Sunday, June 21, 2026
முகப்பு பதிவு பக்கம் 500

ரஃபேல் விமானம் : மூட்டைப் பூச்சி மிசின் தயாரிக்க அம்பானிக்கு அள்ளிக் கொடுக்கும் மோடி

5

‘உத்தமர்’ மோடியின் மற்றுமொரு ஊழல் நம் கண்ணெதிரே நடத்தப்பட்டு வருகின்றது. பிரெஞ்சு நாட்டு விமான நிறுவனமான “தஸ்ஸால்டிடம்” (Dassault) இருந்து 36 ரஃபேல் வகைப் போர் விமானங்களை வாங்க சுமார் 57 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தம் ஒன்றை மோடி உறுதி செய்துள்ளார்.

2015 -ம் ஆண்டு பிரான்சுக்கு சுற்றுலா சென்றிருந்த மோடி, தஸ்ஸால்ட் நிறுவனத்திடம் போர் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்திருந்தார்; எனினும், அப்போது அந்த ஒப்பந்த அடிப்படையில் விமானங்களின் உண்மையான விலை வெளியிடப்படாமல் இருந்தது.

2015 ஃப்ரான்ஸ் நாட்டு பயணத்தின் போது மோடியின் தலைமையில் கையெழுத்தாகும் ஒப்பந்தங்கள்

2015 -ம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்ட போதே ரஃபேல் விமானங்கள் தகுதி குறைவானது என்பதையும், தஸ்ஸால்ட் நிறுவனம் ஏறத்தாழ போண்டியாக வேண்டிய நிலையில் இருந்ததையும், இந்த ஒப்பந்தம் பிரான்சுக்கு சேவை செய்யும் நோக்கம் கொண்டதாக இருப்பதையும் சுட்டிக்காட்டி வினவில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம். (பவர் ஸ்டார் மோடி பாரிசில் வாங்கிய மூட்டை பூச்சி மிஷின்).

தற்போது மேற்படி ஒப்பந்தத்தின் மதிப்பு வெளியாகி இருப்பதோடு மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிதாக வெளியாகி உள்ள தகவல்களின் படி, மோடி செய்து கொண்ட ஒப்பந்தம் ஏகாதிபத்திய பிரான்சுக்கு மட்டுமல்ல உள்நாட்டுத் தரகு முதலாளிகளுக்கும் வைக்கப்படும் கறி விருந்து என்பது அம்பலமாகியுள்ளது.

மேற்கொண்டு விவரங்களுக்குள் செல்வதற்கு முன் சில அடிப்படைத் தகவல்களைப் பார்த்து விடுவோம்.

இந்திய விமானப்படையில் செயல்பட்டு வந்த மிக் ரக விமானங்கள் தொடர்ந்து பயிற்சியின் போது விபத்துக்குள்ளாவது, ரசிய இந்திய கூட்டுத் தயாரிப்பான சுகோய் ரக விமானங்களும் வயதாகிக் கொண்டிருப்பது போன்ற காரணங்களால், சுமார் 200 மத்திய ரக பல்நோக்குப் போர் விமானங்கள் (MMRCA – Medium Multi-Role Combat Aircraft) தேவைப்படுவதாக 2001 -ம் ஆண்டு இராணுவம் அரசுக்குத் தெரிவித்தது. 2007 -ம் ஆண்டு இராணுவத்தின் இந்தக் கோரிக்கையை அங்கீகரித்த மத்திய அரசு, விமானங்களைக் கொள்முதல் செய்ய டென்டர் அறிவித்தது.

பலநாடுகளைச் சேர்ந்த விமானக் கம்பெனிகள் கலந்து கொண்ட டென்டரின் இறுதியில் சர்வதேச அளவில் நடந்த பல்வேறு போர் பயிற்சிகளில் தொடர்ந்து மோசமாக செயல்பட்ட தகுதி குறைவான ரஃபேல் விமானங்கள் தெரிவு செய்யப்பட்டன. எனினும் அப்போது செய்யப்பட்ட ஒப்பந்தங்களின் படி, மொத்தம் 126 விமானங்கள் கொள்முதல் செய்யப்படும் என்றும், அதன் மொத்த மதிப்பு 10.2 பில்லியன் டாலராக இருக்கும் எனவும், ஒரு விமானத்தின் விலை 81 மில்லியன் டாலர்களாக இருக்கும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

மேலும், இந்தியாவின் பொதுத்துறை இராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்களுக்கு தொழில்நுட்பங்களை மாற்றித் தருவது, 108 விமானங்களை இந்தியாவிலேயே தயாரிப்பது, இந்த ஒப்பந்தத்தின் மூலம் தஸ்ஸாட் நிறுவனத்திற்கு கிடைக்கும் மொத்த வருவாயில் 50 சதவீதத்தை இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் என்பன போன்ற விதிகளுக்கு ரஃபேல் நிறுவனம் ஒப்புக் கொண்டிருந்தது. அன்றைய நிலையில் பிற நாட்டு இராணுவங்கள் ரஃபேல் விமானங்களை வாங்கத் தயாராக இல்லாத காரணத்தால் ஏறத்தாழ திவாலாகும் நிலையில் இருந்த தஸ்ஸாட் நிறுவனம், பேரத்தின் போது இந்தியா விதித்த அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக் கொண்டது.

இந்நிலையில் பாரதிய ஜனதா ஆட்சி அமைந்த பின் ரஃபேல் விமானக் கொள்முதல் ஒப்பந்தம் குறித்து பாதுகாப்புத் துறை வட்டாரங்களில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்தது. கடந்த 2015 ஏப்ரல் 13 -ம் தேதியன்று செய்தியாளர்களிடம் பேசிய அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பரிகர், 126 ரஃபேல் விமானங்களை வாங்குவதற்கு 90 ஆயிரம் கோடி ஆகும் (14 பில்லியன் டாலர்) என தெரிவித்தார். 2012 -ம் ஆண்டு 10.2 பில்லியன் டாலராக இருந்தது, முன்றே ஆண்டுகளில் 14 பில்லியன் டாலராக எதன் அடிப்படையில் அதிகரித்தது என்பதற்கு எந்த விளக்கமும் இல்லை.

சரியாக ஒரே மாதம் கழித்து 2015, மே 31 -ம் தேதி பத்திரிகையாளர்களிடம் பேசிய பாரிகர், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ரஃபேல் விமானங்களை வாங்குவதால் நாட்டுக்கு 1.3 லட்சம் கோடி செலவாகும் என தெரிவித்தார். ஒரே மாதத்தில் 40 ஆயிரம் கோடி விலை அதிகரித்த இந்த அதிசயம் எதன் அடிப்படையில் நடந்தது என்பதற்கும் விளக்கமில்லை. இதற்கிடையே ஒப்பந்தம் குறித்தும் விலை குறித்தும் கருத்து தெரிவித்த தஸ்ஸாட் நிறுவனம், தாம் டெண்டருக்கான ஆரம்ப முன்மொழிதல் ஆவணங்களில் (RFP – Request for Proposal) உள்ள விலைகளை உயர்த்தவில்லை என குறிப்பிட்டது.

முன்னால் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர்

இதற்கிடையே 2015 -ம் ஆண்டு பிரான்ஸ் சென்ற மோடி, 36 விமானங்கள் மட்டும் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் ஒன்றைக் கையெழுத்திட்டார். பாதுகாப்புத் துறை சம்பந்தமான ஒரு முக்கியமான ஒப்பந்தம் கையெழுத்தான இந்த வைபவத்தின் போது அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிகர் உடனிருக்கவில்லை; மோடியே முன்னின்று ஒப்பந்தத்தை நிறைவேற்றினார். பிரான்சில் ஒப்பந்தம் கையெழுத்தாகிக் கொண்டிருந்த போது, கோவாவில் நடமாடும் மீன் கடையைத் திறந்து வைத்துக் கொண்டிருந்தார் பாதுகாப்புத் துறை அமைச்சர். அப்போதே விமானங்களின் விலை குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. அதற்கும் ஓராண்டு கழித்து சத்தமின்றி தனியே அறிவித்துக் கொண்டார்கள்.

மனோகர் பாரிகர் ஆரம்பத்தில் சொன்படி 90 ஆயிரம் கோடி என்று வைத்துக் கொண்டாலும் கூட, ஒரு விமானத்தின் விலை 71.414 கோடியாக இருந்திருக்க வேண்டும் – ஆனால், மோடியின் ஒப்பந்தப்படி ஒரு விமானத்தின் விலை 1666.66 கோடி. அதாவது வெறும் 36 விமானங்களுக்கு 60 ஆயிரம் கோடி தண்டம் கட்டப் போகிறது இந்திய அரசு. மேலும், முந்தைய ஒப்பந்தம் போல் தொழில்நுட்பங்களையும் ரஃபேல் நிறுவனம் இந்தியாவுக்கு மாற்றித் தரப் போவதில்லை.

இந்த இமாலய விலையேற்றத்துக்கு என்ன காரணம்? இடையில் நடந்தது என்ன?

2012 -ம் ஆண்டு தஸ்ஸாட் நிறுவனம் டெண்டரை வென்ற இரண்டே வாரத்தில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தோடும் பின்னர் சில மாதங்கள் கழித்து அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தோடும் கூட்டுத் தயாரிப்புக்கான (JV) ஒப்பந்தங்களைச் செய்து கொள்கின்றது.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் தஸ்ஸால்ட்டுக்கு உதிரிபாகங்கள் தயாரித்துக் கொடுக்கும் இசுரேல் நிறுவனம் ஒன்றுடனும் கூட்டுத் தயாரிப்பு ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்தியாவில் விமான இரக்கை மற்றும் அதன் இன்ஜினின் பாகங்களைத் தயாரிப்பதற்கு முகேஷ் அம்பானி நிறுவனத்துடனும், பிற உதிரிபாகங்களைத் தயாரிக்க அனில் அம்பானியின் நிறுவனத்தோடும் தனித்தனியே ஒப்பந்தங்களைப் போட்டுள்ளது தஸ்ஸால்ட்.

இதன் பின் நடந்த பேச்சுவார்த்தைகளில் தஸ்ஸால்ட் நிறுவனத்தின் தொனி மாறத் துவங்குகின்றது. அதற்கு முன் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோனாட்டிக்சுடன் இணைந்து 108 விமானங்களைத் தயாரிக்கவும், அந்நிறுவனத்துக்கு தொழில்நுட்பங்களை மாற்றிக் கொடுக்கவும் இசைந்திருந்த தஸ்ஸால்ட், அதன்பின் ஏராளமான நிபந்தனைகளை விதிக்கத் துவங்கியது.

குறிப்பாக, சில நவீன ஆயுதங்களை விமானத்தோடு இணைப்பதற்கு கூடுதல் செலவாகும் என ஆரம்பித்த தஸ்ஸால்ட், 126 விமானங்களுக்கான விலையை 14 பில்லியன்களாக்கியது. மேலும், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் தயாரிக்கும் விமானங்களுக்கான உத்திரவாதத்தை தரமுடியாதெனவும், தொழில்நுட்பத்தை கையளிக்க முடியாதெனவும் பின்வாங்கியது – இதை மத்திய அரசு ஏற்றுக் கொண்டே அதே சமயத்தில் தான் “மேக் இன் இந்தியா” திட்டத்திற்காக பலூன்களைப் பறக்க விட்டுக் கொண்டிருந்தார் மோடி.

தற்போது இந்த ஊழலை முட்டுக் கொடுக்க கையால் கரணம் போட்டுக் கொண்டிருக்கும் மோடி பக்தர்கள் சில வாதங்களை வைக்கிறார்கள். அதில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் கடந்த காலங்களில் (குறிப்பாக தேஜஸ் விமானத் தயாரிப்பில்) சிறப்பாக செயல்படவில்லை என்று புதிதாக கண்டுபிடித்துள்ளனர். ஆனால், விமானத் தயாரிப்பில் எந்த முன் அனுபவமும் இல்லாத அம்பானி சகோதரர்களால் சிறப்பாக செயல்பட முடியும் என்று வினோதமான தர்க்கத்தை வைக்கிறார்கள்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்

அடுத்து, மன்மோகன் சிங் காலத்தில் செய்து கொண்ட ஒப்பந்தங்களின் படி நமக்கு கிடைக்கவிருந்த விமானங்கள் அடிப்படை மாடல்கள் எனவும், தற்போது கிடைக்கவிருப்பது கூடுதல் ஆயுதங்கள் பொருத்தப்பட்டிருப்பதால் விலை அதிகம் என்கிறார்கள். துப்பாக்கியை விட தோட்டாக்களுக்கு அதிக விலை என்கிற முட்டாள்தனமான தர்க்கத்துக்கு ஒரே உதாரணத்தை மட்டும் பார்க்கலாம்.

விமானத்தில் பொருத்தப்படவுள்ள மெட்டியார் ரக ஏவுகணையின் சந்தை விலையே 2.1 மில்லியன் டாலர் தான். அதே போல் HDMS எனப்படும் ஹெல்மெட்டில் பொருத்தப்படும் வழிகாட்டும் அமைப்பின் விலை 0.4 மில்லியன் டாலர். இவ்வாறு தனித்தனியே விமானத்தில் பொருத்தப்பட உள்ளதாக சொல்லப்படும் ஆயுதங்களின் சந்தை விலையைக் கூட்டினால் ஒரு விமானத்திற்கு 10 மில்லியன் டாலர் அதிகரிக்கலாம். ஆனால், தற்போது ஊதிப் பெறுக்கப்பட்டுள்ள விலையோ 100 சதவீதத்துக்கும் அதிகம்.

ஊழல் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், இவ்வாறு குற்றம் சாட்டுவது வெட்கக்கேடானது என்றும் தேசத்தின் பாதுகாப்பையே கேள்விக்குள்ளாக்குவதாகும் என்றும் எச்சரித்துள்ளார். இதே தர்க்கம் காங்கிரசின் போஃபர்ஸ் ஊழலுக்கும் பொருந்துமா என்பதைப் பற்றி நிர்மலா சீதாராமன் தெரிவிக்கவில்லை.

சுருக்கமாகச் சொல்வதானால் – இது பச்சையான ஊழல். அதுவும் தனியார் முதலாளிகளுக்கு மக்களின் வரிப்பணத்தை எடுத்து கறி விருந்து வைக்கிறார் மோடி. தனது ஊழலைக் கேள்விக்குள்ளாக்குபவர்களை ஒரேயடியாக தேசதுரோகிகளாக சித்தரிக்கும் முயற்சியில் பாரதிய ஜனதா ஈடுபட்டுள்ளது.

மேலும் :


உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

கருத்துக் கணிப்பு : இன்றைய செய்திகளில் சிரிக்கத் தக்கவை எவை ?

1

வினவு தளத்தில் அன்றாடம் கருத்துக் கணிப்பு போடுவதில்லையே ஏன்?

து ஒரு வாசகரின் கேள்வி. என்ன கருத்துக் கணிப்பு நடத்துவது? திணறி வருகிறோம். அ.தி.மு.க காமெடி அக்கப்போர்கள் ஓ.பி.எஸ். தியானத்தில் இருந்த போது ஆரம்பித்தது… இன்றும் நிற்கவில்லை. வளைத்து வளைத்து ஒரே விசயத்தை பேசுவதோடு, காதுகளே நாணப்படும் அளவுக்கு ஃபோன் ஒயர் அந்து போன வார்த்தைகளை சலிக்காமல் வீசுகிறார்கள்.

மோடி அரசின் பொருளாதார ஒடுக்குமுறையும், அதனோடு கூட சேர்ந்து வரும் பார்ப்பனிய அடக்குமுறையும் அன்றாடம் நடக்கின்றன. இடங்களும் காலமும் மாறினாலும் இந்த ஒடுக்குமுறையின் கரு ஒன்றுதான். பிறகு ஊடகங்கள் பாஜக -விற்கு சொம்படிக்கின்றன. சமூகவலைத்தளங்களில் அந்த வார சினிமா செய்திகள் பேசப்படுகின்றன.

இந்நிலையில் கருத்துக் கணிப்பிற்கு நீங்கள்தான் ஆலோசனைகளை தெரிவிக்க வேண்டும்.

ஆகவே இன்றைய கருத்துக் கணிப்பு :

இன்றைய செய்திகளில் சிரிக்கத் தக்கவை எவை?

  • என்னை ‘டுமிலிசை’ என்று அழைப்பதில் கவலை இல்லை – தமிழிசை சௌந்தர்ராஜன்
  • சூர்யாவுக்கு கார்த்தி கடும் போட்டியாக இருக்கிறார் – சென்னை மாநகர காவல் துணை ஆணையர் பாராட்டு
  • உலகின் மிகமிக சுவையான உணவு கருவாடுதான் – இயக்குநர் மிஷ்கின்
  • ‘தமிழகத்தில் மக்களாட்சியை உருவாக்க திமுக, அதிமுக அல்லாத கட்சிகள் பாமக தலைமையை ஏற்க வேண்டும்’ – டாக்டர் ராமதாஸ்
  • யூனிசெஃப்பின்குழந்தைகள் உரிமை தூதராக த்ரிஷா நியமனம்
  • கமல் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது – அமைச்சர் ஜெயக்குமார்

( பதில்களில் ஏதேனும் இரண்டைத் தெரிவு செய்யலாம் )


உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

கார்ல் மார்க்ஸின் மூலதனம் – 150 ரசியப் புரட்சி – 100 – சென்னை சிறப்புக் கூட்டம் !

8

கார்ல் மார்க்சின் மூலதனம் 150-ம் ஆண்டு நவம்பர் புரட்சியின் 100-ம் ஆண்டு விழா சிறப்புக் கூட்டம் நவம்பர் 19, 2017 அன்று நடைபெற்றது.

