Sunday, August 3, 2025
முகப்பு பதிவு பக்கம் 203

புரட்சியாளரான பின்னும் பூணூல் அணிந்திருந்தாரா சந்திரசேகர் ஆசாத் ?

விடுதலைப் போராட்டத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இறுதிமூச்சு வரை போராடிய வீரர் சந்திரசேகர் ஆசாத் அவர்களின் பிறந்த நாளான ஜூலை 23-ஐ முன்னிட்டு தி வயர் இணையதளத்தில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவர்களான ஹர்ஷவர்தன் மற்றும் பிரபாகரன் அகர்வால் ஆகியோர் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம், கீழே கொடுக்கப்பட்டுள்ளது.  சற்று நீளமான கட்டுரைதான்.. ஆனாலும் ஆசாத்தின் வாழ்வில் நாம் அறிந்திராத பல விசயங்களை, அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பல விசயங்களை இந்தக் கட்டுரை பேசுகிறது! படியுங்கள் ! அனைவருக்கும் பகிருங்கள் !!

000

தாய் நாட்டின் விடுதலைக்காக தன் உயிரையே துச்சமென தியாகம் செய்த ஆசாத் இந்திய மக்கள் அனைவராலும் நேசிக்கப்பட்டவராவார். இந்த நாட்டின் விடுதலையானது வெளியிலிருந்து வரக்கூடிய உதவியால் அல்ல; மாறாக உள்நாட்டிலே ஒடுக்கப்பட்ட மக்களால் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்பதை அவர் கொள்கையாகக் கொண்டிருந்தார்.

முறுக்கிய மீசையோடும் கட்டுமஸ்தான உடல் அமைப்போடும் இருக்கக் கூடிய சந்திரசேகர் ஆசாத்தின் படத்தைப் பார்த்தாலே நம்முள் ஒரு வீரஉணர்வு பொங்கி எழும். ஆங்கிலேயரிடம் சிக்காமல் இருப்பதற்காக தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறந்துபோன அவருடைய நினைவுகள் இப்பொழுதும் நம் நினைவிலேயே இருக்கும்.

லஜபதிராயை அடித்துக் கொன்ற போலீஸ் அதிகாரி ஜான் சாண்டர்ஸ் கொலை வழக்கிலும், காக்கோரி ரயில் கொள்ளையிலும் சம்பந்தப்பட்டிருந்த அவர் ஹிந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிபப்ளிகன் அசோசியேஷன் என்ற அமைப்பின் தலைமை கமாண்டராக இருந்தார். இதன் காரணமாகவே நாம் அவருடைய பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் நாம் நினைவுகூரக் கடமைப்பட்டுள்ளோம்.

படிக்க :
♦ பகத் சிங் பிறந்தநாள் : இந்திய புரட்சிகரக் கட்சியின் அறிக்கை !
♦ பகத் சிங்கின் நண்பர் கணேஷ் வித்யார்த்தியை உங்களுக்குத் தெரியுமா ?

யார் இந்த சந்திரசேகர ஆசாத்? எதற்காக அவர் போராடினார்? அவரின் தனிப்பட்ட பிரச்சனைகளின் காரணமாக போராடினாரா? இந்த 115-ம் ஆண்டு பிறந்த நாளில் (ஜூலை 23, 2021) சந்திரசேகர் ஆசாத்தின் புரட்சிகர பயணங்களில் இருந்து சிலவற்றை கற்க முயற்சி செய்வோம்.

1906-ம் ஆண்டு ஜூலை 23-ம் தேதி ஆசாத் அலிராஜ்பூர் என்ற சுதேசி அரசில் உள்ள  பவரா என்ற கிராமத்தில் பிறந்தார். இந்த இடமானது இப்பொழுது மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஜாபூகா மாவட்டத்தில் அமைந்துள்ளது. அவருடைய பெற்றோர்கள் உத்திரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்டவர்கள். தங்களுடைய வாழ்வாதாரத்திற்காக அங்கிருந்து மத்தியப் பிரதேசத்தில் குடிபெயர்ந்தவர்கள் ஆவர். ஆசாத்தின் தந்தையான சீதாராம் திவாரி தோட்ட வேலை செய்து வந்தார். அவருடைய தாய் ஜாக்ரணி தேவி ஆவார்.

அவர் இருந்த கிராமமானது பில் பழங்குடியின கிராமங்கள் சூழ அமைந்திருந்தது. அதனால் இயல்பாகவே பில் பழங்குடியின சிறுவர்களுடன் விளையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அந்த பில் பழங்குடியின மக்களிடம் இருந்து வில் வித்தையைக் கற்றுதுடன் அதிலே மிகச்சிறந்த தேர்ச்சி பெற்றார்.

மிகச் சிறு வயதிலேயே பெற்றோரின் பொருளாதார ஏழ்மை காரணமாக வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார். அவருடைய ஆசிரியர் தாசில்தார் அலுவலகத்தில் வேலைக்கு சேர்த்து விட்டார். ஒவ்வொரு முறையும் உயர் அதிகாரிகள் வரும்பொழுது தலைகுனிந்து அவர்களுக்கு வணக்கம் செலுத்த வேண்டும் என்பது பழக்க வழக்கமாக அங்கே இருந்ததால் இயல்பிலேயே சுயமரியாதை உணர்வு கொண்டிருந்த ஆசாத் இச்செயல்பாடுகளை வெறுத்தார். சில காலம் அங்கேயே வேலை செய்துவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.

1920-களில் பம்பாயில் அவர் பிச்சைக்காரன் ஆகவும் துறைமுகத்தில் கூலியாகவும் இருந்திருக்கிறார். அவர் மும்பையில் இருக்கும் பொழுதுதான் உழைக்கும் வர்க்கத்தின் சொல்லொணாத் துயரங்களை முதன் முறையாக நேரில் கண்டார். அப்படிப்பட்ட அந்த தொழிலாளிகளோடு நெருக்கடி மிகுந்த இடத்தில்தான் தங்கியிருந்தார். இப்படிப்பட்ட நெருக்கடி மிகுந்த இடத்தில் தங்குவதை தவிர்ப்பதற்காகவே திரைப்படங்களுக்கு இரவு நேரத்தில் செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

“கப்பல் துறைமுகத்தில் அவர் வாரத்தில் ஆறு நாட்கள் வரை வேலை செய்வார். அவ்வாறு வேலை செய்து பணம் ஈட்டிய உடனே புது சட்டையையும் திரைப்படத்துக்கு செல்வதற்கான டிக்கெட்டையும் வாங்குவார். ஒரு வாரம் முழுவதும் பயன்படுத்திய பிறகு அந்த சட்டையை தூக்கி எறிந்து விடுவார்.” ஆசாத்தின் பம்பாய் அனுபவங்களைப் பற்றி அவருடன் இணைந்து வேலை செய்த, ஆசாத்தின் வாழ்க்கை சரிதத்தை எழுதிய விஸ்வநாத் வைசாம்பயன் இவ்வாறு கூறுகிறார்.

பம்பாயின் ஒரே மாதிரியான இந்த வாழ்க்கை முறை அவருக்கு மிகவும் சோர்வை ஏற்படுத்துகிறது. மீண்டும் தன்னுடைய முன்னாள் ஆசிரியரை நாடியதன் விளைவாக பெனாரசில் உள்ள காசி வித்யா பீடத்தில் சேர்கிறார். இங்கேதான் அவருடைய அரசியல் வாழ்க்கை தொடங்குகிறது என்று கூறலாம். 1921-ம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி தொடங்கி வைக்கிறார். 15 வயது சிறு இளைஞனான அவர் அந்த இயக்கத்தில் பங்கு கொள்கிறார். அந்த இயக்கம் தொடர்பான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதற்காக போலீசால் கைது செய்யப்பட்டு மாஜிஸ்ட்ரேட் முன்பு நிறுத்தப்படுகிறார்.

இதோ அங்கே மாஜிஸ்ட்ரேட்டுடன் நடைபெற்ற விவாதம்,

 உன்னுடைய பெயர் என்ன?

“ஆசாத்”

உன்னுடைய தந்தை பெயர் என்ன?

நீ எங்கே தங்கி இருக்கிறாய்?

“சிறையில்”

சந்திரசேகர் ஆசாத்தின் பதில்களைக் கேட்டு மிகவும் கோபமடைந்த அந்த மேஜிஸ்ட்ரேட்,  15 வயதான அந்த சிறுவனுக்கு 15 கசையடிகள் தண்டனையாக கொடுக்கும்படி உத்தரவிட்டார்.

ஒவ்வொரு கசையடி விழும் பொழுதும் ‘பாரத் மாதா கி ஜெய்’ இன்று மன உறுதியோடும் அழுது கொண்டே உரத்து முழங்கினார். இந்த சம்பவமானது சந்திரசேகர் என்ற அவருடைய பெயர் ஆசாத் என்று மாறும் அளவுக்கு பெனாரசில் அவரை மிகவும் பிரபலமாக்கியது.

அந்த நாட்களில் காங்கிரஸ் தலைவர்கள் பேசுகின்ற மேடைகளில் சந்திரசேகர் ஆசாத் என்றே அறிமுகப்படுத்தப்படுவார். அவரும் பெயர் காரணம் வந்ததற்கான நீதிமன்ற அலுவலகத்தில் நடைபெற்ற சம்பவத்தை அங்கு விளக்கிப்பேசுவார். இவ்வாறு ஆசாத் காங்கிரஸ் மேடைகளில் ஒரு அங்கமாகி போனார். ஒத்துழையாமை இயக்கத்தில் மிகவும் ஆர்வமுடன் பங்கேற்று இருந்த சந்திரசேகர ஆசாத், காந்தியினால் ஒத்துழையாமை இயக்கம் திரும்பப் பெறப்பட்டது கண்டு, கடும் மனத்துயரம் அடைந்தார். அவர் ஆயுதம் தாங்கிய புரட்சிகர இயக்கத்தில் அடித்துச் செல்லப்படுவதற்கு இந்த சம்பவம் ஒரு முக்கியமான காரணமாக அமைந்தது.

அந்த நேரத்தில் பெனாரஸ் என்பது புரட்சியாளர்களின் ஒரு முக்கியமான மையமாக இருந்தது. ஜோகேஸ் சந்திர சட்டர்ஜி, ராம்பிரசாத் பிஸ்மில் ஆகியோருடன் இணைந்து சசீந்திரனாத் சன்யால் ஹிந்துஸ்தான் ரிபப்ளிகேன் அசோஷியேஷன் என்ற பெயரில் அமைப்பைத் தொடங்கினார்.

பெனாரசை அடித்தளமாகக் கொண்டு செயல்படும் புரட்சியாளர்களான ராஜேஸ்வர்லகரி, மன்மதனாத் குப்தா ஆகியோரை தொடர்பு கொண்டு பின்னர் அவர்களோடு இணைந்து  புரட்சிகர அமைப்பின் ஒரு செயல் துடிப்புமிக்க உறுப்பினர் ஆனார். தொடக்கக்காலத்தில் துண்டறிக்கைகள் விநியோகம் செய்வதும் கட்சி உறுப்பினர்களுக்கு தபால்களை கொண்டு செல்லும் வேலையையும் செய்திருக்கிறார்.

புரட்சிகர அமைப்பின் செயல் துடிப்புமிக்க செயல் வீரனான பின்னர், புரட்சிகர இலக்கியங்களைத் தேடிப் படிப்பதில் ஆர்வம் கொள்ள தொடங்குகிறார்.  அவருடைய கல்வி அறிவு போதாமை காரணமாக மிக குறிப்பிட்ட வரம்புக்குள்ளேயே புத்தகங்களை படிப்பதும் மற்ற தோழர்களை புத்தகங்களை படிக்கச் சொல்லி கேட்பது என்று அவர் தன்னை சித்தாந்த ரீதியாக வளர்த்துக் கொள்வதற்கும் போராடியிருக்கிறார்.

HRA முழு நேர ஊழியரான பிறகு, இத்தாலிய தேசியவாதிகளான மாஜினி மற்றும் கரிபால்டி, ஐரிஷ் புரட்சியாளர்களான மேக்ஸ்வினி மற்றும் பான்டே ஜீவன், சச்சிந்திரநாத் சன்யால்  சுயசரிதை ஆகியவற்றை விருப்பமுடன் படித்தார். ரசியா மற்றும் அயர்லாந்தின் புரட்சிகள் பற்றிய புத்தகங்களையும் குரு கோவிந்த் சிங், சிவாஜி, ராணா பிரதாப் ஆகியோரின் சுயசரிதைகளையும் படிக்கிறார். அக்காலத்தில் புரட்சிகர அமைப்பின் புதிய உறுப்பினர்கள் இப்படிப்பட்ட புத்தகங்களைப் படிப்பது கட்டாயமான ஒன்றாக இருந்தது.

தோழர் சிவவர்மாவிடருந்து கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை புத்தகத்தை ஆசாத் பெறுகிறார். எச்.எஸ்.ஆர்.ஏ-வின் தலைமை கமாண்டராக இருந்தபோது தோழர்கள் அனைவரும் சோசலிசம் பற்றி கற்றுக் கொள்வதற்காக சத்யா பக்த் எழுதிய “ABC OF COMMUNISM” என்ற புத்தகம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எப்படி இருந்தாலும் படிப்பவை அனைத்துமே நடைமுறைக்கானது தான் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

1925-ல் புகழ்பெற்ற காக்கோரி ரயில் கொள்ளையில் ஆசாத் ஈடுபடுகிறார். இதற்கு முன்னதாகவே பல நிலக்கிழார் வீடுகளை கொள்ளையடிக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார். காக்கேரி ரயில் கொள்ளை ஆனது, புரட்சியாளர்கள் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்திற்கு எதிராக நேரடியான யுத்தத்தைத் தொடங்கி விட்டார்கள் என்பதை அறிவித்தது. இந்த சம்பவத்துக்கு பிறகு புரட்சியாளர்களின் மீது மிகவும் கடுமையான அடக்குமுறை செலுத்தப்பட்டது. பலர் சிறையில் அடைக்கப்பட்டனர்; பலர் கொல்லப்பட்டார்கள். எப்படியாகினும் ஆசாத் அதிலிருந்து தப்பித்து ஜான்சியை வந்தடைந்தார். அங்கே சில ஆண்டுகள் மாறு வேடமிட்டு அவர் வாழ்ந்து வந்தார். எப்படிப்பட்ட நேரத்திலும் அவர் தலைமறைவாக சொல்வதில் கெட்டிக்காரராக இருந்ததால் பிஸ்மில் அவருக்கு ‘குயிக்சில்வர்’ என்ற பட்டப் பெயரைக் கொடுத்தார்.

“The Legend of Bagat SIngh” என்ற இந்தி திரைப்படத்தில் ககோரி கொள்ளை தொடர்பான காட்சி

1927-ம் ஆண்டு டிசம்பர் 19-ஆம் தேதி அஸ்வ குல்லா கான், ராம் பிரசாத் பிஸ்மில் ரோஷன் சிங் ஆகிய புரட்சிகர தலைவர்கள் காக்கோரி ரயில் கொள்ளையில் ஈடுபட்டார்கள் என்று கூறி பிரிட்டிஷ் அரசாங்கம் தூக்கு தண்டனை நிறைவேற்றியது.

காக்கோரி ரயில் கொள்ளைக்கு பிறகு புரட்சிகர கட்சியானது மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி சிதிலமடைந்தது. சிறைக்கு வெளியே ஆசாத் மட்டுமே புரட்சிகரக் கட்சியின் உறுப்பினராக இருந்தார். இப்பொழுது இந்த புரட்சிகர கட்சியை மீண்டும் உருவாக்குவதற்கான தேவை அவர் முன்னே இருந்தது. இந்த அவசியமான நோக்கத்திற்காக அவர் பஞ்சாபினை அடித்தளமாகக் கொண்டு செயல்படக் கூடிய பகத்சிங் மற்றும் சுகதேவ் உள்ளிட்ட புரட்சியாளர்களை தொடர்பு கொண்டார்.

அவர்களுடன் மேற்கொண்ட தொடர்ச்சியான கூட்டு முயற்சியின் பலனாக பிரிட்டிஷ் அரசை வீழ்த்துவதற்கான புதிய உற்சாகத்துடன் வளர்த்தெடுக்கப்பட்ட சித்தாந்தத்தால்  பல  புரட்சியாளர்கள் அறுவடை செய்யப்படுவதற்கான காலம் கனிந்தது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வாக வடஇந்தியாவைச் சேர்ந்த பல புரட்சியாளர்கள் இணைந்து ஹிந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிபப்ளிகன் அசாசியேசன் என்ற ஒரு புரட்சிகர  இயக்கத்தை உருவாக்கினார்கள். அந்த இயக்கத்தின் ராணுவ பிரிவுக்கான தலைமை கமாண்டராக சந்திரசேகர ஆசாத் நியமிக்கப்பட்டார். HSRA-ஆனது  HRA-இன் கொள்கைகளோடு இணைந்து மேலும் இது முக்கியமான குறிக்கோள்களை கொண்டிருந்தது.

ஒன்று சோசலிசத்தின் மூலமாக மட்டுமே இக்கட்சியானது தனது இலக்கை அடைய முடியும்.

டர்பன், திலகம், பூணூல் உள்ளிட்ட அனைத்து வகையான சாதி மற்றும் மத ரீதியான அடையாளங்களை அழிக்க வேண்டும்.

லாலா லஜபதிராயை அடித்தே கொன்ற பிரிட்டிஷ் போலீஸ் அதிகாரி ஜேபி சாண்டர்ஸை சுட்டுக்கொலை  செய்ததே HSRA-ன் முதல் நடவடிக்கையாகும்.

இரண்டாவது நடவடிக்கையாக “பொதுப் பாதுகாப்பு மற்றும் தொழில் தகராறு மசோதாவுக்கு எதிராக மத்திய சட்டசபையில் பகத்சிங் மற்றும் பி.கே.தத் ஆகியோரால் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் நடைபெற்றது. மேற்கண்ட இரண்டு சம்பவங்களின் மூலமாக இந்த புரட்சிகரக் கட்சியானது வெளிச்சத்துக்கு வந்ததுடன் பொது மக்களின் ஆதரவையும் ஏகோபித்த அளவில் பெற்றது.

ஆனால், இந்த சம்பவத்துக்கு பிறகு HSRA-ன் தலைவர்கள் பலர் கொல்லப்பட்டும் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

சித்தாந்த பயணத்தில் ஆசாத்

“நான் சிறையிலிருந்து வெளியே வந்து ஆசாத்தை சந்தித்தபொழுது, அவர் சுதந்திர போராட்டம் தொடர்பான கண்ணோட்டங்களில் மிகப்பெரிய மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் பெற்றிருந்தார். புரட்சிகர அமைப்புகளைச் சேர்ந்த புரட்சியாளர்கள் பலர் கொல்லப்பட்டு தியாகி ஆகியுள்ளனர். இந்த சூழலில் தொடர்ச்சியாக புரட்சிகர இயக்கங்கள் வீழ்ச்சி அடைந்து கொண்டே இருப்பதை குறித்து தீவிரமான ஆராய்ந்தறிந்து புரட்சிகர கட்சியானது கண்டிப்பாக விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் வேலை செய்ய வேண்டும். இயக்கத்தின் பிற்காலத் தேவைக்காக தெரிவுசெய்யப்பட்ட சில நபர்களுக்கு ஆயுதப்பயிற்சி அளிக்க வேண்டும்.” என்ற கருத்தை முன்வைத்தார் என்று கூறுகிறார் லாகூர் சதி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அஜாய் கோஷ். 1920-களில் லாகூர் சதி வழக்கில் போதிய சான்றுகள் இல்லை என்று கூறி இவர் விடுவிக்கப்பட்டார். பின்னாளில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகவும் செயல்பட்டார்.

ஒரு முற்போக்கு தேசியவாதியாக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கிய ஆசாத், அதன் வளர்ச்சியின் ஒரு கட்டத்தில் புரட்சிகர கட்சிக்கு அரசியல் சித்தாந்த ரீதியான வளர்ச்சியின் அவசியத்தை உணருகிறார். அதனால் தான் HRA-ஐ HSRA என்று நேரடியாகவே மாற்றியமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறார். இவ்வாறு மாற்றியமைப்பதற்கான முக்கியமான மூன்று காரணங்கள்

  1. காலனிய எதிர்ப்பு தேசியவாதம் என்பதில் இருந்து சோசலிசத்தை நோக்கி முன்னேறுதல்
  2. வெகுஜன அரசியலை நோக்கிய ஆயுதப் போராட்டம்
  3. கறாரான நாத்திகத்தை நோக்கிய சாதி மத அடையாளங்கள் துறப்பு

சிறையில் இருந்து வெளியே வந்த அஜாய் கோஷ், ஆசாத்தை சந்தித்தபோது, தொடர்ச்சியாக கட்சியானது முற்றிலும் முடங்கிப்போய்க் கிடந்தது. மத்திய கமிட்டியானது செயலிழந்து போயிருந்தது. HSRA-ன் மாகாண கமிட்டிகள் சொந்த முறையில் வேலை செய்ய வேண்டுமென்று வழிகாட்டப்படுகிறது. புரட்சிகரக் கட்சி மீண்டும் உருவாக்குவதற்கும் வட இந்தியா மற்றும் மேற்கு, தெற்கு ஆகிய பகுதியில் புரட்சிகர இயக்கத்தை வளர்ப்பதற்காக சில தோழர்களை சித்தாந்த பயிற்சிக்காக யஷ்பால், சுரேந்திரநாத் பாண்டே மற்றும் பவானி சிங் ஆகியோரை சித்தாந்த பயிற்சிக்காக சோவியத் யூனியனுக்கு அனுப்ப வேண்டும் எந்த திட்டத்தையும் கொண்டிருந்தார்.

மேற்கண்ட திட்டமானது மீரட் சதி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் உடனான ஆலோசனையில் இருந்து உருவானதாகும். HSRA மீரட் அமைப்பாளரான ராஜேந்திரபால்சிங் வாரியர் மீரட் சதி வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்தார். அவருடைய தம்பி விஜய்சிங்பால் பாதுகாப்பு கமிட்டியின் உறுப்பினராக இருந்தார். இருவரும் மீரட் சதி வழக்கில் முக்கியமான குற்றவாளிகளாக இருந்தனர்.

வாரியர் தனது நினைவுக் குறிப்புகளின் மூலம் HSRA புரட்சியாளர்கள் சோவியத் யூனியன் செல்வதற்காக பம்பாய் சென்று பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்களை தொடர்பு கொள்ள வேண்டுமென்று திட்டமிடப்பட்டு இருந்ததை கூறுகிறார்.

யஷ்பால் பாம்பே சென்று கம்யூனிஸ்ட் செயல்பாடுகளை சந்திக்கிறார். ஆசாத் இறப்பின் காரணமாக இத்திட்டமானது கைவிடப்படுகிறது பின்னாளில் யஷ்பால் மற்றும் பாண்டே ஆகியோர் கைது செய்யப்படுகிறார்கள். HSRA சார்பில் சோவியத் யூனியனுக்கு கேதார் புரட்சியாளரான பிரீத் சிங் சென்று வந்திருக்கிறார். ஆசாத் கொல்லப்பட்ட அதே ஆல்பிரட் பூங்காவில் சில வாரங்களுக்கு முன்பு அவரை சந்தித்திருக்கிறார்.

ஆசாத்தின் இறுதிக் காலங்களில் அவருடைய சித்தாந்தங்களில் அதிகமான கடுமையான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. சோசலிச தத்துவத்தின் அடிப்படையில் ஏற்கனவே நடத்தப்பட்ட புரட்சிகர போராட்டத்தின் பல்வேறு அனுபவங்களை சேகரித்திருக்கிறார்.

“பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் அடிமைத்தனத்துக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராக நான் செய்துவரும் போராட்டத்தின் விளைவாக நம்முடைய இன்னுயிரை தியாகம் செய்வதற்கு நாம் ஆவலாக இருக்கிறோம். பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிராக நாம் நடத்தக் கூடிய போராட்டங்களை சுதேச அரசுடன் ஒப்பிட முடியாது. ஒருவேளை பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் இந்தியாவை விட்டு வெளியேறிய பிறகு சுதேச அரசுகள் உருவானால் அங்கே இந்த விலங்குகள் (மன்னர்கள்) 10 முதல் 20 வரையிலான பெண்களுடன் அந்தபுரத்தில் சல்லாபித்துக் கொண்டு இருப்பார்கள். அதுதான் அவர்களுக்கு கிடைக்கும் உரிமை எனில்  அவர்கள் நமக்கு என்ன மாதிரியான நீதியை வழங்குவார்கள்” என்று ஆசாத் தன்னுடைய தோழர்களிடம் கூறுகிறார்.

இந்திய தேசிய காங்கிரஸ் ஆகட்டும் அல்லது தேசியவாத இயக்கங்கள் ஆகட்டும் இது நாட்டின் ஒடுக்கப்பட்ட பெரும்பான்மையான மக்களுக்கு ஒருபோதும் நீதியை கொடுக்க மாட்டார்கள் என்று தன்னுடைய கருத்தை தெரிவிக்கிறார். இதன் மூலம் அவருடைய சித்தாந்தம் அது மென்மேலும் வளர்ச்சி அடைந்துள்ளது புரிந்து கொள்ள முடிகிறது. அவர் பரவசமான சூழலில் கீழ்க்கண்ட பாடலை மெல்லியதாக பாடுவார் என்று மன்மத நாத் குப்தா கூறுகிறார்.

“சுதந்திர இந்தியா
அங்கே மக்கள் அனைவருக்கும்
பொதுவான உணவு உண்பதற்கு இருக்கின்றன.
ஆடைகள் உடுத்துவதற்கு இருக்கின்றன.
வீடுகள் தங்குவதற்கு இருக்கின்றன.”

ஆசாத் மிகச்சிறந்த அமைப்பாளராக கட்சியின் தலைமை கமாண்டராக செயல்பட்டார். தத்துவத்திலும் திட்டத்திலும் முன்மாதிரியாக செயல்பட்டார். புரட்சிகர நடவடிக்கைகளை விமர்சித்து காந்தி எழுதிய வெடிகுண்டின் தீமை என்ற கட்டுரைக்கு எதிராக HSRA சார்பில் ‘வெடிகுண்டின் தத்துவம்’ என்ற துண்டறிக்கை விநியோகம் செய்யப்பட்டது. இது தொண்டருக்கு எனது பகவதி சரண்வோரா, யஷ்பால் மற்றும் ஆசாத் ஆகியோர் இணைந்து எழுதினர்.

ஆசாத்தும் மதமும்

புரட்சிகர நடவடிக்கைகளுக்கு நிதி தேவை என்பதற்காக காசிப்பூர் மடாலயத்தை கொள்ளையடிப்பதற்காக திட்டமிடப்பட்டது. அதற்காக ஆசாத் அந்த மடத்திலேயே நான்கு மாதங்களுக்கு மேல் தங்கியிருந்து அந்த மடாலயத்தின் தலைமை பீடாதிபதி இறப்பார் அல்லது அவரை கொலை செய்ய வேண்டும் என்பதற்காக காத்திருந்தார்.

மடாதிபதி இறக்காதபோது அவரை கொலை செய்வதற்கு புரட்சியாளர்கள் தயக்கம்  காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறியிருக்கிறார். இந்தத் திட்டமானது  பின்னாளில் திரும்பப் பெறப்படுகிறது.

முறுக்கிய மீசையோடும் பூணூல் அணிந்த படியும் ஆசாத் இருக்கக்கூடிய படமானது மிகவும் புகழ்பெற்றது. இந்தப் படமானது சமத்துவம் மற்றும் சித்தாந்தம் பற்றிய HSRA நிலைப்பாட்டை கேள்விக்குள்ளாக்குகிறது.

இது ஜான்சியில் ஆசாத் மாறுவேடத்தில் பிச்சைக்காரனாக ராமாயணத்தை பாராயணம் செய்தபோது எடுத்த படமாகும். அவர் பல காலங்களுக்கு முன்னரே பூணூல் அணிவதையும் மத அடையாளங்களை இடுவதையும் 1928-ஆம் ஆண்டில் மத்திய கமிட்டி எடுத்த முடிவின் அடிப்படையில் தவிர்த்துவிட்டார். பூணூல் தொடர்பாக எழுந்த விவாதத்தின் போது “தேசத்திற்காக நீங்கள் உயிர்த் தியாகம் செய்ய முனைந்தால்  கண்டிப்பாக அதையும் தியாகம் செய்வீர்கள்” என்று பதிலளித்தார்.

பல மாறுவேடங்களில் ஆசாத் ஏறத்தாழ ஆறு ஆண்டுகள் புரட்சிகர நடவடிக்கையை மேற்கொண்டார். இந்து துறவி, மோட்டார் மெக்கானிக் இப்படிப் பல வேடங்கள். ஆக மத அடையாளங்களை கருவியாகவே தலைமறைவு வாழ்க்கைக்கு பயன்படுத்தினார்.

கடைசி நாட்கள்

மத்திய சட்டசபையில் வெடிகுண்டு வீசப்பட்ட பிறகு பல தோழர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுகிறார்கள். ஆசாத்தின் கட்சியானது முற்றிலும் முடங்கியது. அப்போதும் கூட அவர் தன்னுடைய நம்பிக்கையை கைவிடாமல் மீண்டும் கட்சியை கட்டுவதற்கான முயற்சியை மேற்கொண்டார். பகத் சிங்கையும் மற்ற தோழர்களையும் எவ்வாறு சிறையில் இருந்து விடுவிப்பது என்பது தொடர்பாகவே அவர் இறுதி நாட்களில் சிந்தித்து வந்தார்.

பகத்சிங் மற்றும் தோழர்களை சிறையில் இருந்து விடுவிப்பதற்காக காங்கிரஸ் தலைவர்களான காந்தி மற்றும் நேரு ஆகியோரை சந்தித்து வலியுறுத்துவதற்காக அவர் முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், அவர் அவர்களிடமிருந்து வெற்று வாக்குறுதிகளை மட்டுமே பெற்றார்.

ஆசாத் புதிய பாதையின் வழியாக கட்சியை மீண்டும் கட்டுவதற்கு அதிகப்படியான முயற்சியை செய்தார். அதற்காகவே பம்பாய் (மும்பை) செல்வதற்கான முயற்சியை மேற்கொண்டார். அங்கு செல்வதற்கு முன் தன்னுடைய இருப்பிடத்தை அலகாபாத்திற்கு மாற்றிக் கொண்டார்.

https://www.youtube.com/watch?v=MHbAJZBTlgg

“The Legend of Bagat SIngh” என்ற இந்தி திரைப்படத்தில் ஆசாத் மரணம் தொடர்பான காட்சி

1931 பிப்ரவரி 27-ம் தேதி ஒருவரை சந்திப்பதற்காக ஆல்பிரட் பூங்காவில் காத்திருந்தார். அப்பொழுது அவரை சுற்றி வளைத்த போலீஸ் சரணடையுமாறு கூறியது. போலீஸிடம் தான் உயிருடன் கைதாக மாட்டேன் என்று அவர் ஏற்கனவே சபதம் செய்திருந்தார். அவருடைய சபதத்தை நிறைவேற்றுவதற்கான நாளும் நெருங்கிவிட்டது. ஆசாத் மிகவும் உறுதியோடு போலீஸ் பட்டாலியனை எதிர்த்து சில மணிநேரங்கள் தீவிரமான சண்டையிட்டார். பிறகு குண்டுக் காயங்களுடன் அவர் உடல் கைப்பற்றப்பட்டது. அவர் தற்கொலை செய்துகொண்டு இறந்தார் என்று மக்கள் கருதுகிறார்கள்.

தாய் நாட்டுக்காக போராடி உயிர் நீத்தவர்களில் மிகவும் நேசிக்கப்பட்டவராக ஆசாத் இப்போதும் இருக்கிறார். வலதுசாரியினர் அவருடைய படத்தை தங்களுடைய போராட்டத்தின் ஒரு பகுதியாக மாற்றுவதற்காக பயன்படுத்துகிறார்கள்.

பல பார்ப்பன இளைஞர்கள் மீசை முறுக்கி விட்டு சாதிப் பெருமையை பறைசாற்றி கொள்வதற்காக சந்திரசேகர் திவாரி என்று தங்களை பெருமையாக அழைத்துக் கொள்கிறார்கள்.

படிக்க :
♦ பிரிட்டிஷ் கைக்கூலியாகவும் தயார் ! என்னை விட்டுவிடுங்கள் | ‘வீர’ சாவர்க்கர் கடிதம் !
♦ மாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்

இந்த நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்களின் மூலமாக மட்டுமே விடுதலை அடைய முடியுமே தவிர வெளியிலிருந்து கிடைக்கக் கூடிய உதவியால் அல்ல என்பதை உறுதியாக கடைப்பிடித்த புரட்சிகர இயக்கத்தின் அசைக்க முடியாத அங்கம் ஆசாத். மத அடிப்படையிலான அரசியலை மட்டுமல்ல; மதங்களின் மீது மிகவும் கடுமையான விமர்சனங்களை கொண்டிருந்தார். ஒரு மனிதன் இன்னொரு மனிதனையோ ஒரு நாடு இன்னொரு நாட்டையோ சுரண்டாத சமூகத்தை உருவாக்குவதற்காக அவர் போராடினார் என்பதே உண்மை.


கட்டுரையாளர்கள் : ஹர்ஷவர்தன் மற்றும் பிரபாகரன் அகர்வால் – ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவர்கள்
தமிழாக்கம் : மருது, மக்கள் அதிகாரம்
செய்தி ஆதாரம் : The Wire

செயல்படாத நிலையில் புலம் பெயர் தொழிலாளர் கண்காணிப்புக் குழு || மக்கள் அதிகாரம்

திருவாரூர் மாவட்டம் காரைக்காட்டு தெருவில் திருச்சியை மையமாகக் கொண்ட சேரிட் என்கிற கட்டுமான நிறுவனத்தில் பீகாரைச் சேர்ந்த கட்டுமான தொழிலாளி சுமார் ஓராண்டுக்கு மேல் வேலைப் பார்த்து வந்தார்.  அவர் கடந்த 05/07/2021 அன்று காலை 8.20 மணி அளவில் தூக்கிடு இறந்துவிட்டார். வழக்குப் பதிவு செய்து சந்தேக மரணம் என்ற அடிப்படையில் காவல் துறை விசாரித்து வருகிறது.

இறந்த தொழிலாளிக்கு ஊனமுற்ற மனைவியும் மூன்று பெண் குழந்தைகளும் இருக்கிறார்கள். தொழிலாளியின் உடல் 10 நாட்களாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்தது.

படிக்க :
♦ “அவர்கள் எங்களை கைவிட்டு விட்டார்கள்” தமிழகத்தில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் !
♦ கொரோனா : கடனில் மூழ்கும் கூலித் தொழிலாளர்கள் !

தொழிலாளியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் சரியான முறையில் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இருந்து அவர் குடுப்பத்தினருக்கு இழப்பீடு வழங்கிட உத்தரவிட வேண்டும். அவருடைய உடலை அவரது சொந்த மாநிலமான பீகாருக்கு அனுப்பி வைக்கும் பொறுப்பை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.

மேலும், இந்த தொழிலாளியை போன்ற வெளிமாநில தொழிலாளிகள் ஆயிரக்கணக்கானோர் திருவாரூரில் வேலை செய்து வருகிறார்கள். ஆனால், அவர்களுக்கு எந்தப் உயிர் பாதுகாப்பும் இல்லாத நிலை இருக்கிறது.

ஆகவே, தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் வெளிமாநில தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்தினர்

போன்ற பல்வேறு கேரிக்கைகளின் அடிப்படையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த மனு அளிக்கு நிகழ்வில் தமிழ்நாடு ஜனநாயக கட்டுமான தொழிற்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் எஸ்.வீரசெல்வன், மக்கள் அதிகாரம் தஞ்சை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் தங்க. சண்முகசுந்தரம், CPI-ML கட்சியின் தோழர் நீதி தமிழன், மக்கள் அதிகாரம் தோழர் ஆசாத் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் உடனடியாக இதை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதனடிப்படையில் திருவாரூர் நகர காவல் நிலையத்தில், காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் தொழிலாளர் நலத்துறை மாவட்ட இயக்குனர் தலைமையில் CPI-ML கட்சியின் தோழர் வீரசெல்வம், மக்கள் அதிகாரம் தோழர் தங்க. சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்திடமிருந்து தொழிலாளி குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் நஷ்ட ஈடாக பெற்றுத் தரப்பட்டுள்ளது.

இறந்த தொழிலாளியின் உறவினர்கள் பீகாரில் இருந்து வரவழைக்கப்பட்டு அவர்கள் முன்னிலையில் தொழிலாளியின் உடல் எரியூட்டப்பட்டது. “கூலி வேலை செய்து பிழைக்கும் நாங்கள் இறந்த வரை எப்படி பார்ப்பது இந்த குடும்பத்தை எப்படி பாதுகாக்கப் போகிறோம் என்று கவலையில் இருந்தோம். ஆனால், எங்களை போன்ற தொழிலாளிகளுக்கு உண்மையாக சேவை செய்யும் அமைப்புகள் தமிழ்நாட்டில் இருக்கிறது என்பது எங்களுக்கு ஒரு புது நம்பிக்கையை கொடுத்திருக்கிறது” என்று தொழிலாளியின் உறவினர் ஒருவர் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

 

This slideshow requires JavaScript.

பிழைப்பு தேடி கூலி வேலைக்காக வரும் வெளிமாநில தொழிலாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மாவட்டம் தோறும் கண்காணிப்பு குழு இருக்கிறது. ஆனால் அந்தக் குழு இயங்காமல் இருக்கிறது. வெளிமாநிலங்களில் இருந்து குறைந்து ஊதியத்திற்காக அழைத்து வரப்படும் கூலித் தொழிலாளிகள் தாங்கள் வேலை செய்யும் நிறுவனத்தில் 12 மணி நேரம் 16 மணி நேரம் வேலை செய்கிறார்கள். அவர்களை கடுமையாக வேலை வாங்கும் நிறுவனங்களோ அவர்களுக்கு எந்தப் பாதுகாப்பும் கொடுப்பதில்லை. உழைப்புச் சுரண்டலை தடுத்து அவர்களை பாதுகாத்துக் கொள்ள தொழிலாளிகள் சங்கம் ஆவது ஒன்றுதான் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்.

தகவல் :
தங்க. சண்முகசுந்தரம்

மக்கள் அதிகாரம், தஞ்சை மண்டலம்
திருவாரூர் : 63747 41279

தேச துரோக சட்டத்தை (124-A) ரத்து செய்யுமா மோடி அரசு ? || தோழர் சுரேசு சக்தி முருகன்

தேச துரோக சட்டம் 124-A என்பது இந்திய குடிமக்களுடைய வாழ்க்கையை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்டது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஒடுக்குமுறைக்காக உருவாக்கப்பட்ட இத்தகைய அடக்குமுறை சட்டங்கள், ஒரு போதும் இந்திய அரசால் நீக்கம் செய்யப்படாது.

இந்த அடக்குமுறை சட்டங்கள் மேலும் தீவரமடையத்தான் செய்யும். அரசின் செயல்பாடுகளால் மக்கள் பாதிக்கப்படும் போது அதை எதிர்த்து குரல் கொடுக்கவோ போராடவோ முற்பட்டால், அவர்கள் இந்த அரசால் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.

குறிப்பாக கார்ப்பரேட்களின் நலன்களின் மீது எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணம் மக்களும் ஜனநாயக சக்திகளும் அடக்கப்படுவதற்கே இதுமாதிரியான மக்கள் விரோத சட்டங்கள் பயன்படும் என்பதை இந்த காணொலியில் விளக்குகிறார் வழக்கறிஞர் சுரேசு சக்தி முருகன்.

காணொளியை பாருங்கள் ! பகிருங்கள் !!

எங்களோட தடுப்பூசி எங்க மோடிஜீ ? || கருத்துப்படம்

நாடெங்கும் தடுப்பூசி பற்றாக்குறை தலை விரித்தாடுகிறது ! குறையத் துவங்கிய கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ள இந்தச் சூழலில், தடுப்பூசியை அதிகரிப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வெறும் வாயிலேயே பள்ளம் வெட்டுகிறார் மோடி !

தடுப்பூசி உற்பத்தியை தனியாருக்கு தாரைவார்த்ததன் மூலம், மக்களை அடுத்த அலைக்கு பலி கொடுக்கத் தயாராகிவிட்டு, அனைவரையும் தடுப்பூசி போட்டுக் கொண்டு பாகுபலியாகச் சொல்கிறார் மோடி !

 

கருத்துப்படம் : மு. துரை

 

கியூபா நாட்டில் அமெரிக்கா நடத்தும் அடாவடித்தனங்கள் !

மெரிக்க மேலாதிக்க வல்லரசு உலகலாவிய பயங்கரவாத அடாவடி அரசாக (Global terrorist rogue State) திகழ்கிறது. அமெரிக்க அறிஞர் நோம் சோம்ஸ்கி “அடாவடி அரசுகளின் உலக விவகாரங்களிலான வன்முறையின் ஆளுமை” என்ற தனது நூலில் அமெரிக்க மேலாதிக்க வல்லரசின் அடாவடித்தனங்களை அடுக்கடுக்காக தோலுரித்துக் காட்டியிருக்கிறார்.

அமெரிக்காவின் அருகிலேயே அமைந்திருக்கும் சின்னஞ்சிறு கியூபா நாட்டை கபளீகரம் செய்வதற்காக பன்னெடுங்காலமாக சதி வலைகளை பின்னி வருகிறது அமெரிக்கா. கியூபாவின் தலைவர் பிடல் காஸ்ட்ரோவை கொலை செய்வதற்கு அமெரிக்க சி.ஐ.ஏ. உளவுப் படை நடத்திய கடுமையான முயற்சிகள் தோல்வியடைந்து அமெரிக்க மேலாதிக்க வல்லரசின் கோரமுகம் உலக மக்கள் முன் அம்பலப்பட்டுப் போய் நின்றது அனைவரும் அறிந்த ஒன்று.

கியூபா அரசை நிலைகுலைய வைப்பதற்கான சதிச் செயல்களை அமெரிக்க மேலாதிக்க வல்லரசு அத்தோடு நிறுத்திக் கொள்ளவில்லை. இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவதாலும் அத்தனை சதிச் செயல்களையும் முறியடித்து பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே கியூபா ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வோடு இருப்பதால், அமெரிக்க மேலாதிக்க வல்லரசு கியூபாவின் மக்கள் நல அரசை சீர்குலைக்க அனைத்து முயற்சிகளையும் செய்கிறது.

படிக்க :
♦ கொரோனா : கியூபாவை எதிர்நோக்கும் பிரேசில் !
♦ இலத்தீன் அமெரிக்க நாடுகளில் சிறுவர்களுக்கு பாதுகாப்பான நாடு கியூபா !

அமெரிக்க மேலாதிக்க வல்லரசு, 60 ஆண்டுகளுக்கு மேலாக கியூபா மீது வர்த்தகத் தடையை விதித்துள்ளது. உலக வரைபடத்தில் வேறு எந்த நாடும் இத்தகைய தடைகளை சந்தித்தது இல்லை. வர்த்தக தடை விதித்ததால் வேறு எந்த நாடும் கியூபாவுடன் வர்த்தகப் பரிவர்த்தனையில் ஈடுபட இயலவில்லை. உயிர் காக்கும் மருந்துகளைக் கூட கியூபாவால் இறக்குமதி செய்ய இயலவில்லை.

29 ஆண்டுகளாக ஐ.நா சபையின் பெரும்பான்மை தேசங்களும் கியூபா மீது உள்ள வர்த்தக தடையை நீக்க வேண்டும் என தீர்மானம் கொண்டு வந்தன. 184 நாடுகள் தடையை நீக்க ஆதரவு தெரிவித்தன. அமெரிக்காவும் இஸ்ரேலும் அந்தத் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த பொருளாதாரத் தடையால் கியூபா 29 ஆண்டுகளில் 150 பில்லியன் டாலர் (ரூ. 11,25,000 கோடி) நஷ்டம் அடைந்து உள்ளது.

இந்த தடைகளையும் தாண்டி, கொரோனா வைரஸை தடுத்து நிறுத்த சிறந்த தடுப்பூசிகளை கியூபா உருவாக்கியுள்ளது. இந்த தடையால் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் சில நாடுகளிலிருந்து தடுப்பூசி மருந்துகளை பெறுவதற்கு கியூபாவிற்கு இயலவில்லை. அமெரிக்காவில் உள்ள ஜனநாயக சக்திகள், மனித நேயர்கள் அமெரிக்க மேலாதிக்க வல்லரசின் இரக்கமற்ற அரக்கத்தனத்தை  கண்டித்து  “கியூபாவிற்கு ஊசிகள், மருந்துகளைக் கொடு” என்ற இயக்கத்தை நடத்துகின்றனர்.

VIDEO: Cuban People Pay Tribute to Fidel Castro at Revolution Sq

உலகம் முழுவதும் தொடரும் கொரோனா நெருக்கடி காரணமாக சமீபத்தில் கியூபாவில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கியூபாவில் தற்பொழுது ஏற்பட்டுள்ள இப்பிரச்சினையை ஊதிப் பெருக்கி அங்கு குழப்பத்தை ஏற்படுத்த அமெரிக்க மேலாதிக்க வல்லரசு தீவிரமாக முயல்கிறது. அங்கிருக்கும் வலதுசாரி அமெரிக்க அடிவருடிகளைக் கொண்டு போராட்டங்களை நடத்தி வருகிறது. கியூபாவில் சமூக ஊடகங்கள் வழியாக புதுவித போரை கியூபாவிற்கு எதிராக நடத்துகிறது. அர்ஜெண்டினா தேசத்தின் தீவிர வலதுசாரியும்  அமெரிக்க கைக்கூலியுமான அகஸ்டின் அந்தோணி என்ற செயல்பாட்டாளர் பல்லாயிரக்கணக்கான ட்விட்டர் கணக்குகளைத் தொடங்கி கியூபாவுக்கு எதிரான பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளார். தொழிலாளர் இயக்க தலைவர்களை, இடதுசாரி சிந்தனையாளர்களை இழிவு செய்வதையே முழு நேரத் தொழிலாக கொண்டிருப்பவன் தான் அகஸ்டின் அந்தோணி என்ற இந்த வலதுசாரி.

கியூபாவிற்கு எதிரான சதித் திட்டங்களுக்கு தலைமையிடமாக புளோரிடா மாநிலத்தில் உள்ள மியாமிச் நகரம் உள்ளது. “நாங்கள் செய்திகளை உற்பத்தி செய்கிறோம்; முதல் வெளிச்சம் பாய்ச்சப்படுவதே சிறந்த செய்தி” என்று கூறுகின்றன இந்த சமூக வலைத்தளங்கள்.

ஆட்டுக்குட்டிக்கு ஓநாய் காவல்” என்பது தான் ஏகாதிபத்திய சித்தாந்த அடித்தளம். உளவுத் தொழில் நுட்பம், புரட்சி எதிர்ப்பு வகுப்புகள் என பயிற்சி கொடுக்கப்பட்டு தான் பொய்யையும் புனை சுருட்டையும் சமூக ஊடகங்களில் ஏகாதிபத்திய எடுபிடிகள் பரப்புகின்றனர்.

10-07-2021 தேதியன்று கியூபாவில் ஆர்ப்பாட்டங்களும் பெரும் குழப்பங்களும் நடைபெற்றன. கியூபாவின் சான் அன்டோனியோ என்ற இடத்தில் கியூப அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த செய்தியை டிவிட்டர் கணக்கின் மூலம் உலகம் முழுவதும் பரப்பினர். அமெரிக்க கடற்படையின் yusneby என்ற கணக்கின் மூலமாகவே இச்செய்தி பரப்பப்பட்டுள்ளது. கியூபாவின் ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசுக்கு எதிராக பெரும் பேரணிகள் நடத்தப்பட்டதாக அமெரிக்காவின் பித்தலாட்ட செய்தியை இந்திய ஊடகங்களும் அப்படியே வாந்தி எடுத்தனர்.

அமெரிக்க மேலாதிக்க வல்லரசின் பிரதிநிதி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பல ஆண்டுகளாக அடக்குமுறைக்கும் பொருளாதார துன்பங்களுக்கும் ஆட்பட்ட போது விடுதலைக்காக போராடும் கியூபா மக்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம் நிற்கிறோம் என்று நீலிக் கண்ணீர் வடித்தார்.

ஏகாதிபத்திய எடுபிடி கும்பலின் எதிர்ப்பு ஆகப் பெரும்பான்மையான கியூபா மக்களால் நிராகரிக்கப்பட்டது. பொருளாதார துன்பங்களின் மூலம் இன்னலுக்கு உள்ளாகும் கியூபா மக்களின் உணர்வைத் தூண்டிவிட்டு கியூபாவின் மக்கள் நல அரசை கவிழ்த்து விடலாம் என்று எண்ணிய அமெரிக்க மேலாதிக்க வல்லரசின் கனவு தகர்ந்தது.

அமெரிக்க நாட்டில் குடியேறிய கியூபா நாட்டினரை தெற்கு புளோரிடா மாகாணத்தில் இயங்கும் தீவிரவாத கும்பலை வைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனர். கியூபா தூதரகத்தின் முன் குண்டுகளை வீசினர். கியூபா நாட்டினர் மீது தொடுக்கும் தாக்குதலை நிறுத்த வேண்டும். கியூபா மீதான முற்றுகையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று சீன அரசு கூறியுள்ளது. வெனிசுலா, மெக்சிகோ ஆகிய நாடுகள் தங்களது முழு ஆதரவையும் கியூபா நாட்டிற்கு வழங்கியுள்ளன.

படிக்க :
♦ எத்தியோப்பிய உள்நாட்டுப் போர் : அமெரிக்காவின் மறைமுக ஆக்கிரமிப்புப் போரே !!
♦ கம்யூனிச அபாயம் : சிரியாவை சீர்கெடுத்த அமெரிக்காவின் கிரிமினல் வரலாறு !

அமெரிக்கா நடத்துகின்ற அத்தனை அடாவடித்தனங்களை, உலக நாடுகளும், உலக பாட்டாளி வர்க்கமும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. அமெரிக்காவின் அட்டூழியங்களை சகித்துக் கொள்ள கியூபா தனித்து விடப்படவில்லை. உலக சமாதானத்துக்கான அமைப்புகள் தங்களது பலத்த கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. சமூக மாற்றத்துக்கான புரட்சிகர அமைப்புகள், சமூக இயக்கங்கள், அறிவுத்துறையினர், மனிதநேய சிந்தனை உள்ள தலைவர்கள் உள்ளிட்டவர்கள் கியூபா மக்களுக்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

தத்துவார்த்த ரீதியில் சில சிதைவுகளும் மாற்றங்களும் நிகழ்ந்துள்ள போதும், கியூபா நாட்டினுடைய அரசு மக்கள் நல அரசாக இருக்கிறது. அமெரிக்க மேலாதிக்க வல்லரசின் அத்துமீறிய தலையீட்டை, அடாவடித்தனத்தை முறியடித்து நாட்டையும் மக்களையும் பாதுகாக்க வேண்டியது சர்வதேச ஜனநாயக சக்திகள் மற்றும் பாட்டாளி வர்க்கத்தின் கடமை. இந்தியத் துணை கண்டத்தில் சமூக மாற்றத்திற்காக போராடும் புரட்சிகர இயக்கத்தின் போராளிகளுக்கும், மக்களுக்கும் இந்த மகத்தான கடமை உள்ளது.


