Tuesday, June 16, 2026
முகப்பு பதிவு பக்கம் 803

அம்மா – ஆணவம் – ஆப்பு!

59

சமச்சீர் கல்வி - அம்மா – ஆணவம் – ஆப்பு!

சமச்சீர் கல்வி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, அம்மாவின் ஆணவத்தின் மீது இறங்கியிருக்கும் ஒரு ஆப்பு!

தீர்ப்பை ஒட்டி இன்று இரவு போயஸ் தோட்டத்தில் நிச்சயமாக விசேட பூஜை நடைபெறும். அவ்வமயம், அம்மாவின் திருக்கரங்களால் அடித்து நொறுக்கப்பட்டு அன்னாரது திருவடியிலேயே உயிரை விட இருக்கின்ற ஜடப்பொருட்கள் எவையெவை,  அம்மையாரின் பாதத்துகள் படிந்த காலணிகளால் முத்தமிடப்படும் பாக்கியம் பெற்ற முகங்கள் யாருடையவை என்பதை நாம் அறியோம். ஸ்பெசல் பூஜை உண்டு என்பது மட்டும் உறுதி.

ஒரு அரசாங்கம் ஏதோவொரு வழக்கில் தோற்பதென்பது ஒன்றும் பெரிய அதிசயமில்லை. இந்த வழக்கு பெற்றுவிட்ட முக்கியத்துவத்துக்கு காரணம் இருக்கிறது. ஒரு கோடிக்கும் மேற்பட்ட மாணவர்களின் வாழ்க்கையை தீர்மானிக்கின்ற வழக்கு என்ற காரணத்தினால் இந்த வழக்கு முக்கியத்துவம் பெற்றிருப்பின் அதில் நியாயம் இருக்கிறது.

மாறாக இந்த வழக்கு பெற்ற முக்கியத்துவத்துக்கு முதற்காரணம் அம்மாவின் ஆணவம். வெறும் ஆணவமல்ல. அம்மாவின் பின்னே அணிவகுத்து நிற்கும் பார்ப்பன மேட்டுக்குடி மெட்ரிக் கொள்ளைக்கூட்டத்தின் கொழுப்பில் தோய்ந்த ஆணவம்.

ஆட்சிக்கு வருவதற்கு முன் சமச்சீர் கல்வியைப் பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசாமல் இருந்த ஜெ, நாற்காலியில் உட்கார்ந்த மறுகணமே அமைச்சரவையில் ஒரு முடிவை எடுப்பதும், சட்டப்பேரவையில் ஒரு சட்டத்திருத்தம் கொண்டு வருவதும் எப்படி சாத்தியமானது?

“நம்மளவா ஆட்சி வந்துடுத்துன்னா அப்புறம் பாத்துக்கலாம்” என்று காத்திருந்த பார்ப்பன மேட்டுக்குடி மெட்ரிக் கொள்ளைக்கூட்டமும், அம்மாவின் மறுவருகைக்குக் காத்திருந்த அதிகார வர்க்கமும் காட்டிய சுறுசுறுப்புதான் ஜெயலலிதாவின் அதிரடி நடவடிக்கைகளுக்கு பின்புலம்.

எது நல்லது எது கெட்டது என்பது பற்றி வாய்திறந்து பேசி விவாதிக்கும் தேவையே இல்லாமல், பார்த்த மாத்திரத்தில் சுருதி சேர்ந்து கொள்ளும் அளவுக்கு அம்மாவுக்கும் அவாளுக்கும் அதிகாரவர்க்கத்துக்கும் ஒரு இசைவு இருக்கிறது.

சமச்சீர் கல்வி என்பது ஒரு குப்பைத்தொட்டி என்றும், இந்தக் குப்பைத் தொட்டியில் விழுந்து பன்றியோடு பன்றியாக நம்முடைய “கன்றுக்குட்டிகளும்” வீணாகப் போய்விடும் என்றும் அட்வகேட் என்.ஆர். சந்திரனும் சோ ராமஸ்வாமியும் டி.ஏ.வி ஸ்கூல் ஃபங்ஷனில் பேசிக்கொண்டிருந்தார்கள் என்று மிசஸ் ஒய்.ஜி.பி அம்முவிடம் (அம்மாவிடம்) சொல்லியிருப்பார். முதலமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து செல்ல வந்த மெட்ரிக் பள்ளி அசோசியேஷன் பிரமுகர்களும் லேசாக கண்ணீர் விட்டு மூக்கை சிந்தியிருப்பார்கள். “ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வுகளில் “தமிழர்களின்” பங்கு குறைந்து கொண்டே வருவது பற்றிய தங்களது கவலையை துவிவேதி, திரிவேதி, சதுர்வேதி முதலான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் அம்மாவின் காதில் போட்டிருப்பார்கள். அப்புறம் பாடப்புத்தகங்களின் பின் அட்டையில் கருணாநிதியின் கையெழுத்தில் திருக்குறள் அச்சிடப்பட்டிருப்பதை அக்காவின் கவனத்துக்கு கொண்டுவந்திருப்பார் அன்புச் சகோதரி. அம்மா முடிவெடுப்பதற்கு இதற்கு மேல் என்ன ஆதாரங்கள் வேண்டும்?

தனக்குப் புரிந்த மேற்கூறிய காரணங்களை நீதிபதிகளும் புரிந்துகொள்வார்கள் என்று அம்மா எதிர்பார்த்திருக்கிறார். அது நடக்கவில்லை. நீதிபதிகளை நமது எம்ஜிஆரில் கட்டம் கட்டி நீக்குவதற்கான வாய்ப்பும் இல்லை. இத்தகைய இக்கட்டான சூழலில், இருக்கின்ற வாய்ப்புகளைப் பயன்படுத்தி சுமார் இரண்டரை மாதகாலம் நீதிமன்றத்திற்கும் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் ஒரே தொட்டியில் அம்மா தண்ணி காட்டியிருக்கிறார்.

இனி நடக்கப்போவது என்ன? “உச்ச நீதிமன்றத் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை அமல்படுத்துவோம்” என்று நேற்று சட்டமன்றத்தில் அம்மா அறிவித்த போது அவையில் மயான அமைதி. இரண்டரை மாதங்களுக்குப் பிறகாவது பாடப்புத்தகம் என்ற ஒன்றை பிள்ளைகளின் கண்ணில் அரசு காட்டவிருப்பதால், அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையிலாவது யாராவது ஒரு உறுப்பினர் மேசையைத் தட்டியிருக்கலாம். வலது,இடது போலிகள் உள்ளிட்ட யாரும் தவறிக்கூட மேசையைத் தட்டவில்லை.

காரணம் அம்மா தோற்றிருக்கிறார். அம்மா குமுறிக் கொண்டிருக்கிறார். கடந்த மே மாதம் தனிப்பெரும்பான்மையுடன் ஜெயித்தாரே அதே அம்மாதான், இப்போது தோற்றிருக்கிறார். தோற்கடித்தவர்களும் அதே மக்கள்தான்.

எனினும் இரண்டாவது சுற்று விரைவிலேயே துவங்கும். அம்மாதான் துவக்குவார். நாம்தான் முடித்து வைக்க வேண்டும்.

இம்சை அரசி செல்வி 24-ஆம் புலிகேசி !

ஜெயலலிதா  :  இம்சை அரசி செல்வி 24-ஆம் புலிகேசி  !

“ஜெயாவின் ஆட்சி என்றாலே நிர்வாகத் திறமைமிக்க ஆட்சி; சட்டம்ஒழுங்கைக் கண்டிப்புடன் பேணக்கூடிய ஆட்சி. தி.மு.க.வின் ஆட்சியோ இதற்கு நேர்மாறானதுசு என்றொரு கருத்தைப் பார்ப்பன ஊடகங்கள் திட்டமிட்டே நீண்டகாலமாகப் பரப்பி வருகின்றன.

அ.தி.மு.க., சட்டசபைத் தேர்தல்களில் அறுதிப் பெரும்பான்மை பெற்று அமைச்சரவையை அமைத்தவுடன், ஜெயாவின் சாணக்கியனான சோ ராமஸ்வாமி, “தடம் புரண்டுவிட்ட நிர்வாகத்தை மீண்டும் நிமர்த்துவது லேசான காரியம் அல்ல. அதைச் செய்து காட்டுகிற திறமை இவரிடம் உண்டு என்ற மக்களின் எதிர்பார்ப்பை உணர்ந்த முதல்வர், அதை நிறைவேற்றி வைக்க முழுமையாக முனைந்திருக்கிறார்சு என “பில்ட்அப்சு கொடுத்து எழுதினார்.

முன்னாள் அரசுத் தலைவர் அப்துல் கலாமின் ஆலோசகர் பொன்ராஜை அழைத்துவந்து, “புரட்ச்ச்சி தலைவிசு நடத்திய அமைச்சரவை ஆலோசனைக் கூட்டத்தில், விவசாயத்தை மேம்படுத்துவது, மின் தட்டுப்பாட்டை மூன்று மாதங்களில் சரி செய்வது, மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைப்பது என்றெல்லாம் தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள ஜூனியர் விகடன், “ஆட்சி நிர்வாகத்தில் முக்கியமான மாற்றத்தைக் கொண்டுவரும் அறிகுறி இதுசு என அக்கூட்டத்தைப் புகழ்ந்து தள்ளியது.

பாடச் சுமையைக் குறைக்க வேண்டும் எனக் கல்வியாளர்கள் கூறிவருவதை, மாணவர்களிடமிருந்து புத்தகங்களைப் பறித்துவிட வேண்டும் என ஜெயா புரிந்து கொண்டிருக்கிறார் போலும். தமிழகத்தில் பள்ளிக்கூட மாணவர்கள் கடந்த இரண்டு மாதங்களாக புத்தகங்களே இல்லாமல் பள்ளிக்கூடத்திற்குப் போய் பொழுதைக் கழித்துவிட்டுவருவதே, ஒரு அசாதாரணமான நிர்வாகியிடம் தமிழகம் மாட்டிக் கொண்டிருப்பதைப் புரிய வைத்துவிடுகிறது. பள்ளிக்கூடத்திற்குப் போக மாட்டேன் என அடம் பிடிக்கும் மாணவர்களைப் பார்த்திருக்கும் தமிழகம், பள்ளிக்கூட மாணவர்கள் புத்தகம் கொடுக்கக் கோரி சாலையில் மறியல் போராட்டம் நடத்துவதை இன்று பார்க்கிறது. ஒரு சட்டத்திருத்தத்தின் மூலம் மாணவர்கள் மத்தியில் இந்த ‘மாற்றத்தை’க் கொண்டு வந்திருக்கும் செல்வி ஜெயாவின் நிர்வாகத் திறமையை, அவரது துதிபாடிகள் கின்னஸ் சாதனைக்குப் பரிந்துரைக்கலாம்.

மாணவர்கள் வீதியில் இறங்கிப் புத்தகம் கேட்டுப் போராடும்பொழுது, ஜெயாவோ 200 கோடி ரூபாய் செலவில் அச்சடிக்கப்பட்டுத் தயார் நிலையில் உள்ள சமச்சீர் கல்வி நூல்களைக் கரையான் தின்ன விடுகிறார். இப்புதிய பாடநூல்களுக்குப் பதிலாக, காலாவதியாகிப் போன பழைய பாடத் திட்டத்தின் கீழ் அச்சடிக்கப்பட்ட பாடநூல்களைக் கொடுத்துத் தமிழக மாணவர்களின் கல்வித் தகுதியை உயர்த்தப் போகிறாராம், இத்திறமைசாலி.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை எதிர்த்துத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருப்பதால், அத்தீர்ப்பை அரசிதழில் வெளியிட முடியாது என்ற நிலையிலும், அதனை அரசிதழில் வெளியிட வேண்டும் என அறிக்கைவிடுத்துத் தனது அதிபுத்திசாலித்தனத்தை வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார், ஜெயா.

தமிழகத்தின் விவசாயத்தை மேம்படுத்த ஜெயாவிடம் சொந்த சரக்கு எதுவும் கிடையாது; குஜராத் பாணியை காப்பியடிப்பது என்பதுதான் அவரது திட்டம். இந்த குஜராத் பாணி மேம்பாடு என்பது சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளை நிலங்களிலிருந்து சிறுகச்சிறுக அப்புறப்படுத்திவிட்டு அல்லது அவர்களை ஐ.டி.சி., ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களின் குத்தகை விவசாயிகளாக மாற்றிவிட்டு விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்குவதுதான். விவசாயத்திலும் தனியார்மயம்  தாரளமயத்தைப் புகுத்த வேண்டும் என்ற உலக வங்கியின் கட்டளையை நடைமுறைப்படுத்துவதுதான். எனவே, அமைச்சரவை ஆலோசனை கூட்டத்தில் விவசாய மேம்பாடு குறித்து ஜெயா கும்பல் நடத்திய ஆலோசனைகளை, தமிழக விவசாயிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட சதி என்றுதான் கூற முடியும்.

இம்சை அரசி செல்வி 24-ஆம் புலிகேசி
மின் பற்றாக்குறையைச் சமாளிக்க மின்வெட்டை அமல்படுத்துவது என்ற புளித்துப்போன சூத்திரத்தைதான் இந்தத் திறமைசாலியும் பின்பற்றி வருகிறார். கடந்த இரண்டு மாதங்களாகத் தமிழகமெங்கும் அறிவிக்கப்பட்ட மின்வெட்டோடு, திடீர் திடீரென மின்சாரத்தை நிறுத்திவிடும் அறிவிக்கப்படாத மின்வெட்டும் நடைமுறையில் இருந்து வருகிறது. கடந்த தி.மு.க. ஆட்சியில் குறிப்பிட்ட நேரம் மின் தடை அமல்படுத்தப்பட்டு வந்த நடைமுறை போய், ஜெயாவின் ஆட்சியில் மின்சாரம் எப்பொழுது வரும், எப்பொழுது போகும் என்ற நிச்சயமற்ற நிலை உருவாகிவிட்டதாகப் பொதுமக்களும், சிறுவீத உற்பத்தியாளர்களும் புலம்பும் அளவிற்கு மின்வெட்டு தீவிரமாகியிருக்கிறது.

மூன்று மாதங்களில் மின் பற்றாக்குறையைச் சமாளித்துவிடுவேன் என ஜெயா அடித்த சவடால் புஸ்வானமாகிப் போய்விட்டதால், புதிய திட்டங்களின் மூலம் அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்குள் நிலைமை சீராகி விடும் என இப்பொழுது பீற்றி வருகிறார். இந்தப் புதிய திட்டங்கள் தனது ஆட்சியின் பொழுது தீட்டப்பட்டு, அவற்றின் கட்டுமானப் பணிகள் அப்பொழுதே தொடங்கப்பட்டதாக உரிமை பாராட்டுகிறார், கருணாநிதி.

தமிழகத்தின் மின் பற்றாக்குறைக்கு யார் காரணம்? யார் அதனைத் தீர்க்கப் போகிறார்கள்? என்பது குறித்து அய்யாவும், அம்மாவும் எதிரும் புதிருமாக நின்று அடித்துக் கொள்ளும் அதே சமயம், இவ்வளவு மின் பற்றாக்குறை நிலவும் சமயத்திலும் தமிழகத்தில் செயல்பட்டு வரும் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தடையில்லாத மின்சாரம் வழங்குவதில் மட்டும் முன்னாள் தி.மு.க. ஆட்சிக்கும், இந்நாள் அ.தி.மு.க. ஆட்சிக்கும் இடையே எந்தவிதமான வேறுபாடும் இல்லை.

“கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தால் தனியார் மருத்துவமனைகளும் தனியார் காப்பீடு நிறுவனமும்தான் பயன் பெறுகின்றன. காப்பீடு திட்டத்தைச் செயல்படுத்த தனியார் நிறுவனங்களுக்குத் தருகின்ற நிதியில் அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தலாம்சு என கவர்னர் உரையிலேயே அறிவித்தார் ‘புரட்ச்சித் தலைவி’. தான் அறிவித்ததைத் தானே ஓரம் கட்டிவிட்டு, பழைய கள்ளு புதிய மொந்தை என்ற கணக்காய், புதிய காப்பீடு திட்டத்தை அறிவித்திருக்கிறது, ஜெயா அரசு. தி.மு.க. அரசு தனியார் காப்பீடு நிறுவனத்திற்குக் கொட்டிக் கொடுத்ததைவிட நான்கு மடங்கு அதிகமாகக் கொட்டிக் கொடுக்கப் போகிறது, இப்புதிய காப்பீடு திட்டம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகச் செயல்படுத்தப்பட்டு வந்த கலைஞர் காப்பீடு திட்டத்தின் மூலம் ஸ்டார் ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ் என்ற தனியார் காப்பீடு நிறுவனம் 400 கோடி ரூபாய் இலாபம் அடைந்ததாகவும், அதிலொரு பங்கு கருணாநிதி குடும்பத்திற்குப் போய்ச் சேர்ந்ததாகவும் குற்றஞ்சாட்டி வந்தார், ஜெயா. இன்னும் ஓரிரு மாதங்கள் போனால், புதிய காப்பீடு திட்டத்தின் மூலம் எந்த கார்ப்பரேட் நிறுவனம் இலாபத்தைச் சுருட்டப் போகிறது, அதிலொரு பங்கு அ.தி.மு.க.வைக் கட்டுப்படுத்தும் எந்தக் குடும்பத்திற்குப் போய்ச் சேரப் போகிறது என்பதும் தெரிந்துவிடும்.

ஜெயா அறிவித்திருக்கும் மற்ற இலவசத் திட்டங்களும்கூடக் குளறுபடிகளும், சர்ச்சைகளும் நிறைந்ததாகதான் தீட்டப்பட்டுள்ளன.“மாதமொன்றுக்கு 1 இலட்சம் கிரைண்டர்கள்தான் தயாரித்து வழங்க முடியும்சுஎன கோவையைச் சேர்ந்த கிரைண்டர் உற்பத்தியாளர்கள் அரசுக்குத் தெளிவுபடுத்தியிருந்த பிறகும், இந்த டெண்டரைக் கோரும் நிறுவனங்கள் ஆண்டொன்றுக்கு 25 இலட்சம் கிரைண்டர்கள் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையை விதித்திருக்கிறது, ஜெயா அரசு. சீன நாட்டு கிரைண்டர்களை இறக்குமதி செய்து விற்கும் வட இந்திய வியாபாரிகளிடம் டெண்டரை ஒப்படைக்கும் நோக்கம் இந்த நிபந்தனையின் பின் மறைந்திருக்கலாம் என்ற சந்தேகத்தைத் தமிழகத்தைச் சேர்ந்த உற்பத்தியாளர்கள் தற்பொழுது எழுப்பியுள்ளனர்.

இலவச கலர் டி.வி. வழங்கும் திட்டத்தைச் செயற்படுத்திய தி.மு.க. அரசு, அதற்காக டெண்டர்களைக் கோரியபொழுது, வெளிப்படைத் தன்மையோடு நடந்து கொண்டதாகவும், அ.தி.மு.க. அரசு இலவச மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் வழங்கும் திட்டங்களுக்காக டெண்டர் கோரும் விஷயத்தில் முந்தைய ஆட்சியைப் போல வெளிப்படைத் தன்மையோடு நடக்கவில்லை என்றும் அ.தி.மு.க.வின் தோழமைக் கட்சிகள்கூட குற்றஞ்சுமத்தி வருகின்றன. இதன் பொருள் இந்த இலவசத் திட்டங்களில் கமிசன் என்ற பெயரில் கொள்ளையடிப்பதற்கான வாய்ப்புகளை அ.தி.மு.க. திறந்துவிட்டுள்ளது என்பதுதான்.

கிராமப்புற ஏழை மக்களுக்கு இலவச ஆடு, மாடு வழங்கும் திட்டத்தைத் தனது தேர்தல் அறிக்கையில் ஜெயா அறிவித்தபொழுதே, மலிவான விலையில் மாட்டுத் தீவனம் கிடைப்பதை உத்திரவாதப்படுத்தாமல் மாடு வழங்குவது, கிராமப்புற ஏழை மக்களை மேலும் கடனில் மாட்டிவிடுவதில் முடிந்துவிடும் எனப் பலரும் சுட்டிக்காட்டினர். “அதனாலென்ன, மாடு வழங்கும் திட்டத்தோடு, மாட்டுத்தீவன உற்பத்தியைப் பெருக்கும் திட்டத்தையும் சேர்த்து அறிவித்தால் தீர்ந்தது பிரச்சினைசு எனக் கோமாளித்தனமாக முடிவெடுத்து இத்திட்டத்தை ஜெயா அரசு அறிவித்திருக்கிறது.

தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்திற்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளைப் பார்த்தால், அத்திட்டம் ஏழைக் குடும்பங்களை மனதில் வைத்துக் கொண்டு உருவாக்கப்பட்ட திட்டமாகத் தெரியவில்லை. வெறும் விளம்பரத்திற்காகவோ அல்லது ஏழைகளின் பெயரைச் சொல்லி அ.தி.மு.க. கும்பலும் அதிகார வர்க்கமும் சேர்ந்து சுருட்டிக் கொள்வதற்காகவோ உருவாக்கப்பட்ட திட்டம் போல தெரிகிறது.

பட்ஜெட்டைத் தாக்கல் செய்வதற்கு முன்னதாகவே 4,000 கோடி ரூபாய் அளவிற்கு கூடுதல் வரிகள் விதிக்கப்பட்டதோடு, 1,400 கோடி ரூபாய் அளவிற்கு டாஸ்மாக் சரக்குகளின் கட்டணங்களும் உயர்த்தப்பட்டன. இக்கூடுதல் வரிகள் விதிக்கப்பட்ட ஒரு சில நாட்களிலேயே, ஜவுளி பொருட்களின் மீது விதிக்கப்பட்ட வரியை ரத்து செய்வதாக அறிவிக்கிறார், ஜெயா. “நினைத்தால் வரி விதிப்பதும், நினைப்பை மாற்றிக் கொண்டால் வரியை நீக்குவதும் ஜெயாவின் பொழுதுபோக்குசு என இதனை நக்கலடித்தார், கருணாநிதி.

ஒரு பக்கம் இலவசம், இன்னொருபுறம் வரிக் கொள்ளை; நினைத்தால் வரி விதிப்பது, நினைப்பை மாற்றிக் கொண்டால் வரியை நீக்குவது; வரி விதிப்பு தமிழக அரசு செய்தது; ஆனால், வரி உயர்வை ரத்து செய்தது ஜெயலலிதா என்ற இந்த நடவடிக்கைகள் எல்லாம் நமக்கு துக்ளக் தர்பாரை, இம்சை அரசன் 23ஆம் புலிகேசியைப் போல கோமாளித்தனமான, வக்கிரமான ராஜாவாக ஜெயா ஆட்சி நடத்தி வருவதைதான் எடுத்துக் காட்டுகின்றன.

“தான் பதவியேற்றவுடனேயே சங்கிலி பறிக்கும் திருடர்கள் ஆந்திராவுக்கு ஓடிவிட்டதாகசு தனக்கேயுரிய மமதையோடு புளுகித் தள்ளினார் ஜெயா. அவர் இப்படிச் சொல்லி வாயை மூடும்முன்பே ஆளுங்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா வீட்டிற்குள் திருடன் புகுந்து தனது கைவரிசையைக் காட்டிச் சென்றான். கடந்த இரண்டு மாதங்களாகத் தமிழகமெங்கும் நடந்துவரும் கொலை, கொள்ளை, சங்கிலி பறிப்பு சம்பவங்கள் ஜெயாவின் நிர்வாகத் திறமையைச் சந்தி சிரிக்க வைத்துவிட்டன. குறிப்பாக, சென்னையில் நடந்த வழக்குரைஞர் சங்கர சுப்புவின் மகன் சதீஷ்குமாரின் கொலை, ஜெயாவின் போலீசு தமிழகத்தின் சட்டம்  ஒழுங்குக்குச் சவால்விட்டிருப்பதைத் தெளிவுபடுத்தியது.

ஆட்சி மாற்றம் நிகழ்ந்தவுடனேயே பெரும்பாலான டாஸ்மாக் பார்களின் ஏலக் குத்தகை அ.தி.மு.க. பிரமுகர்களுக்கு மாறிவிட்டதாகவும், பார்களுக்கான ஏலமே குறிப்பிட்ட சில அ.தி.மு.க. பிரமுகர்கள் மட்டுமே கலந்துகொள்ளும்விதத்தில்தான் நடத்தப்பட்டதாகவும், பார்களுக்கான ஏலத்தொகை அடிமாட்டு விலைக்கு நிர்ணயிக்கப்பட்டு அ.தி.மு.க. பிரமுகர்களுக்குத் தாரை வார்க்கப்பட்டதாகவும் ஜூனியர் விகடன் இதழ் அம்பலப்படுத்தி எழுதியிருக்கிறது.

இம்சை அரசி செல்வி 24-ஆம் புலிகேசி

மணல் கொள்ளையைப் பொருத்தவரை, “ஆட்சி மாறியது; காட்சி மாறவில்லைசு என்றும் குறிப்பிடுகிறது, ஜெயாவின் விசுவாசியான ஜூ.வி. “கடந்த ஆட்சியில் கோவையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆறுமுகசாமியும், தென்மாவட்டத்து காங்கிரசு பிரமுகரான படிக்காசுவும்தான் மணல் விற்பனையில் பெரும் இலாபமடைந்தார்கள். இந்த ஆட்சியிலும் மணல் விற்பனை அவர்களின் கைகளுக்குதான் போயிருக்கிறது. கடந்த ஆட்சியில் இவர்கள் அழகிரியின் நிழல் நபராக இருந்தவருக்கு மாதமொன்றுக்கு 50 இலட்சம் கப்பம் கட்டினார்கள். இப்போது கப்பம் திசை திரும்பி மன்னார்குடிக்குச் செல்கிறது. அவ்வளவுதான் வித்தியாசம்சு என ஜூ.வி. குறிப்பிடுகிறது. (ஜூ.வி. 31.7.2011, பக்.34)

கல் குவாரி அதிபர்களைக் கோட்டைக்கு வரவழைத்து கப்பம் கட்டுவது தொடர்பாக நடத்தப்பட்ட பேரம் அம்பலமானதால்தான், தொழில்துறை அமைச்சராக இருந்த சண்முகவேலு ஊரகத் துறைக்கு மாற்றப்பட்டார். இது தவறுக்குக் கிடைத்த தண்டனையல்ல. மாறாக, கப்பத்தை யாரிடம் செலுத்த வேண்டும் என்பது முடிவாகும் முன்பே, சண்முகவேலு பேரத்தைத் தொடங்கி நடத்தியதுதான் பிசகாகிவிட்டது.

சிறுதாவூரில் தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கப்பட்ட நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டு தனது சொகுசு பங்களாவைக் கட்டியுள்ள ஜெயா; கொடநாட்டில் மக்களின் புழக்கத்திற்குப் பயன்பட்டுவந்த பொது வழித்தடத்தை ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டு, உச்ச நீதிமன்றம் அந்தப் பொதுப்பாதையைத் திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்ட பிறகும், அதனை விட்டுத் தர மறுக்கும் ஜெயா, நில அபகரிப்புக்கு எதிராகத் தனி போலீசு பிரிவை உருவாக்கியிருப்பது குரூரமான நகைச்சுவை. இப்போலீசார் 2006 தொடங்கி 2011 முடிய நடந்துள்ள நில ஆக்கிரமிப்புகளை விசாரிப்பார்கள் என வரையறுக்கப்பட்டிருப்பதே, இது தி.மு.க.வை அரசியல்ரீதியாக முடக்குவதற்கான முயற்சி என்பதை அம்பலப்படுத்திவிட்டது.