ந்தனம் ஒய்.எம்.சி.ஏ. கல்லூரி செல்லும் பாதை நெடுகிலும் செங்கொடிகள் பறக்க, ஒய்.எம்.சி.ஏ. கல்லூரி அரங்க வளாகம் மக்கள் வெள்ளத்தால் நிரம்பியிருந்தது.

( மக்கள் வெள்ளத்தில் ஒய்.எம்.சி.ஏ. அரங்கம் – படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

( அரங்கத்திற்கு வெளியே – படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

மாலை 3.30 மணிக்கு கருத்துப்படக் காட்சி ஒளிபரப்பப்பட்டது.  முதலாளித்துவத்தின் முரண்பாடுகளையும், அதன் ஈவிரக்கமற்ற கொடுமைகளையும், அது தனக்குத் தானே சமாதி கட்டிக் கொண்டிருப்பதையும் விளக்கும் விதமான படங்களும், கேலிச்சித்திரங்களும் கருத்துப்படக் காட்சியை சிறப்பித்தன.

( தப்பாட்டம் – படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

மேலும் இரசியப் புரட்சி பற்றியும், அது உலகத்திற்கு வழங்கிய கொடையைப் பற்றியும் கருத்துப்படக் காட்சியில் படங்கள் இடம்பெற்றன. அரங்கத்திற்கு வெளியே திரையிடப்பட்ட கருத்துப்படக் காட்சியை மக்கள் பார்த்து இரசித்தனர்

கூட்டம் தொடங்குவதற்கு முன்பே ஒய்.எம்.சி.ஏ. அரங்கம் நிரம்பி வழிந்தது. உட்காருவதற்கு இடமில்லாத காரணத்தால், அரங்கத்திற்கு வெளியே 1200 -க்கும் மேற்பட்டவர்கள் அமர்ந்திருந்தனர், அவர்களுக்கு தொலைக்காட்சி திரையில் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.

மாலை 3.45 மணியளவில் தப்பாட்டம் தொடங்கியது. பறையிசையின் உணர்ச்சிப் பெருக்கோடு, கூட்டம் தொடங்கியது.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலத் தலைவர் தோழர் முகுந்தன் கூட்டத்திற்கு தலைமையேற்று நடத்தினார். முதலில் பாட்டாளிவர்க்க சர்வர்தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பங்கேற்றோர் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.

தோழர் முகுந்தன்

அதன் தொடர்ச்சியாக, “ரிசர்ச் யூனிட் ஃபார் பொலிட்டிகல் எக்கானமி” (RUPE) என்ற அரசியல் பொருளாதார பத்திரிக்கையின்  ஆசிரியர் ரஜனி எக்ஸ் தேசாய் , இந்த நிகழ்ச்சிக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியின் தமிழாக்கத்தை தோழர் மருதையன் கூட்டத்தினர் முன் வாசித்தார்.

வழக்கறிஞர் பாலன்

அதன் பின்னர், பெங்களூரு வழக்கறிஞர் பாலன், சிறப்புரையாற்றினார். “இரசியப் புரட்சிதான் நாம் இன்று அனுபவிக்கும் அனைத்து மக்கள் நலத் திட்டங்களுக்கும் காரணம் என்பதையும், தொழிலாளி வர்க்கம் எவ்வாறு போராடிப் பெற்ற தனது உரிமைகளை இன்று இழந்து நிற்கிறது என்பதையும் விளக்கிப் பேசினார்.”

அடுத்தபடியாக, வினவு வழங்கிய “புரட்சியின் தருணங்கள்” இசைச்சித்திரம் ஒளிபரப்பட்டது. மேடையின் பின்னணியில் அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான திரையில் இசைச்சித்திரம் ஒளிபரப்பப்பட்டது. இரசியப் புரட்சியின் காலகட்டத்தையும், உலகின் முதல் சோசலிச அரசின் சாதனைகளையும் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தும் விதமான காட்சிகளோடு 35 நிமிட இசைச்சித்திரம் ஒளிபரப்பப் பட்டது.

அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த தோழர். லெனின் படம்

இரசிய சோசலிசப் புரட்சியின் தாக்கத்தினால் உலகின் பல்வேறு நாடுகளிலும் ஏற்பட்ட விடுதலை இயக்க எழுச்சி, சோசலிசக் குடியரசுகளின் தோற்றம் மற்றும் உலகெங்கும் நடைபெற்ற நவம்பர் புரட்சி நூற்றாண்டு கொண்டாட்டங்களையும் கண்முன்னே காட்டியது “புரட்சியின் தருணங்கள்’ இசைச் சித்திரம்.இசைச் சித்திரத்தின் பல்வேறு காட்சிகளுக்கு மக்கள் ஆரவாரமாக கைதட்டினர். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் நடைபெற்ற தப்பாட்டம், பார்வையாளர்களுக்கு உணர்ச்சிப் பூர்வமான எழுச்சியைக் கொடுத்தது என்றால், “புரட்சியின் தருணங்கள்” இசைச்சித்திரம் உணர்வுப்பூர்வமான எழுச்சியை பார்வையாளர்களின் மத்தியில் ஏற்படுத்தியது.

தோழர் தியாகு

அதனைத் தொடர்ந்து மூலதனம் நூலின் தமிழ் பதிப்பின் மொழி பெயர்ப்பாளரும், தமிழ்தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவருமான தோழர் தியாகு உரையாற்றினார்.

“கார்ல் மார்க்சின் மூலதனம் நூலை மொழிபெயர்க்கும் போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும், மார்க்சின் மூலதனம் நூலைப் பற்றியும் குறிப்பிட்டுப் பேசினார்.”

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

ஒவ்வொரு உரைகளுக்கும் இடையில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக்குழுவின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. தோழர்களின் பாடல்கள் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.

தோழர் மருதையன்

அதன் பின்னர் தோழர் மருதையன் சிறப்புரையாற்றினார். “முதலாளித்துவம் இன்று அதற்கான சவக்குழியை தானே தோண்டிக் கொண்டுள்ளது. அதனை சவக்குழிக்கு அனுப்ப வேண்டிய வேலையை பாட்டாளி வர்க்கம் செய்து முடிக்க வேண்டும்” எனக் கூறினார்.

அவரின் உரையைத் தொடர்ந்து வினவு வழங்கிய “மார்க்ஸ் எனும் அரக்கன்” இசைச் சித்திரம் திரையிடப்பட்டது. மார்க்ஸின் சமகால அரசியல் சூழல்குறித்தும், முதலாளித்துவவாதிகளால் கூட தவிர்க்கப்பட முடியாதவராக இன்று மார்க்ஸ் அவசியப்படுவதையும் எடுத்துக்காட்டியது இசைச்சித்திரம்

 

தோழர் கணேசன்

நிகழ்ச்சியின் இறுதியாக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் நன்றியுரையாற்றினார்.

-வினவு செய்தியாளர்.

குறிப்பு: –

முழுக் கூட்டத்தையும் வினவு இணையதளத்தில் நேரலை செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது. தொழில் நுட்பச் சிக்கல் மற்றும் அனுபவக் குறைவு காரணமாக அது கடைசி நிமிடத்தில் இரத்து செய்யப்பட்டது. எதிர்பார்த்துக் காத்திருந்த நண்பர்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றத்திற்கு வருந்துகிறோம். இனி வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்கிறோம். அதேநேரத்தில் இத்தகைய நிகழ்ச்சிகளை தவறே இல்லாமல் தொழில் நுட்ப நேர்த்தியுடன் நேரலையாக காட்டும் சோதனையில் வெற்றி பெற்றிருக்கிறோம்.  அடுத்து வரும் நேரலைகள் பிரச்சினையின்றி இருக்குமென நம்புகிறோம். நவம்பர் கூட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் வீடியோக்களாக ஓரிரு தினங்களில் வெளியிடப்படும்.


உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

மதயானையை வீழ்த்திய சிற்றெறும்பு !

“நேரடி உற்பத்தியாளர்களின் உடைமைப் பறிப்பைச் சிறிதும் ஈவிரக்கமின்றி வெறித்தனமாய்ச் செய்து முடித்தார்கள். அவக்கேடான, அற்பத்திலும் அற்பமான, கேடுகெட்ட, அசிங்கத்திலும் அசிங்கமான விருப்பங்களாலும் உணர்ச்சிகளாலும் தூண்டப்பட்டு இதனைச் செய்து முடித்தார்கள்.”
– கார்ல் மார்க்ஸ், மூலதனம், முதல் பாகம், முதல் புத்தகம், பக்.1025
தென் கொரியாவைச் சேர்ந்த, உலகின் மிகப் பெரிய இரும்பாலை நிறுவனமான போஸ்கோ, ஒடிசா மாநிலத்தில் ஒருங்கிணைந்த இரும்பு எஃகு ஆலை அமைக்கும் தனது திட்டத்தைக் கைவிட்டு வெளியேறிவிட்டது.
தமிழகத்திற்கு நோக்கியா, குஜராத்திற்கு டாடாவின் நானோ கார் ஆலை என்பது போல, ஒடிசாவில் 52,000 கோடி ரூபாய் முதலீட்டில் அமையத் திட்டமிடப்பட்டிருந்த போஸ்கோ இரும்பாலை, தனியார்மயம் – தாராளமயத்தின் மிகப் பெரிய வெற்றியாகக் கொண்டாடப்பட்டது. அப்படிச் சிலாகிக்கப்பட்ட திட்டம், பிறவி ஊனமாகி, ஆலைக்கு அஸ்திவாரம் தோண்டுவதற்கு முன்பே இந்தியாவிலிருந்து வெளியேறிப் போனதற்குக் காரணம், ஒடிசா மாநிலத்தின் ஜகத்சிங்பூர் மாவட்டத்திலுள்ள திங்கியா, கோவிந்தபூர் உள்ளிட்ட ஏழு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளும், மீனவர்களும், பழங்குடியின மக்களும் நடத்திய பத்தாண்டு கால விடாப்பிடியான போராட்டம்.
2005 -ஆம் ஆண்டு போஸ்கோ நிர்வாகத்திற்கும் ஒடிசா மாநில அரசிற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 2015, மார்ச்சில் போஸ்கோ தனது கனவுத் திட்டத்தைக் கைடுவிடுவதாக அறிவித்தது. இடைப்பட்ட இந்தப் பத்தாண்டுகள் முழுவதும் போஸ்கோவிற்கு எதிரான போராட்டம், “போஸ்கோ பிரதிரோத் சங்க்ராம் சமிதி” (போஸ்கோவிற்கு எதிரான போராட்டக் கழகம்) என்ற ஒருங்கிணைந்த அமைப்பின் கீழ் நடந்தது.
யானை பெரிய உருவம் கொண்ட விலங்குதான். ஆனால், அதன் காதுக்குள் ஒரு சிற்றெறும்பு புகுந்துவிட்டால், அப்பெரிய விலங்கிற்கு என்ன நேருமோ, அந்தக் கதிதான், எஃகு உற்பத்தியில் உலகின் நான்காவது இடத்திலுள்ள போஸ்கோவிற்கு ஏற்பட்டிருக்கிறது, எளிய விவசாயிகளின் போராட்டம் காரணமாக.
தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் வளர்ச்சி என்ற பெயரில் பெட்ரோ கெமிக்கல் திட்டங்கள் திணிக்கப்பட்டு வருவதைப் போலவே, போஸ்கோவும் வளர்ச்சியின் பெயரால்தான் ஒடிசா-ஜகத்சிங்பூர் மாவட்டத்தின் மீது திணிக்கப்பட்டது. 52,000 கோடி ரூபாய் முதலீடு, இரும்புச் சுரங்கம், எஃகு ஆலை, இரும்பு ஏற்றுமதிக்கான துறைமுகம், உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு எனத் தேன் தடவிய வாதங்கள் அவிழ்த்துவிடப்பட்டன.
ஆனால், இந்த ஜிகினா வார்த்தைகளுக்கெல்லாம் அம்மாவட்ட விவசாயிகளும், மீனவர்களும் மயங்கிவிடவில்லை. தமது நெல் வயல்கள், வெற்றிலைக்கொடி தோட்டங்கள், மீன்பிடித் தொழில் ஆகியவற்றின் அழிவில்தான் பீற்றிக் கொள்ளப்படும் இந்த வளர்ச்சி எழுந்து நிற்கப் போகிறது என்பதைப் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்ட நாளிலேயே அவர்கள் உணர்ந்துகொண்டனர்.
அவர்கள் முன்பு இரண்டு வாய்ப்புகள்தான் இருந்தன. ஒன்று, தமது வயல்களை, தோட்டங்களை போஸ்கோவிடம் பறிகொடுத்துவிட்டு, அகதிகளாக வெளியேறுவது. இல்லையென்றால், உயிருக்குத் துணிந்து போஸ்கோவை எதிர்த்து நிற்பது. அவர்கள் இரண்டாவதைத் தேர்ந்தெடுத்தார்கள். இழப்புகள், அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் அதில் உறுதியுடன் இருந்தார்கள். அதனால் போஸ்கோ வெளியேற நேர்ந்தது.
அரசின் ஆசை வார்த்தைகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் பணிந்து போயிருந்தால், என்ன நடந்திருக்கும்? அதற்கு இரத்த சாட்சியாக உள்ளது, போஸ்கோவிற்கு நிலங்களை “விற்ற” நுவாகாவ் கிராமம்.”அக்கிராமத்தைச் சேர்ந்த பாதிப்பேர் இப்பொழுது வேலையில்லாமல் திண்டாடுகிறார்கள். போஸ்கோவிடம் நிலத்தை இழந்து, விவசாயிகள் பெற்ற ஈட்டுப் பணமெல்லாம் கரைந்து போய்விட்டது.
போஸ்கோ வருவதற்கு முன்பாக வெற்றிலை தோட்டங்களில் கிடைத்துவந்த வேலையெல்லாம் மறைந்துபோய், இப்பொழுது அக்கிராமத்தைச் சேர்ந்த “முன்னாள்” நடுத்தர விவசாயிகள்கூட கூலிவேலை தேடி, போஸ்கோவை எதிர்த்து நின்ற பக்கத்து கிராமமான திங்கியாவிலுள்ள தோட்டங்களுக்குச் செல்கிறார்கள். அக்கிராமத்தைச் சுற்றியிருந்த வனப்பகுதியிலுள்ள பெரும்பாலான மரங்கள் ஆலைக்காக வெட்டப்பட்டுவிட்டதால், விறகிற்குக்கூட அக்கிராமத்தில் வழியில்லை என அந்த சோகத்தைப் பதிவு செய்கிறது, எக்கானமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி ஏடு.
***
ந்தவொரு முதலாளியும் தமது சொந்தக் கைக்காசைப் போட்டு தொழில் சாம்ராஜ்ஜியங்களை நிறுவி, இலாபத்தைக் குவிப்பதில்லை. மாறாக, விவசாயிகளின் நிலத்தை அபகரித்துக் கொள்வதன் மூலமும், கைத்தொழில் உள்ளிட்ட சிறு தொழில்களை அழித்து நிர்மூலமாக்குவதன் மூலமும், இயற்கை வளங்களைச் சூறையாடுவதன் மூலமும்தான் முதலாளித்துவம் தனது வளர்ச்சியைச் சாதித்துக் கொண்டது என்பதை வரலாற்று வழியில் நிரூபித்திருக்கிறது, மார்க்ஸின் மூலதனம் நூல். போஸ்கோ, அந்த நிரூபணத்தின் சமீபத்திய எடுத்துக்காட்டு.
இரும்பு எஃகு ஆலை அமைப்பதற்கு 4,004 ஏக்கர் நிலம், ஆலை தொடர்பான அடிக்கட்டுமான வசதிகள் மற்றும் அதிகாரிகள், ஊழியர்களின் குடியிருப்பு நகரியத்தை உருவாக்குவதற்கு 2,000 ஏக்கர் நிலம், இரும்புச் சுரங்கத்தை அமைப்பதற்கு 6,177 ஏக்கர் வனப்பகுதி என 12,000 ஏக்கர் நிலத்தை, ஒடிசா மாநில அரசின் துணையோடு அபகரித்துக்கொள்ளத் திட்டமிட்டிருந்தது, போஸ்கோ. மேலும், ஜடாதாரி என்ற ஆற்றின் முகத்துவாரத்தில் இரும்பை ஏற்றுமதி செய்வதற்கு துறைமுகம் அமைத்துக் கொள்வதற்கும் போஸ்கோவிற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
போஸ்கோ கண் வைத்திருந்த நிலப்பகுதி வானம் பார்த்த வறண்ட பூமியல்ல. நெல்லும், வெற்றிலையும், முந்திரியும், பலவிதமான காய்கறிகளும் விளைகின்ற வளமான பூமி. மகாநதி, கதாஜோடி, தேவி, ஜடாதாரி உள்ளிட்ட ஆறுகளும், பல பத்துக்கணக்கான காட்டாறுகளும், நீரோடைகளும், அருவிகளும் கொண்ட நீர்வளமும் இலட்சக்கணக்கான மரங்களைக் கொண்ட காட்டு வளமும் நிறைந்த பகுதி.
போஸ்கோவின் திட்டம் நிறைவேறியிருந்தால், ஆலை அமையவிருந்த ஏழு கிராமங்களைச் சேர்ந்த 22,000 விவசாயக் குடும்பங்களும்; துறைமுகம் அமையவிருந்த பகுதியைச் சேர்ந்த 20,000 மீனவக் குடும்பங்களும், இரும்புச் சுரங்கம் அமையவிருந்த சுந்தர்கர் மாவட்டத்தைச் சேர்ந்த கந்ததர் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பழங்குடியினக் குடும்பங்களும் தமது வாழ்வாதாரங்களை இழந்து, அகதிகளாக வெளியேற வேண்டியிருந்திருக்கும்.
ஏறத்தாழ 50,000 குடும்பங்கள் போஸ்கோ திட்டத்தால் பாதிக்கப்படும் நிலையில், அந்நிறுவனம் 6,000 பேருக்கு வேலை தரப்போவதாக அளித்த வாக்குறுதியைக் குரூரமான நகைச்சுவை என்றுதான் குறிப்பிடமுடியும்.
ஏனென்றால், அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளும், விவசாயக் கூலிகளும் வளர்ச்சியும் வருமானமும் இன்றிக் கஞ்சிக்குச் செத்துக் கொண்டிருக்கவுமில்லை. போஸ்கோ வந்துதான் அவர்களைக் காத்து இரட்சிக்க வேண்டும் என்ற நிலையிலும் அவர்கள் வாழ்ந்து வரவில்லை. “கூலி உள்ளிட்ட அனைத்துச் செலவுகளும் போக, மாதமொன்றுக்கு எனக்கு 50,000 ரூபாய் வருமானம் கிடைக்கிறது” என்கிறார், சிறீதர் சுவைன் என்ற வெற்றிலைத் தோட்ட விவசாயி.
இதற்கு அப்பால், “ஒவ்வொரு பருவத்தின் போதும் முந்திரி விளைச்சல் மூலம் 40,000 ரூபாய் வருமானம் கிடைக்கும்” எனக் கூறும் அவர், “நான் பள்ளிக்கல்விகூட முடிக்காதவன். போஸ்கோவோ அல்லது வேறு நிறுவனமோ எனக்கு இந்த வருமானத்தைத் தருமா?” எனக் கேட்கிறார்.
அவரது வருமானம், இந்தப் பகுதி வெற்றிலை மற்றும் முந்திரி விவசாயிகளின் வாழ்க்கையை எடுத்துக்காட்டும் குறுக்குவெட்டுத் தோற்றம். மேலும், ஒடிசாவிலேயே இந்தப் பகுதியில்தான் விவசாயக் கூலிகளின் வருமானமும் அதிகம் எனப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
போஸ்கோ ஆலை அமையவிருந்த கிராமங்களான திங்கியா, கோவிந்தபூர், கடகுஜங்கா, நுவாகாவ் உள்ளிட்ட ஏழு கிராமங்களில் விளையும் வெற்றிலையின்  மூலம் மட்டும் ஆண்டிற்கு 50 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் நடைபெற்றுவருவதாகக் கூறப்படுகிறது.
இந்தப் பகுதியில் வெற்றிலை விவசாயம் ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. அவ்விவசாயம் மேலும் பல நூறு ஆண்டுகள் நடப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், போஸ்கோவின் ஆயுட்காலமோ வெறும் முப்பது ஆண்டுகள்தான் எனக் கணக்கிடப்பட்டிருக்கிறது. ஆலையைத் தொடங்குவதற்கு முன்பே போஸ்கோ நிறுவனம் ஏறத்தாழ இரண்டு இலட்சம் காட்டு மரங்களை வெட்டியிருக்கிறது.
இதனால், இனிமேலும் காட்டு மரங்களை வெட்டுவதற்கு அந்நிறுவனத்திற்குத் தடைவிதித்தது, தேசியப் பசுமைத் தீர்ப்பாயம். ஆலையைத் தொடங்குவதற்கு முன்பே இத்துணை அழிவென்றால், போஸ்கோ வெளியேற்றப்படாமல் போயிருந்தால், எதிர்வரும் முப்பது ஆண்டுகளில், அந்நிறுவனம் இந்தப் பகுதியையே சுடுகாடாக்கியிருக்கும்.
ஆனால், ஆளுங்கட்சிகளுக்கும், மத்திய மற்றும் ஒடிசா மாநில அரசுகளுக்கும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின், மீனவர்களின் வாழ்க்கை அழிவது குறித்தோ, இயற்கையும் சுற்றுப்புறச் சூழலும் நாசமாவது குறித்தோ சிறிதும் கவலையில்லை. அவர்களது அக்கறையெல்லாம் போஸ்கோவின் வளர்ச்சியை, அப்பன்னாட்டு நிறுவனத்திற்கு அசாதாரணமான இலாபம் கிடைப்பதை உத்தரவாதப்படுத்துவது மட்டும்தான். அதற்காக அவர்கள் எந்த எல்லை வரையும் செல்லத் தயாராக இருந்தார்கள்.
இரும்புச் சுரங்கத்தையும், ஆலையையும் அமைத்துக்கொள்ள போஸ்கோவிற்கு அனுமதி அளித்ததில் வன உரிமைச் சட்டத்தைக் கடாசியெறிந்தார்கள். சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புச் சட்டங்களைக் காலில் போட்டு மிதித்தார்கள். மேலும், ஒரிசா மாநிலத்தில் தோண்டியெடுக்கப்படும் இரும்புத் தாதுவில் 30 சதவீதத்தைச் சர்வதேச சந்தை மதிப்பில் முப்பது ஆண்டுகளுக்கு ஏற்றுமதி செய்து கொள்ள போஸ்கோவிற்குத் தாராள சலுகையும் வழங்கினார்கள்.
***
“மூலதனத்திற்கு 100 சதவீதம் இலாபம் கிடைக்குமென்றால், எல்லா மனித நியதிகளையும் துவம்சம் செய்யத் தயாராகிவிடும். 300 சதவீதம் கிடைக்குமென்றால் குறுகுறுப்பே இல்லாமல் எந்தக் குற்றமும் செய்யும்” எனத் தனது மூலதனம் நூலில் கார்ல் மார்க்ஸ் எடுத்துக்காட்டியிருக்கிறார்.
மூலதனத்தின் நியதியே இதுதான் எனும்போது, 600 சதவீதத்திற்கும் மேலான இலாபம் எனும் உணர்ச்சியால் தூண்டப்பட்டிருந்த போஸ்கோ இதற்கு விதிவிலக்காக இருந்துவிடுமா? அந்நிறுவனம், தன்னை எதிர்த்து நின்ற விவசாயிகள், மீனவர்கள் மீது அருவருக்கத்தக்க ஊழியாட்டத்தைக்  கட்டவிழ்த்துவிட்டது.
போஸ்கோவிற்கு எதிரான பத்தாண்டு காலப் போராட்டத்தில் விவசாயிகளும் மீனவர்களும் பொருளாதார இழப்புகளை மட்டும் சந்திக்கவில்லை. போராட்டத்தில் முன்னணியில் நின்ற நான்கு தோழர்களைக் குண்டுவீச்சுக்குப் பலி கொடுத்தார்கள். சிறுவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் கல்வியை இழந்தார்கள்.
போராட்டத்தில் உறுதியாக நின்ற கிராமங்கள் போலீசாரால் சட்டவிரோதமாக முற்றுகையிடப்பட்டதால், கிராமத்தைவிட்டு வெளியே செல்ல முடியாமல் முடக்கப்பட்டார்கள். போலீசாலோ அல்லது போஸ்கோ ஆதரவாளர்கள் என்ற பெயரில் கிராமங்களுக்குள் நுழைந்த குண்டர்களாலோ எந்நேரமும் தாக்கப்படலாம் என்ற அச்சத்தில் உறையவைக்கப்பட்டார்கள்.
“கொலை, கொலைமுயற்சி, பாலியல் வன்முறை, ஆள்கடத்தல் உள்ளிட்ட கிரிமினல் குற்றச்சாட்டுக்களின் கீழ் இக்கிராம மக்கள் மீது ஏறத்தாழ 3,000 வழக்குகள் பதியப்பட்டிருப்பதாகவும், இவற்றுள் 70 சதவீதமான வழக்குகள் போஸ்கோவுக்கு எதிராகப் போராடும் யாரையும் கைதுசெய்யும் வண்ணம் அடையாளம் தெரியாத நபர்கள் என்றபடி தயாரிக்கப்பட்டிருப்பதாகவும்” கூறுகிறார், இக்கிராம மக்களுக்காக வாதாடிவரும் வழக்குரைஞர்.
ஆனால், இந்த அச்சுறுத்தல்களெல்லாம் அவர்களின் மன உறுதியைக் கொஞ்சம்கூட அசைத்துவிடவில்லை. 2008 -ஆம் ஆண்டில் போஸ்கோ எதிர்ப்பாளர்கள் மீது ரவுடிப் பட்டாளம் நடத்திய குண்டுவீச்சில் துலா மண்டல் மாண்டுபோனார். 2013 -ஆம் ஆண்டில் நடந்த மற்றொரு குண்டுவீச்சில் அவரது சகோதரர் தருண் மண்டல் மாண்டுபோனார். அச்சகோதரர்களின் வயதான தந்தை ஈடுசெய்ய முடியாத இந்த இழப்பை, “இராணுவமயமான அரசு மற்றும் பன்னாட்டு நிறுவனத்திற்கு எதிரான போராட்டத்தில் தனது மகன்கள் தியாகியானதாக”ப் பெருமிதம் கொண்டாரே தவிர, துவண்டு விடவில்லை.
இந்த மனவுறுதியும் போஸ்கோவின் அடியாளாகச் செயல்பட்ட அரசுப் படைகளின் அடக்குமுறைகள், சூழ்ச்சிகளுக்கு எதிராக அவர்கள் கைக்கொண்ட போராட்ட உத்திகளும்தான் போஸ்கோவைத் துரத்தியடித்தன.
***
போஸ்கோவைத் தோற்கடித்ததன் மூலம் விவசாயிகள் தமது வாழ்வாதாரமான நிலம் அபகரிக்கப்படுவதை மட்டும் தடுத்துவிடவில்லை. விலை மதிப்பற்ற இரும்புத் தாது அடிமாட்டு விலைக்குக் கொள்ளையடிக்கப்படுவதையும், மிக முக்கியமாக அந்தப் பகுதியின் சுற்றுப்புறச் சூழலும் காட்டு வளமும் நீர் வளமும் அழிந்துபடும் அபாயத்தையும் தடுத்து நிறுத்தி, நாட்டு நலன், மக்களின் நலனைக் காப்பாற்றியிருக்கிறார்கள்.
போஸ்கோ வெளியேறிவிட்டபோதும், விவசாயிகளிடமிருந்து வலுக்கட்டாயமாக அபகரித்துக்கொண்ட 2,700 ஏக்கர் நிலத்தைத் திருப்பி அளிக்க மறுத்துவருகிறது, ஒடிசா அரசு. அந்நிலத்தை உள்நாட்டு இரும்பாலை முதலாளிகளுக்குக் கொடுத்து, போஸ்கோ கைவிட்ட திட்டத்திற்கு உயிர் கொடுக்க முயலுகிறது. ஒடிசா அரசின் இந்த துரோகத்திற்கு எதிராகத் தமது போராட்டம் தொடரும் என அறிவித்திருக்கிறது, போஸ்கோ பிரதிரோத் சங்கர்ஷ் சமிதி.
போஸ்கோவிற்கு எதிரான வெற்றியைப் பெற அம்மாநில விவசாயிகள் மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருந்தது உண்மைதான். இத்துணை இழப்புகளுக்குப் பின்னர் இந்தப் போராட்டம் தோல்வியடைந்திருந்தால்கூட, இப்போராட்டத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய படிப்பினைதான் முக்கியமானதாகும்.
இப்போராட்டம் சட்டம், நீதிமன்றம், எதிர்க்கட்சிகளின் தயவை நம்பி நடைபெறவில்லை. உள்ளூர் பகுதி மக்களின் சொந்த பலத்தையும், போராட்டக் களத்துக்கு வெளியே இருந்த ஜனநாயக சக்திகளின் ஆதரவை மட்டுமே அச்சாணியாகக் கொண்டு நடைபெற்றது.
இதற்கு மாறாக, வழமையான, குறுகிய சட்டவாத போராட்ட வரம்புக்குள் இப்போராட்டம் நின்றிருந்தால், எதிரிகள், அதாவது ஆளுங்கட்சிகளும் அதிகாரவர்க்கமும் இப்போராட்டத்தை என்றோ ஒழித்துக்கட்டியிருப்பார்கள்.
தமிழகத்தின் நெடுவாசல், கதிராமங்கலம் உள்ளிட்டு, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகளும், தொழிலாளர்களும், சிறு உற்பத்தியாளர்களும் தமது வாழ்வாதாரங்களைக் காப்பாற்றிக்கொள்ள அரசை எதிர்த்துப் போராடி வருகின்றனர். இத்தகைய போராட்டங்கள் அரசின் போலி வாக்குறுதிகளுக்கு மயங்கி விடக்கூடாது என்பது மட்டுமல்ல, நீதிக்காக நீதிமன்றப் படியேறக்கூடாது என்பதும் போஸ்கோ எதிர்ப்பு போராட்டம் தரும் படிப்பினையாகும்.
இந்த அரசும், ஆளுங்கட்சிகளும், அதிகாரவர்க்கமும் எதிரிகளின் கையாள் என்பதை மனதிற்கொண்டு போராட வேண்டும். வளர்ச்சி, சீர்திருத்தம் என்ற பெயரில் அவர்களால் திணிக்கப்படும் திட்டங்களை மட்டுமல்ல, அந்தக் கருத்தாக்கத்தையே கேள்விக்குள்ளாக்க வேண்டும். அவர்களின் கருணையை நிராகரிப்பதோடு, மக்கள் மீதான இந்த அரசின் அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்க வேண்டும்.  அதற்கு மாற்றாக மக்கள் அதிகாரத்தை நிறுவும் வகையில் போராட்டத் திட்டங்களையும், வழிமுறைகளையும் வகுத்துக் கொள்ள வேண்டும்.
இத்தகைய மாற்றை உருவாக்கி வளர்த்துச் செல்வதுதான் தற்போதைய தேவையாகும். போஸ்கோ எதிர்ப்புப் போராட்டம் இத்திசைவழியில் முதல் அடியை எடுத்துவைத்திருக்கிறது என்பதுதான் அப்போராட்டத்தின் சிறப்பாகும்.
திப்பு
புதிய ஜனநாயகம்,
நவம்பர் 2017

நெடுஞ்சாலைகளை பெயர் மாற்றி மீண்டும் வருகிறது டாஸ்மாக்

0

டந்த 2012 -ம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளை மூடக்கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை மூட உத்தவிட்டது நினைவிருக்கலாம். இந்த உத்தரவுக்குத் தடை கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சந்திரசூட், “நாடு முழுவதும், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் இருக்கும் சாராயக் கடைகளை அகற்ற வேண்டும்” என கடந்த 2016 டிசம்பர் 15 -ம் தேதி தீர்ப்பளித்தார். இந்த உத்தரவை வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு என்று ஊடகங்கள் – கட்சிகள் கொண்டாடின.

இதையடுத்து, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தொலைவைத் தாண்டியே கடைகள் இருக்க வேண்டும் என்பதை 100 மீட்டராக மாற்றியமைக்க வேண்டும். காலக்கெடுவை நவம்பர் 28 வரை நீட்டிக்க வேண்டும். இந்தத் தடையால் எங்களுக்குப் பல கோடி ரூபாய் வரி வருவாய் இழப்பு ஏற்படும். எனவே தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்று தமிழக அரசு மனு செய்திருந்தது.

அதேபோல், நட்சத்திர விடுதிகள், ’பார்’ போன்ற இடங்களிலும் மது விற்பனை செய்யப்படுகிறது. இவையும் 500 மீட்டர் தூரம் என்ற அளவீட்டில் அடங்குமா? என கேட்டு பல மாநில அரசுகளும் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தன. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வு, ‘ஏப்ரல் 1 -ம் தேதி முதல் நெடுஞ்சாலையில் உள்ள கடைகள் செயல்படக்கூடாது’ என்றும் ‘எல்லா வகையான மது விற்பனை நிலையங்கள், கடைகள், உணவகங்களுக்கும் இந்தத் தீர்ப்பு பொருந்தும்’ என்றும் உத்தரவிட்டது.

அதேசமயம், தீர்ப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, 500 மீட்டர் என்பது பெரிய நகரங்களுக்குப் பொருந்தும். அதுவே, 20 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட சிறிய நகர்ப்புறமாக இருந்தால், அங்கு 220 மீட்டர் தூரத்துக்குக் கடைகள் இருக்கக் கூடாது என்ற விலக்கும் அளிக்கப்பட்டு தமிழக அரசுக்கு ஆறுதல் தந்தது.

தமிழகம் முழுவதும் பல்வேறு கிராமங்கள், தங்கள் பஞ்சாயத்துக் கூட்டத்தில் டாஸ்மாக் கடைகள் வேண்டாம் எனத் தீர்மானம் நிறைவேற்றி, தங்களது கிராமத்தில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை மூடினர். கிராமப் பஞ்சாயத்துகளுக்கு இந்த அரசியல் சாசனச் சட்டம் வழங்கியிருக்கும் அந்த எழுத்தளவிலான உரிமையையும் சென்னை உயர்நீதிமன்றம் பறித்தது. கடந்த ஜூன் மாதம், சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய அந்தத் தீர்ப்பு டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக ஏற்கெனவே வழங்கிய எல்லா தீர்ப்புகளையும் நீர்த்துப் போகச் செய்துவிட்டது.

