சிறுமி வெசல் ஷேக்-இன் மரணத்தில் கதறி அழும் பெண்கள்
பிறந்தநாளை விதவிதமாகக் கொண்டாட விருப்பப்படும் குழந்தைகளைப் பார்த்திருப்போம்; தன்னுடைய இறுதிச்சடங்கு எப்படி நடக்க வேண்டும் என்று திட்டமிட்ட சிறுமியைப் பார்த்திருக்கிறீர்களா? அவள்தான் பதினான்கு வயதான சிறுமி வெசல் ஷேக் கலீல். காசா எல்லையில் இஸ்ரேலின் துப்பாக்கிக் தாக்குதலில் தான் எப்படியும் மரணமடைய நேரிடும் என்று அவள் உறுதியாக நம்பினாள். இதையறிந்தே தன்னுடைய தாய் ரீம் அபு இர்மானாவிடம், தான் இறந்த பிறகு தன்னுடைய தாத்தாவின் கல்லறைக்கு அருகில் புதைக்கப்படவேண்டும் என்று முன்கூட்டியே சொல்லி வைத்தாள்.
எட்டு மாத குழந்தையின் மரணத்தில் கதறி அழும் பெண்கள்
தன் மகளை இழந்த மறுநாளில் அந்தத் தாய் பேசுகையில் என் மகளுக்கு வாழ்க்கையின் மீதிருந்த நாட்டத்தை விட மரணத்தின் மீதுதான் அதிக நாட்டமிருந்தது, ஒவ்வொரு நாளும் போராட்ட முனைக்குச் செல்லும்போது இறைவனிடம் அவள் வைக்கக் கூடிய கோரிக்கை ‘இன்றே நான் வீரச்சாவு அடையவேண்டும்’ என்ற ஒன்று மட்டும் தான்.
கடந்த 22.05.2018 அன்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் எப்படி 13 பேர் கோடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டார்களோ, அதே மே மாதத்தில் (14.05.2018) பாலஸ்தீனத்திலும் 60 அப்பாவிகள் ஸ்னைப்பர் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையானார்கள். ரோம் நகரம் எரிகையில் நீரோ மன்னன் பிடில் வாசித்ததைப் போல அமெரிக்க டிரம்ப்பின் ஆசியோடு இஸ்ரேல் இத்தனை கொடூரக் கொலைகளை அரங்கேற்றிய அதே நேரத்தில்தான், அமெரிக்கா தனது தூதரகத்தை சர்ச்சைக்குரிய ஜெருசலேம் நகரில் பல்வேறு நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியில் திறந்து வைத்தது.
கொல்லப்பட்ட 60 அப்பாவி மக்களில் வெசல் ஷேக் கலீலும் ஒருவர். கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டதால் மூச்சுத்திணறி எட்டு மாத கைக்குழந்தை ஒன்றும் உயிரிழந்தது. ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் இத்தாக்குதலில் படுகாயமடைந்தனர்.
இஸ்ரேல் என்ற ஒரு நாடு புவியியல் வரைபடத்தில் திணிக்கப்பட்ட 1948-ஆம் வருடத்தில்தான் 500-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசித்து வந்த சுமார் ஏழு இலட்சம் அப்பாவி பாலஸ்தீனியர்கள் தங்கள் சொந்த மண்ணை விட்டு விரட்டியடிக்கப்பட்டு அகதிகளானார்கள். ‘நாக்பா தினம்’ அல்லது பேரழிவு தினம் என்றழைக்கப்படும் இந்த சம்பவம் நடந்து 70 ஆண்டுகள் நிறைவு பெறப்போவதை நினைவுகூறும் வகையில் காசா எல்லையை நோக்கி பேரணியாகச் செல்வது என பாலஸ்தீனிய மக்களால் திட்டமிடப்பட்டிருந்தது.
பேரணியால் ஈர்க்கப்பட்ட சிறுமி வெசல் எத்தனை தடைகள் வந்தாலும் கண்டிப்பாக இதில் பங்கேற்கப்போவதாகத் தன் தாயாரிடம் தெரிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டு காலமாக இஸ்ரேலும், எகிப்தும் கடுமையான கட்டுப்பாடுகளை தங்கள் எல்லைகளில் விதித்துள்ளதால் பண்டப் பரிவர்த்தனை மற்றும் ஆட்கள் போக்குவரத்து என்பது ஏறக்குறைய சாத்தியமற்றதாகிவிட்டது. ஏழு குழந்தைகளை வைத்துள்ள எனக்கு தங்கும் வீட்டிற்கு வாடகை தருவதென்பதே மிகப்பெரிய சவாலாகிவிட்டது; இதனால் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கொருமுறை வீட்டை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். அடிப்படையான வாழ்க்கை வசதிகள் என்றால் என்ன என்பதே என் குழந்தைகளுக்குத் தெரியாது என்கிறார் சிறுமியின் தாயார்.
எங்கள் பூர்வீகம் ஒரு சிறிய கிராமமாகும். இப்போது அது இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது. நாங்கள் எங்கள் சொந்த ஊருக்கு ஒரு முறை கூடச் சென்றதில்லை. மூன்று தலைமுறைகளாக காசா எல்லைப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சிறுமி வெசலோ காசாவை விட்டு எங்குமே செல்ல விருப்பப்பட்டதில்லை. அவள் இங்கு வாழ்ந்த காலங்களில் மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்தாள். வர இருந்த தன்னுடைய தாயின் பிறந்த நாளுக்காக ஒரு வாழ்த்துப்பாடலைத் தயாரித்து, அதை மனப்பாடம் செய்து வீட்டில் பாடிக்கொண்டேயிருந்தாள்.
வெசல் ஷேக் கலீல்
21 வயதான அவளின் சகோதரன், அந்தப் பேரணியில் கலந்து கொள்ளக்கூடாது என எச்சரித்திருந்தான். ஒரு முறை அவளிடம் விளையாட்டாக பேரணியில் கலந்து கொண்டால் உன்னுடைய காலை முறித்து விடுவேன் எனக்கூற உடனே சிறுமி வெசல் நான் தரையில் ஊர்ந்து கொண்டே பேரணியில் பங்கெடுப்பேன் என்று கூறியதை அவளின் தாயார் நினைவுபடுத்துகிறார்.
சிறுமி வெசலின் மற்றுமொரு சகோதரன் முகம்மது, தன் சகோதரி சுட்டுக்கொல்லப்படும்போது அவளுக்கு அருகில் இருந்திருக்கிறான். 11 வயதான அவன் கூறும்போது ’நாங்கள் முள்வேலிக்கு அருகிலிருந்தோம், என் சகோதரியிடம் சக போராட்டக்காரர்கள் வெட்டு எந்திரத்தைக் கொடுத்த அந்தத் தருணத்தில் தலையில் குண்டடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டாள்’ என்றான்.
துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து இஸ்ரேல் ராணுவம் கூறுகையில் ‘ஹமாஸ் இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது பேரணி என்ற பெயரில் மிகப்பெரிய தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்தனர்’ என்று வியாக்கியானம் பேசியது. ஆனால் மார்ச் 30 2018 அன்று ஆரம்பித்த போராட்டங்கள் முதல் இன்றைய நாள் வரை நடந்த போராட்டங்களில், ஒரே ஒரு இஸ்ரேல் படை வீரர் கூட கொல்லப்படவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
சிறுமி வெசலின் சகோதரன் முகம்மது மறுநாள் செவ்வாய்கிழமையன்று நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்க முற்பட்டுள்ளான்; ஆனால் அவனது தாய் மறுத்துவிட்டாள். எதிர்காலம் பற்றி அவளிடம் கேட்டபோது ’எங்கள் வாழ்க்கையில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை; ஒரே ஒரு மாற்றம் என்னவெனில் என் மகள் இப்போது என்னோடு இல்லை, அவ்வளவுதான்’.
15.05.2018 அன்று, துப்பாக்கிச் சூட்டுக்கு மறுநாள் காசா நகரம் முழுவதும் ஒரு வித மயான அமைதி நிலவியது. குழந்தைகள் தெருக்களில் விளையாடிக் கொண்டிருந்தனர். பழங்களும், தின்பண்டங்களும் வழக்கம்போலக் கிடைத்துக் கொண்டிருந்தன.
இன்னொரு சாலையில் ஊதா நிற பந்தல் போடப்பட்டு அந்தச் சாலை மறிக்கப்பட்டிருந்தது. அதனுள்ளே சிறியவரும் பெரியவருமாக 10-க்கும் மேற்பட்டவர்கள் சோகமாக அமர்ந்திருந்தனர். ஆம்! சிறுமி வெசலைப் போலவே இங்கும் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார். 23 வயதான அவர் பெயர் யாசின்-அல்-தெளபாசி. இரண்டு வயது குழந்தைக்குத் தந்தையான அவரும் இஸ்ரேலின் துப்பாக்கிச் சூட்டுக்கு களப்பலியாகியுள்ளார்.
தெளபாசியின் தந்தை இப்ராஹிம் உறவினர்களுடன் சோகமயமாக அமர்ந்திருந்தார். ஒட்டுமொத்த உலகமும் ஒன்று சேர்ந்து கொண்டு இந்த சின்னஞ் சிறிய காசா பகுதியை வேட்டையாடி வருவது மிகவும் கவலையளிக்கிறது. நானும் கூடத்தான் போராட்டத்திற்குச் சென்றேன். இது ஒவ்வொரு பாலஸ்தீனியரின் கடமை என்றே சொல்வேன். முள்வேலி அருகே செல்லாமல் இருந்ததால் ஒருவேளை நான் கொல்லப்படாமல் இருந்திருக்கலாம்.
தெளபாசி மற்றும் இதுபோல மரணமடைந்த மற்ற சக பாலஸ்தீனியர்களின் இறுதிச்சடங்கிற்கு ஹமாஸ் இயக்கம் உதவியிருப்பதை இஸ்ரேல் வன்மையாகக் கண்டித்திருக்கிறது. பிணந்தின்னி கழுகுகளுக்கு அவர்கள் உடல்கள் இரையாக்கப்பட வேண்டும் என்ற கொடூர எண்ணம் இருக்கும்போலத் தெரிகிறது.
நாங்கள் வேண்டுமானால் உலக நாடுகளால் கைவிடப்பட்டிருக்கலாம். ஆனால் போராட்டம் தான் எங்களது வாழ்க்கையாகிவிட்டது. மறுபடியும் போராடிக்கொண்டே இருப்போம். ஒருவேளை நாளையே என் மகன் தெளபாசிக்கு நடந்தது எனக்கும் நடக்கலாம் என்கிறார் தெளபாசியின் தந்தை இப்ராஹிம்.
குறிப்பு: 14.05.2018 அன்று நிகழ்த்தப்பட்ட இந்தத் துயர சம்பவத்தில் இதுநாள் வரை மொத்தம் 120 பாலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளனர்.
நேற்று (05.06.2018) நியூஸ் 7 தொலைக்காட்சியில் ஒரு விவாதம். “ரஜினி கமல் செய்வது அரசியலா, வர்த்தகமா, விளம்பரமா என்று தலைப்பில் நெறியாளர் விஜயன் நிகழ்ச்சியை நடத்துகிறார். அதில் மார்க்கெட் இல்லாத நடிகை கஸ்தூரி, அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, தி.மு.க.வின் அப்பாவு, பா.ம.க.வின் வழக்கறிஞர் பாலு ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் ரவீந்திரன் துரைசாமியும், கஸ்தூரியும் நடுநிலையாளர்கள் என்ற பாதுகாப்பான பெயரில் காலர் மைக்கே வெட்கப்படும் அளவில் ரஜினிக்கு பக்கவாத்தியம் அடித்தார்கள். தமிழகத்தில் வார்டு கவுன்சிலர் தேர்தலுக்கு கூட வாக்குகள் இல்லாத கட்சி என்று கிண்டல் செய்யப்படும் பாரதிய ஜனதாவிற்கு நேரடி விவாதங்கள் மூலம் வாழ்வளித்த தொலைக்காட்சிகளில் முக்கியமானது தந்தி டி.வி. அந்த டிவியில் நடுநிலையாளராக இறக்கப்பட்டு மோடியின் ரசிகராக காட்டிக் கொண்டவர் இந்த ரவீந்திரன் துரைசாமி. இவர் ஒரு வழக்கறிஞராம். எந்தக் கோர்ட்டில் என்ன வழக்கு வாதாடுகிறாரோ தெரியவில்லை.
இவர் ஒரு நடமாடும் தமிழக அரசியல் கலைக்களஞ்சியம் என்று பலரும் நம்புமளவுக்கு, வரலாறு, தேர்தல் முடிவுகள், அரசியல் ஆளுமைகள், அவர்களது கொள்கைகள், அந்தக் கொள்கைகளின் யூடர்ன்கள் அனைத்தையும் விரல் நுனியில் வைத்திருப்பார். அதே நேரம் அந்த யூடர்ன் அல்லது அந்தர் பல்டிகளை தனது தேவைக்கேற்ப பயன்படுத்துவார். அதனாலேயே இவரோடு மல்லுக்கட்ட ஓட்டுக்கட்சிகளின் நிலைய வித்வான்கள் கொஞ்சம் யோசிப்பார்கள். இருப்பினும் மோடியின் ஒளிவட்டத்தை மட்டும் சற்று கவனமாகவே தூக்கி காட்டுவார்.
அப்பேர்ப்பட்டவர் மோடி-பா.ஜ.க.-வின் அஜெண்டாவாக உருட்டப்படும் ரஜினி குறித்து இந்த விவாதத்தில் எப்படி அம்மணமாக நடந்து கொண்டார் என்பதைப் பார்க்கலாம்.
