Wednesday, August 20, 2025
முகப்பு பதிவு பக்கம் 184

இஸ்லாமியருக்கு ஹிஜாப் தடை! தில்லையில் தமிழுக்கும் தமிழனுக்கும் தடை! – தருமபுரி, கோவை, மதுரையில் ஆர்ப்பட்டம்!

இஸ்லாமியருக்கு ஹிஜாப் தடை! தில்லையில் தமிழுக்கும் தமிழனுக்கும் தடை! தில்லை இருப்பது தமிழ்நாடா? இல்லை அதற்கு ஒரு தனி நாடா? என்ற தலைப்பின் கீழ் தருமபுரி, கோவை, மதுரை ஆகிய இடங்களில் மக்கள் அதிகாரம் ஆர்ப்பட்டம் 7.3.22 அன்று நடைபெற்றது.
000
இஸ்லாமியருக்கு ஹிஜாப் தடை! தில்லையில் தமிழுக்கும் தமிழனுக்கும் தடை! தில்லை இருப்பது தமிழ்நாடா? இல்லை அதற்கு ஒரு தனி நாடா? என்ற தலைப்பின் கீழ் தர்மபுரி மண்டலம் முழுவதும் மக்கள் மத்தியில் வீச்சாக பிரச்சாரம் செய்யப்பட்டு அதனடிப்படையில் தர்மபுரி (BSNL)தந்தி அலுவலகம் அருகில் 7.3.2022 காலை 11 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

This slideshow requires JavaScript.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் மண்டல பொருளாளர் தோழர் செல்வராசு அவர்கள் தலைமை தாங்கினார். தோழர் கோவிந்தராஜ் CPi(ml) லிபரேசன் மாவட்ட செயலாளர், தோழர். மாரிமுத்து cpim மாவட்ட குழு உறுப்பினர், தோழர் பாண்டியன் விசிக தர்மபுரி மாவட்ட செய்தி தொடர்பாளர், தோழர் சின்னவன் மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் மாவட்ட அமைப்பாளர், தோழர் குறிஞ்சிவேந்தன் வழக்கறிஞர் தர்மபுரி, தோழர் பழனி மக்கள் ஜனநாயக இளைஞர் முன்னணி தருமபுரி, தோழர் வில்கிருஷ்ணன் cpi (ml) மாவட்ட செயலாளர், தோழர் கோபிநாத் மக்கள் அதிகாரம் மண்டல செயலாளர் தர்மபுரி மண்டலம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இறுதியாக தோழர் ராஜா மண்டல குழு உறுப்பினர்கள் நன்றி தெரிவித்தார்.
தகவல் :
மக்கள் அதிகாரம்
தர்மபுரி மண்டலம் 9097138614
000
இஸ்லாமியர்களுக்கு ஹிஜாப் தடை!
தில்லையில் தமிழனுக்கு தமிழுக்கும் தடை!
தில்லையில் இருப்பது தமிழ்நாடா?
அதற்குள் ஒரு தனி நாடா?
தில்லை கோயிலை இந்து அறநிலைத்துறையின் கீழ் சிறப்பு சட்டம் இயற்று. என்ற தலைப்பின்கீழ் 07.03.2022 காலை 11 மணியளவில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மக்கள் அதிகாரம் சார்பாக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

This slideshow requires JavaScript.

இதில் ஐனநாயக அமைப்பு தோழர்கள் கலந்துகொண்டனர். திராவிட விடுதலைக் கழகம் கோவை மாவட்டத் தலைவர்.
தோழர் நேருதாஸ்.
போல்ஷிவிக் IMT இந்தியா அமைப்பாளர்
தோழர்.லூயிஸ் வழக்கறிஞர்.
தமிழ்த் தேச இறையாண்மை.
தோழர். திருமொழி.
மக்கள் அதிகாரம் உடுமலை பகுதி செயலாளர்
தோழர் குமார்.
மக்கள் அதிகாரம்
கோவை மாவட்ட செயலாளர்.
தோழர் ராஜன்.
கோவை மணடல செயலாளர்
தோழர் சங்கர்.
கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.
ரெட் ஸ்டார்-
தோழர் குமார்.மற்றும் மக்கள் அதிகார தோழர்களும் பெண்களும் கலந்துகொண்டனர்கள்.
தகவல்:
மக்கள் அதிகாரம்
கோவை.
9488902202
000
இஸ்லாமியருக்கு ஹிஜாப் தடை!
தில்லையில் தமிழுக்கும் தமிழனுக்கும் தடை!
தில்லைக் கோயிலை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டுவர சிறப்புச் சட்டம் இயற்று! என்பதை மையமாக வைத்து மக்கள் அதிகாரம் சார்பாக தமிழகம் முழுவதும் 7,8,9 ஆகிய தேதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தோம்.
அதன் ஒரு பகுதியாக மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஐந்து நாட்களாக மக்கள் மத்தியில் பிரச்சார வேலைகளில் ஈடுபட்டோம். அதன் பிறகு இன்று (07/03/ 2022) காலை 10.30மணி அளவில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

This slideshow requires JavaScript.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேச மக்கள் முன்னணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி( ஐக்கிய விவசாயிகள் முன்னணி) ,தந்தை பெரியார் திராவிடர் கழகம், குடியுரிமை பாதுகாப்பு நடுவம், தமிழ் புலிகள், புரட்சிகர இளைஞர் முன்னணி,திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ் தேச குடியரசு கட்சி, மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி போன்ற ஜனநாயக சக்திகளும் அவர்களுடைய நிர்வாகிகளும் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி( மார்க்சிஸ்ட்) தோழர்கள் தவிர்க்க முடியாத காரணத்தால் வர முடியாததை பதிவு செய்தனர்.
மக்கள் அதிகாரம் தோழர்களும் பல்வேறு ஜனநாயக சக்திகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர் முழக்கமிட்டனர்.
இறுதியாக காவி கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த அனைவரும் சேர்ந்து வேலை செய்வோம் என்பதை வந்திருந்த ஜனநாயக சக்திகளும் தோழர்களும் பதிவு செய்தனர்.
தகவல்:
மக்கள் அதிகாரம், மதுரை மண்டலம்.
தொடர்புக்கு-7826847268

டெக்ஃபாக் : சங்க பரிவாரம் நடத்தும் கலவரங்களின் தொழில்நுட்ப ஊற்றுக்கண் !

பாகம் 1 : Tekfog: பாசிச கருத்தாக்கத்தின் முதுகெலும்பு
புலனாய்வு குழுவிற்கு முதற்கட்ட செய்தி ஆதாரங்களை வழங்கும் நபர்கள் (Sources), இவர்கள் பாஜகவின் கட்டுபாட்டில் உள்ள தகவல் தொழில்நுட்ப பிரிவில் வேலை செய்பவர்கள். அந்த நபர்கள் தங்களின் வங்கி கணக்கு அறிக்கைகள் ( Bank Statements), கட்டணச் சீட்டு ( Payslips) ஆகியவற்றை புலனாய்வு குழுவிடம் கொடுத்திருக்கிறார்கள். இதன்மூலமாக Tekfog செயலியின் விசயத்தில் இரண்டு தனியார் நிறுவனங்களின் தலையீடு இருப்பது தெரியவந்திருக்கிறது. அவையானவை, Persistent Systems, Mohalla Tech Pvt Ltd.
இதில் Persistent Systems என்பது பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் வேலை செய்யும் செயற்பாட்டாளர்களுக்கு வேலைப்பணியை கொடுக்கும் நிறுவனம் என்றும் Mohalla Tech Pvt Ltd என்பது ஒதுக்கப்பட்ட வாடிக்கையாளர் (Assigned Client) நிறுவனம் என்பதும் தெரியவருகிறது.
Persistent Systems என்பது 1990-களில் நிறுவப்பட்ட இந்திய-அமெரிக்க தொழில்நுட்ப சேவை நிறுவனமாகும். Mohalla Tech Pvt Ltd என்பது ட்விட்டரால் நிதியளிக்கப்படும், பிரபலமான இந்திய பிராந்திய மொழிகள் சமூக ஊடகதளமான Sharechat  உருவாக்கத்தின் பின்னால் உள்ள நிறுவனமாகும்.
நாக்பூர் நகரில் உள்ள கார்ப்பரேட் அலுவலகத்தில் சமூக ஊடக செயற்பாட்டாளர்களாகத் தங்களை Persistent Systems நிறுவனம் பணிக்கு அமர்த்தியதாக குறிப்பிடுகிறார்கள்  புலனாய்வு குழுவிற்கு  செய்தி விவரம் தந்த  நபர்கள் (Sources). அவர்களின் தற்போதைய திட்டத்தை (Project) செயல்படுத்த Sharechat உடன் மற்றும் செயற்பாட்டாளர்களின் மேற்பார்வையாளர் என அறியப்படுபவரான தேவாங் தேவ் ( இவர் பாஜகவின் இளைஞர் பிரிவான பாரதிய ஜனதா யுவமோர்ச்சாவின் முன்னாள் தலைவர் மற்றும் தற்போதைய மகாராட்டிர மாநில பாஜகவின் தேர்தல் மேலாளர்) என்பவருடன் நெருங்கிய பிணைப்பு தேவைப்பட்டது என புலனாய்வு குழுவிற்கு செய்தி விவரங்களை வழங்கும் நபர்கள் தெரிவிக்கிறார்கள்.
படிக்க :
எதிர்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளின் செயல்பாட்டை முடக்கும் மோடி அரசு | பாகம் 1
தேசிய பங்குச் சந்தையைக் கட்டுப்படுத்திய இமயமலை சித்தபுருசன் !
தேவாங் தேவ்-இன் மேற்பார்வையாளர் பணியையும் அதில் அவர் சம்பந்தப்பட்டிருப்பதும் இதில் பரந்த பிணைப்பு கொண்டிருப்பதும் தொழில்நுட்ப பகுப்பாய்வு மூலமாக புலனாய்வுக் குழுவால் அறியமுடிகிறது.
Persistent Systems நிறுவனம் 2015 ஆம் ஆண்டில் இருந்து அரசாங்க ஒப்பந்தங்களை பெறுவதில் மிகப்பெரும் அளவில் முதலீடு செய்து வருகிறது. 2018 ஜீலை மாதத்தில் இந்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம், இந்தியாவில் 10 மாநிலங்களில் சுகாதாரம் சம்பந்தமான தகவல்களை சேமிக்க, செயல்முறைபடுத்த ஒரு மின்னணு தகவல் மையம் அமைக்க Persistent Systems நிறுவனத்தை தேர்ந்தெடுத்தது.
Persistent Systems இந்த Tekfog செயலியின் பல்வேறு அடுக்குகளை தயாரித்தற்கான ஆதாரங்கள் தொழில்நுட்ப ஆவணங்களில் காணக்கிடக்கிறது.
Mohalla Tech Pvt Ltd நிறுவனத்தின் முதன்மை தயாரிப்பான Sharechat செயலி பொய் செய்திகளையும் வலதுசாரி அரசியல் பிரச்சாரங்களையும் வெறுப்பு பேச்சுக்களையும் (Hate Speeches) சேமித்து வைக்கும் இடமாக இருந்திருக்கிறது. அதன் பின்னர் மற்ற சமூக ஊடகங்களான Twitter, Facebook, whatsapp போன்றவற்றிற்கு வெறுப்பு பிரச்சாரங்கள், பொய் செய்திகள் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.
Sharechat என்பது 14 இந்திய மொழிகளில் செயல்படுகிறது. இது ஆங்கிலம் பேசாத சிறு குறு நகரங்களில் வாழும் மக்களை முதன்மையான பயனாளர்களாக கொண்டு செயல்படுகிறது. Sharechat மீது ஏற்கனவே தனிநபர் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களான அவர்களின் இருப்பிடம், கைபேசியை பற்றிய தொழில்நுட்ப விவரங்கள், கைபேசியில் உள்ள தொடர்பு எண்கள் உள்ளிட்டவற்றை விளம்பரதாரர்களுக்கு திறந்துவிட்டது பற்றியும் , Sharechat செயலியின் சொந்த வழிகாட்டு நெறிமுறைகளையே மதிக்காத வன்முறையை தூண்டும் தவறான பதிவுகள் பெருமளவில் இடம்பெறுவது குறித்தும் குற்றச்சாட்டுகள் வெளிவந்திருக்கிறது.
இதற்கிடையே புலனாய்வு குழுவிற்கு செய்தி விவரங்களை வழங்கும் நபர்கள், இந்த Tekfog செயலி மூலம் கட்டுப்படுத்தப்படும் Sharechat செயலியுடன் பிணைப்பில் இருக்கும் 14 கணக்குகளின் விவரங்களை கொடுத்திருக்கிறார்கள்.
