வந்தே பாரத் ; வர்க்கத் தீண்டாமை !
தோழர் வெற்றிவேல்செழியன்,
மாநில செயலாளர், மக்கள் அதிகாரம், தமிழ்நாடு-புதுவை.
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
வந்தே பாரத் ; வர்க்கத் தீண்டாமை !
தோழர் வெற்றிவேல்செழியன்,
மாநில செயலாளர், மக்கள் அதிகாரம், தமிழ்நாடு-புதுவை.
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
காவிரி உரிமை: கர்நாடகத்தில்? தமிழ்நாட்டில்?
தோழர் மருது,
மாநில செய்தித்தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு-புதுவை.
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
வாச்சாத்தி தீர்ப்பு
ஆப்ரேஷன் சக்சஸ் பேஷண்ட் டெத்
தோழர் வெற்றிவேல்செழியன்,
மாநில செயலாளர், மக்கள் அதிகாரம், தமிழ்நாடு-புதுவை.
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
பணி நிரந்திரம் செய்யக்கோரி தமிழ்நாடு பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பாக சென்னை பள்ளிக்கல்வித்துறை அலுவலக வளாகத்தில் செப்டம்பர் 25 அன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
திமுக தேர்தல் அறிக்கையில் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அறிவித்தனர். ஆனால் ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும் அவர்களின் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. கடந்த போராட்டத்தின் போது நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வுடன், பி.எப் (PF), இ.எஸ்.ஐ (ESI) போன்றவையும் வழங்கப்படும் என அறிவித்தனர். ஆனால் அவை எதுவும் இதுவரையில் வழங்கப்படவில்லை.
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

வடசென்னையில் அதானி குழுமத்திற்கு சொந்தமான துறைமுகம் 337 ஏக்கர் பரப்பளவில் காட்டுப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ளது. இத்துறைமுகம் அப்பகுதியில் அமைக்கப்பட்டதிலிருந்தே சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு சூழலியல் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதற்கு எதிராக அங்குள்ள மீனவ கிராம மக்களும் சூழலியல் ஆர்வலர்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு துறைமுகத்தின் சரக்குகளைக் கையாளும் திறனை ஆண்டுக்கு 24.65 மில்லியன் டன் என்ற தற்போதைய அளவிலிருந்து 320 மில்லியன் டன்களாக (MTPA – Million Tonnes Per Annum) அதிகரிக்க அதானி குழுமம் திட்டமிட்டது. அதன்பொருட்டு துறைமுகத்தின் பரப்பளவை 6,110 ஏக்கருக்கு விரிவுபடுத்தும் வகையில் ரூ.53,031 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வேண்டி விண்ணப்பித்தது.
அவ்விண்ணப்பத்தின் அடிப்படையில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டாய்வு (Environmental Impact Assessment) மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டம் (Environmental Management Plan) ஆகியவற்றைத் தயாரித்து பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தி நான்காண்டுகளுக்குள் ஆவணங்களை சமர்ப்பிக்க ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் அதானி குழுமத்திற்கு அவகாசம் வழங்கியது.
இதனடிப்படையில் அதானி குழுமம், இந்தாண்டு அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தி ஒன்றிய அரசிடம் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஒருவேளை அவ்வாறு சமர்ப்பிக்க முடியாமற்போனால் மீண்டும் அடிப்படை ஆய்விலிருந்து தொடங்க வேண்டும்.
படிக்க: காட்டுப்பள்ளி எல்&டி நிர்வாகத்தின் அடக்குமுறை !
இதனால் கடந்த அ.தி.மு.க. ஆட்சியிலிருந்தே கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்தி முடிக்க முயற்சித்து வருகிறது அதானி குழுமம். 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்த அ.தி.மு.க. அரசு அனுமதி வழங்கியது. ஆனால், அதற்கு மீனவ கிராம மக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அமைப்புகள், ஜனநாயக சக்திகள் மத்தியில் இருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க.வும் கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. மக்கள் மத்தியில் இருந்து எழுந்த கடுமையான எதிர்ப்பின் காரணமாக அப்போது கருத்துக் கேட்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதானி துறைமுகத்திற்கு அனுமதி வழங்கப்படாது என்று தேர்தல் வாக்குறுதியளித்தது தி.மு.க. ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு வந்து இரண்டாண்டுகளுக்கு மேலாகியும் விரிவாக்கத் திட்டத்திற்கான முயற்சிகளைத் தடுக்காமல் இருப்பது மட்டுமின்றி, சென்ற மாதம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்துவதற்கு அனுமதியும் வழங்கி அதானிக்கு கார்ப்பரேட் சேவகம் செய்கிறது.
மக்களின் எதிர்ப்பு
கருத்துக் கேட்பு கூட்டத்திற்கு தமிழ்நாடு அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியதற்கு மீனவ கிராம மக்கள், பூவுலகின் நண்பர்கள், பழவேற்காடு பாதுகாப்பு இயக்கம், சென்னை க்ளைமேட் ஆக்சன் குரூப், பிற சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். அதானியின் துறைமுக விரிவாக்கத் திட்டத்தின் கருத்துக் கேட்பு கூட்டத்திற்கு எதிராக அப்பகுதி மக்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள் இணைந்து அப்பகுதியில் பேரணி நடத்தினர்.
இதற்கிடையே மக்களின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக ஆகஸ்ட் 10 ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 10 ஆம் அன்று நடக்கவிருந்த கூட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும் மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்தார். இருப்பினும், அதானி துறைமுக விரிவாக்கத்திற்கான திட்டத்தை மொத்தமாக கைவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்து மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
புதிய சுற்றுச்சூழல் பேரழிவுக்கு உள்ளாகும் சென்னை
அதானியின் துறைமுகம் அமைந்துள்ள காட்டுப்பள்ளி பகுதியானது வங்காள விரிகுடா கரையில் உள்ள சிறிய மணல் தீவாகும். இத்தீவை சுற்றிலும், பல லட்சக்கணக்கான மக்கள் கடலை சார்ந்து வாழ்ந்து வருகின்றனர். இத்தீவின் கிழக்கில் வங்காள விரிகுடா கடலும், மேற்கே கொற்றலை (கொசஸ்தலை) ஆறும், தெற்கே சென்னையின் உபரிநீர் கடலில் கலப்பதற்கு முக்கிய ஆதாரமாக உள்ள கொற்றலை ஆற்றின் முகத்துவாரமும், வடக்கே இந்தியாவின் இரண்டாவது உவர்நீர் ஏரியான பழவேற்காடு ஏரியும் அமைந்துள்ளது.
ஆண்டுக்கு ஒரு மீட்டருக்கு மேல் கடலரிப்பு ஏற்படும் பகுதிகள் அபாய பகுதிகளாக (ஹாட் ஸ்பாட்) அடையாளம் காணப்பட்டு, துறைமுகங்கள் போன்ற திட்டங்கள் அப்பகுதிகளில் மேற்கொள்ளக் கூடாது என்பது சுற்றுச்சூழல் விதிமுறையாகும். ஆனால், காட்டுப்பள்ளியில் துறைமுகங்கள் கட்டப்பட்டதன் காரணமாக கடலில் ஆண்டுக்கு 8.6 மீட்டருக்கு கடலரிப்பு ஏற்படுகிறது என்று அதானி துறைமுகத்தின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வே குறிப்பிடுகிறது.
துறைமுகத்தின் அளவை 20 மடங்காக விரிவாக்க தேவையான 6,110 ஏக்கர் நிலப்பரப்பை தேற்றுவதற்கான திட்டம் அதானி குழுமத்தால் முன்வைக்கப்பட்டுள்ளது. அத்திட்டத்தின் அடிப்படையில், ஏற்கனவே துறைமுகம் அமைந்துள்ள 337 ஏக்கரோடு சேர்த்து 1,515 ஏக்கர் தனியார் நிலத்தையும், கிராமங்களில் வாழும் மீனவ மக்களை துரத்தியடிப்பதன் மூலம் 2,291 ஏக்கர் நிலத்தையும் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 1,967 ஏக்கர் நிலத்தை கடல் மீட்பு (Sea Reclamation) திட்டம் மூலம் கடலில் சுமார் 6 கி.மீ. தொலைவிற்கு மணலைக் கொட்டி நிரவி, நிலமாக மாற்றி கடலை ஆக்கிரமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால், சுற்றுவட்டாரத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் இருந்து மக்கள் விரட்டியடிக்கப்படுவர். கடலை மட்டுமே நம்பி வாழும் மீனவ மக்களின் தற்சார்பான வாழ்க்கைமுறை ஒழித்துகட்டப்பட்டு அவர்கள் அருகிலுள்ள தொழிற்சாலைகளுக்கு கொத்தடிமைகளாகும் அவலநிலை உருவாகும்.
படிக்க: பழவேற்காடை அழிக்கப்போகும் அதானியின் துறைமுக விரிவாக்கம்
இன்னொருபுறம், மணலைக் கொட்டி கடலை நிலமாக மாற்றுவதன் மூலம் காட்டுப்பள்ளிக்கு தெற்கே உள்ள கொற்றலை ஆற்று முகத்துவாரம் அடைபட்டு போகும். ஏற்கனவே எண்ணூரிலுள்ள கொற்றலை ஆற்று முகத்துவாரத்திலிருந்து தூர்வாரப்படும் மணல் முறையாக அப்புறப்படுத்தப்படாததாலும், எண்ணூர் அனல்மின் நிலையத்திலிருந்து வெளியேறும் சுடுநீரோடு மணலும் கலந்து வருவதாலும் முகத்துவாரம் கொஞ்சம் கொஞ்சமாக அடைந்து வருகிறது. முன்பு 12 அடியாக இருந்த நீர் மட்டம் தற்போது ஒரு அடிக்கும் குறைந்து கொக்குகள் உட்காரும் அளவிற்கு அடைந்து போயுள்ளது. இந்நிலையில், இம்முகத்துவாரம் முற்றிலுமாக அடைந்து போனால் வருங்காலத்தில் சென்னை வெள்ளத்தில் மூழ்கும் நிலை ஏற்படும்.
இத்துடன், இவ்விரிவாக்கத் திட்டத்தினால் காட்டுப்பள்ளிக்கு வடக்கில் உள்ள பழவேற்காடு ஏரி இருந்த இடம் தெரியாமல் அழிந்து போகும். பல்வேறு அறிய வகை உயிரனங்களின் இனப்பெருக்கத்திற்கான தகுந்த இடமாகவும் வாழ்விடமாகவும் பழவேற்காடு ஏரி உள்ளது. 50 வகையான கண்டம் விட்டு கண்டம் இடம்பெயரும் பறவைகள் உள்ளிட்டு 250-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் வசிக்கும் “பழவேற்காடு பறவைகள் சரணாலயமும்” இந்த ஏரியில்தான் அமைந்துள்ளது.
இந்நிலையில், கடலில் மணலைக் கொட்டி நிலமாக மாற்றுவதனால் காட்டுப்பள்ளிக்கு அருகே உள்ள பழவேற்காடு ஏரிக்கும் வங்காள விரிகுடா கடலுக்கும் இடையிலான நீரோட்டம் தடைப்படும். இந்த நீரோட்டம்தான் பழவேற்காடு ஏரி பல்லுயிர்களின் வாழ்விடமாக இருப்பதற்கு ஆதாரமாக உள்ளது. இதன் வழியாகவே இனப்பெருக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஒவ்வொரு ஆறு மணி நேரத்திற்கும் பல்வேறு உயிரினங்கள் கடலிலிருந்து ஏரிக்கும் ஏரியிலிருந்து கடலுக்கும் இடம்பெயர்கின்றன.
