Saturday, June 20, 2026
முகப்பு பதிவு பக்கம் 849

ராகுல் காந்திக்கு கருப்புக் கொடி! ம.க.இ.க தோழர்கள் கைது !! – படங்கள்

இலங்கை அரசு ஈழத் தமிழ் மக்களை இனப்படுகொலை செய்யும் போருக்கு நேரடியாகவே உதவிகள் செய்யும் இந்திய அரசின் நிலையினை மறைப்பதற்குக் கூட மத்தியில் உள்ள காங்கிரசுப் பெருச்சாளிகள் பயப்படவில்லை. இந்தக்கயமையைக் கண்டித்தும் மத்திய அரசுக்கு ஒரு பாடம் புகட்டவேண்டுமெனவும் ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புக்கள் தமிழகமெங்கும் தேர்தல் புறக்கணிப்பு இயக்கத்தை வீச்சாக செய்து வருகின்றன.

இதன் அங்கமாக இன்று (8.5.09) தமிழகத்திற்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த காங்கிரசு குலக்கொழுந்து ராகுல் காந்தியை எதிர்த்து கருப்புக் கொடி காட்டப்பட்டது. ஏற்கனவே போலீசு சோதனை, குண்டு துளைக்காத மேடை, டெல்லியிலிருந்து வந்திரங்கிய குண்டு துளைக்காத கார் என பாதுகாப்பு ஏற்பாடுகள் அமர்க்களப்பட்டன. இதையும் மீறி சிவகங்கையில் ராகுல் காந்தி உரையாற்றியபோது நான்கு தோழர்கள் கருப்பக்கொடி காட்டி முழக்கமிட்டனர். தோழர்கள் அருகே இருந்த காங்கிரசு அடிப்பொடிகள் தோழர்களை தாக்க வந்தனர். மேடைக்கருகே வந்த எதிர்ப்பைப் பார்த்து திகைத்து நின்ற ராகுல் அதன்பிறகு மொத்தம் பதினைந்து நிமிடத்தில் உரையை முடித்துக் கொண்டார். பதட்டத்தில் அவர் சிதம்பரம் பெயரையும், கை சின்னத்திற்கு ஓட்டுப் போடுங்கள் என்று சொல்வதற்கும் மறந்து மேடையை விட்டு இறங்க, உடனே சிதம்பரம் கையைப்பிடித்து இழுக்காத குறையாக ராகுல் மறந்து போனதைப் பேசுமாறு கூற ஒரு வழியாக கூட்டம் முடிந்தது.

சிவகங்கையை முடித்துவிட்டு திருச்சி உழவர் சந்தையில் ராகுல் காந்தி பேசுவதற்கு வந்தார். அவர் வந்த வாகன வரிசையை சாலையில் மறித்த பெண் தோழர்களையும் உள்ளிட்டு எழுபது தோழர்கள் விண்ணதிர முழக்கமிட்டவாறு கருப்புக் கொடி ஏந்தினார்கள். எவ்வளவோ பாதுகாப்பு செய்து விட்டோமென இறுமாந்திருந்த போலீசு செய்வதறியாது ஒரு கணம் திகைத்து நிற்க அப்புறம் சகஜநிலைக்கு வந்து அனைத்துத் தோழர்களையும் கடுமையாக தடியடி செய்து கைது செய்தது. போலீசு வேன்களில் தோழர்கள் முழக்கமிட்டுச் செல்லும் காட்சியைப் பார்த்த ராகுல் காந்தியை போலிசார் பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர். சாலையிலேயே வந்த மறியலைக் கண்டு உள்ளூர் காங்கிரசுக்காரர்கள் தலை தெரிக்க ஓடினார்கள். இந்த எதிர்ப்புக் குறித்து தமிழக காங்கிரசு வேட்டிகள் அவர்களது இளவரசரிடம் மறைப்பதற்கு முயலலாம். ஆனால் மத்திய உளவுத்துறை காங்கிரசுக் கோமானிடம் உள்ளது உள்ளபடி தெரிவித்துவிடும்.

ஈழத்தமிழ் மக்களை அழிக்கும் நடவடிக்கையில் ஒத்தூதும் காங்கிரசு பெருச்சாளிகள் தமிழகத்திற்கு நிம்மதியாக வந்து செல்லமுடியாது என்ற நிலையை ஏற்படுத்துவதற்கு இந்தக் கருப்புக் கொடி எதிர்ப்பு ஒரு துவக்கம்.

தமிழிஷில் வாக்களிக்க…
தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க…
தமிழ்மணத்தில் எதிர் வாக்களிக்க….
வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…


படத்தை பெரியதாக பார்க்க அதன் மீது சொடுக்கவும்

ஜெ மாறிவிட்டார் ! விரக்தி ->பிரமை ->நம்பிக்கை ->சந்தர்ப்பவாதம்

14

jayalalithathumbநேற்று இடப்பட்ட ஈழத்தின் எதிரி ஜெ – ஆதாரங்கள்! கட்டுரைக்கு வந்த பின்னூட்டங்களுக்கான பதில் இந்த இடுகை. ,  புதிய வாசகர்கள் அந்தக் கட்டுரையையும் பின்னூட்டங்களையும் படித்துவிட்டு வருமாறு கேட்டுக்கொள்கிறோம்

// காரணம் எங்களிடம் வேறு தெரிவு இல்லை //

// கருணாநிதியை நண்பன் என நம்பினோம். அவர் ஏமாற்றி விட்டார் //

// குற்றுயிரும் குலையுயிருமாக இருக்கும் எம்மவருக்கு சரித்திரங்கள் தேவையில்லை. யார் குத்தினாலும் அரிசியானால் போதும்.//

// எமக்கு இந்திய உள் அரசியல் தேவையில்லாத விடயம்.//

ஜெயல்லிதாவின் கடந்த கால நடவடிக்கைகள் பற்றிய விவரத் தொகுப்பு ஒரு நினைவூட்டல். அவ்வளவே. மற்றப்படி சிடி பார்த்து ஜெயல்லிதா அடைந்த்தாக கூறிக்கொள்ளும் மனமாற்றம் என்பது விளக்கம் ஏதும் தேவைப்படாத ஒரு மோசடி. அதை விளக்கும் நோக்கிலும் இந்தப் பதிவு இடப்படவில்லை என்பதை ஆர்.வி புரிந்து கொள்வார் எனக்கருதுகிறோம்.

“எம்மிடம் வேறு தெரிவு இல்லை. சரித்திரங்கள் தேவையல்லை. இந்திய உள் அரசியல் தேவையில்லை” என்ற கருத்துகள் எவ்வளவுதான் வேதனையிலும் விரக்தியிலும் எழுதப்பட்டிருந்தாலும் அவை மிகவும் தவறானவை.

காங்-பாஜக, திமுக-அதிமுக, ஐக்கிய தேசியக் கட்சி-சிறீலங்கா சுதந்திரக் கட்சி, குடியரசுக்கட்சி-ஜனநாயக கட்சி..   – இவற்றை விட்டால் வேறு தெரிவு இல்லை என்ற நிலையையும் கருத்தையும் ஆளும் வர்க்கங்கள் தோற்றுவித்து இருக்கின்றன. இந்த சட்டகத்தை உடைக்காமல் நாம் ஒரு அங்குலம் கூட முன்னேறமாட்டோம். அவ்வளவு ஏன், ஈழத் தமிழ் மக்கள் “வேறு தெரிவு இல்லை” என்ற வலைக்குள் சிக்கியிருந்தால் ஈழ விடுதலைப் போராட்டம் என்பதே துவங்கியிருக்குமா?

1983 க்கு முந்தைய இலங்கைச் சரித்திரம்தான் தேர்தல் பாதையைக் கைவிட்டு ஆயுதப்போராட்டத்தை தெரிவு செய்ய வைத்தது. எத்தகைய துயரமான சூழலில் இருந்த போதும் “சரித்திரம் தேவையில்லை” என்று கூறிவிட இயலுமா? 1983 முதல் இன்று வரை இந்திய அரசை நண்பனாக கருதி ஈழப்போராட்டம் இழைத்த தவறுகளைக் கொஞ்சம் கூட பரிசீலிக்காமல் அதே பாதையில், இன்னும் ஆழமான படுகுழியில் கால்வைப்பது எந்த வகையில் அறிவுடைமை? உணர்ச்சிகள் மேலோங்கியிருந்தால் அறிவு விடைபெற்றுக் கொள்ளவேண்டும் என்பது விதியா என்ன? ஒரு வேளை, ஜெயலலிதா பிரதமராகி, அவர் கூறுவது போல ராணுவத்தை அனுப்பி, ஜெயா-ராஜபக்சா ஒப்பந்தம் ஒன்று போட்டு அமைதியை நிலைநாட்டினால், இன்னொரு அமைதிப்படை ஈழத்தில் இறங்காதா?

இந்தியாவின் உள் அரசியல் தேவையில்லை என்ற ஒற்றை வரியில், குஜராத்தில் கொல்லப்பட்ட முஸ்லிம் மக்கள், ஒரிசாவின் கிறித்தவர்கள், இந்து வெறியர்களால் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் தலித் மக்கள்.. போன்றோரின் துயரத்தை ஒதுக்கித் தள்ளிவிட முடியுமா என்ன? அல்லது பாரதிய ஜனதா வெற்றி பெற்றால் ஒருவேளை ஈழத்தமிழர்க்கு ஆசுவாசம் கிடைக்கலாம் என்பதற்காக, இந்திய மக்கள் உத்திரவாதமான பாசிசக் கொடுங்கோன்மைக்கு வாக்களிக்க வேண்டுமா? ஜெயா ஈழம் வாங்கித்தரட்டும். அதற்காக, குஜராத் படுகொலையை நடத்தி முடித்து, தேர்தலில் வெற்றி வாகை சூடிய மோடியின் பதவி ஏற்பு விழாவுக்கு ஜெயலலிதா போய்வந்ததையும், ஜெயாவின் பார்ப்பன பாசிச அடக்குமுறைகளையும் மறந்து விட முடியாதல்லவா?

இன்று துக்ளக் சோ எழுதியுள்ள தலையங்கத்தில் க”கருணாநிதிக்கு ஏன் ஓட்டுப் போடக்கூடாது” என்று விளக்கியிருக்கிறார். “மத்திய அரசில் செல்வாக்கு இருந்த்தால், தமிழகத்தில் புலிப் பிரச்சாரத்தைப் பெரிய அளவில் தாராளமாக நடத்தியது” என்பது கருணாநிதிக்கு எதிராக அவர் கூறும் காரணங்களில் ஒன்று. ஜெயல்லிதாவுக்கு வாக்களிக்குமாறு கோரியிருக்கும் சோ, அவரது “தமிழ் ஈ.ழம் அமைப்போம்” முழக்கத்தை ஒரு விசயமாகவே கண்டுகொள்ளவிலைல. “அது சும்மா தேர்தல் நாடகம்” ஏன்று ஏற்கெனவே கூறிவிட்டார். அதே நேரத்தில், அதிமுகவுக்கு அளிக்கும் வாக்கு பா.ஜ.க ஆட்சியமைக்கப் பயன்படும் என்பதை மட்டும் அவர் குறிப்பிடத் தவறவில்லை.

ஜெயலலிதாவை எதிர்த்தால் அவர்கள் கருணாநிதியின் ஆட்கள் என்று பார்ப்பதும், கருணாநிதியை எதிர்த்தால் ஜெயாவின் ஆட்கள் என்று பார்ப்பதும் அரசியல் பாமரத்தனம். தெரிந்தே இதனைச் செய்வது கீழ்த்தரமான தந்திரம்.

பெரியார் திகவினர் இந்திய அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிப் போராடுவது என்பது வேறு; அதிமுக ஆதரவு என்பது வேறு. குஜராத் இனப்படுகொலை நடந்தபோது திமுக பாஜகவின் அமைச்சரவையில் இருந்தது. வைகோ மோடிக்கு வக்காலத்து வாங்கிப் பேசினார். அதன் பின் பெரியார் திக எடுத்த தேர்தல் நிலைப்பாட்டுக்கு என்ன அளவுகோல்? பெரியார் திகவினர் ஆத்திரப்படாமல் சிந்திப்பது நல்லது.

காங்கிரசுக்குப் பாடம் கற்பிப்பது என்ற பேச்செல்லாம் நகைக்கத்தக்கவை. ஊழல், அடக்குமுறைகளுக்காக திமுக, காங், அதிமுக முதலான கட்சிகளுக்கு மக்கள் எத்தனை முறை “பாடம்” கற்பித்திருக்கிறார்கள்? இதனால் அவர்கள் அஞ்சிவிடுவார்கள், மாறிவிடுவார்கள் என்று நம்புவது அசட்டுத்தனம்.

அல்லது தமிழகத்தில் அதிமுக அணி வெற்றி பெற்றுவிட்டால் “அது இந்திய அரசு நடத்திய இனப்படுகொலைக்கு எதிராக தமிழகம் கூறிய தீர்ப்பு” என்று கருதி மகிழ்ந்து கொள்வதும் மிகையானது. ராஜீவ் பிணத்தைக் காட்டித்தான் 1991 இல் ஜெயா வெற்றி பெற்றார். “ராஜீவுக்காக மக்கள் எனக்கு ஓட்டுப் போடவில்லை” என்று அடுத்த சில மாதங்களிலேயே கூறி காங்கிரசின் முகத்தில் கரியைப் பூசினார். இன்று ஜெயாவுக்கு வாக்கு கேட்டு அலையும் தமிழ் உணர்வாளர்கள் ஒருவேளை இதையெல்லாம் மறந்திருக்கக்கூடும்.

ஈழத்தின் எதிரி ஜெ – ஆதாரங்கள்!

67

ஈழத்திற்கெதிரான பாசிச ஜெயாவின் குற்றப்பட்டியல்

இந்தியாவின் “வருங்காலப் பிரதமர்” ராகுல் காந்தி, கடந்த செவ்வாய்க்கிழமை பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டிதான் இன்றைய பத்திரிகைகளின் முக்கியச் செய்தி. அந்தப் பேட்டிக்குள் இடம்பெற்ற முக்கியச் செய்தி ஒன்றும் உண்டு. பிகார் முதல்வர் நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு, ஜெயலலிதா ஆகியோரைப் பற்றி போகிறபோக்கில் புகழ்ந்துரைத்தார் ராகுல். திறமையாளர்கள் யாராக இருந்தாலும் போற்றுகின்ற கண்ணியவானின் தோரணையில் இந்தப் பாராட்டு கூறப்பட்டிருந்தாலும், தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியைக் குறி வைத்தே இது பேசப்பட்டிருக்கிறது என்பதை யாரும் புரிந்து கொள்ள முடியும்.

சில நாட்களுக்கு முன்னர் என்.டி.டி.வி சென்னையில் நடத்திய தேர்தல் விவாதத்தில் ஈழம் முக்கிய விவாதப் பொருளாக இருந்த்து. விவாதத்தின் இறுதியில் “தேர்தலுக்குப் பின் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று உறுதியாகச் சொல்வீர்களா?” என்று அதில் பங்கேற்ற அதிமுக மாநிலங்கள் அவை உறுப்பினர் மைத்ரேயனிடம் கேட்டபோது, “இந்தக் கேள்விக்கு நான் பதிலளிக்க மறுக்கிறேன்” என்று சிரித்துக் கொண்டே கூறினார் மைத்ரேயன். “கூட்டணி அமைக்க மாட்டோம் என்று நீங்கள் சொல்லவில்லை. பதிலளிக்க மாட்டோம் என்றுதான் கூறுகிறீர்கள்” என்று கூறிச் சிரித்தார் தொலைக்காட்சி நிருபர். தனது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில், ஈழப்பிரச்சினை பற்றிப் பேசும்போது கூட காங்கிரசை ஜெயலலிதா தாக்குவதில்லை. கருணாநிதியைத்தான் குற்றம் சாட்டுகிறார்.

இருப்பினும், ஜெயலலிதாவின் “தமிழீழ ஆதரவு போர்முழக்கத்தை” வைகோ, ராமதாசு, நெடுமாறன் உள்ளிட்ட அனைவரும் வரவேற்றுப் புளகாங்கிதப் பட்டிருக்கிறார்கள். பெரியார் திராவிடர் கழகம் “ஜெயலலிதா மீது தங்களுக்கு எவ்வித பிரமையும் கிடையாது” என்று கூறிக்கொண்டே தீவிரமாக இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்துக் கொண்டிருக்கிறது. “காங்கிரசுக்குப் பாடம் கற்பிப்பது மட்டுமே தங்கள் நோக்கம்” என்றும் அவர்கள் கூறிக்கொள்கிறார்கள். “ம.க.இ.க வின் தேர்தல் புறக்கணிப்பு இயக்கம் மறைமுகமாக காங்கிரசுக்கு உதவுவதாகவே அமையும்” என்றும் இவர்களெல்லாம் கருதுகிறார்கள்.

இவற்றையெல்லாம் பார்க்கும்போது, தமிழகத்தில் பகுத்தறிவுப் பேச்சாளர்கள் பக்தர்களை இடித்துரைப்பதற்காக அடிக்கடி மேற்கோள் காட்டும் ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது. “கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்” என்பது அந்தப் பாட்டு.  பாட்டைப் பாடிக்காட்டிவிட்டு,  “இவனையெல்லாம் திருத்தமுடியுமா?” என்று பக்தர்களை எள்ளி நகையாடுவார்கள் பேச்சாளர்கள். தற்போது “கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும், இரட்டை இலையை மறந்து விடாதீர்கள்” என்று வீதி தோறும் பிரச்சாரம் நடக்கிறது.

அம்மையாரின் தமிழ் விரோத, ஈழ விரோத நடவடிக்கைகள் பற்றி வைகோவுக்கும் நெடுமாறனுக்கும் தெரிந்த அளவுக்கு எங்களுக்குத் தெரியாது. எங்களுக்குத் தெரிந்தவரை அம்மாவின் வரலாற்றைக் கீழே தொகுத்துத் தந்திருக்கிறோம். வரலாறு தெரியாத தமிழகத்தின் இளம் தலைமுறையினருக்கும், புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களின் இளைய தலைமுறையினருக்கும், வரலாற்றை மறந்துவிட்ட மூத்தோருக்கும் இது உதவக்கூடும். வரலாற்றை மறைக்க விரும்புவோருக்கும் தங்கள் சொந்த மூளையிலிருந்தே அவற்றை அகற்றிவிட விரும்புவோருக்கும் நிச்சயம் இவை உதவ மாட்டா.

காங்கிரசுக்குப் பாடம் கற்பிப்பது மட்டுமே தங்கள் இலக்கு என்று கூறிக்கொள்வோருக்கு ஒரு கேள்வி. காங்கிரசு எல்லாத் தொகுதிகளிலும் தோற்று, அதிமுக எல்லாத் தொகுதிகளிலும் வென்று, அம்மையார் டில்லியில் காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்து அரசும் அமைத்து விட்டால்…? அப்படி ஒரு விபரீதம் நடக்கக்கூடாது என்று இஷ்டதெய்வங்களையெல்லாம் வேண்டிக்கொள்ளலாம். மீறி அப்படி நடந்துவிட்டால்? அதை எப்படி விளங்கிக் கொள்வது?

“நம்மைப் பொருத்தவரை காங்கிரசுக்குப் பாடம் கற்பித்து விட்டோம். தன் பங்குக்கு ஜெயலலிதாவும் நமக்குப் பாடம் கற்பித்து விட்டார். இரண்டு பேருடைய நோக்கமும் நிறைவேறியது” என்று விளங்கிக் கொள்ளலாமா? ஜெயலலிதாவை வெற்றி பெறச் செய்வது என்பது காங்கிரசுக்குச் செய்யும் நேரடி உதவியா, மறைமுக உதவியா?

சிந்திக்க வேண்டும். “பாடம் கற்பிப்பதற்கு” முன், வரலாறு கற்பிக்கும் பாடத்தை நாம் கற்றுக் கொண்டிருக்கிறோமா என்பதைப் பரிசீலிக்க வேண்டும். ஏதோ “நேற்று ஜெயலலிதா ஈழத்தை எதிர்த்தார் – இன்று ஆதரிக்கிறார்” என்று மிகவும் எளிதாக இதனைக் கருதிக் கொண்டிருப்பவர்கள் இதனைப் படியுங்கள். உங்கள் கருத்தைப் பரிசீலியுங்கள்.

ராஜீவ் கொலைக்கு முன்:

தி.மு.க ஆட்சியைக் கலைப்பதற்காகவே ‘புலிகளின் ஆயுதக் கலாச்சாரத்தால் தமிழ்நாட்டில் பொது ஒழுஙகிற்கும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் ஆபத்து ஏற்பட்டு விட்டது’ எனப் பீதியைக் கிளப்பினார்.ராஜீவ் கொலைக்கு முன்பே தன்னைக் கொல்ல சதி நடப்பதாகக் கூறிய ஜெ, எம்.ஜி.ஆர் சமாதிக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற போது தன்னைப் பார்க்க வந்த தனது ரசிகரையே ‘விடுதலைப்புலி என்னைக் கொல்ல வந்தான்’ எனக் கூறி அவதூறு கிளப்பி ஆர்ப்பாட்டம் செய்தார்

ஜூலை 1991:

ராஜீவ் கொலையானவுடன் ஈழத்தமிழர்கள் அனைவரையும் இந்தியாவிலிருந்து வெளியேற்றிவிட வேண்டுமென பேட்டியளித்தார். ராஜீவ் கொலையான சில நாட்களில் இலங்கை அதிபர் பிரேமதாசா ஈழமக்கள் மீது பொருளாதாரத் தடையை விதித்தார். இதனால் ஈழத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. அவர்களுக்கு உதவ இங்கிருந்து பொருட்கள் போக முடியாதபடி சிறப்புக் காவல் படை அமைத்து ஈழ மக்களைப் பட்டினியில் வாடவைத்தவர் ஜெ. ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற துரோகக் குழுக்களை கருணையுடன் நடத்துவோம் என்று முழங்கினார்.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்து, ஈழத்தமிழர் நலன்கள் என்ற பெயரில் மாநாடுகள், பொதுக்கூட்டங்களில் பங்கேற்றாலோ, ஏற்பாடு செய்தோலோ, சுவரொட்டி ஒட்டினாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாயும் என்று எச்சரிக்கை செய்தவர்தான் ஜெ.

செபடம்பர் 1991:

சிவராசன், சுபா ஆகியோரின் தற்கொலைக்குப் பிறகு வேலூரில் ஈழ அங்கீகரிப்பு மாநாடு நடத்த முயன்ற தமிழ்நாடு இளைஞர் பேரவை, மாணவர் பேரவை ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த 70பேர் கைது செய்யப்பட்டு மாநாடு தடை செய்யப்பட்டது. சென்னை அம்பத்தூரில் ஈழ அகதிகளை வெளியேற்றுவதை எதிர்த்து மாநாடு நடத்த முயன்ற பு.இ.மு மற்றும் அதன் தோழமை அமைப்புகளைச் சேர்ந்த 56 பேர் கைது செய்யப்பட்டு மாநாடு தடை செய்யப்பட்டதுடன், தமிழ்நாடு முழுவதும் இவ்வமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சியில் தெருமுனைக் கூட்டம் நடத்திய பெரியாரிய- மார்க்சிய பொதுவுடமைக் கட்சியினர் சிலர் தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாடநூலாக இருந்த கவிஞர் அப்துல் ரகுமானின் ‘சுட்டுவிரல்’ கவிதைத் தொகுப்பு ஈழ ஆதரவு, புலி ஆதரவு எனக்கூறி நீக்கப்பட்டது. பாசிச ராஜீவுக்கு எதிரான அரசியல் விமரிசனங்களைக் கூட தேசத்துரோகக் குற்றமாகவும் வன்முறையையும் பிளவுவாதத்தையும் தூண்டுவதாகவும் சித்தரித்தார். ஈழ ஆதரவு இயக்கங்கள் கூட தடை செய்யப்பட்டு ராஜீவ் கொலை வழக்கில் சேர்த்து உள்ளே தள்ளிவிடப்போவதாக மிரட்டினார்.

‘என்னைக் கொல்ல புலிகள் இயக்கத்தின் தறகொலைப்படை தமிழகத்துக்குள் ரகசியமாக ஊடுறுவி உள்ளனர். ராஜீவ் கொலை தொடர்பான விசாரணை நடத்தி வரும் சிறப்புப் புலனாய்வுக் குழு அலுவலகத்தை தகர்க்கவும் ராஜீவ் கொலையில் கைதாகியுள்ள முக்கியப் புள்ளிகளை மீட்கவும் அவர்கள் சதித் திட்டம் தீட்டியுள்ளனர்’ என்று சட்டசபையிலேயே புளுகிப் பீதியூட்டினார். புலிகள் அமைப்பைத் தடை செய்யவேண்டுமென மத்திய அரசைத் தொடர்ந்து நிர்பந்தித்தார். புலிகள் மீது மத்திய அரசு தடை விதித்ததும் ‘புலிகள் மீதான தடை விதிப்பு தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கைப் பராமரிப்பதை எளிதாக்கி இருக்கிறது’ என்றார்.

1991- இல் ஈழத்தமிழ் அகதிகள் தமது குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டுமென அரசாணையைப் பிறப்பித்தார். ராஜீவ் பிணத்தைக்காட்டி ஒப்பாரி வைத்து மிருக பலத்துடன் ஆட்சியைப் பிடித்த பாசிச ஜெ, புலிப்பூச்சாண்டி காட்டி, ஈழத் தமிழர்களைக் கைது செய்து அகதி முகாம்களைத் திறந்த வெளிச்சிறைச்சாலையாக மாற்றினார். அதுவரை ஈழ அகதிகளின் பிள்ளைகளுக்காக தொழிற்கல்லூரிகளில் இருந்து வந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்தார். ஈழ அகதிகளின் குழந்தைகள் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் சேர்வதைத் தடை செய்தார்.

ஈழத்துரோகி பத்மநாபா கொலைவழக்கைக் காரணம் காட்டி முன்னாள் உள்துறைச் செயலாளர் நாகராஜனைக் கைது செய்து மிரட்டி, துன்புறுத்தி அப்ரூவராக்கினார். அவ்வழக்கில் முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமியையும் அவர் கணவர் ஜெகதீசனையும் தடாவில் உள்ளே தள்ளினார். வைகோவின் தம்பி ரவியைத் தடாவில் கைது செய்தார். பத்மநாபா கொலை வழக்கில் குண்டு சாந்தனை தலைமறைவாகப் போகச் சொல்லி கடிதம் எழுதினார் என்று சொல்லி சாந்தனின் வழக்கறிஞர் வீரசேகரனை (திக) தடாவில் கைது செய்தார்.

ஈழ அகதிகள்-போராளிகள் உரிமைக்கும் ஈழ விடுதலைக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்த ம.க.இ.க, முற்போக்கு இளைஞர் அணித் தோழர்களை தடாவில் கைது செய்தார். ஈழப்போரில் அடிபட்டு சிகிச்சைக்காக தஞ்சம் புகுந்த புலிகள், அவர்களின் ஆதரவாளர்களையும், கோவை ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தி.கவினரையும் தடாவில் பிடித்து சிறையில் தள்ளினார்.