புலனாய்வு குழு இந்த கணக்குகளையும் அவை தொடர்பான Twitter, Facebook கணக்குகளையும் தொடர்ந்து 30 நாட்கள் கண்காணித்து ஆராய்ந்ததில், 90% பதிவுகள் Sharechat, Twitter, Facebook ஆகிய தளங்களில் பதிவிடப்பட்டிருப்பது ஒத்துப் போகிறது. அதாவது, வெறுப்பு பிரச்சாரங்கள், பொய் செய்திகள், வன்முறையை தூண்டும் பதிவுகள் யாவும் முதலில் Sharechat-ல் பதிவேற்றம் செய்யப்பட்டு பின்னர் Twitter, Facebook போன்ற பிற தளங்களுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் தெரியவருவது என்னவென்றால், Sharechat வன்முறையை தூண்டும் பதிவுகள், பொய் செய்திகள், வெறுப்பு பிரச்சாரங்கள் ஆகியவற்றின் சேமிப்பு கிடங்காக செயல்பட்டிருக்கிறது என்பது தான்.
மைய நீரோட்ட இணையப் பத்திரிகைகளில் ஒர் செய்தியின் முக்கிய வார்த்தைகளை (keywords) மாற்றுவதன் மூலமாக அந்த உண்மை செய்தியை  ஒத்த  பொய் செய்தியை உருவாக்கி அதை பல்லாயிரக்கணக்கான பயனர்கள் மத்தியில் உலவவிடுவது இந்த Tekfog செயலியின் மற்றொரு முக்கிய அம்சமாகும்.
URL Shortener என்ற செயலி மூலமாக ஒரு செய்தியின் இணைய செய்தி இணைப்பில் ஏதாவது ஒரு குறியீட்டு வார்த்தையை (code) சேர்ப்பது அல்லது நீக்குவது மூலமாக பொய் செய்தியை உருவாக்குகிறார்கள். அதன்பிறகு உண்மை செய்தியின் இணைய பக்கத்தில் இருந்து, URL Shortener செயலியால் உருவாக்கப்பட்ட  பொய் செய்தியான வேறொரு இணைய பக்கத்திற்கு திருப்பிவிடுகிறது. அந்த பொய் செய்தியின் இணைய பக்கம் ( web page) உண்மை செய்தியின் இணைய பக்கத்தை போலவே வடிவமைக்கப்பட்டிருக்கும்.
அதில், செய்தியின் தலைப்புகள் மாற்றப்பட்டு, செய்தி அல்லது கட்டுரையின் ஆசிரியர் சொல்லாதததை சொல்லி எழுதப்பட்டிருக்கும். அதை வாசகர்கள் உணரவே முடியாத அளவு கட்டுரை அல்லது செய்தியின் கதையாடல், சாயல், எழுத்து நுணுக்கம் என அனைத்தும் கச்சிதமாக போலி செய்யப்பட்டிருக்கும். இவையெல்லாம் தானியங்கியாகவே செய்யப்படுகிறது.
இதற்காக திறந்தவெளி செயற்கை நுண்ணறிவு (Open Artificial Intelligence) என்னும் அதி உயர்ந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறார்கள்.
Tekfog செயலி Tasker என்னும் செயலியை பயன்படுத்துகிறது. அதன் செயல்பாடு என்னவென்றால், ஒரு செய்தியை அட்டவணையிடப்பட்ட குறிப்பிட்ட நேரத்தில் ஒரு தனிநபருக்கோ அல்லது ஒரு குழுவிற்கோ அல்லது பல்லாயிரக்கணக்கான பயனர்களுக்கோ ஆளும் கட்சி உருவாக்கி வைத்திருக்கும் whatsapp கணக்குகள் வழியாக அனுப்பமுடியும். இது மிகப்பெரிய வேலையாக தெரிந்தாலும் இதை மிகக்குறைந்த மனித கண்காணிப்பிலே சாதிக்கிறது  Tekfog செயலி. தானியங்கியாக குறித்த நேரத்தில் குறிப்பிட்ட செய்தியை தனிநபர்களுக்கு அனுப்பி அவர்களை முனைவாக்கம் (Polarise) செய்கிறது  Tekfog செயலி.
பாஜக-வின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் வேலை செய்யும் செயற்பாட்டாளர்களால்  Tekfog செயலியை பயன்படுத்தி பாஜகவை விமர்ச்சிப்பவர்கள் மீது அவதூறு பரப்புவது, இணையவெளியில் துன்புறுத்தி அவர்களை இணையத்தை விட்டு வெளியேற வைப்பது, பொய் செய்திகளை பரப்புவது மட்டுமல்ல இவற்றையெல்லாம் செய்யவதற்கு ஏற்றாப்போல் புதிய வேலை முறையையும் வடிவமைத்துக் கொண்டிருக்கிறது பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு.
Tekfog செயலியை ஒரு குறிப்பிட்ட முடிவை அடைவதற்காக பயன்படுத்தி அதை நிறைவேற்றும் செயற்பாட்டாளர்களுக்கு ஊதிய வெகுமதி கிடைக்கும் படியான வேலைமுறையை அறிமுகப்படுத்திருக்கிறார்கள். இதனால் தேர்தல் மற்றும் பிற‌ முக்கியமான அரசியல் நிகழ்வுகளின் போது Tekfog செயலியை பயன்படுத்தி இலக்கை அடைவதை ஊக்குவிக்க “surge pricing” என்ற முறையை கடைபிடிக்கிறார்கள். அதாவது எந்த அளவுக்கு பொய் செய்திகள் பரப்பப்படுகிறதோ, எந்த அளவுக்கு வெறுப்பு பிரச்சாரங்கள் பரப்பப்படுகிறதோ, எந்த அளவுக்கு இணைய வம்புகள் வளர்க்கப்படுகிறதோ அந்த அளவு ஊழியர்களுக்கு வெகுமானம் கிடைக்கும். ஒரு சில மனிதர்களின் தனிப்பட்ட கூலி அதிகரிப்பிற்காக கருத்து சுதந்திரம், சனநாயக வெளி எப்படி சீரழிக்கப்படுகிறது என்பதை இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளலாம்.
கலவரங்கள் நடத்துவதற்கு இணையத்தின் வழியே எப்படி பிரச்சாரங்கள் செய்யப்படுகிறது என்பதற்கு Tekfog செயலியின் மூலம் எப்படி குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தின் போது டெல்லியில் கலவரம் இணையத்தில் ஒணைங்கிணைத்து நடத்தப்பட்டது என்பது முன்னுதாரணமாக இருக்கிறது.
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக டெல்லியில் மக்கள் அமைதியான வழியில் போராடி வந்தனர். அப்போது கபில் மிஸ்ரா என்பவர் வன்முறையை தூண்டும் வகையில் “காவல்துறை போராட்டக்காரர்களை களைக்கவில்லை என்றால் நாங்கள் சட்டத்தை கையில் எடுக்க நேரிடும்” என்று மிரட்டல் விடுத்தார். துரோகிகளை (அதாவது முஸ்லிம்களை) சுட்டுத்தள்ளுங்கள் என்று வன்முறையை தூண்டும் வகையில் பேசினர்.
இந்த டெல்லி கலவரத்தை இணையத்தில் பரப்பியதில் கபில் மிஸ்ராவுக்கு முக்கிய பங்குண்டு. புலனாய்வு குழு ஆய்வு செய்ததில், கபில் மிஸ்ராவின் ட்விட்டர் கணக்கு ஒரு முனையாகவும் (Node), Opindia செய்தித்தளம் மற்றொரு முனையாகவும் செயல்பட்டிருக்கிறது. இந்த முனைகளுடன்  Tekfog  செயலியின் செயற்பாட்டாளர்களால் கட்டுப்படுத்தப்படும் நான்கு கணக்குகளும் சேர்த்து ஒரு மையமாக செயல்பட்டிருக்கிறது.
இந்த மையத்தில் இருந்து பொய் செய்திகளும் வன்முறையை தூண்டும் பதிவுகளும் மற்ற கணக்குகளுக்கு பரப்பப்பட்டிருக்கிறது. இந்த கணக்குகளில் பெரும்பாலானவை bots என்று சொல்லக்கூடிய தானியங்கி கணக்குகள். அவையாவும் கலவரங்கள் நடத்துவதற்கு Tekfog செயலியின் செயற்பாட்டாளர்களால் உருவாக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுவதாகும். இதன் மூலம் குறுகிய நேரத்தில் ஒரு பொய் செய்தியை பரவலான மக்கள் மத்தியில் உலவவிட்டு கலவரத்தை தூண்ட உதவி செய்யப்பட்டிருக்கிறது. இதை புலனாய்வு குழு ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளது.
மேற்குறிப்பிட்ட நீண்ட விளக்கங்களில் இருந்து Tekfog செயலியின் அளவு (Scale), நுட்பம் ஆகியவையும் இணையவெளியில் தானியங்கி முறையில் பொய் பிரச்சாரங்கள் செய்யப்படுவதும், மக்களின் பொதுக்கருத்தை கட்டமைப்பதில் அதன் தாக்கங்களையும் புரிந்து கொள்ள முடியும்.
தனியார் தொழில்நுட்ப நிறுவனங்கள் சமூகத்தில் சந்தேகத்திற்குரிய மின்னணு செயல்பாடுகளில் தங்கள் சொந்த லாபத்திற்காக ஈடுபடுகிறார்கள் என்பதும் அதனை  பயன்படுத்தி  ஆளும்  பாசிச பாஜக அரசு சனநாயக வெளியை வெட்டி சுருக்கி வருகிறது என்பதும் முன்னெப்போதும் இல்லாத அளவு ஆதாரங்களுடன் நிருபிக்கப் பட்டிருக்கிறது.
படிக்க :
பெகாசஸ் : ‘ஜனநாயகக்’ கட்டமைப்பை உளவு பார்க்கும் இந்து ராஷ்டிரம் !!
பெகாசஸ் : இந்து ராஷ்டிரத்தின் எதிரிகளே அதன் இலக்குகள் !
Tekfog செயலி என்பது உலகம் முழுவதும் பொய் செய்திகளை பரப்பி, சமூக ஊடகங்களில் கருத்துருவாக்கம் செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ள ஊதியம் பெறும் லட்சக்கணக்கான செயற்பாட்டாளர்களின்(Operatives) முதுகெலும்பாக உள்ளது.
இந்த ஊதியம் பெறும் லட்சக்கணக்கான செயற்பாட்டாளர்களின் பணி என்னவென்றால், சமூக ஊடகங்களில் செய்திகளின் உண்மைத்தன்மையை சிதைத்து, பொது உரையாடலை சீரழித்து, சனநாயக வெளியை வெட்டிச் சுருக்கி, அதன் மூலம் ஆளும் அரசியல் கட்சிக்கு ஏற்றார்போல கருத்துருவாக்கம் செய்வதுதான். சமூக ஊடகங்கள் பரவலாகிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் தனிநபர்கள் கருத்துகளின் மீதான அதன் தாக்கமும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இந்த நிலையில் நேர்மையற்ற முறையில் ஆளும் பாசிச பாஜகவும், லாப வெறி கொண்ட கார்ப்பரேட் தொழில்நுட்ப நிறுவனங்களும் சமூக ஊடகங்களை தங்கள் அறமற்ற தொழில்நுட்பங்களால் கைபற்றி மக்களின் கருத்துகள் மீது நியாயமற்ற முறையில் தாக்கம் செலுத்தும் வகையில் பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொள்ளவது, குடிமக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள கருத்து சுதந்திரத்தையும், சொல்லிக்கொள்ளப்படும்  அரசியல் அமைப்பு நிறுவனங்களின் இறையாண்மையையும் மிகப் பாரிய அளவில் கேள்விக்குள்ளாக்குவதாகும்.
எந்த சட்டவரையறையையும் மதிக்காமல் மக்களின் அந்தரங்கம் முழுமையாக சுரண்டப்படும் அளவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த Tekfog செயலி பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை இணையவெளியில் பாசிசத்தின் முன்னேறி தாக்கும் செயல்பாடாக பார்க்கவேண்டும்.
சுதந்திரமாக உண்மையான தகவல்களை பெறுவது என்ற மக்களின் அடிப்படை சனநாயக உரிமை இந்த பாசிச ஆளும் பாஜகவால் கேலிகூத்தாக்கப்பட்டிருகிறது. இதை எந்த முதலாளித்துவ பத்திரிகைகளும் பெரிதாக கண்டிக்கவில்லை.
பொய் செய்திகளையும் வெறுப்பு பிரச்சாரங்களையும் பரப்பி  நாட்டின் தகவல் சூழலை நஞ்சாக்கி, மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் இந்த நடவடிக்கையை மக்கள் எதிர்த்து போராடவேண்டும். பாசிஸிட்டுகளுக்கும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் இருக்கும் கள்ளக்கூட்டை அம்பலப்படுத்த வேண்டும். பறிபோய்க்கொண்டிருக்கும் சனநாயக உரிமைகளுக்காக பாசிச பாஜகவை எதிர்த்து வீதியில் இறங்கிப் போராடவேண்டும்.
முற்றும்
மக்கள் அதிகாரம், நெல்லை மண்டலம்
செய்தி ஆதாரம் : த வயர்1, த வயர்2