“இத்தனை உயிர் குடித்த போராட்டங்கள் இல்லாமல் தமிழகம் எதிர்காலத்தில் வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்” என்று ஒரு செலவே இல்லாத டிவிட்டரில் டிவிட்டினார் ரஜினி. அரசே அறிவித்த 13 உயிர்களை கொன்று குடித்தது போலீஸ் தான் என்று ஒட்டு மொத்த தமிழகமும் ஆத்திரத்தில் கொதித்த போது, இல்லை அதற்கு காரணம் சமூகவிரோதிகள் விஷமிகள் என்று போராடிய மக்களையும் கொல்லப்பட்ட மக்களையும், படுகாயமுற்ற மக்களையும், இந்த மக்களுக்காக குரல் கொடுத்த அனைத்து இயக்கங்களையும் நாக்கூசாமல் அவதூறு செய்தார் ரஜினிகாந்த். பின்னர் சமூக வலைத்தளங்களில் தமிழக இளைஞர்கள் ரஜினிகாந்தை கதறக் கதற அம்பலப்படுத்தினார்கள் இருப்பினும் ரஜினியை முன்னிறுத்திய பா.ஜ.க. மற்றும் அதன் அறிஞர்களான குருமூர்த்தி போன்றோர் மற்றும் பெரும்பாலான தமிழக ஊடகங்கள் அனைத்தும் ரஜினி சொன்னது சரிதான் என்று திரும்பத் திரும்ப பேசி வந்தனர்.
அதில் தினமலம் என்று மக்களால் அன்பாக அழைக்கப்படும் தினமலர் முதல் மோடி மீடியா என்று நடந்து கொள்ளும் தமிழ் இந்து வரை அனைவரும் உண்டு. அடுத்ததாக சிஸ்டம் சரியில்லை என்று கவலைப்படும் ரஜினிகாந்த் தன்னுடைய காலா திரைப்படத்திற்கு அனுமதிக்கப்பட்ட திரையரங்க கட்டணத்தை தாண்டி யாரும் விற்கக் கூடாது என்று சொல்வாரா என பாட்டாளி மக்கள் கட்சி அறிக்கை வெளியிட்டது. தி.மு.க.-வும் முரசொலி பத்திரிக்கையில் தூத்துக்குடி போராட்டத்தைக் கொச்சைப்படுத்திய ரஜினியைக் கண்டித்து எழுதியது. இதை வைத்து நெறியாளர் விஜயன் ரவீந்திரன் துரைசாமியிடம் கேள்விகளைக் கேட்கிறார். அதற்கு அவரோ பா.ம.க., தி.மு.க., போன்ற கட்சிகள் அரசியல் விளம்பரங்களுக்காக இதை பேசுகிறார்கள் என்று ஒரே அடியாக அடித்து விட்டார். கூடுதலாக ரஜினிக்கும் இது விளம்பரம்தான் என்றார்.
இது தொடர்பாக பா.ம.க. பாலு கொஞ்சம் சிலிர்த்த போது வீரப்பனை அரக்கன் என்று சொன்ன ஜெயலலிதாவை இவர்கள் ஏன் எதிர்க்கவில்லை, ரஜினி என்பதால் எதிர்க்கிறார்கள் என்று குட்டினார். மொத்தத்தில் ரஜினி காலா தொடர்பான விவாதங்கள், கேள்விகள், குறுக்கீடுகள் வரும்போது அவர் தெரிவித்த கருத்துக்களின் சாராம்சம் என்ன?
ரஜினிகாந்த் எனும் சூப்பர் ஸ்டாரின் திரைப்படம் மட்டுமல்ல, அஜித் – விஜய் போன்ற நட்சத்திரங்களின் படங்களும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. காரணம் திருட்டு வி.சி.டி. படையெடுப்பால் நான்கு நாட்கள் மட்டுமே ஒரு திரைப்படம் ஓடும் என்றார். வி.சி.டி. எல்லாம் பழைய சாமான்கள் கடைக்குப் போய் வருடங்கள் பல ஆனதும், தற்போது டொரண்ட் மூலம் செல்பேசி வழியாக மக்கள் வி.சி.டி.யை விட மலிவாக அல்லது இலவசமாக படங்களை பார்க்கிறார்கள் என்பது இந்த கலைக்களஞ்சியத்திற்கு தெரியவில்லை.
அடுத்து நான்கு நாட்கள் மட்டுமே ஓட்ட வேண்டிய நிலையில் போட்ட பணத்தை எடுக்க வேண்டும் என்பதுதான் இப்போதைய சினிமா வியாபாரம். ஆகவே திருட்டு வி.சி.டி.யை ஒழிக்காமல் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்காமல் இந்த கட்டணத்தை – அதாவது கட்டணக் கொள்ளையை – நிறுத்த முடியாது என்று நியாயப்படுத்துகிறார் துரைசாமி. அதாவது திருட்டு வி.சி.டி. எனும் ஒரு மோசடி அமலில் இருப்பதால் பிளாக் டிக்கெட் என முறைகேட்டையும் ஏற்றுக் கொள்ள வேண்டுமாம். அதற்கு ரஜினி எந்த விதத்திலும் காரணம் அல்லவாம். “சிஸ்டம்” கெட்டுப் போய் விட்டதாக அவர் கூறி இருந்தாலும் தன்னுடைய படத்திலேயே அந்தக் கெட்டுப்போன சிஸ்டத்தை ஏற்றுக் கொண்டு இஷ்டப்படி பணம் சம்பாதிக்கலாம் என்பதே இதன் பொருள்.
அரசியலில் அவர் ஆயிரம் நீதி போதனைகள், ஆன்மீக அரசியல் எனும் இந்துத்துவ இலக்குகள், “சிஸ்டெம்” கெட்டுப் போய்விட்டது என்ற உளறல்கள் அனைத்துக்கும் பொருளே இல்லையாம். இந்த திரைப்படத்தின் பிசினஸ் என்பது வெறும் வியாபாரம் மட்டுமே, அதை ரஜினியின் அரசியலோடு இணைத்துப் பார்க்கக்கூடாது என்று குப்பைக்கட்டு கட்டுகிறார் ரவீந்திரன் துரைசாமி.
இப்போது ஒரு கேள்வி எழுகிறது. முதலில் ரஜினிக்கு காலா திரைப்படத்தில் கிடைத்திருக்கும் ஊதியம் எவ்வளவு? 50 கோடியோ 100 கோடியோ எவ்வளவோ இருக்கட்டும். இந்த படத்தின் வியாபாரம் என்பது இந்த படத்திற்கான தயாரிப்பு செலவோடு அதைத்தாண்டி ஓரிரு மடங்கு லாபமும் வேண்டும். இதுதான் ரஜினிகாந்தின் மருமகன் தனுஷ் எனும் இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் நோக்கம் அல்லது வியாபார உத்தியாக இருக்கும். 100 அல்லது 200 கோடி ரூபாய் செலவில் தயாராகி இருக்கும் இந்தப் படத்தை விநியோகஸ்தர்களும் திரையரங்க உரிமையாளர்களும் அதிக விலைக்கு வாங்கினால் மட்டும் தான் அந்த லாபம் ரஜினி மருமகனுக்கும், மகளுக்கும் இறுதியில் ரஜினிக்கும் போய்ச் சேரும். அதேபோல அதிக விலை கொடுத்து வாங்கிய விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் அதை நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக விலைக்கு தள்ளினால்தான் அவர்கள் கொஞ்சமோ அதிகமோ லாபம் எடுக்க முடியும்.
இறுதியில் காலா படத்தை பார்க்க வந்த ரசிகர்கள் 1000, 2000 ரூபாய் கொடுத்தால் மட்டும் தான் ரஜினிக்கும் மருமகனுக்கும் படியளக்க முடியும். இப்போது இந்த முறைகேட்டிற்காக ரஜினியை கண்டிக்க முடியாது, ஏனெனில் இந்த சிஸ்டம் அப்படித்தான் செயல்படுகிறது என்று வெட்கமே இல்லாமல் பேசுகிறார் ரவீந்திரன் துரைசாமி.
இது கூட பரவாயில்லை, ரஜினி பேசும் அரசியல் பா.ஜ.க.-வின் அரசியல்தான் என்று அப்பாவு அடித்துச் சொன்ன போது மற்றுமொரு பொய்யை கூசாமல் வெளியிட்டதோடு, பா.ஜ.க.-வின் நிகழ்ச்சி நிரல் ஒன்றையும் இலவச விளம்பரமாக வெளியிட்டார் ரவீந்திரன் துரைசாமி. அதாவது தூத்துக்குடி போராட்டத்திற்கு காரணம் மீனவர்கள். அந்த மீனவர்கள் கிறித்தவர்கள் என்பதால் கிறித்தவ சபைகளே தென்மாவட்டங்களின் போராட்டத்திற்கு தூண்டு கோலாக இருக்கிறார்கள் என்று ஆர்.எஸ்.எஸ். பேசுகிறதாம். இதனால் கிறித்தவர்களல்லாத மக்கள் தத்தமது பகுதிகளில் இருக்கும் வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிராக மீனவர்களே இருப்பதாக கருதுவதாகவும் பிரச்சாரம் செய்கிறதாம் சங்கப் பரிவாரம். ஆனால் ரஜினியோ தூத்துக்குடிக்கு சென்று மீனவர்களுக்கு ஆதரவாக பேசுவதால் அவர் பா.ஜ.க.-வின் அரசியலைப் பேசவில்லை என்று முழு பூசணிக்காயை ஊறுகாயில் மறைக்கிறார் துரைசாமி.
ஸ்டெர்லைட்டின் அனில் அகர்வால், பா.ஜ.க.-வின் அமைச்சர்கள் – தமிழக தலைவர்கள், தினமலர் – தினமணி – தி இந்து போன்ற ஊடகங்கள், எடப்பாடி அரசு, மத்திய அரசு அனைவரும் தூத்துக்குடி போராட்டம் குறித்து என்ன பேசுகிறார்களோ அதைத்தான் இன்னும் பிரலப்படுத்தி பேசினார் ரஜினி. இப்படி இருக்கும் போது அதாவது போராடிய மக்களை தூண்டி விட்ட விஷமிகள், சமூக விரோதிகள் என்று கொச்சைப் படுத்தி பேசிய ரஜினி, திரேஸ்புரத்தின் மீனவர்களுக்கு ஆதரவாக பேசுகிறாராம். ரஜினிக்கு தூத்துக்குடி ஸ்கிரிப்ட் எழுதி அனுப்பியது குருமூர்த்தி என்றால், அவருடன் நேரடியாக சென்று இயக்கியது, பாதுகாத்தது மத்திய உளவுத் துறை அதிகாரிகள். தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பதால் ரஜினியை இறக்குகிறோம், நீங்கள் எல்லாரும் ஆதரியுங்கள் என்று வெங்கய்யா நாயுடு கவர்னர் மாளிகையில் அனைத்து ஊடக பிரமுகர்களையும் அழைத்து பேசியதாக அப்பாவு சொன்னதும், நெறியாளர் விஜயன் ஆதாரம் கேட்டார். வேணும்னா என் மேல் வழக்கு போடுங்கள் என்று அப்பாவு பேசியதும், விஜயன் ஏதோ சமாளித்தார்.
ரஜினி யார் சொல்லி பேசுகிறார் என்பது தெரியாது, அவர் சொந்தமாகவும் பேசியிருக்கலாம் என்று கோதாவில் அடுத்து குதித்தார் கஸ்தூரி. அரசியலே மோசம், அனைவரும் விளம்பரங்களை தேடுகிறார்கள், பிளாக் டிக்கெட் எல்லாம் சகஜம் என்று பேசிய கஸ்தூரி இப்படி அப்பட்டமாக ரஜினி – கமலுக்கு ஜிங்ஜாக் அடிப்பதை யாரும் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்று நம்புமளவுக்கு ஒரு மகா முட்டாள் என்பதால் இந்த காமடி பீஸை இதற்கு மேல் இழுக்கத் தேவையில்லை.
ரஜினி கட்சி ஆரம்பிக்கப் போவதாக கூறியதிலிருந்து, அது தொடர்பாக தந்தி டி.வி. நடத்திய கருத்துக் கணிப்புகளில் எல்லாம் தமிழகத்தில் ஜெயா, கருணாநிதிக்கு பிறகு வெற்றிடம் இருக்கிறது, அந்த இடத்தில் ரஜினிக்கு வாய்சும், மாசும் இருப்பதாக தொடர்ந்து பேசியவர் இந்த துரைசாமி.
அதனால்தான் கத்தரிக்காய் முற்றினால் கடைத்தெருவுக்கு வந்தே ஆகவேண்டும், அது வரை அதாவது ரஜினி கட்சி ஆரம்பிக்கும் வரை, அனைவரும் யானையைப் பார்த்த பார்வையற்றவர்கள் (இங்கே குருடர்கள் என்றார் துரைசாமி. இதிலும் கலைக்களஞ்சியம் அப்டேட்டடாக இல்லை) போல அவரை பா.ஜ.க.விற்கு ஆதரவாக பேசுகிறார்கள் என்றார் துரைசாமி.
அய்யா இந்தக் கத்திரிக்காய் முற்றுவது இருக்கட்டும், இது விளைந்ததே காவித் தோட்டத்தில்தான். நீங்கள் காவித் தோட்டத்தின் பிரமுகர்களிடம் ஏதோ டீல் பேசி வாங்கிய வரங்களுக்கு மேல் கூவுகிறீர்களே, அந்த டீலை என்னவென்று விளக்கினால், மற்ற சமூக ஆர்வலர்கள் பயிற்சி எடுப்பதற்கு உதவியாக இருக்கும்!
மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு - மாதிரிப் படம் - நன்றி - தின்க்ஸ்டாக்
புற்றுநோய் என்பது நோயாளிகளின் வாழ்வை மட்டுமல்ல, அவர்களது மனதையும் சுக்குநூறாக நொறுக்கவல்லது. குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோய் அவர்களின் உலகையே அடியோடு நொறுக்கிவிடுகிறது. மார்பகப் புற்றுநோய்க்கான சிகிச்சையான ’கீமோதெரபி’ மற்றும் அதன் பக்க விளைவுகளும் அவர்களை அச்சுறுத்துகின்றன.
