந்து விவசாயிகளின் நலனுக்குத் துணை நிற்பார்கள்” என்று நினைத்திருக்கலாம்.

மார்க்சிசம் என்பது கட்சியின் பெயரில் மட்டும்தான், கம்யூனிசம் என்பது நிதி திரட்டவும், ஓட்டுப் பிடிக்கவும் பயன்படுத்தும் வெற்றுச் சொல்தான் என்ற போலி கம்யூனிஸ்டு கொள்கையில் தேறி விட்டிருக்கும் காம்ரேடுகள் அத்தகைய ‘மாயை’களுக்குள் சிக்கியிருக்கவில்லை.

1979 முதல் கடந்த 30 ஆண்டுகளாக முல்லைப் பெரியாறு நீரில், தென் தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதார உரிமைகளை கேரளம் தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்த ஆண்டுகளில் சிபிஎம் முதலமைச்சர்களாக பி கே வாசுதேவன் நாயர், ஈ கே நாயனார், வி எஸ் அச்சுதானந்தன் என்று மாற்றி மாற்றி ஆட்சி நடத்தியிருக்கிறார்கள். ‘சமூக அரசியல் பிரச்சனைகளுக்கு நடைமுறை தரவுகளை ஆராய்ந்து அறிவியல் பூர்வமாக உழைக்கும் மக்களது நலனுக்காக ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும்’ என்பதை எல்லாம் மறந்து விட்ட அந்தப் போலி கம்யூனிஸ்டுகள், முல்லைப் பெரியாறு பிரச்சனையை உருவாக்கி உயிரோடு வைத்திருப்பதன் மூலம் தமது தேர்தல் அரசியல் ஆதாயங்களை உறுதி செய்து கொள்கிறார்கள்.  காங்கிரசுடன் ஓட்டுப் பொறுக்குவதில் போட்டி போடும் அரசியலில் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்!

முல்லைப் பெரியாறு பிரச்சனையில் கடந்த ஒரு மாதமாக கேரள சிபிஎம் தலைவர்களின் தேர்தல் அரசியலையும், மத்திய பொலிட்பீரோவின் இரட்டை முகத்தையும் அம்பலப்படுத்திய சில செய்திகளைப் பார்க்கலாம்.

நவம்பர் மாத இறுதியில் கேரளாவில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ‘முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. (டைம்ஸ் ஆப் இந்தியா, நவம்பர் 26, 2011)

‘அப்படிக் குறைத்தால் அணை நீரைச் சார்ந்து விவசாயம் செய்யும் தமிழகத்தின் தென் மாவட்டங்களின் விவசாய நிலங்கள் பாலைவனமாகி விடும்’ என்ற எளிய உண்மையைக் கூட எடுத்துச் சொல்லத் முடியாமல் மந்தையோடு பள்ளத்தில் குதித்தார்கள் போலி கம்யூனிஸ்டுகளின் கேரள தலைவர்கள்.

அதைத் தொடர்ந்து, ‘மத்திய அரசு முல்லைப் பெரியாறு பிரச்சனையில் தலையிட்டு ஒத்தக் கருத்தை ஏற்படுத்த வேண்டும்’ என்று சிபிஎம் தலைவர் பினராய் விஜயன் வலியுறுத்தினார். (டைம்ஸ் ஆப் இந்தியா, நவம்பர் 26, 2011)

அணை பாதுகாப்பாக இருக்கிறது அல்லது பாதுகாப்பாக இல்லை என்ற கேள்வியில் பேச்சு வார்த்தை நடத்தவோ, சமரசம் செய்யவோ என்ன இருக்கிறது. அணை பாதுகாப்பானது என்று பல்வேறு வல்லுனர் குழுக்கள் அறிக்கை அளித்திருக்கிறார்கள். அறிவியலுக்கு கேரளா, தமிழ்நாடு என்று பிரிவினையும், உணர்ச்சியும் இருக்க முடியுமா என்ன? தமிழக பொறியாளர்கள் தயாரித்திருக்கும் வீடியோவில் முல்லைப் பெரியாறு அணை இடிவதற்கு வாய்ப்பில்லை, கற்பனையாக இடிந்து போவதாக வைத்துக் கொண்டாலும் அந்த அணையின் முழுநீரும் மதகு வழியாக இடுக்கி அணைக்குத்தான் வருமே அன்றி மூன்று மாவட்ட மக்களுக்கு எந்த சேதமும் ஏற்படாது என்று அறிவியல் ரீதியாக நிரூபித்திருக்கிறார்கள்.

‘சனி பகவானுக்கு திருநள்ளாறில் பூசை செய்தால் உக்கிர பார்வை குறைந்து பிழைத்துப் போகும்படி விட்டு விடுவார்’ என்று பக்தர்கள் நம்புவது போல போல, இரண்டு மாநிலங்களிலும் ஓட்டுக்கு பங்கம் வந்து விடாமல் அறிவியலின் உக்கிரத்தை மட்டுப்படுத்த பிரதம மந்திரியை அழைப்பதுதான் போலி கம்யூனிஸ்டுகளின் விஞ்ஞானப் பார்வை. ‘கொஞ்சம் பேச்சு வார்த்தை நடத்தி அறிவியலை ‘சமரசம்’ செய்து கொள்ள வைத்தால் கேரளத்தில் இன்னும் சில ஆயிரம் ஓட்டுக்களை தேத்தலாம் என்ற நப்பாசைதான்’ இந்த ஒத்தக் கருத்தை ஏற்படுத்த விளையும் ஆர்வத்தின் பின்னணி.

மக்களிடையே பயத்தைப் பரப்பி பிரச்சனையின் தீவிரத்தை அதிகப்படுத்திய சூழ்நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைக்கக் கோரி சிபிஐ சட்டசபை உறுப்பினர் காலவரையற்ற உண்ணாவிரதத்தை அறிவித்தார். (தி ஹிந்து, நவம்பர் 27, 2011)..

இங்கே முல்லைப் பெரியாறு அணையின் தமிழக உரிமைக்காக தமிழக காம்ரேடுகள் உண்ணா நோன்பிருக்கிறார்கள். இப்படி உண்ணவிரதமிருந்து சண்டை போடுவதற்கு பதில் ஆளுக்கொரு குண்டாந்தடியோடு சண்டை போட்டால் அது பொருத்தமாக இருக்கும்.