அதாவது, “சில்லறை மதுபானக்கடைகளை அமைப்பதற்கான விதிகளின் கீழ் டாஸ்மாக் நிர்வாகம் எங்கு வேண்டுமானாலும் மதுக்கடை களை அமைத்துக் கொள்ளலாம் என்றும், கிராம சபைகளுடைய தீர்மானங்கள் கடைகள் அமைப்பதைக் கட்டுப்படுத்த முடியாது” என்றும் தீர்ப்பளித்து தனது உண்மையான முகத்தை காட்டியது. இந்திய நீதித்துறையின் மீது மக்களின் நம்பிக்கையைக் கட்டிக்காக்க முயலும் முன்னாள் நீதிபதி சந்துரு உள்ளிட்ட பலருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

“மக்கள் நீதிமன்றங்களை வெகுவாக நம்பியிருக்கிறார்கள். அந்த நிலை மாறிவிடுமோ என்று அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இனி பூரண மது விலக்கு வேண்டுமென்றால் நீதிமன்றங்களை நம்ப முடியாது” என்றார் சந்துரு.

அதனை உறுதிபடுத்தும் வகையில் தற்போது உச்ச நீதிமன்றம் புதிய விளக்கம் ஒன்றை அளிததுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு, அளித்த அந்தப் புதிய விளக்கத்தின்படி இனி நகராட்சிகள் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளை ஊரக சாலைகள் எனப் பெயர் மாற்றம் செய்து மாநில அரசு சாராயக் கடைகளை திறந்து கொள்ள அனுமதிக்கலாம்.

ஏற்கனவே சத்தீஷ்கார் அரசு மாநகராட்சி, நகராட்சி பகுதிகளின் வழியாக செல்லும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை ஊரக சாலைகளாக பெயர் மாற்றம் செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், “சாலைகளின் பெயர்களை வகை மாற்றம் செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது” என தீர்ப்பை அப்போது வழங்கியது உச்சநீதிமன்றம்.

இதைதொடர்ந்து தமிழகத்திலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் செல்லும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை ஊரக சாலைகளாக மாற்றும் வகையில் அரசு ஆணை பிறப்பித்தது. இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம், தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் செல்லும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை ஊரக சாலைகளாக மாற்ற தடை விதித்தது.

இந்த தடையை நீக்கும் பொருட்டு, உச்ச நீதிமன்ற உத்தரவில் சில விளக்கம் கேட்டு தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்றை கடந்த செப்டம்பர் மாதம் தாக்கல் செய்தது. இந்த மனுவை அவசர மனுவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கடந்த வாரத்தில் கோரிக்கை விடுத்தார் தமிழக அரசு வழக்கறிஞர்.

அதை ஏற்றுக்கொண்டு, உச்ச நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது. அதில், “தமிழகத்தில் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை ஊரக சாலைகளாக மாற்றியமைத்து டாஸ்மாக் கடைகளை திறக்கலாம். இந்த விவகாரத்தை பொறுத்த வரை சட்டிஸ்கர் மாநிலத்திற்கு உள்ள சட்ட விதிகள் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்” என்று உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.

இந்த உத்தரவின் மூலம் சாராயக்கடைகளை அரசு விரும்பும் இடத்தில் தடையின்றி நடத்திக் கொள்ள வழி ஏற்படுத்தியிருக்கிறது உச்சநீதிமன்றம். மேலும், சட்டம் மக்களுக்கானதல்ல, என்பதை இத்தீர்ப்பு மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தியுள்ளது. டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு சட்டரீதியான தீர்வு இருப்பதாகக் கூறி வந்த கனவான்கள் காண்பித்த ஒரே வழியையும் ஒங்கி அறைந்து மூடியிருக்கிறது.

இனி டாஸ்மாக் கடைகளை மூட நமக்கு விட்டுச் செல்லப்பட்டிருக்கும் ஒரே வழி போர்க்குணமிக்க போராட்டங்களே! இதைத்தான் இந்தத் தீர்ப்பு நமக்கு உறுதிபடக் கூறியிருக்கிறது!

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பயனளித்ததா ?

வாய்க்காலை தூர்வார துப்பற்ற அரசு! களத்தில் மக்கள் அதிகாரம் !

2

திருச்சி மாவட்டம் இலால்குடி வட்டத்திலுள்ள பூவாளூர், பின்னவாசல், காட்டூர், கொத்தமங்கலம், மேட்டுப்பட்டி, கோமாகுடி, தின்னியம், செம்பரை, முள்ளால், கல்விக்குடி, ஆழங்குடிமகாஜனம் ஆகிய 10 -க்கும் மேற்ப்பட்ட கிராமங்களின் பாசனத்திற்கான உயிராதாரமாக கீழ்பங்குனி வாய்க்கால் உள்ளது. சுமார் 5,000 ஏக்கர் பாசன பரப்பை கொண்ட இவ்வாய்காலின் தலைமதகு திருமங்கலம் கலிங்கியிலிருந்து பிரிந்து நீராதாரம் பெறுகிறது.

2016 – 2017 தவிர எந்த காலத்திலும் இந்த வாய்காலில் தண்ணீர் தட்டுப்பாடோ, நிலத்தடி நீர் குறைந்ததோ கிடையாது. ஆனால் 2017 அக்டோபர் 2 -ல் மேட்டூர் அணை தண்ணீர் திறந்து ஒரு மாத காலமாகியும் இவ்வாய்காலுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. பலமுறை இலால்குடி கோட்டம், ஆற்று நீர் பாசன வாய்கால் உதவி செயற்பொறியாளரிடமும் மதகு திறப்பணையாளரிடமும் நேரில் சந்தித்தும் தொலைபேசி மூலமும் வாய்க்காலை தூர்வாரி தண்ணீரை திறந்துவிட முறையிட்டும் எந்த பலனும் இல்லை. 12 ஊர் விவசாயிகளும் ஒன்று சேர்ந்து இனி அரசை நம்பி பலனில்லை “நம்ம ஊர் வாய்காலை நாமே சீர்செய்துக்கொள்ளலாம்” என முடிவு செய்தனர்.

தூர்வாருவதற்கான எந்த முயற்சியையும் எடுக்காமல் கடந்த 07.11.2017 அன்று தண்ணீரை திறந்துவிட்டார்கள் அதிகாரிகள். தண்ணீர் திறந்து 6 நாட்கள் ஆகியும் 10 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள செம்பரையைக் கூட தாண்டவில்லை. பங்குனி வாய்காலின் எந்த கிளை வாய்காலுக்கும் இதுவரை முழுமையாக தண்ணீர் போய் சேரவில்லை. இந்நிலையில் மக்கள் அதிகாரத்தின் உதவியை நாடினால் நம்முடைய பிரச்சனை தீரும் என விவசாயிகள் முடிவு செய்தனர்.

இம்முடிவை ஏற்று திருச்சி மக்கள் அதிகாரம்,

“நீரின்றி அமையாது உலகு”

பங்குனி வாய்காலை தூர்வார துப்பில்லை!
தோற்றுப்போன அரசை நம்பி பலனில்லை!
மக்களே அதிகாரத்தை கையிலெடுப்போம்!
வாய்காலை சீர்செய்வோம் வாரீர்!

என்ற முழக்கத்தை முன்வைத்து சுற்றுவட்டார கிராமங்கள் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டினார்கள். மக்களிடையே துண்டுபிரசுரங்கள் விநியோகித்தனர். 13.11.2017 அன்று விவசாயிகளும், மக்கள் அதிகாரம் தோழர்களும் இணைந்து ஆகாயத்தாமரையாலும், குப்பைகளாலும், சாராய பாட்டில்களாலும், புதர் மண்டிக் கிடந்த வாய்க்காலை சீர் செய்யும் பணியில் பணியில் 30க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

“நாத்துபறி, உழவு, நடவு என விவசாயிகளுக்கு தலைக்கு மேல் வேலைகள் இருந்தாலும் மழைகாலத்தில் தண்ணீரை சேமிக்காவிட்டால் இன்று உழவுக்கு நீர் இல்லாமல் போகும். நாளை குடிக்கவே தண்ணீர் கிடைக்காது. என்ற அபாயத்தை உணர்ந்து சீர் செய்ய வந்ததாக ஒரு விவசாயி கூறினார்.

வேலை நடந்து கொண்டிருந்த போது ஒரு விவசாயிக்கு போன் அழைப்பு வந்து கொண்டே இருந்தது அவர் எடுக்காமல் வேலையில் மும்முரமாக இருந்தார். மக்கள் அதிகார தோழர் ஒருவர் ஐயா போன் வந்துகிட்டே இருக்கு எடுத்து பேசுங்க என சொன்னார். அதற்கு அவரோ “போனை எடுத்தா வீட்டுக்கு வான்னு கூப்பிடுவா… நான் போயிட்டா…? இந்த வேலையை யார் பாக்குறது ? நீங்க மட்டும் தனியா எவ்வளவு நேரம் செய்வீங்க? அதனாலதான் போனை எடுக்கவில்லை” என்று அக்கறையுடன் பேசினார்.

மற்றொரு விவசாயி “என் நிலத்தில் பயிர் நடவு வேலை நடக்கின்றது. நேரம் முடியபோகுது, ஆட்களுக்கு கூலி கொடுக்கனும். அதுக்குதான்  மனைவி போன் பண்றாங்க. இருந்தாலும் ஊர் நல்லதுக்காக சீர்செய்யும் வேலையை முடித்துவிட்டுதான் செல்வேன்” என வைராக்கியத்துடன் கூறிக்கொண்டு ஆகாய தாமரை செடியை வாய்க்காலில் அகற்றி கொண்டிருந்தார்.

இன்னொரு விவசாயி ” காந்தி போன்ற நபர்கள் அரசியலில் கூட்டம் காண்பிப்பதற்காக விவசாயிகளை பயன்படுத்திக் கொண்டார்கள். அதன் பின் விவசாயிகளை கைவிட்டார்கள். ஆனால் மக்கள் அதிகாரம் மட்டும்தான் விவசாயிகளின் பிரச்சனைகளுக்காக வழிகாட்டுதல் கொடுப்பது மட்டுமல்லாமல் உடனிருந்து உதவியும் செய்கின்றனர்” என்றார்.

நீராதாரத்தை பேணி பாதுகாப்பதில் விவசாயிகளுக்குதான் அக்கறை உள்ளது. ஆனால் அதிகாரிகள் அரசியல்வாதிகள் இருப்பதை அழிக்கின்ற வேலையிலும் மணல் கொள்ளையிலும் ஈடுபடுகின்றனர். வாய்க்காலை தூர்வார பலநூறு கோடி ரூபாய் ஒதுக்கியும் எதுவும் செய்யாமல் எடப்பாடி அரசு விவசாயிகளுக்கு எதிராக செயல்படுகிறது. மக்களின் வரிப் பணத்தில் இயங்கும் அரசியல்வாதிகள், அதிகாரிகள் இந்த அரசு கட்டமைப்பு முழுவதும் தோற்றுப்போய் மக்களுக்கு எதிராக மாறிவிட்டது

மத்தியில் ஆட்சியில் இருக்கும் மோடி அரசு ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்றது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து கர்நாடக அரசு கொடுக்க வேண்டிய நீரை பெற்றுத் தராமல் தமிழகத்தை வஞ்சித்தது. இங்குள்ள எடப்பாடி அரசு விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளியது. இப்போது தண்ணீர் வந்தும் அதை முறையாக தூர்வாரி திறந்துவிட மறுக்கிறது தமிழக அரசு. விவசாயிகளோ தனக்கு எதிரியாகிப் போன இந்த அரசமைப்பை பற்றி புரிந்து கொள்ளாமல் ஆண்டவன் விட்ட வழி என வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார்கள்.

மக்கள் அதிகாரத்தின் தலைமையின் கீழ் விவசாயிகளும் இணைந்து அடுத்தகட்ட போராட்டத்தை நடத்துவோம் என அரசிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருச்சி. தொடர்புக்கு : 9445475157

பேரரசரின் நிர்வாணத்தை உணர வைத்த தேர்தல் காற்று!

3
2017 வைப்ரண்ட் குஜராத் நிகழ்ச்சியில் உரையாற்றும் மோடி

நிர்வாணப் பேரரசரின் கதையைக் கேட்டவர்கள் அந்தக் கதையின் முடிவைக் கேட்டிருக்க மாட்டார்கள். இதோ அந்தக் கதையின் முடிவு இப்படியாக இருந்தது.

பேரரசர் மெல்லக் குனிந்து பார்த்தார்; முதன்முறையாகத் தான் அம்மணமாக இருப்பதை அறிந்து கொண்டார். சுற்றிலும் தலையைத் திருப்பிப் பார்த்தார்; அவையில் உள்ளோர் எல்லாம் அரசர் அணிந்துள்ள ஒளிபொருந்திய அங்கியைக் குறித்து சிலாகிப்பதைப் பார்த்தார். “ஒருவேளை எல்லோரும் நம்மை ஓட்டுகிறார்களோ” என தனக்குத் தானே சந்தேகமாய்ச் சொல்லிக் கொண்டார். தனது தலைமை அமைச்சரும் அவையினர் போலவே சிலாகிப்பதைக் கண்டதும் பேரரசரின் சந்தேகம் அதிகரித்தது. சாளரத்தின் வழியாய் வீசிய காற்று நிர்வாண உடலில் படர்வதை உணர்ந்தார்; பேரரசரின் முகம் அவமானத்தில் கறுத்தது.

***

குஜராத் தேர்தல் எண்ணற்ற ஆச்சரியங்களைத் தன்னோடு அழைத்து வந்துள்ளது. முதன்முறையாக எதற்குமே வளைந்து கொடுக்காதவர் எனக் கருதப்பட்ட மோடி மெல்ல இறங்கி வந்துள்ளார். கடந்த நவம்பர் 10 -ம் தேதி கூடிய ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் இது வரை 28 சதவீத வரி விதிப்பு வளையத்தில் இருந்த சுமார் 178 பொருட்களின் வரிவிகிதம் குறைக்கப்பட்டு, அவை 18 சதவீத வரி விதிப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்படுவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. இனிமேல் வெறும் 50 பொருட்கள் மட்டுமே 28 சதவீத வரி வளையத்தின் கீழ் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்துக்கு நன்றி தெரிவித்துள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், “பாராளுமன்றத்தாலும், பொது அறிவாலும் சாதிக்க முடியாததைச் சாதித்ததற்காக நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தலை பெரும் வாக்கு வித்தியாசத்தில் வென்றாக வேண்டும் என்கிற கட்டாயத்தை பாரதிய ஜனதா தனக்குத் தானே உண்டாக்கி வைத்துள்ளது. தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, தாம் 150 -க்கும் மேற்பட்ட இடங்களை வென்று சாதனை படைப்போம் என அமித்ஷா வெற்றிக்கான இலக்கை நிர்ணயித்து விட்டார்.

கடந்த 22 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வரும் பாரதிய ஜனதா ஆட்சியில் இரண்டு முக்கியமான விளைவுகள் நடந்தேறியுள்ளன. ஒன்று பொருளாதாரத் துறையில்; மற்றொன்று சமூகத் துறையில்.

பொருளாதாரத் துறையைப் பொருத்தவரையில் மோடி ஆட்சிக்கு வந்ததை அடுத்து தனிநபர் வருமானம் தொடர்ந்து குறைந்து, தற்போது ஏழாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. பெரும் ஆரவாரத்துடன் 2003 -ம் ஆண்டு ‘வைப்ரண்ட் குஜராத்’ எனும் கொண்டாட்ட நிகழ்வு மோடியால் துவங்கி வைக்கப்பட்டது. இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த முதலாளிகள் இந்நிகழ்வுக்கு வரவழைக்கப்பட்டு புதிய தொழில்கள் துவங்குவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

2003 -ம் ஆண்டு துவங்கி 2017 வரை 8 முறை வைப்ரண்ட் குஜராத் கொண்டாடப்பட்டுள்ளது. 2003 -ம் ஆண்டு நடந்த நிகழ்வில், இந்தியா தவிர 53 நாடுகளைச் சேர்ந்த சுமார் 500 தொழிற்துறை பிரதிநிதிகள் கலந்து கொண்டு சுமார் 66 ஆயிரம் கோடி மதிப்பிலான தொழில் முனைவுக்கான 76 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இந்தாண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற நிகழ்வில் 55 ஆயிரம் பார்வையாளர்களும், 110 நாடுகளைச் சேர்ந்த சுமார் ஆறாயிரம் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு 25,578 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

2017 வைப்ரண்ட் குஜராத் நிகழ்ச்சியில் உரையாற்றும் மோடி

கடைசியாக நடந்த ஏழு வைப்ரண்ட் குஜராத் நிகழ்வுகளில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மதிப்பு மட்டும் 84 லட்சம் கோடி; இதில் மிகப் பெரிய முரண் நகை என்னவென்றால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பே 153 லட்சம் கோடி தான். 2014 – 15 காலகட்டத்திற்கான குஜராத் மாநில மொத்த உற்பத்தியின் மதிப்பு வெறும் 7.82 லட்சம் கோடி தான். மேலும், அதற்கும் முந்தைய ஆண்டுகளின் வளர்ச்சி விகிதத்தை விட இது குறைவான அளவு என்பது அம்மாநில அரசு வெளியிட்ட புள்ளி விவரங்களே தெரிவிக்கின்றன.

புள்ளி விவரக் கணக்குகள் ஒருபுறமிருக்க, குஜராத்தின் வளர்ச்சி என்பது வெறும் காகிதத்தில் எழுதப்பட்ட சர்க்கரை தான் என்பதை பட்டேல்களின் இட ஒதுக்கீடு போராட்டம் பட்டவர்த்தனமாக காட்டியது. குஜராத் முழுக்க சுமார் 60 லட்சம் இளைஞர்கள் வேலை கிடைக்காமலும், தொழில் வாய்ப்புகள் ஏதுமின்றியும் உள்ளனர் என்கிறார் அல்பேஷ் தாக்கோர். மத்திய அரசின் தேசிய மாதிரி சர்வே வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் படி நகர்புற குஜராத்தில் 5.8 சதவீத இளைஞர்களும், கிராமப்புற குஜராத்தில் 11.6 சதவீத இளைஞர்களும் வேலையற்று உள்ளனர்.

