Tuesday, August 12, 2025
முகப்பு பதிவு பக்கம் 791

திவ்யா, B.Com ஒரு பச்சைப் படுகொலை!

140
திவ்யா, B.Com ஒரு பச்சைப் படுகொலை
மாணவி திவ்யா
திவ்யா, B.Com ஒரு பச்சைப் படுகொலை
மாணவி திவ்யா

‘‘ எப்பா இது தாம்பா ஏ ஊடு உள்ள வாப்பா வந்து பாருப்பா…. உள்ள வாப்பா.. இதோ இங்க தாம்பா இந்த கொம்புல தாம்பா எம்பொண்ணு தொங்குனா….ஐய்யோ…. ஐய்யோ…எவ்ளோ நேரமா தொங்கிச்சுணு தெரியல்ல நாக்கெல்லாம் பூண்டுகினு சரிஞ்சி மேனிக்கு தொங்கினிருந்துப்பா… ராஜா மாதிரி படிக்கும்பா எம் பொண்ணு… எப்பா ஏழை பாழைங்கண்ணா படிக்கத் கூடாதப்பா மீன் பிடிக்கிறவண்ணா போகக் கூடாதாப்பா எதுனாச்சும் நடவடிக்கை பண்ணிக் கொடுங்கப்பா’

குனிந்து குடிசைக்குள் நுழைந்தால் அதுதான் பி.காம் மாணவி திவ்யாவின் வீடு மொத்தமே பதினைந்து பதினைந்து அடி நீள அகலத்திலான குடிசை. அம்மா சாந்தி, அப்பா, பாட்டி, இரண்டு தம்பிகளோடு திவ்யா வாழும் வீடும் அதுதான். அன்றாடங் காய்ச்சிகள் ஆனாலும் சோற்றுக்கு மீதி எதுவும் இல்லை. வருகிற வருமானத்தில் வயிற்றைக் கழுவி வாழும் திவ்யாவின் தாய் சாந்திக்கு பெண் பிள்ளையை படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை………அவரே பேசுகிறார் இப்படி…,

‘‘ நாங்க பட்டினவரு கடலுக்குத்தான் போவார் அவர். சொந்தமா கட்டுமரமோ வலையோ கிடையாது கட்டுமரத்துல கூலிக்கு கடலுக்குப் போவாரு ஐம்பதும் கிடைக்கும் நூறும் கிடைக்கும் ஐநூறும் கிடைக்கும் ஆனால் அவரு குடி இப்போ கடல்ல வருமானம் இல்ல ஏண்ணா அவருக்கு கால்ல கட்டி வந்து அவுரால கடலுக்கு போக முடியல்ல அதனால் வாச்மேன் வேலை பாத்தாரு அவருக்கு 3, 500 ரூவா சம்பளம் நான் பெசண்ட்நகரில் இருக்குற ராஜாஜி பவனில் பெருக்குற வேலை பாக்குறேன் 2,500 ரூபாய் சம்பளம் . இது போக எங்கம்மா திவ்யாவோட பாட்டி இட்லி சுட்டு விக்கிறாங்க அவங்கதான் திவ்யாவோட படிப்புச் செலவை ஏத்துக் கிட்டாங்க. அவ அடையாரில் இருக்கிற அன்னை சத்தியா கல்லூரியில் பிகாம் படிக்கிறா ஒரு வருஷத்துக்கு 14,500 ரூபாய் பீசு. அதை இரண்டு தவணையா கட்டுறது திவ்யா பாட்டிதான். நான் வீட்டுச் செலவை பார்த்துப்பேன்….

அண்ணைக்கி சனிக்கிழமை  என்ன நடந்ததுண்ணா அவருக்கு கால் வலி அதிகமாயிடுச்சு பெசண்ட்நகரில் இரண்டாயிரம் ரூபாய் செலவு செஞ்சேன் செரியாகல்ல, ஸ்கேனிங் பண்ணனும்னு எட்டாயிரம் ரூபாய் கேட்டாங்க அது நம்மால முடியாதுப்பாணு ஸ்டேன்லில போனேன். அவங்க உடனே ஆபரேஷன் பண்ணணும்னு சொன்னதால அவரை அங்க ஆஸ்பத்தரில சேர்த்துட்டு இரவு எட்டரை மணிக்கு விட்டுக்கு வந்தேன். வீட்டுக்கு வந்தப்போ புள்ள மொகம் வாடியிருந்தது. அதுவா வந்து அம்மா  காலேஜ்ல ஒரு பொண்ணோட மூணாயிரம் ரூபா காணாமப் போயிடுச்சும்மா. எல்லோரையும் சாதாரணமா சோதிச்சுட்டு விட்டுட்டாங்க என்னை மட்டும் தனியா ஒரு ருமுக்குள்ளாற கூட்டினு போய் டிரஸ் எல்லாம் கழட்டி நிர்வாணமாக்கி சோதனை பண்ணினாங்கம்மா சொன்னா, நாளை லீவு (ஞாயிற்றுக்கிழமை) நாள மறு நாள் நான் வந்து அவங்க கிட்டே கேக்குறம்மாண்ணேன். ஆனா எம்பொண்ணு அடுத்த மாசம் எக்சாம் வருதும்மா மார்க் டிக் பண்ணிடுவாங்கம்மாண்ணா… வாழ்வு இல்லாத போயிடும்ணு என்னைத் தடுத்துட்டா எம்பொண்ணு… எப்பா வாழ்வுண்ணா என்னணு எனக்குத் தெரியாதுப்பா ஆனா அவளுக்குத் தெரிஞ்சதுனால எனக்கு அப்படிச் சொன்னாப்பா….

நானும் மறு நா கிளம்பி ஞாயிற்றுக் கிழமை ஸ்டேன்லி ஆஸ்பிட்டல் போயிட்டேன். எம் பொண்ணு எங்கிட்ட சொன்னதோட மட்டுமில்ல இங்கிருந்து மூணாவது ஊட்லருக்குற மேத்தாங்கற பொண்ணுக்கிட்டயும் அவங்க அப்பா அம்மாகிட்டேயும் இதைச் சொல்லி அழுதிருக்கா அவங்க ஆறுதல் சொல்லி அனுப்பியிருக்காங்க நான் திங்கட்கிழமை வேலைக்குப் போனோன். அவள் காலேஜ் போனா ஆனா அங்க இவளைப் பார்த்த பிரண்சுங்கோ சிரிச்சிருக்காங்க … திருடி வர்றா பாருணு எம் பொண்ணைப் பார்த்து புள்ளைங்க சிரிச்சிருக்குப்பா… நான் வேலை முடிஞ்சு சாயங்காலம் ஒரு ஏழு ஏழரை மணிக்கு வீட்டுக்கு வந்தப்போ தலை சரிஞ்சி எம்பொண்ணு தொங்கிட்டுருந்துச்சுப்பா……. ரொம்ப நேரமா தொங்கிட்டாப்பா எம்பொண்ணு……….. ஏம்பா அவ கிளாஸ்லயே அவ மட்டுதாம்பா ஏழ , இங்க இருந்து கூட இரண்டு பசங்க படிக்கிறாங்க ஆனா அவங்க வசதியானவங்கப்பா எம் பொண்ணு ஏழையாப் பொறந்ததால படிக்கக் கூடாதாப்பா? ……………..

அழுது அரற்றும் அந்த ஏழை மீனவத்தாய் சாந்தி தன் மகளின் மரணம் பற்றிக் கொடுக்கும் வாக்குமூலம் இதுதான்.

 

திவ்யா, B.Com ஒரு பச்சைப் படுகொலை

…………………………………………………………………..

திவ்யா சென்னை அடையாரில் இருக்கும் எம்.ஜீ.ஆர் ஜானகி கலைக் கல்லூரியில் பி.காம் மூன்றாவது ஆண்டு படிக்கும் மாணவி. கடைசி பெஞ்சில் அமர்ந்திருக்கும் நான்கு மாணவிகளுள் அனுராதா என்னும் மாணவி மூன்றாயிரம் ரூபாய் எடுத்து வந்ததாகவும் அந்த ரூபாய் காணாமல் போக கடைசி இருக்கை மாணவிகளை அந்த இடத்திலேயே சாதாரணமாக சோதனை செய்து விட்டு திவ்யாவை மட்டும் தனி அறைக்கு அழைத்துச் சென்று நிர்வாணப்படுத்தி பரிசோதனை செய்திருக்கிறார்கள். அக்கல்லூரியைச் சார்ந்த ஜெயலெட்சுமி, விஜயலெட்சுமி, சுதா, செல்வி, ஆகிய ஆசிரியைகள் அவமானம் தாங்காத கடுமையான மன வேதனையடைந்த திவ்யா தன் தாயிடமும் பக்கத்து வீட்டிலும் சொல்லியிருக்கிறார். பின்னர் திங்கட்கிழமை கல்லூரி சென்றவரை நண்பர்கள் கிண்டல் செய்ய மனமுடைந்த திவ்யா தற்கொலை செய்துள்ளார். கையில் பணமும் செல்வாக்குள்ள மனிதர்களை வளைக்கும் தந்திரமும் தெரிந்திருந்தால் இந்த நாட்டில் ஏழைகளை என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்பதற்கு திவ்யாவின் படுகொலை ஒரு சாட்சி.

முன்னாள் சாராய வியாபாரிகள், அரசியல் ரௌடிகள், விபச்சார தொழிலதிபர்கள் எல்லாம் கல்வி வள்ளல்களாக வளர்ந்து பள்ளி கல்லூரிகளை கைப்பற்றிய தனியார்மயத்தில் செல்வச்செழிப்பான பின்னணியில் பிறந்து பல லட்சம் ரூபாய்களைக் கொட்டி வளரும் மாணவிளுக்கு இது நேர்வதில்லை. முதல் தலைமுறையாக கல்வி கற்க வரும் ஏழை மாணவிகளுக்கே இது நடக்கிறது. ஏழை என்றால் திருடுவார்கள் என்கிற மத்யமர் மனோபாவம்தான் திவ்யாவை நிர்வாணப்படுத்தத் தூண்டுகிறது. அங்கிருந்துதான் திவ்யாக்கள் மீதான கொலை வெறி உருவாகிறது.

திவ்யா, B.Com ஒரு பச்சைப் படுகொலை
மாணவி திவ்யாவின் தற்கொலை கடிதம்

குற்றவழக்கு எண்- 265/2011 என்று எண்ணில் சாஸ்திரி நகர் காவல்நிலையத்தில் பதிவாகியிருக்கும் வழக்கில் திவ்யா தற்கொலை என்று பதிவாகியிருக்கிறது. தற்கொலைக்கு தூண்டியதாகக் கூட இல்லை. திவயாவின்  கொலையால் ஆவேசம் அடைந்த ஊரூர் ஆல்காட் குப்பம் மீனவர்கள் திரண்டு வந்து அடையார் சாலையை மறிக்க ஒரு வழியாக ஜெயலெட்சுமி, விஜயலெட்சுமி, சுதா, செல்வி, ஆகிய ஆசிரியைகள் கைது செய்யப்பட்டார்கள்.இல்லை கைது செய்வதாக அந்த மக்களிடம் பாவனை செய்தது போலீஸ். நீதிமன்றத்தில் நிறுத்தி சிறையில் அடைக்கச் சென்ற போது ஒரே நேரத்தில் அவர்கள் நால்வருக்கும் நெஞ்சுவலி வந்து இப்போது அவர்கள் போலீஸ் பாதுகாப்போடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். திவ்யாவின் கொலைக்கு நியாயம் கேட்டுப் போன மக்களிடம் நிர்வாகம் ஒரு இலட்சம் தருகிறோம் புதைத்து விடுங்கள் என்று பேரம் பேச அதற்கு சம்மதிக்காத மக்களை போலீஸ் ஒரு வழியாக திருப்பி அனுப்ப செவ்வாய்கிழமை பெசண்ட்நகர் மயானத்தில் தகனம் செய்யப்பட்டாள் அந்த பி. காம் மாணவியான திவ்யா.

திவ்யா, B.Com ஒரு பச்சைப் படுகொலை
மாணவி திவ்யா – குடும்பத்தினருடன்

இந்த வழக்கில் என்ன நடக்கும்….? என்பது புரியாத புதிரல்ல அரசு மருத்துவமனையில் சிகிச்சை சரியில்லை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என்று நான்கு நெஞ்சுவலிக்காரர்களும் கேட்பார்கள் நீதிமன்றமும் அதை அனுமதிக்கும். தனியார் மருத்துவமனையில் வாங்கும் சான்றிதழின் படியும் முதல் தகவல் அறிக்கையில் நிர்வாணச் சோதனை செய்த ஜெயலெட்சுமி, விஜயலெட்சுமி, சுதா, செல்வி ஆகியோரின் பெயரும் இல்லாததாலும் இன்னும் சில நாட்களில் அவர்கள் விடுதலையாகக்கூடும்.  கண்ணியமிக்க நமது நீதிமன்றங்களில் இருந்து 100 குழந்தைகளைக் கொன்ற கல்வி வள்ளல்களே தப்பி விடும் போது நிர்வாணச் சோதனை செய்தவர்கள் தப்புவது என்ன கடினமா?
………………….

திவ்யா இறுதியாக எழுதிய கல்லூரித் தேர்வின் டைம்டேபிள்

திவ்யாவின் குடிசையை இரண்டாகப் பிரித்து தோள் உயரத்தில் எழுப்பட்டிருக்கும் மண் சுவரில் தன் தேர்வு நாட்களை சாக்பீஸ்களால் எழுதி வைத்திருக்கிறார். சுகவீனமுற்ற திவ்யாவின் தகப்பன் ஓரமாக உறங்கிக் கொண்டிருக்கிறார். வீட்டை விட்டு வெளியில் வந்தால் அந்தக் குடிசைப் பகுதியில் பல கார்கள் நின்றிருக்க, வெள்ளுடை வேந்தர்கள் நிறைந்திருந்தார்கள். அங்கு நடந்த சம்பாஷனைகளைக் கவனித்த போது அந்த அரசியல் ரௌடிகள் திவ்யாவின் உடலுக்கு விலை பேசிக் கொண்டிருந்தார்கள்.அந்த ஏழைத் தாயின் கண்ணீருக்கு என்ன விலை தேறுமோ தெரியாது…

_________________________________________

– வினவு செய்தியாளர்
_________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

இந்து பயங்கரவாதத்தின் நிரூபணங்கள்: மாலேகான், அஜ்மீர், மெக்கா மசூதி, சம்ஜவ்தா குண்டு வெடிப்புகள்!

இந்து பயங்கரவாதத்தின் நிரூபணங்கள்: மாலேகான், அஜ்மீர், மெக்கா மசூதி, சம்ஜவ்தா குண்டு வெடிப்புகள்!

இந்து பயங்கரவாதத்தின் நிரூபணங்கள்: மாலேகான், அஜ்மீர், மெக்கா மசூதி, சம்ஜவ்தா குண்டு வெடிப்புகள்!

“மலேகான் நகரில் முஸ்லிம்கள் 80 சதவீதத்தினராக இருப்பதால், எங்களது முதலாவது குண்டுவெடிப்பை மலேகானில் நடத்தினோம்… இதற்காக 2006-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பிரக்யா சிங், சுனில் ஜோஷி, பாரத் ரித்தேஷ்வர் ஆகியோருடன் சேர்ந்து நான் திட்டமிட்டேன்… அஜ்மீர் தர்காவுக்கு இந்துக்களும் அதிக அளவில் வழிபாட்டுக்கு வருவதால், அதனைத் தடுக்கவும் இந்துக்களை அச்சுறுத்தவும் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது… சம்ஜவ்தா விரைவு வண்டி குண்டுவெடிப்பை சுனில்ஜோஷி பொறுப்பேற்று நடத்தினான்…”
– ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதி  அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம்.

***

கடந்த 2006-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ஆம் நாள் மகாராஷ்டிரா மாநிலம் மலேகான் நகரின் முஸ்லிம்கள் நெருக்கமாக வாழும் பகுதியில் நான்கு குண்டுகள் வெடித்தன. 2007 நவம்பர் 11-ஆம் தேதியன்று ராஜஸ்தானின் அஜ்மீர் தர்காவில் ரம்ஜான் நோன்பு காலத்தில் குண்டுகள் வெடித்தன. 2007-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் டெல்லிக்கும் பாகிஸ்தானின் லாகூருக்குமிடையே ஓடும் சம்ஜவ்தா விரைவு வண்டியில், அரியானா மாநிலத்தின் பானிபட் அருகே குண்டு வெடித்தது. அதைத் தொடர்ந்து மே மாதத்தில் ஆந்திராவின் தலைநகர் ஐதராபாத்தின் மெக்கா மசூதியில் குண்டு வெடித்தது. மலேகான் நகரில் 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதியன்று மீண்டும் குண்டுகள் வெடித்தன. இக்குண்டு வெடிப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கோரமாகக் கொல்லப்பட்டார்கள். பலர் படுகாயமடைந்தார்கள்.

இப்படி ஒவ்வொரு முறையும் குண்டுகள் வெடிக்கும் போதெல்லாம், பார்ப்பன – முதலாளித்துவ ஊடகங்கள் இதற்கு முஸ்லிம் தீவிரவாதிகள்தான் காரணம் என்று எவ்வித விசாரணையுமின்றி குற்றம் சாட்டின. 2007-ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் குர்ஷித் கசூரி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா வந்திருந்த போது, சம்ஜவ்தா விரைவு வண்டியில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்தியா-பாகிஸ்தானிடையே நல்லுறவு ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கத்துடன் இஸ்லாமியத் தீவிரவாதிகள் இக்குண்டு வெடிப்பை நடத்தியதாக பார்ப்பன – முதலாளித்துவ ஊடகங்கள் சகட்டு மேனிக்குக் குற்றம் சாட்டின. இது ஹூஜி மற்றும் லஸ்கர்-இ-தொய்பா ஆகிய இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்களின் சதி என்று அமெரிக்காவும் கூறியது.

இக்குண்டு வெடிப்புகள் குறித்து ஆரம்ப விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே போலீசையும் துணை ராணுவப் படைகளையும் ஏவி முஸ்லிம் குடியிருப்புகளை அரசு சுற்றி வளைத்தது. சட்டப்படியும் சட்டவிரோதமாகவும் நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு கொடிய சித்திரவதைக்கு ஆளாயினர். அவர்களது இளமையும் எதிர்காலமும் நொறுங்கிப் போயின. பயங்கரவாதி என்ற அவமானத்தோடு, அவர்களது குடும்பங்கள் அலைக்கழிக்கப்பட்டு கையறு நிலையில் தவித்தன. குண்டு வெடிப்புகளில் கொல்லப்பட்டோரின் குடும்பங்களைப் போலவே, குண்டு வெடிப்பில் ஈடுபட்டதாகப் பொய்க்குற்றம் சாட்டி கைது செய்யப்பட்ட அப்பாவிகளின் குடும்பங்களும் பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன.

***

கடந்த 2006-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலத்தின் நான்டெட் நகரில் வெடிகுண்டுகள் தயாரித்தபோது விபத்து நடந்து ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் இருவர் மாண்டனர். ஐந்துபேர் படுகாயமடைந்தனர். அதைத் தொடர்ந்து பார்ப்பன பயங்கரவாதிகள் 21 பேரை மகாராஷ்டிர பயங்கரவாத எதிர்ப்பு அதிரடி போலீசு அடுத்தடுத்து கைது செய்து ஔரங்காபாத் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் அவர்களுக்கு எதிராகக் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. இருப்பினும், போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி நீதிமன்றம் அவர்களுள் 11 பேரை விடுவிக்க எத்தணித்தது. இதை எதிர்த்து உள்ளூர் முஸ்லிம்கள் போராடியதோடு, சி.பி.ஐ. விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். நீண்ட இழுபறிக்குப் பிறகே, சி.பி.ஐ.யின் விசாரணை தொடங்கியது.

சம்ஜவ்தா விரைவு வண்டி குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ். ரகத்தைச் சேர்ந்த வெடிபொருளை முன்னாள் இராணுவ அதிகாரியான சிறீகாந்த் புரோகித் கள்ளத்தனமாக ஜம்முவிலிருந்து வாங்கிக் கொடுத்ததற்கான அறிகுறிகள் கிடைத்தன. மலேகான் குண்டு வெடிப்பிலும் ஆர்.டி.எக்ஸ். ரக வெடிபொருள் பயன்படுத்தப்பட்டிருந்தது. இக்குண்டு வெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளின் சேசிஸ் எண்ணைக் கொண்டு, அது அகில பாரத வித்யார்த்தி பரிசத் எனும் மாணவர் அமைப்பின் தலைவராக இருந்து, பின்னர் அபிநவ் பாரத் எனும் அமைப்பின் பெண் சாமியாரான சாத்வி பிரக்யா சிங்கினுடையது என்பதை மகாராஷ்டிர தீவிரவாத எதிர்ப்பு சிறப்புப் போலீசுப்படைத் தலைவரான ஹேமந்த் கார்கரே கண்டறிந்தார். கடந்த 2008-ஆம் ஆண்டில் பிரக்யா சிங் கைது செய்யப்பட்டாள்.

அவளைத் தொடர்ந்து முன்னாள் இராணுவ அதிகாரியான சிறீகாந்த் புரோகித், ஜம்முவில் சாரதா பீடம் என்ற பெயரில் ஆசிரம் நடத்தி வந்த தயானந்த் பாண்டே மற்றும் மலேகான் குண்டுவெடிப்பில் ஈடுபட்ட 11 பேரை ஹேமந்த் கார்கரே கைது செய்தார். பிரக்யா சிங்கை விசாரணை செய்த போது, ம.பி.யைச் சேர்ந்த சுனில்ஜோஷி, ராமச்சந்திர கல்சங்கரா, சந்தீப் டாங்கே, அசீமானந்தா, பாரத் ரித்தேஷ்வர் முதலானோர் முக்கிய சதிகாரர்கள் என்பது தெரிய வந்தது. விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே 2008, நவம்பர் 26 அன்று மும்பையில் நடந்த இஸ்லாமியத் தீவிரவாதிகளின் தாக்குதலில் கார்கரே பலியானார். இதற்கிடையே சுனில்ஜோஷி இந்துவெறி பயங்கரவாதிகளாலேயே கொல்லப்பட்டான். மற்றவர்கள் தப்பியோடி தலைமறைவாகிவிட்டனர்.

மலேகான் மற்றும் சம்ஜவ்தா எக்ஸ்பிரசில் வெடித்த குண்டுகள் ஆர்.டி.எக்ஸ். ரகத்தைச் சேர்ந்தவையாக இருந்ததால்,  இக்குண்டு வெடிப்புகளில் இந்துவெறி பயங்கரவாதிகளுக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் சி.பி.ஐ. விசாரணையை மேற்கொண்டது. தயானந்த் பாண்டேயின் கணினியிலிருந்து கிடைத்த 37 உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டன. இவையனைத்தும் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இவர்கள் திட்டமிட்டதை நிரூபித்துக் காட்டின. இதனடிப்படையில், கடந்த 2010-ஆம் ஆண்டு நவம்பர் 19-ஆம் தேதியன்று ஆர்.எஸ்.எஸ்.-இன் முழுநேர ஊழியரான சுவாமி அசீமானந்தா எனப்படும் நாப குமார் சர்க்கார்  கைது செய்யப்பட்டு சிறையிடப்பட்டான். ஒரு மாதம் கழித்து டிசம்பர் 18-ஆம் தேதியன்று டெல்லி வழக்கு மன்றத்துக்கு விசாரணைக்குக் கொண்டுவரப்பட்ட அசீமானந்தா, இக்குண்டுவைப்புகளில் ஈடுபட்டது நாங்கள்தான் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளான். போலீசாரின் முன்னிலையில் பெறப்படும் வாக்குமூலங்களை விட, நீதிபதி முன்னிலையில் அளிக்கப்பட்ட வாக்குமூலங்கள் சட்டப்படி உறுதியான ஆதாரங்களாகியுள்ளதால், குண்டுவைப்பு பயங்கரவாதச் செயல்களில் இந்துவெறி ஆர்.எஸ்.எஸ். ஈடுபட்டிருப்பது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமாகியுள்ளது.

மே.வங்கத்தைச் சேர்ந்த நாப குமார் எனப்படும் அசீமானந்தா, 1977-இல் ஆர்.எஸ்.எஸ்-இன் முழுநேர ஊழியனாகி மே.வங்கத்திலும் பின்னர் அந்தமானிலும் ஆர்.எஸ்.எஸ்.-இன் பரிவாரங்களில் ஒன்றான வனவாசி கல்யாண் ஆசிரமத் தலைவராகப் பணியாற்றியுள்ளான். பின்னர் 1997-இல், இவன் குஜராத்தின் டாங் மாவட்டத்தில் ஷப்ரிதாம் என்னும் ஆசிரமத்தை  நிறுவிக் கொண்டு சிறுபான்மை முஸ்லிம்களுக்கும் கிறித்துவர்களுக்கும் எதிராக ஆத்திரமூட்டும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்தான். இவன் குஜராத் முதல்வர் மோடி, ம.பி. முதல்வர் சிவராஜ்சிங் சௌகான், ஆர்.எஸ்.எஸ். தலைவர்களான சுதர்சன், மோகன் பாகவத் ஆகியோருக்கு நெருக்கமானவன். பயங்கரவாதிகளின் சித்தாந்த குருவான இவன்தான் அஜ்மீர், ஐதராபாத், மலேகான் முதலான இடங்களில் குண்டுவைக்க இலக்குகளைத் தீர்மானித்து வழிகாட்டியுள்ளான். 2008-இல் பெண் சாமியாரான பிரக்யா சிங் கைது செய்யப்பட்ட பிறகு, அசீமானந்தா தப்பியோடி தலைமறைவாகிவிட்டான். கடந்த 2010 நவம்பர் 19-ஆம் தேதியன்று அரித்துவாரில் பதுங்கியிருந்தபோது சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டான்.

தன்னோடு இக்குண்டுவைப்பு சதியில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ். மத்தியக் கமிட்டி உறுப்பினர் இந்திரேஷ் குமார், மத்தியப் பிரதேச ஆர்.எஸ்.எஸ். முழுநேர ஊழியரான (பிரச்சாரக்) சுனில் ஜோஷி, இந்தூர் மாநகர ஆர்.எஸ்.எஸ். முழுநேர ஊழியரான சந்தீப் டாங்கே, மூத்த ஆர்.எஸ்.எஸ். முழுநேர ஊழியரான ராம்ஜி, தேவேந்திர குப்தா, மேல்மட்ட உறுப்பினரான சிவம் தாக்கத், முன்னாள் இராணுவ அதிகாரியான சிறீகாந்த் புரோஹித், பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினரான யோகி ஆதித்யானந்த், குஜராத்தின் விவேகானந்தா சேவா கேந்திரத்தின் பாரத் பாய், அந்த அமைப்பின் மாநில அமைப்பாளரான டாக்டர் அசோக், முக்கிய பிரமுகர்களான லோகேஷ் சர்மா, ராஜேஷ் மிஸ்ரா, ஜம்முவைச் சேர்ந்த சாரதா பீட சாமியார் தயானந்த் பாண்டே ஆகியோரின் பெயர்களையும் அவன் வாக்குமூலமாக அறிவித்துள்ளான். “யாருடைய தூண்டுதலோ, நிர்ப்பந்தமோ இல்லாமல், எவ்வித அச்சமுமின்றி சுய நினைவோடு” தான் இந்த வாக்குமூலத்தை அளிப்பதாகவும் அவன் தெரிவித்துள்ளான்.

ஐதராபாத்தின் சன்சல்குடா சிறையில் அசீமானந்தா அடைக்கப்பட்டபோது, அந்தச் சிறைக் கொட்டடியில் அவனுடன் இருந்த கைதியான கலீம் என்ற இளைஞர், வயதில் மூத்தவரான அவனுக்குத் தண்ணீர் எடுத்துக் கொடுப்பது, உணவு எடுத்து வந்து கொடுப்பது முதலான பல உதவிகளைச் செய்துள்ளார். ஐதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பையொட்டி கைது செய்து சிறையிடப்பட்ட அப்பாவி இளைஞர்தான் கலீம். குண்டு வைத்த அசீமானந்தா, தன்னால் ஒரு அப்பாவி முஸ்லிம் இளைஞன் சிறையில் வதைபடுவதைக் கண்டு வருந்தியதாகவும், மனசாட்சி உலுக்கியதாகவும், அதற்குப் பிராயச்சித்தம் தேடும் வகையில் உண்மைகளை வாக்குமூலமாக அளிப்பதாகவும் தெரிவித்துள்ளான்.

இப்பயங்கரவாதச் சதித் திட்டத்தில் முக்கியமானவனாகிய சுனில் ஜோஷி, கடந்த 2007-ஆம் ஆண்டு டிசம்பரில் ஆர்.எஸ்.எஸ். குண்டர்களாலேயே கொல்லப்பட்டான். இக்குண்டுவெடிப்பு வழக்கில் மேலிருந்து கீழ்மட்டம் வரை சங்கிலித் தொடர்போல பலர் கைதாகி வருவதால், ஆர்.எஸ்.எஸ். தலைமை தனது விசுவாச ஊழியனையே கொன்றொழிக்க உத்தரவு பிறப்பித்திருக்க வாய்ப்புள்ளது. இதேபோன்ற நிலைமை தனக்கும் ஏற்படும் என்பதாலும், முஸ்லிம் இளைஞரால் ஏற்பட்ட குற்ற உணர்ச்சியும் சேர்ந்துதான் அசீமானந்தாவை ஒப்புதல் வாக்குமூலத்துக்குத் தள்ளியிருக்க வேண்டும்.

கடந்த டிசம்பர் 20-ஆம் தேதியிட்டு அசீமானந்தா, இந்திய அரசுத் தலைவிக்கும் பாகிஸ்தான் அதிபருக்கும் பாவமன்னிப்பு கோரி கடிதம் எழுதியுள்ளான். அதில், அஜ்மீர், மலேகான், ஐதராபாத், சம்ஜவ்தா விரைவு வண்டி குண்டு வெடிப்புகளைத் திட்டமிட்டு நடத்தியவர்களில் நானும் ஒருவன் எனக் குறிப்பிட்டுள்ளான். ஐதராபாத்தின் சஞ்சலகுடா சிறையிலிருந்து அவன் எழுதிய இக்கடிதங்கள் இப்போது ஊடகங்களில் பகிரங்கமாகியுள்ளது.

***

பா.ஜ.க.வும் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களும் அசீமானந்தாவைச் சித்திரவதை செய்து கட்டாயப்படுத்தி வாக்குமூலம் பெறப்பட்டதாகவும், இந்துத்துவப் பயங்கரவாதம் என்ற அவதூறு கிளப்பப்படுவதாகவும் வழக்கம் போலவே கூச்சலிடுகின்றன. ஆனால் அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம் மட்டுமின்றி, வலுவான தடயவியல் ஆதாரங்களும் சி.பி.ஐ. விசாரணையில் கிடைத்துள்ளன. புதுப்புது அமைப்புகளை திட்டமிட்டு உருவாக்கி, இத்தகைய பயங்கரவாத நடவடிக்கைகளை அத்தகைய அமைப்புகளின் பெயரால் நடத்தி வருவதை ஆர்.எஸ்.எஸ். ஒரு உத்தியாகக் கொண்டு இயங்கி வருவதும் இப்போது நிரூபணமாகியுள்ளது.

ஐதராபாத் மெக்கா மசூதி குண்டு வெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட நோக்கியா செல்போனும் அதிலுள்ள வோடபோன் சிம் கார்டும் குண்டு வைக்கப்பட்ட இடத்தில் கிடைத்துள்ளன. இது, குறிப்பிட்ட நேரத்தில் அலாரம் அடிக்குமாறு செய்து அதன் மூலம் மின் இணைப்பு பெற்று குண்டுகளை வெடிக்கச் செய்யும் அதிநவீன தொழில்நுட்ப முறையாகும். இதேபோன்ற செல்போன் மூலமாக குண்டுகளை வெடிக்கச் செய்யும் முறையில்தான் சம்ஜவ்தா விரைவு வண்டியிலும் குண்டு வெடித்துள்ளது. மெக்கா மசூதியில் 6.53 வாட்ஸ் திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டது. அதே வகையான பேட்டரிகள்தான் சம்ஜவ்தா விரைவு வண்டி குண்டு வெடிப்பிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. குண்டுக்கான வார்ப்பு இரும்பு உலோகமும் ஒரே மாதிரியாக இருந்துள்ளன. இத்தடயவியல் ஆதாரங்களின் அடிப்படையில்தான் இக்குண்டுவெடிப்புகள் அனைத்திலும் ஒரு இந்துவெறி பயங்கரவாத கும்பல் ஈடுபட்டுள்ளதென புலனாவுத் துறையினர் அறுதியிட்டனர்.

செல்போன்கள் வாங்கப்பட்ட இடமும், வாங்கிய நபரின் பெயர் பாபுலால் யாதவ் என்பதும், போலியான ஆவணங்களைக் கொடுத்து இதேபெயரில் 11 சிம் கார்டுகள் வாங்கப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்தன. பாபுலால் யாதவ் வாங்கிய செல்போன்களின் குறியீட்டு எண்ணை வைத்து அவற்றில் நான்கு செல்போன்களை ராஜஸ்தானிலுள்ள ஆர்.எஸ்.எஸ் முழுநேர ஊழியர்கள் பயன்படுத்தி வருவதை வைத்து, அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மூலமாக பாரத் ரித்தேஷ்வர் உள்ளிட்ட இதர சதிகாரர்கள் சிக்கினர்.

இவர்கள் மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் முதலான பிற மாநிலங்களிலிருந்தும் இப்பயங்கரவாதச் செயல்களுக்கு ஆட்களைத் திரட்டியுள்ளனர். ஆர்.எஸ்.எஸ். மட்டுமின்றி அதன் பரிவாரத்தைச் சேர்ந்த பஜ்ரங்தள், விசுவ இந்து பரிஷத், அபிநவ் பாரத், ஜெ வந்தேமாதரம், வனவாசி கல்யாண் ஆசிரமம் முதலானவற்றிலிருந்தும் ஆட்களைப் பொறுக்கியெடுத்து மூன்று குழுக்களை உருவாக்கினர். இதன்படி, ஒரு குழு நிதி ஏற்பாடுகளையும் வாகன ஏற்பாடுகளையும் செய்யும். அடுத்த குழு,  வெடிகுண்டுகளையும் தேவையான சாதனங்களையும் ஏற்பாடு செய்யும். கடைசியாக உள்ள குழு, குண்டு வைப்புகளில் ஈடுபடும். ஒரு குழுவினருக்கு மற்ற குழுவினர் பற்றித் தெரியாது. இதனால் ஒருவர் கைது செய்யப்பட்டாலும் மற்ற குழுவினர் பற்றித் தெரியாது. இந்தச் சதித் திட்டத்துடன்தான் இப்பயங்கரவாதக் கும்பல் இயங்கியது என்பதும் இப்போது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இவை மட்டுமின்றி, 2002-இல் குஜராத் பயங்கரவாதப் படுகொலைகளைத் தொடங்கிவைத்த கோத்ரா எம்.எல்.ஏ.வான ஹரேஷ் பட்டுக்குச் சொந்தமான பட்டாசுத் தொழிற்சாலையில், டீசல் வெடிகுண்டுகளும் பைப் வெடிகுண்டுகளும் தயாரிக்கப்பட்டு குஜராத் பயங்கரவாதப் படுகொலையின்போது இந்துவெறி பயங்கரவாதிகளுக்கு விநியோகிக்கப்பட்டன என்பதும்,  சபர்கந்தா மாவட்ட விசுவ இந்து பரிசத்தின்  தலைவரான தவால் ஜெயந்தி பட்டேலின் கல்குவாரியில் ஆர்.டி.எக்ஸ். ரக வெடிகுண்டுகள் ஏராளமாகத் தயாரிக்கப்பட்டு வெளியிடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன என்பதும் ஏற்கெனவே ஆதாரங்களுடன் நிரூபணமாகியுள்ளது. மேலும், கடந்த 2007-ஆம் ஆண்டில் “தெகல்கா” வார இதழ் குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக பார்ப்பன பாசிச பயங்கரவாதிகள் நடத்திய கொலைவெறியாட்டத்தையும், இந்துவெறி பயங்கரவாதிகளிடையே ஊடுருவி அந்தக் கொடூரங்களை அரங்கேற்றியவர்களின் வாயிலிருந்தே மறுக்க முடியாத ஒப்புதல் வாக்குமூலங்களையும் ஆதாரங்களுடன் வெளியிட்டது. கடந்த 2007-ஆம் ஆண்டு தென்காசியில் நடந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்கள் இந்து முன்னணி கும்பலைச் சேர்ந்தவர்கள்தான் என்பதும் நிரூபணமாகியுள்ளது.

உண்மைகள் அம்பலமானபோதிலும்,  ம.பி.யில் பா.ஜ.க. ஆட்சியில் இருந்ததால் இந்துவெறி பயங்கரவாதிகள் கைது செய்யப்படவில்லை. நெருக்கடிகள் அதிகரித்த பின்னரே ம.பி. போலீசு வேறு வழியின்றி இந்துவெறி பயங்கரவாதிகளில் சிலரைக் கைது செய்தது. அஜ்மீர், மெக்கா மசூதி விசாரணைகளில் உண்மைகள் வெளிவந்துள்ள போதிலும், ராஜஸ்தான் மற்றும் ஆந்திரப் போலீசார் குற்றவாளிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆந்திராவிலும் ராஜஸ்தானிலும் அப்பாவி முஸ்லிம்கள் சிறையில் வதைக்கப்பட்ட பின்னர், அவர்கள் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பாகிய போதிலும், வேறொரு பொய்வழக்கு சோடித்து அவர்களை மீண்டும் சிறையிலடைத்து வதைத்தது, இம்மாநிலங்களின் போலீசு.

இந்துவெறி ஆர்.எஸ்.எஸ்.-இன் பயங்கரவாதம் அடுத்தடுத்து வெளியான போதிலும், ஒருசில ஆங்கில ஊடகங்கள் மட்டுமே இவற்றை வெளியிட்டுள்ளனவே தவிர, தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் அவை திட்டமிட்டே மறைக்கப்பட்டு வருகின்றன. அதேசமயம், தீவிரவாதிகள் என்றாலே முஸ்லிம்களும் நக்சல்பாரிகளும்தான் என்ற கருத்து ஊடகங்களால் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. இந்த அடிப்படையிலேயே போலீசும் அதிகார வர்க்கமும் ஒருதலைப்பட்சமாக அணுகுகின்றன. மதச்சார்பற்றவர்களாகக் கூறிக்கொள்ளும் “இந்து’’க்களே கூட ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் இரகசிய குண்டுவைப்புகள் மூலம் அப்பாவி பொதுமக்களைக் கொல்லும் பயங்கரவாதச் செயல்களில் இறங்க மாட்டார்கள் என்றே இன்னமும் கருதுகின்றனர்.

ஆர்.எஸ்.எஸ். ஒரு பயங்கரவாத அமைப்பு என்பது நிரூபிக்கப்பட்டுள்ள போதிலும், பல்வேறு சாட்சியங்கள், தடயவியல் ஆதாரங்கள், ஒப்புதல் வாக்குமூலங்கள் வாயிலாக தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும், இந்துவெறி பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ். பரிவாரம் சட்டபூர்வமாகத் தடை செய்யப்படவில்லை. தண்டிக்கப்படவும் இல்லை. உண்மைகள் அடுத்தடுத்து வெளிவந்துள்ள போதிலும், எந்த ஓட்டுக் கட்சியும் இதுகுறித்து வாய்திறப்பதுமில்லை. இந்துக்கள் பெரும்பான்மையாக இருப்பதாலும், இந்நாட்டின் அரசியலமைப்பு முறையின் பிரிக்கமுடியாத அங்கமாக இந்துத்துவம் கோலோச்சுவதாலும் அரசும் ஓட்டுக்கட்சிகளும் ஊமையாகி நிற்கின்றன.

ஆர்.எஸ்.எஸ். ஒரு பயங்கரவாத அமைப்பு என்று நிரூபணமாகியிருப்பது மட்டுமல்ல; நாட்டுக்கும் மக்களுக்கும் பேரபாயமாகிவிட்ட இப்பயங்கரவாத கும்பலை கடுமையான நடவடிக்கைகள் மூலமாகவோ, சட்டரீதியாகவோ, ஓட்டுக்கட்சிகளின் தேர்தல் வெற்றிகள் மூலமாகவோ வீழ்த்திட முடியாது என்பதும் இப்போது நிரூபணமாகியுள்ளது. பார்ப்பனியத்தால் இந்து எனும் பெயரில் அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் பெரும்பான்மை உழைக்கும் மக்களை ஒன்றிணைத்துப் போராடுவதும், இக்கொடிய பயங்கரவாத மிருகங்களை அம்பலப்படுத்தி மக்களிடமிருந்து தனிமைப்படுத்துவதும், நேருக்குநேராக நின்று எதிர்த்து முறியடிப்பதும் மதச்சார்பற்ற-ஜனநாயக சக்திகளின் அவசர அவசியக் கடமையாகியுள்ளது.

_______________________________________

தனபால், புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2011
_______________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

தமிழக மீனவர் படுகொலைகள்: இரு நாட்டு மீனவர் மோதலா?

39

savetnfishermanராமேஸ்வரம் மீனவர் படுகொலைகள் என்பது தனித்த பிரச்சனையல்ல. இலங்கையின் இனவாதப் போக்கிற்கும் அதை எதிர்த்துக் கிளம்பிய ஈழ மக்களின் ஆயுதப் போராட்டத்திற்கும், இப்போது மாபெரும் இனப்படுகொலை ஒன்றின் மூலம் போர் முடித்து வைக்கப்பட்டிருப்பதற்கும், இலங்கைக்கு வெளியே தமிழகத்தில் இலங்கை அரசுக்கு எதிராக எழும் எதிர்ப்புகளை நசுக்குவதற்கும், மீண்டும் ஒரு போராட்டம் ஈழத்தில் வேர் விடாத படி அதன் அஸ்திவாரங்களில் ஒன்றாக பாம்பன் பகுதியை தங்களின் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதும், தனியார் – தாராளமயத்திற்காக கடலையும் கரையோரங்களையும் பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளுக்கு தாரை வார்க்கவும், இன்னும் பல்வேறு காரணங்களுக்காய் இந்திய, இலங்கை அரசுகளின் இந்த கூட்டுக்கொலை இராமேஸ்வரத்தில் நடத்தப்படுகிறது.

இக்கொலைகளை இலங்கை கடற்படைகள் முப்பதாண்டுகளாய் செய்தது. இப்போது மீனவர்களைக் கொல்லவென்றே கூலிப்படைகளை நிறுவியிருக்கிறது இலங்கை. இந்தியா இக்கொலைகளை மறைமுகமாக ஆதரிக்கிறது. விஸ்தரிப்பு எண்ணம் கொண்ட இந்திய அரசும், பௌத்த சிங்கள பேரினவாத அரசும் இணைந்து தங்களின் சொந்த சுயலாப வர்த்தக, அரசியல் நலன்களுக்காய இக்கொலைகளை செய்து கொண்டு, கண் துடைப்பு நாடகங்களையும் நடத்திக் கொண்டிருக்கின்றது.

இரு நாட்டு தமிழர்களிடையே பிளவு?

இராமேஸ்வரம் மீனவர் படுகொலைகள் கடந்த முப்பதாண்டுகளாய் நடக்கிறது. சுமார் 500- க்கும் மேற்பட்ட மீனவர்கள் இதுவரை கொல்லப்பட்டிருக்கிறார்கள். விடுதலைப்புலிகள் வலுவாக இருந்த காலத்தில் போர், ஈழ மக்களின் துயரம், ஈழம் என்கிற அளவிலேயே தங்களின் தமிழார்வத்தை வெளிப்படுத்திய தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் அதே அளவுக்கு தமிழக மீனவப் படுகொலைகளைக் கண்டித்ததில்லை.

ஈழ விவாகரம் தமிழகம் தழுவிய பிரச்சனையாக மாற்றப்பட்ட அளவுக்கு இராமேஸ்வரம் மீனவர் பிரச்சனை தமிழகம் தழுவிய பிரச்சனையாக மாற்றப்பட்டதில்லை. மாபெரும் இன அழிப்பின் பின்னர், ஈழ மக்கள் இராணுவ நிழலில் அமைதியான பின்னர் இப்போது அதிகமாக இராமேஸ்வரம் மீனவர் பிரச்சனை பேசப்படுகிறது. அதுவும் சிறிய அளவில்தான். திராவிட இயக்க அரசியலிலும் மீனவ மக்கள் பிரச்சனை பேசப்பட்டதும் இல்லை. அதற்கு அக்கறையான எந்த முடிவுகளும் எடுக்கப்பட்டதும் இல்லை.

ராஜீவ் கொலைக்கு முன்னர் இலங்கைக் கடற்படைக் கொலைகள் என்று மட்டுமே (அதுதான் உண்மை) சொல்லப்பட்ட மீனவர் படுகொலைகள், ராஜீவ் கொலைக்கு பின்னர் விடுதலைப்புலிகள் நிகழ்த்தும் கொலைகள் என்று பிரச்சாரப்படுத்தப்பட்டது. போர் காலத்தில் மரியா என்ற படகில் வந்து புலிகள் சுட்டுக் கொன்றதாகச் சொன்னார்கள். இந்த நிலையில்தான் 2009 – மே மாதம் போர் முடித்து வைக்கப்பட்டு விட்டது. இப்போது புலிகள் இல்லை. ஆனால் மீனவர் படுகொலை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இப்போது சொல்கிறார்கள், “இலங்கை மீனவர்களின் வளங்களை இந்திய மீனவர்கள் கொள்ளையடிக்கிறார்கள், வலைகளை இந்தியப் படகுகள் சேதப்படுத்துகின்றன” என்கிறார்கள். இது தொடர்பாக இந்திய இலங்கை மீனவர்களிடையே நடந்த பேச்சு வார்த்தை தொடர்பாக ஆழமானதும் அவசியமானதுமான இக்கட்டுரையைப் படியுங்கள், பல உண்மைகளைத் தெரிந்து கொள்ளலாம். (இலங்கை : இராமேஸ்வரம் மீனவர் சந்திப்பு நடப்பது என்ன? – அகில். http://inioru.com/?p=16420 )

அதாவது நாம் தமிழக மீனவர்களைக் கொல்கிறது இலங்கை கடற்படை என்கிறோம். அவர்களோ “தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுகிறார்கள், மீன் வளங்களை அழிக்கிறார்கள், வலைகளை அறுத்தெரிகிறார்கள்” என்று தமிழக, ஈழத் தமிழ் மீனவர்களிடையே பிளவை உண்டு பண்ணுகிறார்கள். உண்மையில் தமிழக, ஈழத் தமிழ் மீனவர்களிடையே பிளவை உருவாக்கும் நோக்கம் யாருடையது? இரு நாட்டு மீனவர்களுடையதா? இரு நாட்டு அரசுகளுடையதா?