நாடாளுமன்றத்தின் மையப்பகுதிக்குள் சென்று கலவரம் நடத்தும் கும்பலில் கலந்து கொண்டு தமது மார்க்சிய தகுதிகளை நிரூபித்துக் காட்டினார்கள் கேரள சிபிஎம் உறுப்பினர்கள்.  முன்னதாக நாடாளுமன்றத்துக்கு வெளியில் நடந்த தர்ணாவிலும் கலந்து கொள்ள மறக்கவில்லை. (ஐபிஎன் லைவ், நவம்பர் 29, 2011)

இல்லை என்றால் கம்யூனிச அகிலத்திலிருந்து இவர்களை ஒதுக்கி வைத்திருக்கும் அபாயம் இருந்தது.

இதற்கிடையில் சிபிஎம் பொலிட்பீரோ கூடி வரலாற்றுச் சிறப்பு மிக்க வெண்டைக்காய் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. தமிழ்நாட்டில் தேமுதிக போன்ற புரட்சிகர கட்சிகளுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு சில பல உள்ளாட்சி பதவிகளைக் கைப்பற்றி பூரித்திருந்த தமிழ்நாடு கிளையினர் அந்த ஆதாயத்தை விட்டுக் கொடுக்க விரும்பாமல் வாதிட, கேரளத்தில் ஆட்சிப் பொறுப்பே பிடிக்கும் வாய்ப்பிருப்பதை கெடுத்துக் கொள்ளாமல் அந்த கிளை வாதாட, இயற்கையுடன் பேரம் பேசி கடைசியாக தீர்மானம் ஒரு முடிவு எடுத்தார்கள். (டைம்ஸ் ஆப் இந்தியா, டிசம்பர் 3, 2011)

அணையின் பாதுகாப்பை இரண்டாம் பட்சமாக வைத்து தமிழ்நாட்டின் தண்ணீர் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுப்பதாக பொலிட்பீரோ சொன்னது. முல்லைப் பெரியாறு பிரச்சனையில் சிபிஎம்மின் நிலை இரண்டு கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. முதலாவதாக முல்லைப் பெரியாறு அணை தமிழ்நாட்டின் தேவைகளுக்கு தண்ணீர் வழங்குகுவதால் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தொடர்ந்து தண்ணீர் கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும். இரண்டாவதாக, கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் இருக்கும் 116 ஆண்டு அணையின் பாதுகாப்பு. ஆனால் டிசம்பர் 13ம் தேதிக்குள் இந்த நிலைப்பாடு ‘இரண்டு மாநிலங்களுக்கு இடையே வேறுபாடுகளை உருவாக்கியிருக்கும் முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சனைக்கு அணையின் பாதுகாப்பையும் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வழங்குவதையும் கருத்தில் கொண்டு தீர்வு காணப்பட வேண்டும்’ என்று மாறியது. (ஐபின் லைவ், டிசம்பர் 19, 2011)

‘முல்லைப்பெரியாறு அணையின் வலுவைப் பற்றிக் கவலைப்படுவதாகவும் பிரதம மந்திரி தலையிட்டு சுமுகமாக பிரச்சனையைத் தீர்த்து வைக்க வேண்டும்’ என்று பொலிட்பீரோ சொன்னது. பினராயி விஜயன் அணை விவகாரத்தில் சிபிஎம் கேரள அரசுக்கு முழு ஆதரவை அளித்திருப்பதாகச் சொன்னார். சில சக்திகள் மக்களிடையே குழப்பத்தை உண்டாக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். ‘சிபிஎம் பொலிட்பீரோ கேரளாவின் கோரிக்கைகளுக்கு எதிராக நிலைப்பாடு எடுத்தது’ என்ற கேள்விக்கே இடமில்லை என்று உறுதியளித்தார். (என்டிடிவி, டிசம்பர் 7, 2011)

‘கேரள அரசு சூரியன் மேற்கே உதிக்கிறது’ என்று சொன்னால் கூட அதற்கு எதிரான நிலைப்பாட்டை பொலிட் பீரோ எடுத்து விட முடியுமோ! ஒரு மாநிலத்தில் வோட்டுப் பொறுக்கி ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பை அவ்வளவு சீக்கிரம் விட்டுக் கொடுத்து விட முடியுமா என்ன!

இதற்கிடையில் கேரள அட்வகேட் ஜெனரல் ‘முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பாகத்தான் இருக்கிறது’ என்ற உண்மையை கேரள உயர்நீதிமன்றத்தில் சொல்லி விட்டார்.

‘கேரள உயர்நீதிமன்றத்தில் அட்வகேட் ஜெனரல் அணை உறுதியாக இருப்பதாக சமர்ப்பித்த அறிக்கையை ஆதரித்தது ஏன்’ என்று அமைச்சர்  திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணனை கேள்வி கேட்டார் விஜயன். (என்டிடிவி, டிசம்பர் 7, 2011)

அது எப்படி 2+2=4 என்று சொல்லியிருக்கலாம் ‘அவரை சட்டசபைக்கு அழைத்து விளக்கம் கேட்க வேண்டும்’ என்று சிபிஎம் தலைவர் கொடியேறி பாலகிருஷ்ணன் சாமியாடினார். சட்டசபைக்கு அழைத்து விட்டால் 2+2=4.5 என்று மாற்றிச் சொல்ல வைத்து விடலாம் என்று அவர் எதிர்பார்த்திருக்கலாம்.

‘முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பானதுதான் என்று உயர்நீதிமன்றத்தில் அட்வகேட் ஜெனரல் கே பி தண்டபாணி கருத்து சொன்னதற்கு பொறுப்பேற்று வருவாய்த் துறை அமைச்சர் திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணன் பதவி விலக வேண்டும்’ என்று எதிர்க்கட்சித் தலைவர் வி எஸ் அச்சுதானந்தன் கோரிக்கை விடுத்தார்.