உடலை ரணப்படுத்துவதோடு முடி உதிர்தல், வாந்தி போன்ற பக்கவிளைவுகளால் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் கீமோதெரபி சிகிச்சை முறையைத் தவிர்ப்பதற்கான வாய்ப்பு 70% பேருக்கு இருப்பதாக கடந்த ஞாயிறு (ஜூன் 3, 2018) அன்று வெளியான ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய அந்த ஆய்வின் பெயர் ‘டெய்லர்க்ஸ்’ (Tailorx) ஆய்வு.
புற்று நோய்க்கான சிகிச்சைமுறைகள் மற்றும் அதன் பக்கவிளைவுகளின் துன்பத்திலிருந்து நோயாளிகளை விடுவிக்க எடுக்கப்பட்ட விரிவான முயற்சியின் ஒரு பகுதியே இந்த டெய்லர்க்ஸ் ஆய்வு.
இந்த ஆய்வைப் பொறுத்தவரையில் அமெரிக்கா மற்றும் கனடா முழுவதும் ஆயிரம் இடங்களிலிருந்து சுமார் 10,000-க்கும் மேற்பட்ட பெண்களிடம் மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த ஆய்வு ”ஆன்கோடைப் டி.எக்ஸ்” (Oncotype DX) என்ற ஒரு வகை சோதனையை அடிப்படையாகக் கொண்டது. இந்த சோதனையில், நோயாளியின் உடலின் திசுக்களில் இருந்து 21 மரபணுக்கள் எடுக்கப்பட்டு, அவை எந்த அளவு செயல்துடிப்போடு இயங்குகின்றன என்பதை சோதித்தறிவர்.
கடந்த ஜூன் 1, 2018 முதல் ஜூன் 05,2018 வரை அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்று வரும் ”புற்றுநோய் மருத்துவத்துக்கான அமெரிக்க சமூகம்- 2018” (American Society of Clinical Oncology – 2018) சந்திப்பில், கடந்த ஞாயிற்றுக் கிழமை (03-06-2018) டெய்லர்க்ஸ் ஆய்வின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன் முடிவுகள், 70% மார்பகப் புற்றுநோய் நோயாளிகளால் கீமோதெரபியைத் தவிர்க்கமுடியும் என்று குறிப்பிடுகின்றன.
எட்டு ஆண்டுகளாக நடத்தபட்ட டெய்லர்க்ஸ் ஆய்வில் எடுக்கப்படும் 21 மரபணு ஆய்வினால் பொது வகை மார்பகப் புற்றுநோயின் மீள்வருகை குறித்து முன்னனுமானிக்க முடியும்.
ஈஸ்டிரோஜன் மற்றும் ப்ரோஜஸ்டீரோன் ஆகிய ஹார்மோன் ஏற்பானின் இருப்பு, நிணநீர் முடிச்சுகளில் புற்று நோய்க் கட்டி இல்லாமலிருப்பது, ‘HER2’ வகைப் புரதம் இல்லாமலிருப்பது, கட்டியின் அளவு 4 செ.மீ. அளவிற்கும் குறைவாக இருப்பது ஆகியவை இந்த ஆய்வில் சோதிக்கப்படுகின்றன. ஹார்மோன் ஏற்பானின் இருப்பு, ஹார்மோன்தெரபி மூலம் புற்று நோயை சரி செய்வதற்கு வசதி ஏற்படுத்தித் தரும்.
கேத்தி அல்பேன்
இந்த சிறப்புமிக்க ஆய்வின் முடிவுகளைக் கொண்டு சுமார் 70% மார்பகப் புற்றுநோய் நோயாளிகளுக்கு கீமோதெரபியை தவிர்க்கமுடியும் என்கிறார், இந்த ஆய்வின் இணை ஆசிரியரும், அமெரிக்காவின் லயோலா பல்கலைக்கழக மருத்துவமனையின் புற்றுநோய் மருத்துவருமான கேத்தி அல்பேன்.
இந்த ஆய்வின் அடிப்படை சோதனையான ”ஆன்கோடைப் டி.எக்ஸ்” (Oncotype DX)-ன் அடிப்படையில் புற்றுநோயின் மீள்வருகைக்கான மதிப்பு பூச்சியத்திலிருந்து நூறு வரை கொடுக்கப்படும். மதிப்பெண் அதிகரிக்க அதிகரிக்க, புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். அச்சமயத்தில் புற்று நோயின் மீள்வருகைக்கான அபாயத்தை கீமோதெரபி குறைக்கிறது.
இந்த அடிப்படை சோதனையில் பெறப்படும் மதிப்பெண் நடுமதிப்பில் அமையும் பட்சத்தில் அது மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்கும் ஒரு சவாலாக இருந்து வந்தது. பழைய ஆய்வின் படி 10-க்கு குறைவான மதிப்பெண் கொண்ட பெண்களுக்கு கீமோதெரப்பி தேவையில்லை என முடிவு செய்யப்பட்டது. 25-க்கும் மேல் மதிப்பெண் இருக்கும் பட்சத்தில்தான், கீமோதெரப்பி நலன் பயக்கக் கூடியதாக இருந்தது. மதிப்பெண் 11-க்கும் 25-க்கும் இடையில் உள்ளவர்களுக்கு, கீமோதெரப்பி அவசியம் கொடுக்கப்பட வேண்டுமா என்பது கேள்விக்குறியாகவே இருந்தது. தற்போது புதிய ஆய்வில் இந்த நடுமதிப்பு மதிப்பெண் கொண்ட பெண்களையே பெரும்பான்மையாக ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு அதனடிப்படையிலேயே முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
டில்லியில் உள்ள இந்தரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையால் ’’ஆன்கோடைப் டிஎக்ஸ்’’ சோதனைக்கு பரிந்துரைக்கப்பட்ட நோயாளிகளில் 30% முதல் 40% வரையிலான நோயாளிகளின் மதிப்பெண், 11-க்கும் 25-க்கும் இடையிலேயே அமைந்துள்ளது என்கிறார் அதன் புற்றுநோயியல் மருத்துவர் ரமேஷ் சரின்.
மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நீலம் குப்தா – படம் : நன்றி லின்சே அடாரியோ – நியூயார்க் டைம்ஸ்
மார்பகப் புற்றுநோய் இந்தியப் பெண்களுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது. ஒரு இலட்சம் பெண்களுக்கு 25.8 பேர் என்ற கணக்கில் இந்தியாவில் மார்பகப் புற்றுநோய் இருக்கிறது. ஒரு சில வளர்ந்த நாடுகளை விட இது குறைவுதான் என்றபோதிலும், மார்பகப் புற்றுநோயினால் ஏற்படும் மரண விகிதம் (ஒரு இலட்சம் பெண்களுக்கு 12.7 பேர்) ஒப்பீட்டளவில் மேற்குலக நாடுகளுக்கு சரி சமமாக உள்ளது. இதற்கு முக்க்கியக் காரணம், காலம் தாழ்ந்து புற்றுநோயைக் கண்டுபிடிப்பதுதான்.
இந்தியாவில் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வரும் விகிதம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. இதன் அதிகரிப்பு விகிதம் 0.46% முதல் 2.56% வரையில் இருந்து வருகிறது. ”ஆன்கோடைப் டி.எக்ஸ்” சோதனை செய்வதற்கான வசதிகள் இந்தியாவில் எங்கும் இல்லை. இதனாலேயே, சோதனைக்காக மாதிரிகளை வெளிநாட்டிற்கு அனுப்பவேண்டியது அவசியமாகிறது. இது ஒரு அதிகக் கட்டணம் கொண்ட சோதனை. ஒருமுறை சோதனை செய்ய ரூ2.5 இலட்சம் முதல் செலவு செய்யப்பட வேண்டியது இருக்கிறது.
இந்தியாவில் புற்றுநோய் மருத்துவம் என்பது ஏழைகளுக்கு என்றுமே எட்டாக்கனியாகவே உள்ளது. புதிய கண்டுபிடிப்புகள் பல வந்தாலும், அது பணக்காரர்களின் ஆயுளை நீட்டிப்பதற்காகவேதான் பயன்படுகின்றது. மனிதனுக்கு ஏற்படும் நோய்களின் கோரப் பிடியிலிருந்து படிப்படியாக அவனை மருத்துவ அறிவியலாளர்கள் விடுவித்துக் கொண்டிருக்கின்றனர். முதலாளித்துவத்தின் கோரப் பிடியிலிருந்து அறிவியலை விடுவித்து அதனை சமூகம் முழுவதற்குமானதாக மாற்ற வேண்டிய கடமை நம் அனைவரின் முன்னும் காத்திருக்கிறது.
அபந்திகா கோஷ் – இந்தியன் எக்ஸ்பிரஸ்தளத்திற்கு எழுதிய அறிவியல் கட்டுரையின் தமிழாக்கம்
காவிரி, ஓ.என்.ஜி.சி., நியூட்ரினோ, ஸ்டெர்லைட், மணல் குவாரிகள் முதலானவை தமிழகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அல்ல இவை திட்டமிட்டு நடத்தப்படும் போர் என்பதை அம்பலப்படுத்தி புதிய ஜனநாயகம் ஏப்ரல் – 2018 இதழில் வெளியான தலையங்கம்.
கோடையின் மையமான பகுதி முடிந்தாலும் வெயிலின் வெப்பம் குறையவில்லை. நடுப்பகலில் அலையாமல் இங்கு பலருக்கு வேலையில்லை. தாகம் தணிக்க மக்கள் நாடுவது பழச்சாறு. சென்னை முழுவதும் பழச்சாறுகளுக்கான பழங்களை அனுப்பும் கோயம்பேடு காய்-கனி சந்தைக்குச் சென்றோம். அங்கு வெய்யிலில் கசகசவென்று வேர்வையுடன் பழக்குவியல்களுக்கு மத்தியில் வேலை செய்து கொண்டிருந்தனர், தொழிலாளர்கள்.
சத்தியமங்கலம், ஆந்திரா, திருச்சி, கடலூர் ஆகிய பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் வாழைத்தார்களை இறக்கும் தொழிலாளிகள்.
ஆனந்தன் – ஐயப்பன், (பெரம்பலூர்), சுமைதூக்கும் தொழிலாளிகள்.
கோயம்பேடு மார்கெட்ல ஒவ்வொரு மண்டிக்கும் ஒரு குறிப்பிட்ட ஊர்காரங்க இருப்பாங்க. இப்ப பழ மண்டியை பொறுத்த வரைக்கும் கடலூர், விழுப்புரம், பெரம்பலூர் மாவட்டத்துக்காரங்க இருப்பாங்க. ஏன்னா, ஊருக்கு போனா வேலை இல்லாம ஊர்லையே சுத்திகிட்டு இருக்கும் சொந்தகாரங்கள கூட்டி வந்துடுவோம். இங்க வெளிநாட்டுல இருந்து வரும் பழங்கள் கப்பல்ல துறைமுகத்துக்கு வரும். அங்கிருந்து கண்டெய்னர்ல கொண்டு வருவாங்க. அத நாங்க இறக்குவோம். பழத்தை பொறுத்த வரைக்கும் எல்லாம் தலை சுமைதான். தோள் சுமை இல்லை. ஒரு நாளைக்கு 500 லிருந்து 700 ரூபாய் வரைக்கும் கெடக்கும். அதுவும் நாலு நாளைக்கு தான் வேலை. இதைக்கொண்டு தான் வேலையில்லாத நாட்களை கழிக்கணும். எப்படி இருந்தாலும் ஒரு நாளைக்கு முன்னூறு ரூபா செலவாகிடும். காலைல குளிக்க, கக்கூஸ் போக ரூ.30, மூணு வேளை சாப்பாடு ரூ.150, அப்புறம் உடம்பு வலிக்கு குடிப்போம். கட்டிங் ரூ.70, ஹான்ஸ் புகையிலை ரூ.30 ன்னு செலவாகிடும். எல்லா செலவும் போக மிஞ்சுறது தான் வீட்டுக்கு அனுப்புவோம்.
கண்டெய்னர் லாரியில் இருந்து இறக்கப்பட்ட ஸ்டாபெர்ரி பழப்பெட்டியை கொண்டு செல்லும் தொழிலாளி.
மோகன், கோடைக்காலம் என்பதால் தற்போது தர்பூசணி அதிகமாக இறக்கியுள்ளோம். அடுத்து மாம்பழம், கொய்யா என்று சீசனுக்கு ஏற்றவாறு வியாபாரம் மாத்திக்கிவோம்.
மார்க்கெட்டுக்கு வந்திறங்கிய சாத்துக்குடியை தரம் பிரிக்கும் தொழிலாளிகள்.
கோதண்டம், (விழுப்புரம்), சுமை தூக்கும் தொழிலாளி.
கோயம்பேடு இப்ப மார்கெட்டுக்கு அதிகம் வருவது வாஷிங்டன் ஆப்பிள் மற்றும் டெல்லி ஆப்பிள். வாஷிங்டன் ஆப்பிள் பிப்ரவரி முதல் மே மாதம் வரையிலும், மே முதல் டிசம்பர் வரை டில்லி ஆப்பிளும் நாலு விதமான பெட்டிகளில் வரும். ஒரு பெட்டியின் விலை ரூ 350 முதல் 3500 வரை இருக்கும். ஒவ்வொரு பெட்டிக்கும் பழங்களின் அளவுக்கு ஏற்றவாறு 35 முதல் 70 காய்கள் வரை இருக்கும். இந்த பழங்கள் எல்லாம் கமிசன் மண்டிக்கு போகும். மண்டிகாரங்களுக்கு 1000க்கு 200 ரூபா கமிசன். எல்லாம் வித்த பிறகு தான் பொருளுக்கான காசையே வியாபரிங்ககிட்ட கொடுப்பாங்க. நாங்க சுமை தூக்கும் தொழிலாளிகள் மொத்தம் 25 குழு இருக்கோம். ஒவ்வொரு குழுவுக்கும் 60 பேர். இதுல 40 பேர் வேலை செய்வோம். 20 பேர் ஊருக்கு போயிருப்பாங்க. ஊருக்கு போனவங்க வந்ததும் அடுத்த இருபது பேர்ன்னு சுழற்சி முறையில் வேலை நடக்கும். ஐம்பது கிலோ கூடைக்கு இருபது ரூபா தருவாங்க. அந்த மாதிரி 1000-லிருந்து 1500 கூடை வரைக்கும் இறக்குவோம். அதுல வரும் பணத்தை நாங்க பிரிச்சிக்குவோம்.