அந்த வகையில் கடைசியாக இலங்கையில் இருந்து வெளிவரும் வீரகேசரி இதழ் ( யாருக்கும் கேட்காத பருத்தித்துறை மீனவர்களின் குரல்!  http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=27971 ) இப்படி  ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறது. ஈழ மக்கள் அமைதியாக்கப்பட்டு விட்ட நிலையில் அறிவுஜீவித்தளத்தில் இலங்கை அரசின் அரசியல் நிலைகளை முன்னெடுக்க விரும்பும் சிலர் பருத்தித்துறை மீனவர் குரலில் இப்போது பேசத் துவங்கியிருக்கிறார்கள்.

பருத்தித் துறைப் பகுதியைச் சார்ந்த மரியகுணஸ்டீன்,  // “இது சிங்க இறால் பிடிக்கும் காலம். இந்தக் காலத்தில் தெற்கிலிருந்து சிங்கள மக்களும் முனைப்பகுதிக்கு மீன்பிடிக்க வருகிறார்கள். கடல்மார்க்கமாகவே வந்து, அந்த வழியிலேயே அவர்கள் செல்கிறார்கள். இந்திய மீனவர்களால் தான் தொழிலில் எமக்கு அதிகம் நஷ்டம் ஏற்படுகிறது. நாம் வலை விரித்திருக்கும்போது விளக்குகள் எதுவுமின்றி வரும் அவர்கள் எமது வலைகளைக் கிழித்தெறிகிறார்கள். ரோலர் படகுகளால் எமது வலைகள் துண்டாக்கப்படுகின்றன. இதன் காரணமாக நாம் பாரிய இழப்புகளுக்கு முகங்கொடுக்கிறோம். கடந்த வாரம்கூட சுமார் ஒன்றரை லட்சம் ரூபா விரயமானது. இதுகுறித்து நாம் அதிகாரிகள் பலரிடமும் முறையிட்டோம். ஆனால் சாதகமான எந்த முடிவும் எட்டப்படவில்லை. இருவேறு நாடுகள் எனச் சொல்லிப் பிரிவினைவாதத்துடன் நாம் பார்க்கவில்லை. மனிதாபிமானம் வேண்டும் என்பதையே நான் கூற விரும்புகிறேன்” // என்று சொல்கிறார். இந்த அப்பாவி மீனவரை தன்னைப் போன்ற ஒரு ஒடுக்கப்பட்ட இனமான தமிழக மீனவர்களுக்கு எதிராகப் பேசத் தூண்டிய சக்தி எது?

விசைப்படகுகளால் வலைகள் கிழிக்கப்படுவதும், விரித்து வைக்கப்பட்டிருக்கும் வலைகளை விசைப்படகுகள் இழுத்துச் செல்வதும், மீன் பிடி எல்லைகளை தீர்மானிப்பதில் வரும் குழப்பங்களும் மீன்பிடித் தொழிலில் மிக மிக சாதாரணமானது. இது தொடர்பான பிரச்சினை தமிழக மீனவர்களிடையே கூட அடிக்கடி நடப்பதுண்டு. மேலும் இந்தப் பிரச்சினை உலகெங்கும் உள்ள மூன்றாம் உலக நாடுகளில் வாழும் மீனவர்கள் அடிக்கடி சந்திக்கக் கூடியதுதான்.

இலங்கையில் தெற்கில் இருந்து வரும் சிங்கள் மீனவர்கள் வடக்கில் தமிழ் மீனவர்களின் மீன் பிடி உரிமையை கட்டுப்படுத்தவில்லையா? கடல் மீன் பிடி உரிமையில் இலங்கையின் பெருந்தேசிய சிங்கள வெறி கடலில் தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்தவில்லையா?  இலங்கைக்குள்ளேயே நிலைமை இப்படி இருக்கும் போது ஒரு அப்பாவி மீனவனை தமிழக மீனவர்களுக்கு எதிராகப் பேசத் தூண்டும் குரல் இலங்கை அரசின் குரலல்லாமல் வேறு என்ன?

மீனவர்களின் நட்பு கடலின் ஆழத்தை விட அதிகமானது.

இந்திய இலங்கை மீனவர்கள் நட்பு மட்டுமல்ல உயிருக்கு உத்திரவாதமில்லாத உலகிலேயே உயிராபத்து அதிகமுள்ள தொழில்களில் ஒன்றாக மீன் பிடித்தொழிலில் மீனவர்கள் பேதம் பார்த்து பழகுவதில்லை. ஒரு சுரங்கத் தொழிலாளியின் உயிர் நாடியில் கசிந்து கொண்டிருக்கும் மரணம், அவனது எல்லையற்ற அன்பிற்கு அடையாளமாக இருப்பது போலதான் மீனவனின் அன்பும். அவன் உணர்வுகளால் உந்தப்படுகிறவன். சாதி மத பேதங்களுக்கு அப்பாற்பட்டவன். தான் அன்பு செலுத்தும் ஒன்றுக்காக உயிரைக் கூடக் கொடுக்க அஞ்சாதவன்.

இதுதான் மீனவர்களின் உணர்வுபூர்வமான வாழ்வு. அதே நேரம் அவர்களுக்குள்ளே எந்தப்பிரச்சினைக்காக மோதிக்கொண்டாலும் அது மூர்க்கமாக இருக்குமளவு அப்பாவித்தனமாகவும் இருக்கும். அவர்கள் சமவெளியின் கறைபடியாத எளிய மனிதர்கள். தமிழக மீனவனாக இருந்தாலும் இலங்கை தமிழ் மீனவனாக இருந்தாலும் இதுதான் உண்மை. பாரம்பரிய மீன் பிடித்தொழிலில் ஈடுபடும் ஒரு மீனவனின் கருணையையும் அன்பையும் வேறெந்த சமூகங்களிடமும் காண்பது அரிது. அப்படி ஒரு நீண்ட கால அன்பும் நட்பும் கலந்துதான் தமிழக ஈழத் தமிழ் மீனவர்களின் நட்பு. கச்சத்தீவும் அந்தோனியார் கோவிலும் அந்த நட்பிற்கு நீண்டகால சாட்சியமாக நிற்கின்றன.

இது போக எல்லை தாண்டி புயல் மழையில் சிக்கி தத்தளிக்கும் மீனவர்களை, பரஸ்பரம் காப்பாற்றி கரை சேர்த்து உணவு கொடுத்து உறவு வளர்த்த கதை மீனவனுடையது. வேதாரண்யத்திலும் , பேசாலையிலும், மன்னாரிலும்,  யாழ்பாணத்திலும், பாம்பனிலும், தூத்துக்குடியிலும், கன்னியாகுமரியிலும், என்று இரத்தமும் சதையுமாக இரு நாடு மீனவர்களின் உறவுகளையும் எந்த அழிவு சக்திகளின் எல்லைகளும் பிரித்து விட வில்லை. ஆனால் இன்று?

இரண்டு அரசுகளின் எண்ணங்களை ஈடேற்றவும் இந்த இரு நாட்டு மீனவர்களும் பலிகடாவாக்கப்பட்டிருக்கிறார்கள். இலங்கை அரசின் ஆதரவாளர்களோ அதை ஊதி விட்டு இந்த பிரிவினையை முன்னெடுக்கிறார்கள். தமிழக மீனவர்களைப் பொறுத்தவரையில் தடை செய்யப்பட்ட மடியை பயன்படுத்துவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாது. காரணம் இந்த மடிகள் முதலில் அழித்தது மீன் வளத்தை அல்ல, ஏழை கட்டுமரக்காரனின் மீன் பிடி உரிமையை. அது உள்ளூர் சிறு கட்டுமரக்காரனின் மீன் பிடி உரிமையை நசுக்குவது உண்மைதான். ஆனால் பிரச்சனை இதுவல்ல. தங்களின் சொந்த நலனை முன்னெடுக்க விரும்பும் அரசுகள் பழியை இவர்கள் மீது போட்டு, இவர்களை மோத விட்டு தங்களின் நலனை இராமேஸ்வரத்தில் முன்னெடுக்கின்றன.

உண்மையில் மீன் வளங்கள் இப்பிராந்தியத்தில் இல்லாது போகக் காரணம் பன்னாட்டு ஏக போக மீன் பிடி நிறுவனங்களே. மீன் வளம் பெருக வருடதிற்கு 45 நாட்கள் மீன் பிடித்தடையை உள்ளூர் மீனவர்களுக்கு கொண்டு வந்துள்ள இரு நாட்டு அரசுகளும் தங்களில் கடல்பரப்பில் ஏக போக பன்னாட்டு நிறுவனங்களை கடல் கொள்ளையில் ஈடுபட அனுமதித்துள்ளன. அவர்களுக்கு தடையும் இல்லை தண்டமும் இல்லை. ஆக இரு நாட்டு மீனவர்களும் போராட வேண்டியதும், எதிரியாக கருத வேண்டியதும்  இந்த பன்னாட்டு நிறுவனங்களைத் தானே தவிர தமிழக மீனவர்களை அல்ல.

பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களுக்காகவும் மீன் பிடி நிறுவனங்களுக்காகவும் சேது சமுத்திரத் திட்டத்தை தமிழனின் வரலாற்றுப் பெருமையாகக் காட்டும் அரசியல் வாதிகள் அதை மீனவர்கள் எதிர்ப்பதை கணக்கில் எடுக்க மறுக்கின்றனர். சேதுக் கால்வாய் திட்டம் இரு நாட்டு மீனவர்களுக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் வணிகச் சூதாட்டம் என்பதுதான் உண்மை. கடலிலே இப்படியான கொள்ளைகள் ஒரு பக்கம் என்றால் கரையில் செயற்கைத் துறைமுகங்கள், கடலோர பூங்காக்கள், கேளிக்கை விடுதிகள்,  இறால் பண்ணைகள், என்று கடலோரங்களை தனியாரிடம் ஒப்படைக்க இன்னொரு சுனாமியாய் வருகிறது அடுத்தடுத்த திட்டங்கள்.

இவைகளை முன்னெடுக்கும் இந்திய அரசும், நீண்டகால அரசியல் நோக்கில் மீனவர்களை இராமேஸ்வரத்தில் இருந்து அப்புறப்படுத்த நினைக்கும் இலங்கையும்தான் இரு நாட்டு மீனவ மக்களின் எதிரிகளே தவிர கொலை செய்யப்பட்டவனையே எதிரியாகச் சித்தரிப்பது இன்னுமொரு அயோக்கியத்தனமல்லவா? ஆனால் கொல்லப்பட்ட மீனவர்களுக்கும், கொலை செய்யும் இலங்கை கடற்படைக்குமான பிரச்சனையை இந்திய, ஈழ மீனவர்களுக்கிடையிலான பிரச்சனையாக ஹிந்து ராம், பேராசிரியர் சூரியநாராயணன் போன்றவர்கள் பிரச்சாரம் செய்கின்றனர். ஹிந்து ராம் யார் என்பதை நான் சொல்லி யாரும் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.

இணையத்திலிருந்து களத்திற்கு வாருங்கள்!

துனிசியாவிலும், எகிப்திலும் டிவிட்டர், பேஸ்புக் இணையங்கள் குறிப்பிடத் தக்க செல்வாக்கைச் செலுத்தினாலும் புரட்சியை அவை கொண்டு வந்து விடுவதில்லை. பெருந்திரள் மக்களை வீதிக்குத் திரட்டி வந்து ஆர்ப்பாட்டங்களை ஒருங்கிணைத்து அரசுக்கு நெருக்கடியைக் கொடுப்பதன் மூலமே அரசியல் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்பதுதான் யதார்த்தம். ஆனால் டிவிட்டரிலேயே தொடங்கி டிவிட்டரிலேயே இந்தப் பிரச்சனை தீர்ந்து விடாது நண்பர்களே! ஒன்று திரட்டிய சக்தியை எங்கே எப்படி வெளிப்படுத்தி நெருக்கடியை உருவாக்குகிறோம் என்பதில்தான் இதன் வெற்றி அடங்கியிருக்கிறது.

இதனால் நாமெல்லாம் உடனே களமிறங்கி வெற்றியை ஈட்டிவிடுவோம் என்று சொல்லவில்லை. ஆனால் அதை நோக்கி தெளிவான கொள்கை, நடைமுறையோடு நாம் இந்தப்பிரச்சினையை கொண்டு செல்வது சரியாக இருக்கும். சிலர் மீனவர் பிரச்சினைக்காக எந்த அரசியல் கட்சியையும் எதிர்க்க கூடாது என்றெல்லாம் தவறான கருத்து வைத்திருக்கிறார்கள். இது குறித்து பின்னர் எழுதுகிறேன்.

ஆளும் வர்க்கங்களுக்கிடையிலான முரணை வரம்புக்குட்பட்டுதான் பயன்படுத்த முடியும். தண்டகாரண்யாவில் மாவோயிஸ்டுகளும் . காஷ்மீரில் போராடும் சக்திகளும் அப்படி ஓரளவுக்கு பயன்படுத்துகிறார்கள். பயன்படுத்துவதுதான் சரியும் கூட, அதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை. மேலும் அந்த முரண்பாட்டை பயன்படுத்துமளவு அவர்கள் ஒரு சக்திகளாக இருக்கிறார்கள். அப்படி இல்லாத போது நாமும் அப்படி இறங்கினால் நம்மைத்தான் ஆளும் வர்க்கம் பயன்படுத்திக் கொள்ளும்.

இப்போதே மீனவர் படுகொலை குறித்து பல்வேறு சதிக்கதைகளை இலங்கை அரசு உருவாக்கி தனது எடுபிடிகள் மூலம் பரப்பத் துவங்கியிருக்கிறது. அதிலொன்றுதான் இருநாட்டு மீனவர்களுக்கிடையே மோதல் என்ற கதை. இதையும் நாம் எதிர்கொண்டு வீழ்த்த வேண்டிய அவசியமிருக்கிறது. இதன்றி வெறுமனே மனிதாபிமானத்துடன் மட்டும் இந்தப் பிரச்சினையை எளிமைப்படுத்தி புரிந்து கொள்வது சரியல்ல என்பதோடு ஆபத்தானதும் கூட.

____________________________________________________

– வெண்மணி

_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

செல்பேசி மலிவும் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வும் !

108

புதிய மாடல் செல்போன்களின் விலை நாளுக்கு நாள் மலிவாகிக் கொண்டே போகிறது. உணவுப் பொருட்களின் விலையோ தொடர்ந்து ஏறுமுகமாய் இருந்து வருகிறது. சென்ற ஆண்டின் இறுதி மாதத்தில் குறிப்பிட்ட சில காய்கறிகளின் விலை அதன் முந்தைய மாதத்தை விட 82% அதிகரித்துள்ளது. சந்தைக்குக் காய்கறிகள் வாங்க வந்த நடுத்த வர்க்கக் குடும்பத்தினர் அதன் விண்முட்டும் விலையைக் கண்டு மலைத்துப் போய், தங்கள் ஏமாற்றத்தைத் தம் குடும்பத்தாரோடு பகிர்ந்து கொள்ளத் தான் மலிவு விலை செல்பேசிகள் பயன்படுகின்றன.

இதில் குறிப்பாக வெங்காயத்தின் விலை 70 ரூபாயிலிருந்து 90 ரூபாய்கள் வரை விற்கப்பட்டது. தற்போது சில மாநிலங்களில் மட்டும் விலை சற்று குறைந்திருக்கிறது. ஏற்கனவே இரண்டு முறை வெங்காயத்தால் பதம் பார்க்கப்பட்டிருக்கும் ஆளும் வர்க்கம் உடனடியாக வெங்காய ஏற்றுமதியின் மேல் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பினாலும் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளாலும் கூட பெரிதாகப் பயன் ஏதும் இல்லாத நிலையில் பாகிஸ்தானில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய தற்போது முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

வெங்காய விலையேற்றம் என்பதை மற்ற பொருட்களின் விலையேற்றங்களில் இருந்து தனியே பிரித்துப் புரிந்து கொள்ள முடியாது. கடந்த சில ஆண்டுகளாகவே மற்ற உணவுப் பொருட்கள் மற்றும் காய்கறிகள், சமையல் எண்ணை விலைகளும் தொடர்ச்சியாக உயர்ந்தே வந்துள்ளது. 2008இல் 5.62 சதவீதமாக இருந்த சர்க்கரையின் விலை உயர்வு, 2010இல் 58.94 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. 2008இல் 5.94 சதவீதமாக இருந்த பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலை உயர்வு, 2010இல் 8.33 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. 2008ல் 1.3 சதவீதமாக இருந்த பருப்பு வகைகளின் விலை உயர்வு, 2010இல் 45.62 சதவீதமாக உயர்ந்துள்ளது. (இணைப்பு / சுட்டி – 1).

இதற்கிடையே காய்கறிகளின் இந்த விலையேற்றத்தால் தொழிலாளிகள் அதிகக் கூலி கேட்டுப் போராடும் நிலை வரலாம் என்று கவலை தெரிவித்திருக்கிறார் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் கவுன்சிலின் தலைவரான சக்ரவர்த்தி ரங்கராஜன். இதற்கு மேலும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று களத்தில் இறங்கியுள்ள அரசு, வெங்காயத்தின் விலை உயர்வுக்கு பதுக்கல்காரர்கள் தான் பெருமளவு காரணம் என்று அறிவித்துள்ளது. நாடெங்கும் உள்ள விவசாயச் சந்தைகளில் இருக்கும் வெங்காய மண்டிகளில் சோதனைகள் நடத்தியுள்ளது. பதுக்கல்காரர்கள் மேல் நடவடிக்கை எடுக்கும்படி மாநில முதல்வர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார் நிதிமந்திரி பிரணாப் முகர்ஜி.

வெங்காயத்தின் உண்மைக் கதை!

னால், இந்தப் பருவத்தில் (kharif season ) விளையும் வெங்காயத்தில் ஈரப்பதம் அதிகம் இருக்கும். அதாவது விளைந்த வெங்காயத்தை காயவைக்க முடியாது. மழையும், பனியும் இக்காலத்தில் அதிகம் என்பதால் விளைந்த வெங்காயத்தை எவ்வளவு சீக்கிரம் நுகர்வோரை அடைகிறதோ அந்த அளவுக்கு நல்லது. நாட்கள் நீடித்தால் காலநிலை காரணமாக ஈரப்பதம் அதிகரித்து வெங்காயம் அழுகிவிடும். எனவே அறுவடை முடிந்த நாளில் இருந்து அதிகபட்சம் இரண்டு வாரங்களுக்கு மேல் கையிருப்பில் வைத்திருக்க முடியாது.

இதில் விவசாயி சந்தைக்குக் கொண்டு வருவதில் ஒரு நாளும், உள்ளூர் சந்தையில் இருந்து வெளி மாநில சந்தைகளுக்கு மூன்று நாட்கள் வரையும் ஆகிவிடுகிறது. வெங்காயம் ஈரப்பதத்துடனேயே பயணிப்பதால் அது அழுகல் நிலை ஏற்படுவதற்கு முன்பாகவே  நுகர்வோரிடம் சேர்க்க வேண்டும். எனவே இந்த பருவத்தில் வரும் வெங்காயத்தை ஒரு வியாபாரி எத்தனை நாட்கள் ‘பதுக்கி’ வைக்கிறாரோ அந்தளவுக்கு இழப்பு அவருக்குத் தான் ஏற்படும் (இணைப்பு 2ஐ பார்க்க). எனவே பிரணாபின் உண்மையான அக்கறை பதுக்கலின் மேல் இல்லை – எனில், இந்த பதுக்கல்காரர் பூதத்தை அவர் கிளப்பி விடுவதன் காரணத்தை பின்னர் பார்க்கலாம்.

இதற்கிடையே வெங்காய விலை உயர்வு பற்றி தேசிய அளவிலான பத்திரிகைகள் தொடர்ந்து எழுதத் துவங்கின. பொதுமக்களின் கோபம் கொஞ்சம் கொஞ்சமாக உயரத் துவங்கிய நிலையில், இதற்கான ஆறுதலையும் விலை உயர்வு பற்றிய தத்துவ விளக்கத்தையும் அளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு மத்தியில் ஆளும் கும்பல் தள்ளப்பட்டது.

வெங்காய விலை உயர்வு தற்காலிகமானதென்றும், கூடிய விரைவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் என்றும் ஆறுதல் தெரிவித்துள்ளார் மத்திய விவசாய மந்திரி சரத் பவார். ஒரு படி மேலே போன பிரதமர், ஜனவரி 13ஆம் தேதி “உணவுப் பொருள் உற்பத்தியைக் கட்டுப்படுத்த ஒரே வழி உற்பத்தியைப் பெருக்குவது தான்” என்கிற மாபெரும் பொருளாதார உண்மையைத் தெரிவித்துள்ளார். மான்டேக் சிங் அலுவாலியாவோ இந்திய கிராமப்புறங்களில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியின் காரணமாகத் தான் தற்போது அதிகளவு உணவுப் பொருட்கள் நுகரப்படுகிறது என்றும், அதனாலேயே இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது என்று சொல்கிறார்.

வாங்கும் சக்தி அதிகரிப்பு என்ற மோசடிப் பிரச்சாரம்!

மேலும், ஆளும் வர்க்க ஊதுகுழல்களான முதலாளித்துவ பத்திரிகைகள் சில, மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) அதிகரிப்பதுதான் விலையேற்றங்களுக்கு ஒரு காரணம் என்று எழுதுகின்றன. அதாவது உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பால் கிராமத்து மக்களிடம் வாங்கும் சக்தி அதிகரித்துள்ளதாகவும், இதனால் நுகர்வு அதிகரித்து விலைவாசி உயருகிறது என்றிகிறார்கள் இந்த ‘ஆய்வாளர்கள்’. ஆனால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு மிகவும் குறைவு என்பது பல ஆண்டுகளாக மாறவே இல்லை. இது உண்மையாகும் பட்சத்தில் கிராம மக்களுக்கு வாங்கும் சக்தி எப்படி அதிகரிக்கும்? விவசாயம்தான் கிராமங்களின் முதன்மையான தொழில் என்பதிலும் மாற்றமேதுமில்லை.

மேலும் இணைப்பு – 1இல் கொடுக்கப்பட்டுள்ள பட்டியலைக் கூர்ந்து கவனித்தால், இந்த விலையேற்றங்கள் குறிப்பாக 2008ஆம் ஆண்டிலிருந்து துவங்கிய உலகப் பொருளாதார பெரு மந்த காலத்தில் ஏற்பட்டுள்ளது தெரியவருகிறது. அந்தச் சமயத்தில் தான் ஆட்குறைப்பு, வேலை பறிப்பு, சம்பளக் குறைப்பு போன்ற நடவடிக்கைகளை பொரும்பாலான தனியார்  நிறுவனங்கள் அமல்படுத்தின. நியாயமாகப் பார்த்தால், வாங்கும் சக்தி குறைந்து போன இந்தக் காலகட்டத்தில் நுகர்வும் குறைந்திருக்க வேண்டும் – விலைகளும் குறைந்திருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக விலைகளோ தொடர்ந்து நிலையாக உயர்ந்தே வந்துள்ளது.

கிராமப்புறங்கள், நூறு நாள் வேலைத் திட்டம் போன்றவற்றால் கொழிப்பதாகவும், அதனால் நுகர்வு அதிகமாகியிருப்பதாகவும், சந்தையில் பொருட்களுக்கான போட்டி அதிகரித்திருப்பதால், விலைகளும் அதிகமாகிறது என்று சொல்கிறார் அலுவாலியா. இந்தப் புளுகை ஐ.நா சபையின் குழுவொன்று இந்தியாவில் நிலவும் வறுமை பற்றி நடத்திய ஆய்வொன்றே தகர்த்தெரிகிறது. உலகிலேயே வறுமையான நாடுகளாகக் குறிப்பிடப்படும் 26 ஆப்ரிக நாடுகளைச் சேர்ந்த ஏழைகளை விட இந்தியாவின் 8 மாநிலங்களில் மிக அதிகளவில் ஏழைகள் இருப்பதாக அந்த ஆய்வு சொன்னது. மேலும், சப் சகாரா பாலைவன நாடுகளைக் காட்டிலும், ஊட்டச்சத்துக் குறைவான குழந்தைகள் இந்தியாவில் தான் அதிகம் என்றும் பிற ஆய்வுகளில் வெளியானது. (இணைப்பு 3- வினவு கட்டுரை / ஐ.நா குழுவின் ஆய்வு பற்றி)

அடுத்து உற்பத்தி குறைந்து போனதே விலையேற்றத்திற்கான முக்கிய காரணம்  என்று முதலாளித்துவ பத்திரிகைகள் எழுதுகின்றன. உற்பத்திக் குறைவு என்பது விலையேற்றத்திற்கு ஒரு காரணம் தான் என்றாலும் இப்படிச் சுணங்கிப் போவதற்கு என்ன காரணம்? முதலாளித்துவப் பத்திரிகைகளில் குறித்த காலத்திற்கு மேல் நீண்ட பருவ மழையைக் காரணம் காட்டியிருக்கிறார்கள். அது உண்மை தான் என்றாலும் உண்மையின் ஒரு சிறிய அங்கம் மட்டும் தான்.

வெங்காயத்தின் உற்பத்தி நிலவரமும், உலகமயமாக்கத்தின் பாதிப்பும்!

லகளவில் இந்தியாவில் தான் அதிகமான நிலப்பரப்பில் வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. சீனத்திற்கு அடுத்தபடியாக இந்தியா தான் உலகில் அதிகளவில் வெங்காய உற்பத்தி செய்கிறது.  மகாராஷ்ட்டிரா, குஜராத், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் தான் இதில் அதிகளவு பங்களிப்பைச் செய்கின்றன. 2008-09 நிதியாண்டில் 8,34,000 ஹெக்டேரில் வெங்காய சாகுபடி நடந்து 1,35,65,000 டன் வெங்காயம் உற்பத்தி செய்யப்பட்டிருந்தது. இதுவே 2010-11 நிதியாண்டில் 1.17 லட்சம் டன்களாக  உற்பத்தி குறைந்துள்ளது. மேலும் 2008ஆம் ஆண்டு இருந்ததை விட 2010ஆம் ஆண்டு வெங்காயத்தின் சாகுபடிப் பரப்பு 20% அளவுக்குக் குறைந்துள்ளது.

அரசாலேயே கொடுக்கப்பட்டுள்ள இந்தப் புள்ளி விவரங்கள் சொல்வது என்னவென்றால், பருவமழைக் கோளாறு காரணமாகவும், சாகுபடிப் பரப்புக் குறைந்ததன் காரணமாகவும், சந்தைக்கு வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது; இதன் காரணமாக விலையேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதாகும். மேலும், இந்த நிதியாண்டில் நவம்பர் மாதம் வரையில் 11,58,000 மெட்ரிக் டன் வெங்காயம்  ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் சென்ற நிதியாண்டு முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்ட வெங்காயத்தின் அளவு 18,73,002 மெட்ரிக் டன்கள். (EPW Jan 08, 2010 மற்றும் தி இகனாமிக்ஸ் டைம்ஸ்)

இது இரண்டு முக்கியமான விஷயங்களை உணர்த்துகிறது. ஒன்று – ஏற்றுமதி வெங்காயத்தை உள்நாட்டுச் சந்தைக்குத் திருப்பி விட்டாலும் அது சந்தையின் தட்டுப்பாட்டை பூர்த்தி செய்யாது. இரண்டு – சென்ற நிதியாண்டின் உற்பத்தியில் ஏற்றுமதி அளவைக் கழித்து விட்டால் ஏறக்குறைய இந்த ஆண்டின் உற்பத்தி அளவை எட்டுகிறது. இந்த நிதியாண்டின் மொத்த உற்பத்தியில் செய்யப்பட்டிருக்கும் 11லட்சம் டன்கள் ஏற்றுமதி சந்தைத் தேவையில் உண்டாக்கியிருக்கும் இடை வெளியை விட தற்போது ஏற்பட்டிருக்கும் விலையேற்றம் கற்பனைக்கெட்டாத வகையில் அதிகமானதாகும்.

மேலும், ஏற்றுமதி ரகங்கள் உள்நாட்டு ரகங்களை விட தரத்தில் மேம்பட்டதாகும். ஏற்றுமதிக்கான வெங்காயத்தின் அளவு குறைந்தது 6 செ.மீ இருக்க வேண்டும். மேலும் எல்லா வெங்காயங்களும் ஒரே சீரான நிறம், அளவில் இருக்க வேண்டும். இந்த வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படாமல் உள்நாட்டுச் சந்தைக்கு திருப்பப்பட்டாலும் கூட, இதன் தரம் கருதி உள்நாட்டுச் சந்தையில் இதன் விலை கிலோ 70 ரூபாய்களுக்குக் குறையாமல் தான் இருக்கும். (தினமணி தலையங்கம் 21-12-2010).

ஆக, பிரதமர் சொல்வது போல விலையேற்றத்திற்கு உற்பத்தியில் ஏற்பட்டுள்ள குறைவு முழுகாரணம் அல்ல. அதைப் பற்றிப் பார்க்கும் முன் உற்பத்தி பரப்பு குறைந்ததற்கான காரணத்தைப் புரிந்து கொள்வதும் அவசியமாகும். விவசாயத்தின் ஒரு பொதுப் போக்காக விவசாயிகள் விவசாயத்திலிருந்தே விலக்கப்படுவது உலகமயமாக்கலுக்குப் பின் தீவிரமாக நிகழ்ந்து வருகிறது.

விதை, உரம், பூச்சிக் கொல்லி மருந்து என்று அனைத்தும் பன்னாட்டு பகாசுர நிறுவனங்கள் வைக்கும் கொள்ளை விலைக்குத் தான் வாங்கியாக வேண்டும் என்கிற நிர்பந்தத்தில் இருக்கும் விவசாயிகளுக்குப், பயிர்க்கடன்களும் விவசாய இயந்திரங்களை வாங்கவும் வங்கிகள் கடன் கொடுக்க ஆயிரம் நிபந்தனைகள் விதித்தும் மறுத்தும் வருகின்றது. இதனால் கந்து வட்டி கும்பல்களிடம் மாட்டிக் கொள்ளும் அப்பாவி விவசாயிகள் தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்கள். காலம் தப்பிப் பெய்த பருவ மழையால் பயிர்கள் நாசமானதால் கடந்த செப்டெம்பர் மாதம் மூன்று வெங்காய விவசாயிகள், மராட்டிய மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆக மழையின் பாதிப்பை அந்த விவசாயி மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டுமென்ற அளவில்தான் நமது அரசின் அக்கறை இருக்கிறது.

இதே மாராட்டிய மாநிலத்தின் மராத்வாடா பகுதியில் ஒரு பணக்காரக் கிறுக்கன் 65 கோடி மதிப்பிலான 150 மெர்சிடஸ் பென்ஸ் கார்களை வாங்க வெறும் ஏழு சதவீத வட்டிக்கு 40 கோடிகளை அள்ளிக் கொடுத்துள்ளது பாரத ஸ்டேட் வங்கி. ஒரு விவசாயி டிராக்டர் வாங்கக் கடன் கோரினால் அதற்கான வட்டி 12%. (ஆதாரம் – ஹிந்துவில் பி.சாய்நாத்தின் கட்டுரை)

விவசாயப் பொருட்களில் ஊக வணிகம்

க, மன்மோகன் கும்பல் விசனப்பட்டுச் சொல்லும் பருவ மழையோ – அதனால் குறைந்து போன காய்கறி உற்பத்தியோ, கிராமப் புறக் கொழிப்போ – அதனால் பொருட்களுக்கு சந்தையில் உண்டாகியிருக்கும் போட்டியோ, மொத்த உள் நாட்டு உற்பத்திக் குறியீட்டின் வீக்கமோ – அதனால் நுகர்வில் ஏற்பட்டிருக்கும் பெருக்கமோ அல்ல காரணம் என்பது தெளிவாகிறது.

சர்வதேசப் பொருளாதார மந்த நிலைக்குக் காரணமான நிதி மூலதனச் சூதாடிகள், ரியல் எஸ்டேட், தங்கம், இரும்பு, வெள்ளி போன்ற மூலப் பொருட்களில் தமது நிதிகளை இறக்கிச் சூதாடத் துவங்கிய போதே உலகளவில் உணவுச் சந்தையிலும் தமது சூதாட்டத்தைத் துவங்கி விட்டிருந்தனர். விவசாய விளை பொருட்களிலும் அத்தியாவசிய உணவுப் பொருட்களிலும் முன்பேர வர்த்தகத்தை அனுமதிக்குமாறு உலகவங்கியே இந்தியாவுக்குக் கட்டளையிட்டுள்ளது. உலகவங்கியின் முன்னாள் நேரடி ஊழியரும், இந்நாள் மறைமுக ஊழியருமான மன்மோகன் சிங் சுமார் நாற்பது முக்கியமான விவசாய உற்பத்திப் பொருட்களில் முன்பேர வணிகத்துக்கு அனுமதி வழங்கியுள்ளார்.

சர்வதேச பொருளாதார பெரு மந்தத்தை அடுத்து பங்குச் சந்தைகளிலும், நாணயங்கள், நிதிப் பத்திரங்கள், வீட்டுக்கடன் பத்திரங்களில் நடந்து வரும் பங்குச் சந்தை சூதாட்டங்களில் லாபம் இல்லாத காரணத்தால், இப்போது மக்களின் அத்தியாவசியமான நுகர்வுப் பொருட்களில் சூதாட்டத்தை முடுக்கி விட்டுள்ளனர் சர்வதேசச் சூதாடிகள். உலகளவில் உணவுப் பொருள் விலையேற்றம் என்பது இதன் காரணமாகத் தான் ஏற்பட்டுள்ளது. தற்போது உலகின் பல பாகங்களில் தொடர்ந்து நடந்து வரும் உணவுக் கலகங்களுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். இந்தப் பின்னணியிலேயே இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்டு வரும் உணவுப் பொருள் விலையேற்றத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

கடந்த 2009-10 நிதியாண்டில் மட்டுமே இந்தியாவில் நடந்த முன்பேர சூதாட்டத்தின் மதிப்பு சுமார் 78 லட்சம் கோடிகள். நடப்பு நிதியாண்டில் இதன் மதிப்பு 110 லட்சம் கோடிகளை எட்டி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் மட்டுமே விவசாய விளை பொருட்களில் நடந்த முன்பேர வர்த்தகத்தின் அளவு 25 சதவீதத்திற்கு உயர்ந்துள்ளது. இந்த நிதியாண்டில் நவம்பர் வரையிலான கால கட்டத்தில் மட்டும் விவசாய விளை பொருட்களில் நடந்த முன்பேர வர்த்தகச் சூதாட்டத்தில் புழங்கிய தொகையின் அளவு 6.51 லட்சம் கோடிகள்.

கடந்த ஆண்டின் இறுதி மாதங்களில் துவங்கி இந்த வருடத்தின் துவக்கம் வரையில் உணவுப் பொருட்களில் ஏற்பட்டிருக்கும் விலையேற்றத்திற்கான காரணத்தை இந்தப் புள்ளிவிவரங்களே தெளிவாக எடுத்துரைக்கிறது.

பன்னாட்டு நிறுவனங்களை சில்லறை வணிகத்தில் திணிக்க முயற்சி

டுத்து ‘பதுக்கல்காரர்கள்’ குறித்து பிரணாப் முகர்ஜிக்கு ஏற்பட்டிருக்கும் திடீர் அக்கறை குறித்து பார்ப்போம்.

வெங்காய விலையும் பிற காய்கறிகளின் விலைகளும் விஷம் போல் ஏறிக்கொண்டிருந்த நிலையில் விவசாயத் துறை அமைச்சர் ஒரு பக்கம் பார்வையற்றவன் யானையைத் தடவிய கதையாய் விலையேற்றத்தைப் பற்றி உளறிக் கொட்டிக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் ஒருநாளும் இல்லாத திருநாளாய் தொழில் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா இதில் காட்டிய அக்கறை கவனத்திற்குரியது. மொத்த விவகாரத்திற்கும் காரணம் பதுக்கல்காரர்கள் தானென்றும் சந்தைக்குப்  போதுமான வெங்காயம் கையிருப்பில் இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்.

இதற்கான தீர்வாக பன்னாட்டு நிறுவனங்களுக்கு சில்லறை வணிகத்தில் நுழைவதற்காக இருக்கும் கொஞ்ச நஞ்ச கட்டுப்பாடுகளையும் தளர்த்துவது பற்றி டிசம்பர் மாத இறுதிவாக்கில் ஆனந்த் சர்மா காபினெட் மட்டத்தில் ஆலோசனைகளைத் துவங்கியிருக்கிறார். அந்த ஆலோசனையில் உள்துறை அமைச்சர் சிதம்பரம், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி போன்றவர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். டிசம்பர் 23ஆம் தேதி பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஆனந்த் சர்மா, மொத்த விலைக்கும் சில்லறை விலைக்கும் இருக்கும் இடைவெளியைக் குறைக்கவும், பன்னாட்டு நிறுவனங்களை சில்லறை வணிகத்தில் இறக்கி விடுவது தான் சரியான தீர்வு என்று அறிவித்துள்ளார்.

பன்னாட்டுக் கம்பெனிகளை சில்லறை வர்த்தகத்தில் அனுமதிப்பதை ஆதரித்துப் பேசும் முதலாளித்துவ ஊடகங்கள், அவ்வாறு செய்வது இடைத்தரகர்களை ஒழித்து விடுமென்றும், விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைப்பதை உத்திரவாதப்படுத்தும் என்றும் சொல்கின்றன. ஏற்கனவே பகுதியளவில் சில்லறை வணிகம் திறந்து விடப்பட்டிருக்கும் நிலையிலேயே இது போன்ற பகாசுர நிறுவனங்களால் விவசாயிகளுக்குப் பெரியளவில் பலன் ஏதும் கிடைத்து விடவில்லை. மேலும், அசுரத்தனமான மூலதன பலத்துடன் சந்தையில் இறங்கும் இவர்களால் கோடிக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பை அளித்து வரும் சில்லரை வணிகம் ஒழிந்து போய் விடும் அபாயமும் இருக்கிறது.

ஏற்கனவே ரிலையன்ஸ், ஐ.டி.சி, பெப்சிகோ போன்ற நிறுவனங்கள் ஒப்பந்த விவசாயத்தின் மூலம் விவசாயிகளைக் கசக்கிப் பிழிந்து வரும் நிலையில், இவர்களை விட அதிகமான மூலதன பலத்துடனும் அளும் வர்க்க ஆசீர்வாதத்துடனும் அமெரிக்காவின் பின்புலத்துடனும் களமிறங்கும் வால்மார்ட்டால் விவசாயிகள் பலனடைவார்கள் என்று நம்புவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. சுதந்திரச் சந்தையின் கோட்டையான அமெரிக்காவில் விவசாயச் சந்தையை வால்மார்ட்டும் கேரிஃபோர் நிறுவனமுமே கைப்பற்றி வைத்துள்ளது. இந்நிறுவனங்கள் வளர்ந்த அதே வேகத்தில் அமெரிக்க விவசாயிகளின் எண்ணிக்கை படுபாதாளத்தில் விழுந்துள்ளது. இரண்டாயிரமாவது ஆண்டிலிருந்து எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்புகளில் விவசாயிகளைச் சேர்க்காமல் விடும் அளவுக்கு விவசாயிகள் விவசாயத்திலிருந்தே விரட்டப்பட்டுள்ளனர். ஐரோப்பாவிலோ ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு விவசாயி விவசாயத்திலிருந்து விரட்டப்படுகிறார்.

முதலாளித்துவ நாடுகளைப் பொருத்தவரை நவீன தொழில் நுட்ப உற்பத்தியில், பிரம்மாண்டமான அளவில்தான் விவசாயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் இந்நாடுகளில் 5 சதவீதம் மக்களே விவசாயிகளாக இருக்கின்றனர். தற்போது இந்த உடமை உறவு கூட ஒழிக்கப்பட்டு அந்த இடத்தில் பெரும் நிறுவனங்கள் விவசாயத்தை ஆக்கிரமித்து வருகின்றன.

ஆனால், ஆனந்த் சர்மா வால்மார்ட் தான் விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் இருக்கும் ஒரே கதி மோட்சம் என்பது போலச் சொல்கிறார். இதுவும் கூட அவராகச் சொல்லவில்லை. சென்ற நவம்பரில் இந்தியாவில் எழுந்தருளிய ஒபாமாவதார் இட்டுச் சென்ற முக்கியமான கட்டளைகளில் ஒன்று சில்லறை வணிகத்திலும் விவசாயத்துறையிலும் பன்னாட்டு மூலதனத்தை இந்தியா அனுமதிக்க வேண்டும் என்பதாகும்.

நவம்பரில் ஒபாமா வருகை – டிசம்பரில் வெங்காய விலையேற்றம் – அதே டிசம்பர் இறுதியில் வால்மார்ட்டை அனுமதிப்பதற்கான் காபினெட் சந்திப்பு. நிகழ்ச்சிப் போக்கு வரிசைக்கிரமமாக அமைந்துள்ளது தற்செயல் இல்லை அல்லவா?

அரசின் திட்டமிட்ட துரோகத்தனத்தால் ஓய்ந்து போன விவசாய உற்பத்தியினால் உயர்ந்து போயிருக்கும் விலைவாசியைக் காரணமாக்கிக் கொண்டு, கிடைக்கும் இடைவெளியில் பன்னாட்டுக் கம்பெனிகளை நுழைக்கும் நரித்தனத்தில் அரசு ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே விதைக்கும் உரத்திற்கும் பன்னாட்டு நிறுவனங்களின் முன் இந்திய விவசாயிகளை கையேந்த விட்டுள்ள அரசு, இப்போது விளைச்சலுக்கான விலைக்கும் அவர்களிடமே கையேந்தச் சொல்கிறது. கீழ்மட்ட அளவில் உணவுப் பொருள் உற்பத்தியைக் கைபற்றும் பன்னாட்டு நிறுவனங்கள், இன்னொரு பக்கம் உணவுப் பொருள் வினியோகச் சங்கிலியைக் கைப்பற்றுவதன் மூலம் நுகர்வுச சந்தையையும் கட்டுப்படுத்தும்  வெறியுடன் களமிறங்கியுள்ளன.

இயற்கையான காரணிகளையும் அதனோடு செயற்கையான காரணிகளையும் இணைத்து சந்தையில் விலைவாசிகளை தாறுமாறாக ஏற்றுவதும், அதனால் மக்கள் பீதியடைவதை சாதகமாக்கிக் கொண்டு ஒரு  பொதுக்கருத்தை உண்டாக்கி அதை தமக்குச் சாதமகாப் பயன்படுத்திக் கொள்வது இவர்களின் புதிய செயல்தந்திரம் அல்ல. சமீபத்தில் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள அமெரிக்க அரசின் இரகசிய ஆவணங்களில் இதே போன்ற உத்தியை உலகின் வேறு பாகங்களிலும் செயல்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.

2008ஆம் ஜனவரி மாதம் அமெரிக்கா மற்றும் ஸ்பெயின் வர்த்தகத் துறை அதிகாரிகள் மட்டத்தில் நிகழ்ந்த சந்திப்பு ஒன்றில், உணவுப் பொருட்களின் விலை உயர்வு, மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்களுக்கு நுகர்வோர் இடையே வரவேற்பைப் பெற்றுத் தரும் என்று விவாதிக்கப்பட்டுள்ளது. அதே ஆண்டு ஜூன் மாத வாக்கில் வரலாறு காணாத வகையில் உணவுப் பொருட்களின் விலைகள் ஏறியுள்ளது. முழு விபரம் அறிய – (<http://foodfreedom.wordpress.com/2010/12/14/leaked-cable-bubble-gmo-eu/>)

இப்போது நாடு சந்தித்துக் கொண்டிருக்கும் உணவுப் பொருள் விலைவாசி உயர்வை வழமையான  விலை ஏற்றம் என்பதாக மட்டும் சுருக்கிப் புரிந்து கொள்ளக் கூடாது. இது இந்நாட்டின் உணவுத் தன்னிறவை பன்னாட்டுக் கம்பெனிகளிடம் ஒப்படைக்கும் ஆளும் வர்க்கத்தின் துரோகத்தனமான தொடர் நிகழ்ச்சிப் போக்கின் ஒரு அங்கமாகவே புரிந்து கொள்ள வேண்டும். வெறுமனே விலைவாசி உயர்வுக்கெதிரான மனப்புழுக்கமாக மட்டும் அடங்கி விடாமல், விவசாயத்தை திட்டமிட்டு அழித்த அரசின் துரோகத்தனத்திற்கு எதிரான கோபமாகவும், அரசின் நேரடி ஆசீர்வாதத்துடன் மக்களைக் கவ்விப் பிடிக்க களமிறங்கியிருக்கும் ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டுக் கம்பெனிகளின் நயவஞ்சகத்தை எதிர்த்து முறியடிக்கும் போராட்டமாகவும் மலர வேண்டும்.

________________________________________________________

________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 

மீனவர்களுக்காக தமிழ் இணையத்தின் போர்க் குரல்! #tnfisherman

18

கொல்லப்படும் தமிழ் மீனவர்களுக்காக கடந்த சில நாட்களில் டிவிட்டர் நண்பர்கள் ஓயாது பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதன் மூலம் இருண்டு கிடந்த இந்திய ஊடகங்களின் கோட்டைக் கதவுகள் லேசாவாவது தட்டப்பட்டிருக்கின்றன. மீனவர் டிவிட்டுக்களுக்காகவும், கட்டுரைகளுக்காகவும் ஆங்கிலத்தில் http://www.savetnfisherman.org/ எனும் தளத்தையும், தமிழ் பதிவுகளுக்காக  http://savetnfisherman.blogspot.com/ ஆர்வலர்கள் சிலர் ஆரம்பித்திருக்கின்றனர். இந்திய அளவில் டிவிட்டரது பேசப்படும் விசயாமாக மீனவர் பிரச்சினை மாற்றப்பட்டிருப்பது ஒரு சாதனைதான். இது போக பதிவர்கள் பலரும் இது தொடர்பான கட்டுரைகளை சமீபத்திய நாட்களில் எழுதி வருகின்றனர்.

ஆனாலும் இந்த பிரச்சார யுத்தம் காரணமாக “நாம் பெரிதாக எதையும் சாதிக்க முடியவில்லையோ,” என்று சிலருக்கு தோன்றலாம். மீனவர் பிரச்சினையை நாம் கருதுவது போல பிற மாநிலத்தவர் கருதவில்லை என்பதற்கு வட இந்திய ஊடகங்களின் புறக்கணிப்பு ஒரு காரணம்தான். உலக ஊடகங்களில் இது செய்தியாக வரும்படி செய்வதற்கு நாம் இன்னும் நிறைய உழைக்க வேண்டியிருக்கும்.

ஏனெனில் உலக அளவில் பல நாடுகளில் பல போராட்டங்கள் நடந்த வண்ணம் இருக்கின்றன. நாம் மீனவர் பிரச்சினையை பேசிய நாட்களில் எகிப்தில் மாபெரும் மக்கள் போராட்டம் வெடித்துப் பரவி வருகிறது. உலக ஊடகங்களின் பார்வையில் இதுவே இப்போது மையம்.

இணையத்தில் நாம் மற்ற நாட்டவர், மாநிலத்தவர் பிரச்சினை குறித்து எந்த அளவுக்கு கவலைப்படுகிறோமோ, கருத்து ரீதியாக பங்கேற்கிறோமோ அந்த அளவுக்கு நமது பிரச்சினைகளையும் அவர்களது கவனத்திற்கு கொண்டு செல்ல முடியும். இந்தியாவிலேயே காஷ்மீர், தண்டகாரன்யா, வட கிழக்கு மாநிலங்களில் இருந்து வரும் அரசு ஒடுக்குமுறை குறித்து தமிழ் பதிவுலகம் அவ்வளவாக கவலைப்பட்டதில்லை. அதே போல உலக பிரச்சினைகள் குறித்தும் அப்படித்தான் பாராமுகமாக இருந்து வருகிறோம்.

