Friday, June 12, 2026
முகப்பு பதிவு பக்கம் 648

பெண்கள் விடுதலை முன்னணி டாஸ்மாக் முற்றுகை !

5

பெண்கள் விடுதலை முன்னணி டாஸ்மாக் முற்றுகை !டாஸ்மாக் புண்ணியத்தில் தமிழ்நாடே தள்ளாடுகிறது. ஆண்களோ குடல்வெந்து சாகிறார்கள். பெண்களோ குடும்பத்தை நடத்தவும், குழந்தைகளைக் காப்பாற்றவும் வழியில்லாமல் தினம், தினம் நொந்து சாகிறார்கள். இன்னொரு பக்கம் 3 வயதுக் குழந்தை பாலியல் வல்லுறவு செய்யப்படுகிறாள். பொள்ளாச்சியில் கத்தி முனையில் மிரட்டி 12 வயது சிறுமி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டாள். கரூரில் வேலைக்குச் சென்று திரும்பிய 17 வயது இளம் பெண்ணை குதறிக் கொல்கிறார்கள். தமிழகமே – அரசு சாராயத்தாலும், பாலியல் வல்லுறவாலும் சீரழிந்து கொண்டிருக்கிறது

இன்றைய நிலை என்ன?

10, 15 வருடங்களுக்கு முன்பெல்லாம் ஊருக்கு வெளியே முள்ளுத் தோப்பில் பதுங்கி பதுங்கி சாராயம் விற்றார்கள். குடிப்பவர்களும் யாராவது பார்த்து விடுவார்களோ என பயந்து கொண்டே தலையில் துண்டைப் போட்டு மறைத்துக் கொண்டே போய்க் குடித்தார்கள். ஆனால், இன்றோ 12, 13 வயதிலேயே குடிக்கிராக்ள், பட்டப் பகலில் பஸ் ஸ்டாண்டில் நின்று பெருமையாக மடக் மடக்கெனக் குடிக்கிறார்கள். இதெல்லாம் தப்பில்லையா என்றால், “நாள் முழுக்க கஷ்டப்பட்டு உழைக்கிறோம், வலி தெரியாம இருக்கக் குடிக்கிறோம்” என்ற குடிமகன்கள், நியாயம் பேசுகிறார்கள். 12,15 வயது பள்ளிக் கூடப் பையனெல்லாம் குவார்ட்டரை ராவாக அடிக்கிறானே, அவனுமாக கஷ்டப்பட்டு உழைக்கிறான்?

ஏன் இந்த அவலம்?

“விக்கிற அரசாங்கமே வெக்கமில்லாம ஊருக்குள்ள விக்குது, காசு குடுத்து குடிக்கிற நாங்க ஏன் வெக்கப்படணும் என்பதே குடிமகன் கேள்வி. என்றைக்கு அரசு டாஸ்மாக் மூலம் சரக்கை விற்க ஆரம்பித்ததோ அன்றையில் இருந்தே மறைந்து மறைந்து குடிப்பதெல்லாம் மறைந்து விட்டது. ட்ரீட் என்ற பெயரில் குடிப்பதையே ஒரு ஃபேஷனாக்கி விட்டனர்.

குடிப்பதால் என்ன பிரச்சனை?

ஒரு பக்கத்தில் குடித்துக் குடித்துக் குடல்வெந்து அரசு மருத்துவமனையில் கிடந்தே செத்துப் போகும் கணவன்மார்கள். 2, 3 குழந்தைகளுடன் நடுத்தெருவில் நிற்கும் தாய்மார்கள். இன்னொரு பக்கத்தில், குடிபோதையில் தனது மகளிடமே தவறாக நடக்க முயன்ற தகப்பனை அடித்துக் கொன்ற தாய், குடிவெறியில் 13 வயது சிறுமி புனிதாவை பலத்காரம் செய்து கொன்ற காமுகன்.

“குடிச்சா பொண்டாட்டிக்கும், பொண்ணுக்கும் கூடவா வித்தியாசம் தெரியாது” எனக் கேள்விகள் எழுப்பலாம். ஆனால் இதற்கு குடிபோதை மட்டுமா காரணம்? இல்லை, குடிபோதையோடு மோசமான காமவெறியும்தான், குடிக்கு டாஸ்மாக் போல, காமவெறியைத் தூண்டுவதற்கு ஆபாச இணைய தளங்களும், மெமரி கார்டுகளும் கெடுத்துக் குட்டிச்சுவராக்குகின்றன. பாலியல் குற்றத்தில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலோர் குடிப்பது மட்டுமின்றி, ஆபாச செக்ஸ் படங்களையும் பார்ப்பவர்கள்தான்.

பெண்கள் விடுதலை முன்னணி டாஸ்மாக் முற்றுகை !காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிராமப்புற ஆய்வுக்காக சென்ற நமது தோழர்களிடம், 15 வயது சிறுவன் சொன்ன தகவல் இது “நான் ஒரே நாள்ல 250 பிட்டு படம் டவுன்லோடு பண்ணியிருக்கேன், யாராலயும் முடியாது” என்று பெருமையாகச் சொல்லியிருக்கிறான். இப்படி சிறிய வயதில், நாள் முழுக்க ஆபாசப் படத்தைப் பார்ப்பவன் மனநிலை என்னவாக இருக்கும்? படத்தில் பார்ப்பதை அனுபவிக்க வேண்டும் என்ற வெறிதான் வரும். இதைதான் எதிர்க்க முடியாம பிஞ்சுக் குழந்தைகளிடம் தீர்த்துக் கொள்கிறார்கள்.

இப்போது சொல்லுங்கள், டாஸ்மாக்கின் போதைவெறியும், செக்ஸ் படத்தின் காமவெறியும் தலைக்கேறியவனுக்கு தாய்க்கும் – தாரத்திற்கும் – மகளுக்கும் வித்தியாசம் தெரியுமா?

இதற்கு யார் காரணம்?

சாராயக் கடைகளைத் திறந்து வைத்து சரக்கை விற்று மக்களின் பணத்தைப் பறித்துக் கொண்டதோடு உடலையும் மனதையும் நாசமாக்கியது அரசுதானே. மக்கள் சந்தோசமாக இருக்க வேண்டிய பொங்கல், தீபாவளிப் பண்டிகைக் காலங்களில் கூட 200 கோடி, 300 கோடி என “டார்கெட்” வைத்துக் கொள்ளையடிப்பது அரசுதானே? இதே அரசுதானே செக்ஸ் பட இணைய தளங்களையும் அனுமதிக்கிறது.

அரசு எப்படி எல்லாவற்றையும் தடுக்க முடியும் என்று கேட்கலாம். ஆனால், 2014 உலகக் கோப்பை கால்பந்து போட்டியை இணையதளம் மூலமாக யாரும் இலவசமாகப் பார்த்து விடாமல் தடுக்க, 20 இணைய தளங்களை செயல்பட விடாமல் தடுத்தது அரசு. டி.வி நிறுவன முதலாளிகளின் லாபத்திற்காக இதைச் செய்ய முடியுமென்றால், மக்களின் நன்மைக்காக செக்ஸ் பட இணைய தளங்களை தடுக்க முடியாதா?

10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு பாடம் நடத்த அரசுப் பள்ளிகளில் வாத்தியார் இல்லை. குடிக்கத் தண்ணீர் இல்லை, அவசரத்துக்குப் போக கக்கூஸ் கூட இல்லை. இதெல்லாம் கொடுக்காத அரசு எதற்காக இலவச லேப்டாப் கொடுக்கிறது? வாத்தியாரே இல்லாமல் பையன் அதை எப்படிக் கற்றுக் கொள்வான்? வேண்டுமானால், 5 ரூபாய்க்கு இண்டர்நெட் கார்டு வாங்கி லேப்டாப்பில் போட்டு எதைப் பார்க்கக் கூடாதோ அதைப் பார்க்கத் தொடங்கி கடைசியில் காஞ்சிபுரம் மாணவன் போல சீரழிவில் ‘சாதனையாளனாக’ மாறி விடுகிறான்.

இப்படி மக்களை, மாணவர்களைக் கெடுத்து சீரழித்து, அதிலும் பணம் பார்க்கும் அயோக்கிய பேர்வழிகளான முதலாளிகள்தானே; இவர்களுக்கு அடியாள் வேலை செய்யும் அரசுதானே காரணம். உண்மை இப்படி இருக்கும் போது அரசு எப்படி மக்களுக்காக இருக்க முடியும்?

இதன் விளைவு என்ன?

சாராய போதையும், ஆபாசப் படங்களும் மனிதனை இயல்பு நிலையில் வைத்திருப்பதில்லை. எந்த நேரமும் சீரழிந்த சிந்தனையைத் தூண்டி விடுகின்றன. தவறுகளைச் செய்யத் தூண்டுகின்றன. எந்த அநியாயத்தையும் கண்டும் கோபம் கொள்ளாத மழுங்கிய நிலைக்குத் தள்ளுகின்றன. படிக்கும் படிப்பு முதல் குடிக்கும் தண்ணீர் வரை காசாகி விட்டதைக் கண்டோ, உரிமைகள் பறிக்கப்படுவதைக் கண்டோ, வெளிநாட்டுக் கம்பெனிகள் நம் நாட்டைக் கொள்ளையடிப்பது கண்டோ, கோபமோ, ஆவேசமோ கொள்ளாமல் தடுக்கின்றன. இதைத்தான் கார்ப்பரேட் கம்பெனி முதலாளிகளும், நமது ஆட்சியாளர்களும் விரும்புகிறார்கள்.

இதை நாம் சகித்துக் கொள்ள முடியுமா? சூடு, சொரணை இல்லாத சதைப் பிண்டங்களாக நமது பிள்ளைகளும், சகோரதர்களும் மாறுவதை அனுமதிக்க முடியுமா? இளம்வயதிலேயே பாலியல் குற்றவாளியாக நமது மகன் மாறுவதை அனுமதிக்க முடியுமா? 3 வயது, 4 வயது குழந்தைகளுடன் நமது சகோதரிகள் தாலியறுப்பதைத் தாங்கிக் கொள்ள முடியுமா? முடியாது என்றால் என்ன செய்வது?

பெண்கள் விடுதலை முன்னணி டாஸ்மாக் முற்றுகை !தீர்வுதான் என்ன?

அரசாங்கம் என்ன செய்யும்? குடிப்பவர்கள், ஆபாசப் படம் பார்ப்பவர்கள் தானாகத் திருந்தினால்தான் உண்டு என்று வசனம் பேசுவது நியாயமா? சிகரெட் கம்பெனிகளை அனுமதித்து விட்டு புகைபிடிப்பவனைத் தண்டிப்பது, ஊத்திக் கொடுக்கும் அரசை விட்டுவிட்டு குடிப்பவனைத் தண்டிப்பது என்னவகை நியாயம்? இந்தியக் குற்றவியல் சட்டமே என்ன சொல்கிறது? தப்பு செய்யத் தூண்டுபவன்தான் முதல் குற்றவாளி. அப்படி என்றால் அந்த சட்டம் அரசுக்குப் பொருந்தாதா? விற்பவனை உதைத்தால் குடிப்பவன் அடங்குவான் என்று கூறுவது போல முதல் குற்றவாளியான அரசின் அயோக்கியத் தனத்தைத் தோலுரிப்பதோடு, மக்களுக்கு உதவாத இந்த அரசை அப்புறப்படுத்துவோம். இதற்கு மக்களுக்கான அதிகார கமிட்டிகளைக் கட்டியமைப்போம். மக்களைக் கொல்லும் சாராயத்தையும், மக்களைச் சிதைக்கும் ஆபாசச் சீரழிவுகளையும் ஒழித்துக் கட்டுவோம்.

ஊத்திக் கொடுப்பதும் சீரழிப்பதுமா அரசின் வேலை?

நாகல்கேணி டாஸ்மாக் கடை முற்றுகை

24-12-2014 – காலை 11 மணி
பெண்கள் விடுதலை முன்னணி, சென்னை

உழைக்கும் பெண்களே!

வீதிக்கு வீதி குடிநீர் குழாய்கள் இல்லை,
குடி கெடுக்கும் சாராயக் கடைகளுக்கோ பஞ்சம் இல்லை!
அறிவைப் புகட்டும் கல்வி தனியார்மயம்!
புத்தியைக் கெடுக்கும் சாராயம் அரசுமயம்!

ஆட்சியைப் பிடிப்பதில் ஜெ.வும் ‘கருணா’வும் பங்காளிகள்!
ஊத்திக் கொடுத்து உருவிக் கொள்ளும் நம் உழைப்பு பணத்தை
சாராயப் பேக்டரி முதலாளிகளுக்கும் இலவசங்களுக்கும் படையல் வைப்பதில் கூட்டாளிகள்!

குடிகெடுக்கும் டாஸ்மாக்கை இழுத்து மூடுவோம்! டாஸ்மாக் பிடியில் இருந்து மக்களை விடுவிப்போம்!

தாலிக்கு தங்கம் தரும் தமிழக அரசே,
மக்கள் தாலியறுக்க காரணமான
டாஸ்மாக் சாராயக் கடைகளை இழுத்து மூடு

சாராய போதையும் ஆபாச சீரழிவு படங்களும்
சிந்தனையை சீரழிக்கும் வக்கிரங்களே!

குடிகெடுக்கும் சாராயக் கடைகளை இழுத்து மூடுவோம்!
மக்களின் சிந்தனையைச் சீரழிக்கும் ஆபாச வக்கிரங்களை ஒழித்துக் கட்டுவோம்.

பெண்கள் விடுதலை முன்னணி டாஸ்மாக் முற்றுகை !

பெண்கள் விடுதலை முன்னணி
சென்னை
தொடர்பு எண் : 98416 58457

ஊழியர்களை பலி கொடுக்கும் டி.சி.எஸ்சின் தர மேம்பாடு

35

கவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கல்சன்டன்சி சர்வீஸ் (டி.சி.எஸ்) ஆட்குறைப்பை ஆரம்பித்திருக்கிறது. ஆட்குறைப்பு என்று அறிவிக்காமல் மறுசீரமைப்பு என்ற பெயரில் இதனை செய்துவருகிறது. இதன் மூலம் சுமார் 25,000 பணியாளர்கள் வெளியேற்றப்படுகிறார்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. ஆன்சைட் ஊழியர்கள் என்று அழைக்கப்படும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட ஊழியர்களும் இதில் அடக்கம்.

டி.சி.எஸ் ஆட்குறைப்பு
வரும் காலங்களில் மற்ற ஊழியர்கள் தலையிலும் கைவைக்கப்படலாம்.

மாதம் சில லட்சங்களை சம்பளமாக பெறக்கூடிய மேல்மட்ட ஊழியர்கள் முதலில் குறிவைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆலோசகர் (கன்சல்டன்ட்), இணை ஆலோசகர் (associate consultant), துணைத் தலைவர் (vice prisident) பதவியில் இருப்பவர்கள் இதனால் உடனடியாக பாதிக்கப்படுவார்கள். வரும் காலங்களில் மற்ற ஊழியர்கள் தலையிலும் கைவைக்கப்படலாம்.

நீக்கப்பட வேண்டியவர்களின் பட்டியல் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு விட்டதாகவும் அதை பல்வேறு கட்டமாக பிப்ரவரி மாதம் வரை அறிவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஊழியர்கள் மத்தியில் பேசப்படுகிறது. இதனால் தினமும் காலை அச்சத்துடனேயே மின்னஞ்சலை திறக்கிறார்கள், மேல்மட்ட ஊழியர்கள்.

கீழ்மட்ட ஊழியர்களிடையே பீதியும் நிச்சயமற்ற தன்மையும் பலமடங்கு அதிகரித்துள்ளது. பலர் வங்கித் தேர்வுக்கான தயாரிப்பில் ஈடுபட ஆரம்பித்திருக்கிறார்கள்.

ரூ.64,991 கோடி மதிப்பிலான டி.சி.எஸ் 3.13 லட்சம் மேற்பட்ட ஊழியர்களைக்கொண்டுள்ளது. செப்டம்பருடன் முடிந்த காலாண்டில் மட்டும் ரூ 5,244 கோடி லாபமாக ஈட்டியுள்ளது. இது கடந்த காலாண்டைவிட ரூ 324 கோடி குறைவாக இருப்பினும் சென்ற ஆண்டின் இதே காலாண்டைவிட ரூ 611 கோடி அதிகம். ஆயினும், மேலும் மேலும் லாபத்தை பெருக்கும்  நோக்கத்திற்காக பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை வெளியேற்றிவருகிறது, டி.சி.எஸ்.

அப்ரைசல் எனப்படும் பணித்திறன் கணக்கீட்டின் அடிப்படையில் தான் ஊழியர்கள் நீக்கப்படுகிறார்கள் என்று பொதுவாக சொல்லப்படுகிறது. இந்த பணித்திறன் கணக்கீடே ஒரு ஏமாற்று வேலை என்பது தான் உண்மை.

டி.சி.எஸ் ஆட்குறைப்பு
படம் : நன்றி http://profit.ndtv.com

ஒரு மேலாளரின் கீழ் வேலை செய்பவர்கள் அனைவமே சிறப்பாக வேலை செய்தால் கூட அவர்களை தரம் பிரித்து புள்ளிகள் அளிக்கப்படுகின்றன. இத்தனை ஊழியர்களை திறன் குறைந்தவர்கள் என்று கூறி குறைந்த புள்ளிகள் அளிக்கப்படவேண்டும் என்பது விதி. ஆக தினமும் ஒன்பது மணிநேரம் வேலை செய்து, கொடுக்கப்பட்ட வேலையை முடித்தாலும் கூட ஒருவர் குறைந்த புள்ளிகளைத்தான் பெறமுடியும். யாராவது ஒரு சிலர் மட்டும்தான் அதிக புள்ளிகள் பெறமுடியும். ஆக அப்ரைசல் என்பதே மோசடி என்பது தான் உண்மை. அந்த மோசடி அப்ரைசலின் அடிப்படையில் தான் தற்போது பணிநீக்கம் செய்கிறார்களாம்.

இது குறித்து அந்நிறுவனத்தின் ஊழியர்கள் சிலரிடம் பேசியபோது

“ஒவ்வொரு துறைவாரியாகவும், புராஜெக்ட் வாரியாகவும் இத்தனை இத்தனை ஊழியர்களை நீக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார்கள். இதன்படி எச்.ஆர் நீக்கப்பட வேண்டிய ஊழியர்களின் பட்டியலை தயாரித்திருக்கிறார்கள். இப்படி எண்ணிக்கையை முடிவு செய்துவிட்டு அதற்கு ஆட்களை தேடுகிறார்கள். திறமையான ஊழியர்களும்தான் நீக்கப்படுகிறார்கள். தற்போது ஒவ்வொருக்காக மெயில் வருகிறது. அவர்கள் மூன்று மாதச் சம்பளத்துடன் உடனடியாக வெளியே அனுப்பபடுகிறார்கள்.”

வேலைபறிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள டி.சி.எஸ் செய்தி தொடர்பாளர், “எங்களைப் போன்ற திறனை முன்னிறுத்தும் நிறுவனங்களில் தரமேம்பாடு என்பது தொடர்ந்து நடக்கும் ஒன்றுதான். அச்சமயங்களில் ஊழியர் எண்ணிக்கை குறைவதும் சகஜமானதுதான். கருத்து கூறும் அளவுக்கு இது ஒரு சிறப்பான விசயம் இல்லை.” என்று திமிராக தெரிவித்துள்ளார். அதாவது, தர மேம்பாடு என்பது ஊழியர்களை கழித்துக் கட்டுவது, அதிக செலவு பிடிக்கும் ஊழியரை நீக்கி விட்டு குறைந்த  ஊதியத்தில் ஆள் அமர்த்திக் கொள்வதுதான்.

அதன்படி சுமார் 55,000 பேரை புதிதாக வேலைக்கு எடுக்கப்போவதாகவும் அறிவித்திருக்கிறார், செய்தித் தொடர்பாளர். ஆட்குறைப்பினால் ஏற்படும் பற்றாக்குறையை போக்க குறைந்த ஊதியத்தில் புதிய பணியாளர்களை எடுக்கப்போகிறார்கள். காரணம், வெளியேற்றப்படுவர்களின் ஊதியத்தை விட எடுக்கப்படுவர்களின் ஊதியம் பல மடங்கு குறைவல்லவா!

இது எதிர்பார்த்த ஒன்றுதான்.

டி.சி.எஸ் ஆட்குறைப்பு
“இது ஒன்-டூ-ஒன் டிஸ்கசன் அல்ல. பேசுவதற்கு எதுவுமில்லை” என்று கூறி வேலைநீக்கத்துக்கான காரணத்தைக் கூட தெரிவிப்பதில்லை.

தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் திறக்கப்பட்டிருக்கும் பொறியியல் கல்லூரிகளில் பயின்றவர்கள் பல லட்சம் பேர் உழைப்புச் சந்தையில் குவிந்திருக்கிறார்கள். எவ்வளவு குறைந்த சம்பளத்திற்கும் வேலை செய்ய தயார் என்பது அவர்களது நிலைமை. வாங்கிய கல்விக்கடனை எப்படியாவது அடைக்க வேண்டும் என்று திக்குத் தெரியாமல் தவிக்கிறார்கள் இந்த மாணவர்கள். வேலைக்கு எடுக்கப்படவிருக்கும் இவர்களும், ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் கல்விக்கடனை அடைத்து, வீட்டுக்கடன் வாங்கும் நிலைக்குவரும்போது நீக்கப்பட்டு விடுவார்கள்.

இந்த ஆட்குறைப்பு டி.சி.எஸ் உடன் முடியவில்லை. விப்ரோ மற்றும் இன்போசிஸ் நிறுவனங்கள் ஏற்கனவே இதைச் செய்ய ஆரம்பித்துவிட்டன.

“நீங்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் விரும்பினால் உடனடியாக இப்போதே வேலையை விட்டு நின்றுவிடலாம். இல்லை மூன்று மாதம்வரை பணிபுரியலாம்.” என்று எச்.ஆர் சமபந்தப்பட ஊழியர்களிடம் தெரிவிப்பார். ஊழியர்கள் மறுபேச்சு பேசாமல் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏதேனும் கூற முற்பட்டால், “இது ஒன்-டூ-ஒன் டிஸ்கசன் அல்ல. பேசுவதற்கு எதுவுமில்லை” என்று கூறி வேலைநீக்கத்துக்கான காரணத்தைக் கூட தெரிவிப்பதில்லை.

மூன்று மாத நோட்டீஸ் கூட வேலை நீக்கம் தொடர்பான அலுவலக நடைமுறைகளை செய்ய மட்டுமே. ஐ.டி கார்டுகள் பிடுங்கப்பட்டுவிடும். இனி வாயிற்காப்பாளர் உள்ளே அனுமதிக்கமாட்டார். மன உழைச்சலும் விரக்தியுமாக பலர் வீட்டிற்குத் திரும்புகின்றனர். தங்களுக்கு என்றைக்கும் அழைப்புவருமோ என்று பலர் விரக்தி, மன உளைச்சலுடன் காத்திருக்கிறார்கள்.

வேலை இழந்தவர்கள் பணித்திறன் இல்லாதவர்கள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். இதனால் இனி வேலைதேடும் நிறுவனங்களின் நேர்முகத்தேர்வில் ‘தன்னுடைய தவறு’ குறித்து விளக்கமளிக்க வேண்டும்.

டி.சி.எஸ் ஆட்குறைப்பு
டி.சி.எஸ். வேலை நீக்கம் செய்யப்படும் ஊழியருக்கு தருவதாக வாட்ஸ்-அப்-இல் சுற்றுக்கு விடப்பட்டுள்ள கடிதத்தின் நகல்.

வேறு எதுவும் செய்ய முடியாத கையறு நிலையில் இருப்பவர்கள் தங்கள் கவனத்தை சனிப்பெயர்ச்சியின் பக்கம் திருப்பியிருக்கிறார்கள். மோடிவந்தால் வளர்ச்சி வந்துவிடும் விவாதித்தவர்கள் இப்போது தங்களை சனி பிடிக்காமல் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். நாட்டையே மறுகாலனியாக்கத்தின் ஏஜென்டான மோடி என்ற சனி பிடித்து ஆட்டும் போது ஐ.டி வர்க்கம் மட்டும் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும்.