குஜராத்தின் வர்த்தகம் மற்றும் தொழிற்துறை தொடர்ந்து சரிவைச் சந்தித்துக் கொண்டிருந்த போது தான் பணமதிப்பழிப்பு நடவடிக்கையும் அதைத் தொடர்ந்து ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையும் அறிமுகமாகின. இவ்விரு நடவடிக்கைகளும் ஏற்கனவே மரணப்படுக்கையில் இருந்த குஜராத்தின் பொருளாதாரத்தை மொத்தமாக குழியில் தள்ளி மண்ணை அள்ளிப் போடுவதாக அமைந்து விட்டன. சூரத், அகமதாபாத் என குஜராத் முழுவதும் தொழிற்துறையினர் லட்சக்கணக்கில் திரண்டு போராடினர்.

சூரத் நகரில் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை எதிர்த்து நடந்த போராட்டம் (கோப்புப் படம்)

தனது சொந்த மாநிலமே தனக்கெதிராக போர்க்கோலம் பூண்டு நிற்பதைக் கண்டு திகைத்த மோடி- அமித்ஷா இணை, பணமதிப்பழிப்பு நடவடிக்கை கருப்புப்பண முதலைகளுக்கு எதிரானதென்றும், ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை தொழிற்துறையை ஒழுங்குபடுத்துவதற்கென்றும் இதை எதிர்ப்பவர்கள் ஊழல்வாதிகளென்றும் சொல்லி சமாளிக்க பார்த்தது. இவர்கள் இப்படியான வியாக்கியானத்துடன் மக்களை ஏமாற்ற எத்தனித்த வேளையில் அமித்ஷா மகனின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளும், குஜராத் மாநில முதல்வர் விஜய்ரூபானி மும்பை பங்குச்சந்தையில் முறைகேடுகளில் ஈடுபட்ட புகாரும் மேலெழுந்து வந்தன.

ஆக மொத்தம் மோடி அமித்ஷா இணை பொருளாதார வளர்ச்சி, தூய்மையான நிர்வாகம் எனும் பெயரில் இத்தனை ஆண்டுகளாக தங்களை ஏமாற்றி வந்துள்ளனர் என்கிற உண்மையை குஜராத்திகள் மிகத் தாமதமாகப் புரிந்து கொண்டனர். எனவே தான் கடந்த பாராளுமன்றத் தேர்தல் சமயத்தில் “குஜராத் மாடல்” எனும் பூச்சரத்தை இந்தியர்களின் காதில் சுற்றிய மோடி – அமித்ஷா இணை, அந்தப் பூச்சரத்தை குஜராத்திகளின் முன் எடுக்கவே இல்லை. ஆம், குஜராத் தேர்தல் பிரச்சாரங்களில் காங்கிரசையும் ராகுல் காந்தியையும் கரித்துக் கொட்டிக் கொண்டிருக்கும் மோடி, “வளர்ச்சி” என்றோ “குஜராத் மாடல்” என்றோ பேசுவதை மிக கவனமாகத் தவிர்த்து வருகிறார்.

பாரதிய ஜனதா தலைவர்களின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை காலி நாற்காலிகளே வரவேற்கும் செய்திகளை ஊடகங்கள் வெளியிடாமல் தடுத்துள்ள அமித்ஷா, தற்போது பிரச்சாரக் கூட்டங்களுக்கு வெளி மாநிலங்களில் இருந்து ஆட்களை இறக்கியுள்ளார். மேலும், மாநில அமைச்சர்கள் பிரச்சாரங்களுக்குச் செல்லும் இடங்களில் எல்லாம் கடுமையான மக்கள் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டியிருப்பதால் போலீஸ் காவலுடன் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இன்னொருபுறம் பாரதிய ஜனதா அதிகாரத்துக்கு வருவதற்கு முன் சத்திரியர்கள், தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் இசுலாமியர்கள் (KHAM) ஆகிய பிரிவினரின் ஓட்டு வங்கியின் பலத்தில் தான் தேர்தல்களை காங்கிரசு வென்று வந்தது. இதற்கு எதிராக பட்டேல் வாக்குவங்கியை ஒருங்கிணைத்து நிறுத்தியது பாரதிய ஜனதா. “இந்து ஒற்றுமை” என்கிற காவி அரசியல் அதன் நடைமுறையில் ஆதிக்க சாதிகளின் கூட்டிணைவாகவே இருந்து வந்துள்ளது. மோடியின் வருகைக்குப் பின், இதே ஆதிக்க சாதிகளின் கூட்டிணைவு தனது காலாட்படையாக ஒடுக்கப்பட்ட மக்களையும் ஆதிவாசிகளையும் இணைத்துக் கொண்டது.

மதமோதல்களின் அடிப்படையில் ஒருமுகப்படுத்தப்பட்ட வாக்குவங்கியின் மூலம் வெற்றி பெற்ற மோடி, அதன் பின் வேறு வழியின்றி “தொழில்கள் நடப்பதற்கான அமைதியான சூழலை பராமரிக்கும்” கட்டாயத்துக்கு ஆளானார். தொடர்ந்து மதவெறி நெருப்பை எரிய விட்டு அதன்மூலம் இனப்படுகொலைகளை முன்னெடுத்துச் செல்வதில் இருக்கும் “நடைமுறை” சிக்கல்களைக் கணக்கில் கொண்டு தான் “வளர்ச்சியை” கையில் ஏந்தினார் மோடி.

எனவே தான் “வளர்ச்சி” கைவிட்டுவிட்ட நிலையில் உத்திரபிரதேச தேர்தலுக்கு முன் அரங்கேற்றியதைப் போன்ற நேரடி மதமோதல்களைத் தூண்டி விடுவது காரிய சாத்திமற்றதாகியுள்ளது. வேறு வழியின்றி ராகுல் காந்தியைக் கிண்டல் செய்வது, பட்டேல் சாதித் தலைவராகவும் தமக்குக் கட்டுப்படாதவராகவும் உருவெடுத்துள்ள ஹர்திக் பட்டேலுக்கு எதிராக செக்ஸ் சி.டி. -யை வெளியிடுவது, குஜராத்தின் வளர்ச்சியின்மைக்கு காங்கிரசை காரணம் காட்டுவது என செயல்திட்டம் வகுத்துள்ளது பாரதிய ஜனதா.

தேர்தலை வெல்லும் அளவுக்குக் காங்கிரசு இன்னும் பலம் பெறவில்லை என்றே தேர்தல் பார்வையாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். எனினும், முந்தைய தேர்தல்களைப் போல் பாரதிய ஜனதாவால் சுலபமாக வெற்றி பெற்று விடவும் முடியாது என்பதையே குஜராத்தில் இருந்து வரும் செய்திகள் உணர்த்துகின்றன.

எனவே தான் கறாரான பேர்வழியாக அறியப்பட்ட மோடி, ஜி.எஸ்.டி விவகாரத்தில் மெல்ல இறங்கி வந்துள்ளார். ஒருவேளை காங்கிரசு வென்று விட்டால்? அது காங்கிரசின் வெற்றியாக இருக்காது; மாறாக பாரதிய ஜனதாவின் தோல்வியாகவே இருக்கும்.

மேலும் :

விவசாயிகளின் இரத்தம் குடிக்கும் பாரத ஸ்டேட் வங்கி !

0

திருவண்ணாமலை மாவட்டம், தானிப்பாடியை அடுத்த போந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஞானசேகரன். இவர் கடந்த 2010-ம் ஆண்டு பாரத ஸ்டேட் வங்கியில் டிராக்டர் வாங்கக் கடன் பெற்றிருந்தார். கடந்த 2 ஆண்டுகளாக ஏற்பட்ட வறட்சியின் காரணமாக விளைச்சல் இல்லை. டிராக்டர் கடனுக்கான நிலுவையைச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் டிராக்டரை பறிமுதல் செய்ய வங்கி மேலாளர் குண்டர்களை அனுப்பியுள்ளார். பறிமுதல் செய்வதில் பிரச்சினை ஏற்பட்ட நிலையில் ஞானசேகரன் தனியாக இருக்கையில் அவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர் வங்கியின் அடியாட்படையினர். இதில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்த ஞானசேகரன், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

தமிழகத்தில் வறட்சியான மாவட்டங்களில் ஒன்று திருவண்ணாமலை. மழை பொய்த்தால் விவசாயம் பொய்த்து விடும் நிலையில், இம்மாவட்டத்தின் பெரும்பாலானவர்கள் கூலி வேலைக்கு அண்டை மாவட்டங்களுக்கும், ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் செல்கின்றனர். ஆந்திராவில் செம்மரம் கடத்தும் கும்பலிடம் சிக்கி பரிதாபமாக இப்பகுதியினர் தங்கள் வாழ்க்கையை இழக்கின்றனர்.

விவசாயி ஞானசேகரன்

தற்போது மரணமடைந்துள்ள ஞானசேகரன், கடந்த 2010 -ல் சாத்தனூர் கிராமத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில், டிராக்டர் வாங்குவதற்காக 4 லட்சத்து 95 ஆயிரம்  கடன் பெற்றுள்ளார். அதில் ஐந்து தவணையாக 3.5 லட்சம் கட்டியுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக நிலவிய வறட்சி மற்றும் உற்பத்திக்கு ஏற்ற விலை கிடைக்காமை காரணமாக அவரால் மீதி கடன் தொகையை செலுத்த முடியவில்லை.

தனது நிலையை வங்கி மேலாளரிடமும் எடுத்து கூறியிருக்கிறார். கரும்புக்கான பணம் பண்ணாரியம்மன் சர்க்கரை ஆலையில் இருந்து ரூ.3 லட்சம் வர வேண்டியுள்ளது. அந்த பணம் வந்தவுடன் கடனைச் செலுத்துவதாகக் கூறியுள்ளார். சர்க்கரை ஆலையின் பீல்டுமேனிடம் பணத்தை பலமுறை ஞானசேகரன் கேட்டபோதும் பணத்தை வங்கியில் போட்டு விடுவதாகக் கூறி அலைக்கழித்திருக்கிறார்கள்.

பாரத ஸ்டேட் வங்கி தனது கடன் வசூல் நடவடிக்கைகளை, தனியார் நிறுவனங்களின் வசம் ஒப்படைத்துள்ளது. கல்விக் கடன் வசூல் நடவடிக்கைகளை, வாராக்கடன் நாயகன், ’யோக்கிய சிகாமணி’ அம்பானியின் நிறுவனத்திடம் ஒப்படைத்தது நினைவிருக்கலாம். அந்நிறுவனத்தைச் சேர்ந்த குண்டர்கள் மிரட்டி, அவமானப்படுத்தியதால், மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட லெனின் என்னும் மாணவரே இந்தக் கிரிமினல்களின் மோசமான  நடவடிக்கைகளுக்கு சாட்சி.

அந்த அடிப்படையில் விவசாய கடனை வசூலிக்கும் பொறுப்பை ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது  பாரத ஸ்டேட் வங்கி.  கடந்த 04.11.2017 சனிக்கிழமை, அத்தனியார்  நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் ராஜா, வேங்கடபதி ஆகிய  இருவர்  ஞானசேகர் வீட்டில் வந்து கடன் தொகையை செலுத்தக் கோரி பிரச்சினை செய்துள்ளனர். அந்த நேரத்தில் ஞானசேகர் வீட்டில் இல்லை. அவருடைய மகன் ராமதாஸ் மட்டும் இருந்துள்ளார்.

தொலைபேசி வாயிலாக வங்கி மேலாளரை தொடர்பு கொண்ட ராமதாஸ், ”தற்பொழுது தான் மழை பெய்துள்ளது. எப்படியாவது கடனை அடைத்து விடுகிறோம்” எனக் கெஞ்சி இருக்கிறார்.  “அசல் தொகையை கொடுத்து விட்டு வண்டியை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று திமிராகக் பதிலளித்திருக்கிறார் மேலாளர்.

அதனடிப்படையில் குண்டர்கள் டிராக்டரை எடுக்க முயற்சி செய்துள்ளனர். அப்பொழுது வந்த ஞானசேகர், “ நான் வங்கியில் தான் கடன் வாங்கினேன். இந்த பிரச்சினையை நான் வங்கியில் தீர்த்து கொள்வேன். உங்களுக்கும் இதற்கும் சம்மந்தமில்லை” என்று குண்டர்களிடம் கூறியிருக்கிறார். ஆனால் ஞானசேகரைத் தள்ளிவிட்டு டிராக்டரை எடுக்க முயற்சித்தனர் குண்டர்கள். அதனைத் தொடர்ந்து இரண்டு தரப்பிற்கும் சிறிய அளவில் கைகலப்பு ஏற்படவே தனியார் நிறுவன குண்டர்கள்  இருவரும் அங்கிருந்து  கிளம்பி விட்டனர்.

அதன் பின்னர் மதியம் 1.30 மணியளவில் ஞானசேகர் தனது நண்பர் மூர்த்தியுடன் ஊருக்குள் சென்று கொண்டிருந்த போது தனியார் நிறுவன குண்டர்கள் இருவரும் ஞானசேகரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். ஞானசேகர் சம்பவ இடத்திலேயே சரிந்து  விழுந்து விட்டார்.

விவசாயி ஞானசேகரனின் குடும்பத்தினர்

தகவலறிந்து சென்ற ஞானசேகரின் மகன் ராமதாஸ் அவரை தானிப்பாடி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிகிச்சையளிக்க முடியாது என்று கூறி அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர் மருத்துவர்கள். திருவண்ணாமலையில் அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்காமல் ஞானசேகர் உயிரிழந்துள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, ராமதாஸ் தானிப்பாடி காவல் நிலையத்திற்கு சென்று தனியார் நிறுவன குண்டர்கள் இருவர் மற்றும் வங்கி மேலாளர் மீது புகார் அளித்துள்ளார். ஆனால் வங்கி மேலாளருக்கு எதிராக புகாரை பதிவு செய்ய முடியாது என்று கூறியுள்ளார் தானிப்பாடி ஆய்வாளர். அதனைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை உடலை வாங்க மறுத்து  உறவினர்கள் அனைவரும் போராட்டம் நடத்தவே குற்றப்பிரிவு 174 -ன் படி  சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்துள்ளது போலீசு.

வங்கி மேலாளர் உட்பட அனைத்து குற்றாவாளிகளையும் கைது செய்ய வேண்டும், ஞானசேகரனின் கடனை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து திங்கட்கிழமையும் தொடர்ந்து போராட்டம் நடத்தியதால் தி.மலை கலெக்டரும் நேரடியாக மருத்துவமனைக்கு வந்து தனது இருப்பைக் காட்டிவிட்டுச் சென்றார்.

அதன் பிறகு பல்வேறு விவசாய சங்கங்கள் குவிந்தன. விவசாய சங்கத்தினரை வைத்து பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர எண்ணிய அரசு அவர்களை அழைத்து திங்கள் கிழமை மாலை மூன்று மணிக்கு அமைதிப் பேச்சுவார்த்தையை ஏற்பாடு செய்தது. அந்தக் கூட்டத்தில் ஞானசேகரின் மகள் மங்கையர்க்கரசி, அய்யாக்கண்ணு (டில்லி தொடர்போராட்ட விவசாய சங்கத் தலைவர்), சிபிஎம் கட்சியின் பாலகிருஷ்ணன், திமுக எம்எல்ஏ கிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

( முதல் தகவல் அறிக்கையின் நகல் )

அரசு தரப்பில்  போலீசு துணை ஆணையர், தானிப்பாடி காவல் ஆய்வாளர், மற்றும் ஆர்.டி.ஓ. கலந்து கொண்டனர். இந்தப்  பேச்சுவார்த்தையில் ஞானசேகரைக் கொன்ற குற்றவாளிகள்  ராஜா, வெங்கடபதி மற்றும் வங்கி மேலாளர் கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஞானசேகரின் மகள் மங்கையற்கரசி முன்வைத்தார். மேலும், சந்தேக மரணம் என்பதை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

சந்தேக மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்கிறோம். மற்ற இருவரை கைது செய்கிறோம். ஆனால் வங்கி மேலாளரைக் கைது செய்ய முடியாது, என்று கூறியுள்ளார் போலீசு துணை ஆணையர். மேலும் விவசாய கடனை தள்ளுபடி செய்யும் அதிகாரம் தனக்கு இல்லை எனக் கூறிய போலீசு துணை ஆணையர், ஆர்.டி.ஓ -விடம் மனு கொடுக்கலாம் என்று கூறியிருக்கிறார்.

இதனை எல்லாம் பேச்சு வார்த்தைக்குச் சென்ற குழு ஏற்றுக்கொண்டு உடலை வாங்குவதாக சொல்லி வந்துவிட்டனர். அப்பொழுது ஞானசேகரின் குடும்பத்தினருடன் இருந்த மக்கள் அதிகாரம் அமைப்புத் தோழர்கள் “அதிகாரிகள் எழுத்து பூர்வமாக சொன்னாலே செய்ய மாட்டார்கள். வாய்மொழியாக சொல்வதை எப்படி ஏற்றுக்கொண்டீர்கள்” என்று கேள்வி எழுப்பினர். இந்த கேள்வியின் நியாயத்தை உணர்ந்த ஞானசேகரின் குடும்பத்தார்  உடலை வாங்காமல் போராட்டம் நடத்துவது என்று முடிவெடுத்தனர்.

போராட்டம் முடிவுக்கு வாராமல் நீடிக்குமோ என்று பதறிய பேச்சுவார்த்தை குழுவிலிருந்த விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு, ”அரசு அதிகாரிகள் சொன்னதை செய்வார்கள். அரசை நம்புங்கள். அவர்கள் செய்யவில்லை என்றால் எனது சொந்த முயற்சியில் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கிறேன்” என்று கூறி போராட்டத்தை அரசுக்கு சாதகமான முறையில் முடிவுக்கு கொண்டு வந்தார்.