சில்லறை விற்பனைக்காக உதிரிப்பழங்களை வாங்கக் காத்திருக்கும் சாலையோர வியாபாரிகள்.
தாகம் தணிக்கவும், உடலுக்கு குளிர்ச்சியூட்டவும் தேவைப்படும் பழங்களை இறக்கி, தரம்பிரித்து, மொத்த விற்பனை, சில்லறை விற்பனை, சுமை தூக்கும் தொழிலாளிகள், என்று பெரும் படையே இங்கு வேலை செய்து கொண்டிருக்கிறது.
சோசலிச சமூகத்தை அமைப்பதற்கான போராட்டம் ஃபிரட் எங்ஸ்ட் – உடன் ஓர் நேர்காணல் | பாகம் – 2
ஒனுர்கன் உல்கர்: நீங்கள் இப்போது உற்பத்தியை உயர்த்தும் பிரச்சினையில் முதலாளித்துவ அணுகுமுறைக்கும் மாவோவின் சோசலிச அணுகுமுறைக்கும் இடையேயான அடிப்படை வேறுபாட்டை விளக்கியிருக்கிறீர்கள். இந்த வேறுபாடு அறிவைப் பற்றிய கோட்பாட்டில் ஆழமாக வேர் கொண்டிருப்பது என்று நினைக்கிறேன்.
குறிப்பாக, உற்பத்திச் செயலில் நேரடியாகப் பங்கு கொள்வதன் காரணமாக உழைக்கும் மக்கள் சமூக எதார்த்தத்தைப் பற்றிய அறிவைப் பெற்றிருக்கிறார்கள் என்று கருதும் மாவோயிச அறிவுக் கோட்பாடும், மூளையுழைப்புக்கும் உடலுழைப்புக்கும் இடையேயான வேறுபாட்டை என்றென்றைக்கும் மறுஉற்பத்தி செய்ய விரும்பும் முதலாளித்துவ அறிவுக் கோட்பாடும் முற்றிலும் வேறுவேறானவை.
ஃபிரட் எங்ஸ்ட்
அறிவின் உண்மையான சொந்தக்காரர்களிடமிருந்து, அதாவது தொழிலாளர்கள், விவசாயிகளிடமிருந்து, கற்றுக் கொள்வதற்காகப் படித்த இளைஞர்கள் கிராமங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் அனுப்பப்பட்டனர் என்று நான் நினைக்கிறேன்.
அப்போது நீங்களும் உடலுழைப்பில் ஈடுபட்டீர்கள். உங்களுடைய அனுபவத்திலிருந்து என்ன கற்றுக் கொண்டீர்கள்? மாவோவினுடைய அணுகுமுறை உண்மையிலேயே சரியானதுதான் என்று நினைக்கிறீர்களா?
ஃபிரட் எங்ஸ்ட் : ஆம். நிச்சயமாக. ஆனால், முக்கியமான விசயம் என்னவென்றால், முதலாளித்துவத்தில் உற்பத்தியின் நோக்கமே வேறு. உதாரணமாகச் சொல்ல வேண்டுமென்றால், விவசாய எந்திரங்களின் முன்னேற்றம் வழக்கமாக அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு எந்திர வடிவமைப்பு செய்யும் பொறியாளர்களால் செய்யப்படுவதில்லை. பெரும்பாலும் விவசாயிகளே அந்த எந்திரங்களுடைய பிரச்சினையைக் கண்டுபிடிக்கிறார்கள்.
உதாரணமாக, அமெரிக்காவில் இருக்கும் விவசாயிகள், தாங்களே சின்ன பட்டறை வைத்திருக்கிறார்கள். அவர்களே தங்களது எந்திரத்தை மாற்றி அமைத்துக் கொள்கிறார்கள். எந்திர விற்பனை முகவர்கள் வந்து பார்த்து அப்படியே அந்த மாற்றத்தைத் திருடி, அதை இன்னும் கொஞ்சம் சரி செய்து கொள்வார்கள்.
அறிவு கண்டிப்பாக அனுபவத்தில் இருந்து தான் வருகிறது. அதுதான் எல்லா புதிய கருத்துக்களுக்கும் ஆதாரம். முதலாளித்துவ அறிஞர்களும் பொறியாளர்களும் அந்த அறிவை மேலும் செழுமைப் படுத்த முடியும்.
தொழிற்சாலையில் பணியாற்றுகின்ற, முறையான கல்வியறிவு பெறாத தொழிலாளர்களால் அந்த அளவுக்குச் சிறப்பாக அனுபவத்தைக் கோட்பாடாக மாற்ற முடியாதுதான். ஆனால், கூட்டிக் கழித்துப் பார்த்தால், தொழிலாளர்களிடம் சேகரமாயிருக்கும் அனுபவம்தான் அறிவின் முதன்மையான ஆதாரம்.
அதன் காரணமாகத்தான் மாவோ தொழிலாளர்களை மூளையுழைப்புக்குப் பழக்கப்படுத்த வேண்டும் என்றும், படிப்பாளிகளை உடலுழைப்புக்குப் பழக்கப்படுத்த வேண்டும் என்றும் சொன்னார். இந்த இரண்டையும் இணைப்பது மிக முக்கியம்.
ஆமாம், அறிவைப் பற்றிய கோட்பாடும் இதில் ஒரு காரணிதான். ஆனால், உற்பத்தியின் நோக்கம்தான் இருப்பதிலேயே முக்கியமான காரணி. அமெரிக்காவிலும் மாவோ காலத்து சீனாவிலும் என்னுடைய சொந்த அனுபவம் அதைத்தான் காட்டுகிறது.
அமெரிக்காவில், நாங்கள், தொழிலாளர்கள் என்ற முறையில், தொழில்நுட்ப மேம்பாடு குறித்த எந்த ஆலோசனையையும் நிர்வாகத்திடம் கொண்டு போகமாட்டோம். ஏனென்றால், வேலை போய் விடுமோ என்று பயம்.
ஆனால், மாவோவின் சீனாவில், உற்பத்தியின் நோக்கமே வேறு. நிர்வாகி சொன்னது தவறு என்று நினைத்தால், ஒரு தொழிலாளி எதிர்த்து கேட்க முடியும். ஒழுங்குமுறை விதிகள் இருந்தது உண்மைதான். ஆனால், நாம் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து வேலை செய்கிறோம் என்பதுதான் பொதுவான புரிதல்.
ஒரு நிர்வாகி வெறுமனே தன்னுடைய அறையில் உட்கார்ந்து கொண்டு, டீ குடித்துக் கொண்டு, பேப்பர் படித்துக் கொண்டு, தொழிலாளிகளிடம் ‘‘அதைச் செய் இதைச் செய்” என்று உத்தரவு மட்டும் போட்டால், ‘‘வெளியே வா, இங்கே வந்து எங்களுடன் வேலை செய்” என்று அவர்களிடம் சொல்ல முடியும். தொழிலாளர்களுக்கு அந்த அதிகாரம் இருந்தது.
யார் நிர்வாகியாக நியமிக்கப்படுவது என்பதும் தொழிலாளர்களுடைய ஒப்புதலைப் பொறுத்தது தான். இது தேர்தலைப் போல இல்லைதான். ஆனால், தொழிலாளர்கள் ஒரு நிர்வாகியை மாற்ற விரும்பினால், அவர்களின் கோரிக்கை நிர்வாகத்தால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்றால், அவர்கள் வேலை நிறுத்தம் செய்யவோ, உற்பத்தியின் வேகத்தைக் குறைக்கவோ முடியும். ஆகையால், ஒருவர் வெற்றிகரமான நிர்வாகியாக இருக்க விரும்பினால், அவர் தொழிலாளர்களின் அங்கீகாரத்தைப் பெற்றே தீரவேண்டும்.
மறுபடியும் சொல்கிறேன். இங்கே முக்கியமான விசயம் என்னவென்றால், நிர்வாகிகள் தொழிலாளர்களை வேலையை விட்டுத் துரத்தவோ, சம்பளத்தை பிடித்து வைக்கவோ முடியாது. நான் உங்களை வழிநடத்த விரும்பினால், நான் உங்களைக் கட்டாயப்படுத்த முடியாது. ஒப்புதலோடும் காரணத்தோடும் மட்டுமே அவ்வாறு செய்ய முடியும்.
அதுதான் முதலாளித்துவ உற்பத்தி முறைக்கும் சோசலிசத்திற்கும் இடையே இருக்கும் அடிப்படை வித்தியாசம். உற்பத்திச் செயல்முறையை செழுமைப்படுத்துவதை நோக்கி மக்களை உந்துகின்ற சக்தி இதுதான்.
மாவோவின் காலத்தில், உழைக்கும் வர்க்கம் ஒருபோதும் அதிகாரத்தில் இருக்கவில்லை என்று சிலர் கூறுகிறார்கள். நான் அதை மறுக்கிறேன். அன்று குழுச்சண்டைகள், ஆயுத மோதல்கள் இருந்தன என்ற உண்மையே உழைக்கும் வர்க்கம் அதிகாரத்தில் இருந்தது என்பதை மெய்ப்பிக்கிறது.
ஒனுர்கன் உல்கர்: நீங்கள் உங்கள் தொழிற்சாலையில் வேலை செய்யும்போது இத்தகைய குழுச்சண்டைகளை கண்கூடாகப் பார்த்தீர்களா?
ஃபிரட் எங்ஸ்ட் : எங்கள் தொழிற்சாலையில் இல்லை. ஆனால், பல கடுமையான சண்டைகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். கலாச்சாரப் புரட்சியின் ஆரம்பத்தில் ஒரு நிலக்கரிச் சுரங்கத்திற்கு போயிருந்த போது அங்கே வாக்கு வாதங்கள் நடந்தன. கைகலப்புதான் நடக்கவில்லை.
சுரங்கத் தலைமையை தாங்கிப் பிடிக்கும் மிதவாதக் குழுவும் அதை விமர்சிக்கும் எதிரணியும் ஒருவரையொருவர் விமரிசித்து பெரிய சுவரெழுத்துக்களையும், ஆர்ப்பாட்டங்களையும், பேரணிகளையும் நடத்தினர். நாங்கள் பல பேரணிகளுக்குச் சென்றோம்.
இன்று மக்கள் எப்போது பார்த்தாலும் ‘ஜனநாயக’த்தைப் பற்றிப் பேசுகிறார்கள். ஆனால், பல சந்தர்ப்பங்களில் அது ஒரு பித்தலாட்டமாகவே இருக்கிறது. மாவோவின் சீனாவில் உயிர் துடிப்பான ஜனநாயகம் அன்றாட வாழ்க்கையில் அமலில் இருந்தது.
நீங்களே சொல்லுங்கள். மக்கள் வாக்குவாதம் செய்தார்கள்தான். அவர்களின் கருத்து சரியானது என்பதை நிறுவ கைகலப்பிலும் ஈடுபட்டார்கள்தான். உழைக்கும் வர்க்கம் அதிகாரத்தில் இருந்தது என்று இதற்குப் பொருளில்லை என்றால், இதற்கெல்லாம் வேறு என்னதான் பொருள்? சொல்லுங்கள் பார்ப்போம்.
ஒனுர்கன் உல்கர்: இன்று, மேற்கில் மட்டுமல்ல, சீன கல்வி நிலையங்களில்கூட மாவோயிசக் காலத்தில் அரசியல் பிரச்சாரங்களில் ஈடுபடுத்தப்பட்டு, கிராமங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் அனுப்பப்பட்ட இளைஞர்கள் வீணடிக்கப்பட்ட தலைமுறை என்றும், மேலிடத்து அதிகாரச் சண்டைக்காகப் பலிகொடுக்கப்பட்டவர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். இந்தக் கருத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
ஃபிரட் எங்ஸ்ட் : நான் இதை ஏற்கவில்லை. முதலில், இது அதிகாரச் சண்டையைப் பற்றியது மட்டுமல்ல. சொல்லப்போனால், நான் முன்னர் குறிப்பட்டதைப் போல, இது சோசலிசத்தைக் கட்டமைப்பதைப் பற்றியது. முதலாளித்துவப் பாதையில் செல்ல விரும்பியவர்களுக்கிடையில் நடந்த அதிகாரச் சண்டை, எந்த பாதையில் செல்வது என்று உழைக்கும் வர்க்கத்திற்கும் முதலாளித்துவ வர்க்கத்திற்கும் இடையே நடந்த உண்மையான போராட்டம் மாவோவின் காலத்தின் நடந்தவை இந்த இரண்டின் கலவை என்று மதிப்பிடுவதே சரி.
‘அனுப்பப்பட்ட’ இளைஞர்களைப் பற்றிய உங்கள் கேள்வியைப் பொருத்த வரையில், அந்தக் காலத்தில் நகரத்து இளைஞர்கள் ஓரளவு சலுகை பெற்றவர்களாக இருந்தனர். சலுகை என்றால், கிராம மக்களைவிட நகர மக்கள் அதிகமான வசதிகளை அனுபவித்தார்கள். மிகவும் பின்தங்கிய மற்றும் ஏழையான சீனாவை தொழில்மயமாக்கும் முயற்சியில் இது ஒரு தவிர்க்க முடியாத விளைவு.
எப்படித் தொழில்மயமாக்குவது என்பதுதான் பிரச்சினை. நமக்கு ஏதோ ஒரு வகையான புராதன மூலதனத் திரட்சி தேவை. அந்தக் காலத்தில் பிரிட்டன் செய்ததைப்போல நிலங்களை வேலியிட்டு மடக்கியும் [enclosure] விவசாயிகளை நிலத்திலிருந்து விரட்டியும் சீனாவால் இதைச் செய்ய முடியாது.