இத்தகைய பிரச்சினைகளில் நாம் பங்கேற்று அந்த நாட்டு மக்களகுக்கு நமது ஆதரவை தெரிவிப்பதன் மூலமே அவர்களோடு நாமது நட்புறவை ஆரம்பிக்க முடியும். அதன் போக்கில் நமது பிரச்சினைகளை அவர்களது அக்கறைக்குரியதாக மாற்ற முடியும். மீனவர் பிரச்சினை குறித்த நமது முயற்சி இத்தகைய புரிதலுடன் விரிந்தால் அது ஆரோக்கியமான மாற்றத்தை, வெற்றியை நிச்சயமாக கொண்டுவரும்.

இங்கு வினவு சார்பில் போடப்பட்ட டிவிட்டுக்களை பதிவு செய்கிறோம். இந்த டிவிட்டுகளிலேயே இது மீனவர் பிரச்சினையோடு பல பிரச்சினைகளை இணைத்து பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் எழுதினோம். ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினை அனைத்தம் தேசம்,மொழி, மதம் கடந்து இணையும் போதுதான் இந்த உலகில் கேட்பாரின்றி தொடரும் அந்தீகளை வேரோடு அறுக்க முடியும்.

/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

முப்பது ஆண்டுகள், 500 மீனவர்கள், குருதியான வங்கக் கடல், தாகம் தீராத இலங்கை , ஆசீர்வதிக்கும் இந்தியா, முடிவு எப்போது? #tnfisherman

இலங்கையில் போர் முடிந்து விட்டது, ராமேஸ்வரத்தில் போர் முடியவில்லை, பிணங்கள் விழுவதும் தீரவில்லை, வெஞ்சினம் எப்போது? #tnfisherman

வட இந்தியாவின் காசி ஒரு புனித நகரம். தென்னிந்தியாவின் ராமேஸ்வரம் ஒரு கொலை நகரம். பக்தர்களுக்கு  இரத்த்தீர்த்தம் நிச்சயம் #tnfisherman

இராமேஸ்வரம் இராமநாதனுக்கு தினமும் மீனவர் ரத்த அபிஷோகம், காசி விசுவநாதனுக்கு பாலாபிஷேகம், இந்து  பக்தர்கள் அறிவார்களா? #tnfisherman

காசிக்கு போனா புண்ணியம் கிடைக்குமாம். இராமேஸ்வரம் வந்தா சுடுகாட்டு ஓலம் நிச்சயம். மீனவர் சுடுகாடு பராமரிப்பு இந்திய அரசு #tnfisherman

காசி முதல் ராமேஸ்வரம் பாரத ஒற்றுமையாம். செத்து விழும் மீனவனுக்கு உதவாத அந்த ஒட்டுமை – அழகா, அருவெறுப்பா, அலட்சியமா? #tnfisherman

அமர்நாத்துல 5லட்சம் பக்தர்களுக்கு 5லட்சம் இராணுவம் பாதுகாப்பு! இராமேஸவரத்துல ஐநூறு மீனவர்களப் செத்ததுக்கு யார் பொறுப்பு? #tnfisherman

அன்று ஈழத்தமிழர்களை கொன்றது இந்திய அமைதிப்படை. இன்று தமிழக மீனவர்களை கொல்லப்படுவதை வேடிக்கை பார்ப்பது கடலோரகாவல் படை! #tnfisherman

மாவோயிஸ்ட்டுகளை கொல்வதற்கு ஆபரேஷன் கிரீண்ஹண்ட்! மீனவர்கள் கொல்லப்படுவதை கண்டுக்காதே- இலங்கை இந்திய பிரண்ட் ஹண்ட்! #tnfisherman

தண்டகாரன்யா பழங்குடிகள் அகதிகளாக சாகிறார்கள்! தமிழக மீனவர்கள் அனாதைகளாக  சாகிறார்கள். வாழ்க இந்திய ஒற்றுமை! ஜெய் ஹிந்த்! #tnfisherman

எல்லை தாண்டுற மீனவரை கைது செய்யுது பாக் அரசு. எல்லை தாண்டுற தமிழ் மீனவரை கொல்லுது இலங்கை அரசு!  பதில் சொல் இந்தியஅரசு! #tnfisherman

காஷ்மீரில கல்லெறியும் சிறுவர்களை கொல்வது இந்திய அரசு! வங்க கடலில் மீன்படிக்கும் மீனவரை கொல்வது இலங்கை அரசு! #tnfisherman

காஷ்மீரை சுடுகாடாக்குனது இந்திய இராணுவம். வங்க்கடலை குருதிக்கடலாக்குனது இலங்கை கடற்படை! ஸ்ரீநகர் முதல் குமரி வரை ஓலம்! #tnfisherman

காஷ்மீருக்கு ஆசாதின்னு அருந்ததிராய் சொன்னா கைது செய்வான்! பாம்பனில் மீனவர் ஆயுதம் ஏந்துனா என்ன செய்வான்? #tnfisherman

சென்னையில் கடலோரகாவல் படை சாகசத்தை நாம் வேடிக்கை பாக்கலாம். வங்ககடலில் மீனவர் சடலத்தை அந்த வீரர்கள் வேடிக்கை பார்ப்பர்! #tnfisherman

வாஷிங்கடன்னுல ஒரு அமெரிக்கன் மாரடைப்பில் செத்தா அது உலக செய்தி! தமிழகத்தில் 500 மீனவர் செத்தா அது வெறும் புள்ளிவிவரம்! #tnfisherman

இங்கிலாந்து மன்னர் வரலாறு உலகம் முழுவதும் ஆஸ்கரில்! கொல்லப்படும் தமிழ் மீனவர்களின் வரலாறு உசிலம்பட்டி தினத்தந்தியில்! #tnfisherman

ஈராக்குல பத்துலட்சம் மக்களை கொன்றது அமெரிக்க படை! தமிழகத்தில் 500 மீனவர்களை கொன்றது இலங்கை படை! பெருசுக்கேத்த சிறுசு! #tnfisherman

ஆபாகானில் ராக்கட் மூலம் மக்களைக் கொல்லது அமெரிக்கா! வங்க்கடலில் வெறும் கயித்தை போட்டு மீனவர்களை கொல்லது இலங்கை! #tnfisherman

அமெரிக்கா உலக ரவுடி, இந்தியா பிராந்திய ரவுடி, இலங்கை லோக்கல் ரவுடி! ரவுடிகளின் கூட்டணிக்கு வேட்டு வைப்பது எப்போது? #tnfisherman

தமிழக மீனவர்களுக்கு அடையாள அட்டை தரப்படுமாம்-ப.சிதம்பரம்! அட்டை இருக்கா இல்லேங்குறதா பிரச்சினை மிஸ்டர் செட்டிநாடு! #tnfisherman

கொல்லப்படும் மீனவர்களுக்கு, கொல்லும் இலங்கைக்கு, வேடிக்கை பார்க்கும் இந்தியாவுக்கு – அடையாளமில்லையா? மிஸ்டர் செட்டிநாடு? #tnfisherman

தப்பு செய்யுற மீனவர்கள கொல்லக்கூடாதாம், கைது செய்யணுமாம்-பிரணாப் முகர்ஜி. எங்க மீனவர்கள் என்ன சாராயமா காய்ச்சுராங்க? #tnfisherman

எல்லை தாண்டிபோறதுனாலாதான் இந்த பிரச்சினையாம்-இந்தியன் நேவி. மீன்பிடிக்கிற மீனவருக்கு எல்லை எப்படி தெரியும் முட்டாள் நேவி? #tnfisherman

கல்லுளிமங்கள் மன்மோகன்சிங் வைகோவ பாத்துட்டு மீனவர் பிரச்சினை குறித்து பாக்கலாம்னு சொன்னாராம். இதுவே அம்பானின்னா குதிப்பியே? #tnfisherman

பங்கு சந்தையின் சரிவோ, உயர்வோ ஊடகங்களின் முதன்மை செய்தியில். மீனவர்களின் கொலையோ ஊடகங்களின் மூலைச் செய்தியில். #tnfisherman

நக்சலைட்டுகளை ஒழிக்க போலீசுக்கு ஏ.கே 47னாம். மீனவரை ஒழிப்பதற்கு இந்திய அரசு ஏற்பாடு செய்திருப்பது இலங்கை கப்பற் படையை! #tnfisherman

புதுவை பல்கலை வழங்கும் டாக்டர் பட்டம் டெண்டுல்கருக்கு! இந்திய இலங்கை கூட்டணியின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் மீனவருக்கு! #tnfisherman

ரேஷன் கடையில  ஒரு ரூபாய் அரிசிக்கு மானியம் வழங்கும் இந்திய அரசு, வங்க கடலில் மீனவர் உயிர் பறிக்க இலங்கைக்கும் மானியம்! #tnfisherman

சிவசங்கர் மேனன் சென்று வந்ததும் ஈழத்தில் முள்ளிவாய்க்கால்! நிரூபமாராவ் போய் வந்தால் வங்கவிரிகுடாவில் மரணவாய்க்கால்! #tnfisherman

ராமன் பாலம் கட்டுனான்ற புளுகு மூட்டைக்கு சேது திட்டத்தை நிறுத்துன உச்சிகுடுமி மன்றம் 500 மீனவர்களுக்கு என்ன பிடுங்கியது? #tnfisherman

நிரூபமா விஜயம்! கொன்னவன்கிட்ட கூட இருந்து உதவுனவன் போய் நல்லா கொல்லுன்னு சொல்லுற விஜயம்! நல்லாத்தான் ஏமாத்துறான் நிஜம்! #tnfisherman

நிரூபமா விஜயம்! கொலைகார ராஜபக்சேவுக்கு உதவும் இந்தியாவுக்கு அங்கீகரிக்கும் உலகத்துக்கு ஒரு நாடக விஜயம்! #tnfisherman

ரஜினி எந்திரனுக்கு பீராபிஷேகம் செய்த ரசிகனே, எம் மீனவர் இரத்தம் சிந்தியபோது உன் சூப்பர்ஸ்டார் எங்கே, சரக்கு அடிக்கிறானோ! #tnfisherman

காவலன் படம் ரீலீசாகவில்லை என்று பொங்கிய இளையதளபதி நம் மீனவர் வீழும்போது அடுத்த பட ஷூட்டிங்கில் பொங்குகிறாரா? #tnfisherman

சீதையை இராவணன் தூக்கியதாக இராமன் தொடுத்தான் யுத்தம். 500 மீனவர் செத்தாலும் இங்கே ஒன்றுமேயில்லை என வெறும் நிசப்தம்! #tnfisherman

ஸ்ரீநகருல கொடி ஏத்த துடிச்ச குரங்கு கூட்டம், சேது திட்டத்தை நிறுத்துன வானரக் கூட்டம் மீனவர் சாகும் போது நல்லா நாடகமாடும் #tnfisherman

தமிழக மீனவர்கள் நடுக்கடலில் பலி என்று கொன்னவனை மறைத்து செய்தி போடும் இந்துராம்- லங்காரத்னாராம்- வெட்கம் கெட்டவராம்! #tnfisherman

ராஜபக்சேக்கு இருமல்னா இந்துராம் தும்முவாறு! இலங்கைக்கு பிரச்சினைன்னா இந்து பத்திரிகை பொங்கிஎழும்! இது இந்திய இலங்கை கூட்டு #tnfisherman

மீனவர் செத்தா கருணாநிதிக்கு தந்தி செலவு, ஜெயாவுக்கு அறிக்கை செலவு, வைகோவுக்கு ‘உணர்ச்சி’ செலவு, மன்மோகனுக்கு மவுனமே செலவு #tnfisherman

செத்து விழும் மீனவரை காப்பாற்றவோ, தடுக்கவோ  வக்கில்லாத இந்திய அரசுக்கு, ஐ.நா சபையில் வல்லரசு தகுதி ஒரு கேடா? #tnfisherman

இயற்கை தாயின் பேராற்றலோடு, கடலில் போராடும் அந்த உழைப்பாளிகள், சுட்டுக் கொல்லப்படுவதை நிறுத்தாமல் இது என்ன ஜனநாயகநாடு? #tnfisherman

காஷ்மீரை விடமாட்டோமென கொக்கரிக்கும் தேசபக்த குஞ்சுகளே, எம் மீனவரை காப்பாற்றாத இந்தியாவில் நாங்கள் ஏன் இருக்க வேண்டும்? #tnfisherman

இலங்கையில் மிட்டலின் ஏர்டெல் கம்பெனிக்கு ராஜ உபசரிப்பு! அதனால் மீனவரை கொல்லும் இலங்கை அரசுக்கு இந்திய அரசு ராஜ உபசரிப்பு #tnfisherman

இந்திய முதலாளிகளின் இலங்கை சந்தைக்காக, தமிழக மீனவர்கள் இலங்கை படையால் கொல்லபடுவது இங்கே பாராமுகமாக இருக்கிறது! #tnfisherman

____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

மீனவர்கள் சடலங்களுக்கு ஏன் உயிர் வருகிறது? #tnfisherman

கச்சத்தீவு : அனாதைகளாய் தமிழக மீனவர்கள்! – சிறப்புக் கட்டுரை!

ஜெயக்குமார்: இந்திய ஆசியோடு சிங்களக் கடற்படையின் நரபலி!

மீனவர்கள் சடலங்களுக்கு ஏன் உயிர் வருகிறது? #tnfisherman

34

மீனவர் படுகொலைக்களுக்கு எதிராக ட்விட்டரில் நடைபெறும் இயக்கத்தின் ஆதரவு தளம் http://www.savetnfisherman.org/

இதுவரை இலங்கை கடற்படையால் ஐநூற்றுக்கும் மேற்பட்ட இராமேஸ்வரம் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஒரு நாளும் இல்லாத திருநாளாக ஜெயலலிதா ஓடோடிப் போய் ஒரு இலட்சம் ரூபாய் பணம் கொடுத்ததோடு, கொல்லப்பட்ட மீனவர் குழந்தைகளின் படிப்புச் செலவை அதிமுக ஏற்கும் என்று அறிவித்த கையோடு, வருகிற தேர்தலில் தனக்கு வாக்களிக்குமாறு கோரிக்கை வைக்கிறார்.

இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத கருணாநிதியோ “1991-96-ஆம் ஆண்டுகளில் ஜெயலலிதா ஆட்சி நடைபெற்ற போது 38 மீனவர்கள் கொல்லப்பட்டார்கள். 2001-2011 வரை 17 மீனவர்கள் கொல்லப்பட்டார்கள்.” என்று வழக்கமான பாணியில் பழியை புள்ளிவிவரங்களின் மீது போட்டு விட்டு லாவணி பாடுகிறார்.

மேலும் வேதாரண்யம் மீனவர் ஜெயக்குமார் மறைந்த செய்தி கேள்வியுற்றதும், அவரது உடல் அடக்கம் செய்வதற்கு முன்பாகவே தமிழக அரசின் சார்பில் ரூ.5 லட்சம் தந்து மீனவர்களின் கோபத்தை தணிப்பதற்கு சாணக்கியத்தனமாக முயன்றார். மட்டுமல்லாது, அவரது மனைவி முருகேஸ்வரிக்கு சத்துணவு உதவி அமைப்பாளர் பதவிக்கான பணி நியமன உத்தரவும் தந்து தன்னை கருணை வள்ளலாக காட்டிக் கொண்டார். ஆகவே மீனவ மக்களிடம் ஓட்டு கேட்கும் உரிமை எனக்கு மட்டுமே உண்டு என்று ஆபாச அரசியல் செய்கிறார் கருணாநிதி.

இந்திய வெளியுறவுத்துறை செயலர் நிருபமா ராவ் வருகிற சனிக்கிழமை(29.1.2011) இலங்கை செல்கிறாராம். அவர் மீனவர் கொலைகள் குறித்து ராஜபட்சேவிடம் பேசுவாராம். ஆமாம் நாமும் நம்புவோம், பிரணாப் முகர்ஜியும், சிவசங்கரமேனனும் இலங்கை சென்று வந்த பின்னர் தமிழ் மக்கள் அங்கே கொல்லப்படாமல் பாதுகாக்கப்பட்டது மாதிரி நிருபமாவின் பயணத்தின் பின்னர் இராமேஸ்வரம் மீனவர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்று நம்புவோம்.

இதோ 6-ஆம் தேதி வைகோ உண்ணாவிரதம் அறிவித்து விட்டார், சரத்குமார் போராடக் கிளம்பிவிட்டார். இனி போராட்டங்கள் ஒரு சடங்கைப் போல நடத்தப்படும். கருணாநிதிக்கு எதிரான ஒரு தேர்தல் அஸ்திரமாக மீனவர் விவாகாரம் மாற்றப்படுவதை எதிர்கொள்ள கருணாநிதியும் ஒரு அரை மணி நேர உண்ணாவிரத்தை துவங்கினாலும் துவங்கி விடுவார் போலிருக்கிறது. அதன் முன்னோட்டமாக மீனவ சமூகத்திலிருந்து பொது உடமை இயக்கத்திற்கு வந்த சிங்காரவேலரின் 151 நினைவு நாளை அரசு விழாவாகாக் கொண்டாடுவோம் என்று அறிவித்ததோடு. மீனவர்களுக்காக தான் நிறைவேற்றிய திட்டங்களையும் பட்டியலிட்டிருக்கிறார் கருணாநிதி.

தேர்தல், ஓட்டு, என்று வந்து விட்டாலே கொலை செய்யப்பட்ட மீனவர் பிணங்களுக்கு உயிர் வந்து விடுகிறது. தேவைப்படும் போது மீனவனைப் பிணமாக்கவும், பிணமாக்கிய மீனவனுக்கு உயிர்கொடுக்கும் விதத்தையையும் கற்று வைத்திருக்கிறார்கள் கருணாவும் ஜெயலலிதாவும். தேர்தல் வாக்குச் சீட்டுகளை நம்பி பிழைப்பை ஓட்டும் அரசியல்வாதிகள் இதன்றி வேறு என்ன நினைப்பார்கள்?

ஜே என்றால் “இப்போது நான் எதிர்கட்சி ஆகவே இப்போது எத்தனை பேரை வேண்டுமென்றாலும் சுடு. அது எனக்கு ஆதாயமாக முடியும். நான் ஆட்சிக்கு வந்தவுடன் சுடாதே.” கருணாநிதியோ “இப்போது வேண்டாம், ஏனென்றால் நானும் ஆளும் கட்சி, நாளை அம்மா ஆட்சிக்கு வந்தவுடன் சுட்டுத் தள்ளு”. இதுதான் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் மீனவர் பிணங்கள்மீது நடத்தும் விளையாட்டு.

இந்த அரசியல்வாதிகளின் மோசடி நாடகங்களில் இருந்தோ இந்தியா போன்ற விஸ்தரிப்பு எண்ணம் கொண்ட அரசிடம் இருந்தோ தமிழ் தேசியவாதிகள் எந்த பாடங்களையும் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. சமீபத்தில் இந்தியப் பிரதமர் மன்மோகனைச் சந்தித்த வைகோ “சீனாவும், பாகிஸ்தானும் இலங்கையை ஒரு தளமாகப் பயன்படுத்தி இந்தியாவைத் தாக்கும். ஆகவே இந்திய அரசு ஈழ மக்களுக்கும் தமிழக மக்களுக்கும் நண்பனாக இருக்க வேண்டும்” என்று கேட்டிருக்கிறார்.

பெரும்பலான இலக்கியவாதிகள், தமிழ் தேசியவாதிகள், திராவிட இயக்க ஆர்வலர்களின் கருத்துமே இப்படித்தான் அடிமுட்டாள்தனமாக இருக்கிறது. இவர்கள் அரசு ஒடுக்குமுறையை, கட்சி ஒடுக்குமுறையாக சித்தரிப்பதன் மூலம் “இந்தியா நல்ல நாடுதான், அதை ஆள்வோர்கள்தான் சரியில்லை”, என்கிறார்கள். காங்கிரசை ஒழித்துக் கட்டுவோம் என்ற கோஷமும் இதிலிருந்தே பிறக்கிறது. உண்மையில் ஒழிக்கப்பட வேண்டியது இந்திய அரசும் அதைத் தாங்கி நிற்கும் தரகு முதலாளி வர்க்கமுமே. அந்த பெருமுதலாளி வர்க்கங்களின் நலனை முன்னெடுப்பவர்கள்தான் காங்கிரஸ், பிஜேபி, திமுக, அதிமுக உள்ளிட்ட அனைவருமே.

விஸ்தரிப்பு எண்ணம் கொண்ட ஒரு அரசின் பிரதிநிதிகளாக இருக்கும் இவர்கள் அரசு என்னும் ஆக்ரமிப்பு இயந்திரத்தை எதிர்க்காமல் தங்களைப் பாதுகாத்துக் கொண்டே அதை லாவகமாக கட்சி சார்ந்து திருப்பி தேர்தல் ஆதாயமாக மாற்ற நினைக்கிறார்கள். ஈழப்படுகொலைகள், விவசாயிகள் தற்கொலை, வறுமை, வேலையிழப்பு, மீனவர் படுகொலை என எல்லா மக்கள் பிரச்சனைகளுக்கும் அடிப்படையாக இருப்பது இந்த அரசு-ஆளும் வர்க்கங்களின் கட்டுமானம்தான் காரண்ம். அதுவல்லாமல் காங்கிரஸ் போய் பிஜேபி வந்தவுடன் “நாம் கனவு காணும் ஈழம் அமைந்து விடும்” என நினைப்பது எவளவு அபத்தம். அல்லது “பிஜேபி வந்தாலும் ஈழம் அமையாது என்பது எங்களுக்குத் தெரியும் ஆனாலும் ஆதரிக்கிறோம்” என்றால் அது எவளவு அயோக்கியத் தனம்.

தற்போது டிவிட்டரில் தமிழக மீனவர் பிரச்சினைக்கு பா.ஜ.க கட்சியும் ஆதரவு தெரிவித்திருக்கும் அபத்தத்தை என்னவென்று சொல்ல? இவர்கள் ஆட்சிக்காலத்தில் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அப்போது இந்த பா.ஜ.க கட்சி என்ன செய்தது?

இலங்கை தனது உள்நாட்டுப் போரை முடித்து விட்டு இராமேஸ்வரம் போரைத் துவங்கியிருக்கிறது. இந்தக் கொலைகளை இந்தியா ஊக்கப்படுத்துமே தவிர தட்டிக் கேட்காது என்பது இலங்கை அரசுக்குத் தெரியும். தமிழக அரசியல்வாதிகள் கோமாளிகள் என்பதும் இலங்கைக்குத் தெரியும். ஆக இக்கொலைகளை நியாயப்படுத்த தொடர்ந்து இலங்கை ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறது. அது எல்லை தாண்டுதல். இந்த வார்த்தையை இலங்கை மட்டும் சொல்லவில்லை. இந்தியாவும் சொல்கிறது.

சென்ற ஆண்டு மீனவர் செல்லப்பன் கொல்லப்பட்ட போது நாடாளுமன்றத்தில் தமிழக உறுப்பினர்கள்
எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இந்திய வெளிவிகாரத்துறை அமைச்சர், “இலங்கை கடல் பகுதிக்குள் எல்லைமீறி நுழையும் தமிழக மீனவர்களை பாதுகாக்க முடியாது. சர்வதேச கடல் எல்லை விதிமுறையை மதித்து இந்திய பகுதிக்குள் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாகவுள்ளது. இதில் மாற்றுக்கருத்து இல்லை” என்றார்.
அதேசமயம் “சர்வதேச கடல் எல்லை விதிமுறையை மீறி அண்டை நாட்டு கடல் பகுதிக்குள் நுழைந்து மீனவர்கள் மீன்பிடிக்க முயன்றால் அது கண்டிக்கத்தக்கது .” என்றும் திமிராகப் பதிலளித்தார் எஸ்.எம் கிருஷ்ணா.

மராட்டியம், குஜராத், போன்ற மாநிலங்களில் உள்ள மீனவர்கள் எல்லை தாண்டி பாகிஸ்தான் கடலுக்குள் சென்றால் பாகிஸ்தான் சுட்டுக் கொல்லாமல் பத்திரமாக அவர்களை திருப்பி அனுப்புகிறது. அரபு நாடுகளில் எல்லை தாண்டுதல் என்பது மிக சாதாரணமான விஷயம். காற்றின் போக்கு, கடல் நீரோட்டம், இரவு, இயற்க்கைச் சீற்றம், என ஒரு மீனவன் எல்லை தாண்ட எவ்வளவோ காரணங்கள் இருக்கின்றன.

இதுவல்லாமல் சர்வதேச கடல் எல்லையை வகுத்துள்ளவர்கள். இது சர்வதேச கடல் எல்லை என்று அடையாளக் குறிகளையோ, ஒளிரும் மிதவைகளையோ கடலில் மிதக்க விடுவதில்லை. அதிலும் இலங்கையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பும் இந்தியா இன்று வரை தனது தெற்கு எல்லையை மர்மமான முறையிலேயே வைத்துள்ளது.

2008- இல் இலங்கை அரசோடு இந்தியா செய்து கொண்ட இராணுவ ஒப்பந்தத்தின் கீழ் கடல் எல்லை குறித்த அம்சங்களும் உண்டு. இரு நாடுகளுக்குமிடையில் இன்று வரை மன்னார் வளைகுடா கடல் எல்லை தொடர்பான தீர்க்கமான முடிவுகள் இல்லை.

2009 ஜனவரியில் தங்கள் நாட்டு கடல் எல்லை தொடர்பாக பாராளுமன்றத்தில் பேசிய தினேஸ் குணவர்த்தன “சிறிலங்காவின் வடகடல் வலயத்தில் கடற்கரையிலிருந்து 200 கடல் மைல் தூரம் எமது நாட்டுக்கு சொந்தமானதாகும். இதில் பருத்தித்துறையிலிருந்து கிழக்காக 16 கடல் மைலும், காங்கேசன்துறையிலிருந்து கிழக்காக 15 கடல் மைலும், திருகோணமலையிலிருந்து கிழக்காக 122 கடல் மைலும் முல்லைத்தீவிலிருந்து கிழக்காக 28 கடல் மைலும் உள்ளடங்குகின்றது. இவ்வடிப்படையில் இக்கடல் வலயத்தை இலங்கைக் கடற்படையினர் பாதுகாத்து வருகின்றனர். அத்துமீறி இலங்கையின் கடல் எல்லைக்குள் மீன் பிடித்த இந்திய மீனவர்களின் 66 படகுகள் கடற்படையினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளன.”

தினேஸ் குணரத்னாவின் இந்தக் கருத்தின்படி இராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குள் கூட இறங்க முடியாது. கட்டுமரத்தை கடலில் செலுத்தி பாய்மரத்தை மடக்கி மீன் பிடிக்க துவங்க வேண்டும் என்றால் கூட ஆழிக்கடலுக்கு அப்பால் சென்றாக வேண்டும் என்ற நிலையில் தினேஸ் சொல்லும் எல்லைக் கோடு நமது அலைவாய்க்கரை வரை வந்து விடுகிறது.

கடற்கரை மேலாண்மைச் சட்டம்

மீனவர் கொலை என்னும் கொடூரத்தை வெறும் இலங்கை அரசின் இனவாத நடவடிக்கையாக மட்டுமே பார்க்க முடியாது. பன்னாட்டு நிறுவனங்களின் சூறையாடலும் நமது பாரம்பரிய கடற்கரையை கடற்கரை மேலாண்மைச் சட்டம் என்னும் நில அபகரிப்புச் சட்டத்தின் மூலம் கடலோரங்களையும் கடலையும் தனியாருக்குத் தாரை வார்க்கும் ஏக போக பன்னாட்டுச் சுரண்டலின் ஒரு அங்கமாகவும் பார்க்க வேண்டும்.

இலங்கைக்கு ஒரு நோக்கமும் இந்தியாவுக்கு ஒரு நோக்கமும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஒரு நோக்கமும் இருக்க முடியாது. ஒரே நோக்கம்தான் கடல், நிலம், மீன் வளம் யாவும் எங்களுக்கே உரியது என்பதுதான் அவர்களின் நோக்கம்.

அந்த நோக்கத்தின் இடையூறாக மீனவன் இருப்பதும், இலங்கையில் ஒடுக்கப்படும் தமிழ் மக்களின் போராட்டத்திற்கான வலதுகரமாக இந்த மக்கள் விளங்கினார்கள் என்பதுமே இக்கொலைகளுக்குக் காரணம். ஆனால் ஒன்று மட்டும் உண்மை. தேர்தல் அமைப்பாலோ, ஓட்டுச் சீட்டுக்கட்சிகளாலோ இனி இந்த மக்களைக் காப்பாற்ற முடியாது.

பன்னாட்டு நிறுவனங்களையும், இந்நாட்டு முதலாளிகளையும் இவர்களை தாங்கிப்பிடிக்கும் அரசு, அரசியல் கட்சிகளையும் எதிர்த்து இந்திய மக்கள் நடத்தும் விடுதலைப் போரே மீனவர்களது படுகொலையையும் தடுத்து நிறுத்தும். அத்தகைய அரசியல் எழுச்சியை எழுப்புவதற்கு நாம் நம்மை அர்ப்பணித்துக் கொள்வதே இந்த மீனவர் படுகொலைக்கு செய்யப்படும் அஞ்சலியாக இருக்கும்.
____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

கச்சத்தீவு : அனாதைகளாய் தமிழக மீனவர்கள்! – சிறப்புக் கட்டுரை!

ஜெயக்குமார்: இந்திய ஆசியோடு சிங்களக் கடற்படையின் நரபலி!

 

The King’s Speech: ஆஸ்கர் விருதின் மற்றுமொரு அற்பத்தனம்!

23
The King’s Speech: ஆஸ்கர் விருதின் மற்றுமொரு அற்பத்தனம்!

The King’s Speech: ஆஸ்கர் விருதின் மற்றுமொரு அற்பத்தனம்!

திவுலகிலும் பத்திரிகையுலகிலும் அதிகம் புழங்கும் வார்த்தைகளுள் ஒன்று ராயல் சல்யூட்! செயற்கரிய செயலை போற்றுவதற்கு மக்கள் இந்த வணக்கத்தை பயன்படுத்துகின்றனர். இதை விட்டால் ராயல் சல்யூட் பெயரில் ஒரு புகழ் பெற்ற மதுபானக் கம்பெனி ஸ்காட்லாந்தில் இருக்கிறது. சரக்குகளெல்லாம் பத்தாயிரம் ரூபாய்க்கு மேற்பட்டவை. ராயல் சரக்குகள் என்றால் அதன் அதி உயர் தரத்தை குறிக்கிறதாம். 21 பீரங்கி குண்டுகளால் வணக்கம் செலுத்தும் முறை கூட இங்கிலாந்தில் உருவானதுதான். அதையும் ராயல் சல்யூட் என்று அழைக்கிறார்கள்.

ராயல் என்ற வார்த்தை பொதுவில் மன்னர் குடும்பத்தினரை அடையாளம் காட்டுவதற்கு பயன்படுத்தப்படுகிறது. அதிலும் இங்கிலாந்து அரச பரம்பரையினர்தான் இந்த வார்த்தையால் அதிகம் சுட்டப்படுகின்றனர். ஐரோப்பாவில் பல மன்னராட்சி குடும்பங்கள் பல நாடுகளில் இருந்தாலும், நமது குடியரசு தலைவர் போல அதிகாரத்தை கொண்டவர்களாக அவர்கள் பவனி வந்தாலும், நம்மை போன்ற ஆங்கிலேயர்களின் காலனி நாடுகளாக இருந்தவர்களுக்கு, இங்கிலாந்தின் அரசர் குடும்பம்தான் அதிகம் தெரிந்திருக்கும். நமக்கு மட்டுமல்ல உலக அளவில் கூட இந்த அரசர் குடும்பம்தான் புகழ் பெற்றவர்கள். என்ன இருந்தாலும் உலகின் கால்பங்கை ஒரு காலத்தில் ஆண்டவர்களில்லையா?

உலக செய்திகளில் இங்கிலாந்தின் அரசர் குடும்பத்து செய்திகள், அவர்களது திருமணம், படிப்பு, கேளிக்கை, அரசு சார் விஜயங்கள், விழாக்கள், கிசுகிசுக்கள் அதிகம் வந்தே தீரும். இன்று அரசியாக இருக்கும் வயதான மூதாட்டி இரண்டாம் எலிசபெத் அடுத்த வருடத்தில் (1952இல் அரசியானவர்) டையமண்ட் ஜூப்லியைக் (60 வருடங்கள்) கொண்டாட இருக்கிறார். இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளை உள்ளடக்கிய 16 நாடுகளுக்கு அரசியாக இருக்கும் இவர், இந்தியா, இலங்கை உட்பட ஆங்கிலேயர் ஆட்சி செய்த 54 நாடுகளின் அமைப்பான காமன்வெல்த்துக்கும் தலைவராகவும் இருக்கிறார். கூடுதலாக இங்கிலாந்து நாடு முழுமைக்குமான கிறித்தவ சர்ச் அமைப்பின் தலைவரும் கூட.

ஏகப்பட்ட அரசு மானியங்கள், சொத்து மூலம் ஒரு பன்னாட்டு நிறுவனம் போல செல்வத்துடன் வாழும் இந்த அரசிக் குடும்பம் இன்றும் செல்வாக்குடன் நீடிப்பதற்கு காரணம்? மேற்கத்திய முதலாளித்துவ ஜனநாயகத்தின் கொடுமையிலிருந்து மக்களை மீட்பதற்கு, 19ஆம் நூற்றாண்டில் தொழிலாளி வர்க்கம் எழுச்சி கொள்ள ஆரம்பித்ததும், முதலாளிகள் தமது நிலபிரபுத்துவ எதிர்ப்பை மாற்றிக் கொண்டனர். நாட்டு மக்களை மதம், அரசர், தேசபக்தி,மரபு என்று அடிமைப்படுத்தவதற்கு இந்த அரச குடும்பங்கள் பிழைத்திருப்பதை அவர்கள் விரும்பினர். நேபாள் போன்ற ஏழை நாடுகளெல்லாம் இன்று மன்னராட்சியை தூக்கி எறிந்தாலும் ஐரோப்பிய நாடுகளில் அந்த வம்சம் தொடர்வதற்கு காரணம் இதுதான்.

இந்த மன்னராட்சியின் மகத்துவங்கள் இப்போது எதற்கு?

அதற்கு நீங்கள் சமீபத்தில் வெளிவந்திருக்கும் “தி கிங்ஸ் ஸ்பீச்” எனும் ஆங்கிலப் படத்தை பார்க்க வேண்டும். ஆயினும் அந்த மரண மொக்கையை நீங்கள் பார்க்காமல் இருப்பது சாலச் சிறந்தது. இந்தப்படம் தற்போதைய ஆஸ்கர் விருதுக்கான போட்டியின் 12 பிரிவுகளில் பரிந்துரைக்கப்படும் சிறப்பினை பெற்றிருக்கிறது. சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த துணை நடிகர், சிறந்த திரைக்கதை ஆசிரியர் முதலான பிரிவுகளில் போட்டியிடும் ‘பெருமையை’ அந்தப் படம் எப்படி அடைந்தது?

ஆஸ்கருக்கு போட்டியிடும் படம், அதுவும் பன்னிரண்டு பிரிவுகளில் போட்டியிடும் படமென்றதும் உங்களுக்கு ஒரு ஆவல் பிறக்கும். அந்தப் படம் ஏதோ ஒருவகையில் சிறப்பாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் உங்களுக்கு ஆஸ்கர் எனும் அபத்தத்தின் அரசியல் புரியவில்லை என்று பொருள். அல்லது ஒபாமாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்ட பிறகாவது நீங்கள் நோபலின் அரசியலை புரிந்து கொண்டீர்கள் என்றால் அந்த விதி இந்த படத்திற்கும் அதனால் ஆஸ்கர் விருதிற்கும் பொருந்தும். எனினும் இந்த மரண மொக்கையை நீங்கள் பார்க்காதிருக்க வேண்டுமென மீண்டும் எச்சரிக்கை செய்து உதவும் பொருட்டு அந்த படத்தின் கதை சுருக்கத்தை தருகிறோம்.

______________________________________________________

1925ஆம் ஆண்டு. ஐந்தாம் ஜார்ஜ் மன்னராக இருக்கிறார். அன்று இங்கிலாந்தின் வெம்பிளி மைதானத்தில் நடக்கும் பேரரசர் கண்காட்சியின் இறுதி நாள். அரசரின் மகன் இளவரசர் ஆல்பர்ட் தனது மனைவி எலிசபெத்துடன் அங்கே உரையாற்ற செல்கிறார். அந்த உரையை பி.பி.சி நிறுவனம் முதன் முறையாக உலகம் முழுவதும் நேரடி ஒலிபரப்பு செய்கிறது. ஆயிரக்கணக்கானோர் குழுமியிருக்கும் அந்த மைதானத்தில் இளவரசரால் சரளமாக பேச முடியவில்லை. ஆம். அவர் ஒரு திக்கு வாய் மனிதர்.

அரச குடும்பத்தில் பிறந்து விட்டு இது போன் குறையுடன் இருப்பது மிகவும் பிரச்சினையான ஒன்று. குடிமக்கள் முன் ஒரு கனவானைப் போல நடந்து கொள்ளும் நடிப்பு அவர்களுக்கு அத்தியாவசியமான ஒன்று. உடல்மொழி, வாய்மொழி தொடங்கி பல்வேறு பிரயத்தனங்களை ஒழுங்காக செய்தவன் மூலமே அவர்கள் அரசர்களாக காட்சியளிக்கிறார்கள். எனில் இளவரசர்  ஆல்பர்ட்டின் மனப்போராட்டத்தை நாம் புரிந்து  கொள்ள முடியும்.

அதற்காக அவர் பல முயற்சிகளை செய்கிறார். மருத்தவர் ஒருவர் ஆல்பர்ட்டிடம் புகை பிடிக்குமாறும், அதன் மூலம் இறுக்கத்தை களையலாம் என்கிறார். வாயில் பவளங்களை அடைத்துவிட்டு பேசுமாறும் கூறுகிறார். பலனற்ற இந்த வழிமுறைகளிலால் இளவரசரின் எரிச்சல்தான் அதிகமாகிறது. இறுதியில் அவரது மனைவி வரிவிளம்பரத்தின் மூலம் ஒரு பேச்சு பயிற்சி அளிக்கும் நிபுணரை சந்திக்கிறார். அவர் மூலம் இளவரசருக்கு பேச்சு பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஆஸ்திரேலியரான அந்த பேச்சு நிபுணர் முறைப்படி படித்து அந்த தொழில் செய்பவரல்ல. ஆயினும் புதுமையான வழிமுறைகளால் அவர் இளவரசரது திக்குவாயை சரி செய்ய முயல்கிறார். ஆரம்பத்தில் இளவரசருக்கு இதில் நம்பிக்கை இல்லை என்றாலும் பின்னர் ஆர்வத்துடன் எல்லா வகை பயிற்சிகளையும் செய்கிறார்.

இடையில் இளவரசரது தந்தை ஐந்தாம் ஜார்ஜ் மண்டையைப் போடுகிறார். மன்னரின் மூத்த மகன் எட்வர்டு மன்னராக வரவேண்டும். ஆனால் அவர் இருமுறை மணமாகி விவாகரத்து பெற்ற ஒரு அமெரிக்க சீமாட்டியை திருமணம் செய்ய விரும்புகிறார். நாட்டின் மதத்திற்கும் தலைவராக உள்ள மன்னர் விவாகரத்து பெற்ற ஒரு பெண்ணை மறுமணம் செய்யக்கூடாது. எனவே அவர் மன்னர் பதவியை மறுக்கிறார். வேறு வழியின்றி திக்குவாய் பேச்சால் அவதிப்படும் ஆல்பர்ட் மன்னராகி ஆறாம் ஜார்ஜ் என்று அழைக்கப்படுகிறார்.

இதற்குள் பேச்சு பயிற்சி நிபுணரும் ஆறாம் ஜார்ஜும் நண்பராகிறார்கள். நிபுணர் தனது தொடர் முயற்சியால் மன்னரது திக்குவாய் பிரச்சினைக்கு காரணமான சிறு வயது மன அழுத்தங்களை கண்டுபிடிக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக பேச்சு திறனையும் கொண்டு வருகிறார். இறுதியில் 1939ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் வருகிறது. ஹிட்லரின் ஜெர்மனியை எதிர்த்து இங்கிலாந்து போரிட தயாராகிறது. அதற்காக ஆறாம் ஜார்ஜ் ஒரு மூன்று பக்க உரையை வானொலியில் ஆற்ற வேண்டும்.

பேச்சு நிபுணரது ஆலோசனையின் பேரில் மன்னர் ஒரு தனியறையில் நிபுணருடன் ஒலிவாங்கியில் பேசுகிறார். வெளியே மதத்தலைவர்கள், பிரதமர் சர்ச்சில் உள்ளிட்ட அரசியல்வாதிகள் காத்திருக்கின்றனர். பி.பி.சி மூலம் உலகம் முழுவதும் பேச்சு ஒலிபரப்பப்படுகிறது. மன்னர் ஆரம்பத்தில் தயங்கினாலும் நிபுணரது இயக்கம், ஊக்கம் காரணமாக பின்னர் சரளமாக பேசுகிறார். முடிந்ததும் அனைவரும் கை தட்டி மகிழ்கின்றனர். மன்னரை வாழ்த்துகின்றனர். மனைவி, இரு மகள்களுடன் மாடத்திற்கு வரும் மன்னர் கீழே குழுமியிருக்கும் மக்களை பார்த்து கை அசைக்கிறார். படம் முடிகிறது. பின்னர் இந்த பேச்சு நிபுணர் மன்னரது பல உரைகளை தயாரித்து பேச வைப்பதற்கு காரணமாக இருக்கிறார் என்ற வரிகளுடன் ஒருவழியாக படம் முடிகிறது.

___________________________________________________

து இங்கிலாந்து தயாரிப்பு என்றாலும் ஹாலிவுட் படங்களுக்குள்ள நேர்த்திக்கு குறைவில்லை. வரலாற்று படமென்பதால் அதற்கே உரிய காலத்தை கொண்டுவரும் காட்சிகள், ராயல்குடும்பத்தினருக்கான உயர்ந்த உடைகள், உயர்ந்த வகை ஸ்காட்சுகள், தேர்ந்த நடிப்பு, இயக்கம் எல்லா எழவும் இருக்கின்றன. இவைகளே இப்போது ஆஸ்கர் விருது போட்டிகளுக்கும் சென்றிருக்கின்றன.

டாம் ஹூப்பர் இயக்கியிருக்கும் இந்தத் திரைப்ப்படத்தின் திரைக்கதையினை 73 வயது டேவிட் சீடர் எழுதியிருக்கிறார். கலிபோர்னியாவில் வசிக்கும் இந்தப் பெரிசு இந்தக் கதைக்கான ஆய்வுகளை முன்னமே முடித்து விட்டாராம். 30வருடத்திற்கு முன்னரே இந்தக் கதையினை வெளியிடலாமா என்று ஆறாம் ஜார்ஜின் மனைவியும், இன்றைய இரண்டாம் எலிசபெத் அரசின் தாயாருமான எலிசபத்திற்கு அவர் கடிதம் எழுதி அனுமதி கேட்டிருக்கிறார். ஆனால் அந்த அம்மா தனது வாழ்நாளில் அந்த கதை வெளிவருவதை விரும்பவில்லையாம். கணவனின் திக்குவாய் பிரச்சினை எனும் சோக காவியத்தை அவர் நினைவு கூரவிரும்பவில்லையாம்.

பிறகு 102 வயதில் 2002ஆம் ஆண்டு அந்த அம்மா இறந்து போகிறார். நாமெல்லாம் 60. 70 வருடங்கள் உயிர் வாழ்ந்தால் பெரிய விசயம். ஆனால் அரச பரம்பரையினரெல்லாம் சர்வ சாதாரணமாக செஞ்சுரி அடிக்கிறார்கள். அதன் பிறகு இந்தக் கதை நாடகமாக வெளிவந்து இப்போது திரைப்படமாகவும் ஓடுகிறது. இங்கே ஒரு கேள்வி எழுகிறது.

நம்ம அதியமான் துவங்கி ஆளாளுக்கு போகிற போக்கில் ஸ்டாலின் மக்களை கொலை செய்தார், மாவோ கலையை கொலை செய்தார் என்று கூசாம் புளுகுவது இருக்கட்டும். இவையே எத்தனை நாவல்களாக, திரைப்படங்களாக வந்திருக்கின்றன. கம்யூனிஸ்டுகளை இழிவுபடுத்தும் அமெரிக்காவின் இந்த பூசைகளுக்கெல்லாம் யாரும் அனுமதி பெறவில்லை. அது குறித்து யாரும் கவலையும்படவில்லை. ஆனால் ஒரு அம்மாஞ்சி அரசன் பேசுவதற்கு சிரமப்பட்டான் என்ற ஒரு அக்கப்போரை மேற்குலகின் ஜனநாயகம் கதையாக எடுப்பதற்கு அனுமதி கிடைக்கவில்லை என்றால் என்னவென்று சொல்ல? அதுவும் இந்த மாபெரும் வரலாற்று உண்மையை அந்த அரசி அம்மா இறந்த பிறகுதான் படமாக எடுத்திருக்கிறார்கள் என்றால் இவர்களது பேச்சு சுதந்திரத்தின் யோக்கியதயை புரிந்து கொள்ளலாம்.

இந்த படம் முடிவான பிறகு இயக்குநரும், திரைக்கதை ஆசிரியரும் அந்த பேச்சு நிபுணரின் பேரனைக் கண்டுபிடித்தார்களாம். அவர் மூலம் நிபுணரது டைரிகள், கடிதங்களை அத்தனையையும் சேகரித்து இந்த வரலாற்று காவியத்தில் எந்த தவறும் வந்துவிடக்கூடாது என்று சர்வ ஜாக்கிரதையாக ஆய்வு செய்தார்களாம். படத்தில் முக்கியமான வசனங்களில் அந்த பேச்சு நிபுணரின் உண்மையான வார்த்தைகளே இடம் பெறுகின்றனவாம். சான்றாக இறுதி உரை முடிந்த பிறகு நிபுணர் ” இன்னமும் உங்களுக்கு டபிள்யூ எழுத்து உச்சரிப்பதற்கு கடினமாக இருக்கிறது” என்று மன்னனிடம் சொல்வார். இது அப்படி வரலாற்றில் பதிவாகியிருக்கிறதாம். இந்த அறிஞர்களின் வரலாற்று உணர்வு குறித்து நமக்கும் புல்லரிக்கத்தான் செய்கிறது.

ஒரு மன்னன் பேச்சு சிரமத்தை மாற்றி அமைத்தான் என்பதெல்லாம் மாபெரும் வரலாறாக காட்சியளிக்கிறது என்றால் முதலாளித்துவ உலகம் உருவாக்கியிருக்கும் வரலாற்று நூல்களின் தரத்தை நாம் அறியலாம். இத்தகைய வரலாறுகளைத்தான் நமது ஆர்.எஸ்.எஸ் அம்பிகளும் சரி, இல்லை தமிழினவாத தம்பிகளும் சரி படித்துவிட்டு போதை ஏறி உளறி வருகிறார்கள்.

