Monday, June 22, 2026
முகப்பு பதிவு பக்கம் 475

குதிரைச் சவாரி கூடாது – சிறுநீரைக் குடி – கோவிலில் நுழையாதே !

வன்கொடுமை சட்டத்தை ‘பழி தீர்க்கும் வழியில்’ தலித் மக்கள் பயன்படுத்துவதாக கூறி அதன் அடிப்படையில் இனி குற்ற வழக்குகள் பதியக்கூடாது என்று சமீபத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. புள்ளிவிவரங்களை பார்க்கும் போது நாடு முழுதும் தொடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான சாதி வன்கொடுமை வழக்குகளில் ஒரு சில விழுக்காடு வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்படுகின்றனர். உண்மையில் அந்த சட்டமே இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன? தலித் மக்கள் மீது வடக்கு தெற்கு என்று பேதமில்லாமல் சாதிய வன்கொடுமைகள் நடந்த வண்ணமே இருக்கின்றன. மோடியின் ஆட்சியில பார்ப்பனிய ஆதிக்கம் என்பது முன்னிலும் வலுவாக மக்களை ஒடுக்கி வருகிறது. கீழ்க்கண்ட மூன்று சம்பவங்களும் அதை உறுதி படுத்துகின்றன.

தலித்துக்கள் குதிரையில் ஏறத் தடை – இராஜஸ்தானில் ஆதிக்க சாதியினர் வெறிச்செயல்!

தலித் ஒருவர் குதிரையில் ஏறிச் செல்வது ஆதிக்கச்சாதியினருக்கு பொறுப்பதில்லை

குதிரையில் ஏறிச்சென்ற ஒரே காரணத்திற்காக இராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த தலித் மணமகன் ஒருவர் குர்ஜார் ஆதிக்க சாதியினரால் தாக்கப்பட்டிருக்கிறார். திருமணத்திற்கு ஒரு நாள் முன்னதாக நடைபெறும் பிந்துலி எனும் சடங்கின் போது தான் இத்தாக்குதல் நடைபெற்று இருக்கிறது.

“என்னுடைய இளைய சகோதரன் உதய் லாலின் திருமணச்சடங்கிற்காக குதிரையை வரவழைக்க முடிவு செய்த போது கிராமத்திலிருந்த ஆதிக்க சாதியினரிடம் இருந்து அச்சுறுத்தல்கள் வந்தன. நாங்கள் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தப்பிறகு அவர்கள் எங்களது பாதுகாப்பிற்காக வந்தார்கள். ஆனாலும் தாக்குதல் நடக்கும் போது அவர்கள் எதுவும் செய்யவில்லை” என்று மணமகனின் மூத்த சகோதரர் பன்வார் லால் ரேகர் கூறினார்.

ரேகரை பொருத்தமட்டில் இது ஒன்றும் புதிய நிகழ்ச்சி அல்ல. ஏற்கனவே 2010-ம் ஆண்டில் அவரது சகோதரரின் திருமண நிகழ்வில் இதே போலவே கடுமையாக எதிர்த்து கல்லால் ஆதிக்க சாதியினர் அவர்களை அடித்தனர்.

மகராஷ்டிரா, ரட்லமில் 2015-ம் ஆண்டு இதே போன்றதொரு நிகழ்வில் கல்லெறிந்த ஆதிக்ககச்சாதியினர் சடங்கு குதிரையைத் திருடி சென்று விட்டனர். பின்னர் மற்றொரு குதிரையில் மணமகனுக்கு தலைக்கவசம் அணிந்து சடங்கை நடத்தினர் தலித் மக்கள். அதே போல ஹரியானாவை சேர்ந்த தலித் மணமகன் ஒருவர் குர்சாரி எனும் சடங்கை செய்த போது இராஜபுத்திர ஆதிக்க சாதியினரால் கல்லால் அடித்து தாக்கப்பட்டார்.

உத்திரப்பிரதேசத்தில் தலித் ஒருவரை மூத்திரத்தை குடிக்க செய்த ஆதிக்க சாதிவெறி!

இராம் குலாம், அதிக்கசாதியினரால் தாக்கப்பட்ட சீதாராமின் தந்தை

ங்களுடைய நிலத்தில் வேலை செய்ய மறுத்த ஒரே காரணத்திற்காக உத்திரப்பிரதேசம், பதானை சேர்ந்த தலித் விவசாயக்கூலித் தொழிலாளி ஒருவரை தாக்கூர் ஆதிக்கச்சாதியினர் அடித்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.

வால்மீகி சமூகத்தை சேர்ந்த சீதாராம் தன்னுடைய 10 பிகா நிலத்தில் கோதுமை அறுவடை செய்து கொண்டிருந்த நேரத்தில் அங்கு வந்த விஜய் சிங், பிங்கு சிங், ஷைலேந்திர சிங் மற்றும் விக்ரம் சிங் முதலான தாக்கூர் சாதி வெறியினர் தங்களுடைய 20  பிகா வயலில் முதலில் அறுவடை செய்யுமாறு கூறினர். ஆனால் தன்னால் முடியாது என்று சீதாராம் கூறினார்.

சீதாராம் அப்படி கூறியதை தாங்க முடியாத  ஆத்திரத்தில் நால்வரும் அவரை அடித்து உதைத்ததுடன் சாதிப்பெயரை சொல்லியும் திட்டியுள்ளனர். பின்னர் கிராமத்தின் பொது இடத்திற்கு இழுத்து வந்து அங்கிருந்த ஒரு வேப்பமரத்தில் கட்டி வைத்து அவரது மீசையை எடுத்ததுடன் மூத்திரத்தையும் குடிக்க வைத்தததாக சீதாராமின் மனைவி ஜெய்மாலா கூறினார்.

இதுப்பற்றிய புகாரை காவல்துறையினரிடம் ஜெய்மாலா கொடுத்ததால் அன்று இரவு அவரது வீடு ஆதிக்கச்சாதியினரால் தாக்கப்பட்டது. காவல்துறைக்கு மீண்டும் தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் காவல்துறையோ விஜய் சிங்குடன் சீதாராமையும் சேர்த்து கைது செய்து சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தியது.

இதுப்பற்றி வெளியே செய்தி கசிந்தவுடம் சீதாராமைத் தாக்கிய மீதி ஆதிக்க சாதியினரையும் கைது செய்தது காவல்துறை. மேலும் ஆதிக்கச்சாதியினருக்கு உடந்தையாய் இருந்த அப்பகுதி காவல்நிலையத்தின் பொறுப்பு அதிகாரியை இடைநீக்கம் செய்திருப்பதாக காவல்துறை கண்காணிப்பாளர் கூறினார்.

“இதுபோன்ற அவமானங்கள் எங்களுக்கு ஒன்றும் புதிதல்ல. ஆனால் இளைஞர்கள் இதை அப்படியே விட்டு விட தயாராக இல்லை” என்றார் கிராமத்தை சேர்ந்த பெரியவர் ஜதுலால்.

தலித் பெண்ணை கோவிலுக்குள் நுழைய விடாத புதுச்சேரி ஆதிக்கசாதியினர்!

தலித் பெண் இராதா

புதுச்சேரி அருகே குனிச்சம்பேட்டை தலித் காலனியை சேர்ந்த பெண்ணான இராதா கோவிலுக்குள் நுழைய விடாமல் வெளியேற்றப்பட்டது பற்றிய காணொளி ஒன்று டிவிட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஸ்ரீ காமாட்சி சமதா பூதண்டீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற 20 நாள் திரௌபதியம்மன் திருமண விழாவில் தான் இக்கொடுமை அரங்கேறியுள்ளது.

அக்காணொளியின் படி, வழிபாடு முடிந்தவுடன் சென்று விடுகிறேன் என்று கூறுகிறார் அப்பெண். ஆனால் “இங்கே வருவதற்கு உனக்கு அனுமதி கிடயாது. உங்களது கோவிலுக்கு நாங்கள் வரமாட்டோம் அதே போல எங்களது கோவிலுக்கும் நீங்கள் வரக்கூடாது” என்று கூறி வெளியேற சொன்னார்கள்.

“உங்க சாமி எங்க சாமி என்றும் ஒன்னும் கிடையாது” என்று அப்பெண் வாதிடுகிறார். மேலும் “எல்லோரும் ஒன்று தான். சாமி கும்பிட்டுவிட்டு சென்றுவிடுகிறேன். சாமி கும்பிட மட்டும் விடுங்கள்” என்று அவர் கூறினார். ஆயினும் அக்கோவிலில் இருந்தவர்கள் அப்பெண்ணை வலுக்கட்டாயமாக வெளியேற்றி உள்ளனர்.

அக்கோவிலில் ரெட்டியார், வன்னியர், முதலியார் உள்ளிட்ட சாதி இந்துக்கள் மட்டுமே சடங்குகள் செய்கிறார்கள்.  தலித் மக்களுக்கு அக்கோவிலில் உரிமை இருந்தாலும் அவர்களை உள்ளே விடுவதில்லை என்று தலித் காலனியை சேர்ந்த ஒருவர் கூறினார்.

– வினவு செய்திப்பிரிவு.

மேலும் படிக்க…

சென்னை பல்லாவரம் வாரச் சந்தை – ஏழைகளின் சூப்பர் மார்கெட் !

சென்னை பல்லாவரத்தில் வெள்ளி தோறும் நடைபெறும் வார சந்தை மிகவும் புகழ்பெற்றது. இங்கே கணினி முதல் கருவாடு வரை விற்கப்படாத பொருட்களே இல்லை! இந்த பழைய பொருட்கள் சந்தை ஏழைகளின் பிரம்மாண்டமான “சூப்பர் மார்கெட்டாக” உள்ளது. பழைய பொருட்களைத் தாண்டி புதிய பொருட்களும், காய்கறிகள், பூச்செடிகள், பனியன்கள் உட்பட பல பொருட்களை இங்கு  குறைந்த விலைக்கு வாங்கலாம்.

தமிழகத்தில் இருந்தும், வட மாநிலங்களில் இருந்தும் பிழைப்பிற்காக சென்னை வந்துள்ள ஏழைகளுக்கும், தொழிலாளிகளுக்கும் இந்த சந்தை முக்கியமானது. அதி நவீன சூப்பர் மார்கெட்டுகளில் வாங்கும் பலருக்கும் இந்த பல்லாவரம் சந்தை தெரியாது.

பல்லாவரம் பழைய பொருட்கள் விற்கும் சந்தையில் மக்களும், வணிகர்களும்.

முகமது அலி, ஆடைகள் மற்றும் காலணி விற்பவர்.

வாரந்தோறும் ஏதாவது ஒரு சந்தையில தான் வியாபாரம் பண்ணுவோம். பாண்டிச்சேரி – சண்டே மார்க்கெட், வெள்ளிக்கிழமை சென்னை மின்ட் அப்புறம் பல்லாவரம் சந்தை, புதன் கிழமை ஈரோடு சந்தை என்று ஒவ்வொரு நாளும் சுத்திக்கிட்டே இருப்போம். பனியனை நாங்க திருப்பூர்ல இருந்து பர்ச்சேஸ் பண்ணிட்டு வரோம். இருபது நாளைக்கு ஒருமுறை ரெண்டு லட்சத்துக்கு பனியன் வாங்கிட்டு வந்துடுவேன். பிராண்டட்,  சாதா எல்லாம் கலந்து கட்டி விக்கிறேன். ஆனா எது எடுத்தாலும் நூறு ரூபாதான்.

டி சர்ட்டை ஆர்வமாகத் தேடும் வடமாநில இளைஞர்.

அதே போல ஷு நாங்க ஆக்ரா போயிட்டு வாங்கி வருவோம். அங்க ஒவ்வொரு வீட்டுலயும் குடிசை தொழில் மாதிரி செய்துட்டு இருக்காங்க. நாம சொன்னா கொரியர்ல போடுவாங்க. அதுல டேமாஜ் பீசு இருக்கும். நானே நேர்ல போயிட்டு பாத்துபாத்து வாங்கிட்டு வந்து குறைந்த விலைக்கு தருகிறோம். எங்க கிட்ட எல்லாரும் நம்பி வந்து வாங்குறாங்க. அதுல எங்களுக்கு திருப்தி தான். ஷோ ரூம்ல விக்கிறவங்களுக்கும் எங்களுக்குமான வித்தியாசம், அவன் ஏசி, கரண்ட் பில் எல்லாத்துக்கும் சேர்த்து பணம் வாங்குவான். நாங்க வாங்குறது பொருளுக்கு மட்டும் தான்.

லட்சுமி, திண்டுக்கல், குழந்தைகளுக்கான செய்முறை பொருட்கள் விற்பவர்.

எங்களால இந்த சந்தையில வாடகை கொடுத்து கடை போடகூட முடியல. ஒரு ஓரமா ஒதுங்கியிருக்கோம். எங்க சந்தை போட்டாலும் போயிடுவோம். நானும் எங்க வீட்டுக்காரரும் மாசம் ஒரு முறை தான் வீட்டுக்கே போவோம். அதுவரைக்கு எங்கயாவது தங்கி இதயெல்லாம் விப்போம். புள்ளங்க எல்லாம் என்னோட மாமனார் பார்த்துப்பார். நாங்க படிப்பு வாசனையே அறியாதவங்க. ஆனா நாங்க விக்குற பொருள் கொழந்தங்களோட அறிவ வளர்க்க இது உதவுது, பசங்க ஸ்கூல் புராஜெக்டுக்கு வாங்கிட்டு போவாங்க..

திண்டுக்கல்லை சேர்ந்த கருப்பட்டி விக்கும் பாட்டி.

பேர, ஊர கேட்டு நீங்க இன்னா பண்ண போறீங்க..எங்களுக்கு இதான் வயித்து பொழப்பு. இருபத்தி அஞ்சி வருசமா இந்த வேலைய செய்துகிட்டு இருக்கேன். எனக்கு படிக்க தெரியாது. ஆனா கணக்கு நல்லா போடுவேன். லட்ச ரூபா கொடுத்தாக் கூட எண்ணிடுவேன்.

சுரேஷ், பூச்செடிகள் மற்றும் வீட்டுத் தோட்டத்துகான செடிகள் விற்பவர்.

முப்பது ரூபாயில இருந்து முன்னூறு ரூபா வரைக்கும் செடிகள் இருக்கு. ரோஸ் அயிட்டம் தொட்டியோட விக்கிறதால விலை அதிகம். முன்பெல்லாம் சொந்த வீடு வச்சிருக்கவங்கதான் செடி வாங்க வருவாங்க. இப்ப வாடகை வீட்டில் இருக்குறவங்களும் வாங்கிட்டு போறாங்க.

வீட்டுத் தோட்டத்துக்கான பொருட்கள் விற்பவர்.

மாடித் தோட்டங்களுக்கு தேவையான பூவாளி மற்றும் பூச்சி மருந்து ஸ்பிரே அடிக்கும் உபகரணங்கள் விற்பவர். எங்களோட பெரும் பிரச்சனை போலீஸ் தான். பூவாளிய அய்யாவுக்கு வேணும், அம்மாவுக்கு வேணும்னு போலிஸ் அதிகாரிங்களுக்கு எடுத்திட்டு போயிடுறாங்க. ஆனா பொருள் வாங்க வரும் மக்கள் எங்களை கவுரவமா தான் பார்க்கிறாங்க.

கோழியை சந்தையில் விற்க வந்துள்ள நபர்.

சார் இது வீட்டுக்கோழிதான். ஊர்ல எல்லாக்கோழியையும் வம்புக்கிழுத்து சாவடிச்சிடுது. தெனமும் பக்கத்து வீட்டுக்காரங்களோட சண்டை. அதான் விக்க வந்திருக்கோம். இதுக்கு பேரே கொலைகாரக் கோழி. உங்களுக்கு வேணுமா?

தேவா, தூத்துக்குடி மாவட்டம், எலுமிச்சை சாறு விற்பவர்.

சென்னைக்கே இன்னைக்கு தான் வந்தேன். எங்க ஊர் பையன் கூட்டி வந்து இந்த வேலையில சேர்த்தான். மெட்ராச சுத்தி பாக்கனும்ன்ற ஆசை இருக்கு. முதல்ல வேலையில நல்லா பிக்கப் ஆக்கிட்டு அப்புறம் பாத்துக்கலாம்னு இருக்கேன்.

தாங்கள் விளைவித்த காய்கறிகளை சந்தையில் விற்க வந்துள்ள விவசாயிகள்.

அரக்கோணம் விவசாயிகள். எங்க ஊர்ல இருந்து இருபது பேர் ஆளுக்கு ரெண்டு மூட்டை காய் கொண்டு வந்திருக்கோம். தோட்டத்துல வியாபாரிங்க கிலோ 5 -லிருந்து 8 ரூபாக்குள்ள தான் எடுக்கிறாங்க. அது கட்டுபடியாகல. அதனாலதான் நாங்களே எடுத்திட்டு வந்து விற்பனை செய்யுறோம். சந்தையை நம்பிதான் விவசாயம் பண்றோம். பல்லாவரம், பாலூர், காஞ்சிபுரம், குருவிமலை என்று எல்லா சந்தைக்கும் போவோம். விவசாயிகள் வியாபாரியா அவதாரம் எடுத்திருக்கோம்…

அம்மிக்கல் விற்கும் பெரியவர்.

நடுத்தர வர்க்கம் மின்சாதனப் பொருட்களுக்கு மாறிவிட்ட நிலையில் இன்றும் ஏழைகளால் பயன்படுத்தப்பட்டு வரும் அம்மிக்கல்லை தள்ளுவண்டியில் வைத்து விற்பனை செய்யும் பெரியவர்.

-வினவு புகைப்படச் செய்தியாளர்கள்.

கட்ச்ரோலி : மாவோயிஸ்டுகள் பெயரில் கொல்லப்பட்ட சிறுவர்கள் !

ராசுவின் சடலத்தை அலைபேசியில் பார்க்கின்றனர் கட்டெபள்ளி கிராம மக்கள்

ராட்டிய மாநிலம், கட்ச்ரோலி மாவட்டத்தின் ஒரு குக்கிராமம் கட்டெப்பள்ளி. அருகில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் நடக்கவிருந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஏப்ரல் 21 அன்று இரவு கிளம்பிய 8 பதின்வயதினரின் கதி என்ன எனத் தெரியாமல் அக்கிராமமே தவித்துக் கொண்டிருக்கையில் தற்செயலாக ஒரு துயரச் செய்தி அவர்களை வந்தடைகிறது.

கட்ச்ரோலி பகுதியில் கொல்லப்பட்ட ‘மாவோயிஸ்டுகளின்’ புகைப்படங்கள் அடங்கிய கோப்பு ஒன்றை நகோடி என்ற வழக்கறிஞரின் அலைபேசியில் கடந்த ஏப்ரல் 27 அன்று கட்டெபள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் தற்செயலாகப் பார்க்கையில்தான் அப்பதின்வயதினர் போலீசு துப்பாக்கிச்சூட்டில் பலியாகியிருக்கின்றனர் என்பது தெரிய வந்தது.

அந்தப் புகைப்படத்தில் அக்கிராமத்தைச் சேர்ந்த 16 வயதுடைய ராசு சக்கொ மாதவி என்ற சிறுமி கொல்லப்பட்ட 16 ‘மாவோயிஸ்டுகளில்’ ஒருவராக அப்புகைப்படத்தில் காட்டப்பட்டிருந்தார்.

ராசுவின் சகோதரிகளான வஞ்சி (இடமிருந்து இரண்டாமவர்) மற்றும் ஜனோ (இடமிருந்து மூன்றாமவர்)

இவ்விசயத்தைக் கேட்டு ராசு மாதவியின் சகோதரிகளான வஞ்சி, ஜனோ இருவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். ஏப்ரல் 22 அன்று இந்திராவதி ஆற்றங்கரையில் நடத்தப்பட்ட மோதலில் கொல்லப்பட்ட அடையாளம் தெரியாத நபர் என ராசு மாதவியைக் குறிப்பிட்டிருந்தது போலீசு.

ராசுவின் முகம் ஆழமான வெட்டுகளோடு வீங்கியிருந்தது. இடது கண் பெரிதாக வீங்கியிருந்தது. அவளது முகமே விகாரமாக மாறியிருந்தது. அடையாளம் காண சிரமம் இருந்தாலும், அது அவள்தான் என்பதை கிராம மக்கள் உறுதி செய்தனர்.

நகோடியின் அலைபேசியில் உள்ள அந்தக் கோப்பில் சவ எண் 10 என அடையாளமிடப்பட்ட உடல், அதே நாளில் காணாமல் போன மற்றொரு பதின்வயது சிறுவனான நுஸ்ஸேவின் உடலாக இருக்குமோ என சந்தேகம் தெரிவித்தனர் அக்கிராம மக்கள். கடுமையாகத் தாக்கப்பட்டதன் காரணமாக முகம் வீங்கியிருப்பதால் அது நுஸ்ஸேதானா என அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

போலீசில் புகாரளித்தாலும், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட C-60 கமாண்டோக்களின் விசாரணையைத் தாண்டி, அச்சிறுவர், சிறுமியரின் இருப்பிடம் குறித்தோ, மரணம் குறித்தோ அரசுத ரப்பில் எதையும் உறுதிப்படுத்தவில்லை.

000

ட்சிரோலி மாவட்டம் எடப்பள்ளி தாலுகாவில் உள்ள ஒரு குக்கிராமம் கட்டெபள்ளி. இங்கு வாழும் 35 குடும்பங்களுக்கு காட்டில் கிடைக்கும் பொருட்கள் மற்றும் பீடி சுற்றும் ‘தெண்டு’ இலை சேகரிப்பு ஆகியவைதான் வாழ்க்கை ஆதாரமாக இருக்கின்றது.

இக்கிராமத்திலிருந்து சுமார் 66 கிமீ தொலைவில் இருக்கும் எடப்பள்ளி வரைதான் அரசு, தனியார் பேருந்துகளின் சேவை கிடைக்கப் பெறுகிறது. அங்கிருந்து இக்கிராமம் வரை தனிப்பட்ட இருசக்கர மோட்டார் வண்டிகளில் மட்டும்தான் சென்றடைய முடியும். அதுவும் இரவு நேரப் பயணம் என்பது சவாலானது. இக்காரணத்தினாலேயே இக்கிராமத்தினர் வெளியூருக்கு எப்போதாவது தான் பயணிக்கிறார்கள்.

கட்சிரோலி, எடப்பள்ளி, கசன்சூர்

ஏப்ரல் 21 அன்று பதின்வயது சிறுமியான ராசுவும் அவளது வயதை ஒத்த வேறு ஏழு பேரும் 15 கி.மீ. தொலைவில் உள்ள காசனூர் கிராமத்திற்கு ஒரு திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்றனர். கட்ச்ரோலி சிலா பரிஷத் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் நகோடி கூறுகையில், ”இவர்கள் திருமண நிகழ்விற்கு சென்று சேரவில்லை. ஒன்று மாவோயிஸ்டுகளின் இருப்பிடத்திற்கு அவர்கள் சென்றிருக்க வேண்டும்  அல்லது அவர்கள் போலீசால் கடத்திச் செல்லப்பட்டிருக்க வேண்டும்” என்றார்.

ஏப்ரல் 21 அன்று சென்ற தமது பிள்ளைகள் திரும்புவதற்கு ஏப்ரல் 22 இரவு வரை காத்திருந்தனர் கிராம மக்கள். போலீசு மோதலில் மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்தும் அவர்களுக்கு எவ்விவரமும் தெரியவில்லை.  பின்னர் மறுநாள் பகுதி முழுவதும் தேடிப் பார்த்துவிட்டு, ஏப்ரல் 24 அன்று, 140 கி,மீ தொலைவில் உள்ள கட்ச்ரோலி மாவட்ட தலைமை போலீசு அலுவலகத்திற்கு சென்று புகார் கொடுத்துவிட்டு வந்துள்ளனர்.

அதற்கு முன்னரே சுட்டுக் கொல்லப்பட்ட ‘மாவோயிஸ்டுகளின்’ படங்களை பத்திரிகைகளில் வெளியிட்டிருக்கிறது போலீசு. ஆனால் அந்த பட்டியலை குழந்தைகளை இழந்த கிராமத்தினருக்குக் காட்டாமல், அவர்களை நேராக பிணவறைக்கு அழைத்துச் சென்று அடையாளம் காட்டச் சொல்லியிருக்கிறது.

”குளிரூட்டப்படாத, அதிக வெப்பத்தில் வைக்கப்பட்ட உடல்களில் இருந்து அழுகல் வாடை வந்த்து. முகங்கள் சிதைந்து அழுகத் தொடங்கியிருந்த நிலையில் யாருடைய முகத்தையும் எங்களால் அடையாளம் காட்ட இயலவில்லை” என்கிறார் பிஜ்ஜா.

பிஜ்ஜாவின் 16 வயது சகோதரன் மங்கேஷும் ராசுவுடன் அன்று வெளியூர் சென்ற ஒருவன். மங்கேஷ் எட்டப்பள்ளியில் உள்ள கல்வி நிலையத்தில் 11-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான்.

இக்கிராமத்தைச் சேர்ந்த 8 பதின்வயதினர் கொல்லப்பட்டது குறித்து பலவகையான செய்திகள் உள்ளூர் செய்தித்தாள்களில் வர ஆரம்பித்தன. வெவ்வேறு போலீசு அதிகாரிகள், ஒவ்வொருவரும்  ஒவ்வொருவிதமாக கூறிய தகவல்களை செய்தித் தாள்கள் வெளியிட்டன.

முதலில் பெயர், ஊர் எதுவும் குறிப்பிடாமல் “பயங்கர ஆயுதங்களைக் கொண்டிருந்த போராளிகள்” என குறிப்பிட்டன. பின்னர் மாவட்ட போலீசு அவர்களுக்கு வேறு விதமான ‘கதையைச்’ சொல்லியது. அவர்கள் 8 பேரும் அக்கிராமத்திலிருந்து மாவோயிஸ்டுகளின் படைக்குத் புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்றும், முதல் முறையாக அவர்கள் தங்களது கமாண்டரை பார்க்கச் சென்றிருந்தனர் என்றும் கூறியது போலீசு.

பெர்மெல்லி தளம் என்ற பகுதியின் மாவோயிஸ்ட் படைப்பிரிவின் கமாண்டரான தோலேஷ் மதி அட்ராம் (சாய்நாத்) என்பவர் குட்டெபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதையும், தற்போது இந்த 8 சிறுவர்கள் குறித்து போலீசு கூறும் ‘கதையையும்’ சேர்த்துக் கோர்த்து எழுதத் தொடங்கிவிட்டன உள்ளூர் மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகள்.

ஒரு பச்சைப் படுகொலையை நடத்திவிட்டு, அதனை மாவோயிஸ்டுகள் மீதான தாக்குதலாக சித்தரிக்கவும், அச்சிறுவர்களின் குடும்பத்தினரை மிரட்டவும் பல்வேறு முயற்சிகளை செய்திருக்கிறது போலீசு.

பழங்குடியின மக்கள் தங்களை போலீசு தாக்குதலில் இருந்து காத்துக் கொள்ள அவர்களுக்கு அடிப்படையான, அவசியமான தேவையாக இருப்பது அடையாள அட்டைகளே. தற்போது புகார் அளித்துள்ள குடும்பத்தினரின் ஆதார் அட்டைகளை விசாரணைக்குத் தேவை என பிடுங்கி எடுத்துச் சென்றிருக்கிறது போலீசு. இது தங்களை மிரட்டுவதற்காகவே போலீசு செய்திருக்கிறது என்கின்றனர் கட்டெபள்ளி  கிராமத்தினர்.

மாவோயிஸ்ட் கமாண்டர் சாய்நாத் அக்கிராமத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரு விசயத்தை வைத்துக் கொண்டு, சாய்நாத்தின் தொடர்பில் அந்த  8 சிறுவர்களும் இருந்தனர் எனக் கூறுகிறது போலீசு. ஆனால் அக்கிராம மக்கள் இதனை தெளிவாக மறுக்கின்றனர்.

“சாய்நாத் 15 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த ஊரைவிட்டு வெளியேறிய போது, திரும்பவர மாட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். போராளிகளோடு போய் சேர்வதாக இருந்தால் அவர்கள் அனைவரும் கும்பலாக போயிருக்க மாட்டார்கள்” என்று கூறுகிறார் கட்டெபள்ளி ஊர்ப் பெரியவர் ஒருவர்.

மாவோயிஸ்டுகளோடு ஏற்கனவே தொடர்பு கொண்டிருப்பார்களோ என சந்தேகிக்க கூட வாய்ப்பில்லாதபடிக்கு அச்சிறுவர்கள் இதற்கு முன்னாள் ஒருமுறை கூட காணாமல் போனதில்லை, என்கின்றனர் அக்கிராம மக்கள்.

மேலும் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற சிறுவர்கள் அனைவரும் மதிப்புமிக்க உடைகள் மற்றும் அணிகலன்களை தங்களுடன் கொண்டு சென்றிருக்கின்றனர். மாவோயிஸ்டுகளோடு இணைந்து போர் புரியச் செல்பவர்கள் அணிகலன்களையும் எடுத்துச் செல்வார்களா என்ன ?

அப்பதின்வயதினரின் முகத்தில் இருக்கும் ஆழமான வெட்டும், முகம் மற்றும் கண்கள் வீங்கியிருப்பதும், போலீசு அவர்களை சுட்டுக் கொல்வதற்கு முன்னால் கடுமையாக தாக்கியிருப்பதையே காட்டுகிறது.

போலீசு வெறியாட்டத்திற்கு தமது உறவுகளை இழந்ததோடு மட்டுமல்லாமல், குழந்தைகள் கொல்லப்பட்டது நியாயமென சித்தரிக்கும் ஊடகங்ளின் கொடுமையைுயும் அனுபவித்து வருகிறது கட்டெபள்ளி கிராமம். இறுதியில் மாவோயிஸ்டுகளை விட அதிகம் கொல்லப்பட்டது பழங்குடி மக்களே என்பது இந்த என்கவுண்டரிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதிலும் சிறுவர்களை இப்படி ஈவிரக்கமின்றி கொன்றிருக்கிறார்கள். குழந்தைகளுக்காக அதுவும் ஓநாயக் கண்ணீர் விடும் குரலைக்கூட இங்கே நாம் காண முடியவில்லை.

– வினவு செய்திப் பிரிவு

செய்தி மூலம்:
One of 40 ‘Naxals’ Killed in ‘Encounter’ Was Child, Say Villagers, 7 More Missing

மோடி ஆட்சிக்கு முடிவு கட்டுவார்கள் தொழிலாளிகள் ! தொழிற்சங்க தலைவர்கள் நேர்காணல் !

தொழிலாளி வர்க்கம் போராடி பெற்ற ஒவ்வொரு உரிமையும் மோடி அரசால் பறிக்கப்பட்டு வருகிறது. இன்றையை அரசியல் சூழலில் மே தினத்தின் பொருள் என்ன? தொழிலாளர்களின் பிரச்சினைகள் என்ன? அவர்களை சங்கமாக்கி அணி திரட்டுவதில் என்ன சிக்கல்?  தொலைபேசி மூலம் சில தொழிற்சங்க தலைவர்களிடம் வினவு செய்தியாளர் பேசினார்.

டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்,
பொதுச்செயலாளர், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்.

டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்,
பொதுச்செயலாளர், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்.

ற்போது பாசிச ஆட்சி நடக்கிறது. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஏற்ற வகையில் மாற்றத்தை செய்கிறது மோடி அரசு. மருத்துவம், குடிநீர், போக்குவரத்து உள்ளிட்ட அனைத்தையும் தனியார்மயமாக்கி வருகிறது. மக்கள் மீதான தாக்குதல் பலமுனைகளில் இருந்து வருகிறது. குறிப்பாக பொருளாதார தாக்குதல், மதவாத தாக்குதல் அதிகமாக உள்ளது. மூலதனத்தில் இருந்து விடுதலை, உழைப்பு சுரண்டலில் இருந்து விடுதலையடைய உழைக்கும் மக்கள் ஒன்றிணைய வேண்டும். அதற்குரிய உறுதியேற்பு நாள் தான் மே தினம்.

தோழர் சீனுவாசலு,
பொதுச் செயலர்,சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கம்
.

புதிய பொருளாதாரக் கொள்கை அமல்படுத்தப்பட்ட பிறகு எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. மாநகராட்சியில் ஒப்பந்த முறை அதிகரித்து வருகிறது. அதற்கெதிரான போராட்டத்தை தொடர்ச்சியாக நடத்தி வருகிறோம்.  அரசாணை 62-ன் படி, குறைந்த பட்ச ஊதியம் 15,725 ரூபாய் என்று அறிவித்தார்கள். அதனை கொடுக்காமல் இருக்கிறார்கள்.

தோழர் சீனுவாசலு,
பொதுச் செயலர்,சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கம்
.

சைதை துரைசாமி மேயராக இருக்கும் பொழுதே தெருக்களை கூட்ட “ஒரு மணி நேரத்திற்கு இருபது ரூபாய் என்ற முறையில் எட்டு மணி நேரத்திற்கு இருபத்தி ஆறு நாட்கள் வேலை வழங்க வேண்டும்” என்ற முறையில் குத்தகைக்கு விட முயற்சி செய்தார்கள். அதனை எதிர்த்து போராடியதால் தற்காலிகமாக  கைவிட்டார்கள். தற்போது அரசாணை 63 ஒன்றை போட்டு மணிக்கணக்கில் வேலை செய்வதற்கான ஒப்பந்தத்தை அமுல்படுத்த முயற்சிக்கிறார்கள்.

தொழிலாளர்களும் ஒற்றுமையாக இருப்பதில்லை. கட்சிகள் பின்னாடி செல்வது, கேக் வெட்டுவது, கொண்டாடுவது என்றே இருக்கிறார்கள். மோசமமான காலகட்டத்தில் இருக்கிறோம் என்பதை தொழிலாளி வர்க்கம் உணரவில்லை. அவர்களை வர்க்க ரீதியாக ஒன்றிணைக்க முயற்சி செய்து வருகிறோம்.

தோழர் பாபு , சிறப்புத்தலைவர்,
காஞ்சி காமகோடி மருத்துவமனை ஊழியர்கள் சங்கம்
.

தோழர் பாபு , சிறப்புத்தலைவர்,
காஞ்சி காமகோடி மருத்துவமனை ஊழியர்கள் சங்கம்
.

த்தியில் ஆளக்கூடிய மோடி அரசு தொழிலாளர் விரோதமாக செயல்படுகிறது. கார்ப்பரேட்டுக்களின் ஆதிக்கம் தான் ஆட்சி செய்கிறது. எங்கும் காண்ட்ராக்ட்மயமாகிறது. மே தினத்தில் காண்ட்ராக்ட் முறையை ஒழிக்க வேண்டும் என்பதே எங்களுடைய சூளுரை.

தோழர் திருச்செல்வன், பொதுச் செயலர்,
டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம்
, சிஐடியு.

132 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைமை மீண்டும் திரும்புகிறது. தொழிலாளர் நலச் சட்டங்களை அமல்படுத்த அரசு தயாராக இல்லை. உலகம் முழுவதிலும் வேலைப்பறிப்பு அதிகரித்து வருகிறது.  சம்பள வெட்டு , சமூக பாதுகாப்பின்மை என்று கொடிய நாட்களை சந்திக்கின்றோம். நிதி மூலதனமும், முதலாளித்துவமும் ஆட்டுவிக்கும் பாதையில் செல்கிறது அரசு.

தோழர் திருச்செல்வன், பொதுச் செயலர்,
டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம்
, சிஐடியு.

தொழிலாளர்களின் அடிப்படை உரிமையான சங்கம் துவங்குவது, தனக்கு பிடித்த சங்கத்தில் உறுப்பினராக சேர்வது கூட மறுக்கப்படுகிறது. மீறி சங்கம் துவங்கினால் நிர்வாகத்தால் பழிவாங்கப்படுகிறார்கள். சங்கத்தை பதிவு செய்வது கூட பெரும்பாடாக உள்ளது. அரசு – தனியார் என்று எல்லாத் துறையிலும் நவீன தாக்குதல் அதிகரித்து உள்ளது.  தொழிலாளர்களின் கடுங்கோபத்துக்கு ஆளாகி வருகிறது மோடி அரசு. அந்தக் கோபம் பெரும்போராட்டமாக வெடித்து சிதறும் நாள் நெருங்கி வருகிறது.

தோழர் பாலகிருஷ்ணன், தலைவர்,
சிஐடியு- அரசாங்க போக்குவரத்து ஊழியர்கள் சங்கம்.

ற்கனவே இருக்கக்கூடிய தொழிலாளர் சட்டங்கள் அனைத்தும் திருத்தப்பட்டுவிட்டன. தற்போது  குறிப்பிட்ட கால ஒப்பந்த ஊழியர் (Fixed Time Employs) என்ற முறையை கொண்டு வந்திருக்கிறார்கள். அதாவது நிரந்தரம் என்பது எங்கும் கிடையாது.  சமூகப் பாதுகாப்பு, ESI,PF, விடுப்பு எதுவும் கிடையாது. தொழிலாளர்களை கூலி அடிமைகளாக மாற்றுவது என்பதுதான் நடக்கிறது.

தோழர் பாலகிருஷ்ணன், தலைவர், 
சிஐடியு- அரசாங்க போக்குவரத்து ஊழியர்கள் சங்கம்.

தேர்தல் நேரத்தில் இரண்டு கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தார் மோடி. ஆனால் இருக்கின்ற வேலைகளை பறித்து வீட்டுக்கு அனுப்புகிறார். துப்பாக்கி தொழிற்சாலை. ஊட்டியில் உள்ள பிலிம் பேக்டரி மூடுவிழா, மோட்டார் வாகன தொழிலை கார்ப்பரேட்டிடம் ஒப்படைத்தல், ராணுவ உடை தயாரிப்பு தொழிற்சாலை தனியாரிடம் ஒப்படைத்து விட்டு தொழிலாளர்களை விரட்டியிருக்கிறது.

அரசு பொதுச் சொத்துக்களை பாதுகாப்பது, நிரந்த வேலையை உத்திரவாதப்படுத்துவது, மக்கள் நலன் என்ற கொள்கை எல்லாம் இப்பொழுது அரசுக்கு இல்லை.

தோழர் பழனிச்சாமி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புதுச்சேரி

தொழிலாளர் உரிமை என்பதே இல்லை. ஏற்கனவே அடிமையாக இருந்தார்கள். இப்பொழுது கொத்தடிமையாக இருக்கிறார்கள். எழுத்தளவில் இருந்த சட்டங்கள் எல்லாம் இன்று மோடி அரசு முதலாளிகளுக்கு சாதகமாக மாற்றி விட்டது. மோடி அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள தொழில்துறை துறை அமைச்சர், “முதலாளிக்கு தொழிலாளியை எப்பொழுது வேண்டுமானாலும் வேலையை விட்டு நீக்கவும், எடுக்கவும் உரிமை உண்டு” என்கிறார்.

தொழிலாளர்கள் உயிர்நீத்து பெறப்பட்ட உரிமை என்னவென்பதே தொழிலாளர்களுக்கு தெரியவில்லை. அந்த உரிமை பறிபோவது பற்றியும் கவலைப்படுவதில்லை. ஏற்கனவே ஓட்டுக்கட்சிகள் தொழிலாளியை மழுங்கடிக்கும் வேலையை செய்தன. இன்று முதலாளியே அந்த வேலையில் இறங்கியுள்ளார்கள். புதுவையில் ரானே பிரேக் லைனிங் லிமிடெட் நிறுவனத்தில் ஆண்டு சுற்றுலா என்கிற பெயரில்  தொழிலாளர் தினத்தில் குடும்பத்துடன் டூர் அழைத்து செல்கின்றார்கள். எங்கள் சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் தவிர்த்து மற்ற அனைத்து தொழிலாளர்களும் இத்தினத்தில் செல்கிறார்கள்.  போராட்ட குணம் முற்றிலும் மழுங்கடிக்கப்படுகிறது.

தோழர் ராஜேந்திரன்,
மாநில பொதுச்செயலர்,108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம்.

மே தினம் என்பது கொண்டாடக்கூடிய தினமாக இல்லை. எட்டு மணி நேரம் வேலை, உறக்கம், ஓய்வு என்பது எல்லாம் இல்லை. சமூகத்தை பற்றி சிந்திக்க கூட நேரம் இல்லாமல் போய்விட்டது. உயிர் நீத்து பெறப்பட்ட உரிமை ஒன்று கூட இல்லை. அதற்கு சிறந்த உதாரணம் எங்கள் வேலையை எடுத்துக்கொள்ளலாம். மற்ற துறைகளிலும் உள்ளது என்றாலும் நான் சார்ந்த துறையை பற்றி சொல்கிறேன். ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் பன்னிரண்டு மணி நேரம் வேலை செய்கிகிறார்கள். அதற்கு மேலும் வேலை செய்கிறார்கள். போதிய ஆட்கள் பற்றாக்குறையால் நாங்களே செய்ய வேண்டியுள்ளது. மலைப்பிரதேசங்களில் பணியாற்றக்கூடியவர்களுக்கு ஓய்வு என்பது சுத்தமாக இல்லை. இருபத்தி நான்கு மணி நேரமும் பணியில் இருக்கிறார்கள். பணிப் பாதுகாப்பும் இல்லை. ஊதியமும் இல்லை. மோடி அரசு எல்லா சட்ட திட்டங்களையும் ஒழித்து கட்டி வருகிறது.

இன்றைய தினத்தில் ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு சொல்லக்கூடியது, தொழிலாளர் சட்டம் உளுத்துப்போன, உதவாக்கரை சட்டமாக உள்ளது.  மற்ற நாடுகளில் எட்டு மணி நேர வேலையை ஆறுமணி நேரமாக குறைப்பது பற்றி  யோசித்து வருகிறார்கள். ஆனால் இங்கு பன்னிரண்டு மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று மோடி கூறுகிறார். கார்ப்பரேட்டுகளின் மனம் குளிர அவர்களுக்கு சேவை புரிகிறார். எனவே முதலாளித்துவத்துக்கு எதிராக ஒடுக்குமுறைக்கு எதிராக உலகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் வால்மார்ட், பிரான்சு, இந்தியாவில் கேரளா தேயிலை தோட்ட போராட்டம், குஜராத்தில் ஆயத்த ஆடை தொழிலாளர்கள் போராட்டம் என்று வீரியமாக நடந்து வருகிறது. இதனை ஒருங்கிணைக்க ஒரு சரியான தலைமை இல்லை என்பது நம் நாட்டிற்கு சாபக்கேடு. விரைவில் இந்த நிலைமாற தொழிலாலார்கள் வர்க்கமாக திரள வேண்டும். பகத்சிங் வழியில் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய அவசியம் உள்ளது.

தோழர் சுதேஷ்குமார்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, தமிழ்நாடு.

டந்த இருபது வருடமாக சங்கம் வைக்கும் உரிமை இருந்தது.  மோடி ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, “முதலாளிகளுக்கு தகுந்தாற் போல் தொழிலாளிகள் தங்களை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும், நாட்டின் வளர்ச்சிக்காக விட்டுக் கொடுக்க வேண்டும்” என்று சாதுர்யமாக சொல்கிறார்..  இந்த அறிவிப்பை சொல்லி முடிப்பதற்குள் முதலாளிகள் பல்வேறு விஷயங்களை அமல்படுத்திவிட்டனர். இது நுட்பமான முறை.  ஏழு பேர் சேர்ந்தால் சங்கம் சேரும் உரிமை உண்டு. ஆனால் முதலாளிகள் “சங்கமாக சேராதே, ஐவர் குழுவாக சேர்” பிரச்னையை தீர்த்துக்கொள்ளலாம் என்கிறது.

தோழர் சுதேஷ்குமார்

கடந்த மூன்று ஆண்டுகளில் சங்கம் துவங்க முடியாமல் உள்ளது.   தொழிலாளர்கள் பிரச்சனை என்று தொழிலாளர் துறைக்கு சென்றால், நிர்வாகத்திற்கு சம்மன் அனுப்புகிறார்கள். மூன்று முறைக்கு மேல் சம்மன் அனுப்பியும் நிர்வாகம் வரவில்லை என்றால், கோர்ட்டில் பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறார் தொழிலாளர் துறை அதிகாரி. தொழிலாளி பல் பிடுங்கபட்ட பாம்பாக இருப்பதால் முதலாளிகள் ஏறி அடிக்கிறார்கள். இன்றைய சூழலில் தொழிலாளர்கள் தங்கள் வாழ்ந்தால் போதும் என்றே இருக்கிறார். தொழிலாளர் சங்கங்களும் வலுவாக இல்லை. இதில் மோடி அரசு வெற்றி பெற்றுள்ளது. அசோக் லைலான்ட் நிறுவனத்தில் பயிற்சித் தொழிலாளர்களை நேரடி உற்பத்தியில் ஈடுபடுத்தி நிரந்தர வேலைகளைப் பறிக்கும் அரசின் NEEM திட்டத்தை  நடைமுறைபடுத்தியிருகிறார்கள். அதேபோல் குறிப்பிட்ட கால ஒப்பந்த ஊழியர் (fixed time employs) என்ற முறையை கொண்டுவந்திருக்கிறார்கள்.நிரந்தர தொழிலாளி என்ற பேச்சுக்கே இடமில்லை.  இனி வருகின்ற காலம் தொழிலாளர்களுக்கு இருண்ட காலமாக இருக்கின்றது. இதனை பொற்காலமாக மாற்ற வேண்டும் என்றால் சிகாகோ போராட்ட வழியில் செல்ல வேண்டும்.

– வினவு களச் செய்தியாளர்.

வங்கி தனியார்மயம் : கார்ப்பரேட் திருட்டுக்குத் தரப்படும் லைசன்ஸ் !

பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் குறித்து மக்களவையில் பதிலளித்த மைய அரசு, தற்போது பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் மதிப்பு 7.77 இலட்சம் கோடி ரூபாயாகும் எனத் தெரிவித்திருக்கிறது. இதில் 5.27 லட்சம் கோடி ரூபாயை மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் நிலுவையில் வைத்திருப்பதாகவும், கடந்த 2015-இல் இந்தத் தொகை 1.23 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என்றும் அப்பதிலில் மைய அரசு ஒப்புக்கொண்டிருக்கிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் நான்கு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு கார்ப்பரேட் முதலாளிகளின் வாராக் கடன் அதிகரித்திருப்பது ஒருபுறம் என்றால், இன்னொருபுறத்திலோ கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ஆறு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான வாராக் கடன்களை இந்திய வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளன. எனில், கார்ப்பரேட் முதலாளிகள் கடன் வாங்கி ஏப்பம் விட்டுள்ள பொதுப்பணத்தின் மதிப்பு என்ன என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.

விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மகாராஷ்டிராவில் நடைபெற்ற விவசாயிகளின் பேரணி

இந்நிலையில் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவர் பிபேக் தெபராய் வாராக் கடன் தொகையில் மேலும் மூன்று லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரியிருக்கிறார். இந்தத் தள்ளுபடியை அவர்கள் விவசாயிகளுக்கோ, கல்விக்கடன் வாங்கிய ஏழை மாணவர்களுக்கோ தரப்போவதில்லை. கார்ப்பரேட் முதலாளிகள்தான் இந்தச் சலுகையையும் அனுபவிக்கப் போகிறவர்கள்.

விவசாயிகள் கடன் தள்ளுபடி கேட்டால் வங்கிகள் திவாலாகிவிடும் எனப் பதறித் துடிப்பவர்கள், கார்ப்பரேட் முதலாளிகள் விசயத்தில் இந்த செண்டிமென்டெல்லாம் பார்ப்பதில்லை. பொதுத்துறை வங்கிகளை அழித்தாவது கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தைக் கைதூக்கிவிடத் தயாராகவே இருக்கிறார்கள் அவர்கள்.

பொதுத்துறை வங்கிகளை மீட்டெடுக்க 2.11 இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு அரசு மறுமுதலீடு செய்யப்போவதாக மோடி அரசு பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறது. வாராக் கடனால் திவால் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயப்படுத்துவதற்கு இந்த முதலீடு அவசியம் என நியாயப்படுத்தியிருக்கிறார், தெபராய்.

வங்கிப் பணத்தை ஏப்பம் விட்ட கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்திடமிருந்து அந்தப் பணத்தை மீட்பதற்குத் தயாராக இல்லாத மோடி அரசு, பொதுத்துறை வங்கிகளில் மறுமுதலீடு செய்து, பிறகு அவ்வங்கிகளைத் தனியார் முதலாளிகளிடம் கைமாற்றிவிடத் திட்டம் தீட்டுவது, வல்லுறவு குற்றவாளியைத் தண்டிக்காமல், அவனுக்கே பாதிக்கப்பட்ட பெண்ணைக் கட்டி வைக்கச் சொல்லும் சாதிப் பஞ்சாயத்து தீர்ப்புக்குச் சமமானது. ஆனால், ஆளுங்கும்பலோ இந்த அயோக்கியத்தனத்தை வங்கி சீர்திருத்தம் எனப் பெயரிட்டு அழைக்கிறது. புரோக்கர்களை பி.ஆர்.ஓ.க்கள் என நயமாக அழைப்பதில்லையா, அதுபோலத்தான் இதுவும்!

புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2018

மின்னூல்:


PayUMoney

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.


Paypal

$0.5




Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

மே தினம் : புதுவை – மதுரை ஆர்ப்பாட்டங்கள் !

0

புதுச்சேரி

மே நாள் சூளுரை!

  • கட்சிகளை மாற்றுவது தீர்வாகாது! கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு!
  • தோற்றுப் போய், ஆள அருகதையற்றுப் போன கார்ப்பரேட் அதிகாரத்தை அகற்றுவோம்!
  • தொழிலாளர்கள் – விவசாயிகள் – மாணவர் – இளைஞர்கள் – சிறுவணிகர்கள் – சிறுதொழில் முனைவோர் கூட்டதிகாரத்தை நிறுவுவோம்!

மே நாள்! நமக்கு மேற்கண்ட சூளுரையுடன் தான் துவங்கியது. ஆனால், வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும், ஓட்டுக் கட்சி தலைவர்களது அறிக்கைகளிலும் வாழ்த்துச் செய்திகளால் நிரம்பி வழிந்தது. ஓட்டுக் கட்சிகள் மற்றும் தனிநபர் தொழிற்சங்கங்களும், இனிப்புக்கள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

8 மணி நேர உரிமைகளைப் பெற்றுத் தந்து கொத்தடிமைத்தனத்திலிருந்து தொழிலாளி வர்க்கம் விடுதலை பெற்ற மாபெரும் போராட்ட நாள்தான் மே நாள் என்றாலும் அதைக் கொண்டாடுவதற்கான சூழ்நிலை தற்போது நிலவுகிறதா என்பது தான் நம்முன் உள்ள கேள்வி. அடக்குமுறைகள், சிறை, சித்திரவதைகள் என ஆயிரமாயிரம் தொழிலாளர்களின் உயிர்த் தியாகத்தால் பெற்ற வெற்றியை அடுத்தடுத்த நிலைகளுக்குக் கொண்டு செல்ல முடியாமல், பெற்ற வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ளும் நிலையில் கூட தொழிலாளி வர்க்கம் இல்லை. மாறாக, அந்த வெற்றிகளை இழந்து வருகிறோம். 12 மணிநேர வேலை கட்டாயமாகி விட்டது. சங்கம் சேரும் உரிமையைக் கூட இழந்து நிற்கிறோம். இன்றைய இந்த சூழ்நிலையில் மீண்டும் நமக்கான விடுதலையை மே தினத் தியாகிகளின் வழியிலே மாபெரும் போராட்டமாக நடத்த வேண்டியது நம்முன் உள்ள கடமையாகும்.

தொழிலாளர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த உழைக்கும் மக்களும் தங்களது உரிமைகளையும், வாழ்வாதாரத்தையும் இழந்து வருகின்றனர். மக்களின் சொத்துக்களைப் பறித்தெடுத்து கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வாரி வழங்கி முதலாளித்துவத்திற்குச் சேவை செய்யும் அரசாக மாறிவிட்டது. இந்த ஒட்டுமொத்த கட்டமைப்பும் தோற்றுப்போய் மக்களுக்கு எதிர்சக்தியாக மாறி விட்டது.

எனவே, இந்த கட்டமைப்பில் ஓட்டுக் கட்சிகளை மாற்றி மாற்றி தேர்ந்தெடுத்தும் மக்களின் பிரச்சினைகள் தீரவில்லை. அது வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதனால், கட்சிகளை மாற்றுவதால் பிரச்சினைகள் தீராது. மாற்றாக, இந்த அரசுக் கட்டமைப்பை மாற்றி, மக்களுக்கு அதிகாரம் வழங்கும் அரசுக் கட்டமைப்பை மக்களாகிய நாமே நிறுவிக் கொள்வதன் மூலமே நமக்கான பிரச்சினைகள் தீர்க்க முடியும்.

அன்றுதான் 8 மணிநேர வேலை உரிமை மட்டுமல்ல, நாம் இழந்து நிற்கும் அனைத்து உரிமைகளையும் வெல்ல முடியும் என்பதை வலியுறுத்தும் விதமாகவும் மே நாள் போராட்டத்தை மீண்டும் நடத்த அறைகூவல் விடுக்கும் விதமாகவும் புதுச்சேரி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் மே நாள் பேரணி – ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பேரணியை, புதுச்சேரி புஜதொமு மாநில இணைச் செயலாளர் தோழர் ஆனந்தகுமார் துவக்கி வைத்தார். அவர் தனது உரையில், மே நாளை கொண்டாட்ட நாளாக அல்லாமல் போராட்ட நாளாக நாம் ஏன் கடைபிடிக்க வேண்டும் என்ற அவசியத்தை விளக்கினார். இன்று பெற்ற உரிமைகளை இழந்து நிற்கிறோம். இதை மீட்டெடுக்க வேண்டுமென்றால், தொழிலாளர்களாகிய நாம் மட்டுமே களத்தில் நின்றால் போதாது. குடும்பம் குடும்பமாய் போராட்டங்களில் பங்கு பெற வேண்டும். பிற உழைக்கும் வர்க்கங்களும் இணைய வேண்டும் என்ற அறைகூவலுடன் பேரணியைத் துவங்கி வைத்தார்.

மே நாள் வாழ்கவே! என்று பறை முழக்கத்துடன், மே நாள் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி கம்பீரமாக துவங்கி, நகரத்தின் முக்கிய சாலைகள் வழியாக வரிசையாகவும், ஒழுக்கம், கட்டுப்பாடுடன் நகர்ந்த பேரணி, வழிநெடுகிலும் உள்ள வியாபாரிகள், மக்களின் கவனத்தை ஈர்த்தது. கொளுத்தும் வெயிலையும் வழிந்த வியர்வையையும் பொருட்படுத்தாமல் குழந்தைகள், பெண்கள் என அனைவரும் வீறுநடை போட்டனர். தொடர்ச்சியான முழக்கங்களுடன் நிறைவு பெற்ற பேரணியைத் தொடர்ந்து, நகரின் முக்கிய இடமான சாரம் அவ்வை திடலில் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்திற்கு புதுச்சேரி புஜதொமு மாநிலத் தலைவர் தோழர் சரவணன் தலைமை ஏற்றார். தனது தலைமையுரையில், மே நாள் என்பது போராட்ட நாள்தான் என்பதை வலியுறுத்திய அவர், அமெரிக்காவின் மேநாள் போராட்டங்களுக்கு முந்தைய நிலையில்தான் இன்று ஒட்டுமொத்த நாடும் உள்ளது. எல்லா அரசுத் துறையும் லஞ்சம், ஊழல், முறைகேடுகளால் சீரழிந்துள்ளது. அறிவு புகட்ட வேண்டிய கல்வித்துறை, கூட்டிக் கொடுக்கும் வேலை செய்கிறது. மக்களின் நண்பன் என்று சொல்லும் போலிசு குட்கா விற்கிறது. கொள்ளை, வழிப்பறியில் ஈடுபடுகிறது. நீதிமன்றங்களில் நீதி விலை பேசப்படுகிறது. தொழிலாளர் துறையில் இழுத்தடித்து தொழிலாளர்களை ஏமாற்றுகின்றனர். எனவே இதை ஒழிக்க, கட்சிகளை நம்பி ஏமாறாமல் கட்டமைப்பை மாற்றுவதற்கான வேலைகளில் இறங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தோழர் மகேந்திரன் தனது உரையில், “இன்று மாணவர் இளைஞர்கள் சமூக உணர்வற்றவர்களாக மாற்றப்பட்டு வருகின்றனர். தமிழகமே போராட்டக்களமாக மாறிய போதும், ஐபிஎல் கிரிக்கெட்டை வேடிக்கை பார்க்கத் திரள்வதே இதற்குச் சாட்சி. லட்சங்களைக் கொட்டி படித்து எப்படியாவது முன்னுக்கு வந்து விடலாம் என முட்டி மோதுகின்றனர். என்ன தான் படித்தாலும், இறுதியில் காண்டிராக்ட் வேலைதான் மிஞ்சுகிறது” என குறிப்பிட்டார். அரசின் பல்வேறு துறைகளும் சீரழிந்து வருவதைப் பட்டியலிட்டுப் பேசிய தோழர், மோடி போராடும் விவசாயிகளைச் சந்திக்காமல், நடிகைகளைச் சந்திப்பதையும், லெனின் விவசாயிக்குக் கொடுத்த முக்கியத்துவத்தையும் ஒப்பிட்டுப் பேசினார். எனவே, மக்களை மதிக்கின்ற அரசை உருவாக்க கட்சிகளை மாற்றுவது தீர்வாகாது கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு என்றார்.

திருவெண்ணெய் நல்லூர் வட்டார விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர் ஏழுமலை, இன்று விவசாயம் அழிந்து விட்டது. விவசாயிகளுக்கு மானியம், கடன் தள்ளுபடி என்று சொல்லி ஆட்சிக்கு வரும் எந்தக் கட்சியும், விவசாயத்தை நிரந்தரமாக காப்பாற்ற பேசுவதில்லை. விளைபொருளுக்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமையைப் பற்றி யாரும் பேசுவதில்லை. இன்று காவிரியைத் தடுத்து, டெல்டாவைப் பாலைவனமாக்க மோடி அரசு வேலை செய்கிறது. விவசாயத்தில் மட்டுமல்ல அனைத்துத் துறைகளிலும் நிலைமை அதுதான் என்று விளக்கிய தோழர், இவற்றிலிருந்து நாட்டைக் காப்பாற்றும் பெரும் பொறுப்பு புரட்சிகர அமைப்புகளின் தோளில் உள்ளது. அதை அந்த அமைப்புகளால் மட்டும் செய்து விட முடியாது. அந்தத் தோள்களின் மேல் உள்ள பொறுப்பை மக்களும் பகிர்ந்து கொள்வதன் மூலமே சாதிக்க முடியும் என மக்களுக்குப் போராட அறைகூவல் விடுத்தார்.

தமிழ்நாடு மின் ஊழியர்கள் ஜனநாயக முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ஸ்ரீதர் அவர்கள் பேசும் போது இந்த அரசின் எந்த உறுப்பும் மக்களுக்குப் பயன்படாத நிலையில்தான் உள்ளது. அதனால், இந்த அரசு நமக்குத் தேவையில்லை என்ற முடிவுக்கு மக்கள் வர வேண்டும். கட்சிகளால் மாற்றத்தைக் கொண்டு வர முடியவில்லை என்பதுதான் நாம் தினமும் காணும் உண்மை. எனவே, கட்சிகளை அல்ல, கட்டமைப்பை மாற்ற வேண்டுவதற்கான போராட்ட தருணம் இது என்றார்.

இறுதியாகப் பேசிய புதுச்சேரி, புஜதொமு மாநிலப் பொருளாளர் தோழர் செல்லக்கண்ணு, மே-1 தொழிலாளர் தினம் என்று நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். இந்த நாளில் பிறந்த அஜீத்தின் பிறந்த நாளைக் கொண்டாடுகின்றனர் இளைஞர்கள். எந்த ஒரு சமூகப் பிரச்சினைக்கும் வாயே திறக்காத ஒரு சுயநல தறுதலை, உங்களுக்கு தலையா? இன்று எது நமக்குத் தேவை? என கேள்வி எழுப்பினார்.

போலிசு உங்கள் நண்பன் என்கிறது உண்மையில் போலிசு மக்களின் நண்பனா? எனக் கேள்வி கேட்டால் சிறுகுழந்தை கூட இல்லை என்ற உண்மையைச் சொல்லும். மக்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் போலீசின் நிலை இன்று இதுதான். போலீசு மட்டுமல்ல, மற்ற அரசுத் துறைகளின் நிலைமையும் இதுதான் என்பதை உதாரணங்களுடன் விளக்கிப் பேசி, மக்களின் போராட்டங்களை ஒன்றிணைப்பதும் புரட்சியை நடத்துவதும் தான் நமது வேலையாக இருக்க வேண்டும் என்று முடித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் பாடப்பட்ட தொழிலாளர்கள், மேதினம் மற்றும் கம்யூனிசத்தை பற்றிய பாடல்கள் உணர்வு பூர்வமாகவும், உற்சாகத்தை ஊட்டுவதாகவும் இருந்தன. மக்களும் வெயிலைப் பொருட்படுத்தாமல் ஆங்காங்கே நின்று கேட்டனர்.

மேதினம் என்பது கொண்டாட்ட நாளல்ல! போராட்ட நாள் என்பதையும் இந்த கட்டமைப்பை நொறுக்குவதற்கான போராட்டமாகவும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவும் நிகழ்ச்சி அமைந்தது.

தகவல்: புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புதுச்சேரி.
தொடர்புக்கு: 959778901.

*****

மதுரையில்…

மிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சர்வதேச உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு புரட்சிகர அமைப்புகளின் சார்பில் பேரனி மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

அதன் ஒரு பகுதியாக 01.05.2018 அன்று மதுரை யா.ஒத்தக்கடை பகுதியில் மாலை 5:00 மணியளவில் மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் பேரணி – ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பேரணியின் முன் வரிசையில் பறையிசை முழங்க சிறுவர்களின் கலைநிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இது சுற்றி இருந்தவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருந்தது. இறுதியாக விண்ணதிரும் முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் நடந்து முடிந்தது.

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
மதுரை.

என் இனமடா நீ ! மோடி – பிப்லப் சந்திப்பில் என்ன பேசுவார்கள் ?

3

ர்.எஸ்.எஸ் சங்கி மங்கிகள் இன்னும் பரிணாம வளர்ச்சியில் முழுமை பெற்று மனிதர்களாகி விடவில்லை என்பது அனைவரும் அறிந்த இரகசியம் தான். இதை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மீதான வெறுப்பில் இருந்து சொல்லவில்லை.

நீங்கள் கதுவாவின் ஆசிபாவை இன்னும் மறந்திருக்க மாட்டீர்கள். அந்த எட்டு வயதுச் சிறுமியைக் கோவிலில் அடைத்து வைத்து போதை மருந்து கொடுத்து கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்து கடைசியில் அவளைக் குப்புறக் கிடத்தி முதுகெலும்பை மிதித்தே உடைத்துக் கொன்ற மனித மிருகங்களுக்கு ஆதரவாக ஊர்வலம் சென்ற தனது சட்டமன்ற உறுப்பினருக்கு அமைச்சர் பதவி வழங்கி அழகுபார்த்த கட்சி பா.ஜ.க. இதில் இருந்தே அவர்கள் பரிணாம வளர்ச்சியின் எந்தக் கட்டத்தில் இருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

உன்னாவில் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் குல்தீப்சிங் செங்கார் 17 வயதுச் சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கி சிதைத்துள்ளார். புகாரளிக்கச் சென்ற பெண்ணின் தந்தையைக் காவல் நிலையத்தில் வைத்து அடித்தே கொன்றுள்ளது அம்மாநிலத்தை ஆளும் பா.ஜ.க அரசு. ஒன்பது வயதுச் சிறுமியின் மேல் ஓடும் இரயிலில் வைத்து பாலியல் தாக்குதல் தொடுத்த தமிழ்நாடு பா.ஜ.கவின் பிரமுகர் பிரேம் ஆனந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.

பா.ஜ.க. பிரமுகர் பிரேம் ஆனந்த்

நாடெங்கும் சங்கி மங்கி மிருகங்களைக் கண்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர். கேரளாவின் பல பகுதிகளில் “இந்த வீட்டில் பெண் குழந்தைகள் இருப்பதால் ஓட்டுக் கேட்டு வரும் பா.ஜ.க தொண்டர்கள் தயவு செய்து உள்ளே நுழைய வேண்டாம்” என தங்கள் வீடுகளில் எழுதி ஒட்டியுள்ளனர். மும்பை புறநகர் தொடர் வண்டியில் பயணிக்க நுழைந்த உள்ளூர் பா.ஜ.க பிரமுகரைக் கண்டு அஞ்சிய பயணிகள், பெண்கள் பயணிப்பதால் “வெளியே போ” என அவரைப் பிடித்து தள்ளியுள்ளனர்

மக்களின் பீதியை அதிகரிக்கச் செய்யும் விதத்தில் சமீப காலமாக பாரதிய ஜனதா தலைவர்கள் விசித்திரமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். பத்திரிகையாளர்களிடம் சமீபத்தில் பேசிய திரிபுராவின் பா.ஜ.க முதல்வர் பிப்லப் தேவ், சிவில் இஞ்சினியர்கள் தான் சிவில் சர்வீசுக்கு (பொது நிர்வாக பணிகள்) வர வேண்டும் என்றும், மெக்கானிக்கல் இஞ்சினியர்கள் வரக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார். இது குறித்து விளக்கம் கேட்ட போது சிவில் இஞ்சினியர்கள் தான் சமூகத்தைக் கட்டியெழுப்பும் திறன் பெற்றவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதே ’டிப்டாப்’ ஆசாமி கடந்த சில தினங்களுக்கு முன் வேலை கிடைக்காத இளைஞர்கள் அரசாங்கத்தை தொல்லை செய்யக் கூடாதென்றும், மாடு வளர்த்து பால் கறந்து விற்றோ பீடா கடை போட்டோ பிழைக்கும் வழியைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு நாம் தமிழர் தம்பிமார்கள் மேற்படி நபருக்கும் தமிழ் முப்பாட்டன்மார்களுக்கும் தொடர்பு ஏதேனும் உள்ளதா என்று அறிய காப்புரிமை பெற்ற மூத்திரச் சோதனைக்கு தயாராகி வருவதாக கேள்வி.

மகாபாரத காலத்திலேயே இண்டர்நெட் இருந்ததாக திரிபுராவின் பா.ஜ.க முதல்வர் அறிவித்திருப்பது  தம்பிமார்களின் சந்தேகத்தை மேலும் வலுவடையச் செய்திருக்கிறதாம். ஆமையோட்டுப் படகுகளில் வங்கக் கடலைக் கடந்து திரிபுராவை நோக்கி புலிப்படையொன்று கிளம்பியிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே தன்னை வந்து சந்திக்கும்படி மேற்படி நபருக்கு பிரதமர் ஓலை அனுப்பியுள்ளதாக பத்திரிகைச் செய்திகள் அறிவிக்கின்றன. இந்த சந்திப்புக்கு பொருள் விளக்கம் எழுதிக் கொண்டிருக்கும் பத்தி எழுத்தாளர்கள், பிப்லப் தேவ்-வை பிரதமர் மோடி கடுமையாக கண்டிக்கப் போகிறார் என்று ஆருடம் சொல்கின்றனர். ஆனால், பிரதமரின் பழைய ரிக்கார்டுகளைப் புரட்டிப் பார்த்தால் கண்டனங்கள் தெரிவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் நிச்சயம் இல்லை. பண்டைய இந்தியாவில் பிளாஸ்டிக் சர்ஜரி இருந்ததற்கான ஆதாரமாக சிவகாசி ஓவியர்கள் வரைந்த விநாயகரின் வண்ணப்படத்தைக் காட்டியவர் தான் நமது பிரதமர் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

மேலும், வேலையற்ற இளைஞர்கள் பக்கோடா கடை போட்டுப் பிழைத்துக் கொள்ளட்டும் என்று சொன்னவர் தான் பிரதமர். பக்கோடா கடைக்கும் பீடா கடைக்கும் அதிக தொலைவு இல்லையே. இதில் இன்னொரு ஆச்சர்யமான ஒற்றுமையும் உள்ளது. பிரதமரின் பக்கோடா கடை ஆலோசனையை விதந்தோதிய பொருளாதார மேதை துக்ளக் குருமூர்த்தி, திரிபுரா முதல்வரின் பீடாக்கடை ஆலோசனையையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

ஆக பிரதமர் – திரிபுரா முதல்வர் சந்திப்பில் என்ன நடக்க வாய்ப்புள்ளது?

  • ”என் இனமடா நீ” என்று பிப்லப் தேவ்-வை அணைத்துக் கொள்வார் பிரதமர்.
  • ”என்னப்பா தம்பி, நான் ஷாகா போன காலத்துல இந்த பாடம்லாம் எடுக்கலையே” என ஆச்சர்யப்படுவார்
  • ”என்ன அம்மாச… எனக்கே போட்டியா?” என்று பொறாமைப்படுவார்.
  • “பிரதமருக்கான நாக்பூரின் அடுத்த பட்டியல்ல நீ தான்யா முதல்லே இருக்கே” என பாராட்டுவார்
  • “மச்சி நீயெல்லாம் திரிபுராவில் இருக்க வேண்டிய ஆளே இல்லை. சீக்கிரம் என்னோட அமைச்சரவைலே இடம் தாரேன்” என்று புளகாங்கிதம் அடைவார்.
  • ”இதே மாதிரி பேச ஹெச்.ராஜாவுக்கும் தமிழிசைக்கும் ட்ரைனிங் குடுத்து தமிழ்நாட்டுல தாமரையை மலர வைக்க வேண்டியது உன்னோட பொறுப்பு” என்று நம்பிக்கை அளிப்பார்
  • “பாருப்பா தம்பி நாம பேசறதைக் கேட்டு உலகே உருண்டு புரண்டு சந்தோசத்துல சிரிக்குது” என்று மகிழ்ச்சியடைவார்.
  • ”மார்க்சிஸ்டுகள் ஆட்சியில் கண்டு கொள்ளப்படாமல் இருந்த திரிபுராவை நோக்கி மொத்த உலகத்தின் கவனத்தையும் திருப்பிய இளவலே வாழ்க” என்று குருமூர்த்தி பாணியில் வாழ்த்துவார்

  • “இந்தக் கட்சியில் கொள்கை முழக்கம் செய்யும் உரிமை எனக்கு மட்டுமே உள்ளது” எனக் கோபப்படுவார்.
  • ”நல்ல வேளை… இந்த கும்பல்லேயே புத்திசாலி நான் தான்னு நிரூப்பிச்சிட்டே தம்பி” எனக் கூறி ஆரத் தழுவிக் கொளாவார்.

இதற்கு மேல் பறக்க முடியாதென எமது கற்பனைக் குதிரை சண்டித்தனம் செய்வதால் வேறு எந்த மாதிரியெல்லாம் அந்த சந்திப்பில் பேசப்படும் என்பதை நீங்களே யோசித்து பின்னூட்டத்தில் சொல்லுங்கள் பார்க்கலாம்.

– சாக்கியன்.

ஓசூர் – கும்மிடிப்பூண்டி மே தின நிகழ்வுகள் !

ஓசூர்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி  தனது தோழமை அமைப்பான புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியுடன் இணைந்து ஓசூரில் 01.05.2018 அன்று மேதின பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

தாலுகா அலுவலகம் எதிரிலிருந்து மாலை 4.00 மணியளவில் பேரணி தொடங்கியது. புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை சேர்ந்த தோழர் வெங்கடேசன் மேதினத்தின் பிறப்பை சிறு குறிப்பாக உரையாற்றி பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியில் பெண்கள் குழந்தைகள் பெரியவர்கள் உள்ளிட்டோர் பலரும் கலந்துக்கொண்டு விண்ணதிர உணர்வுப்பூர்வமாக முழக்கமிட்டு சென்றதை ஏராளமான பொதுமக்கள் நின்று கவனித்தனர்.

பேரணியின் முடிவில் ரயில் நிலையம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்டச் செயலாளர் தோழர் பரசுராமன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தருமபுரி மாவட்ட அமைப்பாளர் தோழர் அன்பு கலந்து கொண்டு காவி மயமாக்கப்படும் கல்வித்துறை மற்றும் நீதித்துறை என்ற தலைப்பிலும் மக்கள் அதிகாரத்தின் தருமபுரி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் முத்துக்குமார், கட்சிகளை மாற்றுவது தீர்வல்ல, கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு என்ற தலைப்பிலும் தோழர் சிவா, காவிரியில் வஞ்சிக்கப்படும் தமிழகம் என்ற தலைப்பிலும் உரையாற்றினர். இறுதியில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை சேர்ந்த தோழர் சங்கர் நன்றியுரையாற்றினார்.

தகவல் : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, ஓசூர்
தொடர்புக்கு – 97880 11784.

திருவள்ளூர் கிழக்கு

மே தினத்தையொட்டி பு.ஜ.தொ.மு திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பாக,பேருந்து, இரயில் மற்றும் தொழிலாளர் குடியிருப்புப் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

மே நாளன்று கிளை, இணைப்புச் சங்கங்களில் ஆலை வாயில்களில் கொடியேற்றி ஆலை வாயிற் கூட்டங்கள் நடத்தப்பட்டன. மாலை 5 மணிக்கு கும்மிடிப்பூண்டி ரெட்டம்பேடு சாலையிலிருந்து தொடங்கிய பேரணியை பு.ஜ.தொ.மு மாநில பொதுச்செயலாளர் தோழர் சுப. தங்கராசு, மாநில இணைச் செயலாளர் தோழர் ம.சி. சுதேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்க, மாநில துணைத்தலைவர் தோழர் இரா.சதீஷ் துவக்கி வைத்தார். பறையிசை, சிறுவர் சிலம்பாட்டத்துடனும் விண்ணதிரும் முழக்கத்துடன் பேரணி துவக்கி நடத்தப்பட்டது.

மாலை 6 மணிக்கு கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் தோழர் கே.எம் விகேந்தர் தலைமையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தோழர் ம.சி. சுதேஷ்குமார் மேநாள் குறித்து உரையாற்றினார். கிளை இணைப்பு சங்க நிர்வாகிகள், தொழிலாளார்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் ஆளும் வர்க்கத்துக்கு அதிர்வை ஏற்படுத்துவதாகவும், தொழிலாளர்களுக்கும் உழைக்கும் மக்களுக்கும் உற்ற தோழன் பு.ஜ.தொ.மு.தான் என்பதை பறைசாற்றுவதாகவும் அமைந்தது.

தகவல் : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, திருவள்ளூர் கிழக்கு

நான் உலகம்.. தொழிலாளி நானே உலகம் ! பாடல்

1

ந்த உலகம் தானே சுழலவில்லை! தொழிலாளியின் வியர்வையே அதன் எரிசக்தியாய் இயக்குகிறது !

நீரைத் தேக்கும் அணைகள், பூமியை அளக்கும் சாலைகள், மனித குல முன்னேற்றத்தையே வார்த்தெடுக்கும் ஆலைகள், விரிந்து பரந்த உலகத்தையே கால்பந்தாய் கைக்குள் அடக்கிய கணிணிகள், விண்ணில் மிதக்கும் நட்சத்திரங்களையும் கரம் பிடித்து பூமிக்கு அழைத்து வரும் செயற்கைக் கோள்கள், இப்படி அனைத்திலும் கலந்திருக்கிறது உழைப்பு.

ஆனால் இந்த உலகத்தை உருவாக்கியதும், உலகமக்களை இரட்சிப்பதும் தாங்கள்தான் என்று ஊளையிடுகின்றன முதலாளித்துவ ஓநாய்கள். ஒவ்வொரு முதலாளியின் வளர்ச்சிக்கும் பின்னால், கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் வாழ்க்கை புதைக்கப்படுகிறது.

உலகப் பணக்காரனான அம்பானி உயர்வதற்கு அழிக்கப்பட்ட சிறுதொழில்கள் எத்தனை ஆயிரம்! டாடா, பிர்லாக்களின் இலாப வேட்டைக்காகவே ஈழத்தில் மட்டுமல்ல… இந்தியாவிலும் புதையுண்ட உயிர்கள்தான் எத்தனை ஆயிரம். தினந்தோறும் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள், நெசவாளிகளின் பிணங்களை பரிசோதனை செய்து பாருங்கள்.

அங்கே தெரியும் முதலாளித்துவ தனியுடைமையின் கோரமுகம் !

எண்ணெய் வளங்களைக் கொள்ளையிட ஈராக்கில் அமெரிக்கா நடத்தி வரும் மனிதப் படுகொலைகள், உலகத்தை இரட்சிக்கவா அல்லது உலக வளங்களைக் கொள்ளையிடவா ?

இந்த உலகத்தை அழிப்பவன் முதலாளி..  காப்பவன் தொழிலாளி.. படைத்தலும் காத்தலும் அழித்தலும் கடவுளின் செயல் என்றான் ஆன்மிகவாதி !

அது இல்லாத கடவுளைப் பற்றி உருவாக்கப்பட்டிருக்கும் மாயை. இதோ இருக்கும் கடவுளாய் தொழிலாளி வர்க்கம். படைத்தலும் காத்தலும் தீமையை அழித்தலும் கடவுளின் செயல் என்றால் நாமே அந்தக் கடவுள் ! நாமே அந்த உலகம் !

உழைப்பாளியே அந்தக் கடவுள், உழைப்பாளியே அந்த உலகம் !

பாடல் வரிகள் :

நான் உலகம் !
நானே உலகம் !

( நான் உலகம்! நானே உலகம்! )

வானில் மண்ணில் வழியில் ஒளியில் …
வாழ்வில் எங்கெங்கும் என் உதிரம் !          (2)

நான் உலகம் !
தொழிலாளி நானே உலகம் !          (5)

காணும் காட்சி யாவும்
உருவாக்கும் ஆற்றல் நானே !

உருவாக்கும் ஆற்றல் நானே !

அதை காலம், தேசமெங்கும்
நீண்டு காக்கும் கைகள் நானே !

நீண்டு காக்கும் கைகள் நானே !

மாறாத …
மாறாதே இது என்றால் அதை
மாற்றும் கடவுள் நானே

( நான் உலகம் ! தொழிலாளி நானே உலகம் ! )

சீனத்தின் பெருஞ்சுவர் நான் ..
சிலிகுரியின் தேயிலை நான் ..

(சீனத்தின் பெருஞ்சுவர் நான் ..
சிலிகுரியின் தேயிலை நான் .. )

வானத்தின் வலைகள் நான் ..
பாலத்தின் தூண்கள் நான் ..

(வானத்தின் வலைகள் நான் ..
பாலத்தின் தூண்கள் நான் .. )

அழியாத வரலாற்றுச் சின்னம் நான் ..
நவநாகரிகத்தின் சிற்பியும் நான் ..

(அழியாத வரலாற்றுச் சின்னம் நான் ..
நவநாகரிகத்தின் சிற்பியும் நான் .. )

அணுவிலும் உயிராய் வாழ்பவன் நான்..
நான் தான்..

(நான் உலகம்.. தொழிலாளி நானே உலகம் !)

வானில் மண்ணில் வழியில் ஒளியில் …
வாழ்வில் எங்கெங்கும் என் உதிரம் !

(வானில் மண்ணில் வழியில் ஒளியில் …
வாழ்வில் எங்கெங்கும் என் உதிரம் ! )

(நான் உலகம்.. தொழிலாளி நானே உலகம் !)

(2009-ம் ஆண்டில் வெளியான, ம.க.இ.க-வின் 11-வது பாடல் குறுந்தகடான “நான் உலகம்” தொகுப்பில் இடம் பெற்ற பாடல்.)

பாடல் : மக்கள் கலை இலக்கியக் கழகம்
வீடியோ ஆக்கம் : வினவு

காவிரி உரிமை : சென்னை தாம்பரத்தில் மக்கள் அதிகாரம் கூட்டம் – செய்தி, படங்கள்

சென்னை தாம்பரம் மார்க்கெட் பகுதியில் “காவிரி உரிமை: குப்புறத் தள்ளிய டெல்லி குழியும் பறித்தது” என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் 28.04.2018  அன்று மாலை 5.30 மணியளவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திரளாக பொதுமக்களும், தோழர்களும், ஜனநாயக சக்திகளும் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்திற்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல் செழியன் தலைமை தாங்கினார். தமிழ் தேசிய விடுதலை இயக்கத் தோழர் தியாகு, தன்னாட்சி தமிழகம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு. ஆழி செந்தில்நாதன், காவிரி விவசாயிகள் சங்க திரு. G.வரதராஜன் மற்றும் மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கினைப்பாளர் தோழர் ராஜூ ஆகியோர் உரையாற்றினர். மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தோழர் வெற்றிவேல் செழியன்

தோழர் வெற்றிவேல் செழியன் – சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம். –  தனது தலைமை உரையில்…”காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்தும், தொடர்ச்சியாக தமிழகத்தை வஞ்சிக்கும் வேலையை நீதிமன்றத்தின் துணையோடு இந்த மோடி அரசாங்கம் செய்து வருகிறது” என்று பேசினார்.

அவரைத் தொடர்ந்து தமிழ் தேசிய விடுதலை இயக்க தோழர் தியாகு, “தமிழக மக்கள் கோருவது காவிரி மேலாண்மை வாரியம். அதிகாரமுள்ள காவிரி மேலாண்மை வாரியமும், அதை செயல்படுத்த கூடிய ஒழுக்காற்று வாரியமும் வேண்டும். காவிரி நதி நீர் பங்கீடு என்பது நமது உரிமை. ஆறுகள் எல்லாம் தேசிய உடைமை ஆக்குவோம் என்கின்றனர். என்ன பொருள் கர்நாடக மாநிலத்தின், தமிழக மாநிலத்தின் உடைமையாக உள்ள காவிரியை இந்திய உடைமையாக்க வேண்டும் என கூறுகிறார்கள்.

பெங்களுரு தான் பெரிய நகரமா? சென்னை பெரிய நகரம் இல்லையா? காவிரியில் தண்ணீர் வரவில்லை என்றால், சென்னை மக்களுக்கு வரும் தண்ணீர் அடைப்படுகிறது என்று பொருள். வீராணம் ஏரியில் தண்ணீர் இல்லை. காவிரியில் இருந்து தான் வீராணத்திற்கு தண்ணீர் வருகிறது. வீராணத்திலிருந்து தான் சென்னைக்கு தண்ணீர் வருகிறது. கர்நாடகத்தின் பல  மாவட்டங்களில் வறட்சி நிலவுகிறது என்று தீபக் மிஸ்ரா சொல்கிறார். தமிழகத்தின் மாவட்டங்கள் என்ன செழுமையாகவா இருக்கிறது? இங்கு வறட்சி இல்லையா? காவிரி உரிமை என்பது, காவிரி படுகைக்கான உரிமை.

தோழர் தியாகு

எல்லா திட்டங்களையும் எதிர்ப்பதாக தமிழக அரசு குறைபட்டு கொள்கிறது.  தமிழ்நாட்டில் நாங்கள் கேட்கும் அத்திக்கடவு-அவினாசி போன்ற கூட்டு குடிநீர் திட்டங்களை செயல்படுத்துங்கள். ஆதரவு தருகிறோம்.

வளர்ச்சி என்ற பெயரில் சுற்றுச்சூழலை அழிக்கும் கார்ப்பரேட்களுக்கான திட்டங்களைத்தான் கொண்டு வருகிறது மத்திய அரசு.

நாங்கள் இந்தியாவை ஒன்று கேட்கிறோம். நாங்கள் எங்கள் ஆற்றை காப்பாற்றுங்கள் என்கிறோம், தமிழ்நாட்டு நலனுக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துங்கள் என்கிறோம். ஆனால் உங்களால் முடியவில்லை எனவே நீங்கள் எங்களை விட்டு விடுதலை பெற்று போய் விடுங்கள். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். தமிழகத்திற்கு அதிகாரம் இருந்தால் யாரும் காவிரியை சிறைப்பிடிக்க முடியாது. தமிழக மக்கள் அனைவரும் ஒன்று கூடி உரிமையை மீட்டு எடுப்போம்” என்று பேசினார்.

தன்னாட்சி தமிழகம், ஒருங்கிணைப்பாளர்,  திரு. ஆழி செந்தில்நாதன், “கர்நாடகத்திற்கு சொந்தமான எதையும் நாம் கேட்கவில்லை. தமிழகத்திற்கு பல காலத்திற்கு சொந்தமான உரிமையை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்று தான் கேட்கிறோம். கர்நாடகத்தை பொறுத்தவரை காவிரி பிரச்சனையில் அங்கு உள்ள அனைத்து கட்சிகளும் தமிழகத்திற்கு எதிராக தான் பேசுகிறார்கள். ஒவ்வொரு முறையும் காவிரி பிரச்சனை வரும் பொழுதெல்லாம் கர்நாடகாவில் திட்டமிட்டே கலவரத்தை உருவாக்குகிறார்கள் பிறகு அதையே காரணம் காட்டி தண்ணீர் தர முடியாது என நாடகமாடுவார்கள்.

திரு. ஆழி செந்தில்நாதன்

மத்திய அரசின் கடமை என்ன? கர்நாடக அரசு என்ன சொல்கிறதோ அதை தான் மத்திய அரசும் சொல்கிறது. இப்பொழுது கர்நாடகத்தில் தேர்தல் என்கிறார்கள். அடுத்து நாடாளுமன்ற தேர்தல் வந்தாலும் இதையே தான் சொல்வார்கள்.

காவிரி டெல்டா பகுதியை வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று நாம் கேட்கிறோம். காவிரியை காப்பாற்ற போராடுகிறோம். ஆனால் அவர்கள் காவிரி படுகைக்கு கீழே இருக்க கூடிய இயற்கை வளத்தை கொள்ளையடிக்க, அதை ஒரு ஹைட்ரோகார்பன் மண்டலமாக மாற்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் தீர்மானித்திருக்கிறது. மோடி அரசாங்கம் யாரின் பக்கம் இருக்கிறது? தனக்கு ஓட்டு போடாத, மோடி வந்தால் கருப்பு கொடி காட்டும் தமிழக்கத்தின் பக்கம் அவர்கள் செயல்பட மாட்டார்கள். தமிழகம் இந்தியா என்ற கட்டமைப்பை பல வகையில் ஏற்று கொண்டிருக்கிறது. ஆனால் டெல்லி என்றும் நம்மை சமமாக நடத்தியதில்லை.

தமிழகத்தில் ஏன் தொடர்ச்சியாக போராட்டம் நடக்கிறது என்று கேட்கிறார்கள். தமிழகம் தொடர்ச்சியாக பல வகையில் ஒடுக்கப்படுகிறது அதனால் தான் இங்கு போராட்டங்கள் கடுமையாக நடக்கிறது. காவிரி பிரச்சனையை மக்கள் அதிகாரம் போன்ற அமைப்புகள் முன்னெடுக்கும் போது உண்மையிலேயே நம்பிக்கை பிறக்கிறது. தமிழர்கள் அனைவரும் ஒன்று கூடி தமிழ்நாட்டை மீட்டெடுப்போம்” என்று பேசினார்.

அவரைத் தொடர்ந்து திருவாரூர், காவிரி விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த,                 திரு. G. வரதராஜன் ஆற்றிய உரையில்…மக்கள் அதிகாரம் அமைப்பு, விவசாயிகள் கொத்து கொத்தாக செத்து கொண்டிருக்கும் போது, ”நெஞ்சு வெடித்து சாகிறான் விவசாயி” என்று திருவாரூரில் போராடினார்கள். தஞ்சாவூரில் விவசாயிகளுக்கு நம்பிக்கை தரும் வகையில் பல ஆயிரம் மக்களை அணிதிரட்டி மாநாடு நடத்தினார்கள். காவிரி தான் தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரின் உடலில் ஓடும் ரத்தம். விவசாயிகள் பல வகையில் பாதிக்கப்படுகிறார்கள். விவசாயிகள் ரேசன் கடைகளில் தான் அரிசி வாங்கி சாப்பிடுகிறார்கள் என்பதை உணர்த்தவே இங்கு இந்த கூட்டம்.

திரு. G. வரதராஜன்

தமிழகத்திற்கு தண்ணீர் தர கூடாது என்று டெல்லி நினைக்கிறது. விவசாயிகள் காவிரிக்காக மட்டும் போராடவில்லை, விளைநிலங்களை காப்பாற்ற போராடி கொண்டிருக்கிறார்கள். ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு தீவிரம் காட்டுகிறது. மக்கள் வாழ முடியாத இடமாக கிராமங்கள் மாறி வருகிறது. 21 மாவட்டங்களுக்கு ஆதரமாக இருப்பது காவிரி. காவிரி இல்லையென்றால் விவசாயிகள் வாழ்க்கை அழிந்துவிடும். மத்திய அரசை எதிர்த்து போராடி தமிழகத்தின் உரிமை மீட்டெடுக்க வேண்டும்” என்று பேசினார்.

இறுதியாக மக்கள் அதிகாரம், மாநில ஒருங்கிணைப்பாளர், தோழர் ராஜு  ஆற்றிய உரையில்…

“காவிரி மேலாண்மை வாரியம் குறித்து உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வந்ததை அடுத்து மக்கள் அதிகாரம் உட்பட பல அமைப்புகளும், பொதுமக்களும்  இதை எதிர்த்து போராடிக்கொண்டு இருக்கிறோம். தமிழகம் முழுவதும் நடக்கும் போராட்டங்களை டெல்லி கொஞ்சம் கூட மதிக்கவில்லை. தீபக் மிஸ்ரா இன்னொரு மோடியாக செயல்படுகிறார். நமக்கு எப்படி நியாயம் கிடைக்கும்?

தோழர் ராஜீ

கர்நாடகத்தில் உள்ள காங்கிரஸ், பி.ஜே.பி நமக்கு எதிராக செயல்படுகிறது. இந்த பிரச்சனையை சரி செய்யும் கடமை மத்திய அரசுக்கு தான் உள்ளது. ஆனால் இத்தனை ஆண்டுகளாக இந்த பிரச்சனையை சரி செய்யாமல் இருக்கிறது. 8 கோடி தமிழகமக்களை பற்றி என்ன நினைக்கிறது இந்த மத்திய அரசு? நாம்  எல்லா வகையிலும் போராடி விட்டோம். தமிழ்நாட்டில் இன்னும் என்ன செய்யவேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறார்கள்? காவிரி தர வேண்டும். அது நமது உரிமை. இதை யாரும் மறுக்க முடியாது.

போராடும் மக்களை ஏன் தமிழக அரசு தடுக்கிறது? மக்கள் அதிகாரத்திற்கு சீர்காழியில் பொதுக்கூட்டம் நடத்த கூடாது என தடை விதிக்கிறது. போராட்டத்திற்கு பாதுகாப்பு தர வேண்டியது தான் போலீசோட வேலை. நீதிமன்றம், போலீசுக்கு மக்கள் அடிமை கிடையாது. உங்களை உருவாக்கியது யார்?. மக்கள்  தான்!

தாசில்தார், கலெக்டர் மனு கொடுத்து நாங்கள் தோற்றுவிட்டோம். மணல் கொள்ளையடிப்பவனுக்கு இவர்கள் துணை போகும் போது மக்கள் தான் மணல் கொள்ளையை தடுப்பார்கள். குட்கா ஊழல் யார் மீது வழக்கு, மாநிலத்துடைய சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி மீது புகார், தடை செய்த குட்கா விற்பனைக்கு மாதம் மாதம் சம்பளம் மாதிரி மாமூல் வாங்கியுள்ளார்கள். மக்கள் அதிகாரம் இதை சொல்லவில்லை. வருமான வரித்துறை சொல்கிறது. இவர்கள் விசாரணை செய்து முடிப்பதற்குள் எல்லாம் முடிந்துவிடும். ஒட்டு மொத்த அரசு கட்டமைப்பும் தோற்றுவிட்டது.

3-ம் தேதி காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து தண்ணீர் வர போகிறதா? டெல்லி அமைக்க போவது கர்நாடகத்திற்கு ஆதரவாக தான் இருக்கும். தமிழ்நாட்டிற்கு ஆதரவாக தப்பி தவறி வந்தாலும், அதை கர்நாடக ஏற்று கொள்ள போவதில்லை. மேல் முறையீட்டுக்கு போவார்கள். நாம் மீண்டும் போராட வேண்டும்.

டெல்டா மாவட்டங்களில் முழுவதும் கச்சா எண்ணெய், நிலக்கரி எடுக்கவேண்டும் என்பது  மத்திய அரசாங்கத்தின் திட்டம், கொள்கை. இந்த திட்டத்தை மாநிலத்தில் இருக்க கூடிய கட்சிகள் அனைத்தும் ஏற்று கொள்கிறது. எரிவாயு எடுப்பதற்கும், எண்ணெய் எடுப்பதற்கும் காவிரி தண்ணீர் எதற்கு? இந்த விசயங்களை தீர்மானிக்க கூடிய அதிகாரத்தை, கொள்கையை கேள்வி கேட்காமல் முறியடிக்காமல் நம்முடைய கோரிக்கையை எப்படி சாதிக்க முடியும்?

எல்லா திட்டங்களையும் வளர்ச்சி என்கிறார்கள். யாருக்கான வளர்ச்சி? அம்பானி, அதானி, மிட்டல், மல்லையா போன்றோரின் வளர்ச்சி, நீரவ் மோடி, லலித் மோடி, போன்றோரின் வளர்ச்சி தான் வளர்ச்சி என்று மோடி அரசு கூறுகிறது.

மோடியின் கொள்கை என்பது கார்ப்பரேட்கள் கொள்ளையடிக்க, வழி வகுத்து தருவது தான். ஒரு லட்சம் கோடி கச்சா எண்ணெய் மூலம் மத்திய அரசுக்கு லாபம் போகிறது. ஆனால் வேலை வாய்ப்பு 500 பேருக்கு தான் என்கிறார்கள்.

தமிழக மக்கள் ஏமாளியாக இருக்கிறார்கள் என்று டெல்லி நினைக்கிறது. மெரினாவில் மாற்றியிருக்கிறோம், சாதித்து காட்டியிருக்கிறோம். அது போல காவிரியை மீட்காமல் வீட்டுக்கு போக கூடாது என முடிவு செய்வோம். போலீசுக்கு பயப்படாமல் கோர்ட்டுக்கு பயப்படாமல் போராடினால் காவிரிநீர் கண்டிப்பாக வரும்” என எழுச்சியுரையாற்றினார்.

மக்கள் கலை இலக்கிய கழகத்தின் கலை நிகழ்ச்சி மோடி அரசை அம்பலப்படுத்தி பாடல்கள் பாடியது சிறப்பாக இருந்தது. மார்க்கெட் பகுதி என்பதால் பொதுமக்கள் அதிகளவில் பொதுக்கூட்டத்தை கவனித்தனர்.

மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம், தொலைபேசி : 91768 01656

வேலூர் – கோத்தகிரியில் மே தின நிகழ்வுகள் !

மே 1 தொழிலாளர் தினமன்று புஜதொமு சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பேரணி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

வேலூர்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்புச் சங்கமான “வேலூர் மாநகர் மாவட்ட சாலையோர வணிகர்கள் மற்றும் சிற்றுண்டி வணிகர்கள் நலச்சங்கம்” சார்பில் அண்ணா கலையரங்கம், மீன் மார்கெட் மற்றும் அடுக்கம்பாறை ஆகிய கிளைகளில் மே நாளையொட்டி 01.05.2018 அன்று காலை 10.00 மணியளவில் சங்கக் கொடியேற்றப்பட்டது.

அண்ணா கலையரங்கம் மற்றும் மீன் மார்கெட் கிளைகளில் தோழர் சுப்ரமணி தலைமையேற்க தோழர் சத்யா சங்கக் கொடியை ஏற்றினார். இவ்விரு கிளைகளிலும் மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர் அகிலன் சிறப்புரையாற்றினார்.

அடுக்கம்பாறை கிளையில் தோழர் முருகன் தலைமையேற்று சங்கக் கொடியை ஏற்றினார். புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்டச் செயலாளர் தோழர் சுந்தர் சிறப்புரையாற்றினார்.

பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்!

“கட்சிகளை மாற்றுவது தீர்வல்ல! கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு!” என்ற முழக்கத்தின்கீழ் வேலூர் மாநகரில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில் மேநாள் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் 01.05.2018 அன்று நடைபெற்றது.

மக்கள் கலை இலக்கியக் கழக மாவட்டச் செயலாளர் தோழர் இராவணன் அவர்கள் வேலூர் அண்ணா சாலை பெரியார் சிலை அருகிலிருந்து மாலை 5.00 மணிக்கு பேரணியை தொடங்கி வைத்தார். வேலூர் மாநகரின் லாங்கு பஜார் உள்ளிட்ட முக்கிய சாலைகளின் வழியாக நடைபெற்ற மேநாள் பேரணி பழைய பேருந்து நிலையம் அருகில் மண்டி வீதியில் முடிவடைந்தது.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்டச் செயலாளர் தோழர் சுந்தர் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலத் தலைவர் தோழர் முகுந்தன் அவர்கள் மேநாள் குறித்தும் மக்கள் விரோத மத்திய மாநில அரசுகளை அம்பலப்படுத்தியும் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்டத் துணைத் தலைவர் தோழர் சரவணன் நன்றி கூறினார். பேரணியிலும் ஆர்ப்பாட்டத்திலும் நுற்றுக்கும் மேற்பட்டோர் கலந்த கொண்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
வேலூர்.

*****

கோத்தகிரியில்…

கோத்தகிரி நீலமலை அனைத்து தொழிலாளர் சங்கம் சார்பாக கோத்தகிரி மார்க்கெட் ஜீப் நிலையத்தில் 01 .05.2018 காலை 10 மணிக்கு செங்கொடி ஏற்றப்பட்டு மே தின தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

மாவட்ட செயலாளர் தோழர் பாலன் தலைமை ஏற்று முழக்கமிட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

அவரை தொடர்ந்து மாவட்ட பொருளாளர் தோழர் விஜயன் கொடியேற்றி உரையாற்றினார். அவரது உரையில் “மேதினத்தில் சிக்காகோ தொழிலாளர்களின் இன்னுயிர் ஈந்து பெறப்பட்ட உரிமைகள் இன்று நம்மிடம் இல்லை. இல்லாத உரிமைகளை மீண்டும் பெறும்வரை மே தினம் கொண்டாட்ட நாளல்ல போராட்ட நாள்” என்றார்.

இறுதியாக மக்கள் அதிகார மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆனந்தராஜ் உரையாற்றய போது, “தொழிலாலாளர்களுக்கு மட்டு்மல்ல அனைத்து தரப்பு மக்களின் உரிமைகளும் இன்று பறிக்கப்ப்பட்டுள்ளன, இது கட்டமைப்பு நெருக்கடியின் விளைவு எனவே உரிமைகளை பெற அனைத்து தரப்பு மக்களும் ஜல்லிக்கட்டு -மெரினா போராட்டத்தை போல வீதிகளில் இறங்கி போராடி முதலாளித்துவத்தை வீழ்த்த வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில் வாகனப் பிரிவு தோழர்கள் சுப்பிரமணி, பாபு, கண்ணன், துரை, மணி, ரஜினி உட்பட 40 -க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

தகவல் :
நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கம்
(இணைப்பு-பு.ஜ..தொ.மு)கோத்தகிரி.

மார்க்சியம் கற்பதற்கு கட்சி உறுப்பினராக இருப்பது நிபந்தனையா ?

கேள்வி : ஏன் வினவு, மூலதனம் (காரல் மார்க்ஸ் எழுதிய முக்கியமான நூல்) படிக்க ஒரு அப்பழுக்கற்ற – வாழ்க்கையை தியாகம் செய்யும் ஒரு கட்சி உறுப்பினராகதான் இருக்க வேண்டுமா? ஒரு சமூக அறிவியல் என்ற முறையில் அதை படிக்க முடியாதா?
-ஆதவன்

ன்புள்ள ஆதவன்,

மூலதனம் நூலை யார் வேண்டுமானாலும் படிக்கலாம். அதைப் புரிந்து கொள்வதுதான் பிரச்சினை! அல்லது அந்த நூலை ஏன் படிக்க வேண்டும் என்ற கேள்வியோடும் புரிதல் பற்றிய பிரச்சினை எழுகிறது.

துறை சார்ந்து ஒரு படிப்பை பயில நாம் ஏதேனும் ஒரு கல்லூரிக்கு செல்வது அவசியம். இணைய காலத்தில் எல்லாம் கையில் அடக்கம் என்றான பிறகு நாம் மெய்நிகர் உலகிலேயே எதையும் படிக்கலாமே என்ற கேள்வி எழுகிறது!

நவீன மருத்துவத் துறையில் ஒருவர் மருத்துவர் ஆக வேண்டுமென்றால் அவர் ஐந்தாண்டுகள் கல்லூரியில் படித்து அதில் கடைசி வருடம் “ஹவுஸ் சர்ஜன்” – பயிற்சி மருத்துவர் நடைமுறை தேர்வில் தேற வேண்டும். மேலும் சில வருடங்கள் படித்தால் மட்டுமே முதுகலைப் பட்டம் பெற முடியும்.

இந்த எம்.டி டாக்டர் படிப்பை ஒருவர் இணையத்திலேயே படித்து முடிக்க முடியுமா? இல்லை இது உயிர் காக்கும் விசயம் என்பதால் அப்படி ரிஸ்க் எடுக்க முடியாது என்பீர்கள். அதே போன்று புரட்சி என்பது ஒரு நாட்டின் தலையெழுத்தை மாற்றும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வோடு தொடர்புடையது எனும் போது அந்த “ரிஸ்க்” இங்கே இன்னும் பிரம்மாண்டமான அளவில் இருக்கிறதல்லவா? மருத்துவத்தில் அப்படி விசப் பரிசோதனை எதுவும் இருக்க கூடாது என்பதை முதலாளித்துவ ஜனநாயக நாடுகளின் சட்டங்கள் பார்த்துக் கொள்கின்றன.

மூலதனம் நூலை யார் வேண்டுமானாலும் படிக்கலாம். அதைப் புரிந்து கொள்வதுதான் பிரச்சினை!

மாறாக மார்க்சியம் என்பது கருத்து, அரசியல், கொள்கை சார்ந்ததாக இருப்பதால் அதற்கு அத்தகைய கவசங்கள் இல்லை. ஆனால் எது கம்யூனிசம் எது கம்யூனிசமில்லை என்ற கேள்விக்கான பதில்களாகவே மார்க்சிய ஆசான்களின் படைப்புகள் எழுதப்பட்டன. சொத்துரிமை, அரசு – அதிகாரம் என அரசியலின் மையமான அச்சை பேசுவதாக மார்க்சியம் இருப்பதால் அதை எதிர்த்து பேசும் இசங்களும், போலிகளும் நிறைய இருக்கின்றன.

அறிவியல், வரலாறு போன்றவையும் நவீன கல்வியால் வரையறுக்கப் பட்டிருந்தாலும், பிள்ளையார் சிலை அந்தக் கால பிளாஸ்டிக் சர்ஜரியின் சான்று, இராமயண புஷ்பக விமானம்தான் இன்றைய ஜெட் விமானங்கள், அர்ஜுனன் பயன்படுத்திய பிரம்மாஸ்திரம்தான் இன்றைய நைட்ரஜன் குண்டு என்று உளறுவோர்தான் இன்று ஆட்சியில் இருக்கிறார்கள். இருப்பினும் மருத்துவர்களும், அறிவியலாளர்களும் இந்த உளறல்களை வேறு வழியின்றி சகித்துக் கொள்கிறார்கள். அதைப் போல கம்யூனிசம் மார்க்சியம் குறித்தும் பல முட்டாள்தனமான கருத்துக்கள் பல அறிஞர்களிடம் இருப்பதை நாம் மேற்கண்ட பிளாஸ்டிக் சர்ஜரி நோயாக மட்டும் கடந்து போய்விட முடியாது. எது அசல், எது போலி என்று விவாதித்து நிரூபிக்க வேண்டிய தேவை இருக்கிறது. முக்கியமாக புதியவர் ஒருவர் இத்தகைய குழப்பமான சூழலில மார்க்சியம் கற்பது எப்படி? அதற்கு கட்சியில் சேரவேண்டியது அவசியமா?

யூடியூப்பில் ஒளிப்பதிவு, இயக்கம், படத்தொகுப்பு, சி.ஜி அனைத்தையும் படிப்பதற்கு ஏராளம் டுடோரியல்கள் உள்ளன. இதைப் படித்தே ஒருவர் இயக்குநர் ஆக முடியுமா?

இணையம் பரவலாவதற்கு முன்னர் மேற்கண்ட சினிமா துறைகளில் சேர்ந்து ஆளாவதற்கு நீங்கள் ஒரு முன்னோடியிடம் சேர்ந்து பயிற்சி பெற வேண்டும். சில பல ஆண்டுகள் கழித்தே உங்களுக்கு வாய்ப்பு வரும். இப்போது அப்படி இல்லை. பல புதிய இயக்குநர்கள் யாரிடமும் சேராமலேயே முதல் படங்களை இயக்குகிறார்கள். எனில் இந்த சான்றின் படி தனியாக படித்தே ஒருவர் சினிமாவில் கலைஞராக முடியாதா?

இணையத்தில் படிப்பது மூலம் ஒருவர் இயக்குநராக உருவாக முடியுமா?

இல்லை. இந்த புதிய இயக்குநர்கள் அனைவரும் சினிமா எனும் கூட்டு உழைப்பின் பாதையில் பயணிப்பதால் அங்கே தயாரிப்பாளர் நியமிக்கும் படைப்பாளிகள் தொட்டு பிற கலைஞர்கள் வரை புதியவரின் தவறுகளை திருத்துவதற்கு இருக்கிறார்கள். மேலும் அந்த புதிய இயக்குநரும் தனது பழைய வாழ்வில் ஏதேனும் ஒரு ஓட்டைக் கேமராவை வைத்து நிறைய குறும்படங்கள், சோதனை முயற்சிகளை செய்து பார்த்திருப்பார். அத்தகைய நடைமுறையில் ஈடுபட ஈடுபடத்தான் கலை பழக்கமாகும். இது போக மைல்கல் சாதனைகளான உலகப் புகழ் பெற்ற படங்களை பார்த்து அவர் ஏராளமான படிப்பினைகளையும் கற்றிருப்பார். உலகப் பட அறிமுகம் இல்லையென்றாலும் தமிழ் சினிமாவில் உள்ள முக்கியமான படங்களை பார்த்துப் பார்த்து அவர் காட்சிக் கலையை பழகியிருப்பது அவசியமாக இருக்கிறது.

இத்தகைய கூட்டுத்துவம் சார்ந்த நடைமுறை பயிற்சி இல்லாமல் புதிய இயக்குநர்கள் இல்லை. முந்தைய காலத்தில் இந்த பயிற்சியை ஒரு முன்னோடி அளித்தார். இப்போது பலரும், பல முறைகளில் அளிக்கின்றனர். அவற்றில் இணையமும் ஒன்று.

இணையத்தில் மருத்துவ தளங்களைப் பார்த்து அதில் மருந்துகள், நோய்க்குறிகளை அறியும் போக்கு அதிகரித்து வருகிறது. ஆனால் ஒரு மருத்துவர் ஒரு மருந்தை தேர்வு செய்து ஒரு நோயாளிக்கு கொடுப்பது என்பது அந்த நேரத்தில் எடுக்கப்படும் தனிச்சிறப்பான முடிவு மட்டுமே. குறிப்பிட்ட மருந்தை அல்லது மருந்துகளின் தொகுப்பை அவர் தனது அனுபவம், நோயாளியின் குறிப்பான நிலை, குறிப்பிட்ட நாடு – பகுதி மக்களின் தனிச்சிறப்பான யதார்த்த நிலை, குறிப்பிட்ட பகுதியின் விசேடமான காலநிலை, குறிப்பிட்ட மருந்தின் தனிச்சிறப்பான விளைவுகள் ஆகியவற்றை வைத்து முடிவு செய்கிறார்.

இன்டெர் நெட் மூலம் ஒரு டாக்டர் ஆகிவிட முடியாது!

ஆனால் இணையத்தின் வழி கருத்தாளர்களாக உருவெடுத்திருக்கும் கந்தசாமிகளும் காயத்ரி-கஸ்தூரிகளும் அதன் அடிப்படை தொகுப்பை படித்து விட்டு மருத்துவர்களை பாடாய்ப் படுத்துகின்றனர். நவீன மருத்துவர்கள் முன்பெல்லாம் மக்களிடம் அதிகம் பேசமாட்டார்கள். சந்தேகங்கள் கேட்டால் சீறுவார்கள். இப்போது மக்கள் விழிப்புணர்வு பெறும் காலத்தில் அந்த சீறல் நிறைய மாறியிருக்கிறது. அதேநேரம் நாம் மருத்துவர்கள் அல்ல, அறிவிலிகள் என்பதை இணைய தலைமுறை ஒப்புக் கொள்ளாது. இந்த நோய்க்கு இந்த மருந்துதானே என்று எளிமைப்படுத்தி தொல்லைகளை வரவழைத்துக் கொள்கிறது.

ஆகவதான் அலோபதி மருத்துவத்தை  வெறும் புத்தகங்கள் சார்ந்தோ, இணையம் சார்ந்தோ கற்றுக் கொள்ள முடியாது. கல்லூரிகளில் பல பேராசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வக ஊழியர்கள், நவீன சோதனை எந்திரங்கள், மருத்துவமனைகள், நோயாளிகளான மக்கள் ஆகியோர் சேர்ந்தே ஒரு மருத்துவரை உருவாக்குகிறார்கள். இந்த பல்துறை நடவடிக்கைகளை அந்தந்த வகுப்பின் பேராசிரியர் ஒருங்கிணைக்கிறார்.

இந்த விதி மார்க்சியத்திற்கும் பொருந்தும்.

ஃபேஸ்புக்கில் தமீம் தாந்த்ரா என்பவர் மாஸ்கோ  பதிப்பக தமிழ் நூல்களை வாங்கிப் படிக்க முயன்றும் முடியவில்லை, மொழிபெயர்ப்பு படு மோசம், என்பதாக தெரிவித்திருந்தார். “டெம்பிள் மங்கிஸ்” யூடியூப் சானலின் விஜய் ஆதிராஜ் என்பவரும் தமிழில் இருக்கும் மார்க்சிய நூல்களில் மொழிபெயர்ப்பு படுமோசம் என்று அந்த பதிவில் கூறியிருந்தார். இவர்கள் இருவருக்கும் பரிகாரம் செய்யும் முகமாக சில சி.பி.எம் நண்பர்கள் நல்ல மொழிபெயர்ப்பு நூல்களை அவர்களுக்கு சிபாரிசு செய்து அந்தக் குறையை போக்க முயன்றனர்.

ஒருவேளை நல்ல மொழிபெயர்ப்பில் இல்லையென்று நல்ல ஆங்கிலத்தில் மார்க்சிய நூல்களை கொடுத்தாலும் தமீம் தாந்த்ரா போன்றோர் மார்க்சியத்தை தெளிவாக படித்து தேற முடியுமா? முடியாது அல்லது பெரும் சிரமம் என்கிறோம். இது மருத்துவம், இயற்பியல், வேதியியல் என இயற்கை அறிவியல் துறைகள் அனைத்திற்கும் பொருந்தும்.

இந்த உலகம், சமூகம் ஏன் இப்படி இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள மார்க்சிய தத்துவம் உதவுகிறது என்றால் அந்த உலகை எப்படி மாற்ற வேண்டும் என்பதை முயன்று பார்க்க மார்க்சிய நடைமுறை ( கம்யூனிஸ்டு கட்சி) உதவுகிறது.

இந்த உலகில் இயற்கையின் இயக்கத்திலிருக்கும் வளர்ச்சி குறித்த பொது விதிகளைக் கண்டுபிடித்து அதன் மூலம் மனித சமூகத்தின் இயக்கம் மற்றும் வளர்ச்சி பற்றிய பொதுவான விதிமுறைகளை  மார்க்சியம் கண்டுபிடித்து முன்வைக்கிறது. அதை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே ஒரு கம்யூனிஸ்டு கட்சி ஒரு நாட்டில் புரட்சி நடத்த தேவையான பாதை – திட்டங்களை வகுக்க முடியும். அறிவுத்துறை நடவடிக்கையாக பார்த்தால், மனித சமூகத்தின் எந்தப் பிரச்சினைகளையும் திறம்பட ஆய்வு செய்து புரிந்து கொள்வதோ, அதை மாற்ற முனைவதோ மார்க்சியம் கற்றுக் கொண்டோர் மட்டுமே மற்றவர்களை விட சரியாக முன்வைக்க முடியும்.

மேலே உள்ளவற்றை சுருக்கிப் பார்த்தால் தத்துவம், நடைமுறை இரண்டும் இணைந்திருப்பதை காணலாம். இந்த உலகம், சமூகம் ஏன் இப்படி இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள மார்க்சிய தத்துவம் உதவுகிறது என்றால் அந்த உலகை எப்படி மாற்ற வேண்டும் என்பதை முயன்று பார்க்க மார்க்சிய நடைமுறை ( கம்யூனிஸ்டு கட்சி) உதவுகிறது. இவை இரண்டையும் பிரித்தால் அது மார்க்சியமும் இல்லை, அதைப் பயின்று கொள்வதும் சாத்தியமில்லை.

தனிநபராக இருக்கும் அறிஞர்களும், பெயரளவில் இருக்கும் போலி கம்யூனிஸ்டு கட்சியினர் பலரும் மார்க்சியத்தை ஒரு ஏட்டுக் கல்வியாக மட்டும் பார்ப்பதால் அதன் இலக்கணத்தை எளிமைப்படுத்தி பல நேரங்களில் தவறாக வியாக்கியானம் செய்தும் புரிந்து கொள்கின்றனர், பேசுகின்றனர். இதற்கு அவர்களது பழைய, பிழையான கண்ணோட்டங்களும் காரணமாகின்றன. வர்க்க முரண்பாட்டை ஏற்பதும், அதை மாற்றுவதுமான பார்வை இல்லாமல் இந்த அறிஞர்கள் நிலவும் சமூக அமைப்பை மறைமுகமாக ஆதரிப்பதான தடத்தில் மார்க்சியத்தை பிழையாக விளக்குகிறார்கள். ஆகவே இதில் பிழை எவ்வளவு, காரியவாதம் எவ்வளவு, தேர்தல் கூட்டணிக்கான ஆதாயம் எவ்வளவு என்பதை துல்லியமாக பிரிப்பது கடினம்.

ரு நுட்பமான இசையை ரசிக்கும் போது, ஒரு சூக்குமமான கவிதை – ஓவியத்தோடு ஒன்றும் போது, மார்க்சியம் மட்டும் படித்து புரிந்து கொள்வது சிரமமா அது என்ன கம்பசூத்திரமா என்று ஒரு  கேள்வி எழலாம்.

இந்த சான்றுகளையே எடுத்துக் கொண்டாலும், இசை, ஓவியம், கவிதைகளை ரசிப்பதற்கு சில ஆண்டுகளாவது பயிற்சி வேண்டும். அந்தப் பயிற்சியிலும் முன்னோடிகள், பாடத்திட்டங்கள் போன்றவை குறைந்த பட்சமாக இருக்க வேண்டும். மேலதிகமாக கலை ரசனை குறித்த பார்வையில் ஒரு கலைஞனைப் போல ஒரு பார்வையாளனும் சுதந்திரமாக ரசனை எனும் இரண்டாவது படைப்பு முயற்சியில் ஈடுபடும் போது இப்பார்வைகள் பலவாய் வேறுபடலாம்.

ஆகவே இக்கலைகளை ஒரு ரசனை என்று சுருக்கும் போது அது தனிநபரின் பார்வையாகவும் இருக்கலாம் என்பதால் இந்த ரசனைகள் ஒரே மாதிரியாக இருக்க வேண்டுமென்பதில்லை. குறிப்பாக கலை என்பது நமது அறிவு – சமூகம் சார் நடவடிக்கைகளை உற்சாகப்படுத்தும் உணர்ச்சி என்பதாலும் அது தன்னுடைய பயன்பாட்டு பொருளிலிலும் கூட தொழிற்படும். அதனால்தான் ‘தரமான’ கர்நாடக இசையை விட ‘தரமில்லாத’ திரையிசை இளைஞர்களின் உற்சாகத்தை கரைபுரண்டு ஓட வைக்கிறது.

உரையாடும் மார்க்ஸ்

மார்க்சியம் அத்தகைய தனிநபர் சார்ந்த உணர்ச்சிகளின் ரசனையோடு தொடர்புடையதல்ல. அது ஒட்டு மொத்த சமூகத்தின் உணர்வை ஆய்வு செய்கிறது. அதனால்தான் மற்ற அறிவுத் துறைகளை விட மார்க்சியத்தை கற்பதற்கு தனிச்சிறப்பான கல்லூரிகள், கடும் முயற்சி தேவைப்படுகிறது. உணர்ச்சி என்பது புலனறிவோடும், உணர்வு என்பது பகுத்தறிவோடும் தீர்மானிக்கப்படுகிறது. அதே நேரம் இந்த உலகில் துன்பப்படும் மக்களை விடுதலை செய்ய வேண்டும் என்பது நம்மிடம் உணர்ச்சியாக பாதிப்பு ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் அந்த மக்களை விடுதலை செய்வது எப்படி என்ற மார்க்சியக் கல்வியை படிப்பதற்கு தேவையான மனித எத்தனம் கிடைக்க முடியும்.

இந்த இரண்டையும் அளிக்கும் கல்லூரிகள்தான் கம்யூனிஸ்டுக் கட்சிகள். சரி கம்யூனிஸ்டுக் கட்சிகளும் கூட  பல இருக்கிறதே, அவற்றில் எது நல்ல கல்லூரி என்ற கேள்வி எழுகிறதா? ஒருவகையில் எந்த கல்லூரி பொறியியல் படிப்பிற்கு சிறந்தது என்பதைப் போன்றும் இது தோன்றலாம். அதற்கு பதில், எந்த கம்யூனிஸ்டுக் கட்சி தீவிரமாக செயல்படுகிறது, திட்டம் – நடைமுறையில் ஒத்திசைவைக் கொண்டிருக்கிறது, தான் கூறுகின்ற கொள்கைகளுக்கு உண்மையாக நடந்து கொள்கிறது, புரட்சியின் நலனை முதன்மையாக வைத்து செயல்படுகிறதா இல்லை சட்டமன்றம், பாராளுமன்ற தொகுதி உடன்பாடை முதன்மையாக வைத்து செயல்படுகிறதா என்றெல்லாம் நீங்கள் பரிசீலிக்க வேண்டும்.

 கட்சி உறுப்பினராகவே இருந்தாலும் மார்க்சிய தத்துவத்தை சொந்தமாக படித்து ஆய்வு செய்து, பிரயோகிக்கும் வல்லமையை கற்றுக் கொண்டால்தான் மார்க்சியத்தையும் கற்க முடியும். மாறாக அவர் அதை செய்ய வில்லை மார்க்சியத்தை பயின்று கொண்டவராக மாற முடியாது.

முக்கியமாக ஒரு அரசியல், பண்பாடு, புரிந்து கொள்ளவே முடியாத ஒரு பிரச்சினை, தீர்வே இல்லாத ஒரு சிக்கல், ஒரு நாடு அல்லது பெரும் மக்கட் கூட்டத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கும் பிரச்சினைகள் போன்றவற்றில் ஒரு சரியான கம்யூனிஸ்டு கட்சி மட்டுமே சரியான ஆய்வையும் தீர்வையும் முன்வைக்க முடியும்.

ல்லூரியில் கோட்பாடாக படித்த மருத்துவ அறிவியலை பல நூறு – ஆயிரம் நோயாளிகளைப் பார்த்து சிகிச்சை அளிக்கும் போது மட்டுமே ஒரு மருத்துவர் மருத்துவம்  எனும் நடைமுறையில் தேர்ச்சி பெறுகிறார். அல்லது தன்னை மருத்தவராக செயல்படும் இயக்கத்தில் புகுத்துகிறார். அது போன்று கட்சியில் சேர்ந்து மார்க்சியம் பயிலும் போது மட்டுமே நடைமுறையிலும் அதனை கற்றுத் தேர முடியும்.

மக்கள் என்றால் யார், வர்க்கங்கள் என்றால் என்ன, புரட்சியின் போர் தந்திரம் – செயல் தந்திரம் என்றால் என்ன?, புரட்சி அலை ஓங்குகிறது அல்லது தாழ்கிறது என்பது எவற்றை வைத்து முடிவு செய்வது, பூஜ்யம் என்ற நிலையில் இருந்து துவங்கும் ஒரு கம்யூனிஸ்டு கட்சி சர்வ பலம் நிறைந்த ஆளும் வர்க்கத்தை எப்படி வீழ்த்தும், புரட்சிக்கு முந்தைய – பிந்தைய கால கட்டத்தில் நம்முடைய பணி எதுவாக இருக்கும், புரட்சியை சாதித்த ரசிய – சீன நாடுகளில் கம்யூனிசம் ஏன் பின்னடைவுக்குள்ளானது, அவற்றிலிருந்து நாம் கற்ற பாடம் என்ன என்பவையெல்லாம் கட்சி நடைமுறைகளோடுதான் பயின்று கொள்ள முடியும்.

ரி, ஒருவர் கம்யூனிஸ்டுக் கட்சியில் சேர்ந்தால் போதும், அவர் மார்க்சியத்தை சுலபமாக பயின்று கொள்ள முடியுமா? என்று கேட்டால் நம் பதில், இல்லவே இல்லை. நடைமுறை எனும் பாதியோடு தத்துவம் படித்தல் எனும் மறுபாதியும் இருந்தாக வேண்டும். கட்சி உறுப்பினராகவே இருந்தாலும் மார்க்சிய தத்துவத்தை சொந்தமாக படித்து ஆய்வு செய்து, பிரயோகிக்கும் வல்லமையை கற்றுக் கொண்டால்தான் மார்க்சியத்தையும் கற்க முடியும். மாறாக அவர் அதை செய்ய வில்லை என்றால் அவர் கட்சி உறுப்பினராகவே இருந்தாலும் மார்க்சியத்தை பயின்று கொண்டவராக மாற முடியாது. அல்லது அவரது கம்யூனிச வாழ்வும் நீடிக்கும்  என்று சொல்ல முடியாது. இங்கே நாம் பேசவது ஒரு கம்யூனிஸ்டுக் கட்சியின் அணிகள் எனப்படும் முன்னணிப் படையினரைப் பற்றித்தான். ஏனெனில் கம்யூனிஸ்டு கட்சிகளை ஏற்று  ஆதரிக்கும் மக்கள் பலருக்கும் கம்யூனிசம் என்பது குறித்து விரிவாக தெரிந்திருக்காது, அது சாத்தியமுமில்லை. அவர்கள் வர்க்கம் என்ற முறையிலும், அனுபவத்திலம் கம்யூனிஸ்டுகளை ஆதரிக்கிறார்கள்.

ஒரே மருத்துவக் கல்வியை படித்து வந்தாலும், பிரபலமான மருத்துவர்களின் சிகிச்சை முறை சற்றே அல்லது கணிசமான அளவில் மாறுபடுகிறது அல்லவா? காரணம் அவர்கள் தமது கல்வி – அனுபவத்தின் ஊடாக சொந்த முறையில் மருத்துவத்தை பிரயோகிக்கிறார்கள். ஒரு கம்யூனிஸ்டுக் கட்சியிலும் அத்தகைய சொந்த பிரயோகங்கள் பல சேர்ந்தே இறுதியில் அந்த நாட்டின் புரட்சியை சாத்தியமாக்குகிறது. இந்த சொந்த பங்களிப்புகள் என்பவை பூத்துக் குலுங்கும் ஒரு நந்தவனத்தின் தனித்தனி செடிகள், மலர்களே அன்றி அவை தனியாக ஒரு காட்டிலோ, தெருவிலோ இருப்பதல்ல. ஒரு நாட்டில் எப்போது புரட்சியை கொண்டு வருவோம் என்ற கேள்விக்கு ஒரு கம்யூனிஸ்டு கட்சியின் தனிநபர்கள் தீவிரமாக விடை தேடும் போதே இந்த தனிநபர் பங்களிப்புகள், சாதனைகள் தவிர்க்கவியலாமல் தோன்றுகின்றன. ஆகவே இவற்றை கூட்டுத்துவம் தோற்றுவிக்கும் தனிநபர் சாதனைகள் என்று புரிந்து கொள்வது அவசியம்.

மேற்கு ஐரோப்பிய மக்கள், சமூக அளவில் முன்னேறியவர்களாக இருக்கும் போது ரசியா பின்தங்கி இருப்பதால் இங்கே புரட்சி சாத்தியமில்லை என்றார்கள், லெனினின் சமகாலத்திய கம்யூனிஸ்டுகள் பலர். ஆனால் அரசியல் ரீதியில் ஐரோப்பிய பாட்டாளி வர்க்கத்தை விட ரசிய பாட்டாளி வர்க்கம் முன்னேறி இருப்பதால் இங்கே புரட்சி சாத்தியம், இப்போது இல்லை என்றால் எப்போதுமில்லை என்று லெனின் தலைமையிலான போல்ஷ்விக்குகள் சாதித்துக் காட்டினார்கள்.  தியரிப்படி முடியாது என்ற ஒன்றை முடியும் என்று சாதித்த இந்த அம்சமே நாம் குறிப்பிடும், மார்க்சியம் என்பது தத்துவம் – நடைமுறை இரண்டோடும் சேர்ந்த ஒன்று என்பது.

போலவே பாட்டாளி வர்க்கம் எண்ணிக்கையில் குறைவாக இருக்கும் சீனாவில் புரட்சி சாத்தியமே இல்லை எனும் போது உழவர்கள் – தொழிலாளி கூட்டணியில், தொழிலாளி வர்க்கத் தலைமையில் ஒரு கம்யூனிஸ்டுக் கட்சி புரட்சி நடத்துவது சாத்தியம் என்று மாவோ தலைமையிலான சீன கம்யூனிஸ்டுக் கட்சி சாதித்தது. கம்யூனிசத்தை வறட்டுவாதமாக கற்கும் எவரும் இந்த சீன, ரசிய சான்றுகளின் வேறுபாடுகளை ஒரு போதும் உணர முடியாது.

கட்டுப்பாட்டிற்கு பேர் உள்ளது கம்யூனிஸ்டுக் கட்சிதான். ஆனால் கட்சிக்குள் கம்யூனிசமல்லாத கருத்துக்கள் உள் புகுந்து கட்சி சீரழியும் என்பதையும், அப்படி சீனாவில் ஒரு நிலை உருவானபோது, பொதுமக்கள், அணிகளிடம் தலைமையை தகர்த்தெறியுங்கள் என்று அறைகூவல் விடுத்தவரும் அதே கட்டுப்பாடான கம்யூனிசத்தின் மாவோதான்.

ஆகவேதான் மார்க்சியம் கற்பது என்பதை நடைமுறையில் இருந்தும் பிரிக்க முடியாது, தத்துவத்தில் இருந்தும் பிரிக்க முடியாது. சரியாகச் சொன்னால் மார்க்சியம் என்பது இந்த உலகின் தலை சிறந்த ஆய்வு முறையியல்.

ஆகவேதான் மார்க்சியம் கற்பது என்பதை நடைமுறையில் இருந்தும் பிரிக்க முடியாது, தத்துவத்தில் இருந்தும் பிரிக்க முடியாது. சரியாகச் சொன்னால் மார்க்சியம் என்பது இந்த உலகின் தலை சிறந்த ஆய்வு முறையியல். இதைப் படிப்பது என்பது அதன் பொது விதிகளை தெரிந்து கொள்வது, இதை புரிந்து கொண்டோம் என்பது அந்த விதிகளின் துணையோடு சமூக நிகழ்வுகளை ஆய்வு செய்வதால் கிடைப்பது. குர்ஆன் – பைபிள் போல மார்க்சிய நூல்களில் குறிப்பிட்ட பிரச்சினைக்கு இன்ன தீர்வு என்று ஒன்றைக் காட்டவே முடியாது.

மார்க்சிய ஆசான்கள் எழுதிய நூல்கள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட பிரச்சினைகளை மார்க்சிய ஆய்வுமுறையில் அலசி எழுதப்பட்ட படைப்புகள். இந்த நூல்களை படிப்பதால் நாம் கற்பது என்ன? அவர்கள் மார்க்சியத்தின் துணை கொண்டு அந்த நிகழ்வை எப்படி ஆய்வு செய்திருக்கிறார்கள். அதனால் ஏன் அந்த முடிவுகளுக்கு வந்தார்கள், அந்த முடிவுகளை வந்தடைந்த பாதையின் விசேட அம்சங்கள் என்ன என்பதையே கற்கிறோம். இந்த பயிற்சி அவ்வளவு சுலபமான ஒன்றல்ல.

மூலதனம் நூல் முதலாளித்துவ பொருளாதாரம் செயற்படும் இரகசியத்தை திறந்து காண்பிக்கிறது. அதன் முரண்பாடுகளை ஆய்வின் வழி நிரூபிக்கிறது. அந்த முரண்பாடுகளே அதற்கான சவக்குழியை வெட்டும் என்பதை ஏற்க வைக்கிறது. இதில் எந்த வர்க்கம் தீர்மானகரமான பாத்திரத்தை வகிக்கும் என்பதை உணர்ச்சிப் பெருக்கோடும், உணர்வின் மேதைமையோடும் முன்வைக்கிறது.

கவே முதலாளித்துவ பொருளாதாரத்தை புரிந்து கொள்ள என்னென்ன அடிப்படைத் தகுதிகள் வேண்டுமோ அவையும், அந்த முதலாளித்துவ பொருளாதாரத்தின் அழிவிலிருந்து உலகைக் காக்கும் இலட்சியத்தைக் கொண்டிருக்கும் கம்யூனிசக் கட்சியின் கற்பித்தலும் இன்றி மூலதனம் நூலை மட்டுமல்ல, மற்ற கம்யூனிச நூல்களையும் கற்பது சிரமம் என்கிறோம்.

கட்சி என்றால் தனிநபரின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும், படைப்புணர்ச்சியை நிறுத்திவிடும், புத்தாக்க சிந்தனைகளை அழித்து விடும் என்று முதலாளித்துவ உலகின் ஆதரவு அறிஞர்கள் வரலாறு நெடுகிலும் உருவாக்கி வைத்திருக்கும் – தோ பாரு பூச்சாண்டி வாறான், ஒழுங்கா சாப்பிடு – தவறான அபிப்பிராயங்கள் கம்யூனிஸ்டு கட்சியில் சேருவது குறித்து நடுத்தர வர்க்கத்திற்கு பெரும் தயக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. மறுபுறம் உலகமயம் உருவாக்கியிருக்கும் வண்ணமயமான தூண்டில் புழு வாழ்க்கை வசதிகளும் கூட இந்த தயக்கத்தினை ஒரு நீதி போல அறம் போல பேசவைக்கின்றன. தனிநபரின் காரியவாத வாழ்க்கை கம்யூனிசத்தின் கூட்டுத்துவ இலட்சியத்தினை தவறு என்று பேசும் அடிப்படையை தோற்றுவிக்கிறது.

மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு தமிழகத்தில் கம்யூனிச நூல்கள் கற்கும் ஆர்வம் இளையோரிடம் அதிகரித்திருக்கிறது. சென்னை புத்தகக் காட்சியில் கம்யூனிச நூல்கள் அதிகம் விற்றிருக்கின்றன. ஆனால் அந்த நூல்களை வாங்கியோர் படிக்க முயன்றும் இது ஏன் புரியவில்லை என்று குழம்பியிருப்பர்.

அவர்களை அழைக்கிறோம், வாருங்கள் மார்க்சியம் கற்போம். ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகளில் இணைந்து மார்க்கசியம் எனும் இந்த மகத்தான தத்துவத்தை கற்பதோடு, அதை மனித குல விடுதலைக்கான போராட்டமாக மாற்றும் பணியிலும் நம் வாழ்வை இணைக்க முடியும். இதை விட நமது வாழ்க்கை அதன் பிறவிப் பொருளை அடைவதற்கு வேறு வழி இருக்கிறதா?

– வினவு

ரிக்சாகாரன் படமெடுத்த எம்.ஜி.ஆர். சம்பாதிச்சாரு, எங்களுக்கு சவாரி கூட இல்லை !

சென்னையின் பாரம்பரிய அடையாளங்களில் ரிக்சா தொழிலாளிகள் முக்கியமானவர்கள். கால ஓட்டத்தில் இன்று ரிக்சாவிற்கு தேவை இல்லை. ஆட்டோ வந்து, பிறகு ஷேர் ஆட்டோ வந்து இன்று அவையும் தத்தளிக்கும் வண்ணம் ஓலா – உபர் கால் டாக்சிகள் ஆக்கிரமித்துவிட்டன. ரிக்சா தொழிலை நம்பி வாழ்ந்த சில ஆயிரம் தொழிலாளிகள் வேறு தொழில்களுக்கு மாறிவிட்டார்கள். ஆனால் சிலர் வேறு போக்கிடம் இல்லாமல் இன்றும் ரிக்சாவை வைத்து காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்த தொழிலாளிகள் அனைவரும் வயதானவர்கள்தான். மே தினத்தில் இந்த தொழிலாளிகளை சந்தியுங்கள்!

சென்ட்ரல் ரயில் நிலையம் வால்டாக்ஸ் சாலையில் பயணிகளை ஏற்றிச் செல்லை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சைக்கிள் ரிக்சாக்கள்!

இன்னைக்காவது ஒரு சவாரி வருமா என்ற ஏக்கத்துடன் சென்ட்ரல் ரயில் நிலைய வாசலையே பார்த்த வண்ணம் அமர்ந்திருக்கும் ரிக்சா தொழிலாளி!

குப்புசாமி, ஒரு புது ரிக்சா வாங்கணும்னா 25,000 ரூபா. இதுவே பழசு வாங்குனா 10,000  ஆகும். அதுக்கு பெயின்ட் அடிச்சி  FC காட்டி லைசென்ஸ் வாங்க மூவாயிரம் ஆகிடும். ஆர்.டி.ஒ முத்திரை குத்தினா தான் வண்டிய ஓட்ட முடியும். இப்ப யாரும் ரிச்சாவுல ஏறது இல்ல. ஓலா ஆட்டோ,ஓலா காருன்னு  போறாங்க. முன்பெல்லாம் மார்வாடிங்க ஏறுவாங்க. இப்ப அவங்களும் இல்ல.  லக்கேஜ் அதிகமா  இருந்தா எங்ககிட்ட வருவாங்க. இல்லனா வெத்தலைய அடுக்கின மாதிரி ஆட்டோவுல கூட்டம் இருந்தாலும் அதுல ஏறிக்குறாங்க. ரிக்சாவ கேவலமா நெனக்குறாங்க. காலையில நாலு மணியில இருந்து இப்ப வரைக்கும் ஒரு சவாரி வரல. மூணு நாளா கூட வண்டி ஓடாம இருந்திருக்கு.

ஆடலழகன், எம்ஜிஆர் ரிச்சாக்காரன்னு படம்  எடுத்தாரு. அதனால அவரு நல்லா சம்பாதிச்சாரு. ஓபீஸ்,இபிஎஸ்னு எந்த பாடுபசங்களும் எங்களுக்கு ஒன்னும் பண்ணல. பத்து வருசத்துக்கு முன்னாடி இந்த சென்னையில 18,000 ரிக்சா இருந்துச்சி. இப்ப இரண்டாயிரம் வண்டி கூட இல்ல. பட்டாளம் B&C மில்லுல மட்டும் மூவாயிரம் ரிக்சா இருந்துச்சி இப்ப ஒன்னு கூட இல்ல.  சென்ட்ரலயும், சவுகார்பெட்டையிலும் தான் ஏதோ கொஞ்சம் வண்டி ஓடிட்டு இருக்கு. எல்லாம் ஆட்டோவால அழிஞ்சிடுச்சி. ஆட்டோவோ சொல்லியும் தப்பு கிடையாது. அவங்களுக்கும் வாயிவயிறு இருக்கு. அதுக்கும் பெட்ரோல் போடணும். அவங்க தி.நகர், அண்ணா நகர்னு  தொலைவா போனா பரவாயில்லை. இங்க இருக்க சந்து பொந்து கூட சவாரி வந்தா நாங்க எப்படி பொழைக்கிறது சொல்லுங்க!

சவாரி எதுவும் இல்லாததால் ரிக்சாவிலேயே தூங்கும் தொழிலாளி.

ராமு-மணி, ஆட்டோ எங்களுக்கு பெரிய போட்டியா இருக்கு. தொழில்ல நாங்க எப்பவும் நேர்மையா இருப்போம். யாரையும் ஏமாத்த மாட்டோம். நாங்க மிதிக்கிற கஷ்டத்தை பார்த்துட்டு பத்து ரூபா அவங்களே சேர்த்து கொடுப்பாங்க. அப்படித்தான் எங்க வண்டி ஓடுது.

சீனுவாசன்-ஜெயலட்சுமி, எங்க மாமனார் இங்க ரிக்சா ஓட்டிட்டு இருந்தாரு. அவரு போன பிறகு நான் இந்த வேலைய செய்யுறேன். கல்யாணம்,கருமாதி எதுவானாலும் இந்த பிளாட்பாரத்துலதான். என்னோட கல்யாணமும் இங்கதான் நடந்துச்சி. கானா பாட்டு கச்சேரி, விருந்து எல்லாம் இங்க நடக்கும். ரேசன் கார்டு,ஆதார் கார்டு எல்லாத்துலயும் இந்த அட்ரஸ் தான் இருக்கு.  குடிக்கிற தண்ணிய சென்ட்ரல்ல புடிச்சிப்போம். இங்கேயே சாப்பிட்டு படுத்துப்போம். காசு இருந்தா கவுச்சி. இல்லனா சாம்பார் சோறுதான்.

எங்க சொந்த பந்தம் எல்லாம் இங்க தான் இருந்தாங்க. இரண்டு வருசத்துல அஞ்சி பேர் செத்துட்டாங்க. என்னோட தங்கச்சி தீக்குளிச்சி இறந்துடுச்சி. ஏழுமலை, வெங்கடேசன் தண்ணி அடிச்சி இறந்துட்டாங்க. இவங்க தான் எங்க கடவுள்.

சின்னபொண்ணு, என்னோட புருஷன் செத்த பிறகு, பழக்கடை போட்டு பொழச்சிட்டு வந்தேன். இப்ப அந்த கடையையும் கார்ப்பரேசன் ஆளுங்க எடுத்துட்டானுங்க. நாலு நாளா சாப்பாட்டு வழி இல்லாம இருக்கேன். எனக்கு 12 வயசுல ஒரு பொண்ணு இருந்துச்சி. அதுவும் இங்க கரண்ட் ஷாக் அடிச்சி செத்துடுச்சி. எந்த ஆதாரவும் இல்லாம இந்த பிளாட் பாரத்துல கெடக்கிறேன்.

-வினவு புகைப்படச் செய்தியாளர்கள்.

அதிகரிக்கும் ஆதார் கசிவுகள் : கருத்துக் கணிப்பு !

தாரைக் கட்டாயமாக்க முயற்சிக்கும் மோடி அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது. கடந்த மார்ச் மாதம் 20-ம் தேதி நடந்த வழக்கு விவாதங்களின் போது மக்களிடமிருந்து சேகரிக்கப்படும் உயிரியளவு விவரங்கள் மின்தரவுகளாக சேமிக்கப்படுவதால் அவற்றை ஹேக்கர்கள் களவாடும் வாய்ப்பு உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய அரசின் சார்பில் வாதாடிய அட்டர்னி ஜெனரல் கே.கே வேணுகோபால், ஆதார் விவரங்கள் சேமிக்கப்பட்டுள்ள கணினிகள் நிலவறைக்குள் இருப்பதாகவும் அந்த அறையின் சுவர்கள் 13 அடி உயரமும் 5 அடி அகலமும் கொண்டவையாக இருப்பதால் மக்களின் தனிப்பட்ட தகவல்களை யாராலும் களவாட முடியாது என பதிலளித்துள்ளார்.

காவிரி வழக்கில் ஸ்கீம் என்கிற வார்த்தைக்கு பொருள் கூறும் அகராதியாகச் செயல்பட்ட உச்ச நீதிமன்றம், ஆதார் வழக்கில் கனமான சுவர்களைக் கொண்டு மின்தரவுகள் களவு போவதைத் தடுத்து விடுவோம் என்கிற மத்திய அரசின் வாதத்தை கேட்டுக் கொண்டது. கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ ஓடும் என்பது போன்ற இந்த விளக்கத்தைச் சொன்னவர் செல்லூர் ராஜூத்தனமாக நடந்து கொண்டார் என்றால் அதையும் கேட்டுப் பதிவு செய்து கொண்ட மேன்மை தங்கிய நீதிபதிகளை எப்படி அழைப்பது?

போகட்டும். மேற்படி “ஐந்தடிச் சுவரைத் தாண்டி” நடக்கும் ஆதார் விவரத் திருட்டுக்கள் குறித்த செய்திகள் அன்றாடம் பத்திரிகைகளில் வெளிவந்த வண்ணம் உள்ளன. கடந்த வாரத்தில் மட்டும் ஆதார் திருட்டு தொடர்பாக இரண்டு சம்பவங்கள் தலைப்புச் செய்திகளாகியுள்ளன. ஆந்திராவில் நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பயன் பெறும் சுமார் 89,38,138 பயனாளிகளின் ஆதார் விவரங்கள் அரசின் இணையதளத்திலேயே வெளியிடப்பட்டிருந்தன. ஆதார் எண்களுடன் சேர்த்து வங்கிக் கணக்கு விவரங்களும் வெளியாகின. தனிநபர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள், தொலைபேசி எண்கள், ஆதார் எண்கள் போன்றவை பாதுகாப்பற்ற முறையில் வெளியாகும் போது அவற்றைக் கொண்டு எந்த வகையான சைபர் குற்றங்களையும் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு விவரங்கள் பாதுகாப்பற்ற முறையில் இணையதளத்தில் வெளியாகியிருப்பதை, அரசு அதிகாரிகளோ, ஆதார் விவரங்களைச் சேமித்து வைக்கும் கணினிக் கட்டுப்பாட்டகத்தை பராமரிக்கும் டி.சி.எஸ் நிறுவனமோ கண்டுபிடிக்கவில்லை. மாறாக சிரீனிவாஸ் கோடாலி என்கிற இணைய ஆராய்ச்சியாளரே முதன்முதலாக கண்டுபிடித்து ட்விட்டரில் அம்பலப்படுத்தியிருந்தார் (https://twitter.com/digitaldutta/status/989332234976088064?ref_src=twsrc%5Etfw) இதற்கிடையே அதே ஆந்திர மாநிலத்தில் மற்றுமொரு சந்தர்ப்பத்தில் அரசின் இணைய தளத்தில் சுமார் 1.39 லட்சம் பேருடைய சாதி, மொழி, மதம், குடும்ப உறுப்பினர்கள் குறித்த விவரங்கள் ஆதார் எண்களுடன் வெளியாகின.

மக்களைக் கண்காணிப்பதும் கட்டுப்படுத்துவதுமே ஆதார் திட்டத்தின் நோக்கம். மக்களுடைய நிதிச் செயல்பாடுகள் உள்ளிட்ட இன்னபிற நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காகவே வங்கிக் கணக்கு, வருமானவரித்துறை, செல்பேசி என சகலத்துடனும் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு கட்டாயப்படுத்தி வருகின்றது. ஆதாரைக் கட்டாயம் ஆக்கலாமா கூடாதா என்கிற வழக்கு நிலுவையில் இருக்கும் போதே ஏறத்தாழ அனைத்து விசயங்களுக்கும் ஆதார் கட்டாயம் என்கிற நிலையை அரசு நிலைநாட்டி விட்டது. ஆதார் என்பது தனிநபர் உரிமையில் தலையீடு செய்வதா இல்லையா என்கிற கேள்வியில் இருந்து, ஆதார் என்பது பாதுகாப்பானதா இல்லையா என்கிற கேள்விக்கு விவாதத்தை நகர்த்திச் சென்று விட்டனர்.

மோடி அரசின் இரட்டை நாக்குத்தனத்திற்கு எடுப்பான உதாரணமாக ஆதார் உள்ளது. ஒருபக்கம் ஆதாருடன் செல்பேசி எண்ணை இணைக்கைக் கோரி தினசரி குறுஞ்செய்திகளாக அனுப்பி பீதியூட்டிய அரசு, கடந்த 25-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ஆதாரை இணைப்பது கட்டாயமில்லை என்று ஏற்கனவே நீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்கால உத்தரவைத் தாம் ஏற்றுக் கடைபிடிப்பதாக பச்சையாக புளுகியுள்ளது.

இந்தப் பின்புலத்தில் ஆதார் தொடர்பான கருத்துக்கணிப்பில் பங்கேற்று உங்களது கருத்தைப் பதிவு செய்யுமாறு கோருகிறோம்.

ஆதார் எண் குறித்து உங்களது கருத்து ?

  • அ. நிச்சயம் தேவை. தேசப்பாதுகாப்புக்காக எனது விவரங்களை அரசு சேகரிக்கலாம்.
  • ஆ. ஆதார் அவசியமில்லை. ஆனால், எனது விவரங்களை மறைப்பதற்கு நான் என்ன தீவிரவாதியா?
  • இ. ஆதார் தேவையில்லை – அது அரசு மற்றும் முதலாளிகளின் ஒரு உளவுக் கருவி.
  • ஈ. ஆதாரின் பின்னணி குறித்து தெரியாது. கருத்து இல்லை.

வினவு செய்திப் பிரிவு

தனியார் போல கட்டணம் வாங்கும் மகாராஷ்டிர அரசு மருத்துவமனைகள் !

பொது சுகாதாரத்திற்குக் குறைவான நிதியை ஒதுக்கியதோடு அதற்கான கட்டணங்களை உயர்த்தியுள்ளது மகாராஷ்டிர அரசு. அங்கே அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் பதிவுக் கட்டணம், அறை வாடகை போன்றவற்றுக்கான கட்டணங்களை உயர்த்தியும் முன்னர் இலவசமாக வழங்கப்பட்ட சேவைகளுக்கும் கட்டணங்களை நிர்ணயித்தும் நவம்பர், 2017-ல் ஆளும் பா.ஜ.க அரசு அறிக்கை வெளியிட்டது.

மருத்துவமனை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், உபகரணங்களை பராமரிப்பதற்கும், புதிய தொழில்நுட்ப வசதிகளை கொண்டுவருவதற்கும் இந்த கூடுதல் கட்டணம் உதவும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. மேலும், புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) அமல்படுத்தப்பட்ட பிறகு மருத்துவக் கல்லூரிகளுக்கு அதிகரித்துள்ள செலவை ஈடுகட்ட இக்கட்டண உயர்வு தேவை என மகாராஷ்டிர அரசு வாதிட்டுள்ளது.

ஆனால், இது தனியார் மருத்துவமனைகளுக்கு போகமுடியாமல் அரசு மருத்துவமனையை மட்டுமே நம்பியுள்ள ஏழை மக்களின் மீது கடும் சுமையை ஏற்றியுள்ளது. ஜி.எஸ்.டி வரியை அமல்படுத்தியதோடு அரசு மருத்துவமனைகளின் கட்டணங்களையும் உயர்த்தி மக்களின் மீது பல்முனைத் தாக்குதல் நடத்திவருகிறது பா.ஜ.க மத்திய மாநில அரசுகள்.

உயர்த்தப்பட்ட கட்டணங்கள் :

நோயாளிகளுக்கான பதிவு கட்டணம் ரூ. 10-லிருந்து ரூ.20-ஆக இருமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவுக்கான கட்டணமும் ரூ.200-லிருந்து ரூ.400-க்கு இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், கட்டண முறை உள்ள அறைகளுக்கான வாடகை 7 நாட்களுக்கு மேல் தங்குவோர்க்கு நாளொன்றுக்கு ரூ.1000-லிருந்து ரூ.2000-ஆக இருமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

நன்றி : தி வயர்

குழந்தைகளுக்கான நோய் கண்டறியும் சோதனை மற்றும் அறுவை சிகிச்சைக்கான கட்டணம் ரூ.350-லிருந்து ரூ.1100-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சி.டி ஸ்கேன், மற்றும் எம்.ஆர்.ஐ பரிசோதனைகளுக்கான கட்டணம், ரூ.120 ஆக இருந்தது, தற்போது ரூ.600-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சிறிய அளவிலான பல், கண், எலும்பு அறுவை சிகிச்சைக்கான கட்டணமும்  ரூ.1000 என்றிருந்தது போய், தற்போது ரூ.11,000-ஆக உயர்ந்துள்ளது. பெண்களுக்கான மகளிர் மருத்துவம், மகப்பேறியல் போன்ற சேவைகளுக்கான கட்டணமும் ரூ.50-திலிருந்து ரூ.200-ஆக உயர்த்தப்பட்டுவிட்டது.

இவற்றைப் போலவே, மருத்துவ சான்றிதழ் வழங்குவதற்கான கட்டணம், ரூ.50-திலிருந்து ரூ.500-ஆக மாற்றப்பட்டு விட்டது. மேலும், இதுவரை இலவசமாக வழங்கப்பட்ட மாற்றுத் திறனாளி சான்றிதழ் போன்ற பல்வேறு சான்றிதழ்களுக்கும் இனி கட்டணம் செலுத்த வேண்டும்.

சரி, மகாராஷ்டிரா அரசு சுகாதாரத்துறைக்கு இதுவரை எவ்வளவு செலவு செய்திருக்கிறது?

2017-18 ஆம் ஆண்டு மொத்த மாநில வருவாயில் 0.46 சதவீத்தை மட்டுமே சுகாதாரத்துறைக்கு ஒதுக்கியது. இது தேசிய சராசரியான 1.2 சதவீதத்தை விட மிகக்குறைவாகும். தேசிய சராசரியே குறைவு எனும் போது மகாராஷ்டிர அரசின் ஒதுக்கீடு இன்னும் குறைவாகும்.

மராத்திய அரசு சுகாதார துறைக்கு சராசரியாக இந்தியாவின் தனிநபர் வருவாயில் (Per Capita) ரூ. 763-ஐ ஒதுகீடு செய்துள்ளது. ஆனால், மக்கள் செய்யும் சுகாதாரத்திற்கான செலவானது தனிநபருக்கு 2684 ரூபாயாக உள்ளது. அதாவது, அரசு ஒதுக்கீடு செய்வதை விட, கூடுதலாக 3.5 மடங்கு அதிகமான தொகையை மக்கள் தங்கள் சொந்த காசில் இருந்து செலவழித்தே தங்களது உடல் நலத்தை பேணி வருகிறார்கள்.

தேசிய சுகாதார புள்ளிவிவரம் 2017-ன் படி, சராசரியாக ஒரு நபருக்கு 3000 முதல் 6600 ரூபாய் வரை சுகாதாரத்திற்கென்று ஒதுக்கி, இந்த துறையில் ஓரளவு சிறப்பாக செயல்படும் மாநிலங்களாக லட்சத் தீவு, சிக்கிம், அருணாச்சல பிரதேசம், மிசோரம், அந்தமான், கோவா ஆகியன உள்ளன. இவையெல்லாம் சிறிய மாநிலங்கள், மக்கள் தொகையும் குறைவு.

நேர் மாறாக அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களான உ.பி, மத்திய பிரதேசம், பீகார், ராஜஸ்தான் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் தனிநபர் சராசரியில் 1043 ரூபாய்க்கு மேல் ஒதுக்கீடு செய்யவில்லை. இம்மாநிலங்களில் கர்நாடகாவைத் தவிர பா.ஜ.க. தான் ஆள்கிறது.

சுகாதாரத்துறையில் ஒட்டு மொத்த இந்தியாவுமே பின் தங்கிதான் உள்ளது

2014-15 க்கான தேசிய சுகாதார புள்ளிவிவரத்தின் படி, சுகாதாரத்திற்கான தனிநபர் செலவு சராசரியாக 3,826 ரூபாய் இருந்தது. இதில் மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது 1108 ரூபாய் மட்டுமே. மீதமுள்ள தொகையை மக்கள் தங்கள் கைகளில் இருந்தே கொடுத்துள்ளனர்.

இதன் மூலம் அரசு மிகக் குறைவான தொகையையே சுகாதாரத்திற்கு செலவிட்டு வருவதும், மக்கள் தாங்களாகவே தங்களின் சுகாதாரத்தை பேணி வருவதும் தெரிய வருகிறது.

அரசின் சுகாதாரத்திற்கான ஒதுக்கீடு 2004-05 ஆண்டு  தனிநபர் வருவாயில் 22.5 சதவீதமாக இருந்தது 2014-15 ஆண்டில் 29 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆனால், அதே சமயம் காப்பீட்டுத் திட்டங்களின் மூலம் மக்கள் பணத்தை தனியாருக்கு வாரியிறைத்தது பெருமளவு அதிகரித்துள்ளது. 2004-05-ம் ஆண்டில் 1.6%-ஆக இருந்த ஒதுக்கீடு 2014-15-ம் ஆண்டில் 3.7%-மாக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிராவில் மட்டும் அடிப்படை வசதியின்றி 61% சதவீத பழங்குடிகள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வசித்து வருகின்றார்கள். இவர்கள் பொது சுகாதார நிலையங்களையே பெரும்பாலும் நம்பியிருக்கின்றனர்.

கல்வி, சுகாதாரம், தண்ணீர் போன்றவை மக்களுக்கான அடிப்படை உரிமைகள். மக்களுக்கு அரசு உத்திரவாதப்படுத்த வேண்டிய சேவைகளில் மருத்துவம் அத்திவாசியமான ஒன்று. இவற்றை விற்பனைக்கான சரக்காக சந்தையில் திறந்துவிட வேண்டும் என்பதுதான் காட்ஸ் ஒப்பந்தத்தின் சரத்து. இது அமல்படுத்தப்படுவதைத் தான் இக்கட்டண உயர்வும், நிதிக் குறைப்பும் காட்டுகிறது. இதில் ஜி.எஸ்.டி வரியையும் சேர்த்து  அமல்படுத்தி மக்களின் மீது பல்முனைத் தாக்குதல் நடத்திவருகிறது பா.ஜ.க அரசுகள்.

– வினவு செய்திப் பிரிவு.

மேலும் படிக்க: