பீகார் மாநிலத்தில் மூளைக்காய்ச்சலுக்கு பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 100-ஐத் தொட்டுள்ளது. வெப்பம், ஊட்டச்சத்து பற்றாக்குறை மற்றும் போதிய விழிப்புணர்வின்மை காரணமாக மூளைக்காய்ச்சல் அதிவேகமாகப் பரவி வருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
2018-ம் ஆண்டில் ஏழு பேர் உள்பட இந்த ஆண்டு மொத்தம் 103 பேர் மூளைக்காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகள்.
பீகாரில் அடுத்தடுத்து குழந்தைகள் பலியாவது தேசிய அளவிலான செய்தியாகிவிட்ட நிலையில், குழந்தைகளின் மரணம் குறித்து அறிக்கையை சமர்பிக்கும்படி மனித உரிமைகள் ஆணையம் மத்திய, மாநில அரசுக்கு நோட்டீசு அனுப்பியுள்ளது.
மூளைக் காய்ச்சல் பாதிப்பால் முசாஃபர்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தை.
மருத்துவரீதியாக மூளைக்காய்ச்சல் மரணங்களுக்கு வெப்பம், ஊட்டச்சத்து பற்றாக்குறை மற்றும் போதிய விழிப்புணர்வின்மை ஆகியவை காரணங்களாக சொல்லப்படுகின்றன. இப்படியொரு உயிர்க்கொல்லி நோய் வேகமாகப் பரவி வரும் நிலையில், அதைத் தடுக்க இணக்கமாக உள்ள மத்திய, மாநில அரசுகள் என்ன நடவடிக்கை எடுத்தன? போதிய விழிப்புணர்வின்மைக்கு பின்னால் உள்ள காரணங்கள் என்ன? பீகாரின் அவலத்தை அலசுகிறது இந்தக் கட்டுரை…
புரோமிளா தேவி, பீகாரின் மொதிஹாரி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர். கடந்த செவ்வாய்கிழமை பூஜை ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். பூஜை முடிந்து தனது நான்கரை வயது மகள் பிரியான்சு-வுக்கு 11 மணியளவில் ரொட்டியும், புஜியா எனப்படும் உருளைக்கிழங்கு கறியும் உண்ணக் கொடுத்துள்ளார். அதன் பிறகு, பிரியான்சு உறங்கிவிட்டார்.
அந்த நாளில் பணிகள் அதிகமாக இருந்ததால், புரோமிளா அடுத்த நாள் காலையில் நீண்ட நேரம் கழித்து எழுந்திருக்கிறார். அப்போது, பிரியான்சுவையும் எழுப்ப முயற்சித்திருக்கிறார். ஆனால், தன் மகள் கண் திறக்கவில்லை, அவளுடைய உடல் விறைத்துப் போயிருக்கிறது.
தனது மாமியாரின் துணையுடன் பிரியான்சுவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். ஒரு மருத்துவமனையில் மருத்துவர் இல்லை. இறுதியாக மருத்துவர் இருந்த மருத்துவமனைக்கு மகளை தூக்கிச் சென்றிருக்கிறார்கள். அங்கே பிரியான்சுவுக்கு தற்காலிக மருந்துகள் தரப்பட்டுள்ளன. பிரியான்சுவை முசாபர்பூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தியிருக்கிறார் அந்த மருத்துவர்.
ரூ. 4000 -க்கு ஆம்புலன்சை வரவழைத்து, தனது மகளை முசாபர்பூருக்கு அழைத்து வந்திருக்கிறார் புரோமிளா. ஆக்ஸிஜன் மாஸ்க் பொறுத்தி, அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டிருக்கிறாள் சிறுமி. தனது கணவரும் குடும்பத்தை சுமக்கும் பொறுப்பை ஏற்றுள்ளவருமான மோகன் ராம் பஞ்சாபில் தொழிலாளியாக உள்ளார். மகளின் சிகிச்சைக்கு முழு பொறுப்பையும் ஏற்றுள்ள நிலையில், வெளியே கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருக்கிறார் புரோமிளா.
“முந்தைய நாள் காலையில் லிட்சி பழத்தை உண்டாள். ஆனால், இரவு ரொட்டியும் புஜியாவும் மட்டும்தான் உண்டாள்” என்கிற புரோமிளா, “நாங்கள் அவளை எழுப்ப முயற்சித்தபோது, அவள் வித்தியாசமாக நடந்துகொண்டாள், நாங்கள் பயந்துபோய்விட்டோம்” மிரட்சியோடு சொல்கிறார்.
நூறு பேரை பலிவாங்கிய காய்ச்சல்தான் தன் மகளை இப்படி கிடத்தியிருக்கிறது என அறியும்போது, புரொமிளாவுக்கு பயம் அதிகமாயிருக்கிறது.
முசாபர்பூரில் மட்டும் நோய்த்தாக்குதல் அதிகமாக இருக்க என்ன காரணம்?
ஒவ்வொரு ஆண்டும் முசாபர்பூர் ஒட்டியுள்ள பகுதிகளில் மே, ஜூன் மாதங்களில் Acute Encephalitis Syndrome (AES) எனப்படும் மூளைக்காய்ச்சல் வெப்பத்தின் காரணமாக மக்களை தாக்குகிறது. முதன்முதலாக இந்தப் பகுதியில் 1995-ம் ஆண்டு இந்த நோய்த்தாக்குதல் கண்டறியப்பட்டது. அதுமுதல் மூளைக்காய்ச்சல் தாக்குதல் காரணம் குறித்து பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. மக்களின் உணவுப் பழக்கம், வாழ்வியல், பொருளாதார நிலை, சாதி பின்னணி உள்ளிட்ட பல அம்சங்களை வைத்து ஆராயப்பட்ட நிலையில், உண்மையான காரணம் என்னவென்பது இதுவரை கண்டறியப்படவில்லை.
மூளைக்காய்ச்சல் பாதிப்பின் காரணமாக நோயாளிகளால் நிரம்பி வழியும் முசாஃபர்பூர் மருத்துவமனை.
மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த ஆய்வொன்றில் முசாபர்பூரில் நோய்த்தாக்குதல் கண்ட குழந்தைகளில் 123 பேர் பட்டியலினம், பழங்குடிகள் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களே இருந்தனர். 100 குழந்தைகளின் குடும்பங்கள் படிப்பறிவில்லாதவர்கள் என்றும் 114 குழந்தைகளின் குடும்பங்கள் வேளாண் தொழிலை அடிப்படையாகக் கொண்டவர்கள் என்றும் அந்த ஆய்வு கூறியது.
பல குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பற்றாக்குறை, தூய்மையான குடிநீர் இல்லாமை, போதிய சத்து கிடைக்காமல் இருப்பது, தூய்மையில்லாமல் இருப்பது, விழிப்புணர்வின்மையே நோய்க்கு ஊக்கியாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்திய மருத்துவர் சங்கத்தைச் சேர்ந்த டாக்டர் அஜய் குமார், நோய்க்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றாலும், நோய்க்குக் காரணமான வைரஸை தனிமைப்படுத்த முடியவில்லை என்கிறார். பலமுறை இந்த நோய்க்கென்று பிரத்யேகமாக பரிசோதனைக்கூடம் அமைக்கக் கேட்டும் இதுவரை அதன் பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்கிறார்.
மூளைக்காய்ச்சலை லிச்சி பழம் தூண்டுகிறதா?
சில நிபுணர்கள் லிச்சி பழத்தை உண்பதால், உடல் வெப்பநிலை அதிகமாவதாகவும் இது வைரஸ் பரவலைத் தூண்டுவதாகவும் தெரிவிக்கின்றனர். முசாபர்பூர் லிச்சி உற்பத்திக்குப் பெயர் பெற்றது. தற்போது லிட்சிக்கும் மூளைக்காய்ச்சல் பரவலுக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டால் மட்டுமே உண்மை தெரியவரும்.
மூளைக்காய்ச்சல் கண்டு, முசாபர்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் உறவினர்களிடம் பேசியதில், காய்ச்சல் வருவதற்கு முன் அவர்கள் லிச்சி பழத்தை உண்டதை கூறியுள்ளனர்.
நோய்ப் பரவலைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன?
மூளைக்காய்ச்சல் நோய்க்கான வேர்க்காரணியை கண்டுபிடிக்க முடியாத நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மட்டுமே நோயைக் கட்டுப்படுத்த உதவும். பீகார் அரசு யுனிசெஃப் -உடன் இணைந்து நிலையான இயக்க நடைமுறைகளை வகுத்துள்ளது.
அதன்படி அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார பணியாளர்கள் (ஆஷா) மூலம் கிராமங்களில் ஆய்வு செய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உப்பு – சர்க்கரை கரைசல் தரவேண்டும் என்பது முதல், எந்தக் குழந்தையும் வெறும் வயிற்றில் உறங்கச் செல்லக்கூடாது என்பதை உறுதி படுத்துவது வரை செய்யவேண்டும். இதன்படி கடந்த நான்கு ஆண்டுகளில் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்துள்ளதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
அவசர சிகிச்சைக்காக கொண்டு செல்லப்படும் குழந்தை.
அதே சமயத்தில், இந்த ஆண்டு நிலையான இயக்க நடைமுறைப்படுத்தலில் காட்டிய அலட்சியமே அதிக உயிரிழப்புகள் ஏற்பட காரணம் என நம்பப்படுகிறது. அரசு தரப்பில் இதை மறுத்தாலும் ஆஷா பணியாளர்கள் அரசு தரப்பிலிருந்து தங்களுக்கு போதிய ஒத்துழைப்பில்லை என கூறுகிறார்கள். போதிய அளவு உப்பு – சர்க்கரை கரைசல் பாக்கெட்டுகள் வழங்கப்படவில்லை என்றும் நோய் வேகமாக பரவிய பின்பே, அது பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபடும்படி அரசு தரப்பில் ஆணை வந்ததாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
திங்கள்கிழமை தன்னுடை நான்கு வயது மகனை மருத்துவமனையில் அனுமதித்திருக்கும் சஞ்சய் ராம், “இந்த நோய் பரவாமல் தடுக்க எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து எங்களுக்கு அறிவிக்கப்படவில்லை” என்கிறார். வேளாண் கூலித் தொழிலாளியாக உள்ள இவர், தனது மகனின் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனக் கவலை கொள்கிறார். தனது வீட்டின் அருகே உள்ள மருத்துவமனையில் போதிய வசதி இல்லாத நிலையில், செலவு பிடிக்கும் தூரத்தில் உள்ள இந்த மருத்துவமனையில் மகனை சேர்த்துள்ளதாக தெரிவிக்கிறார் இவர்.
கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இந்தக் காலக்கட்டத்தில் நோய்த்தாக்குதல் இருந்து வரும் நிலையில், அதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதையும் மத்திய – மாநில அரசுகள் செய்யவில்லை. இதோ இந்த ஆண்டு அதன் விளைவாக நூறைக் கடந்து பலிகளின் எண்ணிக்கை சென்று கொண்டிருக்கிறது.
இத்தனை குழந்தைகளின் உயிரிழப்பில் தனக்குரிய மிகப் பெரும் பங்கை மறைக்கும்விதமாக இழந்த குழந்தைகளின் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிதி உதவி அறிவித்திருக்கிறார் நிதிஷ் குமார். ஏகபோகமாக அரியணை ஏறியிருக்கும் மோடி அரசு அதைக்கூட செய்யவில்லை. வழக்கம்போல ஏழை வீட்டு மரணங்கள் நாட்டின் பிரதமரை உலுக்கவில்லை.
செய்திக் கட்டுரை : உமேஷ் குமார் ராய் அனிதா நன்றி :தி வயர்
பொ.வேல்சாமிகடந்த சில நாட்களாக சோழர்கால சமூகம் பற்றியும் இராஜராஜ சோழனைப் பற்றியும் பல்வேறு வகையான விவாதங்கள் நிகழ்ந்து கொண்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள். இந்த விவாதங்களில் பங்குபெற்ற பெருவாரியானவர்கள் தங்கள் கருத்துக்களுக்கு ஆதரவான சான்றுகளை முன் வைக்கவில்லை. தாங்கள் கொண்டுள்ள அபிப்பிராயங்களைப் பொதுக்கருத்துகள் போல பொத்தாம் பொதுவாகப் பேசுகின்றார்கள்.
இதனால் அவர்களுடைய பேச்சைக் கேட்கின்றவர்களை, அவர்கள் சிந்தனையற்ற ஆட்டுமந்தைகள் என்று கருதுவது நமக்குத் தெளிவாகத் தெரிகின்றது. ஒரு சமூகத்தில் எல்லா மக்களும் மந்தைகளாக இருப்பதில்லை. சிலர் சிந்திக்கும் மனிதர்களாகவும் இருக்கின்றார்கள். அப்படிப்பட்டவர்கள் இத்தகைய விவாதங்களில் பேசுகின்றவர்களின் உள்ளத்தின் உண்மைத்தன்மையைப் புரிந்து கொள்வார்கள். அத்தகையவர்கள், தங்களுக்குப் புரிந்ததை மற்றவர்களுக்கு ஆதாரத்துடன் விளக்கும் பண்புடையவர்களாகவும் இருப்பார்கள்.
1000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்களைப் பற்றி போகிற போக்கில் கருத்துக் கூறுவது தமிழகத்தில் வழக்கமாக உள்ளது. அண்மையில் நடந்த, இப்பொழுதும் நடந்து கொண்டிருக்கின்ற பல்வேறுவிதமான அரசியல் பொருளாதார நடவடிக்கைகளின் உண்மைகள் என்னவென்பதை விளக்க முற்படாத ஊடகங்கள் பழங்காலத்தைப் பற்றிய விவாதங்களை எந்த அடிப்படையில் நடத்துகின்றன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இராஜராஜ சோழனை தமிழர்களின் குறியீடு என்று சிலர் குறிப்பிட்டனர். நாம் அவர்களை நோக்கி ஒரு கேள்வியைக் கேட்க வேண்டும். “கி.பி. 1013 -ல் அல்லது 14 -இல் தஞ்சை பெரிய கோவில் கட்டி முடிக்கப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றதாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன. அன்றிலிருந்து 20-ம் நூற்றாண்டின் தொடக்கம் வரை இராஜராஜ சோழனால் தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்டது என்பதை தமிழர்கள் முற்றிலும் மறந்துவிட்டனர். அடுத்து வந்த 900 ஆண்டுகளில் எழுதப்பட்ட எந்தவொரு தமிழ் நூலிலும் இராஜராஜ சோழன்தான் பெரிய கோவிலைக் கட்டியவன் என்ற செய்தி பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் “ஹீல்ஸ்” என்ற ஆங்கில நாட்டு அறிஞர்தான் பெரிய கோவிலைக் கட்டியது இராஜராஜசோழன் என்பதை உலகிற்கு அறிவிக்கின்றார். அதுவரை தஞ்சையில் வாழ்ந்த மிகப்பெரும் தமிழறிஞர் ஜி.யு.போப்-க்கும் கும்பகோணத்தில் வாழ்ந்த தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத அய்யருக்கும் கூட பெரிய கோவிலை இராஜராஜ சோழன்தான் கட்டினான் என்பது தெரியாது. இப்படி இருக்கும் போது இராஜராஜ சோழனை தமிழனின் குறியீடு என்பது எந்த வகையில் சரியானது..? கேப்பையில் நெய் வடிகின்றது என்று கூறுவதை ஒருவன் கேட்கிறான் என்றால் அவன் கேனையனாகத்தான் இருப்பான் என்ற சொலவடை உங்கள் நினைவுக்கு வரவில்லையா?
சோழர்காலத்திய தமிழ்ச் சமூகம் சார்ந்த மக்கள் பல்வேறு வகையாகப் (சாதிகளாக) பிரிந்துகிடந்தனர். எடுத்துக்காட்டாக பறையர்களின் குடியிருப்புகளை மற்றவர்களிடமிருந்து ஒதுக்கி “பறைச்சேரி” என்று கூறுகின்ற கல்வெட்டுகளும் அவரவர்களுக்கு தனித்தனி சுடுகாடு அமைத்துக் கொடுத்த கல்வெட்டுகளும் ஆதாரமாகக் கொடுக்கப்பட்டும், சோழர்கால வாழ்க்கை முறைகளின் வேறுபாடுகளைக் கூறுகின்ற செய்திகளை ஆதாரங்களுடன் விளக்கியும் வரலாற்று அறிஞர்கள் கரசிமா, ஒய்.சுப்பராயலு அவர்களால் எழுதப்பட்ட “தென்னக சமூகம் ஒரு வரலாற்றுப் புரிதலை நோக்கி” (சோழர் காலம்) என்ற நூலும், வரலாற்றுப் பேரறிஞர் நீலகண்ட சாஸ்திரியார் தென்னிந்திய வரலாறு பாகம் 1 மற்றும் பாகம் 2 ஆகிய நூல்களையும் நீங்கள் தரவிறக்கம் செய்து கொள்ள இணைப்பைக் கொடுத்துள்ளேன்.
இந்த நூல்கள் இல்லாமல் சோழர்காலம் பற்றி மிகவும் சிறப்பாக எழுதப்பட்ட “சோழப் பெருவேந்தர் காலம்” என்ற நூல் இரண்டு பாகங்களாக தமிழ் வளர்ச்சித் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. இவை நூலகங்களில் கிடைக்கும். இதில் இரண்டாம் பாகம் மிக முக்கியமான செய்திகளை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. வரலாற்று அறிஞர் நீலகண்ட சாஸ்திரியாரால் சோழர்கள் “இரண்டாம் பாகமும்” இந்த காலம் பற்றிய பல்வேறு அரிய தகவல்களை அள்ளித் தருகின்றது. இந்த நூல்கள் மின்னூல் வடிவில் இல்லை.
1 of 8
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
குறிப்பு…… “சோழர்கள் முதல் பாகம்” மட்டும் மின்னூல் வடிவில் கிடைக்கின்றது. இதன் இணைப்பையும் தந்துள்ளேன்.
“தமிழகத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கட்சியாக திமுக உள்ளது. அக்கட்சியினர் டீ கடை, பிரியாணி கடை என்று தாக்குதல் நடத்தினர்கள். இதற்கு நேரில் சென்று மு.க.ஸ்டாலினே மன்னிப்பு கோரினார். தற்போது, நாகர்கோயிலில் திமுக கட்சியைச் சேர்ந்த கடைக்காரரிடம் மாவு குறித்து கேட்டபோது, எழுத்தாளர் ஜெயமோகன் மீது கடைக்காரர் தாக்கியுள்ளார். ஆகவே, திமுக தமிழகத்திலிருந்து அகற்றப்பட வேண்டும்.” இது ஒரு நேர்காணலில் எச்.ராஜா கூறியது.
நாகர்கோவில் பார்வதிபுரம் கடை ஒன்றில் எழுத்தாளர் ஜெயமோகன் இட்லி தோசை மாவு வாங்கிய கதை பலருக்கும் தெரிந்திருக்கும். வீட்டிற்குச் சென்ற ஜெயமோகன் மாவு புளித்திருந்ததை கண்டுபிடித்து விட்டார். உலக உத்தம எழுத்தாளரான தன்னிடமே இவ்வளவு அலட்சியமா என்று அந்தக் கடைக்குச் சென்று குழாயடிச் சண்டையில் ஈடுபட்டுள்ளார்.
மருத்துவமனையில் ‘படுகாயத்துடன்’ ஜெயமோகன்.
கடையில் இருந்த பெண்மணியும், “ஐயா நீங்கள் வாங்கும்போதே இது முந்தைய தினத்து மாவு” என்று கூறியதை நினைவுபடுத்தியுள்ளார். இருப்பினும் எழுத்தாளர் கோபம் குறையாமல் மாவு பாக்கெட்டுகளை அந்த பெண் முன்னே வீசியுள்ளார். எரிச்சலைடைந்த அந்த பெண்ணின் கணவர் தட்டிக் கேட்க சிறு அளவு கைகலப்பு நடந்துள்ளது.
உடனே ஜெயமோகனது செல்வாக்கால் இது ஊடகங்களில் பரபரப்பான செய்தியானது. சொல்லிக் கொள்ளும்படி அடியே இல்லாமல் அரசு மருத்துவமனைக்குச் சென்று தங்கியவாறு போலீசில் புகார் கொடுக்கிறார் ஜெயமோகன். போலீசும் அந்தப் பெண்ணின் கணவரை கைது செய்து சிறையில் அடைத்தது. கைது செய்யப்பட்டவர் தி.மு.க என்பதால் ஸ்டேசனில் தி.மு.க உள்ளூர் தலைவர்கள் வந்து பிறகு இது ஜெயமோகன் என்பதால் விட்டுக் கொடுத்து சென்றுவிட்டனர்.
தற்போது எச்.ராஜா வரைக்கும் ஜெயமோகனுக்கு ஆதரவு அள்ளிக் கொட்டப்படுகிறது.
இன்றைய கேள்வி:
ஜெயமோகனின் புளிச்ச மாவு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யார்?
♣ ஜெயமோகன்
♣ கடைக்காரர்கள்
♣ தி.மு.க.
♣ செய்தியை பரபரபாக்கிய ஊடகங்கள்
*****
டிவிட்டரில் வாக்களிக்க :
ஜெயமோகனின் புளிச்ச மாவு விவகாரத்தில் தவறு செய்தது யார்?
ஜெயமோகன் கடைக்காரர்கள் தி.மு.க. செய்தியை பரபரபாக்கிய ஊடகங்கள்
நிலத்தின் அடி ஆழத்தில் உயிரைப் பணயம் வைத்து நவரத்தினங்களில் ஒன்றான மாணிக்கக் கல்லை ஆயிரக்கணக்கான மனிதர்கள் தேடுகிறார்கள்.
தாய்லாந்து, கம்போடியா, மியான்மர், ஆப்கானிஸ்தான், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் அதிக அளவில் இது எடுக்கப்படுகிறது. குரோமியத்தின் மகிமையால் இளஞ்சிவப்பு, அடர் சிவப்பு மற்றும் நீல நிறம் என மாணிக்க கற்கள் பல்வேறு அவதாரங்களை எடுக்கின்றன.
அறிவியலை பொருத்தமட்டில் மாணிக்க கல் வெறும் கனிமம் மட்டுமே. இயற்கையில் கிடைக்கும் மாணிக்க கற்கள் அவ்வளவு பொலிவுடன் இருக்காது. மனித கைகளின் உழைப்பு மட்டுமே அதற்கு அத்தனை மதிப்பையும் பொலிவையும் தருகிறது.
மோகாக்கிலிலுள்ள ஒரு மாணிக்க கல் சுரங்கத்திற்கு வந்திருக்கும் தொழிலாளிகளின் இருசக்கர வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.மாணிக்க கல் சுரங்கமொன்றில் பணியில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளிகள்.சுரங்கமொன்றில் மாணிக்க கற்களையும் இதர கற்களையும் சலித்துப் பிரித்தெடுக்கும் தொழிலாளர்கள்மோகோக் நகர சுரங்க குகையொன்றின் உள்ளே தொழிலாளி ஒருவர் இறங்குகிறார்.மோகோக் நகர சுரங்க குகையில் பணியின் இடையே தொழிலாளி ஒருவர் ஓய்வெடுக்கிறார்.தாம் தேடிவந்த கனிமத்தின் படிமம்தானா என பரிசோதிக்கும் தொழிலாளி.மாணிக்க கல் சுரங்கமொன்றில், மாணிக்க கற்களை சுரங்கத் தொழிலாளி ஒருவர் சேகரித்துக் கொண்டிருக்கிறார்.மாணிக்க கல் சுரங்கத்தில் பணியில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளிகள்.உணவு இடைவேளையில் உணவருந்தும் தொழிலாளிகள்.வடக்கு மாண்டலேவின் மோகாக்கிலிலுள்ள ஒரு சுரங்கத்தில் ஓய்வு நேரத்தில் புகைபிடித்து ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் தொழிலாளிமோகாக் நகர், நவரத்தின கற்கள் சந்தையில் வாங்குபவர்களுடன் விற்பனையில் வணிகர்கள்.மோகாக் நகர் சந்தையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் செதுக்கப்படாத மாணிக்கக் கற்கள்.மோகாக் நகர் சந்தையில் மாணிக்க கற்களையும் இதர கற்களையும் வணிகர் ஒருவர் விற்பனை செய்கிறார்.மோகாக் நகர் சந்தையில் ஒரு மாணிக்க கல்லை ஆய்வு செய்கிறார் ஒரு வாடிக்கையாளர்.மோகாக் நகர் சந்தையில் மாணிக்க கற்களையும் இதர கற்களையும் வணிகர் ஒருவர் விற்பனை செய்கிறார்.மோகாக் நகர் சந்தையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் செதுக்கப்படாத மாணிக்கக் கற்கள்.
தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் ! அரசே இதற்குக் காரணம் !
அன்பார்ந்த மக்களே!
பல்துலக்கும் போது, குளிக்கும் போது, துவைக்கும் போது, கக்கூசு போகும்போது தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது எப்படி என்று மக்களுக்கு ஆலோசனை சொல்லும் அரசுதான், தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டதற்கு முதல் காரணம்.
மழைநீரை பஞ்சுப்பொதி போல தேக்கிவைக்கும் ஆற்று மணலை சூறையாடியது, நீர்வழித்தடங்கள், நீர்நிலைகள், சதுப்பு நிலங்களை முறையாக பராமரித்து பாதுகாப்பதற்கு பதில் மண்ணைப் போட்டு மூடி ரியல் எஸ்டேட்டிற்கு பிளாட் போட்டு விற்றது என, மொத்த நீர் ஆதாரங்களையும் தெரிந்தே திட்டமிட்டு அழித்து நாசமாக்கி நம்மை தண்ணீர் பஞ்சத்தில் தள்ளியது இந்த அரசுதான்.
நம்மை அச்சுறுத்தும் தண்ணீர் பஞ்சம் இயற்கையானதல்ல; திட்டமிட்டு அரசால் உருவாக்கப்பட்டது. கடல் போல காட்சியளிக்கும் சிட்லப்பாக்கம் ஏரியை தூர்வாரி பராமரிக்காமல் கழிவு நீர் குட்டையாக மாறிப் போனதற்கு பொறுப்பேற்க வேண்டிய பொதுப்பணித்துறை, இன்று மக்கள் முன்வந்து சுத்தம் செய்வதை தடுப்பதற்கும், சொந்தம் கொண்டாடுவதற்கும் என்ன யோக்கியதை இருக்கிறது?
நீர் நிலைகளை பராமரித்து பாதுகாக்க மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட பொதுப்பணித்துறை என்ற அரசு நிறுவனம்தான், ‘வேலியே பயிரை மேய்ந்தது போல’ நீர் நிலைகள் அனைத்தையும் அழித்தது.
பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள் என்ற முக்கூட்டு கும்பல்தான் நமது நீர் ஆதாரங்களையெல்லாம் அழித்து ரியல் எஸ்டேட்டாக மாற்றியது. இந்த கிரிமினல் குற்றக் கும்பலை எந்த சட்டமும் தண்டிக்காது. மக்கள் மட்டுமே தண்டிக்க முடியும்.
தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவதன் மூலமோ, நதி நீர் இணைப்பு என்ற நிறைவேற்ற முடியாத கனவின் மூலமோ தண்ணீர் பிரச்சினை தீராது. குளம், குட்டை, ஏரி என அழிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நீர் நிலைகளை மீட்டெடுத்து தூர்வாரி பராமரித்து மழை நீரை தேக்குவதன் மூலம் மட்டுமே தண்ணீர் பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்க்க முடியும்.
தண்ணீரை கார்ப்பரேட் வணிகமாக மாற்றும் நோக்கில் வேலை செய்துவரும் அரசு இதைச் செய்யாது. ஜப்பான் முதலாளிகளின் விருப்பத்திற்கு 15 ஆயிரம் கோடி செலவு செய்து மெட்ரோ ரயில் விடும் அரசு, மக்கள் தேவையை எப்படி நிறைவேற்றும்?
பொதுப்பணித்துறை உட்பட அரசின் ஒவ்வொரு துறையும் என்ன நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ அதைச் செய்யாமல் அதற்கு நேரெதிராக செயல்படுகின்றது. இதன் விளைவாக மொத்த அரசு கட்டமைப்பும் மக்களை ஆளும் தகுதியை இழந்து நெருக்கடியில் சிக்கி தோற்றுப் போய்விட்டது. எனவே, மக்கள் பிரச்சினை எதையும் இந்த அரசுக் கட்டமைப்பு தீர்க்காது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இனியும் அரசை நம்பி பயனில்லை என்பதை உணர்ந்துதான் ஏரியை சுத்தம் செய்ய களமிறங்கினார்கள் சிட்லபாக்கம் மக்கள். இதன் வளர்ச்சியாக “எங்கள் ஏரியை சொந்தம் கொண்டாட நீ யார்? பொதுப்பணித்துறையே வெளியேறு!” என்ற கோரிக்கையை முன்வைத்து நீர் நிலைகள் அனைத்தும் மக்கள் கட்டுப்பாட்டின் கீழ், கண்காணிப்பின் கீழ் வர வேண்டும். இந்த அதிகாரம் நிலை நிறுத்தப்படுவதுதான் மக்கள் அதிகாரம்.
இப்படி கிராமம்தோறும், நகரம்தோறும் தோற்றுப்போய் மக்களின் எதிரியாக மாறிப்போன அரசின் தலையீட்டை நிராகரிப்பதும், மக்களின் தேவைகளை மக்களே முடிவு செய்வதும் மக்களின் பிரதிநிதிகளைக் கொண்டு நிறைவேற்றுவதும்தான் மக்கள் அதிகாரம். இதன் வளர்ச்சிப் போக்கில்தான் மக்களின் அனைத்து பிரச்சனைகளும் தீரும்!
1 of 2
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் : மக்கள் அதிகாரம் சென்னை, தொடர்புக்கு : 91768 01656 மின்னஞ்சல் : ppchennaimu@gmail.com முகநூல் பக்கம் : fb.com/ppchennaimu
இதையும் பாருங்கள்…
தாகத்திற்கா தண்ணீர் லாபத்துக்கா ? – கோவன் புதிய பாடல் !
ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராகப் பேசினால் கைது ! குட்கா புகழ் விழுப்புரம் எஸ்.பி ஜெயக்குமாரின் புது சட்டம் !
தமிழகமே ஹைட்ரோ கார்பன் என்ற அழிவுத்திட்டத்திற்கு எதிராகப் போராடுகிறது, போராடிக்கொண்டு இருக்கிறது. “ஹைட்ரோ கார்பன் திட்டம் சரியானது, அது தேவையானது” என்று அரசு பேசும் போது, “ஹைட்ரோ கார்பன் திட்டம் தவறானது” என்று பேசுவதற்கு உரிமை இருக்கிறதா? என்றால் “உரிமை இல்லை” என்கிறது போலீசு.
தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிதான் நிலவுகிறது. ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக போராடுகின்ற ஏன் பேசுகின்ற அனைவரையும் போலீசு அடக்குகிறது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக துண்டறிக்கை வினியோகித்த விழுப்புரம் மக்கள் அதிகாரம் தோழர்கள் மூவர் கைது – சிறை !
விழுப்புரத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த 3 பேர் ஹைட்ரோகார்பன் திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புக்களை விளக்கும் பிரசுரங்களை கொடுத்துக்கொண்டு இருக்கும்போது, போலீசு ‘விசாரிக்க வேண்டும்’ என்று விழுப்புரம் தாலுகா போலீசு நிலையத்திற்கு வலுக்கட்டாயமாக கொண்டு போய் ஒரு நாள் முழுவதும் சட்டவிரோதக் காவலில் வைத்திருந்தனர். இது பற்றி டி.எஸ்.பி திருமாலிடம் பேசினால் அவரோ நான் எதுவும் செய்ய முடியாது, எல்லாம் மேலிடத்து உத்தரவு என்றார்.
முதல் தகவல் அறிக்கையில் போலீசு குறிப்பிட்டுள்ளபடி,
1 of 5
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
“மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினார்களாம், அவர்களை போலீசு விசாரித்ததாம், மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்தவர்கள் கைகளில் கருங்கற்களை வைத்திருந்தார்களாம், பேருந்து கண்ணாடிகளையும் மின்விளக்குகளையும் உடைப்பதற்காக சதி செய்து கொண்டிருந்தார்களாம். பொதுமக்களின் அமைதிக்கும் உயிருக்கும் கேடு விளைவிப்பதோடு அரசுக்கு எதிராக சதி செய்து சட்டம் ஒழுங்கு பிரச்சினையை சீர் குலைத்துவிடுவார்கள் என்ற நியாயமான காரணத்தாலும் ரிமாண்ட் செய்தார்களாம்.”
குட்கா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயக்குமார்தான் தற்போது விழுப்புரம் எஸ்.பி. ஹைட்ரோ கார்பன் மட்டுமல்ல, டாஸ்மாக் எதிர்ப்பு மற்றும் பல்வேறு மக்கள் பிரச்சினையை யார் பேசினாலும்; போஸ்டர் ஒடினால் கூட, ரிமாண்ட்தான் செய்கிறார்.
குட்கா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயக்குமார்
மக்களுக்கு ஆதரவாகவும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகவும் நோட்டீசு கொடுத்தவர்கள் கைது செய்யப்பட்டு 4 நாட்கள் கழித்து கடலூர் மத்திய சிறையிலிருந்து பிணையில் வந்திருக்கிறார்கள். நீதிமன்றத்தில் தினமும் கையெழுத்து போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். குட்கா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயக்குமாரோ விழுப்புரம் எஸ்.பி-யாகிவிட்டார்.
பிரசுரம் கொடுத்தது தவறா? அணுக்கழிவு – ஹைட்ரோகார்பன் – எட்டுவழிச்சாலை என தமிழகத்தை அழிவுத்திட்டங்களால் நாசமாக்காதே என்று பேசக்கூட உரிமை இல்லை என்கிறார் குட்கா கேஸ் அக்கியூஸ்டு எஸ்.பி. ஜெயக்குமார்.
விழுப்புரத்தில் எந்த அமைப்பிற்கும் மக்கள் பிரச்சினையைப் பேச அனுமதி இல்லை. அனைத்து அமைப்புக்களும் இந்த ஜனநாயக விரோதத்துக்கெதிராக, ஒருங்கிணைந்த போராட்டங்களை முன்னெடுக்க வேண்டுமென்பதே தற்போதைய தேவையாக உள்ளது.
1 of 2
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் : மக்கள் அதிகாரம் தமிழ்நாடு. தொடர்புக்கு : 99623 66321.
இந்தியாவில் பள்ளி செல்லும் பருவத்திலுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 22 கோடியாகும். இதில் 12 கோடி குழந்தைகளால் மட்டுமே கல்விக்கூடம் செல்ல முடிகிறது. இந்த 12 கோடி குழந்தைகளிலும் பள்ளிப் படிப்பை முழுவதுமாகப் படித்து முடிப்பவர்களின் எண்ணிக்கை 3 கோடிக்கும் குறைவாகும்.
பள்ளி முடிப்பவர்களின் எண்ணிக்கை மொத்த மாணவர்களில் சுமார் 20 சதவிகிதமாகும். இதுதான் இந்தியா கல்வியில் சாதித்துள்ள மகத்தான சாதனையாகும்.
1951-ல் இந்தியா குடியரசான பிற்பாடு இருந்த தொடக்கப் பள்ளிகளின் எண்ணிக்கை சுமார் 2,10,000. 2005-ல் தற்போதுள்ள தொடக்கப் பள்ளிகளின் எண்ணிக்கை சுமார் 5, 81,000. அறியாமை இருள் விலக்கி ஜனத்தொகை வளர்ச்சிக்கேற்ப, பொருளாதார, கலாச்சார வளர்ச்சிக்கேற்ப கல்விக் கூடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருக்குமானால் குறைந்தபட்சம் 20 லட்சம் தொடக்கப் பள்ளிகளாவது இந்தியாவில் தற்போது இருந்திருக்க வேண்டும்.
ராணுவச் செலவுக்கு தன்னுடைய பட்ஜெட்டில் 30 சதவிகிதத்திற்கு மேல் பணம் ஒதுக்கி தாராளமாகச் செலவு செய்யும் நமது அரசாங்கம் எதிர்காலத் தலைமுறையைப் பட்டை தீட்டும் கல்விக்கூடங்களுக்கு மட்டும் கஞ்சத்தனமாக 3.4 சதவிகிதத்தைத் தான் ஒதுக்குகிறது.
ஆகவே கல்வி என்பது ஏழைகளைப் பொறுத்த அளவில் எட்டாக்கனியாகவே நாளுக்கு நாள் விலகிச் சென்று கொண்டிருக்கிறது.
கல்விக்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு 3.4 சதவிகிதத்திலிருந்து 10 சதவிகிதமாக வேண்டும் என்றும், மாநில அரசின் கல்விக்கான நிதி ஒதுக்கீடு 21 சதவிகிதத்திலிருந்து 30 சதவிகிதமாக உயர வேண்டும் என்றும் தொடர்ந்து கல்வியாளர்கள் வற்புறுத்தி வருகின்றனர். ஆனால் இக்கோரிக்கைகள் கிடப்பில் உள்ளன.
இந்தியாவில் தனிப்பட்ட வி.வி.ஐ.பி.க்களையும், வி.ஐ.பி.க்களையும் பாதுகாக்க அரசாங்கம் ஒதுக்கி வரும் நிதி கூட ஒட்டுமொத்தக் கல்விக்காக ஒதுக்கும் நிதியைக் காட்டிலும் அதிகம்!
இழுத்து மூடப்பட்டு வரும் அரசுப் பள்ளிக்கூடங்கள், புற்றீசல்கள் போல் பெருகிவரும் தனியார் பள்ளிகள் என தமிழகக் கல்விச் சூழல் கதிகலங்கிக் கொண்டிருக்கிறதே?
ஆம்! தமிழகக் கல்விச் சூழலைப் பொறுத்தவரை அது மிகவும் கதி கலங்கிக் கிடக்கிறது. நாளுக்கு நாள் அரசாங்கப் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டு வருகின்றன. இதற்குப் பிரதான காரணம் ஆசிரியர்கள் பற்றாக்குறைதான். தமிழகத்தில் ஐந்தாம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளிகள் 37,000 உள்ளன. எட்டாம் வகுப்பு வரையிலான நடுநிலைப் பள்ளிகள் 6,200 உள்ளன. இவற்றிற்குத் தேவைப்படும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 1,93,000. இதில் நிரப்பப்படாத காலியிடங்கள் சுமார் 70,000. தொடர்ந்து பல ஆண்டுகளாக இப்படி காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாததால் கல்விச் சூழல் மிகவும் சீர்கேடடைந்துள்ளது.
தமிழகத்தில் 3,200 தொடக்கப் பள்ளிகளுக்குத் தலைமை ஆசிரியர்களே இல்லாத நிலை தொடர்ந்துகொண்டிருக்கிறது. பள்ளிக் கூடங்கள் என்றால் உடற்பயிற்சிக் கல்வி, விளையாட்டு என்பது மிக அவசியம். ஆனால் 6,200 நடுநிலைப் பள்ளிகளில் உடற்பயிற்சி ஆசிரியர்களையே நியமிக்கவில்லை தமிழக அரசு.
இப்படியாகப் பள்ளிக்கூடத்தை வழிநடத்தும் தலைமை ஆசிரியர், மற்றும் தேவையான ஆசிரியர்கள் இல்லாத நிலையில் அப்பள்ளிகள் எவ்வாறு சிறப்பாகச் செயல்பட முடியும்? ….
….. 2002-ம் ஆண்டு வரை மூன்று ஆசிரியர்களைக் கொண்டு செயல்பட்ட பள்ளிகளை ஈராசிரியர் பள்ளிகளாக மாற்றியது தமிழக அரசு. இவ்விதம் ஆசிரியர்கள் குறைக்கப்பட்ட பள்ளிகளின் எண்ணிக்கை 18,000. நடைமுறையில் இந்த ஈராசிரியர்களில் ஒருவர் நிர்வாக நடைமுறைகளைக் கவனித்துக்கொள்ளும் அலுவல்களையே பார்க்க வேண்டியுள்ளதால் இந்தப் பதினெட்டாயிரம் பள்ளிகளும் ஏறத்தாழ ஓராசிரியர் பள்ளிகளாகவே தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதுதான் யதார்த்தமான நிலவரம். (நூலிலிருந்து பக்கம் 4,5)
தமிழகத்தில் இன்னும் ஏழை எளிய மாணவர்கள் சுமார் 70 லட்சம் பேர் அரசாங்கக் கல்விக்கூடங்களில்தான் கல்வி பயின்று வருகின்றனர். எத்தனையோ விதமான தனியார் பள்ளிகள் இருந்தும் அதில் சேரக்கூடிய வசதி வாய்ப்புகள் இல்லாததினாலேயே பெரும்பாலான மாணவர்கள் அரசு பள்ளிக் கூடங்களில் படித்து வருகின்றனர்.
குறிப்பாக நகர்ப்புற மாணவர்களில் 20 சதவிகிதம் பேர் குழந்தைத் தொழிலாளர்களாக அவ்வப்போது வேலைக்குச் செல்லக்கூடியவர்களாக உள்ளனர். பீடி சுற்றுதல், பூட் பாலீஸ் போடுதல், பேப்பர் போடுதல், மெக்கானிக் ஷாப்புகளில் வேலை செய்தல், டீக்கடைகள், ஹோட்டல்களில் வேலை செய்தல் அல்லது தந்தை செய்யும் தொழில்களில் உதவுதல், விவசாய வேலைகள் செய்தல், ஆடு, மாடு மேய்த்தல் போன்ற பல வேலைகளை இம்மாணவர்கள் செய்கின்றனர். அரசாங்கப் பள்ளிகளில் கல்வி ஒழுங்காகக் கிடைக்காத சூழ்நிலை தொடரும்போது இம்மாணவர்களில் கணிசமானோர் பள்ளிக்கூடங்களை விட்டு நின்றுவிடுகின்றனர். முழுநேரக் குழந்தைத் தொழிலாளர்களாகி விடுகின்றனர்.
தமிழக அரசு தரும் புள்ளி விபரப்படியே சுமார் 16 சதவிகித மாணவர்கள் ஐந்தாம் வகுப்பு படித்து முடிப்பதற்குள்ளாகவே பள்ளிக் கல்வியைப் பாதியிலேயே விட்டுவிடுகின்றனர். ஐந்து முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களில் சுமார் ஐம்பது சதவிகிதத்திற்கு மேற்பட்டோர் பள்ளிப் படிப்பைத் தொடர முடியாமல் இடையிலேயே நின்றுவிடுகின்றனர். (நூலிலிருந்து … பக்கம் 6)
மாணவர்களுக்கான பாடத்திட்டங்களை உருவாக்குவதில் சமூகப் பிரக்ஞையுள்ள ஆசிரியர்களின் பங்களிப்பு போதுமான அளவில் இல்லை. பெரும்பாலான ஆசிரியர்களிடையே இது குறித்த விழிப்புணர்வே இல்லாமல் உள்ளது.
கற்பித்தல் என்ற வகையிலும் மாணவர்களை மனப்பாடம் செய்து எழுத வைக்கும் இயந்திர ரீதியிலான திறமைசாலிகளாக உருவாக்குவதில்தான் ஆசிரியர்கள் சிரத்தை எடுத்துக் கொள்கின்றனரேயன்றி மாணவர்களை உயிர்ப்புள்ள, சமூக அனுபவங்களோடு தொடர்புடைய கல்வியைப் பயிலுபவர்களாக உருவாக்குவதில் பெரும்பாலான ஆசிரியர்கள் ஆர்வம் காட்டுவதில்லை.
அமெரிக்கா போன்ற, மிகவும் வளர்ச்சியடைந்த நாடுகளில் கூட மாணவர்களின் முழுப் படிப்புச் செலவுகளையும் அரசாங்கமே கவனித்துக்கொள்கிறது. அமெரிக்காவில் மிகப் பெரும்பாலானவர்கள் அரசாங்கப் பள்ளிக்கூடங்களில்தான் படிக்கின்றனர். தனியார் பள்ளிகள் என்பதே மிகக் குறைவாகத்தான் அமெரிக்காவில் உள்ளது. ‘இளந் தலைமுறையினருக்கு முறையான கல்வி பெறச் செலவழிக்கும் பணம் என்பது நாட்டின் வருங்கால முன்னேற்றத்திற்கான முதலீடேயன்றி வேறல்ல’ என்ற கருத்து முதலாளித்துவ நாடான அமெரிக்காவிற்கு உள்ளது. இதனால்தான் அமெரிக்காவில் பள்ளிக் கல்வியை முடித்தவர்களில் 76 சதவிகிதத்தினர் உயர் கல்வி வாய்ப்பைப் பெற்றுவிடுகின்றனர். ஜப்பானில் 87 சதவிகிதத்தினரான மாணவர்களுக்கு உயர் கல்வி வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் இந்தியாவிலோ இது இன்னும் ஏழு சதவிகிதத்தைக் கூட தாண்ட முடியவில்லை. (நூலிலிருந்து… பக்கம் 8)
நூல் : கல்வித் துறை அவலங்கள் ஆசிரியர் : சாவித்திரி கண்ணன் முதற்பதிப்பு : ஏப்ரல் 2005
வெளியீடு : பாரதி புத்தகாலயம், எண்:7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018. தொலைபேசி எண்: 044 – 24332424, 24332924. மின்னஞ்சல்: thamizhbooks@.com
முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107. இடக்குறியீடு :
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி) அலைபேசி : 99623 90277
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 3 | பாகம் – 01
பரஸ்பர உறவு பற்றிய விதி
இனிய மணியொலி கேட்கிறது …
நான் திடீரென வகுப்பறையினுள் நுழைந்து குழந்தைகளைப் பார்க்கிறேன். உடனே நிசப்தம் நிலவுகிறது.
“குழந்தைகளே, வணக்கம்!” என்று மகிழ்ச்சியோடு கூறுகிறேன்.
வகுப்புகள் தொடங்கி இன்று இருபதாவது நாள். குழந்தைகள் என்னிடம் நெருங்கி வருவதை என்னால் உணர முடிந்தது.
ஒரு சிறுவன் சனிக்கிழமையும் தன்னைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லுமாறு எப்படி வேண்டினான் என்று அவனுடைய தாய் கூறினாள். “இன்று விடுமுறை நாள்” என்றாள் அம்மா. “நான் அங்கு ஓய்வெடுக்கிறேன்!.. ஏன் பள்ளியில் ஓய்வெடுக்கக் கூடாது?” என்று அச்சிறுவன் பிடிவாதமாக இருந்தான்.
ஆம், குழந்தைகள் பள்ளியை நோக்கி, சக நண்பர்கள், ஆசிரியரை நோக்கி, பாடங்களை நோக்கிக் கவர்ந்திழுக்கப்படுகின்றனர். ஏன்? எது இவர்களை இப்படி ஈர்க்கிறது?
ஆசிரியர் பணியில் வெளிப்படும் ஒரு விசேசமான புறவய விதி உள்ளது என்று நம்ப விரும்புகிறேன். இதை “பரஸ்பர உறவு பற்றிய விதி” என்றழைக்கலாம்:
குழந்தைகளைச் சந்திக்க ஆசிரியர் எப்போதுமே விருப்பத்தோடு செல்லட்டும், இவர்களைக் சந்திக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மகிழ்ச்சியடையட்டும்; அப்போது குழந்தைகளும் விருப்பத்தோடு பள்ளிக்கு வருவார்கள், தம் ஆசிரியரைச் சந்திக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மகிழ்ச்சியடைவார்கள்.
“வணக்கம்!” என்று அவர்கள் மகிழ்ச்சியோடு பதில் அளிக்கின்றனர்.
“உட்காருங்கள்! இன்று நிறைய வேலைகள் நமக்கு உள்ளன. ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்காது துவங்குவோம் வாருங்கள்!”
படிக்கத் துவங்க வேண்டுமென பல குழந்தைகள் பொறுமையின்றித் துடிக்கின்றனர். “எழுத்துகளைப் படிக்க ஆரம்பிப்போம்!” என்று 3-4 நாட்களாக அவர்கள் இடையறாது என்னிடம் வேண்டினார்கள். “எழுத்துகளைச் சொல்லிக் கொடுப்பதற்கு முந்தைய காலகட்டத்தை” 3-4 நாட்கள் குறைக்க வேண்டுமென நான் இப்போது நினைக்கிறேன், நான் எனது கட்டமைப்புப் பகுப்பாய்வில் சிறிது அதிக நேரத்தைக் கழித்து விட்டேன்.
நான் என்ன செய்ய வேண்டும்!
வார்த்தைகளைப் பற்றிய ஒலிப் பகுப்பாய்வுக் கோட்பாட்டை குழந்தைகள் புரிந்து கொண்டபின் (15 பாட நாட்களுக்குப் பின் இவ்வாறு புரிந்து கொண்டனர்) குழந்தைகளுக்கு எழுத்துகளைச் சொல்லித் தரத் துவங்கியிருக்க வேண்டும், கூடவே, வார்த்தைகள், வாக்கியங்களை எழுதும் முறைகளைக் குழந்தைகளுக்குச் சொல்லித் தர ஆரம்பித்திருக்க வேண்டும்.
நானோ, ஏதோ தெளிவற்ற “எழுத்துக்களைச் சொல்லிக் கொடுப்பதற்கு முந்தைய கட்டத்தை” பின்பற்றினேன். குறைந்தபட்சம் குழந்தைகளை 3-4 நாட்கள் தாமதப்படுத்தி விட்டேன். “குழந்தைகளே, என்னை மன்னியுங்கள், நான் வேண்டுமென்றே இப்படிச் செய்யவில்லை. நீங்கள் போகும் போக்கிலேயே எனது விஞ்ஞானத்தை முறிக்கின்றீர்கள், எனக்கு எல்லாவற்றையும் முன்கூட்டியே பார்ப்பது கடினம். இப்போது 1½ – 2 வயதுள்ளவர்கள் நான்கு வருடங்கள் கழித்து என் வகுப்பிற்கு வரும்போது இதை நான் சரி செய்கிறேன்!”
“எழுத்து வெறி”
என் வகுப்புக் குழந்தைகள் எழுத்துக்களை நோக்கிப் பாய்கின்றனர். நானே இதற்குத் துணை புரிந்தேன். வகுப்பறைக்கு வெளியில் உள்ள தாழ்வாரத்தில் அழகிய படங்களுடன் கூடிய குழந்தை நூல்கள் சிறு மேசைகளில் வைக்கப்பட்டன. இவற்றில் என்ன எழுதியிருக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆசை. ஆனால் படிக்கத் தெரியவில்லை. லேலா என்னிடம் ஓடிவந்து கேட்கிறாள்: “இங்கு என்ன எழுதியுள்ளது!”. கியோர்கி கேட்கிறான்: “இந்தக் கதையை தயவு செய்து படித்துக் காட்டுங்கள்!” சாஷா, இடைவேளைகளின் போது ஏதாவது புத்தகத்தை எடுத்துக் கொண்டு சொற்களையும் வாக்கியங்களையும் படிக்க முயலுகிறான். “இது என்ன எழுத்து? இது ’க’ இல்லையா?” என்று தோழர்களைக் கேட்கிறான்.
ஒவ்வொரு நாளும் நான் காலையில் முன்னதாகவே வந்து, தாழ்வாரத்தில் உள்ள கரும்பலகையில் சில வார்த்தைகளையும் எழுத்துகளையும் எழுதுவேன். குழந்தைகள் காலையில் வரும் போதே கரும்பலகையில் ஏதோ புதிதாக எழுதப்பட்டுள்ளதைப் பார்த்து விடுவார்கள். உடனே விவாதம் ஆரம்பமாகும்:
“இது ‘த’!”
“இல்லை, இது ‘த’ இல்லை ‘ட’!”
“இதோ ‘ட’, இது ‘த’. எனக்கு நன்கு தெரியும்.”
“இங்கு ‘மகிழ்ச்சி’ எனும் சொல் எழுதப்பட்டுள்ளது.”
“நெ.. நெநெ… நெருப்பு. நான் படித்து விட்டேன்!.. ‘நெருப்பு!..’ “
“’மக்க்க்கள்!… மக்கள்! ஓ… நானும் படித்து விட்டேன்!”
எங்கள் வகுப்பிற்கு வெளியே சலசலவென ஒலி எழுந்தது. இதை விட இசை நயமானதை எந்தக் காட்டிலும் கேட்க முடியாது. எழுத்துகள், வார்த்தைகளைப் படிக்க குழந்தைகள் பரஸ்பரம் உதவி செய்து கொண்டனர். நான் கரும்பலகையில் எழுதிய சொற்கள் தற்செயலானவையல்ல. இவையெல்லாம் வகுப்பறையில் ஏற்கெனவே ஒலித்தவை, இவை ஒவ்வொன்றைப் பற்றியும் விரிவாக ஒலிப் பகுப்பாய்வு நடத்தியுள்ளோம். எனவே, வகுப்பறையில் பாடங்களின் போது எழுத்துகளைச் சொல்லிக் கொடுப்பதற்கு முந்தைய கட்டம்’ நீண்டு கொண்டே போனபோது தாழ்வாரத்தில் “எழுத்துக் கட்டம்” மும்முரமாக இருந்தது. கடந்த 3-4 நாட்களாக என் வகுப்புக் குழந்தைகளை ஆட்கொண்ட நிலையை “எழுத்து வெறி” என்று தான் என்னால் அழைக்க முடியும்.
இந்த எழுத்துக் கட்டத்தை உடனடியாகத் தாழ்வாரத்திலிருந்து வகுப்பறைக்கு, பாடங்களுக்கு மாற்ற வேண்டும். இல்லாவிடில், பேச்சு எதார்த்தம் பற்றி அவர்களிடம் சமீபத்தில் கேள்வி கேட்டபோது ஏற்பட்டதைப் போன்ற முட்டுக்கட்டை உண்டாகும். அப்போதுதான் வெறிக்கான அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்தன.
“நான் இப்போது செய்யப் போவதை எந்தச் சொல்லால் குறிக்கலாம்?” நான் வகுப்பறையில் நடந்து காட்டினேன்.
”நடப்பது!..” என்று குழந்தைகள் பதில் சொன்னார்கள்.
“இது?”
“உட்காருவது!..”
”இது?”
கையில் சாக்பீசை எடுத்துக் கொண்டு தற்செயலாக தோன்றிய சொல்லை எழுதி விட்டு எழுதுவது” என்று பதில் வருமென நம்பிக்கையோடு திரும்பிப் பார்க்கிறேன்.
ஏக்கா: “’துணிவு.”
“துணிவா! அப்படியென்றால் என்ன?” என்று நான் வியப்போடு கேட்டேன்.
வோவா: “நீங்கள் தானே ‘துணிவு’ என்று எழுதினீர்கள்.”
“நான் என்ன எழுதினேன் என்று கேட்கவில்லை. நான் செய்த செயலை எப்படி அழைக்கலாம் என்றுதான் கேட்கிறேன். இதோ பாருங்கள்!” என்றபடியே நான் இன்னமும் சிக்கலான ஒரு வார்த்தையை (”எதிர்பார்த்திரு”’) தெளிவின்றி விரைவாக எழுதிக் காட்டுகிறேன். “இந்தச் செயலுக்கு என்ன பெயர்?”
எழுதுவது என்று பெயர். அதே சமயம் என்ன நடந்தது தெரியுமா? பலர் தம் விரல்களைச் சுட்டிக் காட்டியபடியே மெதுவாக உச்சரிக்கத் துவங்குகின்றனர்.
மாயா: ”எஎஎ… திர்…”
தாத்தோ: “எதிர்பார்…”
கீகா: “இல்லை ! எதிர்காண்!”
மாயா: “’எதி-ர்-பா-ர்… எதிர்பார்த்திரு!” என்று உற்சாகமாகக் கூறுகின்றனர் “அங்கே ‘எதிர்பார்த்திரு’ என்று எழுதியுள்ளது.”
“சரி, நல்லது!” என்று நான் யோசித்தபடியே பேச்சு யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளும் பயிற்சிகளை நிறுத்தினேன். “அடுத்த முறை வேறு பயிற்சிகளில் இதைத் தொடர்வோம்! இப்போது…”
“சிறிது விளையாடுவோமா? நான் வார்த்தைகளை எழுதுவேன். உங்களால் முடிந்தால் உடனேயே இவற்றை உரக்கப் படியுங்கள்.”
நான் கரும்பலகையை விட்டு அகன்று குழந்தைகள் நான் எழுதியதைப் பார்த்ததுமே “சூரியன்!” என்று ஒரு பெரும் ஓசை எழுந்தது.
நான் மீண்டும் அவர்களுக்குத் தெரியாதபடி கரும் பலகையின் முன் நின்று ஒரு வார்த்தையை எழுதி விட்டு நகர்கிறேன்.
“மரம்!” என்று மகிழ்ச்சியோடு குழந்தைகள் கூறுகின்றனர்.
பின்னர்: “வீடு!.. அம்மா!.. அப்பா!.. பாட்டி!..”
எல்லோரும் படிக்கவில்லை. எழுத்துக் கூட்டிப் படிக்கச் சிலருக்கு நேரம் போதவில்லை, மற்றவர்கள் இவ்வார்த்தையை உச்சரித்தனர்.
முடிவாக ஒரு துணிச்சலான சம்பவம் பற்றிய கதையைப் படித்தோம். ஓய்வு நேரம் கிடைத்த போதும், பெரும் இடைவேளைகளின் போதும், பூங்காவில் உலாவும் போதும் இப்படிப்பட்ட புத்தகத்தை என்னாலியன்றவரை உணர்ச்சியோடு, பாவனை நயத்தோடு படித்துக் காட்டினேன். படிப்பதைத் தொடர்ந்து கேட்கவே அவர்களுக்குப் பொறுமையில்லை. “இப்படிப் படிக்க முடியுமெனில் நீங்கள் எவ்வளவு சந்தோஷமானவர்!” என்று சமீபத்தில் ஏல்லா கூறினாள். “ஆம், குழந்தைகளே, படிக்கத் தெரிந்திருப்பதும், படிக்கும் ஆர்வமும் உண்மையான மானுட மகிழ்ச்சி. புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ளப் படிக்கும் ஆர்வத்தை உங்களுக்கு எப்படி ஊட்டுவது? இதுதான் இனி என் அக்கறை!” என்று நான் என் மனதினுள்ளேயே ஏல்லாவிற்குப் பதில் சொல்லிக் கொண்டேன்.
நான் இப்படியாக “எழுத்து வெறியை” ஏற்படுத்தினேன்: குழந்தைகள் என்னையும், தம் பெற்றோர்களையும் துளைத்து எடுத்தனர். ”இது என்ன எழுத்து!.. இங்கு என்ன எழுதியுள்ளது!.. இதைப் படித்துக் காட்டு!” என்று கேட்டவண்ணமிருந்தனர். தாழ்வாரத்திலிருந்த கரும்பலகையில் காலைதோறும் நான் எழுதிய எழுத்துகள், சொற்கள், வாக்கியங்களின் அருகிலேயே நீண்ட நேரம் நின்றார்கள்…..
நாளை முதல் அவர்களுக்கு எழுத்துக்களைச் சொல்லித் தர ஆரம்பிப்பேன். அப்போது விரைவாகத் தெரிந்து படிக்கும் பழக்கத்தை அவர்களிடம் ஏற்படுத்துவேன். இன்று 25 நிமிட மினி-பாடவேளைகளின் போது வார்த்தைகளின் கட்டமைவுப் பகுப்பாய்வு சம்பந்தமான பயிற்சிகளைத் தருவேன், படிக்கவும் எழுதவும் பயிற்றுவிக்க வேண்டும்.
இந்த மினி- பாடவேளைகள் எவ்வளவு நல்லவை, கச்சிதமானவை, முழுமையானவை தெரியுமா! குழந்தைகள் களைப்படைவதேயில்லை, இடைவேளை நேரம் வந்ததும் உலோகத்தாலான ஒரு வளையத்தில் மாட்டப்பட்டுள்ள மூன்று பொன்னிற மணிகளை எடுத்து ஆட்டி ஐந்து நிமிட வகுப்பு இடைவேளை ஆரம்பமாகியதைக் குறிப்பிடுகிறேன். சில சமயங்களில் குழந்தைகள் என்னுடன் சேர்ந்து உடற்பயிற்சிகள் செய்வார்கள். சில சமயங்களில் அவர்கள் விருப்பப்படி விட்டு விடுவேன். மற்றும் சில நேரங்களில் தலையைக் குனிந்தபடி இருந்த இடத்திலேயே உட்கார்ந்தபடி நல்ல இசையைக் கேட்கும்படி அல்லது ஏதாவது நல்ல விஷயங்களைப் பற்றி யோசிக்கும்படி சொல்வேன், கற்பனை செய்து பார்க்கும்படி சொல்வேன். பின் என் கைவசமுள்ள மணிகள் ஐந்து நிமிடங்களுக்குப் பின் இனிய ஒலியை எழுப்பும். பள்ளி முழுவதற்குமான மின்சார மணி அடித்து இடைவேளை ஆரம்பமாகும்வரை எங்கள் பாடம் தொடரும்.
தேசியக் கல்விக் கொள்கை – 2019 : சனநாயக கல்விமுறை நீர்த்துப் போகுமா ?
தேசியக் கல்விக் கொள்கை -2019 (வரைவு), மே மாதம் 30 -ம் தேதியில், புதிதாகப் பதவியேற்ற அரசு வெளியிட்டுள்ள முதல் ஆவணங்களில் ஒன்றாகும். 484 பக்கங்களைக் கொண்ட இந்த வரைவு, 4 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை முறையே பள்ளிக் கல்வி, உயர்கல்வி, கூடுதல் கவனத்திற்கான முக்கிய பகுதிகள், மற்றும் கல்விமுறையில் மாற்றம் போன்றவற்றை பேசுகின்றன.
ஒரு ‘துடிப்பான அறிவு சமூகத்தை’ உருவாக்க உதவும் ‘இந்தியாவை மையப்படுத்திய கல்விமுறையை’ வென்றெடுப்பது என்பதே இந்த புதிய கல்விக் கொள்கைக்கு வழிகாட்டு நெறியாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வரைவின் மீது பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய தரப்பினர், ஜூன் 30-ம் தேதிக்குள் தங்களது கருத்தினை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மிக குறுகிய காலமே உள்ள நிலையில், இந்த வரைவுக் கொள்கைகள், இதுவரை எந்த ஒரு தீவிரமான விவாதத்திற்கும் எடுத்துக் கொள்ளப்படாதது மிகவும் வேதனையானது.
இவ்வாறு விவாதமின்றி அவசரமாக அமல்படுத்தப்பட்டால், இவை மிக மோசமான விளைவுளை ஏற்படுத்துவதோடு, கடந்த பல வருடங்களாக, இந்திய கல்வி முறையை சனநாயகப்படுத்துவதற்காக எடுத்துக்கொண்டு அனைத்து தீவிர முயற்சிகளையும் நீர்த்துப்போகச் செய்துவிடும்.
வலுவிழக்கும் அரசியலமைப்பு
பொதுவாக, இதுபோன்ற அரசு ஆவணங்கள், சட்டங்கள் மற்றும் கொள்கை வரைவுகள், இந்திய அரசியலமைப்பு கோடிட்டுக் காட்டியுள்ள மதிப்புகளையும், வழிகாட்டிகளையும் மேற்கோள்காட்டி தொடங்குவது வழக்கம்.
ஆனால் தேசியக் கல்விக் கொள்கை-2019 (இனிமேல் தே.க.கொ-2019), இந்த வழக்கத்திலிருந்து மாறுபட்டுள்ளது. இதன் வரைவுக் குழுத் தலைவர் முனைவர். கஸ்தூரி ரங்கன் இதன் முக்கிய நோக்கமாக ‘இந்தியாவின் மரபுகளையும் மதிப்புகளையும் நிலைநிறுத்தும் அதே வேளையில், 21-ம் நூற்றாண்டுகளின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக ஒரு புதிய முறையை உருவாக்குவது’ என கூறுகிறார்.
ஒருசில இடங்களில் அரசியலமைப்பு குறிப்பிடப்பட்டிருந்தாலும் ( ப.எண்; 83, 289, 303), பொதுவாக அது முதன்மைப்படுத்தப்படவில்லை . இதற்கு பதிலாக ‘அதீத ஊக்குவிப்பு’ (heavy promotion), மேம்பாடு (upliftment), சமுதாயம் (community) போன்ற வார்த்தைகள் அதிகம் வலியுறுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, பள்ளிக் கல்வியின் அனைத்து நிலைகளிலும் இந்திய, வட்டார பாரம்பரியங்கள், மரபுகள் அதீதமாக ஊக்குவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது (ப.எண்.76). ஒரு புதிய வீரியத்துடன் இந்திய மொழிகளை கற்பித்தல் அதீதமாக ஊக்குவிக்கப்படும்(ப.எண்.82). மொழி கற்பித்தலுக்கு உதவியாக இந்திய இலக்கியங்களை வாசிப்பது, ஆராய்வது மேம்படுத்தப்படும்(ப.எண். 85). இதுபோன்ற முயற்சிகள் இந்திய மொழிகளையும் இலக்கியங்கள் மீதான பயிற்சியையும் அறிவையும் வளர்த்தெடுக்க கட்டாயமாக உதவும் என்றாலும், இது ஒரு ஒற்றை கண்ணோட்டத்திலான ஒழுக்கநெறி சார்ந்த போதனைக்கு இட்டுச்செல்லும் என்ற பயமும் மேலோங்குகின்றது.
மேலும் 21-ம் நூற்றாண்டின் குழந்தைகளுக்கு, உலக இலக்கியங்கள், கலை வெளிப்பாடுகள் மீதான அறிவு மிக முக்கியமானதாக இருக்கின்றது. எனவே, உலக இலக்கியங்கள் இந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்தலின் தேவை அவசியமாகிறது. இவ்வகையான அறிவை, பரந்த கண்ணோட்டத்தை குழந்தைகள் பெறுவதற்கு இந்தக் கல்விக் கொள்கை தடையாக இருப்பது வருந்தத்தக்கது.
மேலே குறிப்பிட்டதுபோல், அரசியலமைப்பு முன்னிறுத்தப்பட வேண்டிய இடங்களில், கையாளப்படும் மற்றொரு வார்த்தை ‘சமுதாயம்’ (community) ( ப.எண்.29). இதன்படி, கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள் ‘சமுதாயத்தின்’ மேற்பார்வையின் கீழ் கொண்டுவரப்படுகிறது.
இது தே.க.கொ-2019 கூறும் ‘சமூதாயம்’ என்பது என்ன என்ற கேள்வியை கேட்கத் தூண்டுகின்றது. சாதி, மதம் மற்றும் வர்க்கம் என்று பிளவுண்டு கிடக்கும் இந்திய சமூகத்தை ஒரு ஒற்றை சமூகமாக கட்டமைப்பது மிகவும் ஆபத்தானது. இது சமூகத்தின் ஆதிக்க சக்திகளின் பிடியில் பொதுக்கல்வி அடிமைப்பட்டுவிடும் வாய்ப்பை ஏற்படுத்தும்.
எடுத்துக்காட்டாக, தே.க.கொ-2019 -ன்படி, கல்வித்திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தும் வகையில், பள்ளி நிர்வாக குழுக்களில் (School Complex Management committees) ‘சமுதாயம்’ முக்கியப் பங்கை வகிக்க வாய்ப்பு கொடுக்கப்படுகிறது (ப.எண்.173). இதுமட்டுமல்லாமல், ஆரம்ப குழந்தைப் பராமரிப்பு மற்றும் கல்வி (Early childhood care and education), கல்வி மற்றும் எண் அறிவு திறமைகளை மேம்படுத்துதல் (ப.எண்.57), கல்விக்கான உரிமையை நடைமுறைபடுத்துதல் (ப.எண்.67) போன்றவற்றிலும் ‘சமூதாயத்தின்’ பங்கு ஊக்குவிக்கப்படுகிறது.
மேலும், 6 -லிருந்து 8 -ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எந்த வகையான தொழிற்பயிற்சி கொடுக்கப்படவேண்டும் என்று தீர்மானிப்பதில் இந்த ‘சமூதாயம்’தான் பரிந்துரைகளைக் கொடுக்கும் (ப.எண்.95). ஆரம்பக் கல்விபோல், உயர் கல்வித் துறைகளும் ‘சமூதாயத்துடன்’ இணைந்து செயல்படும் (ப.எண்-202). இவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், தே.க.கொ-2019 கூறும் ‘சமுதாயம்’ ஒடுக்கப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள், ஆதிவாசிகள், உடல் ஊனமுற்றோர், மற்றும் உழைக்கும் வர்கத்தினரின் பிரதிநிதித்துவத்தை கொண்டிருத்தல் முக்கியம்.
ஆனால் பிரதிநிதித்துவம் குறித்து எவையும் உறுதிபடுத்தப்படவில்லை ஆகையால், தே.க.கொ-2019 ஒரு ஒற்றைப்பார்வை கொண்ட ஆளும் வர்கத்தின் சாதியின் ஆதிக்கத்தை வலுப்படுத்தும் ஒரு கல்வி முறையை திணிக்க முற்படும் செயலாகவே அமையும்.
பால் சார்ந்த அடையாளங்கள்
இ.க.கொ-2019 -ல், பால் சார்ந்த அடையாளங்கள் மிகச் சாதாரணமாகவும் கவனக்குறைவுடனும் கையாளப்படுகின்றன. இதில் வரும் Manpower மற்றும் chairman போன்ற வார்தைகள் பொதுவாக பால்-சரிசமமான வார்த்தைகளாகப் பார்க்கப்படுவதில்லை.
குழந்தைக் கல்வியில் பெண்கள் மற்றும் தாய்மார்களின் பங்கு முக்கியமாக வலியுறுத்தப்படுகின்றது (ப.எண்.57, 60). பெண் கல்வியின் முக்கியத்துவம் (ப.எண்.116, 146,) பள்ளிக்கல்வி வரை மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. உயர் கல்விக்கு வரும்போது இதன் முக்கியத்துவம் காணாமல் போகின்றது.
பெண்கல்வியை குறித்து இந்த வரைவு, ‘பெண்கல்வி என்பது, வறுமை ஓழிப்புக்கும், வன்முறைகளை ஒடுக்குவதற்குமான வழி. சமூக ஆரோக்கியத்திற்கும், பொதுமக்கள் உடல் நலத்தையும் பேணும் வழி. அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவேண்டிய வளர்ச்சி கூறுகளை வளர்த்தெடுக்க உதவுவது’ என குறிப்பிடுகிறது.
வேறு வார்த்தையில் கூறினால், பெண்களுக்கான கல்வி என்பது அவர்களின் உரிமை என்ற நோக்கில் அணுகாமல், அதன் முக்கியத்துவத்தை பொதுநலன் என்ற பார்வையின் அடிப்படையிலே முன்வைக்கப்படுகின்றது.
கல்வி நிறுவனங்களில் பாலியல் துன்புறுத்தல் பற்றி ஒருசில இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன (ப.எண்.66,69). ஆனால் இவற்றில் ஈடுபடுவோர் ஒழுக்கப்படுத்த பட வேண்டும்(ப.எண்.69) என்ற கண்ணோட்டமே உள்ளது. பொதுவாக, ஆண் மாணவர்களுக்கு பால் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் எந்த ஒரு நீண்ட காலத் திட்டமும் இதில் குறிப்பிடப்படவில்லை. பெண்களை மதிப்பது, பாதுகாப்பு, குடும்ப கட்டுப்பாடு, போன்றவற்றை மாணவர்கள் கற்கவேண்டும் (ப.எண்.97).
21-ம் நூற்றாண்டின் பால்சார்ந்த எந்த ஒரு புதுக் கண்ணோட்டத்தையும் இந்த வரைவு கொண்டிருக்கவில்லை. மேலும் பால், பாலியல், மாற்றுபால் நோக்குநிலைகளை பற்றி பேசத்தயங்குவது வெளிப்படையாகத் தெரிகின்றது.
கடந்த சில வருடத்தில், பல்கலைகழகங்களில் women studies போன்ற துறைகள் ஊக்குவிக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வந்தாலும், தே.க.கொ-2019 இதைப்பற்றி எதுவும் பேசவில்லை .
ஏழைப் பெற்றோர்
தே.க.கொ -2019 பிரதிநிதித்துவப்படாத குழுக்கள் ( Under Represented Groups) என்ற பதத்தை ஒடுக்கப்பட்டோர், பட்டியல் இனத்தினர், பின்தங்கியோர், போன்றோரை குறிப்பதற்காக பயன்படுத்துகின்றது. குழந்தைகளின் கல்விக்கும் குடும்பத்தின் வருமானத்திற்குமான தொடர்பு பேசப்பட்டிருந்தாலும், இவை ஆழமாக சிந்திக்கப்படவில்லை.
குழந்தைக் கல்வி மற்றும் பராமரிப்பு பற்றிப் பேசும்போது, ஒற்றை பெற்றோர், அமைப்புச்சாரா துறைகளில் வேலை செய்வோர் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை (ப.எண். – 48). இவ்வகை பெற்றோர்கள் குழந்தைக் கல்வி செயல்பாடுகளில் எவ்வாறு பங்கேற்பார்கள் என்ற புரிதல் இல்லை.
குழந்தைகளுக்கான வீட்டுப் பாடங்கள் செயல்பாடுகளில் பெற்றோர்களின் பங்கு பேசப்படுகின்றது (ப.எண்.62). இவற்றில் பெரும்பாலும், வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கும் பெற்றோர்களை கணக்கில் கொள்ளவில்லை.
வசதியற்ற பெற்றோர்கள், தங்களின் தலைவிதிக்கு தாங்களே பொறுப்பு என்பது போன்ற செய்தியே மறைவாக முன்வைக்கப்படுகின்றது. எடுத்துக்காட்டாக, தே.க.கொ-2019 -ல் வரும் ஒரு பத்தியை பார்போம்; பால்ய திருமணம், குழந்தைத் தொழில், இளம் வயதிலேயே வேலைக்குச் செல்லவேண்டிய கட்டாயம், சாதித் தொழிலை பின்பற்ற வேண்டிய நிலை, போன்ற காரணங்களால் சில குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரை பள்ளிக்கு அனுப்புவதில்லை.
தம்பி தங்கைகளை வளர்கவேண்டிய சூழ்நிலை வளர்ந்த குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்கு தடையாக இருக்கின்றது. சுகாதாரமற்ற வாழ்விடங்கள், துப்பரவு வசதிகள் இன்மை, தூய்மையற்ற உணவு போன்றவற்றால் குழந்தைகள் நீண்டகால நோய்களுக்கு ஆளாவது போன்றவை குழந்தைகளின் கல்விக்கு தடையாகக் காரணம் காட்டப்படுள்ளது. ஆனால் தே.க.கொ-2019 இதற்கான தீர்வுகளைப் பற்றி ஆழமாக சிந்திக்கவில்லை .
குழந்தைகளுக்கு ஆங்கிலக் கல்விமூலம் காலங் காலமாக சமூகத்தில் பின்தேங்கி நிற்கும் நிலையிலிருந்து விடுபட நினைக்கும் பெற்றோர்களுக்கு தே.க.கொ-2019 ஆதரவானது அல்ல. இது இவ்வகை எதிர்பார்ப்பை இயற்கைக்கு புறம்பானது என்பதோடு மட்டுமல்லாமல் ஆங்கிலம் மேட்டுக்குடியினருக்கான மொழியென வரையறுக்கின்றது. இருந்தபோதிலும், ஏழை குடும்பத்தில் இருந்து வரும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை பற்றி பேசுவதன் மூலம் (ப.எண்.245) தே.க.கொ-2019 வசதியற்றோரை முழுவதுமாக கைவிட்டுவிடவில்லை எனக் கூறலாம்.
மிக முக்கியமாக தே.க.கொ-2019 சாதியைப்பற்றி குறிப்பிடுவதில் லாவகமாக தவிர்த்து மௌனம் சாதிக்கிறது. ஆணாதிக்கம், நிறவெறி போன்றவைகூட ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தாலும் (ப.எண்.101), சாதி ஒரு சமூக பிரச்சினையாக பார்க்கப்படவில்லை.
பக்கம் எண் 138-ல் குழந்தைகள் எதிர்காலத்தில் வளர்ந்தபின் ஒரு சமத்துவமான உள்ளடக்கிய சமூகத்தில் அங்கமாக இருப்பார்கள். எனவே இது அமைதிக்கும் தேசிய ஒற்றுமைக்கும் வழிவகுக்கும் என்று கூறப்படுகின்றது. ஆனால் தற்போது புறந்தள்ளப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வரும் மாணவர்களின் உரிமையைப் பற்றி பேசவில்லை.
குறிப்பாக, இந்த வரைவு, கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கான அல்லது ஆசிரியர்களுக்கான இட ஒதுக்கீடு பற்றி எங்குமே குறிப்பிடவில்லை. கடந்த சில வருடங்களாக, இட ஒதுக்கீடு சமூக ஏற்றத் தாழ்வை குறைக்கும் ஆயுதமாக இருந்துள்ளது. தே.க.கொ-2019, இதுவரை இட ஒதுக்கீடு சம்பந்தமாக எடுத்துக்கொண்ட அனைத்து முயற்சிகளையும் மறுதலிப்பதாக உள்ளது.
இத்துடன், பக்கம் எண் 334 -ல், தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு கொள்கைகளை கடைபிடிக்க வேண்டிய தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
பக்கம் எண்கள் 148 – 49-ன் படி, பட்டியல் இனம், பின்தங்கிய இனம் இவற்றில் இருந்து வரும் மாணவர்கள் இவ்வினத்திலிருந்து வரும் ஆசிரியர்கள் மூலமே கற்பிக்கப்பட வேண்டும். ஏனென்றால், இவ்வாசிரியர்கள் இம்மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருப்பார்கள். இஸ்லாமிய மாணவர்கள், உருது தெரிந்த ஆசிரியர்கள் மூலம் கற்பிக்க வேண்டும். இங்கு உருது தெரியாத இஸ்லாமிய மாணவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.
இட ஒதுக்கீடு பேசப்படாத நிலையில், ‘மெரிட் சிஸ்டம்’ பேசப்படுகின்றது. கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்க்கை முதல் ஆசிரியர் நியமனம்வரை ஒரு கடுமையான ‘மெரிட் சிஸ்டம்’ கடைபிடிக்கப்படும் (ப.எண்கள்; 114, 116, 119) என கூறப்பட்டுள்ளது..
மாற்றுத் திறனாளிகள்
தே.க.கொ – 2019, CwSN (children with special needs) என்ற பதத்தை பயன்படுத்துகின்றது. இவை பெரும்பாலும், இவ்வரைவின் தொடக்கப் பக்கங்களில், ஆரம்பக் கல்வியைப் பற்றி பேசும்போது குறிப்பிடப்படுகின்றன. ஆனால், உயர்கல்வி பற்றி பேசும் பக்கங்களில் இவை காணப்படவில்லை.
பக்கங்கள் 154 மற்றும் 155 மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தேவைகளைப் பற்றி பேசுகின்றன. ஆனால் மாற்றுத் திறனாளி ஆசிரியர்களை நியமனம் செய்வது குறித்த வழிமுறைகளைப் பற்றியோ அல்லது அவர்களுக்கான சிறப்பு தேவைகளை பூர்த்தி செய்வது பற்றியோ எந்தவித குறிப்பும் இல்லை.
மேலும், ஒவ்வொரு கொள்கைக்கும், அவற்றை அமல்படுத்துவதற்கான ஒரு காலக்கெடுவை முன்வைக்கும் தே.க.கொ-2019, மாற்றுத் திறனாளிக்கான சிறப்பு தேவைகள் பற்றி குறிப்பிடும்போது மட்டும் எந்த காலக்கெடுவையும் கொடுக்கவில்லை.
மொழிக் கொள்கை
கடந்த சில தினங்களாக, தே.க.கொ-2019-ன் மொழிக் கொள்கைக்கான எதிர்வினைகள் பல்வேறு தரப்பினரிடமிருந்து வெளிவருகின்றன. இதன் பயனாக கட்டாய ஹிந்தி என்ற நிலையிலிருந்து அரசு பின்வாங்கியுள்ளது.
தே.க.கொ-2019-ல் 86-வது பக்கத்தில் ஒரு புதிய, ‘இந்தியாவின் மொழிகள்’ என்ற பாடம் 6 முதல் 8-ம் வகுப்புவரை அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, இந்த ‘புதிய’ பாடத்தில், இந்தியாவின் முக்கியமான மொழிகளுக்கிடையே குறிப்பிடும்படியான ஒற்றுமைகளை மாணவர்கள் கற்பார்கள். இவற்றிற்கிடையேயான பொதுவான உச்சரிப்பு, அறிவியல்பூர்வமாக அமைந்துள்ள எழுத்து வரிசை, எழுத்துருக்கள், இவற்றின் இலக்கண அமைப்புகள், சமஸ்கிருதம் மற்றும் ஏனைய செம்மொழிகளிருந்து இவற்றின் தொடக்கம், மற்றும் இவற்றின் ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகள் போன்றவற்றை பயில்வார்கள் என்கிறது.
ஏற்கெனவே, பல்வேறு பாடத் திட்டங்களாலும் புத்தகப் பளுவாலும் துயரில் உழலும் மாணவர்களுக்கு இதுபோன்றதொரு பாடத்தை புகுத்தி அவர்களை மேலும் துயரத்தில் ஆழ்த்துவதற்கான காரணத்தை நம்மால் அவதானிக்க முடியவில்லை.
பக்கம் எண் 87-ல், 6-லிருந்து 8-ம் வகுப்பு வரை தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் ஒரு இந்திய செம்மொழியை பயில்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்த செம்மொழிகளின் வரிசையில், சமஸ்கிருத்துடன், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா, பாலி, பாரசீகம், மற்றும் பிராகிருதம் போன்ற மொழிகள் இருந்தாலும், பயன்பாட்டில் சமஸ்கிருதம் கற்றல் வலியுறுத்தப்படும் என்பதில் சந்தேகமில்லை.
பொதுவாக, இந்த வரைவு சமஸ்கிருதத்தின் முக்கியத்துவத்தை முன்வைக்கின்றது. எடுத்துக்காட்டாக, பக்கம் எண் 86 -ல், “ஒரு நவீன கால மொழியாக இருந்தபோதிலும், தன்னிடம் லத்தின் மற்றும் கிரேக்க மொழிகளில் உள்ள அனைத்து இலக்கியங்களையும் ஒன்று சேர்த்து தொகுத்தாலும், அம்மொழிகளில் உள்ள இலக்கியங்களை விட அதிகமான தொன்மை இலக்கியங்களை சமஸ்கிருதம் கொண்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. ‘இவை பல்லாயிரம் வருடங்களாக, வெவ்வேறு சமூக சூழ்நிலையிருந்து வந்த மதம் சார்ந்த மற்றும் மதம் சாராத ஆசிரியர்களால் எழுதப்பட்டவை’. இது ஒரு உண்மையை திரித்து கூறிய கருத்தாக பார்க்க வேண்டியுள்ளது. மேலும் முக்கியமாக, இவ்வகை ஒப்பீட்டு மொழி கற்றலிலிருந்து அரபு மற்றும் சீனம் போன்ற மொழிகள் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டுள்ளன.
தே.க.கொ-2019 வரைவு முழுவதும் ஒரே விடயங்கள் திரும்பத்திரும்ப சொல்லப்பட்டு, பிழைகள் மலிந்தும், பல்வேறு கருத்துகளுக்கு ஆதாரங்கள் சுட்டிக் காட்டப்படாமலும் இருப்பதையும் எளிதாகக் காண முடியும்.
மேலும், பழைய பண்பாடு, புராதனம், மரபுகள் போன்றவற்றை கற்றல் கற்பித்தலில் வலியுறுத்தும் போக்கு எங்கும் வியாபித்துள்ளது. இந்தியாவின் மரபுகளையும், மதிப்புகளையும் பேணுதல் என்பது தே.க.கொ-2019-ன் முக்கிய அம்சமாக ஆங்காங்கு பேசப்படுகின்றது.
குறிப்பாக ஆசிரியர் பயிற்சியை திடப்படுத்துவது, இவற்றை வென்றடைவதற்கான ஒரு வழியாக முன்வைக்கப்படுகின்றது. இதன்படி ‘ஆசிரியர்கள் தற்போதைய நவீன கல்வி மற்றும் கற்பித்தலில் முழுத் திறமையோடு இருக்கும் அதே வேளையில், இந்திய மதிப்புகள், பண்பாடு, பாரம்பரியம் மற்றும் அறிவு போன்றவற்றில் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்’.
மேலும், பல்வேறு கொள்கைகளுக்கான விளக்கங்கள் சமஸ்கிருத இலக்கியங்களிருந்தும், இராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற காப்பியங்களிலிருந்து எடுக்கப்பட்ட குறிப்புகளுடன் கொடுக்கப்பட்டுள்ளது. இக்குறிப்புகள்கூட பிழைகள் மலிந்து தவறாகவும் உள்ளன. தக்ஷிலா மற்றும் நலந்தா போன்ற பண்டைய பல்கலைக் கழகங்கள் முக்கிய உதாரணங்களாக காட்டப்பட்டுள்ளன.
இந்திய வரலாறு என்பதை சமஸ்கிருத மொழியை சார்ந்த வரலாறாக காட்டும் உந்துதல் அதிகமாக உள்ளது. அண்மைக் காலங்களில் வரலாற்று ஆய்வுகள் மேட்டுக்குடி மக்களின் வரலாற்றை எழுதுவதிலிருந்து விலகி, சாமானிய மக்களின் வரலாற்றை வாசிப்பதில் ஆர்வம் காட்டியுள்ளன. உழைக்கும் மக்கள், பெண்கள், ஒதுக்கப்பட்ட நிலப்பரப்புக்கள் அதன் குடிகள், ஒடுக்கப்பட்ட சாதி சமூகங்கள், என இவர்களின் வரலாறுகள் ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்க்க தொடங்கியிருக்கிறது. ஆனால், தே.க.கொ-2019-ல் இதுபோன்ற புது தகவல்களை, சிந்தனைகளை உள்வாங்கும் தாராளப் போக்கு காணப்படவில்லை.
மாணவ, ஆசிரியர் சங்கங்கள்
தே.க.கொ-2019-ல், மாணவ சங்கங்கள் பற்றிய எந்த குறிப்பும் இல்லாததோடு, இச்சங்கங்களை அங்கீகரிப்பது சம்பந்தமான எந்த வழிமுறைகள் பற்றியும் பேசப்படவில்லை. பேச்சுவார்த்தைக்கும், விமர்சனத்திற்கும், போராட்டத்திற்கும், எதிர்வினையாற்றுவதற்குமான எந்ததொரு வாய்ப்பையும் தே.க.கொ-2019 கொடுக்கவில்லை.
வரைவின் 292-ம் பக்கத்தின்படி, ஆசிரியர்களுக்கு ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், அவர்கள் அரசு அதிகாரிகளிடம் புகார் செய்ய முடியும் அல்லது பிரதம மந்திரி தலைமை தாங்கும் RSA அமைப்பிடம் தெரிவிக்கவேண்டும் (ப.எண்.292).
தே.க.கொ-2019-ஐ அமல்படுத்துவது வருங்கால சந்ததியினரை கருத்தில் கொண்டு செயல்படவேண்டும் என்பதனால், இக்கொள்கைகளின் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பது பற்றிய ஒரு தெளிவான ஆழமான விவாதம் மிகமுக்கியமானதாகும். இந்த வரைவுதிட்டம் சமூகபொருளாதார-பண்பாட்டு வேறுபாடுகளை மதிப்பது ஏற்றுக்கொள்வது என்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் கல்வி கொள்கைகளை வடிவமைப்பதன் சாத்தியத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுபோல் தெரிகின்றது.
ஆழ்ந்து வாசிக்கும்போது, இவை சமூக, பொருளாதார வேறுபாடுகளை கலைவதற்கு பதிலாக அவை மறுகட்டமைப்பு செய்யப்படுவதற்கான ஆபத்துகள் அதிகமாக தெரிகின்றன. கல்விக் கொள்கைகள் அரசியலமைப்பு கூறுகின்ற வழிகாட்டுதலை அடிப்படையாக கொண்டு வரையப்பட வேண்டும். கல்விக் கொள்கைகளை அரசியலமைப்பின் பிடியிலிருந்து நீக்கி ‘சமுதாயத்தின்’ ஆளுகைக்கு மாற்றுவது பேராபத்தை விளைவிக்கும்.
காப் பஞ்சாயத்து – வெறிபிடித்தவர்களின் சாதிமன்றம்
ஒருகணம் காப்-பஞ்சாயத்தின் கீழ் பள்ளிகூடங்கள் வருகின்றன என்ற நினைத்து பாருங்கள், இதன் விளைவுகள் என்னவாக இருக்கும். ஒடுக்கப்பட்ட சாதியினர், பழங்குடியினர், பெண்கள், உழைக்கும் வர்க்கத்தினர், உடல் ஊனமுற்றோர், சிறுபான்மையினர் இவர்களின் உணர்வுகளை உரிமைகளை மதிப்பதாக கல்விதிட்டங்கள் அமைய வேண்டும்.
கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு சமூக மாற்றத்திற்கான தொடக்கப் புள்ளியாக இருந்துள்ளது, இதை அழிக்க விழையும் எந்த கொள்கையையும் உடனே நீக்க வேண்டும். இந்த வரைவு திட்டத்தை எழுதியோர், கல்வி என்பது மக்களின் உரிமை, மக்களுக்கான சேவை அல்ல என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
ஒவ்வொரு மொழியும் முக்கியமானது என்றபோதிலும், சமஸ்கிருதம் மற்றும் ஹிந்தி இவற்றை முதன்மைபடுத்துவதன் மூலம் மற்ற மொழிகளை பின்னுக்குத்தள்ளவது ஏற்றுக்கொள்ள முடியாது. பழைய பண்பாட்டின் பெருமைகளை பண்டைய ஆட்சியாளர்களின் சாதனைகளைப் பட்டியலிடுவதைவிட, 21 -ம் நூற்றாண்டு மாணவர்கள் சதாரண மக்களின் வரலாற்றை, போராட்டங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியதும் அவசியமாக உள்ளது.
சௌ. குணசேகரன் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்,
புதுதில்லி.
(சக பேராசிரயர், முனைவர் கும்கும்ராய் அவர்கள் வரைவு குழுவிற்கு எழுதிய நீண்ட எதிர்வினையைத் தழுவி எழுதப்பட்டது)
தமிழகம் முழுவதும் செங்கல் அறுக்கும் தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இருக்கின்றன. இந்த தொழிலில் இருக்கும் பலரும் கிராமங்களிலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்.
சொந்த கிராமத்தில் விவசாயம் அழிந்து, பிழைக்க வேறு வழியின்றி குடும்பத்தோடு கிளம்பி விடுகிறார்கள். அதன் பிறகு சொந்த ஊருக்கு செல்வது அரிதினும் அரிதாகிறது.
இப்படி வரும் தொழிலாளர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது ?
சென்னை தரப்பாக்கம் அருகே உள்ள செங்கல் சூளையில் வேலை செய்யும் தொழிலாளி பாலகிருஷ்ணன் சொல்கிறார். “விழுப்புரம்-அரசூர் சுத்துப்பட்டு கிராமத்திலிருந்து நாங்க இங்க மொத்தமாக 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தார் வந்து தங்கி வேலை செய்யுறோம். கிராமத்துல விவசாயம் இல்லாதப்ப கல்லறுக்க வெளியூர்களுக்குப் போவோம். இப்ப வானம் சுத்தமா காஞ்சி போனதால விவசாயிங்களுக்கு இந்தத் தொழில் நிரந்தரம் ஆயிடுச்சு.
செங்கல் சூளை தொழிலாளி பாலகிருஷ்ணன்
குழந்தை குட்டிங்கள ஊர்லயே விட்டுட்டு இந்தத் தொழில் செஞ்சிகிட்டிருக்கோம். ஒவ்வொரு வேலையிலயும் ஒரு கஷ்டம் இருக்கும். அத செய்யும்போதுதான் அதோட வலி தெரியுது. பச்சை மண்ணை பதமா கூட்டி கல்லு அறுக்குறது ஒரு பெருஞ்சொமைய கொடுக்கிற வேலை.
களிமண்ணில் தண்ணியவிட்டு மண்ண மிதிச்சி, கெட்டிப்பதமா குழைச்சி அதை அச்சில் வார்த்து ஒவ்வொரு கல்லாக அறுக்கனும். அடுத்து காஞ்ச கல்லை ஓரம் சீவி காயவைத்து அடி போடுவது, பிறகு அதை ஜன்னல் கட்டி போட வேண்டும். இந்த வேலையை குடும்பமாத்தான் செய்ய முடியும். குறைஞ்சதது இரண்டு பேர் வேணும். மூன்று பேர் இருந்தால் கொஞ்சம் அலுப்பு தெரியாம வேலை செய்யலாம்.
செங்கல் சூளை தொழிலாளி பாலகிருஷ்ணனின் மனைவி.
கொளுத்தும் வெயிலில வேலைக்கு கிராக்கி இருக்கும். ஆனா வெயில் காலந்தான் கல்லறுக்க உகந்த காலம். வேலை செய்யும்போதே உடம்புக்கு மேலேயும் கீழேயும் கொதிக்கும். வேக்காடா இருக்கேன்னு கொஞ்ச நேரம் இளப்பாறினா பச்சைமண் இளகிடும். அச்சுல மண்ணை வார்த்தால் மாடு சாணி போட்ட மாதிரி வழியும். “கல்லா இது”ன்னு முதலாளிங்க திட்டுவாங்க.
பச்சை மண்ணை மிதிச்சி கூட்டி பதம் பார்க்கிறது லேசுப்பட்ட விஷயம் இல்ல. பல வருச அனுபவம் வேணும். இந்த வேலையை பெரும்பாலும் ஆம்பளைங்கதான் செய்ய முடியும். ஏன்..னா பல மணி நேரம் மூச்சு பிடிச்சு செய்யும் வேலை இது.
பொம்பளைங்க செய்யும் வேலை சேம்பர் களத்துமேட்டுல கொளுத்தும் வெய்யில்ல குத்துக்காலிட்டு குனிஞ்ச தலை நிமிராம செய்யும் வேலை. களத்தை சவுடு மண் தூவி பச்சை மண் தரையில ஒட்டிக் கொள்ளாம தயார் செய்யணும். அதற்குமேல் ஃபைபர் அச்சு வெச்சு அளவாக மண்ணை உருட்டி அழுத்தமாக அறையணும். பிறகு மண்ணை சமமாக நிறுவி அலுங்காமல் குலுங்காமல் அச்சை எடுக்கனும். இப்படி ஒவ்வொரு அச்சாக வைத்து பின்னாடியே கோடு கிழித்த மாதிரி ஒவ்வொரு கல்லாக வார்த்துக்கிட்டே போகணும்.
வெயில் காலமுங்குறதால இந்த வேலையை நைட்டு 10 மணிக்கு டியூப்லைட் வெளிச்சத்தில் குடும்பமா செய்வோம். இரவு முழுக்க கண்முழிச்சி காலைல 10 மணிக்கு இடைவேளை விடுவோம். அப்பவரைக்கும் சுமார் 2000, 2500 கல்லு விழுந்திருக்கும். (மூணு பேர் 12 மணி நேரம் இடைநிறுத்தம் இல்லாமல் செய்யும் இந்த வேலைக்கு, ஆயிரம் கல்லுக்கு 500 ரூபாய் கூலி.)
இந்த வேலை இதோடு முடியறது இல்லை. கல்லு பதமாக காய்ந்த பிறகு ஒழுங்கு செய்யணும். அந்த வேலையை பகல் 3 மணிக்கு செய்ய ஆரம்பிப்போம். இதுக்கிடையில காலை பத்து பதினோரு மணிக்கு குடிசைக்கு சென்று, கை, கால் கழுவி கஞ்சியோ கூழோ குடிச்சிட்டு, கொஞ்சம் ஓய்வு எடுத்து உடம்பை ஆசுவாசப்படுத்திக்குவோம். மூணு மணிக்கு வந்தா வெயில் கொளுத்தும். கல்லை நான்கு பக்கமும் வடிவா சீவி திருப்பி போட்டுட்டு ஆறு-ஆறரை மணிக்கு குடிசைக்கு திரும்புவோம்.
உணவு சமைக்கும் பெண் தொழிலாளி.
வந்ததும் சுள்ளி கட்டை போட்டு அடுப்பு பத்த வைப்போம். வாங்கிய ரேஷன் அரிசியை வைச்சி அதுக்கு ஏத்தமாதிரி, காரமான கொழம்பு செய்து குழந்தைங்களுக்கு போட்டு நாங்களும் சாப்பிடுவோம். அதுக்குள்ள ஒடம்பு மேலெல்லாம் வலிக்கும் எப்ப தூங்கினோம்ன்னு எங்களுக்குத் தெரியாது.
இரவு 10 மணிக்கு திரும்பவும் எழுந்திருச்சி கல்லு சீவி போட வருவோம். தூக்கமில்லாமல் கண்ணு நெருப்பு மாதிரி கொதிக்கும். இதுதான் எங்க பொழப்பு. இப்படி ஆறு மாசம் தூக்கம் இருக்காது. மண்ணோடு மண்ணா, காயும் வெயிலில் தொடர்ந்து வேலை பார்த்து வாங்கிய கடனை அடைச்ச பிறகுதான் வீடு திரும்ப முடியும். சொந்த ஊர் திரும்பிய பிறகுதான் எங்களுக்கு தூக்கமும் ஓய்வும் நிம்மதியும் கிடைக்கும்.
இன்று இரவு வயிறு நிரம்புமா தெரியாது, ஆனால் வாய் நிறைய புன்னகை உதிர்க்கின்றன இச்செல்வங்கள்.
இப்படி கஷ்டப்பட்டாக்கூட குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் வயிறார கஞ்சி ஊத்த முடியல. குழந்தைகளை பத்தாவதுக்கு மேல் படிக்க வைக்க முடியரதில்லை. வேற வழி இல்லாம பொம்பள பசங்கள சின்ன வயசிலேயே கட்டி கொடுத்துடுவோம். அதுங்க கல்யாணத்துக்கு வாங்கிய கடனை கொஞ்சம் கொஞ்சமாக பல வருசம் ஒழைச்சி அடைப்போம்.
இந்த வேலையில 40 வயசுலேயே கண் பார்வை குறைஞ்சு போயிடுது. கழுத்து நரம்பு வலிக்கும். கால் முட்டி மடங்கி… நிமிர்ந்து நடக்க முடியாம இழுத்து இழுத்து குறை காலத்தை ஓட்டுவோம். ஒடம்பு முடியாதபோது எங்களுக்கு கஞ்சி ஊத்த யாருமிருக்க மாட்டங்க. எங்கள் குழந்தைகளை நெனைச்சி எங்களுக்கு கோபமும் வராது. அவங்களுக்குன்னு எதிர்காலம் ஒன்னுமே இல்லை. அவங்களை அவுங்க பாத்துக்கிட்டாலே போதும்’னு நெனச்சிக்குவோம்!
ஆண்டவனிடம் நாங்கள் வேண்டுறதெல்லாம் கை கால் நல்லா இருக்கும்போதே எங்களைக் கூட்டிக்கொண்டு போ…..! எங்களை பிச்சை எடுக்க வைக்காதே..!” என்பதுதான்.
மண்ணை மிதித்துக் குழைத்து பதமாக்கும் தொழிலாளி.
படித்து தன் வாழ்க்கை கனவை கட்டமைக்க வேண்டிய வயதில், யாரோ ஒருவரின் ‘கனவு இல்லத்தை’ கட்ட செங்கல் சூளையில் உழைக்கும் சிறுவன்.
கல் அறுக்கும் பணியில் ஒரு தொழிலாளி
உழைப்புக்கும் இங்கு வயது வரம்பில்லை, சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் குடும்பமாக உழைக்கின்றனர்
குழந்தையில் இருந்தே வீட்டு உழைப்பும் சேர்ந்து விடுகிறது, இப்பிஞ்சுகளுக்கு.
முகப்பூச்சு வாழ்க்கைக்கு மத்தியில், செங்கல்லுக்கு மேற்பூச்சு வீசும் பெண்
அன்னாந்து பார்க்கும் கட்டிடங்களின் அஸ்திவாரமாய் இவர்களின் உழைப்பு, ஆனால் நிமிரவே முடியாத வாழ்க்கை.
தலை சுமையை இறக்கிவிடலாம், வாழ்க்கை சுமையை என்ன செய்வது !
குளியலறை தொட்டிககளில் வழியும் தண்ணீரில் மிதப்பவர்கள் வாழும் நாட்டில்தான், சேற்று நீரில் இவர்கள் துணி துவைக்கின்றனர்.
உழைப்பின் களைப்பைக் கலைக்க சற்று நேர ஆசுவாசம்.
இவர்களின் வாழ்வும் இப்போது சுட்ட கற்களாய் குவிந்து விட்டது, சரியான பொறியாளர்தான் கட்டமைக்க தேவைப்படுகிறார்.
அந்த பொறியாளர் வேறு யாரும் இல்லை, அணிதிரட்டப்பட்ட தொழிலாளி வர்க்கம்தான்
பூர்ஷுவாக்களின் இந்தத் தாக்குதலை முறியடிப்பதற்கு வேறு வழி என்ன? ஒரே ஒரு வழிதான் இருந்தது. பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர போராட்டம்தான் அது. இதுதான் ஒரே தீர்வு. எனவே இது விஷயத்தில் நமக்கிருந்த சகல வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்தோம். ஆர்டிட்டி டெல் பாப்பலோவை இதற்கு உதாரணமாகக் கூறலாம். எனினும் இதற்குள்ளாக, ரோம் படையெடுப்பு நடைபெற்ற சமயத்தில் சக்திகளின் சமவலிமை நிலை பெரிய அளவுக்கு நமக்குப் பாதகமாக மாறிவிட்டது.
கம்யூனிஸ்டுக் கட்சியின் ஒரு சிறந்த, மிகச் சரியான கொள்கை வழி நமக்கு மிகப் பெரும் வாய்ப்புகளை அளித்திருக்கக்கூடும்; போராட்டத்தை மிகவும் கூர்மையும் தீவிரமுமடையச் செய்திருக்கக்கூடும். அதிருப்தியுற்ற அனைத்து வெகுஜனப் பகுதியினரையும் ஒரு பரந்து விரிந்த போர் முனையில் அணிதிரட்டும் கொள்கையை அப்போது கம்யூனிஸ்டுக் கட்சி கடைப்பிடித்திருக்குமானால் நிலைமை பெரிதும் மாற்றமடைந்திருக்கும். புரட்சிகர நெருக்கடி தோன்றக்கூடிய சாத்தியக் கூறுகளை மீண்டும் தோற்றுவித்திருக்கும்.
ஆனால் அந்தச் சமயத்தில் சக்திகளின் பரஸ்பர வலிமை நமக்குச் சாதகமாக இல்லை. இந்தப் பிரச்சினையை இங்கு நான் ஏன் குறிப்பிடுகிறேன் என்றும் கேட்கலாம். ஆரம்பத்தில் நான் கூறியதை நினைவுபடுத்தவே இவ்வாறு செய்திருக்கிறேன்: பாசிசத்துடனான போராட்டம் முடிந்துவிட்டதாக ஒருபோதும் நினைக்கக் கூடாது என்பதை மீண்டும் இங்கு வலியுறுத்த விரும்புகிறேன்.
பிப்ரவரி 6-ம் தேதி பிரான்சில் என்ன நடைபெற்றது என்பதைப் பாருங்கள்.10 அப்போது உருவான நிலைமை கட்சிக்கு எதிர்பாராத அதிர்ச்சியை அளித்தது. எனினும் உடனே அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு விட்டது. திறமையும் சாதுர்யமுமிக்க ஒரு ஐக்கிய முன்னணிக் கொள்கையின் மூலம் கட்சி வெகுஜனங்களுக்குத் தலைமை ஏற்றது. அவர்களுக்கு உத்வேகமூட்டி பாசிசத்துக்கு எதிரான போராட்டத்தில் அவர்களை வழிநடத்திச் சென்றது. பாசிசத்தின் தாக்குதலுக்கு எதிராக ஒரு வலிமைமிக்க தடையரணை கட்டியெழுப்பிற்று.
இதனை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. பாசிசத்தில் பிளவும் வெடிப்பும் ஏற்படும் ஒவ்வொரு சமயமும் அந்தப் பிளவை நாம் அதிகப்படுத்த வேண்டும்; நிலைமையை நெகிழச் செய்து, போராட்டத்துக்கான சாத்தியக் கூறுகளை மீண்டும் தோற்றுவிக்க வேண்டும்.
ரோம் படையெடுப்புக்குப் பிறகு பாசிசம் எத்தகைய திட்டத்தை மேற்கொண்டது? இச்சமயம் பாசிஸ்டுக் கட்சியில் ஒரு புதிய காலகட்டம் ஆரம்பமாயிற்று – சர்வாதிகாரமல்லாத ஒரு பாசிஸ்டுக் கட்சியைக் கட்டி உருவாக்குவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்ட காலகட்டம் என இதனைக் கூறலாம்.
ரோம் படையெடுப்புக்குப் பிறகு ஆட்சி அமைக்கும்படி முசோலினி அழைக்கப்பட்டார். அப்போது அவர் ஓர் அனைத்து பாசிஸ்டு அமைச்சரவையை அமைப்பது குறித்து கணநேரம் கூட சிந்திக்கவில்லை. அதற்கு மாறாக நாடாளுமன்றத்தில் பல்வேறு சக்தியினரும் ஒத்துழைக்கும் அடிப்படையில் அமைந்த ஓர் அமைச்சரவையை உருவாக்கினார். சோஷலிஸ்டுகளுக்குக்கூட தமது அமைச்சரவையில் இடமளிக்க முன்வந்தார்.
ஒருநாள் நாடாளுமன்றத்தில் பியோஸ்ஸி11யுடனும் பல்டேசியுடனும் பேசிக் கொண்டிருந்தேன். “அரசாங்கத்தில் எங்களுக்கு இடமளிக்க முசோலினி முன்வந்திருக்கிறார். என்ன செய்வது என்று எங்களுக்குத் தெரியவில்லை. நாங்கள் பகைவனின் பீரங்கியின் முன்னால் இருக்கிறோம். அவரது விருப்பத்துக்கு இசையத்தான் வேண்டும் போலிருக்கிறது” என்று அவர்கள் கூறினார்கள்.
அரசாங்கத்தில் சேரவில்லை என்றால் அதற்காக அவர்களை யாரும் பாராட்ட மாட்டார்கள். பூர்ஷுவாக்கள்தான் அவர்கள் சேருவதை விரும்பவில்லை. கியோலிட்டியின் ஒத்துழைப்புத் திட்டம் அப்போது ஏற்கெனவே காலாவதியாகிவிட்டிருந்தது.
சோஷலிஸ்டுகளை அரசாங்கத்தில் சேர்ப்பதற்கு செய்யப்படும் முயற்சிகளை ஒருபுறம் பாசிஸ்டுக் கட்சியின் நடுத்தர ஊழியர்களான ஸ்குவாட்ரிஸ்டிகளும், இன்னொருபுறம் பூர்ஷுவா வர்க்கத்தில் மிகவும் பிற்போக்கான சக்திகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசியவாதிகளும் கடுமையாக எதிர்த்தனர்.
எனினும் முயற்சி தொடர்ந்தது. பல இன்னல்களும் பிரச்சினைகளும் எதிர்ப்பட்டதன் விளைவாக அந்த முயற்சி தோல்வியடைந்தது. இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டிய அவசியம் காரணமாக சர்வாதிகாரத்தை மேன்மேலும் வலுப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு பாசிசம் உள்ளாயிற்று.
நாட்டில் ஸ்திர நிலைமையை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் 1922, 1923, 1924-ம் ஆண்டுகளில் ஏற்பட்டது; அந்தக் கால கட்டத்தைத்தான் இப்போது நாம் அணுகிக் கொண்டிருக்கிறோம். ஸ்திர நிலைமை சம்பந்தப்பட்ட எல்லாப் பிரச்சினைகளும் இத்தாலியில் தலைதூக்கின.
இந்நிலைமையில் பாசிசம் என்ன செய்ய முடியும்? தனது எசமானனான பூர்ஷுவா வர்க்கத்தின் ஆணைகளைத்தான் அது சிரமேல் ஏற்று நிறைவேற்ற முடியும். முதல் நெருக்கடி ஆரம்பமாயிற்று. இந்தக் காலகட்டத்தில் எப்போதும் தோன்றக்கூடிய நெருக்கடிதான் இது. பாசிசத்தின் கொள்கைக்கும் அதன் ஆரம்பகால வெகுஜனத் தளத்துக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடுதான் இந்த நெருக்கடிக்குக் காரணம். கட்சியின் அடிமட்ட ஊழியர்களும் ஆதரவாளர்களும் பழைய திட்டத்தைத் தொடர்ந்து ஆதரித்து வந்தனர் அல்லது அதிகாரத்தைக் கைப்பற்றும் கருத்துக்களை வளர்த்துக் கொண்டிருந்தனர். இந்தக் கருத்துகள் பூர்ஷுவாக்களுக்கு ஏற்புடையவையாக இல்லை.
(தொடரும்)
பின்குறிப்புகள் :
10. 1934 பிப்ரவரி 6ம் தேதி பிரான்சில் நடந்த வலதுசாரிக் கலகங்கள், காவல்படையால் ஒடுக்கப்பட்டன; பாசிஸ்டு ஆட்சி அமைப்புகள் மேலும் பரவுவதற்கான அபாயம் பற்றி பிரான்சின் இடதுசாரிகளையும் அகிலத்தையும் விழிப்படையச் செய்ய உதவின. எனவே பொதுஜன அணிக் கொள்கைக்கு இந்த சம்பவம் வழிவகுத்தது.
11. புரூனோ பியோஸ்ஸி (1881-1944) ஒரு சீர்திருத்தவாத மக்கள் பிரதிநிதி, தொழிற்சங்கவாதி. 1920 செப்டம்பரில் தொழிற்சாலைகள் கைப்பற்றிக் கொள்ளப்பட்டபோது உலோகத் தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவராக இருந்தார். பல ஆண்டுகள் நாடு கடத்தப்பட்டு, பியோஸ்ஸி 1943 ஜூலையில் புனரமைக்கப்பட்ட பொது தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவராக இத்தாலிக்குத் திரும்பி வந்தார். 1944 ஜூன் 6 இல், ரோம் நகருக்குச் சுற்றுப்புறத்தில், நாஜிகளால் கொலை செய்யப்பட்டார்.
கினோ பல்டேசி (1879-1934) ஒரு சீர்திருத்தவாத சட்டமன்ற பிரதிநிதி. பொதுத் தொழிலாளர் சம்மேளனத்தில் மிகவும் பலம்வந்த நபர்களில் இவரும் ஒருவர். பொதுத் தொழிலாளர் சம்மேளனத்திற்கும் சோஷலிஸ்டுக் கட்சிக்கும் இடையேயான செயல்-ஒற்றுமை ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டுமென பல்டேசி வலியுறுத்தினார். சீர்திருத்தவாதிகள், பொது தொழிலாளர் சம்மேளனத்தின் பெரும்பாலான நிர்வாகிகள் உட்பட, 1922 அக்டோபரில் சோஷலிஸ்டுக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டபோது அவரது கோரிக்கை நிறைவேறியது. பாசிஸ்டு ஆட்சியின் முதல் ஆண்டுகளில் பல்டேசியை தனது அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருந்தார் முசோலினி. வர்க்கச் சங்கங்களை பாசிஸ்டுத் தொழிற்சங்கங்களோடு இணைக்கும் திட்டங்கள் சம்பந்தமாகவும் பல்டேசியின் பெயர் அடிப்பட்டது. 1924-க்குப் பின் பாசிச- எதிர்ப்புப் போக்கைக் கடைப்பிடித்தார்.
பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் தமிழில் : ரா. ரங்கசாமி பக்கங்கள் : 233 விலை : ரூ. 50.00 வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
”இந்தியாவில் ஆரிய ஆட்சி’ என்றொரு நூல்; ஹாவல் (Havell) என்பவர் எழுதியுள்ளார். அதிலே,
”மதச் சடங்குகளைச் செய்விக்கும் புரோகிதத் தொழிலிலே, பிராமணர்கள் ஏகபோக உரிமை பெற்றனர். இதனால் சுரண்டிப் பிழைக்கவும், ஆபாசமான காட்டுமிராண்டித்தனமான மூட நம்பிக்கைகளைப் பரப்பவும் முடிந்தது. மந்திரத்தால் ஆகாதது ஒன்றுமில்லை! போரில் ஜெயமோ அபஜெயமோ மந்திர உச்சாடனத்தாலே சாதிக்க முடியும்! சமஸ்தானங்களின் க்ஷேமத்துக்கு எதிரியின் வாயை அடக்குதற்கு, இருமலை நீக்குவதற்கு, சடை வளர்தற்கு, எதற்கானாலுஞ் சரியே, மந்திரத்தால் பலன் உண்டு! நித்திய கர்மானுஷ்டானங்களிலே, பிரமாத காரியமோ, அற்ப விஷயமோ எதற்கும் அந்த மந்திரம் அவசியம் தேவை என்று ஆரியர் கூறி வைத்தனர்”
ஹாவல் (Havell).
என்று ஆசிரியர் கூறுகிறார். இவர் ஈரோட்டுவாசியா? பெரியாரின் சீடரா? சுயமரியாதைப் பிரச்சாரகரா? ஏன் சுரண்டிப் பிழைக்க ”மந்திரம்” என்று மயக்கமொழி பேசிப் பார்ப்பனர் வாழ்ந்தனர் என்பதை எழுதுகிறார். ஆரிய மாயையிலே சிக்கி நம்மவர் மீது ‘துவஜம்’ தொடுக்கும் தமிழர்கள் இந்த ஆராய்ச்சியாளரின் கண்டனத்தைப் பற்றி யோசிக்கக் கூடாதா? “வேதகாலம் முதற்கொண்டு ஆரியர்கள் அனுஷ்டித்து வந்த யாகம் பிராமணருக்கு, மற்றவரைக் கொடுமைப்படுத்தவும், ஏமாற்றவும் ஒரு கருவியாக உபயோகப்பட்டது” என்றும் ஹாவல் எழுதுகிறார். மந்திரம், யாகம் என்பவை பார்ப்பனப் புரட்டு என்று தன்னுணர்வு இயக்கத்தார் கூறினால் கோபங்கொள்ளும் ”தாசர்கள்’ இந்த ஆராய்ச்சிக்காரரின் உரை கேட்ட பிறகாவது தம் கருத்தை மாற்றிக் கொள்ளக் கூடாதா?
‘ஆரிய ஆட்சி’ ஒரு புரட்டர் கூட்டம் வெள்ளை சனத்தினரை வாட்டி வைத்த வரலாறேயாகும். இல்லை என்பதற்கு எங்கிருந்தாவது ஆதாரம் தேடிக்காட்ட, யாராவது முன் வருவார்களா? என்று கேட்கிறேன்!
“கருத்து சுருண்டு அங்குமிங்கும் அலைந்து உன் மனதிலே அலைமோதிடச் செய்யும். அழகுடன் விளங்கும் கூந்தல், உண்மையிலே நரைத்தது! மினுக்குத் தைலமும் கத்திரிக் கோலும், அவளுடைய கைத்திறனும், உன் காமக்கிறுக்கும் கலந்து உனக்கு மயக்க மூட்டுகிறது!
‘வதனமே சந்திர பிம்பமோ, மலர்ந்த சரோஜமோ’ என்று நீ சிந்து பாடுகிறாயே, சற்று சபலத்தை ஒதுக்கிவிட்டு அந்த முகத்தை உற்று நோக்கு! நல்ல இரத்தமில்லாததால் வெளுத்து , காலத்தின் கீறல்கள் நிறைந்த காமுகரின் கரத்தினால் கசங்கிக் கிடக்கும் மோசமும், அதை மாற்ற அவள் அணிந்துள்ள பூச்சு வேஷமும் புலனாகும்!
ஹாவல் (Havell) எழுதிய ”இந்தியாவில் ஆரிய ஆட்சி’ என்ற நூலின் முகப்பு அட்டை.
அந்தச் சிரிப்பிலே நீ சொக்குகிறாய். அது சிலந்தியின் மொழி! வலைவீசும் சாகசம்; அதைக் கண்டு நீ ஏமாறுகிறாய்! உன் வாழ்வை வளைத்து விட்ட அவளுக்கு நீ அடிவருடுகிறாய். உன் அறிவை அழிக்கும் அணைப்பிலே நீ ஆனந்தம் காண்கிறாய்! உன் பண்பினைப் பாழாக்கிய பார்வையை , நீ பாகு என்று பகருகிறாய்! அந்த மேனியின் பளபளப்பு, வெறும் மேல் பூச்சு! அந்தப் புன்னகை முகத்தாளின் மனம், ஓர் எரிமலை! அவள் ஓர் நடமாடும் நாசம்! உனக்கு வேண்டாமப்பா அவளிடம் பாசம்! உன்னைக் கெடுத்திடுமே அந்தக் காசம்! – என்று வெளி வேஷத்தால் வயோதிகத்தை மறைத்துக் கொண்டு, வஞ்சனையுடன் பேசும் வித்தையால் தனது வஞ்சகத்தை வெளிக்குத் தெரியவொட்டாமல் செய்து, நகைமுகங்காட்டி நாசத்தை ஊட்டிடும் நாரியிடம் நேசங்கொண்டு விவேகமிழந்து, காமப் பரவசனாகியுள்ள தன் தோழனுக்குக் கருத்துக் கெடாதவன் கனிவுடன் புத்தி கூறுகிறான்!
”அனங்கன் அம்பாலே அடிபட்டேன்! அவனிடமே சென்று, அதற்கு மருந்து கண்டேன்!” என்று கூறி, காமுகனாகிவிட்ட அவன், “போடா உலகமறியாத உன்மத்தா நீ என்னடா கண்டாய்? அந்த எழிலுடையாளின் இன்சொல்லின் சுவையையும், மதுரகீதத்தின் மாண்பையும், மஞ்சமேவிக் கொஞ்சிடும் பஞ்சபாண வித்தைத் திறத்தையும், அனுபவமில்லாத அபாக்கியசாலி நீ! நான் பெறும் இன்பத்தைத் துன்பமென்று கூறுகிறாய்; நிலவை நெருப்பென நவில்கிறாய்; தென்றலைத் தேள்கடி என்று கூறுகிறாய்; கனியைக் கைப்பு என்றுரைக்கிறாய்; காதலைக் கானல் என்று சொல்லுகிறாய்; உல்லாசத்தை உற்பாதமென்று உரைக்கிறாய்; முல்லையை முள்ளென மொழிகிறாய்; மூடனே, போ! போ! நான் பெற்ற இன்பம் நீ பெறுமுன்னம், நான் கொண்ட அறிவு உனக்கெப்படி பிறக்கும்?” என்று கரையும் காகத்தைக் கடிந்துரைத்து விட்டுக் காலை மலர்ந்ததே, என் களிப்பும் உலர்ந்ததே! என்று கவலைப்படுகிறான்! அவனுடைய வெறி அப்படி இருக்கிறது! குடி கெடுப்பவளை, அவன் கொடியிடையாள் என்று நம்புகிறான். அவனைத் தடுக்க முயலும் நண்பனை நையாண்டி செய்கிறான்.
ஆனால், சித்த வைத்தியர் செந்தூரம் கொடுத்து அலுத்து , பஸ்பத்தைக் கொடுத்துப் பயந்து, கஷாயம் காய்ச்சிக் கொடுத்தும் பயனில்லாதது கண்டு கவலை கொண்டு, ‘கடுகு துவரையாகி, துவரை அவரையாகி, அவரை சுரை போலாகி விட்டதே, ஐயோ! நான் என்ன செய்வேன்? கட்டு மாத்திரையால் முடியாது. கத்தியே இனித்துணை’ என்று கூறும்போதுதான், காமுகன் கலங்கி நடுங்கி, கைகூப்பிக் கதறி, ‘கத்தியா” என்று கேட்டுக் கூவி ‘கனிவுடன் அன்று நீ சொன்னாயே நண்பா, கசடன் நான் கேட்டேனில்லையே! கண்டவர் ஏசும் நிலைபெற்றேனே! கள்ளியின் கூட்டுறவால் கெட்டேனே!’ என்று (புத்தி கூறிய) நண்பனைக் கட்டித் தழுவி அழுவான்.
தமிழர் என்ற இன உணர்ச்சியுள்ளவர்கள் இந்த ஆதாரங்களையும் இவைபோன்ற வேறு ஆதாரங்களையும் தமிழ் மாணவர்கட்குத் தெரியச் செய்ய வேண்டும்… விழிப்புப் பரவவும், எழுச்சி அதிகரிக்கவும், ஆதி நாட்களிலிருந்து இதுவரை ஆரியம் செய்த அட்டூழியத்தை வாலிபர்கள் உணரவும் செய்ய வேண்டும்.
அது போலத்தான் ஆரியம் தனது சூதான சொரூபத்தை மறைக்கச் சாஸ்திரப் போர்வை தரித்துக்கொண்டு வஞ்சகத்தை வேஷத்தால் வெளிக்குத் தெரியவொட்டாது தடுத்து, நாசத்தை நம் இனத்துக்கு நகை முகத்துடன் ஊட்டுகிறது! அந்த நஞ்சினை உண்ணாதீர் என்று கூறும் சுயமரியாதைக்காரர்களை, ஆரிய மாயையிலே சொக்கி அறிவிழந்து கிடக்கும் அன்பர்கள் ஏசுகின்றனர்! ஏளனம் பேசுகின்றனர்! ஆரியத்தால் அழிவு உண்டாகும் அந்தச் சமயத்திலே, சு.ம. காரன் சொன்னது சரியாகத்தானே போச்சு! அன்று அவனை நையாண்டி செய்தோம்! இதோ இன்று ஆரியத்தின் காரியத்தைக் கண்டோமே!’ என்று ஒரு நாள் கூறித்தான் தீர வேண்டும்.
தமிழ் மாணவர்கள் மனதில் பதிய வேண்டிய சரித ஆதாரங்கள் கீழே தரப்பட்டுள்ளன. தமிழர் என்ற இன உணர்ச்சியுள்ளவர்கள் இந்த ஆதாரங்களையும் இவைபோன்ற வேறு ஆதாரங்களையும் தமிழ் மாணவர்கட்குத் தெரியச் செய்ய வேண்டும். இன்றைய கல்வி நிலையங்களிலே பெரும்பாலும் ஆரியரே சூத்திரதாரிகளாக இருப்பதால், உண்மை மறைகிறது. இப்போதுதான், தமிழ் மாணவரிடையே விழிப்பு ஏற்படுகிறது. விழிப்புப் பரவவும், எழுச்சி அதிகரிக்கவும், ஆதி நாட்களிலிருந்து இதுவரை ஆரியம் செய்த அட்டூழியத்தை வாலிபர்கள் உணரவும் செய்ய வேண்டும்.
(தொடரும்)
அண்ணாவின் ஆரிய மாயை
பக்கங்கள் : 64
விலை : ரூ. 40.00
வெளியீடு : திராவிடர் கழகம்
நூல் கிடைக்குமிடம் : கீழைக்காற்று வெளியீட்டகம்.
ஆரிய மாயை என்னும் இந்நூல் கா.ந. அண்ணாதுரை (அண்ணா) எழுதிய சிறு நூலாகும். அண்ணாவின் படைப்புகளில் மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய சில நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலில் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை பற்றியும், பார்ப்பனர்களின் சிறுமதி குறித்தும் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து அம்பலப்படுத்தியிருக்கிறார். இக்காரணங்களுக்காக, அவருக்கு ரூபாய் 700 அபராதம் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் சென்னை மாநில அரசால் அண்ணாவுக்கு அளிக்கப்பட்டது.
உண்மை மனிதனின் கதை | இரண்டாம் பாகம் | அத்தியாயம் – 5
முடிவில் அந்த நாளும் வந்து விட்டது. தமது தினப்படிப் பார்வையீட்டின் போது வஸிலிய் வஸீலியெவிச், அலெக்ஸேயின் கறுத்த, ஸ்பரிசத்தை உணராத பாதங்களை நெடு நேரம் தொட்டுத் தடவிப் பார்த்துவிட்டு, சட்டென நிமிர்ந்து அவனை விழி பொருந்த நோக்கி, “வெட்டிவிட வேண்டியதுதான்!” என்றார். வெளிறிப்போன அலெக்ஸேய் எதுவும் பதில் சொல்வதற்குள்ளேயே அவர் முன்கோபம் தொனிக்க, “வெட்டிவிட வேண்டியதுதான் – மறு பேச்சே கூடாது, கேட்டாயா? இல்லாவிட்டால் மண்டையைப் போட்டுவிடுவாய்! புரிந்து கொண்டாயா?” என்றார்.
தமது துணையாளர்களைத் திரும்பிப் பார்க்காமலே அறையை விட்டு வெளியே போய்விட்டார் தலைமை மருத்துவர். வார்டில் ஏக்கம் செறிந்த மௌனம் குடிகொண்டது. அலெக்ஸேய் உணர்வற்றுக் கல்லாய்ச் சமைந்த முகத்துடன் விழிகளைத் திறந்தவாறு கிடந்தான். தனது ஊரின் நொண்டிப் படகோட்டியின் நீலம் பாரித்த, அலங்கோலமான வெட்டுக் கால்கள் அவன் முன்னே மூடுபனியில் போல மங்கலாகக் காட்சி தந்தன. படகோட்டி உடைகளைக் களைந்துவிட்டுக் குரங்கு போலக் கைகளை ஊன்றி ஈர மணலில் தத்தித் தவழ்ந்து நீரை நோக்கிச் செல்வதை அலெக்ஸேய் மீண்டும் கண்டான்.
“அலெக்ஸேய்” என்று மெள்ள அழைத்தார் கமிஸார்.
“என்ன?” என்று எங்கோ தொலைவிலிருந்து கேட்பது போன்ற ஈனக்குரலில் சொன்னான் அலெக்ஸேய்.
“இப்படிச் செய்யாமல் தீராது, தம்பி.”
படகோட்டி அல்ல, தானே வெட்டுண்ட கால்களுடன் ஊர்வது போலவும் தன்னுடைய காதலி, ஓல்கா, பல் வண்ண உடைக் காற்றில் பறக்க, ஒயிலும் ஒளியும் எழிலும் சுடர்விட மணலில் நின்று கொண்டு, உதட்டைக் கடித்தவாறு தன்னை வேதனையுடன் நோக்குவது போலவும் அந்தக் கணத்தில் அலெக்ஸேய்க்குத் தோன்றியது. இப்படித்தான் நேரும்! அவன் தலையணையில் முகத்தைப் புதைத்துக் கொண்டு உடல் முழுவதும் அதிர்ந்து குலுங்க, ஓசையின்றிப் பொங்கிப் பொங்கி அழுதான். எல்லோருக்கும் பயங்கரமாக இருந்தது. ஸ்தெபான் இவானவிச் தொண்டையைக் கனைத்துக் கொண்டு கட்டிலிலிருந்து இறங்கி நீளங்கியை மாட்டிக் கொண்டு அறைச் செருப்புகள் சடசடக்க, கட்டிலின் பின்புறத்தைக் கைகளால் தாங்கலாகப் பிடித்துக் கொண்டு அலெக்ஸேயிடம் சென்றார். ஆனால் கமிஸார் வேண்டாம் என்று சைகை செய்து அவரைத் தடுத்துவிட்டார் – அழட்டும், குறுக்கிடாதேயும் என்பது போல.
உண்மையாகவே அலெக்ஸேய்க்குச் சுமை இறங்கியது போல் இருந்தது. விரைவில் அவன் நிம்மதி அடைந்தான். தன்னை நெடுங்காலமாக வதைக்கும் பிரச்சினைக்கு முடிவில் தீர்வு கண்டதும் மனிதனுக்கு எப்போதும் ஏற்படுவது போன்ற ஆறுதலைக்கூட அவன் உணர்ந்தான். மாலையில் மருத்துவமனை ஊழியர்கள் அறுவை அறைக்கு அவனை இட்டுச் செல்லும் வரை அவன் பேசாதிருந்தான். கண்களைக் கூசச் செய்யும்படி ஒளிர்ந்த வெண்மையான அறையிலும் அவன் ஒரு வார்த்தை பேசவில்லை. முழு மயக்கமருந்து கொடுப்பதற்கு அவனுடைய இருதய நிலை இடந்தரவில்லை என்றும் ஓரிட உணர்வுநீக்க ஊசி போட்டு அறுவை செய்ய வேண்டியிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டபோது கூட அவன் வெறுமே தலையசைக்க மட்டுமே செய்தான். அறுவை நடந்தபோது அவன் கத்தவோ முனகவோ இல்லை. சிக்கலற்ற இந்த அறுவையை வஸீலிய் வஸீலியெவிச் தாமே செய்தார். தமது வழக்கத்துக்கிணங்க அப்போது அவர் நர்சுகள் மீதும் துணை மருத்துவர்கள் மீதும் சள்ளுப் புள்ளென்று விழுந்தார். நோயாளி அறுவையின் போதே மரித்துவிட்டானா என்று பார்க்கும்படி அவர் தமது துணைவனிடம் பலமுறை கூறினார்.
எலும்பு அறுக்கப்பட்டபோது மிகக் கொடிய வேதனை உண்டாயிற்று. ஆனால், துன்பத்தைத் தாங்கிக் கொள்ள அலெக்ஸேய் பழகியிருந்தான். வெள்ளை நீளங்கிகளும் சல்லாத் துணி முகத்திரைகளும் அணிந்த இந்த மனிதர்கள் தன் கால்களுக்கருகே என்ன செய்கிறார்கள் என்பது அவனுக்கு சரியாக விளங்கவில்லை.
வார்டில்தான் அவன் உணர்வுக்கு வந்தான். அங்கே அவன் முதலில் கண்டது அறைத் தாதி க்ளாவ்தியா மிஹாய்லவ்னாவின் கவலை தோய்ந்த முகம். விந்தை என்னவெனில் அவனுக்கு ஒன்றுமே நினைவு இல்லை. இனிமையும் பரிவும் உள்ள இந்த வெண்முடி மாதின் முகத்தில் இத்தகைய கிளர்ச்சியும் கேள்விக்குறியும் காணப்படுவது ஏன் என்று அவன் வியந்தான். அவன் கண் விழித்ததைக் கண்டதும் அவள் முகம் சுடர் விட்டது. போர்வைக்கு அடியில் அவன் கையை மெதுவாக அழுத்தினாள்.
“நீங்கள் அருமையானவர்!“ என்று பாராட்டிவிட்டு அப்போதே நாடிப்பிடித்துப் பார்த்தாள்.
“இவள் என்ன இப்படி?” என்று எண்ணினான் அலெக்ஸேய். கால்கள் முன்னை விட மேலே எங்கோ வலிப்பதை அவன் உணர்ந்தான். வலியும் முன்போலக் காந்தி எரியும், சுண்டி இழுக்கும் வேதனையாக இல்லை. கணைக்காலுக்கு மேல் கால்கள் கயிறுகளால் இறுகக் கட்டியிருப்பது போன்று ஊமையான, துடிப்பற்ற வலியாக இருந்தது. போர்வை மடிப்புகளைக் கொண்டு தன் உடல் நீளம் குறைந்துவிட்டதை அவன் திடீரெனக் கவனித்தான். வெள்ளை அறையின் கண்கூசும் பளிச்சிடலும், வஸீலிய் வஸீலியெவிச்சின் உக்கிரமான சிடுசிடுப்பும், எனாமல் வாளியில் மந்தமான மோதல் ஒலியும் சட்டென அவன் நினைவுக்கு வந்தன. “ஆகிவிட்டதா அதற்குள்” என்று உற்சாகமின்றி வியந்தான். புன்னகை செய்ய முயன்றவாறு மருத்துவத் தாதியிடம், “நான் குட்டை ஆகிவிட்டேன் போலிருக்கிறது” என்றான்.
புன்னகை நன்றாக வாய்க்கவில்லை. வேதனையால் முகஞ்சுளிப்பது போன்று இருந்தது. க்ளாவ்தியா மிஹாய்லவ்னா பரிவுடன் அவன் தலைமயிரைக் கோதிவிட்டாள்.
“பரவாயில்லை, பரவாயில்லை. அன்பரே. இனி உமக்கு லேசாயிருக்கும்.”
“ஆமாம், லேசுதான். எத்தனை கிலோகிராம்?”
“வேண்டாம், அன்பரே, வேண்டாம். நீர் அருமையான ஆள். மற்றவர்கள் கத்துவார்கள். மற்றவர்களை வாரினால் இறுக்கிக் கட்டுவதோடு பிடித்துக்கொள்ளவும் வேண்டியிருக்கும். நீரோ முணுக்கென்று கூட வாய் திறக்கவில்லை….. அட யுத்தம், பாழும் யுத்தம்!”
அப்பொழுது வார்டின் மாலை அரை இருளில் கமிஸாரின் கோபக்குரல் ஒலித்தது:
“நீங்கள் என்ன, அங்கே இறுதிச் சடங்கு தொடங்கி விட்டீர்கள்? இதோ இந்தக் கடிதங்களை அவனிடம் கொடுங்கள், அம்மா. இவன் அதிர்ஷ்டமே அதிர்ஷ்டம். எனக்குக் கூடப் பொறாமையாக இருக்கிறது. அவனுக்கு எத்தனை கடிதங்கள் !”
கமிஸார் ஒரு கட்டுக் கடிதங்களை அலெக்ஸேய்க்குக் கொடுக்கச் சொன்னார். இவை அவனுடைய ரெஜிமெண்டிலிருந்து வந்திருந்தன. வெவ்வேறு தேதிகள் இட்ட கடிதங்கள் அவை. ஆனால் எதனாலோ ஒரே மொத்தமாக வந்திருந்தன. வெட்டி எடுக்கப்பட்ட கால்களுடன் படுத்தவாறு இப்போது அலெக்ஸேய் நட்பு நிறைந்த இந்தக் கடிதங்களை ஒன்றன் பின் ஒன்றாகப் படித்தான். தொலைவிலுள்ள, உழைப்பும் அசெளகரியங்களும் அபாயங்களும் நிறைந்த, அடக்க முடியாமல் தன்பால் ஈர்க்கும் வாழ்க்கை பற்றி விவரித்தன இவை.
கடிதங்களில் ஒரேயடியாக ஈடுபட்டு விட்டதால் தேதிகளில் இருந்த வேறுபாட்டை அலெக்ஸேய் கவனிக்கவில்லை. கமிஸார் மருத்துவத்தாதியை நோக்கிக் கண் சிமிட்டி தன் பக்கம் சுட்டியதையும் அவன் காணவில்லை. கமிஸார் அவளிடம், “உங்களுடைய இந்த லூமினால்கள், வெரோனால்கள், எல்லாவற்றையும் விட என்னுடைய மருந்து எவ்வளவோ மேலானது” என்று தணிவாகக் கிசுகிசுத்தார். அலெக்ஸேய்க்கு வந்த கடிதங்களில் ஒரு பகுதியைக் கமிஸார் முன்யோசனையுடன் மறைத்து வைத்திருந்தார் – அவன் வாழ்வில் மிகப் பயங்கரமான இந்த நாளில், அவனது விமான நிலையத்திலிருந்து வந்த நட்பார்ந்த வாழ்த்துக்களையும் செய்திகளையும் கொடுத்து இந்தப் பெருந்தாக்கின் கடுமையைக் குறைக்கும் நோக்கத்துடன். ஆனால், இந்த விஷயம் அலெக்ஸேய்க்கு ஒருபோதும் தெரியவில்லை. கமிஸார் அனுபவம் முதிர்ந்த படைவீரர். கவனமில்லாமல் அவசரமாகக் கிறுக்கப்பட்ட இந்தக் காகிதத் துண்டுகளின் பேராற்றலை அவர் அறிந்திருந்தார். போர் முனையில் இவை மருந்துகளையும் தின்பண்டங்களையும் விடச் சில வேளைகளில் அதிக முக்கியமானவையாக இருக்கின்றன என்பது அவருக்குத் தெரியும்.
அந்தமான் சிறையிலிருந்து தன்னை விடுவிக்குமாறு ஆங்கிலேயர்களில் கால்களில் மண்டியிட்டு, கடிதங்களாக எழுதித் தள்ளிய தொடைநடுங்கி சாவர்க்கரை, ‘வீர சாவர்க்கர்’ ஆக்கி இந்துத்துவ கும்பல் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. பாஜக தான் ஆட்சிக்கு வரும் மாநிலங்களில் எல்லாம் சாவர்க்கர் உள்ளிட்ட இந்துத்துவாக்களின் வரலாறுகளை பாடநூல்களில் திணிப்பதை திட்டமிட்டுச் செய்து வருகிறது.
ஆட்சிகள் மாறினாலும் இந்தத் திணிப்புகள் பெரும்பாலும் மாற்றப்படாது. ஆனால், இராஜஸ்தானில் அண்மையில் ஆட்சியமைத்த காங்கிரஸ் தலைமையிலான அரசு, முந்தைய பாஜக அரசில் செய்யப்பட்ட திணிப்புகளை பாடப்புத்தகங்களிலிருந்து நீக்கியுள்ளது. மாட்டரசியலில் பாஜக -வின் கருத்தோடு ஒத்துப்போகும் காங்கிரஸ், துணிச்சலாக இந்த முடிவை எடுத்துள்ளது.
ஆறு மாதத்துக்கு முன் அசோக் கெய்லாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு அமைந்தவுடன் பள்ளிப் பாடப் புத்தகங்களில் பல்வேறு மாற்றங்களைச் செய்துள்ளது. வரலாற்றுத் தகவல்கள், தலைவர்களைப் பற்றிய தகவல்கள் என முந்தைய பாஜக அரசு திணித்த பலவற்றை பாடநூல்களிலிருந்து நீக்கியுள்ளது காங்கிரஸ் அரசு.
இராஜஸ்தான் மேனிலை கல்வி வாரியத்துக்காக, இராஜஸ்தான் மாநில பாடநூல் கழகம் வெளியிட்ட புதிய நூல்கள் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன. அரசியல் நோக்கத்தோடு வரலாற்றை சிதைக்கும் பகுதிகள் பாடநூல்களில் இடம்பெற்றிருந்த நிலையில், அதை சீரமைக்க பிப்ரவரி மாதம் பாடநூல் திறனாய்வு கமிட்டி அமைக்கப்பட்டது. அந்தக் கமிட்டி கொடுத்த பரிந்துரைகளின்படி மாற்றப்பட்ட புதிய நூல்கள் தற்போது, மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
12-ம் வகுப்பு வரலாறு பாடநூலில் சாவர்க்கர்
பழைய நூலில் : விடுதலை இயக்கம் என்ற பகுதியின் கீழ் இருந்த சாவர்க்கர் பற்றிய குறிப்பில் அந்தப் பெயருக்கு முன்னாள் ‘வீர’ என்ற அடைமொழி தரப்பட்டிருந்தது. இந்திய சுதந்திர இயக்க காலக்கட்டத்தில் சாவர்க்கரின் பங்கு குறித்து அந்தப் பகுதியில் விவரிக்கப்பட்டிருந்தது.
புதிய நூலில் : சாவர்க்கர், ‘விநாயக் தாமோதர் சாவர்க்கர்’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறார். பிரிட்டிஷாரின் ஆட்சிக்காலத்தில் அந்தமானின் செல்லுலார் சிறையில் அடைக்கப்பட்ட சாவர்க்கர் அங்கே எத்தகைய சித்ரவதைகளை அனுபவித்தார் என அந்தப் பகுதி விவரிக்கிறது.
மேலும், நவம்பர் 11, 1911-ம் ஆண்டு எழுதப்பட்ட இரண்டாவது மன்னிப்புக் கடிதத்தில் தன்னை போர்ச்சுகலின் மகன் என அவர் அழைத்துக்கொண்டதும் அதில் எழுதப்பட்டுள்ளது. முக்கியமாக, பிரிட்டிஷாருக்கு சாவர்க்கர் நான்கு மன்னிப்பு கடிதங்கள் எழுதியதையும் அந்தப் பகுதி கூறுகிறது.
“தன்னுடைய விடுதலைக்குப் பின், சாவர்க்கர் இந்தியாவை ‘இந்து நாடாக’ மாற்ற பணியாற்றியதாகவும் இந்துக்கள் ஆயுதம் வைத்துக்கொள்ளவும் அழைப்பு விடுத்தார். 1942-ல் நடந்த வெள்ளையனே வெளியேறு இயக்கத்தையும் 1946-ம் ஆண்டில் பாகிஸ்தான் உருவாக்கத்தையும் சாவர்க்கர் எதிர்த்தார். ஜனவரி 30, 1948-ம் ஆண்டு காந்தி படுகொலைக்கு பின், அவருடைய கொலையில் சதி திட்டம் தீட்டியது, கோட்சேவுக்கு உதவியது உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழ் கைதாகி, பின்பு விடுவிக்கப்பட்டார்” போன்ற தகவல்கள் பாடநூலில் சேர்க்கப்பட்டுள்ளன.
பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் ஹால்திகாட்டி போர்
பழைய நூலில் : மொகலாய மன்னர் அக்பரால், மகாரானா பிரதாப்பை பிடிக்கவோ, கொல்லவோ, முழு ராஜாங்கத்தையும் கைப்பற்றவோ முடியவில்லை என்றும்; ஹால்திகாட்டி போர் மகாரானா பிரதாப்புக்கு சாதகமாக முடிந்ததாகவும்; மொகலாய படை அவர்களைக் கண்டு பயந்து நடுங்கியதாகவும் எழுதப்பட்டிருந்தது.
புதிய நூலில் : ஹால்திகாட்டி போர், மகாரானா பிரதாப்பின் குதிரை இறந்துவிட்ட நிலையில், பிரதாப் போர்க்களத்தை விட்டுச் செல்வதில் முடிகிறது. அக்பருக்கும் பிரதாப்புக்கும் நடந்த போர், மதரீதியிலான போர் அல்ல என்றும், அது இரண்டு அரசியல் சக்திகளுக்கிடையேயான போர் என்றும் கூறுகிறது. போர் முடிவு குறித்து தெரிவிக்கப்படாத நிலையில், அடுத்தடுத்த ஆண்டுகளில் அக்பருக்கு எதிரான பிரதாப்பின் கொரில்லாப் போரை மட்டும் குறிப்பிட்டிருக்கிறது.
12-ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடத்தில் பணமதிப்பழிப்பு
பழைய நூலில் : பயங்கரவாதம், அரசியலை குற்றமயமாக்குதல் மற்றும் ஊழல், இந்திய வெளியுறவுக் கொள்ளையின் பண்புகள் குறித்த பகுதியில் பணமதிப்பிழப்பு என்பது ‘கறுப்புப் பண பிரச்சாரம்’ என குறிக்கப்பட்டிருந்தது.
இந்தப் பகுதியில் ஊழல் மற்றும் வெளியுறவு கொள்கையில் பணமதிப்பிழப்பின் தாக்கம் குறித்து விவாதிக்கப்பட்டிருந்தது.
புதிய நூலில் : பணமதிப்பிழப்பு குறித்த அனைத்து தகவல்களும் நீக்கப்பட்டுள்ளன.
12-ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடத்தில் அமைப்புகளும் அவற்றின் அரசியலும்
பழைய நூலில் : ‘சாதியமும் மதவாதமும்’ என்ற தலைப்பில் முசுலீம் அமைப்புகளான ஜமாத் இ இசுலாம், சிமி போன்றவை மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தன.
புதிய நூலில் : முந்தைய முசுலீம் அமைப்புகளின் பெயர்களோடு இந்து மகாசபையின் பெயரும் சேர்க்கப்பட்டு, இந்த அமைப்புகள் சுயலாபத்துக்காக பிரித்தாளும் சித்தாந்தங்களை பிரச்சாரங்களைச் செய்வதாக எழுதப்பட்டுள்ளது.
12-ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடத்தில் ஜிகாத்
பழைய நூலில் : அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா, நேபாளத்துடன் இந்தியாவின் உறவு குறித்த பகுதியில் ஜிகாத் அல்லது இந்தியாவுக்கு எதிரான கொள்கைகள் இந்திய-பாக் உறவை பாதிப்பதாக எழுதப்பட்டிருந்தது.
புதிய நூலில் : ஜிகாத் என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது.
12-ம் வகுப்பு வரலாறு பாடத்தில் அலாவுதின் கில்ஜியின் சித்தூர் தாக்குதல்
பழைய நூலில் : முசுலீம் தாக்குதல்கள் – குறிக்கோளும் தாக்கமும் என்ற தலைப்பில் கில்ஜி சித்தூரை தாக்கியது குறித்து எழுதப்பட்டிருந்தது. அதில், சில வரலாற்றாசிரியர்களின் கருத்துப்படி, சித்தூரின் மேவாரான ரத்தன் சிங்கின் அழகான மனைவி பத்மினிக்காகவே கில்ஜி தாக்குதல் நடத்தியிருக்கிறார். மாலிக் முகமது ஜயாசியின் இலக்கியமான ‘பத்மாவத்’ கில்ஜியின் தாக்குதலுக்கு பத்மினியே காரணம் எனவும் எழுதப்பட்டடிருந்தது.
புதிய நூலில் : பத்மாவத் சொல்லும் காரணத்தை சொல்லியுள்ளது. ஆனால், கே.எஸ். லால், கனூர் கோ மற்றும் ஹபீப் ஆகியோர் உண்மைகளையும் நடந்தவற்றையும் பார்க்கும்போது பத்மாவதி காரணமில்லை என்கிறார்கள் எனவும் ஜயாசி எழுதிய பத்வாத்-இல் சொல்வதுபோல கில்ஜி, சித்தூரை எட்டு ஆண்டுகள் முற்றுகையிட்டிருந்தார் என சொல்வதற்கு எந்த வரலாற்று ஆதாரமும் இல்லை என்றும் திருத்தி எழுதப்பட்டுள்ளது.
பாஜக அரசு செய்த ஆர்.எஸ்.எஸ். சித்தாந்த திணிப்பை, காங்கிரஸ் அரசு நீக்கியிருப்பதைக் கண்டு அம்மாநில பாஜகவினர் துள்ளி குதிக்கின்றனர். ஆனால், ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத் திணிப்பை முற்றிலுமாக நீக்குவோம் என்கிறது அம்மாநில அரசு. இதைப் பாடநூல்களோடு நிறுத்திவிடாமல் மற்ற அனைத்து வகையிலும் செயல்படுத்தினால் மட்டுமே முழுமையான பலன் கிடைக்கும். அதற்குரிய துணிவு காங்கிரசிடம் உள்ளதா?
வணக்கம். இந்த ஒளிப்பதிவில் மாரடைப்பு பற்றிய சந்தேகங்களுக்கு, கேள்வி பதில்கள் மூலம் நாங்கள் விடை அளிக்க முயற்சிக்கிறோம்.
கேள்வி 1 : எனது உறவினர் ஒருவர் தனக்கு நெஞ்சுவலி இருப்பதாகக் கூறுகிறார். அவர் உடனடியாக செய்ய வேண்டியது என்ன?
விடை : இது பொதுவாகவே எல்லோரும் எழுப்பக்கூடிய கேள்விதான். முதலில் நாம் இது இருதய வலியாக இருக்க வாய்ப்புகள் உண்டா என பார்க்க வேண்டும்.
அவருக்கு புகைப் பழக்கம், நீரிழிவு நோய், இரத்தக் கொதிப்பு, உடல் பருமன் முதலிய பிரச்சினைகள் இருந்தால், இது இருதய வலியாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அதைப்போல் வலியானது வந்தவுடன் போய்விடுகிறது என்றால் நாம் அதை பெரிதுபடுத்தத் தேவையில்லை. அதுவே தொடர்ந்து 15-20 நிமிடத்திற்கு மேல் வலியானது நீடிக்கிறது என்றால்? இதுவும் இருதய வலியாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
நாம் என்ன செய்யவேண்டும் என்றால் முதலில் பாதிக்கப்பட்டோரை சாந்தப்படுத்த வேண்டும். காரணம் அவர்கள் அதிகமாக பதட்டம் அடைவார்கள். அடுத்ததாக ஆஸ்பிரின் என்ற ஒரு மாத்திரை. இது டிஸ்பிரின் முதலிய பல பெயர்களில் கிடைக்கிறது. இந்த மாத்திரையை 300 அல்லது 400 கிராம் தண்ணீரில் கலந்து அவரை குடிக்க வைக்க வேண்டும். மாரடைப்பினால் வரும் இறப்பானது இந்த மாத்திரையின் பலனால் மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளது என்பது அறிவியல்பூர்வமான உண்மை. இதைத் தவிர வேறு ஏதும் பெரிதாக நம்மால் செய்ய இயலாது.
அவரை விரைவாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஈ.சி.ஜி எடுத்து என்ன பிரச்சினை என்று பார்ப்பதுதான் அடுத்த கட்டம். இதைவிடுத்து கஷாயம் அல்லது வேறு ஏதாவது கொடுத்து வீட்டிலேயே இருக்க வைப்பது மிகவும் தவறான செயல். எப்போது, இது மாரடைப்புக்கான வலி என நமக்கு சந்தேகம் ஏற்படுகிறதோ, அப்போதே பாதிக்கப்பட்டோரை சாந்தப்படுத்தி, இந்த மாத்திரையை நீரில் கலந்து கொடுப்பதே சரியான ஒன்று.
கேள்வி 2 : குடல்புண் உள்ளவர்களுக்கு, அதற்குண்டான மாத்திரைகள் இருக்கும் அவர்கள் அதை எந்நேரமும் கையில் வைத்திருப்பார்கள். ஆனால் இந்த ஆஸ்பிரின் மாத்திரையை யாரும் கையில் வைத்து இருப்பதில்லை. இது நாம் கவனிக்கத்தக்க ஒன்று. குடல்புண் உள்ளவருக்கு நெஞ்சுவலி ஏற்படுகிறது, அது அசிடிட்டியினால் உண்டாகக்கூடிய வலி என்றால், நாம் தவறி ஆஸ்பிரின் மாத்திரை உண்பதினால் குடல் புண்ணானது அதிகம் அடைய வாய்ப்பு உள்ளது என கருதுகிறீர்களா?
விடை : இல்லை. ஆஸ்பிரின் மாத்திரை, உயிரை காப்பாற்றக் கூடிய ஒன்று, நாம் ஒரு மாத்திரை எடுப்பதனால் குடல்புண் உள்ளவர்களுக்கு எந்தவித பாதிப்பும் பெரிய அளவில் நேர்ந்துவிடாது. அதுவே அந்த நெஞ்சு வலியானது அசிடிட்டியில்லாமல் மாரடைப்புக்கான நெஞ்சு வலியாக இருந்தால், இந்த ஆஸ்பிரினின் பங்கானது விலைமதிப்பற்றது. எனவே எந்த வகையான வலியாக இருந்தாலும் நாம் மருத்துவமனைக்கு சென்று தெளிவுபடுத்திக் கொள்ளப் போகிறோம். அதற்கு முன் இந்த ஆஸ்பிரின் மாத்திரை எடுத்துக்கொள்வது எந்தவித பக்க விளைவையும் ஏற்படுத்தாது.
இந்த மாத்திரைகள் மட்டுமல்லாது க்ளோடிங்கோஸ், ஸ்டேட்டின் போன்ற பிற மாத்திரைகளும் உள்ளன. இவற்றையெல்லாம், வீட்டிலேயே பயன்படுத்த வேண்டும் என கண்டிப்பு கிடையாது. நாம் மருத்துவமனைக்குச் சென்றாலும் மருத்துவர்கள் இவற்றையே வழங்குவார்கள்.
மற்றொருபுறம் இந்த மாத்திரைகளை சாப்பிடுவதன் மூலம் மாரடைப்பை தள்ளிப் போடலாம் என சிலர் கூறுகிறார்கள். இது தவறு, தள்ளிப்போட முடியாது. நாம் திரும்பத் திரும்ப வலியுறுத்துவது இதைத்தான், மாரடைப்பு என சந்தேகம் வந்தாலே மருத்துவமனைக்கு விரைவாகச் செல்ல வேண்டும்.
கேள்வி 3 : மாரடைப்பு எனத் தெரிந்தால் ஏன் விரைவாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்?
விடை : Time is muscle. இதன் பொருள் நாம், எவ்வளவு விரைவாக மருத்துவமனைக்குச் செல்கிறோமோ அவ்வளவு விரைவாக நமக்கு மருந்துகள் வழங்குவார்கள். இதன் மூலம் பெரிய அளவிலான தசைகள் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும். நான் முந்தையவீடியோக்களில்கூறியபடி எவ்வளவு விரைவாக ரத்தக்குழாய் அடைப்பை நீக்குகிறோமோ, அவ்வளவு தசைகள் தப்பிக்கும் இதைத்தான் time is muscle எனக் கூறுகிறார்கள்.
இதற்காகத்தான் வலியுறுத்துகிறோம், வலி ஏற்பட்டவுடன் விரைவாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று.
கேள்வி 4 : நெஞ்சு வலியானது இல்லாமலேயே மாரடைப்பால் பாதிக்கப்பட்ட பல பேரை நாம் பார்க்கிறோம். அதை பற்றி விளக்க முடியுமா ?
விடை : இதை சைலன்ட் அட்டாக் என கூறுவார்கள். நாம் முந்தைய வீடியோக்களில் பார்த்தது போல், சில பேர் கையில் லேசாக வியர்த்தது என்பார்கள், சில பேர் முதுகு லேசாக வலிக்கிறது என்பார்கள் இப்படி பல காரணங்களை கூறுவார்கள். சில பேர் மூச்சு சரியாகிவிடமுடியவில்லை என்று மருத்துவமனைக்குச் செல்வார்கள்.
ஆனால் மருத்துவர் ஈசிஜி எடுத்த பின்பு உங்களுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு மாரடைப்பானது வந்துள்ளது என்பர். இருதயத்தில் இருந்து வரும் வலியை ஏற்படுத்தும் நரம்பு மாரடைப்பு வரும்போது பாதிக்கப்பட்டால், அந்த நபருக்கு வலியை உணர முடியாது. இது யாருக்குப் பொதுவாக இருக்கும் என்றால் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்குத்தான். நீரிழிவு நோய் இல்லாதவர்களுக்கும் இது நேரிடலாம். ஆனால் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு தான் இது அதிகம் நேரிட வாய்ப்பு உள்ளது.
இந்த வகை மாரடைப்பானது சிறிய அளவிலும் இருக்கலாம், அல்லது பெரிய அளவிலும் இருந்து உயிரைப் பறிக்கக் கூடிய ஒன்றாகவும் போகலாம். எனவே மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்யும்போது மருத்துவர் உங்களுக்கு ஏற்கெனவே முதல் அட்டாக் வந்து இருக்கிறது என்று கூறினால், அதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்; இல்லை என மறுதலிக்கக் கூடாது. காரணம் பிரச்சினை உள்ளது என நாம் கண்டறிந்தால்தான் அதை நாம் முறியடிக்க முயற்சிப்போம்.
கேள்வி 5 : ஒருவர் நெஞ்சு வலியோடு வருகிறார். அவருக்கு மாத்திரை மருந்து கொடுத்ததுமே இயல்பு நிலைக்கு திரும்புகிறார். அவருக்கு நாம் ஆஞ்சியோகிராம் பண்ண வேண்டுமா ?
விடை : மாரடைப்புக்கான காரணங்களை துல்லியமாக கண்டுபிடிக்க கூடிய ஒன்றுதான் ஆஞ்சியோகிராம். அதை நாம் பரிசோதிப்பதின் மூலம் மாரடைப்புக்கான காரணங்களை கண்டுபிடித்து அவற்றைக் களைய முடியும். ஆஞ்சியோகிராம் என்பது ஒரு பரிசோதனை, அது ஆபரேஷன் கிடையாது.
பரிசோதனை செய்ய நாம் ஏன் அச்சப்பட வேண்டும்? ஒருவர் நெஞ்சுவலி என வருகிறார். அவருக்கு மருந்து, மாத்திரைகள் கொடுத்த பின்பு இயல்பு நிலைக்கு திரும்புகிறார். ஆனால், அதற்கான ரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்பு நீங்கியதா, இல்லையா என நாம் ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்தால் தான் கண்டுபிடிக்க முடியும். மருந்து மாத்திரைக்குப் பின் சிலருக்கு நெஞ்சு வலி குறையும், அவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்புவார்கள். ஆனால் ரத்தக்குழாயில் அடைப்பு 100% அப்படியே இருக்கும்.
எனவேதான், நாம் ஆஞ்சியோகிராம் பரிசோதனை நெஞ்சுவலி ஏற்பட்டு சில மணி நேரத்திற்குள் எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். அதேபோல் ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்தாலே ஆஞ்சியோபிளாஸ்டி ஆபரேஷன் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. ஏனென்றால், ஆஞ்சியோகிராம் மூலம் நாம் பரிசோதித்த பின் அவருக்கு வெறும் 30%தான் அடைப்பு இருக்கிறது என்றால் ஆஞ்சியோபிளாஸ்டிரி ஆப்பரேஷனை தவிர்க்கலாம். நாம் என்ன செய்யவேண்டும் என்று ஆஞ்சியோகிராம் பரிசோதனை மூலம் தெரியவரும் அவ்வளவே.
கேள்வி 6 : சரி இப்போது இரண்டு நபர்கள் வருகிறார்கள். ஒருவருக்கு ஒரு ரத்த குழாயில் 100% அடைப்பு எப்போதும் உள்ளது. மற்றொருவருக்கு ஒரு ரத்த குழாயில் 100% மற்ற இரத்தக் குழாய்களில் 60, 80 சதவீதம் அடைப்பு உள்ளது. இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?
விடை : முதலாவதாக நாங்கள் நூறு சதவீதம் அடைப்பு உள்ளவற்றிற்குத்தான் முக்கியத்துவம் தருவோம். அதை எப்படியாவது நீக்க முயற்சிப்போம். 60 – 80 சதவீதம் உள்ள அடைப்பை பிறகுதான் பரிசீலிப்போம்.
கேள்வி 7 : இப்போது மாரடைப்பு வந்து குணமாகிய பலபேர் எழுப்பக்கூடிய கேள்வி ”நான் வெயிட் தூக்கலாமா?” இதற்கு என்ன பதில் ?
விடை : எப்போதும், உடலில் அடிபட்டால் நாம் சிறிது காலம் அந்த பாகத்துக்கு ஓய்வு கொடுப்போம். அதேபோல் மாரடைப்பானது இருதயத்திற்கு அடிபட்டுள்ளது. அப்படி என்றால் நாம் இருதயத்துக்கு ஒரு சில வாரங்கள் ஓய்வு கொடுக்கவேண்டும் இயல்பான வேலைகளை நாம் செய்யலாம்.
வாரம் ஒருமுறை பரிசோதனை செய்யும்போது மருத்துவர்கள் அறிவுரை வழங்குவார்கள். சிலருக்கு இருதயமானது சிகிச்சைக்கு பிறகு நன்றாக இயங்கும். அப்படி இருப்பவர்களுக்கு, அப்போதே நீங்கள் ஓடலாம், உடற்பயிற்சி செய்யலாம் என அறிவுரை வழங்கவோம். இன்னும் சிலருக்கு இதயம் சரியாக இயங்காமல் இருக்கும் எனவே அவர்கள் தகுந்த சிகிச்சை மேற்கொண்டு, பிறகுதான் உடற்பயிற்சி போன்றவற்றில் ஈடுபட வேண்டும். எனவே மாரடைப்பு வந்தால் இனிமேல் உடற்பயிற்சி செய்யக்கூடாது எனும் வாதம் தவறானது. அவரவர்க்கு இருக்கும் நிலைமையைப் பொறுத்து இந்த விடையானது மாறுபடும். பொதுவாக மாரடைப்பிற்குப்பின் உடற்பயிற்சி மேற்கொள்ள கூடாது எனும் வாதம் தவறானது.
உதாரணத்திற்கு ஒருவர் மாடிப்படி ஏறுகிறார் என்றால்? ஒரு மாடி ஏறிய பின் அவருக்கு மூச்சடைப்பு பெரிதாக இல்லை என்றால், அவர் இரண்டாவது மாடிப்படியும் ஏறலாம். அதுவே முதலாவது மாடி ஏறிய பின் மூச்சடைப்பு ஏற்படுகிறது என்றால், அவர் மாடிப்படி ஏறுவதை தவிர்க்க வேண்டும். இப்படி தங்களுக்கு ஏற்றாற்போல் உடற் பயிற்சியை தாங்களே சீரமைத்துக் கொள்ள முடியும். ஒருவருக்கு உடற்பயிற்சி மேற்கொள்ள கூடாது என அறிவுரை வழங்கப்பட்டால். சில வாரம் மாத்திரை மருந்துகள் எடுத்தபின் அவரால் மூன்று மாடிக்கு மேல் ஏற முடியும்.
என்னிடம் வரும் இருதய நோயாளிகள் சிலர் ஜிம்க்கும் செல்ல நான் அனுமதிப்பது உண்டு. இதற்கான காரணம் என்னவென்றால் இருதயத்தில் ஒரு சிறிய அளவிலான தசைகள் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்றாலும். மீதி உள்ள தசைகள் வலுவாக வைத்துக் கொள்ளவும், அவை வலுப்பெறுவதால் அவருக்கு உடல்ரீதியான பிரச்சினைகள் மேலும் ஏற்படாமல் இருக்கும். எனவே மாரடைப்பால் பாதிக்கப்பட்டவராக இருந்தாலும் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அவரது உடல் எதுவரை ஒத்துழைக்கிறதோ, அதுவரையில் உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது. பொதுவாக எடை தூக்கக்கூடாது, உடற்பயிற்சி மேற்கொள்ள கூடாது என்னும் வாதம் தவறானது.
கேள்வி 8 : ஆஞ்சியோபிளாஸ்டி மேற்கொண்டவர்கள் உடற்பயிற்சி செய்வது கட்டாயமாகும். ஏனென்றால், உடலின் மற்ற பாகங்களை செயல் இழக்காமல் வைக்க இந்தப் பயிற்சியானது பெரிதும் உதவும். இப்போது நான் முன்னரே கேள்வி எழுப்பியபடி எனது உறவினர் ஒருவர் மருத்துவமனைக்கு வந்து விட்டார். இவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி மேற்கொள்ள வேண்டுமா அல்லது பைபாஸ் மேற்கொள்ள வேண்டுமா என எப்படி முடிவு எடுப்பது.
விடை : இப்போது, இரத்தக் குழாயின் இரு முனைகளிலும் அடைப்பு உள்ளது. ரத்தம் சீராக செல்ல முடியவில்லை. இப்போது நாம் பாதையை கடக்க முயல்கிறோம், ஆனால் இரு பக்கங்களிலும் குப்பையானது தேங்கி நிற்கிறது என்றால். நாம் என்ன செய்வோம் குப்பைகளை இருபுறமும் அகற்ற விரும்புவோம். அதேபோல் ரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்பு ஏற்பட்டு அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி மூலம் சிறிய பாதையில் டியூபை செலுத்தி பலூன்போல் ஊதி இருபுறம் இருக்கும் கொழுப்புகளையும் ரத்தம் பாய ஏற்றவாறு ஒதுக்குவோம்.
ஆனால், ஒதுக்கப்பட்ட கொழுப்புகளானது, மீண்டும் அடைப்பை ஏற்படுத்த முயற்சிக்கும். பலபேர் கூறுவது போல் அது ஒன்றும் சுவற்றில் இருக்கும் அழுக்கு கிடையாது சுரண்டி எடுப்பதற்கு. இந்த கொழுப்புகளானது பல செல்களால் உண்டாகி கெமிக்கல்களால், சேர்ந்து இருக்கக்கூடிய ஒரு கலவையான அமைப்பு. எனவே இந்த கொழுப்புகளானது இஞ்சிச் சாறு குடிப்பதாலும் மற்றவற்றினாலும் கரையாது. இந்த கொழுப்புகளானது நாம் பலூனை வைத்து ஊதி ஒதுக்கிய பின்பு சிறிது நேரத்திற்குள்ளாகவே மீண்டும் இணைய வல்லது. எனவே அவை மீண்டும் இணைய முடியாதவாறு நடுவில் ஒரு ஸ்டெண்ட் வைத்து அந்த கொழுப்புகளை தடுத்து விடுவோம்.
இந்த ஸ்டென்ட், கோபால்ட் குரோமியம் என்ற தனிமத்தால் உருவாகி இருக்கும் ஒரு கம்பி. இதை வைத்துத்தான் நாம் இந்த கொழுப்புகளை இணையவிடாமல் தடுப்போம். இதற்குள் ஒரு ட்யூபை செலுத்தி ரத்தத்தை அதற்குள் சீராக செல்லும்படி செய்து விடுவோம். இதற்குப் பெயர்தான் ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் ஸ்டெண்ட்.
அப்படி என்றால் பைபாஸ் என்றால் என்ன? அதையும் பார்ப்போம்.
நாம் முன்னர் கூறிய உதாரணத்திற்கே வருவோம், நாம் பாதையை கடக்க வேண்டும் இருபுறமும் அடைப்பு உள்ளது. இந்தமுறை பாறாங்கற்கள் ஆக உள்ளது. நம்மால் அவற்றை ஒதுக்க முடியாது. இந்த முறை நாம் என்ன செய்வோம், அந்தப் பாதையை கடக்க முடியாது என்பதால். மாற்றுப் பாதையை தயார் செய்வோம். அதே போல்தான் இங்கும் இந்த கொழுப்புகளை கரைக்க முடியாது என்பதால், வேறு ஒரு பாதையில் ரத்தத்தை இயங்க செய்வோம். அதற்குப் பெயர்தான் பைபாஸ்.
பைபாஸ் என்பது ஆங்கில வார்த்தை, ஒருவர் மதுரையில் இருந்து திண்டுக்கல் செல்ல வேண்டும் என்றால் பேருந்து நிலையத்தை அடையாமல் பைபாஸ் வழியாகவே செல்ல முயற்சிப்போம் அல்லவா அதே போல்தான் இங்கும். இருபுறமும் உள்ள கொழுப்பானது, ஒதுக்க முடியாதவாறு அடர்த்தியாக உள்ளது என்றால் என்ன செய்வது ?
நாம், தமணியை எடுத்து மேற்புறத்தில் வைத்து விடுவோம், தமனியின் கீழ் பகுதியின் முனையை, கொழுப்பு அடைந்த கீழ்ப்புறத்தில் தைத்துவிடுவோம். ரத்தமானது இந்த தமனியின் வழியாக சீராக செல்லும். நமக்கு கொழுப்புகள் அடைப்பட்ட இடத்தைத் தாண்டி இரத்தமானது செல்ல வேண்டும் அவ்வளவே அதற்கு இந்த தமனி உதவும். இதற்குப் பெயர்தான் பைபாஸ் சர்ஜரி.
எனவே இரு புறமும் அடைபட்டுள்ள கொழுப்புகளை ஒதுக்கி வைத்து ரத்தத்தை சீராக செல்ல வைப்பது ஆஞ்சியோபிளாஸ்டி. அதேபோல், தமனிய கொழுப்பு அடைபட்ட தமனிகளின் வெளிப்புறத்தில் தைத்து ரத்தத்தை அதன் வழியாக செல்ல வைப்பது பைபாஸ் சர்ஜரி.
இதற்கு பல காரணிகளை முதன்மையாக வைத்து எந்த வகையான சர்ஜரி சிறந்தது என முடிவுகளை எடுப்போம். சில பேருக்கு 4 அடைப்புகள் இருக்கும். ஆனால், அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி ஸ்டென்ட் வைத்து சரி பண்ணலாம் என முடிவு எடுப்போம். நான்கு ஸ்டெண்ட்கள் வைத்து சரி செய்த ஆட்களும் உள்ளார்கள். ஆனால் சில பேருக்கு இரண்டு அடைப்புதான் இருக்கும் அவர்களை பைபாஸ் சர்ஜரி மேற்கொள்ள வலியுறுத்துவோம்.
ஆஞ்சியோ பிளாஸ்டி அல்லது பைபாஸ் சர்ஜரி இரண்டில் எது நோயாளிக்கு சிறந்தது, விளைவுகளை சிறப்பாக தருவது என்பதைப் பொறுத்தே சிகிச்சையை மேற்கொள்வோம். ஆனால் மக்கள் இதை ஒப்பீடு செய்கிறார்கள். அவர்களுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி பரிந்துரைத்துவிட்டு எனக்கு பைபாஸ் சர்ஜரி மேற்கொள்ள சொல்கிறார்கள். அவருக்கு நான்கு அடைப்பு இருந்தது எனக்கு இரண்டு அடைப்பு தான் உள்ளது. என மக்கள் ஒப்பீடு செய்கிறார்கள். இது தவறு.
மூன்று நபர்கள் நெஞ்சுவலியால் வருகிறார்கள் என்றால், மூன்று பேருக்கும் நிலைமையைப் பொறுத்து சிகிச்சை மாறுபடும் ஒருவருக்கு மருந்து மாத்திரையே போதுமானதாக இருக்கலாம். ஒருவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி செய்து நான்கு நாட்கள் கழித்து வீட்டுக்கு அனுப்புவேன். மற்றொருவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி செய்து ஒரு சில வாரங்கள் கழித்து பைபாஸ் சர்ஜரியும் மேற்கொள்ளக் கூறுவேன். நெஞ்சு வலியை பொறுத்தது மட்டுமன்றி, அந்த இருதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லக்கூடிய தமனியைப் பொருத்தும் இது மாறுபடும்.
மாரடைப்பு என ஒருவர் வருகிறார் என்றால். அந்த நேரத்தில் ரத்தக் கட்டியை கரைப்பதற்கு உண்டான injection அதற்கடுத்து ஆஞ்சியோபிளாஸ்டிதான் சரியான தீர்வு. அந்த அமர்வில் உடல்நிலை மோசமாக உள்ள தருணத்தில் பைபாஸ் சர்ஜரி தீர்வு கிடையாது. இப்படி உடனடியாக நாம் மேற்கொள்ள வேண்டியது இந்த ஆஞ்சியோபிளாஸ்டி தான்.
இதற்குப் பிறகு இரண்டு அல்லது மூன்று அடைப்பு உள்ளது என்றால் பிறகு நாம் பைபாஸ் அல்லது ஆஞ்சியோபிளாஸ்டியே தொடரலாமா என முடிவு எடுக்கலாம். ஆனால், உடனடியாக நாம் முதல் சிகிச்சை வழங்க வேண்டியது ஆஞ்சியோபிளாஸ்டிதான்.