Sunday, May 18, 2025
முகப்பு பதிவு பக்கம் 301

தமிழகம் – புதுச்சேரியை நாசமாக்கவரும் பேரழிவுத் திட்டங்கள் | புதுவை பொதுக்கூட்டம் !

ஹைட்ரோகார்பன் – எட்டுவழிச்சாலை – அணுக்கழிவு

தமிழகம் – புதுச்சேரியை நாசமாக்கவரும் பேரழிவுத் திட்டங்கள்

புதுச்சேரி – தமிழகத்தை நாசமாக்காதே! விளக்கப் பொதுக்கூட்டம் !
புரட்சிகர கலைநிகழ்ச்சி

நாள் : 01-09-2019, மாலை 05.00 மணி
இடம் : மதகடிப்பட்டு பேருந்து நிறுத்தம், புதுச்சேரி

தலைமை :
தோழர். E.K.சங்கர், மக்கள் அதிகாரம், புதுச்சேரி.

கருத்துரை :
தோழர். தீனா, அமைப்பாளர், பெரியார் சிந்தனையாளர் இயக்கம், புதுச்சேரி.
தோழர். முருகானந்தம், தலைவர், மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம், புதுச்சேரி.
தோழர். திருநாவுக்கரசு, மாநில துணைச் செயலாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி, புதுச்சேரி.
தோழர். காளியப்பன், தலைமைக்குழு உறுப்பினர், மக்கள் அதிகாரம், தமிழ்நாடு.

***

அன்பார்ந்த உழைக்கும் மக்களே,

இன்று தமிழகம் பெருமுதலாளிகளின் வேட்டைக்காடாக மாற்றப்பட்டுவிட்டது. நீரழித்து, நிலமழித்து, காடு, மலை, கழனியழித்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு படையலிட்டு வருகிறது மோடி – எடப்பாடி கும்பல். ஹைட்ரோகார்பன், எட்டுவழிச்சாலை அணுக்கழிவு மட்டுமல்லாது, கூடங்குளம் அணு உலை, ஸ்டெர்லைட் நச்சு ஆலை, கெயில் குழாய் பதிப்பு, நியூட்ரினோ, பெட்ரோ – கெமிக்கல் மண்டலம் என தமிழகத்தின் ஒவ்வொரு ஏக்கர் நிலப்பரப்பும் முதலாளிகளின் லாபவெறிக்காக கபளீகரம் செய்யப்படுகிறது.

இந்த நாசகார பேரழிவு திட்டங்களை, அந்தந்தப் பகுதி மக்கள் தங்களது சொந்த பாதிப்பிலிருந்து வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள போராடி வருகின்றனர். அதனால் அவை தனித்தனியான போராட்டங்களாக அந்தந்தப் பகுதிகளுக்குள் சுருங்கி நிற்கிறது. ஆனால், அந்தப் பேரழிவுத் திட்டங்கள் பாரத்மாலா, சாகர்மாலா என்ற பெருந்திட்டத்தின் சங்கிலிப் பிணைப்பாக நீண்டுள்ளது.

ஆனால், மக்கள் ஒருங்கிணையாத வகையில் சாதி, மத உணர்வுகள் தூண்டப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ். – இந்துமதவெறி அமைப்புகள், முஸ்லீம்கள், கிறித்தவர்கள் தான் மக்களின் எதிர்களாக காட்டுகின்றனர். சாதிவெறி அமைப்புகள் சொந்தசாதிப் பெருமையைப் பேசி, மற்ற மக்களை எதிர்களாக்குகின்றனர்.

மேலும், இவை கடலோரத்தில் அல்லது காவிரி டெல்டாவில், விவசாய நிலங்களில் என தனக்கு தொடர்பில்லாத பகுதியில் செயல்படுத்தப்படும் திட்டம். எனவே, எனக்கு பாதிப்பில்லை என்று ஒதுங்கி நிற்க முடியாது. இதோ புதுச்சேரியில் நமது காலுக்கடியில் ஹைட்ரோகார்பன் வந்துவிட்டது. வழுதாவூர், பக்கிரிப்பாளையம் பகுதியில் ஹைட்ரோகார்பன் கிணறுக்கான ஆய்வுப்பணி நடந்துள்ளது. மருதூர், கரிக்கலாம்பாக்கம், பாகூர் பகுதிகளிலும் அதற்கான இடம் தேர்வு செய்வதற்கான அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளது. காலுக்கடியில் பூமி நழுவிக் கொண்டிருக்கிறது. நாம் போராட்ட களத்திற்கு வரவேண்டிய நேரம், போராட்டங்களை ஒருங்கிணைக்க வேண்டிய நேரம் இது.

படிக்க :
♦ ஹைட்ரோ கார்பன் : தமிழகத்தைச் சுடுகாடாக்க மீண்டும் நுழைகிறது வேதாந்தா!
♦ ஸ்டெர்லைட்டை எவ்வாறு மூடுவது ? பதிலளிக்கிறார் மக்கள் அதிகாரம் ராஜு !

கூடங்குளம் அணு உலையை எதிர்த்து மக்கள் 500 நாட்களுக்கும் மேலாக ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என அமைதியான முறையில் தங்களது பகுதியில் போராடினார்கள். ஆனால், ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில், ஆலைப் பகுதியைத் தாண்டி வீதிக்கு வந்தார்கள் மக்கள், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மொத்த தமிழகமே வீதிக்கு வந்து ஒரே குரலில் முழங்கியது. இவை தான் அரசை நிர்ப்பந்தித்து பின்வாங்க வைத்தது. ஓரளவு வெற்றியும் கிட்டியது.

இவை தற்காலிகமானவையே, ஸ்டெர்லைட், எட்டுவழிச்சாலை திட்டங்களைச் செயல்பத்துவதற்கான அனைத்து வேலைகளையும் அரசும், நீதிமன்றமும் செய்துவருகிறது. இந்த அரசுக் கட்டமைப்பு மக்களுக்கானது அல்ல, கார்ப்பரேட்டுக்களுக்கானது என மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகி வருகிறது.

எனவே, நமது போராட்டங்கள் பேரழிவுத் திட்டங்களுக்கு எதிராக மட்டுமின்றி, அவை மீண்டும் இந்த மண்ணில் செயல்படுத்தாமல் நிரந்தரமாக தடுப்பதற்கு அரசுக் கட்டமைப்பை எதிர்த்த போராட்டமாகவும் மாற வேண்டும்.

இவற்றை விளக்கும் வகையில் தான் புதுச்சேரி மக்கள் அதிகாரம் சார்பில் நடக்கும் விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள உங்களை அறைகூவி அழைக்கிறோம்.

அனைவரும் வாரீர் !


மக்கள் அதிகாரம், புதுச்சேரி.
தொடர்புக்கு: 87542 05589

கேள்வி பதில் : விவேகானந்தர், இராமகிருஷ்ணரை எப்படிப் பார்ப்பது ?

கேள்வி : //பரமஹம்ச யோகானந்தரின் “ஒரு யோகியின் சுய சரிதை” படித்திருக்கிறீர்களா? அதில் வரும் அத்வைத நிலை, மரணித்தவர் உயிருடன் எழுவது, மரணித்தவரின் மறுபிறவி, பாபாவுடன் சந்திப்பு, முற்பிறவி ஞாபகம் தோன்றுதல், உணவே உட்கொள்ளாத மகான் போன்ற பல விசயங்களுக்கு அறிவியல்பூர்வமான விமர்சனங்கள் தேவைப்படுகிறது.

அதேபோல் விவேகானந்தர் இந்து மதத்தின் முற்போக்காளராக அறியப்படுகிறார்.

நான் இவ்விருவரையும் பின்பற்றவில்லை என்றாலும் இவர்களது புத்தகங்கள் என்னை பெரிதும் பாதித்தவை. இவர்களைப் பற்றி மற்றும் இவர்களைப் போன்றோர்களின் கருத்துக்கள் பற்றி தெளிவான விமர்சனங்கள் அவசியமாகிறது.

ஏதாவது புத்தகங்கள் வெளியிடப்பட்டிருந்தாலும் சிபாரிசு செய்யலாம். நன்றி!//

– S.கார்த்திகேயன்

ன்புள்ள கார்த்திகேயன்

Hallucination என்ற ஆங்கில வார்த்தையின் பொருள் இல்லாதவை இருப்பது போல மனச்சமநிலை இழந்தோருக்கு புலனுணர்வு வழியாகவும், சிந்தனையிலும் தோன்றுவது. தொலைக்காட்சியில் ஏதாவது ஒரு சானலில் பேசப்படும் வார்த்தைகளில் ஓரிரண்டு ஒலிமாறி வேறு ஒன்றாக கேட்டு புதிய மாய யதார்த்தத்தை தோற்றுவிக்கும். வேறு எதையோ நினைவுபடுத்தும். அது போல புதிய மனிதக் குரல்களும் அப்படி ஒலிக்கும். நமது சாமியார்களுக்கு தோன்றும் மந்திர விசயங்கள் அனைத்தும் இப்படித்தான் உருவாகின்றன. இவை எதுவும் உண்மையல்ல, யதார்த்தமல்ல என்றாலும் பாதிக்கப்பட்ட மனிதர்கள் அப்படி நம்புகிறார்கள். அவர்களிடம் என்ன சொல்லியும் அதை புரிய வைப்பது கடினம். இந்த இடத்தில் மனநல மருத்துவர் மூலம் சிகிச்சை எடுப்பதே சரியானது.

vivekanda-ramakrishna paramahamsaபுறநிலையில் இருக்கும் ஓரிரு விசயங்கள் குறிப்பிட்ட சமூக சூழல் காரணமாக அகநிலையில் நுணுக்கி நுணுக்கி நீண்ட நேரம் சிந்திக்கும் போது இத்தகைய கற்பிதங்கள் போகப் போகத் தோன்றுகின்றன. அது கலைஞனாக இருந்தால் ஒரு கவிதை தோன்றும். மனநிலை பாதிப்படைந்திருந்தால் கடவுள் பேசுவது போலத் தோன்றும். கவிஞன் கவிதை எழுதிய பிறகு சமநிலை அடைந்து விடுகிறான். மனநிலை பாதிப்படைந்தோரோ அப்படி உடனே சமநிலை அடைந்து விடுவதில்லை. இராமகிருஷண் பரமஹம்சரிடம் இந்த இரண்டும் இருக்கின்றன. அதனால்தான் நீதி உபதேசங்களை கதைகள் வழியாக உபதேசிக்கிறார். கூடவே இத்தகைய மாய கற்பிதங்களையும் உண்மையெனக் கூறுகிறார்.

இது shutter island எனும் ஹாலிவுட் உளவியல் த்ரில்லர் படம் போன்றது. மனநலம் பாதிக்கப்பட்டோரைக் கொண்ட தீவில் நிகழும் கொலையை விசாரிப்பதற்கு டிகாப்ரியோ ஒரு போலீஸ் அதிகாரியாக வருகிறார். அங்கே நிகழும் மர்ம சம்பவங்கள் அந்த தீவின் புதிரை அதிகப்படுத்துகின்றன. இறுதிக் காட்சியில் டிகாப்ரியோ பார்வையில் சொல்லப்படும் அனைத்தும் அவரது கற்பிதங்களே, அவரே அங்கு சிகிச்சை பெறும் ஒரு மனிதர் என்பதும் தெரிய வருகிறது. ஆனால் படத்தை பார்க்கும் போது அத்தனையும் தத்ரூபமாக உண்மையென நமக்குத் தோன்றுகிறது. ஏனெனினல் அங்கே மாயை பல்வேறு தர்க்க ஆதாரங்களோடும் நம்பகத் தன்மையோடும் நமக்கு முன்வைக்கப்படுகிறது.

நமது முந்தைய சாமியார்கள் பலரும் இந்த நிலையில் இருந்திருக்கின்றனர். முற்றிப் போய் இருப்பவர்கள் பேசா நிலை அடைந்து சித்தன் போக்கு சிவன் போக்கென வாழ்ந்து மடிகின்றனர். தனது சீடர்களோடு உரையாடி கொஞ்சம் யதார்த்த உலகோடு தொடர்புடையவர்கள் பாதி நேரம் சமநிலையிலும் மீதி நேரம் மாய நிலையிலும் மாறி மாறி இருக்கின்றனர். இந்த இரண்டும் அவர்களது யதார்த்தமாகி விடுகிறது.

படிக்க:
கேள்வி பதில் : வரலாற்றில் கல்விக்கு முக்கியத்துவம் மறுக்கப்பட்டது ஏன் ?
♦ கார்ப்பரேட் சாமியார்கள் : இந்துத்துவத்தின் புரோக்கர்கள் !

இறைவன் சொல்லக் கேட்டுத்தான் குர்-ஆன் எழுதப்பட்டது, பெந்தகோஸ்தே வழிபாட்டில் பேசப்படும் அன்னியபாஷை அனைத்தும் இத்தகைய கற்பிதங்களே. ராமகிருஷண் பரமஹம்சர் பட்டியலிடும் அத்வைத நிலைகளும் அவ்வாறானதே. அவரைப் போன்றவர்களுக்கு சிகிச்சை அளிக்க அந்தக் காலத்தில் வாய்ப்புகள் இல்லை. இன்று இருக்கிறது. அதனால்தான் இன்றைய சாமியார்கள் (சாயிபாபா, பிரேமானந்தா போன்றோர் விதிவிலக்கு) இத்தகைய மந்திர தந்திரங்களை குறைத்துக் கொண்டு கார்ப்பரேட் சாமியார்களாக வலம் வருகின்றனர். கல்லாவையும் கட்டுகின்றனர்.

இராமகிருஷ்ண பரமஹம்சர்  இடைவிடாத முயற்சியால் காளியை தரிசித்தார், ஆறு மாத காலம் சமாதி நிலையில் இருந்து புத்தர், மகாவீரர், குருநானக்கை தரிசித்தார் என்பனவும் கற்பிதங்களே! தரிசித்தவர்களைப் பற்றி செவிவழிக் கதைகளை கேட்டு அதை எண்ணி எண்ணி அகநிலையில் தோயும் போது அப்படி அவர்கள் கற்பனையில் ‘தரிசனம்’ தருகிறார்கள். இராமகிருஷ்ணரின் உபதேசங்கள் இந்திய புராணங்கள், இந்து மத தத்துவங்களை எளிமையாக சொல்கிறது என்றால் விவேகானந்தர் இன்னும் கொஞ்சம் நவீன மொழியில் எடுத்து வைக்கிறார். இருவரும் இந்தியாவை பார்ப்பனியத்தின் பொற்கால மரபைக் கொண்ட ஒரு நாடாக கருதி அதையே வெளிநாட்டினருக்கும் உள்நாட்டினருக்கும் தத்துவமாய் எடுத்துரைத்தனர். முதன்மையாக பார்ப்பன இந்துமதத்தின் ஆன்மா வருணாசிரமம், சாதியில்தான் உறைந்து கிடக்கிறது என்பதை மறுத்து கர்ம வாழ்வில் இருந்து கடைத்தேறும் மதமாக இந்துமதத்தை முன்வைத்தனர்.

அதனால்தான் விவேகானந்தர் “சக்கிலியர்களின் குடிசைகளில் இருந்து புதிய இந்தியா எழட்டும்” என்றாரே ஒழிய சக்கிலியர்களின் சாதி தீண்டாமையை ஒழிப்போம் என்று சொல்லவில்லை. அனைத்து மதங்களும் உண்மையை எடுத்துரைக்கின்றன, நதிகள் பலவாயினும் சேருமிடம் கடல்தான் என்பதாக மற்ற மதங்களை அங்கீகரித்தாலும் மற்ற மதங்களில் பிறப்பில் உயர்வு தாழ்வு இல்லை; இந்து மதத்தில் அது இருக்கிறது எனும் உண்மையான முக்கியமான வேறுபாட்டை புறந்தள்ளினர். அவர்களது காலத்து இந்து மத சீர்திருத்த முன்னோடிகள் பலருக்கும் இது பொருந்தும். ஆங்கிலவழிக் கல்வியினால் நவீன உலகை கொஞ்சம் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப இந்து மதத்தின் கொடிய – சதி, குழந்தை மணம், விதவை கோலம் – ஆகியவற்றை சீர்திருத்தும் போக்கில் நேர்மறையாக இந்தியாவின் ஞான மரபு பற்றி இவர்கள் பெருமை கொண்டார்கள்.

சிகாகோ நகரில் நடந்த சர்வமத மாநாட்டிற்கு இராமநாதபுரம் சேதுபதி மன்னர் காசில்தான் விவேகானந்தர் சென்றார். கமுதி ஆலய நுழைவுப் போராட்டத்தை எதிர்த்த பாஸ்கர சேதுபதிதான் இந்துமதத்தின் அருமை பெருமைகளை பேசுவதற்காக விவேகானந்தருக்கு பொருளுதவி செய்தார்.

“நாடார்களுக்கு தீண்டாமை காரணமாக ஆலய நுழைவு மறுக்கப்பட்ட அதே காலகட்டத்தில் திரு. பாஸ்கர சேதுபதி இந்து மதத்தின் அருமைப் பெருமைகளை அயல்நாடுகளில் வியந்துரைக்க விவேகானந்தரின் சிகாகோ பயணத்திற்குப் பொருளுதவி செய்தார். 1893-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் நடந்த அனைத்துலக சமய மாநாட்டில் விவேகானந்தர், சகோதரர்களே, சகோதரிகளே, எனத் தனது உரையைத் தொடங்கி இந்து மதத்தின் மேன்மைகள் குறித்து பேசிய அதே காலகட்டத்தில் இந்து சனாதன தர்மங்களின் அடிப்படைத் தேவையான தீண்டாமையின் பொருட்டு, இந்துக் கோயில்களுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த தங்களை இந்துக்களாக கருதிய உள்ளூர் நாடார் சகோதர சகோதரிகள் இந்துக் கோயிலுக்குள் தங்களை அனுமதிக்கும்படி திரு. பாஸ்கர் சேதுபதியிடம் கெஞ்சிக் கொண்டிருந்தனர்.”

