இன்று இந்து மதத்தின் விழாக்களாகக் காணப்படும் பல விழாக்களும் முன்னர் பழங்குடி மக்களிடமிருந்தோ அல்லது சமண-பவுத்த-ஆசீவக மதங்களிலிருந்தோ களவாடப்பட்டவையேயாகும்.
எடுத்துக்காட்டாக; விளக்கீடு என்பதனை எடுத்துக்கொண்டால், அது தமிழர்களின் விழா, இன்று மதத்தின் பிடிக்குள் சென்றுவிட்டது. அதே போன்று சங்ககாலப் பாடல்கள் குறிப்பிடும் ‘பாவை நோன்பு’ எனும் இயற்கையினைப் போற்றும் விழா, இன்று ‘திருவம்பாவை’ என்றாகிவிட்டது. இவ்வாறு களவாடப்பட்ட விழாக்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
அவுஸ்திரேலியப் பழங்குடி மக்கள்.
இவ்வளவு ஏன்? மத அடையாளமாகக் கருதப்படும் திருநீற்றினையே பார்ப்போம். ‘சமயத்திலுள்ளது நீறு’ என்று தேவாரமேயுள்ளது. எந்தச் சமயத்திலுள்ளது? என எண்ணிப் பாருங்கள். சைவசமயம் எனக் கொண்டால் கூட, வட இந்தியாவிலுள்ள சிவன் கோயில்களில் எங்காவது திருநீறு கொடுக்கின்றார்களா? இல்லையே. தமிழர் உட்பட்ட பழங்குடி மக்களின் அடையாளமாகவிருந்ததே இந்தத் திருநீறு. பின்னரான காலப்பகுதியில் இந்தப் பழங்குடி அடையாளமும் ஒரு மத அடையாளமாக மாற்றப்பட்டது.
ஏற்கனவே இங்கிருந்த மக்களிடமுள்ள இந்தப் பழக்கத்தினை, வடக்கே கொண்டு செல்ல மதத்தால் முடியவில்லை/முனையவில்லை. மதமானது திருநீற்றினை வடக்கே கொண்டுபோய்ச் சேர்க்கவிட்டாலும், அங்கிருந்து ‘விபூதி’ என்ற வடமொழிப் பெயரினை இங்கு கொண்டு வந்துசேர்த்துவிட்டது. இவ்வாறு அடையாளங்களையே ஆட்டை போடும்போது, விழாக்களை மட்டும் எவ்வாறு விட்டுவிடுவார்கள். பலவற்றையும் விழுங்கிவிட்டார்கள்.
இன்றும் மதத்தினால் விழுங்கமுடியாத ஒரு தொடர் விழாவாகவே (தைப்பொங்கலையும் உள்ளடக்கிய) ‘தை மரபுத் திங்கள் விழா’ காணப்படுகின்றது. இதற்கும் மதச் சாயம் பூசும் வேலையினை அண்மைக் காலத்தில் காணக்கூடியதாகவுள்ளது. அந்த வகையில் பொங்கலிற்கு எனப் ‘புராணப் புருடா’ ஒன்று வெளிவந்துள்ளது.
மகர சங்கராந்திதான் தைப் பொங்கல் என்பது ஏற்கனவே அவர்களால் முன்வைக்கப்பட்ட ஒரு விளக்கம். கதிரவனின் வட செலவு (வடக்கு நோக்கிய நகர்வு) என்பதற்கான ஒரு வடமொழிப் பெயராக ‘சங்கராந்தி’ என்பதனைக் கொண்டு வந்துபார்த்தார்கள். அதில் வடமொழிப் பெயரினை மட்டும் நீக்கிவிட்டால், அது ஒரு இயற்கை சார் நிகழ்வே. எனவே பொங்கலினை மத மயமாக்குவதற்கு இன்னொரு புராணக்கதை அவர்களிற்குத் தேவைப்பட்டது.
தமிழர்களின் இயற்கைசார் விழாவான பொங்கலிற்கு ஒரு புதிய மத விளக்கம் கொடுப்பதற்கென ‘கோவர்த்தன மலைக் கதை’ இன்று கூறப்படுகின்றது. இக் கதையின் படி, இந்திராவினை (இந்திரனை) வணங்காமல் மக்கள் புறக்கணித்தமையால், இந்திரா சினமுற்றார். இதனால் மழை, மின்னல் போன்றவற்றை மக்கள் மீது ஏவினார். அதனால் அச்சமுற்ற மக்கள் கிருசுணரிடம் முறையிட, அவர் கோவர்த்தன மலையினைத் தூக்கிக் குடையாகப் பிடித்து, மக்களை காப்பாற்றினார் (‘மழைக்கு நல்ல குடை என மலை பிடித்த கண்ணனாம்’ பாடல் நினைவிருக்கின்றதா, அதே தான்). பின்னர் இந்திரா தவறினை உணர்ந்தமையால், அவரிற்குப் பொங்கி மகிழ்ந்தார்கள். அதுதான் பொங்கல் ஆயிற்று. இவ்வாறு செல்கின்றது அந்தக் கதை.
சரி, இந்தக் கதை உண்மையென்றால் பொங்கலன்று இந்திராவிற்கு அல்லவா படைத்து வணங்குவார்கள். ஏன் கதிரவனையே வணங்குகின்றார்கள் எனக் கேளுங்கள். பதிலிருக்காது. ஏனெனில், இன்றைய பொங்கலுடன், பழங்கால (சிலப்பதிகாரம் குறிப்பிடும்) இந்திர விழாவினையும் சேர்த்துக் களவாட முனைந்து, இரண்டையுமே கோட்டை விட்ட புராணக்கதைதான் இந்தக் கோவர்த்தன மலைக் கதை. (இப் புராணக்கதையினை அணுகி நுணுக்கமாகப் பார்த்தால் ஒரு உண்மை புலப்படும். அதாவது, ரிக் வேதத்தால் பெரிதும் பாடப்பட்ட இந்திராவினை மக்கள் ஏற்றுக்கொள்ளாமையால், பார்ப்பனியமானது தொல்குடி மக்களின் நிறத்திலேயே (கறுப்பு) ஒரு கடவுளை உருவாக்கி, மக்களைக் கவர்ந்திழுத்தமையே அந்த உட்கிடை).
தைப் பொங்கலிற்கு ஒரு புராணக்கதை கட்டியவர்கள் மாட்டுப் பொங்கலை மட்டும் விட்டுவைப்பார்களா என்ன? அதற்கும் ஒரு புராணக் கதை. ஒரு முறை சிவன், நந்தியிடம் பூமியிலிலுள்ள மக்களிடம் சென்று ‘மாதமொரு முறை எண்ணெய் தேய்த்துக் குளித்து, மாதமொருமுறை உண்ணுமாறு’ சொல்லச் சொல்லிக் கேட்கின்றார். நந்தி தவறுதலாக ஒவ்வொரு நாளும் உண்ணுமாறு கூறிவிடுகின்றது (நல்லவேளை நந்தி மாறிக் கூறியிருக்காவிடின், இன்றைக்கு எமக்கு மாதத்திற்கொருமுறைதான் உணவு).
இவ்வாறு பொய் சொன்னதற்காகச் சாபம் பெற்ற நந்திதான் பின்னர் மாடுகளாக உலகில் பிறந்தது எனவும், அதனால் மாடுகளாகப் பிறந்த நந்திக்காகவே மாட்டுப் பொங்கல் பொங்கப்படுகின்றது எனச் செல்கின்றது அந்தப் புராணக்கதை. சரி இந்தப் புராணக்கதை உண்மையென்றால், வேதங்களில் எல்லாம் பசுக்களைக் கொன்று யாகங்களில் போட்டுக் கொல்லுமாறு கூறப்படுகின்றதே, அவ்வாறு கொல்லப்பட்டவையும் நந்திதானா! எனக் கேளுங்கள் பதிலிருக்காது (அஷ்டதச பசுவிதானம் – 18 பசுக்களை கொலை செய்து நடத்தும் யாகம், ஏகாதசீன பசுவிதானம் – 11 பசுக்களை கொல்லும் யாகம், வாயவீயஸ் வேதபசு – வாயு தேவதைகளுக்காக வெள்ளை பசுவை கொல்லுவது, ஆதித்ய வேதபசு – சூரிய தேவனுக்கு பசு யாகம்,…).
இவ்வாறு தைப் பொங்கல், மாட்டுப் பொங்கலிற்கு எல்லாம் புராணக்கதை இருக்கும்போது, ‘ஏறு தழுவல்’ (சல்லிக்கட்டு) மட்டும் என்ன பாவம் செய்தது என நினைத்த தமிழக பாரதீய சனதா கட்சியினர், அதற்கும் ஒரு புராணக்கதையினை ருவீட்டரில்(டிவிட்டரில்) தட்டிவிட்டுள்ளார்கள்.
அதில் அர்ச்சுணன் சிவனிடம் வரம் வேண்டித் தவமிருந்தபோது காளை ஒன்று அர்ச்சுணனைக் கொல்ல வரச் சிவன் அதனைத் தழுவியதே ‘ஏறுதழுவல்’ என்று அப் பதிவு செல்கின்றது. இதில் வேடிக்கை என்னவென்றால் ஏற்கனவே சிவ புராணத்திலும், மகா பாரதத்திலும் சொல்லப்பட்ட இக் கதையில் சிவனிற்கும் அர்ச்சுணனிற்குமிடையே வந்த மிருகமாக பன்றியே (வராஹம் ) குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னமும் சொல்லப்போனால், முகாசுரன் என்ற அசுரனே முள்ளம்பன்றி வடிவம் கொண்டு வந்ததாக சிவ புராண / மகாபாரத புராணக்கதை சொல்லுகின்றது. இன்று ஏறு தழுவலைத் தழுவிக் கொள்ளும் நோக்கில், இந்தப் பன்றியினையே இப்போது காளை என மாற்றியுள்ளார்கள். பாரதீய சனதா கட்சியினர் ஏறு தழுவலைக் களவாடப் போய், மகாபாரத – சிவ புராணத்தையே மாற்றியுள்ளார்கள்.
அர்ச்சுனன் வீரத்தை சோதிக்க சிவன் வேடுவன் வடிவத்தில் அர்ச்சுனனுடன் மல்யுத்தம் செய்யும்போது இறைவனை தழுவுகின்ற வாய்ப்பு அர்ச்சுனனுக்கு கிட்டுகிறது.
பாரதீய கட்சியினர் ஒழுங்காக யோசித்திருந்தால் இவ்வாறு மகாபாரதத்தை எல்லாம் சிதைக்காமலேயே ஒரு கதை பிடித்திருக்கமுடியும். அதாவது, மகாபாரதத்திலேயே ஒரீடத்தில் கிருசுணர் மாட்டுடன் சண்டையிடுவதாகக் கதை வருகின்றது. அதனைக் கூடப் பொருத்தமாகப் பிடிக்கத் தெரியாமல், பன்றியினை காளையாக மாற்றிவிட்டார்கள்.
சிந்துவெளி முத்திரை.
ஆனால், அக் கதையிலுள்ள சிக்கல் என்னவென்றால், கிருசுணர் காளையுடன் போரிட்டுக் காளையினைக் கொல்வதாகவே பாரதக் கதை செல்கின்றது. அது காளையினைக் கொல்லலே தவிர, ஏறுதழுவல் அல்ல. இந்தப் புராணக்கதையில் ஒரு மறைமுகச் செய்தி உண்டு. ஆரியர்கள் நாடோடிகளாகக் கைபர் கணவாய் மூலமாக இந்தியாவிற்குள் நுழைந்தபோது, இங்கிருந்த பழங்குடியினர் இங்கு உழவினை மேற்கொண்டிருந்தனர். அந்த உழவுத் தொழிலின் ஒரு கூறாகவும், குறியீடாகவுமே காளை பாரதக்கதையில் காணப்பட, அதனைக் கிருசுணர் கொல்வதன் மூலம் சொல்லப்படும் செய்தியானது ஆரியர்கள், தமிழர் உட்பட்ட தொல் குடிகளையும் அவர்களது உழவுத் தொழிலினையும் அழிப்பதையுமே, அக் கதை குறிக்கிறது.
முடிவாக, இவர்கள் என்னதான் முயன்றாலும், இன்று வரை இவர்களால் கைப்பற்றப்பட முடியாத ஒரே விழாவாக இந்தத் தைத்திருநாள் தொடர் விழாக் கொண்டாட்டமே காணப்படுகின்றது. இத் தை மரபுத் திங்களானது அவர்களது இந்து ராஸ்டிர கனவிற்குத் தொண்டையில் சிக்கிய ஒரு முள்ளாகவும், மறுபுறத்தே எமக்கு எமது பண்பாட்டினைக் கட்டிக்காக்கும் ஒரே பற்றுக்கோடாகவும் உள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வில் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது.
06.01.20 அன்று பேராசிரியர் பாத்திமா பாபு சார்பில் வழக்கறிஞர் யோகேஸ்வரன் அவர்கள் ஆஜராகி நிலமோசடி, புகைபோக்கி, காற்று மாசு, பசுமை வளையம், மூலப் பொருட்கள் மற்றும் உற்பத்தியான பொருட்கள் மற்றும் நச்சு கழிவுகள் அவற்றைப் மோசமாக பராமரிப்பது பற்றி வாதிட்டார். மேலும் ஸ்டெர்லைட் நச்சு ஆலை பொது தொழிற்சாலை பகுதியில் அமைந்துள்ளதையும் பற்றி சிறப்பாக விளக்கினார்.
07.01.20 அன்று மக்கள் அதிகாரம் சார்பில் வழக்கறிஞர் டி.மோகன் அவர்கள் ஆலை துவங்கியது முதல் மூடப்படும் வரை, உற்பத்தி நடவடிக்கைகளில் வெளியேறும் இரசாயனங்கள், உலோகங்கள் அடங்கிய கழிவு, நீரை சுத்திகரிக்கும் முறையில் உள்ள குறைபாடுகள், ஆலையின் அலட்சியமான நடவடிக்கைகள், மாசு கட்டுபாட்டு வாரியத்தின் கண்காணிப்பின்மை ஆகியவற்றால் நச்சு பொருட்கள் சுற்றுச்சூழலில் கலந்தன என்றும் ஆலையின் உள்ளே அபாயகரமான கழிவுகள் புதைக்கப்படும் இடங்கள், ஜிப்சம் குளம், தாமிர கழிவு வைப்பிடம் அருகில் நிலத்தடிநீர் மாசு கண்காணிப்பிற்காக உள்ள அனைத்து போர் கிணற்று நீரும் கன உலோகங்கள், இரசாயனங்களால் கடுமையாக மாசு அடைந்துள்ளன.
நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன்.
குமரெட்டியாபுரம், காயலூரணி, தெற்கு வீரபாண்டியபுரம், மீளவிட்டான், சில்வர்புரம், பண்டாரம்பட்டி, மடத்தூர் கிராமங்களிலுள்ள கண்காணிப்பு கிணற்று நீரும் மாசடைந்துள்ளது என்றும், நீரோட்டத்திற்கு எதிரான குமரெட்டியாபுரம், தெற்கு வீரபாண்டியபுரம், காயலூரணி நிலத்தடி நீர் பாதிப்பிற்கு எங்களை எப்படி காரணம் சொல்ல முடியும்? என்ற ஆலையின் வாதத்திற்கு, 2009-ல் ஸ்டெர்லைட் நிதியுதவியில் செய்யப்பட்ட நிலத்தடி நீர் ஆய்வில் ஆலை உள்ள இடத்தில் நிலத்தடி நீர் முகடு (Groundwater crest) உள்ளது, அதிலிருந்து நிலத்தடி நீர் அனைத்து திசைகளிலும் பாய்கிறது எனவும், ஆலையின் உற்பத்தி நடவடிக்கைகள் நடைபெற்ற இடம், தாமிர கழிவுகள் வைப்பிடம் இக்கிராமங்களின் அருகில் இருப்பதாலும், ஓர் ஆண்டின் பல மாதங்கள் காற்று அக்கிராமங்களை நோக்கி வீசுவதாலும், இடையில் தூசுக்களை தடுக்கும் மரங்களின் பசுமை வளையம் இல்லாததால் கனஉலோகங்கள், இரசாயனங்கள் அடங்கிய தூசுக்கள் பல ஆண்டுகளாக அப்பகுதிகளில் தங்கியுள்ளன எனவும் வாதிட்டார். தன் இறுதி வாதமாக, பல ஆண்டுகளாக செயலற்று இருந்த மாசு கட்டுபாட்டு வாரியமும், தமிழக அரசும் மக்களின் தொடர் போராட்டங்களில் விழிப்படைந்து ஆலையை மூடியுள்ளன என்றார்.
வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு வந்திருந்த கிராம மக்கள்.
39-வது நாள் விசாரணையான 08.01.20 அன்று அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன் அவர்கள் ஆஜராகி, ஸ்டெர்லைட் ஆலை நிலம், நீர், காற்று ஆகியவற்றை மிகவும் மோசமான நிலையில் மாசுபடுத்தி உள்ளதாகவும், 25 மீட்டர் பசுமை வளையம் அமைக்கவில்லை என்றும், பல முறை கண்டிப்புடன் கூடிய அவகாசம் கொடுத்ததாகவும், 2013-ல் உச்சநீதிமன்றமும் பல அறிவுரைகள் கூறி பல விதிமுறை மீறல்களை கண்டித்து ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து நடத்த அனுமதித்ததாகவும், அதன் பின்னரும் தவறுகளை ஆலை சரி செய்யாததால் தான் ஸ்டெர்லைட் ஆலையை மூடும் உத்தரவை பிறப்பித்ததாகவும் வாதிட்டார்.
தூத்துக்குடி வாழ் மக்களுக்கு சுத்தமான காற்று, குடிநீரை வழங்க வேண்டியது அரசின் கடமை. அதற்காக அந்த ஆலையை மூடுவதைத்தவிர வேறு வழியே இல்லை. ஆலையை மூடிய பிறகு தூத்துக்குடி சுற்று வட்டார நிலத்தடி நீர் மற்றும் காற்றின் தரம் அதிகரித்துள்ளது.
ரூ.3000 கோடி முதலீடு செய்து ரூ.20,000 கோடி லாபம் ஈட்டிய ஆலை நிர்வாகம் தற்போது நஷ்டம் ஏற்பட்டுவிட்டது எனக் கூறுவதை ஏற்க முடியாது. விதிகளை பின்பற்றாத காரணத்தால் தான் ஆலை நிர்வாகத்துக்கு ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது என வாதிட்டார்.
ஸ்டெர்லைட் தரப்பில் ஆஜரான ஆரியமா சுந்தரம்.
ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.ஆர்யமா சுந்தரம் ஆஜராகி வாதிடும் போது, ‘‘ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட்டால் விதிகளுக்கு உட்பட்டு செயல்படுவோம். கூடுதலாக கட்டுப்பாடுகள் விதித்தாலும் அதை ஏற்கத்தயார்” என்றார். ஆனால் அதற்கு தமிழக அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
மேலும் அரசு தரப்பு வழக்கறிஞர் விஸ்வநாதன் அவர்கள் தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துதான் ஆலையை மூடியுள்ளதாக வாதங்களை வைத்தார்.
அதன் பின்னர் நீதிபதிகள், அரசு தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணன் அவர்களிடம் “ஸ்டெர்லைட் ஆலை பொது தொழிற்சாலை பகுதியில் உள்ளதா? (General industrial zone) அல்லது நச்சு தொழிற்சாலை (hazardous industrial zone) பகுதியில் உள்ளதா?” என்பது பற்றிய கேள்விகளை எழுப்பினர். அதற்கு விஜயநாராயணன் அவர்கள் நச்சு ஆலையான ஸ்டெர்லைட்டானது நச்சு தொழிற்சாலை பகுதியில் இல்லாமல் பொது தொழிற்சாலை பகுதியில் உள்ளதாக பதிலளித்தார்.
அதன் பின்னர் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் மூத்த வழக்கறிஞர் பாலன் ஹரிதாஸ் அவர்கள் ஆஜராகி, ”காப்பர் கழிவுகள் புதுக்கோட்டை உப்பாற்று ஓடை உட்பட பல இடங்களில் கொட்டப்பட்டது அனைவரும் அறிந்ததே! ஆனால் ஸ்டெர்லைட் நிர்வாகம் தனது பினாமிகளை வைத்து அதை உப்பாற்று ஓடையில் கொட்டிவிட்டு, தற்போது தனக்கும் காப்பர் கழிவுகளைக் கொட்டியற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நாடகமாடுகிறது. ஆனால் இப்போது கழிவுகளை அகற்றி விடுகிறோம் என்கிறார்கள்.
மேலும் ஐந்து வருடமாக நச்சுக் கழிவுகளை பராமரிப்பதில் அரசிடம் எந்த அனுமதியும் வாங்காமல் ஆலை செயல்பட்டு நிலம், நீர், காற்று ஆகியவற்றை கடுமையாக மாசு படுத்தியுள்ளது என்றார். இறுதியாக ஸ்டெர்லைட் ஆலை ஒரு போதும் எந்த விதிகளையும் கடைப்பிடிப்பதில்லை என்றும் மாசுபடுத்துதல், விதிகளை மீறுதல், அரசையும் மக்களையும் ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் மட்டுமே ஆலையை நடத்தியதாகவும், இதற்கு அரசு அதிகாரிகளும் கூட்டுச்சதியில் ஈடுபட்டுள்ளதாகவும்” வாதிட்டார்.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் பாலன் ஹரிதாஸ்.
இதற்கு ஸ்டெர்லைட் தரப்பு மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம் அவர்கள், அனைத்து தரப்பினரும் தவறான தகவல்களையும் மற்றும் தங்கள் நிலையில் மாற்றி மாற்றி பேசுவதாகவும் வாதிட்டார். நாங்கள் சட்டத்துக்கு புறம்பாக செயல்படவில்லை என்றும் தொழிற்சாலை விதிகளின்படியே செயல்பட்டதாகவும் வாதத்தை வைத்தார்.
இதனோடு பல மாதங்கள் கழித்து சென்னை உயர்நீதிமன்ற விசாரணை முடிவுக்கு வந்தது. தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
மேலும் தீர்ப்புத்தேதி பட்டியலில் வரும் போதுதான் தெரியும். அதாவது தீர்ப்பு வருவதற்கு ஒரு நாள் முன்பு மட்டுமே தீர்ப்பு தேதியை நாம் தெரிந்து கொள்ள முடியும்.
இலட்சம் மக்கள் போராட்டமும், அனைவரின் தியாகமும் வீண் போகாது. நம்பிக்கையுடன் காத்திருப்போம் !
