Thursday, July 31, 2025
முகப்பு பதிவு பக்கம் 726

அப்சல் குரு தூக்கு – HRPC கண்டன பிரச்சாரம்!

14

அப்சல் குருவை தூக்கிலிட்ட இந்திய அரசின் பயங்கரவாதச் செயலை கண்டித்து மனித உரிமை பாதுகாப்பு மையம் மதுரை உயர்நீதிமன்றத்தில் நடத்திய ஆர்ப்பாட்டம்

மனித உரிமை பாதுகாப்பு மையம் – மதுரை மாவட்டக் கிளை சார்பாக 12.02.2013 காலை 10.00 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

2001 டிசம்பர் 13 அன்று இந்திய பாராளுமன்றம் தாக்கப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அப்சல்குருவின் சட்டபூர்வமான உரிமைகளை மறுத்து ரகசியமாக தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தலைமை தாங்கினார்.

உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் லஜபதிராய் பேசும் போது, “அப்சல்குரு தூக்கிலிடப்பட்டது அநீதியானது. அவர் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிருபிக்கப்படவில்லை. இருந்த போதும் `பாராளுமன்றம் தாக்கப்பட்டது மன்னிக்க முடியாத குற்றம். இந்தக் குற்றத்தை செய்தவர்களுக்கு மரணதண்டனை அளிக்கவில்லையென்றால் தேசிய மனசாட்சி சாந்தமடையாது’ என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. உச்சநீதிமன்றம் இவ்வாறு நடந்து கொண்டது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. எழுத்தாளர் அருந்ததிராய் அவர்கள் இதனைக் கண்டித்து இந்து நாளிதழில் கருத்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ்-பி.ஜே.பி.,-உச்சநீதிமன்றம் சேர்ந்து செய்துள்ள இந்த சட்டவிரோத செயலை எதிர்த்து நாம் போரட வேண்டும். ஜனநாயகத்துக்காக நாம் தொடர்ந்து குரல்கொடுப்போம்” என்று பேசினார்.

உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் திருநாவுக்கரசு பேசும் போது “அப்சல்குருவுக்கு சட்டப்பூர்வமாக இன்னும் எத்தனையோ வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அந்த வாய்ப்புகள் எல்லாம் மறுக்கப்பட்டு உள்ளன. அதுமட்டுமல்லாமல் அவருக்கு தண்டனை நிறைவேற்றப்படும் முன்னர் அவரது குடும்பத்தாருக்குக் கூட தெரிவிக்கப்படவில்லை. அவரது குடும்பத்தார் நேரில் சந்தித்துப் பேசுவதற்கு வாய்ப்பு அளித்திருக்க வேண்டும். அவசரம் அவசரமாக அவர் தூக்கில் போடப்பட்டது ஏற்றுக்கொள்ள முடியாது. குற்றவாளியே ஆனாலும் அவருக்கு உள்ள உரிமைகள் மறுக்கப்படக் கூடாது” என்ற அடிப்படையில் மனித உரிமை பாதுகாப்பு மையம் இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

மாவட்ட செயலாளர் லயனல் அந்தோணிராஜ் பேசும்போது, “காஷ்மீர் மக்களுக்கு பாடம் கற்பிக்கும் வகையில் அப்சல்குரு தூக்கிலிடப்பட்டுள்ளார். அப்சல்குரு பாராளுமன்றத் தாக்குதலில் நேரடியாக ஈடுபடவில்லை. மூளையாகவும் செயல்படவுமில்லை. அதற்கு எந்த ஆதாரமோ, நேரடி சாட்சியங்களோ இல்லை. காவல்துறை, உளவுத்துறை அவரை மிரட்டி வாங்கிய வாக்கு மூலத்தின் அடிப்படை யிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது சட்ட நடைமுறைகளுக்கு முரணானது. ஆனால் இதைத் தெரிந்தே உச்சநீதிமன்றம் செய்துள்ளது. அதற்கு காரணம் புனிதமான பாராளுமன்றம் தாக்கப்பட்டது இந்திய மக்களின் மனசாட்சியை வேதனைப்படுத்திவிட்டது. அதை சாந்தப்படுத்த இப்படியொரு தண்டனை தரப்படுவதே சரியானது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அந்த மனசாட்சி என்பது காஷ்மீர் மக்களுக்கு எதிரானது. இந்து, இந்திய தேசிய வெறி மனசாட்சி அல்லாமல் வேறு எதுவும் இல்லை. ஜெய்ப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் தேசிய குழு கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் ஷிண்டே, ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி., சங்க பரிவாரங்கள், இந்து பயங்கரவாதிகள் என்ற கருத்தை வெளியிட்டார்.”

இதை கடுமையாக எதிர்த்த இந்து பாசிஸ்டுகள் எதிர்வரும் நாடாளு மன்றக் கூட்டத்தை முடக்குவோம். ஷிண்டே பதவி விலக வேண்டும். அல்லது பிரதமர் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூச்சல் போட்டு வருகின்றனர். இதை சாக்காக வைத்துக் கொண்டு இந்து ஓட்டுக்களை மனதில் வைத்து அப்சல்குருவை அவசரமாகத் தூக்கில் போட்டுள்ளது மதசார்பின்மை மூகமூடி அணிந்த காங்கிரஸ்.

இசுலாமிய பயங்கரவாதம் என்ற பெயரால் இசுலாமிய மக்கள் அனைவருமே பயங்கரவாதிகள், தேச விரோதிகள் என்பது போன்ற கருத்து இந்து தேசியத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இசுலாமியர்கள் இந்த அநீதியை எதிர்த்துக்கூட பேச முடியாமல் இருக்கின்றனர். அவர்கள் பேச வேண்டும். மத அடிப்படை வாதம். பயங்கரவாதம் இவற்றைப் புறக்கணித்து ஜனநாயகத்துக்காகப் போராட வேண்டும்.

ராஜீவ் கொலையில் தொடர்பு இல்லாத மூன்று பேர் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, அவர்களது கருணை மனுக்கள் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட பின்பும் அவர்கள் மீண்டும் நீதிமன்றம் சென்று தடையுத்தரவு பெற்றுள்ளனர். ஆனால் காங்கிரசுக்கு ராஜீவ் கொலையை விட காஷ்மீரும் ஆட்சி அதிகாரமும் முக்கியமாக உள்ளது.

ராஜீவ் கொலைக்கான பின்னணி மர்மமாக உள்ளதைப் போலவே நாடாளுமன்றத் தாக்குதல் பின்னணியும் தெளிவுபடுத்தப்படாத நிலையிலேயே உள்ளது. அந்த வழக்கும் முற்றுப் பெறாத நிலையில் (குற்றம் சாட்டப்பட்டவரின் உரிமை) இன்றும் பலரின் தூக்கு நிறைவேற்றப்படாமல் இருக்கிற நிலையில் அப்சல்குரு அவசர, ரகசியத் தூக்கு இசுலாமிய தீவிரவாதத்தை மேலும் தூண்டுகிற வகையிலே தான் உள்ளது.

இதையே காஷ்மீர் முதல் அமைச்சர் உமர் அப்துல்லா வேறு மொழிகளில் தெரிவித்து அப்சல்குரு தூக்கை கண்டித்துள்ளார்.

இப்படிப்பட்ட அநீதிகளை எதிர்த்து, மனித உரிமை மீறல்களை எதிர்த்து மனித உரிமை பாதுகாப்பு மையம் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது.” என்று பேசினார்.

“சாட்சியமே இல்லாத வழக்கில்
தேசத்தின் மனசாட்சியை
இந்து வெறியின் மனசாட்சியை
திருப்திபடுத்தவே தூக்கு
நிரபராதி அப்சல் குருவுக்கு
அவசரமாகத் தூக்கு”

“குஜராத் மாநிலத்தில்
கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள்
ஊனமுற்றோர் முதியோர் என
ஆயிரக்கணக்கில் கொன்றொழித்த
அத்வானிக்கும் மோடிக்கும்
தூக்கு எப்போ? தூக்கு எப்போ?”

“காஷ்மீர் மக்களின் உரிமைக்காக
தன்னுரிமை கோரிக்கைக்காக
குரல் கொடுப்போரும், கூட இருப்போம்!”

போன்ற முழக்கங்கள் முன்வைக்கப்பட்டன.

ஆர்ப்பாட்டத்துக்கு முன்னதாகவே வந்திருந்து ஆதரவளித்த வழக்கறிஞர்கள் உள்பட சுமார் 80 பேர் வரை உற்சாகமாய் கலந்து கொண்டனர்.

தகவல்: மனித உரிமை பாதுகாப்பு மையம்- தமிழ்நாடு மதுரை மாவட்டக்கிளை

2. மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சுவரொட்டிகள்
01-hrpc-banner-1

02-hrpc-banner-2

2. மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு – கடலூர் கிளையின் துண்டு பிரசுரம்
05-kadalur-notice-2
04-kadalur-notice-1

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

‘ரேப்புக்கு’ காரணம் அசைவ உணவாம் – தினமணியின் வக்கிரம்!

42

19.02.2013 தினமணியில் “அரங்கேறும் வக்கிரங்கள்” என்று பாலியல் வன்முறை குறித்து ஒரு தலையங்கம். டெல்லி பாலியல் வன்முறை சம்பவத்திற்குப் பிறகு ஊடகங்களின் அறச்சீற்றம் தாங்க முடியாத அளவுக்கு தலைவிரித்தாடுகிறது. அதில் தான் மட்டும் தனித்து தெரியவேண்டும் என்று நினைக்கிறார் ஆர்.எஸ்.எஸ்-ன் பிரியத்திற்குரிய வைத்தி மாமா!

முறை தவறிய உறவு, காரணமற்ற விவாகரத்து என்று மேலைநாட்டு நாகரீகத்தை எள்ளி நகையாடியது போய் இன்று அவர்கள் இந்தியாவை வக்கிர தேசம் என்று முகம் சுளிக்கும் அளவுக்கு நிலைமை இருப்பதாக துக்கப்படுகிறார் வைத்தி. கூடவே தாய்மை, பெண்மையை உயர்வாக கருதிய இந்திய நாகரீகம் போலித்தனமானது என்பதாய் சமீபத்திய சம்பவங்கள் தோலுரிப்பதாகவும் அவர் வருந்துகிறார்.

பாரதம் கற்புக்கும், விதேசிகள் விபச்சாரத்திற்கும் பெயர் போனவை என்பதுதான் ஆர்.எஸ்.எஸ் கும்பலின் முடிவு. உண்மையில் கற்பின் மறுபக்கம்தான் விபச்சாரம் என்பது இவர்கள் அறியாதது அல்ல, மறைக்க விரும்பும் ஒன்று என்பதே உண்மை. சீதை, கண்ணகிகளை கற்புக்கரசிகளாய் தொழும் நாட்டில்தான் பார்ப்பன, ஷத்திரியர்களின் பொறுக்கித்தனத்திற்கு பயன்படும் விதத்தில் தேவதாசி எனும் உலகின் முதல் விபச்சார நிறுவனத்தை ஏற்படுத்தினார்கள். தேவசாதி முறையை ஒழிக்க வேண்டுமென்று திராவிட இயக்கம் போராடிய போது சத்திய மூர்த்தி போன்ற பார்ப்பனர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையும் வரலாறு பதிந்திருக்கிறது.

எடுத்ததெற்கெல்லாம் விவாகரத்து என்று மேலைநாடுகளை கிண்டல் செய்யும் அம்பிகள் முதலில் கணவன் என்னதான் பொறுக்கியாக இருந்தாலும் அவனை கண்கண்ட தெய்வமாக போற்ற வேண்டும் எனும் இந்து மதத்தின் கொடுமையைத்தான் போற்றுகிறார்கள். அதன்படி விவாகரத்து எனும் ஜனநாயக உரிமையைக் கூட வழங்காத பாரதம்தான் இழிவானதே ஒழிய அந்த உரிமையை அங்கீகரித்திருக்கும் மேலைநாடுகள் அல்ல. இன்று அந்த உரிமையை இந்தியா இறக்குமதி செய்திருப்பதாக ஓநாய் கண்ணீர் விடும் சங்க பரிவாரங்கள் மற்றும் அதன் ஊது குழலான தினமணி போன்றோரின் இதயத்தில் இருப்பது பச்சையான ஆணாதிக்கமே அன்றி பெண்ணுரிமை அல்ல.

” இறைநம்பிக்கை குறைந்ததுகூட, இன்றைய வக்கிரத்தனங்களுக்குக் காரணமாக இருக்கக் கூடும். தவறு செய்தால் தெய்வம் தண்டிக்கும் என்கிற அச்ச உணர்வும், சமுதாய ஏளனத்துக்கு நாம் ஆளாக நேரும் என்கிற பயமும் இல்லாமல் போய்விட்ட சூழல், தவறுகளுக்குக்  கதவுகளைத் திறந்து வைக்கிறது.” என்கிறார் தினமணியின் ஆசிரியர்.

ஒருவழியாக இறைநம்பிக்கை குறைந்து வருவதை இந்துக்களின் பிரச்சார பீரங்கி பத்திரிகையே ஒத்துக் கொண்டது மகிழ்ச்சிக்குரியது. ஆனால் பாலியல் வன்முறைகள் மட்டுமல்ல மற்ற வக்கிரங்களுக்கெல்லாம் காரணம் பக்தி உணர்வு குறைந்து போனதாக சொல்லுவது பச்சையான பார்ப்பனிய வெறியே அன்றி வேறல்ல. சங்கர ராமனை போட்டுத்தள்ளிய ஜெயேந்திரனோ, இல்லை பல் மருத்துவக் கல்லூரிக்காக முறைகேடுகளில் ஈடுபட்ட பங்காருவோ இல்லை வருமானவரி, விற்பனை வரி ஏய்ப்பு செய்த பாபா ராம்தேவோ, இன்ன பிற கிரிமினல் சாமியார்களெல்லாம் நாத்திகர்களா?

குஜராத்தில் 2000த்திற்கும் மேற்பட்ட இசுலாமிய மக்களை இனப்படுகொலை செய்து அதை தெகல்கா வீடியோவிலும் ஒத்துக் கொண்ட இந்துமதவெறியர்களெல்லாம் சாட்சாத் கடவுள் நம்பிக்கை கொண்ட அதி தீவிர பக்தர்கள்தானே? இதிலிருந்து தெரியவரும் உண்மை என்னவென்றால் ஒருவரின் ஆன்மீகம் அல்லது நாத்திக உணர்வு மட்டும் ஒருவனின் சமூக ஆளுமையை உருவாக்கி விடாது. வரைமுறையற்ற அதிகாரம் கையில் இருக்கும் போதும், எளிய மக்களுக்கு ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படும் போதும்தான் இத்தகைய கிரிமினல்கள் அவர்கள் சாமியார்களாக இருந்தாலும் தவறு செய்கிறார்கள்.மட அதிபதிகள்

சங்கரமடத்தின் முடிவுகள் சேரி மக்களின் ஒப்புதலோடுதான் எடுக்க முடியும் என்று இருந்திருந்தால் சங்கரராமன் கொலை செய்யப்பட்டிருக்க முடியாது. இந்தியாவின் பெரும்பான்மை மக்களுக்கு ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டிருப்பதால்தான் போபார்ஸ் முதல் ஹெலிகாப்டர் ஊழல் வரை இறைநம்பிக்கை உடைய பெருச்சாளிகள் ஊழல் செய்கிறார்கள். அப்படி ஊழல் செய்பவர்கள்தான் தமது கருப்புப்பணத்தின் ஒரு பகுதியை திருப்பதி உண்டியலில் போடுகிறார்கள். மக்களுக்கு பதில் சொல்லக் கடமை பட்டவர்கள் எனும் நிலைமை உருவாகாத வரை இவர்கள் கடவுளுக்கே கமிஷன் கொடுத்து முறைகேடுகளை தொடர்வதுதான் நடக்கும். அவ்வகையில் இறைநம்பிக்கைதான் ஒரு மனிதனது தவறுகளுக்கு பரிகாரம், உண்டியல், சடங்கு என்று சலுகைகள் காண்பிக்கிறதே ஒழிய நாத்திகம் அல்லை.

“கற்பைவிட சுகம்தான் பெரிது என்று பெண்களும், ஒழுக்கத்தையும் கௌரவத்தையும்விட பணம் சம்பாதிப்பதுதான் முக்கியம் என்று ஆண்களும் கருதிவிட்டால் அந்தச் சமுதாயத்தைச் சீர்கேடிலிருந்து காப்பாற்றவே முடியாது.” என்ற வரிகளின் மூலம் தினமணி வைத்தி என்ன கூறவிரும்புகிறார்?

டெல்லி மாணவி பேருந்தில் சிதைக்கப்பட்ட செய்தி வெளியான போதே ‘அந்த மாணவி இரவில் ஏன் தனியாக சென்றாள், ஆண் நண்பருடன் தனியாக போக வேண்டிய காரணம் என்ன?’ என்றெல்லாம் அட்வைசு பண்ணியதன் மூலம் அந்த பொறுக்கிகளின் குற்றத்தை தணித்தவர்தான் இந்த வைத்தி. இப்போது அதே பெண்கள் கற்பை விட சுகம் பெரிது என்று கெட்டுப் போகிறார்கள் என்கிறார். அதாவது வீட்டுக்கு அடக்க ஒடுக்கமான அடிமைகளாக இல்லாமல் வெளியில் செல்லும் பெண்கள் சுகத்திற்க்காக அலைபவர்கள் என்று முத்திரை குத்துகிறார். இந்த வக்கிரம் வன்புணர்ச்சி செய்யும் குற்றவாளிகளை விட எந்த விதத்தில் குறைந்தது?

“ஓரினச் சேர்க்கை, திருமணமாகாமல் சேர்ந்து வாழ்வது, இயற்கையை மீறிய திருமண பந்தங்கள், சின்னச் சின்னப் பிரச்னைகளுக்கும்கூட விவாகரத்து என்பவை எல்லாம் சமுதாயத்தில் சர்வ சாதாரணமான நிகழ்வுகளாக மாறிக் கொண்டிருப்பதை நாகரிகம் என்று இந்தியச் சமுதாயமும் ஏற்றுக்கொள்ளுமேயானால்,…”

மேலே வைத்தி மாமா பட்டியிலிட்டிருப்பவைகளுக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கும் என்ன சம்பந்தம்? இவைதான் பாலியல் வன்கொடுமைகளுக்கு காரணம் என்றால் பாலியல் குற்றம் என்றால் என்ன என்பதே இவர்களுக்குத் தெரியவில்லை. விநோதினியின் மேல் அமிலம் ஊற்றிய சுரேஷ் யார்? ஏன் வீசினான்? மேற்கண்ட பட்டியலில் ஒன்று கூட அவனுக்குப் பொருந்தாது எனில் குற்றத்திற்கு காரணம் என்ன? அவன் காதல், பெண் குறித்தோ இல்லை ஒரு காதலை மறுப்பதற்கு ஒரு பெண்ணுக்கு உரிமை உண்டு எனும் குறைந்த பட்ச ஜனநாயக உணர்வைக்கூட புரிந்து கொண்டிருக்கவில்லை. பெண்கள் தமது வேட்கைகளுக்கு பணிந்து கிடக்கக்கூடிய அடிமைகள் என்று பழக்கப்பட்டிருக்கும் சமூகத்தால் உருவாக்கப்பட்டவன் சுரேஷ். சுரேஷைக் கேட்டால் கூட மேலே வைத்தி மாமா பட்டியிலிட்டிருப்பதுதான் ஒழுக்கக் கேடுகளுக்கு காரணம் என்பதை ஏற்றுக் கொள்வான். அதாவது பெண்ணை கட்டுப்பட்டே ஆகவேண்டிய விலங்கு என்று கருதுபவர்கள்தான் ஓரினச் சேர்க்கை, லிவிங் டுகெதர், விவாகரத்து போன்றவற்றை எதிர்க்கிறார்கள். அந்த வகையில் வைத்தி மாமா இங்கே சொல்லியிருப்பது சேம் சைடு கோல்.

இறுதியில் விசயத்திற்கு வருகிறார் வைத்தி.

“மூலைக்கு மூலை திறக்கப்பட்டிருக்கும் மதுபானக் கடைகளும், தெருவெங்கும் அசைவ உணவைப் பரிமாறும் துரித உணவகங்களும், கையேந்தி பவன்களும், அதிகரித்து விட்டிருக்கும் அசைவ உணவுப் பழக்கமும் உணர்ச்சிகளை அதிகரித்து, சாத்வீக குணத்தை மழுங்கடித்து விடுகின்றன என்கிற உண்மையை நாம் எப்போது உணரப் போகிறோம்? அவை மனிதனுக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் மிருக உணர்வுகளைத் தூண்டிவிடும் என்பது விஞ்ஞானம் ஏற்றுக்கொண்டிருக்கும் உண்மை.” இதுதான் வைத்தி முத்தாய்ப்பாக சொல்ல வரும் நீதி. அல்லது காலந்தோறும் நெறி தவறாத பார்ப்பனியத்தின் வேதம்.

வைத்திமாமா கண்டுபிடிப்பின்படி படுக்கையறையை பள்ளியறையாகவும், கருவறையை காமாந்திர அறையாகவும் மாற்றிய ஜெயேந்திரன், நித்தியானந்தா, தேவநாதன் போன்றோர் ஒன்று மாட்டுக்கறியை முழுங்கி  மது குடிப்பவர்களாக இருக்க வேண்டும். இல்லையேல் நெய், தயிர், பருப்பு வகையறாக்களை அதிகம் விழுங்குபவர்கள் காமவெறியர்களாக இருக்க வேண்டும். எது உண்மை வைத்தி அவர்களே?

சைவம் சாத்வீக உணர்ச்சி, அசைவம் அசுர உணர்ச்சி என்பது பார்ப்பன இலக்கியங்கள் தொட்டு பலரும் சொல்லும் பச்சையான பார்ப்பனியத் திமிரே அன்றி வேறல்ல. இதை விஞ்ஞானம் வேறு ஏற்றுக் கொண்டிருக்கும் உண்மை என்பதாக அடித்து விடுகிறது தினமணி. ராகு, கேது கதை மூலம் கிரகணங்களை விளக்கியதுதான் இவர்களது விஞ்ஞான யோக்கியதைக்கு சான்று.

மாட்டுக்கறி தின்னும் பஞ்சமர்கள், மற்ற கறிகளைச் சாப்பிடும் சூத்திரர்கள் என்று உணவின் மூலமும் இழிவுபடுத்தும் பார்ப்பனியத்தின் திமிரைத்தான் வைத்தி இங்கே பிரதிபலித்திருக்கிறார். மட்டன், சிக்கன், பீஃப் சாப்பிடுபவர்கள்தான் பாலியல் வன்கொடுமைகளை செய்கிறார்கள் என்று காட்டுவதன் மூலம் இங்கே சைவ உணவு அல்லது பார்ப்பனியத்தின் ‘கொல்லாமையை’ புனிதப்படுத்துகிறார்கள். மோடியின் குஜராத்திலோ இல்லை தாக்கரேவின் மும்பையிலோ வெட்டிக் கொல்லப்பட்ட மக்களின் ரத்தம் இன்னும் காயாத நிலையில் சைவ உணவுக்காரர்களின் கொலை வெறியை உலகமே பார்த்தது உண்மை இல்லையா?

அல்லது அமெரிக்காகாரன் அதிகம் கறி சாப்பிடுவதால்தான் ஈராக், ஆப்கானில் மக்களை கொன்று குவித்தானா? இல்லை புலால் உண்ணாமையை போதித்த புத்த மதத்தைச் சேர்ந்த ராஜபக்சேவும் சிங்கள இனவெறி இராணுவமும் அகிம்சை பிரியர்களா? உணவுக்கும் வன்முறைக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பதுதான் முதல் உண்மை.

சரி வைத்தியின் வாதத்தை பெண்களுக்கும் பொருத்தி பார்த்தால் என்ன வரும்? மாமிசம் சாப்பிடும் பெண்கள்தான் அதிகம் ‘கற்பழிப்பை’ விரும்பி வரவழைக்கிறார்கள் என்று கூட வியாக்கியானம் செய்யலாமே? பாலியல் வன்முறையோ இல்லை வாழ்வியல் அடக்குமுறைகளோ எதுவும் குறிப்பிட்ட  சமூக பொருளாதார அரசியல் காரணங்களில் பிறக்கின்றன. அவை உணவினால் வருகின்றன என்று சுருக்குவது முட்டாள்தனமானது மட்டுமல்ல, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை ஆதிக்க சாதிவெறிக் கண்ணோட்டத்துடன் பார்க்கும் பார்ப்பனியத்தின் பச்சையான சாதிவெறியாகும்.

இந்த ஒன்றிற்காகவே வைத்தி மற்றும் தினமணி மேல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்கலாம்.

தினமணி ஒரு பார்ப்பனியப் பத்திரிகை அல்லது ஆர்.எஸ்.எஸ்இன் ஊது குழல் என்று ஒவ்வொரு முறையும் நாங்கள் சொல்லும் போதும் இல்லை அது ஒரு நடுநிலைப் பத்திரிகை என்று வக்காலத்து வாங்கும் அம்பிகள் இப்போது என்ன சொல்லப் போகிறார்கள்?

யார் இந்து? ஓடும் ரயிலில் பார்ப்பனர்களோடு சண்டை !

132

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் வழக்கின் இறுதி விசாரணை பிப்ரவரி 20ம் தேதி உச்சநீதி மன்றத்தில் நடக்கிறது.

இது பெரியாரின் நிறைவேறாத ஆசை. நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக பார்ப்பனர்கள் இதை சட்ட ரீதியாக தடுத்து வருகிறார்கள். பெரியார் பிறந்த மண் என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் தமிழகத்திலிருந்து இதை எதிர்த்து எந்த அமைப்பும் வழக்காடவில்லை.

ஒரு பக்கம் தடைகோரி பார்ப்பனர்கள். இன்னொரு பக்கம் பார்ப்பனர்களை பகைத்துக்கொள்ளாமல் வாதிடும் தமிழக அரசு. எதிர்த்தரப்பாக புரட்சிகர அமைப்புகள். இந்த மூன்று பேரைத் தவிர இந்த வழக்கில் வேறு யாரும் தங்களை இணைத்துக் கொள்ளவில்லை. பார்ப்பனர்கள் தரப்பில் பணத்தை அள்ளி இறைக்க ஆயிரம் பேர் இருக்கிறார்கள். பெரியார் படத்தையும் கோடிகளில் பணத்தையும் வைத்துக் கொண்டிருப்பவர்களோ அமைதியாக இருக்கிறார்கள் ! இந்நிலையில் ம.க.இ.க உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகள் தமிழகம் முழுவதும் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வழக்கு நிதி திரட்டி வருகின்றனர்.