அறிவியலைக் கூட கிளாசை கட் அடித்ததால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று விட்டு விடலாம், ‘பொலிட் பீரோ எடுத்த முடிவுக்கு எதிராக மற்ற உறுப்பினர்கள் பொதுவில் பேசக் கூடாது’ என்று கீழ்மட்டத் தொண்டனுக்கும் எளிதாகப் புரியக் கூடிய ஒழுக்கத்தைக் கூட காற்றில் பறக்க விட்டார் வி எஸ் அச்சுதானந்தன்.

‘முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் பொலிட்பீரோ தனது நிலையை மறு பரிசீலனை செய்து கொள்ள வேண்டும்’ என்று அன்று கோரிக்கை விடுத்தார். (தி எகனாமிக் டைம்ஸ், டிசம்பர் 6, 2011).

மாநிலக் குழு உறுப்பினர் டி சிவதாச மேனன், அவருக்கு வேப்பிலை அடித்து, ‘தமிழ்நாட்டுக்கும் தண்ணீர் கொடுக்கணும்’ கொடுத்தாதானே அங்கு நாலு ஓட்டு வாங்கி கட்சி வளர முடியும் என்று ஆறுதல் சொல்லி சர்வதேசியத்தை நிறுவினார்.

பினரயி விஜயன் இரண்டு நாட்கள் கழித்து ‘முல்லைப் பெரியாறு அணையை செயலிழக்க வைக்கும் நேரம் தாண்டி விட்டது’ என்று அறிவித்தார். வல்லுனர்கள் நடத்திய ஆய்வுகள் மூலம் அணை பலவீனமாக இருப்பது தெரியவந்துள்ளதாக சொன்னார்.

திருமணப் பொருத்தம் பார்க்க ஜோசியரிடம் போய் ஒருவர் பொருத்தம் இல்லை என்று சொன்னால், இன்னொருவரிடம் போய், ‘எவ்வளவு ஆனாலும் பரவாயில்லை, எப்படியாவது பொருத்திக் கொடுத்து விடுங்க’ என்று சொல்வது போல தமது ஓட்டரசியலுக்கு ஏற்றபடி வளைந்து கொடுக்கும் வல்லுனர் குழுவைப் பிடித்திருக்கிறார்கள். இவரும் நினைவாக ‘அணை மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும்’ என்று சொன்னார்.

அவ்வளவு முயற்சி செய்தும் உள்ளூர் கட்சிகளின் நம்பிக்கையை பெற்று விடவில்லை சிபிஎம்.

சிபிஎம் போன்ற தேசிய கட்சிகள் ‘உண்மைக்கு’ ஆதரவு தந்தால் பிரச்சனையை உடனே தீர்த்து விடலாம் என்று தனது நம்பிக்கையை வெளியிட்டார் கே எம் மணி (ஐபிஎன் லைவ், டிசம்பர் 11, 2011).

உண்மையை விழுங்கி எவ்வளவோ சிரமத்துக்குப் பிறகு தீர்மானம் என்ற வஸ்துவை வெளியேற்றிய பொலிட்பீரோவின் சிரமம் புரியாமல் அது இன்னும் தெளிவாக இருக்க வேண்டும் என்று மனசாட்சியே இல்லாமல் கேள்வி தொடுத்தார் அவர்.

‘சிபிஎம் முல்லை பெரியாறு விவகாரத்தில் இரட்டை முகம் காட்டுவதாகவும் அது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல’ என்றும் சொன்னார் கேரளா காங்கிரஸ் (பி) தலைவர் ஆர் பாலகிருஷ்ண பிள்ளை.  ‘மாநிலத் தலைவர்கள் தேசியத் தலைவர்களை புதிய அணை தேவை என்பதை ஏற்றுக் கொள்ளச் செய்ய வேண்டும். இடது சாரி தலைவர்கள் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் சூழ்ச்சி செய்கிறார்கள். கடந்த ஆறரை ஆண்டுகளாக புதிய அணை கட்டும்படி போராட்டங்கள் நடந்து வருகின்றன. இது வரை போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்காத இடது சாரி தலைவர்கள் இப்போது போராட்டங்கள் நடத்துவது சந்தேகத்துக்குரியது’ என்றார் பிள்ளை. (டைம்ஸ் ஆப் இந்தியா, டிசம்பர் 11, 2011)

அன்று வி எஸ் அச்சுதானந்தன் ஒரு குட்டிக்கரணம் அடித்தார். உண்மைகளை தெளிவாக புரிந்து கொள்ளாமல் பேசி விட்டதாகவும் பொலிட்பீரோவுக்கு விளக்கம் அளித்து கடிதம் எழுதியதாகவும் சொல்லி விட்டார். அச்சுதானந்தனின் அறிக்கை பற்றி தனது வருத்தத்தை பொலிட்பீரோ பினரய் விஜயன் மூலம் அச்சுதானந்தனுக்கு தெரிவித்தது. வருத்தத்தை தெரிவித்திருந்தாலும் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட மாட்டாது என்று பொலிட் பீரோ  தெளிவுபடுத்தி விட்டது.  (ஐபிஎன் லைவ், டிசம்பர் 19, 2011) 

‘பொலிட்பீரோவுக்கே உண்மைகளை தெளிவாக புரிந்து கொள்ள முடியவில்லை, அல்லது புரிந்து கொள்ள விருப்பமில்லை’ என்று தெரியாமல் இத்தனை வருஷம் கட்சியில் என்ன குப்பை கொட்டினாரோ!

உண்மைக்கும் பொய்க்கும் நடுவில் ஊசலாடிக் கொண்டிருந்த கட்சி, டிசம்பர் 21 அன்று புதிய அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் முழு மனதாக கலந்து கொண்டது.

புதிய அணை கோரி கேரள சட்டசபை நிறைவேற்றும் மூன்றாவது தீர்மானம் இது. முதல் தீர்மானம் 1993ல் கே கருணாகரன் முதலமைச்சராக இருந்த காங்கிரசு அரசின் தலைமையிலும், இரண்டாவது தீர்மானம் சிபிஎம் முதலமைச்சரான வி எஸ் அச்சுதானந்தன் தலைமையிலும் நிறைவேற்றப்பட்டன. ‘புதிய அணை கட்டப்படும் வரை அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும்’ என்று முதலமைச்சர் உம்மன் சாண்டி தீர்மானத்தைப் படித்த போது எல்லா உறுப்பினர்களும் கட்சி வேறுபாடு இல்லாமல் மேசைகளைத் தட்டி ஆதரவு தெரிவித்தனர். (ஓமன் டிரிபியூன், டிசம்பர் 21, 2011)

இது ‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொண்டு சேர்க்க எப்படி உதவி செய்யும்’ என்று யாரும் விளக்க முயற்சிக்கவில்லை.