அல்லது வேறு நாடுகளை ஆக்கிரமித்துச் சுரண்டவும் முடியாது. மக்களில் பெரும்பான்மை விவசாயிகளாக இருக்கும்போது தொழில்மயமாக்கத்திற்குத் தேவையான மூலதனத்தைத் திரட்டுவது எப்படி? 1950 துவக்கத்தில்கூட சீன மக்களில் 80% கிராமங்களைச் சார்ந்துதான் இருந்தார்கள்.
ஆகவே, சீனா என்ன செய்திருக்க முடியும்? பெரும்பான்மை மக்களான விவசாயிகள் மீது வரி விதிக்கலாம். ஏனென்றால், மக்கட்தொகையில் அவர்கள்தான் பெரும்பான்மையினர். அல்லது தொழிற்துறை உற்பத்திப் பொருள்களுக்கு ஈடாக வேளாண் பொருட்களை சமனற்ற விதத்தில் பரிமாற்றம் செய்துகொள்ளலாம்.
வரிவிதிப்பு செலவுமிக்கதாகவும் பராமரிப்பதற்குக் கடினமானதாகவும் இருந்திருக்கும்.
ஆகையால், தொழிற்துறை பொருள்களுக்கு அவற்றின் உண்மையான அடக்க விலையைக் காட்டிலும் கூடுதலான விலையும், வேளாண் பொருள்களுக்கு அடக்க விலையைவிடக் குறைவான விலையும் தீர்மானித்து அவற்றைப் பரிமாறிக் கொள்ளும் முறையை அரசு கடைபிடித்தது. இதன் மூலம் தொழில்மயமாக்கத்திற்குத் தேவையான மூலதனத்தைத் திரட்டிக் கொண்டது.
இந்த வழிமுறை வெற்றி பெறுவதற்கும், தொழில்துறைப் பொருள்களின் விலைகளுக்கும் விவசாயப் பொருள்களின் விலைகளுக்கும் இடையேயான ‘கத்திரிக்கோல்’ இடைவெளியைப் பயன்படுத்தி தனியார் வியாபாரிகள் கொழுப்பதைத் தடுப்பதற்கும், சீனா வேளாண் பொருள் கொள்முதலில் ஏகபோகத்தை அறிமுகப்படுத்தியது.
இந்த தானிய ஏகபோக கொள்முதல் முறை சரியாக வேலை செய்வதற்கு வசிப்பிட அனுமதி (permit) முறையும் தேவைப்பட்டது. நகரவாசிகள் தானியங்களைக் குறைந்த விலைக்குப் பெறுவார்களாதலால், தொழிலாளர்கள் குறைந்த சம்பளத்தில் வாழமுடியும். விவசாயிகளிடமிருந்து தானியங்கள் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டன; தொழிற்துறை பொருள்கள் (துணிகள் அல்லது தெர்மாஸ் ஃபிளாஸ்க், பேட்டரி விளக்குகள், வாஷ் பேசின்கள் போன்ற இலகுரக தொழில் பொருட்கள்) அதிக விலைக்கு விற்கப்பட்டன. துவக்க நிலை தொழில்மயமாக்கலுக்கு இத்தகைய சமனற்ற பரிமாற்றம் அத்தியாவசியமாக இருந்தது.
இந்த சமனற்ற முறை, ஒரு துணி ஆலைத் தொழிலாளியின் ஒரு வருட உழைப்பால் உற்பத்தி செய்யப்பட்ட பொருளை, ஒரு டஜன் முதல் நூறு விவசாயிகளின் ஒரு வருட உழைப்பின் விளைபொருளுக்கு ஈடாகப் பரிமாற்றம் செய்து கொள்வதைச் சாத்தியமாக்கியது.
இதற்கான காரணம் எளிமையானது. தொழில்மயமாக்கலுக்கு நமக்குச் சுரங்கங்கள், இரும்பு, எந்திரங்கள், கட்டிடங்கள் ஆகியவை தேவை. ஆனால் இவை எதுவும் விவசாயிகளுக்குத் தேவைப்படவில்லை. ஒரு தையல் மிசினோ, நூற்பாலை எந்திரமோ செய்வதற்கு இரும்பு உருக்காலை வேண்டும், நிலக்கரி, இரும்புக்கனிமச் சுரங்கங்கள் வேண்டும்.
ஒரு நீண்ட சங்கலித்தொடராகத் தொழில்துறையைக் கட்டியமைக்க வேண்டும். அதில் வேலை செய்யும் தொழிலாளிகள் சாப்பிட வேண்டும். இந்த உணவு எங்கிருந்து வரும்? விவசாயிகளிடமிருந்துதான். இப்படித்தான் மேற்கூறிய சமனற்ற பரிமாற்றம் தொழில்மயமாக்கத்தைத் துவக்கியது. இதுதான் முக்கியமான காரணம்.
சொல்லப்போனால், இது விவசாயிகளின் நீண்டகால நலனுக்காகவும்தான். எதிர்காலத்தில் விவசாயிகள் துண்டு துக்காணி நிலத்திலேயே முடங்கிக் கிடக்க வேண்டியதில்லை. கடுமையான விவசாய வேலைகளிலிருந்து அவர்களைத் தொழிற்சாலைகள் விடுவிக்கும். அவர்கள் டிராக்டர்களைப் பயன்படுத்த முடியும்.
கூட்டுப்பண்ணை உருவாக்கம் விவசாயிகள் எந்திரங்கள் வாங்குவதைச் சாத்தியமாக்கியது. இது நகர்ப்புறங்களுக்குத் தானியங்களை வழங்குவதையும் எளிதாக்கியது. ஆகையால், இதுதான் ‘‘ஹூகோ” என்றழைக்கப்படும் வசிப்பிட அனுமதி முறைக்கு அடிப்படையாக அமைந்தது.
அதே நேரம், நாம் எதிர்மறைகளின் ஒற்றுமை என்பதை நினைவில் கொள்ளவேண்டும். எல்லாவற்றிற்கும் இரண்டு பக்கங்கள் உள்ளன. நான் சொல்ல விரும்புவதைச் சரியாக வெளிப்படுத்துவதற்குச் சீன மொழியில் ‘‘ஊனாய்” என்ற ஒரு அருமையான வார்த்தை இருக்கிறது. இதன் பொருள் ‘‘படுமோசமானதொரு சூழ்நிலையில் இருப்பதற்குள் சிறந்தவொரு தெரிவு.”
அன்றைய காலகட்டத்தில் மூலதனத்தைத் திரட்டிக்கொள்வதற்கு சீனாவிடம் இருந்த சிறந்த மாற்று சமனற்ற பரிமாற்றம்தான். ஆனால், அதற்கு ஒரு பக்க விளைவும் இருந்தது. இந்த முறையின் விளைவாக நகர்ப்புறத்து மக்கள் தங்களின் உழைப்பு விவசாயிகளின் உழைப்பை விட மதிப்புக் கூடியது என்று எண்ணினார்கள். அது உண்மையில்லை. ‘சமனற்ற பரிமாற்றம்’ என்பது அரசின் தானிய ஏகபோகம் தோற்றுவித்த ஒரு விளைவு.
ஆனால், இந்த விளைவினால் நகர்ப்புற மக்கள் தங்களை உயர்வானவர்களாக எண்ணத் தொடங்கினார்கள். அவர்களுக்கு உணவு உத்திரவாதமாக கிடைத்தது. துணிகள் உத்திரவாதமாகவும் குறைந்த விலையிலும் கிடைத்தன. தானிய ரேசன் முறையின் காரணமாகக் கிராமப்புற மக்கள் விரும்பினாலும், நகரங்களுக்குக் குடிபெயர முடியாத சூழல் இருந்தது.
கிராமத்திலிருந்து தன்னிச்சையாக ஒருவர் நகரத்துக்குச் சென்றால் அவருக்கு தானியம் கிடைக்காது. அதனால் நகரத்தில் வாழமுடியாது. நகரங்களில் அங்கு குடியிருப்போருக்கு மட்டுமே தானியம் உத்திரவாதம் செய்யப்பட்டிருந்தது. எனவே, ஒருவர் கிராமத்திலிருந்து நகரத்துக்குக் குடிபெயர்வதென முடிவெடுத்தால், அவர் தனக்குரிய தானியத்தையும் கிராமத்திலிருந்து கொண்டு செல்லவேண்டும்.
இதை ‘‘மக்களின் இடப்பெயர்ச்சிச் சுதந்திரத்திற்கு எதிரான கட்டுப்பாடு” என்று முதலாளித்துவ தாராளவாதிகள் சாடுகிறார்கள். லத்தீன் அமெரிக்காவிலும், இந்தியா போன்ற குறைவளர் நாடுகளிலும் உள்ள நகர்ப்புறச் சேரிகளைப் பாருங்கள். இந்தச் ‘சுதந்திரம்’ எப்படி வேலை செய்கிறது என்று தெரியும். இந்நாடுகளில் மக்கள் சுதந்திரமாகத்தான் இடம் பெயர்கிறார்கள்!
மேற்கண்ட (சமனற்ற பரிமாற்ற) முறையின் எதிர்மறையான விளைவு என்னவென்றால், முன்னேறிய கல்வி, மருத்துவ வசதிகளும் கலை, இலக்கிய நுகர்வுக்கான வாய்ப்பும் நகரங்களில் அதிகமாக இருக்கிறது. கிராமத்தை விட நகர மக்களின் வாழ்க்கை வேகமாக முன்னேறுகிறது. இது பழைய முதலாளித்துவ சமூகத்தால் தோற்றுவிக்கப்பட்டு, சோசலிச சமூகத்திலும் தொடர்கின்ற ஒரு பிளவு.
ஆகையால், இளைஞர்களைக் கிராமங்களுக்கு அனுப்பியது பயனுள்ளதாக இருந்தது.
முதலாவதாக, இது நகர மக்கள் விவசாயிகளுக்குத் தமது நன்றிக்கடனைத் திருப்பிச்செலுத்த வழிவகுத்தது. இளைஞர்கள் தமது அறிவையும் திறனையும் கிராமத்துக்கு கொண்டு சென்றார்கள். கிராமம் எப்படி இருக்கிறது என நகரத்து இளைஞர்கள் கண்ணால் காண்பது அவர்களுக்கு ஒரு செய்தியைச் சொல்லியது. ‘‘நகரத்தில் உனக்கு கிடைப்பவை உன் இயற்கையான உரிமைகள் என்று நினைத்துக் கொள்ளாதே. விவசாயிகள், இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள், எப்படி வாழ்கிறார்கள் என்பதை சிந்தித்துப் பார்” என்பதே அச்செய்தி.
டெங் சியாவோ பிங் அதிகாரத்திற்கு வந்தவுடன், இளைஞர்களைக் கிராமப்புறத்திற்கு அனுப்பும் கொள்கையை ஒழித்தார். இளைஞர்கள் கலகம் செய்த காரணத்தினால்தான் டெங் அந்த கொள்கையை அகற்றினார் என இன்று கூறுகிறார்கள். ஆனால், இளைஞர்கள் ஏன் கலகம் செய்தனர் என்று மிகச் சிலரே ஆராய்கின்றனர். மாவோவின் காலத்தில் இளைஞர்கள் கிராமம் செல்வதற்கு எதிராகக் கலகம் செய்யவில்லை.
1977 டெங் நுழைவுத்தேர்வு முறையை அறிமுகப்படுத்தினார். மாணவர்களில் மேட்டுக்குடிப் பிரிவினர் (இத்தேர்வு முறையில் அதிக மதிப்பெண் பெற்று) நகர்ப்புறக் கல்லூரிகளுக்குப் போய்விட முடிந்தது. விவசாயிகளுடன் வேலை செய்து கொண்டிருக்கும் மற்ற இளைஞர்களின் நிலையை எண்ணிப்பாருங்கள்.
‘‘அவர்கள் மட்டும் போய்விட்டார்கள். நாங்களெல்லாம் வாழ்நாள் முழுவதும் கிராமத்திலேயே கிடந்து சாக வேண்டுமா?” என்று சிந்திக்கத் தலைப்பட்டார்கள். கிராமங்களில் பணியாற்றுவது குறித்து இளைய தலைமுறையிடம் நிலவிய கருத்தொற்றுமையையும், இக்கொள்கையின் பால் அவர்கள் கொண்டிருந்த உந்துதலையும் டெங்கின் கொள்கை ஒழித்துவிட்டது.
இருந்தாலும், ‘‘கிராமம் செல்” என்ற கொள்கையைக் கண்டிப்பவர்கள் உள்ளிட்ட பெரும்பாலானாவர்கள் அந்த வாழ்க்கையைப் பற்றிய மறக்க முடியாத அனுபவத்தைக் கொண்டிருக்கிறார்கள். கிராமத்தில் வாழ்வது அவர்களுக்கு சிரமமாகத்தான் இருந்தது. இருந்தாலும், அந்த நாட்களைப் பற்றிய மலரும் நினைவுகள் இருக்கவே செய்கின்றன. ‘‘அந்த இளைமைக் காலத்துக்கும் அந்த வாழ்க்கைக்கும் திரும்பவும் போக விரும்புகிறோம்” என்று பலரும் கூறுகிறார்கள்.
முதலாளித்துவ சமூகத்தில் தொழிற்சாலையில் வேலை செய்த அனுபவத்தைக் கொண்டாடும் இலக்கியங்களை நான் எங்கும் கண்டதில்லை. எடுத்துக்காட்டாக, அமெரிக்க இலக்கியத்தில், இளைஞர்கள் தங்களின் தொழிற்சாலை அனுபவத்தைப் பெருமையாக பேசிக்கொள்வதை பார்க்கவே முடியாது. நானும் ஒரு அமெரிக்க தொழிற்சாலையில் 12 வருடங்கள் வேலை செய்திருக்கிறேன். ஆனால், மாவோவின் சீனாவில் கிடைத்த அனுபவத்தைப் போன்ற ஒன்றைப் பெற்றதில்லை.