எனினும், கிணறு தோண்ட பூதம் கிளம்பிய கதையாக, வணிக வரித்துறை அமைச்சர் அக்ரி. கிருஷ்ணமூர்த்தி, சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா, சட்டத்துறை அமைச்சராக்கப்பட்டுப் பின் பதவி பறிக்கப்பட்ட அம்பாசமுத்திரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா உள்ளிட்டு பல அ.தி.மு.க. பிரமுகர்கள் மீதும் நில அபகரிப்பு புகார்கள் போலீசிடம் அளிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அக்ரி.கிருஷ்ணமூர்த்தி மீது புகார் கொடுத்த அ.தி.மு.க.வின்  திருவண்ணாமலை  மாவட்டப் பிரதிநிதியான மூர்த்தியை மிரட்டி, அப்புகாரைத் திரும்பப் பெறச் செய்துவிட்டது அ.தி.மு.க. தலைமை. அக்ரி. கிருஷ்ணமூர்த்தி மீது முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி கொடுத்த புகாரை கடந்த ஆட்சியின்பொழுதே போலீசு வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டதால், அவர் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்; அமைச்சர் மீது புகார் கொடுக்க முயன்றுவரும் திருவண்ணாமலையைச் சேர்ந்த அரவிந்த்  தனலெட்சுமி தம்பதியினர் போலீசாரால் அங்குமிங்குமாக அலைக்கழிக்கப்படுகின்றனர். இசக்கி சுப்பையா மீது ஏற்கெனவே நில அபகரிப்பு தொடர்பாக மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அமைச்சர் பதவி மட்டும் அவரிடமிருந்து பறிக்கப்பட்டது.

ஊழலற்ற, யாருடைய தலையீடும் இல்லாத, நேர்மையான ஆட்சியை ஜெயா வழங்குவார் எனப் பார்ப்பன ஊடகங்கள் உருவாக்கிய பிம்பம், ஜெயா ஆட்சியைப் பிடித்த மறுநொடியே உடைந்து நொறுங்கிவிட்டது என்பதைத்தான் இவையெல்லாம் எடுத்துக் காட்டுகின்றன. தி.மு.க. என்ற கொள்ளைக் கும்பலுக்குப் பதில் அ.தி.மு.க.என்ற கொள்ளைக் கும்பல், மு.க.விற்குப் பதில் ஜெயா, கருணாநிதியின் குடும்ப ஆதிக்கத்திற்குப் பதில் சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் என்ற மாற்றத்தைத் தவிர, வேறு எதையும் இந்த ஆட்சி மாற்றம் சாதித்துவிடவில்லை என்பதே உண்மை.

இலவசங்கள் மூலம் மக்களைச் சாதுர்யமாக மயக்கி, கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சேவை செய்யும் ஆட்சியைதான் மு.க. நடத்திவந்தார். அய்யா போன அதே பாதையில்தான் அம்மாவும் தனது ஆட்சித் தேரை உருட்டிச் செல்கிறார். இது மட்டுமா, ஈழத் தமிழர் விவகாரம், தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் தாக்கப்படும் பிரச்சினைகளில் மைய அரசுக்குக் கடிதம் எழுதுவது என்ற மு.க.வின் தந்திரத்தைதான் ஜெயாவும் பின்பற்றி வருகிறார். தமிழ், தமிழினம், நாத்திகம் என முற்போக்கு வேடம் போடுவார் மு.க. பார்ப்பன பாசிஸ்டான ஜெயாவிடம் இந்த வேடத்தைக்கூட எதிர்பார்க்க முடியாது என்பதைத் தவிர, அய்யாவின் ஆட்சிக்கும், அம்மாவின் ஆட்சிக்கும் இடையே அடிப்படையில் எந்த வேறுபாடும் கிடையாது.

எனினும், சில விஷயங்களில் அய்யாவைவிட, அம்மா ‘திறமையானவர்’ என்பதை நாம் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து குவித்த வழக்கு, பிறந்த நாள் பரிசு வழக்கு ஆகிய கிரிமனல் வழக்குகளில் முதல் குற்றவாளியான ஜெயா, சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்திக் கொண்டு, கிரிமினல்தனமான முறையில் இந்த வழக்குகளின் விசாரணையை 14 ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்தடித்து வருகிறார். தேர்தல் ஆணையத்திற்குத் தவறான தகவல்களைக் கொடுத்ததற்காக ஜெயா மீது தொடரப்பட்ட வழக்கு, 37ஆவது முறையாகத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், தனது கிரிமினல் குற்றங்களுக்காக நீதிமன்றம் தன்னை நெருங்கிவிடாதபடி, தனக்குள்ள சாதி மற்றும் அரசியல் செல்வாக்கு, தொடர்புகளைப் பயன்படுத்திக்கொண்டு திறமையாகத் தன்னைத் தற்காத்துக் கொண்டு வருகிறார், பார்ப்பன  பாசிச ஜெயா.

இப்படிபட்ட கிரிமினல் பேர்வழியை, அவர் மாறிவிட்டாரென்றும், பக்குவப்பட்டுவிட்டாரென்றும், திறமையான நிர்வாகியென்றும் ஒளிவட்டம் கட்டி, ஊடகங்கள் மக்கள் முன் நிறுத்துவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் தவிர வேறென்ன?

____________________________________________________________________

– புதிய ஜனநாயகம், ஆகஸ்டு – 2011

_____________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

பாரதமாதவின் தலைசிறந்த சுயம்சேவக் எடியூரப்பா!

27
பாரதமாதவின் தலைசிறந்த சுயம்சேவக் எடியூரப்பா!
எப்பூடி........

ஆர்.எஸ்.எஸ் – பெயர் சொன்னால் போதும்; தரம் எளிதில் விளங்கும். உங்களுக்கு அதன் தரமோ தராதரமோ போதுமான அளவுக்கு விளங்கவில்லையா? கவலையை விடுங்கள், சுயம்சேவகர்களைப் பார்த்துப் புரிந்து கொள்ளுங்கள். ஆர்.எஸ்.எஸின் கடமை, கட்டுப்பாடு, ஒழுக்கம், நேர்மை மற்றும் இன்னபிற யோக்கியதைகளை மக்களுக்குத் துலக்கமாக விளக்கும் வாழும் உதாரணம் தான் சுயம்சேவகர்கள். அதில் முதன்மையானவர் தான் சுயம்சேவக் எடியூரப்பா.

பல்வேறு சிறப்பான குணாம்சங்களைக் கொண்டவரும், ஆர்.எஸ்.எஸ் காக்கி டவுசர்கள் சொல்லும் சுய சேவையில் கரைகண்டவருமான எடியூரப்பாவுக்கு பல சிறப்புகள் இருக்கின்றன. அதில் சமீபத்திய சிறப்பு அவர் வழங்கிய ராஜினாமாக் கடிதம். உலகிலேயே நல்ல நேரம் பார்த்து ராஜினாமாக் கடிதம் கொடுத்த ஒர்ர்ரே முதலமைச்சர் அனேகமாக இவராகத் தான் இருக்க முடியும். நல்ல விஷயங்கள் நல்ல நேரத்தில் தான் நடக்க வேண்டும் என்று நினைத்துத் தான் இப்படிச் செய்தாரா தெரியவில்லை.  ஆனால், இந்த சாதனையை இனிமேல் ஜெயலலிதாவால் கூட மிஞ்ச முடியாது என்பது மட்டும் திண்ணம்.

மேலும் விஷயத்துக்குள் போகும் முன் விவரங்களுக்குள்ளும் கொஞ்சம் உலாத்தி விட்டு வரலாம் நண்பர்களே!

அதாகப்பட்டது, ‘கம்யூனிஸ்ட்டு’ செஞ்சீனம் மேன்மேலும் உயர்வதைத் தடுத்து பரதவர்ஷத்தின் புகழ்க் கொடி பாரில் பட்டொளி வீசிப்பறக்க ஆர்.எஸ்.எஸ் காக்கி டவுசர்கள் தீவிரமாக சிந்தித்து ஒரு திட்டத்தைத் தயாரித்தார்கள். அதன்படி, கருநாடக மாநிலம் பெல்லாரியில் கிடைக்கும் இரும்புத் தாதுவை சல்லிசான விலைக்கு சீனத்துக்கு அனுப்பி, அதன் மூலம் உண்டாகும் இரும்புக் குவியலாலேயே சீன தேசத்தை அழுத்திக் கீழே தள்ளி விட வேண்டும்  என்பது தான் அந்தத் திட்டம். இதற்காகவே ரெட்டி சகோதரர்கள் என்கிற மூன்று முத்தான சுயம்சேவகர்களிடம் பெல்லாரி மாவட்டத்தையே தூக்கிக் கொடுத்துள்ளார்கள்.

ரெட்டிகளின் நேரடிக் கம்பெனிகளும் பினாமிக் கம்பெனிகளுமாகச் சேர்ந்து  இரும்புத் தாதுக்களால் அழுத்தப்பட்டுக் கிடக்கும் பாரதமாதாவின் சுமையைக் குறைக்க வேண்டுமே என்கிற நல்லெண்ணத்தில் பெல்லாரி மாவட்டத்தையே தோண்டித் துருவியதற்கு பெற்ற அற்ப கூலி மட்டுமே 16,000 கோடிகளுக்கும் மேல் இருக்கும் என்று தனது விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் கருநாடக லோக் அயுக்தா தலைவர் சந்தோஷ் ஹெக்டே. சந்தோஷ் ஹெக்டே ஒரு நல்லவர் என்பதை தில்லியில் உள்ள பா.ஜ.க தலைவர்களே சான்றிதழ் அளித்திருப்பதால் நாம் அவரின் கூற்றை சந்தேகிக்க வேறு காரணங்களில்லை.

மேற்படி திட்டம் நல்ல முறையில் இயங்கி வந்ததை அடுத்து, தென்னிந்தியாவின் முதல் இராம இராஜ்ஜியத்தின் மாமா மன்னர் எடியூரப்பா அவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட784 அதிகாரிகளுக்கு அப்பாவி இரும்பு யாவாரிகள் பல்வேறு பரிசில்களைக் கொடுத்துள்ளனர். மேலும், மன்னரின் புதல்வர்களுக்கும் சில பத்து கோடிகள் கப்பமாகக் கட்டப்பட்டுள்ளது. இதன் விவரங்களும் சந்தோஷ் ஹெக்டேவின் விசாரணை அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

ஏற்கனவே தேசிய அளவில் பாரதமாதாவைக் கூறு போட்டு விற்பதில் சிறப்புப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியே பொறாமை கொள்ளும் அளவிற்கு ஆர்.எஸ்.எஸ் டவுசர்களின் சாதனை அமைந்துள்ளதே அதற்குக் கிடைத்துள்ள பெருமைகளில் தலையாயது. ஓரிரு மாநிலங்களில் ராம ராஜ்ஜியத்தை அமைப்பதில் வெற்றி ஈட்டியுள்ள நிலையிலேயே தமது கீர்த்தி மிக்க செயல்பாடுகளால் பாரத மாதாவின் புகழ்க் கொடியைப் பட்டொளி வீசிப் பறக்க விட்டுள்ள டவுசர்கள், மத்திய அரசின் அதிகாரத்தையே கைப்பற்றி விட்டார்கள் என்றால் பாரத மாதாவின்  கோவணத்தைக் கூற சிறப்பாகப் பறக்க விடுவார்கள் என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க முடியாது.

ஏற்கனவே இவர்கள் மத்தியில் அதிகாரத்தில் இருந்த போது உலகிலேயே யாரும் சிந்தித்திராத வண்ணம், அரசுத் துறைகளை தனியாருக்கும் அந்நியர்களுக்கும் விற்பதற்காக தனி இலாக்காவே வைத்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தனது மாமா வேலைக்கு இந்துத்துவக் காவிகள் ஒரு போட்டியாக உருவெடுத்து விடக் கூடாது என்பதில் குறிப்பாக இருக்கும் காங்கிரசு, சந்தோஷ் ஹெக்டேவின் அறிக்கையை வைத்து கடந்த மாதம் பஞ்சாயத்தைக் கூட்டியது. கருநாடக பாரதிய ஜனதாவிலேயே புறங்கையை நக்க வாய்ப்புக் கிடைக்காத பிற கோஷ்டிகளும் எடியூரப்பாவிற்கு எதிராய் போர்க் கொடியை உயர்த்தினர்.

குரங்குக் கூட்டத்தில் மரத்திலிருந்து தவறி விழும் குரங்கு கீழே விழுந்தவுடன் கையில் அகப்பட்ட உடைந்த கம்பை தூக்கி மற்ற குரங்குகளுக்குக் காட்டுமாம். ஏனெனில், கிளை தாவும் போது கீழே விழுவது குரங்குகளிடையே அவமானகரமானதாகக் கருதப்படுகிறது. அப்படிக் கீழே விழுந்த குரங்கை மற்ற குரங்குகள் கூட்டத்தை விட்டு விலக்கி விடுமாம். அதைத் தவிர்க்கத் தான் கீழே விழுந்த குரங்கு ‘நானாக விழவில்லை; இதோ இந்தக் கிளை முறிந்ததால் தான் கீழே விழுந்தேன்’ என்பதை உணர்த்தும் விதமாக அவ்வாறு செய்யுமாம்.

காங்கிரசு, பா.ஜ.க மற்றும் போலி கம்யூனிஸ்டு கட்சிகளைப் பொருத்தவரையில் சிறப்பான முறையில் ஒரு ஊழலில் இருந்து இன்னொரு ஊழலுக்கு மாட்டிக் கொள்ளாமல் தாவும் வரை பிரச்சினையில்லை. மாட்டிக் கொண்டால் மற்றவர்கள் இன்ஸ்டன்ட் யோக்கியர்களாகி விடுவார்கள். எனவே இப்போது கீழே விழுந்த குரங்கான எடியூரப்பாவைப் பார்த்து கீழே விழாத பா.ஜ.க குரங்குகள் கடந்த மாதத்திலிருந்து எக்காளமிடத் துவங்கின. எடியூரப்பாவும் லேசுப்பட்டவர் இல்லையென்பதால், குப்புற விழுந்து மூஞ்சியே மண்ணில் புதைந்து போன நிலையிலும் ‘ மீசையில் மண் ஒட்டலையே’ என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

எப்படியாவது இவர் கையில் காலில் விழுந்தாவது பதவியை ராஜினாமா செய்ய வைத்து விட்டால் ஆர்.எஸ்.எஸின் கட்டுக்கோப்பை நிலைநாட்டி விடலாம் என்று கருதிய தில்லி மேலிடம், எடியூரப்பாவிற்குத் தூது மேல் தூது அனுப்பிக் கொண்டிருந்தது. இந்த விஷயமாக நடந்த சமரசக் கூட்டங்களில் எடியூரப்பா வெங்கைய்யா நாயுடுவின் லேப்டாப்பை விசிறி அடித்தார் என்றும், இன்னொரு அமைச்சரை பளார் என்று கன்னத்தில் அறைந்தார் என்றும் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன.

காங்கிரஸ்காரனுக்கு அரசியலில் அதிக பட்ச பயிற்சியே வேட்டி உருவச் சொல்லிக் கொடுப்பது தான். எனவே அவர்களின் கூட்டங்களில் கலந்து கொள்ளும் செயல் வீரர்கள் பட்டாபட்டியை பேண்டு நீளத்துக்குத் தைத்துப் போட்டுக் கொண்டால் பிரச்சினை தீர்ந்தது. ஆனால், இவர்களோ ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம்களில் குஸ்தி பயின்றவர்கள். எனவே மூடிய அறைக்குள் குத்துச் சண்டையே நடந்திருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஆர்.எஸ்.எஸின் நேர்மை, ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடு பற்றியெல்லாம் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள பா.ராகவன், அவர்களின் குத்துச் சண்டைத் திறமையையும் சேர்த்தே குறிப்பிட்டிருக்கலாம்.

இதற்கிடையே தில்லியில் நடந்த பாரதிய ஜனதா உயர் நிலைக் கூட்டத்தில் தனது படை பரிவாரங்களோடு கலந்து கொள்ளச் சென்றிருந்த எடியூரப்பா யாருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் ராவோடு ராவாக அங்கிருந்து எஸ்கேப்பாகி கருநாடகத்திற்குத் திரும்பி  ஆர்.எஸ்.எஸில் கற்றுக் கொண்ட கட்டுப்பாட்டை சிறப்பாக நிலைநாட்டி விடுகிறார். பாரதிய ஜனதாவின் தேசியத் தலைவர்கள் எடியூரப்பா சொந்தமாகக் கிண்டிக் கொடுத்துச் சென்ற அல்வாவைக் கையில் வைத்துக் கொண்டு தேசிய ஊடகங்களின் முன் பேந்தப் பேந்த முழித்துக் கொண்டிருந்தார்கள்.

அடுத்து எடியூரப்பா இராஜினாமா செய்வாரா மாட்டாரா என்று புரியாமல் பாரதிய ஜனதா தலைமை தலையைச் சொறிந்து கொண்டிருந்த நிலையில் கருநாடகம் வந்த எடியூரப்பா, தனது ஆஸ்தான அரசியல் வழிகாட்டிகளான பில்லி சூனிய மந்திரவாதிகளிடம் விவாதித்தாரா இல்லை அரசியல் குரு குட்டிச்சாத்தானிடம் விவாதித்தாரா தெரியவில்லை. ஆனால், ஒருவழியாக இராஜினாமா செய்வேன் என்று தீர்மானித்து அறிவித்தார். அதிலும் பீடை மாதமான ஆஷாட மாதம் ஜூலை 30ம் தேதி தான் முடிகிறது என்றும் அதன் பின் புனித நாளான ஜூலை 31ம் தேதியன்று தான் பதவி விலக முடியும் என்றும் அறிவித்த எடியூரப்பா, தனக்கு அடுத்து தனது அடிப்பொடியான சதானந்தா தான் முதல்வராக வேண்டும் என்றும் தன்னிச்சையாக அறிவிக்கிறார்.

இதற்கிடையே, ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளாக காங்கிரசு குரங்குக் கூட்டத்திலிருந்தும் பல குரங்குகள் கிளை தாவும் போது கீழே விழுந்து கிடக்கின்றன. எனவே அவர்களும் ‘நீ மட்டும் யோக்கியமா’ என்கிற அறிவியல்பூர்வமான அரசியலைக் கையில் எடுக்கிறார்கள். பாராளுமன்றம் வேறு விரைவில் கூடுகிறது; ஆ. ராசா வேறு பிரதமரின் கோவணத்தில் இருக்கும் பொத்தல்களை நீதிமன்றத்தில் வைத்து அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்துக் காட்டிக் கொண்டிருக்கிறார் – அவர்கள் கவலை அவர்களுக்கு.

எடியூரப்பா முதல்வர் பதவிக்கான தனது வாரிசு யார் என்று அறிவித்து விட்ட நிலையில் பாரதிய ஜனதாவைச் சேர்ந்த தன்னலமற்ற சுயம் சேவகர்களுக்குள் குடுமிப்பிடி சண்டை துவங்குகிறது. இந்தச் சண்டைகளெல்லாம் யார் தொடர்ந்து பாரத மாதாவுக்கு செய்யப்பட்டு வரும் சேவையைத் தொடர்ந்து தங்கு தடையில்லாமல் செய்வது என்பதற்காகத் தான் என்பதை நாம் வாசகர்களுக்கு நினைவூட்டத் தேவையில்லை என்று நினைக்கிறோம்.

ஒருவழியாக குருக்ஷேத்திரத்தில் வெற்றியீட்டும் எடியூரப்பா தனது அணியைச் சேர்ந்த சதானந்தாவை ஆகஸ்ட் 3ம் தேதி முதல்வர் பதவியில் அமர்த்துவதில் வெற்றி கண்டுள்ளார். எடியூரப்பாவை இராஜினாமா செய்ய வைத்ததன் மூலம் தனது அமைப்பு ஒரு இராணுவக் கட்டுப்பாடு கொண்ட அமைப்பு என்கிற பெயரை பாரதிய ஜனதா தக்கவைத்துக் கொண்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறது. ‘அவளும் பத்தினியில்லை’ என்று நிறுவ முடிந்ததில் காங்கிரசுக்குப் பேரானந்தம்.

பெல்லாரியிலிருந்து தோண்டியெடுக்கப்பட்ட பாரதமாதாவின் அங்கங்களோ கப்பலில் சீனத்தை நோக்கித் தடையின்றிப் பயணிக்கின்றன. ஆர்.எஸ்.எஸ் காரர்கள் சாகாவில் பாடிக் கொண்டிருக்கிறார்கள் ‘பரம் வைபவன்யே துமே தத்ஸ்வராஷ்ட்ரம்’ – அதாவது, “பரம வைபவமான நிலைக்கு உன்னை உயர்த்துவேன் உன்னதமான ஸ்வராஷ்ட்ரமே” என்று இதற்குப் பொருள். பீகிங்கின் வானுயர்ந்த பாலங்களும் கட்டிடங்களும் தான் அந்த ‘பரம வைபவமான’ நிலை என்று சொல்கிறார்கள் இந்துத்துவ யோக்கியர்கள். இந்தப் பரம வைபவத்தை நோக்கிய பயணம் ஒவ்வொன்றிற்கும் துறைமுக அதிகாரிகளுக்குக் கொடுக்கப்படும் லஞ்சம் 50 ஆயிரம் என்று கண்டறிந்து சொல்லியிருக்கிறார் சந்தோஷ் ஹெக்டே.

ஓரிரு மாநிலங்களில் அதிகாரத்தில் இருக்கும் போதே ராம ராஜ்ஜியம் இந்தப் போடு போடுகிறதே, மொத்த நாட்டுக்கும் அதிகாரம் செலுத்தும் நிலைக்கு இவர்கள் வந்தால் என்ன போடு போடும் என்பதை நாங்கள் புதிதாக விளக்க வேண்டுமா என்ன?

__________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2011 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

புதிய ஜனநாயகம் ஆகஸ்டு 2011

புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2011 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

1. “சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்து! பாடநூல்களை உடனே வழங்கு!” – கல்வி தனியார்மயத்துக்கு எதிராகத் தமிழகமெங்கும் பரவும் போராட்டம்

2. பா.ஜ.க.-வின் ஊழல் எதிர்ப்பு: ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை!

3. இம்சை அரசி செல்வி 24-ஆம் புலிகேசி!

4. தோழர் கணபதியின் நினைவை நெஞ்சிலேந்துவோம்!

5. “வணிகமயமாகும் கல்விக் கொள்ளைக்கு முடிவு கட்டுவோம்! இலவசக் கட்டாயக் கல்வி உரிமையை நிலைநாட்டுவோம்!! -பு.மா.இ.மு, ம.க.இ.க கருத்தரங்கம்

6. பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு எதிராகப் புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டம்

7. 2-ஜி அலைக்கற்றை ஊழல் விசாரணை: குற்றவாளி ராசா அம்பலப்படுத்தும் உண்மைகள்

8. இந்தியா வல்லரசாகவில்லை, அமெரிக்காவின் அடியாளாகிறது!

9. நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்தம்: நரியைப் பரியாக்கும் காங்கிரசின் மோசடி!

10. “டாஸ்மாக் கடைக்கு இடமுண்டு; ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கபு இடம் கிடையாது!” – தமிழக அரசின் மோசடியை அம்பலப்படுத்தி வி.வி.மு.-வின் ஆர்ப்பாட்டம்

11. சல்வாஜூடும் கலைப்பு: உச்சநீதிமன்றத்தின் கோணல் பார்வை!

12. குஜராத்: கார்ப்பரேட்மயமாகும் விவசாயம்! ஓட்டாண்டிகளாகும் விவசாயிகள்!!

13. பாலியல் அவதூறு – வக்கிரத்துக்கு எதிராக பெண்கள் விடுதலை முன்னணியின் ஆர்ப்பாட்டம்

14. வர்க்க ஒற்றுமைக்குக் கிடைத்த வெற்றி! – மாருதி சுசுகி தொழிலாளர் போராட்டம்

15. மத்திய கினியா: சர்வாதிகார எதிர்ப்பில் அமெரிக்காவின் இரட்டை வேடம்

16. பாலியல் வக்கிரத்துக்கு எதிராகப் போராடிய வீரப்பெண்மணி தேவியை விடுதலை செய்! – பு.ஜ.தொ.மு ஆர்ப்பாட்டம்

17. வீரவணக்கம், தோழர் மாசானம்!

18.போலீசு பாசறைகளாக பள்ளிக்கூடங்கள்! போராளிகளாக மாணவர்கள்!!

புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2011 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 6 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS)

___________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

ஸ்ரேயா கோஷல் பிடிக்குமா?

55

நிலை ஓய்வில் ஒதுங்கிய  மனவேளையில், புலத்தேவைகள் சற்றே பதுங்கிய நேரத்தில், புத்தார்வத்தை நோக்கிய எத்தனத்தில் சலிக்காமல் ஈடுபடும் வாழ்வின் ஓர் மாலையில், ஸ்ரேயா கோஷலின் பாடல்களோடு கைகோர்த்து லயிக்கும் போது, அழகும் வலிமையும் இணைந்து எழுகின்ற உயிர்ப்பான இசையருவியை விரும்பாதவர் யார்?

முதன்மையாக இந்தியிலும், பிறகு அநேக தேசிய மொழிகளிலும் பாடிவரும் ஸ்ரேயா கோஷலை நாம்  அதிகமும் தமிழ் வழியாகத்தான் கேட்டிருப்போம். அநேகமாக கடந்த பத்தாண்டுகளில் தமிழ்த் திரையிசை அறிமுகமப்படுத்தியிருக்கும் குரல்களில், தனிச்சிறப்பான அழகுகள் என்று கண்டு லயிப்பது சிரமம். ஒரே மாதிரியான குரல்கள், சலித்துப் போன ஃபார்முலா உணர்ச்சிகள், குரலிசையை மிஞ்சும் கருவியிசைகள், பாடல் வரிகளை மென்று தீர்க்கும் சப்தநுட்பங்கள்…

உலகமயமாக்கம் பண்பாட்டுத் துறையில் அனைத்தையும் ஒரே படித்தானவைகளாக  மாற்றுகிறது. தேசிய இனங்களின் தனியழகுச் சிறப்பான பண்பாட்டு அம்சங்கள், சாதனைகள் அனைத்தும் உலகச்சந்தையின் அகோரப் பசியில் இறந்து போகின்றன. தமிழ் சினிமாவும் சில விதிவிலக்குகளைத் தவிர இந்த அனைத்துலக திணிக்கப்பட்ட மேட்டுக்குடி வாழ்வை காட்சிப்படுத்துகிறது, இசையும் படுத்துகிறது.

தமிழ் சினிமாவை மொழிமாற்றி தெலுங்கிலோ, இந்தியிலோ வெளியிட்டால் கூட அது பண்பாட்டு மாறுபாட்டால் தடுமாறுவதில்லை. அங்கனமே மற்ற மொழிப் படங்களும். செல்பேசி, கோக், ஷாப்பிங்  மால்கள், பல்சர் பைக், ஜீன்ஸ் பேண்ட், உதட்டுச்சாயம் இத்தியாதிகளில் விதவிதமான தேசிய இனங்கள் வாழவா முடியும்? இந்த ஒருமைப்பாடு, வேறுபட்ட மக்களின் வாழ்க்கை உணர்ச்சியில், அழகான வேற்றுமைகளை இணைக்கும் ஆன்மாவாக மிளிரவில்லை. மாறாக நுகர்வை மாபெரும் அகோரப் பசிவெறியாக்கி நசுக்கி வருகிறது.

சென்னை சத்யம் திரையரங்கு சென்றால் மேட்டுக்குடி சீமான்களும், சீமாட்டிகளும் ஒரே உடையில், ஒரே மணத்தில், ஒரே உடல் மொழியில், ஒரே நாசுக்கில், கோக்கை இழுப்பது கூட ஒரே அளவில் இருப்பதைப் பார்க்கலாம்.  ஆனால் சென்னை மாநகராட்சியின் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பள்ளி முடிந்து வீடு திரும்பும் காட்சியைக் கண்டால் நூற்றுக்கணக்கான அழகுகளையும், உடல்மொழிகளையும், குதூகலத்தையும் அறியலாம். உழைக்கும் மக்களிடத்தில் இருக்கும் அந்த வேற்றுமையான தனித்தனி அழகு ,வார்க்கப்படும் பார்பி பொம்மை போன்ற கனவான்களிடம் கடுகளவு கூட உணர முடியாது.