♦ தீண்டாமை வேண்டி வழக்கு போட்ட பாஸ்கர சேதுபதியின் காசில் அமெரிக்கா சென்ற விவேகானந்தர் !

சாதாரண இந்துக்களிடையே ராமகிருஷ்ணரும், விவேகானந்தரும் இந்தியா முழுவதும் கொண்டு சேர்க்கப்பட்டிருக்கின்றனர். காரணம் என்ன? எழுத்தாளர் காஞ்சா அய்லயா பதிலளிக்கிறார்.

“ராம் மோகன் ராய், தாகூர், விவேகானந்தர் குறித்து நாட்டின் அனைத்து பகுதியினரும் அறிவர். வங்காள மாணவர்களுடன் உங்களுக்கு மகாத்மா புலே, பெரியார் பற்றி தெரியுமா எனக் கேட்டால். அந்தப் பெயர் கூட அவர்களுக்கு பரிட்சயமானதில்லை என்பது தெரியவரும்.” என்கிறார் அய்லய்யா.

பார்ப்பனிய வருணாசிரமத்தை எதிர்த்த பெரியோர்களின் பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டதற்கும், பார்ப்பனிய மீட்சிக்காக பாடுபட்டோரை சந்தைப்படுத்துவதும் வேறு வேறு அல்ல.

♦ வங்காளிகள் சாதியத்தை புரிந்து கொள்ளாதது ஏன் ? காஞ்சா அய்லய்யா

விவேகானந்தர், புகைப்படத்தில் காவி தலைப்பாகையுடன் கம்பீரமாக திகழும் படிமத்தை இந்துமத அமைப்புகளும், ஆர்.எஸ்.எஸ்-ஸும் இந்திய மக்களிடையே வலுவந்தமாகக் கொண்டு சென்றன. விவேகானந்தரின் தேசியம்தான் தங்களது தேசியம் என்று ஆர்.எஸ்.எஸ் தனது நூல்களில் பிரகடனப்படுத்துகிறது. இந்தியா ஒரு நாடு அல்ல பல்வேறு தேசிய இனங்களின் நாடு என்று மார்க்சியர்களும், மற்றவர்களும் கூறுவதற்கு மாறாக அவர்கள் இந்தியா ஒரே படித்தான பண்பாட்டினைக் கொண்ட நாடு என்று கூறும் விவேகானந்தரை முன்வைக்கின்றனர்.

இந்திய மனநிலையில் துறவு, காவி, கடவுள், பக்தி, கர்மம், யோகம் அனைத்தும் நமது ஆழ்மனதில் படியும் வகையில் இங்கே சமூக அமைப்பும் அதன் இயக்கமும் இருக்கிறது. குறைந்தபட்சமாக படித்த நடுத்தர வர்க்கத்திடம் இது அதிகமாய் இருக்கிறது. அதற்கு அப்பாற்பட்ட மக்களிடத்தில் அப்படி இல்லை. அந்த நடுத்தர வர்க்கத்து மத உணர்வின்பால் எழும் குற்ற உணர்வை மட்டுப்படுத்தும் நீதி போதனைகளாக இராமகிருஷணர், விவேகானந்தரின் உபதேசங்கள் செல்வாக்கோடு இருக்கின்றன. அப்படி கொண்டு செல்லவும் படுகின்றன. சென்னை புத்தகக் காட்சியில் எடைக்கு எடை கடைக்கு கடை ஆன்மீக நிலையங்களும் புத்தகங்களும் இருப்பது ஒரு தற்காலிக சான்று. ஆண்ட்ராய்டு தலைமுறைக்கு முன்புதான் இந்த நடுத்தர வர்க்க ஆன்மீக நாட்டம் அதிகம் என்றாலும் இன்று ஆண்ட்ராய்டு காலத்தில் அத்தி வரதருக்கு திரண்ட கூட்டத்தை பார்க்கும்போது இன்றும் அந்த சூழல் சமூகத்தில் தொடர்வதை அவதானிக்கலாம். இவற்றை கடந்து உலகை உள்ளதுபடி பார்க்கும் போது அந்த உபதேசங்களின் பொருத்தப்பாடின்மையை நாம் அறிந்து கொண்டு நிஜ உலகோடு உரையாட வழி பிறக்கும்.

நன்றி!

♦ ♦ ♦

(கேள்வி பதில் பகுதிக்கு நிறைய கேள்விகளை நண்பர்கள் கேட்கிறார்கள். மகிழ்ச்சி. கூடுமானவரை உடனுக்குடன் பதிலளிக்க முயல்கிறோம். சில கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு கூடுதலான நேரம் தேவைப்படுகிறது. கொஞ்சம் காத்திருங்கள்.)

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

இன்றைய காலகட்டத்தில் புற்றுநோய் அதிகரிப்பதன் காரணம் என்ன ?

1
cancer-india-slider

“இதற்கு காரணம் காற்று மாசுபாடு, அப்புறம் இந்த பீசா பர்க்கர் போன்ற உங்களுடைய மேற்கத்திய உணவுமுறையும் தான்” என்று என்னுடைய பதிலுக்குக் கூட காத்திராமல் என்னுடைய மாமா கூறினார். தன்னைச் சுற்றி இருப்பவர்கள் அனைவருக்கும் புற்றுநோய் ஏன் வருகிறது என்று அவர் என்னிடம் கேட்டிருந்தார் அவர். “தீர்வு ஏதாவது கண்டறிந்து உள்ளீர்களா?” என்று என்னிடம் கேட்டுவிட்டுத்தான் மேற்கண்ட பதிலையும் சொன்னார்.

நான் அவரை குறை சொல்லவில்லை. அவரது சகோதரி – என்னுடைய அம்மா கடைசி கீமோதெரபி சிகிச்சையை சமீபத்தில்தான் முடித்திருந்தார். எனவே இக்கேள்விகளைக் கேட்பதற்கான அவரது வாய்ப்பு இது.

இந்தியாவில் நாங்கள் வளரும் போது மலேரியா, டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்களையும் இதய அடைப்பு பற்றியும் தெரிந்து வைத்திருந்தோம். புற்றுநோய் என்பது ஒருசிலருக்கு வரும் மர்மமான நோயாகத்தான் இருந்தது.

cancer1990-களில் போலியோ போன்ற நோய்கள் பெரும் மரணங்களை ஏற்படுத்தி நம்மை கவலையடையச் செய்தன. இந்தியாவின் சுகாதார கொள்கைகளும் அந்நோய்களுக்கு கவனம் செலுத்தி சரியாக உருவாக்கப்பட்டிருந்தன. நான் கல்லூரியில் படிக்கும்போது எப்போதோ என்னுடைய உறவினரோ அல்லது குடும்பத்திற்கு தெரிந்தவரோ, ஒருவருக்கு புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் கடந்த பத்தாண்டுகளில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகரித்து கொண்டே இருப்பது போல தெரிகிறது. பிறகு, போன ஆண்டின் கடைசியில் ஒருநாள் என்னுடைய அம்மாவிற்கும் கருப்பை புற்றுநோய் இருப்பதாக ஒரு அதிர்ச்சியான செய்தி எனக்கு வந்தது.

நான் அவரை சந்தித்த நேரத்தில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து வெள்ளம் போல கேள்விகள் வந்தன. அமெரிக்காவின் தேசிய புற்றுநோய் நிறுவனத்தில் ஆராய்சியாளராக அப்போது நான் இருந்தேன். என்னுடைய மாமா மட்டுமல்ல, அமெரிக்காவிலும் கூட பலருக்கும் தங்களுக்கு நெருக்கமானவர்கள் புற்றுநோயோடு போராடிக் கொண்ருப்பது தெரியும்.

படிக்க:
♦ களைக் கொல்லி மருந்து கேட்டால் புற்று நோயைத் தரும் மான்சாண்டோ !
♦ முற்பிறவி பாவம்தான் கேன்சருக்கு காரணமாம் ! சொல்வது பாஜக சுகாதார அமைச்சர்

இது உண்மையா? முன்பை விட இப்போது புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்து கொள்பவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் அதிகமா? அல்லது சிறப்பான மருத்துவ முறை மற்றும் செலவு செய்யும் திறன் மேம்பட்டதால் இது சாத்தியமானதா?

இந்தியா போன்ற ஒரு வளரும் நாட்டில் புற்றுநோய் வளர்ச்சியை அளவிட அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகளை ஒப்பிடுவதுதான் சரியான தொடக்கப்புள்ளி. மூன்றில் ஒரு அமெரிக்கர் தன்னுடைய வாழ்நாளில் புற்று நோய்க்காக சிகிச்சையளிக்கப்படுகிறார் என்று 2015-ல் ஆராய்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்தியாவில் இந்த அளவு மிகவும் குறைவு. 120 கோடி மக்களில் ஒரு பத்து இலட்சம் மக்கள் புற்றுநோயால் பாதிப்படைகின்றனர்.

எனினும், 1990-க்கும் 2016-க்கும் இடையில், இரு நாடுகளின் தகவல்களை பார்ப்போம். இந்தியாவில் இறப்புக்கான காரணங்களின் பட்டியலில் புற்றுநோய் மூன்று இடங்கள் முன்னேறி இருப்பதை நீங்கள் காண்பீர்கள், ஆனால் அமெரிக்க பட்டியலில் அது இல்லை. இந்த அளவில் மட்டும் நம்முடைய உள்ளணர்வு சரியானது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரிக்கத்தான் செய்கிறது.

ஆனால் இதுவே முழுமையான சித்திரமல்ல. பெருகி வரும் புற்றுநோய் பாதிப்புகளுக்கும் இறப்புகளுக்கும் என்னுடைய மாமா சொல்வது போல மேற்கத்திய உணவு அல்ல பெரிய காரணம். உண்மையில் இறைச்சியை விட புகை பிடிப்பது உள்ளிட்ட வாழ்க்கை முறைகளால் தான் இந்தியாவில் அதிக புற்றுநோய் ஏற்படுகிறது. மேலும் வாழ்நாள் அதிகரிப்புடன் அதற்கு தொடர்பிருப்பதை நாம் ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும்.

அடிப்படையில் வயதாக ஆக ஏற்படும் மரபணு சார்ந்த ஒரு நோய்தான் புற்றுநோய். நம்முடைய வாழ்நாளில் திசுக்கள் மற்றும் உறுப்புகளில் தொடர்ந்து செல்கள் நிரப்பப்படுகிறது. செல்கள் மீண்டும் மீண்டும் பிளவுபடுவதால் இது சாத்தியமாகிறது. ஒவ்வொறு முறையும் செல்கள் பிளவுற்று டி.என்.ஏ நகல்களை உருவாக்குகின்றன. இச்சமயத்தில் மரபணுவில் தவறு ஏற்பட வாய்ப்புள்ளது. இதை மரபணு பிறழ்வு (mutation) என்றழைக்கிறார்கள்.

இப்பிறழ்வுகள் பெரும்பாலும் பாதிப்பில்லாதவை மற்றும் பல்வேறு உயிரியல் வழிமுறைகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன. ஆனால் சில நேரங்களில், இந்த மரபணு பிறழ்வானது கட்டுப்பாடில்லாமல் செல்களை தொடர்ந்து பிளவுபடுத்துகிறது. இவை தான் புற்றுநோய் செல்கள் ஆகின்றன. இவை நம்முடைய உறுப்புகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக ஆகின்றன. உறுப்புக்குக் கிடைக்கும் அனைத்து சத்துக்களையும் இந்த செல்களால் எடுத்துக்கொள்ள முடியும், உறுப்புகளின் இயல்பான செயல்பாட்டை குறுக்கிட்டு முடக்க முடியும். மேலும் உடலின் மற்ற பகுதிகளுக்கும் இது பரவுகிறது. இந்த சுயநல புற்றுநோய் செல்கள் ஒருபோதும் மரிக்க விரும்புவதில்லை என்பதுதான் புற்றுநோயின் முரண்சோகம்.

படிக்க:
♦ நூல் அறிமுகம் : கீதையின் மறுபக்கம்
♦ குழந்தைகள் தமது திறமைகளால் உலகை வியப்பில் ஆழ்த்துவார்கள் !

உயிரினங்கள் அதிக காலம் வாழும் போது, வயது ஆக ஆக, நம்முடைய செல்களில் சிலவற்றில் மரபணு பிறழ்வினால் புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. தோராயமாக 37 டிரில்லியன் செல்கள் நம்முடைய உடலில் இருக்கின்றன. இத்துடன் வயதாக ஆக புற்றுநோய் வருவதற்கான நிகழ்தகவு அதிகரிக்கிறது. இது ஒன்றும் வியக்கும்படியானதோ அல்லது புதிய கண்டுபிடிப்போ அல்ல . 1950-களிலிருந்து இது நமக்கு தெரியும். ஆயினும் விளைவுகளை இப்போதுதான் நாம் எதிர்கொள்கிறோம்.

1990 மற்றும் 2016-க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் 50 (வயது) க்கும் கடைசியிலிருந்து 70 (வயது)க்கும் நடுப்பகுதி வரை நம்முடைய வாழ்நாள் அதிகரித்துள்ளது. இது தொடர்ந்து அதிகரிக்கிறது. தொற்று நோய்களை தடுக்க நாம் எடுத்த கடுமையான முயற்சிகள், சிறந்த குழந்தை பராமரிப்பு, சிறப்பான சுகாதார வசதி மற்றும் போலியோவிற்கு எதிரான வெற்றிகரமான செயல்பாடுகள் இதற்கு முதன்மையான காரணம்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

புற்றுநோய் ஆய்வு மற்றும் அதற்கான மருத்துவத்திற்காக இப்பொது அதிகமாக செலவு செய்யாவிட்டால் அடுத்த பத்தாண்டுகளில் அது அதிகரிப்பதை நாம் தொடர்ந்து பார்க்க நேரிடும். புற்றுநோயை கண்டறிவதிலும் அதற்கான மருத்துவத்திலும் நாம் முன்னேறாவிட்டால் இதே போக்குதான் தொடரும்.

எதிர்காலத்தில் ஒரு பெறிய அளவிலான செலவை தவிர்க்க விரும்பினால், புற்றுநோய் வருவதற்கு முன்பே கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டும். மேற்கத்திய நாடுகளில் புற்றுநோய் பாதிப்புகளில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்புகளிலிருந்து தப்பியவர்கள் எண்ணிக்கை 20 விழுக்காடாக உயர்ந்துள்ளது. புற்றுநோயை கண்டறிதலிலும் அதற்கான மருத்துவத்திலும் அடைந்த மிகப்பெரிய முன்னேற்றத்தினால் இது சாத்தியமானது.

சீனாவைப் போலவே இந்தியாவும் புற்றுநோய் மருத்துவத்திற்காக முன்கூட்டியே முதலீடு செய்வதன் மூலமும், HPV போன்ற தடுக்கப்படக் கூடிய புற்றுநோய்களுக்கு தடுப்பூசி போடுவதன் மூலமும், முன்கூட்டியே புற்றுநோய் கண்டுபிடிப்பிற்கான முதலீடு செய்வதன் மூலமும் வரக்கூடிய பத்தாண்டுகளில் ஏராளமான உயிர்களை காப்பாற்ற முடியும். இந்தியாவில் புற்றுநோய் மருத்துவத்திற்கான செலவு அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், இதன் மூலம் இந்திய மக்களின் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வரிப்பணத்தையும் மிச்சப்படுத்த முடியும்.

என்னுடைய அம்மாவுக்கு மிகவும் அரிதான முதற்கட்ட கருப்பை புற்றுநோய் இருந்தது. ஆனால் இது தொடக்கத்திலேயே கண்டறியப்பட்டதால் இதற்கு மருத்துவம் பார்க்க முடிந்தது. அறுவை சிகிச்சை மற்றும் கீமோதெரப்பிக்கு பிறகு ஓராண்டாக அவர் நலமாய் உள்ளார். தனியார் மருத்துவம் பார்க்கும் அளவிற்கு எங்களுக்கு வசதி இருந்தது. ஆனால் பெரும்பாலானவர்களுக்கு இது சாத்தியமில்லாதது.

நமது சட்டைப் பையிலிருந்து பணத்தை ஆட்டையைப் போடும் அரசாங்கம், புற்று நோயைத் தடுக்கவா பணத்தைச் செலவழிக்கப் போகிறது?


தமிழாக்கம் :
சுகுமார்
நன்றி : தி வயர் 

கேள்வி பதில் : வரலாற்றில் கல்விக்கு முக்கியத்துவம் மறுக்கப்பட்டது ஏன் ?

education-Slider

கேள்வி : //உலகப் பொதுமறை என்று அழைக்கப்படும் திருக்குறளில் பிச்சை புகினும் கற்கை நன்றே என்று இருக்கிறது. ஆனால் ஒரு காலகட்டத்தில் கல்விக்கு முக்கியத்துவம் மறுக்கப்பட்டது. ஆனால் திருவள்ளுவர் ஆண்டுக்குப் பின்னரே? அது எப்படி?//

– சண்முகவேல்

ன்புள்ள சண்முகவேல்,

“கற்கை நன்றே; கற்கை நன்றே;
பிச்சை புகினும் கற்கை நன்றே”

என்ற பாடல் வரி திருக்குறளில் இல்லை. வெற்றிவேற்கை எனும் நூலில் இருக்கிறது. இதை “நறுந்தொகை” – நல்ல பாடல்களின் தொகுப்பு – என்றும் அழைக்கிறார்கள். காலம் தோராயமாக பதினொராம் நூற்றாண்டு. ஒருவன் செல்வம் இல்லாதவனாக மிகவும் ஏழ்மை நிலையை அடைந்து பிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்டாலும், அந்த நிலையிலும் கல்வி கற்க வேண்டும் என கல்வியின் முக்கியத்துவத்தை இந்த வரிகள் உணர்த்துகின்றன.

educationதிருக்குறளிலும் கல்லாமை குறித்தும், கற்பதின் அருமை பற்றியும் நிறைய குறள்கள் உள்ளன. குறளின் காலம் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் திருக்குறள் வருகிறது.

சங்க காலத்தில் இனக்குழு வாழ்க்கை முடிந்து சிற்றரசர்கள் தோன்றி சமூகம் வர்க்கங்களாய் பிரிய ஆரம்பித்தது. வர்க்க சமூகத்தின் வாழ்வியல் சிக்கல்களுக்கு நீதி புகட்டும் வகையில் சங்க கால இலக்கியங்கள் தோன்றின. அப்போது சாதி பார்ப்பனமயமாக்கப்படவில்லை என்றாலும் வேலைப் பிரிவினை என்ற அளவில் இருந்தது. அதன்படி ஆளும் வர்க்கங்களுக்கே கல்வி கற்கும் வாய்ப்பு இருந்தது. இதர பிரிவு மக்களுக்கு இல்லை.

களப்பிரர் ஆட்சிக்கு பின்னர் பல்லவர் காலம், பிற்கால சோழர் காலம் துவங்கி திருமலை நாயக்கர் காலம் வரை தமிழகத்தில் சாதிகள் வருணாசிரம வகைப்பாட்டில் பார்ப்பனமயமாக்கப்பட்டன. அப்போது பார்ப்பன, ஷத்ரிய, வைசிய சமூகத்தினருக்கு மட்டுமே கல்வி புகட்டப்பட்டது. இதர பெரும்பான்மையினரான சூத்திர, பஞ்சம மக்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. எனவே இங்கு கல்வியின் முக்கியத்துவம் என்பது யாருக்கு கற்க முடியும் என்பதோடு சேர்ந்தே இருக்கிறது.

வெள்ளையர் காலத்தில்தான் பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு கல்வி கற்கும் வாய்ப்பு திறந்து விடப்படுகிறது. அந்த வகையில் 19, 20-ம் நூற்றாண்டுகளில்தான் தமிழகத்தின் ஆகப்பெரும்பான்மையான மக்கள் முதல் தலைமுறையாக கல்வி கற்கின்றனர்.

நன்றி!

♦ ♦ ♦

(கேள்வி பதில் பகுதிக்கு நிறைய கேள்விகளை நண்பர்கள் கேட்கிறார்கள். மகிழ்ச்சி. கூடுமானவரை உடனுக்குடன் பதிலளிக்க முயல்கிறோம். சில கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு கூடுதலான நேரம் தேவைப்படுகிறது. கொஞ்சம் காத்திருங்கள்.)

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

நூல் அறிமுகம் : கீதையின் மறுபக்கம்

புராண, இதிகாசங்களை நாட்டில் வெகுவாகப் பரப்பியதன் மூலமே, மக்களின் மூளைக்கு விலங்கிட்டனர் – பண்பாட்டுப் படையெடுப்பாளர்களான ஆரியர்கள்.

பாரதம், இராமாயணம் போன்ற இதிகாசங்கள்தான் சனாதனத்தின் மூலதனம் ஆகும். வர்ணாசிரம தர்ம சமூகத்தின் குலதர்மத்தினைப் பிரச்சாரம் செய்ய கற்பனைகளைக்கூட, ‘கடவுள் அருளியது’, ‘பகவான் பகர்ந்தது’ என்று படித்த – படிக்காத இருசாரரான பாமர மக்களிடையே பரப்பி வருகின்றனர்.

அந்த வரிசையில் வேறு எந்த நூலையும் விட அதிகமான பிரச்சார வசதி பெற்று, மிகப்பெரிய அளவில் மக்களிடையே உலகம் முழுவதும் விளம்பரப்படுத்தப்பட்ட நூல் ‘பகவத்கீதை’யாகும்.

அது கற்பனைதான் என்று ஏற்றுக்கொள்ளும் மிகப்பெரிய தலைவர்கள், சிந்தனையாளர்கள்கூட, அதற்காக வேறு முறையில் வாதாடி, மக்கள் மனதில் நிலைக்க வைக்கும் தவறினை நீடித்துச் செய்து வருவது அறிவு விடுதலை அடைவதற்கும், சமத்துவ சமுதாயம் அமைவதற்கும் மிகப்பெரும் முட்டுக்கட்டையாகும்.

இந்நாட்டின் அறிஞர்கள் என்பவர்கள் கீதையில் இரண்டு சுலோகம் தெரிந்ததுபோல் காட்டிக்கொண்டால் தங்களுக்கு ‘அறிவு ஜீவி’ முத்திரை கிடைத்து, பக்திப் பரவச வேடத்தினால் பல்வேறு பயன் அடைய முடியும் என்று கருதி, அதனைக் கட்டுப்பாடாய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றனர் தொன்று தொட்டு இன்றுவரை!

…  “பைத்தியம் பிடித்தவனுக்கு மேலும் கள்ளையும் ஊற்றிவிட்டால் எப்படி இருக்கும்?” என்ற ஓர் அழகான உவமையை, தந்தை பெரியார் அவர்கள், பல கூட்டங்களில் பேசும்போது கூறியதைக் கேட்டிருக்கிறேன்.

நானும் அப்பேச்சினைக் கேட்ட மக்களைப்போல் அவ்வப்போது கைதட்டிச் சுவைத்ததுண்டு. அதற்கு முழுப் பொருள் அனுபவத்தோடு அறிந்த நிலை – உணர்ந்த நிலை – எப்போது ஏற்பட்டது என்றால், இந்தப் ‘பகவத் கீதை’யை ஆய்வுக் கண்ணோட்டத்தோடு ஆழ்ந்து படித்தபோதுதான் ஏற்பட்டது!

கிரேக்கத்து ஏதென்சில் வாழ்ந்த சாக்ரட்டீசின் சீடர் பிளாட்டோ. மாறி வந்த யுகத்தில் வாழ்ந்த தத்துவ ஞானி பிளாட்டோ. அவர் ஒரு விசித்திரமான கருத்தினை வெளியிட்டார்.

எகிப்து நாட்டு தேவ அரசர் (மக்கள் அவரை அன்று அப்படி நம்பினர்) தேமுஸ் என்பவர் கருத்துகளை எழுத்துகள் மூலம் வெளியிடும் தோத் என்பவரைப் பார்த்து, ”எதனையும் எழுதி வெளியிடும் இந்த புதிய கண்டுபிடிப்பால் கற்றறிந்தோரின் ஞானத்திற்கு ஊறு ஏற்படும். எப்படியெனில், மூளை ஏற்கெனவே அறிந்ததை மறந்துவிடக் கூடும். எதையும் வாயால் சொல்ல, காதால் கேட்டு, மூளையில் நினைவுமூலம் பத்திரப்படுத்திக் கொள்ளும் முறைக்கு அது விடை கொடுத்தனுப்பிவிடும்” என்றார்.

எனவேதான் நேருக்கு நேர் இருவர் உரையாடல் (Dialogue) முறைக்கே முன்னுரிமை அவர்கள் (சாக்ரடீஸ், பிளாட்டோ) காலத்தில் தரப்பட்டது. எழுதி, கருத்துகளைப் பரப்பும் (Writing) முறைக்கு இரண்டாவது இடமே!

எழுத்து மூலம் வேதமோ, உபநிஷத்துகளோ மற்றும் இராமாயணம், பாரதம் போன்ற இதிகாசங்களோ முதலில் உருவாக்கப்படவில்லை என்பது அறிஞர்கள் ஆய்வு, செவி வழிச் செய்தியாக – பேச்சு வழக்கில் நிலவிய பிறகுதான் அவைகள் எழுத்து உருவத்தினைப் பிற்காலத்தில் கண்டன. இடைச்செருகல், திரிபுகளுக்கு அதனால் ஏராளமான வாய்ப்பு உண்டல்லவா?

படிக்க:
நயவஞ்சகன் இராமன் – டாக்டர் அம்பேத்கர்
இந்து மதம் : ஏகாதிபத்திய சந்தையை உறுதிப்படுத்த உருவாக்கப்பட்ட ஓர் கட்டமைப்பு !

… கீதை பாரதத்தில் இடைச்செருகல் என்பது பல அறிஞர்களின் முடிவு என்றாலும், செவி வழியாக மக்கள் கேட்டு, பாரம்பரியமாகச் சொல்லி பரப்பி வந்த கதைகளையே பிறகு எழுதியதாகக் கூறி, எழுத்துமுறை தோன்றிய பின் வெளியிட்டனர். அப்படி வெளியிடுகையில், பழைய காலப்பேச்சு வழக்கு – உரையாடல் போலவும் அமைத்தனர்.

கீதையையும் அதே பாணியைப் பின்பற்றி அர்ச்சுனன் கேள்விக்குக் கண்ணன் பதில் கூறியதாகவே உரையாடல் முறையைப் பின்பற்றி – எழுத்து வடிவங்களைக் கொண்டு பின் பாரதத்தில் சேர்த்திருக்கக் கூடும்!

புத்தரின் பிரச்சாரத்தினால் மூச்சுத் திணறி அழியும் நிலையில் இருந்த வர்ணாசிரமவாதிகள், இப்படி ஒரு முயற்சியை அந்தக் காலகட்டத்தில் தான் பயன்படுத்தியிருக்கக்கூடும்.

… இதன்மூலம் நாம் புரிந்து கொள்ள வேண்டிய செய்தி, எழுத்து முறை மூலம் கருத்துப் பரப்புதல் ஏற்பட்ட கால கட்டத்தில்தான் கீதை பிறந்திருக்க முடியும் என்பதேயாகும்.

இந்த நூலை ஒரு புதினத்தைப் படிப்பதுபோல் படித்து முடித்து விட எண்ணாதீர்கள். ஒரு புதுமையை ஆய்வது போன்று, பொறுத்து, அசை போட்டுப் படித்துச் செரிமானம் செய்ய முயற்சியுங்கள்! (நூலின் முன்னுரையிலிருந்து…)

கீதை, மிகப்பெரிய ஒரு ராஜதந்திரியை அடையாளம் காட்டி உலகுக்கு தந்த நூல் என்று சில ஆய்வாளர்கள் – கீதை வியாபாரிகள் கூறுகிறார்களே, அக்கூற்று எவ்வளவு தூரம் உண்மையானது என்பதை நடுநிலைக் கண்ணோட்டத்தோடு துல்லியமாக எடைபோட்டுப் பார்க்க வேண்டாமா?

அதையும் இந்த அத்தியாயத்தில் ஆராய்வோம்.

வங்காளத்தின் பிரபல நாவலாசிரியரும், எழுத்தாளருமான பங்கிம் சந்திர சட்டர்ஜி (இவர் ஒரு வங்காளப் பார்ப்பனர்) தேச பக்தியால் உந்தப்பட்ட எழுத்தாளர் என்று நாட்டோருக்கு அறிமுகம் ஆனவர். வாழ்வின் துவக்கத்தில் ஒரு பகுத்தறிவாளர் என்று தன்னைச் சொல்லிக்கொண்டு பிறகு மதவாதக் கருத்துக்களுக்கு அவரது பிற்கால வாழ்க்கையில் சாய்ந்தவர் இவர்.

இவருக்கு கிருஷ்ணனின் தெய்வாம்சத்தில் அபார நம்பிக்கை! இவர் ‘கிருஷ்ண சரிதா’ என்று வங்காள மொழியில் எழுதிய ஒரு நூலில்- இது ஒரு கடவுள் அவதாரத்தின் வரலாறு அல்ல; ஒரு ராஜதந்திரியின் கதை என்று கூறியுள்ளார்!

தேச பக்தர்கள் என்ற பார்ப்பனர்கள், தேசபக்தி பெயரில் ஆரிய மதவாத பக்தியைப் பரப்ப கிருஷ்ணனை – சீதையை மிகச் சிறந்த கருவியாக  – அரிய பெரிய வாய்ப்பாகவே கருதினார்கள்; பயன்படுத்தினார்கள். பாலகங்காதர  திலகர் ‘கீதா ரகசியம்’ என்று எழுதியதும் இந்த அடிப்படையில்தான்!

முன்னே பார்த்து அடியெடுத்து வைத்து நாட்டை அழைத்துச் செல்வதற்குப் பதில், இந்த இதிகாசங்களைக் காட்டியதனால் பின்னே திரும்பிப் பிற்போக்குத்தனத்தினைத்தான் அவர்கள் தெரிந்தோ, தெரியாமலோ, விரும்பியோ, விரும்பாமலோ வளர்த்தார்கள் என்றுகூடப் பொத்தாம் பொதுவில் கூற முடியாதபடி , தெரிந்தே, வேண்டுமென்று இதனைச் செய்தனர் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

இராமனை, கிருஷ்ணனை வைத்து நவீன இந்தியாவை, புதிய தேசிய எழுச்சியை உருவாக்கிவிடலாம் என்ற ஒரு தப்புக்கணக்கினைப் போட்டுச் செயலாற்ற முனைந்தனர்! காந்தியாரின் இராமராஜ்யமும், பாரதிய ஜனதாவின் இராம இராஜ்யமும் – இராமஜென்மபூமி – அனுமன் வழிபாடும் இவைகள் எல்லாம் இந்த அடிப்படையில்தான்!

நீங்கள் கூறும் இராமன் யார் என்று காந்தியாரிடம் கேட்ட போது, எனது இராமன், தசரத குமாரன் இராமன் அல்ல; கடவுள் இராமன் என்றார்! இது அவரது குழப்பத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஒரு கூற்றாகும். ( நூலிலிருந்து பக். 166-167)

கிருஷ்ணனுக்கு அடுத்தபடியாக இரண்டாவதாக முக்கியத்துவம் பெற்ற பலராமன், கிருஷ்ணனின் சொந்தப் பிள்ளைகளாக பிரதியும்னா (pradyumna), சம்பா ஆகிய இருவரும் இரண்டு அணிகளிலும் சேராமல் நடுநிலை வகித்தனர். சொந்தப் பிள்ளைகளையோ அல்லது தனக்கு அடுத்து துவாரகையில் முக்கியத்துவம் பெற்ற இரண்டாவது தலைமை பலராமனையோக் கூடத் தன்வசம் இழுக்க இயலாதவன் எப்படி எல்லோரையும் ஒன்றாக்கிய மிகப்பெரிய ராஜதந்திரியாவார்? (நூலிலிருந்து பக்.171-172)

… கீதையிலுள்ள முரண்பாடுகள் ஒன்றா இரண்டா? கீதையின் தொடக்க அத்தியாயங்களில் கிருஷ்ணன் அதிகம் வலியுறுத்திக் கூறுவது கர்மத்தைப்பற்றித்தான். மனிதன் எதையும் சீர்தூக்கிப் பார்த்துச் சிந்தித்துத் தானாகவே ஒரு முடிவுக்கு வந்து தன்னுடைய சொந்தக் கருத்தின் வழிச் செயல்படுவதே கர்மயோகம் எனப்படும், ஞானயோகத்தைவிட இந்தக் கர்ம யோகமே மிக உயர்ந்ததாகச் சொல்லப்படுகிறது.

இப்படிக் கர்மயோகத்தை வலியுறுத்தும் கண்ணபிரான் பின்னால் பதினொன்றாவது அத்தியாயம் 32-ஆவது சுலோகத்தில் “மக்களையெல்லாம் அழிப்பவன் நானே! நான் தான் மிகப்பெரிய காலனாவேன். இதோ எதிரில் இருப்பவர்களையெல்லாம் அழிப்பதற்காகவே வந்துள்ளேன். நீ இல்லையென்றாலும், நீ போரிடாவிட்டாலும் எதிர்ப்படையிலிருக்கும் அத்தனை வீரர்களும் அழிவது திண்ணம், எனவே அர்ச்சுனா எழுந்திரு! வெற்றிகொள்! பகைவரை வென்று பெரிய நாட்டினை அனு பவி! முன்னமேயே நான் அவர்களைக் கொன்றுவிட்டேன். எனவே அர்ச்சுனா! அவர்களை அழித்தவன் என்று பெயரளவில் காரியகர்த்தாவாக முன்னே இருக்க நீ வா!

துரோணர், பீஷ்மர், ஜயத்ரதன், கர்ணன், பிற வீரர்கள் முதலியோர் எப்போதோ என்னால் கொல்லப்பட்டு விட்டார்கள், நீ இப்போது அவர்களை அழிப்பாயாக அஞ்சாதே! என்று கிருஷ்ணன் கூறுகிறான்.

33-வது சுலோகத்தில் தங்கள் சொந்தச் செயல்களாலேயே, தீயவர்கள் அழிகின்றனர். அவர்களை அழித்தவன் என்று ஒருவனைக் கூறுவது ஏதோ பெயரளவுக்குத்தான். எனவே கொன்றவனைப் பழிசாராது; அவனைப் பழிப்பதும் தவறென்றும் கூறப்படுள்ளது.

பிறகு 18-வது அத்தியாயம் 59-வது சுலோகத்தில் ”நான் என்ற உனது நினைப்பு உன்னைப் போரிடக் கூடாது என்று தடுக்கிறது. ஆனால் இயற்கை (பிரகிருதி) உன்னைப் போரிடுவதற்குக் கட்டாயப்படுத்தும். அஞ்ஞானத்தினால் நீ எதைச் செய்யக் கூடாதென்று கருதுகிறாயோ அதைச் செய்தே தீருவாய்! அது உனது கடமையாகும், அதிலிருந்து தப்ப வழியேயில்லை. நீ எப்படி நடக்க வேண்டுமென்பது முன்பே முடிவு செய்யப்பட்ட ஒன்றாகும். அர்ச்சுனா! ஒவ்வொருவர் மனதிலும் இருக்கும் ஈசன் மக்களைத் தனது மாயையினால் தன்னிச்சைப்படி இயங்கச் செய்கிறான்” என்கின்றான்.

படிக்க:
சாதி பற்றிய காந்தியின் வாதங்கள் பைத்தியக்காரத்தனமானவை | அம்பேத்கர்
பகவத் கீதையை தடை செய் !

மூன்றாவது அத்தியாயம் 33-வது சுலோகத்திலும் பின்வருமாறு சொல்லப்படுகிறது ”ஆத்மா தனித்து இயங்கினாலுங்கூட, நாம் உலக விவகாரங்களைப் பார்க்கும்போது, நம்முடைய செயல்கள், மிகத் தொன்மையான காலத்திலிருந்தே நடைபெறுகின்றன என்பதையும் ஆத்மா இவைகளை எவ்விதத்திலும் கட்டுப்படுத்த முடியாதென்பதையும் அறிவோம். படைக்கப்பட்ட எந்த உயிரும் எவ்வளவு உறுதியோடிருப்பினும் தங்களிச்சைப்படிச் செயல்பட முடியாது. இவ்வுலகில் நடக்கும் எல்லாச் செயல்களும் இறைவன் எப்படி விரும்புகிறானோ அப்படியே நடைபெறுகின்றன. அவனின்றி அணுவும், அசையாது.”

கீதையிலே உண்மைக்கு இடமில்லை

மேலே சொன்ன கருத்துக்கள் உண்மையானால் கர்மயோகம் என்ற பேச்சுக்கே இடமில்லையே! மனிதன் அதன்படி நடக்க வேண்டுமென்ற பிரச்னையே எழாதே! கவுரவர்களுடன் போரிட்டு அவர்களைக் கொல்வதற்கு இசையும்படிச் செய்வதற் காக அர்ச்சுனனைக் கிருஷ்ணன் வேண்டிக் கொள்ள வேண்டிய அவசியமே இருந்திருக்காதே! எல்லாம் இறைவனால் முன்பே முடிவு செய்யப்பட்டபடிதான் நடக்குமென்றால் கர்மயோகம் என்ற கோட்பாடு எப்படி உண்மையாகும்? கர்மயோகமும் இறைவன் விதித்தபடிதான் நடக்குமென்ற கருத்தும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாகவல்லவா இருக்கின்றன? அப்படியானால் இவற்றிலே எதுதான் உண்மை ? ஒருக்கால் கீதையிலே உண்மைக்கே இடமில்லையோ! (நூலிலிருந்து பக்.211-212)

நூல் : கீதையின் மறுபக்கம்
ஆசிரியர் : கி.வீரமணி

வெளியீடு : திராவிடர் கழக வெளியீடு,
50, ஈ.வெ.கி. சம்பத் சாலை, சென்னை – 600 007.
தொலைபேசி எண் : 044 – 2661 8161; 8428 455 455

பக்கங்கள்: 384
விலை: ரூ 150.00 / ரூ 300.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : panuval | periyarbooks

குழந்தைகள் தமது திறமைகளால் உலகை வியப்பில் ஆழ்த்துவார்கள் !

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 4 | பாகம் – 04

குழந்தை – எல்லையற்ற திறமையின் மாடல்

ன்று ஒரு அதிசயம் நடக்கப் போகிறது. ஒருவேளை “அதிசயம்” என்பது மிகைப்படுத்தி சொல்லப்பட்டதோ? அதிசயங்கள் சாதாரணமாக நடப்பதில்லை, அதுவும் கல்வி போதிப்பதிலும் குழந்தை வளர்ப்பிலும் இது நடப்பதில்லையோ! ஆனால் 84-வது பள்ளி நாளாகிய இன்று நடக்கப் போவதை வேறு எப்படிச் சொல்வது?

இன்று என்ன நடக்கப் போகிறது தெரியுமா? “எனக்கு எது மகிழ்ச்சி தருகிறது? எது வருத்தமளிக்கிறது?” எனும் தலைப்பில் எழுதும்படி அவர்களுக்குச் சொல்லப் போகிறேன். அவர்கள் தமது வாழ்வின் முதல் கட்டுரையை எழுதுவார்கள். என் வகுப்புக் குழந்தைகளில் பலர் எல்லா எழுத்துகளையும் படித்து முடிப்பதற்கு நீண்ட நாட்களுக்கு முன்னரே கவிதைகள், கதைகளைப் படிக்க ஆரம்பித்ததும் தங்கள் மனதில் தோன்றியதை எழுதத் துவங்கியதும் எனக்குத் தெரியுமென்ற போதிலும் வியப்புடனும் சந்தோஷத்துடனும்தான் இவர்களின் முதல் கட்டுரைகளைப் படிப்பேன்.

யாருக்கெல்லாம் இக்கட்டுரைகளைக் காண்பிப்பேனோ அவர்களில் பெரும்பாலோர் ஆறு வயதுக் குழந்தைகளால் இப்படி எழுத முடியாது என்பார்கள். இந்த வயதுக் குழந்தைகளிடம் இப்படிப்பட்ட திறமைகள் இருப்பதை நம்ப மாட்டார்கள், இவற்றை எழுதியது குழந்தைகள்தானா என்று சந்தேகப்படுவார்கள்.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன் நான் முதன்முதலில் இந்த அதிசயத்தைச் சந்தித்த போது இப்படி நடந்தது. அப்போது நான் மகிழ்ச்சியோடு, உணர்ச்சி வசப்பட்டு எனது அன்றைய குழந்தைகள் எழுதியதைக் காட்ட விஞ்ஞானிகளிடம் ஓடினேன் (அக்குழந்தைகள் இன்று வளர்ந்து பெரியவர்களாகிப் படிக்கின்றனர், உழைக்கின்றனர்).

“இன்று இவர்கள் என்ன எழுதியிருக்கின்றார்கள் பார்த்தீர்களா!”

குழந்தைகளின் இந்த முதல் கட்டுரைகளைப் படிக்கத் தொடங்கினேன்.

திடீரென யாரோ என்னைத் தடுத்து நிறுத்தினார்.

“போதும்!” என்று எரிச்சலோடு யாரோ சொன்னார்கள்.

வயது முதிர்ந்த, செல்வாக்குள்ள, எல்லோர் மரியாதைக்கும் உரிய ஒரு பழைய ஆசிரியை சொல்கிறார்:

“என் அன்பு சக ஆசிரியர்களே! ஏன் ஒருவரையொருவர் நாம் ஏமாற்றிக் கொள்ள வேண்டும்! அதுவும் ஆசிரியர் ஆலோசனைக் கவுன்சில் கூட்டத்தில்! ஆறு வயதுக் குழந்தைகள் எப்போதாவது இப்படி எழுதியிருக்கின்றார்களா!”

மற்ற விஞ்ஞானிகள் ஏளனமாக புன்னகைத்தபடி, அந்த முதிய ஆசிரியைச் சொல்வதை ஒப்புக் கொள்ளும் முகமாகத் தலையை ஆட்டியபடி ஏதோ நான் அவர்களை ஏமாற்றுவது போல் என்னைப் பார்த்தனர். “இது எப்படி நடந்தது? விளக்கிச் சொல்” என்று யாருமே என்னைக் கேட்கவில்லை.

படிக்க:
பெஹ்லு கானை கொன்றவர்களை விடுவித்தது நீதிமன்றம் !
மூடப்படும் அரசுப் பள்ளிகள் – யார் காரணம் ?

ஆம், அறுபதாம் ஆண்டுகளின் மத்தியில் விஞ்ஞானிகளிடையே இப்படி நடந்தது! “குழந்தையால் இதைக் கிரகிக்க முடியாது…”

“குழந்தைகளுடைய வயதுரீதியான சிறப்பியல்புகள்….. மட்டுப்பாடுகள்…”

“குழந்தைகளுக்கு இது புரியாது. இதை அவர்களால் கிரகிக்க முடியாது…”

சில விஞ்ஞானிகள், கல்வி முறையியலர்கள், ஆசிரியர்களிடமிருந்து நான் அடிக்கடி இப்படிப்பட்ட கருத்துகளைக் கேட்கிறேன்.

நிச்சயமாக, குழந்தைகளால் எல்லாவற்றையும் கிரகிக்கவும் புரிந்து கொள்ளவும் செய்யவும் முடியாது.

உதாரணமாக, பிறந்தவுடன் எழுந்து நின்று பேச அவர்களால் முடியாது. அவர்களால் தாமாகவே உணவு சாப்பிட்டு அம்மாவை இந்த வேலையிலிருந்து விடுவிக்க முடியாது. தேவையான திறமைகள் வரும் வரை விஞ்ஞானங்களைப் பயில முடியாது. தேவையான அறிவும் அனுபவமும் கிட்டும்வரை நகரங்கள், பாலங்கள், தொழிற்சாலைகளைக் கட்ட முடியாது, சாலைகளைப் போட முடியாது, விவசாயம் செய்ய முடியாது. சமூக அனுபவம் கிட்டும் வரை நம்முடைய பல அக்கறைகளைப் புரிந்து கொள்ள இயலாது.

குழந்தைகளின் வயது, அனுபவமின்மையால் வரும் மட்டுப்பாடுகள் உண்மையிலேயே நிறைய உள்ளன. ஆனால் மேற்கூறிய படி குழந்தைகளால் முடியாது என்று ஆணித்தரமாகச் சொல்வதில் குழந்தைகளைப் பற்றிய பழமையில் ஊறிப்போன கருத்து உள்ளது என்று எனக்குத் தோன்றுகிறது. “முடியாது.” ஏன்? நீண்டகாலமாக இப்படி இருந்தது, நேற்று இப்படி இருந்தது, அதனால் இன்றும் நாளையும் நாளை மறுநாளும் இப்படித்தான் இருக்க வேண்டுமா? அப்படியெனில் 21-வது நூற்றாண்டுக் குழந்தைகளின் சிந்தனைகளிலும் இதே வயதுக் கட்டுப்பாடுகள்தான் வெளிப்படுமா? அப்படியென்றால் ஆசிரியரியல், கல்வி போதிக்கும் முறை, ஆசிரியரின் படைப்பாற்றல் ஆகியவற்றிற்கு என்ன விலை?

“குழந்தைகளால் முடியாது” என்று சொல்லும்போது இதில் குழந்தைகளின் பாதுகாப்பின்மையையும் பலவீனத்தையும் காப்பாற்ற வேண்டுமே என்பதை விட இவர்களைத் தமது உண்மையான திறமைகளிலிருந்து வேலியிட்டுத் தடுக்க வேண்டும் எனும் எண்ணம்தான் மிகுந்திருப்பதாக எனக்குப்படுகிறது. அனேகமாக “குழந்தைகளால் முடியாது” எனும் கூற்றில் குழந்தைகளின் வளரும் திறமைகளின் மட்டுப்பாட்டை விட அவர்களைப் பற்றிய நமது கருத்துகளின் மட்டுப்பாடே அடங்கியிருப்பதாக நான் எண்ணுகிறேன்.

நமது 20-ம் நூற்றாண்டின் சிறப்பியல்புகள் யாவை? பல்வேறு விஞ்ஞான சாதனைகள் ஒரு புறமிருக்க, குழந்தைகளுடைய மனநிலையின் கிட்டத்தட்ட எல்லையற்ற திறமைகளும் உள்ளாற்றல்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத் தக்கவையாகும். 30 ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட இன்று ஆசிரியரின் வசம் பெரும் எதிர்கால வாய்ப்புள்ள, ஆழ்ந்த வளர்ச்சிப் போக்குகள் உள்ளன. குழந்தைகளின் சக்தி (நல்ல ஆக்கபூர்வமான கல்வி, குழந்தை வளர்ப்புப் போக்கில் இது வளர்ந்து வலுப்பெறும்) மீதுள்ள நம்பிக்கை நவீன சோவியத் ஆசிரியரின் பிரதான அம்சமாகும். ஒரு சில வயது மட்டுப்பாடுகள் பற்றிய பழைய கருத்துகள் நம் கண்களிலேயே தகர்ந்து விழுகின்றன. எதிர்காலத்தில் குழந்தைகள் தமது திறமைகளால் உலகைப் பன்முறை வியப்பில் ஆழ்த்துவார்கள், குழந்தை மனதைப் பற்றிய விஞ்ஞானிகள், ஆசிரியர்களின் கருத்துகளைப் பன்முறை தகர்ப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நல்ல, ஆக்கபூர்வமான ஆசிரியரின் கவனத்தின் கீழ் இருந்தால் குழந்தைகளின் திறமைகளுக்கு எல்லைகளே கிடையாது. எனவே கீழ்வரும் “முதுமொழியை” நான் பின்பற்றுகிறேன், இது சிறு குழந்தைகளின் மனதையும் இதயத்தையும் நாடிச் செல்லும் போது எனக்குக் கைகொடுக்கிறது:

குழந்தைகளின் ஆழ்ந்த உள்ளாற்றல்களை வெளிப்படுத்தி, வளர்க்கவல்ல கல்வி போதிக்கும் முறை எவ்வளவுக்கெவ்வளவு செயல்முனைப்போடு புதுப்பிக்கப்படுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அது மனிதாபிமானம் மிக்கதாய், எதிர்கால நம்பிக்கையுள்ளதாய், மகிழ்ச்சிகரமானதாய் மாறும்.

இன்றைய அதிசயத்தின் வேர் இந்த “முதுமொழியில்” தான் உள்ளது.

நான் இந்தக் கட்டுரைகளை யாருக்கெல்லாம் காட்டுகிறேனோ அவர்கள் இவற்றை நம்பாமல் இருக்கட்டும், இவற்றை அப்பா, அம்மாக்கள் எழுதினார்கள் என்று கூறட்டும். இதனால் என் குழந்தைகளின் வெற்றி மங்காது. இவர்களுடைய திறமைகளின் மீதும், புதிய மனிதனை உருவாக்குவதில் ஆசிரியரியலின் வாய்ப்புகள் மீதும் எனக்குள்ள உறுதி இருமடங்கு அதிகமாகும்.

எனது சின்னஞ்சிறு மாணவமணிகள் முதன்முதலாக வாழ்க்கையில் தமது உணர்வுகளின், இன்ப துன்பங்களின் ஆழத்திற்குள், சென்று, “நான்” என்பதினுள் மூழ்கும் அந்த நிமிடத்தின் மகிழ்ச்சியையும் உணர்ச்சிப் பெருக்கையும் நான் உணருகிறேன். ஒரு வேளை சாஷா அல்லது வாசிக்கோ பதினைந்து ஆண்டுகளுக்கு முன் அதே வயதிலிருந்த நூக்ரீ எழுதியதைப் போல எழுதலாம்: ”பலவற்றைக் கண்டு மகிழ்கிறேன். உதாரணமாக, நேற்று நானும் அப்பாவும் பாட்டி வீட்டிற்குச் சென்றிருந்த போது அவருடைய அலமாரியை ரிப்பேர் செய்து தந்தோம். ‘உங்களுடன் இருக்கும்போது எவ்வளவு நன்றாக உள்ளது’ என்றார் பாட்டி. எனது யோசனையற்ற நடவடிக்கைகளால் மற்றவர்களுக்கு வருத்த மேற்படச் செய்யும் போதும் அல்லது எதற்கு என்று எனக்குத் தெரியாதபோது என்னைத் தண்டிக்கையிலும் வருத்தப்படுகிறேன்…”

படிக்க:
உங்களுக்குத் தேவை அறிவியல்பூர்வமான கல்வியா – அய்யர்களை குஷிப்படுத்தும் கல்வியா ?
செயற்கை நுண்ணறிவு : அறிவியல் உலகில் அறம் சார்ந்த கேள்விகள் !

முதன்முதலாக தன்னைத்தானே நன்கு உணர்வதை நான் விண்வெளிவலவர் முதன்முதலாக திறந்த விண்வெளியில் வருவதுடன் ஒப்பிடுகிறேன். தனது உணர்வுகள், எண்ணங்கள், உறவுகளை எழுத்து வடிவில் வடிப்பதன் மூலம் குழந்தை தன் மனநிலையை அறிந்துணருமாறு செய்ய நான் மேன்மேலும் பாடுபடுவேன். எனது சின்னஞ்சிறு மாணவமணிகள் தம் நடவடிக்கைகள், உற்றார் உறவினர் மீதான நேசம், தம் எதிர்காலம் ஆகியவற்றைப் பற்றி, மக்களுக்கு எப்படி மகிழ்ச்சியை வழங்குவது, தீமையை எதிர்த்து எப்படிப் போராடுவது என்பதைப் பற்றி மேன்மேலும் அதிகம் சிந்திப்பார்கள்.