இந்தக் கொள்கையை எதிர்ப்பவர்கள்கூட, அன்றைய அனுபவத்தை மட்டும் ஏன் மலரும் நினைவுகளாகக் கொண்டிருக்கிறார்கள் என்ற காரணத்தை யாரும் யோசிப்பதில்லை. அதுதான் பொதுமை என்ற அம்சம். அனைவரும் சமம் என்ற உணர்வு, ஒருவருக்கொருவர் உறுதுணை என்ற உணர்வு.
ஒரு தொழிற்சாலையில் கூட்டாக அடக்குமுறையை அனுபவிப்பதுகூட ஒரு ‘கூட்டுத்துவ அனுபவம்’தான். ஆனால், அதை மீண்டும் வாழ்ந்து பார்க்க யாரும் விரும்புவதில்லை. ஆனால், எவ்வளவுதான் கஷ்டப்பட்டு உழைத்தோம் என்ற போதிலும், ஒரு புதிய சீனத்தை உருவாக்குவதற்கு உழைத்தோம் என்ற கூட்டுத்துவ அனுபவம்தான் நினைவுகூர்வதற்கான தகுதியைப் பெறுகிறது.
-தொடரும்
இத்தொடரின் முந்தைய பாகத்துக்கு செல்ல கீழே உள்ள சுட்டியை அழுத்தவும் :
ஆழ்வார்பேட்டை ஆண்டவர் கருநாடகாவுக்கு திக் விஜயம் மேற்கொண்ட செய்தி ஊடகங்களில் பரபரப்பாக அலசப்படுகின்றது. கருநாடக முதல்வர் குமாரசாமிக்கு தரிசனம் கொடுத்த ஆண்டவர், பின்னர் செய்தியாளர்களுடன் பேசும் போதுதான் தமிழ்நாட்டின் பிரதிநிதியாக கருநாடகம் வந்ததாக தெரிவித்தார். மேலும், காவிரி பிரச்சினை குறித்து முதல்வருக்கு அருளுரை வழங்கிய கமலஹாசன், குறுவை சாகுபடிக்கு காவிரியைத் திறந்து விட கோரியதாகவும் குறிப்பிட்டார். மேலும் இப்பிரச்சினை இன்று நேற்று வந்ததல்ல என்றும், 100 ஆண்டுகளுக்கு மேல் உள்ளதாகவும் கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறார். தமிழர்களும் கன்னடர்களும் சகோதரத்துவத்துடன் இருக்க வேண்டும் எனத் தாம் திருவுளம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் ஆண்டவரோடு தோன்றிய குமாரசாமி, காவிரி பிரச்சனையில் தமிழக அரசு தயாராக இருந்தால் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று கூறியுள்ளார். இதற்கிடையே கருநாடகாவைச் சேர்ந்த சில அமைப்புகள் ரஜினிகாந்தின் காலா திரைப்படத்தை அம்மாநிலத்தில் வெளியிட எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து கருநாடக திரைப்பட விநியோகஸ்தர்கள் அப்படத்திற்கு தடை விதித்திருந்தனர். இது குறித்து கருத்து தெரிவித்த ஆண்டவர், காலா படத்தை பற்றி கர்நாடக முதல்வரிடம் தான் பேசவில்லை என்றும் காலாவை விட காவிரி முக்கியம் என்றும் குறிப்பிட்டார்.
காவிரிப் பிரச்சினை இருமாநிலங்களுக்கு இடையிலான தாவா எனும் நிலையைக் கடந்து உச்சநீதிமன்றத்தில் வழக்காகி, பல்வேறு குறைகளோடு ஒரு தீர்ப்பு வந்து, அதைக் கூட கசப்பு மருந்தாக தமிழகம் விழுங்கிக் கொண்ட பின், கர்நாடகத் தேர்தலுக்காக தாமதம் செய்து ஆணையம் ஒன்றை அமைத்திருக்கிறது மத்திய அரசு. இப்போது காவிரி விசயத்தைக் குறித்துப் பேசுவதாக இருந்தால் அமைக்கப்பட்டிருக்கும் பல் இல்லாத ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசைக் கோரலாம். நீர் திறந்து விடப்பட வேண்டும் என்றால், அது ஆணையத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் படி பார்த்தால் நீரைத் திறந்து விடலாமா வேண்டாமா என்று தீர்மானிக்கும் உரிமை குமாரசாமிக்கு இல்லை. அப்படி இருக்க ஆண்டவர் ஏன் பூட்டிய வீட்டின் முன் நின்று சவுண்டு விடுகிறார்? ஒன்று உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரு டுபாக்கூர் என்பதை ஆண்டவர் தனது ஞான திருஷ்டியில் உணர்ந்திருக்க வேண்டும் அல்லது உச்சநீதிமன்றத்தை விட (மைனாரிட்டி அரசின்) மாநில முதல்வருக்கு அதிகாரம் அதிகம் என்பதைக் கண்டறிந்திருக்க வேண்டும். ஆனால், அன்னாரின் தலைமைப் பூசாரிகளில் ஒருவரான பாரதி கிருஷ்ணகுமார் மேற்படி சந்திப்பு உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது இல்லை என்று கற்பூரம் அடிக்கிறார்.
உரிமைகளைப் பேச்சுவார்த்தையின் மூலம் பெறுவது தான் தங்களது நோக்கம் எனக் குறிப்பிடும் பாரதி கிருஷ்ணகுமார், உரையாடலின் வழியே தீர்வு காண்பதுதான் எல்லாருக்கும் நல்லது என்கிறார். போலி கம்யூனிஸ்டுகளின் பாசறையில் வளர்க்கப்பட்ட அறிவுஜீவிப் பிராணி என்பதால் ”உரையாடல் & Stuff” மீது பாரதி கிருஷ்ணகுமாருக்கு இருக்கும் நம்பிக்கையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், சாதாரண அறிவு கொண்ட தமிழர்களோ “மீண்டும் முதலில் இருந்தா” என எரிச்சலுடன் கேட்கிறார்கள்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் ”மேற்பார்வை” ஆணையம் ஒன்றை அமைப்பதாக முதலில் மத்திய அரசு அறிவித்தது. அதை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாத நிலையிலேயே மேலாண்மை ஆணையத்தை அமைத்துள்ளது. நீரின் இருப்பையும் அதன் வரத்தையும் ஆராய்ந்து நீர் திறப்பதைத் தீர்மானிக்க சம்பந்தப்பட்ட துறை சார்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களை நியமித்திருக்க வேண்டும். ஆனால், ஆணையத்தை வெறும் நிர்வாக அமைப்பாக மாற்றும் போக்கில் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரை (நீர் வளத்துறையின் செயலாளர்) நியமித்துள்ளது மத்திய அரசு.
மேலும், நீர்ப்பகிர்வு சார்ந்த சிக்கல்களில் மேலாண்மை ஆணையத்தின் தீர்ப்பே இறுதியானது என்றாலும் கூட, அதன் தீர்ப்பை ஏதேனும் ஒரு மாநிலம் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் அதுபற்றி மத்திய அரசிடம் முறையிட்டு உதவிகளைக் கேட்டுப் பெறலாம் என்கிறது மத்திய அரசு. அதாவது மீண்டும் தமிழக விவசாயிகள் தன்னிடம் கையேந்திப் பிச்சை கேட்க வேண்டும் என்கிறார் மோடி. நியாயமாக ஆண்டவர் சண்டமாருதம் செய்திருக்க வேண்டியது தில்லியில்; பிரதமர் அலுவலகத்தின் முன்.
ஆனால், தன்னைத் தானே தமிழகத்தின் பிரதிநிதியாக நியமித்துக் கொண்டு குமாரசாமியிடம் பேசியிருக்கிறார். கமல்ஹாசனுக்கு தமிழகத்தின் பிரதிநிதியாக பரிவட்டம் கட்டியது யார் எனக் கொந்தளிக்கின்றனர் விவசாய சங்கங்களைச் சேர்ந்தவர்கள். ஜெயலலிதாவை இரும்புப் பெண்மணியாக நியமித்தவர்களே இதையும் செய்திருக்கிறார்கள் என்பதே உண்மை. மேலும், காவிரியைக் கேட்டு குமாரசாமியின் பூட்டிய வீட்டின் கதவுக்கு முன் சவுண்டு விடும் அளவுக்கு ஆண்டவர் முட்டாள் அல்ல.
தற்போது காலா திரைப்படத்திற்கு கன்னட அமைப்புகள் தெரிவித்து வரும் எதிர்ப்பை கமல் அறிவார். காவிரிக்காக தானும் கூட்டத்தோடு கோவிந்தா போட்டதை கன்னட அமைப்பினர் அறிந்திருப்பார்கள் என்பதையும் அறிவார். எனவே விஸ்வரூபம் 2-ஆம் பாகம் வெளியாவதற்கு முன்பே ஊருக்கு முந்திச் சென்று துண்டைப் போட்டு வைத்துக் கொள்வோம் என்று கருதியிருக்கலாம். அல்லது, தனது தூத்துக்குடி விஜயம் பத்தோடு பதினொன்றாகிப் போனதை அடுத்து விளம்பர வெளிச்சத்துக்காகக் கூட கருநாடக விஜயத்திற்கு திட்டமிட்டிருக்கலாம்.
காரணம் எதுவாக இருந்தாலும், கமலின் பெங்களூரு நாடக காட்சிகளுக்கும் மக்கள் நலனுக்கும் மயிரளவுக்கும் சம்பந்தமில்லை. தனது சொந்த சுயநலனுக்கான பயணங்களின் மேல் ”மக்கள் நலன்” என்கிற முகமூடியை கமல் போர்த்திக் கொண்டு அலைவது அவரது சொந்த வாழ்க்கையை விட படு மோசமாக நாறுகிறது என்பதே உண்மை. தற்போது “பிக்பாஸ்: சீசன் 2” ஆரம்பிக்க இருப்பதால் இப்படி டி.ஆர்.பி.யை ஏற்றவும் வேண்டியிருக்கிறது! மற்ற ஓட்டுக்கட்சி தலைவர்கள் அரசியலை பயன்படுத்தி பிசினெஸ் செய்து சம்பாதிப்பார்கள் என்று பொதுவில் சொல்வார்கள்! ஆனால் கமல்ஹாசனைப் பாருங்கள் – பிசினசையே அரசியலாக்கி விடுகிறார்! இந்த சாமர்த்தியம் ஓ.பி.எஸ்.ஸுக்கு இல்லையே!
கருத்துக் கணிப்பு:
கேள்வி:கமல்ஹாசனது கர்நாடக பயணத்திற்கு காரணம் என்ன?
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு விளம்பரம்
சபாஷ்நாயுடு – விஸ்வரூபம் 2 படங்களுக்கு கர்நாடகாவில் எதிர்ப்பில்லாமல் செய்வது
ஆளே இல்லாத டீக்கடையான மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு பிரேக்கிங் நியூஸ்!
பிளான் பி ரஜினியுடன் இவர் பிளான் சி-யாக பா.ஜ.க.-வின் அஜெண்டாவிற்கு வேலை செய்கிறார்.
வெற்றிவேல்.
மண்வெட்டியோடு தந்தையுடன் செல்லும் சிறுவன் பெயர் வெற்றிவேல். சேலம் மாவட்டத்தில் 6-ஆவது படித்துக் கொண்டிருக்கிறான். கட்டிட வேலை செய்யும் தந்தையைப் பார்க்க கோடை விடுமுறையில் தனது அம்மாவோடு சென்னை வந்துள்ளான்.
விடுமுறை என்றால் ஊட்டி, கொடைக்கானல், பீச், பார்க் என்று ஊடகம் கட்டியமைக்கும் சுற்றுலா மேனியா மத்தியில் ஒரு தொழிலாளியின் மகனுக்கு, தனது தந்தையோடு இருப்பதே பொழுதுபோக்கு, வேலைகளுக்கு உதவுவதே மகிழ்ச்சி!
1 of 4
அர்ஜூன்.
பெயிண்ட் டப்பாவோடு வருகிறான் அந்தச் சிறுவன். பெயிண்ட் சிதறிய ஆடை, அழுக்குப் படிந்த முகம். காலை 7 மணிக்கெல்லாம் வேலையைத் தொடங்கி விட்டான் அர்ஜூன். குன்றத்துரில் உள்ள சேக்கிழார் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ஆவது படித்துக்கொண்டிருக்கிறான்.
“எங்கூட படிக்கிற பசங்களெல்லாம் கிரிக்கெட் விளையாட கௌம்பிட்டாங்க. எனக்குக்கூட கிரிக்கெட் புடிக்கும், கபடி வெளையாடுவேன். பக்கத்துல இருக்குற முந்திரி தோப்புக்கு போயி மரம் ஏறி குதிச்சு வெளையாடுவோம். ஆனா, இப்ப எனக்கு வெளையாட புடிக்கல, வேலைக்கு வந்துட்டேன்.
அப்பா மாதா காலேஜ்ல டிரைவரா இருக்காரு. அம்மா வீட்டுலதான் இருக்காங்க. ஸ்கூல் லீவுல ஏதாவது வேலை செய்யலாமுன்னு பெயின்டிங் வேலைக்கு வந்திருக்கேன். இங்கே வேன், லாரிகள சுத்தம்பன்னி பெயின்ட் அடிக்கிற வேல. ஸ்கூல் தெறக்குற வரைக்கும் வந்து போவேன்.