சென்னை மின்சார இரயிலில் ஒரு முழு நாள் செய்யப்பட்ட பிரச்சாரம் மற்றும் நிதிவசூல் அனுபவம் ஒன்றை வாசகர்களுக்காக இங்கு தருகிறோம்.

ஓடுகின்ற மின்சார இரயிலில் தோழர்கள் குழுக்களாக பிரிந்துகொண்டு ஒவ்வொரு பெட்டியாக ஏறி மக்களிடையே வழக்கைப் பற்றி விளக்கி கூறிய பிறகு நிதி கோருவார்கள். பிரச்சாரத்தின் போது மக்களிடையே பேசிய உரையின் சுருக்கம் இது தான்.

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
தேர்தல் பாதை திருடர் பாதை! புரட்சி ஒன்றே மக்கள் விடுதலைப் பாதை! என்கிற முழக்கத்தோடு செயல்பட்டு வரும் புரட்சிகர நக்சல்பாரி அமைப்பான மக்கள் கலை இலக்கியக் கழகத்திலிருந்து வருகிறோம். வணக்கம்.

இந்த நாட்டில் பெரும்பான்மை மக்கள் இந்துக்கள் என்கிறார்கள், சரி தான், ஆனால் ஒரு மதம் என்கிற வகையில் மதங்கள் பக்தனுக்கு வழங்கக்கூடிய அடிப்படையான வழிபாட்டு உரிமையை இந்து மதம் அனைத்து இந்துக்களுக்கும் வழங்கியிருக்கிறதா என்றால் இல்லை. பக்தன் தனது கடவுளை தொட்டு வணங்கி பூஜிக்கும் உரிமையை இந்து மதம் அனைவருக்கும் வழங்கவில்லை. நீங்கள் கோவில் வாசல்படி வரை தான் போக முடியும், அதற்கு மேல் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது, மீறி எடுத்து வைத்தால் அங்கு வன்முறை வெடிக்கும். இன்றுவரை ஆகம விதிகளின்படி அமைந்த கோவில் கருவறைக்குள் பார்ப்பனர்களைத் தவிர வேறு எந்த இந்துவும் நுழைய முடியாது. இது தான் இந்து மதம். இரண்டாயிரம் ஆண்டுகளாக இது தான் நிலைமை. இதை எதிர்த்து தான் தந்தை பெரியார் 1970-ல் கருவறை நுழைவுப் போராட்டத்தை அறிவித்தார்.

உடனே அன்றைக்கு இருந்த தி.மு.க அரசு அனைவரையும் அர்ச்சகராக்கும் சட்டத்தைக் கொண்டு வந்தது. பார்ப்பனர்கள் அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தடையாணை வாங்கினார்கள். தமிழக அரசு அதற்கெதிராக எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. அதன்பிறகு கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் கழித்து 2006 இல் தி.மு.க அரசு அனைவரையும் அர்ச்சகராக்கும் அரசாணையை வெளியிட்டு, அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி ஒன்றையும் துவங்கியது. அதில் பல்வேறு சாதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்க்கான மாணவர்கள் படித்தார்கள். அவர்களில் 206 மாணவர்கள் முறையாக ஆகம விதிகளை கற்று, சமஸ்கிருத வேதங்கள், ஸ்லோகங்களை கற்று தீட்சையும் பெற்று கோவில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட இருந்த தருணத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோவில் பார்ப்பனர்கள் மறுபடியும் உச்சநீதி மன்றத்தில் நியமனத்திற்கு தடை வாங்கினார்கள்.

இதன் மூலம் இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்? என்னைத் தவிர எவனும் கோவில் கருவறைக்குள் வரக்கூடாது என்கிறார்கள். பொதுவாக சாதியைப் பற்றி பேசினால் பலரும் இப்பல்லாம் யார் சார் சாதி பார்க்கிறாங்க என்று கேட்கிறார்கள். இதோ இது தான் ஆதாரம், இது தான் சான்று. இதற்கு பெயர் என்ன? அப்பட்டமான, பச்சையான சாதிவெறி இல்லையா இது? இவர்கள் தான், இந்த பார்ப்பனர்கள் தான் வெறித்தனமாகவும், பார்ப்பன கொழுப்பு கொப்பளிக்கவும் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இடஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள். கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீட்டை எதிர்க்கும் இவர்கள் தான் கோவில் கருவறைக்குள் முழு இடஒதுக்கீடும் தமக்கே வேண்டும் என்று ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்துக்களில் பார்ப்பனர்கள் வெறும் மூன்று சதவிகிதம் தான். மூன்று சதவிகிதம் உள்ள பார்ப்பன கும்பல் மிச்சமுள்ள தொண்ணூற்று ஏழு சதம் இந்துக்களை, அதாவது பெரும்பான்மையான இந்துக்களை கோவில் கருவறைக்குள் விட மறுப்பது ஏன்? இது தான் மிக முக்கியமான கேள்வி. நீங்கள் இந்தியாவின் ஜனாதிபதியாகலாம், பிரதமர் கூட ஆகிவிடலாம் ஆனால் கோவில் கருவறைக்குள் நுழைய முடியாது ! ஏனென்றால் பெரும்பான்மை மக்களை இந்து மதம் சூத்திரன், பஞ்சமன் என்கிறது. சூத்திரன் என்றால் என்ன தெரியுமா? வேசி மக்கள் என்று அர்த்தம். அந்த வேசி மக்கள் சாமியை தொட்டால் சாமி தீட்டாகி பவரை இழந்துவிடும் என்கிறான் பார்ப்பான். அதனால்தான் பிறப்பிலேயே உயர்ந்தவனாகிய என்னைத்தவிர எவனும் உள்ளே வரக்கூடாது என்கிறார்கள்.

இது செருப்பால் அடித்தது போல் இல்லை? இது அவமானமாகவும், அசிங்கமாகவும் இல்லையா? இந்த நாடு வல்லரசு ஆகிக்கொண்டிருக்கிறது என்கிறார்கள், உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு என்கிறார்கள், ஆனால் சாமியை கும்பிடுவதற்குக் கூட இங்கு ஜனநாயகம் இல்லை.

இங்குள்ள கோவில்களில் எல்லாம் ஆகமவிதிப்படி தான் எல்லாம் நடக்கிறதா ? கோவில்களையே லாட்ஜாகவும், டாஸ்மாக் பாராகவும் பயன்படுத்தும் கிரிமினல் சங்கராச்சாரி, தேவநாதன், தில்லை தீட்சிதர்கள் எல்லாம் ஆகமவிதிகளின் படி தான் நடந்து கொள்கிறார்களா?

இது தமிழனுக்கு நேர்ந்த இழிவு மட்டுமல்ல, தமிழுக்கும் நேர்ந்த இழிவு. தமிழனைப் போல தமிழ் மொழியும் கருவறைக்குள் நுழைய முடியாது. தமிழர்கள் வேசி மக்கள் என்றால் அவர்களின் மொழி வேசி மொழி, நீஷ பாஷை என்று கூறி கருவறைக்குள் விட மறுக்கிறது பார்ப்பனியம்.

எனவே யார் யாரெல்லாம் தன்னை இந்து என்று கருதிக்கொள்கிறார்களோ, யார் யாரெல்லாம் தமிழ் என்னுடைய தாய் மொழி என்று கூறுகிறார்களோ அவர்களுடைய பிரச்சினை இது. உங்களுடைய பிரச்சினை இது. ஒட்டுமொத்த இந்துக்களுக்கும் நாங்க தான் அத்தாரிட்டின்னு பேசுகின்ற பி.ஜே.பி.யோ இந்து முன்னணியோ அல்லது வேறு எந்த இந்து அமைப்புகளுமோ இந்தப் பிரச்சினையில் தலையிடவில்லை. அவர்கள் அமைதியான முறையில் ஆலையத் தீண்டாமையை அங்கீகரிக்கிறார்கள். நக்சல்பாரி புரட்சிகர அமைப்புகள் தான் இந்தப்பிரச்சினைக்காக போராடி வருகிறார்கள்.

வருகின்ற இருபதாம் தேதி இந்த வழக்கு உச்சநீதி மன்றத்தில் இறுதி விசாரணைக்கு வருகிறது. பார்ப்பனர்களின் தரப்பில் பராசரன் என்கிற மூத்த வழக்குரைஞர் ஆஜராகிறார். அவருடைய வாதங்களை முறியடிக்க வேண்டுமானால் அவருக்கு இணையான வழக்குரைஞர்களை நியமிக்க வேண்டியுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டுக்கு எல்லோரும் சாதாரணமாக போய்விட முடியாது. ஒரு வழக்குரைஞரை நியமித்து அவர் ஒரு முறை எழுந்து நின்று வாதாடினாலே சில பல லட்சங்களை எடுத்து வைக்க வேண்டியிருக்கும். பார்ப்பனர்களுக்கு பல லட்சங்களை கொட்டி அழுவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால் நாங்கள் முதலாளிகளிடமோ, கந்து வட்டிக்காரர்களிடமோ, சமூக விரோதிகளிடமோ போய் கையேந்துபவர்கள் அல்ல. மாறாக அனைத்து போராட்டங்களுக்கும், வழக்குகளுக்கும் மக்களையே சார்ந்து நிற்கிறோம். உழைக்கும் மக்கள் வழங்கும் நிதியிலிருந்து தான் எமது போராட்டங்களையும் வழக்குகளையும் நடத்துகிறோம். அந்த வகையில் இந்த வழக்கை நடத்துவதற்கான நிதியை கோரி உங்கள் முன்னால் வந்திருக்கிறோம். அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவதன் மூலம் சாதி தீண்டாமையை ஒழித்துக்கட்ட உங்களையும் எங்களோடு இணைத்துக்கொள்ளுங்கள். சாதி தீண்டாமையை ஒழித்துக்கட்ட நிதியளித்து ஆதரவு தாருங்கள். நன்றி.

என்று உரையாற்றிய பிறகு தமது பங்கேற்பை உறுதிபடுத்தும் வகையில் மக்கள் நிதியளிப்பார்கள். இந்த நிதிவசூல் பிரச்சாரம் எந்த தடையுமின்றி நடந்துவிடவில்லை. இந்த பிரச்சாரம் மட்டுமல்ல எந்த பிரச்சாரமும் அப்படி நடப்பதில்லை. பல்வேறு இடையூறுகள், தடைகள், சண்டை சச்சரவுகளைக் கடந்து தான் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் நிதிவசூல் நடத்தப்படுகிறது. சிறப்பாக இந்த பிரச்சாரம் நேரடியாக இந்து மதத்தின் தீண்டாமையை தாக்கக்கூடியதாக இருப்பதால் வரவேற்பும் எதிர்ப்பும் சேர்ந்தே இருக்கிறது.

இந்து முன்னணி லும்பன்கள், ஆர்.எஸ்.எஸ் இல் இல்லாத ஆர்.எஸ்.எஸ் காரர்கள், பார்ப்பனியத்தை ஆதரிப்பவர்கள், பார்ப்பனர்கள், கருப்பு பார்ப்பனர்கள் என்று பல தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்பு வந்தது. இவர்களைத் தவிர பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் விசயத்தை கூர்ந்து கவனித்து மகிழ்ச்சியோடு நிதியளித்தார்கள். பார்ப்பனர்களையும் கருப்பு பார்ப்பனர்களை எதிர்த்து கேள்வி எழுப்பினார்கள்.

ரு பெட்டியில் தோழர் ஒருவர் பேசிக்கொண்டிருக்கும் போது ஒரு பார்ப்பனரும் அவரோடு ஒரு கருப்பு பார்ப்பானரும் சேர்ந்து கொண்டு இந்து மதத்தைப் பற்றி பேசக்கூடாது என்று சண்டைக்கு வந்தனர்.

“ஏய் நிறுத்துடா மதத்தை பத்தியும், சாதியை பத்தியும் இங்க பேசாதே!” என்றனர்.

தோழர்கள் பதிலளிப்பதற்குள் தரையில் அமர்ந்துகொண்டிருந்த உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவர் பாய்ந்துகொண்டு வந்தார்

“ஏன் பேசக்கூடாது, அவனுங்க பன்ற அட்டகாசம் தாங்க முடியலய்யா, காது குத்திலிருந்து கல்யாணம் வரைக்கும் எல்லாத்துக்கும் ஐயாயிரம் பத்தாயிரம்னு காசப் புடுங்குறானுங்க, கொள்ளையடிக்கிறானுங்க. அதை பேசக் கூடாதா ? அவங்கள பேசக்கூடாதுன்னு சொல்ல நீ யாருய்யா? தம்பி நீ பேசுப்பா” என்றார். இரண்டு பேரும் கப்சிப் ஆகிவிட்டார்கள். அதோடு அடுத்த ஸ்டேஷனில் இறங்கியும் போய் விட்டனர்.

ன்னொரு பெட்டியில் பேசிக்கொண்டிருந்த போது குழந்தை குட்டிகளோடு வந்திருந்த நடுத்தர வயதைச் சேர்ந்த ஒருவர் எழுந்து நின்று ஆவேசமாகக் கத்தத் துவங்கி விட்டார். “இந்து மதத்தை பத்தி நீ எப்படி பேசலாம், வெளிய போடா நாயே, டிரெய்ன விட்டு கீழ இறங்குங்கடா” என்றார். தோழர்கள் பொறுமையாக விளக்கமளித்தனர். இருந்தும் அவர் அடங்கவில்லை.

“சரி நாங்கள் பேசுவதைப் போல நீங்களும் உங்கள் கருத்தை மக்கள் மத்தியில் நின்று பேசுங்கள்” என்றனர். அதற்கும் அவர் சம்மதிக்கவில்லை. அத்துடன் “தே.பசங்களா, மகனுங்களா” என்றெல்லாம் கெட்ட வார்த்தைகளில் ஏசத்துவங்கிவிட்டார். அதன்பிறகு தோழர்கள் அவரை நையப்புடைத்து விட்டார்கள். அடி உதைகளால் அல்ல வார்த்தைகளால். நாலா பக்கமும் சூழ்ந்துகொண்டு அவரை நோக்கி தோழர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திக்குமுக்காடிப்போனார்.

இதற்கிடையில் அவருடைய வேட்டி வேறு அவிழ்ந்துவிட்டது. வேட்டியை சரி செய்வதா பதிலளிப்பதாக என்று தெரியாமல் தடுமாறிக்கொண்டிருந்தார். அவரை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்திவிட்டு தோழர்கள் அடுத்த ஸ்டேஷனில் இறங்கினர்.

தொண்ணூற்று ஒன்பது சதம் பார்ப்பனர்கள் வாயையே திறக்கவில்லை. தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தனர்.

ரு பெட்டியில் ஆறு ஏழு பார்ப்பனர்கள் அமர்ந்துகொண்டிருந்தனர். அவர்களில் நீட்டாக பேண்ட் ஷ்ர்ட் அனிந்து உச்சிக்குடுமியுடன் அமர்ந்துகொண்டிருந்த ஒரு நடுத்தர வயது பார்ப்பனர் துண்டறிக்கையை கேட்டு வாங்கி படித்துக்கொண்டிருந்தார். அவருக்கு எதிரில் ஒருவர் அமர்ந்திருந்தார். அப்போது தான் டாஸ்மாக்கிலிருந்து வந்திருக்கிறார் என்பது அவரைக் கடந்து சென்ற போது நன்றாக தெரிந்தது.

பேசிக்கொண்டிருந்த தோழர் ’பார்ப்பனக் கும்பல்’ என்ற வார்த்தையை உச்சரித்ததும் “டேய்” என்றார் லும்பன் பார்ப்பனர். அதை சட்டை செய்யாமல் தோழர் தொடரவே அடுத்ததாக “வேண்டாம்… வேண்டாம்..” என்று இழுத்தார். உடனே அருகில் நின்று கொண்டிருந்த மற்றொரு தோழர் “என்ன வேண்டாம்.. என்ன..” என்று கேட்டுக்கொண்டே அருகில் நெருங்கியதும் உச்சிக்குடுமி பார்ப்பனர் உதிரிப் பார்ப்பனரை பார்த்து ’எதுக்கு சும்மா டென்ஷன் ஆகிறேள்’ என்றார் ஏதோ ஒரு அர்த்தத்துடன். அத்துடன்டு லும்பன் பார்ப்பனர் நிதானமாக பேச முடியாத நிலையிலும் இருந்ததால் வாயை மூடிக்கொண்டார்.

ன்னொரு கம்பார்ட்மெண்டில் உலகறிந்த பொறுக்கியான நித்தியானந்தாவைப் பற்றி பேசியதற்கு ஒருவர் சண்டைக்கு வந்துவிட்டார். தமிழகத்தில் நித்திக்கெல்லாம் ஆதரவாளர்கள் இருக்கிறார்களே என்று அதிர்ச்சியாக இருந்தது. அதன் பிறகு தான் “அந்தாள் நித்தியோட சாதிக்காரன் தோழர் அதனால தான் அவனுக்கு கோபம் வருது” என்றார் ஒரு தோழர்.

வேறொரு பெட்டியில் பேசி முடித்ததும் “சங்கராச்சாரியை பற்றி தப்பா பேசாதீங்க” என்றார் ஒரு பார்ப்பனர். ஏன் என்பதில் துவங்கி பல்வேறு கேள்வி பதில் மறுப்பு என்று போய்க்கொண்டிருந்த விவாதத்தில், “சரி ஜெயேந்திரரை நீங்க மகா பெரியவான்னு சொல்றீங்க அந்த மகா பெரியவா இப்போ நித்தியானந்தாங்கிற மகா பொறுக்கியை பார்த்திருக்கிறாரே அதுக்கு என்ன சொல்றீங்க” என்றதும், “அது அவரோட பர்ஸ்னல்(!) விஷயம்” என்றார். கடைசியில் “நான் என்ன சொல்ல வர்றேன்னா ஜெயேந்திரரை நீங்கள் குற்றவாளின்னு சொல்ல முடியாது ஏன்னா வழக்கு நீதிமன்றத்தில் நடந்துட்ருக்கு அவர் குற்றவாளியா இல்லையான்னு நீதிமன்றம் தான் சொல்லணும். வேணும்னா பொறுக்கின்னு சொல்லிக்கிங்க “என்றார். இவர் நூறு ரூபாய் நன்கொடையும் போட்டார். இது என்ன மாதிரி கேஸ் என்பது புரியவில்லையே என்று எண்ணிக்கொண்டே அடுத்தப் பெட்டிக்கு ஓடினோம்.

தோழர் ஒருவர் பேசிக்கொண்டிருந்தார். பேசிக்கொண்டிருந்த போதே மூலையில் அமர்ந்திருந்த ஒருவர் விதம் விதமாக முகத்தை சுழித்துக்கொண்டிருந்தார். பிறகு நிதி கோரி உண்டியலை ஏந்திச் சென்ற போதும் “ச்சீ.. போ அந்தப்பக்கம்” என்பதைப் போல நிதி தர மறுத்து வேகமாக தலையை ஆட்டினார். அவ்வாறு தலையை ஆட்டியதில் ‘நான் மட்டுமல்ல நீங்களும் போடாதீர்கள்’ என்று மற்றவர்களுக்கும் சேர்த்து ஆட்டியதை போல இருந்தது. அந்த பெட்டியில் பேசி முடித்ததும் மதிய உணவு இடைவேளைக்காக இறங்க வேண்டும் என்பதால் அதே பெட்டியிலுள்ள இருக்கைகளில் அமர்ந்தோம். ஒரு தோழர் மட்டும் அந்த நபரை ஆரம்பத்திலிருந்தே கவனித்துக்கொண்டே இருந்தார்.
தமிழ்நாடு பார்ப்பனர்
அந்த நபருக்கு அருகில் அமர்ந்து கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் அனைவரும் நிதியளித்திருந்தனர். துண்டறிக்கையை அனைவரும் கூட்டாக சேர்ந்து வாசித்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு அருகில் தான் அந்த முக்கியஸ்தர் அமர்ந்துகொண்டிருந்தார். அவர் அந்த மாணவர்களிடம் “இதெல்லாம் என்னப்பா முட்டாள்தனமா இருக்கு, எல்லோரும் அர்ச்சகராகனும்னு பேசுறாங்களே இதெல்லாம் தேவையா? தேவையில்லாத வேலைப்பா” இது என்று பிரச்சாரம் செய்துகொண்டிருந்ததை அந்த தோழர் பார்த்து விட்டார்.

உடனே அனைத்து தோழர்களும் அவர் அமர்ந்திருந்த இருக்கைக்கு மாறினர். “உங்கள் பிரச்சினையை எங்ககிட்ட சொல்லுங்க சார்” என்றதும் அவர் அதிர்ந்து போனார். இதை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் தோழர்கள் இறங்காமல் அதே பெட்டியில் அமர்ந்துவிட்டதை அவர் கவனிக்கவில்லை, இறங்கிப் போய்விட்டார்கள் என்று எண்ணிக்கொண்டு தான் மாணவர்களிடம் தனது பார்ப்பன ஆதரவுப் பிரச்சாரத்தை செய்து கொண்டிருந்தார்.

இருந்தாலும் சமாளித்துக்கொண்டு “எதுக்கு எல்லோரும் அர்ர்சகராகனும்னு சொல்றீங்க” என்றார். “ஆகம விதிப்படி அமைந்த இந்துக்கோவில்களில் பார்ப்பனர்களைத் தவிர வேறு யாரும் கருவறைக்குள் நுழைய முடியாதுங்க…” என்று விளக்கிக்கொண்டிருக்கும் போதே, “ஏன் நான் நுழைஞ்சிருக்கேனே” என்றார். “நீங்க ஏதாவது ஒரு கருப்பசாமி கோவில்ல நுழைஞ்சிருக்கலாம் சிறீரங்கம், திருவண்ணாமலை, திருச்செந்தூர், பழனி போன்ற கோவில்களில் நுழைய முடியாது, ஏன் தெரியுமா? ஏன்னா அது தீட்டு” என்று விளக்கினோம்.

“அப்படியெல்லாம் ஒன்னுமில்ல காலம்காலமா இப்படித்தான் இருக்கு, இந்து மதம் எல்லோருக்கும் சொந்தமானது தான் நீங்க தான் பர்ப்பனர்களை மட்டுமே வேணும்னு திட்றீங்க அந்த கோவில் இல்லைன்னா வேற கோவிலுக்கு போங்க அங்கே ஏன் போறீங்க” என்றார்.

“வேற கோவிலுக்கு போறதெல்லாம் இருக்கட்டுங்க அந்த கோவிலுக்குள்ள ஏன் விடமாட்டேங்கிறாங்கிறதை முதல்ல பேசுங்க. இடஒதுக்கீட்டை எதிர்க்கிற இந்த பார்ப்பனர்கள் தான் கருவறைக்குள்ள நூறு சதவீதம் இடத்தையும் ஆக்கிரமிச்சிக்கிட்டு மத்தவங்களை விடமாட்டேங்கிறாங்க” என்றதும்.

“இடஒதுக்கீடே குடுக்கக்கூடாதுங்கிறேன் எதுக்கு இடஒதுக்கீடு ? இடஒதுக்கீடு கொடுக்கிறதால தான் திறமை இல்லாம போகுது” என்றார்.

“சார் நீங்க பாப்பானுக்காகவும் இந்துமதத்துக்காகவும் ரொம்ப வருத்தப்படுறீங்க. இந்து மதத்துக்காக இவ்வளவு பேசுறீங்களே பகவத்கீதையோட பதினாறாவது அத்யாயத்துல கண்ணன் என்ன சொல்றான்னு தெரியுமா?” என்றதும் திரு திருவென்று முழித்தார். அருகில் அமர்ந்திருந்த மாணவர்களையும் பார்த்துக்கொண்டார். மாணவர்கள் நக்கலாக பார்த்துக்கொண்டிருந்தனர். கடைசியில் “தெரியல நீங்களே சொல்லுங்க” என்றார்.

“சரி, மனுஸ்மிருதியில் பார்ப்பனர்களைத் தவிர உள்ள பெரும்பான்மை மக்களை என்னன்னு எழுதி வச்சிருக்கான்னு தெரியுமா?” என்றோம் அதற்கும் “தெரியாது நீங்களே சொல்லுங்க” என்றார். இதற்கிடையில் அனைவரும் இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டது. பிளாட்பாரத்தில் இறங்கியும் அவருடைய பார்ப்பன அடிவருடித்தனத்தை அம்பலப்படுத்திக்கொண்டிருந்தோம். அந்த மாணவர்கள் பிளாட்பாரத்தில் இறங்கிய பிறகும் அவரை வடிவேலைப் பார்ப்பதைப் போல பார்ப்பதை விடவில்லை. மாணவர்களுக்கு புத்திமதி சொல்லப்போய் அவர்கள் காரித்துப்பாத குறையாக அந்த நபர் அனைவரின் முன்பாகவும் அவமானப்பட்டுப்போனார்.

இதைப்போன்று இன்னும் பல்வேறு சம்பவங்களும் இந்த நிதிவசூல் அனுபவத்தில் கிடைத்தன. அனைத்தையும் குறிப்பிட்டால் நான்கு பதிவுகளாக விரியும். பார்ப்பனியத்தை எதிர்த்து செய்யப்பட்ட இந்த பிரச்சாரத்தில் பொதுவாக பெரும்பான்மையாக உழைக்கும் மக்களும், நடுத்தர வர்க்கத்தில் குறிப்பிடத்தக்க அளவுக்கும், மாணவர்கள் மத்தியில் குறிப்பிடும்படியும் வரவேற்பு இருந்தது. இவர்கள் அனைவரும் நிதியளித்து ஆதரவளித்தனர்.