சர்வதேச அளவில் இழிவுபடுத்தப்படும் ‘பறையா’ எனும் சொல் || வி.இ.குகநாதன்

உக்கிரேன் போர் தொடர்பான சொற் போரில் அனைத்துலக மட்டத்தில் பயன்படுத்தப்படும் `பறையா` எனும் சொல்
க்கிரேன் போர் ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்க, மறுபுறம் சொற்போர், பொருளாதாரத் தடை தொடர்பான அச்சுறுத்தும் அறிக்கைகள் என்பனவும் நடந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய சொற்போர்களில் மேற்குலகால் கையாளப்படும் ஒரு சொற் பயன்பாடு பற்றியே இக் கட்டுரை பார்க்கப் போகின்றது; அச் சொல்லானது `பறையா` என்ற தமிழ்ச் சொல்லாகும்.
தமிழிலிருந்து ஆங்கிலம் உட்பட்ட பிற மொழிகளுக்குச் சென்றதாகப் பல சொற்களை நாம் பெருமையுடன் குறிப்பிடுவோம்; காசு ( Cash ), கட்டுமரம் (Catamaran ), நாவாய் ( Navy ) என அப் பட்டியல் நீளும். அத்தகைய சொற்கள் எல்லாம் தமிழுக்குப் பெருமை சேர்ப்பன. அதேவேளை வேறு ஒரு தமிழ்ச் சொல்லும் பிற மொழிகளுக்குச் சென்றுள்ளபோதும், அதனையிட்டு நாம் பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது; அச் சொல் `பறையா` (Pareas / Pariah) என்பதாகும்.
குறிப்பாக இன்றைய போர்க் காலத்தில் ருசியாவினை `பறையா நாடு` (Pariah state ) எனவும் புடினை `உலகப் பறையன்` (Global Pariah) எனவும் மேற்குலக அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், ஊடகவியலாளர் ஆகியோர் குறிப்பிடுகின்றனர். அமெரிக்கத் தலைவர் யோ பைடன் முதல் பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் (Liz Truss) வரை இச் சொல்லினைப் பொதுவெளியில் பயன்படுத்தியுள்ளனர்.
இச் சொல்லின் ( (Pariah ) பொருளாக சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டவர் என அகராதி (The Oxford Advanced Learner’s Dictionary) கூறுகின்றது. அதே அகராதி அச் சொல்லின் மூலமாக `தென்னிந்தியாவில் ஒதுக்கிவைக்கப்பட்ட ஒரு பிரிவினரையே அச் சொல் வரலாற்றுரீதியாகக் குறிக்கின்றது` எனக் காட்டவும் தவறவில்லை. இதன் மூலம் இச் சொல்லானது உலகின் ஒரு மூலையில் வாழும் மக்களை இழிவுபடுத்துகின்றது எனத் தெரிந்து கொண்டுதான் இச் சொற் பயன்பாடு உலகில் தொடருகின்றது. இந்தப் பின்னனியிலேயே இந்த நிகழ்வினை ஆழமாகப் பார்க்க வேண்டியுள்ளது.
`பறையா` என்ற சொல்லின் ஏற்றுமதியின் வரலாற்றுப் பின்னனி :-
`பறையா` என்ற சொல்லானது ஐரோப்பாவுக்குச் சென்ற வரலாறு குறித்து பேராசிரியர் முனைவர்.அழகரசன் பி.பி.சியிடம் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார், “இந்தச் சொல் முதன்முதலாக போர்ச்சுகீசிய மொழியில் தான் உலா வரத் தொடங்குகிறது. 1500 முதல் 1517 வரை போர்ச்சுகீசிய அரசரின் சார்பாக இந்தியாவில் பணிபுரிந்துகொண்டிருந்த டுவர்டே பர்போசா (Duarte Barbosa) என்பவரின் எழுத்துகளில் தான் முதன்முதலில் ‘பறையா` (Pareas)’ என்ற சொல் பயன்பாடு தெரிகிறது. அங்கிருந்து பிரெஞ்சு மொழிக்குச் சென்ற இந்தச் சொல், பிறகு, ஜெர்மன், ஸ்பானிய மொழிகளுக்கும் பின்னர் ஆங்கிலத்திற்கும் சென்றது” . இவ்வாறு தொடக்க கால வரலாறு இருந்த போதிலும், பிரித்தானியர் இந்தியாவினை ஆண்டபோதுதான் இச் சொல்லானது மேற்குலகில் மிகவும் பரவலடைந்திருந்தது.
இச் சொல்லினைப் பிற மொழிகளுக்குக் கடத்தியதில் பார்ப்பனியத்தின் பங்கு அளப் பெரியது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பார்ப்பனர்களே பெருமளவுக்கு அவர்களின் அதிகாரிகளாகவும் ஆங்கிலம் தெரிந்தவர்களாகவும் இருந்திருந்தார்கள். `பறை` என்ற சொல்லினைப் பறவைகளின் பெயரிடல் மூலம் ஆங்கிலத்துக்கு ஏற்றுமதி செய்யும் நுட்பத்தினையும் பார்ப்பனியம் விட்டு வைக்கவில்லை. ஆங்கிலேயர் இங்கு கரும் பருந்து, செம் பருந்து என இரு வகையான பருந்துகளைக் கண்டு, ஆங்கிலத்தில் எவ்வாறு பெயர் வைப்பது எனக் குழம்பி நின்றார்கள். அப்போது பார்ப்பனர்கள் கரும் பருந்தினைப் `பறைப் பருந்து` என மாற்றி, ஆங்கிலத்தில் ` Pariah kite ` என கரும் பருந்துக்குப் பெயரிட்டார்கள். மறுபுறத்தில் செம் பருந்தினை `பார்ப்பரப் பருந்து` எனவும் ஆங்கிலத்தில் `Brahmini kite ` எனவும் பெயரிட்டார்கள்.
இது போலவே கறுப்பாக இருக்கும் மைனா, பாம்பு போன்ற பல உயிரிகளுக்கு `பறை` என்ற முன்னொட்டுக் கொடுத்து, பெயரினை ஏற்றுமதி செய்தார்கள். இது பற்றி விரிவாக நான் எழுதிய `தெரிந்தும் தெரியாத தமிழ்` என்ற நூலில் விரிவாக எழுதியுள்ளேன் (பக்கங்கள் 93-94).
பிரித்தானிய காலனி ஆட்சிக் காலத்தில் ஆங்கிலேயர் பலரிடம் காணப்பட்ட நிறவெறி, கறுப்பு மீதான வெறுப்பினைப் பயன்படுத்திப் பார்ப்பனியம் இச் செயலினை வெற்றிகரமாக நடாத்தி முடித்தது. இந்தப் பின்புலத்தில்தான் `பறையா` என்ற சொல்லானது `ஒதுக்கப்பட்டவர்`களைக் குறிக்க உலக மொழிகளுக்குப் போன பின்புலத்தினை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். இச் சொல் மூலம் அடையாளப்படுத்தப்படும் போது, அவர்களுடன் பொருளாதார-சமூக உறவுகள் எதனையும் பேணாது, அவர்களை ஒதுக்கி வைக்க வேண்டும் என்பதே இன்றைய பொருளாகும்.
படிக்க :
கட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும் ! | பறையிசை படக் கட்டுரை
பார்ப்பன – பனியா உயர்சாதிக் கும்பலின் அதிகாரக் கூடாரமே பாஜக !
இந்தியாவில் பல்வேறு சாதிகள் தீண்டப்படாத / ஒதுக்கப்பட்ட பிரிவுகளாகப் பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் காணப்பட்டிருந்தன; வால்மீகி, மாலா, மதியா போன்ற பல பிரிவுகள் காணப்பட்டிருந்தன; இவ்வாறிருக்க `பறையர்` என்ற பெயரினை மட்டுமே தெரிந்து எடுத்து பார்ப்பனியம் ஏற்றுமதி செய்தது ஏன்? என்ற கேள்வி எழுகின்றது.
`பறையர்’ என்ற சொல் இன்று சாதி குறித்ததாகவிருந்தாலும், சங்க காலத்தில் அச் சொல் குறித்தது ஒரு குடியினையே! (சாதி-குடி பற்றிய வேறுபாடு பற்றி ஏற்கனவே வினவில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்).
பறையர் என்ற குடியானது சிறப்பான ஒரு குடி எனப் புறநானூறு பாடும்.
“‘துடியன், பாணன், பறையன், கடம்பன், என்று
இந்நான் கல்லது குடியும் இல்லை;”  : புறநானூறு 335:7-8
அத்தகைய தமிழ்க் குடியினை இழிவுபடுத்துவது தமிழர்களை இழிவுபடுத்துவதுதானே. மேலும் பழைய அகராதி (லெக்சிகன்) ஒன்றில் தமிழருக்கு இரு பொருள்கள் கொடுக்கப்பட்டிருந்தன; ஒன்று பறையர், மற்றையது ‘விளிம்பில்லாத பாத்திரம்` (டம்ளர்). இவற்றினைக் கருத்திற் கொண்டு பார்த்தால், இச் சொல்லின் ஏற்றுமதி மூலம் முழுத் தமிழர்களையும் இழிவுபடுத்துவதே பார்பனியச் சூழ்ச்சியின் நோக்கமாகும்.
இன்று புடினை ‘ உலகப் பறையன்’ ( Global Pariah) என்பது போல; சில ஆண்டுகளுக்கு முன் சுப்பிரமணிய சுவாமி ஒருவரை ‘ அனைத்துலகப் பறையன்’ ( International pariah) எனக் குறிப்பிட்டிருந்தார். அது யாரைத் தெரியுமா ? அவர் குறிப்பிட்டது புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அவர்களை. பிரபாகரன் செயலில் ஒரு சாதி மறுப்பாளர், பிறப்பினடிப்படையில் கூட அவர் ‘ பறையர்’ என்ற சாதிக்குள் வரமாட்டார், அவ்வாறிருக்க ஏன் அவரை அவ்வாறு சுப்பிரமணிய சுவாமி அழைத்தார்.
இரு காரணங்கள் ; உள்நாடு சார்ந்து பறையன் என்பது சிறப்பாகத் தமிழரையே குறிக்கும் என்ற புரிதல் , இரண்டாவதாக அனைத்துலக மட்டத்தில் அவரைத் தனிமைப்படுத்தல் என்பனவாகும். இதனை மேலும் விளங்கிக் கொள்ள வேண்டும் என்றால் இனவாதச் சிங்களவர் தமிழர்களைப் பொதுவாகத் திட்டும் போது `பறைத் தமிழோ` எனத் திட்டுவனைச் சொல்லலாம்; இங்கு சாதி வேறுபாடு எதுவுமில்லாமல் முழுத் தமிழரையுமே இழிவுபடுத்தும் நோக்கிலேயே இச் சொல் பயன்படுத்தப்படுகின்றது என்பது நோக்கத்தக்கது. எனவேதான் இச் சொல்லின் இன்றைய பயன்பாடு குறித்து முழுத் தமிழர்களுமே அக்கறை கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பறையா` என்ற சொல்லின் மேற்குலகப் பயன்பாடு :-
`பறையா` என்ற சொல் மேற்குலகுக்கு வந்த வரலாறு குறித்தும், அதன் பொருள் குறித்தும் ஏற்கனவே பார்த்துள்ளோம். இச் சொற் பயன்பாடானது இன்றைய உக்கிரேன் போர்க் காலத்தில் அதிகரித்துள்ள போதும், இதற்கு முன்னரும் இச் சொல்லானது அவ்வப்போது பயன்படுத்தப்பட்டே வந்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் இங்கிலாந்து இளவரசர் அன்ட்ரூ மீது பாலியல் குற்றச்சாட்டுகள் வந்த போதும் கூட , கேற்றி ( KATIE STRICK) என்பவர் எழுதிய கட்டுரை ஒன்றின் தலைப்பினை ` The fall of Prince Andrew — from party prince to royal pariah` { விருந்தின் இளவரசனாகவிருந்து அரச குடும்பப் பறையனாக இளவரசர் அன்ட்ரூவின் வீழ்ச்சி} என அமைத்திருந்தார் (படம் காண்க).
பாலியல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய திரைப்படத் தயாரிப்பாளர் கார்வி வெயின்சிடீனுடைய (Harvey Weinstein ) படத்தினைப் போட்டு, ரைம் (Time ) இதழானது `பறையா`என அவரினை அட்டைப் படத்தில் போட்டிருந்தது. அப்போதும் (2017 இல்) அதற்கு எதிர்ப்புகள் எழுந்தன [ , “Producer. Predator. Pariah” ]. தன்பால் ஈர்ப்புக்காக குடும்பத்திலிருந்தும் சமூகத்திலிருந்தும் ஒரு பெண் விலக்கி வைக்கப்பட்ட கதையினைக் கூறும் ஒரு ஆங்கிலத் திரைப்படம் 2011 இல் வெளிவந்திருந்தது; அந்தப் படத்தின் பெயர் கூட இதுதான் : Pariah. இவ்வாறு இச் சொல்லானது கடந்த காலங்களில் பயன்படுத்தப்பட்டு வந்தபோது , எதிர்ப்புகள் சிலவும் எழுந்தே வந்தன.
மேற்கூறிய குறித்த ரைம் (Time) இதழின் அட்டைப்பட நிகழ்வின் போது (தற்போதைய) இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் இரவிக்குமார் அவர்கள், குறித்த இதழுக்கு இச் சொல்லின் பயன்பாடு குறித்துக் கடிதம் எழுதியிருந்தார். அதே போன்று எலெனி வரிகாசு ( Eleni Varikas ) என்பவர் எழுதிய ` la figure du paria ` (The Figure of the Outcast) என்ற ஆய்வுக்கட்டுரையும் தனது எதிர்ப்பினைக் காட்டியிருந்தது. இத்தகைய எதிர்ப்புக்கள் அடங்கிப் போன நிலையில் இன்று இச் சொல்லின் பயன்பாடு மீண்டும் அதிகரித்துள்ளது.
‘பறையர் தேசம்’ ( Pariah state) என்றால் ஒதுக்கி வைக்கப்பட்ட நாடு என்பதே பொருள். அப்படிப்பட்ட நாட்டுடன் எந்தவிதப் பொருளாதார- சமூக உறவுகளையும் கொள்ளக்கூடாது எனவும் `அரசியல் கலைச்சொல் அகராதி` பொருள் கூறுகின்றது. ‘பறையர்’ என்ற சொல்லுக்கான மூலமாக தென்னிந்தியாவில் பிரித்தானிய காலணி ஆட்சி இருந்த போது கடைப்பிடிக்கப்பட்ட சாதி முறைப் பெயர் என்பதனையும் கூட இவர்கள் அறிந்தே பயன்படுத்துகிறார்கள்.
இவ்வளவும் அறிந்த பின்பும் இந்த வசைச் சொல்லினை/ இந்தப் பாகுபாட்டினை ஊக்கப்படுத்தக் கூடிய சொல்லினை இவர்கள் பொது வெளியில் கூச்சமே இல்லாமல் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள். இதுதானா இவர்கள் பேசும் நாகரிக உலகம், மக்களாட்சி எல்லாம். இரு நிலைகளில் இச் சொல்லாட்சிக்கு எதிரான போரினை நாம் செய்ய வேண்டும்.
1. மேற்குலக நாடுகளிலுள்ள முற்போக்காளர்களுடன் இணைந்து , மேற்குலக அரசியல்வாதிகளுக்கும் ஊடகங்களுக்கும் இச் சொல்லாட்சியின் தாக்கத்தினை விளக்கி, அதற்கான விழிப்புணர்வினை ஏற்படுத்தல்.
2. தமிழ்நாடு அரசு மூலமாகவும் இந்திய முற்போக்காளர்கள் மூலமாகவும் அங்குள்ள மேற்குலக தூதரகங்களுக்கு அழுத்தம் கொடுத்தல்.
இந்த நிலையில் ஒரு திரைப்படப் பாடல் வரிகளுடன் இக் கட்டுரையினை நிறைவு செய்வோம்.
” இன்னும் இங்கு பள்ளுப் பறை எனச் சொல்லும் மடைமைகள் உள்ளதடா….
போராடடா ஒரு வாளேந்தடா
வேங்கைகளோ இனி தூங்கதடா”
வி. இ. குகநாதன்
disclaimer

எதிர்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளின் செயல்பாட்டை முடக்கும் மோடி அரசு | பாகம் 1

எதிர்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளின் செயல்பாட்டை முடக்கும் மோடி அரசு – பாகம் 1
ந்திய குடியரசின் அடிப்படையான கூட்டாட்சி தத்ததுவத்தை மிக எளிமையான வடிவத்தில் திராவிட இயக்கங்கள் “மாநிலத்தில் சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி” என தமிழக மக்கள் மனதில் பதிய வைப்பதில் வெற்றியும் பெற்றனர். சமீப காலங்களில் கூட்டாட்சி தத்துவம் பற்றி பாஜக-வின் எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ‘அதே வலிமை; அதே தொனியில்’ இல்லாமல் விவாதம் எழுப்படுகிறது.
“மோடியின் ஆட்சி ‘கூட்டாட்சி என்ற அரசியல் சாசனத்தின்’ அடிப்படையை சுற்றி எழுப்பியிருக்கும் அச்சுறுத்தல்களே” இத்தகைய விவாதத்திற்கு அவசியத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. சமீபத்திய நாடாளுமன்ற விவாதங்களை ‘குறியீடுகளிலிருந்து உள்ளார்ந்த பொருள் பற்றியதாக’ மடைமாற்றியிருக்கிறது ஆளும் மோடி அரசு. எதிர்கட்சி உறுப்பினர்கள் மாநில உரிமைகள் பறிக்கபடுவதை எதிர்த்து கடுமையாக ஆட்சேபத்தை தெரிவித்துள்ளனர். சுயாட்சி பற்றி பேசினாலே “பிரிவினைவாதிகள்; தேசவிரோதிகள்” என தூற்றுவது தான் மோடி மற்றும் பாஜக-வினரின் பதிலாக இருக்கிறது.
பன்முக கலாச்சார பூமியில் ஒற்றை தலைமை – பார்ப்பன மதவெறி – இந்தி – நஞ்சை விதைக்கிறது மோடி அரசு.
படிக்க :
கேடி ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் : மோடியின் கிரிமினல் பிள்ளைகளை பாதுகாக்கும் உச்ச நீதிமன்றம்!
குடியரசு விழா : சாதிய ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகளைக் கண்டு அஞ்சும் மோடி அரசு !
பல்வேறு மொழி, கலாச்சாரம், இனம் ஆகியவற்றை கொண்ட பகுதிகளை ஒன்றிணைத்து அவற்றின் கூட்டாட்சியாகவே இந்தியா உருப்பெற்றது என்பது வரலாறு. மாநில அரசுகளுக்கு மட்டுமல்ல அதன் உள்ளாட்சி வரை அதிகார பகிர்வை அங்கீகரிக்கிறது அரசியல் சாசனம். எல்லா மாநிலங்களுக்கும் மேலானதாக அல்ல ஒரு கூட்டரசாங்கமாகவே மத்திய அரசை வரையறுத்திருக்கின்றது அரசியல் சட்டம். இந்த நிலைமைகளுக்கு முன்னெப்போதும் இல்லாத அபாயம் ஏற்பட்டுள்ளது என ஜனநாயக உணர்வுள்ள அரசியல் விமர்சகர்கள் முதலாளித்துவ பத்திரிகைகளும் அறிவுஜீவிகளும் கூட பத்திபத்தியாக எழுதி வருகின்றனர்.
மோடி அரசின் தற்போதைய ஒரே செயல்பாடாக இருப்பது” அரசியல் – பொருளாதாரம் – கலாச்சாரம்” அனைத்திலும் தங்களது கொள்கைகளுக்கு ஏற்றவகையில் ஒரே சிந்தனைக்குள்ளானதாக மாற்றுவது. அதாவது ‘ஒத்திசைவை’ ஏற்படுத்துவது. இதில் இடைஞ்சலாக இருப்பவர்களை ‘ஒன்று வழிக்கு கொண்டு வருவது’ அல்லது ‘இல்லாதொழிப்பது’. இவற்றையெல்லாம் இருக்கும் சட்டங்களை பயன்படுத்தியே செய்கிறது. இப்படிப்பட்ட ஒரு அபாயகரமான பாசிச கும்பலிடம் நாடு சிக்கியிருக்கிறது.
உரிமை பற்றி பேசுவது நாட்டுக்கு எதிரானதாம்
மக்களுக்கு அவர்களது உரிமை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என நினைப்பவர்களை பேசுபவர்களை எழுதுகிறவர்களை செயல்படுபவர்களை ‘தேசவிரோத சக்திகள் பிரிவினைவாதிகள் நகர்புறநக்சல்கள் மாவோயிஸ்டுகளுக்கு உதவிசெய்பவர்கள்’ என பொய்யான குற்றங்களை சுமத்தி வேட்டையாடி வருகிறது மோடி அரசு.
அதற்கு ஒரு சிறந்த உதாரணம் பீமா கொரேகான் வழக்கு. தலித் மக்கள் ஒன்றுகூடி நடத்திய விழாவில் ஆர்.எஸ்.எஸ். – பாஜகவினர் ஏற்படுத்திய வன்முறையை ஒரு கலவரமாக மாற்றி மாவோயிஸ்டுகளுடன் இணைத்து மோடியை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக வளர்த்து அதற்கான சதி இலண்டனில் நடைபெற்றதாக விளக்கி 17 சமூக செயற்பாட்டாளர்களை ஊபா, ராஜதுரோகம் ஆகிய பிரிவுகளில் கைது செய்து 3 ஆண்டுகளுக்கு மேலாக சிறை வைத்திருக்கிறது மோடி அரசு.
அவர்களில் ஸ்டான் சுவாமி என்ற பழங்குடியினருக்காக போராடியவர் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் சிறையிலேயே இறந்து விட்டார். விசாரணை வகைதொகையில்லாமல் நீண்டு கொண்டே போகிறது. அவர்களுக்கு பிணை மட்டுமல்ல சிகிச்சை கூட மறுக்கப்படுகிறது. அவர்களுக்கான ஆதரவு குரல்கள் மிக சன்னமானதாக மாறிப் போயிருக்கிறது.
அதுபோலவே தபோல்கர், கௌரி லங்கேஷ், கல்புர்கி, பன்சாரே போன்றோர் கொடூரமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் மக்களின் உரிமைகளுக்காக விழிப்புணர்வுக்காக எழுதியவர்கள் பேசியவர்கள் செயல்பாட்டாளர்கள்.
இதுபோன்ற நிகழ்வுகளை காவி – கார்ப்பரேட் மதவெறி அமைப்புகள் திட்டமிட்டு அரங்கேற்றியுள்ளன. விசாரணை நீடிப்பதும், குற்றவாளிகளை பிடிப்பதிலும் காட்டும் மெத்தன போக்குகள் மோடி அரசுக்கு இருக்கும் ‘அக்கறையை’ பறைசாற்றுகிறது. இதன்மூலம் நிரந்தரமாக மக்கள் மனதில் அச்சத்தை நிலைநிறுத்தி மெத்த பணிவுடன் மோடி அரசை பின்பற்ற செய்வதே பிரதான நோக்கமாகும். நாட்டு மக்களை ஒரு அச்ச உணர்வோடு நடமாடச் செய்வதே மோடி அரசின் நோக்கம்.
பேருக்கு பாராளுமன்றம்! ஆள்வதோ காவி – கார்ப்ரேட் பாசிசம்
2014-லிருந்து ஆட்சியிலிருந்தாலும் 2019-ல் அரிதி பெரும்பான்மையுடன் அரசை கைப்பற்றியதிலிருந்தே கூட்டாட்சியின் அடிப்படைகளை தகர்த்து ‘ஒற்றை தலைமை துருவ’ ஆட்சியை நோக்கி அதாவது பாசிச ஆட்சியை கொண்டுவருவதற்கான எத்தனிப்புகளை சட்டப்பூர்வமாக மோடி அரசு செய்து வருகிறது. இந்த 7½ ஆண்டுகளில் 356 சட்டப்பிரிவு 8 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு பெரிய விசயம் இல்லை என்பதுபோல அதற்கும் மேலாக இந்திய கூட்டாட்சி முறைக்கே மிகப்பெரிய அச்சுறுத்தலான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது மோடி ஆட்சி.
முக்கியமான கொள்கைகளை வரையறுக்கும்போது அது நாடு முழுமைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற உண்மையை புறந்தள்ளி அது சம்பந்தமாக மாநில அரசுகள் கருத்துகள் தெரிவித்தாலும் அதை ஏற்றுக் கொள்ளாமல் தன்னிச்சையாக செயல்படுவது; பெரும்பாலான சட்டங்கள் பாராளுமன்றத்திலோ ராஜ்யசபாவிலோ விவாதிக்கப்படாமல் பிரதமர் அலுவலகத்திலிருந்து நேரடியாக அவசர சட்டங்களாக நிறைவேற்றப்படுவது ஆகியவற்றின் மூலம் சொல்லிக் கொள்ளப்படும் பாராளுமன்ற ராஜ்யசபா மாண்புகளை மோடி அரசு புதைகுழிக்கு அனுப்பிவிட்டது. இதன் மூலம் மாநில அரசுகளை கட்டளைகளை நிறைவேற்றும் இடத்தில் மட்டுமே வைத்திருக்கிறது.
இப்போது திரும்ப்பெறப்பட்ட விவசாய சட்டங்கள் விசயத்தில் இது பட்டவர்த்தனமாக வெளிப்பட்டது. நாடாளுமன்ற நடைமுறைகள் எதுவும் கடைபிடிக்கப்படாமல் எதிர்கட்சிகளின் ஆட்சேபங்களை கூட கணக்கிலெடுக்காமல் அமுல்படுத்தப்பட்டதை பார்த்தோம்.
மிகப்பெரும் முடிவுகளான பணமதிப்பிழப்பு நடவடிக்கையும்; ரஃபேல் விமான ஒப்பந்தமும் அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படாமலேயே நேரடியாக பிரதமர் அலுவலகத்தை மையமாக வைத்தே செயல்படுத்தப்பட்டிருக்கின்றன.
மாநில அரசுகளின் துறைகளிலும் மோடி அரசின் குறுக்கீடு!
இது மட்டுமா? கல்வி கூட்டுறவு சங்கங்கள் வங்கிகள் பற்றியெல்லாம் கொள்கை முடிவுகளையும் சட்டங்களையும் ஒன்றிய அரசு தீர்மானிக்கிறது. அமல்படுத்தும் பொறுப்பை மட்டும் மாநில அரசுகளிடம் விட்டு விட்டது.
சட்டம் ஒழுங்கு என்பது அரசியல் சட்டப்படி மாநிலங்களின் வரம்புக்குள் வரக் கூடியது. ஆனால், மோடி அரசோ மாநிலங்களின் வல்லமை மற்றும் தன்னாட்சி ஆகியவற்றை சிதைத்து சீர்குலைப்பதற்குண்டான அனைத்து வேலைகளையும் செய்கிறது. மாநில அரசுகளின் சட்டவரம்புக்குட்பட்ட பிரதேசங்களிலும் தங்களது சட்டங்களே செல்லுபடியாக வேண்டும் என்ற சர்வாதிகார மனப்பான்மையுடன் மோடி அரசு செயல்படுகிறது.
அரசியல் ரீதியாக தன்னை விமர்சிப்பவர்களை முடக்கி போட அவர்கள் மீது சட்ட விரோதமான முறையில் ஊபா(UAPA) சட்டத்தை ஏவுகிறது. மாநிலங்களுக்குள் அவர்களுக்கு தெரியாமலேயே தேசிய விசாரணை ஆணையத்தை(NIA) அனுப்பி மிரட்டுகிறது. இதன் மூலம் சட்ட ஒழுங்கு உட்பட நாட்டின் அத்தனை அதிகாரத்தையும் தன் கைகளுக்குள் முடக்கிகொண்டிருக்கிறது மோடி அரசு.
கோவிட்-19 சர்வதேச அச்சுறுத்தல் சமயத்தில் மாநிலங்களுடன் கலந்தாலோசித்து நாட்டை ஒருமுகமான முறையில் செயல்படுத்த நல்ல வாய்ப்பாக இருந்தது. ஆனால், மோடியோ தன்னிச்சையாக மனம்போன போக்கில் செயல்பட்டதையே பார்க்க முடிந்தது. நாடு முழுவதும் மக்களை தட்டை தட்டி சத்தம் எழுப்பி கொரோனாவை விரட்டுவோம் என்றார்.
மத்தியப் பிரதேசத்தில் எம்.பி.க்களை கட்சி மாற செய்து பாஜக அரசு அமையும் வரை காத்திருந்து அதற்கு பிறகே கோவிட்-19 சர்வதேச அச்சுறுத்தலாக நாட்டில் அறிவித்தார். அது மட்டுமல்ல நான்கு மணிநேர அவகாசம் மட்டுமே கொடுத்து நாடு முழுதும் ஊரடங்கை அமுல்படுத்தினார். இந்த விசயத்தில் மாநிலங்களை கலந்தாலோசிக்காத்து மட்டுமல்ல அமைச்சரவை சகாக்களுக்கு கூட சொல்லவில்லை.
படிக்க :
நாட்டில் பட்டினிச் சாவே இல்லையாம் ! மோடி அரசின் பொய்யுரைகள் !
மோடியின் உயிருக்கு பாதுகாப்பில்லையா? 5 மாநில தேர்தல்களுக்கான இன்னொரு நாடகம் !
இதனால் நாட்டிலுள்ள உழைக்கும் மக்கள் பட்ட கஷ்டங்கள் சொல்லிமாளாது. இவற்றினால் மாநில அரசுகள் செய்வதறியாமல் திகைத்து போய் கையறு நிலையில் நின்றது காணமுடிந்தது. கடைசியில் ஊரடங்கு காரணமாக இடமாற்றத்தின் போது இறந்தவர்கள் பற்றிய எண்ணிக்கை கணக்கு தங்களிடம் இல்லை அதனால் நிவாரணம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றுமோடி அரசு கைவிரித்தது.
ஊரடங்கு சட்டத்தினூடாகவே ‘தேசிய பேரிடர் மேலாண்மை’ சட்டத்தை அமுல்படுத்தியது. இப்போதும் மாநில அரசுகளை கலந்தாலோசிக்க வில்லை. இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது இப்போது கொரோனாவை வென்றுவிட்டதாக மோடி அரசு தம்பட்டம் அடிக்க ஆரம்பித்துள்ளது. இப்போது தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம் தேவைப்படாத நிலையிலும் அமலில் உள்ளது.
இந்த சட்டம் ‘மக்களின் நகர்வை பற்றியும் பொருட்களின் இடப்பெயர்வு பற்றியும்’ கண்காணிக்க நேரடியாக மத்திய அரசுக்கு அதிகமான அதிகாரத்தை கொடுக்கிறது. அதனால் நிச்சயமாக நீண்ட காலத்துக்கு அமலில் இருக்கும் சாத்திய கூறுகளே அதிகம். தேசிய அளவில் குறிப்பிடத்தக்க பேரிடர்களை குறிப்பிட்ட காலகெடுவுக்குள் பயன்படுத்தும் வகையில் மட்டுமே அமைக்கப்பட்டுள்ள இந்த சட்டம் மோடியின் கைகளில் மாநிலங்கள் மேலான தனது ஆளுமையை நிலைநிறுத்திக் கொள்ள பயன்படுத்தப்படுகிறது.
(தொடரும்…)

மணிவேல்
மூலக்கட்டுரை : ராமச்சந்திர குஹா
நன்றி : ஸ்க்ரால்

Tekfog: பாசிச கருத்தாக்கத்தின் முதுகெலும்பு | பாகம் 1

”Tek fog: வெறுப்பு பிரச்சாரங்களின், இணையவெளி தாக்குதல்களின்,
பாசிச கருத்தாக்கத்தின் முதுகெலும்பு” – பாகம் 1
“தனது சொந்த இலாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட உள்நாட்டு, பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் இலாபங்களை உறுதி செய்துகொள்ளும் பொருட்டு மக்கள் கருத்துக்களை ஒடுக்கும், சமூக செயற்பாட்டாளர்களை வேட்டையாடும் தொழில்நுட்பங்களை  பாசிஸ்டுகளுக்கு கையளிக்கிறார்கள். அந்த அறமற்ற தொழில்நுட்ப சாதனங்கள்  சொல்லிக்கொள்ளபடும் சட்ட வரைமுறைகள் எதையும் மதிக்காமல் மக்கள் மீது பாசிஸ்டுகளால் ஏவப்படுகிறது”.
கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆர்த்தி சர்மா என்பவர் @Aarthisharma08 என்ற ட்விட்டர் கணக்கில், “Tekfog என்னும்  ரகசிய செயலியை பயன்படுத்தி ஆளும் கட்சியுடன் (பாஜக) இணைந்திருக்கும் அரசியல் செயற்பாட்டாளர்கள் (Operatives) கட்சியின் பிரபலத்தை உயர்த்தி காட்டவும், கட்சியை விமர்ச்சிப்பவர்களை இணையவெளியில் தனிப்பட்டவகையில் அவதூறு செய்து துன்புறுத்தவும், மக்களின் பொது உணர்வுகளை தங்களுக்கு ஏற்றார்போல மடைமாற்றம் செய்யவும் பயன்படுத்தி வருவது குறித்து” பதிவிட்டிருந்தார்.
ஆர்த்தி சர்மா, பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் (IT Wing) வேலை செய்து வந்திருக்கிறார். கடந்த 2018-ம் ஆண்டு, பாரதிய ஜனதா யுவமோர்ச்சா (பாஜக-வின் இளைஞர் பிரிவு)வை சேர்ந்த முன்னாள் தேசிய சமூக ஊடகத்துறை தலைவராக இருந்தவர் தேவாங் டேவ் என்பவர். இவர் தற்போது மகாராட்டிர மாநில பாஜக-வின் தேர்தல் மேலாளராக உள்ளார். இவர் 2018-ம் ஆண்டு பாஜக-வின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் வேலை செய்யும் செயற்பாட்டாளர்களுக்கு வருகிற 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் அரசாங்க வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்துள்ளார். ஆனால், தேர்தலில் வெற்றி பெற்று வெகுநாட்களான பின்பும் அதை நிறைவேற்றவில்லை. அதுமட்டுமின்றி வேலை செய்யும் செயற்பாட்டாளர்களுக்கு ஒரு ட்விட்டுக்கு வெறும் ரூ.2 மட்டுமே கொடுக்கப்படுவதாக ஆர்த்தி சர்மா தெரிவிக்கிறார். அந்த அதிருப்தியில் தான் அங்கே இயக்கப்பட்டு வரும் இரகசிய செயலியான Tekfog பற்றி பொது வெளியில் தெரிவித்திருக்கிறார்.
படிக்க :
குறுஞ்செய்திகள் : புல்லிபாய், டெக் ஃபாக் செயலி விவகாரம் – கூடுதல் தகவல்கள்
புல்லிபாய் : சங்கிகளின் முசுலீம் வெறுப்பு அரசியல்
பாஜக-வின் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயல்பாட்டாளர்களால் மட்டுமே பயன்படுத்த முடிந்த Tekfog செயலியின் சிறப்பு அமசங்களாக சிலவற்றை குறிப்பிடுகிறார், ஆர்த்தி சர்மா. அவற்றில் “டிவிட்டர் ட்ரெண்ட்ங்கில் hashtag-களையும், செய்திகளையும் தானியங்கியாகவே பதிவேற்றம் செய்யும் திறன் கொண்டது” என்ற அம்சம் தகவல் தொழில்நுட்ப துறையில் நிபுணர்களான ஆயுஷ்மான் கவுல், தேவேஷ் குமார் ஆகியோரின் கவனத்தை ஈர்க்கிறது. அதனால் ஊந்தப்பட்டு Tekfog செயலியை பற்றி 20 மாதங்களுக்கு மேலாக புலனாய்வு செய்து The Wire என்னும் இணைய பத்திரிகையில் செய்தி கட்டுரைகளாக வெளியிட்டனர். அந்த செயலி பற்றி பொதுவில் வெளியிட்ட நபர் சொன்ன ஒவ்வொரு தகவலும் புலனாய்வு குழுவால் சுதந்திரமான முறையில் சரிபார்க்கப்பட்டு தான் அந்த கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளது.
இந்த Tekfog செயலி ஒரு முன்மாதிரி வடிவம் (Prototype) அல்ல. கடந்த 2020-ம் ஆண்டில் இருந்து பாஜக-வின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் ஊதியம் பெறும் செயல்பாட்டாளர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதையும் இந்த புலனாய்வு குழு உறுதிப்படுத்துகிறது.
இந்த செயலியின் மிக முக்கியமான அம்சம் என்பது Twitter, Facebook போன்ற சமூக ஊடகங்களின் ட்ரெண்ட்ங் பகுதியை கைபற்றுவதாகும் (Hack). இதற்கு Tekfog செயலியிலே உள்ளார்ந்து வடிவமைக்கப்பட்டுள்ள அம்சங்களை பயன்படுத்தி, தானியங்கியாக  சமூக ஊடகங்களில் உள்ள தனிநபர்கள் அல்லது குழுக்கள் பதிவிடும் செய்தி அல்லது பதிவை மறுட்விட்டு செய்வது அல்லது பகிர்ந்து கொள்வது என அந்த செய்தி அல்லது பதிவுக்கு போலியான முக்கியத்துவத்தை உருவாக்குகிறார்கள். இதை Tekfog செயலியை தகவல் தொழில்நுட்ப பிரிவின் அறையில் இருந்து இயக்கும் செயற்பாட்டாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கணக்குகள் (Accounts) மூலமாக செய்ய முடிகிறது.
இதன் மூலம் வலதுசாரி அரசியல் பிரச்சார செய்திகளை உருப்பெருக்கி (Amplify) மிகப் பரவலான மக்கள் பகுதிகளிடம் சென்றடையும் விதமாக பரப்பப்படுகிறது. இதன் மூலம் வலதுசாரி தீவிரவாத கதையாடல்கள், கருத்துக்கள், அரசியல் பிரச்சாரங்கள் வழக்கத்தைவிட மிக அதிக பிரபலமானதாக முக்கியத்துவமுடையதாக மாற்றப்படுகிறது.
மற்றுமொரு முக்கிய அம்சம் என்னவென்றால் இந்த Tekfog செயலி ” தனிநபர்களின் செயல்பாட்டில் இல்லாத (inactive) whatsapp கணக்குகளை கைப்பற்றி அதன் மூலமாக அந்த கைபேசி எண்ணை பயன்படுத்தி, அந்த எண்ணிலிருந்து அடிக்கடி தொடர்பு கொள்ளப்பட்ட எண்களுக்கு ( Frequently Contacted) அல்லது தொடர்பில் இருந்த அனைத்து எண்களுக்கும் (All Contacted) தானியங்கியாக செய்திகளை அனுப்புகிறது. அந்த செய்திகள் வலதுசாரி அரசியல் பிரச்சாரங்கள் தான் என்பதை குறிப்படத்தேவையில்லை. தங்களது எண்ணில் இருந்து செய்திகள் அனுப்பப்படுவது குறித்து அறியாத அந்த அப்பாவி நபர்கள் தான் அந்த செய்திகளால் நிகழும் விளைவுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும்.
ஒருவரின் Whatsapp கணக்கை ஊடுருவி கைப்பற்றுவதற்கு முதலில் பயன்பாட்டில் இருக்கும் ( Active) WhatsApp கணக்கிற்கு ஒரு புகைப்படமோ அல்லது வீடியோவோ, அதாவது ஏதேனும் ஒரு மின்னணு கோப்பு ( digital file), அநாமதேய எண்ணிலிருந்து அனுப்பப்படுகிறது. அந்த புகைப்படமோ வீடியோவோ ஒரு Spyware என்று சொல்லப்படும் உளவு மென்பொருளை கொண்டிருக்கும். இந்த உளவு மென்பொருள், ஊடுருவப்பட்ட whatsapp கணக்கு உள்ள கைபேசியின் அனைத்து செயல்பாடுகளையும் உளவு பார்க்கும் தன்மையுடையது. அந்த மின்னணு கோப்பான புகைப்படமோ அல்லது வீடியோவோ கைபேசியில் தரவிறக்கம் செய்யப்பட்ட உடன் உளவு மென்பொருள் செயல்பட தொடங்கிவிடும். அதன் மூலம் அந்த whatsapp கணக்கு கண்காணிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும். எப்போது அந்த whatsapp கணக்கு பயன்பாட்டில் இல்லாமல் போகிறதோ ( become inactive) அப்போது பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் உள்ள Tekfog செயற்பாட்டாளர்கள்  அதன் கட்டுப்பாட்டை கையில் எடுத்துக்கொள்கிறார்கள். பின்பு அந்த whatsapp கணக்குடன் தொடர்புடைய அனைத்து எண்களுக்கும் (All Contacted) அல்லது அடிக்கடி தொடர்பு கொள்ளப்பட்ட எண்களுக்கு (Frequently Contacted) செய்திகளை அனுப்பகிறது. இது பயனரின் கவனத்திற்கு தெரியாமல் செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒருவரின் அந்தரங்கம் முழுமையாக சுரண்டப்படுகிறது.
whatsapp கணக்கு பயன்பாட்டில் உள்ளபோதே  Tekfog செயலியால் அதை ஊடுருவி கைபற்ற முடியாது என்று  Tekfog செயலியின் தொழில்நுட்ப அம்சம் சார்ந்து இதை பார்க்க முடியாது. பயன்பாட்டில் இருக்கும் whatsapp கணக்கை கைப்பற்றி செய்திகளை அனுப்பினால் பயனரின் சந்தேகத்திற்கு ஆட்பட நேரிடும் என்பதால் அது தவிர்க்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி அந்த எண்ணை பயன்படுத்தும் நபரைப்பற்றிய விவரங்கள் Tekfog செயலியின் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் தரவுதளத்தில் (Database) சேமித்து வைக்கப்படுகிறது. இதனால் அந்த நபர் வருங்காலத்தில்  பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் Tekfog செயலியை பயன்படுத்தும் செயற்பாட்டாளர்களால் (Operatives) இணைய துன்புறுத்தல்களுக்கு ( Online Harrassment) உள்ளாக்கப்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.
பிறர் whatsapp கணக்குகளை கைப்பற்றுவது, அதிலிருந்து அந்த நபர்களுக்கே தெரியாமல் செய்திகளை அனுப்பவது, தனிநபர் தரவுத்தளத்தில் அவர்களின் விவரங்களை சேமித்து வைப்பது என யாவற்றையும் அந்த நபர்களின் அனுமதியின்றி அவர்களால் அறியமுடியாத படி சந்தேகிக்க முடியாதபடி செய்யும் வகையில் Tekfog செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
தனிநபர் குடிமக்கள் பற்றிய தரவுகளை அவர்களின் மொழி, மதம், தொழில், வயது, பாலினம், அரசியல் சார்பு மற்றும் உடல் அம்சங்கள் (Physical Attributes) ஆகியவற்றின் அடிப்படையில் வகை பிரித்து தரவுத்தளத்தில் சேமித்து வைத்திருக்கிறார்கள்.
சமூக ஊடகங்களில் இருக்கும் தனிநபர்கள் அல்லது குழுக்களை இணையவெளியில் துன்புறுத்தவோ இணைய வம்பிற்கு (Trolling) உட்படுத்தவோ இந்த தரவுத்தளத்தில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தனிநபர் தரவுகளை பயன்படுத்தி கொள்ளமுடியும். இதை பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் Tekfog செயலியை பயன்படுத்தும் செயற்பாட்டாளர்களால் கட்டுப்படுத்தப்படும் கணக்குகளின் உதவியோடு தானியங்கியாகவே (Auto Generated)இந்த இணைய துன்புறுத்தல் பதிவுகள் உருவாக்கப்பட முடியும். இதற்காகவே முக்கிய வார்த்தைகள் ( keywords) , சொற்தொடர்கள் ( Phrases) , அவற்றில் பெரும்பாலானவை தவறானவை, இழிவானவை இந்த  செயலியால் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக Google Sheets போன்ற தொழில்நுட்ப அம்சங்களும் பயன்படுத்தப்படுகிறது.
Tekfog செயலியை இயக்கும் செயற்பாட்டாளர்கள் இணைய வம்பிற்கு உள்ளாக்கப்போகும் நபர்களை தேர்ந்தெடுப்பார்கள். அதாவது அவர்களுக்கு ஏற்கனவே மேலிடத்தில் இருந்து இணைய வெளியில் தாக்குதலுக்கு உள்ளாக்க வேண்டிய நபர்களின் பெயர்கள் தரப்பட்டிருக்கும். அந்த தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட போகும் நபர்கள் பற்றிய விவரங்களை Tekfog செயலியுடன் இணைந்த தனியார் தரவுத்தளத்தில் இருந்து எடுத்துக்கொள்வார்கள்.
இணைய வம்பை  (Online Trolling) தொடுப்பதற்காக தரவுத்தளத்தில் வெவ்வேறு வகையீனங்களின் அடிப்படையில் சேமிக்கப்பட்டிருக்கும் தரவுகள் அலசப்படும். மாணவர்கள், பத்திரிகையாளர்கள், நடிகர்கள், சமூக வலைதள பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ஆன்மீக தலைவர்கள் மற்றும் பலவற்றுடன் அவர்களின் மதம், மொழி, வயது, பாலினம், அரசியல் சார்பு, சில சமயங்களில் உடல் ரீதியான கூறுகளான நிறம், எடை, மார்பக அளவு என்பன போன்ற வகையீனத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கும்.
படிக்க :
இனப் படுகொலைக்கான பாதையில் ஏற்கெனவே பயணிக்கும் இந்தியா !
‘பாதுகாப்பு குறைபாடு’ கூச்சலுக்கு பின்னே பஞ்சாபை ஒடுக்கத் துடிக்கும் சதிகார நோக்கம்!
இதன் மூலம் Tekfog செயலி செயற்பாட்டாளர்கள் குறிப்பிட்ட நபரை சில கூறுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுப்பார்கள். அவற்றின் அடிப்படையில் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி, அதற்காகவே உருவாக்கப்பட்டிருக்கும் முக்கிய வார்த்தைகள், சொற்தொடர்கள் மூலமாக தானியங்கியாகவே பதிவுகள் தயாரிக்கப்பட்டு செயற்பாட்டாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கணக்குகளின் வழியாக பகிரப்படும். அல்லது Twitter Facebook போன்ற சமூக ஊடகங்களின் அந்தரங்கமான உள்பெட்டிக்கு ( Inbox) மோசமான தாக்குதல் தன்மையுள்ள வசவு மொழியில் எழுதப்பட்ட பதிவுகள் அனுப்பப்படும்.  இவை பெரும்பாலும் பெண் பத்திரிகையாளர்கள் மற்றும் முஸ்லிம் பெண்களை குறிவைத்தே நடத்தப்படுகிறது.
இந்த Tekfog செயலியின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், இந்த செயலியால் செய்யப்பட்ட வேலைகள், அதை செய்ய செயற்பாட்டாளர்களால் கட்டுப்படுத்தப்பட்ட கணக்குகள் ஆகியவற்றை தடம் தெரியாமல் அழிக்க முடியும் அல்லது வேறு மாதிரியாக மறு வடிவமைப்பு (Remap) செய்ய முடியும். அதனாலே இந்த Tekfog செயலியின் இந்த குறிப்பிட்ட ஒரு அம்சம் குறித்து புலனாய்வு குழுவால் எதையும் கண்டறிய முடியவில்லை.
புலனாய்வு குழு Tekfog செயலிக்கு பின்னால் இருக்கும் தொழில்நுட்ப நிறுவனங்கள் பற்றிய ஆய்வையும் செய்திருக்கிறது. இதன் மூலம் ஆளும் பாஜகவிற்கும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் இருக்கும் பரஸ்பர இலாபம் அடிப்படையிலான பிணைப்பு பற்றிய தெளிவை பெறமுடிகிறது.
(தொடரும்…)
மக்கள் அதிகாரம், நெல்லை மண்டலம்
செய்தி ஆதாரம் : த வயர்1, த வயர்2

உக்ரைன் : ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் போர் | தோழர் சுரேசு சக்தி முருகன்

க்ரைன் போரானது வெறுமனே ஐரோப்பாவில் இருக்கும் அமைதியை மட்டும் இன்று குலைக்கப்போவதில்லை. இது உலகளவிய மக்களில் பாதிப்புகளாக மாறிபோய் உள்ளது. அமெரிக்க – ரசிய ஏகாதிபத்தியங்கள் உலகத்தை மறுபங்கீடு செய்வதற்கு தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் அனைத்தையும் கொண்டுவருவதற்கான நடவடிக்கையாக இருப்பதினால், இந்த போரை எதிர்க்க வேண்டியிருக்கிறது. இந்த போருக்கு காரணமாக அமெரிக்க நேட்டோ கூட்டமைப்பையும் அதனுடைய கிழக்கு ஐரோப்பா விரிவாதிக்கத்தையும் நாம் எதிர்க்க வேண்டியிருக்கிறது. இதுபோன்ற உக்ரைன் போர் பற்றிய பல்வேறு பிரச்சினைகளை விளக்குகிறார் தோழர் சுரேசு சக்தி முருகன்.
காணொலியை பாருங்கள் ! பகிருங்கள் !!

உக்ரைன் : உலகத்தை மேலாதிக்கம் செலுத்துவதற்கான கழுத்தறுப்பு போர்!

0
க்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா அல்பேனியா உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் கொண்டுவந்தன. இதற்கு பிரேசில் பிரிட்டன் நார்வே உள்ளிட்ட 11 நாடுகள் ஆதரவளித்தன.
சீனா, இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தன. ரஷ்யாவோ தனது ‘வீட்டோ’ அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை ரத்து செய்துவிட்டது. வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்த இந்தியாவை ரஷ்யாவை பாராட்டியது. உக்ரைனோ இந்தியாவின் புறக்கணிப்பை அதிருப்தியோடு சாடியுள்ளது.
உக்ரைன் மீதான வான்வழித் தாக்குதலை தொடர்ந்து ரஷ்யா, கிரிமீயாவின் மூலம் கடல்வழி தாக்குதலையும் பெலாரஸ் மூலம் தரைவழி தாக்குதலையும் தீவிரப்படுத்தியது. உக்ரைன் தலைநகர் கீவ்-வை சுற்றி வளைத்துள்ளதுடன், உக்ரைனின் பல மையமான பகுதிகளையும் ஆக்கிரமித்துவிட்டது.
படிக்க :
உக்ரைன் போர் : ரசிய – அமெரிக்க ஏகாதிபத்தியங்களின் போர் வெறியை எதிர்ப்போம் || புரட்சிகர அமைப்புகள் அறிக்கை
உக்ரைனிலிருந்தும் கிரீமிய தீபகற்பத்திலிருந்தும் ரஷ்யப் படைகளே வெளியேறு | கருத்துப்படங்கள்
ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுக்கும் முன்பு வரை ரஷ்யா போர்தொடுத்தால் எதிர்பாராத அளவிற்கு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று வாயால் வடை சுட்டு வந்த அமெரிக்கா, போர் தொடங்கியதும், ‘உக்ரைன் நேட்டோவில் அங்கம் வகிக்கவில்லை. எனவே அந்நாட்டுக்கு அமெரிக்கப் படைகளை அனுப்ப முடியாது’ என்று கைவிரித்து விட்டது. இந்தியா, சீனா போன்ற நாடுகள் போரைக் கைவிடும்படி வலியுறுத்தியதோடு நிறுத்திக்கொண்டன. பிரான்சோ ரஷ்யாவுடன் போரிட விரும்பவில்லை என்று வெளிப்படையாக அறிவித்து விட்டது.
ஏன் இந்த பின்வாங்கல்? தயக்கம்?. ஐநா-வை ஆட்டி படைக்கும் அமெரிக்காவும் பொருளாதாரமும் ஆட்டம் கண்டு வருகிறது. அதன் உள்நாட்டு பொருளாதாரம் பலவீனம் அடைந்து வருகிறது. இதன் விளைவாகவே அமெரிக்கா பின்வாங்குகிறது.
சீனாவோ உலக மேலாதிக்கத்திற்கான போட்டியில் ரஷ்யாவை நம்பகமான கூட்டாளி என்ற வகையில்தான் இந்த புறக்கணிப்பு . அமெரிக்க ஐக்கிய நாடுகள், கனடா உள்பட பல்வேறு நாடுகள் ரஷ்ய விமானங்களுக்கு தடை, புதின் உட்பட ரஷ்ய அமைச்சர்களின் சொத்துக்கள் முடக்கம், ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பொருளாதார தடைகளை ரஷ்யாவின் மீது அறிவித்து வருகின்றன.
ரஷ்யாவுக்கு ஏன் இவ்வளவு போர் வெறி ? என்ன காரணம் ? ரஷ்யாவின் கடலோரப் பரப்பு நீளமாக இருப்பினும் வருடம் முழுவதும் கடல் உறைந்தே இருக்கும். இது வணிகத்திற்கும் தெற்கு பகுதிகளுக்கு பண்ட பரிவர்த்தனை தொடர்புக்கும் இதற்கேற்ப துறைமுகளை அமைக்கவும் தடையாக உள்ளது.
எனவே வருடம் முழுவதும் உறையாத கருங்கடலில் கிரிமியா அமைந்துள்ளது. அதன் வழியாக மத்திய தரை கடல் பகுதியை அடையவும் அதன் மூலம் மற்ற நாடுகளில் கடல் வாணிபம் செய்ய முடியும். மேலும் தெற்குப் பகுதிக்கு செல்ல ஏதுவாகவும் கிரிமியாவின் செவஸ்புடல் துறைமுகம் இருப்பதால் அதை ரஷ்யா குத்தகைக்கு எடுத்திருந்தது.
இதற்கு ஈடாக உக்ரைனின் இறையாண்மையை காப்பதாக உறுதியளித்தது. ஆனால் தற்போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேட்டோ படையில் சேர்வதாக அறிவித்ததன் விளைவு எதிர்காலத்தில் இந்த துறைமுகத்தை இழக்க வேண்டும். இதனுடன் மத்திய தரை கடலுக்கு செல்ல நேட்டோவின் உறுப்பு நாடான துருக்கியின் “போஸ்பரஸ்” கால்வாயை ரஷ்யா பயன்படுத்த வேண்டும். இதற்கு இதுவரை எந்த தடையும் இல்லை.
நாளை இப்போரின் விளைவாக நேட்டோவின் நிர்பந்தத்தால் மறுக்கப்படலாம் என்ற அச்சமும் இணைந்தததால் கிரிமியாவை தன் கட்டுப்பாட்டுக்குள் ரஷ்யா கொண்டு வந்துவிட்டது. மேலும் எரிசக்தி – எரிவாயுவை ஐரோப்பாவிற்கு எடுத்துச்செல்லும் பல குழாய்கள் இணையும் இடமாகவும் இருப்பதால் உக்ரைனை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக நடத்தப்படுவதே இந்த ஆக்கிரமிப்புப் போர்.
அதேபோல் அமெரிக்காவும் நேட்டோவும் மத்திய தரைகடல் வழியை ரஷ்யாவின் ஆதிக்கம் தெற்கு பகுதிக்கும் விரிவடைவதையும் குறிப்பாக ஐரோப்பாவிற்குள் நுழைவதை தடுப்பதும் அவற்றின் எதிர் நடவடிக்கையின் விளைவு அமெரிக்கா – ரஷ்யா இடையேயான மேனிலை வல்லரசுகளின் ஆக்கிரமிப்பிற்கான களமாகவும் உக்ரைனை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டனர். உலக மேலாதிக்கத்திற்கான வல்லரசாக தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கனவு சீனா – ரஷ்யா வளர்ச்சியால் தகர்ந்து வருகிறது.
அதாவது ஐரோப்பாவிற்குள் எரிசக்தி – எரிவாயுவை எடுத்துச்செல்லும் வலைப்பின்னலில் ரஷ்யா நுழைவதை தடுப்பதும் எரிவாயு – எரிசக்தியை ஜெர்மனிக்கு கிடைக்கவிடாமல் தடுத்து இவற்றுக்காக அமெரிக்காவையே நம்பியிருக்கும் சூழலை உருவாக்கி ஜெர்மனியை அடிபணிய வைப்பதும் இதன் மூலம் அமெரிக்கா ஐரோப்பாவிற்குள் நுழைவதை நிரந்தரமாக்கிக் கொள்ளும் நோக்கம் நிறைவேறவில்லை.
மோசமாகிய  ஆப்பிரிக்க கண்டங்களையும் கூட்டமைப்புகளையும் பிரிக்ஸ் கூட்டமைப்பு போன்றவைகளின் வளர்ச்சியும் அமெரிக்காவின் கனவை ஆட்டம் காண வைக்கிறது. ஐநா-விலும் அமெரிக்காவின் செல்வாக்கு சீனா – ரஷ்யா ஆகிய நாடுகளின் வீட்டோ பவரால் தகர்ந்து வருகிறது. தற்போது அமெரிக்காவிற்கு கைத்தடியாக இருப்பது நேட்டோ மட்டுமே.
எனவே நேட்டோவிற்குள் சாத்தியமான உலக நாடுகள் அனைத்தையும் கொண்டு வந்து தன்னுடைய ஒற்றை துருவ மேலாதிக்கத்தை வளர்த்து தனக்கேயுரிய – ஏகாதிபத்தியத்திற்குரிய – அத்துமீறலையும் ஆக்கிரமைப்பையும் போரையும் மேற்கொண்டு வருகிறது.
உலக மேலாதிக்கத்திற்கான போட்டியின் அணிவரிசையில் சீனாவும் ரஷ்யாவும் அணிவகுத்து வருவதால் சிபிஐ, சிபிஎம் கூறுவது போல இவை சோசலிச நாடுகள் / சோசலிச சாயல் கொண்ட நாடுகள் அல்ல. இதை ரஷ்ய அதிபர் புதினே, “சோவியத் யூனியன் சிதறியதை நினைத்து வருந்தாதவர்கள் இதயம் இல்லாதவர்கள். அதே நேரம் மீண்டும் ஒரு சோவியத் யூனியனை அமைக்க நினைப்பவர்கள் மூளை இல்லாதவர்கள்” என்று தனது திருவாயை மலர்ந்துள்ளார். புதினைப் பொறுத்தவரையில் ஜாரின் ரசியாவைப் போன்ற ஒரு விரிவடைந்த ரசியா தனது சர்வாதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்பதுதான். ஒரு ஏகாதிபத்தியம் என்ற வகையில் ரசியாவின் ஆளும் வர்க்கங்களின் விருப்பமும் இதுதான்.
உலகத்தை மேலாதிக்கம் செலுத்துவதற்காக அமெரிக்காவுக்கும் ரசியாவுக்கும் இடையே நடக்கும் கழுத்தறுப்பு போரில் மடியப்போவது என்னவோ மக்களும் ராணுவ வீரர்களும் தான். ஆனால், ஆதாயம் அடையப்போவது ஆளும் வர்க்கமும் – கார்ப்பரேட்டுகளும் தான்.
எனவே உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பையும், அமெரிக்கா தலைமையிலான கொலைகார நேட்டோவுடனான இணைப்பையும் ஆதரிக்க முடியாது. உக்ரைனை நவ நாஜிகளிடமிருந்து விடுவிக்கவே தான் போர் தொடுத்ததாக ரசியா கூறுவதும் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் இருந்து உக்ரைனை பாதுகாக்கவே உக்ரைன் – நேட்டோ ஒப்பந்தத்தில் இணைவதாகக் கூறுவதும் பின் தங்கிய ஏழை நாடுகளை வேட்டையாடுவதற்கான ஏகாதிபத்திய நாடுகளின் தந்திரங்களே அன்றி வேறல்ல.
படிக்க :
எத்தியோப்பிய உள்நாட்டுப் போர் : அமெரிக்காவின் மறைமுக ஆக்கிரமிப்புப் போரே !!
பாலஸ்தீனயர்களுக்கு எதிராக தொடரும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப் போர் || படக்கட்டுரை
விடுதலை, சுதந்திரம் ஆகியவை வழங்குவதும், பெறுவதும் அல்ல. அந்தந்த நாட்டு மக்கள் போராடிப் பெறுவதாகும். எனவே தான் தனித்து நிற்பதா அல்லது மற்றவர்களுடன் சேர்ந்து நிற்பதா என்பதை உக்ரைன் மக்கள் முடிவு செய்ய வேண்டும்.
சுயமாக முடிவு எடுக்கும் அதிகாரத்தையும், மற்றவர்களின் ஜனநாயகத்தையும் ஏகாதிபத்தியம் ஒருபோதும் அனுமதிக்காது. எனவே ஏகாதிபத்தியங்களின் ஆக்கிரமிப்பு போரை முறியடிக்க ஒவ்வொரு நாடுகளும் விடுதலைப் போரை முன்னெடுப்பதும் அதை சோசலிசத்தோடு இணைப்பதுமே உழைக்கும் மக்களுக்கு வாழ்வையும், ஏகாதிபத்தியங்களுக்கும் அதன் ஆளும் வர்க்கங்களுக்கும் சாவையும் துரிதப்படுத்தும் என்பதை பாரதிதாசன் வரிகளோடு இணைப்போம்.
“புதியதோர் உலகம் செய்வோம்;
கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்”

கதிரவன்

எல்.ஐ.சி பங்கு விற்பனையை நாம் ஏன் எதிர்க்க வேண்டும்? | கருத்துப்படங்கள் – பாகம் -2

எல்.ஐ.சி பங்கு விற்பனையை நாம் ஏன் எதிர்க்க வேண்டும்?
♣ ஒருபுறத்தில் எல்.ஐ.சி-யை கைப்பற்றுவது; மற்றொருபுறத்தில் எல்.ஐ.சி விற்பனையில் கிடைக்கும் பல்லாயிரம் கோடிகளை சுருட்டிக் கொள்வது.
♣ இதுதான் கார்ப்பரேட் கொள்ளைக்கான திட்டம்!
♣ எல்.ஐ.சி பங்கு விற்பனையால் அடித்தட்டு மக்களுக்கு கிடைக்கும் மலிவான காப்பீடுகள் தடுக்கப்படும்!
♣ எல்.ஐ.சி பங்கு விற்பனையால் புதிய வேலை வாய்ப்புகள் நிறுத்தப்படும். சமூகநீதிக்கு வேட்டு வைக்கப்படும்!
♣ எல்.ஐ.சி பங்கு விற்பனையால் சமூகநலத் திட்டங்களுக்கு கிடைக்கும் நிதி நிறுத்தப்படும்!
♣ எல்.ஐ.சி பங்கு விற்பனையால் முதலீடுகளில் கிடைக்கும் இலாபம் பங்குதாரர்களுக்கு (கார்ப்பரேட்டுகள்) பிரித்து கொடுக்கப்படும்!
♣ எல்.ஐ.சி பங்கு விற்பனையால் அரசின் வருவாய் தடுக்கப்படும். இதை ஈடுகட்ட மேலும், மேலும் பங்குகள் விற்பனை அதிகமாகும்!
♣ எல்.ஐ.சி-யில் இலாபம் குறையும். அதனால் நிறுவனம் தள்ளாடி விழுந்து விடும். அதன் பிறகு எல்.ஐ.சி மெல்ல, மெல்ல சாகும்!
♣ அதன் சொத்துக்களையும், நிதி இருப்பு மற்றும் முதலீடுகளையும் கார்ப்பரேட்டுகள் ஆள்வார்கள்!
♣ எல்.ஐ.சி பங்கு விற்பனையால் எல்.ஐ.சி-யை நம்பியுள்ள சுமார் 28 கோடி பாலிசிதாரர்களின் ரூ.39 இலட்சம் கோடிகள் பணம் சூறையாடப்படும்!
♣ எல்.ஐ.சி-யின் துணை நிறுவனங்களான LICHFL, வீட்டுவசதி நிறுவனம் போன்றவையும் முடங்கிப்போகும்.
♣ எல்.ஐ.சி பங்கு விற்பனையால் எல்.ஐ.சி முதலீடு செய்துள்ள ரிலையன்ஸ் (அம்பானி), டி.சி.எஸ் (டாடா) போன்றவற்றில் போடப்பட்ட முதலீடுகள் கபளீகரம் செய்யப்படும்!
♣ நலிவடைந்த (IDBI வங்கி போன்ற) நிறுவனங்களை தாங்கிப் பிடித்தல் போன்ற நடவடிக்கைகள் முடங்கி விடும்!
♣ எல்.ஐ.சி பங்கு விற்பனையை “பங்கு விற்பனைகளின் தாய்” என்று வர்ணிக்கின்றனர்.
♣ உண்மையில் இந்த பங்கு விற்பனையானது பாலூட்டிய தாயை விற்பதற்குச் சமம்!
எல்.ஐ.சி பங்கு விற்பனையை எதிர்க்கும் கடமையும், பொறுப்பும் நம் அனைவருக்கும் உள்ளது.
நன்றி : பு.ஜ.தொ.மு,
மாநில ஒருங்கிணைப்புக் குழு.

உக்ரைனிலிருந்தும் கிரீமிய தீபகற்பத்திலிருந்தும் ரஷ்யப் படைகளே வெளியேறு | கருத்துப்படங்கள்

உக்ரைனிலிருந்தும் கிரீமிய தீபகற்பத்திலிருந்தும் ரஷ்யப் படைகளே, வெளியேறு!
♦ உக்ரைனை இணைத்துக் கொண்டு, நேட்டோ (NATO) இராணுவக் கூட்டமைப்பை கிழக்கு ஐரோப்பாவில் விரிவுபடுத்தி, ரஷ்யாவை முற்றுகையிட்டுத் தாக்கத் துடிக்கும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களின் மேலாதிக்கப் போர் வெறியை முறியடிப்போம்!
♦ ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் எதிரான போட்டாபோட்டியை உலகப் போராகத் தீவிரப்படுத்த குவாட் (QUAD), ஆக்கஸ் (AUKUS) போர்க் கூட்டணிகளைக் கட்டியமைத்துள்ள அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்களின் மேலாதிக்க வெறியைத் தகர்த்தெறிவோம்!
♦ உலக நாடுகளின் சுதந்திரத்தையும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையையும் நிலைநாட்டப் போராடுவோம்!
♦ உக்ரைனிலிருந்தும் கிரீமிய தீபகற்பத்திலிருந்தும் ரஷ்யப் படைகளே, வெளியேறு!
♦ கிழக்கு ஐரோப்பாவிலிருந்தும் கருங்கடல் பிராந்தியத்திலிருந்தும் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளே, வெளியேறு!
♦ உலகப் பாட்டாளிகளே, ஒன்றுசேருங்கள்!
நன்றி :
மக்கள் கலை இலக்கிய கழகம்

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
மக்கள் அதிகாரம்

நீதிமன்றத்தில் பொய் வழக்குகளை உடைத்தெறிந்து மக்கள் அதிகாரம் தோழர்கள் விடுதலை !

க்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக கடந்த பல ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்களை கட்டியமைத்து நடத்தியுள்ளோம். குறிப்பாக கொரானா காலங்களில் மக்கள் வாழ்விழந்து வாழ வழியற்ற நிலையில் வாடியபோது அதனை எதிர்கொள்வதற்காக மக்களுடைய உரிமைகளை பெற்றுத்தர பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளோம்.
அப்படி நடத்திய பல்வேறு போராட்டங்களுக்கு தருமபுரி மாவட்ட காவல்துறை பல்வேறு பொய் வழக்குகளை போட்டு மக்கள் அதிகாரம் தோழர்களை அன்றாடம் நீதிமன்றத்திற்கு வந்து செல்லும் வகையில் 30-க்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்துள்ளது. இந்த வழக்கினால் பல முன்னணியாளர்கள் தோழர்கள் பாதிக்கப்பட்டு சொந்த வேலை இழந்து தினம்தோறும் நீதிமன்றம் சென்று வருகின்றனர்.
கடந்த 3 ஆண்டுகளாக வழக்கிற்காக அலைகழிக்கப்படுகின்றனர். இந்நிலையில் இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற STC-எண் 753,2828,399,669 ஆகிய 4 வழக்குகளில் கடந்த 21.2.2022, 22.2 2022 ஆகிய தேதிகளில் 20-க்கும் மேற்பட்ட தோழர்கள் இது பொய் வழக்குதான் என்பதை நிறுவி விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
நீதிமன்றம் என்பது மக்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கான இடமாக ஒருநாளும் இருந்ததில்லை. குறிப்பாக நீதிமன்றம் என்றாலே, மக்களுக்காக போராடுபவர்களை, சமூக மாற்றத்தை விரும்புபவர்களை, நக்சல்பாரி புரட்சியாளர்களை, அடக்கி ஒடுக்கி ஆளுகின்ற ஒரு சர்வாதிகார கூட்டம் என்ற வகையிலே தான் செயல்படுகிறது. எடப்பாடி ஆட்சி செய்த காலத்தில் மத்தியில் ஆளும் பாஜக-விற்கு துணையாக நின்று எந்த போராட்டங்கள் நடத்தினாலும் பொய் வழக்குகளை போட்டு வந்தது, போலீசு.
குறிப்பாக வேளாண் சட்டம், நீட் எதிர்ப்பு, காவிரி பிரச்சனை, இப்படி பல்வேறு பிரச்னைகளில் மக்கள் அதிகாரம் தலையிட்டு போராடி வந்தது. அதேபோல் பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல போராட்டங்களை முன்னின்று நடத்தினோம். பாசிச பாஜகவுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தியது எமது அமைப்பு தான். இப்படி ஜனநாயக முறையில் போராடுவதற்கு சட்டம் வழங்கிய ஜனநாயகத்தை ஒருபோதும் தருமபுரி காவல்துறை மதித்து நடந்தது கிடையாது.
நான் போடுவது பொய் வழக்கு தான் என்னை ஒன்றும் புடுங்க முடியாது என்று வெளிப்படையாகவே B1 காவல் ஆய்வாளர் ரத்தினகுமார் பேசினார். கொரானா காலத்தில் நிவாரணம் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கச் சென்றதைக் கூட வழக்குப் போட்டு இன்று வரை நீதிமன்றத்திற்கு அலைக்கழிக்க வைக்கின்றனர். இப்படி எண்ணற்ற பொய் வழக்குகளை தருமபுரி மாவட்ட காவல்துறை போட்டு வருகிறது.
தற்போது ஆட்சியைப் பிடித்த திமுகவோ இதுபோன்ற போராட்ட வழக்குகளை எல்லாம் நாங்கள் ரத்து செய்கிறோம் என்று அறிவித்தது. இந்த அறிவிப்பு அறிவிப்பாக மட்டுமே இருக்கிறது. இன்றுவரை குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்கு, வேளாண் சட்டத்திற்கு எதிரான வழக்கு, நீட்டுக்கு எதிரான போராட்டத்தின் வழக்கு என பல வழக்குகளுக்கு இன்றும் நீதிமன்றத்தின் படி ஏறித்தான் வருகிறோம்.
தமிழக அரசின் மூலமாக கொடுக்கப்பட்ட அரசாணையை நீதிமன்றத்தில் கொடுத்தால்கூட வழக்கு தள்ளுபடி பற்றி நான் முடிவு செய்ய முடியாது என்கிறார் நீதிபதி. சட்டம் ஒன்றாகவும், நடைமுறை வேறாக இருக்கிறது. இதுபோன்ற பொய் வழக்குகளை தமிழக அரசின் அரசாணையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க கூட அரசு வழக்கறிஞர்கள் முன்வருவதில்லை. சட்டத்தை துளியும் மதிப்பது கிடையாது. ஆனால் நாங்கள் வழக்குகளை எல்லாம் ரத்து செய்து விட்டோம் என்ற வெற்று அறிவிப்பு மட்டும் சாதனை பட்டியலில் உள்ளது.
படிக்க :
உக்ரைன் போர் : ரசிய – அமெரிக்க ஏகாதிபத்தியங்களின் போர் வெறியை எதிர்ப்போம் || புரட்சிகர அமைப்புகள் அறிக்கை
எச்சரிக்கை – உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் || களத்தில் காலூன்றும் ஆர்.எஸ்.எஸ். – பாஜக !
வேளாண் சட்டம் ரத்து செய்துவிட்ட பிறகு கூட அதற்கான வழக்கை நீதிமன்றம் நடத்துவது கேலிக்கூத்தானது. அரசின் உண்மையான நோக்கம் போராடுபவர்களை ஒடுக்குவது தான். கடந்த இரண்டு ஆண்டுகளாக 30-க்கும் மேற்பட்ட தோழர்கள் நீதிமன்றத்தால் அலைக்கழிக்கப்பட்டு வருகிறோம். அந்த வழக்குகளை எல்லாம் தருமபுரி காவல்துறை திட்டமிட்டு பதிவு செய்து அதன் மூலமாக ஒரு பழிவாங்கும் நடவடிக்கையில் இன்றளவும் ஈடுபட்டுவருகிறது.
ஏன் பழி வாங்குகிறது? மக்கள் அதிகாரம் அமைப்பு தொடர்ச்சியாக சமூக பிரச்சனைகளில் தலையிட்டு போராடுகிறது. அந்த அமைப்பின் செயல்பாடுகளை ஒடுக்க வேண்டும் என்றால் அதற்கு பொய் வழக்குதான் சரி என பார்க்கிறது காவல் துறை. மிகக் கேவலமான வேலைகளில் கீழ்த்தரமாக செயல்படுகிறது தமிழக அரசு. இதுபோன்ற பொய் வழக்குகளை துணிவோடு எதிர்கொண்டு போராடி வருகிறது மக்கள் அதிகாரம்.
இந்த வழக்குகளை எதிர்கொள்வதற்காக தோழர் பாலசுப்பிரமணியன், வழக்கறிஞர், தோழர் ஆசியஜோதி, வழக்கறிஞர், தோழர் பிரசாந்த், வழக்கறிஞர் ஆகியோர் தொடர்ந்து போராடி நீதிமன்றத்தின் பொய்களை உடைத்தெறிந்து விடுதலையை பெற்றுத் தந்துள்ளனர். இது போன்ற பல்வேறு வழக்குகள் இன்னும் நிலுவையில் இருக்கிறது. வரும் காலங்களில் பிற வழக்குகளையும் பொய் வழக்கு என்பதை நிருபித்து விடுதலை பெறுவோம்.

தகவல்:
மக்கள் அதிகாரம்
தருமபுரி மண்டலம்
9097138614.

கர்நாடகாவில் ஹிஜாப் தடை – தில்லை கோவிலில் தமிழுக்கு தடை || தர்மபுரி மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்

“இஸ்லாமியருக்கு ஹிஜாப் தடை, தில்லையில் தமிழனுக்கும் தமிழுக்கும் தடை. தில்லை இருப்பது தமிழ்நாடா இல்லை அதற்குள் ஒரு தனி நாடா? தில்லைக் கோயிலை இந்து அறநிலை துறையின்கீழ் கொண்டு வர சிறப்பு சட்டம் இயற்று” என்ற முழக்கத்தின் கீழ், கடந்த 28. 02. 2022 அன்று மாலை 3 மணிக்கு, பென்னாகரம் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கர்நாடகாவில் கலவரத்தைத் தூண்டி அதன் மூலம் ஆட்சியை தக்க வைக்கவும், மீண்டும் மீண்டும் இந்து மதவெறியின் சோதனைச் சாலையாக மாற்றுவதற்கும், கர்நாடக பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே இந்து-முஸ்லிம் என்ற மத உணர்வை தூண்டி அதன்மூலம் பிரிவினையை ஏற்படுத்தி கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்ற ஆர். எஸ். எஸ், பாஜக-வின் சதியை முறியடிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
அந்தவகையில் பாஜக ஆர்.எஸ்.எஸ். கும்பல் நாடு முழுவதும் திட்டமிட்டு இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்து, பொதுச்சொத்தை சூறையாடுவதை மறைப்பதற்காகவும் தங்களது இந்து ராஷ்டிரக் கனவை நனவாக்கவும் இந்த கலவரத்தைத் தூண்டி வருகிறது.
தமிழ்நாட்டில் இருக்கும் தில்லை நடராஜர் கோயில் தமிழ் மக்களால் கட்டப்பட்ட கோயிலாகும். இந்தக் கோயிலில் தமிழில் பாடினால் சாமி தீட்டாகிவிடும் என்றும் தமிழில் தேவாரம் திருவாசகம் பாடக்கூடாது என்றும் மொழி தீண்டாமையை இன்றும் கடைபிடிக்கும் தீட்சிதர்களுக்கு எதிராக, தில்லை கோயிலை தீட்சித பார்ப்பன கும்பலிடம் இருந்து மீட்டெடுக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. அது உழைக்கும் மக்களின் போராட்டத்தின் மூலமாக தான் வெற்றி கொள்ள முடியுமே, தவிர வெறுமனே நீதிமன்ற போராட்டத்தின் மூலமாக மட்டும் நீதி கிடைக்காது.
தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிழர்கள் சோற்றை சாப்பிட்டுவிட்டு, தமிழ் மண்ணுக்கு துரோகமிழைக்கும் பார்ப்பனக் கும்பலை தமிழகத்தை விட்டே விரட்டி அடிக்க வேண்டும். லட்சுமி என்ற பெண்ணை தாக்கிய தீட்சதர் கும்பலை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும். என்ற அடிப்படையில் தோழர்கள் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரத்தின் பென்னாகரம் வட்டார செயலாளர் தோழர் அருண் அவர்கள் தலைமை தாங்கினார். கண்டன உரையாக சிபிஐ மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் தோழர் மாதையன், விசிக பென்னாகரம் தொகுதி செயலாளர் தோழர் கருப்பண்ணன்,  மக்கள் ஜனநாயக இளைஞர் முன்னணி மாவட்ட பொறுப்பாளர் தோழர் பெரியண்ணன்,  மக்கள் அதிகாரம் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் முத்துக்குமார் ஆகியோர் உரையாற்றினர்.
இறுதியாக மக்கள் அதிகாரம் பென்னாகரம் வட்டார இணைச்செயலாளர் தோழர் சிவா அவர்கள் நன்றி உரையாற்றினார்.

தகவல்
மக்கள் அதிகாரம்
தர்மபுரி மண்டலம்
9790138614

நூல் அறிமுகம் : இப்போது உயிரோடிருக்கிறேன் || நமக்கு ஏன் இத்தனை எதிரிகள் ? || முரளிதரன்

நமக்கு ஏன் இத்தனை எதிரிகள்?
டந்த நூற்றாண்டில் ஊடகங்கள், அவற்றின் போக்கு எப்படியிருந்திருக்கிறது என்பது குறித்து விரிவாக வெகுசில ஆய்வுகளே வெளியாகியிருக்கின்றன. ஆனால், ஊர் ஊராகப் பயணம் செய்து, தீவிரமாக செயல்படக்கூடிய ஒரு அரசியல் தலைவர் ஒரு கால் நூற்றாண்டிற்கு ஊடகங்களைக் கவனித்து, அவற்றின் போக்கு குறித்து மக்களிடம் தொடர்ந்து பேசியும் எழுதியும் வந்திருக்கிறார் என்பது ஆச்சரியமளிக்கிறது. அவர் பெரியார்!
ஒரு கால் நூற்றாண்டிற்கு, அதாவது 1925 முதல் 1949 வரை பெரியாரின் ஊடகங்கள் குறித்த கட்டுரைகளை பொருள்வாரியாகப் பிரித்து தொகுத்திருக்கிறார் டாக்டர் இரா. சுப்பிரமணி.
இந்தக் கால் நூற்றாண்டில் குடியரசு, பகுத்தறிவு, புரட்சி ஆகிய இதழ்களில் இதழியல், ஊடகங்கள், பத்திரிகைகள் குறித்து வெளியான உரைகள், தலையங்கங்கள், துணைத் தலையங்கங்கள், கட்டுரைகள், குறிப்புகள் ஆகியவை
1. தந்தை பெரியாரின் பார்வையில் இதழ்கள்
2. ஏன் தொடங்கினேன் இத்தனை இதழ்கள்?
3. பெரியார் போற்றிய தோழமை இதழ்கள்
4.தந்தை பெரியாரின் வழக்காடும் இதழியல்
5. தந்தை பெரியாரின் நூல் மதிப்புரைகள்
என ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டு தொகுக்கப்பட்டிருக்கின்றன.
மொத்தம் 410 கட்டுரைகள்!
இந்தக் கட்டுரைகளையும் பெரியாரின் பார்வையையும் சரியாகப் புரிந்துகொள்ள ஏதுவாக, அந்த காலகட்டத்திலும் அதற்கு சற்று முந்தைய காலகட்டத்திலும் வெளியான இதழ்கள் குறித்தும் அந்த காலகட்டம் குறித்தும் 14 விரிவான அறிமுகக் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார் சுப்பிரமணி.
அந்த காலகட்டத்தின் இதழ்கள் மக்கள் மீது செலுத்திய செல்வாக்கைச் சரியாகவே உணர்ந்திருந்த பெரியார், அவற்றைப் பற்றி எழுதுவதும் சொந்தமாக பத்திரிகைகளைத் தொடங்கி தனது கருத்தைப் பரப்புவதும் மிக முக்கியம் என்பதை உணர்ந்திருக்கிறார்.
குறிப்பாக, ஏன் தொடங்கினேன் இத்தனை இதழ்கள் என்ற பகுதி மிகச் சிறப்பான ஒன்று. குடியரசு, பகுத்தறிவு, புரட்சி, ரிவோல்ட், விடுதலை, உண்மை என வெவ்வேறு பத்திரிகைகளை அவர் தொடங்கி நடத்த வேண்டிய காரணம், ஒவ்வொரு இதழையும் கொண்டுவருவதில் அவர் எதிர்கொண்ட சிரமங்கள், ரெய்டுகள், வழக்குகள், அபராதங்கள், அவற்றை முடக்க மேற்கொள்ளப்பட்ட அரசின் நடவடிக்கைகள் போன்றவை இந்தப் பகுதியில் விரிவாக காணக்கிடைக்கின்றன. தனது பத்திரிகைகள் குறித்த சின்னச் சின்னத் தகவல்களைக்கூட வாசகர்களிடம் பகிர விரும்பியிருக்கிறார் பெரியார்.
புத்தகத்தின் இறுதியில் பல்வேறு பத்திரிகைகள் குறித்த சிறு அறிமுகக் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.
புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சில ஆர்வமூட்டும் தலைப்புகளைப் பாருங்களேன்:
‘நமது துணை ஆசிரியர் விலகுகிறார்’
‘குடி அரசு வாசகர்களுக்கு ஒரு உண்மையான முன்னறிவிப்பு’
‘பயமுறுத்தல் கடிதங்கள்’, ‘1550 புத்தகங்கள் கைப்பற்றப்பட்டது’
‘ஆளவந்தாருக்கு எச்சரிக்கை’
‘மித்திரன் புரட்டு நிருபர்களின் அயோக்கியத்தனம்’!
சுதேசமித்திரன், தினமணி, விகடன் போன்றவை அவருடைய விருப்ப இலக்குகளாக இருந்திருக்கின்றன.
பெரிய சைஸில் 800 பக்கங்களோடு பிரம்மாண்டமாக வெளியாகியிருக்கிறது இந்தப் புத்தகம்.
இதழியல் மாணவர்கள், ஆய்வாளர்கள், 20-ம் நூற்றாண்டின் மத்தியப்பகுதியில் தமிழ் சமூகத்தின் மீது இருந்த தாக்கங்களை புரிந்துகொள்ள விழைவோர் கண்டிப்பாக வாங்கிப் படிக்க வேண்டிய புத்தகம் இது!
ஏன் நமக்கு இத்தனை எதிரிகள்?
வெளியீடு: விடியல் பதிப்பகம்
விலை : ரூ. 1000/-
புத்தகக் கண்காட்சியில் ரூ. 700க்குக் கிடைக்கும்.
முகநூலில் : முரளிதரன்
000
இப்போது உயிரோடிருக்கிறேன்
மிழின் மிக முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான இமையத்தின் நாவல்களாக இருந்தாலும் சிறுகதைகளாக இருந்தாலும், அவை படிப்பவர்களை ஒரு கணமாவது உலுக்கிவிடும்.
படிக்க :
நூல் அறிமுகம் : செல்லாத பணம் || இமையம் || எஸ். காமராஜ்
நூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ். இந்தியாவிற்கு அச்சுறுத்தல் || ஆர்.எஸ்.எஸ். எனும் டிரோஜன் குதிரை
‘கோவேறு கழுதைகள்’லில் இருந்து இப்போது வெளியாகியுள்ள ‘இப்போது உயிரோடிருக்கிறேன்’வரை இதில் விதிவிலக்கு இல்லை. அவருடைய எல்லாப் படைப்புகளோடும் ஒப்பிடுகையில் மிகுந்த துயரமும் கையறுநிலையும் படிந்த படைப்பாக இந்த நாவலைச் சொல்லலாம்.
பள்ளிச் சிறுவன் ஒருவனுக்குத் திடீரென சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகிறது. இதற்குப் பிறகு அந்தக் குடும்பமே நிலைகுலைந்து விடுகிறது. கிராமத்தைச் சேர்ந்த அவனுடைய பெற்றோர் இருக்கும் பணத்தைப் புரட்டிக்கொண்டு, நகரத்திற்கு வந்து ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். வாரத்திற்கு இரண்டு முறை டயாலிசிஸ் செய்ய வேண்டும். முடிவில் அவனது தாயாரின் சிறுநீரகம் அவனுக்குப் பொருத்தப்படுகிறது.
ஆனால், அதோடு பிரச்சனை முடியவில்லை. திடீரென க்ரியாட்டின் அளவு அதிகமாக இருக்கிறது. ஏற்கெனவே நொறுங்கிப் போயிருக்கும் அவனுடைய தந்தை, இடி விழுந்ததைப் போல ஆகிவிடுகிறார். பயாப்சி சோதனைக்காக அந்தச் சிறுவன் காத்திருப்பதைப் போல நாவல் முடிவுக்கு வருகிறது.
இந்த ஒற்றைச் சிறுவனின் வாழ்வைச் சொல்வதின் மூலம், நாள்தோறும் வாழ்வுக்கும் மரணத்திற்கும் இடையில் ஊசலாடும் ஆயிரக்கணக்கான சிறுநீரக நோயாளிகளின் வாழ்விற்குள் அழைத்துச் செல்கிறார் இமையம்.
ஒரு படைப்பு என்றவகையில் இமையம் மீண்டும் ஒரு உச்சத்தைத் தொட்டிருக்கிறார். ஆனால், இந்த நாவலைப் படிக்கும்போது உணர்வுரீதியாக பெரும் விலகலோடு படிக்க வேண்டும். இல்லாவிட்டால், அந்தச் சிறுவனாகவோ அவனது பெற்றோராகவோ உணர்ந்து மனமுடைய நேரும்.
மருத்துவத் துறையைப் பொறுத்தவரை, சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்ட நோயாளிகளுக்கு டயாலிசிஸ் செய்வது, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை போன்றவற்றில் கவனம் செலுத்துகிறது. ஆனால், ஒருவருக்கு செயலிழப்பு ஏற்பட்டுவிட்டால், அவர்கள் வாழ்நாள் முழுக்க நோயாளிதான். ஆகவே, சிறுநீரக நோயைத் தடுப்பதற்கான வழிமுறைகளும் அவற்றைப் பின்பற்றுவதுமே மிக முக்கியம். தமிழ்நாடு அரசின் கவனத்தை அந்தத் திசையில் இந்த நாவல் திருப்புமானால், அதுதான் இமையத்தின் மிகப் பெரிய வெற்றியாக இருக்கும்.
நூல் : இப்போது உயிரோடிருக்கிறேன்
ஆசிரியர் : இமையம்
வெளியீடு : க்ரியா (Stall No. 228)
விலை : ரூ. 345/-
முகநூலில் : முரளிதரன்
disclaimer

எல்.ஐ.சி பங்கு விற்பனையை நாம் ஏன் எதிர்க்க வேண்டும்? | கருத்துப்படங்கள் – பாகம் -1

எல்.ஐ.சி பங்கு விற்பனையை நாம் ஏன் எதிர்க்க வேண்டும்?
♠ 1956-ல் ரூ.5 கோடி முதலீட்டில் துவக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனம், எல்.ஐ.சி !
♠ எல்.ஐ.சி தொடங்கி 65 ஆண்டுகள் ஆகின்றன. இன்றைய சொத்து மதிப்பு ரூ.39 இலட்சம் கோடிகளுக்கும் மேல்!
♠ அரசு கொடுத்த ரூ.5 கோடி முதலீட்டுக்கான டிவிடென்ட் ஆக இதுவரை ஒரு இலட்சம் கோடிக்கு மேல் ஒன்றிய அரசுக்கு கொடுத்துள்ளது!
♣ சுமார் 1.5 இலட்சம் ஊழியர்கள், அதிகாரிகளுக்கு வேலை கொடுத்துள்ளது. சுமார் 12 இலட்சம் முகவர்களுக்கு வாழ்வளிக்கும் ஆதாரமாகத் திகழ்கிறது!
♣ தன்வசமுள்ள ரூ.39 இலட்சம் கோடிகளில் சுமார் ரூ.36 இலட்சம் கோடிகளுக்கு பல துறைகளில் முதலீடுகள் செய்துள்ளது.
♣ ஒன்றிய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களுக்கு மிகக்குறைந்த வட்டியில் கடன் கொடுத்து மக்கள் நலனுக்கு மூலதன நிதியளிப்பாளனாகத் திகழ்கிறது.
♣ எல்.ஐ.சி-யில் கொழுத்த பணம் இருக்கிறது. அதனை பங்கு போட்டு விற்றால் நிறைய பணம் கிடைக்கும் என்கிறது, மோடி அரசு!
♣ எல்.ஐ.சி-யின் உரிமையாளர் அரசு என்றாலும், அதில் போடப்பட்டுள்ள 39 இலட்சம் கோடி பணமும் மக்களது பணம்தான்!
♣ மக்களது பணத்தை தனியார் நிறுவனங்கள் கைப்பற்றும் நோக்கமே இந்த பங்கு விற்பனை!
♠ சுமார் 31.6 கோடி பங்குகளை (மொத்த பங்கில் 5%) விற்பதன் மூலம் ரூ.65,000 கோடிகள் அரசின் கஜானாவுக்கு கிடைக்கும் என்கிறது, மோடி அரசு!
♠ கஜானாவில் குவியும் ரூ.65,000 கோடிகளை யாருக்கு செலவிடப் போகிறார்கள்?
♠ இவ்வளவு கோடிகளும் கார்ப்பரேட் கொள்ளைக்குத்தான் தரப் போகின்றனர்!
♠ இந்தியாவின் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனம் எல்.ஐ.சி.தான்!
♠ எல்.ஐ.சி-யின் சொத்து மதிப்பு பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) விட அதிகம்!
♠ கடந்த 65 ஆண்டுகளில் நட்டம் என்பதையோ, இலாபத்தில் சரிவு என்பதையோ இதுவரை சந்தித்திராத ஒரே பொதுத்துறை எல்.ஐ.சி.தான்!
♠ கடந்த 25 ஆண்டுகளாக முழுமையாகவோ, பகுதியாகவோ நடந்த அனைத்து பொதுத்துறை விற்பனைக்கும் நட்டம் என்பதைத்தான் அரசு தரப்பில் பிரதான காரணமாக காட்டப்பட்டது!
♠ உலகத்தரம் வாய்ந்த உலகின் டாப் 10 இன்சூரன்ஸ் நிறுவனங்களில் ஒன்றான எல்.ஐ.சி-யின் பங்குகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது!
♠ எல்.ஐ.சி பங்கு விற்பனைக்கு நட்டம் காரணம் அல்ல; அதை அழிக்கும் முயற்சிதான்!
♠ எல்.ஐ.சி பங்கு விற்பனையால் மக்கள் பணத்தை கார்ப்பரேட்டுகள் திருடுவதற்காக கதவுகள் முற்றாகத் திறக்கப்படும்!
♠ எல்.ஐ.சி பங்கு விற்பனையால், பாலிசிதாரர்களுக்கு கிடைக்க வேண்டிய உபரியில் கணிசமானதை பங்குதாரர்கள் என்கிற பெயரில் கார்ப்பரேட்டுகள் உறிஞ்சிக் கொள்வார்கள்!
எல்.ஐ.சி பங்கு விற்பனையை எதிர்க்கும் கடமையும், பொறுப்பும் நம் அனைவருக்கும் உள்ளது.
நன்றி : பு.ஜ.தொ.மு,
மாநில ஒருங்கிணைப்புக் குழு.

ஹிஜாப் தடை! தில்லையில் தமிழுக்கும் தமிழனுக்கும் தடை || மார்ச் 7,8,9 மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்

ர்நாடகத்தில் கல்வி நிறுவனங்களில் இசுலாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தடைவிதித்தது அம்மாநில பிஜேபி அரசு. தில்லை நடராஜர் கோவிலில் சிற்றம்பல மேடை ஏறிய ஒரு தலித் பெண்ணை சாதி ரீதியாக இழிவுபடுத்தி தாக்கியுள்ளனர் கோவில் தீட்சிதர்கள். கர்நாடக ஹிஜாப் தடையைக் கண்டித்தும், தில்லை கோயிலில் தலித் பெண் பக்தர் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் மக்கள் அதிகாரம் அமைப்பு மார்ச் 7,8,9 தேதிகளில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளது.
♠ இசுலாமியர்களுக்கு ஹிஜாப் தடை!
♠ தில்லையில் தமிழுக்கும் தமிழனுக்கும் தடை !
♠ தில்லை இருப்பது தமிழ்நாடா ? அதற்குள் தனிநாடா ?
♠ தீண்டாமை சின்னமான நந்தன் நுழைந்த தெற்கு வாயில் சுவரை அகற்றுவோம்!
♠ தில்லை கோயிலை இந்து அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர சிறப்புச்சட்டம் இயற்று !
மார்ச் 7,8,9 – தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் !!
அனைவரும் வாரீர்!
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

இலக்கியம் கற்றுக்கொள்ள இலக்கிய நூல்கள் மட்டும் போதுமா ? || பாவெல் சக்தி

புதிதாக இலக்கியம் கற்றுக்கொள்ளும் முனைப்பில் இருக்கும் நண்பர்கள் பலர், புத்தகக் கண்காட்சியில் எதை வாங்குவது என்றுத் தெரியாமலும், ஏமாந்து விடக்கூடாது என்ற முனைப்பிலும் மூத்த எழுத்தாளர்களின் முக்கியமான இலக்கிய நூல்களின் பட்டியல்களை ஆங்காங்கே கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
என்னிடமும் கேட்கிறார்கள். நானும், நான் படித்த புதுமைப்பித்தனில் தொடங்கி ஜெயமோகன் வரையும் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் தொடர்ந்து அவர்களுக்கு பரிந்துரை செய்தும் வருகிறேன். ஆனாலும் ஒவ்வொரு முறையும் இந்தப் பரிந்துரைகளைச் செய்யும்போதும் ஒரேயொரு கேள்வி மட்டும் எப்போதும் எழும்.
“இலக்கியம் கற்றுக்கொள்ள இது மட்டும் போதுமா?”
அப்படியே இந்தக் கேள்வி எழத் தொடங்கும்போது தோழர் பிளக்ஹானவ் அவர்களின் இந்த மேற்கோளும் கூடவே தொற்றிக்கொண்டு வந்துவிடும்.
“கலைஞர்களும் கலைப் படைப்புகளில் ஆழ்ந்த அக்கறைக் கொண்டோரும், அவர்களைச் சுற்றிலுமுள்ள சமுதாயச் சூழலிடம் தீர்வுகாண முடியுமென்ற நம்பிக்கைக்கு இடமின்றி அதனுடன் பிணக்கு கொள்ளும்போது, கலை கலைக்காவே என்ற போக்குடையவர்களாக மாறுகின்றனர்”
படிக்க :
இதயத்தை ஈரமாக்குவது இலக்கியமா? அரசியலா?
சுயமோகன்: ஊட்டி இலக்கியச் சந்திப்பு குறித்து…
அவர் கூறியதை கொஞ்சம் விரிவுபடுத்தினால், அவர்கள் கலை கலைக்காக என்ற போக்குடையவர்களாக மட்டுமல்ல, கலை இலக்கியம் யாவும் மக்களுக்காக என்ற கோட்பாட்டின் எதிரிகளாவும் இருக்கின்றனர் என்பதையும் நாம் காணமுடியும்.
இங்கேயும் அப்படி பலர் இருங்கிறார்கள். அவர்களின் பெயர்களைச் சொல்வது இந்தப் பதிவின் நோக்கமல்ல. இந்த இடத்தில் நீங்கள், ஆளும் வர்கத்தின் ஒடுக்குமுறையின்கீழ் ஒவ்வொருமுறையும் மக்கள் தாங்க முடியாத அளவிற்கு சித்ரவதைக்கு ஆளாகும்போதும் எந்த எழுத்தாளர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று கொஞ்சம் கற்பனை செய்து பார்த்தாலே போதுமானது.
இப்படிச் சொல்வதால், அவர்களை நாம் தெருவில் இறங்கிப் போராடவோ, சிறைக்கு செல்லவோ, வழக்குகளை வாங்கவோ கட்டாயப்படுத்தவில்லை. குறைந்தபட்சம் அவரவர் கதைகளில் அதை நேர்மையாக தொடர்ந்து பிரதிபலிக்கவாவது செய்திருக்கிறார்களா? பின் இவர்களை படிக்கும் நாம் மட்டும் எவ்வாறு மக்களின்பால் அக்கறை கொண்டவர்களாக இருப்போம் இல்லையா? படிப்படியாக நாமும் அவர்களைப்போலே மாறிப்போய்விடுவோம்தானே..? ஆபத்து என்பது அதுதான்.
இதைப்பற்றி பலமுறை நாம் பேசிவிட்டோம் என்பதால், இப்போது புதுமைப்பித்தன், மண்ட்டோ என்ற வெறும் இருவரை மட்டும் உதாரணத்திற்கு எடுத்துகொள்வோம்.
புதுமைப்பித்தனைப் படியுங்கள். அவர் கதைகளில் அந்தக் காலத்தில் உருவான அதிகார வர்க்கம் இருக்கும். எரியும் பனிக்காடு நாவல் பேசும் துயரத்தை துன்பக்கேனியில் அவர் முன்னெடுத்திருப்பார். பொன்னகரம், ஒப்பந்தம் போன்ற கதைகளில் அந்த காலத்தில் யாரும் கேட்க முடியாத விஷயங்கள் கேள்விகுள்ளாக்கப்பட்டிருக்கும். அப்படியே இன்னொருவரான மண்ட்டோ பக்கம் வாருங்கள். அவரைப்பற்றி சொல்ல வேண்டுமா என்ன? பிரிவினையில் மதவாதம் தின்று செரித்த மனித இறைச்சியின் கழிவையல்லவா நம் முகத்தில் விடாமல் தூக்கி வீசுகிறார்!
ஆனால் அந்த காலத்திலும் சரி, இப்போதும் சரி. அரசியலின் பெயரால் இதுபோன்ற துயரங்கள் நடக்கும்போதும், மனிதக் கழிவுகளை அவர்கள் வீசி எரியும்போதும்… அதைத் துடைக்கக்கூட தகுதியில்லாதவர்களும், திராணியில்லாதவர்களும், வக்கில்லாதவர்களும்தான்…
சமூகத்தில் எந்த மாதிரியான அசாதாரண சூழல் நிலவினாலும், அதன் சமகாலத்தை பேசக்கூடாது என்றும், மக்கள் பிரச்சனையை பேசும் படைப்புகள், முக்கியமாக கம்யூனிசம் பேசும் படைப்புகள் அனைத்தும் பிரச்சார இலக்கியங்கள் என்றும், எழுத்தாளனுக்கு சமூகப் பொறுப்பு அவசியமில்லை; அவன் தனித்துவமானவன் என்றும், கலை கலைக்காகவே என்றும் பேசிக்கொண்டு, மதவாத பாசிச அரசியல் கருத்துக்களோடும், போலி அறங்களோடும், அரசிற்கு, அதிகாரத்திற்கு கொஞ்சமும் வலிக்காத கதைகளாக எழுதிக் குவித்துக் கொண்டிருந்தார்கள்; குவிக்கிறார்கள்.
இதற்கு மாறாக, “இலக்கியப் படைப்பு என்பது உழைக்கும் மக்களின் ஒரு ஆயுதமாக இருக்க வேண்டும்” என்று நாம் சொன்னாலோ, இப்படிப்பட்ட நூல்களைப் புறக்கணித்தாலோ… “மக்களுக்கு அறிவு கிடையாது. வாசகன் கேள்வி கேட்கக்கூடாது. இவர்கள் முட்டாள்கள். இலக்கியத்தின் ஆழத்தை உணராதவர்கள்” என்று நம்மீது பழிபோட்டு நம் குற்ற உணர்ச்சியையே தூண்டுவார்கள்.
அதேநேரம் இப்படி இலக்கியத் தூய்மைவாதம் பேசும் இவர்களின் பின்புலம் என்பது வெறும் இலக்கியத்தை மட்டுமா சார்ந்து இருக்கிறது…? அவர்களின் எழுத்துக்களும் பாசிசம், மதவாதம், பின்நவீனத்துவம், அடையாள அரசியல் போன்ற கழிசடை அரசியல்களை மையமாகக் கொண்டுதானே இயங்குகிறது? ஏதோ ஒரு வகையில் இந்தப் புரிதல் இருப்பதினால்தான் நண்பர்கள் இலக்கிய நூல்களின் பரிந்துரைகள் கேட்கும்போது எனக்கு எப்போதும் அந்தக் கேள்வி எழுகிறது.
படிக்க :
நூல் அறிமுகம் : லெனின் மார்க்சை எவ்வாறு பயின்றார் ?
மார்க்ஸ் – எங்கெல்ஸ் : இணைபிரியா இரட்டையர்கள் !
இந்த இடத்தில்தான், இலக்கியம் என்பதை கலகம் செய்யத் துணிந்து விட்டவனின் ஆயுதம் என்று மக்சிம் கார்க்கி சொன்னதையும், ஒரு இலக்கியப் படைப்பு என்பது வரலாற்று சக்கரத்தை ஒருபோதும் பின்நோக்கி இழுக்கக்கூடாது, அது அதிகாரத்திற்கு எந்த நிலையிலும் துணை போகக்கூடாது, இலக்கியம் என்பது எப்போதும் அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒன்று கிடையாது; அப்படி போதிப்பவர்களை எள்ளி நகையாட வேண்டும் என்பதையும் முற்று முழுவதுமாக ஏற்கிறேன்.
அந்த வகையில்…
1. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை
2. கூலியுழைப்பும் மூலதனமும் – மார்க்ஸ்
3. குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் – எங்கெல்ஸ்
4. அரசும் புரட்சியும் – லெனின்
5. மார்க்சியம், தேசிய இனப் பிரச்சனை மற்றும் மொழியியல் (கட்டுரைகள்) – ஸ்டாலின்
6. முரண்பாடு பற்றி – மாவோ
என இந்த ஆறு நூல்களையும்… தொடக்க நிலையில் உள்ள ஒருவர் மக்களையும், சமூகத்தையும், இலக்கியத்தையும், அரசியலையும் புரிந்துகொள்ள கண்டிப்பாக பயில வேண்டும்.
என்னைப் பொறுத்தவரை, எனக்கு மாபெரும் இலக்கிய நூல்கள் என்பது இந்த ஐவர் எழுதிய அனைத்து நூல்களும்தான். இவற்றுக்கு பின்தான் மற்ற அனைத்தும்.
முகநூலில் : பாவெல் சக்தி

disclaimer