இரணியன்

செய்தி ஆதாரம் : டெலிசர்

தமிழ்நாட்டின் மீதான தாக்குதல்களை முறியடிப்போம் || மக்கள் அதிகாரம் வெளியீடு

மிழகம் பாலைவனம் ஆகாமல் தடுப்பது உழைக்கும் மக்களாகிய நம் அனைவரது கடமையுமாகும். தேர்தல் அரசியல் கட்சிகளை நம்பி அன்று ஜல்லிக்கட்டுப் போராட்டம் தொடங்கப்படவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்த மோடிக்கு எதிரான போராட்டங்கள் எத்தனையெத்தனை?

தமிழகம் தழுவிய கடையடைப்பு, கருப்புக்கொடிப் போராட்டம், எங்கு காணினும் ஆர்ப்பாட்டங்கள் – மறியல்கள், மோடி சென்னைக்கு வந்த போது மூத்திர சந்து வழியாக ஐ.ஐ.டி.க்கு செல்ல வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்திய போராட்டங்கள் என பல போராட்டங்களை தமிழகம் முன்னெடுத்திருக்கிறது. இவை போன்ற போராட்டங்களே இன்று நமக்கு அவசியமானவை.

தொடர்ந்து தமிழ்நாட்டின், தமிழினத்தின் மீது நடத்தப்படும் அடக்குமுறைக்கு முடிவு கட்ட வேண்டுமெனில், தேசிய இனத்தின் நியாயவுரிமைக்காகவும், மோடி அரசின் கார்ப்பரேட் – காவி பாசிசத் திட்டங்களுக்கு எதிராகவும் அனைத்துப் பிரிவு உழைக்கும் மக்களும் ஓரணியில் திரண்டு போராடுவதுதான் ஒரே வழி.

நம்மீது திணிக்கப்படும் கார்ப்பரேட்-காவி பாசிச திட்டங்களுக்கு எதிராகவும் கார்ப்பரேட் கம்பெனிகளின் சுரண்டலுக்கு எதிராகவும் வீறுகொண்டு போராட வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் மக்களின் வாழ்வாதாரங்களைச் சுரண்டும் கார்ப்பரேட்டுகள் மற்றும் அவர்களது கைக்கூலிகளான ரியல் எஸ்டேட் முதலாளிகள், புரோக்கர்கள், அரசு அதிகாரிகளை மக்களின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வரவேண்டும்.

அந்தந்த ஊரில் இருக்கும் வளங்களின் மீது உள்ளூர் மக்கள் அதிகாரம் செலுத்தும் வகையில் உண்மையான ஜனநாயகத்திற்கான மாற்று அதிகார மன்றங்களைக் கட்டியமைக்க உழைக்கும் வர்க்கங்கள், மக்கள் ஓரணியில் திரண்டு போராடுவோம்! மக்கள் எழுச்சியின் மூலம் இதனை சாதிப்போம்!

மேக்கேதாட்டு அணை – யார்கோன் அணை – நீட் தேர்வு :
தமிழகத்தின் மீதான தாக்குதல்களைத் தகர்த்தெறிவோம் || மக்கள் அதிகாரம் வெளியீடு

விலை ரூ. 10

தகவல் :
மக்கள் அதிகாரம்
சென்னை

பாசிச கும்பலுக்கு புரோக்கர் வேலை பார்க்கும் தினகரன் நாளிதழ்

பாசிச மோடி அரசின் ஆட்சியில், தொடர்ச்சியாக பத்திரிகை சுதந்திரம் நெறிக்கப்பட்டு, பத்திரிகையாளர்கள் மிரட்டப்பட்டும், கொல்லப்பட்டும் வரும் சூழல் நிலவுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பத்திரிகையாளர்கள் மிரட்டப்படுவதும், பணிநீக்கம் செய்யப்படுவதும் மிகவும் அதிகமாக நடந்திருக்கிறது.

இந்தியா முழுவதும் கடந்த ஏழாண்டுகளாக, தமது பாசிச நடவடிக்கைகளை அம்பலப்படுத்தும் பத்திரிகையாளர்களை சிறையில் தள்ளியும் மிரட்டியும் வந்திருக்கிறது பாஜக. சமீபத்தில் கூட 40 பத்திரிகையாளர்களின் அலைபேசிகளில், திருட்டுத்தனமாக ஒட்டுக் கேட்கும் ஒற்று மென்பொருளை நிறுவி அவர்களைக் கண்காணித்து வந்த சம்பவம் ஆதாரப் பூர்வமாக அம்பலமாகியிருக்கிறது.

இந்நிலையில், தங்களை அம்பலப்படுத்தும் பத்திரிகைகளைக் குறிவைத்து அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ. ஆகியவற்றின் மூலமாக ரெய்டுகளை நடத்தி, அவற்றை முடக்குவதற்கான வேலைகளையும் செய்து  வருகிறது பாசிசக் கும்பல்.

”நியூஸ் க்ளிக்” எனும் இணையதளம், மோடி ஆட்சியில் நடைபெறும் கார்ப்பரேட் முறைகேடுகளையும், இந்துத்துவ வெறியாட்டங்களையும் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறது. அந்த செய்தி நிறுவனத்தினை மிரட்டி பணியச் செய்யும் வகையில் சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு அந்நிறுவனத்தில் அமலாக்கத்துறை தேடுதல் வேட்டையை நடத்தியது.

படிக்க :
♦ அரசின் கையாலாகா நிலையை மறைக்க தேசியவெறியை கிளப்பும் தினகரன் !
♦ கொங்கு நாடு : கொளுத்திப் போட்ட தினமலர் – ஊதிவிடும் மாலன்

அதன் பின்னர், அந்நிறுவனம் அந்நிய நாடுகளில் இருந்து முறைகேடான முறையில் நிதிபெற்று வந்ததாக பொய்யான குற்றச்சாட்டுகளை, அதிகாரப்பூர்வமற்ற வகையில் கசியவிட்டது. இதனை பல்வேறு ஜனநாயக ஊடகங்களும் கடுமையாகக் கண்டித்தன. இதற்கு எதிரான வழக்கு நீதிமன்றத்த்ல் நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று (19.07.2021), நியூஸ் கிளிக் நிறுவனம் குறித்து ஒரு செய்தியை தினகரன் நாளிதழ் வெளியிட்டிருந்தது.

இலங்கையைச் சேர்ந்த சிங்கம் உதவி : சீனாவுக்கு ஆதரவாக ரூ 38 கோடி வாங்கிய ஊடகம் அமலாக்கத் துறை திடுக்கிடும் தகவல்” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தது தினகரன்.

செய்தியின் உள்ளடக்கத்தில், நியூஸ் கிளிக் ஊடகத்தின் நிதிப் பரிமாற்றங்களை கண்காணித்து வந்த அமலாக்கத் துறை, “கடந்த 2018 முதல் 2021 வரையிலான காலத்தில், சீனாவுக்கு ஆதரவாக செய்தி வெளியிட இந்நிறுவனத்துக்கு 38 கோடி ரூபாய் பணம் கொடுக்கப்பட்டது உறுதியானதாக” தகவல் தெரிவித்திருப்பதாகக் கூறி செய்தி வெளியிட்டது.

மேலும், இலங்கையைச் சேர்ந்த க்யூப வம்சாவளி தொழிலதிபர் நெவில்லே ராய் சிங்கம் என்பவர் இந்த பணப் பரிமாற்றத்துக்குப் பின்புலமாக செயல்பட்டுள்ளார் என்றும் இதில் குறிப்பிட்ட தொகை எல்கர் பரிஷத் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கவுதம் நவ்லகா உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், நவ்லகாவிடம் இதுகுறித்து விசரித்து வருவதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.

இந்தச் செய்தியை வெளியிட்டுள்ள தினகரன், அதற்கான அடிப்படை ஆதாரத்தைப் பற்றியோ, அது குறித்து அச்செய்தி பிரசுரமாவதற்கு முன்பே (18.07-2021 அன்றே) அமலாக்கப் பிரிவின் அவதூறுக்கு மறுப்புத் தெரிவித்து நியூஸ் கிளிக் இணையதளத்தின் ஆசிரியர் பிரபிர் பர்கய்ஸ்தா வெளியிட்டுள்ள மறுப்பையோ வெளியிடவில்லை.

பாசிச மோடி அரசு, ஊடகங்களை முடக்குவதற்கு அமலாக்கத் துறை, வருமானவரித் துறை ஆகியவற்றைப் பயன்படுத்துவது குறித்து சாதாரண நபர்களுக்கே தெரிந்திருக்கும் இந்தச் சூழலில், அனைத்து அறிந்திருக்கும் தினகரன், இதுபோன்ற மொட்டைச் செய்திகளை அதற்கான விளக்கம் ஏதுமின்றி வெளியிட்டுள்ளது.

நியூஸ் கிளிக் செய்தி நிறுவனத்தில் நடத்தப்பட்ட அமலாக்கப் பிரிவு தேடுதல் வேட்டை குறித்து வழக்கு நடைபெற்று வரும் நிலையில், இப்படி பொருத்தமற்ற அரைகுறை தகவல்களை அமலாக்கத்துறை ஊடகங்களுக்கு கசியவிட்டு வருவதாகவும், அது குறித்து சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தமது தளத்தில் தெரிவித்திருக்கிறார், நியூஸ்கிளிக் இணையதளத்தின் ஆசிரியர் பிரபிர் பர்கய்ஸ்தா.

கடந்த 18-07-2021 அன்றே நியூஸ் கிளிக் இணையதளத்தில் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், அமலாக்கத்துறையிலிருந்து கிடைக்கப்பெற்ற செய்தியின் அடிப்படையில் ஒரு இழிவான பிரச்சாரம் நியூஸ் கிளிக் தளத்திற்கு எதிராக நடத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டே அந்த அறிக்கையை துவக்குகிறார்.

நியூஸ் க்ளிக் இணையதளத்தின் மீது செய்யப்பட்டுள்ள, அந்நிய நேரடி முதலீடுகள் மற்றும் அதன் குழுச் சேவைக்காக வழங்கப்பட்ட கட்டணம் ஆகியவை குறித்துதான் அமலாக்கத்துறை விசாரித்தது என்றும், இவை அனைத்தும் வெளிப்படையான வங்கிப் பரிவர்த்தனை மூலமும், முறையான அரசு பிரதிநிதிகள் வாயிலாகவுமே நடைபெற்றவை என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேற்கூறிய இருவகையான பணப் பரிவர்த்தனையும் நம்பிக்கைக்குரிய அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளில் இருந்தும் இந்தியா மற்றும் அமெரிக்காவின் சட்ட வழிமுறிகளுக்கு உட்பட்டே நடத்தப்பட்டுள்ளன. இத்தகைய தாக்குதல்களால் நியூஸ் கிளிக் பணிந்துவிடாது என்றும் தொடர்ச்சியாக தனது பத்திரிகைப் பணியை துணிவுடன் செய்யும் என்றும் அந்த அறிக்கையில் கூறியுள்ளார் நியூஸ் கிளிக் இணையதளத்தின் ஆசிரியர்.

மோடியின் ஊடக ஒடுக்குமுறைக்கு ஒத்து ஊதும் விதமாக ஒரு செய்தியைப் பற்றி முழுமையான விவரத்தை வெளியிடாமல், பாசிச கும்பலுக்குச் சேவை செய்யும் வகையிலேயே செய்தி வெளியிட்டுள்ளது தினகரன்.

நியூஸ் கிளிக்கிற்கு எதிரான பாசிச கும்பலின் இழி பிரச்சாரத்தில் பங்குகொண்ட தினகரன் அதோடு நிற்கவில்லை. பாசிச கும்பலின் அடுத்த ஆயுதத்தையும் வாசகர்களின் மீது பிரயோகித்திருக்கிறது.

பாஜக தலைமையிலான பாசிச கும்பல் மக்களை திசைதிருப்பவும், ஏமாற்றவும் கையில் வைத்திருக்கும் மற்றொரு ஆயுதம், போலி தேச பக்தி மற்றும் பாகிஸ்தான், சீன எதிர்ப்பு உணர்வுகளைத் தூண்டுவதுதான். பிரச்சினை முற்றி வரும் சுழலில் இது போன்ற தேசபக்த விவகாரங்களைக் கிளப்பிவிட்டு, குளிர்காய்வது பாஜகவின் வழக்கம்.

காலங்காலமாக அதை மக்களிடம் கொண்டு சென்று வியாபாரம் செய்வதிலும் தினகரனுக்கு நிகர் தினகரன் தான்.

அதே 18-07-2021 தேதிக்கான நாளிதழில், “ஆப்கானிஸ்தானில் இந்தியாவால் உருவாக்கப்பட்ட சொத்துக்களை தாக்கி அழியுங்கள்.” என்ற தலைப்புடன். “தலிபான் தீவிரவாதிகளுக்கு பாக். உத்தரவு. 10000 வீரர்களை உதவிக்கு அனுப்பியது. ” என்ற உபதலைப்புடன் ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறது.

படிக்க :
♦ ஓ.டி.டி., சமூக ஊடகங்கள், மின்னணு செய்தி ஊடகங்களை முடக்கத் துடிக்கும் மோடி !
♦ டிஜிட்டல் ஊடகங்களின் மீதான மோடி அரசின் தாக்குதல்

இந்தியாவின் பல ஆயிரம் கோடி நிதியுதவி மூலமாக பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்கள் ஆப்கனில் நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும், அந்த கட்டிடங்கள் எல்லாம் இந்தியாவின் பெருமை பேசுவதால், அவற்றை அழிக்க பாகிஸ்தான் 10000 வீரர்களை தாலிபான்களோடு அனுப்புவதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ‘அதிர்ச்சித்’ தகவலை இந்திய உளவுத்துறை நிறுவனங்கள் தெரிவித்ததாகத் தெரிவிக்கிறது இந்தச் செய்தி.

தாலிபான்களின் ஆட்சி ஆப்கானில் வந்தால் பாதிக்கப்படப் போகும் நாடுகளில் பிரதானமானது பாகிஸ்தான் தான். எனில் தாலிபான்களுடன் ஏன் தனது படை வீரர்களை பாகிஸ்தான் அனுப்பப் போகிறது? இந்தியக் கட்டிடங்களை உடைக்க 10000 வீரர்களை தாலிபன்களுடன் அனுப்பும் அளவிற்கு பாகிஸ்தானிடம் பண பலம் உள்ளதா ? என அடிப்படையான சில கேள்விகளிலேயே உடைந்துவிடத்தக்க ஒரு வாதத்தை பெரும் உளவுத்துறை தகவலாகக் கூறி, பாகிஸ்தான் எதிர்ப்பு மனநிலையையும் தேசிய வெறியையும் தூபம் போட்டு வளர்க்கிறது தினகரன்.

ஒருவேளை இப்படி ஒரு விவகாரம் நடைபெற்றிருந்தால் கூட, அதை அதிகாரப் பூர்வமாக சொல்லவேண்டியது இந்திய அரசு தானே ஒழிய, உளவுத்துறை அல்ல. இப்படி இழிவான வகையில் தேசிய வெறியை தேர்தல் சமயத்தில் பாஜக அறுவடை செய்யும் வகையில் வளர்த்துவிடுகிறது தினகரன்.

பாசிசக் கும்பலுக்குச் சேவை செய்யும் வகையிலான இது போன்ற செய்திகளை தினகரனில் அன்றாடம் காணலாம். தினமலர், தினமணி, துக்ளக் போன்ற பத்திரிகைகள் வெளிப்படையாகவே பாசிச கும்பலை ஆதரிக்கும் வகையில் செய்திகளை வெளியிடுவார்கள். இவர்கள் பாஜக-வை ஆதரித்துக் கொண்டே பாசிச சித்தாந்தத்தையும் பரப்புவார்கள்.

ஆனால் தினகரன் போன்ற பத்திரிகைகள், பாஜக-வை எதிர்த்து செய்து வெளியிட்டுக் கொண்டே பாசிச சித்தாந்தத்திற்கு மறைமுகமாக புரோக்கர் வேலை செய்கின்றன. இப்படி நைச்சியமாக பாசிசத்திற்கு சேவை செய்யும் தினகரன் குழுமத்தை தொடர்ந்து அம்பலப்படுத்துவதுதான் ஜனநாயகத்தை பாசிசத்தின் பிடியிலிருந்து காப்பதற்கான ஒரே வழி !

கர்ணன்
செய்தி ஆதாரம் : தினகரன் நாளிதழ் – 19-07-2021

பசில் ராஜபக்சேக்கு அமைச்சர் பதவி : ராஜபக்சே குடும்பத்தின் பிடியில் இலங்கை || ரிஷான் ஷெரிஃப்

சில் ராஜபக்சேவின் பாராளுமன்றப் பிரவேசம் குறித்து விவாதங்கள் செய்வது பயனற்றதொரு செயல். பசில் பாராளுமன்றத்துக்குப் பிரவேசிப்பதில் தவறென்ன இருக்கிறது? தவறு என்றால் அப்பிரவேசம் இந்தளவு தாமதித்தது மாத்திரம்தான்.

பசில் பாராளுமன்றம் வராதிருந்த கடந்த காலம் முழுவதும் அரசாங்கத்தின் முக்கியமான தீர்மானங்கள் அனைத்தும் அவரது ஆலோசனைக்கும், ஆசிர்வாதத்துக்கும் ஏற்பவே எடுக்கப்பட்டன. ஆகவே, பசில் பாராளுமன்றத்தில் இருப்பதுவும், இல்லாதிருப்பதுவும் ஒன்றுதான்.

படிக்க :
♦ லைக்கா குழுமம் : மோடிக்கு வரவேற்பு – ராஜபக்சேவுடன் தொழில் கூட்டணி !
♦ கொழும்பு துறைமுக நகரம் : சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் இலங்கை !

எப்போதும் பசிலின் அறிதலோடுதான் அனைத்தும் நடைபெறுகின்றன. பசில் பாராளுமன்ற அமைச்சர் பதவியை ஏற்று அமைச்சைப் பொறுப்பேற்பது அவரது அரசியல் தலையீடுகளுக்கு இலகுவாக இருக்கும். பசில் அமைச்சர்களுக்கு பேச்சால் மாத்திரமல்லாது உடலாலும் தாக்கக் கூடிய ஒருவர் என்பதால் பெரும்பாலானோர் பசிலின் பாராளுமன்றப் பிரவேசத்தை விரும்புவதில்லை.

பசில் ராஜபக்சே

ராஜபக்சேக்களை ஆட்சியில் அமர்த்திய பின்னர் அவர்களுள் நல்ல ராஜபக்சே, மோசமான ராஜபக்சே என்ற வேறுபாடு இல்லை. அவ்வாறான நிலைமையில் பசில் ராஜபக்சேவின் பாராளுமன்றப் பிரவேசம் குறித்தும், அமைச்சைப் பொறுப்பேற்றது குறித்தும் உரையாடுவது வெறுமனே எமது காலத்தைத்தான் விரயமாக்கும். ராஜபக்சேவின் குடும்பத்தோடு தொடர்புடைய அனைவருக்கும் அரசாங்கத்தின் உயர் பதவிகளை வழங்கிக் கொண்டிருக்கும் இந்த அரசாங்கத்தில் பசிலின் பாராளுமன்றப் பிரவேசம் ஒரு வியப்புக்குரிய விடயமல்ல.

ஒரு குழு ‘பசில் வேண்டும், பசில் இல்லாமல் நாட்டை முன்னேற்ற முடியாது’ என கூச்சலிட்டுக் கொண்டிருக்கையில் அதைக் கேட்டு ஆவேசம் கொண்டு பதிலுக்குக் கூச்சலிடுவது முட்டாள்தனமேயன்றி வேறில்லை. பசிலை சிறப்பாக வரவேற்று அவருக்கு விருப்பமான விதத்தில் செயற்பட இடமளிப்பது போன்ற அரசியல் இலாபமளிக்கும் செயற்பாடு இந்த அரசாங்கத்துக்கு வேறில்லை. பசில் இல்லாததால் அல்லாது, பசிலின் செயற்பாடுகளாலும்தான் தற்காலத்தில் அரசாங்கம் செயலிழந்து போயிருக்கிறது.

பசிலின் நோக்கமெல்லாம் பாராளுமன்றத்துக்குள் பிரவேசித்து, வரப்போகும் இலாபங்கள் அனைத்தையும் சுருட்டிக் கொள்வதுதான். அதில், அவர் மிகவும் திறமை வாய்ந்தவர். இந்த விடயத்தில் இந்த ராஜபக்சேக்கள் அனைவருமே ஒன்றுபோலவே எப்போதும் செயற்படுகிறார்கள். அதை விளங்கிக் கொள்ளாமல் அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டு பிரியும் வரைக்கும் காத்திருப்பது தவறு. இந்த சமூகத்தின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதுதான் ராஜபக்சேக்களின் நோக்கம். கைப்பற்றியதுமே அதை குடும்ப அதிகாரமாக நிலைநிறுத்தி விடுவதிலும் அவர்கள் திறமை வாய்ந்தவர்கள்.

நாமல் ராஜபக்சே

நாமல் ராஜபக்சே அருமையானதொரு உதாரணத்தைக் கூறியிருக்கிறார். அதாவது ஒரு முச்சக்கர வண்டியின் முன்னாலிருக்கும் சக்கரம் மஹிந்த ராஜபக்சே என்றும், பின்னாலிருக்கும் சக்கரங்கள் இரண்டும் பசிலும், கோத்தாபய என்றும் கூறியிருக்கிறார். இந்த மூன்று சக்கரங்களும் இல்லாமல் வண்டி முன்னோக்கி நகராது என்றும் கூறுகிறார். அந்த வண்டிக்குள் சுகமாக அமர்ந்து பயணித்துக் கொண்டிருப்பவர்கள் நாமலும், யோஷிதவும், ரோஹிதவும் என்பது இதில் அவர் சொல்லாமல் போன விடயம்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது, அநாதரவாகிப் போயிருந்த ராஜபக்சேக்களை கை கொடுத்துத் தூக்கி விடுவதில் பசிலின் செயற்பாடுகள் மிக அதிகளவில் பங்காற்றின. அந்த ஒருமைப்பாட்டின் பலம் மிக உயர்ந்தது. அவ்வாறான நிலைமையில் பசிலை இவ்வளவு காலம் பாராளுமன்றத்துக்குக் கூட்டி வராதிருந்ததே பெரும் பிழை. பசில் வந்ததன் பின்னர் இந்த நாடு செழிப்புறும் என்று கூற முடியாவிட்டாலும், ராஜபக்சேக்களின் ஆதாயம் தேடும் செயற்பாடுகள் செழித்து ஓங்கி வளரும் என்பது நிச்சயம். அக்காலத்தில் பசிலை எதிர்த்த அமைச்சர்களும், பசில் அமைச்சைப் பொறுப்பேற்று பதவியேற்ற பின்னர் அவரது இரு பாதங்களையும் முத்தமிடத் தயாராகவே இருப்பார்கள்.

பசிலுக்கும் அமைச்சைப் பொறுப்பை கையளித்ததன் பிறகு அதிகாரங்கள் பலதும் அவர் வசமாகும். ஆகவே, பாராளுமன்றத்திலுள்ள ஏனைய அமைச்சர்கள் பெயரளவில் மாத்திரம் அமைச்சர்களாக இருக்கும் நிலைமை உருவாகும். அவ்வாறான நிலைமையில் அனைத்து அதிகாரங்களும் ராஜபக்சேக்களுக்கே உரித்தாகும்.

நாட்டில் அறுபத்தொன்பது இலட்சம் பேர் பெரும்பான்மை வாக்களித்து ராஜபக்சே அரசாங்கத்திடம் கையளித்த ஆட்சியில் ராஜபக்சேக்களின் நோக்கம் இந்தத் தருணத்தில் மிகச் சரியாக ஈடேறிக் கொண்டிருக்கிறது. இனி பசில் பொறுப்பைக் கையேற்றதன் பிறகு நாட்டில் மீண்டும் ராஜபக்சே யுகமே தலை விரித்தாடும்.

எம்.ரிஷான் ஷெரீப்

disclaimer

ஒழித்துக் கட்டப்பட வேண்டிய மக்கள் தொகை கட்டுப்பாட்டு மசோதா!

பொது சுகாதாரம் மற்றும் சமூக வளர்ச்சித் துறையில் பணிபுரியும் பலரும் சமீபத்தில் உத்தரப் பிரதேச அரசால் கொண்டுவரப்பட்ட மக்கள் தொகை (கட்டுப்படுத்துதல், உறுதிப்படுத்துதல், நலம்) 2021-ஆல் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த மசோதாவானது, இரு குழந்தைகள் மட்டும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதை சட்டப்படியாக்குவதில் கவனம் கொண்டுள்ளது. மேலும், இதனை நடைமுறைப்படுத்துவதற்காக சலுகைகள் மற்றும் சட்ட மீறலுக்கான அபராதம் ஆகியவற்றை குறிப்பிடுகிறது. இந்த மசோதாவின் உள்ளார்ந்த அபாயங்களால் எதிர்மறை விளைவுகள் அதிகரிக்கின்றன.

ஆனால், பெரும்பான்மையான நிபுணர்கள் “வளர்ச்சியே கருத்தடைக்கான சிறந்த வழிமுறை” என்று கூறுகின்றனர். சலுகைகள் – அபராதங்கள் போன்ற பகுத்தறிவற்ற மூடத்தனமான நடவடிக்கைகளால் உறுதியற்ற நீண்ட பயணத்தை நோக்கி செல்ல முடியுமே தவிர தீர்வை அல்ல.

படிக்க :
♦ உ.பி : முசுலீம்களை எதிரிகளாக சித்தரிக்க துணைபோகும் மக்கள் தொகை வரைவு !
♦ இந்திய மக்கள் தொகையில் பாதியளவு வறுமைக்கு தள்ளப்படுவார்கள் : உலக வங்கி அறிக்கை !

1994-ம் ஆண்டில் திட்டமிடல், நடைமுறைக்கான மக்கள்தொகை மற்றும் வளர்ச்சி பற்றிய சர்வதேச மாநாடு நடைபெற்றது. அம்மாநாடானது “கடுமையான முறையில் கட்டாயப்படுத்துதல், சலுகை மற்றும் அபராதங்கள் போன்றவை மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் மிக மிகச் சிறிய பங்கையே ஆற்றும். அதற்குப் பதிலாக மக்களையே தெரிவு செய்யும் முறையை கையாளுவதன் மூலம் மட்டுமே நோக்கத்தை நிறைவேற்ற முடியும்” என்று தெரிவித்தது. அந்த மாநாட்டில் இந்தியாவும் கையொப்பமிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐயத்திற்கிடமின்றி எளிய முறையில் வெளிப்படையாக நம்முடைய கவனத்தை கல்வி, தாய்மை, குழந்தை மருத்துவம் மற்றும் வாழ்வாதாரம் மற்றும் சுகாதார சேவைகள் ஆகியவைகளை மேம்படுத்துவதை முக்கிய தந்திரங்களாக நடைமுறைப்படுத்தும் போது மட்டுமே மக்கள் தொகையை நிலைப்படுத்துவதை உறுதிப்படுத்த முடியும். இதனை தேசிய மக்கள்தொகை கொள்கை (2000) ஆனது தெரிவித்தது. இக்கொள்கையானது இப்போதும் எதிரொலித்த வண்ணமே இருக்கின்றது.

தர்க்க ரீதியாகவும் பகுத்தறிவு ரீதியாக காணும்போது சர்வதேச மற்றும் தேசத்தின் வெளிப்பாடு என்பது கூட சலுகைகள் மற்றும் அபராதங்களுக்கு எதிரானதாகவே உள்ளது. மேலே குறிப்பிட்ட வளர்ச்சி நடவடிக்கைகளுக்கு ஆதரவாக மக்கள் தொகை கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும் என்பதானது உத்தரப் பிரதேசம் மற்றும் மற்ற மாநிலங்களுக்கும் பொருந்தக் கூடியது.

மக்கள் தொகை நிலைப்படுத்தலின் அடையாளம்

காரண காரியங்களின் அடிப்படையில் வந்தடையப்பட்ட கோட்பாடானது கீழ்க்கண்ட உண்மைகளை தெரிவிக்கிறது. அவற்றை எப்பொழுதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இரு குழந்தை கொள்கையானது மீண்டும் மீண்டும் எதார்த்தத்தைப் பொருட்படுத்தாமல் கட்டாயப்படுத்துவதன் பெயரில் நிலையற்று சென்று கொண்டிருக்கிறது.

உத்திரப் பிரதேச தாய்மார்களின் கருவுறும் விகிதமானது தேசிய குடும்ப சுகாதார கணக்கீட்டின்படி 2.1 என்ற அளவில் உள்ளது. பத்து வருடங்களுக்கு முன்பு 3.8 என்ற விகிதத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனை அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை வளர்ச்சியோடு ஒப்பிட வேண்டும். இதுபோலவே குழந்தை இறப்பு விகிதம், தாய்மார்கள் இறப்பு விகிதம், ஊட்டச்சத்து குறைபாடு போன்றவைகளும் மேற்குறிப்பிட்ட ஆண்டுகளோடு ஒப்பிடும்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது.

பல மாநிலங்களின் தொடர் முயற்சியின் விளைவாக குழந்தை பிறப்பு வீதமானது 2.1 என்ற அளவில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இதனை தேசிய குடும்ப சுகாதார கணக்கீடு-4 தெரிவிக்கிறது. அந்த அறிக்கையின் மூலம் ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா, தெலுங்கானா, தமிழ்நாடு உத்தரகாண்ட், மேற்கு வங்காளம் (யூனியன் பிரதேசங்கள் மற்றும் சில வடகிழக்கு மாநிலங்கள் தவிர) ஆகியவை இந்த முன்னேற்ற நிலையை அடைந்துள்ளன. இவை அனைத்தும் வளர்ச்சிக்கான அறிகுறியே.

தேசிய குடும்ப சுகாதார கணக்கீடு நான்கின் படி குழந்தை இறப்பு விகிதம் ஆனது உத்தரப் பிரதேசத்தில் 78 ஆகவும், கேரளாவில் 7 ஆகவும் தமிழகத்தில் 27 ஆகவும் உள்ளது.

பத்து மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் பள்ளிக்குச் செல்லும் பெண் குழந்தைகளின் விகிதமானது உத்திரப் பிரதேசத்தில் 33 சதவீதம், கேரளாவில் 72 சதவீதம், தமிழகத்தில் 50 சதவீதமாக உள்ளது.

கல்வி மற்றும் மருத்துவ சேவைகளை கொடுப்பதற்கான எந்த அளவுக்கு நடவடிக்கைகளை முடுக்கி விடுகிறோமோ அந்தளவுக்கு மக்கள் தொகையை நிலைப்படுத்துதலுக்கான பலனை உணர முடியும்.

ஆண், பெண் விகிதம் குறைபாடு என்ற மிகப் பெரிய பிரச்சினை

இரு குழந்தை கொள்கையினை கட்டாயப்படுத்தும் போது அதன் தாக்கமானது ஆண் குழந்தைகளை பெற்றுக் கொள்வதில் மட்டுமே அதிக முனைப்பு காட்டுவதில் போய் முடியும். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு சீனா.

சீனாவானது தொடக்கத்தில், இரு குழந்தை கொள்கையினை நடைமுறைப்படுத்தியது. அத்திட்டம் எதிர்பார்த்த விளைவை தராததால் ஒரு குழந்தை கொள்கையினை மிகவும் கெடுபிடியுடன் நடைமுறைப்படுத்தியது. இந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்தியதன் விளைவாக குழந்தை பாலின விகிதத்தில் மிகப் பெரியப் பேரழிவை சந்தித்தது.

இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்திரப் பிரதேசத்தில் குழந்தை பாலின விகிதமானது 903 என்ற மிகக் குறைவான அளவிலேயே உள்ளது. அதே நேரத்தில் கேரளாவில் 1047 என்றும் தமிழகத்தில் 954 என்ற அளவிலும் உள்ளன. தேசிய குடும்ப சுகாதார கணக்கீடு 4 மற்றும் 3 ஆகியவற்றை ஒப்பிடும் பொழுது உத்திரப் பிரதேசத்தில் வளர்ச்சிக்கான அறிகுறிகள் மிகவும் மோசமடைந்து இருக்கின்றன.

இப்படி இருந்தபோதும் மடத்தனமான தவறான பாதையை நோக்கி அம்மாநிலம் செல்வதை புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது.

பின்தங்கிய சமூக பொருளாதாரம் மற்றும் குடும்பத்தின் அளவு ஆகியவற்றுக்கான உள்ளார்ந்த உறவுகள் பொருளாதார ரீதியான பாகுபாட்டுடன் ஆராயப்பட வேண்டும்.  சமூகத்தில் ஏழ்மையிலும் ஏழ்மையாக உள்ள சிறுபான்மையினர், தலித்துகள் நிலை ஆராயப்பட வேண்டும்.

அப்படிப்பட்ட மக்களுக்கு அரசியல் மற்றும் நிர்வாகத்திடம் இருந்து நலத்திட்டங்களை கிடைப்பதற்கான இடைவெளியை குறைக்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் சமூகநீதி உரிமையும் கிடைப்பது மிகவும் கடினமாகிவிடும்.

எங்களின் அனுபவத்தில் பார்க்கும் பொழுது, ஏழைச் சமூகமானது மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் எவ்வித முயற்சியும் எடுப்பதில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது. ஆனால், உண்மை என்னவெனில் பெரும்பான்மையான ஏழை மக்கள் கருத்தடைக்கான சேவைகளை பயன்படுத்துகின்றனர் என்பது தான்.

உத்திரப் பிரதேசத்தில் ஐந்தில் ஒரு பகுதி மக்களுக்கு அடிப்படை சேவைகளை வழங்கத் தவறிய அரசு, தேவையற்ற அளவில் 18 சதவீதமாக கருத்தடை சேவையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. (தமிழகத்தில் 10 சதவீதமாக இதன் அளவு உள்ளது)

சட்டமானது சரியான முறையில் சரியான நேரத்தில் பயன்படுத்தப்பட்டிருந்தால் சுகாதார பராமரிப்பு உரிமைக்காக ஏன் பல பத்தாண்டுகளாக போராடிக் கொண்டிருக்கிறோம்?

இத்தனை ஆண்டுகளில் அரசு மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்வதில் தோல்வி அடைந்துள்ளதே, அதற்காக நாங்கள் ஏன் அபராதம் விதிக்கக் கூடாது ?

கிரிமினல்தனமாக உருவாக்கப்பட்ட கட்டாயக் கருத்தடை மையங்களில் நூற்றுக்கணக்கான உயிர்கள் பறிக்கப்பட்டு மனித உரிமைகள் நசுக்கப்பட்ட நினைவுகள் நம்மை விட்டு எப்போதும் அகலப் போவதில்லை. தேவிகா பிஸ்வாஸ் எதிர் யூனியன் ஆப் இந்தியா வழக்கில் கருத்தடை மையங்களை முறைப்படுத்துவதற்காக முயற்சி எடுத்தது உச்சநீதிமன்றம்.

மிக மிக சமீபத்தில், உத்திரப் பிரதேசத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஊனமுற்ற ஒருவர் கொரோனா தடுப்பூசிக்கு செலுத்த சென்றபொழுது அவர் கட்டாயப்படுத்தப்பட்டு கருத்தடை செய்யப்பட்டார். கொடுக்கப்பட்ட இலக்கை நிறைவேற்றுவதற்காக இச்செயல் நடந்ததாக கூறப்படுகிறது.

தவறான பாதையில் செல்லும் அரசு

வெளிப்படையாகத் தெரியக் கூடிய விஷயம் என்னவெனில், அரசானது மக்களின் நல்வாழ்விற்கு தேவையான திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் குடிமக்களின் மீது நம்பிக்கை வைக்காமல் பிரபுத்துவ அடக்குமுறை வகைகளையே பெரிதும் வெளிப்படுத்துகின்றது என்பதை சமீபகால செயல்கள் மூலம் உணர முடியும்.

போலீஸின் கேவலமான அராஜகமான அடக்குமுறை நடவடிக்கைகள் மூலம் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை மறுபரிசீலனை செய்து மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வது உரிமைகளை நிலை நாட்டுவது தொடர்பான முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

படிக்க :
♦ தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா ?
♦ தடுப்பூசி உதவியுடன் மக்கள் தொகையை குறைக்க விரும்பும் பில்கேட்ஸ்

மக்கள் தொகை நிலைப்படுத்துதல் தொடர்பாக கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு கூட்டு முயற்சிகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட அறிவியல் பூர்வமான சான்றுகளை பாராமல் கொண்டுவரப்பட்ட இந்த மக்கள் தொகை கட்டுப்படுத்துதல் மசோதாவானது திரும்பப் பெறப்பட வேண்டும் என்பது கட்டாயமாகும். பிற மாநில அரசாங்கங்கள் எந்த அடிப்படையில் முன்னேறிக் கொண்டு இருக்கிறதோ அவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்.

நமது அரசாங்கங்களுக்கு வளர்ச்சியால் பாதிக்கப்பட்ட மக்களை குற்றம் சாட்டி அவர்களுக்கு அபராதம் விதிப்பது மூலம்தான் கல்வி மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்யாமல் இருந்த தங்களது பொறுப்பின்மையையும் தோல்விகளையும் மூடி மறைக்க முடியும்.

(AN IRRATIONAL DRAFT POPULATION CONTROL BILL THAT MUST GO என்ற தலைப்பில் தி இந்து ஆங்கில நாளிதழில் 17.07.2021 அன்று வெளிவந்த கட்டுரை)


கட்டுரையாளர்கள் : வந்தனா பிரசாத் மற்றும் தீபா சின்கா
தமிழாக்கம் : மருது
செய்தி ஆதாரம் : The Hindu

எண்ணூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் TANGEDCO || மக்கள் அதிகாரம்

கொற்றலை ஆற்று கழிமுகம் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை எதிர்த்த எண்ணூர் மீனவர்கள் போராட்டத்திற்கு துணை நிற்போம் !

19.07.2021

பத்திரிகைச் செய்தி

நிலமும் நீரும் மக்களின் சொத்து – கொற்றலை (கொசஸ்தலை) ஆற்றின் மீது TANGEDCO-வின் ஆக்கிரமிப்பை எதிர்த்து எண்ணூர் மீனவர்களின் நீர்வழிப் போராட்டம் வெல்லட்டும்.  TANGEDCO-வும் L&T-யும் இணைந்து ஆற்றை அழிக்கும் இந்த வேலை கண்டனத்துக்கு உரியது. மக்கள் அதிகாரத்தின் சார்பாக இதை வன்மையாக கண்டிக்கின்றோம்.

“எந்த ஊருக்கும் போய் வேலைக்கொடு என்று நாங்கள் கேட்டது கிடையாது வந்த வேலையை கூட தள்ளிவிட்டு விடுவோம். எங்களுக்கு ஆறு இருக்கிறது சோறு போட” – என்கிறார்கள் எண்ணூர் மீனவப் பெண்கள். அந்த அளவிற்கு கொற்றலை ஆறு அந்த மக்களுக்கான வாழ்வாதாரத்தை வழங்குகிறது.

மூன்று மாதம் முன்பு வரை ஆறாக இருந்த இடத்தில் இன்று, ஆற்றின் ஒரு பகுதியில் L&T-யும் TANGEDCO-வும் சேர்ந்து மணலைக் கொட்டி, எண்ணூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்துடன் (SEZ) இணைந்து அனல்மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரியை கொண்டு செல்வதற்கான கன்வேயர் கட்டுமானத்தை ஆற்றை ஆக்கிரமித்து கட்டுகின்றன.

மணல் கொட்டியதால் இறந்து போகும் இறால்கள்

இதனால் அங்குள்ள மீன்வளம் அழிக்கப்படுவதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. ஆற்றுக்கு பின்புறத்தில் அலையாத்தி காடுகள் இருக்கின்றன. எண்ணூர் கடைமடை பகுதிகளிலேயே மிச்சம் இருக்கக் கூடிய முக்கியமான அடர்த்தியாக ஆரோக்கியமாக உள்ள அலையாத்தி காடுகள். இங்கு ஐந்து வகையான இறால், பல வகையான நண்டுகள், மடவை போன்ற உயிரினங்கள் கிடைக்கும் இயற்கை வளமுள்ள பகுதியாக உள்ளது.

இந்த பகுதி ஊர் மக்கள் தொழில் செய்யும் இடமாக இந்த ஆறு இருக்கிறது. அலையாத்தி காடுகள் இருப்பதால், உயிர் சூழல் அதிகமாக உள்ளது. மீன்கள் இங்கு தான் அதிகம் உற்பத்தியாகிறது. இங்கு மணலை கொட்டுவதால் இங்குள்ள இறால்கள் உற்பத்தி தடைபடுவதோடு அவை அழிகின்றன.  இப்படி மணல் கொட்டுவதால் மூன்று ஆண்டுகளுக்கு இந்த பகுதியில் எந்த உயிரும் உற்பத்தியாகாது என்கின்றனர் மீனவ மக்கள்.

இப்போது கன்வேயர் போடும் இடம் அனுமதி பெற்ற இடம் கிடையாது. ஆற்றிற்கு பக்கத்தில் உள்ள நிலத்தில்தான் வழி போகிறது என்று அனுமதி வாங்கி விட்டு, ஆற்றின் குறுக்கே ஆக்கிரமித்து கன்வேயர் போடுகிறார்கள். இதனால் மீனவப் பெண்கள், குறிப்பாக தலித் சமூகத்தை சேர்ந்த 2500 பேரின் வாழ்வாதாரம் இந்த அலையாத்தி காடுகளை நம்பித் தான் இருக்கிறது. அவர்கள் தான் அதிகம் பாதிக்கப் படுகிறார்கள். சுற்றியுள்ள மீனவ கிராமங்களின் பொருளாதாரமும் இதை நம்பியிருக்கிறது. இந்த சட்டவிரோதமான செயலை அரசு அதிகாரிகள் தடுக்காத நிலையில், மீனவ மக்கள் ஆற்றையும் வளத்தையும் காக்கப் போராடுகிறார்கள்.

ஆற்றில் TANGEDCO-வும் L&T-யும் சேர்ந்து மணலைக் கொட்டி, 2017-ம் ஆண்டிலேயே முடிந்துபோன வழித்தட வேலைக்காக, அனுமதியை புதிதாக புதுப்பிக்காமல் இந்த வேலையை சட்டவிரோதமாக செய்து வருகின்றனர்.

TANGEDCO- L&T-யின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது. மக்கள் அதிகாரத்தின் சார்பாக இதை கண்டிக்கின்றோம். இதை தமிழக அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும். எண்ணூர் மக்களின் நியாயமான போராட்டத்தில் உழைக்கும் மக்கள் அனைவரும் துணை நிற்போம்.

தோழமையுடன்,
தோழர் அமிர்தா,
சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்,
91768 01656.

நூல் அறிமுகம் : செல்லாத பணம் || இமையம் || எஸ். காமராஜ்

லக்கிய வடிவங்கள் நிகழ்கால சமூகத்தின் பிரதிபலிப்புகளாய் விளங்குகின்றன. நாம் வாழ்கின்ற சமூகத்தில் நல்லவர்களும் – கெட்டவர்களும், மனிதர்களும் – மனித மிருகங்களும், ஒழுக்க நெறி கொண்டவர்களும், ஒழுக்க நெறி தவறியவர்களும் ஒன்று கலந்து தான் வாழ்ந்தாக வேண்டும் என்பதே சமூக எதார்த்த நடைமுறை.

பண்பாட்டு சீரழிவுகள், சாதிய ஒடுக்குமுறைகள், வர்க்க வேறுபாடுகள், கல்வித்தகுதி வாழ்க்கையில் எத்தகைய சிக்கல்களை தோற்றுவிக்கிறது என்பதை உணர்வுப்பூர்வமாக, “செல்லாத பணம்” நாவலின் வாயிலாக நிகழ்கால சமூக எதார்த்தத்தை படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் எழுத்தாளர் இமையம்.

வசதியான நடுத்தரவர்க்க வீட்டுப்பெண் ரேவதி, ஒரு பொறியியல் பட்டதாரி. பர்மாவிலிருந்து வந்த அகதியும் ஆட்டோ ஓட்டுநருமான ரவியை காதலிப்பதாக கூறி அவனையே “திருமணம் செய்து கொள்வேன்” என்று பிடிவாதமாக உறுதியாக இருக்கிறாள்.

ரேவதியின் தந்தை நடேசன், தலைமை ஆசிரியராக பணியாற்றுகிறார். ரேவதியின் மொத்த குடும்பமுமே இந்தக் காதலை எதிர்க்கிறது. சாதி – தொழில் – படிப்பு – பொருளாதாரப் பின்புலம் – சுற்றத்தார் மதிப்பு என இவற்றில் எதிலுமே ரேவதியின் குடும்பத்திற்கு சமமற்ற ஆட்டோ டிரைவர் ரவியை காதலிக்கிறாள் ரேவதி.

படிக்க :
♦ ஊறிப்போன ஆணாதிக்க சிந்தனையை அகழ்ந்தெடுத்து அகற்றிய கொரோனா ஊரடங்கு !
♦ தி கிரேட் இந்தியன் கிச்சன் || ஆணாதிக்கமும் மதமும் இங்கு தோலுரிக்கப்படும்

ரேவதியின் மனதை மாற்ற, அவரது பெற்றோர்கள் எத்தனையோ வழிகளை கையாண்டும் ரவியை தான் கல்யாணம் கட்டிக் கொள்வேன் என்பதில் உறுதியாக இருக்கிறாள். ரேவதியின் பெயரை உடம்பு முழுவதும் பச்சை குத்திக் கொண்டு, அவளுக்காக கையில் பிளேடால் கீறிக்கொண்ட ஆட்டோ டிரைவர் ரவியின் செய்கைகள் அனைத்தையுமே காதலின் அளவீடாகக் கருதுகிறாள் ரேவதி.

“அவன் ஸ்டேட்டஸ் தெரிஞ்சுமா அவனை காதலிக்கிறாய்?”
“ம் ”
“எப்படி !”
“பிடிச்சிருக்கு”
“எதனால ?”
“தெரியல ”
“உலக அதிசயமானது அவன் கிட்ட நீ எதை பார்த்த”
“ஒன்னும் இல்ல.”
”நீ சொல்றதெல்லாம் மனசுல நிக்கல.”
“அவன் சொன்னது மட்டும்தான் நிக்குது”

ரேவதியின் அண்ணன் மனைவி அருள்மொழிக்கும் ரேவதிக்கும் இடையிலான உரையாடல் இது. ‘தன் பெண்ணின் வாழ்க்கை சிதைந்து போய்விடுமே’ என்ற
அச்சத்தால் அந்தக் குடும்பமே அதைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்கிறது. அவனைத்தான் கட்டுவேன் என்று பிடிவாதத்தில் உடும்பு பிடியாக இருக்கிறாள் ரேவதி.

இதன் விளைவாக அந்த குடும்பம் படும் வலி – வேதனை- துயரங்கள், அவற்றுக்கு அக்குடும்பம் காட்டும் எதிர்வினைகள், ரவி மீது காட்டும் பாரபட்சம், அவை ஏற்படுத்தும் தாக்கங்கள் என அத்தனையையும் மிகையான புனைவு இல்லாமல் கதைக்களம் பின்னப்பட்டுள்ளது தான் இந்த நாவலின் சிறப்பு. சமூகத்தின் பலதரப்பட்ட மனிதர்களையும் நம் கண் முன் எடுத்துக் காட்டியிருக்கிறது இந்நாவல்.

பெற்றோர்கள், உறவினர்களின் எதிர்ப்புகளை மீறி ரவியை திருமணம் செய்துகொள்ளும் ரேவதியின் வாழ்க்கையில், ரவியின் எதற்கும் கட்டுப்படாத ஒழுக்கமற்ற நடத்தையும்; அவனது குடிப்பழக்கமும், அவனது ஆணாதிக்க சந்தேகப் பார்வையும், ஒடுக்குமுறையும் ரேவதியின் வாழ்க்கையில் விளையாட ஆரம்பிக்கிறது.

அடியும் உதையும் வறுமையும், கணவனின் சந்தேக குணமும், தனது தாய் தந்தையின் ஒதுக்குதலும், ரேவதிக்கு வாழ்க்கையின் மீது மிகப்பெரிய வெறுப்பை உண்டாக்குகின்றன. தனது பொறியியல் பட்டப் படிப்பை வைத்து நல்ல வேலையில் அமர்ந்து தனது கணவனையும், அவனது குடும்பத்தையும் சீர்தூக்கி விடலாமென்று நினைத்த ரேவதியின் கனவு சுக்கு நூறாகிப் போகிறது.

தனது மகளின் வாழ்க்கை இப்படி சீரழிந்து விட்டது என்று எண்ணி கலங்குகிறாள் ரேவதியின் தாய். ஏதாவது கேட்கும்போதெல்லாம் பண உதவி செய்கிறார். இரண்டு குழந்தைகளைப் பெற்ற பிறகும் திருந்த மறுக்கிறான் ஆட்டோ டிரைவர் ரவி. மது அடிமையாகி, ஆணாதிக்க வெறியோடு தனது மனைவியை துன்புறுத்துகிறான். நிலைகுலைந்து போய் விரக்தியின் விளிம்பில் நிற்கிறார் ரேவதி. தாய் தந்தை சகோதரன் உள்ளிட்ட குடும்ப உறவுகளுடனான மனக்கசப்பு மிக்க உறவு மற்றும் கணவன், குழந்தைகள் என்ற குடும்ப உறவு ஆகிய இரண்டுக்கும் இடையில் சிக்கித் தவிக்கிறாள் ரேவதி.

தன் அம்மாவிடம் பணம் வாங்கி ஆட்டோ வாகனத்திற்கு கட்ட வேண்டிய தவணைத் தொகையை வைத்திருக்கிறாள் ரேவதி; அதை எடுத்துக்கொண்டு போய் குடித்துவிட்டு வந்து நிற்கிறான், குடிநோயாளி ரவி. விரக்தியின் விளிம்புக்கு சென்ற ரேவதி இனி உயிர் வாழ்வது அர்த்தமற்றது என்ற முடிவுக்கு வருகிறார்.

“நீ இல்லாவிட்டால் நான் செத்து விடுவேன்” என்ற ரவியின் ஒரு சொல்லின் பின்னே தன் வாழ்க்கையை ஒப்படைத்த ரேவதி, “சாகிறது என்றால் போய் சாவு” என்ற ரவியின் ஒற்றைச் சொல்லை கேட்டு செத்துப் போக முடிவு செய்கிறாள்.

80 சதவிகித தீக்காயங்களுடன் ரேவதி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார்.ஜிப்மர் மருத்துவமனையின் தீ விபத்து பிரிவு என்ற வளாகத்துக்குள் நடக்கும் நிகழ்வுகளை ஒட்டியே இந்த நாவலின் கதைக்களம் பின்னப்பட்டிருக்கிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் உடல் எரிந்து மருத்துவமனைக்கு புகுவதும், உடல் கொள்ளும் தவிப்புகளும், உயிர் பிரிவதும் என விவரிக்க முடியாத வேதனையான உணர்வுகளை மனதை உலுக்கும் வகையில் நமக்குக் கடத்துகிறது இந்த நாவல்.

தீக்குளிப்புக்குப்பின் நடக்கும் போராட்டங்களையும், உடனிருப்பவர்கள் படும் வலியையும்; வேதனையையும் ஆற்றாமையையும்; அழுகையையும் மனப் போராட்டங்களையும், – நேரில் காண்பதுபோல் – நாம் அங்கே நிற்பது போன்ற ஒரு உணர்வை இந்த நாவல் ஏற்படுத்துகிறது. ஜீவ மரணப் போராட்டத்தில் இந்த உயிரை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற தவிப்போடு பல்வேறு உறவுகளின் உணர்ச்சிக் கொந்தளிப்புகளை மருத்துவமனையைச் சுற்றி சுற்றி பின்னி விரிகிறது “செல்லாத பணம்” நாவல்.

படிக்க :
♦ மல்லாக்கத் துப்பலாமா பெற்றோர்களே ? எழுத்தாளர் இமையம்
♦ நூல் அறிமுகம் : தூப்புக்காரி || மலர்வதி || சு.கருப்பையா

“எவ்வளவு பணம் ஆனாலும் பரவாயில்லை என் பெண்ணை காப்பாற்றுங்கள் “என்று கதறுகிறார் ரேவதியின் தந்தை. இவ்வளவு நாளும், தன் பேச்சை மீறி திருமணம் செய்ததால், தன் பெண்ணை முகம் கொடுத்துக் கூட பேச மனமில்லாத அதே தந்தை. மருத்துவர் ஒற்றை வரியில் சொல்லிவிடுகிறார். “இந்தப் பணம் இப்போ இங்கே செல்லாத பணம்” என்று.

ரேவதியின் மரணம் ரேவதியின் வாக்குமூலத்தின்படி அது ஒரு விபத்து. அவளது தாய்தந்தையரைப் பொருத்த வரையில் அது ரவி செய்த கொலை. ரவி விவரித்தபடி அது ஒரு தற்கொலை!

தற்கொலையோ, கொலையோ இவற்றை விட கொடுமையானது வாழும் போதே நடத்தப்படும் உணர்வுக் கொலை. ரேவதி உயிரோடு இருக்கையில் அத்தகைய உணர்வுக் கொலையை முன்னின்று நடத்தியவர்கள் தான் அவள் இறந்த பிறகு, அது கொலை என்றும் தற்கொலை என்றும் மாறி மாறி குற்றம்சாட்டிக் கொள்கிறார்கள்.

“தாலி கட்டிய மறுநாளே வெளியே போகக்கூடாது, அக்கம்பக்கம் பேசக்கூடாது, தெருவில் நடக்கக் கூடாது என்று கூறிவிட்டான். 24 மணி நேரமும் சந்தேகம்தான், பொறுக்கிப் பயலுக்கு” என்று தன் மகள் அவளது கணவன் ரவியிடம் பட்ட வேதனையைச் சொல்லி அழுகிறாள் ரேவதியின் தாய்.

அனைவரும் வெறுத்து ஒதுக்கும் ரேவதியின் கணவன் ரவியிடம் ரேவதியின் அண்ணன் மனைவி அருள்மொழி உரையாடுகிறார். ரவியின் வாதங்களைக் கேட்ட பின்னர்,  “இவ்வளவு புத்திசாலித்தனமாக பேசுகிறானே ஆட்டோ டிரைவர்… இந்தப் புத்திசாலித்தனம் நல்ல நடப்புக்கு மாற்றப்பட்டு இருந்தால் இப்படிப்பட்ட சோகம் நிகழ்ந்திருக்காது” என்று எண்ணி வருந்துகிறாள்.

ரவியின் புத்திசாலித்தனம் ஏன் நல்ல நடப்புக்கு மாற்றப்படவில்லை? ரவியின் ஆணாதிக்க – உதிரித்தனமான மனநிலை எங்கிருந்து ஏற்பட்டது ? ரவியின் மீது ரேவதி வைத்திருந்த காதலையும், ரேவதிக்காக உடல் முழுக்க பச்சைகுத்திக் கொண்டு கையை பிளேடால் அறுத்துக் கொள்ளும் அளவிற்கு ரவி வைத்திருந்த காதலையும் தாண்டி ரேவதியை மரணத்தை நோக்கித் தள்ளியது எது ?

நிலவும் முதலாளித்துவ சமூகம், ஏற்படுத்தியிருக்கும் சமூக ஏற்றத்தாழ்வு ரவியைப் போன்ற ஆணாதிக்க, குடி நோய்க்கு அடிமையான ஒழுங்கீனமான இளைஞர்களை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது. சமூகம் ஏற்படுத்தியிருக்கும் இந்த ஏற்றத்தாழ்வில், தாழ்நிலையில் இந்தச் சமூகத்தால் இருத்தி வைக்கப்பட்டவர்கள் மீது அதற்கு சிறிது மேலே உள்ளவர்கள் காட்டும் அசூயையும், அதன் மீது அவர்க்ள் நடத்தும் மறைமுகத் தீண்டாமை நடவடிக்கைகளும், ரவியைப் போன்ற இளைஞர்களை அதே நிலையில் இருத்தி வைக்கின்றன.

ரேவதி இறந்ததும், அவரது தாய் தனது கணவரிடம், “காச கொடுத்தீங்க. பொருளை கொடுத்தீங்க. நான் எதை செஞ்சாலும் ஏன் என்று கேட்காம இருந்தீங்க. எல்லாம் செஞ்சு என்னத்துக்கு ஆச்சு? நேரில கூப்பிட்டு அந்த நாய மிரட்டல; அவனை மிரட்டி இருந்தா அவனுக்கு பயம் வந்திருக்கும்;அடங்கி இருப்பான். தெரு பொறுக்கி நாய் கிட்ட என்ன பேசறதுன்னு இருந்தீங்க; மானம் போயிடும், மானம் போய்விடும் என்று ஒதுங்கி-ஒதுங்கி போனீங்க” என ஆற்றாமையோடு கேட்கிறாள்.

மகள் தனது விருப்பத்துக்கு மாறாக, தன் ‘தரத்துக்கு’ கீழான ரவியை திருமணம் செய்து கொண்டதால், சமூக எதார்த்தத்தின் கட்டுகளுக்குள் சிக்கியிருந்த ரவியை அதிலிருந்து மீட்டெடுப்பது பற்றி ரேவதியின் தந்தையுடைய ‘உயர்தர’ மனம் யோசிக்கக் கூட இல்லை. இதை ரவியின் குரலிலேயே ஒலிக்கிறது இந்த நாவல்.

“சல்லிப்பயல் சல்லிப்பயல் ஆகத்தான் இருப்பான்.. ஆனால் பெரிய மனுஷன் பெரிய மனுஷன் ஆக இருக்க வேண்டுமா இல்லையா?” என்று ரவியின் கேள்வி நம்மை உலுக்கி எடுக்கிறது.

ரேவதியின் கல்வித் தகுதி அவளுக்கு முழுமையான சமூக விழிப்புணர்வை உருவாக்கவில்லை. சமூகத்திலும் அதன் பிரதிபலிப்பாக தனது குடும்பத்திலும் நிலவும் சாதிய, வர்க்கரீதியான ‘உயர்’ மனநிலையை ஒதுக்கும் அளவிற்கு விழிப்புணர்வு கொண்ட ரேவதியால், வாழ்க்கை பற்றிய தனது விருப்பத்திற்கு ஏற்ற துணையைத் தேர்வு செய்வதற்கு அறிவுப்பூர்வமாக சிந்திக்க முடியவில்லை. அங்கு தனது உணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாள். பணிக்குச் செல்லும்  தனது விருப்பம் முதல், சாதாரணமாக தெருவுக்குச் செல்வதையே தடை செய்யும் – சந்தேகிக்கும் – ‘கணவன்’ ரவியைக் கண்டு அதிர்ச்சியுறுகிறாள்.

ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு ஏற்படும் உள்ளக் கலப்புக்கு நட்பு என்று பெயர். வெறும் உடல் கலப்புக்கு காமவெறி என்று பெயர். நட்புணர்வும் காமமும் கலந்ததே காதல். குணமறிந்து காதல் கொள்! உடல் அறிந்து, உடல் அழகு சார்ந்து அல்ல! கண்டதும் காதல் என்பதெல்லாம் வெறும் உணர்ச்சியின் வெளிப்பாடு.

நடுத்தரவர்க்க பெண்கள் பழமையான ஆணாதிக்க மேலாண்மை மதிப்புக்கு உட்பட்டு தங்கள் வாழ்வில் அனுபவிக்கும் இன்னல்களையும், கொடுமைகளையும் மௌனமாக சகித்துக் கொண்டு இருக்கின்றனர். குடிகார கணவனை சீர் படுத்துவதற்கான போராட்டத்தை நடத்தாமல், தனது குழந்தைகளுக்காக வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற துணிச்சலான உணர்வோடு, நிலைமைகளை மாற்றுவதற்கு போராடுவதற்கு மாறாக தற்கொலை என்ற கோழைத்தனமான முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்.

ரேவதியின் வாழ்க்கை சிதைந்து போனதற்கு நிலவுகின்ற ஆணாதிக்க சமூகமும், குடி உள்ளிட்ட பண்பாட்டுச் சீரழிவுகளும், சாதி ஆதிக்க உளவியலும், நடுத்தர வர்க்கத்தின் ஒதுங்கும் போக்கும், வறட்டு கௌரவமும் அடிப்படைக் காரணிகளாக உள்ளன.

சமூகத்தில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும்; சாதியப் படிநிலை வரிசையும் இதற்கு ஏற்ற, சாதி ‘அருமை பெருமைகளும்’ திருமணங்களின் மூலமாகவே நிலைநிறுத்தப்பட்டு வருகிறது.

பொருளாதாரம்-கல்வி-ஒழுக்கம்-தொழில் இந்த நான்கும் சரியாக இருந்தால் சாதி சற்று பின்வாங்குகிறது; சமரசம் செய்து கொள்கிறது. இந்த நான்கும் இல்லையென்றால் சாதி வெறியாக மாறி தாண்டவமாடுகிறது.

இந்த நாவலில் வரும் ரேவதியின் அண்ணன் முருகனும், அவளது கல்லூரி தோழி அருள் மொழியும் காதலிக்கிறார்கள். வர்க்க அந்தஸ்தும் கல்வித் தகுதியும் ஒன்றாய் இருப்பதால் இங்கு சாதி சமரசம் செய்து கொள்கிறது.

ஒரு பர்மா அகதியை சாதி கடந்து திருமணம் செய்து கொள்ளும் ஒரு பெண் – தனது வர்க்கத்துக்கும் குறைவான தான்தோன்றித்தனமான குணகேடுகள் கொண்டவனை திருமணம் செய்துகொண்டு சிக்கித் தவிக்கும் ஒரு பெண் – தன்னைச் சுற்றியுள்ள சமூக மதிப்பீடுகளுக்கு எப்படி தன்னை பலிகொடுக்க வேண்டி உள்ளது என்பதை யதார்த்தமாகவும் மிக நுட்பமாகவும், உணர்ச்சிகள் இழையோட, மிக ஆழமாகவும் “செல்லாத பணம்” கதைக்களம் மனதை உலுக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

நிலவுகின்ற சாதி அமைப்புக்கும் – பால்நிலை பாகுபாட்டுக்கும் இடையில் ஒரு நெருக்கமான உறவை பெண் விடுதலை என்ற நோக்கில் சமத்துவத்துக்கான பண்பாட்டுப் போராட்டத்தை நடத்த வேண்டியுள்ளது.

சமத்துவ – ஜனநாயக உணர்வை ஏற்படுத்த நடைபெறும் போராட்டத்தின் வாயிலாகத்தான் சமூக அவலங்களுக்கு தீர்வைத் தேட முடியும்.

“செல்லாத பணம்” என்கின்ற சமூக யதார்த்த நாவல் இலக்கியத்தை மிகையான புனைவுகள் இன்றி எழுத்தாளர் இமையம் சிறப்பாக படைத்துள்ளார்.

எஸ். காமராஜ்

disclaimer

நள்ளிரவில் எரிவாயு குழாய்களை குவித்த கெயில் நிறுவனம் : விவசாயிகள் போராட்டம் !

ருமபுரி எர்ரப்பட்டியில் இரவோடு இரவாக விவசாய நிலத்தில் எரிவாயு குழாய் பதிப்பதற்காக ஆயிரக்கணக்கில் குழாய்களை குவித்து வைத்துள்ளது கெயில் நிறுவனம்.

ஆட்சிகள் மாறினாலும் விவசாயிகளின் துயரங்கள் மாறுவதில்லை. கடந்த 10 ஆண்டுகளாக விவசாய நிலத்தில் எரிவாயு குழாய் பதிக்கக் கூடாது என்று விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஆட்சியாளர்கள் விவசாயிகளின் போராட்டத்தை என்றுமே மதித்து நடப்பதில்லை.

கர்நாடக, கேரளா போன்ற மாநிலங்களில் சாலை ஓரமாக குழாய்களை பதிக்கும் போது தமிழகத்தில் மட்டும் விவசாய நிலத்தில் பதிக்கப்படுவது ஏன்? என்ற விவசாயிகளின் கேள்விக்கு பதில் இல்லை.

படிக்க :
♦ நூல் அறிமுகம் : கெயில் வளர்ச்சிக்குப் பலியாகும் விவசாய நிலங்கள் !
♦ விவசாயிகளை காவு வாங்கும் கெயில் – சிறப்புக் கட்டுரை

இந்த குழாய் பதிப்பு காரணமாக தமிழகத்தில் 7 மாவட்டங்களில் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதோடு விவசாயிகளின் வாழ்க்கையும் பறிபோகிறது. சாலை ஓரமாக கொண்டு சென்றால் விவசாய நிலங்கள் பாதிக்காது என்ற கோரிக்கையை கூட ஏற்றுக் கொள்ள ஆட்சியாளர்கள் மறுப்பது ஏன் என்று குற்றம் சாட்டுகிறார்கள் விவசாயிகள்.

தருமபுரி எர்ரப்பட்டியில் விவசாயிகளுக்கு தெரியாமல் இரவோடு இரவாக, ஆயிரக்கணக்கான குழாய்களை குவித்து வைத்துள்ளனர். இதனை அறிந்த விவசாயிகள் 19.7.2021(இன்று) காலை 10 மணிக்கு ஏர்ரப்பட்டியில் குவிந்தனர்.

This slideshow requires JavaScript.

முறையான பேச்சுவார்த்தையோ, உரிய பதிலோ அரசு தரப்பில் கொடுக்கப்படாத பட்சத்தில், விவசாயிகள் சங்க தலைவர் ஈசன் தலைமையில் காத்திருப்புப் போராட்டம் நடைப்பெற்றது. இந்தப் போராட்டத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த தோழர்கள், மக்கள் அதிகாரத்தின் வட்டார ஒருங்கிணைப்பாளர் தோழர் சிவா தலைமையில் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து காத்திருப்புப் போராட்டத்தில் உடன் கலந்துக் கொண்டனர்.

This slideshow requires JavaScript.

தகவல் :
மக்கள் அதிகாரம்
தருமபுரி மண்டலம்
9097138614.

மக்களை நம்ப வைத்து கழுத்தறுக்காதே ! சட்டம் இயற்றி ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடு !

PP Letter head

19.07.2021

தமிழக அரசே !
மக்களை நம்ப வைத்து கழுத்தறுக்காதே !
சிறப்பு சட்டம் இயற்றி ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடு !

பத்திரிகை செய்தி

கொரோனா நெருக்கடி அதனால் ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறை என்ற முகாந்திரத்தை வைத்துக் கொண்டு, 15 உயிர்களை இழந்து மக்களால் போராடி மூடப்பட்ட நாசகார ஸ்டெர்லைட்டை மீண்டும் சதித்தனமாக திறப்பதற்கான முயற்சியை ஸ்டெர்லைட் நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் மேற்கொண்டது. இது தமிழக மக்கள் மத்தியில் பரவலான எதிர்ப்பை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மக்கள் இத்தகவலை தெரிந்தவுடனே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

எக்காரணம் கொண்டும் ஸ்டெர்லைட்டை திறக்கக் கூடாது என்பதை அதன் மூலம் அரசிடமும், நீதிமன்றத்திடமும் பதிவு செய்தனர். மக்களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி உச்சநீதிமன்றத்தின் வாயிலாக கடந்த ஏப்ரல் 27 ம் தேதி திறப்பதற்கான ஆணையை ஸ்டெர்லைட் நிறுவனம் பெற்றது. அதே சமயத்தில் தமிழகத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சிகள் கூட்டத்தின் மூலம் மக்களின் கருத்துக்கள் எதையும் மதிக்காமல் ஆக்சிஜனுக்காக ஸ்டெர்லைட்டை திறக்கலாம் என அனைத்துக் கட்சிகளும் முடிவெடுத்து, தங்களது கார்ப்பரேட் விசுவாசத்தை வெளிப்படுத்தி கார்ப்பரேட் சேவையில் நாங்கள் எல்லோரும் ஓரணி தான் என்பதை நிரூபித்தனர் .

ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்கிய ஸ்டெர்லைட் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வாக்குறுதிபடி அளித்த 1050 டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்யவில்லை. ஒரு நாளைக்கு 30 டன் ஆக்சிஜனை மட்டுமே உற்பத்தி செய்தது. அதன் தொடர்ச்சியாக ஏறக்குறைய 1500 டன் வளிமண்டல ஆக்சிஜனை வீணடித்ததை பலரும் அம்பலப்படுத்தினர். இப்படிப் பொய்யான வாக்குறுதியை அளித்து, அராஜகமாக நடந்துக் கொண்ட ஸ்டெர்லைட் நிறுவனத்தை உச்சநீதிமன்றமோ, தமிழகத்தின் பெரும்பான்மை அரசியல் கட்சிகளோ எந்தக் கேள்வியும் எழுப்பவில்லை.