பிரச்சாரத்தின் வீச்சாலும் அதன் நியாயத்தாலும் பார்ப்பனர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் கப்சிப் ஆகியிருந்தானர். பார்ப்பனமயமாக்கப்பட்ட பலர் பார்ப்பனர்களாக இல்லாவிட்டாலும் பார்ப்பனர்களுக்காக பரிந்துபேசினார்கள். பார்ப்பனர்களை விட இத்தைகைய கருப்புப் பார்ப்பனர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இவர்களை கருத்து ரீதியாக வீழ்த்தாவிட்டால்பெரியார் பிறந்த மண் என்று இனியும் நாம் பெருமைப்பட்டுக்கொள்ள முடியாது.

பெண்கள் மீதான வன்முறை: தீர்வு அளிக்கும் திசை எது?

11
பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு

டெல்லி மக்கள் போராட்டத்தை ஒட்டி, பெருகி வரும் வல்லுறவுக் குற்றத்தை தடுப்பது குறித்து சட்டம், பண்பாடு ஆகிய இரு தளங்களில் இரு விதமான கருத்துகள் கூறப்படுகின்றன. நடந்துள்ள குற்றத்தின் கொடூரம் காரணமாக வல்லுறவுக் குற்றவாளிகளைத் தூக்கிலிடவேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்படுகிறது. பிரச்சினை சூடாக இருப்பதால், வல்லுறவுக் குற்ற வழக்குகள் விசாரிக்கப்படாமல் தேங்கிக் கிடப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. அவற்றை விரைந்து முடிக்க வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கிறது உச்ச நீதிமன்றம்.

பண்பாட்டுத் தளத்தில், பெண்கள் அடக்க ஒடுக்கமாக உடையணியாதது, இரவு நேரத்தில் தனியாகப் போவது போன்ற மேற்கத்திய கலாச்சார சீரழிவுகளே இதற்கு காரணம் என்று சங்கப்பரிவாரத்தினர் உள்ளிட்ட பிற்போக்குவாதிகள் கூறுகின்றனர். இசுலாமிய மதவாதிகள் உடனே பர்தா மார்க்கெட்டிங்கை த் தொடங்குகின்றனர்.

பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு
பெண்களுக்குப் பாதுகாப்பு கோரியும், பாலியல் வல்லுறவுக் குற்றங்களில் ஈடுபடுவோருக்குத் தூக்கு தண்டனை விதிக்கக் கோரியும் டிசம்பர் 23 அன்று டெல்லியில் நடந்த ஆர்ப்பாட்டம்

ஆயிரம் முறை பதிலளிக்கப்பட்டாலும், இந்த ஆணாதிக்கக் கருத்துகள் வெட்ட வெட்டத் துளிர்க்கின்றன. ஆண் சட்டையைக் கழற்றுவதும், வெற்றுடம்போடு இருப்பதும் தங்களை மிருகமாக்குவதாக பெண்கள் கூறவில்லையே, ஆண்கள் கல்லூரிகளின் பேருந்து நிறுத்தங்களில் பெண்கள் குவிவதில்லையே என்ற எளிய உண்மைகள் கூட ஆண்களுக்கு உரைப்பதில்லை. பத்து நாள் பட்டினி ஆனாலும், ஓட்டல் கடையில் தின்பண்டங்களின் மீது காசு கொடுக்காமல் யாரும் கை வைப்பதில்லை. அந்த அளவுக்குத் தனிச் சொத்துடைமையை மதிக்கும் கருத்து இரத்தத்தில் ஊறியிருப்பவர்கள்தான், யாரோ ஒரு பெண் கவர்ச்சியாக உடையணிந்து சென்றால் தன்னை கைநீட்ட வைக்கிறது என்று கூச்சமில்லாமல் பேசுகின்றனர்.

இந்த கூச்சமின்மை நிலப்பிரபுத்துவ ஆணாதிக்கம் அளித்த பண்பாட்டுக் கொடை. பெண்ணை போகப்பொருளாகப் பார்ப்பதற்குப் பழக்கியிருக்கும் நிலவுடைமைப் பண்பாடு கூட, மனித குல மறுஉற்பத்தியில் பெண்கள் ஆற்றும் பாத்திரத்தை மதிக்க வேண்டிய கட்டாயம் இருந்த காரணத்தால், தாய்மை – புனிதம் என்ற விழுமியங்களை வைத்திருந்தது.

ஆனால் மறுகாலனியாக்க கொள்கைகளின் கீழ் அதிரடியாகத் திணிக்கப்படும் முதலாளித்துவமோ, நிலப்பிரபுத்துவத்துடன் இணைந்த வீரிய ஒட்டு ரகப் பண்பாட்டை உருவாக்கியிருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளில்தான் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பெண் சிசுக்கொலை அதிகரித்திருக்கிறது. வரதட்சிணைக் கொலைகளும் அதிகரித்திருக்கின்றன. வாடகைத் தாய்களின் விலை குறைந்து வருகிறது.

“புகுந்த வீட்டில் உங்கள் மகள் பாதுகாப்பாக வாழ்வதை உறுதி செய்ய எங்கள் கடையில் நகை வாங்குங்கள்” என்ற விளம்பரத்தை எதிர்த்து சமீபத்தில் டெல்லியில் போராட்டம் நடத்தியிருக்கிறது, ஒரு பெண்கள் அமைப்பு. புகுந்த வீடு போகும் பெண்ணின் உயிரை உத்திரவாதப்படுத்த, நகை அணிவித்து அனுப்புவதைப் போல, வெளியில் செல்லும் பெண்களின் ‘கற்பை’ உத்திரவாதப்படுத்தவும் கவசங்கள் விற்கப்படலாம். பாலியல் தாக்குதலைத் தடுக்க மாணவிகள் மேல் கோட்டு அணிய வேண்டும் என்று புதுச்சேரி அரசு கூறியிருக்கிறது. மேற்கூறிய எடுத்துக்காட்டுகள் அனைத்தும் ஆணாதிக்கத்துக்கு அளிக்கப்படும் அங்கீகாரங்கள்.இராணுவமும் போலீசும்

தொலைக்காட்சியும் திரைப்படங்களும் ஆணாதிக்கத்தை மேலும் வக்கிரமாக்கியிருக்கின்றன. தன்னைக் காதலிக்குமாறு கட்டாயப்படுத்தியதற்காக சூர்ப்பனகை மூக்கை அறுத்தான் ராமன் என்கிறது ராமாயணம். காதலிக்க மறுக்கும் பெண்கள் மீது ஆசிட் ஊற்றுவது சகஜமாகி வருகிறது. ஏனென்றால், நுகர்வியம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தனிநபர்வாத வெறித்தனத்தை வளர்த்து விட்டிருக்கிறது.

எவ்வளவு நுகர்கிறோமோ அவ்வளவு மகிழ்ச்சி, விதவிதமாக நுகர்வதே வாழ்க்கையின் நோக்கம் என்ற மனோபாவமே ஒரு மனிதனின் விழுமியங்களை ஆட்சி செய்கிறது. இத்தகைய சூழலில் ஆண்களின் நுகர்பொருள் பட்டியலில் பெண்ணும் ஒரு பண்டமாகக் காட்டப்படும்போது, அவள் மிக எளிதில் பாலியல் வன்முறையின் இலக்காகி விடுகிறாள். சக மாணவன், ஆசிரியன், தெருவில் போகிறவன், பக்கத்து வீட்டுக்காரன், சொந்தக்காரப் பையன் என்று எந்த ஒரு ஆணும் தன்மீது பாலியல் வன்முறையை செலுத்தக்கூடும் என்ற அச்சத்துடன் வாழவேண்டிய நிலைக்கு ஒரு பெண் ஆளாக்கப்பட்டிருக்கும்போது, இதனை சட்டத்தின் மூலம் தடுப்பது எப்படி என்பதே கேள்வி.

வர்மா கமிசன்
நீதிபதி வர்மா கமிசன் அளித்த பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தக் கோரி ‘குடியரசு’ தினத்தன்று டெல்லியில் நடந்த ஆர்ப்பாட்டப் பேரணி (உள்படம்) நீதிபதி வர்மா.

தீண்டாமையை நல்லொழுக்கமாகக் கருதும் சமூகத்தின் மீது விதிக்கப்பட்டிருக்கும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் ஏன் இயங்க மறுக்கிறதோ, அதே காரணத்தினால்தான், ஆணாதிக்க வன்முறைகளுக்கு எதிரான சட்டங்களும் இயங்குவதில்லை. சட்டம் எதனைக் குற்றம் என்று விளக்குகிறதோ, அதுவே ஆண்மையின் இலக்கணமாக பண்பாட்டால் உயர்த்தப்படும்போது, பெண்ணை துரத்தி மிரட்டிப் பணியவைப்பது கதாநாயகர்களின் சாதனை ஆகிவிடுகிறது. இத்தகையொரு ‘நாயகன்’தான் காதலுக்கு இணங்க மறுத்த காரணத்தினால் விநோதினி என்ற பெண்ணின் முகத்தில் ஆசிட் ஊற்றினான். முந்தையது கலை, பண்பாடு. பிந்தையது குற்றம். “புகை, குடி போன்றவற்றைக் காட்டிலும் வல்லுறவும் கொலையும் பாரிய குற்றங்கள் அல்லவா? சினிமாவில் அத்தகைய காட்சிகள் வரும்போதும் எச்சரிக்கை வாசகம் வெளியிடலாமே!” என்று கேலி செய்திருந்தார் திரைப்பட இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன்.

மறுகாலனியாக்கம் வர்க்க ரீதியில் மட்டும் சுரண்டல், ஏற்றத்தாழ்வை அதிகரிக்கவில்லை. அது ஏற்கெனவே சமூகப் படிநிலையில் அதிகம் ஒடுக்கப்படுபவர்களாக இருக்கும் பெண்கள், தாழ்த்தப்பட்டவர்கள் மீதான சுரண்டல் -அடக்குமுறையையும், அதன் விளைவாக முரண்பாடுகளையும் தீவிரப்படுத்தியிருக்கிறது. பெண்களின் மீதான வன்முறை அதிகரிப்பதற்கான சமூக, பொருளாதார, பண்பாட்டுக் காரணிகள் என்னவென்று யாருக்கும் தெரியாமல் இல்லை. இருப்பினும், அவை ஆளும் வர்க்க நலனுக்கானவை என்பதால், அவற்றை இருட்டடித்து விட்டு, வல்லுறவை தனியானதொரு குற்றமாகக் காட்டவே அரசு முயற்சிக்கிறது.

மறுகாலனியாக்கம்அப்பட்டமான பாலியல் குற்றங்களே தண்டிக்கப்படுவதில்லை என்ற சூழ்நிலை ஒருபுறம் நிலவும்போதே, மேட்டுக்குடி பெண்ணியவாதிகள், ஆணாதிக்கத்தின் புதிய நுட்பமான வடிவங்களைப் பட்டியலிட்டு இவையும் குற்றங்களாகச் சேர்க்கப்பட வேண்டுமென்று அரசிடம் கோருகின்றனர். இவற்றையும் குற்றம் என்று அங்கீகரித்து சட்டப் புத்தகத்தில் ஏற்றி விடுவதன் மூலம், அந்தக் குற்றங்கள் நிகழ்வதற்கான சமூகப் பண்பாட்டு காரணங்களுக்குப் பொறுப்பேற்பதிலிருந்து அரசும் ஆளும் வர்க்கமும் தார்மீக ரீதியில் விலகிக் கொண்டு விடுகின்றன.

அதுமட்டுமின்றி, ஏற்கெனவே சட்டங்கள் அளித்திருக்கின்ற அதிகாரத்தை வைத்தே குற்றங்களைத் தடுக்காத அதிகார வர்க்கமும் போலீசும், அவ்வாறு செயல்படத் தவறியதற்கு வெகுமதியாக புதிய அதிகாரங்களைக் கோருகின்றனர். வல்லுறவுக்குக் குண்டர் சட்டம், குற்றவாளிகளைக் கண்காணிக்க எல்லா பொது இடங்களிலும் வீடியோ காமெராக்கள் – என்று வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, மக்கள் மீது தமது கண்காணிப்பையும் அதிகாரத்தையும் அதிகப்படுத்துவதற்கான அனைத்தையும் அரசு செய்து கொள்கிறது.

குற்றவாளிக்கு தண்டனை
அசாமில் மாவட்டக் காங்கிரசு கட்சியின் தலைவரான பிக்ராம்சிங் பிரம்மா என்பவன் பாலியல் வல்லுறவுக் குற்றத்தில் கைது செய்யப்பட்ட போது, பெண்கள் திரண்டெழுந்து அவனை நடுவீதியில் செருப்பால் அடித்து அவமானப்படுத்தும் முன்னுதாரணமிக்க போராட்டம்

ஆகவே வல்லுறவு மற்றும் பாலியல் குற்றங்களுக்கு மேலும் கடுமையான சட்டம், தூக்கு தண்டனை என்ற கோரிக்கைகளை அரசின் முன்வைக்கும் போது, இக்குற்றத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சம்பந்தப்பட்ட பிறர் விடுவிக்கப்பட்டு விடுகின்றனர். டெல்லி சம்பவத்தையே எடுத்துக் கொண்டால், பேருந்து கண்ணாடிகள் கருப்பாக இருக்கக் கூடாது என்று தான் போட்ட உத்தரவையே கண்காணிக்காத நீதிமன்றம், நிறைவேற்றாத பேருந்து உரிமையாளர், சோதிக்காத போக்குவரத்து அதிகாரி மற்றும் போலீசார், இரவு நேர ரோந்து போலீசார் – என இத்தனை பேர் இதில் தொடர்புள்ளவர்கள். அதேபோல பாலியல் வக்கிர வீடியோக்கள் புழங்கும் செல்போன்கள், போதை மருந்துகள், ஆணாதிக்கத் திமிரைச் சாகசமாக காட்டும் திரைப்படங்கள், பள்ளி மாணவர்களைக் குறிவைத்து நடத்தப்படும் டைம் பாஸ்” போன்ற ஆபாசப் பத்திரிகைகள் – எனப்பல குற்றவாளிகள் இதன் பின்புலத்தில் இருக்கின்றனர். இவர்கள் மட்டுமின்றி, குற்றம் நிகழ்வதற்கான சூழலை ஏற்படுத்தித் தந்த அரசு, போலீசு, நீதித்துறை உள்ளிட்ட அரசு எந்திரம் முழுவதும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவதற்குப் பதிலாக, அவர்களிடமே கோரிக்கை வைக்கப்படும்போது, ஆளும் தகுதியை இழந்துவிட்ட அரசு மீண்டும் நியாயவுரிமை பெற்றுவிடுகிறது.

பெண்கள் மீதான வன்முறை குறித்த பிரச்சினையில் பெரிதும் அக்கறையுள்ளது போல காட்டிக்கொள்ளும் பொருட்டு அரசு, நீதிபதி வர்மா தலைமையில் கமிசன் அமைத்த போதிலும், உள்துறை அமைச்சரும் உள்துறைச் செயலருமே இக்கமிசனுக்கு உரிய மதிப்பளிக்கவில்லை.

போலீசு, துணை இராணுவம் மற்றும் இராணுவப் படையினரின் மீதான வல்லுறவுக் குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் விசாரித்துத் தண்டனை வழங்க வேண்டும் என்றும், வல்லுறவுக் குற்றம் விசயத்தில் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் பொருந்தாது என்றும் வர்மா கமிசன் கூறியிருப்பதை அமல்படுத்தவியலாது என்று மறுநாளே அறிக்கை விட்டார் அமைச்சர் அச்வினி குமார். தற்போது அரசு கொண்டு வந்திருக்கும் அவசரச் சட்டமோ, மேற்கூறிய கமிசன் சிபாரிசுகளை முற்றிலுமாக நிராகரித்திருப்பதாகக் கூறுகின்றன பெண்கள் அமைப்புகள்.

ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துத்தான் ஐரோம் சர்மிளா உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். “எங்களை வல்லுறவு கொள்ளுங்கள்” என்று மணிப்பூர் தாமார்கள் இராணுவ அலுவலகத்தின் முன் நிர்வாணமாக நடத்திய போராட்டம், டில்லி போராட்டத்துக்கு மிகவும் முந்தையது.

டில்லி கிரிமினல்கள், ஒரு மணி நேரம் தன் கட்டுப்பாட்டில் வைத்து அந்தப் பெண்ணை வல்லுறவுக்கு ஆளாக்கி வீசிவிட்டு, தப்பிச் செய்ன்றனர். இதே குற்றத்தை இழைக்கும் போலீசும் இராணுவமும் ஓடுவதில்லை. போலீசு நிலையமும் இராணுவ முகாமும் அவர்களின் அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதிகள். வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட பெண் மீது பொயாக திருட்டு வழக்கு போடுவது, விபச்சார வழக்கு போடுவது என்பது போலீசின் உத்தி. தீவிரவாதி என்று முத்திரை குத்தி சுட்டுக் கொன்று வீசியெறிந்து விடுவது ராணுவத்தின் உத்தி. மணிப்பூரைச் சேர்ந்த தங்ஜம் மனோரமாவின் படுகொலை இத்தகையதுதான்.

ஒரு குற்றத்தை சாதாரண கிரிமினல்கள் இழைப்பதற்கும், போலீசு, இராணுவத்தினர் இழைப்பதற்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால், இது அதிகாரத்தைப் பயன்படுத்தி இழைக்கும் குற்றம்; பெண்களை ஒடுக்கும் அரசு எந்திரம்அதிகாரத்தைப் பயன்படுத்தியே மறைக்கும் குற்றம்; இறுதியாக, வேலியே பயிரை மேயும் குற்றம். வல்லுறவுக் குற்றத்துக்குத் தூக்கு தண்டனை கொடுப்பது என்றால், அது இவர்களுக்குத்தான் கொடுக்கப்பட வேண்டும். இருப்பினும், அவ்வாறு தண்டிப்பது போலீசு, இராணுவப் படையினரின் தார்மீக பலத்தைக் குன்றச்செய்துவிடும் என்று சொல்லித்தான் அரசு இதனைத் தொடர்ந்து நிராகரிக்கிறது.

இது ஒரு உருவகம். ஓட்டுப் பொறுக்கிகள் முதல் அதிகார வர்க்கம், நீதித்துறை ஆகியவற்றின் எல்லா மட்டங்களிலும் லஞ்ச-ஊழல் உள்ளிட்ட நெறிகெட்ட செய்யல்கள் அனைத்தும் நியாயப்படுத்தப்படுவது இப்படித்தான். இது தனியே நடைபெறவில்லை. இதுநாள்வரை நெறிகெட்டதாகவும் சட்டவிரோதமானதாகவும் கருதப்பட்ட பல விசயங்களை மறுகாலனியாக்கக் கொள்கை சட்டபூர்வமாக்கியிருக்கிறது. தண்ணீரும் ஆறுகளும் தனியார்மயக்கப்படுகின்றன.

பஞ்சமா பாதகம் என்று எனப்பட்டவையெல்லாம் இன்று சட்டமாக்கப்படுகின்றன. ஒப்புக்கொள்ளாத மக்கள் மீது திணிக்கப்படுகின்றன. இந்த நாடே பன்னாட்டு நிறுவனங்களால் கும்பல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுவது சகஜமானதாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. சமூக நலன் சார்ந்த விழுமியங்களைக் கைவிடுவது அவ்வளவு சுலபமாக நடக்கும்போது, தனிநபர் ஒழுக்கம் எப்படி நிலைக்க முடியும? அதனால்தான் மகளை வல்லுறவுக்கு ஆட்படுத்திய தந்தை, மாணவியை பாலியல் சித்திரவதை செய்த ஆசிரியர் போன்ற விபரீதங்கள் அரங்கேறுகின்றன.

பண்பாட்டில் ஒழுக்கமில்லாத நிலை என்பது திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. சீனத்தை அபினியில் மூழ்கடித்ததைப் போல, இந்த விழுமியங்களற்ற கலாச்சாரத்திற்குள் மக்கள் வீழ்த்தப்படுகிறார்கள். இதன் காரணமாகத்தான் அநீதி இழைப்பதும், அநீதியைச் சகித்துக் கொள்வதும் சகஜமாகிவிட்டது.

இந்த சமூகச் சீரழிவை, சட்டத்தின் துணைகொண்டு மாற்றியமைக்க முடியாது. காரணம், அந்தச் சட்டத்தை ஏந்தியிருப்பவர்கள்தான் இந்தச் சீரழிவை விதைத்தவர்கள். இந்தச் சூழலிலிருந்து தனியாக யாரும் பாதுகாப்பு தேடவும் முடியாது. தனித்தனியாக திருத்தவும் முடியாது. குறிப்பிட்ட சமூகச் சூழல்தான் தனிநபர் பண்பாட்டை சீரழித்தது என்றாலும், தனிநபர்களாக அதனை மாற்றிக் கொள்ள இயலாது.

தனிப்பட்ட முறையில் ஆண்-பெண் உறவில் ஜனநாயக விழுமியங்கள் வரவேண்டுமானால், புதிய ஜனநாயகப் புரட்சிக்கான போராட்டத்தில் மக்களை ஈடுபடுத்த வேண்டும். டில்லியில் குறுகிய காலமே நடந்த அந்த போராட்டத்தின் ஊடாக, பல ஆணாதிக்கவாதிகளுடன் கொண்டிருந்த நட்பை முறித்துக் கொண்டதாக பெண்கள் தம் அனுபவத்தைக் கூறியிருக்கின்றனர். இத்தகைய போராட்டங்கள்தான் ஆண்-பெண் உறவில் ஜனநாயகக் கூறுகளை அமல்படுத்தும். ஒரு பெண்ணுக்குப் பேருந்திலோ, பொது இடத்திலோ அநீதி நடந்தால் பார்த்துக் கொண்டு செல்லாமல் தலையிட்டுத் தட்டிக் கேட்கும் பண்பை அனைவரிடமும் வளர்க்கும். பெண்களை இழிவுபடுத்தும் பண்பாட்டுச் சீரழிவுகளுக்குப் பணிந்து போகாமல், எதிர்த்துப் போராடும் மனவலிமையைத் தரும்.

இதுகாறும் ஆணாதிக்கமாகத் தெரிந்திராதவற்றை ஆண்களுக்கும், பெண்ணடிமைத்தனமாகப் புரிந்து கொள்ளாதவற்றை பெண்களுக்கும் புரிய வைக்கும். அதிகாரத்தை மக்கள் கையிலெடுப்பதற்குப் பயின்று கொள்வது இப்படித்தான். இத்தகைய மக்கள் எழுச்சிகளை முடிந்தவரை விரைவாக தண்ணீர் ஊற்றி அணைப்பதன் மூலம்தான், தனது அதிகாரத்தையும் மேலாண்மையையும் அரசு தக்கவைத்துக் கொள்கிறது. இத்தகைய எழுச்சிகளை இயல்பான நிகழ்வுகளாக மாற்றுவதன் மூலம்தான், இந்த அரசதிகாரத்தைச் செல்லாக் காசாக்கவும், மக்கள் அதிகாரத்தை நிலைநிறுத்தவும் முடியும்.

– அஜித்

________________________________________________________________________________
– புதிய ஜனநாயகம், பிப்ரவரி – 2013
________________________________________________________________________________

பிப்ரவரி 19 – உயர்நீதிமன்றம் மீது காவல்துறை தாக்குதல் தொடுத்த நாள்!

1

பிப்ரவரி 19 – உயர்நீதிமன்றம் மீது காவல்துறை தாக்குதல் தொடுத்த நாள்உயர்நீதிமன்ற பேனர்

  • தாக்குதலுக்கு உத்தரவிட்ட அதிகாரிகளையும் தாக்குதல் தொடுத்த போலீசு குண்டர்களையும் பாதுகாக்கும் தமிழக அரசினை எதிர்த்து போராடுவோம்!
  • போலீசு அதிகாரிகளை காப்பாற்ற வழக்குரைஞர்களை குற்றவாளிகளாக்கும் சி.பி.ஐ.யின் மோசடியான குற்றப்பத்திரிக்கைகளை கிழித்தெறிவோம்!
  • உயர்நீதிமன்றத் தாக்குதல் தொடர்பான வழக்குகளை விசாரிக்காமல் இழுத்தடிக்கும் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் யோக்கியதையை திரை கிழிப்போம்!
  • செயலற்ற வழக்குரைஞர் சங்கத் தலைமைகளை அம்பலப்படுத்துவோம்!
  • காக்கி உடை ரவுடிகள் தண்டிக்கப்படும் வரை ஒருங்கிணைந்து விடாப்பிடியாக போராடுவோம்!

மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு (HRPC), சென்னை கிளை
தொடர்புக்கு : 9842812062

 

சென்னை போலீஸ் லாயர்நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பிப்ரவரி 19ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ஈழத்தில் தமிழர்களுக்கு எதிரான போரை கண்டித்து வேலை நிறுத்தம் செய்த வழக்கறிஞர்களை காவல் துறை தாக்கியது தொடர்பான பதிவுகள்:

  1. ஈழம்: சுப்ரமணிய சுவாமிக்கு ஹை கோர்டில் முட்டையடி!
  2. போலீசு வக்கீல் மோதலல்ல ! ஈழத்துக்கு எதிரான பார்ப்பன பாசிச பேயாட்டம் !!
  3. வழக்குரைஞர்களை வில்லனாக்க தினமணியும் விஜயனும் செய்யும் சதி!
  4. உண்மை உண்மை ஒன்றே உண்மை லத்திக் கம்பு ஒன்றே உண்மை!

புதுச்சேரியில் பாலியல் வன்முறையைக் கண்டித்து பொதுக்கூட்டம்!

4

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு முடிவுகட்டுவொம்!
ஆணாதிக்கத் திமிரை ஒழிப்போம்!
மனித மதிப்பீடுகளை மழுங்கடிக்கும் மறுகாலனியாக்க கலாச்சாரத்தை துடைத்தெறிவோம்!

புதுச்சேரியில் பேரணி – பொதுக்கூட்டம் மற்றும் மக்கள் கலை இலக்கிய கழக மைய கலைக் குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

நாள்: 22.02.2013 வெள்ளிக்கிழமை

பேரணி நேரம்: மாலை 4.00 மணி
பேரணி துவங்குமிடம்: சுதேசி மில் அருகில்
பேரணி முடியுமிடம்: அவ்வை திடல்

பொதுக்கூட்டம் நேரம் : மாலை 5:30 மணி,
இடம்: அவ்வை திடல்

டெல்லி மாணவி பாலியல் வன்முறையை தொடர்ந்து தமிழகம்-புதுச்சேரியில் பள்ளி மாணவிகள் மீது நடக்கும் பல பாலியல் வன்கொடுமைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.புதுவை நோட்டிஸ்

புதுச்சேரியில்  11ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு எதிராக டெல்லியைப் போலவே பொதுமக்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் தன்னெழுச்சியாக ஒன்று திரண்டு பேருந்து மறியல் வரை செய்து போராடினர். பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட மாணவி சிகிச்சை பெற்று வந்த ராஜிவ்காந்தி குழந்தைகள் நல மருத்துவமனை எதிரில் தொடர்ந்து போராட்டம் நடந்து கொண்டிருந்தது.