உடலையும் வாங்கி சென்று அடக்கம் செய்த பின்னர், எந்த விவசாய சங்கமும் இன்று வரை எட்டிக்கூட பார்க்கவில்லை. தற்போது அவர்களுக்கு ஆறுதலாக மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர்கள் சட்ட ரீதியான ஆலோசனைகள், உதவிகளை செய்து வருகின்றனர்.

விவசாயிகளின் எதிரியே இந்த அரசு தான். அரசின் வாய் வார்த்தையை நம்பினால் அம்மணமாக நடுத்தெருவில் தான் நிற்க வேண்டும் என்பதற்கு அய்யாக்கண்ணுவின் டில்லி போராட்டமே சாட்சி. ஆனால் இன்னமும் அதனை அய்யாக்கண்ணு உணரவில்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய் என்று கெஞ்சுவதால் பலனில்லை. ”விளைச்சல் இல்லை, விலை இல்லை, கடனைக் கட்ட முடியாதுஎன்று மறுப்பது மட்டும் தான் ஒரே தீர்வு.

-வினவு செய்தியாளர்

கார்ட்டூனிஸ்ட் பாலாவை விசாரணை செய்ய போலீசுக்கு தடை !

3

கார்ட்டூனிஸ்ட் பாலாவை விசாரணை செய்ய போலீசுக்கு தடை! மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவு!

கார்ட்டூனிஸ்ட் பாலாவை கடந்த நவம்பர் 05, 2017 அன்று கைது செய்தது நெல்லை போலீசு. கந்து வட்டி பிரச்சினைக்கு கலெக்டரிடம் மனு கொடுத்தும் தீர்வில்லை என இசக்கிமுத்து குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார். இதற்குக் காரணமான அரசை அம்பலப்படுத்தி பாலா வரைந்த கார்ட்டூனிற்காக நெல்லைப் போலீசார் அவரை கைது செய்தனர்.

நெல்லை நீதிமன்றத்தில் கார்ட்டூனிஸ்ட் பாலா (கோப்புப் படம்)

அவதூறு செய்தல் (இ.பி.கோ 501) , ஆபாசமாக சித்தரித்தல் (இ.பி.கோ 67) ஆகிய வழக்குப் பிரிவுகளின் கீழ் பாலா கைது செய்யப்பட்டார். மறுநாள் நெல்லை நீதிமன்றத்தில், இவ்வழக்கே சட்டவிரோதமானது என்ற அடிப்படையில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வாதாடினார். அதனைத் தொடர்ந்து பாலா பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் இவ்வழக்கு நவம்பர் 15, 2017 அன்று விசாரணைக்கு வந்தது. பாலா கைது செய்யப்பட்டதும், அவர் மீது போடப்பட்ட வழக்குப் பிரிவுகளும் சட்ட விரோதமானவை என்று வழக்கறிஞர்  வாஞ்சிநாதன் வாதங்களை முன் வைத்தார்.

குறிப்பாக இபிகோ 501 (அவதூறு பரப்புதல்) பிரிவின் படி, நீதிமன்றத்தில் மட்டுமே தனிநபர் வழக்குத் தொடுக்க முடியும். அந்தப் பிரிவின் படி கைது செய்வதற்கான உரிமை போலீசுக்கு இல்லை. அவ்வாறு கைது செய்திருப்பது குற்றவியல் நடைமுறைச் சட்டம் 199 -க்கு விரோதமானது. பாலா விவகாரத்தில் நெல்லை போலீசும், கலெக்டரும் தங்களது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பாலாவைக் கைது செய்திருக்கின்றனர்.

பாலா வரைந்த கார்ட்டூன்

அடுத்ததாக ஆபாசமாகச் சித்தரித்தல் என்ற வகையில் தகவல் தொழில்நுட்பவியல் குற்றங்கள் (இபிகோ 67) படி இவ்வழக்கை எடுத்துக் கொள்ள முடியாது. கருத்துச் சுதந்திரத்தின் கீழ் ஒரு இந்தியக் குடிமகனுக்கு தனது கருத்துக்களை கலையில் வெளிப்படுத்தும் உரிமை உள்ளது என்பதையும், ஆபாசம் என்பது பார்ப்பவர்களைப் பொறுத்தது என்பதையும் ஏற்கனவே ஓவியர் எம்.எஃப். ஹுசைன் மீதான வழக்கினில் டில்லி நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சுட்டிக் காட்டி வாஞ்சிநாதன் வாதாடினார்.

வாதங்களைக் கேட்டுக் கொண்ட நீதிபதி, கார்ட்டூனிஸ்ட் பாலாவை விசாரணை செய்வதற்கு போலீசுக்கு தடையுத்தரவு பிறப்பித்தார். மேலும் போலீசின் முதற் கட்ட தகவல் அறிக்கைக்கும் நீதிமன்றம் தடை பிறப்பித்தது. இதனால் முகத்தில் பூசப்பட்ட கரியுடன் வெறுங்கையோடு திரும்பியது போலீசு.

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
தமிழ்நாடு

ஊழல் பரிவார் ‘உத்தமர்’ மோடி ! புதிய கலாச்சாரம் மின்னூல்

0

தேர்தல் அரசியலில் காங்கிரசிடமிருந்து தன்னை வேறுபடுத்தி யோக்கிய சிகாமணியாகக் காட்டிக்கொள்வதற்கு பாஜக வசம் இருப்பவை இரண்டு துருப்புச் சீட்டுகள். ஒன்று குடும்ப ஆட்சி, இன்னொன்று ஊழல். ஆனால் இரண்டிலுமே பாரதிய ஜனதாக் கட்சி என்று அழைக்கப்படும் சங்க பரிவார், காங்கிரசுக்கு எந்த விதத்திலும் சளைத்ததில்லை. பரிவார் என்ற சொல்லின் பொருள் குடும்பம். காங்கிரஸ் குடும்பத்தை விட பாஜக பரிவாரம் மிகப்பெரியது. இந்த பரிவாரத்தில் ஆதிக்க சாதி ரத்த உறவுகள் மட்டுமின்றி, பார்ப்பன-பனியா-மார்வாரி தரகு முதலாளிகளும், மன்னர் பரம்பரையினரும் அடக்கம்.

அரசாங்க கஜானாவைத் தமது சொந்த பணப்பெட்டியாகவே கருதுவது ஆண்ட பரம்பரையின் கண்ணோட்டமாகையால், மற்றவர்கள் பார்வையில் ஊழல் என்று கருதப்படுவதை, பரிவாரம் தனது உரிமையாகவே கருதும். இது பண வகைப்பட்ட ஊழலுக்கு மட்டுமல்ல, எல்லா வகையான அதிகார துஷ்பிரயோகங்கள் விசயத்திலும் இவர்களது பார்வை இத்தகையதுதான். சு.சாமியின் மொழியில் சொல்வதென்றால் பிராமணன் பணம் வாங்குவதில் எந்த தோஷமுமில்லை.

மோடியை பிரதமர் பதவிக்கு ஸ்பான்சர் செய்த கௌதம் அதானி தனது பெயர் பொறித்திருக்கும், தனிப்பட்ட விமானத்தை அவரது தேர்தல் பிரச்சாரத்துக்கு வழங்கினார். இப்படி வெளிப்படையாக வழங்குவதற்கு அதானியோ, அதனை வெளிப்படையாக வாங்குவதற்கு மோடியோ எள்ளளவும் கூச்சப்படவில்லை என்பதுதான் இந்த உறவின் தனிச்சிறப்பு. பிரதமரான பிறகு, ஆஸ்திரேலியாவில் ஒரு நிலக்கரி சுரங்கத்தை அதானிக்கு வாங்கித்தர விரும்பிய மோடி, பிரதமருக்குரிய தனி விமானத்தில் அதானியை அழைத்துச் செல்வதற்கு சிறிதளவும் கூச்சப்படவில்லை. முறைகேடுகளை வெளிப்படையாகச் செய்யும்போது அவை புதிய மரபாகிவிடுகின்றன. திருட்டை வெளிப்படையாக செய்யும்போது அது உரிமையாகிவிடுகிறது. எச்.ராஜாவின் மொழியில் சொல்வதென்றால், “ஆமாங்கறேன், அதுல என்ன தப்புங்கறேன்”. இதுதான் ஊழல் குறித்த பரிவாரத்தின் பார்வை.

சகாரா-பிர்லா டயரிக் குறிப்புகள் காட்டும் மோடியின் ஊழல், அதானிக்காகவும் அம்பானியின் ஜியோவுக்காகவும், எண்ணெய் வயல்களுக்காகவும் நடக்கும் ஊழல்கள், சீரியல் கொலைகளால் மறைக்கப்படும் வியாபம் ஊழல், பண மதிப்பழிப்பு என்ற மாபெரும் ஊழல், அமித் ஷா மகன் ஜெய் ஷா வின் ஊழல், எடியூரப்பா –  ரெட்டி சகோதரர்களின் ஊழல்கள் என்று சொல்லிக்கொண்டே போகலாம். அதிகாரத்தில் இருப்பவர்களின் ஊழல் மட்டுமல்ல, அந்த ஊழல்களை நியாயப்படுத்தி தொலைக்காட்சி விவாதங்களில் பாஜக வுக்காக சவுண்டு கொடுப்பவர்களான கே.டி ராகவன், வானதி சீனிவாசன் போன்றோரும் இந்தப் பட்டியலில் இருக்கிறார்கள். பாபா ராம்தேவ்கள் போன்ற சாமியார்களும் இருக்கிறார்கள். பாஜக ஊழல் குறித்த இந்த தொகுப்பை ஒரு டிரைய்லர் என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்.

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்.

ஊழல் பரிவார் ‘உத்தமர்’ மோடி  ! – புதிய கலாச்சாரம் நவம்பர் 2017 மின்னூல் வடிவில் வாங்குவதற்கு Add to cart அழுத்துங்கள்


அச்சுநூலாகப் பெற

20.00Read more

மின்னூலாகப் பெற

20.00Read more

20.00Read more

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

அச்சு நூல் தேவைப்படுவோர் சாதாரணத் தபாலில் பெற ரூ 20-ம் (நூல் விலை ரூ 20, தபால் செலவு இலவசம்), பதிவுத் தபாலில் பெற ரூ 50-ம் (நூல் விலை ரூ 20, பதிவுத் தபால் கட்டணம் ரூ 30) எமது வங்கிக் கணக்கில் அனுப்பிவிட்டு தபால் முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்பவும். வங்கி கணக்கு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)

நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :

  • மைனர் லலித்மோடிக்கு மாமா வேலை பார்த்த பா.ஜ.க.
  • எடியூரப்பா – தென்னிந்தியாவின் முதல் பா.ஜ.க. முதலமைச்சரின் லேட்டஸ்ட் ஊழல்!
  • BJP கே.டி. ராகவன் மறைக்கும் கருப்புப் பண ஊழல் ஆதாரங்கள்
  • கள்ள நோட்டடித்த கேரள பாஜக தலைவர் கைது!
  • தமிழக பா.ஜ.க.வின் ஊழல்கள் : வானதி சீனிவாசன்
  • பாபா ராம்தேவ் – பதஞ்சலி வெற்றியின் இரகசியம் என்ன?
  • வியாபம் ஊழல் : பார்ப்பன கிரிமினல்தனம் !
  • லாட்டரி மாஃபியா மார்ட்டினுக்கு தமிழக பா.ஜ.க. பாதுகாப்பு!
  • பிர்லா சஹாரா ஆவணங்கள் : மோடியின் உத்தமர் வேடம் கலைந்தது!
  • ஊழல் செய்யாத உத்தமரா மோடி?
  • கருப்புப் பணத்தின் ஷா இன் ஷா : அமித்ஷா மற்றும் ஜெய்ஷா!

பக்கங்கள் : 80
விலை ரூ. 20.00

ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 300

ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1600

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,

KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

தொலைபேசி
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்
vinavu@gmail.com

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

_____________

முந்தைய புதிய கலாச்சாரத்தின் மின்னூல் வெளியீடுகள்


அச்சுநூலாகப் பெற

20.00Read more

மின்னூலாகப் பெற

20.00Read more


அச்சுநூலாகப் பெற

20.00Read more

மின்னூலாகப் பெற

20.00Read more


அச்சுநூலாகப் பெற

20.00Read more

மின்னூலாகப் பெற

20.00Read more

 

 

மீண்டும் வருகிறது அடிமைமுறை – ஆர்ப்பாட்டங்கள் !

0

“தீவிரமடைகிறது கூலி அடிமைமுறை ! தொழிலாளி வர்க்கம் புழுவல்ல; கோடிக்கால் பூதம் என்பதை நிலை நாட்டுவோம் !” என்ற முழக்கத்தின் கீழ் வேலூர் மாவட்டம், ஆம்பூர் பத்திர பதிவு அலுவலகத்தின் முன் பு.ஜ.தொ.மு. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள், பெண்கள் என திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

வேலூர் மாவட்ட செயலாளார் தோழர் சுந்தர் தலைமையேற்று பேசும்போது “விவசாயிகள், மாணவர்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு மக்களும் மோடியின் ஆட்சியில் தங்கள் உரிமைகள் பறிக்கப்படுவதற்கு எதிராகப் போராட வேண்டும்.” என தனது உரையில் கூறினார்.

அதன் பிறகு மாவட்ட இணைச் செயலாளர் தோழர் சரவணன், கண்டன உரையாற்றினார்.

அவரைத் தொடர்ந்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலத் தலைவர் தோழர் முகுந்தன் சிறப்புரையாற்றினார். அவரது உரையில் “மோடி பிரதமராக பதவியேற்ற கடந்த மூன்று ஆண்டுகளில் கொண்டு வந்த அனைத்து திட்டங்களும் மக்களுக்கு எதிரானவைகளாவே உள்ளன.

பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி., நீட் தேர்வு, நிலம் கையகப்படுத்தும் மசோதா மேலும் மீத்தேன் திட்டம், பெட்ரோ கெமிக்கல் மண்டலம் என அனைத்து தரப்பு மக்களுக்கும் எதிரான திட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன.

அந்த வரிசையில் தற்போது கார்ப்பரேட்களின் நலனுக்காக ஏற்கனவே தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகளான, 44 தொழிலாளர் நலச்சட்டங்கள் திருத்தப்பட்டு விதிமுறைகளாக மாற்றப்படவுள்ளன.

இது தொழிலாளிகளை மீண்டும் கொத்தடிமை நிலைக்கு மாற்றும் என்பதையும் நிதி ஆயோக் பற்றியும் விளக்கி பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டம் கடைகள் நெருக்கமாக இருந்த பகுதியில் நடைபெற்றதால் திரளான வணிகர்களும், பொதுமக்களும் கவனித்து சென்றனர். மேலும் கட்டுப்பாட்டுடன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை அப்பகுதி தொழிலாளிகள் நின்று கவனித்து சென்றனர்.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
வேலூர் மாவட்டம்.

***

தீவிரமடைகிறது கூலியடிமை முறை! தொழிலாளி வர்க்கம் புழுவல்ல, கோடிக்கால் பூதம் என்பதை நிலைநாட்டுவோம்! என்கிற தலைப்பில் 11.11.2017 மாலையில் ஆவடி நகராட்சி அலுவலகம் அருகில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பு.ஜ.தொ.மு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட செயலாளர்  தோழர் முகிலன் தலைமையேற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலப் பொருளாளர் தோழர் விஜயகுமார் கண்டன உரையாற்றினார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் ( மேற்கு ) மாவட்டம்.

***

தீவிரமடைகிறது கூலி அடிமை முறை தொழிலாளி வர்க்கம் புழுவல்ல ! கோடிக்கால் பூதம் என்பதை நிலைநாட்டுவோம்! என்ற முழக்கத்தின் கீழ் 11.11.17 அன்று திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தில் கும்முடிப்பூண்டி பேருந்து நிலையம் எதிரிலும், திருவொற்றியூர் நகராட்சி அலுவலகம் எதிரிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கும்முடிப்பூண்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்…

கும்முடிப்பூண்டியில்  மாவட்டச் செயலாளர் தோழர் விகந்தர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. SRF புதிய ஜனநாயகத் தொழிலாளர் சங்கத்தின் செயலர் தோழர் ரமேஷ் தனது கண்டனத்தை பதிவு செய்தார். இறுதியாக மாநில இணைச் செயலாளர் தோழர் ம.சி.சுதேஷ்குமார் கண்டன உரையாற்றினார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

திருவொற்றியூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்…

திருவொற்றியூரில் தோழர் ஆனந்தபாபு தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மணலி SRF எம்ப்ளாயீஸ் யூனியன் சங்கத்தின் இணைச்செயலாளர் தோழர் வெங்கடேசன் தனது கண்டனத்தை பதிவு  செய்தார். மாவட்டத் தலைவர் தோழர் சதீஷ் கண்டன உரையாற்றினார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் (கிழக்கு) மாவட்டம்

பிரிட்டிஷ் ராஜ் முதல் பில்லியனர் ராஜ் வரை – வளர்ச்சி உருவாக்கும் சமூக ஏற்றத்தாழ்வு !

0

வளர்ச்சி உருவாக்கிவரும் சமூக ஏற்றத்தாழ்வு !