கடைசியாக இந்து நாளிதழில் ஜனவரி 3ம் தேதி எழுதிய கட்டுரையில் இடது சாரி அரசாங்கத்தில் நீர்வளத் துறை அமைச்சராக இருந்த என் கே பிரேமச்சந்திரன் ‘கேரளா எப்போதுமே நீதித் துறையை மதித்து வந்திருக்கிறது, அதன் தீர்ப்புகளை தவறாமல் பின்பற்றி வந்திருக்கிறது’ என்று சொல்லி விட்டு அடுத்த வரியில் ‘பிப்ரவரி 27, 2006 உத்தரவில் உச்ச நீதிமன்றம் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தவும், பேபி அணையை உறுதிப்படுத்திய பிறகு அதை 152 அடிக்கு உயர்த்தவும் உத்தரவிட்டது’ என்ற தகவலைக் குறிப்பிடுகிறார். உச்ச நீதிமன்றத்தை மதித்த கேரள அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்த ஒரு மாதத்துக்குள்ளாகவே, ‘கேரள-நீர்ப்பாசனம்-மற்றும்-சேமிப்பு-சட்டம்-2003 ஐ திருத்தி முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 136 அடியாக நிர்ணயித்தது’ என்று அவரே தொடர்ந்து எழுதுகிறார்.

‘இப்போது இருக்கும் அணையை அப்படியே வைத்து விட்டு, தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் போவதை நிறுத்தாமல், புதிய அணை கட்டுவோம்’ என்றும் அதே கட்டுரையில் எழுதுகிறார். அப்படி என்றால் அணையின் நீர் மட்டத்தை 142 அடிக்கும், பேபி அணையை வலுப்படுத்திய பிறகு 152 அடியாகவும் உயர்த்துவதை ஏற்றுக் கொள்ளாமல். நீர் மட்டத்தை 120 அடியாகக் குறைக்கச் சொல்வது என்ன அடிப்படையில்?

இப்படி ஒரே பத்திக்குள் முரண்பாடுகளைக் கூச்சமில்லாமல் எழுதிக் கொடுப்பது போலி கம்யூனிஸ்டுகளுடன் சேர்ந்து ஆட்சி புரிந்த போதுதான் அவருக்குக் கிடைத்திருக்க வேண்டும்.

ஆக, கேரளத்தில் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்காக சாமியாடி, வேப்பிலை அடித்து, இனவெறியை, துவேசத்தை கிளப்பி மக்களை பீதியாக்கி ஓட்டுப் பொறுக்கும் அரசியலை செய்வது சாட்சாத் காம்ரேடுகள்தான். இவர்கள் இப்படித்தான் பேசுகிறார்கள், பேசுவார்கள் என்று தெரிந்தும் பொலிட்பீரோவும் அதற்கு பங்கம் வராமல் எல்லாம் மன்னு மோகன்சிங் பார்த்துக் கொள்வாரென்று கை கழுவி விட்டதையும் பார்த்தால் இவர்களை விட தே.மு.தி.க கட்சியும், பவர் ஸ்டார் சீனிவாசனும் மேலென்று தோணவில்லையா?

செழியன்.

மத்திய அரசு கடல்சார் பல்கலைக்கழகத்தின் கண்ணீர் கதை

8

புதுமைப்பித்தன் உயிருடன் இல்லை. இருந்திருந்தால், ‘என்னமோ மத்திய அரசு பல்கலைக்கழகம், மத்திய அரசு பல்கலைக்கழகம் என்று கதைக்கிறீர்களே! இதுதான் ஐயா, மத்திய அரசு பல்கலைக்கழகம்’ என்று என்னை சுட்டிக் காட்டி, மத்திய அரசு பல்கலைக்கழகங்களின் இலட்சணத்தை தோலுரித்துக் காட்டியிருப்பார். இதன் மூலம் பலரது மயக்கத்தை தெளிய வைத்திருப்பார்.

பின்னே… ஏதோ, தனியார் கல்லூரிகள் மட்டுமே உள் கட்டமைப்பு இன்றி இருப்பதாகவும், மாணவர்களிடம் இலட்சம் இலட்சமாக கட்டணம் என்ற பெயரில் கொள்ளையடிப்பதாகவும், மத்திய அரசு பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் தேனாறும், பாலாறும் ஓடுவதாகவும், பிரம்மாண்டமான உள்கட்டமைப்பு வசதி இருப்பதாகவும், குறைந்த கட்டணத்தை மட்டுமே வசூலித்து இயங்குவதாகவும் பெரும்பான்மையான மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்களே…

எங்கே சென்று முட்டிக் கொள்வது என்று தெரியவில்லை. அந்த எண்ணமே கடைந்தெடுத்த பொய். அதற்கு நானே சாட்சி. இத்தனைக்கும் நான் அரசு கல்லூரி அல்ல; மத்திய அரசின் கீழ் இயங்கும் அரசு பல்கலைக்கழகம்!!!

சுற்றி வளைக்காமல் நேரடியாக விஷயத்துக்கு வந்து விடுகிறேன். என் பெயர், ‘கடல்சார் பல்கலைக்கழகம்‘. இந்திய அரசுதான் என் அப்பா, அம்மா. இந்திய ஜனாதிபதிதான் எனது பாதுகாவலர். அரசு மற்றும் தனியார் கப்பல்களில் பணிபுரியும் தொழிலாளர்களை ஆண்டுதோறும் உற்பத்தி செய்து அனுப்புவதுதான் என் வேலை. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் உத்தண்டிதான், என் இருப்பிடம்.