இதைக் கண்ட தலைமை மருத்துவர், ”ஏதோ இப்பதான் புதுசா நடப்பதைப் போல எல்லோரும் குதிக்கிறார்கள், இது போல மாதத்திற்கு மூன்று கேஸ் வருகிறது” என்று கூறினார்.

9 லட்சம் மக்கள் கொண்ட சிறு மாநிலத்தில், ஒரு மருத்துவமனையிலேயே மாதத்திற்கு மூன்று பாதிக்கப்பட்ட பெண்கள் என்றால்? மாநிலம் முழுவதும், நாடு முழுவதுமுள்ள மருத்துவமனைகளுக்கு எத்தனை பேர் வருவார்கள்? வெளியில் சொல்லமுடியாமல் மூடிமறைக்கப்பட்டு குமுறிக் கொண்டிருக்கிற பெண்கள் எத்தனை பேர்? என்பதை நினைக்கும்போது நெஞ்சம் பதறுகிறது.

இக்கொடுமைகள் சமூகத்தில் எந்த அளவுக்கு வேருன்றி இருக்கின்றன என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இப்பிரச்சினைக்கு அடிப்படையாக இருக்கக்கூடிய நிலவுடமை ஆணாதிக்கத்தையும், இந்தியா கடைப்பிடித்து வரும் புதிய பொருளாதார கொள்கையால் ஏற்படும் மனிதமற்ற, அறநெறியற்ற சீரழிந்த கலாச்சாரத்தையும், இதற்கு காரணமான அரசு அமைப்பையும் மூடி மறைத்துவிட்டு அல்லது கவனமாக ஒதுக்கி விட்டு  ”பெண்கள் ஆடை அணிவது சரியில்லை, சட்டம் சரியில்லை” என்று மழுப்புகிறார்கள்.

இதில் எது உண்மை? யார் குற்றவாளிகள்? பெண்களின் வரலாற்று பாத்திரம் என்ன? உண்மையை விவாதிக்க அணி திரண்டு வாருங்கள்.

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

பெண்ணை போகப்பொருளாய், ஆணுக்கு சேவை செய்யும் அடிமையாய் நடத்தும் ஆணாத்திக்க நிலவுடமை பண்பாட்டை அறுத்தெறிவொம்!

ஆபாச வக்கிரங்களை கடைவிரித்து பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறையை தூண்டும் ஏகதிப்பத்திய சீரழிவுக் கலாச்சாரத்தை துடைத்தெறிவொம்!

மறு காலனியாக்க கொள்கையை எதிர்ப்பின்றி நடத்த சாராயப்போதை, நுகர்வெரியில் ஆழ்த்தி மக்களை உழைக்கும் விலங்குகளாக்கும் ஆளும் வர்க்க சதியை முறியடிப்போம்!

மனித இனத்தை உருவாக்கி பேணுகின்ற பெண்ணினத்தின் மேன்மையை உயர்த்திப்பிடிப்போம்!

பாலியல் துன்புறுத்தல்களை அவமானமாக கருதி முடங்கிக்கொள்ளாமல், ஆணாதிக்க பொறுக்கிகளை அடையாளம் காட்டுவோம்!
அடித்து நொறுக்குவொம்!

பெண்களுக்கு எதிராக பாலியல் வன்முறை புரிந்தவர்களில் முதல் குற்றவாளிகள் போலிசு-ராணுவம்-அதிகார வர்க்கமுமே!

சினிமாக்கள், பத்திரிகைகள்,விளம்பரங்கள், இணையம், செல்போன் அனத்திலும் ஆபாச காமவெறியை அனுமதித்து மக்களை சீரழிப்பதே இந்த அரசுதான்!

சட்டத்தை க்டுமையாக்குவது – தூக்கு தண்டனை என்பது பம்மாத்து! இந்த அரசமைப்புக்குள்ளேயே தீர்வு என்பது ஏமாற்று!

பாலியல் வெரியாட்டங்களுக்கு காரணமான நிலவுடமை – பார்ப்ப்னிய சாதி ஆணாதிக்கத்தையும், மறுகாலனியாக்க கலாச்சாரத்தையும் பாதுகாப்பதே இந்த போலி ஜனநாயக அரசுதான்!

போலி ஜனநாயக அரசை வீழ்த்தி, புதிய ஜனநாயக அரசை புரட்சியின் மூலம் அமைப்பதே பெண்களின் ஜனநாயகத்திற்கான ஒரே மாற்று!

அணிதிரண்டு வாருங்கள்! ஆதரவு தாருங்கள்!

தகவல் :
புதிய ஜனநாயக தொழிலாள்ர் முன்னணி, புதுச்சேரி
தொடர்புக்கு: 9488778940

Even the Rain (2009) – வியர்வைத் துளிகளையும் திருடுவார்கள் !

5
ஈவன் த ரெயின்

திரை விமர்சனம் – “ஈவன் த ரெயின்” :

ஈவன் த ரெயின்”அவர்கள் நம் நதிகளை விற்றார்கள். நமது கிணறுகளை, ஏரிகளை, ஏன் நம் தலை மேல் விழும் மழையைக் கூட விற்று விட்டார்கள். லண்டனிலும், கலிபோர்னியாவிலும் வசிப்பவர்களுடைய கம்பெனி நம் தண்ணீரை வாங்கியிருக்கிறது. இனிமேல் எதைத் திருடப் போகிறார்கள்? நமது மூச்சுக் காற்றிலிருக்கும் நீர்த்துளிகளையா? அல்லது நமது நெற்றியில் முகிழ்க்கும் வியர்வைத் துளிகளையா?”

ஈவன் த ரெயின் (மழையைக் கூட) என்ற ஸ்பானிய திரைப்படத்தில், தண்ணீர் தனியார் மயமாக்கத்தை எதிர்த்துப் போராடும் மக்களிடம் கதாநாயகன் டானியல் பேசும் வசனம் இது. 2010ல் இகியார் பொலைன் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படம், விவசாயம் செய்ய பக்கத்து மாநிலத்தை எதிர்பார்த்து நிற்கும்போதே, தாமிரபரணி ஆற்றை கோக்கிடம் தாரை வார்த்திருக்கும் நமக்கு நெருக்கமானதுதான்.

வாள் முனையில் காலனிகளாக அடிமைப்படுத்தி, பல நூறு ஆண்டுகள் சுரண்டிய பிறகு, சுதந்திரம் என்ற பெயரில் தமது ஏஜெண்டுகளுக்கு அதிகாரத்தைக் கைமாற்றிக் கொடுத்து, அதற்காக நாம் ஆடிக்கொண்டும் பள்ளு பாடிக் கொண்டும் இருக்கும்போது, வளர்ச்சி என்கிற பெயரில் மறுகாலனியாக்கத்தை அமல்படுத்திக் கொண்டிருக்கின்றன ஏகாதிபத்திய நாடுகள். இன்று மூன்றாம் உலக நாடுகள் மீது திணிக்கப்படும் மறுகாலனியாதிக்கத்தையும், 16ம் நூற்றாண்டின் காலனியாக்கத்தையும் ஒப்பிட்டு அழுத்தமாக முன் வைக்கும் படம் ஈவன் த ரெயின்.

மெக்சிகோவைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் செபாஸ்டினும், திரைப்படத் தயாரிப்பாளர் கோஸ்டாவும் தமது குழுவுடன் புதிய திரைப்படத்தை படம் பிடிப்பதற்காக தென் அமெரிக்காவில் இருக்கும் ஏழை நாடான பொலிவியாவுக்கு வருகிறார்கள்.

கொலம்பஸ் புதிய உலகைக் கண்டுபிடிக்க கடற்பயணம் புறப்பட்டு, மேற்கிந்திய தீவுகளின் பூர்வகுடி மக்களை விலங்குகள் போல அடிமைப்படுத்தியது, அவற்றுக்கெதிராக தைனோ இன மக்கள் அத்வே எனும் பழங்குடியினத் தலைவர் தலைமையில் எதிர்த்து சண்டையிட்டது போன்றவற்றின் அடிப்படையில் காலனியாதிக்கத்தின் கொடுமைகளைப் படமாக எடுக்க விரும்புகிறார்கள்.

நாள் கூலியாக 2 அமெரிக்க டாலர் கொடுத்தாலே ஆள் கிடைக்கும் நாட்டில், குறைந்த செலவில் பெரும் எண்ணிக்கையிலான துணை நடிகர்களை நடிக்க வைக்கலாம் என்று திட்டமிடுகிறார்கள். விளம்பரத்தைப் பார்த்து படப்பிடிப்பில் வேலை செய்வதற்கு நூற்றுக்கணக்கான பேர் கூடி விடுகிறார்கள். தைனோ இனத் தலைவர் அத்வே கதாபாத்திரத்திற்கு டானியலையும், சிறுமியாக நடிப்பதற்கு அவன் மகள் பெலனையும் தேர்ந்தெடுக்கிறார்கள்.

குறைந்த கூலிக்கு துணை நடிகர்களை எடுத்தது மட்டுமின்றி, படப்பிடிப்புக்கான தயாரிப்புகளையும் உள்ளூர் மக்களை வைத்து முடிப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான டாலர்கள் மிச்சப்படுத்துகிறார் தயாரிப்பாளர் கோஸ்டா.

டானியலுக்கு திரைப்படத்தில் நடிக்கிறோம், அதுவும் கதாநாயகனாக என்பது போன்ற பெருமிதங்கள் ஏதுமில்லை. அவனுக்கு சினிமா என்பது காசு சம்பாதிக்க உதவும் ஒரு தொழில், அவ்வளவுதான். ஆனால் அவனது முழு நேர வேலை கோபகன் நகரில் தண்ணீரை ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்கு அரசு தாரை வார்த்ததை எதிர்த்த போராட்டங்களுக்கு மக்களை ஒன்றிணைப்பதுதான்.

இகியார் பொலைன்
இயக்குநர் – இகியார் பொலைன்

ஒரு பக்கம் கொலம்பஸ் தலைமையிலான காலனிய ஆதிக்கவாதிகள் மக்களை அடிமையாக்கி கொடுமைப்படுத்துவது, தண்டிப்பது போன்ற நிகழ்ச்சிகள் படம் பிடிக்கப்பட, மறுபுறம் நகரில் தண்ணீர் தனியார்மயமாக்கலுக்கெதிரான போராட்டம் சூடு பிடிக்கிறது. டானியல் இந்த போராட்டங்களில் கலந்து கொள்வது தயரிப்பாளர் கோஸ்டாவையும், இயக்குநர் செபாஸ்டினையும் கவலைக்குள்ளாக்குகிறது.

பாதிப் படம் எடுத்திருந்த நிலையில் ஒரு போராட்டத்தில் டானியல் போலிஸாரால் கைது செய்யப்பட்டு நன்றாக அடிக்கப்படுகிறான். தங்கள் சொந்த செலவில் லஞ்சம் கொடுத்து டானியலை படக் குழுவினர் மீட்டு வருகிறார்கள். இந்த போராட்டங்களில் பங்கேற்க வேண்டாம் என அவனைக் கேட்டுக் கொள்கிறார்கள்.

நகரில் போராட்டம் முற்றி கலவரமாக மாறுகிறது. விவசாயிகளும், நகரவாசிகளும் நகர மையத்தை முற்றுகையிடுகிறார்கள். அவர்களை எதிர்த்து ஆயுதப் படைகள் துப்பாக்கிகளால் சுடுகின்றனர். மக்கள் பின்வாங்காமல் போராடுகிறார்கள்.

அந்த கலவரத்திலிருந்து தப்பிப்பதற்காக படக் குழுவினர் நகரத்தை விட்டு கிளம்ப முடிவு செய்து வேறு ஊருக்குப் புறப்படுகிறார்கள். டானியலின் மகள் பெலன் கலவரத்தில் மாட்டிக் கொண்டதாகவும், அவளைக் காப்பாற்றும்படியும் கோஸ்டாவிடம் டானியலின் மனைவி தெரசா மன்றாடுகிறாள். கோஸ்டாவும் மனம் மாறி பெலனைத் தேட நகரத்தினுள் காரில் போகிறான்.

போராடும் மக்கள் டஜன் கணக்கில் கொல்லப்படுகின்றனர், இன்னும் பலர் சிறைப்படுத்தப்படுகின்றனர். மக்கள் தளராமல் முற்றுகைப் போராட்டத்தைத் தொடர்கிறார்கள்.

பெலனை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கிறான் கோஸ்டா. இயக்குநர் செபாஸ்டினையும், தயாரிப்பாளர் கோஸ்டாவையும் விட்டு விட்டு படக்குழுவின் மற்ற உறுப்பினர்கள் நாட்டை விட்டே வெளியேறுகின்றனர்.

இறுதிக் காட்சியில் தண்ணீரை வாங்கிய தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட செய்தி வெளியாகிறது. போராட்டங்கள் நிறுத்தப்படுகின்றன. தன் மகளைக் காப்பாற்றிய கோஸ்டாவை பார்க்க வரும் டானியல் உணர்ச்சிப் பெருக்குடன், நன்றிக் கடனாக ஒரு பரிசுப் பொதியை கொடுக்கிறான். அதனுள் ஒரு பாட்டிலில் தண்ணீர் இருக்கிறது.

கொலம்பஸ் கடல் வழி பயணத்தின் மூலம் அமெரிக்காவை கண்டுபிடித்து காலனியாக்கியது வரலாறு. பொலிவியாவில் தண்ணீர் வளங்களை தனியார் நிறுவனத்துக்கு குத்தகை கொடுத்ததை எதிர்த்து போராடி மக்கள் வெற்றி பெற்றது சமீபத்திய நிகழ்வு. இரண்டையும் பொருத்தி, காலனிய வரலாற்று நிகழ்வுகளும், மறுகாலனிய சம கால நிகழ்வுகளும் பின்னிப் பிணையும் படியான திரைக்கதை வடிவம் மிகவும் பொருத்தமாக அமைகிறது.

நகர மக்கள் மலை மீது ஒரு ஏரியை விலைக்கு வாங்கி, 7 கிலோ மீட்டருக்கு கால்வாய் தோண்டி தண்ணீரைத் தங்கள் இடத்துக்கு கொண்டு வருகிறார்கள். தண்ணீர் கம்பெனி அதற்கு அரசுப் படைகளின் உதவியுடன் பூட்டு போட்டு சீல் வைத்து விடுகிறது. ”எங்கள் குழந்தைகள் குடிப்பதற்கான தண்ணீரை ஆண்டுக்கு $300 கொடுத்து எப்படி வாங்க முடியும்?” என்று பெண்கள் சண்டை போடுகிறார்கள். அந்த ஊரில் சராசரி தினசரி கூலியே $2 தான்.

சுரண்டலை நேரடியாக எதிர்கொள்ளும் பெண்களும், முதியவர்களும் உள்ளிட்ட மக்கள் வீதியில் இறங்கிப் போராடத் தயாராகிறார்கள். எழுச்சி மெல்ல வளர்ந்து இறுதியில் தனது இலக்கை எட்டுகிறது.

கதாநாயகனின் எழுச்சிமிக்க ஒரு உரையில் வில்லனை அடையாளம் கண்டு, உணர்ச்சிகரமான பாடல் வரிகளினால் உந்தப்பட்டு, இறுதிக் ஈவன் த ரெயின்காட்சியில் போராடச் சென்றவர்கள் அல்ல இவர்கள். சிறு சிறு தீப்பொறிகளாக மக்கள் தண்ணீர் கம்பெனியை எதிர்த்து சண்டை இடுகிறார்கள், போராடுகிறார்கள்.

அரசு சார்பில் நடத்தப்படும் விருந்தில் கலந்துகொள்ளும் படக் குழுவினரிடம் அந்த நாட்டு மந்திரி, வெளியில் நடக்கும் போராட்டத்தைக் குறிப்பிட்டு, ஒரு சில தீவிரவாதிகள் மக்களைத் தூண்டி விட்டு கலவரம் செய்வதாகச் சொல்கிறார்.

”அந்நிய முதலீடு இல்லாமல் நாட்டின் தண்ணீர் தேவையை நிறைவு செய்வது சாத்தியமில்லை. அரசாங்கத்துக்கு பணம் மரத்தில் காய்ப்பதாக மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று அவர் பேசும் வசனம், சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை நியாயப்படுத்துவதற்கு மன்மோகன் சிங் பேசியிருக்கும் அதே வசனம்.

இறுதிக் காட்சியில் மக்கள் முற்றுகையிடும் செப்டம்பர் 14 மைதானத்தில் கேடயங்களுடனும், துப்பாக்கிகளுடனும், கண்ணீர் புகைக் குண்டுகளுடனும், ரப்பர் குண்டுகளுடனும் படையினர் நிற்க பெண்களும், குழந்தைகளும், வயதானவர்களும் உள்ளிட்ட மக்கள் படையோ கையில் கம்புகளோடு அவர்களை எதிர்கொள்கிறது. மக்கள் படையின் முன் ஆயுதம் ஏந்திய கூலிப்படை எப்போதுமே வெற்றி பெறுவதில்லை என்பதை பொலிவிய மக்கள் நிரூபித்திருக்கிறார்கள்.

டானியல் போலிஸிடம் அடிபட்டுக் கிடக்கும் போது, அவனை போரட்டத்தைக் கைவிடும்படி சொல்லி, திரைப்பட வேலைகள் கெட்டுப் போவதாக கோஸ்டாவும், செபாஸ்டினும் கோபப்படுகின்றனர். டானியல் உள்ளிட்ட மக்கள் நடத்தும் போராட்டத்தை திரைப்படக் குழுவினர் ஒரு தொந்தரவாகவே பார்க்கிறார்கள். வருமானத்தைக் கூட துறந்து போராடக் கிளம்பும் டானியல் அவர்களின் கண்களுக்கு பைத்தியகாரனாகவே தெரிகிறான்.

ஆனால் இறுதியில் டானியல், அவனது மனைவி தெரசா, மகள் பெலன் மூலம் அவர்கள் மனித நேயத்தையும் போராட்ட நியாயங்களையும் உணர்கிறார்கள். இறுதிக் காட்சியில் டானியல் அன்பளிப்பாக கொடுக்கும் ஒரு பாட்டில் நீரை வாங்கும் கோஸ்டாவின் முகத்தில் தோன்றும் உணர்ச்சிகள் பல அரசியல் நியாயங்களை நமக்கு உணர்த்துகின்றன.

படைப்பாளிகளும், கலைஞர்களும் மக்கள் விரோத நிறுவனங்களையும், அரசையும் எதிர்க்க முதுகெலும்பில்லாமல் இருக்கும் நிலையில், உண்மையை இயல்பான முறையில் பேசும் நேர்மையான ஒரு படைப்பு இந்தத் திரைப்படம் – ஈவன் த ரெயின் – மழையைக் கூட!
____________________________________________________________
– புதிய கலாச்சாரம், ஜனவரி – 2013
____________________________________________________________

பாலியல் வன்கொடுமைகள் – நெல்லையில் கருத்தரங்கம் !

2

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு நடத்தும் கருத்தரங்கம்

நாள் : 23-02-2013 சனிக்கிழமை

நேரம் : மாலை 5 மணி

தலைமை :
திரு செ தங்கபாண்டியன் B.A.,B.L. வழக்கறிஞர்,
அமைப்பாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம்,
திருநெல்வேலி மாவட்டம்

கருத்துரை :

பெண்கள், சிறுமியர் மீதான பாலியல் வன்முறை ஆணாதிக்கத் திமிரின் வெளிப்பாடு! எண்ணெய் ஊற்றி வளர்க்கும் பன்னாட்டுப் பண்பாடு

தோழர் காளியப்பன், மாநில இணைப் பொதுச் செயலாளர், ம.க.இ.க. தமிழ்நாடு

பெண்களை போகப் பொருளாக பாவிக்கும் சமூக சிந்தனையை சட்டத்தால் தடுக்க முடியாது

திரு கோ இராமலிங்கம் B.Sc., B.L., வழக்கறிஞர், மாவட்ட அமைப்பாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம், புதுக்கோட்டை

நன்றியுரை
திரு அப்துல் ஜப்பார், வழக்கறிஞர், மனித உரிமை பாதுகாப்பு மையம், திருநெல்வேலி.

பெண்கள் மீதான பாலியல் வன்முறை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. சென்ற டிசம்பர் மாதம் 16ம் தேதி டெல்லி மாநகரில் துணை மருத்துவ மாணவியை ஏழு பேர் கும்பல் மிகக் கொடூரமான முறையில் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியதோடு அவரை இரும்புத் தடியால் அடித்து துவைத்து குற்றுயிரும் கொலையிருமாக வீசியெறிந்து விட்டுப் போனது. அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அவர் இறந்து விட்டார். இந்தச் சம்பவத்தையொட்டி டெல்லியில் சுமார் 2 லட்சம் மாணவர்கள் ஒன்று திரண்டு பாராளுமன்றம், நீதிமன்றம், காவல் நிலையம் இவற்றை முற்றுகையிட்டுப் பல நாட்கள் போராடினர். இந்தப் போராட்டம் இதுவரை பாலியல் வல்லுறவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களிலேயே மிகப்பெரிய போராட்டம் என்று கணிக்கப்பட்டது.

இதையொட்டி அனைத்து ஊடகங்களும் அரசியல் தலைவர்கள், சமூக சிந்தனையாளர்கள், மதத் தலைவர்கள், எழுத்தாளர்கள் என்று பல தரப்பினரும் கருத்துத் தெரிவித்தனர். கிளர்ந்து எழுந்த மாணவர்கள் மற்றும் ஜனநாயக சக்திகளின் போராட்டம் டெல்லி காவல் துறையினரால் ஒடுக்கப்பட்டது. டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்தை பாதிக்கப்பட்ட மாணவியை பார்க்கவோ அவரது குடும்பத்தாரைச் சந்தித்து ஆறுதல் சொல்லவோ கூட போராட்டக் காரர்கள் அனுமதிக்கவில்லை. வல்லுறவு கொண்டவர்களை உடனடியாகத் தூக்கில் போட வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரினர். பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களுக்குத் தண்டனை விதிக்க வேண்டும், ஆணுறுப்பை வெட்ட வேண்டும். ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும். நடுத்தெருவில் நிற்க வைத்து சுட்டுத்தள்ள வேண்டும். சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்று பொதுவாக கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன. மக்களின் கொந்தளிப்பான மனநிலையை மாற்றுகின்ற வகையில் காங்கிரஸ் அரசு வர்மா கமிஷனை அமைத்தது. அவரும் தனது நீண்ட பரிந்துரைகளை அரசுக்கு அளித்து விட்டார்.

ஆனால், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை என்பது இப்போதுதான் நடைபெற்ற ஒன்றா? இல்லை. இது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நடைபெற்று வருகின்ற ஒன்று. மேலும் டெல்லி மாணவி மீது நடைபெற்றது மட்டும்தானா? இல்லை. அன்றாடம் இந்தியாவில் ஒரு நிமிடத்திற்கு 7 பெண்கள் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். டெல்லி சம்பவத்தையொட்டியே நாடு முழுவதும் தொடர்ச்சியாகப் பல்வேறு வல்லுறவு நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. கிராமப் புறங்களிலும் ஏழைகளின் மீதும் ஆதிவாசி, தலித் பெண்கள் மீதும் நாளும் கட்டவிழ்த்து விடப்படும் வன்கொடுமைகள் கணக்கிலடங்காதது. ஆனால் இதற்குத் தீர்வை முன் வைப்பவர்கள் பாலியல் வல்லுறவு என்பது ஒரு குற்ற நிகழ்வு என்றும் அதற்குத்தான் உரிய தண்டனை என்றும் அந்த தண்டனை சட்டத்தின் மூலமாக கடுமையாக்கப்பட வேண்டும் என்றே முன்வைக்கின்றனர்.

ஆனால் அது ஒரு குற்ற நிகழ்வு மட்டுமல்ல. இந்த வன்கொடுமைக்குக் காரணம் பெண்கள் மீது ஆண்கள் செலுத்தும் ஆதிக்கமே. அதாவது, இந்த சமூக அமைப்பே ஆணாதிக்க சமூக அமைப்பாக இருப்பதுவே. பெண்களுக்கு அணிகலன் கற்பு என்றும்- அது புனிதமானது என்றும் அதை இழந்து விட்டால் அவள் வெறும் நடைப்பிணம்தான் என்றும் கூறுகின்ற ஆண்கள், பெண்கள் கற்பிழக்க காரணமாயிருக்கிற ஆணைப் பற்றி எதுவும் சொல்வதில்லை, ஏன்? அதுதான் ஆணாதிக்கம.. பெண்ணை அடிமையாக நினைப்பது, நடத்துவது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் சொல்கிறார், “பெண்கள் பிள்ளைகளைப் பெறவும், வளர்க்கவும், வீட்டு வேலைகள், கணவனுக்குப் பணிவிடை செய்பவளுமாக இருக்க வேண்டும். அவர்களது நடையுடை பாவனைகளில் அடக்கம் வேண்டும்.” எனவே பெண் என்பவள் ஆணுக்கு இன்பம் தருகின்ற அடிமை என்பதே அவரது கருத்து. இன்னும் சிலர், பெண்கள் கவர்ச்சிகரமாக உடையணிவதாலேயே ஆண்களின் காம உணர்வு தூண்டப்படுகிறது. எனவே அவர்கள் உடை அணிவதிலே கட்டுப்பாடு வேண்டும் என்கிறார்கள். ஆனால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகிறவர்கள் பற்றிய புள்ளி விவரங்கள் தெரிவிப்பது என்னவென்றால் பாதிக்கப்படுபவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் குழந்தைகள்; இன்னொரு பங்கினர் தெரிந்தவர்கள், உறவினர்கள், அலுவலக மேலதிகாரிகள், நம்பியவர்களால் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகின்றவர்கள்; இன்னொரு பகுதியினர், போலீசு, ராணுவம், அரசு எந்திரத்தினால் வன்புணர்வு செய்யப்படுகிறவர்கள்.