காதிபத்திய சார்பு அமைப்புகளால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் உலகக் கோடீசுவரர்களின் பட்டியலில் இந்தியத் தரகு முதலாளிகளுள் ஒரு சிலர் தவறாது இடம் பிடித்துவிடுகிறார்கள். இதுபோக, உள்நாட்டில் மல்டி மில்லியனர்களும் காளான்களைப் போலக் கிளைத்து வருகிறார்கள். நாடே பெருமிதம் கொள்ள வேண்டிய சாதனை போல இது சித்தரிக்கப்படுகிறது.

ஆனால், இந்தப் “பெருமிதம்”, “சாதனை” ஒரு மாபெரும் சமூக அவலத்தின் தோள் மீதுதான் ஏறிநிற்கிறது. 99 சதவீத இந்திய மக்களின் வருமானத்தை உறிஞ்சித்தான் இவர்கள் உலக மகா கோடீசுவரர்களாகவும் மல்டி மில்லியனர்களாகவும் வலம் வருகிறார்கள். இந்த உண்மையை உலகமயத்தை ஆதரிக்கும் பொருளாதார வல்லுநர்களாலும் மறுக்க முடியவில்லை.

பிரான்சு நாட்டிலுள்ள பாரீஸ் பொருளாதாரப் பள்ளியின் ஒரு பிரிவான உலக ஏற்றத்தாழ்வு ஆய்வகத்தில் பணியாற்றும் பேராசிரியர் தாமஸ் பிக்கட்டியும் அவரோடு இணைந்து பணியாற்றிவரும் லூகாஸ் சான்ஸெலும் சேர்ந்து 1922 முதல் 2014 வரை இந்திய சமூகத்தில் ஏற்பட்டுள்ள வருமான ஏற்றத்தாழ்வுகளை ஆராய்ந்து, காலனிய காலத்தைவிட, இருபத்தோராம் நூற்றாண்டில் இந்தியாவில் சமூக ஏற்றத்தாழ்வு தீவிரமடைந்திருப்பதை நிறுவியுள்ளனர்.

தமது ஆய்வறிக்கைக்கு அவ்விணையர் இட்டிருக்கும் தலைப்பு, “பிரிட்டிஷ் ராஜ் தொடங்கி பில்லியனர் ராஜ் வரை”. இத்தலைப்பே இந்தியக் குடியரசின் யோக்கியதையை அம்பலப்படுத்திவிடுகிறது.

இந்திய மக்கட்தொகையில் பெரும் கோடீசுவரர்களாக உள்ள ஒரு சதவீத “மேன்மக்கள்”, நாட்டின் மொத்த தேசிய வருமானத்தில் 21.7 சதவீதத்தைக் கைப்பற்றிக் கொள்வதாகக் குறிப்பிடுகிறது, பெக்கட்டின் ஆய்வறிக்கை. இது 2013 – 14 ஆம் ஆண்டுக்கான கணக்கு. அதற்குப் பிறகுதான் மோடி பதவிக்கு வந்தார். இந்தியத் தரகு முதலாளிகளின் பெருத்த ஆதரவோடு பதவிக்கு வந்த அவரது ஆட்சியில் இந்த மேன்மக்களின் வருமானம் மேலும் வேகமாக கூடிக்கொண்டுதான் இருக்கிறது.

மீதமுள்ள 99 சதவீத மக்களின் வருவாயும் ஒருபடித்தானதாக இல்லை. சமூகத்தின் அடித்தட்டில் வாழுகின்ற 50 சதவீத உழைப்பாளிகளின் (இருபது வயதுக்கு மேற்பட்டவர்கள்) ஆண்டு வருமானம் கடந்த 34 ஆண்டுகளில் (1980 முதல் 2014 முடிய) 89 சதவீதம் மட்டுமே அதிகரித்திருக்கிறது. அதேசமயம், அவர்களுக்குச் சற்று மேலேயுள்ள 40 சதவீத நடுத்தர வர்க்கத்தினரின் (சராசரிக்கும் அதிகமாக வருமானம் ஈட்டக்கூடிய தனிநபர்களின்) ஆண்டு வருமானம் அதே 34 ஆண்டுகளில் 93 சதவீதம் அதிகரித்திருக்கிறது.

அதேபொழுதில் 10 சதவீத மேல்தட்டு வர்க்கத்தின் ஆண்டு வருமானம் 394 சதவீதமும்; இந்த 10 சதவீதத்திற்குள்ளேயே மேல்தட்டில் உள்ள 1 சதவீதத்தினரின் ஆண்டு வருமானம் 750 சதவீதமும்; இந்த 1 சதவீதத்திற்குள்ளேயே மேலேயுள்ள 0.1 சதவீதத்தினரின் ஆண்டு வருமானம் 1,138 சதவீதமும்; இந்த 0.1-க்குள்ளேயே மேலேயுள்ள 0.01 சதவீதத்தினரின் ஆண்டு வருமானம் 1,834 சதவீதமும்; இவர்களுக்கும் மேலேயுள்ள 0.001 சதவீதத்தினரின் ஆண்டு வருமானம் 2,726 சதவீதமும் அதிகரித்திருக்கிறது என வருமான வரித் தரவுகளைக் கொண்டு நிறுவுகிறது, பெக்கட்டின் ஆய்வு.

இந்தியாவில் வருமான வரிக் கணக்கிற்கும் பொய்க் கணக்கிற்கும் அதிக வேறுபாடு இருப்பதில்லை என்பதால், இந்த 10 சதவீதத்தினரின் ஆண்டு வருமான உயர்வு பெக்கட் குறிப்பிடுவதைவிட அதிகமாகவே இருக்கும்.

பெக்கட்டின் ஆய்வின்படி, சமூக அடுக்கில் உச்சாணிக் கொம்பில் இருக்கும் ஒரு சதவீதக் கோடீசுவரர்கள், நாட்டின் ஆண்டு தேசிய வருமானத்தில் கைப்பற்றும் பங்கு 1982 – 83 ஆம் ஆண்டில் வெறும் 6.2 சதவீதமாக இருந்து, இன்று அதோடு ஒப்பிடும்போது 3.5 மடங்கு அதிகரித்திருக்கிறது. இது மட்டுமின்றி, இந்தியா ஆங்கிலேய காலனி நாடாக இருந்த 1939 – 40 ஆண்டுகளில், அப்பொழுது சமூக அடுக்கில் உச்சாணியில் இருந்த 1 சதவீதப் பணக்காரர்கள், நாட்டின் ஆண்டு வருமானத்தில் கைப்பற்றிய பங்கை (20.7%) விட, இன்று பெரும் பணக்காரர்கள் கைப்பற்றும் பங்கு அதிகரித்திருக்கிறது.

இந்திய உழைக்கும் மக்களைச் சுரண்டுவதில் வெள்ளைத் துரைமார்களை விஞ்சிவிட்டார்கள் பழுப்பு துரைமார்கள். மற்ற நாடுகளைப் போலின்றி, ஒருபுறம் சாதியப் படிநிலை ஏற்றத்தாழ்வு இன்னொருபுறம் பொருளாதார (வர்க்க) ஏற்றத்தாழ்வு என்ற இரண்டு நுகத்தடிகளை இந்திய உழைக்கும் மக்கள் சுமக்க வேண்டியிருக்கிறது.

பெக்கட்டின் ஆய்வின்படி 1980 -களுக்குப் பிறகுதான் இந்தப் பொருளாதார ஏற்றத்தாழ்வு படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கி, இன்று அருவருக்கத்தக்க நிலையை எட்டியிருக்கிறது. அந்த 1980 -களில்தான் ராஜீவ் காந்தி அரசு புதிய பொருளாதாரக் கொள்கையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. அதன் பின், நரசிம்ம ராவ் ஆட்சியில் தொடங்கி வைக்கப்பட்ட தனியார்மயம்-தாராளமயம்-உலகமயக் கொள்கையை, அதன் பிறகு வந்த ஒவ்வொரு அரசும் போட்டிபோட்டுக் கொண்டு தீவிரமாக நடைமுறைப்படுத்தின.

அக்கொள்கைக்கு வால்பிடித்த ஒவ்வொரு அரசும் நெல்லுக்குப் பாயும் நீர், புல்லுக்கும் புசிவது போல, தனியார் முதலாளிகள் பெறும் வளர்ச்சி, சிறிது சிறிதாகக் கசிந்து அடித்தட்டு மக்களையும் வந்தடையும் என்றன. குறிப்பாக, காங்கிரசு அரசில் நிதி மந்திரியாகவும் வர்த்தகத் துறை அமைச்சராகவும் இருந்த ப.சிதம்பரம், அதற்குக் கொஞ்ச காலம் ஆகும் என வக்கணை பேசினார்.

இதோ, தனியார்மயக் கொள்கைகள் அமலுக்கு வந்து இருபத்தைந்து ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. கண்ட பலனோ, மற்ற உலக நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் சமூக ஏற்றத்தாழ்வு – செல்வம் ஓரிடத்தில் குவிவதும் வறுமை மற்றோர் இடத்தில் தாண்டவமாடுவதுமான நிலைமை – மிக வக்கிரமாக வளர்ச்சி அடைந்துகொண்டே செல்வதைத்தான் காண்கிறோம்.

பார்ப்பனியம் அதன் இயல்பிலேயே சமூக ஏற்றத்தாழ்வை நியாயப்படுத்தும் சித்தாந்தம் என்பதால், தற்போது ஆட்சியிலுள்ள பா.ஜ.க. அரசு மக்களைச் சுரண்டி முதலாளிகளைக் கொழுக்க வைப்பதில் எந்தவித தயவுதாட்சண்யமும் பார்ப்பதில்லை.

கூலி வெட்டு, சமூக நலத் திட்டங்களுக்கு வெட்டு, தொழிலாளர் நலச் சட்டங்களைக் கைவிடுவது, நிலம், நீர், தாது வளங்கள் உள்ளிட்ட இயற்கைச் செல்வங்களை, வங்கி தொடங்கி தொழிலாளர் சேமிப்பு முடியவுள்ள பொதுப் பணத்தைப் பன்னாட்டு மற்றும் இந்தியத் தரகு முதலாளிகள் ஏப்பம் விடுவதற்கு ஏற்பாடு செய்து கொடுப்பது என நாலுகால் பாய்ச்சலில் ஓடுகிறது, மோடி அரசு. முதலீடுகளுக்கு இலாபத்தை உத்தரவாதப்படுத்திய பிறகுதான் உழைப்பாளிகளின் பங்கு பற்றிப் பேச முடியும் எனப் பச்சையாகவே இந்தக் கொள்ளையை நியாயப்படுத்துகிறார்கள்.

தொழிலாளர்களை, விவசாயிகள் உள்ளிட்ட சிறுவீத உற்பத்தியாளர்களைக் கொள்ளையடிக்க ஏற்பாடு செய்வதன் வழியாகத்தான் முதலாளிகளின் இலாபம் உத்தரவாதப்படுத்தப்படுகிறது என்ற உண்மையை 19 -ஆம் நூற்றாண்டிலேயே எடுத்துக்காட்டிவிட்டது, மார்க்ஸின் மூலதனம் நூல். மார்க்சியம் கூறும் இந்த அடிப்படையான உண்மையை பிக்கெட்டியின் ஆய்வு மறுக்கவொண்ணாமல் நிரூபித்திருக்கிறது.

முதலாளித்துவ அமைப்பு இந்த ஏற்றத்தாழ்வை மேலும்மேலும் தீவிரப்படுத்தும் திசையில்தான் செல்லுமேயொழிய, தனியார்மய ஆதரவாளர்கள் கதைப்பது போல, எத்தனை ஆண்டுகள் காத்திருந்தாலும் புல்லுக்குப் புசிவது ஒருபோதும் நடவாது.

-செல்வம்
-புதிய ஜனநாயகம், நவம்பர் 2017

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com

ஆளுநர் புரோஹித்தின் கோவை ஆய்வு – கருத்துக் கணிப்பு

6

மிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று 14.11.2017 அன்று கோவையில் மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அதிகாரிகள் தவிர உள்ளூர் அமைச்சர், எம்.எல்.ஏ. -க்கள் கூட்டத்திற்கு அழைக்கப்படவில்லை.

கோவை பாரதியார் பல்கலை விழாவிற்கு வந்த ஆளுநர் திடீரென இந்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியிருக்கிறார். அரசின் துறைரீதியான செயல்பாடுகளை ஆளுநர் ஆய்வு செய்ய உள்ளதாகக் கூறி அனைத்துத் அதிகாரிகளும் கோப்புகளுடன் கலந்து கொண்டனர்.

ஆளுநரின் செயலர் ரமேஷ் சந்த் மீனா, மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், மாநகராட்சி ஆணையாளர் விஜய கார்த்திகேயன், காவல் ஆணையர் அமல்ராஜ், எஸ்.பி. மூர்த்தி ஆகியோர் ராஜ விசவாசத்துடன் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.  இவர்களைப் போல 12 முக்கிய துறைகளின் அதிகாரிகளுடன் நடந்த கூட்டம் மதியம் 3.30 மணியளவில் தொடங்கி மாலை 6 மணி அளவில் முடிவடைந்தது.

ஏற்கெனவே புதுச்சேரியில் இதேபோன்று ஆளுநர் கிரண்பேடி, அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை என்ற பெயரில் பல்வேறு மிரட்டல் நடவடிக்கைகளை முதல்வர் நாராயணசாமி அரசாங்கத்திற்கு எதிராக எடுத்து வருகிறார். தற்போது தமிழகத்திலும் இத்திருப்பணியை பாஜக அரசு ஆரம்பித்திருக்கிறது. இது மாநில சுயாட்சியை பாதிக்கும் என்று தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறியிருக்கின்றன.

ஆளுநர் சரியாகத்தான் செயல்படுகிறார் என அ.தி.மு.க அடிமை அரசு இதை நியாயப்படுத்தி வருகிறது.

பாஜக-வின் நோக்கம் என்ன?

அரசியல்வாதிகள் தலையீடு என்று ஆனந்த விகடன் நகைச்சுவைகளை ரசிக்கும் நடுத்தர வர்க்கத்திடம் செல்வாக்கு பெறுவது,

தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், ஊழலை எதிர்த்தும் பாஜக போராடுகிறது என ஊடகங்களில் செய்திகளை வரவழைப்பது,

ஏற்கனவே பாஜக பண்ணைகளிடம் அடிமையாக இருக்கும் அதிமுக அரசை கோமாளி அடிமைகளாக காட்டுவது,

கோவை போன்ற ஆர்.எஸ்.எஸ் செல்வாக்கு பகுதிகளை உறுதி படுத்துவது, ஆதரவை அதிகப்படுத்துவது. பா.ஜ.க-விற்கு எதிரான இயக்கங்கள், தனிநபர்களை உள்ளூர் அதிகார வர்க்கத்தின் துணையுடன் ஒடுக்குவதை துரிதப்படுத்துவது.

இதன் மூலம் தமிழகத்தில் பாஜக-வின் செல்வாக்கை பல முனைகளில் உயர்த்துவது.

வாக்களியுங்கள்! மூன்று பதில்களை தெரிவு செய்யலாம்.

கேள்வி: தமிழக ஆளுநர் புரோகித்தின் கோவை ஆய்வு – நோக்கம் என்ன?

  • உள்நோக்கம் ஏதுமில்லை
  • நடுத்தர வர்க்கத்திடம் பெயர் வாங்குவது
  • பெயரளவு மாநில சுயாட்சியையும் ஒழிப்பது
  • இந்துத்துவ செல்வாக்கை அதிகரிப்பது
  • ஊழலை ஒழிக்கும் நல்ல முயற்சி
  • மாற்று இயக்கங்களை ஒடுக்குவது

மழைநீரை அகற்ற அரசாங்கத்தை செயல்பட வைத்த மக்கள் அதிகாரம் !

1

மழைநீர் அகற்றப்படவில்லையா? மக்கள் அதிகாரத்தை அழையுங்கள்! – தண்டையார்பேட்டை அனுபவம்.

ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக பெய்த மழை நவம்பர் 5ம் தேதி சற்று ஓய்வு எடுத்தது. தண்டையார்பேட்டை நேரு நகரில் மொத்தம் உள்ள 14 தெருக்களில் 13வது தெரு மட்டும் சற்று உயரம் குறைவு. இளைத்தவனை வலியவன் ஆதிக்கம் செலுத்துவது போல மற்ற தெருக்களில் வழிந்தோடும் மழைநீர் 13வது தெருவில் தஞ்சம் புகும்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தெருவில் புதிதாக சாலை அமைக்கும்போது ஏற்கனவே இருந்த சிமெண்ட் சாலைக்கு பதிலாக தார்ச்சாலை அமைக்க ஒப்புதல் கிடைத்துள்ளதாக தெரிவித்து சாலையை உயரம் தூக்காமல் போட்டுள்ளனர். நேரு நகரின் மற்ற தெருக்களில் இல்லாத தார்ச்சாலை இங்கு மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. விளைவு தொடர்ச்சியான நீர்த்தேக்கம்.

குழந்தை குட்டிகளுடன் வயதானவர்கள், முதியவர்கள் என யாவரும் துயருரவே தொடர்ச்சியாக மாநகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொள்ளும்போது இயங்குவதில் கோளாறு நிரம்பிய பழைய நீரிறைக்கும் இயந்திரத்தை கொடுத்துவிட்டு சென்றுவிட்டனர். பகுதி இளைஞர்களை கொண்டு இரவு முழுக்க நீர் இறைத்தபின்னும் மறுநாள் காலையில் பெய்த மழை மீண்டும் நீரை வரவழைத்துவிட்டது.

அதிகாரிகளோ, ஊழியர்களோ யாரும் கண்டுகொள்ளவில்லை. முதன்மை சாலை அருகில் வசித்தவர்கள் சாலையை மறித்ததால் அங்கு உடனடியாக வேலை செய்த அதிகாரிகள் சற்று உள்ளே உள்ள இவர்களை கண்டுகொள்ளும் நிர்ப்பந்தம் ஏற்படாததால் கண்டுகொள்ளவில்லை.

ஆறு நாட்கள் வீடுகளின் வாசலில் முட்டிக்காலளவு நீரில் நடந்து சென்று பகுதியில் பெரும்பாலானோருக்கு காலில் சேற்றுப்புண் வந்துவிட்டது. பாதம் சிதைந்து போயிருந்தது. போதாக்குறைக்கு சாலையில் இருக்கும் மின்பெட்டி கீழேயே இருப்பதால் தண்ணீரில் மூழ்கியிருந்தது. எனவே, மின்சார வாரியம் மின் இணைப்பை கொடுக்கவில்லை. நீரில் மட்டுமல்ல, இருளிலும் மூழ்கியுள்ளனர். கழிவறைகளில் நீர் மேலேறியதால் பெண்கள், வயதானவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாயினர். எந்த ஒரு பிரச்சனையும் கண்டுக்கொள்ளப்படவில்லை. கேட்க நாதியில்லை.

இந்நிலையிலே மக்கள் அதிகாரம் அமைப்பினர் வந்து பார்க்கும்போது இரண்டு மாநகராட்சி ஊழியர்கள் பள்ளத்தில் உள்ள தண்ணீரை மேட்டிற்கு கொண்டு செல்ல சிமெண்ட் சாலையில் துளையிடும் கருவி கொண்டு துளையிட முயன்று கொண்டிருந்தனர். அதிலும் மின்வெட்டு பிரச்சனையால் அந்த வேலையும் நடைபெறவில்லை.

எனவே பகுதி முழுக்க ஒவ்வொரு வீடாக சென்று மக்களை திரட்டிக்கொண்டு மாநகராட் சி அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த அதிகாரிகளை கையோடு அழைத்துவரலாம் என முடிவு செய்தோம். முப்பதுக்கும் மேற்பட்ட தோழர்கள் அதே அளவு பொதுமக்களுடன் சென்று பார்த்தால் அலுவலகத்தில் ஒருவர் கூட இல்லை.

எனவே, அதிகாரிகளை வரவழைக்க சாலையை மறிப்போம் என முடிவு செய்து தண்டையார்பேட்டை வைத்தியநாதன் பால முச்சந்தியில் அமர்ந்தோம். உடனடியாக அங்கு முழக்கங்களை தயார் செய்து முழக்கங்களை எழுப்பினோம். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதால் அவர்களுக்கு நிலைமை என்னவென்று ஒரு தோழர் விளக்கினார். பின்னர் மீண்டும் முழக்கம் போடத்துவங்கினோம். மறியல் நடைபெறும்போதே மழை பெய்யத் துவங்கிவிட்டது.

இருப்பினும் யாரும் கலைந்து செல்லாமல் மறியல் தொடரவே இருபது நிமிடங்களில் போலீசு வந்து சேர்ந்தது. தானே நேரில் வந்து பிரச்சனையை முடித்துக் கொடுத்துவிட்டு செல்வதாக ஆய்வாளர் தெரிவித்ததால் அவரை முன்னே அனுப்பிவிட்டு பின்னே தெருக்களில் முழக்கங்களை எழுப்பிக்கொண்டே பகுதிக்கு வந்து சேர்ந்தோம். பகுதிக்கு வந்தவுடன் வீட்டிலிருந்தவர்கள் அனைவரும் வெளியில் வந்துவிட்டனர். நம்மை அழைத்து வந்த காவல்துறை ஆய்வாளர் அவருக்கு பதிலாக உள்ளூர் காவல் ஆய்வாளர் மற்றும் இன்னொரு காவலரை பொறுப்பாக்கிவிட்டு சென்றுவிட்டார்.

உடனே நமது தோழர் ஒருவர் பொதுமக்களுக்கு நிலைமையை விளக்குவதற்காக வீட்டு திண்ணையில் ஏறி பேசத்துவங்கினார். போராட்டம் அதன் முடிவு குறித்து விளக்கிவிட்டு பிரச்சனை தீரும் வரையில் இந்த இரு போலீசாரை நம்மிடம் விட்டுவிட்டு சென்றுள்ளனர். அவரை நாம்தான் பார்த்துக்கொள்ளவேண்டும் என தெரிவித்துவிட்டார். உடனே போலீசாரை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என தெரிவித்துவிட்டு இருவரையும் கையோடு தேங்கியிருந்த நீருக்குள் அழைத்து சென்றுவிட்டனர்.

பின்னர் மாநகராட்சி ஊழியர்கள் வந்து நீரை வெளியேற்ற துவங்கினர். போராட்ட செய்தி வெளியில் கசிய பாலிமர் செய்தி நிருபர்கள் களத்திற்கு வந்து பொதுமக்களை பேட்டி கண்டு சென்றனர். அச்செய்தியும் வெளிவர தெருவில் உள்ள பிரச்சனை ஊர் முழுக்க தெரிந்தது. இடையில் இரு போலீசாரை பொதுமக்கள் சிறைபிடித்தனர் என செய்தி  பரவவே இன்னும் ஐந்தாறு போலீசு, உளவுப்பிரிவினர் வந்துவிட்டனர். போராட்டத்தில் சமாதானம் பேசி நம்மை அழைத்துவந்த போலீசு வந்துவிட்டு அந்த செய்திப் பதிவை நீக்குமாறு அரைமணி நேரம் கெஞ்சினார். குறைந்தது மறுப்பு செய்தியாவது தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார். பின்னர் அன்று மாலையே கழிவுநீர் அடைப்பை நீக்க ஜெட்ராடிங் வண்டி தெருவுக்குள் வந்தது.

அத்தெருவை சேர்ந்த முதியவர் ஒருவர் அவர் வந்து கடந்த 20 ஆண்டுகளில் முதன்முறையாக தெருவுக்குள் சாக்கடை அடைப்பை போக்க வண்டி வந்திருப்பதாக தெரிவித்தார். அதற்கு காரணம் நீங்கள்தான் என நெகிழ்ந்தார். இரவு 9 மணிவரை அடைப்பை போக்க முயற்சித்தும் வேலை முடியவில்லை. வேலை முடியும்வரை போலீசார் கூடவே இருந்துவிட்டுதான் வீட்டுக்கு போயினர்.

மறுநாள் காலை 6 மணிக்கே போலீசு வந்துவிட்டது. நாம் 9 மணிக்குதான் சென்றோம். வந்தவுடன் நிலைமையை ஆராய்ந்துவிட்டு மாநகராட்சி ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்து காலையிலேயே நீர் இரைக்க துவங்கிவிட்டனர். அதுமட்டுமல்லாமல் மின்வாரியத்தை சார்ந்தவர்களும் காலையிலேயே வந்துவிட்டு சாலையில் கிடந்த உடைந்து போன மின்பெட்டியை சீரமைக்க துவங்கிவிட்டனர். வெல்டிங் கருவியை கொண்டுவந்து சீரமைத்துவிட்டு சிமெண்ட் காரையில் மேடை அமைத்து உயரே தூக்கிவைத்து மின் இணைப்பை கொடுத்துவிட்டு சென்றனர். வேலையை பார்வையிட துணை பொறியாளர் வந்துவிட்டார்.

அதோடு கூடவே பகுதி மக்களுக்கு மருத்துவமுகாம் ஏற்பாடு செய்துதர வேண்டுமென நாம் கோரியிருந்தோம். கோரியபடி நடமாடும் மருத்துவ முகாமை அழைத்து வந்து மக்களுக்கு மருந்து மாத்திரைகளை கொடுக்க துவங்கினர். பகுதி இளைஞர்கள் நம்மிடம் நீங்கள் இருப்பதனாலே வேலை நடைபெறுகிறது. நீங்கள் போய்விட்டால் இவர்களும் போய்விடுவர் என தெரிவித்தனர். அதோடு எங்களுக்கும் மக்கள் அதிகாரம் டிசர்ட் கொடுங்கள் நாங்கள் போட்டுக்கொள்கிறோம். இங்கு டிசர்ட் போட்ட நபர் இருந்தால்தான் போலீசு பயப்படுகிறது என தெரிவித்தனர்.

கழிவு நீர் அடைப்பு எடுப்பதற்காக சென்னைக்கே மொத்தம் 22 வாகனங்கள்தான் உள்ளன. ஆனால் இப்பகுதிக்காக அன்றைய தினத்தில் சிறப்பாக முகப்பேரிலிருந்து ஒரு வாகனத்தை வரவழைத்து நாள் முழுக்க இப்பகுதிக்கே ஒதுக்கிவிட்டனர். அந்த வண்டியும் போதாமல் மீண்டும் முந்தைய ஜெட்ராடிங் வாகனத்தை கொண்டுவந்துவிட்டனர்.

இவ்வளவு வாகனங்கள் கொண்டுவந்தும் நீரை முழுமையாக வெளியேற்ற முடியவில்லை. கழிவுநீரை வாகனத்தில் அடைத்து வெளியில் விடலாம் என சென்றால் சிறிது நேரத்தில் மற்ற இடங்களிலிருந்து வந்து நிரம்பி விடுகிறது. கழிவுநீர் அகற்றும் நிலையத்திலே அடைப்பு என்பதால் நகரில் எங்கிருந்தும் கழிவுநீரை அகற்ற முடியவில்லை. ஜெட்ராடிங் வண்டி மூலம் அதிக அளவு அழுத்தம் நிறைந்த காற்று மூலம் கழிவுநீர் குழாயில் அடைப்பு எடுக்க முயலும்போது கருவியே உள்ளே நுழைய முடியாத அளவிற்கு அடைப்பு இருந்தது.  மேலும் அதிலிருந்து வெளியேறும் கழிவுநீர்தான் தெருவில் நுழைந்துவிடுவதையும் கண்டறிந்தோம்.

தொகுப்பாக பார்க்கையில் கடந்த நான்கைந்து ஆண்டுகளாக கழிவுநீர் அடைப்பு எடுக்கும் பணி நடைபெறுவதில்லை என்பதை புரிந்துக்கொள்ள முடிந்தது. கழிவுநீர் குழாய்க்கு அருகிலேயே மெட்ரோ வாட்டர் குழாயும் உள்ளது. இரண்டில் எதன் அழுத்தம் அதிகமாக உள்ளதோ அதிலிருந்து நீர் மற்ற குழாயில் கலந்துவிடும்.

கழிவுநீருடையது அதிகம் என்றால் மெட்ரோவாட்டரில் கழிவுநீர் கலந்துவரும். மெட்ரோ வாட்டருடையது அதிகமென்றால் கழிவுநீருடன் கலந்து வீணாக சென்றுவிடும். மொத்தமாக இவை இரண்டையும் பழுதுபார்த்து மாற்ற வேண்டும். மழைநீர் கால்வாய் எங்குள்ளது என்றே தெரியவில்லை. மொத்தமாக இதை மாற்றிவிட்டு தெருவில் உள்ள சாலையை உயரம் தூக்கி போட்டால்தான் பிரச்சனை நிரந்தரமாக தீரும். இன்னும் சொல்லப்போனால் கழிவுநீர் அகற்றும் நிலையம் முதல் நகரின் ஒட்டுமொத்த கழிவுநீர் கால்வாய் வரை சீரமைத்தால் மட்டுமே பிரச்சனை நிரந்தரமாக தீர்க்கப்படும்.

அரசின் அணுகுமுறை சென்னைக்கு விடிவுகாலத்தை கொடுக்காது என்பது மட்டுமல்ல சிறு மழைக்கு கூட அல்லாடும் நிலைக்கு வந்துவிட்டதன் காரணமும் இந்த அரசுதான் என்பது தெள்ளத்தெளிவாகிறது. இப்பிரச்சனைகளை தீர்ப்பதற்கு இவர்களிடம் திட்டம் ஏதுமில்லை. கழிவுநீரை வெளியேற்ற வருபவர்களின் மனநிலையே பூசி மெழுகிவிட்டு செல்வதாகத்தான் உள்ளது. தற்காலிக, குறைந்தபட்ச தீர்வினைத்தான் இவர்கள் சொல்கின்றனர். அதுதான் இயல்பு என்பது போல பேசுகின்றனர்.

இத்தெருவுக்கு சாலை அமைக்கவும், மெட்ரோ குழாய் பதிக்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட அதிகாரி தெரிவித்தாலும் இன்று வரை இரண்டும் நிறைவேறவில்லை. தினமும் பகுதி இளைஞர்களிடம் போலீசு வந்துவிட்டு மக்கள் அதிகாரம் அமைப்பினரிடம் மட்டும் பிரச்சனையை சொல்லிவிடாதீர்கள் என சொல்லுவதாக தெரிவிக்கின்றனர்.

உடனுக்குடன் நடைபெறும் வேலைகளை எடுத்துச்சொல்லி போராட்டம் செய்யாதீர்கள் என சமாதானமாக பேசுவதாகவும் தெரிவித்தனர். முதல் நாளிலிருந்தே நீங்கள் போங்கள் நாங்கள் பார்த்து பிரச்சினையை தீர்த்துவிடுகிறோம் என போலீசு நம்மிடம் பேசுகிறது. போராடிய நாளிலிருந்து இன்று வரை தினமும் வந்துவிடும் போலீசு அவ்வப்போதைய கழிவுநீரை அகற்றும் வேலையில் ஈடுபட்டு வருகிறது.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம்.
தொடர்புக்கு : 91768 01656.

இனியும் வகுப்பெடுத்தால் உனக்கு செவிப்பறை கிழியும்! கவிதை

3

ந்த விடியல்
எங்களுக்கும் அவ்வளவு
முக்கியமானது…ஆனால்
பொழுதுகள் மட்டும் நகராது…

இருப்பினும்
நட்சத்திரங்களை
எண்ணிக்கொண்டே
கயிற்றுக்கட்டிலில்
கவிழ்ந்து விடுவோம்.

எங்கள் செவளை மாடும்
கருப்புக்காளையும் மட்டும்
வாயில் எதையோ அசைத்தபடி
மெல்லிய தாளமிட்டுக் கொண்டிருக்கும்.

அண்ணன்களோடு அதிகாலையிலேயே
ஆயத்தமாகிவிடுவோம்….
செவளையையும்; கருப்பனையும்
முல்லை பெரியாற்றில்; களம் இறக்க…

இரண்டு மாடுகளும் மூழ்கி குளிக்கும் அழகு
அவ்வளவு அலாதியானவை,
வேலியில் அமர்ந்திருக்கும்
வண்ணத்துபூச்சிகளும்
வேடிக்கை பார்த்து மகிழும்.

குளித்து முடித்த
அதன் கூரிய கொம்புகளில்
வர்ணம் பூசி,
குங்குமமும், சந்தனமும்
உடல் முழுவதும் தடவி…..

எங்கள் காளைகளின் நெற்றியில்,
மின்மினிபூச்சி பிடித்து பொட்டிட்டு…
அழகு பார்த்த தருணங்கள்
அவ்வளவு சுகமானவை.

மஞ்சள் கிழங்கு
கரும்பு… கருப்பட்டி….
கை முழுக்க திண்பண்டங்கள்….. என்று
கால்கள் முளைத்த திருவிழாவாய்
அப்பா வந்து நிற்பார்.

அம்மா வைத்திறக்கிய
பொங்கலை ஆவிபறக்க
வாழை இலையில் எடுத்து,
ஊதி…… ஊதி எங்கள் காளைகளுக்கு
ஊட்டி மகிழ்ந்த
அந்த டவுசர் காலங்கள்தான்
எவ்வளவு டக்கரானவை.

பருத்திப்பால்,
புண்ணாக்கு, தவிடு அத்தனையும்
கலந்து தயாராய்
தாழியில் வைத்திருப்போம்.
உழுது திரும்பும் – எங்கள்
காளைகளின் பசியமர்த்த,

கருப்பனும், செவளையும்
ஒரே தாழியில் உறிஞ்சிக் குடிக்கும்.
அந்த  ஒற்றுமை கண்டு
வீட்டிற்கு வரும் சுற்றத்தார்
‘கண்ணு’ வைத்து விடுவதாய்
அக்கா அடிக்கடி கூறுவாள்.

அந்த ஆசாரி திறமையானவர்தான்
இருப்பினும்
காளைகளின் கால்களில்
கயிறுகட்டி லாடம் போடும்போது,
குலதெய்வம் ஒன்று விடாமல்
வேண்டிக் கொள்வோம்…

காளைகளுக்கு சிறு சிராய்ப்பும்
ஏற்பட்டு விடக்கூடாதென்று.

இப்படியாக….
எங்கள் வாழ்வின் ‘செம்மை’
வறுமை என்று கோடிட்ட இடம்
அத்தனையும்
உழவாலும், மாடுகளாலும்,
நிரப்பப்பட்ட அடர்த்திகளே அதிகம்.

இங்கே…
எவ்விதத்திலும் மாட்டோடு
தொடர்பற்ற நீங்கள்
உங்களின் புராணக் குப்பைகளை
மூலதனமாக்கி எங்களுக்கு

மாடுகளின் ’புனிதம்’ குறித்தும்
மாடுகளின்  மகத்துவம் குறித்தும்
வகுப்பு எடுப்பதைத்தான்
வேடிக்கையுடனும்­
வெறுப்புடனும் கடக்க வேண்டியதாகிறது…

இத்தோடு நிறுத்தி கொள்ளுங்கள்
எங்கள் மீது கட்டவிழ்த்துவிடும்
உங்களின் மாட்டரசியலை..

நாங்கள் வகுப்பெடுத்தால் – நீங்கள்
உங்கள்  இரண்டு  செவிப்பறைகளையும்
இழக்க நேரிடும்..

ஏனெனில், எங்கள் கரங்கள் …
மாடுகள் பிடித்து இறுகிப்போனவை.

முகிலன்