கடல் மீட்பு திட்டத்தினால் இந்த பாதை அடைபடுவதால் ஏரிக்கான நீர்போக்குவரத்து நின்றுபோய் அதனால் ஏரி சாக்கடையாக மாறும் அபாயம் உள்ளது. அதானி துறைமுகம் கட்டப்பட்டதிலிருந்தே கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வரும் ஏரியை நம்பி வாழும் உயிரினங்கள், இவ்விரிவாக்கப்பட்ட திட்டத்தால் ஒரேயடியாக அழிந்து போகும். ஏரியை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான மீனவ மக்களின் வாழ்வாதாரமும் முற்றிலும் முடங்கிவிடும்.
இதுமட்டுமின்றி, கடல் அரிப்பு பல மடங்கு அதிகரித்து பழவேற்காடு ஏரிக்கும் வங்காள விரிகுடாவிற்கும் தடையாக செயல்படும் காட்டுப்பள்ளி தீவு மூழ்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இதனால், பழவேற்காடு ஏரி நீரில் மூழ்குவதோடு கடல் தற்போது இருப்பதை விட பல மடங்கு சென்னைக்கு அருகாமையில் வர நேரிடும்.
மொத்தமாக, இவ்விரிவாக்கத் திட்டத்தினால் சென்னையின் வரைபடத்தையே மறுவடிவமைப்பு செய்யும் அளவிற்கு பாதிப்பு ஏற்படும் என்கிறார் காலநிலை ஆர்வலரான நித்யானந்த் ஜெயராமன். புவி வெப்பமயமாதலால் சென்னை போன்ற கடலோர நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம் இருக்கும் நிலையில், அதானி திட்டம் அதனை விரைவுப்படுத்துகிறது.
துறைமுகத்தை நிரந்தரமாக மூடுவதே தீர்வு
மக்களின் எதிர்ப்பை மடைமாற்றம் செய்வதற்காக அதானி குழுமத்தின் கார்ப்பரேட் ‘சமூகப் பொறுப்பு’ப் பிரிவான அதானி அறக்கட்டளை, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் நலத்திட்டப் பணிகளை மேற்கொள்வது போல பாசாங்கு காட்டி வருவதை அம்மக்கள் தன்மானத்துடன் எதிர்த்து வருகின்றனர்.
ஆனால், எப்படியேனும் துறைமுக விரிவாக்கத்திற்கு அனுமதி பெற வேண்டும் என்பதே லாபவெறிப்பிடித்த அதானியின் ஒற்றை நோக்கமாக இருக்கிறது. அதற்கு காரணம் இத்துறைமுகத்தை சர்வதேச அளவில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக மாற்ற வேண்டும் என்ற அதானியின் திட்டமாகும்.
சமீபத்தில் பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு சென்றிந்தபோது, இந்தியாவின் லார்சன் & டூப்ரோ நிறுவனத்திற்கும் (L&T) அமெரிக்க கடற்படைக்கும் இடையில் “மாஸ்டர் கப்பல் பழுதுபார்க்கும் ஒப்பந்தம்” (Master Ship Repair Agreement) கையெழுத்தானது. அதனைத் தொடர்ந்து காட்டுப்பள்ளி துறைமுகத்தில் உள்ள லார்சன் மற்றும் டூப்ரோ கப்பல் கட்டும் தளத்திற்கு அமெரிக்க கடற்படையின் போர்க்கப்பல்களான “சால்வர்” வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், வருங்காலங்களில் இந்த துறைமுகத்தின் மூலம் ஆயுத ஏற்றுமதிகள் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
எனவே, அவ்வளவு எளிதில் அதானி துறைமுக விரிவாக்கத்திற்கான திட்டம் கைவிடப்படாது. எப்படியாவது அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் கூட்டதை நடத்தி முடிக்க வேண்டும் என்பதில் கார்ப்பரேட் அதானி கும்பல் தீவிரமாக உள்ளது.
இதற்கேற்ப திருவள்ளூர் ஆட்சியினரின் அறிவிப்பும் வெளிவந்துள்ளது. “திட்டம் குறித்து மக்கள் கருத்து தெரிவிக்கும் வகையில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என கோரிக்கைகள் வந்ததால் கூட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது” என்று கூறியிருந்தார். அதாவது, கருத்துக் கேட்புக்கு மக்கள் திரள்வதைத் தடுக்கும் வகையில், பிரித்தாளும் சூழ்ச்சியை கையிலெடுத்துள்ளது அதானி-அரசு கூட்டு கும்பல்.
அப்படி அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் கூட்டத்தை நடத்த முடியாமல் போனாலும் அது அதானிக்கு மிகப்பெரிய இழப்பு அல்ல. ஒன்றிய அரசிடம் சுற்றுசூழல் அனுமதி வேண்டி மீண்டும் விண்ணப்பித்து துறைமுகத்தை விரிவுப்படுத்தவதற்கான வேலைகளையே மூர்க்கமாக முன்னெடுக்கும். இல்லையேல், கருத்துக் கேட்பு கூட்டத்தையே நடத்தாமல் மத்திய அரசிடம் ஆவணங்களை சமர்ப்பிக்கும் வகையில் விதிகள் மாற்றியமைக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
கார்ப்பரேட் நலனே தனது உயிர் மூச்சாகக் கருதி செயல்படும் பாசிச மோடி அரசும் சரி, பாசிசத்தை எதிர்ப்பதாக கூறும் தி.மு.க. போன்ற மற்ற மாநில அரசுகளும் சரி, மக்களின் நலனை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. தமிழ்நாட்டின் காட்டுப்பள்ளி, கேரளத்தில் விழிஞ்சம் என அதானியின் சாம்ராஜ்ஜியம் விரிந்து கொண்டே வருகிறது. மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் எதிரான இந்த கார்ப்பரேட் கொள்ளை என்பது தனி ஒரு திட்டமல்ல. சாகர் மாலா என்ற விரிந்த உள்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்களையும் உள்ளடக்கியதாகும்.
ஆகையால், அதானி துறைமுக விரிவாக்கத் திட்டம் என்பது காட்டுப்பள்ளி மீனவ மக்களுக்கு மட்டும் எதிரானதல்ல, ஒட்டுமொத்த மனித சமூகத்திற்கும் எதிரானதென்பதை உணர்ந்து அம்மக்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். இக்கார்ப்பரேட் திட்டங்களை முறியடிக்க உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும்.
![]()
துலிபா
(புதிய ஜனநாயகம் செப்டம்பர் மாத இதழ்)

ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி அம்பானி, அதானி பாசிசம் ஒழிக!
2024 நாடாளுமன்றத் தேர்தல்
வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம்
கோடி மக்களிடம் கொண்டு செல்வோம் !
அரங்கக் கூட்டம் – விருத்தாசலம் |நேரலை
பாகம் 1
பாகம் 2
பாகம் 3
பாகம் 4

’நீட் தேர்வென்பது தகுதியான மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கிறது; நீட் தேர்வால் பல ஊழல்களும் முறைகேடுகளும் குறைக்கப்படுகிறது’ என்று படாடோபமாக கொண்டு வரப்பட்ட நீட் தேர்வு மக்கள் மத்தியில் தொடர்ந்து அம்பலமாகி வருகிறது.
செப்டம்பர் 20 அன்று மோடி அரசின் சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் மருத்துவ கலந்தாய்வுக் குழு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், இரண்டு சுற்று கலந்தாய்விற்குப் பிறகும் முதுநிலை மருத்துவ படிப்பில் மருத்துவ இடங்கள் காலியாக இருப்பதால் நீட் தேர்வில் பூஜ்ஜியம் சதமானம் (percentile) எடுத்திருந்தாலும் முதுநிலை மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. இந்த பூஜ்ய சதமான கட்-ஆஃப் அனைத்து பிரிவினருக்கும் பொருந்தும்.
இதன் அடிப்படையில் தான் தற்போது கலந்தாய்வு நடந்துகொண்டிருக்கிறது. இந்த அறிவிப்பிற்கு பல மருத்துவ அமைப்புக்களும் எதிர்க்கட்சிகளும் அதிருப்தியும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளன.
இங்கு நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். பூஜ்ய சதமானம் என்று இவர்கள் குறிப்பிடுவது “Percentile” (சதமானம்), “Percentage” (சதவீதம்) இல்லை. இவ்விரண்டும் பார்பதற்கு ஒன்றுபோல் இருந்தாலும் அடிப்படையில் வேறானது.
சதவீதம் vs சதமானம் (Percentage vs Percentile)
பெர்சண்டேஜ் என்பது சதவீதம். நூறில் எத்தனை பங்கு எனக் கணக்கிடுவது. உதாரணமாக 100 மதிப்பெண் தேர்வில் 50 பெர்சண்டேஜ் என்பது 50 மதிப்பெண்கள். இந்த பெர்சண்டேஜ் எத்தனை பேர் தேர்வு எழுதினாலும் மாறாது. யார் எத்தனை மதிப்பெண் எடுத்தாலும் மாறாது. ஐம்பது என்பது 50-ஆகத் தான் இருக்கும்.
பெர்சண்டைல் என்பது அனைத்து மாணவர்களும் எடுத்த மதிப்பெண்களை வரிசைப்படுத்தி அதில் ஒரு இடத்தை குறிப்பது. உதாரணமாக, ஒரு தேர்வில் 9 மாணவர்களின் மதிப்பெண்கள் = 89, 90, 90, 91, 92, 96, 98, 98, 99. இதில் 50-வது பெர்சண்டைல் = 92. அதாவது 50 சதவீத மாணவர்கள் 92-க்கு மேல் பெற்றுள்ளனர். 50 சதவீத மாணவர்கள் 92-க்கு கீழ் பெற்றுள்ளனர். (50th percentile is 92). இதில் 50% பெர்சன்டைல் மதிப்பெண் எடுத்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்பது 92 மதிப்பெண்கள் மேல் எடுத்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று பொருள்.
படிக்க: நீட் எனும் மோசடித் தேர்வு: முதுநிலை மருத்துவ படிப்பில் சேர “0” மதிப்பெண் போதுமாம்!
இதனடிப்படையில் பார்த்தால், இவ்வாண்டு பூஜ்ஜியம் சதமானம் (Zero Percentile), அதாவது இந்த ஆண்டு முதுநிலை நீட் தேர்வின் கடைசி மதிப்பெண்ணான -40 பெற்ற மாணவனும் விண்ணப்பிக்கலாம் என்பதே இந்த அறிவிப்பின் பொருள். அதாவது அனைத்து கேள்விகளுக்கும் தவறாக பதில் அளித்திருக்கும் ஒரு மாணவனும் தகுதியுடையவன் என்று அர்த்தம். இவர்கள் கூறும் ’தகுதி’ என்பது பணமற்ற ஏழை மாணவர்களுக்குத் தானேயொழிய பணம் படைத்தவனுக்கு இல்லை. பணம் வைத்திருப்பதே தகுதி தான் என்று மீண்டுமொரு முறை நிரூபணமாகியிருக்கிறது.
இதற்கு முன்பு வரை 50 பெர்சன்டைலுக்கு மேல் எடுத்தவர்களுக்கு தான் இடங்கள் ஒதுக்கப்பட்டது. இந்த அறிவிப்பை வைத்துப் பார்த்தால் சென்ற ஆண்டு 50 பெர்சன்டைலுக்கும் கீழ் எடுத்து தகுதியற்றவர்கள் என்று வெளியேற்றப்பட்ட மாணவர்கள் தற்போது தகுதியுள்ளவர்களா என்று கேள்வி எழுகிறது. இந்த நுழைவுத் தேர்வு முறையே ஒரு கேலிக்கூத்து என்பது நிரூபணம் ஆகிறது.