வேலைக்கு சேந்த கொஞ்ச நாளா இத எடு, அத எடு, டீ வாங்கி வான்னு எடுபுடி வேலையா கொடுப்பாங்க. பக்கத்துல கெடக்குற பெயின்ட் டப்பாவைக்கூட எங்கேயோ நிக்கிற என்ன கூப்பிட்டு எடுக்கச் சொல்வாங்க. ஆனா, இப்ப டயருக்கு பெயின்ட் அடிக்க கத்துக்கிட்டேன். ஒரு நாளைக்கு 200 ரூபா சம்பளமுன்னு சொல்லியிருக்காங்க. இதுவரைக்கும் சம்பளம் ஏதும் வாங்கல. சேத்துக் கொடுத்தாங்கன்னா மொத்தமா எங்க அம்மாகிட்ட கொடுப்பேன்.’’
சிரித்துக்கொண்டே கூறிய அர்ஜூனின் முகத்தில், ஒரு வேலையைக் கற்றுக்கொண்ட பெருமை பளிச்சிட்டது. படிப்பு கொடுக்காத தன்னம்பிக்கையை அந்த உழைப்பு கொடுத்திருக்கிறது.
விஷால்.
குன்றத்தூர் சேக்கிழார் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவன் விஷால். கோடை விடுமுறையில் குன்றத்துர் அருகில் உள்ள நொறுக்குத் தீனி கடையில் வேலை செய்கிறான்.
கடை திறந்ததும் சுத்தம் செய்வது, வெங்காயம் நறுக்குவது, ஜூஸ் கலக்கி வைப்பது, பார்சல் ஆர்டரை எடுத்துச் செல்வது… இப்படி கடையின் மொத்த வேலையையுமே லாவகமாகவும் வேகமாகவும் செய்து முடிப்பதால், வேலைக்குச் சேர்ந்த ஒரு மாதத்திலேயே கடையின் செல்லப் பிள்ளையாகிவிட்டான்.
ஏன் வேலைக்கு சேந்த? – என்று கேட்டதுமே,
“இப்ப கெவர்ன்மென்ட் ஸ்கூல்ல பதினொன்னாவதயும் பப்ளிக் எக்சாம் ஆக்கிட்டாங்க. டியூசன் சேந்தாத்தானே நல்லா மார்க் வாங்க முடியும். பீஸ் கட்ட காசு வேணுமே. கம்பெனில அப்பா செக்யூரிட்டியா இருக்காரு. டியூசனுக்கெல்லாம் காசு கேக்க முடியாது, அதான் வேலைக்கு வந்துட்டேன். இப்ப மட்டுமில்ல, பத்தாவதே வேலைக்கு சேந்துதான் பாஸ் பன்னினேன்.” என்றான்.
படிக்க முடியில்லை என்று இவர்கள் மீது பரிதாபப்படுவதா? இல்லை இந்த வயதிலும் தன்னம்பிக்கையுடன் வாழவும், போராடவும் கற்றுக் கொள்கிறார்களா? நீங்களே முடிவு செய்யுங்கள்!
“கார்ப்பரேட்டுகள் பிடியில் உயர்கல்வி” என்ற தலைப்பின் கீழ் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில் கடந்த 2018, மே -13, அன்று சென்னை கவிக்கோ மன்றத்தில், நூல் வெளியீடு மற்றும் கருத்தரங்க நிகழ்வு நடைபெற்றது.
நெல்லை புனித சவேரியார் கல்லூரி பொருளாதாரவியல் துறைத் தலைவர் பேராசிரியர்ஜெ.அமலநாதன், மற்றும் திருமதி பேராசிரியர்சி.சாந்தி, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்சு.மில்டன், குடியாத்தம் அரசுக்கல்லூரி மேனாள் முதல்வர் பேராசிரியர்ப.சிவக்குமார் மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர்கணேசன் ஆகியோர் ஆற்றிய கருத்துரைகளின் வீடியோ. பாருங்கள்… பகிருங்கள்…
நெல்லை புனித சவேரியார் கல்லூரி பொருளாதாரவியல் துறைத் தலைவர் பேராசிரியர்ஜெ.அமலநாதன், மற்றும் திருமதி பேராசிரியர்சி.சாந்தி, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்சு.மில்டன் ஆகியோர் ஆற்றிய உரை…
“கார்ப்பரேட்டுகள் பிடியில் உயர்கல்வி” என்ற தலைப்பின் கீழ் குடியாத்தம் அரசுக்கல்லூரி மேனாள் முதல்வர் பேராசிரியர் ப.சிவக்குமார் மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் ஆகியோர் ஆற்றிய உரை…
மாமேதை லெனின் அவர்களால் உருவாக்கப்பட்ட போல்ஷ்விக் கட்சியின் ஆரம்பகாலத் தோழர்களான புகாரின், புரோயோ பிரொஷென்ஸ்கி ஆகியோரால் எழுதப்பட்டு, உலகம் முழுவதும் பொதுவுடமை என்றால் என்ன என்பதைக் கற்றுத் தருவதற்கான துவக்கநிலை பாடப் புத்தகமாக பல்லாண்டுகாலமாக பயன்பட்ட நூல்.
மகத்தான ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டு நிகழ்வுகளின் பகுதியாக பாரதி புத்தகாலயம் மீள்பதிப்பு செய்த செவ்வியல் நூல்களின் வரிசையில் The ABC of Communism என்று ஆங்கிலப் பெயரில் வெளிவந்த நூலின் முதல் தமிழ் மொழிபெயர்ப்பு.
காலம் உருண்டோடி இருந்தாலும் அடிப்படைகள் மாறவில்லை என்பதால் இன்றைக்கும் பொதுவுடைமை குறித்து வாசிக்க முயலும் ஒருவர்க்கு பயன் மிகு துவக்க நூல்.
நமது கட்சித் திட்டம், முதலாளித்துவ சமூக அமைப்பு, முதலாளித்துவ சமூக அமைப்பின் வளர்ச்சி, கம்யூனிசமும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமும், முதலாளித்துவத்தின் வளர்ச்சி எவ்வாறு கம்யூனிஸ்ட் புரட்சிக்கு இட்டுச் சென்றது (ஏகாதிபத்தியம், யுத்தம் மற்றும் முதலாளித்துவத்துவத்தின் வீழ்ச்சி), இரண்டாவது மற்றும் மூன்றாவது அகிலம், சோவியத் அதிகார அமைப்பு, கம்யூனிசமும் தேசிய இனப்பிரச்சனையும், ராணுவ அமைப்பு தொடர்பான கம்யூனிஸ்டுகளின் செயல்திட்டம், பாட்டாளி வர்க்க நீதிமுறை, கம்யூனிசமும் கல்வியும், கம்யூனிசமும் மதமும் ஆகிய உட்தலைப்புகள் இந்நூலில் இடம் பெற்றிருக்கின்றன.
இந்தப் புத்தகத்தைக் கையில் எடுத்துக் கொள்ளும் ஒவ்வொரு தோழரும் இதனை முழுமையாகப் படிக்க வேண்டும். அதன் மூலம் கம்யூனிசத்தின் நோக்கங்கள் மற்றும் எதிர்காலக் கடமைகள் குறித்த ஒரு புரிதலைப் பெற முடியும். (நூலிலிருந்து)
நூல்: பொதுவுடமை என்றால் என்ன?
ஆசிரியர்:நிகோலாய் புக்காரின், இவ்ஜெனி புரோயோ பிராஷென்ஸ்கி. தமிழில்: கி. இலக்குவன்.
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம், 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018. தொலைபேசி: 044 – 24332424, 24356935
பக்கங்கள்: 296 விலை: ரூ.260.00
சென்னையில் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று, (கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
கடையின் புதிய முகவரி கீழே)1/110, முதல் தளம், லட்சுமி வளாகம், ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107. பேச : 99623 90277
நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்று வந்த பிறகு, தி இந்து – தினமணி – தினமலர் போன்ற பார்ப்பன பத்திரிக்கைகள், ரஜினி பற்றிய ஆதரவான செய்திகளை அநேகமாக அனைத்துப் பக்கங்களிலும் வெளியிட்டன. “போராட்டம் கூடாது, போராடும் விஷக்கிருமிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். போராடினால் வேலையின்றி தமிழகம் சுடுகாடாகிவிடும்” என்று எழுதிக் குவித்தன. அடுத்த நாளே, ரஜினி மிகச் சரியாக, துணிச்சலாக பேசியிருக்கிறார் என்று தமிழருவி மணியனது பேட்டியை வெளியிட்டது தி இந்து.
இப்படி, தமிழகமே ரஜினியின் கருத்தை ஆதரிப்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க இவர்கள் முயன்றாலும் உண்மையில், சிறுகடை வியாபாரிகளும், தொழிலாளர்களும், சாதாரண மக்களும் என்ன சொல்கிறார்கள். இங்கே நாம் சந்திப்பது, சென்னை பட்டினம்பாக்கம் மீனவக் குடியிருப்புப் பகுதியை ஒட்டிய மக்கள்.
ஆரோக்கியராஜ், ஏ.சி. மெக்கானிக். சமூக விரோதிங்கன்னு ஆஸ்பத்திரியில சொல்லியிருந்தா அங்கயே அவரயும் அட்மிட் பண்ணிருப்பாங்க. இவரோட பேச்சு, ஃபுல்லா பி.ஜே.பி. வாய்ஸ்தான் சார். அவருக்கு என்ன… காலா படம் ஓடனும்!
சரண், ஏ.சி. மெக்கானிக். சமூக விரோதின்னு ரஜினி யாரயெல்லாம் சொல்றாரு தெரியுமா… போராடுர நம்மளத்தான்… இதெல்லாம் கஷ்டப்பட்டு, அடிபட்டு அனுபவிக்கிறவனுக்குத் தான் வலி தெரியும்… காசுக்கு நடிக்கிற ரஜினிக்கெல்லாம் எங்களோட கஷ்டம் எப்படி புரியும்?
பெருமாள், ஆட்டோ ஓட்டுனர், வேளச்சேரி. தமிழக மக்களத்தான் சமூக விரோதிங்க, விஷக்கிருமிங்கன்னு சொல்றாரு ரஜினிகாந்த். காந்தி கூடத்தான் போராடுனாரு.. போராட்டம் இல்லாம எதாவது ஒன்னாச்சும் நடந்திருக்கா? இதெல்லாம் சும்மா ஆதாயத்துக்காக பேசுறாருங்க…
முகமது அன்வர், மீனவர், பட்டினம்பாக்கம். கலகம் பண்ணலன்னா எதுவுமே கெடைக்காது… போராட்டமுன்னு ஒன்னு நடக்கலன்னா, ஜல்லிக்கட்டையே அழிச்சிருப்பாங்க. போராடித்தான் நம்ம உரிமையை பெற்றிருக்கோம்.
தூத்துக்குடியில என்ன அவரு பொண்டாட்டி, புள்ளங்கள கடத்துறதுக்கா போறோம், சமூக விரோதின்னு சொல்றதுக்கு… கேன்சர உருவாக்குற ஸ்டெர்லைட்டதானே வேணான்றோம்.
சார், நான் சொன்னேன்னு போடுங்க… ரஜினி ஒரு பைத்தியக்காரன்… ஒரு நாள் எங்க கூட வந்து வெயில்ல நின்னு வேல செய்யச் சொல்லுங்க, அப்ப தெரியும் போராடனுமா வேணாமான்னு!
ரஞ்சித், மீனவர். தூத்துக்குடி போராட்டத்துல விஷக்கிருமிகள் உள்ள வந்து என்ன பண்ணுனாங்கன்னு சொல்லுவாரா ரஜினி…. ஏ.சி. ரூம்ல ஒக்காந்துகிட்டு என்ன வேணும்னாலும் பேசக்கூடாது.. எங்க கூட கடலுக்கு வரச்சொல்லுங்க… கஷ்டம்னா என்னன்னு புரியும்…
வளர்ச்சி வேணுமுன்னா போராடாதேன்றாரு, அதுக்கு முதல்ல உசுரோடு இருக்கனுமே?
ஏன் போராடுராங்க? கேன்சர் வருது, சுத்தமான தண்ணி, காத்து வேணுமுன்னுதானே? 99 நாளா மக்கள் போராடும்போது இந்த ரஜினி எங்கே போயிருந்தாரு. போனவாரம் 13 பேரை சுட்டுக் கொன்னப்ப போலீசை கண்டிச்சு அறிக்கை விட்டாரு. சுட்ட 9 நாளுக்குப் பெறவு தூத்துக்குடி போயிட்டு வந்து, விஷக்கிருமிகளாலத்தான் போலீசு சுட்டாங்கன்னு சொல்றாரு. யாரு இந்த விஷக்கிருமின்னு சொல்லுவாரா இந்த ரஜினி?
சேகர், கார் டிரைவர். போராட வேணாம், கோர்ட்டுக்கு போங்கன்னு சொல்றாரு ரஜினி. அதே கோர்ட்டு தானே 2 மொற ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவா தீர்ப்பு கொடுத்தாங்க…. மக்கள் என்ன பொழுது போகலன்னா போராடிக்கிட்டு இருக்காங்க…. ஒன்னுமில்லங்க, இவர இயக்குறது பி.ஜே.பி.காரனுங்க. அதனால அவுங்க சொல்றத அப்படியே வாந்தியெடுக்குறாரு அவ்ளோதான்.
ஆசிக் – பழையபொருள் வாங்கி விற்பவர் (வலது), ராஜசேகரன்- ஆசிரியர் (ஓய்வு)
ஆசிக், காயலாங்கடை.
இதே ஸ்டெர்லைட் ஆலைய மஹாராஷ்டிரால வேணாம்னுதானே போராட்டம் பண்ணி வெரட்டி விட்டாங்க… அப்ப மராட்டியர்களும் சமூக விரோதிகளான்னு ரஜினிதான் சொல்லனும்.
ராஜசேகரன், ஆசிரியர் – ஓய்வு.