ஆகவேதான் தமிழ் பின்னணி பாடகர்களும் அப்படி ஒரு படித்தானவர்களாக பாடுவதால் நமக்கு எல்லாம் ஒரே குரலாய், இசையாய் தெரிகிறது. நட்சத்திரங்களின் இமேஜை வைத்தே வெற்றியடையும் பாடல்கள் அடையாளம் காணப்படுகின்றன. முந்தைய தலைமுறையைச் சேர்ந்த ஏசுதாஸ், பாலசுப்ரமணியம், ஜானகி, சித்ரா, சுவர்ணலதா முதலானவர்களின் தனியழகு நினைவுகளை இப்போது யாரிடம் தேடினாலும் கிடைப்பது கடினம்.

இத்தகைய கடினமான உலகமய மோல்டிங் கலைச் சூழலில்தான் ஸ்ரேயா  கோஷல் மட்டும் ஓரளவுக்குத் தனியாக தெரிகிறார். எனினும் ஊடகப் பெருவெளி உருவாக்கி வரும் அழகுப் பெண்ணின் குரல் மாதிரியோடு ஸ்ரேயா கோஷலின் குரலும் பெருமளவு ஒத்துப்போவது கண்கூடு.  சமகால நாயகிகளுக்கு டப்பிங் குரல்தான் என்றாலும் அது தனித்தனி வேறுபாடுகளைக் கொண்டிருப்பதில்லை.  அது ஒரு வகையான நகரத்து மேட்டுக்குடி நடுத்தரவர்க்க பெண்ணின் ரோல் மாடலான குரல். அந்த வகையில் ஸ்ரேயா கோஷலின் குரலும் சினிமாவில் இன்று தேவைப்படுகிறது. என்றாலும் அவரது தனித்திறமைகள் அந்த மாதிரித் தோற்றத்தை கொஞ்சம் வெற்றி கொண்டிருப்பதும் நிஜம்.

இயக்குநர் பாலுமகேந்திரா, ஹாலிவுட் படமொன்றை ஷாட்டுக்கு ஷாட் சுட்டு எடுத்த ஜூலி கணபதியில்தான் ஸ்ரேயா கோஷலை “ எனக்குப் பிடித்த பாடல்” மூலம் கேட்டதாக நினைவு. பிறகு விருமாண்டி, சில்லுனு ஒரு காதல், நான் கடவுள், செல்வராகவன் படங்கள், படமே தெரியாத பாடல்கள் என்று தொடரும்போது அவரது குரல் எனக்கு தனித்து தெரியத் தொடங்கியது. ஆர்வத்துடன் தேடிப் பிடித்துக் கேட்டேன். கேட்கிறேன்.

வரம்புக்குட்பட்ட கலைத்தூண்டுதலில், திட்டவட்டமான வகைமாதிரிகளையே விதிகளாக கொண்டு இயங்கும் தமிழ் இசையில் இந்த பெண் மட்டும் ஏதோ ஒரு விதத்தில் அதை கொஞ்சம் தனது சாயலோடு பாடுகிறாரோ என்று தோன்றியது. ஆலாபனைகளில் அவர் தோய்ந்து பாடும் போது தெரியும் உணர்ச்சிகளில் இழையோடும் அசாத்தியத் திறமை ஆச்சரியப்படுத்தியது. இசை, பாடல் வரிகள், உப்புமா கதைகள் அத்தனையும் ஸ்ரேயா கோஷலின் குரலிசையில் மண்டியிடுகின்றனவோ என்று கூட தோன்றியது.

1984-இல் வங்கத்தில் பிறந்த கோஷல் அவரது தந்தையின் அணு உலை பொறியாளர் பணி காரணமாக ராஜஸ்தானில் வளர்கிறார். பெற்றோர் இருவரும் படித்தவர்கள் என்பதோடு கூட இசையார்வமும் உள்ளவர்கள். காரணமாக  ஸ்ரேயாகோஷல் அங்கே மகேஷ் சந்திர ஷர்மா என்ற இந்துஸ்தானி கலைஞரிடம் இசை பயில்கிறார். ராஜஸ்தான், இந்துஸ்தானி இரண்டும் மிக வளமான இசைப் பின்னணி கொண்டவை. ராஜஸ்தானின் நாட்டுப்புறப் பாடல்களில் பாலைவனத்தின் சோகமும், கம்பீரமும், உச்சஸ்தாயில் பாடும் பெண்களது வலிமையும் எவரையும் சுண்டி இழுக்கும்.

பாரசீகத்திலிருந்து ராஜஸ்தான் வரையிலும் இசைக்கு ஒரு வரலாற்றுரீதியான இழையும் தொடர்பும் காலந்தோறும் இருந்து வருகிறது. மொகலாயர்களது பங்களிப்பாக வளர்ந்த இந்துஸ்தானி இசை, செவ்வியல் இசையறிவு இல்லாத பாமரர்களையே சுண்டி இழுக்கும். தமிழிசையிலிருந்து திருடப்பட்ட கர்நாடக இசையும் ஒரு செவ்வியல் இசைதான் என்றாலும் இதில் பாடுபவர்கள் இசையை கணிதம் போல பாடுவார்கள். மனோபாவத்துக்கு முக்கியத்துவம் தருவதாக கூறப்படும் கர்நாடக இசையில் உணர்ச்சியை விட தாளத்தின் ஸ்வர வரிசையே மேலோங்கி இருக்கும். இந்துஸ்தானியில் கணிதம் இருந்தாலும் உணர்ச்சிதான் முதன்மையானது.

அதற்கும் ஒரு வரலாற்றுக் காரணம் உண்டு. ஹிந்துஸ்தானி இசை அடிப்படையில் மதச்சார்ற்ற இசை. வாழ்வின் மகிழ்ச்சியை, கேளிக்கையை பாடுவதற்காக உருவான இசை. கர்நாடக இசை பக்தியை மட்டுமே கொண்ட மதச்சார்பு இசை. வாழ்வின் மற்ற உணர்ச்சிகளுக்கு இங்கே இடமில்லை.

அதனால்தானோ என்னமோ இசையறிவு அற்ற பாமரர்களும் ஹிந்துஸ்தானி இசையில் மயங்குவது போல கர்நாடகத்திடம் நெருங்குவதில்லை. இன்னதென்று சொல்லத் தெரியாத இனிமை ஹிந்துஸ்தானி இசையிடம் இருக்கிறது என்று ஒரு இசையமைப்பாளரான நண்பர் சொன்னார்.

ரஹமான் கூட தனது பாடல்கள் பலவற்றுக்கும் ராஜஸ்தான் நாட்டுப்புற இசையையும், சூஃபி இசை, ஹிந்துஸ்தானி இசையையும் பல்வேறு வகைகளில் பயன்படுத்தியிருக்கிறார்.

பிரபலமான இந்திப் பாடல்கள் அன்றும், இன்றும் நம் மனதைக் கொள்ளை கொள்ளும் பின்னணியில் இந்துஸ்தானி இசையே ஆட்டுவிக்கிறது. மெலடி என்று எடுத்துப் பார்த்தால் இந்தி திரையிசையை எந்த இசையும் விஞ்சுவது கடினம். ஆலாபனைகளோடு சேர்ந்து வரும் வரிகள் மொழியைத் தாண்டி இதயத்தில் கரைந்து கசியும். மனதை மயக்கும் கஜல் பாடல்களில், தன்னெழுச்சியாக இசையோடு இணைந்து பிறக்கும் கவிதைகளை வாரே வாஹ் என்று இரசிகர்கள் வரவேற்பதும் செயற்கையானதல்ல. இத்தகைய மண்ணில் கோஷல் வளர்ந்தது தற்செயல் என்றாலும் அதுவே அவரது அவசியமான அடிப்படைகளை உருவாக்கியிருக்கக் கூடும்.

சிறுமியாக இருக்கும் போது ஜீ டி. வியின் ச ரி க ம நிகழ்ச்சியில் கலந்து கொண்டு  இறுதிப் போட்டியில் வெல்கிறார். இந்த நிகழ்ச்சியின் நடுவராக இருந்த இந்தித் திரையுலh இசையமைப்பாளர் கல்யாண்ஜி, ஸ்ரேயா கோஷலின் அசாத்தியத் திறமையை கண்டு கொண்டு உவகை அடைகிறார். அவரது பெற்றோர்களிடம் சொல்லி மும்பையில் குடியேறுமாறு கேட்டுக் கொள்கிறார். அதன்படி மும்பைக்கு மாறுதல் வாங்கிக் கொண்டு ஸ்ரேயா கோஷல் குடும்பம் குடியேறுகிறது. கல்யாண்ஜியிடம் பதினெட்டு மாதங்கள் கோஷல் பயிற்சி எடுக்கிறார்.

கல்யாண்ஜி இந்தி திரையுலகில் கொஞ்சம் பிரபலம் என்றாலும் அங்கே ஜாம்பவான்களாக இருந்தவர்கள் வரிசையில் அவரை சேர்க்க முடியாது. எனினும் ஒரு திரையிசை  இசையமைப்பாளரிடம் கற்றுக் கொள்வது கோஷலுக்கு  கிடைத்த இரண்டாவது வரப்பிரசாதம். பலரும் செவ்வியல் கலைஞர்களிடம்தான் பயில்வதை முக்கியமாக கருதுகிறார்கள். அதை நாமும் மறுக்க வேண்டியதில்லை. கோஷலும் கிரமமாக செவ்வியல் இசை பயின்றவர் என்றாலும் திரையிசைப் பயிற்சி என்பது சற்றே மாறுபாடானது. ஏனெனில் ஒரு கதை அல்லது உணர்ச்சிக்கு பாடுவது என்பது கர்நாடக கீர்த்தனைகளில் காணமுடியாது. அங்கே ஆதிக்கம் செய்யும் ஒரே உணர்ச்சி பக்தி மட்டும்தான்.

தியாகய்யரின் கீர்த்தனைகளில் வாழ்ந்து கெட்ட பார்ப்பனரது புலம்பல்கள் ராமனை வைத்து ஏங்குவதைத் தவிர அதில் சமகால வாழ்வின் போராட்டமான தருணங்களோ, உணர்ச்சிகளோ, கொண்டாட்டங்களோ இல்லை. இதையே பல்லாண்டு கற்று பாடுபவர்களும் உணர்ச்சியில் தோய்ந்து பாடும் வித்தையை அல்லது இசைமொழியை அறிவதில்லை. ஒரு கணித சூத்திரம் போல விரியும் கர்நாடக இசை அதனாலேயே என்னமோ மக்களது இசையாய் பரிணமிக்கவில்லை.

சுதா ரகுநாதன், பாம்பே ஜெயஸ்ரீ, நித்யஸ்ரீ முதலான செவ்விசைக் கலைஞர்கள் திரையிசையில் பாடும் போது கூட இந்த கணித சூத்திர முறையில்தான் பாடுகிறார்கள் என்பதையும், மற்ற பின்னணி பாடகிகளைப் போல உணர்ச்சி பாவம் இல்லாமல் இருப்பதையும் மேலோட்டமாக கேட்டாலே அறிய முடியும். அந்த வகையில் திரையிசையின் உணர்ச்சியில் தோய்ந்து பாடுவதற்கு இந்துஸ்தானி இசை பொருத்தமாகவே உள்ளது. இது ஏன் என்பதை கண்டு சொல்லுமளவு எனக்கு இசைஞானமில்லை.

கல்யாண்ஜியின் பயிலகத்தில் பயின்ற ஸ்ரேயா கோஷல் பின்னர் தேவதாஸ் படத்திற்கு ஐஸ்வர்யா ராயின் பாத்திரத்திற்காக பாடுகிறார். பிரபலமடைகிறார். பின்னர் பல மொழிகள், பல பாடல்கள், பல உணர்ச்சிகள். 26 வயதிற்குள் நான்கைந்து தேசிய விருதுகள், ஏராளமான சினிமா விருதுகள். இப்போது தமிழுக்கு வருவோம். அவர் பாடிய சில பாடல்களை  மட்டும் ஒரு இரசிகனது பார்வையில் – கவனிக்க இசையறிஞன் அல்ல – அசை போடுவோம்.

1.     முன்பே வா

பாடியவர்கள்: கோஷல், நரேஷ் ஐயர்
இசை: ஏ.ஆர்.ரஹமான்
பாடல்: வாலி
படம்: சில்லுனு ஒரு காதல்

தற்செயலாய் தொலைக்காட்சியில் இந்தப் பாடலைக் கேட்ட போது முதல் முறையிலேயே ஈர்த்த பாடல். ஆனால் அறியும் முன்பே இது மிகவும் பிரபலமான பாடல் என்பது அறியேன். இப்போது இது பலமுறை கேட்டுத் தேய்ந்ததாகத்தான் இருக்கமென்றாலும் இதை எழுதுவதற்காக மீண்டும் கேட்ட போது கூட அதிலுள்ள ஈர்ப்பை இன்னும் நான் இழக்கவில்லை. முதலில் திருஷ்டிக் கழிப்புக்களை பார்த்துவிடலாம். ரஹ்மானது வியாதி போல பல பாடல்களில் தொடரும் கோரஸ் என்ற சேர்ந்திசை இந்த பாடலுக்கு தேவையே இல்லை. கோஷலின் தனி ஆவர்த்தனத்தை பொருத்தமின்றி அந்த சேர்ந்திசை இடையூறு செய்கிறது. அடுத்தது நரேஷ் ஐயரும் இங்கு அவ்வளவாக தேவையில்லை. படத்தில் இவருக்காக சூர்யா தலையையும், தோளையும் அசைப்பது(எத்தனை படத்தில் பார்த்துவிட்டோம்) ஒன்றே இந்த தேவையின்மைக்கு சான்று பகரும். தாளத்திற்கு உட்காரும் வரிகளை வாலி எழுத முயற்சித்து தோல்வியடைந்திருக்கிறார். மேலும் காதில் வார்த்தைகள் விழுவதில்லை. பாடுவதற்கு சிரமமான முறையிலும் பாடல் வரிகள் இருக்கின்றன.

பாடலை மட்டும் முதலில் கேட்டு இரசித்துவிட்டு காட்சிகளை திரையில் பார்த்தால் கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருக்கும். இருப்பினும் கோஷலின் உதவியால் இதையும் கடந்து பாடலை இரசிக்கலாம். இந்த பாடலின் உணர்ச்சி என்னவாக இருக்குமென்று பார்த்தால் இது காதலின் அடக்கமான, பணிவான வலிமையினை பெருந்தாய்மையோடு இசைக்கிறது. அடக்கமான காதலே அழகானது என்றார் காரல் மார்க்ஸ். அந்த அழகின் உணர்ச்சியினை இந்த பாடல் மூலம் கோஷல் கலையாக மனதில் செதுக்கியிருக்கிறார் என்று தோன்றுகிறது. நானும் காதல் வயப்படும் வயதுதான் என்பது கூட ஒரு புறக்காரணமாக இருக்குமென்றாலும் நாளை (இருபது, முப்பது வருடம் கழித்து) அறுபதுகளைக் கடக்கும் நேரத்திலும் கூட இந்த இசையை மீட்டமுடியுமென்றுதான் கருதுகிறேன்.

காதலின் குதூகலத்தை முகப்பிலேயே நரம்பிசை ஒரு கற்றார்ந்த தன்னடக்கத்துடன் கொண்டாட்டமாக  அறிவிக்கிறது. யானை வருமுன்னே மணியோசை வருவது போல அது ஒரு அழகான வழித்தடத்தை குதித்தோடும் தாளம் காட்டிவிட்டு செல்ல கோஷல் காதலின் மேல் கை கோர்த்துக் கொண்டு முன்பே வா, அன்பே வா என்று வருகிறார்.  உணர்வும், உயிரும், பூவாய் மென்மையாக நெஞ்சம் கரைந்து வழிகிறது. ரங்கோலி சேர்ந்திசை முடியும் நேரத்தில் ஒரு ஆலாபனை வரும். இந்தப்பாடலின் மைய உணர்ச்சியாக இதைக் கூறலாம். எந்த வித்தைகளோ, ஆர்ப்பாட்டங்களோ இன்றி வெகு இயல்பாக ஆனால் கண்ணைப் பறிக்கும் அழகுடன் வரும் இந்த தருணத்தின் காதலின் பணிவான அழகு கம்பீரத்துடன் இசைக்கப்படுகிறது.

காதலனது தோழமையை கைப்பற்றும் சரணத்தில் நாம் காதலிக்க வாய்ப்பற்ற பாலைவன பாரதத்தில் இருந்தாலும் காதலிக்காக அவளது கைபிடித்து செல்லும் பரவசத்திற்காக நனவில் இல்லையென்றாலும் கனவில் மிதக்க ஆரம்பிப்போம். அடுத்த சரணத்தில் தான் சாயும் தோளில் வேறெருவர் சாய்ந்தால் தகுமா என்று மெல்லிய ராகத்தில் கோஷல் இசையாய் இறைஞ்சுகிறார். இப்படி ஒரு இவள் இருக்கும் போது நான் ஏன் மற்றவளை நினைப்பேன் என்று எல்லா ஆண்களும் நினைக்கும் கணநேர யோக்கியத்தை நிஜம் போல நம்பவைக்கிறது அந்த அழகு.

எனினும் காதல் உணர்ச்சியில் நாம் நீடிக்க நினைப்பது உண்மையென்றாலும் நடப்பில் அது பொய்யாகத்தானே இருக்கிறது? ஆதலால் இந்த இனிய காதலின் நினைவுகள் முடியும் சோகத்தை பாடலின் இறுதியில் வரும் கோரசைத் தாண்டி கோஷலின் ஆலாபனை நமது செவியை ஊடுறுவி மனதை வருத்தும் வலியுடன் இசைத்து மறைகிறது. வேறுவழியின்றி பாடலை மீண்டும் கேட்டாக வேண்டுமென்ற ஆசையையும் தூண்டுகிறது.

ரஹ்மானது மிகச்சிறப்பான இந்த பாடல் அதன் புத்தாக்க ராகத்தை எல்லையற்ற விரிவாய் இசைத்து ஒரு சாம்ராஜ்ஜியத்தை கட்டுவதற்குப் பதில் ஒரு சில மின்னல்களுடன் சுருங்கிவிடுகிறது. கோஷலின் உணர்ச்சிக்கு தீனி போட்டிருக்கும் இந்தப் பாடலை இன்னும் பரவித் திரும்பும் இசையோடு விரித்திருந்தால் அது காலத்தின் உணர்ச்சியை பொய்யென்றாலும் கூட பற்றியிருக்குமோ என்று தோன்றுகிறது.

2.     நினைத்து நினைத்து…

பாடியவர்: கோஷல்
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடல்: நா. முத்துக்குமார்
படம்: 7ஜி ரெயின்போ காலனி

படத்தைப் பார்த்த போது இந்தப்பாடல் நினைவில் இல்லை. பாடலை கேட்கும் போது படம் நினைவிலில்லை. இந்த உலகமே தன்னை மறுக்கிறது என்று அல்டாப்பு பில்டப்பு கொடுக்கும் நடுத்தர வர்க்க விடலைப் பருவ இளைஞனது வம்படியான காதலில் சிக்கிய பெண்ணின் உணர்வை ஏதோ ஒரு இனம்புரியாத சோகத்தின் உணர்ச்சியை இந்தப் பாடல் மூலம் கோஷல் மீட்டுகிறார் போலும். உச்ச ஸ்தாயில் ஏறி சோகத்தை கேள்விகளாய் கேட்டுவிட்டு அந்த சுவடே இல்லாமல் கீழே இறங்கி காதலனுக்கு காதலை மறுக்காமல் கொடுக்கும் லாவகம். என்னதான் இருந்தாலும் உன்னால்தான் வாழ்கிறேன் என்று விட்டுக் கொடுக்காத காதலின் எளிமையான இசையை யுவன் தனது வழக்கமான மெலொடியில் வழங்க, தபேலாவின் எளிய தாளத்தில் கோஷலின் குரலில் உணர்ச்சியையும், அழகையும் கண்டு கொள்ளும் வண்ணம் நா.முத்துக்குமார் எழுதியிருக்கும் பாடலையும் கொண்ட இந்த இசையைக் கேட்டுப் பாருங்கள்.

3.     சாரல்

பாடியவர்: கோஷல்
இசை: ஜி.வி பிரகாஷ்
பாடல்: கிருத்தியா
படம்: குசேலன்

படம் பார்த்திருக்கவில்லை.  உண்மையில் சாரலுக்கு பொருத்தமான ராகத்தை பின்னியிருக்கும் இசையமைப்பாளர் பின்னணி இசையில் வித்தைகளைக் காட்டவேண்டுமென்ற முனைப்புகளைக் குறைத்திருக்கலாம். ஆனால் கோஷல் பாடும் போது நாம் நேரே குற்றாலத்தின் ஆனி ஆடிச்சாரலில் நனைந்து கொண்டு மழைத்துளியின் உற்சாகத்தை ஆசை தீர பருகுகிறோம். வெள்ளிமழைச் சாரல் நம்மை கிள்ளிவிட்டுப் போகுமென்று விடலைப்பருவ நினைவுகளை கோஷல் அதே வயதோடு பாடுகிறார்.  சரணத்தில் தூரலுக்கு பிறகு வரும் அடைமொழியின் வரிகளை மேலே துள்ளியவாறு பாடுகிறார். அனுபல்லவியில் மழை ஓய்ந்த பின் நீடிக்கும் இனிமையின் மணத்தோடு பல்லவிக்கு குதித்தோடுகிறார். சாரலின் கிள்ளலில் அனுபவித்திராதவர்கள் கோஷலின் உதவியோடு நனையலாம். சாரலுக்கு பொருத்தமான ராகத்தை இசையமைப்பாளர் ஆச்சரியப்படுமளவு செதுக்கியிருப்பதால் கோஷல் மிளிர்கிறார்.

4.     எந்த குதிரையில்

பாடியவர்கள்: கோஷல், ராகுல் நம்பியார்
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடல்: நா.முத்துக்குமார்
படம்: சத்தம் போடாதே

பாடல் சுமார்தான் என்றாலும் துள்ளலான ராகத்தில் கோஷல் சற்றே கிண்டல் போன்ற தொனியில் பாடியிருப்பார். இதற்குத்தானே இத்தனை நாளா ஆசைப்பட்டாய் தானனானே என்ற ஆலாபனையை வேறு வேறு உணர்ச்சியில் பாடியிருப்பார். மற்றபடி படத்தை பார்க்கவில்லை என்பதால் பாடலை மட்டும் கேட்டுப் பிழைக்கலாம்.

5.     கண்ணின் பார்வை..

பாடியவர்: கோஷல்
இசை: இளையராஜா
பாடல்: வாலி
படம்: நான் கடவுள்

பாலாவின் பெருத்துப் புடைக்கும் அக ஆன்மீக மொக்கை என்பதால் படத்தை பார்க்கவில்லை. ஆனால் பாடல்..?

பாடுவதற்கு மிகவும் கடினமான பாடல். பாடலின் கம்பீரமான தாளக்கட்டுக்கு இணையாக கோஷல் வரிகளை உணர்ச்சியில் தோய்ந்து பாடியிருப்பார். பார்வையில்லாத போதும் கண்ணில் ஈரம் ததும்பும் என்று அவர் பாடும் போது வேறு வழியில்லை, நமக்கும் ததும்பித்தான் ஆகவேண்டும். பார்வையற்றோரின் கூர்மையான நோக்குணர்ச்சியை இளையராஜாவின் அற்புதமான ராகத்தின் துணை கொண்டு கோஷல் மீட்டு வருகிறார். ராஜாவின் பாடலில்தான் கோஷல் தனியாக தெரியாமல் பின்னணிக்கு போய்விடுகிறார் எனும் அளவுக்கு இந்தப் பாடலின் கட்டுமானம் சற்றே பிரம்மாண்டமானதுதான், சந்தேகமில்லை. ரஹ்மானது பாடலில் ராகங்கள் சுருங்கி தேங்கி நின்று விடுவதற்கு மாறாக ராஜாவின் ராகம் எவ்வளவு விரிய முடியுமோ அதற்கு மேலும் பறக்கிறது. சரணங்களுக்கு இடையில் வரும் பின்னணி இசையில் இதை அறியலாம். கோஷலை நன்கு வேலை வாங்கிய பாடலாக இது இருந்திருக்குமென்று தோன்றுகிறது.

6.     அய்யைய்யோ

பாடியவர்கள்: மாணிக்க விநாயகம், கிருஷ்ணராஜ், யுவன் சங்கர் ராஜா, கோஷல்
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடல்: சிநேகன்
படம்: பருத்திவீரன்

முழுமையில் நன்கு கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடலில் கோஷலை சற்றே தமிழ் நாட்டுப்புறத்தின் சாயலில் பாடுவதை பார்க்கிறோம். கருவாச்சியின் கரடு முரடான பாத்திரத்திற்குப் பொருத்தமான பாடலில் சற்றே கனமான குரலில் கோஷல் பாடுகிறார். சமயத்தில் இது கோஷல்தானா என்று சந்தேகம் கூட வருகிறது. ஒரு பாடலின் உணர்ச்சியைப் புரிந்து கொண்டு அவர் காட்டும் வித்தியாசம் உண்மையில் பிரமிப்பாகத்தான் இருக்கிறது.

7.     உருகுதே மருகுதே

பாடியவர்கள்: சங்கர் மகாதேவன், கோஷல்
இசை: ஜி.வி பிரகாஷ்
பாடல்: நா. முத்துக்குமார்
படம்: வெயில்

கரிசல் மண்ணின் வெள்ளேந்தியான காதலர்கள் பாடும் பாடலில் சங்கர் மகாதேவனிடம் மட்டும் அந்த வெள்ளேந்தித்தனத்தை காண முடியவில்லை. ஆனால் கோஷல் பாடும் போது உண்மையிலே உருகுகிறார். உலகம் சுழலுதே என்று பாடும் போது உண்மையில் உலகம் சுழலத்தான் செய்கிறது. தமிழ் தெரியாத ஒரு வங்கத்துப் பெண் இப்படி வார்த்தைகளை பொருள் தெரிந்து, இசையமைப்பாளர் எதிர்பார்க்கும் உணர்ச்சியை அநாயசமாக வெளிப்படுத்தி பாடுவதற்கு இந்தப்பாடல் ஒன்றே போதும்.

8.       எனக்குப் பிடித்த பாடல்

பாடியவர்: கோஷல்
இசை: இளையராஜா
படம்: ஜூலி கணபதி

ஸ்ரேயா கோஷலின் முதல் தமிழ் பாடல் இதுதானாவென்று தெரியவில்லை. ஆனால் மிகவும் இளவயது பாடல் என்பது மட்டும் புரிகிறது. இன்றை கோஷலின் குரலில் இருக்கும் கனமும், முதிர்ச்சியும் இந்த இளங்குரலில் இல்லை என்றாலும் அவரது திறமை இங்கேயே பளிச்சிடுகிறது. ஒரு பாடலில் இருக்கும் ராகத்தின் திருப்பம், ஏற்ற இறக்கம், கமகங்கள் இதெல்லாம் பாடுவதற்கு பொருத்தமான காலநேரத்தை வைத்துக் கொண்டே கட்டமைக்க முடியும். அதாவது அந்தந்த திருப்பத்திற்கு ஒரு தூரம் இருக்க வேண்டும். ஆனால் கோஷல் மட்டும் அந்த தூரத்தை மிகவும் குறைத்துக் கொண்டு பாடுகிறார். உண்மையில் இது சிரமமானது என்றாலும் அவரது இந்துஸ்தானி பயிற்சி இதற்கு கைகொடுக்கும் போலும். இந்தப் பாடலிலும், இந்தப்படத்தில் வரும் இதயமே என்ற பாடலிலும் கோஷல் அப்படி பாடும் ராகத்தை கமகத்தால் ஒரு குரலாட்டத்தோடு லாகவகமாக பாடுவதைக் கேட்டுப் பாருங்கள். இந்தப் பாடலை வேறொரு தேர்ந்த பாடகரை பாடச் சொன்னாலும் இந்த அளவு நகாசு வேலைகளோடு பாடுவது மிகவும் சவாலான ஒன்று.