இங்கிலாந்து அறிவாளிகள் ஆறாம் ஜார்ஜின் வாய்ப்பேச்சு குறித்த விசயத்தை வரலாறாக ஆக்கும் போது அம்பிகள் ராமனையும், தம்பிகள் ராசராச சோழனையும் எப்படியெல்லாம் ஆக்கியிருப்பார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.

_____________________________________________________

னாலும் தி கிங்ஸ் ஸ்பீச் திரைப்படம் தந்திரமாக சில வரலாற்று மோசடிகளையும் கொண்டிருக்கிறது என்பதை சில ஆய்வாளர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர். உண்மையில் பேச்சு நிபுணர் தனது பேச்சு பயிற்சியை ஆறாம் ஜார்ஜுக்கு 1926ஆம் ஆண்டிலேயே துவக்கி விடுகிறார். ஆனால் படத்தில் அந்த காலவரிசை 1936ஆம் ஆண்டு என்று மாற்றப்பட்டிருக்கிறது. காரணம் காலத்தை நீட்டினால் அரச குடும்பத்தின் பல அக்கப்போர்களையும் சொல்ல வேண்டியிருக்கும் என்பதே.

படத்தில் ஆறாம் ஜார்ஜின் பேச்சை கேட்பதற்கு காத்திருப்பவராக பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் வருகிறார். உண்மையில் சர்ச்சில் ஆறாம் ஜார்ஜை விட அவரது அண்ணன் எட்வர்டையே மன்னராக வருவதற்கு விரும்பியிருக்கிறார். மேலும் இந்த எட்வர்டு பொதுவில் ஹிட்லர் மற்றும் நாசிக் கட்சியின் அனுதாபியாக இருந்திருக்கிறார். மேலும் 1940வரை அரச குடும்பத்தினர் நடத்திய கடிதப் போக்குவரத்தில் இந்த அனுதாபமே தென்படுகிறது என்பதை பல ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.

சர்ச்சிலுக்கு முன்னதாக பிரதமராக இருந்தவர் சேம்பர்லின். இவரும் ஹிடலரோடு உடன்பாடு செய்து கொண்டதையெல்லாம் அரசரும் வெகுவாக வரவேற்று இருக்கிறார். மேலும் அன்றைக்கு ஹிட்லரின் பாசிசம் முழு உலகையும் பிடித்தாட்டப்போகிறது என்பதை மேற்குநாடுகளுக்கு தொடர்ந்து சோவியத் யூனியன் எச்சரிக்கை செய்தது. ஆனால் ஹிட்லர் எப்படியும் ரசியாவை பிடித்து அழிப்பார் என்றும் அதனால் கம்யூனிசம் மரணமடையும் என்பதையும் விரும்பிய இங்கிலாந்து, தோழர் ஸ்டாலினின் அறைகூவலை அலட்சியம் செய்தது.

இதையெல்லாம் ஒளித்து வைத்துவிட்டு, பேரரசர் ஆறாம் ஜார்ஜ் தனது மக்களுக்கு போர் அபாயம் குறித்து பேசுகிறார் என்று அவரை மாபெரும் பாசிச எதிர்ப்பு போராளியாக காட்டுகிறார்கள். ஆனாலும் இந்த போராளி படம் முழுவதும் தனது நாக்கோடுதான் சண்டை போடுகிறார், ஹிட்லரை எதிர்த்து அல்ல. மேலும் அன்றைக்கிருந்த போப்பாண்டவரும் கூட ஹிட்லரின் ஆதரவாளராகத்தான் இருந்திருக்கிறார்.

1930களின் பிற்பகுதி என்பது உலக வரலாற்றில் மிகவும் கொந்தளிப்பான காலகட்டம். இங்கிலாந்து முதலான ஏகாதிபத்தியங்களின் கொடூரமான காலனி ஆதிக்கத்தை எதிர்த்து விடுதலைப் போராட்டங்கள் தீவிரமடைகின்றன. சோவியத் யூனியனை முன்னோடியாக வைத்து அந்த காலனிய எதிர்ப்பு போராட்டங்கள் போர்க்குணத்துடன் வளர்கின்றன. சீனா முதலான நாடுகள் சோசலிச புரட்சிக்காக போராடுகின்றன.

இத்தகைய காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு மன்னன், அதிலும் ஒரு ஏகாதிபத்தியத்தின் சுரண்டல் அமைப்புக்கு தன்னை சக்கரவர்த்தியாக கருதிக் கொண்டவனது வரலாறு இங்கே என்னவாக எடுக்கப்பட்டிருக்க வேண்டும்? காலனிய நாடுகளில் ஆயிரக்கணக்கான பொது மக்களை ஏகாதிபத்திய இராணவமும், போலீசும் கொன்று குவித்த நேரத்தில் இந்த மன்னன் ஒரு பேச்சு பயிற்சி நிபுணனோடு சாமனியனாக பழகுகிறானாம். படம் அப்படி எடுக்கப்பட்டிருப்பதை பலர் மனம் குளிர பாராட்டுகிறார்கள்.

என்ன இருந்தாலும் இது ஆண்டைகள் எழுதிய வரலாறு அல்லவா, அப்படித்தான் இருக்கும். சரி, கொந்தளிப்பான காலகட்டத்தில் ஒரு மன்னன் எப்படி எதிர்வினையாற்றுகிறான் என்பதை விடவா அந்த பேச்சு பிரச்சினை முக்கியமானது? இதை வைத்தே இவர்கள் ஒரு மாபெரும் வரலாற்று படத்தை எடுத்திருக்கிறார்கள் என்றால் ஒன்று அந்த மன்னனது வாழ்வில் வேறு அதி முக்கியத்துவம் ஒன்றும் இருந்திருக்காது, இரண்டு அவனது மற்ற வரலாறு வெளியே சொல்ல முடியாதபடிக்கு பிரச்சினைக்குரியதாக இருந்திருக்க வேண்டும். இல்லையா?

________________________________________________________

ந்த வரலாற்று கிங்கின் ஆஸ்கர் அக்கப் போருக்கு மத்தியின் மற்றுமொரு கிங் ஒரு விசயத்தை பேசியிருக்கிறார். அவர் இங்கிலாந்து வங்கியின் தலைவர் மெர்வின் கிங். வரும் நாட்கள் இங்கிலாந்து பொருளாதாரத்திற்கு சிக்கல்கள் ஏற்படுத்தும் நாட்களாக இருக்கும் என்று அவர் பேசியிருக்கிறார். இந்த விசயத்தில் மட்டும் கிங்கின் பேச்சு உண்மையாக இருக்கிறது.

வேலையில்லா திண்டாட்டம், அரசு மானியம் ரத்து, அதிகரித்து வரும் பணவீக்கம் என்ற முதலாளித்துவத்தால் பெற்றெடுத்த அபாயங்களை நோக்கி இங்கிலாந்து நாடு சென்று கொண்டிருக்கும் போது அந்த நாட்டு மக்களை தேசபக்தியிலும், அரச விசுவாசத்திலும் குளிப்பாட்டுவதற்கு இந்த படம் வந்திருக்கிறது. முக்கியமாக இந்த மகா குப்பை வரலாற்று படம் ஆஸ்கர் பரிந்துரைகளுக்காக 12 பிரிவில் தெரிவாகியிருக்கிறது என்பதிலிருந்தே இது உலகம் முழுவதும் கொண்டு செல்வதற்கான சதி என்பதையும் உணரலாம்.

மூன்றாம் உலகநாடுகளின் மக்களை இந்த படம் ஈர்க்காது. ஆனாலும் ஜெயமோகன், சாரு நிவேதிதா போன்ற அறிவாளி அம்பிகள் இந்த படத்தை சிலாகித்து உள்ளொளி, கொண்டாட்டம் என்று எழுதுவார்கள். இது போன்ற கதைகளை தேடிப்பிடித்து காப்பியமாக்கும் கிழக்கு பதிப்பகம் போன்றவர்கள் இதையே ஒரு தொழிலாக செய்கின்றனர். அதே போல மேற்குலகின் ஊடகங்கள் இப்போதே இந்தப் படத்தின் அருமை பெருமைகளை எழுதி பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்டன.

ஆனாலும் மேற்குலக நகரங்களில் “முதலாளித்துவம் ஒழிக” என்று தெருவுக்கு வந்து போராடும் மக்களை இந்த படம் நிச்சயம் வசியப்படுத்தாது.

இறந்த காலத்தின் வரலாற்று புனைவுகள் எப்போதும் நிகழ்காலத்தின் இயங்கு விசையை தீர்மானிக்க முடியாது. ஏனெனில் வரலாறு என்பது மக்களால் அவர்களது போராட்டத்தால் எழுதப்படுவது. இந்த உண்மை இப்போது மறைக்கப்பட்டிருந்தாலும் எதிர்கால வரலாறு அதை நிரூபிக்கும்.  இன்று அதற்கான முன்னுரையை துனிசியாவிலும், எகிப்திலும், கிரீசிலும் மக்கள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்

__________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 

தோழருக்காக ஒரு உதவி…

ஒரு காந்தியால் ஏற்பட்ட
அகிம்சையின் இரணமே ஆறவில்லை
ஆயிரம் காந்தி அமைதி ஊர்வவலமா?
பகத்சிங் படையல்லவா
பாட்டாளிவர்க்கத்திற்குத் தேவை என்றேன்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்
வர்க்க ஸ்தாபனம் இல்ல தோழர்
என்றார் அந்த மார்க்சிஸ்டு கட்சி ஊழியர்.

மதவெறியை மாய்ப்போம்,
மனித நேயம் காப்போம் என்று
தட்டிக்குத் தட்டி கதை கட்டிவிட்டு
விநாயகர் சதுர்த்திக்குச் செட்டு போட்டு
இந்துவெறிக்குச் சிவப்புக் கொடி கட்டுவதுதான்
கம்யூனிசமா? என்றேன்.
தோ….ழ….ர் சி.ஐ.டி.யு வர்க்க ஸ்தாபனம் இல்ல
என்றார் அழுத்தமாக.

அயல்நிதி வாங்கும் தன்னார்வக் குழுக்களுடன் சேர்ந்து
சுயநிதிக் கல்லுரி எதிர்ப்புப் பிரச்சாரமா?
மாணவர் சங்கம் உருப்படுமா என்றேன்,
மனப்பாடம் செய்தவர் போல
எஸ்.எப்.ஐ வர்க்க ஸ்தாபனம் இல்ல
என்றார் திருத்தமாக.

மீன் குழம்புக்கும் விலைமாதருக்கும்
சோரம் போகிறவர்கள் தோழர்கள் என்று படமெடுக்கும்
குருதிப்புனல் கமலஹாசனுக்கும்
‘தேவர்மகன்’ பாரதிராஜாவுக்கும்
திரைப்பட விருதா என்றேன்.
த.மு.எ.ச வர்க்க ஸ்தாபனம் இல்ல
என்றார் தயக்கமின்றி.

தீபாவளி, திருவண்ணாமலை தீபத்திற்குச் சிறப்பிதழும்
ஆடிக் கிருத்திகைக்கு அழைப்பிதழுமாய்
தீக்கதிர் வந்து விழுகிறதே என்றேன்.
அது என்ன வர்க்க ஸ்தாபனமா
வெகுஜன பத்திரிக்கை தோழர் என்றார்
தனித்த சிரிப்புடன்.

‘நானொரு பாப்பாத்தி’ என்று
கோட்டையிலேயே சொன்ன ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு
மதச்சார்பற்ற…ஜனநாயக….முற்போக்கு என்றீர்களே
கனவு என்னாயிற்று என்றேன்.
தோழர் உங்களுக்குச் சொன்னா புரியாது
என்பது போல
கன்னாபின்னாவென முகத்தைச் சுழித்தார்.
இந்த முறை அந்தத் தோழர்க்காக நாம் சொல்லுவோம்
” மார்க்சிஸ்டு கட்சி (CPI(M)) என்பதே
தொழிலாளி வர்க்க அமைப்பு (ஸ்தாபனம்) அல்ல”

__________________________________________

துரை.சண்முகம்
புதிய கலாச்சாரம் செப் 2003

__________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

இந்தியாவில் தனியார்மயம்! ஒரு ஊழலின் வரலாறு!!

தனியார்மயமும் தாராளமயமும் புகுத்தப்பட்டபோது,  இக்கொள்கைகள் ஊழலின் கதவை இறுக்கிச் சாத்தப்போகின்றன என ஆளும் வர்க்க எடுபிடிகள் அனைவரும் தம்பட்டமடித்தனர். ஆனால்  அதற்கு மாறாக, கடந்த 20 ஆண்டுகளில் நடந்துள்ள, பல்லாயிரம் கோடிகளை  விழுங்கிய பிரபலமான ஊழல்களின் சுருக்கமான பட்டியல் இவை.

1991 ஜெயின் டயரி – ஹவாலா ஊழல்

1991-இல் தில்லியில் தற்செயலாகப் பிடிபட்ட ஹவாலா தரகன் ஜே.கே. ஜெயினிடம் அவன் இலஞ்சக் கணக்கு எழுதிவைத்திருந்த டைரி பிடிபட்டது. இன்று ஸ்பெக்ட்ரம்-ராடியா விவகாரத்தில் சிக்கியிருக்கும் காங்கிரசு, பாஜக தலைவர்களின் இரகசியங்களைக் கசியவிட்டு, ‘எல்லோரும் திருடர்கள்தான்’ என்று நிரூபிக்க முயல்வதைப் போலவே, அன்று பல்வேறு ஊழல்களில் சிக்கித் திணறிக்கொண்டிருந்த பிரதமர் நரசிம்ம ராவ் ஜெயின் டயரியைக் கசியவிட்டார். கமிஷன் பெற்றவர்களின்  பட்டியலில் 115 பேர் இருந்தனர். ரூ.68 கோடி வரை கமிஷன் தரப்பட்டிருந்தது. ராஜீவ் காந்தி, நரசிம்ம ராவ், தேவிலால், அத்வானி, சுக்லா எனப் பெருந்தலைகள் எல்லாம் இந்த ஊழலில் கை நனைத்திருந்தனர். சட்டப்பூர்வமான ஆதாரங்கள் ஏதுமில்லை எனக்கூறி 1997 ஏப்ரலில் அத்வானிக்கும் சுக்லாவுக்கு எதிரான  வழக்கு தள்ளுபடியானது. பின்னர் அனைவருமே சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.

1992 அர்சத் மேத்தா ஊழல்

ஒவ்வொரு அரசுடமை வங்கியும் வாடிக்கையாளர்கள் முதலீடு செய்யும் தொகையில் குறிப்பிட்ட சதவீதத்துக்கு அரசாங்கப் பத்திரமாக மாற்றி வைத்திருக்க வேண்டும் என்பது ரிசர்வ் வங்கியின் உத்தரவு. தரகர்கள் வழியாக வாங்கப்படும் இந்தப் பத்திரங்களுக்கு வங்கிகள் வழங்கும் அத்தாட்சி ரசீதை, முப்பது நாள் அவகாசத்துக்குள் வங்கிகளில் பிணையாக வைத்துப் பொதுமக்கள் பணத்தைக் கடனாகப் பெற்ற பங்குச் சந்தைத் தரகரான அர்சத் மேத்தா, பங்குச் சந்தையில் சூதாடி கோடிகோடியாகச் சுருட்டியதுதான் இந்த ஊழலாகும். வங்கி அதிகாரிகளும் ஓட்டுக்கட்சிகளும் பெரும் தரகு முதலாளிகளும் மேத்தாவைப் பினாமியாகக் கொண்டு நடத்திய இக்கொள்ளையில் ஏறத்தாழ ரூ.2500 கோடிக்கு மேல் சுருட்டப்பட்டது. அர்ஷத் மேத்தாவுக்கு எதிராக 72 கிரிமினல் வழக்குகளும், 600-க்கும் மேற்பட்ட சிவில் வழக்குகளும் தொடுக்கப்பட்டிருந்தன. இவற்றில் ஒரு வழக்கில் 7 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டு, மற்ற வழக்குகள் ஆமை வேகத்தில் வழக்குகள் நகர்ந்து கொண்டிருக்கும்போதே 2002-இல் மேத்தா மரணமடைந்தான்.

1995 ரிலையன்சின் போலிப் பத்திரங்கள்

ரிலையன்சு ரூ 1.06 கோடிக்குப் போலிப் பங்குகளை வாடிக்கையாளர் ஒருவருக்கு விற்றது கண்டறியப்பட்டதால் மூன்று நாட்களுக்கு ரிலையன்சின் பங்கு வர்த்தகம் பம்பாய் பங்குச் சந்தையில் நிறுத்திவைக்கப்பட்டது. இதேபோல அரசு நிறுவனமான ’யூனிட் டிரஸ்ட் ஆப் இந்தியா’வுக்கு 47 கோடி ரூபாய்க்கு போலிப் பங்குகளை ரிலையன்சு விற்றிருந்ததும் தெரியவந்தது.  உடனே கொதித்தெழுந்த அம்பானி, பம்பாய் பங்குச் சந்தையில் இருந்து விலகி தில்லிச் சந்தையோடு இணையப் போவதாக மிரட்டினார். உடனே பம்பாய் சந்தை சமரசப் பேச்சு நடத்தி அம்பானிக்குப் பணிந்தது.

1996 காலணி ஊழல்

1982 முதல் மராட்டிய கூட்டுறவுச் சங்க காலணித் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 25000 கடனாக வழங்கப்பட்டு வந்தது. நொடித்துப் போன சங்கங்களை மோசடி – தில்லுமுல்லுகள் மூலம் அதிகாரிகள் துணையோடு பெருமுதலாளிகள் கைப்பற்றி, போலியாக தொழிலாளர் எண்ணிக்கையைக் காட்டி கடன்களைச் சுருட்டினர். ஆண்டுதோறும் ரூ 500 கோடி வரை இவ்வாறு சுருட்டப்பட்டது. தாவூத் ஷூ, மெட்ரோ ஷூ, மிலானோ ஷூ முதலான கார்ப்பரேட் நிறுவனங்களின் முதலாளிகளும் சிட்டி பேங்க், மராட்டிய மாநில நிதிக் கழகம், ஓமன் வங்கி, பஹ்ரைன் வங்கி, தேனா வங்கி ஆகியவற்றின் உயரதிகாரிகளும் குற்றப்பத்திரிக்கையில்  சேர்க்கப்பட்டுள்ள போதிலும், 15 ஆண்டுகளாகியும் வழக்கு இன்னும் நகரவேயில்லை.

1997 சி.ஆர்.பி. நிதி நிறுவன ஊழல்

மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டியங்கிய சி.ஆர்.பி. நிதி நிறுவனத்தின் தலைவரான சி.ஆர்.பன்சாலி, போலி ஆவணங்கள் – போலி நிறுவனங்களின் பெயரால் முத்திரைத் தாள் தயாரிப்பதில் திறமைசாலி. இதனையே மூலதனமாகக் கொண்டு சி.ஆர்.பி. நிதி நிறுவனத்தைத் தொடங்கி, பங்கு பத்திர வியாபாரத்தை நடத்தினான். அடிமாட்டு விலைக்கு மொத்தமாகப் பங்குகளை வாங்கி, விற்பதென்பது இவனது தொழில் உத்தி. பன்சாலியின் முறைகேடுகளைப் பற்றி பங்கு பரிமாற்றக் கழகம் முன்னரே அறிந்திருந்தபோதிலும் சி.ஆர்.பி.யை அங்கீகரித்தே வந்தது. ஸ்டேட் வங்கியின் முன்னாள் தலைவரான எம்.கே. சின்ஹா, இந்நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவர். இந்த நம்பிக்கையில் பங்குகளை வாங்கிய நடுத்தர வர்க்கத்தினருக்கு 1997-இல் பட்டை நாமம் சாத்தி ரூ.1200 கோடியை பன்சாலியும் அவனது கூட்டாளிகளான பெருமுதலாளிகளும் அதிகாரிகளும் சுருட்டினர். 1997-இல் கைதான பன்சாலி  மூன்று மாதங்களைச் சிறையில் கழித்துவிட்டு, பிணையில் வெளிவந்து தலைமறைவாகிவிட்டான்.

2001 கேதான் பரீக் மோசடி

கேதான் பரீக் எனும் பங்கு சந்தைத் தரகன், பிரபலமான  10 தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின்(கே10) பங்குகளை 2000-வது ஆண்டில் வாங்கிக் குவித்ததன் மூலம் பங்குகளின் விலை மடமடவென உயர்ந்தன. “கே10” பங்குகளை ஊதிப் பெருக்குவதற்காக 4 அந்நிய நிதி நிறுவனங்கள் பரீக்குடன் சேர்ந்து கொண்டு, ரூ 1,47,000 கோடி ரூபாயை பரீக் நடத்திய ஊக வணிகத்தில் முதலீடு செய்து, பங்குச் சந்தை சூதாட்டத்தில் கோடிகோடியாகச் சுருட்டின.  2001-இல் டாட்.காம் வீழ்ச்சியின்போது மும்பை போட்டித் தரகர்கள் “கே10” பங்குகளைக் கொத்துக் கொத்தாக விற்று விலையை வீழ்த்தினர்.

இச்சரிவைத் தடுத்து நிறுத்த பல்வேறு வங்கிகள் கோடிக்கணக்கில் கடனாகக் கொடுத்தன. இக்கடன்களுக்குப் பிணையாக பரீக் கொடுத்திருந்த பங்குப் பத்திரங்கள் சந்தை வீழ்ச்சியால் வெறும் காகிதமாகிப் போயின.  ரூ.4669.50 கோடிகளை கேதானின் பங்குகளில் முதலீடு செய்திருந்த யூனிட் ட்ரஸ்ட் ஆப் இந்தியா எனும் அரசுத்துறை பரஸ்பர நிதி நிறுவனம் இதனால் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டது. நம்பிக்கையோடு யூனிட் டிரஸ்டில் முதலீடு செய்திருந்த நடுத்தர வர்க்கத்தினர் பணம் கரைந்து போனது. 1992-இல் ஏற்கெனவே கேத்தன் பரீக் செய்த வேறொரு ஊழல் விசாரிக்கப்பட்டு 2008-இல் ஒரு வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. 2001-இல் செய்த ஊழல் விசாரணை இன்னும் முடியவில்லை. 2017 வரை பங்கு வர்த்தகத்தில் ஈடுபடத் இவனுக்குத் தடை விதிக்கப்பட்ட போதிலும், கேத்தான் பரீக் இன்னமும் பங்குச்சந்தையில் சூதாடுவதாகக் கூறியிருக்கிறது செபி.

2003 போலிப் பத்திர ஊழல்

பத்திரங்கள் விற்பனையாளனான தெல்கி என்பவனுடன் அரசு அச்சுக்கூடத்தின் அதிகாரிகள், அமைச்சர்கள், போலீசு அதிகாரிகள் சேர்ந்து நடத்திய மோசடி இது. அரசு அச்சகத்தில் இருந்து பழைய அச்சு எந்திரம், அரசு அச்சகத்தின் தொழில்நுட்பங்கள்,இறக்குமதி செய்யும் காகிதம், மை, அச்சிடப்போகும் பத்திரத்தின் எண்வரிசை என அனைத்தும் தெல்கிக்காகக் கடத்தப்பட்டது. 9 மாநிலங்களில் விற்பனை வலைப்பின்னலை உருவாக்கி போலிப் பத்திரங்களை விற்றதோடு, ஒரிஜினல் பத்திரங்களுக்குச் சந்தையில் செயற்கையாக தட்டுப்பாட்டை உருவாக்கி, இக்கும்பல் வியாபாரத்தை விரிவுபடுத்தியது.

இந்த விசயம் மெதுவாகக் கசிந்து 2001-இல் கர்நாடக போலீசு தெல்கியைக் கைது செய்த போதிலும், அவனது வியாபாரம் சிறைக்குள் இருந்தபடியே தொடர்ந்தது. அன்னா ஹசாரே எனும் காந்தியவாதி போட்ட பொதுநல வழக்குக்குப் பின்னர்தான் தெல்கியின் ஊழல் அவசரமாக விசாரிக்கப்பட்டது. தெல்கியிடமிருந்து 90 லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு அவனுக்குத் துணையாக இருந்த போலீசு இணை கமிஷனர் சிறீதர் வாக, மும்ப நகர போலீசு கமிஷனர் ஆர்.எஸ். சர்மா, தமிழக போலீசு உயரதிகாரி முகம்மது அலி போன்ற பெருந்தலைகள் கைதாகினர். இவர்கள் விற்ற போலிப் பத்திரங்களின் மதிப்பு ரூ.30,000 கோடி. ஆனால், 53 லட்சம் பெறுமானமுள்ள பத்திரத் தாள்களை மட்டுமே கைப்பற்றியதாக பெயருக்கு ஒரு வழக்கு கர்நாடகத்தில் போடப்பட்டது. பிற மாநிலங்களில் பல்வேறு வழக்குகள் போடப்பட்டுள்ள நிலையில், கர்நாடகத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என  2010-இல் விடுவித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்.

2009 சத்யம் மோசடி

சர்வதேச அளவில் சிறந்த கார்ப்பரேட் நிர்வாகத்திற்கான “தங்க மயில்” விருது பெற்ற சத்யம் மென்பொருள் நிறுவனத்தின் தலைவர் ராமலிங்க ராஜு,  தன் நிறுவனத்திற்கு ரொக்க சேமிப்பு ரூ.5040 கோடி இருப்பதாக 2001 முதல் பொய்க்கணக்கு காட்டி, முதலீட்டாளர்களைக் கவர்ந்து பத்து ரூபாய் மதிப்புள்ள பங்கினை ரூ 188.70-க்கு உயர்த்தி, பங்குகளில் பெரும்பகுதியை விற்று  2003 டிசம்பர் முதல் 2007 மார்ச்சுக்குள்  ரூ.1252 கோடியைச் சுருட்டினார். உண்மையில் அந்நிறுவனத்திடமிருந்த கையிருப்பு ரூ.320 கோடிதான்.

கணக்கு காட்டிய 5040 கோடிக்கும், 320 கோடிக்குமான இடைவெளியை நிரப்ப, தனது மகன்கள் பெயரில் ரியல் எஸ்டேட் நிறுவனங்களை ஆரம்பித்து, அவற்றை சத்யம் ரூ.7000 கோடி கொடுத்து விலைக்கு வாங்குவதாக செட்டப் செய்தார். அதாவது, இல்லாத ரொக்கத்தை கொடுத்து இரண்டு கம்பெனிகளை வாங்கியதாகக் காட்டி மோசடி செய்வதே ராஜுவின் திட்டம். சில முதலீட்டாளர்களின் எதிர்ப்பால் தில்லுமுல்லுகள் வெளியாகி கைது செய்யப்பட்டார். இவரது கள்ளக் கணக்குக்குத் தணிக்கை சான்றிதழ் கொடுத்து பங்குச்சந்தை முதலீட்டாளர்களைக் கழுத்தறுக்கத் துணை நின்றது பிரபல பன்னாட்டு தணிக்கை நிறுவனமான பிரைஸ்வாட்டர் கூப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜூ, தனது மோசடிக்கு ஆதாரமான ஆவணங்களை அழித்து விட அவகாசம் கொடுக்கப்பட்டுப் பின்னர்தான் கைது செய்யப்பட்டார். சொகுசு மருத்துவமனையில் ‘சிறைவாசம்’ புரிந்த ராமலிங்க ராஜுவுக்கு பிணையும் வழங்கப்பட்டது. வழக்கு நடந்து வருகிறது.

2010 கேதான் தேசாய் கொள்ளை

இந்திய மருத்துவ கவுன்சில் தலைவரான டாக்டர் கேதான் தேசாய், பஞ்சாப் மருத்துவக் கல்லூரி ஒன்றுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக ரூ.2 கோடி லஞ்சம் வாங்கும்போது பிடிபட்டார். அவரது வீட்டிலிருந்து ரூ.1800 கோடி ரொக்கம், 1500 கிலோ தங்க நகைகளை சி.பி.ஐ. கைப்பற்றியது. அங்கீகாரமளிப்பதற்கு கல்லூரி ஒன்றுக்கு ரூ.30 கோடி லஞ்சம் வாங்கியதுடன், நாட்டிலுள்ள 200 சுயநிதிக் கல்லூரிகளிடமிருந்து தலா 5 சீட்டுகளை ஒதுக்கீடாகப் பெற்று அவற்றை இலட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்தும் பணம் குவித்துள்ளான் தேசாய். 2010 ஜூனில் பிணையில் வந்த இந்த கிரிமினலை, 2010 நவம்பரில் குஜராத் பல்கலைக்கழகம் தனது செனட்டிற்குத்  தேர்ந்தெடுத்தது.

– இவை சில உதாரணங்கள் மட்டுமே. இவை தவிர 1996-இல் நடந்த நரசிம்ம ராவின் மகன் பிரபாகர் ராவின் யூரியா ஊழல், கர்நாடக ரெட்டி சகோதரர்களின் சுரங்க ஊழல், அண்மையில் நடந்துள்ள ஆதர்ஷ் ஊழல்.. எனத் தொடரும் ஊழல்களையும், மாநில அளவில் நடைபெற்றுள்ள  ஊழல்களையும் பட்டியலிட பக்கங்கள் போதாது. இவற்றில் பங்குச்சந்தை, போலிப்பத்திரங்கள், ஹவாலா மற்றும் நிதிநிறுவன ஊழல்கள் போன்றவை தாராளமயக் கொள்கைகளின் நேரடி விளைவுகள். கேதான் தேசாய், காலணி ஊழல் போன்றவை தனியார்மயத்தின் விளைவுகள்.
__________________________________________

–  அப்துல்லா, புதிய ஜனநாயகம், ஜனவரி – 2011
__________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

ஆடுகளம்: மண்ணை விடுத்து சினிமாப் புனைவில் ஆடும் களம்!

70

வினவில் திரைவிமரிசனம் எழுதி நாளாயிற்றே, ஆடுகளத்தை எழுதலாமே” என்று தோழர் ஒருவர் கேட்டார். சற்றே காத்திரமான கதைகளை கொண்ட படங்களை எழுதவேண்டுமென்றால் அத்தகைய வாய்ப்புகள் அதிகமில்லை. வாய்ப்புகள் இல்லை என்பதற்காக திரை விமரிசனங்கள் எழுதாமலும் இருக்க கூடாது. அரசியல், சமூக கண்ணோட்டத்தை கூட சினிமா வழியாக சொன்னால் நமது மக்கள் கொஞ்சம் பரிசீலிப்பார்களில்லையா? ஆக துணிந்து ஆடுகளம் சென்றோம்.

வெளியே தேநீர் அருந்திக் கொண்டிருந்த போது “இந்த படத்தை பாக்காதீங்க, கதையே இல்லை” என்று ஒரு ஆட்டோ ஓட்டுநர் அவரது நண்பரிடம் எச்சரித்துக் கொண்டிருந்தார். அதுவேறு வயிற்றில் பீதியைக் கிளப்பியது. வளாகத்தில் விஜயின் காவலன் படத்திற்குத்தான் கூட்டம் கொஞ்சம் அதிகம். ஆடுகளத்திற்கு அந்த அளவுக்கில்லை. சன் டி.வியின் ஏகபோகம் உருவாக்கியிருக்கும் சதுரங்க ஆட்டத்தில், விஜய் போன்ற நட்சத்திரங்கள் தாமே உருவாக்கியிருந்த இமேஜை துறக்க முடியாமல் அதனாலேயே சிக்கிக் கொண்டிருக்கும் கதையை பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.

சமீப காலமாக கிராமங்களை மையமாக வைத்து நிறைய படங்கள் வருகின்றன. யதார்த்தத்தில் கிராமப்புறங்கள், விவசாயத்தை அரசு திட்டமிட்டு புறக்கணித்து வரும் நிலையில் தமிழ் சினிமா மட்டும் நாட்டுப்புறங்களின் மேல் அளவிலா காதல் கொண்டிருக்கும் மர்மமென்ன?

சிலம்பு வாத்தியாரைப் போல சேவல்களை பழக்கி சண்டைப் போட்டிக்கு விடும் பேட்டைக்காரனாக கவிஞர் வ.ஜ.ச.ஜெயபாலன். அவரிடம் சேவல்களை பழக்கும் சீடர்களாய் தனுஷும், கிஷோரும். கிஷோர் மதுவறை நடத்தும் வசதியானவர். தனுஷ் அப்படியில்லை. வெறுமனே எடுபிடியாக வருகிறார். ஏதாவது ஒரு போட்டியிலாவது பேட்டைக்காரனை வெல்ல வேண்டும் என்ற இலட்சிய வெறியோடு வரும் இன்ஸ்பெக்டராக ரத்தினம்.

இடையில் ஆங்கிலோ இந்தியப் பெண் தப்சியோடு தனுஷின் காதல். அப்புறம் முழு வீச்சாக நடக்கும் பிரம்மாண்டமான சேவல் சண்டை போட்டி. போட்டியில் குருவின் மதிப்பீட்டை பொய்யாக்கி, அவரது உத்திரவை மறுத்து  தனுஷின் சேவல் வெற்றி பெறுகிறது. சீடனின் வெற்றியை சீரணிக்க முடியாமல் பிறகு அவனையே பழி தீர்க்க முயலும் பேட்டைக்காரன். கிஷோர், தனுஷ் இருவரையும் மோதவிட்டு, காதலியை பிரித்து, அதற்காக இளம் வயது மனைவியை விரட்டி, எல்லாம் செய்கிறார் ஜெயபாலன். இறுதியில் அவர் மனம் திருந்தியோ இல்லை இன்னும் தனுஷை பழிவாங்க வேண்டுமென்றோ தற்கொலை செய்ய, அந்த பழியுடன் தனுஷ் காதலியோடு ஊரைவிட்டு போகிறார்.

முற்பாதியில் தனுஷின் காதல். பிற்பாதியில் ஜெயபாலனது துரோகம். இரண்டு உணர்ச்சிகளும் ரசிகர்களுக்கு பழக்கப்பட்டவை. முன்னது இதயத்திற்கு தாலாட்ட, பின்னது வயிற்றில் பதைபதைப்பை உருவாக்கும். அந்த பலத்தில் இந்த இரு உணர்ச்சிகளையும் சேவற் சண்டை பின்னணிக் களத்தில் துணிந்து  கதையாக்கியிருக்கிறார் இயக்குநர். இது போதாதா? கிராமம், முதன்முறையாக சேவற் சண்டை களம் என்று அறிஞர் பெருமக்கள் பாராட்டுகிறார்கள்.

முதலில் காதல். இது கதையோடு பொருத்தமின்றி திணிக்கப்பட்ட காதல் என்று சிலருக்குத் தோணலாம். எந்தக் கதையில் காதல் இயல்பாக வந்திருக்கிறது? ஆஸ்திரேலியா போக வாய்ப்பிருக்கும் ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண், சேவற் சண்டைக்காக ஊரைச் சுற்றும் ஒரு லுங்கி கட்டிய இளைஞனை காதலிக்கும் அபத்தம் இருக்கட்டும். அதிலும் தனுஷ் வம்படியாகத்தான் அந்த பெண்ணைக் காதலிக்கிறார். அதற்காக வலிந்து சுற்றுகிறார். அவரைத்தான் காதலித்தாக வேண்டுமென்ற நிலையில் அந்தப் பெண் வேறு வழியின்றி காதலிக்கிறாள்.

அந்த வகையில் தமிழ் சினிமா காதலின் ஜனநாயகத்தைக் கூட இன்னும் கற்றுத் தரவில்லை. மட்டுமல்ல, அந்த இடத்தில் ஆணாதிக்க சர்வாதிகாரத்தையே இளைஞர்களின் ஆளுமைப் பண்பாகவும் உணர்த்துகிறது. படியாத மாட்டை படிய வைப்பது போல அந்த பெண்ணை படியவைக்கும் தனுஷின் முயற்சிகளில் தங்களது ஆளுமைகளை உணர்கிறார்கள், கைதட்டும் இரசிகர்கள். காதல் என்பது இருபாலாரின் சமத்துவத்தையும், அதன் பால் வரும் விருப்பத் தெரிவையும் கொள்ளாமல் இருந்தால் அது காதலா, இல்லை பெண்டாளும் ‘கொலை’யா?

ஏழை இளைஞன் தனது வீரத்தால் பணக்கார வீட்டுப் பெண்ணை காதலிப்பது எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே தொடர்கிறது. பரிசாரர்கள் புடை சூழ வாழும் அந்த பெரிய இடத்து மங்கைகள் பின்னர் காதலனுக்காக குடிசையில் மூக்கு சிந்தி அடுப்பூதும் தியாகத்தை ஏற்கிறார்கள். யதார்த்தத்தில் இது சாத்தியமா? படத்தில் டேபிள் மேனர்சோடு விருந்துண்ணும் நாகரீகம் உள்ள அந்த பெண் ஒரு நாள் தனுஷோடு சுற்றிவிட்டு, பிய்த்துப் போட்ட புரோட்டாவை சாப்பிட்டுவிட்டு, கை கழுவிய பின் உடையில் துடைக்கும் தனுஷைப் போலவை துடைக்கிறாள். இயக்குநரின் மெய்சிலிர்க்க வைக்கும் ‘டச்’!

இது போல பல படங்களில் பார்த்திருக்கிறோம். மாளிகையிலிருந்து இறங்கும் பெண்கள் குடிசைகளில் ஒன்றி வாழ்வதையும், ஐந்து நட்சத்திர விடுதிகளில் உண்ணும் வழக்கமுள்ளவர்கள், கையேந்தி பவன்களில் இரசித்து சாப்பிடும் அழகையும் சகித்திருக்கிறோம். இது சாத்தியமே இல்லை என்பதை அறிந்தும் நமது இரசிகர்கள் ஏன் இரசிக்கிறார்கள்? இது யதார்த்தமே இல்லை என்று தெரிந்தும் இயக்குநர்கள் தொடர்ந்து இப்படி ஏன் படுத்துகிறார்கள்?

வெள்ளையும் சொள்ளையுமாக உள்ள அழகு பெண்களை துய்க்க விரும்புவதாக, ஏழைகளை இப்படித்தான் இழிவு படுத்த வேண்டுமா? அப்படி ஒரு விருப்பமிருந்தால் அது விமரிசனத்திற்குரியதா இல்லை போற்றுதலுக்குரியதா? நுகர்வுக் கலாச்சாரம் வழங்கியிருக்கும் வாழ்க்கையை நிறைவேற்ற ஓடியும் வாடியும் வரும் பெண்கள் இப்படி தங்களது நிலையிலிருந்து அதை துறந்து விட்டு சாமியார் போல வருவார்களா என்ன? புறாக்கள் சூழ, தோட்டமே பூத்திருக்க, தளைய தளைய கட்டிய பட்டுச் சேலையுடன், இத்தாலி பாணி நவநாகரீக கிச்சனில் லியோ காபி போட்டு, லேப்டாப்பில் கணவனுடன் மகிழ்ந்திருக்கும் அந்த பெண், தெருவில் குப்பை அள்ளும் இளைஞனைப் பார்த்து காதலிக்கிறாள் என்றால் ஏற்றுக் கொள்வீர்களா?

காதலைக் கூட யதார்த்தமாக, அந்தெந்த வர்க்கங்களின் வாழ்க்கை பிரச்சினைகளோடு காட்டினால் குடி முழுகிவிடுமா என்ன?

அடுத்தது கிராமம்.

கிராமமென்றால் வெள்ளேந்தியான மனிதர்கள், மீசையை உருவும் வில்லன்கள் என்ற ஃபார்முலாவை ஆடுகளத்தின் இயக்குநர் வெற்றி மாறனும் மீறவில்லை. சமீப காலமாக நிறைய படங்கள் கிராமத்து வாழ்க்கையை மையமாக வைத்து வருகின்றன. இந்த போக்கில் நாம் இன்றைய கிராமங்களை மட்டுமல்ல, நேற்றைய கிராமங்களையும் உண்மையாக பார்க்க இயலாது என்பதை எத்தனை பேர் உணர்ந்திருக்கிறார்கள்?

தனுஷின் தந்தை இறந்துவிட, அவரது தாய் ரேஷன் கடைக்கு சென்று, பையனுக்கு ஆக்கிப் போட்டு, அவன் கோபத்தில் ஏறியும் பொருட்களை கண்டு புலம்புவதை நிறுத்தி இறுதியில் இறந்தே போகிறாள். சேவல் வாத்தியாரோடு ஊரைச்சுற்றி வரும் தனுஷ், காதலிக்கிறார், நண்பனுடன் குடிக்கிறார், சேவலை பாசத்துடன் வளர்க்கிறார். உழைக்கும் பெண்களது காசில் குடித்துவிட்டு ஊரைச் சுற்றும் ஆண்கள்தான் தமிழக கிராமத்து யதார்த்தம்.

அந்த யதார்த்தத்தை சுட்டிக்காட்டும் அந்த விதவை பெண்ணை அரட்டி மிரட்டுகிறார் தனுஷ். அவரது மிரட்டலைப் பார்த்து கைதட்டுகிறார்கள் இரசிகர்கள். விமரிசனத்திற்குரியது இங்கே பாராட்டப்படுகிறது என்றால் என்ன பொருள்? அந்தப் பிரச்சினை படத்தின் மையப் பொருளிலேயே இருக்கிறது. சேவற்சண்டை என்ற பொழுது போக்கு ஓரிரு பத்தாண்டுகளுக்கு முன்னர் பிரபலமாக இருந்திருக்கலாம். குறுகிய வாழ்க்கையைக் கொண்டிருக்கும் கிராமத்தில் இத்தகைய சேவல் வளர்ப்பு, புறா வளர்ப்பு, மாடு வளர்ப்பு, ஜல்லிக் கட்டு போன்றவை வீராப்பு, கௌரவத்தின் அடையாளமாக கூட இருக்கலாம்.

“சேவற் சண்டை போட்டி என்பது கஞ்சி குடிக்கும் உயிர்ப்பிரச்சினை அல்லை, அது மானப்பிரச்சினை” என்று தனுஷ் வசனம் பேசுகிறார். இரசிகர்களும் அதை தமது பிரச்சினையாக ஏற்கிறார்கள். பாரம்பரிய விவசாயத்தை பறித்தெடுத்துவிட்டு, விவசாயத்தை அடிமைகளின் தொழிலாக மாற்றிவரும் மான்சாண்டோ காலத்தில் எது மானப்பிரச்சினை? விளைபொருளுக்கு விலை இல்லாமல் கமிஷன் மண்டி வணிகர்களிடமும், அம்பானியிடமும் அடிபணிந்து நிற்கையில் போகாத மானம் சேவலுக்காக போகிறது என்றால்?

எனில் அத்தகைய அர்த்தமற்ற மானம் இங்கே இடித்துரைக்கப்படவேண்டும். மாறாக அது ஒரு மகாபாரதப் போராக மாபெரும் கௌரவப்பிரச்சினையாக காட்டுகிறார், இயக்குநர். சமூக உறவுகளோடு நெருக்கமாக வாழும் கிராம சமூகத்தில், முழு வாழ்க்கையும் அங்கேயே பிறந்து மரிக்க வேண்டுமென்ற குறுகிய வட்டத்தில் இத்தகைய சேவல் சண்டைகள் கூட வாழ்வா, சாவா பிரச்சினையாக இருக்கலாம், தவறில்லை. ஆனால் அது அந்த குறுகிய உலகின் மீதான யதார்த்தமான விமரிசனப் பார்வையாக பார்வையாளனுக்கு உணர்த்தப்பட வேண்டும்.

சான்றாக, கிராமங்களில் வாழும் சாதி ஆதிக்கமே இத்தகைய சேவல், மாடு பிடி சண்டைகளின் அடிநாதமாக இருக்கிறது. தேவர் வீட்டு சேவலை, பள்ளர் வீட்டு சேவல் வென்று விட்டது என்றால் வரும் சண்டைதான் அந்த குறுகிய உலகின் அற்பத்தனத்தை விரிந்த அளவில் காட்டும். ஆள் போட்டு வளர்க்கும் கவுண்டரின் மாட்டை, ஒரு அருந்ததி இளைஞர் அடக்கிவிட்டார் என்றால்தான் அங்கே கதையே எழும். அதன்றி இங்கே மானம் ஏது? சாதியின்றி எடுக்கப்படும் ஒரு படம் எங்கனம் கிராமப் படமாக இருக்க முடியும்? ஆதிக்க சாதி பெண்ணை ஒரு தலித் மணந்துவிட்டால் ஏற்படும் பதட்டங்கள்தான் சேவல் சண்டையிலும் இருக்க முடியும். அப்படி இருந்திருந்தால் இந்த படம் உண்மையிலேயே சமகால வாழ்க்கையை நெருங்கிச் சென்றிருக்க முடியும். அத்தகைய தைரியமில்லாததால் இயக்குநர் இதை துரோகத்தின் கதையாக எடுத்திருக்கிறார்.

சாதி ஆதிக்கம் கோலேச்சும் கிராமங்களில் ஜனநாயகம் இல்லை. அங்கே நிலவுவது நிலவுடைமை வர்க்கங்களின் கட்டைப்பஞ்சாயத்துதான். ஒடுக்கப்பட்ட சாதிகளின் உரிமை மறுப்பிலேயே நீதி நியாயம் என்பது நாட்டுப்புறங்களில் பேசப்படும். அதிலும் விவசாயத்தை மையமாக கொள்ளாமல் வெறுமனே சேவல் வளர்ப்பு என்று இருக்கும் போது அதில் சம்பந்தப்பட்டவர்களிடம் என்ன நீதி இருக்க முடியும்? கிராமத்து லும்பன்களான இவர்களிடம் சேவற் சண்டைகளில் கிடைக்கும் பணம், புகழ்தான் முக்கியமென்றால் அதற்காக இவர்கள் எது வேண்டுமானாலும் செய்வார்கள். அதில் நீதி, நியாயம் என்று ஒரு கதை செய்வது பொருத்தமாக இல்லையே?

சாதி மற்றும் நிலவுடைமை ஆதிக்கம் கோலேச்சும் கிராமங்களில் மூத்தோர் சொல் தட்டக்கூடாது என்பது ஒரு வகையில் ஜனநாயக மறுப்புதான். அந்த ஜனநாயக மறுப்பின் அற்பத்தனத்தை காட்டவேண்டுமென்றால் அது விரிந்த சமூக யதார்த்தத்தில்தான் சாத்தியம். சேவற் சண்டை வாத்தியாரது கோணத்தில் அதைக் காட்டும்போது அது ஏதோ ஒரு வில்லனது நடவடிக்கையாக சுருங்கி விடுகிறது. ஏனெனில் தந்தை, பண்ணையார், கணவன், அண்ணன், ஆதிக்க சாதி என்று எல்லா இடங்களிலும் ஆதிக்கம் செலுத்தும் அந்த மூத்தோர் அதிகாரத்தால் பல்வேறு வகைகளில் மக்கள் துன்பப்படுகிறார்கள். அதற்கு கிராமத்தின் மையமான பொருளாதார வாழ்விலிருக்கும் பாத்திரமே பொருத்தமாக இருக்கும்.