ஸ்டெர்லைட் சார்பில் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகள் சுற்றுவட்டார கிராமங்களில் கொண்டாடப்பட்டதாகவும், அதற்கான பரிசுப்பொருட்கள் வழங்கியதாகவும், ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் அதிகாரிகள், அலுவலர்கள் அந்த விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டதாகவும் நேற்று (18-01-2020) சில பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது. இந்த நாளிதழ் செய்தியை பார்த்த பல கிராமங்களில் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஏனென்றால் இந்த கிராமங்களில் எல்லாம் இளைஞர்கள், பெரியோர்கள் வசூல் செய்தும் மற்றும் ஊர் கணக்கில் இருந்தும் பொங்கல் விளையாட்டு போட்டிகள் கொண்டாடப்பட்டது.ஸ்டெர்லைட் நிறுவனத்திடமிருந்து சல்லிக்காசு கூட வாங்காமல் தான் நடத்தியுள்ளார்கள். உண்மை இப்படியிருக்க ஸ்டெர்லைட் நிறுவனத்தின் செலவில் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடத்தியதாக ஸ்டெர்லைட் நிறுவனம் உண்மைக்கு புறம்பாக பத்திரிகைகளில் செய்தி கொடுத்துள்ளது.இது ஸ்டெர்லைட் சுற்றுவட்டார கிராம மக்களை மதிப்பிழக்கச் செய்யவும், அவதூறு செய்யும் விதமாகவும் ஸ்டெர்லைட் நிறுவனம் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகிறது. இது விஷமத்தனமானது.
இந்த பொய்யான செய்தி கொடுத்து வெளியிட செய்ததற்கு ஸ்டெர்லைட் நிறுவனம் மறுப்பும், மன்னிப்பு செய்தியும் உடனே வெளியிட வேண்டும் என்று பண்டாரம்பட்டி சந்தன மாரியம்மன் கோயில் முன்பு ஊர் மக்களும் ஸ்டெர்லைட் சுற்றுவட்டார கிராம மக்களும் கண்டணம் தெரிவித்திருப்பதோடு, சிப்காட் போலீசு நிலையத்தில் புகாரும் அளித்துள்ளனர்.
மேல்கோட்டு | The Overcoat | குறுநாவல் – பாகம் – 08
அந்த உதவித் தலைமை எழுத்தனோ மிகவும் ஆடம்பரமாக வாழ்ந்தான். மாடிப்படிக்கு மேலே விளக்கு எரிந்து கொண்டிருந்தது, அவன் இருப்பிடம் இரண்டாவது மாடியில். நடைக்குள் புகுந்ததுமே அக்காக்கிய் அங்கே ரப்பர் மேல்காலணிகள் வரிசை வரிசையாக வைத்திருப்பதைக் கண்டான். அவற்றுக்கு இடையே, சீறிக்கொண்டும் ஆவிப் படலங்களை வெளிவிட்டுக் கொண்டும் அறை நடுவில் நின்றது ஒரு சமோவார். சுவர்கள் மேல்கோட்டுக்களாலும் குளோக் எனப்படும் போர்வைகளாலும் மூடப்பட்டிருந்தன. அவற்றில் சில நீர்நாய்த்தோல் காலர்களும் மகமல் முகப்புக்களுங்கூட வைத்தவை. சுவரின் மறுபுறமிருந்து பேச்சும் கூச்சலும் கேட்டன. காலித் தேநீர் கிளாசுகளும், க்ரீம் ஜாடியும் பிஸ்கட்டுகளும் வைத்த டிரேயுடன் பணியாள் அறைக் கதவைத் திறந்துகொாண்டு வரவும், சத்தம் தெளிவாகக் கணீரென ஒலித்தது. எழுத்தர்கள் கொஞ்ச நேரமாகவே அங்கே கூடியிருக்கிறார்கள் என்பதும் முதல் முறை தேநீர் அருந்தி ஆயிற்று என்பதும் துலக்கமாகப் புலப்பட்டது.
அக்காக்கிய் மேல்கோட்டைக் கழற்றி மாட்டி விட்டு அறைக்குள் நுழைந்ததுமே மெழுகுவத்தி விளக்குகளும், எழுத்தர்களும், சுங்கான்களும், சீட்டாட்ட மேசைகளும் எக்காலத்தில் அவன் பார்வையில் பளிச்சிட்டன. அவன் காதுகளோ, அறையின் எல்லா மூலைகளிலிருந்தும் வந்த இடையறாத உரையாடல்களின் குழம்பிய ஒலிகளாலும், நாற்காலிகள் நகர்த்தப்படும் அரவத்தாலும் நிறைந்தன. அவன் அறை நடுவே அசடுவழிய நின்றுகொண்டு என்ன செய்வது என்று மூளையைக் குழப்பிக்கொண்டான். ஆனால், கூடியிருந்தவர்கள் அவன் வந்ததைக் கவனித்துப் பெருங்கூச்சலுடன் அவனை வரவேற்று, அவனது மேல்கோட்டை மறுமுறை பார்வையிடும் பொருட்டு ஒரு மொத்தமாக நடைக்குச் சென்றார்கள். அக்காக்கிய் ஆரம்பத்தில் கொஞ்சம் கூச்சப்பட்டாலும் களங்கமற்ற உள்ளம் வாய்ந்தவனாதலால் எல்லாரும் தன் மேல்கோட்டைப் புகழ்வதைக் கேட்டு உச்சி குளிராமலிருக்க அவனால் முடியவில்லை. அப்புறம் எல்லாரும் அவனையும் அவன் மேல்கோட்டையும் அறவே மறந்து விட்டு, எதிர்பார்த்தது போலவே சீட்டாட்ட மேசைகளைச் சுற்றிக் குழுமினார்கள்.
அக்காக்கிய்க்கோ இந்தச் சத்தம், பேச்சு, ஆட்களின் கூட்டம் எல்லாமே புதுமையாகவும் விந்தையாகவும் இருந்தன. என்ன செய்வது, கைகளையும் கால்களையும் உடல் முழுவதையுமே எங்கு வைப்பது என்று விளங்காமல் தத்தளித்தான். முடிவில் அவன் சீட்டாடுபவர்கள் அருகே உட்கார்ந்து, சீட்டுக்களைப் பார்ப்பதும் ஆட்டக்காரர் முகங்களை ஒன்று மாற்றி ஒன்றாக நோட்டமிடுவதுமாக இருந்து விட்டு, சிறிது நேரம் சென்றதும் சலிப்புற்றுக் கொட்டாவி விட ஆரம்பித்தான் – அகாலமாகிவிட்டது, அவன் வழக்கமாகத் தூங்கும் வேளை எப்போதோ கடந்துவிட்டதாகையால். அவன் விடை பெற்றுகொண்டு வெளியேறத் துடித்தான். ஆனால் அவனுடைய புதிய மேல்கோட்டுக்கு மரியாதை செலுத்தும் பொருட்டுத் தலைக்கு ஒரு கிளாஸ் ஷாம்பெயின் பருகுவது அவசியம் எனக் கூறி எல்லாரும் அவனைத் தடுத்துவிட்டார்கள். ஒரு மணி நேரத்திற்கெல்லாம் உணவு பரிமாறப்பட்டது: ஸலாத் எனப்படும் காய்கறிக் கூட்டு, பொரிக்காத கன்றிறைச்சி, இறைச்சி வடை, க்ரீம் கேக்கு, ஷாம்பெயின் ஆகியன.
அக்காக்கிய் இரண்டு கிளாஸ் ஷாம்பெயின் அருந்தினான். அப்புறம் அறையில் குதூகலம் அதிகரித்துவிட்டதாக அவனுக்குப்பட்டது. எனினும் நள்ளிரவாகிவிட்டது என்பதையும் தான் எப்போதோ வீடு திரும்பியிருக்க வேண்டும் என்பதையும் மாத்திரம் அவனால் மறக்கவே முடியவில்லை. விருந்தளப்பவன் எதாவது சாக்குப் போக்கு சொல்லித் தன்னைப் போகாது தடுத்துவிடக் கூடாதே என்பதற்காக யாரும் கவனிக்காத படி நழுவி, நடைக்கு வந்து தன் மேல்கோட்டைத் தேடி எடுத்தான். அது தரையில் விழுந்து கிடந்ததைக் கண்டு அவனுக்கு நெஞ்சு சுரீர் என்றது. அதை எடுத்து உதறி, ஒரு பொட்டு தூசி இல்லாமல் தட்டித் துடைத்துத் தோள் மேல் போட்டுக்கொண்டு மாடிப்படியிறங்கித் தெருவுக்கு வந்தான். தெருவில் இன்னும் வெளிச்சமாயிருந்தது. செல்வர் வீட்டு வேலைக்காரர்களுக்கும் பலரக மக்களுக்கும் ஓயா அரட்டைக் கூடங்களாக விளங்கிய சில சிறிய பலசரக்குக் கடைகள் திறந்திருந்தன. மூடியிருந்த கடைகளுக்குள்ளிருந்தும் கதவிடுக்கு வழியாக வந்த ஒளிக்கீற்று உள்ளே ஆட்கள் இருப்பதைக் காட்டியது – பணிப் பெண்களும் பணியாட்களும் அவர்கள் எங்கே போய்த் தொலைந்தார்கள் என்று தெரியாமல் எசமானர்கள் தவிக்கும்படி விட்டு விட்டு, மிச்ச அரட்டையை அடித்து முடித்துக் கொண்டிருந்தார்கள் போலும். அக்காக்கிய் உள்ளம் மகிழ நடந்து சென்றான்; மேனியின் ஒவ்வோர் அங்கமும் அசாதாரணச் சலனத்துடன் இயங்க மின்வெட்டுப் போலத் தன்னைக் கடந்து சென்ற சீமாட்டி ஒருத்தியின் பின்னே, எதற்காகவோ தெரியவில்லை, ஓடக் கூடத் தலைப்பட்டான்.
ஆனால் அக்கணமே நின்று, இந்தத் திடீர் விரைவாற்றல் எங்கிருந்து வந்தது என்று எண்ணியவனால் மீண்டும் மிக மிக மெதுவாக நடக்கலானான். சிறிது நேரத்திற்கெல்லாம் முடிவேயின்றி வெறிச்சோடிக் கிடந்த தெருக்களை அடைந்தான். பகல் வேளையிலேயே இவை அழுது வழியும், இரவிலோ கேட்கவே வேண்டியதில்லை. இப்போது அவை இன்னும் வெறுமையாகவும் ஏகாந்தமாகவும் தோற்றமளித்தன; தெரு விளக்குகள் குறைவாயிருந்தன, அப்படித் தென்பட்ட ஒரு சிலவும் அணைந்து போயிருந்தன. நகரசபை அதிகாரிகள் எண்ணெயை மிச்சம் பிடித்தார்கள் போலும். மரவீடுகளும் வேலிகளும் உள்ள பகுதிக்கு அவன் வந்து விட்டான்.
சுற்றிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஓர் ஆளைக் காணோம், வெண்பனி மட்டுமே தெருக்களில் ஒளிர்ந்தது. சன்னல்களின் பலகைக்கதவுகள் அடைக்கப்பட்டு இருளடைந்து கிடந்த தாழ்ந்த குடில்கள் அயர்ந்த உறக்கத்தில் ஆழ்ந்தவை போன்ற தோற்றத்துடன் அவலம் பிடித்த கரிக்கோடாய் நெடுந்தொலை வரை சென்றிருந்தன. அக்காக்கிய் அக்காக்கியெவிச் தெருவின் குறுக்கே எல்லையற்றது போலப் பரந்து கிடந்த விசாலமான மைதானத்தை நெருங்கினான். மைதானத்தின் மறு கோடியிலிருந்த வீடுகள் மங்கலாக, பட்டும் படாமலும் தெரிந்தன. இந்த மைதானம் அவனுக்குப் பயங்கரமான பாலைவனம் போலக் காணப்பட்டது.
சென்னையில் நடைபெறும் 43-வது புத்தகக் கண்காட்சியில்
வாங்க வேண்டிய நூல்கள் குறித்து ஒரு பார்வை !
வரலாற்றில் இருந்து நாம் கற்க வேண்டிய படங்களை நூல்கள் கற்றுத் தருகின்றன. இன்றைய பாசிச சூழலை எதிர்கொள்வதற்கான உத்திகளை தெரிந்து கொள்ள படிக்க வேண்டிய நூல்களைப் பட்டியலிடுகின்றனர் பிரபல வெளியீட்டகங்களான பாரதி புத்தகாலயம், நீலம் மற்றும் நிமிர் ஆகியவற்றின் நிர்வாகிகள் !
சென்னையில் நடைபெற்று கொண்டிருக்கும் 43வது புத்தகக் கண்காட்சியில் புத்தகங்களின் தேவையை பற்றி எழுத்தாளர் ஓவியா, எழுத்தாளர் மருதன், கருஞ்சட்டை பதிப்பகத்தில் இருந்து சுப. வீரபாண்டியன் இந்தக் காணொளியில் விளக்குகிறார்கள் !
சமூகத்தை புரிந்துகொள்ள புத்தகம் படி |
மகிழ்நன் | மருத்துவர் ருத்ரன் | பேரா.சுந்தரவள்ளி
சென்னையில் நடைபெற்று கொண்டிருக்கும் 43 -வது புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்று அரங்கில் வாசிப்பின் தேவை குறித்து விளக்குகிறார்கள், மகிழ்நன், வசன எழுத்தாளர்.,
ருத்ரன், மனநல மருத்துவர், த.கணேசன், பு.மா.இ.மு., பேராசிரியர் சுந்தரவள்ளி ஆகியோர்.
* இது புத்தகத் திருவிழா! கொண்டாடித் தீர்க்க வேண்டும்!
இளைஞர்களிடையே வாசிப்பு பழக்கத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது மகிழ்ச்சிக்குரிய விசயம்தான். வாசிப்புதான் இளைஞரின் அனுபவத்தை கூர்தீட்டும். உரையாடலை நிகழ்த்துகிறபோது, இன்னும் அடுத்தக் கட்டத்துக்கு செல்லும்.
* வாட்சப், சமூக ஊடகங்களில் காணும் செய்திகளைத் தாண்டி புத்தகத்தைப்படி. குறைந்தபட்சம் எதையாவது படி!
* நாட்டைப்பற்றி புரிந்துகொள்ள சமூக நடப்புகளை அறிந்துகொள்ள தினந்தோறும் குறைந்தபட்சம் நான்கு பக்கங்களையாவது படிக்க முயற்சியுங்கள்… நாளைக்கு மட்டுமல்ல எதிர்கால சந்ததியினருக்காக படியுங்கள்!
* போராட்டக் களத்தில் நிற்கிறோம். எதிரிகளை எதிர்க்கிறோம். அதிகாரத்தின் அத்துமீறல்களுக்கு எதிராக பெருந்திரளாகக் கூடுகிறோம். இவற்றுக்கெல்லாம் எது ஆயுதம்? அறிவாயுதம்தான் ஆயுதம். அறிவாயுதத்தை கையில் எடுக்கும்பொழுதுதான் எதிரிகள் அச்சம் கொள்வார்கள். அறிவாயுதம் ஒருபோதும் தோற்காது.
அறிவுப் பசியை தீர்க்க புத்தகக் கண்காட்சிக்கு வாங்க ! வாசகர்கள் பரிந்துரை !
சென்னையில் நடைபெற்று கொண்டிருக்கும் 43 -வது புத்தகக் கண்காட்சியில் கல்லூரி மாணவர்கள் – இளைஞர்கள் தாங்கள் தேர்வு செய்த நூல்கள் குறித்து வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறார்கள்.
புத்தகங்களின் மீதான ஆர்வம் இளைஞர்களிடையே குறைந்துவிட்டதா? பதிலுரைக்கிறார்கள் கல்லூரி மாணவர்கள்…
பொங்கல் பண்டிகையையொட்டி திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் கடைவிரித்திருந்த சாலையோர கரும்பு வியாபாரிகளிடம் எடுக்கப்பட்ட நேர்காணல் காணொளி!
லாரி ஓட்டுநர், கல்லூரி மாணவர், பி.இ. பட்டதாரி இளைஞர்கள் கூட, சீசனுக்காக கரும்பு வியாபாரிகளாக மாறியிருக்கும் அவலத்தையும்; மக்களிடையே வாங்கும் சக்தி குறைந்து போயிருப்பதால் கட்டுக்கட்டாக கரும்பு வாங்கிய மக்கள் இன்று சம்பிரதாயத்திற்காக ஒன்று இரண்டு கரும்பு வாங்கிச் செல்லும் வாழ்க்கைச்சூழலையும் எடுத்துக்காட்டுகிறது, இந்த நேர்காணல்!
இரண்டாம் உலகப் போரின் காலகட்டத்தில் உலகம் ஒரு ஹிட்லரைத்தான் எதிர் கொண்டது. இன்றோ உலகம் முழுவதும் ஹிட்லர்கள் தலைதூக்கியிருக்கிறார்கள்.
இந்தியாவிலும் ஆர்.எஸ்.எஸ். என்றொரு நாசிக் கும்பல் ஆட்சியதிகாரத்தில் அமர்ந்துள்ளது. மோடி என்ற ஹிட்லர் ஏகாதிபத்தியத்தின் சேவகனாக மக்களை ஒடுக்குகிறார்.
அன்று உலகை ஹிட்லரிடமிருந்து காக்க ஒரு ஸ்டாலின் இருந்தார். ஹிட்லரை வீழ்த்தி மனித சமூகத்தைப் பேரழிவிலிருந்து காத்தார். ஆனால் இன்றோ பல ஹிட்லர்கள் உருவாகி நிற்கிறார்கள். இவர்களை எதிர்கொள்ள இன்னும் பல ஸ்டாலின்கள் தேவை !
இன்றைய சூழலில் ஹிட்லர்களை எதிர்கொள்ள தோழர் ஸ்டாலினின் எழுத்துக்கள் மிகவும் அவசியமானவை ! அதனை உணர்ந்து தோழர் ஸ்டாலினின் எழுத்துக்களை கடும் உழைப்பைச் செலுத்தி தமிழில் கொண்டு வந்துள்ளார் அலைகள் வெளியீட்டகத்தின் தோழர் சிவம்.
கடை எண் 71, 72 – அலைகள் வெளியீட்டகத்தில் இந்நூல் தொகுப்பு முன்பதிவு செய்யப்படுகிறது. வாங்கிப் படியுங்கள் !
பாரத ரத்னாவா இந்தியாவின் அவமானச் சின்னமா? – பாகம் – 1
வினாயக் தாமோதர் சவார்க்கர். சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் ஒரு அரை நூற்றாண்டு காலம் மறக்கப்பட்ட, இன்று அதை அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டு உச்சரிப்பவர்களே பொது வெளியில் சொல்லத் தயங்கிய பெயர் மீண்டும் பேசு பொருளாக்கப்பட்டிருக்கிறது. இதற்கு உடனடிக் காரணம், மஹாராஷ்டிர மாநிலத்தின் பி.ஜே.பி வரும் தேர்தலில் வெற்றி பெற்றால் சவார்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதற்கான முயற்சி எடுக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையிலேயே கூறியிருக்கிறது.
பிஜேபியின் தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷாவும் சவார்க்கரைப் புகழ்ந்து, 1857-ல் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக நடந்த ராணுவ வீரர்களின் எழுச்சியை முதன் முதலாக இந்தியாவின் முதல் சுதந்திரப் போராக உலகுக்குக் காட்டியவர் சவார்க்கர்தான் என்று ஒரு பொய்யைச் சொல்லியிருக்கிறார். பிரதமர் மோடியும் தன் ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் சவார்க்கரை 1857 எழுச்சியின் ‘சாம்பியன்’ என்று பொருள்படப் பேசியிருக்கிறார். வரலாற்று அறிவில்லாதவர்கள் இவர்களின் உரைகளைக் கேட்டால் சவார்க்கரே முன் நின்று அந்த எழுச்சியை நடத்துவது போல் தோன்றும். அதுதான் மோடி— ஷா கூட்டணியின் நோக்கமும்.
இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து நடத்திய அந்த எழுச்சிப் போராட்டத்தை காரல் மார்க்ஸ் செப்டம்பர் 16, 1857 அன்றே இந்தியாவின் ‘முதல் சுதந்திரப் போர்’ என்று வர்ணித்து நியூயார்க் டெய்லி டிரிப்யூன் பத்திரிகையில் எழுதினார். தகவல் தொழில்நுட்பம் வளராத காலத்தில் அவருக்குக் கிடைத்த தகவல்களை வைத்து எழுதிய மார்க்ஸ் புரட்சியாளர்களை எதிர்மறையாக விமரிசித்த அதே நேரத்தில், அவர்களின் ‘கொடூரமான’ செயல்பாடுகள் பிரிட்டிஷ் அரசின் கொள்கைகளுக்கான எதிர் வினையென்றே சொன்னார். பிரிட்டிஷ் ராணுவம் உலகில் பிற பகுதிகளில் செய்து கொண்டிருந்த கொடுமைகளையும் அதில் பட்டியலிட்டு பகிரங்கப்படுத்தினார்.
1857-க்கு முன்பே தென்னிந்தியாவில் ஆங்காங்கு நடந்த கிளர்ச்சிகள் வரலாற்றில் பதிவு செய்யப்படாமலே போயிருந்தன என்பது மார்க்ஸுக்குத் தெரியாமல் போயிருக்க வாய்ப்புண்டு. சவார்க்கருக்கும், இன்று அவரை தேசிய ஹீரோக்களின் வரிசையில் வைக்கத் துடிக்கும் அமித் ஷா போன்றோருக்கும் தெரிந்தாலும் ஏன் பேச மாட்டார்கள் என்பது நமக்குத் தெரியும்.
ஆனால் இவற்றிற்கெல்லாம் மேலான பிரச்சினை அல்லது தர்மசங்கடம், அமித் ஷாவுக்கும் சங்க பரிவாரத்திற்கும் இருக்கிறது.
வரலாற்றை ‘நம்’ பார்வையில் எழுத வேண்டும் என்று சொல்கிற அமித் ஷா சவார்க்கரின் பார்வையில் எழுதப்பட்ட 1857-ன் வரலாறு குறித்த புத்தகத்தை இன்று தடை செய்ய வேண்டும் என்றுதான் கூறுவார். அந்த அளவுக்கு இந்து—முஸ்லிம் ஒற்றுமையை வலுவாகவும் உணர்ச்சி பூர்வமாகவும் எழுதியிருக்கிறார் சவார்க்கர். ஆனால் அவரின் கண்ணோட்டத்தில் மதவாதம் அப்போதே பொதிந்திருந்தது என்று வரலாற்றியலாளர்கள் கூறுகிறார்கள்.