9.     ஏ பெண்ணே..

பாடியவர்: கோஷல்
இசை: வித்யா சாகர்
படம்: தென்றல்

மேற்கத்திய இசை, செவ்வியல் இசை, கேள்வி பதில் அடுக்கு, சந்தப்பாட்டு, தனிக்குரலிசை என்று பல அம்சங்கள் இந்தப் பாடலில் சேர்ந்து வருவது அழகு. அத்தனைக்கும் ஈடு கொடுத்து பாடும் கோஷலும் அதை செவ்வனே செதுக்கியிருக்கும் வித்யாசாகரும் தனித்து நிற்கிறார்கள்.

10.   ஆவாரம் பூவுக்கும்

பாடியவர்: கோஷல்
இசை: வித்யா சாகர்
பாடல்: கபிலன்
படம்:  அறை எண் 305-இல் கடவுள்

நாட்டுப்புறத்தாளத்தில் ஆரம்பிக்கும் பாடலில் நாயனம் ஒரு சோகமும் இனிமையும் கலந்து இசைக்கிறது. பின்னர் கோஷல் பாடுகிறார். ஐயா என்று பாடும் போது நமக்கு தமிழ் ஐயா நினைவு வருகிறது.  பல்லவியில் சந்தப்பாட்டு போல வார்த்தைகள் தாளத்தோடு துள்ளும் வண்ணம் பாடல் கட்டியமைக்கப்பட்டிருக்கிறது. வரிகள் தெளிவாக கேட்கவில்லை என்றாலும் இனிமையான பாடல்தான்.

11.   பார்த்துப் போ மாமா

பாடியவர்: கோஷல்
இசை: கார்த்திக் ராஜா
படம்: நிறைஞ்ச மனசு

நாட்டுப்புறத்தின் அழகை கோஷல் பாடும் விதத்திற்காகவே இந்த பாடல் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது. பார்த்துப் போ மாமா என்று கோஷல் பாடும் போது அது சுத்தமான அக்மார்க் தமிழ் பெண்ணாகத்தான் இருக்குமென்று தோன்றுகிறது. ஜிலு ஜிலு சலங்கைச் சத்தம் என்று அவர் பாடும் போது அதுவே ஜல்லரி போல ஒலிக்கிறது. கரிசல் காடு, கம்மாய், நாத்து நடும் பெண்கள், என்று கிராமத்தின் சத்தங்கள் எல்லாம் கோஷலின் வழியாக நமது காதில் எங்கோ கேட்டது போல ஒலிக்கிறது.

12.   கண்டேன் கண்மணியே

பாடியவர்: கோஷல்
இசை: கணேஷ் ராகவேந்திரா
பாடல்: நா. முத்துக்குமார்
படம்: ரேணிகுண்டா

இந்தப்பாடலில் கோஷல் காயம்பட்ட மனதிற்கு ஆறுதல் சொல்லும் வண்ணம் இசைக்கிறார். இதில் அழகே தேவையற்ற கமகங்கள், ஆர்ப்பாட்டங்கள், அலங்காரங்கள் எதுவுமின்றி நேரடியாக பாடுவதுதான். மிகவும் கட்டுப்பாட்டோடு பாடப்பட்ட எளிமையான பாடல் என்றும் சொல்லலாம்.

13.   என்னவோ செய்தாய்

பாடியவர்கள்: கோஷல், கைலாஷ் கேர்
இசை: லஷ்மணன் ராமலிங்க
படம்: ஏன் இப்படி மயக்கினாய்

மெல்லிசையும், இந்துஸ்தானி ஆலாபனையும் இனைந்து வரும் அருமையான பாட்டில் ஆண் குரல் பொருத்தமாக கோஷலுடன் இணைகிறது. ஆண்குரல் நாட்டுப்புற சாயலுடன் இசைக்க கோஷல் நகர்ப்புறத்து பெண்குரலாய் சிணுங்கி பாடுகிறார்.

14.   ஒண்ண விட

பாடியவர்கள்: கோஷல், கமல் ஹாசன்
இசை: இளையராஜா
படம்: விருமாண்டி

ஸ்ரேயா கோஷல் பாடிய தமிழ் பாடல்களில் எனக்கு பிடித்த சிறப்பான பாட்டு இதுதான். இந்தப் பாட்டில் ஆச்சரியமாக குறைகளோ திருஷ்டிகளோ எதுவுமில்லை. கமலின் குரல் கூட படத்தின் மையப்பாத்திரத்தை நினைவுபடுத்தும் விதமாகவே வருகிறது. திருமணம் செய்த இளஞ்ஜோடி நிலா வெளிச்சத்தில் ஊரைவிட்டு காதல் கீதத்தோடு பயணிக்கிறது. மதுரை வழக்கோடு, நாட்டுப்புற பாணியில் கோஷல் உசிலம்பட்டி பெண்ணாகவே பாடுகிறார். தனிமையின் நிர்ப்பந்தம் சோகமான முறையில் பின்னணி இசையாக ராஜாவால் நேர்த்தியாக கட்டமைக்கப்பட்டுள்ளது. கோஷலும் அலங்காரங்கள் எதுவுமின்றி எளிமையாக நேரடியாக உணர்ச்சியில் தோய்ந்து இசைத்திருக்கிறார். தாளமும், ஏனைய கருவிகளும் பின்னணி இசையில் கதையின் கருவை அநாயசமாக கொண்டு வருவதால் கோஷலின் குரல் அன்றி இங்கு வேறு யாரும் பாட முடியாது என்று தோன்றுகிறது.

_________________________________________

ஸ்ரேயாவின் ஏனைய மொழிப் பாடல்களைக் கேட்டதில்லை. முக்கியமாக இந்தியில் அவர் நிறைய நல்ல பாடல்களை பாடியிருக்கிறார். இந்தியில்தான் கோஷலின் திறமை முதன்முதலில் வெளிவந்திருக்கிறது. மலையாளத்தில் அவர் எப்படி பாடியிருக்கிறார் என்பது எனக்கு ஆவலான ஒன்று. அந்த மொழியே இசையாக இருக்கும்போது இசையையே குரலாக கொண்டிருக்கும் அவரது பாடல் நிறைய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துகிறது.

எனினும் ஸ்ரேயா கோஷலை இன்னும் எத்தனை நாள் இரசிக்க முடியும் என்ற ஐயமும் தோன்றாமலில்லை. அநேகமாக தமிழ் சினிமா ஃபார்முலாவில் நைந்து போயிருக்கும் எல்லா உணர்ச்சிகளையும் அவர் பாடிவிட்டார் என்றே தோன்றுகிறது. இனி அவர் என்னதான் பாடினாலும் அதில் புதிய உணர்ச்சிகள் இருக்கப் போவதில்லை. சராசரித் தமிழனது வாழ்வை விட்டு அன்னியப்பட்டிருக்கும் தமிழ் சினிமாவால் அந்த நல்ல பாடகியின் அத்தனை சாத்தியங்களையும் வெளிக்கொணர்வது கடினம்.

காதலின் ஏக்கம், இனிமை இவற்றைத்தான் கோஷல் அதிகம் பாடியிருக்கிறார். காதலில் கூட சமூக எதார்த்தம் இடம் பெறாத போது உணர்ச்சியில் மட்டும் புதுமையை நாம் கண்டு கொள்ளவோ, கொண்டு வரவோ செய்வது கடினம். கோஷல் பாடிய நல்ல பாடல்களின் திரைக் காட்சிகளைப் பார்க்கும் போது நமக்கு உவப்பாக இருப்பதில்லை. வெறும் பாட்டு தோற்றுவிக்கும்  கலையுணர்ச்சியை அலுப்பூட்டும் பிம்பக்காட்சிகள் எளிதாக கலைத்துவிடுகின்றன. இது கோஷலுக்கு மட்டுமல்ல, இளையராஜா போன்ற திறமையான இசையமைப்பாளர்களுக்கும் நடந்திருக்கிறது.

ஆகவேதான் அந்த அசட்டுக் கனவு ஒரு கணம் தோன்றுகிறது. ம.க.இ.க பாடல்களுக்கு இளையராஜா இசையமைக்க, கோஷல் பாடுவதாக ஒரு கணம் எண்ணிப் பார்த்தேன். எண்ணுவதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனாலும் அரசியல் பாதையின் கலையுணர்ச்சியை திரையிசை என்ற மாய உலகத்தில் வாழும் கலைஞர்கள் எவ்வளவு உணரமுடியும் என்ற கேள்வி இருக்கிறது. காதலின் சிணுங்கலுக்காக உணர்ச்சி பாவத்தை பிரசிவிக்கும் அந்த பாடகி, புரட்சி தோற்றுவிக்கும் பிரசவ வலியை எங்கனம் உணர முடியும்? ஆனாலும் தனது கலை உணர்ச்சிக்கு உண்மையாக இருக்கும் ஒரு படைப்பாளி இறுதியில் பொதுவுடமைக்கு தானே வருவான் என்று ஒரு தத்துவப் பிரச்சினையை ஒரு தோழரிடம் நீண்டநேரம் விவாதித்தது நினைவுக்கு வருகிறது. ஸ்ரேயாவின் இசை உன்னதத்தை புரட்சியின் சர்வவியாபாக உண்மை இணைக்க முடியாதா என்ன?  ஆகவேதான அது முற்றிலும் அசட்டுக் கனவு என்றும் சொல்ல முடியவில்லை.

ஆனாலும் ஒரு நல்ல இசை கேட்பதற்கு மட்டுமல்ல, நாம் ஈடுபடும் எந்த காரியத்திற்கும் ஒரு ஊக்கத்தை வழங்கவே செய்யும். ஸ்ரேயா கோஷலை அம்மட்டுமிலாவது நாம் பயன்படுத்திக் கொள்ளலாமென்பதைத் தவிர வேறென்ன?

சென்ற மாதம் 17 தேதி முதல் வினவு நான்கம் ஆண்டில் அடியெடுத்து வைத்துவிட்டது. நன்றியும் வாழ்த்துக்களும் !

___________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

பயங்கரவாதிகளின் உண்மைக் கதை!

பயங்கரவாதிகளின் உண்னமைக் கதை

ஒரு முசுலீமின் வீட்டுக்கதவை போலீசோ அல்லது ஆர்.எஸ்.எஸ் குண்டர்களோ தட்டிக் கொண்டே இருக்கிறார்கள். குண்டு வெடிப்புகளுக்காக அப்பாவி முசுலீம்களை போலீசு கைது செய்கின்றது. இந்துத்துவா திட்டத்திற்காக அப்பாவி முசுலீம்களை ஆர்.எஸ்.எஸ் கொல்கின்றது. மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி போல ஆகிவிட்டது இசுலாமிய மக்களின் நிலைமை.

வீடு, வேலை, கல்வி அனைத்திலும் முசுலீம் என்பதற்காகவே வாய்ப்புகள் மறுக்கப்படும் அளவுக்கு அவர்கள் தனிமைப் படுத்தப்பட்டிருக்கின்றார்கள். அவ்வளவு ஏன் இரண்டாம் காட்சி சினிமாவைப் பார்ப்பதற்குக்கூட ஒரு முசுலீமுக்கு சுதந்திரம் இல்லை.

ஒவ்வொரு குண்டு வெடிப்பின் போதும் ஓராயிரம் முசுலீம் மக்களின் நிம்மதி குலைக்கப்படுகின்றது. குண்டு வைத்த தீவிரவாதிகளை உடனே கைதுசெய்து ரிசல்ட் காட்ட வேண்டுமென்ற இயல்பான பொது நிர்ப்பந்தம் காரணமாக எண்ணிறந்த முசுலீம் மக்கள் எந்தக் குற்றமுமிழைக்காமல் ஆண்டுக்கணக்கில் சிறையில் வாடுகின்றார்கள். இது அப்படிப்பட்டவர்களின் கதை. தெகல்கா ஏடு இந்தியாவெங்கும் புலனாய்வு செய்து இந்த உண்மைகளை வெளியிட்டிருக்கின்றது. தொந்தரவில்லாமல் நிம்மதியாக வாழும் இந்து மனத்தை இந்த கண்ணீர்க்கதைகள் சற்று நேரமாவது குறுக்கீடு செய்யட்டும்.

···

அகமதாபாத் பள்ளிவாசல் ஒன்றில் ஜூமா நமாஸில் நிதானமாக அமைதியாக ஜூலை 25, 2008, வெள்ளியன்று தொழுகை நடத்தி “இந்துக்களோடு பரஸ்பரம் நேசமான வாழ்க்கை வாழவேண்டும்; அடுத்தவன் பசியோடு இருக்க நாம் மட்டும் வயிறுமுட்டச் சாப்படுவது அநீதி” என்று போதித்த ஒல்லியான இசுலாமியக் கல்விமான் அப்துல் அலீம் — அடுத்தநாள் ஜூலை 26 அகமதாபாத் குண்டுவெடிப்புக்குப் பிறகு சில நிமிசங்களுக்குள்ளாகவே போலீசால் கைது செய்யப்பட்டார். வீட்டில், தெருவில் எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்து நிற்க, தடதடவென வீட்டுக்குள்ளிருந்து அலீம் இழுத்துச் செல்லப்பட்டார்.

ஞாயிறு ஜூலை 27 அன்று டி.வி., செய்தித்தாள்களில் அப்துல் அலீம் புழுதிவாரித் தூற்றப்படுகின்றார். ரகசிய சதிவேலை செய்த தீவிரவாதி என்று வர்ணிக்கப்பட்ட அலீம் நெரிசல்மிக்க சந்தடிமிகுந்த முசுலீம் பகுதிகளில் மக்களால் மதிக்கப்பட்டவர்தான். இரண்டு மாதங்களுக்கு முன்புகூட உள்ளூர் இன்ஸ்பெக்டர் அலீமின் அமைப்பான “அஹ்பே ஹதீஸ்’ இசுலாமியப் பிரிவின் டிரஸ்டுக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்; அவரது உறுப்பினர்கள் பட்டியல் தனக்கு உடனே வேண்டும் எனக் கோரியிருந்தார். அப்போதுகூட, போலீசாரின் தகவலின்படி, அலீம் ஒரு முகவரியில் டிரஸ்டு நடத்துபவர்தான்; தவிர, அலீம் சட்ட விரோதமானவரோ, ரகசிய நபரோ அல்ல.

2006 இல் அலீமின் அமைப்பு புதுடெல்லியில் நடத்திய தேசியக் கருத்தரங்கத்திற்குத் தலைமை விருந்தினராக வந்தவர் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் என்பது குறிப்பிடப்பட வேண்டிய சிறப்புச்செய்தி. குஜராத் இனப்படுகொலைக்குப் பிறகு, அலீம் ஏராளமான நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார். அப்போது, நிராதரவாக விடப்பட்ட 34 முசுலீம் குழந்தைகளுக்கு குவைத்தில் வசிக்கும் ஒரு பணக்காரரிடம் உதவி கோரினார். ஆனால் திட்டம் நிறைவேறவில்லை, கைவிடப்பட்டது. குழந்தைகளும் அந்தப் பணக்காரரிடம் அனுப்பப்படவில்லை. இதையெல்லாம் காரணம் காட்டி அலீமின் மீது தீவிரவாதக் குற்றச்சாட்டு தொடுக்கப்பட்டது. தீவிரவாதப்பயிற்சி எடுப்பதற்காக அகமதாபாத்திலிருந்து இளைஞர்களை உ.பி.க்கு அனுப்பினார்; 2002லிருந்து தலைமறைவாகி விட்டார்” என்றெல்லாம் ஜோடித்து, அவரைப் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி கொடுத்ததாகச் சித்தரித்து குற்றவாளியாக்கினார்கள்.

சட்டத்துக்கு உட்பட்ட குடிமகனாய் வலம்வந்த ஒரு இசுலாமிய மதநம்பிக்கையாளரான அலீமை சட்டவிரோதமாகத் தீவிரவாதியாய்க் காட்டி இப்போது 2008 இல் கைதுசெய்து உள்ளே தள்ளிவிட்டது போலீசு. நமக்கு எழும் கேள்வி: முன்பு அலீமின் டெல்லி கருத்தரங்கில் கலந்து கொண்ட சிவராஜ் பாட்டீலை விசாரித்து விட்டார்களா?

நம்முள் எழும் வேதனை: அலீம் சிறையில் வாடுகின்றார்; அலீமின் குடும்பமோ அடுத்தவேளைச் சோற்றுக்கே பரிதவிக்கின்றது. அலீம் இருந்த வரை கடைச்சிறுவன் உதவியோடு பழைய இரும்புக் கடை ஒன்றை நடத்தி வந்தார்; இப்போது சிறுவன் மட்டுமே கடையைக் கவனிக்கின்றான்; அதிக வருவாயில்லை. ஒவ்வொரு மாதமும் வீட்டுவாடகைக்கு அலீமின் மனைவி ரூ. 2500 தேற்ற வேண்டும்; 5 குழந்தைகளுக்குச் சோறு போட்டுக் காப்பாற்ற வேண்டும்.

···

ஐதராபாத்தில் மவுலானா மொகம்மது நசீருதீன் மற்றும் அவரது இரு மகன்களான யாசிர், நசீர் ஆகிய மூவரையும் “தீவிரவாதிகளின் குடும்பம்’ என்று போலீஸ் அழைத்தது. நசீருதீன் முப்பதாண்டுகளுக்கு முன்னால் தெருவோரக் கடைகளில் தான் கற்ற மோட்டார்பைக் ரிப்பேர், வேலைத்திறன், நண்பர்களிடம் வாங்கிய கடன் இவற்றை வைத்து என்ஜினீயரிங் ஒர்க்ஷாப் வைத்திருந்தார்.

நசீருதீன் இசுலாமியக் கல்விமான். பாபர் மசூதி இடிப்பு, குஜராத் 2002 முசுலீம் படுகொலைகள் இரண்டிலும் அரசை வெட்டவெளிச்சமாக விமரிசித்தவர்; “குஜராத்தில் கலவரம் செய்தார்; 2003 மார்ச்சில் குஜராத் உள்துறை அமைச்சர் ஹரேன் பான்டியாவைக் கொலை செய்த சதியில் ஈடுபட்டார்” என்ற சொல்லி 4 ஆண்டுகள் சிறையில் தள்ளப்பட்டார்.

செப் 2001ல் “சிமி’ தடை செய்யப்பட்ட சமயத்தில் யாசிர் இதில் உறுப்பினர். பிறகு பல பொய்வழக்குகளில் அவர் சேர்க்கப்பட்டபோதும் “சிமி’ உறுப்பினர் என்பதிலிருந்து தொடங்கியே வழக்கு சோடித்தது போலீசு. முதலில் 2001இல் “சிமி’ தடைசெய்யப்பட்டபோது கைது; கைதான மறுநாளே பிணை கிடைத்தது; ஆனால் “அரசை எதிர்த்துப் பேசினார்’ என்று அடுத்தநாளே மறுபடியும் கைது, 29 நாள் சிறை. இப்போது ஏழாண்டுகளாகி விட்டன. ஆனாலும் எந்த வழக்குமே நடக்கவில்லை.

அண்மையில் ஜூலை 15, 2008 இல் மறுபடி கைது பெங்களூருவைக் குலுக்கிய குண்டு வெடிப்புக்கள் ஜூலை 25இல் நடந்தபோது, குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட தீவிரவாதிகளைக் கர்நாடகாவுக்கு அனுப்ப ஏற்பாடு செய்தவர் என்று பின்னால் வந்த வழக்குடன் பிணைக்கப்பட்டார். ஆதாரம் விசாரணையில் யாசிரே கொடுத்த வாக்குமூலம் என்றார் கமிஷனர் பிரசன்னராவ். போலீசு சொன்னது பொய் என்று தனது தாய் உதாய் பாத்திமா மூலம் வெளி உலகுக்குத் தெரிவித்தார் யாசிர். தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு அடித்துச் சித்திரவதை செய்து கையெழுத்து வாங்கிவிட்டார்கள் என்று அதனது குரூரத்தை அம்பலமாக்கினார் பாத்திமா.

யாசிரின் தம்பி நசீர் இருபதே வயது நிரம்பியவர். ஜனவரி 11, 2008 இல் கர்நாடகாவில் நண்பர் ஒருவருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது மறித்து நிறுத்திக் கைதுசெய்யப்பட்டார். மோட்டார் சைக்கிளைத் திருடி ஓட்டுவதாகவும், இருவரும் கைவசம் சிறுகத்தி வைத்திருப்பதாகவும், “அரசுக்கெதிராகப் போர்செய்ய இருப்பதாகவும்’, தாங்கள் “சிமி’ உறுப்பினர்கள் என வாக்குமூலம் கொடுத்ததாகவும் போலீசு கூறியது. ஆனால் 90 நாட்களுக்குப் பிறகும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாததால், நசீரின் வழக்குரைஞர் பிணை பெற்றார். ஆனால் உடனே அவர் மீது சதிவழக்கொன்றைப் போட்டு சிறையிலிருந்து வெளியே வராதவாறு போலீசு செய்து விட்டது.

அக், 2004 இல் மவுலானா நசீருதீன் கைது செய்யப்பட்டபோது அதை எதிர்த்து மக்கள் காவல்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது ஐதராபாத் வந்திருந்த குஜராத் போலீசு அதிகாரி நரேந்திர அமீன் தனது துப்பாக்கியால் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரைச் சுட்டுக் கொன்றுவிட்டார். இறந்தவர் உடலை வைத்துக்கொண்டு, அமீன் மீது வழக்குப் போட்டால்தான் நகருவோம் என்று மக்கள் உறுதியாக அங்கேயே மறியல் செய்தனர். போலீசு மக்கள் மீது ஒரு வழக்கும் அமீன் மீது ஒரு வழக்குமாகப் பதிவுசெய்தது. அமீன் கைது செய்யப்படவில்லை. பிறகு அமீன் மீதான வழக்கு ஒர் அங்குலம் கூட நகரவில்லை. அன்று மவுலானாவுடன் அமீன் அகமதாபாத்துக்குப் பறந்தான்; அவனுடைய உடையில் சிறு கசங்கல் கூட இல்லை. அவனுக்கு எதிரான வழக்கு எப்போதோ செத்துப் போய் விட்டது.

மவுலானா நசீருதீன் மற்றும் இரு மகன்களும் கொடுஞ்சிறையில். அந்த மகன்களைப்பெற்ற தாய் கதறுகின்றாள்: “எங்கள் குடும்பத்திலிருந்து மூன்று பேர் மீது பொய்வழக்கு. என்னையும் சேர்த்துச் சிறையில் தள்ளட்டும். பிறகு, எங்களை ஒன்றாகவே சேர்த்து சுட்டுக் கொன்று விடட்டும், வசதியாக இருக்கும்.”

···

அப்துல் முபீன், உத்திரப் பிரதேச மாநிலம் பக்வா கிராமம். இவர் மீது ஒன்றன் பின் ஒன்றாகப் பொய்யாக 4 கிரிமினல் தீவிரவாத வழக்குகள். முதல் வழக்கு செப் 2000 இல் போடப்பட்டது. பிறகு அடுத்தடுத்து வழக்குகள். ஒவ்வொரு வழக்கையும் அது பொய் என்று நிரூபிக்க இரண்டு, மூன்று ஆண்டுகள் எடுத்தன. நான்காவது வழக்கு மட்டுமே எட்டு நீண்ட ஆண்டுகளாக நடந்தது. முதல் இரு வழக்குகளிலுமே அவர் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டது. ஆகஸ்டு 6, 2008 இல்தான் முபீன் விடுதலை ஆனார்.

மேலே சொன்ன நான்கு வழக்குகளிலுமே “இவர் சிமி உறுப்பினர்’ என்று பொய் சொல்லப்பட்டது எப்படியாவது “சிமி’ யைத் தடைசெய்ய வேண்டும் என்பதற்காக. சாட்சி: அப்துல் முபீன் போலீசில் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட வாக்குமூலம்.

முதல் வழக்கில் முபீன் சிறை சென்றபோது அவரது கடைசிக் குழந்தையான மகள் ஜைனாவுக்கு வயது ஆறேமாதம். இப்போது 2008 இல் முபீன் விடுதலையாகி வந்து பார்க்கும்போது அவளுக்கு அப்பாவைப் பார்க்க ஒரே வெட்கம். இந்த முபீன் விடுதலையான நான்காம் நாள், “இந்துஸ்தான் டைம்ஸ்’ நாளேடு ஆகஸ்டு 10, 2008 அன்று சிமியைப் பற்றி முழுப்பக்கக் கட்டுரை ஒன்றை வெளியிட்டது. முபீன் சிமியின் முதல் தீவிரவாதி என்று எழுதியது; குற்றம் நிரூபிக்கப்படாத போதும் அவர்தான் முதல் தீவிரவாதி என்று எழுத இந்துஸ்தான் டைம்ஸ் வெட்கப்படவில்லை. முபீனுக்கும் “சிமி’க்கும் ஜனநாயக மறுப்பு, சித்திரவதைகள், பலப்பல பொய் வழக்குகள்; “இந்துஸ்தான் டைம்ஸூ’க்கோ பொய்களை இரைத்துக் கதைகள் விற்க வானளாவிய உரிமை.

···

அபுல் பஷார் குவாஸ்மி உ.பி.யைச் சேர்ந்த இசுலாமியக் கல்விமான். 23 வயதே நிரம்பிய இளைஞர். ஒராண்டுக்கு முன் தனது திருமணத்தை முடித்திருந்த குவாஸ்மி தம்பிக்கும் திருமணம் செய்து வைக்க அங்கங்கே சொல்லி வைத்திருந்தார். இதை மோப்பம் பிடித்த போலீசு தரப்பு கடந்த ஆகஸ்டில் பெண்வீட்டார் என்று சொல்லிக் கொண்டு குவாஸ்மியின் வீட்டுக்குள்ளே நுழைந்தது. வெளியே அவர்கள் மாருதி வேனை நிறுத்தியிருந்தார்கள். உள்ளே தடதடவென நுழைந்த இரண்டு போலீசோ குவாஸ்மியைத் தரதரவென்று இழுத்துச் சென்று மாருதி வேனில் திணித்துக் கொண்டு பறந்து போனார்கள்.

இரண்டு நாள் கழித்து, குஜராத் போலீசு அதிகாரி பி.சி. பாண்டே அகமதாபாத் குண்டு வெடிப்பைத் திட்டமிட்டவன் குவாஸ்மிதான் என்று அறிவித்தான். “பாண்டே’ கேள்விப்பட்ட பெயராகத் தெரிகின்றதா? ஆமாம், குஜராத்தில் 2000 அப்பாவி முசுலீம்களின் படுகொலைகளில் ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி, பஜ்ரங் தள் மூன்றோடும் தீவிரமாக இறங்கி நரவேட்டையாடியவன்தான் பாண்டே. இதற்காக அவன் பதவி உயர்வும் வாங்கிக் கொண்டான்.

ஆனால் குவாஸ்மி ஒரு அப்பாவி; கிழக்கு உ.பி.யிலுள்ள அசாம்கர் நகரத்தின் அருகே ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்த கூச்ச சுபாவமுள்ள அப்பாவி. போலீசோ அவனைச் “சிமி’யின் தலைவன், குஜராத் படுகொலைகளுக்குப் பழிவாங்கத் துடித்த “புனிதப் போராளி’ (ஜிகாதி) என்று விவரித்தது. ஊடகங்கள் தங்களது பங்குக்கு குவாஸ்மி இந்தியா முழுக்கப் பயணம்செய்து தீவிரவாத வலைப்பின்னலை உருவாக்கியவன் என்றும், கேரளத்தில் செயல் வீரர்களை வடிவமைத்தவன் என்றும் கலர்கலராகச் செய்திகளை விற்றன.