மேலும், இந்த ஆண்டு முதுநிலை மருத்துவ படிப்பில் 4,400 இடங்கள் காலியாக உள்ளது. பெரும்பாலும் தனியார் கல்லூரிகளில் தான் காலி இடங்கள் இருக்கிறது. தனியார் கல்லூரிகள் லாபம் கொழிப்பதற்காக இதுவரை இல்லாத அளவிற்கு கட்-ஆஃப் சதவீதத்தை குறைத்திருக்கிறது மோடி அரசு. வசதி படைத்திருப்பவர்கள் கோடிகளைக் கொட்டி மருத்துவர் ஆகமுடியும். ஆனால், வசதி இல்லாத மாணவர்கள் தனியார் கல்லூரிகளில் நுழைவது குறித்து கனவுகூட காணமுடியாது.
அண்ணாமலையின் உருட்டு!
இதுகுறித்து பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “கேள்வி கேட்பதற்கு ரிசர்ச் செய்து விட்டு வர வேண்டும் அல்லவா. நான் பதில் சொல்கிறேன். ரிசர்ச் செய்துள்ளேன் போன ஆண்டு நீட் PG-ல் 50 சதவீதம் என்பது கட்-ஆஃப் ஆக இருந்தது. சென்ற ஆண்டு இந்தியாவில் கிட்டத்தட்ட 1,80,000-ற்கும் மேல் PG சீட் இருக்கிறது. அதில் ஏகப்பட்ட சீட் நிரம்பவில்லை. குறிப்பாக டீச்சிங் பாடங்களாக இருப்பதை நீட் மூலமாக PG-க்கு போகிறவர்கள் எடுக்கவில்லை. அவையெல்லாம் தொடர்ந்து காலியாக உள்ளது. இன்றைக்கு மத்திய அரசு என்ன முடிவு எடுத்துள்ளது என்றால், PG-க்கு ஜீரோ பெர்சண்டைல். அப்படி என்றால், நீட் நீங்கள் எழுதி இருந்தால் போதும். ஏன் என்றால் அவர்கள் MBBS பாஸ் செய்து விட்டுத்தான் வருகிறார்கள்.
ஆனால், MBBS முடித்துவிட்டு PG படிக்கப் போகிறவர்களுக்கு MBBS-ல் கடைசியில் எழுதக் கூடிய பரீட்சையே ஒரு கட்-ஆஃப். அதையே தற்போது ஒரு கட்-ஆஃப் ஆக கருதுகிறார்கள். அதைத்தான் ஜீரோ பெர்சண்டைல் எனக் கூறுகிறார்கள். எதற்கு என்றால் இந்தியாவில் courses fill-ஆக வேண்டும். 1,80,000 சீட் நிரம்ப வேண்டும். குறிப்பாக டீச்சிங் படிப்புகள் நிரப்ப வேண்டும்” என்று உருட்டுக் கொண்டிருக்கிறார் அண்ணாமலை.
படிக்க: நீட் தேர்வு: பிரபஞ்சன்களும் அனிதாக்களும்!
மொத்தமாகவே 67,802 முதுநிலை இடங்கள் தான் இருக்கிறது. மேலே குறிப்பிட்டதைப் போல் 4,400 இடங்கள் தான் காலியாக உள்ளது. அதுவும் பெரும்பான்மையாக தனியார் கல்லூரிகளில். மருத்துவத்தில் Non- clinical துறையை தேர்வு செய்த மாணவர்களுக்கு முறையான உதவித்தொகையும் வேலைவாய்ப்பும் கிடையாது. ஆகையால் அண்ணாமலை பேசுவதையெல்லாம் கணக்கிலே எடுத்துக் கொள்ளக்கூடாது.
பாசிச மோடி அரசின் இதுபோன்ற நடவடிக்கைகளால் மருத்துவ கட்டமைப்பையே சுக்குநூறாக உடைந்து வருகிறது. நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும், பல லட்சங்களைச் செலவழித்துப் படிக்கும் மாணவன் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டுமென்றா நினைப்பான். செலவழித்த பணத்தை எவ்வாறு இரட்டிப்பாக்குவது என்றுதான் சிந்திப்பான். இதனால், ஒருபுறம் லாபவெறிபிடித்த, தகுதியற்ற மருத்துவர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது நீட் தேர்வு; மற்றொருபுறம், தனியார் மருத்துவமனைகளையும் பயிற்சி மையங்களையும் உருவாக்கி லாபத்தில் கொழிக்க வைக்கிறது.
மக்களுக்கு மாணவர்களுக்கும் எதிரான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.”நீட் தேர்வை ரத்து செய்” என்பது மக்கள் கோரிக்கை. மக்கள் கோரிக்கைகளை மக்கள் போராட்டத்தின் மூலமே வென்றெடுக்க முடியுமேயொழிய நாடாளுமன்ற நீதிமன்ற வழிமுறைகளால் அல்ல.
![]()
ஹைதர்

பசுமைப் புரட்சியின் தந்தை என்று சொல்லப்பட்ட விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் தனது 98-வது வயதில் இறப்பெய்தியுள்ளார். ஒருவர் இறந்துவிட்டால் அவரது குற்றங்குறைகளை எல்லாம் சொல்லிக் கொண்டிருப்பது நமது வேலையல்ல. ஆனால், வாழுங்காலத்தில் கடும் விமர்சனங்களுக்கு ஆளானவர்களை எல்லாம், அவர்கள் இறந்து போனதும் புனிதர்களாக்கி அஞ்சலி செலுத்துவது என்பது மிகக் கேவலமானது. அது சம்பந்தப்பட்டவர்களின் வர்க்கப் பார்வையை வெளிப்படுத்துவது என்பதை சுவாமிநாதனைப் புகழ்ந்து அஞ்சலி செலுத்துவதன் மூலம் பலரும் வெளிக்காட்டியிருக்கிறார்கள். சி.பி.எம் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு, அகில இந்திய விவசாயிகள் சங்கம் மட்டுமல்லாது இதர கட்சிகள், தனிநபர்கள் பலரும் இதில் அடங்குவர்.
ஜெயாவின் ஆட்சிக் காலத்தில் உழைக்கும் மக்களுக்கு நேர்ந்த துன்ப துயரங்களுக்கு எல்லாம் துணை நின்று போராடுவோராய், பாட்டாளிகளின் தோழனாய் இருப்பதாக சொன்னவர்கள் வலது, இடது கம்யூனிஸ்ட் கட்சிகள். அதே சமயத்தில் ஜெயாவுடனும் நட்பைப் பேணி வந்தார்கள் என்பது முக்கியமானது. இவ்விரண்டு அம்சங்களில் எது உண்மை, எது நடிப்பு? என்பதை அவர்களாலேயே சொல்ல முடியாது. இரண்டுமே உண்மை தான் என்றும், அதுதான் இயங்கியல்பூர்வமான புரிதல் என்றும் கூட சொல்லக்கூடும். அதாவது, ஒரே நேரத்தில் ஒரு பொருள் அதுவாகவும், அதுவல்லாமலும் என இரண்டுமாக – பாட்டாளிகளின் தோழனாகவும், ஜெயாவின் நண்பர்களாகவும் – இருப்பதை இப்படியும் அவர்கள் விளக்கக்கூடும்.
இப்படிப்பட்ட நபர்களும், கட்சிகளும் தான் சுவாமிநாதனையும் புகழுக்குரிய நபராக, சாதனையாளராக மட்டும் முன்னிறுத்தி அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள். அவர் மட்டும் வேளாண் விஞ்ஞானி ஆகியிருக்காவிட்டால், இந்திய நாட்டு மக்கள் எல்லாரும் இந்நேரம் பட்டினியால் செத்துப் போயிருப்பார்கள்; அவர் தான் பசுமைப் புரட்சியை உருவாக்கி, கோதுமை – அரிசி உற்பத்தியைப் பெருக்கி இந்த நாட்டுக்கே சோறு போடும் அன்ன லட்சுமியாக, மணிமேகலையாக, அட்சயப்பாத்திரமாக இருந்தார் என்கிறார்கள்.
நேற்றுவரை இந்தக் கட்சிகள், நபர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? பசுமைப் புரட்சி எனப்படும் பெரும் கார்ப்பரேட் கம்பெனிகள் கொள்ளைக்கு ஆளாகி, விவசாயத்தை விட்டே ஓடிப்போன, தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் வீட்டு வாசலில் ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தார்கள்! சிறு – குறு விவசாயிகள் அழிவு குறித்து பி.சாய்நாத் போன்ற பத்திரிக்கையாளர்கள் எழுதிய கட்டுரைகளை மொழிபெயர்த்து, சமூகத்தில் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் என பேசினார்கள்! நம்மாழ்வார் உள்ளிட்ட இயற்கை வேளாண் விஞ்ஞானிகளை வானளாவப் புகழ்ந்து தள்ளினார்கள்! இன்றோ, இந்தப் பிரச்சினைகளில் எல்லாம் தொடர்புடைய சுவாமிநாதன் இறந்தவுடன், அவர் வீட்டுக்கு அஞ்சலி செலுத்த முதல் ஆளாக நிற்கிறார்கள். சமூக ஊடகங்களில் கண்ணீர் அஞ்சலிகள் கடலெனப் பெருக்கெடுத்து ஓடுகின்றன. கேட்டால், அறிவியல், உபரி தானிய உற்பத்தி, உணவுப் புரட்சி, பட்டினி ஒழிப்பு என்கிறார்கள்.
படிக்க: ‘வளர்ச்சி’யின் பெயரால் குறி வைக்கப்படும் விவசாய நிலங்கள்!
விவசாயிகளின் துயரங்களைத் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டிய பத்திரிக்கையாளர் பி.சாய்நாத் உள்ளிட்டு பலரும் புகழஞ்சலி செலுத்தியிருப்பதை நாம் எப்படி பார்ப்பது? எவருடைய அஞ்சலியிலும் விவசாயம் கார்ப்பரேட் மயமாகி வருவதற்கான அடிப்படை எது, யார் துவங்கி வைத்தது? என்பது பற்றி ஒரு வரி கூட இடம்பெறவில்லை. இலட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டமைக்கான காரணம் குறித்த குறிப்புகள் இல்லை. ஆனால், பி.சாய்நாத் இன்னொரு விசயத்தைக் குறிப்பிடுகிறார். சுவாமிநாதன் தேசிய விவசாயிகள் ஆணையத்தின் தலைவராக இருந்த போது, விவசாயிகளின் மயானமான விதர்பா பகுதிக்கு அவரை அழைத்துச் சென்றதையும், அங்கு விவசாயிகளின் குமுறலை சுவாமிநாதன் காதுகொடுத்துக் கேட்டதோடு, இறந்துபோன விவசாயியின் வீட்டுக்குச் சென்ற போது கண்ணீர் சிந்தி அழுததையும் பதிவு செய்திருக்கிறார். நிச்சயமாக உள்ளத்தை உருக்கும் பதிவுதான், நிகழ்வு தான் அது. ஆனால், இதற்கெல்லாம் அடிப்படை எது?
சுவாமிநாதன் தனது பேட்டிகளில் சொல்லியிருப்பதைப் போல, அரசின் அரசியல், பொருளாதாரக் கொள்கைகள் மட்டும் தான், தொழில்நுட்பத்திற்கு மேலே நின்று ஆதிக்கம் செலுத்தினவா? அதுதான் உண்மை என்றால் அந்தக் கொள்கைகளைத் தீர்மானித்து, நடைமுறைப்படுத்தச் சொல்லி அரசின் கைகளை முறுக்கிக் கொண்டிருப்பது யார்? விதைகள், இரசாயன் உரங்கள், பூச்சிக் கொல்லிகளைத் தயாரிப்பைக் கட்டுப்படுத்தும் பன்னாட்டுக் கார்ப்பரேட்டுகள் தானே. தங்களது நலனுக்கு உகந்த வகையில் அரசுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டிருப்பது அவர்கள் தானே. சுவாமிநாதன் எந்தவொரு தருணத்திலும் இந்தக் கார்ப்பரேட்டுகள் பற்றி குறிப்பாகப் பேசியதே இல்லை. கேள்வி கேட்டவர்களும் இவை குறித்து வாய் திறக்கவேயில்லை.
