Thursday, June 25, 2026
முகப்பு பதிவு பக்கம் 129

கலவரம் நடத்துவதை வெளிப்படையாக சொல்லும் காவி பயங்கரவாதி! | தோழர் வெற்றிவேல் செழியன்

கலவரம் நடத்துவதை வெளிப்படையாக சொல்லும் காவி பயங்கரவாதி!
– தோழர் வெற்றிவேல் செழியன்

காணொலியை பாருங்கள் பகிருங்கள்

ஆசிரியர்களை கற்பித்தல் பணியில் இருந்து அகற்றும் திட்டமே மணற்கேணி | ஆசிரியர் உமா மகேஸ்வரி

ஆசிரியர்களை கற்பித்தல் பணியில் இருந்து அகற்றும் திட்டமே மணற்கேணி
– ஆசிரியர் உமா மகேஸ்வரி

காணொலியை பாருங்கள் பகிருங்கள்

மணிப்பூர், ஹரியானா என தொடரும் கலவரங்கள்!

மணிப்பூர், ஹரியானா என தொடரும் கலவரங்கள்!
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச குண்டர்படைகளை தடை செய்!

ஆர்.எஸ்.எஸ் சார்பு மெய்தி இனவெறிக் கும்பல்களால் முன்னின்று நடத்தப்பட்ட மணிப்பூர் கலவரத்தில் 2 பெண்களை நிர்வாணமாக்கி இழுத்து செல்லும் வீடியோவால் நாடே அச்சத்தில் மூழ்கியுள்ள நிலையில் தற்போது ஹரியானா கலவரம் அரங்கேறியுள்ளது.

ஜூலை 31 திங்கள்கிழமை அன்று ஹரியானாவின் நூஹ் மாவட்டத்தில் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் விஷ்வ ஹிந்து பரிசத் மற்றும் பஜ்ரங் தளம் நடத்திய ஊர்வலம் கலவரமாக மாற்றப்பட்டது. ஊர்வலம் தொடங்க இருந்த சிவன் கோவிலில் மக்கள் சிறைப்படுத்தப்பட்டிருப்பதாகவும், வன்முறை கும்பல் சூழ்ந்துள்ளதாகவும் செய்திகள் பரப்பப்பட்டதையடுத்து நூஹ் பகுதியில் வன்முறை மூண்டது.

கோவில் சேதப்படுத்தப்பட்டதாக வந்த தகவல் பொய் என கோவில் தலைமை பூசாரி மறுத்தது குறிப்பிடத்தக்கது. ஊர்வலத்திற்கு வந்த 2,000 பேர் கோவிலுக்குள் இருந்துள்ளனர். வி.எச்.பி மற்றும் பஜ்ரங் தள குண்டர்படைகள் திட்டமிட்டு பொய்ச் செய்திகளை பரவச் செய்து கோவிலில் இருந்த மக்களை அச்சமடையச் செய்து கலவரமாக மாற்றியுள்ளனர்.

நூஹ் மாவட்டத்தைத் தொடர்ந்து அன்று மாலையே குருகிராம், சோஹ்னாவில் கலவரம் வெடித்தது. குருகிராமில் 70 பேர் கொண்ட குண்டர்படை மசூதிக்குத் தீ வைத்தது. வெறிபிடித்த  இந்து மதவெறிக் கும்பல் மசூதியிலிருந்த 19 வயது இமாம்-ஐ கொன்றது.


படிக்க: ஹரியானா : பசு பயங்கரவாதிகளால் உயிருக்குப் போராடும் சிவம்


இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்; ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். ஒரே நாள் இரவில் இரண்டு மசூதிகளை எரித்துள்ளனர். பல இடங்களில் வழிபாட்டு தலங்கள், கார்கள், வாகனங்கள், கடைகள், கட்டிடங்கள், போன்றவை சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

***

ஹரியானா ‘பசுப் பாதுகாவலர்’ தலைவரும், பஜ்ரங்  தள் உறுப்பினருமான மோனு மானேசர் மூன்று நாட்களுக்கு முன் “நான் அங்கே வருகிறேன், உங்கள் அண்ணன் வருகிறார்” என்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளான். அப்போதிருந்தே அப்பகுதி பதட்டமடைந்துள்ளதாக அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.

மானேசரின் வீடியோ வைரலானவுடன் மேவாட் (மேவாட் மாவட்டம் 2016 இல் நூஹ் என பெயர் மாற்றப்பட்டது) முஸ்லீம் இளைஞர்கள் தங்களது சொந்த வீடியோக்களை வெளியிட்டு  “மானேசரை  மேவாட்டில் அனுமதிக்க கூடாது, அவரை கைது செய்ய வேண்டும்” என்று ஹரியானா அரசின் நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். மேவாட் இளைஞர்கள் குழு மானேசருக்கு எதிராக போராடவும் அழைப்பு விடுத்துள்ளது. இப்பதிவுகளில் ஹரியானா அரசின் சமூக ஊடகப் பக்கங்களையும் டேக் (Tag) செய்ததாக இளைஞர்கள் குழு கூறியது. அரசு நிர்வாகமும், ஆளும் பாஜக அரசாங்கமும் இதைக் கண்டும் காணாமல் இருந்துவிட்டன.

மானேசர் தனது டிவிட்டர் பக்கத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான உள்ளடக்கங்களையே தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளான். மானேசர் கொலைக்காரப் பட்டியலில் தேடப்படுபவன். அவன் இந்த யாத்திரையில் இணையப் போவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியானதே ஹரியானாவில் கலவரம் ஏற்படுவதற்கான துவக்கப்புள்ளி.

இந்த ஊர்வலத்தை பாசிசக் குண்டர்படை “பிரஜ்மண்டல்” யாத்திரை (Brij Mandal Jalabhishek Yatra)  என்ற பெயரில் நடத்தியுள்ளது. இந்த யாத்திரை 2021 முதல் பெரிய அளவில் VHP-ஆல் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

***

இப்பகுதியில் ‘பசுப் பாதுகாவலர்’ என்ற பெயரில் விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் இந்து மதவெறி பாசிச அமைப்புகள் நீண்ட காலமாக இயங்கி வந்துள்ளன.

இந்தாண்டு, பிப்ரவரியில் பிவானி மாவட்டத்தில் இரண்டு முஸ்லீம் ஆண்களின் (நசீர் மற்றும் ஜூனைட்) எரிந்த எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவர்கள் பசுப் பாதுகவலர் என்ற பெயரில் மானேசரின் குண்டர்படையினரால் கொலை செய்யப்பட்டனர். இதற்கு முன்பு அதேப் பகுதியின், மெக்கானிக்கான வாரிஸ் கான் என்பவரின் மரணத்திலும் தொடர்புள்ளவனாக  மானேசர் இருந்துள்ளான்.

அதேபோல் 2022-ஆம் ஆண்டு ஏப்ரலில் ஹரியானாவில் முஸ்லீம் ஆண்களை தாக்கி சித்திரவதை செய்யும் வீடியோக்கள் வெளியானது. ஜாமியா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூட்டில் முன்னணியில் இருந்த  ராமபக்த் கோபால் மற்றும் மானேசர் ஆகிய இருவரும் இந்த வீடியோவை சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இப்பகுதியில் மதக் கலவர பதட்டங்கள், ‘பசுப் பாதுக்காப்பு’ குண்டர்களுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. ‘பசுப் பாதுகாவலர்’ கும்பலால் அடித்து கொலைச்செய்யப்பட்ட முஸ்லீம் குடும்பங்கள் மானேசரின் வன்முறை தாக்குதலுக்கு எதிராக ஹரியானா அரசு நிர்வாகத்திடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்துள்ளனர்.

இவையனைத்தும் தான் அப்பகுதியில் உள்ள முஸ்லீம் இளைஞர்களை மானேசருக்கு எதிராக தனித்தனியாக வீடியோ பதிவிட்டு பேச வைத்துள்ளது. ஹரியானா அரசு நினைத்திருந்தால் இந்த கலவரத்தை தடுத்திருக்கலாம். ஆனால் இந்த அரசு தடுக்காமல் முஸ்லீம் மக்களுக்கு எதிரான கலவரத்தை நடக்கவிட்டு வேடிக்கைப் பார்த்துள்ளது.


படிக்க: ‘பசு பாதுகாப்பு’ எனும் ஆயுதத்தை சுழற்றும் பாசிஸ்டுகள்!


கலவரம் நடந்த பின்னரே 144 தடை, இணையசேவை முடக்கம், துணை ராணுவப்படையை இறக்குவது போன்ற  கண்துடைப்பு நடவடிக்கையை செய்கிறது.

கலவரம் பற்றிப் பேசிய துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா “ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் யாத்திரை குறித்து முழுமையான தகவலை அதிகாரிகளுக்கு கொடுக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

“ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் வாள்கள், லத்திகளை ஏந்திச்சென்றனர்” என்று குருகிராம் மாவட்ட பா.ஜ.க தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராவ் இந்தராஜித் சிங் குறிப்பிட்டுள்ளார்.

துப்பாக்கி ஏந்தியப்படி வி.எச்.பி மற்றும் பஜ்ரங் தள் குண்டர்படையினரும், போலீஸ் மற்றும் துணை இராணுவப்படையும் கலவரத்தின் போது ஒன்றாக நிற்கின்றனர். போலிசும், துணை இராணுவப்படையும் வேடிக்கை பார்ப்பதற்கு என்ன பொருள்? குண்டர்படையினரும் போலிசும் துணை இராணுவப்படையும் இந்த கலவரத்தை இணைந்து நடத்துவதாக தான் பொருள். இதுதானே குஜராத்திலும் மணிப்பூரிலும்  நடந்தது; நடந்துவருகிறது.