சேவற்சண்டை தொடர்பாக போலீசு, அரசியல் கட்சிகள், சாதி, ஊர் கௌரவம், என்று சமூகம் தழுவிய பின்னணியோடு இந்த கதை இருந்திருந்தாலும் இதன் பரிமாணம் விரிந்திருக்கும். அதற்கு மாறாக நாயகன்,காதல், வில்லன் என்று எளிமைப்படுத்தப் பட்ட சுருங்கிய இடத்திலேயே கதை சுற்றுவதால் பார்வையாளன் இதில் எதையும் புதிதாகப் பெறப்போவதில்லை.

இது வெற்றிமாறனுக்கு மட்டும் நேர்ந்த விபத்தல்ல. தமிழ் சினிமாவின் எல்லா இயக்குநர்களும் கதை என்றாலே அதை சில உணர்ச்சிகள், பாத்திரங்களின் வழியாக மிக மிக எளிமைபடுத்தியே உருவாக்குகிறார்கள். ஆனால் இத்தகைய கதைகள் கேரளாவில் எடுக்கப்பட்டிருந்தால் (80.90களில்) அது சம கால கேரளத்தின் வாழ்வோடு வண்ணமயமாகவும், விரிந்த அளவில் வாழ்க்கையை உணர்த்துவதாகவும் இருந்திருக்கும். சங்க இலக்கியங்களிலிருந்தெல்லாம் சேவற் சண்டைகளை ‘ஆய்வு’ செய்து சேகரித்திருக்கும் இயக்குநர் சமகால கிராம வாழ்வு குறித்து எதையும் பார்த்த மாதிரி தெரியவில்லையே?

எனினும் இந்தப்படத்தின் பாத்திரங்களும், கதை அமைப்பும், காதலை தவிர்த்துவிட்டு பார்த்தால் அழுத்தமாகவும், இயல்பாகவும் படைக்கப்பட்டிருப்பதாக சிலருக்குத் தோன்றலாம். அதற்கு காரணம் நட்பு, துரோகம், அவலம், கையறுநிலை முதலான உணர்ச்சிகளை சமூக யதார்த்தத்தில் பட்டை தீட்டப்படாத சினிமா புனைவு மூலம் நாம் ஒரு இரசனையாக பயன்றிருக்கிறோம். வேறு வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால் நமது வாழ்க்கையில் கூட இத்தகைய பிரச்சினைகளே ஆழமான முக்கியத்துவமின்றி நெடுங்காலம் மனதை ஆக்கிரமித்திருக்கும் வண்ணம் வாழ்கிறோம். அற்ப விசயங்களுக்காக ஆழமான மன பாதிப்பு அடைவது உண்மையென்றாலும் அதுவே வாழ்க்கையின் ஆழம் ஆகிவிடாது இல்லையா? அதனால்தான் இந்த படம் பாத்திரங்களின் சித்திரப்பில் கொண்டிருக்கும் ‘ஆழத்தை’  சமூக வாழ்க்கையில் கொள்ள வேண்டிய ஆழமாகா பயணிக்கவில்லை. நாமும் தெரிந்த உணர்ச்சிகள், அறிந்த அனுபவங்கள் என்று அதிலேயே நின்றுவிடுகிறோம்.

கிராம வாழ்க்கையில் இருந்து கொண்டு கதை சொல்வது வேறு. ஒரு கதைக்காக கிராமத்தை பின்னணியாகக் கொள்வது வேறு. அந்த வகையில் இந்தப் படம் தொப்பிக்காக தலையை வெட்டுகிறது. நல்ல நடிப்பு, ஒளிப்பதிவு, அசலான கிராமக் காட்சிகள் எல்லாம் இருந்தும் இது வழக்கமான ஃபார்முலா கதைகளை பார்த்த எரிச்சலையே தருகிறது.

இதுதான் உண்மையான கிராமத்தை காட்டுவதாக நம்புபவர்கள், உண்மையான கிராமத்தை காட்டினால் என்ன சொல்வார்களோ தெரியவில்லை. நகரத்தின் வாழ்வை அனுபவித்துக் கொண்டே, அதை ஒரு போதும் விட்டுக்கொடுக்க விரும்பாதவர்கள் எப்போதாவது கிராம வாழ்வு குறித்து ஏங்குவது போல பேசுவார்கள். அத்தகைய அக்மார்க் நகரத்து மனிதர்களுக்கு இந்த சினிமா கிராமம் நிச்சயம் பிடிக்கும்.

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

ஜெயக்குமார்: இந்திய ஆசியோடு சிங்களக் கடற்படையின் நரபலி!

39
சிங்களக் கடற்படையால் கொல்லப்பட்ட வேதாரண்யம் மீனவர் ஜெயக்குமார்.
சிங்களக் கடற்படையால் கொல்லப்பட்ட வேதாரண்யம் மீனவர் ஜெயக்குமார்.

புதுக்கோட்டை மீனவர் வீரபாண்டியன், இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்ட பத்துநாட்களுக்குள் அடுத்த கொலை!

வேதாரண்யம், புஷ்பவனம் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் ராஜேந்திரன்(45), ஜெயக்குமார்(28), இவரது தம்பி செந்தில்(25) ஆகியோர் சனி காலையில் சேது சமுத்திர திட்டப்பணி நடந்த இடமருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர் படகை சுற்றி வளைத்து மூன்று மீனவர்களையும் கடலில் குதித்து நீந்துமாறு மிரட்டினர். மற்ற இருவரும் உடன் குதிக்க, சுனாமியால் கை ஊனமடைந்திருந்த ஜெயக்குமார் மட்டும் குதிக்க இயலவில்லை. அவரது கழுத்தை ஒரு கயிற்றில் கட்டி மறு முனையை பிடித்துக் கொண்டு படகைச் சுற்றி வந்த கடற்படையினர் அவர் செத்து விழுந்ததும் சென்றுவிட்டனர்.

கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மற்ற இரு மீனவர்களும் படகு திரும்பினர். பின்னர் ஜெயக்குமாரது உடலை எடுத்துக் கொண்டு அதிர்ச்சியுடனும், அவலத்துடனும் கரை திரும்பினர். கொல்லப்பட்ட ஜெயக்குமாருக்கு மூன்று ஆண்டுகள் முன்தான் திருமணம் நடந்து, இரு பெண்குழந்தைகள் உள்ளது. ஆத்திரம் தீராத மீனவர்களும், பிற மக்களும் ஜெயக்குமாரின் உடலை கிடத்தி சிலமணிநேரம் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். பிறகு வழக்கம் போல பண உதவி, ஆறுதல், சட்டம் ஒழுங்கு நிலைநாட்டுதல் என்ற சடங்குகளெல்லாம் நடந்து விட்டன.

ஜெயக்குமாரின் குடும்பத்தினர்

நூற்றுக் கணக்கில் தமிழக மீனவர்கள் இப்படி சிங்கள கடற்படையால் கொல்லப்படுவது குறித்து அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனாலும் ஒவ்வொரு முறையும் இது மற்றுமொரு சம்பவமாகத்தான் கடந்து செல்லப்படுகிறது. இந்த உலகில் எதை வேண்டுமானாலும் நிறுத்தி விடலாம் என்றாலும், தமிழக மீனவர்கள் கேட்பார் கேள்வியின்றி சிங்கள கடற்படையால் கொல்லப்படுவதை மட்டும் எவராலும் நிறுத்த முடியாது என்று ஆகிவிட்டது.

கருணாநிதி வழக்கம் போல அதிர்ச்சியை தெரிவித்துவிட்டார். மற்றபடி அவர் எழுதும் கடிதம், தந்தி குறித்து கோபாலபுரத்து தெரு நாய்களே கிண்டல் செய்யும் நிலையில் புதிதாக ஒன்றும் இல்லை. ஆனாலும் சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில் இத்தகைய கெட்ட பெயர் வாங்கினால் வாக்குகள் சிதறுமே என்ற சுயநலத்தை வைத்துக்கூட இந்த படுகொலைகளை நிறுத்த இயலவில்லை என்றால் என்ன சொல்ல?

இப்போதெல்லாம் ஆளும் கட்சிகள் எந்த பிரச்சினை வந்தாலும் கவலைப்படுவதில்லை. திமிராக எல்லாவற்றுக்கும் விளக்கம் கொடுக்கிறார்கள். விலை வாசி உயர்வா – மக்களின் வாங்கும் சக்தி உயர்ந்துவிட்டது. ஸ்பெக்ட்ரம் ஊழலா – அதனால்தான் செல்பேசி கட்டணங்கள் குறைவு. டாஸ்மாக் விற்பனை உயர்வா – அதனால்தான் நலத்திட்டங்கள் நடக்கின்றன. பெட்ரோல் விலை உயர்வா – உலகம் முழுவதும் உயர்ந்திருக்கிறது… என்று எல்லாவற்றுக்கும் கூச்சநாச்சமின்றி பேட்டி கொடுக்கிறார்கள். அதன்படி மீனவர் கொலையைக்கூட அவர்கள் மாரடைப்பு வந்து செத்துவிட்டார்கள் என்றுகூடச் சொல்லலாம்.

ஜெயலலிதாவும் சூடாக கண்டனம் தெரிவத்தோடு, கருணாநிதியின் கடித போரைக் கிண்டலடித்துவிட்டு கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்திற்கு ஐந்து இலட்சம் ரூபாய் வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். அவர் கேட்பதற்கு முன்னரே கருணாநிதி அரசு அந்த பணத்தை அறிவித்ததோடு வழங்கியும் விட்டது. ஆரம்பத்தில் அந்த மீனவர் குடும்பம் அதை வாங்காமல் எதிர்ப்புக் காண்பித்திருக்கிறது. பின்னர் அதை மாற்றி வாங்க வைத்திருக்கிறார்கள். இதறத்கு பல அரசியல்வாதிகள், அதிகாரிகள் மெனக்கெட்டிருக்கிறார்கள். இந்த மெனக்கெடலை சிங்கள கடற்படையை தண்டிப்பதற்கு மட்டும் யாரும் காண்பிக்கவில்லை.

ராமதாஸ் விரைவில் தி.மு.க கூட்டணியில் சேர இருப்பதால் அடக்கமாக கச்சத்தீவை திரும்பப் பெறவேண்டுமென்றும், இலங்கை அரசை கண்டித்தும் ஒரு அறிக்கை விட்டுள்ளார். வைகோ சமீபத்தில்தான் மன்மோகன் சிங்கை சந்தித்து அவர் ரொம்ப நல்லவர் என்றும் அவரிடம் தமிழக மக்களின் கோரிக்கைகளை வைத்திருப்பதாகவும் சொல்லி முடிக்கவில்லை. அதற்குள் அடுத்த படுகொலை. இதை மத்திய அரசு உடனே நிறுத்தாவிட்டால் தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை ஏற்படலாம் என்றும் கூறியிருக்கிறார். அவரே போயஸ்தோட்டத்தில் ஒரு சாதாவாக வலம் வரும் போது யார் எங்கு அசாதாரணத்தை எற்படுத்துவது?

ஸ்பெக்ட்ரம் ஊழல், மந்திரி சபை மாற்றம், தேர்தல் கூட்டணி முதலான அதி முக்கிய விசயங்களை கருணாநிதியிடம் பேசவந்த பிரணாப் முகர்ஜி அதையெல்லாம் பேசிவிட்டு வெளியே வந்த பின்னர் மீனவருக்காக ஒரு மெல்லிய அதிர்ச்சியை வெளியிட்டார். அதன்படி மீனவர்கள் தப்பு செய்திருந்தால் கைது செய்யவேண்டுமே அன்றி கொல்லக்கூடாதாம். ஆமாம். நமது மீனவர்கள் நடுக்கடலில் கள்ளச் சாராயம் காய்ச்சி, கஞ்சா பயிரிட்டு தொழில் நடத்துகிறார்கள், இதற்காகத்தான் சிங்கள கடற்படை நமது மீனவர்களை கொல்கிறது போலும்.

ஆங்கில ஊடகங்கள் அனைத்தும் இந்த கொலையை ஒரு செய்தியாக வெளியிட்டிருக்கின்றன. ஆனால் தலைப்பில் இலங்கை கடற்படை செய்ததாக இல்லை. உள்ளேயும் அது ஊகமாக வருகிறது. அதற்கு மேல் இலங்கை கப்பற்படை அதிகாரி இதை மறுத்தது தனிச் செய்தியாக வந்திருக்கிறது. அதன்படி இந்த செய்தி தமிழகத்தை தாண்டி வேறு எங்கும் ஒரு விசயமே இல்லை.

இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் அதன் வாசகர்கள் இந்த படுகொலையை கடத்தல்காரர்களும், விடுதலைப்புலிகளும் செய்து இந்திய இலங்கை நட்பை முறிப்பதற்கு முயன்றிருக்கலாம் என்று தைரியமாக எழுதுகிறார்கள். இன்னும் ஐந்து இலட்சத்திற்கு ஆசைப்பட்டு கூட இந்தகொலை நடந்திருக்கலாம் என்று கூட சொல்வார்கள். அப்படி சொல்வர்கள் எவரும் வேதாரண்யமோ, ராமேஸ்வரமோ வரப்போவதில்லை. காஷ்மீர் பிரச்சினைக்காக இந்திய அரசை ஆதரித்து பேசுபவர்கள் எவரும் ஸ்ரீநகர் போகப் போவதில்லை போல.

மேற்கு நாடுகளில் ஒரு விபத்தில் ஓரிருவர் இறந்தாலே அது உலகச் செய்தியாக பேசப்படும். நடவடிக்கை எடுக்கப்படும். மூன்றாம் நாடுகளில் நூற்றுக்கணக்கில் இறந்தாலும் அது கொசுக்கடி செய்தி போல பார்க்கப்படும். இந்த நிலைமையை இன்று நாம் இந்தியாவிலும் பார்க்கிறோம். தமிழகத்தை தாண்டி குறிப்பாக வட இந்தியாவில், ஊடகங்களில் இது குறித்த எந்த அதிர்ச்சியும் இல்லை. மத்திய அரசு, அதன் வெளியுறவுத்துறை அமைச்சகத்திலும் கூட இதற்காக தூதரிடம் அறிக்கை கேட்பது, சம்பிரதாயமான கண்டனம் என்று ரெடிமேடு விசயங்கள்தான் நடக்கின்றன. சோனியா-மன்மோகன் அரசு காஷ்மீர் பண்டிட்டுகளுக்காக ஒரு பூலோக சொர்க்கத்தையே டெல்லியில் அளித்து காக்கிறார்கள். ஆனால் இங்கே இலங்கை அகதி மக்கள் வதைமுகாமில் அடைபட்டிருப்பதோடு, தமிழக மீனவர்களும் கொல்லப்படுகிறார்கள். எனில் நமது மக்களின் உயிருக்கு எந்த மதிப்பும் இல்லை.

ஒரு அமெரிக்கன் ஒரு விபச்சார வழக்கில் உசிலம்பட்டியில் சிக்கினால் கூட அடுத்த கணம் அவனது தூதரகம் ஓடி வந்து உதவி செய்யும். ஆனால் ஒரு இந்தியக் குடிமகன், அவனது தொழில் செய்யும் இடத்தில் அண்டை நாட்டு கடற்படையால் கொல்லப்படுகிறான். இதற்கு முன் நூற்றுக்கணக்கில் அப்படி கொல்லப்பட்டும் எந்த நாதியும் இல்லை. பிறகு ஏன் இதற்கு இந்தியா என்று பெயர் வைத்து தேசபக்தி, தேசியக் கொடி, என்று உருகுகிறார்கள்?

விடுதலைப்புலிகளின் அழிவுக்கு முன்னர் எப்படியோ அப்படித்தான் இப்போதும் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவது தொடர்கிறது. தமிழக மீனவர்கள் இப்படி மாதத்திற்கொரு முறையோ இல்லை வாரத்திற்கொரு முறையோ கொல்வதன் மூலம் எதிர்காலத்தில் ஈழத்தில் போராளிகளுக்கு ஒரு துரும்பும் உதவ கூடாது என்பதற்காக இது நடக்கலாம். அதன்படி மறைமுகமாக இந்திய அரசும் இதை கண்டுகொள்ளாமல் இருக்கலாம்.

ஈழத்தில் சிங்கள இராணுவத்தின் துப்பாக்கி நிழலில் மக்கள் வாழவேண்டும் என்ற நிலை உருவானது போல தமிழக கடற்கரையில் சிங்கள கடற்படைக்கு கட்டுப்பட்டுதான் மீனவர்கள் வாழவோ சாகவோ வேண்டும் என்ற நிலையும் உருவாகிவிட்டது. ஏற்கனவே மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கும் போது சிங்கள கடற்படை வந்து மீன்களை பிடுங்குவது, வலையை நாசம் செய்வது, அடித்து துரத்துவது என்று செய்து வரும் வதைகள் பெரிய அளவுக்கு செய்தியாவதில்லை. எப்போதாவது நடந்தால்தானே அது செய்தி.

சொந்த நாட்டு மக்களை காப்பாற்றும் அருகதையை இந்த அரசுகள் என்றோ இழந்துவிட்டன. தமிழகத்தின் நிலை அசாதாரணமாகிவிடும் என்று எச்சரிக்கை விடுக்கும் வைகோ, ஜெயலலிதா போன்ற பெரிய கட்சியினர் அந்த அசாதாரண நிலையை தமது போராட்டங்கள் மூலம் ஏன் உருவாக்க வில்லை? அவர்களும் கூட மத்திய அரசு, வெளியுறவுக் கொள்கை என்று வரும்போது இந்திய அரசின் மனம் கோணாமல்தானே பேச முடியும்? இல்லையெனில் சீமானை பிடித்து தேசதுரோகத்தில் உள்ளே போட்டதுபோல புரட்சித் தலைவியையும் போடலாம்.

இந்திய அரசு வழங்கும் வாழ்வை விட அதை எதிர்ப்பதால் வரும் இழப்பு அதிகம் என்பதால் தமிழக ஓட்டுக்கட்சிகள் எதுவும் மீனவர்களுக்காக மத்திய அரசை பணிய வைக்கும் போராட்டத்தை நடத்தப் போவதில்லை. இதுதான் இந்திய அரசின் ஆசிர்வாதத்தோடு இயங்கும் சிங்கள இனவெறி அரசின் பலம்.

எனில் என்னதான் தீர்வு?

மத்திய அரசை நிர்ப்பந்திக்கும் போர்க்குணமிக்க போராட்டங்கள் தமிழகத்தில் நடைபெறவேண்டும். இது கெஞ்சியோ அல்லது மனுக்கொடுத்தோ அல்ல. மத்திய அரசின் பணிகள் இங்கே நடைபெறாமல் இருக்கும் வண்ணம் மக்கள் போராட்டம் தடை போடவேண்டும். அப்போதுதான் தமிழகத்தை தாண்டி இருக்கும் இந்திய மனநிலையில் ஒரு அதிர்ச்சியை கொண்டுவரமுடியும். நமது மீனவர்களின் கொலைக்கான நடவடிக்கையையும் ஆணையிட்டு செய்ய முடியும். ஆனால் அப்படி ஒரு போராட்டம் எழக்கூடாது என்பதற்கே எல்லா கட்சிகளும் தீவிரமாக வேலை செய்யும். அந்த கட்சிகளின் செல்வாக்கில் இருக்கும் மக்களை மீட்காமல் மத்திய அரசை பணியவைக்கும் போராட்டம் நமது விருப்பமாக இருந்தாலும் நடைமுறையில் வருவது கடினம்.

அதுவரை  தமிழக மீனவர்களது  மரணம் ஒரு சிலரின் சுரணையையாவது எழுப்பும். எழுப்புவோம்.

_____________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

கச்சத்தீவு : அனாதைகளாய் தமிழக மீனவர்கள்! – சிறப்புக் கட்டுரை!

 

பாலஸ்தீனம்: ஒரு விதவைத் தாயின் வீரக்கதை!

8
இசுரேல் இராணுவத்தால் கொல்லப்பட்ட 35 வயது ஜவஹர் அபு ரஹமே

தனது படுக்கையில் அமர்ந்து சுபையா மூசா அபு ரஹ்மே அவரது சமீபத்திய இழப்பைப் பற்றி புலம்பிக் கொண்டிருக்கிறார்.  இறந்து போன அவரது மகனை நினைவுபடுத்தும் விளம்பர அட்டைப்படங்கள் அவரைச் சூழ்ந்திருக்கின்றன. புத்தாண்டு தினத்தன்று அவரது சொந்த கிராமத்தில் நடந்த‌ இஸ்ரேல் தடுப்புச் சுவருக்கெதிரான ஆர்ப்பாட்டத்தில் அவரது 35 வயது மகள், ஜவஹர் இறந்து போனார். இஸ்ரேல் ராணுவம் உறுதியாக மறுத்தாலும், கண்ணீர் புகையை அளவுக்கதிகமாக சுவாசித்ததாலேயே அவர் இறந்து போனதாக ஜவஹரின் குடும்பத்தினர் உறுதிபட‌க் கூறுகிறார்கள்.

“எனக்கு எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?” என்கிறார் வலுவற்ற குரலில் அபு ரஹ்மே. தலையில் ஒரு வெண்ணிறத் துணியை சுற்றியிருக்கிறார். கண்களில் வெறுமை படர்ந்திருக்கிறது.அவரது குடும்பத்திற்கு இழைக்கப்பட்டிருப்பதை,அவரது குடும்பத்தின் மீது தொடர்ந்து நிகழ்ந்துவரும் பயங்கரங்களை  அவரால் முழுமையாகக் கிரகித்துக்கொள்ள முடியவில்லை.   மேற்குக்கரை ஆக்கிரமிப்புக்கு எதிரான பாலஸ்தீன போராட்டத்திற்கான உருவகமாக அமைந்து விட்டது.

கடந்த ஆண்டு நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது அபு ரஹ்மேவின் மகன் பாசாம்,கேஸ் குண்டுவெடிப்பில் இறந்து போனார். அவர் “வன்முறையற்ற எதிர்ப்பு” ஒன்றை ஒருங்கமைத்திருந்த கமிட்டிகளில் ஒரு துடிப்புமிக்க உறுப்பினராக இருந்தார். எஞ்சியிருப்பது அவரது அடுத்த மகன், அஷ்ரப். ஒரு இஸ்ரேல் ராணுவ வீரன் இரும்புத் தோட்டாக்களால்  சுட்டதால் அவரும் காலில் காய‌த்துடன் தப்பியிருக்கிறார்.

இப்போது, ஜவஹர்.

“அவள் மிகவும் அருமையான பெண். இங்கிருக்கும் அனைவருக்கும் பிடித்தமானவள். இந்த தடுப்புச் சுவர் எங்கள் நிலங்களைப் பறித்துக் கொண்டது. இப்போது,எனது பிள்ளைகளும் என்னை விட்டு போய் விட்டனர்.என்னிடம் இப்போது எதுவும் மீதமில்லை.” என்கிறார் 55 வயதான விதவை, அபு ரஹ்மே.

“ஆனால், எங்கள் பிரியத்துக்குரியவரை இழக்கும் ஒவ்வொரு தடவையும் ஆக்கிரமிப்புக்கெதிராக போரிடும் பலத்தைத்தான் பெறுகிறோம்.” மேலும் கூறுகிறார் “இது எங்கள் நிலம். அதற்காக எதிர்த்துப் போராடுவோம். அந்தச் சுவரை தகர்த்தெறியும் வரை ஓயமாட்டோம்”.

ஜவஹருக்கு துக்கம் கொண்டாட வீட்டிற்கு வெளியே தாழ்வாரத்தில்,ஆண்கள்  கூடியிருக்கிறார்கள்.பேரிச்சம் பழத்தை சாப்பிடுகிறார்கள். மசாலா காபியை அருந்துகிறார்கள்.தொடர்ந்து புகை பிடிக்கிறார்கள் – ஆனால், யாரும் பேசவில்லை. அவ‌ர்க‌ளது ம‌ர‌புப்ப‌டி பெண்க‌ள் த‌னிய‌றையில் அம‌ர்ந்திருக்கிறார்க‌ள். அருகிலிருந்த‌ ர‌ம‌ல்லாவைச் சேர்ந்த‌ இரு மாற்றுத்திற‌னாளிக‌ளுக்கு உத‌வி செய்துக கொண்டிருந்த‌ இர‌க்கம் வாய்ந்த‌‌ ஒரு இள‌ம்பெண்ணுக்கு த‌ங்க‌ள் அனுதாபத்தைத் தெரிவிக்க‌ அர‌சு அதிகாரிக‌ள்,ந‌ண்ப‌ர்க‌ள்,உற‌வின‌ர்க‌ள் ம‌ற்றும் ப‌ள்ளிச்சிறார்க‌ள் என்று அனைவ‌ரும் வந்து செல்கிறார்க‌ள்.

இஸ்ரேலிலிருந்து பால‌ஸ்தீனப் ப‌குதிக‌ளைப் பிரிக்கும் த‌டுப்புச் சுவ‌ர் அபு ர‌ஹ்மேவின் வீட்டிற்கு வெளிப்புறத்திலிருந்து பார்த்தால் தெளிவாக‌த் தெரிகின்ற‌து. இந்த‌ த‌டுப்புச் சுவ‌ர் எழுப்ப‌ப்ப‌டுவ‌த‌‌ற்கெதிராக‌ அக்க‌ம்ப‌க்க‌த்து வீட்டாருட‌ன் சேர்ந்து அவர்கள்  ஐந்து ஆண்டுக‌ளுக்கும் மேலாக‌ போராட்ட‌த்தில் ஈடுப‌ட்டு வ‌ருகின்ற‌ன‌ர். ஆனால், இந்த‌ப் போராட்டம் அந்த‌ கிராம‌த்திலேயே வேறெந்த‌க் குடும்ப‌த்தையும் விட‌ அதிக‌மான‌ இழ‌ப்பை இக்குடும்பத்திற்கு கொண்டு வ‌ந்திருக்கிற‌து. மேலும்,  க‌ட‌ந்த‌ வார‌த்தில் ஜ‌வ‌ஹ‌ரின் ம‌ர‌ணம் அவ‌ர்கள் குடும்பத்தை மீண்டும் த‌லைப்புச் செய்திக‌ளுக்குக் கொண்டு வ‌ந்திருக்கிற‌து.

பில்லிங்கில் ந‌ட‌ந்த‌ ஆர்ப்பாட்ட‌த்தின்போது இஸ்ரேல் ராணுவ‌ வீர‌ர்க‌ள் போட்ட‌ கண்ணீர்ப் புகை குண்டுக‌ளை சுவாசித்த‌தாலேயே அவ‌ர் உயிரிழ‌ந்தார் என்று அவ‌ர‌து குடும்ப‌த்தின‌ர் உறுதியாக‌ச் சொல்கிறார்க‌ள். ராணுவ‌ம் ம‌ருத்துவ‌ம‌னை அறிக்கைக‌ள் உட்பட, பால‌ஸ்தீன‌ அறிக்கைக‌ளின் ந‌ம்ப‌க‌த்த‌ன்மையை இது கேள்விக்குள்ளாக்குகின்ற‌து. ராணுவ‌ விசார‌ணை இன்னும் முடிவுக்கு வ‌ர‌வில்லையென்றாலும், “இது போன்ற‌ ஒரு சில‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் உண்மையென்று ஏற்றுக்கொண்டாலும், ஜவஹரின் ம‌ர‌ண‌ம் க‌ட‌ந்த‌ வெள்ளிக்கிழ‌மை ந‌ட‌ந்த‌ ஆர்ப்பாட்ட‌த்தோடு முற்றிலும் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌டாத‌ ஒன்று” என்றும் கூறுகிற‌து.

ஆனால், முற்றிலும் சோர்வடைந்த நிலையிலிருக்கும் சுபையா முசா அபு ரஹ்மேவுக்கு எந்த‌ ச‌ந்தேக‌மும் இல்லை. “ராணுவ‌ வீர‌ர்க‌ள் புகைக் குண்டுக‌ளை போட ஆர‌ம்பித்த‌போது,  மோத‌ல் ந‌ட‌ந்த‌ ப‌குதிக்கு ச‌ற்றுத்த‌ள்ளி நான் என் ம‌க‌ளுட‌ன் இருந்தேன்.” என்று நினைவு கூர்கிறார்.”காற்றில் வ‌ந்த‌  புகையினால் நாங்க‌ள் அவ‌திக்குள்ளானோம். இத‌ற்குமேல் என்னால் தாங்க‌ முடிய‌வில்லை என்று எனது ம‌க‌ள் சொன்ன‌தோடு வாந்தியெடுக்க‌வும் ஆர‌ம்பித்தாள்”. ச‌மீர் இப்ராஹிம், 34 வ‌ய‌தான‌ ஜ‌வ‌ஹ‌ரின் ம‌ற்றொரு ச‌கோத‌ர‌ர் ஆம்புல‌ன்சை அழைத்த‌தையும், ம‌ருத்துவ‌மனைக்குச் செல்லும் வ‌ழியிலேயே த‌ன‌து ச‌கோத‌ரி மரணமடைந்த‌‌தையும் நினைவு கூர்கிறார்.

“அவ‌ள் மிக‌வும் மோசமான‌ நிலையில் இருந்தாள்” என்கிறார். “அவ‌ர்க‌ள் அவ‌ளை ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றார்க‌ள்.அவ‌ள் வாயிலிருந்து நுரைநுரையாக‌ வாந்தியெடுத்துக் கொண்டிருந்தாள். நான்கைந்து நிமிட‌ங்க‌ளில் ஒரு ஆம்புல‌ன்சு வ‌ந்த‌து. புகைமூட்டம் காரணமாக‌ அவ‌ளுக்கு போதுமான ஆக்சிஜ‌ன் கிடைக்க‌வில்லை என்று ம‌ருத்துவ‌ர்க‌ள் கூறினார்கள்”

ச‌மீர்,  த‌டுப்புச்சுவ‌ருக்கெதிராக‌ ந‌டைபெறும் ஆர்ப்பாட்ட‌த்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழ‌மையும் க‌ல‌ந்துகொள்கிறார். தொடர்ச்சியாக பாலஸ்தீனிய‌ர்க‌ள் க‌ற்க‌ளை வீசுவ‌து,ராணுவ‌ம் க‌ண்ணீர் புகைக்குண்டுக‌ளை வீசுவ‌து என போராட்ட‌த்தில் மோத‌ல்க‌ள் நிக‌ழ்வ‌து சாதார‌ணமான‌துதான். அருகாமையில் உள்ள‌ கிராம‌ங்களுக்குக் கூட சில நொடிக‌ளில் அட‌ர்புகை ப‌ரவிவிடுகிற‌து. க‌ண்ணீர் புகையினால் க‌ண்க‌ளில் எரிச்ச‌ல் ஏற்ப‌டுவ‌தும், வீதிக‌ளில் ம‌க்க‌ள் வாந்தியெடுப்ப‌தும் சாதார‌ண‌மான‌துதான். ஆயினும் ச‌மீர், அவ‌ர‌து குடும்பம் ம‌ற்றும் ந‌ண்ப‌ர்கள் இதற்கு ப‌ணிய‌ ம‌றுத்து தங்களது எதிர்ப்பைத் தொடர்ந்து தெரிவிக்கிறார்க‌ள்.

“நாங்க‌ள் எங்க‌ள் பாதிப்பை அவர்களுக்கு காண்பிக்க‌ச் செல்கிறோம்” என்கிறார்.” எங்க‌ளது நில‌ங்களை அவ‌ர்கள் வ‌ன்கொடுமைக்குள்ளாக்குகின்றார்க‌ள் என்ப‌தை முடிவு வ‌ரை சொல்வ‌த‌ற்கான‌ எங்களுடைய‌ வ‌ழி இது.” அவ‌ர‌து குடும்ப‌ம் க‌ட‌ந்து வ‌ந்த துயரம் மிகுந்த பாதையினால் அவ‌ர்க‌ள் சிற‌ப்பான‌ இட‌த்தைப் பெற்ற‌வ‌ர்க‌ளாகிறார்க‌ளா என்ற‌ கேள்விக்கு இல்லையென்று ப‌தில‌ளிக்கிறார். “நாங்க‌ளும் ம‌ற்ற‌வ‌ர்க‌ளைப் போன்றவர்களே. க‌ட‌வுள் எங்க‌ளுக்கு வைக்கும் சோத‌னைதான் இது.”

பில்லிங், ஒரு விவ‌சாய‌ கிராம‌ம். ஆனால், அந்த‌ த‌டுப்புச்சுவ‌ரினால் 50 ச‌த‌வீத‌ம் நில‌த்தை பெறுவ‌திலிருந்து இக்கிராம‌த்த‌வ‌ர்க‌ள் த‌டுக்க‌ப்ப‌ட்டிருக்கிறார்க‌ள். இது, அவ‌ர்க‌ளுக்காக‌ வாதாடும் மைக்கேல் ஸ்ஃபார்ட் எனும் வ‌க்கீலின் கூற்று.பாதிக்க‌ப்ப‌ட்ட‌ அபு ர‌ஹ்மே குடும்ப‌த்தாரும் நில‌மிழ‌ந்த‌வ‌ர்க‌ளுள் அட‌க்க‌ம்.

தினசரி குறிப்பிட்ட நேரம்  ராணுவம் திற‌ந்துவைத்துள்ள ஒரு வாயிலை அவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் தோட்ட‌த்துக்குச் செல்ல உப‌யோகித்துக் கொள்ள‌ முடியும். ஆனால், மைக்கேல் ஸ்பார்டு சொல்வது போல‌ ராணுவ‌ம் எப்போதும் இசைந்து கொடுக்காது.

இர‌ண்டு ஆண்டுக‌ளுக்கு முன்பு துப்பாக்கிச்சூட்டில் அடிப‌ட்ட அஷ்ர‌ப், க‌ழுத்தில் சிவ‌ப்பு வெள்ளை பாலஸ்தீனிய அங்கியை அணிந்த‌ப‌டி த‌ன‌து தாயாரையும் ச‌மீரையும் கூர்ந்து க‌வனிக்கிறார்.  இஸ்ரேலை சேர்ந்த மனித உரிமை அமைப்பொன்று அவர் சுட‌ப்ப‌ட்டதை ப‌ட‌மாக்கிய‌து.அந்தப் ப‌ட‌ங்க‌ள் உல‌கையே வ‌ல‌ம் வ‌ந்த‌ன‌. அவ‌ர் த‌ன்னை அதிர்ஷ்ட‌ம் வாய்ந்த‌வ‌ராக‌க் க‌ருதிக்கொள்கிறார். சிறு காய‌ங்க‌ளுட‌ன் த‌ப்பிய‌த‌ற்காக‌ ம‌ட்டும‌ல்ல, அவ‌ரை சுடுவ‌த‌ற்கு உத்த‌ர‌வ‌ளித்த‌ உய‌ர‌திகாரி த‌ற்போது ராணுவ‌ நீதிம‌ன்ற‌த்தால் த‌ண்டிக்க‌ப்ப‌ட்டுள்ளதாலும். ஆனால், க‌ட‌ந்த‌ வார‌ம் ம‌கிழ்ச்சிக்குரிய ஒன்றாக‌ இல்லை. “எங்க‌ள் குடும்ப‌ம் சித‌ற‌டிக்க‌ப்ப‌ட்டு விட்ட‌து”  என்ற‌தோடு “எங்க‌ள் குடும்ப‌த்தில் இந்த‌ச் சோக‌ம் நிர‌ந்த‌ர‌மாக தங்கியிருக்கும்.” என்றார்.

______________________________________________________________________________

நன்றி: கார்டியன்,
http://www.guardian.co.uk/world/2011/jan/09/palestinians-ramallah-israeli-barrier
தமிழாக்கம்: சந்தனமுல்லை

______________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

முதலாளிகளுக்கு மாமா வேலை செய்யும் பத்திரிகையாளர்கள்!

24

நீரா ராடியாவின் உரையாடற் பதிவுகள் இந்திய அரசியல் அரங்கில் காலம் காலமாக நிலவி வந்த தரகுத்தனத்தின் ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றத்தை அம்பலப்படுத்தியது என்றால், இன்னொரு பக்கம் முதலாளித்துவ ஊடகங்களின் உண்மையான மறுபக்கத்தையும் வெளிச்சமிட்டுக் காட்டியது. பன்னாட்டுக் கம்பெனிகள் மற்றும் தரகு முதலாளிகளுக்குச் சாதகமாய் அரசு இயந்திரத்தின் அச்சை சுழற்றும் தரகு வேலை பார்த்து வந்த நீரா ராடியாவுடன் பர்க்கா தத், வீர் சங்வி போன்ற பத்திரிகையாளர்கள் நடத்திய பேச்சுக்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது.

ஜனநாயகத்தைக் காக்கும் காவல் நாய் என்பது போலச் சித்தரிக்கப் பட்ட முதலாளித்துவ ஊடகங்கள், எதார்த்தத்தில் டாடா அம்பானிகளின் பங்களா நாய்களாக இருந்துள்ளது, இந்த ஜனநாயக அமைப்பை நம்பியவர்களுக்கு ஒரு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பத்திரிகையாளர்கள் என்றவுடன் உங்கள் நினைவுக்கு எப்படியானதொரு சித்திரம் தோன்றுகிறது? ஒல்லியான உருவம் ஒன்றில் ஒட்டிக் கொண்டிருக்கும் அழுக்கான பைஜாமா, லேசாகக் குழி விழுந்த கண்கள், ஒட்டிய கன்னங்கள், கனமான கண்ணாடி, அதற்குள் சிவந்த கூர்மையான கண்கள். இவரது ஆளுமை பற்றிய பிம்பமாக, அதிகாரத்தையும் முறைகேடுகளையும் எப்போதும் எதிர்த்துக் கொண்டிருப்பது, மக்களுக்கு உண்மைகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற முனைப்பில் உயிரையே கூட துச்சமாக மதிப்பது, நேர்மை… இத்யாதி இத்யாதி.. என்றால், நீங்கள் இன்னமும் என்பதுகளில் வெளியான தமிழ்சினிமாக்களின் தாக்கத்திலிருந்து விடுபடாதவர் என்று பொருளாகிறது.

இறக்குமதி செய்யப்பட்ட காரில், பளீரென்ற மேக்கப்பில், டிசைனர் உடைகளோடும் நுனி நாக்கில் புரளும் ஆங்கிலத்தோடும் ஒரு சினிமா நடிகருகருக்கு ஒப்பான தோற்றம் தான் இன்றைய நவீன பத்திரிகையாளர்களின் தோற்றம்! பண்பில் ஏற்பட்ட மாற்றம் தான் தோற்றத்தில் பிரதிபலிக்கிறது. மிகவும் சகஜமாக அதிகார வர்க்கத்தினரிடையேயும் அரசியல் மட்டத்திலும் கிடைக்கும் தொடர்புகள் அவர்களுக்குத் தரகர்களாக ஆகும் வாய்ப்பை எளிதாக்குகிறது. இந்திய அளவிலான பத்திரிகையாளர்கள் இந்திய அளவில் தரகு வேலை செய்கிறார்கள் என்றால், மாநில அளவிலான பத்திரிகைகளின் நிருபர்கள் மாநில அளவிலும், மாவட்ட அளவிலான நிருபர்கள் மாவட்ட அளவிலும் இதே வேலையை வெவ்வேறு அளவுகளில் வெவ்வேறு விதமாக வெளிப்படுத்தியே வருகின்றனர்.

தமிழகத் தேர்தல் சமயங்களில் போயஸ் கார்டனை விட்டு ஒரு மர்மப் புன்னகையோடு வெளியேறும் துக்ளக் சோவை தவறாமல் தமிழ் செய்தி ஊடகங்களில் பார்த்திருக்கிறோம். சுயேச்சையாய் செய்திகளை அளிக்கும் கடமை உள்ள ஒரு பத்திரிகையாளருக்கு அரசியல் அணி சேர்கைகளுக்காக தரகு வேலை செய்ய வேண்டிய அவசியம் என்னவென்ற கேள்வி இது வரை எழுந்ததில்லை. இலங்கை இந்தியா இடையே இந்து பத்திரிகையின் என்.ராம் செய்து வரும் தரகு வேலைகளும் இலங்கை இனவெறி பாசிஸ்டுகளுக்கு ஆதரவாக இங்கே அவர் செய்து வரும் எத்து வேலைகளும் எவரும் அறியாத இரகசியங்கள் அல்ல.

தற்போது வெளியாகியிருக்கும் நீரா ராடியாவின் பதிவு செய்யப்பட்ட உரையாடல்களைத் தொடர்ந்து ஏதோ பர்கா தத்தும் வீர் சிங்வியும் மட்டும் தான் தரங்கெட்டுப் போய் விட்டதைப் போன்றும்,  “நாங்களெல்லாம் யோக்கிய சிகாமணிகள்” என்பது போலவும் மற்ற முதலாளித்துவப் பத்திரிகைகள் நடிக்கின்றன. இல்லாத புனிதம் கெட்டுப் போய்விட்டதைப் போல் அலறிக் கொள்கின்றன. உரையாடற் பதிவுகள் முழுமையாக கைக்குக் கிடைக்கும் வரையில் பொறுமையாக இருந்து விட்டு, தாம் சம்பந்தப்பட்ட விவரங்கள் வெளியாகவில்லை என்பதை உறுதி செய்து விட்டு இப்போது பர்க்கா தத்தையும் வீர் சிங்வியையும் மட்டும் காவு கொடுத்து விட்டு மற்றவர்கள் தப்பிக்க முடியுமா என்று பார்க்கிறார்கள்.

கவர் வாங்கிக் கொண்டு “கவர்” ஸ்டோரிகள் எழுதுவது முதலாளித்துவ பத்திரிகைகளுக்கு ஒன்றும் புதிய விவகாரம் இல்லையென்றாலும், நேரடியாக ‘இன்னதற்கு இன்ன ரேட்’ என்று நிர்ணயித்துக் கொண்டு மக்கள் தம்மேல் வைத்திருக்கும் நம்பிக்கையைக் கூறு போட்டு விற்கும் போக்கு சமீப வருடங்களில் பரவலாகி வருகிறது.

தற்போது கார்கில் போரில் உயிர் நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்வதில் (ஆதர்ஷ் ஊழல்) முறைகேடுகள் செய்து அம்பலமாகி ஊரே காறித்துப்பிக் கொண்டிருக்கும் மகாராஷ்ட்டிர (முன்னாள்) முதல்வர் அசோக் ராவ் சவாண் பற்றி அம்மாநில சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் “ஆற்றல் மிக்க இளம் தலைவர்” என்று தலைப்பிட்டு லோக்மத் எனும் மராட்டிய இதழ் லஞ்சம் வாங்கிக் கொண்டு செய்தி வெளியிட்டது. அது மட்டுமல்லாமல், அந்தக் காலகட்டத்தில் சவாண் பற்றி பல்வேறு சிறப்பிதழ்களையும் வெளியிட்டது. இவை எதுவும் விளம்பரம் என்று குறிக்கப்படாமல், செய்தியைப் போலவே வெளியிடப்பட்டது பின்னர் அம்பலமாகி நாறியது.

அரிந்தம் சௌத்ரி “இதிலெல்லாம் என்னய்யா பிரச்சினையக் கண்டுட்டீங்க?” என்கிறார். “அமெரிக்கா இங்கிலாந்து போன்ற நாடுகளில் இப்படி பத்திரிகையாளர்கள் அரசியல் கட்சிகளுக்கு சார்பு நிலையெடுப்பதோ லையசன் (தரகு) வேலை பார்ப்பதோ ஒன்றும் புதிதில்லையே? இத்தனைக்கும் நம்மை விட அவர்களோ முன்னேறிய ஜனநாயக நாடு அல்லவா; நாம் மட்டும் ஏன் இன்னும் பழைய பஞ்சாங்கமாகவே இருக்க வேண்டும். இந்தியாவில் உள்ள பத்திரிகைகள்  இனிமேல் தலையில் முக்காடு போட்டுக் கொண்டு அரசியல் கட்சிகளுக்கு சார்பு நிலையெடுக்கவோ தரகு வேலை பார்க்கவோ வேண்டாம் – அதை வெளிப்படையாக நேரடியாகவே செய்து விடலாம்” என்று தனது சண்டே இண்டியன் பத்திரிகையில் எழுதியுள்ளார். அரிந்தமின் அந்தக் கட்டுரையை ஒரு வேளை சோ ராமசாமி படித்திருந்தால் “ஹெஹ் ஹெஹ் ஹே.. இவாள்ளாம் இப்பத்தான் எல்கேஜிக்கே வந்திருக்கா… நாமெல்லாம் பிஹெச்டியே முடிச்சுட்டோமே” என்று இந்து ராமைப் பார்த்து சொல்லியிருக்கக் கூடும்.

பத்திரிகைகளின் தரகுத்தனம் என்பது தனியே ஆதாரமில்லாமல் அந்தரத்தில் தொங்கும் அதிசய மாங்காய் அல்ல.  “முதலாளித்துவப்” பத்திரிகைகள் என்று நாம் சொல்வது அதன் இயங்கும் விதத்தை வைத்து மாத்திரமல்ல – அவைகள் அடிப்படையிலேயே முதலாளித்துவ குணாம்சங்களைக் கொண்டுள்ளன. அவைகள் தாம் வெளியிடும் “செய்தியை” ஒரு பண்டமாகக் கருதி உற்பத்தி செய்து சந்தையில் திணிப்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்வதில்லை, தம்மிடம் விலை போகக் கூடிய சரக்கு என்னவெல்லாம் உண்டோ அவையத்தனையையும் பட்டியல் போட்டு விற்கத் தயங்குவதில்லை – நீதி, நேர்மை, நியாயம் என்று இவர்களின் அனைத்திற்கும்  ஒரு விலை உண்டு.

Paid News விவகாரம் பற்றி பத்திரிகையாளர் பி.சாய்நாத் எழுதிய கட்டுரையை வைத்துக் கொண்டு பாராளுமன்றத்தில் சில நாட்கள் பஜனைகள் நடத்தி முடித்த பின், பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா அவ்விவகாரம் பற்றி விசாரிக்க சீனிவாச ரெட்டி மற்றும் பரஞ்சோய் குகா தலைமையில்  இருநபர் கமிட்டி ஒன்றை அமைத்தது. அக்கமிட்டியின் விசாரணைகளில், இந்தியாவின் மிகப் பெரிய ஊடக நிறுவனங்கள், நேரடியாக பங்குச்சந்தையின் பங்குகளை வாங்குவதும், அப்படி பங்குகள் பெற்ற நிறுவனங்களைப் பற்றிய விளம்பரங்களை ‘செய்தி’ போல வெளியிட்டு ஆதாயம் அடைந்திருப்பது அம்பலமானது.

பங்குச் சந்தை கண்காணிப்பு அமைப்பான செபி, இப்படிப்பட்ட ‘தனி ஒப்பந்தங்கள்’ (private treaties) முறையை டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையின் தாய் நிறுவனமான பென்னட் & கோல்மன் நிறுவனமே அறிமுகம் செய்தது என்றும், தற்போது பல்வேறு ஊடக நிறுவனங்களும் அவ்வாறான நடைமுறையைப் பின்பற்றுவதாகவும் உறுதி செய்தது. பங்குகளை வாங்குவதையும் விற்பதையும் சந்தையின் மனநிலையைப் பொறுத்தும் பங்கு வெளியிட்டுள்ள நிறுவனத்தின் மேல் சந்தையில் நிலவும் ‘நல்லெண்ணத்தையும்’ வைத்தே அதில் முதலீடு செய்வதைப் பற்றி சாதாரண முதலீட்டாளர்கள் முடிவு செய்கிறார்கள் என்கிற நிலையில், இப்படி சந்தையின் மனநிலையையும் பங்குகளை வெளியிட்டுள்ள நிறுவனங்களின் மேலான நல்லெண்ணத்தையும் பங்குகளை கைக்கூலியாகப் பெற்றுக் கொண்டு ஊடகங்கள் ‘உற்பத்தி’ செய்கின்றன.