நான் பிறந்தது 2006ம் ஆண்டில். அதற்கு முன்புவரை கடல்சார் பல்கலைக்கழகம் என்று எதுவும் தோன்றவில்லை. பதிலாக, கொச்சி, கொல்கத்தா, மும்பை உட்பட நாட்டின் பல இடங்களில், பல கல்லூரிகளில், கடல்சார் பட்டப் படிப்புகள் என்னும் மெரைன் கோர்ஸ் அல்லது டிப்ளமோ வகுப்புகள் என்ற பெயரில் உயிரணுக்களாக சிதறிக் கிடந்தேன். என்னை சிசுவாக மாற்றியதில் தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்ற பெயரில் நாட்டை சூறையாடும் மறுகாலனியாதிக்கச் சூழலுக்கு பெரும் பங்குண்டு.

காரணம், கடல்சார் பட்டப்படிப்புகளுக்கு ஏக கிராக்கி ஏற்பட்டது அதன்பிறகுதான். கப்பல்களில் பணிபுரிபவர்களுக்கு வழங்கப்பட்ட – வழங்கப்படும் – மாதச் சம்பளத்தின் தொகை, உயர் நடுத்தர மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை வாய் பிளக்கச் செய்தது. எனவே புற்றீசல் போல் தோன்ற ஆரம்பித்த ‘கீத்துக் கொட்டாய்’ தனியார் கல்லூரிகளில், கடல்சார் படிப்புகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டால் போதும்… உடனே தங்கள் வாழ்நாள் சேமிப்பை தாரை வார்த்து அந்தப் படிப்பில் தங்கள் வாரிசுகளை சேர்க்க முண்டியடித்தார்கள்.

உண்மையிலேயே கப்பல்களில் பயிற்சி அளிக்கிறார்களா… லேப் வசதி இருக்கிறதா… கற்றுத் தரும் பேராசிரியர்களின் தகுதி என்ன… என்று எதைக் குறித்தும் ஆராய நடுத்தர வர்க்கம் தயாராக இல்லை. சான்றிதழ் கிடைத்தால் போதும் என திருப்தி அடைந்தார்கள்.

ஆனால், அந்தச் சான்றிதழ்களை ஏற்க கப்பல் நிறுவனங்கள் தயாராக இல்லை. அரசுக்கு சொந்தமான கப்பல் நிறுவனங்கள் குறைவு. எனவே தனியாருக்கு சொந்தமான – குறிப்பாக பன்னாட்டு நிறுவனங்களுக்கு சொந்தமான – கப்பல்களில்தான் பணிக்கு சேர வேண்டும். அந்த நிறுவனங்கள்,  இந்தச் சான்றிதழ்களை தங்கள் மலத்தை துடைக்கக் கூட பயன்படுத்த மறுத்தன. இதனால் கடல்சார் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு சரியான வேலை கிடைக்கவில்லை. புதிதாக இப்படிப்புக்கு சேர வந்தவர்களும் பின்வாங்கத் தொடங்கினார்கள்.

இப்படியே போனால், பொன் முட்டையிடும் வாத்தாக இருக்கும் கடல்சார் படிப்புத் துறையை தங்கள் கல்லூரிகளில் இருந்தே நீக்க வேண்டிய நிலை வந்துவிடும் என்பதை உணர்ந்த தனியார் கல்லூரிகள், இந்தப் படிப்புக்கு என்று ஒர் அரசு பல்கலைக்கழகத்தை தொடங்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தார்கள். அப்படியொரு பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டால், அந்தப் பல்கலைக்கழகம் வழங்கும் சான்றிதழை ஏற்பதாக தனியார் கப்பல் நிறுவனங்களும் அறிவித்தன.

இதனை தொடர்ந்துதான் 2006ம் ஆண்டு நான் குறை பிரசவத்தில் பிறந்தேன். நியாயமாகப் பார்த்தால் என்னை இன்குபேட்டரில் வைத்து பராமரித்திருக்க வேண்டும். உரிய மாதங்கள் முடியும் வரை என்னை கண்ணும் கருத்துமாக பாதுகாத்திருக்க வேண்டும். அப்படியெல்லாம் மத்திய கடல்வழி போக்குவரத்துத் துறை செய்யவேயில்லை. பதிலாக, குறை மாதங்களில் அறுத்து எடுத்த என்னை, சென்னை கடலோரம் வீசி எறிந்துவிட்டார்கள். இதற்கு காரணம், அப்போது மத்திய கடல்வழி போக்குவரத்துத் துறையின் அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு. வட மாநிலங்களில் என் பிறப்பு நிகழாமல், தென் மாநிலத்தில் – குறிப்பாக தமிழகத்தில் – நான் பிறந்தது அவரது சாதனைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. திமுகவும் தேர்தல் அறிக்கைகளில் இதனை மாபெரும் வரலாற்று நிகழ்வாக குறிப்பிடுகிறது.

உண்மையிலேயே என் பிறப்பு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியா? என் பிறப்பு மூலம் தமிழகம் ஜொலிக்கிறதா? சத்தியமாக இல்லை. கேழ்வரகில் எப்படி ஒருபோதும் நெய் வடிவதில்லையோ அப்படி கடல்சார் பல்கலைக்கழகமாகிய என்னை தமிழக மக்களின் நலன் கருதி டி.ஆர்.பாலு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பிறக்கச் செய்யவில்லை.

டி.ஆர். பாலு – துணை வேந்தர் விஜயன்

டி.ஆர்.பாலுவின் சம்பந்தி நடத்தும் ‘சாய்ராம் பொறியியல் கல்லூரி’யில் என் தொடர்பான கோர்ஸ் இருக்கிறது. அதுமட்டுமா… ரவுடித்தனம் செய்யும் ஐசரி கணேஷுக்கு சொந்தமான ‘வேல்ஸ்’ கல்லூரியில், நடிகர் விவேக் உரிமையாளராக இருக்கும் காலேஜில்… என திமுகவுக்கும், டி.ஆர்.பாலுவுக்கும் வேண்டப்பட்டவர்கள் நடத்தும் அனைத்துக் கல்லூரிகளிலும் ஏதோவொரு வகையில் என் சம்பந்தப்பட்ட படிப்பு இருக்கிறது. இவற்றுக்கெல்லாம் ‘அங்கீகாரம்’ வழங்கத்தான் என்னை வலுக்கட்டாயமாக சென்னையில் பிறக்க வைத்திருக்கிறார்களே தவிர வேறு எந்த பொடலங்காய் சாதனைகளும் காரணமில்லை. அதாவது, ஜெயலலிதாவின் ஆட்சியில் பால்வாடி எல்லாம் எப்படி அரசு சுகாதார நிலையங்களாக ஒரே இரவில் உருமாறியதோ அப்படித்தான் சூல் கொண்ட மறு விநாடியே என் பிறப்பு நிகழ்ந்தது.

”இது நல்ல கதையாக இருக்கிறதே… வேண்டுமென்றே டி.ஆர்.பாலுவின் மீது அபாண்டமாக குற்றம் சாட்டுகிறாய். திமுகவின் மீது இப்படி அவதூறு கிளப்ப ஜெயலலிதாவிடமிருந்து எவ்வளவு பணம் வாங்கினாய்…” என சில சில்லுண்டிகள் கேட்கக் கூடும். அவர்களுக்காகவே விஜயனை அறிமுகப்படுத்தும் கடமை எனக்கு இருக்கிறது.

இந்த விஜயன் வேறுயாருமல்ல, எனது உப பாதுகாவலர்தான். வைஸ் சான்சிலர் என்று அழைக்கப்படும் இவர், உண்மையில் விசி ஆக இருக்கவே தகுதி இல்லாதவர். பொதுவாக மத்திய அரசின் கீழ் இயங்கும் ஒரு பல்கலைக்கழகத்துக்கு வைஸ் சான்சிலராக நியமிக்கப்படுபவர், சம்பந்தப்பட்ட துறையில் 10 ஆண்டுகள் பேராசிரியராக இருந்திருக்க வேண்டும். அதிலும் என்னைப் போன்று குறிப்பிட்ட படிப்பை சார்ந்த பல்கலைக்கழகமாக இருந்தால், அது குறித்த கல்வியறிவும் அனுபவமும் அவசியம்.

ஆனால், விஜயனிடம் இந்தத் தகுதிகள் எதுவும் இல்லை. ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்யும் இவர், ஏதோ மெரைன் கோர்ஸில், தான் பழம் தின்று கொட்டை போட்டதாக தனது விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அதுவும் இவர் ஆசிரியராக பணிபுரிந்து கற்றுத் தந்த நிறுவனம் எது தெரியுமா? ‘மன்னார் அண்ட் மன்னார்’ கம்பெனி! ஐடிஐ என்று கூட சொல்ல முடியாத ஒரு நிறுவனத்தில், அதுவும் அங்கீகரிக்கப்படாத இன்ஸ்டிடியூட்டில், பேராசிரியராக இருந்தாராம்.

உடனே, ‘மத்திய அரசின் கடல்சார் பல்கலைக்கழகமே இப்போதுதானே வந்திருக்கிறது? எனவே அனுபவம் வாய்ந்த விசி கிடைப்பது கடினம்… இருப்பவரை வைத்து தொடங்கியதை தவறு என்று சொல்ல முடியாது…’ என சப்பைக்கட்டு கட்டாதீர்கள். இராமச்சந்திரன் என்னும் பேராசிரியர் ஒருவர் இருக்கிறார். அவர், வைஸ் சான்சிலருக்கு என்று யூஜிசி குறிப்பிட்டுள்ள அனைத்து தகுதிகளும் பெற்றவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதேபோல், விசி ஆக நியமிக்கப்படுபவரை 3 பேர் கொண்ட குழு, ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்திருக்க வேண்டும். விஜயன் விஷயத்தில் இதுவும் மேற்கொள்ளப்படவில்லை. ஆமாம், ஒருவர் கூட இவரை பரிந்துரை செய்யவில்லை. அப்படியிருந்தும் சட்டத்துக்கு புறம்பாக, கொல்லைப்புறம் வழியாக, விஜயனை விசி ஆக அமர வைத்து அழகு பார்த்தவர் – பார்க்கிறவர் – யார் தெரியுமா?

சாட்சாத் டி.ஆர்.பாலுவேதான். காரணம், விஜயன், நம்பர் ஒன் அல்லக்கை. டி.ஆர்.பாலுவின் பினாமி. தவறாமல் கப்பம் கட்டும் நேர்மையாளர். இந்தத் தகுதிகள் இராமச்சந்திரனிடம் இல்லை. அதனால் அவருக்கு எனது உப பாதுகாவலர் பதவி வழங்கப்படவில்லை.

சொந்தமாக வீடு இருக்கும் வைஸ் சான்சிலர், வீட்டு வாடகை என அரசிடமிருந்து எந்தத் தொகையையும் வாங்கக் கூடாது என்பது விதி. ஆனால், விஜயன், சொந்த வீட்டில் வசித்தபடி அதற்காக மாதா மாதம் அரசிடமிருந்து வாடகை வசூலித்து வருகிறார். ஒரு கார் மட்டுமே வைத்துக் கொள்ளலாம் என்பது இன்னொரு விதி. இதையும் 3 கார்கள் வைத்தபடி மீறுகிறார் விஜயன். இந்த 3 கார்களுக்கும் 3 ஓட்டுநர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு சம்பளம் வழங்க எனது உப பாதுகாவலர் என்ன பைத்தியக்காரரா? அதுதான் வருடந்தோறும் தவறாமல் வரி கட்டும் மக்கள் இருக்கிறார்களே… எனவே அரசு அந்த 3 ஓட்டுநர்களுக்கும் மாத ஊதியம் வழங்குகிறது. ஜேப்பியாருக்கு சொந்தமான செயிண்ட் ஜான்ஸ் பள்ளியில் படிக்கும் எனது உப பாதுகாவலரின் பிள்ளைகளை தினமும் பள்ளிக்கு அழைத்துச் செல்வதும், மாலையில் அழைத்து வருவதும் இந்த ஓட்டுநர்களில் ஒருவரது பணி.

எதிர்த்து யாரும் கேட்க முடியாது. அப்படி கேட்கக் கூடியவர்கள் யாரும் பணியிலும் இல்லை. ஊழியர்கள் அனைவருமே ஒன்று விஜயனின் உறவினர்கள் அல்லது நண்பர்கள் அல்லது தெரிந்தவர்கள் அல்லது ஊர்க்காரர்கள்.

எனவே விஜயன் கொட்டமடிக்கிறார். அது எந்த அளவுக்கு என்றால், மாணவர்களின் எதிர்காலத்தையே கால்பந்தாக விளையாடும் அளவுக்கு…

குறை பிரசவமாக இருந்தாலும் நானும் அரசு பல்கலைக்கழகம் தானே? எனவே என்னிடம் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகபட்சம் 180 ஆக இருக்கலாம் என எனது பெற்றோரான இந்திய அரசாங்கம், நிர்ணயம் செய்திருக்கிறார்கள்.

ஆனால், இப்போது என்னிடம் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 350! ஆமாம், கிட்டத்தட்ட நிர்ணயிக்கப்பட்ட அளவை விட இரு மடங்கு மாணவர்களை விஜயன் சேர்த்திருக்கிறார்.

அப்படியானால் அதிகப்படியான மாணவர்களுக்கு எப்படி சான்றிதழ் வழங்க முடியும்..? என சிறுபிள்ளைத்தனமாக கேள்வி கேட்காதீர்கள். 1991 – 96ல் பாசிச ஜெயலலிதாவின் காட்டாட்சியில் காளான் போல் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் முளைத்ததே நினைவிருக்கிறதா? அவை எப்படி செயல்பட்டனவோ, அப்படித்தான் நான் இப்போது இயங்குகிறேன்.

அதாவது முதலில் 180 மாணவர்களுக்குத்தான் அவர்களது படிப்பு முடிந்ததும் சான்றிதழ் கிடைக்கும். மீதமுள்ள மாணவர்களுக்கு அடுத்த பேட்ச்சில் வழங்கப்படும். இப்படி ரிலே ரேஸில்தான் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறன. எனவே படிப்பு முடிந்தாலும் சான்றிதழ் கிடைக்கும் வரை மாணவர்கள் அமைதியாக இருக்க வேண்டும், வாய் திறக்கக் கூடாது. தங்கள் பெற்றோர்களிடம் கூட இது குறித்து பகிர்ந்துக் கொள்ளக் கூடாது…

இந்த இடத்தில், ”அஸ்கு புஸ்கு… பட்டப்படிப்பு என்றால், குறைந்தது 3 ஆண்டுகளாவது இருக்கும் என்று எங்களுக்கு தெரியாதா? அப்படியிருக்க, நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக மத்திய அரசின் கீழ் இயங்கும் பல்கலைக்கழகத்தில் மாணவர்களை எப்படி சேர்க்க முடியும்? விட்டால் எங்கள் காதைச் சுற்றி ஒரு பூந்தோட்டத்தையே அமைத்து விடுவாய் போலிருக்கிறதே…”

என்ற கேள்வி எழுந்தால் –

கேட்பவரை கட்டிப் பிடித்து முத்தம் தர தயாராக இருக்கிறேன். சரியான வினாவை எழுப்பியவரை வேறு எப்படி பாராட்ட?

ஆனால் –

எப்படிச் சொல்வது… என்னவென்று புரிய வைப்பது? பட்டப் படிப்பு என்று எதுவும் என்னிடம் இல்லையே… 2 ஆண்டுகள் அல்லது ஒரு வருட சான்றிதழ் கோர்ஸ்தானே நடத்தப்படுகின்றன..?

ஆமாம் ஐயா ஆமாம்… மத்திய அரசு கடல்சார் பல்கலைக்கழகமாகிய நான், ஒரு ஏசி மெக்கானிக், டிவி மெக்கானிக் இன்ஸ்டிடியூட் போலத்தான் இயங்குகிறேன். அப்படி நடக்கும்படிதான் அரசாங்கம் உத்தரவிட்டிருக்கிறது. அப்படியானால் பட்டப்படிப்பு? அதற்குத்தான் சாய்ராம், வேல்ஸ்… முதலிய கல்லூரிகள் இருக்கின்றதே… அவர்களுக்கு போட்டியாக பட்டப்படிப்பை நானும் நடத்தினால், அந்தக் கல்லூரிகளுக்கு எப்படி வருமானம் கிடைக்கும்? அந்தக் கல்லூரி தாளாளர்களால் எப்படி பிழைக்க முடியும்?

இந்த விஷயம் பெற்றோர்களுக்கும் தெரியும். படிக்கும் மாணவர்களும் அறிவார்கள். ஆனாலும் மத்திய அரசு பல்கலைக்கழகத்தில் நேரடியாக படிப்பதென்றால் – அது 2 ஆண்டுகளோ அல்லது ஓராண்டோ – ஒரு ‘இது’தானே? அதுவும் மற்ற மாணவர்களுடன் தொடர்பற்ற, சமூகத்துடன் துண்டித்த அபூர்வமான படிப்பு என்னும்போது இதுமாதிரியான ‘சில்லரை’ விஷயங்களை கவனத்தில் கொள்ள முடியுமா?

இந்த மனநிலையைத்தான் எனது உப பாதுகாவலரான விஜயன் நன்றாக பயன்படுத்திக் கொள்கிறார். நான் வழங்கும் கோர்சுக்காக வசூலிக்கப்படும் கட்டணம் எவ்வளவு தெரியுமா? ரூபாய் 3 இலட்சம். இதில், ஒரு இலட்சம் விடுதிக் கட்டணத்துக்காக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ், உடனடியாக கப்பலில் வேலை, கைநிறைய சம்பளம்… என நடுத்தர வர்க்கத்தினர் கனவில் மிதப்பதால், சாதாரண டிப்ளமோ கோர்சுக்கு இவ்வளவு பெரிய தொகையா… அதுவும் அரசு பல்கலைக்கழகத்திலா என்று யோசித்து மூளைக்கு வேலை தராமல் இருக்கின்றனர். இந்த மயக்கம்தான் எனது உப பாதுகாவலர், அரசுக்கு செலுத்தும் மாணவர் கட்டணம் வேறு… மாணவர்களிடமிருந்து வசூலிக்கும் கட்டணம் வேறு… என்பதை அறிந்துக் கொள்ளாமலேயே இருக்கச் செய்கிறது.

உண்மை தெரிந்ததும் வயிறு எரிகிறதல்லவா..? இன்னும் விஷயங்கள் இருக்கின்றன. தலா 2 இலட்சம் ரூபாயை பயிற்சி வகுப்புக்காக எனது உப பாதுகாவலர் வசூலிக்கிறார் என்று முன்பே சொன்னேன். ஆனால், அதற்குறிய உள்கட்டமைப்பு வளாகத்தில் இல்லவே இல்லை. சுனாமிக்கு பிறகு, சில விதிமுறைகளை அரசாகிய எனது பெற்றோர் வகுத்திருக்கிறார்கள். ஆனால், அந்த விதிமுறைகள் அனைத்தும் எனது விஷயத்தில் மீறப்பட்டுள்ளன.

விடுதிக் கட்டணமாக ரூபாய் ஒரு இலட்சம் வசூலிக்கப்படுவதும் இதில் சேர்த்தி. அந்தப் பணம், எங்கு செல்கிறது என்பது அந்த பாலுவுக்கே வெளிச்சம். சினிமாவுக்காக செட்டிங்ஸ் போடுவார்கள் இல்லையா? அதுபோல்தான் விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. வெறும் மரத் தடுப்புகள்தான். ஆஸ்பெஸ்டாஸ் தகடுகள்தான் கூரைகள். முன்பு லைலா புயல் வீசியபோது, கூரைகள் எங்கோ பறந்துவிட்டன. அலட்டிக் கொள்ளாமல் பறந்த கூரையை பொறிக்கி வந்து மீண்டும் பொருத்தினார்கள். முகாம்களில் அகதிகள் எப்படி அடைபட்டுக் கிடப்பார்கள் என்று தெரிந்துக் கொள்ள விரும்பினால், என்னைப் பார்க்க வாருங்கள். மாணவர்களை, விடுதிகளில் அப்படித்தான் எனது உப பாதுகாவலர் அடைத்து வைத்திருக்கிறார்.

நான்கு பேர் தங்கக் கூடிய அறையில் 10 பேரும், 2 பேர் தங்கக் கூடிய அறையில் 5 பேரும் தங்குகிறார்கள். உணவை வாயில் வைக்க முடியாது. தண்ணீரை ஒரு சொட்டுக் கூட குடிக்க முடியாது. தாகம் எடுத்தால், கோக்/பெப்சி எடு… கொண்டாடு…

இதையெல்லாம் சகித்துக் கொண்டுதான் அங்கு மாணவர்கள் வசிக்கிறார்கள்; படிக்கிறார்கள். காரணம், கப்பல் வேலை… கை நிறைய சம்பளம் என்ற கனவு.

இதையெல்லாம் மீறி, யாரோ எனது உப பாதுகாவலர் குறித்து புகார் அளித்துவிட்டார். கடமையை சரிவர செய்யும் சிபிஐ அதிகாரிகளும் டக் டக் என பூட்ஸ் ஒலிக்க, டையை தளர்த்தியபடி வந்து சேர்ந்தார்கள். இண்டு, இடுக்கு விடாமல் விஜயனின் இருப்பிடத்தை ஆராய்ந்தார்கள். இரண்டு கோடி ரூபாய் அளவுக்கு கணக்கு காட்டாத சொத்துக்களை கண்டுபிடித்தார்கள்.

அப்புறம்?

விழுப்புரம்தான். வேறென்ன? இந்த வழக்கு, அதுபாட்டுக்கு ‘பெண்டிங்கில்’ இருக்கிறது. நியாயமாகப் பார்த்தால், இந்தக் குற்றச்சாட்டுக்கு எனது உப பாதுகாவலரை சஸ்பென்ஷனில் வைத்திருக்க வேண்டும். ஆனால், மனிதர் இன்னும் வைஸ் சான்சிலர் ஆக நீடிக்கிறார். சட்டமும் தன் கடமையை செய்துக் கொண்டிருக்கிறது.

இதையெல்லாம் மோப்பம் பிடித்த புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில அமைப்பாளர் தோழர் கணேசன், விஜயனை எதிர்த்து வழக்கு தொடுத்திருக்கிறார். வைஸ் சான்சிலராக இருக்கவே தகுதியில்லாத ஒரு நபர், அதுவும் சிபிஐ குற்றம்சாட்டியிருக்கும் ஆள், எப்படி விசி ஆக நீடிக்கலாம் என்று கேட்டிருக்கிறார்.

இதற்குள் எனது உப பாதுகாவலரின் பதவிக் காலம் முடிந்துவிட்டது. அதை நீட்டிக்கச் சொல்லி விஜயன் வைத்த கோரிக்கையை நிராகரித்த இந்திய அரசாகிய எனது பெற்றோர், வேறொருவரை எனது உப பாதுகாவலராக நியமித்திருக்கிறார்கள். அதற்காக ஏதோ ’நீதி’ கிடைத்து விட்டதாக தப்புக் கணக்கு போட்டு விடாதீர்கள். எனது மாஜி உப பாதுகாவலரான விஜயனை, சென்னை கேம்பசின் இயக்குநராக புதிய பொறுப்பில் அமர வைத்திருக்கிறார்கள்! இதுதான் ’நீதி’யின் இலட்சணம்!!

சிம்கார்ட் ஒன்று போட்டால் சிக்னல் வேறொன்றா கிடைக்கும்? அதுபோல் இந்த சமூக அமைப்பில், என்னைப் போன்ற மத்திய அரசு பல்கலைக்கழகங்களும் இப்படித்தான் பல்லிளிக்கும். தனியார் நிறுவனங்கள் கொழிக்க அரசுத்துறை நிறுவனங்கள் சவலப் பிள்ளைகளாகத்தான் மாற்றப்படுவார்கள்.

‘என்னைப் பார்; யோகம் வரும்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்ட கழுதையின் படத்தை மாட்டினால் இலாபம் கிடைக்குமோ இல்லையோ, எனது படத்தை மாட்டி ‘என்னைப் பார்; யோகம் வரும்’ என்று  எழுதி வைத்தால்,

இலாபம் கிடைக்கிறதோ இல்லையோ மக்களாகிய நீங்கள் மத்திய அரசாலும், தனியார் கல்வி முதலாளிகளாலும் மொட்டையடிக்கப்படுவது புரியும்.

-வினவு செய்தியாளர்

தகவல் உதவி:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி (RSYF), சென்னை.