***

ஹரியானாவில் 2014 முதல் பா.ஜ.க தான் ஆட்சியில் உள்ளது. அன்று முதல் இன்றுவரை முதல்வராக மனோகர் லால் கட்டார் உள்ளார்.  முஸ்லீம் வெறுப்பைத் தனது அரசியலாக கொண்டுள்ள ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க ஹரியானாவில் வி.எச்.பி, பஜ்ரங் தள் போன்ற மதவெறி அமைப்புகளை வளர்த்து வருகிறது.

ஹரியானாவில் அமைக்கப்பட்ட புலனாய்வு குழு 2000 வீடியோக்களை ஆய்வு செய்துள்ளது. அதனடிப்படையில் 176 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், 93 பேர் மீது எஃப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது. பாசிசக் குண்டர்படை களத்தில் மட்டுமல்லாமல் ஊடகங்கள் மூலமும் மதவெறி அரசியலை புகுத்தி வருகின்றனர்.

2024 நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி இந்தியா தேர்தலை மட்டும் எதிர்கொள்வதாக இருக்கப்போவதில்லை, இதுபோன்ற ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி குண்டர்படையின் கலவரத்தையும் எதிர்கொள்ள வேண்டும். இந்த கும்பல் இருக்கும் வரை கலவரங்கள் ஓயப்போவதில்லை. அவர்கள் இருக்குமிடமெல்லாம் கலவரம் வெடிக்கும். இதற்கு ஒரே வழி ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி-யை தடை செய்வது மட்டுமே.


குழலி

”கொலைகார அகர்வாலே திரும்பிப்போ” – சென்னை கண்டன ஆர்ப்பாட்டம் | வீடியோக்கள்

“தூத்துக்குடியில் 15 தமிழர் படுகொலைக்கு காரணமான ஸ்டெர்லைட் நிறுவனத்தின் அனில் அகர்வாலே திருப்பிப்போ! சுரானா பள்ளியே, தமிழர் உணர்வுகளை இழிவுபடுத்தாதே!” என்ற தலைப்பில் எஸ்.டி.பி.ஐ, ஆம் ஆத்மி கட்சி, வெல்பேர் பார்ட்டி, தந்தைப் பெரியார் திராவிடர் கழகம், மக்கள் அதிகாரம், தமிழர் விடுதலைக்கழகம், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி, இளம் வழக்கறிஞர்கள் சங்கம், மே பதினேழு இயக்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து சென்னை அடையாறு பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் ஆகஸ்டு 5 அன்று நடைபெற்றது.
அந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் பேசிய தலைவர்களின் வீடியோக்கள் தனிதனியாக பதிவிடுகிறோம்.

கொலைகார அகர்வாலை அடிச்சி விரட்டு – ம.க.இ.க சிவப்பு அலை புதிய பாடல்

ஸ்டெர்லைட் நிறுவனத்தின் அனில் அகர்வாலே திரும்பிப்போ! – கண்டன ஆர்ப்பாட்டத்தின் முழக்கங்கள்!

ஸ்டெர்லைட்டை மூடவைத்தோம் போராட்டத்தாலே! – ம.க.இ.க சிவப்பு அலை புதிய பாடல்

ஸ்டெர்லைட்டுக்கு விலைபோன ஊடகங்கள்! | தோழர் திருமுருகன்காந்தி

ஸ்டெர்லைட் படுகொலை குற்றவாளிகளை தண்டிக்க துப்பில்லாத அரசு! | குடந்தை அரசன்

கொலைகாரன் அகர்வால் வந்தால் தமிழ்நாடு அமைதியாக இருக்காது! | தோழர் மருது

15 பேரின் உயிர் தியாகத்தால் ஸ்டெர்லைட் மூடப்பட்டது | தோழர் அமிர்தா

மணிப்பூர் ஊடகங்கள் போல் தமிழ்நாட்டு ஊடகங்களும் மாறிவிட்டதா? தோழர் குமரன்

ஸ்டெர்லைட்டை மீண்டும் தூத்துக்குடி மண்ணில் எந்த காலத்திலும் திறந்துவிட முடியாது | கிருஷ்ணமூர்த்தி

ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மக்கள் புற்றுநோயால் அவதிப்படுகிறார்கள் | முகமது பிலால்

எங்கள் போராட்டங்களை கண்டுகொள்ளாத திமுக அரசு ! | முகமது கவுஸ்

என் உயிரை கொடுத்தேனும்… ஸ்டெர்லைட்டை திறக்க விடமாட்டேன் | ஸ்டீபன்

தூத்துக்குடி மக்கள் மட்டுமல்ல.. தமிழ்நாட்டு மக்களும் ஸ்டெர்லைட்டை எதிர்க்கிறார்கள் | காந்தி மள்ளர்

ஸ்டெர்லைட் அகர்வால் வருகை: திமுகவும் கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்? | அருள் தாஸ்

ஸ்டெர்லைட்டை தரைமட்டமாக்கி 15 தியாகிகளுக்கு நினைவு மண்டபம் கட்ட வேண்டும் | தோழர் சீராளன்

15 தியாகிகளை கொச்சைப்படுத்தும் ஸ்டெர்லைட் அனில் அகர்வால் | காசி புதியராஜா

காணொலிகளை பாருங்கள்! பகிருங்கள்!!

தமிழகத்தின் ராஜபக்சேவே! தலைநகருக்கு வராதே!!

டந்த 2018-ம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலையில் இருந்து எரிக்கப்பட்டு வெளிவரும் நச்சுத்தன்மை வாய்ந்த புகையால் அந்த பகுதியில் பெரும்பாலான மக்கள் பல்வேறு வகையான நோய்க்கு பாதிக்கப்படுவதற்கு எதிராக மக்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலையை மூடப் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தி வந்தனர்.

“லட்சம் மக்கள் கூடுவோம்! ஸ்டெர்லைட்டை மூடுவோம்” என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டன. நீர், நிலம், காற்று என அனைத்தையும் நஞ்சாக்கி, மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தொழித்ததைக் கண்டித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மக்களின் பேரணி அடைந்தபோது கண்ணீர் புகை குண்டுகளை வீசி மக்களை சிதறடித்து நிலைக் குலையச் செய்தது கார்ப்பரேட்களின் கைக்கூலியான போலீஸ்.

படிக்க : அவன் இடத்தை அவனுக்கே கல்லறையாக்குவோம்! | கவிதை

அத்துடன் நில்லாது குருவியை சுடுவதுபோல் -இரக்கமற்ற மிருகம் இரையை வேட்டையாடி விழுங்குவதைப் போல்- அப்பாவி மக்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி நரவேட்டையாடியது ஸ்டெர்லைட் அடியாட்படையான போலீஸ். முன்னணியாளர்களை குறிவைத்து கொலை செய்தது – கொலைவெறி தாக்குதல் நடத்தியது. அனில் அகர்வால் என்கிற கொலைகாரனுக்காக சொந்த நாட்டு மக்களையே படுகொலை செய்தது அன்றைய முதலாளித்துவ அடிமை அரசான அ.தி.மு.க அரசு. இதில் 15 உயிர்கள் பலியாக்கபட்டது. 40 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது, அதனால் பலர் கை, கால்களை இழந்து ஊனமாக்கப்பட்டார்கள். மேலும் 60 பேர் காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டனர்.

தமிழக வரலாற்றின் ஜாலியன்வாலாபாக் என்று கருதப்படும் இந்த படுகொலைக்கு காரணமான -ஸ்டெர்லைட் ஆலையின் தாய் நிறுவனமான “வேதாந்தா” குழுமத்தின் தலைவனான- கொலைகாரன் அனில் அகர்வால் நமது தமிழ்நாட்டிற்கு இன்று(06.08.23) வரவிருக்கிறான்.

கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு 18-ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகியோர் அளித்த 215 பக்க தீர்ப்பால் தமிழ்நாடு அரசு ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடியது.

ஏற்கனவே, அந்நிறுவனத்தை சரியான இடத்தில் கட்டவில்லை என்றும், ஆலையில் இருந்து வெளியே வரக்கூடிய மிக மிக நச்சுத்தன்மை வாய்ந்த ஆர்சனிக், பாதரசம் போன்ற கழிவுகள் மண்ணிலும் நிலத்தடி நீரிலும் கலக்கப்பட்டிருக்கின்றன என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

மறுபடியும் ஏதாவது ஒரு வழியில் ஸ்டெர்லைட்டை திறக்க வைப்பதற்கான வேலைகளை கொலைகார அகர்வாலும் அரசும் திட்டம் போட்டு வேலை செய்து கொண்டிருக்கும் இதே வேளையில் -அடுத்து என்ன செய்ய போகிறார்கள் என்று தெளிவான தீர்ப்பு வராத சூழலில்- 4000 நபர்களை வேலைக்கு எடுத்துக் கொள்வோம் என்ற ஸ்டெர்லைட்டின் அறிவிப்பு, அவர்கள் ஆலையை மீண்டும் திறக்க முற்படுகிறார்கள் என்பதை உறுதிபடுத்துகிறது.

இந்தியாவில் மூன்று மாநிலங்களில் ஆலையை வைத்து மக்களின் உழைப்பை ஒட்டச்சுரண்டிய, ஆப்பிரிக்காவில் ஆலை தொடங்கி அங்கு உள்ள வளங்களையும் ஒட்டச் சுரண்டி அதனை எதிர்த்து போராடியவர்களை படுகொலை செய்த கொலையாளி அனில் அகர்வால் என்கிற பனியா, மார்வாடி குஜராத்தில் பிறந்து இங்கிலாந்தில் குடியுரிமைப் பெற்ற கார்ப்பரேட் முதலாளி எனும் கொலைகாரன் இன்று(06.08.23) சென்னையில் இயங்கிவரும் ஒரு தனியார் பள்ளி நிறுவனமான சுரனா ஹை டெக் (surana hi-tech) முதலாளியின் நூற்றாண்டு விழாவிற்கு வருகை தருவதென்பது தூத்துக்குடி தியாகிகளை இழிவுபடுத்துவதாகும்.

படிக்க : நேரலை | ஸ்டெர்லைட் கொலைகாரன் அனில் அகர்வாலே தமிழ்நாட்டிற்குள் நுழையாதே…

ஈழத்தில் இனப் படுகொலை நடத்தி ஒன்றரை லட்சம் தமிழர்களைக் கொன்றுகுவித்த இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவை எப்படி தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்க மாட்டோமோ! அதைப்போல தூத்துக்குடியில் தமிழர்களை படுகொலை செய்த கொலைகாரன் அகர்வாலை தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்க கூடாது!

அப்படி அனுமதித்தால் தூத்துக்குடி மக்கள், ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கங்கள், மக்கள் அதிகாரம் உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகள், மே 17 இயக்கம், மற்றும் ஜனநாயக சக்திகள் ஆகிய அனைவரும் இன்று ஸ்டெர்லைட் கொலைகாரன் அனில் அகர்வாலை அடித்து விரட்டு என்று முழங்கிக் கொண்டிருக்கிறார்கள். போராட்டக்களத்தில் இருக்கிறார்கள். ஒட்டுமொத்த தமிழ்நாடும் கொலைகாரனுக்கு எதிராக கிளர்ந்தெழும்.

மக்கள் அதிகாரம் தோழர் ஜெயராமன் உட்பட 15 ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகளை படுகொலை செய்த பயங்கரவாதியைப் பார்த்து முழங்குவோம் “தமிழகத்தின் ராஜபக்சேவே; தலைநகரத்திற்கு வராதே” என்று!

தென்றல்

நேரலை: கொலைகாரன் அகர்வாலே தமிழ்நாட்டுக்குள் நுழையாதே! நெல்லை கண்டன ஆர்ப்பாட்டம்

கொலைகாரன் அகர்வாலே தமிழ்நாட்டுக்குள் நுழையாதே!
நெல்லை கண்டன ஆர்ப்பாட்டம்

 

நேரலையை பாருங்கள்! பகிருங்கள்!!

அவன் இடத்தை அவனுக்கே கல்லறையாக்குவோம்! | கவிதை

அவன் இடத்தை அவனுக்கே கல்லறையாக்குவோம்! | கவிதை

ஓ…  எம் மண்ணே..
கலங்காதே!
முத்து நகரில்
பதினைந்து உயிர்களை காவு வாங்கிய
கார்ப்பரேட் நரி
தலைநகருக்குள்ளே நுழைகிறதே என்று!

ஓ… எம் உறவே..
வருந்தாதே!
கல்லறைக்குப் போன பின்னும்
போராட்டம் ஓயவில்லையே என்று!

ஓ… எம் தாயின் கருப்பையே..
நடுங்காதே!
கொலைகாரன் கால் பதித்த மண்
இனி தலைமுறைக்கும் சுடுகாடு தான் என்று!

ஓ… எம் நிலமே..
பதறாதே!
உன் மேல் தெறித்த ரத்தம்
நீதி கேட்குமே என்று!

புள்ளினமே
நீரோடையே
காற்றே
மரமே
கடலே
ஒடுங்காதே!
வெடிச்சத்தம் கேட்டதும்
வீழும் உடல்கள் கூக்குரல் இட்டதும்
காதில் ஓயவில்லையே என்று!

தெறித்த ரத்தமும்
சிதறிய சதைகளும்
எழும்பிய ஓலமும் ஓயவில்லை இன்றும்!
உடல்கள் மண்ணில் புதையலாம்
உணர்வுகள் மக்களிடம் விதைகளாய்!

படைகள் புடை சூழ
அதிகாரம் தலைவணங்க
ராஜமரியாதையுடன் வந்தாலும்
அவனொரு  சர்வதேச கொலைகாரன்!
அவனொரு சர்வதேச பயங்கரவாதி!

பஞ்சத்தில் வாழ்ந்தாலும்
பட்டினியில் நடந்தாலும்
ஊண் உறுப்புகளை இழந்த
உறவுகளை இழந்த
எம் மக்களுக்கு
அவன் எதிரி!

லட்சம் பேர் திரண்டோம்
ஆலையை மூடினோம்!
கோடிகளாய் திரள்வோம்!
அவன் இடத்தை
அவனுக்கே கல்லறையாக்குவோம்!

– செங்குரல்

ரணில்: இலங்கையின் மோடி!

லங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க ஜூலை 20, 21 ஆகிய இரண்டு நாட்களில் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்து சென்றுள்ளார். அதிபரான ஓராண்டுக்குப் பிறகு முதல்முறையாக இந்தியா வந்த அவர், தனது பயணத்தின் போது பிரதமர் மோடி, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆயோரை சந்தித்தார். இந்தப் பயணம் இலங்கையின் வளர்ச்சிக்கு உதவும் என ரணில் சொன்னாலும், அவரது இந்தியப் பயணத்திற்கு மற்றொரு முக்கியத்துவமும் இருக்கிறது.

இலங்கைக்குக் ‘கை’ கொடுக்கும் இந்தியா:

கடந்த ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கிக்கொண்ட இலங்கையில் நடந்த எழுச்சிமிக்க மக்கள் போராட்டங்களால் ராஜபக்சேக்கள் நாட்டைவிட்டு விரட்டியடிக்கப்பட்டனர். நிலைமையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அமெரிக்கா, தனது அடிவருடியான ரணில் விக்ரமசிங்கவை அதிபராக்கியது. அமெரிக்காவின் இந்த நகர்வானது ஒருவகையில் தனது பிராந்திய மேலாதிக்கத்தை நிறுவிக் கொள்வதற்கு இந்தியாவிற்கும் சாதகமாக அமைந்துவிட்டது.

இலங்கையைப் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்கும் இரட்சகராக ரணில் முன்னிறுத்தப்பட்டார். ஆனால், உண்மையில் அதன் பிறகுதான் நெருக்கடி தீவிரமானது. உணவு, மருந்துப் பொருட்கள், எரிபொருள் பற்றாக்குறை, 12 மணிநேர மின்வெட்டு, தொழிற்சாலைகள் மூடல்களால் வேலையிழப்பு ஆகியவற்றால் மக்கள் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டனர்.

மக்களது வாழ்வில் இருள் சூழ்ந்திருக்க 46 பில்லியன் வெளிநாட்டு கடனையும் திருப்பிக்கொடுக்க வேண்டிய நிலையில் இருந்தது இலங்கை. இந்நெருக்கடி நிலையில், ஏற்கனவே பொருளாதார ரீதியில் மோசமான நிலையில் இருந்த இலங்கைக்கு மற்ற நாடுகள் உதவத் தயக்கம் காட்டிய போதும், 4 பில்லியன் டாலர் அளவுக்கான உணவு மற்றும் நிதியுதவி வழங்கி தன்னை ஒரு இரக்கக் குணமுடைய வள்ளலாகக் காட்டிக்கொண்டது இந்திய அரசு. இதையடுத்து, சர்வதேச ஆதரவைக் கோரிய இடங்களிலெல்லாம் தனது பங்கிற்கு இந்தியாவைப் புகழ்ந்து பேசி வருகிறார் ரணில். மேலும், இலங்கைக்கு நிதியுதவி அளித்த அமெரிக்கக் கருவூலச் செயலாளர் ஜேனட் யல்லென் மற்றும் சர்வதேச நிதி நாணயத்தின் (ஐ.எம்.எஃப்) முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா ஆகியோருடன் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சர்வதேச மகளிர் தினத்தில் பாராட்டிப் பேசியிருந்தார்.


படிக்க: இலங்கை மின் உற்பத்தி ஒப்பந்தம்: அதானியின் பகற்கொள்ளைக்கு மோடியின் கரசேவை!


தற்போதைய இந்தியப் பயணத்தின் போதும் கூட, சவாலான காலத்தை இலங்கை சந்தித்துக் கொண்டிருந்தபோது இந்தியா உதவியதாகப் பாராட்டி பேசிய ரணில், “இந்தியாவின் வளர்ச்சி அண்டை நாடுகளுக்கும் இந்தியப் பெருங்கடல் பகுதிக்கும் பயனுள்ளதாக இருக்கும். இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தவும் மேம்படுத்தவும் தனது இந்திய வருகை என்பது நல்லதொரு வாய்ப்பாக அமைக்கிறது” என்றார்.

ரணிலின் பயணத்தில் போடப்பட்ட ஒப்பந்தங்கள்:

ரணிலின் இந்த இந்தியப் பயணத்தில், எரிசக்தி, விமான சேவை, தமிழகத்தின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறை இடையேயான பயணிகள் கப்பல் சேவை, இந்தியாவின் யு.பி.ஐ. பணப் பரிவர்த்தனையை இலங்கையில் ஏற்றுக்கொள்வது மற்றும் மக்கள் தொடர்பு உள்ளிட்டவை தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

மேலும், பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வரும், இந்தியா மற்றும் இலங்கை ஒருங்கிணைந்த எரிசக்தி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்தியாவின் உதவியுடன் திரிகோணமலையை எரிசக்தி மையமாக வளர்த்தெடுப்பது குறித்தும் கலந்துரையாடியுள்ளனர்.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் முன்மொழிவின் பேரில், நாகப்பட்டினம், கொழும்பு மற்றும் இலங்கையின் கிழக்குக் கடற்கரையில் உள்ள போர்த்தந்திர ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த நகரமான திரிகோணமலை ஆகியவற்றை இணைக்கும் எண்ணெய் விநியோகக் குழாய்கள் அமைப்பது குறித்து, இலங்கை மற்றும் இந்திய அதிகாரிகள் மட்டத்திலான ஒரு கூட்டம் ஏற்கெனவே இலங்கையில் நடைபெற்றது. திரிகோணமலையில் நூற்றாண்டு காலமாக பயன்பாட்டில் இல்லாத எண்ணெய்த் தொட்டிகளை மீட்டெடுப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இவை இரண்டாம் உலகப்போரின் போது பயனபடுத்தப்பட்ட எண்ணெய்த் தொட்டிகளாகும். இலங்கை சுதந்திரமடைந்த பிறகு இவை கைவிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சந்திப்பில் இலங்கைக்கு எரிசக்தி வளங்களைக் குறைந்த விலையில் வழங்கவும், நம்பகமான விநியோகத்தை உறுதி செய்யவும், தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு எரிசக்தி விநியோகத்திற்கான குழாய்களை அமைப்பதற்கும், இதன்மூலம் எரிசக்தி ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய வளர்ச்சியை மேம்படுத்தும் வகையிலும் பேச்சுவார்த்தை நடந்தது.

இந்தியா ரூபாயில் பரிவர்த்தனை:

கடந்த ஆண்டு திவால் நிலையை அடைந்தபோது இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பு பெருமளவு குறைந்தது. தற்போது அதனை மீட்டெடுக்க இலங்கையின் சுற்றுலாத்தளங்களுக்கு இந்தியாவில் இருந்து பயணிகளை ஈர்ப்பதையும், அதன் மூலம் வரும் வருவாயையும் இலங்கை எதிர்நோக்கியிருக்கிறது.

இனிவரும் நாட்களில் அனைத்துப் பரிவர்த்தனைகளையும் அமெரிக்க டாலருக்குப் பதிலாக இந்திய ரூபாயை பரிவர்த்தனைக்காகப் பயன்படுத்துவது குறித்தும் தற்போதிய ரணில் – மோடி சந்திப்பில் பேசப்பட்டுள்ளது.

இந்தியா வருவதற்கு முன்பு, கொழும்புவில் உள்ள இந்தியத் தலைமை நிர்வாக அதிகாரிகள் மன்றத்தில் ரணில் உரையாற்றியபோது, இலங்கைக்குள் இந்திய நாணயம் விரைவில் ஏற்றுக்கொள்ளப்படும். இது வர்த்தகம் மற்றும் சுற்றுலா ஆகிய இரண்டையும் மேம்படுத்தும் என்று எதிர்பார்ப்பதாகவும், இதன் மூலம் இந்திய நிறுவனங்களிடம் இருந்து அதிக தனியார் முதலீட்டை இலங்கை நாடியுள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.

இந்திய நிதியுதவி, வர்த்தக ஒப்பந்தங்கள் ஆகிய அனைத்தின் பின்னும் இலங்கையின் நலன் இருப்பதாக சொல்லிக் கொண்டிருக்கும் ரணில், அந்த நலனை மேம்படுத்தும் ரகசியம் எதுவென்பதை வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறார். அதுதான் இந்தியத் தனியார் நிறுவனங்களின் முதலீடு. இந்தியாவிலும் கூட மன்மோகன், மோடி உள்ளிட்ட அனைத்து இரட்கர்களும் உதிர்த்த அதே முத்துக்கள் தானே இவை.

இலங்கையின் இரட்சகர் ரணில்! ரணிலின் இரட்சகர் மோதானி!

தந்து இந்தியப் பயணத்தில் இந்தியாவின் பிரமதமரையும் குடியரசுத் தலைவரையும் சந்தித்ததை விட மிக முக்கியமான சந்திப்பை நிகழ்த்தினார் ரணில். அது ரணில் – அதானி சந்திப்புதான். இந்தச் சந்திப்பில், கொழும்பு துறைமுகத்தின் விரிவாக்கம், புதுப்பிக்கத்தக்க மின்னுற்பத்தி திட்டம் உள்ளிட்ட அதானி குழுமத்தின் இலங்கை முதலீடுகள் குறித்து விரிவாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. உண்மையில் ரணில் வந்தது இதற்காகத்தான். அதாவது, அதானிக்காகத்தான். மோடியின் ஆசியுடன், அதானியின் முதலீட்டைக் கொண்டு இலங்கையை மீட்டெடுக்க போகிறாராம் ரணில்.

அதானியுடனான இந்தச் சந்திப்பிற்குப் பிறகு, இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள மன்னார் மற்றும் பூனேரியின் அதானி குழுமத்தின் புதிப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டம் 2025 ஆம் ஆண்டு ஜனவரிக்குள் நிறைவடையும் என்று இலங்கையின் எரிசக்தி துறை அமைச்சர் காஞ்சன விஜசேகர தெரிவித்தார்.


படிக்க: மக்களை வாட்டும் பொருளாதார நெருக்கடி: நேற்று – இலங்கை, இன்று – பாகிஸ்தான்!


கடந்த ஆண்டு மார்ச் மாதம், இலங்கைக்கு வடக்கு மாகாணத்தின் மன்னார் மற்றும் பூநேரி ஆகிய பகுதிகளில் 500 கோடி முதலீட்டில் காற்றாலை மற்றும் சூரிய சக்தி ஆகிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் மின்சாரம் தயாரிக்க அதானி குழுமத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தது இலங்கை மின்சார வாரியம். இதற்கு எவ்வித சட்டப்பூர்வ வழிமுறைகளையும் இலங்கை அரசு பின்பற்றவில்லை.

எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி மக்களிடமும் இந்நடவடிக்கை கடும் எதிர்ப்பைச் சந்தித்தது. இது “மோடியின் நண்பரை கொல்லைப்புற வழியாக அனுமதிக்கும் நடவடிக்கை” என்று எதிர்க்கட்சிகள் சாடினர். மக்களும் இதற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து, “அதானியை நிறுத்து”, “இலங்கையிலிருந்து வெளியேறு” என்று முழங்கினர்.

இதற்கெல்லாம் காது கொடுக்காமல், அதானியை சட்டப்பூர்வமாகவே அனுமதிக்கும் வகையில், இலங்கை மின்சாரச் சட்டம் 2009-இல் உடனடியாக திருத்தத்தைக் கொண்டு வந்தது, அப்போதைய கோத்தபய அரசு. இந்தக் கோத்தபய அரசு மக்கள் எழுச்சியால் வீழ்த்தப்பட்டுவிட்டது. ஆனால், இலங்கையின் மீதான அதானியின் பிடி கொஞ்சமும் தளரவில்லை. அதானி குழுமத்தின் திட்டங்களை விரைவுபடுத்தவும், மேலும் விரிவுபடுத்தும் வகையிலுமே ரணிலின் தற்போதைய இந்திய பயணம் அமைந்துள்ளது. கிட்டத்தட்ட இலங்கையில் 1 பில்லியன் டாலர் முதலீடு கொண்ட இத்திட்டங்கள் மூலம் இலங்கையின் கொழும்பு துறைமுகம் மற்றும் எரிசக்தித் துறையில் அதானியின் ஆதிக்கம் வளர்ந்து வருகிறது.

உண்மையில், இந்தியாவுடனான இத்தகைய ஒப்பந்தங்கள், இலங்கை மீதான இந்தியத் தரகுப் பெருமுதலாளிகளின் ஆதிக்கத்தையே அதிகரிக்கச் செய்யும். இந்தியாவுடன், குறிப்பாக அதானியுடன் பல திட்டங்கள் மற்றும் ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருவதன் மூலம் அதானிக்கு இலங்கையை அடமானம் வைப்பதுடன் இந்தியாவின் பிராந்திய மேலாதிக்கத்துக்கு இலங்கையை பலி கொடுக்கிறார் ரணில். இந்தக் கார்ப்பரேட் சேவைக்கும் இலங்கையை மறுகாலனியக்குவதற்குமே ரணிலின் இந்திய வருகை பயன்பட்டிருக்கிறது.

இந்தியாவில் அதானியின் நலனுக்காக எவ்வாறு, அனுதினமும் மோடி தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளாரோ, அதேபோன்று இலங்கையில் மோடியின் நகலாக இருக்கிறார் ரணில். இலங்கையை மீட்கப் போவதாக சொல்லிக்கொண்டே அந்நாட்டை மறுகாலனியாக்கி வரும் ரணிலின் நடவடிக்கைகள் எவ்விதத்திலும் இலங்கையை மீட்கப் போவதில்லை. “இலங்கையிலிருந்து வெளியேறு” என்று கடந்த ஆண்டு அதானிக்கு எதிராகப் போராடிய இலங்கை உழைக்கும் மக்கள், இன்று இலங்கையை மறுகாலனியாக்கும் ரணிலுக்கு எதிராகவும், இலங்கையில் தனது பிராந்திய மேலாதிக்கத்தை நிறுவத் துடிக்கும் இந்திய அரசுக்கு எதிராகவும் சேர்த்தே தங்களது போர்க்குரலை உயர்த்த வேண்டியுள்ளது.