மற்றவர்கள் மத்தியில் தன்னைத் தானே பார்த்துக் கொள்ளக் குழந்தைக்குச் சொல்லித் தருவது, சுயவளர்ப்பிற்கு, சுயகல்விக்கு, சுயமாகத் தன் நிலையை முடிவு செய்வதற்குப் பாடுபடுவது-எழுதுவதன் மூலம் சிந்திக்கும் திறமையை, தன்னுடன் தானே உரையாடும் திறமையைக் குழந்தைகளிடம் வளர்க்கும்போது நான் முன்வைக்கும் லட்சியம் இதுதான். எழுத்துகள்-மனதின் மெழுகுவர்த்தி. தன் ஆன்மிக வாழ்வுக் கிடங்கினுள் குழந்தை அடியெடுத்து வைக்கும்போது இதை எப்படிப் பயன்படுத்துவதென சொல்லித் தரவேண்டும். எனது பணியில் இது குழந்தைகள் மத்தியில் தனிப்பட்ட குண நலன்களை வளர்க்கும் முறையாக, அவர்கள் தமது ஆன்மிக உலகைத் தாமே கண்டறிய உதவும் முறையாக மாறும்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

இன்சுலின் எனும் அரு மருந்து ! | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

என்னை பாதித்த ஒரு புகைப்படம் :

diabetes

முதல் படத்தில் நாம் பார்ப்பது டைப் ஒன்று டயாபடிஸ் எனும் கொடிய உயிர் குடிக்கும் நோயால் பாதிக்கப்பட்ட தனது இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருந்த ஒரு சிறுவன்

இரண்டாவது படத்தில் அவனது உயிர்காக்கும் அந்த மருந்து கிடைத்தவுடன் அவன் மீண்டும் பெற்ற வாழ்க்கை

ஆம்… அந்த உயிர்காக்கும் அமிர்தம் இன்சுலின் தான். நாள்தோறும் உலகின் பல கோடி மக்களின் உயிரைக்காப்பாற்றி வரும் இன்சுலின் பிறந்த கதை விந்தையானது.

Dr. பாண்டிங் எனும் அறுவை சிகிச்சை நிபுணர், அறிவியல் ஆராய்ச்சியில் பண்டிதம் கிடையாது. கார்போஹைட்ரேட் என்றால் பெரிதாக தெரியாது. அவர் ஒரு அறிவியல் ஆராய்ச்சியை படிக்கிறார்.

“கணையம் வெட்டி எடுக்கப்பட்ட நாய்களில் நீரிழிவு ஏற்படுவது குறித்த ஆராய்ச்சி கட்டுரை அது..” கணையம் முழுவதும் நீக்கப்பட்ட நாய்களில் நீரிழிவு நோய் ஏற்பட்டது, அதுவே கணையத்தில் இருந்து வரும் குழாயை (pancreatic duct) மட்டும் அடைத்தால் நீரிழிவு ஏற்படவில்லை.

படிக்க:
டியர் மிடில்கிளாஸ், மூழ்கும் கப்பலில் பாதுகாப்பான இடம் எதுவும் கிடையாது !
♦ தற்கொலை தேசமா நம் இந்தியா ? | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

இதைப்படித்ததும் அவருக்கு ஒரு யோசனை வருகிறது, அந்த ஒரு யோசனைதான் பலரது வாழ்க்கையில் விளக்கேற்ற இருக்கிறது என்பது அவருக்கு அப்போது தெரியாது.

நாயின் கணையத்தில் இருந்து குழாயை அடைத்து விட்டால் கணையம் முழுவதுமாய் இறந்து விடுகிறது. இருப்பினும் டயாபடிஸில் இருந்து தடுக்கும் ஏதோ ஒன்றை அந்த நாயின் மீதி இருக்கும் கணையம் சுரக்கிறது என்று அறிந்தார்.

banting and best
மருத்துவர் பாண்டிங் (கண்ணாடி அணிந்திருப்பவர்) மற்றும் பெஸ்ட்.

இந்த அறிவியல் ஆய்வுக்காக டொரண்ட்டோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த மெக்லியாய்ட் துணையை நாடுகிறார். அவரும் தனது ஆய்வகத்தில் ஒரு பகுதியையும், துணைக்கு Dr. பெஸ்ட் எனும் மருத்துவரையும் தருகிறார்.

பல நாள் ஆய்வுக்கு பிறகு நாயின் மிச்ச கணையத்தின் Islet of langerhans எனும் பகுதியில் இருந்து அந்த திரவத்தை எடுத்தனர். அதை கணையம் முழுவதும் நீக்கப்பட்டு நீரிழிவு உண்டாக்கப்பட்ட நாய்க்கு ஊசியாக செலுத்தினர்.

அந்த நாய்க்கு உடனடியாக ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவுகள் குறைவதை கண்டனர். பின்பு அந்த திரவத்தை தூய்மை படுத்தி மனிதர்களுக்கு பயன்படுத்தி வெற்றி கண்டனர்.

அந்த உயிர் காக்கும் திரவம் தான் “இன்சுலின்” இந்த கண்டுபிடிப்புக்காக 1923-க்கான நோபல் பரிசு Dr. பாண்டிங் மற்றும் Dr. மெக்லியாய்ட் இருவருக்கும் வழங்கப்பட்டது.

இன்சுலின் கண்டறிந்து பாண்டிங் அதற்கான காப்புரிமையை மக்கள் அனைவரும் எளிதாக பெறுவதற்காக இலவசமாக அளித்தார். வரலாற்றில் நிலைத்தார்…

மீண்டும் ஒரு முறை அந்த புகைப்படத்தை பாருங்கள்.. ஒரு மனிதனின் சுயநலமின்மை எப்படி உலகை மாற்ற முடியும் என்று புரியும்.

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

அம்பேத்கர் சிலை உடைப்பு : குடந்தை கல்லூரி மாணவர்கள் போராட்டம் !

0

வேதாரண்யத்தில் வெட்டரிவாள், சுத்தியலுடன் அம்பேத்கர் சிலையை ஆதிக்க சாதிவெறி கும்பல் சிதைத்ததைக் கண்டித்து குடந்தை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் மற்றும் குடந்தை சங்கரா கலைக்கல்லூரி மாணவர்களும் ஆகஸ்ட் 28, 29 ஆகிய தேதிகளில் போராட்டம் நடத்தினர்.

வேதாரண்யம் சிலை உடைப்பின்போது வேடிக்கைப் பார்த்த போலீசார், சாதிய வன்மத்தோடு திட்டமிட்ட வகையில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலைக் கண்டித்து ஜனநாயக சக்திகள் குரல் கொடுப்பதைக்கூட சகிக்க முடியாமல் ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி மறுத்து வருகின்றனர். தமிழகம் சாதிவெறியர்களின் கூடாரமாவதை அனுமதிக்க மாட்டோம் என்ற சூளுரையோடு தடையை மீறி தன்னெழுச்சியான போராட்டங்கள் பலவும் நடைபெற்று வருகின்றன.

கடலூர் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி, மதுரை சட்டக்கல்லூரி உள்ளிட்ட இடங்களில் மாணவர்கள் கண்டன போராட்டங்களை நடத்தியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி மற்றும் சங்கரா கலைக் கல்லூரி மாணவர்கள் கடந்த ஆக-27, 28 ஆகிய தேதிகளில் வகுப்புப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி நுழைவாயில் அருகே திரண்ட மாணவர்கள் அம்பேத்கர் சிலையை உடைத்த பொறுக்கிகளை கைது செய்ய கோரியும், சாதிவெறிக்கும்பலுக்குத் துணைபோகும் போலீசாரைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.

இசுலாமியர்களை இரண்டாந்தர குடிமக்களாகக் கருதி கடப்பாறையும் கையுமாக சென்று பாபர் மசூதியை இடித்துத்தள்ளிய சங்பரிவார் கும்பலுக்கும், வேதாரண்யத்தில் சுத்தியலோடு சென்று அம்பேத்கர் சிலையை சிதைத்ததோடு, அதை விசிலடித்து ரசித்து கொண்டாடிய சாதிவெறிக்கும்பலுக்கும் பெரிய வேறுபாடு ஏதும் இருக்கிறதா என்ன?

 வினவு செய்தியாளர்.

தமிழகத்தை நாசமாக்காதே ! ஆகஸ்ட் 30 விழுப்புரம் கருத்தரங்கம் !

அணுக்கழிவு – ஹைட்ரோ கார்பன் – எட்டுவழிச்சாலை :

தமிழகத்தை நாசமாக்காதே !

கருத்தரங்கம்
நாள் : ஆகஸ்டு – 30, வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 4.30 மணி
இடம்: கலைஞர் அறிவாலயம், விழுப்புரம்

உரையாற்றுவோர்:

தோழர் இளங்கீரன்,
தலைவர்,
காவிரி டெல்டா விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு,
சிதம்பரம்.

தோழர் தமிழ்குமரன்,
வழக்கறிஞர், சங்கராபுரம்.

தோழர் ரவி கார்த்திகேயன்,
ஒருங்கிணைப்பாளர், மருதம்,
விழுப்புரம்.

தோழர் ஞானவேல்,
அமைப்பாளர்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
விழுப்புரம்.

சிறப்புரை :

வழக்கறிஞர் தோழர் ராஜூ,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.

தோழர் அய்யநாதன்,
பத்திரிகையாளர், சென்னை.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
விழுப்புரம் மண்டலம்,
தொடர்புக்கு : 94865 97801


இதையும் பாருங்க :

பசுமை எங்கும் அழிகிறதே ! இனி பாலைவனமோ தமிழகமே | Kovan Song

தமிழகத்தை நாசமாக்காதே ! கடலூர் கருத்தரங்க செய்திகள் – படங்கள் !

“அணுக்கழிவு, ஹைட்ரோகார்பன், எட்டு வழிச்சாலை – தமிழகத்தை நாசமாக்காதே !” என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் மாநாடு, கருத்தரங்கம், பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சி ஆகியவற்றை நடத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கடலூரில் 26.08.2019 அன்று மாலை 04:00 மணி அளவில் மஞ்சகுப்பம் டவுன்ஹாலில் கருத்தரங்கம், ம.க.இ.க கலை நிகழ்ச்சி ஆகியவை  நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மக்கள் அதிகாரம், கடலூர் மண்டல ஒருங்கிணைப்பாளர், தோழர் து. பாலு அவர்கள் தலைமைதாங்கினார். அவர் பேசுகையில்:

“கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்கள் அதிகாரம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்துப் போராடி வருகிறது. தமிழகத்தில் மக்கள் அதிகாரம் கூட்டங்களுக்கு அனுமதி கிடையாது ஏனென்றால், இது அதானி – அம்பானி போன்ற முதலாளிகள் தொடர்பான பிரச்சினை எனவே கூட்டத்திற்கு அனுமதி இல்லை.

CUddalore-PP-Meeting-(5)இந்தியாவில் உள்ள 58 மண்டலங்களில் மிகவும் முக்கியமான இடம் தமிழகம். மரக்காணம் முதல் கடலூர் வரை ஒரு மண்டலம், பரங்கிப்பேட்டை முதல் வேதாரண்யம் வரை ஒரு மண்டலம், குள்ளஞ்சாவடி முதல் வேளாங்கண்ணி வரை ஒரு மண்டலம் இதில் மிகவும் முக்கியமானது கடலூர் பகுதி.

இப்படி ஹைட்ரோகார்பன், 8 வழிச்சாலை, அணுக்கழிவு, கோயம்புத்தூர் பகுதியில் கெயில் குழாய் பதிப்பு, தேனியில் நியூட்ரினோ என பல்வேறு திட்டங்களை தமிழகத்தில் கொண்டுவருகிறார்கள். 10 பேர் சேர்ந்து ஒரு பெண்ணை நாசமாக்குவது போல் தமிழகத்தை நாசமாக்க பார்க்கிறார்கள்.

இந்த நாசகார செயல்களை மறைக்க இவர்கள் எடுக்கும் ஆயுதம் டாஸ்மாக், சாதிக்கலவரம், மதக்கலவரம் போன்றவை. எனவே இதையெல்லாம் நாம் முறியடிக்க வேண்டும். மக்கள் அதிகாரம் மட்டும் போராடி இதை முறியடிக்க முடியாது நாம் எல்லோரும் சேர்ந்து எதிர்க்க வேண்டும்” என்று உரையாற்றினார்.

படிக்க :
♦ டியர் மிடில்கிளாஸ், மூழ்கும் கப்பலில் பாதுகாப்பான இடம் எதுவும் கிடையாது !
♦ காஷ்மீர் : மோடிக்கு சொம்படிக்கும் இந்திய பிரஸ் கவுன்சில் !

இதைத்தொடர்ந்து சிதம்பரம், காவிரி டெல்டா விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் திரு இளங்கிரன் பேசுகையில்: “கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி தெரியாமல் உள்ளது எனவே ஒவ்வொரு இளைஞரும் கிராமத்திலுள்ள பத்து விவசாயிகளுக்கு ஹைட்ரோகார்பன் திட்டத்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை தெரியப்படுத்த வேண்டும்.

அதிமுக அமைச்சர் சி.வி. சண்முகம் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்கிறார். இவர்களை நம்பினால் நீட் தேர்வில் என்ன நடந்ததோ, அதேதான் ஹைட்ரோ கார்பன் திட்டதிலும் நடக்கும். மத்திய அரசு தமிழகத்தை சுடுகாடாக நினைக்கிறது, ஆகையால் இந்தத் திட்டத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்” என்று உரையாற்றினார்.

இதைத்தொடர்ந்து திரு இளங்கோவன் அவர்கள் ஹைட்ரோகார்பன், அணுக்கழிவு, புதிய கல்விக் கொள்கை, இந்தி – சமஸ்கிருத திணிப்பு, ஆகியவற்றை அம்பலப்படுத்தும் வகையில் கவிதை வாசித்தார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

அவருக்கு அடுத்தபடியாக ஹைட்ரோகார்பன் – சாகர்மாலா எதிர்ப்பு இயக்கங்களின் கூட்டமைப்பு, தோழர் கு. பாலசுப்பிரமணியன் அவரது உரையில்: “நாடே பொருளாதார நெருக்கடியில் இருக்கும் போது, மக்களை பாதுகாப்பது விவசாயம்தான். ஆனால் இன்று விவசாயம் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு வருகிறது.

நாட்டின் வளர்ச்சி என்ற பெயரில் பல்வேறு திட்டங்களை கொண்டு வருகிறார்கள். ஆனால் நாட்டில் வேலைவாய்ப்பு இல்லை, வறுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, குடிநீர் கூட இந்த அரசால் வழங்க முடியவில்லை தமிழகம் முழுவதும் மின்சாரம் வழங்கப்படவில்லை; ஆனால் அரசு ஹைட்ரோகார்பன் எடுப்பதில் மட்டும் ஆர்வம் காட்டுகிறது.

இன்று விவசாயிகள் பெருமளவு தங்களுடைய கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி போராடி வருகிறார்கள் ஆனால் அதை செய்ய மறுக்கும் இந்த அரசு அதானி, அம்பானி போன்ற முதலாளிகளின் கடனை பெருமளவு தள்ளுபடி செய்கிறது.
ஆக அரசு என்பது மக்கள் நலன் இல்லாமல் முதலாளிகள் நலன் என மாறிவிட்டது. எனவே இந்த பிரச்சாரத்தை கிராமந்தோறும் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் இதை எதிர்த்துப் போராடி முறியடிக்க வேண்டும்” என்று கூறி நிறைவு செய்தார்.

இதைத்தொடர்ந்து பத்திரிகையாளர் திரு அய்யநாதன் உரையாற்றும் பொழுது; “தமிழகத்தில் குறிப்பாக காவிரிப்படுகையில் மக்களுடைய பிரச்சினைகளுக்கு போராட்டம், கூட்டம் நடத்த இதற்கு முன் அனுமதி இருந்தது. ஆனால் எப்பொழுது ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக காவிரி படுகையை கபளீகரம் செய்யத் துணிந்தார்களோ; எட்டு வழி சாலைக்காக ஐந்து மலைகளை சிதைக்க துணிந்தார்களோ; மக்களை வாழ வழி இல்லாத நிலையை உருவாக்க அணுக் கழிவுகளை கொட்ட துணிந்தார்களோ; அப்போதிருந்து அவர்கள் கையில் எடுக்கும் ஆயுதம் அடக்குமுறை.

வளர்ச்சி என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக மண் வளங்களையும், கனிம வளங்களையும், மக்களையும் சுரண்டுகிறார்கள். இதனை எதிர்த்து கேட்பவர்களை வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்று முத்திரை குத்துகிறார்கள். பிரதமர் மோடி அவர்களே, இன்றைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவுக்கு என்ன பதில் வைத்துள்ளீர்கள்?

உலகம் முழுவதும் தொழில்நுட்ப மாற்றத்தினால் மின்கலங்களுக்கும் மாறிக் கொண்டிருக்கும் வேளையில்; உலகம் முழுவதும் கச்சாப்பொருள் சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில்; ஹைட்ரோ கார்பன் யாருக்காக எடுத்து எங்கே கொடுக்கப் போகிறீர்கள்?”

மேலும் மக்கள் சந்தித்து வரும் பொருளாதார நெருக்கடி, வேலைவாய்ப்பின்மை, மக்களின் வாங்கும் சக்தி குறைதல் என்று அடுக்கடுக்கான பிரச்சினை குறித்த கேள்விகளை முன் வைத்து எழுச்சிகரமாக உரையாற்றினார்.

படிக்க :
♦ வேதாரண்யம் அம்பேத்கர் சிலை உடைப்பு : கடலூர் மாணவர்கள் போராட்டம் !
♦ இந்து ராஷ்டிரம் : நம் கண்முன்னேயே நெருங்கிக் கொண்டிருக்கிறது !