ஜெயா-வாழப்பாடி கும்பல் கரடியாய்க் கத்தியதால் ராஜீவ் கொலைக்கு பின்னர் ஈழ அகதிகள் வாரம் ஒரு கப்பல் வீதம் கட்டாயாப்படுத்தி ஈழத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். போயஸ் தோட்டத்துக்கு முன்பு நரிக்குறவர்களையும், ‘வயர்லெஸ்’ கருவியுடன் இருந்த ‘கூரியர்’ நிறுவன ஊழியரையும் கைது செய்து புலிகள் பிடிபட்டதாக வதந்தி பரப்பினார் ஜெ.

1992

தமிழர் வாழ்வுரிமை மாநாடு நடத்தி, புலிகளை ஆதரித்துப் பேசியமைக்காக பா.ம.க தலைவர் ராமதாசு, பண்ருட்டி ராமச்சந்திரன், த.தே.கட்சியின் தலைவர் ப.நெடுமாறன் உட்பட 7 பேர் தேச விரோத நடவடிக்கையில் ஈடுபட்டாகக் குற்றம் சாட்டப்பட்டு ஜெ.அரசால் கைது செய்யப்பட்டனர்.

‘தமிழகத்தில் பிரிவினைவாத சக்திகளையும், ஊடுறுவ முயலும் புலிகளையும் துடைத்தொழிப்பதில் தமிழக போலீசார் மகத்தான சாதனை புரிந்துள்ளனர். அவர்களுக்கு நவீன ரக துப்பாக்கிகளும், சாதனங்களும் இன்று அவசியமாக உள்ளது’ என்று ஜெ கூடுதல் நிதி ஒதுக்கியதோடு, மத்திய அரசிடமும் இதற்காக சிறப்பு நிதி ஒதுக்கக் கோரினார்.

1992- செப்டம்பர் 10,11,12 தேதிகளில் பா.ம.க நடத்திய ‘தமிழர் வாழ்வுரிமை மாநாட்டினை’ அடுத்து ‘தேசத் துரோக, பிரிவினை சக்திகளுக்கு தமிழகத்தில் சிறிதும் இடமில்லை’ எனப் பாய்ந்த ஜெ, ராமதாசு, பண்ருட்டி ராமச்சந்திரன், மற்றும் மாநாட்டில் தீவிரமாகப் பேசியதாகக் கூறி சுப.வீரபாண்டியன், பெ.மணியரசன், தியாகு, நெடுமாறன் ஆகியோரைக் கைது செய்தார். ராமதாசுக்கு பிணை கொடுத்த சென்னை கூடுதல் தலைமை பெருநகர நீதிமன்ற பொறுப்பு நீதிபதி டி.வி.சுப்ரமணியத்தை மிரட்டி விடுப்பில் வீட்டுக்கு அனுப்பிவிட்டு நீதிபதி கந்தசாமிபாண்டியனை அமர்த்திப் பிணையை ரத்து செய்ய வைத்து சி.பி.சி.ஐ.டி மூலம் 124-ஏ (தேசத்துரோகம்) சட்டத்தின் கீழ் கைது செய்ய வைத்தார்.

தமிழகத்தின் கேடிகள், ரவுடிகள் செய்த கொலை, கொள்ளை, கடத்தல்களை எல்லாம் புலிகள் செய்தாகக் கூறி பிரச்சாரம் செய்தார். நாகை கீவளூர் அருகே டிரைவரை அடித்துப் போட்டு டாக்சியைக் கடத்தியதாகக் கூறி 4 புலிகளை – அவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் போல் இருந்தனர் எனக்கூறி – கைது செய்ததாக ஜெ அரசு சொன்னது. மதுரை கூடல்நகர் அகதி முகாம் அருகே சாராயம் காய்ச்சும் ரவுடிகளால் சமயநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணசாமி சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால் இதனைப் புலிகள்தான் செய்தனர் எனப் புளுகி ‘கொலை செய்த புலிகளை சும்மா விடமாட்டேன் ‘ என்றும் சொன்னார்.

1993

புலிகளின் தளபதி கிட்டு கொல்லப்பட்டபோது கிட்டுவின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்தும், இந்தியாவின் அத்துமீறிய நடவடிக்கையைக் கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றியதற்காக ப.நெடுமாறன், சுப.வீ, புலமைப்பித்தன் ஆகியோரைக் கைது செய்தார். பின்னர் போலி சாட்சியங்கள் – ஆதாரங்களைக் கொண்டு ப.நெடுமாறன் போன்றோரை ‘தடா’வின் கீழ் சிறை வைத்தார்.

1993 மே – ‘நள்ளிரவில் கிளைடர் விமானத்தில் வந்த புலிகள் எனது வீட்டைக் குறிவைத்து வட்டமடித்துள்ளனர். காவலுக்கு நின்ற போலீசர் இதனைப் பார்த்துள்ளனர்’ என்ற ஆகாசப் புளுகை அவிழ்த்து விட்டார் ஜெ.

கோவை ராமகிருஷ்ணன், சிறு பொறியியல் தொழிலை கோவையில் நடத்திக் கொண்டு தனியாக ஒரு தி.க அமைப்பை நடத்தி வந்தார். (தற்போது பெ.தி.கவின் பொதுச்செயலாளர்களில் ஒருவர்) இவரையும் இவர் அமைப்பின் தலைமை நிலையச்செயலாளர் ஆறுச்சாமியையும் இரண்டாண்டுகளுக்கும் மேலாக கொடிய தடா சட்டத்தின் கீழ் ஜெ சிறையில் வைத்தார். விடுதலைப் புலிகளுக்கு வெடிமருந்தும், ஆயுதத் தளவாடங்களும் தயாரித்துக் கொடுத்ததாகப் பொய் வழக்குப் போட்ட ஜெ அரசு இவர்களைப் பிணையில் கூட வெளியில் விட மறுத்தது.

பெருஞ்சித்திரனாரும் அவரது மகன் பொழிலனும் நள்ளிரவில் அவர்களின் வீட்டில் அமர்ந்து தேச விரோதமாக சதி செய்தாகக் கூறிய ஜெ அவர்களை தடாக் கைதிகளாக்கினார். ‘திராவிடம் வீழ்ந்தது’ என்ற நூலை எழுதிய ஒரே குற்றத்திற்காக குணா என்பவரை வீரமணியின் ஆலோசனையின் பேரில் ஜெ தடாவில் உள்ளே தள்ளினார்.

ஜெயாவின் ஆட்சி ஈழத்தமிழர்களை எப்படி எல்லாம் பழிவாங்கியது என்பதற்கு பாலச்சந்திரனின் கதை ஒரு எடுத்துக்காட்டாகும். கனடா நாட்டுக் குடியுரிமை பெற்ற சி.பாலச்சந்திரன் எனும் ஈழத்தமிழர் இந்திய அரசு வழங்கிய விசா அனுமதியுடன் 24.4.90 முதல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்தார்.  அவர் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லாத சூழ்நிலையிலும் அவர் ஈழத் தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக 12.3.91 இல் க்யூ பிரிவு போலீசால் பிடித்துச் செல்லப்பட்டார். தி.மு.கவை வன்முறைக்கட்சி எனச் சித்தரிக்க ஐ.பி தயாரித்திருந்த சதித் திட்டத்திற்கு ஒத்துழைக்க அவரை மிரட்டினர். அவர் அதற்கு மறுக்கவே, சட்ட விரோதக் காவலில் அவரை அடைத்து வைத்தனர். தீலீபன் மன்றத்தில் தியாகு ( இன்றைய தமிழ் தமிழர் இயக்கத்தின் தலைவர்) தொடுத்த ஆட்கொணர்வு மனுவால் 16.3.91 அன்று நிலக்கோட்டை நீதிமன்றத்தில் பாலச்சந்திரன் நிறுத்தப்பட்டார். நீதிமன்ற உத்தரவுப்படி மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். 1988இல் நடந்த ( அதாவது பாலச்சந்திரன் தமிழ்நாட்டுக்கு வருவதற்கு 2 ஆண்டுகளுக்கு முந்தைய ) கொடைக்கானல் தொலைக்காட்சி கோபுர வெடிகுண்டு வழக்கிலும், சென்னை நேரு சிலை குண்டு வெடிப்பு வழக்கிலும் அவர் சேர்க்கப்பட்டார். 7.5.91 முதல் தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டார். 15.3.91 அன்று மாலை 5 மணி அளவில் தியாகராய நகர் பேருந்து நிலையத்தில் பொழிலனுடன் அமர்ந்து குண்டு வைக்க சதித் திட்டம் தீட்டியதாக தே.பா.சட்டக்காவலுக்கான ஆணையில் காரணம் சொல்லப்பட்டது.( அதே தேதியில் பாலச்சந்திரன் சிறைச்சாலையில் இருந்தார் ). தே.பா.ச.காவல் முடிந்ததும் வேலூர் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டார். பாலச்சந்திரன் சோர்ந்துவிடாமல் நீதிமன்றம் போனார். உயர்நீதி மன்றம் 21.7.1992இல் நிபந்தனையுடன் கூடிய பிணை தந்தும் தீர்ப்புக்கு எதிராக சிறப்பு முகாமில் ஜெ.அரசு அவரை அடைத்தது. கொடைக்கானல் வழக்கில் அதிகாரிகள் இவரை கொடைக்கானல் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லாததால் பாலச்சந்திரன் மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இது அரசின் பழிவாங்கும் செயல் என அவர் முறையிட்ட பின்னர் 24.8.1993இல் அரசு அவரை துறையூர் முகாமிற்கு மாற்ற உத்தரவிட்டது. மீண்டும் அவர் நீதிமன்றம் போனார். 1.7.94 முதல் மேலூர் சிறப்பு முகாமில் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டார். கொடைக்கானல் வழக்கில் குற்றம் சாட்டிய 14 ஏனைய நபர்களுக்கு அப்போது பிணை வழங்க நீதித் துறை உத்தரவிட்டது. ஆனால் ஈழத்தமிழர் எனும் ஒரே காரணத்துக்காக நெடுங்காலமாய் சிறைக்கொட்டடியில் அரசு அவரை வாட்டியது. இன்று ஈழத்துக்கு ஆதரவாக சவுடால் அடிக்கும் ஜெயா எனும் பாசிஸ்ட் எவ்வாறெல்லாம் ஈழத்தமிழர்களை சித்திரவதை செய்தார் என்பதற்கு ஒரு உதாரணம்தான் பாலச்சந்திரனின் கதை.

1995 – இல் தஞ்சையில் ஜெ நடத்திய உலகத்தமிழ் மாநாட்டுக்கு அழைப்பின் பேரில் வருகை தரவிருந்த கா.சிவத்தம்பி உள்ளிட்ட ஈழத் தமிழ் அறிஞர்கள், புலி ஆதரவாளர் என முத்திரை குத்தி வெளியேற்றப்பட்டனர். ஜெயின் கமிசன் விசாரணையில் ‘விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்த பா.ம.க, தவிர ம.க.இ.க என்ற அமைப்பை எங்கள் ஆட்சியில் ஒடுக்கினோம்’ என்று பெருமை பொங்க சாட்சியம் அளித்தார் ஜெயா.

2002

புலிகளும் சிங்கள அரசுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தை சமயத்தில் சர்க்கரை நோயினாலும், சிறுநீரகக் கோளாறினாலும் அவதிப்பட்டு வந்த புலிகளின் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கம் சிகிச்சை பெறவும், பேச்சுவார்த்தைகளின் போது வன்னிக்காட்டிற்கு சென்று பிரபாகரனுடன் கலந்தாலோசனை செய்யவும் சென்னையில் அவர் தங்குவது வசதியாக இருக்கும் என்ற கருத்து புலிகளால் முன்வைக்கப்பட்டது. மனிதாபிமான அடிப்படையில் இந்தியா இதனை ஏற்றால் பேச்சுவார்த்தைகளில் இந்தியா ‘பார்வையாளர்’ ஆகிவிடக்கூடும் எனப் புலிகள் எதிர்பார்த்தனர். இக்கருத்து பத்திரிகைகளில் வெளியானவுடன் பயங்கரவாதப் பீதியூட்டி, புலிகளை எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது என ஜெ கொக்கரித்தார். ஜெயாவின் பினாமியான அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மூலம் புலிகளின் பயங்கரவாதப் படுகொலைகளைப் பட்டியல் போட்டு, ஒருக்காலும் புலிகளை அனுமதிக்கக் கூடாது என மைய அரசுக்குக் கடிதம் எழுதினார். அவரின் கோரிக்கையை இந்திய அரசும் ஏற்றுக் கொண்டது.

இதே ஆண்டில் ஜெயா சட்டசபையில் ‘தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதி-தலைவர் பிரபாகரனைப் பிடித்து இங்கே கொண்டு வரவேண்டும்’ என்று தீர்மானமும் நிறைவேற்றினார்.

ஜூலை 2002:

விடுதலைப் புலிகளை ஆதரித்து மதுரை திருமங்கலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதைக் காரணம் காட்டி வை.கோ மற்றும் 8பேர்கள் மீது ஜெ கொடிய பொடா சட்டத்தை ஏவிச் சிறையில் அடைத்தார். பொடா சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வது தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என நியாயப்படுத்திய ஜெ, ‘ம.தி.மு.க தடை செய்யப்படவேண்டிய இயக்கம்; அதற்கான பரிசீலனையில் உள்ளோம்’ என எச்சரித்தார். ம.தி.மு.க மட்டுமின்றி, புலிகளுக்கு ஆதரவாகப் பேசிவரும் ராமதாசு, பழ.நெடுமாறன், திருமாவளவன் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுப்பது குறித்துப் பரிசீலித்து வருவதாக எச்சரித்தார். புலிகளின் ஈழத்துடன் தமிழ்நாட்டையும் இணைத்து அகண்ட தமிழகமாக்க மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததால் தமிழகத்தை இரு மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும் என ராமதாசு கோருகிறார் எனக் கூறி ஜெ பிரிவினைவாதப் பீதியூட்டினார்.

செப்டம்பர் 2002:

பயங்கரவாத – பிரிவினைவாத பீதி கிளப்பி அரசியல் ஆதாயம் அடையும் பார்ப்பன சதிகார அரசியலின் ஒரு பகுதியாக வைகோவும் நெடுமாறனும் புலிகளின் ஆதரவாளர்கள் எனக் கைது செய்யப்பட்டனர். இக்கைதுகளைக் கண்டித்து வழக்குப் போடப் போவதாகக் கூறிய சுப.வீயும் அடுத்த சில நாட்களில் கைது செய்யப்பட்டார். ஆள்பலமோ, மக்கள் செல்வாக்கோ இல்லாத நெடுமாறனின் கட்சி தடை செய்யப்பட்டு, அலுவலகங்கள் அதிரடிப்படை போலீசால் சோதனை இடப்பட்டு சீல் வைக்கப்பட்டன.

செப்டம்பர் 2007

தமிழ்ச்செல்வன் கொலை செய்யப்பட்ட பிறகு, அவருக்கு நினைவேந்தல் கூட்டமும், வீரவணக்கக் கூட்டமும் நடத்தியவர்கள் மீது தேசத் துரோகக் குற்றத்தில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று ஜெ கூறினார். கருணாநிதி எழுதிய இரங்கற்பாவை வைத்து தி.மு.க ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று கூறினார். பதிலுக்கு கருணாநிதி ‘இலங்கையில் கொல்லப்படுவது ஒரு தமிழன். என் உடம்பில் ஓடுவது தமிழ் ரத்தம். அதனால்தான் இரங்கல் தெரிவித்தேன்’ என்றார். அதற்கு ஜெ ‘நானும் தமிழச்சிதான்’ என்று கூறி விடுதலைப் போராளிகளைக் கொச்சைப்படுத்தினார்.

2008:

அதியமான் கோட்டையில் காவல்நிலையத்தில் இருந்த துப்பாக்கிகள் சில காணாமல் போயின. போலீசுக்காரர்களிடையே இருந்து வந்த முன்விரோதம் காரணமாக அவர்களில் ஒரு தரப்பினரே இச்செயலைச் செய்து துறை ரீதியான நடவடிக்கைக்கு எதிர்தரப்பினரை தள்ளிவிட்டனர். ஆனால் இச்சம்பவத்தைக் கூட ஜெ ‘கருணாநிதி ஆட்சியில் காவல்துறையினர் பரிதாபகரமான நிலைக்குத்தள்ளப்பட்டு விட்டனர். விடுதலைப் புலிகள், நக்சலைட்டுகள் எனப் பல்வேறு தீவிரவாத மற்றும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் ஊடுறுவல் காரணமாக தமிழக மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது’ என ஊளையிட்டார்.

மற்றபடி ஈழத்தமிழ் மக்கள் செத்து மடிவதைப் பற்றி ‘போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்’ என திமிராகப் பேசினார். திரைத்துறையினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சீமான், அமீர் போன்றோர் பயங்கரவாதத்திற்கு ஆதரவாகப் பேசினார்கள் அவர்களை கைது செய்யவேண்டுமென கருணாநிதிக்கு உத்தரவுபோட்டார். அதன்பிறகு திருமாவைக் கைது செய்யவேண்டுமென்றார். கடைசில் கருணாநிதியையும் கைது செய்ய வேண்டுமென மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

இப்படி பத்தொன்பது ஆண்டுகளாக ஈழத்திற்கு எதிராகவும், தமிழ்நாட்டுத் தமிழருக்கு எதிராகவும் ஆட்டம் போட்ட பாசிசப் பேய் இப்போது நாற்பது சீட்டையும் வெற்றிபெற வைத்தால் தன் முந்தானையில் முடிந்துவைத்திருக்கும் ஈழத்தை தூக்கித் தருவதாக கூக்குரலிடுகிறது. ஈழப்பிரச்சினைக்காக அ.தி.மு.கவை ஆதரிக்கவேண்டுமென முடிவெடுத்துள்ள அப்பாவிகள் இனியாவது திருந்துவார்களா?

ஈழம்…நேபாளம். தொடர்கிறது இந்தியாவின் மேலாதிக்க வெறி!

15

Nepal May Day

நேபாள பிரதமர் தோழர் பிரசண்டா ராஜினாமா செய்திருக்கிறார். நேபாள இராணுவத்தின் தலைமை ஜெனரல் ருக்மாங்கத் கட்வாலை பதவி நீக்கம் செய்து பிரசண்டா பிறப்பித்த உத்தரவை நேபாள ஜனாதிபதி ராம் பரன் யாதவ் நிராகரித்ததற்கான எதிர் நடவடிக்கை இது. இது ஜனாதிபதியின் அதிகார வரம்பை மீறியது என்றும் அரசமைப்பு முறைக்கு எதிரானது என்றும் அம்பலப்படுத்தி, தனது பதவி விலகலை தொலைக்காட்சி மூலம் அறிவித்திருக்கிறார் பிரசண்டா. “நேபாளத்தின் மக்களாட்சியைக் கருவிலேயே கொல்வதற்கு இந்தியா (அண்டை நாடு) சதி செய்கிறது” என்று குற்றம் சாட்டியுமிருக்கிறார்.

இந்திய ஆளும் வர்க்கத்தின் மேலாதிக்க கொலைக்கரங்கள் நேபாளத்தில் நடத்தி வரும் சதிவேலைகள் குறித்த செய்திகள் கடந்த சில நாட்களாகவே வெளிவந்து கொண்டிருந்தன. தற்போது பிரசண்டாவின் ராஜினாமா அதனை முழுமையாக அம்பலத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது.

நேபாள மன்னராட்சியைத் தூக்கியெறிவதில் மாவோயிஸ்டுகள் ஆற்றிய முதன்மைப் பாத்திரத்தை வெறிகொண்ட கம்யூனிஸ்டு எதிர்ப்பாளர்களும் கூட மறுக்க முடியாது. மன்னராட்சியை அகற்றுகிறோம் என்று கூறிக்கொண்டு நேபாளத்தின் ஓட்டுக்கட்சிகள் பல ஆண்டுகளாக நடத்திய போராட்டங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை. அவ்வாறு அகற்றும் நோக்கத்துடன் அவர்கள் அந்தப் போராட்டங்களை நடத்தவும் இல்லை. மன்னராட்சியுடன் சமரசம் செய்து கொண்டு அதிகாரத்தில் அமர்ந்து ஆதாயங்களைப் பெறுவதை மட்டுமே செய்து வந்தனர். அதன் காரணமாகவே மக்களின் வெறுப்பையும் சம்பாதித்துக் கொண்டனர். இறுதியில் மன்னர் ஞானேந்திரா நாடாளுன்றத்தை முடக்கி, கட்சித் தலைவர்களை சிறை வைத்து அடக்குமுறையை ஏவிவிட்ட காலத்தில் செய்வதறியாமல் இந்திய அரசிடம் தங்களைக் காப்பாற்றுமாறு மன்றாடிக் கொண்டிருந்தன நேபாள காங்கிரசு, யு.எம்.எல் முதலான ஓட்டுக் கட்சிகள். மாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்டமும் அவர்கள் துவக்கி வைத்த மக்கள் எழுச்சியும்தான் ஞானேந்திராவைத் தூக்கி எறிந்தன. ஓட்டுக் கட்சித்தலைவர்களை சிறையிலிருந்து மீட்டன. இது உலகறிந்த வரலாற்று உண்மை.

எனினும், மாவோயிஸ்டுகள் அதிகாரத்துக்கு வராமல் தடுப்பதற்கும், மன்னராட்சியை எப்படியாவது காப்பாற்றுவதற்கும் இந்தியாவும் அமெரிக்காவும் இறுதிவரை பெரிதும் முயன்றன. எல்லா வகையான சூழ்ச்சிகளையும் செய்து பார்த்தன. ஏழு கட்சிக் கூட்டணி மாவோயிஸ்டுகளுடன் சேர்ந்து ஒர் முன்னணி அமைத்து விடாமல் தடுப்பதற்கு இந்தியா எல்லா சூழ்ச்சிகளையும் செய்து தோற்றது. பிறகு, மன்னர் ஒழிக என்ற முழக்கத்துடன் இந்தியா ஒழிக என்று நேபாள மக்கள் தெருவில் முழங்கத் தொடங்கிய பின்னர்தான் வேறு வழியே இல்லாமல் மாவோயிஸ்டுகளின் வெற்றியை கசப்புடன் விழுங்கிக் கொண்டது இந்தியா.

பிறகு, மாவோயிஸ்டுகள் தேர்தலில் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதற்காக, தெராய் பகுதியில் மாதேசி மக்கள் மத்தியில் கலவரங்களைத் தூண்டியது. பின்னர் இந்து பாசிஸ்டுகளுக்கு ஆயுதம் கொடுத்து நேபாளத்துக்குள் அனுப்பி, (இதில் மட்டும் அத்வானி சோனியா கூட்டணி) நிராயுதபாணிகளாகத் தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த மாவோயிஸ்டு அணிகளைக் கொலை செய்தது. இத்தனைக்கும் பிறகு மாவோயிஸ்டுகள் பெற்ற தேர்தல் வெற்றி இந்தியாவின் மேலாதிக்க மகுடத்தில் இரண்டாவது செருப்படியாக இறங்கியது.

இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டதை வாய் பேச்சுக்கு வரவேற்ற போதிலும், மாவோயிஸ்டுகளை அதிகாரத்திலிருந்து அகற்றும் தனது முயற்சியை இந்தியா நிறுத்தவில்லை. இராணுவ தலைமை ஜெனரல் கட்வால் விவகாரத்தில் இது வெடித்து வெளியே வந்திருக்கிறது.

ராயல் நேபாள் ஆர்மி என்று முன்னர் அழைக்கப்பட்ட நேபாள இராணுவத்தின் தலைமை ஜெனரல் ருக்மாங்கத் கட்வால், ஞானேந்திராவின் தந்தையான மன்னர் மகேந்திராவின் வளர்ப்பு மகன். நேசனல் டிஃபென்ஸ் அகாதமி, இந்தியன் மிலிட்டரி அகாதமி போன்ற இந்திய இராணுவ நிறுவனங்களில் பயிற்றுவிக்கப்பட்டவர். மன்னராட்சிக்கும் இந்திய மேலாதிக்கத்துக்கும் விசுவாசமான அடியாள்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைந்த பிறகு, அதன் உத்தரவுகளுக்குக்  கட்டுப்படுவதாக வாயளவில் ஏற்றுக் கொண்டு, செயலில் நேரெதிராகச் செயல்பட்டார் கட்வால். மிக முக்கியமாக, மன்னராட்சிக்கும் இந்தியாவுக்கும் விசுவாசமான பல இராணுவ அதிகாரிகளுக்கு ஓய்வுக்காலத்துக்குப் பின்னரும் பதவி நீட்டிப்பு அளித்தார். மாவோயிஸ்டுகளின் மக்கள் படையைச் சேர்ந்த சிப்பாய்களை நேபாள இராணுவத்தில் சேர்த்துக் கொள்வது என்ற அரசின் நிராகரித்தது மட்டுமின்றி, தன்னிச்சையாக ஆளெடுப்பு நடத்தி, மன்னராட்சிக்கு சாதகமான ஆட்களை இராணுவத்தில் பெரும் அளவில் சேர்க்கத் தொடங்கினார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நேபாள அரசின் உத்தரவுகளுக்கு கீழ்ப்படிய மறுத்த காரணத்தினால், இவருக்கு விளக்கம் கோரும் நோட்டீஸ் அனுப்பினார் பிரசண்டா. அவரது பதில் திருப்திகரமாக இல்லை என்ற காரணத்தினால் இவரைப் பதவிநீக்கம் செய்தார். கட்வாலுக்கு நோட்டீஸ் அனுப்பிய உடனேயே “கட்வாலை நீக்கக் கூடாது” என்று பிரசண்டாவை மிரட்டியது இந்திய அரசு. ஏற்கெனவே மாவோயிஸ்டுகளை வேறு வழியின்றி சகித்துக் கொண்டிருந்த நேபாள காங்கிரசு, யு.எம்.எல் கட்சியினரை மாவோயிஸ்டுகளுக்கு எதிராகத் தூண்டி விட்டது. ஒரு இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு நடத்துவதற்கான சதிவேலைகளையும் இந்தியா தொடங்கியது.