ஆனந்தி

தோழர் சாலமன் மீது போடப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டத்தை திரும்பப் பெறு! | மக்கள் அதிகாரம்

04.08.2023

தோழர் சாலமன் மீது போடப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டத்தை திரும்பப் பெறு!

மக்கள் அதிகாரம் கண்டன அறிக்கை

தென் கொரியாவைச் சேர்ந்த “ஊசு” கார் உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையானது கட்டுமானப் பணியின் போது  ஆற்று மணலைச் சட்ட விரோதமாகத் திருடி விற்பனை செய்தது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திருவள்ளூர் மாவட்டம் நரசிங்கபுரம் கிராம சபையில்  தீர்மானம் இயற்றப்பட்டது. மேலும் தோண்டி எடுக்கப்படும் மணலை ஊர் மக்கள் பயன்பாட்டிற்கே வழங்க வேண்டும் என்றும் கோரிக்கையை மக்கள் முன்வைத்து போராடினார்கள்.

அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட அம்பேத்கர் பொதுவுடைமைத் முன்னணியின் மாநிலத் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் சாலமன் உட்பட 11 பேரை போலீசு கைது செய்து சிறையில் அடைத்தது. நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பிறகு 10 பேர் விடுதலை செய்யப்பட்ட போதும் தோழர் சாலமனுக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

படிக்க : பத்ரி சேஷாத்ரி கைது – பாசிசக் கருத்துகளுக்கு ஜனநாயகம் வழங்க முடியுமா?

மேலும் தோழர் சாலமனை குண்டர் சட்டப் படியும் சிறையிலடைக்க மாவட்ட கலெக்டர் ஆணையிட்டுள்ளார்.

மக்களுக்காக போராடும் போராளிகளைத் திட்டமிட்டு ரவுடிப்பட்டியலில் சேர்ப்பது, பொய் வழக்குகள் போடுவது, குண்டர் தடுப்புச்சட்டத்தில் அடைப்பது  ஆகிய அடக்குமுறைகளை அரசு மேற்கொண்டு வருவது கண்டிக்கத்தக்கது.

ஊசு நிறுவனத்தின் மீதும் அதன் சட்டவிரோத செயல்பாடுகளுக்குத் துணை போன மாவட்ட கலெக்டர், போலீசு, நிர்வாக அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டுமென்றும் தோழர் சாலமன் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.

தோழமையுடன்,
தோழர் சி.வெற்றிவேல்செழியன்,
மாநிலச் செயலாளர், மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை. 9962366321

ஸ்டெர்லைட் முதலாளி தமிழ்நாட்டுற்குள் கால் வைக்க கூடாது | மக்கள் நேர்காணல்

ஸ்டெர்லைட் முதலாளி தமிழ்நாட்டுற்குள் கால் வைக்க கூடாது | மக்கள் நேர்காணல்

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

ஸ்டெர்லைட்டை இடித்து நொறுக்க வேண்டும் | தோழர் மருது

ஸ்டெர்லைட்டை இடித்து நொறுக்க வேண்டும் | தோழர் மருது

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

கொலைகார அகர்வாலை அடிச்சி விரட்டு! – ம.க.இ.க சிவப்பு அலை கலைக்குழு புதிய பாடல் – டீசர்

கொலைகார அகர்வாலை அடிச்சி விரட்டு!
– ம.க.இ.க சிவப்பு அலை கலைக்குழு புதிய பாடல் – டீசர்

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

முழுபாடல் ஆகஸ்ட் 5 சென்னையில் நடக்கவிருக்கும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டத்தில் பாடப்படும்..

ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் துப்பாக்கிச்சூடு படுகொலை! – திட்டமிட்ட இந்து மதவெறி பயங்கரவாதத் தாக்குதல் !

இராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து மும்பைக்கு வந்து கொண்டிருந்த ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் மராட்டிய எல்லைக்குள் கடந்த திங்கள்கிழமை (ஜூலை 31) அதிகாலை வந்து கொண்டிருந்தபோது  இரயில்வே பாதுகாப்புப் படையைச் சார்ந்த சேத்தன் சிங் என்பவனால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவனது மேலதிகாரி திக்காராவ் மீனா மற்றும் மூன்று இஸ்லாமியப் பயணிகள் படுகொலை செய்யப்பட்டனர்.

இது இந்துமதவெறியனால் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு பயங்கரவாதத் தாக்குதல்தான் என்பதை அவனுடன் பணியாற்றும் காவலர் கன்ஷிராம் ஆச்சார்யாவின் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த வாக்குமூலத்தின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

சேத்தன் சிங் அவனது உயரதிகாரியான திக்காராவ் மீனாவிடம் உடல்நலக் குறைவின் காரணமாக பணி நேரம் முடியும் முன்பே அடுத்த இரயில் நிலையத்தில் இறங்கிக் கொள்வதாக கூறியுள்ளான். திக்காராவ் அதற்கு அனுமதிக்கவில்லை. ஆனால் சேத்தன் சிங் அதைப் பொருட்படுத்தவில்லை. அதன் பிறகு திக்காராவ் அவரது மேலதிகாரிகளிடம் பேசியுள்ளார். அதன் பிறகு பணிநேரம் முடிந்த பின்புதான் இறங்க முடியும், அதன் பிறகு சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு அவனுக்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்து உத்தரவிடப்பட்டுள்ளது. சேத்தன் சிங் அதையும் பொருட்படுத்தவில்லை.

அதன் பிறகு திக்காராவ் “அவரிடமிருந்த துப்பாக்கியை வாங்கிக் கொள்ளுங்கள் இரயிலிலேயே ஓய்வெடுக்கட்டும், நீங்கள் அழைத்துச் செல்லுங்கள்” என்று கன்ஷிராம் ஆச்சார்யா விடம் கூறியுள்ளார்.


படிக்க: நம்பிக்கையில்லாத் தீர்மானம்: குட்டிச்சுவரைக் கட்டி அழாதீர்!


சேத்தன் சிங்கிடம் இருந்து துப்பாக்கியைப் பெற்றுக் கொண்டுள்ளார் ஆச்சார்யா. ரயிலில் காலியாக இருந்த இருக்கையில் சேத்தன் சிங்கை படுக்கச் சொல்லிவிட்டு அருகிலேயே அமர்ந்துள்ளார். சிறிது நேரத்தில் தனது துப்பாக்கியைக் கொடுக்குமாறு சேத்தன் சிங் ஆச்சார்யாவிடம் கேட்டுள்ளான். ஆச்சார்யா கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சேத்தன் சிங் ஆச்சார்யாவின் கழுத்தை நெரித்து துப்பாக்கியைப் பிடுங்கிக் கொண்டு அங்கிருந்து வெளியேறியுள்ளான்.

துப்பாக்கியை மாற்றி எடுத்துக் கொண்டு சென்றதால் மீண்டும் அவனிடம் சென்று தனது துப்பாக்கியை வாங்கிக் கொண்டு அவனது துப்பாக்கியைக் கொடுத்துள்ளார் ஆச்சார்யா. சேத்தன் சிங் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு தயாரான நிலையில் அவனது துப்பாக்கியைக் கையாண்டதை உணர்ந்துள்ளார் ஆச்சார்யா.

சிறிது நேரத்தில் சேத்தன் சிங் B5 பெட்டியில் திக்காராவ் மற்றும் மற்றொரு பயணியை தனது தானியங்கி துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான். மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்த சேத்தன் சிங் தயாராக இருப்பதை ஆச்சார்யா உணர்ந்துள்ளார். பயணிகளை ஆச்சார்யா எச்சரித்துள்ளார். சிறிது நேரத்தில் மறுபடியும் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது.

அடுத்ததாக B 6 பெட்டியில் இருந்த மற்றொரு பயணியையும், B5 மற்றும் B6 பெட்டிகளுக்கு இடையில் அமைந்துள்ள பேன்ட்ரி காரில் மேலும் ஒருவரையும் அவன் சுட்டுக் கொன்றான்.

அதன் பிறகு சாவகாசமாக இரயிலில் இருந்து இறங்கி சேத்தன் சிங் சென்றுள்ளான். ஆச்சார்யா B5,  B6 உடனடியாக சென்று பார்த்தபோது, அங்கே மத அடையாளத்தோடு இருந்த மூன்று இஸ்லாமியர்கள் இரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளனர்.

இக்கொடூரமான படுகொலைகளை நிகழ்த்திய பிறகு “அவர்கள் பாகிஸ்தானில் இருந்து செயல்படுபவர்கள் என்று ஊடகங்கள் கூறியுள்ளன. இந்துஸ்தானில் வாழ வேண்டுமானால்… மோடி, யோகி… இருவருக்குத்தான் வாக்களிக்க வேண்டும்” என்று சேத்தன் சிங் அங்கு பேசிய காணொலி வெளியாகியுள்ளது.


படிக்க: பத்ரி சேஷாத்ரி கைது – பாசிசக் கருத்துகளுக்கு ஜனநாயகம் வழங்க முடியுமா?


படுகொலையான அதிகாரி திக்காராவ் மீனா பழங்குடி சமூகத்தைச் சார்ந்தவர். மற்ற மூவரும் இஸ்லாமியர்கள். இது திட்டமிட்ட இந்து மதவெறி, சாதிவெறி பயங்கரவாத தாக்குதல் அன்றி வேறென்ன?