வேலை இழந்ததைவிட கொடுமையானது, அதை எதிர்த்து கேட்க நாதியில்லாமல் அடங்கியிருப்பதுதான். நீக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் எதிர்த்து பேசுவதற்கு பல கேள்விகள் நிச்சயமாக இருந்திருக்கும். இந்த வேலையை நம்பி வாங்கிய வீட்டுக் கடன்கள், கிரெடிட் கார்டு பில்கள், திருமணங்கள் என பல விசயங்கள் கண்முன்னால் வந்து மறைந்திருக்கும். ஆனால் எதுவும் செய்யும் நிலையில் அவர்கள் இல்லை என்பது தான் உண்மை.

எழுத்துக்கூட்டி படிக்கக்கூட தெரியாத தொழிலாளர்கள் தங்கள் மீதான நிறுவனத்தின் அடக்குமுறைகளை எதிர்த்து போராடுகிறார்கள். குறைந்தபட்சம் தங்கள் சுயமரியாதையை காத்துக்கொள்கிறார்கள். அதற்கு காரணம் அவர்கள் சங்கமாக அணிதிரண்டிருப்பதுதான். தொழிலாளர்களில் ஒரு அங்கம் தான் நாம் என்பதை ஐ.டி ஊழியர்கள் உணரவேண்டிய தருணம் இது.

அநீதியான இந்த ஆட்குறைப்பு ஐ.டி. துறை ஊழியர்கள் சங்கமாக அணிதிரள்வதுதான் தேவையை முன்னிலும் அதிகப்படுத்தியிருக்கிறது. இன்று மேல்மட்ட ஊழியருக்கான குறி நாளை அனைவர் மீது திருப்பப்படும் என்பது உறுதி. இப்பொழுது போராடாவிட்டால் எப்பொழுதும் போராட முடியாது. கிடைத்திருக்கும் இந்த அவகாசத்தில் சங்கமாக அணிதிரள்வீர்.

டி.சி.எஸ் ஆட்குறைப்பு மற்றும் பொதுவாக ஐ.டி துறையில் பணி பாதுகாப்பின்மையை நாம் சட்ட பூர்வமாகவும் அமைப்பு ரீதியாகவும் எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது.

இது தொடர்பாக மேல் விபரம் அறிய விரும்பும் ஐ.டி. துறை நண்பர்கள் எங்களை தொடர்பு கொள்ளவும்.

மின்னஞ்சல் : combatlayoff@gmail.com
முகநூல் பக்கம் : https://www.facebook.com/VinavuCombatsLayoff

தொலைபேசி : 9003198576

பு.ஜ.தொ.முவை தொடர்பு கொள்ள
தோழர் விஜயகுமார், மாநில பொருளாளர், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, 94441 06479

மேலும் படிக்க

ஆபாச பத்திரிகைகளைத் தீயிலிடு – மாணவிகள் போர்க்கோலம் !

7

“ஆபாசப் பத்திரிகைகளை எரிக்கும் போராட்டம்” என்று அறிவித்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக சென்னை முழுக்க சூறாவளியாய் சுழன்று பிரச்சாரம் செய்தனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர்  சென்னை மதுரவாயல் முதல் பிராட்வே வரை புமாஇமுவின் செம்படை உழைக்கும் மக்களைச் சந்தித்து பாலியல் வக்கிரத்தை ஒழித்துக்கட்ட வேண்டியதன் அவசியத்தை எடுத்து உரைத்தது. உழைக்கும் மக்கள் தங்கள் வர்க்கப்பாசத்தோடு  ஆதரவளித்தனர். “மாணவர்கள் என்றாலே சரியாகத்தான் இருப்பார்கள்” என்றும் “மாணவர்கள் -இளைஞர் சமூகத்தை மாற்றப் பிறந்தவர்கள் தாம்” என்றும் வாழ்த்துக்கூறினர்.

பிரச்சாரப் பயணம் முடிந்ததும் போராட்டத்திற்கான வேலைகள் தொடங்கின, நகரம் முழுக்க, “ஆபாசப் பத்திரிகைகளை எரித்தே தீர வேண்டும், வேறு மாற்றே இல்லை” என்பதை அறிவிக்கும் விதமாக 3000-க்கும் மேற்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

ஆணாதிக்கத்தின் முகத்தை  கிழிக்கும் வகையில் திரும்பிய பக்கமெல்லாம் புமாஇமுவின் போராட்ட சுவரொட்டிகளுக்கு இடம் கொடுத்து மேலும் பெருமை தேடிக்கொண்டது சென்னை.

சுவரொட்டிகளைக் கண்ட மக்கள் கும்பல் கும்பலாக வேடிக்கை பார்ப்பதோடு மட்டுமல்லாமல் தங்களுக்குள் விவாதிப்பதும், பலர் அலுவலக எண்ணுக்கு தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவிப்பதும், தாங்களும் கண்டிப்பாகக் கலந்து கொள்வதாகவும் தெரிவித்தனர்.

உழைக்கும் மக்கள் இச்சுவரொட்டிகளை கண்டவுடன் வாழ்த்து தெரிவித்தனர் என்றால் ஆளும் வர்க்கத்தின் எடுபிடியான போலீசு என்ன செய்திருக்கும்?

17-ம் தேதி காலைமுதல் பு.மா.இ.மு.வின் சென்னை மாநகரச் செயலர் தோழர் கார்த்திக்கேயனின் வீட்டுக்கு வந்து “எங்கே போராட்டம் நடத்தப் போகிறீர்கள்?” என்று குடைச்சல் கொடுத்துப் பார்த்தது, பாச்சா பலிக்காமல் போனது. தொடர்ந்து அலுவலக எண்ணுக்கு போன் செய்து, “என்ன செய்யப்போகிறீர்கள்?” என்று பதைபதைப்போடு இருந்தது.

நாம் எதிர்பார்த்த நாளும் போலீசு எதிர்பார்த்த நாளுமான 18-ம் தேதி விடிந்தது . அன்றும் காலை முதல் அலுவலக எண்ணுக்கு போலீசு அழைத்துக்கொண்டே இருந்தது.

“சார் எப்போ வருவீங்க, சாப்பாடு ரெடி பண்ணணும், பர்மிசன் கொடுத்துடுறோம், பப்ளிக்குக்கு டிஸ்டர்ப் இல்லாம பண்ணுங்க” என்று பல பல மொழிகளில் பேசின.

நாம் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்த இடத்தில் காலை 8 மணி முதல் நூற்றுக்கணக்கான போலீசு குவிக்கப்பட்டு இருந்தது.

ஆபாச பத்திரிகைகள் எரிப்புப் போராட்டம்
நாம் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்த இடத்தில் காலை 8 மணி முதல் நூற்றுக்கணக்கான போலீசு குவிக்கப்பட்டு இருந்தது.

நம்மைக் கண்ட உளவுப் பிரிவு போலீசு நாம் செல்லும் இடமெல்லாம் வால் போல திரிந்தது. டீ குடிக்கச் சென்றாலும் கால் வலிக்கிறதென்று ஒரு இடத்தில் உட்கார்ந்தாலும் கூட கூடவே வந்தது. சரி அதிகாரிகளை சந்திப்போம் என்று சென்றோம்.

நாம் எந்த நோக்கத்திற்காக போராட்டம் செய்யப் போகிறோம் என்பதைக் கேட்ட D1 போலீசு இன்ஸ்பெக்டர்,

“அப்படியா, டைம் பாஸ்ன்னு ஒரு  பத்திரிக்கை வருதா எனக்கு தெரியவே தெரியாதே”

“ஏன் சார் உங்க பசங்க எல்லாம் இந்தப் பிரச்சினையில பாதிக்கறது இல்லையா?”

“ச்சே என்ன செய்யறது” என்று தன் முகத்தில் நவரசங்களையும் காட்ட ஆரம்பித்தார்,  இன்னொரு போலீசு.

மணி சரியாக 12.30.

புமாஇமுவின் கல்லூரி மாணவிகளும் இளம் பெண்களும் தோழமை அமைப்பான பெண்கள் விடுதலை முன்னணி தோழர்களும் “பாலியல் வக்கிரத்தை துடைத்தெறிவோம்” என்ற எச்சரிக்கை செய்யும் வாசகங்களோடு தலையில் தொப்பி, கையில் பேட்ஜ், சிவப்பு சீருடை சகிதமாக சென்னை உயர்நீதிமன்றம் எதிரில் உள்ள பிரதான சாலையில் கம்பீரமாக முழக்கமிட்டபடி வர, போராட்டத்தின் தலைவரான  புமாஇமுவின் தோழர் கனிமொழி கையில் தீயோடு வந்தார்.

ஆபாச பத்திரிகைகள் எரிப்புப் போராட்டம்
“பாலியல் வக்கிரத்தை துடைத்தெறிவோம்” என்ற எச்சரிக்கை செய்யும் வாசகங்களோடு தலையில் தொப்பி, கையில் பேட்ஜ், சிவப்பு சீருடை சகிதமாக முழக்கமிட்டபடி வர, போராட்டத்தின் தலைவரோ கையில் தீயோடு வந்தார்.

தீயிட்டுக் கொளுத்துவோம் ! தீயிட்டுக் கொளுத்துவோம் !
பாலியல் வக்கிரத்தை தூண்டுகின்ற
ஆபாசப் பத்திரிக்கைகளை
தீயிட்டுக் கொளுத்துவோம் !தீயிட்டுக் கொளுத்துவோம் !

அனுமதியோம்!அனுமதியோம்!
மாணவர்கள் -இளைஞர்கள்
டைம்பாஸ்- சினிக்கூத்து
வண்ணத்திரை, குமுதம்
ஆபாசக் குப்பைகளை
கடைவிரிக்க அனுமதியோம்!

பள்ளிக்கூட மாணவனுக்கும்
ஊத்திக் கொடுத்து சீரழிக்கும்
மாமா பயல் கவர்மெண்டே
நீ நடத்துவது அரசாங்கமா?
விபச்சார விடுதியா?

தடை செய்!தடை செய்!
ஆபாச பத்திரிக்கைகளான
டைம்பாஸ் சினிக்கூத்து
குமுதம் வகையறாக்களை
உடனடியாக தடை செய்!

பாலியல் வக்கிரத்தை பரப்பும்
இண்டர் நெட் மெமரி கார்டு
ஃபேஸ் புக் வாட்ஸ் அப்
தொலைக்காட்சி ஆபாசங்களை
உடனே தடை செய்!

எச்சரிக்கை ! எச்சரிக்கை!
எச்சரிக்கை செய்கின்றோம்
கோடி கோடியாய் லாபம் பார்க்க
மாமா வேலை செய்கின்ற
பத்திரிக்கை முதலாளிகளே
ஆபாசக் குப்பைகளை
தமிழகத்தில் கடைவிரித்தால்
தீயிட்டு கொளுத்துவோம் !

முறியடிப்போம் ! முறியடிப்போம் !
மாணவர்கள் -இளைஞர்கள் மீது
குறிவைத்து ஏவப்படும்
கலாச்சாரச் சீரழிவை
முறியடிப்போம் ! முறியடிப்போம் !

என விண்ணதிர முழக்கங்களை எழுப்பியவாறு உயர் நீதிமன்றம்  ஆவின் வாயிலுக்கு எதிரே உள்ள சாலையில்  ஊர்வலமாக வந்தனர்.

ஆபாசப் பத்திரிகைகள் எரிப்பு
பெண்களை கேவலப்படுத்துவதையே தொழிலாகக்கொண்ட மஞ்சள் பத்திரிகைகளான டைம்பாஸ், சினிக்கூத்து, குமுதம், வண்ணத்திரை ஆகிய பத்திரிகைகளை கையில் இருந்த சுயமரியாதை நெருப்பில் சுட்டுப்பொசுக்கினர்.

பெண்களை கேவலப்படுத்துவதையே தொழிலாகக்கொண்ட மஞ்சள் பத்திரிகைகளான டைம்பாஸ், சினிக்கூத்து, குமுதம், வண்ணத்திரை ஆகிய பத்திரிகைகளை கையில் இருந்த  சுயமரியாதை நெருப்பில் சுட்டுப்பொசுக்கினர். அருகில் ஒரு கடையில் விற்றுக்கொண்டிருந்த ஆபாசப் பத்திரிகைகளை பறித்துக் கொண்டு வந்த புமாஇமுவின் கல்லூரி மாணவிகள்  அவற்றை நெருப்பிலிட்டனர்.  தீப்பந்தம் கையை சுட அதை கீழே வைக்க முனைந்த தோழரின் கையிலிருந்த அந்த தீப் பந்தத்தை 5-ம் வகுப்பு படிக்கும் மாணவியும் இளந்தோழருமான செந்தாரகை  தன் கையில் ஏந்தினார்.

ஆபாச பத்திரிகைகள் எரிப்பு போராட்டம்
தீப் பந்தத்தை 5-ம் வகுப்பு படிக்கும் மாணவியும் இளந்தோழருமான செந்தாரகை தன் கையில் ஏந்தினார்.

சாலையை மறித்த தோழர்கள் தொடந்து முழக்கமிட்டபடி அகல மறுத்தனர். மீடியா வந்தவுடன் வழக்கம் போல கிளம்பிவிடுவார்கள் என்று நினைத்த போலீசு  என்ன செய்வதென முழித்தது.

“ஆபாசப் பத்திரிக்கைகளை தடை செய்ய வேண்டும் ! செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் வந்து வாக்குறுதி கொடுக்காமல் நகர மாட்டோம்” என்றனர்.

அதெல்லாம் முடியாது என கான்ஸ்டபிள் முதல் ஏசி வரை மிரட்டும் தொனியில் பேச, அமைச்சர் வராமல் ஒரு அங்குலம் கூட நகர முடியாது என பெண் தோழர்கள் உறுதிபடக் கூறினர். முக்கால் மணி நேரத்துக்கும் மேலாக அந்தச் சாலை ஸ்தம்பித்துப் போனது. இதுவரைக்கும் எத்தனையோ சாலை மறியலைக் கண்ட அந்தச் சாலை இம்மறியலில் நிச்சயம் பெருமிதம் கொண்டு இருக்கும்.

ஆபாச பத்திரிகைகள் எரிப்பு போராட்டம்.
கான்ஸ்டபிள் முதல் ஏசி வரை மிரட்டும் தொனியில் பேச, அமைச்சர் வராமல் ஒரு அங்குலம் கூட நகர முடியாது என பெண் தோழர்கள் உறுதிபடக் கூறினர்.

போராட்டத்தை சிதைக்க பலவாறு போலீசு முயன்றது. அதன் ஒரு பகுதியாக ஆண் போலீசு  பெண் தோழர்களை கையாள முயல, பெண் தோழர்களும் அருகில் இருந்த வழக்கறிஞர்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்க ஒதுங்கி நின்றது. அடுத்து பெண் போலீசு தோழர்களை காட்டுமிராண்டித்தனமாக இழுக்க முயல, “நீங்கள் ஒரு பொம்பளையா இருந்துகிட்டு ஏன் இப்படி பண்ணறீங்க? உங்க பிரச்சினையத்தான பேசறோம்?  ஏன் நீங்க எல்லாம் பாலியல் வக்கிரத்தால பாதிக்கப்படுறதே இல்லையா என்ன ?” என்று சிவப்பு உடை அணிந்த தோழர்கள் கேட்க, சிலையாய் நின்றார்கள் பெண் காவலர்கள். அவர்கள் வேறு எப்படி இருக்க முடியும் காக்கி உடை தரித்தபோது.

போராட்டம் அடுத்த கட்ட வடிவத்தை நோக்கி நகர்ந்தது,  போலீசு தன் முகத்தை காட்ட தொடங்கியது. பெண் தோழர்களுக்கு பாதுகாப்பாக நின்ற ஆண் தோழர்களை  நேரடியாகவே வந்து தாக்கினார் டிசி. செந்தில்குமார். இதைப்பார்த்த வழக்கறிஞர்களும் தோழர்களும்  டிசியிடமிருந்து ஆண் தோழர்களை மீட்டனர்.

உடனே  டிசி “உங்களால தானய்யா எப்பவுமே பிரச்சினை” என்று ஏகத்துக்கும் எகிற, வழக்கறிஞர்களின் கடுமையான எதிர்ப்புக்கிடையில் பின்வாங்கினார் டிசி.

ஆபாச பத்திரிகைகள் எரிப்புப் போராட்டம்
பாலியல் வக்கிரத்திற்கு முடிவுகட்டுவதற்கு வைக்கப்பட்ட முதல் கொள்ளி இதுதான்.

‘டிசிக்கு ஒரு அவமானம் என்றவுடன் அதைத் துடைக்க மற்ற காவலர்கள்’ ஓடோடி வந்து பெண் தோழர்களை தூக்க முயற்சிக்க இம்மி அளவும் அவர்களை நகர்த்த முடியவில்லை. வலுக்கட்டயமாக தோழர்களை ஏற்ற முயற்சிக்க,  அதற்கு தோழர்கள் மறுக்க , வேறுவழியே இன்றி அமைச்சரைச் சந்திக்க  சில  பெண் தோழர்களை மட்டும் பிரதிநிதிகளாக அனுப்புவதாகக்கூறி அனைத்து தோழர்களையும் கைது செய்தது போலீசு.

சுற்றி இருந்த மக்கள் இந்த போராட்டத்தை இறுதிவரை கண்டதுடன் நமது பிரசுரங்களை படித்துக்கொண்டும் விவாதித்துக்கொண்டும் இருந்தனர். பாலியல் வக்கிரத்திற்கு முடிவுகட்டுவதற்கு  வைக்கப்பட்ட முதல் கொள்ளி இதுதான்.

கைது செய்யப்பட்ட  நூற்றுக்கும் மேற்பட்ட  பெண் தோழர்கள் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். அவர்கள் அடைத்து வைக்கப்பட்ட இடத்திற்கு புமாஇமுவின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் சென்றார்.

rsyf-burn-yellow-magazines-20அமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்வதாகக் கூறிய போலீசு, அமைச்சரின் அலுவலகத்திற்கு தோழர் கணேசன் உட்பட 5 பெண் தோழர்களை அழைத்துச் சென்றது. அமைச்சர் அங்கு இல்லை என்று பதில் கூறியது.

“அத்துறைச் செயலரை சந்திக்க வேண்டும்” என்று தோழர்கள் கேட்ட போது

“அவர் மீட்டிங்கில் உள்ளார். சி.எம் தனிப் பிரிவுல மனு கொடுக்குறீங்களா?” என்றது போலீசு.

“அதற்காக நாங்க இங்க வரல, அடுத்து தலைமைச் செயலர், அல்லது உள்துறை செயலர் ஆகியோர்கள பார்த்து பேசுவதாக இருந்தா ஏற்பாடு செய்யுங்க அல்லது நாங்கள் செல்கிறோம்” என்று தோழர்கள் மனுகொடுக்கும் சம்பிரதாயச் செயலை செய்யமாட்டோம் என உறுதியாக நிற்க, அவர்களுக்குள்ளேயே ஏதோ பேசியவர்கள், பின்னர் யாரிடமோ பேசிவிட்டு,

“நீங்க சொல்றவங்கள இப்ப பார்க்க முடியாது” என்றனர்.

மீண்டும், “மனு வேண்டுமானால் கொடுங்க” என்றனர், போலீசுகாரர்கள்.

தோழர்கள், “வண்டிய எடுங்க போகலாம்” என்று மண்டபத்திற்கு வந்து போலீசு அமைச்சர்களின் கபட நாடகத்தை தோலுரித்து பேசினர்.

ஆபாச பத்திரிகைகள் எரிப்புப் போராட்டம்
தோழர்கள் மனுகொடுக்கும் சம்பிரதாயச் செயலை செய்யமாட்டோம் என உறுதியாக நின்றனர்.

இவ்வியக்க பிரச்சாரத்திற்காக கடந்த 15-ம் தேதி நடைபயணமாக தோழர்கள் வந்து கொண்டு இருக்கும் போது ஒருவர்

“பெரியார் காலத்துலதான் இப்படி மக்கள் கிட்ட நடந்து போய் பிரச்சாரம் பண்ணாங்க, இந்த காலத்துலயும் மக்கள சந்தித்து பிரச்சாரம் செய்ய ஒரு நடைபயணம் என்றால் அது ஒரு கம்யூனிஸ்டாலதான் முடியும்” என்றார்.

அந்த மக்கள் பணியை இன்றும் புமாஇமு களத்தில் நிரூபித்துக்கொண்டிருக்கிறது.

இது முடிவல்ல…… கலாச்சார சீரழிவுக்கு எதிரான புமாஇமுவின் போராட்டப் பயணம் தொடரும்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
சென்னை.

மணல் குவாரி முற்றுகை : பணிந்தது அதிகார வர்க்கம்

13

வெள்ளாறு எங்கள் ஆறு! மணல் கொள்ளையனே வெளியேறு!

கொட்டும் மழையிலும் நடந்த பல கட்ட பேச்சு வார்த்தையில், “அதிகாரிகள் மக்கள் கோரியுள்ள அனைத்து ஆவணங்களையும் தர வேண்டும், 20-12-14 அன்று மக்கள் முன்பாக பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். அது வரை குவாரியை தற்காலிகமாக மூட வேண்டும்” என முடிவு செய்யப்பட்டு முற்றுகை போராட்டம் இரண்டாம் நாள் (16-12-2014) மாலை 3-00 மணியளவில் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.

வெள்ளாறு எங்கள் ஆறு
“அதிகாரிகள் மக்கள் கோரியுள்ள அனைத்து ஆவணங்களையும் தர வேண்டும், 20-12-14 அன்று மக்கள் முன்பாக பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். அது வரை குவாரியை தற்காலிகமாக மூட வேண்டும்”

வருவாய்த்துறையும், பொதுப்பணித்துறையும் தர வேண்டிய ஆவணங்கள்

  1. 2-12-14 அன்று நடந்த முற்றுகைப் போரட்டத்தின் விளைவாக மணல் குவாரியை மாவட்ட நிர்வாகம் தற்காலிகமாக மூடியதற்கான உத்தரவு நகல்
  2. மேற்படி உத்தரவின் அடிப்படையில் அமைக்கப்பட்ட பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, கனிமவளத்துறை ஆகியோர் அடங்கிய விசாரணை க்குழுவின் அறிக்கை.
  3. மீண்டும் மணல் குவாரி இயங்கும் என மாவட்ட நிர்வாகம் பிறப்பித்த உத்தரவு நகல்.
  4. மாநில சுற்றுச் சூழல் ஆணையம் கார்மாங்குடி மணல் குவாரிக்கு வழங்கிய தடையில்லாச் சான்றிதழின் அடிப்படையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் வழங்கிய உத்தரவு நகல்.
  5. மேற்கண்ட உத்தரவுகளின் அடிப்படையில் குவாரி துவங்கிய நாள் முதல் இன்று வரை எடுக்கப்பட்ட மணலின் அளவு, லாரி லோடுகளின் எண்ணிக்கை, அரசுக் கருவூலத்தில் செலுத்தப்பட்ட மொத்தத் தொகை விபரம் – மாத வாரியாக.
  6. கார்மாங்குடி ஊராட்சியில் மேற்படி மணல் குவாரியில் அள்ளப்பட்ட மணலின் மூலம் வந்த மொத்த வருமானம் – மாத வாரியாக
  7. கார்மாங்குடி மணல் சேமிப்புக் கிடங்கில் (யார்டில்) இருந்து குவாரிதொடஙகியதிலிருந்து இன்று வரை சென்ற மணலின் விபரம் மற்றும் வழங்கப்பட்ட பெர்மிட்டுகள் விபரம் – நாள் வாரியாக.
  8. குவாரியில் பயன்படுத்தபட்ட ஜே.சி.பி.எந்திரங்களுக்கு பி.டபிள்யூ.டி அல்லது அரசு மூலம் வழங்கப்பட்ட மொத்தத் தொகை, எந்த ஒப்பந்ததாரர்களுகக்கு வழங்கப்பட்டது – நாள் வாரியாக.
  9. கார்மாங்குடி ஊராட்சியில் மணல் குவாரி ஒப்புதலுக்காக இயற்றப்பட்ட தீர்மான நகல்
  10. கருவேப்பிலங்குறிச்சி தேவங்குடி சாலை அமைப்பு மற்றும் பராமரிப்பு திட்ட மதிப்பீடு என்ன? கால நிர்ணயம் எனன்?
  11. மாவட்டம் மற்றும் வட்ட அளவில் அரசாணை எண் 135-ன் படி அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழுவின் அறிக்கை – மாத வாரியாக.
  12. கார்மாங்குடி வெள்ளாற்று மணல் குவாரி சர்வே எண் 398/1-ல் குவாரி தொடங்குவதற்கு முன் இருந்த
    அ) மணலின் அளவு விபரம்
    ஆ) குவாரி தொடங்கிய பிறகு எடுத்த மொத்த மணலின் அளவு
    இ) இன்னும் எடுக்கப்பட வேண்டிய மணலின் அளவு என்ன?
வெள்ளாறு எங்கள் ஆறு
தற்போது நடைபெறும் குவாரி சட்டத்துக்கு புறம்பானது என ஏற்கப்பட்டால் குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும்.