சுவாமிநாதனைப் பேட்டியெடுத்த ப.கு.ராஜன்(புத்தகம் பேசுது), சமஸ் (தி இந்து தமிழ்) இன்னும் சில ஆங்கில ஊடகங்கள் கூட இந்தக் கோணத்தில் ஒரு கேள்வியைக் கூட கேட்காமல் பொத்தாம் பொதுவாக பசுமைப் புரட்சியின் – இரசாயன உரம், பூச்சிக்க்கொல்லி பயன்பாட்டின் – எதிர்விளைவுகள், விவசாயிகள் நெருக்கடிகள் என்ற வகையிலும், சுவாமிநாதன் மீதான விமர்சனம் என 1970-களில் வந்த ஒருசிலவற்றை மட்டும் முன்வைக்கிறார்கள். அதற்கு, அவரும் மேலோட்டமாகவும், அந்தக் காலத்திலேயே அதுபற்றி தான் பதில் சொன்னதாகவும் கூறி கடந்து செல்கிறார்.
பசுமைப் புரட்சி என்பதைத் தான் ஏற்கவில்லை என்றும், அது USAID என்ற நிறுவன அதிகாரி ஒருவர் பயன்படுத்திய வார்த்தை என்றும் கூறும் சுவாமிநாதன், நடந்தது பேராசைப் புரட்சி என்கிறார். அதாவது, அதிக விளைச்சலுக்கு ஆசைப்பட்ட சில பேராசைக்கார விவசாயிகள் ஏராளமான யூரியாவை (மலிவாகக் கிடைக்கும் இரசாயன உரம்) பயன்படுத்தியதால் நிலம் பாழாகிப் போனது என்கிற ரீதியில் பேசியிருக்கிறார். விவசாயிகளின் பேராசையா, பன்னாட்டு உரக் கம்பெனிகளின் பேராசையா என்று கேட்கக் கூட பேட்டியாளர் எவருக்கும் துணிவில்லை பாருங்கள்!
படிக்க: மோடி அரசுக்கு எதிராக மகாராஷ்டிர விவசாயிகள் மாபெரும் போராட்டம்!
தொழில்நுட்பத்தை விட அரசியல், பொருளாதாரக் கொள்கைகள் தான் தீர்மானிக்கின்றன என்பது சுவாமிநாதனின் வாதம். அப்படியானால் இத்தனை ஆண்டுகளாக இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளால் ஏற்படும் சூழலியல் கேடுகள், விவசாய நெருக்கடி, இலட்சக் கணக்கான விவசாயத் தற்கொலைகளுக்குப் பின்னும் அரசின் கொள்கைகள் மாறாமல் இருக்க என்ன காரணம் என்பதை அவரால் சொல்ல முடியாமல் போனது ஏன்? அவரது அறிக்கைகளைக் கூட நடைமுறைப்படுத்த அரசுகள் மறுப்பதற்கான காரணத்தை ஏன் விளக்கவில்லை? தஞ்சை டெல்டாவில் காட்டாமணக்கும், மக்காச் சோளமும் பயிரிட்டு ஏற்றுமதி செய்தால் விவசாயிகளுக்கு இலாபம் கிடைக்கும் என்று அரசுக்கு அறிவுரை வழங்கினாரே, அதற்கு பின்னால் இருக்கும் நலன் யாருடையது? ஈழத்தில் போர் முடிந்த கையோடு வடக்கின் வசந்தம் என்ற பெயரில், இலங்கைப் பேரினவாத அரசின் துணையோடு ஒரு விவசாயத் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆலோசனை கொடுத்தாரே, அதன் பின்னால் யாருடைய நலன் இருந்தது?
ஒரு வேளாண் விஞ்ஞானி என்ற வகையில், உணவு தானிய உற்பத்திக்கு சுயசார்பான திட்டங்களை முன்வைத்தார் என்றோ, அதில் நேர்ந்துவிட்ட தவறுகளில் தனது பங்கிற்கு வருந்தினார் என்றோ சொல்லி கடந்துவிட முடியாத ஒருவர் தான் சுவாமிநாதன். நவீன அறிவியலை விவசாயத்தில் புகுத்துவதற்கு நாம் எதிரிகள் அல்லர். ஆனால், யாருடைய நலனை முன்னிறுத்துகிறோம் என்பது முதன்மையானது. பெரும் கார்ப்பரேட்டுகள் பிடியில் விவசாயத்தைச் சிக்க வைத்த பின்னர், அவர்களின் விளைபொருளுக்கு உரிய விலை வேண்டும், பொது விநியோகத் திட்டம் அவசியம் என்று பேசுவதெல்லாம் கண்கெட்ட பின் சூரிய வணக்கம் செய்வதற்கு ஒப்பானது. சுவாமிநாதனின் நேர்மறை அம்சங்களாக பலர் சுட்டிக்காட்டுபவை அனைத்தும் இந்த வகையில் தான் அடங்கும்.
இறுதியாக, 2017 ஆம் ஆண்டில் மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு எதிராக, குறிப்பாக பி.டி பருத்திக்கு எதிராக சி.ஆர்.கேசவன் என்ற விஞ்ஞானியுடன் இணைந்து அவர் வெளியிட்ட அறிக்கைக்கு, மோடி அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் எதிர்ப்பு தெரிவித்ததும், குழப்பமான, சர்ச்சையை ஏற்படுத்தும் அறிக்கையாக மாறியமைக்கு வருத்தம் தெரிவித்து முடித்துக் கொண்டார் சுவாமிநாதன். எந்த வர்க்கத்தின் நலனுக்காக செயல்படுகிறோம் என்ற தெளிவில்லாத போது தடுமாறுவது இயல்புதானே.
“அரம் போலும் கூர்மையரேனும் மரம்போல்வர்
மக்கட் பண்பில்லா தவர்”
என்பது சுவாமிநாதனுக்கு மட்டுமல்ல அவரைப் புனிதராக்கும் அனைவருக்குமே பொருந்தும்.
![]()
வாகைசூடி

ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி தோழர் பகத்சிங் 117-வது பிறந்த நாள்
உன்னோடு நான்…
சோர்விலும்
ஏக்கத்திலும்
தளர்விலும்
எப்போதும் என்னுடன் இருக்கிறாய்
தடுமாறும் போது
எனை நம்பிக்கையூட்டி அழைத்துச் செல்கிறாய்
துவளும் போதும்
உன்னுடைய தியாகம்
என்னை சுட்டுப் பொசுக்குகிறது
அடக்குமுறைகள்
அச்சுறுத்தும் போது
உனது வீரம்
எனை
எள்ளி நகையாடுகிறது
உறவுகளில்
லயித்து கிடக்கையில்
உன் உறுதி
எனை
விழிப்படையச் செய்கிறது
மக்களுக்காக வாழும் வாழ்க்கையே உன்னதமானதென்ற
உன் வாழ்வே
எமக்கு ஒளி
சமரசமற்ற
உன்
கம்யூனிச சித்தாந்தமே
எமக்கு வழி
![]()
மருது

நடந்துமுடிந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் மணிப்பூர் விவகாரம் குறித்து மோடியை வாய்திறக்கச் சொல்லி எதிர்க்கட்சிகள் ‘போராடிக்’ கொண்டிருந்தன. அந்த நேரத்தில் விவாதங்கள் ஏதுமின்றி மக்கள் விரோத சட்டங்களையும், புதிதாக பல மசோதாக்களையும் அறிமுகப்படுத்தியும் நிறைவேற்றியுமுள்ளது மோடி அரசு. அவற்றில் ஆகஸ்ட் 11-ஆம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்த மூன்று மசோதாக்கள் முக்கியமானவை.
ஏற்கனவே நடைமுறையில் இருக்கும், “இந்திய தண்டனைச் சட்டத்திற்கு (1860) (ஐ.பி.சி.)” பதிலாக “பாரதிய நியாய சன்ஹிதா (2023)”, “குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்கு (1973) (சி.ஆர்.பி.சி.)” பதிலாக “ பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா”, “இந்திய சாட்சிய சட்டத்திற்கு (1872) (ஐ.இ.சி)” பதிலாக “பாரதிய சாக்ஷிய விதேயக் (2023)” ஆகியவையே அந்த மூன்று புதிய மசோதாக்கள்.
இந்த புதிய மசோதாக்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அமித்ஷா, “இந்த மூன்று ஆங்கிலேய கால சட்டங்களும், ஆங்கிலேயர்களின் நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்காக, பாதுகாப்பதற்காக கொண்டுவரப்பட்டவை. அதன் நோக்கம் தண்டனைகள் வழங்குவது மட்டுமே, நீதி வழங்குவதல்ல, தற்போது கொண்டுவரப்பட்ட மூன்று புதிய மசோதாக்கள் காலனித்துவச் சட்டங்களை முடிவுக்குக் கொண்டுவந்து இந்தியர்களுக்கான இந்தியர்களால் வழங்கப்படும் சட்டங்களாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.
ஊடகங்களில் விவாதிக்கப்படுவது போல, மூன்று சட்டங்களின் பெயர்களை ஹிந்தி மொழியில் குறிப்பிட்டுள்ளார்கள், அதன் மூலம் மொழித்திணிப்பு செய்கிறார்கள் என்பது மட்டும் பிரச்சனையல்ல. இந்த சட்டங்களின் ஒவ்வொரு அடிப்படை கூறுகளும் மாற்றப்பட்டிருக்கின்றன. மசோதாக்களில் சில புதிய பிரிவுகள் (சட்டங்கள், விதிகள்) இணைக்கப்பட்டிருக்கின்றன.
காலனியச் சட்டத்திற்கு மாற்றாக இந்துராஷ்டிர சட்டம்
குற்றவியல் சட்டங்களை மாற்றியமைப்பதற்காக கடந்த 2020-ஆம் ஆண்டே உள்துறை அமைச்சகத்தால் சட்ட நிபுணர்களைக் கொண்ட சிறப்பு கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. தற்போது மறுசீரமைக்கப்பட்ட புதிய மசோதாக்களில், ஐ.பி.சி. சட்டத்தில் 22 பிரிவுகள் நீக்கப்பட்டு, 175 பிரிவுகளில் மாற்றம் செய்யப்பட்டு புதிதாக 9 பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. சி.ஆர்.பி.சி. சட்டத்தில் 107 பிரிவுகளில் மாற்றம் செய்யப்பட்டு, புதிதாக 9 பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதேபோல ஐ.இ.சி. சட்டத்தில் 23 பிரிவுகள் திருத்தம் செய்யப்பட்டு, புதிதாக ஒரு பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.
இந்திய குற்றவியல் நீதி முறையில் மிகப் பெரிய சீர்த்திருத்தத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த மசோதாக்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்த அமித் ஷா, “இந்த மசோதாக்கள் சட்டமாக ஆகும்போது, தேசத் துரோகச் சட்டம் ரத்தாகும்” என்று கூறியிருந்தார்.
தேசத் துரோக குற்றம் குறித்தும், அதற்கான தண்டனை குறித்தும் விவரிக்கும் இந்திய தண்டனைச் சட்ட பிரிவான “124 (ஏ)”-வை நீக்கப்போவதாக ஷா கூறுகிறார். ஆனால், “தேசத் துரோகம்” என்ற வார்த்தைக்கு முன்பிருந்த வரையறையை மாற்றி புதிய வரையறை கொண்டுவரப்பட்டுள்ளதே உண்மை.