2005ஆம் ஆண்டு விடியோகான், கைனடிக் போன்ற நிறுவனங்கள் கணக்கற்ற பங்குகளை டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகைக்கு கையூட்டாக அளித்து தமது நிறுவனங்களைப் பற்றி பென்னட் & கோல்மன் குழுமத்தைச் சேர்ந்த டைம்ஸ் ஆப் இந்தியா , டைம்ஸ் நௌ, பிசினஸ் டைம்ஸ் போன்ற எல்லா பத்திரிகைகளிலும் ‘நல்லவிதமாக’ செய்தி வரும்படி பார்த்துக் கொண்டன. டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை, தான் முதலீடு செய்திருந்த நிறுவனங்களைப் பற்றி அதன் தலையங்கங்களிலேயே எழுதத் துணிந்தது. 2007ஆம் ஆண்டு இறுதிவாக்கில், டைம்ஸ் குழுமம் மட்டுமே கிட்டத்தட்ட 140 நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்து, தனியார் நிறுவன முதலீட்டாளர்களிலேயே முதலிடத்தைப் பிடித்தது. ஜூலை 2008ம் ஆண்டு பத்திரிகையொன்றிற்கு பேட்டியளித்த பென்னட் & கோல்மன் நிறுவனத்தின் சிவக்குமார், அப்போதைய நிலவரத்தின் படி ‘தனி ஒப்பந்தங்கள்’ (Private treaties) மூலம் சுமார் 200 நிறுவனங்களில் பென்னட் & கோல்மன் முதலீடு செய்திருப்பதாகவும் அதன் அளவு 4000 கோடிகளுக்கு இருக்கலாம் என்றும் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்.

ப்ரஸ் கௌன்சில் ஆப் இந்தியாவின் அந்த விசாரணை அறிக்கையில், இந்தப் போக்குகளுக்கு எதிராக சில பரிந்துரைகளைச் செய்யப் பட்டிருந்தது. பத்திரிகை நிறுவனங்கள் தாம் பங்குச் சந்தையில் செய்திருக்கும் முதலீடுகள் பற்றிய விபரங்களை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்றும், விளம்பரமாக வரும் ‘செய்திகளின்’ கீழே அது விளம்பரம் தானென்று குறிக்க வேண்டும் என்பதையும் உள்ளிட்டு செய்திருந்த பரிந்துரைகளை, 12 பத்திரிகைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் எதிர்த்து இறுதியறிக்கையில் இந்த விபரங்கள் ஏதும் வராமல் இருட்டடிப்பு செய்துள்ளனர்.

இவர்கள் தான் இப்போது பத்திரிகைத் தொழிலின் ‘புனிதம்’ கெட்டு விட்டதாக ஓலமிடுகின்றனர்.

மறைக்கப்பட்ட அந்த முழு அறிக்கையை இந்த சுட்டியில் வாசிக்கலாம் –

http://www.scribd.com/doc/35436631/The-Buried-PCI-Report-on-Paid-News>

மக்களுக்கு எதிரான கூட்டணி..!

இது ஒரு நுட்பமான வலைப்பின்னல். தரகு முதலாளிகளும், ஆளும் வர்க்க அரசியல் கட்சிகளும், பெரும் முதலாளித்துவ பத்திரிகைகளுமாகச் சேர்ந்து மக்களுக்கு எதிராய் அமைத்துள்ள மெகா கூட்டணியே தற்போதைய ராடியா டேப் விவகாரத்தில் அம்பலமாகியுள்ளது. வெளியாகியுள்ள துண்டு துண்டான அந்தப் பதிவுகளினூடே ஜனநாயகம் என்பதைப் பற்றி மெய்யாலுமே இவர்கள் கொண்டிருக்கும் சித்திரம் மிகத் தெளிவாகப் புலனாகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு – மக்களுக்காக அமைக்கப்படும், மக்களுடைய அரசாங்கம் என்று  அலங்காரமாகச் சொல்லப்படும் இந்த ஜனநாயக அரசின் யோக்கியதை சிரிப்பாய்ச் சிரிக்கிறது.

இந்த ‘மக்கள்’ பிரதிநிதிகளைத் தேர்தல்களில் தேற்றி விடுவது முதலாளித்துவ பத்திரிகைகள்; அப்படி யாரைத் தேற்றுவதும் வென்றபின் யாருக்கு எந்த பதவி என்பதைத் தீர்மானிப்பதும்  முதலாளிகள் எனும் போது இவர்களின் விசுவாசம் யாரிடம் இருக்கும்? ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளியாகி ஊரே காறித்துப்பிய நிலையிலும், ரத்தன் டாடா ‘தமிழ் தாத்தா’வுக்கு கைப்பட எழுதியனுப்பும் மடலே அதைத் தெளிவாக்குகிறது. “ஆ.இராசாவின் செயல்பாடுகள் ஒரு புதிய வரலாற்றைப் படைத்து விட்டது” என்று அன்றைக்கு அவர் சொன்னதன் பொருள் என்னவென்பது இன்றைக்குத் தெளிவாகிறது – அந்த வரலாற்றின் பின்னே பத்து சைபர்கள் ஒளிந்து கொண்டிருக்கிறது.

காலனிய ஆட்சிக் காலம் முதல் இந்தியா முதலாளித்துவ நாடுகளுக்கு வளங்களை சல்லிசாக அள்ளிக் கொடுக்கும் பின்நிலமாகவே இருந்துள்ளது என்றாலும் உலகமயமாக்களுக்குப் பின் அதன் வேகம் கூடியுள்ளது. தொண்ணூறுகளுக்கு முந்தைய ஊழல் என்றால் எவருக்கும் உடனே நினைவுக்கு வருவது போபர்ஸ் ஊழல் தான். அதன் மதிப்பே 64 கோடிகள் தான். ஒருவரையும் தண்டிக்க முடியாத – அட குறைந்தது அந்த 64 கோடியையாவது திரும்பப் பெறமுடியாத அளவுக்கு நடந்த அதன் விசாரனைச் செலவு மாத்திரம் இருநூற்றுச் சொச்சம் கோடிகள்!

ஆனால், அதன் பின் கடந்த இருபத்தாண்டுகளில் நடந்துள்ள ஊழல்களின் மொத்த மதிப்பின் முன் போஃபர்ஸ் ஊழல் ஒரு கொசுவைப் போல் தோற்றமளிக்கிறது. புதிய பொருளாதாரக் கொள்கையில் சந்தை மட்டும் திறந்து விடப்படவில்லை – இந்த நாட்டின் எல்லைகளும் பன்னாட்டுத் தொழிற்கழகங்களுக்காகத் திறந்து விடப்பட்டுள்ளது.

தேசத்தின் வளங்கள்  கொள்ளை போவதை எதிர்த்துப் போராடும் மக்களையும் புரட்சிகர சக்திகளையும் ‘தீவிரவாதிகள்’ போல் சித்தரிப்பதையும், வளங்களைச் சுரண்டிக் கொழுக்கும் பயங்கரவாதிகளை யோக்கியர்கள் போல் சித்தரிப்பதையுமே முதலாளித்துவ பத்திரிகைகள் செய்து வருகின்றன.  இந்த மக்கள் விரோதிகளைப் புரிந்து கொள்வதோடு, இவர்களைப் பாதுகாக்கும் இந்தப் போலி ஜனநாயக ஏற்பாட்டிற்கு மாற்றான மெய்யான ஜனநாயக அரசியல் அமைப்பை உருவாக்க, மறுகாலனியாதிக்கத்தை எதிர்த்துப் போரிட ஜனநாயகத்தில் பற்றுள்ள அனைவரும் முன்வர வேண்டும்.

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

துனிசிய மக்கள் புரட்சியின் படிப்பினைகள்

22
துனிசிய மக்கள் புரட்சியின் படிப்பினைகள்

துனிசிய மக்கள் புரட்சியின் படிப்பினைகள்

“குறிப்பாக ஒடுக்கப்பட்ட அரபு மக்களுக்கும், முழு உலகிற்கும் துனிசிய மக்கள் ஒரு செய்தியை தெரிவிக்க விரும்புகின்றனர். எவரிடமிருந்தும் எதனையும் எதிர்பார்க்காதீர்கள். எல்லாமே உங்களிடம் உண்டு. மனதையும், சக்தியையும் முடமாக்கும் அச்சத்தில் இருந்து விடுபட்டு மேலெழுந்து வாருங்கள்.”
– ஒரு துனிசிய பதிவர்

துனிசிய புரட்சி ஒன்றுமில்லாத இடத்தில் இருந்து எழவில்லை. வெறும் கலவரங்கள் மட்டும் புரட்சியை தோற்றுவிப்பதில்லை. காட்டுத்தீ பரவுவதற்கு காய்ந்த மரங்களும், வெப்பநிலை அதிகரிப்பும் காரணமாக இருந்திருக்கும். அத்தகைய அகவய, புறக் காரணிகள் நமது கண்களுக்கு தெரிவதில்லை. துனிசிய மக்களின் எழுச்சியையும், பி.பி.சி. போன்ற சர்வதேச ஊடகங்கள் நீண்ட காலமாக இருட்டடிப்பு செய்து வந்தன. அதனால் தமிழிலும் அது குறித்த ஆய்வுகள் எதுவும் இல்லை. தகவல்கள் கூட குறைவாகவே ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டன. துனிசிய புரட்சியில் இருந்து பெற்ற படிப்பினைகளை, தமிழ் உழைக்கும் மக்களுக்கு கொண்டு சென்று சேர்க்கும் வரலாற்றுக் கடமை எமக்குண்டு. துனிசிய புரட்சி எவ்வாறு சாத்தியமாகிற்று? எத்தகைய அரசியல் சக்திகள் வழிநடத்தின? அது ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சியா? பிரான்ஸ் போன்ற ஏகாதிபத்திய நாடுகள் ஏன் தலையிடவில்லை?

முதலில் துனிசிய மக்கள் எழுச்சி பற்றிய செய்திகள், ஏன் இவ்வளவு காலதாமதமாக நமக்கு வந்து சேர்ந்தன என்று பார்ப்போம். ஒரு மாதத்திற்கு முன்பு வரை, மக்கள் எழுச்சியினால் துனிசிய ஜனாதிபதி பென் அலி நாட்டை விட்டு தப்பியோடுவார், என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. நீண்ட காலமாக, துனிசியா எந்தவிதமான உள்நாட்டுப் பிரச்சினைகளுமற்ற ஸ்திரமான ஆட்சியைக் கொண்ட நாடாக அறியப்பட்டது. அயல்நாடுகளில் நடந்த அசம்பாவிதம் எதுவும் துனிசியாவில் நடக்கவில்லை. மத அடிப்படைவாதிகளுக்கு எதிரான போர், குண்டுவெடிப்பு, எதுவுமே இன்றி துனிசியா அமைதிப்பூங்காவாக காட்சியளித்தது. டிசம்பர் 17 , “சிடி புசிட்” என்ற சிறிய நகரத்தில், முஹமட் புவாசிசி என்ற இளைஞன் தீக்குளித்து மரணமடைந்தான். ஜனவரி 14 , ஜனாதிபதி பென் அலி நாட்டை விட்டு தப்பியோடினார். இடைப்பட்ட ஒரு மாத காலத்தில் நடந்த மாற்றங்கள் தாம், அரபுலகின் முதலாவது மக்கள் புரட்சிக்கு வழிவகுத்தது.

துனிசிய மக்கள் புரட்சியின் படிப்பினைகள்பென் அலியின் வெளியேற்றத்திற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர் இருந்து தான் பி.பி.சி. துனிசியா பக்கம் கவனத்தை திருப்பியது. அது வரையில் அல்ஜசீரா மட்டுமே செய்தி தெரிவித்துக் கொண்டிருந்தது. துனிசியாவின் பெரு நகரங்களில் லட்சக்கணக்கான மக்கள் பங்குபற்றிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. கடந்த ஒரு மாத காலமாக, நாட்டின் பல பாகங்களிலும், தினசரி அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீது போலிஸ் சுட்டது. குறைந்தது பத்துப் பேராவது மரணமடைந்தனர். மரணமடைந்தோர் எண்ணிக்கை என்பது என்று, ஊர்ஜிதப் படுத்தப் படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. வலைப்பதிவுகளில் எழுதிக் கொண்டிருந்த பதிவர்கள் பலர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த செய்திகள் எதுவுமே வெளியுலகத்தை எட்டவில்லை. சர்வதேச ஊடகங்கள் அத்தனை கரிசனையுடன் நடந்து கொண்டன.

சர்வதேச ஊடகங்களின் மௌனத்திற்கு காரணம், இது மேற்குலகின் நிகழ்ச்சிநிரலின் படி நடக்கவில்லை என்பது தான். ஈரானில் தேர்தல் முடிவுகளை எதிர்த்து மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களுக்கு, மேற்குலக ஊடகங்களில் இரட்டிப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டன. போலிஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒரு மாணவி கொல்லப்பட்டதும், அந்த மாணவியின் இரத்தம் தோய்ந்த முகம் அனைத்து பத்திரிகைகளின் முதல் பக்கத்தில் பிரசுரமானது. மேற்குலக தலைவர்கள், கண்டனத்திற்கு மேல் கண்டனங்களை விடுத்துக் கொண்டிருந்தார்கள். துனிசிய சம்பவங்களை யாரும் அந்தளவு கவனம் எடுத்து பொருட்படுத்தியதாக தெரியவில்லை. பென் அலி தப்பியோடிய விமானம் மேலெழும் வரையில், அமெரிக்க அரசு வாய் திறக்கவில்லை. மிகவும் தாமதமாகத் தான் வாஷிங்டனில் இருந்து அறிக்கை வந்தது. அதுவும் எப்படி? “துனிசிய அரசின் நடவடிக்கைகளையிட்டு கவலையடைகிறோம். ஆர்ப்பாட்டக்காரர்களின் நடவடிக்கைகளும் சமாதான வழியில் இருக்காததால் கவலையடைகிறோம்.” (இது தானா நடுநிலைமை?)

துனிசிய மக்கள் தமது புரட்சியை, “மல்லிகைப்பூ புரட்சி” என்று பெயரிட்டு அழைக்கிறார்கள். மேற்குலக ஊடகங்கள் அந்த சொற்பிரயோகத்தை புறக்கணித்துள்ளன. இதே ஊடகங்கள், லெபனானில் நடந்ததை “சிடர் புரட்சி” என்று வர்ணித்தன. (அமெரிக்கா அப்படி பெயரிட்டு அழைத்தது.) லெபனானின் சிடர் புரட்சி, சிரிய நாட்டு படைகளை வெளியேற்றுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருந்தது. ஜோர்ஜியாவில் “ரோஸ் புரட்சி”, உக்ரைனில் “ஆரஞ்சுப் புரட்சி” என்று கலர் கலரான புரட்சிகள் நடந்துள்ளன. பிற்காலத்தில் அதிகாரத்திற்கு வந்த, மேற்குலக சார்பு எதிர்க்கட்சிகளின் வர்ணத்தின் பெயரால் புரட்சிகள் நடந்தன. அந்தப் புரட்சிகளுக்கு எல்லாம், வெளிநாட்டு நிதி, மேற்குலக தொண்டு நிறுவனங்கள் ஊடாக கிடைத்துக் கொண்டிருந்தது. குறிப்பாக அமெரிக்க கோடீஸ்வரரின் “சோரோஸ் நிதியம்” ஆர்ப்பாட்டங்களை ஒழுங்குபடுத்த தேவையான செலவுகளை பொறுப்பேற்றது. துனிசிய புரட்சி இவற்றில் இருந்து பெருமளவு வேறுபடுகின்றது. எந்தவொரு வெளிநாட்டு சக்தியின் தூண்டுதலோ, நிதியுதவியோ இன்றி, தன்னெழுச்சியாக திரண்ட மக்கள் சர்வாதிகார அரசை தூக்கியெறிந்தனர்.

ஈரானில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் டிவிட்டரை பயன்படுத்தியதை, மேற்குலக ஊடகங்கள் “டிவிட்டர் புரட்சி” என்று பெருமையாக குறிப்பிட்டன. துனிசியாவிலும் டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி புரட்சி நடந்தது. நிச்சயமாக, இணையப் பாவனையாளர்கள் மட்டுமே புரட்சி நடத்தி விட முடியாது. வேலையற்ற இளைஞர்களின் கலவரம், உழைக்கும் வர்க்க மக்களின் ஆர்ப்பாட்டம், தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் போன்ற பல்வேறு காரணிகளும் கவனத்தில் எடுக்கத் தக்கன. இணையத்தை விட, இன்னொரு தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு புரட்சிக்கு பெரிதும் உதவியது. வீடியோ கமெரா கொண்ட செல்லிடத் தொலைபேசிகள், இன்று எல்லோர் கைகளிலும் பரவலாக புழங்குகின்றன. தெருவில் நடந்த ஒவ்வொரு நிகழ்வும் உடனுக்குடன் படமாக்கப்பட்டன. இப்போது தான் நேரடியாக தொலைபேசியில் இருந்து இணையத்திற்கு அனுப்பும் வசதி வந்து விட்டதே? கலவரங்கள், ஆர்ப்பாட்டங்களை காட்டும் வீடியோக்கள் சுடச்சுட “யூ டியூப்” பில் வெளியிடப்பட்டன. துனிசிய அரசின் அடக்குமுறையினால், பல யூடியூப் வீடியோக்கள் பின்னர் அழிக்கப்பட்டன. ஏற்கனவே துனிசியாவில் எதிர்க்கட்சிகளின் இணையத்தளங்களை பார்வையிடத் தடை இருந்தது. ஆயினும், டிவிட்டர், பேஸ்புக் தடை வருவதற்கு முன்னர், புரட்சியாளர்கள் முந்திக் கொண்டனர். கடுமையான செய்தித் தணிகை இருந்த நாட்டில், டிவிட்டர், பேஸ்புக் மூலம் தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. பின்னர் அந்தத் தகவல்கள், தெருவில் ஆர்ப்பாட்டம் செய்த பாமரர்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள், பதிவர்கள், இணையப் பாவனையாளர்கள் அனைவரதும் கூட்டு முயற்சி இன்றி புரட்சி சாத்தியமாகி இருக்காது.

துனிசிய மக்கள் புரட்சியின் படிப்பினைகள்

துனிசிய பதிவர்கள், டிவிட்டர், பேஸ்புக் பாவனையாளர்கள் மட்டுமல்ல, ஐரோப்பாவில் புலம்பெயர்ந்து வாழ்ந்த துனிசியர்களும் விரைவான தகவல் பரிமாற்றத்திற்கு உதவியுள்ளனர். ஆனால் எந்தவொரு மேற்குலக ஊடகமும் இவற்றை கூர்ந்து கவனித்ததாக தெரியவில்லை. (ஈரான் மாணவர்களின் டிவிட்டர் தகவல்களுக்கு அவை தமது இணையத்தளத்தில் இடம் ஒதுக்கிக் கொடுத்திருந்தன.) துனிசிய மக்களில் பெரும்பான்மையானோர், அல்ஜசீரா தொலைக்காட்சி மூலமே தமது நாட்டில் நடக்கும் மாற்றங்களை அறிந்து கொண்டனர். சம்பவங்களை உடனுக்குடன் தெரிவித்தது மட்டுமல்ல, விவாதங்கள், ஆய்வுகள் மூலம், அல்ஜசீரா மக்கள் மனதை மாற்றிக் கொண்டிருந்தது. இவை எல்லாவற்றையும் விட, துனிசிய மக்களின் மனவுறுதி இறுதி வெற்றியை தேடித் தந்தது. அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தால் தண்டனைக்குள்ளாவோம் என்று தெரிந்து கொண்டும் வீதியில் இறங்கி போராடினார்கள். சனத்தொகையில் சரிபாதியான பெண்களும் தீரத்துடன் போராட்டத்தில் குதித்தனர். புரட்சியில் பலதரப்பட்ட மக்கள் பங்குபற்றினர். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், வேலையற்றவர்கள், உழைக்கும் வர்க்க மக்கள், நடுத்தர வர்க்க மக்கள் எல்லோரும் கலந்து கொண்டனர்.

எந்த நாட்டிலும் பாட்டாளிகளின் எழுச்சி மட்டுமே புரட்சியை வெல்ல போதுமானதல்ல. நடுத்தர வர்க்கம் எந்தப் பக்கம் சாய்கின்றது என்பதும் அவசியம். பொருளாதார நெருக்கடியினால் ஒரு சிறிய மேட்டுக்குடியினர் மட்டுமே தப்பிப் பிழைக்க, பெரும்பான்மை நடுத்தர வர்க்கமும் மோசமாகப் பாதிக்கப்பட்டது. நடுத்தர வர்க்கத்திற்கு ஊதியம் குறைவது பிரச்சினை. தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு பிரச்சினை. வேலையற்றவர்களுக்கோ உணவு வாங்க பணமற்ற பிரச்சினை. ஒரு நாட்டின் மொத்த சனத்தொகையில் பெரும்பான்மையாக உள்ள உழைக்கும் வர்க்கமும், நடுத்தர வர்க்கமும் ஒன்று சேரும் போது தான் புரட்சி சாத்தியமாகின்றது. துனிசியாவில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் செய்தவர்களின் பக்கம் சார்ந்திருந்தமை பெரிய பலமாகும். துனிசிய தொழிலாளர் கூட்டமைப்பு, வேலைநிறுத்தங்களை ஒழுங்குபடுத்தியது. குறிப்பாக மக்கள் எழுச்சி நகரங்களில் பரவிய பொழுது, ஒரே நாளில் நாடளாவிய வேலை நிறுத்த போராட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

துனிசிய மக்கள் புரட்சியின் படிப்பினைகள்அரசியல் கொள்கையைப் பொறுத்தவரை, “இஸ்லாமிய- தேசியம்” அல்லது “அரபு- தேசியம்” பேசிய யாருமே ஊர்வலங்களில் பங்குபற்றவில்லை. அவர்களுக்கு வர்க்க அரசியல் ஒத்துக் கொள்ளாது. ஒதுங்கியே இருந்தார்கள். கம்யூனிஸ்டுகள், சோஷலிஸ்டுகள், பல்வேறு இடதுசாரி சிந்தனை கொண்டவர்களை அதிகமாக காண முடிந்தது. இதே நேரம், இராணுவம் எந்தப் பக்கம் நிற்கின்றது என்பது குறித்து தெளிவான விளக்கம் இல்லை. இராணுவம் மக்களின் பக்கம் நிற்பதாக பரவலாக நம்பப்படுகின்றது. ஆனால் எந்த நேரமும் எதுவும் நடக்கலாம். உண்மையில் பென் அலி வெளியேறுவதை இராணுவமும் விரும்பியதால், அமைதியான சதிப்புரட்சிக்கு உடந்தையாக இருந்திருக்கும் என்ற சந்தேகமும் உண்டு. இதுவரை காலமும் பாதுகாப்புப் படைகள் வசம் மட்டுமே ஆயுதங்கள் இருந்துள்ளன. தற்போது பொதுமக்கள் கைகளில் ஆயுதங்கள் சென்று விட்டதாக வதந்திகள் உலாவுகின்றன. இராணுவத்தில் புரட்சிக்கு ஆதரவான சிலராலேயே அப்படி நடந்திருக்க வாய்ப்புண்டு என்பதால், இராணுவம் எந்தவித நடவடிக்கையிலும் இறங்கவில்லை என்றும் கருதப்படுகின்றது.

துனிசியாவின் புரட்சி எத்தகைய குணாம்சத்தைக் கொண்டிருந்தது என்பதை ஆராய்வது அவசியம். எப்போதும் மேற்குலக நிலைப்பாட்டில் இருந்து உலகைப் பார்ப்பது பல தவறான புரிதலுக்கு வழிவகுக்கின்றது. மேற்குலக ஊடகங்கள் சில இதனை “விக்கிலீக்ஸ் புரட்சி” என்று குறிப்பிட்டன. விக்கிலீக்ஸ் கசிய விட்ட இரகசியங்கள் பல ஏற்கனவே பலருக்கு தெரிந்த சங்கதி தான். அவற்றை இப்போது தான் மேலைத்தேய வெகுஜன ஊடகங்கள் கண்டுபிடித்துள்ளன. தாங்கள் சொல்லித் தான் உலக மக்களுக்கு இவை எல்லாம் தெரிய வேண்டும், என்பது போன்ற நினைப்பில் மிதக்கின்றனர். துனிசியாவில் சர்வாதிகாரி பென் அலி குடும்பத்தின் ஊழல் குறித்து, விக்கிலீக்ஸ் சொல்லித் தான் தெரிய வேண்டும் என்று நினைப்பது மகா அபத்தம். அந்த கேபிளை எழுதிய அமெரிக்க தூதரக அதிகாரிக்கு அப்போது தான் ஞானம் பிறந்திருக்கலாம். 23 வருடங்களாக கொடுங்கோல் சர்வாதிகாரியின் கீழ் வாழும் துனிசிய மக்களுக்கு, இவை எல்லாம் அன்றாட வாழ்வியல் அனுபவம். சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடிய எத்தனையோ அரசியல் ஆர்வலர்கள், இரு தசாப்தங்களாக பிரான்சில் வாழ்கின்றனர். அவர்கள் அங்கிருந்த படியே பென் அலியின் அடக்குமுறை ஆட்சி பற்றியும், ஊழல் பற்றியும் தமக்கு தெரிந்த வழிகளில் எல்லாம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். துனிசிய சர்வாதிகாரி மேற்குலக சார்பானவர் என்ற ஒரே காரணத்திற்காக, சர்வதேச ஊடகங்கள் அரச எதிர்ப்பாளர்களை புறக்கணித்து வந்துள்ளன.

கடந்த வருடம் பெல்ஜியத்தில் நடந்த சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சிகளின் மகாநாடு நடந்தது. பிரான்சில் அரசியல் அகதியாக வாழும், துனிசிய கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதி ஒருவரும் வந்திருந்தார். அவர் உரையாற்றும் பொழுது இஸ்லாமிய- தேசியவாதிகளுடனான வெகுஜன எதிர்ப்பு முன்னணியில் தமது கட்சி பங்கெடுப்பதை குறிப்பிட்டார். குறிப்பாக ரஷ்யாவை சேர்ந்த கம்யூனிஸ்டுகளுக்கு, “பிற்போக்கு மதவாதிகளுடனான கூட்டமைப்பு” என்ற கோட்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காரசாரமான விவாதத்தின் முடிவிலும், அவர்களை தனது கருத்தோடு இணங்க வைக்க துனிசிய பிரதிநிதியால் முடியவில்லை. அரபுலகில் புரட்சி என்பது, “இன்டிபதா” என்றே புரிந்து கொள்ளப்படுகின்றது. இன்டிபதா என்றால் “அநீதிக்கு எதிரான மக்கள் எழுச்சி” என்றும் அர்த்தம் கொள்ளலாம். இன்டிபாதாவில் பாட்டாளி வர்க்கம் மட்டுமல்லாது, பிற பாதிக்கப்பட்ட வர்க்கங்களும் கலந்து கொள்வார்கள். அது சிறு முதலாளிகளாக இருக்கலாம், மத்தியதர வர்க்கமாக இருக்கலாம். மேற்கத்தய அரசியல் சித்தாந்தப்படி புரிந்து கொள்ள வேண்டுமானால், இதனை “ஜனநாயகப் புரட்சி” என்று அழைக்கலாம். சோஷலிசப் புரட்சிக்கு முந்திய, புதிய ஜனநாயகப் புரட்சி குறித்து மாவோ கூட நிறைய எழுதியுள்ளார். பிரெஞ்சுப் புரட்சி, பூர்ஷுவா வர்க்கத்தின் எழுச்சியாக இருந்த போதிலும், அது வரலாற்றில் முற்போக்கான பாத்திரம் வகித்ததை கார்ல் மார்க்ஸ் வரவேற்றுள்ளார்.

துனிசிய மக்கள் புரட்சியின் படிப்பினைகள்

துனிசியாவில் இடம்பெற்றது பாட்டாளி வர்க்கப் புரட்சியோ, அன்றி சோஷலிசப் புரட்சியோ அல்ல. அத்தகைய மாயை யாருடைய மனதிலும் இல்லை. துனிசிய மக்கள் மேற்குலகில் நிலவுவதைப் போல, அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்காக போராடினார்கள். கருத்துச் சுதந்திரம், அரசியல் சுதந்திரம், வேலைவாய்ப்புக்கான உத்தரவாதம், எல்லோருக்கும் உணவு கிடைக்கும் வசதி, இவை எல்லாம் மேற்கு ஐரோப்பாவில் தனி மனிதனுக்கு உறுதிப்படுத்தப்பட்ட உரிமைகள். மேற்கத்திய நெறிகளுக்கு உட்பட்ட தனி மனித உரிமைகள் தான், துனிசிய மக்களின் குறிக்கோளாக இருந்துள்ளது. புரட்சி அவற்றை சாத்தியமாக்கும் என்றே எல்லோரும் நம்புகின்றனர். அத்தகைய உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்காக துனிசிய மக்களுக்கு உதவ வேண்டிய மேற்குலகம், ஒதுங்கியிருந்து மௌனம் சாதிக்கின்றது. ஜனநாயக விழுமியங்களை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்வதாக கூறும் மேற்குலகின் இரட்டைவேடம் அம்பலமாகிக் கொண்டிருக்கிறது.

துனிசிய தொழிற்துறையில் 40 % முதலீட்டை செய்துள்ள பிரான்ஸ், சர்வாதிகாரி பென் அலிக்கு அடைக்கலம் கொடுக்க மறுத்தது. அதற்கு காரணம், பிரான்ஸ் துனிசிய மக்கள் பால் கொண்ட கரிசனை அல்ல. பிரான்சில் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த துனிசியர்கள் வாழ்கிறார்கள். தனது நாட்டினுள்ளும் துனிசிய மக்களின் எழுச்சியை எதிர்கொள்ள பிரான்ஸ் தயாராக இல்லை. துனிசியா எண்ணெய் வளமற்ற சிறிய நாடு. அதனால் அமெரிக்காவும் தலையிடாமல் பிரச்சினையை தவிர்த்துக் கொள்கின்றது. “எண்ணெய் இல்லாத சின்னச்சிறு துனிசியாவில் வாழ்ந்த அதிர்ஷ்டசாலிகள் நாங்கள்.” என்று புரட்சி வென்றதற்கான காரணமாக துனிசியர்கள் கருதுகின்றனர்.

தற்போது எழுந்துள்ள அபாயம் என்னவெனில், சர்வதேசம் ஒத்துழையாமை இயக்கம் நடத்துவதன் மூலம் புரட்சியை தோல்வியடைய வைக்க முனையலாம். வேலையில்லாப்பிரச்சினை, உணவுப்பொருள் விலையேற்றம் போன்ற பொருளாதார பிரச்சனைகளை தீர்க்க, திறந்த சந்தைக் கொள்கையை முன்வைக்கலாம். “சந்தைக்கு அதிக சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.” என்று நவ-தாராளவாத பொருளாதாரக் கொள்கையை போதிப்பார்கள். ஏற்கனவே ஐ.எம்.எப். ஆலோசனைப் படி, திறந்த சந்தை, உலகமயமாக்கல் என்று கிளம்பித் தான் பிரச்சினை இந்தளவு விஸ்வரூபம் எடுத்தது. சர்வதேச சமூகம் அந்த உண்மையை மறைக்கப் பார்க்கும். சிறிது காலத்தின் பின்னர் துனிசியர்கள் மீண்டும் ஒரு புரட்சியை நோக்கி தள்ளப்படுவார்கள். துனிசிய புரட்சியை, உலக நாடுகளில் தோன்றும் பல புரட்சிகளின் ஓர் அங்கமாகவே கருதப்பட வேண்டும்.

_________________________________________________________

– கலையரசன்

_________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

பா.ராகவன் : ஆர்.எஸ்.எஸ்-இன் அஜினோமோட்டோ ராஜரிஷி !

120

கண் போனாலென்ன, பா.ராவின் ‘நடுநிலை’ போகாது!

ஒரு சைக்கோ நம் கண்களுக்குள் பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியைச் சொருகினால் என்னவாகும்? இந்தக் கேள்வியைக் கிழக்குப் பதிப்பகத்தின் முதன்மை ஆசிரியர் பா.ராகவனிடம் கேட்டால் ‘சிலர் குருடாகும் என்பார்கள், சிலர் குருடாகாது என்பார்கள், நான் நடுநிலையாக சொல்ல வருவது என்னவென்றால்….” என்று மென்று முழுங்குவார். அதன் பொருள் குருடாகாது என்பதுதான். அவர் எழுதிய கிழக்கு பதிப்பகத்தின் “ஆர். எஸ். எஸ் – மதம், மதம் மற்றும் மதம்” புத்தகத்தின் முன் அட்டையில் ஆர்.எஸ்.எஸ் குறித்த நடுநிலைப் பார்வை என்று அவர் இதைத்தான் குறிப்பிடுகிறார்.

ஒரு வரலாற்றுச் சம்பவத்தை அதன் வரலாற்றுக் காலத்தில் வைத்து, விருப்பு-வெறுப்பின்றி விளக்குவதற்குப் பதில், தன்னுடைய இந்துத்வ திட்டத்திற்கேற்ப பச்சையான புளுகுகளையும் அரை உண்மைகளையும் கொண்டு  திரிப்பது ஆர்.எஸ்.எஸ்ஸின் உத்தி. ஆனால் நம்ம பா.ரா இந்த அளவுக்கு கச்சாவாக புளுகாமால் கொஞ்சம் உப்பு, புளி, அஜினாமோட்டா அதாவது சுஜாதா நயத்தில் பாமரரும் புரிந்து கொள்ளும் விதத்தில் எழுதுகிறார்.

லவ புராண ஒளியில் முசுலீமின் எதிர்வினையாய் ஆர்.எஸ்.எஸ் விசுவரூப தரிசனம்!

லாகூர் ராமனின் மகன் என்று நம்பப்படும் – வால்மீகி முனிவருக்குப் பிறந்ததாக சொல்லப்படும் – லவனால் நிர்மாணிக்கப்பட்டது என்கிற மாபெரும் வரலாற்றுக் கண்டுபிடிப்பிலிருந்து ஆரம்பிக்கிறார் பா.ரா. இராமரால் கட்டப்பட்ட மண்பாலத்தை இடித்து சேது சமுத்திரத் திட்டத்தை கட்டக்கூடாது என்று அவாள் கூறும் ஒரு பச்சையான புரட்டிற்கு ஒப்பான இந்த லவ லாகூர் கதையின் அவசியம் என்ன? இப்பேற்ப்பட்ட லாகூரிலிருந்தான் முசுலீம் லீகின் கொடூரமான பிரிவினை ஆரம்பிக்கிறது என்று சென்டிமெண்டாக போட்டு தாக்குவதுதான் பா.ராவின் நோக்கம்.

“ஒரு முடிவோடு இருந்தார் ஜின்னா. ஒரு முடிவோடு பிரசாரம் செய்தார்கள் முஸ்லிம் லீக்கைச் சேர்ந்தவர்கள். இது பஞ்சாபில் பல முஸ்லிம்களுக்கே பிடிக்கவில்லை. திடீரென்று இத்தனை அழுத்தமாக மதவாதம் பேச என்ன அவசியம்? இது சிக்கல் தரும். நிச்சயமாகப் பிரச்சினை வரும். மக்களின் அன்றாட அமைதி குலையப்போகிறது. சந்தேகமில்லை” – பக்.10

பேய்க்கதை மன்னன் பி.டி.சாமியின் மொழியில் பா.ரா சொல்வதன் பொருள் என்ன? லவன் விளையாடிய புண்ணிய பூமியில் இப்படி முசுலீம் லீக் அநீதியாக பிரிவினையை பேசியதன் காரணமாகவே அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டும் வண்ணம் ஆர்.எஸ்.எஸ் கிருஷ்ண பரமாத்மாவாக களமிறங்கியது என்று புரியவைக்கிறார் பா.ரா. எனில் முசுலீம் லீகின் பிரிவினை வாதம்தான் ஆர்.எஸ்.எஸ் பகவானது விசுவரூபத்திற்கு காரணம் என்பது உண்மையா?

அதற்கு முன் ஆர்.எஸ்.எஸ் தோன்றியதற்கு பா.ரா கொடுக்கும் தத்துவப் புரணக்கதையைப் பார்ப்போம்

ஒத்துழையாமை இயக்கமும் இந்துத்தவ ‘போராளி’களும்!

1919ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக அகிம்சை முறையில் ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்த காந்தி, பின்னர் 1922இல் சௌரி சௌராவில் நடந்த ‘வன்முறை’ சம்பவத்தை அடுத்து அந்த போராட்டத்தை திரும்ப பெறுகிறார்.  இதைக் கண்டதுமே ஆர்.எஸ்.எஸ்ஸின் முன்னோடியான சாவர்க்கர் மனம் கொதித்து ஹிந்து மகாசபையில் இணைந்து கொண்டார் என்கிறார் பா.ரா. இதைப் படிக்கும் வாசகர் சாவர்கர் என்ற அந்த தலைவர் வெள்ளையனை எதிர்த்து பயங்கரமாக போராடிக் கொண்டிருந்திருக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வார். உண்மை என்ன?

1911ஆம் ஆண்டு அந்தமானில் இரட்டை ஆயுள் தண்டனைக்காக சிறைவைக்கப்படும் சாவர்க்கர், ஆறே மாதத்தில் ஆங்கிலேயருக்கு மன்னிப்புக் கடிதங்கள் அனுப்ப ஆரம்பிக்கிறார். தொடர்ந்த வந்த இந்த மன்னிப்பு படையெடுப்பால் மனம் குளிர்ந்த வெள்ளையர்கள், சாவர்க்கரை மராத்திய மாநிலத்தில் உள்ள ரத்தினகிரிக்கு 1922ஆம் ஆண்டு அனுப்புகின்றனர். “இந்த மாவட்டத்தை விட்டு வெளியேறக்கூடாது, வெள்ளையர்களை எதிர்க்கும் எந்த அரசியல் போராட்டத்திலும் பங்கேற்கக்கூடாது” என்று ஆங்கிலேயர் உத்தரவிட்டதை அவர் ஏற்றுக் கொண்டதால் சிறை வாழ்க்கையிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.

1910களின் மத்தியில் ஆரம்பிக்கப்பட்ட இந்து மகா சபை எனும் இந்துத்வா அமைப்பு, வெள்ளையர்களின் மறைமுக ஆதரவுடன் அதாவது அவர்களது பிரித்தாளும் சூழ்ச்சியை நிறைவேற்றுவது என்ற அடிப்படையில் இயங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறது. அந்த வகையில்தான் சாவர்க்கர் அதில் சேர்கிறார். வெள்ளையனை எதிர்த்து ஒரு எழுத்து கூட எழுதக்கூடாது, ஒரு சொல் கூட பேசக்கூடாது என்பதற்காக விடுதலை பெற்ற சாவர்க்கர் ஒத்துழையாமை இயக்கத்தின் அருகில் கூட செல்லவில்லை. மேலும் அந்த இயக்கத்தை அவர் எதிர்த்திருக்கிறார். ஏனெனில் கிலாபத் இயக்கத்தின் தொடர்ச்சியாக வந்த ஒத்துழையாமை இயக்கம் என்பது முசுலீம்களுக்கு ஆதரவானது என்பதே அவர் கருத்து. உண்மை இதுவாக இருக்க நம்ம அஜினோமோட்டோ பா.ரா படிக்கிறவெனெல்லாம் அடி முட்டாள்கள் என்று துணிந்து சாவர்கரை ஆங்கிலேய எதிர்ப்பு வீரராக அறிமுகம் செய்கிறார்.

இனி பா.ராவின் அடுத்த புளுகைப் பார்ப்போம். இதே ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி நிறுத்தியதை கண்டு கொதித்த கேசவ பலிராம் ஹெட்கேவார் எனும் மராத்தியப் சித்பவனப் பார்ப்பனர் 1925இல் ஆர்.எஸ்.எஸ் ஐ ஆரம்பித்தாராம். இவர் ஏற்கனவே திலகர் தலைமையில் காங்கிரசு கட்சியில் இருந்தார், சில அடையாளப் போராட்டங்களில் ஆபத்தில்லாமல் கலந்து கொண்டிருக்கிறார் என்பதெல்லாம் அரை உண்மைதான். உண்மையில் இவர் காங்கிரசில் அப்படி பட்டும் படாமலும் இருந்ததற்கு காரணம் ஆங்கிலேய எதிர்ப்பா, இந்துத்வ மீட்சியா என்பதுதான் கேள்வி. அதற்கு நாம் ஆர்.எஸ்.எஸ் ஆரம்பிக்கப்பட்ட காலத்தை அதன் வரலாற்றுப் பொருளை உள்ளது உள்ளபடி அறிந்து கொள்ளவேண்டும்.

காந்தியை எதிர்த்தது பகத்சிங்கா, ஆர்.எஸ்.எஸ்ஸா?

அதற்கு முன் ஒரு முக்கியமான விசயத்தை பார்த்து விடுவோம். காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தின் அருமை பெருமைகளை அடித்துவிடும் பா.ரா, பின்னர் காந்தி அதை நிறுத்தியவுடன் காங்கிரசில் இருந்த தேசபக்த தீவிரவாத சிங்கங்கள் அதிருப்தியுற்று தனிப்பாதையில் பயணித்தனர் என்கிறார். இந்த தீவிரவாதப் பெருமையைத்தான் வெள்ளைக்காரனை எதிர்த்து வாயே திறக்காத சாவர்க்கருக்கும், ஹெட்கேவாருக்கும் அளிக்கிறார். கூடவே அவர்கள் காந்தியின் முசுலீம் ஆதரவை ஏற்கவில்லை என்று ஒரு விளக்கம் அளிக்கிறார். அதிலும் அந்தக் காலகட்டத்தில் முசுலீம்களுக்கென்று தனிநாடு கோரிக்கையை எழுப்பியே இராத முசுலீம் லீகை பிரிவினை பேசினார்கள் என்று வாய் கூசாமல் புளுகுகிறார். காரணம் இப்போது உள்ள முசுலீம் மீதான வெறுப்புணர்வு கொண்ட இந்து பொதுப்புத்தி இதை கேள்வி கேட்காமலேயே ஏற்றுக் கொள்ளும் என்ற நம்பிக்கைதான்.

ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தி, விடுதலைப் போராட்டத்திற்கு காந்தி இழைத்த துரோகத்தை கண்டு சினமுற்றவர்கள் சாவர்க்கர், ஹெட்கேவார் முதலான தொடை நடுங்கிகள் அல்லர். அவர்கள் சந்திரசேகர ஆசாத், பகத்சிங் முதலான தோழர்கள். அவர்கள் ஆரம்பித்த அந்த புரட்சிப்பணிதான் அடுத்த பத்தாண்டுகளில் இந்திய வானில் மையமாக இருந்தது. 1931ஆம் ஆண்டு ஒரு சிங்கம் போல பகத்சிங் தூக்குமேடையில் நின்று கொண்டிருந்தபோது, ஆர்.எஸ்.எஸ் கோழைகள் வெள்ளைக்காரனது ஸ்பான்சரோடு மைதானத்தில் கபடி ஆடிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் நம்ம அக்மார்க் அம்பியான பா.ராகவன் கம்யூட்டரின் கீ போர்டே கதறி அழுமளவுக்கு பகத்சிங் தோழர்களின் வீர அத்தியாத்தை மறைத்துவிட்டு அந்த இடத்தில் ஆர்.எஸ்.எஸ் அம்பிகளை திருட்டுத்தனமாய் திணித்து விடுகிறார். இப்படித்தான் கோழைகள் பா.ரா கையால் குட்டுப்பட்டு போராளிகளாய் ஆபாசத்தோடு உருவாக்கப்படுகிறார்கள்.

ஹெட்கேவாரின் பார்ப்பனியக் கவலைகள்!

உண்மையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை ஹெட்கேவார் ஆரம்பிக்க என்ன காரணம்? அதை அவரது வார்த்தைகளிலேயே பார்ப்போம்

“மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தின் காரணமாக நாட்டில் (தேசியத்திற்கான) உற்சாகம் குறைந்து வருகிறது. அந்த இயக்கம் தோற்றுவித்த தீமைகள் சமுதாயத்தில் அச்சமூட்டும் வகையில் தலைதூக்கியுள்ளன. தேசியப் போராட்ட அலை தணிந்து வந்த போது ஒருவருக்கொருவரிடையே உள்ள குரோதங்களும் பொறாமைகளும் வெளிப்படத் தொடங்கின. எங்கு பார்த்தாலும் தனிப்பட்டவர்களிடையே சச்சரவுகள். பல்வேறு சமூகங்களுக்கிடையே மோதல்கள் தொடங்கியிருந்தன. பிராமணருக்கும் பிராமணரல்லாதோருக்கும் இடையிலான முரண்பாடு அப்பட்டமாகவே தெரியத் தொடங்கியது. எந்த ஒரு அமைப்பிலும் ஒருமைப்பாடோ ஒற்றுமையோ இருக்கவில்லை. ஒத்துழையாமை இயக்கத்தின் பாலைப் பருகி வளர்ந்த யவனப் பாம்புகள் நஞ்சைக் கக்கிப் படமெடுத்தபடி தேசத்தில் கலவரங்களைத் தூண்டிவிட்டுக் கொண்டிருந்தன” (The brotherhood in saffron: The RSS and Hindu revivalism. Anderson and Damle- எஸ்.வி.ராஜதுரையின் இந்து இந்தியா நூலிலிருந்து)

இந்த விளக்கத்தை கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றாமல் மேலோட்டமாக பார்த்தாலே, ஒத்துழையாமை இயக்கம் குறித்த போதாமைகளை அதாவது காந்தியின் மிதவாதத்தை ஹெட்கேவார் ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்பது புரியும். இங்கே அவரது கவலை என்ன?

சமூகங்களுக்கிடையே உள்ள மோதல், மக்களிடையே ஏற்பட்டு வரும் பிளவு அதாவது தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப் பட்டோர், பார்ப்பனரல்லாதோர் முதலான சமூகங்கள் அம்பேத்கார், பெரியார், திராவிட இயக்கம் போன்றவர்களின் முயற்சியில் ஆதிக்க சாதிகளை எதிர்க்க துவங்கிவிட்டனர். குறிப்பாக அந்த வரலாற்று காலத்தை வைத்துப் பார்த்தால் 1922 ஒத்துழையாமை இயக்கத்திற்கு பிறகு பார்ப்பன ஆதிக்க சாதியினரை எதிர்க்கும் போக்கு, இயக்கங்கள் முன்னிலைக்கு வருகின்றன. ஆர்.எஸ்.எஸ் அவதரித்த மராட்டிய மண்ணில் அம்பேத்கரின் தாழ்த்தப்பட்டோருக்கான சம உரிமை போராட்டங்கள் சூல் கொண்டிருந்தன. இன்னொரு பக்கம் ஒத்துழையாமை இயக்கத்தின் உதவியால் யவனர்கள் அதாவது முசுலீம்கள் தங்களது சம உரிமைக்காக குரல் கொடுக்க ஆரம்பித்தனர். இவைதான் ஹெட்கேவாரின் இதயத்தை குடைந்தெடுத்த கவலைகள். இந்த கவலை அவரிடத்தில் வந்ததற்கும் ஒரு வரலாற்றுப் பின்னணி இருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ் இன் தோற்றம் பார்ப்பனிய மீட்சிக்காகவே!