ஆகஸ்டு 14இல் குவாஸ்மியை இழுத்துச் சென்ற போலீசு இரண்டுநாள் கழித்து மறுபடியும் அவரது வீட்டுக்கு வந்தது. அவரது தந்தை, தம்பி, தங்கைகளை வெளியே பிடித்துத் தள்ளிவிட்டு வீட்டைச் சல்லடை போட்டுச் சலித்து சோதனை போட்டது. வீட்டிலிருந்த மூட்டைப் பூச்சி மருந்து மற்றும் ஒரு மெட்டல் கிளீனிங் பிரஷ்ஷைக் கவனமாகப் பொட்டலம் கட்டி எடுத்துச் சென்றது. அபு பக்கீர் பயத்தோடு கேட்டார்: “இவற்றை என் பையன் குண்டு தயாரிக்கத்தான் பயன்படுத்தினான் என்று போலீசு சொல்லி விடுவார்களோ?”

குவாஸ்மி “சிமி’ உறுப்பினர் அல்ல; இசுலாமிய இறையியல் முடித்துள்ள, வழக்குகள் ஏதுமில்லாத எளிய இளைஞர். இவரைப் போலீசு கடத்திச் சென்றது என்று உள்ளூர் மக்கள் போலீசிடமே முறையிட்டார்கள். அக்குடும்பத்துக்கே இப்போது ஊரார்தான் சோறு போடுகின்றார்கள்.

தந்தை அபுபக்கீர் சொல்கிறார்: “நாங்கள் செய்த ஒரே தவறு முசுலீம்களாக இருப்பதுதான்.”

______________________________________________

குப்பண்ணன்,  புதிய கலாச்சாரம் அக்டோபர் 2008
______________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

எனது பளபள கருப்புக் குண்டியை காண விரும்புகிறீர்களா?

61

எனது பளபள கருப்புக் குண்டியை காண விரும்புகிறீர்களா?வீடு நியாய வாடகையுடன் இருந்தது.
அமைந்துள்ள இடத்திற்கு
பெரிய சிறப்பில்லை.
வீட்டு உரிமையாளர் பெண்
அங்கு வசிக்கவில்லை என்பதை சொன்னாள்.
வேறொன்றும் பேச இருக்கவில்லை
வாக்குமூலமாக சொல்ல ஒன்றை தவிர.

‘மேடம்’ நான் ஆரம்பித்தேன்.
‘ஒரு தேவையற்ற பயணத்தை
தவிர்க்க விரும்புகிறேன்– நான் ஒரு ஆப்பிரிக்கன்’.

மறுமுனையில் நிசப்தம்.
அந்த மவுனம் செயற்கையாக
அழுத்தம் பெற்ற ஒரு நற்குணம்.
குரல் உயிர் பெற்ற போது
உதட்டு சாயம் பூசப்பட்டிருந்தது.
தங்க உருளையான நீண்ட சிகரட்-
பிடியின் ஒலி கேட்டது.
நான் சிறைபட்டிருந்தேன்

‘எவ்வளவிற்கு கருமை?…..’
எனக்கு சரியாகவே கேட்டது……..
‘நீங்கள் லேசான கருப்பா?
அல்லது ரொம்ப கருப்பா?’ பட்டன் B , பட்டன் A
வெளியேறாத மூச்சுக்காற்றின் துர்நாற்றம்
அந்த பொது தொலைபேசியகத்தை நிறைத்தது.
சிவப்புநிற தொலைபேசியகம்.
சிவப்பு அஞ்சல் பெட்டி.
சிவப்பு நிற ஈரடுக்கு ஆம்னி பேருந்து சாலையில்.

ஆம். எதுவும் கனவல்ல.
அமைதியும், சரணாகதியும் அவமானகரமாக இருந்தது.
அது வாய்ப்பூட்டை மெல்ல
திறந்து விளக்கம் கோரியது.
மீண்டும் அவள், அழுத்த மாறுபாடுடன்– நீங்கள்
‘ரொம்ப கருப்பா? அல்லது லேசான கருப்பா?’
உண்மை இப்போது மிகவும் உறைத்தது.

‘உங்கள் கேள்வி– சாதாரண சாக்லேட்டா?
அல்லது பால் சாக்லெட்டா? என்று கேட்பது போலவா’.
அவளின் அணுகுமுறை உணர்ச்சியற்றும்
எதிர்கொள்ள இயலாமலும் இருந்தது.
மெதுவாக ஒலி அளவை வேறுபடுத்தி நான் குறிப்பிட்டேன்.

‘மேற்கு ஆப்ரிக்க சீப்பியா’ — ஏதோ யோசித்தவனாக,
‘அது எனது கடவு சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது’.
எனது மனம் உடல் வண்ணத்தை
ஆராய மவுனம் பூண்டது.
அவள் குரலை வேறுபடுத்தி கடுமை காட்டினாள்.

‘என்ன அது? எனக்கு அது
என்னவென்று புரியவில்லை.
கருப்பு தலைமுடியை உடைய
வெள்ளைப் பெண் போலவா?
அப்படியிருந்தாலும் கருப்பு தான் இல்லையா?’

‘முழுவதுமாக அப்படியில்லை.
முகவமைப்பில் நான் ஒரு ப்ரூனட்’
‘ஆனால், மேடம் என்னுடைய மற்றவற்றையும்
பார்க்க வேண்டும்,நீங்கள்’.
‘எனது உள்ளங்கையும், கால்பாதமும்
வெளிறிய மஞ்சள் நிறம்’.
‘உட்காருவதால் ஏற்படும் உராய்வின் காரணமாக–

மேடம் —
எனது பின்புறக் குண்டி பளபள
கரும் பறவையின் நிறத்தில் இருக்கிறது’.
‘ஒரு நிமிடம் மேடம்’–
மறுமுனையில் இடியோசை கேட்டது— ‘

மேடம்’ —
நான் குழைந்தபடி,
‘நீங்கள் அதனை பார்க்க விரும்புகிறீர்களா?’

வோல் சோயிங்கா

குறிப்புகள்:

சீப்பியா (sepia) — அடர் மாநிறம்
ப்ரூனட் (brunette)– கரும் பழுப்பு தலைமயிரும் வெள்ளைத் தோலும் உடையவர்.

Telephone Conversation by Wole Soyinka

ஆசிரியர் குறிப்பு:
மேற்கு நைஜீரியாவின் யோருபா நாட்டில் 1934 -இல் பிறந்த வோல் சோயிங்கா லீட்ஸ் பல்கலைக்கழக படிப்புக்கு பின்னர் லண்டனில் குடியேறினார். தனது எழுத்து இயக்கத்தின் பெரும் பகுதியை லண்டனில் மேற்கொண்டார். அவருடைய The Lion and the Jewel நாடகம் பெரும் கவனத்தை பெற்றது. ஒரு வெள்ளை இளைஞனின் ‘முற்போக்கு’ வசியம் ஒரு ஆப்ரிக்க இளம்பெண்ணிடம்  தோற்பதை அழகாக சொல்லியிருப்பார். வெள்ளையர்களின் ‘நாகரிக’ உலக கண்ணோட்டம் கறுப்பின மக்களின் யதார்த்த, எளிமையான வாழ்க்கையை சிதைக்கும் நோக்கம் கொண்டிருப்பதை நாம் அறிய முடியும்.

இக்கவிதை 1950 –களில் பிரிட்டனில் கறுப்பின மக்கள் கடுமையான கண்காணிப்புக்கு ஆளாக்கப்பட்டு, சந்தேகத்துக்குரியவர்களாக கருதப்பட்ட நேரத்தில் வோல் சொயிங்காவால் எழுதப்பட்டது. வீடு தேடும் கறுப்பினத்தவருக்கு அவரின் நிறம், இனம் காரணமாக ஒரு வெள்ளையினப் பெண் மறுக்கிறாள். அவளுடைய கேள்வியில் தொனித்த கேலியை புரிந்து கொண்டவர், அதே மொழியில் பதிலடி  தருகிறார். சென்னையில், ‘வெஜிட்டேரியன் ஒன்லி’ என்று அட்டை தொங்க விடப்படும் மாம்பலம், மைலாப்பூர் பகுதிகளில், அந்த வார்த்தைகளில் ஒளிந்திருக்கும் பார்ப்பன சூழ்ச்சியை, நமது பேச்சிலர்கள், தலித்துக்கள் இவ்வாறு தான் எதிர்கொள்கிறார்களோ?

_____________________________________________________________

சம்புகன்
______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

ஆம்னி பேருந்துகளின் விபத்து! அரசு பேருந்துகளின் நட்டம்!! ஏன்?

17

னியார்மயமும் தாராளமயமும் மக்களை நாட்டின் குறுக்கும் நெடுக்கும் வீசியெறிந்துக் கொண்டிருக்கும் நிலையில் மக்கள் போக்குவரத்துக்கு பெருமளவு பேருந்தைத்தான் நாட வேண்டியிருக்கிறது.

கிட்டதட்ட மூன்று மாதங்களுக்கு முன்பாக முன்பதிவு செய்திருந்தால் மட்டுமே தொடர்வண்டியில் இடம் நிச்சயம். மேலும், வேண்டிய நேரத்தில் கிடைக்கின்றன, கொண்டு செல்கின்றன என்ற காரணங்களாலும் பேருந்துகளே மக்களுக்கு பெருமளவு கை கொடுக்கின்றன. இதில் அரசுப் பேருந்துகள் அதிகரிக்கப்படாமல் அதே எண்ணிக்கையிலிருந்தாலும் தனியார் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. அரசுப்பேருந்துகள் தனியார் பேருந்துகளைவிட சொகுசாகவும், வசதியாகவும், முக்கியமாக சரியான நேரத்துக்குக் சென்றுவிடும்படியாகவும் இருக்கின்றன என்பதே பெருமளவு சொல்லப்படுகின்ற காரணங்களாக இருக்கின்றது. இதில் உண்மை இல்லாமல் இல்லை.

இன்று எல்லா முக்கிய நகரங்களுக்கும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தனியார் பேருந்துகள், ஏசி, ஸ்லீப்பர் போன்ற வசதிகள், இணையத்தில் பதிவு செய்துக்கொளளும் வசதி, குடிநீர் பாட்டில், முகந்துடைத்துக் கொள்ள கைக்குட்டைகள் என்று வாடிக்கையாளர்களை பலவகைகளில் ஈர்க்கின்றன. அதோடு, எவ்வளவு தொலைவாக இருந்தாலும் பயண நேரத்தை மிகக்குறுகிய நேரத்தில்  சென்னையிலிருந்து மதுரையையோ ஏன் கன்னியாகுமரியைக்கூட எட்டிவிடுகின்றன இப்பேருந்துகள்.

சான்றாக, சென்னையிலிருந்து மதுரைக்கான சராசரி தூரம் 592 கிமீ என்றால், தனியார் பேருந்துகள் 7.30 மணிநேரத்துகுள்ளேயே  சென்றடைகின்றன. மாறாக அரசுப்பேருந்துகள் பத்து மணிநேரத்திலிருந்து 11 மணி நேரம் வரை எடுத்துக்கொள்கின்றன.

எனில், தனியார் பேருந்துகளுக்கு மட்டும் எப்படி இது சாத்தியம்? இந்தியாவில், சட்டப்படி நகர்ப்புறத்தில் சராசரி மணிக்கு 50 கிமீ வேகமாகமும்,புறநகரில் சராசரியாக 80கிமீ வேகமும் செல்லலாம். ஆனால், இந்த ஆம்னி பேருந்துகள் இவ்விதிகளை பின்பற்றுவதாக தெரியவில்லை. இதற்கு அவ்வப்போது நிகழும் விபத்துகளே சாட்சி.

இப்பேருந்துகள் சராசரியாக, மணிக்கு 110 கிமீ மேல் அல்லது திடீரென்று கட்டுக்குள் கொண்டுவரமுடியாத அளவு வேகத்தில்தான் தான் செல்கின்றன. அதோடு, அரசுப் பேருந்துகளைவிட இதில் கட்டணமும் பலமடங்கு அதிகம். சராசரியாக, 900ரூபாயிலிருந்து ஆரம்பிக்கும் இக்கட்டணங்கள், பஸ்சைப் பொறுத்து 2000ரூபாய் வரையிலும் வசூலிக்கப்படுவதுண்டு.

நேரம், வசதி போன்ற காரணங்களால் தனியார் பேருந்துகளை மக்கள் பெருமளவு விரும்புவதாகச் சொல்லப்பட்டாலும் தனியார் பேருந்துகளின் வருமானம் அதில் பயணம் செய்பவர்களனால் மட்டுமல்ல பொருட்கள் ஏற்றிச்செல்லப்படுவதாலும் வருகின்றது. சீட்டுக்குக் கீழாக இருக்கும் தளம் பொருட்களை வைக்கத்தான் என்றாலும் முறைகேடாக பல்வேறு பொருட்களை வைத்து ஏற்றிச் செல்லப்படுகின்றன. இதில், வேதிப்பொருட்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களும் அடங்கும்.

இப்படி அளவுக்கதிகமான பாரத்துடன், கட்டுக்கடங்காத வேகத்தில் பேருந்துகள் ஓட்டிச் செல்லப்படும்போது விபத்துகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அதோடு, ஒரு பேருந்துக்கு ஒரே டிரைவர் மற்றும் கிளீனர்தான் இருக்கின்றனர். தனியார் பேருந்துகள் வந்த புதிதில் இரண்டு டிரைவர்கள் மாறி,மாறி ஓட்டுவதை கண்டிருக்கலாம். தற்போது நிலைமை மாறிவிட்டது. எவ்வளவு  நீண்ட தூர பயணமென்றாலும்,ஒரு வண்டிக்கு ஒரே டிரைவர் மற்றும் ஒரு கிளீனர்தான்.

பெரும்பாலான தனியார் பேருந்து டிரைவர்களுக்கு போதுமான ஓய்வு இல்லாத நிலையில்தான், தொடர்ந்து வண்டியோட்டிக்கொண்டு வருகிறார்கள். எப்படியும் சொன்ன நேரத்திற்குள்ளாக இலக்கை அடைந்துவிட விரட்டிப்பிடித்து ஓட்டுகிறார்கள். இதில் கொஞ்சம் அசந்தாலும் அது அடுத்தநாள் செய்தியாகிவிடுகிறது. சமீபத்தில், வேலூருக்கு அருகில் நிகழ்ந்த பொள்ளாச்சி பேருந்து விபத்து கூட இந்த காரணங்களை உள்ளடக்கியதுதான். கட்டணமும்  விபத்துக்கான சாத்தியங்களும் அதிகமென்றாலும்  ஏன் தனியார் பேருந்துகளையே நாடுகிறார்கள்?

முதலாவதாக, அரசுப்பேருந்துகள் இன்றைய தேவைக்கேற்றபடி எண்ணிக்கையில் இல்லை என்பது ஒரு காரணம். சமயங்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டாலும் அவை மாற்றுப்பேருந்துகளே. அதன் இயக்கமும் சரியாக இருப்பதில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக தமிழக அரசுப்போக்குவரத்துக் கழகம் நட்டத்தில் இயங்குவதாக அரசுத் தரப்பில் சொல்லப்படுவதும் நாம் அறிவோம்.

எனில் தனியார் பேருந்துகள் மட்டும் நாளுக்குநாள் வளர்ந்து வருவது எங்ஙனம்?  தமிழக அரசுப் போக்குவரத்துறை பயணித்த தனியார்மய பாதையை சற்றுப் பார்ப்போம்.

2000-க்கு முன்புவரை தமிழகத்தில்  மட்டும் 21 போக்குவரத்து கழகங்கள் இருந்தன. இன்று அவற்றில் பல கழகங்கள் நாடு பயணித்த ‘முன்னேற்ற’ப்பாதையில் காணாமல் போய்விட்டன. 2002-இல், சென்னையிலும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களிலும் ஓடிக்கொண்டிருந்த 12,905 பேருந்துகளில் 7,742 பேருந்துகளை அன்றைய அம்மா அரசு திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்திருந்தது.

28 மாவட்டங்களில் பாதிக்குப்பாதியாக அரசுப் பேருந்துகளை குறைக்கப் போவதாகவும், ட்ரிப்புகளையும் குறைக்கப் போவதாகவும் அவற்றை தனியாருக்கு விடப்போவதாகவும் அறிவித்தது. இறுதியில் போக்குவரத்துத் துறையை தனியாருக்கு விடப்போவதில்லை என்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ரூட்களை மட்டும் தனியாருக்கு விடப் போவதாகவும் இதனால் ஊரகப் பகுதிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லையென்றும் அறிவித்தார் ஜெயலலிதா.

அக்டோபர் 2001த்தில் போனஸ் கேட்டு வேலைநிறுத்தம் செய்த போக்குவரத்து ஊழியர்களிடம் தனது உண்மையான முகத்தை காட்டியது ஜெயலலிதா அரசு. தீவிர பொருளாதார சிக்கலில் இருப்பதாகவும் சென்ற ஆண்டைப் போல் போனசை தரமுடியாதென்றும் கூறி ஊழியர்களின் வயிற்றில் அடித்தது. அதோடு, பயிற்சி பெறாத டிரைவர்களையும்  தனியார் பேருந்துகள், வேன்களையும் களமிறக்கியது. வேறுவழியில்லாமல், போக்குவரத்துத் துறையினர் தங்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றனர். இந்த தனியார் மயமாக்கத்தை எதிர்த்து பல எதிர்ப்புகள் கிளம்பியது நினைவிருக்கலாம்.  உண்மையில், இதில் எந்த பொருளாதார சிக்கலும் இல்லை.

போக்குவரத்துத்துறையை தனியார்மயமாக்குதல் என்பது உலகவங்கி, மத்திய அரசு மற்றும் அதன்  தாராளமயமாக்கல் கொள்கையின் ஒரு அங்கமே. அதனை செயல்படுத்த ஜெயலலிதா போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை பயன்படுத்திக்கொண்டார். இன்றும் அதில் பெரிய மாற்றமில்லை. பல ஆண்டுகளாக புதிய ஊழியர்களை நியமனம் செய்வதில்லை. பெரும்பாலோனார் ஒப்பந்த தொழிலாளர்களாகவே நீடிக்கின்றனர். அதோடு, போக்குவரத்து கழகங்களின் வளர்ச்சிக்கு எந்த நிதியும் கிடையாது. இது, அரசே திட்டமிட்டு பொதுத்துறையை ஒழிக்கிறது என்பதையே காட்டுகிறது.

இந்த தனியார்மயமாக்கம் போக்குவரத்துத்துறை ஊழியர்களின் குடும்பங்களையும், பொதுபோக்குவரத்தை நாடும் அன்றாடங்காய்ச்சிகளையும்தான் பெருமளவு பாதிக்கிறது. பலருக்கு விஆர்எஸ் திட்டங்கள் கொடுத்தாலும் அது நிரந்தர வேலை மற்றும் ஊதியம் ஆகாது. அது ஒரு ஆட்குறைப்பு நடவடிக்கை மட்டுமே. அதோடு, இது பொதுமக்களை பாரதூரமாக பாதிக்கும் ஒரு நடவடிக்கை.

தோராயமாக, 25 லட்சம் பள்ளி/கல்லூரி மாணவர்கள் இலவச பஸ் பாஸ்களை பயன்படுத்துகின்றனர். மேலும், மாற்றுத்திறனாளிகள் , உடல்நலக்குறைபாடு உள்ளோர், வயதானவர்கள் என்று பலருக்கும் பேருந்தில் சலுகைகள் உண்டு. தனியார் மயமாக்கல் இதனை பாதிப்பதோடு அவர்களுக்குள் இருக்கும் தொழில் முறை போட்டியால் சாலை விபத்துகளையும் அதிகரிக்க காரணமாகிறது. தனியார் பேருந்து முதலாளிகளுக்கு லாபம்தான் முக்கியமேயொழிய லாபமற்ற ரூட்களை தேர்ந்தெடுத்து மக்களுக்கு சேவை செய்வது நோக்கமல்ல. அதோடு பேருந்து கட்டணங்களும் அவ்வப்போது அதிகரிக்கும். போக்குவரத்துத்துறையை முற்றிலும் அரசே எடுத்து நடத்தினால் நஷ்டம் வர வாய்ப்பே இல்லை.

தனியார்பேருந்து முதலாளிகள் வருடா வருடம் புதிய புதிய பேருந்துகளை சொகுசான பேருந்துகளை வாங்கிய வண்ணம் உள்ளனர். எப்படி?

எ.கா-ஆக, சென்னையிலிருந்து மதுரை செல்லும் ஒரு பேருந்தின் விவரம் கீழ்வருமாறு:

வரவு:

சராசரி இருக்கைகள்                 34

சராசரி கட்டணம் ஒரு நபருக்கு      ரூ.600

ஒரு நாள் சராசரி வருமானம்      ரூ.20,400

சுமை ஏற்றுவதால் வருமானம் ஒரு நாளைக்கு ரூ.10,000

சாராசரி நாள் வருமானம்             ரூ. 30,400

சராசரி மாத வருமானம்               ரூ.9,12,000

சராசரி ஆண்டு வருமானம்       ரூ.1,09,44,000

செலவு:

ஓட்டுநர் ஊதியம் ஒரு நாளைக்கு      ரூ.300

உதவியாளர் ஊதியம் ஒரு நாளைக்கு  ரூ.200

டீசல் செலவு                ரூ.5,100

பழுதுபார்க்கும் செலவு              ரூ.1,500

ஒரு நாள் சராசரி செலவு               ரூ.7,100

ஒரு மாத சராசரி செலவு              ரூ.2,13,000

ஒரு ஆண்டு சராசரி செலவு            ரூ.25,56,000

சராசரி பேருந்தின் மதிப்பு        ரூ.45,00,000

சராசரி பேருந்து பயண வரிச் செலவு   ரூ.20,00,000

சராசரி மொத்த செலவு           ரூ.90,56,000

சராசரி ஆண்டு லாபம் ரூ.18,88,000

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், ஆந்திரா போன்ற மாநிலங்களில் போக்குவரத்து இதே போல்  தனியாரிடம் விடப்பட்டது. அந்த மாநிலங்களில் என்ன நடந்தது என்பதை எம்.கே தாமஸின் Urban Bus Transport in India: Half a Century’s Stride புத்தகத்தில் அறியலாம்.  அரசாங்கத்தைவிட நல்ல சேவையை மக்களுக்கு அளிப்பதாக கூறி தனியாரிடம் ஒப்படைத்தாலும் இம்முடிவு எவ்வளவு தவறானது என்பதை அவர்கள் ஒரு கட்டத்தில் உணர்ந்தார்கள்.

தனியார்முதலாளிகள் லாபநோக்கோடு செயல்பட்டதில் பொதுமக்களின் பாதுகாப்பை கண்டு கொள்ளவில்லை. இந்த மாநிலங்களில் மக்கள் போக்குவரத்துத் துறையை அரசாங்கமே எடுத்து நடத்த வேண்டுமென்று வலியுறுத்தியதாக கூறுகிறார் அவர்.

எனில், தமிழ்நாட்டிலும் அது சாத்தியமே. போக்குவரத்து ஊழியர்களும், மக்களும் கரம் கோர்த்து போராடவேண்டிய தேவை இங்கு இருக்கிறது. அரசியலற்ற தொழிற்சங்கங்களாக பிரிந்து அடித்துக்கொள்ளாமல் ஊழியர்கள் தங்கள் உரிமையை மீட்டெடுக்கவேண்டும், அதோடு, மக்களும் தங்களது பொதுச்சொத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் அரசாங்கத்தை தட்டிக் கேட்க வேண்டும். தனியார் பேருந்து முதலாளிகள் தங்களது லாபத்துக்காக பொதுமக்களின் உயிரை பணயம் வைப்பதை உணர்ந்து ஒன்றாக திரள வேண்டும்.

இந்த கோர விபத்துகளை, சுரண்டலை தடுக்க இது ஒன்றுதான் வழி.

______________________________________________________

– வினவு செய்தியாளர்கள்

­­­­­­­­­­­­­­_____________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

சமச்சீர் கல்வி போராட்டம்: தடியடி, 600 பேர் கைது!!

சமச்சீர் பொதுப்பாடத்திட்டத்தை ஒழித்துக்கட்டும் நோக்கில் அதற்கு எதிரான அத்தனை சதிவேலைகளையும், நீதிமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் மும்முரமாகச் செய்து வரும் பாசிச ஜெயா அரசுக்கு எதிராக தொடர்ந்து போராடிவரும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, சென்னை, தாசப்பிரகாஷ் ஓட்டல் அருகே, மாணவர்கள், பெற்றோரை அணிதிரட்டி போர்க்குணமிக்க மறியலை இன்று(1.8.2011)  நடத்தியது.

காலை 10.30 மணிக்கு தாசப்பிரகாஷ் ஓட்டல் அருகே சிக்னலில் மறியல் நடத்துவதென முடிவு செய்து, அப்பகுதியைச் சுற்றிலும் நேற்றே வீச்சான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டதால் நூற்றுக்கணக்கான பெற்றோர் திரண்டு வந்தனர். சரியாக 10.30 மணிக்கு பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த தோழர்களும், மாணவர்களும் பேருந்திலிருந்து இறங்கி, முழக்கமிட்டபடியே  சாலையை மறித்து நின்றனர். இதே சமயத்தில் சந்தோஷ் நகர் பகுதியிலிருந்து நூற்றுக்கணக்கான பெற்றோர், போலீசின் தடையை உடைத்து கொண்டு, சாலைக்கு வந்து, மாணவர்களுடன் கரம் கோர்த்தனர்.

பு.மா.இ.மு சென்னைக்கிளை செயற்குழுத் தோழர்கள் கார்த்திக்கேயன், நெடுஞ்செழியன், மாநில அமைப்புக்குழு உறுப்பினர் தோழர் சரவணன் ஆகியோர் தலைமையில் தொடங்கிய இம்மறியலால் நாற்புறமும் போக்குவரத்து ஸ்தம்பித்ததைக் கண்ட போலீஸ் உடனடியாக செய்வதறியாது திகைத்தது. 10 நிமிடத்திற்குள் போக்குவரத்து மேலும் தேங்குவதுடன் போராட்டத்தில் ஈடுபடுவோர் எண்ணிக்கையும் அதிகரித்ததால், உடனடியாக முன்னணியாளர்களைக் குறிவைத்துக், களத்தில் இறங்கியது போலீஸ். சிவப்பு சட்டை அணிந்தவர்களை எல்லாம் தரதரவென இழுத்து வந்து வேனில் ஏற்ற முயல, தோழர்கள் வர மறுத்தபோது லத்தியால் அடித்தும், வேனில் படியில் நின்று முழக்கமிட்டவர்களை தாக்கியும் கட்டுப்படுத்த முயன்று தோற்றனர். தோழர்கள் ஏற்றப்பட்ட வேனை, மற்றவர்கள் முற்றுகையிட்டு மறித்ததும், அங்கிருந்த பள்ளி மாணவர்களை கழுத்தைப் பிடித்துத் தள்ளியும், சங்கிலிபோல் நிற்பவர்களை உடைக்கவும் முயன்றது போலீசு.