இந்தியாவின் இந்த தலையீட்டுக்கு இரண்டாவது முக்கியக் காரணம், சீனாவுடன் நேபாள அரசு செய்து கொள்ளத் திட்டமிட்டிருந்த ஒப்பந்தம். ஏற்கெனவே நேபாளத்தின் மீது இந்தியா திணித்திருந்த மேலாதிக்க ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறிவருகிறார்கள் மாவோயிஸ்டுகள். இந்தியாவின் மேலாதிக்கத்தை எதிர்க்கும் உணர்வு நேபாள மக்களிடையே மிகவும் செல்வாக்குப் பெற்றிருப்பதால், வேறு வழியின்றி பிற ஓட்டுக் கட்சிகளும் இதனை ஆதரிக்கவேண்டிய கட்டாயம் இருந்தது. இந்நிலையில் சீனாவுடன் நேபாளம் சுயேச்சையாக செய்து கொள்ளும் இந்த ஒப்பந்தம், தனது மேலாதிக்க நோக்கத்துக்கு எதிராக அமையும் என்ற காரணத்தினால், அந்த ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்னரே மாவோயிஸ்டு அரசை வீழ்த்திவிட வேண்டும் என்பது இந்திய அரசின் திட்டமாக இருந்திருக்கிறது. இதனை ஒட்டித்தான் கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லி வந்த முன்னாள் மன்னன் ஞானேந்திரா, சோனியாவை இரகசியமாகச் சந்தித்துப் பேசியிருக்கிறார். இந்தப் பின்புலத்தில்தான் நடந்திருக்கிறது பிரச்ண்டாவின் ராஜினாமா. இப்போது தனது எடுபிடிக் கட்சிகள் அனைத்தையும் ஒன்று சேர்த்து நேபாளத்தில் ஒரு அரசாங்கத்தை உருவாக்க முனைந்திருக்கிறது இந்தியா.

இவை எதையும் “இல்லை” என்று இந்திய அரசு மறுக்வே முடியாது. அனைத்தும் அப்பட்டமாக அம்பலமாகி விட்டன. இந்தியாவின் நலனுக்கு அவசியமான நடவடிக்கைகள் என்ற கோணத்தில் இவற்றை நியாயப்படுத்தி எழுதுகின்றன ஆளும் வர்க்கப் பத்திரிகைகள். “இந்தியாவின் மேலாண்மையை இந்தப் பிராந்தியத்தில் நிலைநாட்ட காங்கிரசு தவறிவிட்டது” என்பதுதான் நேபாளம் குறித்த பா.ஜ.க வின் விமரிசனம். இன்னும் கொஞ்சம் சூழ்ச்சித் திறனுடன், குட்டு உடைபடாத வண்ணம் இதனை செய்திருக்க வேண்டும் என்பது ஆளும் வர்க்க அரசியல் விமரிசகர்கள் கூறும் விமரிசனம்.

மாவோயிஸ்டு அரசின் நடவடிக்கைகளில் இந்தியாவை அச்சுறுத்தும் மூன்று விசயங்கள் எவை என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா பட்டியலிடுகிறது. முதலாவதாக நேபாள இராணுவத்தில் மாவோயிஸ்டுகளின் மக்கள் படையின் வீரர்களைச் சேர்ப்பது. இதில் இந்தியாவுக்கு என்ன நோக்காடு? நியாயமாக மன்னராட்சி தூக்கியெறியப்பட்ட உடனேயே அதனைப் பாதுகாத்து நின்ற இராணுவம் கலைக்கப் பட்டிருக்க வேண்டும். நேபாளத்தின் சூழலும், இன்றைய உலகச் சூழலும் அதனை சாத்தியமற்றதாக்கியிருந்தன. எனவேதான் மக்கள் படையை இராணுவத்தில் சேர்ப்பது என்ற கோரிக்கையை மாவோயிஸ்டுகள் முன்வைத்தனர். மன்னராட்சிக்கு எதிரான போராட்டம் உச்சத்தில் இருந்த அந்தக் காலத்தில் 7 கட்சிக் கூட்டணி இதனை ஏற்றுக் கொண்டது.

மன்னராட்சியை அகற்றி குடியரசை நிறுவுவதற்காகப் போராடி, பல்லாயிரம் உயிர்களைப் பலி கொடுத்த மக்கள் படைதான் குடியாட்சியைப் பாதுகாக்க முடியும். ஆனால் இந்த நடவடிக்கை நேபாள ஆளும் வர்க்கத்துக்கு மட்டுமல்ல, இந்திய ஆளும் வர்க்கத்துக்கும் பாதுகாப்பானது இல்லையே! அதன் விளைவுதான் இந்தியத் தலையீடு. ஞானேந்திரா சோனியா சந்திப்பு.

இரண்டாவதாக, இராணுவத்தில் ஊடுறுவுவதைப் போலவே, நீதிமன்றத்திலும் மாவோயிஸ்டுகள் ஊடுறுவி விடுவார்களாம். மக்கள் நீதிமன்றம் என்ற தங்களது அமைப்பை நீதித்துறைக்குள்ளும் புகுத்தி விடுவார்களாம். அந்த அபாயம் குறித்து நேபாள பிரபுக்குலம் மட்டுமின்றி, இந்திய மன்னர் குலமும், நேபாளத்தில் முதலீடு செய்திருக்கும் இந்திய தரகு முதலாளிகளும் கவலைப்படுகிறார்கள். இது இந்தியாவிற்கான இரண்டாவது அபாயம்.

மூன்றாவதாக, நேபாளம் சீனாவுடன் செய்து கொள்ள விரும்பும் ஒப்பந்தம். ஒரு இறையாண்மை மிக்க நாடு, வேறொரு நாட்டுடன் ஒப்பந்தம் போடுவதை இந்தியா எப்படி தடுக்க முடியும்? ஏனென்றால் தனது அண்டை நாடான சீனாவுடன் நேபாள அரசு ஒப்பந்தம் போடுவது இந்திய நலனுக்கு எதிரானதாம். நேபாளத்தில் தனக்குப் போட்டியாக சீனா கால் பதிப்பதை இந்தியா விரும்பவில்லையாம்.

அண்டை நாட்டின் இறையாண்மையை இந்தியா மதிக்கும் யோக்கியதை இதுதான். இலங்கையில் இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்தக் கோரினால், “இறையாண்மை மிக்க ஒரு நாட்டின் உள்விவகாரத்தில் நாம் எப்படித் தலையிட முடியும்?” என்று கேட்கும் அதே வாயால்தான் இராணுவ ஜெனரலை பதவி நீக்கம் செய்யக் கூடாது என்று மாவோயிஸ்டுகளை மிரட்டுகிறது இந்தியா. ஆட்சிக் கவிழ்ப்புக்கும் சதித்திட்டம் தீட்டுகிறது. இராணுவ ஜெனரல் விவகாரம் கிடக்கட்டும். கேவலம் பசுபதிநாதர் கோயில் பூசாரியை மாற்றியதற்கே இந்தியா தலையிடவில்லையா?

இந்தியாவில் மட்டுமல்ல, தெற்காசிய வட்டாரத்திலேயே தேசிய இனப் போராட்டமோ ஜனநாயகப் புரட்சியோ வெற்றி பெறுவதை இந்தியா ஒரு போதும் அனுமதிக்காது. அன்று ஐரோப்பியப் புரட்சிக்குத் தடையரணாக இருந்த ரசியாவின் ஜாராட்சியைப் போல, இன்று இந்திய அரசு தெற்காசியப் பகுதியில் பிற்போக்கின் காவலன், அமெரிக்காவின் அடியாள்.

தற்போது பொருளாதார வலிமை பெற்றிருக்கும் சீன முதலாளித்துவ அரசு, அமெரிக்காவுக்குப் போட்டியாக, தனது செல்வாக்கை தெற்காசியப் பகுதிக்கும் விரிவு படுத்தும் நோக்கத்தில் இலங்கையிலும் நேபாளத்திலும் பாகிஸ்தானிலும் மேற்கொண்டு வரும் முயற்சிகளைக் காரணம் காட்டித் தனது மேலாதிக்க நோக்கத்தை இந்திய ஆளும் வர்க்கம் மறைத்துக் கொள்ள முனையும். இந்திய அமெரிக்க இராணுவ ஒப்பந்த்தத்தின் மூலம் அமெரிக்காவின் அடியாளாக நியமனம் பெற்றுவிட்டதால், சீனப்பூச்சாண்டி காட்டி தனது அமெரிக்க அடிவருடித்தனத்தை நியாயப்படுத்திக் கொள்ளவும் செய்யும்.

ஆனால் அதில் கடுகளவும் உண்மை இல்லை. சீனாவின் தற்போதைய ஆசைகள் தான் புதியவை. ஆனால் இந்திய

ஆளும் வர்க்கத்தின் ஆசையும் ஆதிக்கமும் மிகவும் பழையவை. 1950 களிலேயே அது தொடங்கி விட்டது. இந்திய நேபாள ஒப்பந்தம் முதல், ராஜீவ் ஜெயவர்த்தனா ஒப்பந்தம் வரை இதற்குப் பல சான்றுகள் உண்டு.

1990 களில் நேபாளத்தில் மன்னர் பிரேந்திராவுக்கு எதிராக நேபாள ஓட்டுக் கட்சிகள் நடத்திய ஜனநாயகத்துக்கான இயக்கத்தைப் பின்நின்று இந்தியா இயக்கியதற்கும், 1983 இல் இந்தியா ஈழப்போராளிக் குழுக்களுக்கு பயிற்சியும் அடைக்கலமும் கொடுத்ததற்கும் ஒற்றுமைகள் உண்டு. இன்று ராஜபக்சேவுடன் இணைந்து இனப்படுகொலையை நடத்துவதற்கும், சோனியா ஞானேந்திரா சந்திப்புக்கும் கூட ஒற்றுமை உண்டு. ஒருவேளை சோனியாவுக்குப் பதில் அத்வானியோ, ஜெயல்லிதாவோ பிரதமராக இருந்திருந்தாலும் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தே இருக்கும். ஈழத்து இனப் படுகொலைக்கும் இந்திய அரசின் ஆதரவு கிடைத்தே  இருக்கும்.

“ஹவாய் செருப்புக்கும் தோல் செருப்புக்கும் வித்தியாசமில்லையா?” என்று டெல்லிக்குக் காவடி எடுத்துக் கொண்டிருக்கும் அறிவாளிகளும் தமிழ் உணர்வாளர்களும் கொதித்தெழலாம். இல்லை என்று நாம் கூறவில்லை. அந்த வித்தியாசத்தைக் காட்டிலும், அவையிரண்டுமே ஆளும் வர்க்கத்தின்  கால்செருப்புகள் என்ற ஒற்றுமையே முதன்மையானது என்ற உண்மையைப் பணிவுடன் சுட்டிக் காட்டுகிறோம். வர்க்கம் என்ற சொல்லை தமிழ் உணர்வாளர்களும் ஈழ ஆதரவாளர்களும் எவ்வளவுதான் வெறுத்தாலும், கண்களை மூடிக்கொண்டாலும், ஆளும் வர்க்க நலன்தான் இந்திய அரசை இயக்குகிறது.

இறுதியாக, பிரசண்டாவின் பதவி விலகல் உரையிலிருந்து சில வாக்கியங்கள்:

“நாற்காலி ஆசைக்காக வெளிநாட்டவரின் தயவை எதிர்நோக்கிய காலம் முடிந்து விட்டது. தேசத்தின் கவுரவத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்கு எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயாராகுமாறு நாட்டுப் பற்று கொண்டவர்களைக் கேட்டுக் கொள்கிறோம். தங்கள் உயிரை அர்ப்பணித்திருக்கும் பத்தாயிரக்கணக்கான மக்களின் இரத்தத்தின் மீது நின்று கொண்டு, “அந்நியக் கடவுளர்களின்” முன் நாம் தலைவணங்க மாட்டோம்.”

இறையாண்மை நாட்டுப்பற்று என்ற பெயரில் மேலாதிக்கத்தை நியாயப்படுத்தும் ஆளும் வர்க்கங்களின் மிரட்டலுக்குத் நாமும் தலை வணங்க கூடாது.  தெற்கே ஈழம். வடக்கே நேபாளம். இந்திய மேலாதிக்கத்தின் கொலைக்கரங்கள் நீள்கின்றன. அவற்றை வெட்டி எறிவது நம் கடமை. மேலாதிக்கத்தின் தயவில் விடுதலையைச் சாதிக்கலாம் என்று நம்புவது மடமை.

தமிழிஷில் வாக்களிக்க…
தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க…
தமிழ்மணத்தில் எதிர் வாக்களிக்க….
வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

சில  தொழில்நுட்பப் பிரச்சினைகள் காரணமாக மே 1 முதல் 8 தேதி வரை இந்த இடுகைக்கு வந்த பின்னூட்டங்கள் அழிந்துவிட்டன. கூடிய விரைவில் அவற்றை மீட்க முயல்கிறோம். இனிமேல் வரும் பின்னூட்டங்களுக்கு பிரச்சினையில்லை. சிரமத்திற்கு வருந்துகிறோம்.


ஈழத்தின் மீதான இந்திய மேலாதிக்கப் போருக்கு பதிலடி கொடுப்போம்! – ம.க.இ.கவின் மே தினப் பேரணி – புகைப்படங்கள் !

ஈழத்தின் மீதான இந்திய மேலாதிக்கப் போருக்கு பதிலடி கொடுப்போம்! தேர்தலைப் புறக்கணிப்போம்! என்ற தலைப்பில் மே 01 அன்று தஞ்சையில் மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகளான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகியவை இணைந்து மேதினப் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை வீச்சாக நடத்தின.

தஞ்சை திருவள்ளுவர் திடலில் காலை எட்டு மணிக்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலத் தலைவர் தோழர் அ.முகுந்தன் அவர்களால் கொடியேற்றம் நடைபெற்றது. அதன்பிறகு 9 மணிக்கு ஓவியக் கண்காட்சியை தோழர் துரை. சண்முகம் துவங்கி வைத்தார். தோழர் முகிலன் வரைந்த அந்த ஓவியங்களில் ஈழம் பற்றிய ஓட்டுச் சீட்டு அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாதமும், தேர்தல் கூட்டணி என்பதற்கு கொள்கை ஒற்றுமை கிடையாது என்பதை நிறுவும் அப்போலி ஜனநாயக தாசர்களின் வாக்குமூலமும் ஓவியங்களில் சிறப்பாக வெளிப்பட்டு இருந்தது.

பேருந்துகள் மற்றும் புகைவண்டிகளின் வழியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து தோழர்கள் வந்த வண்ணமிருந்தனர். மாலை 4 மணிக்கு சரியாக புகைவண்டி நிலையத்திலிருந்து கூட்டம் நடக்கவிருந்த திருவள்ளுவர் திடல் வரை ஒரு மாபெரும் பேரணி நடைபெற்றது. கம்பம் பகுதி விவசாயிகள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த தோழர் மோகன் தலைமையில் நடந்த இப்பேரணியில் ஈழப்பிரச்சினையில் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா போன்றோர் போடும் வேடங்களை அம்பலப்படுத்தியும், ஈழத்திற்கு எதிராக சிங்கள இனவெறி அரசை மேலாதிக்க நலனுக்காக ஆதரிக்கும் இந்திய தரகு முதலாளிகளை முறியடிக்க அறைகூவல் விடுத்தும், பணநாயகத்தை விடுத்து மானத்தோடு இருக்க வலியுறுத்தியும் முழக்கமிட்டவாறு பேரணி நடைபெற்றது.

ஓட்டுப் பொறுக்கிகளின் அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியலை அதன் கூச்சத்தைக் கேட்டுச் சலித்த தஞ்சையின் வீதிகளில் எதிரொலித்த புரட்சிகர அரசியலின் நம்பிக்கையூட்டும் எழுச்சியான முழங்கங்களை மக்கள் ஆர்வத்துடன் கவனித்தனர். சுமார் பத்தாயிரம் பேர் கலந்து கொண்ட இப்பேரணியில் குழந்தைகளும், பெண்களும் குறிப்பிடத்தக்க அளவில் கலந்து கொண்டனர்.

ஈழத்தின் அவலநிலையை எடுத்துக்காட்டும் காட்சிப்படிமத்தை புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தோழர்கள் சிறப்பாக ஊர்வலத்தில் நடத்திச் சென்றது பார்வையாளர்களைக் கவர்ந்தது. தேர்தல் புறக்கணிப்பு, ஈழப்போரில் இந்திய அரசின் தலையீட்டை எதிர்ப்பது, தனியார்மய தாராளமய உலகமயமாக்கல் எதிர்ப்பு போன்ற முழக்கங்களுடன் கூடிய பதாகைகளையும், அனைத்து தோழமை அமைப்புகளும் தத்தமது கொடிகளுடன் ஊர்வலத்தில் வந்தது பார்வையாளர்களைக் கவரும் வண்ணம் இருந்தது.

ஊர்வலம் மாலை 6 மணிக்கு திருவள்ளுவர் திடலை வந்தடைந்தவுடன் பொதுக்கூட்டம் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் பரமானந்தம் தலைமையில் தியாகிகளுக்கான வீரவணக்கத்துடன் துவங்கியது.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் சுப. தங்கராசு சிறப்புரை ஆற்றினார். ஈழப்பிரச்சினைக்கு அப்பாற்பட்டு இந்தியாவின் ஜனநாயகம் என்பது எப்படி பெரும்பான்மை மக்களை ஒடுக்கும் போலி ஜனநாயகமாக இருக்கின்றது, தேர்ந்தெடுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கு சட்டத்தை இயற்றும் அதிகாரத்தைத் தவிர அமல்படுத்தும் அதிகாரமில்லை, உண்மையான அதிகாரம் கொண்ட மக்கள் சர்வாதிகார மன்றங்களைக் கட்டி புரட்சிகர அதிகாரத்தை மக்கள் கைப்பற்றுவதுதான் இதற்கு தீர்வு, நக்சல்பாரிகளின் தலைமையில் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு உழைக்கும் மக்கள் அணிதிரள வேண்டுமெனவும் தோழர் தனது உரையில் குறிப்பிட்டார்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர் காளியப்பன் சிறப்புரை ஆற்றினார். இந்திய அரசும், இந்திய ஆளும் வர்க்கங்களும் ஈழத்திற்கு எப்போதும் எதிரிதான் என்பதை ஈழத்தின் போராளிக் குழுக்களும், தமிழ்நாட்டில் உள்ள ஈழ ஆதரவு இயக்கங்களும் புரிந்து கொள்ளாமல், இந்தியாவை நண்பனென்று ஆதரிப்பதையும் அதன் விளைவே இன்றைக்கு நடைபெறும் இனப்படுகொலை உச்சத்தை அடைந்திருப்பதாகவும் தோழர் குறிப்பிட்டார். இந்திய தரகு முதலாளிகளுக்கு ஒன்றுபட்ட இலங்கையின் சந்தை தேவைப்படுவதால் அவர்களின் நலனைக் காப்பதற்காக இந்திய அரசு நேற்றும், இன்றும், நாளையும் சிங்கள பேரினவாதத்திற்கு ஆதரவாகத்தான் இருக்கும் என்பதையும் விளக்கினார்.

அடுத்து இன்றைய ஈழத்தின் மீதான இனப்படுகொலைக்கு நேரடியாக உதவும் காங்கிரசு அரசிற்கு பாடம் கற்பிப்பதற்காக ஈழ ஆதரவுக் குழுக்கள் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.கவை ஆதரிப்பதன் அபாயத்தை தோழர் புரியவைத்தார். கருணாநிதி நாளைக்கே ஈழம் கிடைக்குமென்றால் தனது பாரளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாகவும் அது இல்லாத பட்சத்தில் ராஜினாமா செய்வதால் பலனில்லை எனவும் கூறுகிறார். ஜெயலலிதாவோ தனக்கு தமழிக மக்கள் நாற்பது தொகுதிகளையும் தந்தால் புதிய மத்திய அரசின் மூலமாக ஈழத்தை வாங்கித் தருவாதக கூறுகிறார். இதிலிருந்து இருவரும் தமது பதவி ஆதாயத்திற்காக ஈழத்தின் பிணங்களை வைத்து நாடகமாடுவதை தோழர் உணர்த்தினார்.

தோழர் காளியப்பனின் உரைக்குப் பிறகு ம.க.இ.கவின் மையக் கலைக்குழு உணர்ச்சிகரமாக நடத்திய கலைநிகழ்ச்சி நடைபெற்றது. ஈழத்தின் அவலத்தை துல்லியமாக எடுத்தியம்பும் இசைச்சித்திரம் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தது.

பெண்கள் விடுதலை முன்னணியின் தோழர் நிர்மலா நன்றியுரை நிகழ்த்தினார். பாட்டாளிவர்க்க சர்வதேசிய கீதத்துடன் கூட்டம் இரவு 10 மணிக்கு நிறைவு பெற்றது. மிச்சமிருக்கும் நாட்களில் தமிழகம் முழுவதும் தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரத்தை இன்னும் வீச்சாக கொண்டு செல்லும் உறுதியுடன் தோழர்களும், ஆதரவாளர்களும் கலைந்து செல்ல மே தின நிகழ்ச்சிகள் தஞ்சையில் முடிவடைந்தது.

படங்களை பெரியதாக பார்க்க அதன் மேல் சொடுக்கவும்

தமிழிஷில் வாக்களிக்க…
தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க…
தமிழ்மணத்தில் எதிர் வாக்களிக்க….
வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

சில  தொழில்நுட்பப் பிரச்சினைகள் காரணமாக மே 1 முதல் 8 தேதி வரை இந்த இடுகைக்கு வந்த பின்னூட்டங்கள் அழிந்துவிட்டன. கூடிய விரைவில் அவற்றை மீட்க முயல்கிறோம். இனிமேல் வரும் பின்னூட்டங்களுக்கு பிரச்சினையில்லை. சிரமத்திற்கு வருந்துகிறோம்.


அமெரிக்காவில் ஒரு அம்பியின் சாதிவெறி!

51

poonol

மே 2 தினத்தந்தியில் ஒரு செய்தி! ” குழந்தை பெற்றுக் கொள்ளத் தடை, கணவனை, ஜெயிலுக்கு அனுப்ப துடித்த மனைவி, சென்னை போலீசு நிலையத்தில் ருசிகரமான வழக்கு” – இதுதான் அந்த செய்தியின் தலைப்பு. தலைப்பை பார்த்ததும் ஏதோ வழக்கமான தந்தி பாணியிலான க.காதல் மேட்டர் என்றுதான் பலருக்குத் தோன்றும். முதலில் செய்தியைப் பார்ப்போம்.

சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ஷியாம் நாராயணன் அமெரிக்காவில் மாதம் நான்கு இலட்ச சம்பளத்தில் என்ஜினியராக வேலை பார்க்கிறார். அவரைப் போல அதே சம்பளம், படிப்புடன் அங்கேயே வேலை பார்க்கும் நந்தினி என்ற பெண்ணை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்கிறார் நாராயணன். இனிமேல்தான் வில்லங்கம் ஆரம்பிக்கிறது.

நாராயணன் ஒரு சுத்த பத்தமான பார்ப்பன சாதியைச் சேர்ந்த அம்பி. நந்தினியோ தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர். அம்பி நந்தினியை ஏற்றுக் கொண்டதற்கு அவரது சம்பளம், படிப்பு, அமெரிக்க வாசம் என்பதைத் தவிர வேறு காரணம் இருந்திருக்க வாய்ப்பில்லை. நந்தினியைப் பொறுத்தவரை தன் சுயசாதி அவலத்தை ஒரு பார்ப்பனரை திருமணம் செய்வதன் மூலம் வென்றுவிட்டதாக நினைத்திருக்கலாம். எப்படியும் அமெரிக்காவில் செட்டிலான ஒரு தலித் பெண்ணுக்கு அம்மக்களின் போராட்ட உணர்வு இருக்கும் என்பதற்கு அவசியமில்லை. இருவரின் சாதியையும் தினத்தந்தி நேரடியாக குறிப்பிடவில்லை எனினும் நாம் உறுதியாகவே ஊகமின்றி அவர்களது சாதியை அறிய முடியும்.

ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஆணோ, பெண்ணோ ஆதிக்க சாதியைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்யும் போது அங்கே சமூகப்புரட்சி நடப்பதில்லை. தம்பிதியினர் இருவரும் யாரது சாதி படியெடுக்கில் மேலிருக்கிறதோ அந்த சாதியின் பண்பாட்டில் சங்கமித்து விடுவார்கள். இதைப் பற்றி தனியாகவே எழுதலாம். இங்கே நாம் கூற விரும்புவது நந்தினியும் அப்படி பார்ப்பனமயமாக்கத்தை ஏற்றுக் கொண்டிருக்கலாம் என்பதைத்தான். அப்படியெல்லாம் அவர் மாறியிருக்கக் கூடுமென்றாலும் அம்பி நாராயணனின் பெற்றோர்கள் ஏற்பதாக இல்லை.

ஒரு தலித் பெண்ணின் உறவில், இரத்தக் கலப்பில் குழந்தை கூடாது என அவர்கள் அம்பியை மாம்பலத்தில் இருந்தவாறே நோண்டிக் கொண்டிருந்திருக்கிறார்கள். தலித் பெண்ணின் நான்கு இலட்ச ரூபாய் சம்பளத்தை உற்சாகமாக வரவேற்ற அம்பியும் இறுதியில் பெற்றோரின் கோரிக்கையை ஏற்று குழந்தை வேண்டாமெனவும் கடைசியில் தாம்பத்திய உறவே கூடாது எனவும் வக்கிரமாக நடந்திருக்கிறார். இந்தக் கயமைத்தனத்தை நான்கு ஆண்டுகளாக போராடியிருக்கிறாள் அந்த அபலைப் பெண். இறுதியில் இருவரும் சென்னை வந்திருக்கிறார்கள்.

தன் உறவில் குழந்தை  கூடாதென இழிவு படுத்தும் நாராயணனோடு சேர்ந்து வாழ்வதில் பயனில்லை என பெற்றோருடன் சேர்ந்து முடிவெடுத்த நந்தினி கூடுதலாக அம்பியின் மேல் தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் கொடுக்கவும் முடிவு செய்திருக்கிறார். அவ்வாறே போலீசு ஆணையரிடம் புகார் பதிவு செய்தார். ஆணையரின் உத்தரவுப்படி அசோக் நகர் போலீசார் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தனர். முதலில் இருவருக்கும் கவுன்சிலிங் செய்து சேர்ந்து வாழ முயற்சி எடுத்த போலீசாரை நாராயணன் சட்டை செய்யவில்லை. நந்தினியுடன் சேர்ந்து வாழத்தயாராக இருப்பதாகவும் குழந்தை மட்டும் கிடையவே கிடையாது என அந்த திமிரெடுத்த மாம்பலத்துப் பார்ப்பான் உடும்புப் பிடியாக நிற்கிறார்.

கடைசியில் நாராயணன் மேல் தீண்டாமை சட்டத்தின் கீழ் கைது செய்யப் போவதாக அறிவித்த போலீசு போனால் போகட்டுமென ஒரு நாள் சிந்திப்பதற்கு வாய்ப்பு கொடுத்தது. அமெரிக்காவில் ஆர்ப்பாட்டமாய் வாழ்ந்து விட்டு இப்போது புழல் சிறைக்கு செல்ல வேண்டுமா என பயந்து போன அம்பி அடுத்த நாள் நந்தினிக்கு அவர் விரும்பியவாறு குழந்தை தருவதாக ஒப்புக் கொண்டாராம். தலித் சாதி மக்களுக்கு மட்டும் தண்டனைகளை பாவம் பார்க்காமல் வாங்கித் தரும் போலீசு ஒரு அக்ரகாரத்துப் பார்ப்பானை தண்டிப்பதற்கு தயாராக இல்லை. என்ன இருந்தாலும் இது மேன்மக்களின் பிரச்சினையல்லவா! அப்புறமென்ன, அடுத்த முறை அமெரிக்காவிலிருந்து வரும்போது குழந்தையுடன் வரவேண்டுமென போலீசு வாழ்த்துக்களுடன் அவர்களை அனுப்பி வைத்ததாம்.