வெள்ளையர்கள் ஆதிக்கம் வரும் முன்பு 18ஆம் நூற்றாண்டில் மராட்டியத்தின் அரசியல், சமூக அதிகாரத்தில் இருந்தவர்கள் பேஷ்வாக்கள். சித்பவன் எனும் பார்ப்பன பிரிவைச் சேர்ந்த இவர்களது ஆட்சிக் காலம்தான் பார்ப்பனர்களின் பொற்காலம். அதாவது சூத்திரர்களும் பஞ்சமர்களும் அடிமைகளாக அவதிப்பட்ட இருண்டகாலம். இந்நிலையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளை தனது சாம்ராஜ்ஜியத்தில் இணைத்த வெள்ளையர்கள் மராட்டியத்தையும் கைப்பற்றினார்கள். தங்களது இருண்ட காலத்தில் இருந்து விடுதலை பெற விரும்பிய சூத்திரர்கள் – குறிப்பாக மகர்கள் எனப்படும் தலித் மக்கள், வெள்ளையர்களின் இராணுவத்தில் சேர்ந்து உணர்வுப்பூர்வமாக போரிட்டு சித்பவன பேஷ்வாக்களை வீழ்த்துவதற்கு காரணமாக இருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை அது பார்ப்பனக் கொடுங்கோன்மையிலிருந்து விடுவித்த சொந்தப் போர்.

இந்த முரண்பாட்டை வெள்ளையர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதும் இப்படி தமது சமூக அதிகாரத்தை இழந்த சித்பவன பார்ப்பனர்கள் வெள்ளையர்களின் மீது ஆத்திரம் கொண்டனர் என்பதும்தான் வரலாற்று உண்மை. ஆகவே மராட்டியத்தைப் பொறுத்தவரை அங்கே சித்பவன பார்ப்பனர்களிடேயே தோன்றிய ஆங்கிலேய எதிர்ப்பு என்பது காலனிய எதிர்ப்பு உணர்வல்ல. அது வாழ்ந்து கெட்ட ஒரு பண்ணையாரின் கசப்புணர்வு.

அதைத் தொடர்ந்து 19ஆம் நூற்றாண்டில் ஜோதிர்ராவ் பூலே வருகிறார். வேதத்தை மறுத்து, பார்ப்பனர்களின் மேலாண்மையை எதிர்த்து, சூத்திர பஞ்சமர்களின் சம உரிமைக்காக அயராது பாடுபடுகிறார். இதுவும் ஒடுக்கப்பட்ட மக்களிடம் பெரும் எழுச்சியை ஏற்படுத்துகிறது. அதனால் எற்கனவே ஆட்சியிழந்த பார்ப்பனர்கள் மேலும் வயிறெறிந்து போகிறார்கள்.

இப்படித்தான் மராட்டியத்தில் திலகர் உள்ளிட்ட சித்பவன பார்ப்பனர்கள் காங்கிரசில் சேர்ந்து வெள்ளையனை எதிர்க்கிறார்கள். அந்த எதிர்ப்பின் உள்ளடக்கமாக இழந்துவிட்ட வருண சாதி ஆதிக்கத்தை மீட்டெடுப்பதே இருந்தது. விதவை மறுமண எதிர்ப்பு, பாலிய விவாகத் தடை எதிர்ப்பு போன்றவற்றில் திலகர் தீவிரமாக ஈடுபட்டார். பிளேக் நோயை பரப்பும் எலிகளை ஒழிப்பதற்காக எடுக்கபட்ட நடவடிக்கைகளை எதிர்க்கிறார்; அதற்காக விநாயகர் ஊர்வலத்தை ஆரம்பிக்கிறார். ஆக மொத்தம் இந்த நடவடிக்கைகளில் இருப்பது வெள்ளையர் எதிர்ப்பா, இல்லை பார்ப்பன மீட்பா?

இதே காலத்தில் தென்னிந்தியாவில் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து பார்ப்பனரல்லாதோர் இயக்கம் திராவிடர் இயக்கமாக வளர்கிறது. இந்த இயக்கத்தில் தமது சமூக ஆதிக்கத்தை இழக்க விரும்பாத பார்ப்பனர்கள் வெள்ளையர்களது அரசில் சேர்ந்து கொண்டும், காங்கிரசில் இருந்து கொண்டும் தந்திரமாக வேலை செய்கின்றனர். அன்று காங்கிரசு தலைவரான சத்தியமூர்த்தி அய்யர் தேவதாசி தடை சட்டத்தை கடுமையாக எதிர்த்தார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

மேற்கு வங்கத்தில் முசுலீம் நவாப்புகளை வீழ்த்திய வெள்ளையர்களை அங்கிருந்த பார்ப்பன ‘மேல்’சாதியினர் வரவேற்றனர். அதன் மூலம் இழந்து விட்ட தமது சமூக ஆதிக்கத்தை பெறலாம் என்பது அவர்களது நம்பிக்கை. இப்படி இந்தியா முழுவதும் பார்ப்பனர்களின் வெள்ளையர் எதிர்ப்பு அல்லது ஆதரவு இரண்டுமே பார்ப்பனிய சாதி ஆதிக்கத்தின் மீட்போடு தொடர்புடையது என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

ஆர்.எஸ்.எஸ் துவக்கப்பட்ட காலகட்டத்தில்தான் அம்பேத்கரும் தனது செயல்பாடுகளை துவங்குகிறார். 1920கள் மற்றும் 1930களில் அவர் தாழ்த்தப்பட்ட மக்களின் மீதான தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்து பொதுக்குளத்தில் நீரெடுக்கும் போராட்டம், கோவில் நுழைவுப் போராட்டம் முதலானவற்றை நடத்துகிறார். அப்போது ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் ஹெட்கேவார் இத்தகைய சோதனைகளால் இந்துக்களுக்கு அதாவது பார்ப்பனர்களுக்கு நேர்ந்துவிட்ட அபாயத்தை பற்றி கவலைப்படுகிறார்.

இத்தகைய வரலாற்றுப் பின்னணியிலிருந்து ஆர்.எஸ்.எஸ் ஏன் தோற்றுவிக்கப்பட்டது என்பதை வாசகர்கள்  புரிந்து கொள்ள முடியும். இந்த வரலாற்றை மறுத்து நூலாசிரியர் பா.ரா உருவாக்கும் மோசடியையும் அறிந்து கொள்ள முடியும்.

ஆர்.எஸ்.எஸ் இன் புரவலர்கள் யார்?

1925க்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ் எப்படி பரவியது? யார் உதவினார்கள்?

சுதந்திரப் போராட்டம் தங்களது நிகழ்ச்சி நிரலில் இல்லை என்பதில் தீர்மானகரமாய் இருந்த ஆர்.எஸ்.எஸ்ஐ குண்டாந் தடிகளுடன் இராணுவ பயிற்சி செய்வதற்கு வெள்ளையர்கள் அனுமதித்தார்கள்.

அந்த விசுவாசத்தை ஆர்.எஸ்.எஸ் தலைவர்களிடம் நிறைய சந்தர்பங்களில் நாம் காணலாம். உதாரணத்திற்கு ஒன்று –

“We should remember that in our pledge we have talked of freedom of the country through defending religion and culture. There is no mention of departure of British in that.” (Shri Guruji Samgra Darshan, Vol 4, p. 2)”

இது ஆர்.எஸ்.எஸ் காரர்கள் “குருஜி” என்று ஏற்றிப் போற்றும் அவர்களது இரண்டாவது தலைவர் கோல்வால்கர் கொடுத்துள்ள ஒப்புதல் வாக்குமூலம்.

இப்படித்தான் ஆங்கிலேயர்கள் ஆசிர்வாதத்துடனும், மேல்மட்ட பார்ப்பனிய சனாதனிகளின் உதவயுடனும் நாட்டின் பல்வேறு இடங்களுக்கு ஆர்.எஸ்.எஸ் பரவியது.

வட இந்தியாவில் குமாஸ்தக்களை உருவாக்கும் ஆங்கிலக் கல்விமுறையின் பரவலால் ஒடுக்கப்பட்ட மக்கள் ஓரிருவர் முன்னேறியதைப் பார்த்து தமது அஸ்திவாரத்தில் லேசான ஆட்டம் கண்டு போயிருந்த வருணாசிரம இந்து தரும ஆதிக்கத்தைக் காப்பாற்றவும், சமஸ்கிருதத்தை மீண்டும் உயிர்த்தெழ வைக்கும் நோக்கத்திற்காகவும் ஜமீன்தார்கள், நிலப் பிரபுக்களிடம் நன்கொடை திரட்டி பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தை உருவாக்கியிருந்தார் காங்கிரஸ்காரரும் இந்து மகாசபையை தோற்றுவித்தவர்களுள் ஒருவருமான மதன் மோகன் மாளவியா. இந்த பல்கலைக்கழகத்தில் ஆர்.எஸ்.எஸ்க்கு என்று தனியாக கட்டிடமே கட்டிக் கொடுதிருந்தார். இத்தகைய புரவலர்களால்தான் ஆர்.எஸ்.எஸ் நாடெங்கும் பரவியது.

ஆனால் பா. ராவோ, பத்துப் பதினைந்து வயது சிறுவர்களுடன் சேர்ந்து கபடி விளையாடிய ஹெட்கேவார் “மெல்லியக் குரலில்” சித்தாந்தப் பயிற்சியளித்ததாகவும் அதிலிருந்து தேறியவர்கள் வடநாடு முழுக்கப் பரவி பத்தே ஆண்டுகளில் நாற்பதாயிரம் பேராகப் பெருகியதாக அதிசயக்கிறார்.

பிரிவினையை முதலில் பேசியது முசுலீம் லீகா, இந்து மகா சபையா?

அடுத்து புத்தகத்தின் துவக்கத்திலேயே முசுலீம் லீக் கட்சியினர் தனி நாடு கோரி பிரிவினை பேசினார்கள் என்றும் அதன் காரணமாக நடந்த கலவரங்களில், ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் தரப்பில் களமிறங்கியதாலேயே அது பரவலான வெளிச்சத்துக்கு வந்தது என்றும் சொல்கிறார் பா.ரா.

ஆனால், உண்மையில் முசுலீம் லீக்கின் தனிநாடு கோரிக்கை வெளிப்பட்ட  பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு 1923ஆம் ஆண்டு சாவர்க்கர் எழுதி வெளியிட்ட “ஹிந்துத்துவம்: யார் ஹிந்துக்கள்?” எனும் நூலில் தான் முதன் முறையாக இசுலாமியர்கள் இந்த நாட்டில் இந்துக்களோடு சேர்ந்து வாழ முடியாது எனும் பிரிவினை வாதம் பேசப்பட்டது. ஹெட்கேவார் அப்புத்தகம் கையெழுத்துப் பிரதியாக இருக்கும் போதே வாசித்தவர்.

அப்புத்தகம் தான் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கு ஆரம்பத்தில் ஒரு தத்துவ அடிப்படையை வழங்குவதாக இருந்தது. மிகத் தெளிவாக பார்ப்பனிய இந்து மேலாதிக்கத்தை ஏற்றுக் கொள்வோரைத் தவிர்த்து வேறு எவருக்கும் இந்தியாவில் இடமில்லை என்பதை அப்புத்தகத்தில் தெளிவாக சாவர்க்கர் அறிவிக்கிறார். ஆனால் இதற்கெல்லாம் வெகு காலம் முன்னதாகவே இந்துத்துவம் என்பது பேச்சளவிலும் செயல் அளவிலும் காங்கிரசில் இருந்த புகழ் பெற்ற பார்ப்பனப் பெருச்சாளிகளின் செயல்பாட்டில் இருந்தது.

இந்துத்வக் காங்கிரசில் முசுலீம்கள் இணைய முடியுமா?

மேலும் இந்திய அரசியலில் மதத்தை கலந்து அரசியல் செய்த முதல் கட்சியே காங்கிரசுதான். ஏற்கனவே அதன் தடங்களை திலகரது வரலாற்றில் பார்த்து விட்டோம். பின்னர் காந்தியின் காலத்திலும் அதுவே நடந்தது. இந்துக் கடவுளர்களின் உருவகமாக நாட்டை சித்தரித்து பாடும் வந்தே மாதரம் முசுலீம்களின் எதிர்ப்புக் கிடையிலும் காங்கிரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. காங்கிரசின் தலைவர்கள் பலர் இந்துத்வத்தின் பொற்காலத்தை மீட்டெடுக்கும் கனவினை கொண்டிருந்தவர்கள்தான். அதற்காக முசுலீம்களை அவர்களது சம உரிமைகளை அவர்கள் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை.

சாவர்க்கர், ஹெட்கேவார் கும்பலுக்கும் முன்பாகவே காங்கிரஸில் விபின் சந்திர பால் போன்ற மிதவாத இந்துத்துவவாதிகளும் லாலா லஜபதிராய், திலகர், மதன் மோகன் மாளவியா போன்ற தீவிர இந்துத்துவவாதிகளும் நிறைந்திருந்தனர். காங்கிரஸில் உறுப்பினர்களாக இருக்கும் போதே லாலா லஜபதிராய் ஆரிய சமாஜத்தில் இயங்கி வந்துள்ளார். மாளவியா உத்திரபிரதேசத்தில் “பாரத தர்ம மகாமண்டலம்” என்கிற அமைப்பை நிறுவியவர் – தான் இறக்குவரை காங்கிரஸில் இணைந்திருந்தவர். பின்னாளில் இவர்கள் சேர்ந்து ஆரம்பித்த இயக்கம் தான் ஹிந்து மகாசபா.  இதற்காக காங்கிரசு இவர்களைக் கண்டித்து வெளியேற்றவில்லை.

அந்தக் காலகட்டத்தில் இந்து மகாசபை, ஆர்.எஸ்.எஸ் போன்ற இயக்கங்களின் உறுப்பினர்களும் தலைவர்களும் காங்கிரசிலும் இருந்துள்ளனர். இவர்கள் தீவிரமான ஆங்கிலேய எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் காங்கிரசை ஒரு தீவிரமான இந்துத்வா போக்கில் மாற்ற வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களாக இருந்தார்கள். 1937ஆம் ஆண்டு தான் வேறு இயக்கங்களில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் காங்கிரசிலும் உறுப்பினர்களாக இருப்பதைத் தடை செய்து ஒரு விதியைக் கொண்டு வருகிறது. இங்கே புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் காங்கிரசை அனைத்து பார்ப்பனியவாதிகளும் இது நம்ம ஆளு கட்சி என்றுதான் கருதினார்கள். இப்படிப்பட்ட மனநிலை கொண்ட இந்து காங்கிரசுக் கட்சியில் முசுலீம்கள் எப்படி சேர்ந்து பணியாற்ற முடியும்?

இப்படி இந்துத்துவவாதிகளின் கூடாரமாய் காங்கிரசு சீரழிந்து கிடந்த நிலையில் அதற்கான எதிர்வினையாக வேறுவழியின்றி தோன்றியது தான் முசுலீம் லீக். ஆங்கிலேயர்களும் இந்த முரண்பாட்டை திறமையாக பயன்படுத்தி முற்றவைத்தார்கள். முசுலீம் லீக் அதன் துவக்க காலத்தில் தேசப் பிரிவினையை செயல் திட்டமாகக் கொண்டிருக்கவில்லை. முசுலீம்களைக் கல்வியறிவு பெறச்செய்வது, மாகாண அரசுகளில் போதிய பிரநிதித்துவத்தைக் கோரிப் பெறுவது போன்றவைகளையே அதன் தலைவர்கள் முன்வைத்தனர். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தோடு சமரசமாகச் சென்று சில சில்லரைக் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வது எனும் அளவில் காங்கிரஸின் இசுலாமிய பிரதி தான் முசுலீம் லீக்.

முதல் இந்திய சுதந்திரப் போரில் இந்து, முசுலீம் என மதவேறுபாடு இல்லாமல் மக்கள் ஒருங்கிணைந்து போராடியதைக் கண்டு உணர்ந்த ஆங்கிலேயர்கள் பிரித்தாளும் சூழ்ச்சியை கையாள்கிறார்கள். இந்த சூழ்ச்சியை முறியடித்து மதசார்பற்ற தேசிய இயக்கத்தை கட்டுவதற்கு பதில் இந்துத்தவ வழியில் காங்கிரசு கட்சியைக் கட்டினார்கள் அதன் பிதாமகர்கள்.

இந்த வரலாற்று உண்மையை மறைத்துவிட்டு இதை அப்படியே புரட்டிபோட்டு முசுலீம்கள்தான் ஆர்.எஸ்.எஸ் ஐ துவங்குவதற்கு காரணம் என்று பா.ரா ஒரு பொய்யை விரல் கூசாமல் எழுதுகிறார்.

எமர்ஜென்சியில் ஆர்.எஸ்.எஸ்: கோழைகள் சூரர்களான அதிசயம்!

“மிசாவில் கைதாகி சிறை சென்றவர்களுள், முழு எமர்ஜென்சி காலமும் சிறைப்பட்டிருந்தவர்கள் அநேகமாக ஆர். எஸ். எஸ் காரர்கள்தாம்.” என்கிறார் பா.ரா. தேசமெங்கும் அவசர நிலையை எதிர்த்து போராடுமாறு தனது தொண்டர்களை அப்போதைய ஆர்.எஸ்.எஸ் தலைவர் தேவரஸ் அழைப்பு விடுத்தாராம். அதை ஏற்று “மாறு வேடங்களில் வீடுவீடாகச் சென்று இந்திரா அரசின் அடக்குமுறை நடவடிக்கைகளை எடுத்துச் சொல்வது, பத்திரிகையாளர்களை ரகசியமாகச் சந்தித்து, சிறையில் இருக்கும் இயக்கத்தின் உறுப்பினர்கள் அனுபவிக்கும் கொடுமைகளை விவரிப்பது” போன்ற வேலைகளை ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் செய்தார்களாம்.

நரியைப் பரியென்று காட்டும் பேராசை பா. ராகவையங்காருக்கு வந்ததில் தப்பில்லை – ஒரு ‘நூலின்’ துயரம் இன்னொரு ‘நூலு’க்குத்தானே புரியும்? அதற்காக தெளிவாய் நாடே பார்த்துக் கொண்டிருந்த போது பகிரங்கமாய் இந்திராவின் காலை நக்கியாவது சிறையிலிருந்து வெளியே வரத் தயாராக இருந்த ஆர்.எஸ்.எஸ் கோழைகளை வீரர்களாகக் காட்டுவது, போட்டுக் கொண்டிருக்கும் ‘நடுநிலை’ முகமூடிக்கு சற்றும் பொருந்தாமல் அசிங்கமாய் பல்லிளிப்பதை பா.ரா உணராமல் இல்லை. இதற்கு அவர் கொடுக்கும் விளக்கம் என்னவென்றால் ஆர்.எஸ்.எஸ் ஒரு சமூக இயக்கம், அரசியல் இயக்கம் இல்லையாம். அதனால் அதன் தலைவர் அப்படித்தான் அணுகுவாராம்.

முதலில் இவர்கள் சொல்வது போல் இந்திரா காந்தி ஆர்.எஸ்.எஸ்ஸின் விரோதியல்ல. அன்றைக்கு இந்தியாவிலிருந்த அமெரிக்க சார்பு முதலாளிகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கும் சமூக ஏகாதிபத்தியமாய் சீரழிந்து நின்ற ரசிய சார்பினருக்குமான முரண்பாடுகளின் பின்னணியில் தனது சர்வாதிகாரத்தை நிலைநிறுத்த இந்திரா காந்தியால் எமர்ஜென்சி அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில் அமெரிக்க ஏகாதிபத்திய சார்பு நிலையிலிருந்ததாலேயே ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப்படுகிறது. இந்தத் தடை ஆர்.எஸ்.எஸ் அதன் செயல்பாடுகளால் வரவழைத்துக் கொண்ட ஒன்றல்ல. மாறாக இந்திராவின் அரசியல் கணக்குகளுக்காக அதன்மேல் திணிக்கப்பட்டது.

அதேபோல ரசிய சார்பு கொண்ட வலது கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்படாமல் இருந்ததற்கும், ரசிய சார்பற்ற இடது கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டதற்கும் இந்திராவின் ரசிய சார்புதான் காரணம். இதே அவசர நிலை காலத்தில் நக்சல்பாரி புரட்சியாளர்கள் கொலை செய்யப்பட்டும், பலர் சிறைபட்டதற்கும் கூட அவர்கள் ரசிய சமூக ஏகாதிபத்தியத்தை எதிர்த்தார்கள் என்பதோடு உள்நாட்டில் ஆளும் வர்க்கத்திற்கு தலைவலியாக செயல்பட்டார்கள் என்பதே.

மற்றபடி ஆர்.எஸ்.எஸ் வெளியிலிருந்தால் என்ன செய்திருக்குமோ அதை  எந்தக் குறையுமில்லாமல் இந்திராவே நிறைவேற்றினார். தில்லி குடிசை வாழ் மக்களை அகற்றுவது, கட்டாயக் குடும்பக்கட்டுப்பாடு போன்றவைகளை எதிர்த்துப் போராடிய ஏழை முசுலீம்களை ஆயுதம் கொண்டு காட்டுமிராண்டித்தனமாய் ஒடுக்கியது இந்திராவின் அரசாங்கம். இதனால் இன்றைக்கும் சஞ்செய் காந்தி எனும் சர்வாதிகார இளவலை ஆர்.எஸ்.எஸ் கூட்டம் பாராட்டித் திரிகிறது. மேனகா காந்தியும், வருண் காந்தியும் இன்று பா.ஜ.கவில் இருந்து கொண்டு இந்துவெறி பிரச்சாரத்தை செய்கிறார்கள் என்றால் அது அவர்களது மரபிலேயே இருக்கிறது என்பதுதான்.

அன்னை இந்திராவின் அடிமைகளாக ஆர்.எஸ்.எஸ் கும்பல்!

எமர்ஜென்சிக்கு முன்பே இந்திரா காந்தி வெளிப்படையாக விஷ்வ ஹிந்து பரிசத்தின் மாநாட்டில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ் மேல் போடப் பட்ட தடையே ஒரு அடையாளத்திற்காகத் தானேயொழிய இவர்கள் அன்றைக்கு சிறையிலிருந்த கம்யூனிஸ்டு புரட்சியாளர்களைப் போல எமர்ஜென்சி கொடுமைகள் எதையும் அனுபவித்ததில்லை. இருந்த போதும் கைதான மறு நொடியிலிருந்தே இந்திராவுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதத் தொடங்கிவிட்டார்கள். அதுவும் எப்படி?

சிறையிலிருந்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் தேவரஸ் கடிதம் மேல் கடிதமாய் இந்திராவுக்கு எழுதித் தள்ளுகிறார். அவற்றில் இந்திராவை தைரியலட்சுமி, வீரலட்சுமி என்றெல்லாம் புகழ்ந்து விட்டு, இந்திராவின் சுதந்திர தின உரையைப் பாராட்டி விட்டு, தேர்தல் வழக்கின் மேல் முறையீட்டில் அவர் வென்றதற்கு வாழ்த்து சொல்லி விட்டு – தங்கள் மேலான தடையை விலக்குமாறும், தங்கள் இயக்கத்திற்கும் நெருக்கடி நிலை எதிர்ப்பியக்கத்திற்கும் தொடர்பிலை என்றும், தடையை நீக்கினால் அரசுக்கு விசுவாசமாக இயங்குவதாகவும் குறிப்பிடுகிறார்.

கருணாநிதியாவது எமர்ஜென்சிக் கொடுமைகளை அனுபவித்து முடித்த பின் தான் ‘நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக’ என்று சரண்டரானார். அடி வாங்கிய பின் தான் தி.மு.க அழுதது – இவர்களோ இந்திரா செல்லமாக கம்பை ஓங்கியதுமே தம் காலோடு மூத்திரம் பெய்து கண்ணீர் விட்டுக் கதறிய கோழைகள்.

எனினும் நூலாசிரியர் பா.ரா கூச்ச நாச்சமின்றி ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கு அவசர நிலையை எதிர்த்த வீரர்கள் என்ற பட்டத்தை அவர்களே  வெட்கப்படுமளவுக்கு மனம் குளிர வழங்குகிறார். இன்று தேவரஸ் உயிரோடு இருந்திருந்தால் பா.ராவிற்கு “சங்கம் காத்த சிங்கம்” என்று பட்டமே வழங்கியிருப்பார்.

அயோத்தி – ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு ஆலோசனை வழங்கும் பா.ரா

கிட்டத்தட்ட ஒன்றரை நூற்றாண்டுகளாக இந்து வெறியர்கள் தொடர்ச்சியாகத் திட்டமிட்டு, சாமானிய மக்களிடையே மதவெறி நஞ்சைக் கலந்து மக்களிடையே கண்ணுக்குப் புலப்படாத ஒரு பெரும் தடைச் சுவரையே ஏற்படுத்தி, பல கலவரங்கள் நடத்தி பலநூறு முசுலீம் மக்களைக் கொன்று குவிப்பதற்கு காரணமான பாபர்மசூதி எனும் அயோத்தி விவகாரத்தை வரலாற்றறிஞர் பா. ரா வெறும் ஒன்றரை பக்கத்திலேயே முடித்துக் கொள்கிறார். இதை விரித்து எழுதியிருந்தால் அவரே விரும்பினாலும் ஆர்.எஸ்.எஸ்இன் கொலைபாதகத்தை மறைக்க முடியாது என்பது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

அயோத்தி விவகாரத்தை மூலதனமாக்கி, நாட்டு மக்களை ஒரு ரத்தக் குளியலில் மூழ்கவைத்து ஆட்சியைக் கைப்பற்றும் அளவுக்கு இந்து மதவெறி பாசிஸ்டுகள் தலையெடுத்த அந்த நிகழ்வுக்கு பல முக்கியத்துவங்கள் இருக்கின்றன. இந்த நாட்டின் அரசு, அரசியல், நீதி, நிர்வாக, ஊடக அமைப்புகள் அனைத்தும் இந்துமதவெறி பாசிசத்தின் தூண்களாக அம்பலப்பட்டதன் பின்னணி குறித்து அவருக்கு அக்கறை ஏதும் இல்லை. ஏனெனில் அவரும் கூட இந்த தூண்களில் ஒருவர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

அதனால்தான் அயோத்தி விவகாரத்தை வேறு விதமாக சுமூகமாகத் தீர்த்திருக்க முடியும் என்கிறார் – அதற்கு உதாரணமாக ஆர்.எஸ்.எஸ் விவேகானந்தர் நினைவாலயம் நிறுவியதை ‘சாதுர்யமாகச்’ சாதித்துக் கொண்டதாக எடுத்துக் காட்டுகிறார்.

விவேகானந்த கேந்திரத்தின் வரலாறும், தமிழகத்தில் இந்துமதவெறியும்!

“விவேகானந்தருக்கு நினைவுச் சின்னம் அமைப்பதில் யாருக்குக் கருத்து வேறுபாடு இருக்க முடியும்?எனவே எந்தத் தடையுமின்றிப் பரபரவென்று ஆலோசனைகள் நடைபெறத் தொடங்கின.”

“சிக்கல், கன்னியாகுமரி கிறிஸ்தவர்கள் வடிவில் வந்தது. பாறையில் விவேகானந்தருக்கு நினைவுச் சின்னம் அமைப்பதை ஏற்க முடியாது. நூறு வருடங்களுக்கு முன்னால் புனித  சேவியர் இங்கு வந்த போது அவர் அமர்ந்து ஜபம் செய்த பாறை அது. கிறிஸ்தவர்களுக்குச் சொந்தமானது” – பக்கம் 123.

இதன்படி பா.ரா கூறுவது என்ன?

நினைவுச்சின்னம் அமைக்க ஏக்நாத் ரானடே எனும் ஆர்.எஸ்.எஸ்-இன் அகில இந்திய பொதுச் செயலாளரை அதன் தலைவர் கோல்வால்கர் அனுப்புகிறார். வந்தவர் கையெழுத்து இயக்கம் எடுத்தது, தி.மு.க தலைவர் அண்ணாதுரையை நினைவுச் சின்ன கமிட்டிக்குள் இழுத்தது, உச்சகட்டமாக ஜோதிபாசு எனும் கம்யூனிஸ்ட் தலைவரிடமே விவேகானந்தர் வங்கத்துகாரர் என்று நன்கொடை கேட்டது, இப்படியே மத்திய மாநில அரசுகளை நைச்சியமாகப் பேசி சம்மதிக்க வைத்து நாசூக்காக காரியத்தை சாதித்ததாக பா.ரா சொல்கிறார்.

ஆனால் உண்மை என்ன?

தமிழகத்தில் பெரியாரின் தாக்கத்தினால் வளரமுடியாமல் தேங்கியிருந்த ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு, பார்ப்பனரல்லாத இந்து மதப் பிரச்சாரகர் விவேகானந்தருக்குப் பொதுவில் இருந்த இரசிகர் பட்டாளம் நம்பிக்கையளித்தது. பார்ப்பனரல்லாதோரையும் உள்ளிழுக்கும் வகையில் வருண சாதி அமைப்புக்கு பங்கம் வராமல் சில சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று பிரச்சாரம் செய்தவர் விவேகானந்தர். காங்கிரசு மட்டுமல்ல  போலி கம்யூனிஸ்டுகள் கூட விவேகானந்தரை ஏற்றுக் கொள்பவர்கள் தான்.

பொதுவாக ஆர்.எஸ்.எஸ் தனது வளர்ச்சிக்கு மக்களிடம் இயல்பாக இருக்கும் நம்பிக்கைகளையும் விழுமியங்களையும் கவர்ந்து கொண்டும், அவற்றுள் ஊடுருவிக் கைப்பற்றியும் அவற்றின் உள்ளடக்கத்தை தமக்கேற்றவாரு மறுசீரமைத்து மதவெறியூட்டுவதையும் தமது செயல் தந்திரங்களில் ஒன்றாகக் கொண்டுள்ளது. சாமானியர்கள் வழிபடும் வினாயகரைக் கைப்பற்றியதும், கிராமக் கோயில் பூசாரிகள் சங்கம் எனும் பெயரில் சிறு தெய்வங்களை சமஸ்கிருதமயமாக்குவதும் இதற்கான உதாரணங்கள்.

இப்படித்தான் விவேகானந்தரை வைத்து தமிழகத்தில் ஊடுறுவுவதற்கு ஆர்.எஸ்.எஸ் முயன்றது. காலம் காலமாக குமரி மாவட்ட கரையோர மீனவர்கள் கடலாடி வந்து உணவருந்தி ஓய்வெடுக்கவும், தமது வலைகளைக் காய வைக்கவும், ஆண்டுக்கொரு முறை சிலுவை வைத்து ‘குரூஸ்’ எனும் வழிபாடு நடத்தப் பயன்படுத்தி வந்த பாறையை ஆர்.எஸ்.எஸ் இதற்காக குறிவைக்கிறது.

நாட்டில் பெயர் பெற்ற பண்டாரம் பரதேசிகள் மூத்திரம் பெய்த, வெளிக்கு போன இடங்களையெல்லாம் கண்டுபிடித்து நினைவாலயம் அமைக்க வேண்டுமென்றால் இந்த நாட்டில் மக்கள் வசிக்கவே இடம் காணாது. விவேகானந்தரோ நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்து பல இடங்களில் தங்கி தியானம் செய்திருக்கிறார் – சொற்பொழிவுகள் ஆற்றியிருக்கிறார். இவர்கள் குறிப்பாக அந்தப் பாறையைத் தேர்ந்தெடுக்கக் காரணம் அதைப் பயன்படுத்தி வந்த மீனவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்ததும் – அம்மாவட்ட மக்கள் தொகையில் அவர்கள் கணிசமான அளவில் இருந்ததும் தான். மேலும் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை, புறக்கணிப்பு காரணமாக மதம் மாறியவர்கள் அந்த மக்கள். அதே போல நாடார்களில் கணிசாமானோரும் கிறிஸ்தவர்களாக இருக்கின்றனர். மிச்சமிருக்கும் இந்து நாடார்களையும் ஏனைய சாதி இந்துக்களையும் திரட்டுவதற்கு இந்த விவேகானந்தர் நினைவு சின்னம் வழி அமைத்துக்கொடுக்கிறது.

மேலும் இந்தியா முழுவதிலும் இருந்துவரும் மக்களுக்கு இந்த நினைவுச் சின்னம் ஒரு இந்துத்வ சுற்றுலாவாக இருக்கும் நன்மையையும் ஆர்.எஸ்.எஸ் கணித்திருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ் எதிர்பார்த்ததைப் போலவே நினைவாலயம் அமைக்கப்பட்டால் தமது வாழ்வுரிமை பாதிக்கப்படும் என்பதை உணர்ந்த மீனவர்கள், அந்நடவடிக்கைகளை தம்மால் இயன்ற அளவில் கடுமையாக எதிர்க்கிறார்கள். ஏழை மீனவர்களின் இந்த பிரச்சினையை இந்துக்களுக்கு வந்த சோதனையாக பிரச்சாரம் செய்கிறது ஆர்.எஸ்.எஸ்.

மீனவர்களுக்கு அந்தப் பாறை மேல் இருந்த பாரம்பரிய உரிமையை மூடி மறைத்து, அவர்களிடம் இருந்து அதைத் தட்டிப் பறித்த ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு மத்தியில் ஆட்சியிலிருந்த சாஸ்திரியும், மாநிலத்தில் ஆட்சியிலிருந்த பக்தவத்சலமும் பக்கபலமாய் இருந்துள்ளனர். காஞ்சி சங்கராச்சாரி மறைமுகமாகத் துணை நின்றார். அன்றைய காலகட்டத்தில் தமிழகத்தில் தனக்கு பலமில்லாத காரணத்தால், கேரளாவில் இருந்து இரகசியப் படகுகள் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் குண்டர்களையும், தமிழக போலீசையும் வைத்து மீனவர்களை அடித்து விரட்டி விட்டு தான் இந்த ஆக்கிரமிப்பை வெற்றிகரமாகச் செய்தனர்.

இறுதியில் 1970ஆம் ஆண்டு விவேகானந்தர் நினைவாலயம் திறக்கப்படுகிறது. கூடவே கன்யாகுமாரியில் ஆர்.எஸ்.எஸ்இன் நச்சுப்பணிக்கான தளவேலையும் ஆரம்பிக்கப்படுகிறது.

இயல்பாகவே ஆளும் அதிகார வர்க்கத்தினிடையே நிலவும் இந்துத்துவ ஆதரவு நிலைப்பாட்டை சாதகமாக்கிக் கொண்டு அதிகாரத்தையும், குண்டர்படையையும் துணைக்கு வைத்துக் கொண்டு எதிர்ப்புகள் நசுக்கப்பட்டதாலேயே விவேகானந்தர் பாறை நினைவாலயம் சாத்தியமானது. இந்த ‘அமைதி’ வழியைத் தான் பா.ரா அயோத்தி விஷயத்திற்கும் பரிந்துரைக்கிறார்.

அதாவது, இவர்கள் ஏன் அவசரப்பட்டு கலவரம் செய்து, முசுலீம்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்து, கைகளை இரத்தச் சகதியில் முக்கியெடுத்து, மசூதியை இடித்து இத்தனை கெட்ட பெயரை வாங்க வேண்டும்? கொஞ்சம் பொறுமையாய் இருந்திருந்தால், நீதி மன்றத்தின் மூலமே ‘முறையான’ தீர்ப்பைப் பெற்று, இராணுவத்தைக் கொண்டே மசூதியை இடித்து கோயிலைக் கட்டியிருக்கலாமே என்பது தான் பா.ராவின் அங்கலாய்ப்பு. இப்போது அலகாபாத் உயர்நீதி மன்றம் கொடுத்திருக்கும் தீர்ப்பின் பின்னணியில் பா.ராவின் அங்கலாய்ப்பைப் புரிந்து கொள்ள முடிகிறது. மேலும் அயோத்தயில் இந்து கோவிலை இடித்துத்தான பாபர் மசூதியைக் கட்டினார் என்று ஆர்.எஸ்.எஸ் கூறும் அபாண்டத்தை பா.ராவும் வழிமொழிகிறார். கருத்து வேறுபாடு எதில் என்றால் இந்த விவகாரத்தை சாணக்கிய குள்ளநரித் தந்திரத்தின் மூலம் சிரமமின்றி சாதித்திருக்கலாம் என்பதே.

குஜராத் இனப்படுகொலையை ஆர்.எஸ்.எஸ் செய்யவில்லையாம்!

இதையே தான் குஜராத் கலவரங்கள் பற்றிய விவரணைகளின் பின்னும் சொல்கிறார்.

“அடிப்படை இது தான். குஜராத்தின் இன்றைய வளர்ச்சி, சுதந்திரம் அடைந்த நாளாக அந்த மாநிலம் காணாதது. மிகவும் பிரம்மாண்டமானது. மக்களுக்கு வளர்ச்சி தான் முக்கியம். வசதிகளே முக்கியம். குஜராத் என்றல்ல. உலகெங்கும்  இது தான். இது மட்டும் தான். ” பக்கம் – 138

ஆயிரக்கணக்கான முசுலீம்களை இனப்படுகொலை செய்து, பெண்களைக் கற்பழித்து, முசுலீம் பெண்களின் கருப்பையைக் கிழித்து கண்களைக் கூடத் திறக்காத பிஞ்சுகளை வீசியெறிந்து வாள் முனையில் சொருகிக் கொன்று ரத்த வெறியாட்டம் ஆடிய பின்னும் மோடி வென்றதற்கு மிக முக்கிய காரணம் அவர் குஜராத்திற்குக் காட்டிய வளர்ச்சிப் பாதை தான் என்றும் – வளர்ச்சியொன்றே முக்கியமென்றும் சொல்கிறார் பா.ரா.

யூதர்களை கொன்று பின்னர் ஜெர்மனியர்களின் வளர்ச்சிக்கு வித்திட்டு அவர்களது செல்வாக்கை அணிதிரட்டிய ஹிட்லரின் வெற்றியும் அப்படித்தான். நவீன இந்தியா கண்ட மிகக் கொடூரமான முசுலீம் மக்கள்  இனப்படுகொலைதான் 2002 கலவரங்கள். அது முடிந்து எட்டு ஆண்டுகள் கூட ஆகவில்லை. அதற்குள் அதெல்லாம் ஒரு பொருட்டல்ல, இனி வளர்ச்சிதான் மோடியின் தாரகமந்திரம் என்று பாவமன்னிப்பு வழங்குகிறார். இதன்படி இந்துமதவெறியர்கள் கலவரத்தின் மூலம் சிறுபான்மை மக்களைக் கொன்றுவிட்ட கையோடு ஏதாவது கார் தொழிற்சாலை, வளர்ச்சி என்று செட்டிலாகிவிட்டால் அது பிரச்சினையில்லை.

அடுத்து குஜராத் கலவரத்தை ஆர்.எஸ்.எஸ் திட்டமிடவில்லையாம். அதற்கு ஆர்.எஸ்.எஸ் உருவாக்கிய மத உணர்வு கொண்டவர்கள் தான் காரணமாம். அதாவது, கொலைகளையும் கற்பழிப்புகளையும் குண்டு வீசியதும் ஆர்.எஸ்.எஸ்ஸால் மத உணர்வு ஊட்டப்பட்டவர்கள் தான் – அதற்கு ஆர்.எஸ்.எஸ் காரணமில்லை என்று பச்சையாய் புளுகுகிறார். இதே ஆர்.எஸ்.எஸ் காரர்கள் தான் தெகல்கா வீடியோ முன் அப்பட்டமாக நின்று எப்படித் திட்டமிட்டோம், எப்படிக் கொன்றோம் என்று குற்றவுணர்ச்சியே இல்லாமல் விவரித்தார்கள். ஆனாலும் ஆர்.எஸ்.எஸ் என்ற அர்ப்பணிப்பு உணர்வு மிக்க தேசபக்தர்களை கொலைகாரர்களாக பார்ப்பதற்கு பா.ரா தயாரில்லை. அதனால்தான் அந்த கொலைகாரர்களது சித்தாந்தத்தை நெஞ்சிலேந்தி விடம் கக்கும் அரவிந்த நீலகண்டன் போன்ற பாம்புகளெல்லாம் பா.ராகவனது தமிழ் பேப்பரில் படம் எடுத்து ஆடுகின்றன. நல்ல பாம்பு படமெடுப்பதை இரசிக்கும் பா.ரா போன்ற கண்ணியவான்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

பனியாக்களின் பின்புலத்தோடு குஜராத்தில் ஊடுருவிய ஆர்.எஸ்.எஸ் பல பத்தாண்டுகளாக அங்கே வேலை செய்திருக்கிறது. கலவரத்திற்கு பல ஆண்டுகள் முன்பாகவே குஜராத்தைப் பற்றிய ஒரு முழுமையான சர்வேயை வி.எச்.பி எடுத்துள்ளது. அதில் முசுலீம்கள் மக்கள் தொகை, முசுலீம்கள் செய்து வந்த வியாபாரம் போன்ற விவரங்களைத் திரட்டி முன் தயாரிப்பு செய்திருக்கிறார்கள். வனவாசி கல்யாண் ஆசிரமத்தின் மூலம் பழங்குடியினரிடையே ஊடுருவி அவர்களிடையே மதவெறி நஞ்சூட்டி முசுலீம் சமுதாயத்திற்கு எதிராய் அணிதிரட்டியிருக்கிறார்கள்.

இது ராகவன் சொல்வது போல ஏதோ “உணர்வால் உந்தப்பட்டு” சட்டென்று நிகழ்ந்த ஒன்றல்ல; பல்லாண்டுகளாகத் திட்டமிட்டு படிப்படியாக ஊடுருவி ஒரு சமூகத்தின் பெரும்பான்மை மக்களையே பாசிசமயமாக்கியிருக்கிறார்கள். இத்தனை விமரிசையாக அம்பலப்பட்ட பின்னும் மோடியின் தேர்தல் வெற்றி சாத்தியமாகி இருக்கிறதென்றால் அதற்குக் காரணம் இது தான். நாஜிக் கட்சியினர் எப்படி ஜெர்மானியர்களின் மனங்களை பாசிசமயமாக்கி யூதர்களுக்கு எதிரான தமது நடவடிக்கைகளை அமைதியாக வேடிக்கை  பார்த்துக் கொண்டிருக்கும் வெறும் பார்வையாளர்களாக ஆக்கினார்களோ அதே வழிமுறையைத் தான் ஆர்.எஸ்.எஸ் பரிவாரம் குஜராத்தில் பின்பற்றியது – தேசமெங்கும் அதையே விரித்துச் செல்லும் திட்டத்தையும் வைத்துள்ளது. அதனால்தான் குஜராத் இந்துத்வத்தின் சோதனைச் சாலையாக இருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ் எனும் பாசிச இயக்கத்தை பாராட்டும் பா.ரா!

1948ஆம் ஆண்டு காந்தி கொலை செய்யப்பட்டபோது ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப்படுகிறது. மராத்திய சித்பவன பார்ப்பனனும், இந்து மகா சபையின் தீவிரவாதியுமான நாதுராம் கோட்சேதான் காந்தியைக் கொல்கிறார். சாவர்க்கரின் தலைமையிலான ஒரு தீவிர இந்துத்தவ கும்பலே இதை திட்டமிட்டு செய்கிறது. கோட்சே ஒரு ஸ்வயம் சேவகரும் கூட. ஆனால் அவர் ஒரு முன்னாள் ஆர்.எஸ்.எஸ்காரர்தான், காந்தி கொலையின் போது அவர் அந்த இயக்கத்தில் இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டதாம். இதை டெக்னிக்கலாக சொல்லி ஆர்.எஸ்.எஸ் பங்கை விடுவிக்கிறார், பா.ரா.

சரி, ஒரு ஸ்வயம் சேவக் ஆர்.எஸ்.எஸ் இல் உறுப்பினராக இருக்கிறார் என்பதற்கு ஏதாவது சாட்சியங்கள் இருக்கிறதா? இல்லை. உலகத்தில் உள்ள எல்லா கட்சிகளும், அமைப்புகளும் அவ்வளவு ஏன் நமது சிலம்பரசனது ரசிகர் மன்றத்தில் கூட உறுப்பினர்கள் என்றால் ஒரு அடையாள அட்டை கொடுப்பார்கள். அந்தந்த அமைப்புகளின் ஆவணங்களில் உறுப்பினர்களது பெயர்கள் இடம்பெற்றிருக்கும்.

ஆனால் இப்படி ஒரு ஜனநாயக நடைமுறை ஆர்.எஸ்.எஸ் இல் அறவே கிடையாது. யாரெல்லாம் அதன் ஷாகாக்களுக்கு வருகை தருகிறார்களோ அவர்களெல்லாம் ஸ்வயம் சேவகர்கள் என்று கூறுவார்கள். ஒரு வேளை அவர்கள் ஷாகாக்களுக்கு வருகை தருவதை நிறுத்தி விட்டால் அவர்களை முன்னாள் ஸ்வயம் சேவகர்கள் என்று கூறமாட்டார்கள். கேட்டால் வாழ்க்கையில் ஓரிரு நாட்கள் வந்தால் கூட அவர்கள் என்றுமே ஸ்வயம் சேகவர்கள்தான், இதில் முன்னாள், பின்னாள் என்று பாகுபாடெல்லாம் கிடையாது என்பார்கள். ஆர்.எஸ்.எஸ் இன் இந்த லாஜிக்படி கோட்சே ஒரு ஸ்வயம் சேவக்தான்.

ஆர்.எஸ்.எஸ்இல் இப்படி உறுப்பினர் பதிவேடுகள், இல்லாமல் இருப்பதற்கு காரணம் அது ஜனநாயகமற்ற பாசிச அமைப்பு என்பதுதான். ஆர்.எஸ்.எஸ்இல் ஒரு உறுப்பினருக்கு இன்னென்ன உரிமைகள், கடமைகள், அவருக்கு அதன் தலைவர்களை தெரிவு செய்யும் வாக்குரிமை என்று எதுவும் கிடையாது. ஆர்.எஸ்.எஸ்இன் பல்வேறு கீழ்மட்டத் தலைவர்களெல்லாம் மையத்திலிருந்து நியமனம் செய்யப்படுபவர்கள்தான். சான்றாக ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் ஹெட்கேவார் தனக்கு பிறகு கோல்வால்கரை தெரிவு செய்கிறார். கோல்வால்கர் தனக்கு பிறகு தேவரசை தலைவராக தெரிவு செய்து உயில் எழுதிவிட்டு சாகிறார். அதே போல தேவரஸ்ஸுக்கு பிறகு ராஜேந்தர் சிங், அவருக்கு பிறகு சுதர்சன், சுதர்சனுக்கு பிறகு மோகன் பகவத் என்று சங்கராச்சாரிகளின் சங்கரமடம் போல ஆர்.எஸ்.எஸ்இன் பாரம்பரியம் தொடர்கிறது.
இதுதான் இந்த பாசிச அமைப்பின் இயங்கு முறை. ஆனால்

” ஜனநாயகத்தின் பெயரால் நிகழ்த்தப்படும் விவாத, விமரிசன கேலிக்கூத்துகள் அறவே தவிர்க்கப்பட்டன. இவர் தலைவர், இது முடிவு. தீர்ந்தது விசயம் ” பக்.57

என்று இதற்கு ஒளிவட்டம் போடுகிறார் பா.ரா. ஆர்.எஸ்.எஸ் இல் மருந்துக்குக் கூட ஜனநாயகம் இல்லை என்பதை பா.ரா விவரிக்கவில்லை என்பதும் அதையே போற்றுகிறார் என்றால் அது அவருடைய கருத்து மட்டுமல்ல. அவருடைய நூலை வாங்கி படிக்கும் ‘இந்துத்வ’ நடுத்தர வர்க்கத்திடம் கேட்டால் கூட ” இந்தியாவில் ஒரு சர்வாதிகார ஆட்சி வந்தால்தான் நாடு உருப்படும்” என்று சொல்வார்கள்.
காந்தி கொலைக்குப் பிறகு தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் அடுத்த ஆண்டே மீண்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. இந்த சலுகை அந்த இயக்கத்திற்கு எப்படி கிடைக்கிறது?

அமெரிக்க கைக்கூலியாய் கம்யூனிசத்தை எதிர்க்கும் ஆர்.எஸ்.எஸ்!

அப்போது தமது இயக்கத்தின் மேலான தடையை விலக்கக் கோரி ஆர்.எஸ்.எஸ்இன் தலைவர் கோல்வால்கர், நேருவுக்கு எழுதிய கடிதங்களில் உலகெங்கும் கம்யூனிச அபாயம் பரவுவதாகவும் இந்தியாவிலும் அது வேகமாகப் பரவிவருவதாகவும் இதை எதிர்த்த போராட்டத்தில் அரசுக்கு விசுவாசமான அடியாள் படையாக ஆர்.எஸ்.எஸ் இருக்கும் என்கிற உறுதி மொழியைக் கொடுத்துள்ளார். அன்றைய சூழ்நிலையில் உலகளவில் கம்யூனிஸ்டுகளைக் கண்டு அஞ்சியது அமெரிக்க ஏகாதிபத்தியமும் இந்தியளவில் நிலபிரபுக்களும், தரகு முதலாளிகளும் தான். இதிலிருந்தே இவர்களின் விசுவாசம் யாரிடம் இருக்கிறது என்பது தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.

அந்த காலகட்டத்தில் தெலுங்கானாவில் நிலவுடைமை பண்ணையார்களை தூக்கி எறிந்துவிட்டு நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு நிலத்தை சொந்தமாக்கி ஆயுதந் தாங்கிய போராட்டத்தை கம்யூனிஸ்ட்டுகள் நடத்தி வந்தார்கள். இந்த செயல் இந்திய ஆளும் வர்க்கத்திற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதென்றால் அதற்கு பரிகாரம் செய்வதற்கு ஆர்.எஸ்.எஸ் துடித்திருக்கிறது. மேலும் உலக அளவில் கிழக்கு ஐரோப்பாவிலும், கொரியா, வியட்நாமிலும் கம்யூனிஸ்ட்டுகள் வென்று வரும் நேரத்தில் அமெரிக்கா அலறித் துடிக்கிறது. அந்த அமெரிக்காவின் கையை பலப்படுத்தி இந்தியாவில் கம்யூனிச அபாயத்தை வீழ்த்துவதற்கு தங்கள் மீதான தடையை விலக்க வேண்டுமென்று கோல்வால்கர் கூறுகிறார் என்றால் இதன் பொருள் என்ன?

ஆம். ஆர்.எஸ்.எஸ் என்பது இந்தியாவின் எதிர்ப்புரட்சி கும்பல் என்பதே. அதனால்தான் அந்த இயக்கத்தின் மீதான தடை நேரு அரசாங்கத்தால் நீக்கப்படுகிறது. இந்த வரலாற்று உண்மை பா.ரா என்ற ‘நூல்’ ஆசிரியரின் அக்கறைக்குரியதாக இல்லை. ஜமீன்தார்கள், மிட்டா மிராசுதாரர்கள், பண்ணையார்களது அதிகாரம், நில உடமை பறி போவதை பார்த்துக் கொண்டு ஆர்.எஸ்.எஸ் பதறுகிறது என்றால் இந்த கட்சியின் யோக்கியதை குறித்து வாசகர் முடிவு செய்து கொள்ளலாம்.

மக்களுக்குகாக போராடாத ஆர்.எஸ்.எஸ்இன் பரிவார அமைப்புகள்!

இதன் பிறகு ஆர்.எஸ்.எஸ்இன் பல்வேறு பரிவார இயக்கங்களைப் பற்றி பிரம்மிப்பூட்டும் வகையில் விவரிக்கிறார் பா.ரா. இவை ஆரம்பிப்பதற்கு என்ன காரணம்? காந்தி கொலையின் போது அந்த இயக்கத்தின் சார்பில் பொது அரங்கில் பேசுவதற்கு யாருமில்லை என்று கோல்வால்கர் கவலைப்பட்டு இத்தகைய கிளைகளை ஆரம்பிக்கிறாராம். பா.ரா இதில் பார்க்கத் தவறிய உண்மை ஒன்று இருக்கிறது. என்னதான் தடை நீக்கபட்டாலும், பட்டேல் போன்ற தீவிர இந்துத்வவாதிகள் காங்கிரசில் இருந்தாலும் ஆர்.எஸ்.எஸ்இன் கொள்கையை நேரடியாக பேசுவதற்கும், செயல்படுத்துவதற்குமான ஒரு அரசியல் கட்சி இல்லை என்பதும், அரசியல் அதிகாரத்தில் நாமே நேரடியாக குதிக்க வேண்டும் என்ற அவாவே ஆர்.எஸ்.எஸ் பல்வேறு பரிவார இயக்கங்களை ஆரம்பிப்பதற்கு காரணமாகும். அந்த வகையில் ஜனசங்கம் என்ற முன்னாள் பாரதிய ஜனதா கட்சி ஆரம்பிக்கப்படுகிறது.

இன்று ஆர்.எஸ்.எஸ்ஸின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பிக்கு ஒன்றரைக் கோடி உறுப்பினர்கள் இருக்கிறார்களாம். ஐம்பது லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட பி.எம்.எஸ் எனப்படும் பாரதிய தொழிற்சங்கம் இருக்கிறதாம். இன்னும் தேசமெங்கும் செல்வாக்கான மடங்கள், மத நிறுவனங்கள் போன்றவற்றில் ஊடுருவி வேலை செய்யும் பலமான வி.எச்.பி, வடநாட்டில் அநேகமாக எல்லா மலைவாசி கிராமத்திலும் கிளைகள் கொண்ட வனவாசி கல்யாண் ஆஷ்ரம் என்று அவர்களது பலமான வலைப்பின்னலை ஒரு வியப்புடன் வாசகனுக்கு விவரிக்கிறார் பா.ரா.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் இந்தியாவில் கோடிக்கணக்கானோர் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளில் இருப்பதாகத் தோன்றும். இது தமிழ்நாட்டின் ஆதிக்க சாதி சங்கங்கள் அடித்துவிடும் பிரம்மாண்டமான உறுப்பினர் எண்ணிக்கைக்கு ஒப்பானதாகும். மேலும் பொட்டு வைத்தவெனெல்லாம் ஆர்.எஸ்.எஸ் காரன் என்ற பொதுப்புத்திக்கு முரண்படாத வாதமும் ஆகும்.

இருக்கட்டும். இப்படி ஒவ்வொரு அரங்கத்திற்கும் தனித்தனியான அமைப்புகளைப் பெற்றிருக்கும் ஆர்.எஸ்.எஸ், அந்தப் பிரிவு மக்களின் எத்தனை கோரிக்கைகளுக்குப் போராடியுள்ளது என்கிற செய்தியை மட்டும் பா.ரா சொல்லவில்லை. ஆர்.எஸ்.எஸ்ஸின் அபிமானத்திற்குரிய வாசர்களான மயிலாப்பூர் பார்த்தசாரதிகளுக்கு வேண்டுமானால் அது தேவைப்படாத தகவலாய் இருக்கலாம்; ஆனால் வினவு வாசகர்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

தி.மு.க, அ.தி.மு.க போன்ற ஆளும் வர்க்க கட்சிகளிலும் மாணவர் பிரிவு, தொழிலாளர் பிரிவு, விவசாயிகள் பிரிவு என்று வைத்திருக்கிறார்கள். இவர்களாவது அந்தந்த வர்க்கப் பிரிவினரின் கோரிக்கைக்காக ஒரு சந்தர்ப்பவாதமாகவாவது போராடியிருக்கிறார்கள். இன்றைக்கு கல்வியே வியாபாரமாகப் போய்  விட்ட சூழலில், படித்த எத்தனையோ இளைஞர்களுக்கு திறமைக்கேற்ற வேலை கிடைக்காமல் அவதியுறும் நிலையில், எத்தனையோ அரசுக் கல்லூரிகள் அரசால் புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில், ஏ.பி.வி.பி ஆரம்பிக்கப் பட்ட இத்தனை வருடங்களில் எத்தனை முறை போராடியிருக்கிறார்கள்?

மாணவர் சமுதாயத்திற்காக ஆர்.எஸ்.எஸ்ஸின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி நடத்திய இயக்கங்கள் எத்தனை? சொல்லிக் கொள்ளுமளவு ஒன்றுமில்லை என்பதே உண்மை. அப்படியிருக்க ஏ.பி.வி.பி ஏன் ஆரம்பிக்கப் பட்டது? யாருடைய நலனுக்காக இயங்குகிறது?

இதற்கு நாம் பதில் சொல்ல வேண்டாம். பா.ராவே பதில் சொல்கிறார் – மாணவர்களை மொழிப் போராட்டம், சாதி எதிர்ப்புப் போராட்டம் போன்றவற்றில் கலந்து கொள்ளாமல் தடுத்து அவர்களை அரசியல் விலக்கம் செய்வது தான் நோக்கமாம். ஏ.பி.வி.பியில் இணையும் மாணவனை ஷாகாக்களுக்கு வரவழைத்து இந்துத்வத்தை ‘உணர்வாகவும் உணவாகவும்’ ஊட்டுவார்களாம் (பக்கம் 44). மொழி உரிமைப் போராட்டம் என்று பா.ரா குறிப்பிடுவது தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்களைத் தான். அதாவது, தமது பார்ப்பன சனாதன தருமத்தின் பரவலுக்கு மாணவர் பிரிவினரிடம் இருந்து எதிர்ப்புகள் வந்து விடாமல் தடுத்து அவர்களை மடை மாற்றி மதவெறி ஊட்டி பாசிஸ்ட்டுகளாக வார்த்தெடுப்பது தான் ஆர்.எஸ்.எஸ்ஸின் நோக்கம்.

அதே போல் உலகிலேயே முதலாளிகளைக் கேள்வியே கேட்காமல் உழைக்க வேண்டும் என்று சொல்லும் ஒரு கருங்காலி தொழிற்சங்கம் தான் பி.எம்.எஸ். அந்த வகையில் முதலாளிகள் இந்த சங்கத்தை ஸ்பான்சர் செய்து வளர்த்தார்கள். முதலாளிகளும், தொழிலாளிகளும் முரண்படாமல் ஒருங்கிணைந்து பாரதத்தின் முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும் என்பதுதான் பாரதிய மஸ்தூர் சங்கத்தின் கொள்கை முழக்கம். மே தினத்திற்கு பதில் விசவகர்மாவின் ஜன்ம நட்சத்திர தினத்தைத்தான் தொழிலளிகளும், முதலாளிகளும் கொண்டாட வேண்டுமென்பது இந்த சங்கத்தின் சுதேசிக் கொள்கை.

பழங்குடிகள் போராட்டத்தை ஒடுக்கும் ஆர்.எஸ்.எஸ்!

வடநாட்டில் வனவாசிகள் வாழும் கிராமம் தோறும் கிளைகள் கொண்டிருப்பதாக பா.ராவால் வியந்தோதப்படும் வனவாசி கல்யாண் ஆஷ்ரம் ஒரிசாவிலும் சட்டீஸ்கரிலும், ஆந்திரத்திலும், பீகாரிலும், மேற்குவங்கத்திலும் வனவாசி மக்கள், பன்னாட்டு நிறவனங்களை எதிர்த்து போராடிக் கொண்டிருந்த போது எங்கே போனது? இதன் இலட்சக்கணக்கான உறுப்பினர்கள் எங்கே மாயமாக மறைந்து போனார்களா?

அயோத்தி புனிதம். மதுரா புனிதம். காசி புனிதம். எனில்  நியாம்கிரி புனிதமில்லையா? கோண்ட் இன மக்களின் வாழ்வாதாரமாய் இருக்கும் அம்மலையை பன்னெடுங்காலமாய் அவர்கள் புனிதத்தாயாக வணங்கி வருகிறார்களே அதை அவர்களிடமிருந்து பறித்து, அம்மண்ணை விட்டும், கோண்ட் தாயை விட்டும் விரட்டியடித்து விட்டு பன்னாட்டு முதலாளிகளுக்குத் தாரை வார்க்க இந்திய இராணுவமே களத்தில் இறங்கியிருக்கும் போது, குண்டாந்தடிப் பயிற்சி பெற்ற ஆர்.எஸ்.எஸ் என்ன செய்திருக்க வேண்டும்? அவர்களின் வழிபாட்டு உரிமையை காப்பாற்றப் போகிறோம் என்று புறப்பட்டிருக்க வேண்டுமா இல்லையா?

ஆனால் செய்ததென்ன? பாரதிய ஜனதா மூலமும் வனவாசி கல்யாண் ஆஷ்ரம் மூலமும் திரட்டப்பட்ட சில கைக்கூலி பழங்குடியினரை வைத்து சல்வாஜூடும் என்கிற குண்டர் படையை ஆரம்பித்து, அவர்களுக்கு ஆயுதப் பயிற்சியளித்து லட்சக்கணக்கான பழங்குடியினர் மேல் ஏவி விட்டுள்ளனர். போஸ்கோ, மிட்டல் போன்ற பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் உள்நாட்டுத் தரகு முதலாளிகளுக்கும் அடியாள் படையாக அணிதிரட்டி நிறுத்தியிருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ்இன் சங்க பரிவார அமைப்புகளின் உறுப்பினர் எண்ணிக்கையை கோடிகளில் காட்டும் கிழக்கு பதிப்பகத்தின் முதன்மை ஆசிரியரும், ‘மாபெரும் அறிஞரு’மான பா.ராவுக்கு இந்த உண்மைகள் மறந்தும் கூட தெரியாமல் போனது என்?

பெண்கள் சேரமுடியாத ஆர்.எஸ்.எஸ்ஸும் அல்கைதாவும்!

பெண்களுக்காகத் ‘தனியே’ ஒரு இயக்கம் ஆரம்பித்தது இவர்களுடன் பெண்கள் நிறைய சேர ஒரு காரணம் என்று பா.ரா ஆச்சரியமாய்க் குறிப்பிடுகிறார். ஆனால், இதில் அவர் குறிப்பிடாமல் மறைத்த இன்னொரு விஷயமும் இருக்கிறது.  தி.மு.கவாகட்டும், அ.தி.மு.கவாகட்டும் இன்னும் உலகில் எந்தவொரு அரசியல் சமூக இயக்கங்களாகட்டும் பெண்கள் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். ஆனால், உலகிலேயே பெண்களை இயக்கத்தில் சேர்க்காமல் ‘தனியே’ தள்ளி வைத்திருக்கும் இயக்கங்கள் மூன்று தான் – ஒன்று கூ -க்ளக்ஸ் – க்ளான், இரண்டு அல்காயிதா, மூன்று ஆர்.எஸ்.எஸ். ஆர்.எஸ்.எஸ்இன் விதிமுறைப்படி அங்கு பெண்களுக்கு இடமில்லை. அதனால்தான் பெண்களுக்கென்று தனியே ராஷ்ட்ரிய சேவிகா சமிதி என்று ஒன்றை ஆரம்பித்தார்கள். சங்கபரிவார அமைப்புகளின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் இல் ஒரு பெண் உறுப்பினராக சேரக்கூடாது என்று இன்றும் அதாவது இருப்பத்தியோராவது நூற்றாண்டிலும் ஒரு கூட்டம் இருக்கிறு என்ற பாசிச உண்மையை அதன் பக்தரான பா.ரா ஏறெடுத்தும் பார்க்கவில்லை. என்ன இருந்தாலும் அவரும் அத்தகைய விழுமியங்களை, பச்சையான ஆணாதிக்கத்தை ஏற்றுக் கொண்ட ஒரு சான்றோர்தானே?

ஆதாரம் வேண்டுவோர் பா.ராவை அணுகி அதுகுறித்து கல்கி பத்திரிகையில் செத்துப் போன சீனியர் சங்கராச்சாரி என்ன சொல்லியிருக்கிறார், உயிரோடு இருக்கும் ஜெயேந்திரர் என்ன சொல்லியிருக்கிறார் என்று கேட்டால் தப்பாமல் சொல்வார். ஏனெனில் அந்த மேற்கோள்களை பக்தி சிரத்தையோடு பிழை திருத்தம் பார்த்த பக்தர் அவர்தான்.

ஆர்.எஸ்.எஸ்இன் ஒழுக்கமும், தேசபக்தியும் உண்மையல்ல!

பா.ரா தனது நூலின் நெடுக ஆங்காங்கே ஆர்.எஸ்.எஸ்ஸைச் செல்லமாகக் கடிந்து கொள்ளவும் செய்கிறார். ஆனால், அதையெல்லாம் மீறி எந்த விமரிசனத்திற்கும் அப்பாற்பட்ட உண்மையாக அவர் கூறுவது, போற்றுவது, வாசகர்களிடம் உருவாக்க நினைப்பது என்ன? ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்குகள் ஒழுக்கமானவர்கள், நேர்மையானவர்கள், சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட தேசபக்தர்கள், முக்கியமாக திருமணத்தை தியாகம் செய்த பிரம்மச்சாரிகள் என்றும் புகழ்கிறார். இதை வாசகர்கள் எந்த சந்தேகமின்றியும் ஏற்றுக்கொண்டாக வேண்டும் என்று பல இடங்களில் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறார்.

நாம் ஒரு வாதத்திற்காக பிரச்சாரக் கோவிந்தாச்சார்யா – உமாபாரதி காதல் கதைகளும், பிரச்சாரக் சஞ்சை ஜோஷியின் காமக் களியாட்டங்கள் சி.டியாக வலம் வந்ததையும், வாஜ்பாயி, இல.கணேசன் போன்ற அக்மார்க் பிரம்மச்சாரிகளின் யோக்கியதை குறித்து குமுதமே கிசுகிசு எழுதி அம்பலமாகி ஊரே நாறி சிரிப்பாய்ச் சிரித்ததை ஒதுக்கி வைத்து விட்டு பா.ரா அளிக்கும் ஒழுக்கவாத சான்றிதழைப் பார்க்கலாம்.

ஒழுக்கம் என்பது என்ன? அதன் அளவு கோள் என்ன?

ஒரு சின்ன உதாரணத்தைப் பார்க்கலாம். ஒருவன் ரொம்ப ஒழுக்கமானவன். புகைப் பழக்கம் இல்லை. மது அருந்தும் பழக்கம் இல்லை. பெண்களை ஏறெடுத்தும் பார்க்காதவன். நெற்றியில் பட்டை – கழுத்தில் கொட்டை; பெரிய பக்திமான். முக்கியமாக அவன் ஒரு பிரம்மச்சாரி. ஆனால், அவன் தொழிலில் மட்டும்  விபச்சாரத் தரகன். இவனின் ஒழுக்கம் பற்றி இப்போது நீங்கள் கொள்ளும் மதிப்பீடு என்ன?

ஆக, ஒழுக்கம் என்பது ஒரு தனிமனிதனின் பழக்க வழக்கங்களிலும் தனிப்பட்ட பண்புகளிலும் மட்டும் சுருங்கிக் கொள்வதல்ல. அது அம்மனிதன்  சமூக உறவில் வெளிப்படுத்தும் செயல்பாடுகளைக் கொண்டும் தான் உருவெடுக்கிறது. சமூக உறவுகளில் ஒழுக்கமில்லாத ஒருவன் தனிப்பட்ட வாழ்வில் எத்தகைய ஒழுக்கவானாக இருந்தாலும் அவன் ஒரு அயோக்கியனே. இல்லையென்றால் எந்த கெட்டபழக்கமும் இல்லாமல், கோவில் கொடைகளுக்கு வாரி வழங்கும் பல்வேறு ரவுடிகளையும் நாம் பிரச்சாரக்குகள் போன்று போற்ற வேண்டும். இந்திய இராணுவத்தின் இரகசியங்களை விற்று கைதான தீவிர ஆன்மீக சிவபக்தரான கூமர் நாராயணனையும் நாம் வணங்க வேண்டும்.

வாஜ்பாயி தலைமையில் பா.ஜ.கவின் பாரத மாதா விற்பனை!

பா.ரா தனது நூலின் பல இடங்களில் ஆர்.எஸ்.எஸ் தேசபக்தியை கேள்விக்கப்பாற்பட்ட இடத்தில் வைத்து போற்றுகிறார். வேறு பெரிய விளக்கங்களை இதற்கு நாம் தேட வேண்டிய அவசியம் எதையும் வைக்காமல் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் ஒருவர் போராட்டம் ஒன்றின் போது சந்தேகத்தின் பேரில் பிடித்துச் செல்லப் பட்ட போது நீதி மன்றத்தில் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலமே ஆர்.எஸ்.எஸ் கொண்டிருந்த ‘தேசபக்தியை’ தெளிவாக விளக்குகிறது.

“He had given a confessional statement in the court which helped in his release from the jail for his being just the onlooker of the assembly which went on to damage the government property. At that time he was a dedicated and active member of RSS. In his confession he wriggles out of active participation. ‘ I along with my brother followed the crowd, I did not cause any damage. I did not render any assistance in demolishing the government buildings’ ” (<http://www.milligazette.com/Archives/15-12-2000/Art6.htm>)

மேலே உள்ள ஒப்புதல் வாக்குமூலத்தைக் கொடுத்தது மட்டுமல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களைக் காட்டியும் கொடுத்த அந்த தேசபக்தி நிறைந்த ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்கின் பெயர் அடல் பிகாரி வாஜ்பாய். தேசவிடுதலைப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்த அந்த தேர்ந்த முன் அனுபவம் தான் பிற்காலத்தில் பன்னாட்டு முதலாளிகளுக்கு தேசத்தையே காட்டிக் கொடுக்க அவருக்குக் கை கொடுத்தது. ஆர்.எஸ்.எஸ் தனது சுதேசி ஜாக்ரன் மன்ச் எனும் ஒரு காமெடி பீஸு இயக்கத்தை கொண்டு மக்களிடம் சுதேசிப் பொருள்களின் பட்டியலை விநியோகித்துக் கொண்டிருந்த போது இவரோ சுதேசி நிறுவனங்களை விதேசிகளிடம் ‘தேசபக்தியோடு’ விலை பேசிக் கொண்டிருந்தார்.

ஒழுக்கமான, நேர்மையான, பிரம்மச்சாரியான இன்றைய ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் என்ன செய்கிறார்? அப்பட்டமாய் அம்பலமாகி ஊரே காறித்துப்பிய பொம்பளைப் பொறுக்கி மற்றும் கொலைகாரனான காஞ்சி சங்கராச்சாரியின் காலைக் கழுவிக் குடிக்கிறார். நித்தியானந்தா அம்பலமாகி நின்ற போது ஒரு அடையாளமாகக் கூட எந்த ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்கும் கண்டிக்க வில்லை. இன்னொரு ஒழுக்கமான பிரம்மச்சாரி பிரச்சாரக்கான வாஜ்பாயி, நம்மிடம் பாரதமாதா படத்தைக் கொடுத்து சூடம் சாம்பிராணி காட்டிக் கும்பிட்டுக் கன்னத்தில் போட்டுக் கொள்ளச் சொல்லி விட்டு – வெளியே பாரதமாதவைப் பன்னாட்டு முதலாளிகளிடம் கூட்டிக் கொடுத்துள்ளார். அதாவது பாரதமாதாவை ஏகாதிபத்தியங்கள் ‘கற்பழிப்பதற்கு’ ரேட்டு பேசினார்.

இந்தத் தேசத்தின் நதிகளெல்லாம் புனிதமென்று ஷாகாவில் பயின்று வந்த பிரச்சாரக்கான வாஜ்பாயி தான் கங்கையை விலை பேசினார். எங்கள் தேசத்தின் புழுதியே சந்தனம் தானென்று தினமும் ஷாகாவில் பஜனை பாடிய பயிற்சி பெற்று வந்த வாஜ்பாயி  சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் எனும் பெயரில் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்களை சுயாட்சிப் பிரதேசங்களாகப் பட்டா போட்டுக் கொடுத்துள்ளார்.

தேசபக்தியென்பது காவிக் கொடியேந்திய லட்சுமி படத்தை பாரத மாதாவென்று சொல்லி சூடம் சாம்பிராணி காட்டி கும்பிடுவது தானா? தேசம் என்பது வெறும் நிலப்பரப்பு மட்டுமா? இல்லை காவிக் கொடியேந்திய லட்சுமி படமா? இல்லை. ஒரு தேசம் என்பது அதனுள் ரத்தமும் சதையுமாக வாழும் மக்கள். அந்த மக்களின் நலனுக்காக உழைப்பதே உண்மையான தேசபக்தி. இந்தப் பரிவாரங்களெல்லாம் ஆரம்பிக்கப்பட்டு இத்தனை ஆண்டுகளில் எத்தனை மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் போராட்டங்களை, இயக்கங்களை எத்தனை முறை முன்னெடுத்திருக்கிறார்கள்? ஒன்றுமில்லை என்பதே இந்த தேசபக்தர்களது யோக்கியதை.

ஆர்.எஸ்.எஸ்இன் பிரம்மச்சாரி பிரச்சாரக்குகள் தியாகிகளாம்!

அயோத்தி ராமனை இந்த நாட்டின் மாபெரும் இலட்சிய புருஷன் என்று அவாள் கம்பெனிகள் போற்றுவதற்கு என்ன காரணம்? எல்லா  இராமயணங்களும், அதன் உபன்னியாசர்களும் அதற்கு இறுதியில் கூறும் காரணமென்னவென்றால் இராமன் ஒரு ஏகபத்தினி விரதன் என்பதாகும். ஒரு நாட்டில் ஒருவன் ஒரு பெண்டாட்டியை வைத்திருக்கிறான் என்பதற்காகவே அவனை போற்றுகிறார்கள் என்றால் அந்த நாட்டில் மற்றவர்களெல்லாம் பொம்பள பொறுக்கிகள் என்று அர்த்தம்.

அதே போல ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்குகள் திருமணம் செய்யவில்லை என்பது தியாகமென்றால் பதிவுலகில் திருமணம் ஆகாத அத்தனை பேரும் தியாகிகள்தான். இந்த தியாகத்தை பல நூற்றாண்டுகளாய் கத்தோலிக்க பாதிரியார்களும் செய்து வருகிறார்கள். என்ன, திருச்சபையில் கொஞ்சம் ஜனநாயகம் இருப்பதால் அந்த தியாகங்கள் சந்தி சிரித்த கதைகள் நிறைய வெளியே வந்துவிட்டன. ஆர்.எஸ்.எஸ் ஒரு பாசிச இயக்கமென்பதால் இந்த தியாகத்தின் உண்மை ரூபம் வெளியே கசிவதில்லை.

ஈழத்திலும், ஈராக்கிலும், ஆப்கானிலும், காஷ்மீரத்திலும் குடும்பம், கணவன், மனைவி, குழந்தைகளை இழந்து அனாதைகளாய் கோடிக்கணக்கான மக்கள் வாழும் உலகத்தில் ஒரு ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகன் காமத்தை திருட்டுத்தனமாய் அடக்கினான் என்பதுதான் தியாகமா? பா.ராவின் ஆய்வு இந்த விசயத்தில் ஆபாசமாகவும், அருவெறுப்பாயும் இருக்கிறது.

முடிவுரை:

உலக பாசிச இயக்கங்களின் வரிசையில் ஆர்.எஸ்.எஸ்!

முதல் உலகப் போர் முடிந்து, ரசியாவில் கம்யூனிச எழுச்சி ஏற்பட்ட பிறகு 1920களில் உலகமெங்கும் உள்ள முதலாளிகளில் தீவிர தேசியத்தின் முகமூடியில் இனவெறி பேசிய பாசிச பிரிவினர் தோன்றுகிறார்கள். இனிமேலும் ஜனநாயகத்தை மக்களுக்கு வழங்க முடியாது என்று மத,சாதி,இனவெறியின் பேரில் தோன்றிய ஹிட்லரின் நாசிக் கட்சி, முசோலினியின் பாசிசக் கட்சி, ஜப்பானின் தேசியவெறி மன்னராட்சி முதலான சமகால பாசிச இயக்கங்களின் வரிசையில்தான் அதே காலத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸும் தோன்றுகிறது. மற்ற இயக்கங்கள் பாசிசத்தின் மூலம் ஆட்சியைப் பிடித்து பின்னர் அழிந்து விட்டன என்றால் ஆர்.எஸ்.எஸ் ஆட்சியைப் பிடிப்பதற்கு பல ஆண்டுகள் ஆனது. இதற்கு காரணம் இந்த நச்சுப் பாம்புகளை, இவர்களது பார்ப்பனியத்தை எதிர்த்து இந்தியாவில் பெரும் போராட்டங்கள் நடந்தன என்பதுதான்.

இன்று தீவிர இந்துத்வம் பேசினால் கடை ஓடாது என்ற நிலையில் அரசியல் ரீதியில் அவர்கள் காலாவதியாகும் நேரத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு ஒரு ஒளிவட்டம் போட்டு வாசகனுக்கு அறிமுகப்படுத்துகிறார் பா.ரா. உலகமயமாக்கத்தின் தயவில் நுகர்வுக் கலச்சாரத்தில் முங்கி எழும் நடுத்தர வர்க்கம் தனது பண்பாட்டு ஏக்க புலம்பலுக்காக ஆன்மீகம், கர்நாடக சங்கீதம், பரதநாட்டியம் என்று சுயதிருப்தி அடையும் வரிசையில் ஆர்.எஸ்.எஸ்ஸும் வருகிறது. மேலும் பொதுப்புத்தியில் இந்துத்வம் வலுவாக படிந்திருக்கும் நிலையில் அதை விற்று காசாக்கும் நோக்கில்தான் கிழக்கு பதிப்பகத்தின் இந்த நூல் திட்டமிட்டு பொய்களோடும், புனைவுகளோடும் சந்தையில் இறக்கி விடப்பட்டிருக்கிறது.

பா.ராவை ஆதரிப்போரும், விமரிசிப்போரும் ஸ்வயம் சேவக்குகளே!

இதனால் அரவிந்த நீலகண்டன், ஜடாயு, டோண்டு ராகவன், ஜெயமோகன் போன்ற ஆர்.எஸ்.எஸ் அம்பிகள் இந்த நூலை வரவேற்பார்கள் என்பதல்ல. அவர்களைப் பொறுத்த வரை பா.ரா வை கொஞ்சம் செல்லமாக கடிந்து விட்டு அவர் இந்துத்வத்தின் தீவிர இலட்சியத்தை இந்த நூலில் முன்வைக்க வில்லை என்று விமரிசிப்பார்கள். இது அசோக் சிங்காலின் குரல் என்றால் அதே ஆர்.எஸ்.எஸ்ஸில் பிரமோத் மகாஜன், அருண் ஜேட்லி, அருண் ஷோரி, இந்தியா டுடே, வாஜ்பேயி, கிழக்குபதிப்பகம், தமிழ் பேப்பர் போன்ற முதலாளித்துவத்தை முதன்மைப்படுத்தும் இந்துத்வவாதிகளும் இருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இவர்கள்தான் இந்த நூலை வரவேற்பார்கள். அந்த வகையில் இந்த புத்தகம் தராளமய தாசர்களான இந்துத்வவாதிகளை நிச்சயம் கவரும் என்பதில் சந்தேகமில்லை.

எது வரலாறு?

வரலாறு என்பது எப்போதும் தெளிவான சித்திரத்தை பதிவு செய்து எதிர்காலத்திற்கு வழங்கிவிடும் ஒன்றல்ல. உண்மையில் வரலாறு என்பதே சமூகத்தின் நிகழ்ச்சிப் போக்கான இயக்கத்தை துப்பறிந்து கண்டுபிடிக்கும் ஒன்றாகும். இதில் எதை நீங்கள் கண்டு பிடிக்க போகிறீர்கள் என்பது உங்களது வர்க்க நலன் தீர்மானிக்கும். அந்த வகையில் எல்லா வரலாறுகளும் கூட அந்தந்த வர்க்க நலன்களின் விருப்பங்களோடும், தேவைகளோடும்தான் உருவாகிறது. அதனால் வரலாறு என்பது முழுக்க அகநிலை விருப்பங்களால் புனைந்துரைக்கப்படும் புனைவு என்று பொருளல்ல. அது பல்வேறு விசயங்களை பதிவு செய்திருக்கும் குறிப்பிட்ட காலகட்டத்தில் எதை பார்க்க விரும்புகிறீர்கள், எதை முன்னிலைப்படுத்த விரும்புகிறீர்கள், யாருக்காக ஆய்வு செய்கிறீர்கள் என்பதோடு தொடர்புடையது என்கிறோம்.

சாரமாக பெரும்பான்மை மக்கள் நலனிலிருந்து பார்த்தால் வரலாறு என்பது ஒடுக்கப்படும் வர்க்கங்கள் நீதிக்காக ஒடுக்கும் வர்க்கங்களை எதிர்த்து நடத்தும் போராட்டத்தை குறிக்கிறது என்று அறியலாம். அதன்படி பார்த்தால் ஆர்.எஸ்.எஸ் என்பது ஒடுக்கும் வர்க்கங்களின் தேவைக்கேற்ப உருவானது என்பதை சந்தேகத்திற்கிடமின்றி புரிந்து கொள்ளலாம். கூடவே நூலாசிரியர் பா.ராவின் பச்சையான அயோக்கியத்தனத்தையும் தெரிந்து கொள்ளலாம்.

ஆர்.எஸ்.எஸ் குறித்த இந்த நூலுக்கு பா.ரா படித்த புத்தகங்களில் அதிகம் இருப்பது ஆர்.எஸ்.எஸ்இன் வெளியீடுகள்தான். இராமேஸ்வரத்திலிருந்து தலைமன்னாருக்கு அந்தக் காலத்திலேயே இராமன் குரங்கு கூட்டத்தை வைத்து மண்ணால் பாலம் கட்டினான் என்று வரலாறு எழுதும் இந்த கும்பலிடமிருந்து எதை ஆய்வுக்கு எடுக்க முடியும்? ஒருவேளை எடுத்துக் கொண்டாலும் அவர்களது பிற்போக்கு பாத்திரத்தை நிறுவுவதற்குத்தான் பயன்படவேண்டும். ஆனால் பா.ரா அவர்களது புளுகுகள் பலவற்றை கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்கிறார். அந்த வகையில் பா.ராவையும் நாம் ஒரு இலட்சியப் பூர்வமான ஸ்வயம் சேவக் என்றுதான் கொள்ள வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ்இன் இரண்டாது தலைவர் கோல்வல்கர் எழுதிய ஞானகங்கை நூலில் அவர் ஹிட்லரையும், இஸ்ரேலையும் வியந்தோதி வழிப்பட்டிருப்பதெல்லாம் கூட பா.ராவின் காமாலைக் கண்ணுக்கு தென்படவில்லை. சிறுபான்மை மக்கள் மீது வன்மத்தையும், துவேசத்தையும் கக்கும் படிமங்களும், வசனங்களும் அந்த நூலில் ஏராளம். இருந்து என்ன பயன்?

கிழக்கு பதிப்பகம் ஒரு கார்ப்பரேட் நிறுவனமாக இருக்கலாம். பத்து ரூபாய்க்கு ஒரு புத்தகம் வாங்கினால் கூட அதற்கு கடன் அட்டை வசதி வழங்கும் வெகு நவீனமான நிறுவனமாக இருக்கலாம். ஆனால் பா.ராவின் இந்த நூல் ஒரு காயலான் கடையில் இருக்கும் ராஜேஷ்குமாரின் பழைய பாக்கெட் நாவலின் தரத்தில் கூட அதாவது உள்ளடக்கத்தில் இல்லை. முதலாளித்துவ பதிப்பகங்களிடம் இருக்கும் குறைந்த பட்ச தரமும், நம்பகத்தன்மையும் இந்த நூலில் நிச்சயம் இல்லை. இதையெல்லாம் யார் கேள்வி கேட்பார்கள் என்ற அலட்சியம் கூட இந்த டவுண்லோடு அறிவாளிகளிடம் இருக்கலாம்.

கல்கி பத்திரிகையில் சீனியர் சங்கராச்சாரியின் அருள் வாக்கோடு அறிவைப் பயின்ற இந்த பா.ராகவன் சந்தேகத்திற்கிடமின்றி ஒரு பார்ப்பனிய அறிஞர்தான். கூடவே அவர் சுஜாதாவின் ‘சிலிர்ப்பான’ நடையையும் கொஞ்சம் பயின்றிருக்கிறார். இது பதிவுலகின் மொக்கைகள் பலரும் ஆராதிக்கும் விசயமாகும். ஆனால் பா.ராவின் இந்த நடையைப் பார்த்தால் நமக்கு குமட்டிக் கொண்டு வருகிறது. எது ஆர்.எஸ்.எஸ்இன் கருத்து, எது பா.ராவின் கருத்து என்று பிரித்தறிய முடியாமல் பேருக்கு ரெண்டு விமரிசனங்களையும் கலந்துவிட்டு ஏதோ மர்ம நாவலைப் போல திடுக்கிடும் கோணங்களில் அவர் எழுதுவதைப் பார்த்தால் காறித் துப்பத் தோன்றுகிறது.

கிழக்கு பதிப்பகத்தை கேள்வி கேளுங்கள்!

கிளியோபாட்ரா தினமும் குளிக்கும் கழுதைப்பாலின் கதை, இந்திய சமஸ்தான ராஜாக்களின் தங்கக் கழிப்பறைகள், தென்னிந்திய தேவதை திரிஷாவின் வாழ்க்கை வரலாறு, கருப்பு எம்.ஜி.ஆர் விஜயகாந்தின் வெற்றிக் கதை போன்ற அதி முக்கியத்துவம் வாய்ந்த வரலாறுகளையெல்லாம் ஆயிரக்கணக்கான பக்கங்களில் அழகான தரத்தோடு கிழக்கு பதிப்பகம் நூலாக கொண்டு வந்தால் அதை நாம் ஆட்சேபிக்கப் போவதில்லை.

ஆனால் ஆர்.எஸ்.எஸ் என்பது இந்த நாட்டின் உழைக்கும் மக்களிடமும், சிறுபான்மை மக்களிடமும் இருந்து ரத்தத்தை உறிஞ்சி எடுத்து இந்த நாட்டை பல பத்தாண்டுகளில் ரத்த சகதியாக்கியருக்கும் ஒரு பாசிச அமைப்பு. அதன் வாழ்வும், இருப்பும், வரலாறும் இந்த நாட்டின் பிற்போக்குத்தனங்களுக்கு ஒரு அரண். அந்த அரணை இடித்து நொறுக்குவதில்தான் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் விடுதலை அடங்கியிருக்கிறது. எனவே இது நம்மைப் போன்றவர்களுக்கு சமூகக் கடமையாக இருக்கிறது. அத்தகைய கடமையேதும் இல்லாத, சந்தையில் விற்பனை இலாபம் என்ற பச்சையான சுயநலத்தை மட்டும் வைத்திருக்கும் கிழக்கு பதிப்பகம் போன்ற முதலாளிகளுக்கு ஆண்டாண்டு காலமாக இந்துத்துவ கூட்டத்தால் கொல்லப்பட்ட ஒரு முசுலீம் அல்லது ஒரு தலித்தின் அவலக்குரல் கேட்குமா என்ன?

சுரணையுள்ள வாசகர்கள் ஆர்.எஸ்.எஸ்  நூலை வாங்கியிருந்தால் அதை எடுத்துக் கொண்டு எல்டாம்ஸ் சாலையில் உள்ள கிழக்கு பதிப்பகத்தின் அலுவகத்திற்கு சென்று வீசி எறிந்து விட்டு காசை திருப்பி கேளுங்கள்! ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பில் நியாயத்தை கேளுங்கள்! கிழக்கு பதிப்பகத்தின் முதன்மை ஆசிரியரின் நூலே இந்த இலட்சணத்தில் இருக்கிறது என்றால் மற்ற கத்துக்குட்டிகளின் புரட்டுக்கள் எப்படி இருக்குமென்பதை அறிந்து கொள்ளுங்கள்!

வரலாறும், அறிவும் மேட்டுக்குடி கோமான்களது பொழுது போக்கல்ல. அவை நமது வாழ்க்கையில் இரத்தமும், சதையுமாய்  கலந்திருக்கும் சக்தி மூலங்கள். அதில் நாம் எந்த சமரசமும் செய்ய முடியாது. பா.ராகவனையும் மன்னிக்க முடியாது.

_______________________________________________________________

பின்குறிப்பு:

  1. எங்களுக்கு நேரம் அமைந்தால் இது குறித்து தனியான அரங்க கூட்டத்தை ஏற்பாடு செய்து இந்த கட்டுரையில் பேசாத விசயங்கள் அத்தனை குறித்தும் விளக்குகிறோம். முடிந்தால் தனியாக ஒரு நூலையும் கொண்டு வர முயல்கிறோம்.
  2. இந்த ‘நூல்’ ஆசிரியர் காஷ்மீர் குறித்தும் ஒரு வரலாறு எழுதியிருக்கிறார். கூடிய விரைவில் அது குறித்த விமரிசனம் வரும்.

__________________________________________________

விளக்கக் குறிப்புகள்:

ஆர்.எஸ்.எஸ்: ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கம். பொருள்: தேசத்தின் தன்னார்வத் தொண்டர்களது இயக்கம்

விநாயக தாமோதர சாவர்கர்: ஆரம்பத்தில் இந்து விழுமியங்களோடு ஆங்கிலேயர்களை எதிர்த்த தேசியவாதியாகவும், பின்னர் காலனிய ஆட்சியோடு சமரசம் செய்து கொண்டு தீவிர இந்துத்வவாதியாகவும் மாறிய மராட்டியத்தை சேர்ந்த சித்பவன பார்ப்பனர்.

கேசவ பலிராம் ஹெட்கேவார்: ஆர்.எஸ்.எஸ்ஐ 1925இல் ஆரம்பித்தவர். 1940இல் மரணம் அடைகிறார்.

மாதவ சதாசிவராவ் கோல்வல்கர்: ஹெட்கேவாருக்கு பிறகு ஆர்.எஸ்.எஸ்இன் இரண்டாவது தலைவரானவர்

மதுகர் தத்தாத்ரேய தேவரஸ்: கோல்வல்கருக்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ்இன் மூன்றாவது தலைவரானாவர்.

ஷாகா: ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் தினசரி உடற்பயிற்சிக்காக சந்திக்கும் கிளை

ஸ்வயம் சேவக்: ஆர்.எஸ்.எஸ் ஷாகக்களுக்கு வருகை தரும் உறுப்பினர்.

பிரச்சாரக்: ஆர்.எஸ்.எஸ்இன் முழுநேர ஊழியர்

அகில பாரத வித்யார்த்தி பரிஷத்: ஏ.பி.வி.பி எனப்படும் ஆர்.எஸ்.எஸ்இன் மாணவர் அமைப்பு.

வனவாசி கல்யாண் ஆஷ்ரம்: பழங்கடி மக்களை இந்துக்களாக மாற்றுவதற்கு ஆர்.எஸ்.எஸ் ஆரம்பித்த இயக்கம்.

ராஷ்ட்ரிய சேவிகா சமிதி: ஆர்.எஸ்.எஸ்இன் பெண்கள் அமைப்பு

விசுவ ஹிந்து பரிஷத்: உலக அளவில் இந்துக்களை அணிதிரட்டுவதற்காக ஆர்.எஸ்.எஸ் ஆரம்பித்த அமைப்பு

பி.எம்.எஸ்: பாரதிய மஸ்தூர் சங்கம் எனும் ஆர்.எஸ்.எஸ்இன் தொழிலாளர்(முதலாளிகளும்தான்) பிரிவு

அஜினோ மோட்டோ: நினைத்தாலே நாக்கில் நீர் சுரக்க வைக்கும் சீனத்து உப்பு. அப்படி பா.ராவின் மொழி நடையை நினைத்தால் மொக்கைகளுக்கு கிளர்ச்சி வருமாம்.

ராஜரிஷி: ஷத்திரிய மன்னர்களை இந்து வருண சாதி தர்ம அறத்தின் வழியில் நடத்திய பார்ப்பன சாணக்கிய குருக்கள்

___________________________________________________________

இந்த கட்டுரைக்கான ஆதாரங்கள்,நூல்கள் பல இருக்கின்றன. எனினும் இணையத்தில் உள்ள சுட்டிகளை மட்டும் இங்கு இணைக்கிறோம்.

http://www.countercurrents.org/gatade240507.htm

http://www.radianceweekly.com/38/67/Fascism-and-Muslim-Today/2006-10-22/Cover-Story/Story-Detail/Fascism-in-India.html

http://goanobserver.com/high-cost-of-freedom.html

http://www.countercurrents.org/dalit-george020906.htm – Fascism Versus Indigenous People

http://www.countercurrents.org/teltumbde100510.htm – Modi Vomits Caste Venom

http://www.countercurrents.org/dalit-sivaraman250903.htm – Amedkar vs Hindutva

http://www.countercurrents.org/desai160510B.htm – Background of Gujarat Riots

http://www.countercurrents.org/gatde130710.htm – Hindutva Terror

http://www.indianexpress.com/storyOld.php?storyId=34620 – GOA – A Liberation from Lies

http://www.storyofpakistan.com/articletext.asp?artid=A119 – Minto Morley Reforms

http://www.hinduonnet.com/fline/fl2207/stories/20050408001903700.htm – SAVARKAR’S MERCY PETITION

http://pd.cpim.org/2001/march25/march25_nalini.htmSavarkar Pledged Loyalty To British Government

http://www.indianexpress.com/res/web/pIe/columnists/full_column.php?content_id=2638 – Hindu Rashtravad

http://www.punjabspectrum.com/english/index.php?option=com_content&view=article&id=1840:golden-gloss-on-khaki-knickers-rss&catid=171:politics&Itemid=173 – GOLDEN GLOSS ON KHAKI NICKERS

http://www.rediff.com/news/2004/aug/23spec1.htm – Who was Veer Savarkar

http://www.revolutionarydemocracy.org/rdv7n1/videshi.htm – Videshi roots of RSS

மற்றும் புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகம் இதழ்கள், ம.க.இ.க வெளியீடுகள், எஸ்.வி.ராஜதுரையின் நூல்கள்….