ஆனால் பள்ளி மாணவர்களோ, “முதல்ல எங்களுக்கு புத்தகம் கொடு” , “எங்கள எதுக்கு இழுக்கற, ரோட்டுக்கு வரவச்ச கவர்மெண்ட போய் கேளு” என வாக்குவாதம் செய்து வாயடைத்தனர். ஏறத்தாழ 100 க்கும் மேற்பட்ட போலீஸ் குவிக்கப்பட்டு, ஒவ்வொரு தோழரையும் மிருகத்தனமாக இழுத்துச் சென்றும், சிலரை 5,6 பேர் சேர்ந்து இழுத்துச் சென்றும் வேனில் ஏற்றினர். நாலாபுறமும் வாகன நெரிசல், பொதுமக்கள் மத்தியில் மேலும் போலீசும், வேனும் கொண்டுவரப்பட்டு பெற்றோர்கள், மாணவர்கள், தோழர்கள் என 600க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் வெவ்வேறு இடங்களில் மூன்றாகப் பிரித்து வைத்ததோடு, தோழர்கள் மீது வழக்கு பதிவு செய்து ரிமாண்டு செய்யவும் முயன்று வருகிறது, பாசிச ஜெயா அரசு. மீண்டும் ஒரு முறை புழல் சிறையைப் பிரச்சார மேடையாக்க தயாராகிவிட்டனர் பு.மா.இ.மு தோழர்கள்.

உச்சநீதிமன்றத்தில் சமச்சீர் வழக்கு முடிவை நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், தமிழக அரசு தீயாய் வேலை செய்து தடைபெற துடிக்கிறது. ஆனால் தமிழக அரசின் திமிரை உடைக்கத் தயாராகி வருகின்றனர், பு.மா.இ.மு தலைமையிலான மாணவர்கள்.  அறியப்பட்ட பெரிய ஒட்டுக்கட்சிகளெல்லாம் வாய்மூடி மௌனமாக இருக்கும் நிலையில் தோழர்கள் அன்றாடம் போராட்டத்தை வீச்சாக வளர்த்து வருகின்றனர். புரட்சியாளர்களின் தலைமையில் அணிதிரளும் இந்த மாணவப்படை பாசிச ஜெயாவின் திமிருக்கு ஆப்பு வைப்பது உறுதி.

படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்

108 ஆம்புலன்ஸ் – சேவையா? சுரண்டலா??

23

108 ஆம்புலன்ஸ்

  • விபத்துக்களினாலோ, நோய்களினாலோ, மனிதர்கள் உயிருக்குப் போராடுகின்ற மிக ஆபத்தான சூழ்நிலைகளிலே அவர்களைக் காப்பாற்றுகிற மிகவும் பொறுப்பு வாய்ந்த பணியினை அர்ப்பணிப்போடு செய்யும் பணியாளர்கள் மூலமாக மிகக் குறுகிய காலத்தில் தமிழக மக்களின் மனதில் மிக ஆழமாகப் பதிந்துவிட்ட ஒரு எண் 108.
  • 108-ன் மூலம் மக்களுக்குக் கிடைக்கிற சேவைகளை ஏற்கனவே நீங்கள் அறிவீர்கள். கடந்த தி.மு.க அரசு குறிப்பாக கருணாநிதி, ஏதோ தெருத்தெருவாக தானே சென்று செய்துகொண்டிருக்கிற மிகப்பெரும் சேவை என்பது போல 108 குறித்து விளம்பரம் செய்து கொண்டார். தற்போதைய ஜெயாவோ, இதை இன்னும் சிறப்பானதாக ஆக்கப் போவதாக, அதாவது தானே வீடுவீடாகச் சேவை செய்யப்போவது போலக் கூறியிருக்கிறார்.
  • ஆனால், இந்த மகத்தான சேவைகளை மக்களுக்குத் தரக்கூடிய 108-ன் ஊழியர்கள் நிர்வாகத்தால் கசக்கிப் பிழியப்படுகின்ற துயரமும், இந்தச் சேவையைப் பயன்படுத்தி ஜி.வி.கே.இ.எம்.ஆர்.ஐ (G.V.K.E.M.R.I) என்கிற தனியார் நிறுவனம் அடிக்கும் கொள்ளையும் யாரும் அறியாதது.
  • அவசரகால மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி மையம் (Emergency Management and Research Institute- EMRI) என்கிற நிறுவனத்தை அவசர உதவிக்காக அழைக்கும் தொலைபேசி எண்தான் 108. இந்த அவசர உதவி மையமானது, தமிழகம் முழுவதும் 411 வாகனங்களை ஊருக்கு ஊர் நிறுத்தி வைத்திருக்கிறது. நாளொன்றுக்கு  சுமார் 3000 க்கும் மேற்பட்டவர்களுக்கு அவசர சிகிச்சை அளித்து வருகிறது.
  • திடீரென நடைபெறுகின்ற சாலைவிபத்துக்கள், மாரடைப்பு, தீக்காயங்கள், நோய்களினால் உருவாகின்ற ஆபத்துக்களுக்கான அவசர உதவிகள் மற்றும் பிரசவகால அவசரங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான மருத்துவ சிகிச்சைகளுக்கான அவசரஉதவிகளை 108-ன் ஊழியர்கள் செய்கிறார்கள்.
  • விலை உயர்ந்த நவீனக்கார்கள் எதிலும் இல்லாத; வேறு எந்த தனியார் மற்றும் அரசு மருத்துவமனை ஆம்புலன்சிலும் இல்லாத; அவ்வளவு ஏன், பெரும்பாலான தனியார் மருத்துவக் கிளினிக்குகளிலும் இல்லாத, அதி நவீன மருத்துவக்கருவிகள்; உயிர் காக்கும் மருந்துகள்; மற்றும் சிறப்புப் பயிற்சி பெற்ற அவசரகால மருத்துவ நிபுணர்களோடு ஒரு நவீன மருத்துவமனைக்கு இணையாக 108- வாகனங்கள் இயங்கி வருகின்றன.
  • ஒரு 108- வாகனத்தில் ஒரு ஓட்டுனர்(pilot), மற்றும் ஒரு அவசரகால மருத்துவப் பணியாளர் (Emergency Medical Technician) ஆக, இரண்டு ஊழியர்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் ஒரு நாளைக்கு ஒரு ஷிப்ட் (shift) வேலை செய்கிறார்கள். ஒரு ஷிப்ட் என்பது காலை எட்டு மணி முதல் இரவு எட்டு மணி வரையிலான பனிரெண்டு மணி நேரமாகும். ஷிப்ட் முடியப்போகும்போது ஏதேனும் ஒரு கேஸ் வந்தால் அதையும் முடித்துவிட்டுத்தான் இவர்கள் வீட்டிற்குச் செல்கிறார்கள். இதனால் ஏற்படும் கூடுதலான வேலைக்கான கூடுதல் சம்பளம் எதுவும் இவர்களுக்குக் கிடையாது. மேலும் இதற்கான நேரத்தை இவர்கள் அடுத்த ஷிப்ட் வரைக்குமான ஓய்வு நேரத்தில்தான் கழித்துக்கொள்கிறார்கள். அதாவது தொடர்ச்சியாக அடுத்த ஷிப்டிற்கு மீண்டும் மறுநாள் காலை எட்டு மணிக்கு வேலைக்கு வந்து விடுகிறார்கள்.
  • மிகச்சரியாகக் காலை எட்டு மணிக்குத் துவங்கும் முதல் ஷிப்டில் பணியாற்ற வீட்டிலிருந்து 108-வாகனம் இருக்கும் இடத்திற்கு வரும் இவர்களுக்கு பயணப்படியோ, பஸ்பாஸோ வழங்கப்படுவது கிடையாது. மேலும் இவர்களின் சொந்த ஊரிலோ, அல்லது அதன் அருகாமையிலுள்ள ஊர்களிலோ, இவர்களுக்கு பணி தருவதும் கிடையாது. தமிழகத்தில் எங்கு போய் வேலைசெய்யச் சொன்னாலும் அங்கே இவர்கள் போயாக வேண்டும்.
  • வேலைக்கு வந்ததும் இ.எம்.டி யாக வேலை பார்ப்பவர்  முதல் வேலையாக மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், மற்றும் பதிவேடுகளைச் சரிபார்த்து பெற்றுக் கொள்கிறார். அதுபோல ஓட்டுனரும் வழக்கமான சோதனைகளைச் செய்து வண்டியை பொறுப்பெடுத்துக் கொள்கிறார். எவ்வளவு போக்குவரத்து நெருக்கடியிலும், மோசமான சாலைகளிலும் சிரமங்கள், நெருக்கடிகளைச் சமாளித்து சாமர்த்தியமாகவும், துரிதமாகவும் வாகனங்களை  ஓட்டக்கூடிய இளைஞர்கள்தான் இப்பணிக்கு நியமிக்கப்படுகிறார்கள். ஆனால், முறையான பராமரிப்பு எதுவும் வாகனங்களுக்கு நடைபெறுவது இல்லை. டயர், பிரேக் உள்ளிட்ட முக்கியப் பாகங்கள் கூட பராமரிக்கப்படாமல் இருப்பதால் ஏராளமான வாகனங்கள் அடிக்கடி விபத்திற்குள்ளாகின்றன.
  • 108 வாகனமானது, ஒவ்வொரு ஊரிலும் உள்ள  போலீஸ் ஸ்டேசன், அரசு மருத்துவமனை, ஊரின் மையமான பகுதி, ஒரு பொதுவான இடம் ஆகிய ஏதேனுமொரு இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். 108-ன் ஊழியர்கள் எப்போதும் வண்டியின் உள்ளேதான் இருக்க வேண்டும் என்பது நிர்வாகத்தின் விதி. இவர்களுக்கு வாகனத்திற்கு வெளியே ஓய்விடமோ, கழிப்பறை ஏற்பாடோ கிடையாது. இதனால்ஈ.எம்.டி-க்களாக வேலை செய்கின்ற பெண்கள் படும்பாடு தனித்துயரம்.
  • வேலை நேரத்தினிடையே, தேனீர் நேரமோ, உணவு இடைவேளையோ கிடையாது. வண்டியினுள்ளேயே அமர்ந்துகொண்டுதான் சாப்பிடுகிறார்கள். அப்படிச் சாப்பிடத்துவங்கும் போது, அழைப்பு வந்தால் ஒரு நிமிடத்திற்குள் புறப்பட்டு விடுகிறார்கள். அடுத்த முப்பது நிமிடத்திற்குள் சம்பவ இடத்திற்குச் சென்று விடுகிறார்கள். பாதிக்கப்பட்டவரைப் பரிசோதனை செய்கிறார்கள். அவரைச் சுற்றி உணர்ச்சி வசப்பட்ட நிலையிலே கூடியிருக்கிற உறவினர்களைச் சமாளிக்கிறார்கள். பாதிக்கப்பட்டவரை வண்டியில் ஏற்றுகிறார்கள். ஒடிக்கொண்டிருக்கும் வண்டியிலேயே பாதிக்கப்பட்டவருக்கு அவசர சிகிச்சை அளிக்கிறார்கள்.  குறிப்பிடப்பட்டுள்ள மருத்துவமனைக்கோ, அல்லது தகுந்த மருத்துவமனைக்கோ, அல்லது பாதிக்கப்பட்டவர் அல்லது அவருடைய உறவினர்களின் விருப்பப்படியான மருத்துவமனைக்கோ சென்று சேர்க்கிறார்கள். இதற்குள் பாதிக்கப்பட்டவர் குறித்த தகவல்களைப் பதிவேடுகளில்  பதிவு செய்கிறார்கள். மொத்தம் 22 பதிவேடுகளில் பதிவு செய்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களால் வாகனத்தினில் ஏற்படுகின்ற ரத்தக்கறை, வாந்தி, மலம், மூத்திரம், மற்றும் பிரசவமேற்பட்டால் உண்டாகும் அதன் கழிவுகள் ஆகிய அனைத்தையும் இவர்களே சுத்தம் செய்கிறார்கள். நாளொன்றுக்கு சுமாராக ஐந்திலிருந்து பத்து வரையிலான நபர்களைக் கையாளுகிறார்கள். இவர்களுக்கு எந்தவிதமான பாதுகாப்புக் கருவிகளோ, மருந்துகளோ வழங்கப்படுவதில்லை. ஒருமுறை கழட்டி மாட்டினால் கிழிந்துவிடுகிற அளவிற்கு மட்டரகமாகத் தயாரிக்கப்பட்ட கையுறையைத்தான் இவர்கள் பயன் படுத்துகிறார்கள்.
  • இப்படி கூடுதலான பணிச்சுமையிலும், பொறுப்பாகப் பணிசெய்யும் இவர்களுக்கு மிகவும் துயரத்தைக் கொடுப்பது இவர்களின் வேலைப்பளு அல்ல, மாறாக, இவர்களைக் கொடுமையாகச் சுரண்டுகிற நிர்வாகம்தான்.
  • 108-எனும் இந்த அவசரகால மருத்துவச் சேவையைச் செய்வதற்காக தமிழக அரசு ஜி.வி.கே.ஈ.எம்.ஆர்.ஐ எனும் நிறுவனத்துடன் ஓர் ஒப்பந்தத்தை செய்துள்ளது. அது சாதாரண ஒப்பந்தமல்ல, நாம் அடிக்கடி செய்தித்தாள்களிலே படிக்கிறோமே அந்த புரிந்துணர்வு ஒப்பந்தம். அது என்ன புரிந்துணர்வு ஒப்பந்தம்? இலாப, நட்டமில்லாமல் சேவை நோக்கோடு அரசும் தனியார் நிறுவனங்களும் செய்து கொள்கின்ற ஒப்பந்தத்தைத்தான் புரிந்துணர்வு ஒப்பந்தம் என்று கூறுகிறார்கள். ஒரு மக்கள் நல அரசு என்று சொல்லிக்கொள்கின்ற அரசு அப்படி ஒரு ஒப்பந்தம் போட்டு சேவை செய்வதை நாம் புரிந்து கொள்ளலாம். ஆனால், ஒரு முதலாளி எப்படி சேவை செய்கின்ற ஒரு ஒப்பந்தத்திற்கு முன் வருவான்? விற்க முடியுமென்றால், அதுவும் லாபத்தோடு விற்க முடியுமென்றால் தன் மனைவியையும், பிள்ளைகளையும் கூட விற்கத் துடிப்பதுதானே முதலாளித்துவத்தின் சிறப்பியல்பு. உண்மை இவ்வாறு இருக்க எதனால் அந்த முதலாளி  சேவை செய்ய முன் வந்தார்? 108-ற்காக சேவை செய்ய ஒப்பந்தம் போட்டுள்ளவர் ஜி.வி.கே.ஈ.எம்.ஆர்.ஐ (G.V.K.E.M.R.I) என்னும் நிறுவனத்தின் முதலாளியான  ஜி.வி.கிருஷ்ணராம ரெட்டி என்பவர்.
  • இந்த சேவைக்காக, ஆண்டு தோறும் அரசிடமிருந்து ஜி.வி.கே.யின் முதலாளி பெறுகிற பராமரிப்புத் தொகை மட்டும் ரூபாய் நாலாயிரத்து இருநூறு கோடி. இது தவிர, பிரசவம் நடந்தால் இரண்டாயிரம் ரூபாயும், மற்ற பிரச்னைகளுக்கு ஆயிரத்து ஐநூறு ரூபாயும் பெற்றுக் கொள்கிறார். சரி, மொத்தமாக ஜி.வி.கே.ஈ.எம்.ஆர்.ஐ நிறுவனத்தின் வரவு, செலவு எவ்வளவு?

முதலில் செலவைப் பார்ப்போம்.

ஒரு மாதத்திற்கு ஒரு வாகனத்திற்கு ஆகும் செலவு:

எரிபொருள்                                                                    ரூ. 20,000

பராமரிப்பு                                                                       ரூ.    5,000

2 பைலட்டுகள் சம்பளம்                                        ரூ.   11,400

2 இ.எம்.டி. களுக்கான சம்பளம்                        ரூ.   13,000

வார விடுமுறையில் மாற்றம் செய்யும்

பைலட் மற்றும் இ.எம்.டிக்கான சம்பளம   ரூ.     5,000

மருந்து மற்றும் கருவிகளுக்கான செலவு  ரூ.     2,000

இதர செலவுகள்                                                           ரூ.     3,600

ஆக, மொத்தம்                                                              ரூ. 60,000

400 வாகனங்களுக்கு, 400 X 60,000 =            ரூ. 2,40,00,000.

ஒரு ஆண்டிற்கு, 12 X 2,40,00,000 =                ரூ. 28,80,00,000.

இனி வரவாக அரசிடம் பெறும் கட்டணத்தைப் பார்க்கலாம்.

மொத்தமுள்ள 411 வாகனங்கள் மூலமாக, ஒரு நாளைக்கு வரும் மொத்த கேஸ்கள் சுமார் 3,000.

ஒரு கேஸுக்கு அரசிடம் பெறும் கட்டணம் ரூபாய் குறைந்தபட்சமாக ரூபாய் 1,500 என வைத்துக் கொண்டால்
ஒரு நாளைக்கு 3,000 X 1,500= 45,00,000 ரூபாய்
ஒரு மாதத்திற்கு 30 X 45,00,000= 13,50,00,000 ரூபாய்.
அப்படியானால் ஒரு ஆண்டிற்கு 12 X 13,50,00,000= 162 கோடி ரூபாய்

ஆக, ஒரு ஆண்டிற்கான மொத்த வரவு, செலவு விவரம்:
வரவு         = 162.00 கோடி.
செலவு     =   28.80 கோடி.

ஆக, ஆண்டொன்றிக்கு நிகர லாபம் 133 கோடியே 20 லட்ச ரூபாய்கள். இது குறைந்த பட்சத்தொகை என்பதை மறந்துவிடக்கூடாது.

இவ்வளவு லாபம் அடைகின்ற முதலாளி, ஈ.எம்.டி.க்குத் தரும் மாதச்சம்பளம் வெறும் 6,310 ரூபாய். பைலட்டுக்குத் தருகிற மாதச்சம்பளம் வெறும் 6,000 ரூபாய் மட்டும்தான். இதுதான் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வரவு செலவுப் பின்னணி. உள்ளூர் புரிந்துணர்வு ஒப்பந்தமே இந்த லட்சணமென்றால் மாதத்திற்கொன்றாக பன்னாட்டுக் கம்பனிகளிடம் போடப்படுகின்ற மத்திய, மாநில அரசுகளின் புரிந்துணர்வு ஒப்பந்தமெல்லாம் என்ன யோக்யதையில் இருக்குமென நாமே யூகித்துக்கொள்ளலாம்.

108 ஒரு அரசு நிறுவனமா?

108 வாகனத்தில் தமிழக அரசின் சின்னம் இருப்பதால் 108 ஒரு அரசு நிறுவனமென்றும், 108 வேலை ஒரு அரசு வேலை என்றும் மக்கள் நம்புகிறார்கள் அப்படி நம்பித்தான் அதில் வேலைக்கும் சேருகிறார்கள். ஆனால், 108 வேலை ஒரு தனியார் நிறுவன வேலைதான். 2008 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி அண்ணாத்துரை பிறந்த நாளில் 108 சேவை தொடங்கப்பட்டபோது, மிகப்பிரபலமான சத்யம் கம்ப்யூட்டர்ஸ்தான் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருந்தது. பின்னர் சத்யம் போண்டியாகிப்போய் மஞ்சள் நோட்டீஸ் கொடுத்ததால் சத்யம் முதலாளியின் மச்சானான ஜி.வி. கிருஷ்ணராம ரெட்டிக்கு இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மாற்றப்பட்டிருக்கிறது. தமிழகம் உள்பட மொத்தம் 18 மாநிலங்களிலே ஜி.வி.கே இது போன்ற சேவைகளை நடத்திவருகிறான்.

ஊழியர்களின் பரிதாப நிலமை:

பணியில் சேரும் ஊழியர்களை முதல் ஒரு வருட காலத்திற்குப் பல மாவட்டங்களிலும் அதன் பின்னர் சொந்த மாவட்டத்திற்கும் பணியாற்ற  அனுப்பப்படுகிறார்கள். ஆனால், வாகனங்களில் எதாவது ஒரு பிரச்னை ஏற்பட்டால் முதலில் நிர்வாகம் செய்வது ஊழியர்களை இடம் மாற்றுவதுதான். ஊழியர்களை அதிகாரிகளுக்கு அடிமைகளாக்கவே நிர்வாகம் நிர்ப்பந்திருக்கிறது. வேலையில் முறையாக இருந்து, அதிகாரிகளின் கேள்விகளுக்கு முறையாகப் பதில் சொன்னாலோ, அல்லது அவசியமான கேள்விகள் எதையும் கேட்டாலோ, உடனடியாக மாவட்டத்தலைமை அலுவலகத்திற்கு வரவழைக்கிறார்கள். தானே தவறு செய்ததாக நிர்ப்பந்தம் செய்து மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். அல்லது இனிமேல் தவறு செய்யக்கூடாது என்று எச்சரிக்கைக் கடிதம் கொடுக்கிறார்கள். இவ்வாறு மூன்று எச்சரிக்கைக் கடிதங்கள் பெறுகின்ற ஊழியரை வேலையை விட்டு நீக்குகிறார்கள்.

அதிகாரிகளின் அயோக்கியத்தனம்:

இப்படியெல்லாம் ஊழியர்களிடம் கெடுபிடியாகவும்  கறாராகவும் நடந்து கொண்டு, 40,000 முதல் 50,000 ரூபாய்களுக்கும் கூடுதலாகச் சம்பளம் வாங்கி, ரெட்டியிடம் நல்லபேரை எடுக்கிற ஜி.வி.கே அதிகாரிகளின் அசல் சேவையுள்ளத்தைச் சிறிது பார்க்கலாம்.

1) வாகனங்களுக்கு மாதாமாதம் வழங்குகின்ற மருந்து மற்றும் கருவிகளைக் குறைந்த எண்ணிக்கைகளில் வாங்கி அதிமான எண்ணிக்கையில் வாங்கியதாகப் பில் எழுதிப் பணம் திருடி ரெட்டியை ஏமாற்றுகிறார்கள்.

2) அப்படியே வாங்கப்படும் மருந்துகளில் காலாவதியான மற்றும் காலாவதித் தேதிக்கு மிக அருகில் இருக்கும் மருந்துகளே மிக மிக அதிகமாக இருக்கிறது. இதன் மூலமாகவும் பணம் சுருட்டுகிறார்கள்.

3) வாகனங்களில் ஏற்படும் சிறு சிறு குறைபாடுகளுக்கும் பல ஆயிரக்கணக்கான தொகைக்கு பில்எழுதி ரெட்டியை ஏமாற்றுகிறார்கள்.

4) ஊழியர்களின் சம்பளங்களில் பிடித்தம் செய்யப்படுகின்ற பிராவிடண்ட் தொகை மற்றும் ஈ.எஸ்.ஐ-த் தொகைகளை வேலையிலிருந்து நின்று விட்ட எந்த ஊழியர்களுக்கும் இதுவரை வழங்கியதில்லை.அதிகபட்சமாக மூன்று ஆண்டுகளுக்கு மேல் எந்த ஊழியர்களையும் வேலை செய்யவும் விடுவதில்லை.

இந்தப் புரிந்துணர்வுக்குப் பிறந்த அதிகாரிகள்

பிரசவக்காரியங்களுக்கு அதிகக் கட்டணம் கிடைக்கிறது என்பதால் பிரசவக் கேசுகளாக ஏத்துங்கள் என மானங்கெட்டதனமாக ஊழியர்களை  நிர்ப்பந்திக்கிறார்கள்.

  • திருச்சி டோல் கேட் பகுதியில் 108 பைலட் ஒருவர் வேறு வாகனத்தால் மோதப்பட்டு உயிரிழந்தார். அவரின் குடும்பத்திற்கு ஜி.வி.கே ரெட்டி எந்த ஒரு உதவியையும் செய்யவில்லை. ஆனால், அவரது குடும்பத்திற்காக, பிற ஊழியர்கள் திரட்டிக் கொடுத்த தொகையான 3,25,000 ரூபாயைத் தானே கொடுத்ததாக ஜி.வி.கே ரெட்டி பத்திரிகைகளில் செய்தி கொடுத்தார். அவ்வளவு யோக்கியமான ரொட்டி அவர். சொந்த விமானத்தில் மாநிலம் மாநிலமாகப் பறக்கிற அவரது யோக்கியத்தனமும் அப்படித்தான் பறக்கிறது. சரி, ரெட்டியின் யோக்கியதையே இப்படி இருக்கும் போது, அவனைத் தாஜா செய்து வேலை பார்க்கின்ற அதிகாரிகள் மட்டும் யோக்கியனாக இருப்பானா என்ன?
  •  சமச்சீர்க் கல்வித் திட்டம் போன்ற கருணாதியின் சிறந்த பல திட்டங்களை ஜெயலலிதா காழ்ப்புணர்வோடு ரத்து செய்வதாக பல நடுத்தட்டுகள் தமிழகத்தில் அங்கலாய்த்துக் கொள்கின்றன. இதோ, ஜிவிகே ரெட்டியென்னும் கொள்ளையனுக்கு மக்கள் வரிப்பணத்தை அள்ளி ,அள்ளிக்கொடுக்கிறது கருணாநிதி போட்ட 108 புரிந்துணர்வு ஒப்பந்தம். அதை ரத்து செய்வாரா ஜெயலலிதா? மாட்டார். ஆனால் என்ன செய்திருக்கிறார் தெரியுமா? குழந்தைகளுக்கான 108 என்று அதை விரிவாக்கி இன்னும் கூடுதலாக இரண்டு வண்டிகள் வாங்கிக் கொடுத்திருக்கிறார். இதைத் தமிழ்நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யப் போவதாகவும் அறிவித்திருக்கிறார்.

இதுவரை 108-ன் பின்னால் மறைந்துகிடக்கிற ஊழியர்களின் துயரத்தையும், ஜிவிகே ரெட்டி நிறுவனம் அடிக்கிற கொள்ளையையும் பார்த்தோம்.

  • 108-ன் ஊழியர்களின் துயரங்களுக்கு ஜெயலலிதா முடிவுகட்டுவாரா? சென்ற ஆட்சியின் போது சாலைப் பணியாளர்களையும், அரசு ஊழியர்களையும் நடத்தியதைப் பார்க்கும் போது, அவர் எதை முடிவு கட்டுவார் என்பது யாருக்கும் தெரியாது. ஆக, 108-ன் பணியாளர்கள் தங்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
  • உயிரைப் பயணம் வைத்து பாதிக்கப்பட்டவரைக் காப்பாற்ற வாகனம் ஓட்டும் பைலட்டுகளும், பாதுகாப்பு வசதியில்லாததால், பாதிக்கப்பட்டவர் மூலமாக, தனக்கு ஏதேனும் நோய் தொற்றுமோ எனக் கவலைப்படாமல் பணியாற்றுகின்ற ஈ.எம்.டிக்களும் ஆக, ஒட்டுமொத்தமாக 108-ன் பணியாளர்களும் எப்படி இந்த பிரச்சினையைப் பார்க்கவேண்டும்?
  • 108 ஊழியர்களின் பிரச்சினை அவர்களுக்கு மட்டுமே உரிய பிரச்சினை அல்ல. என்று இந்தியாவில் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற கொள்கை கொண்டுவரப்பட்டதோ, அன்றிலிருந்து  விவசாயிகள், தொழிலாளிகள், நெசவாளர்கள், சிறுவியாபாரிகள், மீனவர்கள், மாணவர்கள், என பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிற பல்வேறு மக்கள் பிரிவினரின் பிரச்சினையோடு இணைந்ததுதான், 108 ஊழியர்களின் பிரச்சினை. இதை 108 -ன் ஊழியர்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். எனவே 108-ன் ஊழியர்களாக இருந்து போராடுகிற அதே வேளையில், இதே காரணத்தினால், பாதிக்கப்பட்டுப் போராடிக் கொண்டிருக்கிற மக்களோடும் அவர்கள் இணைந்து போராட வேண்டும். அப்போது மட்டுமே நிரந்தரமாக இப்பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டமுடியும். அதற்கு முதலில் சரியானதொரு சங்கத்தை அவசியம் நீங்கள் உண்டாக்கியாக வேண்டும்.
  • அந்தச்சங்கம் 108 ஊழியர்களின் துயரங்களை, கோரிக்கைகளை மக்களிடம் கொண்டு செல்லவேண்டிய அதே நேரத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக நடத்தப்படுகின்ற பிற போராட்டங்களிலும் பங்கேற்க வேண்டும்.

108-ன் ஊழியர்களாகிய உங்கள் மீது மக்கள்   கொண்டிருக்கும் நல்லெண்ணமும் மதிப்பும் நீங்கள் அவர்களுக்காகப் போராடும்போது உங்களது போராட்டங்களுக்கான ஆதரவாக அது வெளிப்படும்.

சங்கமாகுங்கள்!
மக்களிடம் செல்லுங்கள்!
மக்களுக்காக நில்லுங்கள்!

__________________________________________________________________

– கடற்கரைத்தோழன்.

___________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

ஆசிரியர் அடித்து மாணவன் கொலை! போராடிய தோழர்கள் கைது!

தி.மு.க பிரமுகர் – பினாமியான சாமிக்கண்ணு என்பவருக்கு சொந்தமான ஏழுமலை தொழில் நுட்பக் கல்லூரி விழுப்புரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இக்கல்லூரியில் புதுச்சேரியைச் சேர்ந்த பிரபாகரன் வயது 19, ஆட்டோமொபைல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இவரது வகுப்பாசிரியராக பணியாற்றும் குணசேகரன் தொட்டதுக்கெல்லாம் மாணவர்களை காட்டுமிராண்டித்தனமாக அடிப்பது வழக்கம். அப்படித்தான் 27.7.2011 அன்று கேள்வி கேட்டு பதில் சொல்லவில்லை என்று பிரபாகரனை பளார் என கன்னத்திலும், தலையிலும், கழுத்திலும், வயிற்றிலும் ஆத்திரம் தீர அடித்திருக்கிறார்.

அடிபட்ட வலி தாங்காமல் கண் இருட்டி விழுந்த மாணவனின் மூக்கிலிருந்து இரத்தம் வழிந்தது கண்டு சக மாணவர்கள் அதிர்ச்சியில் சத்தம் போடத் துவங்கினர். பதறிய நிர்வாகம் உடனே மாணவர் பிரபாகரனை சிகிச்சைக்கு கொண்டு செல்வதாக சமதானப்படுத்த முயன்றது. ஆனால் மாணவனைத் தூக்கும்போதே அவன் இறந்து விட்டான் என்பதைத் தெரிந்து கொண்ட மாணவர்கள் முழு கல்லூரியையும் அணிதிரட்டி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் செய்தனர்.

நிர்வாகமோ மாணவன் பிரபாகரன் வலிப்பு வந்து இறந்து விட்டதாகவும் பின்னர் அவன் சாகவில்லை என்று சொல்லியும் கதை கட்டி போராட்டத்தை முடிக்க நினைத்தது. இந்நிலையில் இப்பகுதியில் செயல்பட்டு வரும் பு.மா.இ.மு தோழர்கள் தலையீட்டின் பேரில் போராட்டம் மேலும் தீவிரமடைந்தது.

சுமார் 2 மணிநேரம் நடந்த சாலை மறியலால் போக்கு வரத்து முற்றிலும் முடங்கியது. போலீசும் போக்குவரத்தை மாற்றுப்பாதையில் திருப்பிவிட்டது. பின்னர் ஏராளமான போலீசாரைக் கொண்டு சாலையில் இருந்த மாணவர்களை தடியடி நடத்தி பலரை காயப்படுத்தி விரட்டினார்கள். போராட்டத்திற்கு தலைமை தாங்கிய பு.மா.இ.மு தோழர்கள் எட்டு பேரை பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்திருக்கிறது.

இந்த கைது வழக்கிற்கு அஞ்சாமல் பு.மா.இ.முவும் மாணவர்களும் நீதி கிடைக்கும் வரை போராடுவதாக உறுதி பூண்டிருக்கிறார்கள். இதற்கு முன்னோட்டமாக ஆசிரியர் குணசேகரன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

_________________________________________________________

– புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விழுப்புரம்

___________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

‘தேசபக்தி’யை கற்பழித்த ஜொள்ளு!!

45
ஹீனா ரப்பானி கார் - எஸ்.எம்.கிருஷ்ணா
எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் ஹீனா

விவர்மாவின் அந்தக்கால அல்ட்ரா மாடர்ன் பட்டுடை உடுத்திய காளிதேவி போன்ற ஷேப்பில் இருக்கும் பாரதமாதாவை பார்த்திருக்கிறீர்களா? இல்லையென்றால் ஆர்.எஸ்.எஸ் அம்பிகளின் வீடுகளுக்குச் சென்றால் தவறாமல் தரிசிக்கலாம். கோவில் சிலைகளில் அம்மணத்தை ஆடையாகக் கொண்டு ஆடிய பழங்குடியான காளி, பாரதமாதாவான கதை தனிக்கதை! ஆனால் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பாரதமாதாவை, பர்தா போட்டு வந்த ஒரு பாகிஸ்தான் தேவதை வென்றுவிட்டாள்! பாரத் மாதா கி நகி! பாக் அழகி கி ஜெய்!

34 வயதானா ஹீனா ரப்பானி கார் எனும் பாகிஸ்தானின் முதல் பெண் வெளியுறவு அமைச்சர், டெல்லி விமானப்படை தளத்தில் (சரி, இந்திய விமானப்படைத் தளத்தில் பாக் விமானம் இறங்கினால் எல்லா இரகசியங்களையும் செல்போனில் சுட்டுவிடுவார்களே என்று யாரும் ஏன் கேட்கவில்லை) இறங்கி வந்து ஒரு பேஷன் ஷோ மங்கை போல கைப்பையை தூக்கிக் கொண்டு நடந்து வந்தாரா…… அவ்வளவுதான் முழு இந்தியாவும் அதன் மனசாட்சியுமான இந்திய ஊடகங்களும் அவுட்! மூன்றாவது அம்பையர், டி.ஆர்.எஸ் இதிலெல்லாம் சோசோதித்தறிய தேவையில்லாத கிளீன் போல்டு! தேசபக்தியை வீழ்த்திக் காட்டிய அழகு!

தமிழ்ப் பதிவுலகம் நன்கறிந்த ஜொள்ளர்களெல்லாம் சினிமா நடிகைகளை ஜொள்ளுவதையெல்லாம் கிண்டலடித்து வந்த ”ஹை கிளாஸ்” அம்பிகளெல்லாம் ஹீனா ஜன்னி பிடித்து சமூக வலைத்தளங்களை பிராண்டுகிறார்கள். டிவிட்டரில் இரண்டு நாட்களாக ஹீனாதான் பேரரசியாக கோலேச்சுகிறார். கசாப்பை தூக்கில் போடு, அப்சல் குருவை சுட்டுப்போடு என்று டெம்பிளேட் தேசபக்தி முழக்கங்களை காப்பி அடித்துப் போடும் இந்திய டவிட்டர்கள் இன்று ஹீனாவை மாய்ந்து மாய்ந்து உருகுகிறார்கள். “இந்தியா – பாக் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் பேச்சுவார்த்தையில் எந்தப் பிரச்சினையையும் பேசித் தீர்க்க முடியாது, ஏனெனில் ஹீனா என்றொரு அழகான பிரச்சினை இருக்கும் போது வேறு எதைப்பற்றி பேசுவது?” இது ஒரு டிவிட். எனில் மற்ற ஜொள் (டிவிட்டு) களைப் பற்றி விளக்கத் தேவையில்லை.

  • “பாகிஸ்தான் தனது அழகான முகத்தை இறக்கியிருக்கிறது” – இது டைம்ஸ் ஆப் இந்தியா.
  • “மாடல் நடிகையைப் போன்ற அமைச்சரால் இந்தியாவே வேர்த்துக் கிடக்கிறது” – இது இந்தி நாளிதழான நவபாரத் டைம்ஸ்.
  • “அனைவரது விழிகளும் அந்த கவர்ச்சியான பாக் அமைச்சர் மேல், அழகும்-சிந்தனையும் கச்சிதமாக கலந்தவள்தான் அந்தப் பெண் என்பது மட்டும் நிச்சயம்” இது ரீடிப் இணையத்தளம்.
  • “காலநிலைக்கு பொருத்தமான நீலநிற உடையில் அந்த 34 வயது அமைச்சர் டெல்லி விமான நிலையத்தை அடைந்தபோதே, ஆடை அலங்காரப் பிரிவில் முழு மதிப்பெண்களையும் பெற்றுவிட்டார் என்றே சொல்ல வேண்டும்” – இது மெயில் டுடே.
  • புதன்கிழமை காலையில் டெல்லியில் பெய்த மழையைப் போன்று ஹீனாவுக்கான கவரேஜூம் இருந்தது என்று கூறுகிறார், பத்திரிகையாளரும் எழுத்தாளருமான சீமா கோஸ்வாமி.
  • “ரசிக்கத்தக்க உபகரணங்கள், ரோபெர்ட்டோ கவாலி சன்கிளாஸ், பெரிய எர்மெஸ் பிர்கின் பை, பாரம்பரிய முத்து மாலை – எல்லாம் சேர்ந்து அவளது கவர்ச்சிக்கு மெருகூட்டுகிறது” – இது ஒரு பத்திரிகை செய்தி.

என்னதான் கசாபின் மண்ணிலிருந்து வந்தவரென்றாலும் இந்த அழகு தேவதையை ஆராதிக்கவில்லை என்றால் யூத் உலகோடு இடைவெளி வந்துவிடும் என்பதாலோ என்னமோ பா.ஜ.க தலைவர் அத்வானியும் அழகான ஒரு பொக்கேயை கொடுத்து போட்டோ எடுத்துக் கொண்டார். இந்தியா – பாக் நாடுகளின் சண்டை வரலாற்றை கிண்டல் செய்யும் வண்ணம், ” இந்தியாவில் இறங்கிய பாக் குண்டு” என்று குறிப்பிட்டது, மும்பையின் மிரர் பத்திரிகை.

79 வயது வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, தனது விலையுயர்ந்த டிசைனர் கோட்டு சூட்டுடன் பெருமையாக உலா வந்தாலும், ஹீனாவுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்கப்பட்ட போதெல்லாம் அவரால் மற்றவர் கவனத்தை கவர்ந்திழுக்க முடியவில்லையாம்.

இப்படியாக ஹீனா ரப்பானி காரின் சௌந்தரிய புராண விளக்கத்தை இந்திய ஊடகங்கள் விதவிதமாக வருணித்து அதையும் தலைப்பு செய்தியாக வெளியிட்டிருக்கின்றன. பாக்கிற்கு எதிரான இந்திய வெத்துவேட்டு தேசபக்திக் கூச்சலை ஒரு இயக்கமாக பரப்புகின்ற டைம்ஸ் ஆப் இந்தியாதான் இந்த அலங்கார வருணணைகளை தொகுத்து அளித்திருக்கிறது! தேசபக்தி நாணயத்தின் மறுபக்கம் அள்ள அள்ளக் குறையாத ஜொள்ளு! இது நகை முரணல்ல, இயல்பான உள்ளத்தைக் காட்டும் கண்ணாடி!

இரு குழந்தைகளுக்குத் தாயான ஹீனா ஒரு உலக அழகி போல ரசிக்கப்படுவார் என்று தெரிந்துதான் பாக் அரசு அனுப்பியிருக்கிறதோ என்னமோ! பெனாசீர் பூட்டோ போல பாக்கின் பஞ்சாப் மாநிலத்தின் செல்வாக்கு மிக்க நிலவுடமை குடும்பத்தைச் சேர்ந்தவர் ஹீனா. இந்தியாவைப் போல பாக்கிலும் இத்தகைய பாரம்பரிய பணக்காரக் குடும்பங்களே அரசியலிலும், தொழிற்துறையிலும் கோலேச்சுகின்றன.

அந்த வகையில் ஹீனாவின் வருகை ஒன்றும் அதிசயமல்ல. ஆனால் அவர் அமைச்சராக்கப்பட்ட நேரம்தான் முக்கியமானது. பின்லேடன் மரண நாடகத்திற்குப் பிறகு பொதுவெளியில் அமெரிக்க – பாக் உறவு எள்ளும் கொள்ளும் வெடிப்பதான பாவனையில் இருக்கும்போது உலக மகா ஜொள்ளர்களான அமெரிக்கர்களை குஷப்படுத்துவதற்கும், அப்படியே உள்ளூர் ஜொள்ளர்களான இந்தியர்களின் பேச்சை மாற்றுவதற்கும் கூட ஹீனா பயன்படவேண்டுமென்று பாக் ஆளும் வர்க்கம் நினைத்திருக்கலாம்.

இருந்தாலும் ஒரு உண்மையை ஒத்துக் கொள்ளவேண்டும். பாக்கிலிருந்து யார் வந்தாலும் அது முஷராப்போ, ஜர்தாரியோ, நவாஸ் ஷெரிப் என்று யாராக இருந்தாலும் அவர்களது ஆளுமை, பேச்சு, வாதம் எல்லாம் இந்திய அம்பிகளை விட மேம்பட்டே இருக்கிறது. டைம்ஸ் நௌவின் அம்பி ஆர்னாப் கோஸ்வாமி உள்ளூர் அரசியல்வாதிகளையெல்லாம் டி.டி.எஸ் அலறில் கடித்துக் குதறுவார். அப்படிப்பட்ட அம்பியே பின்லேடன் மரணம் தொடர்பாக முஷராப்புடன் பேசும் போது அடிபட்ட பாம்பு போல அடங்கிக் கிடந்தார். எதிர்த்துக் கேட்க ஆளில்லாத மேடையில் மட்டும்தான் இந்திய திறமை பளிச்சிடும் என்பதை ஜனநாயகம் வளராத பாக்கின் தலைவர்கள் நிரூபித்திருக்கிறார்கள்.

சரி பாக், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் அப்படி என்ன பேசி சாதிக்கப் போகிறார்கள்? வந்த செய்திகளைப் பார்க்கும் போது “இதுவரை பேச்சு வார்த்தை திருப்தி அளிக்கிறது, இனி தொடர்ந்து பேசுவதற்கு ஊக்கமூட்டுகிறது” இதுதான் அந்த சாதனையின் சிகரம். பேசுனோம், பேசிகிட்டு இருக்கோம், பேசுவோம் என்பதுதான் சாதனை என்றால் அர்த்தமில்லாமல் வளவளவென்று பேசும் எப்.எம் ரேடியோ ஜாக்கிகளையே அமைச்சராக்கலாமே?

தீவிரவாதத்தை எதிர்க்க இருநாடுகளும் இணைந்து பணிபுரிய பேசுவார்களாம். பணிபுரிவது இருக்கட்டும், மும்பை 26/11 தாக்குதலுக்காக பாக்கில் உள்ள குற்றவாளிகளை ஒப்படைக்க வேண்டுமென்று இந்தியா கேட்டால், சம்ஜூத்தா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பிற்கான இந்திய குற்றவாளிகளை பாக் கேட்கிறது. மும்பையில் கொல்லப்ப்பட்டது இந்தியக் குடிமகன்களென்றால், சம்ஜூத்தாவில் கொல்லப்பட்டது பாக் குடிமகன்கள். அடுத்து காஷமீர் பிரச்சினை குறித்து இந்தியா ஏதாவது வாயைத் திறந்தால் மாட்டிக் கொள்ளும். முழு காஷ்மீரத்து மக்களும் ஏகோபித்த நிலையில் இந்திய ஆக்கிரமிப்பை எதிர்க்கும் போது அங்கும் பாக்கின் கையே ஓங்கி நிற்கிறது. தற்போது காஷ்மீர் மக்கள் இயக்க பிரதிநிதிகளை ஹீனா சந்தித்ததை இந்திய அரசு கண்டித்திருப்பதாக செய்தி வந்திருக்கிறது. காஷ்மீர் மக்கள் பிரதிநிதிகளை பிரிவினைவாதிகள் என்று சொல்லும் இந்திய ஊடகங்கள் இதனாலொன்றும் ஹீனாவை அவ்வளவாக கண்டித்து விடவில்லை. மேலும் இந்தியா வந்து காஷ்மீர் போராட்டக்காரர்களை சந்திப்பதற்கு ஒரு தில் வேண்டுமே?

ஆக இறுதியில் என்னதான் பேசினார்கள்? இரண்டு காஷ்மீர்களிலிருந்தும் மக்கள் வணிக, பக்தி சுற்றுலாவிற்கு வந்து போகலாம், பஸ் விடலாம், வர்த்தகத்தை அதிகப்படுத்தலாம் என்பதைத்தான் பேசியிருக்கிறார்கள். இவையெல்லாம் நல்ல விடயங்கள்தான். ஆனால் மக்கள் வந்து போகும் இந்த விசயத்தைக் கூட செய்ய முடியாதபடி இந்திய தேசபக்தி வெறி அவ்வப்போது சாமியாடுகிறதே? அதைத் தீர்ப்பது எப்படி? பாக்கும் கூட காஷ்மீரின் தோழன் என்று தனது உள்நாட்டு பிரச்சினைகளை திசை திருப்புவதற்கு பயன்படுத்துகிறது, அதை யார் கேட்பது? மதச்சார்பற்ற முறையில் போராடிய காஷ்மீர் மக்களை மதம் சார்ந்து திணித்த பாவத்தை இருநாடுகளும் குறைவில்லாமல் செய்திருக்கின்றன.

ஒன்று மட்டும் உண்மை. இந்திய பாக் கவுரவப் பிரச்சினைகள் இருநாட்டு ஆளும் வர்க்கங்களுக்கும் கிடைத்திருக்கும் வரப்பிரசாதம். அதை வைத்து மக்களை திசைதிருப்புவதற்கு அவர்களுக்கு கிடைத்திருக்கும் அழியாத சாக்கு. அதனால்தான் நேற்று வரை பாக் காஷ்மீரில் குண்டு போட்டு அழிக்க வேண்டும் என்று சாமியாடிய இந்திய ஊடகங்கள் இன்று பாக்கிலிருந்து வந்திருக்கும் தேவதையை ஆராதிக்கின்றன. அந்த வகையில் இந்த பேச்சு வார்த்தையில் முழு வெற்றி அடைந்திருப்பது பாகிஸ்தான்தான்.

இந்திர பதவிக்கு ஆப்பு வைத்த மாமுனிவர்களின் தவத்தை கலைத்த ரம்பா, ஊர்வசி, மேனகை என உலகின் முதல் ஜெள்ளாயுத்தை தயாரித்த இந்த புண்ணிய பூமிக்கு இது  வெட்கக்கேடல்லவா? அவர்களில் ஒருவர் யாராவது வெளியுறவு அமைச்சராக இருந்தால் இந்தியாவும் பேச்சு வார்த்தையில் வெற்றி வாகை சூடலாமே? அப்படி ஒன்றும்  இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பணி என்பது கஷ்டமானதில்லையே? ஐ.நா சபையில் பக்கத்து சீட்டில் இருந்து வேறு ஒரு நாட்டு பிரதிநிதியின் உரையை எடுத்து படித்தவர்தானே நம்ம எஸ்.எம். கிருஷ்ணா? இந்த ஈயடிச்சான் காப்பி வேலையை பாலிவுட், கோலிவுட், டோலிவுட் முதலிய இந்திய வுட்களின் நடிகைகள் யாராவது செய்ய முடியாதா என்ன?

கமான் இந்தியா, கமான்… ஒரு அழகு தேவதையை தேர்ந்தெடு, உலக அழகி போட்டிகளிலெல்லாம் வென்று காட்டிய உன் நாட்டில் அழகிகளுக்கா பஞ்சம்? அழகியை அமைச்சராக்கு, பாக்கை வென்று காட்டு! ஜொள் ஹிந்த்!

____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

போலீசின் பொய்க் கதையை வெளியிட்ட தினத்தந்தி அலுவலகம் முற்றுகை!

“மாணவ-மாணவிகளை வேனில் கடத்திச்சென்று சமச்சீர் கல்விக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் 9 பேர் கைது” என்று தினத்தந்தி நாளிதழ் விரிவாக ஒரு பொய்ச் செய்தியை வெளியிட்டிருந்தது. இதையே மற்ற ஊடகங்கள் சிறு செய்தியாக, குழந்தைகளின் புகைப்படங்களோடு வெளியிட்டிருந்தன.

கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் பு.மா.இ.முவினர் மாணவர்களை திரட்டி பாசிச ஜெயா அரசாங்கத்தைக் கண்டித்தும், சமச்சீர் பாடப்புத்தகங்களை உடனே வழங்கக் கோரியும் போராடி வருகின்றனர். இதில் சில இடங்களில் பெற்றோர்களும் கூட கலந்து கொண்டிருக்கின்றனர். இப்படி மாணவர்களும், பெற்றோர்களும் கலந்து கொள்வதனாலேயே போலீசு எந்தப் போராட்டத்தையும் விரும்பியபடி தடை செய்ய முடியவில்லை. மாணவர்களை கைது செய்தால் தமிழகம் முழுவதும் போராட்டம் முன்னிலும் பெரிதாக வெடிக்கும் என்று அவர்களுக்கு தெரியும்.

ஆனாலும் இனி போராட்டங்கள் எங்கும் நடக்கக் கூடாது என்று பாசிச ஜெயா தனது ரவுடி போலீசுக்கு உத்திரவிட்டுள்ளார். அதன்படியே போலீசு உருவாக்கிய இந்த பொய்ச் செய்தியை தினத்தந்தி வெளியிட்டிருக்கின்றது. மேலும் திருச்சி பு.மா.இ.முவினரை கைது செய்வதற்கென்றே உள்ளூர் அ.தி.மு.க பிரமுகர்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆய்வாளர் உதவியுடன் பொய் மனு அளித்திருக்கின்றனர். அதற்காகவே ஒரு பெண் தோழரை உள்ளிட்டு எட்டு பு.மா.இ.மு தோழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். எப்படியும் இந்தப் போராட்டத்தை சிதைக்க வேண்டுமென்பது காவல்துறையின் நோக்கமென்பதால் இந்த பொய்ச்செய்தியை உருவாக்குவது ஒன்றும் அவர்களுக்கு புதிதல்ல.

இந்த கடைந்தெடுத்த பொய்யை பெரியதாக வெளியிட்டிருக்கும் தினத்தந்தி, பு.மா.இ.மு மாணவர்கள் சென்னை பள்ளிக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட செய்தியை ஒரு குறுந்துணுக்கு செய்தியாக வெளியிட்டிருக்கிறது. அம்மா புகழ் பாடும் பஜனை கூட்டத்தில் நான்தான் முன்னணி என்று காட்டுவது தினத்தந்தியின் நோக்கம்.

இந்தச் செய்தி வந்த உடனேயே பு.மா.இ.மு தோழர்கள் சென்னை தினத்தந்தி அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தினத்தந்தி செய்தி ஆசிரியரை சந்தித்து தங்களது மறுப்பை வெளியிடுமாறும் கோரினர். தினத்தந்தி ஆசிரியர் அவ்வாறே நாளை வெளியிடுவதாக கூறியதும் தோழர்கள் ஆர்ப்பாட்டத்தை முடித்துக் கொண்டு திரும்பினர்.

இங்கே அனைத்து ஊடகங்களுக்கும் பு.மா.இ.மு சார்பில் அளிக்கப்பட்ட மறுப்பு செய்தியை வெளியிடுகிறோம்.

 

படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்


அய்யா,

நேற்று காலை 26.07.2011 காலை 10 மணியளவில் சமச்சீர் பாடப்புத்தகங்களை உடனடியாக மாணவர்களுக்கு  வழங்கக்கோரி புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் பள்ளிக் கிளைகள் சார்பாக திருச்சி மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. ஆனால் அங்கு பெற்றோர்களுக்கு தெரியாமல் மாணவர்களை அழைத்து வந்து போராட்டத்தில் ஈடுபடுத்தினோம் என்ற முகாந்திரத்தில் எங்கள் அமைப்பின் மீது அவதூறு பரப்பும் நோக்கத்தில் மக்கள் மத்தியில் நேர்மையான அமைப்பு என்று அங்கீகரிக்கப்பட்டிருக்கும் எங்கள் மீது தவறான கருத்தை  உருவாக்கும் எண்ணத்தோடு திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலைய ஆய்வாளர் கண்ணதாசன் உண்மைக்கு புறம்பான செய்தி வெளியிடும்படி பத்திரிக்கைக்கு தவறான தகவல் கொடுத்துள்ளார்.

இது குறித்து பு.மா.இ.மு திருச்சி மாவட்ட நிர்வாகக்குழுவின் அவசரக்கூட்டம் நேற்று மாலை 4 மணியளாவில் கூட்டப்பட்டு இப்பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

இதில் திருச்சி பீம நகரில் உள்ள ஒரு பள்ளியிலும் வண்ணாரப்பேட்டையில் உள்ள பள்ளியிலும் பெற்றோர்களுக்கு அறிவிக்காமல் மாணவர்களை அழைத்து வந்து போராட்டத்தில் ஈடுபடுத்தியதால் அது ஏதோ திட்டமிட்ட கடத்தல் நடவடிக்கை எனவும், கதறி அழுத  மாணவர்களை  போலீசார் தனிப்படை அமைத்து விரைந்து மீட்டு சாகசம் புரிந்ததைப் போலவும், அப்பட்டமான ஒரு பொய்யை திருச்சி காந்திமார்க்கெட் காவல் நிலைய ஆய்வாளார் பரப்பி உள்ளார்.

போலீசின் இந்த அவதூறையே சில பத்திரிக்கைகள் வெளியிட்டு உள்ளது எங்களுக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. சமச்சீர் கல்விக்காக ஆர்ப்பாட்டம், அரங்கக்கூட்டம், கொடும்பாவி எரிப்பு, கைது, சிறையில் உண்ணாவிரதம், பள்ளிக்கல்லூரி மாணவர்களை திரட்டி போராட்டம் என்று தொடர் நடவடிக்கைகளில் நாங்கள் இந்த அரசின் தவறான செயல்பாடுகளுக்கு எதிராக சிறிதும் சமரசமின்றி போராடி வருகின்றோம் என்பதை பத்திரிக்கை  துறையினராகிய நீங்கள்  நன்கு அறிவீர்கள். எனவே எங்கள் மீது அவதூறு பரப்புவதன் மூலம் மக்கள் மத்தியிலிருந்து எங்களை தனிமைப்படுத்தும் நோக்கில்  போலீசு அளித்த பொய்ச்செய்தியை வெளியிடவேண்டாம் எனக்கோருகின்றோம்.

கல்லூரி படிக்கும் மாணவர்களே நிர்வாகத்திற்கும், பெற்றோருக்கும் பயந்துகொண்டு முகத்தில் துணியைக்கட்டிக்கொண்டு போராட்டம் நடத்தி வருவது நாம் அறிந்த ஒன்று. மாநிலம் தழுவிய அளாவில் சமச்சீர் கல்விக்காக பள்ளி-கல்லூரி மாணவர்கள் போராடிக்கொண்டு இருக்கும்  இந்த கொந்தளிப்பான சூழலில், ஒரு பள்ளியில் தன்னுடைய மாணவர் அமைப்பின் உறுப்பினர்களாக இருக்கும் மாணவர்களை பெற்றோர்களின் அனுமதிபெற்ற பின்னர்தான் ஒரு மாணவர் அமைப்பு போராட்டத்தில் ஈடுபடுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியல்ல என்று கருதுகிறோம். இச்சம்பவத்தில் தங்கள் குழந்தைகள் கடத்தப்பட்டதாக போலீசு கொடுத்த தவறான தகவல் காரணமாக அச்சமடைந்த பெற்றோர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உண்மை நிலையினை அறிந்து பின்னர் புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணியின் செயல்பாடு குறித்து போலீசு அவதூறாக பேசியது ஏன் என்று வினா எழுப்பியும், பு.மா.இ.மு-வினர் குழந்தைகளை கடத்திச்செல்லவில்லை என்று கூறியுள்ளனர். ஆனால் போலீசின் தூண்டுதலின் பேரில் இந்த அவதூறையே சில பத்திரிக்கைகள் செய்தியாக வெளியிட்டு உள்ளன.

பு.மா.இ.முவின் நியாயமான செயல்பாடுகள் குறித்து நாங்கள் பத்திரிக்கையாளார்கள் முன்பு விளக்கமளிக்கத் தயார் என்று பெற்றோர்களும் கூறியுள்ளனர். எனவேதான் போலீசில் எந்தப்புகாரையும் நாங்கள் அளிக்கவில்லை, பள்ளியின் தலைமை ஆசிரியரை மிரட்டி, காவல்துறையே இப்பொய் புகாரை பெற்றுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். தலைமை ஆசிரியர் புகாரின் பேரில்தான் வழக்கு போட்டுள்ளனர். இதில் பெற்றோர்கள் யாரும் புகார் அளிக்கவில்லை என்பது உறுதி ஆகிறது. ஆக எங்கள் அமைப்பின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் வெளியிடப்பட்டிருக்கும் செய்திகள் குறித்து பத்திரிக்கையாளர்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் பத்திரிக்கையாளர் சந்திப்பை எங்கள் அமைப்பின் முன்நின்று நடத்த தயாராக உள்ளோம். அந்தசந்திப்பின் போது, சம்பந்தப்பட்ட இரு பள்ளிகளில் உள்ள எங்கள் பிரதிநிதிகளும், பெற்றோர்களும் கலந்து கொண்டு பதில் அளிக்க உள்ளனர்.

எங்கள் அமைப்பின் மீது அவதூறு பரப்பி பொய்வழக்கு போட்ட காந்திமார்க்கெட் காவல் துறையினர் மீது சட்டரீதியான நடவடிக்கை  எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். மேலும் பொய் வழக்கில் கைது செய்யப்ப்ட்ட தோழர்களை விடுதலை செய்யக்கோரியும், போலீசின் இந்த அவதூறுக்கு எதிராகவும் மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். ஆகவே போலீசின் அவதூறுக்கு மறுப்பு செய்தியை வெளியிடுமாறு பு.மா.இ.மு வின் மாநில அமைப்புக்குழு சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி

இப்படிக்கு
த.கணேசன்
மாநில ஒருங்கிணைப்பாளர்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி

________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

சமச்சீர் புத்தகங்களை வழங்கு! தமிழகமெங்கும் மாணவர்கள் போராட்டம் !

சமச்சீர்கல்விக்கான புத்தகங்களை வழங்கக் கோரியும், பாசிச ஜெயா அரசைக் கண்டித்தும் தமிழகமெங்கும் மாணவர்கள் போராடத்துவங்கியுள்ளனர். அவற்றின் சில பதிவுகள் இங்கே……….
படங்களை பெரியதாக பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்

______________________________________________________

விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி

சமச்சீர் புத்தகங்களை வழங்கு! தமிழகமெங்கும் போராட்டங்கள்!!

விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் நூற்றுக்கணக்கிலான மாணவிகள் 26.7.2011 செவ்வாய்க்கிழமை அன்று போராட்டம் நடத்தினர். காலையில் இருந்தே பெற்றோர் சங்கம் மற்றும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத் தோழர்கள் பள்ளி முன் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர். பின்னர் மதிய உணவு இடைவெளியின் போது மாணவிகள் தெருவுக்கு வந்து போராட்டம் நடத்தினர். விருத்தாசலத்தில் உள்ள எல்லா பள்ளிகளிலும் இப்படி போராட்டம் தொடர்வது காவல் துறைக்கு பெரும் சிக்கலை தோற்றுவித்துள்ளது. எல்லா பள்ளி தலைமை ஆசிரியர்களையும் கல்வித்துறை மிரட்டி வருகிறது. எனினும் இதையெல்லாம் மீறி தோழர்களின் முயற்சியால் போராட்டம் தொடர்கிறது.

______________________________________________________

விருத்தாசலம் டேனிஷ்மிஷன் மேல்நிலைப்பள்ளி

சமச்சீர் புத்தகங்களை வழங்கு! தமிழகமெங்கும் போராட்டங்கள்!! சமச்சீர் புத்தகங்களை வழங்கு! தமிழகமெங்கும் போராட்டங்கள்!! சமச்சீர் புத்தகங்களை வழங்கு! தமிழகமெங்கும் போராட்டங்கள்!!

25.07.2011 திங்கட்கிழமை, விருத்தாசலத்தில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியான டேனிஷ்மிஷின் பள்ளியின் மாணவ மாணவிகள் சமச்சீர் புத்தகங்களை வழங்கக் கோரி உற்சாகத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து ஸ்தம்பித்தது. மாணவர்களது கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்க தலைவர் வெங்கடேசன், செயலாளர் செந்தாமரைக்கந்தன், மற்றும் கதிர்வேல் ஆகியோர் காலை பள்ளி துவங்கும் முன் பிரசுரத்தை மாணவர்கள் முன்னிலையில் விநியோகித்தனர். 50க்கும் மெற்பட்ட மாணவர்கள் ஆதரவு தெரிவித்து வாயிலில் நின்றனர்.

தலைமை ஆசிரியர் மாணவர்களை மிரட்டி உளளே அழைத்து சென்று விட்டார். உடனே தலைமை ஆசிரியரிடம் சென்று நமது நிர்வாகிகள் மாணவர்களை தடுக்கக்கூடாது என்றும் புத்தகம் கேட்டு மாணவர்களை போராட வைப்பது பெற்றொர்களாகிய எங்களது கடமை என்றனர். ஆசிரியர்கள் மாணர்களின் நலன்களை காப்பதில் இருந்து தவறி விட்டனர் என்று வாதம் செய்தனர். உச்சநீதிமன்ற உத்தரவை அமுல் படுத்தாமல் அரசே தவறு செய்யும் போது பாதிக்கப்படும் மாணவர்கள் போராடுவதில் தவறுஇல்லை, என்று பேசி மதிய உணவு இடைவெளியில் வருவோம், நீங்கள் தடுக்கக்கூடாது என்றனர்.

அதேபோல மதியம் உணவு இடைவேளையில் மாணவர்ளை திரட்டி சாலை மறியல் நடத்தப்பட்டது. ஏற்கனவே அரசு பள்ளி மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் புகைப்படத்தை பிரசுரமாக அடித்து விநியோகிக்கப்பட்டது. அது மாணவர்களை மேலும் உணர்வூட்டியது. டி.எஸ்.பி, ஆர்.டி.ஓ., தாசில்தார், ஆய்வாளர், என அரசு இயந்திரம் அனைத்தும் சுற்றி வளைத்தது. ஆனால் உள்ளே வந்து மாணவர்களிடமும், பெற்றோர் சங்கத்தினரிடமும் கெஞ்சியது. மாணவர்கள் கலைந்து போகுமாறு நேரடியாக மிரட்டிப் பார்த்தனர். புத்தகம் கொடு, போகிறோம் என முகத்தில் அடித்தாற் போல் பதிலளித்தனர் மாணவர்கள். அதிகாரிகளின் கெஞ்சல் மேலும் கீழிறங்கியது. மாணவர்களின் முழக்கம் அந்த பகுதியையே  அலறடித்தது. இதனால் பொதுமக்கள் பெருந்திரளாக கூட தொடங்கினர். ஆசிரியர்கள் சோகமாக காட்சியளித்தனர். பிறகு அரசு அதிகாரிகள் மாணவர்களிடம் புத்தகம் வழங்க விரைந்து ஏற்பாடு செய்கிறோம் என்று உறுதி அளித்ததின் பேரில் மாணவர்கள் கலைந்து சென்றனர்.

அது கூட தோழர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்கத்தான் மாணவர்கள் வகுப்பறைக்குத் திரும்பினர். பெற்றோர் சங்கத்தின் சார்பில் மாணவர்களுடன் முழக்கமிட்டு கொண்டு சென்று அந்தந்த வகுப்பறையில் அமரவைக்கப்பட்டது. தலைமை ஆசிரியரிடம் சென்று மாணவர்கள் போராடியதற்காக பாகுபாடு காட்டவோ தண்டிக்கவோ கூடாது என தோழர்கள் வலியுறுத்தினார்கள். மாணவர்களோ அரசு புத்தகம் வழங்கவில்லையென்றால் மீண்டும் போராட்டம் செய்வோம் என்று உணர்ச்சி பொங்க கூறினார்கள்.

______________________________________________________

தருமபுரியில் மாணவர்கள் ஆர்பாட்டம்

சமச்சீர் புத்தகங்களை வழங்கு! தமிழகமெங்கும் போராட்டங்கள்!! சமச்சீர் புத்தகங்களை வழங்கு! தமிழகமெங்கும் போராட்டங்கள்!!

சமச்சீர் பாடப்புத்தகங்களை உடனே வழங்க கோரி தரும்புரி மாவட்டத்தில் இயங்கும் மனித உரிமைப் பாதுகாப்ப்பு மையம், விவசாயிகள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகள் இணைந்து பென்னாகரம் பேருந்து நிலையத்தில் 26.07.2011 காலை பெற்றோர், மாணவர்களை அணிதிரட்டி ஆர்ப்பாட்டம் செய்த்தனர். இந்த ஆர்பாட்டத்திற்கு மனித உரிமைப் பாதுகாப்பு மைத்தின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஆர்.ஜானகிராமன் தலைமைதாங்கினார். விவசாயிகள் விடுதலை முன்னணியின் பென்னாகரம் செயலாளர் கோபிநாத் கண்டன உரையாற்றினார். பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட இந்த ஆர்பாட்டம் மக்களிடையே குறிப்பாக கல்லூரி மாணவர்களிடத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

______________________________________________________

விழுப்புரம் அரசு கல்லூரி, அரசு நடுநிலைப்பள்ளி

26.07.11 செவ்வாய்க்கிழமை  உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சமச்சீர் பாட புத்தகங்களை உடனே  வழங்கக்கோரி  விழுப்புரம்- சோழகனூர் கிராம  நடுநிலைப்பள்ளியை மாணவர்கள் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமச்சீர் புத்தகங்களை வழங்கு! தமிழகமெங்கும் போராட்டங்கள்!!சமச்சீர் புத்தகங்களை வழங்கு! தமிழகமெங்கும் போராட்டங்கள்!!சமச்சீர் புத்தகங்களை வழங்கு! தமிழகமெங்கும் போராட்டங்கள்!!சமச்சீர் புத்தகங்களை வழங்கு! தமிழகமெங்கும் போராட்டங்கள்!!
அதேபோல் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரி    மாணவர்கள் சமச்சீர் பாட புத்தகங்களை உடனே  வழங்கக்கோரி வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இரண்டு  போராட்டங்களையும் புரட்சிகர மாணவர்-இளைஞர்  முன்னணி விழுப்புரம் கிளை தோழர்கள் நடத்தினார்கள்.

___________________________________________________________

விருத்தாசலம் மங்களம்பேட் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

சமச்சீர் புத்தகங்களை வழங்கு! தமிழகமெங்கும் போராட்டங்கள்!!

இந்தப்பள்ளியிலும் 26.7.2011 செவ்வாய்க்கிழமை அன்று மதிய உணவு இடைவெளியில் பெருந்திரளான மாணவர்கள் கலந்து கொண்ட போராட்டம் நடைபெற்றது. சமச்சீர் புத்தகங்கள் வழங்கப்படவில்லை என்றால் போராட்டம் தொடர்ந்து செய்வோம் என்று மாணவர்கள் உறுதி ஏற்றனர்.

____________________________________________________________________

திருச்சியில் பள்ளி கல்வித்துறை அலுவலகம் – பு.மா.இ.மு முற்றுகை!

சமச்சீர் புத்தகங்களை வழங்கு! தமிழகமெங்கும் போராட்டங்கள்!!

திருச்சியில் இருக்கும் பள்ளி கல்வித்துறை அலுவலகத்தை பு.மா.இ.மு தோழர்கள் தலைமையில் மாணவர்கள் முற்றுகை இட்டு போராட்டம் நடத்தினர். இதில் திரளான பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கு கொண்டனர். முற்றுகையின் போது அலுவலகம் முற்றிலும் செயல்படாமல் முடங்கிக் கிடந்தது. மாணவர்கள் எழுப்பிய முழக்கங்கள் அந்த வட்டாரத்தையே கலங்கச் செய்தன.

____________________________________________________________________________________

சென்னை பள்ளிக்கல்வித்துறை DPI அலுவலகத்தை பு.மா.இ.மு முற்றுகை

சமச்சீர் புத்தகங்களை வழங்கு! தமிழகமெங்கும் போராட்டங்கள்!! சமச்சீர் புத்தகங்களை வழங்கு! தமிழகமெங்கும் போராட்டங்கள்!! சமச்சீர் புத்தகங்களை வழங்கு! தமிழகமெங்கும் போராட்டங்கள்!! சமச்சீர் புத்தகங்களை வழங்கு! தமிழகமெங்கும் போராட்டங்கள்!! சமச்சீர் புத்தகங்களை வழங்கு! தமிழகமெங்கும் போராட்டங்கள்!!

சமச்சீர்கல்விக்கான பாடப்புத்தகங்களை வழங்கக்கோரியும், உச்சநீதிமன்றத்தில் சமச்சீர் கல்விக்கு தடையேற்படுத்த முயலும் பாசிச ஜெயா அரசை கண்டித்தும் சென்னையில் உள்ள DPI வளாகத்தை பு.மா.இ.மு மாணவர்கள் 26.7.2011 செவ்வாய்க்கிழமை முற்றுகை இட்டனர். இதில் குரோம்பேட்டை மற்றும் மதுரவாயம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் அரை டவுசர் போட்ட மாணவர் சிங்கங்களும் உண்டு. நெடுநேரம் தமது முழக்கத்தால் அந்த இடத்தையே போராட்டக்களமாக்கிய மாணவர்கள் காவல்துறை கைது செய்து பின்னர் மாலையில் விடுதலை செய்தது.

—————

கோவையில் வழக்கறிஞர்கள் போராட்டம்

சமச்சீர் புத்தகங்களை வழங்கு! தமிழகமெங்கும் போராட்டங்கள்!!

கோவையில் மனித உரிமைப்பாதுகாப்பு மையம் HRPC    சார்பாக சமச்சீர் கல்வி தொடர்பாகத் தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தி வருகிறது. அதன் அடிப்படையில்   மாணவர்களுக்கு உடனடியாக சமச்சீர் பாடபுத்தகங்களை வழங்க வேண்டியும் இணையத்தளத்தில் சமச்சீர் கல்வி பாடம் மீண்டும் பதிவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும்  மனித உரிமை பாதுகாப்பு மையம் 25/07/11 திங்கள்கிழமை  காலை 11மணி செஞ்சிலுவை சங்கம் முன்பாக கண்டன ஆர்பாட்டம் நடத்தியது.  இந்த போராட்டத்தில் மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்திற்கு வர வேண்டும் என்ற முழக்கம் இடப்பட்டது. ஆர்பாட்டத்தில் திரளான பேர் கலந்து கொண்டனர்.    HRPC  தொடர்ந்து  மாணவர்களையும் பெற்றோர்களையும் போராட்டத்திற்கு அணிதிரட்டி வருகின்றது.

______________________________________________________

மதுரையில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் ஆர்பாட்டம்

________________________________________________________

ஜூலை 26 அன்று உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கின் இறுதி விசாரணை (Final hearing) தொடங்குகிறது.  இந்தப் போராட்டத்தைப் பொருத்தவரை இது இறுதிச் சுற்று. எதிரியின் பணபலத்தையும் அதிகார பலத்தையும், நியாயம் தானாகவே வென்றுவிடாது. நமது தரப்பிலும் மூத்த வழக்குரைஞர்களை அமர்த்த வேண்டும்.  இந்த வழக்கில் சமச்சீர் கல்வி பொதுப் பாடத்திட்டத்துக்கு ஆதரவாக வாதாடுவதற்கும், போராடுவதற்கும் உங்களிடம் வழக்கு நிதி கோருகிறோம்.

வழக்கு நிதி தாரீர்

இணையம் மூலம் பாதுகாப்பாக நன்கொடை அளிக்கும் வகையில் பேபால் (PAYPAL) வசதியை ஏற்படுத்தியிருக்கிறோம் “DONATE” பட்டனை அழுத்தி நீங்கள் விரும்பும் தொகையை அளிக்கலாம். BANK TRANSFER மூலம் வங்கி கணக்கில் செலுத்த விருப்புவோருக்கான விவரம்

Name: KANNAIAN RAMADOSS
Bank Name: ICICI BANK LTD
Account Number: 612801107389
IFSC Code: ICIC0006128
Branch Location: TANJORE IFSC-ICIC0006128
MICR Code: NONMICRLO
Account Type: Savings

நன்கொடை அளிப்பவர்கள் அனைவருக்கும் இரசீதுகள் அனுப்பி வைக்கப்படும்.

________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி முதலாளிக்கு எதிரான போராட்டம் !

சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர்கள் கடந்த 1 வருடமாக கூடுதல் கட்டணத்திற்கு எதிராக போராடி வருகிறார்கள். இந்தப் பள்ளிக்கு நீதியரசர் கோவிந்தராஜன் கமிட்டி கட்டணம் 4500 என்றால் கூடுதலாக 12000 கொடுத்தால் தான் வாங்குவேன் என பள்ளி தாளார் லட்சுமிகாந்தன் கூறுகிறார்.

அரசு கட்டணத்தை வாங்க மறுத்து விட்டு கட்டணம் கட்டாத மாணவர்கள் என்று வருகை பதிவேட்டில் கூப்பிடாமல் அவர்களை தனியே அமர வைக்கிறார் இந்த பள்ளி முதலாளி. முன்நின்று போராடும் பெற்றோர்களுக்கு கட்டாய டிசியை பதிவு தபாலில் அனுப்புகிறார். ஆசைவார்தை காட்டி பிறகு பெற்றோர்களை  மிரட்டவும் செய்கிறார். இந்த லட்சுமி காந்தன் தனியார் மெட்ரிக் பள்ளி முதலாளிகள் சங்கத்தின் கடலூர் மாவட்ட தலைவர், முன்னால் மேலவை உறுப்பினர், அண்ணாமலை செட்டியாரின் நேர்முக உதவியாளர் இராஜேந்திரனின் நெருங்கிய உறவினராவார்.

இந்நிலையில் 50க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் அரசு கட்டணத்தை தவிர கூடுதலாக தரமாட்டேன் என்று உறுதியாக போராடுகிறார்கள், 12-ம் வகுப்பு முடித்த 2 இஸ்லாமிய மாணவர்களுக்கு 24500 ரூபாய் கொடுத்தால்தான் மதிப்பெண் பட்டியல், டி,சி கொடுப்பேன் என்று மிரட்டினார், நமது சங்கம் தலையிட்டு காவல்துறையிடம் அச்சுறுத்தி பணம் பறிக்கிறார் என்று புகார் கொடுத்து அரசு கட்டணம் ரூபாய் 11000 மட்டும் செலுத்து பெற்றுக் கொடுத்தது. மேலும் சங்கத்தினுடைய சிதம்பரம் நகர பொருளார் நடராஜன் மகன் நான்காம் வகுப்பு படிக்கும் டேவிட்ராஜா என்பவருக்கு பள்ளி திறந்த 2வது நாளே சக மாணவனை கிள்ளி விட்டான் என்று ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாக கூறி டிசி கிழித்து  பதிவு தபாலில் அனுப்பி வைத்தது பள்ளியின் நிர்வாகம். நமது புகாரின் பேரில் 20.6.2011 மெட்ரிக்பள்ளியின் ஆய்வாளர் அருள்மொழிதேவி பள்ளி முதல்வரிடமும் தாளாளர் லட்சுமி காந்தனிடமும் விசாரணை நடத்தினார். சிதம்பரம் நகர போலீசும் பஞ்சாயத்து பேசியது.

50க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். பெற்றோரான நடராசன் என்பவர் நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பதாக மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தால் சேர்த்து கொள்கிறோம் என்று கூறினார். நமது சங்கம் தரப்பில் தவறு செய்தது பள்ளி நிர்வாகம், மாணவனை திரும்ப சேர்த்து கொள்ள வேண்டும், மன்னிப்பு கடிதம் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை என்று உறுதியாக நின்றோம். கூடுதல் கட்டணம் தொடர்பாக பள்ளி ஆய்வாளர் கேள்விகளுக்கு பள்ளி தாளாளர்,” ஆடிட்டரை கேட்டு சொல்லுகிறேன், லாயரை கேட்டு சொல்லுகிறேன்” என்று திமிராக பேசி அதிகாரியை எரிச்சலூட்டி அனுப்பி விட்டார்.

இது தொடர்பாக ஆட்சியரிடம் சென்று நமது சங்கம் புகார் கொடுக்கப்பட்டு முதன்மை கல்வி அலுவலர் அமுதவள்ளியும் ஆய்வாளர் அருள்மொழிதேவியும் சேர்ந்து விசாரிக்க உத்தரவிட்டார். 24,6,2011 அன்று நடந்த விசாரணையின் போது கடந்த ஆண்டு காமராஜ் மெட்ரிக் பள்ளி பலமடங்கு கூடுதலாக வசூலித்ததை ஆதாரங்களுடன் பெற்றோர்கள் சார்பில் புகார் மனுவுடன் கொடுக்கப்பட்டது. இந்த ஆண்டு பல மடங்கு ரசீது இல்லாமல் வசூலிப்பதும் ஆதாரத்துடன் கொடுக்கப்பட்டது. விசாரணையில் பள்ளி முதல்வர்கள் அப்பட்டமாக பொய் சொல்லுவதும் பணிபுரியும் ஆசிரியர்களிடம் உங்கள் சம்பளம் எவ்வளவு, எத்தனை வருடமாக பணிபுரிகிறீர்கள் என்று கேட்டால் தெரியாது என்று சொல்லுகிறார்கள். இதே போல் காமராஜ் சிறப்பு பள்ளியில் அரசு கட்டணத்தை விட 20000 அதிகம், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்குஅனுமதி இல்லாமல் நடத்துகிறீர்கள் என்று அந்த பள்ளி முதல்வரை கேட்டதற்கு இங்கு நடத்தவில்லை என்றதோடு வகுப்பறையில் உள்ள மாணவர்களை காலை 10,30 மணிக்கு பேஸ்கட் பால் விளையாடுவதற்கு அனுப்பிவிட்டார். இவர்களெல்லாம் வேறு பள்ளியில் இருந்து இங்கு விளையாட வந்திருக்கிறார்கள் என்று பொய் சொன்னார். மாணவர்களையும்  அவ்வாறே பொய் சொல்ல பயிற்றுவித்திருக்கிறார்கள்.

ஆனால் முதன்மை கல்வி அதிகாரி மாத தேர்வு தாள்களையும் வருகை பதிவேடுகளையும் ஆசிரியர்களின் பதிவேடுகளையும் ஆட்சேபணையை புறம் தள்ளி கைப்பற்றினார்.

அதேபோல் தாளாளரிடம் விசாரித்தபோது கட்டணம் கூடுதலாக வசூலிக்க எனக்கு உரிமை உண்டு, கல்வி கட்டணத்தை தவிர கூடுதலாக ஸ்மார்ட் கிளாலஸ் என்று பல்வேறு தலைப்புகளில் வாங்கலாம் என்று ரவிராஜ் பாண்டியன் குறிப்பிட்டுள்ளார், இதுதொடர்பாக மேலும் விபரங்களை ஆடிட்டரையும், லாயரையும் கன்சல்ட் பண்ணித்தான் சொல்லமுடியும் என்று சொல்லிவிட்டார். மேலும் காமராஜ் சிறப்பு பள்ளியில் அங்கீகாரம் இல்லாமல் மேல்நிலை வகுப்பு நடத்துவது குறித்தும், ஒரே இடத்தில் பள்ளியையும், ஆசிரியர் பயிற்சி நடத்துவது தவறு  என்றும் அதிகாரிகளுடைய கேள்விகளுக்கு நான் உரிய விளக்கம் அனுப்புகிறேன் என்று அதிகாரிகளை எரிச்சலூட்டி விசாரணையை பாதியிலேயே முடிக்க வைத்தார்.  விசாரணைக்கு வந்திருந்த 100க்கும் மேற்பட்ட பெற்றொர்கள், மாணவர்கள்ர மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர்க சங்கத்தின் நிர்வாகிகள், மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டதை தெடங்கினர்.

அரசு உத்திரவை மாவட்ட நிர்வாகமும் அமுல் படுத்த எதிர்ப்பு தெரிவிக்கும் தாளாளர் லட்சுகாந்தன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கையுடன் அமர்ந்தனர். காவல் துறை மிரட்டிப்பார்த்தது. அரசு உத்தரவை அமுல்படுத்தவே இப்போராட்டம், அமுல்படுத்த மறுக்கும் லட்சுமி காந்தன் மீது நடவடிக்கை எடுங்கள் பார்ப்போம் என்றதும் போலீசு அதிகாரிகள் வாச்சுமேன்னாக விலகி நின்றார்கள். மாலைமதிய உணவின்றி தொடர்ந்த இப்போராட்டம் மாலை 6 மணிக்கு சிதம்பரம் கோட்டாச்சியர் கல்விதுறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் ஒன்றாக வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இங்கு வந்து பேசினால் அவர் பணிய மறுக்கிறார், அதிகாரிகள் அலுவலகத்திற்கு வரவழைத்து பேசுவோம் உங்கள் தரப்பில் இருந்து 5 பிரதிநிதிகள் வாருங்கள். கட்டணம் தொடர்பாக சுமுக முடிவு எட்டப்படாவிட்டால் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கிறோம் என்று உறுதி அளித்தன் பேரில் பெற்றோர்கள் ஏற்றுக்கொண்டு  உரிய நடவடிக்கை இல்லையென்றால் அடுத்தநாள் முதல் போராட்டம் தொடரும் என பெற்றோர்கள்அறிவித்தனர்.  இதற்கும் உள்ளூர் பத்திரிக்கையாளர்கள் வராமல் கடலூரில் இருந்து ஒருசிலர் மட்டுமே வந்து நாளிதழ்களில் வெளியிட்டனர். இந்த விசாரணை, போராட்டத்திற்கு முன்பாக பெற்றோர்களின் அச்சத்தை போக்க அரசு உத்தரவை மயிரளவும் மதிக்காத காமராஜ் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய், பெற்றோர்கள், மாணவர்களை கூடுதல் கட்டணத்திற்காக துன்புறுத்தும் தாளார் லட்சுமி காந்தனை குண்டர் சட்டத்தில் கைது செய் என மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டது.

மேலும் சமீபத்தில் நடந்த தனியார் மெட்ரிக் பள்ளி முதலாளிகள், அவர்கள் கட்டணம் தொடர்பாக பேசுவதற்கு சிறப்பு கல்வி மாநாடு என்ற பெயரில் தங்கள் பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர்களை வைத்து கூட்டம் நடத்தினார்கள். இந்த மாநாட்டிற்கு எதிராக நமது சங்கத்தின் சார்பில்  பெற்றோர்களின் தாலி அறுத்து கட்டண கொள்ளை அடிக்கும் கல்வி வியாபாரிகளுக்கு கல்வி மாநாடு தேவையா என சிதம்பரம் நகரம் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டது. சிதம்பரத்தில் பெற்றோர்கள் அனைவரும் உற்சாகம் அடைந்து நூற்றுக்கும் மேற்ப்ட்ட பெண்களும் ஆண்களும் வீதியில் இறங்கு போர்க்குணமாக நமது தலைமையில் போராடி வருகிறார்கள். இந்த வெற்றியின் முலம் தமிழக மெட்ரிக் பள்ளி முதலாளிகளுக்கும் கள்ளம் மெளனம் காக்கும் அரசுக்கும் ஒரு பாடமாக அமையும் என கருதுகிறோம்.

_____________________________________________________________

தகவல்: மாணவர்களின் கல்வி உரிமைக்கான சங்கம்,
மனித உரிமைப் பாதுகாப்பு மையம், சிதம்பரம்.

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்