படிக்க :
♦ ரஃபேல் ஊழல் : பிரான்சில் அம்பலமான பின்னும் இந்தியாவில் அமைதி ஏன் ? || தோழர் சுரேசு சக்தி
♦ ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கான சதித்தனமான முயற்சிகளை முறியடிப்போம் || மக்கள் அதிகாரம்

ஆக்சிஜன் உற்பத்தி செய்கின்ற எந்த ஒரு தனியார் நிறுவனமும் செய்யாத ஒரு வேலையை ஒன்றிய அரசு நிறுவனங்களின் உதவியோடு ஸ்டெர்லைட் நிறுவனம் செய்தது. அனைத்து செய்தித்தாள்களிலும் INDIAN MEDICAL ASSOCIATION உள்ளிட்ட நிறுவனங்கள் ஸ்டெர்லைட்டை பாராட்டிய விளம்பரங்கள் வெளியானது. “உற்ற நேரத்தில் உயிர் காற்று! “ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்திற்கு நெஞ்சார்ந்த நன்றி” என்று கொலைகாரனுக்கு புனிதர் பட்டம் கொடுத்திருந்தன அந்நிறுவனங்கள். மக்கள் மத்தியில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆதரவான மனநிலையை உருவாக்குவதற்கான வேலையை திட்டமிட்டு நடத்தின.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கட்டில்கள், மெத்தைகள், மருத்துவ உபகரணங்களை சட்டவிரோதமாக கொடுக்கப்பட்டன. அதில் அந்நிறுவனத்தின் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. அங்குள்ள அறிவிப்பு பலகையிலும் ஸ்டெர்லைட் நிறுவனம் தான்உதவிகள் செய்ததை விளம்பரப்படுத்திக் கொண்டது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகமும் கேள்வி எழுப்பவில்லை. மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதைக் கேள்விப்பட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கங்கள் மருத்துவமனை நிர்வாகத்திடமும், மாவட்ட ஆட்சியரிடமும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தன. நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மக்கள் நடவடிக்கை எடுப்போம் என்று எச்சரித்த பின்பு, மாவட்ட நிர்வாகம் கட்டில்களில் உள்ள வேதாந்தா என்ற பெயரினை மட்டும் அழித்து “நடவடிக்கை” எடுத்தது. தொடர்ந்து சட்டவிரோதமாக செயல்பட்ட ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக, ஸ்டெர்லைட் என்கிற ஓநாய்க்கு ஆக்சிஜன் தயாரிக்க ஆதரவு அளித்த ஆளும் தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் யாரும் பொங்கி எழவில்லை.

தொடர்ந்து அந்த ஓநாய் கிராமப்புறங்களில் தனது ஆதரவாளர்களை தனக்கு ஆதரவாக பேச வைத்து சட்டவிரோதப் பணியை அதிகார வர்க்கத்தின் ஆசியோடு தடையின்றி தொடர்ந்தது.

இச்சூழ்நிலையில்தான் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் ஜூலை 31 க்குப் பிறகு ஸ்டெர்லைட்டை மூடுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். “தற்போதைக்கு என்ன அவசரம்? தொற்று எண்ணிக்கை பூஜ்ஜியம் வரட்டும், அதற்குபிறகு மூடுவது பற்றி யோசிக்கலாம்’’ என்று ஸ்டெர்லைட்டின் குரலாக பேசுகிறார் சுகாதரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடனே சிறப்பு சட்டம் இயற்றி ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடுவோம் என்று வாக்குறுதி கொடுத்தார். தற்போது அந்தர்பல்டி அடித்து மாற்றி பேசுகிறார்கள். மக்களை எவ்வளவு கிள்ளுக்கீரையாக நினைத்தால் இவர்கள் இப்படி பேசவார்கள்?

அன்று எதிர்கட்சிகளாக இருந்து ஸ்டெர்லைட்டுக்கு எதிராக சிலம்பம் சுற்றிய இதர கட்சிகள் தற்போது வாய்ப்பொத்தி அமைதிகாக்கின்றன. உதிரம் சிந்தி, உயிர் கொடுத்து மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழக மக்களும் எதிர்ப்பு தெரிவிக்கும்போது இதையெல்லாம் ஒரு பொருட்டாக கருதாமல், ஓநாய்க்கு ஆதரவாக சுகாதாரத்துறை அமைச்சர் பேசியதை இயல்பாக கடந்து செல்ல முடியுமா? நாங்களும் கார்ப்பரேட்டுகளின் ஆட்கள்தான் என்பதைத்தானே இதன்மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

இதற்கெதுவும் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பதற்கு கூட்டணிக் கட்சிகளின் / பல்வேறு அமைப்புகளின் கள்ளமவுனத்திற்கு காரணம் என்ன?

இன்னும் 6 மாதத்திற்கு ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி தேவை என்று கடந்த ஜூலை 7ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது ஸ்டெர்லைட் நிர்வாகம். ஜூலை 22-ல் விசாரணைக்கு அனுமதி அளித்துள்ளது உச்சநீதிமன்றம். மறுபடியும் அனைத்துக் கட்சிகள் கூட்டத்தைக் கூட்டி ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதியை நீட்டிப்பதை அறிவிப்பதுதான் அடுத்தகட்ட திட்டமாக இருக்கும்.

தூத்துக்குடி மக்களை, உயிர்நீத்த தியாகிகளை இதைவிடவும் அவமானப்படுத்த முடியுமா?

அதிகார வர்க்கத்தின் துணையோடு நிறுவனத்தை திறப்பதற்கான வேலைகளை கொலைகார ஸ்டெர்லைட் நிறுவனம் வேகப்படுத்தி கீழறுப்பு வேலைகளையும் வெளிப்படையாக செய்து வருகிறது.

ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடுவதற்கு மக்கள் போராட்டத்தை தவிர வேறெந்த வழியும் இல்லை!

தமிழக அரசே!
மக்களை நம்ப வைத்து கழுத்தறுக்காதே!
சிறப்பு சட்டம் இயற்றி ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடு!
தூத்துக்குடி மக்களுக்கு துணை நிற்போம் !
ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்றுவோம் !
அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறு !
ஸ்டெர்லைட் படுகொலைக்கு காரணமானவர்கள் மீது கொலைவழக்கு பதிவு செய்!

தோழமையுடன்

தோழர் வெற்றிவேல் செழியன்,
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
91768 01656

டேனிஷ் சித்திக் மறைவு : பாசிச எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு || கருத்துப்படம்

ப்கானில் தாலிபான்களுக்கும் ஆப்கன் அரசு படையினருக்கும் இடையே நடந்து வரும் போர் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிக்கையாளர் டேனிஷ் சித்திக் போர்க்களத்தில் உயிரிழந்தார்.

கொரோனா போரிடர் காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் சந்தித்த அவலம், கொரோனாவில் பாதிக்கப்பட்ட மக்கள் ஆக்சிஜன் இல்லாமலும் படுக்கை வசதிகள் இல்லாமலும் அரசு மருத்துவமனைகளில் அவதிப்பட்டதும், எரிக்கக் கூட இடமில்லாமல் குவிந்து கிடந்த கொரோனா பிணங்கள் என கொரோனா பேரிடரில் மோடி அரசின் கையாலாகாத் தனத்தை  தமது புகைப்படங்களின் மூலம் உலகறியச் செய்தவர் டேனிஷ் சித்திக்.

சி.ஏ.ஏ.-வுக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தின் மீது இந்துத்துவ வெறியர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு, மற்றும் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் நாள் துவங்கி டெல்லியில் அரங்கேற்றப்பட்ட கலவரங்கள் வரை அனைத்தையும் துணிச்சலாக அம்பலப்படுத்தியிருந்தார் சித்திக்.

ஒரு முசுலீம் இளைஞரைச் சூழ்ந்து கொண்டு இந்துத்துவக் கும்பல் கடுமையாகத் தாக்குவதை சித்திக் எடுத்த புகைப்படம், இந்தியாவில் மோடியின் மதவெறியை உலகறியச் செய்தது.

புகைப்படக் கலையில்  கலையின் அழகியலைத் தாண்டி, சமூகத்துக்கான தேவை உள்ளடக்கப்படும் போதுதான் அந்தப் புகைப்படம் உயிர்பெறுகிறது. அத்தகைய தன்மையை வெளிப்படுத்துவதற்கு பரந்துபட்ட மக்களின் மீதான பேரன்பும், ஒடுக்குமுறையையும் மிரட்டல்களையும் எதிர்த்து நிற்கும் பெரும் துணிச்சலும் தேவை. அதைத் தன்னகத்தே கொண்டுள்ள ஒரு போராளிதான் டேனிஷ் சித்திக்

அவரது மறைவு, இந்தியா எதிர்கொண்டுள்ள பாசிசத்தை எதிர்த்து ஜனநாயக – புரட்சிகர சக்திகள் நடத்தும் போராட்டத்திற்கு ஏற்பட்ட பின்னடைவு என்பதை அவரது மறைவை ஒட்டி, பாஜக உள்ளிட்ட சங்க பரிவாரக் கும்பல், சமூக வலைத்தளங்களில் குதூகலமாக வெளியிட்ட பதிவுகள் நிரூபிக்கின்றன.

ஆளும் வர்க்கக் கொடூரங்களின் துயரப் பதிவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்
புகைப்பட ஓவியன் டேனிஷ் சித்திக்


கருத்துப்படம் : மு.துரை

அரியானா : உச்சநீதிமன்ற ஆசியோடு விரட்டியடிக்கப்படும் தொழிலாளர்கள் !

ரவல்லி மலைத்தொடர் வனப்பகுதியை ஒட்டிய ஃபரிதாபாத் மாவட்டத்திற்கு உட்பட்ட, கோரிக்கான் என்ற சேரி பகுதியில் அதிகளவிலான கூலி தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தலித், சிறுபான்மை மக்கள் இரண்டு தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர்.

இப்பகுதியில் 173 ஏக்கர் நிலப்பரப்பில்  உள்ள 10,000-க்கும் மேற்பட்ட வீடுகளை அகற்ற அம்மாநில அரசு முடிவு செய்து இருக்கிறது. அரியானா மாநில அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த கோரியும், வீடுகள் இடிக்கபடுவதற்கு முன்னர் பாதுகாப்பு கோரியும் அப்பகுதி மக்கள், போராடும் இயக்கங்கள் உச்சநீதிமன்றத்தை அணுகினர்.

படிக்க :
♦ தீவுத்திடல் குடிசைகள் இடிப்பு : எடப்பாடி அரசின் அடாவடித் திமிரும் தீண்டாமையும்..
♦ அகமதாபாத் : ஜப்பான் நிறுவன இலாபத்திற்காக அகற்றப்படும் தொழிலாளர் குடியிருப்புகள் !

உச்சநீதிமன்றம் ஜூன் 7-ஆம் தேதியன்று தீர்ப்பு வழங்கியது. கோரிக்கான் பகுதியில் உள்ள குடிசை பகுதியை உடனடியாக அகற்றுமாறு அம்மக்களுக்கு எதிராக அநீதியான உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனை கண்டித்து குடியிருப்புகளை அகற்ற கூடாது என்று அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நீதிமன்றமோ தனது அநீதியான தீர்ப்புக்கு ஆரவல்லி மலைத்தொடரில் உள்ள காடுகளைப்  பாதுகாப்பதாக கூறி ’நியாயம்’ கற்பிக்கிறது. ஆனால், அதே பகுதியில் மலைத்தொடரை ஒட்டி உயர்தர தங்கும் விடுதிகள், அப்பார்ட்மெண்ட்ஸ், 500-க்கும் மேற்ப்பட்ட பண்ணை வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மேலும், சட்டத்திற்கு புறம்பாக சுரங்கங்கள் செயல்படுகின்றன. அப்பகுதியில் உள்ள காடுகளை பெரும் தொழில் நிறுவனங்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளன.

சாதரண குடிசை அமைத்து வாழக் கூடிய கூலி தொழிலாளர்களை வன ஆக்கிரம்மிப்பாளர்களாகவும், விரோதிகளாகவும் சித்தரிக்கும் உச்சநீதிமன்றமும் ஒன்றிய அரசும், அம்பானி, அதானி, டாடா மற்றும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தன் விருப்பத்துக்கு ஏற்றது போல் இயற்கை வளங்களை  கொள்ளையடிக்கவும், காடுகளை அழிப்பதையும், பெரும் சுற்றுலா தளங்கள் அமைக்கவும் சிவப்பு கம்பளம் இட்டு வரவேற்கின்றன.

மக்களுக்கு அடிப்படை உரிமையை மறுக்கும் அரசு, கார்ப்பரேட் கொள்ளையடிக்க அனைத்து அனுமதியையும் உடனே வழங்க சூற்றுச்சூழல் சட்டத்தையே மாற்றி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

அரியானா மாநில அரசின் நடவடிக்கையால் கோரிக்கான் பகுதியில் 2000-க்கும் மேற்பட்ட வீடுகள் தற்போது இடிக்கப்பட்டுவிட்டன. தொடர்ந்து இடிக்கபட்டும் வருகின்றன. கோரிக்கான் பகுதியில் மட்டும் 20,000 மேலான குழந்தைகள், சிறுவர்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். 5000-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரசின் இந்த மனித தன்மையற்ற செயலால் வீடுகளை இழந்தும், கொரோனாவால் வேலை இழந்தும் வாடகை கொடுக்க கூட பணம் இல்லாமலும் திறந்த வெளியில் வாழும் நிலைமைக்கு அம்மக்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

இந்திய அரசியலமைப்பின் 21-வது பிரிவின் கீழ் அடிப்படை சட்ட உரிமையான உயிர் வாழ்வதற்கான உரிமையின்படி மக்களுக்கு தங்குமிடத்தை உத்திரவாதம் செய்வது அரசின் கடமை.

ஆனால், அதைப்பற்றி வாய் திறக்காத உச்ச நீதிமன்றமோ, நிதிகேட்டுச் சென்றவர்களை வீதியில் தள்ளுவதற்கு விரைந்து நடவடிக்கை வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது. உழைக்கும் மக்களுக்கு நீதிமன்றத்தில் நீதி கிடைக்காது என்பதை மீண்டும் நிருபித்து இருக்கிறது இத்தீர்ப்பு.

ஏற்கனவே 1990-களில் ஆரவல்லி மலைத்தொடர்களில் உள்ள காடுகளை அழித்து சுரங்க பணிகள் மேற்கொள்ளபட்டன. இச்சுரங்க செயல்பாடுகளால் சீரழிக்கப்பட்ட பகுதி தான் கோரிக்கான் ஆகும். மக்கள் வாழமுடியாத ஒரு பகுதியாக தான் இருந்தது.

அப்பகுதியை வியர்வையும், ரத்ததையும் சிந்தியும் பல ஆயிரங்கள் செலவு செய்தும் மறுசீரமைத்து அம்மக்கள் குடியிருப்புக்களை அமைத்துள்ளனர். இன்றும் அப்பகுதியில் மின்சார வசதி கிடையாது, குடிநீர் வசதி கிடையாது. எந்த அடிப்படை வசதியும் அரசு செய்து தரவில்லை.

அரியானா மாநில அரசும், உச்சநீதிமன்றமும் சொல்வது போல், காடுகளை பாதுகாப்பது இவர்களின் நோக்கம் அல்ல. கோரிக்கான் பகுதியானது டெல்லி மெட்ரோ சிட்டிக்கு உட்பட்ட பகுதியாகவும், ஸ்மார்ட் சிட்டியின் ஒரு பகுதியாகவும் உள்ளது. அப்பகுதியில் பெரும்பாலும் தலித், சிறுபான்மை, தொழிலாளர் வர்க்கத்தை சேர்ந்தவர்கள் தான் வாழ்கின்றனர்.

நகரத்தில் இருந்து சேரியை அப்புறப்படுத்துவது  என்ற பார்ப்பனிய திட்டத்தின் அடிப்படையிலும், வளர்ச்சி, சூற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற பெயரில் கார்ப்பரேட்களுக்கான பொலிவுறு நகரத்தை அமைக்கவும் தான் கோரிக்கான் பகுதி மக்கள் விரட்டியடிக்கப் படுகின்றனர்.

படிக்க :
♦ நாங்கள் உறங்கினாலும் எங்கள் உடல்கள் உறங்குவதில்லை : டெல்லி குடியிருப்பு வாழ்க்கை
♦ அசாம் : 70 ஆண்டுகளாக வீடு, சாலை, மின்சாரம் இல்லாமல் வாழும் பழங்குடிகள் !

இது நாட்டின் ஒரு பகுதியில் மட்டும் நடக்கவில்லை, சிங்கார சென்னை என்ற பெயரில் அதனை சுற்றியுள்ள சேரி பகுதியை காலி செய்வது, குஜராத்- மும்பை புல்லட் ரயில் திட்டம், அகமதபாத் மெட்ரோ திட்டம், மும்பை பெருநகர வளர்ச்சி திட்டம் என்ற பெயரில் கார்ப்பரேட் நலனுக்காக  உழைக்கும் மக்களை நகர்புறத்திலிருந்து அப்புறப்படுத்தும் வேலையை வேகமாகச் செய்து வருகின்றன ஒன்றிய, மாநில அரசுகள்.

எனவே, போராடும் கோரிக்கான் பகுதி மக்களின் போராட்டத்திற்கு துனை நிற்போம். வளர்ச்சி என்ற பெயரால் கொண்டுவரப்படும், மக்களின் வாழ்வாதரத்தை பறிக்கும் தனியார்மய – தாராளமய கொள்கையின் ஒரு பகுதியான ஸ்மார்ட் சிட்டி  திட்டத்தை எதிர்த்து போராடுவோம்.

பிரபு
செய்தி ஆதாரம் : countercurrents, countercurrents2

முகநூலில் : Revolutionary Students Youth Front – Rsyf
disclaimer