அரசுக் கட்டமைப்பின் எல்லா அங்கங்களிலும் காவி பாசிஸ்டுகள் ஊடுருவி விட்டார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. அது அன்றாட செய்தியாக மாறி இயல்புநிலையாக்கப்பட்டு வருகிறது. அதன் வெளிப்பாடுகளை, கொடூர பாதிப்புகளை நாம் அனுபவித்து வருகிறோம். குறிப்பாக இராணுவம், போலீசு ஆகியவற்றில் பாசிஸ்டுகள் பரவலாக ஊடுருவியிருப்பது எவ்வளவு பெரிய பேரபாயம் கொண்டது என்பதை இச்சம்பவம் இன்னும் கூடுதலாக நமக்கு உணர்த்துகிறது.

நாங்கள் எல்லா முனைகளிலும் தாக்குதல் தொடுப்போம், இஸ்லாமியர்களைக் கொல்வோம், கிறித்தவர்களைக் கொல்வோம், தலித்களையும் பழங்குடி மக்களையும் கொல்வோம், எங்களை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. ஒன்று எங்களுக்கு அடிமையாக இரு… இல்லையேல் கொல்லப்படுவாய் என்பதுதான் காவி பாசிஸ்டுகள் உழைக்கும் மக்களுக்கும், ஜனநாயகத்தை நேசிப்போருக்கும் விடுக்கும் செய்தி…

பார்ப்பன இந்துமதவெறி பாசிச கும்பலால் சேத்தன் சிங் கதாநாயகனாக்கப்படுவான். பிரக்யா சிங் தாக்கூரைப் போல் 2024 பாராளுமன்றத் தேர்தலில் பிஜேபி வேட்பாளராக நிறுத்தக்கூடப் படுவான். மணிப்பூர், அரியானா வன்முறை, ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் துப்பாக்கிச் சூடு பயங்கரவாதத் தாக்குதல் போன்ற சம்பவங்கள் மூலம் பாசிஸ்டுகள் இந்துராஷ்ரத்தை நோக்கி செல்வதற்கான பாதை எது என்பதை தெளிவாக அறிவித்து நகர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த அரசுக்கட்டமைப்புக்குள் இருந்து கொண்டு, தேர்தலில் மட்டும் வெற்றி பெற்று பாசிஸ்டுகளை வீழ்த்தி விட முடியும் என்று நினைப்பது இந்நாட்டை முற்றாக அழிவுப் பாதைக்குள் கொண்டு சென்று விடும்.

இந்த அரசுக் கட்டமைப்புக்கு வெளியே, பாராளுமன்றத்திற்கு வெளியே காவி பாசிஸ்டுகளை நேரடியாக களத்தில் வீழ்த்துவது ஒன்றே நமக்கிருக்கும் வழி! பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியை விரைவாக கட்டியமைப்பதன் வரலாற்று முக்கியத்துவத்தை பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள் அனைவரும் உணர வேண்டிய தருணமிது.


இனியன

பத்ரி சேஷாத்ரி கைது – பாசிசக் கருத்துகளுக்கு ஜனநாயகம் வழங்க முடியுமா?

கிழக்கு பதிப்பக உரிமையாளரும், பா.ஜ.க ஆதரவாளருமான பத்ரி சேஷாத்ரி கடந்த சனிக்கிழமையன்று அவரது வீட்டில் தமிழக போலீசால் கைது செய்யப்பட்டார். ஆதன்தமிழ் என்ற யூடியூப் சேனலுக்கு மணிப்பூர் பிரச்சினை பற்றி அளித்த பேட்டியில் மோதலைத் தூண்டும் வகையிலும், தலைமை நீதிபதி பற்றி அவதூறாகவும் பேசியதாக கவியரசன் என்கிற வழக்கறிஞர் அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். மிக விரைவாக  நீதிமன்றமும் பிணை வழங்கி விட்டது. என்ன பேசினாலும் பத்ரி சேஷாத்ரிகளுக்கு இது எளிதுதானே…

பத்ரி சேஷாத்ரி கைது செய்யப்பட்டதை வரவேற்றும், கண்டித்தும் பலரும் தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர். அதில் ஒரு சில பத்திரிக்கையாளர்கள் மற்றும் பாடகர் டி.எம்.கிருஷ்ணா, எழுத்தாளர்கள் பெருமாள் முருகன், அம்பை, ராஜன்குறை, காலச்சுவடு கண்ணன், வரலாற்று எழுத்தாளர் ராமச்சந்திர குஹா உள்ளிட்ட சிலர் இந்த கைது தேவையில்லாதது, கருத்துரிமை, ஜனநாயக உரிமைகளுக்கு எதிரானது என தங்களது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

வேறு சிலர் அவரது இழிவான, அபத்தமான பேச்சுக்காக வழக்கு போட்டிருக்கலாம், கைது செய்தது தவறு என்கின்றனர். பத்ரியின் பேச்சு இழிவுபடுத்தும் வகையிலான மற்றும் கோமாளித்தனமான கருத்துகளே தவிர வெறுப்பூட்டும் கருத்துகள் இல்லை, எனவே கைது போன்ற நடவடிக்கை தேவையில்லை என்கின்றனர். கருத்துரிமைக்காகவும், மோடி அரசின் அடக்குமுறைகளுக்கெதிராகவும் குரலெழுப்பியவர்களை கைது செய்தது போன்றதுதான் இதுவும் என்கின்றனர். இரண்டையும் சமப்படுத்தி பேசுகின்றனர். அதாவது இவர்களின் ஜனநாயக உணர்வு என்பது பாசிசத்தை எதிர்த்து போராடுபவர்களுக்கும், விசத்தைக் கக்கும் பாசிஸ்டுகளுக்கும் ஒரே மாதிரியான அளவுகோலை வைக்கிறது.


படிக்க: மோடியிடம் கேள்வி கேட்ட பத்திரிகையாளரை ட்விட்டரில் தாக்கும் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. சங்கிகள்!


பத்ரி சேஷாத்ரியின் அந்த குறிப்பிட்ட பேட்டி முழுக்கவே பார்ப்பன சாதித்திமிரும், இந்துமதவெறியும்தான் வழிந்தோடுகிறது. தமிழர்கள் பொறுக்கிகள் என்பதாகட்டும், இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வக்கிர நகைச்சுவையோடு பேசுவதாகட்டும், பாதிக்கப்பட்ட குக்கி மக்களை இழிவுபடுத்தி அவர்களை போதை மருந்து கடத்தல்காரர்கள், அவர்கள் மைத்திக்களைக் கொன்றார்கள் அதனால் கொல்லப்பட்டார்கள் என்று ஆதாரமே இல்லாமல் பேசுவது, இராணுவம் பெண்களை வல்லுறவு செய்ததை ஒன்றும் பெரிய விசயமில்லை என்கிற தொனியில் பேசுவது, எதிர்க்கட்சிகளை, தலித் இயக்கங்களை, முற்போக்கு இயக்கங்களை, முற்போக்கு நபர்களை இழிவாக சித்தரித்து பேசுவதாகட்டும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பற்றி பேசுவதாகட்டும் பத்ரியின் தடித்த வார்த்தைகளும், உடல்மொழியும் ஒரு பாசிஸ்டுக்குரியதே.  இந்த பத்ரிதான் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, நான் இப்போது அமெரிக்காவில் இருந்தாலும் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்று அன்றே பேசியவர்…

ஆர்.எஸ்.எஸ்- பா.ஜ.க கும்பல் எப்படி சிறுபான்மையினரைப் பற்றி குறிப்பாக இஸ்லாமியர்களைப் பற்றி வெறுப்பை விதைக்கிறதோ, அவர்கள் மீதான தாக்குதலையும், ஒடுக்குமுறையையும் நியாயப்படுத்துகிறதோ அதே போல வெறுப்பூட்டும் வகையில்தான் பத்ரியின் பேச்சும், கருத்துகளும் உள்ளது. இங்கு எழும் கேள்வி ஆர்.எஸ்.எஸ்- பா.ஜ.க கும்பலுக்கு வழங்கப்படும் கருத்து சுதந்திரம் எங்கு போய் முடிந்துள்ளது என்பதைத்தான். நாம் இதை வடமாநிலங்கள் முழுவதிலும், தற்போது ஹரியானாவில் நடைபெறும் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ள கலவரத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

பாசிஸ்டுகளின் கலவரங்களும், சிறுபான்மையினர் மீதான படுகொலைகளும் எப்படி இயல்பு நிலையாக்கப்படுகின்றதோ, அதுபோல் பத்ரி போன்றவர்களுக்கு கருத்துரிமை என்ற பெயரில் ஆதரவு கொடுப்பதானது பாசிசக் கருத்துகளை பேசுவதும் இயல்புதான் என்ற நிலைக்கே கொண்டு செல்லும். இப்படித்தான் வடமாநிலங்களில் சங்பரிவாரங்கள் தங்களது அடித்தளத்தை நிறுவிக் கொண்டன. ஜனநாயகம் என்ற பெயரில் பாசிசக் கருத்துகளையும், நடவடிக்கைகளையும் அனுமதிப்பது ஜனநாயகத்திற்கே முற்றுப்புள்ளி வைக்கும் திசையில்தான் கொண்டு செல்லும். பாசிசத்தின் வளர்ச்சிக்கும், வெற்றிக்குமே வழிவகுக்கும். ஜனநாயகத்தின் பெயரால் பாசிசக் கருத்துகளையும் அனுமதிக்கலாம் எனும் சில அறிவாளிகளது கருத்து பாசிசத்திற்கு மறைமுகமாக ஆதரவளிப்பதை நோக்கியே இட்டுச் செல்லும். பாசிசம் வெற்றியடைந்துவிட்டால் அழுது புலம்புவதையும், ஓடி ஒளிந்து கொள்வதையும் தவிர இவர்களுக்கு வேறுவழியிருக்காது. எனவே பாசிசக் கருத்துகளுக்கு சுதந்திரமளிப்பது ஜனநாயகத்திற்கே எதிரானது என்பதில் தெளிவுடனும், உறுதியுடனும் நிற்போம்! பாசிசத்தை எதிர்த்து முறியடிப்போம்!