சிஸ்டம் சரியில்லன்னாரு… எப்படிங்க சரி பண்ணப்போறாரு…. சும்மா ஆக்ஷன் கொடுத்துக்கிட்டே இருக்காரு… படம் பிரச்சினையில்லாம ஓடனும்ல.. அதான் கவர்மெண்ட அட்ஜட்ஸ்ட் பண்ணிட்டு போறாராம்…
மருது, பால் வியாபாரம். ரஜினி சொல்றதெல்லாம் ஒரு பொருட்டாவே எடுத்துக்கக்கூடாது… இங்கிருந்து போறப்ப நடிகனா போறேங்குறாரு…. சிஸ்டம் சரியில்ல போராடனும்கிறாரு, அடுத்த நாள் போராட்டம் நடத்துனா சுடுகாடு ஆயிடும்கிறாரு. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தா கடவுளாளக் கூட இந்த நாட்ட காப்பாத்த முடியாதுன்னாரு, இப்ப என்னன்னா அந்தம்மா இருந்தா இரும்புக்கரம் கொண்டு அடக்கிருப்பாங்கன்னு சொல்றாரு. மொத்தத்துல லூசுங்க அவரு…
தாத்தா, பாட்டன் வேசத்துல நடிக்க வேண்டியவரு, இன்னமும் காலேஜ் ஸ்டூடன்டாவே நடிச்சி மக்கள முட்டாளாக்கினது போதாதுன்னு, இப்போ அரசியலுக்கு வந்து நாட்டையே குட்டிச்சுவராக்கப் போறாரு.
மஞ்சு, (புகைப்படம் தவிர்த்தார்) நாங்க எங்க பிரச்சினைகளுக்காகத்தானே போராடுறோம், இவருக்கு என்னா பிரச்சினயாம் இப்போ. ஜல்லிக்கட்டுக்கு போராடித்தானே வெற்றி கெடச்சுது. இந்த மீடியாக்காரங்க தான் ரஜினிய பெரிய ஆளாக்குனாங்க… இப்ப அவுங்களயே திட்டிட்டாருல்ல… எனக்கு தெரிஞ்சு ரஜினிதாங்க உண்மையிலேயே சமூக விரோதி.
ராபின், பி.காம். சமூக விரோதி, விசக்கிருமியெல்லாம் காலா படம் பிரச்சினையில்லாம ஓடனும்னுதான். ஆளுங்கட்சி சப்போர்ட் வேணும்ல… போராடாம எது எதெல்லாம் நமக்குக் கெடச்சிருக்குன்னு ரஜினிய சொல்லச் சொல்லுங்க பார்ப்போம். சரி போராடம இருந்தா செடி, கொடியெல்லாம் தானா வளர்ந்துடுமா, இல்ல குடிக்க நல்ல தண்ணிதான் கெடைக்குமா? எல்லாமே போராடுனாதானே கெடைக்குது.
ஷியாம் மற்றும் நண்பர்கள். மேட்டர் ஒன்னுதான் ப்ரோ, ரஜினி மோடி சப்போர்ட்டர், அப்போ நாமோ யாரு? சமூக விரோதிங்கதானே!
“கார்ப்பரேட்டுகள் பிடியில் உயர்கல்வி” என்ற தலைப்பின் கீழ் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில் கடந்த 2018, மே -13, அன்று சென்னை கவிக்கோ மன்றத்தில், நூல் வெளியீடு மற்றும் கருத்தரங்க நிகழ்வு நடைபெற்றது.
அந்நிகழ்வில் “கல்வியில் காவிமயம்” என்ற தலைப்பின் கீழ் விவேகானந்தா கல்லூரியின் மேனாள் வரலாற்றுத்துறை தலைவர் பேராசிரியர். அ. கருணானந்தன், “வியாபாரமான உயர்கல்வியும், நிர்மலா தேவி விவகாரமும்” என்ற தலைப்பின் கீழ் மதுரை காமராசர் பல்கலைக்கழக பாதுகாப்பு கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் அ. சீனிவாசன் ஆற்றிய கருத்துரைகளின் வீடியோ. பாருங்கள்… பகிருங்கள்…
***
“கல்வியில் காவிமயம்” என்ற தலைப்பின் கீழ் விவேகானந்தா கல்லூரியின் மேனாள் வரலாற்றுத்துறை தலைவர் பேராசிரியர். அ. கருணானந்தன் அவர்கள் ஆற்றிய உரை…
“வியாபாரமான உயர்கல்வியும், நிர்மலா தேவி விவகாரமும்” என்ற தலைப்பின் கீழ் மதுரை காமராசர் பல்கலைக்கழக பாதுகாப்பு கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் அ. சீனிவாசன் அவர்கள் ஆற்றிய உரை…
பேட்டி பச்சாவ், பேட்டி படாவ் (Beti Bachao, Beti Padhao (BBBP) – பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் – பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்) என்று 22.01.2015 அன்று ஆர்ப்பரித்தார் மோடி. ஆனால் நடந்து கொண்டிருப்பது என்ன?
2016-ஆம் ஆண்டுக்கான தேசிய குற்றப்பிரிவுகள் ஆணையம் (NCRB) அளித்துள்ள தகவல்களின் படி இந்தியாவில் பெண் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் (பாலியல் குற்றங்கள் உட்பட) தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே போகின்றன.
2014-ஆம் ஆண்டில் 89,423 குற்றங்களும், 2015-ஆம் ஆண்டில் 94,172 குற்றங்களும், 2016-ஆம் ஆண்டில் 1,06,958 குற்றங்களும் என வருடத்திற்கு வருடம் இந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகின்றது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
சதவிகிதங்களின் அடிப்படையில் பார்க்கும் போது 2014-இல் 20.1% , 2015-இல் 21.1% மற்றும் 2016-இல் 24.0% என்ற அடிப்படையில் பெண் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
பாரத மாதாவின் புனித பூமியில் நிகழ்த்தப்படும் வன்கொடுமைகள் – மாதிரிப்படம்
2012-இல் அறிமுகப்படுத்தப்பட்ட போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் மட்டும் இதுவரை 37,022 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இவற்றில் 4,954 வழக்குகளுடன் உத்திரப்பிரதேசம் முதலிடத்திலும், 4,815 வழக்குகளுடன் மஹாராஷ்டிரா இரண்டாமிடத்திலும், 4,717 வழக்குகளுடன் மத்தியப் பிரதேசம் மூன்றாமிடத்திலும் உள்ளன. இதே மூன்று மாநிலங்களும் தான் குழந்தை கடத்தலிலும் இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளன.
இந்தியா முழுவதும் பதியப்பட்டுள்ள 54,723 குழந்தை கடத்தல் வழக்குகளில், உத்திரப்பிரதேசத்தில் 9,657 வழக்குகளும், மஹாராஷ்டிராவில் 7,956 வழக்குகளும், மத்தியப்பிரதேசத்தில் 6,016 வழக்குகளும் பதிவாகியுள்ளன.
பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்படும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 2015-இல் 10,854 ஆக இருந்து 2016-ஆம் ஆண்டில் ஏறக்குறைய இரட்டிப்பாகி 19,765 ஆக அதிகரித்துள்ளது.
ஆனால் பெண் குழந்தைகளுக்கெதிரான பாலியல் வழக்குகளில் தண்டிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.
2016-ஆம் ஆண்டில் 42,196 நபர்களுக்கெதிராக பாலியல் குற்ற வழக்குகள் பதியப்பட்டது. ஆனால் நீதிமன்ற விசாரணைகளுக்குப் பின்னர் 3,859 பேர் மட்டுமே குற்றவாளிகள் என்று அறியப்பட்டுள்ளனர் மேலும் 9,111 பேர் இவ்வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். பெண் குழந்தைகளுக்கெதிரான பாலியல் வல்லுறவு குற்றவழக்குகளில் 24,007 பேர் கைது செய்யப்பட்டு 2,241 பேர் மட்டுமே குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுனர், 5,693 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பெண் குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்ற வழக்குகளில் பெருநகரங்களைப் பொருத்தவரையில் தலைநகர் டெல்லியில் தான் அதிகப்படியான குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளன. ஆனால் கடந்த மூன்று வருடங்களில் எண்ணிக்கை அளவில் ஒப்பிடும்போது, டெல்லியில் நடக்கும் குற்றங்கள் சிறு அளவில் குறைந்துள்ளது. டெல்லிக்கு அடுத்தபடியாக மும்பை, பெங்களூரு, புனே, லக்னோ ஆகிய நகரங்கள் பெண் குழந்தைகளுக்கெதிராக நிகழ்த்தப்படும் பாலியல் குற்றங்கள் அதிகம் நடக்கும் இடங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன. இந்த நகரங்களில் குற்றங்களின் விகிதாச்சார எண்ணிக்கை பாரிய அளவில் அதிகரித்திருப்பது வாழ்வதற்கான சூழல் மிகவும் மோசமாகி வருவதை வெளிப்படுத்துகிறது.
பெண் குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்ற வழக்குகளில், மிக மோசமான மாநிலங்களாக உத்திரப்பிரதேசமும் அதைத் தொடர்ந்து மராட்டியம், மத்தியப்பிரதேசம், மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்கள் முதல் ஐந்து இடங்களைப் பிடித்துள்ளன.
பெண் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்து சீரழிப்பதில் மிக மோசமான இடத்தில் மத்தியப் பிரதேசம் உள்ளது. 2016-ஆம் ஆண்டில் மட்டும் மத்தியப்பிரதேசத்தில் 2,479 பெண் குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்குள்ளாகி சீரழிக்கப்பட்டுள்ளனர். அடுத்தபடியாக மராட்டியம்(2,333), உத்திரப்பிரதேசம்(2,115), ஒடிசா(1,258), மேற்கு வங்கம்(719) என இந்த எண்ணிக்கை நீண்டு கொண்டே போகிறது.
இப்போது பேட்டி பச்சாவ் – பேட்டி படாவ் திட்டத்திற்கு வருவோம். சுமார் 100 கோடி முதலீட்டில் பெண் குழந்தைகளின் வளர்ச்சித் திட்டங்களுக்காக நாட்டில் மிகவும் பின்தங்கிய மாநிலங்கள் உட்பட எல்லா மாநிலங்களிலும் பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம் இப்போது கிணற்றில் போடப்பட்ட கல்லாகத்தான் இருக்கிறது.
இந்தத் திட்டத்தை உலக அளவில் பிரபலப்படுத்தும் விதமாக 28.06.2015 அன்று ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் உரையாற்றிய மோடி பெண் பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுடன் செல்ஃபி எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்க, உடனேயே #SelfieWithDaughter என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் உருவாக்கப்பட்டு அது சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய டிரெண்டிங் ஆனது என்பது வரலாறு. அவ்வளவே தான் மோடி நினைத்ததும் நடந்ததும்.
குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் - நன்றி : ஃப்ரண்ட்லைன் இதழ்
1 of 7
மேற்கண்ட புள்ளிவிவரங்கள் குறித்து மோடி அண்ட்-கோ-விற்கு தெரியாதா என்ன? ‘கிடப்பது கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மனையில் வை’ என்ற கதையாக இவையெல்லாம் செல்பிக்காக, பிரபலத்துக்காக ஏங்கும் உயர்தர நடுத்தட்டு வர்க்கங்களுக்காகவென்றே பிரத்தியேகமாகத் திட்டமிட்டு உருவாக்கப்படும் சில நிகழ்வுகள் அவ்வளவே…
இதையன்றி இதே சமயத்தில் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டிருக்கலாம், நாட்டு வளங்களைத் தனியார், தரகு முதலாளிகளுக்குத் தாரை வார்க்க பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கலாம், கோமாதாவின் பெயரால் அப்பாவி முசுலீம்கள் அடித்து கொல்லப்பட்டிருக்கலாம் இவ்வளவு ஏன் அன்றைய தினம் எத்தனையோ இளம்பிஞ்சுக் குழந்தைகள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம்.
இவ்வளவு ஏன்? பேட்டி பச்சாவ் – பேட்டி படாவ் என்று ஆர்ப்பரித்த மோடி, சமீபத்தில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு மிகவும் மோசமான சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட காஷ்மீர் சிறுமி ஆசிபா குறித்தோ, அல்லது உத்திரப்பிரதேச மாநிலம் உன்னாவில் ஒரு பா.ஜ.க. எம்.எல்.ஏ-வால் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி குறித்தோ வாய் திறக்கவில்லை. இந்த இரண்டு நிகழ்வுகளிலும் பா.ஜ.க.-வும் அதன் அமைப்புக்களும் நேரடித் தொடர்பு கொண்டிருந்தது கண்கூடாக நிரூபிக்கப்பட்ட போதிலும் மோடியின் இதயம் கணக்கவில்லை.
மேலோட்டமாகப் பார்க்கும்போது இது போன்ற திட்டங்கள் எல்லாம் நம்மை எளிதில் தன்வயப்படுத்திக் கொள்ளும்; ஆனால் இதனால் சமூக வாழ்வில் முன்னேற்றம் ஏற்படுமா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
ஆணாதிக்கமும், சாதி-மத ஆதிக்கமும் கொண்ட பிற்போக்குத்தனமான நாம் வாழும் இந்த சமூகம் பெண்கள் மீது தொடர்ந்து அடக்குமுறைகளை ஏவிவரும் நிலையில், தனியார்மயமும் தாராளமயமும் பெண்களை நுகர்வுப்பொருளாக மாற்றியிருப்பதால், நாடு முழுவதும் பாலியல் வக்கிரங்கள் தீவிரமாகி வருகின்றன.
பெண் குழந்தைகள் என்றால் அவர்களின் எதிர்ப்பு குறைவாக இருக்கும் என்பதால், இதுவரை கண்டிராத கொடூரமான பாலியல் தாக்குதல்களுக்கு சிறுமிகள் அடுத்தடுத்து ஆளாகின்றனர்.
இச்சீரழிவுகளை முறியடிக்க குடும்பம் உள்ளிட்டு சமூகத்தின் அனைத்து அரங்குகளிலும் ஜனநாயகத்தை நிலைநாட்டும் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும். குற்றங்களைச் செய்வோரே ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருக்கும் போது மக்கள் சட்ட ரீதியான போராட்டங்களோடு பா.ஜ.க அரசை தனிமைப்படுத்துவதும் முக்கியம்.