மேற்கண்ட விபரங்களைத் தந்து அதனடிப்படையில் பேச்சுவார்த்தை நடைபெற்று தற்போது நடைபெறும் குவாரி சட்டத்துக்கு புறம்பானது என ஏற்கப்பட்டால் குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதை மக்கள் மத்தியில் விளக்கி மக்கள் ஒப்புதலை பெற்றபோது மனித உரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜு பேசியவற்றிலிருந்து

மணல் குவாரி நிரந்தரமாக மூடப்படும் வரை நாம் இங்கிருந்து போக மாட்டோம் என அறிவித்து போராடிக் கொணடிருக்கிறோம். நேற்று மாலை 4 மணிக்கு வந்து பேசிய அதிகாரிகள், இன்று காலை 8-00 மணிக்கே வந்து விட்டனர். கடலூர் மாவட்ட போலீசாருடன், விழுப்புரம் மாவட்டத்திலிருந்தும் பல வாகனங்களில் போலீசார் வந்துள்ளனர். ஆற்றுக்கு வரும் மக்கள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்படுகின்றனர். பெண் போலீசார் வீடு வீடாகச் சென்று போராட்டத்திற்கு போகாதீர்கள் என தடுத்து பிரச்சாரம் செய்கின்றனர். அனைத்து கிராமங்களிலும் போலீசார் காவலுக்கு நிறுத்தப்பட்டுளள்னர். கடும் மழை விட்டு விட்டு பொழிகிறது.

காவல் துறை, “எங்களுக்கு வேறு வழியில்லை நீங்கள் எதாவது ஒரு முடிவு எடுத்துதான் ஆக வேண்டும்” என முழு பலத்தோடு வந்து நிற்கிறார்கள்.

  • நேற்று நாம் கேட்ட ஆவணங்களை, “பொதுப்பணித்துறையில் சென்று வாங்கிக் கொள்ளுங்கள்” எனக் கூறியவர்கள் இன்று “நாங்களே தருகிறோம்” என்கிறார்கள்.
  • நேற்று “குவாரியை மூடமுடியாது” எனச் சொன்ன கோட்டாட்சியர், “இன்று தற்காலிகமாக மூடுகிறேன்” எனக் கூறுகிறார்.
  • முன்பு நம்மை கலக்காமல் குவாரியை திறந்தார்கள். இன்று, “உங்களோடு பேசிவிட்டுதான் மீண்டும் திறப்போம்” என்கிறார்கள்.

நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை உங்களோடு சேர்ந்து விவாதித்து முடிவு எடுக்க விரும்புகிறோம். அது அவசியமான தேவை. எந்த போராட்டத்திலும் மக்களின் முழு ஒத்துழைப்பும்,  எடுக்கும் முடிவைப் பற்றி மக்கள் சிந்திப்பதும் அவசியமானது.

மக்கள் தரப்பிலிருந்து ”தற்காலிகமாக மூடுவது ஏமாற்று, அமைதி பேச்சு வார்த்தை என்பது மக்களை குழப்பவும் போராடுபவர்களை ஏமாற்றவும் அதிகாரிகள் செய்யும் நடவடிக்கை, அதனால் எந்த பயனும் ஏற்படாது. மக்கள் வெயிலிலும், மழையிலும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மாவட்ட ஆட்சியர் ஏன் வரக்கூடாது? மக்கள் கலைந்து சென்று விட்டால் மீண்டும் எப்படி அணி சேர்ப்பது? எனவே குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும்” என்று பலர் பேசினர். தற்போது நடத்தப்படும் போராட்டம் வரலாற்று போராடடம் எனக் குறிப்பிட்டார்கள்.

வெள்ளாறு எங்கள் ஆறு
உங்களில் எத்தனை பேர் ஓடாமல் கைதாவதற்கு தயார்” எனக் கேட்டோம். பெரும் பகுதி மக்கள், “நாங்கள் தயார் தயார்” என உற்சாக முழக்கமிட்டனர்.

“நாம் அவர்கள் சொல்லும் சமரசத்தை ஏற்காவிட்டால் அனைவரும் கைது செய்யப்படுவோம், உங்களில் எத்தனை பேர் ஓடாமல் கைதாவதற்கு தயார்” எனக் கேட்டோம். பெரும் பகுதி மக்கள், “நாங்கள் தயார் தயார்” என உற்சாக முழக்கமிட்டனர்.

காவல் துறை கைது செய்து மண்டபத்தில் வைத்திருந்து, மாலை விட்டுவிடுவார்கள். நாம் மீண்டும் மக்களை திரட்டித்தானே ஆக வேண்டும். மக்கள் கலைந்து விடுவார்கள் என்பதுதான் அரசின், மணல் கொள்ளையனின் எதிர்பார்ப்பு. திரும்பி வரமுடியாது என்றால் ஏன் அவர்கள் மணல் குவாரியை மூட வேண்டும்.

பேச்சு வார்த்தைக்கு நான்கு நாட்கள் இருக்கிறது. அதற்குள் வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கத்துக்கு அனைத்து கிராமங்களிலும் கிளைகளை அமைப்போம், அனைவரையும் உறுப்பினராக சேர்ப்போம். நமது இயகக்ததின் கட்டமைப்பை வலுப்படுத்துவோம். இன்று ஆயிரமாக முற்றுகையிட்டதை பல ஆயிரமாக பெருக்குவோம். பேச்சு வார்த்தையில் பெரும் திரளாக கலந்து கொள்வோம். அது வரை இயங்கிக் கொண்டிருந்த குவாரியை மூடிவிட்டுத் தானே செல்கிறோம்.

மணல் கொள்ளையை நிரந்தரமாகத் தடுத்து இந்த குவாரியை மூடும் வரை நாம் போராட்டத்தை விடப்போவதில்லை. பேச்சுவார்த்தையில் வெற்றி பெறுவோம் என நம்பி நாம் போராட்டத்தை விலக்கவில்லை. மீண்டும் மக்களைத் திரட்ட வேண்டும், திரட்ட முடியும், திரளுவார்கள் என்ற நம்பிக்கையில் நாம் இந்த முடிவை எடுக்கிறோம்.

வெள்ளாறு எங்கள் ஆறு
திருட்டுக் குற்றத்தில் ஈடுபட்ட அதிகாரிகளிடமே நாம் இதை எல்லாம் பேசப் போகிறோம். வேறு வழியில்லை. குவாரி மீண்டும் இயங்கினால் அடுத்த கணம் ஆயிரக்கணக்கில் நாம் ஆற்றில் இறங்க வேண்டும்.

பல ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்பிலான ஆற்று மணல் கொள்ளையை நிறுத்த வேண்டும் என்பது சில ஆயிரம் பேரின் சில நாள் போராட்டத்தால் முடியும் என்பது இயலாத காரியம். மணல் குவாரியை மூட 20 கிராம மக்கள் ஒன்றிணைந்து இரவு முழுவதும் இங்கு தங்கி போராடியது, எதற்கும் வராத மக்கள் இன்று திரண்டிருக்கிறார்கள் என்றால் நம்மை மக்கள் நம்பத் தொடங்கி விட்டார்கள், இவர்கள் சோரம் போக மாட்டார்கள் என்ற உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.  நம் ஆற்றை, நீர் ஆதாரத்தை நாம் காக்காவிட்டால் யார் காப்பார்கள் என்ற உணர்வை நமது தொடர்ந்த பிரச்சாரம் ஏற்படுத்தியிருக்கிறது.

பொதுப்பணித்துறை 1,91,000 cu.m (1.9 லட்சம் கன மீட்டர் – சுமார் 68000 யுனிட் மணல் அதாவது11300 லாரிகள்) மணல் மட்டும்தான் எடுக்க வேண்டும் என உத்தரவு பெற்றுள்ளார்கள்.  நாள் ஒன்றுக்கு 300 லாரிகள் என மதிப்பிட்டால் 37 நாட்களில் அவர்கள் எடுக்க வேண்டிய மொத்த மணலையும் எடுத்து விட்டார்கள். மேலும் அனுமதிக்கப்பட்ட எல்லையைத் தாண்டி வந்து விட்டார்கள் என்பதையும் நாம் ஜி.பி.எஸ்.வைத்து நிரூபிக்க முடியும். 10 மாதங்கள் கணக்கில் வராமல் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான மணலை கொள்ளையடித்துள்ளார்கள். அதற்கு அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளனர். கொள்ளையில் பங்கு வாங்கியுள்ளனர். அதற்குத்தான் சி.பி.ஐ விசாரணை வேண்டும் எனக் கேட்கிறோம்.

திருட்டுக் குற்றத்தில் ஈடுபட்ட அதிகாரிகளிடமே நாம் இதை எல்லாம் பேசப் போகிறோம். வேறு வழியில்லை. குவாரி மீண்டும் இயங்கினால் அடுத்த கணம் ஆயிரக்கணக்கில் நாம் ஆற்றில் இறங்க வேண்டும்.

வெள்ளாறு எங்கள் ஆறு
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கலைக்குழு தோழர்கள் இரண்டு நாட்கள், ஆற்றின் இரு கரையிலும் புரட்சிகர பாடல்கள் மூலமாக பிரச்சாரம் செய்தனர்

இன்றைய போராட்டத்தில் உங்களை இங்கு அழைத்து வர மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கலைக்குழு தோழர்கள் இரண்டு நாட்கள், ஆற்றின் இரு கரையிலும் புரட்சிகர பாடல்கள் மூலமாக பிரச்சாரம் செய்தனர்.

மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் மட்டுமல்லாது இன்னும் பல வழக்கறிஞர்கள் பல மாவட்டங்களிலிருந்து இங்கு வந்து உங்களிடையே தங்கி நீங்கள் கொடுத்த உணவை பெற்று பிரச்சாரம் செய்தனர்.

விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் விருத்தாசலம் நகரம் முழுவதும் வீடு வீடாகப் போய், “இது கிராம மக்கள் போராட்டம் மட்டுமல்ல, அனைத்து மக்களின் போராட்டம்” என பிரச்சாரம் செய்தனர்.

மருங்கூர் பஞ்சமூர்த்தியும், மேலப்பாளையூர் சசிக்குமாரும், சீ.கீரனூர் ராஜ வன்னியனும், கார்மாங்குடி கோபால கிருஷ்ணன், அறிவரசன், பன்னீர் செல்வம், இளையராஜா, சிவப்பிரகாசம், நேமம் சுப்பிரமணியன், கருவேப்பிலங்குறிச்சி இளங்கோ என அனைவரும் உங்களை பல நாட்கள் வலியுறுத்தி ஒவ்வொரு முறையும் அழைத்து வருவது சிரமமான காரியம்.

நமது வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கத்தை அனைத்து கிராமங்களிலும் கிளையாக உருவாக்கி, அறிவிப்பு கொடுத்தால் அனைவரும் வர வேண்டும். மணல் அள்ள இயந்திரம் ஆற்றில் இறங்கினால் உடனே மறிக்க ஏதுவாக அமைப்பு பலம் வாய்ந்த கட்டமைப்பை உருவாக்க வேண்டும். கனிம வளக் கொள்ளைக்கு எதிரான இந்த போராட்டம் நீண்ட காலம் தொடர்ந்து நடத்த வேண்டிய போராட்டம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

வெள்ளாறு எங்கள் ஆறு
கனிம வளக் கொள்ளைக்கு எதிரான இந்த போராட்டம் நீண்ட காலம் தொடர்ந்து நடத்த வேண்டிய போராட்டம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

கார்மாங்குடி கிராம போராட்டத்தை இன்று தமிழகம் தழுவி அறியப்பட்ட போராட்டமாக மாற்றியிருக்கிறோம். பிற பகுதி மக்கள் தாமாக வந்து இங்கு கலந்து கொண்டுள்ளார்கள். பல இளைஞர்கள், பெண்கள் தங்கள் பெயரை செல் நம்பரோடு கொடுத்து சென்றுள்ளனர். மக்கள் பெருமளவில் வரத் தயாராக இருப்பதாக முன்னணியாக வேலை செய்தவர்கள் இங்கு சொல்கிறார்கள். இதுதான் நமது முன்னேற்றம், வெற்றி.

மத்திய மாநில அரசுகளின் தனியார்மய கொள்கையின் கீழ் மணலை மட்டும் தனியார் கொள்ளையடிக்கவில்லை. இயற்கை எரிவாயு, தாதுமணல், கிரானைட், பாக்சைட் (அலுமினியத் தாது), இரும்புத் தாது, நிலக்கரி வயல் என இயற்கை மனித குலத்திற்கு வழங்கிய அனைத்துக் கொடைகளையும் லாப வெறிக்காக சூறையாடுகிறார்கள்.

மேலும் விலைவாசி உயர்வு, கல்வி, மருத்துவம், சுகாதாரம், ரயில்வே, சாலை, போக்குவரத்து, மின்சாரம் என அனைத்தையும் தனியார் கொள்ளையடிக்க அனுமதித்திருக்கிறார்கள். பாராளுமன்றம், சட்டமன்றம் இதை ஏற்று கொண்டிருக்கின்றன. அதில் பங்கு பெறும் கட்சிகள், பங்கு பெறவிரும்பும் கட்சிகள் ஆதரிக்கின்றன். அதிகாரிகள் அனைவரும் இதை சிறப்பாக செய்து முடிக்கவே உள்ளார்கள்.

இந்த நிலையில்தான் நாம் ஆற்று மணல் கொள்ளைக்கு எதிராக மணல் குவாரியை மூடு என போராடுகிறோம்.

நாம் மட்டும் போராடி இந்தப் போரில் வெல்ல முடியாது. நமது உறுதியான போராட்டம் பிற பகுதி மக்களையும் போராடச் சொல்லும். பிற வர்க்கப் பிரிவினரை இதற்கு ஆதரவாக போராடச் சொல்ல முடியம்.

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக இடிந்த கரையில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மீனவ கிராம மக்கள் போராடுகிறார்கள். பல மாதங்கள் பல ஆயிரம் பேர் போராட்ட திடலில் வரிசையில் நின்று கஞ்சி குடித்து போராடியுள்ளனர். பல நாட்கள் தொழில் முடக்கம் செய்துள்ளனர். வருமானம் இழந்துள்ளார்கள். அது, உலக அளவில் அணு உலை தேவையில்லை என்ற கருத்து பிற மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

அது போல் ஆற்று மணல் கொள்ளைக்குஎதிராக பல ஊர்களில் மக்கள் போராடி வருகிறார்கள். அனைத்து போராட்டங்களுக்கும் நமது போராட்டத்தை முன்மாதிரியாக, நம்பிக்கையளிக்கும் போராட்டமாக மாற்றிக் காட்டுவோம்.

என உரையை நிறைவு செய்தார்.

வெள்ளாறு எங்கள் ஆறு
மைய கலைக்குழு, பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த புமா இமு, விவிமு தோழர்களின் உற்சாகமான பாடல்கள் மக்களுக்கு உணர்வூட்டிக் கொண்டிருந்தன.

அதிகாரிகளுடன் பேசுவது, போராட்டக் கமிட்டி விவாதிப்பது, ராஜு பேசுவது என நேரம் நீண்டு கொண்டே செல்கையில் மழை கனமாகப் பெய்யத் தொடங்கியது. மக்கள், உடனடியாக, கீழே அமரப் போட்டிருந்த நெகிழி பாயை (சீட்) உயர்த்திப் பிடித்து, தற்காலிகமான டோம் அரைக்கோள வடிவிலான விவாத அரங்கமாக மாற்றினர். ஒரு துளி மழை நீர் கூட உள்ளே சிந்தாமல், அனைத்து மக்களும் உற்சாகமாக உரையை கேட்டனர். பாடல்களை ரசித்தனர். மக்கள் அரசியல் உணர்வு பூர்வமாக திரண்டு விட்டால் எதையும் நினைத்த மாத்திரத்தில் மாற்றியமைக்க முடியும் என்பதற்கு இது சிறந்த சான்று.

அதே போல சமையல் செய்யுமிடத்திலும் சிலர் பெரிய நெகிலி பாயை (சீட்) உயர்த்திப் பிடித்தனர். மழை பெய்யும் உணர்வின்றி சமையலும் விவாதங்களும் நடந்தன. நமது குடையில் காவல்துறையினரும் வந்து மழைக்கு ஒதுங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இடையிடையே மைய கலைக்குழு, பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த புமா இமு, விவிமு தோழர்களின் உற்சாகமான பாடல்கள் மக்களுக்கு உணர்வூட்டிக் கொண்டிருந்தன.

17-dinamani

போலீசின், தாசில்தார் போன்ற உயர் நிர்வாக அதிகாரிகளின் மமதையும், திமிரும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டே இருந்தன. நீதிமன்றத்தில் நீதி கிடைக்காது என்ற உண்மை மக்கள் மனதில் ஆழப் பதியுமளவு தரவுகள் தோழர்களால் தரப்பட்டுக் கொண்டே இருந்தன.

உப்பு விலை ஏறிப் போச்சண்ணே“, “கரும்புத் தோட்டத்திலே” என்ற பல பாடல்களுக்கு மக்கள் கைதட்டியதோடு, தன்னெழுச்சியாக வாயசைத்துப் பாடுவதையும் காண முடிந்தது.

இறுதியாக, மக்கள் அனைவரின் ஒப்புதலுடன் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திக் கொண்டு, ஆவணங்களைப் பற்றிப் பரிசீலிப்பதும், 20-ம் தேதி மக்கள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்துவதும் என ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது. மணல் குவாரி மூடப்படும் வரை உறுதியாகப் போராடுவது என்ற மன உறுதியுடன் மக்கள் உற்சாகமாக புறப்பட்டுச் சென்றனர்.

மதியம் தயாரிக்கப்பட்ட உணவை உண்டு மக்கள் புறப்படும் சமயம் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. மழையில் நனைந்து கொண்டே மக்களும் தோழர்களும் வழக்கறிஞர்களும் புறப்பட்டுச் சென்றனர். மணல் குவாரி நிரந்தரமாக மூடப்படும் என்ற நம்பிக்கை அப்பகுதி விவசாயிகளிடம் உறுதியாக உள்ளது.

vellaru-siege-141214-25

  • கடுமையான உச்சி வெயிலிலும், கடுமையான இரவு பனிக் குளிரிலும், கொட்டும் மழையிலும் கலையாத மக்களின் உறுதியான போராட்டம்தான், “கேட்ட ஆவணங்கள் அனைத்தையும் தருகிறோம். உங்களோடு பேசி சுமுக உடன்பாடு எட்டப்பட்ட பின்பே மணல் குவாரியை இயக்குகிறோம்” என மந்திரிச்ச கோழி போல மைக்கு முன்பாக, உணர்ச்சியற்ற மனிதனாய் வருவாய் கோட்டாட்சியரைப் பேச வைத்தது.
  • முதல் நாள் இரவு வரை நடந்த பேச்சு வார்த்தையில், “மணல் அள்ளுவதில் எந்த விதிமுறைகளும் மீறப்படவில்லை என பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறுகிறார்கள். மணல் குவாரி தொடர்பான அனைத்து ஆவணங்களையும் அவர்களிடம் தான் நீங்கள் வாங்க வேண்டும். மணல் குவாரியை மூட முடியாது” என எந்திரமாக பணயக் கைதி போல பேசிய வருவாய்க் கோட்டாட்சியரின் குரல் மறுநாள் மாறியதற்குக் காரணம், வெள்ளாற்று கரையோர கிராம மக்களின் போராட்டம் தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்ததுதான்.
  • என்ன செய்ய முடியும் என ஏங்கிய மக்களின் ஆதங்கத்திற்கு உரிய செயலாக இந்த முற்றுகைப் போராட்டம் அமைந்தது. இரவு சமையலில் வரிசையாக அமர்ந்து சாப்பிட்டதும், ஒரே தட்டில் இருவர் சாப்பிட்டதும், சாப்பிட்ட பேப்பர் தட்டைக் கழுவி மீண்டும் சாப்பிட்டதும் சாதி பாராமல், வயது வித்தியாசம் பாராமல், ஆண்-பெண் பாராமல் மணல் கொள்ளையை முறியடிக்க வேண்டும் என உத்வேகம் போற்றுதலுக்குரியதாக, கற்றுக் கொள்ளுவதற்குரியதாக கண் கொள்ளாக் காட்சியாக விளங்கியது.
  • உள்ளூரில் வீடிருந்தும், பல ஏக்கர் நிலமிருந்தும் போராட்டத்திற்கு உண்மையாக வெட்ட வெளியில் ஆற்று மணலிலே பாகுபாடில்லாமல் படுத்துறங்கிய காட்சி எத்தகைய அநீதியையும் எதிர்த்து வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது.
  • ஒவ்வொரு பேச்சு வார்த்தையின் போதும் காவல் துறையின் அதிகாரத்தையும், வருவாய் கோட்டாட்சியர் மூலம் மணல் கொள்ளையர்களின் சதித் தனத்தையும் முறியடிக்கும் வகையில் அறிவு பூர்வமான வாதங்களை நமது வழக்கறிஞர்கள் அடுக்கிய போது, அதிகார வர்க்கம் அதை எதிர் கொள்ள முடியாமல் புறமுதுகிட்டு ஓடியதை மக்கள் ஆரவாரம் செய்தது அதிகார வர்க்கத்தின் மீது மக்களுக்குள்ள ஆத்திரத்தை வெளிப்படுத்தியது.

போராட்டம் ஆரம்பித்த பல மணி நேரம் ஆன பிறகும் அதிகாரிகள் யாரும் பேச வராத போது கோபமுற்ற முன்னணியாளர்கள் அரசின் கவனத்தை ஈர்க்க உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி மிரட்டலாம், பாதையை வெட்டி இடையூறு ஏற்படுத்தலாம் எனக் கூறிய போது, நாங்கள்

vellaru-siege-141214-04

“உறுதியான, நீடித்த மக்கள் போராட்டம் தான் அரசைப் பணிய வைக்கும், பரபரப்பான செயல்பாடுகளில் அதிகார வர்க்கம் என்றைக்கும் பணியாது, நம்மில் யார் இறந்தாலும் அவர்கள் வருத்தப்படமாட்டார்கள். ஆகவே இன்னும் அதிக மக்களைத் திரட்டுவோம், அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்யுங்கள், நீர் வழங்குங்கள், வெயிலுக்குப் பந்தல் அமையுங்கள், இரவு வெளிச்சத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள், மக்களைப் பாதுகாக்க, பராமரிக்க உரிய நடவடிக்கை எடுங்கள். ஒரு நாள் போராட்டத்திலேயே அரசு உங்களுடன் பேசும் என எதிர்பார்க்காதீர்கள், அரசு பேசும் வரை நாம் போராடுவோம்” என்பதை விளக்கிச் சொன்னதும், மந்திரக் கோலுக்குக் கட்டுப்பட்ட மனிதர்களாக அனைவரும் செயலில் இறங்கினர்.