அது போக எஞ்சியுள்ள ஒரு சிறுபகுதி மட்டுமே முகம் தெரியாத மனிதர்களால் நடைபெறுகிறது என்று தேசிய மற்றும் சர்வதேச புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்தியாவில் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகின்ற பெண்கள் புகார் தர முன்வருவதில்லை. இது வெளியே தெரிந்தால் பெண் வாழ முடியாத சூழ்நிலை உள்ளது. அதனால் இதற்கு எதிரான போராட்டம் இங்கே மிகமிகக் குறைவு. இதுவே மேலை நாடுகளில் மிக அதிக அளவில் (அமெரிக்காவில் நிமிடத்திற்கு 22 பெண்கள்) பாலியல் வல்லுறவு நடைபெறுகிறது. அதற்கெதிரான போராட்டமும் அவ்வாறே அதிக அளவில் நடைபெறுகின்றது, பதிவாகின்றது. இந்தியாவில் கற்பு என்ற ஒன்றால் பெண்கள் விலங்கிடப்பட்டுள்ளனர். ஒரு பெண் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டால் அவளது வாழ்க்கை அத்துடன் முடிந்து விட்டதாக கருதப்படுகிறது. இதிலிருந்து பெண்கள் விடுபட வேண்டும். ஆண்களோடு பேசுவது, பழகுவது, தொடுவது, சிரிப்பது இவையெல்லாம் பெண்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. இதுதான் பெண்ணடிமைத்தனம். இதனைப் பெண்கள் ஏற்றுக் கொள்ளும்படி செய்யப்பட்டுள்ளது.

இன்றைய ஏகாதிபத்திய உலகமயமாக்கச் சூழலில் பெண்கள் இன்னும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர், பெண்கள் ஒரு நுகர்வுப் பண்டமாக கருதப்படுகின்றனர். ஊடகங்கள், சினிமா, வலைத்தளம், செல்போன்-விளம்பரங்கள் என்று அனைத்து தளங்களிலும் பெண் போதையேற்றும் சரக்காக மாற்றப்பட்டிருக்கிறாள். மேலும் போதையேற்ற அரசே டாஸ்மாக் நடத்துகிறது. அது போலவே, காவல் நிலையங்கள், ராணுவ முகாம்கள் எல்லாம் பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுக் கூடாரங்களாக மாறி விட்டிருக்கின்றன என்பது அனைவரும் அறிந்ததே. இந்த சட்ட விரோதக் கும்பல்தான் பாலியல் குற்றவாளிகளை தண்டிக்கும், அதன் கையில் அதிகாரத்தைத் தர வேண்டும் என்று கோருகிறார்கள் பலர். நம்நாட்டின் உயர், உச்சநீதிமன்ற நீதிபதிகளில் பாலியல் புகாருக்கு ஆளாகாதவர்கள் எத்தனை பேர்?

தகவல் தொடர்பு ஊடக வளர்ச்சியை பாலியல் வக்கிரங்களுக்காக பயன்படுத்துபவர்கள் வயது வராத சிறுவர், சிறுமி, மாணவர்களிடம் வேகமாகப் புகுத்துகின்றனர். இவற்றுக்கெல்லாம் அரசு தடைவிதிப்பதில்லை, கட்டுப்படுத்துவதில்லை. நடவடிக்கையும் எடுப்பதில்லை. எனவே பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகும் பெண்களுக்கு முதல் எதிரி அரசுதான்.

பெண்ணியம், பெண்ணுரிமையை விலாவாரியாகப் பேசுவதெல்லாம் இவற்றுக்குத் தீர்வாகி விட முடியாது. மாறாக ஆணாதிக்க சமூக சிந்தனையை ஒழிப்பதே தீர்வாகும். ஆணாதிக்கம் ஒழிந்த சமூகத்தில்தான் பெண்ணுக்கு சம உரிமை கிட்டும். முதலாளித்துவ சமூக அமைப்பு முற்போக்கானது, அங்கே பெண்களுக்கு சம உரிமை உண்டு என்று சொல்வதெல்லாம் சுத்தப் பொய். ஏகாதிபத்திய உலகமயமாக்கச் சூழலில்தான் பெண் மிகவும் மோசமாக சுரண்டப்படுகிறாள். போகப் பொருளாக கருதப்படுகிறாள். வரைமுறையற்ற பாலுறவு, வயதுக்கு முன் பாலுறவு, பொருந்தாத பாலுறவு, இயற்கைக்கு முரணான பாலுறவு என்று அத்துணை வக்கிரங்களும் இந்தச் சூழலில்தான் வேகமாக வளர்க்கப்படுகின்றன. விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, வாழ்வாதாரங்கள் முற்றிலும் பறிக்கப்படுகின்ற காரணத்தினால் தவிர்க்க இயலாமல் பெண்கள் வேலைக்குப் போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அங்கேதான் பெண் இரு வகையிலும் சுரண்டப்படுகிறாள். பெண் என்றாலே அவள் போகப் பொருள் என்கிற கருத்தோட்டம் தோன்றி வளர்ந்து பாதுகாப்புக்குள்ளாகிறது.

ஆணும் பெண்ணும் இணைந்து உயிர்களை மறு உற்பத்தி செய்வது என்பது இயற்கையின் விதி. இதில் ஓர் உயிரை ஈன்று தருகின்ற பெருமை படைத்தவள் பெண். எனவே பெண் என்பவள் இயற்கையிலேயே ஒரு படி உயர்ந்தவள். அந்தப் பெண்ணினத்தை மதிக்கத் தவறியதோடு சிறுமைப்படுத்துகிற சமூகமாக இந்திய சமூகம் உள்ளது. இந்த ஆணாதிக்கச் சமூகத்தை வீழ்த்துவதற்குப் பெண்கள் தங்களது தளைகள், அனைத்தையும் அறுத்தெறிந்து விட்டு ஜனநாய மற்றும் மனித உரிமை அமைப்புகளின் கீழ் அணி திரள்வதே ஒரே மாற்று.

  • ஆணாதிக்கத்தின் வேரறுக்கப் போராடுவோம்!
  • பெண்ணுரிமைகளை நிலைநாட்டச் சூளுரைப்போம்!
  • பெண்களை முற்றிலும் நுகர்வுப் பொருளாக மாற்றிச் சீரழிக்கும் மறுகாலனியாக்கச் சூழலை துடைத்தெறிவோம்!

மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டம்
தொடர்புக்கு : 94423 39260

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் – நேர்காணல் வீடியோ

8

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் வழக்கு குறித்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி ராஜூவும் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத் தலைவர் ரங்கநாதனும் கலந்து கொண்ட நேர்காணல்  நிகழ்ச்சி பிப்ரவரி 16, 2013 காலை 11 மணி முதல் 12 மணி வரை கேப்டன் நியூஸ் டிவியில் ஒளிபரப்பானது.

நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பு, இன்று இரவு 10 மணி முதல் 11 மணி வரை ஒளிபரப்பாகும்.

நிகழ்ச்சியின் பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை கீழே காணலாம்

மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
தொடர்புக்கு: 94432 60164, 94437 24403
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் – தமிழ்நாடு
தொடர்புக்கு: 90474 00485

குமுதம் : ரிப்போர்ட்டரா , புரோக்கரா ?

38
குமுதம் ரிப்போர்ட்டர்

செட்டியார் – ஐயங்கார் கூட்டணியில் இருந்த குமுதம் நிறுவனம் தற்போது ஐயங்கார் கும்பலிடம் மட்டும் உள்ளது. செட்டியார் கும்பல் நீக்கம் நிறைவேற்றப்பட்டதற்கு அம்மாவின் அருளும் ஒரு காரணமென்பதால் சொத்தைக் கைப்பற்றிய ஐயங்கார் கும்பல் அதிமுகவின் அடிவருடி பத்திரிகையாக செயல்படுவதை அனைவரும் அறிந்திருக்கலாம். குமுதம் நிறுவனங்களில் வேலை செய்யும் அனைவரும் கையில் இரட்டை இலையை பச்சை குத்தியும், மூளையில் புரட்சித் தலைவியின் பொற்பாதங்களை வணங்கும் முத்திரையை பதித்தும் பத்திரிகைகளை நடத்துகிறார்கள், எழுதுகிறார்கள். இதில் ஓனர், வொர்க்கர் என்ற பேதமெல்லாம் இல்லை.

தமிழக அரசு அல்லது ஜெயாவிற்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் கருணாநிதியின் சதியே காரணமென்று ஜெயாவே யோசித்திராத கோணத்திலெல்லாம் சிந்தித்து எழுதுகின்றன குமுதம் குழும பத்திரிகைகள்.

விசவரூபம் பிரச்சினை வந்தபோது கூட மற்ற பத்திரிகைகளெல்லாம் சற்று பயந்து கொண்டு தமிழக அரசைக் கண்டிக்கவில்லை என்றாலும் மொக்கையான கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் கொஞ்சம் கமலை ஆதரித்தன. ஆனால் குமுதம் மட்டும் இந்தப்பிரச்சினைக்கு சதி செய்த காரணகர்த்தா கருணாநிதி என்று ஒரு திகில் நிறைந்த மர்மக்கதையை அட்டைப்படக் கட்டுரையாக எழுதி வெளியிட்டது. அதன்படி இவர்கள் தமிழக அரசை ஆதரிப்பதோடு கமலையும் ஆதரிக்கிறார்களாம். அப்பாவி கமல் ஒரு பகடைக்காயாக கருணாநிதியின் கையில் சிக்கிவிட்டதாக எழுதியது குமுதம்.

இதற்காக இவர்கள் உருவாக்கிய வரலாறு இன்னும் பயங்கரம். அதாவது இன்று கமல் பலியானது போல அன்று ரஜினி பலியானார் என்று ஒரு புதிய வரலாற்றை உருவாக்கியிருந்தார்கள். அதன்படி 1991இல் ஆட்சிக்கு வந்த ஜெயாவை தமிழக மக்கள் அமர்க்களமாக ஆதரித்து தள்ளினார்களாம். அந்த ஆட்சிக்காலத்தின் இறுதியில் பாட்சா பட விழாவில் மணிரத்தினம் வீட்டு குண்டு வீச்சு தொடர்பாகவும், டிராபிக் ஜாமில் தனது கார் நிற்பதற்காகவும் துக்கப்பட்ட ரஜினி தமிழக அரசைக் கண்டித்தது நினைவிருக்கிறதா? அதை ஊதிப்பெருக்கி ரஜினிக்கும் ஜெயாவுக்கும் ஒரு முரண்பாட்டை உருவாக்கி அடுத்த தேர்தலில் ரஜினியை ஒரு வாய்ஸ் கொடுக்க வைத்து அதிமுகவை தோற்க வைத்தவர் கருணாநிதி என்று போகிறது குமுதம் மாமாவின் வரலாறு.

அட மாமாக்களா! அந்த ஆட்சிக்காலத்தில் பாசிச ஜெயாவின் ஆட்சியில் முழு தமிழகமுமே மொட்டை அடிக்கப்பட்டதும், வளர்ப்பு மகன் திருமணம் முதல் டான்சி ஊழல் வரை பாசிச ஜெயாவின் முறைகேடுகளும்தான் அந்த தேர்தலில் தமிழக மக்கள் கொடுத்த செருப்படிக்கு முக்கியமான காரணம். உண்மையாகவே வாக்கு கேட்க வந்த அதிமுக அமைச்சர்கள் பலரை பெண்களின் விளக்குமாறுதான் அடித்தி விரட்டியதெல்லாம் வரலாறு. அதைக்கூட தனது அம்மா போற்றி அடிமைத்தனத்திற்காக இப்படி புரட்டி எழுவது என்றால் இவர்களின் நரித்தனம் எந்த அளவு அபாயகரமானது என்பதை புரிந்து கொள்ளலாம்.

இப்படி அந்தக் காலத்தில் ரஜினியை பயன்படுத்திய கருணாநிதி இன்று கமலை மோத வைத்து அடுத்த பாராளுமன்ற தேர்தலில் அவரை வாய்ஸ் கொடுக்க வைத்து வெற்றி பெற திட்டமிட்டிருக்கிறாராம். இதனாலாயே ப.சிதம்பரம் நூல் வெளியீட்டு விழாவில் வேட்டி கட்டிய தமிழர்தான் பிரதமர் ஆக வேண்டும் என்று கமல் விரும்புகிறாரே ஒழிய சேலை கட்டியவரை அல்ல என்று விசமத்தனம் செய்து பேசியவர் கருணாநிதியாம். இப்போதும் முழு தமிழக மக்களும் ஜெயாவை முழுமனதுடன் ஆதரிக்கிறார்களாம். ஒரு வேளை கமல் அப்படி குரல் கொடுத்தால் மக்கள் மாற வாய்ப்பிருக்கிறது என்பது திமுகவின் திட்டமாம்.

இதுதான் விசுவரூபம் கதையின் பின்னணி என்று நாக்கூசாமல் எழுதுகிறது குமுதம். சரி கருணாநிதி இப்படி சதி செய்து கமலை அப்படி பேசவைத்தால் அம்மா ஏன் கோபப்பட்டு கமலை எதிர்க்க வேண்டும்? அந்த சதியை முறியடிக்கும் வண்ணமாக அமைதியாக இருந்து விசுவரூபத்தை அனுமதித்திருக்கலாமே? இப்படியெல்லாம் நாம் கேட்டாலும் குமுதத்தைப் பொறுத்தவரை அம்மாவின் அதிகாரம் என்பது கேள்விகளுக்கு அப்பாற்பட்டது. அதை தெருவில் போகும் ஒரு குழந்தை கேட்டாலும் அவருக்கு கோபம் வரும். இந்த கோபத்தைப் பொறுத்துக் கொண்டு கேள்வி கேட்ட அந்த குழந்தையை ரெண்டு அடி போடுவதுதான் ஊடக தர்மம் என்று குமுதம் சொல்கிறது. அதாவது அந்த அறியாக் குழந்தையை கருணாநிதிதான் லாலிபாப் வாங்கி இப்படி அம்மாவுக்கு எதிராக பேசவைத்தார் என்று புரிந்து கொள்ள வேண்டுமாம். அடேங்கப்பா, இம்சை அரசனின் அரசவைக் கவிஞர்களெல்லாம் இவர்களிடம் பிச்சை வாங்க வேண்டும்.

தடை செய்யப்பட்ட காலத்தில் கூட கமலின் ரசிகர்கள் ஆந்திரா சென்றுதான் படத்தை பார்த்தார்களே அன்றி தமிழகத்தில் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. இப்படிப்பட்ட ரசிகர்களை உசுப்பி விட்டு கமல் குரல் கொடுத்து திமுக வெற்றிபெறும் என்றால் பவர் ஸ்டாருக்கு இதைவிட வாய்ஸ் அதிகம் என்பதை நாம் ஒத்துக் கொள்ள வேண்டும். இது போக திமுக வாரிசுச் சண்டையை வைத்து ரிப்போர்ட்டர் எனும் இந்த நரி எழுதிய கதைகளை பிட்டு வைப்பதற்கு இந்த ஜென்மம் மட்டும் போதாது.

குமுதம்-ரிப்போர்ட்டர்-குஷ்பு-மணியம்மைஇதன் தொடர்ச்சியாக இன்று வந்த குமுதம் ரிப்போர்ட்டர் அட்டைப்படத்தில் பெரியார் படத்தில் மணியம்மையாக நடித்த குஷ்பு படத்தை போட்டு பக்கத்தில் பெரியாருக்கு பதில் கருணாநிதி அமர்ந்திருக்கும் படத்தை ஒட்ட வைத்து “இன்னொரு மணியம்மை?” என்று வெட்கம் கெட்ட விதத்தில் எழுதியிருக்கிறார்கள். குஷ்பு இப்படி மணியம்மை பெரியாரை மணந்தது போல கருணாநிதியிடம் நெருங்கி வர முயற்சி செய்கிறார் என்றும் இதை கருணாநிதியின் குடும்ப பெண்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள் என்றும் இந்த மஞ்சள் பத்திரிகை மாமா பச்சையாக வாந்தி எடுத்து வைத்திருக்கிறது.

ஆனந்த விகடனில் பேட்டி கொடுத்த குஷ்பு, திமுகவில் தலைவர் என்பவர் பொதுக்குழுவில் தேர்வு செய்யப்படுவார் என்பது போல கூறியதை அனைத்து பத்திரிகைகளும் ஊதிப்பெருக்கி ஒரு சென்சேஷன் நியூசை உருவாக்கின. இதன் தொடர்ச்சியாக குஷ்பு வீடு திமுகவினரால் தாக்கப்பட்டதும், கருணாநிதி அதை கண்டித்தாதாகவும் செய்திகளை படித்திருப்பீர்கள். குஷ்பு ஒரு மேட்டுக்குடி ரோட்டரி கிளப் பெண் அரசியலுக்கு வந்தால் எப்படி நடந்து கொள்வாரோ அப்படித்தான் பேசுகிறார். இவரது பிரபலம் தேர்தல் காலங்களில் வாக்கு கேட்க பயன்படும் என்பதால் திமுக இத்தகைய களப்பணி செய்து வந்த ‘போராளிகளை’ வெட்கமில்லாமல் ஏற்றுக் கொள்கிறது. பதிலுக்கு குஷ்புவும் தனது பிரபலத்தை வைத்து திமுகவில் இன்னும் செல்வாக்குமிக்க பதவிகளில் வரலாம் என்று முயற்சி செய்கிறார். பரஸ்பரம் காரியவாதம். அதே போல ஸ்டாலின், அழகிரி மற்றும் பல தளபதிகள் கொண்ட திமுகவின் மையங்கள் பல ஒரு நடிகையின் பிரபலத்தை எந்த அளவுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்வது என்பதை எச்சரிக்கையாகவே கையாள்கிறார்கள்.

இதைத்தாண்டி குஷ்புவின் நேர்காணல்களுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. ஸ்டாலின், அழகிரி வாரிச் சண்டையின் பின்னணியில்தான் குஷ்புவின் நேர்காணல் பரபரப்பு செய்தியாக மாற்றப்பட்டது. இதை இன்னும் கொஞ்சம் பாலியல் கலந்த தளத்திற்கு கொண்டு சென்றது குமுதம் ரிப்போர்ட்டர் மட்டுமே.

குமுதத்தின் இலக்கு என்ன? கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்து பெண்களையெல்லாம் காலஞ்சென்ற எஸ்.எஸ்.சந்திரன் பொதுமேடையில் வாய் புழுக்க பேசிய போது குலுங்கி குலுங்கி சிரித்தவர்தான் இந்த ஜெயலலிதா. இன்று குமுதம் ரிப்போர்ட்டரை பார்த்தால் அப்படி சிரிப்பது உறுதி என்று குமுதம் மாமாவுக்கு தெரியும். இந்த ஒரு மேட்டருக்காகத்தான் இத்தகைய தரந்தாழ்ந்த கதையை படத்துடன் எழுதி வெளியிடக் காரணம்.

எனினும் தமது தலைவரை குமுதம் கேவலப்படுத்திவிட்டது, தனது கட்சிக்காரர் என்பதால் குஷ்புவை இழிவுபடுத்திவிட்டது என்று திமுகவின் ஒரு உடன்பிறப்புக்கு கோபம் வந்து குமுதம் அலுவலகத்தை அடிக்க சென்று கலவரமெல்லாம் நடக்காது. ஒன்று அம்மாவின் மீதான பயம். இரண்டு இப்படித்தான் திமுக மட்டுமல்ல அதிமுக மேடைகளிலும் இரண்டு கட்சி பேச்சாளர்களும் பாலியல் அநாகரிகத்தோடு பேசுவார்கள். வெற்றி கொண்டான், தீப்பொறி ஆறுமுகம், நாஞ்சில் சம்பத் பேச்சுக்களுக்கு கை தட்டும் இவர்கள் குமுதத்திற்காக கல்லை எடுக்க மாட்டார்கள் என்பதையும் நாம் ஒத்துக் கொள்ள வேண்டும்.

ஆனாலும் குமுதம் ரிப்போர்ட்டரின் இத்தகைய அயோக்கியத்தனத்தை நாம் அனைவரும் கண்டிக்க வேண்டும். தமிழகத்தை பிடித்த சாபக்கேடு பாசிச ஜெயா மட்டுமல்ல, அவருக்கு பல்லக்கு தூக்கும் இத்தகைய பத்திரிகை மாமாக்களும்தான் என்பதை உணர்வதோடு பொது அரங்கில் இவர்களை முறியடிப்பதற்கும் நாம் முன்வரவேண்டும்.

கிரிக்கெட் : பாகிஸ்தானுக்குக் கைதட்டுபவன் பயங்கரவாதியா ?

17

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 28

“கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி தோல்வியுறுவதையும், பாகிஸ்தான் அணி வெற்றி பெறுவதையும் இந்திய முசுலீம்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடுகிறார்கள். அவர்களது தேசபக்தி யோக்கியதைக்கு இதுவே சான்று”

இந்து முன்னணியின் பிரபலமான அவதூறுகளில் ஒன்று.

கபில்தேவ் - இம்ரான்கான்20-ஆம் நூற்றாண்டின் இறுதிப் பயணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு வந்தபோது தில்லி ஆடுகளத்தை சிவசேனா கொத்தியது; சென்னை அரங்கத்தில் பன்றித் தலைகளை வீசியது; மும்பை கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தினுள் புகுந்து பரிசுக் கோப்பைகளை அடித்து நொறுக்கியது.

அணுகுண்டு வெடிப்பு, தேவாலய இடிப்புகளால் உலக அரங்கில் தனிமைப்பட்டிருக்கும் பா.ஜ.க. அரசுக்கு எப்படியாவது ஆட்டத்தை நடத்திவிட வேண்டும் என்ற கவலை; போட்டி ரத்தானால் பலகோடி ரூபாய் பறிபோகுமே என்பது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கவலை; பணம் வாங்கிக்கொண்டு தோற்றதாக இந்திய, பாகிஸ்தான் வீரர்கள்மீது குற்றச்சாட்டுகள் இருப்பதால், அந்தக் களங்கத்தைத் துடைப்பதற்காகவாவது போட்டியில் வெல்ல வேண்டும் என்பது  இந்திய, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் கவலை; தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு விளம்பரம் உருவாக்கித் தரும் வியாபாரம் குறித்த கவலை; எதைப் பற்றியும் கவலைப்படாத ரசிகர்களுக்கு மட்டும்தான் ஆட்டத்தை ரசிக்க வேண்டுமே என்ற கவலை.

இவை பின்னரங்கத்தில் பேசப்படும் பல்வேறு கவலைகள். ஆனால், மக்கள் அரங்கில் பேசப்படும் ஒரே கவலை, ‘விளையாட்டு வேறு, அரசியல் வேறு, இரண்டையும் கலக்காதீர்கள்’ என்பதுதான். என்றால் யுத்தத்தை தாக்கரே மைதானத்திற்கு கொண்டு வந்ததில் உண்மையில்லையா? ஒரு வரலாற்றுத் தொடர்ச்சியில்லையா? சிவசேனா செயற்கையாகத்தான் இப்பிரச்சினையை எழுப்பியதா? எழுப்பப்படும் ஒரு பிரச்சினையால், ‘அரசியலைக் கலக்காதே’ என்பது, அப்பிரச்சினையைச் சந்திப்பதற்கு பதில், தப்பித்து ஓடுவதையே கோருகிறது. தானும், தன் வீடும் மட்டுமே உலகம் என்று வாழும் நடுத்தர வர்க்கத்தின் ஒழுக்கம், ஒளிந்திருக்கும் பாதுகாப்பான இடமே, ‘அரசியலைக் கலக்காதே’ என்பதில்தான். இதுதான் நேர்மையற்ற அரசியல். இதனால்தான் சிவசேனாக்கள் வளருகின்றன.

உண்மையில் விளையாட்டிற்கும் அரசியலுக்கும் தொடர்பில்லையா? பண்டைய கிரேக்க வீரனுக்குத் தரப்பட்ட விருது வெறும் ஆலிவ் இலைக் கிரீடம்தான். இன்றைய ஒலிம்பிக் வீரனுக்கு விருது, விளம்பரத்திற்காக பன்னாட்டு நிறுவனம் தரும் சில மில்லியன் டாலர்கள். டாலரும், இலையும் ஒன்றுதானா? பிரான்சில் நடந்த உலகக் கால்பந்து போட்டியினால் பிரபலமான வீரர்களை வாங்குவதற்கு ஐரோப்பிய கிளப்புகள் போட்டியிட்டன. யார் திறமையான கால்பந்து வீரர் என்பது, யார் விலை அதிகம் என்பதிலிருந்தே தீர்மானிக்கப்படுகிறது. திறமையைப் பணம் ஆதிக்கம் செய்வதன் காரணம் என்ன?

முன்பு கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா ஆடுவதையே காணமுடியாத நீங்கள், இன்று எந்த நாடு ஆடினாலும் காண முடியும். உலக மயமாக்கமும், அறிவியல் தொழில்நுட்பப் புரட்சியும் அதைச் சாத்தியமாக்கியது. விளையாட்டில் மட்டும் புழங்கும் மூலதனம், பல மூன்றாம் உலக நாடுகளின் தேசிய வருமானத்தை விட அதிகம். சர்வதேசக் கால்பந்துக் கழகம்தான் உலகின் மிகப்பெரும் பன்னாட்டு நிறுவனம், பில்கேட்சின் நிறுவனம் அல்ல. விளையாட்டின் இத்தகைய மாபெரும் வருமானம் ஆப்பிரிக்கப் பஞ்சத்தைப் போக்குவதற்கும், ஆசியாவின் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும் தான் பயன்படுகிறதா? அல்லது ஏழை நாடுகளைக் கொள்ளையிடவும், ஆதிக்கம் செய்யவும் பயன்படுகிறதா? மூலதனம், சந்தை, விளம்பரம், பணம் இவற்றை உருவிவிட்டு எந்த விளையாட்டைக் காட்ட முடியும்? அல்லது ஆட முடியும்? முடியாதென்றால் அதன் காரணம் அரசியல்; ஆம். அரசியல் கலப்பற்ற தூய விளையாட்டு எதுவும் இன்று கிடையாது. சாத்தியமும் இல்லை.

ஒரு போராகவும், போர் வெறியைத் தீர்த்துக்கொள்ளும் கருவியாகவும், இன – நிற வெறிச் சண்டையாகவும் விளையாட்டு மாற்றப்பட்டுவிட்டது. ஏகாதிபதிய உலகின் ஆதிக்க மனோபாவமும், அதை எதிர்க்கும் விடுதலை உணர்வும் விளையாட்டிலும் வெளிப்பட்டே தீரும். 1932-இல் மியூனிச்சில் நடந்த ஒலிம்பிக் ஓட்டத்தில் ஜெஸ்ஸி ஓவன்ஸ் எனும் அமெரிக்கக் கருப்பர் வெல்கிறார். வெள்ளையர்களே பலசாலிகள் என்று கருதிய ஹிட்லரால் அதைத் தாங்க முடியவில்லை. முந்தைய சோவியத் யூனியன் பல தலைமுறைகளாக, ஒலிம்பிக் போட்டியில் முதலிடம் பெற்றது. கம்யூனிச அரக்கனின் அதிகாரத்தின் கீழ் தரப்பட்ட காட்டுமிராண்டித்தனமான பயிற்சிதான் வெற்றிக்குக் காரணம் என அமெரிக்க மக்கள் இன்றும் கருதுகின்றனர்.

பிரான்சில் நடந்த உலகக் கால்பந்துப் போட்டியில் அமெரிக்காவை வீழ்த்திய ஈரானை, அரபு மக்கள் விடிய விடியக் கொண்டாடியதற்குக் காரணம், ஏகாதிபத்திய வெறுப்பு. இந்தியாவின் தெற்காசிய ஆதிக்கத்தில் சிக்கியிருக்கும் இலங்கை, கிரிக்கெட்டில் இந்தியாவை வெல்லும்போது ஈழத் தமிழர்களும் மகிழ்வார்கள். காரணம் அமைதிப்படையின் அழியாத வடுக்கள்தான். இதுபோக, ஏழை நாடுகளுக்கிடையே நடக்கும் போட்டிகளும் தேசிய வெறியால் கவ்வப்பட்டிருக்கின்றன. அவை பொய்யான உணர்ச்சியில் மக்களை மூழ்கடிக்க ஆள்பவருக்குப் பயன்படுகின்றன. இருப்பினும் விளையாட்டில் நாம் கண்ட சமூக நிலைமைகள் அனைத்தும், பரபரப்பை ஏற்படுத்தி, சந்தையை அதிகரித்து, பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையிடவே முக்கியமாகப் பயன்படுகிறது. கிரிக்கெட்டின் விதிகள் தெரியாத ஒரு நபர்கூட, ‘ஸ்கோர் என்னாச்சு, நம்மாளு ஜெயிப்பானா?’ என்று கேட்பதன் காரணம் அதுதான்.

விளையாட்டின் சர்வதேச அரசியல் நிலைமைகள் இந்தியக் கிரிக்கெட்டிற்கும் பொருந்தும். ஆள்பவர்களுக்குத் தேசிய வெறியூட்டும் கருவியாகவும், பன்னாட்டு நிறுவனங்களுக்குப் பெரும் வர்த்தமாகவும்தான் கிரிக்கெட் பயன்படுகிறது. அதனாலேயே அது பிரபலமாக்கப்பட்டது. இனிமேலும் அது வெறும் விளையாட்டு மட்டுமல்ல.

‘பாகிஸ்தானுடன் போரோ, கிரிக்கெட்டோ இரண்டிலும் இந்தியாதான் வெல்ல வேண்டும் என்று விரும்புகிறோம்’, என்கிறார் மத்திய அமைச்சர் பிரமோத் மகாஜன். ‘போரில் யாரிடம் நியாயம் உள்ளதோ அவன் வெல்லட்டும், விளையாட்டில் யாரிடம் திறமை உள்ளதோ அவன் வெல்லட்டும்’ என்பதுதானே சரி. தாக்கரேயின் அரசியல் கலப்பைக் கண்டித்தவர்கள், மகாஜனின் கூற்றில் அரசியலைக் காணவில்லையா? இல்லை என்பதன் காரணம் இது புதிதல்ல. இருநாட்டு அணிகளுக்கிடையேயான போட்டியின் போது கிளம்பும் தேசிய வெறியில்  இருநாட்டு ஆளும் வர்க்கங்களும் குளிர் காய்கின்றன. காசுமீர் பிரச்சினையிலும், கிரிக்கெட் போட்டியிலும் அவர்களது அணுகுமுறை ஒன்றுதான். இன்று சிவசேனாவை எதிர்ப்பவர்களும், ஆதரிப்பவர்களும் இதில் அடக்கம்.

கபில்தேவ் தலைமையிலான அணி, பாகிஸ்தான் அணியுடன் ஷார்ஜாவில் மோதிய ஒரு போட்டியின் இறுதிக் காட்சி.  கடைசிப் பந்தில் 4 ரன் அடித்தால் வெற்றி, என்ற நிலையில் சேதன் சர்மாவின் பந்தை சிக்சர் அடிக்கிறார், பாகிஸ்தான் வீரர் மியான்தத். இருநாட்டு இரசிகர்களையும் பல நாட்கள் தூங்கவிடாமல் செய்த இப்போட்டியைப் போன்று, பலவற்றில் பாகிஸ்தான் அணி வென்றிருக்கிறது. அரசியல் கலக்காத கிரிக்கெட்டை விரும்பியவர்கள் அனைவரும் திறமை – இரசனை அடிப்படையில் பாகிஸ்தான் அணிவெற்றியைப் பாராட்டியிருக்க வேண்டும். இரசிகர்களை ஏற்கச் செய்திருக்க வேண்டும். செய்தார்களா? அன்று இந்தியப் பத்திரிகைகள் எழுதியவை என்ன? ”இறைச்சி விழுங்கும் பாகிஸ்தான் வீரர்களின் ரத்தத்தில் ஒரு வெல்லும் வெறி (Killer instinct) இருக்கும். இந்தியாவுடன் மோதும்போது அவ்வெறி விசுவரூபமெடுக்கும். சைவ பட்சிணிகளான இந்திய வீரர்கள் சாந்த சொரூபியாக, இக்கட்டான தருணங்களில் கோழைகளாக விளையாடுகின்றனர்.”

தாக்கரேயுடன் தோளோடு தோள் நின்று தேசிய வெறியை ஊட்டியவர்கள், அரசியலற்ற விளையாட்டைப் பற்றி நமக்கு நீதி உபதேசம் செய்கிறார்கள். தேசிய வெறியின் தர்க்க நீட்சியாக முன் செல்லும் சிவசேனாவை ‘ஒரு எல்லைக்குள் மேல் போகாதே’ என அன்பாய்க் கடிந்து கொள்கிறார்கள்.

எப்போதோ அரசியலாக்கப்பட்ட கிரிக்கெட்டின் செல்வாக்கை அறுவடை செய்ய, சிவசேனைக்கு முன்பாகவே ஆர்.எஸ்.எஸ் முயன்று வந்தது. ‘இந்தியாவை வெல்லும் பாகிஸ்தான் அணியை, இந்திய முசுலீம்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கிக் கொண்டாடுகின்றனர்’ என்று தமது முசுலீம் எதிர்ப்பு அரசியலை கிரிக்கெட்டிலும் புகுத்தினர். ஒரு விளையாட்டு என்ற முறையில் யாரும் எவரையும் ஆதரிக்கலாம் என்று, கிரிக்கெட்டின் ஜனநாயகக் காவலர்கள் இதுவரை உங்களிடம் ஏன் விளக்கவில்லை? இல்லையென்றால், இந்திய கிரிக்கெட்டில் இந்து தேசிய அரசியல் நுழைவை இவர்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்றுதானே பொருள்?

வருடந்தோறும் வளைகுடா ஷார்ஜாவில் இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. அங்கே இந்திய அணியை ஆதரிப்பவர்களில் அதிகம் பேர் இங்கிருந்து பிழைக்கச் சென்ற இசுலாமிய மக்கள்தான் என்பது உங்களுக்குத் தெரியும். ‘முசுலீம்கள் தேச பக்தர்கள்தான்’ என்று ஆர்.எஸ்.எஸ். கும்பலிடம் சான்றிதழ் பெறுவதற்காக இதைக் கூறவில்லை. உண்மையை எப்படித் திரிக்கிறார்கள் என்பதைத்தான் கூறுகிறோம். இருப்பினும் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு இசுலாமிய இளைஞனின் மனநிலை – பாகிஸ்தான் அணிக்கு ஆதரவாக இருக்க முடியுமா என்பதையும் நீங்கள் பரிசீலிக்க வேண்டும்.

பிரான்சில், உலகக் கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரேசில்தான் வெல்ல வேண்டும் என்ற நமது விருப்பம், ஏகாதிபத்திய வெறுப்பினாலும், மூன்றாம் உலக நாட்டின் மீதான நட்பினாலும் வருகிறது. இங்கிலாந்தை எதிர்த்து மேற்கிந்தியக் கிரிக்கெட் அணி வெற்றி கொள்ள விரும்பும் நமது ஆவல், வெள்ளை நிற வெறியின் மீதுள்ள வெறுப்பினால் வருகிறது; யார் திறமையாக ஆடுகிறார்கள் என்பதல்ல. எனில், இந்தியச் சமூக நிலைமைகளில் ஒரு முசுலீமின் மனநிலை கிரிக்கெட்டில் யாரை ஆதரிக்கும்? 20 ஆண்டுகளில் அவர்களை எதிர்த்து நூற்றுக்கணக்கில் கலவரங்கள், ஆயிரக்கணக்கில் படுகொலைகள், அகதிகளாக வெளியேற்றம், பாபர் மசூதி இடிப்பு, ஐ.எஸ்.ஐ. பீதியூட்டி சிறை, மொத்தத்தில் முசுலீம்கள் சொந்த மண்ணில் இரண்டாந்தரக் குடிமக்கள்.

தாக்கரே-வாஜ்பாயிஆனால், தண்டிக்கப்பட வேண்டிய இந்துமத வெறியர்கள் ஆட்சியில்; ‘முசுலீம்களின் புட்டத்தை எட்டி உதைப்பேன், மசூதியை இடித்தது நாங்கள்தான், ஸ்ரீகிருஷ்ணா கமிசனைக் குப்பையில் போடு’ என்னும் தாக்கரே; கடவுளின் பெயரால் கலவரம் வேண்டாம் என்று ஏனைய கட்சிகளின் மழுப்பலான உபதேசம். இந்தச் சூழ்நிலையில் காயம்பட்ட இசுலாமிய இதயங்களை வருடிக்கொடுத்தது யார்?

தாக்கரேவைக் கைது செய்யுங்கள் என்று இந்திய அணி ஊர்வலம் போனதா? மசூதி இடிப்பு தவறு என ஒரு வீரராவது அறிக்கை விட்டாரா? இல்லை. எதுவும் இல்லை. டெண்டுல்கரின் திருமணத்திற்கு வந்த 50 பேரில் பாதிக்கும் மேல் தாக்கரேவின் குடும்பத்தினர்தான். கீர்த்தி ஆசாத், சௌகான் போன்ற முன்னாள் வீரர்கள் பா.ஜ.க.வில் குவிகின்றனர். பாகிஸ்தானுடன் மோதும் இந்திய அணி, முசுலீம்களை எதிர்த்துப் போராடும் இந்து மதச் சேனையாக உங்களுக்குக் காட்டப்படுகிறது. இப்போது முசுலீம்களுக்கு நீங்கள் தரும் யோசனை என்ன?

பம்பாய், மீரட், பிவந்தி, பகல்பூர், கோவைக் கலவரங்களில் சொந்தபந்தத்தையும், வாழ்க்கையையும் இழந்து, விதியை நொந்து உழலும் இசுலாமிய இளைஞர்களின் மனநிலை எப்படி இருக்கும்? ஒரு சிலர் குண்டு வைக்கலாம். முடியாதவர்கள் மைதானத்தில் கை தட்டலாம். இந்தியாவில் எவரும் தண்டிக்க முடியாத இந்து மத வெறியர்களை, ஒரு கிரிக்கெட் போட்டியிலாவது வெறுப்பேற்றலாம் என்ற அந்த இளைஞர்களது மனநிலை, இசுலாமிய மக்களுக்கல்ல, இந்தியாவின் மதசார்பற்ற, ஜனநாயக சக்திகளுக்குத்தான் அவமானம். அதில் ரசிகர்களாகிய உங்களுக்கும் பங்கு உண்டா, இல்லையா?

‘ஒரு இந்து ஆஸ்திரேலியா அல்லது இங்கிலாந்தின் வீரனை ரசிக்கலாம்; ஒரு பாகிஸ்தான் வீரனை மட்டும் ரசிக்கக்கூடாது’ என்பதற்கு என்ன பதில்? பிராட்மேனுக்குப் பிறகு டெண்டுல்கர்தான் சிறந்த மட்டையாளர் என பல நாட்டு இரசிகர்களும், வீரர்களும் கூறுகின்றனர். அவர்களெல்லாம் அந்நாடுகளின் தேசத் துரோகிகளா? ராம் பிரகாஷ், சந்தர்பால், முரளிதரன், தீபக்பட்டேல், நாசர் ஹூசைன் போன்ற இந்திய வம்சாவழியினர் பல நாடுகளுக்காக இந்தியாவை எதிர்த்து ஆடுகிறார்கள். எனில் இவர்களைத் தூக்கில் போட வேண்டும் என்று இந்து முன்னணி கோருமா?

– முற்றும்.

_________________________

வாசக நண்பர்களே! இத்துடன் கண்ணைப் பறிக்கும் காவிப்புழுதி எனும் இந்நூலின் கட்டுரைகள் வரிசை முடிவு பெறுகிறது. ஆனால் இந்துமதவெறியர்களின் அவதூறுகள் இன்றும் தொடர்கின்றன. இவை வெறுமனே கருத்து ரீதியான அவதூறுகள் மட்டுமல்ல. ஆர்.எஸ்.எஸ் எனும் பார்ப்பன பாசிசக் கூட்டம் இத்தகைய அவதூறுகளை மூலதனமாக வைத்துத்தான் அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற முனைகிறது. எனவே இந்த அவதூறுகளும், வெறுப்பும் கருத்து என்பதைத்தாண்டி நாட்டு மக்களை ஒடுக்கும் வன்முறைக்கு அச்சாரமாகவும் இருக்கின்றன. சிறுபான்மை மக்களை குறிவைத்து குறிப்பாக முசுலீம் மக்களை வில்லன்களாக்கி ‘இந்துக்களை’ அணிதிரட்டும் வேலைக்காகவே இந்த அவதூறுகள் சுமார் 80 ஆண்டுகளாக இந்துமதவெறியர்களால் பரப்பப்படுகின்றன. பார்ப்பன பாசிசம் என்பது முசுலீம்களுக்கு மட்டுமல்ல, பெரும்பான்மையான ‘இந்துக்களுக்கும்’ எதிரான ஒரு நிறுவனமாகும். உழைக்கும் மக்கள் என்ற முறையில் மதவேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு இந்துமதவெறியர்களை வீழ்த்த வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. அத்தகைய பணிக்கு இங்கே வெளியிடப்பட்டிருக்கும் 28 கட்டுரைகளும் உங்களுக்கு ஒரு ஆயுதமாக பயன்படும் என்று நம்புகிறோம்.

மேலும், இந்த நூல் இதுவரை மூன்று பதிப்புகள் வெளியிடப்பட்டு விற்பனையாகியிருக்கின்றது. தற்போது கீழைக்காற்று வெளியீட்டகத்தில் இந்த நூல் விற்பனைக்கு கிடைக்கும். இந்த நூலை நீங்கள் வாங்குவதோடு உங்கள் நண்பர்களிடமும் விநியோகிக்குமாறும் அன்புடன் கோருகிறோம்.

– வினவு

கண்ணை மறைக்கும் காவிப்புழுதி

நூல் விற்பனை விவரங்கள்:
பெயர்: கண்ணை மறைக்கும் காவிப்புழுதி – சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்-ன் பொய்யும் புரட்டும் !

கிடைக்கும் இடம் :
கீழைக்காற்று, 10, ஔலியா சாகிபு தெரு, எல்லீசு சாலை, சென்னை – 2
தொலைபேசி – 044-2841 2367

பக்கங்கள் : 160 விலை : ரூ 80/-
தபால் செலவு : 
உள்நாடு ரூ 50/-, வெளிநாடு ரூ 500/-
கிடைக்கும் இடம்
:
கீழைக்காற்று, 10, ஔலியா சாகிபு தெரு, எல்லீசு சாலை, சென்னை – 2
தொலைபேசி – 044-2841 2367

__________முந்தைய பகுதிகள்____________

 

ஒரு பெண் ஒரு பொறுக்கியை எதிர்க்க முடியுமா ?

26

பெண்களுக்கு எதிரான பாலியல் அச்சுறுத்தல்களுக்கும் வன்முறைக்கும் கடுமையான சட்டங்கள்தான் தீர்வு என்று அரசாங்கம் முன் வைக்கிறது. ‘சட்டத்தை கடுமையாக்கணும், போலீசுக்கு அதிக அதிகாரம் வேணும், நல்லவங்க அரசியலுக்கு வரணும், ஊடகங்கள் சுதந்திரமா செயல்பட்டா பிரச்சனை தீரும்’ என அப்பாவியாய் நம்புபவர்கள் பலர் உள்ளனர்.

ஆணாதிக்க பிற்போக்கு கலாச்சாரத்தோடு  புழங்கும் பொது இடங்களில் பெண்கள் மீது வசை பொழிவது, பாலியல் ரீதியாக திட்டுவது போன்ற நடத்தைகள் சகஜமாகியுள்ளன. அனைவரும் தினமும் சந்திக்கும் இந்த நிகழ்வுகளை பெண்கள் ‘வேறு வழியில்லாமல்’ சகித்துக் கொண்டு போக வேண்டியிருக்கிறது.

சட்டங்களை செயல்படுத்த வேண்டிய காவல் துறை, சமூகத்தின் ஒட்டு மொத்த ஆணாதிக்க மனப்போக்கைத்தான் பிரதிபலிக்கிறது. இந்தச் சூழலில் ஒரு பெண் தனக்கு நேர்ந்த அச்சுறுத்தல்கள் குறித்து புகார் செய்ய காவல் நிலையத்தை அணுகுவதோ, வழக்கு பதிவு செய்வதோ நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்றாக இருக்கிறது.

கடந்த 2 வாரங்களில் பெண்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்பான வழக்குகளை போலீஸ் நிலையத்தில் பதிவு செய்வதற்காக நடத்தப்பட்ட போராட்டங்களைப் பற்றிய இரண்டு சம்பவங்களை பார்க்கலாம். பெண்கள் மீதான அச்சுறுத்தல்களுக்கு எதிராக பெண்கள் அமைப்பாக ஒன்றிணைந்து போராடுவதுதான் ஒரே தீர்வு.

திருச்சியைச் சேர்ந்த மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக்குழுவினர் பிப்ரவரி 1ம் தேதி அனுப்பிய சம்பவம்

திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவி, பள்ளிக்குச் செல்வதற்காக நின்று கொண்டிருந்தார். 30 வயதுடைய ஆண் ஒருவர் ஹீரோ ஹோண்டாவில் வேகமாக வந்து, அந்த மாணவியின் தோளை அமுக்கி, பின்பக்கம் தட்டிவிட்டு சென்றுள்ளான்.

சிறிதும் தயங்காத அந்த மாணவி வேகமாக பின்னாலேயே ஓடிப்போய், அவனை வழிமறித்து, வண்டியை நிறுத்தி, வண்டிசாவியை பறித்து கொண்டு நடுரோட்டில் வைத்து கடுமையாக திட்டி உள்ளார். அவன் வேறுவழியின்றி “என்னை மன்னித்துவிடு , வண்டி சாவியை கொடு” எனக் கேட்டுள்ளான்.

அந்த மாணவி சாவியை தரமறுத்து, அருகில் உள்ள மகளிர் காவல்நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்து விட்டு, அவர்கள் வருவதற்க்குள் வேகமாக அந்த ‘பொறுக்கி’ இருக்கும் இடத்திற்கு வந்து மீண்டும் திட்டியுள்ளார். கூட்டம் கூடவும் ஆண் ட்ராபிக் போலீஸ் வந்து… “ஏம்மா இதப் போயி பெரிய பிரச்சனையா ஆக்குற, போம்மா” என்று அந்த மாணவியை திட்டியுள்ளார். அதற்குள் கூடியிருந்த மக்களில் ஒருவர், அந்த ‘பொறுக்கியை’ கையை ஓங்கிக் கொண்டு அடிக்கப் போயுள்ளார். ட்ராபிக் போலிஸ் உடனே “சரி…சரி விடுங்க, பிரச்சனைய பெரிசாக்காதீங்க“ என்றிருக்கிறார்.

அங்கு வந்த மகளிர் காவல் நிலைய பெண் போலிஸ் ட்ராபிக் போலிஸிடம் “சார், இதுக்கும் உங்களுக்கும் சம்மந்தமில்லை. அந்த பெண்ணை தோளை பிடித்து அமுக்கி இருக்கான், சாதாரணமா விட்டுடுங்கன்னு சொல்லுறீங்க… இது எங்க(பெண்கள்) பிரச்சினை.. நாங்க பார்த்துக்குறோம். நீங்க உங்க ட்யூட்டிய பாருங்க“ என்று சொல்லி அந்தப் ‘பொறுக்கியை’ அழைத்துக் கொண்டு காவல்நிலையத்திற்கு சென்றார்.

திருச்சியைச் சேர்ந்த பெண்கள் விடுதலை முன்னணி பிப்ரவரி 14ம் தேதி அனுப்பிய செய்தி

திருச்சி பாலக்கரையில் இருந்து சுப்பிரமணியபுரம் செல்வதற்காக தனியார் நகர பேருந்தில் பெண்கள் விடுதலை முன்னணி தோழர் ஒருவர் பயணம் செய்தார். பேருந்தில் கால் வைக்க முடியாத அளவிற்கு கூட்டம் தொங்கி கொண்டும், தள்ளாடிக் கொண்டுமிருந்தது.

பேருந்தின் நடத்துனர் ஒவ்வொரு ஸ்டாப்பிலும் இடமே இல்லையென்றாலும் பயணிகளை ஏற்றிக் கொண்டேயிருந்தார். அவ்வப்போது ‘உள்ளே போ, உள்ளே போ’ என சத்தம் போட்டு கொண்டேயிருந்தார். ஒரு சந்தர்ப்பத்தில் நடத்துனர் டிக்கெட் போடவே முடியாதபடி இட நெருக்கடி ஏற்ப்பட்டது.

நிலைமையை உணர்ந்த நடத்துனர் பயணிகளை பார்த்து ஆத்திரத்துடன் வா, போ என்றும் பெண்களிடம் “ஏய் சொன்னா கேட்கமாட்டியா போன்னு சொல்றேன் அப்படியே நிக்கிற” என தன் மனைவியை ஆணாதிக்கத்துடன் அதட்டுவது போல அடிக்காத குறையாக உறுமினார்.

பெண் தோழர் “ஏங்க மரியாதை இல்லாம பேசுறீங்க, இவ்வளவு கூட்டத்தில் எப்படி இன்னும் உள்ளே போக முடியும், எல்லாத்தையும் சகட்டு மேனிக்கு பேசுறீங்க தனி ஒரு முதலாளி லாபத்துக்காக இவ்வளவு மக்களையும் கொடுமை படுத்துறீங்க” என சத்தம் போட்டு கண்டித்தார்.

உடனே டிரைவர் ஆவேசமாக “ஏய் என்ன திமிறா பேசுற, கண்டக்டர் வயசு என்ன? உன் வயசு என்ன? மரியாதையா பேசு” என சீறினார்.

“ஏங்க மரியாதை இல்லாம எல்லா பெண்களையும் ஒருமையில் பேசுறதும் என்ன நியாயம்? பயணிகள் எல்லாம் இவருக்கு என்ன பொண்டாட்டியா? (மனைவியையே அப்படி பேசுவது தவறு என்பது வேறு)” என கேட்டதும் நக்கலாக

“பொண்டாட்டி இல்ல வப்பாட்டி” என கேலி செய்தான் டிரைவர்.

“மரியாதையா பேசல செருப்பால அடிப்பேன்” என பெண் தோழர் பதில் சொல்ல,

டிரைவர் வண்டியை நடுரோட்டில் நிறுத்தி விட்டு “நீ என்னடி அடிக்கிறது நானும் செருப்பால அடிப்பேன்” என செருப்பை தூக்கி காட்டி போடி, வாடி என்று ரவுடித்தனமாக நடந்து கொண்டிருக்கிறான்.

பெண் தோழர் விடாமல் அவனிடம் சண்டை போட்டுள்ளார், உடனே பயணிகள் மத்தியில் இருந்த ஆண்கள் சிலர் “ஏம்மா டிரைவர் தான் பேசுறார்னா நீயும் சரிக்கு சரியா பேசுற, பேசாம அமைதியாய் போம்மா” என பஞ்சாயத்து செய்தனர்.

“நாகரீகமே  இல்லாமல் இவ்வளவு கேவலமா பேசுறான் என்னை அடங்கி போக சொல்றீங்க, இதே உங்க வீட்டு பொம்பளைங்களை இவன் இப்படி பேசுனா வேடிக்கை பார்ப்பீங்களா? என்ன உங்க நியாயம்” என அவர்களிடமும் வாதம் செய்து கொண்டே பெண் தோழர் உறுதியாக நின்றார். இடையில் 3 இடங்களில் டிரைவர் வண்டியை நடுரோட்டில் நிறுத்தி ஆபாசமாக திட்டுவதும், செருப்பை தூக்கி அடிக்க வருவதும் நடந்தது.

“யேய் போடி என்ன வேணாலும் செய்டி ஒன்னும் புடுங்க முடியாது. இதோ போலீஸ் ஸ்டேஷன் இங்கதான் இருக்கு போய் என்ன வேணாலும் செய்!” என இறக்கிவிட்டு பேருந்து கிளம்பியது. பேருந்தில் இருந்து இறங்கிய தோழருடன் சில இளம்பெண்களும், இரண்டு இளைஞர்களும் அந்த ஸ்டாப்பில் இறங்கினர்.

நடந்த சம்பவங்களை கவனித்தவர்கள் “இவனுக்கு இதே வேலதாம்மா, தினமும் இவனோட வேற வழி இல்லாமல் இந்த பேச்சை கேட்க வேண்டி உள்ளது. இதுக்கு ஏதாவது முடிவு கட்டணும்” என தைரியமூட்டினர். உடன் இறங்கிய இரண்டு இளைஞர்கள் “வாங்க நாங்களும் புகார் செய்றோம்” என தோழருடன் ஏர்போர்ட் போலீஸ் ஸ்டேஷன் சென்று புகார் தெரிவிக்க சென்றனர்.

சம்பவங்களை கேட்டறிந்த காவல்துறை அதிகாரிகள் ரொம்ப நிதானமாக, “சம்பவம் நடந்தது கே கே நகர் எல்லையில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் வருது. நாங்க அதில் தலையிட முடியாது, இது ஏர்ப்போர்ட் எல்லையில் வராது. நீங்க கே கே  நகர் போலீஸ் ஸ்டேஷன் போங்க” என திசை காட்டினர். சலிப்படையாமல் கே கே நகர் காவல் நிலையம் சென்று புகார் அளிக்க பெண் தோழர் சென்றார். மக்கள் கலை இலக்கிய கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மனித உரிமை பாதுகாப்பு மையம் தோழர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தோழர்கள் உதவியுடன் புகார் அளிக்கப்பட்டது.

சம்மந்தப்பட்ட டிரைவர், நடத்துனர் காவல் நிலையத்திற்குள் வந்து சேர்ந்ததும் “நடத்துனரை பார்த்தா வயதான அப்பாவிபோல தெரியுது, இவர் அப்படி பேச மாட்டாரே!” என அதிகாரிகள், பெண் தோழர் பொய் புகார் அளித்ததை போல கேள்வி கேட்டு துளைத்தனர். தோழரின் உறுதியை பார்த்து பின்வாங்கினார்.

அடுத்து தனியார் பேருந்தின் மேனேஜர், “ஏம்மா நடந்த சம்பவத்திற்கு நான் மன்னிப்பு கேக்குறேன் புகார் எல்லாம் வேண்டாம், இன்னும் 15 நாளில் டிரைவருக்கு திருமணம் நடக்க போவுது. அதுவும் உன்னை போல ஒரு பெண் தான், அது வாழ்க்கையை கெடுக்கலாமா?” என உருகினார்.

“இப்படிப்பட்ட காலிப் பயலுக்கு எதுக்கு வக்காலத்து வாங்குறீங்க, உங்க வீட்டு பொண்ணு கிட்ட இப்படி நடத்துகிட்டா நீங்க என்ன செய்வீங்க?” என்றதும் மேனேஜர் உதட்டை பிதுக்கியாவாறே சென்று விட்டார்.

மாலை நேரம் கடந்து இருட்ட தொடங்கியது. தீர விசாரித்ததாக கூறிய காவல்துறை ஆய்வாளர், “வழக்கு போட சொல்லி உள்ளேன், எனக்கு முக்கிய வேலை இருக்கு, சார் பார்த்துக்குவார்” என உதவி ஆய்வாளரை கைகாட்டி விட்டு எஸ்கேப் ஆனார். கடைசி வரை திரும்ப வரவே இல்லை.

அடுத்து உதவி ஆய்வாளர் தீர விசாரித்த வகையில் நடந்த குற்றத்திற்காக ரூ.1,000 அபராதம் கட்ட போதுமான அளவிற்கு வழக்கு என்று தீர்ப்பு எழுதுவது போல பேசினார். “என்ன சார் நியாயம்? நாகரீகமே இல்லாமல் பொது மக்கள் மத்தியில் எந்த வித கூச்சநாச்சம் இல்லாமல் இவ்வளவு கேவலமாக நடந்துள்ளனர். மொய் எழுதுவதை போல அபராதம் போடுவது என்ன நியாயம்?” என சத்தம் போட்டனர்.

“சரி, சரி உங்களுக்கும் வேணாம், எங்களுக்கும் வேணாம், 506\1 ஜாமீனில் வரும் செக்க்ஷனில் வழக்கு போடுகிறோம், போதுமா? இப்போது சந்தோஷம் தானே” என பேரம் பேசினார் உதவி ஆய்வாளர்.

கொடுத்த புகாருக்கு நடந்த சம்பவத்துக்கு பொருத்தமான செக்சனில் வழக்கு போடாமல் இழுத்தடித்தது நீடித்தது. இரவு மணி 10 வரை, வந்திருந்த தோழர்கள், பெண்கள், குழந்தைகள், ஆட்டோ ஓட்டுநர்கள் ஆகியோர் உறுதியோடு காத்திருந்தனர். ‘சரி இவனுங்க சரிப்பட்டு வரமாட்டானுங்க, இரண்டு பொறுக்கிய உள்ள தள்ளனும்னா, நாம 10 பேர் சிறைக்கு போற போராட்டம் நடத்துறதை தவிர வேறு வழி இல்லை’ என முடிவு செய்து, ஸ்டேஷனை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்ய முடிவு செய்தனர். பத்திரிக்கைகளுக்கு தகவல் தரப்பட்டது.

பலாப்பழத்தில் ஈ மொய்ப்பதை போல நடிகர், நடிகைகள், அரசியல்வாதிகள் வாயில் மைக்கை திணிக்கும் மீடியா கும்பல் ஒன்றையும் காணோம். இறுதியாக தினத்தந்தி நிருபர் மட்டும் வந்து படம் எடுத்து சென்றார்.

ஆர்ப்பாட்டம் தொடங்கியது.

K K நகர் காவல்துறையே,
துணை போகாதே! துணை போகாதே!
பொறுக்கிகளுக்கு துணை போகாதே!

தினமும் இரண்டு கற்பழிப்பு,
கடத்தல், கொலைகள், தாலியறுக்க
வேடிக்கை பார்க்கும் காவல்துறையே!

பட்டப் பகலில் பஸ்ஸிலே
இரண்டு பொறுக்கிகள் துணிச்சலாக
திட்டுறான், மிரட்டுறான்,
பெண்ணை அடிக்க பாயுறான்!
வார்த்தையால கொல்லுறான்
பாதிக்கப்பட்டவர் புகார்கொடுக்க
நேரில் பார்த்த சாட்சியிருக்க
காவல் துறையே தயக்கமென்ன?

பாலியல் குற்றத்துக்கு
ஆண்மை நீக்க தண்டனை என்று
ஜம்பமிடும் ஜெயலலிதாவே!
பாரு, பாரு, யோக்கியதை பாரு,
உன் காவல் துறையின் யோக்கியதை பாரு.

பெண்கள் விடுதலை முன்னணி – வாழ்க!
மக்கள் கலை இலக்கியக் கழகம் – வாழ்க!
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி – வாழ்க!
மனித உரிமை பாதுகாப்பு மையம் – வாழ்க!

என முழக்கம் எதிரொலிக்க துவங்கியதும், கியூ பிரிவு போலீசு வெளியே வந்தார். “இந்தாம்மா ஏன் சத்தம் போடுறீங்க, FIR போட்டுக்கிட்டு இருக்கோம். சும்மா அமைதியா இருங்க” என்றார்.

பிறகு நமது மனித உரிமை பாதுகாப்பு மையம்  வழக்கறிஞர், மக்கள் கலை இலக்கிய கழகம் செயலாளர், பெண்கள் விடுதலை முன்னணி முன்னணியாளர்களை அழைத்து 294(B),506(1),352,354,பெண்களை தொல்லையில் இருந்து காக்கும் சட்டம் பிரிவு-4 ஆகிய செக்சன்களில் வழக்கு பதிவு செய்ததாக கூறி நகலை நம்மிடம் ஒப்படைத்தனர்.

இதற்கு முன் இரண்டு எப்.ஐ.ஆர் எழுதப்பட்டது. அது என்ன ஆனது கிழித்தெறியப்பட்டதா? அல்லது வேறு நபர்கள் மாட்டினால் அவர்களை வைத்து வழக்கு ஜோடிக்கப்படுமா? என நமக்கு தெரியவில்லை.

காலை 11 மணிக்கு நடந்த சம்பவம் இரவு 11 மணிக்கு முடிவிற்கு வந்தது. இது தான் நம்ம ஜனநாயகமும் சட்டமும் பெண்களுக்கு கொடுக்கும் பாதுகாப்பின் லட்சணம்.

ஆதிக்க சாதிவெறிக் கும்பலின் அவதூறுகள் !

22
சாதி மக்கள்
புதுக்கோட்டை மாவட்டம் வண்ணாரப்பட்டியில் தப்படிக்க மறுத்ததற்காகத் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பு தாக்கப்பட்டது குறித்து நடந்த விசாரணை (இடது); இருகூர் பஞ்சாயத்தைச் சேர்ந்த ஆதப்பகவுண்டன் புதூரில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பொது சுடுகாட்டில் புதைக்கும் உரிமை மறுக்கப்படுவதால், தனிச்சுடுகாடு கேட்டு, அம்மக்கள் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கீழ் அணிதிரண்டு நடத்திய போராட்டம்
சாதிக் கூட்டம்
ராமதாசு தலைமையில் அணிதிரண்டுள்ள ஆதிக்க சாதி வெறியர்களின் அனைத்து சமுதாய பாதுகாப்பு பேரவை சென்னையில் நடத்திய கூட்டம்.

ன்றளவும் தமிழக கிராமங்கள் ஊரும் சேரியுமாகப் பிரிந்து கிடக்கும் நிலையில், இரட்டைக் குவளை முறையும் தனிச்சுடுகாடும் இருந்துவரும் நிலையில், கிராமப் பொதுக் கோவில்களில் தாழ்த்தப்பட்டோர் சென்று வழிபடுவதற்கு ஆதிக்க சாதியினர் தடைபோட்டு வரும் நிலையில், தாழ்த்தப்பட்டோர் ஊருக்குள் செருப்புப் போட்டுக் கொண்டு நடந்தால், ஊர் திருவிழாக்களுக்குத் தப்படிக்க மறுத்தால் தண்டிக்கப்படும் நிலையில் தமிழகத்தில் தீண்டாமை ஒழிந்துவிட்டதாகவும், வன்கொடுமைச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும் ராமதாசு கும்பல் நாக்கில் நரம்பில்லாமல் பேசி வருகிறது. இது மட்டுமின்றி, ராமதாசும், அவரது புதிய கூட்டாளிகளும் அனைத்து சமுதாயப் பாதுகாப்பு பேரவை என்ற பெயரில் ஊர்ஊராய்ப் போய்க் கூட்டம் போட்டுத் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராகப் போர்ப் பிரகடனம் செய்து வருகிறார்கள்.

கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி கோவையில் நடந்த அனைத்துச் சமுதாயப் பாதுகாப்பு பேரவைக் கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு ரெட்டியார் சங்கத்தைச் சேர்ந்த காமராஜ், “நம்பியூரில் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்துவதாக அறிவித்து, போலீஸ் பாதுகாப்புடன் அணிவகுத்து வந்தனர். ஒரு லோடு செங்கல் எடுத்துத் தாக்கினோம். அதோடு வாலைச் சுருட்டிக் கொண்டனர். இனி யாரும் வாலாட்ட அனுமதிக்கக் கூடாது” என வெளிப்படையாகவே ஆலயத் தீண்டாமைக்கு வக்காலத்து வாங்கியிருக்கிறார்.

அக்கூட்டத்திற்குத் தலைமையேற்றிருந்த பா.ம.க. ராமதாசோ இன்னும் ஒருபடி மேலே போய், “பி.சி.ஆர். சட்டத்தில் புகார் அளிக்கவும், வழக்குத் தொடரவும் இனி ஒருவனுக்கும் தைரியம் வரக்கூடாது. குழந்தைகளிடம் சாதியைப் பற்றிச் சொல்லுங்கள். குறிப்பாக, பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் பெண் குழந்தைகளிடம் சாதியைப் பற்றித் தெளிவாகச் சொல்லுங்கள்” எனப் பேசி ஆதிக்க சாதித் திமிருக்கும் வன்கொடுமைக்கும் கொம்பு சீவிவிட்டிருக்கிறார்.

இப்பேரவை நடத்திவரும் கூட்டங்களில் போடப்படும் தீர்மானங்களோ ஒருபுறம் பொய்-அவதூறுகளையும் மற்றொருபுறம் வெறுப்பையும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக உமிழ்கின்றன.

‘‘தமிழகத்தில் தீண்டாமை முற்றிலுமாக ஒழிந்துவிட்டது. ஆனாலும், தாழ்த்தப்பட்டோர் மற்ற சமுதாயத்தினர் மீது வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் பொய்ப் புகார்களைக் கொடுத்து வருகின்றனர். அதனால், இச்சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் புகார்களைப் பரிசீலித்து முடிவுசெய்ய மாவட்ட நீதிபதி தலைமையின் கீழ் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்க வேண்டும்; இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோருக்கு உடனடியாகப் பிணை கிடைக்கவும்; பொய்ப் புகார் அளிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு ஏற்றவாறும் இச்சட்டத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டும்.”

‘‘வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் பொய்ப் புகார்களுக்கு அடுத்து, காதல் என்ற பெயரில் நடக்கும் நாடகத் திருமணங்களால்தான் தமிழகத்தில் சமூக நல்லிணக்கமும் அமைதியும் கெட்டு வருகிறது. இந்நாடகத் திருமணங்கள் பணம் பறிக்கும் நோக்கத்தோடு நடந்து வருவதோடு, இதனைச் சில தலித் தலைவர்கள் தூண்டிவிட்டு வருகிறார்கள். எனவே, இந்நாடகத் திருமணங்களைத் தடுக்கும் விதத்தில், பெண்ணின் திருமண வயதை 21 ஆகவும், ஆணின் திருமண வயதை 23 ஆகவும் உயர்த்த வேண்டும்; இந்த வயதிற்கு முன்பு திருமணம் நடத்த வேண்டுமென்றால், அத்திருமணங்களுக்கு மணமக்களின் பெற்றோர்களின் சம்மதத்தைக் கட்டாயமாக்க வேண்டும். மேலும், கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகமெங்கும் நடந்துள்ள நாடகத் திருமணங்கள் பற்றி ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையின் கீழ் விசாரணை நடத்த வேண்டும்.”

‘‘10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் தனித்தொகுதிகள் மாற்றப்பட வேண்டும்” என ராமதாசு தலைமையில் திரண்டுள்ள ஆதிக்க சாதிவெறியர்கள் கோருகிறார்கள்.

*********

சாதி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
அனைத்து சமுதாய பாதுகாப்பு பேரவை சென்னையில் நடத்திய கூட்டத்தைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள், திராவிட விடுதலை இயக்கம் மற்றும் தமிழ்நாடு மக்கள் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தை தடியடி நடத்திக் கலைக்கும் போலீசு

தீண்டாமையை வெளிப்படையாக ஆதரித்துப் பேசி வரும் இந்தப் பிற்போக்குக் கும்பலை வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் கைது செய்திருக்க வேண்டும். அனைத்து சமுதாயப் பாதுகாப்பு பேரவையைத் தடை செய்திருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் நடந்து விடவில்லை. இதிலிருந்தே வன்கொடுமைச் சட்டம் எந்த இலட்சணத்தில் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதையும், அந்தச் சட்டம் எவ்வளவு மொன்னையானது என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

வன்கொடுமைச் சட்டம் மற்றும் குடியுரிமைப் பாதுகாப்புச் சட்டம் (பி.சி.ஆர்.) ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்படும் சதவீதம் மிகவும் குறைவாக இருப்பதைக் காட்டியே இச்சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக வாதிடுகிறது, ராமதாசு கும்பல். மேலவளவு முருகேசன் கொலை வழக்கிலும், திண்ணியத்தில் தாழ்த்தப்பட்டோரின் வாயில் மலத்தைத் திணித்த வழக்கிலும்கூட ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த குற்றவாளிகள் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படாமல், சாதாரண கிரிமினல் சட்டங்களின் கீழ்தான் தண்டிக்கப்பட்டனர். இவ்வழக்குகள் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வராது என்றுதான் நீதிமன்றங்கள் தீர்ப்பளித்தன. இந்தத் தீர்ப்புகளைக் காட்டி இவ்வழக்குகளில் வன்கொடுமைச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதாக வாதிடுவது எத்துணை மோசடியானதோ, உண்மைக்குப் புறம்பானதோ, அதைப் போன்றதுதான் ராமதாசின் வாதமாகும்.

சாதாரண மக்கள் தரும் எந்தவொரு புகாரையும் இழுத்தடிக்காமல் போலீசுக்காரர்கள் பதிவு செய்து விடுவதில்லை என்பது ஊரறிந்த உண்மை. அதிலும் கிராமப்புறங்களைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டோர் போலீசு நிலையங்களில் நடத்தப்படுவது பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. அவர்கள் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் புகார் அளிக்கச் சென்றாலோ, அப்புகாரை போலீசு தனது சாதிப் பற்று மற்றும் ஆதிக்க சக்திகளோடு அதற்குள்ள உறவு ஆகியவற்றின் காரணமாக நிராகரித்துவிடுவதில்தான் அக்கறை காட்டுகிறது. போலீசின் இந்த அலட்சியத்தையும் தாண்டி வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் புகாரைப் பதிவு செய்ய வேண்டுமென்றால், அதற்கு வெளியிலிருந்து ஓர் அமைப்பின் உதவியைத் தாழ்த்தப்பட்டோர் நாடுவது அவசியமாகிறது. தாழ்த்தப்பட்டோருக்கு ஆதரவாக வரும் இயக்கங்களை, குறிப்பாகத் தாழ்த்தப்பட்டோர் அமைப்புகளைக் கட்டப் பஞ்சாயத்து செய்வதாக ஆதிக்க சாதிகள் பழி போடுகின்றன.

இச்சட்டத்தின் கீழ் தாழ்த்தப்பட்டோர் கொடுக்கும் புகார்கள் போலீசு நிலையத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், அதனைச் சாதாரண கீழ் நிலையில் உள்ள போலீசு அதிகாரிகள் விசாரிக்க முடியாது. போலீசு துணைக் கண்காணிப்பாளர் நிலையில் உள்ள அதிகாரிகள் மட்டுமே விசாரித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்ய முடியும். அந்த அதிகாரி இது பொய்ப்புகார் என அறிக்கை அளித்தால், நீதிமன்றம் உடனடியாகவே அப்புகாரைத் தள்ளுபடி செய்துவிடும். இது, ஆதிக்க சாதியினர் எவ்விதத்திலும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகச் சட்டபூர்வமாகவே செய்யப்பட்டுள்ள ஏற்பாடாகும்.

தேசியக் குற்றவியல் ஆவணத் துறை வெளியிட்டுள்ள ஒரு புள்ளிவிவரத்தின்படி, 2007 முதல் 2010-ஆம் ஆண்டு முடிய இந்தியாவெங்கும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக நடந்துள்ள வன்முறைக் குற்றங்களில் 67 சதவீதமும், பழங்குடியின மக்களுக்கு எதிராக நடந்த வன்கொடுமைத் தாக்குதல்களில் 81 சதவீதமும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படவில்லை என்பது அம்பலமாகியிருக்கிறது. உண்மைப் புகாரைப் பதிவு செய்வதே குதிரைக் கொம்பாக இருக்கும்பொழுது, பொய்ப் புகாரை போலீசு பதிவு செய்கிறது என்றால், போலீசு யாருடைய ஆதாயத்துக்காகவோ தாழ்த்தப்பட்டோரைப் பகடைக்காயாகப் பயன்படுத்தியிருக்கிறது என்றுதான் புரிந்துகொள்ள முடியும்.

சாதி பலியானவர்கள்
வன்னிய சாதிப்பெண்ணைக் காதலித்த ஒரே காரணத்திற்காக கொல்லப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த கோபால கிருஷ்ணன் (இடது); வேறு சாதியைச் சேர்ந்த தனது வகுப்புத் தோழனை காதலித்த விவகாரம் வீட்டிற்குத் தெரிய வந்ததையடுத்து, ‘மர்மமான’ முறையில் தீயில் கருகி இறந்து போன கவுண்டர் சாதியைச் சேர்ந்த நந்தினி.

ஏழு கடல் – ஏழு மலைகளைத் தாண்டிப் பதிவு செய்யப்படும் வழக்குகளிலும்கூட நீதி கிடைத்துவிடுவதில்லை. வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் 2010-ஆம் ஆண்டு முடிய, கடந்த 21 ஆண்டுகளில் நாடெங்கும் பதிவு செய்யப்பட்ட மொத்த வழக்குகளில் (1,26,593), நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 1,00,098. தீர்ப்பு அளிக்கப்பட்ட 25,573 வழக்குகளில் 8,628 வழக்குகளில் மட்டும்தான் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், 2010-ஆம் ஆண்டு முடிய வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் மொத்த எண்ணிக்கை 3,635. இதில் 30 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன; 2,839 வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. தீர்ப்பு அளிக்கப்பட்ட 766 வழக்குகளில் 189 வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர்; 577 வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். (ஆதாரம்: மைய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரத்துக்கான அமைச்சகம் வன்கொடுமைச் சட்டம் பற்றி வெளியிட்டுள்ள அறிக்கை.)

‘‘இந்தியாவெங்கும் ஒவ்வொரு மணி நேரத்திலும் இரண்டு தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுகின்றனர்; ஒவ்வொரு நாளும் மூன்று தாழ்த்தப்பட்ட பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாகின்றனர்; இரண்டு தாழ்த்தப்பட்டோர் கொல்லப்படுகின்றனர்; இரண்டு தாழ்த்தப்பட்டோரின் வீடுகள் எரிக்கப்படுகின்றன” என்ற புள்ளிவிவரத்தோடு, கடந்த இருபது ஆண்டுகளில் இத்தகைய தீண்டாமைக் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டுள்ள ஆதிக்க சாதிவெறியர்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டுப் பார்த்தாலே, இச்சட்டம் தாழ்த்தப்பட்டோருக்கு எவ்விதப் பாதுகாப்பையும் நீதியையும் வழங்கிவிடவில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இன்றளவும் கிராமப்புறங்களில் தாழ்த்தப்பட்டோருக்குத் தனிக்குடியிருப்பு, தனிக்குழாய், தனிக்கிணறு, தனிச்சுடுகாடு போன்றவை இருப்பதை இச்சட்டம் குற்றமாகப் பார்க்கவில்லை. தீண்டாமையின் இந்த வடிவங்களை அரசும் சட்டமும்கூட ஏதோ சம்பிரதாயமான நடைமுறையாக, காலப்போக்கில்தான் இவற்றை மாற்ற முடியும் என்பது போலவே கருதுகின்றன. இப்படிபட்ட நிலையில் இன்று தீண்டாமையோ புதுப்புது வடிவங்களை எடுத்து வருகிறது. எடுத்துக்காட்டாகச் சோன்னால், தாழ்த்தப்பட்டோர் கோவில் நுழைவுப் போராட்டங்களை நடத்தினால், ஆதிக்க சாதியினரோ தங்களுக்கென தனிக் கோவிலைக் கட்டிக்கொண்டு, அதில் தாழ்த்தப்பட்டோர் நுழைய அனுமதியில்லை என வக்கிரமாக வாதிடுகின்றனர். முன்பு தாழ்த்தப்பட்டோர் செருப்பு அணியத் தடை விதித்த ஆதிக்க சாதியினர், இந்த நவீன காலத்திற்கு ஏற்ப அவர்கள் இரு சக்கர வாகனங்களை ஓட்டத் தடை விதிக்கின்றனர். இந்திய அரசின் வங்கிகள் பல்வேறு காரணங்களைச் சொல்லி தாழ்த்தப்பட்டோருக்குக் கடன் தர மறுத்துத் தீண்டாமையைக் கடைப்பிடிப்பதாக ப.சிதம்பரம் புலம்பியிருக்கிறார்.

இது மட்டுமின்றி, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் மீது போலீசும் அரசு துருப்புகளும் நடத்தும் தாக்குதல்கள் – பரமக்குடி துப்பாக்கிச் சூடு, கொடியன்குளம் தாக்குதல், தாமிரபரணி படுகொலை, சத்தீஸ்கர், ஜார்கண்ட் மாநிலங்களில் பழங்குடியின மக்கள் எல்லைப் பாதுகாப்புப் படையால் படுகொலை செய்யப்படுவது போன்றவை இச்சட்டத்தின் கீழ் மட்டுமல்ல, கிரிமினல் சட்டத்தின் கீழும் வழக்காகப் பதிவு செய்யப்படுவதில்லை. இப்படிப்பட்ட நிலையில் ஆதிக்க சாதிவெறியர்களுக்குச் சாதகமாக இச்சட்டத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டுமெனக் கோருவது, தாழ்த்தப்பட்டவர்களுக்கு இச்சட்டம் வழங்கியிருக்கும் பெயரளவிலான பாதுகாப்பையும் பறித்தெடுப்பது தவிர வேறல்ல. இப்படியொரு கோரிக்கையை முன்வைத்துவிட்டு, “நான் இச்சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டுமெனக் கோரவில்லை” என எகத்தாளமாகப் பகடி செய்கிறார், ராமதாசு.

***********

சாதி புள்ளிவிபரங்கள்சாதி மாறித் திருமணங்கள் செய்வதை அனுமதிக்கவே கூடாது என சாதித் தூமைவாதம் பேசி வரும் கொங்கு வேளாளர் பேரவையைச் சேர்ந்த பொங்கலூர் மணிகண்டன், “கடந்த ஓர் ஆண்டில் மட்டும் காதல் திருமணங்களால் 963 பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 716 பேர் வாழாவெட்டியாக உள்ளனர். ஏழு ஆண்டுகளில் 300 கோடி ரூபா பணத்தைத் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நமது சமூகத்தினரிடம் இருந்து கறந்துள்ளனர்” என்றொரு புள்ளிவிவரக் குண்டைத் தூக்கிப் போட்டு வருகிறார் (ஜூ.வி.,30.12.12, பக்.28) அனைத்து சமுதாயப் பாதுகாப்பு பேரவை சென்னையில் நடத்திய தனது கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தில், “நாமக்கல் மாவட்டத்தில் நடந்த 955 காதல் திருமணங்களில் 712 தோல்வியில் முடிந்துவிட்டதாக’’க் கூறுகிறது. ராமதாசு-காடுவெட்டி குரு கும்பல், நாடகக் காதல் திருமணங்களால் 2,000 வன்னியப் பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கும் பட்டியல் தங்களிடம் உள்ளதாகக் கூறித் திரிகின்றனர்.

