Saturday, August 2, 2025
முகப்பு பதிவு பக்கம் 327

திருச்சி : கஞ்சா வியாபாரிகளுடன் கை கோர்த்த காஜா பேட்டை போலீசு !

லக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ஆளும் எடப்பாடி அரசு, அமைச்சர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை 26.06.2019 அன்று நடத்தினர்.

தமிழகத்தில் டாஸ்மாக் பார் நடத்தி இளைஞர்களை சீரழித்து, பெண்களின் வாழ்க்கை நிர்மூலமாக்கி  சமூகத்தையும், பண்பாட்டையும் சிதைத்து “சாராயம் வித்த காசில் சர்கார் நடத்தும் ”  இந்த எடப்பாடி அரசுக்கு போதை ஒழிப்பு பற்றி பேச எந்த தகுதியும் கிடையாது. சந்துக்கு சந்து டாஸ்மாக்கும், குட்கா, கஞ்சா போதை பொருட்கள் விற்பனை போலீசு கூட்டுடன் அமோகமாக நடக்கிற சமூக விரோத கும்பலின் குற்றம் பெருகி மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர்.

அழுகி நாறும் அரசு கட்டமைப்பு ! மக்களை ஆளும் தகுதியைஇழந்து விட்டதை மீண்டும் நிரூபிக்கிறது திருச்சி  சம்பவம்.

கஞ்சா பார்ட்டியுடன் பாலக்கரை போலீசு !

திருச்சி காஜாபேட்டையில் கஞ்சா விற்பனையை தட்டி கேட்ட இளைஞர்கள், மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு மைய மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் முருகானந்தம் மீதும் பொய் வழக்கை பொய் வழக்கு பதிந்துள்ளது பாலக்கரை போலீசு!

கஞ்சா விற்பனை கும்பலுக்கு ஆதரவாக செயல்படும் பாலக்கரை போலீசார் மற்றும் ஆய்வாளரை கண்டித்து 26.06.2019 காலை 11 மணியளவில் மாநகர காவல் ஆணையர் அவர்களை காஜாபேட்டை இளைஞர்கள் – பெண்களுடன் இணைந்து மாநகர ஆணையாளர் திரு. அமல்ராஜ் அவர்களை சந்தித்து நுற்றுக்கணக்கான மக்களின் கையொப்பங்களுடன் மனு அளிக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம் காஜாபேட்டையில் கஞ்சா விற்பனை செய்யும் கும்பலை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும், கஞ்சா விற்பனையை தடுக்க கோரியும் எமது மக்கள் அதிகாரம் அமைப்பு அண்மையில் பகுதி  மக்களுடன் இணைந்து கஞ்சா போதை  எதிர்ப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டது.

இந்நிலையில் கஞ்சா விற்ற குற்றச்சாட்டில் ஏற்கனவே கைதாகி சிறையில் இருக்கும் கொளஞ்சி என்ற பெண்ணின் மகள் மலர் கொடி உள்ளிட்ட குடும்பத்தினர் கஞ்சா போதைக்கு எதிராக போராடிய இளைஞர்கள் மீது கோபமுற்றனர். மேலும் அதே பகுதியில் வசிக்கும் மக்கள் உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர் முருகானந்தம் குடும்பத்தினரை அவதூறு செய்ததுடன் “நாங்க காலம் காலமாக கஞ்சா விற்கிறோம் – இனியும் விற்போம்… எவன்டா புகார் கொடுத்தது, போலீசே எங்களுக்கு பக்கபலமா தான் உள்ளது… ” என மிரட்டியுள்ளனர்.

அத்துடன் அப்பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞரை கட்டையால் தாக்கி மண்டையை உடைத்துள்ளனர். இப்படி ஒரு அட்டூழியத்தை செய்து விட்டு, தங்களை அடித்து விட்டதாக மருத்துவமனையில் படுத்து கொண்டு; தன்னை இளைஞர்கள் தாக்கியதாகவும்; (மலர் கொடியை) மானபங்கம் செய்ததாக பொய் புகாரும் தந்துள்ளனர். ‘மாதாந்திர மாமூல்’ மூலம் போலீசுடன் உள்ள நெருக்கத்தை பயன்படுத்தி, தட்டி கேட்ட வழக்கறிஞர் முருகானந்தம் மற்றும் இளைஞர்கள் மீதே பொய் வழக்கும் பதிவு செய்துள்ளது கஞ்சா கும்பல்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

கஞ்சா வியாபாரி குடும்பம் இப்படி பயன்படுத்திக் கொண்டது என்பதை விட, இப்பகுதியில் கடந்த காலத்தில் காவல்துறை நடத்திய கட்டுப்பாடற்ற காட்டு தர்பாருக்கு தடையாக செயல்பட்ட வழக்கறிஞர் முருகானந்தத்தை பழி தீர்க்க இந்த சம்பவத்தை பாலக்கரை ஆய்வாளர் ஆரோக்கியதாஸ் பயன்படுத்திக் கொண்டார்.

கடந்த 2018 -ல் மனித உரிமை மீறல், சட்ட விரோத கைது நடவடிக்கையை கண்டித்தும் இதே ஆய்வாளர், அடாவடியாக நடந்து கொண்டதை கண்டித்தும் தோழர் முருகானந்தம் அளித்த தனிப்புகார் வழக்கு திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் (CC-441/2018)  நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் பெண் கஞ்சா வியாபாரியிடம்; “மக்கள் அதிகாரம் அமைப்பிற்காக அவ்வப்போது தோழர் முருகானந்தம் மிரட்டி பணம் வசூலிப் பார் என்றும், இரண்டு நாட்களுக்கு முன் அவ்வாறு பணம் கேட்டபோது தராததால், தண்ணியடித்து விட்டு இளைஞர்களை சேர்த்து கொண்டு தன்னை வம்பிழுத்து தாக்கியதாகவும், ‘பெண்னை இழிவு செய்து துன்புறுத்தும்’ வகையில் நடந்து கொண்டதாகவும், கீழ்த்தரமாக புகார் தரச் செய்து எந்த விசாரணையும் செய்யாமல் வழக்கு பதிவு செய்தார் பாலக்கரை ஆய்வாளர் ஆரோக்கியதாஸ்.

எமது அமைப்பு குறித்து இதுவரை எந்த எதிரியும் சொல்ல முன்வராத கேவலமான அவதூறை எழுதி அதை செய்தித்தாள் மூலம் பரப்பவும் செய்தார். முருகானந்தத்தை கைது செய்யும் நோக்கில் இரவில் வீட்டிற்கு தேடிச் சென்றதுடன் அவர் இல்லாததால் வேறு இரு இளைஞர்களை வீடு புகுந்து கொலைவெறித் தாக்குதல் நடத்தி கைது செய்து சிறையிலடைத்துள்ளார் ஆரோக்கியதாஸ்.

படிக்க:
இந்தியா : போதை உலகின் வளரும் சந்தை !
♦ ஹைட்ரோகார்பனுக்கு எதிராக பேசினாலே சிறை ! குட்கா புகழ் எஸ்.பி ஜெயக்குமாரின் அடாவடி !

உண்மையில், கஞ்சாவை எதிர்த்ததால் தாக்குதலுக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கார்த்திக்கிடம் வாக்குமூலம் பெற்ற உதவி ஆய்வாளர் சட்டநாதன், அவர் கூறியதையெல்லாம் எழுதியதாக படித்துக்காட்டி விட்டு, “ஸ்டேசனில் சென்று தெளிவாக எழுதிக் கொள்வதாக”க்கூறி யோக்கியரைப் போல பேசி, வெற்றுத்தாளில் கையொப்பம் வாங்கியுள்ளார். ஆனால், ஆய்வாளர் ஆரோக்கியதாசின் அறிவுரைப்படி “தான் தண்ணியடித்துவிட்டு வந்து வம்பிழுத்து தாக்கியதாகவும் மானபங்கம் செய்ததாகவும்” கார்த்திக் தானே ஒப்புதல்வாக்கு மூலம் தந்ததாக எழுதி வழக்குப் பதிந்துள்ளார். கஞ்சா கும்பலிடம் வாங்கிய காசுக்கு மேலேயே வாலைக் குழைத்துள்ளது போலிசு. சட்டத்துக்குப்புறம்பாக செயல்படும் இவருக்கு ‘சட்டநாதன்’ என்று பெயர் வேறு!

சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தை இப்படிகேடான முறையில் பயன்படுத்தி கற்றறிந்த வழக்கறிஞரையே பாடாய்ப்படுத்த முனையும் ஆய்வாளர் ஆரோக்கியதாஸ் – சட்டநாதன் கும்பலிடம் சாதாரண மக்கள் என்ன பாடுபடுவார்கள் என்பதை எண்ணிப்பார்த்தால் மனம் பதைபதைக்கிறது.

கஞ்சா விற்பனையைத் தடுக்கவேண்டிய ‘காவல் ஆய்வாளரே’ கஞ்சா விற்பனைக் கெதிராக போராடுவோரை ஒடுக்கி கஞ்சா விற்பனையை ஊக்கப்படுத்துவதை வழக்கறிஞர்களும், ஜனநாயகஉள்ளம்கொண்ட அனைத்துப்பிரிவுமக்களும் கண்டிக்க வேண்டும். போலிசின் அராஜக செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

மாணவர் – இளைஞர் சமுதாயம் கஞ்சாவிற்கு அடிமையாகி எண்ணற்ற குடும்பங்களும், பெண்களும் பாதிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

பாலக்கரை ஆய்வாளர் ஆரோக்கியதாசே !

  • பெண் கஞ்சாவியாபாரியைத் தூண்டிவிட்டு பெண்களுக்கெதிரான வன்கொடுமை (4 of women harassment act) பிரிவில் வழக்குப் போடுவது பேடித்தனம்!
  • கஞ்சா விற்பனையைத் தடுத்து உன்வீரத்தைக் காட்டு!

தமிழக அரசே ! காவல்துறையே !!

  • அதிகாரத் திமிரில் கஞ்சா பார்ட்டிக்கு ஆதரவாக வழக்கறிஞரைப் பழிவாங்கும் ஆய்வாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடு! பதவியைவிட்டுநீக்கு !
  • டாஸ்மாக், குட்கா, கஞ்சா உள்ளிட்ட அனைத்து போதை பொருட்களையும் தடைசெய் !

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருச்சி, தொடர்புக்கு : 94454 75157.

இந்திய நாடு, அடி(மை) மாடு !

இந்திய நாடு, அடி(மை) மாடு !

ராமனை விடவும் பாரதிய ஜனதாவின் வெற்றிக்குப் பெரிதும் பயன்பட்ட மாடுதான் சங்கப் பரிவாரத்தின் பக்திக்கு உரியது என்றால், அது மிகையல்ல. சிறுபான்மை மக்களை உரிமைகள் அற்ற அடிமைகளாக அச்சுறுத்தி வைப்பதற்கு மாட்டின் புனிதம் குறித்த இந்துத்துவக் கோட்பாடுதான் அவர்களுக்குப் பெரிதும் உதவியது. அதே கோட்பாடு இந்நாட்டை மட்டுமின்றி, பெரும்பான்மை இந்துக்களாகிய தங்களையும் அடிமைகளாக நடத்துவதற்கு பாசிஸ்டுகளுக்குப் பயன்படும் என்பதை மோடிக்கு வாக்களித்த மக்கள் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை.

தேர்தலுக்குச் சில மாதங்கள் முன் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில் வீழ்ச்சியடைந்திருந்த மோடிக்கான ஆதரவு, “புல்வாமா தாக்குதல், பாலகோட் எதிர்த் தாக்குதல்” என்ற மர்ம நாடகங்களுக்குப் பிறகு குறிப்பிடத்தக்க அளவில் மாறியது.

தேசம், மதம், கட்சி ஆகிய அனைத்தின் உருவமாகவும், தேசத்தின் ஒரே பாதுகாவலனாகவும் மோடியை உருப்பெருக்கிக் காட்டின ஊடகங்கள். கழிவறை முதல் காப்பீடு வரையிலான அனைத்துக்கும் மோடி என்ற தனிமனிதனின் கருணையை நாடே எதிர்பார்த்து நிற்பதைப் போன்ற தோற்றம் உருவாக்கப்பட்டது. இந்தப் பிரச்சாரத் தாக்குதலுக்குக் கணிசமான மக்கள் பலியாகினர்.

இவ்வாறு பலியானதை வெறும் ஏமாளித்தனம் என்று மட்டுமே மதிப்பிட முடியாது. ரோகித் வெமுலாவின் தற்கொலை, பசுக் குண்டர்களும், சனாதன் சன்ஸ்தாவும் நடத்திய படுகொலைகள், உனா முதல் பீமா கோரேகான் வரையிலான தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் ஆகிய அனைத்தையும் அங்கீகரித்துச் செல்லும் ஒரு புதிய “சகஜ நிலை” நாடெங்கும் ஏற்பட்டிருக்கிறது.

படிக்க :
♦ பாசிசத்தின் ஏழு அறிகுறிகள் : பாஜகவை தெறிக்கவிட்ட திரிணாமூல் எம்.பி. !
♦ ஜார்க்கண்ட் : புதிய இந்தியாவில் மீண்டுமொரு கும்பல் வன்முறை !

ஒருவேளை இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி வெற்றி பெற்றிருந்தாலும், கடந்த ஐந்தாண்டுகளில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த “சகஜ நிலை”யை அவர்களால் மாற்றியிருக்க முடியாது. அப்படிப்பட்ட முயற்சியில் கடந்த ஐந்தாண்டுகளில் எதிர்க்கட்சிகள் ஈடுபடவுமில்லை. மாறாக, இந்த “சகஜ நிலை”யிடம் அவர்கள் சரணடைந்து விட்டார்கள். போர் தொடங்குவதற்கு முன்னரே தோல்வியை ஒப்புக் கொண்டுவிட்டார்கள்.

மோடியின் வெற்றி தங்களது வாழ்க்கையில் அடிப்படையான மாற்றத்தைக் கொண்டுவந்துவிடும் என்ற மயக்கம் ஏதும் மக்களிடம் இல்லை. நிலவுகின்ற அமைப்பின் மீது அவர்கள் கொண்டிருக்கும் அதிருப்திக்கும், மாற்று குறித்த அவநம்பிக்கைக்கும் நடுவில் இருந்த இடைவெளி, ஒரு பாசிஸ்டின் வெற்றியைச் சாத்தியமாக்கியிருக்கிறது.

தமது வர்க்க நலன் குறித்த மக்களின் சிந்தனையைப் பின்னுக்குத் தள்ளி, கற்பனையான எதிரியைக் காட்டி, தேசவெறியும் மதவெறியும் ஊட்டிப் பெறப்பட்டிருக்கும் வெற்றி இது. இவ்வெற்றி அளித்திருக்கும் அதிகாரத்தையும் குண்டர்படைகளின் வலிமையையும் பயன்படுத்தி எதிர்ப்புக் குரல்கள் அனைத்தையும் பாசிசக் கும்பல் ஒடுக்கும். அந்த ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தினூடாகத்தான் மக்களின் சிந்தனை மீது கவிந்திருக்கும் காவி இருளை நாம் அகற்ற முடியும்.

இது நமக்கு மட்டுமே நேர்ந்திருக்கும் துயரமல்ல. உலக முதலாளித்துவக் கட்டமைவின் நெருக்கடி பல்வேறு நாடுகளிலும் பாசிஸ்டுகளை அதிகாரத்தில் அமர்த்தியிருப்பது போல, நமது நாட்டில் காவி பாசிஸ்டுகளை ஆட்சியிலமர்த்தியிருக்கிறது. பாசிசம் பெற்றிருக்கும் இந்த வெற்றி என்பது முதலாளித்துவக் கட்டமைவு சந்தித்து வரும் தோல்வியின் ஒரு விளைவு. எனவே, காரணத்தை மறந்து விட்டு விளைவை மட்டும் எதிர்ப்பது நிழற்சண்டையாகவே அமையும்.

நிஜமான சண்டைகள் அரசியல், பொருளாதார, பண்பாட்டுத் தளங்களில் அன்றாடம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்த அரசியல் கட்டமைவுக்கு உள்ளே தீர்வு கண்டுவிட முடியும் என்ற நம்பிக்கையில் இப்போராட்டங்களை மக்கள் நடத்துகிறார்கள்.

இக்கட்டமைப்புக்குள் தீர்வு இல்லை என்ற உண்மையை குண்டாந்தடியின் மூலம் அவர்களுக்கு இந்துத்துவ பாசிசக் கும்பல் புரியவைக்கும். அந்தப் புரிதலின் ஊடாகத்தான் இந்துத்துவக் கருத்தியலின் பிடியிலிருந்தும் பாசிசக் கும்பலின் பிடியிலிருந்தும் நாட்டையும் மக்களையும் விடுவிக்க முடியும்.

இந்திய நாடு அடி(மை) மாடு ! புதிய ஜனநாயகம் ஜூன் 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

 

அரசியல் கட்சிகளை கருவறுத்த இத்தாலி பாசிஸ்ட் கட்சி

பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் | விரிவுரை – 3 | பாகம் – 16

டோக்ளியாட்டி

பாசிஸ்டுக் கட்சி அதிகார பீடமேறுவதற்கு முன்னர் இந்த இயல்பைத்தான் பெற்றிருந்தது: குட்டி பூர்ஷுவா மற்றும் மத்தியதர பூர்ஷுவாவின் ஆரம்பகால அடையாள முத்திரையை இன்னமும் கொண்டிருந்தது. புரட்சிகர போக்குகளுடைய பிரச்சினைகளை இன்னமும் எழுப்பிக் கொண்டிருந்தது. பாஸ்ஸி டி கம்பாட்டிமென்டோ வேலைத் திட்டத்தை இன்னமும் முற்றிலும் கைவிடாது இருந்தது. பாசிஸ்டுக் கட்சியானது பூர்ஷுவாக்களின் தாக்குதல் படையாக அப்போதுதான் உருவாக ஆரம்பித்திருந்தது.

பாசிஸ்டுக் கட்சி அதிகாரத்தை கைப்பற்றியதும் இரண்டு குறிக்கோள்களை வரித்துக் கொண்டது. முதல் குறிக்கோளை உடனடியாக அல்லாமல் படிப்படியாகத்தான் செயல்படுத்திற்று. இதர எல்லா இத்தாலியப் பூர்ஷுவாக் கட்சிகளையும், பொதுவாக அனைத்துக் கட்சிகளையும் ஒழித்துக் கட்டுவதே இந்த முதல் குறிக்கோள். அதிகாரத்தைக் கைப்பற்றிய உடனேயே இந்தக் குறிக்கோளை அது மேற்கொள்ளவில்லை; பாசிச சர்வாதிகாரம் வளர்ச்சியடைந்து வந்தபோதுதான், அப்போது எழுந்த அரசியல், பொருளாதாரச் சிக்கல்களைச் சமாளிப்பதற்கு முயற்சி செய்துவந்த போதுதான் இந்தக் குறிக்கோள் உருவெடுத்தது.

பாஸ்ஸி டி கம்பாட்டிமென்டோ வேலைத் திட்டம்.

இத்தாலிய பூர்ஷுவாக்களின் இதர கட்சிகளுடன் நேசஉறவு ஏற்படுத்திக் கொள்ளும் முயற்சியில் பாசிஸ்டுக் கட்சி ஈடுபட ஆரம்பித்தது. ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் 1921-ல் பூர்ஷுவாக்களது இதர பல்வேறு அரசியல் கட்சிகளின் நண்பனாக வாக்காளர்களின் முன்னால் தன்னைக் காட்டிக் கொண்டது. அதிகாரத்துக்கு வந்த பின்னர் கூட, அதிலும் 1924-ல் பாசிஸ்டுக் கட்டுப்பாட்டின் கீழ் நடைபெற்ற தேர்தல்களில் பாசிஸ்டுக் கட்சி தான் மட்டும் தன்னந் தனியாகப் போட்டியிடவில்லை; பாசிஸ்டு சக்திகளுடன் மட்டுமின்றி, பழைய மிதவாதிகள் மற்றும் லிபரல்கள் முதல் கியோலிட்டின்கள் வரை பல்வேறு பழைய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுடன் சேர்ந்தே அது போட்டியிட்டது.

நான் கூறுவது தவறாக எடுத்துக் கொள்ளப்படவில்லை என்றால் கியோலிட்டியே கூட முசோலினியின் வேட்பாளர்களில் ஒருவராக இருந்தார். பாசிஸ்டுக் கட்சி மேற்கொண்ட நிலையை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். 1921 இல் ஏனைய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தல்களில் போட்டியிட்டபோதிலும் கூட முப்பது இடங்களை மட்டுமே பெற முடிந்தது. 1924 ஆம் ஆண்டிலோ மூன்றில் இரண்டு பங்கு இடங்களை அது வென்றது. மொத்த வாக்குகளில் ஐம்பது சதவிகித வாக்குகளைப் பெற்ற கட்சிக்கு மூன்றில் இரண்டு பங்கு இடங்கள் ஒதுக்க வேண்டும் என்று புதிய தேர்தல் சட்டத்தின் மூலமும், இத்தாலிய பூர்ஷுவாக்களின் பழைய லிபரல் மற்றும் கன்சர்வேடிவ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துக் கொண்டதன் மூலமும் இது சாதிக்கப்பட்டது. இத்தாலிய பூர்ஷுவாக்களின் இந்த அரசியல் அமைப்புகளுடனான உறவு சம்பந்தமாக பழைய கியோலிட்டியன் முறை இந்தக் காலகட்டத்தில் கைக்கொள்ளப்பட்டது.

படிக்க:
காவிரி ஆணையம் : கர்நாடகாவின் கைத்தடியா ?
அர்ஜுன் ரெட்டி போல ஒருவருடன் வாழ நேர்ந்தால் எப்படி இருக்கும் ?

எனினும் இதர அரசியல் கட்சிகளை ஒழித்துக்கட்டும் பிரச்சினை 1923, 24, 25-ம் ஆண்டுகளில் திடீரென எழுந்தது. பாசிசத்தின் ஆரம்பகால வெகுஜன அடித்தளத்தை ஒத்த வெகுஜன அடித்தளங்களைக் கொண்ட கட்சிகள் மீது பாசிஸ்டுக் கட்சி முதலில் தாக்குதல் தொடுத்தது. சீர்திருத்தக் கட்சியைத் தாக்குவதற்கு முன்னர் பாப்புலர் கட்சி மீதும் கம்யூனிஸ்டுக் கட்சியைத் தாக்குவதற்கு முன்னர் சீர்திருத்தக் கட்சி மீதும் அடக்குமுறைக் கணைகளை அது ஏவிற்று. இது ஏன்? அந்தக் காலகட்டத்தில் நம்மை விட பாப்புலர் மற்றும் சீர்திருத்தக் கட்சிகளுக்கு எதிராகத்தான் மிக மூர்க்கமாகப் போராட்டம் நடைபெற்று வந்தது.

ஏனென்றால் இந்தக் கட்சிகளின் வெகுஜன அடித்தளங்கள் பாசிசத்தின் தொடக்கக்கால வெகுஜன அடித்தளங்களை ஒத்திருந்தன; இக்கட்சிகள் குட்டி பூர்ஷுவா மற்றும் விவசாயப் பகுதியினரிடையே பரவியிருந்தன. ஒரு வெகுஜனக் கட்சியாவதற்கு பாசிசம் தனது அணிகளுக்குள் சேர்த்துக் கொள்ள விரும்பிய அதே வெகுஜனப் பகுதியினரிடையே இக்கட்சிகள் செல்வாக்குப் பெற்றிருந்தன. எனவே, இந்த வெகுஜனப் பகுதியினரைத் தம்வசம் நீடித்து வைப்பதற்கு அல்லது அவர்களைத் தம் பக்கம் ஈர்ப்பதற்குக் கடும் போட்டி ஏற்பட்டது. இது மிக உக்கிரமான அரசியல் போராட்டமாக உருவெடுத்தது. இதர கட்சிகளை அழித்தொழித்துக் குழி தோண்டிப் புதைக்கும் திட்டம் உறுதியாக விரிவுபடுத்தப்பட்டது. முடிவில் பழைய கட்சிகளை எல்லாம் தடை செய்யும் சட்டங்கள் 1925-26 இல் இயற்றப்பட்டன. இவை யாவற்றுக்கும் உச்சகட்டமாக, யுத்தத்திற்கு முன்னர் இத்தாலிய பூர்ஷுவாக்களின் ஒரே அரசியல் அமைப்பாக இருந்த கூட்டுரிமைக் கழகத்தின் மீதும் (ஃப்ரிமசோன்றி) தாக்குதல் தொடுப்பதற்கான அபாய அறிகுறிகளாக இந்தச் சட்டங்கள் காட்சியளிக்கின்றன.

கூட்டுரிமைக் கழகத்தின் மீது சற்றுத் தாமதமாகத்தான் பாசிசம் தனது விஷப் பார்வையைத் திருப்பிற்று. இது 1925 இல் நடைபெற்றது. ஆனால் புயல் வேகத்தில் காரியங்கள் நடைபெற்று இறுதி முடிவு எய்தப் பெற்றது. கூட்டுரிமைக் கழகம் இருந்து வருவதைப் பாசிசத்தால் பொறுத்துக் கொள்ள முடியாது. இத்தாலிய பூர்ஷுவாக்களின் ஒரே கட்சியாக இருக்க பாசிஸ்டுக் கட்சி விரும்பியதால் கூட்டுரிமைக் கழகம் நீடிப்பதை அது அனுமதிக்க முடியாது. பூர்ஷுவாக்களின் ஒரே கட்சியாக பாசிஸ்டுக் கட்சி இருக்க வேண்டும் என்ற இந்தப் பிரச்சினை முக்கியமாக 1925, 1926-ம் ஆண்டுகளில் எழுந்தது. அந்தக் கணம் முதல் கூட்டுரிமைக் கழகத்தின் தலைவிதி நிர்ணயிக்கப்பட்டுவிட்டது. அதற்குச் சாவுமணி அடிக்கப்பட்டு விட்டது. இதேபோன்று இதர எல்லா அரசியல் கட்சிகளும் அஸ்தமிக்க வேண்டியதேற்பட்டது.

பாசிசத்தின் அரசியல் திட்டம் இச்சமயம் விரிவடைந்தது. இவ்விதம் அதன் பரிணாம வளர்ச்சியின் இரண்டாவது கட்டத்துக்கு நாம் செல்லுகிறோம். பூர்ஷுவாக்களின் மிகப் பிற்போக்கான, அப்பட்டமான சர்வாதிகாரத்தை எதிர்த்த கட்சிகளுக்குச் சமாதி கட்டுவதோடு பாசிசம் திருப்தியடையவில்லை. இந்தக் கட்சிகளின் அடிமட்ட ஊழியர்களைத் தனது அணிகளில் ஈர்த்து இணைத்துக் கொள்வதிலும், இதன் மூலம் ஸ்தாபனக் கண்ணோட்டத்தில் ஆளும் வர்க்கங்களிடையே ஒற்றுமையை ஈட்டுவதிலும் பாசிஸ்டுக் கட்சி மிகவும் முனைப்பாக இருந்தது.

(தொடரும்)

பால்மிரோ டோக்ளியாட்டி
ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள்
தமிழில் : ரா. ரங்கசாமி
பக்கங்கள் : 233
விலை : ரூ. 50.00
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

முந்தைய பகுதிகள் : பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் !

நூல் அறிமுகம் : எது நல்ல பள்ளி ?

து நல்ல பள்ளி? எது தரமான பள்ளி? தேர்ச்சி விழுக்காடு மட்டுமா? இசை, ஓவியம், விளையாட்டு வேண்டாமா? ஆய்வுக்கூடம் நூலகம் பயன்படுத்த வேண்டாமா? ஆங்கிலம் மட்டும் பேசினால் போதுமா? பாடத்திட்டம் மட்டும் போதுமா?… என்பது உள்ளிட்ட எளிமையான அதேசமயம் சிந்திக்கத் தூண்டும் கேள்விகளை முன்வைத்து மிகச் சுருக்கமான பதிலையும் தந்திருக்கிறார், நூலாசிரியர்.

பள்ளியில் தாய்மொழி வழிக் கல்வி நடைபெற வேண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரை தமிழ்வழிக் கல்வி நடைபெற வேண்டும். தாய்மொழி வழிக் கல்வியே சிறந்தது என்பதற்கு நாம் இன்னும் ஆராய்ச்சி முடிவுகளைத் தேடி அலைந்து கொண்டிருக்க வேண்டியதில்லை. வளர்ந்த நாடு எதை வேண்டுமானாலும் பாருங்கள். அங்கே தாய்மொழி வழிக் கல்விதான் இருக்கும். நான் அறிந்தவரை எந்த ஐரோப்பிய நாட்டிலும் தாய்மொழி வழிக்கல்வியே பள்ளிகளில் கற்பிக்கப்படுவதுடன் முதல் வகுப்பிலேயே ஆங்கிலம் சொல்லித்தரப்படவும் இல்லை. பொதுவாக நான்காம் வகுப்பில் ஆங்கிலம் அல்லது வேறொரு மொழி கற்பிக்கத் தொடங்கப்படுகிறது. பிறகு ஏழாம் வகுப்பில் மற்றொரு மொழியைக் கற்பிக்கத் தொடங்குகிறார்கள். சில நாடுகளில் விரும்பும் மாணவர்கள் மட்டும் நான்கு மொழிகளைக் கூடக் கற்கிறார்கள். ஆனால், அந்தந்த நாட்டில் அந்தந்த நாட்டு மொழி வழியாகவே கற்கிறார்கள். ஆகவே, ஒரு நல்ல பள்ளிக்கூடம் அடிப்படையில் தமிழ் வழிக் கல்விக்கூடமாக இருக்கவேண்டும்…

கற்பித்தலும் கற்றலும் சிறப்பாக நடைபெறவேண்டுமானால் ஆசிரியர் மாணவர் விகிதம் குறைவாக இருக்க வேண்டும். நான் பரிந்துரைக்கும் அளவு இதுதான். மழலையர் வகுப்புகளில் இருபது பேரும் தொடக்கநிலை வகுப்புகளில் முப்பது பேரும் உயர்நிலை வகுப்புகளில் நாற்பது பேரும் மேல்நிலை வகுப்புகளில் ஐம்பது பேரும் இருக்கலாம்… ஆசிரியர் மாணவர் உறவு என்பது கற்றலில் மிக மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நல்ல உறவு இருக்கும்போது கற்றல் சிறப்பாக இருக்கும்.

படிக்க:
காவிரி டெல்டாவை எச்சரிக்கிறது நைஜர் டெல்டா !
அரசியலமைப்பை புறக்கணிக்கும் தேசியக் கல்விக் கொள்கை – 2019 !

ஒரு பள்ளி நல்ல பள்ளியா என்பதை முடிவு செய்தலில் நாம் கவனிக்க வேண்டிய ஒரு கூறு. அந்தப் பள்ளிக்கு எவ்வாறு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பது. பெற்றோர்கள் இருவரும் பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது, பணக்கார குழந்தைகளை மட்டும் தேர்வு செய்வது, மிக இளம் வயதிலேயே போட்டித் தேர்வு நடத்தித் தேர்வு செய்வது போன்றவை நல்ல பள்ளிக்குரிய அடையாளங்கள் இல்லை… நூலகமும் ஆய்வுக்கூடமும் இல்லாத பள்ளி, பள்ளியே இல்லை. இவை இருந்தும் மாணவர்களுக்குப் பயன்படாத பள்ளியை என்னவென்று சொல்வது?…

மாணவர்களுக்கு வாழ்வில் பயன்தரப் போவது திறன்களே அல்லாமல் வெறும் தகவல்கள் அல்ல. ஏனென்றால், உலகில் உள்ள எல்லா தகவல்களையும் யாரும் தெரிந்து வைத்திருக்க முடியாது. இதனால் எல்லா நேரங்களிலும் மாணவர்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியாது. ஆனால், திறன்கள் எப்பொழுதும் உதவும்…

குழந்தைகள் பெரியவர்களிடமிருந்து கற்றுக்கொள்வதைவிடச் சக குழந்தைகளிடமிருந்து எளிதாகவும் அதிகமாகவும் கற்றுக்கொள்கிறார்கள். இது பள்ளிக்கு வெளியே மட்டுமல்ல பள்ளியிலும் நடைபெறக்கூடியதே. இந்த இயல்பைப் பயன்படுத்தி மாணவர்கள் நன்கு கற்றுக் கொள்ளப் பள்ளிகள் உதவ வேண்டும்…

பொதுவாக நமது மாணவர்களிடம் லண்டனில் ஓடும் ஆறு எது என்று கேட்டால் சொல்லிவிடுவார்கள். ஆனால், உள்ளூருக்கு அருகில் ஓடும் ஆறுபற்றிக் கேட்டால் தெரியாது. ஏனென்றால் அவர்களுக்குக் கற்பிக்கப்படும் பாடத்திட்டம் அத்தகையதாய் இருக்கிறது… (நூலிலிருந்து)

நூல் : எது நல்ல பள்ளி ?
ஆசிரியர் : த. பரசுராமன்

வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
தொலைபேசி எண்: 044 – 2433 2424.
மின்னஞ்சல் : thamizhbooks@.com

பக்கங்கள்: 16
விலை: ரூ 10.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

குழந்தைகளே உங்களுக்கு விளையாடப் பிடிக்குமா ?

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 3 | பாகம் – 04

“பழைய பிரெஞ்சுப் பாடலுக்கேற்ப” வகுப்பறையில் நடனமாடும் இந்தச் சின்னஞ்சிறு பிஞ்சு உள்ளங்களில் ஞானத்தையும் உறவுமுறைகளையும் எப்படி இரண்டறக் கலந்து ஊட்டுவது, இவர்களில் ஒவ்வொருவருடைய மனதிலும் தனிச் செயல் முனைப்பை எப்படி ஊக்குவிப்பது? இந்தப் பாதை எவ்வளவு சிக்கலானது என்று என் ஆசிரியர் அனுபவம் காட்டுகிறது. நான் என் வகுப்புக் குழந்தைகளுடன், இப்பாதையின் ஆரம்பத்தில் நிற்கிறேன். நாங்கள் இப்பாதையில் முதலடிகளை எடுத்து வைக்கின்றோம். நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? அவர்கள் இப்பாதையில் மெதுவாக ஊர்ந்து செல்லும்படி கட்டாயப்படுத்தி, அவர்களின் புகார்களைக் கண்டும் காணாமல் இருப்பதா? வேறு பாதை கிடையாது, என்ன நேர்ந்தாலும் எல்லா தடைகளையும் கடக்க வேண்டும் என்பதைக் குழந்தைகள் புரிந்து கொள்ள வேண்டும்.

குழந்தைகளே, உங்களுக்கு விளையாடப் பிடிக்குமா? விளையாட்டுதானே உங்கள் வாழ்க்கையின் அடிப்படை. மிக்க நன்று. உங்களுடன் விளையாடுவதில் எனக்கு ஆட்சேபணையில்லை. நாம் என்ன விளையாட்டு விளையாடுவது? நீங்கள் குழந்தைகள், பள்ளி மாணவர்கள், நான் உங்கள் ஆசிரியர், பெரியவர். நான் சொல்லித் தருகிறேன், நீங்கள் கற்றுக் கொள்கின்றீர்கள், நான் கணக்குகளைத் தர நீங்கள் அவற்றைப் போடுகின்றீர்கள், நான் கேள்விகளைக் கேட்க, நீங்கள் பதில் சொல்கின்றீர்கள். ஏன் சோர்வடைகின்றீர்கள்? இப்படி விளையாட மாட்டார்களா? இது விளையாட்டில்லையா? ஏன், இதிலென்ன தவறு? இந்த விளையாட்டில் எல்லாமே உண்மை என்பதாலா? அதாவது நான் உண்மையில் ஆசிரியர், நீங்கள் உண்மையில் மாணவர்கள் என்பதாலா? இங்கே கற்பனைக்கும், மாற்றங்களுக்கும் இடம் இல்லை, இங்கே கற்பனைப் பாத்திரங்கள் கிடையாது. அப்படித்தானே? நான் உங்களைச் சரியாகப் புரிந்து கொண்டேனா? சரி, அப்போது வேறு விதமாகச் செய்வோம். நாமனைவரும் நண்பர்கள்; நீங்கள் என் சக ஊழியர்கள், கருத்தாழமுள்ள, வயது வந்த மனிதர்கள்; நான் கவனக் குறைவான, ஞாபகமறதியுள்ள ஆசிரியனாக இருக்கிறேன், நீங்கள் என்னை விட்டுவிடாமல், கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.

நான் விளையாட்டில் முன்னின்று விளையாடுபவன். இந்தக் கற்பனை நிலையை யதார்த்தமாக்க உங்களுக்கு உதவுகிறேன்; நீங்கள் உண்மையிலேயே வயது வந்த, விளையாட்டுத்தனமற்ற நபர்கள் என்று நீங்கள் நம்ப உதவுகிறேன். இவ்வாறு ஒன்றாகச் சேர்ந்து நம் பாடங்களைப் “படைப்போம்” வாருங்கள். “தாய் நாடு” எனும் சொல்லில் எவ்வளவு எழுத்துகள் உள்ளன என்று எனக்குத் தெரியாது”. ஐந்து எழுத்துகளா? ஏழு எழுத்துகளா? இதில் கடைசி எழுத்திற்கு முந்தைய எழுத்து எது? ‘நா’ எனும் எழுத்தா ‘ய்’ எனும் எழுத்தா?… பத்து மணி நேரமாக கார் நிறுத்தும் ஓரிடத்தில் ஒவ்வொரு மணி நேரமும் எட்டு கார்கள் வந்து, ஏழு கார்கள் வெளியேறின என்றால் அங்கு எவ்வளவு வாகனங்கள் எஞ்சியுள்ளன? இதுவும் எனக்குத் தெரியாது! நீங்கள் ஏன் இவ்வளவு அவசரப்படுகின்றீர்கள்? என்னால் உங்களுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை!

நீங்கள் பத்து கார்கள் என்கின்றீர்கள், எனக்கோ ஒன்பது கார்கள் என்று படுகிறது!
நீங்கள் மகிழ்ச்சியை விரும்புகின்றீர்கள். உங்களுக்கு எது மகிழ்ச்சி தருகிறது? சாக்லேட்டா? புதிய விவரங்களைத் தெரிந்து கொள்வதா? நிச்சயமாக இரண்டும் மகிழ்ச்சி தருவதாகும். புதியவற்றைத் தெரிந்து கொள்ளும் மகிழ்ச்சியை கல்வி கற்கும் போது தோன்றும் இடர்ப்பாடுகளை அகற்றுவதன் மூலம் அளிப்பதை நான் என் கடமையாகக் கருதுகிறேன். நான் கல்வியை உங்கள் “தலைகளில் புகுத்தும்” வழிகளைத் தேடவில்லை, மாறாக, நீங்கள் என்னிடமிருந்து இவற்றை “எடுத்துக் கொள்ள முயலும்படி” செய்ய, என்னுடன் “அறிவுச் சண்டை” போட்டு இவற்றை கிரகிக்குமாறு செய்ய, இடைவிடாத தேட்டங்களின் மூலம், அயராத வேட்கையின் மூலம் இவற்றைப் பெறுமாறு செய்ய நான் பாடுபடுகிறேன். இவற்றை செயல்படுத்தும் பொருட்டு நான் உங்கள் அறிதல் பாதையில் தடைகளை வைப்பேன், நீங்கள் உங்கள் மூளையைப் பயன்படுத்தி இவற்றைக் கடக்க வேண்டும்.

படிக்க:
“ஏன் குல்லா அணிந்திருக்கிறாய் ? ஜெய் ஸ்ரீராம் சொல்” கொல்கத்தாவில் காவிகளின் வன்முறை !
காவிரி ஆணையம் : கர்நாடகாவின் கைத்தடியா ?

புதியவற்றைத் தெரிந்து கொள்வதில் ஏற்படும் சண்டைகளினால் உண்டாகும் குழந்தைகளின் சிரிப்பு நம் பாடங்களுக்கு அழகூட்டும். இப்படிப்பட்ட சிரிப்பு இவ்வாறு புதியவற்றைத் தெரிந்து கொள்வதை ஊக்குவிப்பதோடன்றி, புதிய விவரங்களைத் தெரிந்து கொள்ளும் வழிகளில் ஒன்றாயும் இந்நிகழ்ச்சிப் போக்கின் விளைவுகளில் ஒன்றாயும் இருப்பது என் அனுபவத்திலிருந்து எனக்குத் தெரியும். சிரிப்பு மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் சிறந்த முறையாகும். தேவையற்று இச்சிரிப்பு பாடவேளைகளிலிருந்து அகற்றப் பட்டுள்ளதாக எனக்குத் தோன்றுகிறது. பல ஆசிரியர்கள், புதியவற்றைத் தெரிந்து கொள்வதில் “சண்டைகளை” மூட்டி விட்டு சிரிப்பை வரவழைப்பதற்குப் பதில் இதை விரட்டியடிக்கின்றனர்.

என்னைப் பொறுத்தமட்டில் குழந்தைகளின் சிரிப்பு ஒரு ஆசிரியரின் முக்கியப் பிரச்சினையாகும், என் பாடவேளைகளில் இவர்கள் அடிக்கடி “’கருத்தாழத்தோடு“ சிரிப்பார்கள். நகைச்சுவையான படக்கதைகளைச் சொன்னால் வகுப்பறையில் சிரிப்பு வெடிக்கும். “ஏன் நீங்கள் சிரிக்கின்றீர்கள்? இதில் சிரிப்பதற்கென்ன உள்ளது?” என்று நான் கேட்டதும் குழந்தைகள் போட்டி போட்டுக் கொண்டு விஷயத்தை விவரிப்பார்கள், அது ஏன் சிரிப்பிற்கிடமானது என்று விளக்குவார்கள். நாங்கள் சேர்ந்து சிரிப்போம். இதே திருப்தியை, மகிழ்ச்சியை பெற்றோர்களுக்கும் குடும்பத்தினருக்கும் விளக்குமாறு விஷயத்தை வார்த்தைகளால் விவரிக்குமாறு நான் கேட்டுக் கொள்வேன். “உங்களால் மற்றவர்களைச் சிரிக்க வைக்க முடிந்தது என்றால், உங்களால் நன்றாக, உள்ளது உள்ளபடி கதை சொல்ல முடியுமென்று பொருள்” என்று நான் குழந்தைகளிடம் சொல்வேன்.

“பிழைகளைக் கண்டுபிடிக்குமாறு அவர்களிடம் சொல்லி நான் வேண்டுமென்றே தப்பாகப் படித்துக் காட்டும் போது குழந்தைகள் சிரிப்பார்கள். அவர்கள் தாம் சொல்வது சரி என்று நிரூபிக்கும் வரை நான் விடாப்பிடியாகத் தீவிரமாக நிற்பேன். பின் அவர்களை எனக்குக் கணக்கு தரச் சொல்லி வேண்டுமென்றே நான் அவற்றை தவறாகப் போடும் போதும் அவர்கள் சிரிப்பார்கள். என் “தவறு” என்ன என்று அவர்கள் சிரிப்புடன் நிரூபிப்பார்கள்.

அனேகமாக சிரிப்பு என்பது நம்பிக்கையை வெளிப்படுத்தவும் நிலையை ஊர்ஜிதப்படுத்தவும் சிறந்த வழிகளில் ஒன்றாயிருக்கும். குழந்தைகளுடனான பணியில் நான் இதை இப்படித்தான் பார்ப்பேன். மகிழ்ச்சிகரமான சிரிப்பை குழந்தைகளிடம் வரவழைப்பதற்காக மட்டும் நான் “தவறு” செய்யப் போவதில்லை. எனது “தவறுகள்” குழந்தையின் சிந்தனையைத் தட்டிவிடும். குழந்தைகள் என்னுடன் விவாதம் செய்யத் துவங்குவார்கள், நான் ஒப்புக் கொள்வேன்; “நீங்கள் சொன்னது சரி… என்னை மன்னிக்கவும்!”

நான் ஏன் இப்படிச் செய்ய வேண்டும்? ஆசிரியர் தவறிழைத்து விட்டுப் பின் குழந்தைகள் முன் மன்னிப்பு கேட்கலாம், குழந்தைகள் ஆசிரியருடன் விவாதிக்கலாம் என்பதை ஆசிரியரியல் ஒப்புக் கொள்கிறதா என்ன? இது பற்றி இப்போது என்னால் ஒன்றும் சொல்ல இயலாது. இது புதியவற்றை அறிய உயிர்த்துடிப்புள்ள, சுவாரசியமான பாதையென அனுபவம் எனக்குச் சொல்கிறது. குழந்தைகள் இதை மேம்படுத்த எனக்கு உதவுவார்கள்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

எங்க சாமி கருப்பனும் சுடலைமாடனும்தான் ! ஜெய் ஸ்ரீராம் கிடையாது | #NoToJaiShriRam

டந்த ஒரு வாரத்தில் நாட்டின் பல இடங்களில் இந்துத்துவ கும்பல் அரங்கேற்றிய தாக்குதல் சம்பவங்களின் போது, ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற முழக்கம் முதன்மையாக இடம்பெற்றிருந்திருக்கிறது. பாராளுமன்றத்திலும் எதிர்க்கட்சியினர் பதவி ஏற்கும்போது ”ஜெய் ஸ்ரீராம்” என்ற முழக்கத்தைக் கூவினர் பாஜக எம்பிக்கள்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இந்துத்துவ வெறியேற்றப்பட்ட ஒரு கும்பல் தாக்கியதில் தப்ரேஸ் அன்சாரி என்ற இளைஞர் கொல்லப்பட்டார். அவரை ‘ஜெய் ஸ்ரீராம்’ என சொல்ல கட்டாயப்படுத்தி அடிக்கிறது அந்த கும்பல். அதுபோல, கொல்கத்தாவில் இரயிலில் சென்ற முசுலீம் இளைஞர் ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலின்போதும் ‘ஜெய் ஸ்ரீராம்’ என சொல்லும்படி காவிக் கும்பல் அவரைக் கட்டாயப்படுத்தியிருக்கிறது.

இப்படி ‘ஜெய் ஸ்ரீராமின்’ பெயரால் காவி கும்பல் கையிலெடுத்துள்ள வன்முறையைக் கண்டிக்கும் வகையில் #NoToJaiShriRam என்ற ஹேஷ் டேக் டிவிட்டரில் டிரெண்டானது. இதை டிரெண்டாக்கியவர்கள் தமிழர்கள். தமிழர்களின் எதிர்ப்புக்குரலில், நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்தவர்களும் இணைந்து கொண்டனர். அதிலிருந்து சில தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகளை இங்கே தொகுத்திருக்கிறோம்.

தமிழ் நடராஜ்:

சான்றிதழின்படி நான் இந்து. ஆனால், நான் “ஜெய் ஸ்ரீராம்” சொல்ல மாட்டேன். இது என்னுடைய வாழ்தலுக்கான லட்சியத்தை கூறவில்லை. இன்று ‘வேண்டாம் ஜெய் ஸ்ரீராம்’ என்று சொல்கிறேன், ஏனெனில் இது மனிதநேயத்தைக் குறிக்கிறது. வாழ்தலுக்கான நோக்கத்தைக் குறிக்கிறது.

பழுவேட்டரையர்:

கடவுள் ராமனுக்கு வெற்றியை என முழங்கி, மக்களைக் கொல்கிறீர்கள். ராமனுக்கு நீங்கள் சமர்ப்பிக்கும் வெற்றி எத்தகையது? கோழைத்தனமான கிரிமினல்தனத்தின் மூலம் மனித சதையை சமர்ப்பிப்பதால் மகிழ்ச்சியடைவாரெனில் என்ன வகையான  கடவுள் அவர் ?

வைசாலி:

இந்தியாவில் உள்ள எவருக்கும், ஏன் மோடிக்குமே கூட முசுலீம்களாகிய உங்களை  ‘ஜெய் ஸ்ரீராம்’ என சொல்ல வற்புறுத்த உரிமை கிடையாது.

மணிமாறன் ராஜசோழன்:

ராமன் யார்? ராமாயண கதையின்படி தனது மனைவியை நம்பாத ஒருவர். ராமன் ஒரு கதாபாத்திரம் மட்டுமே. இவர் உண்மையான கடவுள் இல்லை. இந்த முட்டாள்கள் ராமனை வழிபட விரும்புகிறார்கள். நான் ஏன் வழிபட வேண்டும்?

விவேக் கோபாலகிருஷ்ணன்:

காவி இந்துத்துவக் கும்பல் சக முசுலீம் சகோதரர்களை மதத்தின் பேரால் கொல்வதற்கு எதிராக தமிழர்கள் நாங்கள் நிற்கிறோம்.

குரு தமிழ் :

ராவணனைப் போல இதுவும் கற்பனைக் கதாபாத்திரம்தான். ராமன் தன்னுடைய மனைவியை சந்தேகித்து நெருப்பில் இறங்கச் சொன்னார். அவரை ஒரு மனிதராகக்கூட ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படியிருக்கும்போது ஏன் அவரைக் கடவுளாக வழிபடுகிறார்கள்?

ஆஸ்டின் பெஞ்சமின் :

மதம் மனிதனை, விலங்காக மாற்றுகிறது.

இக்‌ஷ்தீப் சிங்:

இந்திய அரசியலமைப்பு நமது மதத்தைப் பின்பற்றும் உரிமையை வழங்கியுள்ளது. ஒருவருடைய மத நம்பிக்கையை கட்டாயமாக திணிக்கும் சக்தி எவருக்கும் இங்கே இல்லை.

சித்தார்த்தா சரண்:

எங்களுடைய கடவுளர்கள் அய்யனார், கருப்பன், சுடலைமாடன், மதுரைவீரன் போன்றோர். அவர்கள்தான் எங்களைக் காப்பவர்கள், வீரர்கள். நாங்கள் எங்களுடைய தாய்மொழியில் அவர்களை துதிப்போம். ராமன் யார்? தனது மனைவியை சந்தேகித்துக் கொன்றவன். நாங்கள் ஏன் அந்த சமஸ்கிருத பயங்கரவாதியைத் துதிக்க வேண்டும்?

அமெரிக்காவாசி:

நாட்டின் சிறுபான்மையினரைக் கொன்று கொண்டிருக்கும் “ஜெய் ஸ்ரீராம்” சொல்வதை நிறுத்துவோம். இந்தியா எப்போதும் மதச்சார்பற்ற நாடுதான்.

குரு:

உங்கள் அருகே யாரேனும் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என முழங்கிக் கொண்டிருந்தால், நீங்கள் ஜாக்கிரதையாக இருங்கள். அவன்/அவள் ஒரு பயங்கரவாதியாக இருக்கலாம்.

அனுஷ்கா அகர்வால்:

ஒரு ரயில் நிலையத்தில் முசுலீம்கள் தொழுதுகொண்டிருப்பதைப் பார்த்து ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என சிலர் கத்தும் வீடியோவை இப்போது பார்த்தேன். தயவு செய்து மனிதத்தன்மையற்ற இந்தச் செயலை நிறுத்துங்கள்.

இதனால் உங்களுக்குக் கிடைக்கப்போவது என்ன? அனைத்து இந்தியர்களும் சகோதர, சகோதரிகளே.. தயவுசெய்து நிறுத்துங்கள்.

சுபம் ராஜ் பிராமி:

இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். நம்முடைய நாட்டில் இத்தகைய வன்முறைகளுக்கு இடமில்லை. இது மதச்சார்ப்பற்ற நாட்டின் மீது விழுந்த அடி. இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சக நாடாளுமன்றவாதிகளை ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என முழங்க வேண்டாம் என்றும் வலியுறுத்துங்கள்.

முகமது ஆரிஃப்:

கும்பல் வன்முறையாளர்களால் ஐம்பதுக்கும் அதிகமான முசுலீம்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் அரசு அதுபற்றி கவலைப்படவில்லை. சட்டமும் இல்லை, நடவடிக்கையும் இல்லை. இதுதான் நாம் விரும்பும் இந்தியாவா? தயவுசெய்து உங்களுடைய குரல்களை உயர்த்துங்கள்.

அப்துல் அஜீஸ்:

மனிதநேயம் தேவையாக உள்ளது.

கணேஷ் பாண்டியன்:

உங்களுடைய அமைதி அவர்களை கொல்லக்கூடும்.

முகமது உமர்:

நீங்கள் சிறு குற்றச்சாட்டுக்கு உள்ளான முசுலீம் எனில் கொல்லப்படுவீர்கள். நீங்கள் இந்து, பயங்கரவாத குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் எனில் நாடாளுமன்றத்துக்கு அனுப்பப்படுவீர்கள்.


தொகுப்பு : அனிதா

தொழிலாளர் வாழ்க்கை : ஒரு பருந்துப் பார்வை !

0

நாடு முழுவதுமுள்ள தொழிலாளர் நிலைமை, அவர்களது வாழ்க்கை மற்றும் போராட்டங்களைக் குறித்து ஒரு பருந்துப் பார்வையில் தொகுத்துள்ளது தி வயர் இணையதளம். அக்கட்டுரையில் இருந்து சில துளிகள் :

கடும் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள தமிழ்நாடு.

குறைந்துபோன மழைப்பொழிவும் வறண்டு வரும் நீராதாரங்களும் மற்றுமொரு கடினமான ஆண்டை தமிழக விவசாயிகள் எதிர்கொள்ளவிருப்பதற்கு கட்டியம் கூறுகின்றன. பெரும் அணைக்கட்டுகளில் நீரின் அளவு குறைந்திருப்பதாலும், மற்ற நீராதாரங்களான குளங்கள் ஏரிகள் உள்ளிட்டவை வறண்டு போயிருப்பதாலும் குறுவை சாகுபடியைக் கைவிட விவசாயிகளை நிர்பந்தித்துள்ளது.

பருவ மழை பொய்த்துப் போனதைக் காரணம் காட்டி மாநில அரசு கை கழுவ முயல்கிறது; ஆனால், விவசாயிகளும் செயல்பாட்டாளர்களும் மாநில அரசின் கொள்கைகளும் நீர் மேலாண்மையைக் கைவிட்டதும், ஆறுகளையும் குளங்களையும் காக்கத் தவறியதும்தான் இப்பிரச்சினைக்குக் காரணம் என்கின்றனர்.

தில்லி அரசாங்கம் பெண்களுக்கு இலவச போக்குவரத்தையும் தலைமைச் செயலகத்தில் குழந்தைகள் காப்பகம் ஒன்றை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.

தனது லிபரல் கொள்கைகளின் வரிசையில் தில்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சி, தலைமைச் செயலகத்தில் குழந்தைகள் காப்பகம் ஒன்றை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய குழந்தைகள் நலன் மற்றும் பெண்களுக்கான அமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் தில்லியின் துணை முதல்வர்.

தனது கடிதத்தில் பணியாளர்களின் வேலை மற்றும் சொந்த வாழ்க்கைக்கு இடையிலான சமன்பாட்டை உறுதி செய்வது குறிப்பிட்ட நிறுவனத்தின் கடமை என்பதை குறிப்பிட்டுள்ளார். தில்லி தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் குழந்தைகள் காப்பகம் அவர்களுக்குப் பெரிதும் பயன்தரும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பொதுப் போக்குவரத்தில் பெண்கள் இலவசமாக பயணிக்க வகை செய்யும் விதமாகத் திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளது ஆம் ஆத்மி கட்சி. பெண்கள் எந்த நேரமும் எங்கும் பாதுகாப்பாக பயணிப்பதை இத்திட்டம் உறுதி செய்யும் என அக்கட்சி கூறுகின்றது. இத்திட்டத்தின்படி தில்லி மெட்ரோ இரயில் மற்றும் தில்லி அரசுக்குச் சொந்தமான பேருந்துக் கழகம் ஆகிவற்றில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்பதால் இது தொடர்பாக பெரும் விவாதங்கள் நடந்து வருகின்றன. இன்னொருபுறம், தில்லியின் பொதுப் பேருந்துகள் அனைத்தும் சி.என்.ஜி எரிவாயுவில் செயல்படுபவை என்பதும், அவை பெருமளவு விரிவாக்கம் செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பேறுகாலச் சலுகைகளை ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு விரிவுபடுத்துகின்றது அருணாச்சலப் பிரதேச அரசாங்கம்.

இரண்டாவது முறையாக முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ள பெமா கந்து அரசாங்கம், பேறுகால சலுகைகளை ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் விரிவுபடுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. இதுவரை நிரந்தரத் தொழிலாளர்களுக்கு மட்டுமே இச்சலுகை வழங்கப்பட்டு வந்தது.

பேறுகாலச் சலுகைகளின்படி, ஒப்பந்தத் தொழிலாளர்கள் 180 நாட்கள் ஊதியமில்லா விடுப்பு எடுத்துக் கொள்ள முடியும். மேலும் 60 நாட்கள் குழந்தைகளைப் பராமரிப்பதற்காக விடுப்பெடுத்துக் கொள்ளவும் முடியும். இந்த நடவடிக்கையின் விளைவாக 20 ஆயிரம் பணியாளர்கள் பயன்பெறுவர் என அம்மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது.

படிக்க:
சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் ஸ்டெர்லைட் நிர்வாகம் – மீளவிட்டான் மக்கள் புகார் !
♦ மனைவியின் பிரிவிலும் மக்களுக்காக நின்ற மருத்துவர் ரமேஷ் !

ஆந்திராவின் ஆஷா ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு

இந்தியா முழுவதுமுள்ள ஆஷா (சுகாதாரப் பணியாளர்கள்) ஊழியர்கள் சம்பள உயர்வுக்காகப் போராடி வருகின்றனர். மிகக் கடுமையான வேலையாக இருந்தாலும், அவர்களது சம்பளம் குறைவு என்பதோடு அவர்கள் முழுநேர ஊழியர்களாகவும் கருதப்படுவதில்லை. எனினும், புதிதாக ஆந்திராவில் தெரிவு செய்யப்பட்டுள்ள ஜெகன்மோகன் ரெட்டியின் அரசு ஆஷா ஊழியர்களின் சம்பளத்தை மூவாயிரத்தில் இருந்து பத்தாயிரமாக உயர்த்தியுள்ளது.

தேசிய ஊரக சுகாதார திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஆஷா ஊழியர்களின் பங்கு மிக முக்கியமானதாகும். நாடெங்கும் உள்ள ஆஷா ஊழியர்கள் சம்பள உயர்வு கோரி போராடியதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு அவர்களது மதிப்பூதியத்தை சொற்ப அளவில் அதிகரித்திருந்தது மத்திய அரசு. தற்போது ஆந்திர அரசு எடுத்திருக்கும் முடிவு பிற மாநிலங்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கும்.

ஆலையில் நடந்த வெடிவிபத்தில் ஒருவர் கொல்லப்பட்டார்; இரண்டு தொழிலாளிகள் படுகாயமுற்றனர்.

தெலுங்கானாவில் உள்ள ரெஜினிஸ் வெடி மருந்துக் கம்பெனியில் நடந்து விபத்தில் ஒரு தொழிலாளி கொல்லப்பட்டார். டெட்டனேட்டர் ஒன்று தவறுதலாக தூண்டப்பட்டதால் நடந்த இவ்விபத்தில் மேலும் இரண்டு தொழிலாளிகள் படுகாயமுற்றனர். இறந்த தொழிலாளி சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர்.

கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை இந்தியாவில் தலைவிரித்து ஆடுவதாக அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களே அறிவிக்கின்றன.

மிகக் கடுமையாக விவாதிக்கப்பட்ட தேசிய மாதிரி சர்வே அமைப்பு நடத்திய தொழிலாளர்கள் குறித்த ஆய்வறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் வேலைவாய்ப்பின்மையை கணக்கிட புதிய முறைமையை மத்திய அரசு புகுத்தியுள்ளது. இப்புதிய முறையின்படி பார்த்தாலும் தேசிய அளவில் 6.1 சதவீத அளவு வேலைவாய்ப்பின்மை நிலவுவதாக தெரிய வருகிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள தரவுகள் புதிய முறையின்படி அளவிடப்பட்டது என்பதால் முந்தைய ஆண்டுகளின் தரவுகளோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2018 -ம் ஆண்டு அக்டோபர் மாதமே தயாராகிவிட்ட ஆய்வறிக்கையை மத்திய அரசு வெளிடாமல் வைத்திருந்தது. இதன் காரணமாகவே அரசு உயரதிகாரிகளுக்கும் புள்ளியியல் நிபுணர்களுக்கும் இடையே ஒரு முறுகல் நிலை தோன்றியிருந்தது. அந்த அறிக்கையின் முக்கியமான பகுதிகள் அப்போதே ஊடகங்களில் கசிந்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ஊடகங்களில் வெளியான அறிக்கையின் விவரங்கள் சரிபார்க்கப்படாதவை என அப்போது மத்திய அரசு சொன்னது. எனினும், தேர்தலில் வெற்றி பெற்றவுடன் ஊடகங்களில் வெளியான அதே அறிக்கை அதிகாரப்பூர்வமானதாக வெளியிடப்பட்டுள்ளது. வேலையின்மை அதிகரித்துள்ளதா இல்லையா என்பதைக் கடந்து நமது பொருளாதாரம் ஒரு பெரும் நெருக்கடியில் உள்ளது என்பது மட்டும் உறுதியாகியுள்ளது. உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் அருகி வரும் வேலையிடங்களே இதை உணர்த்துகின்றன.

பி.எம்.ஜே ஆய்வின்படி இந்தியாவில் நபர்வாரியான மருத்துவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

உலக சுகாதார நிறுவனம் 10,000 பேருக்கு 22.8 பேர் அளவில் மருத்துவர்கள் இருக்க வேண்டும் என நிர்ணயித்துள்ளது. இந்த அடிப்படையில் பார்த்தால் நாம் இலங்கை தாய்லாந்து உள்ளிட்ட பல தெற்காசிய நாடுகளை விட பட்டியலில் பின் தங்கியுள்ளோம். உலக சுகாதார நிறுவனம் தற்போது அபாயகரமான அளவில் மருத்துவர்கள் குறைவான நாடுகளின் பட்டியலில் இந்தியாவை வைத்துள்ளது.

விலைக் குறைப்பிற்குப் பின் 5000 ஊழியர்களின் வேலையைப் பறித்துள்ளது ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சுமார் 5,000 தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்ய முடிவெடுத்திருப்பதாக எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பெரும்பாலும் ஒப்பந்தத் தொழிலாளர்களே பணி நீக்கத்திற்கு ஆளாகி உள்ளனர். இதில் சுமார் 500 – 600 பேர் நிரந்தரத் தொழிலாளர்கள். ரிலையன்ஸ் ஜியோ பணி நீக்கம் குறித்த செய்தியை மறுத்துள்ளதோடு தாங்களே மிக அதிக பணி நியமனங்களைச் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. எனினும், குறைந்த லாபத்தில் இயங்கி வருவதால் பணி நீக்க நடவடிக்கையை அந்நிறுவனம் மேற்கொண்டுள்ளதாக எகனாமிக் டைம்ஸ் கட்டுரை தெரிவிக்கின்றது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் முதலீடுகள் அதிகரிக்கப்பட்டது மற்றும் அதிரடி விலைக்குறைப்பின் காரணமாக செல்பேசி சந்தையின் பெரும் பகுதியை அந்நிறுவனம் கைப்பற்றியுள்ளது. எனினும், அதன் நிர்வாகச் செலவுகளை உடனடியாக கட்டுப்படுத்தியாக வேண்டும் என சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர். நிர்வாகச் செலவுகளை குறைப்பதற்கு தனது பணியாளர்களின் வேலைகளைப் பறித்துள்ளது அந்நிறுவனம். இத்தனைக்கும் அதன் நிர்வாகச் செலவுகளில் தொழிலாளர்களின் ஊதியத்தின் அளவு வெறும் 5 சதவீதம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தனியாரமயமாக்கலும் தொழிலாளர் சட்டங்களைச் சீர்திருத்துவதும்தான் மோடி 2.0 அரசின் முக்கிய திட்டம்

மத்திய அரசின் சிந்தனைக் குழாமாகச் செயல்படும் நிதி ஆயோக்கின் துணை சேர்மன் இந்த அரசின் முதல் 100 நாட்களில் ஏராளமான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அதிலும் குறிப்பாக கடந்த ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்ற முடியாத தொழிலாளர் நலச் சட்டங்களில் திருத்தங்களை இம்முறை நிறைவேற்ற உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதே போல் தனியார்மயமாக்களைத் துரிதப்படுத்தவும், 46 பொதுத்துறை நிறுவனங்களை மூடவும் அரசு முன்னுரிமை வழங்கவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இவ்விரு நடவடிக்கைகளுமே பாரதிய ஜனதாவுக்கு ஓட்டளித்து வெற்றிபெறச் செய்த தொழிலாளர்களுக்கே உவப்பானதாக இருக்கப்போவதில்லை. மேலும் பரவலான வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் பொருளாதார நெருக்கடி நாட்டைக் கவ்விப் பிடித்திருக்கும் இந்நிலையில் இது போன்ற நடவடிக்கைகள் நிலைமையை மேலும் மோசமாக்கி விடும்.

படிக்க:
100 நாட்களுக்குள் 46 அரசு நிறுவனங்களை ஒழித்துக்கட்டத் துடிக்கும் மோடி அரசு !
♦ “ஏன் குல்லா அணிந்திருக்கிறாய் ? ஜெய் ஸ்ரீராம் சொல்” கொல்கத்தாவில் காவிகளின் வன்முறை !

முன்னறிவிப்பின்றி ஊதியத்தை மாற்றம் செய்வதை எதிர்த்து ஸ்விக்கி ஊழியர்கள் போராட்டம்

ஸ்விக்கி நிறுவனத்தில் பணிபுரியும் டெலிவரி ஊழியர்கள் ஊதியப் பிரச்சினைக்காக போராடி வருகின்றனர். கொச்சின், முஷீராபாத் மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்த ஊழியர்கள் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். ஸ்விக்கி நிறுவனத்தின் தொழிலாளர் விரோதப் போக்குகள் கடந்த காலங்களில் தொடர்ந்து செய்திகளில் அடிபட்டு வந்துள்ளன. திடீரென்று ஊதியம் குறைக்கப்பட்டதை அடுத்து கொச்சினைச் சேர்ந்த ஸ்விக்கி டெலிவரி ஊழியர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தத்தை கடந்த மே மாதம் 28 தேதி துவங்கி நடத்தி வந்தனர்.

நிர்வாகத்தின் தரப்பிலிருந்து இறங்கி வந்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து கடந்த வாரம் வெள்ளிக்கிழமை போராட்டம் தற்காலிகமாக திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டது. எனினும், நிர்வாகத்தினர் ஒரு வாரத்திற்குள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் மீண்டும் போராட்டத்தை துவங்கவிருப்பதாக தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.

முதலில் 4 கிலோ மீட்டர்களுக்குள் உணவு சப்ளை செய்ய 25 ரூபாயும் கூடுதல் கிலோ மீட்டர் ஒவ்வொன்றுக்கும் 5 ரூபாயுமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதை எந்த அறிவிப்பும் இன்றி 5 கிலோ மீட்டர்களுக்கு 25 ரூபாய் என மாற்றியது ஸ்விக்கி. அதே போல் காத்திருப்புக்கான கட்டணத்தையும் நீக்கியது ஸ்விக்கி நிறுவனம். இப்புதிய ஊதியம் கடந்த வாரம் திங்கட்கிழமையில் இருந்து எந்த அறிவிப்புமின்றி நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

தமிழகத்தைச் சேர்ந்த ஸ்விக்கி டெலிவரி ஊழியர்களும் கடந்த சில மாதங்களுக்கு முன் இதே போன்ற ஊதிய பிரச்சினைகளை ஒட்டி திடீர் வேலை நிறுத்தம் ஒன்றிற்கு திட்டமிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சாக்கியன்

மேலும் வாசிக்க :

♦ The Life of Labour: Job Cut at Reliance Jio, Bonanza for ASHA Workers in Andhra

ஒரு குடம் தண்ணி எடுக்க 3 மணிநேரம் ஆகும் ! | தாகத்தில் தமிழகம் – ஆவணப்படம் !

மிழகத்தின் மூலை முடுக்குகள் எங்கும் மக்கள் தண்ணீர் இன்றி பரிதவிக்கின்றனர். வடக்கே தருமபுரி தொடங்கி தெற்கே திருநெல்வேலி வரை வறண்டு கிடக்கிறது தமிழகம்.

தண்ணீருக்காக ஐந்து மணிநேரம், ஆறு மணிநேரம் காத்திருந்தாலும் ஒரு குடம் கூட நிறைவதில்லை, எனக் கண்ணீர் மல்கக் குமுறுகின்றனர் கொட்டாம்பட்டி மக்கள். மக்களின் கண்ணீரைக் காசாக்கும் இரசவாதம் தெரிந்த, அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இத்துயரத்திலும் பணம் பார்க்கும் அவலமும் நிகழ்கிறது என்பதுதான் கொடூரத்தின் சிகரம். இது ஏதோ ஒற்றை கிராமத்து பிரச்சினை இல்லை ஒட்டுமொத்த தமிழகத்தின் பிரச்சினை.

தண்ணீர் பஞ்சமும், இந்த அரசின் கையாலாகாத்தனமும் எப்படி வாழ்வின் அனைத்து அசைவுகளையும் பாதிக்கிறது என்பதை விவரிக்கிறது இந்த ஆவணப்படம். செயலிழந்து போன அரசின் தோல்வியை துலக்கமாகக் காட்டும் இந்தக் காணொளியைப் பாருங்கள்… பகிருங்கள்…


இதையும் பாருங்கள்…

தாகத்திற்கா தண்ணீர் லாபத்துக்கா ? – கோவன் பாடல் !

 

இந்தியா : உலகளவில் பெண்கள் வாழ்வதற்கு ஆபத்தான நாடு !

1

லகளவில் பெண்கள் வாழ்வதற்கு ஆபத்தான நாடு எனப் பெயரெடுத்துள்ளது இந்தியா. கடந்த 2018-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பின் முடிவு இவ்வாறு தெரிவிக்கிறது. இதே போன்றதொரு கருத்துக்கணிப்பில் ஏழாண்டுகளுக்கு முன் நான்காம் இடத்தில் இருந்தது இந்தியா.

உலகப் பொருளாதார மன்றம் (World Economic Forum) பாலின ஏற்றத்தாழ்வு மிகுந்த நாடுகளின் தரப் பட்டியலில் இந்தியாவுக்கு 108-வது இடத்தை வழங்கியுள்ளது. இந்தப் பட்டியலில் இருந்தது மொத்தம் 144 நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்படி ஆய்வானது பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் மற்றும் அரசியல் அதிகாரம் போன்றவற்றில் பெண்களின் பங்கேற்பை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்டதாகும்.

அதே போல் 2017-18 ஆண்டுகளுக்கான “பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்புக் குறியீட்டுப் பட்டியலில்” கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்ட 153 நாடுகளில் இந்தியா 131-வது இடத்தைப் பிடித்தது. இந்த ஆய்வானது, பெண்களின் சமூக இணைப்பு, நீதி, பாதுகாப்பு உள்ளிட்ட 11 அம்சங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு நடத்தப்பட்டதாகும்.

இந்திய மக்கள் தொகையில் 49 சதவீதம் உள்ள பெண்களின் பாராளுமன்ற பங்கேற்பு வெறும் 12 சதவீதம்தான். அதே போல் பெண் தொழிலாளிகளின் சதவீதம் 2006-ம் ஆண்டு 37 சதவீதமாக இருந்து, 2017-ல் 27 சதவீதமாக சரிந்துள்ளது என்கிறது உலக வங்கியின் அறிக்கை ஒன்று. இதனடிப்படையில் 181 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா வகிப்பது 163-வது இடமாகும்.

முந்தைய காலத்தை விட இப்போது பெண்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபடுகின்றனர். இதில் பல தொழில்துறைகள் இதுகாறும் ஆண்களுக்கேயானது எனக் கருதப்பட்டு வந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. வாடகை வாகனங்கள் ஓட்டுவது, தொடர்வண்டி ஓட்டுநர், அறுவை சிகிச்சை நிபுணர், ஒலிம்பிக் வீரர் என்பதில் துவங்கி விமானங்கள் ஓட்டுவது வரை பெண்கள் ஈடுபடுகின்றனர். ஊரகப் பகுதிகளில் கூட பஞ்சாயத்து அளவிலான பொறுப்புகளை பெண்கள் வகித்து வருகின்றனர்.

2018-ம் ஆண்டுக்கான பொருளாதார கருத்துக்கணிப்பின் படி, கிராமப் பஞ்சாயத்துகளில் 43 சதவீதம் பெண்கள் தலைமை ஏற்றுள்ளனர். பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் அடிப்படையில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பதாலேயே இந்த பங்கேற்பு சாத்தியமாகி உள்ளது என்பதோடு, அவ்வாறு கிராமப்புற பெண்கள் பஞ்சாயத்து உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டாலும் பெரும்பாலும் அவர்கள் தங்களது கணவன்மார்களின் கட்டுப்பாட்டிலேயே செயல்பட்டாக வேண்டும் என்பதும் கவனத்திற்குரியது.

படிக்க:
பெண்களின் உயிரை உறிஞ்சும் ஆயத்த ஆடை தொழிற்சாலைகள் !
♦ மோடி ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு : உண்மை நிலவரம் என்ன ?

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது வேலை வாய்ப்புகளில் பெண்களின் பங்கேற்பு சதவீதம் பெருமளவிற்குக் குறைவாகவே உள்ளது என்கிறார் வழக்காடுதல் மற்றும் சட்ட ஆலோசனை சங்கத்தைச் (Association for Advocacy and Legal Initiatives (AALI)) சேர்ந்த ரேணு மிஷ்ரா. மேலும், அவ்வாறு குறைந்த சதவீதமாக இருக்கும் பெண் தொழிலாளிகளுக்கு அதேபோன்ற வேலையில் ஈடுபடும் ஆண் தொழிலாளிகளோடு ஒப்பிடும்போது குறைந்த ஊதியமே வழங்கப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். பெண்கள் தங்களது சொந்த முடிவுகளைக் கூட எடுக்க முடியாத நிலையையும், திருமண பந்தம் குறித்து ஒரு முடிவெடுக்கும் சுதந்திரம் இல்லாதிருப்பதையும் ரேணு சுட்டிக் காட்டுகிறார்.

தன்னுடைய வயதைக் கணக்கில் கொண்டு பார்த்தால் வேலை மற்றும் சொந்த வாழ்க்கைக்கு இடையிலான சமன்பாட்டை சமாளிப்பது பெரும் சவாலாக இருக்கிறது என்கிறார் மார்பகப் புற்றுநோய் நிபுணர் மருத்துவர் பூஜா ரமாகாந்த். “ஒரு பெண் அறுவை சிகிச்சை நிபுணர் எனும் வகையில் எனது ஆண் சக மருத்துவர்களைக் காட்டிலும் அதிக போராட்டங்களை நான் சந்திக்க வேண்டியுள்ளது. ஒரு ஆண் வழிச் சமூகம் விதித்துள்ள சட்டகத்திற்குள் மற்றவர்கள் ஏற்படுத்தியுள்ள சமூக நடைமுறைக்குள் ஒரு பெண் பொருந்திப் போக வேண்டும் என ஏன் எதிர்பார்க்கிறார்கள்? அது அந்தப் பெண்ணுக்கு நல்லது என்பதாகவே கூட இருக்கட்டுமே?” எனக் கூறும் பூஜா, பொருளாதார ரீதியில் நல்ல நிலைமையில் உள்ள பெண்களும் கூட சமூகத்தில் பிறர் என்ன சொல்வார்களோ என்கிற அச்சத்தால் தங்களுக்குப் பொருந்தாத திருமண பந்தத்தில் உழல்வதாகக் குறிப்பிடுகிறார்.

பெண்கள் கல்வி பெறுவதில் உள்ள சவால்களைப் பட்டியலிடுகிறார் கல்வியாளர் மரு. சித்ரா சிங். ஊரகப் பகுதிகளில் பெண்களுக்கான கல்வி நிலையங்கள் குறைவு என்பதோடு பெற்றோரும் தங்கள் பெண் குழந்தை நீண்ட தொலைவு சென்று படிப்பது பாதுகாப்பானதில்லை எனக் கருதுகின்றனர். மேலும், இருக்கும் பள்ளிகளிலும் ஒழுங்கான கழிவறை வசதிகள் இல்லாமல் இருப்பதை சுட்டிக்காட்டுகிறார் சித்ரா.

அடுத்து, ஒரு பெண் குழந்தையின் கல்விக்கு செலவு செய்து அவளை இன்னொருவருக்கு கட்டிக் கொடுத்து விடுவதைக் காட்டிலும், ஆண் குழந்தையைப் படிக்க வைத்தால் அவன் தங்களைப் பிற்காலத்தில் பார்த்துக் கொள்வான் என பொருளாதார ரீதியில் பின் தங்கிய பெற்றோர் கருதுவதையும் சித்ரா குறிப்பிடுகிறார்.

படிக்க:
மனைவியின் பிரிவிலும் மக்களுக்காக நின்ற மருத்துவர் ரமேஷ் !
♦ அர்ஜுன் ரெட்டி போல ஒருவருடன் வாழ நேர்ந்தால் எப்படி இருக்கும் ?

சரி, இந்த சிக்கலுக்கு என்னதான் தீர்வு?

வாழ்க்கை என்பது ரோஜா மலர்கள் தூவப்பட்ட படுக்கையாகவும் இருக்க வேண்டாம்; அதே போல் முட்கள் நிறைந்த சிம்மாசனமாகவும் இருக்க வேண்டாம். பெண்கள் தனிப்பட்ட முறையில் குடும்பத்தாராலும், சமூகத்தாலும் நிர்பந்திக்கப்படும் ஆண் வழிச் சமூகத்தின் நெறிமுறைகளுக்குக் கட்டுப்படத் தேவையில்லை என்கிறார் ரேணு. பெண்கள் தங்களுடைய கல்விக் கூடங்களில், பணி இடங்களில், இன்னபிற இடங்களில் இதற்கு எதிராக அச்சமின்றிப் போராட வேண்டும் என்கிறார். பெண்கள் பொருளாதார ரீதியில் சுதந்திரம் பெறாமல் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்கிறார் சித்ரா.

தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை இனிமேலும் அமைதியாகப் பொறுத்துக் கொண்டிராமல் அவற்றை எதிர்த்துப் போராட வேண்டும் என்கிறார் பூஜா. சமூகத்தை நினைத்து அஞ்சாமல் அவர்களது தெரிவுகளை – அது வேலையோ, குடும்பமோ – சொந்த முறையில் செய்ய வேண்டும் என்கிறார். மேலும், வீட்டு வேலைகளை எல்லா உறுப்பினர்களும் சமமாக பங்கிட்டுச் செய்ய வேண்டும் என்பதைப் பெண்கள் வலியுறுத்த வேண்டும் என்கிறார் பூஜா. “வேலைக்குச் செல்கிறார்களோ இல்லையோ.. எல்லா பெண்களும் வேலையில் இருக்கிறார்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது” என்கிறார்.

பெண்கள் அச்சமின்றிப் போராடுவதே தீர்வு என்பதை இவர்கள் தங்களுக்கே உரிய முறையில் வெவ்வேறு வார்த்தைகளில் முன்வைக்கின்றனர். அந்தப் போராட்டத்தோடு தோள் கொடுப்பது அனைவரின் கடமையும் கூட. மக்கள் தொகையில் சரிபாதியாக இருக்கும் பெண்களின் உரிமைகளுக்காகப் போராடுவது பெண்களுக்கு மட்டுமே விதிக்கப்பட்டதல்ல; அதில் பாலின வேறுபாடின்றி அனைவரும் கைகோர்ப்பதே சரியானதும், அவசியமானதும் ஆகும்.

சாக்கியன்

திராவிட மலர்ச்சிக்குத் தாமதம் ஏற்படக்கூடுமே தவிர தடையேற்படாது !

அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் | பகுதி – 07

ரியர் –  திராவிடர் பிரச்சினை பற்றியும், பெரியாரின் திட்டமாகிய திராவிட நாட்டுப் பிரிவினை விஷயமாகவும் சாஸ்திரியார் பேசியிருப்பதுடன், அவை ஆதாரமற்றவை, ஆபத்தானவை என்றும் கண்டித்திருக்கிறார்.

பலமான அஸ்திவாரம் போட்டுக் கொள்ள வேண்டுமென்று சாஸ்திரியார் நினைக்கிறார். ஆகவே இந்து என்ற சொல்லுக்கே அவர், “இந்து என்றால், இந்த நாட்டைப் பிறந்த இடமாகவும் புண்ணிய பூமியாகவும் கருதுகின்றவன் என்பது பொருள்” என்று கூறுகிறார்.

இவரது வியாக்கியானத்துக்கு ஆதாரம் என்ன என்பதை அவர் கூறவில்லை .

“இந்து” என்ற பதத்திற்கு இதுவரை ஆராய்ச்சியாளர்களும், சரித்திரம் எழுதினோரும், அகராதிக்காரர்களும் கொடுத்துள்ள பொருள் என்ன என்று கேட்கிறோம்.

படித்த எவரிடமும் உள்ள ஜெம் அகராதியில் (Gem Dictionary) பார்க்கட்டும். மேதாவிகளுக்குத் தோழன் எனக் கருதப்படும் சேம்பர்ஸ் (Chambers) அகராதியைப் பார்க்கட்டும். பல நாட்டுத் தகவல்களைத் தொகுத்துத் தரும் என்சைக்ளோபீடியாக்களைப் பார்க்கட்டும். ”இந்து’’ என்பதற்கு என்ன பொருள் தரப்பட்டு இருக்கிறது என்பது விளங்கும். ஒரு டி.ஏ.சாமிநாதய்யர் என்பவர் வெளியிட்டாரே (Gem) ஜெம் அகராதி , அதில் ”இந்து”  என்பதற்கு 467- ம் பக்கத்தில் பொருள் கூறப்பட்டிருக்கிறது. யாது அப்பொருள்?

இந்து என்றால், சனாதன தர்மானுசாரி! இந்துஸ்தானம் என்பதற்கு பியர்ஸ் என்சைக்ளோபீடியா தந்துள்ள பொருள் : இமயத்துக்கும் விந்தியமலைக்கும் இடையே உள்ள பிரதேசத்தில் ஒரு பகுதி என்பதாகும். இந்து என்பது ஆரியரையும், இந்துஸ்தானம் என்பது ஆரிய வர்த்தனத்தையும் குறிக்கும். இதைச் சாஸ்திரியார் மறுக்க எந்த ஆதாரத்தையும் – அவரது ஆத்திரத்தைத் தவிர – காட்டுவதற்கில்லை.

இந்த இந்துஸ்தானம், இந்து, இந்துமதம் ஆகியவற்றிற்கும், திராவிடநாடு, திராவிடர், திராவிடர் சமயம் ஆகியவற்றுக்கும் அடிப்படையான வேறுபாடுகள் உள்ளன. நிலவளம் முதற்கொண்டு மக்கள் மனவளம் வரை வேறுபாடுகள் உண்டு. வேறுபாடுகள் இருப்பினும் கேடொன்றும் நேரிடாது என்றிருக்கலாம்! முரண்பாடுகள் உள்ளன! அவற்றை மறைத்துப் பயனில்லை; மூடி வைத்து ஆகப் போவது ஒன்றுமில்லை. மிக்க தந்திரத்தோடு ஆரியர் காங்கிரசின் துணையை நாடியோ, இந்து மகாசபையின் துணை கொண்டோ, வெள்ளையரின் துணை கொண்டோ திராவிட மலர்ச்சியைத் தடுக்க முயன்றால், “தாமதம் ஏற்படக் கூடுமே தவிர, ”தடை”யேற்படாது. முடிவு பிரிவினைதான்!

சரிதமும் இலக்கியமும், சான்றோர் சொல்லும் திராவிடமும் தனிநாடாக இருந்ததை மெய்ப்பிக்கின்றன. வேதகாலம் முதற்கொண்டு வேற்று நாட்டு மன்னர்கள் படையெடுப்புக் காலம் வரை திராவிடம் தனி நாடாகவே இருந்தது!

ஆரிய ராஜ்யங்களாகக் காந்தாரம், காம்போஜம், விதேகம் முதலியன இருந்தபோதும், திராவிடம் தனி ஆட்சியாகவே இருந்தது !

இராஜக்கிருகத்தைத் தலைநகராகக் கொண்டு “மகோன்னத” மாக மகதராஜ்யம் நடத்தப்பட்ட போதும், திராவிடம் தனிதான். மகதராஜ்யத்தின் ”மணிகள்’ எனப் பாணினி, பதஞ்சலி முதலிய “ஆரிய சிரேஷ்டர்கள்” ஒளி வீசவும் நாளந்தா, விக்ரமசீலா முதலிய ஆரிய சர்வகலா சாலைகள் ஆரியக் கதிர்களைப் பரப்பியபோதும், ஆரிய ஒளியும் – கதிரும் , விந்தியத்தைத் துளைத்துக் கொண்டு திராவிடத்தினுள்ளே வரமுடியவில்லை, திராவிடம் தலை நிமிர்ந்தே நின்றது.

சாணக்கியத் தந்திரம் இந்து சாம்ராஜ்யத்தைக் கட்டியாண்ட சந்திரகுப்தன் காலத்திலும், திராவிடம் தனியாகவே இருந்தது.

படிக்க:
“ஏன் குல்லா அணிந்திருக்கிறாய் ? ஜெய் ஸ்ரீராம் சொல்” கொல்கத்தாவில் காவிகளின் வன்முறை !
காவிரி டெல்டாவை எச்சரிக்கிறது நைஜர் டெல்டா !

அன்புடன் கூடிய ஆட்சியை நடத்திய அசோகர் காலத்தில் மட்டுமே, திராவிட எல்லைப் பிரதேசத்தின் ஒரு பகுதியை வடநாட்டு வல்லரசு தன்னுள் கொண்டிருந்தது. கடுமையான கலிங்கப் போருக்குப் பிறகு, இந்தப் பகுதி அசோகர் ஆட்சிக்குட்பட்டது. ஆனால் அந்தப் போரில் கலிங்கர் காட்டிய வீரம் அசோகரைத் திணற வைத்ததுடன், விடுதலை வீரர்கள் மடிந்து வீழ்ந்த குழிகள் அவரது குலையை நடுங்க வைத்தது! அதனால் இனிச் சண்டையே வேண்டாம் என்று கூறுமாறும் அன்புடன் ஆளவேண்டும் என்ற போக்கை அவர் கொள்ளும்படியும் செய்வித்தது. திராவிடம் காட்டிய வீரம் அசோகருக்கு அறத்தின் மீது அளவிலாப் பற்றுப் பிறக்கும்படிச் செய்தது.

குஷான் வகுப்பினர் ஏற்படுத்திய இராஜ்யம், விரிந்து பரந்து இருந்தது; ஆனால் விந்தியத்தோடு நின்றது. திராவிடம் தனி நாடே.

சந்திரகுப்தன்.

வீணை வாசிப்பதால் விற்பன்னர்களைப் பரவசப்படுத்தவும், வாள் எடுத்து வீசுவதால் வீரர்களைப் பயங்கொள்ளச் செய்யவும் ஒருங்கே ஆற்றல் பெற்றவரும் இந்திய நெப்போலியன் என்ற பட்டத்தைச் சரித்திராசிரியரிடமிருந்து பெற்றவரும், சூரனுமாகிய சந்திரகுப்தன் தனது வீரம் முழுவதையும் நர்மதை ஆற்றுக்கு மேலேதான் காட்ட முடிந்தது. திராவிடம் புகவில்லை !

மாளவம், கூர்ஜரம், சௌராஸ்டிரம் ஆகிய ராஜ்யங்களை வீழ்த்தியவனும் காளிதாஸர், அமரசிம்மர், தன்வந்திரி ஆகிய ஆரியக் கலைவல்லாருடன் அளவளாவி ஆண்டவனுமான விக்கிரமாதித்தியன் என்ற காரணப் பெயரும், இரண்டாம் சந்திரகுப்தன் என்ற இயற்கைப் பெயரும் பெற்ற மன்னனையும் விந்தியம் மடக்கிவிட்டது. அவன் திராவிடநாடு புகவில்லை !

ஆரியம் உச்சநிலை அடைந்திருந்த காலம் அது. ‘பொற்காலம்’ என்று புகழ்பெற்ற நேரம், புரோச் காம்பே துறைமுகங்களில் வியாபாரம் செழித்த சமயம். ஆரியபட்டர் தமது ஆற்றலைக் காட்டிய நேரம். ‘இந்து மதம்’ என்றுமடையா ஆதிக்கம் பெற்று புத்த மதத்தை ஒடுக்கிய சமயம். அந்தப் பொற்காலத்திலும் (Golden Age) திராவிடம் தனி நாடாகவே தழைத்திருந்தது.

(தொடரும்)

அண்ணாவின் ஆரிய மாயை
பக்கங்கள் : 64
விலை : ரூ. 40.00
வெளியீடு : திராவிடர் கழகம்
நூல் கிடைக்குமிடம் : கீழைக்காற்று வெளியீட்டகம்.

ஆரிய மாயை என்னும் இந்நூல் கா.ந. அண்ணாதுரை (அண்ணா) எழுதிய சிறு நூலாகும். அண்ணாவின் படைப்புகளில் மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய சில நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலில் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை பற்றியும், பார்ப்பனர்களின் சிறுமதி குறித்தும் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து அம்பலப்படுத்தியிருக்கிறார். இக்காரணங்களுக்காக, அவருக்கு ரூபாய் 700 அபராதம் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் சென்னை மாநில அரசால் அண்ணாவுக்கு அளிக்கப்பட்டது.

முந்தைய பகுதிகள் : அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை

கடிதங்களைக் கண்டதும் கட்டுகள் போட்ட கரங்கள் விடுதலை பெற்றன

உண்மை மனிதனின் கதை | இரண்டாம் பாகம் | அத்தியாயம் – 7-அ

“லெப்டினன்ட் க்யோஸ்தியேவ், குதி போடுங்கள்! அட, நீங்கள் என்ன இப்படி?”

க்யோஸ்தியேவின் உடம்பு சிலிர்த்ததை மெரேஸ்யெவ் கண்டான். அக்கணமே க்யோஸ்தியேவ் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, நடுங்கும் குரலில் அலட்சியபாவத்தைக் காட்ட முயன்றவாறு, “தவறு. பக்கத்து வார்டிலே வேறு யாரோ ஒரு க்யோஸ்தியேவ் இருந்தான்” என்றான்.

எனினும், தாதி கொடிபோன்று உயர்த்திப் பிடித்திருந்த மூன்று உறைகளை அவனுடைய விழிகள் ஆர்வத்துடன், நம்பிக்கை தோன்ற நோக்கின.

“இல்லை, உங்களுக்குத்தான். பாருங்கள்: லெப்டினன்ட் கி. மி. க்யோஸ்தியேவுக்கு என்று எழுதியிருக்கிறதே. நாற்பத்து இரண்டாம் வார்டு என்றும் குறித்திருக்கிறது. ஊம்?”