  • ஒருவர் வீட்டிலிருந்து, டிஷ் எடுத்து வந்து, இரவுச் செய்திகளை ஒளி-ஒலி பரப்பியதும், இரவு முழுவதும் செய்திகளையும், நகைச்சுவை காட்சிகளையும் தூங்காமல் பார்த்து ரசித்ததுடன் தூங்கிய மக்களை பாதுகாத்ததும் மறக்க முடியாத நினைவுகள்.
  • முதல் நாள் உச்சி வெயிலில் குடிநீர் தடைபட்டு நா வறண்ட போது அருகிலுள்ள கரும்புத் தோட்டத்தில் விளைந்த கரும்புகளை உடைத்து பலருக்கு உணவாகக் கொடுத்ததும், அதில் சிலவற்றை பெண் காவலர்களுக்கு கொடுத்ததும், பலமைல் தூரம் ஆற்றில் பயணித்து அனைவருக்கும் தேநீர் விற்ற அந்தத் தொழிலாளியும், கார் போகவே சிரமப்படும் ஆற்றுப் பாதையில் சைக்கிளைத் தள்ளி அந்த உச்சி வெயிலில் ஒரு தொழிலாளி ஐஸ் விற்றதும் மறக்க முடியாத நிகழ்வுகள்.
  • 70 வயதைக் கடந்த ஒரு முதிய பெண்மணி சிவத் தொண்டில் ஈடுபாடுடையவர், பல ஏக்கருக்கு சொந்தக்காரர், போராட்டத்தின் அனைத்து நிகழ்வுகளிலும் முன்னணியில் நின்றதுடன், போராடியவர்களில் கண்ணில் பட்டவர்களை எல்லாம் வீட்டிற்கழைத்து குளிக்க வைத்து, உணவு கொடுத்து, காபி, பிஸ்கட், தின்பண்டங்கள் என சளைக்காமல் கொடுத்தார். “ஆற்று மணல் கொள்ளைக்கு எதிரான எல்லா போராட்டங்களுக்கும் நான் வருவேன், ஜெயிலுக்கும் வருவேன், வெள்ளாற்றைக் காக்க இரவு முழுவதும் ஆற்றில் படுத்துப் போராடும் வாய்ப்பை எனக்கு வழங்கியதற்கு உங்களுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்” என்று கூறியது உண்மையான அன்பின், போராட்ட உணர்வின் வெளிப்பாடாக அமைந்தது.

vellaru-siege-141214-02

இந்தப் போராட்டம் வெள்ளாற்று பகுதி கிராம மக்களிடையே மிகுந்த நம்பிக்கையையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

  • நாமா இரண்டு நாட்கள் கடும் வெயில், குளிர், கொட்டும் மழை என போராடினோம்!
  • நூற்றுக்கணக்கான போலீசார் அணிவகுதது எதிரே நிற்க நாமா போராடினோம்!
  • நாமா அது என்று வியக்கும் வண்ணம் உலகம் முழுவதும் பார்க்கும்படி கார்மாங்குடி மணல் குவாரி போராட்டம் தொலைக்காட்சியில் வந்தது !
  • அனைத்துப் பத்திரிகைகளிலும் அரைப்பக்க செய்தி புகைப்படத்துடன் வெளியாகின. மணல் பள்ளத்தாக்கில் மக்கள் வெள்ளமாக நாமா அது!

என போராட்ட வரலாற்று கண்ணாடிகளில் தம்மைப் பார்க்க மக்கள் கற்றுக் கொண்டார்கள். கற்றுக் கொடுத்திருக்கிறோம்

அந்த பிம்பங்கள் அதிகரிக்கும் போது அதிகார வர்க்கத்திற்கு போராடும் மக்கள் உத்தரவு போடுவார்கள். அந்த நாளை நோக்கி நாங்கள் மட்டுமல்ல அனைவரும் பயணிப்பார்கள்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்

வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கம்
மனித உரிமை பாது காப்பு மையம்
கடலூர் மாவட்டம்
தொடர்பு 9360061121

முந்தைய பதிவுகள்

_____________________

விழிப்போடு மீண்டும் போராட ….

கழுத்தும் மார்பும் அறுபட்டு
வல்லுறவுக்கு ஆளாகிக் கிடக்கிறது
வெள்ளாறு….

மணற் கொள்ளையரின்
லாபவெறி நகங்கள் கிழித்து
மணற்சதை தாண்டி
களிமண்வரை ரத்தம் கசிகிறது

நெல்லுக்கும் கரும்புக்கும்
எங்கள் தொண்டைக்கும்
உயிர்நீரை ஊட்டும்
நதியின் மார்புகள்
கிழிக்கப்பட்டுக் கிடக்கின்றன

ஆற்றோடும் மணலோடும்
எமக்கிருந்த உறவறுந்து
கரையில் நிற்கிறோம்

ஆழப்படுத்தி ஆழப்படுத்தி
பெருமூச்சை மட்டுமே இறைக்கின்றன
எங்கள் இறவை எந்திரங்கள்

இரவிலும் பகலிலும்
மணலை அள்ளிச்செல்லும் டாரஸ்ஸுகள்
எங்கள் நெஞ்சில்தான்
தினமும் ஏறிப்போகின்றன

ஆற்றைச் சுரண்டி
ஏற்றிச் செல்லும் லாரிகள்
வாழ்வையும் எங்கள் வழியையுங்கூட
சிதைத்துவிட்டன.

நாய்கள்கூட நடக்காத
பவழங்குடி ரோட்டில்
நாங்கள் தினமும் சென்று ஒடிகிறோம்

இன்று முடிவாய்…

காக்கியும் வெள்ளையுமாய்
மணற்கொள்ளையரின் அறனாய் அந்த
மதிற்சுவரோடு மோதுவதென்று
ஆற்றுக்குள் இறங்கிய பாதைகளை
அடைத்து நின்றன காக்கி வேலிகள்

மலையின் நிலச்சரிவாய்
மணல் குவாரிக்குள் இறங்கின
எங்கள் கிராமங்கள் !

மணலை விரிப்பாக்கி
இரவை போர்வையாக்கி
ஆற்றை வீடாக்கி தொடர்ந்தது போராட்டம்

குவாரிகள் மூடப்பட்ட
இரண்டு நாளாய்
உறங்குகிறோம்…

விழிப்போடு மீண்டும் போராட…

– கோவன்

பார்ப்பனர் நிலை – ஒரு பூர்வாசிரம பார்ப்பனனின் கடிதம்

112
மாதிரிப் படம்
மாதிரிப் படம்

வினவு தோழர்களுக்கு வணக்கம்,

ஜெயமோகனின் ஒடுக்கப்படுகிறார்களா பார்ப்பனர்கள் (பிராமணர்கள்) எனும் கட்டுரையை படிக்க நேர்ந்ததின் விளைவே இம்மடல். இருப்பினும் இதற்கு மூலமான பத்ரியின் கட்டுரைக்கு குருஜீயே விளக்கமளித்த பின் சிஷ்யரின் வார்த்தையை படித்து துன்புறவேண்டுமா என நினைத்து படிக்கவில்லை.

ஜெயமோகனின் அகஒளி தரிசனத்திற்க்கும் சமூக எதார்த்தத்திற்கும் உள்ள இடைவெளி பாரியது. பல்வேறு விசயங்களில் அபத்தமாக எதையாவது உளறி கொட்டி விட்டு தனது மொழிநடையின் மூலம் அதை பூசிச்செல்வது அவரது தந்திரம். பிறகு அழுத்தி கேட்டால் நான் ஆய்வாளன் இல்லை, அது எனது பணியும் கிடையாது என ஒரே போடாக போட்டுவிடுவார்.

இந்த விசயத்தை பொறுத்தவரை பூர்வாசிரமத்தில் பார்ப்பனனாக இருந்த எனக்கு இதைப்பற்றி பேச அதிகம் தகுதி உள்ளதாகவே நினைக்கிறேன். பிறப்பில் எனது பங்கு எதுவும் இல்லாவிட்டாலும், பின்பு நான் கொண்டிருந்த தவறான நம்பிக்கைகளுக்காக இப்போதும் குற்ற உணர்ச்சி கொள்கிறேன். குற்ற உணர்ச்சியை சகித்து கொண்டு ஜெயமோகனுக்காக என் ரிஷிமூலத்தை கொஞ்சம் கிளறி அளிக்கலாம் என நினைக்கிறேன்.

என் வார்த்தைகள் எதுவும் அசீரீரியாய் உள்ளிருந்து ஒலித்தவை அல்ல. என் வாழ்வில் எனக்கே எனக்கேயுமாகவும், என் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஏற்பட்ட அனுபவங்கள்.

பார்ப்பனர்களும் சமூக அவமதிப்பும் எனும் இரண்டாவது தலைப்புக்கு முதலில் செல்லலாம் என நினைக்கிறேன். ஆயிரம்தான் உதாரணங்கள் காட்டினாலும், சொந்த அனுபவத்தின் வாயிலாக உண்மையை அடைவது போல ஆகுமா? ஆர்.எஸ்.எஸ் -ன் உண்மை முகத்தை ஹிந்து ஆன்மீக கண்காட்சி வழியாக அறிந்தாரே ஓர் இளைஞர், அதுபோல என் சொந்த வாழ்க்கையின் வழியாகவே ஜெயமோகனின் அபத்தங்களை பார்க்கலாம் என நினைக்கிறேன். முதலில் நம்பகதன்மைக்காக என்னுடைய சாதியை தெளிவு படுத்த விரும்புகிறேன்.

நான் ­­­­­_________ எனும் ஊரில் மாத்வா எனப்படும் கன்னட பார்ப்பன வகுப்பில் பிறந்தவன். சுமார் இரண்டு லட்சம் பேர் கொண்ட ஊரில் மூன்றே குடும்பங்களை கொண்ட ஆகச்சிறுபான்மையிலும் சிறுபான்மை பார்ப்பன சாதி எங்களுடையது.

ஒரு காலத்தில் பல கிராமங்களை சொத்தாக கொண்ட உத்ராதி மடமும், பல நூறு பார்ப்பன குடும்பங்களையும் கொண்ட ஊரில் மற்றவர் அனைவரும் உயர்ந்த வேலை, வெளிநாட்டு வாழ்க்கை என அமர்ந்துவிட கடைசியாக மிஞ்சியது எங்கள் மூவர் குடும்பங்களும் உத்ராதி மடமும் மட்டுமே.

எங்களை தவிர விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் அய்யர், அய்யங்கார் குடும்பங்களும் இங்குள்ளது. என்னதான் பார்ப்பனர்களாய் இருந்தாலும் எங்கள் சாதிகளுக்குள்ளும் ஏற்றத்தாழ்வுகள் உண்டு. வருடந்தோறும் நடக்கும் மடத்தின் ஆராதனை விழாக்களின் போது எங்கள் சாதியினர் உணவின் போது முன்வரிசையில் அமர அய்யர், அய்யங்கார்களுக்கு பின் வரிசையில் இடம் கிடைக்கும். இதனாலேயே அந்த சாதியினரில் பலர் மடத்தின் விழாவின் போது வருவதில்லை. நாங்களும் அவர்களின் மடத்தின் விழாக்களுக்கு செல்வதில்லை.

இந்த உணவருந்தும் நிகழ்ச்சியும் பார்ப்பனர்களுக்கானது மட்டுமே, இதில் மற்ற சாதியினர் கலந்து கொள்ள முடியாது. அது மட்டுமின்றி பார்ப்பனர்கள் உணவருந்தும்பொழுது மற்றவர்கள் பார்த்தால் தீட்டாகிவிடுமென்று கதவுகளெல்லாம் அடைக்கப்பட்டுவிடும். இது இன்றும் நடைமுறையில் தொடர்கிறது. இதை கண்டு _________யில் யாரும் பொங்கி எழுவதில்லை, என்ன இது பார்ப்பனர்களுக்கு மட்டும் தனி பந்தியா என்று…

guiltinessஉணவு அருந்தி முடித்தபின் கர்நாடகாவில் உள்ளது போல் எச்சில் இலையில் உருளும் நிகழ்ச்சியும் நடைபெறும், என்ன வித்தியாசமென்றால் இங்கே உணவருந்துவதும் பார்ப்பனர்கள் உருளுவதும் பார்ப்பனர்கள். உருண்டு முடித்த பின் எச்சில் இலைகள் எடுக்கப்பட்டு தனியாக புதைக்கபட்டுவிடும். காரணம் பார்ப்பனர் உருண்ட இலைகள் புனிதமானவையல்லவா, அவை பிற இலைகளுடன் கலந்து அசுத்தமாகலாமா?

இதே போன்று திருவரங்கத்தில் உள்ள இராகவேந்தர் மடத்திலும் ஆராதனை சமயத்தில் வெளியே சூத்திரர்க்கு ஒரு பந்தியும், பிராமணர்களுக்கு ஒரு பந்தியும் நடக்கும். இதன் தலைமை மடமான மந்த்ராலயத்தில் பிராமணர்களுக்கான பந்தியில் உணவருந்த சென்று அவமான பட்ட கதையை அரவிந்த் மாளகத்தி தனது கவர்மெண்ட் பிராமணன் நூலில் எழுதியிருப்பார். இதையெல்லாம் கண்டு யாரும் கொதித்து கொந்தளித்து தமிழகத்தில் மாத்வர்கள் எனப்படும் சாதியே இருக்க கூடாதென்று அழித்தொழிப்பு நடவடிக்கையில் இறங்கி விட்டார்களா? இல்லையே! எப்போதும் போல் அவர்கள் தீண்டாமையை கடைபிடித்துதான் வருகிறார்கள். இத்தனைக்கும் இது மற்ற பார்ப்பன சாதிகளை போல அதிகார வர்க்கத்தில் அதிகம் பங்கெடுக்காத பார்ப்பன சாதி.

பார்ப்பனன் என்ற ஒற்றை காரணத்துக்காக எந்த அவமதிப்பையும், ஒதுக்கலையும் நானும் என் குடும்பமும் பெற்றதில்லை. இன்றும் கூட சாமி என்றே எனது தந்தை ஊர்மக்கள் அனைவராலும் அழைக்கப்படுகிறார். இத்தனைக்கும் என் தந்தை ஆரம்ப நாட்களில் பலகார கடையும் அது நொடித்த பின் பெரும்பாலான நாட்களில் சிறுகடைகளிலும் பணி புரிந்தவர். பார்ப்பன சிறுவன் என்பதற்க்காக தனிமைபடுத்த பட்டதோ, கிண்டல் செய்யப்பட்டதோ, ஒதுக்கப்பட்டதோ இல்லை.

மாறாக நரசிம்மன் எனும் இன்னொரு பார்ப்பன சிறுவனின் வீட்டிற்க்கு சென்ற பொழுதுதான் தனி அலுமினிய குவளையில் நீர் கொடுக்கப்பட்டு அவமானப்படுத்த பட்டேன். ஆச்சாரமான அவர்கள் வீட்டில் யார் வந்தாலும் தனிக்குவளை!

மற்ற சிறுவர்களிடமிருந்து பார்ப்பனன் என்ற காரணத்தால் ‘ஒதுக்கப்பட்ட’ சுவையான சம்பவமும் ஒன்று உண்டு. நான்காவது படிக்கும் பொழுது ‘கெட்ட’ வார்த்தை பேசும் குழுவொன்று இருந்தது. அந்த குழுவில் இடம்பெற்று கெட்டவார்த்தைகள் பேச வேண்டுமென்பது என் அவா!

ஆனால்,

“நீயெல்லாம் அய்யருடா, நீ கெட்ட வார்த்தை பேசக்கூடாதுடா” என்று ஒதுக்கப்பட்டேன்.

“ஏண்டா அய்யருக்கு மட்டும் ரெண்டு ________ இருக்கு” என கூறி வலுக்கட்டாயமாக பல கெட்டவார்த்தைகள் பேசி அந்த குழுவுடன் சேர்ந்தது தனிக்கதை. இன்றும் என் பள்ளிக்கால நண்பர்களின் மத்தியில் சிரிப்புடன் நினைவுக்கூறப்படும் கதை இது. அந்த வயதில் பார்ப்பனர்கள் மட்டும் ஏன் தனிப்பட்ட முறையில் நடந்து கொள்ள வேண்டும் என எனக்கு புரியவில்லை.

எனது தம்பியின் வாழ்வில் இது போன்று வேடிக்கையான சம்பவம் ஒன்று நடந்தது. சம்பவம் என்னமோ வேடிக்கையானதாக இருந்தாலும் அதன் முடிவு அத்தனை வேடிக்கையாக இருக்கவில்லை. இது அவன் ஒன்றோ அல்லது இரண்டோ படிக்கும் பொழுது நடந்தது. அவனுடைய சக வகுப்பு தோழன் ஒருவன் வலுக்கட்டாயமாக மீன் குழம்பை எனது தம்பிக்கு ஊட்டிவிட முயன்று, உதடெல்லாம் மீன் குழம்பாகி வீட்டில் வந்து தம்பி அழத்தொடங்க என் அம்மா பள்ளிக்கு சென்று புகார் அளித்தார்.

பின்னர்தான் நடந்தது கொடுமை. ஊட்டி விட்ட பையனை வெளுத்து வாங்கிய வாத்தியார், பின்னர் அந்த சிறுவனை என் தம்பியின் காலிலும் விழச்செய்தார். சிறு பிள்ளையின் விளையாட்டுத்தனமான சேட்டைகளுக்கு இந்த தண்டனைகள் எந்த விதத்தில் சரி?

மாதிரிப் படம்
மாதிரிப் படம்

பார்ப்பனர்களின் ஆச்சாரத்திற்கு ஆபத்து வரும்போது ஏற்படுத்தியவர்களுக்குத்தான் கடும் தண்டனை. பள்ளிகளில் தலித் மாணவர்களை கழிப்பறை கழுவச் சொல்வதிலிருந்து, குப்பையை திண்ண சொல்வது வரை பல்வேறு கொடுமைகள் அரங்கேறும் காலத்தில்,அரிதினும் அரிதாகவாவது ஊளைச்சாம்பார் சத்தம் உண்மையில் கேட்கிறதா என்பதே சந்தேகமாக உள்ளது.

பள்ளி கல்லூரி காலங்கள் தொடங்கி யாரும் என்னை அசைவம் சாப்பிடுமாறு கட்டாயப்படுத்தியதில்லை. வளைகுடா நாட்டில் நான் பணிபுரிந்த பொழுது அங்குள்ள அராபியர்களுடன் அவர்கள் வீட்டில் சேர்ந்து உணவருந்தும்போது கூட அவர்கள் என்னை அசைவம் சாப்பிடுமாறு கட்டாயபடுத்தியதில்லை.

நிலப்பிரச்சனை பார்ப்பனர்களுக்கு மட்டுமானதா? எளியவர்களின் சாதாரண நிலங்கள் எங்கும் பிடுங்கப்படுகின்றன. நில அபகரிப்பு புகார் கொடுக்க வரிசையில் நின்றவர் எத்தனை பேர்?

வன்னிய பெண்களை கூலிங்கிளாசும், ஜீன்சும் போட்டு மயக்குறாங்க என்று இராமதாசு சொன்னது போல, தமிழகத்தின் அத்தனை பொறுக்கிகளும் பார்ப்பன பெண்களாக பார்த்து வம்பு செய்கிறார்கள் என்று ஜெயமோகன் சொல்கிறார். சாலையில் தனியாக நடந்து செல்லும் அத்தனை சாதி,மத பெண்களும் ஆணாதிக்க பொறுக்கிகளிடம் அனுபவிக்கும் துன்பத்தை பார்ப்பன பெண்களுக்கு மட்டும் மடை மாற்றி விட இலக்கிய குருஜீ ஒருவராலேயே முடியும்.

பெண்கள் மீதான் ஆண்களின் இத்தகைய வக்கிரங்கள் நிகழும் இடங்கள் அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்துள்ளன. அலுவலகம், பேருந்து நிலையம், முகநூல் தொடங்கி ஏன் இலக்கிய உலகம் (சாரு நிவேதிதாவை மனதில் கொள்க) வரை இது தொடர்கிறது. இதையெல்லாம் தனிப்பட்ட சாதியின் பிரச்சனையாக மாற்ற தனித்திறமை வேண்டும்.

லவ் ஜிகாத் புகழ் ஆர்.எஸ்.எஸ்-இடம் ஆரம்ப கல்வி பயின்றவராகையால் ஜெயமோகனக்கு இது எளிதாகவே வருகிறது. சாதி என்பது என் அளவில் அரசியல்வாதிகளுக்கும், பெருந்தொழிலதிபர்களுக்கும் தங்களின் அதிகாரத்தையும், சொத்துக்களையும் பெருக்கி பாதுகாத்து கொள்ள ஒரு வழி அல்லது கருவி. இதில் மயங்கி பலியாகும் அடித்தட்டு வர்க்கத்திற்க்கு எந்த ஒரு பலனும் இதில் இல்லை.

இராமதாசோ, வைகுண்டராஜனோ அல்லது டிவிஎஸ் முதலாளியோ அனைவருக்கும் சாதி என்பது ஒரு கேடயம்தான். சென்னை பாடியில் உள்ள டிவிஎஸ்ல் பணி புரிந்ததின் அடிப்படையிலேயெ சொல்கிறேன், பார்ப்பன தொழிலாளர்களுக்கும் பார்ப்பனராய் இருப்பதால் பயன் ஒன்றும் இல்லை.

பார்ப்பனர்கள் வெளியேறுகிறார்களா?

ஆமாம், அவங்க ஊரை காலி பண்ணி போய் ரொம்ப காலமாச்சு. பொழைக்க தெரியாத வழியில்லாத சில பேருதான் ஊர்ல இருக்காங்க. பீகார்ல இருந்தும் உ.பியில இருந்தும் ஏதோ பொழைக்க முடியமா தமிழ்நாட்டுக்கு வந்த மாதிரியில்ல சொல்றாரு அவரு. போனவன் எல்லாம் அமெரிக்கா, ஜெர்மன், ஜப்பான்னு நல்லாதானே இருக்கான், ஏதோ அஞ்சுக்கும் பத்துக்கும் கல்லு உடைக்குற மாதிரியில்ல இருக்கு ஜெயமோகன் சொல்றது. நான் கூட வளைகுடாவுலயும் இப்போ வேறு ஒரு வெளிநாட்டிலும் இருக்கேன்.

இதுக்கும் காரணம் திராவிடச்சதியா? இன்றைய உலகமயமாக்கல் இப்படித்தான் தொழிலாளர்களோட வாழ்வை சூறையாடுது, இதுல பார்ப்பனர்கள் படுற பாடு ரொம்பவும் குறைவுதான். எனக்கு தெரிஞ்சு எங்க ஊர்ல இருந்து மற்ற சாதி மக்கள் நிறைய பேரு கேரளாவுக்கும் குஜராத்துக்கும் போறாங்க கூலி வேலைக்கு. சுகந்திரமடையுறதுக்கு முன்னாடி தென் ஆப்ரிக்காவுக்கும், மொரிஷியசுக்கும் கூட தமிழன் அடிமையா போனான். ஒருத்தன் பொழைக்கவே வழியில்லாம போறான், இன்னொருத்தன் தன் வசதி வாய்ப்புகளை பெருக்கிக்க போறான். இவங்க ரெண்டு பேர் வாழ்க்கையும் ஒன்னுனு சொன்னா எதால சிரிக்கனு தெரியலை.

பண்பாட்டு அடையாளம்

எங்கள் குடும்பத்திற்க்கு அதிக மதிப்பும் மரியாதையும் கொடுக்க ஆரம்பித்ததே இது போன்ற சிறப்பு பூசைகள் செய்யும் பொழுதுதான். என் அம்மாவின் பூசையினால் மாமி ரொம்ப பக்தியானவுங்க என்று எங்கள் தெரு முழுவதும் பெயர் வேறு. அந்த மரியாதையும் பெயரும் மொத்தமும் சரிந்தது, நான் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட பொழுதுதான்.

தமிழகம் தன்னுடைய பெரியாரிய அடையாளங்களை இழந்து கொண்டிருக்கிறதோ என அச்சமடையவேண்டிய காலம் இது. பிரதோசம் என்றால் என்னவென்ற தெரியாத காலம் ஒன்று இருந்தது, இன்றோ எல்லா சிவன் கோவில்களிலும் கூட்டம் அலை மோதுகிறது. அட்சய திரிதியை தொடங்கி பல்வேறு பார்ப்பன பண்பாட்டு புரட்டுகள் மக்களின் பர்சை சூறையாடி கொண்டிருக்கிற காலகட்டத்தில் எங்கே ஐயா பார்ப்பனியம் தன் பண்பாட்டு அடையாளத்தை இழந்தது?

குமுதம், விகடன் தொடங்கி தினமலர்,தினத்தந்தி வரை ஆன்மிக இதழ் போட்டு பக்தியை காசாக்கும் காலமிது. பார்ப்பனிய பண்பாட்டையே அனைவரின் பண்பாடாய் நிறுத்தும் இவ்விதழ்களின் காலத்தில் ஸ்ரீராம நவமியை பார்த்து சிரிப்பது யார்? ஒருவேளை அவரது நாத்திக நண்பர் கமலஹாசனாய் இருக்குமோ!

பார்ப்பனர்களும் அதிகாரமும்

selfசட்ட சபையிலேயே தான் ஒரு பார்ப்பனத்தி என அறிவித்து கொண்ட தமிழகம் கண்ட ஒரே இந்து முதல்வரென சங்க பரிவாரங்களால் போற்றப்படும் ஜெயாவின் காலத்திலா இப்படி ஒரு அசட்டுத்தனமான ஆதங்கம்? தமிழ்நாட்டுக்கு ஒரு மாமி டெல்லிக்கு சுப்பரமணிய சாமி. மத்தியிலும் மாநிலத்திலும் பார்ப்பனியத்தின் ஆட்சிதானே பிறகென்ன மீண்டும் அதிகாரமில்லை என்ற ஒப்பாரி!