அவரைத் தொடர்ந்து மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளாளர் தோழர் காளியப்பன் அவரது சிறப்புரையில்: “தமிழகத்தில் அணுக்கழிவு, ஹைட்ரோகார்பன், எட்டு வழி சாலை, போன்ற திட்டங்கள் எல்லாம் நாட்டின் வளர்ச்சி என்ற பெயரில் திணிக்கப்படுகிறது. ஆனால் நாட்டு மக்கள் இந்த வளர்ச்சி எங்களுக்கு தேவையில்லை என்று எதிர்க்கிறார்கள், போராடுகிறார்கள்.

தமிழக சட்டமன்றத்தில் அமைச்சர்கள் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கொண்டு வந்தால் நாங்கள் கிரிமினல் வழக்கு தொடருவோம் என்கிறார்கள். ஆனால் மக்கள் ஹைட்ரோகார்பன் வேண்டாமென தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றினால் போலீசு மக்கள் மீது வழக்கு போடுகிறது. எனில் தமிழகத்தில் யாருக்கு அதிகாரம் இருக்கிறது.

கார்ப்பரேட்டுகள் என்ன நினைக்கிறார்களோ அதைத்தான் ஆட்சியாளர்களும், போலீசும் செய்கிறது. தமிழகம் முழுவதும் மக்கள் இந்த நாசகார திட்டங்களுக்கு எதிராக பல்வேறு அமைப்புகளை ஏற்படுத்தி போராடி வருகிறார்கள். ஆனால் இது போதுமானது கிடையாது.

நாம் இப்போது தனித்தனி ஆயுதமாக இருக்கிறோம், அனைத்தையும் ஒன்று சேர்க்க வேண்டும். நாம் மிகப்பெரிய சக்தியை மாற வேண்டும், மாபெரும் சக்தியாக எழுந்து நாசகார திட்டங்களை விரட்டி அடிப்போம்.” என்று கூறி நிறைவு செய்தார்.

பின்னர் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கலைக்குழு சார்பில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. கடைசியாக மக்கள் அதிகாரம் கடலூர் வட்டார குழு தோழர் ஜெயக்குமார் நன்றியுரையாற்றினார். அத்துடன் கூட்டம் நிறைவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் – இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள் என சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
கடலூர் மண்டலம்.
தொடர்புக்கு :  81108 15963


இதையும் பாருங்க :

எங்க மண்ணு.. எங்க ஊரு.. மீத்தேன் எடுக்க நீ யாரு ? – பாடல் வீடியோ

ஸீனா உன்னுடைய இதயத்தைப் பதிவு அஞ்சலில் திருப்பி அனுப்புவாள் !

உண்மை மனிதனின் கதை | மூன்றாம் பாகம் | அத்தியாயம் – 02-அ

கட்டான பஸ்களின் ஜன்னல்களிலிருந்து வெளியே பார்த்தன பழுப்பேறிய, கிளர்ச்சி பொங்கும் முகங்கள். உயரமற்ற மேனியும் வழுக்கைத் தலையும் நொண்டும் காலும் கொண்ட ஓர் ஆர்மீனியன் கோடிட்ட பைஜாமா அணிந்து கெந்திக் கெந்தி நடந்தவாறு பஸ்களின் அருகே அலை பாய்ந்தான். இளைப்பாறுவோர் கூட்டம் ஒவ்வொன்றிலும் கட்டாயமாகக் காணப்படும், எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படும் வேடிக்கைப் பேச்சாளர்கள் மற்றும் சுய விருப்ப விகடகவிகளில் இவன் ஒருவன். கைத்தடியை வீசி ஆட்டியவாறு ஒரு பிரயாணிக்கு ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான் அவன்:

“ஏய், வானில் பாசிஸ்டுகளுக்கு என் வணக்கத்தைத் தெரிவியுங்கள்! பேத்யா! உன்னை ‘நிலவு ஸ்நானத்தை’ முடிக்க விடாமல் அடித்தற்காக அவர்களிடம் கணக்குத் தீர்த்துக்கொள். பேத்யா! தலைசிறந்த சோவியத் விமானிகளின் காதல் விவகாரங்களில் அவர்கள் குறுக்கிட்டது பண்பற்ற செய்கை என்று வானத்தில் அவர்களுக்குக் காட்டு. பேத்யா! போர்க்களத் தபால் நிலைய எண்ணை விரைவில் எழுதி அனுப்பு. ஸீனா உன்னுடைய இதயத்தைப் பதிவு அஞ்சலில் திருப்பி அனுப்புவாள்….”

மரச்சாலைத் திருப்பத்தில் பஸ்கள் மறைந்துவிட்டன. மாலை வெயிலில் பொன்மயமாக மின்னிய புழுதி அடங்கி விட்டது. மேலங்கிகளும் கோடிட்ட பைஜாமாக்களும் அணிந்த இளைப்பாறுவோர் மெதுவாகப் பூங்காவில் அவரவர் வழிகளில் நடக்கலானார்கள். நொண்டி ஆர்மீனியன், மெரேஸ்யெவை அலுவலகத்துக்குக் கொண்டுவிட்டுப் போனான். கிட்டத்தில் கூர்ந்து பார்க்கையில், பெரிய அழகிய, சோகம் ததும்பிய விழிகள் கொண்ட அவனது முகம் ஆழ்ந்த, அறிவார்ந்த தோற்றம் உள்ளதாகக் காணப்பட்டது. தான் மருத்துவ நிலாக் கமிட்டித் தலைவன் என்று வழியில் அவன் தன்னை வேடிக்கையாக அறிமுகப்படுத்திக் கொண்டான். நிலா ஸ்நானம் எந்தக் காயத்துக்கும் கைகண்ட மருந்து என்றும் இந்தக் காரியத்தில் தான்தோன்றித் தனத்தையும் ஒழுங்கின்மையையும் தான் அனுமதிப்பதில்லை என்றும் மாலை உலாவலுக்கு ஏற்ற ஆடைகள் பற்றித் தானே குறிப்பு எழுதித் தருவதாகவும் கூறினான். அவன் ஏதோ இயந்திரம் போல வேடிக்கை பேசினான். அப்போது அவனுடைய விழிகள் அதே ஆழ்ந்த தோற்றம் கொண்டிருந்தன, எதிரொளியை ஆவலுடன் கூர்ந்து நோக்கின.

அலுவலகத்தில் வெள்ளை நீளங்கி அணிந்த ஒரு பெண் மெரேஸ்யெவை எதிர்கொண்டாள். அவளுடைய கேசம் ஒரே செம்பழுப்பாக இருந்தமையால் அவளது தலை மூண்டெரியும் தீக்கொழுந்துகளால் சூழப்பட்டது போலத் தோற்றம் அளித்தது.

தான் படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை வைத்து விட்டுக் கண்டிப்பான குரலில் கேட்டாள் அவள்: “மெரேஸ்யெவ்? அலெக்ஸேய் பெத்ரோவிச் மெரேஸ்யெவ்?” விமர்சனக் கண்களுடன் விமானியை ஏற இறங்க நோட்டமிட்டாள். “நீங்கள் என்ன என்னிடம் விளையாடுகிறீர்கள்? அதோ பதிவாகியிருக்கிறது: ‘மெரேஸ்யெவ், சீனியர் லெப்டினன்ட், கால்கள் இல்லாதவர்’ என்று. நீங்களோ….”

“என்ன ஆனாலும் நான்தான் அலெக்ஸேய் மெரேஸ்யெவ். இதோ என் நியமனப்பத்திரம்… நீங்கள் தாம் லோல்யாவா?”

“இல்லை. எங்கிருந்து இந்தப் பெயரைத் தேடிப் பிடித்தீர்கள்? என் என் பெயர் ஸீனா. உங்கள் பொய்க்கால்களா இப்படி இருக்கின்றன?” என்று நம்பிக்கை இன்றி அலெக்ஸேயின் கால்களைப் பார்த்தாள்.

“ஓகோ! அப்படியானால் பேத்யா தன் இதயத்தைப் பறி கொடுத்த அதே ஸீனாவா நீங்கள்?”

“மேஜர் புர்நாஸியான் என்னைப் பற்றி உங்களிடம் இப்படிக் கதை கட்டிவிட்டாரோ? அதற்குள் அவருக்கு வாய்ப்பு கிடைத்துவிட்டதே. ஐயே, இந்த புர்நாஸியானைக் கண்டாலே கரிக்கிறது எனக்கு! எதை எடுத்தாலும் கேலியும் நையாண்டியும், எதை எடுத்தாலும்! பேத்யாவுக்கு நான் நடனமாடக் கற்றுக் கொடுத்தேன் என்றால் இதில் என்ன பிரமாதம் வந்துவிட்டது? நல்ல வம்புதான் போ!”

“இப்போது எனக்குக் கற்றுக் கொடுப்பீர்கள், சம்மதம் தானே? ‘நிலவு ஸ்நானத்துக்கு’ எனக்கு அனுமதிச் சீட்டு தருவதாக புர்நாஸியான் வாக்களித்திருக்கிறார்.”

அந்தப்பெண் முன்னிலும் அதிக வியப்புடன் அலெக்ஸேயை நோக்கினாள்.

“நடனமாடப் போகிறீர்களா? எப்படி? கால்கள் இல்லாமலா? நல்ல வேடிக்கைதான். நீங்களும் எல்லாவற்றையும் பரிகசிக்கிறீர்கள் போலும்” என்றாள்.

இந்தச் சமயத்தில் மேஜர் ஸ்த்ருச்கோவ் அறைக்குள் ஓடிவந்து மெரேஸ்யெவை இறுகத் தழுவிக்கொண்டார்:

“ஸீனா, ஏற்கனவே பேசி வைத்துக்கொண்டோம் அல்லவா, சீனியர் லெப்டினன்ட் என் அறையில் தங்குவார் என்று”

ஒரே மருத்துவமனையில் நீண்ட காலம் தங்கிச் சிகிச்சை பெறுபவர்கள் அப்புறம் சகோதரர்கள் போல ஒருவரையொருவர் சந்தித்தார்கள். மேஜரை அனேக ஆண்டுகள் காணாதவன் போல அலெக்ஸேய் பெருங்களிப்பு அடைந்தான். ஸ்த்ருச்கோவின் சாமான் பை ஆரோக்கிய நிலையத்தில் இருந்தது. அவர் இங்கே சொந்த வீட்டில் போல விட்டாற்றியாக இருந்தார். எல்லாவற்றையும் தெரிந்து கொண்டிருந்தார், எல்லோருக்கும் அவரைத் தெரிந்தது.

இரவுச் சாப்பாட்டுக்குப் பிறகு உடனேயே அலெக்ஸேய் கட்டிலில் ஏறி, மாலை மூடுபனி காரணமாக ஈரப்பதமாயிருந்த, குளிர்ந்த படுக்கை மீது நீட்டிப்படுத்து அக்கணமே உறங்கி விட்டான்.

அந்த இரவில் அவன் விந்தையான, கலவரமூட்டும் கனவுகள் கண்டான். நீலம் பாரித்த வெண்பனி, நிலா. காடு, சடை வலை போல அவனை மூடிப்போர்த்திருந்தது. இந்த வலையை அறுத்துக் கொண்டு அவன் விடுபட வேண்டும், ஆனால் வெண்பனி அவன் கால்களைப் பிணித்தது. இன்னதென்று விளங்காத, ஆனால் பயங்கரமான துன்பம் தனக்கு நேரப் போகிறது என்று உணர்ந்து அலெக்ஸேய் வேதனை அடைந்தான். கால்கள் வெண்பனியில் விரைத்துப் போயின, ஆனால் அவற்றை அங்கிருந்து அகற்ற அவனுக்கு வலுவில்லை. அவன் முனகினான், புரண்டான். அதற்குள் அவன் முன் காடு அல்ல, விமான நிலையம் இருந்தது. நெடுங்காலனான டெக்னீஷியன் யூரா இறக்கையற்ற, விந்தையான மெத்தென்ற விமானத்தின் விமானி அறையில் இருந்தான். அவன் கையை ஆட்டினான், சிரித்தான், பின்பு செங்குத்தாக மேலே கிளம்பி வானில் பறந்தான். மிஹாய்லா தாத்தா அலெக்ஸேயைத் தூக்கிக் கொண்டு குழந்தையிடம் சொல்வது போல, “கிடக்கிறான் அவன். போகட்டும். நீயும் நானும் வெந்நீரில் குளிப்போம், அங்கங்களைச் சூடுபடுத்திக் கொள்வோம், நன்றாக, இதமாக” என்றார். ஆனால் சூடான பலகையில் அல்ல, வெண்பனியில் அவனைக் கிடத்தினார் அவர்.

அலெக்ஸேய் எழுந்திருக்கப் பார்க்கிறான், முடியவில்லை. தரை அவனை வலுவாகத் தன்பக்கம் இழுத்து அழுத்துகிறது. இல்லை, இழுத்து அழுத்துவது தரை அல்ல, கரடி ஒன்று தன் சூடான உடம்போடு அவன் மேல் விழுந்து அவன் மூச்சைப் பிடித்தது, அங்கங்களை முறிக்கப் பார்த்தது, கொர் கொர்ரென்று செருமிற்று. விமானிகளை ஏற்றிக் கொண்டு பஸ்கள் அருகாகச் சென்றன. ஆனால் ஜன்னல்கள் வழியே சந்தோஷமாக வெளியே பார்த்துக் கொண்டிருந்த அந்த ஆட்கள் அவனைக் கவனிக்கவில்லை. அவர்களை உதவிக்கு வரும்படி கத்தி அழைக்க விரும்பினான் அலெக்ஸேய், அவர்களை நோக்கிப் பாய்ந்து ஓட, அல்லது கையால் ஜாடையாவது காட்ட அவன் முயன்றான். ஆனால் முடியவில்லை. வாய் திறந்தது எனினும் கிசுகிசுப்புதான் கேட்டது. அலெக்ஸேய்க்கு மூச்சுத் திணற ஆரம்பித்தது. இருதயத்துடிப்பு நிற்பதை அவன் உணர்ந்தான். கடைசி முயற்சி செய்து பார்த்தான்…..

விளங்காத கலவர உணர்ச்சியுடன் விழித்துக்கொண்டான் அலெக்ஸேய். அறையில் நிசப்தம். லேசான ஒலிப்புடன் மூச்சுவிட்டவாறு உறங்கிக்கொண்டிருந்தார் மேஜர். நிலவொளித் தம்பம், அறையின் குறுக்கே சென்று தரையில் ஊன்றியிருந்தது. அந்தப் பயங்கர நாட்களின் மாதிரி உருவங்கள் ஏன் திடீரென்று திரும்பி வந்துவிட்டன? இந்த நாட்களை அலெக்ஸேய் அனேகமாக நினைவுபடுத்திக் கொள்ளவே இல்லை. எப்போதாவது ஞாபகப்படுத்திக் கொள்ளத் தொடங்கினாலும் அவை அவனுக்கு ஏதோ பிதற்றலான கட்டுக் கதையாகவே தோன்றின. ஒரு சீரான மெல்லொலி, உறக்க முணுமுணுப்பு, இரவுக் காற்றின் நறிய குளுமையுடன் நிலவால் ஒளியுறுத்தப்பட்ட விரியத் திறந்த ஜன்னல் வழியே அறைக்குள் பெருகியது. ஒரு சமயம் அது கிளர்ச்சியுடன் பொங்கி வந்தது, மறுசமயம் தொலைவில் அகன்று அமிழ்ந்தது, வேறு சமயம் கலவரம் நிறைந்த சீறல் ஒலியாக மாறியது. பைன் மரச் சோலையின் சலசலப்பு அது.

படிக்க:
ஸ்டெர்லைட் எதிர்ப்பு வழக்கு விசாரணை ! என்ன நடக்கிறது ?
பெஹ்லு கானை கொன்றவர்களை விடுவித்தது நீதிமன்றம் !

அலெக்ஸேய் கட்டிலில் உட்கார்ந்து பைன் மரங்களின் மர்ம ஒலியை வெகு நேரம் கேட்டுக்கொண்டிருந்தான். பின்பு அந்த மாய மயக்கத்தை விரட்டியவன் போலத் தலையை வெடுக்கென்று அசைத்தான். பிடிவாதம் நிறைந்த மகிழ்பொங்கும் ஆற்றல் அவனுக்குள் மீண்டும் நிறைந்தது. ஆரோக்கிய நிலையத்தில் அவன் இருபத்து எட்டு நாட்கள் தங்கியிருக்க வேண்டும். அவன் போரிடவும் விமானமோட்டவும் வாழவும் போகிறானா அல்லது டிராமில் மற்றவர்கள் எப்போதும் அவனுக்கு உட்கார இடங்கொடுத்து விலகிக் கொள்ளவும் அனுதாபத்துடன் அவனைப் பார்க்கவும் வேண்டியிருக்குமா என்பது அதன் பிறகே தீர்மானிக்கப்படும். எனவே, இருபத்து எட்டு நாட்கள் கொண்ட இந்த நீண்ட அல்லது குறுகிய காலத்தின் ஒவ்வொரு நிமிடமும் உண்மை மனிதன் ஆவதற்குரிய போராட்டமாக விளங்க வேண்டும்.

நிலவு வெளிச்சத்தில் கட்டிலில் உட்கார்ந்துகொண்டு, மேஜரின் குறட்டையைக் கேட்டவாறே பயிற்சித் திட்டம் வகுக்கலானான் அலெக்ஸேய். காலை, மாலை உடற்பயிற்சி, நடை, ஓட்டம், கால்களுக்கு விஷேசப் பயிற்சி ஆகியவற்றை இந்தத் திட்டத்தில் அவன் சேர்த்துக் கொண்டான். அவனுக்குச் சிறப்பாகக் கவர்ச்சி அளித்தது, செயற்கைக் கால்களை எல்லா வகைகளிலும் பழக்கித் தேர்ச்சிபெறச் செய்வதாக நம்பிக்கை ஊட்டியது ஸீனாவுடன் உரையாடுகையில் அவனுக்கு உதித்த கருத்துத்தான்.

நடனமாடக் கற்றுக் கொள்வது என்று அவன் முடிவு செய்தான்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

டியர் மிடில்கிளாஸ், மூழ்கும் கப்பலில் பாதுகாப்பான இடம் எதுவும் கிடையாது !

2
Sinking-Ship-Indian-economy-Slider

வில்லவன்
சூரின் நடுத்தர வர்க்க தெருவொன்றில் 20 ஆண்டுகளாக வசிக்கும் நண்பர் ஒருவரோடு பேசிக்கொண்டிருந்தேன். குடும்பத்தலைவியான அவர் உதவும் மனப்பான்மை கொண்டவர், சுற்றியிருப்போரோடு நல்ல இணக்கமான நட்பை பேணுபவர். சுமார் 20 வீடுகள் கொண்ட அவரது தெருவில் நிகழ்ந்த (அவர் விவரித்த) சில சம்பவங்கள் நாம் எத்தகைய மோசமான எதிர்காலத்தை நோக்கி நகர்கிறோம் என்பதை முன்னறிய உதவும்.

சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்புகூட மிகவும் பரபரப்பாக வேலை நடந்த ஒரு சிறுதொழில் நிறுவன அதிபர் இன்று மொத்த நிறுவனம் மற்றும் இதர சொத்துக்களை விற்றுவிட்டு வேலை தேடிக்கொண்டிருக்கிறார். கனவுகளோடு கட்டிய அவர் வீடு விற்பனைக்கு வரவிருக்கிறது. அடையாள மறைப்புக்காக இன்னும் கசப்பான மேலதிக தகவல்களை தவிர்க்க வேண்டியிருக்கிறது.

Sinking Ship Indian economyஅடுத்தவர் இரண்டு நிறுவனங்களை நடத்தியவர், உயர் மத்தியதர வாழ்க்கை வாழ்ந்தவர். கடந்த ஆறு மாதங்களில் அடுத்தடுத்து இரு நிறுவனங்களையும் மூடிவிட்டார். கம்பெனி விற்பனைக்கு தயாராக இருக்கிறது. வேறெதுவும் விற்பதற்கு பாக்கியில்லை. வீட்டைக் காலி செய்துவிட்டு போயிருக்கிறார்கள். பள்ளிக் கட்டணத்துக்கு வழியில்லாமல் பிள்ளைகள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருப்பதாக தகவல். இங்கேயும் மேலதிக தகவல்கள் நம்மை அச்சுறுத்தவல்லவையே.

அதே தெருவில் வசித்த ஒருவர் இன்னும் சிறிய நிறுவனம் நடத்தியவர், கொஞ்சம் முன்பே நட்டத்தை சந்தித்து நிலைமை கைமீறும் முன்பு எந்திரங்களை விற்றுவிட்டு ஊரை காலி செய்துகொண்டு போயிருக்கிறார்.

அந்த தெருவில் குடியிருந்த சமீபத்தில் மணமான ஒரு இளைஞர் தமது வாடகை வீட்டை காலி செய்துகொண்டு போயிருக்கிறார். மனைவியை சொந்த ஊரில் தங்கவைத்துவிட்டு இவர் நண்பர்களோடு அறையொன்றை பகிர்ந்துகொண்டு வாழ்கிறார். காரணம் மாதத்தில் 15 நாட்கள் மட்டுமே அவர் பணியாற்றும் நிறுவனத்தில் வேலை இருக்கிறது. குடும்பமாக வாழ சம்பளம் போதவில்லை.

படிக்க:
ஓசூர் அசோக் லேலாண்டில் சட்டவிரோத லே – ஆஃப் !
இந்திய நாடு, அடி(மை) மாடு !

வெறுமனே 20-30 குடும்பங்களை உள்ளடக்கிய சிறிய தெருவொன்றின் நிலை இது. ஏனைய இடங்களின் நிலை இப்படியே இருக்கவேண்டும் என அவசியமில்லை. ஆனாலும் இந்த ஒற்றை சிறு பரப்பின் சூழல் ஏனைய பகுதியினருக்கு ஒரு எச்சரிக்கை. மேற்சொன்ன யாரும் ஊதாரிகளோ சூதாடிகளோ அல்ல. அரசு மற்றும் சுயமுன்னேற்ற பிரச்சாரகர்களின் அறிவுரைக்கிணங்க சுய தொழில் செய்தவர்கள். அதில் தேவைக்கு அதிகமாக உழைத்து நடுத்தர வாழ்வை வாழ்ந்தவர்கள். இப்படியான செய்திகள் உங்கள் வசிப்பிடத்திலும் இருக்கக்கூடும். அப்படியில்லை என்றால் இனி வந்தே தீரும்.

காரணம், நாடு முழுக்க நுகர்வு என்பது மந்தமாகியிருக்கிறது. அதனால் உற்பத்தி குறைப்பும், வேலையிழப்பும் முழுவீச்சில் ஆரம்பித்திருக்கின்றன. ஆகவே இதன் தாக்கத்தில் இருந்து நாம் யாருமே தப்ப முடியாது. நம் வேலையோ வருவாயோ ஏதோ ஒன்று பாதிக்கப்படப்போகிறது. இதனை பெருந்தொகையான மத்தியதர வர்க்கம் உணரத் துவங்கிவிட்டதாகவே ஊகிக்கிறேன். சில மாதங்களுக்கு முன்பு இதனை சொன்னபோது எதிர்மறையாக பேசுவதாக சலித்துக்கொண்ட பலரும் இப்போது மெல்ல ஆமோதிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். பெங்களூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் பல மூடப்பட்டிருக்கின்றன. மேலும் சில மூடப்படவிருப்பதாக தொழிலாளர்களிடம் சொல்லப்பட்டிருக்கிறது.

ஆனாலும் ஒரு பிடிவாதமான நம்பிக்கை மத்தியதரவர்க்கத்திடம் இருக்கிறது. அதனை நம்பிக்கை என்றுகூட சொல்ல முடியாது, ‘விஷ்ஃபுல் டெல்யூஷன்’ (Wishful delusion) என்று சொல்லலாம். அதாவது அதீத விரும்பம் மிகைநம்பிக்கையாக மாறியிருக்கும் நிலை. நமக்கு எதுவும் மோசமாக நடந்துவிடக்கூடாது எனும் பெருவிருப்பம் நமக்கு எதுவும் மோசமாக நடந்துவிடாது எனும் மிகை நம்பிக்கையாக உருமாறியிருக்கிறது. நேரிலும் சமூக ஊடகங்களிலும்கூட இவர்களோடு உரையாடுவதில் பெரிய இடையூறாக இருப்பது உண்மையைவிட்டு விலகி ஓடும் இந்த இயல்புதான். இது வெறிபிடித்ததுபோல பக்தியின் பக்கமும் சோதிடத்தின் பக்கமும் மக்களை தள்ளுகிறது. யதார்த்தம் கசப்பானதாக இருப்பதால் அதனை சுட்டிக்காட்டாத கோயில் சிலைகளும், போலி நம்பிக்கையளிக்கிற அல்லது பரிகாரம் போன்ற எளிய மற்றும் தனிப்பட்ட தீர்வுகளை தருகிற சோதிடர்களும் நடுத்தர வர்க்கத்தை வசீகரிக்கிறார்கள்.

ஆனால் தற்காலிக ஆற்றுப்படுத்துதல்களுக்கு இனி பலன் ஏதும் இருக்கப்போவதில்லை. நாம் ஒரு வதைமுகாமின் வாயிலில் நிற்கிறோம். ஒரு வதைமுகாமின் அதிகபட்ச சவுகர்யம் என்பது உங்கள் பழைய நினைவுகளும் சக மனிதர்களின் அன்பும் அரவணைப்பும்தான். அதுதான் இனி பெரும்பான்மை இந்தியர்களின் தலைவிதி.

உங்கள் வருமானத்துக்கான கதவுகள் மூடப்படுகின்றன. பொருளாதாரத்தேக்கம் எல்லா தரப்பு மக்களின் வருமானத்தையும் பறிக்கும் அல்லது குறைக்கும். அது இன்னும் மோசமான தேக்கத்தை நோக்கி இட்டுச்செல்லும். அது வாங்கும் திறனை சிதைத்து இன்னும் அதிகமாக பொருளாதார தேக்கத்தை ஏற்படுத்தும். 2009 அமெரிக்க பொருளாதார பெருமந்தத்தின்போது பெங்களூரில் இருக்கும் ஒரு பெரிய மருத்துவமனை 15% சம்பள வெட்டை கொண்டுவந்தது. சீக்குகளுக்கு பஞ்சமில்லாத ஊரின் ஆஸ்பத்திரியே சம்பளத்தில் கைவைக்கும் எனில் ஏனைய துறைகள் பற்றி கேட்கவே வேண்டாம்.

மிடில் கிளாசின் இன்னொரு பெரிய நம்பிக்கை அவர்களது சேமிப்பு அல்லது சொத்துக்கள். அவையும் இனி கைகொடுக்கப் போவதில்லை. நிலமதிப்பு அப்படியேதான் இருக்கிறது. ஆனால் வாங்க ஆளில்லை. நிலமும் வீடும் இன்று ஒரு செத்த முதலீடு. அவை கூடுதலாக செலவு வைக்குமேயன்றி இனி லாபம் தரப்போவதில்லை. வங்கி சேமிப்புக்கள் மீதான வட்டி 15 ஆண்டுகளில் பாதியாக குறைந்திருக்கிறது. இன்று அது உண்மையான பணவீக்க விகிதத்தைவிட குறைவு. ஆக உங்கள் வங்கி சேமிப்பின் மதிப்பு ஆண்டுதோறும் குறைகிறது, வட்டியோடு சேர்த்து கணக்கிட்டாலும்கூட.

படிக்க:
தீபாவளி இனிக்காது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள் !
♦ காஷ்மீர் : மோடிக்கு சொம்படிக்கும் இந்திய பிரஸ் கவுன்சில் !

பென்ஷன் திட்டங்கள், எல்.ஐ.சி மற்றும் பி.எஃப் ஆகியவையும் பங்கு சந்தையில் பணத்தை கொட்டுகின்றன. அதன் பணத்தை விழுங்கிய ஐ.எல்.எஃப்.எஸ் நிறுவனம் இனி பிழைக்க வழியில்லை எனும் நிலையில் இருக்கிறது. பணம் போட்ட பாவத்துக்காக ஐ.டி.பி.ஐ வங்கியை அதன் முரட்டு நட்டத்தோடு கைப்பற்றி கட்டிக்கொண்டு அழுகிறது எல்.ஐ.சி. புதிய பென்சன் திட்டத்தின் வட்டியும் சமீபத்தில் 8% இல் இருந்து 7.9% ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. ரிசர்வ் வங்கியின் கடைசி கையிருப்பு 1.76 லட்சம் கோடி அரசால் எடுத்துக்கொள்ளப்பட்டிருகிறது. அடுத்து மிச்சம் இருப்பது பி.எஃப் பணம் மட்டும்தான். அதுவும் தேசபக்தி கணக்கில் வரவு வைக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.

இதன் சமூக தாக்கங்களை நாம் இன்னமும் யோசிக்கக்கூட இல்லை. பொருளாதாரத்துக்கும் சமூக குற்றங்களுக்கும் (மனநலத்துக்கும் கூட) நேர்மறையான தொடர்புண்டு. தஞ்சையில் 2 வருடங்கள் மழை இல்லாவிட்டால் வழிப்பறியும் திருட்டும் அதிகம் நடக்கும். ஆதரவற்ற பிள்ளைகளும் கல்வி மறுக்கப்படும் பிள்ளைகளும்தான் சமூக விரோதிகளின் இலக்கு. கல்வி, மருத்துவம் மற்றும் ஓய்வுகால பராமரிப்பு ஆகியவற்றுக்கு அரசு பொறுப்பெடுத்துக்கொள்ளும் நாடுகளில் தற்கொலை விகிதம் மிகக்குறைவு. இந்த கோணத்தில் பார்க்கையில் நாம் இன்னும் மோசமான சமூகக்குற்றங்களை எதிர்கொள்ள தயராக இருக்க வேண்டும். கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ளும் செய்திகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்திருப்பது தெரியும். பொருளாதாரம் மோசமடைவதால் உருவாகும் எல்லா குற்றங்களாலும் அதிகம் பாதிக்கப்படப் போவது மிடில்கிளாஸ்தான். காரணம் அதுதான் சுலபமான இலக்கு.

Middle-classஇன்னொரு முக்கியமான பிரச்சினை, தாராளமயம் உருவாக்கியிருக்கும் பொருள்சார் மதிப்பீடுகள். சற்றேறக்குறைய ஒரு தலைமுறை மனிதர்கள் எல்லாவற்றையும் பொருள் சார்ந்து மதிப்பிடக் கற்றுகொண்டிருக்கிறார்கள். வெற்றி, தோல்வி, மகிழ்ச்சி, கவலை, அந்தஸ்து, லட்சியம், வாழ்வின் அர்த்தம் என எல்லாமே பொருள் சார்ந்ததாகவே அவர்களுக்கு இருக்கிறது. மனநல ஆற்றுப்படுத்துனர்கள் எதிர்கொள்ளும் குடும்ப பிரச்சினை சம்பவங்கள் எல்லாமே பெருமளவு இந்த மதிப்பீட்டின் விளைவாக உருவானவையாகவே இருக்கின்றன. மனிதர்களின் வருவாய் ஆதாரங்கள் நாசமாகி சேமிப்புக்கள் பாதுகாப்பற்றதாகும்போது இந்த மதிப்பீட்டின் வழியே உலகைக் காண பயிற்றுவிக்கப்பட்டவர்கள் தம் வாழ்வே அர்த்தம்ற்றுப்போனதாக உணரக்கூடும். மனரீதியான பிரச்சினைகளையும் உறவுச் சிக்கல்களையும் இழுத்துவர அது ஒன்றே போதுமானது. இது மிகையான கற்பனை எனில் நாம் இழக்க ஏதுமில்லை, ஒருவேளை இது பகுதியளவு உண்மை என்றாலும் அதன் விளைவுகளை சமாளிக்கும் வழிகள் நம்மிடையே இல்லை.

நீங்கள் ஆசைப்படுவதற்கும் அடைய முடிவதற்கும் இடையேயான இடைவெளிதான் உங்கள் ஸ்ட்ரெஸ்ஸின் (Stress) வீரியத்தை தீர்மானிக்கிறது. ஆகவே இந்த பொருளாதார முடக்கம் பொருள்சார் மதிப்பீடுகளை மட்டும் கொண்டிருக்கும் பெரும்பான்மை நடுத்தர வர்க்கத்திடையே பரவலாக மன அழுத்த மற்றும் மனப்பதட்ட நோயாளிகளை உருவாக்கப்போகிறது. மேலும் அரசு ஜீவித்திருக்க மக்களின் ஒரு தரப்பை சுரண்டியாக வேண்டும். செருப்பால் அடித்தாலும் செக்கு மாடுமாதிரி வாழும் நடுத்தர வர்க்கமே அதன் பாதுகாப்பான ஒரே இலக்கு. எல்லாவற்றுக்கும் தனிமனித தீர்வுகளை தேடுகிற அனாதை இல்லங்களுக்கு ஒருவேளை சோறு போடுவதைவிட வேறு சமூகப் பணியையே அறிந்திராத இவர்களை சுரண்ட பெரிய துணிச்சல் அவசியம் இல்லை.

இதுவரை உழைத்த உழைப்பு வீண், சம்பாதித்தவை யாவும் அர்த்தமற்றவையாகப் போகின்றன. நிச்சயமற்ற நிகழ்காலம் கொஞ்சமும் பாதுகாப்பற்ற எதிர்காலத்தை முன்னறிவிக்கின்றது. இதுதான் நீங்கள் 2014-ல் ஆவலோடு எதிர்பார்த்த இந்தியா.

சூழல் சீர்கேடு, சிதைந்துபோன பொருளாதாரம் மற்றும் மதவெறி என ஒரு நாட்டை பாதுகாப்பற்றதாக்கும் எல்லாமே உச்சத்தில் இருக்கும் இந்தியாவைத்தான் நாம் நம் பிள்ளைகளுக்கு பரிசளித்திருக்கிறோம். அதாவது அமெரிக்காவுக்கு இணையான வளர்ச்சியடைந்த நாட்டை உருவாக்குவதாக சொன்ன பொய்களை நம்பி கனவு கண்டுகொண்டிருந்தோரிடம் ஆப்கானிஸ்தானைவிட மோசமான ஒரு நாட்டை டெலிவரி செய்திருக்கிறது ஆர்.எஸ்.எஸ்.

பிரார்த்தனைகள், படிப்பு, உழைப்பு என மகிமைப்படுத்தப்பட்ட எந்த மீட்பர்களும் இந்த சாபத்தில் இருந்து நம்மை காக்கப்போவதில்லை. வீதிக்கு வருவதுதான் நமக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. அங்கே போராட்டக்காரனாக வருவதா அல்லது பிச்சைக்காரனாக வருவதா என தேர்வு செய்யும் வாய்ப்பு மட்டுமே நமக்கு மிச்சமிருக்கிறது.

வில்லவன்

அரசியல் விமர்சகர். வினவு தளத்தில் “வில்லவன் சொல்” எனும் தலைப்பில் பத்தி எழுதுகிறார்.

கேள்வி பதில் : மூடநம்பிக்கைகளை விமர்சித்து இன்றைய தலைவர்கள் பேசுவதில்லையே ஏன் ?

கேள்வி : //மூடநம்பிக்கை, கடவுள் மற்றும் அதன் வழிபாட்டு முறைகளை பெரியார் கடுமையாக விமர்சித்தது மற்றும் கேள்வி கேட்டதை போல தற்கால தலைவர்கள் யாரும் விமர்சிப்பது இல்லையே? ஏன்? எதனால்?//

– அறிவரசு

ன்புள்ள அறிவரசு,

“ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்று அண்ணாதுரை காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் நாத்திகப் பிரச்சாரத்தைக் கைவிட்டது. கருணாநிதி உயிருடன் இருந்தபோது சில தருணங்களில் அவர் லேசாக நாத்திகப் பார்வையை வெளிப்படுத்தியிருக்கிறார். ராமன் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தான் என்று சேது சமுத்திரத் திட்டப் பிரச்சினையின் போது அவர் எழுப்பியது ஒரு சான்று. அதனால்தான் விசுவ இந்து பரிஷத்தின் சாமியார்கள் அவரது தலையை வெட்ட வேண்டும் என்று அப்போது பேசினார்கள். மேலும் இறக்கும் வரையிலும் அவர் பார்ப்பனப் பண்டிகைகளுக்கு (தீபாவளி போன்ற) வாழ்த்துச் சொல்வதில்லை. அவரது மறைவுக்கு பின்னர் திமுக-வில் அப்படி கொஞ்சமாக பேசக்கூட ஆள் இல்லை.

ADMK Mansoruஅதிமுக-வை ஒரு திராவிட இயக்கம் என்றே எடுத்துக் கொள்ள முடியாது. அம்மா காலத்தில் மண் சோறு சாப்பிட்டு அலகு குத்தி காவடியாட்டம் எடுத்தம் கட்சி அது. அம்மா காலத்திலும் சரி அடிமைகள் எடப்பாடி, ஓபிஎஸ் காலத்திலும் சரி அவர்கள் இந்துத்துவ பாஜக-வின் இயல்பான இளைய பங்காளியாக இருக்கின்றனர்.

தேர்தல் அரசியலில் பங்கேற்கும் இரண்டு கம்யூனிஸ்டுக் கட்சிகளும் நாத்திகப் பிரச்சாரத்தை கையில் எடுப்பதில்லை. மட்டுமல்ல அப்படி பேசினால் இந்துக்களிடமிருந்து தாம் தனிமைப்படுவோம் என்று அவர்கள் கருதுகிறார்கள். திருவண்ணாமலை தீபத்திற்கும், தீபாவளிக்கும் தீக்கதிர் சிறப்பு மலரே வெளியிடுகிறது. இவர்களே இப்படி என்றால் மற்ற ஓட்டுக் கட்சிகளைப் பற்றி சொல்லத் தேவையில்லை.

கட்சி பெயரில் திராவிடம், முற்போக்கு என்றெல்லாம் வார்த்தைகளை வைத்திருக்கும் விஜயகாந்த் நல்ல நேரம் பார்த்துத்தான் தனது கட்சியின் பெயரை அறிவித்தார். அதுவும் சாமி முன் துண்டுச் சீட்டுகளை போட்டு பயபக்தியுடன் எடுக்கப்பட்ட பெயர்தான் தே.மு.தி.க. அத்திவரதருக்கு அதிக நேர தரிசனம் கேட்டதுதான் அவரது இப்போதைய அரசியல் கோரிக்கை. ரஜினியோ தனது அரசியலையே ஆன்மீக அரசியல் என்று அறிவித்து விட்டார். அதன் படி இவர் ஆர்.எஸ்.எஸ்., பாஜக வழி அப்பட்டமான இந்துத்துவ அரசியல் பேசக்கூடியவர். சீமானைப் பொறுத்த வரை நிறையவே தமிழ் ஆர்.எஸ்.எஸ்-ஆக பேசுகிறார். ஆகவே நாம் தமிழர் கட்சியும் ஆத்திகத்திற்கு ஆதரவான கட்சிதான்.

படிக்க:
கேள்வி பதில் : உணர்ச்சி வசப்படுவது நல்லதா ? சுபாஷ் சந்திரபோஸ் வலதா இடதா ?
♦ வேதங்களிலேயே சொல்லப்பட்ட புவியீர்ப்பு விசை ! நியூட்டனெல்லாம் லேட்டு !

திராவிடர் கழகம் பெரியார் கொள்கைகளை வெளியீடுகளாக கொண்டு வருகிறது, அவர்கள் பத்திரிகைகளில் எழுதுகிறது என்பதைத் தாண்டி மக்களிடையே ஊக்கமாக நாத்திகப் பிரச்சாரம் செய்வதில்லை. ஒரு வர்த்தக நிறுவனம் போல நிலைபெற்று விட்ட பின்னர் அவர்கள் அரசியல் அரங்கில் பேசுவதும் செய்வதும் குறைந்து விட்டது. இவர்களிடமிருந்து பிரிந்த பெரியார் திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் அவ்வப்போது நாத்திகப் பிரச்சாரத்தை அரசியல் ரீதியாக செய்கிறார்கள். விநாயகர் ஊர்வலத்தை எதிர்த்து பெரியார் ஊர்வலத்தை நடத்துவது போன்று சில போராட்டங்களை செய்கிறார்கள்.

ம.க.இ.க போன்ற அமைப்புகளும் அரசியல் ரீதியாக இந்துத்துவத்தை எதிர்த்து இயக்கம் நடத்தும் போது இந்துமத மூடநம்பிக்கைகளை எதிர்த்து போராட்டம் நடத்துகிறார்கள். ராமன் பட எரிப்பு, திருவரங்கம் கருவறை நுழைவுப் போராட்டம், தஞ்சை தமிழ் மக்கள் இசை விழா, அசுரகானம் போன்ற பாடல் ஒலிப்பேழைகள், தில்லையில் தமிழில் பாடும் போராட்டம் ஆகியவை சில சான்றுகள். எனினும் இவையெல்லாம் அத்திவரதருக்கும், குடந்தை மாகமகத்திற்கும் திரளும் பக்தர் வெள்ளத்திற்கு போதுமானவை அல்ல.

பெரியார் பார்ப்பனிய ஆதிக்கத்தை வீழ்த்த புராண, இதிகாச புரட்டுக்களை அம்பலப்படுத்துவது அவசியம் என்பதில் உறுதியாக இருந்தார். இன்று பாஜக – ஆர்.எஸ்.எஸ் அணி தமிழகத்தில் வளர்ந்திருக்கிறது. அவர்கள் தாம்தான் இந்துக்களின் ஏகபோக பிரதிநிதியாக மக்களிடையே பேசுகிறார்கள். உண்மையில் அவர்கள் பார்ப்பன மற்றும் சில ஆதிக்க சாதிகளின் பிரதிநிதிகள் மட்டுமே பெரும்பான்மையான ‘இந்துக்களுக்கு’ அவர்கள் பிரதிநிதி இல்லை என்பதை சமூகநீதி பேசும் கட்சிகள் உரத்துப் பேசுவதில்லை. அவ்வகையில் அவர்கள் இந்து மதத்தை விமர்சித்தால் இந்துக்களிடமிருந்து தனிமைப்படுவோம் என்று அஞ்சுகிறார்கள்.

உண்மையில் இந்து மதம், இந்துக்கள் என்ற அடையாளம் இங்கே யதார்த்தத்தில் நிலவவில்லை. சாதிதான் இந்துமதத்தின் ஆன்மா. அவ்வகையில் ஆதிக்க சாதி சங்கங்களை ஆர்.எஸ்.எஸ் வளைத்துப் போட்டிருப்பதால் இங்கே ஆதிக்க சாதி வெறியர்களும் நாத்திகப்  பிரச்சாரத்திற்கு எதிராக இந்துத்துவத்தின் குரலை பேசுகிறார்கள். சென்னையில் ஆர்.எஸ்.எஸ் நடத்தும் ஆன்மீகக் கண்காட்சியில் பல்வேறு ஆதிக்க சாதி சங்கங்கள் கலந்து கொள்வது ஒரு சான்று. இப்படி சாதிவெறியும், மதவெறியும் சேர்ந்து இங்கே வளர்கிறது.

மொழி, பண்பாடு, பக்தி அனைத்திலும் பார்ப்பனியம் ஆதிக்கம் செய்கிறது என்ற உண்மையை பிரச்சாரம் செய்யும் போது அது இந்துக்களிடமிருந்து நம்மை தனிமைப்படுத்துவதில்லை, மாறாக இந்துமதவெறி அமைப்புக்களைத்தான் இந்துக்களிடமிருந்து தனிமைப்படுத்துகிறது. இந்த உண்மையை முற்போக்கு இயக்கங்கள் உணர்ந்து கொண்டு பிரச்சாரம் செய்யும் போது பெரியார் கொள்கைகளுக்கு இங்கே ஒரு தொடர்ச்சி இருக்கும்.

நன்றி!

(கேள்வி பதில் பகுதிக்கு நிறைய கேள்விகளை நண்பர்கள் கேட்கிறார்கள். மகிழ்ச்சி. கூடுமானவரை உடனுக்குடன் பதிலளிக்க முயல்கிறோம். சில கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு கூடுதலான நேரம் தேவைப்படுகிறது. கொஞ்சம் காத்திருங்கள்.)

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

திருக்குறள் – புகழ்பெற்ற பழைய உரையாசிரியர்களின் உரைகள் PDF வடிவில் !

1

திருக்குறள் – புகழ்பெற்ற பழைய உரையாசிரியர்கள் அனைவருடைய உரைகளும் ( பரிமேலழகர் உரைக்கு விளக்கமும்) PDF வடிவில் 3400 பக்கங்கள் உங்கள் கைகளில்…

நண்பர்களே…

பொ.வேல்சாமி

திருக்குறளுக்கு பழங்காலத்திலேயே பல வேறுபட்ட கருத்துக்களைக் கொண்ட ஆசிரியர்கள் உரை எழுதி இருந்தனர். அவர்களுள் 1917-ம் ஆண்டு வரை பரிமேலழகர் உரையைத் தான் அச்சிட்டார்கள், படித்தார்கள். 1917-ல் மணக்குடவர் உரையை வ.உ.சிதம்பரம் பிள்ளை வெளியிட்டார். பரிமேலழகருக்கு அடுத்தப்படியாக அச்சில் வந்த உரை இதுதான்.

1925-ல் பொன்னுசாமி நாட்டார் என்பவரால் மணக்குடவர் உரை குறிப்பிடத்தக்க சில விளக்கங்களுடன் வெளியிடப்பட்டது. 1945, 1948-ல் திருப்பதியிலிருந்து காளிங்கர் மணக்குடவர் உரை வெளியிடப்பட்டது. திருப்பதியிலிருந்து வெளியிடப்பட்ட இந்தப் பதிப்பில் அறத்துபால் முழுமையாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இந்நிலையில் சிறப்புமிக்க எல்லா பழைய உரைகளையும் முழுமையாக மகாவித்துவான் தண்டபாணி தேசிகர் தன்னுடைய குறிப்புகளுடன் 1950, 1951, 1952-ல் எழுதியதை தருமபுர ஆதினம் 3 தொகுதிகளாக வெளியிட்டது. இத்தொகுதிகளின் திருக்குறள் பரிமேலழகர் உரையில் வந்துள்ள நுட்பமான இலக்கண குறிப்புகளுக்கு சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பே காரிரத்தின கவிராயரால் தெளிவான விளக்கம் எழுதப்பட்ட “திருக்குறள் நுண்பொருள்மாலை” நூலும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பரிமேலழகர் உரைக்கு நுட்பமாகவும் தெளிவாகவும் ( தங்களுடைய சனாதனத்தையும் விடாமல் ) எழுதப்பட்டு மாணவர்களுக்கு பல ஆண்டுகள் பாடமாக வைக்கப்பட்டிருந்த வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியார் பதிப்பான முழு நூலின் PDF யையும் இத்துடன் இணைத்துள்ளேன். திருக்குறள் முழுமைக்கும் வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியார் விளக்கம் எழுதவில்லை. வை.மு.சடகோப இராமானுாச்சாரியார் 108 அதிகாரங்களுக்கும் மீதியுள்ள பகுதிகளுக்கு வை.மு.கோ எழுதியது காலபோக்கில் நூல் முழுமைக்கும் வை.மு.கோ தான் எழுதியதாக தமிழ் உலகம் ஏற்றுக்கொண்டது.

திருக்குறள் – உரைவளம் : அறத்துப்பால் (பக்.575)

திருக்குறள் – உரைவளம் : பொருட்பால் (பக்.1130)

திருக்குறள் – உரைவளம் : காமத்துப்பால் பக்.539

திருக்குறள் : அறத்துப்பால் மூலமும் பரிமேலழகருரையும் (பக்.316)

திருக்குறள் : பொருட்பால் காமத்துப்பால்களின் மூலமும் பரிமேலழகருரையும் (பக்.840)

பொ.வேல்சாமி : தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.
எழுதிய நூல்கள்:

  • பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
  • கோவில் நிலம் சாதி
  • பொய்யும் வழுவும்

தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 3 நாள் தொடர் போராட்டம் !

மிழ்நாடு மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களின் மாநிலம் தழுவிய தொடர் போராட்டம் சென்னை, அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தின் பின்புறம், கடந்த 24.08.2019 முதல் 27.08.2019 வரையிலான மூன்று நாட்கள் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான தொழிலாளிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.

  1. நாளொன்றுக்கு ரூபாய் 380 தினக் கூலியாக வழங்கு.
  2. வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாடு மின்வாரிய பணிகளில் ஈடுபடுத்தப்படும் ஒப்பந்த பணியாளர்களை உடனடியாக தடுத்து நிறுத்து!
  3. பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்!

    – ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து போராடினர்.

தொழிலாளர்களின் இப்போராட்டத்தை ஆதரித்து பு.ஜ.தொ.மு-வின் காண்டிராக்ட் தொழிலாளர் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் சிவா 24.08.2019 அன்று நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

TNEB Workersஅவர் பேசுகையில் மின்வாரியத்தில் காலிப் பணியிடங்கள் இருந்தும் பல ஆண்டுகளாக பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களை அந்த இடங்களில் நிரப்பாமல் இருக்கக் காரணம் தனியார்மய தாராளமயக் கொள்கைகள்தான் என தனது பேச்சில் அம்பலப்படுத்தினார். அத்துடன் தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களின் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒரு தொழிலாளி பேசுகையில் “கடந்த 1996-ம் ஆண்டுமுதல் தமிழக மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிகிறேன். என்னைப் போலவே ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தமிழகம் முழுவதும் உள்ளார்கள். இவர்கள் அனைவரும் கடும் உழைப்பில் ஈடுபடக்கூடியவர்கள்.

உங்களுக்கு சந்தேகமாக இருந்தால் உங்கள் வீட்டருகில் உள்ள மின்வாரிய அலுவலகம் அல்லது பணிமனைக்கு சென்று கேளுங்கள். அங்கு நிரந்தர தொழிலாளர்களைவிட ஒப்பந்த தொழிலாளர்கள்தான் அதிகமாக இருப்பார்கள்.

படிக்க:
♦ காஷ்மீர் : மோடிக்கு சொம்படிக்கும் இந்திய பிரஸ் கவுன்சில் !
♦ கார்ப்பரேட் கம்பெனி இலாபமே மின்வாரியத்தின் நட்டம்!

இவ்வாறு மின்வாரியத்தில் காலிப்பணியிடங்கள் இருந்தாலும் அதில் பல ஆண்டுகளாக வாரியத்துக்காக உழைத்த எங்களை பணியமர்த்துவதில்லை. அது மட்டுமில்லை எங்களுக்கான கூலியைக் கூட முறையாக கொடுப்பது இல்லை. தமிழகத்தில் கடந்த காலங்களில் ஏற்பட்ட இயற்கை பேரிடர் சமயத்தில் முழுவதுமாக பணியாற்றியது நாங்கள்தான்.

கடந்த ஆண்டு கஜா புயலின் போதும் சரி அதற்கு முன்பான வர்தா புயல் சமயங்களில், அப்பகுதியின் நிலைமைகளை சீராக்கியது எங்கள் உழைப்புதான். அதுபோன்ற நேரங்களில் எங்களுக்கான அடிப்படை வசதிகள் கூட முழுமையாகக் கிடைக்காது. ஏதாவது பள்ளிக்கூடம் அல்லது திருமண மண்டபத்தில் தங்க வைப்பார்கள். ஆனால் அவற்றை அந்த நேரத்தில் நாங்கள் ஒரு பொருட்டாகக் கூட கருதியதில்லை. ஆனால் தற்போது போலீசார் எங்கள் போராட்ட இடத்தை சுற்றியுள்ள தெருவிளக்குகளை மாலையில் அணைத்து விடுகின்றனர்.” என்றார்.

தொடர்ந்து மூன்றுநாட்களாக போராட்டம் நடந்துவந்த நிலையில் 27.08.2019 அன்று மாலை மின்சாரத்துறை அமைச்சர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசியுள்ளார். அதில் அவர்களது கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதால் போராட்டம் தற்காலிகமாக முடித்துக் கொள்ளப்பட்டது.

வாக்குறுதி கொடுத்ததைப் போல, நடவடிக்கைகள் ஏதும் இல்லையென்றால், மீண்டும் போராட்டம் தொடரும் என்று தொழிலாளர்கள் தெரிவித்தனர். இறுதி வரையில் போராட்டங்கள் மட்டுமே தீர்வைத் தரும் என்பதுதான் வரலாறு !

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தமிழ்நாடு.