‘1857-ல் நடந்த முதல் சுதந்திரப் போர்’ என்கிற புத்தகத்தை சவார்க்கர் மராத்தி மொழியில் எழுதியது 1908-ல். பின்னர் அது ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டது. அப்போது அபினவ் பாரத் என்கிற அமைப்பினைத் தன் சகோதரருடன் நடத்தி வந்தார்.
1857-ல் நடந்த போரில் பங்கேற்ற ராணுவ வீரர்களைக் குறித்து இப்படி எழுதுகிறார்.
“மவுல்விகளின் போதனையைப் பெற்று, கற்றறிந்த பிராமணர்களின் ஆசி பெற்று, டெல்லியின் மசூதிகளிலிருந்தும், பனாரஸின் கோவில்களிலிருந்தும் சொர்க்கம் வரை சென்ற பிரார்த்தனைகளின் பலனிகளான இவர்கள் யார்? சுயதர்மமும் சுயராஜ்யமும்தான் அவர்களின் பெரும் கொள்கைகள். உயிரினும் மேலான மதத்தின்மீது சூழ்ச்சிமிகு, அபாயகரமான, அழிவுமிக்க தாக்குதல் நடத்தப்படுவதற்கான அறிகுறிகள் தெளிவாகத் தெரிந்த பிறகு, சுயராஜ்யத்தை அடைவது என்கிற புனிதமான விருப்பத்துடன் அடிமைச் சங்கிலிமீது ஆவேச அடிகள் விழுந்தபோது ‘தீன், தீன்’ என்ற கோஷம் இடியாக எழுந்தது. சுயதர்மம், சுயராஜ்யம் ஆகிய கொள்கைகள் இந்துஸ்தானத்தின் புதல்வர்களின் எலும்பிலும் மஜ்ஜையிலும் பதிக்கப்படும்.”
புத்தகத்தில் கடைசி முகலாய மன்னரான பகதூர் ஷா சஃபரை தாராளமாகப் புகழ்கிறார் சவார்க்கர். அதைவிட அதிகமாக இன்று உத்தரப் பிரதேசத்திலிருக்கும் அவத் பிரதேசத்தை 1857-ல் கைப்பற்றிய மவுல்வி அஹமத் ஷாவையும் இவ்வாறு புகழ்கிறார்: “தேசபக்த மவுல்வியான அஹமத் ஷாவின் புனிதப் பெயர் இந்துஸ்தானத்தைச் சுற்றி ஒரு ஒளிவட்டத்தைச் சூட்டியிருக்கிறது, அவருடைய மரணச் செய்தி லண்டனை அடைந்தபோது, பிரிட்டிஷ் ஆட்சிக்கு வட இந்தியாவில் இருந்த பெரும் வல்லமை நிறைந்த ஒரு எதிரி இனி இல்லை என்று ஆங்கிலேயர்கள் நிம்மதியடைந்தனர்.
சாவர்க்கர்
அதேபோல் ஹைதர் அலி, திப்பு சுல்தான் ஆகியோரின் பெருமைகளையும் சொல்லாமல் அவர் கடந்து செல்லவில்லை. “இந்தியாவின் சுதந்திரத்திற்கு ஏற்பட்ட அபாயத்தை முதன்முதலில் உணர்ந்தவர்கள் பூனாவைச் சேர்ந்த நானா ஃபத்னாவிஸும், மைசூரின் ஹைதர் சாஹிபும்தான். நம் கண்முன் விரிந்த நாடகத்தில் தஞ்சாவூர், மைசூர், ராஜ்கார், டெல்லி போன்ற சமஸ்தானத்தை ஆண்டவர்கள் முக்கியமான பாத்திரங்களாயிருந்தனர்” என்கிறார் சவார்க்கர்.
மராத்தா பேரரசின் பேஷ்வா பாஜி ராவின் மகன் நானா சாஹிப் தன் நம்பிக்கைக்குரிய தூதுவராக அறிவுக் கூர்மை வாய்ந்த அசிமுல்லா கானைத்தான் வைத்திருந்தார் என்றும் சவார்க்கர் குறிப்பிடுகிறார். அன்று சவார்க்கரின் உலகப் பார்வையைப் பின்வரும் பத்தியிலிருந்து அறிந்து கொள்ளலாம்:
“முதலில் இந்தியாவின் விடுதலைக்காக ஒன்றுபட்ட போராட்டத்தை நடத்தி, உள்நாட்டுச் சண்டைகளை நிறுத்தி, மாநிலங்களை உள்ளடக்கிய ஐக்கிய இந்தியாவை உருவாக்கி, உலகில் இருக்கும் சுதந்திர நாடுகளின் கூட்டமைப்பில் அதற்குரிய இடத்தை அடைவதுதான் நானா சாகிப்பின் முதல் திட்டமாக இருந்தது. இஸ்லாம் மற்றும் இந்து மதத்தைப் பின்பற்றுபவர்களின் ஐக்கிய தேசமாக இருக்க வேண்டுமென்றும் அவர் விரும்பினார். முகமதியர்கள் இந்தியாவில் ஆட்சி செய்யும் அன்னியர்களாக இருக்கும் வரை அவர்களை சகோதரர்களாகக் கருதுவது ஒரு தேசிய பலவீனத்தை ஒப்புக் கொள்வது போல்தான் இருந்தது.
அதனால் அந்த எண்ணம் நீடிக்கும் வரை இந்துக்கள் முகமதியர்களை அன்னியர்களாகப் பார்ப்பது அவசியமாக இருந்தது. டெல்லியின் சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு ஆண்ட முகமதியர்களின் ஆட்சியை பஞ்சாபின் குரு கோவிந்த், ராஜபுதனத்தின் ராணா பிரதாப், புண்டேல்கண்டின் சத்ராசல், மராத்தியர் போன்றோர் அழித்து விட்டனர்; பல நூற்றாண்டுகளுக்கும் மேல் நடந்த போர்களின் மூலம் முகமதியர்களை வென்ற இந்து இறையாண்மை தன்னை இந்தியா முழுவதிலும் ஸ்திரப்படுத்திக் கொண்டது. அந்தச் சூழலில் முகமதியர்களுடன் கைகோர்த்து செல்வது தேசிய அவமானம் அல்ல. மாறாக, அது ஒரு பெருந்தன்மையான செயல்.”
முகமதியர்களை இந்து மன்னர்கள் அடக்கி வெற்றி கண்டபின் அவர்களை சகோதரர்களாகக் கருதலாம் என்கிற இந்த இந்து மேலாதிக்கப் பார்வையின் தொடர்ச்சியை அவருடைய இந்துத்துவம் என்கிற நூலில் காணலாம். இந்துக் கலாச்சாரத்தை ஏற்றுக் கொண்டால் இந்து இனம் விரும்பும்வரை கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் இங்கு இருக்கலாம் என்பதுதான் அவருடைய இந்த்துவக் கொள்கையின் சாரம்.
முஸ்லிம்கள் அடக்கப்பட்டு விட்டதால் “இந்துக்களுக்கும் முகமதியர்களுக்கும் இடையே இருந்த விரோதத்தினைக் கடந்த காலத்திற்குள் வீசி விடலாம். அவர்களுக்கிடையே இப்போது நிலவுவது ஆள்வோருக்கும் ஆளப்படுவோர்க்கும், அன்னியர்க்கும் பூர்வகுடியினருக்குமான உறவு அல்ல. அது சகோதரர்களுக்கிடையேயான உறவு. அவர்களுக்கு இடையில் நிலவும் ஒரே வேறுபாடு மதம் மட்டும்தான். இரு தரப்பினரும் இந்துஸ்தான மண்ணின் மைந்தர்கள். பெயர்கள் வேறுபட்டாலும் அவர்கள் ஒரு தாய் மக்கள். இந்தியா என்கிற ஒரே தாயின் பிள்ளைகளாக இருப்பதால் அவர்கள் ரத்த உறவு கொண்ட சகோதரர்கள்.”
1857 எழுச்சியின் உச்சகட்டத்தில் பஹதூர் ஷா சஃபரை புரட்சிக்காரர்கள் மன்னராக ஏற்றுக் கொண்டதைக் குறித்து சவார்க்கர் இப்படி எழுதுகிறார்:
பஹதூர் ஷா
“எனவே, பஹதூர் ஷா சஃபரை இந்தியாவின் அரியாசனத்தில் ஏற்றியது மீண்டும் முகமதிய ஆட்சியை ஏற்படுத்தியதாகாது என்பதுதான் உண்மை. மாறாக, இந்துக்களுக்கும் முகமதியருக்கும் இடையே நடந்த நீண்ட காலப் போர் முடிவுக்கு வந்துவிட்டது, கொடுங்கோலாட்சி முடிந்தது என்கிற பிரகடனம்தான் அது. ஆகவே, இந்துக்களும் முகமதியர்களும் மே 11, 1857 அன்று தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது முதன்முதலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அவர்களது மண்ணின் பேரரசருக்கு உளப்பூர்வமான, மிகவும் விசுவாசமான வாழ்த்துகளை அனுப்பட்டும்!”
முஸ்லிம் ஆளுமைகள மட்டுமின்றி, பாமர முஸ்லிம்களையும், முல்லாக்களையும் கூட சவார்க்கர் வெகுவாகப் புகழ்கிறார். “டெல்லியில் நிறைந்து வாழும் முஸ்லிம் மக்களிடையே முல்லாக்கள் தீவிரமாகப் பணியாற்றினர். நாடு, மதம் ஆகியவற்றைக் காக்கும் லட்சியத்திற்கான போர்க்களத்தில் ரத்தம் சிந்துவதற்காக உத்தரவு வரும்வரை ஆயிரக்கணக்கான முஸல்மான்கள் உறுதியுடன் காத்திருந்தனர்.
சவார்க்கர் கடந்த காலத்தைக் குறித்துதான் எழுதினார். ஆனால் அவருடைய எச்சரிக்கைகள் தெளிவாக எதிர்காலம் குறித்தும் இருந்தன.
“இப்போதும் ஆங்கிலேயர்கள் தங்களுடைய பழைய ஏமாற்று வேலையை மீண்டும் காண்பிக்க முயற்சி செய்வார்கள். இந்துக்களை முஸல்மான்களுக்கு எதிராகவும், முகமதியர்களை இந்துக்களுக்கு எதிராகவும் போராடத் தூண்ட முயற்சி செய்வார்கள். ஆனால், அவர்களின் வலைக்குள் விழுந்து விடாதீர்கள் இந்து சகோதரர்களே! ஆங்கிலேயர்கள் தாம் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற மாட்டார்களென்று புத்திசாலியான இந்து சகோதரர்களுக்கு சொல்லத் தேவையில்லை.”
முஸல்மான்களே, நீங்கள் குரானை வணங்குபவர்களென்றால், இந்துக்களே நீங்கள் கோமாதாவை வணங்குபவர்களென்றால், உங்களுக்கிடையே இருக்கும் சிறு பிரச்சினைகளை மறந்துவிட்டு இந்தப் புனிதப் போருக்காக ஒன்றுபடுங்கள்! போர்க்களத்தில் ஒரே கொடியின்கீழ் திரண்டு, போராடி ரத்த ஆறுகளின் மூலம் ஆங்கிலேயரின் பெயரை இந்தியாவிலிருந்து கழுவி விடுங்கள்! இந்துக்கள் முகமதியர்களுடன் கைகோர்த்து இந்தப் போரில் இறங்கினால், முகமதியர்களும் நாட்டின் சுதந்திரத்திற்காகக் களத்தில் இறங்கினால், அவர்களின் தேசபக்திக்குப் பரிசாக பசுக்களைக் கொல்வது நிறுத்தப்படும்.”
அமித் ஷாவும் மோடியும் இந்த வரலாற்றைக் கூடச் சரியாகப் படிக்கவில்லை என்பதுதான் உண்மை. இன்று 1857 குறித்து எழுதியதை அவர்கள் மேற்கோள் காட்டக்கூட முடியாது. ஏனெனில் இந்திய சுதந்திரப் போரில் முஸ்லிம்களின் பங்கு என்பது அவர்கள் மூடி மறைக்க விரும்பும் வரலாறு.
முஸ்லிம்களைச் சகோதரர்கள் என்றும், பிரிட்டிஷ் ஆட்சியை எதிரிகளென்றும் பார்த்த சவார்க்கர் பின்னர் வரலாற்றையும் அரசியல் பார்வையையும் நேர்மாறாகத் திருப்பிப் போட்ட புரட்டு வேலை அந்தமான் சிறையில் துவங்கியது. ஒரு மனிதனின் வாழ்க்கையில் அரசியல் பார்வைகள் மாறுவதில் ஆச்சரியமில்லை. ஆனால், அது எந்தத் திசையில் எந்த நோக்கத்திற்காக மாறுகிறது என்பதைப் பொறுத்துதான் அதனை ஏற்றுக் கொள்வதா நிராகரிப்பதா என்று முடிவு செய்ய முடியும்; அந்த மனிதனைக் குறித்த மதிப்பீடும் இருக்கும்.
தன் வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில் ‘இந்தியாவின் ஆறு புகழ்மிகு சகாப்தங்கள்’ என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதினார். அதில் முதல் சுதந்திரப் போர் குறித்து அவர் எழுதிய புத்தகத்தில் இந்து தேசத்தின் பார்வையை முன்வைத்ததாகக் கூறுகிறார். முஸ்லிம்களின் பங்களிப்பு குறித்து எழுதியதை முழுவதும் மறைத்து விட்டார். அசோகர் வேதாந்த வழி வந்த இந்துக்களிடம் மிகவும் சகிப்புத் தன்மையின்றி நடந்து கொண்டார், திப்பு சுல்தான் என்கிற காட்டுமிராண்டித்தனமான சுல்தானை மராத்தியர்களும், ஆங்கிலேயர்களும் தோற்கடித்தனர், அக்பர் அன்னியர், இரக்கமற்றவர், சகிப்புத் தன்மையற்றவர் என்றெல்லாம் வசை பாடுகிறார்.
அவருடைய அறிவு நாணயத்திற்கு வேறு ஒரு சான்று தேவையில்லை.
சவார்க்கர் அந்தமான் சிறையிலிருந்தபோதே அவருடைய மதவாதப் பார்வை தெளிவாக வெளிப்படத் தொடங்கியது.
அந்தமான் உண்மைகள் :
அந்தமானின் தனிமைச் சிறையில் அவர் செக்கிழுப்பது போன்ற கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டார் என்பது யாரும் குறைத்து மதிப்பிட முடியாத உண்மை என்ற போதிலும் அதே போன்ற கொடுமைகளை அனுபவித்த சக சிறைவாசிகள் பிரிட்டிஷ் அரசிடம் விடுதலைக்காக மண்டியிடவில்லை என்பதும் உண்மைதான். சுபோரஞ்சன் தாஸ்குப்தா என்பவர் அது குறித்து இப்படி எழுதுகிறார்:
“வினாயக் தாமோதர் சவார்க்கர் ஒரு சுதந்திரப் போராட்டக்காரர்தான். ஆனால் சிட்டகாங் எழுச்சியில் ஈடுபட்ட புரட்சிக்காரர்களைப் போல பிரிட்டிஷாருடன் போராடி உயிர் துறக்கவில்லை; பகத்சிங், குதிராம் போஸ் ஆகியோரைப் போல பிரிட்டிஷாரை எதிர்த்து நிற்பதால் உயிரே போனாலும் சரி என்று தியாகம் செய்யவும் இல்லை. கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் அவர் வீரமாகப் போராடினாலும், ஒன்றுக்கும் மேற்பட்ட தருணங்களில் ஆட்சியாளர்களிடம் மன்னிப்புக் கோரும் அளவிற்கு அவரது உணர்வு தகர்ந்து போயிருந்தது.. அந்தமான் சிறையில் சித்திரவதை செய்யப்பட்ட பிற புரட்சிக்காரர்கள் மன்னிப்புக் கேட்பது குறித்து கனவுகூடக் காணவில்லை.”
அந்தச் சிறையில்தான் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுடன் சவார்க்கரும் பின்னர் சங்கப் பரிவாரமும் ஒத்துழைத்த கதையின் கரு உருவானது. மதம் கடந்த தேசியம் என்று அவர் பேசிய சிறிது காலத்திற்குள்ளேயே அவருக்குள் இருந்த மதவாத விஷம் வெளிப்பட்டதும் அங்குதான், இதற்கு அவர் எழுதிய The Story of My Transportation for Life என்கிற புத்தகமே சாட்சி. 1927-ல் வெளிவந்த அந்தப் புத்தகம் தடை செய்யப்பட்டது. 1947-ல் தடை நீங்கியது. சிறைக்குள்ளேயே மதரீதியான பிரிவினை வேலைகளைச் செய்தார் என்பது இந்த புத்தகத்தில் தெளிவாகிறது. சவார்க்கரின் நிலைப்பாட்டில் நிகழ்ந்த மாற்றத்திற்கு சிறையிலிருந்த முஸ்லிம் வார்டர்கள்தான் காரணம் என்று பொருள்படும்படி எழுதுகிறார் சவார்க்கர். எல்லா அரசியல் கைதிகளுக்கும் முஸ்லிம் வார்டர்கள்தான் இருந்தனர், இதனால் சக சிறைவாசிகளும், குறிப்பாக இந்துக்களும், துன்புறுத்தலுக்கு ஆளாயினர் என்கிறார்.
சிறைக்குள்ளும் மதம் மாறியவர்களைச் சுத்திகரிக்கும் ஷுத்தி இயக்கத்தை நடத்தியதாகவும், இது சிறைக்கு வெளியில் அந்தமான் தீவிலும் பரவியது என்கிறார். அவர் சொல்வது இதுதான்: “பாவிகளாகவும், கிரிமினல்களாகவும், சமூக விஷமிகளாகவும் இந்து சமூகத்தில் இருப்பவர்களை அந்தச் சமூகத்திற்குள்ளேயே வைக்க முயற்சிப்பது நேர விரயம், குழந்தைத் தனமானது என்று சொன்னால், ஆயிரம் ஆண்டுகளாக இந்து சமூகத்திற்குள் இருக்கும் சபிக்கப்பட்ட இந்தக் கீழ்மக்களை வென்றெடுக்க முஸ்லிம்கள் செய்யும் பிரச்சாரத்தை எப்படி விளக்குவது? முஸல்மான்கள் அதற்காகப் போர்களை நடத்தினர்; ஆண்களையும் பெண்களையும் வாளினால் கொன்றனர்; வீடுகளுக்குத் தீ வைத்துக்கொள்ளை அடித்தனர். சுருக்கமாகச் சொன்னால், பேரளவிலான மதமாற்றத்திற்காக அவர்கள் ஜிஹாத் என்கிற புனிதப் போரைப் பிரகடனம் செய்திருக்கின்றனர்.”
கிறிஸ்துவர்கள், முஸ்லிம்களின் மீது என் இதயத்தில் வெறுப்பில்லை; இவர்களிடையே இருந்து மற்றவர்களை ஒடுக்கி, வன்முறைக்குள்ளாக்கும் பிரிவினரை நான் முழுமனதுடன் எதிர்க்கிறேன் என்று சொன்ன சவார்க்கர் ஷுத்தி இயக்கத்தின் மூலம் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே நிரந்தரமான ஒற்றுமையை உருவாக்குவேன் என்றும் ஒரு விசித்திரமான தர்க்கத்தை முன்வைக்கிறார். ‘சுத்திகரிக்கப்பட்டு’ மீண்டும் ‘தாய் மதத்திற்கு’ வருபவர்களை எந்த ஜாதியில் சேர்த்துக் கொள்வார் என்று அவர் சொல்லவும் இல்லை, சொல்லவும் மாட்டார்.
அவ்வப்போது அன்பொழுகப் பேசும் சவார்க்கர் இதே புத்தகத்தில் மீண்டும் ஒரு குட்டிக் கரணம் அடிக்கிறார். 1914-ல் முதல் உலகப் போர் துவங்கி விட்டிருந்தது. மத்திய நாடுகள் என்று அழைக்கப்பட்ட ஜெர்மனி, ஆஸ்த்ரியா, ஹங்கேரி, பல்கேரியா, ஆட்டோமான் ஆட்சியிலிருந்த துருக்கி ஒருபுறமும், பிரிட்டன், ஃபிரான்ஸ், ரஷ்யா, இத்தாலி, ருமேனியா, ஜப்பான், அமெரிக்கா எதிரிலும் நின்றிருந்தன.
துருக்கி பிரிட்டனுக்கு எதிரணியில் இருந்ததால் சவார்க்கருக்கு பயம் வந்து விட்டது. “துருக்கி ஜெர்மனியின் பக்கமும் பிரிட்டனுக்கு எதிராகவும் இருப்பதால், உலகம் முழுவதும் பரந்த இஸ்லாமியம் வந்து விடுமோ என்று எனக்கு சந்தேகங்கள் எழுந்து விட்டன. அதனால் இந்தியாவுக்கு அபாயம் நேரும். இந்தச் சூழலில் ஜெர்மனியின் நீண்ட கை இந்தியாவை நோக்கி நீண்டு, இந்தியாவிற்கு ஒரு சிக்கலான சூழலை உருவாக்கும் என்று நான் கண்டுபிடித்து விட்டேன். இது என் திட்டங்களுக்கு உகந்த சூழல்தான். ஏனெனில், பிரிட்டன் இந்தியா கேட்கும் எல்லா உரிமைகளையும் வழங்கி விடும். போரினால் பிரிட்டனும், ஜெர்மனியும் களைத்துப் போயிருக்கும் தருணத்தில் இந்தியாவே அந்த உரிமைகளப் பறித்துக் கொள்ளலாம். ஆனால் இரண்டு வலுவான நாடுகளுக்கிடையே கடுமையான சண்டை நடக்கும் இந்தச் சூழலை இந்தியாவிலிருக்கும் முஸ்லிம்கள் ஒரு சாத்தானின் வாய்ப்பாகக் கருதி வடக்கிலிருக்கும் முஸ்லிம் கும்பல்களை ரஷ்யாவின் உதவியுடன் அழைத்து வந்து சூறையாடி விடுவார்களோ என்கிற அச்சமும் எனக்கு இருக்கிறது,” என்கிற சவார்க்கர் பிரிட்டிஷ் அரசிடம் சரணாகதி அடைவதற்குத் தயாராகிறார். இதை எழுதுவதற்குச் சில ஆண்டுகள் முன்னர் முஸ்லிம்களை நண்பர்களாகவும், பிரிட்டிஷ் அரசை எதிரிகளாகவும் சித்தரித்த சவார்க்கர் சிறைவாசத்தின்போது அப்படியே நேர் மாறாக இடம் மாற்றிப் போட்டு விடுகிறார்.
விடுதலை செய்தால் ஏராளமானவர்களை இந்திய ராணுவத்தில் சேர்த்து ஆஃப்கானிஸ்தானத்திலிருந்தும், துருக்கியிலிருந்தும் நடக்கும் படையெடுப்புகளைத் தடுக்க தன்னாலான முயற்சிகள் அனைத்தையும் செய்வதாக பிரிட்டி அரசுக்கு உறுதி மொழி கொடுக்கிறார். பிரிட்டிஷ் அரசு இந்த வாய்ப்பை நழுவவிடக்கூடாது என்றும் அறிவுறுத்துகிறார். தன் விடுதலைக்காக இப்படி எழுதிய சவார்க்கர் சக சிறைவாசிகளைக் குறித்து சொல்வதையும் பார்த்தால் ஆழமாக வேரூன்றியிருக்கும் அவருடைய போலித்தனம் வெளிப்படும். போர் செய்தியை அவர்கள் ஆர்வமாக எதிர்பார்த்திருப்பதற்கு ஆழமான காரணம் ஒன்றுமில்லை, விடுதலை கிடைக்கும் என்கிற சுயநலம்தான் காரணம் என்று சொல்கிறார். இவருடைய விடுதலை தேச நலனுக்காக; பிறருடைய விடுதலை சுயநலத்துக்காக. பாரத ரத்னாவுக்காகக் காத்திருக்கும் சவார்க்கரின் ஆவிக்கு வாழ்க்கை முழுவதும் இரட்டை வேடம்தான்!
பிரிட்டனிடம் அவர் அளித்த உறுதிமொழிக்கு விடுதலை கிடைக்கவில்லையெனினும் உடனடி பலனாகப் பதவி உயர்வு கிடைத்தது. அவர் சிறையில் எண்ணெய் டிப்போவின் ஃபோர்மேனாக ஆக்கப்பட்டார். அவருடைய உடனடி இலக்கு முஸ்லிம் சிறைவாசிகள்தாம். “நான் ஃபோர்மேனாக ஆன பிறகு முஸ்லிம்களிடமிருந்து நான் என்ன எதிர்பார்த்தேன் என்று அவர்களுக்குத் தெரியும். இந்து முறைப்படி ‘ராமா ராமா’, ‘நமஸ்கார்’, ‘வந்தே மாதரம்’ முகமன் கூறுவதில் எனக்குப் பெருமிதம் இருப்பது அவர்களுக்குத் தெரியும். நான் எண்ணைய் டிப்போவின் தலைவராக்கப்பட்டேன் என்பதைக் கண்டு பயந்து நடுங்கிய அவர்கள் என்ன விலை கொடுத்தாவது என்னை தாஜா செய்வதற்குத் தயாராக இருந்தனர்.” இவர் வீர சவார்க்கர்தான்.
ஃபோர்மேன் ஆனவுடன் வார்டர்களை நீக்கி விட்டு இந்துக்களை அந்தப் பதவியில் நியமித்தார்.
அந்தமான் சிறை தொடர்பான ஆவணங்களில் தேசியத்திலிருந்து மதவாதத்திற்கு சிறைவாசிகள் (சவார்க்கர் தவிர) மாறியதாகவோ, இந்து சிறைவாசிகளை முஸ்லிம் வார்டர்கள் மோசமாக நடத்தியதாகவோ எந்தக் குறிப்பும் இல்லை என்று அறிஞர் ஏ.ஜி. நூரானி எழுதுகிறார்.
அந்தமானில் ஷுத்தி மற்றும் கல்வி தொடர்பான இயக்கங்களை மேற்கொள்ளத் தன் புதிய பதவி உதவியதாக சவார்க்கர் எழுதுகிறார். இந்தியைத் தேசிய மொழியாகப் பிரச்சாரம் செய்யவும் இதனால் வாய்ப்பு ஏற்பட்டதென்றும் கூறுகிறார்: “நாம் ஜெர்மானிய மொழியைக் கற்பது போலவே இந்தியையும் கற்க வேண்டும். ஆனால் ஒரு தாய்மொழியாகவோ அல்லது தேசிய மொழியாகவோ அந்தமானின் இந்து கலாச்சாரத்தில் இடமிருக்கவில்லை. அந்தமானுக்கு உருது தவிர வேறு மொழி தெரியவில்லை. இந்துப் பெண்கள் பேசிக்கொண்டிருக்கும்போதுகூட திருமணம் என்பதைக் குறிக்க ஷாதி என்கிற சொல்லைத்தான் இயல்பாகப் பயன்படுத்துகின்றனர். அதற்கு இணையான சமஸ்கிருதச் சொல்லையோ, இந்தி சொல்லையோ அவர்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் இன்று அற்புதமான ஒரு மாற்றம் அங்கு நிகழ்ந்திருக்கிறது. இந்துஸ்தான் மற்றும் இந்து கலாச்சாரத்தின் பாதுகாப்பையும் மேலாண்மையையும் பாதுகாத்து அந்தமானின் முக்கியத்துவத்தையும், எதிர்காலத்தையும் மேம்படுத்த வேண்டுமெனில் இந்தியும், நாகரியும் அங்கு கட்டாயமாக்கப்பட வேண்டும்” என்கிறார் அவர். இன்று வரை இவர்கள் மாறவில்லை.
பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் ரகசியமாக சமரசம் பேசிய சவார்க்கர் தன்னுடன் இருந்த பிற அரசியல் கைதிகளையும் இழிவுபடுத்துகிறார். அதிகாரிகளின் அழைப்புக்கும் கட்டளைக்கும் காத்திருந்த அவர்கள் அவர்களுக்கு அடிமை போலிருந்தனர் என்கிறார் இந்த வீர். இதைச் சொல்பவர் சவார்க்கரின் மீது பரிவு கொண்ட வரலாற்றியலாளர் ஆர்.சி. மஜூம்தார்.
“சவார்க்கர் இப்படிச் சொல்வது மிகவும் சீரியஸான குற்றச்சாட்டு. பிற அரசியல் கைதிகள் அப்படி நடந்து கொண்டனர் என்று சவார்க்கர் சொல்வதை உறுதி செய்ய நமக்கு வழியில்லை. சவார்க்கர் தன் கருத்தை நிரூபிக்க ஆதாரமும் கொடுக்கவில்லை” என்று மஜும்தாரே வருத்தப்படுகிறார்.
அதே மஜூம்தார் அந்தமான் சிறையில் நடந்த ஒரு வேலை நிறுத்தத்தின்போது சவார்க்கர் செய்த துரோகத்தையும் பதிவு செய்கிறார். 1916 முதல் 1920வரை அந்தமான் சிறையிலிருந்த ட்ரைலோக்ய நாத் சக்ரவர்த்தி தன்னுடைய சுயசரிதையில், “சவார்க்கரும் அவருடைய சகோதரரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுமாறு எங்களை ரகசியமாக ஊக்குவித்து விட்டுப் பின்னர் அவர்களே அதில் கலந்துகொள்ளவில்லை” என்று எழுதியிருப்பதை மஜூம்தார் சுட்டிக் காட்டுகிறார்.
இது குறித்து சவார்க்கர் அளித்த விளக்கம் இன்னமும் சிறப்பானது. “நாங்கள் பகிரங்கமாக வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு அளித்திருந்தால் அதை வாய்ப்பாகப் பயன்படுத்தி அதிகாரிகள் சிறை விதிகளின்படி எங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த சலுகைகளைத் திரும்பப் பெற்றுக் கொண்டு என்னை மீண்டும் தனிமைச் சிறையில் அடைத்திருப்பார்கள். எனவே எங்களிடையே இருந்த இளைஞர்களும் வலுவானவர்களும் அந்தச் சுமையை ஏற்றுக் கொள்வதுதான் நல்லது. மேலும் இந்தியாவிற்குக் கடிதம் அனுப்பும் என் உரிமையும் பறி போயிருக்கும்” என்றார் வீர்.
கருணை மனு, சரணாகதி, ஒத்துழைப்பு :
ஆனால் இதையெல்லாம் விஞ்சும் வகையில் இருந்தது அவர் சிறையிலிருந்து எழுதிய மன்னிப்பு மனுக்களும் அதன் வாயிலாக பிரிட்டிஷ ஆட்சியாளர்களுடன் சமரசமும், அவர்களுடன் ஒத்துழைப்பதாக அவர் அளித்த உறுதிமொழிகளும்.
சிறைக்கு வந்து ஒரு ஆண்டு முடியும் முன்னரே பிரிட்டிஷ் அரசுக்கு ஒரு கருணை மனுவை அனுப்பினார் சவார்க்கர். ஆனால் அதில் என்ன எழுதியிருந்தார் என்கிற விவரங்கள் கிடைக்கவில்லை. இப்படி ஒரு மனுவை அவர் எழுதிய விவரமே நவம்பர் 14, 1913 அன்று எழுதிய மனுவிலிருந்துதான் தெரிய வந்தது. இரண்டாவது மனு இப்படிச் செல்கிறது:
“இறுதியாக, நான் 1911-ல் அனுப்பிய மன்னிப்பு மனுவை நல்ல மனது வைத்துப் படித்துப் பார்க்க வேண்டுமென்று மேன்மை தாங்கிய உங்களுக்கு நினைவுபடுத்தி அந்த மனுவை இந்திய அரசுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளலாமா? இந்திய அரசியலின் இன்றைய நிகழ்ச்சிப் போக்கில் அரசியலமைப்புச் சட்டரீதியான நிலைப்பாட்டை அரசாங்கம் முன்வைத்திருக்கிறது. 1906–07-ல் நிலவிய பதட்டமான, நம்பிக்கையற்ற இந்தியச் சூழலினால் ஏமாந்துபோய் நாங்கள் அமைதியான முன்னேற்றப் பாதையிலிருந்து விலகி முட்கள் மண்டிய பாதைகளில் சென்றது போல் இன்று, இந்தியா மற்றும் மனிதகுலத்தின் நன்மையை மனதில் கொண்ட யாரும் கண்ணை மூடிக் கொண்டு செல்ல மாட்டார்கள். எனவே, அரசாங்கம் அளவில்லாத அறத்தையும் கருணையையும் காட்டி என்னை விடுதலை செய்தால் நான் அரசியலமைப்பு சட்டரீதியான முன்னேற்றத்துக்காகவும், அந்த முன்னேற்றத்துக்கு முன்நிபந்தனையான ஆங்கிலேய அரசின்பால் காட்ட வேண்டிய விசுவாத்துக்காகவும் தீவிரமாக வாதிடுபவனாக இருப்பேன். நான் என் சக்திக்கு உட்பட்ட வகையில் எந்த விதத்தில் வேண்டுமானாலும் அரசுக்குச் சேவகம் செய்யத் தயாராயிருக்கிறேன். பெற்றோரின் வீட்டுக்குத் திரும்புவதைத் தவிர ஊதாரி மகனுக்கு என்ன வழி?”
மார்ச் 30, அன்று மீண்டும் ஒரு கருணை மனுவை அளித்தார் சவார்க்கர். அதில்,
“காலம் கடப்பதற்கு முன் என்னுடைய கோரிக்கையை சமர்ப்பிப்பதற்கு ஒரு இறுதி வாய்ப்பைத் தருமாறு” கெஞ்சினார். அரவிந்த கோஷின் சகோதரர் உட்பட தன் சக சிறைவாசிகளைக் காட்டிக் கொடுக்கும் வகையிலும் அதில் ஒரு வாசகம் இருந்தது.
“போர்ட்பிளேரில் இருக்கும்போதே அவர்கள் தீவிரமான சதி செய்ததாக ஒரு சந்தேகம் இருந்தது. அந்த வகையான தீவிரவாத சிந்தனையிலிருந்து நான் வெகுதூரம் தள்ளியிருக்கிறேன். கடந்த காலத்தில் என்னிடமிருந்த புரட்சிகர மன நிலையைப் பொறுத்த வரையில் நான் கூறுவது இதுதான். இப்போது மன்னிப்புக்காக மட்டுமின்றி, பல ஆண்டுகளுக்கு முன்பே நான் அரசுக்கு எழுதிய மன்னிப்புக் கடிதங்களில், அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் பணியை திரு மாண்டேகு தொடங்கியவுடனே அச்சட்டத்திற்கு ஆதரவாக இருக்கவும், அதற்கு இணங்கி நடக்கவும் உறுதியான எண்ணத்தில் இருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறேன். மாண்டேகு சீர்திருத்தங்களும் அது குறித்து பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் செய்யப்பட்ட பிரகடனமும் என்னுடைய கருத்துகளை உறுதி செய்திருக்கின்றன; இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டப் படியான முன்னேற்றத்தை முறையாகச் செய்யும் முயற்சியில் எனக்கு நம்பிக்கை இருக்கிறதென்றும் அதற்கு நான் ஆதரவாக இருப்பேனென்றும் பகிரங்கமாக உறுதியளித்திருக்கிறேன்.”
மேலும், “அரசியலமைப்புச் சட்டரீதியான பாதையில் நடப்பேன் என்கிற என் சீரிய நோக்கத்தை உண்மையுடன் வெளிப்படுத்துகிறேன்; என் அன்பையும், மரியாதையையும், பரஸ்பர உதவியையும் காட்டும் வகையில் பிரிட்டிஷ் ஆளுகைக்கு கை கொடுக்க எளியவனான நான் அனைத்து முயற்சிகளையும் செய்வேன். பிரகடனத்தில் கூறப்பட்டிருப்பது போல் அமையப் போகும் ஒரு பேரரசுடன் மனப்பூர்வமாக இணங்கி நடப்பேன்.”
இப்படிப் பேசும் சவார்க்கர், முடிவாகச் சொன்னது இதுதான்:
“அரசாங்கம் குறிப்பிட்டுச் சொல்லும் ஒரு உறுதியாக நிர்ணயம் செய்யப்பட்ட, நியாயமான காலம் வரை நானும் எனது சகோதரரும் அரசியலில் பங்கேற்க மாட்டோம் என உறுதிமொழி அளிக்க முற்றிலும் தயாராக இருக்கிறோம். இது தவிர, நாங்கள் விடுதலை செய்யப்பட்டவுடன் நிர்ணயம் செய்யப்பட்ட காலம் வரை ஒரு குறிப்பிட்ட பகுதியில் தங்கியிருப்பது, எங்கள் நடமாட்டங்களின் விவரங்களைப் போலீசுக்குத் தெரிவிப்பது, அரசின் பாதுகாப்பை உறுதி செய்யும் உண்மையான நோக்கத்துடன் விதிக்கப்படும் இத்தகைய நிபந்தனைகளை நானும் என் சகோதரரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வோம்.”
சவார்க்கரின் கருணை மனுக்களை அரசாங்கம் நிராகரித்தது. மே 2, 1921 அன்று சவார்க்கரும் அவருடைய சகோதரர் கணேஷும் இன்றைய மஹாராஷ்டிரத்திலுள்ள ரத்னகிரி சிறைக்கும், பின்னர் எரவாடா சிறைக்கும் மாற்றப்பட்டனர். இறுதியாக ஜனவரி 6, 1924 நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டார். அந்த நிபந்தனைகள்:
பம்பாய் கவர்னரின் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களிலும், ரத்தினகிரி மாவட்டத்திற்குள்ளும், குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசங்களிலும் அவர் தங்கியிருக்க வேண்டும்.; அரசாங்கத்தின் அனுமதியின்றியும், அவசரமாக இருந்தால் மாவட்ட மாஜிஸ்ட்ரேட் அனுமதியின்றியும் மாவட்டத்தின் எல்லைகளைத் தாண்டிச் செல்லக் கூடாது; ஐந்து வருட காலத்திற்கு அரசாங்கத்தின் ஒப்புதலின்றி அரசியல் நடவடிக்கைகளில் தனிப்பட்ட முறையிலும், பொதுவாகவும் பங்கேற்கக் கூடாது; குறிப்பிட்ட இந்தக் காலம் முடியும் போது மீண்டும் இத்தகைய தடைகளை மீண்டும் பிறப்பிப்பது குறித்து அரசாங்கம் முடிவு செய்யும்.
அவரை விடுதலை செய்யும் ஆவணம் இப்படிக் கூறியது:
“இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதாக சவார்க்கர் ஏற்கனவே கூறிவிட்டார். மேலும் பின்வரும் அறிக்கையையும் அவர் சமர்ப்பித்தார் (அப்படிச் சமர்ப்பிப்பது அவருடையை விடுதலைக்கான நிபந்தனை அல்ல என்பதை அவருக்குத் தெளிவுபடுத்திய பின்னரும்): “என் வழக்கில் நேர்மையான விசாரணை நடந்து நியாயமான தண்டனை வழங்கப்பட்டது என்று நான் இதன் மூலம் பதிவு செய்கிறேன். கடந்து சென்ற நாட்களில் நான் நடத்திய வன்முறைச் செயல்களை நான் மனப்பூர்வமான வெறுக்கிறேன்; என் சக்தி முழுமையையும் பயன்படுத்தி சட்டத்தையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் உயர்த்திப் பிடிப்பது என் கடமையென நினைக்கிறேன்; எதிர்காலத்தில் அரசியலமைப்புச் சட்டச் சீர்திருத்தங்களை வெற்றிபெறச் செய்வதற்கு எனக்கு அனுமதியளிக்கப்பட்ட அளவிற்கு உதவுவேன்.”
அந்தமானில் கொடுமைகளை அனுபவித்த சிறைவாசிகள் அவற்றை எப்படி எதிர்கொண்டனர்? அது குறித்து சவார்க்கரே இப்படிச் சொன்னதாக மஜும்தார் எழுதுகிறார்: “அவர்களில் ஒருவர் 60 வயதான சீக்கிய அரசியல் கைதி சர்தார் சோஹன் சிங். மற்றொருவர் ராஜபுத்திர இனத்தைத் சேர்ந்த பஞ்சாபிய இளைஞர் பிரித்வி சிங். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அவர்கள் ஒரு வாய் சோறு கூட இல்லாமல் 12 நாட்கள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டனர். கடைசியில் சிறை நிர்வாகம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டோரின் அனைத்துக் கோரிக்கைகளும் அடங்கிய மனுவை அவர்களிடமிருந்து ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. இதைத் தொடர்ந்து சோஹன் சிங் வேலை நிறுத்தத்தை திரும்பப் பெற்றுக் கொண்டார். ஆனால் பிரித்வி சிங் மேலும் 12 நாட்களுக்குத் தன் போராட்டத்தைத் தொடர்ந்தார்.”
சிறையில் இருந்தபோதே சக சிறைவாசிகளைக் காட்டிக் கொடுக்கும் வேலையைச் செய்து தன் விடுதலைக்கு ஏங்கிய சவார்க்கரின் அரசியல் வாழ்வு முழுவதும் அப்படியே தொடர்ந்தது. கொலைச் சதிகளில் பங்கேற்று அவை நிறைவேறும் தருணத்தில் தப்பித்துக் கொண்ட வரலாற்றினை இனி பார்ப்போம்.
மஹாரஷ்டிர மாநிலத்தின் நாசிக் மாவட்டத்திலிருக்கும் பாகூரில் மே 28, 1883இல் பிறந்த வினாயக் தாமோதர் சவார்க்கருக்கு பாபாராவ் என்றைழைக்கப்பட்ட கணேஷ், நாராயண் என்று இரு சகோதரர்கள். கல்லூரியில் படிக்கும்போது இவர்கள் நடத்திய அமைப்பின் பெயர் அபினவ் பாரத் சொசைட்டி. இந்திய சுதந்திரத்திற்காகப் போராடுவதுதான் அதன் நோக்கம்.
பாரிஸ்டர் பட்டப் படிப்புக்காக சவார்க்கர் லண்டன் சென்றிருந்த நேரத்தில் மஹாராஷ்டிராவில் அபினவ் பாரத் நடத்திய சிறிய வெடிகுண்டுத் தொழிற்சாலைகளும் கிடங்குகளும் கண்டுபிடிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து ஜூன் 8, 1909 அன்று தேசத் துரோக குற்றத்துக்காகக் கணேஷ் சவார்க்கர் கைது செய்யப்பட்டார். இது நடந்து சில நாட்களுக்குள்ளேயே வினாயக் சவார்க்கர் லண்டனில் இருக்கும் இந்தியா ஹவுஸில் தேசத் துரோக உரையாற்றியதாக உளவுத் துறை இந்தியாவில் பயங்கரவாதம் என்கிற தலைப்பில் தயாரித்த ஆவணம் கூறுகிறது. அந்த அறிக்கை மேலும் கூறியதாவது: “சவார்க்கர் இந்த உரையை ஆற்றிய 12 நாட்களுக்குள் பிரிட்டிஷ் அதிகாரியான கர்னல் சர் வில்லியம் கர்சன் வைலி என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அதே ஆண்டு டிசம்பர் மாதம், கணேஷ் சவார்க்கர் மீது வழக்குத் தொடுத்த நாசிக் மாவட்ட மாஜிஸ்ட்ரேட் எம்.டி. ஜாக்சன் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் மூன்று பேருக்குத் தூக்கு தண்டனையும், 27 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப் பட்டது.” ஆயுள் தண்டனை பெற்றவர்களுள் ஒருவரான கணேஷ் சவார்க்கர் அந்தமான் சிறைக்கு அனுப்பப் பட்டார். (ஆர்.எஸ்.எஸ்.சின் ஸ்தாபர்களுள் ஒருவர் இவர்)
ஜுலை 1, 1909 அன்று வில்லியம் கர்சன் வைலியைச் சுட்டுக் கொன்றவர் மதன் லால் திங்க்ரா. அவருடைய உண்மையான இலக்கு முன்னாள் இந்திய வைஸ்ராயான கர்சன் பிரபுதான். கர்சன் பிரபு அதிர்ஷ்டவசமாகத் தப்பி விட்டார். லண்டனில் உள்ள இம்பீரியல் இன்ஸ்டிடியூட்டில் இந்திய தேசிய அசோஷியேஷன் என்கிற அமைப்பின் ஆண்டு விழாக் கூட்ட முடிவில் இந்தப் படுகொலை நடந்தது. சவார்க்கரின் வாழ்க்கை வரலாறை எழுதிய தனஞ்சய் கீர் திங்க்ராவைக் குறித்து இப்படி எழுதுகிறார்:
“மதன்லால், சவார்க்கரின் விசுவாசம் மிக்க ஆதரவாளர். வைலி கொலை செய்யப் படுவதற்குச் சில நாட்கள் முன்பு, அவர் உயிர்த் தியாகம் செய்வதற்கான நேரம் வந்து விட்டதா என்று சவார்க்கரிடம் கேட்டார். சவார்க்கரிடமிருந்து பொறித்து வைத்தது போல் பதில் வந்தது: ‘ஒரு தியாகி உறுதியோடும் தயாராகவும் இருந்தால் அதுவே உயிர்த் தியாகத்திற்கான நேரம் வந்து விட்டதென்பதையே உணர்த்துகிறது.’ இந்தியாவின் முன்னாள் வைஸ்ராயான கர்சன் பிரபுதான் திங்க்ராவின் உடனடி இலக்கு.”
1950இல் வெளிவந்தபோது சில உண்மைகளை அப்போது எழுதவில்லை. சவார்க்கர் இறந்த பிறகு ராபர்ட் பாய்ன் என்கிற எழுத்தாளரிடம் அவர் சொன்ன உண்மைகள் அதிர்ச்சியளிக்கக் கூடியவை. ராபர்ட் பாய்ன் அது குறித்து எழுதியது இதுதான்:
“வைலியின் படுகொலைக்குத் தானே காரணம் என்று தனஞ்சய் கீரிடம் அவர் கூறினார். நிக்கல் பட்டை வைத்த துப்பாக்கியை மதன்லால் திங்க்ராவிடம் கொடுத்த சவார்க்கர், “இந்த முறை தோற்றால் உன் முகத்தை என்னிடம் காட்டாதே,’ என்று கடுமையாகச் சொன்னார்… லண்டன் மாநகர போலீஸ் இந்தக் குற்றத்தில் சவார்க்கருக்குப் பங்கு இருக்கிறது என்று உறுதியான சந்தேகம் கொண்டிருந்தது ஆனால் அவரைத் தண்டிக்க போதுமான ஆதாரம் இல்லை. அவர் இறுதியாக தண்டிக்கப்பட்டது நாசிக்கில் நடந்த ஜாக்சன் கொலை வழக்கில்தான். அவருக்கு அந்தமான் சிறையில் ஆயுள் தண்டனை என்று தீர்ப்பளிக்கப்பட்டது.”
சவார்க்கர் உயிரோடிருக்கும் வரை முதல் இரண்டு கொலை வழக்குகள் தொடர்பாகத் தனக்குத் தெரிந்த உண்மைகளை எழுதாத கீர், அவர் இறந்த பிறகு வெளியிட்ட தன் புத்தகத்தின் இரண்டாவது பதிப்பில் (1966) இப்படிச் எழுதினார்: “திங்க்ரா இந்திய விடுதலைக்காக உயிர்த் தியாகம் செய்யும் நாளுக்காக அவரைப் பல மாதங்கள் ஆயத்தப் படுத்தினார் சவார்க்கர். திட்டமிட்டபடி கர்சன் பிரபுவை திங்க்ரா கொல்லத் தவறியதை மீண்டும் மீண்டும் குத்திக் காண்பித்துக் கொண்டிருந்தார் அவர். சர் கர்சன் வைலி கொல்லப்பட்ட அன்று காலை திங்க்ராவிடம் ஒரு நிக்கல் பட்டை பதித்த துப்பாக்கியைக் கொடுத்த சவார்க்கர், ‘இந்த முறை நீ தவறினால் உன் முகத்தை என்னிடம் காட்டாதே,” என்று கூறினார். திங்க்ரா கைது செய்யப்பட்டபோது அவரிடமிருந்து தன்னை வழக்கிலிருந்து காப்பாற்றும் வகையில் எழுதப்பட்ட ஒரு தாள் கைப்பற்றப்பட்டது. அதில் சவார்க்கர் கைப்பட எழுதியது.
நாசிக்கில் ஜாக்சன் ஷாரதா என்கிற மராத்தி நாடகத்தைக் கண்டு கொண்டிருக்கும் அவரைச் சுட்டுக் கொன்றவர் ஆனந்த் கான்ஹேரே. அவருடன் கூட்டுச் சதியில் ஈடுபட்ட சிலரும் கைது செய்யப்பட்டனர். சாவர்க்கர் எழுதிய ஒரு கடிதமும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டது. கான்ஹேரே பயன்படுத்திய ப்ரவுனிங் துப்பாக்கியும் சவார்க்கரிடமிருந்து வந்தது என்று தெரியவந்தது. மார்ச் 13, 1920 அன்று அவர் லண்டனில் கைது செய்யப் பட்டார். அவர்மீது வைக்கப் பட்ட குற்றச்சாட்டுகள்: இந்தியாவை ஆளும் பிரிட்டிஷ் அரசருக்கு எதிராகப் போர் தொடுத்தார்; பிரிட்டிஷ் இந்தியாவின் மீது அரசருக்கு இருக்கும் இறையாண்மையைப் பறிக்க சதி செய்தார்; ஆயுதங்களைச் சேகரித்து, வினியோகம் செய்து, ஜாக்சனைக் கொலை செய்யத் தூண்டினார், லண்டனில் அவர் தங்கியிருந்த காலத்தில் ராஜத்துரோக உரைகளை ஆற்றினார். இந்தியாவிலிருக்கும் தன் சகாக்களுக்கு 20 ப்ரவுனிங் துப்பாக்கிகளைக் கொடுத்ததாகவும் ஒரு குற்றச்சாட்டு இருந்தது.
அவரை இந்தியாவுக்குக் கொண்டு வந்த கப்பல் பிரான்சின் மார்செயில்ஸ் துறைமுகத்தில் நின்றிருந்தபோது இரண்டு காவலர்களின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு கப்பலின் பக்கவாட்டு ஜன்னல் வழியே தப்பித்தது அவர் ஒரு வீரராகப் புகழப்படுவதற்கு முக்கியக் காரணம். அவர் பிரான்ஸ் நாட்டில் தஞ்சம் கேட்கும் எண்ணத்துடன் நீந்திக் கரை சேர்ந்தவுடனே மீண்டும் கைது செய்யப்பட்டார். பம்பாய் உயர்நீதிமன்றத்தின் 69 நாட்கள் அவர் தொடர்பான இரண்டு வழக்குகள் நடந்தன. டிசம்பர் 24, 1910 அன்று வந்த முதல் வழக்கில் அவருக்கு அந்தமான் சிறையில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
அவரது சொத்துக்கள் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்டது. இரண்டாவது வழக்கில் ஜனவரி 23, 1911இல் வந்த தீர்ப்பின்படி 50 ஆண்டு சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது. இரண்டு தண்டனைகளையும் ஒரே நேரத்தில் அனுபவிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று அவர் எழுப்பிய கோரிக்கை சிறைவாசத்தைக் குறைக்கும் நோக்கத்துடன் நிராகரிக்கப் பட்டது. ஜூலை 4, 1911இல் அவர் அந்தமானிலிருக்கும் போர்ட் பிளேயர் சிறைக்குக் கொண்டு வரப்பட்டார்.
விடுதலைப் போராட்டத்தில் தீவிரவாத நடவடிக்கை என்பதை ஏற்றுக் கொண்டாலும் அவர் மற்றவர்களின் கைகளில் ஆயுதங்களைக் கொடுத்து தான் தப்பிக்கும் வகையில் செயல்பட்டார் என்பதுதான் அவர்மீது குற்றச்சாட்டு. பகத்சிங், குதிராம் போஸ் போன்றோர் அவர்களே நேரடியாக தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டனர் என்பதை ஒப்பிடும்போதுதான் சவார்க்கரின் தந்திரம் தெளிவாகப் புரியும்.
(தொடரும்)
***
(இந்த நீண்ட கட்டுரையின் பெரும்பகுதி அறிஞர் ஏ.ஜி. நூரானி எழுதிய இரு புத்தகங்களிலிருந்து தொகுக்கப்பட்டவை. அவை: 1. Savarkar and Hindutuva: The Godse Connection; 2. The RSS: A Menace to India.
உயிர்மை இதழுக்காக நான் சவார்க்கர் குறித்து ஒரு கட்டுரை எழுதுவதற்கு இந்தப் புத்தகங்களிலிருந்து விவரங்களையும் மேற்கோள்களையும் எடுத்துக்கொள்ள மிகுந்த மகிழ்ச்சியுடன் அனுமதி தந்த அவருக்கு நன்றி. கட்டுரையில் இருக்கும் மேற்கோள்களின் மொழிபெயர்ப்பு என்னுடையது)
நவம்பர் 2019உயிர்மை மாத இதழுக்கு ஆர்.விஜயசங்கர் அவர்கள் எழுதிய கட்டுரை.
இந்திய ஒன்றியத்தின் பல்வேறு தேசிய இனங்கள் தத்தம் தனித்த தேசிய வளங்களுடன், அது சார்ந்த சமூக, பொருளியல் மற்றும் பண்பாட்டு உறவுகளுடன் இயங்கி வருகின்றன. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே நகர நாகரீகம் கண்டு தழைத்தோங்கிய தமிழ்ச் சமூகம் அதன் ஊடாக மொழி, கல்வி, மருத்துவம், இலக்கியங்கள், அறிவியல், அறம் என தேர்ந்த பட்டறிவின் மூலம் பல்வேறு துறைகளில் பல நிலை முன்னேற்றத்தை கண்ட இனமாக இருந்தது என்பது வரலாறு நமக்கு உணர்த்தும் பாடம்.
தமிழினத்தின் முதன்மையான அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் நம் சித்த மருத்துவமும் இதையே பறைசாற்றுகிறது. இந்திய ஒன்றியத்தில் தனக்கென ஒரு தனி மருத்துவத்தைக் கடுமையான பார்ப்பனிய ஊடுருவலைத் தாண்டி, தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதில் தமிழ்ச் சமூகம் தனிச்சிறப்பை பெற்றிருக்கின்றது. “உணவே மருந்து, மருந்தே உணவு” என்ற வாழ்வியல் மருத்துவ அறநெறியை தனது மருத்துவத்தின் தனித்தன்மையாகக் கொண்டிருகின்ற சித்த மருத்துவம் எனும் தமிழ் மருத்துவம் இன்று எப்படி படிப்படியாக, கார்ப்பரேட் நலன்களுக்கு சமஸ்கிருதத்தின் வழி பலியிடப்படுகிறது என்பதை இந்நூல் சரியாக அம்பலப்படுத்துகிறது. ‘தமிழ்ச் சமூகம்’ எப்படி வாழ்ந்தது என்பதைவிட என்னவாக இருக்கின்றது என்ற பார்வையும், அதற்கான அரசியலும் மிக அவசியமானது.
முடக்கப்பட்டு வரும் தமிழ் மருத்துவத்தைக் காப்பதற்கு மருத்துவத்தைத் தொடர்ந்து நாசமாக்கி வரும் கார்ப்பரேட் காவி கட்டமைப்பை எதிர்த்து களம் காண்பதற்கு இந்நூல் ஒரு கருவியாகப் பயன்படும் என உறுதியாக நம்புகிறேன். இந்நூலை வெளிக்கொண்டு வந்திருக்கின்ற பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழுவிற்கு (நெல்லை) எனது வாழ்த்துக்கள். (தொ. பரமசிவன், (மேனாள் தமிழ் துறைத் தலைவர், ம. சு. பல்கலைக்கழகம், திருநெல்வேலி), அவர்கள் எழுதியுள்ள மதிப்புரையிலிருந்து…)
மருந்து நிறுவனங்கள் நோய்களுக்கான மருந்துகளை தயாரிப்பதற்கான அடிப்படை மூலக்கூறுகளை இயற்கையிடமிருந்தே பெறுகின்றன. அவற்றைத் தன்னுடையச் சொத்தாக அறிவுசார் சொத்துடைமைச் சட்டத்தின் மூலம் பாதுகாத்துக் கொள்வதின் வாயிலாகக் கொள்ளை லாபம் ஈட்டுகின்றன. பல நூற்றாண்டுகளாக மனித சமூகம் இயற்கையுடன் நடத்திய போராட்டத்தின் மூலமும் நோய்களுக்கான சரியான மருந்துகளையும் உணவு முறைகளையும் கண்டறிவதற்கான போராட்டத்தின் மூலமும் பெற்ற அறிவை சித்த மருத்துவம் போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகள் பாதுகாத்து வைத்துள்ளன. அதனை நவீன அறிவியல் – தொழில்நுட்ப உதவியுடன் ஆராய்ந்து பெரும்பான்மை மக்களுக்கானதாக்க முடியும். எதார்த்தத்திலோ இந்திய மருத்துவச் சந்தை ஏகாதிபத்தியங்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. சித்த மருத்துவமோ பார்ப்பனிய மேலாதிக்கத்தினால் தொடர்ந்து நசுக்கப்பட்டு கொண்டே வருகிறது. இந்தக் கார்ப்பரேட் – காவி கூட்டுப் பிடியிலிருந்து சித்த மருத்துவம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவத்தை மீட்பதென்பது பெரும்பான்மை மக்களுக்கான தரமான மருத்துவக் கட்டமைப்பை உருவாக்குவதில் ஒரு முக்கியப் பணியாகும். இவ்வகையில் இந்நூல் சித்த மருத்துவம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவ முறைகளும் இந்திய மருத்துவ சந்தையும் கார்ப்பரேட்- காவிக் கும்பலின் பிடியில் சிக்கியுள்ளது எவ்வாறு? என்பது பற்றிய கண்ணோட்டத்தை வாசகர்களுக்கு உருவாக்கும் என்று நம்புகிறோம்.
இந்நூலின் முதற்பகுதியில் இந்திய மருத்துவச் சந்தையை ஏகாதிபத்தியங்கள் கட்டுப்படுத்துவது குறித்து விளக்கப்பட்டுள்ளது. இரண்டாவது பகுதி சித்த மருத்துவம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவம் எவ்வாறு பார்ப்பனியமாக்கப்படுகிறது என்பதை விளக்குகிறது. இறுதியில் 1920, 1955-ம் ஆண்டுகளில் சித்த மருத்துவம் குறித்து பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்நூல் உருவாக்கத்திற்கு உறுதுணையாய் இருந்த பேராசிரியர்கள் மற்றும் நண்பர்களுக்கு CCCE-ன் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். (நூலின் பதிப்புரையிலிருந்து…)
பக்கங்கள் : 32 விலை: ரூ.25.00
நவீன காலனியாதிக்கத்தின் தோற்றம் !
ஏகாதிபத்திய காலனியாதிக்கத்தின் சூறையாடலுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் உலகெங்கும் தீவிரமடைந்து வரும் சூழலில், நவீன காலனியாதிக்கத்தைப் பற்றிய தொகுப்பான புரிதல் நமக்கு அவசியமாகியுள்ளது. இதற்கு உதவும் வகையில், மார்க்சிய அரசியல் – பொருளாதாரக் கண்ணோட்டத்தில், ஏகாதிபத்தியத்தின் நவீன காலனியாதிக்கத்தைப் பற்றி தோழர் பி.ஜே. ஜேம்ஸ் “நவீன காலனியக் கட்டத்தில் ஏகாதிபத்தியம்” (Imperialism in the Neo colonial Phase) என்ற நூலை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.
இந்நூலின் முதல் அத்தியாயமான, நவீன காலனியாதிக்கத்தின் தோற்றம்” (Genesis of Neo colonialism) என்ற பகுதியை மட்டும் மொழியாக்கம் செய்து வெளியிடுகிறோம். இப்பகுதியைத் தமிழில் வெளியிட ஒப்புதல் அளித்த மாஸ் லைன் பதிப்பகத்தாருக்கு (Massline Publication) எமது நன்றி.
தோழர் ஜேம்ஸ் எழுதியுள்ள இந்நூலின் முதல் அத்தியாயமானது, நிலப்பிரபுத்துவத்திலிருந்து முதலாளித்துவமும், முதலாளித்துவத்திலிருந்து ஏகாதிபத்தியமும் காலனியாதிக்கமும் வளர்ச்சியடைந்துள்ளதைப் பற்றி வரலாற்று ரீதியாகவும் கோட்பாட்டு ரீதியாகவும் விரிவாகத் தொகுத்தளிக்கிறது. தலைமை தாங்கும் ஏகாதிபத்திய வல்லரசாக வளர்ந்துள்ள அமெரிக்காவின் காலனியாதிக்கக் காட்டுமிராண்டித்தனங்களையும், உலகையே அடிமைப்படுத்திவரும் நிதி மூலதனம் மற்றும் நிதியாதிக்கக் கும்பல்களின் வளர்ச்சியையும் விளக்குவதோடு, சமூக – பொருளாதாரக் கட்டமைப்பு என்ற வகையில் முதலாளித்துவத்தின் தோல்வியையும், கீனிசியவாதம் உள்ளிட்ட அதன் சித்தாந்த – கோட்பாட்டு ஓட்டாண்டித்தனத்தையும் அம்பலப்படுத்திக் காட்டுகிறது. முதலாளித்துவம், ஏகாதிபத்தியம், காலனியாதிக்கம் பற்றியும், அவற்றின் இரத்தம் தோய்ந்த வரலாறையும் கற்றறிய முயற்சிக்கும் இளைய தலை முறையினருக்கு, ஒருங்கிணைந்த கண்ணோட்டத்தைத் தரும் ஒரு பாடப்புத்தகம் போல இந்த அத்தியாயம் எளிமையாக விளக்குகிறது.
ஏகாதிபத்தியத்துக்கும் நவீன காலனியாதிக்கத்துக்கும் எதிராகப் போராடிவரும் புரட்சிகர – ஜனநாயக சக்திகளுக்கு இந்நூல் பெரிதும் பயனளிக்கும் என்று நம்புகிறோம். (நூலுக்கான பதிப்புரையிலிருந்து…)
தோழர் பி.ஜே.ஜேம்ஸ், தற்போது இ.பொ.க. (மா-லெ), ரெட் ஸ்டார் குழுவின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினராக இயங்கி வருகிறார். இதற்குமுன் அவர் பொருளாதாரத் துணைப் பேராசிரியராகப் பணியாற்றினார். கேரளத்தின் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் கல்விச்சாலையில் அவர் முனைவர்ர பட்டம் பெற்றுள்ளார். ”நேரு முதல் ராவ் வரை: இந்தியாவில் நவீன காலனியாதிக்கத்தின் நிகழ்முறை” (1995), ”உலகளாவிய நிதி ஒதுக்கலும் அரசுசாரா நிறுவனங்களின் வலைப்பின்னலும்: செயல்முறைத் திட்டத்தின் உண்மையான பணி” (2004) ஆகிய நூல்களை எழுதியுள்ளார். ரெட் ஸ்டார் இதழில் தொடர்ந்து அரசியல் – பொருளாதார – சித்தாந்தக் கட்டுரைகளை எழுதி வருகிறார். (நூலாசிரியரை பற்றிய அறிமுகக் குறிப்பிலிருந்து…)
(அச்சில்… விரைவில் விற்பனைக்கு)
சென்னை புத்தகக்காட்சியில் கீழைக்காற்று !
நாள் : 09.01.2020 முதல் 21.01.2020 வரை
நேரம் : வேலை நாட்கள் : மதியம் 2 – இரவு 9 மணி
விடுமுறை நாட்கள் : முற்பகல் 11 – இரவு 9 மணி இடம் : ஒய்.எம்.சி.ஏ. உடற் கல்வியியல் கல்லூரி மைதானம், நந்தனம், சென்னை–35
கடை எண் : 182, 183
அனைத்து முற்போக்கு நூல்களும் ஒரே கூரையின் கீழ் உங்களுக்காக காத்திருக்கிறது …
புதிய முகவரி :
கீழைக்காற்று பதிப்பகம்,
16, அருமலை சாவடி,
கண்டோன்மென்ட் பல்லாவரம்,
சென்னை – 600043.
அலைபேசி : 9444 88 1066
மின்னஞ்சல் : keezhaikkatru2019@gmail.com முகநூலில் பின் தொடர :கீழைக்காற்று
2019 டிசம்பர் 1-ம் தேதி தொடங்கி (2020 ஜனவரி 5-ம் தேதி வரையிலான காலகட்டத்தில்) இராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் உள்ள 6 அரசு மருத்துவனைகளில் மட்டும் சுமார் 500-க்கும் மேற்பட்ட கைக்குழந்தைகள் மரணித்துள்ளதாக ‘இந்தியா ஸ்பெண்ட்’ அறிக்கை கூறுகிறது. மத்தியப்பிரதேசத்தின் ஷாடோல் (Shahdol) நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் 13-ம் தேதி நள்ளிரவில் மட்டும் 6 பழங்குடி குழந்தைகள் இறந்ததுள்ளதாக தற்போது செய்தி வந்துள்ளது. இந்தியா முழுமைக்கும் எடுத்து பார்த்தால் 2018-ல் மட்டும் 7,21,000 கைக்குழந்தைகள் அதாவது, நாளொன்றுக்கு சராசரியாக 1,975 பிஞ்சுக்குழந்தைகள் மடிந்துள்ளனர்.
முதன்மை சுகாதார மையங்களில் அடிப்படை வசதிகள் இல்லாமை, சிறப்பு வசதிகள் கொண்ட மருத்துவமனைகளுக்கு பரிந்துரைப்பதில் உள்ள குறைபாடுகள், போக்குவரத்து வசதி குறைபாடுகள் போன்ற அடிப்படை கட்டமைப்பு சிக்கல்கள் சேர்ந்து அதிகப்படியான மரணங்களுக்கு வித்திட்டதாக மம்தா (MAMTA) அரசு சாரா தாய் சேய் நல நிறுவனத்தின் தலைமை அதிகாரியும் குழந்தைகள் நல மருத்துவருமான சுனில் மெஹ்ரா கூறுகிறார்.
அதிக கைக்குழந்தைகள் மரணங்கள் நிகழும் பீகார், ஜார்கண்டு, உத்திரப்பிரதேசம், உத்தர்காண்டு, இராஜஸ்தான், ஒடிசா, சத்திஸ்கர் மற்றும் அஸ்ஸாம் போன்ற பின்தங்கிய மாநிலங்களிலும், சமீப காலமாக கைக்குழந்தைகள் மரண செய்திகளில் அடிப்படும் மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களிலும், நாட்டிலேயே மிகக்குறைவான கைக்குழந்தைகள் மரணங்கள் நிகழும் கேரளா, தமிழ்நாடு மற்றும் கோவா மாநிலங்களிலும் ‘இந்தியா ஸ்பெண்ட்’ ஆய்வினை நடத்தியது.
சுகாதார உள்கட்டமைப்பு, மகப்பேறுக்கு முந்தைய பராமரிப்பு, தாயின் உடல்நலம் பராமரிப்பு மற்றும் மகப்பேறுக்கு பிந்தைய பராமரிப்பு ஆகியவற்றின் மோசமான தரம் கைக்குழந்தைகளை ஆபத்தில் ஆழ்த்துவதை இந்த ஆய்வு காட்டுகிறது.
கைக்குழந்தைகளின் மரணம் என்பது வெறுமனே மருத்துவரீதியான அம்சங்களை விட, ஊட்டச்சத்து குறைபாடு, சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு போன்ற ஆழமான சமூக சிக்கல்களின் அறிகுறியாக இருப்பதாக டெல்லியில் உள்ள பி.ஆர்.அம்பேத்கர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் தீபா சின்ஹா தெரிவித்தார். நுரையீரல் அழற்சி போன்ற எளிதில் சிகிச்சையளிக்கப்படக் கூடிய நோய்த்தொற்றுகளால் பெரும்பாலான குழந்தைகள் மரணிப்பது என்பது முதன்மையாக சிதிலமடைந்த சுகாதார கட்டமைப்பையே காட்டுகிறது என்று மேலும் அவர் கூறினார்.
கைக்குழந்தைகள் இறப்பில் உலக சாரசரியான 1000-க்கு 39 என்பதை விட சற்றே குறைவாக 1000-க்கு 37 ஆக இந்தியாவில் இருக்கிறது. அதே நேரத்தில் எண்ணிக்கை அடிப்படையில் உலகிலேயே முதலிடத்தில் இருக்கிறது. 2017-ம் ஆண்டின் தரவுகள் படி 37 குழந்தைகளில் 33 குழந்தைகள் ஒரு வயதாகும் முன்பாகவே மடிகின்றன.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இறப்பு குறைந்து வந்திருந்தாலும் இந்தியா முழுவதும் அதனுடைய தாக்கம் என்பது சமூக பொருளாதார அடிப்படையில் ஏற்றத்தாழ்வாக இருக்கிறது. நாகலாந்தில் இறப்பு விகிதம் 7, கோவாவில் 9, கேரளாவில் 9 ஆக இருக்கும் அதே நேரத்தில் மத்தியப்பிரதேசத்தில் 47 ஆக இருக்கிறது. எளிதில் தடுக்கப்படக்கூடிய வயிற்றுப்போக்கு போன்ற நோய்த்தொற்றுகளால் பின்தங்கிய மாநிலங்களில் அதிக குழந்தைகள் மடியும் அதே நேரத்தில் கேரளா போன்ற முன்னேறிய மாநிலங்களில் மரபணு சிக்கல்களால் குறைந்த எண்ணிக்கையில் குழந்தைகள் மடிகின்றன.
மோசமான முதன்மை சுகாதார கட்டமைப்பும் நெரிசலில் தவிக்கும் சிறப்பு சுகாதார கட்டமைப்பும் :
மருத்துவமனையில் நடக்கும் மகப்பேறுகளின் எண்ணிக்கை 2015 (38.7%) லிருந்து இருமடங்காகியுள்ளதால் (78.9%) சிசு மரணங்கள் கணிசமாக குறைந்துள்ளன. ஆனால், அதே நேரத்தில் பிறந்த குழந்தைகளை பராமரிப்பதற்கான கட்டமைப்பு வசதிகளை அதற்கேற்றாற்போல அதிகப்படுத்தப்படவில்லை என்கிறார் குஜராத், ஆனந்திலுள்ள பிரமுக்ஸ்வாமி மருத்துவமனை குழந்தைகள் நலத்துறை பேராசிரியர் சோமசேகர் நிம்மல்கார்.
பெரும்பாலான அதாவது 57.9% கைக்குழந்தைகள் மரணங்கள் 28 நாட்களுக்குள்ளேயே நடப்பதாக மருத்துவ சஞ்சிகை லேன்செட் (Lancet) ஆய்வு கூறுகிறது. இந்த மரணங்களை கங்காரு கவனிப்பு (kangaroo care) அல்லது சருமத்துடன் சரும(ம்) கவனிப்பு மூலமாக எளிதில் தடுக்கப்பட முடியும். இது போன்ற சிக்கல்களை சமாளிக்க தேசிய கிராமப்புற சுகாதரா திட்டத்தின் அடிப்படையில் பச்சிளங்குழந்தை பாராமரிப்பு மையங்களை (Newborn Care Corners) ஏற்படுத்தினாலும் அங்கு மருத்துவர் பற்றாக்குறை, படுக்கை வசதியின்மை, மருத்துவக்கருவிகள் பற்றாக்குறை போன்ற சிக்கல்களால் சேவையை பெற முடியாத அளவிற்கு கூட்டம் அலை மோதுகிறது. 83% பராமரிப்பு மையங்களில் பச்சிளங்குழந்தைக்கான கருவிகள் இல்லை. எனவே நகர்புறங்களில் உள்ள மருத்துவமையங்களை நோக்கி மக்கள் ஓடுகிறார்கள்.
மகப்பேறுக்கு முன்னதான சிக்கல்:
இந்தியாவில் குழந்தை இறப்பில் சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வு முதன்மையான பங்காற்றுகிறது. நல்ல கல்வியும் வசதியும் கொண்ட மேல்மட்ட பணக்காரக் குடும்பங்களின் 20% குழந்தைகள் ஏழ்மையான கடைக்கோடி 20% குழந்தைகளை விட உயிர்பிழைப்பதற்கு 3 மடங்கு அதிமாக வாய்ப்பினை பெறுகின்றன என்று ‘இந்தியா ஸ்பெண்டின்’ 2019-ம் ஆண்டு அறிக்கை கூறுகிறது.
குழந்தைகள் மரணம் அதிகம் கொண்ட மத்தியப்பிரதேசம், இராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பெண்களுக்கு படிப்பறிவு மிகக் குறைவாக உள்ளது. குழந்தை திருமணங்களும் மிக அதிகம். குழந்தைப் பிறப்புக்கு முன்னதாக 4 முறை (ANC visits – 12 வாரங்களில், 26 வாரங்களில், 32 வாரங்களில், 36-38 வாரங்களில்) மருத்துவமனை பரிசோதனைக்குச் செல்வது இன்றியமையாதது என்பது உலக சுகாதார மையத்தின் பரிந்துரை. ஆனால், இந்த மாநிலங்களில் பெரும்பாலான குடும்பங்கள் ஒருமுறை செல்வதே அதிகமாக இருக்கிறது. நாட்டிலேயே குறைவாக பீகாரில் 14.4% பெண்கள் மட்டுமே நான்கு முறையும் மருத்துவ பரிசோதனைக்கு செல்கின்றனர்.
மகப்பேறின் போது ஏற்படும் சிக்கல்:
இந்தியாவில் 2.5 கிலோவிற்கும் குறைவான எடையுடன் ஐந்தில் ஒருக்குழந்தை பிறக்கிறது. 53.3% குழந்தைகள் மட்டுமே 6 மாதங்களுக்கு முழுமையான தாய்ப்பால் கிடைக்கிறது என்கிறது 2019 செப்டம்பரில் லேன்செட்டில் வெளியான இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றத்தின் அறிக்கை. தாய்மார்களின் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பாலூட்டல் தொடர்பான சரியான அறிவுறுத்தல் இல்லாததும்தான் இதற்கு அடிப்படையான காரணம் என்கிறார் மும்பை இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தை (Indian Institute of Technology) சேர்ந்த கிராமப்புறங்களுக்கான தொழில்நுட்ப மாற்றுகளுக்கான மையத்தின்(Centre for Technology Alternatives for Rural Areas) குழந்தை நல மருத்துவரான ரூபல் தலால்.
குழந்தை பிறந்ததும் ஒரு மணி நேரத்திற்குள்ளேயே தாய்ப்பால் ஊட்டினால் பல சிக்கல்களை தவிர்க்க முடியும் என்கிறது யுனிசெஃப். உத்திரப்பிரதேசம் மற்றும் இரஜஸ்தானில் நான்கில் ஒரு குழந்தைக்கு மட்டுமே ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் ஊட்டப்படுகிறது என்று 2015-16-ம் ஆண்டு NFHS அறிக்கை கூறுகிறது. குழந்தைகள் மரணங்கள் குறைவாக உள்ள கேரளாவில் (63.3%), கோவாவில் (75.4%) மற்றும் தமிழ்நாட்டில் (55.4%) முதல் ஒரு மணி நேரத்தில் பாலூட்டுவது அதிகமாக இருக்கிறது.
தடுப்பூசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு:
2 வயதிற்குட்பட்ட தமிழ்நாட்டின் 69.7% மற்றும் கோவாவின் 88.4 விழுக்காடு குழந்தைகளுக்கு அனைத்து அடிப்படையான தடுப்பூசிகளும் போடப்படுகின்றன. அதுவே அஸ்ஸாமில் (47.1%), குஜராத்தில் (50.4%) மற்றும் உத்திரப்பிரதேசத்தில் (51.1%) குழந்தைகளுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது.
ஒட்டுமொத்த குழந்தைகள் இறப்பில் ஊட்டச்சத்து குறைபாடு (68.2%) முதன்மையான பங்காற்றுகிறது என்று ‘இந்தியா ஸ்பெண்டின்’ 2019-ம் ஆண்டு அறிக்கை கூறுகிறது. வளர்ச்சி குன்றிய குழந்தைகளில் பீகாரில் மட்டும் 42% உள்ளனர். பின்தங்கிய மாநிலங்களில் ஐந்தில் இரண்டு குழந்தைகளுக்கு இந்த சிக்கல் உள்ளது. கேரளாவில் 20.5%, தமிழ்நாட்டில் 19.7% மற்றும் கோவாவில் 19.6% குழந்தைகளுக்கு குன்றிய வளர்ச்சி சிக்கல் உள்ளது.
நிமோனியா காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு :
ஒட்டுமொத்த குழந்தை இறப்புகளில் நிமோனியா (12.9%) மற்றும் வயிற்றுப்போக்கு (8.9%) போன்ற எளிதில் சரி செய்யப்படக்கூடிய நோய்த்தொற்றுகள் அதிக பங்கு வகிக்கின்றன. ஊட்டச்சத்து குறைபாடுள்ள, தூய்மையான தண்ணீர் கிடைக்காத, காற்று மாசுபாட்டில் அகப்படும் குழந்தைகளுக்கு விலை குறைவான நுண்ணுயிர் கொல்லிகளால் (antibiotics) எளிதில் சரி செய்யப்படக் கூடிய நிமோனியா எளிதில் தொற்றுகிறது. 2018-ல் நிமோனியாவினால் 1,27,000 குழந்தைகள் மடிந்துள்ளனர்.
2017-ம் ஆண்டில் 90,000 குழந்தைகளை வயிற்றுப்போக்கு பலிவாங்கியிருக்கிறது. வெறுமனே 50.6% குழந்தைகளுக்கு மட்டுமே எளிய தீர்வான வாய்வழி மறுசீரமைப்பு திரவ சிகிச்சையும் (oral rehydration solution), 20.3% குழந்தைகளுக்கு மட்டுமே துத்தநாக மருந்தும் (zinc supplementation) கிடைத்திருக்கிறது. விலை அதிமான மருத்துவம் கூட தேவையில்லை. தூய்மையான தண்ணீருடன் உப்பு சர்க்கரை கரைசலே போதுமானது. ஆனால், எத்தனை குழந்தைகளுக்கு இது கிடைக்கிறது? என்று வினவுகிறார் பி.ஆர். அம்பேத்கர் கல்லூரி பேராசிரியர் சின்ஹா. 2019-ல் திட்டமிடப்பட்ட 41 விழுக்காட்டினரில் 73 விழுக்காட்டினருக்கு மட்டுமே ரோட்டா வைரஸ் (rotavirus) தடுப்பூசி போடப்பட்டதாக உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.
அதேபோல திட்டமிடப்பட்ட 13% மக்களில் வெறுமனே 44% மட்டுமே நிமோனியா தடுப்பு மருந்து போடப்பட்டதாக 2018-ம் ஆண்டு ‘இந்தியா ஸ்பெண்ட்’ அறிக்கை கூறுகிறது. தற்போதைய நிலையில் 6 மாநிலங்களில் மட்டுமே முழுமையாக தடுப்பூசி போடப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
எந்த ரூபத்தில் இனிப்பு சுவை எடுத்தாலும், உங்கள் ரத்த சர்க்கரை அளவுகள்
கூடும் … கூடும் … கூடும் …
நாட்டு சர்க்கரை டீ வாங்கி பருகினால் சர்க்கரை ஏறாது என்று நம்பிக்கொண்டிருக்காமல் இனிப்பு ஏதுமில்லாமல் டீ/ காபி அருந்தும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.
நான் கடந்த நான்கு ஆண்டுகளாக டீ / காபியில் சீனி/ சர்க்கரை / வெல்லம் / கருப்பட்டி/ தேன் / பனங்கற்கண்டு எதுவும் போடாமல் பருகிவருகிறேன். என்னால் முடிந்தது, உங்களாலும் முடியும்.
Hba1c எனும் மூன்று மாத சர்க்கரை அளவுகளை அதன் கட்டுக்குள் வைத்திருக்க இது போன்ற எளிய நடவடிக்கைகள் பெரிதும் உதவுகின்றன. சில மாத்திரைகள் ஏ1சி அளவுகளை மூன்று மாதங்களில் 0.5 முதல் 1 கிராம் அளவு குறைக்கின்றன
என்று ஆய்வு செய்யப்பட்டு சந்தைக்கு வருகின்றன.
ஆனால் அதே 1கிராம் A1c ஐ நம்மால் இந்த எளிய சிறு நடவடிக்கை மாற்றம் மூலம் செய்ய முடியும். இன்று முதல் டீ/ காபிக்கு சீனி முதலிய எந்த இனிப்பையும் போடுவதில்லை என்று முடிவு செய்து பின்பற்றுவோம்.
நீரிழிவு / ரத்த கொதிப்பு உள்ள நோயர்கள் அடிக்கடி பால் டீ/ காபி அருந்துவதை தவிர்ப்பது சிறந்தது. காரணம் பாலில் உள்ள லேக்டோஸ் எனும் மாவுச்சத்து
நமது ஜீரண மண்டலத்தால் க்ளூகோஸ் மற்றும் கேலக்டோஸாக உடைக்கப்படும் Lactose in milk = galactose + glucose இந்த க்ளூகோஸ் ரத்தத்தில் கலந்ததும்
நமது கணையம் இன்சுலினை வெளியிட்டாக வேண்டும்.
டைப் டூ / டைப் ஒன்று நீரிழிவு நோயாளிகள், ரத்த கொதிப்பு நோயாளிகள் (hypertension) மெடபாலிக் சிண்ட்ரோம் (syndrome X) இருப்பவர்கள் உடல் பருமனாக (obesity) இருப்பவர்கள் PCOD (polycystic ovarian disease) கருமுட்டை நீர்க்கட்டி நோய் மேற்சொன்ன அனைவருக்கும் கீழ் உள்ள முதல் அல்லது இரண்டு அல்லது இரண்டும் சேர்ந்த குறைபாடு இருக்கும்.
ஒன்று, க்ளூகோஸ் உள்ளே வந்தால் கணையம் சுரக்க வேண்டிய இன்சுலினை முறையாக சுரக்காமல் போவது.. ஒன்று தேவைக்கு மீறி சுரப்பது அல்லது தேவைக்கும் குறைவாக சுரப்பது.
இரண்டு, சுரக்கப்பட்ட இன்சுலின் நமது செல்களில், தசைகளில், கல்லீரலில் முறையாக தனது பணியை செய்யாமல் போவது. இதை Insulin resistance என்கிறோம்.
இத்தகைய பிரச்சினைகளை நமது ரத்தத்தில் க்ளூகோஸ் கலக்கும் போதெல்லாம் நமது உடல் சந்திக்கும். எனவே, பால் பருகுவதை மேற்சொன்ன நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. முடியாதபட்சத்தில் ஒருநாளைய ஒட்டுமொத்த பால் கொள்முதலை 200 மில்லி என்ற அளவில் நிர்ணயம் செய்து அதையும் ஒரே வேளையில் எடுப்பது சிறந்தது.
பாலில் உள்ள இயற்கையான சர்க்கரையும் (lactose) நீரிழிவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க விடாது. அதிலும் அரைச்சீனி / கால் சீனி / முக்கால் சீனி / ஒரு பிஞ்ச் சுகர் என்று போட்டு பருகினால் இன்னும் பிரச்சனைகள்தான் கூடும் என்பதை பதிவு செய்கிறேன்.
முடிவுரை: நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க இரண்டு வழிகள் உள்ளன.
முதலாவது பாதை – மருந்துகளின் மூலம் குறைப்பது. இந்த வழியில் நாம் உண்ணும் உணவுக்கு ஏற்ப மருந்துகள் கூடும்.
இரண்டாவது பாதை – உணவுக்கட்டுப்பாட்டின் மூலம் குறைப்பது. இதில் பேலியோ உணவு முறை சிறந்தது. இந்த வழியில் நாம் உண்ணும் உணவுக்கு ஏற்ப மருந்துகள் குறையும்.
இரண்டில் எந்தப்பாதையில் நாம் இருக்க வேண்டும் என்பதை நாமே முடிவு செய்வோம். உலகத்தில் நம்மீது துளி இரக்கம் காட்ட விரும்பாத எதிரி கூட ஏதோ ஒரு நொடியில் நமக்காக இரக்கம் காட்டக்கூடும்.
ஆனால், இரக்கம் என்பதே சிறிதும் அறியாத இரு நோய்கள் உள்ளன. அவை
நீரிழிவும், ரத்த கொதிப்பும். இவை இரண்டையும் மருந்து மூலமாகவும் உணவுக் கட்டுப்பாட்டு மூலமாகவும் தொடர்ந்து கட்டுக்குள் வைக்க வேண்டிய பொறுப்பு நம்முடையது. விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொண்டார்..
நன்றி :ஃபேஸ்புக்கில் –Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.
”புதிய ஜனநாயகம்” இதழில் 2003 – ஜூலை முதல் நவம்பர் வரையிலான இதழ்களில் வெளியான தொடர்கட்டுரையின் மறுபதிப்பு.
… ”பித்தலாட்டக்காரர்களின் கடைசிப் புகலிடம் தேச பக்தி” என்று முதலாளிய அறிஞர் ஜான்சன் கூறினார். ஆர்.எஸ்.எஸ். போன்ற பாசிச – பார்ப்பன பயங்கரவாதிகளுக்கு இது முழுமையாகப் பொருந்தும். பார்ப்பன மற்றும் பார்ப்பனிய எதிர்ப்பு என்பது நாட்டிற்கு – தேசத்திற்கு எதிரான துரோகம் என்று சித்தரிப்பதன் மூலம் நாட்டுப்பற்று – தேசப்பற்று என்பதைக் கேடாகப் பயன்படுத்துவதைத் தமது மூல உத்தியாகக் கொண்டிருக்கிறார்கள். அதாவது, தேசதுரோக முத்திரை குத்தி தனது எதிராளிகளை ஒழிப்பது எளிய வழி என்று கண்டுள்ளனர். இதோடு கூடவே தனக்கு எதிரானவற்றை அந்நிய ஊடுருவல், அந்நிய ஆக்கிரமிப்பு, அந்நிய சதி என்று முத்திரை குத்தி தேசியவெறியூட்டுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
… ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தன்னை ஒரு தேசியவாதப் பண்பாட்டு, சமூக இயக்கம் என்று கூறிக்கொள்கிறது. அதேபோல பாரதிய ஜனதா கட்சி தான் ஒரு சுயேட்சையான அரசியல் கட்சி என்று கூறிக்கொள்கிறது. இந்த இரண்டு கூற்றுமே உண்மை இல்லை. ஆர்.எஸ்.எஸ்-இன் ஒரு அரசியல் பிரிவுதான் பாரதீய ஜனதா கட்சி. இரண்டுக்குமே இந்து மதவெறி பாசிசக் கொள்கையான “இந்துத்துவம்” தான் வழிகாட்டும் சித்தாந்தம், இந்து ராஷ்டிரம்தான் இலட்சியம்.
… பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் முன்பு ஒருமுறை சொன்னார்:
”வெள்ளைக்காரன் ஒரு நல்ல காரியம் செய்தான். நெடுஞ்சாலைகளில் மைல் கல்லை நட்ட வெள்ளைக்கான் அதில் வெள்ளையடித்து ஊர், பேர், தூரத்தை எழுதி வைத்தான். இல்லையானால் நம்ம ஜனங்க அதற்குப் போய் பொட்டு வைத்து, மாலை போட்டு மைல்சாமி ஆக்கி இருப்பான்” நமது பாமர மக்களின் பக்தி எத்தகையது என்பது குறித்து கிண்டலாகப் பேசிய ஈ.வெ.ரா.தான் வாழ்நாள் முழுவதும் பகுத்தறிவு, நாத்திகப் பிரச்சாரம் செய்து அந்த மூட நம்பிக்கையை ஒழிக்க அரும்பாடுபட்டார்.
ஆனால், ஆர்.எஸ்.எஸ். கும்பலோ அந்தப் பாமரப் பக்தர்களிடையே நிலவும் பக்தி உணர்வை மேலும் ஆழப்படுத்தி, பரவச்செய்து தமது பாசிச அரசியல் பேராசைகளை ஈடேற்றிக் கொண்டு வருகிறது. ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆகிய வகுப்புவாத மதவெறி சக்திகளை முறியடிப்பதே தமது நோக்கமென்று கூறிக்கொள்ளும் மதச்சார்பற்ற அல்லது மதநல்லிணக்க அரசியல் கட்சிகளும் கூட்டணிகளும் பாமர மக்களிடையே நிலவும் மதம், கடவுள், பக்தி உணர்வுகளை பாதித்து விடாமல் – வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதைப் போன்ற அணுகுமுறையின் மூலம் அதைச் சாதித்துவிட எத்தனிக்கிறார்கள்.
ஆனால், தேவையானது ஊசி – வாழைப்பழ அணுகுமுறை அல்ல; அறுவைச் சிகிச்சை!
உடைக்க முடியாத கற்கோட்டையாக இருந்த தமிழகத்தை உடைத்து விட்டோம் என்று மார்தட்டுகிறது ஆர்.எஸ்.எஸ். கும்பல். நாம் என்ன செய்யப் போகிறோம்?
உடைக்க முடியாத இந்தக் கற்கோட்டையில் சாந்தாகப் பூசப்பட்டிருக்கிறது நம் முன்னோர்களின் ரத்தம். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று கூறிய வள்ளுவன் முதல் “இறைச்சி தோல் எலும்பிலும் இலக்கமிட்டிருக்குதோ? என்று பார்ப்பனியத்தின் மீது சாட்டையடி கொடுத்த சிவவாக்கிய சித்தர் வரையிலான அறிஞர்கள்; பர்ப்பன மதத்தை எதிர்த்த குற்றத்துக்காகவே கழுவிலேற்றப்பட்ட சமணர்கள், துரத்தியடிக்கப்பட்ட பவுத்தர்கள், ஆசீவகர்கள், தலைமறைவாய்க் காடுகளில் திரிய நேர்ந்த சித்தர்கள்; சாதிக்கெதிராகக் கலகம் புரிந்து கொலை செய்யப்பட்டு இன்றும் நாட்டார் தெய்வங்களாக நம்மை எச்சரிக்கும் மதுரை வீரன், முத்துப்பட்டன், ஒண்டிக் கருப்பு முதலானோர்; தமிழ் மக்களைத் தலைநிமிரச் செய்த தந்தை பெரியார்! இத்தகைய பெருமை மிக்க நீண்ட மரபின் வாரிசுகளாகிய நாம் என்ன செய்யப் போகிறோம்?
… “ஏதோ இயன்றதைச் செய்வோம் என்று முனகிப் பயனில்லை. இது போர்க்களம்; இங்கே எதைச் செய்ய வேண்டுமோ, அதைச் செய்தாக வேண்டும். பெரியாரை இனிமேல்தான் படிக்க வேண்டிய தமிழகத்தின் இளைய தலைமுறை முதல், பெரியாரைப் பார்த்தறிந்த முதியோர் வரை அனைவரும் இந்தப் போர்க்களத்தின் வீரர்களாக முடியும். போர்க்களத்தில் ஆயுதமேந்தி நிற்கும் முன்னணிப் படைக்கு ஆயிரம் வழிகளில் துணை நிற்க முடியும்.
எதிரியிடம் பணபலமும், பத்திரிகை பலமும், படைபலமும் கூட இருக்கலாம்; ஆனால் நீதி நம் பக்கமிருக்கிறது. இன்று எதிரியின் பின்னால் மக்கள் மயங்கி நடக்கலாம்; ஆனால் எல்லா மயக்கங்களையும் தெளிய வைக்கும் சித்தாந்தம் நம்மிடம் இருக்கிறது.
… இதோ, இங்கேதான் பார்ப்பனியம் புதைக்கப்பட்டிருக்கிறது என்ற வரலாற்றுப் பெருமையை தமிழ்மண் தன்மீது பொறித்துக் கொள்ளட்டும்!
பக்கங்கள் : 72 விலை: ரூ.50.00
கண்ணை மறைக்கும் காவிப்புழுதி
இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுமளவுக்கு பார்ப்பன இந்துமதவெறி பாசிஸ்டுகள் வளர்ந்து விட்டார்கள். இது பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். கட்சிகளோடு மட்டும் தொடர்புடையதல்ல. அதற்கு சமீபத்தில் வந்த அயோத்தி தீர்ப்பு ஒரு எடுத்துக்காட்டு.
… மக்களிடையே நிலவும் மத நம்பிக்கை என்பதை பயன்படுத்தி இந்து மதவெறியர்கள் ஏராளமான பொய் பிரச்சாரங்களை இலகுவாக கலக்கச் செய்து விடுகின்றனர். ஒரு சராசரி முசுலீம் குறித்து ஒரு சராசரி ‘இந்து’ இப்படித்தான் சிந்திக்கிறான். அப்படி பொது மக்களிடம் நிலவும் அவதூறுகளை பட்டியலிட்டு அதன் பொய்மையை இந்த நூல் போட்டுடைக்கிறது. சிறுபான்மையினர் மீதான இந்து மதவெறியரின் வெறுப்பு என்பது பெரும்பான்மையாக இருக்கும் சூத்திர, பஞ்சம மக்கள் மீதும் உள்ளது என்பதை இந்த நூல் நிரூபிக்கிறது.
… இந்தியாவில் நிலவும் பல்வேறு மொழி, மத, இன மக்களின் பண்பாட்டை அழித்து விட்டு இந்து மதவெறியர்கள் உருவாக்க நினைக்கும் பாரதப் பண்பாட்டின் அயோக்கியத்தனத்தையும் இந்த நூலின் கட்டுரைகள் அம்பலப்படுத்துகின்றன.
பக்கங்கள்: 160 விலை: ரூ.100.00
பொது சிவில் சட்டம் – மாயையும் உண்மையும்
தனது இந்து ராஷ்டிரக் கனவை நிறைவேற்றிக் கொள்வதற்கு அயோத்தி பிரச்சினைக்கு இணையான முக்கியத்துவம் கொண்ட பிரச்சினையாக “பொது சிவில் சட்டம்” குறித்த பிரச்சினையை பாரதீய ஜனதா எழுப்புகிறது. முசுலீம்களின் நான்கு தார மணமுறை மற்றும் மணவிலக்கு முறையை மட்டும் குறிவைத்துத் தாக்குவதன் மூலம் ‘இந்து தனிநபர் சட்டம் ‘ ரொம்பவும் முற்போக்கானது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது.
“இந்திய உண்மையான மதச்சார்பற்ற நாடென்றால் எல்லா இந்தியர்களுக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டியதுதானே” என்ற பாரதீய ஜனதாவின் கேள்விக்கு, அதன் எதிர்ப்பாளர்களால் முகம் கொடுக்க முடியவில்லை. எனவே “இது முசுலீம்களுக்கு ஆதரவான போலி மதச்சார்பின்மை” என்ற பாரதீய ஜனதாவின் வாதம் பெரும்பான்மை ‘இந்து’க்களிடம் எடுபடுகிறது.
இது போலி மதச்சார்பின்மை என்ற கருத்தை இந்நூல் வேறொரு கோணத்திலிருந்து கூறுகிறது. “அரசு மற்றும் சிவில் சமூகத்தின் மீது எவ்வித அதிகாரமும் செலுத்தவியலாமல் மதத்தைத் துண்டிப்பது” என்ற மதச்சார்பின்மைக் கோட்பாட்டுக்குப் பதிலாக, அனைத்து மதங்களையும் சமமாக நடத்துதல் என்ற மோசடியான விளக்கம் இந்திய மதச்சார்பின்மைக்குத் தரப்பட்டிருப்பதை இந்நூல் சுட்டிக் காட்டுகிறது.
இந்திய அரசியல் சட்டத்தில் மதம், மதச்சார்பின்மை ஆகியவை தெளிவாக வரையறுக்கப்படவில்லை என்பதுடன், மதம் – மத நம்பிக்கை குறித்து உச்சநீதி மன்றம் அளித்துள்ள விளக்கங்கள் மதச்சார்பின்மைக் கோட்பாட்டுக்கே எதிரானவை என்பதை ஆதாரங்களுடன் நிறுவுகிறது இந்நூல்.
பக்கங்கள்: 64 விலை: ரூ.50.00
சென்னை புத்தகக்காட்சியில் கீழைக்காற்று !
நாள் : 09.01.2020 முதல் 21.01.2020 வரை
நேரம் : வேலை நாட்கள் : மதியம் 2 – இரவு 9 மணி
விடுமுறை நாட்கள் : முற்பகல் 11 – இரவு 9 மணி இடம் : ஒய்.எம்.சி.ஏ. உடற் கல்வியியல் கல்லூரி மைதானம், நந்தனம், சென்னை–35
கடை எண் : 182, 183
அனைத்து முற்போக்கு நூல்களும் ஒரே கூரையின் கீழ் உங்களுக்காக காத்திருக்கிறது …
புதிய முகவரி :
கீழைக்காற்று பதிப்பகம்,
16, அருமலை சாவடி,
கண்டோன்மென்ட் பல்லாவரம்,
சென்னை – 600043.
அலைபேசி : 9444 88 1066
மின்னஞ்சல் : keezhaikkatru2019@gmail.com முகநூலில் பின் தொடர :கீழைக்காற்று
இந்திய நாத்திகமும் மார்க்சியத் தத்துவமும் | நா. வானமாமலை – பாகம் – 08
மார்க்ஸ் தமது காலத்தில் உற்பத்திச்சக்திகளின் வளர்ச்சி நிலையை ஆராய்ந்தார். இவற்றின் வளர்ச்சி, வருங்காலத்தில் சமூகத்தை மாற்றியமைக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்துகிறது என்பதை உணர்ந்தார். இதனை உணர்ந்த காரணத்தால், வருங்காலத்தைப்பற்றி முன்னம் கூறி அதற்காகப் போராட வேண்டும் எனக் கூறினார். மனிதன் சமூக விடுதலை பெறும் காலத்தில், தற்காலிக ஊக்கியாகவோ (Stimulent – தேநீர், காபி போல), வேதனைக் குறைக்கும் மருந்தாகவோ மதம் இருக்க வேண்டியதில்லை என்று உறுதியாக அறிவித்தார்.
மார்க்ஸ் எழுதினார்:
“கடந்த காலத்தின், சமுதாய வரலாறு, வர்க்க முரண்பாடுகள், வர்க்கப் பகைமை இவற்றை, இவற்றின் வளர்ச்சி நிலைகளில் ஆராய்வதாகும். அவற்றின் வடிவங்களை அறிவதையும் வரலாறு உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது. கடந்த சமுதாயங்களின் அமைப்புகளில் பல வேறுபாடுகள் காணப்பட்டாலும் அவையனைத்தும் ஒரு அடிப்படையான தன்மையில் ஒன்றாகவே இருக்கின்றன. அவையாவும் ஒரு சிறுபான்மைப் பிரிவினர், மற்றோர் பெரும்பான்மைப் பிரிவினரை சுரண்டுகிற அமைப்புகளே. இவ்வடிப்படைகளில் இருந்து தோன்றிய கருத்துக்களில் சில பொதுப்படையான கூறுகள் காணப்படுகின்றன. வர்க்கப் பகை ஒழியும் வரை இச்சிந்தனைகள் இருந்துதான் தீரும்.
கம்யூனிஸ்டுப் புரட்சி மரபு வழியான சொத்துரிமை உறவுகளை ஒழித்து மரபையே மாற்றுகிறது. எனவே மரபு வழியான கருத்துகளில் இருந்தும் ஒரு முறிவை உண்டாக்கிப் புதிய கருத்துக்களைப் படைக்கிறது.”
இப்புதிய கருத்துக்கள், வரலாறு முழுவதிலும் சிதறிக் காணப்படுகிற தீவிரமான, மனித நேயக் கருத்துக்களின் புதிய கால கட்டத்தின் வளர்ச்சியே.
ரஷ்யாவில் புரட்சி வெற்றி பெற்று ஐந்து ஆண்டுகள் கழித்து 1922-ல் லெனின் மதக்கருத்துக்களை எதிர்த்து நாத்திகத்தைப் பரப்ப வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். மதக்கருத்துக்களின் அழுத்தம் மக்கள் மனதில், புதிய மனித நேயமும், முற்போக்கான கருத்துக்கள் வளராமல் தடைக் கல்லாக இருந்து, மக்களது விடுதலை பெற்ற உழைப்புச் சக்தி வளராமல் தடுப்பதையும் உணர்ந்து, மதக் கருத்துக்களையும், கடவுள் நம்பிக்கையையும் எதிர்த்து விரிவான பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என அவர் எழுதினார். லெனின் எழுதினார்:
“எல்லா மொழிகளிலும் இப்பொருள் பற்றி (நாத்திகம்) எழுதப்பட்டிருக்கும் நூல்களை எல்லாம் கவனமாகப் படித்து அவற்றில் இருக்கும் முக்கியமான கருத்துக்களை விமர்சனம் செய்தல் வேண்டும். அல்லது மதிப்புரைகள் எழுத வேண்டும்,”
“எங்கெல்ஸ் தமது கால புரோலிட்டேரியன் தலைவர்களுக்கு, 18-ம் நூற்றாண்டின் தீவிரமான நாத்திக நூல்களை மொழி பெயர்க்கும்படி ஆலோசனை கூறினார். 18-வது நூற்றாண்டின் புரட்சிவாதிகளின் எழுத்துக்களில் அறிவியல் பூர்வமற்ற கருத்துக்களும், அப்பாவித்தனமான வாதங்களும் மிகுதியாக உள்ளன. ஆயினும் இவற்றையெல்லாம் சுருக்கி, அடிக்குறிப்புகள் கொடுத்து, அறிவியல் பூர்வமான மதம் பற்றிய விமர்சனங்கள் எழுத வேண்டும். 18-ம் நூற்றாண்டில் முன்னேற்றம் கண்டிருந்த மத எதிர்ப்புக் கருத்துக்களைச் சுட்டிக் காட்ட தற்காலத்தில் பதிப்பாளர்களுக்கு யாரும் தடை விதிக்கவில்லை. கோடிக்கணக்கான மக்கள் (முக்கியமாக விவசாயிகளும், தொழிலாளிகளும்) எழுத்தறியாமையிலும், மதங்கள் பிரசாரம் செய்யும் மூடத்தனத்திலும் ஆழ்ந்து கிடக்கும் பொழுது, மார்க்சீய கல்வியென்னும் நேர்வழியால் இவர்களது மனத்தில் அறிவொளி பாயச் செய்யலாம் என்று மார்க்சீயவாதிகள் கருதினால் அது பெருந்தவறாகும். இம்மக்கள் பெருங் கூட்டத்திற்கு பலவேறு விதமான நாத்திக எழுத்துக்களை அளித்தல் அவசியமானது. வாழ்க்கையின் பல்வேறு துறைகளில் இருந்து உண்மைகளை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு ஆர்வமுள்ள துறைகளில் நாம் அவர்களைச் சந்திக்க வேண்டும். மத மயக்கத்தினின்றும் அவர்களை விழிப்புறச் செய்ய வேண்டும். அவர்கள் எழுச்சி பெறச் செய்வதற்கு பலவேறு முறைகளை நாம் கையாள வேண்டும். மார்க்ஸ், எங்கல்ஸ் இருவருடைய முக்கியமான நூல்களை நாம் (ரஷ்ய மொழியில்) மொழி பெயர்த்துள்ளோம். பழமையான நாத்திகம், பழமையான பொருள்முதல் வாதம் இவற்றிற்கு மார்க்ஸும், எங்கல்ஸும் அளித்த பிழைத்திருத்தங்கள் மக்கள் மனத்தைக் கவராமல் போய்விடுமோ என்று அஞ்ச வேண்டியதில்லை. மார்க்ஸிஸ்டுகளாகத் தங்களைக் கருதிக் கொள்ளும் கம்யூனிஸ்டுகள் ஒரு முக்கியமான விஷயத்தை கவனத்தில் கொள்ளுவதில்லை. அறிவு வளர்ச்சி பெறாத மக்கள் மனங்களில் மதப் பிரச்சினைகள் பற்றி ஒரு அறிவுக் கூர்மையான போக்கை உண்டாக்கவும் மதம் பற்றிய அறிவுக் கூர்மையான விமர்சனம் செய்ய மக்கள் கற்றுக் கொள்ளவும் ஓர் எழுச்சியை உண்டாக்குவது தமது கடமை என்று கம்யூனிஸ்டுகள் உணர வேண்டும்.”
இக்கட்டுரை சில முக்கியமான விஷயங்களைச் சுட்டிக் காட்டியுள்ளது. அவையாவன:
1) இந்தியத் தத்துவங்கள் அனைத்துமே கடவுள் நம்பிக்கையைப் போதிக்கவில்லை. மாறாக, மிகப் பெரும்பான்மையானவை கடவுளை மறுக்கின்றன.
2) நமது பண்டைய நாத்திகவாதிகளின் பலவீனங்களை, மார்க்சீயம் தான் நிவர்த்தி செய்து அவர்களது நாத்திகவாதத்தை தருக்க நிலையில் இருந்து, கீழே கொணர்ந்து வாழ்க்கை நிலையோடுள்ள தொடர்பைச் சுட்டிக் காட்டுகிறது.
3) இன்று, மார்க்சியம் உலகெங்கும் பரவியுள்ள நிலையில் கூட, நமது பண்டைய நாத்திகவாதிகளின் கடவுள் மறுப்பு வாதங்கள், பயனுள்ள தர்க்க வாதங்களாகவே உள்ளன. அவற்றை முற்போக்காளர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.
மேற்கூறிய மரபும் அதன் தற்கால வளர்ச்சியான மார்க்சீயமும் வளர்த்துள்ள நாத்திகத்தின் அடிப்படையில் பெரியாரின் நாத்திக வாதத்தை மதிப்பிட வேண்டும். மார்க்சீயவாதிகள் பெரியாரின் நாத்திகத்தை, சமூக வளர்ச்சிப் போக்கின் வெளிப்பாடாக ஆராய வேண்டும். இத்தகைய ஆராய்ச்சி இன்னும் துவங்கவில்லை.
ஆராய்ச்சி துவங்கு முன்னரே, முடிவுகளுக்கு வருவது மார்க்சீயவாதிகளின் மரபல்ல. ஆயினும் சில மேற்போக்கான கருத்துக்களை இங்கு கூறலாம்.
பெரியார் முரணற்ற நாத்திகர். “கடவுள் இல்லை, இல்லை. கடவுளை நம்புபவன் முட்டாள்” என்ற அவருடைய முழக்கங்களை, அவருடைய சிலைகளின் கீழ் செதுக்கி வைத்துள்ளார்கள். அவருடைய சுயமரியாதை இயக்கத்தில் இருந்து பிரிந்து வந்தவர்கள் கடவுளை ஒப்புக் கொண்டு நாத்திகத்தை கைவிட்டார்கள். “ஒன்றே குலமும், ஒருவனே தேவனும்” என்ற முழக்கத்தை அரசியல் சௌகரியத்துக்காக மேற்கொண்டார்கள்.
பெரியார் கடவுள் எதிர்ப்போடு, மூடநம்பிக்கைகளை எதிர்த்தும் பிரச்சாரம் செய்தார். தீமிதியின் தெய்வத் தன்மையை மறுத்து, எவ்வித விரதங்களும் இல்லாமல், கடவுள் இல்லை என்று முழங்கிக் கொண்டு அவருடைய மாணவர்கள் தீமிதி நடத்தினார்கள்.
கடவுளை, சமூகமும், அரசும் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி நிலையில் படைத்தது என்ற மார்க்ஸிய சிந்தனையை அறியாமல் அவர் சமூகப் படைப்பின் ஒரு பிரிவினரான பிராமணரையே, கடவுளைப் படைத்தவர்களாகவும், தங்கள் பிழைப்புக்கு தாங்கள் படைத்த மாயையான கடவுளை பயன்படுத்தினார்கள் என்று கூறினார்.
பிராம்மணரையும், சூத்திரரையும் சமூக வரலாறு படைத்தது என்ற உண்மையை அவர் அறியவில்லை.
அவருடைய நாத்திகம் பொது அறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. அதில் விஞ்ஞானக் கொள்கைகளை அவர் பயன்படுத்தவில்லை. எனவே அது கரடுமுரடாக (Crude) இருந்தது.
அவருடைய காலத்தில் மார்க்சீயத்தைக் கற்றுணர வாய்ப்பு இருந்தது. ஆனால் அவருடைய நாத்திகத்தில் மார்க்சீயப் பொருள்முதல் வாதத்தின் தாக்கம் எதுவும் இல்லை. பண்டையப் பொருள்முதல்வாதிகள் வாதங்களின் சிலவற்றை அவர் பயன்படுத்திக் கொண்டார்.
அவருடைய நூற்றாண்டு விழாவில் ’நாத்திக சிந்தனையை மிகவும் துணிச்சலோடு மக்களிடையே பிரச்சாரம் செய்தார்’ என்பதை நினைவு கொள்வோம், அவருடைய பிரசாரம் பல நாத்திகர்களை உருவாக்கிற்று என்பதை ஒப்புக்கொள்ளலாம். ஆனால் வளர்ந்து வரும் அறிவியல் உண்மைகள், அவற்றின் அடிப்படையில் உருவாகும் அறிவியல் கொள்கைகள், இவ்வறிவியல் கொள்கைகளை கிரகித்துக் கொண்டு வளர்ச்சி பெற்று வரும் மார்க்சீய தத்துவம், இவற்றினின்று அவருடைய நாத்திகம் விலகியே நிற்கிறது. இதுவே அதனுடைய பலவீனம்.
தமிழக மார்க்சீயவாதிகள், முற்போக்காளர்கள் அவருடைய நூற்றாண்டின்போது, அவருடைய நாத்திகவாதத்தை ஆராய்ந்து, அதன் பலத்தையும் பலவீனத்தையும் அறிந்து, பெரியாரின் நாத்திகக் கருத்துக்களை மார்க்சிய தத்துவத்தின் அடிப்படையில் கற்று, அறிவியல் அறிவின் முடிவுகளோடு இணைத்துப் பிரச்சாரம் செய்ய வேண்டும்.
ஜனவரி 29, 2019, பிரேசிலிய சுரங்க நிறுவனமான வேல் எஸ்.ஏ.பிரமடின் ஹோவுக்குச் (Vale SA Brumadinho) சொந்தமான தாதுக் கழிவுகள் நிரப்பும் அணை இடிந்து விழுந்த பிறகு அங்கிருந்து ஒரு மாடு மீட்கப்படுகிறது.
பிப்ரவரி 17, 2019, ஏமனின் வடமேற்கு பகுதியான ஹஜ்ஜாவில் (Hajjah) உள்ள அஸ்லம் (Aslam) மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஒரு படுக்கையில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள வெறும் 10 கிலோ எடையுள்ள 12 வயதான பாத்திமா இப்ராஹிம் ஹாதி (Fatima Ibrahim Hadi) அமர்ந்திருக்கிறார்.
மார்ச் 23, 2019, மொசாம்பிக், புஜியில் உள்ள ரிங் மைதானத்தின் தங்குமிடத்தில் 11 வயதான எனியா ஜோவாகின் லூயிஸ் (Enia Joaquin Luis) 6 வயதான தன்னுடைய சகோதரி லூயிசாவுடன் (Luisa) மழையிலிருந்து பாதுகாக்கும் நெகிழித்தாள்களுக்கிடையே விழித்தெழுகிறார். மார்ச் 14, 2019 அன்று மொசாம்பிக்கின் சதுப்பு நிலங்களைத் தாக்கிய இடாய் புயலினால் (Cyclone Idai) பலி எண்ணிக்கை 417 ஆக உயர்ந்தது. ஆயிரக்கணக்கான சதுர கிலோமீட்டர் வெள்ளத்தில் மூழ்கியது. ஆறு வாரங்களுக்குப் பிறகு ஆப்பிரிக்க கண்டத்தை இதுவரை தாக்கிய புயல்களிலேயே வலிமையான புயலாக மாறிய “கென்னத்” புயலால்(Cyclone Kenneth) மறுபடியும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
ஏப்ரல் 24, 2019, சூடானின் கார்ட்டூமில் (Khartoum) உள்ள பாதுகாப்பு அமைச்சக வளாகத்திற்கு வெளியே கை ஃபாக்ஸ் முகமூடி (Guy Fawkes mask) அணிந்த ஒரு சூடான் எதிர்ப்பாளர் தேசியக் கொடியை அசைக்கிறார்.
ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் சமீபத்திய மோதல்களில் அழிக்கப்பட்ட காசா பகுதியைச் சேர்ந்த ஒரு கட்டிடத்திற்கு பக்கத்தில் பாலஸ்தீனிய குடும்பங்கள் முஸ்லீம்களின் புனித நோன்பு மாதமான 2019 மே 18 அன்று தங்களது நோன்பை முடித்துக் கொள்கின்றன.
ஜூன் 24, 2019 அன்று சால்வடோரை சேர்ந்த அகதியான ஆஸ்கார் ஆல்பர்டோ மார்டினெஸ் ராமிரெஸ் (Oscar Alberto Martinez Ramirez) மற்றும் அவரது அரவணைப்பில் இருக்கும் 23 மாத மகள் வலேரியா ஆகியோரின் உடல்கள் மெக்ஸிகோ, டமுலிபாஸ் மாநிலம், மாடமொரோஸில் உள்ள ரியோ பிராவோ (Rio Bravo) ஆற்றின் கரையோரத்தில் கிடக்கின்றன. ஒரு நல்ல வாழ்க்கையை தேடி தன்னுடைய சின்னஞ்சிறிய மகளை ராமிரெஸ் அமெரிக்கா அழைத்து செல்ல முயன்றார். ராமிரெஸ்ஸின் மனைவி டானியா வனேசா அவலோஸ் (Tania Vanessa Avalos), ஒரு நண்பரால் மீட்கப்பட்ட பின்னர் உயிர் பிழைத்ததாக டானியாவின் தாயார் தெரிவித்துள்ளார்.
ஜூலை 14, 2019 அன்று அல்ஜீரியாவின் அல்ஜியர்ஸில் நடைபெற்ற ஆப்பிரிக்கா நாடுகளுக்கான கோப்பையை வெல்லும் போட்டியில் நைஜீரியாவுக்கு எதிரான அரையிறுதி கால்பந்து ஆட்டத்தில் அல்ஜீரியா வெற்றி பெற்றதை அடுத்து அந்நாட்டின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்.
ஆகஸ்ட் 11, 2019 அன்று, ஹாங்காங்கில் கைதிகள் பரிமாற்ற சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டத்தின் போது பாதுகாப்பு கியர் அணிந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கலக தடுப்புப்பிரிவு போலீஸ்காரர்களை தெருவொன்றில் எதிர்கொள்கின்றனர்.
2019 செப்டம்பர் 24-ம் தேதி, பொலிவியா, காட்டுத்தீயினால் ரோபோரில் (Robore) உள்ள ராஞ்சோ கிராண்டே (Rancho Grande) கிராமத்தில் பல ஹெக்டேர் காடுகள் அழிந்த பகுதியில் பொலிவிய இராணுவத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் ரோந்து செல்வதற்கு முன்பாக வரிசையில் நிற்கிறார்கள்.
ஸ்ரீநகரில் அக்டோபர் 11, 2019 அன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு தலையில் முள் கம்பியை தலையில் சுற்றிக்கொண்டு காஷ்மீரி ஒருவர் போராட்டத்தில் கலந்து கொள்கிறார். காஷ்மீருக்கான சிறப்பு அரசியலமைப்பு தகுதியை இந்திய அரசாங்கம் நீக்கியதை எதிர்த்து இந்த போராட்டம் நடந்தது.
நவம்பர் 7, 2019 அன்று ஈராக், பாக்தாத்தில் உள்ள தஹ்ரிர் சதுக்கத்திற்கு (Tahrir Square) அருகே நடந்து வரும் போராட்டங்களின் போது “அவர்கள் எங்கள் பெண்கள்” என்ற அரபு சொற்களுடன் உள்ள சுவரோவியத்திற்கு அருகில் ஒரு பெண் அதைப்போல செய்கிறார்.
டிசம்பரில் சிலி அரசுக்கு எதிரான போராட்டத்தின் போது ஆர்ப்பாட்டக்காரர்களை போலீஸ்காரர் ஒருவர் துரத்தும் அதே நேரத்தில் ஒரு நபர் கோலாவைப் பருகிக் கொண்டிருக்கும் காட்சி.
குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA), தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC), மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) ஆகியவற்றுக்கு எதிராக மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில் திருவண்ணாமலையில் 11.01.2020 சனிக்கிழமை அன்று மாலை நடைபெற்ற கருத்தரங்கில் PRPC மாநில அமைப்புச் செயலர் வழக்கறிஞர் பொன்.சேகர் ஆற்றிய உரை.
வழக்கறிஞர் பொன்.சேகர் உரை
அனைவருக்கும் வணக்கம்,
“சட்டங்கெட்டச் செயல்களே சட்டமாகின்றன” என்பார் அம்பேத்கர். அதுதான் இன்று நடந்து கொண்டிருக்கிறது.
ஒரு நாட்டின் அரசியல் கட்டமைப்பு சரியாக இருந்து, சமூகக் கட்டமைப்பு சரியாக இல்லை என்றால் அது அந்த நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும்.
இன்றைய அரசியல் கட்டமைப்பு மக்களுக்கு பயனளிக்கிறதா இல்லையா என்பது ஒரு பக்கம் இருந்தாலும் ஊராட்சித் தொடங்கி நகராட்சி, சட்டமன்றம், நாடாளுமன்றம் வரை அரசியல் கட்டமைப்பில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகின்றன. ஆனால் சமூகக் கட்டமைப்பு மட்டும் அப்படியே நீடிக்கிறது. தற்போது மோடி-அமித்ஷா கொண்டு வந்துள்ள சட்டத் திருத்தங்கள் தற்போதைய சமூகக் கட்டமைப்பை மேலும் கெட்டிப்படுத்தவே செய்யும்.
மக்களின் வாழ்வுரிமை, சுதந்திரம், சமத்துவம், கண்ணியம்-மாண்பு ஆகியவை காக்கப்பட வேண்டும் என்கிறது இந்திய அரசமைப்புச் சட்டம். ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச மனித உரிமைப் பிரகடனமும் இதைத்தான் வலியுறுத்துகிறது. 1993 மனித உரிமைகள் சட்டமும் இதைத்தான் சொல்கிறது. ஆனால் மோடி அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் இதற்கு நேர் எதிரானதாக உள்ளது.
வழக்கறிஞர் பொன்.சேகர்.
ஆர்.எஸ்.எஸ் கும்பல் நிலைநாட்டத் துடிக்கும் வருணாசிரம தர்மம் – சனாதன தர்மம் என்பது அடிப்படையிலேயே சக மனிதனின் வாழ்வுரிமை, சுதந்திரம், சமத்துவம், மாண்பு ஆகியவற்றை பறிக்கக் கூடியது. ரிக்-யஜூர்-சாம-அதர்வண எனும் நான்கு வேதங்கள், நாரதர்-யாக்ஞவல்கியர்-மனு உள்ளிட்ட பதினெட்டு ஸ்மிருதிகள்/சாஸ்திரங்கள், விஷ்ணு-பாகவதம் உள்ளிட்ட பதினெட்டு புராணங்கள், மகாபாரதம்-இராமாயணம் ஆகிய இரு இதிகாசங்கள் அனைத்தும் வருணாசிரம தர்மம் மற்றும் சனாதன தர்மத்தைத்தான் வெவ்வேறு வடிவங்களில் வலியறுத்துகின்றன. கடந்த கால வரலாறும் அப்படித்தான் இருந்துள்ளது.
மனிதர்களை பிறப்பின் அடிப்படையில் வருணங்களாவும், சாதிகளாகவும் பிரித்து அவர்களிடையே ஏற்றத்தாழ்வை கற்பிப்பதுதான் வருணாசிரம தர்மம். பிரம்மாவின் தலையில் பிறந்தவன் பார்ப்பனன், தோளில் பிறந்தவன் சத்திரியன், தொடையில் பிறந்தவன் வைசியன், காலில் பிறந்தவன் சூத்திரன் என்றும், இதில் பார்ப்பானே உயர்ந்தவன், சூத்திரன் தாழ்ந்தவன் என்று பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வை கற்பிக்கிறது. மற்ற மூன்று வருணத்தாருக்கும் சேவை செய்வது சூத்திரர்களுக்கு கடமையாக்கப்பட்டுள்ளது. அவர்கள் வேறு எந்தத் தொழிலையும் செய்யக் கூடாது என கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இன்று சாதிகளுக்கிடையில் காதல் திருமணங்கள் நடப்பது போல அன்று வருணங்களுக்கிடையில் கலப்புகள் நடந்துள்ளன. மண்ணைத் தொட்டவனையும் பொண்ணைத் தொட்டவனையும் என வீர வசனம் பேசுகின்றனர் மஞ்சள் சட்டிக்காரர்கள். எத்தனை திரௌபதிகள் வந்தாலும் மனிதக் காதலை ஒருக்காலும் அழிக்க முடியாது. திரௌபதிகள் வேண்டுமானால் வீழ்வார்களேயொழிய ஒருக்காலும் காதல் வீழாது.
அன்று நான்கு வருணங்களுக்கிடையில் ஏற்பட்ட வருணக் கலப்பினால் பிறந்தவர்களை அனுலோம, பிரதிலோம, அந்தராள, பாகியா சாதிகள் என வகைப்படுத்தி அவர்களை ஊருக்கு வெளியே வாழும்படி நிர்பந்தித்தனர். இந்த சாதிகளுக்குள் ஏற்பட்ட சாதிக் கலப்பால் பிறந்தவர்களை மேலும் பல்வேறு சாதிகளாக்கி அவர்களை ஈனச் சாதிகளாக இழிபடுத்தியது பார்ப்பனியம்.
பார்ப்பனப் பெண்ணுக்கும் சூத்திர ஆணுக்கும் பிறந்தவனை சண்டாளன் என அடையாளப்படுத்தி அவனைத் தீண்டத்தகாதவனாக்கியது மனு தர்மம். இன்றைய பறையர்கள்தான் சண்டாளர்கள் எனப்படும் சேரி மக்கள். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பெயர்களில் இருக்கும் சேரி மக்கள் என்பவர்கள் இவர்களே. தொழிலுக்காக இவர்கள் அலைந்து திரிய வேண்டும், கழுதை-நாயைத் தவிர வேறு சொத்துக்கள் எதையும் வைத்துக் கொள்ளக் கூடாது எனவும், பிணத்தை எரிப்பதும் புதைப்பதும்தான் இவர்களது தொழில் எனவும் கட்டுப்பாடுகளை விதித்து அவர்களது வாழ்வுரிமையைப் பறித்தது பார்ப்பனியம்.
தீண்டத்தகாத மக்கள் இரவு நேரத்தில் ஊருக்குள் பிரவேசிக்கக் கூடாது என தடை விதித்தனர். பகல் நேரத்தில்கூட அரசன் கொடுத்த அடையாளத்தோடுதான் செல்ல வேண்டும். அன்றே ஆதாரை அறிமுகப்படுத்தியவர்கள் பார்ப்பனர்கள்தான். 200 ஆண்டுகளுக்கு முன்பு பேஷ்வாக்கள் ஆட்சிக் காலத்தில் புனே நகரத்திற்குள் மகர்கள் பிரவேசிக்க வேண்டுமானால் காலை 9 மணிக்குப் பிறகும் மாலை 3 மணிக்கு முன்னதாகவும்தான் வரவேண்டும் எனக் கட்டுப்பாடு விதித்தனர்.
காரணம் காலை மற்றும் மாலை நேரத்தில் நீண்ட நிழல் விழும், அந்த நிழல் பார்ப்பனர்கள் மேல்விழுந்தால் தீட்டாகிவிடும் என்பதற்காக இந்தக் கட்டுப்பாடு. மேலும் அவ்வாறு வரும் போது எச்சிலை கீழே துப்பக் கூடாது என்பதற்காக கழுத்தில் ஒரு பானையையும், பாதச்சுவடுகளை அழிப்பதற்காக முதுகுக்குப்பின்னால் நீண்ட மிலாரையும் கட்டிக் கொண்டுதான் வரவேண்டும் எனக் கட்டளை பிறப்பிக்கப்பட்டது. சுதந்திரமாக நடமாடக்கூட மகர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்தக் கொடுமைகளுக்கு முடிவு கட்டத்தான் 200 ஆண்டகளுக்கு முன்பு ஆங்கிலேயனோடு மகர்கள் கைகோர்த்து பீமா கோரேகானில் பேஷ்வாக்களை வீழ்த்தினார்கள். இது வரலாறு.
நான்கு வருணங்களுக்கிடையிலேயே சமத்துவம் கிடையாது. நூறு வயது சத்திரியனும் பத்து வயது பார்ப்பானும் மகன்-தந்தையாகக் கருதப்பட வேண்டும் என்கிறது மனு தர்மம். தொன்னூறு வயதுக்கு மேல்தான் சூத்திரனுக்கு மரியாதை கிடைக்கும் என்கிறான் மனு. அதனால்தான் பார்ப்பனச் சிறுவர்கள்கூட பிற சாதி மக்களை அவர்கள் வயதில் மூத்தவர்களாக இருந்தாலும் பெயர் சொல்லி மரியாதைக் குறைவோடு அழைக்கிறார்கள். சாட்சி சொல்வதிலும் தண்டனை அளிப்பதிலும் சமத்துவம் இல்லை. சூத்திரன் மற்ற வருணத்தாருக்கு சாட்சி சொல்ல முடியாது. குற்றம் ஒரே தன்மையுடையதாக இருந்தாலும் பார்ப்பனர்களுக்கு குறைவான தண்டனையையும் பிற வருணத்தாருக்கு அதிகப்படியான தண்டனையையும் கொண்டதுதான் மனு தர்மம். இந்து மதத்தில் மக்களுக்கிடையில் சமத்துவம் எப்பொழுதும் இருந்ததே இல்லை.
வருண தர்மம் மக்களை கண்ணியமாக, மரியாதையாக நடத்துவதில்லை. புனிதம்-தீட்டு என்கிற கோட்பாட்டை உருவாக்கி ஒரு சாராரை தீண்டத்தகாத-பார்க்கத் தகாத மக்கள் என வகைப்படுத்துகிறது வருண தர்மம். பறையனை ஒரு பார்ப்பான் பார்த்துவிட்டால் தீட்டாகி விடுமாம். காயத்திரி மந்திரம் ஓதினால் பார்த்த தீட்டு கழிந்து விடுமாம். சண்டாளர்கள் தீண்டின பாத்திரம் எவ்வளவுதான் சுத்தம் செய்தாலும் அது சுத்தமாகாது. அதனால்தான் சேரி மக்களுக்கு குடிக்கத் தண்ணீர் கொடுக்கும் போது சொம்பில் கொடுக்காமல் படியில் கொடுப்பார்கள் அல்லது கையில் ஊற்றுவார்கள். இந்த நடைமுறை இன்றும் கிராமங்களில் இருக்கத்தானே செய்கிறது.
சேரி ஆட்கள் சாதி இந்துக்களின் வீடுகளில் சாப்பிட நேர்ந்தால் அவர்கள் சாப்பிட்ட இடத்தைத் தண்ணீர் தெளித்து மெழுகிக் கழுவுவார்கள். அதே போல கோவில் மற்றும் வீடு கட்டும் போது அது போன்ற இடங்களுக்கு சண்டாளர்கள் உள்ளிட்ட சேரி மக்கள் வேலை செய்வதற்காக வந்து போயிருப்பார்கள். அதனால் அந்த இடம் தீட்டுப்பட்டு இருக்குமாம். கிரகப் பிரவேசம் மற்றும் கும்பாபிஷேகத்தின் போது பசுமாட்டை உள்ளே ஓட்டுவது, கோமியம் தெளிப்பது, மெழுகுவது, கழுவுவது, புதுமண்ணை அள்ளிப் போடுவது இவை தீட்டுக் கழிப்புக்காக செய்யப்படும் சடங்குகளே.
சுடுகாடு, சுடுகாட்டுப் பாதை, பொதுக்கிணறு, கோவில் வழிபாடு, காதல் – சாதி மறுப்புத் திருமணங்கள் என பல்வேறு வழிகளில் இன்றும் இந்தத் தீண்டாமைக் கொடுமை இந்து மதத்தின் பெயரால் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. இத்தகைய தீண்டாமைதான் ஒருசாராரை கண்ணியக் குறைவாகவும், மரியாதைக் குறைவாகவும் நடத்துவதற்கு வழி செய்கிறது. இது பார்ப்பன இந்து மதத்தின் ஒரு பிரிக்க முடியாத அங்கம். இப்படி மதத்தின் பெயரால் ஒரு சாராரை கண்ணியக் குறைவாக நடத்தவதுதான் வருண தர்மம்-சனாதன தர்மம்.
ஒருவருடைய வாழ்வுரிமை-சுதந்திரத்தைப் பறிப்பதும், சமமாக நடத்தாததும், மாண்பைக் குறைக்கும் வகையில் கண்ணியக் குறைவாக நடத்துவதையும்தான் சட்டங்கெட்டச் செயல்கள் என்கிறார் அம்பேத்கர். இந்த சட்டங்கெட்ட செயல்களுக்கு எதிராகக் குரல் எழுப்பினால் இந்து தர்மத்திற்கு ஆபத்து என்கிற போர்வையில் சாதி இந்துக்கள் ஒன்று சேர்ந்து கொண்டு போராடுபவர்களை் மீது தாக்குதல் நடத்தி சட்டங்கெட்டச் செயல்களையே சட்டமாக நிலை பெறச் செய்கின்றனர். அதனால்தான் சட்டங் கெட்டச் செயல்களே சட்டமாகின்றன என்கிறார் அம்பேத்கர்.
நான் எனது உரையின் துவக்கத்தில் சொன்னது போல அரசியல் கட்டமைப்பில் ஒரு சில மாற்றங்கள் நடந்திருந்தாலும், சமூகக் கட்டமைப்பில் பெரிய மாற்றங்கள் எதுவும் நடக்கவில்லை. கிராமங்களில் உள்ள ஊர்-சேரி என்கிற சமூகக் கட்டமைப்பு அப்படியேதான் நீடிக்கிறது. தீண்டாமை நீடிப்பதற்கு இந்தக் கட்டமைப்பு மிக முக்கியப் பங்காற்றுகிறது. இந்தக் கட்டமைப்பு நீடிக்கும் வரை சட்டங்கெட்டச் செயல்கள்தான் சட்டமாகிக் கொண்டிருக்கும்.
குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு என்பவை மக்களை மத அடிப்படையில் பாகுபடுத்துகிறது. சமத்துவத்தைக் குலைக்கிறது. ஒரு சாராரின் வாழ்வுரிமையை, சுதந்திரத்தைப் பறிக்கிறது. முகாம்கள் என்ற பெயரில் புதிய வகைச் சேரிகளை உருவாக்கி அதில் அவர்களை அடைக்க முனைகிறது. முகாம்களில் கண்ணிமான வாழ்க்கைக்கு ஏது உத்தரவாதம்?
இதற்கு எதிராகப் பேசினால், போராடினால் வழக்கு, சிறை, படுகொலை என அடக்கு முறைகளை ஏவுகிறது மோடி அரசு. ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் சாதி இந்துக்களைப் போல நேரடியாகத் தாக்குதல் தொடுக்கின்றனர். இதன் மூலம் சட்டங்கெட்டச் செயல்களையே சட்டமாக்க முனைகிறது மோடி-அமித்ஷா கும்பல்.
மீண்டும் பேஷ்வாக்கள் ஆட்சியை நிறுவ முயல்கிறது ஆா்.எஸ்.எஸ் கும்பல். எனவே ஜோதிராவ் புலே-அம்பேத்கர்-பெரியார் சிந்தனைகளை நெஞ்சில் ஏந்துவோம். நாம் மகர்களாக அவதாரம் எடுப்போம். பீமா கோரேகான்களை நடத்திக் காட்டுவோம். சட்டங் கெட்டச் செயல்களுக்கு முடிவு கட்டுவோம்!
நன்றி! வணக்கம்.
உரை : பொன்.சேகர்
தகவல் : மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
இடதுசாரி இளைஞர்கள் ஒருங்கிணைப்பில், குடியுரிமைச்சட்டம் என்ற தலைப்பில் ”சகாக்களின் சங்கமம்” நிகழ்ச்சி கடந்த ஜனவரி-5 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், ”குடியுரிமை சட்டம்: ஏன், எதற்கு, எப்படி?” என்ற தலைப்பில் வழக்கறிஞர் தோழர் அருள்மொழி அவர்களும்; ”வெங்காய பொருளாதாரமும், குடியுரிமை மறுப்பும்…” என்ற தலைப்பில் தோழர் கனகராஜ் அவர்களும்; ”என்ன செய்ய வேண்டும்?” என்ற தலைப்பில் தோழர் மகிழ்நன் அவர்களும் உரையாற்றினர். இந்த சிறப்புரைகளின் காணொளிகள்!
பாஜக கொண்டு வரும் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய திட்டங்கள் ஆர்.எஸ்.எஸ்.-ன் இலக்கான இந்து ராஷ்டிரத்தின் மனுதர்ம சட்டங்கள்தான் என்பதை வழக்கறிஞர் அருள்மொழி விவரித்துப் பேசினார்!
குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றின் மூலம் மோடி அரசு எவ்வாறு தனது அரசின் தோல்விகளை மூடி மறைக்கிறது என்பதை தோழர் கனகராஜ் விளக்கினார்.
மதரீதியாக நம்மை பிளவுபடுத்தும் பாஜக-வை வர்க்கமாய் ஒன்றிணைந்து எதிர்த்தால்தான் சி.ஏ.ஏ. – என்.ஆர்.சி போன்ற மக்கள் விரோத திட்டங்களை உடைக்க முடியும் என்பதை வரலாற்றுரீதியான அனுபவங்களிலிருந்து விரிவாக விளக்கினார் தோழர் மகிழ்நன்.
இன்றைய பாசிச அரசியல் சூழலை ஹிப் ஹாப் பாடல் வடிவில் பாடினார் இந்த இளைஞர்.