அருந்ததிராயின் சமீபத்திய கட்டுரையான இந்தியாவின் இழிவு கட்டுரையில் 25 ஆண்டுகளுக்கு முன்பு குஷ்வந்சிங் எழுதியதை மேற்கோள் காட்டியிருப்பார். நண்பர்களையும் தோழர்களையும் மீண்டுமொருமுறை நிதானமாக இக்கட்டுரையை படிக்குமாறு கேட்டு கொள்கிறேன். மேலும் நீதித்துறையிலும் ஊடகங்களிலும் பார்ப்பனர்களின் செல்வாக்கு எப்படி மேலோங்கி இருக்கிறது என்று விளக்கியிருப்பார். அதிகாரத்திலும் உயர்பொறுப்பிலும் பார்ப்பனர்கள் அமர்ந்திருக்கும் உண்மை இவ்வாறிருக்க அதிகாரத்திலிருந்து மெல்ல மெல்ல துரத்தப்படுகிறோம் என்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்!

வினவை தொடர்ச்சியாக படித்து வரும் வாசகன் என்ற முறையிலே கடைசியாக சொல்வது இதுதான், பார்ப்பனர்களை மட்டுமல்ல தேவர் வன்னியர் உள்ளிட்ட இடை நிலை சாதிகளைகளை எதிர்த்தும் அவர்களின் வெறியாட்டத்தின் போது பகிரங்கமாக சாதியின் பெயரை சொல்லி கண்டித்தும் போராடுவது புரட்சிகர அமைப்புகள்தான்.முத்துராமலிங்கம் மீதான விமரிசனம் தொடங்கி தர்மபுரி இளவரசன் முதல் உசிலம்பட்டி விமலாதேவி வரை பல கட்டுரைகள் வினவில் உள்ளன.

திருவையாறு போராட்டங்களை குறித்து கீழைக்காற்று நூலான இசை,போதை, பொழுதுபோக்கு- நூலில் விரிவான கட்டுரைகள் உள்ளன. அறிவு நாணயமிருந்தால் ஜெயமோகன் அதற்க்கு முதலில் பதில் சொல்லட்டும். தமிழை நீச மொழியாக்கி மேடை ஏறவிடாத திருவையாறும், கன்னட ஒக்கலிக்கர் மாநாடும் ஒன்றா?

கலைஞருக்கும்,செயலலிதாவுக்கும்,ராகுல்காந்திக்கும் கருப்பு கொடி காட்டி அடியும் உதையும் பெற்று சிறையும் சென்றவர்கள் எம் தோழர்கள். மொழி,இன வெறியை எதிர்த்து வர்க்க அடிப்படையில் வட மாநில தொழிலாளர்களை ஆதரிப்பதும் எம் தோழர்கள். இவை அனைத்திற்க்கும் ஆதாரம் வினவிலேயே உள்ளது, படித்து பார்த்து பின்னர் வழக்கம் போலதன் அகஒளி தரிசனத்தின் வாயிலாக இந்தியாவை தகர்க்க சீன சதி என ஜெயமோகன் தாரளமாய் அவதூறு எழுப்பலாம்.

தோழமையுடன்

_______________

(பெயர், ஊர் அடையாளங்கள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன – வினவு)

தற்குறிகள் நேர்மையற்றவர்களாக மாறியது ஏன் ?

4

சொத்துக் குவிப்பு வழக்கு : தண்டனை ஜெயலலிதாவுக்கா? தமிழ்ச் சமுதாயத்துக்கா?

துரையில் நடைபெற்ற மனித உரிமை பாதுகாப்பு மையம், மதுரைக் கிளையின் 11-வது ஆண்டு விழாவில் “சொத்துக் குவிப்பு வழக்கு : தண்டனை ஜெயலலிதாவுக்கா? தமிழ்ச் சமுதாயத்துக்கா?” என்ற தலைப்பில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் மருதையன்  ஆற்றிய உரை.

சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்ததும் என்ன நடந்தது என நாடே பார்த்தது. ஒரு கிரிமினலைத் தண்டித்தால், தண்டிக்கப்பட்ட கிரிமினலுக்காக தமிழ்ச் ‘சமூகமே’ அழுதது ஏன்?

இந்திய சமூகத்தில் சிவில் உரிமைகள்

அம்பேத்கர்
“நாம் அரசியலில் ஜனநாயகமும், சமூகத்தில் ஜனநாயக மறுப்பும் கொண்டிருக்கிறோம்”

இந்தியாவில் சிவில் உரிமை பற்றிய கோரிக்கை அவசர நிலைக்குப் பிறகு எழுந்தது; அரசு மனித உரிமைகளை மீறும் போது அதைக் காப்பதற்காகத் தோன்றியது.

அம்பேத்கர் “நாம் அரசியலில் ஜனநாயகமும், சமூகத்தில் ஜனநாயக மறுப்பும் கொண்டிருக்கிறோம்” என்று நமது இந்திய சமூதாயத்தின் முரண்பட்ட நிலையைச் சொன்னார். நமது ஜனநாயகம் வெள்ளைக்காரன் கொடுத்த ஜனநாயகம்; சுதந்திரத்திற்காக, ஜனநாயகத்திற்காக நமது மக்கள் போராடியதால் நம்முடைய ஜனநாயகம் வரவில்லை; ஆங்கிலேய ஆட்சியாளர்கள் காங்கிரசுகாரர்கள் முதல் ஜஸ்டிஸ் கட்சியினர் வரை பதவிகளை உருவாக்கிக் கொடுத்து உருவானது.

நமது சமூகம் சாதி ஆதிக்கமும், நிலவுடமை ஆதிக்கமும் கொண்டது. சாதி அமைப்பு ஜனநாயகத்திற்கு விரோதமானது. நமது நாட்டில் தீண்டாமைச் சட்டங்கள் இருந்தாலும், அரசு தீண்டாமையைப் பாதுகாக்கும் அரசாக இருக்கிறது. அதனால்தான் நாம் ஒவ்வொன்றுக்கும் போராட வேண்டியதிருக்கிறது. ஒரே நேரத்தில் அரசுக்கு எதிராகவும், சமூக அமைப்புக்கு எதிராகவும் போராட வேண்டியதிருக்கிறது.

அழுகி நாறி விட்ட அரசமைப்பு

இன்று அதிகார வர்க்கம், நீதித் துறை உள்ளிட்ட அரசமைப்பு மதிப்பிழந்து கடைத்தேற்ற முடியாத அளவுக்கு நிலைமை உள்ளது. இன்றைய அரசமைப்பு அதற்கு ஆள்வதற்கு தகுதி இருப்பதால் நிலவவில்லை; மக்கள் அதை நொறுக்காததால் தொடர்கிறது. எல்லாத் துறைகளும் அழுகி நாறிவிட்டன; காலாவதி ஆகிவிட்டன.

நீதித்துறை லஞ்ச ஊழல் நிறைந்து அழுகி நாறிவிட்டது. பிரசாந் பூசணின் தந்தை சாந்திபூஷண் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வாக்குமூலத்தில் 8 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஊழல்வாதிகள் என்று ஆதாரபூர்வமாகக் குறிப்பிட்டுள்ளார். அவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைச் சந்திக்கத் தயாராக இருந்தாலும் உச்ச நீதிமன்றம் வழக்குப்போட மறுக்கிறது.

இந்த அரசமைப்பு முடை நாற்றம் அடிப்பதன் அடையாளம் தான் ஜெயா மீது அது காட்டும் விசுவாசம்.

ஜெயா சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக வாதாடிய ஆச்சாரியா நூல் எழுதியிருக்கிறார். அதில் தன்னை மிரட்டினார்கள் எனப் பச்சையாக எழுதியிருக்கிறார். மிரட்டல், பொய் வழக்கு என அடுத்தடுத்து மிரட்டியதாகச் சொல்கிறார். ஆனால் எவரும் அதைப்பற்றிக் கேள்வி எழுப்பவில்லை.

சுப்ரதா ராய்
சகாரா முதலாளி சுப்ரதாராய் இருபத்தையாயிரம் கோடி திருடிவிட்டு திகார் ஜெயிலில் இருக்கிறார்.

வருமானவரி வழக்கில் ஜெயாவிற்காக நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் நடைபெறுகிறது. இவற்றைத் தட்டிக் கேட்காமல் இருப்பதால் நாம் அனுபவிக்கும் தண்டனை ஏராளம். ஜெயா என்ற கிரிமினல் படத்தை அரசு அலுவலகங்கள் அனைத்திலும் மாட்டி வைத்திருக்கிறார்கள். அதை எடுக்க முடியவில்லை. அரசுக்கு நோட்டீஸ் அனுப்புகிறது நீதிமன்றம். ஏன் உத்திரவிடவில்லை?

ஜெயா அடைக்கப்பட்ட பரப்பன அக்கிரகாரா சிறையில் அவருக்கு குளுகுளு வசதி செய்து கொடுக்கப்பட்டது எப்படி?

சகாரா முதலாளி சுப்ரதாராய் இருபத்தையாயிரம் கோடி திருடிவிட்டு திகார் ஜெயிலில் இருக்கிறார். மக்களை ஏமாற்றிக் கொள்ளையடித்த பணத்தைத் திருப்பிக்கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. “சொத்துக்களை விற்றுக்கட்ட வேண்டும்” என்றார் ராய். அதற்காக திகார் சிறைக்கு உள்ளேயே தனி அறை கட்டி இணைய வசதியுடன் அலுவலகம் வைக்க அனுமதி அளித்துள்ளது நீதிமன்றம்.

கர்நாடகத்தில் ரெட்டி பிரதர்ஸ் ஜெயிலில் அப்படித்தான் இருந்தார்கள். இன்னும் கொஞ்ச நாளில் ஜெயிலில் நட்சத்திர விடுதிபோல் சொகுசு அறைகள் வந்தாலும் வரும். அதற்கான வாய்ப்பு இருக்கிறது.

டான்சி நிலம் முறைகேடு வழக்கில் உயர் நீதிமன்றம் என்ன சொன்னது? அரசு நன்னடத்தை விதி மீறல் தான்; குற்றமில்லை என்றது.

சி.பி.ஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்கா 2 ஜி குற்றவாளிகளைச் சந்தித்துள்ளார் என்று அவரை பொறுப்பை விட்டு விலகச் சொல்லியிருக்கிறது உச்ச நீதிமன்றம். ‘மக்களுக்கு கடவுள் மீது நம்பிக்கை இருக்கிறது. ஆகையால் விலகிக் கொள்’ என்று தேவநாதனை விலகிக் கொள்ளச் சொன்னது போல, சங்கராச்சாரியை விலகிக்கொள்ளச் சொன்னது போல சின்காவையும் சொல்லியிருக்கிறது.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயாவுக்கு உடந்தையாக நீதித்துறை

உச்ச நீதிமன்றம்17 ஆண்டுகளாக நடந்த சொத்துக்குவிப்பு வழக்கில் 170 முறை வாய்தா வாங்கியிருக்கிறது ஜெயலலிதா கும்பல். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தான் ஜெயாவைக் காப்பாற்றி இருக்கிறார்கள்.

  • கர்நாடக உயர்நீதி மன்றம் ஜெயா கும்பலை கடுமையாக எச்சரித்து பிணை வழங்க மறுத்தது. ஆனால் உச்ச நீதிமன்றத்தில் 2 மாதத்திற்குள் மேல்முறையீடு செய்துவிடுவதாக நாரிமன் சொல்ல 3 மாதத்திற்குள் செய்யுங்கள் என்று சலுகை காட்டி ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்.
  • கர்நாடக உயர் நீதிமன்றம் ஊழல், மனித உரிமை மீறல், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை வழிகாட்டியாகக் கொண்டு தான் பிணை மறுத்தது. ஆனால் இதை எல்லாம் கணக்கில் கொள்ளாமல் சர்வசாதாரணமாக பிணை வழங்குகிறார் தலைமை நீதிபதி தத்து. அப்பீல் பண்ணச் சொல்லி வழக்கை முடித்துக் கொள்ள ஏற்பாடு செய்து தருகிறார்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.
  • ஜெயாவுக்கு ஆதரவாக ஜாமீன் கோரி வழக்கு நடத்திய நாரிமன் தி.மு.க அரசு சார்பாக ஜெயாவுக்கு எதிராக வழக்கு நடத்தியவர். இது வழக்கறிஞர்களின் வழிகாட்டு நெறிமுறை மரபுகளுக்கு முரணானது.
  • டிராபிக் ராமசாமி, நாரிமன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனுத் தாக்கல் செய்தார். காரணம் நாரிமன் மகன் ரோகிண்டன் நாரிமன் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கிறார். நெருக்கமான உறவினர்கள் நீதிபதியாக இருக்கும் இடத்தில் வழக்கு நடத்தக் கூடாது என்று மரபு உள்ளது. பாலி நாரிமன் அங்கே வழக்கு நடத்தியது தவறு என நீதிபதி சந்துரு சொல்கிறார்.

தமிழகத்திற்கு ஏற்பட்டிருக்கும் இழிநிலை

ஜெயா கைது, காஞ்நிபுரம் காட்சிகள் (2)
தமிழன் எனச் சொல்லிக் கொள்ளவே வெட்கமாக இருக்கிறது.

ஜெயா தண்டிக்கப்பட்டது குறித்து எல்லா ஊடகங்களும், ‘ஏதோ தப்பு நடந்துவிட்டது. கூடா நட்பினால் வந்த கேடு’ என்பது போல சித்தரித்து இதிலிருந்து எப்படி தப்பிப்பது என்று ஆலோசனைகளும் வழங்கினார்கள். காரணம் எல்லா ஊடகங்களும் முதலாளிகள் வசம் இருக்கின்றன.

கொள்ளை அடித்து தண்டிக்கப்பட்ட ஜெயாவிற்காகப் பால்குடம், மொட்டை அடித்தல், யாகம், ஹோமம் என பரிகாரம் செய்கிறார்கள். என்ன இது மழுங்கத்தனம். தமிழன் எனச் சொல்லிக் கொள்ளவே வெட்கமாக இருக்கிறது. தமிழகத்திற்கு இந்த இழிநிலை ஏன் ஏற்பட்டது? அதை குஜராத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

குஜராத் காந்தி பிறந்த ஊர், வணிகம் செய்பவர்கள் அதிகம். நல்ல உணவு உண்பது, ஷேர் மார்க்கெட் இது தான் அவர்களது அன்றாட வாழ்க்கை நடைமுறை. 2002-ல் நடந்த கலவரத்தில் முசுலீம்களைக் கொலை செய்ததும், கொள்ளையில் ஈடுபட்டதும் பக்கத்து வீட்டு இந்துக்கள் தான். நெருக்கமாக பழகியவர்களே அவர்களை அழித்தார்கள் என்பதை முசுலீம்களே சொல்லியிருக்கிறார்கள். காரணம் தொடர்ச்சியாகப் பல ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மதவெறிப் போதைக்கு மக்களைத் தயார்ப் படுத்தி இருக்கிறது. அதனால் தான் மோடி மீண்டும் மீண்டும் வெற்றி பெற்றார். குஜராத் படுகொலை பற்றி பல ஆதாரங்கள் வெளி வந்தாலும் மோடி மீண்டும் வென்றார்.

அதேதான் தமிழகமும்.  கடந்த காலத்தில் தி.மு.க எம்.ஜி.ஆரை அரசியலுக்குப் பயன்படுத்திக் கொண்டது. எம்.ஜி.ஆர் பாமரர்களை வாக்கு வங்கியாக மாற்றினார். 80-களின் இறுதியில் தான் ஜெயா அரசியலுக்கு வந்தார். பல்வேறு நாடகங்களை நடத்தினார். ராஜீவ் காந்தி கொலைக்குப் பின் அவரது இறப்பை வைத்து அரசியல் செய்து ஆட்சிக்கு வந்தார்.

மறுகாலனியாக்கத்தில் ஊழல்படுத்தப்படும் மக்கள்

எல்லாக் கட்சிகளும் உருமாற்றம் அடைந்துவிட்டன. தனியார்மயம் தாராளமயக் கொள்கைக்கான ஆதரவு எந்தக் கட்சியில் இல்லை? கட்சிகளுக்கு இடையில் எதை வைத்து வேறுபடுத்திக் காட்டுவது. சாதி, மற்றும் பணம் கொடுப்பதன் மூலம் தான் அதைக் காட்ட முடியும்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
பு.ஜ.தொ.மு தான் பல்வேறு உரிமைகளை தொழிலாளர்களுக்குப் பெற்றுத் தந்துள்ளது. ஆனால் 1 சீட் தான் கிடைத்தது.

ஓட்டுக்குப் பணம் கொடுக்காமல் மக்களைக் கவர முடியாது. மக்களை எந்த வகையிலாவது ஊழல்படுத்தினால் மட்டும் தான் இந்த ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியும்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சங்கம் தேசிய பஞ்சாலை கழக ஆலை தேர்தலில் மீண்டும் போட்டியிட்டபோது ஒரு இடம்தான் கிடைத்துள்ளது. பு.ஜ.தொ.மு தான் பல்வேறு உரிமைகளை தொழிலாளர்களுக்குப் பெற்றுத் தந்துள்ளது. ஆனால் 1 சீட் தான் கிடைத்தது. காரணம் ஓட்டுக் கட்சி தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் வீட்டுக்குப் போய் அரிசி மூடை, 500 ரூபாய் பணம் தந்துள்ளார்கள்.

பழைய காலனியாதிக்கத்தின் போது மக்கள் முட்டாளாக, தற்குறியாக இருந்தார்கள். ஆனால் மறுகாலனியாக்கச் சூழலில் மக்களை ஊழல்படுத்தி நேர்மையற்றவர்களாக மாற்றிவிட்டார்கள்.

பழைய காலனியாதிக்கத்தில் கொலை செய்வது, தூக்கிலிடுவது, ஆயுதங்கள் மூலம் ஆக்கிரமிப்பு செய்வது என்றால், மறு காலனியாக்கத்தில் நமது ஒப்புதலோடு பகல் கொள்ளை நடக்கிறது. இதை பல சினிமாக்களிலும் காணலாம். மங்காத்தா, சூதுகவ்வும், சதுரங்க வேட்டை போன்ற படங்கள் சமூகத்தின் மனோபாவத்தை எடுத்துக் காட்டுகின்றன.

கத்தி படத்தில் விஜய் கோக்குக்கு எதிராக நடித்தது பற்றி ட்விட்டரில், “கோக் விளம்பரப் படத்திலும் நடிக்கிறீர்கள், எதிர்க்கிற படத்திலும் நடிக்கிறீர்களே?” என்று கேள்வி கேட்டபோது “இதை அரசியல் கட்சிக்காரங்களிடம் கேட்பீர்களா?” என்று கேட்கிறார் விஜய்.

கூட்டுத்துவமும் தனிநபர் வாதமும்

தோழர் மருதையன்
தோழர் மருதையன் உரை

இந்நிலைக்கு மிக முக்கிய காரணம் நுகர் பொருள் மோகம். இது கூட்டுத்துவத்திற்கு எதிரான தனிநபர் வாதம். அனைவருக்கும் கல்வி, மருத்துவம், போக்குவரத்து என்று கேட்பதற்குப் பதில் எனக்கு என்ன என்று கேட்கத் தூண்டுகிறது. நுகர்வு மோகத்தைத் தூண்டக் காரணம் முதலாளிகளின் சந்தை மற்றும் லாபம் தான். “எல்லோரும் கூட்டாகச் சேர்ந்து அடைய முடியாது. தனி நபர் என்றால் அடைந்து விடமுடியும்” என்கிறார்கள்.

விவசாயம் அழிந்து பெரும் கூட்டம் உதிரிகளாக மாற்றப்பட்டுள்ளார்கள். நகர்மயமாக்கத்தால் வேரற்றவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். இவர்களை எளிதில் விலைக்கு வாங்க முடியும்.

குற்றங்கள் பெருகி வருவதைப் பார்க்கிறோம். இக்குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மாணவர்கள், முன்னாள் தகவல்துறை ஊழியர்கள் எனப் பலதரப்பினரும் இருக்கிறார்கள். எல்லைக் கோடுகள் அழிந்து வருகின்றன.

வியட்நாமை அமெரிக்கா ஆக்கிரமித்து இருக்கும் போது அமெரிக்க சிப்பாய்களுக்கு ஊழியம் செய்யும் ஒரு கூட்டம் உருவாயிற்று. அமெரிக்க ஆக்கிரமிப்பை உலகமே எதிர்த்துப் போராடிய போது அமெரிக்க சிப்பாய்களை அண்டிப் பிழைத்தவர்கள், “அமெரிக்காவே போகாதே” என்றார்கள். அவர்களை விலைமாதர்களின் பிள்ளைகள் என்றார்கள் அந்த நாட்டுப் போராளி மக்கள்.

நாட்டின் எதிர்காலம் மட்டுமல்ல சொந்த எதிர் காலத்தைப் பற்றிக் கூட கலலைப்படாத கூட்டத்தை உருவாக்கி வருகிறார்கள். டாடா கஞ்சா கடத்தி சீனாவை போதைக்கு அடிமையாக்கியதைப் போல டாஸ்மாக் மூலம் தமிழக மக்களை அடிமையாக்கி வருகிறார்கள். கலாச்சாரச் சீரழிவின் மூலம் மக்களை விலங்குகளாக ஆக்குவது தான் இவர்களது நோக்கம். ஜெயா தண்டிக்கப்பட்ட போது தனக்குக் கிடைக்க வேண்டிய இலவசப் பொருட்கள் கிடைக்குமா? கிடைக்காதா? என்று கேட்டனர் பலர்.

மனித உரிமைகளை மட்டுமல்ல மனிதத்தை நாம் மீட்க வேண்டியதிருக்கிறது. அதற்காக வினையாற்ற வேண்டும். ஜெயா தனது விடுதலைக்கு அப்பீல் செய்கிறார். நான்  இந்த உரையின் மூலமாக மனிதத்தை மீட்க உங்களிடம் அப்பீல் செய்கிறேன்.”

தொகுப்பு

மனித உரிமைப் பாதுகாப்பு மையம்,
மதுரை

கோவையில் பு.ஜ.தொ.மு முற்றுகைப் போராட்டம்

1

கார்ப்பரேட் முதலாளிகள் இந்தியத் தொழிலாளர்களை எந்தவிதமான தடையும் இல்லாமல் கொள்ளையடிக்க ஏதுவாக  நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தொழிலாளர் நலச் சட்ட திருத்தங்களை நிறைவேற்ற உள்ளது, மத்திய அரசு. இதன் மூலம் இந்தியத் தொழிலாளர் வர்க்கம் உரிமைகள் பறிக்கப்பட்டு கொத்தடிமைகளாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தொழிலாளர் நலச் சட்டத் திருத்தங்கள் அமுலானால் ஏற்படவிருக்கும் விளைவுகள் :

  • எட்டு மணி நேரம் வேலை என்பது பறிபோய் தினசரி 15 மணிநேரம் வேலை செய்வது கட்டாயமாக்கப்படும்.
  • தொழில் பழகுநர் (அப்ரண்டிஸ்), பணி நிரந்தரம்  என்பது ஒழிக்கப்பட்டு  அனைத்துத் தொழிலாளர்களுக்கும் ஒப்பந்த (காண்டிராக்ட்) முறை  நிரந்தரமாகும்.
  • தொழிற்சாலை ஆய்வாளரின் அதிகாரம் பறிக்கப்பட்டு தொழிலாளர்களது உயிருக்கும், வேலைக்கும் உத்திரவாதம் இல்லாமல் போகும்.
  • பெண்களை இரவுப் பணியில் ஈடுபடுத்துவது கட்டாயமாக்கி, அதிக வேலைச்சுமை, குறைந்த கூலி கொடுத்து  வரம்பற்ற சுரண்டல் நடத்த முதலாளிகளுக்கு அதிகாரம் தரப்படும்.
  • ஷிப்டு, மிகைநேரப்பணி அனைத்துக்கும் ஒரே சம்பளம் என்னும் கொடூரம் சட்டத்திருத்தம் மூலம் நிறைவேற  உள்ளது.

இது வெறும் சட்டத்திருத்தம் மட்டுமல்ல, தொழிலாளர்கள் மீதான தாக்குதல் மட்டுமல்ல, இந்தியநாட்டின் அனைத்து மக்களின் மீதும், ஜனநாயக உரிமைகள் மீதும் தொடுக்கப்பட்ட தாக்குதல் ஆகும்.

வெள்ளையர்கள் ஆண்ட போது கூட இப்படிஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டது இல்லை.

இதனை எதிர்த்து கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, திருச்சி பகுதிகளில் உள்ள  புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி தொழிலாளர்கள் சார்பில் காலை 10 மணிக்கு கோவை சிங்கநல்லூர் பேருந்து நிறுத்தம் முன்பாக பேரணி துவங்கி   முற்றுகை போராட்டம் நடத்த காவல்  துறையிடம் அனுமதி கேட்கப்பட்டது.

காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. காலை 10 மணியளவில் தடையை மீறி கோவை சிங்கநல்லூர் பேருந்து நிலையம் முன்பு அனைத்துப் பகுதி தோழர்களும் ஒன்றுகூடி மாவட்டச் செயலாளர் தோழர் விளவை இராமசாமி அவர்களின்   தலைமையில் பேரணியாகச் செல்ல முற்பட்டனர்.

காவல்துறை தடுத்து நிறுத்தவே, தோழர்கள் அந்த இடத்திலேயே 1 மணி நேரம் ஆர்ப்பாட்டம் செய்தனர். இறுதியில் கைது செய்யப்பட்டனர். இதில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

kovai-ndlf-demo-03

kovai-ndlf-demo-06

kovai-ndlf-demo-05

kovai-ndlf-demo-09

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை.

தாலிபான்கள் பாகிஸ்தானில் மட்டுமா ?

72

பாகிஸ்தானிலுள்ள வடமேற்கு மாகாணமான கைபர் பக்துன்கவாவின் புகழ்பெற்ற பெஷாவர் நகரின் வார்ஸாக் சாலையில் அமைந்திருக்கிறது ராணுவ பொதுப்பள்ளி ஒன்று. ஏறக்குறைய 800 மாணவர்கள் பயிலும் உயர்நிலைப் பள்ளி அது. அரையாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.

pakistan-relativesசெவ்வாய்க்கிழமை (16-12-2014) காலை 10.30 மணிக்கு பள்ளியின் முதலாவது வாயிலில் துணை ராணுவப் படையினரைப் போல உடையணிந்த தெஹ்ரிக் இ தலிபான் இயக்கத்தைச் சேர்ந்த 6 தற்கொலைப் படையினர் நுழைந்தனர். அவர்கள் நடத்திய குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூட்டில் ஏறக்குறைய 132 பள்ளிக் குழந்தைகள் உள்ளிட்ட 160 பேர் இதுவரை இறந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் மூன்று நாள் தேசிய துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி என்றோ குழந்தைகள் என்றோ கூட பாராமல் இந்த பயங்கர படுபாதகச் செயலை செய்திருக்கின்றனர். ஒரு மனிதனுக்குள்ளே உள்ளார்ந்த இயல்பாய் இருக்கும் சக மனிதன் குறித்த நேசம் இங்கே துளியளவு கூட இல்லை என்பதை உணர்த்தியிருக்கிறது இந்த பயங்கர நிகழ்வு. அதே நேரத்தில் உலகில் இது முதல்முறையாகவும் நடக்கவில்லை.

பாகிஸ்தானில் தூய இசுலாமிய கோட்பாடுகளைப் பின்பற்ற வேண்டும் என 2007-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த இசுலாமிய தீவிரவாத இயக்கம் அவ்வப்போது சிறியதும் பெரியதுமான பல தாக்குதல்களை பொதுமக்கள் (முசுலீம்கள்) மீதும் ராணுவத்தின் மீதும் நடத்தியிருந்தாலும் இதுதான் இதுவரையிலான தாக்குதல்களில் பெரியது, கொடூரமானது. எட்டு மணி நேரம் வரை நீடித்த பயங்கரவாதத் தாக்குதல் இது. பாக் ராணுவ வீரர்கள் சுற்றி வளைத்து திருப்பி தாக்குதல் நடத்தியதில் தீவிரவாதிகள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டனர்.

‘’கைபர் மற்றும் வடக்கு வஜிரிஸ்தானில் எங்களது குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தி வரும் பாக் அரசின் ஷர்ப் இ அஸ்ப் (Sharp and cutting straight) நடவடிக்கையை நிறுத்திக் கொள்ள வேண்டும். எங்களுடைய மக்களின் வேதனையை புரிய வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த தாக்குதல்’’ என்று அந்த இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் முகமது ஹொராசனி தெரிவித்துள்ளார். இந்த முட்டாள்களின் கோரிக்கை இதுதான் என்றால் இனி இவர்களை ஆதரிக்க கூடியோரும் கூட இவர்களின் வேதனையை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள்.  முன்னிலும் அதிகமாய் இவர்களை அழிப்பதற்கே இந்த தாக்குதல் உதவி செய்யும் என்பது கூட இந்த முட்டாள் பயங்கரவாதிகளுக்கு தெரியவில்லை.

children-funeral2013-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு பாகிஸ்தான் தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக நவாஸ் ஷெரீப் சொன்ன போதிலும், 2014 ஜூன் துவங்கி பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வரும் இந்த நடவடிக்கையில் அப்பாவி மக்களையும் உள்ளிட்டு 1600 பேர் வரை இறந்துள்ளனர். கூடுதலாக ஆளில்லாத விமானங்கள் மூலம் அமெரிக்கப் படையும் இங்கே தாக்குதல் நடத்துவது வழக்கம். கொல்லப்படுவதற்கென்றே பிறந்தவர்களைக் கொண்ட நாடு போல பாகிஸ்தான் மாற்றப்பட்டுவிட்டது.

இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்ற மலாலா யூசுப் சாயை சுட்டவர்களும் இதே தெஹ்ரிக் இ தாலிபான் கூட்டத்தினர்தான். மலாலா துவங்கி ஒபாமா, மோடி வரை பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வரை இந்த பள்ளி தாக்குதலை கண்டித்திருக்கின்றனர்.

தாக்குதல் பற்றி குறிப்பிட்ட மலாலா இது கோழைத்தனமானது என்றும் தீவிரவாதத்திற்கு எதிராக போராடும் பாகிஸ்தான் ராணுவத்தை தான் பாராட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். இதே பாக் ராணுவம்தான் இந்தியாவில் இந்துமதவெறியர்களால் தூற்றப்படுகிறது. பெற்றோர்களின் மன வேதனையை பகிர்ந்து கொள்வதாக கூறுகிறார் ஒபாமா. ஈராக்கிலும், ஆப்கானிலும் அமெரிக்காவால் கொல்லப்பட்ட குழந்தைகளுக்கும் பெற்றோர்கள் உண்டு.

‘’இறந்தவர்கள் என்னுடைய குழந்தைகளைப் போல, ஆகவே இது என்னுடைய துயரம் போன்றது’’ என்கிறார் நவாஸ் ஷெரீப். அன்றாடம் குண்டுவெடிப்புகளால் குதறப்படும் பாகிஸ்தானின் துயரத்தை இத்தகைய ரெடிமேடான அறிக்கைகள் எந்த அளவு பகிரும்? இம்ரான்கானும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். ஐநா செயலர் பான் கி மூன் இதனை எப்படியும் நியாயப்படுத்த முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். பொருளாதாரத் தடைகளால் பத்து இலட்சம் ஈராக் குழந்தைகள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்திய கடமை உணர்வின் பேச்சிது.

குழந்தைகளைக் கொன்றது கோழைத்தனமானது என்று சொன்னவர்களில் முக்கியமானவர் இந்திய பிரதமர் மோடி. சங்க பரிவாரங்களால் கொல்லப்பட்ட குழந்தைகளும் குதறப்பட்ட பெண்களும் அவர்களின் உறவினர்களும் இந்த ‘கோழைத்தனத்தை’ மோடியை விட நன்கு அறிவார்கள்.

குஜராத் குழந்தைகள்
குஜராத்தில் மோடியின் ஆட்சியில் படுகொலை செய்யப்பட்ட குழந்தைகள்

“மாணவர்களில் பத்து வயதுக்கு மேற்பட்டவர்களை மட்டும் தான் தேடி கொல்லச் சொல்லியிருக்கிறோம். எங்கள் மீதான தாக்குதல்களை நிறுத்தாவிடில் இதுபோல செயல்படும் 146 ராணுவப் பள்ளிகளையும் தாக்குவோம்’’ என்று பாகிஸ்தான் தாலிபான்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். அப்பாவிகள் எனும் போது பத்து வயதுக்கு மேற்பட்டவர்கள் சாவதற்கு தகுதியானவர்கள் என்று ‘பெருந்தன்மையுடன்’ முடிவு செய்யுமளவுதான் இந்த காட்டுமிராண்டிகளின் சிந்தனை இருக்கிறது. இந்த சிந்தனையின் பயன் என்ன? இன்னும் அதிக அளவில் எல்லை மாகாண பழங்குடி மக்கள் அமெரிக்கா மற்றும் பாக் இராணுவத்தால் கொல்லப்படுவார்கள்.

ஆப்கானை ஒட்டிய பகுதியில் பழங்குடி மக்களிடையே செல்வாக்காக இருக்கும் இந்த இயக்கத்தின் முதல் தலைவரான பைதுல்லா மசூதுவை அமெரிக்காவின் ஆளில்லா விமானம் 2009-ல் சுட்டுக் கொன்றது. தற்போது தலைவராக இருப்பவர் ஹக்கிமுல்லா மசூத். இந்த பள்ளி தாக்குதலில் யாரையும் பிணையக் கைதிகளாக வைக்கும் நோக்குடன் தீவிரவாதிகள் வரவில்லை. முடிந்தவரை சுட்டுக் கொல்வது, தற்கொலைப் படையாக மாறுவது, ராணுவம் முன்னேறாதபடி கண்ணிவெடிகளைப் புதைப்பது என்ற பேரழிவு நோக்கத்துடனேயே அவர்கள் செயல்பட்டனர்.

ஆப்கானில் தாலிபான் அரசை தாக்கி ஒழித்த அமெரிக்காவிற்கு எதிராக தாலிபான்களுக்கு ஆதரவாக பாகிஸ்தானில் தோற்றுவிக்கப்பட்டதுதான் இந்த தெஹ்ரி இ தாலிபான் இயக்கம். இதன் போக்கில் இந்த தாலிபான்களை எதிர்க்கும் அமெரிக்க அரசுக்கு உதவியாக பாகிஸ்தான் அரசு மாறிய பிறகு இவர்கள் பாக் அரசையும் கடுமையாக எதிர்க்கின்றனர். கூடவே கடுமையான ஷரியத் சட்டங்களை அமல்படுத்த வேண்டும், பாகிஸ்தானை அதி தீவிர இசுலாமிய மதவாத நாடாக மாற்ற வேண்டும் என்பதும் இவர்களது நோக்கம்.

இத்தகைய மத பயங்கரவாதிகளை நாம் கண்டிக்கிறோம். இவர்களெல்லாம் இசுலாமிய மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொண்டு உலா வரும் கயமைத்தனத்தையும் நாம் முறியடிக்க வேண்டும். ஏழ்மையிலும் பயங்கரவாதத்திலும் மூழ்கடிக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தான் மக்களுக்கு இவர்களும் முக்கியமான எதிரிகள் என்பதில் சந்தேகமில்லை.

இந்த படுகொலையை கேள்விப்பட்ட மாத்திரத்தில் யாரும் கடும் அதிர்ச்சியடைவதும், இந்த கொலைபாதகத்தை செய்தவர்களை கண்டிப்பதும் இயல்பானதே. ஆனால் ஒரு பிரச்சினையை அதன் கொடூரமான காட்சிப்படிமங்களை வைத்து மட்டும் முடிவு செய்வதாக அது சுருங்கி விடக்கூடாது. ஏனெனில் அரசு ரீதியான அதிகாரப்பூர்வமான பயங்கரவாதிகளும், அவர்களின் ஊடகங்களும் கூட இந்த துயர நிகழ்வை வைத்து குளிர்காய்கின்றனர்.

வியட்நாம் குழந்தைகள்
வியட்நாமில் பொதுமக்கள் மீது ரசாயன குண்டுகளை வீசிய அமெரிக்கா இன்று பாகிஸ்தானிய குழந்தைகளுக்கு கண்ணீர் வடிக்கிறது.

ஏனெனில் இந்தியாவில் இந்துமதவெறியர்கள், உலக அளவில் அமெரிக்க ஏகாதிபத்திய அடிவருடிகள் அனைவரும் இதை வைத்து இசுலாமிய மக்களை தனிமைப்படுத்தும் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள பயன்படுத்துகின்றனர். இன்னொரு புறம் நெஞ்சினுள்ளே பார்ப்பனியத்தையும் தோற்றத்தில் முற்போக்கையும் கொண்டிருக்கும் பார்ட் டைம் முற்போக்காளர்கள் பலரும் இந்த சம்பவத்தை வைத்து எதற்கெடுத்தாலும் அமெரிக்காவை நொட்டம் சொல்லாதீர்கள் என்று அவதாரத்தை கலைத்துவிட்டு உறுமுகின்றனர்.

உலகில் எந்த மதமும் தனது மதக் கொள்கையின் கீழ் முழு உலகையும் கொண்டு வருவதற்கான ஆசையைக் கொண்டிருந்தாலும் நடைமுறையில் அது துளியளவு கூட சாத்தியமில்லை. முதலாளித்துவ உற்பத்தி ஆரம்பித்து, வளர்ந்து ஏகாதிபத்தியமாகி மேல்நிலை வல்லரசாகி விட்ட இந்த காலத்தில் முழு உலகையும் கட்டுப்படுத்துவது பொருளியல் உலகின் எஜமானர்களான ஏகாதிபத்தியங்களே அன்றி பண்டார பரதேசிகளோ, பாதிரியார்களோ, முல்லாக்களோ இல்லை. ஒருவேளை இந்த முட்டாள்கள் அப்படிக் கூறிக் கொண்டாலும் அது பவர் ஸ்டார் என்று தன்னை காசு கொடுத்து அழைக்க வைக்கும் ஜந்துவின் அற்பத்தனமாக மட்டுமே இருக்கும். இத்தகைய மதக் கனவுகளுக்கு உலகமெங்கும் உள்ள ஆளும் வர்க்கங்கள் எப்போதும் புரவலராக நடந்து கொண்டு பயன்படுத்தி வருகின்றன.

அது போல இசுலாமிய சர்வதேசியம் என்பதும் அமெரிக்கா காசு கொடுத்து கற்றுக் கொடுத்து பரப்பச் செய்த ஒரு புரட்டே அன்றி வேறல்ல. ஈராக்கில் சதாமை வளர்த்து விட்டு, அதே போல ஆப்கானில் தாலிபான்களை உருவாக்கி ஆளச் செய்து பின்னர் வேலைக்காகாது என்று அவர்களை அழிக்க நினைத்தது அமெரிக்கா. ஆதரித்ததற்கும், அழிப்பதற்கும் அமெரிக்க நலனே காரணமே அன்றி வேறல்ல.  ராம்போ பட வரிசையில் ஆப்கான் முசுலீம்களை அற்புதமான பழங்குடி போராளிகளாக காண்பித்த ஹாலிவுட், பின்னர் அவர்களை கொடூரமான காட்டுமிராண்டிகளாகக் காட்டி வருவது இங்கே குறிப்பிடத்தக்கது.

முக்கியமாக அமெரிக்க தலைமையிலான ஒற்றைத் துருவ வல்லரசு ஆதிக்கத்தை கேள்வி கேட்கக் கூட இங்கே உலகில் ஒரு சோசலிச முகாம் இல்லை.  அதனால் அமெரிக்க ஆதிக்கத்தினால் பாதிக்கப்படும் நாடுகளின் போராட்டம் இத்தகைய மதத் தீவிரவாதிகளால் சில நாடுகளில் கையிலெடுக்கப்படுகிறது. இப்படிப்பட்ட மதத்தீவிரவாதிகள் தன்னை எதிர்ப்பதை அமெரிக்காவும் விரும்பிகிறது. இவர்களை வில்லன் போல காட்டிக் கொண்டு தனது ஆதிக்கத்தை தொடருவதற்கு அமெரிக்காவிற்கு சதாம் உசேனும், பின்லேடனும், தாலிபான்களும் எப்போதும் தேவைப்படுகிறார்கள்.

இந்த உலகில் இசுலாமிய நாடுகளில் இயல்பாக ஜனநாயகமும், கம்யூனிசமும் துளிர்விட ஆரம்பித்த காலத்தில் தன்னுடைய கேடான நோக்கத்திற்காக்க அவற்றை ஒழித்து மத பிற்போக்குவாதிகளை ஆட்சியில் அமர்த்தி இன்று வரை பாதுகாத்து வருவதும் இதே அமெரிக்காதான். அன்று அதை ஆர்ப்பரித்து மகிழ்ச்சியடைந்த சோசலிச முகாமின் எதிரிகள் இன்று பாக் குழந்தைகளுக்கு கண்ணீர் விடுவதில் முதல் ஆளாய் நிற்கிறார்கள்.

ஈராக் குடும்பங்கள்
அமெரிக்கத் தாக்குதலுக்கு அஞ்சி ஓடும் ஈராக்கிய குடும்பங்கள்.

இந்த ஏகாதிபத்திய சதுரங்க ஆட்டத்தில் சிக்கியதனால்தான் பொதுவில் இசுலாமிய மதம் இருக்கும் நாடுகளில் ஜனநாயகமும் மதச்சார்பின்மையும் வளருவதற்கே பெரும்பாடு பட வேண்டியிருக்கிறது. வளைகுடா நாடுகளில் அது சுத்தமாக இல்லை. துருக்கி, துனிஷியா போன்ற நாடுகளில் அது வென்றிருக்கிறது. வங்கதேசம், மலேசியா போன்ற நாடுகளில் அது இன்னமும் போராடிக் கொண்டிருக்கிறது.

இசுலாமிய  மக்கள் மற்ற மத  மக்களைப் போல வர்க்கங்களால் பிரிந்திருக்கிறார்களே அன்றி மதத்தினால் ஒன்றுபட்டிருக்கவில்லை. அப்படி ஒரு மத ஒற்றுமை இருப்பதாகக் காட்டுவதுதான் அமெரிக்கா மற்றும் அதன் அடிவருடிகளான சவுதி ஷேக்குகளின் ஆதிக்கத்திற்கு பாதுகாப்பு. மதம் என்பது ஒரு தனிமனிதனின் தனிப்பட்ட உரிமையே அன்றி சமூக, அரசியல், பொருளாதார வாழ்வில் அதை அனுமதிக்க முடியாது. அது சாத்தியமும் இல்லை.

ஆனால் இசுலாமிய மதவாதிகள் இதற்கு எதிராக வர்க்கம் கடந்த மதம் என்று தூய இசுலாத்தை பிரச்சாரம் செய்கிறார்கள். இவர்களை உருவாக்கியது அமெரிக்காதான் என்றாலும் இந்த மதவாதிகளை இசுலாமிய மக்கள் புறந்தள்ள வேண்டும். முசுலீமாக இருந்து கொண்டு நாத்திகராய் இருப்பதும்,  கம்யூனிஸ்டாய் வேலை செய்வதும் பல்வேறு முசுலீம் நாடுகளில் உண்டு. இவற்றையெல்லாம் ஒழித்து விட்டு வெறும் மத மனிதராய் இசுலாமியர்களை மாற்ற வேண்டும் என்பதே இசுலாமிய மதவாதிகளின் இலக்கு.

பாலஸ்தீனம்
அமெரிக்க – இசுரேலிய ஆக்கிரமிப்பாளர்களால் கொலை செய்யப்படும் பாலஸ்தீன குழந்தைகள்

இதன் அதி பயங்கர வெளிப்பாடுதான் பாகிஸ்தான் தாலிபான்கள் போன்றவர்களின் பள்ளி தாக்குதல்கள். ஆகவே மதத்தை மதத்தின் இடத்தில் மட்டும் வைத்து விட்டு தங்களது சமூக பொருளாதார கோரிக்கைகளுக்கு வர்க்க ரீதியாக அணிதிரளுவதே இசுலாமிய மக்களின் சொந்த பிரச்சினைகளை தீர்க்கும் வல்லமை கொண்டது. இதை பிறப்பால் முசுலீம்களாய் வாழும் நண்பர்கள் பரிசீலிக்க வேண்டுமாய் கோருகிறோம்.

அதே நேரம் இந்த மதவாதம் இசுலாத்திற்கு மட்டும உரிய பிரச்சினை அல்ல. இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளின் ஆட்சியில் வாழும் நாம் இதை அன்றாடம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். மதங்களை தனது கேடான நோக்கத்துக்கு பயன்படுத்தி ஆதாயம் அடையும் அமெரிக்காதான் தற்போது சி.ஐ.ஏ. பயங்கரவாத சித்ரவதைகளை வெளியிட்டுள்ளது. பயங்கரம் என்றால் ஐ.எஸ்.ஐ.எஸ். மட்டுமல்ல அது அவர்களின் ஆசானான சி.ஐ.ஏ. மூலம்தான் என்ற புரிதல் அவசியம்.

மேலதிகமாக இசுலாமிய பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்படுவது இசுலாமிய மக்கள்தான். பாகிஸ்தானில் இவர்களால் கொல்லப்படுவது அப்பாவி முசுலீம் மக்கள்தான். ஷியாக்களின் மசூதிகளில் வெடித்த குண்டுகளின் இரைச்சல் நித்தம் கேட்கிறது. ஈராக்கின் மனித ஓலத்திற்கு என்றுமே ஓய்வு கிடையாது.

ஆகவே பாகிஸ்தானில் கொல்லப்பட்ட குழந்தைகளுக்குகாக லிங்கா பட இடைவெளியில் அஞ்சலி செலுத்திவிட்டு ‘அரசியல்’ பேசும் பார்ட் டைம் முற்போக்காளர்களை ஒதுக்கி வைத்து விட்டு இதன் உண்மை காரணத்தை அறிய வேண்டும்.

எங்களது குடும்பத்தினரை கொன்ற பாக் இராணுவத்திற்கு அதன் வலியை உணர வைக்கவே இப்படி செய்தோம் என்று தாலிபான்கள் கூறியிருப்பது வேறு யாரையும் விட பாக் இராணுவத்தின் சிப்பாய்களுக்கு புரியும். இந்த சிப்பாய்களோ இல்லை அவர்கள் போரிடும் தாலிபான்களோ இருவரும் சாதாரண மக்கள் பிரிவைச் சேர்ந்தவர்கள்தான்.

இவர்களை மோதவிட்டு ஆதாயம் பார்க்கும் அமெரிக்காவும், பாகிஸ்தான் ஆளும் வர்க்கமும்,  கண்டன அறிக்கையையும், குண்டுகளையும் எப்போதும் கைவசம் வைத்திருக்கிறார்கள்.

பார்ப்பனரின் எச்சியிலையில் உருண்டால் பவர் கிடைக்கும்

7

கூக்கே சுப்ரமணியனும் திருநள்ளாறு சனிஸ்வரனும்

ர்நாடக மாநிலம் மங்களூர் அருகில் இருக்கிறது கூக்கே சுப்ரமணியசாமி கோவில். 12-12-2014 அன்று மதன் பி. லோகூர் மற்றும் ஆர். பானுமதி அடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு, இக்கோவிலில் நடைபெறும் ‘மட் சனா’ சடங்குகளுக்கு எதிராக இடைக்கால உத்தரவு பிறப்பத்திருக்கிறது.

மட் சனா அல்லது உருளு சேவையின் படி பார்ப்பனர்கள் தின்று போட்ட எச்சியிலையில் பிற சாதிகள் உருளுவதன் மூலமாக பல்வேறு நோய்கள் தீரும் என்பது இந்துப் பார்ப்பனியம், இதர சாதிகளுக்கு வழங்கிய மருத்துவ சேவையாகும். காசுள்ளவனுக்கு கார்ப்பரேட் மருத்துவம், ஏழைகளுக்கு ஏதுமற்ற அரசு மருத்துவமனை என்பது மோடி துரிதப்படுத்தும் உலகமயமாக்கும் என்றால் ஒடுக்கப்பட்ட சாதிகளின் ஏழை பக்தர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் தூக்கிப்பிடிக்கும் பார்ப்பனியம் அளிக்கும் சேவை இதுதான்.

கூக்கே சுப்பிரமணியா கோயில்
தலித் சிறுவன் தண்ணீர் குடிக்கப் போனால் மண்டையை உடைக்கும் பார்ப்பனியம் எச்சியிலையில் உருளச் சொல்கிறது.

இப்படி எச்சியிலையில் உருளும் இந்த ‘மரபு’ அல்லது ‘தொன்மம்’ அல்லது ‘ஐதீகம்’ இன்னும் சற்றும் நாசூக்காக சொன்னால் ‘நம்பிக்கை’ கடந்த 500 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவருவதாகவும் இது ‘இந்துப் பாரம்பரியம்’ என்றும் மனுதாரரின் எதிர்தரப்பு, பார்ப்பன மனுநீதியை உச்ச நீதிமன்றத்தில் நாட்டியிருந்தது. இந்தப் பாரம்பரியத்தின் பேரில்தான்  சூத்திர-பஞ்சமர்களும், தமிழும் கருவறையில் நுழைவதற்கு இன்று வரை அனுமதியில்லை.

மூட நம்பிக்கை என்று சொன்னால் ஒட்டு மொத்த பார்ப்பனியத்திற்கு வேட்டு வைக்க வேண்டிவரும் என்பதால் இக்கோயிலை ஏற்று நடத்தும் கர்நாடக அரசுத் தரப்பு, பார்ப்பனர்கள் தின்று போட்ட எச்சியைலையில் உருளுவது பொது அமைதி, நன்னடத்தை மற்றும் உடல் நலத்திற்கு தீங்கானது என்று புது ராகம் பாடியிருக்கிறது. எனில் தனிக்குவளையில் தலித்துக்கள் குடிப்பதோ, சேரிகளில் முடக்கப்படுவதோ கூட சுகாதாரம்தானே என்று ஆர்.எஸ்.எஸ் தத்துவ அறிஞர்கள் வாதிடலாம்.

எச்சியிலையில் உருளுவது மருத்துவம் தொடர்பானது (!) என்பதால் பார்ப்பனியம், இந்து எதேச்சதிகாரம் என்ற வாதங்களுக்குள் செல்லாமல் உடல் நலம்-சாதி என்ற கோணத்தில், முன்னர் நடந்த வழக்கை, நீதிமன்றங்கள் சாட்சியங்களாக மனசாட்சியின்றி புரட்டிக்கொண்டிருந்ததைக் குறிப்பிட வேண்டியது அவசியமாகும். குறிப்பாக தாழ்த்தப்பட்ட சாதிகள் ‘உயர்’ சாதி இந்துக்களின் நகத்தையும் மயிரையும் தின்றால் நோய்கள் தீரும் என்ற ‘மரபை’ அரசு தடைசெய்திருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டி எச்சியிலையில் உருளுவதையும் தடைசெய்ய வேண்டும் என்பதை வழக்கறிஞர்கள் ஒருவாதமாக முன் வைத்திருக்கிறார்கள்!

ஏற்கனவே கர்நாடக உயர் நீதி மன்றம் இவ்வழக்கை வேறு விதத்தில் அணுகியிருந்ததையும் கவனிக்க வேண்டும். அதாவது பார்ப்பனர்கள் தின்றுபோட்ட எச்சியிலையில் உருளுவதற்குப் பதிலாக பார்ப்பன கடவுளான சுப்ரமண்யத்திற்கு படைக்கிற நைவேத்யங்களை வைத்து உருளுவதன் மூலமாக இந்து மதத்தின் தொன்மத்தை மேற்கொண்டு தொடரலாம், ‘மட்-சனா’ என்பதற்கு பதிலாக ‘ஏதே-சனா’ என்று அழைக்கலாமென பரிந்துரைத்து எச்சியிலைக்கு பதிலாக உண்டகட்டியில் உருளுங்கள் என்று இந்து பாசிசத்திற்கே உரிய கரிசனத்தை நிலைநாட்டியிருந்தது. உச்சநீதிமன்றமே உச்சிக்குடுமி மன்றமாக இருக்கும் போது கருநாடக உயர்நீதிமன்றம் மட்டும் உருப்படியான மன்றமாக இருப்ப வாய்ப்பில்லை.

தற்பொழுது வழங்கியிருக்கும் இடைக்காலத் தடையே கர்நாடக உயர் நீதி மன்றத்தின் உண்டகட்டி ஆலோசனையை நிறுத்தியிருக்கும் இடைக்காலச் செயல் தான். எச்சியிலையில் உருளுவது அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் மனித உரிமைகளுக்கு எதிரானது என்கிற வாதத்தை வேறு வழியில்லாமல் ஏற்றிருக்கிறது உச்ச நீதிமன்றம். இதில் இடதுசாரி இயக்கங்கள், ஜனநாயக அமைப்புகள், தலித்துகள், சமயங்களில் நீதிபதிகளும் (பானுமதி, தில்லைகோயில் நிர்வாகத்தை அரசின் கீழ் கொண்டுவர புரட்சிகர இயக்கங்கள் தொடுத்த வழக்கில் தீர்ப்பளித்தவர்) இருந்தாலும் கூட பார்ப்பன எதேச்சதிகாரத்தைப் பற்றி பேசாமல் தொடர்ச்சியான களப்போராட்டங்களை முன்னெடுக்கமால் இந்துப் பாசிசத்தை முறியடிக்க முடியாது. அப்படி பார்ப்பனியத்தை முறியடிக்க வேண்டுமானால் அதன் மற்றொரு பரிமாணத்தை நாம் கவனிக்க வேண்டும்.

சம்பவம்-2;

சனி பெயர்ச்சி
மேச ராசிக்கு அஷ்டம சனி, ரிசபத்திற்கு கண்ட சனி, சிம்மத்திற்கு அர்த்தாஷ்டம சனி, விருச்சத்திற்கு ஜென்மச் சனி, தனுசுக்கு விரயச் சனி என்று சனி பகவான் கலந்து கட்டி அடிக்கவிருக்கிறார்.

வாக்கிய பஞ்சாங்க கணிதப்படி 16-12-2014 அன்று பிற்பகல் 2.43 மணி அளவில் சனி பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்குள் நுழைகிறாராம். இதனால் மிதுனம், கன்னி மற்றும் மகர ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களாம். ஏனெனில் சனியின் சஞ்சாரம் இங்கு இல்லையாம். அதே சமயம் கடகம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு லைட்டா ஏதாவது நடக்கலாமாம். மாறாக, மேசம், ரிசபம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கு நோ சான்ஸ். ஜீரோ டாலரன்ஸ் என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். இனி வரும் காலங்கள் இவர்களுக்கு மிகக் கடினம்! மேம்போக்காக பார்த்தாலே சனியின் பார்வையே படிநிலையாகத்தான் இருக்கிறது! மொத்தமுள்ள 12 ராசிகளில் 6 ராசிக்காரர்களுக்கு அதாவது 50% பேருக்கு வாழ்வு கர்ண கொடூரமாக இருக்கப்போகிறது.

மேச ராசிக்கு அஷ்டம சனி, ரிசபத்திற்கு கண்ட சனி, சிம்மத்திற்கு அர்த்தாஷ்டம சனி, விருச்சத்திற்கு ஜென்மச் சனி, தனுசுக்கு விரயச் சனி என்று சனி பகவான் கலந்து கட்டி அடிக்கவிருக்கிறார். இதுதவிர மற்ற மூன்று ராசிக்காரர்களுக்கு அதாவது 25% பேருக்கு வாழ்க்கை சற்று கடினம். மீதுமுள்ள 25% பேர்மட்டும் தான் ஓகோவென்று வாழப்போகிறார்கள். சனியின் பார்வையே பாசிசமாக இதுதாண்டா இந்து மதம் என்று 75% பேருக்கு மறுப்பும் 25% பேருக்கு விருப்பும் தெரிவிக்கிறது! சதவீதக்கணக்கே இப்படி இருக்கிற பொழுது மக்கள் சனியை எப்படி அணுகுகிறார்கள்? முதலாளித்துவத்திற்கு இந்து-பார்ப்பனியம் எப்படி இசைவாக இருக்கிறார்? என்பதை மேற்கொண்டு பார்க்க வேண்டும்.

இந்து மதத்தில் மட்டும் தான் கெட்ட கடவுள் நல்ல கடவுள் என்று இரு வகுப்புகள் உண்டு. இதில் சனி கெட்ட கடவுளாவர். இவர் பொங்கு சனியாக இருந்தாலும் சுயம்புவாக இருந்தாலும் திருமணக் கோலத்தில் இருந்தாலும் சனி சாமி வேண்டாத சாமி! பிறகு எதற்கு இத்தனை கெட்டப்பு! டிசம்பர் 16 லிருந்து அடுத்த பதினைந்து நாட்களுக்கு திருநள்ளாறில் தரிசனத்திற்காக வரும் பல இலட்சக்கணக்கான பக்தர்கள் ‘சனியே தயவு செய்து எங்களை விட்டு விடு’ என்று இறைஞ்சுகிறார்கள். பக்தர்களின் கோரிக்கை எதுவாக இருப்பினும் இது பக்தியல்ல என்பது தெளிவாகும். ஏனெனில் மிரட்டி பணிய வைப்பது பக்தியல்ல. அது பாசிசமாகும்.

சனிப்பெயர்ச்சியின் போது பெருமாளை சேவிக்கச் சொல்கிறார்கள். அனுமாருக்கு வெண்ணெய்யும் உளுந்த வடையும் சாத்தச் சொல்கிறார்கள். ஏனெனில் சனி, பெருமாளிடம் வாக்கு கொடுத்திருக்கிறாராம். உனது பக்தர்களை நான் பீடிக்க மாட்டேன் என்று சனி சொல்லியிருக்கிறாராம். ஒரு கடவுளுக்கு உளுந்த வடை இலஞ்சம் கொடுத்தால் மற்றொரு கடவுளின் பிடியில் இருந்து தப்பலாம் என்றால் உளுந்தவடைக்குதானே பவர் ஜாஸ்தி!

இது ஒரு புறமிருக்க, தனியார்மயமும் தரகுமுதலாளித்துவமும் சிறுவணிகத்தை அழிக்கிற பொழுது தொழில் நட்டம் என்று சொல்கிற விரயச் சனி, வேலை வாய்ப்பை முதலாளித்துவம் நசுக்குகிற பொழுது அதற்குக் காரணமாக ஜென்மச் சனி, பைபாஸ் சர்ஜரி செய்ய வசதியில்லாமல் செத்துப்போகிற குடும்பத் தலைவன்களின் மரணத்திற்கு காரணம் கண்டச் சனி இது தவிர வீட்டுக்கடன், கோர்ட்டு வாய்தா, திருமணம் தள்ளிப்போவது என்று இச்சமூகத்தின் அனைத்து சீர்கேடுகளுக்கும் பார்ப்பனியம் சனியை ஒற்றை ஆளாய் கைகாட்டுகிறது. பார்ப்பனியமும் முதலாளித்துவமும் ஒன்று சேர்ந்து இயங்குகிறதே என்று சொல்கிறோமோ அது இப்படித்தான்.

சனி பெயர்ச்சி
ஒரு கடவுளுக்கு உளுந்த வடை இலஞ்சம் கொடுத்தால் மற்றொரு கடவுளின் பிடியில் இருந்து தப்பலாம் என்றால் உளுந்தவடைக்குதானே பவர் ஜாஸ்தி!

பிரச்சனைகளுக்கு காரணம் என்று சனியையே கைகாட்டுபவர்கள் தீர்வுக்கு முதலாளித்துவத்தைக் கைகாட்டுகிறார்கள்! அதனால் தான் எட்டாவது மாதம் வயிற்றில் குழந்தை இருந்தாலும் நாள் நட்சத்திரம் பார்த்து சனிக்கிழமையைத் தவிர்த்து, பிறக்காத குழந்தைக்கு லக்னம் பார்த்து தனியார் மருத்துவமனையில் குழந்தையை அறுத்தெடுக்க தயங்குவதில்லை நடுத்தர வர்க்கம். தனியார் மருத்துவமனைகளும் இதற்காக சீசனை திறந்துவைத்திருக்கின்றன. கத்தி வைத்தாலும் வைக்காவிட்டாலும் டெலிவரி பேக்கேஜ் 7777-ல் இருந்து மூன்று இலட்சம் முடிய அறிவிக்கிற பொழுது பார்ப்பனியம் எப்படி முதலாளித்துவத்திற்கு தரகனாக இருக்கிறது என்பதையும் அறியலாம்.

இப்பொழுது முடிவுரைக்கு வருவோம். கூக்கே சுப்ரமண்ய கோவிலிலே இந்துப் பார்ப்பனியம் தன் சக மனிதனையே எச்சியிலையில் உருள வைப்பதை மரபு என்று சாதிக்கிறது. அரசும் ஆளும் வர்க்கமும் நீதி அமைப்புகளும் விசயத்தை பூசி மெழுகுகின்றன. ஓர் இடைக்காலத் தடையால் இந்தச் சமூகத்தின் ஆன்மா ஒன்றும் தட்டியெழுப்பப்படவில்லை. சமூகமே பார்ப்பனிய எச்சியிலையில் தான் இருக்கிறது என்பதை தில்லையாக இருந்தாலும் கூக்கேவாக இருந்தாலும் பார்க்கிறோம். இரண்டாவது சம்பவத்தில் பார்ப்பனியம் முதலாளித்துவத்திற்கு சேவை செய்வதைப் பார்க்கலாம். பக்தி என்பதோ, கடவுள் என்பதோ இங்கு இல்லை. கத்தி முனையில் கடவுளை பார்த்து கடவுளே வராதே என்று மக்களை கும்பிட வைக்கிறது பார்ப்பனியம். முதலாளித்துவச் சுரண்டலுக்கு சனி பகவான் படிமமாக இருக்கிறார், பார்ப்பனியம் இயங்கு வடிவமாக இருக்கிறது.

ஆக இதற்கு தீர்வு என்ன? நாம் நம்மை ‘பார்ப்பனியத்தை எதிர்க்கிற அதிதீவிர விமர்சகர்களாக மாற்றிக்கொள்ளாதவரை’, ‘முதாலாளித்துவத்தை எதிர்க்கிற வர்க்கப்போராட்டத்தை முன்னெடுக்காதவரை’ இந்த சமூகம் எச்சியிலையில் உருளுவதையோ எள் தீபம் ஏற்றுவதையோ தடுத்துவிட முடியாது.

– இளங்கோ

செய்தி ஆதாரங்கள்

  1. SC stays controversial rituals “urulu seve” and “made snana” at temple
  2. SC steamrolls controversial ‘made snana’

மணிப்பூரில் தொடரும் ஐரோம் சர்மிளாவின் போராட்டம்

2

ணிப்பூரில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக அமலில் இருக்கும் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்கக்கோரும் ஐரோம் சர்மிளாவின் உண்ணாநிலை போராட்டம் பதினைந்தாம் ஆண்டை எட்டியுள்ளது.

ஐரோம் சர்மிளா
ஐரோம் சர்மிளா (படம் : நன்றி http://indianexpress.com )

கடந்த நவம்பர் 6-ம் தேதியன்று பல்வேறு மனித உரிமை அமைப்புகள் அவரது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மணிப்பூர் மாநிலம் முழுவதும் போராட்டங்களை நடத்தியுள்ளன. மணிப்பூர் தலைநகர் இம்பாலில் நடந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட மனித உரிமை ஆர்வலர் மருத்துவர் பினாயக் சென் “ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் ஜனநாயகத்தின் சாரத்தையே அழிக்கிறது, நியாயத்தின் பாதையை தடுக்கிறது. மணிப்பூரில் இரண்டு தலைமுறையினர் சுதந்திரத்தின் பொருள் தெரியாமலேயே வாழ்ந்து வருகின்றனர்” என்று குறிப்பிட்டார்.

2000-ம் ஆண்டு நவம்பர் 2 அன்று மணிப்பூரின் இம்பால் பள்ளத்தாக்கிலுள்ள மலோன் எனுமிடத்தில் பேருந்துக்காக நின்றிருந்த அப்பாவி பொதுமக்கள் பத்து பேரை அசாம் துப்பாக்கி படைப்பிரிவைச் சேர்ந்த சிப்பாய்கள் கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றனர். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் தமது அன்றாட வேலைகளுக்காக போய்க் கொண்டிருந்த அப்பாவி பொதுமக்கள். கொல்லப்பட்டவர்களில் 1988-ம் ஆண்டில் சிறார் வீரதீர செயல்களுக்கான தேசிய விருதைப் பெற்ற 18 வயது சினம் சந்திரமணி சிங்கும், அவரது சகோதரர் ராபின் சிங்கும், ஒரு 68 வயது மூதாட்டியும் அடக்கம்.

அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவின் மீது கிளர்ச்சியாளர்கள் நடத்திய கையெறிகுண்டு தாக்குதலுக்கு பதிலடியாக அப்பாவி பொதுமக்கள் மீது இப்படுகொலை நடத்தப்பட்டது.

ஐரோம் சர்மிளா
ஐரோம் சர்மிளாவின் அறைச் சுவரை மக்கள் அவருக்கு பரிசாக அளித்த போஸ்டர்கள் நிரப்பியிருக்கின்றன (படம் : நன்றி : http://indianexpress.com )

1958-ம் ஆண்டு நாகாலாந்தில் இந்திய ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடும் கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்கு ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச்சட்டத்தை கொண்டுவந்தது இந்திய அரசு. பின்னர் அதை படிப்படியாக வடகிழக்கின் அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தியது. இச்சட்டம் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை ஒடுக்குவதற்கு காலனியாதிக்கவாதிகள் கொண்டுவந்த 1942-ம் ஆண்டின் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச்சட்டத்திற்கு ஒப்பானது.

இச்சிறப்பு அதிகாரச்சட்டம் அமுலில் இருக்கும் பகுதியில் இராணுவத்தின் அதிகாரிகள் மட்டுமல்ல சாதாரண படை வீரர்கள் கூட, பொது அமைதியைப் பாதுகாப்பதற்காக, முன் அனுமதியின்றி எவரையும் சோதனையிடவும், சட்டத்தை மீறுபவர்களாகத் தாம் சந்தேகிக்கும் நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தவும் அதிகாரத்தை வழங்குகிறது. அத்துப்பாக்கிச் சூடு மரணத்தை விளைவிப்பதாகக்கூட இருக்கலாம். இச்சட்டம் அமலில் உள்ள பகுதியில் பணியாற்றும் இராணுவச் சிப்பாய்கள் மீதான குற்றங்களை விசாரிக்கவோ, வழக்கு தொடுக்கவோ, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவோ முடியாது. இதற்கு மைய அரசின் முன் அனுமதியைப் பெற வேண்டும் எனச் சட்டபூர்வ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

மலோன் படுகொலைகள் நடந்த மூன்றாம் நாளே, ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நிபந்தனையின்றி முற்றிலுமாக விலக்கக் கோரி, உண்ணநிலைப் போராட்டத்தை துவங்கினார்,ஐரோம் சர்மிளா. இன்றும் போராட்டம் தொடர்கிறது.

ஐரோம் சர்மிளா மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 309-ன் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதன்படி தற்கொலைக்கு முயற்சிப்பது தண்டனைக்குரிய குற்றம்; அதற்கு ஓராண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். ஐரோம் சர்மிளாவை கைது செய்து  மருத்துவமனையில் அடைத்து வைத்து வலுக்கட்டாயமாகத் திரவ உணவை மூக்கின் வழியாகச் செலுத்தி வருகிறது மணிப்பூர் அரசு. ஒவ்வொரு ஆண்டும் விடுதலை செய்யப்பட்டதும், அவர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவார். உடனே, அரசு அவரை மீண்டும் கைது செய்து மருத்துவமனை சிறையில் அடைத்துவிடுகிறது. தற்போது அந்தச் சட்டப்பிரிவு நீக்கப்பட்டாலும் ஐரோம் சர்மிளா மீது வேறு ஏதாவது பிரிவின கீழ் வழக்கு போடுவார்கள். அரசின் நோக்கம் அவர் உயிர் துறக்க கூடாது என்பதல்ல, இராணுவத்தின் அதிகாரம் கேள்விக்கு அப்பாற்பட்டது என்பதே!

ஐரோம் சர்மிளா
ஐரோம் சர்மிளா (படம் : நன்றி http://indianexpress.com )

ஐரோம் சர்மிளா இம்பாலின் கீழ் நடுத்தர வர்க்க குடும்பத்தின் ஒன்பது குழந்தைகளில் கடைசி குழந்தையாக பிறந்தவர். சர்மிளாவின் தந்தை ஐரோம் நந்தா ஒரு கால்நடை மருத்துவ உதவியாளர். மற்ற மணிப்பூர் குழந்தைகளைப் போலவே மணிப்பூரின் நாயகர்கள் மற்றும் புரட்சியாளர்கள் பற்றிய கதைகளை கேட்டு வளர்ந்தார் ஐரோம் சர்மிளா. “நாங்கள் அரசுக்கு எதிராக போரிடும் புரட்சியாளர்கள் மற்றும் காணாமற்போனவர்களைப் பற்றி கதைகளை கேட்டு வந்தோம். அவர்களை நெருக்கமாக பழகியவர்கள் போல உணர்ந்தோம். சில நேரங்களில் நான் அவர்கள் எங்கள் வீட்டு புழக்கடையில் நடந்து போவது போல கற்பனை செய்து கொள்வேன்” என்று அவர் நினைவு கூர்கிறார். மணிப்பூரில் இராணுவத்தின் இருப்பை உணராத குடும்பமே இருக்க முடியாது.

மணிப்பூரின் மன்னனை 1891-ம் ஆண்டு போரில் வென்றதிலிருந்து அதை தனது ஆளுகைக்குட்பட்ட சமஸ்தானமாக பராமரித்து வந்தது பிரிட்டிஷ் அரசு. அதை எப்போதும் இந்தியாவுடன் இணைக்கவில்லை. பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பிரிட்டன் வெளியேறிய பின் 1948-ல் இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்படுவதற்கு இரண்டாண்டுகளுக்கு முன்னரே மணிப்பூர் மக்கள் அனைவருக்கும் வாக்குரிமை தந்து பொதுத் தேர்தலை நடத்தியது.

1949 அக்டோபரில் மணிப்பூர் மன்னரை பேச்சுவார்த்தைக்கு அழைத்து ஷில்லாங்கில் அவரை வீட்டுக்காவலில் வைத்து, மணிப்பூரில் இராணுவத்தை குவித்து அவரை மிரட்டி இந்தியாவுடன் இணைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைத்தது இந்திய அரசு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும், அமைச்சரவையும் கலைக்கப்பட்டன. இதுதான் மணிப்பூரை இந்தியா ஆக்கிரமித்ததன் சுருக்கமான வரலாறு.

ஐரோம் சர்மிளாவின் உண்ணாநிலைப் போராட்டம் தொடர்ந்து வரும் கடந்த 15 ஆண்டுகளில் நிலைமை எந்த விதத்திலும் மேம்பட்டுவிடவில்லை. அவரது உண்ணாவிரதத்தைத் தூண்டிய படுகொலைகளுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. அசாம் துப்பாக்கிப் படைப்பிரிவு இன்று வரை போராளிகளுடனான துப்பாக்கிச் சண்டைக்கு நடுவே சிக்கி பொதுமக்கள் கொல்லப்பட்டதாக சாதிக்கிறது. இப்படுகொலைக்கான வழக்கு இன்னும் நீதிமன்ற வாசலையே எட்டவில்லை. ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்தான் அக்குற்றவாளி சிப்பாய்கள் விசாரிக்கப்படுவதையும் தண்டிக்கப்படுவதையும் தடுத்து, அவர்களுக்குச் சட்டபூர்வ பாதுகாப்பை வழங்கி வருகிறது. டிசம்பர் 5 (2014) அன்று இப்படுகொலையில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு கண்துடைப்பு நிவாரணமாக ரூ 5 லட்சம் நிவாரணம் வழங்க மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இராணுவத்தில் இருக்கும் ஒரே காரணத்திற்காக வல்லுறவு குற்றவாளிகளுக்கும், பச்சைப் படுகொலை குற்றவாளிகளுக்கும், தண்டனையிலிருந்து விலக்குரிமையை (Impunity) சிறப்பு அதிகாரச்சட்டம் வழங்குகிறது.

“ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தின் பாதுகாப்பை வல்லுறவுக் குற்றவாளிகளுக்கு வழங்கக் கூடாது; வல்லுறவுக் குற்றமிழைக்கும் இராணுவத்தினரை, மற்றெல்லா குற்றவாளிகளையும் போல நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தித் தண்டிக்க வேண்டும்” என்று கூறுகிறது பெண்கள் மீதான பாலியல் வன்முறை குறித்து விசாரித்து அறிக்கை அளித்த வர்மா கமிசன். அந்த பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்து விட்டது.

உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த ஒரு பொதுநல வழக்கிற்கு பதிலளிக்கையில் 2007 முதல் 2012 வரையிலான 5 ஆண்டுகளில் மணிப்பூரிலிருந்து மொத்தம் 1671 போலி மோதல் கொலைப் புகார்கள் வந்துள்ளதாகவும், அவற்றில் 191 புகார்களை விசாரித்ததில், அனைத்தும் போலி மோதல் கொலைகள் என்பது உறுதியானது என்றும், மீதமுள்ள வழக்குகளை விசாரிக்கவிடாமல் அம்மாநில அரசு, பல்வேறு முட்டுக்கட்டைகளைப் போட்டுவருவதாகவும் தேசிய மனித உரிமை ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.

இவற்றில் ஆறு போலிமோதல் கொலைகளை வகைமாதிரியாக எடுத்துக் கொண்டு விசாரிக்க உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதி ஹெக்டே கமிசன், அவை அனைத்தும் போலிமோதல் கொலைகளே என்றும் ஆயுதப்படையினர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்றும் முடிவு செய்தது. அந்த அறிக்கையை குஜராத்தில் போலி மோதல்களுக்கு பேர் பெற்ற புகழ் மோடியின் தலைமையில் இயங்கும் இப்போதைய மத்திய அரசு நிராகரித்துவிட்டது.

இந்த முட்டுக்கட்டைகளையும் மீறி போலி மோதல்படுகொலைகள் விசாரணைக்கு வந்துவிட்டால், அவ்வழக்குகளை இராணுவமே விசாரித்துத் தீர்ப்பளிக்கலாம் எனச் சலுகை வழங்குகிறது, உச்ச நீதிமன்றம். உதாரணமாக, காஷ்மீர் பத்ரிபால் படுகொலையை விசாரித்த சி.பி.ஐ இராணுவத்தின் ஐந்து அதிகாரிகளை குற்றவாளிகள் என குற்றப்பத்திரிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டத்தை கொண்டு மத்திய அரசும் இராணுவமும் விசாரணையை முடக்கி வந்தன. உச்சநீதிமன்றமோ குற்றவாளி இராணுவத்திடமே இப்படுகொலைகள் தொடர்பாக இராணுவ விசாரணையை நடத்திக்கொள்ள விட்டுவிட்டது. தனது உள்விசாரணையில் அதிகாரிகள் மீதான குற்றசாட்டுகளுக்கு ஆதரமில்லை என்று அவர்களை விடுவித்துவிட்டது இராணுவம்.

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை மறுபரிசீலனை செய்வதற்காக நியமிக்கப்பட்ட நீதிபதி ஜீவன்ரெட்டி கமிசன், “ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்துக்கு இணையாக வேறு சட்டங்கள் இருப்பதால் இச்சட்டத்தை நீக்கிவிடலாம்” என 2005-ம் ஆண்டே அரசுக்கு அறிக்கை அளித்திருந்தது.

முன்னாள் இராணுவத் தளபதியும், இன்றைய வெளியுறவுத்துறை துணை அமைச்சருமான வி.கே சிங், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டம் இராணுவத்திற்கு எந்த சிறப்பான சலுகையையும் அளித்துவிடவில்லை என்றும் அச்சட்டம் இல்லையெனில் கிளர்ச்சியாளர்கள், பிரிவினைவாதிகளுக்கு எதிராக இராணுவத்தால் செயலாற்ற முடியாது என்றும் தெரிவித்துள்ளார். இது இவருடைய கருத்து மட்டுமல்ல. எல்லா இராணுவ தளபதிகளும், ஆட்சியிலிருக்கும் அரசியல்வாதிகளும் இதைத்தான் கூறுகிறார்கள்.

ஆனால், இச்சட்டம் அமலில் இருக்கும் மாநிலங்களில் தீவிரவாதிகளைக் கண்டறிந்து சுட்டுக் கொல்வதைவிட, தான் சுட்டுக் கொல்லும் அனைவரையும் அடையாளம் தெரியாத தீவிரவாதிகளென முத்திரை குத்தி விடுகிறது, இராணுவம்.

“சிறப்பு அதிகாரச்சட்டம் ஒரு வெறுக்கத்தக்க சட்டம் என்றும் அதற்கு நாகரீக சமூகத்தில் இடமில்லை” என்றும் ப.சிதம்பரம் இப்போது கூறியுள்ளார். இதே ப. சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்த போது சிறப்பு அதிகாரச்சட்டத்தை நீக்குவதற்கு எம்முயற்சியும் எடுக்கவில்லை. பிப்ரவரி 6, 2013-ல் ஒரு கருத்தரங்கில் பேசிய சிதம்பரம், தற்போதைய மற்றும் முன்னாள் இராணுவ தளபதிகளுக்கு ஆய்தப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவருவதில் உடன்பாடு இல்லாத போது அரசு எப்படி சட்ட திருத்தத்தை கொண்டுவர இயலும் என்று கூறினார். எனில் இந்தியாவை ஆள்வது மக்கள் பிரதிநிதிகளா இராணுவமா?

இச்சட்டத்தை நீக்கக்கூடாது என்ற இராணுவத்தின் கருத்து தான் பா.ஜ.கவின் கருத்தும். மோடி அரசும் இக்கொடிய சட்டத்தை நீக்குவதைப் பற்றி பரிசீலிக்கக்கூட இல்லை. மாறாக, இந்திய சட்ட கமிஷனின் பரிந்துரையின் அடிப்படையில் தற்கொலை முயற்சி குற்றச் செயல் அல்ல என IPC 309 சட்டப்பிரிவை சட்ட புத்தகத்தில் இருந்து முற்றிலுமாக நீக்க மோடி அரசு முடிவெடுத்துள்ளது. இதுதான் ஐரோம் சர்மிளாவின் போராட்டத்துக்கு இந்த அரசு முன் வைத்திருக்கும் ‘தீர்வு’.

ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தின் தேவை குறித்த பொது வாக்கெடுப்பை அச்சட்டம் அமுலில் உள்ள எந்த மாநிலத்திலும் நடத்த இதுவரை எந்த அரசும் முன்வரவில்லை.

இந்திய அரசியல் அமைப்பு என்பது மக்களுக்கு விரோதமானது, மக்களை ஒடுக்குவதற்கு ஆளும் வர்க்கங்களுக்கு அனைத்து ஆயுதங்களையும் வழங்குகிறது என்பதை நிரூபித்துக் கொண்டே தொடர்கிறது ஐரோம் சர்மிளாவின் போராட்டம்.

– மார்ட்டின்

ஆர்.எஸ்.எஸ் கட்டாய மதமாற்றம் – மகஇக பத்திரிகை செய்தி

14

மக்கள் கலை இலக்கியக் கழகம்

16, முல்லை நகர் வணிக வளாகம், இரண்டாவது நிழற் சாலை, அசோக் நகர், சென்னை – 600 083
தொலைபேசி 99411 75876
மின்னஞ்சல் – vinavu@gmail.com    pukatn@gmail.com

_______________________________________________________________________
16.12.2014
பத்திரிகைச் செய்தி

சிறுபான்மை மக்களை மதம் மாற்றும் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க கும்பலை முறியடிப்போம்!

ட்சியைப் பிடித்த ஆறே மாதத்தில் இந்தியாவை கூறுகட்டி விற்பதை அதிவேகமாக செய்து வருகிறது மோடி அரசு. கூடவே  தனது பார்ப்பனிய இந்துமதவெறி பாசிச செயல் திட்டத்தையும் புயல் வேகத்தில் நிறைவேற்றி வருகிறது. இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு, குரு உத்சவ், புராணக் குப்பைகளை பாடத்திட்டத்தில் சேர்ப்பது, அவற்றையே வரலாறு என்று திரிப்பது, பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிப்பது என்ற வரிசையில் தாய் மதத்திற்குத் திரும்புதல் என்ற பெயரில் கட்டாய மதமாற்றத்தை அரங்கேற்றி வருகிறது, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல்.

ஆர்.எஸ்.எஸ். முஸ்லீம்கள் மதமாற்றம்
படம் : நன்றி http://indianexpress.com

புகழ்பெற்ற தாஜ்மஹால் நகரமான ஆக்ராவில், இருநூறு ஏழை முஸ்லீம்களை, ஆர்.எஸ்.எஸ்-இன் அடியாள் படையான பஜ்ரங்தள் கும்பல் கட்டாய மதமாற்றம் செய்துள்ளது. இவர்கள் அனைவரும் பழைய – வீணான பொருட்களை சேகரித்து வாழும் ஏழைகள். மேற்கு வங்கத்திலிருந்து பிழைக்க வந்த பரிதாபத்திற்குரியவர்கள், இம்மக்கள்.

ரேசன் கார்டு, ஆதார் அடையாள அட்டை, உதவித்தொகை, போலீஸ் தொல்லையிலிருந்து பாதுகாப்பு என ஒருபுறம் ஆசை காட்டியும், மறுபுறம் குடியிருக்கும் இடத்தை விட்டு காலி செய்துவிடுவோம் என மிரட்டியும் நடத்தப்பட்ட மதமாற்றம் இது.

50 இடங்களில் ஒரு லட்சம் சிறுபான்மையினரை மதமாற்றம் செய்ய இலக்கு நிர்ணயித்து, வரும் டிசம்பர் 25 (கிருஸ்துமஸ்) அன்று 4000 கிருத்துவர்களையும், ஆயிரம் முஸ்லீம்களையும் மதமாற்றம் செய்யப்போவதாக பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர் ரவுடி சாமியார் ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ் மண்டலத் தலைவர் ராஜேஸ்வர் சிங் ஆகியோர் பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.

மதமாற்றம் செய்ய மட்டும் மாதம் 50 லட்சம் ரூபாயும், போக்குவரத்து செலவுக்கு எட்டு முதல் பத்து லட்சம் ரூபாயும் செலவழிப்பதாக ராஜேஸ்வர் சிங் அறிவித்துள்ளார். வழிபாடு எதுவும் நடக்கவில்லை எனப் பொய் பிரச்சாரம் செய்து அறுபது கிருஸ்தவ தேவாலயங்களையும் ஆர்.எஸ்.எஸ் கும்பல் கைப்பற்றியுள்ளது. கடந்த 2003 வாஜ்பாய் ஆட்சியில் இருந்த போது இப்போதைய மிரட்டல் வழியில் உ.பியிலும், உத்திரகாண்டிலுமாக 2.73 லட்சம் பேரை மதம் மாற்றினர்.

இந்தியாவில் மதமாற்றம் என்பது பார்ப்பனியக் கொடுங்கோன்மை காரணமாகவே வரலாறு நெடுகிலும் நடைபெற்று வருகிறது. விவேகானந்தர் எனும் இந்து சாமியாராலேயே “பைத்தியக்காரர்களின் நாடு” என்று அழைக்கப்பட்ட நம்பூதிரிகளின் சாதிக் கொடுமையில் சிக்கியிருந்த கேரளமோ, திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் சனாதன கிரிமினல் பிடியில் மாட்டியிருந்த குமரி மாவட்ட நாடார் சாதி மக்களோ, கம்மா-ரெட்டி காட்டுமிராண்டித்தனத்தில் உயிரை விட்டுக் கொண்டிருந்த ஆந்திரத்து தலித் மக்களோ, ஒரிசாவின் பழங்குடியினரோ, வரலாற்று ரீதியாகவே பார்ப்பனியத்தின் பண்பாட்டு பிடியை ஏற்க மறுத்த வட கிழக்கு மக்களோ, நிலவுடமை ஆதிக்கத்தின் இறுமாப்போடு தலித் மக்களை ஒடுக்கி வரும் இந்தி பேசும் மாநிலங்களோ…இங்கெல்லாம் மதமாற்றம் ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைப் பெருமூச்சாகவே இருந்தது.

இந்துமதவெறியர்கள் தூற்றுவது போல மதமாற்றம் என்பது வாளின் முனையிலோ இல்லை பால்பவுடர் தயவிலோ நடைபெறவில்லை. ஒருவேளை வாழ்க்கை வசதிகள் கிடைக்கும் என்பதால் ஏழைகள் மதம் மாறுகிறார்கள் என்றால் அது பார்ப்பனியத்தின் நிலவுடமை சமூகம் தோற்றுவித்த வறுமைதான் அடிப்படை. அப்போதெல்லாம் இகலோக வசதிகளுக்காக ‘தாய் மதத்தை’ – தாயை விற்றுவிட முடியுமா என்று நொள்ளை நியாயம் பேசினார்கள், இந்துமதவெறியர்கள்.

இப்போது அதே இகலோக வசதிகளை கொடுப்போம் என்று ஆசை வார்த்தையோடு, அதிகார மிரட்டலையும் சேர்ந்து மதம் மாற்றுகிறார்கள். இசுலாம், கிறித்தவம் போன்று இந்துமதம் அடிப்படியிலேயே ஒரு மதத்திற்குரிய அடிப்படைகளை கொண்டிருக்கவில்லை என்றார் அம்பேத்கர். அதனால்தான் இந்து மதம் மற்ற மதங்களைப் போல தனது மதத்தில் வெளிநபர்கள் யாரையும் சேர்ப்பதை விரும்பவில்லை, முயலவுமில்லை. காரணம் இது சாதி ஏற்றத்தாழ்வை ஆன்மாவாகக் கொண்டிருக்கும் ஒரு அதிகார அமைப்பு.

இப்போதும் கூட இவர்கள் மதம் மாற்றினாலும் அந்த மக்கள் வங்கதேச முசுலீம்கள் – ஆதலால் தலித்துக்கள் எனும் அடையாளத்தோடுதான் அங்கே நடத்தப்படுவார்கள். பாஜக அதிகாரத்தில் இல்லாத போது இந்தியா முழுவுதம் மதமாற்றத் தடை சட்டம் வேண்டும் என்று ஊளையிட்டதும் இதே கூட்டம்தான். ஆட்சிக்கு வந்த பிறகு அந்த தடை சட்டம் மற்ற சிறுபான்மை மதங்களுக்கு மட்டுமெனஅமல்படுத்தி விட்டு, இவர்கள் “தாய் மதம்” திரும்புதலுக்கு இது பொருந்தாது என்று மதம் மாற்றுவார்கள்.

பார்ப்பனியம் என்னதான் முயன்றாலும், எத்தனை இலட்சம் பேரை மதம் மாற்றினாலும் சாதி ஏற்றத்தாழ்வு எனும் கொடுங்கோன்மை இங்கே இல்லாமல் போய்விடாது. இந்து மதத்தின் கொடுமைகளுக்கு எதிராக மதம் மாறினார்கள் எனும் வரலாற்று உண்மை, இப்போதும் பொருள் இழந்து விடவில்லை. கட்டயமாக முசுலீம்களும், கிறித்தவர்களும் இந்து மதத்திற்கு மாற்றப்பட்டாலும் அக்ரஹாரம் சமத்துவபுரமாக மாறிவிடாது. பார்ப்பனியத்தோடு ஜன்ம பகை கொண்டிருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டமும் குறைந்து விடாது.

ஆர்.எஸ்.எஸ்
படம் : நன்றி reuters

‘இந்தியாவில் உற்பத்தி செய்’ என்ற மோசடி முழக்கத்தின் கீழ் நாட்டு வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்ப்பது, மேலும் 12 அணு உலைகளை நிறுவி மக்களை நிரந்தர ஆபத்தில் வைத்திருப்பது, ஏழை மக்களுக்கு வழங்கப்படும் மானிய விலை மண்ணெண்ணெய் உட்பட அனைத்து மானியங்களையும் வெட்டி வயிற்றிலடிப்பது, சமையல் எரிவாயுவுக்கு வங்கி கணக்கின் பெயரில் மறைமுக மானிய வெட்டு என பீடை நடை போடுகிறது மோடி அரசு.

நாட்டின் மீதும், மக்களின் மீதும் பொருளாதார பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிடும் அதே வேளையில் ஆர்.எஸ்.எஸ் கும்பல் கலாச்சார ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டு பார்ப்பன பாசிச மேலாதிக்கத்தை நிலைநாட்ட வெறிபிடித்து அலைகிறது. இந்தியாவை இந்து நாடு என மறைமுகமாக அல்ல பகிரங்கமாகவே அறிவிக்கிறது.

பெரியார், அம்பேத்கர் உட்பட ஏராளமான அறிஞர்களாலும், வரலாற்றறிஞர்களாலும் குப்பை என்றும் சாதிவெறிக் கிரிமினல் சட்டத் தொகுப்பு என்றும் இகழப்பட்ட பார்ப்பனியத்தின் புராணப் புரட்டுக்களையும், பகவத் கீதையையும் ஊதிப்பெருக்கி இந்து வெறியைத் தூண்டுகிறது இக்கும்பல்.

கீதையை தேசிய நூலாக்குவதன் மூலம் கருத்தியல் ரீதியாகவே பார்ப்பனிய மேலாதிக்கத்தை பறைசாற்றுகிறது ஆர்.எஸ்.எஸ் கும்பல். கிறிஸ்மஸ் விடுமுறையை ரத்து செய்வதன் மூலம் பள்ளி மாணவரிடையே இருக்கும் கொஞ்ச நஞ்ச சமத்துவ உணர்வையும் குழி தோண்டி புதைக்கிறார்கள். பெரியார் உருவாக்கிய பார்ப்பனிய ஆதிக்க எதிர்ப்பு, சாதி மதம் பார்க்காத சமத்துவ நடைமுறைகள், சாதி மறுப்பு திருமணங்கள், பகுத்தறிவு ஆகிய பண்புகள் கோலோச்சிய தமிழகத்தில் கால்பதிக்க ஆர்.எஸ்.எஸ் கும்பல் வெளிப்படையாக கூட்டங்களையும் பயிற்சியையும் நடத்துகிறது.

அனைத்து ஓட்டுக்கட்சிகள், இனவாதிகள், சாதியக் கட்சிகள், அனைவரும் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு துணைபோகும் அபாயகரமான சூழலில் மதவெறி சக்திகளை வீழ்த்த வேண்டிய வரலாற்று கடமை நம் முன் நிற்கிறது. எனவே பார்ப்பனியத்திற்கு பாடை, கட்ட உழைக்கும் மக்களை அணிதிரட்ட, மதச்சார்பற்ற, ஜனநாயக, புரட்சிகர சக்திகள் ஓரணியில் திரண்டு போராட வேண்டுமென அறைகூவி அழைக்கிறோம்.

இவண்,
காளியப்பன்,
மாநில இணைப்பொதுச் செயலாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு

thai-matham-post-cartoon
படம் : ஓவியர் முகிலன்

பாம்புகள் படையெடுக்கும் அம்மையப்பன் அரசு பள்ளி

1

திருவாரூர் மாவட்டம், அம்மையப்பன், அரசினர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1,200 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மிகச்சிறந்த பள்ளியாக விளங்குகிறது. இப்பள்ளி இயற்கை சூழலோடு சிறப்பாக இயங்கி வருகின்றது. பல்வேறு அரசு பள்ளிகளுக்கிடையே இப்பள்ளி முன்னுதாரணமாக இயங்கி வருகின்றது. அம்மையப்பனைச் சுற்றி ஏறத்தாழ 20 கிராமங்களில் இருந்து ஏழை எளிய மக்களின் பிள்ளைகளே இங்கே பயின்று வருகின்றனர்.

school-frontஇந்தப் பள்ளி வளாகத்தின் மையப்பகுதியில் பெரிய பாழடைந்த கட்டடம் ஒன்று உள்ளது. இந்தக் கட்டடம் எந்த நேரத்திலும் இடிந்து விழுந்து மாணவ,மாணவிகளின் உயிரைக் குடிப்பதற்குக் காத்துக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, இக்கட்டிடத்தில் பாம்பு மற்றும் விஷ ஜந்துக்கள் ஏராளமாக உள்ளன.

பாழடைந்த கட்டிடம்
பள்ளியின் மையத்தில் உள்ள பழைய பாழடைந்த கட்டடம்.

பாழடைந்த இந்தக் கட்டிடத்தில் உள்ள கொடிய பாம்பு போன்றவைகள் மற்ற வகுப்பறை கட்டிடங்களில் செல்வதும்ர மாணவர்கள் இதனைக் கண்டு அலறி அடித்துக் கொண்டு ஓடுவதும், ஊழியர்கள் அதனை விரட்டியடிப்பதும் தொடர்கதையாக உள்ளது.

இந்தக் கட்டடத்தை அப்புறப்படுத்தக் கோரி, பலமுறை நேரிலும், புகார் மனுவிலும் கல்வித்துறை அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டு விட்டது. இதுவரை அந்தப் பாழடைந்த கட்டடத்தை அப்புறப்படுத்துவதற்கு அதிகாரிகள் எந்த முயற்சியும் செய்யவில்லை.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

அதனால், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சார்பில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடத்தில் கையெழுத்து இயக்கம் நடத்தி விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அனைவரும் சேர்ந்து 01.12.2014 அன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடத்தில் நேரடியாக மனு கொடுத்தனர்.

collector-petition

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

புரட்சிகர  மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு
திருவாரூர் மாவட்டம்
99434 94590

வெள்ளாறு பொங்கட்டும் ! போராட்டம் வெல்லட்டும் !

1

வெள்ளாறு பொங்கட்டும்! போராட்டம் வெல்லட்டும!

reclaim-vellaru-04ஊரையே காத்த ஆறு – அதற்கு
உன்னை விட்டால் வேறு யாரு?
முகம் கிழிந்து கிடக்குது பாரு
ரத்தம் கொதிக்குதடா மணல் மீது!

சேர்வராயன் தொடங்கி
சேரும் இடம் வரைக்கும்
வண்டல் வழங்கிய ஆறு,
மக்களை
வாழ வைக்கும் வெள்ளாறு!
அதன் தொண்டைக் குழியே
தூர்ந்து போகுது பாரு,

துடிக்கத் துடிக்க
கழுத்தை அறுக்கும் குவாரிகளை
வெட்டி எறி வேரோடு!

reclaim-vellaru-07நம் உதிரம் கலந்த ஆறு
உருக்குலைந்ததை பாரு,
மண்ணுயிர்க்கெல்லாம்
பால் வார்த்த வெள்ளாறு – அதன்
மார்பை டிப்பர் லாரிகள்
நசுக்கிய தடம் பாரு,

நம் உறவில் கலந்த ஆறு
ஒருவன் கொள்ளைக்கா கூறு?
நம் கண்ணைத் தோண்டுவதாரு
கலெக்டர், போலீசு, தாசில்தாரு,
ஆற்றைச் சுரண்டும் அதிகாரத்தின்
அடக்குமுறைகள் மீறு!

எத்தனை தலைமுறை
பருகிய ஆறு!
எத்தனை கால்நடை
பழகிய ஆறு!
எத்தனை பறவைகள்
உரசிய ஆறு!

reclaim-vellaru-09எத்தனை உயிரினம்
நம்பிய ஆறு!
அத்தனை உணர்ச்சியும்
அடி மணல் பாரு! – இதை
மொத்தமாய்க் கொல்லும்
குவாரிகளை மூடு!

நாணல் பூ நிழல் விழுந்தாலே
கூசும் நம் ஆறு – அதை
நாலாபக்கமும் பொக்லின் நகங்கள்
குதறி எடுப்பதைப் பாரு,
இயற்கையின் மடி அறுக்கும்
எந்திரங்கள் நம் தாய் மீது,
ஆற்றை அழிக்கும்
வன்முறைக்கு எதிராக
ஆயிரம் கரங்களாய்ச் சேரு!

reclaim-vellaru-02ஆற்றை காக்க முடியாத
ஓட்டு கேட்கும் தேர்தல் எதற்கு?
கூட்டு சேர்ந்து மணலை
கொள்ளையடிக்கும் கட்சிகளை
வெள்ளாற்றில் வைத்து நொறுக்கு!

சுட்டுப் பொசுக்கிய வெயிலிலும்
நமக்கு சுரந்து கொடுத்த ஆறு!
ஒட்டச்சுரண்டிய போதும் – இப்போது
மக்கள் ஊற்றெடுக்கும் ஆறு!
மணல் பரப்பெல்லாம் பாரு – மடியாத
உழைக்கும் மக்களின் வரலாறு
மக்கள் என்றால் கார்மாங்குடி – என
தமிழகமே நெஞ்சு நிமிர்கிறது!

போராட்ட உணர்ச்சியின் தடம் பதிந்து
வெள்ளாற்று மணலும் சிவக்கிறது!
நம் கர்ப்பம் சிதைப்பது யாரு?
அவன் கைகளை முறிக்கும்
போராட்டப் பெருக்கில்
பொங்கும் வெள்ளாறு!

– துரை.சண்முகம்