நம்பிக்கையில்லாத் தீர்மானம்: குட்டிச்சுவரைக் கட்டி அழாதீர்!

ற்போது நாடாளுமன்றத்தில் நடக்கும் விவகாரங்கள் தொடர்பான விசயத்தில், அப்படி ஒரு முரண் வெளிப்பட்டுள்ளது. மணிப்பூர் விவகாரத்தில் நமது நாட்டின் பிரதமரை நாடாளுமன்றத்தில் பேசவைக்க வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகளின் ‘பகீரத முயற்சி’களின் விளைவாக உருவாகியிருக்கும் முரணாகும்.

‘பகீரத முயற்சி’ என்று சொல்லும் போது நமது இளந்தலைமுறையினருக்கு அது குறித்து தெரியாமல் இருக்கலாம். இராமாயணத்தில் வரும் ஒரு கிளைக்கதையின் நாயகன் பகீரதன். அவன் இராமனின் முன்னோர்களில் ஒருவன். தனது அறுபதாயிரம் முன்னார்களுக்கு கபில முனிவரால் நிகழ்ந்த சாபத்தை நீக்கி புனிதப்படுத்தி சொர்க்கத்திற்கு அனுப்ப விரும்பிகிறான். இதன் பொருட்டு கங்கை நதியை பூமிக்கு அழைத்துவர பிரம்மன், கங்கை, சிவன் ஆகியோரை நோக்கி பலமுறை, பல ஆயிரம் ஆண்டுகள் கடும் தவம் புரிந்ததாகச் சொல்கிறது அந்தப் புராணக் கதை. விடாமுயற்சியும் கடும் உழைப்பும் இருந்தால் வெற்றியடையலாம் என்பதற்குச் சான்றாக பார்ப்பனர்கள் இந்தக் கதையைக் கூறுவார்கள். அற்பக் காரணங்களுக்காக பார்ப்பனர்கள் மற்றவர்களை அலைக்கழித்தாலும் தன்மான உணர்வு குறித்து சிந்தனை கொள்ளாமல் அதனை ஏற்று அவர்கள் சொல்வதை செய்ய வேண்டும் என்ற அடிமைப் புத்தியை இக்கதை தந்திரமாக விதைக்கிறது.

தன் முன்னோர்களை நரகத்தில் இருந்து மீட்க வேண்டும் என்பதற்காக தவம் புரியும் பகீரதன் – ராமாயணக் கதை

சரியாக சொன்னால், நமது நாட்டின் பிரதமர் மணிப்பூர் விசயத்தில் பேச வேண்டும் என்பதில் எந்த அளவிற்கு நியாயம் இருந்தாலும், அவரது நடவடிக்கைகள் நாட்டையும் மக்களையும் அவமானப்படுத்துபவையாக இருக்கின்றன. ஒரு பிரதமர் என்ற முறையில் அவர் முன்வந்து இந்த கலவரங்களைத் தடுத்திருக்க வேண்டும். ஆனால், அவரது கட்சியும் பார்ப்பனிய சிந்தாந்தத் தலைமையும்தான் இந்தக் கலவரங்களின் சூத்திரதாரிகள். இந்தக் கலவரங்களை வளர்க்க வேண்டும் என்பது அவரது விருப்பம். அவர் இந்தப் பிரச்சினையில் வாயைத் திறக்காமல் இருக்கும் நடவடிக்கையானது, கலவரங்களைத் தடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல், அதில் இருந்து திசைத்திருப்பும் ஒரு தந்திரமும் ஆகும்.

மேலும், இப்பிரச்சினை குறித்து பிரதமர் நாடாளுமன்றத்திற்கு வெளியே கருத்துகளைத் தெரிவித்துவிட்டார். அவர் நாடாளுமன்றத்தில் விவாதிக்க தைரியம் இல்லாதவர் என்பது ஒரு உண்மையாக இருந்தாலும் அவர் கருத்து சொல்லி ஆக வேண்டும் என்று கட்டாயமில்லை.

எதிர்க்கட்சிகள் கோருவதெல்லாம், பிரதமர் மணிப்பூர் விசயத்தில் விவாதிக்க முன்வரவேண்டும் என்பது அப்பதவிக்குரிய தார்மீகப் பொறுப்பு, நாடாளுமன்ற மரபு என்ற வகையில் மட்டுமே.

சரி, நமது பிரதமர் என்ன கருத்துகளைச் சொல்வார் என்பதும் நமக்கெல்லாம் தெரிந்த விசயம்தான். அவரது கருத்துகள் என்னவாக இருக்கும் என்பதற்கு நாடாளுமன்றத்திற்கு வெளியே 21-07-2023 அன்று அவர் தெரிவித்த கருத்துகள், மணிப்பூர் முதல்வர் பைரன் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, அமைச்சர் ஸ்மிருதி இராணி போன்றவர்கள் தெரிவித்த கருத்துகளைப் பார்த்தாலே புரிந்து கொள்ள முடியும். இதனைத் தவிர அவரது வாயில் எந்தக் கருத்துகளும் வந்துவிடப் போவதில்லை, கலவரங்களைத் தடுப்பதற்கு எந்த முயற்சியையும் மேற்கொள்ளப் போவதில்லை, இந்தக் கலவரங்களுக்குப் பொறுப்பெடுத்துக் கொள்ளப்போவதுமில்லை.

அதுமட்டுமல்ல, எதிர்க்கட்சிகளின் பெங்களூரு கூட்டத்தைப் பற்றி கருத்து தெரிவித்த அமித்ஷா, அவர்களை இந்திய முஜாகிதீன்கள் என்று கூறுகிறார். அதாவது, ஆளுங்கட்சியை மொன்னையான வகையில் விமர்சனம் செய்வதைக் கூட அங்கீகரிக்கத் தயாராக இல்லை என்பதுதான் பா.ஜ.க.வின் நிலை.

இருப்பினும், நாடாளுமன்றத்தில் பிரதமர் பேச வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் ஒற்றைக் கோரிக்கையாக இருக்கிறது.

இந்த நாடாளுமன்றம் எப்பேர்ப்பட்டதாக இருக்கிறது, நாட்டின் 99 சதவிகித மக்கள் அங்கு என்ன நடக்கிறது என்றே தெரிந்துகொள்ள விரும்பாத ஒரு இடம். ஏனெனில் அவர்களது அன்றாடப் பிரச்சினைகளையும் வாழ்வாதாரத்தை பாதிக்கும் நடவடிக்கைகளையும் பற்றி அங்கு விவாதிக்கப்படுவதாக அவர்கள் கருதுவதில்லை. அப்படிப்பட்ட நாடாளுமன்றத்தில்தான், மோடியை அம்பலப்படுத்த வேண்டுமென்பதற்காக, நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவந்துள்ளனர், எதிர்க்கட்சிகள்.

இதுஒருபுறமிருக்க, நம்பிக்கையில்லா தீர்மானம் என்பது நடந்து கொண்டிருக்கும் ஆட்சியின் மீது நம்பிக்கையில்லை என்பதை விவாதித்து, அதன் மீது வாக்கெடுப்பு நடத்துவதாகும். அவ்வாறு வாக்கெடுப்பில் ஆளுங்கட்சி தோற்றால், ஆட்சி கலைந்துவிடும். ஆனால், ஆகப்பெரும்பான்மையைப் பெற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியை இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் எதையும் செய்துவிடாது என்பதும் எதிர்க்கட்சிகளுக்கு நன்கு தெரியும்.

நமது பிரதமரோ ஒரு ஃபாசிச சித்தாந்தவாதி, கொடுங்கோலன். ஆனால், அவர் எப்படிப்பட்ட கொடுங்கோலன் என்பதுதான் முக்கியமானது.

மணிப்பூரில் என்ன நடக்கிறது என்பதை செய்தியாளர்கள் பலரும் விளக்குகின்றனர். சான்றாக, ஊடகங்களில் வெளிவந்த ஒரு வீடியோவில் பின்வருமாறு ஒரு காட்சி இருக்கிறது. ஒரு குக்கி இன இளம் பெண் நாற்பது ஐம்பது மெய்தி இன ஆண்கள், பெண்கள் மத்தியில் மாட்டிக்கொண்டு அச்சத்தில் நிலைகுலைந்து நிற்கிறாள். அங்கிருக்கும் மெய்தி இனப் பெண்கள் அந்த குக்கி இனப் பெண்ணை நிர்வாணமாக்கி அவளை வன்புணர்வு செய்யுமாறு மெய்தி ஆண்களைப் பார்த்துக் குரல் எழுப்புகின்றனர். ஆகையால், மணிப்பூரில் நடப்பது ஆர்.எஸ்.எஸ்.யின் தூண்டுதலாலும் அரசின் ஆதரவுடனும் மெய்தி இனத்தினர் குக்கி இனத்தினர் மீது நடத்தும் வன்முறை மட்டுமல்ல, ஒரு இனம் இன்னொரு இனத்திற்கு எதிராக நடத்தும் வன்முறையாகும்.

இது குஜராத்தில் இசுலாமியர்களுக்கு எதிராக நிகழ்ந்த இனப்படுகொலையைப் போன்றதல்ல. அது மதவெறியூட்டப்பட்ட கும்பல் அரசின் ஆதரவுடன் திட்டமிட்டு இசுலாமியர்களுக்கு எதிராக நடத்திய வன்முறை வெறியாட்டமாகும். ஆகையால், மணிப்பூரில் நடப்பது நமது நாட்டில் இதற்கு முன்னர் நிகழ்ந்திராத ஒரு வன்முறை வெறியாட்டமாகத்தான் இருக்கும்.