தலித் மக்களின் மீது ஆதிக்கத்தை அரிவாளின் மூலம் நிலை நிறுத்தும் தேவர் சாதி – வன்னிய சாதி வெறிகளைப் போல பாரப்பன சாதி வெறி வன்முறை செய்வதில்லை என சிலர் பேசுவது வழக்கம். ஆனால் இந்த பிரச்சினையின் வன்முறையும், அநாகரிகமும், அயோக்கியத்தனமும் அரிவாளை விட அணுதினமும் சித்திரவதை செய்யும் வல்லமை கொண்டது. எவ்வளவு நுட்பமாக பாரப்பன சாதி தன்னை தக்கவைத்துக் கொள்கிறது பாருங்கள்! இத்தகைய சாமர்த்தியங்களெல்லாம் நிச்சயமாக தேவர், வன்னிய சாதி வெறியர்களிடம் இல்லை. அதனால்தான் இவர்களை திருத்துவது முடியும் என்பதோடு பார்ப்பனர்களை திருத்துவது இயாலாததாக இருக்கிறது.

போகட்டும், நந்தினியின் இந்த கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்ற முடிவை நம்மால் ஏற்க முடியவில்லை. காதலித்து மணந்த ஒரு பெண்ணை உலகில் வேறு எவரும் இதைப் போல கேவலப் படுத்த முடியாது என்றளவுக்கு இலக்கணம் படைத்திருக்கும் இந்த நபரின் உறவை அவர் வழக்குப் போட்டு தண்டித்திருக்க வேண்டும். அந்த மண உறவையும் துண்டித்திருக்க வேண்டும். இவ்வளவு கீழான நடத்தை உள்ளவனோடு எப்படி குடும்பம் நடத்த முடியும்? ஆனாலும் இந்தியப் பெண்கள் இத்தகைய கொடுமைகளை சகித்துக் கொண்டு வாழும் அடிமை மனநிலையை நந்தினி அமெரிக்கா சென்றும் கூட வெல்ல முடியவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது.

நாராயணன் இத்துடன் முடித்துக் கொள்ளும் ஆள்மாதிரி தெரியவில்லை. அமெரிக்க திரும்பியதும் சுலபமாக அந்த நாட்டு சட்டப்படி ஏதாவது ஒரு போண்டா காரணத்தைச் சொல்லிக்கூட விவாகரத்து செய்யலாம் என நினைத்திருக்கலாம். ஊர் உலகம் என்ன சொன்னாலும், எப்படியிருந்தாலும் பார்ப்பனர்கள் தமது இருப்பை தந்திரமாக காத்துக் கொள்வதில் விற்பன்னர்களாயிற்றே! பாவம் நந்தினி!!

மே தினத்தில் கனவுகளுடன் வினவு !

3

leninஅன்பார்ந்த நண்பர்களே,

அடி மனதின் ஆழத்தில் நனவாக நடந்தேற முடியாத ஆசைகளுடன் புதையுண்டு அன்றைய தினத்தை முடித்துக் கொண்டு நித்திரை கொள்ளும் மனம், அடுத்த நாளின் உயிர்த்தெழலுக்காக அந்த ஆசைகளை கனவுலகில் நிஜம் போல நிகழ்த்தி ஆசுவாசப் படுத்தும். அப்படித்தான் போதாமைகளுடனும், நம்பிக்கையற்றும், சலித்துப் போன விரக்திகளுடனும் கடந்து செல்லும் நாட்களில் கனவுகள் கனவாகவே நமத்துப் போகின்றன.

2008ஆம் ஆண்டு ஜூலை மாதம் பதினேழாம் தேதி வினவுத் தளத்தை ஆரம்பிக்கும் போது எங்களுக்கு பெரிய ஆசைகள் எதுவுமில்லை. இணைய உலகில் சமூகத்தின் ஒரு சிறிய பிரிவில் எமது கருத்துக்களை வாசகருடன் நெருக்கமாக பகிர்ந்து கொள்வதைத் தாண்டி வேறு திட்டம் இல்லை. ஆயினும் நாட்படச் சென்ற பதிவுகளில் பல, அரசியல் தொடங்கி பண்பாடு, சமூகம் வரை அனைத்தும் கூர்மையாக உடனுக்குடன் எழுதப்பட்டு, படிப்பவர்களின் சுய அனுபவத்தில் புரட்சிகர அரசியலை நம்பிக்கையுடனும், நெருக்கமாகவும் முன்வைத்ததன. விவாதத்துடன் பங்கேற்ற நண்பர்களின் எண்ணிக்கை வலைப்பூ என்ற வரம்பை கடந்து சென்றது. நாங்கள் அவ்வளவாக எதிர்பார்த்திராத இந்த உற்சாக வரவேற்பு வலைப்பூ எனும் பகுதிநேர, தனிப்பட்ட விருப்பத்தில் எழுதும் தன்மையை எங்களுக்கே தெரியாமல் மாற்றியமைத்து, முழுநேரமாக ஒரு செய்திப் பத்திரிகைக்குரிய பரப்பில், சமூகத்தை அடியோடு மாற்றியமைக்கும் நோக்கில், கண்ணோட்டத்தை தோழமையோடு பகிர்ந்து கொள்ளும் வகையில் எழுதுவதாக மாறிப் போனோம்.

வாசகர்கள் செப்பனிட்டு, பதம்பார்த்து, அங்கீகரித்து, கற்றுத்தந்த இந்தப் பாதையில் தீர்மானகரமாக பயணம் செய்யும் நோக்கில்தான் நாங்களும் கனவுகளைக் கண்டடைந்தோம். இந்தக் கனவுகள் எல்லாம் இனிய நினைவுகளின் இணைப்பில் மலர்ந்தவையல்ல. ஈழத்தின் துயரக் குரலிலிருந்தும், உலகமயத்தின் பெயரில் சுரண்டலும், நெருக்கடியும் இந்திய உழைக்கும் மக்களின் தலையில் இடியாய் இறங்கியிருக்கும் தருணத்திலிருந்தும், தமிழகத்தின் அரசியலை வணிக நோக்கில் இலாபம் பார்க்கும் தொழில் போல மாற்றியமைத்திருக்கும் அரசியல்வாதிகளின் இரைச்சலிலிருந்து விடுபடும் கடினமான கடமையிலிருந்தும், பல்வேறு காரணங்களால் வாழ்க்கையைப் பல தேசங்களில் சிக்க வைத்திருக்கும் புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் சிந்தனையை இணைக்க முடியுமா என்ற ஆசையிலிருந்தும் இந்தக் கனவுகள் மலர ஆரம்பித்தன.

அப்படித்தான் கருத்துப்படம், ஒளிப்படம், போராட்டச்செய்திகள், பதிவுலகில் பெயர் பெற்ற எழுத்தாளர் நண்பர்களின் எழுத்துக்களெல்லாம் வினவில் பூக்க ஆரம்பித்தன. ஒரு வகையில் சொன்னால் வினவின் பாதையை வினவே தெரிவு செய்து கொண்டது. இந்தப் பாதையில் அது கோரும் கடமையை ஆற்ற விரும்பும் நாங்களும், அதற்கு கைகோர்க்கும் நீங்களும் இணைந்து பயணம் செல்கிறோம். இந்தப் பாதை இன்னும் விரிந்து பரந்து செல்லும் போது நாங்களும் அதற்காக தயாராக வேண்டும் என்பதுதான் எங்களுக்குரிய சிக்கல். இப்போது கனவே எங்களை மகிழ்ச்சியாக அச்சுறுத்துகிறது. எனினும் நீங்களும் இந்த இன்பச்சுமையை சுமந்து கை கோர்ப்பீர்கள் என்பதால் இந்தப் பாதையில் நாங்கள் தனியாக செல்லவில்லை.

மனித குலம் தனக்குள் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொள்ளும் அருகதையைப் பெற்றிருக்கும் ஓரிரு தினங்களில் மே தினமே முதலிடத்தைப் பெற்றிருக்கின்றது. அன்றாட வாழ்க்கையின் மகிழ்ச்சியை பறித்துக் கொண்டு துன்பத்தையே முடிவேயில்லாத அமத சுரபியாக அள்ளி வழங்கியிருக்கும் இந்த சமூக அமைப்பின் விசித்திரமான இயக்கத்தை தொழிலாளி வர்க்கத்திற்கு கற்றுத் தந்த நாள் மே நாள். தொழிலாளி வர்க்கம் எவ்வளவு ஆழமாக இந்த விதியை தன் சொந்த அனுபவத்தில் கற்றுக் கொள்கிறதோ அவ்வளவு சீக்கிரத்தில் மானிட குலம் தன் துயரங்களிலிருந்து விடுதலை அடையும். உலகமயத்தின் விஷக் கொடுக்குகளிலில் சிக்கி வதைபடும் பெரும்பான்மை மக்களின் நோக்கில் பார்த்தால் இன்றைக்கு மே தினம் நிச்சயமாக கொண்டாட்ட தினமாக இல்லை. மாறாக போராட்டத்தை பற்றியெழும் அவசியத்தை உழைக்கும் மக்களுக்கு முன்னிலும் அதிகமாய் உணர்த்தும் விரிந்த பொருளினை மே தினம் கொண்டிருக்கிறது.

இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க, புதிய வரலாற்றை கட்டியமைக்கப் போகின்ற மே தினத்தில் வினவு புதிய வசதிகள், வடிவமைப்பில் உங்களைச் சந்திக்கிறது. இதன் தொழில் நுட்ப பணிகளுக்கு இடையூறு வரக்கூடாது என்பதற்காகவே இரண்டு வாரங்களாக புதிய இடுகைகள் வெளியிட இயலவில்லை. அதே நேரம் மே தினத்திற்குள் இந்த வேலை கைகூடுமா என்ற நிச்சயமின்மையால் இதை முன்கூட்டியே அறிவிக்கவும் இல்லை. வினவு.காமின் வேலைகளை மனமுவந்து எடுத்துக் கொண்டு நிறைவேற்றிக் கொடுத்த நண்பர் ரவிசங்கர் அவர்களுக்கு எமது நன்றிகள். புதிய வினவின் வசதிகளுக்கேற்ப உங்களின் பங்கேற்பும் அதிகரிக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன் இந்த இரண்டாம் பயணத்தை ஆரம்பிக்கிறோம். இனி வழக்கம் போல தேவைக்கேற்ற இடுகைகள் மற்ற பகுதிகள் தொடர்ந்து வரும்.

உலகத் தமிழ் மக்களுக்கு வினவு ஒரு நம்பகமான தமிழ்ப் பத்திரிகையாக மட்டுமல்ல, சமூக அநீதிகளின் பால் வெறுப்புற்று சோர்வுற்று படுத்திருக்கும் இதயங்களை வருடி உலுக்கி நம்பிக்கையை விதைக்கும் தோழனாகவும் செயல்படும்.

அனைவருக்கும் மே தின வாழத்துக்கள் !

தோழமையுடன்
வினவு

தமிழிஷில் வாக்களிக்க…
தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க…
தமிழ்மணத்தில் எதிர் வாக்களிக்க….
வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

சில  தொழில்நுட்பப் பிரச்சினைகள் காரணமாக மே 1 முதல் 8 தேதி வரை இந்த இடுகைக்கு வந்த பின்னூட்டங்கள் அழிந்துவிட்டன. கூடிய விரைவில் அவற்றை மீட்க முயல்கிறோம். இனிமேல் வரும் பின்னூட்டங்களுக்கு பிரச்சினையில்லை. சிரமத்திற்கு வருந்துகிறோம்.


மூன்றாவது அணி: போலி கம்யூனிஸ்டுகளின் பதவிப் பித்து !

wrap

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், கொள்கைக்கான கூட்டணி என்பதெல்லாம் காலாவதியாகி, இத்தனை தொகுதிகள் கொடுத்தால் இந்தக் கூட்டணி; இல்லையேல் அந்தக் கூட்டணி என்பதாக ஓட்டுக் கட்சிகளின் பிழைப்புவாதம் நாடெங்கும் நாறுகிறது. கூட்டணிக் குழப்பமே நாட்டின் மையமான அரசியலாக மாற்றப்பட்டு, கடந்த ஐந்தாண்டுகளில் இக்கட்சிகளும் ஆட்சிகளும் அடித்த கொள்ளைகள், அடக்குமுறைகள், துரோகங்கள் அனைத்தும் மூடி மறைக்கப்பட்டு வருகின்றன.

ஈழத் தமிழ் மக்கள்  மீது சிங்களஇந்திய அரசுகள் நடத்திவரும் கொடூரமான போரை எதிர்த்து சவடால் அடித்துவந்த திருமாவளவன் 2 சீட்டுக்காக கருணாநிதியிடம் பம்மிப் பதுங்கிவிட்டார். மருத்துவர் அண்ணன் ராமதாசு, அன்புச் சகோதரி பாசிச ஜெயலலிதாவின் காலடியில் விழுந்து கிடக்கிறார். தமிழினவாதக் குழுக்களோ, காங்கிரசு  துரோகிகளை தேர்தலில் வீழ்த்துவது என்ற பெயரில் பாசிச ஜெயா, பா.ஜ.க.வுக்கு மறைமுகமாகச் சேவை செய்யக் கிளம்பிவிட்டனர். இப்பிழைப்புவாதிகளின் துரோகங்கள் மூடிமறைக்கப்பட்டு, ஈழவிவகாரம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, ஓட்டுச்சீட்டு சந்தர்ப்பவாதக் கூட்டணியை தமிழகத்தின் மையமான அரசியலாக்கப்பட்டு வருகிறது.

காங்கிரசும், பா.ஜ.கவும் கடந்த தேர்தலில் வென்ற தொகுதிகளை மீண்டும் கைப்பற்ற முடியுமா என்பதே கேள்விக்குறியாகி விட்டது. தமிழகத்தில் முன்பு காங்கிரசு  தி.மு.க. கூட்டணியிலிருந்த பச்சோந்தி ராமதாசின் பா.ம.க.வும் இடதுவலது போலி கம்யூனிஸ்டுகளும் கூட்டணியிலிருந்து வெளியேறி ஜெயலலிதாவுடன் கூட்டணி கட்டிக் கொண்டுள்ளனர். ஆந்திராவில் நடிகர் சிரஞ்சீவியின் கட்சி காங்கிரசின் வாக்கு வங்கிகளைச் சிதறடித்து விடும் என்று கூறப்படுகிறது. உ.பி.யில் முலயம்சிங், பீகாரில் லல்லுபிரசாத் யாதவ்  ராம் விலாஸ் பாஸ்வான் ஆகியோர் காங்கிரசுக்கு அற்பமான இடங்களை மட்டுமே ஒதுக்கியுள்ளனர். மகாராஷ்டிராவில், சரத்பவார் கட்சியும் காங்கிரசும் கூட்டணி கட்டிக் கொண்டுள்ள போதிலும், இன்னமும் தொகுதிப் பங்கீட்டில் கழுத்தறுப்புகள் நீடிக்கின்றன. இதேபோல, மே.வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசுடன் காங்கிரசு கட்சி கூட்டணி கட்டிக் கொண்டுள்ள போதிலும், தொகுதிப் பங்கீட்டில் நாய்ச் சண்டை தொடர்கிறது.

காங்கிரசின் நிலைமை இப்படியிருக்க, பா.ஜ.க.வின் நிலைமையோ அதைவிடக் கேவலமாக உள்ளது. பா.ஜ.க.வில் நாற்காலியைப் பிடிப்பதற்கான கோஷ்டிச் சண்டை புழுத்து நாறுவது ஒருபுறமிருக்க, ஒரிசாவில் பா.ஜ.க.வுடன் கூட்டணி கட்டிக் கொண்டிருந்த பிஜு ஜனதா தளம் இப்போது பா.ஜ.க.வைக் கை கழுவி விட்டது. மகாராஷ்டிராவில் சிவசேனாவும், பா.ஜ.க.வும் கூட்டணிக் கட்டிக் கொண்டாலும் தொகுதிப் பங்கீட்டில் இழுபறிகள் நீடிக்கின்றன. பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் மக்களிடம் நிலவும் அதிருப்தி காரணமாகவும், கட்சியில் புழுத்து நாறும் கோஷ்டி சண்டைகள் காரணமாகவும் மீண்டும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் சுருங்கிவிட்டன.

இப்படி பா.ஜ.க.வும் காங்கிரசும் பலவீனப்பட்டுப் போயுள்ள நிலையில், அவற்றுக்கு மாற்று என்ற பெயரில் காங்கிரசு  பா.ஜ.க.வுடன் கூட்டணி சேராத பிழைப்புவாதக் கட்சிகளைக் கொண்ட மூன்றாவது அணியை இடது வலது போலி கம்யூனிஸ்டுகள் உருவாக்கியுள்ளனர். ‘இந்த மூன்றாவது அணியிலுள்ள கட்சிகள் மொத்தத்தில் 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றுவிட்டால், நாடாளுமன்ற தொங்கு நிலை ஏற்பட்டு, இந்த அணியின் ஆதரவு இல்லாமல் எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்படும். நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு உருவாகும் புதிய கூட்டணியால் இந்த அணியே ஆட்சியில் அமரும்’ என்று போலி கம்யூனிஸ்டுகள் வாக்கு சதவீத கணக்கு போடுகின்றனர்.

இதனால் தற்போதைய, தேர்தல் கூட்டணியை விட, தேர்தலுக்குப் பிறகு உருவாகும் கூட்டணிதான் பெருத்த எதிர்பார்ப்புகளைத் தோற்றுவித்துள்ளது. ஒன்று, போலி கம்யூனிஸ்டுகள் மற்றும் மூன்றாவது அணியிலுள்ள கட்சிகளின் ஆதரவோடு காங்கிரசு ஆட்சி அமைவது; இரண்டு, காங்கிரசின் ஆதரவோடு போலி கம்யூனிஸ்டுகள் மற்றும் மூன்றாவது அணியிலுள்ள கட்சிகளின் ஆட்சி அமைவது; மூன்று, பா.ஜ.க.வுக்குக் கூடுதல் இடங்கள் கிடைத்தால் மூன்றாவது அணியிலுள்ள கட்சிகள் அதனுடன் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி கட்டிக் கொண்டு ஆட்சியமைப்பது என்கிற வாய்ப்புகளே நிலவுகின்றன.

இதிலே, பா.ஜ.க., காங்கிரசு மட்டுமின்றி, மூன்றாவது அணியுடனும் கூட்டணி சேராமல், தனி ஆவர்த்தனம் செய்கிறார் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவி மாயாவதி. அதேசமயம், மூன்றாவது அணியுடன் நட்பும் பாராட்டுகிறார். பா.ஜ.க.  காங்கிரசு அல்லாத மூன்றாவது அணி ஆட்சியமைக்க வாய்ப்பு கிடைத்தால், தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியில் தன்னையே பிரதமராக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார். அவர் மட்டுமல்ல; போலி கம்யூனிஸ்டுகளும் மூன்றாவது அணியிலுள்ள கட்சிகளின் தலைவர்களும் தேர்தலுக்கப் பிந்தைய இழுபறியில் தாமும் பிரதமராகி விடலாம் என்று நப்பாசையுடன் கணக்கு போடுகின்றனர்.

மூன்றாவது அணி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைப்பது கடினம்தான் என்றாலும், ஒருவேளை காங்கிரசு ஆதரவு ஆட்சிமைக்க வாய்ப்பு கிடைத்தால், அல்லது தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியில் காங்கிரசுக்கு ஆதரவளிக்க நேர்ந்தால், இடதுசாரிகள் இம்முறை மைய அரசில் பங்கேற்க வேண்டும் என்று உபதேசித்திருக்கிறார், பழம் பெரும் சி.பி.எம். தலைவரான ஜோதிபாசு. இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் எந்த ஆட்சி அமைந்தாலும் அந்த ஆட்சியை வெளியிலிருந்து கண்காணித்து நெறிப்படுத்தும் வேலையை மட்டும் செய்து கொண்டிராமல், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் வகையில், அந்த ஆட்சியில் பங்கேற்கும் கூடுதல் பொறுப்பையும் இடதுசாரிகள் ஏற்க வேண்டும் என்றும், 1996இல் நடந்ததைப் போல ‘வரலாற்றுத் தவறை’ச் செய்து விடக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

1996இல் சி.பி.எம். கட்சியின் மூத்த தலைவரும் மே.வங்க முதல்வருமான ஜோதிபாசுவைப் பிரதமராக்க மூன்றாவது அணியின் கட்சிகள் பரிந்துரைத்த போது, சி.பி.எம். கட்சித் தலைமை அதை ஏற்காமல் ‘வரலாற்றுத் தவறு’ என்று சாடி, தடுத்து நிறுத்தி விட்டது. அப்போதைய சி.பி.எம். கட்சித் திட்டத்தில், மாநில அரசில் சி.பி.எம். கட்சி பங்கேற்கலாம் என்ற விதி இருந்தபோதிலும், மைய அரசில் பங்கேற்பது பற்றி குறிப்பாக எந்த விதியும் வகுக்கப்படவில்லை என்று அப்போது கட்சித் தலைமை தனது நிலையை நியாயப்படுத்தியது. பின்னர் 2000வது ஆண்டில் நடந்த கட்சியின் சிறப்புப் பேராயத்தில் இந்த விதி திருத்தப்பட்டு, மைய அரசிலும் பங்கேற்கலாம் என்று மாற்றப்பட்டது. அதைக் காட்டியே இப்போது ஜோதிபாசுவும் மீண்டும் அந்த வரலாற்றுத் தவறைச் செய்து விடக் கூடாது என்று கட்சிக்கு வழிகாட்டுகிறார். இதை வரவேற்று பக்கமேளம் வாசிக்கத் தொடங்கிவிட்டார், சி.பி.எம்.மின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான யெச்சூரி. நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் போராட்டங்களை நடத்தி புரட்சி செய்யப் போவதாக நாடகமாடி வந்த சி.பி.எம். கட்சி, கடைசியில் மைய அரசிலும் பங்கேற்று நாற்காலி சுகம் தேடும் இழிந்த நிலைக்குச் சென்று விட்டது.

எந்தக் கூட்டணிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை என்றும், மீண்டும் நாடாளுமன்ற தொங்குநிலைதான் ஏற்படும் என்றும், தேர்தலுக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய கூட்டணி உருவாகி நிலையான ஆட்சி அமையும் என்றும் முதலாளித்துவ அரசியல் நோக்கர்களும் போலி கம்யூனிஸ்டுகளும் மதிப்பீடு செய்கின்றனர். ஆனால் தொங்கு நிலையானாலும் தொங்கா நிலையானாலும் முதலாளித்துவ நாடாளுமன்ற ஜனநாயக மூடுதிரையின் பின்னே, அதிகாரவர்க்க போலீசு இராணுவ நீதித்துறை அடங்கிய அரசு எந்திரம் இருந்து கொண்டு நிரந்தரமாக நிர்வாகத்தை நடத்தி வருகிறது. அதைக்கொண்டு ஆளும் வர்க்கங்கள் சட்ட ரீதியாகத் தமது அடக்குமுறை சுரண்டலை நடத்தி வருகின்றனர். இத்தகைய அரசியலமைப்பு முறை தொடர்வதற்குத் தடையாகி நாடாளுமன்ற அராஜகம் முற்றினால், ஆளும் வர்க்கங்கள் பாசிச அல்லது இராணுவ சர்வாதிகாரத்தை நிறுவவும் தயங்காது. உலகெங்கும் முதலாளித்துவ ஜனநாயக ஆட்சியின் தர்க்க ரீதியான தவிர்க்க முடியாத அங்கமாகவே இது தொடர்கிறது. ஆகவே, தொங்கு நிலையில் இருப்பது நாடாளுமன்ற அமைப்பு முறை மட்டுமல்ல; முதலாளித்துவ ஜனநாயக அரசியலமைப்பு முறை முழுவதும்தான்.

இத்தகைய கேடுகெட்ட முதலாளித்துவ நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு முறையைத்தான் இப்போலி கம்யூனிஸ்டுகள் முட்டுக் கொடுத்து தூக்கிப் பிடிக்கின்றனர். அழுகி நாறும் முதலாளித்துவ அமைப்பு முறைக்குள்ளேயே தீர்வுகளைத் தேடி, நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பாதுகாப்பது, வகுப்புவாத சக்திகளை வீழ்த்துவது என்ற பெயரில் காங்கிரசுக்கு வால் பிடித்துச் செல்கின்றனர்.

தேர்தலுக்குப் பின்னரும் வகுப்புவாத சக்திகள் அதிகாரத்துக்கு வருவதைத் தடுப்பது என்ற பெயரில் காங்கிரசை உள்ளிருந்தோ, வெளியிலிருந்தோ ஆதரிக்கவும் அவர்கள் தயாராக உள்ளனர்.

இப்@பாலி கம்யூனிஸ்டுகள் காங்கிரசுடன் முரண்பட்டு நிற்பதாகக் காட்டிக் கொண்ட அணுசக்தி ஒப்பந்தம் மட்டுமல்ல; அந்நிய நாடுகளுடனான எந்தவொரு ஒப்பந்தத்தையும் விவாதித்து, வாக்கெடுப்பு நடத்தி நாடாளுமன்ற ஒப்புதல் பெற்ற பிறகுதான் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறுவதற்கு இந்திய நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் கிடையாது. அமெரிக்காவுடனான இராணுவ மற்றும் அணுசக்தி ஒப்பந்தம் மட்டுமல்ல; உலக வங்கிஐ.எம்.எஃப் மற்றும் உலக வர்த்தகக் கழகம் ஆகியவற்றுடனான ஒப்பந்தங்களும் இப்படித்தான் இந்நிய நாடாளுமன்றத்துக்கு மேலானதாக, அதன் வாக்கெடுப்பு விவாதத்துக்கு வராமலேயே நடைமுறைப்படுத்தப் படுகின்றன. அந்நிய நாடுகளுடனான துரோகத்தனமான ஒப்பந்தங்களை எதிர்த்து முறியடிக்கும் அதிகாரமே இல்லாத நாடாளுமன்றம், நாட்டுக்கும் மக்களுக்கும் துரோகமிழைத்து வரும் ஓட்டுக் கட்சிகள் இவை பற்றிய உண்மைகளை மக்கள் அறிந்து கொள்ளக் கூடாது என்பதற்காகவே தேர்தல் நாடகம் முதல் நம்பிக்கை வாக்கெடுப்பு, வெளிநடப்பு முதலான கூத்துக்கள் நடக்கின்றன.