படிக்க: புதிய குற்றவியல் சட்ட மசோதாக்களை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
புதிய மாசோதாவில் முதல்முறையாக பயங்கரவாதம் தனி குற்றமாக வரையறுக்கப்படுகிறது. மத்திய அரசு தற்போது தாக்கல் செய்துள்ள “பாரதிய நியாய சன்ஹிதா” மசோதாவில் தேசத் துரோகத்துக்கான தண்டனை குறித்து பிரிவு 150-இல் விளக்கப்பட்டுள்ளது. அதில் தேசத் துரோகம் என்ற வார்த்தைக்கு பதிலாக, “நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கு எதிராக செயல்படுவது” என்ற வரி இடம்பெற்றுள்ளது. காவிக்கும்பலின் அகராதியில் தேசம் என்பதற்கான அர்த்தம் அதானி, அம்பானிக்களுக்கானது என்பதே. அதை எதிர்ப்பவர்கள் அனைவருமே தேசவிரோதிகள்தான்.
மேலும், பிரிவு 150-இல், “வேண்டுமென்றோ, தெரிந்தோ, பேச்சின் மூலமாகவோ, எழுத்தின் மூலமாகவோ, அறிகுறிகள் மூலமாகவோ, மின்னணு தகவல் தொடர்பு மூலமாகவோ, வேறுவிதமாகவோ பிரிவினை பேசுவது, ஆயுதமேந்தி கிளர்ச்சியில் ஈடுபடுவது, பிரிவினைவாத உணர்வுகளை ஊக்குவிப்பது ஆகியவை இந்திய இறையாண்மைக்கு, ஒற்றுமைக்கு, ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் செயல். இத்தகைய குற்றத்தில் ஈடுபட்டால் ஆயுள் தண்டனை அல்லது ஏழு ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய சிறைத்தண்டனை மற்றும் அபராதமும் விதிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, சட்டம் அமலாக்கப்பட்டால், காவிக்கும்பலுக்கு எதிராக மூச்சு கூட விட முடியாது என்பதையே இது நமக்கு உணர்த்துகிறது.
கூடுதலாக மறுசீரமைக்கப்பட்ட மசோதாக்களில், எந்தவொரு நபரையும் தீவிரவாதி என்று சந்தேகித்தால் அவர்மீது மூத்த அதிகாரியின் ஒப்புதல் இல்லாமலேயே ஒரு சாதராண போலீஸ் அதிகாரி கூட முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யலாம் என்கிறார், பயங்கரவாத வழக்குகளில் நிபுணத்துவம் பெற்ற வழக்கறிஞர் எம்.எஸ்.கான். மேலும் அவர், “ஏற்கனவே நடைமுறையில் இருந்த சட்டத்தில், ஊபா-வின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய ஒரு மூத்த அதிகாரியின் ஒப்புதல் வேண்டும் என்று விதி கூறுகிறது. இரண்டாவதாக, ஒரு குறிப்பிட்ட தகுதியில் இருக்கும் அதிகாரிகளால் மட்டுமே விசாரணையை மேற்கொள்ள முடியும். ஆனால், இத்தகைய விதிகள் எதுவும் தற்போது முன்மொழியப்பட்ட மசோதாக்களில் இல்லை” என்கிறார். இதுவரை இருந்த முறைபடி, ஒருவர்மீது குற்றச்சாட்டை வைக்காமல் தடுப்பு காவலில் 60 நாட்கள் வரை விசாரிக்கலாம். இப்போது புதிய மசோதாவில் 90 நாட்கள் வரை தடுப்பு காவலில் விசாரிக்கலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை இல்லாத, கைவிலங்கைக் கொண்டு கைது செய்யும் உரிமையை (எதார்த்தத்தில் அப்படியில்லை) புதிய மசோதாவின் ஷரத்து 43(3) போலிசுக்கு வழங்குகிறது. அதேபோல், ஒரு நபரை கைது செய்யும்போது தேவையான எந்த சக்தியையும் வழிமுறையையும் பயன்படுத்துவதற்கான உரிமம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, போலி மோதல் கொலைகளை நடத்தி சுட்டுக்கொல்லவும் அதிகாரமளிக்கிறது.
படிக்க: குற்றவியல் நடைமுறை அடையாள மசோதா – 2022 : பாசிசத்தை நோக்கிய அடுத்த அடி!
“அனைவருக்கும் பேச உரிமை உள்ளது. நாங்கள் தேசத்துரோகச் சட்டத்தை முற்றிலும் ஒழிக்கிறோம்,” என கதையளந்த அமித்ஷா அதனை மேலும் விரிவுப்படுத்தி பாசிச பா.ஜ.க.வையும், ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ பயங்கரவாதத்தையும் எவரொருவர், எந்தவகையில் எதிர்க்க முற்பட்டாலும் அவர்களை விசாரணை ஏதுமின்றி கைது செய்து ஒடுக்கும் வகையில் சட்டத்தைத் திருத்தி அமைத்துள்ளார்.
அடுத்து, “கும்பல் படுகொலைகள் பற்றி நிறைய கவலைகள் உள்ளன, நாங்கள் அதை மிக கவனமாகப் பார்த்தோம். இச்சட்டத்தில் கும்பல் படுகொலை செய்பவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை அல்லது ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை வழங்குவதற்கான ஏற்பாடுகள் உள்ளன” என்று அமித் ஷா கூறுகிறார்.
ஒருவேளை, இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால் முதலில் கூண்டோடு பிடிப்படுபவர்களாக இந்துத்துவ குண்டர்களாக தானே இருப்பார்கள் என்று நமக்கு சந்தேகம் எழலாம். இங்கு ஷா தனது சூட்சுமத்தைக் காட்டியுள்ளார். தற்போது நடைமுறையில் இருக்கும் சட்டத்தின்படி, கும்பல் படுகொலைகளில் ஈடுபடுபவருக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை வழங்குவதற்கு மட்டுமே வாய்ப்புள்ளது. ஆனால், புதிய மசோதாவில் 7 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது, அதாவது தண்டனைக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
000
முன்னதாக, கடந்த 2022-ஆம் ஆண்டு குற்றவியல் நடைமுறை மசோதாவில் கொண்டுவரப்பட்ட திருத்தத்தில், குற்றவாளிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களிடமிருந்து தலைமுடி, உள்ளங்கை ரேகைகள், பாத ரேகைகள், கண் விழித்திரை, கருவிழிப்படலம், விந்தணு, சளி-எச்சில், மரபணு (டி.என்.ஏ) ஆகிய உடல் மற்றும் உயிரியல் மாதிரிகள் சேகரிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இப்போது கொண்டுவரப்பட்ட மறுசீரமைக்கப்பட்ட மசோதாக்களின்படி, ஒவ்வொரு போலிசு நிலையமும், மாவட்ட போலிசு கண்காணிப்பாளர் அலுவலகங்களில் பழைய வழக்குகளில் கைது செய்யப்பட்டோரின் முழுவிவரங்கள் அடங்கிய டிஜிட்டல் தொகுப்பை உருவாக்க வேண்டும். அனைத்து நீதிமன்றங்களும் வரும் 2027-க்குள் டிஜிட்டல்மயமாக்கப்படும். இதன்மூலம் வழக்குகளை சில நொடிகளில் கண்டுபிடிக்க முடியும் என்கிறது.
ஒரு வழக்கில் புகார் முதல் தீர்ப்பு வரை அனைத்தும் டிஜிட்டலில் பதிவு செய்யப்பட வேண்டும். மேலும், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபரின் கையெழுத்து, குரல் பதிவு, விரல் ரேகை பதிவை போலிசு பெறலாம். வழக்கில் தகவல் தொடர்பு சாதனங்களை ஆதாரங்களாகப் பயன்படுத்தலாம். 2018-ஆம் ஆண்டு பீமா கோரேகான் வழக்கில் ரோனா வில்சன், ஸ்டான் சுவாமி போன்றோரின் மடிக்கணினிகளை புனே போலிசு ஹாக் செய்து கோப்புகளை நுழைத்தது. அதை ஆதாரமாக கொண்டு ஊபா சட்டத்தில் 16 செயற்பாட்டாளர்களை கைது செய்து சிறையில் அடைத்து ஐந்து ஆண்டுகளாக சித்தரவதை செய்து வருகிறது, மோடி அரசு. இனி தகவல் தொடர்பு சாதனங்களை ஆதாரங்களாக பயன்படுத்தலாம் என்ற திருத்தத்தின் மூலம் மோடி அரசை விமர்சிக்கும் ஜனநாயக சக்திகள் அனைவருக்கும் இந்த ஒடுக்குமுறை நடக்கும்.
குற்றவாளியாக பிடிக்கப்பட்ட ஒருவரின் தகவல் தொடர்பு சாதனங்களை வைத்தே அவரது குடும்பப் பின்னணியையும், நண்பர்கள் பின்னணியையும் எளிதாக கண்டறிய முடியும். இதன் மூலம், குற்றவாளியாக பிடிபடுபவர் இஸ்லாமியராக இருப்பாரேயானால், அவரது குடும்ப உறவினர்கள் அனைவருமே குற்றவாளியாக சித்தரிக்கப்படுவர். ஏற்கனவே, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் எந்த குற்றமும் செய்யாத இஸ்லாமியர்களின் வீடுகளும் அவர்களின் குடும்பத்தினரின் வீடுகளும் புல்டோசர் கொண்டு இடித்து நிர்கதியாக்கப்பட்டு வருவதை இதனுடன் இணைத்துப் பார்க்க வேண்டியுள்ளது.
இஸ்லாமியர்களை ஒடுக்குவதற்கான சட்டங்கள்
தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய மசோதாவில் “வெள்ளத்தை” ஏற்படுத்துவது ஒரு பயங்கரவாத செயலாக வரையறுக்கப்பட்டுள்ளது. “பயங்கரவாதி” என்பதை மசோதாவின் பிரிவு 111 (6) (ஏ), “ஆயுதங்கள், வெடிபொருட்கள், அணு – கதிரியக்க அல்லது பிற ஆபத்தான பொருட்களை உருவாக்குவது, உற்பத்தி செய்வது, வைத்திருப்பது, வாங்குவது, கொண்டு செல்வது, வழங்குவது அல்லது பயன்படுத்துவது அல்லது தீ, வெள்ளம் அல்லது வெடிப்புகளை ஏற்படுத்துவது ஆகிய செயல்களில் ஈடுபடுபவர்” என்று வரையறுக்கிறது. இந்த குற்றத்திற்கு குறைந்தபட்ச தண்டனையாக ஐந்து ஆண்டுகள் சிறை தண்டைனையும் அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனையும் வழங்கப்படும்.
வெள்ளத்திற்கு ஒரு நபரைக் குற்றம் சாட்ட முடியுமா? என்று தோன்றலாம். பா.ஜ.க ஆளும் அசாம் மாநிலத்தில் ஏற்கனவே இதுபோன்று ஒரு சம்பவம் நடந்துள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு மே, ஜுன் மாதங்களில் அசாமில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது. இதனால் 192 பேர் உயிரிழந்தனர். இதற்கு இஸ்லாமியர்கள்தான் காரணம் என கூறி ‘வெள்ள ஜிகாத்’ என்ற பெயரில் காவிக் கும்பல் வெறுப்புப் பிரச்சாரத்தைக் கட்டியமைத்தது. இதற்கு வலு சேர்க்கும் விதமாக அம்மாநில அரசு எந்தவித ஆதாரமுமின்றி ஐந்து இஸ்லாமியர்களை கைது செய்து சிறையிலடைத்தது. தற்போது, காவிகளின் வெறுப்புப் பிராச்சாரத்திற்கு சட்ட அங்கீகாரம் கொடுத்துள்ளது இப்புதிய மசோதா.
இதைப்போல, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில், இஸ்லாமிய ஆண்கள் இந்து பெண்களை காதலித்து திருமணம் செய்து கொள்வதை காவிக் கும்பல் ‘லவ் ஜிகாத்’ என்ற பெயரில் பிரச்சாரம் செய்து வருகிறது. அதற்கு இப்புதிய மசோதாவில் சட்ட அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் இருக்கும் சட்டத்தில் ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் நேர்மையற்ற முறையில் அல்லது திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி உடலுறவு கொள்ளமுயன்றால் அது குற்றமாகும். ஆனால், இப்புதிய மசோதாவில் “உண்மையான அடையாளத்தை மறைத்தோ, திருமணம், பணிவாய்ப்பு குறித்து போலி வாக்குறுதி அளித்தோ பாலியல் உறவில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த உண்மையான அடையாளத்தை மறைத்தல் என்பதில், மதம் ஒரு அம்சமாக சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் ‘லவ்ஜிகாத்’ என்ற பெயரில் இஸ்லாமிய இளைஞர்களைக் கைது செய்து சிறையில் அடைக்கும் வாய்ப்பு உருவாக்கப்படுகிறது.