இப்படி ஒரு கொடூரம் அரங்கேறிக்கொண்டிருக்கும் நேரத்தில் கூட அதனைத் தடுக்கமனமில்லாமல், வெளிநாடுகளுக்குச் சுற்றிவருவது, இசைநிகழ்ச்சிகளைக் கேட்பது, கேலிக்கைகளில் ஈடுபடுவதைத்தான் நமது பிரதமர் செய்துவருகிறார்.

எதிர்க்கட்சிகளின் இந்த பகீரதப் போராட்டங்கள் நடக்கும் இந்த ஒருவார காலத்தில் பிரதமரின் செய்கைகளைப் பார்த்தாலே, அவர் எந்த அளவுக்கு கொடூரமான ஃபாசிஸ்டு என்பதைப் புரிந்து கொள்ள முடியும். மணிப்பூர், ஹரியானா பற்றி எரிகிறது, நாடாளுமன்றமோ முடங்கிக் கிடக்கிறது. ஆனால், மோடியோ ஃபிரான்சில் ஊர்சுற்றிக் கொண்டிருக்கிறார். அங்கு யோகா பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார். விருந்துகளில் பங்கேற்கிறார். அம்ருதா களசம் என்று ஒரு யாத்திரையைப்பற்றி பேசுகிறார். திலகர் விருது வழங்கும் விழாவில் பங்கேற்கிறார்.

இன்னொருபக்கம், ஹரியானாவில் விஷ்வ இந்து பரிஷத் என்ற குண்டர்படை கலவரங்களை அரங்கேற்றி வருகிறது. மசூதிகள் தாக்கப்பட்டுள்ளன; இப்பாசிச குண்டர் படையினர் துப்பாக்கிகளைக் கொண்டு போலீசையும் சுட்டுக்கொன்றுள்ளனர்; நுஹ் இமாம் கொல்லப்பட்டுள்ளார். அந்த மாநிலத்திலும் பா.ஜ.க. ஆட்சிதான். இந்த வன்முறைகளை உடனடியாக தடுப்பதற்கான எந்த முயற்சியையும் ஹரியானா முதல்வர் எடுப்பதாகத் தெரியவில்லை.

ஹரியானாவில் விஷ்வ இந்து பரிஷத் குண்டர்படை அரங்கேற்றிய கலவரங்கள்

ஜெய்ப்பூர் எக்பிரஸ் இரயிலில் ரயில்வே காவலராக இந்து பயங்கரவாதி சேத்தன் சிங், ஒரு இரயில்வே உயரதிகாரியையும் மூன்று இசுலாமியர்களையும் சுட்டுக்கொன்ற பயங்கரவாதமும் நடந்துள்ளது. இந்த பயங்கரவாதத்தை அரங்கேற்றும்போது “இவர்கள் எல்லோரும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள்; பாகிஸ்தானின் உளவாளிகள்; இந்தியாவில் இருக்க வேண்டுமென்றால் நீங்கள் மோடிக்கும் யோகிக்கும்தான் வாக்களிக்க வேண்டும்” என்று கத்தியுள்ளான். ஒன்றிய அரசோ, கொல்லப்பட்ட இரயில்வே அதிகாரியின் குடும்பத்தினருக்கு மட்டும் இழப்பீட்டை வழங்கியுள்ளது. ஆனால், கொல்லப்பட்ட இசுலாமியர்களின் குடும்பத்தினருக்கு இதுவரை நிவாரணமே அறிவிக்கவில்லை என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஜெய்ப்பூர் எக்பிரஸ் இரயிலில் இசுலாமியர்களை தேடிச் சுட்ட இந்து பயங்கரவாதி சேத்தன் சிங்

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இப்படி நாள்தோறும் பயங்கரவாதங்கள் அரங்கேற்றப்படும். இதற்கெல்லாம் எதிராக பிரதமர் வாய் திறக்கமாட்டார். வாய் திறக்கச் சொல்லிப் போராடுவதால் மட்டும் இப்பிரச்சினையைத் தீர்க்க முடியாது.

இறுதியாக, ஆகஸ்டு 8-ஆம் தேதி எதிர்க்கட்சிகள் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கும் என்று நாடாளுமன்றத்தின் அவைத் தலைவர் அறிவித்துள்ளார். அதற்குள் நமது நாட்டில் என்னவெல்லாம் நடக்கும் என்று தெரியது. ஆனால், மோடி-அமித்ஷா கும்பல், அதற்குள் பல்வேறு அடக்குமுறைகள், சம்பவங்களை நிகழ்த்தி மணிப்பூர் விசயத்தைப் பழைய நிகழ்வாக்கிவிடும் என்பது உறுதி.

இத்துடன் செண்ட்ரல் விஸ்தா என்ற புதிய நாடாளுமன்றக் கட்டிடமும் இருக்கிறது. அதற்குள் இந்த விவாதத்தை வைக்க இருப்பதாகக் கூட மோடி-அமித்ஷா கும்பல் அறிவிக்கக் கூடும். இந்துத்துவத்தின் மன்றாமாக்கப்பட்டுள்ள அந்த கட்டிடத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடத்த வேண்டியிருக்கும்.

எதிர்க்கட்சிகளுக்கு தற்போது அமித்ஷாதான் பதிலளித்து வருகிறார். அதனால், நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசாமல் இருக்கலாம், அவர் பதிலளிக்காமலேயே நம்பிக்கையில்லா தீர்மானத்தின்மீது வாக்கெடுப்பு நடத்த முடியும் என்று இந்திய ஜனநாயகத்தின் அவலநிலையை ஊடகங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

ஒருவேளை பிரதமர் நாடாளுமன்றத்தில் வாய்திறப்பாரானால், அதற்காக எதிர்க்கட்சிகள் எடுத்துக் கொண்ட பகீரத முயற்சிகள் எல்லாம் பலவகைகளில் கோமாளித்தமானவையாக ஆக்கப்பட்டுவிடும்.

ஏனென்றால், இந்த நாடாளுமன்றக் கரையான் புற்றில் இருந்துதான் பா.ஜ.க. என்ற நாகப் பாம்பு குட்டிபோட்டு வளர்ந்து வந்துள்ளது. இந்த புற்றின் சந்துபொந்துகள் மீது அதற்கு எந்த பயபக்தியும் கிடையாது. அதுமட்டுமல்ல, இன்று பா.ஜ.க.வும் மோடியும் 1999-இல் ஆட்சிக்கு வந்த வாஜ்பாய் போன்று குட்டி அல்ல. அனகோண்டவாக வளர்ந்துவிட்ட நாகப் பாம்பு. இந்த பாசிச அனகோண்டாவின் வலிமை மற்றும் அசைவுகள் காரணமாக நாடாளுமன்றம் என்ற கரையான் புற்றே இடிந்து வருகிறது. தனது வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் உற்ற துணையாக இருந்து இன்று பயனற்று குட்டிச்சுவராகிக்கொண்டிருக்கும் நாடாளுமன்றத்தைத் தூக்கிவீசிவிட்டு ஓட இருக்கிறது அனகோண்டா.

ஆனால், எதிர்க்கட்சிகளோ இந்த அனகோண்டாவை குட்டிச்சுவர்களை வைத்து தடுக்கப் போவதாக நம்பிக்கைக் கொண்டிருக்கின்றன. இந்த நம்பிக்கைக்கு அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிதான் நம்பிக்கையில்லா தீர்மானமாம். சொற்களில் இருக்கும் இந்த முரண், பொருளிலும் அமைந்துவிட்டதுதான் காலப் பொருத்தமாகும்!

ஆகையால், எதிர்க்கட்சிகள் அந்தக் ‘குட்டிச்சுவர்’ மீது நம்பிக்கை வைப்பதையும் அந்த ஆளைப் பேசச்சொல்லும் மொக்கையான விசயத்தையும் கைவிட்டு, வீதியில் இறங்க வேண்டும். மக்களைத் திரட்டிப் போராட வேண்டும். நாடாளுமன்றத்தைவிட நாட்டை முடக்கும் வகையில் பொதுவேலை நிறுத்தத்திற்கு அழைப்புவிடுப்பதுதான் சரியான பதிலடியாகும். மற்றொருபுறம், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பா.ஜ.க. தடை செய்யப்பட வேண்டும். சங்கப் பரிவார அமைப்புகள் தடை செய்யப்பட வேண்டும். மதவெறியைத் தூண்டுகின்ற, ஜனநாயகத்தை இழிவுப்படுத்தி செய்யப்படும் ஆர்.எஸ்.எஸ். கும்பலின் பிரச்சாரங்கள் எல்லாம் தடைசெய்யப்பட வேண்டும். மக்கள் உரிமை, ஜனநாயகத்திற்கு எதிராக பாசிசக் கருத்துகளை ஆதரித்துப் பேசும் ஊடகவியலாளர்கள், அறிவுஜீவிகள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். இதுதான், மோடியை மணிப்பூர் விசயத்தைப் பேச வைப்பது மட்டுமல்ல, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளையும் முடிவுக்குக் கொண்டுவரும்!

மணிப்பூருக்காக தமிழ்நாட்டு மாணவர்கள், ஜனநாயாக சக்திகளின் போராட்டமும் பத்ரி கைதும் சரியான பாதையிலான ஒரு முன்னேற்றமாகும். இந்த திசையில் பாசிசத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தொடரட்டும்.


தங்கம்