காங்கிரசுடனான தேர்தல் அரசியல் கூட்டு வைத்துக் கொள்வதற்காகவும் மதச்சார்பின்மை போலி நாடகமாடுவதற்காகவும் மட்டுமே ஆர்.எஸ்.எஸ்.பா.ஜ.க. வகுப்புவாத சக்திகளை எதிர்ப்பதாக இப்போலி கம்யூனிஸ்டுகள் பித்தலாட்டம் செய்து வருகின்றனர். மற்றபடி, பாபர் ம‹தி இடிப்பு முதல் சேது சமுத்திர திட்ட எதிர்ப்பு வரை எல்லா விவகாரங்களிலும் இந்துத்துவா கும்பலுடன் சமரசப் போக்கைக் கடைபிடிப்பதே இப்போலி கம்யூனிஸ்டுகளின் கொள்கையாக உள்ளது. மும்பை, குஜராத், ஒரிசா என மதச் சிறுபான்மையினருக்கு எதிராக இந்துவெறி பயங்கரவாதிகள் நடத்திய படுகொலைஅட்டூழியங்களுக்கு எதிராக அறிக்கைகள்அடையாள எதிர்ப்புக்கு மேல் இப்போலிகள் வேறெதுவும் செய்யவில்லை. அதேபோல, மதச்சார்பின்மை நாடகமாடி முஸ்லிம் ஆதரவாளர்களாகத் தம்மைக் காட்டிக் கொண்டு, ஓட்டுக்காக இஸ்லாமிய மதவெறியர்களின் நிலையைச் சந்தர்ப்பவாதமாக ஆதரிக்கும் இப்போலி கம்யூனிஸ்டுகளும் அதன் இடது சாரி அரசும் வங்கதேச மருத்துவரும் எழுத்தாளருமான தஸ்லிமா நசுரீனை நாடு கடத்தின.

தனியார்மயம் தாராளமயம் உலகமயமாக்கம் எனும் ஏகாதிபத்திய மறுகாலனியாதிக்கத்துக்கு மனிதமுகம் கொடுப்பது என்கிற தோரணையோடு, மாற்றுக் கொள்கை என்ற பெயரில் மறைமுக ஆதரவளிப்பது; மாநிலத்தைத் தொழில்மயமாக்குவது என்ற பெயரில் சிங்கூர், நந்திகிராம விவசாயிகளிடமிருந்து விலைநிலங்களைப் பிடுங்கி அவர்களை ஒடுக்கி, பன்னாட்டு உள்நாட்டுத் தரகு முதலாளிக்குத் தாரை வார்ப்பது; சிறு வணிகர்களை ஒழிக்கும் ரிலையன்ஸ், வால்மார்ட் முதலான ஏகபோகங்களுக்கு நடைபாவாடை விரிப்பது என்று பலநூறு வழிகளில் இப்போலி கம்யூனிஸ்டுகள் மக்கள் விரோதநாட்டு விரோத நடைமுறையைக் கொண்டுள்ளனர். மொத்தத்தில், போலி கம்யூனிஸ்டுகளுக்கும் ஆளும் வர்க்க கூட்டணிக் கட்சிகளுக்குமிடையே அடிப்படையில் வேறுபாடு ஏதுமில்லை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, தேசிய ஜனநாயகக் கூட்டணி, மதச்சார்பற்ற மூன்றாவது அணி, இடது சாரி கூட்டணி என்ற வேறுபாடுகள் இருந்தாலும், நாட்டு விரோதமக்கள் விரோத மறுகாலனியாதிக்க கூட்டணி ஒன்று மட்டுமே ஓட்டுக் கட்சிகளிடம் உள்ளது.

இதனால்தான் எந்தவொரு ஓட்டுக் கட்சிக்கும் அவற்றின் கூட்டணிக்கும் ஆதரவு அலை வீசவில்லை. எதிர்ப்பு அலையுமில்லை. ஓட்டுக் கட்சிகளும் முன்னிறுத்திப் பேச முக்கியமான விசயமோ, கொள்கையோ இல்லை.

போலி கம்யூனிஸ்டுகளின் மூன்றாவது அணியில் பங்கேற்கும் கட்சிகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்தவெறி பா.ஜ.க. வுடன் மாறிமாறி கூட்டுச் சேர்ந்தவைதான். தனியார்மயம், தாராளமயம், உலகமயம் எனும் ஏகாதிபத்திய மறுகாலனியாக்கத்துக்கு விசுவாசமாகச் சேவை செய்பவைதான். சந்திரபாபு நாயுடு, நவீன் பட்நாயக் ஆகியோர் அப்பட்டமான ஏகாதிபத்திய அடியாட்களாகச் செயல்பட்டு, மக்கள் போராட்டங்களை மிருகத்தனமாக ஒடுக்கியவர்கள். பாசிச ஜெயலலிதாவோ பார்ப்பன பாசிசத்தையும் தமிழின எதிர்ப்பையும் தனது சித்தாந்தமாகவே கொண்டுள்ளார். மக்களால் வெறுத்தொதுக்கப்படும் இத்தகைய கழிசடை அரசியல் சக்திகளுக்கு மதச்சார்பற்ற முற்போக்கு அலங்காரம் செய்து மீண்டும் இச்சக்திகள் அரசியல் அரங்கில் வேரூன்ற மூன்றாவது அணியின் மூலம் போலி கம்யூனிஸ்டுகள் ஏற்பாடு செய்து தருகின்றனர். அதன் மூலம் இம்மக்கள் விரோத பாசிச சக்திகளை மக்கள் நலனில் அக்கறை கொண்ட முற்போக்கு சக்திகளாகக் காட்டி மக்களை ஏ#த்து வருகின்றனர்.

அனைத்துலக முதலாளித்துவத்தின் பெருந்தோல்விபொருளாதாரச் சரிவின் காரணமாக எழும் நெருக்கடிகளின் சுமைகளை ஏகாதிபத்தியவாதிகள் உழைக்கும் மக்கள் மீது சுமத்திவருவதை எதிர்த்து ஏகாதிபத்திய நாடுகளிலேயே மக்கள் போராட்டங்கள் வெடித்துப் பரவுகின்றன. முதலாளித்துவத்தை எதிர்த்து சோசலிசமே ஒரே தீர்வு என்று மக்கள் போராடி வரும் நிலையில், இந்தியாவிலும் அத்தகைய போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டிய சூழலில், மனித முகம் கொண்ட மாற்றுப் பொருளாதாரத் திட்டம் என்ற பெயரில், ஏகாதிபத்திய மறுகாலனியாக்கத்துக்கு விசுவாசமாக இப்போலி கம்யூனிஸ்டுகள் செயல்பட்டு வருகின்றனர். மைய அரசில் தாமும் பங்கேற்பதன் மூலம், மக்கள் போராட்டங்களைத் திசை திருப்பி நாடாளுமன்றத் தேர்தல் மூலம் இன்றைய முதலாளித்துவ அமைப்பிற்குள்ளேயே தீர்வுகாண முடியும் என பிரமையூட்டி மக்களை மோசடி செய்து வருகின்றனர்.

இப்படி நாடாளுமன்ற மோசடி ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையூட்டி, பாசிசபிழைப்புவாத சக்திகளுக்கு முற்போக்கு அலங்காரம் செய்து சந்தர்ப்பவாத கூட்டணி கட்டி மக்களை ஏய்த்து வரும் இப்போலி கம்யூனிஸ்டுகளை அம்பலப்படுத்தி தனிமைப்படுத்தாமல், மறுகாலனியாக்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லவே முடியாது. எந்த அதிகாரமோ, உரிமையோ இல்லாத உலக வர்த்தகக் கழகத்தின் ஆட்சிக்கு”ரப்பர் ஸ்டாம்ப்”பாகச் சீரழிந்து விட்ட நாடாளுமன்ற போலி ஜனநாயகத்தில், மறுகாலனியாதிக்கத் தாக்குதலுக்குத் தீர்வு காணவும் முடியாது. போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணித்து, நாடாளுமன்ற அரசியலமைப்பு முறைக்கு வெளியே மக்கள் போராட்டங்களின் வழியே ஓர் அரசியல் புரட்சியைச் சாதிப்பதன் மூலம் மட்டுமே இம் மறுகாலனியாதிக்கத்தை முறியடிக்க முடியும். பதவிப்பித்து கொண்ட இப்போலி கம்யூனிசத் துரோகிகளாகத் திரைகிழித்து தனிமைப்படுத்துவதன் மூலம் மட்டுமே இத்தகைய போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லவும் முடியும்.
 ________________________________________________

புதிய ஜனநாயகம், ஏப்ரல் 09

 ________________________________________________

கொலைகார காங்கிரசடி – குதம்பாய் கொலைகார காங்கிரசடி…

chidambaram shoe congressபடம் நன்றி : நான் 1084

ஒய்யாரமாகவே ஊரைக் கூட்டியே
சிறப்பாதான் வந்தாரடி குதம்பாய் – ஆனா
சிதம்பரம் செருப்பா சிரிச்சாரடி!

பொய்முகம் கண்டதும் பொறுக்க மாட்டாமலே
புறப்பட்டு வந்தடி குதம்பாய்….
அந்தச் செருப்புக்கு நன்றியடி!

சிங்காரம் கெட்டு, செருப்படிப்பட்ட
சிதம்பரம் மூஞ்சிக்கு
சிவகங்கை ஏதுக்கடி குதம்பாய் – காங்கிரசுக்கு
தேர்தல் ஒரு கேடாடி!

செருப்படிபட்டதை வெளியில் சொன்னாக்கா
தண்டிக்க வேணுமாண்டி குதம்பாய் – தமிழின துரோகி
தங்கபாலுதான் மிரட்டுறாண்டி!
இந்த மூஞ்சிக்கு ஏத்த அளவு என்னான்னு
பாத்து வீசுங்கடி குதம்பாய்…. ஈழத்து
செருப்பையும் சேத்துக்கடி!

ஜெர்னைல் சிங் போட்ட செருப்புக்கும் கோவம்
வந்த்து ஏதுக்கடி குதம்பாய் – அந்த
வரலாறை கூறுங்கடி!

பிந்தரன்வாலாவை வளர்த்து விட்டதே
இந்திராகாந்திதாண்டி குதம்பாய்….
இந்திராகாந்திதாண்டி – பின்னே பிந்த்தரன்வாலாவை
பயங்கரவாதின்னு பேயாட்டம் போட்டாளடி
குதம்பாய்…
பொற்கோயிலையே குருதியில் நனச்சாளடி!

சொந்த இனத்தும் பிணங்களைப் பார்த்து
இரத்தம் கொதிச்சானடி குதம்பாய் – அந்தச் சீக்கியன்
இந்திரா கதையை முடிச்சானடி!

இந்திரா கொலைக்கு பழிக்கு பழிவாங்க
பகையை வளர்த்தானடி குதம்பாய் – காங்கிரசு
பச்சைப் படுகொலை செய்தானடி!

ஆயிரக்கணக்குல சீக்கிய மக்களை
வெட்டிப் போட்டானடி குதம்பாய்… கொளுத்தி
வெறியாட்டம் போட்டானடி…
ஒத்தப் பொணத்துக்கு மொத்த இனமுன்னு
கத்தித் தீர்த்தானடி குதம்பாய்…. காங்கிரசு
கொலைகார கும்பலடி!

சீக்கியப் பெண்கள் ஆயிரக்கணக்கில்
விதவையர் ஆனாரடி குதம்பாய்….அவர்
வேதனை கொஞ்சமோடி!
பிஞ்சுக் குழந்தையும் தப்பவில்லை சொல்லவே
நெஞ்சு வேகுதடி குதம்பாய் – பலரை
டயரோடு சேர்த்து எரித்தானடி!

பெத்தவயிறு பத்தி எரியுதுன்னு பெண்கள் ராஜீவிடம்
நியாயம் கேட்டாரடி குதம்பாய் நியாயம் கேட்டாரடி!
”ஆலமரம் விழுந்தால் நிலம் அதிரத்தான் செய்யுமென்னு”
ஆணவம் பேசினாண்டி குதம்பாய் – அந்தக் குரூரத்தை
யாரும் மறப்பாரோடி !

சஜ்ஜான் குமாரும் ஜகதீஷ் டைட்லரும் – இதை
முன்னின்று நடத்திய பாவியடி! குதம்பாய் – பயங்கரவாதிகளை பாதுகாப்பது காங்கிரசடி!
ப.சிதம்பரம் வாங்கிய செருப்படி – குதம்பாய்
உண்மையை ஊருக்கு சொல்லுதடி!

சொந்த நாட்டு மக்களையே கண்டம் துண்டமாக
வெட்டுனானே! குதம்பாய் – காங்கிரசு கையாலே
காசுமீரு, வடகிழக்கு மாநிலத்தில்
தினம் காணாப் பிணங்கள் எத்தனையோடி!

ஈழம் எரியுது, தமிழ் இனம் கருகுது
காரணம் இந்திய அரசுதாண்டி – குதம்பாய் இந்தக்
காங்கிரசு அரசுதாண்டி

உன்காலுக்கு ஒரு செருப்பு இல்லேன்னாலும்
கடன் வாங்கியாவது வீசுங்கடி குதம்பாய்
தமிழின சொரணையைக் காட்டுங்கடி!

– துரை.சண்முகம்.

கருத்துப்படம்: ஈழத்துக்கு திரு.மு.க தலைமையில் இறுதி ஊர்வலம்!

22

karunanithi-perani-cartoon(படத்தை பெரிதாக காண படத்தின் மேல் சொடுக்கவும்)

ஈழத்தில் ஆயிரம் மக்கள் செத்தாலும் பரவாயில்லை ஒரு புலி கூட தப்பி விடக்கூடாதென ராஜபக்ஷேவின் சிங்கள ராணுவம் மக்களை கொன்று குவித்து வருகிறது. அன்றாடம் வரும் உயிரிழப்புக்களின் சோகம் தமிழகத்தில் வெறும் புள்ளிவிவரங்களாய் நீர்த்து போகிறது. அ.தி.மு.க ஆதரவில் நெடுமாறனின் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு பேரவையும், தி.மு.க ஆதரவு நல உரிமைப் பேரவையும் மாறி மாறி தேர்தல் காலத்தில் பத்தோடு ஒன்றாக ஈழம் குறித்த அழுகுணிக் குரலை ஒலிக்கின்றன.

குஜராத்தில் முசுலீம்களை இனப்படுகொலை செய்த பா.ஜ.கவையும், ஈழப் போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரிக்கும் அ.தி.மு.கவின் ச்சிகலா நடராஜனையும் அருகில் வைத்துக் கொண்டு நெடுமாறன் ஈழத்திற்காக கண்ணீர் விடுகிறார். அ.தி.மு.க கூட்டணியில் இருக்கும் பா.ம.க, சி.பி.ஐ முதலான கட்சிகளெல்லாம் மத்திய அரசும், கருணாநிதியும் ஒன்றும் செய்வில்லை என லாவணி பாடுகிறார்கள். இதே மத்திய அரசில் இவ்வளவு நாளும் பொறுக்கித் தின்ற ராமதாஸ் இதைச் சொல்வதற்காக கூச்சப்படுவதில்லை.

போயஸ் தோட்டத்தில் புரட்சித் தலைவியின் மூன்று நிமிட தரிசனத்திற்காக மூன்று மணிநேரம் காத்திருந்து

நாலு சீட்டு கூட தரமறுக்கும் அம்மாவிடம் ராப்பிச்சைக்காரனைப் போல மன்றாடும் இந்த வீரர் ஈழத்தில் பிரபாகரனுக்கு ஏதாவது நடந்தால் தமிழகத்தில் இரத்த ஆறு ஓடுமென சவடால் அடிக்கிறார். கோமாளிகள் வீர வசனம் பேசினால் எப்படி?

செவ்வாய்க்கிழமை நெடுமாறன் பேரவை ஆர்ப்பாட்டம் செய்ததற்காக தாங்களும் கணக்குக் காட்ட வியாழக்கிழமை தி.மு.க ஈழத்தில் போரை நிறுத்துமாறு ஊர்வலம் நடத்துகிறது. போரை நடத்துபவர்களே அதை நிறுத்தச் சொன்னால் அதன் பொருளென்ன? தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் ஈழத்தில் ஏதாவது நடந்து மக்களின் உணர்வு தனக்கு எதிராக திரும்பக்கூடாது என்பதற்காத்தான் இந்த நாடக ஊர்வலம்.

ராமேஸ்வரத்தின் மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கப்பற்படையால் சுடப்படுகிறார்கள். அதைக் கூட தடுக்க வக்கற்ற கருணாநிதி ஈழத்திற்காக நாடகமாடுவதைத் தவிர வேறு என்ன செய்யமுடியும்? விஷவாயுக் குண்டுவீச்சால் நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் கரிக்கட்டையாக எரிந்து கிடக்க இந்த குண்டை அளித்தும், படையை வழிநடத்தியும் உதவி செய்வது இந்திய அரசுதான் என்பது இப்போது உலக நாடுகள் எல்லாமும் அறிந்த விசயம். அத்தகைய அரசில் அமைச்சர்களாய் பங்கேற்று ஆளும் கூட்டணி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தி.மு.க யாரை எதிர்ப்பதாக ஏய்க்கிறது?

அழகரி என்ற ரவுடி தனதுமகன் என்ற ஒரே காரணத்திற்காக எம்.பியாக்கி பார்க்கத் துடிக்கும் கருணாநிதிக்கு ஈழத்தின் துயரம் என்னவென்று தெரியுமா? எம். பிக்கள் ராஜீனாமா, மத்திய அரசுக்கு தந்தி, மனித்ச் சங்கிலி, உண்ணாவிரதம், எல்லாம் முடிந்து விட்டது. மிச்சமிருப்பது கோவணம் கட்டிய ஊர்வலம்தான. அதுதான் சுயமரியாதை அற்ற இந்த ஜன்மங்களுக்கு சரியாகப் பொருந்தும்.

தமிழகத்தில் எவ்வளவு தீவிரமாக ஈழம்பற்றிய உணர்ச்சி மேலோங்கியதோ அவ்வளவு சீக்கிரம் வற்றிப் போவதற்கு இந்த துரோகிகளே முழு முதல் காரணம். இதைத் தாண்டி தமிழக மக்களிடமும், இளைஞர்களிடமும் ஈழத்தில் நல்லது ஏதும் நடக்காதா, நாம் ஏதாவது செய்யவேண்டாமா என்ற ஆதங்கம் இருக்கிறது. ஆனால் அதை ஓட்டுப் பொறுக்குவதற்கான முகாந்திரமாக எல்லாக் கட்சிகளும் மாற்றிவிட்டன.

தி.மு.க நடத்தும் ஊர்வலத்தில் ஈழத்தில் குண்டு போட்டு தமிழனைக் கொல்லும் காங்கிரசு கட்சியும் கலந்து கொள்கிறதாம். இவ்வளவு நாளும் இந்தக் காங்கிரசை எதிரி என பிலாக்கணம் வைத்த திருமாவளவனும் இந்த ஊர்வலத்தில் மானங்கெட்டு கலந்து கொள்கிறாராம். இவர்களையெல்லாம் நம்பி ஏதாவது செய்வார்கள் என எண்ணிய ஈழத்தமிழ் மக்கள் இப்போதாவது  இவர்களைப்பற்றி புரிந்து கொள்ளவேண்டும்.

இன்று உலகமெங்கும் உள்ள புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தங்களால் செய்ய முயன்ற அனைத்தையும் செய்து போராடுகிறார்கள். அந்தப் போராட்டங்களோடு தமிழகமக்களும், மாணவர்களும் இந்த ஓட்டுக் கட்சிகளைப் புறந்தள்ளி தனியாக, எழுச்சியான போராட்டத்தை கட்டியமைக்க வேண்டும். அந்தப் போராட்டம் இந்திய அரசின் கழுத்தைப் பிடித்து உலுக்குவதாக இருக்க வேண்டும். இல்லையென்றால் ஈழத்தின் இறுதி மூச்சை காப்பாற்ற நாதி இருக்காது.

ஈழமும் இந்திய தேர்தலும் – என்ன செய்ய வேண்டும் ?

eelam_oviyam_002

சிங்கள இனவெறி அரசுடன் கைகோர்த்துக் கொண்டு ஈழத்தமிழ் மக்கள் மீது இந்திய அரசு தொடுத்து வரும் மேலாதிக்கப் போருக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிக்குமாறு உங்களை அறைகூவுகிறோம்.

ஈழம்: தலைவர்களின் ‘தியாகம்’ – தமிழருவி மணியன் !

26
ஈழப் பிரச்சினையில் காங்கிரசுக் கட்சியின் எதிர்ப்பைக் கண்டு சினமடைந்து அக்கட்சியிலிருந்து வெளியேறியிருக்கிறார் சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான  தமிழருவி மணியன். தேர்தல் பிரச்சாரத்தில் எல்லாக் கட்சிகளும் ஈழத்தை மறந்தும் மறுத்தும் கூட்டணி அரசியிலை சில தொகுதிகளைப் பெறவேண்டுமென்பதற்காக பரப்புரை செய்துவருகின்றன.  இதை அம்பலப்படுத்தி ஜூனியர் விகடன் ஏப்ரல் 5 இதழில் தமிழருவி மணியன் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இது அவரது ஒப்புதலோடும், ஜூனியர் விகடனுக்கு நன்றி தெரிவித்தும் இங்கு வெளியிடப்படுகிறது.
தமிழருவி-மணியன்
தமிழருவி மணியன்

நாற்காலி மனிதர்களின் நாடக மேடை தான் தமிழக அரசியல் என்பது மிண்டும் நிரூபணமாகியிருக்கிறது.  சமூகக் கூச்சம் என்பது எள்ளளவும் இல்லாத மலினமான மனிதர்கள், மக்களின் விதியை எழுதும் தலைவர்களாக வாய்த்தது தமிழினத்தின் சாபம்.  நம் சமகால அரசியல்வாதிகளின் பேச்சும் எழுத்தும், தங்கள் நேர்மைக் குறைவை நியாயப்படுத்தும் முயற்சிகளாகவே இருக்கின்றன.  இந்த நடிப்பு சுதேசிகளை இன்னும் எத்தனை காலம் தான் சகித்துக்கொள்வது?

‘வெற்றிக்கான வாய்ப்பிருந்தால், கோழைகூடக் களத்தில் நிற்பான்.  நிச்சயம் தோற்றுவிடுவோம் என்ற நிலையிலும் போராடத் துணியும் வீரர்களுக்குத் தலைமை தாங்கவே நான் விரும்புவேன். பல மோசமான வெற்றிகளைவிட ஒரு நேர்மையான தோல்வியே மேன்மையானது’ என்றார் ஜார்ஜ் எலியட்.  ஆனல், நம் அரசியல் தலைவர்களுக்கு வெற்றிதான் முக்கியம்.  இங்கே கொள்கைகளை பலியிடுவதுதான் கூட்டணி தர்மம்!

பாவம், புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள்… பாசிச வெறி பிடித்த ராஜபக்சே ராணுவத்தால் கரிக்கட்டைகளாய் குவிக்கப்படும் தங்கள் சொந்த உறவுகளின் சோகம் தவிர்க்க உடனடியாகப் போர்நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த ‘சொக்கத்தங்கம்’ சோனியா காந்தியிடம் கலைஞர் தன் செல்வாக்கைப் பயன்படுத்துவார் என்று ஒவ்வொரு நாளும் ஏக்கத்துடன் எதிர்பார்த்தனர். ஈழத்தமிழரின் பிரச்சினை குறித்துப் பேசாத நாட்கள் எல்லாம் பிறவா நாட்கள் என்று இரவு, பகல் கண்ணுறக்கமின்றிக் கண்ணீர் வடிக்கும் ‘தமிழ்க்குடி தாங்கி’ மருத்துவர் ராமதாஸ், இலங்கை அரசுக்குத் துணைநிற்கும் இந்திய அரசின் செயலைக் கண்டித்து, மத்திய அமைச்சர் பதவியிலிருந்து மகன் அன்புமணியை விலகச்செய்து, ஈழத்தமிழரின் இன்னலைத் தேர்தல் பிரச்சனையாக்கி மாநிலம் முழுவதும் இனவுணர்வைத் தூண்டுவார் என்று நாளும் நம்பிக்கை வளர்த்தனர். அவர்களுடைய அனைத்து நம்பிக்கைகளும் பொய்த்துப்போயின.

முத்துக்குமாரின் உயிர்த்தியாகத்தில் கொழுந்துவிட்டெரிந்த ஈழ ஆதரவு நெருப்பு ஒவ்வொரு தமிழர் நெஞ்சிலும் தகித்தபோது, பிணங்களை வைத்துப் பிழைப்பு நடத்தும் தமிழகத்து அரசியல் பாரம்பரியம் மறு உயிர்ப்பு அடைந்தது.  அதனால் உந்தப்பட்டு தீக்குளிக்கும் அப்பாவித் தியாகிகளின் பட்டியல் நீண்டது.  கருகிக் கிடந்த சடலம் தேடி ஓங்கிய குரலில் ஒப்பாரி வைக்கும் கூட்டம் ஓடியது.  எங்கும் உணர்ச்சி வெள்ளம்.  கலைஞரின் ஆட்சி அதைக் கண்டு அரண்டது.  ஒருபுறம் இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவை, மறுபுறம் இலங்கைத் தமிழர் நலவுரிமைப் பேரவை என்று வீதி நாடகங்கள் இனவுணர்வு ஒப்பனைகளுடன்  அரங்கேறின.  இரண்டு பக்க நாடகங்களிலும் அரிச்சந்திரன் – சந்திரமதி மயான காண்டப் புலம்பல்கள் நெஞ்சைப் பிளந்தன.  நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.  ஈழ நாடகத்தில் இரண்டு பக்கமும் அவரசம் அவசரமாய்த் திரை விழுந்தது.

கூட்டணி முயற்சிகள் தொடங்கின.  ‘இனமே அழியினும், ஈழமே கருகினும், சோனியா காந்தியின் கருணையில் ஆட்சி நாற்காலியில் அசையாமல் இருப்பதே அடியேன் லட்சியம்’ என்று முடிவெடுத்த முதல்வர் கலைஞர், ராமதாஸூக்கும் விஜயகாந்துக்கும் திருமாவளவனுக்கும் வெவ்வேறு வலைகளை விரித்துவைத்தார். ஒவ்வொரு மாநிலத்திலும் சக்திமிக்க மாநிலக் கட்சிகளிடம் கையேந்தி நிற்கும் காங்கிரஸ், விஜயகாந்தையும் மருத்துவரையும் கட்டியணைத்துக் கூட்டணியமைக்கக்  கால்களில் விழுந்து கண்ணீர்விட்டது.  பேரம் படியாததால், விஜயகாந்த் லட்சிய வீரரானார்.  ஆசைப்பட்ட தொகுதிகள் அமையாததால், காங்கிரஸை ஈழத் தமிழரின் விரோதியாய் இனம் கண்டுகொண்டார் ராமதாஸ்.  இதுதான் பின்னணி உண்மை.

கலைஞரின் வலையில் விடுதலைச் சிறுத்தைகள் விரும்பி விழுந்தன.  இரண்டு தொகுதிகளுக்காக திருமாவளவனின் புறநானூற்றுப் போர்க்கோலத்தில் புழுதி படிந்தது.