கட்டுகள் போட்ட கரம் போர்வைக்கு உள்ளிருந்து ஆசையுடன் வெளியே துள்ளி வந்தது. கடிதத்தைப் பற்களால் பற்றி பொறுமையின்றிக் கிள்ளிக் கிள்ளி அவன் உறையைப் பிரித்த போது கை நடுங்கிக் கொண்டிருந்தது. க்யோஸ்தியேவின் கண்கள் கட்டுக்களின் இடையிலிருந்து சுடர் வீசின. விஷயம் விந்தையாக இருந்தது. ஒரே பல்கலைக்கழகத்தில் ஒரே வகுப்பில் படித்துக் கொண்டிருந்த மூன்று தோழிப் பெண்கள் வெவ்வேறு கையெழுத்துக்களில், அனேகமாக ஒரே விஷயத்தை வெவ்வேறு சொற்களில் எழுதியிருந்தார்கள். டாங்கிப்படை வீரர் லெப்டினன்ட் க்யோஸ்தியேவ் காயமடைந்து மாஸ்கோவில் சிகிச்சை பெற்று வருவதாக அறிந்து அவருடன் கடிதத் தொடர்பு கொள்ள அவர்கள் தீர்மானித்தார்களாம். அவர்களுடைய நச்சரிப்பால் லெப்டினன்ட் க்யோஸ்தியேவ் கோபம் அடையாவிடில், தாம் எப்படியிருக்கிறார், அவர் உடல் நிலை எப்படி இருக்கிறது என்று எழுதும்படி கேட்டுக் கொள்கிறார்களாம். “அன்யூத்தா” என்று கையொப்பம் இட்டிருந்த ஒரு பெண் எழுதியிருந்தாள்: “ஏதாவது ஒரு விதத்தில் தங்களுக்கு உதவ என்னால் முடியாதா? தங்களுக்கு நல்ல நூல்கள் ஒருவேளை வேண்டியிருக்குமே? ஏதேனும் தேவைப்பட்டால் கூச்சப்படாமல் எனக்கு எழுதுங்கள்.”

க்யோஸ்தியேவ் பகல் முழுவதும் இந்தக் கடிதங்களைத் திருப்பித்திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தான், முகவரிகளைப் படித்தான், கையெழுத்துக்களை ஊன்றிக் கவனித்தான். இவ்வகையான கடிதப் போக்குவரத்துக்களை அவன் கட்டாயமாக அறிந்திருந்தான். ஆனால் இந்தக் கடிதங்கள் எதிர்பாராத விதமாக ஒரே சமயத்தில் வந்திருந்தன என்பதுதான் அவனுக்கு வியப்பளித்தது. மருத்துவப்பிரிவு மாணவிகள் அவனுடைய போர்ச் செயல்கள் பற்றி எப்படித் திடீரென்று தெரிந்து கொண்டார்கள் என்பதும் விளங்கவில்லை. வார்டுக்காரர்கள் எல்லாருமே இந்த விஷயம் புரியாமல் திகைத்தார்கள் – யாவரிலும் அதிகமாகத் திகைத்தார் கமிஸார். ஆனால் அவர் ஸ்தெபான் இவானவிச்சுடனும் மருத்துவத் தாதியுடனும் பரிமாறிக் கொண்ட பொருள் பொதிந்த பார்வையை மெரேஸ்யெவ் கண்டு கொண்டான். இது கமிஸாரின் கைவேலைதான் என்பது அவனுக்குப் புரிந்து விட்டது.

அது எப்படி ஆயினும் மறுநாள் காலையில் க்யோஸ்தியேவ் கமிஸாரிடம் காகிதங்களை கேட்டு வாங்கி, வலது கையை மருத்துவர் அனுமதி இன்றியே கட்டவிழ்த்து, சாயங்காலம் வரை எழுதுவதும் அடிப்பதும் கசக்கி எறிவதும் மறுபடி எழுதுவதுமாக, தனது அறிமுகமற்ற கடிதத் தோழிகளுக்குப் பதில் வரைந்து கொண்டிருந்தான்.

இரண்டு பெண்கள் தாமாகவே ஒதுங்கிக் கொண்டார்கள். ஆனால் அக்கறையுள்ள அன்யூத்தா மூவருக்கும் சேர்த்து எழுதலானாள். க்வோஸ்தயேவ் ஒளிவு மறைவற்ற சுபாவம் உள்ளவன். எனவே மருத்துவப் பிரிவின் மூன்றாவது ஆண்டு வகுப்பில் நடப்பதை வார்டு முழுவதும் அறிந்து கொண்டது.

க்வோஸ்திக் பேச மட்டும் தொடங்கவில்லை. அவன் ஒரு வகையில் முற்றிலும் மலர்ந்து விட்டான். அவன் உடல் நிலை விரைவாகச் சீர்படலாயிற்று. குக்கிஷ்கினுக்கு வைத்துக் கட்டப்பட்டிருந்த சிம்பு எடுத்து விடப்பட்டது. ஸ்தெபான் இனாவிச் கவைக்கோல்கள் இல்லாமல் நடக்கப் பயின்றார், போதிய அளவு நேராக முன் செல்லலானார். கமிஸாருக்கும் மெரேஸ்யெவுக்கும்தான் உடல் நிலை நாளுக்கு நாள் மோசமாகிகொண்டு போயிற்று. அதிலும் கமிஸார் வெகு விரைவாகப் படுத்த படுக்கை ஆகிவிட்டார்.

அறைத்தாதி தினந்தோறும் காலையில் அவருடைய முகத்தைக் கழுவித் துடைப்பாள், சிறு கரண்டியால் அவருக்கு உணவு ஊட்டுவாள். கொடிய வேதனை அல்ல, இந்த ஏலாமைதான் அவரை வாட்டி வதைக்கிறது, அவருக்குக் கட்டுக்கு அடங்காத கோபம் உண்டாகிறது என்பது எல்லோருக்கும் புலப்பட்டது. ஆனால் அப்போதும் அவர் உள்ளம் சோர்ந்து விடவில்லை. முன் போலவே அவருடைய கட்டைக் குரல் பகலில் அதிர்ந்து ஒலித்தது, செய்தித் தாள்களில் செய்திகளை முன் போலவே ஆர்வத்துடன் அவர் படித்தார், ஜெர்மானிய மொழியைக் கூட தொடர்ந்து கற்றுக் கொண்டார். ஸ்தெபான் இவனாவிச் தனிப்பட அமைத்த கம்பிப் புத்தகந்தாங்கி மீது அவருக்காகப் புத்தகங்களை வைக்க வேண்டியதாயிருந்தது, ஸ்தெபான் இனாவிச் அவர் அருகே உட்கார்ந்து அவருக்காகப் பக்கங்களை திருப்பினார் என்பதுதான் வித்தியாசம்.

அவருடைய உடல் எவ்வளவு பலவீனம் அடைந்து திறனிழந்ததோ அவருடைய உள்ளம் அவ்வளவே அதிகப் பிடிவாதமும் வலிமையும் பெற்றதாகத் தோன்றியது. முன் போன்ற அதே அக்கறையுடன் அவர் ஏராளமான கடிதங்களைப் படித்து அவற்றிற்கு பதில்கள் அளித்து வந்தார். பதில்களை அவர் சொல்ல, குக்கூஷ்கினோ அல்லது க்வோஸ்தியேவோ எழுதுவார்கள். ஒரு நாள் சிகிச்சைக்குப் பிறகு உறங்கத் தொடங்கியிருந்த அலெக்ஸேய் அவருடைய இடிக் குரலைக் கேட்டு விழித்துக் கொண்டான்.

“சிவப்பு நாடாக்காரர்கள்!” என்று கோபம் பொங்க முழங்கினார் கமிஸார். கம்பிப் புத்தகந்தாங்கியில் வைத்திருந்த டிவிஷன் தினத்தாள். “படைப் பிரிவிலிருந்து வெளியே எடுத்துச் செல்லலாகாது” என்ற உத்தரவை மதியாமல் ஒரு நண்பன் அதை கமிஸாருக்கு ஒழுங்காக அனுப்பிக் கொண்டிருந்தான். “அங்கே தற்காப்பில் உட்கார்ந்து அவர்களுக்கு மூளை மழுங்கிவிட்டது. க்ரோவ்த்ஸோவாவது, அதிகாரச் சடங்கு பாராட்டுபவனாவது! சேனையிலேயே தலைசிறந்த மிருகவைத்தியன் சடங்கு பாராட்டுபவனோ ? கிரிகோரிய், எழுது, எழுது, இந்தக் கணமே!”

சேனையின் இராணுவ சபை உறுப்பினர் ஒருவருக்குச் சினம் பொங்கும் அறிக்கையை அவர் சொல்ல க்வோஸ்தயேவ் எழுதலானான். உழைப்பாளியான ஒரு நல்ல மனிதனுக்குக் காரணமின்றி அவப்பெயர் சூட்டிய பொறுப்பற்ற ‘எழுத்தர்களை’ அடக்கிவைக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

மருத்துவத்தாதி வசம் கடிதத்தை அனுப்பிய பிறகும் அவர் இம்மாதிரிச் “சளப்பர்களை” வெகுநேரம் வரை காரசாரமாகத் திட்டி நொறுக்கிக் கொண்டிருந்தார். தலையணை மேல் தலையை திருப்பக் கூட ஏலாத வாயிலிருந்து செயலார்வம் ததும்பும் இந்தச் சொற்களைக் கேட்க விந்தையாக இருந்தது. …

படிக்க:
“ஏன் குல்லா அணிந்திருக்கிறாய் ? ஜெய் ஸ்ரீராம் சொல்” கொல்கத்தாவில் காவிகளின் வன்முறை !
காவிரி டெல்டாவை எச்சரிக்கிறது நைஜர் டெல்டா !

மாலையில் கமிஸார் உடல் நிலை இன்னும் மோசமாயிற்று. கற்பூரத் தைலம் ஊசி மூலம் செலுத்தப்பட்டது. ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டது. நெடு நேரம் அவருக்கு நினைவு திரும்பவில்லை. உணர்வுக்கு வந்ததுமே கமிஸார் ஆக்ஸிஜன் பையும் கையுமாகத் தம் அருகே நின்ற க்ளாவ்தியா மிஹாய்லவ்னாவை நோக்கிப் புன்முறுவல் செய்ய முயன்றார்.

நோயுடன் கடும் போராட்டத்தில் ஆவேசம் பொங்க எதிர்த்து நின்றவாறு இந்த, விறல் மிக்க மனிதர் நாளுக்கு நாள் வலிமை குன்றுவதைக் காணத் தாங்க முடியாத வேதனை உண்டாயிற்று.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் ஸ்டெர்லைட் நிர்வாகம் – மீளவிட்டான் மக்கள் புகார் !

சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் ஸ்டெர்லைட் நிர்வாகம் – மீளவிட்டான் மக்கள் ஆட்சியரிடம் புகார் !

மதிப்புடையீர்,

எங்கள் கிராமத்தில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் கிராமத்தில் நாடார், கோனார், பறையர், அருந்ததியர் என அனைத்து சமூக மக்களும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம்.

கடந்த ஆண்டு ஸ்டெர்லைட் ஆலை பாதிப்புகளிலிருந்து விடுபடுவதற்காக ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தொடர் போராட்டம் நடந்தது. எங்கள் கிராமத்திலும் ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி எங்கள் ஊரில் தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அமைதிப் போராட்டம் நடத்தினோம்.

மே-22, 2018-ல் நடந்த இப்போராட்டத்தில் காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டிற்கு அப்பாவி மக்கள் 13 பேர் பலியானார்கள். நிறைய பேர் நிரந்தர ஊனமாகி காணப்படுகின்றனர். அதன் பிறகு தமிழக அரசு அரசாணை பிறப்பித்து அதன் மூலம் ஸ்டெர்லைட் ஆலையை தற்போது வரை மூடியுள்ளது. இந்த நிலைமையில் ஸ்டெர்லைட் நிறுவனம் எங்கள் ஊரில் மரக்கன்று நடுவது, குடிதண்ணீர் விநியோகிப்பது, பள்ளிக் குழந்தைகளுக்கு கல்விக் கடன் கொடுப்பது, மாதா மாதம் சிலர் பெயரில் வங்கியில் பணம் டெபாசிட் செய்வது என்ற பெயரில் எங்கள் ஊரில் பொது அமைதியைக் குலைக்கிறது.

தற்போது அரசாணை மூலமும், நீதிமன்றத் தீர்ப்பாணை மூலமாகவும் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. இதனால் எந்த பிரச்சினையும் இன்றி நாங்கள் அமைதியாக எந்த போராட்டமும் செய்யாமல் அரசு ஆணைக்கு கட்டுப்பட்டு உள்ளோம்.

மக்கள் தூத்துக்குடி ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் அளித்த மனுவின் நகல் :

(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)

ஆனால் எங்கள் ஊரைச் சேர்ந்த ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் சிலர் ஸ்டெர்லைட்டிடமிருந்து முறைகேடாக பணத்தைப் பெற்றுக்கொண்டு ஊரின் பெயரை தவறாக பயன்படுத்தி லாபம் அடைந்து வருகின்றனர். அவர்களால் எங்கள் ஊரில் பொது அமைதி குலைந்து சட்டம் ஒழுங்கு சீர்குலையும் நிலையில் உள்ளது. இது சம்பந்தமாக சம்பத்தப்பட்ட காவல் நிலையங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் – இதற்கு முன்பு பல புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது 18.6.2019-ம் தேதி நாளிதழ்களில் ஸ்டெர்லைட் சார்பில் தூத்துக்குடி பகுதியை சுற்றி சிறுதொழில்களை ஊக்குவிக்கும் விதமாக, கிராம மக்கள் 122 பேருக்கு ரூபாய் 5 லட்சம் மதிப்பில் இஸ்திரி பெட்டி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியதாகவும் செய்திகள் வந்துள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு எங்கள் ஊரைச் சேர்ந்த முத்துராஜ் மற்றும் பழனிக்குமார் உள்ளிட்டோர் தங்களை ஊர்த் தலைவர் என்று அறிவித்துக் கொண்டு அந்த நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்துள்ளனர். இந்தச் செய்தி எங்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

படிக்க :
♦ ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை ! பசுமை தீர்ப்பாய உத்தரவு செல்லாது ! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு !
♦ ஹைட்ரோ கார்பன் : தமிழகத்தைச் சுடுகாடாக்க மீண்டும் நுழைகிறது வேதாந்தா !

ஏனெனில் எங்கள் கிராமத்தில் மேற்படி இருவரும் கிராமத் தலைவர்கள் கிடையாது. அவர்கள் தங்களைத் தாங்களே கிராமத் தலைவர்கள் என்று அறிவித்துக் கொண்டு ஸ்டெர்லைட்டிடம் இருந்து பணம் பெற்று வருகின்றனர். ஊரில் உள்ள ஒரு சிலருக்கு பணத்தாசை காண்பித்து ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேண்டும் என்று அரசாணைக்கு எதிராக பிரச்சாரம் செய்கிறார்கள்.

இதனால் எங்கள் ஊரில் சட்டம் ஒழுங்கு கெட்டு பொது அமைதி சீர்குலைந்து வருகிறது. எங்கள் கிராமத்தில் நாடார் சமூகத்திற்கு தங்கவேல் நாடார் என்பவரும், கோனார் சமூகத்துக்கு மாடசாமி கோனார் என்பவரும் தலைவர்களாக உள்ளனர். உண்மை இவ்வாறு இருக்க மேற்படி முத்துராஜ் மற்றும் பழனி குமார் தங்களை தலைவர்களாக அறிவித்துக்கொண்டு ஸ்டெர்லைட் நிறுவனம் வழங்கி வரும் முறைகேடான பணத்தையும், பொருட்களையும் பெற்றுக்கொண்டு எங்கள் ஊர் நற்பெயருக்கு களங்கம் விளைவித்து வருகின்றனர். நாங்கள் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து பணம் பெறுவதை பாவம் என்றும், இறந்த 15 பேருக்கு செய்யும் துரோகம் எனவும் கருதுகிறோம்.

எங்கள் ஊர் பொதுமக்கள் முடிவுக்கு விரோதமாகவும், ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகவும் செயல்பட்டுக்கொண்டு ஊரில் குழு மோதல்களை ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கு பிரச்சினையைத் தூண்டிவிடும் ஸ்டெர்லைட் நிர்வாகத்தினர் மீதும், முத்துராஜ் மற்றும் பழனிக்குமார் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவரிடமும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் மனு அளித்துள்ளோம்.

இப்படிக்கு
மீளவிட்டான் கிராம பொதுமக்கள்,
தூத்துக்குடி.

நாசா அதிர்ச்சி : மீனாட்சி அம்மன் கோவிலின் விண்வெளி அதிசயங்கள் !

ஜூன் 23 அன்று வெளியான வாரமலர் இதழில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குறித்த கட்டுரை ஒன்று வெளியாகியிருக்கிறது. அதைப் படித்தால் தலை சுற்றுகிறது. முதலில் இணைக்கப்பட்டிருக்கும் படங்களில் உள்ள கட்டுரையைப் படித்துவிடுங்கள்.

இதைப் படித்த பிறகு, ஒரு விஷயம் தெளிவாகப் புரியும். அதாவது இத்தனை ஆண்டுகளாக திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலைப் பார்த்துப் பயந்துபோயிருந்த நாசா தற்போது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைப் பார்த்துப் பயந்து போயிருக்கிறது !

இந்தக் கட்டுரையில் எழுதப்பட்டிருக்கும் வரிகள் ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

1. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை கண்காணித்தபோது பல அறிவியல் அற்புதங்களை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். பிறகு, வாழ்க்கையே ஒரு வட்டமாக இருந்த நிலையில், இந்தக் கோவில் மட்டும் சதுரமாக இருந்ததாம். சமூகத்தில் எல்லோரும் சமம் என உணர்த்துவதற்காக இப்படிக் கட்டப்பட்டிருக்கிறதாம்.

Fact: உண்மையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் செவ்வக வடிவமானது. இரு பக்கங்கள் 254 மீட்டர் நீளத்தையும் மற்ற இரு பக்கங்கள் 237 மீட்டர் அளவையும் கொண்டவை. அதுபோக, எல்லோரும் சமம் என நிரூபிக்க கோவிலை எதற்கு கஷ்டப்பட்டு சதுரமாக கட்டவேண்டும். எல்லா ஜாதியினரையும் அர்ச்சகராக்கிவிட்டால் போதாதா?

2. நீள்வட்டப் பாதையில் சுற்றும் செயற்கைக் கோளால், சதுர வடிவமான மீனாட்சி அம்மன் கோவிலைப் படம் பிடிக்க முடியாது.

Fact: உலகம் முழுவதும் எவ்வளவோ சதுர வடிவ கட்டடங்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் செயற்கைக்கோள்கள் படம் பிடிக்காதா? இந்தக் கேள்வி ஒரு பக்கமிருக்க மீனாட்சி அம்மன் கோவிலை செயற்கைக்கோள் எடுத்த படத்தையும் இங்கே பார்க்கலாம்.

3. 1984-ல் ஜெர்மனியைச் சேர்ந்த மைக்கல் கெப்ளர் என்ற விஞ்ஞானி சதுரவடிவில் ஒரு செயற்கைக்கோளை அனுப்பி மீனாட்சி அம்மன் கோவிலை படம் பிடித்தார்.

Fact: மைக்கல் கெப்ளர் என ஜெர்மன் விஞ்ஞானி யாரும் கிடையாது. தவிர, 1984-ல் மைக்கல் கெப்ளர் மட்டுமல்ல, ஜெர்மனியே எந்த செயற்கைக்கோளையும் விண்ணுக்கு அனுப்பவில்லை.

4. சதுரமான கோவில் வட்டவடிவமாகத் தெரிய கோவிலின் ஒரு கோபுரமான மொட்டை கோபுரம் தான் என்பதைக் கண்டறிந்தார். சாட்டிலைட் சிக்னல்களை கிரகிக்கும் மற்ற கோபுரங்கள் அதை மொட்டை கோபுரத்திற்கு டிரான்ஸ்பர் செய்யும். மொட்டை கோபுரம் அந்த சிக்னல்களை கிரகித்து குழப்பி அடித்து புது சிக்னலை சாட்டிலைட்டிற்கு அனுப்பும்.

Fact: கோபுரங்களின் மீது கலசங்களும் இடிதாங்கிகளும்தான் இருக்கின்றனவே தவிர, டிரான்ஸ்பான்டர்கள் ஏதும் கிடையாது.

5. அதே போல மொட்டை கோபுரத்தின் மீது எந்த இராடாரும் வேலை செய்யாது எனவும் கண்டறிந்தார்..

Fact: இராடாரை எங்கு பொறுத்தினாலும் வேலை செய்யும். ஆனால், கோவில் கோபுரத்தின் மீது ஒருவரும் பொறுத்த மாட்டார்கள்.

6. ஆயிரங்கால் மண்டபம் உண்மையில் 965 கால்கள் உடையது என்பதை அறிந்து மிகவும் வியந்து போனார். காரணம் 965 என்பது விண்வெளியில் தவிர்க்க இயலாத எண்!! ஸ்பேஸ் சென்டர்களை நிலை நிறுத்தும் உயரத்தை 965 Stand எனக் குறிப்பிடுவார்கள்.!

Fact: ஆயிரங்கால் மண்டபம் 965 தூண்களைக் கொண்டதல்ல. 985 தூண்களைக் கொண்டது. மீதி 15 தூண்கள் இருக்க வேண்டிய இடத்தில் விஸ்வநாதர் சன்னிதி இருக்கிறது. தவிர, 965 ஸ்டான்ட் என விண்வெளியில் ஏதும் கிடையாது.

படிக்க :
♦ கணவனின் எச்சில் தட்டில் மனைவி உண்டால் ஜீன் அப்டேட் ஆகுமாம் !
♦ தோழர் பெ.மணியரசன் அவர்களின் பொய்யும் புளுகும் … | பொ.வேல்சாமி

7. வாணியன் கிணற்று சந்துக்கு செல்லும் கிணற்று சுரங்கத்தில் இருந்த கல்லை புகைப்படம் எடுத்தவர் அதை என்லார்ஜ் செய்து பார்த்த போது ஓ.. ஜீசஸ் என அலறியே விட்டார்.! அப்பாறையில் இருந்த வரி வடிவங்கள் அச்சு அசலாக இராக்கெட்டுகளின் சர்க்யூட் பேனல்களின் வடிவத்தில் இருந்தது!!!

Fact: கிணற்றுச் சுரங்கம் எப்போதோ மூடி பூசப்பட்டுவிட்டது. அதிலிருந்து எந்தக் கல்லையும் யாரும் எடுக்க முடியாது.

8. மேலும் பொற்றாமரைக் குளத்தருகே மட்டும் இரவில் அமாவாசை பவுர்ணமி இரண்டிலும் ஒரே அளவுள்ள வெளிச்சம் இருப்பதைப் பார்த்து அதிசயத்து போனார்! அது எப்படி என்று இன்றுவரை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.!

Fact: இதை கோவில் நிர்வாகத்திடம் கேட்டால் சொல்லியிருப்பார்கள். காரணம், அங்கு பொருத்தப்பட்டிருக்கும் விளக்குகள் அம்மாவாசை, பௌர்ணமி தினங்களில் ஒரே மாதிரிதான் எரியும். அதனால், வெளிச்சத்தில் எந்த மாறுபாடும் இருக்காது. அதுமட்டுமல்ல, தேர்தல் நடக்கும் தினம், ரம்ஜான் தினத்தன்றுகூட எந்த மாறுதலும் இருக்காது.

9 . சித்தர் சந்நிதி, தட்சிணாமூர்த்தி சந்நிதி, முக்குறுணி விநாயகர் சன்னிதி, இவையெல்லாம் விண்வெளி வீரர்கள் அமரும் சேம்பர்கள் வடிவில் கட்டப்பட்டிருந்தன!!

Fact: மீனாட்சி அம்மன் கோவிலைப் பார்க்காதவர்கள்தான் இப்படி எழுத முடியும். உண்மையில் இந்த சன்னிதிகள் வெவ்வேறு வடிவில் அமைந்தவை. விண்வெளி வீரர்கள் இருக்கும் ராக்கெட்டுகள் வட்ட வடிவிலானவை.

10. நாயன்மார்கள் பிரகாரம்,108 லிங்கங்கள் பிரகாரம் இவையெல்லாம் ஸ்பேஸ் ஷட்டில் வடிவில் கட்டப்பட்டிருந்ததை பிரமிப்புடன் பார்த்தார்.

Fact: நாயன்மார் சிலைகளும் 108 லிங்கங்களும் சுவாமி சன்னதி அம்மன் சன்னதியிலும் பிரகாரங்களிலும் அமைந்திருக்கின்றன. தனியாக சன்னதி கிடையாது.

ஷப்பா…

(அது ஏன் எப்போது பார்த்தாலும் நாசா மட்டுமே நம் கோவில்களைப் பார்த்து வியக்கிறது? இஸ்ரோ, ராஸ்காஸ்மாஸ், SpaceX, JAXA, CSAASC, CNSA, ESA போன்றவையெல்லாம் வியப்பதில்லை? அவற்றுக்கு வியக்கத் தெரியாதா? நாசா விஞ்ஞானிகள் மட்டும் வேலைவெட்டியை விட்டுவிட்டு எந்நேரம் பார்த்தாலும் வியந்துகொண்டேயிருக்கிறார்கள்?)

நன்றி : முரளிதரன் காசி விஸ்வநாதன்
ஃபேஸ்புக் பதிவிலிருந்து…

***

தமிழ்நாட்டில் பெரும் நிலவுடமையாளர்கள் கடவுளர்கள்தான். அதனாலேயே, நிலச் சீர்திருத்தங்கள் என்பவை மிகச் சிக்கலான ஒரு காரியமாகவே தமிழ்நாட்டில் இருந்துவருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள கோவில்கள், மடங்களுக்குச் சொந்தமாக மட்டும் சுமார் 28 லட்சம் ஏக்கர் நிலங்கள் இருக்கின்றன. ஆனால், இந்த நிலங்கள் மூலம் கடவுள்களும் கோவில்களும் பயனடைவதில்லை என்பதுதான் இங்கு கவனிக்க வேண்டியது.

குறிப்பாக, தமிழகத்தில் பெரும் அளவில் நிலத்தைச் சொந்தமாக வைத்திருக்கும் கடவுள் நாகப்பட்டினத்தில் உள்ள வேதாரண்யேஸ்வரர். கிட்டத்தட்ட 10 ஆயிரம் ஏக்கர் நிலம் அவருக்குச் சொந்தம். ஆனால், 90களில் அந்தக் கோவிலின் வருவாய் வருடத்திற்கு சுமார் ரூ. 34,000. அப்படியானால், இந்த நிலங்களை யார் அனுபவிக்கிறார்கள்,ஏன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்பதை அவரவர் யூகங்களுக்கே விட்டுவிடலாம்.

பேராசிரியர் வி. சிவப்பிரகாசம் சென்னைப் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்த ஆய்வேடு ஒன்று, கோவில்களின் நிலவுடமை குறித்தும், அதனை மீறி தமிழக அரசுகள் எப்படி நிலச் சீர்திருத்தத்தைச் செய்ய முயன்றன என்பது குறித்தும் ஆராய்கிறது. இதில் பல எளிதில் கிடைக்காத புள்ளிவிவரங்களும் இருக்கின்றன.

புத்தகத்தின் தலைப்பு: Temple Lands and the Agrarian Reforms in Tamilnadu during the Dravidian Rule.
270 பக்கங்கள்.
விலை : ரூ. 280/-

நன்றி : முரளிதரன் காசி விஸ்வநாதன்
ஃபேஸ்புக் பதிவிலிருந்து…

குற்றமும் தண்டனையும் | பொருளாதாரம் கற்போம் – 24

0

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 24

குற்றமும் தண்டனையும்
அ.அனிக்கின்

ருடங்கள் உருண்டோடின. புவாகில்பேர் புதிதாகப் புத்தகங்கள் வெளியிடக் கூடாதென்று அமைச்சர் உத்தரவு போட்டிருந்தார்; தன் கருத்துக்களைச் செயல்படுத்துகிற காலம் வரும் என்ற நம்பிக்கையில் அவர் பொறுத்துக் கொண்டிருந்தார்.

கடைசியில் 1705-ம் வருடத்தில் அவருடைய “பொருளாதாரப் பரிசோதனையைச்” செய்வதற்கென்று ஆர்லியான் மாநிலத்தில் ஒரு பகுதி அவரிடம் ஒதுக்கித் தரப்பட்டது. இந்தப் பரிசோதனையை அவர் எத்தகைய சூழ்நிலையில் எப்படிச் செய்தார் என்பது சரியாகத் தெரியவில்லை. எப்படி இருந்த போதிலும், அந்தப் பரிசோதனை அடுத்த வருடத்திலேயே தோல்வியில் முடிவடைந்தது. இத்தகைய ஒரு பரிசோதனையை ஒதுங்கியுள்ள ஒரு சிறு வட்டாரத்தில் – செல்வாக்குள்ள சக்திகளின் எதிர்ப்புக்கு இடையில் – செய்தால், அதற்கு வெற்றி கிடைக்குமா?

இனி அவரை எதுவும் தடுக்க முடியவில்லை. 1707-ம் வருடத்தின் தொடக்கத்தில் அவர் தன்னுடைய கட்டுரைகளின் இரண்டு தொகுப்புகளை வெளியிட்டார். அவற்றில் தத்துவ ரீதியான ஆராய்ச்சிக் கட்டுரைகளைத் தவிர அரசாங்கத்தின் மீது தீவிரமான குற்றச்சாட்டுகளும் அரசியல் தாக்குதல்களும் அபாய அறிவிப்புகளும் அடங்கிய கட்டுரைகளும் இருந்தன. இதற்குப் பதில் கிடைப்பதற்கு அதிகமான காலதாமதம் ஆகவில்லை. புத்தகங்கள் தடை செய்யப்பட்டன; அதன் ஆசிரியர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

புவாகில்பேருக்கு இப்பொழுது வயது அறுபத்தொன்று. அவருடைய குடும்பம் பெரியது – ஐந்து குழந்தைகள். அவருடைய சொந்த விவகாரங்களில் அதிகமான சிக்கல்கள் ஏற்பட்டிருந்தன. அவருடைய உறவினர்கள் அவரை அமைதிப் படுத்துவதற்கு முயற்சி செய்தார்கள். அவருடைய தம்பி ருவான் நகரத்தில் நீதிமன்றத்துக்கு ஆலோசகராகவும் எல்லோராலும் மதிக்கப்பட்டவராகவும் இருந்தார். அவர் தன்னுடைய அண்ணனுக்காகப் பரிந்து பேசினார்.

அவருக்காகப் பரிந்து பேசுவதற்குப் பலர் இருந்தார்கள். ஷமில்லாரும் அரசாங்கம் விதித்த தண்டனையின் பொருந்தாத் தன்மையை உணர்ந்தார். ஆனால் திட்டங்களைத் தயாரிக்கும் அந்தப் பைத்தியக்காரன் பணிவாக நடந்து கொள்ள வேண்டும் என்றார்கள். கற்சுவரின் மீது தலையை மோதிக் கொள்வதால் பலனில்லை என்பதை புவாகில்பேரும் உணர்ந்தார். எனவே அவரும் பற்களைக் கடித்தபடியே ஒத்துக் கொண்டார்.

அதன் பிறகுதான் அவர் ருவானுக்குத் திரும்புவதற்கு அனுமதி கிடைத்தது. அவர் ஊருக்குத் திரும்பிய பொழுது நகர் மக்கள் அவரை உற்சாகமாக வரவேற்றுச் சிறப்பளித்தார்கள் என்று அவருடைய சமகாலத்துக் கட்டுரையாளரான சான்-சிமோன் கோமகன்(1) எழுதியிருக்கிறார். (இந்தப் பகுதியில் சொல்லப்பட்டிருக்கும் பல விவரங்களுக்காக நாம் அவருக்கு நன்றி செலுத்த வேண்டும்).

படிக்க:
இத்தாலிய பாசிஸ்டுக் கட்சி ஒரு பூர்ஷுவாக் கட்சி !
♦ உலகப் பொருளாதாரம் : பொது அறிவு வினாடி வினா – 20

இதற்குப் பிறகு புவாகில்பேர் மீது நேரடியான அடக்குமுறை ஒருபோதும் பிரயோகிக்கப்படவில்லை. அவர் தம்முடைய புத்தகங்களுக்கு இன்னும் மூன்று பதிப்புகளை வெளியிட்டார்; அவற்றில் தகராறுக்குரிய பகுதிகளை நீக்கியே வெளியிட்டார் என்பதும் உண்மையே. ஆனால் அவர் மனமுடைந்து போய்விட்டார்.

1708-ம் வருடத்தில் ஷமில்லார் வகித்த முக்கியமான பதவிக்குக் கொல்பேரின் மகனான டெமரே நியமிக்கப்பட்டார். இவர் கெட்டிக்காரர், திறமைசாலி. இவர் அவமானப்படுத்தப்பட்ட புவாகில்பேரைப் பற்றி நல்ல அபிப்பிராயம் கொண்டவர். அவரை நிதித்துறை நிர்வாகத்துக்குள் கொண்டு வருவதற்குக் கூட சில முயற்சிகளைச் செய்தார்.

ஆனால் காலம் கடந்துவிட்டது. புவாகில்பேர் மிகவும் மாறிப்போயிருந்தார்; நாட்டின் நிதி நிலைமை வேகமாகச் சீர்கேடடைந்து கொண்டிருந்தது; ஜான் லோவின் பரிசோதனைக்குத் தளம் தயாராகிக் கொண்டிருந்தது. புவாகில்பேர் ருவானில் 1714-ம் வருடம் அக்டோபர் மாதத்தில் மரணமடைந்தார்.

அவருடைய புத்தகங்கள், கடிதங்கள், அவருடைய சமகாலத்தவர்கள் அவரைப் பற்றி எழுதிய குறைவான செய்திகள் ஆகியவற்றிலிருந்து அவர் பலமான ஆளுமை உடையவர் என்பதைத் தெரிந்து கொள்கிறோம். அவரிடம் எல்லா அம்சங்களும் இணைந்து பொருந்தியிருந்தன. சொந்த வாழ்க்கையிலும் மற்ற விவகாரங்களிலும் அவரோடு பழகுவது சுமூகமானதாக இருந்திருக்க முடியாது. ஏனென்றால் பிடிவாதமும் முரட்டுத்தனமும் மன உறுதியும் அவருடைய சிறப்பான குணங்கள்.

”அவருடைய உற்சாகமான இயல்பைப் பொறுத்தவரை, அந்த வகையில் அது ஒப்புவமையில்லாதது” என்று சான்-சிமோன் சுருக்கமாகக் குறிப்பிடுகிறார். எனினும் புவாகில்பேரிடம் அவர் ஆச்சரியம் கலந்த மரியாதை கொண்டிருந்தார் என்பது தெளிவாகும்.

அவருடைய வளைந்து கொடுக்காத சுபாவத்துக்கு அவர் கோட்பாடுகளில் வைத்திருந்த உறுதியே காரணமாகும். முக்கியமானவை, முக்கியம் இல்லாதவை ஆகிய இரண்டிலுமே அவர் தன்னுடைய கோட்பாடுகளை உணர்ச்சி வேகத்தோடு வலியுறுத்தினார். இந்தக் கோட்பாடுகள் அன்று புதுமையானவையாக இருந்தபடியால் தவிர்க்க முடியாத மோதல்கள் ஏற்பட்டன.

ருவான் நகரத்தைச் சேர்ந்த இந்த அடக்கமான நீதிபதி இருபது வருட காலம் விடாப்பிடியாகப் போராடினார்; மன அமைதியையும் வசதிகளையும் பொருளாயத நலன்களையும் இழந்தார். (அவருடைய பிடிவாதத்தை அடக்குவதற்காக ஷமில்லார் விசித்திரமான அபராதங்களை விதித்தார். அவர் பணம் கொடுத்து விலைக்கு வாங்கிய பதவிக்கே மறுபடியும் பணம் கட்ட வேண்டுமென்று உத்தரவு போட்டார்.) அமைச்சர்களுக்கு அவரைப் பிடிக்கவில்லை. அதே சமயத்தில் அவரிடம் அவர்களுக்கு லேசான (உண்மையைச் சொல்வதென்றால் சற்று அதிகமான) பயம் இருந்தது.

புவாகில்பேர் தன்னுடைய கருத்துக்களிலும் கோட்பாடுகளிலும் யாருக்கும் அஞ்சாத நேர்மையோடு உறுதியாக நின்றதில்தான் அவருடைய சிறப்பு அடங்கியிருக்கிறது.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

(1) இவர் மாபெரும் கற்பனாவாத சோஷலிஸ்டான சான்சிமோன் பிரபுவின் முன்னோர்.

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

காவிரி டெல்டாவை எச்சரிக்கிறது நைஜர் டெல்டா !

வேண்டாம் ஹைட்ரோ கார்பன் ! எச்சரிக்கிறது நைஜர் டெல்டா !!

பொன் விளைந்த பூமியாக இருந்த நைஜர் டெல்டா, எண்ணெய்க் கிணறுகளால் மனிதர்கள் வாழத் தகுதியற்ற பூமியாக மாறிவிட்டது.

கோய் ஆற்றின் கரையில் நிற்கும் எரிக் தூவின் முகம் வியர்வையில் மின்னுகிறது. ஆறும் மின்னுகிறது. அதன் மீது எண்ணெய்ப் படலம். என் பெற்றோர் மிகச்சிறந்த விவசாயிகள்” என்று சொல்லியபடியே ஆற்றோரம் இருக்கும் தனது வயல்வெளியைக் காட்டுகிறார். எங்கும் களைகள் மட்டுமே முளைத்திருக்கின்றன. கடலை, சோளம், மரவள்ளி, கருணைக் கிழங்கு என்று அனைத்தும் விளைந்த நிலம் அது. எங்களுக்குச் சாப்பிடுவதற்கும், விற்பதற்கும், சேமிப்பதற்கும் போதுமான விளைச்சல் இருந்தது. நிலம் வளமாக இருந்தது. இங்கே விவசாயிகள் ஒருபோதும் ஏழையாக இருந்ததில்லை.”

நைஜர் டெல்டா
நைஜர் டெல்டாவை காட்டும் வரைப்படம்

அதெல்லாம் ராயல் டச்சு ஷெல் நிறுவனம் 1950 அங்கே எண்ணெயைக் கண்டுபிடிக்கும் வரைதான். எங்கள் கிராமத்திலிருந்து 70 மைல் தூரத்தில் அவர்கள் எண்ணெயைக் கண்டுபிடித்தார்கள். 80-களின் தொடக்கத்தில்தான் எங்கள் வயல்களில் எண்ணெய் படிவதை நாங்கள் பார்த்தோம். விளைச்சல் மெதுவாகத்தான் குறையத் தொடங்கியது. ஆனால், வரவிருக்கும் அபாயத்தை அப்போது நாங்கள் புரிந்து கொள்ளவில்லை” என்றார் எரிக்.

அந்த டெல்டா பகுதி முழுவதும் குறுக்கு நெடுக்காக ஷெல் நிறுவனத்தின் எண்ணெய்க் குழாய்கள் வந்தன. குழாய்களிலிருந்து எண்ணெய் கசிவது வழக்கமாகிவிட்டது. ஒருபுறம் இப்படி விவசாயம் அழிந்து கொண்டிருக்க, மறுபுறம் டெல்டாவிலிருந்து விவசாயிகளை மொத்தமாக வெளியேற்றுவதற்கான சட்டத்தை இயற்றியது நைஜீரிய அரசு. நாட்டின் நிலம் அனைத்தும் அரசுக்கே சொந்தம்” என்ற கோட்பாட்டின்படி, நிலத்தின் மதிப்புக்கு இழப்பீடு தரவியலாது என்றும், நிலத்தை கையகப்படுத்தும் ஆண்டில் விளைந்த பயிர்களின் மதிப்பு என்னவோ அதன் அடிப்படையில் கணக்கிட்டு மட்டுமே இழப்பீடு என்றும் அறிவித்தது நைஜீரிய அரசு.

மார்ச் 1993-ல், 3 இலட்சம் ஒகோனி இன மக்கள் கென் சரோ  விவா தலைமையில் மாபெரும் அமைதிவழிப் போராட்டத்தை தொடங்கினர். அதன் விளைவாக ஒகோனி பிராந்தியத்தில் இருந்த 30 எண்ணெய்க் கிணறுகளை ஷெல் நிறுவனம் மூடவேண்டியதாயிற்று. இப்போராட்டத்தைத் தொடர்ந்து கொடிய அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டது நைஜீரிய அரசு. கென் சரோவிவா உட்பட, ஒகோனி மக்கள் வாழ்வுரிமைக்கான இயக்கத்தின் தலைவர்கள் 8 பேர் மீது ஒரு பொய்வழக்கில் கொலைக்குற்றம் சாட்டித் தூக்கிலிட்டது நைஜீரிய அரசு. உலகம் முழுவதும் இதற்குக் கண்டனங்கள் எழுந்தன.

மாசடைந்த ஆறு. இந்த ஆற்று நீரைக் குடிக்கவோ அல்லது நீந்தவோ, மீன் பிடிக்கவோ கூடாது என எச்சரிக்கும் விளம்பரப்பலகை.

2004-ல் ஏற்பட்ட மிகப்பெரிய எண்ணெய்க் கசிவின் காரணமாக சுமார் 40 ஏக்கர் மாங்குரோவ் காடுகள் நாட்கணக்கில் தீப்பிடித்து எரிந்தன. கோய் கிராமத்தின் வயல்களுக்கும் அந்தத் தீ பரவியது. ஆறுகளிலும் ஓடைகளிலும் இருந்த மீன்கள் அழிந்தன. 2007-ல் மறுபடியும் எண்ணெய்க் கசிவு, மீண்டும் மாங்குரோவ் காடுகள் எரிந்தன. மர்மமான இருமல், புற்றுநோய், நுரையீரல் நோய், பார்வையிழப்பு உள்ளிட்ட இனம்புரியாத பல நோய்கள் பரவத்தொடங்கின. அங்கே வாழவே முடியாது என்ற நிலையில் மொத்த மக்களும் கிராமத்தை விட்டு வெளியேறினர்.

கோய் என்பது இப்போது ஒரு பேய்க் கிராமம். ”தடை செய்யப்பட்ட பகுதி. அருகே வராதீர்கள்” என்று ஒரு எச்சரிக்கைப் பலகையை அந்தக் கிராமத்தில் வைத்திருக்கிறது நைஜீரிய அரசு. இது ஒரு கிராமத்தின் கதை மட்டுமல்ல. நைஜர் டெல்டாவின் கதை.

படிக்க :
♦ இந்து தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக இந்திய அரசு : அமெரிக்கா அறிக்கை !
♦ அர்ஜுன் ரெட்டி போல ஒருவருடன் வாழ நேர்ந்தால் எப்படி இருக்கும் ?

30,000 சதுர மைல் பரப்புள்ள நைஜர் நதியின் டெல்டா ஆப்பிரிக்காவிலேயே மிகப்பெரியது. உலகின் 3-வது மிகப்பெரிய சதுப்புநிலமும், மாங்குரோவ் காடுகளும் கொண்டது. 3 கோடி மக்கட்தொகை கொண்ட இந்த டெல்டாவின் 60% மக்கள் சுயசார்பு விவசாயிகள் மற்றும் மீனவர்கள்.

உலகிலேயே எண்ணெயால் சூழல் மாசுபடுத்தப்பட்ட பிராந்தியங்களில் நைஜர் டெல்டா முக்கியமான இடத்தில் இருக்கிறது. நாற்பது ஆண்டுகளுக்கு முன் எண்ணெய்க் கசிவு ஏற்பட்ட இடங்களில் கூட இன்றளவும் மண்ணும் நிலத்தடி நீரும் பெரிதும் மாசுபட்டே இருக்கின்றன என்கிறது 2011-ம் ஆண்டு ஐ.நா நடத்திய ஆய்வு. இன்றைக்கும் சராசரியாக ஆண்டொன்றுக்கு 1.1 கோடி காலன் எண்ணெய்க் குழாய்களிலிருந்து கசிந்து நைஜர் டெல்டாவை நாசமாக்கிக்  கொண்டிருக்கிறது.

கென் சரோ விவா
நைஜர் டெல்டாவை சீரழித்த ஷெல் எண்ணெய் நிறுவனத்தை எதிர்த்து ஒகோனி இன மக்களை அணித் திரட்டிப் போரடியதற்காக நைஜீரிய இராணுவ சர்வாதிகார அரசால் தூக்கிலிடப்பட்ட போராளி கென் சரோ விவா

சூழலை நாசப்படுத்துவது மட்டுமின்றி, சமூகத்தையும் நாசமாக்குகின்றன எண்ணெய் நிறுவனங்கள். இன்று நைஜீரியாவில் எண்ணெய்த் திருட்டு என்பது ஆண்டொன்றுக்கு 60,000 கோடி ரூபாய் புழங்குகின்ற தொழில். ஆயுதம் தாங்கிய கூலிப்படைகள், சர்வதேச கார்ட்டல்கள், அரசு பாதுகாப்புப் படையினருக்கான இலஞ்சம் எனப் பல கோடி ரூபாய் புழங்கும் இந்த தொழிலில் சுமார் 26,000 பேர் வேலை செய்கின்றனர். 60,000 கோடி ரூபாயில் 80% அரசியல்வாதிகள், இராணுவம் மற்றும் எண்ணெய் வளத்துறையின் அதிகாரவர்க்கத்தினருக்குத்தான் செல்கிறது.

எண்ணெய்க் கசிவு மட்டுமல்ல பிரச்சினை. எண்ணெய்க் கிணறுகளிலிருந்து நிரந்தரமாக எரிகின்ற எரிவாயுத் தீயின் காரணமாக, சூழல் வெப்பமடைவது மட்டுமல்ல, அது அமில மழையாகவும் பூமிக்குத் திரும்ப வருகிறது. நைஜீரிய அரசின் கணக்குப்படியே ஆண்டொன்றுக்கு 31.3 கோடி கன அடி எரிவாயு எரிக்கப்பட்டு, 1.65 கோடி டன் கரியமிலவாயு டெல்டா பகுதியின் காற்றில் கலந்து வருகிறது.

இவ்வாறு சூழல் மாசுபடுவதன் விளைவாக டெல்டா பகுதியில் எங்கு திரும்பினாலும் தோல் நோய்கள், ஆஸ்துமா, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களைக் காணமுடிகிறது. அதுமட்டுமல்ல, விளைச்சல் கடுமையாக வீழ்ச்சியடைந்து விட்டது. எண்ணெய் கசிவையும் மீறி வளரும் தானியங்கள் எண்ணெயையும் உட்கொண்டு வளர்கின்றன. இந்த ஆறுகளிலும் ஓடைகளிலும் வளரும் மீன்களிலும் எண்ணெயின் வீச்சம் தெரிகிறது. இந்த தானியத்தையும் மீனையும்தான் மக்கள் சாப்பிடுகிறார்கள்.

விளைவு, இந்தப் பகுதியில் மக்களின் ஆயுட்காலமே குறைந்து விட்டது. நைஜீரிய மக்களின் சராசரி ஆயுட்காலம் 65 ஆண்டுகள். நைஜர் டெல்டாவில் சராசரி ஆயுட்காலம் 40 முதல் 43 ஆண்டுகள்தான்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இந்த ஓடைகளில் மீனும் நத்தையும் பிடித்து அதை விற்றுப் பிழைக்கும் பெண்கள் இங்கே ஏராளம். இந்த தொழில் செய்யும் பெண்கள் தோல் நோய் முதல் இருமல், காய்ச்சல் உள்ளிட்ட பலவிதமான நோய்களால் பாதிக்கப்படுவதும் சகஜம்.  ஒரு பெண் கருவுற்றாள். ‘‘உன் குழந்தை பிழைக்க வேண்டுமானால்,  ஓடையில் மீன் பிடிக்கப் போகாதே என்று எச்சரித்திருக்கிறார் மருத்துவர். ஆனால், அந்தப் பெண்ணுக்கு அந்த வேலை தவிர வேறு வழியில்லாத காரணத்தால், தொடர்ந்து மீன் பிடிக்கப் போனாள். விளைவு குழந்தை பிறந்த 6 மணி நேரத்தில் இறந்து விட்டது. நீ சுவாசித்த நச்சுக்காற்றுதான் உன் மகனைக் கொன்று விட்டது” என்று மருத்துவர் சொன்னதைக் கேட்டு உடைந்து அழுதாளாம் அந்தப் பெண். இதுபோல ஓராயிரம் கதைகள்.

இச்சூழல் மக்கள் மத்தியில் தோற்றுவித்த கோபத்தின் விளைவாக 2006-ம் ஆண்டில் நைஜர் டெல்டா மீட்பு இயக்கம்” என்ற பெயரில் பல ஆயுதக்குழுக்கள் தோன்றின. அவை நைஜீரிய அரசையும் போலீசையும் எதிர்த்து மோதின. 3 ஆண்டுகள் இந்த மோதல் தொடர்ந்தது. பிறகு 2009-ல் இந்த ஆயுதக் குழுக்களுடன் அரசு ஒரு சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டது.

ஒகோனி இன மக்கள் ஆர்ப்பாட்டம்
நைஜர் டெல்டா பகுதியில் ஷெல் நிறுவனம் நடத்திய பச்சைப் படுகொலைகள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்களுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கிற்கு ஆதரவு தரக்கோரி ஒகோனி இன மக்கள் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடத்திய ஆர்ப்பாட்டம்.

அந்த ஒப்பந்தத்தின்படி 30,000 முன்னாள் ‘போராளிகளுக்கு மாதம் தோறும் உதவித்தொகை, தொழில் பயிற்சி, எண்ணெய்க் குழாய்களைப் பாதுகாப்பதற்கான காண்டிராக்டுகள்” ஆகியவற்றைக் கொடுத்து அவர்களை பன்னாட்டு நிறுவனங்களின் கூலிப்படையாக மாற்றிவிட்டது நைஜீரிய அரசு. இதன் விளைவாகப் போராடிய இளைஞர்களில் பலர் மாஃபியா தலைவர்களாக மாறினர்.

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்தபோது மாத உதவித்தொகையை அரசால் கொடுக்க முடியவில்லை. உடனே ’முன்னாள் போராளிகள்’ மீண்டும் ஆயுதம் ஏந்தினர். குழாய்களை உடைக்கத் தொடங்கினர். உடனே பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுக்கான பாக்கியை செட்டில் செய்தது அரசு. வாழ்விழந்த மக்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. அதே நேரத்தில், போராட்டத்தை ஊழல்படுத்தியதன் மூலம் தனக்கான கைக்கூலிகளை அரசும் பன்னாட்டு நிறுவனங்களும் உருவாக்கிக் கொண்டன.

படிக்க :
♦ இராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்த நவரத்தின ஆபரணங்கள் எங்கே ?
♦ ஹைட்ரோ கார்பன் : தமிழகத்தைச் சுடுகாடாக்க மீண்டும் நுழைகிறது வேதாந்தா !

ஷெல் நிறுவனத்துக்கு எதிராக மட்டும் சுமார் 1000 வழக்குகள் நிலுவையில் உள்ளன. பெரும்பாலான வழக்குகள் தள்ளுபடியாகின்றன அல்லது சிறிய இழப்பீட்டுக்குப்பின் முடிக்கப்படுகின்றன. மற்றவை ஆண்டுக்கணக்கில் இழுத்தடிக்கப்படுகின்றன.

ஷெல் நிறுவனம், ஆறுகளையும் வயல்களையும் மாசுபடுத்தியதற்கு இழப்பீடு கேட்டும், அவற்றைச் சுத்தம் செய்யக் கோரியும் 1997 எரிக்கின் தந்தை வழக்கு தொடுத்தார். 21 ஆண்டுகள் ஆகியும் இன்னும் அந்த வழக்கு முடியவில்லை. ஆனால், பார்வை இழந்து, நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு எரிக்கின் தந்தை இறந்து போனார். இப்போது எரிக் அந்த வழக்கை தொடர்ந்து நடத்துகிறார்.

மீத்தேன் திட்டம்
எரிக் தூ

இத்தகைய வழக்குகளில் ஷெல் நிறுவனம் ஒரு மோசடியான வாதத்தை வழக்கமாக முன்வைக்கும். எண்ணெய்க் கசிவுக்கு நாங்கள் பொறுப்பல்ல. எண்ணெய்த் திருடர்கள் குழாய்களைச் சேதப்படுத்துவதுதான் காரணம்” என்று வாதிடும்.

ஒரு வாதத்துக்கு அதனை ஏற்றுக் கொண்டாலும், விளைநிலத்திலிருந்து விவசாயிகளை விரட்டி விட்டு, எண்ணெய்க் குழாய் போட்டால், பெண்டு பிள்ளைகளுக்குச் சோறு போடுவதற்காகச் சிலர் திருடத்தானே செய்வார்கள்?

ஆறுகளில் படிந்து விட்ட எண்ணெயை அகற்றுவோம்; விளை நிலத்தைச் சுத்தம் செய்து மீட்டுருவாக்கம் செய்வோம்; மீண்டும் மாங்குரோவ் காடுகளை உருவாக்குவோம்” என்று கூறுகிறது ஐ.நா-வின் ஹைட்ரோ கார்பன் மாசு அகற்றும் திட்டம். அவர்களது கணக்குப்படியே இதற்கு 30 ஆண்டுகள் ஆகுமாம்.

இன்று அப்பகுதி மக்கள் குடிக்கும் தண்ணீரில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 900 மடங்கு அதிகமாக பென்சீன் கலந்திருக்கிறது. நல்ல குடிநீருக்கும் வழியில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ சோதனைகூடச் செய்யப்படவில்லை.

“என்னையே எடுத்துக் கொள்ளுங்கள், நான் ஒரு வசதியான விவசாயியின் மகன். ஆனால், எனக்குக் கிடைத்திருக்கும் சொத்து – வறுமை. பலருக்கு வேலை கொடுத்த நான் இன்று வேலை தேடுகிறேன். குழந்தைகளுக்குச் சோறு போட முடியவில்லை, படிக்கவைக்க முடியவில்லை. என்னுடைய தந்தை வாழ்நாள் முழுவதும் போராடி, நீதியைக் கண்ணால் காணாமலேயே செத்துப்போனார். இப்போது நான் போராடிக் கொண்டிருக்கிறேன். ஒருவேளை நான் செத்துவிட்டாலும், என் பிள்ளைகள் போராட்டத்தைத் தொடருவார்கள்” என்றார் எரிக் தூ.

அஜித்

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart