சென்னை 42-வது புத்தகக் காட்சி பற்றியும் கீழைக்காற்று அரங்கிற்கு வருகை தந்திருந்த வாசகர்கள் பகிர்ந்து கொண்ட கருத்துக்களையும் பகிர்ந்து கொள்கிறார் தோழர் துரை. சண்முகம்.
‘’கீழைக்காற்று அரங்கிற்கு அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், திரைத்துறையினர், தோழர்கள் என பலரும் வருகை தந்திருந்தனர். ஏதோ புத்தகம் வாங்குவதற்கான வருகையாக என்றில்லாமல், ஒரு புதிய அரசியல் கருத்து உரையாடலை நோக்கி வந்ததாகவே பார்க்கிறேன்.
வாசகர்களை வெறும் நுகர்வோராக மட்டும் கருத முடியாது. அவர்களுக்குத் தேவையான கருத்து நம்மிடம் இருக்கிறதா? என்பதை புத்தக வெளியீட்டாளர்கள் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இதனை வணிகம் சார்ந்த நடவடிக்கையாக மட்டும் சுருக்கி புரிந்து கொள்ள முடியாது. இது கருத்துலகம். இன்றைய தலைமுறையினருக்கு என்ன மாதிரியான கருத்தும் சிந்தனையும் தேவைப்படுகிறது. அதனோடு தொடர்புடையவர்களாக புத்தக வெளியீட்டாளர்கள் இருக்கிறோமா? என்பதை பரிசீலித்து பார்ப்பதற்கான வாய்ப்பாகவும் இந்தப் புத்தகக் கண்காட்சியைப் பார்க்க வேண்டியிருக்கிறது.
மார்க்சிம் கார்க்கி சொல்வதைப்போல உலகத்திலேயே சிறந்த கருத்து மனிதன் என்பார். அவர்களது நடைமுறைக்கும் சிந்தனைக்கும் தேவைப்படும் தொடர்புடைய ஒரு கருத்தை தரக்கூடிய இடத்தில் நூல் வெளியீட்டாளர்கள் இருக்க வேண்டும்.
எண்ணற்ற இளைஞர்கள் வருகை தந்திருந்தார்கள். இளைஞர்களுக்குத் தேவைப்படுவோராக நாங்கள் இருந்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி. விழுப்புரம், விருத்தாசலம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து தோழர்கள், இளைஞர்கள், மாணவர்கள் குறிப்பாக முதல் பட்டதாரி மாணவர்கள் பலர் வந்திருந்தனர். நிறைய படிக்க வேண்டும் என்று விருப்பப்படுவர்களுக்கு பொருளாதாரம் இல்லை. புத்தக அலமாரியைப் பார்ப்பார்கள். எல்லாம் நல்ல நூல்களாக இருக்கிறது. இவற்றையெல்லாம் வாங்குவதற்குத்தான் எங்களிடம் பணமில்லை என்று வெளிப்படையாகவே பல இளைஞர்கள் சொன்னார்கள். இந்தக் குழந்தையை தூக்கி கொஞ்சுவதற்கு வாய்ப்பில்லையே என்ற ஏக்கத்தை அவர்களிடம் உணர முடிந்தது.
நிறைய நூலைப் படித்துவிட்டு முதுகுக்குப் பின்னால் அடுக்கி வைத்துவிட்டு உட்கார்ந்து இருப்பதனால் என்ன பயன்? படிப்பின் தேவையை எனக்கானதாக மட்டுமில்லாமல், நான் வாழக்கூடிய சமுதாயத்திற்குப் பயன்பட வேண்டுமென்ற அந்த இளைஞர்களின் புரிதல் முன்னுதாரணமானது.
இன்னொரு சம்பவம், 50 வயதைக் கடந்த முதிய தம்பதியினர் வந்திருந்து நூல்களை தேர்வு செய்தனர். பார்ப்பவர்களுக்கு வயதான காலத்தில் பொழுது போகாமல் நூல் வாங்கிப் படிப்பதாக எண்ணத் தோன்றும். ஆனால், அவர் சொன்னார் “இதையெல்லாம் படிக்க முடிகிறதா? என்று கேட்கிறீர்கள். இதையெல்லாம் இதுவரை நான் படிக்காமல் இருந்திருக்கிறேன் என்றுதான் நான் பார்க்கிறேன் என்றார்.’’
இவை போன்ற இன்னும் பல சுவாரசியமான புத்தகக் காட்சி அனுபவங்களை பகிர்கிறார் தோழர் துரை. சண்முகம்.
சென்னை குருநானக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 10-வது இந்து ஆன்மீகக் கண்காட்சி நடைபெற்று முடிந்திருக்கிறது. தமிழகத்தின் அனைத்து மடாதிபதிகள் தொடங்கி சாதி சங்கங்கள் வரை அக்கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. “இந்து என்றால் சாதி- சாதி என்றால் இந்து” இதுதான் இந்துத்துவத்தின் மூலமந்திரம். அதனால்தான் “ஆன்மீக” கண்காட்சியில் சாதி சங்கங்ளுக்கு பிரதான இடம் ஒதுக்கியிருந்தனர். இவர்கள் சொல்லும் ‘இந்து ஒற்றுமை’ என்பது உண்மையில் சாதிகளின் ஒற்றுமையே!
என்னதான் சாதி வெறியனாக இருந்தாலும் பொதுவில் தன் சாதியை சொல்லத் தயங்கும் ஒரு மாநிலத்தில் சாதி சங்கங்ளுக்கு ஸ்டால் ஒதுக்கித் தரப்படுகிறது என்றால்… இதனை வேறு யாரால் இவ்வளவு அழுத்தமாக செய்ய முடியும்? நிச்சயம் ஆர்.எஸ்.எஸ்தான்.
பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக நடைபெற்ற இந்த கண்காட்சியின் புரவலர்கள் யார் தெரியுமா? டாஃபே, ஜி.எம்.ஆர், லார்சன் & டியூப்ரோ, பாரத் ஃபோர்ஜ், அசோக் லேலாண்ட், எஸ்ஸார், ஜெம் கிரானைட், டிவிஎஸ், ஸ்ரீராம் பைனான்ஸ் உள்ளிட்ட ஏராளமான நிறுவனங்கள் துக்ளக் ஆசிரியர் குருமுரூத்தியின் ஆணைக்கிணங்க நிதியால் கண்காட்சியை ஆசிர்வதித்திருந்தன.
ஆன்மீக கண்காட்சியில் சாதி சங்கங்கள் :
1 of 3
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தமிழக மண்ணில் காலூன்ற துடிக்கும் சங்க பரிவார் கூட்டம் இதுபோன்ற கண்காட்சியின் மூலம் நடுத்தர இந்துக்களுக்கு வலைவீசி வருகிறது. வட இந்தியாவைபோன்று இங்கு பக்தி மூடநம்பிக்கையில் ஊறித்திளைப்பவர்கள் குறைவு. இங்கே பக்தி-இறை நம்பிக்கை இருந்தாலும் கூடவே பகுத்தறிவும் கொஞ்சமாவது இருப்பதால் ஏமாற்றுவது குறித்து சங்கிகள் தினுசு தினுசாக யோசித்து வருகின்றனர்.
அதனால்தான் “தத்துவார்த்த” ஆன்மீக ஆசாமிகளுக்கும், யோகா மற்றும் தியான பீடங்கள் மற்றும் “உயர்” சாதி சங்களுக்கும் கணிசமான ஸ்டால்களை ஒதுக்கியுள்ளனர். அரங்கத்தில் ஓரளவு அறியப்பட்ட வரலாற்று பிரபலங்களை இந்துவாக மாற்றி அவர்களுக்கு வரலாற்றுக்குறிப்புடன் கூடிய பதாகைகளையும் வைத்திருந்தனர்.
எந்த ஸ்டாலை அணுகினாலும் அன்பான அணுகுமுறையும், கனிவான பேச்சும்… நம்மை மென்மையாக இந்துத்துவத்தை நோக்கி இழுக்கும் படியாகவே உள்ளது. யோகா, தியானம், சமஸ்கிருதம், மன நிம்மதியுடன் ஆரோக்கியமாக வாழ்வது எப்படி என்று டெம்பிளேட் அட்வைசுகள் ஏராளம். “எல்லாம் இலவசம் நீங்க வந்தா மட்டும் போதும்” என்ற ஒரு பேக்கேஜும் கூடவே இருப்பதால் அந்த இலவசத்தில் “இந்து வெறியூட்டும்” ஐட்டங்களை நைசாக சேர்த்திருந்தார்கள்.
அந்த அரங்கத்தில் பகத்சிங் பற்றியும், வேலு நாச்சியார் பற்றியும் ஒளிப்படங்கள் போடுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. அதில் இருந்த பெண்ணிடம் பேசியபோது சொன்னார். “இங்க வரக்கூடிய பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் சுற்றி பார்த்தால் ஒரே ஆன்மீகமா இருக்கேன்னு வெறுப்பாகிடுறாங்க. அதனாலதான் ஒரு மாற்றுக்காக இதை போடுறோம்” என்றார்.
கொஞ்சம் தள்ளி இருந்த ஒரு ஸ்டாலில் வரலாற்று விளக்க ஓவியத்தில் பகத்சிங் படம் இருந்தது. அந்த ஸ்டால் குருநானக் கல்லூரியின் சார்பாக போட்டிருந்தனர். அவர்களிடம், ஆன்மீக கண்காட்சியில பகத்சிங் படம் போட்டிருக்கிங்களே ஆன்மீகத்துக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்? என்று கேட்டோம்
“குருநானக் தான் சீக்கிய மதத்தை தோற்றுவிச்சாரு… முகலாயர்களின் ஆட்சியில சீக்கியர்களை மதம் மாற சொன்னாங்க. அவங்க முடியாதுன்னு சொன்னதால ரொம்ப துன்புறுத்தினாங்க. நெறைய சீக்கியர்களை கொலை பண்ணினாங்க. அதை விளக்கத்தான் இந்த படங்கள் இருக்கு” என்று தடுமாறி சொன்னார். ஒரு கல்லூரியின் ஸ்டாலே இப்படி அப்பட்டமாக வரலாற்றை திரித்து பேசும் போது நாக்பூர் ஆர்.எஸ்.எஸ் பல்கலைக் கழகத்தின் பாடத்திட்டமெல்லாம் எவ்வளவு பயங்கரமாக இருக்கும்?
அது இருக்கட்டும் மேடம். இதுல பகத்சிங் எங்க வந்தாரு?
“அவரும் ஒரு சீக்கியர்தான்… இந்திய விடுதலைப் போராட்டத்துல கலந்துகிட்டாரு… இங்க நிறைய படம் இருக்கு. அதை பாத்துகிட்டே வந்திங்கன்னா இதெல்லாம் புரியும். இருங்க சார், இங்க ஒரு சார் இருந்தாரே… ம்… அவர்தான் இதெல்லாம் விளக்குவாரு… அவரையும் காணோம்.” என ஒரு சிரமத்துடன் சொல்லிவிட்டு அமர்ந்தார். பொய்யுரைப்பதற்கு இத்தனை குறைவான பில்டப் வார்த்தைகளே போதுமென்றால், இந்து ஆன்மீகக் கண்காட்சி மூலம் எத்தனை எத்தனை வகை வாட்ஸ் அப் வதந்திகளெல்லாம் செய்தி – வரலாறு – தத்துவமாக மக்கள் காதில் கொட்டப்பட்டிருக்கும்?
இன்னொரு இடத்தில் சென்னை பிரமிட் ஆன்மீக மன்ற இயக்கம் சார்பாக, வரும் போகும் அனைவரையும் இழுத்து இரண்டு நிமிட தியானப் பயிற்சியை அளித்துக் கொண்டிருந்தனர். அருகே நோட்டிசு கொடுத்துக்கொண்டிருந்தவரிடம் கேட்டபோது சொன்னார். “மனம் அமைதியா இருக்கும், நினைவாற்றல் அதிகரிக்கும்.. அதுகுத்தான் சார் தியானம். நீங்க வாங்க. உங்களுக்கும் சொல்லிக் கொடுப்பாங்க” என்றார்
பிரமிட் ஆன்மீக மன்ற இயக்க அரங்கு
வேற என்ன எல்லாம் சொல்லிக் கொடுப்பாங்க…
“உங்க ஆரோக்கியத்துக்காக தியானத்தோட சேத்து சைவ உணவு பழக்கத்தையும் சொல்லிக் கொடுப்போம். உலகத்துலேயே சிறந்தது சைவ உணவுப் பழக்கம்தான். அது அகிம்சைய சொல்லித்தருது. எந்த ஒரு உயிரையும் கொல்லக்கூடாது சார்… இப்போ நாம காய்கறிய நறுக்குவோம் அது எதுனா சத்தம் போடுதா? இல்ல.. அது சாத்வீகமான உணவு. இதே நான்-வெஜ்லாம் ஒரு உயிர கதற வைக்குது பாத்தீங்களா.. அதனால அதெல்லாம் சாப்பிடக்கூடாது. உடல் ஆரோக்கியத்துக்கு சைவ உணவு பழக்கம், நல்ல மனநலத்துக்கு தியானம்.. இதெல்லாம் கத்துகுடுக்குறோம். தியானத்தால நாம சுத்தமான காத்த சுவாசிக்க முடியும் சார்..” மாட்டுக்கறி மகத்துவங்களை எப்படி நைசாக சைவம் – அசைவம் என்று பேஷாக பேசுகிறார்கள் பாருங்கள்!
இவர்கள் சொல்லும் “மன நிம்மதி” எந்த பிரச்சனையைப் பற்றியும் பேசாமல் – கண்டுகொள்ளாமல் – இருந்தாலே போதும் என்பது மட்டும் புரிந்தது.
தியானத்தின் மூலம் சுத்தமான காத்து கெடைக்கும், மனசு அமைதியா இருக்கும்னு சொல்றீங்க… சென்னையில எங்க போனாலும் பொல்யூசன்தான் அதிகமா இருக்கு.. இதுவே பெரும் பிரச்சனையா இருக்கே..?
“அதை எல்லாம் பெரிசா எடுத்துக்கவே கூடாது சார். இப்ப நான் இருக்கேன். இங்க வந்துதுல இருந்து ஆரோக்கியமாதான் இருக்கேன். நமக்கு நிம்மதிதான் சார் முக்கியம்” என்று திரும்பத்திரும்ப சொன்னார். எப்படி மாற்றிக் கேட்டாலும் அவர் இதையே வேறு வேறு வார்த்தைகளில் கீறல் விழாத ரிக்கார்டாகவே ஓதினார். இவர்கள் சொல்லும் “மன நிம்மதி” எந்த பிரச்சனையைப் பற்றியும் வெளிப்படையாக பேசாமல் – கேள்வி கேட்காமல் – கண்டுகொள்ளாமல் – இருந்தாலே போதும் என்பது மட்டும் புரிந்தது.
அடுத்த வரிசையில் விலங்குகள் பாதுகாப்பிற்காக இருந்த ஸ்டாலில் ஒரு முதியவர் வருபவர்கள் அனைவரிடமும் நோட்டிசு கொடுத்து விளக்கிக் கொண்டிருந்தார்.
மாட்டு மூத்திர ஆராய்ச்சி அரங்கம்
“நாங்க 800 மாடுகள பராமரிக்கிறோம். நாம மாட்டுகிட்ட இருந்து எல்லாத்தையும் பெறுகிறோம். ஆனா கடைசியில அதை அம்போன்னு விட்டுடுறோம். அப்படி இல்லாம அதையெல்லாம் வச்சு பராமரிக்கணும்… அததான் நாங்க செய்யுறோம் சார்.. இது மாதிரி மாடுகளை பராமரிக்க ஆகுற செலவு வருசத்துக்கு ரெண்டு லட்சம். தினமும் ஒரு மாட்டுக்கு 50 ரூபா. மாசத்துக்கு 1500 ரூபா. வருஷத்துக்கு 18,000 ரூபா ஆகர்..றது சார்” என தொடர்ந்தார்.
சரி நாங்க என்ன பண்ணனும்… அந்த மாடுகளை வாங்கிட்டு போயி வளக்கனுமா?
உ.பி.-ல யோகி சார் கோசாலை கட்டி தர்ரதா சொன்னாரு. அதே மாதிரி நீங்களும் அரசுகிட்ட டிமாண்ட் வக்கலாமே..
நமக்கு வாய்-வயிறு இருக்க மாதிரி அதுக்கும் இருக்குதானே…ன்னு சொல்லிக்கொண்டே அந்த வழியாக சென்றவரை வம்படியாக இழுத்து அவரிடம் பேச ஆரம்பித்துவிட்டு சாதூர்யமாக நம்மை புறக்கணித்தார் அந்த விலங்கு பாதுகாவலர். முந்தையதில் சைவ உணவின் மகத்துவமாக விஷம் பாய்ச்சியவர்கள் இங்கே கோமாதாவை சென்டிமெண்ட்டாக மார்கெட்டிங் செய்து வந்தார்கள்.
ஈஷா மையம்
ஈஷா மையம் – கர்ம யோகி ஜக்கி வாசுதேவ் கம்பெனி, இரண்டு மூன்று ஸ்டால்களை சேர்த்து எடுத்து பெரிய குடில் போட்டிருந்தார்கள். அந்த அரங்கில் முன்னே இருந்த பெரிய டிஜிட்டல் திரையில் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார் ஜக்கி… அதில் பணியாளர்களே பத்து பேர் இருப்பார்கள். வரிசையாக பள்ளி சிறுவர்கள் இந்த மையத்திற்கு வந்து கொண்டிருக்க அவர்களிடம் நோட்டிசு கொடுத்துக் கொண்டிருந்தனர் ஒரு பிரிவினர். இந்தக் கண்காட்சிக்கு தினசரி பல்வேறு பள்ளிகளின் குழந்தைகள் பள்ளி நிர்வாகத்தின் மூலம் அழைத்து வரப்பட்டிருந்தனர். பள்ளிகளின் மதச்சார்பின்மை எப்படி இளித்துக் கொண்டிருக்கிறது பாருங்கள்!
ஜக்கி கம்பெனியார் “வரும் மஹா சிவராத்திரி அன்னைக்கு எல்லா ஊர்ல இருந்தும் அழைச்சிண்டு போகறதுக்கு பஸ் ஏற்பாடு பண்ணியிருக்கோம். நீங்க அவசியம் வரணும்” என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
என்னடா இது…. பைசா செலவில்லாம கூட்டிட்டு போறதா சொல்றாங்க. என்ன ஏதுன்னு விசாரிக்க அவர்களிடம் சென்றதும்.
நீங்க எந்த ஏரியா? என்றார்கள். ஏரியா பேரை சொன்னதும்.. “ஒன்னும் பிரச்சனை இல்ல. அங்கேயே பஸ் வரும். நீங்க உங்க பேர், போன் நம்பர்லாம் கொடுங்க.. நாங்க கூப்பிடுவோம்” என்றார்கள்.
“சரி சார்… நீங்க வாங்க. இந்த செலவினங்களுக்கு உங்களால் முடிஞ்ச தொகை எதாவது பண்ணுங்க” என்றார்கள். சிவராத்திரி தரிசனம் இலவசமென்றாலும் தரிசனத்திற்கான நிதியை விலை போல உடனே சொன்னது சுவாரசியமாக இருந்தது. ஒண்ணு வாங்கினால் ஒண்ணு இலவசம் என்ற வணிகச் சந்தை உத்தி ஆன்மீகச் சந்தையிலும் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்தது. காசே கொடுக்கவில்லை என்றாலும் ஃபோன் நம்பர் வருவதே அவர்களுக்கு போதுமானதாக இருந்தது.
அதே போல ஆர்.எஸ்.எஸ்-ஸின் சமஸ்கிருத பாரதிக்கும் பெரிய ஸ்டால் போடிருந்தார்கள். கையில் இருந்த நோட்டிசைக் கொடுத்து சமஸ்கிருதம் சொல்லித்தறோம். 20 நாள்ல பேசக் கத்துக்கலாம். அனைத்தும் ஃப்ரிதான் என்றார்.
சார், இத கத்துக்க கஸ்டமா இருக்கும்னு சொல்றாங்களே?
சமஸ்கிருத பாரதி
“அப்படி எல்லாம் கிடையாது. நானே இங்க வந்துதான் கத்துகிட்டேன். எனக்கு சமஸ்கிருதம் சுத்தமா தெரியாது. இப்ப ஓரளவுக்கு பேசுறேன். படிக்கிறேன்” என்றார்.
ஆக்சுவலா எனக்கு இந்தி கத்துக்கிறதுலதான் விருப்பம், அதெல்லாம் சொல்லிக் கொடுப்பிங்களா?
“அது சொல்லித்தர மாட்டோம். ஆனா இரண்டும் ஒரே மாதிரிதான் இருக்கும். எல்லா மொழியிலும் சமஸ்கிருதம் இருக்கிறதால, அதைவிட இதத்தான் ஈசியா கத்துக்க முடியும். கொஞ்சம் பிக்கப் ஆகிட்டிங்கன்னா உங்களுக்கு அடுத்தடுத்த லெவல்ல எக்ஸாம் வச்சி சர்டிஃபிகேட் கொடுத்துவோம்” என்றார்.
சரிங்க சார். இத கத்துக்கனும்னா எதாவது குறிப்பிட்ட சாதியாதான் இருக்கனுமா?
இல்ல… சாதி எல்லாம் பிரச்சனையே இல்ல. எல்லோருக்கும் சொல்லிக் கொடுக்கிறோம் என்று நம்மை தொட்டு தட்டிக் கொடுத்தார். செத்தமொழி சமஸ்கிருதத்திற்கு மத்திய அரசு கொட்டிக் கொடுக்கும் பல நூறு கோடி ரூபாயில் சங்கிகளின் இந்த சம்ஸ்கிருத பாரதியும் வளமாக வாழ்கிறது. பத்தே நாட்களில் சமஸ்கிருதம் எனும் இன்ஸ்டண்ட் திறமையை பத்தே நாட்களில் ஆங்கிலம் பேசலாம் போல அப்பாவிகளை ஓரளவிற்காவது ஈர்த்திருக்க வாய்ப்புண்டு.
கொஞ்சம் தள்ளி வனவாசி சேவா கேந்திரான்னு ஒரு ஸ்டால் இருந்தது. இந்த கேந்திரம்தான் ஆர்.எஸ்.எஸ் சார்பாக பழங்குடி மக்களிடம் இயங்குகிற முக்கியமான பரிவார் உறுப்பு.
அந்த அரங்கில் இருந்த அண்ணன் ரொம்ப அமைதியா பேசினாரு. “நாங்க மலைவாழ் மக்கள் மத்தியில வேலை செய்யிறோம். கிரிஸ்டின்காரங்க அந்த மக்கள் கிட்ட போயி மதமாற்றம் செய்யுறாங்க. அப்படி பண்ண முடியாம செய்யிறதுதான் வேலை. அதனால மலைவாழ் மக்களுக்களுக்கான உதவிகளை செஞ்சிட்டு வறோம்” என்றார்.
எனக்கும் இது மாதிரி பன்னனும்னு ஆசைதான். அதுக்கு என்ன பண்றதுன்னு சொல்றிங்களா?
“இதைப் பத்தி பேசனும்னா ஒருத்தரோட காண்டாக்ட் நம்பர் தறேன். அவருதான் ஆற்.எஸ்.எஸ்-சோட பிரச்சாரக். அவர் இதைப் பத்தி முழுசா சொல்வாரு. அவர்கிட்ட பேசுங்க” என்று சொல்லி நம்பரைக் கொடுத்தார்.
சுருங்கச் சொன்னால் பக்தி, ஆன்மீகம், யோகா, சுய முன்னேற்றம், உணவு – உடல்நலம், கல்வி – வரலாறு என்ற பெயரில் வளைத்து வளைத்து பார்ப்பனியத்தின் நிகழ்ச்சி நிரல்கள் அனைத்தும் அங்கே மக்களை வெறியூட்டிக் கொண்டிருந்தன. அங்கே கடை போட்டவர்களுக்கு அரங்குகள் இலவசம் அல்லது மிகக் குறைந்த வாடகை. பணியாளர்களுக்கு பேட்டா, உணவு அனைத்தும் இலவசம். சாதி முதல் ஃபிராடான சித்த வைத்தியர்கள், ஜோசியர்கள் வரை பெட்டிக் கடை முதல் கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை அனைத்தையும் இணைத்திருந்தார்கள்.
ஏதோ ஒரு கண்காட்சி என்று வேடிக்கை பார்க்க வந்த கூட்டம்தான் அதிகம். ஆனால் அந்த வேடிக்கையுணர்வில் கொஞ்சமோ நிறையவோ இந்துத்துவ விசம் கலக்க ஆரம்பித்திருக்கிறது.
சோசலிச அரசுகளின் அரசியல் சார்ந்த சரிவுகளைக் கண்டு மகிழ்ச்சியுற்ற முதலாளிய மீட்பர்கள் அச்சரிவை சோசலிசப் பொருளாதார அமைப்பின் வீழ்ச்சியாக மட்டுமே அதிகம் விமர்சித்தனர். கிழக்கு ஜெர்மனியின் சுவர் உடைப்பு, சோவியத் ஒன்றியத்தின் தகர்வு, சீனாவின் முதலாளிய மீட்பு போன்றவற்றை தூக்கிப் பிடித்துக் கொண்டாடியது ஒருபுறம், மறுபுறம் உலகமயமாக்கல் மூலம் வரப்போகும் செழிப்பான வாழ்க்கை என்கின்ற மாயை. கடந்த 30 ஆண்டுகளாக இதை உருமியடித்த ஊடகங்களும் முதலாளிய அறிஞர்களும் இன்று அமைதியாக முணுமுணுக்கின்றனர்.
அமெரிக்காவும், அய்ரோப்பாவும் முட்டி நிற்கும் சுவர் இரும்பாலானது என்பது இப்பொழுதுதான் அவர்களுக்கு உறைக்கத் துவங்கியுள்ளது. இவர்களால் சவக்குழிக்கு அனுப்பப்பட்டு விட்டதாகக் கூறப்பட்ட மார்க்சிடம் மீண்டும் அவர்களே தீர்வைத் தேடுகின்றனர். மீண்டும் மார்க்சியத்தை இந்தப் பின்னணியில் பயில்வது அவசியம். (நூலுக்கான பதிப்புரையிலிருந்து)
*****
இஸ்ட்வன் மெசரோசின் மூலதனத்தின் அமைப்பு நெருக்கடி என்னும் நூலில் உள்ள இரண்டு நேர்காணல்களின் மொழியாக்கமே இந்தச் சிறு நூல். முதலாளிய அமைப்பின் நெருக்கடி பற்றி சோசலிஸ்ட் ரெவ்யூ இதழில் வந்த நேர்காணலிலும், இந்தச் சூழலில் நம் முன் உள்ள கடமைகள் பற்றி டிபேட் சோசலிஸ்டா இதழில் வந்த நேர்காணலிலும் அவர் பேசுகிறார்.
…. உலகம் முழுவதும் முதலாளியம் தனது இலாப வெறிக்காக இன்று மனித சமூகத்தை ஓட்டாண்டியாக்கி வருகிறது : பூமியிலுள்ள இயற்கை வளங்களைக் கொடூரமாகவும், வேகமாகவும் அழித்து வருகிறது. அதன் மூலம் எதிர்கால மனித சமூகத்தின் இருப்புக்கான அடிப்படையையே அழித்து வருகிறது. உலக முதலாளியத்திற்குத் தலைமை தாங்கும் அமெரிக்கா தனது இலாபத்திற்காக ஆக்கிரமிப்பு யுத்தங்களில் ஈடுபட்டு வருகிறது. தனது இலாபத்திற்காக அணு ஆயுதங்களைப் பயன்படுத்தவும் அது தயாராக உள்ளது. இவ்வகையில் முதலாளியத்தின் இலாபவெறி இன்று மனித குலத்தை அழிவின் எல்லைக்குக் கொண்டு சென்றுள்ளது. இவை எல்லாம் முதலாளிய அமைப்பில் உள்ள நெருக்கடியின் விளைவுகள் என்கிறார் மெசரோஸ்.
இந்தப் பின்னணியில்தான் நாம் இந்தியப் பொருளாதாரத்தையும் காண வேண்டும். இந்தப் புவிக் கோளத்தின் மீதுள்ள எந்த ஒரு நாடும் உலகு தழுவிய பொருளாதார நெருக்கடியிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது. இந்தியா அதற்கு விதி விலக்காக இருக்க முடியாது.
ஏகாதிபத்திய ஆக்டோபசின் கால்களில் சிக்கிக் கொண்டுள்ள இந்தியப் பொருளாதாரம் இன்று பெரும் நெருக்கடியில் மாட்டிக் கொண்டுள்ளது. பொதுச் சொத்துக்களைத் தனியார் முதலாளிகளுக்குத் தாரை வார்த்துக் கொடுத்தல், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் விவசாயிகளின் நிலங்களைக் கைப்பற்றி அவர்களைப் பஞ்சை பராரியாக்குதல், இலாப நோக்கத்திற்காகக் கட்டுப்பாடற்ற பொருள் இறக்குமதி, அந்நிய மூலதனத்திற்கு கதவை அகலத் திறந்துவிட்டதன் மூலம் இந்திய மக்களின் உபரி உழைப்பு இலாபமாக வெளிநாடுகளுக்கு வெளியேறுதல், அந்நிய நிதி நிறுவனங்கள் இந்தியப் பங்குச் சந்தையைக் கொள்ளையடிக்க வழிவகுத்தல், உள்நாட்டு உற்பத்தியில் வீழ்ச்சி, பண வீக்கம், ரூபாயின் மதிப்பில் வீழ்ச்சி, விலைவாசி ஏற்றம், நடப்புக் கணக்கில் கடும் பற்றாக்குறை, இலட்சம் கோடிகள் என்ற அளவில் ஊழல் இவைதான் இன்றைய இந்தியப் பொருளாதாரத்தின் சித்திரம்.
1990-களின் உலகமயமாக்கலும், தாராளமயமாக்கலும், தனியார்மயமாக்கலும் இந்தியாவைச் சொர்க்க பூமியாக்கிவிடும் என ஒளிமயமான சித்திரங்களைத் தீட்டிய முதலாளிய ஊடகங்கள் இன்று ஒப்பாரி வைக்கின்றன. அழுது புலம்புகின்றன. ஏதாவது அதிசயம் நடந்து இந்த கடுமையான நெருக்கடியிலிருந்து நாம் தப்பிக்க முடியாதா என முதலாளியப் பொருளாதார மேதைகள் ஏங்கிக் கொண்டு இருக்கிறார்கள். ஆட்சியாளர்களோ பொருளாதாரத்தின் இந்தச் சீரழிந்த நிலைக்குக் காரணமான ஏகாதிபத்தியச் சுரண்டலுக்கு முடிவுகட்டாமல் மேன்மேலும் அந்நிய மூலதனத்திற்கு கதவைத் திறந்து விடுவதன் மூலம் நமது மக்களை மேன்மேலும் அழிக்கவும் வழி வகுத்து வருகின்றனர். மக்கள் மத்தியில் ஆட்சியாளர்கள் மீது எழுந்துள்ள அதிருப்தியையும், கோபத்தையும் திசை திருப்பவும், சாந்தப்படுத்தவும் கிராமப்புற வேலை உத்திரவாதத் திட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம், அம்மா உணவகம் போன்ற கீனிசிய ஒடுக்கு எடுக்கும் வேலைகளைச் செய்து வருகின்றனர்.
ஆனால், உலகம் தழுவிய அளவில் இன்று முதலாளியம் எதிர்கொண்டுள்ள நெருக்கடி ஆழமானது என்கிறார் மெசரோஸ். இது ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் அவ்வப்பொழுது முதலாளியம் எதிர்கொள்ளும் நெருக்கடி போன்றதல்ல….
…. பாராளுமன்றவாதத்திலும், தொழிற்சங்கவாதத்திலும் வீழ்ந்துள்ள சீர்திருத்தவாதத் தலைமையிலிருந்து பாட்டாளி வர்க்கம் விடுபட வேண்டும். இன்று பாட்டாளி வர்க்கத்தின் செயல்பாடு தொழிற்சங்கக் கிளை என்றும் அரசியல் கிளை என்றும் இரு பிரிவுகளாக உள்ளன. தொழிற்சங்கக் கிளை கூலி உயர்வுப் போராட்டத்தோடு தமது நடவடிக்கைகளை மட்டுப்படுத்திக் கொள்கிறது. பாட்டாளி வர்க்கத்தின் சீர்திருத்தவாத அரசியல் பிரிவோ முதலாளியப் பாராளுமன்றத்தின் விதிகளுக்கு உட்பட்டு மூலதனத்தின் நலனுக்குச் சேவை செய்வதாக மாறி விடுகிறது. மூலதனத்தின் ஆதிக்கத்திலிருந்து கூலி அடிமைத்தனத்தை விடுவிக்க வேண்டும் என்ற ஒட்டு மொத்த சமூக விடுதலைக்கான இலட்சியம் கை விடப்பட்டுள்ளது…. (இந்நூலின் மொழிபெயர்ப்பாளர் குறிப்பிலிருந்து…)
நூல்: முதலாளிய அமைப்பின் நெருக்கடியும் நம் முன் உள்ள கடமைகளும் ஆசிரியர்: இஸ்ட்வன் மெசரோஸ் தமிழில்: மு.வசந்தகுமார்
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
சென்னையில் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று,
கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107. இடக்குறியீடு:
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி) அலைபேசி:99623 90277
ஆப்பிரிக்கக் காட்டில் சூரியன் எழும்போது மான் எழும்பும். அன்று, வேகமாக ஓடும் ஒரு சிங்கத்திலும் பார்க்க அதிவேகமாக அது ஓடவேண்டும். அல்லது உயிர் பிழைக்காது.
ஆப்பிரிக்கக் காட்டில் சூரியன் எழும்போது சிங்கம் எழும்பும். அன்று, ஆக வேகம் குறைந்த ஒரு மானைக்காட்டிலும் அது வேகமாக ஓடவேண்டும். அல்லது உயிர் பிழைக்காது.
நீ சிங்கமோ, மானோ, சூரியன் எழும்போது எழு. ஓடத்தொடங்கு. – ஓர் ஆப்பிரிக்க பழமொழி.
*****
எழுத்தாளர் அ. முத்துலிங்கம் ஓர் இளம் அமெரிக்கப் பெண் இந்த வருட ஆரம்பத்தில் எங்களுடன் வந்து இரண்டு நாள் தங்கியிருந்தாள். அவளுடைய பெயர் ஜெனிவீவ் என்று இருந்தபடியால் அவளுக்கு ஒரு பிரெஞ்சு மூதாதை இருந்திருக்கக்கூடும். அவளுடைய ஆங்கில உச்சரிப்பும் தேனில் கலந்ததுபோல ஒரு மிருதுத்தன்மையுடன் கேட்பதற்கு சந்தோசத்தை கொடுத்தது. ஒவ்வொரு வார்த்தையையும் நாக்கினால் தடவி விடுவதால் அந்த வார்த்தையில் ஈரப்பசை இருந்தது. அவள் வந்த காரணம் கனடாவை சுற்றிப் பார்ப்பதற்கு. அதற்கு ஒதுக்கிய காலம் இரண்டு நாட்கள்.
இந்தப் பூமியில் மூன்று சமுத்திரங்களால் சூழப்பட்ட ஒரே நாடு கனடா. உலகத்தின் பரப்பளவில் இரண்டாவது பெரிய தேசம். நான் இருந்த சிறு பிரதேசமான ஸ்காபரோவையே பத்து நாட்களில் சுற்றிப் பார்க்க முடியாது. ஆனால் இந்தப் பெண் இரண்டு நாட்களில் கனடாவைப் பார்க்கவேண்டும் என்று சொன்னாள். இவளுடைய விருப்பத்தை அறியாமை என்று எடுப்பதா அல்லது பேராசை என்று எடுப்பதா என்பதில் எனக்கு திண்டாட்டமிருந்தது.
கனடாவை இரண்டு நாளில் சுற்றிப் பார்க்க வந்த பெண் இன்னும் பல அதிசயங்களையும் தன்னுள் வைத்திருந்தாள். காலை பத்து மணிக்கு வருவதாகச் சொன்னவள் இரண்டு மணி நேரம் தாமதமாக வந்தாள். என்னவென்று கேட்டால் முதல் பிளேனை தவறவிட்டதால் தான் இரண்டாவது பிளேனை பிடித்து வந்ததாக கூறினாள்.
எப்படி முதல் பிளேனை தவற விட்டாள்?
அவள் மராத்தான் ஓட்டப் பயிற்சியில் இருப்பதாகவும், அன்று காலை இருபது மைல்கள் ஓடியதாகவும், தன்னுடைய ஓட்டத்தில் சில குறைபாடுகள் இருந்ததாகவும், பயிற்சியாளர் திருப்தியடையாமல் தனக்கு சில புதுவிதமான பயிற்சிகளுக்கு ஆலோசனை கூறியதாகவும், அதனால் நேரம் தடைபட்டுப் போய் அடுத்த பிளேனை பிடிக்கவேண்டி வந்ததாகவும் மிகவும் சாதாரணமாகக் கூறினாள். அவளுடைய வாசகமும் ஒரு மராத்தான்போல நீண்டுபோய் கிடந்தது. எந்தப் போட்டிக்கு தயார்ப் படுத்துகிறீர்கள் என்று கேட்டேன். 2008 ஒலிம்பிக் மராத்தான் என்றாள்.
நான் மனைவியைப் பார்த்தேன். அவர் என்னைப் பார்த்தார். இந்தப் பெண் மராத்தான் ஓட்டப் பயிற்சியில் இருப்பது எனக்கோ, மனைவிக்கோ தெரியாது. இவளுடைய பெற்றோர்களும் இதுபற்றி ஒரு வார்த்தை எங்களிடம் சொல்லவில்லை. கனடா பார்க்க வந்த ஒரு சாதாரணப் பெண் என்று நாங்கள் அதுவரை நினைத்திருந்தோம். இவளின் உருவத்தைப் பார்த்தால் ஒரு ஓட்ட வீராங்கனை போலவோ, அன்று காலை இருபது மைல் தூரத்தை கடந்தவள் போலவோ தெரியவில்லை. சந்திர வெளிச்சம் போன்ற சருமம், சாம்பல் முடி, நீலக் கண்கள். இடையை இறுக்கிப் பிடிக்கும் ஜீன்ஸ். ஐந்து அடி உயரம், எடை 90 றாத்தல் மதிக்கலாம். ஒரேயொரு வித்தியாசம். மூன்றடி தூரத்திலும் அவள் உடம்பிலிருந்து ஒரு வெப்பம் வீசியது.
எனக்கு ஒலிம்பிக் ஓட்டக்காரர் எப்படி இருக்கவேண்டும் என்பது தெரியாது. நான் என் வாழ்நாளில் ஒருவரைக்கூட நேருக்குநேர் கண்டதில்லை. அப்படிக் கண்டாலும் அது தொலைக்காட்சியில்தான். சரி. ஒலிம்பிக் போட்டிக்கு பயிற்சி பெறுபவர் எப்படி இருப்பார். அதுவும் தெரியாது. கடைசியாக ஏதென்ஸில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 929 பதக்கங்கள் வழங்கப்பட்டன. அதில் அமெரிக்காவுக்கு 103 பதக்கங்கள், கனடாவுக்கு 12, இந்தியாவுக்கு ஒன்றே ஒன்று கிடைத்தது. இலங்கைக்கு அதுவும் இல்லை. இந்த வெட்கம்கெட்ட நிலைமையில் நான் ஓர் ஒலிம்பிக் ஓட்டக்காரர் நேரில் எப்படி தோற்றமளிப்பார் என்பதை ஊகிக்கமுடியும்.
என் வாழ்க்கையில் எனக்கு தெரிந்த ஒரேயொரு ஓட்டக்காரர் ஆறுமுகதாஸ்தான். நான் பிறந்து வளர்ந்த கிராமத்தை சேர்ந்தவர். அங்கே ரயிலுக்காக ஓடியவர்களும், நாய் துரத்தி ஓடியவர்களும்தான் அதிகம். இந்த ஆறுமுகதாஸ் எங்கள் பள்ளிக்கூடத்தில் புகழ்பெற்ற மைல் ஓட்டக்காரர். அந்தக் காலத்தில் சுற்றுவட்டாரத்தில் இவரை வெல்ல ஆள் இல்லை. எங்கள் பள்ளிக்கூட மைதானத்தை சுற்றி எட்டுத்தரம் ஓடினால் ஒரு மைல் என்பது கணக்கு. இதை தலைமை ஆசிரியர் அறிவித்திருந்தார். அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.
ஓட்டம் தொடங்கியதும் ஆறுமுகதாஸ் ஆற அமரப் புறப்படுவார். மற்றவர்கள் அடித்துப் பிடித்து முன்னே செல்வார்கள். ஆறுமுகதாஸோ, இலையான் ஓட்ட மாடு தலையை ஆட்டுவதுபோல இரண்டு பக்கமும் தலையை ஆட்டிக்கொண்டு, கடைசியாக வருவதற்கு பயிற்சி எடுத்தவர்போல முகத்தை ஆர்வமில்லாமல் வைத்துக்கொண்டே ஓடுவார். எல்லோரையும் முன்னால் விட்டு தனக்கு பின்னால் யாரும் வராமல் பார்த்துக்கொள்வார். ஏழாவது சுற்று முடிந்ததும் மனுசன் அம்புபோல புறப்படுவார். ஒவ்வொருவராக தாண்டி முன்னேறி வருவார். முதலாவதாக ஓடுபவரை ஒரு டிராமா காட்டுவதற்காக கடைசி பத்து செக்கண்டில் முந்தி வெற்றியீட்டுவார். சனங்களின் ஆரவாரம் அப்போது செவ்வாய் கிரகத்தை எட்டும்.
நான் பிற்காலத்தில் ஆறுமுகதாஸிடம் அவருடைய வெற்றியின் ரகசியத்தைக் கேட்டேன். அவர் இரண்டு பக்கமும் திரும்பி பார்த்தார். கடற்கரை மணலில் தான் கால் புதையப் புதைய ஓடிப் பயிற்சி எடுத்ததைச் சொன்னார். போட்டியில் ஒரு மைல் ஓடவேண்டுமென்றால் இரண்டு மைல் தூரம் ஓடிப் பழகவேண்டும். பத்து மைல் என்றால் இருபது. இதுதான் ரகசியம் என்றார்.
ஜெனிவீவைப் பார்த்தேன். அவள் அப்படி ஒடிப் பயிற்சி செய்பவளாகத் தெரியவில்லை. ஏதோ அலுவலகம் போவதற்கு வெளிக்கிட்டதுபோல உடையணிந்திருந்தாள். மேக்கப் என்பதே கிடையாது, ஆனால் முகம் பளிச்சென்று உள்ளுக்கிருந்து யாரோ வெளிச்சம் அடிப்பதுபோல பிரகாசமாக இருந்தது. நான் மராத்தான் ஓட்டத்தைப் பற்றியும், அதன் பயிற்சி முறையயைப் பற்றியும், ஓட்டக்காரர்களைப் பற்றியும் அன்றுவரை அறிந்து வைத்திருந்ததெல்லாம் தவறானது என்பது அந்தப் பெண்ணிடம் பேசிய முதல் மூன்று நிமிடத்திலேயே எனக்கு புரிந்துவிட்டது.
மராத்தான் ஓட்டம் என்பது 26.2 மைல்கள் தூரம் கொண்டது. இந்தப் பெயர் வந்ததற்கு உண்மையான சரித்திர காரணம் உள்ளது. கி.மு 490-ல் மராத்தான் என்ற இடத்தில் கிரேக்கர்களின் படை பாரசீகப் பெரும்படையை போரிலே தோற்கடித்தது. அந்த வெற்றியை சொல்வதற்கு ஃபெய்டிப்பிடீஸ் என்ற வீரன் 26.2 மைல் தூரத்தை நிற்காமல் ஓடி ஏதென்ஸ் நகரத்தை அடைந்து ‘நாங்கள் வென்றுவிட்டோம், கொண்டாடுங்கள்’ என்று தகவல் சொல்லிவிட்டு அப்படியே சரிந்தான். அந்த கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள அவன் மட்டும் உயிரோடு இருக்கவில்லை.
ஒலிம்பிக் விளையாட்டுகள் 1896-ல் ஆரம்பித்தபோது மராத்தான் ஓட்டமும் சேர்க்கப்பட்டது. 2004-ம் ஆண்டு ஏதென்ஸில் நடந்த ஒலிம்பிக் பெண்கள் மராத்தான் போட்டியில் கலந்துகொண்ட 82 பேரில் மூன்று அமெரிக்கப் பெண்கள். உலகத்தின் அதிவேக ஓட்டக்காரியான போலா ராட்கிளிவ் முதலாவதாக வருவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர் 23-வது மைலில் போட்டியில் இருந்து விலகி பாதையின் ஓரத்தில் அமர்ந்து விக்கி விக்கி அழுததை உலகம் முழுவதும் தொலைக்காட்சியில் பார்த்து திகைத்தது. அந்தப் போட்டியில் முதலாவதாக வந்து தங்கம் வென்றவர் யப்பானியப் பெண் மிசுகி நோகுச்சி. இரண்டாவது கென்யாவின் காதரின் ண்டெரேபா, மூன்றவது அமெரிக்கப் பெண் டீனா காஸ்டர்.
ஓட்ட வீராங்கனை என்றால் அவர் உயரமாகவும், நீண்ட கால்கள் கொண்டவருமாக அல்லவா இருக்கவேண்டும் என்று ஜெனிவீவிடம் கேட்டேன். அப்படி இல்லை என்றார். மராத்தான் ஓட்டத்துக்கு எடை கூடாமலும், உயரம் குறைவாகவும் இருந்தால் நல்லது. உதாரணம் தங்கம் வென்ற யப்பானிய வீராங்கனையின் உயரம் ஐந்து அடி, எடை 88 றாத்தல் என்றார்.
அவர் சொன்ன விவரங்களைக் கேட்க கேட்க நான் இதுவரை ஓட்டக்காரர்களை பற்றி தெரிந்து வைத்தது எல்லாம் அபத்தம் என்று பட்டது. ஜெனிவீவ் தன் சொந்தச் செலவிலே, ஒரு மராத்தான் ஓட்டப் பயிற்சியாளரிடம், பயிற்சி பெறுகிறார். இவருடைய பயிற்சி திருப்தியாக முடியும் பட்சத்தில் ஒலிம்பிக் ஓட்டக்காரர்களுக்கு நடக்கும் இறுதி பயிற்சிக்கு இவர் தேர்வு செய்யப்படுவார். அங்கே இவருடன் சேர்ந்து அமெரிக்கா முழுவதிலுமிருந்து ஒரு 300 பேர் வந்திருப்பார்கள். ஆறுமாத காலம் இவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான பயிற்சி வகுப்பு நடக்கும். முன்னாள் ஒலிம்பிக் ஓட்டக்காரர்களும், அமெரிக்காவின் மிகச் சிறந்த பயிற்சியாளர்களும் இந்த பயிற்சியை கொடுப்பார்கள். இது இலவசம் அல்ல. ஓட்டக்காரர்கள் தாங்களே பணம் கட்டவேண்டும் அல்லது அவர்களை ஸ்பொன்சர் செய்யும் கம்பனிகள் செலவை ஏற்கவேண்டும். ஆறுமாத முடிவில் ஒரு போட்டி நடைபெறும். இந்தப் போட்டியில் தெரிவுசெய்யப்படும் முதல் மூன்று ஓட்டக்காரர்களே ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்காவின் சார்பில் கலந்துகொள்வார்கள்.
மிசுகி நோகுச்சி
அவளுடைய பயிற்சி முறைகள் எப்படியானவை என்று கேட்டேன்.
‘நான் படித்த பள்ளிக்கூடத்துப் போட்டிகளில் ஓடும்போது எனக்கு இப்படி பயிற்சிகள் இருப்பது தெரியாது. என் போக்குக்கு ஓடுவேன். என் மனதுக்கு தோன்றிய பயிற்சிகளை செய்வேன். ஆனால் ஒரு பயிற்சியாளரிடம் சேர்ந்த பிறகுதான் நான் செய்ததெல்லாம் தவறானவை என்பது தெரிகிறது. நான் கடைப்பிடித்த பயிற்சி முறைக்கும், பயிற்சியாளர் தரும் பயிற்சிமுறைக்கும் பெரும் வித்தியாசங்கள் இருக்கின்றன.’
எப்படியான வித்தியாசங்கள்?
முதலாவது விதி : நான் இங்கே கற்றுக்கொண்டது என்னுடைய உடல் பற்றி. உங்களிடம் இருப்பது ஒரேயொரு உடம்புதான். இதைப் பத்திரமாக பேணவேண்டும். பயிற்சியின்போது உடம்பிலே காயமோ, அடியோ படாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். கால்களில் சுளுக்கு வராமலும், மூட்டுகள் பிசகாமலும், தசைநார்கள் விலகாமலும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அப்படி நடக்கும் பட்சத்தில் உங்கள் வருடக்கணக்கான தேகப் பயிற்சியும், உழைப்பும், அர்ப்பணமும் வீணாகப்போய்விடும்.
இரண்டாவது விதி : நான் நினைத்தது 26 மைல்தூரம் ஓடவேண்டுமானால் அதனிலும் கூடியதூரம் ஓடிப் பழகவேண்டும் என்று. ஒரு முப்பது மைலோ முப்பத்தைந்து மைலோ ஓடிப் பழகினால் போட்டியின்போது 26 மைல் ஓடுவது சுலபமாக இருக்கும். ஆனால் அப்படி இல்லை. இன்னும் சொல்லப்போனால் பயிற்சி காலத்தில் ஒருநாள்கூட 26 மைல் நான் ஓடியதில்லை. ஓடக்கூடாது. ஆக முதன்முதல் 26 மைல் ஓடுவது இறுதி நாள் போட்டியின்போதுதான்.
ஆச்சரியமாயிருந்தது. நான் எங்கள் ஊர் ஆறுமுகதாசை நினைத்துக்கொண்டேன்.
முழுத்தூரமும் ஓடாமல் எப்படி ஓட்டக்காரருக்கு நம்பிக்கை பிறக்கும்?
மராத்தான் பயிற்சி என்பது ஓடுவது மட்டுமல்ல. எப்படி உடம்பை பலப்படுத்துவது; பாதுகாப்பது; தயார்ப்படுத்துவது என்று எல்லாம் அடங்கியது. ஓட்டப்பயிற்சி என்பது இதற்குப் பிறகுதான். இந்தப் பயிற்சியில் முக்கியமானது உடம்பை ஏய்ப்பது. ஒருநாள் செய்த பயிற்சிகளை இரண்டாவது நாள் செய்வதில்லை. அப்பியாசம், ஓட்டம், நடை, நீச்சல், சைக்கிள் என்று மாறி மாறி பயிற்சி எடுப்பதுடன் பயிற்சி அளவையும் கூட்டிக்கொண்டே போகவேண்டும். நீங்கள் அடுத்த நாள் என்ன செய்யப்போகிறீர்கள் என்பது உடம்புக்கு தெரியக்கூடாது. ஒவ்வொரு நாளும் 10 மைல் ஓடினால் உடம்பு அதற்குப் பழகி தன்னுடைய உச்சக்கட்ட ஒத்துழைப்பை தர மறுக்கும். உடம்பின் வலிமையையும், சேமிப்பு சக்தியையும் கூட்டிக்கொண்டே போவதுதான் உண்மையான பயிற்சி. போட்டி நாளுக்கு முதல் நாள் உடம்புக்கு முழு ஓய்வு தேவை.
அப்படி என்றால் போட்டியன்று உடம்பு தயாராயிருக்குமா?
போட்டி நாள் அன்று உங்கள் உடம்புக்குள் ஒரு மிருகம் புகுந்ததுபோல தேகம் துடித்தபடியே இருக்கும். சேமித்துவைத்த சக்தி அத்தனையும் வெளியேறத் துடிக்கும். ஒரு ரேஸ் குதிரை ஓடத் தயாராவதுபோல கால்கள் பரபரக்கும். அன்றுதான் நீங்கள் மராத்தான் ஓட்டத்தில் முதன்முதலாக முழுமையான 26.2 மைல்களை ஓடி முடிப்பீர்கள்.
களைப்பு வராதா?
எப்படி வரும். ஆறுமாதகால பயிற்சி அதற்குத்தானே. இந்தப் பயிற்சி இருந்திருந்தால் கிரேக்கவீரன் ஃபெய்டிப்பிடீஸ் பாவம் விழுந்து இறந்திருக்கமாட்டானே.
ஒரு பெண்ணுக்கு இரண்டு நாட்களுக்கிடையில் கனடாவில் எவ்வளவு பகுதியைக் காட்டமுடியுமோ அவ்வளவையும் காட்டினோம். கடைசி நாள் இரவு இவளை யாழ்ப்பாணத்து அப்பம் சாப்பிடுவதற்கு ஒரு உணவகத்துக்கு கூட்டிப் போக முடிவெடுத்தோம். இங்கே சுடும் அப்பத்துக்கு நிகரே இல்லை. நாக்கிலே வைத்தால் பல்லுக்கு ஒரு வேலையும் வைக்காமல் தானாகவே உருகி இறங்கிவிடும். இலங்கை சாப்பாடு பற்றி ஒரு நல்ல அபிப்பிராயம் அவளிடம் உருவாகும். அதுவும் நல்லது.
ஒலிம்பிக் பதக்கத்தை பெறும்போது அவள் உடம்பின் வலிமையில் ஒரு பகுதி யாழ்ப்பாணத்து அப்பத்தால் உருவாகியது என்று நான் பிறகு பீற்றிக்கொள்ளலாம். ஆனால் இந்த உணவகத்தில் ஒருசில ஆபத்துக்கள் இருந்தன. குறைந்த பட்சம் நாலு வாடிக்கையாளர்கள் வந்து போனபிறகுதான் மேசையை துடைப்பார்கள். மெனுவிலே குறிப்பிட்டிருக்கும் விலையும், பில்லிலே காணப்படும் விலையும் ஒருபோதும் இணையாது. இங்கே வேலைசெய்யும் பரிசாரகர்கள் கோப்பையை மேசையில் கொண்டுவந்து வைப்பதில்லை. அப்படியே தூரத்திலிருந்து தள்ளிவிடுவார்கள்.
பரிசாரகர் வணக்கம் என்றார். அவருடைய தலை தோள் மூட்டுகளுக்குள் மாட்டுப்பட்டு இருந்ததால் குரல் எங்கேயிருந்து வருகிறதென்று தெரியவில்லை. ஆனாலும் அவர் எங்களை ஆச்சரியப் படுத்தவில்லை; இந்தப் பெண்தான் ஆச்சரியப்படுத்தினாள். உணவுக்கு ஓடர் பண்ணி அப்பம் சுடச்சுட வந்துகொண்டே இருந்தது. எனக்கு முன் சாப்பிட்டவர் என்னுடைய பிளேட்டில் நண்டு சாப்பிட்டிருக்க வேண்டும். இவள் இடம், வலம் பார்க்கவில்லை. சாப்பிட்டுக்கொண்டே இருந்தாள். நானும் மனைவியும் சேர்ந்து உண்டதிலும் பார்க்க இரண்டுமடங்கு அதிகமாகவே சாப்பிட்டாள். ஒரு மராத்தான் ஓடியதுபோல பரிசாரகர்தான் களைத்துப்போனார். இந்தச் சிறிய பெண்ணின் உடம்பில் எங்கே இது போய்ச் சேருகிறது என்று நாங்கள் வியப்படைந்தோம்.
ஓட்டக்காரர்கள் அளவாகச் சாப்பிடவேண்டுமல்லவா? அல்லாவிட்டால் அவர்களுடைய எடை எக்கச்சக்கமாக ஏறி ஓடமுடியாமல் போய்விடுமே.
ஆனால் உண்மை எதிர்திசையில் இருந்தது. மராத்தான் ஓட்டக்காரர்கள் எல்லோருக்குமே உள்ள பெரும் பிரச்சினை உணவுதான். ஒரு சராசரி மனிதனுக்கு நாளுக்கு 2000 கலரி தேவை என்றால் ஒரு மராத்தான் ஓட்டக்காரர் 4000 – 5000 கலரி உணவை தினம் சாப்பிடவேண்டும். இதை எப்படி உண்பது. இந்த அளவு கலரி கொடுக்காவிட்டால் உடம்பு பயிற்சியை தாங்கமுடியாமல் நலிந்து போய்விடும்.
இவள் நாள் தவறாமல் இரவு எட்டுமணிக்கு தூங்கப் போய்விடுவாள். தினமும் அதிகாலை சூரியன் உதயமாகும்போது எழும்புவாள். ஒரு ஆப்பிரிக்க மான்போல ஓடத்தொடங்குவாள். இரண்டு மணிநேரம் பலதரப்பட்ட உடல் பயிற்சி செய்வாள். வாரத்தில் ஆறு நாட்கள் இந்த அப்பியாசம் தொடரும். ஏழாவது நாள் ஓய்வு. ஓய்வு என்றால் உடம்புக்கு மாத்திரமே. நாள் முழுக்க பழைய ஒலிம்பிக் ஓட்டப் பந்தயங்களை வீடியோவில் பார்ப்பாள். சொல்லப்போனால் பயிற்சிக் காலம் முழுக்க உடம்பும், மனதும் மராத்தான் ஓட்டத்திலேயே குவிந்திருக்கும்.
‘ஓடு, மணிக்கூட்டுக்கு எதிராக ஓடாதே. உனக்கு எதிராக ஓடு.’
‘என்னுடைய பயிற்சியாளர் கருணையே இல்லாதவர். இவரை ‘அடிமை விரட்டி’ என்று ரகஸ்யமாக எங்களுக்குள் அழைப்போம். ஓய்வு என்பது களைப்படைந்த பிறகு எடுப்பது. அதற்கு முன் எடுப்பதற்கு பெயர் சோம்பல் என்பார். எங்களுடைய உடம்பின் ஒவ்வொரு உறுப்பையும் வாடகைக்கு எடுத்தவர்போல அதிகாரம் செய்வார். ஆனால் என்னால் அவரை விட முடியாது. அமெரிக்காவின் மிகத்திறமையான பயிற்சிக்காரர். ‘ஓடு, மணிக்கூட்டுக்கு எதிராக ஓடாதே. உனக்கு எதிராக ஓடு.’ இதுதான் அவர் திருப்பி திருப்பி சொல்லும் மந்திரம்.’
கடந்த ஒலிம்பிக் மரதனில் தங்கம் வென்ற யப்பானியப் பெண்ணின் நேரம் 2ம, 26நி, 20செ. ஓடிய பெண்களில் குறைந்த வயது 21, கூடியது 43. அடுத்த ஒலிம்பிக்கின்போது தனக்கு 26 வயது நடக்கும் என்றும் அது தவறினால் 30ல் ஒரு வாய்ப்பு இருக்கிறதென்றும் அதுவும் தவறினால் 34 என்றும் சொன்னாள். அதற்கு பிறகு யாராவது அகப்பட்டால் மணம் முடிப்பதற்கு சம்மதம் என்றாள். அவள் முகத்திலே காணப்பட்ட உறுதி என்னை வியக்க வைத்தது.
இந்தப் பெண்ணைப் பார்க்க சிலசமயம் பரிதாபமாக இருந்தது. ஒரு வெள்ளை ரீ சேர்ட்டும், கணுக்கால் தெரியும் கால்சட்டையும் அணிந்திருந்தாள். நீர்ப்பறவை ஒன்று நீண்ட பயணத்துக்கு பிறகு செட்டைகளை ஒடுக்கி ஓய்வெடுப்பதுபோல தோள்களைக் குறுக்கிக்கொண்டு தரையிலே உட்கார்ந்திருந்தாள். அவள் கைகளிலே ‘தென் அமெரிக்க ஸ்லொத்’ என்ற புத்தகம் இருந்தது. உலகத்திலேயே மெதுவாக நகரும் ஒரு மிருகத்தைப் பற்றி இவள் படிக்கிறாள். ஒரு நிமிட நேரத்தில் ஐந்து அடி நகரும் இந்த விலங்குக்கும், மராத்தான் ஓடும் இவளுக்கும் என்ன சம்பந்தம் என்று நினைத்தபோது வியப்பாகவிருந்தது. இவள் கண்கள் புத்தகத்தில் இல்லை; எதிரில் இருந்த ஒன்றையும் கவனிக்கவில்லை. 2008-ம் ஆண்டில் இருந்தன என்றே நினைக்கிறேன்.
நீங்கள் எதற்காக உடம்பை இவ்வளவு வருத்திப், பிழிந்து இந்தப் போட்டிகளில் கலந்து கொள்ளவேண்டும்? உங்கள் பொழுதுபோக்குக்கு வேறு ஏதாவது தேர்வு செய்து சேவை செய்யலாமே?
இந்தக் கேள்வி அவளை நிலைகுலைய வைத்துவிட்டது. ஒரு முட்டாளிடம் இத்தனை நாள் தன் அபிலாட்சைகளை சொல்லியதற்காக அவள் வருத்தப்பட்டாளோ, என்னவோ. ஒரு கணம் என்ன பேசுவது என்று தெரியாமல் குழம்பினாள். அப்பொழுதும் அவள் கண்கள் என்ன உணர்ச்சியை காட்டலாம் என்று முடிவெடுக்க முடியாமல் அங்குமிங்கும் சுழன்றன. கடைசியில் ஒருவாறு நிதானித்து ஒவ்வொரு வார்த்தையாக தேர்வு செய்து பேசினாள்.
‘ஜவலின் எறிபவர்கள், நீச்சல் வீரர்கள், எடை தூக்குபவர்கள், இவர்கள் எல்லாம் தினம் தினம் தங்களை வருத்தி பயிற்சி எடுக்கிறார்கள். போட்டிகளில் பங்குபற்றுகிறார்கள். எதற்காக இதைச் செய்கிறார்கள். மனித உடம்பை அறிவதுதான் நோக்கம். உடலின் எல்லையை கண்டுபிடிப்பது. அதை சிறிது நீட்டுவது. இதுவும் ஒரு சேவைதான். அடுத்தவருக்கு.’
அவள் முகம் சிவந்துபோய் இருந்தது. என்னை நிமிர்ந்து பார்க்கவே இல்லை.
விமான நிலையத்தில் மனைவியிடம் பேசியபடியே இருந்தாள். கம்புயூட்டர் திரையில் அறிவிப்பு விழுந்ததும் விடை பெற்றுக்கொண்டாள். என்னைக் கட்டிப்பிடித்து ஒரு முத்தம் தந்தாள். அடுத்தநாள் காலை முத்தமிடுவதை அரசாங்கம் தடைசெய்துவிடும் என்பதுபோல அது நீண்டதாக இருந்தது. பிரெஞ்சு கலந்த ஆங்கிலத்தில் ஒரு வார்த்தையாவது பேசுவாள் என்று எதிர்பார்த்தேன். பேசவில்லை. பயணிகளின் சோதனைக் கூடத்தை தாண்டியதும், தோளிலே மாட்டிய ஒரு நீண்டவார் கைப்பையை சரிசெய்தபடி, ஒரு துள்ளுத் துள்ளி ஓடினாள். அப்போதும் பிடரியை வளைத்துப் பார்த்து கையசைக்க மறக்கவில்லை.
2008 ம் ஆண்டு பெய்ஜிங்கில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் 202 நாடுகள் பங்குபற்றும். பெண்களுக்கான மராத்தான் ஓட்டத்தில் கலந்துகொள்ளும் 80 – 90 ஓட்டக்காரர்களில் மூன்று அமெரிக்கப் பெண்கள் இருப்பார்கள். அவர்களில் சாம்பல்முடி, நீலக்கண்கள், ஐந்தடி உயரம், 90 றாத்தல் எடைகொண்ட ஒரு பெண்ணும் இருக்கலாம்; இருக்காமலும் போகலாம். போட்டி முடிவு அறிவித்ததும் மேடை ஏறிய ஒரு பெண் தன் தங்கப் பதக்கத்தை முத்தமிட்டு, ஒரு கையால் அதைத் தூக்கிக் காட்டியபடி மறுகையை அசைத்து சுழலுவாள்.
அந்தக் கணம் அவளை கோடி சனங்கள் உலகம் முழுவதும் தொலைக்காட்சி திரைகளில் கண்டு களிப்பார்கள். அவளுடைய சாதனைக்கான சக்தியை அவள் தன் உடலின் ஒவ்வொரு அணுவையும் கசக்கி, வருத்தி, உறிஞ்சிப் பறித்திருப்பாள். அவள் கடந்துவந்த மைல்களை, செய்த தியாகங்களை, பட்ட இன்னல்களை, கெடுத்த தூக்கங்களை நான் நினைத்துப் பார்ப்பேன். அப்பொழுது அந்தப் பெண் மனித உடலின் எல்லையை மேலும் ஒரு இன்ச் நகர்த்தியிருப்பாள்.
எழுத்தாளர் அறிமுகக் குறிப்பு: இலங்கையில் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்ததன் பின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டட்ர்ட் மனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்தி செய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்தேன். 2000ம் ஆண்டில் ஓய்வு பெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.
அறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல்கள் என எழுதியிருக்கிறேன்.
(அ.முத்துலிங்கத்தின் தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகளை அவரது அனுமதியுடன் இங்கே வெளியிடுகிறோம்.)
கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்ற வழக்கு இன்றைய டிஜிட்டல் உலகத்தில் என்னவாக இருக்கும்? அதற்கு குழந்தைகள் மனதில் கடவுளின் இருப்பு என்னவாக இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.
நண்பர் ஒருவரது வீட்டுக்கு போயிருந்தோம். அவர் வீட்டருகில் ஐம்பது பேர் கலந்து கொண்ட அல்லேலுயா செபக் கூட்டம் நடந்தது. மாலை ஆறுமணி இருக்கும். டெண்டு கொட்டகை, ஒளி விளக்குகள், மேடை, மைக்செட் சகிதம் கூட்டம் துவங்கியது. முதலில் மெழுகுவத்தி ஏத்துவாங்கன்னு பாத்தா, கொசு வத்திய ஏத்தி மூலைக்கி ஒன்னா வச்சுட்டு கூட்டத்த தொடங்கினாங்க.
“பேய் பிசாசை விரட்டும் வல்லமை வாய்ந்த கர்த்தருக்கு கொசுவ வெரட்ட முடியாம போச்சே பாவம்…” என கூட வந்த நண்பர் நாத்திகத்துக்கான பிள்ளையார் சுழியை போட்டார்.
எதுக்கும் பிரோயோசனம் இல்லாத எங்களை கண் இமைபோல காக்கும் கர்த்தாவே உமக்கு நன்றி, என தொடங்கி பிரசங்கம் ஆராவாரமாக ஓடிக்கொண்டு இருந்தது. கர்த்தர் உயிர்தெழுவார் என்று பொங்கி பொங்கி அடங்கினாரு பிரசங்கம் செய்த ஃபாதர்.
கூட்டத்தை வேடிக்கை பாத்துட்டு இருந்த தோழரின் ஆறு வயதுக் குழந்தை சிரித்துக் கொண்டே வீட்டுக்குள்ள ஓடி வந்தது. தன் அம்மாவிடம் போய் “ஏசு இறந்து மண்ணுக்குள்ள போயி செடியாவே மொளச்சுருப்பாரு. திரும்ப எப்படி உயிரோட வருவாரு. எறந்து போனா யாராலையும் திரும்ப வரவே முடியாது. ஏசு மட்டும் என்ன ஸ்பெசலா… திரும்பி வர்ரதுக்கு. ஒரே மாப்பிள்ளை (நடிகர் வடிவேலுக்கு அந்த குழந்தை வச்ச பேரு) படம் போல பேசுராங்கம்மா” என்றது.
“ஏன் ஒனக்கு சாமின்னா பிடிக்காதா” என்றார் கூட வந்த நண்பர்.
சாமிய பாத்தாதானே மாமா பிடிக்குதான்னு சொல்ல முடியும். நீங்க உங்க வீட்டுல சாமி கும்பிடுவிங்களா? என எதிர் கேள்வி எழுப்பியது.
நான் நம்ப மாட்டேன் அவங்களும் சாமி பத்தி தப்பா சொல்றாங்க.
டீச்சருக்கே பாடம் எடுக்குறியா நீ. சரி அவங்க என்ன தப்பா சொன்னாங்க.
அன்பான இறைவா இந்த காலை பொழுதை எமக்காக தந்தமைக்கு நன்றின்னு சொல்ல சொல்றாங்க. தப்புல்ல…
தப்பில்லையே சரியாதானே சொல்லிருக்காங்க. நமக்கு எல்லாம் கடவுள் தானே தர்ராரு.
நமக்கு காலை பொழுத தர்ரது சூரியானா? கடவுளா? அப்ப சூரியனுக்குதானே நன்றி சொல்லனும்.
இப்படி ஒரு விவாதம் விறுவிறுப்பா போகும் நேரம் அருகில் நடந்த ஜெபக்கூட்டம் முடிந்துவிட்டது. சிக்கன் பிரியாணி இதர ஐட்டங்கள் மற்றும் ஐஸ்கிரிம் சகிதம் உணவு வேளை ஆரம்பமானது.
அதுவரை கடவுள் மறுப்பு பேசிய குழந்தை, ”நானும் போகணும், பிரியாணி சாப்பிட்டே ஆகணும்” என அடம் பிடித்தது. சிங்கம் போல வாசப்படியை நோக்கி சீறி பாய்ந்த குழந்தையை கட்டுப்படுத்த பெற்றோர் இருவரும் பெரும் பாடுபட்டனர்.
இதுவரைக்கும் கடவுள் இல்லை ஏசு எறந்துட்டாரு திரும்பவும் வரமாட்டாருன்னு வசனமெல்லாம் பேசிட்டு பிரியாணிக்காக கட்சி மார்..றியே இது சரியா? என்றார் நண்பர்.
“பிரியாணி மட்டும் இல்ல, ஐஸ்கிரிமும் தர்றாங்க, என்ன போக விடுங்க ப்ளீஸ்” என்றதும் சிரிப்பொலி அடங்கவில்லை.
அறிவாக விவாதித்த அழகு குழந்தை பிரியாணி வாசத்தால் அழுதழுது அரைமணி நேரம் கடந்தது.
இதுபோல ஒரு வாதம் பள்ளியிலும் நடந்ததாக குழந்தையின் அம்மா கூறினார். கடவுள் பற்றி தன் கூட படிக்கும் பிள்ளைகளுடன் சமயம் வரும் போதெல்லாம் பேசியிருக்கிறாள் அந்தக் குழந்தை. ஒருநாள் பள்ளிக்கூடத்தில் அவள் கூட படிக்கும் குழந்தைகள் சூழ்ந்து கொண்டு அவள் அம்மாவிடம் இப்படி பேசியுள்ளனர்.
ஆண்டி நேத்து இலக்கியா ஏன்னோட புத்தகத்த மிதிச்சுட்டா. தொட்டு கும்பிடுன்னு சொன்னேன், செய்ய மாட்டேங்குறா.
புத்தகத்த மிதிச்சா சாரிதானேம்மா சொல்லனும் எதுக்கு தொட்டு கும்பிடனும்.
“இப்புடி தப்பு செஞ்சா.. தப்பா பேசுனா சாமி கண்ண குத்தும் தானே ஆண்டி.” என்றது இன்னொரு குழந்தை.
ஆமா ஆண்டி கடையில எல்லா சாமி போட்டாவும் இருக்கும். எந்த சாமி வேணுமோ வாங்கிக்கலாம்.
நானு கடையில போயெல்லாம் போட்டா வாங்க மாட்டேன். ஒங்க வீட்டுல இருக்குற சாமிய எங்க வீட்டுக்கு அழைச்சுட்டு வா. கடையில போட்டோவுக்கு போஸ் குடுத்தாப்போல ஒரு போஸ் குடுக்க சொல்லு. அந்த படத்த வச்சு கும்பிட்டுக்குறேன்.
போங்க ஆண்டி நீங்க ஒரே சிரிப்பு சிரிப்பா பேசுறீங்க. என்று அந்தக் குழந்தை சொன்னதைக் கேட்ட மற்ற குழந்தைகளும் சிரித்தனர்.
குழந்தைகள் உலகில் ஆத்திகமோ நாத்தீகமோ எவ்வளவு இயல்பா இருக்கு பாத்தீங்களா? இவ்ளோ அறிவா இருக்குற நம்ம குழந்தைகளை இன்னும் 5 வருசம் மோடி ஆண்டால் முழு முட்டாளாக்கிடுவாங்களா இல்லையா?
(உண்மைச் சம்பவம் – அடையாளங்கள், பெயர் மாற்றப்பட்டிருக்கின்றன)
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் திருச்சி கிளையின் சார்பில் சபரிமலை வழக்கு : உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சரியா, தவறா? என்ற தலைப்பில் கடந்த ஜன-23 அன்று கருத்தரங்கம் நடைபெற்றது.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஹோட்டல் சுமங்கலி மஹாலில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் திருச்சி மாவட்ட செயலர் வழக்கறிஞர் ப.முருகானந்தம் தலைமை வகித்தார். மூத்த வழக்கறிஞர் T.A. புனிதன் மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சே. வாஞ்சிநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இந்நிகழ்வில், தோழர் கோவன் தலைமையிலான மக்கள் கலை இலக்கிய கழக மைய கலைக்குழுவின் கலைநிகழ்ச்சியும் நடைபெற்றது.
கருத்தரங்கில் பங்கேற்று கருத்துரை வழங்கிய வழக்குரைஞர் வாஞ்சிநாதன் அவர்களது உரையின் காணொளி இப்பதிவில் இடம் பெறுகிறது.
அவரது உரையிலிருந்து சில பகுதிகள்…
* சபரிமலை பிரச்சினை என்பது மத நம்பிக்கை தொடர்பான பிரச்சினை அல்ல அது பாலின ரீதியான ஒடுக்குமுறை.
* இஸ்லாமிய பெண்களின் உரிமை பற்றி பி.ஜே.பி. பேசுகிறது. முத்தலாக் பிரச்சினையில் முஸ்லீம் பெண்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்று சொல்லி சட்டம் கொண்டு வந்திருக்கிற… பெரும்பான்மை இந்துப் பெண்களின் உரிமை பற்றி பி.ஜே.பி.யின் நிலைப்பாடு என்ன?
* தாழ்த்தப்பட்டவர்கள் கோவிலுக்குள் வந்தா கோவிலின் புனிதம் கெட்டுடும்னு நீ மனசுல நினைச்சிக்கலாம்… ஆனா, வரக்கூடாதுனு தடுத்தால் அது குற்றம்.
* தனிமனித கண்ணியத்திற்கு தனிமனித சுதந்திரத்திற்கு எதிரான எந்தவொரு பழக்க வழக்கம் மரபு எதுவாக இருந்தாலும் அது செல்லாது.
பத்திரிகையாளரும் செயல்பாட்டாளருமான கௌரி லங்கேஷ் கடந்த 2017-ம் ஆண்டு இந்துத்துவ தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். சாதி ஒடுக்குமுறை, பெண்களுடைய உரிமைகள், குறிப்பாக வலது சாரி இந்துத்துவ தீவிரவாதத்தை கடுமையாக எழுதிவந்தார் கௌரி லங்கேஷ். சனாதன் சஸ்தா என்ற காவி தீவிரவாத அமைப்பால் திட்டமிட்டு சுட்டுகொல்லப்பட்ட கௌரியின் பிறந்த தினமான ஜனவரி 29 அன்று, அவருடைய சகோதரியின் மகள் இஷா லங்கேஷ் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இங்கே…
வலி…நான் அதிகமாக சிந்தித்த உணர்வுகளில் ஒன்று. அது உடலில் ஏற்பட்ட காயம் காரணமாக உண்டான வலி அல்ல; ஒருவரை இழக்கும்போது உண்டாகும் ஒருவித வலி அது. என் அன்புக்குரிய ஒருவரை ஒருநாள் இழக்க வேண்டியிருக்குமே என அதிகமாக என்னுடைய சிறுவயதில் சிந்தித்ததுண்டு, பயம் கொண்டதுண்டு. ஆனால், ஒருபோதும் அதை உண்மையாக உணர்ந்ததில்லை; அது உண்மையாக நடக்கும்வரை.
ஒரு மாலைப் பொழுது, என்னுடைய பெரியம்மா விழுந்துவிட்டதாக பாட்டியும் நானும் அறிந்தோம். நாங்கள் அப்போது தனியாக இருந்தோம். என் பெரியம்மாவின் வீட்டுக்கு பாட்டி என்னை அழைத்துச் சென்றார். வழி முழுவதும் பயத்துடன் அழுதபடியே வந்தார் அவர். என்ன நடந்திருக்கும் என்பது பற்றி அவர் பயந்தார். நாங்கள் பெரியம்மாவின் வீட்டுக்குச் சென்றபோது, அவர் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியானோம்.
என் அம்மா எங்களுக்கு முன்பே அங்கு இருந்தார், மனமுடைந்து அழுதுகொண்டிருந்தார். நானும் மனமுடைந்துபோனேன். நான் முன்பு எப்போதும் இல்லாத வகையில் அழுதேன், அந்த வலி நான் உணர்ந்திராதது, அல்லது கற்பனை செய்திராதது. மேலும், என்ன நடந்தது என்பது அதிர்ச்சியளிக்கக்கூடியது, அது நம்ப முடியாததாக இருந்தது. இந்த நாள் வரை, நான் இப்போதும் அவரை இங்கே இருப்பதாக உணர்கிறேன். அவர் இங்கிருந்து என்றென்றுமாக விட்டுச் செல்லவில்லை.
காலம் வலிகளை ஆற்றும் என்பார்கள். ஓராண்டு ஓடிவிட்டது ஆனால், வலி நேற்றையது போலவே உள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் அழுததைப் போல இப்போது அழாமல் இருக்கலாம். ஆனால், உள்ளே இருக்கும் வெற்றிடத்தில், அந்த நாளில் உணர்ந்ததைப் போல ஆழமாக உணர்கிறேன்.
தொடக்கத்தில், கொலைகாரர்கள் மீது கடும்கோபத்தில் இருந்தேன். அவரை தாக்கியதைப் போலவே, அவர்களும் தாக்கப்பட வேண்டும் என விரும்பினேன். நாங்கள் அனுபவித்த வலியை அவர்களும் உணர வேண்டும். இப்போதும் அதை நினைக்கிறேன். கசக்கும் உண்மை என்னவென்றால், அவர்கள் பாதிக்கப்பட்டாலும்கூட என்னுடைய பெரியம்மா திரும்பிவரப் போவதில்லை. ‘கண்ணுக்கு கண் என்பது, மொத்த உலகத்தையும் குருடாக்கிவிடும்’ என்பதை உணர்ந்தேன். நாம் அனைவராலும் செய்ய முடிந்தது, வலி குறையும் வரை காத்திருப்பதுதான். சட்டரீதியாக கொலைகாரர்கள் தண்டனை பெறும்வரை, நீதி கிடைக்கும் வரை நாம் காத்திருக்கத்தான் வேண்டும்.
நான் அவரை நினைக்காத நாளே இல்லை. என் மீதான அவருடைய அன்பை நினைக்கும்போதெல்லாம், நான் அவரை இழந்திருப்பதை தீவிரமாக உணர்கிறேன். என்னுடைய பெரியம்மாவுக்கு குழந்தைகள் இல்லை, அதனால் அவர் என்னை மகள் என அழைத்தார். நான் அவரை ‘அவ்வா’ (கன்னடத்தில் அம்மாவை அவ்வா என்பார்கள்) என்று அழைப்பேன். அவர் எனக்கு இரண்டாவது அம்மாவைப் போன்றவர். ஒருவரை இழக்கும்வரை அவருடைய உண்மையான மதிப்பை நாம் உணர மாட்டோம் என சொல்வார்கள். நான் அவரை எவ்வளவு நேசித்தேன் என்பதை அவரை இழக்கும்வரை உணரவில்லை. அவர் இல்லாத உலகை நான் ஒருபோதும் கற்பனை செய்து பார்த்ததில்லை.
நான் சிறுமியாக இருந்தபோது, வார இறுதிகளில் அவருடைய வீட்டுக்குச் செல்வேன். தூங்கும் முன் சிண்ட்ரெல்லா கதைகளை தன்னுடைய பாணியில் அவர் சொல்வார். அவருடைய சிண்ட்ரெல்லா கதைகளில், சிண்ட்ரெல்லா உறுதியான, சுதந்திரமான பெண். சிண்ட்ரெல்லா பணி செய்யும் பெண்ணாக இருப்பார். ஒவ்வொரு முறையும் சிண்ட்ரெல்லாவின் பணியை பெரியம்மா மாற்றிக்கொண்டே இருப்பார். சில நேரங்களில் சிண்ட்ரெல்லா சமையல் கலைஞராக இருப்பார், இன்னொரு நேரத்தில் எழுத்தாளராக இருப்பார். ஆனால், அனைத்து சிண்ட்ரெல்லாக்களும் இளவரசருக்காக காத்திருக்கும் சாதுவான பெண்கள் அல்லர்.
ஒவ்வொரு முறையும் இந்தக் கதை கொஞ்சமாவது வேறுபட்டிருக்கும். அவர் சந்தித்த சவால்களும் அதில் இருக்கும். நான் இந்தக் கதைகளைக் கேட்க விரும்பினேன். நான் வயது முதிர்ச்சியடைந்தபோது, ஜிம் கார்பெட், கென்னித் ஆண்டர்சன், பூர்ணசந்திர தேஜஸ்வி போன்றோரின் நூல்களை படிக்கக்கொடுப்பார். அவர் தீவிரவான வாசிப்பாளராக இருந்தார். உண்மையில், என் பெரியம்மா சிறுமியாக இருந்தபோது, அவருடன் பிறந்தவர்கள் விளையாடப்போவார்களாம். ஆனால், பெரியம்மா நூல்களின் உலகத்தில் மகிழ்வுடன் இணைத்துக்கொள்வாராம்.
கவுரி லங்கேஷ் இறுதி ஊர்வலத்தில் திரண்ட பல்லாயிரக் கணக்கான மக்கள்.
என் பெரியம்மா என்னை கொண்டாடி மகிழ்வார். அவருடைய நண்பர்களிடம் என்னை அவருடைய தங்கையின் மகள் என ஒருபோதும் சொன்னதில்லை. தன் மகள் என்றே சொல்வார். அவர் பணியில் எவ்வளவு மும்முரமாக இருந்தாலும், என்னைப் பற்றி நண்பர்களிடம் சொல்வதை மட்டும் நிறுத்தியதில்லை. அவர் எப்போதும் என்னிடம் ”உனக்காக நீதான் பேச வேண்டும்” என்று உறுதியாக சொல்லிக் கொண்டிருப்பார். தற்போது என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது பற்றி எனக்கு சொல்வார், உரைகளை கேட்க என்னை அழைத்துச் செல்வார். கன்னையா குமார் அல்லது ஷீலா ரஷீத் போன்ற இளம் மாணவ செயல்பாட்டாளர்களின் பேச்சுக்களை கேட்கச் சொல்வார். இளைஞர்கள் எப்போதும் விழிப்பாக இருக்க வேண்டும் என அவர் சொல்வார். அவர்களால்தான் மாற்றத்தைக் கொண்டுவர முடியும் எனவும் சொல்லிக்கொண்டிருப்பார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, தன்னுடைய பிறந்த நாளில் தாத்தாவின் நாளிதழ் இலட்சிணையான மயில் இறகையும் அதன் கீழே என் பெயரையும் டாட்டூவாக குத்திக்கொண்டார். ஒவ்வொரு வார இறுதியிலும் வீட்டுக்கு வந்து, அம்மாவுடனும் என்னுடனும் நேரத்தை செலவழிப்பார். என்னுடைய பெரியம்மாவுக்கு இறைச்சி உணவுகள் பிடிக்கும். ஆனால், அவர் சமைத்ததில்லை. எப்போதெல்லாம் எங்கள் வீட்டுக்கு வருவாரோ, அப்போது என் அம்மா எங்கள் இருவருக்கும் கோழி இறைச்சியை சமைத்து தருவார். அவர்கள் இருவரும் தங்களுடைய கடந்த காலத்தில் நடந்த கேளிக்கையான நிகழ்வுகளை பகிர்ந்துகொள்வார்கள். நாங்கள் அந்த மதியத்தை சிரித்து கழிப்போம்.
சார்பில்லாமலும் சமமாகவும் இருப்பதற்கு என்னுடைய பெரியம்மா முக்கியத்துவம் கொடுத்தார். அது எங்களுக்குள் ஆழமாக பதிந்தது. எங்களுடைய குடும்பம் என்னுடைய மாமா வீட்டில் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடும். கிறித்துமஸை எங்கள் வீட்டில் கொண்டாடுவோம். ரம்ஜானை எங்களுடைய பெரியம்மாவின் வீட்டில் கொண்டாடுவோம். எனக்கும் என்னுடைய மாமாவின் பிள்ளைகளுக்கும் இந்த விழாக்களில் உள்ள ஒற்றுமையை சொல்வார். அவரைப் பொறுத்தவரை அனைத்து மதங்களையும் சாதியினரையும் புரிந்துகொள்வது உணர்ந்துகொள்வது முக்கியமானது. அவர் பெண்களுக்காகவும் தலித்துகள், முசுலீம்கள், மாற்று பாலினத்தார் மற்றும் சமூகத்தின் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்காகவும் போராடினார் என்பதை சொல்லத்தேவையில்லை. அவர் உறுதியான, அறத்துடன் செயல்பட்ட பத்திரிகையாளர். அடித்தட்டு மக்களுக்காகவும் அவர்களுடைய பிரச்சினைக்காகவும் போராடிய தீவிரமான செயல்பாட்டாளர் அவர். அவர் நக்ஸலைட்டுகளிடம் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு, அரசுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு வரும்படி வலியுறுத்தியவர்.
அவர் இரவு பகல் பாராமல், கடினமாக உழைத்தார். எப்போதும் ஓய்வெடுத்ததில்லை. அவருடைய இறப்புக்குப் பிறகு அவர் யார் என்பதையும், அவர் மக்களுக்காக என்ன செய்தார் என்பதையும் உணர்ந்தேன். என்னைப் பொறுத்தவரை அவர் என்னை நேசித்த அவ்வா. ஆனால், ஆயிரக்கணக்கானவர்களுக்கு அவர் அக்கா, அம்மா, நண்பர், உடன் பணியாற்றியவர். மேலும் பல இளைஞர்களுக்கு அவர் வழிகாட்டியும்கூட.
அவர் என்ன செய்தார் என எனக்குத் தெரியும், அவர் எதை நேசித்தார் என்பது தெரியும். மேலும் அவர் எதை வெறுத்தார் என்பதையும் நான் அறிவேன். ஆனால், அவர் எத்தனை பேருடைய வாழ்க்கையில் தாக்கம் செலுத்தினார், வயதானவர்கள், இளைஞர்கள், வலிமையிழந்தவர்கள், ஒன்றுமேயில்லாதவர்கள் என்பது குறித்து நான் ஏதும் அறியேன். அவருடைய இறுதி நாளில், சில பேர் வருவார்கள் என எதிர்ப்பார்த்தோம். ஆனால், ஆயிரக்கணக்கானவர்கள் வந்ததைக் கண்டு ஆச்சரியமுற்றோம்.
கர்நாடகத்தின் மூலை முடுக்கில் மட்டுமல்ல, இந்தியா, உலகம் முழுமைக்கும் போராட்டங்கள் நடந்தன. இந்தியா கேட் அருகே மெழுகுவர்த்தி ஏந்தி மக்கள் போராடினார்கள். அனைத்து நகரங்களிலும் பத்திரிகையாளர்கள் போராடினார்கள். ஓராண்டு கழிந்த பிறகும்கூட, நீதியை வேண்டியும் அதிகாரத்தை நோக்கி உண்மையை பேசுகிற பத்திரிகையாளர்களின் பாதுகாப்புக்காகவும் பிரான்ஸ், நியூயார்க், ஜெர்மனி, மால்டா ஆகிய இடங்களில் போராடினார்கள். ‘எல்லைகளற்ற நிருபர்கள்’ அமைப்பினர் ஃபிரெஞ்சு நகரமான Bayeuxல் அவ்வாவின் நினைவாக தூண் ஒன்றை எழுப்பினார்கள்.
அவரைப் பற்றி பெருமை கொள்ளும்போது, என்னுடைய வலி அனைத்தும் குறைவதை உணர்கிறேன். மேலும், அவரைக் கொன்றவர்கள் அவருடைய குரலை நிறுத்தவில்லை. ஆனால், அவருடைய குரல் இன்னும் வலிமையடைந்திருக்கிறது. அவருக்காக எங்களை நிற்க வைத்திருக்கிறது. அவர் எதற்காக நின்றாரோ அதற்காக எங்களையும் நிற்க வைத்திருக்கிறது.
அவரை இழக்கும் முன், ஒருவரை இழப்பது எப்படிப்பட்ட உணர்வைத் தரும் என எனக்குத் தெரியாது. நான் ஆழமாக நேசிக்கும் ஒருவரை இழப்பேன் என்கிற பயமும் எனக்கு இருந்தது. அது அனைத்துக்குமான முடிவாக இருக்கும் என நினைத்ததில்லை. பிறகு எல்லாம் இயல்பாகிவிடும் என நினைத்தேன். எதிர்பாராதவிதமாக இது இரண்டுமாக உள்ளது. சில விசயங்கள் திடீர் முடிவுக்கு வந்துள்ளன. சில விசயங்கள் ஒன்றுமே நடக்காததுபோல கடந்து போயிருக்கின்றன.
திரும்பிப் பார்க்கும்போது, நான் அவருடன் அதிகமான நேரத்தை செலவிட்டிருக்க வேண்டுமோ என விரும்புகிறேன். நான் அவரை எவ்வளவு உண்மையாக நேசித்தேன் என்பதை அவருக்கு சொல்லியிருக்க வேண்டும் என விரும்புகிறேன். அவர் எதற்காக நின்றாரோ அதை இன்னும் சிறப்பாக புரிந்துகொண்டேன் என சொல்ல விரும்புகிறேன். என்னுடைய பெரியம்மாவாக மட்டுமல்ல, அதையும் கடந்து அவரை அறிந்திருந்தேன் என்பதை சொல்ல விரும்புகிறேன். நான் அவரை மிகவும் மதிக்கிறேன் என்பதை சொல்ல விரும்புகிறேன்.
இதையெல்லாம் அவரிடம் வெளிப்படுத்தினேனா என்பதை பொருட்படுத்தவில்லை. ஆனால், நான் அவரை எவ்வளவு நேசித்தேன் என்பதை அவர் அறிவார். அவர் என்னை எவ்வளவு நேசித்தார் என்பதை நான் அறிவேன். இப்போது அவரிடம் ஏதாவது சொல்ல விரும்பினால், 13 ஆண்டுகளாக எனக்கு வழிகாட்டியாய் இருந்ததற்காக நன்றி என்று மட்டும் சொல்வேன். ஏராளமான விசயங்களை பகிர்ந்துகொள்ள அவர் இல்லை என்பதை என்னால் நம்பமுடியவில்லை. ஆனால், அவருடைய மனம் எப்போதும் என்னுடனே இருக்கும். குறுகிய காலமே வாழ்ந்த அவருடைய வாழ்க்கையில் அவர் நிறைய செய்தார். அவர் என்னுடைய இதயத்திலும் மற்றவர்களிடத்திலும் நீண்ட காலங்கள் வாழ்வார். மிக நீண்ட காலங்கள் வாழ்வார்.
பானை வயிறுகள் இப்போது சாதாரணமாக காணக் கூடியவைகளாகியுள்ளன. காலை நடைப் பயிற்சியின் போது எதிர்வரும் பத்தில் ஒன்பது பேர் அதிக பருமன் பிரிவில் இருக்கின்றனர். எதிர்வரும் நாட்களில் உடல் நலம் – அதிலும் குறிப்பாக உடல் எடைக் குறைப்பு – மிகப் பெரிய வணிகச் சந்தையாக இருக்கும் என பலரும் சொல்கின்றனர்.
முன்பெல்லாம் பணக்காரர்களின் பிரச்சினை என்று கருதப்பட்ட அதிக உடல் எடை மற்றும் அதீத உடற்பருமன் நோய் இன்று பரவலாகியிருப்பதற்கு என்ன காரணம்? எல்லோரும் பணக்காரர்கள் ஆகிவிட்டார்களா? இல்லை. உடல் உழைப்பு செலுத்தும் பிரிவினரான நடுத்தர வர்க்க, கீழ் நடுத்தர வர்க்கங்களைச் சேர்ந்தவர்களும் கூட தொப்பையும் தொந்தியுமாக மாறி வருவதை சாதாரணமாக பார்க்க முடிகிறது. உடல் உழைப்பு இன்மை, உடற்பயிற்சி இன்மை, சோம்பேறித்தனம், அளவுக்கதிகமாக தின்பது, சரிவிகித உணவு உட்கொள்ளாதது என இதுவரை உடற் பருமன் பிரச்சினைக்கு தனிநபர்களின் வாழ்க்கைத் தெரிவுகளே காரணமாக சுட்டிக்காட்டப்பட்டு வந்தன. எனினும், புதிய ஆராய்ச்சி முடிவுகள் உடற் பருமன் பிரச்சினைக்கு வேறு சில காரணங்களும் இருக்கக்கூடும் என முன்வைக்கின்றன.
அமெரிக்காவைச் சேர்ந்த உடற்புள்ளியியல் நிபுணர் (biostatistician) டேவிட் பி அலிசன் உள்ளிட்டோர் 2010-ம் ஆண்டில் அலபாமா பல்கலைக்கழத்தில் முன்வைத்த ஒரு ஆய்வறிக்கையின் படி கடந்த இருபது ஆண்டுகளில் சராசரி அமெரிக்கர்களின் உடல் எடை வேகமாக அதிகரித்துள்ளது. மேலும், மேற்கண்ட காலகட்டத்தில் வீட்டில் வளர்க்கப்படும் பூனை, நாய் மற்றும் வீட்டு எலிகளின் சராசரி உடல் எடையும் அதிகரித்துள்ளது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால், பரிசோதனைக் கூடங்களில் வளர்க்கப்பட்டு வந்த மர்மோசெட் என்கிற ஒரு வகைக் குரங்குகளும் சிம்பன்சி மற்றும் மக்காவ் இனக் குரங்குகளும் உடல் எடை கூடியுள்ளது. பரிசோதனைக் கூடத்தில் வளர்க்கப்படுபவை என்பதால் இம்மிருகங்களுக்கு மிக நுணுக்கமாக கண்காணிக்கப்பட்டு தேவைக்கு அதிகமாகவோ, குறைவாகவோ அல்லாமல் சரியான அளவு உணவு மட்டுமே அளித்துள்ளனர்.
பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் உடற்பருமன் பிரச்சினை குறைந்த வருமானம் கொண்ட பிரிவினரிடையேயும் மிக அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. அதிக உணவை உட்கொள்வது மற்றும் குறைந்த உடல் உழைப்பு மட்டுமே உடல் எடை அதிகரிக்க காரணம் என்கிற கண்ணோட்டத்தையும் புதிய ஆய்வு முடிவுகள் மறுப்பதாக அமைந்துள்ளன. ஒரே வகை உணவை ஒரே அளவில் எடுத்துக் கொள்ளும் வெவ்வேறு நபர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வுகளில் ஒவ்வொருவரின் உடலும் அந்த உணவைக் கொழுப்பாக மாற்றும் தன்மையில் வேறுபடுவது தெரியவந்துள்ளது.
அதே போல் வெவ்வேறு உணவுகளின் மூலம் நமது உடலுக்கு கிடைக்கும் ஆற்றல் (கலோரி) ஒரே தன்மையிலானது அல்ல என்கின்றது சமீபத்திய ஆய்வுகள். லண்டன் பல்கலைக்கழகத்தின் குழந்தைகள் ஊட்டச்சத்து நிபுணர் பேராசிரியர் ஜொனாதன் வெல்ஸ் சுமார் 68 நாடுகளைச் சேர்ந்த தனிநபர்களிடம் நடத்திய ஆய்வின் முடிவு, ஆண்களை விட பெண்கள் மத்தியில் உடற்பருமன் பிரச்சினை இருமடங்காக இருப்பதாக தெரிவிக்கிறது. மேலும் “எல்லா கலோரிகளும், சமமானவை அல்ல” என்று குறிப்பிடுகிறார் ஜொனாதன் வெல்ஸ். அதாவது இறைச்சி, கொழுப்பு, சர்க்கரை போன்ற உணவுப் பொருட்களின் மூலம் கிடைக்கும் ஆற்றல் அளவு என்கிற முறையில் ஒன்றாக இருந்தாலும், அது உடலுக்குள் ஆற்றும் வினை என்கிற அளவில் மாறுபட்டு உள்ளது தெரிய வந்துள்ளது.
அதீத கொழுப்போ சர்க்கரையோ அவற்றில் உள்ள அதிக கலோரிகளால் மட்டும் சிக்கலை தோற்றுவிப்பதில்லை. மாறாக, அவை கொழுப்பு சக்தியை நமது உடல் சேமித்து செலவழிக்கும் முறையை மாற்றியமைக்கிறது; கொழுப்பு செலவழிக்கப்படுவதற்கு பதில் அதிகம் சேமிக்கப்படுகின்றது. மாறுபக்க கொழுப்பு (trans-fats), சர்க்கரை மற்றும் ஆல்கஹால் உள்ளிட்டவை நமது உடலில் நுழைந்த பின் ஒருவகையான இன்சுலின் சமிக்ஞையை எழுப்புவதாகச் சொல்கிறார் ஜொனாதன் வெல்ஸ். இதன் விளைவாக மாவுச்சத்துக்களை (carbohydrates) உடல் கையாளும் முறை மாற்றத்துக்குள்ளாகிறது. இப்புதிய ஆய்வுகள் நாம் உண்ணும் உணவின் அளவை விட எந்த உணவை உண்கிறோம் என்பதே உடற்பருமன் பிரச்சினையும் நெருக்கமாக தொடர்பு கொண்டிருப்பதை வெளிப்படுத்தியுள்ளது.
நமது உடல் கொழுப்பு மற்றும் மாவுச்சத்துக்களை கையாளும் விதம் உணவுப் பழக்கத்தால் மட்டும் மாற்றமடையவில்லை. இதற்கு வேறு பல சூழலியல் காரணங்களும் உள்ளதாக தெரிய வந்துள்ளது. குறிப்பாக மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை நமது உடலில் சுரக்கும் லெப்டின் என்கிற ஹார்மோனின் அளவை பாதிக்கின்றது. லெப்டின் ஹார்மோன் தான் நாம் போதுமான உணவை உட்கொண்டிருக்கிறோம் என்கிற முடிவை மூளை எடுப்பதற்கு தூண்டுகின்றது. இது பாதிப்புக்கு உள்ளாகும் போது ஒருவர் தேவையின்றி அதிக உணவை உட்கொள்ளத் துவங்குகின்றார்.
சூழலியல் பாதிப்புகள் இத்தோடு நிற்கவில்லை. சிலவகை வைரஸ்கள், பாக்டீரியாக்கள், தொழிற்சாலை இரசாயனங்கள் உள்ளிட்டவைகளும் நமது உடலின் அணுக்கள் ஆற்றலைக் கையாளும் (சேமித்தல் – செலவழித்தல்) முறைகள் மாற்றமடைந்ததற்கு காரணங்களாக இருக்கக் கூடுமென சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மிசௌரி பல்கலைக்கழகத்தின் உயிரியல் விஞ்ஞானத் துறையைச் சேர்ந்த பேராசிரியர் ஃப்ரெட்ரிக் வோம் சால் நடத்திய ஆராய்ச்சிகளின் படி, நாம் வீடுகளில் பயன்படுத்தும் நெகிழிப் பொருட்களில் காணப்படும் பிஸ்ஃபெனோல்-A (bisphenol-A or BPA) என்கிற மூலக்கூறானது உயிரணுக்கள் கொழுப்பைக் கையாளும் விதத்தை பாதிப்பது தெரிய வந்துள்ளது. பேராசிரியர் ஃப்ரெட்ரிக் வோம் சால் தனது சோதனைகளை பரிசோதனைக் கூட எலிகளின் மேல் நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளார். அதையடுத்து நியூயார்க் பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறையைச் சேர்ந்த லியனோர்டோ ட்ரான்சாண்டே, 2838 அமெரிக்க குழந்தைகளின் சிறுநீரைப் பரிசோதித்ததில் உடற்பருமன் இருப்பவர்களிடம் அதிக அளவு பிஸ்ஃபெனோல்-A இருப்பது தெரியவந்தது.
வளர்ந்த நாடுகளைச் சேர்ந்த மக்களிடம் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் அவர்களின் சிறுநீரில் பிஸ்ஃபெனோல் இருப்பது தெரியவந்துள்ளது. என்றாலும், உடற்பருமனுக்கு பிஸ்ஃபெனோல் மட்டுமே ஒரே வில்லன் என்கிற முடிவுக்கு வருவதும் சரியாக இருக்காது. ஏனெனில், 2004-ம் ஆண்டு பிறந்த பத்து குழந்தைகளின் தொப்புள் கொடிகளை ஆராய்ச்சி செய்து பார்த்த போது அதில் சுமார் 287 வகையான தொழிற்சாலை இரசாயனக் கழிவுகள் இருப்பது தெரியவந்தது. அவை அனைத்தும் பிரசவகாலத்தில் தாய்மார்கள் உட்கொண்ட உணவின் மூலம் குழந்தைகளுக்கு கடத்தப்பட்டுள்ளது. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியை பியேட்ரிஸ் கோலோம்ப் உடலின் ஆற்றல் செலவழிக்கும் முறையை பாதிப்புக்குள்ளாக்கும் இரசாயனங்கள் என ஒரு நீண்ட பட்டியலை வெளியிட்டுள்ளார். இந்த இரசாயனங்கள் அனைத்தும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள், குளியல் சோப்பு போன்ற பொருட்களில் கலந்துள்ளன.
குழந்தைகள் கருவில் இருக்கும் போது மட்டுமல்ல, கருவுறும் போதே கூட ஆபத்தான இரசாயனங்களின் தாக்கங்களுக்கும் இன்னபிற சுற்றுச்சூழல் மற்றும் புறநிலைக் காரணிகளால் பாதிப்புக்கு உள்ளாக கூடும் என்பதை புரூஸ் புளூம்பெர்க், டேவிட் ஜே.பி பார்க்கர் உள்ளிட்ட பேராசிரியர்கள் நடத்திய தனித்தனி ஆய்வுகளின் முடிவுகள் காட்டுகின்றன. புறநிலை பாதிப்புகள் என்பவை தாய் உட்கொள்ளும் உணவின் மூலமாகவோ அல்லது அவளது மனநிலை பாதிப்புகளின் விளைவாகவோ கூட ஏற்பட முடியு என்பதை இந்த ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. இவ்வாறான பாதிப்புகள் பின்னர் அந்தக் குழந்தை வளரும் போது அதனுடைய உடலின் உயிரணுக்கள் கொழுப்பை செலவழிக்கும் முறைகளை மாற்றியமைக்கின்றன.
இவை தவிர சில வகை வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களும் உடற்பருமனுக்கு காரணம் என்கின்றன வேறு சில ஆய்வுகள். கண்களில் பாதிப்பு ஏற்படுத்தும் ஏடி-36 (Ad-36) என்கிற ஒரு வைரஸ், பரிசோதனைக் கூடங்களில் குரங்குகள் மற்றும் எலிகளின் மேல் சோதிக்கப்பட்ட போது அவைகளின் உடல் எடை அதிகரித்துள்ளது. அதே போல் அதீத உடற்பருமன் நோய் கொண்டவர்களின் இரத்தத்தை சோதித்த போதும் அதில் இதே வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளது. எனினும் இந்த வைரஸ் என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்துவதன் மூலம் உடல் எடை கூடுகின்றது என்பது இன்னும் திட்டவட்டமாக கண்டறியப்படவில்லை. இன்னும், அதீத செயற்கை ஒளி, அதிகளவில் குளிரூட்டும் சாதனங்கள் பயன்படுத்துவது போன்றவைகளுக்கும் உடல் எடை அதிகரிப்பதற்குமான தொடர்புகள் குறித்தும் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.
♦ ♦ ♦
உடல் எடை அதிகரிப்பிற்கு தனிப்பட்ட பழக்கவழக்கங்கள் மட்டுமின்றி ஏராளமான சமூக காரணங்களும் இருப்பதை மேலே உள்ள விவரங்களின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. இதுவரை உடல் எடை, ஆரோக்கியம் போன்றவை குறிப்பிட்ட தனிநபர்களின் வாழ்க்கைத் தெரிவுகளின் நேரடி விளைவு என்கிற கண்ணோட்டத்தை இந்த ஆராய்ச்சி முடிவுகள் பெருமளவிற்கு கேள்விக்கு உள்ளாக்குகின்றன.
மருத்துவ விஞ்ஞானம் உடற்பருமன் பிரச்சினைக்கு இன்னது மட்டுமே காரணம் என முடிந்த முடிவாக ஒரு பட்டியலை உறுதியாக ஒரே குரலில் ஏற்கவில்லை. அகநிலை மற்றும் புறநிலைக் காரணங்கள் இணைந்து ஒருவரின் உடல் எடையின் மேல் தாக்கம் செலுத்துகின்றன என்கிற அளவுக்கு இந்த ஆராய்ச்சி முடிவுகளை நாம் புரிந்து கொள்ளலாம். அகநிலையான காரணங்களை நமது பழக்க வழக்கங்களை மாற்றியமைத்துக் கொள்வதன் மூலம் சரி செய்யலாம். உடற்பயிற்சி அல்லது உடல் உழைப்பு, சரிவிகித சத்தான உணவு, சரியான ஓய்வு என்பவை ஒருவரின் தனிப்பட்ட தெரிவாக இருந்தாலும் இவற்றை சாத்தியப்படுத்தும் சமூகப் பொருளாதார சூழலை அடைவதற்கு புறநிலையோடு போராடித்தான் ஆக வேண்டும்.
முறைப்படுத்தப்பட்ட தொழில்கள் அனைத்தும் நெருக்கடியில் இருக்கும் நிலையில் அவற்றில் பணிபுரியும் ஊழியர்கள் ஒருபக்கம் மனரீதியான அழுத்தங்களுக்கு முகம் கொடுக்கின்றனர். இன்னொருபுறம் வேலையைக் காப்பாற்றிக் கொள்ள ஆரோக்கியத்தைப் பணயம் வைத்து உழைக்க வேண்டியுள்ளது. எனில், உடற்பருமன் பிரச்சினைக்கு அகநிலையான தீர்வுகளை அமல்படுத்த வேண்டும் என்றாலே புறநிலையோடு மோதுவதைத் தவிர்த்து வேறு வழியில்லை.
அதே போல் உடற்பருமனுக்கு கராணம் என புதிதாக பட்டியலிடப்பட்டுள்ள புறநிலையானவைகள் அனைத்துமே நவீன தொழில்நுட்பம் மற்றும் அறிவியலின் துணை விளைவுகள். எனில், இவையனைத்தையும் துறந்து விட்டு காடுகளுக்கு ஓடி விடலாமா? அல்லது நம்மாழ்வார் போன்ற “வில்லேஜ் விஞ்ஞானிகள்” சொல்வது போல் உடல் முழுவதும் சாணியை அப்பிக் கொண்டு “காஸ்மிக் கதிர்களின் பாதிப்பை” எதிர்க்க முனையலாமா?
முதலில், இந்த முறையில் சிந்திப்பதே அடி முட்டாள்தனம். புதிய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளும், தொடர்ந்து வந்த தொழிற்புரட்சிகளும், அதன் விளைவாக சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் மனித சமூகத்திற்கு வழங்கியுள்ள கொடைகள் ஏராளம். உடற் பருமன் பிரச்சினை மட்டுமின்றி இன்னும் ஏராளமான புதிய நோய்கள் உருவான அதே காலகட்டத்தில்தான் அதற்கான தீர்வுகளும் கண்டுபிடிக்கப்பட்டு மக்களின் வாழ்நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. வரலாற்றுச் சக்கரம் முன்னோக்கிச் சுழலுமே தவிர மீண்டும் ராம ராஜ்ஜியம் சாத்தியமில்லை. எனவே மாறிய சூழல் உருவாக்கியுள்ள சிக்கல்களை நவீன விஞ்ஞானத்தின் துணை கொண்டு எதிர்ப்பதும், மறுபுறம் சூழலியல் பாதிப்புகளைத் தவிர்த்த முன்னேற்றத்தை விஞ்ஞானப்பூர்வமாக சாதிப்பதுமே தீர்வு.
சோசலிச சமூகத்தை அமைப்பதற்கான போராட்டம் ஃபிரட் எங்ஸ்ட் – உடன் ஓர் நேர்காணல் | பாகம் – 4
ஒனுர்கன் உல்கர்: முதலாளித்துவ பாதையினருக்கும் புரட்சியாளர்களுக்கும் இடையில் மாவோ காலத்தில் நடந்த போராட்டத்தைப் பற்றிக் கூறினீர்கள். கட்சிக்குள் இருந்த வலது பாதையாளர்களை முறியடிப்பதற்கு, அதிகார வர்க்க மேட்டுக் குடியினருக்கு எதிராக மக்களைத் திரட்டுவது மாவோவின் வழியாக இருந்தது… இருப்பினும் பிற்காலத்தில், திறந்த பொருளாதாரமும் (முதலாளித்துவ – மொர்) சீர்திருத்தங்களும் அறிமுகப்படுத்தப்பட்ட ஆரம்பக் கட்டங்களில், மாவோ காலத்திய கொள்கைகளை பாதுகாக்கும் பொருட்டு, சீர்திருத்தங்களுக்கு எதிராக எமக்குத் தெரிந்த வரை உழைக்கும் மக்கள் பரவலான முறையில் எதிர்ப்பு காட்டவில்லையே!
ஃபிரட் எங்ஸ்ட்: டெங் அதிகாரத்திற்கு வந்த போது, நாங்கள் சோசலிசத்திற்கு எதிரானவர்கள் என்று அவர்கள் அறிவித்துக் கொள்ளவில்லை. இது அனேகமாக மக்களை குழப்பியிருக்கலாம். ஆனால், பெரியளவு எதிர்ப்பு இல்லை என்று நீங்கள் சொல்லிவிட முடியாது.
டெங் சியாபெங்
அப்படியென்றால், 1989 -இன் நிகழ்வுகளைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்? அன்று புதிதாக உருவாகி வந்த புதிய ஆளும் வர்க்கத்தை மக்கள் எதிர்க்கிறார்கள் என்று காட்டிய போராட்டமல்லவா அது. அந்தப் போராட்டத்தின் முன்னணியில் இருந்த மாணவர் தலைவர்களின் நோக்கம் வேண்டுமானால் மேற்கத்திய ஜனநாயகமாக இருக்கலாம். அவர்களுக்கு ஆதரவளித்த தொழிலாளர்களும் விவசாயிகளும், ஜனநாயகம் என்ற அரூபமான கருத்துக்காக அந்தப் போராட்டத்தில் ஈடுபடவில்லை… எனக்குத் தெரியும்.
ஏனென்றால் 1988-ல் நான் பெய்ஜிங்கில் இருந்தேன். மக்கள் எல்லா விசயங்களைப் பற்றியும் அதிருப்தி கொண்டிருந்தார்கள். சீனத்தில் தாங்கள் உருவாக்கியிருந்த அனைத்தையும் சில பணக்காரர்கள் கைப்பற்றிக் கொண்டுவிட்டார்கள் என்ற ஆத்திரத்தில் மக்கள் இருந்தார்கள். ஆய்வாளர்கள் இதையெல்லாம் மிக மேலோட்டமாகப் பார்க்கிறார்கள். மக்கள் எதனால் அதிருப்தி அடைந்திருந்தார்கள் என்ற கேள்விக்கு நீங்கள் விடை தேடவேண்டும்.
ஆகவே, மேலே என்ன நடக்கிறது என்பதை மட்டும் பார்த்து முழு சித்திரத்தையும் புரிந்து கொள்ள முடியாது. என்ன நடக்கிறது என்பது குறித்து கணிசமான காலத்துக்கு எனக்கே தெளிவில்லாமல்தான் இருந்தது. 1976-ல் நடந்தது ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு என்ற விசயமே 20 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் திடீரென்று எனக்கு உரைத்தது.
ஒனுர்கன் உல்கர்: அப்படியென்றால், அந்த காலத்தில், கட்சிக்குள்ளிருந்த சோசலிசப் பாதையினர் மக்களுடன் உயிரோட்டமான தொடர்பைப் பேணவில்லை என்று கருதலாமா?
ஃபிரட் எங்ஸ்ட்: நான் அப்படிச் சொல்ல மாட்டேன். உழைக்கும் வர்க்கத்தின் பக்குவமின்மைதான் முதன்மையான காரணம். தங்களுக்குள் நிலவிய முரண்பாடுகளைக் கையாள்வதற்கு அவர்களுக்குத் தெரியவில்லை. கோஷ்டித் தகராறுகளை அவர்களால் தவிர்க்கமுடியவில்லை.
கலாச்சாரப் புரட்சியின் தொடக்கத்தில் மக்கள் திரளைத் தட்டியெழுப்புவது எப்படி என்பது சவாலாக இருந்தது. மக்கள் கிளர்ந்தெழுந்த பின், அவர்களுக்கிடையிலான கோஷ்டிவாதத்தை சமாளிப்பது மையப் பிரச்சினையாகிவிட்டது. உழைக்கும் வர்க்கம் பிரிந்து கிடந்தது. முதலாளித்துவப் பாதையினர் ஒற்றுமையாக இருந்தனர்.
நான் ஏற்கனவே கூறியது போல, முதலாளித்துவப் பாதையாளர்கள் தங்களது உண்மை சொரூபத்தை உடனே காட்டிவிடவில்லை. அவர்கள் செய்து கொண்டிருந்தது முதலாளித்துவ மீட்புதான் என்பதை மக்கள் புரிந்து கொள்ளவில்லை.
மார்க்சியத்திற்கும் திரிபுவாதத்திற்கும் இடையிலான முக்கிய வேறுபாடு இதுதான். எந்த திரிபுவாதியும் நான் மார்க்சியத்திற்கு எதிரானவன் என்று வெளிப்படையாகச் சொல்லமாட்டான். “புதிய சூழ்நிலை தோன்றியிருக்கிறது. இதனைக் கையாள்வதற்கு புதிய அணுகுமுறை தேவை” என்பார்கள். பெரும்பாலான மக்களுக்கும் அது சரிதானே என்று தோன்றும்.
அவர்கள் முதலாளித்துவ சீர்திருத்தத்தை முதலில் தொடங்கும்போது முதலில் நகரத்தில்தான் கொஞ்சம் முயற்சி செய்தார்கள். அதற்கு தொழிலாளர்களின் எதிர்ப்பு பலமாக இருந்தது. அதனால் கிராமப்புறத்தை நோக்கிப் போய்விட்டார்கள். கிராமப்புறம்தான் சங்கிலியின் பலவீனமான கண்ணி.
ஆரம்பத்தில், மலைப் பிராந்தியங்களில் பரவிக் கிடக்கும் விவசாயிகள் வறுமையில் வாடுகிறார்கள். அவர்களை கூட்டுப் பண்ணைக்கு கட்டாயப் படுத்த வேண்டாம். அவர்களுக்கு நிலத்தை பகிர்ந்து கொடுப்போம் என்றார்கள். அது நியாயம்தானே என்று தோன்றியது. சில ஆண்டுகளிலேயே கூட்டுப்பண்ணைகளின் நிலத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிரிக்கத்தொடங்கினார்கள். சில ஆண்டுகளுக்குள் எல்லா கூட்டுப்பண்ணைகளையும் இல்லாமல் செய்து விட்டார்கள். என்ன நடக்கிறது என்று நீங்கள் சுதாரிப்பதற்குள், அதிகாரம் உங்கள் கையை விட்டுப் போய்விட்டது.
தொழிலாளி வர்க்கத்தைப் பொருத்தவரை, முதலாளித்துவப் பாதை என்றால் என்ன, சோசலிசப்பாதை என்றால் என்ன என்பதை அவர்கள் புரிந்திருக்கவில்லை. தந்திரமான பேச்சுக்கு அவர்கள் மிக எளிதில் பலியாகி விட்டார்கள்.
முதலாளித்துவ பாதையினர், “மாவோ காலத்தில் உங்கள் சம்பளம் உயரவே இல்லை. நாங்கள் உயர்த்தப் போகிறோம்” என்றார்கள். டெங் மென்மேலும் பணத்தாள்களை அச்சிட்டுத் தள்ளினார். கூடுதல் பணம் கிடைத்தது என்று எல்லோரும் மகிழ்ந்தனர். பணவீக்கத்தைப் பற்றி அப்புறம்தான் புரிந்து கொண்டனர். அதற்குள் காலம் கடந்து விட்டது. முதலாளித்துவப் பாதையினர் தங்கள் அதிகாரத்தை உறுதிப்படுத்திக்கொள்ளும் வரை, தற்காலிகமாக, விவசாயிகளையும், தொழிலாளர்களையும், அறிவுஜீவிகளையும் தனித்தனியே விலைக்கு வாங்கினர்.
அவர்களுக்கு கட்சி உறுப்பினர்களில் உண்மையான மாவோயிஸ்டுகள் யார் என்பது தெரியும். அவர்களை வெளியேற்றினார்கள், தனிமைப்படுத்தினார்கள், ஓரங்கட்டினார்கள். அவர்கள் கைதேர்ந்த தந்திரசாலிகள்! தவளையை சமைக்க வேண்டுமானால், தண்ணீரை மெதுவாக சூடேற்று என்றொரு பழமொழி சீனத்தில் உண்டு. தண்ணீரின் சூட்டை தாங்கமுடியாது என்று தவளை உணரும்போது அதனால் குதித்து வெளியேற முடியாமல் போய்விடும்.
ஒனுர்கன் உல்கர்: கலாச்சாரப்புரட்சி தோல்வியடைவதற்கான காரணங்கள் என்ன? சமூக வர்க்கம் குறித்த மாவோவின் கருத்தாக்கம் கொஞ்சம் தெளிவில்லாமல் இருந்தது என்றும், இந்த நிச்சயமின்மை காரணமாக நண்பர்கள் யார் எதிரிகள் யார் என்று புரட்சியாளர்களால் சரியாக இனங்காண முடியாமல் போய்விட்டது என்றும் கூறப்படுவதை நீங்கள் ஏற்கிறீர்களா?
ஃபிரட் எங்ஸ்ட்: ஆம். ஆனால் ஏன்? ஏனென்றால், சட்டப்படியும், நடைமுறையிலும், உற்பத்தி சாதனங்கள் தனியாருக்கு சொந்தமாக இல்லை. தலைவர்கள் தம் சொத்துகளை தங்கள் குழந்தைகளுக்கு விட்டுச் செல்லமுடியாது.
சோசலிசத்தின் கீழ் வர்க்கம் என்பதை வரையறுக்கும் போது யாரிடம் முடிவெடுக்கும் அதிகாரம் இருக்கிறது என்பதையும், அந்த அதிகாரம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதையும் பார்ப்பது மிகவும் முக்கியம்.
பில் கேட்ஸ் அல்லது ராக்ஃபெல்லரை எடுத்துக்கொள்ளுங்கள். தங்களது உலகக் கண்ணோட்டத்தின்படி அவர்களால் முடிவெடுக்க முடியும், உலகத்தை மாற்றியமைக்க முடியும் என்பதுதான் அங்கே முக்கியம். இங்கே சோசலிசத்தின் கீழும், முடிவெடுக்கும் அதிகாரத்தை தம் கையில் வைத்துக் கொள்ள முதலாளித்துவ வர்க்கம் முயற்சிக்கத்தான் செய்கிறது.
இரண்டு வகை முதலாளித்துவ வர்க்கத்தினரும் மற்றவர்களின் கருத்துக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. இதுதான் முதலாளித்துவத்தின் சாரம், அல்லது, டி.என்.ஏ.
ஈக்கள் பறக்கும், புழுக்கள் பறக்காது. பறப்பது என்பது பெரிய வேறுபாடுதான் என்ற போதிலும், இரண்டும் ஒரே இனம்தான். கொஞ்சம் பொருத்திருந்தால் புழுக்கள் ஈக்களாக மாறும். சோசலிச சமூகத்தில் இருக்கும் முதலாளித்துவத்தினர் ஈயாக வளர்வதற்கு முந்தைய புழுவின் நிலையில் இருப்பவர்கள். அவர்கள் ஈக்களின் நிலையை எய்திவிட்ட முதலாளி வர்க்கத்தின் கரு வடிவாக இருப்பவர்கள்.
மாவோவின் அரசியல் பாரம்பரியம் குறித்து
ஒனுர்கன் உல்கர்: மாசேதுங் அவர்களின் மறைவிற்கு 40 ஆண்டுகளுக்குப்பின், மாவோயிசத்தின், குறிப்பாக கலாச்சாரப் புரட்சியின் எஞ்சி இருக்கும் பாரம்பரியம் என்ன?
ஃபிரட் எங்ஸ்ட்: மாவோவின் பாரம்பரியம் அளப்பறியது. உலகில் எந்தப் பகுதியிலும் பழைய அமைப்பு முறையைத் தூக்கி எறிவதற்காகத் திரள்கின்ற மக்கள் அனைவரும் ஒரே பிரச்சனையைத்தான் எதிர்கொண்டார்கள். புரட்சியாளர்கள் புதிய ஆதிக்க சக்திகளாக மாறாமல் தடுப்பது எப்படி? இந்த பிரச்சனையைத் தீர்ப்பதற்கு மாவோ என்ன முயற்சி செய்தார் என்பதை புரிந்து கொள்ளாதவரை, புரட்சி, எதிர் புரட்சி என்ற இந்த சுழற்சி தொடரத்தான் செய்யும்.
பாரிஸ் கம்யூனுக்குப் பிறகு, மார்க்ஸ் அதன் படிப்பினைகளை தொகுத்தார்.
பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்றுவதைப் பற்றி மட்டும் அக்கறை செலுத்தினால் போதாது; அது பழைய அரசு எந்திரத்தைத் தகர்த்து புதிய ஒன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றார். ஆனால் அதிகாரத்திற்கு வந்த பிறகு உழைக்கும் வர்க்கத்தின் குறிப்பான பாத்திரம் என்னவாக இருக்கும் என்பதைப் பற்றி அவருக்கும் கூட ஒரு தெளிவு கிடைக்கவில்லை. அதைப் புரிந்து கொள்வதற்கு அப்போது காலம் கனியவில்லை.
லெனின், இது குறித்து பல ஆண்டு காலம் சிந்தித்தார். உயர்ந்த அளவில் ஒழுங்கமைக்கப்பட்ட, ஆகப் பெரும்பான்மையான உழைக்கும் மக்கட்பிரிவினரைத் தன் பின்னே திரட்டும் ஆற்றல் பெற்ற, முன்னணிக் கட்சி ஒன்றை பாட்டாளி வர்க்கம் தனக்கென உருவாக்கிக் கொண்டால் மட்டுமே, பொருளாதாரத்திலும், அரசியலிலும், இராணுவபலத்திலும், பண்பாட்டிலும் சமூகத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகின்ற முதலாளி வர்க்கத்தை வெற்றி கொள்ள முடியும் என்று உணர்ந்து கொண்டார்.
அக்டோபர் புரட்சி முடிந்த நான்கு ஆண்டுகளுக்குப் பின்னரும், சீன மக்களின் 1919 மே 4 எழுச்சிக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரும்தான் சீன கம்யூனிஸ்டு கட்சி உருவாக்கப்பட்டது. கட்சியை எப்படி உருவாக்குவது என்று யோசிக்க வேண்டிய தேவை அவர்களுக்கு ஏற்படவில்லை. அந்த வகையில் லெனினுடைய பங்களிப்பு, சீனப்புரட்சிக்கான காலத்தை மிகப்பல ஆண்டுகள் குறைத்துக் கொடுத்தது.
கலாச்சாரப்புரட்சியின் பங்கும் அதே போன்றதுதான். அடுத்த முறை, உழைக்கும் வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றும்போது, அவர்கள் முதலிலிருந்து தொடங்கத் தேவையில்லை. மற்ற புரட்சியாளர்கள் செய்த அதே தவறுகள் மீண்டும் நிகழாமல் தவிர்ப்பது எப்படி என்பதை அவர்கள் அறிந்திருப்பார்கள். அதாவது, சலுகை பெற்ற அதிகாரவர்க்கம் என்ற ஒரு பிரிவு வளர்ந்துவிடாமல் தடுப்பது எப்படி என்பதை அறிந்திருப்பார்கள். முன்னணிக் கட்சியின் மீது மக்கள்திரளின் கண்காணிப்பு இருந்தாகவேண்டும் என்று வலியுறுத்துவது எப்படி என்று அறிந்திருப்பார்கள்.
முன்னணிக் கட்சிக்கும் மக்கள் திரளின் கண்காணிப்புக்கும் இடையிலான உறவு என்பது சோசலிசத்தின் மிகப்பெரிய முரண்பாடாகும். இதிலிருந்து தப்பிக்கவே முடியாது. மாவோவைத் தவிர, சோசலிசம் குறித்த மற்றெல்லா கோட்பாடுகளும் இந்தச் சிக்கலைக் கையாள்வதில் தோல்வியடைந்து விட்டன. ஸ்டாலின் போன்றவர்கள் மக்கள் திரளின் கண்காணிப்பை புறக்கணித்து, கட்சியின் முக்கியத்துவத்தை மட்டுமே வலியுறுத்தினர். சமூக ஜனநாயகவாதிகள் ஜனநாயக அம்சங்களை மட்டும் வலியுறுத்தினர். முன்னணிக் கட்சியின் தேவையை முற்றிலுமாகப் புறக்கணித்தனர். மேற்சொன்ன இரண்டு அணுகுமுறைகளுமே வேலைக்கு ஆகாதவை. இதுதான் இயங்கியல்.
இந்த இரண்டு அம்சங்களையும் இணக்கமாக கையாள்வது எப்படி என்பதை மாவோ முயன்று பார்த்தார். ஆனால், இந்த விசயத்தை அவர் கிரகித்துக் கொள்வதற்குள் பெரிதும் காலங்கடந்து விட்டது. அதற்கு முன்னரே முதலாளித்துவப் பாதையினர் சீனத்தில் பெரிதும் பலம் பெற்றுவிட்டார்கள். முதலாளித்துவப் பாதையாளர்களை அடையாளம் காண்பதற்கே மாவோவிற்கு ஐந்து முதல் ஆறு ஆண்டுகள் (1957 முதல் 1962 வரை) ஆகிவிட்டன.
முதலாளித்துவப் பாதையாளர்கள் எனப்படுபவர்கள் வெளியில் வரும்போதுதானே புரட்சியாளர்கள் அவர்களை அடையாளம் காண இயலும்? மார்க்ஸ் காலத்தில் முதலாளித்துவப் பாதையாளர்களைப் பற்றி யோசித்திருக்க முடியாது. இது பற்றி ஆராய்வதற்கு லெனினுக்கு காலம் போதவில்லை. ஸ்டாலினுக்கு வாய்ப்பிருந்தது. ஆனால், அவர் அந்த வாய்ப்பை தவறவிட்டுவிட்டார். தவறிழைத்து விட்டார். அவர் நாடு கடத்தினார், மரண தண்டனை விதித்தார். அதெல்லாம் பிரச்சினையைத் தீர்க்கவில்லை. இருப்பினும், பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தில் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் ஸ்டாலின் பாடுபட்டார். முதலாளித்துவத்தை மீண்டும் கொண்டு வர அவர் முயற்சிக்கவில்லை. எனவே சீனக்கம்யூனிஸ்டு கட்சியின் பல ஊழியர்கள் தவறிழைத்ததைப் போலவே அவரும் தவறிழைத்தார். இவர்களை உணர்வுபூர்மற்ற முதலாளித்துவப் பாதையாளர்கள் என்று நான் அழைப்பேன்.
நாம் உணர்வுபூர்மான முதலாளித்துவப் பாதையாளர்களையும், உணர்வுபூர்வமற்ற முதலாளித்துவப் பாதையாளர்களையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். சிலருடைய வேலைப்பாணி தவறாக இருக்கிறது. சிலர் உணர்ச்சிவயப் படுபவர்களாக இருக்கிறார்கள். சிலர் ஆதிக்க மனோபாவம் கொண்டவர்களாக நடந்து கொள்கிறார்கள். இவர்களெல்லாம் உணர்வுபூர்வமாக முதலாளித்துவப் பாதையைத் தெரிவு செய்தவர்கள் அல்ல. ஆனால், மார்க்சிய இயங்கியல் குறித்த அவர்களது பார்வை பலவீனமாக இருந்தது.
எனவே, அவர்களால் முதலாளித்துவ மீட்பை தடுக்கவியலவில்லை. ஸ்டாலின் தெளிவாக இருந்தார். அவர் மற்றவர்கள் மீது நம்பிக்கை வைக்கவில்லை. மக்கள் திரள் வழியைப் பின்பற்றவில்லை… மக்களைத் திரட்டவில்லையென்றால், நீங்கள் அதிகாரவர்க்கத்துக்கு உள்ளேதான் தீர்வைத்தேட முடியும். மேலிருந்து திணிக்கப்பட்ட அணுகுமுறை தவிர்க்கவியலாமல் அதிகாரவர்க்க ஆட்சியைத்தான் மீண்டும் உற்பத்தி செய்யும்.
டிராட்ஸ்கி
இதில் டிராட்ஸ்கியவாதிகளின் தீர்வு என்பது சமூக ஜனநாயகவாதிகளின் தீர்வைப் போன்றது. அவர்களது தீர்வு கட்சி என்ற முன்னணிப்படையின் தேவையை நிராகரிக்கிறது. அவர்கள் ஜனநாயகம் என்பதை தொழிலாளர் காங்கிரஸ் என்பதாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். தொழிலாளர்களுக்கிடையே வெவ்வேறு கருத்துகள் வரும்போது என்ன செய்வது என்று அவர்கள் சொல்வதில்லை. சீனாவில் டிராட்ஸ்கியவாதிகளுடனான விவாதத்தில் நான் இந்த பிரச்சனையைத் தொடர்ந்து எதிர் கொள்கிறேன்.
சோசலிசம் என்பது ஒரு நீண்ட வரலாற்றுக் காலம். இந்தக் காலகட்டத்தில் வர்க்கங்களும் வர்க்கப்போராட்டமும் தொடர்ந்து நிலவவே செய்யும்.
தொடர்ந்து இருக்கும். முதலாளித்துவம் எப்போது வேண்டுமானாலும் மீண்டு வரலாம். அதுதான் சீனத்தில் நடந்திருக்கிறது. இன்று சீனாவில் அதிகாரத்தில் இருப்பவர்கள் முதலாளி வர்க்கத்தினர் அல்ல, திரிபுவாதிகள் என்றும், உட்கட்சி போராட்டம் நடத்தி அவர்களை முறியடிக்க வேண்டும் என்றும் சிலர் கூறுகிறார்கள். உண்மையில் இன்று சீனா ஒரு தொழில்மயமான முதலாளித்துவ நாடு. இங்கே முதலாளிவர்க்கம்தான் அதிகாரத்தில் இருக்கிறது.
ஒனுர்கன் உல்கர்: என் குறிப்பான கேள்வி இதுதான். மாவோ மறைந்து அரை நூற்றாண்டு ஆகிவிட்டது. 21-ம் நூற்றாண்டில் சோசலிசத்தைப் படைக்க விரும்பும் மக்கள் மார்க்சியத்திற்கு மாவோ செய்த பங்களிப்பை இன்று எதற்காக கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்?
ஃபிரட் எங்ஸ்ட்: ஏனென்றால், அது ஒரு கட்டாயம். புரட்சிக்காகப் போராடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எங்கே இருந்தாலும் அவர்கள் எதிர்கொள்ளக்கூடிய பிரச்சினையை அவர் ஆராய்ந்திருக்கிறார். முன்னோடியாகத் தீர்வு கண்டிருக்கிறார். குறிப்பான விசயங்களில் சில வேறுபாடுகள் இருக்கலாம்.
அடிப்படைக் கேள்வி இதுதான். உட்கட்சி போராட்டத்தை எப்படி கையாளவேண்டும்? இது குறித்த முழுமையான கோட்பாடும், நடைமுறையும் அவரிடம் இருக்கிறது. மார்க்சியத்தை நடைமுறைப்படுத்துங்கள். திருத்தல்வாதத்தை அல்ல என்கிறார். வெளிப்படையாக இருங்கள், சூழ்ச்சி செய்யாதீர்கள் என்கிறார். ஐக்கியப்படுங்கள் பிளவுபடாதீர்கள் என்கிறார். விமரிசனம் சுயவிமரிசனத்தை திறந்த மனதுடன் எதிர்கொள்ளுங்கள் என்கிறார்.
இவை அனைத்தும் புரட்சிகர அணிகள் மத்தியிலான போராட்டம் தொடர்பானவை. மக்களிடையேயான முரண்பாடுகளைக் கையாள்வது தொடர்பானவை. கோஷ்டிவாதத்தை முறியடிப்பதற்கும் ஐக்கியத்தை சாதிப்பதற்கும் மாவோவின் இந்தக் கருத்துக்கள் புரட்சியாளர்கள் அனைவருக்கும் மிகவும் அவசியமானவை. ஐக்கியம் என்பதன் பொருள் நமது கருத்தை வெளியிடாமல் விழுங்கிக் கொள்வது அல்ல. அது ஒரு ஒத்த கருத்தை எட்டுவதற்கானது. இவையனைத்தும் கலாச்சாரப் புரட்சிக்கு முன்னதாகவே அவரால் கோட்பாடு ரீதியாகத் தொகுக்கப்பட்டு விட்டன.
கோட்பாடு ரீதியாக மட்டுமல்ல, புரட்சிகர நடைமுறையிலும் மாவோ பங்களித்திருக்கிறார். மாவோவை நிராகரிப்பவர்கள் தம் அறியாமையைத்தான் வெளிப்படுத்துகிறார்கள். பருண்மையான நிலைமைகள் குறித்த உண்மையான புரிதலின் அடிப்படையில் மாவோவின் மீது விமரிசனம் வைக்கின்ற அர்ப்பணிப்புள்ள அறிஞர்கள் யாரும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
கலாச்சாரப் புரட்சி காலகட்டத்தில் செங்காவலர்கள் மத்தியில் பாடியாடும் சிறுமி. (கோப்புப் படம்)
மூன்றுலக கோட்பாடு போன்ற விசயங்களுக்காக மாவோவை சிலர் நிராகரிக்கிறார்கள். சோவியத் யூனியன் உண்மையிலேயே பெரிய அபாயமாக இருந்தது. அது சீனத்துக்கு மட்டும் அபாயமாக இல்லை. சோவியத் யூனியன் சிதறிவிட்டது என்பது உண்மை. ஆனால் என்ன நடக்கப்போகிறது என்பதை யாராலும் அனுமானிக்க முடியவில்லை… முதலாளித்துவப் பாதையாளர்கள் குறித்தும் ஏகாதிபத்தியம் குறித்தும் மார்க்ஸ் முன்கூட்டியே ஆய்வு செய்திருக்க முடியவில்லை என்பதைப் போன்றதுதான் இதுவும்.
சோவியத் யூனியன் அரசின் பலவீனத்தைப் பார்க்க முடியாத காரணத்தினால், அந்த அபாயத்தைப் பற்றி மாவோ சற்று மிகையாக கவலைப்பட்டிருக்க கூடுமோ என்று இப்போது நமக்குத் தோன்றுகிறது. இதற்காக மாவோவை யாரேனும் குற்றம் சொல்ல முடியுமா? சோவியத் யூனியனுக்கு என்ன நடக்கப்போகிறது என்பதை யார்தான் முன்கூட்டி அறிந்திருந்தார்கள்? தவறிழைப்பதை யாரும் தவிர்க்கவியலாது. மார்க்ஸ் தவறு செய்திருக்கிறார், லெனின் தவறு செய்திருக்கிறார், ஸ்டாலினும் பல தவறுகள் செய்திருக்கிறார். மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோரின் பல கணிப்புகள் நடக்காமல் போயிருக்கின்றன. அதற்காக அவர்களைக் குற்றம் சொல்வது அபத்தமானது.
ஒனுர்கன் உல்கர்: உங்கள் நேரத்தையும் ஞானத்தையும் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி. நீங்கள் புதிய தெளிவை ஏற்படுத்தி இருக்கிறீர்கள்.
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876 Email –vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
”புராணக் குப்பைகள் அறிவியலாகுமா ? உயர்சாதி இடஒதுக்கீடு சமூக நீதியா ?” என்ற தலைப்பில் கடந்த ஜன-25 அன்று சென்னை பெரியார் திடல் – அன்னை மணியம்மையார் அரங்கத்தில் பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு (CCCE) – வின் ஏற்பாட்டில் கருத்தரங்கம் நடைபெற்றது.
இக்கருத்தரங்கத்தில் பங்கேற்று, அறிவியக்கத்தின் அவசியம் என்ற தலைப்பில் CCCE அமைப்பைச் சேர்ந்த முனைவர் ரமேஷ் அவர்கள் உரையாற்றினார். அவரது உரையில், இன்றைய நிலையில் பொறியியல் படிக்கும் மாணவர்கள் கூட கட்டாயமாக சமஸ்கிருதம் படித்தாக வேண்டும் என்ற நிலையை கொண்டு வந்திருப்பதையும் என்பதையும் ஐ.ஐ.டி., எய்ம்ஸ்., என இந்தியாவின் எந்த ஒரு உயர்கல்வி நிறுவனத்தை எடுத்துக் கொண்டாலும் அங்கு சமஸ்கிருதத்தையும் புராணக் குப்பைகளும் கட்டாய பாடமாக திணித்து வருவதையும் அம்பலப்படுத்தி பேசினார்.
மேலும், பள்ளி கல்லூரிகளின் மாணவர்களின் சிந்தனைத் திறனை மழுங்கடிக்கும், இத்தகைய பாடத் திட்டங்களைக் கொண்டு வருவதன் மூலம், மாணவர்களை ஒரு அடிமையாக வளர்த்து, அவர்களின் ஆயுள் முழுவதும் அவர்களைச் சுரண்ட முடியும் என்பதையும், இதற்கு எதிராக பேராசிரியர்களும் மாணவர்களும் கல்வியாளர்களும் பெற்றோர்களும் சேர்ந்து ஓர் அமைப்பை உருவாக்காமல் நமக்கும் நம் தலைமுறையினருக்கு விடுதலை கிடையாது என்பதையும் சுட்டிக் காட்டினார்.
கலையரசன்“என் முதல் ஆசிரியர்”- மத்திய ஆசியாவில் எழுத்தறிவற்ற மக்களை, குறிப்பாக பெண்களை படிக்க வைத்த “கம்யூனிசக் கொடுங்கோன்மை(?)” பற்றி கூறும் குறுநாவல். கிர்கிஸ்தான் எழுத்தாளர் சிங்கிஸ் ஐத்மாத்தவ் எழுதிய நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பாக வெளிவந்துள்ளது. பெண்களின் கல்வி உரிமை தொடர்பாக அக்கறை கொண்டோர் அனைவரும் வாசிக்க வேண்டிய அருமையான நூல்.
சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர், ஆப்கான் பெண்களின் கல்வி உரிமை பற்றி உலகம் முழுவதும் விவாதித்தார்கள். பள்ளிக்கூடம் செல்ல முடியாத அந்நாட்டு பெண்களின் அவலங்களை எண்ணிப் பரிதாபப்பட்டார்கள். ஆனால், இன்று ஆப்கான் பெண்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் கபடவேடதாரிகள், அன்று ஆப்கானிஸ்தான் கம்யூனிச ஆட்சியை தீவிரமாக எதிர்த்தார்கள். தாங்கள் செய்வது என்னவென்று அறியாமல், கூடவே பெண்களின் கல்வி உரிமையையும் எதிர்த்தார்கள்.
ஆப்கானிஸ்தானில் உள்ள அதே இனத்தவரையும், மத, பண்பாட்டுக் கூறுகளையும் கொண்ட தாஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்ற அயல்நாடுகளில் ஏறத்தாழ அனைத்து பெண்களும் கல்வியறிவு பெற்றுள்ளனர். அந்தக் குடியரசுகள் முன்னர் ஒரு காலத்தில் சோவியத் யூனியனின் பகுதிகளாக இருந்த காரணத்தால் தான் இது சாத்தியமானது என்ற உண்மையை யாரும் சிந்தித்துப் பார்ப்பதில்லை.
பெரும்பாலும் பின்தங்கிய நாடோடி சமூக மக்களை கொண்ட மத்திய ஆசிய நாடுகளில், கம்யூனிசப் புரட்சிக்கு முன்னர் பள்ளிக்கூடங்களே இருக்கவில்லை. புல்வெளிகளில் கால்நடைகளை மேய்ப்பதை மட்டுமே பிரதானமாக கருதிய அந்த மக்கள், கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. பெண்கள் கல்வி கற்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாத காலம் இருந்தது. ஒவ்வொரு பெண் பிள்ளையும் பருவமடைந்ததும் பெற்றோரால் மணம் முடித்து வைக்கப்பட்டாள். ஏழைக் குடும்பத்தில் பிறந்த பெண் என்றால், வசதி படைத்த வயதான ஆணுக்கு இரண்டாவது அல்லது மூன்றாவது மனைவியாக வாழ்க்கைப்பட வேண்டி இருக்கும். இந்த உண்மைகளின் அடிப்படையில் எழுதப்பட்டது தான் “என் முதல் ஆசிரியர்” எனும் குறுநாவல்.
இந்தக் கதை முழுவதும் ரஷ்யப் புரட்சிக்கு பின்னரான காலத்தில் நடக்கிறது. துருக்கி மொழிக் குடும்பத்தை சேர்ந்த கிர்கீசிய மொழி பேசும், இஸ்லாமிய மதத்தை பின்பற்றும், நாடோடி மக்கள் சமூகங்களை கொண்ட கிர்கிஸ்தான் பிற்காலத்தில் தனியான குடியரசு ஆகியது. அயலில் உள்ள பிற மத்திய ஆசியக் குடியரசுகளுடன் ஒப்பிட்டால் கூட, கிர்கிஸ்தான் பிராந்தியம் நாகரிகத்தில் பல நூறாண்டுகள் பின்தங்கி இருந்தது.
இந்த நாவலில் வரும் தூய்ஷன் எனும் ஆசிரியர், கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்த பின்னர், தான் வாழும் குர்கிரி கிராமத்தில் ஒரு பாடசாலையை நிர்மாணிக்கிறார். அங்குள்ள பிள்ளைகளை பாடசாலைக்கு கூட்டிச் சென்று படிக்க வைப்பதில் அவர் பட்ட கஷ்டங்களை இந்த நாவல் விவரிக்கிறது.
அந்தப் பாடசாலையில் படிக்கும் கெட்டிக்கார மாணவியான அல்டினாய் என்ற பதினைந்து வயது சிறுமி, அவளது விருப்பத்திற்கு மாறாக குடும்பத்தினரால் கட்டாயக் கல்யாணம் செய்து வைக்கப்படுகிறாள். அதைத் தடுத்த ஆசிரியர் தூய்ஷன் அடித்து நொறுக்கப்படுகிறார்.
துள்ளித் திரிந்த பள்ளிச் சிறுமியான அல்டினாய், ஒரு வயதான ஆணுக்கு மனைவியாக வீட்டு அடிமையாக வாழ நிர்ப்பந்திக்கப்படுகிறாள். ஆசிரியர் தூய்ஷன் செம்படை வீரர்களை கூட்டிக் கொண்டு, அவள் இருக்குமிடத்திற்கு வந்து காப்பாற்றுகிறார். பின்னர் அவளை தொலைதூர நகரத்திற்கு அனுப்பி உயர்கல்வி படிக்க வைக்கிறார்.
ரஷ்யப் புரட்சிக்குப் பின்னர் வந்த சோவியத் அரசு, பிற நாட்டு அரசுகளைப் போன்று “உள்ளூர் மக்களின் பண்பாட்டுக்கு மதிப்பளித்து” ஒதுங்கி இருக்கவில்லை. அப்படி ஒதுங்கி இருந்தால், கிர்கிஸ்தான் இன்று இன்னொரு ஆப்கானிஸ்தானாக காட்சி அளித்திருக்கும். உண்மையில், சோவியத் அரசு தனி மனித உரிமைகளுக்கு எந்தளவு மதிப்பளித்துள்ளது என்பதை இந்த நாவலை வாசித்தால் புரிந்து கொள்ளலாம்.
இந்த நாவலில் வரும் பாடசாலை சுவரில் லெனின் படம் மாட்டப்பட்டிருந்தது. லெனின் மரணமடைந்த நேரம் மாணவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். இது போன்ற பகுதிகளை காட்டி, “பார்த்தீர்களா? கம்யூனிசப் பிரச்சாரம்!” என்று சில விஷமிகள் குறை கூறலாம். எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்றொரு தமிழ்ப் பழமொழி உண்டு. நாகரிக வளர்ச்சியில் பின்தங்கி இருந்த, எழுத்தறிவற்ற மக்கள் கல்வி கற்க வாய்ப்பளித்த, சோவியத் அரசையும், அதன் ஸ்தாபகரான லெனினையும் அந்த மக்கள் போற்றுவதில் என்ன பிழை இருக்கிறது?
கலையரசன்
கலையரசன் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர். வரலாறு, அரசியல், பண்பாடு ஆகியன குறித்து மார்க்சிய நோக்கில் கலையகம் தளத்தில் தொடர்ந்து எழுதி வருபவர். வெகுசன ஊடகப் பிரச்சாரத்தின் விளைவாக முதலாளித்துவக் கண்ணோட்டத்திற்கு தம்மையறியாமல் ஆட்பட்டிருக்கும் வாசகர்களை மீட்பதில் இவருடைய எழுத்தின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
சென்னையில் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று,
கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107. இடக்குறியீடு:
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி) அலைபேசி:99623 90277
சினிமா என்பது சமீப கால நிகழ்வுகளை பிரதிபலிக்கும் கண்ணாடியாக விளங்குகிறது.
அந்த வகையில் சமீபகால தமிழ் சினிமாக்களில் தொற்றா நோய்களை காமெடியாகவோ அல்லது செண்ட்டிமெண்ட்க்காகவோ சேர்க்கும் தன்மையை காண முடிகிறது.
சமீபத்தில் பார்த்த ரஜினி காந்த் நடித்திருக்கும் “பேட்ட” படத்தில் கூட வில்லனான சிங்கார் சிங் கதாபாத்திரத்திற்கு சிறுநீரகம் முழுவதும் செயலிழந்து தனது வீட்டின் மாடியிலேயே, வீட்டிலேயே ஹீமோ டயாலிசிஸ் (Hemodialysis) செய்து கொள்ளும் நிலையில் இருப்பதாக இயக்குநர் காண்பித்திருப்பார்.
படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் ரஜினி அவரைப் பழிவாங்க வரும்போது தப்பித்து சென்று விடாமல் இருப்பதற்காக அவருக்கு டயாலிசிஸ் செய்யுமாறு காண்பிக்கப்பட்டாலும் தற்போதைய நமது தமிழக நடப்பு நிலவரத்தை பிரதிபலிப்பதாகவே அந்த காட்சி அமைந்துள்ளது.
தமிழகத்தில் நீரிழிவு (Diabetes ) மற்றும் ரத்தக்கொதிப்பு போன்ற வாழ்வியல் நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அதிகமாகி வருகின்றனர்.
இவர்களில் கிட்னி ஃபெயிலியர் நிலையில் மாற்று கிட்னி வேண்டி காத்திருப்போர் பட்டியலில் பெரிதாகிக் கொண்டே செல்கிறது. தெருவுக்கு ஒரு கிட்னி நோயாளியாவது இருக்கும் நிலை தற்போது இருக்கிறது. இது நாளை குடும்பத்தில் ஒருவர் கிட்னி நோயாளியாக மாறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது
காரணம் 1980-களில் தெருவில் ஒருவருக்கு நீரிழிவு இருந்தது இப்போது குடும்பத்தில் ஒருவருக்கு நீரிழிவு இருக்கிறது.
மாதிரிப்படம்
நாளுக்கு நாள் டயாலிசிஸ் தேவைப்படும் நோயாளிகள் அதிகமாகி வருவதும், டயாலிசிஸ் மிகவும் தேவையான சிகிச்சையாக மாறியிருப்பதும் உணர்த்துவது
நாம் இனிவரும் பத்து வருடங்களில் அதிகமான கிட்னி நோயாளிகளைக் காண இருக்கிறோம் என்பதைத்தான்.
இந்த கட்டுரை வழியே கிட்னி நோயாளிகள் ஏன் தோன்றுகிறார்கள் என்று காண்போம்.
நீங்கள் தமிழகத்தில் எங்கு இருந்தாலும் சரியே.
அருகில் இருக்கும் மருத்துவமனையில் டயாலிசிஸ் யூனிட் இருந்தால் அங்கு சென்று டயாலிசிஸ் செய்து விட்டு வெளியே வரும் மக்களிடம், ஏன் டயாலிசிஸ் செய்யும் நிலை உங்களுக்கு வந்தது? என்று கேளுங்கள்;
99 சதவிகிதம் பேர் கண்டிப்பாக தங்களுக்கு நீரிழிவு அல்லது ரத்தக்கொதிப்பு இருந்ததாகவும் அதை சரியாக கட்டுக்குள் வைக்கவில்லை எனவும் கூறுவதைக் கேட்கலாம்.
நீரிழிவு மற்றும் ரத்தக்கொதிப்பு ஆகிய இரண்டு நோய்களும் தங்களது முதல் எதிரியாக நினைப்பது “சிறுநீரகங்களைத்தான்” எக்காரணம் கொண்டும் நீரிழிவு மற்றும் ரத்தக்கொதிப்பை அதன் அளவுகளுக்குள் நீங்கள் வைக்காவிட்டால் உங்கள் கிட்னிகள் பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்புகள் மிக அதிகம்.
தொற்றா நோய்களான நீரிழிவு மற்றும் ரத்தக்கொதிப்பு ஆகிய இரண்டையும் சரி செய்ய அறிவியல் பூர்வமான சிறந்த வழி அதற்குரிய நவீன அறிவியல் பயின்ற மருத்துவரைச் சந்தித்து மருத்துவ சிகிச்சை எடுக்க வேணடும். கூடவே உணவு முறை மாற்றம் செய்ய வேணடும்.
அதிக மாவுச்சத்து உணவு முறை என்பது நீரிழிவையும் ரத்த கொதிப்பையும் அதிகப்படுத்தும். ஆகவே மாவுச் சத்தை குறைத்து உண்பது அறிவியல்பூர்வமாக நீரிழிவு மற்றும் ரத்தக் கொதிப்பை குறைக்க உதவும்.
இது கூட தினமும் ஒரு மணி நேரம் நடை பயிற்சி அல்லது தங்களது அலுவலகப் பணிகளுக்கிடையே 10,000 நடைகள் நடந்திருக்க வேணடும். மன அழுத்தத்தை முடிந்த அளவு திறனுடன் கையாண்டு மன அழுத்தம் நமது உடலை பாதிக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். தினமும் ஏழு மணிநேரமாவது உறக்கம் வேண்டும்.
நீரிழிவு மற்றும் ரத்தக்கொதிப்பு குறித்த மூடநம்பிக்கைகளை நம்பாமல் அறிவார்ந்து சிந்தித்து அறிவியல் கூறிய முறைப்படி அதை கட்டுக்குள் வைக்க வேண்டும். “நீரிழிவு மற்றும் ரத்தக்கொதிப்பு போன்றவை நோய்களே அல்ல என்று பொய்களை நம்பிக்கொண்டு சிகிச்சை எடுக்காமல் இருந்தால் பின்னாளில் சிறுநீரகம் முழுதாக செயலிழந்து விட்ட பிறகு அதை சரிசெய்ய முடியாது.
மேலும் முழுதும் செயலிழந்து விட்ட கிட்னியை வைத்து பல மூடநம்பிக்கைகள் மற்றும் போலி மருத்துவ சிகிச்சைகள் வளர்ந்து மக்களை சுரண்டுகின்றன. முழுவதும் செயலிழந்த கிட்னியை முற்றிலும் சரிசெய்கிறேன் என்று யாராவது கிளம்பினால் அது முற்றிலும் பொய் புரட்டு வேலை.
காரணம் முழுவதும் செயலிழந்த கிட்னியில் நூறு சதவிகிதம் அதில் உள்ள நெஃப்ரான்கள் எனும் நுண்ணிய செல்கள் அழிந்திருக்கும். நெஃப்ரான்கள் முழுவதும் அழிந்துவிட்ட நிலையில் அதை சரிசெய்து செப்பனிடுவது முடியாத காரியம்.
இதற்காகவே கண்டறியப்பட்ட முக்கிய உயிர்காக்கும் சிகிச்சைதான்
டயாலிசிஸ் என்பதாகும். இந்த டயாலிசிஸ் என்பது இயந்திரத்தின் உதவியுடன் சிறுநீரகம் செய்யும் வேலையை செய்வதாகும்.
சிறுநீரகங்கள் இரண்டும் இயற்கையாக செய்யும் வேலை என்ன?
நமது ரத்தத்தில் உள்ள கழிவுப் பொருட்களை அனுதினமும் சுத்தம் செய்வது கிட்னிகளில் உள்ள நெஃப்ரான்களாகும்.
கிட்னிகள் சரியாக வேலை செய்கின்றன என்பதை எளிதாக நாம் எப்படி அறிந்து கொள்ள முடியும் ?
ஒரு வீட்டில் நாம் தூய்மை செய்ய ஒரு பணியாளரை நியமிக்கிறோம். அவர் தினமும் சரியாக வேலை செய்வதை எப்படி நாம் கண்காணிக்க முடியும் ?
வீட்டில் சேரும் குப்பைகளின் அளவை வைத்து அவர் செய்யும் பணியை அளவிட முடியும். வீட்டில் குப்பையே இல்லையெனில் பணியாளர் தன் பொறுப்பை சிறப்பாக செய்கிறார் என்று அர்த்தம். குப்பை அதிகமாக சேர்ந்தால் அவர் பொறுப்பை சரியாக செய்யவில்லை என்று அர்த்தம்.
இது போலத்தான் நமது ரத்தத்தில் கழிவுப்பொருட்களான யூரியா மற்றும் க்ரியாடினின் ஆகிய இரண்டும் சரியாக இருந்தால்.. துப்புறவுப்பணியாளரான கிட்னி சரியாக வேலை செய்கிறது என்று அர்த்தம்.
இந்த இரண்டும் தன் அளவுக்கு மேல் இருந்தால் கிட்னி சரியாக வேலை செய்யவில்லை என்று அறிய முடியும்.
மேலும் ஆரம்பகட்ட கிட்னி செயலிழப்பை கிட்னி வழியாக ஆல்புமின் எனும் புரதம் கசிவதைக்கொண்டு அறிய முடியும். நுண்ணிய அளவில் இந்த புரதம் சிறுநீரில் வெளியேறுவது (microalbuminuria) என்பது கிட்னி செயலிழப்பின் ஆரம்பக்கட்ட நிலையை குறிக்கும்.
இது நீரிழிவு மற்றும் ரத்தக்கொதிப்பு நோயாளிகளுக்கு நிகழும் விசயமாகும்.
இதை உடனே அறிந்து சரியான சிகிச்சை எடுத்தால் கிட்னியை சீர் செய்ய இயலும்.
முழுவதும் கிட்னி செயலிழந்து விட்டது. இப்போது இதற்குரிய சரியான சிகிச்சை எது?
முழுவதும் செயலிழந்து விட்ட கிட்னிக்கு சரியான சிகிச்சை என்பது மாற்று கிட்னியை பொறுத்துவதே ஆகும். இதை கிட்னி மாற்று அறுவை சிகிச்சை என்கிறோம். (Kidney Transplantation)
அரசாங்கத்தால் கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கென தனி குழு அமைக்கப்பட்டு அந்த குழு கிட்னி வேண்டி காத்திருப்போர் பட்டியல் அடங்கிய ரிஜிஸ்டரை பராமரிக்கிறது.
மாதம் ஒரு முறை இந்தக் குழு கூடி கிட்னி தேவைப்படுவோருக்கு அதைக் கொடுக்க சம்மதிக்கும் நபரிடம் இருந்து பெற்று தருகிறது. இறந்த நபர்களிடம் இருந்து பெறப்படும் உறுப்பு மாற்று சிகிச்சைக்கு பெயர் (cadaver transplant ). நெருங்கிய ரத்த உறவு முறைகளிடம் இருந்து வாங்கப்படும் கிட்னிகளையும் பொறுத்த முடியும்.
இந்த கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு மருத்துவமனையை பொறுத்து பத்து லட்சம் முதல் இருபது லட்சம் வரை செலவாகும். மேலும் மாற்று அறுவை சிகிச்சை செய்தபின் மாத மாதம் உண்ண வேண்டிய எதிர்ப்பு சக்தி குறைப்பு மருந்துகளுக்கு ₹20,000 வரை செலவாகும்.
இந்த அறுவை சிகிச்சையையும் மாத்திரைகளையும் அரசாங்க மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இலசவசமாகவும் பெற முடியும்.
சரி, கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்யும் காலம் வரை எப்படி உயிரைக் காப்பது?
கிட்னி வேலை செய்ய மறுத்துவிட்ட நிலையில் அந்த வேலையை செய்ய நமக்கு இருக்கும் ஒரே உயிர்காக்கும் சிகிச்சை “டயாலிசிஸ்” எனும் உயிர்காக்கும் சிகிச்சை ஆகும்.
வாரம் இரண்டு முறை செய்யப்படும் இந்த சிகிச்சை மூலம் ரத்தத்தில் சேர்ந்த கழிவுகளை செயற்கையாக நாம் சுத்திகரிக்கிறோம். ஆபத்தான பல கழிவுகள் உடலில் சேர்ந்தால் மரணம் நேரும். இதில் இருந்து டயாலிசிஸ் நம்மைக் காக்கிறது.
டயாலிசிஸ் குறித்து பரப்பப்படும் தேவையற்ற அச்சத்தால், முழுதும் பழுதடைந்த கிட்னிகளை கொண்ட நபர்களும் டயாலிசிஸ் செய்து கொள்ளாமல் போலி மருத்துவர்களை நாடி அதனால் இறக்கின்றனர்.
ஒரு டயாலிசிஸ்க்கு தற்போது ₹1,200 முதல் 2,000 வரை செலவாகிறது. தமிழக முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் டயாலிசிஸ் பல தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக செய்யப்படுகிறது.
அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் டயாலிசிஸ் இலவசமாக செய்யப்படுகிறது. இதை அனைத்து மக்களும் உபயோகப்படுத்திக்கொள்ள வேண்டும்.
வீட்டிலேயே வயிற்றின் மூலம் செய்து கொள்ளும் Peritoneal Dialysis என்ற சிகிச்சையும் உண்டு. ஆனால் பின்னதை விட Hemo Dialysis சிறந்தது.
இககட்டுரை வழி நான் கூறவருவது…
நீரிழிவு மற்றும் ரத்தக்கொதிப்பு நோயாளிகள் தங்களது சர்க்கரை மற்றும் ப்ரஷரை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். தங்களது சிறுநீரகம் நன்றாக செயல்படுகிறதா ? என்று அவ்வப்போது கவனிக்க வேண்டும்.
சிறுநீரகம் செயலிழந்தவர்கள் கண்டிப்பாக சிறுநீரக சிறப்பு நிபுணரை அணுகி அதற்கான சிகிச்சை பெற வேண்டும்.
டயாலிசிஸ் என்பது உயிர்காக்கும் சிகிச்சையாகும். அதைப்பற்றிய வதந்திகள் தேவையற்றது. யாருக்கேனும் கிட்னி முழுவதுமாக பழுதடைந்தால் கட்டாயம் டயாலிசிஸ் அவரது உயிரைக்காக்கும்.
*****
வில்லனுக்கு கிட்னி பிரச்சினை இருந்து, அதனால் அவருக்கு டயாலிசிஸ் செய்யப்படுவதை காட்சியாக வைத்து இந்த கட்டுரையை எழுத உந்திய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜிற்கு நன்றி.
நன்றி :ஃபேஸ்புக்கில் –Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.
சாலைகளின் பெயர்களில் சொல்வதற்கு ஏதேனும் ஒரு கதை இருக்கும். கல்கத்தாவின் நெடிய தொடர்ச்சியான வரலாற்றில் அது இன்னும் கூடுதலாகவே இருக்கிறது. வடகிழக்கு கல்கத்தாவின் பாக்பாஸர் (Baghbazar) பகுதியில் மர்ஹாட்டா அகழி சந்து (Marhatta Ditch Lane) பெயரிடப்பட்ட பின்னணியில் அது போன்ற சுவாரசியமான கதை ஒன்று உள்ளது.
கல்கத்தாவின் வடகோடியில் 1740-களில் அந்த அகழி எதற்காக கட்டப்பட்டது? அந்த காலகட்டத்தில் வங்காளியர்களை படுகொலை செய்து கொண்டிருந்த மராட்டியத்தின் குதிரைப்படையை தடுக்கவே அது கட்டப்பட்டது.
இரகோஜி போஸ்லே.
1741-ம் ஆண்டுவாக்கில், பாஸ்கர் பண்டிட்டின் தலைமையில் அன்றைய நாக்பூர் மராட்டிய மன்னரான இரகோஜி போஸ்லேவின் (Raghoji Bhosle) குதிரைப்படை மேற்கு வங்கத்தை கொள்ளையிடத் தொடங்கியது. இந்த மராட்டியர்களை வங்காளிகள் பார்கிகள் என்றழைத்தனர். இது பர்கிர் (மூலச்சொல்-பாரசீகம்) என்ற மராட்டி சொல்லின் திரிபு. அகமத்நகரின் புகழ்பெற்ற முதன்மை அமைச்சரான மாலிக் அம்பர் (Malik Ambar) பீடபூமிக்கே உரித்தான கொரில்லா போர்முறையை நேர்த்தியாக்கியிருந்தார். அது அன்று பார்கிர் – கிரி (bargir-giri) என்றழைக்கப்பட்டது. அதிரடியாக தாக்கி மறையும் இந்த போர்த் தந்திரம் பீடபூமி வரித்துக்கொண்ட போர்முறையின் தவிர்க்கவியலாத ஒரு அங்கமானது. இதை பயன்படுத்திதான் சிவாஜி மிகப்பெரிய வெற்றி பெற்றார். கெடுவாய்ப்பாக, அதே போர்தந்திரம்தான் வங்கத்து மக்கள் மீது பின்னர் மராட்டியர்களால் தொடுக்கப்பட்டது.
பார்கிர் – கிரி:
1740-களில், வங்கத்தை ஆட்சி செய்து கொண்டிருந்த நவாப் அலிவர்டி கானின் (Nawab Alivardi Khan) படைகளை போஸ்லேவின் பார்கிரி-கிர் கொரில்லாப்படை திக்குமுக்காட செய்து கொண்டிருந்தன. சில நேரங்களில் நேருக்கு நேரான மோதல்களில் மராட்டிய படைகளை வங்க படைகள் தோற்கடித்தாலும், கொள்ளையடிப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டிருந்த மராட்டிய கொரில்லா படைகள் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த கானின் வங்கத்துப்படைகளை எளிமையாக பிளந்து சென்றன.
இப்படி பத்து ஆண்டுகளாக தொடர்ந்து வங்கத்தை தாக்கி கொள்ளையடித்த மராட்டிய படையினால் வங்க மக்களுக்கு ஏற்பட்ட விளைவுகளாக அளப்பரிய உயிர்பலி உள்ளிட்ட மனித துன்பங்கள் முதல் பொருளாதார நெருக்கடி வரை ஏற்பட்டன. சமகாலத்து டச்சு தகவல்களின் படி, மேற்கு வங்கத்தின் புகழ்பெற்ற வணிகர்கள் உட்பட 4 இலட்சம் வங்க மக்களை மராட்டியர்கள் படுகொலை செய்தனர் என்று வரலாற்றாய்வாளர் பி.ஜெ மார்ஷல் எழுதுகிறார். இத்தகைய இழப்புகள் வங்கத்தை நிரந்தரமாக முடக்கியதாக அவர் மேலும் கூறுகிறார்.
கொரில்லா படைகளால் ஏற்பட்ட சேதங்களை மகாராட்டிர புராணத்தில் தான் எழுதிய வங்கப் பாடலொன்றில் பின்வருமாறு கூறுகிறார் கங்காராம்,
இச்சமயத்தில் ஒருவரும் தப்பவில்லை, பார்ப்பனர், வைணவர்கள், துறவிகள் மற்றும் குடும்பத்தினர், அனைவருக்கும் விதி ஒன்றுதான், பசுக்களுடன் மனிதர்களும் கொல்லப்பட்டனர்.
இப்படி பார்கிகளின் பயங்கரவாதம் அளப்பரியதாக இருந்தது. இது வங்கத்து தாலாட்டுப் பாடல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் வங்கத்து தாய்மார்கள் மராட்டிய படைகளின் தாக்குதலுக்கு பயந்து தங்கள் குழந்தைகளை தூங்கச் செய்வதற்கு கூட பயப்படுவார்கள் என்று வருகிறது. வங்காளிகளிடையே இன்றும் இக்கவிதைகள் பிரபலமாக இருக்கின்றன. அதில் ஒன்றின் சுமாரான மொழியாக்கம்,
குழந்தைகள் தூங்கும் போது, எங்கும் நிசப்தம் சூழ்ந்த சமயத்தில், பார்கிரிகள் நம்முடைய நாட்டிற்குள் வருவார்கள் பறவைகள் விதைகளை தின்று விட்டன, என்னால் எங்கனம் திரை செலுத்த முடியும் (பார்கிக்கு)? நம்முடைய உணவும் குடிநீரும் தீர்ந்து விட்டன, என்னால் எங்கனம் திரை செலுத்த முடியும்? சிலநாட்கள் காத்திருங்கள், நான் பூண்டு விதைத்திருக்கிறேன்.
கல்கத்தாவின் அகழிகள்:
கிராமப்புறங்களை மட்டுமல்ல வங்கத்தின் தலைநகரான முர்ஷிதாபாத்தையும் மராட்டிய பார்கிகள் விட்டு வைக்கவில்லை. அன்றைய காலகட்டத்தில் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களின் ஒருவரான மார்வாரி வங்கியாளர் ஜகத் சேத்தின் (Jagat Seth) மாளிகையையும் அவர்கள் கொள்ளையடித்தனர்.
ஆயினும், ஆங்கிலேயர்களின் தகவல்கள் படி கல்கத்தாவை மராட்டியர்கள் ஒருபோதும் தாக்கவில்லை. மேலும் அகழியின் தெற்கு பகுதியில் “உண்மையான” கல்கத்தாவில் வாழ்ந்த மக்களுக்கு அகழி தோண்டுபவர்கள் (ditchers) என்று பெயர் வந்தது. இன்று இந்த அகழி மூடப்பட்டு மேல் வட்ட சாலையாக போடப்பட்டுள்ளது.
பத்தாண்டுகள் தொடர் கொள்ளைத் தாக்குதலுக்குப் பின்னர் தோல்வியை நவாப் ஒப்புக்கொண்டதாலும் ஒரிசாவையும் ரகோஜி போஸ்லேவிடம் ஒப்படைத்ததாலும் மாராத்தாக்கள் தாக்குதலை நிறுத்திக் கொண்டனர்.
வரலாற்றை இந்துத்துவ கண்ணாடியால் ஊடுருவுதல்:
ஆகார் படேல் (Aakar Patel) தன்னுடைய கட்டுரையில் குறிப்பிடுவது போல, மாராத்தாக்களின் இந்த வரலாறு உண்மையாக ஒருபோதும் நினைவுக் கூறப்படுவதில்லை. மாராத்தாக்கள் எப்பொழுதுமே தேசப்பற்றாளர்களாகவும் இந்தியா அல்லது இந்து தேசியத்திற்கு உறுதுணை புரிந்தவர்களாகவே சித்தரிக்கப்படுகின்றனர். இது ஒரு பொதுவான போக்கு. மேலும் கட்டுக்கதைகளின் மூலமாகவே நவீன நாடுகள் வரலாற்றை உருவாக்குகின்றன. இசுலாமிய தேசியம் என்பது குதுப்-உத்-தீன் ஐபக்கின் (Qutb-ud-din Aibak) காலந்தொட்டே இருப்பதாக பெரும்பாலான பாகிஸ்தானியர்கள் கருதுகின்றனர். அதே போலவே விநாயக் சாவர்க்கரின் சொற்களில் சொல்வதெனில், “ஹிந்து பாத் பாத்ஷாஹி” (Hindu Pad Padshahi) யை உருவாக்கும் நோக்கிலேயே மாராத்தாக்களால் இந்து தேசியம் வளர்க்கப்பட்டதாக பெரும்பாலான இந்துக்கள் கருதுகின்றனர்.
குதுப்-உத்-தீன் ஐபக்.
பீடபூமியின் இசுலாமிய சுல்தான்கள் மற்றும் முகலாயர்களிடமிருந்து எப்படி எந்த சிக்கலுமில்லாமல் பாரசீக மொழியிலான “ஹிந்து பாட் பாஷ்சஹி” என்ற சொற்றொடர் மாராத்தாக்களால் முற்றிலும் எடுத்துக் கொள்ளப்பட்டது என்பது இங்கே முரண்படுகிறது. இப்படி வரலாற்றை எளிமையாக புரிந்து கொள்வது, “இந்து பெரும்பான்மை” வாழ்ந்த மேற்கு வங்கத்தை தாக்கி கொள்ளையிட்ட மராட்டியர்கள் பாத்திரத்தையும், அவர்களை துரத்துவதற்கு ஒரு “முஸ்லீம் நவாப்” போராடியதையும் எளிமையாக கடந்து செல்வதற்கே வழி வகுக்கிறது. இன்றைய இந்தியா “இந்து” மற்றும் “முஸ்லிம்” என்ற இருமைகளாக பார்க்கப்படுகிறது. அது கடந்த காலத்தையும் அதே பார்வையிலேயே பார்க்க முயல்கிறது. ஆனால், கடந்த காலத்தில் இருந்தது முற்றிலும் வேறான ஒரு நாடு.
“பொருள் இல்லார்க்கு இவ்வுலகு இல்லை” என்பார்கள். அது ஆன்மிகத்தில் இன்னும் அதிகம் என்பதே நிதர்சனம். கும்பமேளா என்ற பெயரில் யோகி ஆதித்யநாத் அரசு நடத்தும் பாஜக-வின் அரசியல் மேளாவிற்கான ஏற்பாடுகளை அனைத்து ஊடகங்களும் புளகாங்கிதமடைந்து உச்சிமுகர்ந்து பாராட்டுகின்றன.
கும்பமேளாவிற்காக வருகை தந்துள்ள நடுத்தர மக்கள் மத்தியில் ஆன்மிக சிந்தனை பெயரளவிலும் சுற்றுலாவிற்கு வந்த மனநிலையே மேலோங்கியும் இருந்தது. சாதாரண மக்கள் அனுபவிக்க முடியாத, இதுவரையிலும் பார்த்திராத இந்த விழா ஏற்பாடுகளை இலயித்துப்போய் சொல்கிறார்கள் உள்ளூர் மக்கள்.
சங்கம் என்று அழைக்கப்படக்கூடிய கங்கை, யமுனை மற்றும் கற்பனை நதியான சரஸ்வதி ஆகியவை ஒன்றுகலக்கும் இடமான முக்கூடல் பகுதிக்கு அருகில் பணக்காரர்களுக்கான குடில்களும், சாதாரண மக்களுக்கு தொலைவிலும் குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பணக்காரர்கள் தங்கள் பக்தி நிலைக்கும், சக்தி நிலைக்கும் ஏற்ப ஒரு நாளைக்கே சிலபல ஆயிரங்களில் செலவு செய்து தங்கி இருந்து தங்களின் பாவங்களைக் கழுவிச் செல்கின்றனர்.
1 of 2
ஆம்! உத்திரப் பிரதேசத்தின் சுற்றுலா துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சங்கம் டெண்ட் காலனி பகுதியில் ஒரு நாளைக்கான கட்டணம் உங்களின் விருப்பத்திற்கேற்ப 9,000/- ரூபாயிலிருந்து 18,000/- வரை உள்ளது. இவை இல்லாமல் கூடுதல் வரியும் வசூலிக்கப்படுமாம். வரிகள் உட்பட இவற்றின் கட்டணம் 12,000/- முதல் 24,000/- ரூபாயாக வருகிறது. இவை அனைத்தும் ஒரு நபருக்கானது மட்டுமே. உங்களுடன் கூடுதல் நபர்கள் வந்தால் அவர்களுக்கு தலா ஒரு நபருக்கு 15% மொத்த கட்டணத்தில் கூடுதலாக வசூலிக்கப்படும்.
1 of 2
இந்த குடில்களின் பெயரே நமக்கு சொல்லிவிடும் இவை யாருக்கானவை என்பதை. ரூ.9,000/- செலுத்துபவர்களுக்கான குடில்களின் பெயர் SWISS Cottage (சுவிஸ் காட்டேஜ்) மற்றும் ரூ.18,000/- செலுத்துபவர்களுக்கான குடிலின் பெயர் Maharaja Swiss Cottage (மஹாராஜா சுவிஸ் காட்டேஜ்). என்று தனித்தனியாக பிரித்து வைத்திருக்கிறது உ.பி டூரிஸம். நம்மைப் போன்ற ஏழைகள் அதன் உள்ளே சென்று பார்ப்பதற்கு கட்டணம் நிரணையித்தால்கூட அந்தக் காசை கொடுக்க முடியாது. அந்தளவிற்கு அதன் பாதுகாப்பும், இன்னபிற வசதிகளும் உள்ளன. அத்துவான வெளியிலே ஒரு ஐந்து நட்சத்திர விடுதியின் வசதிகளைக் கொண்டு வந்திருக்கிறார்கள். அதனால்தான் அதற்கு சுவிஸ் என்றும் பெயரிட்டிருக்கிறார்கள். கும்பமேளாவிற்கான குடிலாக இருந்தாலும் அதற்கு இந்துத்துவப் பெயர்கள் வைக்க முடியாமல் போயிருக்கிறது. ஒருவேளை வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு பிருந்தாவனம், கிஷ்கிந்தா என்று வைத்தால் செட்டாகாது என்று கூட நினைத்திருக்கலாம்.
அதேபோல், ஆயுர் யுனிவெர்ஸ் என்ற நிறுவனம் தங்கள் பயனாளர்களுக்காக டீலக்ஸ் காட்டேஜ், லெக்சுரி காட்டேஜ் என்று வைத்திருக்கிறார்கள். சுமார் 25 ஏக்கரில் இந்த காட்டெஜ் அமைக்கப்பட்டுள்ளது. தரமான இருக்கை வசதிகளுடன் 100 குடில்கள் உள்ளன. அதன் வசதிகள் நம்மை மிரட்சியடைய வைக்கின்றன. வை-ஃபை இன்டர்நெட், டபுள் அண்ட் சிங்கிள் பெட் ரூம், வெஸ்டெர்ன் டாய்லட், ஹாட் வாட்டர் என்று வைத்திருக்கிறார்கள்.
தூங்கி எழுந்ததும் கங்கையின் அழுக்கு நிறைந்த அழகை ரசித்தவாறே நீங்கள் போட்டிங் செல்ல முடியும். அதற்காக இந்த நிறுவனமே சொந்த படகுகளை வைத்துள்ளது.
1 of 2
பசுமையான செயற்கைத் தோட்டங்கள், சங்கத்திற்கு அருகே குடில்கள் இருப்பதால் நதிகளை பார்த்துக்கொண்டே காலை நடை செல்லலாம். தியானம் மற்றும் யோக மையம், நாகா மற்றும் அக்காராஸ்களுக்கு செல்வதற்கான வழிகாட்டுதல்கள், யாருடைய தொந்தரவும் இல்லாமல் குளிப்பதற்கு தனியான இடம், உண்ணுவதற்கென்றே அமைக்கப்பட்டுள்ள தரமான உணவகம், மாலை நேரம் நெருங்க நெருங்க இசையுடன் கூடிய விருந்தோம்பல்கள், குளிருக்கு இரவு நேர நெருப்பு, இவற்றை எல்லாம் தின்னு கழிக்க அட்டாச்சிடு பாத்ரூம்; அதற்கு துப்பாக்கி ஏந்திய போலீசு பாதுகாப்பு என்று சகலமும் வைத்துள்ளனர்.
1 of 5
அதேபோல் கல்ப வ்ரிக்ஷ் என்ற பெயரில் யமுனா நதிக்கரையில் நூற்றுக்கணக்கான குடில்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கூட்டு உரிமையாளரில் ஒருவர் அலகாபாத்தின் லல்லூஜி பிரதர்ஸ்.
லல்லூஜி பிரதர்ஸ் அலகாபாத்தின் புகழ்பெற்ற ஒரு ஒப்பந்ததாரர். கார்ப்பரேட் ஈவண்ட், திருமண நிகழ்ச்சி போன்றவற்றிற்கு ஸ்டீல் ஸ்ட்ரெச்சர் உருவாக்குவதிலும்; பெரு நிறுவனங்களுக்கு உலோகம், அலுமினியம் மற்றும் கனிம, ஸ்டீல் மற்றும் துருப்பிடிக்காத ஸ்டீல் கட்டமைப்பு உருவாக்கி கொடுப்பவரும்கூட. இத்தொழிலில் நான்கு தலைமுறை அனுபவமும், தனக்கு இருக்கும் செல்வாக்கையும் பயன்படுத்தி அரசின் பல ஒப்பந்தங்களை பெற்றுவரும் ஒரு கார்ப்பரேட் ஒப்பந்ததாரர்.
இந்த கல்ப வ்ரிக்ஷ் 3 வகையான அறைகள், KV Dorms, KV Cottages மற்றும் KV Luxury ஆகிய முறைகளில் குடில்களை வழங்கி வருகிறது. குறைந்தபட்சம் படுத்துக் கொள்வதற்கு ஒரு படுக்கை – தலையணைக்கு ரூ.600 தொடங்கி, சகல வசதிகளையும் பெற அதிகபட்சமாக ரூ.11,000 வரை வாங்குகிறது. இது சாதாரண நாட்களுக்கும், சிறப்பு நாட்களுக்கும் வேறுபடும். கல்ப விரிக்ஷின் இடம் சங்கத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது. இரும்பு தகடால் போடப்பட்ட சாலை வசதியும் உள்ளது. குடிலுக்கு செல்ல போட் வசதியும் உள்ளது.
இவை இன்றி இன்னமும் பல்வேறு நிறுவனங்களும் இது போன்ற தங்கும் இடங்களை ஏற்பாடு செய்து அவற்றை வாடகைக்கு விட்டு வருகின்றன. அவை ஒவ்வொன்றும் தங்கள் விருப்பத்திற்கேற்ப வாடகைகளை நிர்ணயித்துள்ளனர். இப்படியாக கும்பமேளாவின் மூலம் பாஜக தனது ஆதரவு நிறுவனங்களுக்கு பெரும் வருவாய் ஏற்பாடு செய்திருப்பதோடு, மக்களிடம் இந்துத்துவ சாம்பியனாக காட்டிக் கொள்ளவும் முயல்கிறது.
இந்த பிரமாண்ட தற்காலிக குடில்களுடன் கங்கை ஆற்றங்கரையில் நிரந்தரமாக குடியிருக்கும் குடிசைப் பகுதியைப் பார்த்தால்மேன்மக்களுக்கு எரிச்சல் வரும். இந்த ஏழைகள் கும்பமேளாவின் அழகை சீர்குலைப்பவர்கள், இவர்களை அப்புறப்படுத்தினால்தான் மேளா முழு அழகையும் பெறும் என்ற சிந்தனை வெண்தோல் இந்தியர்களுக்கு நிச்சயமாக எழும்.
“பாஜிராவ் மஸ்தானி” என்ற படத்தில் பேஷ்வா மன்னனாக வரும் ரன்வீர் காய்ச்சலால் நர்மதை நதிக்கரையோரம் டெண்ட் அமைத்து ஓய்வெடுக்க அறிவுறுத்தியிருப்பார்கள்.
அதைப்போலவே யமுனா மற்றும் கங்கா நதிக்கரையை ஆக்கிரமித்து தற்காலிக குடில்கள் அமைக்க அனுமதியளித்திருக்கிறது யோகியின் இந்துமதவெறி கும்பல். ரன்வீருக்கு வந்தது காதல் காய்ச்சல் என்றால் பணக்கார மேட்டுகுடிகளுக்கு வந்திருப்பதோ ஆன்மீகக் காய்ச்சல். இவர்கள் தங்களின் ஆன்மீக அனுபவத்தை சிலாகித்து சொல்லுவார்கள். இதனை பயன்படுத்தி கார்ப்பரேட்டுகள் நிச்சயம் ஒரு தொகையை கறந்து விடுவார்கள். அதில் பாஜக கும்பலுக்கும் பங்கு போய்விடும்.
ஆனால், பக்தியின் பால் வந்துள்ள ஆயிரக்கணக்கான ஏழை பக்தர்கள் எலும்பைத் துளைக்கும் குளிரிலிருந்து காத்துக்கொள்ள ஆங்காங்கே சிறு கூடாரம் அமைத்து கீழே உமியை கொட்டி நிரவி படுக்கையை தயார் செய்து கொண்டனர். அதற்கும் வழியில்லாதவர்கள் திறந்தவெளியில் இரவின் உறைபனிகுளிரில் உறைந்துகிடந்தனர். இதன்படி பார்த்தால் கும்பமேளா ஏற்பாடுகள் எவையும் சாதாரண மக்களுக்கு அல்ல. ஊடகங்கள் வியந்தோடும் கும்பமேளா கட்டமைப்புகள் அனைத்தும் மேன்மக்களுக்கானது மட்டுமே. கடவுள், மதமும் கூட வர்க்க பிரிவினைக்கு உட்பட்டதே என்பதற்கு கும்பமேளாவும் விதிவிலக்கு அல்ல!
கேள்வி: வணிக ஊடக பத்திரிகையாளர் – மாற்று ஊடக பத்திரிகையாளர் என்ன வேறுபாடு ? இந்தப் பதிவில் ஆசிரியர் அளித்துள்ள பதிலுக்கு நான் முழுமையாக உடன்படுகிறேன். நான் ஒரு பிரபல தனியார் செய்தி ஊடகத்தில் பணியாற்றுகிறேன். அடித்தட்டு மக்களுக்காக குரல் கொடுக்கவும், அதிகார வர்க்கத்தை நோக்கி கேள்வி எழுப்பவும் ஊடகத்துறைக்குள் நுழைந்தவன் நான். முன்பு பணியாற்றிய ஊடகத்திலும், இப்போது பணியாற்றும் ஊடகத்திலும் பல்வேறு சிறப்பு செய்தித் தொகுப்புகளை துணிச்சலாக வெளியிட்டுள்ளேன். அதில் சில கருத்துக்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளது உண்மை தான். ஆனால் என்னால் முடிந்த ஏதோ ஒன்றை செய்ய முடிகிறது என்ற திருப்தி ஒருபக்கம் இருந்தாலும், பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை என்ற வருத்தமும், நாமும் கார்ப்பரேட் அடிமையாகி விட்டோமோ என்ற அச்சமும் எனக்குள் எழுந்து கொண்டே இருக்கிறது.
லோயர் மிடில் கிளாஸ் குடும்ப பின்னணியில் இருந்து வந்த என்னை பொருளாதார சுமையும் ஒரு பக்கம் அழுத்திக் கொண்டிருக்கிறது. வணிக ஊடகத்தில் இருந்துகொண்டு சமூக சீர்திருத்தங்களை மேற்கொள்ள முடியாதா? மேற்கொள்வதற்கு ஏதேனும் யோசனை இருந்தால் சொல்லுங்க….
ஊடகத்துறைக்குள் நுழைவதற்கு முன்பிருந்தே உங்கள் பதிவுகள் தொடர்ந்து வாசித்து வருகிறேன். தொடரட்டும் உங்கள் உண்மையான ஊடகப்பணி.
– ஒரு பத்திரிகை நண்பர்
அன்புள்ள நண்பருக்கு,
மக்கள் பால் நேசமும், அதை போதுமான அளவு செய்ய முடியாத குற்ற உணர்வும் கொண்டிருப்பதற்கு முதற்கண் வாழ்த்துக்கள்! இந்த உணர்வு நீடிக்குமளவு சமூக மாற்றத்திற்கான உங்களது முயற்சிகளும் வெற்றி பெறும். வணிக ஊடகங்களில் கூட வரம்பிற்குட்பட்ட அளவில் மக்களுக்கு நன்மை தரத்தக்க வேலைகள் சிலவற்றை செய்ய முடியும். ஆனால், நிரந்தரமாகவும், பிரச்சினைகளின்றியும் செய்ய இயலாது. செய்யக்கூடியவற்றை செய்வதற்கு கூட நாம் ஒரு உறுதியான ஆளுமையாக மாற வேண்டியிருக்கிறது.
வர்க்கப் பின்னணியோடு நவீன வாழ்வியல் சூழலும் ஒரு நபரின் ஆளுமையை வடிவமைப்பதில் தீர்மானிக்கின்றது. ஒரு பொதுவுடமை அமைப்பில் உறுப்பினராக இருக்கும் ஒரு நபர் பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்க்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் கட்சி சார்ந்த வேலைகளின் போதும், தோழர்களோடு அளவளாவும் போதும் மட்டுமே சமூக அக்கறைக்குரிய விசயங்களோடு வாழ்கிறார். நிறுவன வேலைகளில்தான் அதிக நாட்களை அவர் செலவழிக்க வேண்டியிருப்பது ஒரு யதார்த்தம். எனில் பொதுவுடமை உலகை விட கார்ப்பரேட் உலகுதான் அவரது வாழ்வியலோடு அதிகம் தொடர்புடையதாக இருக்கிறது.
இந்த முரண்பாட்டை உணர்ந்து தனது அக உலகை பாதுகாத்துக் கொள்வது யாராக இருந்தாலும் ஒரு போராட்டமே! கார்ப்பரேட் ஊடகங்களில் பணியாற்றும் பத்திரிகையாளருக்கும் அது பொருந்தும். பேயோடு வாழ்க்கைப்பட்டால் சுடுகாடுதான் பணியிடம் என்றான பிறகு குடியிருப்பில் இருக்கும் மக்கள் குறித்த எண்ணம் இருப்பது சிரமம்தான். அதற்காக கலங்கத் தேவையில்லை.
இந்த முரண்பாட்டை நமக்கு சாதகமாக மாற்றிக் கொள்வது எப்படி என யோசித்துப் பார்ப்போம்.
மூன்று வழிகள் இருப்பதாகத் தோன்றுகிறது. ஒன்று நடைமுறையில் மக்கள் வாழ்க்கை, போராட்டங்களோடு தொடர்பு வைத்திருக்க வேண்டும். நீட் போராட்டமோ, ஒக்கி புயலோ, கஜா புயலோ, அரசு ஊழியர் போராட்டமோ நடக்கும் போது அங்கு செல்லும் பத்திரிகையாளர்கள் யதார்த்தமாக மக்கள் வாழ்க்கையையும், இந்த அரசமைப்பின் போதாமையையும் உணர்கிறார்கள். ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது அங்கு சென்ற வெளியூர் பத்திரிகையாளர்கள் துணிந்து போலீசை அம்பலப்படுத்தியதற்கு காரணம் கொடூரமான அந்த அடக்குமுறைக் காட்சிகளை நேரில் கண்டதுதான்.
இரண்டு மக்கள் வாழ்க்கை தொடர்பான இலக்கியங்கள், சமூகம் தொடர்பான பொது நூல்கள் (வரலாறு, சமூகவியல், மொழி, தத்துவம், அரசியல்) போன்றவற்றை படிப்பது கண்டிப்பாக வேண்டும். நமது உணர்ச்சிக்கு தேவையான உணர்வை அளிக்கவல்லது இந்த பல்துறை வாசிப்பு பழக்கம். அதே நேரம் இந்த வாசிப்பு படிக்கும் இன்பம் என்று இல்லாமல் பயன்பாட்டிற்கான படிப்பாக இருக்குமாறு நாம் வைத்துக் கொள்வது அவசியம். நல்ல நூல்களை படிப்போர் பலருக்கு, அந்நூல்கள் கூறும் கருத்துக்களை ஏதோ ஒரு வழியில் பயன்படுத்தம் வாய்ப்பற்று இருக்கும் போது காலஞ்செல்லச் செல்ல படிப்பு என்பது வாசிப்பின்பமாக மட்டும் மாறிவிட்டிருக்கிறது.
மூன்றாவதாக போராடும் மக்களோடு துணை நிற்கும் உண்மையான அரசியல் அமைப்புகளோடு தொடர்பில் இருப்பது அவசியம். சமூக மாற்றம் குறித்த எந்த ஒரு நடவடிக்கையும் நடைமுறையில் பணியாற்றும், அதற்கு பொறுப்பேற்றுக் கொள்ளும் அரசியல் இயக்கங்களாலேயே மக்களுக்கு சென்று சேர்கிறது. தனி நபராக நாம் பேசும் சமூக விசயங்களின் பரிமாணம் மிகவும் குறுகியது. கருத்தரங்கில் தீர்வு சொல்வதும், களத்தில் தீர்வுக்காக போராடுவதும் முற்றிலும் வேறுபட்ட விசயங்கள். கம்யூனிச்தை கற்பதற்கு கூட இந்த களத் தொடர்பு அவசியம்.
மேலும், மக்களிடம் வேலை செய்யும் அரசியல் ஊழியர்களை சந்தித்து அளவளாவும் போதுதான் நாம் அறிவை மெருகிடுவது மட்டுமல்ல, அகந்தையை அகற்றுவதையும் செய்ய முடியும். நமது கருத்துக்களும் கூட வெறுமனே கருத்துக்கள் என்ற கிணற்றைத் தாண்டி களம் எனும் கடலை நோக்கி பயணிக்கிறது. அதன் போக்கில் சரி, தவறுகள் பரிசீலிக்கப்பட்டு கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து, கண்ணோட்டங்களை கற்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.
இவற்றையெல்லாம் ஓரளவுக்கு செய்து கொண்டு ஒரு பத்திரிகையளராயும் நாம் மக்களுக்கு தொண்டாற்ற முடியும். எங்கள் அனுபவத்தில் பல பத்திரிகையாளர்களை தொடர்பு கொண்டிருக்கிறோம். மேற்கண்ட பாதையில் அவர்களை நட்புடன் அழைத்துச் சென்று புதிய உலகை கொஞ்சமாவது காட்டியிருக்கிறோம். நாங்களும் நிறையக் கற்றுக் கொண்டிருக்கிறோம்.
அதே நேரம் பத்தரிகையில் பணியாற்றும் நண்பர்கள் பணிச்சுமை, நிர்வாக நெருக்கடி போன்றவற்றோடு அடித்துச் செல்லப்படும் போது அவர்களால் உரிய அளவில் சமூகத்திற்கு தொண்டாற்ற முடிவதில்லை. பகுதி நேரமாக அவர்கள் வினவு போன்ற மாற்று ஊடகங்களில் அடையாளம் தெரியாமல் நிறைய பணிகளை செய்ய முடியும். எனினும் இந்த விருப்பம் இன்னும் பெரும் போராட்டமாகவே இருக்கிறது.
“கருத்தாடல்” பக்கத்தில் பங்களிப்பு செய்யுமாறு பல ஊடக நண்பர்களுக்கு மடல் அனுப்பியிருந்தோம். அலுவலகத்தில் பிரச்சினைகளை தவிர்ப்பதற்காக புனை பெயரில் எழுதுமாறும் ஆலோசனை கூறியிருந்தோம். சிலர் விருப்பம் தெரிவித்திருந்தாலும் அவர்களால் அப்படி செயல்பட முடியவில்லை.
எப்படியாவது மாற்று ஊடகங்களில் பணியாற்றும் போதுதான் ஒரு ஊடகவியலாளர் தனது சுயத்தையும், மக்களின் பால் உள்ள பொறுப்புணர்வையும் தக்கவைத்துக் கொள்வதோ, வளர்த்துக் கொள்வதோ சாத்தியம். ஆகவே, இது இறுதியில் எங்களது பிரச்சினையில்லை. அவர்களது பிரச்சினை. உண்மையில் ஒரு மக்கள் ஊடகவியலாளராக மாற வேண்டும் என்ற அவாவை ஒரு யதார்த்தமாக மாற்றுவது அவர்கள் கையில்தான் இருக்கிறது. அதற்கு என்ன உதவி வேண்டுமானாலும் நாங்கள் செய்யத் தயாராக இருக்கிறோம்.
வினவோடு ஒரு பத்திரிகையாளர் தொடர்பு கொள்ளும் போது அவர் சமூகவியல், அடிப்படை மார்க்சியம், வரலாறு, கண்ணோட்டத்துடன் எழுதுவது போன்றவற்றை எங்களோடு விவாதித்து கற்றுக் கொள்ள முடியும். கடந்த காலத்தில் பத்திரிகையாளர்கள், பதிவர்களுக்கென்றே வகுப்புகள் நடத்தியிருக்கிறோம். இப்போதும் கூட செய்து வருகிறோம். இனியும் நடத்துவோம். எனவே உங்கள் வணிக ஊடகப் பணி பாதிக்கப்படாமல் மக்களுக்காக பணியாற்றும் வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன.
ஆகவே இந்த பதிவின் மூலம் தமிழக பத்திரிகையாளர்களுக்கு மீண்டும் அழைப்பு விடுக்கிறோம். தொடர்பு கொள்ளுங்கள்.
மாற்றிக் காட்டுவதற்காக ஒரு புதிய உலகம் காத்துக் கொண்டிருக்கிறது!