ஈழத்தில் இன்றுவரை இனப்படுகொலை ஓயவில்லை. திசையெங்கும் வாழ்வாதாரங்களை முற்றாக இழந்து உணவின்றி, மருந்தின்றி நம் தொப்புள் கொடி உறவுகள் லட்சக்கணக்கில் சாவுப் பள்ளத்தில் சரிந்து கிடக்கின்றனர்.  ஈழத் தமிழரின் இந்த நிலைக்கு முக்கியமான காரணம் இந்திய அரசின் தவறான வெளியுறவுக் கொள்கை.  பண்டாரநாயகா, சேனநாயகா, சிறிமாவோ, சந்திரிகா, ரணில் விக்கிரமசிங்கே ஆகியோரை விட ராஜபக்சே பெரிய ராஜதந்திரி இல்லை.  ஆனால், அவர் ஜெயவர்த்தனேவைவிட மோசமான இன அழிப்பு அரக்கனாக விசுவரூபம் எடுத்ததற்கு இந்திய அரசின் ஆதரவுதான் அடித்தளமானது.

தமிழகத்திலிருந்தும் புதுவையிலிருந்தும் தேர்ந்தெடுக்கப் பட்ட நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனவுணர்வுடன் இயங்கியிருந்தால் மன்கோகன் அரசு ராஜபக்சேவுக்கு ஆயுதங்களையும், சிங்கள ராணுவத்துக்கு இந்திய மண்ணில் பயிற்சியையும், வட்டியில்லாமல் 2000 கோடி நிதியையும் வழங்கியிருக்க முடியாது.  மன்மோகன் அரசு சோனியா காந்தியின் வழிகாட்டுதலில் நடப்பது நாடறிந்த உண்மை.  காங்கிரஸ், தேர்தல் அறிக்கையை வெளியிட்ட விழாவில் மன்கோகன் சிங் மனம் நெகிழ்ந்து சோனியா காந்தியை ‘மத்திய அரசின் காவல் தெய்வம்’  என்று வர்ணித்திருக்கிறார்.  அந்தக் காவல் தெய்வம் இன்றுவரை ஈழத்தமிழர் அவலம் குறித்து ஒரு வார்த்தையும் பேசவில்லை.  அதனால், அவருடைய தலைமையில் இயங்கும் காங்கிரஸூக்கு இனவுணர்வுள்ள எந்தத் தமிழரும் வாக்களித்தால் அது தகுமா?  இலங்கைத் தமிழர் பாதுகாப்பு பேரவை மாநிலம் முழுவதும் மேடை போட்டு, ‘முதல்வர் கலைஞர் தமிழினத்துக்கு துரோகம் இழைத்துவிட்டார்’ என்று முழங்கியது. முத்துக்குமார் தொடங்கி வைத்த தீக்குளியல் தியாகம் வைகோவையும், ராமதாஸையும், தா.பாண்டியனையும், திருமாவளவனையும் ஈழத்தமிழர் இன்னல் தீர்க்க ‘எந்த தியாகத்தையும் செய்யும்’ சூளுரைக்குத் தூண்டியது.  உண்மையில் இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தியாகத்தைச் செய்திருப்பதை மக்கள் மறந்துவிடக்கூடாது.

விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக ஆண்டுக்கணக்கில் ‘பொடா’ சட்டத்தில் வைகோவை சிறையிலடைத்தார் ஜெயலலிதா. ‘பிரபாகரனைக் கைது செய்து இந்தியாவுக்குக் கொண்டுவந்து தண்டிக்க வேண்டும்’ என்று முதல்வராய் இருந்த போது சட்டப்பேரவையில் சங்கநாதம் செய்தார்.  ‘நடந்தது நடந்ததாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லதாக அமையட்டும்’ என்று இயேசுவின் இரக்கவுணர்வோடு, புத்தரின் பாதையில் ஜெயலலிதாவுக்குப் பாவமன்னிப்பு வழங்கி, பகைமையுணர்வைத் தியாகம் செய்து, ஐந்து எம்.பி. தொகுதிகளுக்காக அன்று போயஸ் தோட்டத்தில் அடைக்கலமானார் புரட்சிப்புயல் வைகோ. நாளையே தொகுதி பேரங்கள் படியாமல் போனால், மறுபடியும், அவர் ஜெயலலிதாவுக்கு எதிராகப் போர்வாள் தூக்குவார்!

‘ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் புதிய அரசு நியமனங்களே கிடையாது.  சாலைப் பணியாளர்களை சாவின் விளிம்பில் நிறுத்திய ஜெயலலிதா, ஒரு துளி மையில் இரண்டரை லட்சம் அரசு ஊழியர்களை வீட்டுக்கனுப்பிய தொழிலாளர் விரோதி’ என்று பாட்டாளிகளின் நலனுக்காகப் பாடுபடும் இடதுசாரிகள் கடுமையாக விமர்சித்தனர்.  கிரிமினல் குற்றவாளிகளைப் போல அரசு ஊழியர்களை நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்த ஜெயலலிதாவைக் கோட்டையிலிருந்து வெளியேற்ற கலைஞருடன் கைகோர்த்தனர்.  இன்றோ, தலா மூன்று தொகுதிகளைக் கேட்டு வரதராஜனும் பாண்டியனும் போயஸ் தோட்டத்தில் மணிக்கணக்கில் காத்திருந்து வாதிட்ட காட்சிகளை நாடு பார்க்கிறது.  ஆம், தொகுதி ஆசையில் தங்கள் வர்க்கப் போராட்ட உனர்வையே தியாகம் செய்துவிட்டவர்கள் அவர்கள்.

பெரியார், அம்பேத்கர் இருவரின் வாரிசாக வலம்வர விரும்பும் திருமாவளவனிடம் பெரியாரின் நாற்காலிப் பற்றற்ற பண்பும் இல்லை; அம்பேத்காரின் போர்க்குணமும் இல்லை.  தேர்தல் அரசியலைப் பொறுத்தவரை அவர் கலைஞரிடமும் ஜெயலலிதாவிடமும் அடங்க மறுத்ததும் இல்லை; அத்துமீறியதும் இல்லை.  மாறி மாறி சரணடைவார். ‘காங்கிரஸை அழித்துவிட்டுத்தான் இனி அடுத்த வேலை’ என்று அவர் சூளுரைத்த வார்த்தை நெருப்பில் சாம்பல் பூப்பதற்கு முன்பே தன்மானத்தைத் அவர் தாரை வார்த்திருக்க வேண்டாம்.  டெல்லியிலிருந்து பறந்து வந்த காங்கிரஸின் குலாம் நபி ஆஸாத்துக்குப் பக்கத்தில் போய் நின்று கனிவுப் புன்னகை பூத்திருக்கவும் வேண்டாம். இப்போதும் கெட்டுவிடவில்லை… ‘எனக்குக்  கலைஞருடன் தான் கூட்டு. காங்கிரஸ்காரர்கள் எனக்கு வாக்களிக்க வேண்டாம்’ என்று திருமா பகிரங்கமாக வாக்குமூலம் வழங்குவாரா?  கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகளை இருக்கவிடமாட்டோம் என்று காங்கிரஸ் நண்பர்கள் எதிர்ப்புக் குரல் கொடுத்தாலும், கலைஞருக்காக அவர்களை அரவணைக்கத் துடிக்கும் திருமாவளவனின் சுயமரியாதைத் தியாகம் என்னவொரு சிலிர்ப்பைத் தருகிறது… பார்த்தீர்களா தோழர்களே! பொதுவாழ்வில் அடிக்கடி ஏதாவது தியாகம் செய்வதற்கென்றே பிறப்பெடுத்தவர் மருத்துவர் ராமதாஸ்.   சந்தர்ப்பவாத அரசியல் என்று நாமெல்லாம் நினைத்துக் கொண்டிருந்ததை, ‘இதுதான் சாணக்கிய முத்திரை’ என்று கொண்டாட  வைத்த பெருமை அய்யாவுக்கே உண்டு.  ஒரே நேரத்தில் கலைஞரோடும் காங்கிரஸோடும் ஜெயலலிதாவோடும் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தும் சாகஸக் கலையை அவரன்றி இந்த அரசியலில் வேறு யாரறிவார்? அவருக்குத் தேவை அதிக தொகுதிகள். அவருடைய மகனுக்குத் தேவை மாநிலங்களவை உறுப்பினர் பதவி.  அடுத்த தேவை, மத்திய அமைச்சர் பதவி.  இதில் ஈழமாவது எள்ளுருண்டையாவது!  தேர்தலுக்குத் தேர்தல் மருத்துவர் செய்யும் கொள்கைத் தியாகம் பெரிதினும் பெரிதல்லவா!

திரைப்பட நடிகர்களை, தமிழகத்தின் முதல்வர் நாற்காலியில் அமரவைத்துப் பார்ப்பதில் காங்கிரஸூக்கு அளவற்ற ஆசை.  எம்.ஜி.ஆர். இருக்கும்வரை அவருக்கு வெண்கொற்றக்குடை பிடித்த காங்கிரஸ், அவருடைய மறைவுக்குப் பின் ஜெயலலிதாவின் பக்கத்தில் நின்று கவரி வீசியது.  இன்று விஜய்காந்த்துக்குப் பட்டுக்கம்பளம் விரித்து, ‘கோடி அர்ச்சனை’ நடத்தப் பெட்டியைத் திறந்துவைத்தும் பயனற்றுப்போனது.  பேரம் படியவில்லை… விஜயகாந்த் கூட்டணி காணா தனிப்பெரும் வீரராகிவிட்டார்.  போகட்டும்… காரணம் எதுவாயினும்… விஜயகாந்தின்  ‘மக்கள் கூட்டணி அமைக்கும்  மனோதிடம்’ ம.தி.மு.க., பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகளுக்கு ஏன் வரவில்லை?  இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவை அமைத்து இனவுணர்வை வெளிப்படுத்திய இந்த கட்சிகள் ஏன் தேர்தல் கூட்டணியாக ஒன்றுபட்டுத் தொடர்ந்திருக்க கூடாது?  தங்கள் கொள்கைகளின் வெற்றி மீது அவர்களுக்கே நம்பிக்கை இல்லையா…?  அல்லது, மக்கள் தங்களை நம்பவில்லை…  அதனால் தோற்றுவிடுவோம் என்ற அச்சமா? தேர்தலில் வென்றால், வை.கோ. பிரதமரா?  தா. பாண்டியன் உள்துறை அமைச்சரா? பா.ம.க. தலைமையில் மத்திய அரசா? தன்மானம் துறந்து தொல்.திருமாவளவன் சிதம்பரத்தில் வென்றால் நிதி மந்திரியா?

எதற்காக இவ்வளவு சகிக்கவொண்ணாத சமரசங்கள்?

ஈழ மக்களுக்கான அரசியல் தீர்வை ராஜபக்சே அரசு விரைவில் வழங்கும் என்று கலைஞருக்கு பிரதமர் கடிதம் வரைந்திருக்கிறார். இது தமிழரின் வாக்குகளைப் பெற காங்கிரஸும் கலைஞரும் நடத்தும் தேர்தல் திருவிளையாடல்.  சிங்களர் – தமிழர் சம உரிமையுடன் வாழ வழிவகுக்கும் கூட்டாட்சிமுறை, தமிழுக்கும் சிங்களத்துக்கும் சம அந்தஸ்து, எல்லா மதங்களையும் பராமரிக்கும் மதச்சார்பற்ற மத்திய அரசு, தமிழரின் பாரம்பரிய வாழ்விடங்கள் இணைந்த தமிழ் மாநிலம், ராணுவத்திலும்  காவல்துறையிலும் தமிழருக்கு உரிய இடம் என்ற அரசியல் தீர்வை பெளத்த சிங்களப் பேரினவாத அரசு அங்கீகரிக்க இந்திய அரசு வழிவகுக்குமா? இலங்கை சிங்கள நாடு. ஆட்சிமொழி சிங்களம் மட்டும்.  அரசு மதம் பெளத்தம்.  ஆளப்பிறந்தவர் சிங்களர் என்று அடம்பிடித்தால் தமிழீழத்தை அங்கீகரிக்க மத்திய அரசு முன்வருமா?

இரண்டில் ஒன்றையும் செய்யாமல் கடைசித்தமிழனும் செத்து மடிந்து அநாகரிக தர்மபாலன் என்ற சிங்களத் தலைவன் என்ற சிங்களத் தலைவன் கண்ட கனவின்படி இலங்கை முழுவதும் சிங்களர் நாடாய் மாறுவதற்கு, மத்திய அரசு மறைமுகமாக உதவி செய்கிறதா?

இந்தக் கேள்விகளோடு வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு வந்தால், யாருக்குத்தான் வாக்களிக்க முடியும்?  நான் யாருக்கும் வாக்களிப்பதாக இல்லை.

ஈழத்தில் உயிரிழந்தவர்கள் ஒரு பக்கம்; உறவிழந்தவர் மறுபக்கம்; உறுப்பிழந்தவர் இன்னொரு பக்கம். பார்க்குமிடமெங்கும் பிணக்குவியல்.  கேட்பதெல்லாம் நெஞ்சைப் பிளக்கும் மரண ஓலம்.  இன்று தமிழக அரசியல்வாதிகளின் கவனம் தேர்தல் திருவிழாவில்.  மக்கள் நலனில் மருந்துக்கும் நாட்டமில்லாத இவர்கள் அமர்ந்து ஆடும் நாற்காலிகள், சுயநல கீதம் இசைத்தப்படி இடையறாமல் ஆடிக்கொண்டிருக்கின்றன.

‘என் நம்பிக்கையின் பாடை அலங்கரிக்கப்பட்டுள்ளது.  தோல்வியின் பூக்களால் உடைந்த  என் இதயத்தில், யாரோ துயருற்ற நண்பன்  ஒருவன் அதை வைத்திருக்கிறான்’ என்று ஈழத்திலிருந்து  ஈனஸ்வரத்தில் வரும் சோகராகம் இன்று யார் காதிலும் விழவில்லை.  நாற்காலி மனிதர்கள் செவிடாகிவிட்டனர்!

இந்திய அரசியலின் இழிநிலை : ஆ.விகடனில் தோழர் மருதையன் !

னந்த விகடனுக்காக ம.க.இ.க பொதுச்செயலாளர் தோழர் மருதையனிடம் எடுக்கப்பட்ட நேர்காணல் இது.  உரையாடலின் போது நாங்கள் செய்த ஒலிப்பதிவிலிருந்து அதன் சுருக்கப்படாத முழுமையான வடிவத்தை இங்கு வெளியிடுகிறோம். இதில் இன்றைய இந்திய அரசியலின் உண்மை முகம், ம.க.இ.கவின் தேர்தல் புறக்கணிப்பு, மாற்று திட்டம், திராவிட அரசியலின் சீரழிவு, ஈழப்பிரச்சினையின் தற்போதைய நிலை,  ரசிய-சீன பின்னடைவு,  நேபாள மாவோயிஸ்டுகளின் வெற்றி… அனைத்தும் ஒரு பறவைப் பார்வையில் சுருக்கமாக இடம் பெறுகின்றன. தேர்தல் புறக்கணிப்பு குறித்த எமது அரசியல் நிலைப்பாட்டை இந்த நேர்காணல் எளிமையாக எடுத்துரைக்கிறது. வரும் நாட்களில் இது குறித்த விரிவான கட்டுரைகளை வெளியிடுவதற்கு இந்த நேர்காணல் ஒரு முன்னுரையாக இருக்கும்.
நட்புடன்
வினவு

ஓட்டுக்கட்சிகளை மக்கள் ஏன் நிராகரிக்க வேண்டும்?

”ஓட்டரசியல் என்பது வேறு ஒரு மாற்று தெரியாத காரணத்தினால், அது பழக்கப்பட்டுப்போன காரணத்தினால் மக்களால் பின்பற்றி வரப்படும் ஒரு நடைமுறை. 1950&லிருந்து இன்றுவரை இந்த தேர்தல் அரசியலில் மக்கள் பங்கேற்று வருவதால் ‘வாக்குச்சீட்டு அரசியலில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்’ என்று யாரும் சொல்ல முடியாது. ஒட்டுப்போடுகிற மக்களிடம் சென்று ‘தேர்தலில் ஓட்டுப்போடுவதால் என்ன நடக்கும்?’ என்று கேட்டால், ‘எதுவும் நடக்காது’ என்று மிகத் தெளிவாக பதில் சொல்வார்கள். கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், சாலைவசதி, குடி தண்ணீர் என தேர்தல் அரசியல் மூலம் எதுவும் கிடைக்காது என்பதை மக்கள் தங்களின் சொந்த அனுபவத்தின் மூலம் புரிந்து வைத்திருக்கிறார்கள். பழநி கோயிலுக்குப் போகும் பக்தனுக்குக் கூட ‘முருகனுக்கு மொட்டைப்போட்டா ஏதாவது நல்லது நடக்கும்’ என்று நம்பிக்கை இருக்கிறது. ஓட்டுப் போடுகிறவர்களுக்கு அந்த நம்பிக்கைக்கூட கிடையாது.

இருந்தாலும் ஓட்டுப்போடுகிறார்கள் என்றால், அது வேறு வழியில்லாத கையறு நிலை. இரண்டாவது இது ஒரு ஆஸ்வாசம். கருணாநிதி மாற்றி, ஜெயலலிதா. அந்தம்மாவை மாற்றி கருணாநிதி என்று மக்கள் தங்களின் கோபத்தை தணித்துக்கொள்வதற்கான வாய்ப்பு. மூன்றாவது வாக்காளர்களில் கணிசமான பிரிவினர் ஊழல் படுத்தப்பட்டிருக்கிறார்கள். ஓட்டு வாங்கிட்டுப் போறவன் எப்படியும் எதையும் செய்ய மாட்டான்னு தெரியும். அதனால் உடனடியா ‘இப்ப என்ன தர்ற?’ என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அண்ணாச்சிக் கடையில் சோப்பு, ஷாம்பு வாங்கும் வாடிக்கையாளன் ‘என்ன ஆஃபர் இருக்கு?’ என்று கேட்பதுபோல ஓட்டுக்கேட்கும் அரசியல்வாதிகளிடம் மக்கள் ஆஃபர் கேட்கும் அளவுக்கு பக்குவப்படுத்தப் பட்டிருக்கிறார்கள். கீழ்மட்ட கிராமங்கள் வரை இந்த ஊழல் நிறுவனமயப்படுத்தப்பட்டு பரப்பப்பட்டிருக்கிறது. கிராமங்களில் இந்தப் பணத்தை வாங்கி விநியோகிப்பவர்களாக மகளிர் சுய உதவிக் குழுக்கள் இருக்கின்றன. ‘அந்த ஊர்ல அவ்வளவு கொடுத்தீங்க, எங்களுக்கு மட்டும் இவ்வளவுதான் கொடுத்திருக்கீங்க’ என்று ‘உரிமை’யை போராடிப் பெறும் குழுக்களாக அவை மாற்றப்பட்டிருக்கின்றன.

ஆனால், இந்த ஜனநாயகத்தை ‘இது இப்படித்தானே இருக்க முடியும்?’ என்று அதன் சகல சாக்கடைத்தனங்களோடும் அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு மக்கள் மாற்றப்பட்டிருக்கின்றனர். இது தேர்தலுக்கு மட்டுமில்லை. ‘போலீஸுன்னா அப்படித்தான் இருக்கும், கோர்ட்டுன்னா அப்படித்தான் இருக்கும்? வேறு எப்படி இருக்க முடியும்?’ என்பதுவரைக்கும் நீள்கிறது. வேறு எப்படி இருக்க முடியும் என்பதை சித்திரம் போட படம் வரைந்து காட்ட முடியாது. எப்படி இருக்க வேண்டும் என்ற விருப்பத்தோடு மக்கள் போராடி அதை பெற வேண்டும். அதுதான் தீர்வு. அது வரைக்கும் நம் மக்கள் ஓட்டுப்போடுகிறார்களே… அதனால் இதற்கு ஒரு மாற்று கிடையாது என்று சிந்திக்க வேண்டியது இல்லை. ஓட்டுப்போடுவது என்ற நடவடிக்கை 1950&களில் நம்பிக்கையோடு ஆரம்பித்தது. இன்று அது ஒரு கொடுக்கல்&வாங்கள் வியாபாரமாக மாறிவிட்ட சூழலில் அவநம்பிக்கையின் எல்லையில் நின்றுகொண்டுதான் மக்கள் ஓட்டுப்போடுகிறார்கள். ‘இருந்தாலும் போடுறாங்கல்ல’ என்பது இந்த அமைப்பு முறையை நியாயப்படுத்துவதற்கும், இதனால் ஆதாயம் அடைபவர்களும் சொல்கிற ஒரு வாதம், அவ்வளவுதான்.

வாக்குரிமை என்பது பல ஜனநாயக உரிமைகளில் ஒன்று.  கல்வி, வேலை, உணவு, விவசாய விளை பொருளுக்கான விலை, பேச்சுரிமை என மற்ற உரிமைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு வாக்கு மட்டும் வைத்துக்கொள்ளலாம் என்பதற்கு பெயர்தான் ஜனநாயகமா..?

சரி, அப்படியானால் என்னதான் மாற்று?

” ‘தேர்தலே கூடாது என்கிறீர்களா, ஜனநாயகமே கூடாது என்கிறீர்களா, சர்வாதிகாரத்தை ஆதரிக்கிறீர்களா?’ என்று அவ்வப்போது கேட்கப்படுகிறது. தேர்தலே தப்பு என்று சொல்லவில்லை. இது ஒரு போலி ஜனநாயகம் என்கிறோம். ஓட்டுப்போடும் உரிமை இருப்பதினால் மட்டுமே இது ஜனநாயக நாடாகிவிடாது. வாக்குரிமை என்பது பல ஜனநாயக உரிமைகளில் ஒன்று. நம் நாட்டில் மக்கள் ஓட்டுரிமையைத் தவிர வேறு எந்த உரிமையையும் கேட்டாலும் அதிகாரத்தில் உள்ளவர்கள் அதை தருவதும் இல்லை, விரும்புவதும் இல்லை. கல்வி, வேலை, உணவு, விவசாய விளை பொருளுக்கான விலை என இவை எல்லாம் அடிப்படை உரிமையாக இருக்க வேண்டும். பேச்சுரிமைக் கூட அடிப்படை உரிமைதான். இந்த உரிமைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு வாக்கு மட்டும் வைத்துக்கொள்ளலாம் என்பதற்கு பெயர்தான் ஜனநாயகமா..?

வேறு ஒரு உதாரணத்தின் வழிக்கூட இதை பேசலாம். இப்போது ஈழப் பிரச்னையில் சிங்கள பேரினவாதத்தால் ஒடுக்கப்படும் மக்கள், அந்த ஒடுக்குமுறையின் கீழ் வாழ சம்மதிக்கவில்லை. ராஜபக்ஷே என்ன சொல்கிறார்? ‘பெரும்பான்மை தமிழர்கள் என்னுடன்தான் இருக்கிறார்கள், ஈழம் கேட்பவர்கள் சிறுபான்மையினர்’ என்கிறார். இப்போது இந்தப் பிரச்னையை தீர்ப்பதற்கான சிறந்த ஜனநாயக வழி என்ன? தமிழர்களிடம் ஒரு வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மை தமிழர்கள் இலங்கையுடன் சேர்ந்திருக்க விரும்புகிறார்களா, தனித்திருக்க விரும்புகிறார்களா என்பதை தெரிந்துகொள்ளலாம். ஆனால் அந்த கருத்துரிமையின் மீது குண்டு வீசப்படுகிறது. இதை ஆதரிப்பவர்கள்தான், சுப்பிரமணியன் சாமியின் மீது முட்டை வீசியதை கருத்துரிமையின் மீதான தாக்குதல் என்கிறார்கள். இதில் நான் சொல்ல வந்த விஷயம், வாக்குரிமைதான் ஜனநாயகம் என்ற சித்திரம் ஒரு மோசடி. அது பல ஜனநாயக உரிமைகளில் ஒன்று. மற்ற ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டு வாக்குரிமை மட்டும் வழங்கப்பட்டால் அதனால் எந்த பயனும் இல்லை. அது ஈராக்கில் வழங்கப்பட்டிருக்கும் வாக்குரிமை மாதிரி. ஜனநாயகம் பற்றிய இந்த புரிதலின்மையுடன் மக்கள் வைக்கப்பட்டிருப்பது அவர்கள் இந்த மோசடிக்கு இரைவாதற்கு ஒரு முக்கியமான காரணம்.

இவற்றையெல்லாம் அம்பலப்படுத்தி போராடுவதன் வழியாகத்தான் மாற்றை நாம் கண்டறிய முடியும். ம.க.இ.க&வைப் பொருத்தவரைக்கும் ‘புதிய ஜனநாயகம்’ என்று ஒரு மாற்றை சொல்கிறோம். அதில் தேர்தல் உண்டு. ஆனால் அந்த தேர்தல் இப்படி ‘வாக்காள பெருமக்களே’ என்று அழைக்கிற தேர்தலாக இருக்காது. டாடாவையும், அவரால் துப்பாக்கி சூடுபெற்ற சிங்கூர் விவசாயியையும் சமப்படுத்தி வாக்காளப் பெருமக்கள் என்ற வரையறைக்குள் கொண்டுவரும் மோசடியை அது செய்யாது. அது, விவசாயிகள், தொழிலாளர்கள் என ஒவ்வொரு பிரிவினரும் அவர்களுடைய பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தலாக இருக்கும். ஒடுக்கப்பட்ட மக்கள், வர்க்கங்கள், சாதிகள் தங்களை பிரதிநிதித்துவப் படுத்தும்போது மட்டும்தான் அங்கு ஜனநாயகம் உத்தரவாதப்படுத்தப்படும். அதில் ஆலைகள் அனைத்தும் சமூகத்தின் அங்கமாக இருக்க வேண்டும், தொழிலாளர்களாக நிர்வகிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறது. விவசாயிகளுக்கு நிலம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறது. அதற்குள்ளே தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் தாங்கள் போடும் சட்டங்களை தாங்களே அமுல்படுத்தும் அதிகாரம் உள்ளவர்களாக இருப்பார்கள்.

இப்போது உள்ளது இரட்டை ஆட்சிமுறை. சட்டம் இயற்றுவது சட்டமன்றம், சட்டத்தை அமுல்படுத்துவது அதிகார வர்க்கம். இப்படி ஒரு இரட்டை ஆட்சிமுறை இல்லாத, இந்த அதிகார வர்க்கம் ஒழித்துக்கட்டப்பட்ட ஒரு ஜனநாயகம் வேண்டும். தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகளை திருப்பி அழைக்கும் அதிகாரம் மக்களுக்கு இருக்க வேண்டும்.

இப்போது உள்ளது இரட்டை ஆட்சிமுறை. சட்டம் இயற்றுவது சட்டமன்றம், சட்டத்தை அமுல்படுத்துவது அதிகார வர்க்கம். இப்படி ஒரு இரட்டை ஆட்சிமுறை இல்லாத, இந்த அதிகார வர்க்கம் ஒழித்துக்கட்டப்பட்ட ஒரு ஜனநாயகம் வேண்டும். accountable and answerable to the people and representative.  கோர்ட் உள்பட அனைத்துமே தேர்ந்தெடுக்கப்பட்டதாக, மக்கள் பிரதிநிதிகளுக்குக் கட்டுப்பட்டதாக, அவர்களுக்கு பதில் அளிக்க கடமைப் பட்டதாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகளை திருப்பி அழைக்கும் அதிகாரம் மக்களுக்கு இருக்க வேண்டும். ஒரு தொழிற்சங்க தேர்தலைப்போல அது எளிமையானதாக இருக்கும். செயலாளர் சரியில்லை என்றால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து எடுத்துவிடலாம். இவ்வளவு ஆர்ப்பாட்டங்கள் தேவையில்லை. இந்த உத்தரவாதங்கள் இருக்கும்போதுதான் ஜனநாயகம் என்பது உண்மையிலேயே இயங்கும். உண்மையிலேயே அது பெரும்பான்மை மக்களின் நலனுக்கானதாக இருக்கும். அப்படி ஒரு மாற்றைதான் நாங்கள் முன் வைக்கிறோம். அப்படி ஒரு மாற்றுதான் ஏற்கெனவே கம்யூனிச நாடுகள் என பொதுவாக அழைக்கப்படும் ரஷ்யாவிலும், சீனாவிலும் அமுலில் இருந்தது.

சோவியத் யூனியன்தான் உடைந்துவிட்டதே, சீனாவிலும் இப்போது முதலாளித்துவ ஆட்சிதானே..?

அப்படிப் பார்த்தா கடந்த 300, 400 ஆண்டுகளாக அமுலில் இருக்கும் ஜனநாயகம் வெற்றியடைந்ததாக சொல்ல முடியுமா..? ஒரு வரலாற்றுக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது கம்யூனிசத்துக்கு ஏற்பட்டிருக்கும் இந்த பின்னடைவு மிகச் சாதாரண விஷயம். பெரும்பான்மை மக்கள் நலனுக்கான ஒரு புதிய மக்கள் அரசை உருவாக்குவதற்கு நீண்ட நெடிய போராட்டம் தேவைப்படும். அது மோடி மஸ்தான் வித்தை கிடையாது. ‘அது தோற்றுவிட்டதே’ என்பது அது தோற்றுப்போவதில் மகிழ்ச்சி அடைபவர்கள் சொல்லக்கூடிய கருத்து. ஏன் தோற்றது என்பதை ஆராய்ந்து, இனி தோற்காமல் இருக்க என்ன செய்யனுமோ அதை செய்ய வேண்டும். ‘அதான் தோத்துடுச்சே, தோத்துடுச்சே’ன்னா நேபாளத்தில் எப்படி வென்றது?

நேபாளத்திலும் அவர்கள் தேர்தல் பாதைக்குதானே வந்திருக்காங்க?

”தேர்தல் பாதைதான். ஆனால் ஒரு புரட்சிக்குப் பிறகு முடியாட்சியை அகற்றி வந்த குடியாட்சி. ஒரு தீவிரமான மக்கள் போராட்டத்துக்குப் பிறகு வந்த குடியாட்சி. இதற்கு அடுத்ததா அடுத்தக் கட்டத்துக்குப் போகனும். நம்ம நாட்டுல இருக்குற பாராளுமன்றம் மக்கள் போராட்டத்தினால் வந்தது அல்ல. இது விடுதலைப் போராட்டத்தை மழுங்கடிப்பதற்காக வெள்ளைக்காரனால் போடப்பட்ட எலும்புத்துண்டு. நம்மை நிறுவனமயப் படுத்துவதற்காக செய்யப்பட்ட ஓர் ஏற்பாடு. அதனுடைய உச்சத்தை இன்று எட்டிவிட்டது. அன்று பெரிய முதலாளிகளும், செல்வந்தர்களும் அந்த சபையை அலங்கரித்தார்கள். 60 ஆண்டுகள் கடந்து ஒரு சுற்று வந்த பிறகு இன்றைக்கும் கோடீஸ்வரர்கள்தான் அந்த சபையை அலங்கரிக்கிறார்கள். இந்த ஜனநாயகம் தோற்றுவிட்டது என்பதற்கு இதெல்லாம்தான் ஆதாரம்.”

நல்லவர்களை எப்படி தேர்ந்தெடுப்பது? ஒரு கட்சியில் யாருக்கு டிக்கெட் கிடைக்கும்? ‘உன் சாதி என்ன, நீ எவ்வளவு செலவு செய்வே?’ கட்சியிலேர்ந்து சுயேச்சை வரைக்கும் இதுதான் தீர்மானிக்குது. நீ நல்லவனா, கெட்டவனா என்ற கேள்வியா… அது இல்லை. அப்புறம் எப்படி நல்லவனை தேர்ந்தெடுப்பது?

ஊழல் மட்டுமே பிரச்னை என்று சொல்ல முடியுமா..?

”ஊழல் மட்டுமல்ல. உண்மையான மக்கள் அதிகாரம் இல்லை என்பதுதான் இதன் மையமான பிரச்னை. ஊழல் என்பது ஒரு நோயின் வெளிப்பாடு. ‘ஊழல் மட்டுமே பிரச்னை. ஆகையால் நல்லவர்களைத் தேர்தெடுங்கள்’ என்றுதான் அதை நியாயப்படுத்துகிறவர்கள் சொல்கிறார்கள். நல்லவர்களை எப்படி தேர்ந்தெடுப்பது? நான் ரொம்ப எதார்த்தமா கேட்கிறேன். ஒரு கட்சியில் யாருக்கு டிக்கெட் கிடைக்கும்? ‘உன் சாதி என்ன, நீ எவ்வளவு செலவு செய்வே?’ இந்த ரெண்டு கேள்விகள்தானே இன்னைக்கு டிக்கெட் கிடைக்க அடிப்படையா இருக்கு? கட்சியிலேர்ந்து சுயேச்சை வரைக்கும் இதுதான் தீர்மானிக்குது. நீ நல்லவனா, கெட்டவனா என்ற கேள்வியா… அது இல்லை. அப்புறம் எப்படி நல்லவனை தேர்ந்தெடுப்பது? அதனால் ஊழல்தான் பிரச்னை என்பது அடிப்படைப் பிரச்னையிலிருந்து திசை திருப்பக்கூடிய ஒரு வாதம். இந்த அமைப்பை சீர்திருத்திவிடலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிற வாதம்.”

நேபாளத்தில் வந்திருப்பதும் முதலாளித்துவ ஆட்சிதானே..?

”அங்கு முடியாட்சி வீழ்த்தப்பட்டு ஜனநாயகம் வந்திருக்கிறது. இன்னும் முதலாளித்துவம் முற்றிலுமாக அகற்றப்படவில்லை என்றாலும் கீழிருந்து மேல் நோக்கி வந்திருக்கும் புரட்சி அது. ஆனால் இந்தியாவில் கீழிருந்து மேல் வரை எல்லா வகையான முதலாளித்துவக் கூறுகளையும் வைத்துக்கொண்டே ஜனநாயகத்தை ஒரு குல்லா மாதிரி போட்டார்கள். இது ஒரு கோமாளித் தொப்பி மாதிரி. ஜனநாயகமும் இருக்குது, தீண்டாமையும் இருக்குது. ஜனநாயகமும் இருக்குது, சாதியும் இருக்குது. ஜனநாயகமும் இருக்குது, ஊர் கட்டுப்பாடும் இருக்குது. கோவை மாவட்டத்தின் கிராமம் ஒன்றில் வசிக்கும் ஒரு முடி திருத்தும் தொழிலாளி இன்னைக்கும்  ஊர் உத்தரவு வாங்காமல் கடை வெச்சிட முடியுமா..?”

 

தேர்தல் அரசியலை நீங்க எதிர்க்குறீங்க. ஆனால் தேர்தல் அரசியலில் வந்த கருணாநிதியே அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்என்று சட்டம் கொண்டு வந்தார். ஆனால் நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் ஆட்சிக்கு வந்தபின்னர் அங்குள்ள கோயில்களில் தென்னிந்திய பார்ப்பனர்களை பூசாரிகளாக தொடர்ந்து வைத்துக்கொள்வதா, நேபாளப் பார்ப்பனர்களை நியமிப்பதா?என்றுதான் சர்ச்சை வந்தது. இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

”இதையெல்லாம் தாண்டி அவர்கள் போக வேண்டும். அதுதான் அடுத்த கட்டமாகவும் இருக்கலாம். ‘கருணாநிதியே’ என்றால், இங்கு நமக்கு திராவிட இயக்கம், பெரியார், சாதி எதிர்ப்புப் போராட்டங்கள் என்று ஒரு மரபு இருக்கிறது. அதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். நேபாளத்தில் கம்யூனிஸ்ட்டுகளின் செயல்பாடுகளினால் கீழ்மட்ட அளவில் சாதி ஒழிக்கப்பட்டிருக்கலாம். கருத்தியல் தளத்தில் சாதி, மதம் ஒழிக்கப்பட்டிருக்கிறதா என்றால் என்னால் உடனே சொல்ல முடியவில்லை. அதற்கு ஒரு தொடர்ச்சியான போராட்டம் தேவைப்படலாம். அதேநேரம் இங்கே அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம்தான் போடலாம். ஆனால் கிராமங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் யாரும் கோயிலுக்குள் போக முடியாது என்ற உண்மையையும் புரிந்துகொள்ள வேண்டும்.”

நேபாளத்தில் சாதியக் கட்டுமானம் எப்படி இருக்கிறது?

”கிராமப்புறங்களைப் பொருத்தவரை ஓரளவுக்குத் தகர்க்கப்பட்டிருக்கிறது. முற்றிலுமாக தகர்க்கப்பட்டிருந்தால் நேபாள காங்கிரஸ் போன்ற கட்சிகள் இருக்கக்கூடாது. இப்போது என்ன நிலைமை என்று சொல்லக்கூடிய அளவுக்கு என்னிடம் விவரங்கள் இல்லை.”

ஈழப் பிரச்னையில் இங்கே ரெண்டு அணிதான் இருக்கு. ஒன்று ஈழத் தமிழர்களுக்கு எதிரிகள் அணி, இன்னொன்னு துரோகிகள் அணி. ஜெயலலிதா வகையறா நேரடியாக எதிர்ப்பவர்கள். இந்தப் பக்கம் தமிழர்கள் என்று சொல்லிக்கொண்டு காட்டிக்கொடுத்து துரோகம் இழைப்பவர்கள்.

வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலில் ஈழப் பிரச்னை எப்படி எதிரொலிக்கும் என நினைக்கிறீர்கள்?

”ஈழப் பிரச்னை சம்பிராதாயமான முறையில் பேசப்படும். ‘ஆரம்பத்துலேர்ந்து குரல் கொடுத்தேன். முதல் தீர்மானம் நான்தான் போட்டேன்’ என்று கருணாநிதி சொல்வார். ‘போர் என்றால் அப்பாவிகளும் சாகத்தான் செய்வார்கள்’ என்று சொன்ன அம்மையார் பிறகு உண்ணாவிரதம் நடத்தினார். ஈழப் பிரச்னையை இதைவிட யாரும் கேவலப்படுத்திவிட முடியாது. இங்கே ரெண்டு அணிதான் இருக்கு. ஒன்று ஈழத் தமிழர்களுக்கு எதிரிகள் அணி, இன்னொன்னு துரோகிகள் அணி. ஜெயலலிதா வகையறா நேரடியாக எதிர்ப்பவர்கள். இந்தப் பக்கம் தமிழர்கள் என்று சொல்லிக்கொண்டு காட்டிக்கொடுத்து துரோகம் இழைப்பவர்கள். இவர்களும் மிச்சமிருக்கும் அணிகளும் ஈழப் பிரச்னையை ஒரு ஊறுகாய்போல் பயன்படுத்துவார்கள். இதற்கு மேல் இதற்குப் பெரிய முக்கியத்துவம் இருக்கும் என்று நான் கருதவில்லை.

ஈழத் தமிழர் பிரச்னை என்பது சிங்கள பேரினவாதத்தால் தமிழ் மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்ற நிலையைத் தாண்டி இந்திய அரசு, சிங்கள அடக்குமுறையின் அங்கமாகவும், வழிகாட்டியாகவும் இருக்கிறது. இந்தியா ஈழத் தமிழர்களை ஒடுக்கிக்கொண்டிருக்கிறது என்பது மிக நேரடியாக வெளிவந்துவிட்டது. இந்திய நாட்டின் மக்கள் என்ற அடிப்படையில் நாம் கொடுக்கின்ற வரிப்பணமும், வழங்கியிருக்கிற அதிகாரமும் தமிழ் மக்களுக்கு எதிராக, ஒரு இனப்படுகொலைக்கு ஆதரவாக பயன்படுத்தப்படுகிறது. அதற்கு இவர்கள் அத்தனை பேரும் உடந்தையாக இருக்கிறார்கள். இதைப்பற்றி ஒரு வாக்காளன் கேள்வி கேட்டால் அவனுக்குத் தேர்தலைப் புறக்கணிப்பதைத் தவிர வேறு வாய்ப்பு இல்லை. இன்னொன்று, ஏதோ காங்கிரஸ் அரசுதான் ஈழத் தமிழனுக்கு துரோகம் இழைக்கிறது என்பதில்லை. இதற்கு முந்தைய பா.ஜ.க. ஆட்சியில் யாழ் கோட்டையை புலிகள் சுற்றி வளைத்தபோது அதற்குள் ஏறத்தாழ 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிங்கள ராணுவத்தினர் சிக்கியிருந்தனர். அப்போது ‘உடனே முற்றுகையை விலக்கிகொள்ள வேண்டும். இல்லை என்றால் இந்திய விமானங்கள் வரும்’ என்று வாஜ்பேயி அரசு மிரட்டியது. முற்றுகை விலக்கப்பட்டது. அதற்கு வைகோ முதல் நெடுமாறன் வரைக்கும் அனைவரும் உடந்தை. ‘இந்தியாவை பகைத்துக்கொள்ளக்கூடாது. அனுசரித்துப் போனால்தான் ஈழ விடுதலை சாத்தியம்’ என்ற கண்ணோட்டத்தில் இதை செய்தார்கள். ஆக இந்த தேர்தலில் ஈழத் தமிழர் பிரச்னை பேசுபொருளாக இருக்கும்பட்சத்தில் தேர்தலைப் புறக்கணிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

இந்தியாவின்  தரகு முதலாளிகள் அத்தனை பேருக்கும் இலங்கை என்பது லாபமுள்ள சந்தை. பிரணாப் முகர்ஜி போர் நிறுத்தத்தைப்பற்றி பேசுவதற்கு முன்பாக,  யுத்தத்தால் சீரழிந்தப் பகுதிகளை புணரமைக்க இந்தியா உதவும் என்று முந்திக்கொண்டு அறிவித்தார். இதுதான் இந்திய ஏகாதிபத்தியத்தின் உண்மை முகம்.

ஈழப்போரில் இந்தியாவின் தலையீட்டுக்குப் பின்னால் இருக்கும் பொருளாதார நலன்கள் பற்றி?

இந்தியாவில் இருக்கும் பெரும் தரகு முதலாளிகள் அத்தனை பேருக்கும் இலங்கை என்பது லாபமுள்ள சந்தை. டாடாவுக்கு அங்கே டீ எஸ்டேட் இருக்கிறது, மஹிந்திரா கார் கம்பெனிக்கும், டி.வி.எஸ்ஸுக்கு இலங்கை என்பது மிகப்பெரிய வாகன மார்க்கெட், அம்பானிக்கு வரிசையா பெட்ரோல் பங்க் இருக்குது, திரிகோணமலையில் ஓ.என்.ஜி.சி&க்கு எண்ணெய் கிணறுகள் இருக்குது, போர் நடந்துகொண்டிருக்கிற இந்த சூழலில் ஏர்டெல் மிட்டல் கடந்த மாதம் இலங்கை முழுவதற்குமான சேவையை அங்கு ஆரம்பித்திருக்கிறார். கடந்தமுறை பிரணாப் முகர்ஜி இலங்கைக்குப் போய்விட்டு வந்த பின்னர் போர் நிறுத்தத்தைப்பற்றி பேசுவதற்கு முன்பாக, இலங்கையில் யுத்தத்தால் சீரழிந்தப் பகுதிகளை புணரமைக்க இந்தியா உதவும் என்று முந்திக்கொண்டு அறிவித்தார். நாளை பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தாலும் இதேபோன்று பெருமுதலாளிகளின் நலனுக்காகத்தான் பேசும். இதுதான் இந்திய ஏகாதிபத்தியத்தின் உண்மை முகம்.

இன்னொன்று ஈழ மக்களின் போராட்டத்தை நாம் ஏன் ஆதரிக்க வேண்டும் என்பதற்கு இதுவரைக்கும் இங்கு சொல்லப்படும் ஒரே ஒரு காரணம், ‘அவர்கள் நம் ரத்த உறவுகள்’ என்பது. இது ரொம்ப அபத்தமானது. எந்த ஒரு இனத்தையும், அந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் விரும்பாத பட்சத்தில் அவர்களை அந்த நாட்டு ஆட்சியின் கீழ் இருத்தி வைக்கக்கூடாது. இதுதான் தேசிய இனங்களின் தன்னுரிமை. இந்த அடிப்படையில் தமிழ் மக்களுக்கு தன்னுரிமை வழங்கப்பட வேண்டும். சேர்ந்திருப்பதா, பிரிந்துப் போவதா என்பதை தீர்மானிக்கும் உரிமை அவர்களுக்குதான் உண்டு. இந்த நியாயம் காஷ்மீருக்கும் பொருந்தும், வடகிழக்கு மாநிலங்களுக்கும் பொருந்தும். இதை யாரும் பேசலை. தீவிரமான ஈழ ஆதரவாளர்கள் கூட, ‘இந்தியாவில் பிரச்னை இல்லை. அங்குதான் பிரச்னை’ என்கிறார்கள். என்ன அயோக்கியத்தனம் இது? காஷ்மீரில் இதுவரைக்கும் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஏறத்தாழ இந்திய ராணுவத்தின் பாதி பேர் அங்கு நிரந்தரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதைப்பற்றி யாரும் பேசுவதில்லை. இந்தியா ஏன் சிங்கள அரசை ஆதரிக்கிறது என்பதை ஈழ ஆதரவாளர்களும் கூட விளக்குவதில்லை. ‘ஏதோ முட்டாள்தனமா நடக்குது, சில அதிகாரிகள் இந்த மாதிரி பண்ணிட்டாங்க’ என்கிறார்கள். ‘ஜி.பார்த்தசாரதி இருந்தார். அவர் அருமையா பண்ணினார்’ என்று பழ.நெடுமாறன் சொல்லிக்கிட்டிருக்கார். இப்போ பார்த்தசாரதி ‘தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் புலி ஆதரவு சக்திகளை ஒடுக்கனும்’ என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கார்.

‘இந்தியாவின் தயவில்தான் ஈழத் தமிழன் உயிர்வாழ முடியும்’ என்பது ஒடுக்குபவனின் கருத்து மட்டுமல்ல, ஈழ ஆதரவாளர்களின் நிலையும் அதுதாவாகத்தான் இருக்கிறது. தமிழக மக்கள் மனங்களில் மனிதாபிமான அடிப்படையிலான இரக்க உணர்ச்சியைத் தாண்டி, ‘நீயும் தமிழன், நானும் தமிழன்’ என்ற உணர்ச்சியைத் தாண்டி அரசியல் ரீதியாக இதனுடைய நியாயம் விளக்கப்படவில்லை. அது பாரதூரமான அளவு அரசியல் பிரச்னையாகும் அளவுக்கு மக்களிடம் கொண்டு சேர்க்கப்படவில்லை. அப்படி சொல்லப்படாதபோது நாம் அதில் அதிகமாக எதிர்பார்ப்பது கூடாது. தவிரவும் ஈழத்தை தனிநாடாக அங்கீகரிக்க இந்தியா முனையுமானால் இங்கு காஷ்மீருக்கும், வட கிழக்கு மாநிலங்களுக்கும் அதே தீர்வை கொடுக்க வேண்டியிருக்கும். பொதுவா ‘தமிழகம் முழுவதும் ஒரு எழுட்சி நிலவுகிறது’ என்று சொல்லலாம். அது யதார்த்தமா இருக்கனும். நம்ம மனசுல ஆசைப்படுறதுனால அது எழுட்சியா ஆகிடாது.

இந்த தேர்தலில் எவை பேசப்பட வேண்டிய பிரச்னைகளாக இருக்க வேண்டும்?

எவை பேசப்பட வேண்டியவையோ அவைப்பற்றி இவர்கள் யாரும் பேசப்போவதில்லை. கடந்த 15 ஆண்டு காலமாக அமுல்படுத்தப்படும் தனியார்மய, தாராளமய கொள்கை ஒரு உச்சத்தை எட்டி, இப்போது அமெரிக்காவின் வீழ்ச்சிக்குப் பிறகு முட்டாள்களும் புரிந்துகொள்ளும் அளவுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சுமார் 18 ஆண்டு காலமாக அமுல்படுத்தப்பட்டு வரும் இந்த கொள்கைகள் இனியும் இந்தியாவுக்குத் தேவையா, இது கொண்டு வந்து சேர்த்த நன்மை, தீமைகள் என்ன என்பதுபற்றி வலது, இடது கம்யூனிஸ்டுகள் உள்பட எந்தக் கட்சியும் பேசாது. இந்த கொள்கைகள்தான் நாட்டின் வீழ்ச்சிக்கு முதன்மையான காரணங்களா இருந்திருக்கு. இந்தக் கொள்கைகளை அமுல்படுத்துவதற்கு எதிராகத்தான் இந்தியா முழுவதும் பல மக்கள் போராட்டங்கள் நடந்திருக்கின்றன. இதைப்பற்றி யாரும் பேசப்போவதில்லை. நகர்மயமாதலில் தமிழ்நாடு, இந்தியாவிலேயே முதலிடத்தில் இருக்கிறது. சமீபத்தியக் கணக்கெடுப்பின்படி ஏறத்தாழ 50:50 என்ற விகிதத்திற்கு தமிழ்நாட்டின் நகர&கிராம விகிதாச்சாரம் வந்துவிட்டது. இதன் தொடர்ச்சியாக விவசாயம் சுருங்கிவிட்டது. அதனால்தான் வட மாநிலங்களைப்போல சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு தமிழகத்தில் அதிக எதிர்ப்பு இல்லை. இந்தப் பிரச்னைப்பற்றி பேசப்போவதில்லை. இவர்கள் ஏற்படுத்தியிருக்கும் தொழிற்வளர்ச்சியின் காரணமாக சென்னையை சுற்றி வந்திருக்கும் பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் எவற்றிலும் தொழிற்சங்க உரிமை கிடையாது. தொழிற்சங்கம் ஆரம்பித்த குற்றத்துக்காக 250 தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். வேலை நேரம் என்பது இல்லாமல் போய்விட்டது. இந்தப் பிரச்னைகள் பற்றி யாரும் பேசப்போவதில்லை. அமெரிக்காவின் வீழ்ச்சியைத் தொடர்ந்து பல நிறுவனங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான படித்த இளைஞர்கள் வெளியேற்றப்படுகிறார்கள். அதை எதிர்த்துக் கேட்பதற்கு அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. எதிர்ப்பு என்ற உணர்வே தெரியாத அடிமைகளைப்போல பழக்கப்பட்டிருக்கிறார்கள். இதைப்பற்றியும் பேசப்போவதில்லை.

எது பேசப்படும் என்றால், ஜெயலலிதாவுக்கு ஒரு பாய்ண்ட் போதும். குடும்ப ஆட்சி. அந்தம்மாவுக்கு அது போதும். அது சட்டமன்ற தேர்தலா, நாடாளுமன்ற தேர்தலா, உள்ளாட்சித் தேர்தலா… அதெல்லாம் தேவையில்லை. அத்தோட சேர்த்து ‘ஹைகோர்ட்ல அடிக்கிறாங்க, லா காலேஜ்ல அடிக்கிறாங்க, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது, தீவிரவாத சக்திகள் தலைதூக்கி விட்டன’ இவ்வளவுதான் அந்தம்மாவுக்கு பாய்ண்ட். கலைஞரைப் பொருத்தவரைக்கும் நல்லாட்சி, சாதனைகள். அதைத்தவிர தளபதி அழகிரி இருப்பதால் அவர்களுக்கு வேறு திட்டங்கள் இருக்கலாம்.

கொள்கை என்பது இப்போது கிடையாது. பா.ம.க&வுக்கு ஒரு கொள்கை, கம்யூனிஸ்டுகளுக்கு ஒரு கொள்கை. ‘இப்படி ஆளுக்கு ஒரு கொள்கை வெச்சுக்கிட்டு அ.தி.மு.க&வோடப் போய் சேர்றீங்களே?’ன்னு கேட்டா, ‘கொள்கைக்கும், கூட்டணிக்கும் தொடர்பில்லை’ன்னு பதில் வருது.

கொள்கை என்பது இப்போது கிடையாது. இது நாங்கள் சொல்கிற விமர்சனம் இல்லை. அவர்களே சொல்வதுதான். பா.ம.க&வுக்கு ஒரு கொள்கை, கம்யூனிஸ்டுகளுக்கு ஒரு கொள்கை. ‘இப்படி ஆளுக்கு ஒரு கொள்கை வெச்சுக்கிட்டு அ.தி.மு.க&வோடப் போய் சேர்றீங்களே?’ன்னு கேட்டா, ‘கொள்கைக்கும், கூட்டணிக்கும் தொடர்பில்லை’ன்னு பதில் வருது. தேர்தலுக்கு முந்தைய கூட்டணிக்கும், ஆட்சி அமைப்பதற்கான கூட்டணிக்கும் தொடர்பில்லை. ஆனால் இவர்களுக்குள் ஆழமான வேறொரு கொள்கை ஒற்றுமை இருக்கிறது. தனியார்மய, தாராளமய கொள்கைகளில் கம்யூனிஸ்டுகள் உள்பட எல்லோருக்கும் ரொம்ப தீர்க்கமான ஒற்றுமை இருக்கிறது. அதுதான் இவர்களை ஒன்றிணைந்திருக்கிறது. இவர்களுக்கு இப்போது உள்ள பிரச்னை எல்லாம் தங்களுடைய வேற்றுமையை மக்களிடம் நிரூபிப்பதுதான். ‘நாங்க வேற’ன்னு காட்டனும். ஹமாம், லக்ஸ், ரெக்சோனா சோப்பு வியாபாரிகள் எப்படி தங்களது சோப்பு மற்றதைவிட வேறுபட்டது என்று காட்டிக்கொள்கிறார்களோ அதுபோல ‘நாங்க வேற கட்சி’ என்று நிரூபிப்பதற்கு மட்டுமே அவர்களுக்கு வேற்றுமை தேவைப்படுகிறது. அதன் வழியா அதிகாரத்தை சுவைப்பதற்கு. மற்றபடி கொள்கை வேறுபாடு என்பது இல்லை. இந்த வேறுபாடு பொய்யாக இருக்கின்ற காரணத்தினால்தான் தேர்தலின் விவாதப் பொருள்களும் பொய்யாகவே இருக்கின்றன. நம்ம நாட்டுல எதுடா எலெக்ஷன் பிரச்னைன்னா, ராஜீவ்காந்தி செத்துப்போனா அதுதான் பிரச்னை, ஜெயலலிதா முடியைப் பிடிச்சு இழுத்தா அதுதான் அந்த எலெக்ஷன் பிரச்னை. கருணாநிதி ‘ஐயோ கொல்றாங்க’ன்னு கத்துனா அந்த தேர்தலின் பிரதான பிரச்னை அதுதான். காங்கிரஸ் மீது இப்போது மக்களுக்கு இருக்கும் வெறுப்பு தேர்தலில் பிரதிபலிக்கும் என்றாலும் அது ரொம்ப வரம்புக்கு உட்பட்டதாக இருக்கும். ஜெயலலிதா ரொம்பத் தாமதமா ஈழப் பிரச்னையைப்பத்தி பேச ஆரம்பிச்சிருக்காங்க. அவங்களும் ஒரு எல்லைக்கு மேல் பேசமாட்டாங்க. சரியா சொல்லனும்னா இதுக்கு மேல பேசத் தேவையில்லைன்னு நினைக்கிறாங்க.

இறையாண்மை என்ற சொல் இப்போது அடிக்கடி உச்சரிக்கப்படுகிறது. கைதுகள் நடக்கின்றன. இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

”இறையாண்மை என்ற சொல்லுக்கு அர்த்தமாவது யாருக்கும் தெரியுமான்னு தெரியலை. அரசுகளுக்கு இடையேயான உறவைப் பொருத்தவரை ஒரு நாடு தன்னைத்தானே நிர்வகித்துக்கொள்ளும் உரிமை அல்லது அதிகாரம்தான் இறையாண்மை என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவோட இறையாண்மையை ஏற்கெனவே வித்தாச்சு. அணுசக்தி ஒப்பந்தம் என்ற பெயரில் இந்திய இறையாண்மையை அமெரிக்காவிடம் விற்ற மன்மோகன் சிங்தான் இன்று இந்தியாவின் பிரதமர். அவர் படத்தைக் கொழுத்தினால் தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாயும் என்று முதல்வர் சொல்கிறார். ஒரு கருத்தைப் பேசக்கூட உரிமையில்லாத ஒரு நாட்டில் ஜனநாயகம் இருக்கிறது, வாக்குரிமை இருக்கிறது என்று சொல்வதைப்போல கேலிக்கூத்து வேறெதுவும் இல்லை. இலங்கையில்தான் பிரச்னை என்றில்லை. இங்கேயே சகல அடக்குமுறைகளும் நடக்குகின்றன. துப்பாக்கிகள் தேவைப்படவில்லை, அவ்வளவுதான்.

ஜனநாயகத்தின் பொய்மைத்தன்மையைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களைக் கேட்கலாம். உயர்நீதிமன்றம் என்பது என்ன? அரசியல் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கான ஒரு கட்டடம். அங்கு ஒரு போலீஸ் அத்துமீறல் நடக்கிறது. வழக்கறிஞர்கள் தாக்கப்படுகிறார்கள். போலீஸ் அடிச்சா வாங்கிட்டு மட்டும் போயிருந்தாங்கன்னா அவங்க உண்மையான ஜனநாயகத்துக்குக் கட்டுப்பட்ட குடிமக்கள். திருப்பி அடிச்சதுதான் பிரச்னை. ‘இப்படி கல்லால எல்லாம் அடிக்கக்கூடாது. எங்கக்கிட்ட ஒரு பெட்டிஷன் போடுங்க. நாங்க ஜனநாயகத்தை உத்தரவாதப்படுத்துறோம்’னு சொல்ற ஜட்ஜே உள்ளே உட்கார்ந்திருக்கிறார். சுப்ரீம் கோர்ட், ‘நீங்க கோர்ட்டுக்குப் போங்க, நாங்க பார்த்துக்குறோம்’ என்று சொன்னாலும் அதில் நம்பிக்கை இல்லாததினால்தான் வக்கீல்கள் போராட்டத்தை பல்வேறு வடிவங்களில் தொடர்கிறார்கள். ஜனநாயகத்தின் மீது படிக்காத பாமர மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவது இருக்கட்டும். படித்த வழக்கறிஞர்கள், ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காகவே இருக்கும் நீதிபதிகள் அத்தனை பேரும் இன்று ரோட்டில் நிற்கிறார்கள். காரணம், அவர்கள் யாருக்கும் நடப்பில் உள்ள இந்த ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை.”

திராவிட இயக்கம் என்பது அண்ணா காலத்திலேயே முடிந்துபோய்விட்டது. அதை அறிவிக்க வந்தவர்தான் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரின், வருகையும், வெற்றியும் திராவிட இயக்கத்தின் வீழ்ச்சி குறித்த அதிகாரப் பூர்வ பிரகடனம்.

திராவிடக் கட்சிகள்பற்றிய உங்கள் பார்வை என்ன?

”திராவிட இயக்கத்துக்கு ஒரு வரலாற்றுப் பாத்திரம் உண்டு. அதை மறுக்க முடியாது. இதை நான் பெரியார் என்ற பார்வையிலிருந்து சொல்கிறேன். அதற்குப் பிறகு திராவிட இயக்கம் நிறுவனமயப்படுத்தப்பட்டுவிட்டது. அவர்கள் அறிவித்துக்கொண்ட கொள்கைகளான சாதி ஒழிப்பு முக்கியமானது. ‘திராவிடம்’ என்பதெல்லாம் பொதுவான வார்த்தை. அதை வைத்துக்கொண்டு அவர்கள் எக்காலத்திலும் ‘நாங்கள் கம்யூனிஸ்ட்’ என்று உரிமை கொண்டாட முடியாது. பெரியாரைப் பொருத்தவரைக்கூட கருத்தியல் ரீதியா கம்யூனிஸத்தின் மீது அனுதாபம் கொண்டவராக இருந்தார்.

சாதி ஒழிப்பு என்ற நிலையைத் தாண்டி அவர்கள் ஏன் போகலை என்றால் இந்த நிறுவனத்துக்குள் அவர்கள் வந்தது ஒரு முக்கியக் காரணம். அப்படி இந்த நிறுவனத்துக்குள் திராவிட இயக்கம் வரும்போது பார்ப்பனர் அல்லாத உயர்சாதி, உயர் வர்க்கத்தின் பிரதிநிதியாக மாறுகிறது. அவர்களுடைய நலனை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. உடனேயே பார்ப்பனர்கள் உடனான சமரசம் தொடங்குகிறது. பிறகு வட இந்திய தரகு முதலாளிகளும் தேவைப்படுகிறார்கள். திராவிட இயக்கம் என்பது அண்ணா காலத்திலேயே முடிந்துபோய்விட்டது. அதை அறிவிக்க வந்தவர்தான் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரின், வருகையும், வெற்றியும் திராவிட இயக்கத்தின் வீழ்ச்சி குறித்த அதிகாரப் பூர்வ பிரகடனம். திராவிட இயக்கத்தின் வரலாற்றுப் பாத்திரத்தை மறுப்பவர்கள் வெவ்வேறு கோணத்தில் இருந்து மறுக்கிறார்கள். காங்கிரஸ் தேசியவாதிகள், பார்ப்பன சக்திகள் திராவிட இயக்கத்தின் பாத்திரத்தை மறுப்பது என்பது வேறு. நாங்கள் மறுப்பது என்பது வேறு.”

ம.க.இ.க. மற்ற இயக்கங்களை, அமைப்புகளை, கட்சிகளை யாரையுமே ஏற்றுக்கொள்வதில்லை என்ற விமர்சனம் பற்றி?

”ஒருத்தர் இன்னொருவரை நிராகரிப்பதால்தான் இத்தனை கட்சிகளே இருக்கின்றன. ம.க.இ.க. தெளிவாக அறிவிக்கப்பட்ட கொள்கைகளுக்காக ஒரு இயக்கமாக இருக்கிறது. தனது கொள்கைகளின் அடிப்படையில் அது மற்றவர்களை நிராகரிக்கிறது. நான் ஒரு தனிக்கட்சி வைத்திருப்பதே மற்றவர்களை நிராகரிக்கத்தான் என்றால், ஒவ்வொரு கட்சியும் மற்றவர்களை நிராகரிக்கிறது என்றுதான் போகும். எங்கள் மீது பொதுவாக சொல்லப்படுவது ‘எல்லோரையும் விமர்சிக்கிறீர்கள்’ என்பது. ‘நீங்க சொல்லியிருக்கும் விமர்சனம் தவறு’ என்று சொல்லலாமேத் தவிர, ‘நீங்கள் எல்லோரையும் விமர்சிக்கிறீர்கள்’ என்பதையே ஒரு விமர்சனமாக வைப்பது எப்படி சரியாகும்?  ம.க.இ.க. ஒத்தக் கருத்துடன் இருக்கக்கூடிய அமைப்புகளுடன் இணைந்து அவ்வப்போது போராடுகிறது. ஆனால் ஒவ்வொரு பிரச்னைக்கும் 40, 50 அமைப்புகள் சேர்ந்து ஒரு கூட்டமைப்பு ஏற்படுத்துவது, அது அத்துடன் காணாமல் போய்விடுவது என்ற கசப்பான அனுபவங்கள் இருப்பதால் அத்தகைய கூட்டமைப்புகளில் நாங்கள் இணைவதில்லை. அதுவும் கூட இப்படி கருதுவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.”

ஸ்பெக்ட்ரம் ஊழல் மர்மங்கள் விலகாது !

ந்தியத் தரகு முதலாளிகளுக்கு பொன்முட்டையிடும் வாத்து, தகவல் தொடர்புத் துறையாகும். கடந்த பத்தாண்டுகளில் இந்தத் துறையில் முதலாளிகள் அடித்த கொள்ளை பல ஆயிரம் கோடிகளைத் தாண்டும். அதே அளவு கோடிகளை அரசும், பொதுத்துறையும் இழந்திருக்கிறது. இந்த இழப்பிற்கும், அந்தக் கொள்ளைக்கும் காங்கிரசு, பா.ஜ.க. இரு கட்சிகளும், அதிகார வர்க்கமும் காரணமாயிருக்கின்றன. இந்த அணிவகுப்பில் சமீபத்திய வரவு ஸ்பெக்ட்ரம் ஊழல். இதில் கொள்ளையடிக்கப்பட்டிருக்கும் மக்கள் பணம் ரூ. 60,000 கோடி என மதிப்பிடப்பட்டிருக்கிறது.

narasimha-rao1991ஆம் ஆண்டிலேயே உலக வங்கி தொலைபேசித் துறையில் தனியார் முதலாளிகளை அனுமதிக்க வேண்டுமென இந்தியாவிற்கு உத்தரவிட்டிருந்தது. அப்போதிருந்த நரசிம்ம ராவ் அரசும் இதைச் சிரமேற்கொண்டு அமல்படுத்தியது. எல்லா பகாசுரக் கம்பெனிகளும் களத்தில் குதித்து, அரசிடமிருந்த தொலைபேசித் துறையின் வளத்தை ஊழல் உதவியுடன் முழுங்க ஆரம்பித்தன. அப்பொது தகவல் தொடர்பு அமைச்சராக இருந்த சுக்ராம் வீட்டில் சி.பி.ஐ கட்டுக்கட்டாய்ப் பல கோடி பணத்தைக் கைப்பற்றியது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

பின்னர் வந்த வாஜ்பாய் அரசில் தகவல் தொடர்புத் துறை அசுரவேகத்தில் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டது. ஊழலும் அதே வேகத்தில் கொடிகட்டிப் பறந்தது. அரசுக்குக் கட்டவேண்டிய லைசென்சு பணத்தை எல்லா நிறுவனங்களும் கட்டாமல் பட்டை நாமம் போட்டன. இதில் சில ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் பணம் சுருட்டப்பட்டது. பா.ஜ.க. அரசும் தனியார் நிறுவனங்களின் இந்தக் கட்டண ஏய்ப்பை அங்கீகரித்து உத்தரவிட்டது. அரசுத் தொலைபேசித் துறையை ஒழித்துத் தனியாரை வளர்ப்பதற்கென்றே “ட்ராய்” என்ற தொலைபேசித் துறை ஒழுங்குமுறை ஆணையம் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு எல்லா புகார் மற்றும் வழக்குகளில் தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டு வருகிறது.

2003012101650701அப்போது தகவல்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த பிரமோத் மகாஜன் இந்த நிறுவனங்களின் தரகராக இருந்து காரியத்தைச் சாதித்துக் கொடுத்தார். இந்தச் சூழலில்தான் ரிலையன்சு நிறுவனம் பல மோசடிகளை அரங்கேற்றியது. வில்போன் எனப்படும் வட்டார தொலைபேசி லைசென்சு எடுத்திருந்த அம்பானி அதற்கு மாறாக செல்பேசி சேவையை வழங்கினார். இதில் சில ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதும் ரிலையன்சுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பிறகு அந்த அபராதத் தொகை பல மடங்கு குறைக்கப்பட்டுத் தள்ளுபடி செய்யப்பட்டது. அதேபோல வெளிநாட்டுத் தொலைபேசி அழைப்புக்களை உள்ளூர் அழைப்புக்களாக மாற்றி ரிலையன்சு செய்த பச்சையான மோசடியிலும் அபராதத் தொகை தள்ளுபடி செய்யப்பட்டது. மாநகரங்களில் உரிமை அளிக்கப்பட்ட நிறுவனங்கள் கிராமங்களுக்கும் சேவை அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையைத் தனியார் நிறுவனங்கள் புறந்தள்ளின.

இந்தச் சூழலில்தான் மன்மோகன்சிங் அரசின் ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பார்க்க வேண்டும். முதலில் அலைக்கற்றை எனப்படும் ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன என்று பார்க்கலாம். 1990க்கு முன்பு நமது தொலைபேசிகள் எல்லாம் கம்பி வழியாக செயல்பட்டன. நாடு முழுக்க கம்பி வலைப்பின்னல் போடப்பட்டு, இந்த தொலைபேசி சேவை இயங்கியது. பின்னர் செல்பேசி வந்ததும் இந்த கம்பிவழி தேவைப்படவில்லை. இதன்படி மின்காந்த அலைகள் ஒரு அலைக்கற்றை வரிசையில் அனுப்பப்பட்டு, செல்பேசியில் இருக்கும் குறியீட்டு வாங்கியினால் பெறப்பட்டுத் திரும்ப அனுப்பப்படுகிறது. கிட்டத்தட்ட ரேடியோ செயல்படும் விதத்தைப் போலத்தான் இதுவும். அதனால்தான் செல்பேசிகளில் எஃப்.எம். வானொலி சேவை கிடைக்கிறது. இந்த அலைக்கற்றைகள் உலகமெங்கும் ஒரு ஒழுங்குமுறைக்கு உட்படுத்தப்பட்டுப் பல நிறுவனங்களுக்கும் பிரித்துக் கொடுக்கப்படுகிறது. இது, பல வானொலி நிலையங்களுக்குப் பல்வேறு அலைவரிசைகளை ஒதுக்குவதற்கு ஒப்பானது.

செல்பேசியைப் பொருத்தவரை இந்த அலைக்கற்றைகளின் வசதி வருடத்திற்கு வருடம் மேம்பட்டு வருகிறது. அதாவது, முதலாவது தலைமுறை அலைக்கற்றை 2001ஆம் ஆண்டில் நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்டது. இப்போது அதைவிட வேகமாகவும் வசதிகள் கொண்ட அலைக்கற்றைகள்  இரண்டாம் தலைமுறை ஸ்பெக்ட்ரம் கொண்டு வரப்படுகிறது. இனி வருங்காலத்தில் செயல்பாட்டுக்கு வரும் மூன்றாம் தலைமுறை அலைக்கற்றை என்பது இணையம் பயன்படுத்துவது உட்பட பல வசதிகளைக் கொண்டிருக்கும். எனவே, இந்த அலைக்கற்றைகளின் அலைவரிசைகளை ஒதுக்கீடு செய்வது என்பது இயற்கையை விற்பது போல என்று கூடக் கூறலாம். இதை வைத்து அந்த நிறுவனங்கள் பல சேவைகளை வாடிக்கையாளருக்கு அளித்து பல்லாயிரம் கோடி ரூபாயைத் திரட்டுகின்றன என்பதுதான் முக்கியம்.

இப்போது சென்ற ஆண்டு இறுதியில்  இரண்டாவது தலைமுறை அலைக்கற்றை எனப்படும் 2 ஜி ஸ்பெக்ட்ரம் விற்கப்பட்ட விதத்தைப் பார்ப்போம். 2001ஆம் ஆண்டில் முதல் தலைமுறை அலைக்கற்றை விற்கப்பட்டது. அப்போது அதை வாங்கிய நிறுவனங்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி பெறும் வர்த்தக ஆதாயத்தில் அரசுக்குப் பங்கு தர, வருவாய்க்கேற்ற பங்கு என்ற முறையில் விற்கப்பட்டன. அப்போதே விற்பனைத் தொகை மிகவும் குறைவு என்பதோடு, பின் வந்த ஆண்டுகளில் அந்த உரிமையை வாங்கிய நிறுவனங்கள் அந்த தொகையைக் கூடக் கட்டாமல் ஏமாற்றி வந்தன. அரசும், அதிகார வர்க்கமும் இந்த ஏமாற்றுதலை அங்கீகரித்தன.

ஏழு ஆண்டுகளுக்கு பின்பு இப்போது இரண்டாவது தலைமுறை அலைக்கற்றையை விற்கிறார்கள். இப்போதாவது அரசு இதை நல்ல விலைக்கு விற்றதா என்றால் இல்லை. 2001ஆம் ஆண்டில் என்ன விலைக்கு விற்றார்களோ அதே அடிமாட்டு விலைக்கு விற்றிருக்கிறார்கள். அதுவும் பகிரங்கமாக ஏலம் விட்டு இதைச் செய்யவில்லை. முதலில் எந்த நிறுவனங்கள் வருகிறதோ அவைகளுக்கு ஒதுக்கீடு என்ற முறை பின்பற்றப்பட்டு வழங்கப்பட்டிருக்கிறது. இதன்படி ரூ.60,000 கோடிக்கு விற்கவேண்டிய சரக்கு வெறும் ரூ.3000 கோடிக்கு விற்கப்பட்டிருக்கிறது. ஸ்வான், யுனிடெக் என்ற இரு நிறுவனங்கள் ஊழல் உதவியுடன் இதைச் சாதித்திருக்கின்றன. காங்கிரசு மற்றும் தி.மு.க. கட்சிகளின் ஆசீர்வாதத்தோடு இந்தத் திருப்பணியை மைய அமைச்சர் ராஜா செய்து முடித்திருக்கிறார்.

a_raja_ye_20081224


ஒரு தொகை என்ற அளவில் இதுவரை நாடு கண்ட ஊழலில் இதுதான் மிகப் பெரியது என்று சொல்லலாம். இத்துடன் ஒப்பிடும்போது போபார்ஸ், ஃபேர்பாக்ஸ் போன்ற ஊழல்களெல்லாம் வெறும் தூசிதான். இவ்வளவு பெரிய ஊழல் நடந்திருக்கிறது என்று பொதுவில் நாடு பெரிய அளவுக்கு அதிர்ச்சியடையவில்லை. எதிர்க்கட்சிகள் கூட ஒரு சடங்குக்குப் பேசிவிட்டு முடித்துக் கொண்டன. பா.ஜ.க.விற்கு இதைக் கண்டிப்பதற்கு தார்மீக தகுதியில்லை என்பதாலோ என்னவோ, ஒரு கடமைக்கு மட்டும் பேசியது. இத்தனைக்கும் மேல் மன்மோகன் சிங் அரசு இந்த ரூ. 60,000 கோடி ஊழல் குறித்து ஒன்றும் அலட்டிக் கொள்ளவில்லை.

ஸ்வான், யூனிடெக் என்ற இரு கம்பெனிகளும் உண்மையில் “உப்புமா” கம்பெனிகள்தான். இந்த கம்பெனிகள் எதுவும் தொலைத்தொடர்புத் துறையில் எந்தவிதமான அனுபவமோ, ஆட்பலமோ, ஏன் கட்டிடமோ, கருவிகளோ இல்லாத “டுபாக்கூர்” நிறுவனங்களாகும். இந்த இரண்டு நிறுவனங்களிலும் பங்குகள் வைத்திருக்கும் பினாமி நிறுவனங்கள் கருணாநிதி குடும்பத்தினருக்குச் சொந்தமானவை என்று கூறப்படுகிறது. மேலும் இந்த நிறுவனங்கள் இரண்டும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை வாங்கியபிறகு, தங்களதுப் பாதிப் பங்குகளைப் பல மடங்கு அதிகமான விலையில் கிட்டத்தட்ட 6,000 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்திருக்கின்றன. இதற்குக் காரணம் இவை ஸ்பெக்ட்ரம் உரிமையை மலிவு விலைக்கு வாங்கியிருப்பதால், இவற்றின் மதிப்பு பின்னாளில் பல மடங்கு ஏறியிருக்கும் என்பதுதான்.

மேலும் பல தொலைபேசித் தனியார் நிறுவன்ஙகள் எதுவும் இந்த ஊழலைக் குறித்து பெரிய அளவுக்கு புகார் எதுவும் கிளப்பவில்லை. இது டெண்டர் எடுப்பதற்கு முதலாளிகள் திருட்டுத்தனமாக சிண்டிகேட் அமைப்பதைப் போன்றது. இதன்படி இரண்டு உப்புமா கம்பெனிகளைத் தவிட்டு ரேட்டுக்கு எடுக்க வைத்து, பின்னர் அதை மாற்றிக் கொள்வது என்ற உடன்படிக்கைபடி இது நடந்திருக்கிறது. இப்படி இந்தியாவின் மிகப் பெரிய ஊழல் கனகச்சிதமாக அரங்கேறியிருக்கிறது. அதனால்தான் அமைச்சர் ராஜா இந்த முறைகேடு சட்டப்படி நடந்திருப்பதாக திரும்பத் திரும்ப ஓதி வருகிறார். சட்டப்படிதான் இந்திய மக்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாகத்தான் நாமும் கூறுகிறோம்.

15dayaதொலை தொடர்பு அமைச்சராக தயாநிதி மாறன் பதவியில் இருந்தபொழுதே, ரூ. 10,000 கோடி அளவிற்கு முறைகேடு நடந்திருப்பதாக அவருக்குப் பின்னர் அத்துறையின் அமைச்சரான ராஜா குற்றஞ்சாட்டினார். அப்போது மாறன் சகோதரர்கள், கருணாநிதியுடன் தகராறில் இருந்தனர். இதன் நீட்சியாக ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து மாறன்களது சன் டி.வி.யும் தினகரன் நாளேடும் அதிரடியாக ரூ. 60,000 கோடி ஊழல் குறித்து அம்பலப்படுத்தி வந்தன. இதில் முக்கியமாக அமைச்சர் ராஜாவைக் குறி வைத்தே செய்திகளை வெளியிட்டு வந்தார்கள். ராஜாவும் மாறன்களது ஊடகங்கள் தேவையில்லாமல் பிரச்சினைகளைப் பெரிதுபடுத்துவதாகப் பேசி வந்தார். இதற்கிடையில் கருணாநிதி, மாறன் சகோதரர்களது துரோகத்தைக் கவிதையாய், கடிதமாய் முரசொலியில் எழுதி வந்தார். அதற்குப் பதிலடியாய் கலாநிதி மாறனது கடிதம் தாத்தாவோடு நடந்த பாகப்பிரிவினை குறித்து பல விசயங்களை அம்பலப்படுத்தியதோடு, அக்கடிதம் பகிரங்கமாக பத்திரிகைகளிலும் வெளியிடப்பட்டது.

karuunity

இரண்டு கோடீசுவரக் குடும்பங்களும் தங்களது சொத்துக்களை வைத்துத் தகராறு நடத்த தொடங்கிய இந்த நேரத்தில்தான் ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளியே வந்ததும் அதில் கருணாநிதியின் பின்னணி இருப்பதும் வெளிச்சத்திற்கு வந்தது. அதன் பிறகு என்ன மாயம் நடந்ததோ, இரு குடும்பங்களும் சேர்ந்து எடுத்துக் கொண்டு போட்டோவோடு ஊடகங்களுக்கு குடும்பத் தகராறு முடிந்துபோன செய்தியைக் கொடுத்தன. இதை யோசித்துப் பார்த்தால் ஸ்பெக்ட்ரம் ஊழலில் கருணாநிதியின் குடும்பத்தினர் அடித்த ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் விசயம் வெளியே வரக்கூடாது என்ற ஒப்பந்தத்தின் பெயரில் மாறன்களுக்குப் பல சலுகைகள் கொடுக்கப்பட்டுப் பூசி மெழுகியிருக்கிறார்கள். அதன் பிறகு மாறன்களது ஊடகங்கள் இந்த ஊழலைப் பற்றி எதுவும் பேசாமல் அமைதி காக்கின்றன. திருமங்கலத்தில் ஸ்பெக்ட்ரம் பணம்தான் தண்ணியாய்ச் செலவழிக்கப்பட்டிருக்கிறது. அனைத்து வாக்காளர்களுக்கும் கறி விருந்தே நடத்தியிருக்கிறார்கள் என்பதிலிருந்தே இதை ஊகிக்க முடியும்.

2007052706170101இந்தக் காலத்தில்தான் கனிமொழிக்கு சுவிஸ் வங்கியில் கணக்கு திறக்கப்பட்டு, இந்த ஊழல் பணம் அதில் சேர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இவற்றுக்கெல்லாம் நம்மிடம் ஆதரமில்லை என்றாலும், அடித்த கொள்ளைப் பணம் இவர்களிடம்தான் சேர்ந்திருக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. மேலும், கருணாநிதி குடும்பத்தினர் அடைந்த ஆதாயம் காங்கிரசு அரசின் ஆசீர்வாதத்தோடுதான் நடந்திருக்க வேண்டுமென்பதிலும், அதில் ஒரு பங்கு காங்கிரசுக்கும் சென்றிருக்கலாம் எனவும் உறுதியாகக் கூற முடியும்.

60,000 கோடி ரூபாயைக் கமுக்கமாக அடித்துவிட்டு இந்த ஊழல் பெருச்சாளிகள் கவுரவமாக உலா வருகின்றன என்பதை நாட்டு மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். மக்கள் ஒரு ரூபாய்க்கு பேசும் ஒரு உள்ளூர் அழைப்புக்குப் பயன்படும் செல்பேசி சேவையில் இத்தகைய ஊழலும் கொள்ளையும் கலந்திருக்கிறது என்பதை அறிய வேண்டும். செல்பேசி சேவை மலிவாகக் கிடைக்கிறது என்று மூடநம்பிக்கை நிறைந்திருக்கும் நாட்டில்தான், இந்த மலைமுழுங்கி மகாதேவன்களது சாம்ராஜ்ஜியம் நடந்து வருகிறது.

புதிய ஜனநாயகம், பிப்’09