இதற்கு எல்லாம் ஆதாரம் இருக்கிறதா, போலீசில் வழக்குப் பதிவாகியிருக்கிறதா எனக் கேட்டால், இதெல்லாம் பெண் வீட்டாரின் மானப் பிரச்சினை, எங்களுக்கு மட்டும்தான் தெரியும் எனப் பதில் அளித்து, செண்டிமென்டுக்குள் ஒளிந்து கொள்கிறார்கள். கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகமெங்கும் நடந்துள்ள நாடகக் காதல் திருமணங்கள் பற்றி விசாரணை நடத்த வேண்டுமெனக் கோரும் ராமதாசு, அந்த விசாரணைக்கு இணையாக, ஆதிக்க சாதிவெறிக் கும்பல் தங்கள் சாதிப் பெருமையைக் கட்டிக் காப்பதற்காக நடத்தியிருக்கும் கௌரவக் கொலைகள் பற்றிய விசாரணை நடத்தக் கோருவாரா?

அப்படியொரு விசாரணை நியாயமாக நடந்தால், மேல்சாதிப் பெண்களைக் காதலிப்பதாக நாடகமாடி ஏமாற்றியதாகக் கூறப்படும் தாழ்த்தப்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கையைவிட, ஆதிக்க சாதியினரின் அச்சுறுத்தலையும் மீறி, அச்சாதிப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டதால் கொல்லப்பட்ட தாழ்த்தப்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்; தாழ்த்தப்பட்ட இளைஞர்களால் ஏமாற்றப்பட்டதாகக் கூறப்படும் மேல்சாதிப் பெண்களின் எண்ணிக்கையைவிட, தனது குடும்பத்தை எதிர்த்து தாழ்த்தப்பட்ட இளைஞரைத் திருமணம் செய்து கொண்டதால், தனது பெற்றோர்களால், உறவினர்களால், சாதிவெறியர்களால் கொல்லப்பட்ட மேல்சாதிப் பெண்களின் எண்ணிக்கை அதிகமிருக்கும் என்ற உண்மைகள் அம்பலத்துக்கு வரும்.

‘‘வன்னியன் வீட்டுப் பெண்களை வன்னியன்தான் காப்பாற்ற வேண்டும். கொங்கு வேளாளார் வீட்டுப் பெண்களை கொங்கு வேளாளர்கள்தான் காப்பாற்ற வேண்டும். முதலியார் வீட்டுப் பெண்களை முதலியார்கள்தான் காப்பாற்ற வேண்டும்” என வன்னிய சாதிப் பெருமை பேசும் இணையதளமொன்று சூளுரைக்கிறது. ஆனால், வன்னிய சாதிப் பெண்களுக்கு வன்னியனாலும், கவுண்டர் சாதிப் பெண்களுக்கு கவுண்டனாலும்தான் ஆபத்து என்பதை இக்கௌரவக் கொலைகள் எடுத்துக் காட்டுகின்றன.

************

சாதி மக்கள்
புதுக்கோட்டை மாவட்டம் வண்ணாரப்பட்டியில் தப்படிக்க மறுத்ததற்காகத் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பு தாக்கப்பட்டது குறித்து நடந்த விசாரணை (இடது); இருகூர் பஞ்சாயத்தைச் சேர்ந்த ஆதப்பகவுண்டன் புதூரில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பொது சுடுகாட்டில் புதைக்கும் உரிமை மறுக்கப்படுவதால், தனிச்சுடுகாடு கேட்டு, அம்மக்கள் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கீழ் அணிதிரண்டு நடத்திய போராட்டம்

தருமபுரியில் வன்னிய சாதிவெறிக் கும்பல் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பு மீது நடத்திய தாக்குதலைத் தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பாலான ஓட்டுக்கட்சிகள் கண்டித்துள்ளன என்றாலும், தற்பொழுது ராமதாசு அனைத்து சமுதாயப் பாதுகாப்பு பேரவை என்ற போர்வையில் ஆதிக்க சாதிவெறிக்குத் தூபம் போட்டு வருவதையும், தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக அவதூறு பரப்பி வருவதையும் எத்தனை கட்சிகள் கண்டிக்கவும், அதற்கு எதிராகப் போராடவும் முன்வந்துள்ளன என்பதுதான் இப்பிரச்சினையில் கவனத்தைக் குவிக்க வேண்டிய விடயம்.

இந்த ஆதிக்க சாதிக் கும்பல் கட்டியிருக்கும் பேரவையைத் தடை செய்யாமல், தமிழகத்தின் மூன்றே மாவட்டங்களில் மட்டும் (மதுரை, இராமநாதபுரம், கடலூர்) ராமதாசு நுழைவதற்குத் தடை விதித்து நாடகமாடுகிறார், ஜெயா. இத்தடையை கருணாநிதி எதிர்த்தவுடன், கடலூர் மாவட்டத்தில் ராமதாசு நுழைவதற்கு விதிக்கப்பட்டத் தடை அ.தி.மு.க. அரசால் உடனடியாக நீக்கப்படுகிறது. இப்படியாக அவ்விரண்டு கட்சிகளுக்கு இடையே ஆதிக்க சாதியினரை அரவணைத்துக் கொள்வதில் ஒரு போட்டாபோட்டி நடந்து வருகிறது.

மற்ற திராவிடக் கட்சிகளும், தமிழின அமைப்புகளும் காரியத்தனமாக மௌனம் சாதிக்கின்றன. சி.பி.எம்., ராமதாசு மீது விதிக்கப்பட்ட தடையை ஆதரிப்பதாக அறிவித்ததோடு முடங்கிக் கொண்டது. காதலைக் கொண்டாடும் மாநாடு நடத்தியதைத் தாண்டி, ஆதிக்க சாதிவெறியர்களுக்கு எதிரான போராட்டங்களை நடத்தும் தெம்பு சி.பி.எம்-க்கு இருப்பதாகத் தெரியவில்லை. இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பிற தாழ்த்தப்பட்டோர் அமைப்புகளும் மற்றும் பெரியார் திராவிடர் கழகம், ம.க.இ.க., ஆகிய அமைப்புகளும்தான் ராமதாசு தலைமையில் அணிதிரண்டுள்ள ஆதிக்க சாதிவெறியர்களின் கூட்டம் நடைபெறும் இடங்களில், அதனை எதிர்த்துக் களத்தில் இறங்கிப் போராடி வருகின்றன.

தேசியக் கட்சியானாலும் சரி, திராவிடக் கட்சியானாலும் சரி, அக்கட்சிகள் அனைத்தும் பல காலமாகவே ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த பிரமுகர்களைத்தான் கட்சிப் பதவிகளில் அமர்த்தி அழகு பார்த்து வருகின்றன. இப்பிரமுகர்களில் பலர் நிலவுடமை ஆதிக்க சக்திகள் என்பது ஒருபுறமிருக்க, தற்பொழுது தனியார்மயத்தையும் தங்கள் பதவிகளையும் பயன்படுத்திக் கொண்டு, ரியல் எஸ்டேட், மணல் காண்டிராக்டு, கல்வி வியாபாரம் எனப் புதுவிதமான தரகு முதலாளிகளாகவும் வளர்ந்துவிட்டனர். ஓட்டுக்கட்சிகளில் அண்ணன்களாக, தளபதிகளாக வலம் வரும் இப்பிரமுகர்களுக்கு ஓட்டுப் பொறுக்குவதற்கும், தங்களது சுய இலாபத்திற்கும் சாதியும், சாதி அரசியலும் அவசியமாக உள்ளது. அதனாலேயே இந்தத் தளபதிகளும் சாதி சங்கங்களும் இயற்கையான கூட்டாளியாகப் பொது அரங்கில் நடமாடி வருகின்றனர். இந்தத் தளபதிகள்தான் ஓட்டுக்கட்சிகளின் பணப்பெட்டிகளாக, அடியாட்களைத் திரட்டிக் கொடுப்பவர்களாக, சுருக்கமாகச் சோன்னால் கட்சியின் தலையெழுத்தைத் தீர்மானிப்பவர்களாக இருப்பதால், எந்தவொரு ஓட்டுக்கட்சியும் தமிழகத்தில் தற்பொழுது தூண்டிவிடப்படும் ஆதிக்க சாதிவெறிக்கு எதிராக நிற்காது; நிற்கவும் முடியாது.

எனினும், ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் ராமதாசு கும்பலை ஆதரித்து நிற்கவில்லை. வன்னிய சாதி மக்கள் கணிசமாக வாழும் கடலூர் மாவட்டத்தில் ராமதாசு நுழைவதற்கு விதித்த தடையை எதிர்த்து, அம்மாவட்டம் கொதித்துப் போவிடவில்லை என்பதே இதற்கு சாட்சி. இது, பல்வேறு சாதிகளைச் சேர்ந்த உழைக்கும் மக்களிடையே சாதி கடந்த ஒற்றுமையை நிலைநாட்டுவதற்கும், அவர்கள் மத்தியில் சாதிகளைப் புறக்கணிக்கக்கூடிய ஜனநாயகப் போராட்டங்களைக் கட்டமைப்பதற்குமான வாய்ப்புகள் அருகிப் போய்விடவில்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது.

– குப்பன்

சரணாகதிதான் திருமாவின் எதிர்வினையா?

வீராணம் ஏரி நீரை விவசாயத்துக்குத் திறந்துவிடக் கோரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடந்த ஜனவரி மாதம் சிதம்பரம் நகரில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், “இதுவரை நடந்ததை நாங்கள் மன்னித்துவிட்டோம்; மறந்துவிட்டோம். வீராணம் ஏரியிலிருந்து தண்ணீரைத் திறக்கும் பிரச்சினைக்காக பா.ம.க. போராட முன்வந்தால், அவர்களுடன் இணைந்து விடுதைச் சிறுத்தைகள் கட்சியும் போராடும்” எனப் பேசியிருக்கிறார், தொல்.திருமாவளவன்.எதை மறப்பது? யார், யாரை மன்னிப்பது? விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கட்டப் பஞ்சாயத்து செய்வதாக ராமதாசு குற்றஞ்சுமத்தி வருவதை மன்னிப்பது, மறப்பது என்றால், அதற்கு திருமாவிற்கு முழு உரிமையும் சுதந்திரமும் உண்டு.

ஆனால், தருமபுரி தாக்குதலை மன்னிப்பது என்றால், அந்த உரிமையை திருமாவிற்குக் கொடுத்தது யார்? தருமபுரியில் நடந்த தாக்குதல் அவ்வளவு சீக்கிரத்தில் மறக்கக்கூடியதா? மன்னிக்கக் கூடியதா?

தருமபுரியில் தமது கட்சியினரும் சாதியினரும் நடத்திய தாக்குதலுக்கு வருத்தம்கூடத் தெரிவிக்காமல், ஊர்ஊராகக் கூட்டம் போட்டுத் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக அவதூறுகளைப் பரப்பிச் சாதிவெறியைத் தூண்டி வரும் ராமதாசை மன்னிப்பது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கும் அநீதியாகாதா, துரோகமாகாதா? ராமதாசு கூட்டம் போடும் இடங்களில் எல்லாம் ஆர்ப்பாட்டம் நடத்தும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அணிகள் இதனை ஏற்றுக் கொள்கிறார்களா?

“தருமபுரி தாக்குதலையொட்டி பெரியாரிய, மார்க்சிய, தமிழ்த் தேசிய சக்திகளும் மனித உரிமை ஆர்வலர்களும் இன்ன பிற ஜனநாயக சக்திகளும் ஆற்றவிருக்கும் எதிர்வினையென்ன?” என்று மற்றவர்களையெல்லாம் கூண்டிலேற்றிக் கேள்வி எழுப்பினார் திருமா. அவருடைய எதிர்வினை “மறப்போம், மன்னிப்போம்” என்று தெளிவு படுத்திவிட்டார்.

திருமாவின் இந்தக் கூற்றுக்கு தாழ்த்தப்பட்ட மக்களின் எதிர்வினை என்ன?

______________________________________________________________________________
– புதிய ஜனநாயகம், பிப்ரவரி – 2013
________________________________________________________________________________

மரத்துப் போனதா சமூகத்தின் மனசாட்சி ?

6

அதிகரித்து வரும் பாலியல் குற்றங்கள்:  மரத்துப் போனதா சமூகத்தின் மனசாட்சி?

  • தேசிய குற்றப்பதிவுத் துறையின் புள்ளிவிவரப்படி, கடந்த 2011ம் ஆண்டில் நாடு தழுவிய அளவில் பெண்களுக்கு எதிராக 2,28,650 குற்றங்கள் பதிவாகியுள்ளன. இதில் பாலியல் வல்லுறவுக் கொடூரங்கள் மட்டும் 24,260.
  • 1971-ஆம் ஆண்டை ஒப்பிடும் போது, 2011 வரையிலான நாற்பதாண்டுகளில் பதிவு செய்யப்பட்ட பாலியல் வல்லுறவுக் குற்றங்கள் 873 சதவீதம் அதிகரித்துள்ளன. பாலியல் வல்லுறவுக்கு ஆளான மொத்தப் பெண்களில் 10.6 சதவீதத்தினர் 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளாவர்.
  • இந்தியாவின் 53 பெருநகரங்களை ஒப்பிடும் போது தலைநகரான டெல்லியில்தான் பெண்களுக்கு எதிராக அதிக அளவு குற்றங்கள் நடக்கின்றன.
  • ஆப்கான், பாகிஸ்தான், காங்கோ போன்ற போர் நடக்கும் நாடுகளை விட, இந்தியாவில்தான் பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர் என்றும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழலும் நிலவும் மிக மோசமான நாடுகளில் உலகில் 4-வது இடத்தில் இந்தியா இருப்பதாகவும் தாம்சன்-ராய்டர் செய்தி நிறுவனத்தின் ஆய்வு குறிப்பிடுகிறது.
  • தமிழகத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டில் 584 பாலியல் வல்லுறவுக் கொடூரங்கள், 721 பாலியல் சீண்டல்கள், 1379 கடத்தல்கள், 656 பாலியல் தொல்லைப்படுத்தல் வழக்குகளைப் போலீசு பதிவு செய்துள்ளது.
  • தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களாகப் பதிவு செய்யப்பட்ட 5,861 வழக்குகள் இன்னமும் குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்யப்படாமல் உள்ளன. இவற்றில் 834 பாலியல் வல்லுறவுக் குற்றங்களாகும்.
  • தமிழகத்தின் பல்வேறு நீதிமன்றங்களில் 1,751 பாலியல் வல்லுறவுக் குற்ற வழக்குகள் உள்ளிட்டு பெண்களுக்கு எதிரான 14,545 குற்ற வழக்குகள் இன்னமும் விசாரிக்கப்படாமல் பல ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கின்றன.
  • இந்தியாவில் ஒவ்வொரு 22 நிமிடத்திலும் ஒரு பெண் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்படுகிறார். ஒவ்வொரு 7-வது நிமிடத்திலும் பெண்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. ஒவ்வொரு 43 நிமிடத்திற்கும் ஒரு பெண் கடத்தப்படுகிறார். ஒவ்வொரு 42 நிமிடத்துக்கும் ஒரு வரதட்சிணை சாவு நடக்கிறது. பெண்கள் மீதான வன்முறை குற்றங்களாக பதிவாகியுள்ள 93,000 வழக்குகள் இன்னமும் விசாரணைக்கே வரவில்லை.

_____________________________________________________________________________
– புதிய ஜனநாயகம், பிப்ரவரி – 2013
________________________________________________________________________________

காதலர் தினம் சிறப்புப் பரிசு : விநோதினியின் மரணம் !

17
வினோதினி
விநோதினி
அமில  வீச்சினால் உயிரிழந்த விநோதினி

காதலர் தினத்திற்க்காக ரோஜாப்பூ முதல் பரிசுப் பொருள் அங்காடி வரை காதலை பரிமாறிக் கொள்வதற்காக எண்ணிறந்த பொருட்கள் கடைவீதியினை நிரப்பியிருக்கின்றன. ஒற்றைத் தண்டுடன் கண்ணைப் பறிக்கும் சிவப்பு நிறத்துடன் வரும் பெங்களூர் ரோஜாதான் காதலர்களின் ஏகோபித்த வரவேற்பாம். அமில வீச்சால் கண்ணை இழந்த விநோதினியை பெண் என்பதற்காக ஒரு மலருடன் ஒப்பிட்டு கவிஞர்கள் யாரேனும் கவிதைகள் எழுதியிருப்பார்களா தெரியவில்லை! எனினும் அந்த மலர் நேற்றோடு கருகிப் போனது.

அடித்தோ, விரட்டியோ, துன்புறுத்தியோ அடக்கியாள வேண்டியவள்தான் ஒரு பெண் என்பதை எண்ணிறந்த கதைகளின் மூலம் சொல்லிக் கொடுக்கும் திரைப்படங்கள் ஒருபுறம். அந்த திரைப்படங்களை வைத்தும், அந்தக் கதைகளின் மூலமாகவும் சமூகப் பிரச்சினைகளை செய்திகளாக்கித் தரும் பத்திரிகைள் அனைத்தும் ஒரே மாதிரியான சோகத்தில் விநோதினியின் மரணத்தை அறிவிக்கின்றன, கண்டிக்கவும் செய்கின்றன. சஹானா எனும் கேரளப் பெண்ணை ஊடகத் திமிரால் வன்புணர்ச்சி செய்த தினமலரும் கூட வெட்கமில்லாமல் விநோதினிக்காக வருந்துகிறது. அதை உண்மையென நம்பும் அப்பாவிகளும் வாசகர்களாக இருக்கத்தான் செய்கிறார்கள்.

டெல்லி மாணவியின் மரணத்திற்கு பிறகு, வர்மா கமிஷன் பரிந்துரைகள் மற்றும் மத்திய அரசின் அவசரச்சட்டத்திற்கு பிறகு அமிலத்தை வீசிய சுரேஷை தூக்கிலிட வேண்டும் என்ற கோரிக்கை எண்ணிறந்த முறையில் கோரப்படுகின்றது. விநோதியினை அழித்த சுரேஷை தண்டிப்பது கடினமல்ல. ஆனால் சுரேஷ் எனும் ஆணாதிக்க பன்றியினை வடிவமைத்த ஊடகக் குற்றவாளிகள் இங்கே நீதிபதிகளாக தீர்ப்பளிக்கும் கொடுமையினை என்ன செய்ய?

காதலர் தினக் கொண்டாட்டங்கள் ஆண்டு தோறும் அதிகரித்து வரும் நாட்டில்தான் விநோதினி எனும் 23 வயது பெண் ‘காதலின்’ பெயரால் கொல்லப்பட்டிருக்கிறாள், அதுவும் கொடூரமான சித்திரவதைக்குப் பிறகு. பரிசுகள், வாழ்த்துக்கள், சந்திப்புகள் என்பதாக காதலை நுகர்வு கலாச்சார விற்பனைக்குரிய சரக்காக மாற்றி விட்டு அதன் விளம்பரங்களில் கல்லா கட்டும் ஊடகங்கள் இங்கே காதல் என்ற பெயரில் கற்றுத் தருவது என்ன? பெண்ணடிமைத்தனத்தை போற்றும் விதமாக அழகு, உடைகள், அணிகலன்கள், பரிசுகள், வார்த்தைகள் எதற்கும் குறைவில்லை. காதலை எப்படி கவர்ச்சியாக தெரிவிப்பது, பரிமாறிக் கொள்வது என்பதை நீயா நானா அலசுகிறது.

ஆனால் சாதி, மத, ஆணாதிக்க அடக்குமுறைகளுக்குள் சிக்கியிருக்கும் காதலை எப்படி வெற்றி பெறவைப்பது என்பதை ஊடகங்களோ இல்லை திரையுலகமோ பேசத் துணியாது. கலப்புத் திருமணம் குறித்து விவாதம் நடத்தும் விஜய் டி.வி, எந்த சாதியையும் குறிப்பிட்டு பேச மறுக்கிறது. யாராவது தப்பித் தவறி சாதியைக் கூறினால் மியூட் செய்து மறைக்கிறது. ஆனால் இந்த நிகழ்ச்சியின் விருந்தினர் கொங்கு வேளாள முன்னேற்றக் கழகத்தின் ஈசுவரன்.

கொலவெறி பாட்டின் உள்ளடக்கமோ, இல்லை அந்த பாடலை பாடி பிரபலமடைந்த தனுஷோ, அவரது  போட்டியாளரான சிம்புவோ அனைவரும் தத்தமது கதைகளில் பெண்களை காதல் என்ற பெயரில் மானை வேட்டையாடும் ஓநாய்கள் போலத்தான் வருகின்றனர். அப்படித்தான் அவர்களுக்கு ரசிகர்கள் ஆதரவு. ஆனால் சுரேஷ் மட்டும்தான் குற்றவாளி என்றால் என்ன செய்வது?

விநோதினியின் மரணத்திற்கு ‘அய்யா’ ராமதாசும் வருத்தம் தெரிவித்திருக்கிறார். காதலர்களை வெட்டுவேன் என்று சபதம் புரிந்திருக்கும் காடுவெட்டி குருவும் கூட கண்டித்திருக்கக் கூடும். ஒரு ஆணும் பெண்ணும் சாதி மாறி காதலித்தால் அதுவும் தாழ்த்தப்பட்ட சாதியில் இருந்து கொண்டு ஒரு ஆண் பிற்படுத்தப்பட்ட சாதிப் பெண்ணை காதலித்தால் அய்யாவின் அடிப்பொடிகள் வெட்டுவார்கள். மாறாக அந்தக் காதலை குறிப்பிட்ட பெண் மறுத்தால் சுரேஷ் போன்ற ஆண்கள் கொலை செய்வார்கள். கவனியுங்கள் இங்கே காதலை ஏற்றுக் கொள்வதற்கும் மறுப்பதற்கும் ஒரு பெண்ணுக்கு உரிமையில்லை. அந்த உரிமையினை அமிலத்தாலும், அரிவாளாலும் மறுக்கும் சுரேசுக்கும் ராமதாசுக்கும் என்ன வேறுபாடு?

காதலர் தினக் கொண்டாட்டங்களை கடுமையாக எதிர்ப்பதில் சங்க பரிவாரங்கள் மட்டுமல்ல தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் போன்ற இசுலாமிய மதவாதிகளும் போட்டி போடுகின்றனர். ஆபாசம், வெளிநாட்டுக் கலாச்சாரம், என்று தமது ‘நியாயத்தை’ பேசுவதில் இருவரும் ஒன்றுபடுகின்றனர். அமெரிக்காவைக் காதலிக்கும் சவுதியையும், பாரத மாதாவை அமெரிக்காகாரனுக்கு நேர்ந்து விட்டதையும் ஆதரிக்கக் கூடிய இந்த மதவாதிகள்தான் சாமானியர்களின் காதலை சகித்துக் கொள்ள முடியாது என்கின்றனர். காதல் எனும் குறைந்த பட்ச ஜனநாயக உரிமைகூட தமது மதங்களில் கிடையாது என்று ஆணையிடும் இவர்கள்தான் இந்து மற்றும் முசுலீம் மக்களின் பிரதிநிதிகள் என்றால் நமது மக்கள் எத்தனை பரிதாபத்திற்குரியவர்கள்?

ஐ.டி துறையில் வேலை பார்க்கும் ஒரு தோழரின் நண்பர் தேவர் சாதியைச் சார்ந்தவர். முதலியார் சாதியைச் சார்ந்த பெண்ணை காதலிக்கிறார். இருவரும் பசையான சம்பளம் வாங்குபவர்கள். ஐந்தாண்டு காதலுக்கு பிறகும் பெண் தரப்பில் ‘மேல்’ சாதி என்பதால் குடும்பத்தினர் மறுக்கிறார்கள். அந்த மறுப்பைத் தாண்டி போராடி வாழ்வதற்கு பெண் தயாராக இல்லை. அந்த இல்லையை இன்னும் பல்வேறு வியாக்கியானங்களைக் கூறி நியாயப்படுத்தி விட்டு அந்த ஆண் சொந்த சாதியில் வீட்டார் பார்த்த பெண்ணை மணந்து கொள்கிறார். எனில் இந்தக் கதையில் ‘காதல்’ என்பது என்ன என்று கேட்டால் நமது தோழரிடம் பதில் இல்லை.

மனித குலத்தின் மிகவும் அன்னியோன்னியமான உறவு என்று போற்றப்படும் காதலே இத்தனை தரமிழந்து காணப்படுகிறது என்றால் ஏனைய உறவுகள் எப்படி இருக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை. ஜனநாயகம், ஆண் – பெண் சமத்துவம், சாதி மத பிற்போக்குத்தனங்களை எதிர்ப்பது போன்றைவையெல்லாம் நமது இந்தியக் காதலில் பெருமளவு கிடையாது. இருப்பதெல்லாம் நுகர்வுக் கலாச்சாரம் வழங்கியிருக்கும் சரக்குக் காதல்தான். இத்தகைய அபாயரகமான சமூக சூழலில்தான் சுரேஷ் போன்ற வெளிப்படையாகத் தெரியும் கொலைகாரர்களிடம் விநோதினி போன்ற பெண்கள் உயிரை இழக்க வேண்டியிருக்கிறது.

ஒரு நாட்டு மக்களின் அரசியல், பொருளாதார, சமூக போராட்டங்கள் என்ன வகை தரத்தினைக் கொண்டிருக்கிறதோ அதுதான் காதலிலும் பிரதிபலிக்கும். சமூக அக்கறையில் இருந்து துண்டிக்கப்பட்டிருக்கும் காதலை எந்த அளவுக்கு சமூக மதிப்பீடுகளின் பால் கொண்டு வருகிறோமோ அந்த அளவு இங்கே கண்ணியமான காதலை உருவாக்க முடியும். அது வரையிலும் விநோதினிகள் காதல் பலிகளாக தமது உயிர்களை துறக்க வேண்டியிருப்பது வெட்கக் கேடு. சமூக அக்கறையுள்ளவர்கள் சிந்திக்கட்டும்.