000
இச்சட்டங்களில் உள்ள அம்சங்களை பார்த்தாலே இது காலனியச் சட்டங்களை ஒழிப்பதற்காக கொண்டுவரப்படவில்லை என்பது அப்பட்டமாக தெரியும். நிலவுகின்ற போலி ஜனநயாகக் கட்டமைப்பை தனது பாசிச சர்வாதிகாரத்தை நிறுவும் வகையில் மறு ஒழுங்கமைப்பு செய்துவரும் பாசிச கும்பல் அடுத்தக்கட்டமாக, தாம் அமைக்கவிருக்கும் இந்துராஷ்டிரத்திற்கான குற்றவியல் தண்டனைச் சட்டங்களையும் வகுத்து விட்டது என்பதையே அமித்ஷாவின் இப்புதிய மசோதாக்கள் நமக்கு உணர்த்துகின்றன. தனது பாசிச சர்வாதிகாரத்தை நிலைநிறுத்திக்கொள்ள தடையாக இருக்கும் ஜனநாயக சக்திகளை ஒழித்துக்கட்டுவது, இஸ்லாமியர்கள், சிறுபான்மையினரை ஒடுக்குவது, ஆர்.எஸ்.எஸ்.-பஜ்ரங்தள் போன்ற சட்டவிரோத கும்பல்களுக்கு சட்ட ரீதியான அங்கீகாரத்தை வழங்குவது என பல பாசிச அம்சங்களை அமித்ஷாவின் புதிய மசோதாக்கள் கொண்டிருக்கின்றன.
![]()
வெண்பா
(புதிய ஜனநாயகம் செப்டம்பர் மாத இதழ்)


29.09.2023
காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையை பாதுகாப்போம்!
மீண்டும் மாபெரும் மக்கள் திரள் இயக்கத்தை கட்டி எழுப்புவோம் !
தமிழ்நாட்டின் உரிமையை மறுக்கும் ஆர்எஸ்எஸ் – பாஜக மற்றும்
கன்னட இனவெறிக் கட்சிகளை விரட்டியடிப்போம் !
பத்திரிகை செய்தி
காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என்று ஆர்எஸ்எஸ் – பாஜக கும்பலால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இனவெறியின் காரணமாக கர்நாடகாவில் தொடர்ந்து முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
நேற்றைய தினம் நடிகர் சித்தார்த் கர்நாடகாவில் ஏற்பாடு செய்திருந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில் புகுந்த கன்னட இன வெறியர்கள், அவரை வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்கள். கன்னட இனவெறியர்கள் செய்த தவறுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் பகிரங்க மன்னிப்பு கூறியுள்ளார் . ஒரு நடிகர் என்ற முறையில் அவரிடம் இருக்கக்கூடிய நேர்மையில் குறைந்தபட்சம் கூட ஆளும் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கோ கர்நாடகத்தில் உள்ள ஏனைய தேசிய கட்சிகளுக்கோ இல்லை.
தமிழ்நாட்டில் ஒன்று பேசுவதும் கர்நாடகாவில் இன்னொன்று பேசுவதுமாக செயல்படும் தேசிய கட்சிகளின் சந்தர்ப்பவாதம் கண்டிக்கத்தக்கது. தேச, மத, இனவெறிக்கு எதிராக எது சரியோ எது நியாயமோ அதை பேச முடியுமா? முடியாதா? அதை விட்டுவிட்டு ஓட்டு பொறுக்குவதற்காகவும் அரசியல் ஆதாயம் பெறுவதற்காகவும் ஆர் எஸ் எஸ் – பாஜக திட்டமிட்டு உருவாக்கியுள்ள தற்போதைய இன வெறிச் சூழலை கண்டிப்பதற்கோ எதிர்ப்பதற்கோ காங்கிரஸ் உள்ளிட்ட எந்த கட்சியும் கர்நாடகத்தில் தயாராக இல்லை. ஏனென்றால் அனைவரும் இனவெறியை தூண்டிவிட்டு குளிர்காயும் சக்திகளே.
படிக்க: காவிரி நீருக்கான போராட்டம் பாசிச எதிர்ப்புப் போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும்!
தமிழ்நாட்டு ஊடகங்களில் திட்டமிட்டு காவிரி பிரச்சினை மிகப் பெரிய அளவில் விவாத பொருளாக்காமல் தவிர்க்கப்பட்டு உப்புச்சப்பு இல்லாத விவாதங்களே நிகழ்ச்சி நிரலில் இருக்கின்றன. வலைக்காட்சிகளோ திமுகவுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடும் ,காங்கிரசுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடும் என்று அமைதியாக இருக்கின்றன. கன்னட இனவெறியர்கள் செய்வதை விட இது தமிழினத்திற்கு செய்யப்படும் மிகப்பெரிய துரோகம் ஆகும்.
மிகப்பெரிய தேர்தல் கட்சி என்று கூறிக் கொள்ளும் யாரும் காவிரி உரிமைக்காகவும் கர்நாடகாவில் நடைபெறும் திட்டமிட்ட இனவெறி சம்பவங்களுக்கு எதிராகவும் போராட்டங்கள் எதுவும் நடத்தப்படவில்லை. மாறாக சிறு சிறு அமைப்புகளும் இயக்கங்களும் மட்டுமே இது தொடர்பான போராட்டங்களை முன்னெடுப்பதும் அறிக்கைகளையும் விடுகின்றன. மதவெறி பாசிசம் தவறு என்றால் ஒரு மாநிலத்தின் உரிமையை மறுக்கும் இந்த இனவெறி தவறல்லவா? ஒரு தேசிய இனத்தின் இன உரிமையை ஒரு மாநில மக்களின் நதிநீர் மீதான முற்றுரிமையை மறுக்கும் கர்நாடக இன வெறியர்களிடம் பணிந்து செல்ல முடியுமா?
காவிரி ஒழுங்காற்று ஆணையம், உச்ச நீதிமன்றம் என யார் உத்தரவிட்டாலும் கட்டுப்பட மாட்டோம் என்று கொக்கரிக்கிறார்கள் இன வெறியர்கள் .காவிரி பிரச்சனை வரும்போதெல்லாம் கர்நாடக வாழ் தமிழர்கள் பலியாடாக்கப்படுவது போல இப்போதும் பலியாடாக்கப்படுகிறார்கள்.இதனை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.
படிக்க: கார்ப்பரேட் திட்டங்களை ஒழிக்காமல் காவிரி நீர் கிடைக்காது!
கர்நாடகாவில் திட்டமிட்டு இனவெறி கிளப்பப்பட்டு கலவரச் சூழல் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இந்த நிலையில், ஒன்றிய அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? கன்னட இன வெறியர்களுக்கு ஆதரவாகத்தான் ஒன்றிய அரசு இருக்கும் என்றால், தமிழ்நாட்டின் நதி நீர் மீதான உரிமையை கர்நாடக அரசும் ஒன்றிய அரசும் மறுக்கும் என்றால் ஒரு மாநிலமாக தமிழ்த் தேசிய இனம் வாழ்வதில் என்ன பயன் இருக்கிறது?
ஒரு தேசிய இனத்தின் உரிமையை மற்றொரு தேசிய இனம் அங்கீகரிக்க வேண்டும். இல்லையென்றால் சேர்ந்து வாழ்வதில் எவ்வித பயனும் இல்லை என்ற உண்மையை கர்நாடகாவில் இன வெறியைத் தூண்டி வரும் கும்பலுக்கு உணர்த்த வேண்டும். அப்படி இல்லாத வரை மழை பெய்யாத காலங்களில் எல்லாம் தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் ஒருபோதும் வரப்போவதில்லை. மழை அதிகமாக பெய்யும் போது தமிழ்நாட்டை வடிகாலாக வைத்துக்கொண்டு உரிய காவிரி நீரைத் தராத இந்த அடாவடி செயல்பாடு விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.
காவிரி நதிநீர் ஆணையத்திற்காக கோ பேக் மோடி இயக்கம் தொடங்கியதைப் போல மீண்டும் ஒரு மிகப்பெரிய மக்கள் திரள் போராட்டம் தொடங்கப்பட வேண்டும். அந்தப் போராட்டம் காவிரி நதிநீருக்காக மட்டுமல்ல தமிழ்நாட்டின் தேசிய சுயநிர்ணய உரிமைகளைப் பெறுவதற்கானதாக இருக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.
![]()
தோழமையுடன்
தோழர் மருது,
செய்தி தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை,
9962366321
பாசிச பா.ஜ.க ஆளும் மத்தியப் பிரதேச மாநிலத்தின் உஜ்ஜயினி மாவட்டத்திலுள்ள மகாகால் என்ற இடத்தில் 12 வயது சிறுமி ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, வீட்டைவிட்டு விரட்டியடிக்கப்பட்டார்.
கடுமையான ரத்தப்போக்குடன் அரை நிர்வாணமாகத் தெருக்களில் நடந்து சென்ற அந்த சிறுமி ஒவ்வொரு வீட்டுக் கதவையும் தட்டி உதவி கேட்டார். ஆனால், யாரும் அவருக்கு உதவி செய்ய முன்வரவில்லை. இந்த பதைபதைக்க வைக்கும் சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுவருகிறது.

மணிப்பூர், மத்தியப் பிரதேசம் என பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பெண்கள் மீதான வன்முறை என்பது இயல்பாகி விட்டது. உஜ்ஜயினி பயங்கரமோ மக்களும் இதுபோன்ற கொடூரங்களை இயல்பாகக் கருதத் தொடங்கிவிட்டனரோ என்ற கேள்வியை எழுப்புகிறது.

ரஷ்யா-உக்ரைன் போர் ஏதேனும் ஒருவரின் தோல்வியில் முடிய வேண்டும் அல்லது ராஜீய ரீதியான அமைதித் தீர்வின்படி முடிவுக்கு வர வேண்டும். ரஷ்யா ஒரு மிகப் பெரிய, வலுவான அணு சக்தி நாடு. உக்ரைன், மிகப் பெரிய அளவிற்கு மேற் கத்திய நாடுகளின் ஆதரவோடு போரில் முன்னிறுத் தப்பட்டிருக்கும் நாடு. ஒருவரை வீழ்த்தி ஒருவர் வெற்றி பெறுவது எளிதாக நடக்கும் என்று தோன்றவில்லை. மாறாக, ராஜீயரீதியான தீர்வுக்கு செல்வதே ஒரே வழி. போர் நீடிக்க நீடிக்க, அது சுழல் ஏணி போல மேலே மேலே சென்று இரு தரப்பையும் ஒரு கூட்டுத் தற்கொலை என்ற இடத்திற்கே இட்டுச் செல்லும் அபாயம் உள்ளது. இந்தப் போர் நீடிக்க வேண்டுமென்று அமெரிக்கா விரும்புகிறது. அதன் நோக்கம், ரஷ்யாவை முற்றிலும் பலவீனமடைந்த நாடாக மாற்றுவதே. இதை அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாய்டு ஆஸ்டின் உள்பட உயரதிகாரிகள் பகிரங்கமாகவே சொல்லி வருகிறார்கள். அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும் ரஷ்யாவை பலவீனப்படுத்தும் கொள்கையில் சேர்ந்து நிற்கிறார்கள்.
உக்ரைன் திட்டங்கள் தோல்வி
ஆனால், உலகின் பிற அனைத்து நாடுகளும் இந்தப் போருக்கு ராஜீய ரீதியான தீர்வு காணுமாறு ஒரே கருத்தாக கூறி வருகின்றன. போர் நீடித்தால் முதல் பெரும் சேதம் உக்ரைனுக்குத்தான் என்பதை இந்நாடுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஏற்கெனவே உக்ரைன் தனது பல்லாயிரக்கணக்கான வீரர்களை இப்போரில் இழந்து விட்டது. மிகக் கடுமையான பொ ருளாதாரச் சிதைவைச் சந்தித்துள்ளது. ரஷ்யாவைச் சுற்றி வளைத்து தாக்கி விட முடியும் என்ற உக்ரை னின் திட்டங்கள் தோல்வியடைந்து விட்டன. உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கியின் தனி பாது காப்புப் படையிலிருந்து கூட பலர் வெளியேறி விட்டார்கள்.
இராக், லிபியா போன்று இல்லை
உக்ரைனில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருக்கி றது என்ற போதிலும், அது இந்த உலகின் பல பகுதிகளில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் கூட்டணிப் படையினர் நடத்திய மிக மிகக் கொடிய யுத்தத்தினைப் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை என்பதை கவனிக்க வேண்டும். 2003-இல் இராக் மீது அமெ ரிக்காவும் அதன் கூட்டாளிகளும் நடத்திய யுத்தம்; 2011-இல் லிபியா மீது நடத்திய யுத்தம் போன்றவற்றில் அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் படைகள் அந்த நாடுகளின் அடிப்படைக் கட்டமைப்பையே குண்டு வீசித் தகர்த்தன. எண்ணெய் வளக் கட்டமைப்பு களை அழித்தொழித்தன. ஒட்டுமொத்த போக்கு வரத்தையும் சிதைத்து அழித்தன. தொலைத் தொடர்பு அமைப்பு முறையை முற்றாக சிதைத்தன. சுருக்கமாகச் சொன்னால், சமூகம் முற்றிலும் ஸ்தம்பிக் கச் செய்தன. இவற்றில் எதுவும் உக்ரைனில் நடக்க வில்லை. ஈரானிலும், லிபியாவிலும் பயன்படுத்தப் பட்டது போல யுரேனியமும், வெள்ளை பாஸ்பரசும் கலந்த குண்டுகள் வீசப்படவில்லை. சட்டப்பூர்வமான வழியிலோ அல்லது சட்டப்பூர்வமற்ற வழியிலோ உக்ரைன் மீது ரஷ்யா இத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. அதுமட்டுமல்ல, இராக்கில் அமெரிக்காவும் பிரிட்டனும் தாக்குதல் நடத்திய போது, அவர்கள் உட்பட எந்த ஒரு மேற்கத்திய நாட்டின் தலைவரும், பாக்தாத்திற்கு பயணம் மேற்கொள்ளவில்லை. ஆனால் உக்ரைனுக்கு இடைவிடாமல் மேற்கத்திய தலைவர்கள் சென்றவண்ணம் இருக்கிறார்கள். இந்த இரட்டை வேடத்தை பகிரங்கமாகவே அரங் கேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
உலகம் முழுவதும் பாதிப்பு
இந்தப் போரின் கசப்பான விளைவுகள் உக்ரைன் மற்றும் ரஷ்யாவோடு நின்று விடப் போவதில்லை. உலகின் பல பகுதிகளில் பல லட்சக்கணக்கான மக்கள் உணவு தானியம் வந்து சேராமல் பட்டினியின் பிடியில் சிக்கியிருக்கிறார்கள். வளம் மிகுந்த கருங்கடல் பிரதே சத்திலிருந்து உணவு தானியங்களும், உரங்களும் பிற நாடுகளுக்கு விநியோகம் ஆகாமல் நிற்கின்றன. இதுதான் சமயம் என்று உலக உணவுக் கட்ட மைப்புக்குள் புகுந்து வெகு சில பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் உணவு விலைகளை உயர்த்தி கொள்ளை லாபம் அடித்து வருகின்றனர். இந்த பின்ன ணியில் 2022-ஆம் ஆண்டு ஜூலையில் உக்ரைன், ரஷ்யா, துருக்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவை நான்கு மாத காலத்திற்கு “கருங்கடல் உணவு தானிய முன் முயற்சி” எனும் ஒப்பந்தத்தை மேற்கொண்டு, 2 கோடி டன் உணவு தானியங்களை இந்தப் பிரதேசத்திலி ருந்து உலக நாடுகளுக்கு செல்ல வழி செய்தன. அது மேலும் சில மாதங்கள் நீடிக்கப்பட்டது. போர் நீடிக்கும் நிலையில் இந்த ஒப்பந்தம் என்னாகும் என்று தெரியவில்லை. ரஷ்யா- உக்ரைன் போருக்கு முன்பே மனிதகுலம் ஒரு மிகப் பெரிய காலநிலைப் பேரழிவில் சிக்கும் அபாயத்தை எதிர்கொண்டிருந்தது. 2002-இல் வெகு ரக ஏவுகணை எதிர்ப்பு ஒப்பந்தத்திலிருந்து தன்னிச் சையாக முறித்துக்கொண்டு அமெரிக்கா வெளியேறி யது; 2019-இல் கையெழுத்தான அணுசக்தி நாடுக ளின் இடைக்கால ஒப்பந்தம்; 2020-இல் விண்வெளியை தங்களுக்குள் பிரித்துக் கொள்வதற்கான ஒப்பந்தம் ஆகியவற்றை அமெரிக்காவும், அதன் கூட்டாளிகளும் மேற்கொண்டதன் விளைவாக மனிதகுலத்தில் மிகப் பெரிய அழித்தொழிப்பு வேலையை அவர்கள் ஏற்கெ னவே துவங்கிவிட்டார்கள். இந்தப் பின்னணியில், தெற்கு சீனக் கடல் மற்றும் உக்ரைன் போர் ஆகிய இரண்டு பிரச்சனைகளை மையப்படுத்தி உலகளா விய முறையில் பதற்றத்தை தூண்டிவிடுவது இவர்க ளுக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கே. சுற்றுச்சூழல் பேரழிவைத் தடுத்து நிறுத்த கால நிலை மாற்ற மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தங் கள், உடனடியாகவே நீர்த்துப் போகச் செய்யப் பட்டுள்ளன. எனவே அந்த ஒப்பந்தங்கள் மனிதகுலத் திற்கு எந்த நம்பிக்கையையும், உறுதியையும் அளிக்கவில்லை.
பகடைக்காயாக உக்ரைன்
உக்ரைனை பகடைக் காயாக வைத்து அமெரிக்கா வும், பிரிட்டனும் கூட்டாளிகளும் சூதாடுகின்றன என்பதை யாரும் விவாதிப்பதற்கு தயாராக இல்லை. அந்த சூதாட்டம் என்னவென்றால், அவர்களால் ‘வெறி பிடித்த பைத்தியக்கார மனிதர்’ என்று முத்திரை குத்தப்பட்டுள்ள புடின் தோல்வியைத் தழுவினால், அவர் அமைதியாக பையை தூக்கிக் கொண்டு நடை யைக் கட்டிவிடுவார்; அதன்பிறகு தலைநகர் கீவ் உட்பட உக்ரைனை தங்களது கைகளுக்கு கொண்டு வந்துவிடலாம் என்பதே. ஆனால், அது நடக்கக்கூடிய காரியமா? 2014-ஆம் ஆண்டிலேயே அப்போதைய நேட்டோ ராணுவக் கூட்டணியின் தலைவர் ஜென்ஸ் ஸ்டோல் டன்பர்க், “நாங்கள் உக்ரைனில் நீண்ட போருக்கு தயாராகி வருகிறோம்” என்று கூறினார். அந்த நீண்ட போர் தான் இப்போது நடந்து வருகிறது. ஆனால் இதற்கான விலையை நேட்டோ கூட்டணி தரவில்லை; மாறாக, அப்பாவி உக்ரைனியர்கள் தான் தந்து கொண்டிருக்கிறார்கள். பெரும் எண்ணிக்கையில் மரணத்தைத் தழுவியிருக்கிறார்கள். ரஷ்யாவை பலவீனப்படுத்துவதற்காக மிகப் பெரிய சூதாட்டத்தில் உக்ரைனைத் தள்ளியுள்ளது அமெ ரிக்கா. இடைவிடாமல் ஆயுதங்களை அனுப்புகிறது. ராஜீயரீதியான தடைகளை ரஷ்யாவுக்கு ஏற்படுத்திவிட்டால் எளிதில் வெற்றி பெற்று விடலாம் என்ற மாயத் தோற்றத்தை உருவாக்கியுள்ளது. முதலில் உக்ரைன் மக்களிடையே ரஷ்யாவுக்கு எதி ரான உணர்வும் வெறியும் ஊட்டப்பட்டு இது துவங்கி யது; இப்போது அவர்களே அமைதிக்கான சாத்தி யக்கூறுகள் இல்லையா என்று ஏங்கும் இடத்திற்கு வந்திருக்கிறார்கள்.
கார்ப்பரேட்டுகள் குதூகலம்
போர் என்பது போர்தான். போர் என்பது ஒவ்வொரு வருக்கும் பேரழிவு. அது நீடிக்க நீடிக்க பெரும் பதற்றம். ஆனால், போர் நீடிக்க நீடிக்க மிகப் பெரும் பெட்ரோலிய கார்ப்பரேட் கம்பெனிகளின் தலைமை அலுவலகங்களில்; ராணுவத் தளவாடங்கள் மற்றும் ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் கார்ப்பரேட் நிறு வனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் தலைமை யகங்களில் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடுகிறது. அவர்க ளது வரலாற்றில் இதுவரை இல்லாத லாபத்தால் குதூகலம் அடைந்திருக்கிறார்கள். உக்ரைனில் பயன் படுத்துவதற்காக அமெரிக்க ராணுவ தளவாடங்களை புதுப்பிப்பதற்காகவும், கூடுதலாக ஆயுத உற்பத்தி செய்வதற்காகவும் தனியார் கார்ப்பரேட் ஆயுத கம்பெனிகளுக்கு 1.2 பில்லியன் டாலர் அளவிற்கு ஒப்பந்தங்கள் அளித்திருப்பதாக 2022-ஆம் ஆண்டு அக்டோபரில் அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் அறிவித்தது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அமெரிக்காவின் மிகப் பெரிய ஆயுத கம்பெனிகளான நார்த் ராப் குரும்மன் நிறுவனத்தின் பங்குகள் 40 சத வீதம் அதிகரித்தன; லாக்ஹீட் மார்ட்டின் நிறுவ னத்தின் பங்குகள் 37 சதவீதம் அதிகரித்தன. அதேபோல ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்யாவின் இயற்கை எரிவாயு செல்லக்கூடாது என தடை விதித்ததன் விளைவாக, மேற்கத்திய பெரும் கார்ப்ப ரேட் எண்ணெய் கம்பெனிகளான செவ்ரான், எக்ஸ்ஸான் மோபில், ஷெல், பிரிட்டிஷ் பெட்ரோலியம் மற்றும் டோட்டல் எனர்ஜிஸ் போன்றவை 2022-இல் கூடுதலாக 134 பில்லியன் டாலர் லாபம் சம்பாதித்துள் ளன. இவை இந்த போர் நீடிக்க வேண்டும் என்று விரும்புகின்றன.
பீப்பிள்ஸ் டெமாக்ரசி (செப்.24) ஏட்டில் இடம் பெற்றுள்ள கட்டுரையின் பகுதிகள்
சுருக்கம்: எஸ்.பி.ஆர்
நன்றி: தீக்கதிர்

வேறுசில புரட்சியாளர்களைக் கொண்டு பாராளுமன்றத்தில் குண்டு வீசும் செயல்திட்டத்தை நிறைவேற்றலாம் என்றும் எண்ணினர். ஆனால், சுக்தேவ் மற்றும் பகத்சிங்-ன் நீண்ட விவாதத்திற்கு பிறகு பகத்சிங் நீதிமன்றத்திற்கு சென்றால்தான் நம் கட்சியின் செயல்பாடுகளை தெளிவாக முன்வைக்க முடியும் என்று கருதி பகத்சிங், பட்டுகேஸ்வர் தத் ஆகிய இருவரும் பாராளுமன்றத்தில் குண்டு வீச HSRA தோழர்களால் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் வெளியேறிய பிறகுதான் பிஜோய் குமார் சின்ஹா சோவியத் யூனியனுக்கு ஒரு பயணமாக செல்ல முடிந்தது.
தமிழ்நாட்டில் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் மாதத்தில் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டது. தென்மேற்கு பருவ மழை உரிய காலத்தில் பொழியாததாலும், தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீர்ப்பங்கை கர்நாடகா தரமறுத்து வருவதாலும் தமிழகத்தின் குடிநீரும், குறுவை சாகுபடியும் கேள்விக்குறியாகி இருக்கின்றன. மேட்டூர் அணை வறண்டுபோவதற்கான அபாயத்திலும் உள்ளது.
காவிரி நீர் பங்கீட்டில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையோ அல்லது காவிரி மேலாண்மை ஆணையத் தீர்ப்பையோ இதுவரை கர்நாடகா மதித்ததில்லை. காங்கிரசோ, பா.ஜ.காவோ காவிரி நீரில் தமிழ்நாட்டின் உரிமையை மறுத்து, தமிழ்நாட்டை காவிரியின் வடிகாலாகத்தான் பயன்படுத்துகின்றன.
தற்போது தமிழ்நாட்டில் குறுவை சாகுபடி தொடங்கிய பிறகு கூட, தமிழ்நாட்டிற்கான உரிய நீர்ப்பங்கை கொடுக்காமல் ஏமாற்றி வருகிறது கர்நாடகா. தமிழ்நாட்டிற்கு ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி., ஜூலையில் 31.24 டி.எம்.சி., ஆகஸ்டில் 37.29 டி.எம்.சி. நீரை வழங்க வேண்டும். ஆனால், இந்த மூன்று மாதங்களிலும் தமிழ்நாட்டிற்கு மிகச் சொற்பமான அளவே கர்நாடகா நீரை வழங்கியுள்ளது. அதில் பெருமளவு தமிழ்நாட்டின் நீர்பிடிப்புப் பகுதியில் பெய்த மழைநீரும் உள்ளடங்கியதாகும்.
ஜூன் மாதத்தில் இருந்தே தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டிற்குரிய நீரை வழங்குமாறு கர்நாடக அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. காவிரி மேலாண்மை ஆணையமோ தமிழ்நாட்டிற்குரிய நீரை வழங்க முன்வரவில்லை. இந்நிலையில், ஆகஸ்டு மாதம் 14-ஆம் தேதி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை அணுகியது.
படிக்க: கார்ப்பரேட் திட்டங்களை ஒழிக்காமல் காவிரி நீர் கிடைக்காது!
கர்நாடக மாநிலம் தமிழ்நாட்டிற்கு ஆகஸ்டு 9-ஆம் தேதி வரை தரவேண்டிய நீரில் 37.971 டி.எம்.சி. நிலுவை உள்ளது. மேலும், ஆகஸ்டு மாதத்தில் நாளொன்றுக்கு 24,000 கன அடி நீர் திறந்துவிட வேண்டும். ஆனால், ஆகஸ்டு 10-ஆம் தேதி நடந்த காவிரி ஒழுங்காற்று கூட்டத்தில் ஆகஸ்டு 11-15 தேதிகளில் நாளொன்றுக்கு 15,000 கன அடி நீர் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் மறுநாள் காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், 10,000 கன அடி நீர் குறைக்கப்பட்டது. எனவே, தமிழ்நாட்டிற்கு இனி வழங்க வேண்டிய நீரையாவது முறையாக பெற்றுத் தருமாறு கோரியது.
இவ்வாறு தமிழ்நாடு அரசு, உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக் குழு என்று அலைந்து கொண்டிருக்கிறது. எங்குமே தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய நீரில் பத்தில் ஒரு பங்கு கூட தருவதற்கு கர்நாடகா தயாராக இல்லை என்பதையே அதன் அணுகுமுறைகள் காட்டுகின்றன. கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கர்நாடகாவில் போதுமான நீர் இருப்பு இல்லை என்று தொடர்ந்து பொய்யைக் கூறி தமிழ்நாட்டின் நீர் உரிமையை மறுத்து வாதிட்டு வருகிறார்.
காவிரி மேலாண்மை ஆணையமோ, காவிரி நீர் ஒழுங்காற்று குழுவோ 2018-ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்துவதற்குப் பதிலாக, கர்நாடக அரசு சொல்லும் காரணங்களைக் கேட்டுக்கொண்டு, தமிழ்நாட்டை வஞ்சித்து வருகின்றன.
உண்மை நிலவரம் இவ்வாறிருக்க, கர்நாடக மாநில காங்கிரசு அரசு தமிழ்நாட்டிற்கு அடிபணிந்து சென்றுவிட்டதாகவும், தமிழ்நாட்டிற்கு நீரைத் தரக்கூடாது என்று கூறி கர்நாடக பா.ஜ.க. போராட்டங்களை நடத்தி வருகிறது. மேலும், காவிரிக்கு குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கான பணிகளைத் தீவிரப்படுத்துமாறு சித்தராமையா அரசை நிர்பந்தித்து வருகிறது. மேலும், இந்தியா கூட்டணியில் இருப்பதால், தி.மு.க.வின் அழுத்தத்திற்கு கர்நாடக முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் டி.கே. சிவக்குமாரும் அடிபணிந்து செல்வதாக கர்நாடக மக்களிடம் பொய் பிரச்சாரத்தைச் செய்து வருகிறது.
வருகிற ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் மும்பையில், இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த சூழலில், காவிரிப் பிரச்சினையைக் கொண்டு தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் இடையே மோதலைத் தூண்டிவிட பா.ஜ.க. முயன்றுவருகிறது என சித்தராமையா குற்றஞ்சாட்டுகிறார்.
படிக்க: காவிரி நீர் விவகாரம்: இந்த அநீதிக்கு விடிவு எப்போது?
அண்ணாமலையோ, கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகுதான் காவிரி பிரச்சினை தொடங்கியதாகவும், மேக்கேதாட்டுவில் அணைகட்டுவோம் என்று கர்நாடக துணைமுதல்வர் டி.கே. சிவக்குமார் கூறியதிலிருந்துதான் பிரச்சினை தீவிரமடைந்திருப்பதாகவும் கூறியிருக்கிறார். மேலும், “தமிழகத்தில் நீட்டை வைத்து அரசியல் செய்வது போல காவிரிப் பிரச்சினையில் காங்கிரஸ் அரசியல் செய்கிறது என்றும், மேக்கேதாட்டு விவகாரத்தில் காங்கிரஸையோ, டி.கே. சிவக்குமாரையோ கண்டிக்க ஸ்டாலினுக்கு மனமில்லை” என்றும் கூறியிருக்கிறார்.
தற்பொழுது காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் மீது திடீர் பாசாங்குகாட்டும் அண்ணாமலையோ, கர்நாடகம் மேக்கேதாட்டுவில் அணைக்கட்ட ஒன்றிய பா.ஜ.க அரசு அனுமதி வழங்கியது குறித்து வாய் திறக்கவில்லை. காவிரியில் தமிழ்நாட்டிற்குரிய நீரை வழங்க மறுக்கும் கர்நாடக அரசின் மீது நடவடிக்கை எடுக்குமாறு மோடி அரசையும் கோரவில்லை.
மேக்கேதாட்டுவில் அணையைக் கட்டி தமிழ்நாட்டிற்கு வருகின்ற நீரைத் தடுத்து, கார்ப்பரேட் திட்டங்களால் வளர்ந்து வரும் பெங்களூருவுக்கு கொடுப்பது, மற்றொருபுறம், தஞ்சை டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் திட்டம், ஹைட்ரோகார்பன் திட்டம் ஆகியவற்றை நிறைவேற்றி கார்ப்பரேட் கொள்ளையைத் அரங்கேற்ற காவிரியில் உரிய முறையில் நீரைத் திறந்துவிட மறுப்பது என்ற இரட்டை நோக்கத்தில் இருந்துதான் கர்நாடக காங்கிரசு, பா.ஜ.க. அரசுகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.
தஞ்சை டெல்டாவைப் பாலையாக்கும் கார்ப்பரேட் கொள்ளையில் அனைத்து கட்சிகளும் ஏதாவது ஒரு வகையில் உடன்படுவதால்தான், காவிரி நீர் பிரச்சினையை வைத்துக் கொண்டு லாவணி பாடுகின்றன. தமிழ்நாட்டிற்கு நீரைக் கொடுக்கக்கூடாது என்பதில் காங்கிரசும் பா.ஜ.க.வும் ஒரே குரலில் செயல்படுகின்றன. ஒன்றியத்தில் ஆளுங்கட்சியாக இருக்கும் போது கர்நாடக அரசுக்கு சாதகமாக செயல்படுவது, எதிர்க்கட்சியாக இருக்கும் போது வாயை மூடிக்கொண்டிருப்பது என்பது இவ்விரு கட்சிகளின் தேசிய தலைமைகளின் போக்காக உள்ளது.
தமிழ்நாட்டை ஆக்கிரமிக்கும் பா.ஜ.க.வுக்கு அடிமை அ.தி.மு.க., சீமான் போன்ற கட்சிகள் மறைமுகமாக ஆதரவு கொடுத்துக் கொண்டே தி.மு.க. அரசுக்கு நெருக்கடி கொடுக்கின்றன. பா.ஜ.க. எதிர்ப்பு என்ற ஒரு அம்சத்தில் மட்டும் காங்கிரசு உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் இணையும் தி.மு.க.வும் காவிரி நீர் பிரச்சினை, நீட் பிரச்சினை போன்றவற்றில் தமிழ்நாட்டு மக்களைத் திரட்டி மக்கள் போராட்டங்களைக் கட்டியமைக்காமல் சட்டவாதத்திற்குள்ளேயே மூழ்கிக் கிடக்கிறது.
உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கிவிட்டது, இனி எந்தப் பிரச்சினையும் இல்லை என்று அன்று சொன்னவர்கள் எல்லாம் இன்று வாய் திறக்காமல் மௌனமாக இருக்கின்றனர். காவிரி நீர் பிரச்சினை என்பது சட்டப்பூர்வமான வழிமுறைகளில் தீர்க்கமுடியாது. உச்சநீதிமன்றத் தீர்ப்பை அப்பட்டமாக மீறுகின்ற கர்நாடகாவிடம் கெஞ்சிக் கொண்டிருக்கின்றது உச்சநீதிமன்றம். இதுதான் இந்திய ஜனநாயகத்தின் உண்மை முகம். ஆகையால், காவிரி நீருக்கான போராட்டம் கார்ப்பரேட் திட்டங்களுக்கு எதிரான போராட்டங்களுடனும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிச சக்திகளுக்கு எதிரான போராட்டங்களுடனும் இணைக்கப்பட வேண்டும்.
அந்தவகையில், காவிரி நீருக்கான போராட்டமும் தஞ்சை டெல்டாவை பாலையாக்கும் சதித்திட்டத்தை முறியடிப்பதும் புரட்சிகர ஜனநாயக சக்திகளின் கையில்தான் அடங்கியுள்ளது. இதற்காக மக்களைத் திரட்டிப் போராட வேண்டியது காலத்தின் கட்டாயம்!
![]()
வாகைசூடி
(புதிய ஜனநாயகம் செப்டம்பர் மாத இதழ்)
