மூடு டாஸ்மாக்கை ! மீண்டும் வெடிக்கட்டும் டாஸ்மாக்கிற்கு எதிரான போராட்டம் !
கொரோனா கால ஊரடங்கு தளர்வுகளோடு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா கால உதவித்தொகையாக இரண்டாவது தவணையாக ரூபாய் 2,000 கொடுக்கப்பட்ட நாளன்று டாஸ்மாக் திறக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஆட்சியின் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் “அரசு கொடுக்கும் உதவித் தொகையானது வேறு வழியில் அரசுக்கே வந்து சேரும்” என்று கூறியதை மெய்ப்பிக்கின்றது இந்நிகழ்வு. யார் ஆட்சிக்கு வந்தாலும் குடிகெடுக்கும் டாஸ்மாக்கை மூட மாட்டார்கள். மக்கள் போராட்டம் ஒன்றே டாஸ்மாக்கை மூடும் என்ற உண்மயையும் அறிவிக்கிறது.
டாஸ்மாக் திறக்கப்பட்ட இரு நாட்களுக்குள்ளேயே எத்தனை குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்பதை ஆராய வேண்டும். ரேசன் கடையில் இருந்து உதவித் தொகையை மனைவியிடம் இருந்து பிடுங்கிக்கொண்டும் / தானே உதவித் தொகையை பெற்றுக் கொண்டும் நேரடியாக டாஸ்மாக் செல்கிறார்கள்.
திருச்சி – கரூர் மாவட்ட எல்லைப்பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையில் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் சரக்கு வாங்க குடிமகன்கள் ஆர்வமாக இருந்ததாகவும், இதில் இளையவர்களுக்கு போட்டியாக முதியவர்களும் களத்தில் இருந்ததாகவும் பாலிமர் செய்தியில் ‘சுவாரசியமான’ குறிப்பு வாசிக்கப்படுகின்றது.
காத்திருந்தவர்களின் வீடுகளில் நேற்று எத்தனை சண்டை – சச்சரவுகள் ஏற்பட்டிருக்கும்? பெண்கள் மீதான தாக்குதல்கள் – வன்கொடுமைகள் நடத்தப்பட்டு இருக்கும்? எத்தனை விபத்துக்கள் நடந்திருக்கும்?
இளம் பெண் ஒருவர் “பிராந்தி வேண்டாம், மூணு பாட்டில் பீர் கொடுங்க” என்று கேட்டு வாங்கிச் செல்கிறார். உடனே “பெரியார் பேத்தியைப்பார்!” என்று பிஜேபி கும்பல் சமூக வலைத்தளங்களில் கிண்டலடிக்க, அதற்கு பதிலடியாக பெரியார் இயக்க ஆதரவாளர்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். இதற்கு காரணமான அரசைப் பற்றி துளியும் விமர்சிக்க தயாராக இல்லை.
கள்ளச்சாராயம் – போலி மதுவினை தடுப்பதற்காக கடும் விமர்சனங்களுக்கிடையில் டாஸ்மாக் திறக்கப்படுவதாகவும் கடும் கட்டுப்பாடுகளை பின்பற்றவில்லை என்றால் டாஸ்மாக் மூடப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கடந்த ஆட்சியின் ஊரடங்கின் போது “ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் எதற்கு?” என்று அவர் பிடித்திருந்த முழக்கத்தட்டிகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார் மு.க.ஸ்டாலின்.
அவருக்கு ஆதரவாக தமிழகத்தின் அமைச்சர்களும் அவரது கட்சியினரும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
கடந்த ஆட்சியில் எடப்பாடியும் அவரது அமைச்சர்களும் மக்களின் நலனுக்காகவே டாஸ்மாக் திறக்கப்படுவதாக கூறியதையே ரீமேக் செய்து திமுக அரசும் கூறுகிறது. கள்ளச்சாராயமும் போலி மதுவும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும், அதனால் டாஸ்மாக் திறக்கிறோம் என்பது எவ்வளவு கேவலமான வாதம்? அதை தடுக்க வக்கில்லாமல்தான் ஒரு அரசு இருக்கிறதா?
மூடு டாஸ்மாக்கை !
11 மாவட்டங்கள் தவிர மீதமுள்ள மாவட்டங்களில் ஒரு நாளில்மட்டும் ரூபாய் 165 கோடி டாஸ்மாக் மூலம் வசூல் செய்யப்பட்டு இருக்கிறது.கொரோனா காலத்தில் வேலைவாய்ப்பின்றி மக்கள் வாடிக்கொண்டு இருக்கும் சூழலில் மக்களின் பொருளாதாரம் ரூபாய் 165 கோடி சுரண்டப்பட்டு இருக்கிறது. இந்த உண்மையில் இருந்தல்லவா இப்பிரச்சினையைப் பார்க்க வேண்டும் ?
டாஸ்மாக் அரசியல்
தனியார்மயம் – தாராளமய காலகட்டத்திற்கு பிறகு அரசின் அனைத்து உற்பத்தி நிறுவனங்களும் தனியாருக்கு தாரை வார்க்கப்படுகின்றன. இச்சூழலில் சேவைத் துறைகளும் பாதுகாப்புத் துறையும் கூட கார்ப்பரேட்டுகளுக்கு அளிக்கப்படுகின்றன.
இந்த தனியார்மய – தாராளமய – உலகமயப் பொருளாதாரம் தனக்கான நுகர்வுப் பண்பாட்டை உருவாக்குகிறது. போதை – நுகர்வு – பாலியல் சீரழிவு என அனைத்தையும் இந்தப் பொருளாதாரம் உருவாக்குகிறது. கடந்த 30 ஆண்டுகளில் சுரண்டல் தீவிரமாகியுள்ளது. 8 மணி நேர உழைப்பு, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர உறக்கம் என்பதெல்லாம் காணாமல் போய்விட்டன. சுரண்டல் தீவிரமடைய தீவிரமடைய அதற்கெதிரான போராட்டங்கள் தீவிரமடையும். அதை மட்டுப்படுத்தவும் ஒழித்துக்கட்டவுமே சீரழிவு பண்பாட்டை பரப்புகின்றது அரசு.
மதுவிலக்கு அன்றும் இன்றும்
2015 – 2016-ஆம் ஆண்டில் மக்கள் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்தார்கள். டாஸ்மாக் கடைகள் முற்றுகை, டாஸ்மாக் கடைகள் உடைப்பு என திரும்பும் பக்கமெல்லாம் போராட்டங்கள் நடைபெற்றன. அதில், மக்கள் அதிகாரம் அமைப்பின் பங்கு மிகவும் முக்கியமானது. திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளையும் (அதிமுக, பாஜக, பாமக.. தவிர) சந்தித்து “டாஸ்மாக்கை மூடு” என்ற கோரிக்கைக்கு ஆதரவு திரட்டினோம். திமுக தனது தேர்தல் அறிக்கையில் டாஸ்மாக்கை மூடுவோம் என்று அறிவித்தது. ஜெயயலலிதா படிப்படியாக டாஸ்மாக்கை மூடுவோம் என்று அறிவித்தார்.
2016-ஆம் ஆண்டு மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார். மாநில நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் வைக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து மாநில நெடுஞ்சாலைகளை, மாவட்ட நெடுஞ்சாலைகளாக மாற்றி அங்கே டாஸ்மாக் கடைகளை திறந்தார். அந்த நடவடிக்கைகளை எல்லாம் திமுக கடும் விமர்சனம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
2021-ஆம் ஆண்டு திமுக டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற வாக்குறுதி எதுவும் கொடுக்கவில்லை. ஆட்சிக்கு வருவதற்கு மக்களின் உணர்வுகளை பயன்படுத்திக் கொள்வது என்பதைத் தாண்டி திமுக-விடம் ஏதும் இல்லை. 2016-ஆம் ஆண்டு கொடுக்கபட்ட வாக்குறுதிகள் 2021-ஆம் ஆண்டு செல்லுபடியாகாது என்பதை தனது செயல்மூலமாக அறிவித்திருக்கிறது.
திமுக ஆதரவு கட்சிகள், அறிவுஜீவிகளின் மவுனம்
திமுக-வின் ஆதரவு கட்சிகள் டாஸ்மாக் திறப்பு விசயத்தில் வெளிப்படையாக பச்சோந்தித்தனமான வாதம் செய்கின்றன. டாஸ்மாக் திறக்கவில்லை என்றால் கள்ளச்சாராயம் ஆறாக ஓடும் என்கிறார் ப.சிதம்பரம். ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலோ பூரண மதுவிலக்கு என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. மற்ற
திமுக ஆதரவு கட்சிகள் இப்பிரச்சினை குறித்து நேரடியாக எதுவும் பேசவில்லை.
ஆனால், அக்கட்சிகளைச் சேர்ந்தோர் ஊடகங்களில் வேறுவகையான விவாதங்களை கிளப்பி வருகின்றனர். “டாஸ்மாக்கை மூடு” என்ற கோரிக்கைக்கு 2016-ஆம் ஆண்டு ஆதரவாக இருந்தவர்கள் தற்போது “படிப்படியாகத்தான் மதுவிலக்கு அமல்படுத்த முடியும், உடனே டாஸ்மாக்கை மூட முடியாது, குடிகாரர்கள் பாதிக்கப்படுவார்கள்” ஆகிய பச்சோந்தித்தனமான கருத்துக்களை பரப்பி மொத்த இலக்கையே திசை திருப்புகின்றனர். இதை ஏன் 2016-ஆம் ஆண்டு பேசவில்லை?
டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று மாங்குமாங்குவென கட்டுரைகளை எழுதிய அறிவுஜீவிகள் அமைதியாக இருக்கிறார்கள். இன்னும் சிலரோ “மூடு டாஸ்மாக்கை” என்ற கோரிக்கைக்கு எதிராக பூரணமதுவிலக்கு சாத்தியமல்ல என்று கூறுவதும், வெளிநாட்டு சரக்கு அடித்துக் கொண்டு இருக்கும் போட்டோக்களை வெளியிடுவதன் நோக்கம் என்ன? ஏன் இதையெல்லாம் 2016-ம் ஆண்டுகளில் செய்யவில்லை? திமுக ஆட்சி மீது எவ்விதத்துரும்பும் படாமல் பாதுகாத்து பரிசில் பெறுவதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் போல.
அதிமுக – பிஜேபி ; அயோக்கியர்களின் புகலிடம் மக்கள் பிரச்சினை
டாஸ்மாக் திறக்காதே ! என்ற தலைப்பில் பிஜேபி-யினர் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தியுள்ளனர். ஓ.பன்னீர்செல்வமோ “டாஸ்மாக் திறக்கக் கூடாது” என்று அறிக்கை கொடுத்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே புதுச்சேரியில் சாராயக்கடைகளை அப்பிரதேச ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் திறந்தார். கர்நாடகாவில் சாராயக்கடைகளை திறந்தது பிஜேபி-யின் எடியூரப்பா. இவர்களுக்கு எல்லாம் தமிழகத்தில் டாஸ்மாக்கை திறக்க வேண்டாம் என்று சொல்வதற்கு தகுதி உள்ளதா என்ன?
சோமபானம், சுராபானம் என்று போதை வஸ்துகளை புனிதமாக கருதிய புராண காலம் முதல் இப்போது வரை போதை, பாலியல் சீரழிவுகளின் கூடாரமான பிஜேபி – ஆர்.எஸ்.எஸ் கும்பல் இப்போது டாஸ்மாக் பிரச்சினையை கையில் எடுத்திருக்கிறது.
கடந்த 10 வருட அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் கடைக்கு எதிராகப் போராடியோரின் மீது போடப்பட்ட வழக்குகள் அளவிடமுடியாது. திருப்பூர், சாமளாபுரத்தில் டாஸ்மாக்கிற்கு எதிராகப் போராடிய ஒரு பெண்ணை கன்னத்தில் அறைந்த பாண்டியராஜன் என்ற ஏ.டி.எஸ்.பி-க்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. டாஸ்மாக் எதிர்ப்பு போராளி சசி பெருமாள் கொல்லப்பட்டது முதல் டாஸ்மாக்கிற்கு எதிராகப் போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களும் ஏராளம். தமிழகத்தையே மொத்தமாக சுரண்டி கொழுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு டாஸ்மாக் பற்றிபேச என்ன தகுதி இருக்கிறது?
இப்படி தமிழகத்துக்கு, தமிழினத்திற்கு எதிரான அதிமுக – பிஜேபி கும்பல் தங்களை இருப்பு வைத்துக் கொள்வதற்காக டாஸ்மாக் பிரச்சினையில் பதுங்கிக் கொள்கிறார்கள். டாஸ்மாக் திறப்புக்கு எதிராக தமிழகத்தின் முற்போக்கான அமைப்புகள் எல்லாம் கொதித்து எழுந்திருந்தால் பிஜேபி – பாமக-வின் போராட்டங்கள் எல்லாம் காணாமல் போயிருக்கும். இனி மக்கள் பிரச்சினையில் அதிமுக – பிஜேபி-யினர் தொடர்ந்து தலையிடுவார்கள். திமுக மீது தூசு படக்கூடாது என்று எதிர்பார்த்துக் கொண்டு இருந்தால் தமிழகம் இன்னொரு புதுவையாக மாறுவதை யாரும் தடுக்க முடியாது.
முழக்கம் மட்டுமல்ல; மூளையே மாற்றம் அடைந்திருக்கிறது !
டாஸ்மாக் பிரச்சினை எதிரிகளான அதிமுக – பாஜக-வை மட்டுமல்ல துரோகிகளையும் அம்பலப்படுத்தி இருக்கிறது. “மூடு டாஸ்மாக்கை !” என்ற முழக்கம் ‘டாஸ்மாக்கை திறக்காதே !’ என்றும் ‘தமிழக முதல்வருக்கு டாஸ்மாக் மூடுவது சாத்தியமே’ என்றும் மாறி இருக்கிறது.
ஏன் மூடு டாஸ்மாக்கை என்ற முழக்கத்தை இவர்கள் பயன்படுத்துவதில்லை? மூடு டாஸ்மாக்கை என்பது மக்களின் ஆணை, அதை இப்போது திமுக-விற்கு பயன்படுத்த முடியுமா? குடிகெடுக்கும் அரசிடம் கெஞ்சாதே என்ற முழக்கம் காணாமல் போய் தமிழக முதல்வருக்கு சாத்தியம் என்று கெஞ்சிக்கொண்டு இருப்பதில் போய் அல்லவா முடிந்திருக்கிறது.
பாசிசம் பற்றிய அரசியல் புரிதல் இல்லை என்பதல்ல பிரச்சினை; அரசு அதிகாரத்துடன் கூடிக்குலாவி தங்களின் கோரிக்கைகளை தீர்த்துக் கொள்ள முடியும் என்ற நவீன யுத்தியே இந்த முழக்க மாற்றத்துக்கு காரணம்.
இனி வருங்காலம் ???
திமுக அரசின் தவறான செயல்பாடுகளை முற்போக்கு அமைப்புகள் எல்லாம் எப்படி டீல் செய்யப்போகின்றன என்பதற்கு டாஸ்மாக் பிர்ச்சினை என்பது ஒரு தொடக்கமே. டாஸ்மாக் திங்கட்கிழமை திறக்கப்பட்டதும் அன்றைய தினம் பொறுக்கி கிஷோர் கே.சாமி கைது செய்யப்பட்ட செய்தி பிரபலமாக்கப்பட்டதும் வேறு வேறான சம்பவங்கள் அல்ல. திமுக-வின் ஐ.டி டீமை விட பெரிய நெட்வொர்க்கையும் ஆளும் வர்க்க ஆதரவையும் கொண்டது ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி.
அதனால்தான் மயிரிலும் மலராது என்று பெருமை பீற்றிக் கொண்டிருந்த தமிழ்நாட்டில் 4 பேர் பிஜேபி-யின் எம். எல்.ஏக்களாகி இருக்கின்றனர். மொடக்குறிச்சியின் திமுக வேட்பாளரான திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசனின் தோல்வி எப்படி நேர்ந்தது என்பதை கவனியுங்கள். இதுவரை யாரென்றே கேள்விப்படாத சரஸ்வதியை வைத்து தோற்கடித்திருக்கார்கள். ஒரு தொகுதியில் வருடக் கணக்காக வேலை செய்து யாரையும் தோற்கடிக்க முடியும் என்பதை தெரிவிக்கிறார்கள். கடந்த பத்தாண்டு அதிமுக அட்சியின் அவலங்களையும் மீறி அறுபதிற்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக வென்றிருக்கிறது.
ஆட்சி அதிகாரத்துக்கு அரிதாரம் பூசியபடியே பாசிசத்தை வீழ்த்த முடியாது. கார்ப்பரேட் – காவி பாசிசத்துக்கு எதிரான போராட்டங்களை எந்த அளவுக்கு மக்கள் மத்தியில் கட்டமைக்கிறோமோ அதுமட்டுமே பாசிசத்தை வீழ்த்துவதற்கான துவக்கமாக இருக்கும்.
மக்களோடு துணை நிற்பது மட்டுமே நமது கடமை
“மூடு டாஸ்மாக்கை!” என்ற கோரிக்கையானது மக்கள் மத்தியில் தற்போது பரவலாக இல்லை. மக்கள் அதிகாரம் அமைப்பாகிய நாங்கள் மட்டுமே இக்காலகட்டத்தில் முதலில் முன்வைத்தோம். தமிழ்த்தேச மக்கள் முன்னணி, மனிதி உள்ளிட்ட அமைப்புக்கள் டாஸ்மாக்கை மூடவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளன.
தேர்தல் பாதை இடதுசாரிகள் – பெரியாரிய அமைப்புக்கள் – முற்போக்காளர்கள் – அறிவு ஜீவிகள் என யாரின் துணையின்றியும் மக்களுடன் மட்டுமே களத்தில் நிற்கிறோம்.
ஒரு பிரச்சினைக்கு மக்கள் ஆதரவு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை வைத்து முடிவு எடுக்க முடியாது. இப்போது “மூடு டாஸ்மாக்கை” என்ற முழக்கம் மேலெழாமல் இருக்கலாம். ஆனால், கார்ப்பரேட் சுரண்டல் டாஸ்மாக் மட்டுமல்ல அனைத்துவிதமான பிரச்சினைகளையும் மேலெழ வைக்கும். அதற்கு, மக்களோடு துணை நிற்பது மட்டுமே நமது கடமை.
ஆப்கானிலிருந்து அமெரிக்கப் படைகள் விலகலும்
மத்திய ஆசியாவைச் சுற்றி நடக்கும் காய் நகர்வுகளும்!
கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானை ஆக்கிரமித்திருக்கும் அமெரிக்கா, தனது படைகளைத் திரும்பப் பெறப்போவதாக கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து வட அட்லாண்டிக் ஒப்பந்த நாடுகளும் (நேட்டோ – NATO) தங்கள் படைகளைத் திரும்பப் பெறப்போவதாக அறிவித்துள்ளன. ஆப்கானை ஆக்கிரமித்துக் கொண்டுள்ள 9,500 படைவீரர்களில் 2,500 பேர் அமெரிக்காவையும் மீதம் 7,500 பேர் அதன் நேட்டோ கூட்டணி நாடுகளையும் சேர்ந்தவையாகும். மே 1–ம் தேதி தொடங்கி செப்டம்பர் 11–ம் தேதிக்குள் – இரட்டை கோபுரத் தாக்குதலின் 20–ம் ஆண்டு – படிப்படியாக படைகள் திரும்பப் பெறப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இதனை விளக்கியுள்ளார்.
2001 செப்டம்பர் 11–ல் உலக வர்த்தக மையம், பெண்டகன் ஆகியவை அல்கொய்தா பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டதை முகாந்திரமாகக் கொண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் புஷ் ஆப்கானின் மீது போர்ப் பிரகடனம் செய்தார். “பயங்கரவாதத்துக்கு எதிரான உலகப் போர்” என்றும் “இந்த நூற்றாண்டின் – ஆயிரமாவது ஆண்டின் முதல் போர்” என்றும் அவரால் அறிவிக்கப்பட்ட “அமெரிக்க வரலாற்றின் நீண்ட போரை” முடிவுக்குக் கொண்டுவந்து விட்டதாக பைடனும் அவரது ஏகாதிபத்தியக் கூட்டாளிகளும் பெருமைப்பட்டுக் கொள்கின்றனர். ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா, பைடனின் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளார். “ஆப்கான் போரை நடத்தும் நான்காவது அதிபர் நான். ஐந்தாவதாக ஒரு அதிபரின் கையில் அதை ஒப்படைக்க மாட்டேன்”, “அமெரிக்கப் படைகள் தங்கள் தாயகம் திரும்ப வேண்டிய காலம் வந்துவிட்டது” என்றெல்லாம் படைவிலக்கத்தை பெருமையுடன் குறிப்பிடுகிறார், பைடன்.
பைடனின் இந்த அறிவிப்பையும் மத்திய ஆசியப் பகுதியில் அமெரிக்காவின் நகர்வுகளையும் புரிந்துகொள்ள, ஆப்கான் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பின் வரலாற்றைச் சுருக்கமாகவேனும் பார்ப்பது நமக்கு அவசியமாகும்.
ஆப்கான் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பின் வரலாறு
1978–ல் ஆப்கானில் “ஆப்கானிஸ்தான் மக்கள் ஜனநாயகக் கட்சி” ஆட்சியை அமைத்தது. 1979–ல் சோவியத் சமூக ஏகாதிபத்தியம் தனது மேலாதிக்க நோக்கத்திற்காக ஆப்கான் மீது ஆக்கிரமிப்புப் போரைத் தொடுத்தது. அதன்பிறகு, 1986–ல் சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தின் கைக்கூலியான நஜிபுல்லா-வின் தலைமையிலான அரசு அமைந்தது. பெண் கல்வி உள்ளிட்ட சில சீர்திருத்த நடவடிக்கைகளை நஜிபுல்லா அரசு மேற்கொண்டதாகப் பேசப்பட்டாலும், சோவியத் ஆக்கிரமிப்பை எதிர்த்த சொந்த நாட்டு மக்கள் 80,000-க்கும் மேற்பட்டோரை கொன்றொழித்தது.
சோவியத் சமூக ஏகாதிபத்தியம், அமெரிக்க ஏகாதிபத்தியம் – என இரு மேல்நிலை வல்லரசுகளுக்கு இடையில் தீவிரமான பனிப்போர் நிகழ்ந்து கொண்டிருந்த காலம் அது. மத்திய ஆசியப் பகுதியில் தனது செல்வாக்கை நிலைநாட்ட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்த அமெரிக்காவுக்கு, ஆப்கானை சோவியத் ஆக்கிரமித்தது ஒரு நல்வாய்ப்பாக அமைந்தது. 1979–ல் அப்போதைய அமெரிக்க அதிபரான ஜிம்மி காட்டரும் அவரின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஸ்பிக்னியேவ் ப்ரெஸ்சின்ஸ்கியும், பாகிஸ்தான் அரசின் உளவுத்துறை நிறுவனமான ஐ.எஸ்.ஐ.யுடன் சேர்ந்து – சோவியத்தை எதிர்ப்பதற்காக – இசுலாமிய அடிப்படைவாத கும்பலான முஜாகிதின்களை வளர்த்து விட்டார்கள்.
ஆப்கான் மீதான சோவியத்தின் ஆக்கிரமிப்பை “இசுலாத்தின் மீதான நாத்திக, கம்யூனிஸ்டுகளின் ஆக்கிரமிப்பு” என்றும், “சோவியத்தை எதிர்த்த புனிதப் போர்” என்றும் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. இவையனைத்துக்கும் பின்னிருந்து நிதியுதவியும் ஆயுத உதவிகளும் செய்தவை அமெரிக்காவும் அதன் (அப்போதைய) கூட்டாளியான பாகிஸ்தானுமே ஆகும். பாகிஸ்தானில் தொடர்ச்சியாக முஜாகிதின்கள் ஆயுதப் பயிற்சியும் மதப் பயிற்சியும் பெற்றனர். ஆப்கான் மீது சோவியத் சமூக ஏகாதிபத்தியம் நடத்திய ஆக்கிரமிப்புப் போரில் உடைமையிழந்த, அகதிகளான இளைஞர்கள்தான் இந்த முஜாகிதின்களில் பெரும்பாலானோர் என்பது சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தின் மீதான அவர்களின் வெறுப்புக்கு இன்னொரு முக்கியமான காரணமாகும்.
இதன் விளைவாக, முஜாகிதின்களோடு நடந்த தொடர்ச்சியான போரில் சோவியத் சமூக ஏகாதிபத்தியம் தோற்றது. 15,000 சோவியத் துருப்புகளை இழந்த பின்னர், 1989–ல் தன் படைகளை ஆப்கானிலிருந்து விலக்கிக் கொண்டது. ஆப்கான் மீதான சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தின் தோல்வியானது, அமெரிக்காவின் கை மேலோங்குவதில் முடிந்தது. அதன் பின்னர் சோவியத் ஒன்றியம் உடைந்து பல நாடுகளாகச் சிதறியது.
முகமது நஜிபுல்லா
1992–ல் சோவியத் எடுபிடியான நஜிபுல்லா ஆட்சியை முஜாகிதின் குழுக்கள் வீழ்த்தினர். அதன் பிறகு, முஜாகிதின் குழுக்களிடையே அதிகாரப் போட்டி ஏற்பட்டது. அதில், பத்தானிய இனத்தைச் சேர்ந்த குல்புதின் ஹெக்மெத்யார் தலைமையிலான “ஹிஸ்ப்-இ இஸ்லாமி” என்ற குழுவை ஓரங்கட்டிவிட்டு, தாஜிக் இனப்பிரிவைச் சேர்ந்த ரப்பானி மற்றும் அகமத் ஷா மசூத் ஆகியோர் தலைமையிலான “ஜமாத்-இ இஸ்லாமி குழு” என்ற குழு அதிகாரப் போட்டியில் வென்றது.
அதன்பிறகு, 1994–ல் சன்னி மதப் பிரிவு மற்றும் பத்தானி இனப்பிரிவைச் சேர்ந்த தாலிபானும் அதிகாரப் போட்டியில் குதித்தது. அப்போதைய அதிபர் ரப்பானி மற்றும் இராணுவத் தளபதி முகமது ஷா மசூத்-க்கும் முல்லா உமரைத் தலைமையாகக் கொண்ட தாலிபான்களுக்கும் இடையில் ஏற்பட்ட அதிகாரப் போட்டியில் 1996–ல் தாலிபான்கள் நாட்டின் பெரும்பகுதியைக் – 95 சதவீதத்தைக் – கைப்பற்றினர். இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதற்காக, ஐ.நா அலுவலகத்தினுள் பதுங்கியிருந்த ‘கம்யூனிஸ்டு’ அதிபர் நஜிபுல்லாவைக் கொன்று தூக்கிலிட்டனர், தாலிபான்கள்.
பின்னர், ஏழு ஆண்டுகள் (1996–2001) தாலிபான்களின் காட்டுமிராண்டித்தனமான ஆட்சி ஆப்கானில் நடந்தது. ஷரியத் சட்டத்தின் ஆட்சி என்று சொல்லப்பட்ட தாலிபான் ஆட்சியில் பெண்கள் மீது எண்ணற்ற கொடுமைகள் நிகழ்த்தப்பட்டன. பெண்கள் கல்வி கற்பது, வேலைக்குச் செல்வது தடை செய்யப்பட்டது. பர்தா அணியாத பெண்கள் கல்லால் அடித்தே கொல்லப்பட்டனர். ரப்பானி அரசை அதுவரை ஆதரித்து வந்த அமெரிக்கா, தாலிபான்கள் காபூலைக் கைப்பற்றியதும் அவர்களை ஆதரிக்கத் தொடங்கியது.
அப்போதைய அமெரிக்க அதிபர் கிளிண்டன்-இன் அரசு தாலிபான்களை அங்கீகரித்தது. ஐ.நா.விலும் அவர்களுக்கு அங்கீகாரம் பெற்றுத்தர முயன்றது. இதற்குக் காரணம், ஆப்கானின் பூகோள முக்கியத்துவமே ஆகும். ஈரானைக் கண்காணிப்பதும், சோவியத் ஒன்றியம் உடைந்து உருவாகியுள்ள தாஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், துருக்மேனிஸ்தான், காசக்ஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய மத்திய ஆசிய நாடுகளில் உள்ள எண்ணெய் – எரிவாயு வளங்களைக் கைப்பற்றி, அவற்றை ஆசிய, ஐரோப்பியச் சந்தைக்கு கொண்டுசெல்ல ஆப்கான் – பாகிஸ்தான் – அரபிக் கடல் வழியாக பாதை அமைப்பதே இதன் நோக்கமாகும். சுருங்கச் சொன்னால், மத்திய ஆசியப் பகுதியில் தன் மேலாதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வதே ஆகும்.
ஆனால் 1996–க்குப்பின், பின்லேடனுடன் தாலிபான்கள் கூட்டுச் சேர்ந்து கொண்டனர். தன் நோக்கத்திற்கேற்ப செயல்படாமல் தாலிபான்கள் வேறு திசையில் பயணித்ததால், அமெரிக்கா அப்போது செய்வதறியாமல் திகைத்தது. ஆப்கானின் உள்விவகாரத்தில் தலையிட்டு எப்படியாவது தனது நோக்கத்திற்கேற்ப அங்கு ஒரு பொம்மை அரசை அமைக்க வேண்டும் எனத் துடித்துக் கொண்டிருந்த அமெரிக்காவுக்குக் கிடைத்த பொன்னான வாய்ப்புதான் செப்டம்பர் 11, 2001-ல் நடந்த அமெரிக்க இரட்டை கோபுரத் தாக்குதல். உலக வர்த்தக மையமானது, அல்கொய்தா எனும் பயங்கரவாத அமைப்பால் தாக்கப்பட்டதைச் சாக்கிட்டு, உடனே ஆப்கானில் படைகளைக் குவித்து தாலிபான்களை அழித்துவிட்டு தனது கைக்கூலி அரசை நிறுவ வேண்டும் என அமெரிக்கா தீர்மானித்தது. இதுதான் “பயங்கரவாத எதிர்ப்புப் போர்” என்று பீற்றிக் கொள்ளப்படும் ஆப்கான் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பின் பின்னணி.
அதாவது, எந்த இசுலாமிய பயங்கரவாத அமைப்புகளை சோவியத் சமூக ஏகாதிபத்தியத்துக்கு எதிராக அமெரிக்கா வளர்த்துவிட்டதோ, அவற்றையே பின்னர் எதிரிகளாகவும் உலகை அச்சுறுத்தும் பயங்கரவாதிகளாகவும் அறிவித்து – அவற்றிடமிருந்து உலகைக் காக்க வந்த மீட்பன் போலத் தன்னைக் காட்டிக் கொண்டு – தன் ஆக்கிரமிப்புக்கு நியாயம் கற்பித்தது, அமெரிக்கா.
இதுஒருபுறம் இருக்க, 1996–இல் அதிகாரப் போட்டியில் தோற்ற ரப்பானி மற்றும் மசூத் குழுவானது, தோஸ்தம் என்ற யுத்தப் பிரபுவுடன் சேர்ந்துகொண்டு சில கிராமப்புறப் பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டு தாலிபான்களை எதிர்த்து வந்தது. இது “வடக்குக் கூட்டணி” என அழைக்கப்பட்டது. இந்த வடக்குக் கூட்டணியை ஒழிக்க 1996–களில் அமெரிக்கா தாலிபான்களுடன் சேர்ந்து கொண்டது. ஏனெனில், இக்கூட்டணியானது ரசியா மற்றும் ஈரானின் ஆதரவைப் பெற்றிருந்தது.
2001–ல் அமெரிக்க, பிரிட்டன், நேட்டோ படைகள் ஆப்கானை ஆக்கிரமித்து கொலைவெறித் தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டதால், தாலிபான்களுக்குப் பின்னடைவு ஏற்பட்டது. அவர்கள் காபூலைக் காலிசெய்துவிட்டு பத்தானியர்கள் அதிகமுள்ள மலைகளில் போய் பதுங்கிக் கொண்டனர். தாலிபான்கள் காபூலைக் காலிசெய்யும் செய்தி அறிந்ததும், வடக்குக் கூட்டணியானது காபூலைக் கைப்பற்றிக் கொண்டது. அப்போது அமெரிக்கா வடக்குக் கூட்டணியை ஆதரித்தது. அதாவது, 1996–களில் வடக்குக் கூட்டணியை ஒழிக்க தாலிபான்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்ட அமெரிக்கா, 2001–ல் தாலிபான்களை ஒழிக்க வடக்குக் கூட்டணியுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டது.
ஆனாலும் வடக்குக் கூட்டணியை முழுமையாக அமெரிக்கா நம்பவில்லை. ஏனெனில், அந்நாட்டில் பத்தானிய இனப்பிரிவைச் சேர்ந்த இஸ்லாமிய சன்னி மதப்பிரிவு மக்கள்தான் பெரும்பான்மையாகும். இக்கூட்டணியோ தாஜிக், உஸ்பெக் ஆகிய சிறுபான்மை இனத்தவர்களின் சேர்க்கையாக இருந்ததால், இவர்களின் ஆட்சி நிலையானதாக இருக்காது என்பதே இதற்குக் காரணமாகும்.
சி + சி5
எனவே, தனது மறுகாலனியக் கொள்கைக்கு ஏற்ப ஆப்கானில் ஒரு இடைக்கால அரசை அமைக்க அமெரிக்கா முயன்றது. அதன்படி, அப்போதைய அமெரிக்க அதிபர் புஷ், பிரிட்டன் பிரதமர் டோனி பிளேயர், பாகிஸ்தான் அதிபர் முஷாரப் ஆகியோரின் திட்டப்படி ஜெர்மனியில் கூட்டம் நடத்தி, பத்தானிய இனத்தைச் சேர்ந்த ஹமீது கர்சாய் என்பவர் தலைமையில் 2001-ல் ஒரு கைப்பாவை அரசை அமெரிக்கா அமைத்தது. பின்னர் ஜனநாயகத்தை நிலைநாட்ட ஒரு தேர்தல் நாடகம் நடத்தப்பட்டு, 2004 மற்றும் 2009-இல் நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்று, கர்சாய் அதிபரானார். அதன் பின்னரும் அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளின் படைகள் ஆப்கானிலிருந்து வெளியேறாமல் அங்கேயேதான் இருந்து வந்தன. அதன் பின்னர், தாலிபான்களின் அச்சுறுத்தல்களுக்கு நடுவே மிகக் குறைவான வாக்குப்பதிவுடன் நடந்த 2014 இத்தேர்தலில் அஷ்ரப் கானி வெற்றி பெற்று அதிபரானார். பின்னர் 2019-இல் நடைபெற்ற தேர்தலிலும் இரண்டாம் முறையாக அவரே வெற்றி பெற்று அதிபராக நீடிக்கிறார்.
ஆப்கானில் தாலிபான்களின் வளர்ச்சியும், அமெரிக்கா ‘பின்வாங்குவதன்’ பின்னணியும்!
அமெரிக்கா தனது படைகளைத் திரும்பப்பெறும் அறிவிப்பை இப்போது வெளியிட்டிருப்பது ஒன்றும் வியப்பான விடயமல்ல. இது, அனைவரும் எதிர்பார்த்த ஒன்றுதான். இதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று, கடந்த 20 ஆண்டுகளில் தாலிபான்களின் வளர்ச்சியாகும்.
தாலிபான்களின் வளர்ச்சிக்கு முக்கியமான மூலாதாரம் கஞ்சா (அபினி) உற்பத்தி. 2001–இல் பின்னடைவுக்குப்பின் தாலிபான் யுத்தப் பிரபுக்கள் சில கிராமப்புறப் பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டு, அங்கு அபினி பயிரிடுவதைச் செய்து வந்தனர். 2003–இல் 3,600 டன்கள் அளவுக்கு நடைபெற்ற அபினி உற்பத்தியானது, 2007–இல் 8,200 டன்களாக உயர்ந்தது. இது, உலகின் மொத்த சட்டவிரோத அபினி உற்பத்தியில் 93 சதவீதமாகும். அக்காலத்திலேயே தாலிபான்கள், படிப்படியாக கிராமப்புறங்களைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவரத் தொடங்கினர்.
ஆப்கானில் தனது கைப்பாவையான கர்சாய் அரசின் பிடி தளர்ந்து வருவதைக் கண்டு அஞ்சிய அப்போதைய அமெரிக்க அதிபர் புஷ், தாலிபான்களைக் கட்டுப்படுத்த, 7 பில்லியன் டாலர்களைச் செலவு செய்து “போதை மருத்து ஒழிப்புப் போர்” என்ற பெயரில் ஒரு தாக்குலை நடத்தினார். அதன் பின்னர் 2009–ல் ஒபாமா நிர்வாகம், 1,00,000 துருப்புகளை அங்கே குவித்தது. தாலிபான்களைக் கட்டுப்படுத்துவதில் ஓரளவு வெற்றியடைந்தாலும், அபினி பயிரிடுவதை அமெரிக்காவால் அழிக்க முடியவில்லை. மீண்டும் 2014–ம் ஆண்டு தாலிபான்கள் ஆப்கான் அரசுப் படைகள் மீது தாக்குதல் தொடுக்கத் தொடங்கினர். 2017–ல் அபினி சாகுபடி 9,000 டன்களாக உயர்ந்தது.
தற்போது பெரும்பாலான கிராமப்புறங்களைத் தாலிபான்கள் தங்கள் பிடியில் கொண்டுவந்து விட்டனர். கடந்த பிப்ரவரியிலிருந்து, அஷ்ரப் கானி அரசின் செல்வாக்கிலுள்ள கேந்திரமான கந்தகார், குண்டூஸ், ஹெலமந்த், பக்லான் ஆகிய பகுதிகளை அச்சுறுத்தி வருகின்றனர். பல பகுதிகளில் ஆப்கான் போலீசு மற்றும் இராணுவத்தின் பிடி தளர்ந்து வருகிறது. இதேநிலை நீடித்தால் விரைவில் அமெரிக்க–ஆப்கான் படைகளுக்கும் தாலிபான்களுக்கும் போர் மூளும் என்பதை அமெரிக்கா நன்கு உணர்ந்துள்ளது.
ஏற்கெனவே ஆப்கான் போரில் மட்டும் ஏறத்தாழ 2 டிரில்லியன் டாலர் (2 லட்சம் கோடி டாலர்) அளவுக்கு அமெரிக்கா செலவு செய்துள்ளது. மேலும் 2,500–க்கும் மேற்பட்ட படைவீரர்களை அது இழந்துள்ளது. 57 சதவீத அமெரிக்க மக்கள் ஆப்கான் போரை எதிர்ப்பதாகக் கூறுகிறது, 2007–ல் நடத்தப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பு. எனவே, மேலும் மேலும் ஆப்கான் போருக்காக அதிக செலவுகள் செய்தால், அது அமெரிக்க மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்பதை அமெரிக்க அரசு உணர்ந்துள்ளது. அதனால், ஆப்கானிலிருந்து துருப்புகளைத் திரும்பப் பெறுவது, போரை முடிவுக்குக் கொண்டுவருவது ஆகியன பற்றி நீண்ட காலமாகவே அமெரிக்கா மற்றும் நேட்டோ கூட்டணி நாடுகளின் அரசுகள் விவாதித்து வந்தன.
இப்பின்னணியில், டிரம்ப் அதிபராக இருந்தபோதே, 2019 பிப்ரவரியில் தாலிபான்களும் அமெரிக்காவும் கத்தார் நாட்டின் தோஹா நகரில் கூடி ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொண்டனர். இதன்படி, அமெரிக்கா ஆப்கானிலிருந்து வெளியேறுவதாக முடிவானது. அந்த ஒப்பந்தத்தைத்தான் பைடன் இப்போது செயல்படுத்துகிறார். இனி படிப்படியாக ஆப்கான், தாலிபான்களின் பிடியில் செல்லும் என்பது உறுதியாகிவிட்டது.
“பயங்கரவாதத்தை எதிர்த்த உலகப் போர்” என்றும், “ஆப்கானில் நீடித்த சுதந்திரத்தை நிலைநாட்டுவதற்கான போர்” என்றும் அமெரிக்காவால் சித்தரிக்கப்பட்ட இந்தப் போர், அதன் நோக்கங்களில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை என முதலாளித்துவ பத்திரிக்கையாளர்களே கேலி செய்கின்றனர். ஆனால் பைடனோ, “அமெரிக்கா தான் வாக்களித்த கடமைகளையெல்லாம் நிறைவேற்றிவிட்டதாகவும், அல்கொய்தாவை அழித்துவிட்டதாகவும்” கூச்சமின்றிப் பேசுகிறார்.
மதவெறி – பயங்கரவாத யுத்தப் பிரபுக்களான தாலிபான்கள் மீண்டும் ஆப்கானை ஆளப்போகின்றனர். இதுதான் அமெரிக்கா மீட்டெடுத்த ‘ஜனநாயகம்’. தனது மேலாதிக்க நோக்கங்களுக்கு அமெரிக்கா நடத்திய இந்த ஆக்கிரமிப்புப் போரில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள் கொல்லப்பட்டனர். காயமுற்றவர்களும் உடைமையிழந்தவர்களும் உடல் ஊனமானவர்களும் அகதிகளானவர்களும் எண்ணிலடங்காதோர்.
மத்திய ஆசியப் பகுதியில் அமெரிக்காவின் கேந்திரமான தளம் ஆப்கான்!
ஆப்கானிலிருந்து தன் படைகளைத் திரும்பப் பெறுவது, சீனாவின் பக்கம் பாகிஸ்தான் இருப்பது – ஆகிய இவையெல்லாம் மத்திய ஆசியப் பகுதியில் அமெரிக்காவுக்கு மிகப்பெரிய பின்னடைவு என்றும், அதன் உலக மேலாதிக்கத்திற்கு மிகப்பெரிய சரிவு என்றும் பலராலும் கருதப்படுகிறது. ஒருபுறம் அது உண்மைதான் என்ற போதிலும், இன்னொருபுறம் அவ்வளவு எளிதில் ஆப்கானை அமெரிக்கா விட்டுவிடாது. “ஆசியா ஒரு விமானம் என்றால், அதில் விமான ஓட்டியின் அறைதான் ஆப்கான்” என்றது, அப்போதைய அமெரிக்க அதிபர் புஷ் நிர்வாகம். இப்போதும் அமெரிக்கா ஆப்கானை அப்படித்தான் பார்க்கிறது. சுருக்கமாகச் சொன்னால், 20 ஆண்டுகளாகத் தொடரும் மிக நீண்ட போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான நோக்கம் எதுவும் அமெரிக்காவுக்கு இல்லை. அதை வேறு வழிகளில் தொடர்வதற்கு மட்டுமே திட்டமிட்டுள்ளது.
உலக அரங்கில் தனக்குப் போட்டியாக வளர்ந்துவரும் சீனாவையும், ரசியா, ஈரான் ஆகிய நாடுகளையும் கட்டுப்படுத்த ஆப்கானை ஒரு முக்கியமான தளமாகவே அமெரிக்கா கருதுகிறது. “ஆப்கானில் அமெரிக்கா இருப்பதற்கு மூன்று நோக்கங்கள் உள்ளன. அதில் முக்கியமான ஒன்று, சீனாவைக் கட்டுப்படுத்துவதே” என்று அமெரிக்காவின் முன்னாள் இராணுவ அதிகாரி லாரன்ஸ் வில்கர்சன் 2018–இல் கூறியுள்ளார். அதிபர் பைடன் பதவியேற்றதும் பெண்டகன் எனும் அமெரிக்க இராணுவத் தலைமையகத்துக்கு வந்தபோது, “சீனாதான் 21–ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய சவால். சீனாவின் சவாலைச் சந்திப்போம். எதிர்காலத்துக்கான போட்டாபோட்டியில் வெற்றி பெறுவோம்” என்று வெளிப்படையாகவே அறிவித்துள்ளார்.
சீனாவுக்கும் ஆப்கானுக்கும், பாகிஸ்தானுக்கும் எல்லைப் பகுதியாக உள்ள ஷின்ஜியாங் (Xinjiang) என்ற சீனாவின் தன்னாட்சி பெற்ற மாநிலமானது, உய்குர் சுயாட்சிப் பிரதேசம் என்று குறிப்பிடப்படுகிறது. இப்பகுதியிலுள்ள துருக்கி மொழி பேசும் தேசிய இனச் சிறுபான்மையினரான முஸ்லிம்களே உய்குர்கள் என்றழைக்கப்படுகின்றனர். உய்குர் முஸ்லிம்கள், இப்பிராந்தியத்தை “கிழக்கு துர்கிஸ்தான்” என்று குறிப்பிடுகின்றனர். தற்போது உய்குர் பிரதேசத்தில், துர்கிஸ்தான் இஸ்லாமிய கட்சியும் (TIP) இன்னும் சில ஆயுதக் குழுக்களும் தனிநாடு கோரிக்கையுடன் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இக்கட்சியும் இதர ஆயுதக் குழுக்களும் ஆப்கானில் பயிற்சி பெற்றதோடு, பயங்கரவாதி பின்லேடன் தலைமையிலான குழுவினர் மூலம் நிதியும் ஆயுதங்களும் பெற்றுள்ளன. 2009-லிருந்து தொடர்ச்சியாக உய்குர் பிராந்தியத்திலும், சீனாவிலும், சீனத் தூதரகம் அமைந்துள்ள நாடுகளிலும் தொடர் குண்டுவெடிப்புகளை நடத்தி வந்துள்ளன. சிரியாவில் அமெரிக்கா தூண்டிவிட்ட ஆட்சி மாற்றத்திற்கான போரில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் உய்குர் பயங்கரவாதிகளும் பங்கேற்றுள்ளனர்.
அமெரிக்க – சீன மோதல் தீவிரமடைந்துள்ள தற்போதைய சூழலில், உய்குர் முஸ்லிம் சிறுபான்மையினரின் மனித உரிமைகளைப் பறித்ததாகக் குற்றம்சாட்டி மூன்று சீன அரசு அதிகாரிகளைத் தனது நாட்டுக்குள்ள நுழையக் கூடாதென அமெரிக்க வல்லரசு தடை விதித்துள்ளது. மறுபுறம், “வெளிநாட்டில் இயங்கும் கிழக்கு துர்கிஸ்தான் அரசாங்கம்” என்ற அமைப்பும், “கிழக்கு துர்கிஸ்தான் தேசிய விழித்தெழும் இயக்கம்” என்ற அமைப்பும் அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் இயங்கி வருகின்றன.
சீனாவின் புதிய பட்டுப்பாதைத் திட்டத்தின்படி (BRI), மேற்காசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் முக்கியப் பகுதியாக ஷின்ஜியாங் மாநிலம் அமைந்துள்ளது. எனவே, உய்கூர் பிரச்சினையைப் பயன்படுத்தி, அங்குள்ள இஸ்லாமிய ஆயுதக் குழுக்களை வளர்த்துவிட்டு சீனாவுக்குத் தீராத தொல்லைகளையும் நெருக்கடியையும் உருவாக்க வேண்டும் என்று ஒபாமாவின் ஆட்சிக் காலத்திலிருந்தே அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது. அமெரிக்காவின் இத்திட்டத்திற்கு ஆப்கான்தான் கேந்திரமான தளமாக இருக்கப் போகிறது.
மேலும், கடந்த 20 ஆண்டுகளில் ஆப்கானில் அமெரிக்கா ஒரு பெரிய புலனாய்வு வலையமைப்பை நிறுவியுள்ளது. ஆப்கானின் பாதுகாப்புப் படையில் 17,000–க்கும் மேற்பட்டோரை “பாதுகாப்பு ஒப்பந்ததாரர்கள்” எனும் பெயரில் அமெரிக்கா நுழைத்துள்ளது. அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஆயுதந்தாங்கியவர்கள். படைகளைத் திரும்பப்பெறும் பைடனின் திட்டத்தில் இந்தப் “பாதுகாப்பு ஒப்பந்ததாரர்கள்” பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
மேலும், “ஆப்கானில் நாம் இராணுவ ரீதியாக ஈடுபாடு கொண்டிருக்க மாட்டோம் என்றாலும், அரசு தந்திர, மனிதாபிமான பணிகள் தொடரும். ஆப்கானிஸ்தான் அரசுக்குத் தொடர்ந்து ஆதரவு அளிப்போம்”, “ஆப்கானிஸ்தான் மற்றும் அதன் பிராந்தியத்தில் பயங்கரவாத அபாயத்தைத் தொடர்ந்து நாங்கள் கண்காணிப்போம், அதற்கு எதிராக தொடர்ந்து சண்டையிடுவோம்” என்று கூறியுள்ளார் பைடன். “ஆப்கானை அமெரிக்கா கைவிடுவது என்பது, அதோடு கொண்டிருக்கும் தொடர்பின் வடிவத்தை மாற்றுவதுதான்” என்று கூறியுள்ளார் ஆப்கானில் நல்லிணக்கத்துக்கான அமெரிக்க சிறப்பு பிரதிநிதியான, சால்மே கலீல்சாத்.
படைகளைத் திரும்பப் பெறும் பைடனின் அறிவிப்புக்குப் பின்னர், அமெரிக்க இராணுவ தளபதி கென்னத் பிராங்க்ளின் மெக்கென்சி, “அமெரிக்கா அப்பகுதியில் தனது இராணுவ செல்வாக்கை தொடர்ந்து பராமரிக்கும். மேலும், ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல்களை நடத்தும் திறனையும் உறுதி செய்யும்” என்று கூறியுள்ளார்.
இவற்றின் மூலம் ஆப்கானில் அமையவுள்ள அரசை அமெரிக்கா மறைமுகமாகக் கட்டுப்படுத்தவே முயலும். தனது ஆதிக்கத்தைத் தொடரவே முயலும். நேரடியாகப் படைகளைக் குவித்து, ஆக்கிரமிப்பைச் செய்து ஒரு நாட்டைக் கட்டுப்படுத்துவதைக் காட்டிலும், இவ்வகையான மறைமுகமான நடவடிக்கைகள் அமெரிக்காவுக்கு – சர்வதேச ரீதியில் அவப்பெயர் இல்லை என்பதால் – சாதகமானதே ஆகும்.
இன்னொருபுறம், சீனாவோ ஆப்கானுடன் உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள 2017–இல் இருந்து முயன்று வருகிறது. அமெரிக்கப் படைகள் வெளியேறிய பின்னர், ஆப்கானில் தாலிபான்களையும் அஷ்ரப் கனியையும் உள்ளடக்கியதொரு ‘ஜனநாயக’ அரசை ஏற்படுத்தவும் முயற்சிக்கிறது. “ஆப்கானின் வளர்ச்சிக்கு ஒத்துழைக்க வேண்டும்” என 2020–ஆம் ஆண்டு நடந்த ஷாங்காய் கூட்டுறவு (SCO) உச்சி மாநாட்டில் பேசியுள்ளார் சீன அதிபர் ஜி ஜின்பிங். தன்னுடைய புதிய பட்டுப்பாதைத் திட்டத்தில் ஆப்கானை இணைத்துக் கொள்ளவும் சீனா முயற்சிக்கிறது.
சீனாவின் ஷின் ஜியாங் பகுதி
இதுவொருபுறமிருக்க, அமெரிக்காவின் திட்டங்களை முறியடிக்கும் நோக்கத்துடன் மத்திய ஆசியாவின் ஐந்து நாடுகளுடன் சீனா ஒரு கூட்டணியைக் கட்டியமைத்துள்ளது. அது சி+சி5 (C+C5) என்று குறிப்பிடப்படுகிறது. (சீனா + காசக்ஸ்தான், கிர்கிஸ்தான், தாஜிகிஸ்தான், துருக்மேனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 5 மத்திய ஆசிய நாடுகளின் கூட்டணி) கடந்த மே 12 அன்று இந்தக் கூட்டணியின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில், மத்திய ஆசியப் பிராந்திய நாடுகளின் பாதுகாப்பு, ஒத்துழைப்பு, பயங்கரவாதத்தை முறியடிப்பது, புதிய பட்டுப்பாதைத் திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள் முதலானவற்றைச் செயல்படுத்துவதற்கான திட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, அமெரிக்கப் படைவிலக்க அறிவிப்புக்குப் பின்னர் எழுந்துள்ள புதிய நிலைமைகளையொட்டி கடந்த ஜூன் 5-ஆம் தேதியன்று ஆப்கான், சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் அரசுகள் இணையவழி கூட்டத்தையும் நடத்தியுள்ளன.
புதிய போர் அபாயம் ஏற்படுமா ?
ஏற்கெனவே ஆசிய – பசிபிக் பிராந்தியத்தில் தனது செல்வாக்கை விரிவுபடுத்த சீனா முயற்சித்து வருவதற்கு எதிராக இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளை இணைத்துக் கொண்டு “குவாட்” கூட்டணியை அமெரிக்கா அமைத்துள்ளது. இப்போது மத்திய ஆசியப் பகுதியிலும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளதால், இக்கூட்டணியானது சீனாவுக்கு எதிரான போரில் இறங்கவும் வாய்ப்புள்ளது. இப்போரானது, ஆப்கான், பாகிஸ்தான், ஈரான், சீனா, இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளும், மத்திய ஆசிய நாடுகளும் ஈடுபடக்கூடிய மிகப் பெரிய போராக மாறவும் வாய்ப்புள்ளது.
அமெரிக்காவின் விசுவாசக் கூட்டாளியாகவும், தெற்காசியாவில் பிராந்திய மேலாதிக்கம் செய்யும் பெரிய நாடாகவும் உள்ள இந்தியா, ஆப்கானில் அமெரிக்காவின் பொம்மை அரசு அமைந்த பிறகு, அமெரிக்காவின் தயவில் ஆப்கானில் மறுசீரமைப்பு – கட்டுமானப் பணிகளைச் செய்யத் தொடங்கியது. இதன் மூலம் ஒருபுறம் இந்தியத் தரகு முதலாளித்துவ நிறுவனங்களுக்கு ஆதாயம் கிடைக்கும், மறுபுறம் உலக அரங்கில் மனிதாபிமான முகமும் இந்தியாவுக்குக் கிடைக்கும் என்று கருதியது.
ஆப்கானில், தாலிபான்களை வீழ்த்தி, அந்நாட்டை மீண்டெழச் செய்யும் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுவதன் மூலம் தெற்காசியா மட்டுமின்றி, மத்திய ஆசியப் பகுதியிலும் தனது வல்லரசு பராக்கிரமத்தையும் செல்வாக்கையும் உயர்த்திக் கொள்ள முடியும் என்ற உத்தியுடன் தனது அரசு தந்திரக் கொள்கையை அமைத்துக் கொண்டது. ஆனால், இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களுக்குப் பழிதீர்க்க இந்தியத் தூதரகத்தின் மீதும், இந்தியக் கட்டுமானத் தொழிலாளர்கள் மீதும் தாலிபான்கள் தொடர்ச்சியாகத் தாக்குதல்களை நடத்தி மோடி அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
அமெரிக்காவின் தயவில் பெயரளவிலான ஒரு அரசு ஆப்கானில் நீடிக்கும் வரை, உதவி என்ற பெயரில் இந்தியாவும் ஆப்கானில் தலையிடுவதற்கு ஒரு வாய்ப்பாக இருந்தது. ஆனால், இப்போது அமெரிக்கப் படைகள் வெளியேறுவதால், அமெரிக்காவின் தயவிலான அரசும் நீடிக்க இயலாமல் போய், தாலிபான்களின் கை மேலோங்குவதால், இந்திய அரசின் நோக்கங்கள் தோற்றுப்போய் புஸ்வாணமாகிவிட்டன. இதனால்தான் அமெரிக்காவுக்கும் தாலிபான்களுக்கும் இடையில் கடந்த பிப்ரவரி 2020-ல் ஒப்பந்தம் கையெழுத்தானதும், “இது தாலிபான்களுக்கும் பாகிஸ்தானுக்கும் கிடைத்த வெற்றி” என இந்திய அரசு சித்தரித்தது.
பைடனின் படைவிலக்க அறிவிப்புக்குப் பின்னர், ஆப்கானில் அனைத்து தரப்பினரும் போர் நிறுத்தத்தைச் செயல்படுத்துமாறு மோடி அரசின் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கோரியது. இல்லையேல், இது முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் சிக்கல்களை உருவாக்கும் என்று கவலை தெரிவித்தது.
ஏற்கெனவே இந்தியாவுக்கும் சீனாவுக்கும் மற்றும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையில் முறுகல் நிலை நீடிக்கிறது. இந்நிலையில் ஆப்கானிலிருந்து அமெரிக்கப் படை விலகலையொட்டி அங்கு தமது தரகு முதலாளிகளின் முதலீடுகளைத் தொடர்வது குறித்த பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான போட்டி உருவெடுத்துள்ளது. இப்பிரச்சினைகள் சுமுகமாகத் தீர்வதற்கான வாய்ப்பும் இல்லை. ஆப்கானிஸ்தானில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கும் பட்சத்தில், அது இந்தியாவுக்குச் சாதகமாக இருக்க வாய்ப்பு இல்லை.
மத்திய ஆசியாவில் சீனாவின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்த அமெரிக்கா ஒருபுறம் முயற்சிக்கும் வேளையில், தென்கிழக்கு ஆசியாவில் இந்தியாவுடன் “குவாட்” கூட்டணி அமைத்து போர் சூழலை உருவாக்கியுள்ளது. ஒருவேளை, அமெரிக்காவின் மத்திய ஆசியாவைக் கைப்பற்றும் போரிலோ, தென் கிழக்கு ஆசியாவில் சீனாவுக்கு எதிராக நடத்தப்படும் ‘குவாட்’ இராணுவ நடவடிக்கைகளிலோ இந்திய அரசு ஈடுபட்டால் அது புதைசேற்றில் இந்திய மக்களைத் தள்ளுவதாகவே போய் முடியும்.
தீரன்
உதவிய கட்டுரைகள் :
ஆப்கான் : மதவெறி – யுத்தப்பிரபுக்களின் காலடியில் – புதிய ஜனநாயகம், டிசம்பர் 1996.
ஆப்கான் போர் : புதைமணலில் சிக்கியது அமெரிக்க வல்லரசு, பகுதி 1, 2 – புதிய ஜனநாயகம், நவம்பர், டிசம்பர் 2001.
சேவா பாரதி அமைப்போடு திமுக-வின் அமைச்சர்கள் இருவர், எம்.எல்.ஏக்கள் கூட்டு சேர்ந்து கொரோனா வார்டு திறந்து வைத்ததையும், பாரத மாதாவுக்குப் பூஜை செய்ததையும் அவ்வளவு எளிதில் கடந்துவிட முடியாது.
திமுக-வுக்கு வாக்கு கேட்ட முற்போக்கு பேசும் தோழர்கள், யூட்யூப் சேனல்கள், இயக்கங்கள் முதலானவை சேவா பாரதியின் அழைப்பின் பெயரில் திமுக-வினர் கலந்து கொண்டுள்ளனர் என்று normalise செய்வதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில், சேவா பாரதியின் வரலாறு அப்படிப்பட்டது.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மக்கள் சேவைப் பிரிவுதான் சேவா பாரதி. அவர்களின் அகராதியில் ‘சேவா’ என்பது வெறும் சேவை கிடையாது. ’சேவா’ என்றால் சாதியால் பிரிந்திருக்கும் இந்துக்களை ஒரு அணியில் திரட்டுவதற்கும், இந்துக்கள் அல்லாத கிறித்துவ, இஸ்லாமியர்களை மீண்டும் தாய் மதம் திருப்புவதற்கும் மேற்கொள்ளப்படும் பணியாகும்.
2001 குஜராத் பூகம்பத்தின் போது, வெளிநாட்டு நிதியைப் பெற்றுக் கொண்டு உயர்சாதி இந்துக்களுக்கு மட்டும் சேவை செய்த அமைப்பு சேவா பாரதி. மற்ற அமைப்புகள் பணியாற்றுவதைத் தடுத்து, தங்களுக்கு அளிக்கப்பட்ட நன்கொடைகளை வைத்து இந்துக் கோயில்களைக் கட்டியிருக்கிறது இந்த அமைப்பு.
அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து பழங்குடிச் சமூகங்களைச் சேர்ந்த ஏறத்தாழ 31 சிறுமிகளை குஜராத், ராஜஸ்தான் முதலான மாநிலங்களுக்குக் கடத்தி, அவர்களை இந்துக்களாக மாற்றுவதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறது சேவா பாரதி. இது குறித்து அவுட்லுக் இதழில் 2016-ஆம் ஆண்டு விரிவான கட்டுரை ஒன்று வெளிவந்தது.
சேவா பாரதியின் சர்வதேச அமைப்பான சேவா இண்டர்நேஷனல் அமைப்புக்கு குஜராத் பூகம்பத்தின் போது, பிரிட்டிஷ் மக்கள் அளித்த நிதி, 2002 குஜராத் படுகொலையின் போது முஸ்லிம்களைக் கொல்வதற்காகப் பயன்படுத்தப்பட்டதாக அப்போதைய பிரிட்டிஷ் தொலைக்காட்சி நிறுவனம் சேனல் 4 செய்தி வெளியிட்டது.
கடந்த ஆண்டு, சாத்தாங்குளம் லாக்கப் மரணத்தில் சேவா பாரதி அமைப்பு ஊடுறுவிய Friends of Police குழுவுக்குத் தொடர்பு இருந்தது. தமிழ்நாடு முழுவதும், குறிப்பாக கோவை, திருப்பூர் முதலான கொங்கு பகுதிகளில் காவல் நிலையங்களிலும், சட்டமன்ற உறுப்பினர்களைச் சுற்றியுள்ளவர்களிலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சேவா பாரதி தொண்டர்களைப் பார்க்க முடியும்.
இப்படியான வரலாற்றைக் கொண்டிருக்கும் சேவா பாரதியோடு மேடையைப் பகிர்ந்து கொண்டிருக்கிறது திமுக. மேலும், Heartfulness என்ற மற்றொரு தொண்டு நிறுவனமும் இதில் இடம்பெற்றிருக்கிறது. இது ஸ்ரீ ராமசந்திரா மிஷன் என்ற பெயரில் செயல்படும் கார்ப்பரேட் சாமியார் கமலேஷ் படேலின் நிறுவனம். கமலேஷ் படேலின் பணிகளைப் பிரதமர் மோடி தொடர்ந்து பாராட்டி வருகிறார். சர்வதேச அளவில் யோகாவை பரப்புவதற்காக இந்த அமைப்பின் பணிகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முன்னிறுத்தியிருக்கிறார்.
This slideshow requires JavaScript.
Heartfulness அமைப்பின் கொரோனா உதவிச் சேவையை சென்னையில் திறந்து வைத்திருக்கிறார் திமுக-வின் மாநில இளைஞரணிச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின். எதிர்காலத்தில் இந்த அமைப்பு மற்றொரு ஈஷாவாக உருவாகும் போது, அப்போது இவை பயனற்றதாக இருக்கும்.
திமுக அமைச்சர்கள் பங்குபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி, தனது பதவியில் இருந்து விலகிய முன்னாள் மேகாலயா ஆளுநர் சண்முகநாதன், பிஜேபி துணைத் தலைவர் அண்ணாமலை, தமிழக ஆர்.எஸ்.எஸ் மூத்த பொறுப்புதாரிகள் முதலானோர் பங்கேற்றுள்ளனர்.
வாக்கு அரசியலுக்காக சிறுபான்மையினரிடம் பாசிச பாஜக பூச்சாண்டி காட்டியும், ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி எதிர்ப்பு அரசியலை முன்வைக்கும் இயக்கங்களின் போராட்டங்களை அறுவடை செய்தும் ஆட்சிக்கு வந்திருக்கும் திமுக, இந்துப் பெரும்பான்மைவாதத்தின் திராவிட முகமாக மாறுவதற்கான ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது.
எப்படி தமிழ்நாட்டில் தலித்துகளுக்கு எதிரான சாதிவெறி, திராவிடக் கட்சிகளால் வாக்கு வங்கிக்காக கண்டிக்க இயலாத அளவுக்கு normalise ஆகியிருக்கின்றதோ, அதே போல இந்துப் பெரும்பான்மைவாதமும் மாறப் போகிறது.
கொள்ளை நோய்களுக்கு முதலாளித்துவம் எப்படி காரணமாகிறது?
இதுவரை தற்கால முதலாளித்துவ உற்பத்தி ஒழுங்கமைக்கப்பட்டுள்ள முறையினால் எப்படி மனிதர்களை தொற்றும் புதுப்புது வைரஸ்கள் உருவாகின்றன, பரிணாமமடைகின்றன என்பதையும் நவீன விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள பெருநிறுவனங்களின் இலாபவெறியால், எங்ஙனம் புதிய தொற்று வைரஸ்கள் உருவாகின்றன என்பதையும் பார்த்தோம். மேலும், அவை உலகளாவிய கொள்ளை நோயாக உருவாக இந்த உலகளாவிய முதலாளித்துவ உற்பத்திமுறையே (உற்பத்தி, வாணிபம் வலைப்பின்னல், வினியோகம்) எங்ஙனம் வாய்ப்பேற்படுத்திக் கொடுக்கின்றன என்பதையும் கவனித்தோம்.
ஆனால், எந்த தொற்றுகிருமிகளும் அவை தொற்ற ஏதுவான சமூகத்தை எதிர்கொள்ளாமல் கொள்ளைநோயாக உருவெடுப்பதில்லை. அப்படிப்பட்ட சமூகத்தை – ஊட்டச் சத்தற்ற, உடல்ரீதியிலும் மனரீதியிலும் பலவீனமான, பொதுச் சுகாதாரமற்ற, சமூக பாதுகாப்பற்ற மக்கள் சமூகத்தை – முதலாளித்துவம் எப்படி படைக்கின்றது என்பதை அதன் மூலம் கொள்ளைநோய்களுக்கு ம்க்கள் கொத்து கொத்தாக பலியாவதற்கு எப்படி காரணமாகின்றது என்பதையும் இனி பார்ப்போம்.
ஆரம்பகால முதலாளித்துவத்தில் மக்களின் உடல்நிலை எவ்வாறு நலிவுறுகிறது, அதற்கு முதலாளித்துவத்தின் உற்பத்திமுறையே எப்படி காரணமாக இருக்கிறது என்பதை ஏங்கெல்ஸ் தனது இங்கிலாந்தில் தொழிலாளர் வர்க்கத்தின் நிலை என்ற புத்தகத்தில் விளக்குகிறார்.
“… ஆனால் சமூகமானது பல நூற்றுக்கணக்கான பாட்டாளிகளை இத்தகைய நிலையில் இருத்திவைக்கும்போது, அவர்கள் தவிர்க்கவியலாமல் மிகவும் இளமையிலும், இயற்கைக்கு மாறான முறையிலும் மரணங்களைச் சந்திக்க நேரிடுகிறது. இது, வன்முறையால் ஒரு துப்பாக்கிக் குண்டுக்கு அல்லது வாள் வெட்டுக்குப் பலியாவதைப் போன்ற மரணமாகும். இது, ஆயிரக்கணக்கானோரின் வாழ்க்கைத் தேவைகளைப் பறித்துக் கொள்ளும்போது, அவர்களை வாழவே முடியாத நிலைகளின் கீழ் இருத்தி வைக்கும்போது – சட்டத்தின் இரும்புக் கரம் கொண்டு அவர்களைக் கட்டாயப்படுத்தும்போது, மரணங்கள் தவிர்க்கவியலாத விளைவு என்று உறுதியாகும் வரை அவர்களை இத்தகைய நிலைமையிலேயே தொடர்ந்து இருக்குமாறு வைத்திருக்கும்போது – இத்தகைய நிலைமைகளால் ஆயிரக்கணக்கில் பாதிக்கப்பட்டவர்கள் அழிந்தே போக வேண்டும். இருப்பினும், இத்தகைய நிலைமைகள் தொடர்ந்து நீடிக்க அனுமதிக்கப்படுகின்றன.
இத்தகைய செயலானது, நிச்சயமாகவே, ஒரு தனிநபரின் செயலைப் போன்றதொரு அப்பட்டமான கொலையே ஆகும். இது, பொய்வேடமிட்ட, தீங்கிழைக்கும் கொலை; இந்தக் கொலைக்கு எதிராக யாரும் தன்னைத் தற்காத்துக் கொள்ளவும் முடியாது. அது கொலையாகவும் தெரிவதில்லை. ஏனென்றால், எந்தவொரு மனிதனும் கொலைகாரனைப் பார்க்க முடிவதில்லை. (ஏனென்றால், ஒவ்வொருவரும் இந்தக் கொலைக்குப் பொறுப்பாகிறார்கள்; இருப்பினும் யாரும் இதற்குப் பொறுப்பாளியுமல்ல)… இது சமூகப் படுகொலையைப் பண்படையாளப் படுத்துகிறது…”26
“பெரிய நகரங்களில் மக்கள் தொகையைக் குவித்து மையப்படுத்துவதானது, ஒரு சாதகமற்ற சூழலைச் செயல்படுத்துகிறது. இங்கிலாந்தின் கிராமப்புறத்தில் நிலவும் காற்றைப் போல, லண்டன் நகரின் வளி மண்டலம் ஒருக்காலும் தூய்மையாகவும், ஆக்சிஜன் நிறைந்ததாகவும் இருக்க முடியாது. மூன்று முதல் நான்கு சதுர மைல் பரப்பளவில், நெருக்கமாக உயிர்வாழும் 25 லட்சம் ஜோடி நுரையீரல்களும், 2,50,000 எரிவிசை எந்திரங்களும் (ஆலைகளிலுள்ள டீசல் என்ஜின்கள், நிலக்கரி அடுப்புகள் மற்றும் மோட்டார் வாகனங்கள்) ஏராளமான ஆக்சிஜனை உட்கிரகிக்கின்றன. இதனால் ஆக்சிஜன் சிரமத்துடன்தான் மாற்றீடு செய்யப்படுகிறது. ஏனென்றால், நகரங்களைக் கட்டியமைக்கும் முறையானது, காற்றோட்டத்திற்கு இடையூறாக இருக்கிறது.
சுவாசத்தாலும், ஆலைகளின் எரிவிசை எந்திரங்களாலும் கார்போனிக் அமில வாயு விளைவிக்கப்படுகிறது. அதன் ஈர்ப்பு விசையின் எடையால் (Specific Gravity) இந்த வாயு தெருக்களில் தங்கி விடுகிறது. பிரதான காற்றின் ஓட்டமானது நகரத்துக் கட்டிடங்களின் கூரைகளுக்கு மேலாகச் செல்கிறது. இதனால், நகரங்களில் வாழ்வோரின் நுரையீரலானது, போதிய அளவுக்கு ஆக்சிஜனைப் பெறத் தவறி விடுகிறது. இதன் விளைவாக, குறைந்த உயிர்ச்சக்தியும், மன ரீதியாக – உடல் ரீதியாகக் களைப்பும் ஏற்படுகிறது.
இந்தக் காரணத்தினால் சுதந்திரமான, இயல்பான சூழலில் வாழும் கிராமப்புற மக்கள்தொகையை விட குறைவாகவே, நகரங்களில் வாழ்வோர் மிகக் கடுமையான (acute) நோய்க்கும், குறிப்பாக அழற்சி (inflammatory) நோய்க்கும் ஆளாகின்றனர். ஆனால், நகர்ப்புற மக்கள் நாள்பட்ட நோயினால் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். பெருநகரங்களில் வாழ்க்கையானது, தன்னுள்ளேயே, உடல் நலத்திற்குக் கேடு விளைப்பதைக் கொண்டிருக்கிறது என்றால், தொழிலாளி வர்க்கத்தினரின் குடியிருப்புகளில் நிலவும் தீங்கு விளைவிக்கும் அசாதாரணமான சுற்றுச்சூழலின் தாக்கமானது, இன்னும் எவ்வளவு பெரியதாக இருக்கும்? அங்கே, நாம் ஏற்கெனவே பார்த்ததைப் போல அனைத்துமே இணைந்து காற்றை நஞ்சாக்கிக் கொண்டிருக்கின்றன.”27.
இதன் பிறகு டைபஸ், காலரா போன்ற கொள்ளைநோய்கள் உருவாக கூடிய இடங்களாக தொழிலாளர்களின் குடியிருப்புகள் எப்படி உள்ளன; எங்ஙனம் தொழிலாளர்கள் அவற்றுக்கு பலியாகின்றனர் என்பதை விளக்கிச் செல்கிறார். ஏங்கெல்ஸின் கூற்று இன்றைக்கு அப்படியே பொருந்தாவிட்டாலும் (பின் தங்கிய ஏழை நாடுகளுக்கு பொருந்தும்), முதலாளித்துவ சமூகத்தில் தொழிலாளர்களின் நிலைமை குறிப்பாக வாழ்நிலைமை எங்ஙனம் அவர்களை பலவித நோய்களுக்கும், கொள்ளை நோய்களுக்கும் பலியாகுபவர்களாக ஆக்குகிறது என்பதை இன்றும் பொருத்திப்[ பார்த்து புரிந்துகொள்ள முடியும்.
குறிப்பாக, கோவிட்-19 போன்ற கொள்ளை நோயால் உடல்ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் அதிகம் பாதிக்கப்படுவது சாதாரண உழைக்கும் மக்கள்தான். அவர்கள் மீது முதலாளித்துவ வர்க்கம் நிகழ்த்தும் நேரடியான மற்றும் சமூகரீதியான கட்டுபாடற்ற சுரண்டல்கள் அவர்களை உடல்ரீதியில் பலவீனமானவர்களாக்குகிறது.
கொள்ளைநோயியலாளர்கள் (Epidemologist) இந்நோய்களை பற்றி பேசும்போது “அடிப்படை மறுவுற்பத்தி எண்” (basic reproduction number, Ro) பற்றி குறிப்பிடுகின்றனர். இந்த எண்ணை எப்படி கணக்கிடுகின்றனர் என்பதை முதலில் பார்க்கலாம். Ro-எனும் அடிப்படை மறுவுற்பத்தி எண்ணைக் கணக்கிட முதலில் சமூகத்தில் யாருக்கும் அந்நோய்க்கெதிராக நோயெதிர்ப்பு சக்தி இல்லை (நோயெதிர்ப்பு சக்தி எண் (A) பூஜியம்) என்று கருதிக் கொள்ளப்படுகிறது. அப்படியிருக்கும்போது, அந்நோய் எவ்வளவு மக்களை தாக்கும் என்பதை குறிக்கும் எண் தான் Ro.
அதாவது, Roஎன்பது நோயை ஏற்படுத்தும் வைரஸ் / நோய்க்கிருமியின் வீரியத்தை மறைமுகமாக வெளிப்படுத்துகிறது. இந்த Roஎண் ஒன்றுக்கும் குறைவாக இருந்தால் அந்நோயின் பரவல் சிறிது காலத்தில் நின்றுவிடும். Roஒன்றுக்கும் மேல் இருந்தால் அது மேலும் பரவ அதிக வாய்ப்பிருக்கிறது. கோவிட்-19 வைரஸுக்கு Roஎண் 2.0 முதல் 2.5 வரை இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
வேறுவகையில் பார்த்தால், ஒரு வைரஸ் எவ்வளவுதான் வீரியமிக்கதாக இருந்தாலும் ஒரு சமூகத்தின் நோயெதிர்ப்பு சக்தி எண் (A) அதிகமாக இருந்தால் அவ்வளவுக்கு கொள்ளைநோயின் பரவல் குறைவாக இருக்கும் என்பதை புரிந்துக்கொள்ளலாம். ஆக, நடைமுறையில் (நோயெதிர்ப்பையும் சேர்த்துக் கணக்கிடும்போது) இந்த R எண் ஒன்றுக்கு கீழ் இருக்குமா என்பது தொற்றும் வைரஸை பொருத்தது மட்டுமல்ல, அக்கொள்ளைநோயை எதிர்கொள்ளும் சமூகத்தின் ஆரோகியத்தையும் பொருத்ததாகும்.
ஒரு சமூகம் அனைத்து வகையிலும் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பது மக்களின் நிலையான வாழ்வாதாரம், சமூக பாதுகாப்பு, வேலை பாதுகாப்பு, பொது மருத்துவம் மற்றும் சுகாதாரம், மக்களின் ஊட்டச்சத்து நிலை இன்னும் பலவற்றைச் சார்ந்தது. ஆனால், கடந்த 30 ஆண்டுகளாக அமல்படுத்தப்பட்டு வரும் புதியதாராளவாதக் கொள்கைகள் என்பது மேலே கூறிய அனைத்திற்கும் எதிராக வேலைச் செய்கிறது.
மேலும், 2008ம் ஆண்டு ஏற்பட்ட நெருக்கடியில் இருந்து இன்னும் முழுமையாக மீள முடியாத முதலாளித்துவம் மக்கள் மீது சிக்கன நடவடிக்கைகளை ஏவியுள்ளது. வளர்ந்த ஏகாதிபத்திய நாடுகளில் கூட ஓய்வூதிய வெட்டு, சம்பளக் குறைப்பு, வேலைவாய்ப்பின்மை, சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கான நிதிகளை குறைப்பது போன்றவற்றை அமல்படுத்தியதன் விளைவாக அந்த சமூகத்தின் ஆரோக்கியம் வெகுவாக வீழ்த்தப்பட்டது. அதன்மூலம் அச்சமூகங்களில் இக்கொள்ளை நோய் பரவுவதற்கான தளத்தை முதலாளித்துவம்தான் விரிவுபடுத்தி கொடுத்துள்ளது.
உதாரணமாக, இத்தாலியை எடுத்துக் கொள்வோம். இத்தாலி நாட்டில் தேசிய மருத்துவ சேவை அமலில் இருந்து வந்தது; அதன்படி எல்லா இத்தாலிய குடிமக்களும், அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டினரும் தங்களுக்கான மருத்துவ சேவையை இலவசமாக பெற்று வந்தனர். 2000ம் ஆண்டில், உலக சுகாதார நிறுவனம் இத்தாலிய மருத்துவத் துறையை உலகிலேயே இரண்டாவது சிறந்த மருத்துவ சேவை (முதலாவது பிரான்ஸ்) என்று பாராட்டியது. ஆனால், 2012-ம் ஆண்டில் அரசுக்கு ஏற்பட்ட கடன் நெருக்கடியின் காரணமாக சிக்கன நடவடிக்கையை அறிவித்தது;
அதன்படி 2012-ல் இத்தாலிய அரசு மருத்துவத்திற்கான தனது நிதி ஒதுக்கீட்டை 90 கோடி யூரோ குறைத்தது, 2013-ல் மேலும் 180 கோடி யூரோ குறைத்தது, 2014-ல் மேலும் 200 கோடி யூரோ குறைத்தது. தனது குடிமக்களின் மருத்துவத்திற்கான நிதியை தொடர்ச்சியாக குறைத்துக்கொண்டு வந்துள்ளது. இதனால், 2015-ல் 1.22 கோடி இத்தாலியர்கள், அதாவது ஐந்தில் ஒரு பங்கு இத்தாலியர்கள், மருத்துவ வசதி அற்றவர்களாக்கப்பட்டனர்; மேலும் 78 லட்சம் இத்தாலியர்கள் தங்களது மொத்த சேமிப்பையும் மருத்துவத்திற்காக செலவிட வேண்டிய நிலையில் அல்லது கடன் வாங்க வேண்டிய நிலையில் அல்லது இரண்டையும் செய்யக் கூடிய நிலையில் உள்ளனர்28.
இவையல்லாமல் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட வேலையிழப்பு, சம்பள வெட்டு, வேலையின்மை, கடன் நெருக்கடி போன்றவற்றையும் நினைத்து பார்த்தால் அம்மக்களின் ஊட்டச்சத்து, ஆரோக்கியம் எந்தளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கும் என்பதை புரிந்துகொள்ளலாம். இந்நிலைமைகள் எல்லாவற்றையும் கணக்கில் கொண்டால், இத்தாலியில் கோவிட்-19 முதலாம் அலையில் ஏன் அவ்வளவு பெரிய இழப்பை ஏற்படுத்தியது என்பதை எளிதில் புரிந்துகொள்ள முடியும்.
ஸ்பெயின், கிரீஸ் போன்ற நாடுகளிலும் இதே நிலைதான். முதல் 20 சதவீத பணக்காரர்களின் வருமானம் மற்றும் கடைசி 20 சதவீத மக்களின் வருமானம் ஆகியவற்றுக்கு இடையிலான விகிதம் இத்தாலியில் 2007-ல் 5.5 ஆக இருந்தது 2016-ல் 6.5 ஆக உயர்ந்துள்ளது; ஸ்பெயினில் 2007-ல் 5.4 ஆக இருந்தது 2016-ல் 6.6 ஆக உயர்ந்துள்ளது; இதுவே கிரீஸில் 2007-ல் 5.3 ஆகவும் 2016-ல் 6.2 ஆகவும் உள்ளது. மேலும் இந்நாடுகளின் சிக்கன நடவடிக்கைகள் எவ்வாறு ஏற்றத்தாழ்வை அதிகப்படுத்திருக்கிறது என்பதை ஆக்ஸ்பாம் அறிக்கை (2018) விளக்குகிறது.
ஸ்பெயின் நாட்டின் மொ.உ.உ (2013-ல் இருந்து) பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு அதிகரித்த போதிலும் 1.3 கோடி அல்லது 28 சதவீத ஸ்பெயின் குடிமக்கள் வறுமையிலும் சமூக விலக்குக்கு ஆட்பட்ட நிலையிலும் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன29. ஸ்பெயினின் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் வறுமையில் உள்ளனர். மேலும் ஸ்பெயினின் பல ஆயிரக் கணக்கான மக்கள் வீடற்றவர்களாக உள்ளனர்; வீட்டுக்கான வாடகை இரண்டு மடங்கு அதிகரித்து செலவழிக்க கூடிய வருமானத்தை விட 40 சதவீதம் அதிகரித்துள்ளது. 2008 நெருக்கடிக்கு பின், பல ஐரோப்பிய நாடுகளின் நிலைமை இதுதான். அமெரிக்காவிலும் மக்களுக்கான மருத்துவ ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டுள்ளன; அங்கு கோவிட்-19னால் இறந்தவர்களில் பெரும்பான்மையோர் கருப்பினத்தவர்கள் தான் என்று பத்திரிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்தியா போன்ற பின் தங்கிய நாடுகளிலோ (வளர்ந்த நாடுகளில் இருப்பது போல) சமூக பாதுகாப்போ, வேலை பாதுகாப்போ இல்லை. இந்தியாவின் குழந்தைகளில் 40 முதல் 50 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைபாட்டில் உள்ளனர். மொத்த வேலைவாய்ப்பில் கிட்டதட்ட 80 சதவீதம் வேலைகளை முறைபடுத்தபடாத துறைகள் வழங்குவதால், அத்தொழிலாளர்கள் எவ்வித பாதுகாப்பும் அற்றவர்களாக உள்ளனர். ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட உடனே வெளிப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் போராட்டங்களையும் நெடும் பயணங்களையும் பற்றிய செய்திகளே பார்த்தாலே போதும், இது போன்ற கொள்ளைநோய்களால் நம் மக்கள் கொல்லப்படுவதற்கு ஏதுவாகத்தான் நம் நாட்டின் சமூக மற்றும் பொருளாதார அமைப்பு உள்ளதை நாம் புரிந்துகொள்ள முடியும்.
மேலும், முதலாளித்துவ உற்பத்திமுறை சுற்றுச்சூழலை மாசுபடுத்தி மக்களை நாட்பட்ட நோய்களுக்கு தள்ளிவிடுவதால், கொள்ளைநோய்களில் இறப்பது சுலபமாகிவிடுகிறது. கோவிட்-19-னால் இறப்பவர்கள் ஏற்கெனவே உடல்நல பிரச்சினை உள்ளவர்களும் அதனால் இயல்பாகவே வயதானவர்களும்தான் என்று செய்திகளில் கூறப்படுகிறது. ஆனால், அந்த உடல்நல குறைபாடு ஏன் மக்களுக்கு ஏற்படுகிறது என்பதைதான் நாம் புரிந்துகொள்ள வேண்டும். “நகரங்களில் வாழ்கின்ற மக்கள்… நாள்பட்ட கொடிய நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்” என்று கூறுகிறார் எங்கெல்ஸ்.
2003-ல் வெடித்த சார்ஸ் நோயின் இறப்பு விகிதம் (mortality) மற்றும் நீண்டகால பாதிப்பிற்கும் (morbidity) காற்று மாசு குறியீட்டிற்கும் உள்ள தொடர்பு பற்றிய ஆய்வுகள் வந்துள்ளன. காற்றுமாசு அதிகரிக்க அதிகரிக்க சார்ஸினால் ஏற்பட்ட இறப்பு விகிதமும் அதிகரித்தது. குறைந்த காற்றுமாசு குறியீடு உள்ள இடத்தில் உள்ள சார்ஸ் இறப்பு விகிதத்தை விட மத்தியதர காற்றுமாசு உள்ள இடத்தில் சார்ஸ் இறப்பு விகிதம் 84 சதவீதம் அதிகமாக இருந்தது. இதுவே அதிக காற்றுமாசு குறியீடு உள்ள இடத்தில் 200 சதவீதம் அதிகமாக சார்ஸ் இறப்பு விகிதம் இருந்தது30.
தற்போதை கோவிட்-19 கொள்ளை நோய்க்கு வட இத்தாலிய பகுதி ஏன் அதிகமாக ஆளாகியுள்ளது என்பதை இன்னொரு ஆய்வு தெரிவிக்கிறது. அதாவது, காற்றுமாசு அதிகரிக்க அதிகரிக்க நாள்பட்ட நோய்கள் அதிகமாவதும் அதனால் அதிக அளவில் கோவிட்-19 தொற்று ஏற்படுத்தியிருப்பதையும் எடொர்டோ–வும் அவரது குழுவும் எடுத்துக்காட்டுகிறது31. அமெரிக்காவை சேர்ந்த இன்னொரு அறிவியலாளர்கள் குழு32 , ஏற்கனவே காற்றுமாசினால் ஏற்பட்டுள்ள நோய்வாய்ப்பட்ட தன்மை கோவிட்-19ன் இறப்பு விகிதத்தை அதிகப்படுத்துவதாக கூறுகிறது. ஒரு கனமீட்டரில் ஒரு மைக்ரோ கிராம் (1 µg/m3) அளவிற்கு காற்றுமாசு அதிகரித்தால் கோவிட்-19ன் இறப்பு விகிதம் 15 சதவீதம் அதிகரிப்பதாக கணக்கிட்டுள்ளது.
000
ஆக, முதலாளித்துவ சமூக அமைப்பு மக்கள் மீது அனைத்து வழிகளிலும் தாக்குதல் தொடுத்துள்ளதன் ஒரு வெளிப்பாடே இக்கொள்ளைநோய் தாக்குதல். முதலாளித்துவத்தில் மக்களின் மேற்கூறிய நிலைமைகள் தான் தற்போதைய கொள்ளைநோயான கோவிட்-19ன் இறப்பு விகிதத்திற்கு காரணம் என்பதை இப்படித்தான் நாம் விளக்க முடியும். இது ஏங்கெல்ஸ் கூறியது போல, முதலாளித்துவத்தால் நடத்தப்படும் சமூகக் கொலை. கொரோனாவைரஸ் மக்களை காவு வாங்குதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தது முதலாளித்துவ சமூக அமைப்பும் முதலாளிகளின் இலாபத்திற்கான வெறியுமேயாகும். எனவே, இந்த முதலாளித்துவ சமூக அமைப்பை தூக்கியெறிவதும், லாபவெறியில்லாத விரிவாக்கப்பட்ட உற்பத்தியை அதாவது சோஷியலிச உற்பத்திமுறையை நிலைநாட்டப் போராடுவதும்தான் இதற்கு நிரந்தர தீர்வாக இருக்க முடியும்.
26இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை, எங்கெல்ஸ், மார்க்ஸ் – எங்கெல்ஸ் தொகுப்பு நூல்கள், ஆங்கிலம், தொகுதி-4, பக். 393-4 27இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை, எங்கெல்ஸ், மார்க்ஸ் – எங்கெல்ஸ் தொகுப்பு நூல்கள், ஆங்கிலம், தொகுதி-4, பக்.394-5 28 Rossella De Falco, Death by a million cuts: what future for the right to health in Italy? August 22, 2018 29Eurostat, 2017. Statistics on Income and Living Conditions (t_ilc) 30Yan Cui, Zuo-Feng Zhang, Air pollution and case fatality of SARS in the People’s Republic of China: an ecologic study, 2003 31 Edoardo Conticini, Bruno Frediani, Dario Caro, Can atmospheric pollution be considered a co-factor in extremely high level of SARS-CoV-2 lethality in Northern Italy?, March, 2020. 32 Xiao Wu MS, Rachel C. Exposure to air pollution and COVID-19 mortality in the United States, updated on April 5, 2020.
கொரோனாவின் கோரப் பிடியையும் அடுத்தடுத்த அலைகளின் அழுத்தத்தையும் தாங்க முடியாமல் மக்கள் மரண பயத்தில் அல்லாடிக் கொண்டிருக்கின்றனர். இன்னொருபுறம் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் சூழலிலும், தங்கள் வாழ்நாள் முழுவதும் சேர்த்த செல்வங்களை எல்லாம் குடும்பத்தினரைக் காப்பாற்ற செலவு செய்கிறார்கள்.
ஆனால் பெரும்பாலான தனியார் மருத்துவமனைகளோ, மக்களின் பயத்தின் மீதேறி உல்லாசமாக சவாரி செய்து கொண்டிருக்கின்றன.
சமீபத்தில், சில தனியார் மருத்துவமனைகளுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு, அம்மருத்துவமனைக்கு நோயாளிகளை வரவழைப்பதற்காக கொரோனா இல்லாதவர்களுக்கும் பாசிட்டிவ் எனச் சான்று கொடுத்த ‘மெட் ஆல்’ என்ற தனியார் ஆய்வு நிறுவனத்தை நமக்கு நினைவிருக்கும். கடந்த மே மாதம் 19, 20 தேதிகளில் மட்டும் கொரோனா இல்லாத சுமார் 400 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் என சோதனை முடிவுகளை இவ்வாய்வகம் தந்துள்ளது. மேலும், கொல்கத்தா ஆய்வகத்திலிருந்து எடுக்கப்பட்ட சளி மாதிரிகளை கள்ளக்குறிச்சியில் இருந்து எடுக்கப்பட்டதாக கூறி நாடகமாடியதும் அம்பலமானது.
இதன் உச்சமாக, இறந்தவரின் உடலை தாராமல் லட்சக்கணக்கில் பணம் கட்ட சொல்வது, இறந்ததைக் கூட சொல்லாமல் பணம் பறிப்பது என்று தனியார் மருத்துவமனைகளின் அக்கிரமங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இறந்தவர்களின் உடலையும் முகத்தையும் கடைசியாகப் பார்க்க விரும்பும் குடும்பத்தினரின் உணர்வைப் பயன்படுத்திக் கொண்டு பிணத்திலும் பணம் பார்க்கிறார்கள் பல தனியார் மருத்துவமனைகள்.
சென்னை வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனை இதற்கு ஒரு பொருத்தமான எடுத்துக்காட்டு. கொரோனா தொற்றால் கடந்த மே மாதம் நான்காம் தேதி இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரவீந்திரன் என்ற நோயாளி, ஜூன் 1-ம் தேதி உயிரிழந்தார். இறப்பதற்கு முந்தைய ஒரு வாரம் இவருக்கு சரியான சிகிச்சை தரப்படவில்லை என்கிறார்கள் உறவினர்கள். இறப்பதற்கு முதல் நாள் முன்பு கூட மருத்துவமனை நிர்வாகம் உறவினர்களிடம் 4 யூனிட் ரத்தம் வேண்டும் என்று கேட்டதால் அவர்கள் ரூபாய் 11,400-க்கு ரத்தம் வாங்கி கொடுத்துள்ளனர். இந்நிலையில், ஏற்கனவே ரவீந்திரனின் சிகிச்சைக்காக ரூபாய் 15.5 லட்சம் கட்டியிருந்தபோதிலும், இன்னும் ரூபாய் 8 லட்சம் கட்டினால்தான் உடலை தருவோம் என்று உறவினர்களை மிரட்டியுள்ளது மருத்துவமனை நிர்வாகம்.
இதேபோல, கடந்த வாரம் கோவை சுங்கம் பகுதியிலுள்ள ‘மனு’ என்ற தனியார் மருத்துவமனையின் கொள்ளையும் வெளிச்சத்திற்கு வந்ததுள்ளது. இந்த மருத்துவமனையில் இருபது நாட்கள் சிகிச்சை பெற்று வந்த காதர் என்பவர் கடந்த வாரம் உயிரிழந்தார். அவருக்கு அளித்த சிகிச்சைக்கு மருத்துவமனை நிர்வாகம் ரூபாய் 20 லட்சம் கட்டணம் கேட்டது. ஏற்கனவே, 16 லட்சம் கட்டிய போதிலும் மீதமுள்ள 4 லட்சத்தை கட்டினால்தான் உடலை பெற முடியும் என்று கூறிய நிலையில் உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்து உடலை மீட்டுள்ளனர்.
அதே கோவையில் உள்ள முத்தூஸ் என்ற மருத்துவமனையிலும் இதே கதை தான். தந்தை இறந்ததைக் கூட கூறாமல் அங்கேயே சிகிச்சை பெற்று வந்த மகன் நதீப் என்பவரிடம் பணம் பறிப்பதிலேயே மருத்துவமனை நிர்வாகம் குறியாக இருந்துள்ளது. தந்தை சிகிச்சைக்காக ரூபாய் 15 லட்சம் கேட்டு பிறகு குறைத்து கொண்டு பதினொன்றரை லட்சமும், மகனின் சிகிச்சைக்காக தனியாக இரண்டரை லட்சமும் கேட்டுள்ளனர். இறுதியில், மாவட்ட ஆட்சியர் தலையிட்ட பின்னர் உடலை வாங்கியுள்ளார் அவர். ஆனால், உடலைப் பெற்று வீடு திரும்பிய பிறகும் கூட மருத்துவமனை நிர்வாகம் அவரை பணம் கேட்டு தொந்தரவு செய்து கொண்டுதான் இருக்கிறது.
இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வெளிச்சத்திற்கு வரும் மருத்துவமனைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளியை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டுமென்று, எத்தனை வட்டிக்கு வேண்டுமானாலும், கடன் வாங்கி இருக்கின்ற சொத்து நகைகளை எல்லாம் அடமானம் வைத்து விற்று காசு புரட்டும் உறவினர்களின் இந்த உயிர் பயத்தை வைத்தே, இதுபோன்ற தனியார் மருத்துவமனைகள் சுரண்டி தின்று கொண்டிருக்கின்றன.
இப்படிக் கொள்ளையடிக்கும் மருத்துவமனைகளின் மீது அரசும் அதிகாரிகளும் எந்தவித நடவடிக்கையையும் எடுக்காமல், ஆட்சியர் அலுவலகத்திலிருந்து ஆள் அனுப்பி கட்டப்பஞ்சாயத்து செய்யும் நிலைதான் உள்ளது. அந்த நேரத்துக்கு மட்டும் உடலை வாங்கி தந்து விட்டு இறந்தவரின் உறவினர்களை தெருவில் விட்டு விடுகின்றனர். பிறகு மருத்துவமனை நிர்வாகம் மீண்டும் அவர்களை பணம் கேட்டு நச்சரிக்க தொடங்கி விடுகிறது.
தனியார் மருத்துவமனைகளின் இத்தகைய அட்டூழியங்களைக் கண்டுகொள்ளாமல் அதில் பங்கு வாங்கித் திண்பது அரசின் அனைத்த் உறுப்புகளின் ரத்தத்தில் கலந்த ஒன்றே என்றபோதிலும், பெருந்தொற்று காலத்திலும் கூட அது தொடரவே செய்கிறது.
இன்னொருபுறம், இப்பெருந்தொற்று காலத்தில் மட்டும், மருத்துவத் துறையில் சுமார் 24 கோடீசுவரர்களின் சொத்து மதிப்பு பல்லாயிரம் கோடி அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. ஆனால், அதே சமயம், ஒரு நாள் வருமானம் ரூபாய் 140-க்கும் குறைவாக பெறுபவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 6 கோடியில் இருந்து 13.4 கோடி பேராக உயர்ந்துள்ளது. பல மருத்துவமனைகள் ஒரு நாளைக்கு எழுவதாயிரத்திலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றன. ஒருநாளைக்கு ரூபாய் 140 கூலி பெற்று, சோற்றுக்கு அல்லற்படும் ஒருவரால், இந்தப் “பிணந்தின்னிகளுக்கு” முன்னால் கொரோனாவே மேல்” என்றுதான் நினைக்க முடியும்.
இன்னொரு முக்கியமான அம்சம் என்னவென்றால், ஆக்சிஜன் இல்லாத படுக்கைக்கு ஒரு நாளைக்கு ரூபாய் 7,500 வெண்டிலேட்டரோடு கூடிய தீவிர சிகிச்சை பிரிவுக்கு ஒரு நாளைக்கு ரூபாய் 35,000 என்று நிர்ணயித்து, கொரோனா சிகிச்சைக்கு அதிகக் கட்டணத்தை மக்களிடம் இருந்து ஜேப்படி செய்துகொள்ளலாம் என அரசே சட்டப்பூர்வ ஏற்பாட்டைச் செய்து கொடுத்திருக்கிறது. இப்போது நாம் பேசும் நிகழ்வுகள் எல்லாம், மேற்படி ஜேப்படி ஏற்பாட்டிற்கும் மேலாக நடைபெறும் பகற்கொள்ளைகளைப் பற்றிதான்.
இத்தனியார் மருத்துவமனைகள், அதிகார வர்க்கத்தை தங்கள் கைக்குள் போட்டுக் கொண்டு தங்களை யாரும் அசைக்க முடியாது என்ற திமிருடன் செயல்படுகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக அரசின் தனியார்மயக் கொள்கையும் நிற்கிறது. இந்த தைரியத்தில் தான் விஜயா மருத்துமனை நிர்வாகத்தாரும் “யாரிடம் வேண்டிமானாலும் போய் சொல்” என்று நோயாளியின் உறவினர்களை மிரட்டுகிறது.
“அதிகமாக கட்டணம் வசூல் செய்யும் மருத்துவமனைகளின் உரிமம் இரத்து செய்யப்படும்” உயர்நீதிமன்றத்தில் கூறியுள்ள தி.மு.க அரசோ, நடைமுறையில் இவையெதையும் தடுக்க வக்கற்றதாக உள்ளது. இன்னொருபுறம், காப்பீடு என்ற பெயரில் மக்கள் பணத்தை தனியாருக்கு வாரியிறைத்து, அதையே சாதனையாகவும் காட்டிக் கொள்கிறது. தனியார் கொள்ளையைப் பொருத்தவரையில், ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை. தனியார்மயத்தை அமல்படுத்துவதில் ஓட்டுக் கட்சிகளிடையே கொள்கை வேறுபாடில்லை.
சென்ற எடப்பாடி ஆட்சியில் ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி பல அமைப்புகள், அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் கருத்துக்கள் தெரிவித்தனர். அப்போது எதிர்கட்சியாக இருந்த திமுகவும் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரியது.
ஆனால் தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு டாஸ்மாக் கடைகளை கொரோனா வேகமாக பரவிய காலத்தில் கண் துடைப்பிற்காக மூடிவிட்டு, தொற்று சற்று குறைய தொடங்கியதும் மீண்டும் திறந்துள்ளது. மக்கள் வாழ்வாதாரம் இழந்திருக்கும் இந்தச் சூழலில் டாஸ்மாக் கடைகளை திறந்திருப்பது, கண்டிக்கத்தக்க செயல் ! மூடு டாஸ்மாக்கை !!
இலட்சத்தீவை சுற்றி வளைக்கும் கார்ப்பரேட்-காவி பாசிசம் !
குஜராத்தின் முன்னாள் உள்துறை அமைச்சராக இருந்த பிரஃபுல் படேலை தற்போது இலட்சத்தீவில் நிர்வாகியாக நியமித்துள்ளது இந்திய ஒன்றிய அரசு.
இலட்சத்தீவு விலங்குகள் பராமரிப்பு ஒழுங்குமுறை விதியின்படி பசு, காளைகள், கன்றுகள் போன்றவற்றை கொல்வதற்கு தடை விதித்துள்ளது. 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் நிற்பதைத் தடுக்க பஞ்சாயத்து ஒழுங்குமுறை விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இலட்சத்தீவு மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம் என்ற அமைப்பின் மூலம், இலட்சத்தீவில் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்க முடியும் என்று மாற்றி கார்ப்பரேட் கும்பல் இலட்சத்தீவைக் கொள்ளையிட வழிவகை செய்துள்ளது.
இலட்சத்தீவு சமூகவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம் என்ற பெயரில் குண்டர் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இலட்சத்தீவில் ஒரு கோவிட் நோயாளிகூட கிடையாது என்ற நிலை இருந்தது. பிரஃபுல் படேல் பொறுப்பேற்ற பின்பு, கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது.
இப்படி, பிரஃபுல் படேல் மூலம் தனது கார்ப்பரேட்-காவி பாசிசத்தை இலட்சத்தீவில் மோடி அரசு அரங்கேற்றுவது பற்றி கடந்த ஜூன் 14 அன்று மக்கள் அதிகாரம் அமைப்பின் முகநூல் பக்கத்தில் தோழர் சுரேசு சக்தி முருகன் ஆற்றிய உரை !
காணொலியை பாருங்கள் !! பகிருங்கள் !!
தகவல் : மக்கள் அதிகாரம், தமிழ்நாடு – புதுவை, 99623 66321.
1990-களுக்குப் பின்னர் புதிய தாராளவாதக் கொள்கைகள் அமல்படுத்தப் பட்டதோடு உலகின் பெரும்பாலான நாடுகளும் காட் ஒப்பந்தத்தில் கையெடுத்திட்டு உலக வர்த்தகநிறுவனத்தின் உறுப்பினர்களாயினர்.
இந்த ஒப்பந்தத்தின் விளைவாகவும், 21-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஏகாதிபத்திய நாடுகளின் உற்பத்தி வடிவமாகக் கருதப்பட்ட’”பழைய, இலாபங்குறைந்த, ஆபத்தான, சுற்றுச்சூழல் மாசை ஏற்படுத்தும், தொழிலாளர்கள் செறிவாகத் தேவைப்பட்ட உற்பத்தித்துறைகளையும், தண்ணீர் அதிகமாகத் தேவைப்படும் இறைச்சிக்கான மிருகங்களை உற்பத்தி செய்யும் விவசாயத் தொழிற்துறையையும் வளரும் மூன்றாம் உலக நாடுகளுக்கு மடைமாற்றும்” ஏகாதிபத்திய நாடுகளின் உத்தியால், நாடுகள் மற்றும் கண்டங்களுக்கு இடையேயான வர்த்தக உறவு மேலும் சிக்கலானதாக மாறியுள்ளது.
வர்த்தகப் பாதைகளும், சரக்குப்போக்குவரத்தும், மனிதர்களின் நகர்வும் தேச எல்லைகளைத் தாண்டி வரலாறுகாணாத அளவு வேகத்தில் முன்னும் பின்னுமாக மிகச்சிக்கலான வடிவில் நடக்கிறது. சீனாவின் ஒரு பெல்ட் ஒரு ரோடு திட்டம் இத்தகையதொரு வலைபின்னலின் நவீன வடிவமாகும். இந்த சிக்கலான அதிவிரைவு வர்த்தகத் தடங்கள், பொருட்களையும், மனிதர்களையும், விலங்குகளையும் மட்டுமன்றி இவற்றை ஓம்புயிரிகளாகக் கொண்ட நோய்க்கிருமிகளின் உலகளாவிய பரவலுக்கும் தோதான தடமாக செயல்படுகின்றன.
முன்னெப்போதும் இந்நோய்கிருமிகளுக்கு இயலாததாக இருந்த இத்தகையதொரு பரவும் வீரியம் தற்போது சாத்தியமாகி உலகளாவிய கொள்ளைநோயாக மாறுவதில் உலகெங்கும் தேச எல்லைகளைத்தாண்டி குறுக்கும் நெடுக்கும் முன்னும்பின்னுமாக ஓடும் இச்சிக்கலான வர்த்தகத் தடங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.
பன்றிகளின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரம் :
கண்டங்கள்
உயிருள்ள பன்றிகளின் எண்ணிக்கை
1980
1990
2017
ஏற்றுமதி
இறக்குமதி
ஏற்றுமதி
இறக்குமதி
ஏற்றுமதி
இறக்குமதி
ஐரோப்பா
57,11,996
56,81,639
78,74,867
86,54,832
3,69,22,652
3,41,61,228
ஆசியா
45,66,473
45,56,678
40,58,058
36,23,814
22,75,617
24,25,408
வ. அமெரிக்கா
2,53,881
2,48,688
9,48,442
8,90,980
56,77,370
56,00,220
தெ.அமெரிக்கா
53
6,022
13,854
15,014
5,663
9,413
ஆப்ரிக்கா
1,001
11,642
786
24,035
3,478
9,906
உயிருள்ள கோழிகள் குறித்த புள்ளிவிவரம் :
கண்டங்கள்
உயிருள்ள கோழிகளின் எண்ணிக்கை ×1000
1980
1990
2017
ஏற்றுமதி
இறக்குமதி
ஏற்றுமதி
இறக்குமதி
ஏற்றுமதி
இறக்குமதி
ஐரோப்பா
2,14,885
88,071
2,68,624
1,31,083
15,14,680
14,09,545
ஆசியா
66,434
94,367
93,169
1,75,278
1,53,174
1,99,757
வ.அமெரிக்கா
40,598
20,870
50,476
30,889
76,017
61,716
தெ.அமெரிக்கா
1,182
5,498
8,614
7,506
18,733
17,072
ஆப்ரிக்கா
4,261
54,748
8,212
39,535
11,896
52,176
ஆதாரம்: ஐநா உணவு மற்றும் வேளாண் நிறுவனம் புள்ளிவிவரம்
மேலே கொடுக்கப்பட்ட அட்டவணை 1980, 1990, 2017 ஆகிய ஆண்டுகளில் ஐந்து கண்டங்களிலும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட உயிருள்ள இறைச்சிக் கோழிகள் மற்றும் பன்றிகளின் எண்ணிக்கையைத் தருகிறது. ஐரோப்பா, ஆசியா மற்றும் வட அமெரிக்கா கண்டங்களில் 1980, 1990 ஆகிய ஆண்டுகளை விட 2017-இல் உயிருள்ள பன்றி மற்றும் கோழிகளின் ஏற்றுமதி/இறக்குமதி எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளதைக் காணலாம்.
மரபணுவியலின் முன்னேற்றத்தாலும் உற்பத்தியின் வெவ்வேறு நிலைகளுக்கேற்ப தீவனம் கொடுப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தாலும் இறைச்சிக்கான கால்நடை உற்பத்தித் தொழிற்துறையின் உற்பத்தித் திறன் அதிகரித்துள்ளது. எடுத்துக்காட்டாக, இறைச்சிக் கோழி மற்றும் பன்றி வளர்ப்புத் துறையில் மரபணுவியலின் உதவியால் குஞ்சு/குட்டிகளை உருவாக்குவதல், பெருக்குதல், அக்குஞ்சு/குட்டிகளை இறைச்சிக்காக வளர்த்தல் (பெரும்பாலும் ஒப்பந்தத் விவசாயிகளால் வளர்க்கப்படுகிறது) ஆகிய பல கட்டங்களில் நடைபெறுகிறது.
இந்த உற்பத்தியின் ஒவ்வொரு கட்டமும் வெவ்வேறு இடங்களில் அல்லது நாடுகளில் நடப்பதால் உயிருள்ள விலங்குகள் அவ்விடங்களுக்கு கொண்டுசெல்ல வேண்டியிருக்கிறது. எடுத்துக்காட்டாக 2005-இல் மட்டும் 2.5 கோடிகளுக்கும் மேற்பட்ட உயிருள்ள பன்றிகள் சர்வதேசரீதியில் வர்த்தகம் செய்யப்பட்டன. அமெரிக்காவில் இது போன்ற உயிருள்ள பண்ணை விலங்குகளின் வர்த்தகம் அதிகமாக நடைபெறுகிறது. 2001-இல் மட்டும் 27% பண்ணைப் பன்றிகள் அமெரிக்காவின் ஒரு மாகாணத்திலிருந்து இன்னொரு மாகாணத்திற்கு அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட மாகாணத்திற்கு கொண்டுசெல்லப்பட்டன.
கடந்த 2005-ம் ஆண்டு இங்கிலாந்தில் ஏற்பட்ட பறவைக்காய்ச்சல் பற்றிய விசாரணையில் உற்பத்தியின் வெவ்வேறு கட்டங்களை நிறைவேற்றுவதற்காக இறைச்சிக் கோழிகள் இங்கிலாந்திற்கும் ஹங்கேரிக்கும் நான்கு முறை கொண்டுசெல்லப்பட்டது தெரிய வந்தது.
சீனா 2018-இல் ஏற்பட்ட ஆப்ரிக்க பன்றிக்காய்ச்சலால், பன்றி உற்பத்தியில் பின்னடைந்தது. (ஆப்ரிக்க பன்றிக்காய்ச்சல் வைரஸ் வீரியமிக்க தொற்றுத்தன்மை வாய்ந்தது. பதப்படுத்தப்பட்ட இறைச்சியிலும் கூட உயிர்வாழும் சக்திவாய்ந்தவை.) எனவே சீனா பன்றி இறைச்சியை இறக்குமதி செய்ய ஆரம்பித்தது. 2018 மே மாதம் மட்டும் பன்றி இறக்குமதி 63% அதிகரித்தது 1,87,000 டன்னாகியது.
ஏற்கனவே சீன–அமெரிக்க வர்த்தகப் போரால் அமெரிக்க பன்றிகளுக்கான இறக்குமதி வரியை 62% ஆக ஆக்கிய நிலையில் தன் உள்நாட்டுத் தேவைகளுக்காக பிரேசிலையும் ஐரோப்பாவையும் மட்டுமே சார்ந்திருக்கும் நிலைக்குத் சீனா தள்ளப்பட்டது.
கனடா நாட்டிலிருந்து பன்றி இறைச்சி இறக்குமதிக்கு தடை விதித்திருந்தது. சீனாவின் உள்நாட்டுத் பன்றி இறைச்சித் தேவை 24 மில்லியன் டன் பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில் அதை ஈடுகட்ட அமெரிக்க பன்றி இறைச்சிக்கான இறக்குமதி வரியைக் குறைக்கும் நிலைக்கு சீனா தள்ளப்பட்டது.19கனடாவுடனான இறக்குமதித் தடையையும் நீக்கியது. உலகளாவிய கால்நடை தொழிற்துறை வர்த்தகத் தடங்கள் எவ்வளவு சிக்கலான முறையில் பிணைக்கப்பட்டுள்ளன என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
ஆசியாவை அடிப்படையாக கொண்ட ச்ரோயன் போக்பெந்த் (Chaoren Pokphand, CP), உலகிலேயே நான்காவது பெரிய இறைச்சிக்கோழி உற்பத்தி நிறுவனமாகும். இதன் இறைச்சிக்கோழி தொழிற்சாலைகள் துருக்கி, சீன, மலேசியா, இந்தோனேசியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் வைத்துள்ளது. இதன் வணிக வலைப்பின்னல் இந்தியா, சீனா, இந்தோனேசியா வியத்னாம் ஆகிய நாடுகளையும் உள்ளடக்கியது. தென்கிழக்கு ஆசியாவில் துரித உணவக வலைப்பின்னலையும் சொந்தமாக கொண்டுள்ளது.
2003ல், சீனாவில் உள்ள CP குழுமத்தின் இறைச்சிக்கோழி பண்ணையில் பறவைக் காயச்சல் தாக்கிய உடன் ஜப்பான் சீனாவில் இருந்து இறைச்சிக்கோழி இறக்குமதியை தடைச் செய்தது. உடனே, தாய்லாந்தில் உள்ள CP குழுமம் ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்து சந்தை இடைவெளியை பூர்த்தி செய்தது. வெவ்வேறு நாடுகளில் இப்படிப்பட்ட வழங்கல் சங்கிலியை கொண்டிருப்பது வைரஸ் பரவலுக்கான வாய்ப்பை அதிகப்படுத்துகிறது. மேலும், இது போன்ற நிறூவனங்கள் உலகளாவிய உற்பத்தி மற்றும் வழங்கல் சங்கிலியை கொண்டிருப்பதால் அதன் எல்லா வணிக வலைப்பின்னலுக்கும் வைரஸ் பரவுவதற்கு ஏற்ற நிலைமைகளை உண்டாக்கிவிடுகிறது.
ஏனென்றால், இவ்வர்த்தகத் தடங்கள் வழி வைரஸ் செல்லுமிடமெல்லாம் பூகோளரீதியான மறுசீரமைப்புக்கு (geographical reassortment of antigen) உள்ளாகி் ஒவ்வொரு நாட்டின் சுற்றுச்சூழலுக்கேற்ப தனது பண்புகளான நிறம், வடிவம், அளவு, நடத்தை, உயிர்வேதியியல் பண்புகள் ஆகியவற்றில் ஏற்படும் பீனோடைப் (phenotype – ஒரு வகை சடுதி–மாற்றம்) மாற்றத்தை அடைகின்றன. எடுத்துக்காட்டாக 2003-இல் ஹாங்காங்கில் தோன்றிய H5N1 முதலில் பறவையிலிருந்து மட்டுமே மனிதனுக்குப் பரவியது. ஆனால் மனித–மனிதத் தொற்று ஏற்படுத்துவதற்கு ஏற்ற வீரியத்தைப் பெற்ற H5N1 வைரஸ் ஹாங்காங், தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேஷியா, எகிபது, சீனா, துருக்கி, ஈராக், இந்தியா, பாகிஸ்தான் எனப் பல இடங்களுக்கு பயணித்ததன் மூலமே சாத்தியமானது.
இந்நாடுகளிலெல்லாம் புதிய தாராள வர்த்தகக் கொள்கைகளையும், பன்னாட்டு நிதிமூலதனத்தின் ஏற்றத்தாழ்வான ஒப்பந்தங்களையும் ஏற்றுக்கொண்டு, தங்கள் நாடுகளின் தொழிற்துறையையும் விவசாயத்துறையையும் ஏகாதிபத்தியங்களும், தனியார் முதலாளிகளும் தங்கு தடையற்ற வர்த்தகத்தை செய்யும் விதமாக மறுகட்டமைப்புகளை நடைமுறைப்படுத்தியவை. இக்காரணத்தால் ஏழை நாடுகளின் பல கிராமப்புற நிலப்பரப்புகள் ஒழுங்குமுறைபடுத்தப்படாத புறநகர் வேளாண் வணிகச் சேரிகளாக மாற்றப்பட்டுள்ளன. பல கண்டங்களில் பரவுவதால் இத்தகு சூழல்களிலிருந்து மரபணு மாறுபாட்டைப் பெறும் வைரஸ்கள் மனிதனை ஓம்புயிரியாக்கத் தேவையான குறிப்பிட்ட பண்புகளை அடைந்து கொள்ளை நோயாக மாறுகிறது; இதே உலகளாவிய வணிக வலைப்பின்னலில் வேகமாக பரவவும் செய்கிறது.
பெய்ஜிங்கில் உள்ள ஒரு மொத்த விலை இறைச்சியகம்
நவீன கால்நடைத்–தொழிற்துறை கூட்டுகளில் (livestock-industrial complex) உற்பத்தி ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும் முறையால் மட்டும் இவ்வைரஸ்கள் உருவாவதில்லை. அதாவது தொழிற்சாலைப் பண்ணைகள் மட்டுமே இத்தகைய புது வைரஸ்களை உற்பத்தி செய்வதாக எளிமைப்படுத்தி புரிந்து கொள்ளக்கூடாது. இதோடு கூடவே பரந்துபட்ட அளவில் காடுகள் அழிக்கப்படுவது, சுற்றுச்சூழல் சீர்குலைக்கப்படுவது, பல்லுயிர் தன்மை சிதைக்கப்படுவது, காலநிலை மாற்றம் போன்றவையும் காரணிகளாக உள்ளன20. இதன் விளைவாக வனவிலங்குகளுக்கும் வீட்டுவிலங்குகளுக்கும் பண்ணை விலங்குகளுக்குமிடையிலான இடைவெளி அழிக்கப்படுவது, பல்வேறு இனத்தைச் சேர்ந்த மக்களையும் விலங்குகளையும் ஒரே உலகளாவிய மதிப்புச் சங்கிலியில் பிணைத்தது ஆகியவற்றின் மூலம் புதிய நோய்க்கிருமிகளின் சுழற்சிக்கு வழிவகுத்துள்ளது. இதற்குக் காரணம் மூலதனத்தின் உள்ளியல்பே ஆகும்.
முன்னர் காட்டுயிர்களில் தனிமைப்படுத்தப்பட்டதாக அல்லது மனிதர்களுக்கு பாதிப்பில்லாததாக இருந்து வந்த வைரஸ் வகையினங்கள் கொள்ளைத் தொற்றுநோய்க்கான பண்புகளை அடைய சாதகமான உயர்போட்டிச் சூழல்களை (hypercompetitive environment) மூலதனத்தின் இவ்வுள்ளியல்பு உருவாக்கியுள்ளது. கொள்ளைத் தொற்றுநோய்க்கான இப்பண்புகளாவன: விரைவான வைரஸ் வாழ்க்கைச் சுழற்சிகள், சூனாடிக் தாவு திறன் மற்றும் புதிய பரிமாற்ற திசையன்களை (transmission vectors) விரைவாக உருவாக்கும் திறன் போன்றவையாகும்.21
இன்னொரு உதாரணத்தையும் பார்ப்போம். தெற்காசியாவில் 1990-களின் இறுதியில் நிப்பா வைரஸ் உருவானது. இங்கு பன்றிப்பண்ணைகள் அபரிமிதமான வளர்ச்சிகண்ட காலமிது. பண்ணைகளுக்குகாக காடுகள் அழிக்கப்பட்டது மற்றும் வறட்சி போன்ற காரணங்களால் வாழ்விடங்களை இழந்த வௌவால்களாலிருந்து (வௌவால் எச்சத்திலிருந்து) இப்பன்றிகளுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டது.
கடந்த2013-இல் மேற்காப்பிரிக்காவில் பரவிய கொள்ளைநோயான எபோலா, சமகாலத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஓர் எடுத்துக்காட்டாகும், நோய்த்தொற்று ஏற்பட்ட 90% மக்களை இவ்வைரஸ் கொன்றது. இந்த வைரஸும் வௌவால்களால் காடுகளுக்குள் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அமெரிக்க, ஐரோப்பிய, சீன ஏகபோகங்களால் கினியப் புல்வெளி கையகப்படுத்தப்பட்டு எண்ணெய்ப்பனை விவசாயம் தொடங்கப்பட்டபோது இவ்வௌவால்கள் தங்கள் உணவிற்காக வாழிடத்தை எண்ணெய்ப்பனைப் பண்ணைகளுக்கு மாற்றிக் கொண்டதால் இவ்வைரஸ் வௌவால்களிலிருந்து மனிதருக்கு தொற்றும் சூழல் உருவானது.
கடந்த சில பத்தாண்டுகளாக கார்ப்பரேட் விவசாயத்தின் கட்டுப்பாடற்ற விரிவாக்கத்தால் இந்த போக்குகள் மேலும் அதிகரித்துள்ளன. தொழிற்துறை வேளாண் உற்பத்தியின் விரிவாக்கத்தோடு கூடவே உலகமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கத்தால் உலகெங்கிலும் உள்ள கன்னிவனப்பகுதியையும் சிறுஉடைமை விவசாய நிலங்களையும் மூலதனம் பறிக்கிறது.
இம்முதலீடுகள், நோய் வெளிப்படுவதற்கு வழிவகுக்கும் காடழிப்பு, சுற்றுச்சூழல் சீர்குலைகேடு, பல்லுயிர் தன்மை சிதைதல் ஆகிய உபவிளைவுகளை உண்டாக்கிறது. மேலும், மூலதனத்தால் கையகப்படுத்தப்பட்டிருக்கும் இப்பெரும் நிலப்பரப்புகள் ஏற்படுத்தியிருக்கும் செயற்பாட்டு பன்முகத்தன்மையும் கடுஞ்சிக்கல் நிலையும் (functional diversity and complexity)22தான், முன்பு பெட்டிக்குள் (காட்டுயிர்களில்) அடைக்கப்பட்டிருந்த நோய்க்கிருமிகள் உள்ளூர் கால்நடைகள் மற்றும் மனித சமூகங்களுக்குள் பரவ ஏதுவாகியுள்ளன.
முதலாளித்துவ அமைப்பின் இதயத்திலிருந்து ஓடும் மூலதனத்தால் இந்நிகழ்ச்சிப்போக்கு நடக்கிறது. இதனாலேயே மூலதனத்தின் மையங்களாகத் திகழும் இலண்டன், நியூயார்க், ஹாங்காங் போன்றவற்றை நமது கொள்ளைநோய்களின் ஊற்றுக்கண்களாகக் கருதவேண்டும் என்கிறார் ராப் வாலஸ். நில பயன்பாட்டில் ஏற்படும் மாற்றங்களைப் போலவே, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பரந்துபட்ட சுற்றுச்சூழல் சீர்குலைவும் மேலும் சூனாசிஸ் ஏற்பட ஏதுவாகும்.
இப்படியாக, முதலாளித்துவ பெருவீத இறைச்சிப் பண்ணை உற்பத்தியின் நிகழ்முறைகளில் (குறிப்பாக தற்கால வடிவத்தில்) சூனாசிஸ் தாவல் வேகமாக நடப்பதற்கு எப்படி வாய்ப்பேற்படுகிறது; சூனாசிஸ் தாவல் மூலம் ஒட்டுண்ணிகள் எப்படி மனிதர்களை வந்தடைகிறது; மேலும் அது கொள்ளை நோயாக அல்லது உலகளாவிய கொள்ளை நோயாக உருவெடுக்க எப்படி வாய்ப்பேற்படுகிறது என்பது பற்றி நமக்கு தெளிவேற்படுத்த நவீன அறிவியல் உதவுகிறது.
“தொழிலாளர்கள் பெருந்திரளாக நெருக்கமாக வசிக்கின்ற ‘ஏழ்மையான வட்டாரங்கள்’ என்று கூறப்படுகின்ற பகுதிகள் நம்முடைய நகரங்களில் அடிக்கடி ஏற்படுகின்ற எல்லாவிதமான கொள்ளை நோய்களும் உற்பத்தியாகின்ற இடங்களாக இருக்கின்றன என்று நவீன இயற்கை விஞ்ஞானம் நிரூபித்திருக்கிறது”23, என்று எங்கெல்ஸ் அவர் காலத்தில் கூறினார்.
தற்கால கொள்ளை நோய்களில் ஒரு வகையான புளுக் காய்ச்சல்களை ஏற்படுத்தும் வைரஸ்கள் உருவாகும் இடங்களாக நவீன பெருவீத பண்ணை–விலங்கு மற்று இறைச்சிக்கோழி வளர்ப்பு துறை உற்பத்தி மையங்கள் இருப்பதாக தற்கால நவீன அறிவியல் நிரூபித்துள்ளதாக நாம் கூடுதலாகக் கூறுலாம்24.
மேலும், சுற்றுசூழல் பற்றிக் கருதிபார்க்காமல் காடுகளை அழித்து செய்யப்படும் பெருவீத முதலாளித்துவ விவசாயமும் முதலாளித்துவத்தின் விரிவாக்கத்திற்காக அழிக்கப்படும் பல்லுயிர்தன்மை மற்றும் காலநிலை மாற்றங்கள் போன்றவையும் இவ்வைரஸ்கள் உருவாகக் காரணமாக இருப்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை முதலாளித்துவ விஞ்ஞானிகள் ஆராய்ந்து இக்கொள்ளை நோய்களை தடுக்க பல கட்டுப்பாடுகளை விதிக்க பரிந்துரைக்கின்றனர்; அரசு சில கட்டுப்பாடுகளை கொண்டும் வருகின்றன. ஆனால், இந்த புதிய தாரளவாதக் காலத்தில் மற்ற உற்பத்தி நிறுவனங்கள் செய்வதை போல நவீன பெருவீத பண்ணை–விலங்கு மற்று இறைச்சிக்கோழி நிறுவனங்களும் கட்டுப்பாடுகள் குறைவாக இருக்கும் (இன்னும் பல சாதக அம்சங்களை கொண்டிருக்கும்) இடங்களுக்கு, குறிப்பாக இந்தோனிசியா, மெக்சிக்கோ, சீனா, லத்தீன் அமெரிக்க நாடுகள் மற்றும் பல ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளுக்கு தங்களது உற்பத்தி மையங்களை மாற்றிக் கொள்வதை பிரதானமாக செய்கின்றன.
முதலாளித்துவ நிறுவனங்கள் இப்படி தங்களது உற்பத்தி மையங்களை மூன்றாம் உலக நாடுகளுக்கு மாற்றுவது லாபத்தை நோக்கமாக கொண்டுதான் என்பதை விளக்கி கூற வேண்டியதில்லை. அம்மையங்களில், ஒரு முறை இவ்வைரஸ்கள் சூனாசிஸ் தாவல் மூலம் பரிணாமம் அடைந்தால் பல நாடுகளுக்கு பரவும் கொள்ளைநோய்களாக உருவெடுக்க வாய்ப்புள்ளன. இங்ஙனம் “முதலாளித்துவ சமூக அமைப்பு அகற்றப்படவேண்டிய தீமைகளை மீண்டும் மீண்டும் மறு உற்பத்திச் செய்கிறது”25. ஏனென்றால், முதலாளித்துவம் லாபத்திற்காக இயங்கும் பொருளாதாரமாகும்.
அடிக்குறிப்புகள் : 19.‘Not enough pork in the world’ to deal with China’s demand for meat 20. Why deforestation and extinctions make pandemics more likely, Nature, Aug 13, 2020 21. Chuang, 2020, “Social Contagion :Microbiological Class War in China” (February) 22.செயல்பாட்டு பன்முகத்தன்மை (functional diversity) என்பது பல்லுயிர் பெருக்கத்தின் (biodiversity) ஒரு அங்கமாகும். இது பொதுவாக சமூகங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளில் உயிரினங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தின் வரம்பைப் பற்றியது. Complexity பெரும்பாலும் நோய்த்தொற்று ஏற்பட்ட உயிரி மற்றும் நோய்க்கிருமிகளின் இணை பரிணாம வளர்ச்சியில் எழுகிறது. நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் நோய்க்கிருமிகள் அதைத் தவிர்ப்பதற்கு உருவாக்கிய பல நுட்பங்கள் போன்ற அதிநவீன தழுவல்கள் காரணமாக இக்கடுஞ்சிக்கல் நிலை உருவாகுகின்றது. 23.மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் பன்னிரண்டு பகுதிகளில், தொகுதி 8, பக். 62-63 24.மார்க்ஸின் பார்வைபடி இயற்கை என்பது மனிதனின் அங்கக உடல் (inorganic body); எப்படி கை, கால், மூளை போன்ற மனித உடல்பகுதிகளின் ஒருங்கிணைப்புடன்தான் மனிதனால் உழைக்க முடியுமோ அதேபோல் இந்த அங்கக உடலுக்கும் மனிதனுக்குமான ஒருங்கிணைப்பு என்பது உற்பத்தி செயல்பாடுக்கு ஓர் முன்நிபந்தனை. இயற்கைக்கும் மனிதனுக்குமான இந்த இடைத்தொடர்பை இயற்கைக்கும் மனிதனுக்குமான வளர்சிதைமாற்ற செயல்பாடு (metabolic interaction between man and nature) என்று கூறலாம். இந்த ஒருங்கிணைப்பை முதலாளித்துவ உற்பத்திமுறை சிதைக்கிறது; இந்த சிதைவு வளர்சிதைமாற்ற பிளவு (metabolic rift) எனப்படுகிறது. நாம் பேசிக்கொண்டிருக்கும் வைரஸ்களின் சூனாசிஸ் தாவலும் முதலாளித்துவ உற்பத்தியால் ஏற்படும் வளர்சிதைமாற்ற பிளவுக்கான ஒரு உதாரணமாகும். இந்த வளர்சிதைமாற்ற பிளவு பற்றிய மார்க்சின் கருத்துக்களாஇ கோட்பாட்டுரீதியாக ஜான் பெல்லாமி பாஸ்டர் (மன்த்லி ரிவியூ பத்திரிக்கையின் ஆசிரியர்), பால் பர்கெட் போன்றோர் 20 ஆண்டுகளாக ஆய்வு செய்து எழுதியுள்ளனர். 25.மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் பன்னிரண்டு பகுதிகளில், தொகுதி 8, பக். 64
ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்பரிவாரங்களின் பல்வேறு அமைப்புகள் பற்றி பல நூல்கள் வந்துவிட்டாலும் அது அந்தந்த அமைப்புகளின் அடிப்படைவாத செயல்பாடுகளின் விளைவுகள் மூலம் பெற்ற கருத்துக்கள் அல்லது உண்மைகளின் அடிப்படையில் எழுதியதாகத்தான் இருந்து வந்துள்ளது. ஒரு வேளை, அதன் உண்மைத் தன்மையில் சிறிது சந்தேகம் கூட எழலாம்.
ஆனால், பன்வர் மெக்வன்ஷி, ஆர்.எஸ்.எஸ்-இல் பதினாறு ஆண்டுகள் செயலாற்றி, அந்த அமைப்பிற்குள் அவர் மீது எழுந்த சாதீய அவமதிப்பின் காரணமாக மனம் வெதும்பி ஆர்.எஸ்.எஸ் அமைப்பை விட்டு வெளியேறியவர். அவர் அந்த அமைப்பின் பயங்கரவாத நடவடிக்கைகளைப் பற்றியும், சதித் திட்டங்களைப் பற்றியும் புள்ளி விபரங்களோடு விளக்கி இருப்பது உண்மையில் நமக்கு திகிலூட்டுவதாக இருக்கிறது.
குறிப்பாக, ஆர்.எஸ்.எஸ் இந்தியாவை 11 மண்டலங்களாகவும், 41 மாவட்டங்களாகவும் பிரித்து கிட்டத்தட்ட ஒரு இணை அரசாங்கம் போல் செயல்படுகிறது என்று குறிப்பிடுகிறார் பன்வர் மெக்வன்ஷி. அதேபோல் ஒவ்வொரு மாவட்டமும் இரண்டு அல்லது மூன்று சங் மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நகரத்திற்கும் மற்றும் மாவட்டத்திற்கும் ஒரு ஷாகா பயிற்சியாளர், விஸ்ட்டாரக், வட்டார பிரசாரக், மாவட்ட பிரசாரக் மற்றும் நன்கொடைகள் மூலம் பெறப்படும் நிதியை பராமரிக்கும் வணிகக்கும்பல் (பனியாத் தலைவர்) என்று கிட்டத்தட்ட ஒரு இராணுவம் போல் செயலாற்றுவதை மிக நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார்.
அதாவது, ஒருவர் ஆர்.எஸ்.எஸ்-இல் சேர்ந்தவுடன் சுயம்சேவக் ஆகி பின்னர், படிப்படியாக கடநாயக் – ஞான நாயக் – முதன்மை ஆசிரியர் – ஷாகா மேலாளர் – கார்யவாஹ் – மண்டல அலுவலர் என்று பதவி உயர்வு பெறுகிறார்கள். இந்த மண்டல அலுவலர்கள் தான் சர்சங்க்ஸ்லாக் என்ற மிக மேல்நிலைத் தலைவரைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவரே நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமை இடமான ஹெட்கேவர் பவனின் தலைமை இயக்குனர் ஆவார்.
இந்த சர்சங்க்லாக் பதவி என்பது “வாழ்நாள் பதவி” ஆகும். பொதுவாக இந்தப் பதவிக்கு மராட்டிய சித்பவன் பிராமணர்களே தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 1925-ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். துவக்கப்பட்டது முதல் இதுவரை சர்சங்க்லாக் பதவியில் இருந்தவர்களின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது;
கேசவ் பலிராம் ஹெட்கேவர் – கி.பி. 1925-1930.
லட்சுமண் வாசுதேவ் பரஞ்சபே – கி.பி. 1930-1931 (தற்காலிகமாக ).
கேசவ் பலிராம் ஹெட்கேவர் – கி.பி. 1931-1940.
குருஜி எம்.எஸ். கோல்வாக்கர்- கி.பி. 1940-1973.
மதுக்கர் தத்தாத்ரேயா தேவரஸ் – கி.பி. 1973-1994.
ராஜு பைய்யா ராஜேந்திரசிங்- கி.பி. 1994-2000 (இவர் மட்டுமே சத்திரியர் வகுப்பைச் சேர்ந்தவர்).
கே.எஸ். சுதர்சன்- கி.பி. 2000-2009.
மோகன் பகவத்- 21/03/2009 ந்தேதி முதல்.
தற்போதைய ஆர்.எஸ்.எஸ்-இன் தலைமை இயக்குனராக மோகன் பகவத் அவர்கள் 21/03/2009 ந்தேதி முதல் இருக்கிறார்.
ஆர்.எஸ்.எஸ். தமது அமைப்பில் கும்ஹார், ஜாட், குஜ்ஜார், மாலி போன்ற உயர்சாதி இந்துக்களையும், பங்கார்கள், கோலிகள் போன்ற தலித்துகளையும், பில் – ஆதிவாசிகளையும் சேர்த்துக் கொள்கிறார்கள். ஆனால், உயர்சாதி இந்துக்களுக்குத்தான் முதன்மை செயல்பாட்டாளர்கள் பதவி கிடைக்கும் என்றும் தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் பதவிகளுக்கு தேர்வு செய்யப்படமாட்டார்கள் என்று குறிப்பிடுகிறார் பன்வர் மெக்வன்ஷி.
ஆர்.எஸ்.எஸ்-இன் அரசியல் பிரிவான பா.ஜ.க-வில் ஒரு தலித்தான ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி ஆகலாம். ஆனால் ஆர்.எஸ்.எஸ்-இல் அவர் ஒரு மாவட்ட அல்லது மணடல பிரசாராக் போன்ற பதவிக்கு வர முடியாது என்று தெளிவாக குறிப்பிடுகிறார்.
ஆர்.எஸ்.எஸ் கட்டமைப்பு மனுநீதி வழிகாட்டியபடி தான் அமைக்கப்பட்டுள்ளது. அதன் முக்கிய குறிக்கோள்களாக இருப்பவைகள் என்னவென்றால்;
இந்து – இந்தியா – இந்துஸ்த்தான்.
இந்துயிசத்தை இராணுவமயமாக்குவதும், இராணுவத்தை இந்து மயமாக்குவதும்.
கிறித்துவ மற்றும் இஸ்லாமியர்களை நாட்டை விட்டு வெளியேற்றுதல் அல்லது அழித்தொழித்தல்.
இவற்றை அடித்தளமாகக் கொண்டே ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களுக்கு ஷாகா பயிற்சி கொடுக்கப்படுகிறது. சுருக்கமாக, அவர்களுக்கு இந்துத்துவத்தையும், தேசபக்தியையும் புகட்டி பிற மதத்தினரை எதிரிகளாக நினைக்க பயிற்றுவிக்கிறது. இவ்வாறான ஒரு சுயம்சேவக் போன்றுதான் பன்வர் மெக்வன்ஷியும் இருந்தார்.
இவர் 1990-ஆம் ஆண்டு நடந்த முதல் கரசேவையில் கலந்து கொள்ள இவரது உடன்பிறந்த சகோதரர் பத்ரிலாலும் அயோத்தி நோக்கிச் செல்லும்போது அப்போதைய உ.பி முதல்வர் முலாயம்சிங் யாதவ்-ன் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டு மதுராவில் சிறைவைக்கப்பட்டு பிறகு விடுவிக்கப்படுகிறார். தோல்வியுடன் சிர்தியாஸ் திரும்பிய பன்வர் மெக்வன்ஷி பின்னர் ஆர்.எஸ்.எஸ் செயல்பாடுகளில் முன்னிலும் வேகமாக இயங்கி ஆர்.எஸ்.எஸ்-இன் மாவட்ட கார்யவாஹ் பதவி வரை முன்னேறுகிறார்.
இந்த சூழலில், தமது பட்டப்படிற்காக இவரது சிர்தியாஸ் கிராமத்திற்கு அருகில் உள்ள பில்வாரா கிராமத்திற்கு செல்கிறார். அங்கே, இவர் ஒரு தலித் என்பதால் தங்குவதற்கு இடம் கிடைக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்களும் அவருக்கு இடம் கொடுக்கவில்லை. அதனால், பில்வாராவில் உள்ள அம்பேத்கர் விடுதியில் தங்கும் நிலை ஏற்படுகிறது. அதுவரை சாவர்க்கர், மூஞ்சே, திலகர், கோகலே, ஹெக்டேவர் மற்றும் குருஜி கோல்வாக்கர் போன்ற இந்துத்துவா தலைவர்களை மட்டுமே தெரிந்திருந்த பன்வர் மெக்வன்ஷிக்கு பூலே, கபீர், புத்தர் மற்றும் அம்பேத்கர் போன்றவர்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு அங்கே கிடைத்தது.
அதேபோல் அதுவரை ஆர்.எஸ்.எஸ். பத்திரிக்கையான “பாஞ்சஜன்யா”-வை மட்டுமே படித்து வந்த அவருக்கு, ஓஷோ ரஜனீஷ் வெளியிட்ட “ஓஷோ டைம்ஸ்” செய்தித்தாள் படிக்கும் வாய்ப்பும் அங்குதான் கிடைத்தது. இந்தச் செய்தித்தாள் தனது மனதின் மற்ற கதவுகளைத் திறந்து விடத் துவங்கியது என்றும், ஆர்.எஸ்.எஸ். தனது மனதிற்குள் புகுத்தியிருந்த தேசியம், நற்குண உயர்பண்பு, மனத்துறவு, ஆன்மீக இயல்பு ஆகியவைகள் ஓஷோவை படித்த பிறகுதான் மாறத் துவங்கியது என்றும் கூறுகிறார், பன்வர் .
இந்த நிலையில், 1990-ஆம் ஆண்டு கரசேவை செய்ய அயோத்திக்கு சென்றபோது இறந்துபோன தொண்டர்களுக்கும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்காக பில்வாராவில் இறந்தவர்களுக்கும் சேர்த்து “தியாகிகள்” தினம் கொண்டாட 1991-ஆம் ஆண்டு மே மாதம் பில்வாராவில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் சிர்தியாஸ் வரும்போது அவர்களுக்கு உணவளிக்க முன் வருகிறார் பன்வர் மெக்வன்ஷி.
ஆனால், அவர் தந்தை நாராயணன்லால் “ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் உயர்சாதியினர், அவர்கள் போலி வேடதாரிகள்; பொதுவில் ஒன்றைச் சொல்வார்கள்; ஆனால், தனிமையில் வேறு ஒன்றைச் செய்வார்கள், அவர்கள் நமக்கு எதிரான விஷம் நிறைந்தவர்கள். அதனால், நமது வீட்டில் தயாரிக்கப்படும் உணவை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்” என்று எச்சரிக்கிறார்.
ஆனால், பன்வர் மெக்வன்ஷி நம்பிக்கையுடன் தான் ஆர்.எஸ்.எஸ்-இன் முக்கிய பொறுப்பில் இருப்பவன், அதனால் என்னை உதாசீனப்படுத்த மாட்டார்கள் என்று அவரை சமாதானப்படுத்தி பூரியும், உருளைக்கிழங்கும் தயாரிக்கச் சொல்கிறார். ஆனால், ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் சாப்பிடுவதற்கு தங்களுக்கு நேரம் இல்லை என்று கூறி, உணவை பொட்டலமாக கட்டித் தருமாறும், தாங்கள் அடுத்த ஊருக்குச் செல்லும் வழியில் அதை சாப்பிட்டுக் கொள்கிறோம் என்று கூறுகிறார்கள். பன்வர் மெக்வன்ஷியும் பூரியையும் கிழங்கையும் பொட்டணம் செய்து தருகிறார். ஆனால், சங் பரிவாரங்கள் பன்வர் மெக்வன்ஷி கொடுத்த உணவை சாப்பிடாமல் ஊருக்கு வெளியே தூக்கி எறிந்துவிட்டுச் செல்கிறார்கள்.
இந்த தகவலை அறிந்த பன்வர் மெக்வன்ஷிக்கு பெருத்த அவமானமும், கோபமும் ஏற்படுகிறது. இந்த தீண்டாமை செயலினால் அவரது மனம் பேதலித்துப்போகிறது. அவர்கள் தனது வீட்டின் உணவை நிராகரித்ததன் மூலம் தன்னை அவமானப்படுத்தியதாக உணர்ந்ததாகவும், தன்னை வெகு தூரத்தில் வீசி எறிந்தது போல் இருந்தது என்றும், தான் அவர்களிடமிருந்து தொலைவில் இருப்பது போல உணர்ந்ததாகவும் குறிப்பிடுகிறார், பன்வர்.
தனக்கு ஏற்பட்ட இந்த தீண்டாமை கொடுமையை அவர் மாவட்ட, மண்டல பிரச்சாரக்குகளுக்கு எடுத்துச் செல்கிறார். ஆனால், யாரும் அவருக்கு சரியான பதிலைக் கூறவில்லை. ஆனால், நந்தலால் காஸ்ட் என்ற பனியா பொறுப்பாளர் மட்டும் “சங் அமைப்பின் எல்லா முயற்சிகளுக்குப் பிறகும், இந்து சமுதாயம் ஒன்றாக ஆகவில்லை. நம்மைப் பொறுத்தவரை எந்த நாளிலும் உங்களுடன் ஒன்றாக அமர்வோம், ஒரே தட்டில் உணவு உண்போம்.
ஆனால், சங் பரிவாரத்தினருக்கு தாழ்த்தப்பட்ட சாதியினர் வீட்டிலிருந்து உணவு கொடுப்பது அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திவிடும். அவர்கள் மிகவும் கோபம் கொள்ளுவார்கள். அவர்கள் விலகிச் சென்று விடுவார்கள்” என்று கூறுகிறார். அவரது வார்த்தைகள் தன்னைக் கல்லாக மாற்றியதாகக் கூறுகிறார் பன்வர் மெக்வன்ஷி.
தனக்கு நியாயம் கிடைக்கும் வரை விடக் கூடாது என்று கருதி இந்த சம்பவத்தை பற்றி நாக்பூரில் இருக்கும் சர்சங்க்லாக் தேவரஸ் அவர்களுக்கு எழுதுகிறார். ஆனால், அவரிடமிருந்தும் பதில் கிடைக்கவில்லை. அதன்பிறகு சங் அமைப்பிலிருந்து முற்றிலும் உடைத்துக் கொண்டு வெளியேறுகிறார். சங் பரிவாரங்களின் முகத்திரையை கிழித்து அம்பலப்படுத்த வேண்டும் என்ற உத்வேகம் அவருக்குள் எழுகிறது. ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிர் திசையில் அவரது பயணம் துவங்குகிறது.
1992 டிசம்பர் 6-இல் பாபர் மசூதி இடிக்கப்படும் போது அவர் பில்வாராவில் உள்ள அம்பேத்கர் விடுதியில் இருக்கிறார். இப்போது அவர் ஒரு கரசேவர் அல்ல. சங்கிகளால் தீண்டாமை சுவர்களுக்குள் அடைக்கப்பட்ட ஒரு தலித். அந்த சூழ்நிலையில் அவருக்கு நௌசாத்-ஹதர்-எ- கர்ரார் என்ற இஸ்லாமிய நண்பரின் அறிமுகம் கிடைக்கிறது. அவருடன் ஏற்பட்ட உரையாடல்கள் வழியாக ஏற்பட்ட தெளிவின் மூலம் முஸ்லிம்களின் மீது கொண்டிருந்த வெறுப்பு பனிக்கட்டி போல் உருகியது என்கிறார் பன்வர் மெக்வன்ஷி.
அவர்கள் இருவரும் மாணவர்களை ஆர்.எஸ்.எஸ். வலையில் சிக்கவிடாமல் தடுப்பதற்கும், பல்கலைக்கழகத்திற்குள் குழப்பம் விளைவிக்கும் ABVP (தலிபானின் இந்திய வடிவம் என்கிறார் பன்வர் மெக்வன்ஷி) அமைப்பிற்கு எதிராக செயல்படவும் மாணவர் அமைப்புகளை உருவாக்க நினைத்தார்கள். அதனால், 1993 டிசம்பரில், பன்வர் மெக்வன்ஷி “வித்தியார்த்தி அதிகார் ரக்ஷக் சங் (VARS – மாணவர் உரிமை பாதுகாப்பு மையம்)” என்ற அமைப்பையும், நௌசாத் “இஸ்லாமிய சேவா சங்கத்தையும்” துவக்கினார்கள். இவை இரண்டும் ஆர்.எஸ்.எஸ்-இன் நடவடிக்கையை அம்பலப்படுத்தும் அமைப்புகளாக இருந்தன.
இருந்தாலும் போலீஸ் தொல்லைகளால் இந்த அமைப்புகள் ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக வெற்றிகரமாக செயல்பட முடியவில்லை என்கிறார் பன்வர் மெக்வன்ஷி. அதனால், நௌசாத் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிய – லெனினிய) பிரிவுக்கு சென்றுவிட்டார். பன்வர் மெக்வன்ஷி-க்கு அம்பேத்கரை போல் இந்து மதத்தை விட்டு வெளியேறும் எண்ணம் எழுகிறது !.
மதமாற்றம் பற்றி சிந்திக்கும் போது சீக்கியம், ஜைனம், பௌத்தம் போன்ற மதங்கள் “இந்து மதத்தின் பாகங்கள்” என்று சங் பரிவாரங்கள் சொல்லி வருவதால் அந்த மதங்களுக்கு மாறுவதை பன்வர் மெக்வன்ஷி விரும்பவில்லை. அதே சமயத்தில் இஸ்லாம் மதத்திற்கு செல்வதை விட கிறித்துவ மதத்திற்கு செல்வதை விரும்புகிறார். அதனால் பாப்டிஸ்ட், மேதேடிஸ்ட், சிரியன் மற்றும் கத்தோலிக்க தேவாலயங்களுக்கு சென்று தன்னை கிறித்துவ மதத்தில் இணைத்துக் கொள்ளுமாறு வேண்டுகிறார். ஆனால், இவரின் ஆர்.எஸ்.எஸ். தொடர்பை நன்கு அறிந்திருந்த கிறித்துவர்கள் இவரை ஆர்.எஸ்.எஸ்-இன் உளவாளி என்று கருதி கிறித்துவ மதத்தில் சேர்த்துக் கொள்ள மறுத்து விடுகிறார்கள்.
ஒரு வழியாக ஜோத்பூர் பாதிரியார் பாவெஸ் அவர்களை சந்தித்து வேண்டுகோள் வைக்கிறார். அவர் இவரை நம்பினாலும் உடனடியாக கிறித்துவ மதத்தில் சேர்த்து கொள்ளாமல், மத போதனைகளை முதலில் கடைபிடித்து வருமாறும், தக்க சமயத்தில் சேர்த்துக் கொள்கிறேன் என்றும் கூறுகிறார். சில நாட்கள் இயேசுவின் போதனைகளை கற்று வருகிறார். ஆனால், கிறித்துவம் முழுவதும் இயேசுவை சுற்றியே சுழல்வதாக இருப்பது அவருக்கு வெறுப்பைத் தருகிறது. “ஒரு சாக்கடையில் இருந்து தப்பி ஒரு கிணற்றுக்குள் விழுந்தது” போன்ற உணர்வு எழுந்ததால் அவரால் கிறித்துவத்தை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. ஆனால், இயேசு மட்டும் ஏற்றுக் கொள்ள முடிந்தது என்கிறார்.
1995-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் தன் கிராமத்திற்குத் திரும்புகிறார். அவரது பார்வை அம்பேத்கர் மீது ஆழமாக பதிகிறது. இந்துமதத்தின் புதிர்கள், சாதி ஒழிப்பு போன்ற நூல்களை வாசிக்கிறார். அந்நூல்கள் அவருக்கு பிராமணீயத்தை புரிய வைத்தது. மூடப்பட்டிருந்த அவரது மனக்கதவுகள் படபடவென்று திறந்து கொள்கின்றன. அதன் பிறகு கபீர், பெரியார் மற்றும் பூலே ஆகியோர்களின் படைப்புகளைத் தேடித்தேடி படிக்கிறார். ஒரு சங்கியாக இருந்த பன்வர் மெக்வன்ஷி ஒரு கிளர்ச்சியாளனாக உருமாறத் தொடங்கினான்.
சமூகத்தின் நலனில் தனது செலுத்த ஆரம்பித்த பன்வர் மெக்வன்ஷி சங்கிகளுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்துகிறார். குறிப்பாக, பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் தலித்துகள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேருவதற்கு பெரும் தடையாக மாறுகிறார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இவருக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை அரங்கேற்றுகிறது. அவற்றை எல்லாம் தனது தந்தை, சகோதரர் பத்ரிலால் மற்றும் நண்பர்கள் உதவியுடன் எதிர் கொள்கிறார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பன்வர் மெக்வன்ஷி-ன் வலுவான எதிர் தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் திணறுகிறது.
பின்னர் 2001, ஜனவரி 14-இல் அவரும், அவரது 13 நண்பர்களும் சேர்ந்து “டைமண்ட் இந்தியா” என்ற பத்திரிக்கையை ஆரம்பிக்கிறார்கள். இந்தப் பத்திரிகை ஆர்.எஸ்.எஸ்-இன் செயல்பாட்டை தோலுரித்துக்காட்டி மக்களுக்கு விழிப்புணர்வைத் தந்தது. பன்வர் மெக்வன்ஷி ஆளுமை மிக்க பத்திரிக்கையாளராக வளர ஆரம்பித்தார். எங்கெல்லாம் ஆர்.எஸ்.எஸ் தமது நாசக்கரங்களை நீட்டி கொடுமைகள் புரிகிறதோ அங்கெல்லாம் பன்வர் மெக்வன்ஷியின் கரம் நீண்டது.
குறிப்பாக, ராஜஸ்தானில் உள்ள அசிந்திக்கு அருகிலுள்ள லோவிந்தபுரா கிராமத்தில் இருந்த மசூதி இடிப்பு, தண்பி பார்யா கிராமத்தில் கண்டேஸ்வரி பாபா நடத்திய யாகத்தில் தலித்துகள் புறக்கணிப்பு போன்ற நிகழ்வுகளில் தலையிட்டு அவற்றை செய்திகளாக்கி பிரச்சனை தீர நடவடிக்கை எடுத்தார்.
2002-இல் குஜராத்தில் நடந்த கலவரத்தை நேரில் சென்று ஆய்வு செய்து, “தலிபானி இந்துக்களே, கவனியுங்கள்” என்று டைமண்ட் இந்தியா பத்திரிக்கையில் தலையங்கம் எழுதினார். அதில், “தேவகி-ன் எட்டாவது குழந்தை தன்னைக் கொன்றுவிடும் என்று தெரிந்திருந்த கம்சன் கூட, அவளது கர்ப்பத்தைக் கிழித்துத் திறக்கவில்லை. இன்னும், இரவும் -பகலும் யாரெல்லாம் “ஜெயகிருஷ்ணா” என்று பஜனை செய்து கொண்டிருந்தார்களோ, அவர்களால் கம்சன் கூட கனவு கண்டிராதவாறு அப்பாவிகள் உயிரோடு எரிக்கப்பட்டார்கள். பொது இடங்களில், பெரும் கூட்டத்தின் முன்னிலையில் பெண்கள் கூட்டுக் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்கள் – இது தான் அவர்களின் இந்துயிசமா ?” என்று கடுமையாக எழுதியிருந்தார்.
சங்கிகளை “இந்து தலிபான்கள்” என்று அடையாளப்படுத்தப்பட்டது சங்கிகளுக்கு கோபமூட்டியது. அதனால், பில்வாராவில் இருந்த டைமண்ட் இந்தியா அலுவலகம் சூறையாடப்பட்டது. அந்த பத்திரிக்கைக்கு நன்கொடை கொடுத்தவர்கள் மிரட்டப்பட்டதால் அவர்கள் பின்வாங்கினார்கள். அதன்பிறகு டைமண்ட் இந்தியா வெளிவரவேயில்லை.
பின்னர், 2005-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் பில்வாரா மற்றும் மண்டல் பகுதிகளில் நடந்த இந்து – முஸ்லிம் கலவரங்களை விசாரிக்கும் “குடிமக்கள் விடுதலைக்கான மக்கள் ஒற்றுமை (PUCL)” நடத்திய உண்மை அறியும் குழுவில் சென்ற பன்வர் மெக்வன்ஷி, “அணுகும் பாசிசத்தின் காலடிச் சுவடுகள்” என்ற அறிக்கையை தயார் செய்து, அதை துண்டறிக்கையாக வெளியிட்டார். இது ராஜஸ்தானில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. அவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியது ஆர்.எஸ்.எஸ். பன்வர் மெக்வன்ஷியின் தந்தை, சகோதரர் மற்றும் உறவினர்களால் எதிர் தாக்குதல் நடத்தப்பட்டது. சங்கிகள் பயந்து ஓடினார்கள்.
ஆனாலும், பன்வர் மெக்வன்ஷி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்குமாறு குல்தீப் நய்யார், ஹரிஷ் மந்தர், அருந்ததிராய், பாரத் தோக்ரா மற்றும் பிரபாஷ் ஜோஷி ஆகியோர்களை சந்தித்து உதவி கோரினார் பன்வர் மெக்வன்ஷி. இறுதியாக பிரபாஷ் ஜோஷி, அப்போதைய துணை ஜனாதிபதி பைரோன் சிங் செகாவத்திடம் பேசி பிரச்சனையை தீர்க்க உதவி செய்தார்.
மேலும், தேசிய அளவில் பத்திரிக்கையாளர்களாலும், சமூக செயல்பாட்டாளர்கள் தலையீட்டாலும் இந்தப் பிரச்சனை சுமூகமாக முடிந்தது. PUCL அவருக்கு முழுமையாக ஆதரவு தந்ததை அவர் நன்றியுடன் நினைவு கூர்ந்துள்ளார். இருந்தாலும், எந்தவொரு தலித் அமைப்பும் அல்லது தலித் இலக்கியவாதிகளும் அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பாதது அவருக்கு ஆச்சரியம் தந்ததாக பதிவு செய்துள்ளார்.
மொத்தத்தில் இந்த நூல் பன்வர் மெக்வன்ஷி என்ற சமூகப் போராளியை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங் பரிவாரங்களுக்கு எதிரான அவரின் திடமான போராட்டம் நம்பிக்கை தருவதாக இருக்கிறது. ஒரு தனி மனிதனாக ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக அடுக்கடுக்கான பல போராட்டங்களை நிகழ்த்தி இருக்கிறார். குறிப்பாக, வட மாநிலங்களில் தலித் மக்கள் ஆர்.எஸ்.எஸ்-இல் சேருவது தடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் புத்தகத்தை இந்தியாவின் மூலை முடுக்கில் எல்லாம் கொண்டு சென்று மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்த நூல் மூலம் பன்வர் மெக்வன்ஷி, தான் ஒரு இந்துவாக இருக்க முடியாது என்று சொல்லியிருக்கிறார்; ஒரு இந்திய குடிமகனாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
இந்த புத்தகத்தை வாசித்தபோது எனக்கு ஜான் பெர்க்கின்ஸ் எழுதிய “ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்ற புத்தகம்தான் ஞாபகம் வந்தது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலக வலைப்பின்னலை அந்தப் புத்தகம் வெளிப்படுத்தியது போல், இந்தப் புத்தகம் இந்துத்துவ பாசிசத்தை வெளிப்படுத்தியுள்ளது. இருந்தாலும், இந்தப் புத்தகம் எனக்குள் நிறைய கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்தியா முழுவதும் விஷவித்துக்களாக பரவியுள்ள இந்த ஆர்.எஸ்.எஸ் கும்பலிடமிருந்து இந்திய நாட்டை எப்படி மீட்டெடுப்பது ?
இடது சாரி, தலித் மற்றும் மதச்சார்பற்ற அமைப்புகள் இந்த இந்துத்துவ-பாசிச அமைப்புக்கு எதிராக ஏன் வலுவாக போராடுவதில்லை ?
நாடு முழுவதும் கிட்டத்தட்ட 57,000 கிளைகளையும், 6 மில்லியன் உறுப்பினர்களையும், 34 துணை அமைப்புகளையும் கொண்ட இந்த இந்துத்துவ -பாசிச அமைப்பை வீழ்த்தி எவ்வாறு நம் நாட்டை மதச்ச்சார்பற்ற நாடாக மீண்டும் புத்தாக்கம் செய்வது ?
இந்த கேள்விகளுக்கான பதிலை காலம் சொல்லும் வரை காத்திருக்கத்தான் வேண்டும்.
நல்லதொரு புத்தகத்தை தமிழுக்கு கொடுத்த மொழிபெயர்ப்பாளர் ச.நடேசனுக்கு நன்றி!
(குறிப்பு : இந்த நூலை எழுதிய பன்வர் மெக்வன்ஷி (Bhanwar Maghwanshi) ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மண்டல் கிராமத்தின் அருகில் உள்ள சிர்தியாஸ் என்ற கிராமத்தில் 1975 இல் பிறந்தவர். தனது 13 வயதில் ராஷ்டிரிய சுயம்சேவக் சங் -கில் (RSS) சேர்ந்த இவர் பின்னர் 1991 இல் ஆர்.எஸ்.எஸ் லிருந்து விலகி தற்போது ஒரு தலித் இயக்க செயல்பாட்டாளராகவும் பத்திரிக்கையாளராகவும் இருந்து வருகிறார். அவர் தனது நேரத்தை சிர்தியாஸில் உள்ள அம்பேத்கர் பவனைக் கவனித்துக் கொள்வதற்கும் , நாடு முழுவதும் அவரைக் கொண்டு செல்லும் அரசியல் வேலைகளுக்கும் இடையில் பிரித்துக் கொள்கிறார். இந்த நூல் முதலில் ” நான் கரசேவகனாக இருந்தேன் “என்ற தலைப்பில் ஹிந்தியில் எழுதப்பட்டது. பின்பு “ இந்துவாக நான் இருக்க முடியாது – ஆர்.எஸ்.எஸ்ஸில் ஒரு தலித்தின் கதை (I could not be Hindu-Story of a Dalit in the RSS)” என்ற தலைப்பில் தமிழில் வெளிவருகிறது.)
நுல் ஆசிரியர் : பன்வர் மெக்வன்ஷி தமிழில் : செ.நடேசன் பதிப்பகம் : எதிர் வெளியீடு, ஆகஸ்ட் 2020 பக்கங்கள் : 256 விலை : ரூ.299
ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கான சதித்தனமான முயற்சிகளை முறியடிப்போம் ! தூத்துக்குடி மக்களுக்கு துணை நிற்போம் !
பதினைந்து உயிர்களின் தியாகத்தை நெஞ்சில் ஏந்தி, கொலைகார ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்றுவதற்கான போராட்டத்தை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள் தூத்துக்குடி மக்கள்.
கொலைகார ஸ்டெர்லைட்டோ எப்படியாவது சதி செய்து ஆலையை திறந்து விடுவது என்ற நோக்கில் எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறது.
ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்காக ஆலையைத் திறக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை, அதை ஆமோதித்த ஆளுகின்ற தி.மு.க உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளின் முடிவை மிகச்சிறந்த வாய்ப்பாக ஸ்டெர்லைட் நிர்வாகம் பயன்படுத்திக் கொண்டது.
மக்களின் துயரத்தைப் பொருட்படுத்தாமல், ஆக்சிஜன் உற்பத்தி செய்து கொண்டாட்டத்தோடு அதை விளம்பரப்படுத்தியது. அது குறித்து ஊடகங்களிலும், பத்திரிக்கைகளிலும் தொடர்ந்து செய்திகள் வரும்படி பார்த்துக் கொண்டது.
உண்மையில், வாக்குறுதி அளித்ததை விட குறைந்த அளவிலேயே ஆக்சிஜன் உற்பத்தி செய்ததையும், ஏறக்குறைய 1500 டன் வளிமண்டல ஆக்சிஜனை வீணடித்ததையும் நித்யானந்த்த ஜெயராமன் உள்ளிட்டோர் ஆதாரப்பூர்வமாக முன்வைத்துள்ளனர்.
அனைத்து செய்தித்தாள்களிலும் INDIAN MEDICAL ASSOCIATION உள்ளிட்ட நிறுவனங்கள் ஸ்டெர்லைட்டை பாராட்டிய விளம்பரங்கள் வெளியானது. “உற்ற நேரத்தில் உயிர் காற்று !, ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்திற்கு நெஞ்சார்ந்த நன்றி !” என்று கொலைகாரனுக்கு புனிதர் பட்டம் கொடுத்திருந்தன அந்நிறுவனங்கள். அரசின் அங்கங்கள் அனைத்தும் ஸ்டெர்லைட்-க்கு ஆதரவாகவும் இருப்பதையே இந்த விளம்பரம் எடுத்துக் காட்டுகிறது.
இதற்கு கடுமையான கண்டனங்கள் தமிழகமெங்கும் எழத் தொடங்கிய நிலையில், இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்காமல் அடுத்த கட்ட நடவடிக்கையாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கட்டில்கள், மெத்தைகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை ஸ்டெர்லைட் நிறுவனம் வழங்கியுள்ளது. ஸ்டெர்லைட்டின் விளம்பரம் மருத்துவமனை சுவர்களில் ஒட்டப்பட்டுள்ளன.
கொரோனா கால நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு, மக்களுக்கு உதவி செய்வதைப் போல நடித்து, மரணித்த தியாகிகளையும், தூத்துக்குடி மக்களையும் அவமானப்படுத்திக் கொண்டிருக்கிற ஸ்டெர்லைட் நிறுவனம் செய்யும் இச்சதிவேலைகள் அரசின் ஒப்புதலோடுதான் அடுத்தடுத்து வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன.
ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக திறப்பதற்கான முன்னேற்பாடுகளாகவே இதைக் கருத வேண்டியுள்ளது. ஸ்டெர்லைட்டின் இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளை கண்டிக்காமல் அதற்கு ஒத்துழைக்கும் வகையிலேயே தி.மு.க அரசின் போக்கு உள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்றுவதற்காக தனிச்சட்டத்தை உடனே இயற்ற வேண்டும். அதற்கான போராட்டங்களை தூத்துக்குடி மக்கள் முன்னெடுப்பார்கள். அதற்கு மக்கள் அதிகாரம் துணைநிற்கும்.
தோழமையுடன் தோழர் வெற்றிவேல் செழியன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
99623 66321.
ஊரடங்குக் காலத்தில் மக்கள் அல்லல்படும் போது மூடு டாஸ்மாக்கை !
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மக்களுடைய வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதிக்கப் பட்டுள்ள இச்சூழலில் டாஸ்மாக்கை திறக்கப் போவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். எடப்பாடி ஆட்சியில் ஊரடங்குக் காலத்தில் டாஸ்மாக்கை திறக்க எதிர்ப்பு தெரிவித்த திமுக, தற்பொழுது ஆட்சியில் அமர்ந்தவுடன் இந்த நச்சுச் சூழலிலும் டாஸ்மாக்கை திறக்க உத்தரவிட்டது கடும் கண்டனத்துக்குரியது.
ஊரடங்குக்காலத்தில் மக்கள் வேலையின்றி தவிக்கும் சூழலில் அரசால் அளிக்கப்படும் உதவித்தொகை டாஸ்மாக்கிற்கே செல்லும்.
தமிழக அரசு உடனடியாக டாஸ்மாக்கை திறக்கின்ற உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும். அவ்வாறு டாஸ்மாக் திறக்கப்படும் பட்சத்தில் அதற்கு எதிரான மக்கள் போராட்டங்களை ஒருபோதும் தடுக்க முடியாது.
தோழமையுடன் தோழர் வெற்றிவேல் செழியன்,
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321.
ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களில் சோவியத் ரஷ்யாவையும், கம்யூனிஸ்ட் கட்சியையும் வில்லன்களாக காட்டி எடுத்திருந்தார்கள்.நாங்கள் அதைக் கண்டு பொங்கி எழவில்லை. மாறாக அந்தப் படங்களை பார்த்து இரசித்து மகிழ்ந்தோம். ஏனென்றால் நாங்கள் ரஷ்யர்களும் அல்ல, கம்யூனிஸ்டுகளும் அல்ல. மாறாக தன்னலம் கருதும் தமிழ்த் தேசியவாதிகள்!
வியட்கொங் விடுதலைப் போராளிகளால் தென் வியட்நாம் விடுதலை செய்யப்பட்டு சில வருடங்களின் பின்னர் எடுக்கப்பட்ட ராம்போ போன்ற திரைப்படங்களில் வியட்நாமிய போராளிகளை வில்லன்களாகவும், அமெரிக்க ஆக்கிரமிப்புப் படையினரை ஹீரோக்களாகவும் காட்டினார்கள்.நாங்கள் அதைக் கண்டு பொங்கி எழவில்லை. மாறாக அந்தப் படங்களை பார்த்து இரசித்து மகிழ்ந்தோம். ஏனென்றால் நாங்கள் வியட்நாமியரும் அல்ல, கம்யூனிஸ்டுகளும் அல்ல. மாறாக தன்னலம் கருதும் தமிழ்த் தேசியவாதிகள்!
ராம்போ-2 வில் சோவியத் செம்படையினரை கொடூரமான வில்லன்களாக காட்டினார்கள். ஆப்கான் இஸ்லாமியவாத ஜிகாதிகளை ஹீரோக்களாக காட்டினார்கள்.நாங்கள் அதைக் கண்டு பொங்கி எழவில்லை. மாறாக அந்தப் படங்களை பார்த்து இரசித்து மகிழ்ந்தோம். ஏனென்றால் நாங்கள் தன்னலம் கருதும் தமிழ்த் தேசியவாதிகள்!
ரோஜா என்ற தமிழ்த் திரைப்படத்தில் காஷ்மீர் விடுதலைப் போராளிகளை இஸ்லாமிய மதவெறி பிடித்த கொடூரமான வில்லன்களாக காட்டி இருந்தார்கள்.நாங்கள் அதைக் கண்டு பொங்கி எழவில்லை. மாறாக அந்தப் படத்தை பார்த்து இரசித்து மகிழ்ந்தோம். ஏனென்றால் நாங்கள் காஷ்மீரிகளும் அல்ல, இஸ்லாமியரும் அல்ல. மாறாக தன்னலம் கருதும் தமிழ்த் தேசியவாதிகள்!
உயிரே எனும் தமிழ்த் திரைப்படத்தில் அசாமிய விடுதலைப் போராளிகளை வில்லன்களாக காட்டி இருந்தார்கள்.நாங்கள் அதைக் கண்டு பொங்கி எழவில்லை. மாறாக அந்தப் படத்தை பார்த்து இரசித்து மகிழ்ந்தோம். ஏனென்றால் நாங்கள் அசாமியர் அல்ல. மாறாக தன்னலம் கருதும் தமிழ்த் தேசியவாதிகள்!
கடந்த இருபது வருட காலமாக பல நாடுகளை சேர்ந்த இஸ்லாமிய ஜிகாதிகளை வில்லன்களாக காட்டும் திரைப்படங்கள் ஏராளம் வந்து விட்டன. ஹாலிவூட் ஆங்கிலத் திரைப்படங்கள் மட்டுமல்ல, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஏராளமான ஹிந்தி, தமிழ்ப் படங்கள் அது போன்ற கதைக்கருவை கொண்டிருந்தன.நாங்கள் அதைக் கண்டு பொங்கி எழவில்லை. மாறாக அந்தப் படங்களை பார்த்து இரசித்து மகிழ்ந்தோம். ஏனென்றால் நாங்கள் இஸ்லாமியர்கள் அல்ல. மாறாக தன்னலம் கருதும் தமிழ்த் தேசியவாதிகள்!
அமெரிக்க ஏகாதிபத்தியமும், இந்திய பிராந்திய வல்லரசும் தமது நலன்களுக்கு எதிரான இயக்கங்களை பயங்கரவாத இயக்கங்களாக அறிவித்து தடைசெய்திருந்தன. அப்போதெல்லாம் எந்தவிதமான அரசியல் புரிதலும் இல்லாமல் நடந்து கொண்டோம். உலகத்தை அல்லது பூகோள அரசியலை புரிந்து கொள்வதற்கு, எமது குறுகிய சிந்தனை கொண்ட தமிழ்த்தேசியம் அனுமதிக்கவில்லை. அதைக் கூட ஒரு குறைபாடாக நினைக்காமல், பெருமையாக நினைத்துக் கொண்டோம்.
நாங்கள் தொடர்ந்தும் அமெரிக்க – இந்திய நலன்களுக்கு விசுவாசமாக இருப்பதாக காட்டிக் கொண்டோம். இப்போதும் காட்டிக் கொள்கிறோம். எஜமானின் காலடியில் விழுந்து கிடந்தோம். ஒவ்வொரு வருடமும் ஜெனீவா மகாநாட்டில் அமெரிக்காவும், மேற்குலக நாடுகளும் தமிழர்கள் பக்கம் நிற்பதாக எங்களை நாங்களே ஏமாற்றிக் கொண்டோம். தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த நாடுகளில் சீனா, கியூபாவை மட்டும் தேர்ந்தெடுத்து திட்டித் தீர்த்தோம். அப்போதுதான் அமெரிக்காவின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்று உண்மையிலேயே நம்பினோம்.
அமெரிக்காவையும், இந்தியாவையும் திருப்திப் படுத்துவதற்காக நாங்களும் சீனாவை திட்டினோம். இலங்கையில் சீன மொழித் திணிப்பு நடக்கிறது, சீனாவின் காலனி உருவாகிறது என்று பிரச்சாரம் செய்தால் இந்தியா தமிழர்களை ஆதரிக்கும் என்று நம்பினோம். சர்வதேச மட்டத்தில் இஸ்லாமியப் பயங்கரவாதத்தை கண்டித்தோம். “இஸ்லாமியர்களை நம்ப முடியாது… குண்டு வைப்பார்கள்…” என்று ஏகாதிபத்தியம் சொல்லித் தந்த பாடத்தை மனனம் செய்து ஒப்புவித்தோம். அத்துடன் இஸ்ரேலை இருக்க விடாமல் அரபு – இஸ்லாமியர்கள் தாக்குகிறார்கள் என்று சொல்லி, பாலஸ்தீனர்களின் போராட்டத்தை எதிர்த்து வந்தோம். இஸ்ரேலை நிபந்தனை இன்றி ஆதரித்தோம். இதன் மூலம் அமெரிக்க எஜமான் மனத்தைக் குளிர வைத்தோம்.
இவ்வாறு எந்த விதமான அரசியல் புரிதலுமற்ற, குறுகிய மனப்பான்மை கொண்ட தமிழ் குறுந் தேசியவாதிகளின் பலவீனத்தை பயன்படுத்தி Family Man – 2 சீரிஸ் தயாரித்திருக்கிறார்கள்.
உதாரணத்திற்கு சில எடுத்துக்காட்டுகள்:
இறுதிப்போரில் புலிகளின் தலைவர் பிரபாகரன் தப்பி விட்டதாகவும் வெளிநாட்டில் பதுங்கி இருப்பதாகவும் தமிழ்த் தேசியவாதிகள்தான் கதைகளை கட்டி விட்டார்கள். அனைத்து தமிழர்களும் தாம் சொல்வதை உண்மை என்று நம்ப வேண்டும் என அடம்பிடித்தார்கள். இந்த நம்பிக்கையை மூலதனமாகக் கொண்டு Family Man – 2 சீரிஸ் தொடங்குகிறது. பாஸ்கரன் என்ற பாத்திரப் பெயருடன் வரும் பிரபாகரன் போர்க்களத்தில் இருந்து உயிருடன் தப்பி விட்டதாக சொல்கிறது.
வைகோ, நெடுமாறன், சீமான் போன்ற தமிழக அரசியல்வாதிகளை “உண்மையான தமிழினப் பற்றாளர்கள்” என்று தமிழர்கள் பலர் (இன்றும்) நம்புகிறார்கள். அன்று புலிகளும் அவர்களை நம்பினார்கள்.இந்த நம்பிக்கையை மூலதனமாகக் கொண்டு Family Man – 2 சீரிஸ் தொடங்குகிறது. ஆரம்பத்திலேயே வைகோ, நெடுமாறன், சீமான் போன்றவர்கள் இந்தியப் புலனாய்வுத் துறையின் தொடர்பில் இருப்பவர்களாக காட்டப்படுகின்றனர். அவர்கள் புலிகளின் தலைவருடனும் நேரடித் தொடர்பில் இருக்கிறார்கள். ஆனால், அவர்களது விசுவாசம் இந்திய இறையாண்மை மீதே இருக்கிறது. (இந்த உண்மையை சீமானும் மறுக்கவில்லை.)
இறுதிப்போரில் புலிகளின் தோல்வியை ஏற்றுக் கொள்ளும் தைரியம் இல்லாத தமிழ்த் தேசியவாதிகள், “இருபது சர்வதேச நாடுகள் ஒன்று சேர்ந்து அழித்து விட்டன” என்று சொல்லித் திரிந்தார்கள். இப்போது கேட்டாலும் அதைத்தான் சொல்வார்கள்.இந்த நம்பிக்கையை மூலதனமாகக் கொண்டு Family Man – 2 சீரிஸ் தொடங்குகிறது. புலிகளை அழித்த இந்த சர்வதேச நாடுகள் எல்லாம், இஸ்லாமியவாதிகளுக்கும் எதிரி நாடுகள் தான். ஆகவே லண்டனுக்கு தப்பிச் சென்ற புலிகளின் தலைவர் அங்கிருந்த படியே ISI உடன் கூட்டுச் சேர்ந்து இந்தியாவுக்கு எதிராக சதி செய்வதாக கதை அமைத்திருக்கிறார்கள்.
அமெரிக்காவில் ஸ்தாபிக்கப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமெரிக்க ஏகாதிபதிபத்திய, அல்லது இந்திய பிராந்திய வல்லரசின் நலன்களுக்கு விசுவாசமாக இருப்பதாக காட்டிக் கொள்கிறது. இதை அவர்கள் எந்த ஒளிவுமறைவும் இன்றி நேரடியாகவே சொல்லிக் கொள்கிறார்கள். இந்த நம்பிக்கையை மூலதனமாகக் கொண்டு Family Man – 2 சீரிஸ் தொடங்குகிறது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எந்தக் கட்டத்திலும் இந்திய நலன்களுக்கு எதிராக நடந்து கொள்ளாது. மாறாக, இந்திய அரசுடன் ஒத்துழைப்பார்கள் என்று கதை அமைத்திருக்கிறார்கள்.
000
சரி, இனிமேல் Family Man – 2 சர்ச்சைக்கு பிறகாவது இந்த குறுகிய மனப்பான்மை கொண்ட தமிழ்த்தேசியவாதிகள் திருந்தி நடப்பார்கள் என்று நினைத்தால் ஏமாந்து போவீர்கள். இப்போதும் கம்யூனிஸ்டுகள், காஷ்மீரிகள், இஸ்லாமியர்கள் போன்றவர்களுடன் அவர்களுக்கு ஒட்டும் இல்லை உறவும் இல்லை. இதன் மூலம் ஏகாதிபத்தியத்தின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு தொடர்ந்தும் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படியான நிலைமையில், Family Man – 2 க்கு எதிரான எதிர்ப்புகள் அதற்கான விளம்பரமாக அமையுமே தவிர வேறெந்த பலனையும் தரப்போவதில்லை. இனி வருங்காலத்தில் இது போன்ற படங்கள் தயாரிப்பதற்கான ஊக்குவிப்பாகவே, அவர்கள் இந்த எதிர்ப்புகளை கருதிக் கொள்வார்கள்.
சத்தீஸ்கர் மாநிலம் தெற்குப் பகுதியில், சுக்மா மற்றும் பிஜாப்பூர் மாவட்டங்களின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது சில்கர் கிராமம். இக்கிராமத்தில் துணை இராணுவப் படையின் முகாம் ஒன்று கடந்த மே 12-ம் தேதி இரவு அமைக்கப்பட்டது.
கிராம சபையிடம் அனுமதி கேட்காமல் அமைக்கப்பட்ட இம்முகாமை அகற்றக்கோரி, மே 12 இரவு முதல் சில்கர் மற்றும் அதன் அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆதிவாசி பழங்குடியின மக்கள் 22 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அமைதியாக நடந்து கொண்டிருந்த போராட்டத்தில் மாவோயிஸ்டுகளின் தலையீடு இருப்பதாகக் கூறி, மே 17 அன்று போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். மாவோயிஸ்டுகள் தலையீடு என்று போலீசு தரப்பு கூறியதை மறுக்கும் கிராம மக்கள், போராட்டத்தை மேலும் தீவிரமாக்கினர்.
ஆதிவாசி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்டோரை கிராமத்திற்குள் நுழையவிடாமல் போலீஸ் தடுத்தபோதும், போராட்டக் களத்தில் மக்கள் கூடுவது அதிகரித்தே வருகிறது. மே 25 அன்று, துணைராணுவப் படையினர் முகாமிட்டிருக்கும் டாரெம் எனும் இடத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை எடுத்து செல்லவிடாமல் சாலையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராமமக்கள், “துணைராணுவப்படையின் முகாமை அகற்றுங்கள்; நாங்கள் முகாம்களை விரும்பவில்லை; இந்த நிலம் எங்களுடையது; தண்ணீர், காடு, காற்று எங்களுடையது” என முழங்கினர்.
“சில்கர் கிராமத்தில் இருந்து முகாம் அகற்றபடும் வரை, முகாமிற்கான ரேஷன் பொருட்களையோ அல்லது வேறு பொருட்களையோ எடுத்து செல்வதற்கான அனைத்து வாகன வழித்தடங்களையும் மறிப்போம்” என்கிறார் “மூல் நிவாசி பச்சாவ் மஞ்ச்சை” (பூர்வ குடிமக்களை காப்பாற்றுவோம் அமைப்பு) சேர்ந்த இளம் பெண் ஒருவர்.
போராட்டம் வீரியமடைந்த நிலையில் இனியும் தாமதம் செய்தால், போராட்டம் மேலும் தீவிரமடையும் என்று அஞ்சிய அம்மாநிலத்தின் பூபேஷ் பாகேல் அரசு, போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒன்பது பேர் கொண்ட குழுவை அமைத்தது.
அரசு அமைத்துள்ள குழுவில், 11 சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாஸ்டர் மக்களவை எம்.பி.யான தீபக் பைஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இரண்டு மாவட்ட மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதால், பிஜாப்பூர் மற்றும் சுக்மா ஆகிய இரண்டு மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் பாஸ்டர் காவல்நிலைய ஆய்வாளர் ஆகியோர் அரசு பிரதிநிதிகளுடன் சென்றனர்.
அரசு அமைத்துள்ள குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த, சுக்மா, பிஜாப்பூர் மற்றும் தாந்தேவாடாவில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த நான்கு பெண்கள், ஆறு ஆண்கள் உட்பட பத்து பேரை கொண்ட இளைஞர் குழு ஒன்று அமைக்கப்பட்டது. 17 வயது முதல் 25 வயதுடைய இளைஞர்கள்தான் இக்குழுவில் இடம் பெற்றிருந்தவர்கள்.
ஜூன் 2 அன்று அரசு தரப்பிற்கும் கிராமப்புற இளைஞர் குழுவுக்கும் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டனர். கடும் மழையையும் பொருட்படுத்தாமல், பெண்கள், ஆண்கள், இளைஞர்கள் என பலர் அரசு தரப்பில் இருந்து வருபவர்களுக்காக காத்திருந்தனர்.
அரசு தரப்பு குழு டாரெம் பஞ்சாயத்து கட்டிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தலாம் எனக் கூறியுள்ளது. ஆனால் பேச்சுவார்த்தை பொதுவெளியில் அனைவரின் முன்பும் நடத்தப்பட வேண்டுமென்று மூல் நிவாசி பச்சாவ் மன்ச் வலியுறுத்தியது. இந்த நிபந்தனைக்கு அரசாங்க தரப்பு குழு ஒப்புக்கொண்டது. ஆனால், பேச்சுவார்த்தை நடக்கும் அந்த இடத்திற்கு ஊடகங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் செல்ல போலீசு அனுமதிக்கவில்லை.
“பேச்சுவார்த்தை பயன் தரும் விதமாக அமைந்தது. போராட்டக்காரர்கள் ஆறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இவற்றை நாங்கள் விவாதித்து ஒரு முடிவெடுத்து அவர்களிடம் தெரிவிப்போம்” என்று கூறிய எம்.பி. தீபக் பைஜ், போராட்டக்காரர்கள் முன்வைத்த கோரிக்கைகளை ஊடகங்களுக்கு சொல்ல மறுத்துவிட்டார்.
“துணைராணுவப் படையின் முகாமை வெளியேற்ற வேண்டும். போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய போலீசாரை இடைநீக்கம் செய்யவேண்டும். ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி இதனை விசாரிக்க வேண்டும். இறந்தவர்களுக்காக கட்டப்பட்ட நினைவு சின்னத்தை எதுவும் செய்யக்கூடாது என போலீசாருக்கு அறிவுறுத்த வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை”, என்கிறார் முன்னாள் பள்ளி ஆசிரியை மற்றும் சமூக செயல்பாட்டாளரான சோனி சோரி.
மேலும், “எந்தவொரு போராட்டக்காரர்களையும் போலீசு துன்புறுத்தக்கூடாது. முகாம் அமைப்பதற்கு முன்பு 7 மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி அமைக்கப்படும் குழுவில் கலந்து ஆலோசிக்க வேண்டும். இனி கிராம சபைக் கூட்டத்தை நடத்தாமல் எந்தவொரு முகாம்களும் அமைக்கக்கூடாது” என்றார் அவர்.
பேச்சுவார்த்தை நடந்த ஒருமணி நேரம் கழித்து, அரசு தரப்பு குழு போராட்டக்காரர்களிடம் சென்று, “உங்களது பெரும்பாலான கோரிக்கைகளுக்கு அரசு கட்டுப்படும். ஆனால், துணைராணுவப் படையின் முகாமை அகற்ற மத்திய அரசோ மாநில அரசோ முடிவுக்கு வரவில்லை” என தெரிவித்துள்ளனர்.
“அரசாங்க தரப்பு பதிலை நாங்கள் எழுத்துப்பூர்வமாக தரச்சொல்லி கேட்டுள்ளோம். ஏனென்றால், நாங்கள் இந்த அரசாங்கத்தை துளியும் நம்பவில்லை”, என்கிறார் இளம் தலைவர்களில் ஒருவர். மேலும், “பதில் கேட்டு நான்கு நாட்கள் ஆகியும் அரசாங்கத்தில் இருந்து எங்களுக்கு எழுத்துப்பூர்வ பதில் எதுவும் வரவில்லை என்றால் அரசாங்கம் எங்களை மதிக்கவில்லை என்பது தெளிவாகிறது. இப்போது எங்களது போராட்டத்தை தீவிரப்படுத்துவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை” என்கிறார் அவர்.
எழுத்துப்பூர்வ பதிலுக்காக கிராம மக்கள் காத்திருப்பதைப் பற்றி, அரசு தரப்பு குழுவை தலைமை தாங்கிய எம்.பி. தீபக் பைஜ்ஜிடம் ஸ்காரல் இணையதளம் கேட்டுள்ளது. அதற்கு, “எழுத்துப்பூர்வமாக பதில் கொடுத்தால் மட்டும் போராட்டத்தை நிறுத்தப்போகிறார்களா என்ன?”, என்று திமிர்தனமாக பதிலளித்துள்ளார் தீபக் பைஜ்.
அரசு தரப்பு குழுவில் இருந்து எழுத்துப்பூர்வ அறிக்கை ஏதும் வராத நிலையில் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்திருக்கிறார்கள் கிராம மக்கள். “எழுத்துப்பூர்வ அறிக்கை வரவில்லை என்று தெரிந்ததும் முன்பை காட்டிலும் அதிகமான கிராம மக்கள் போராட்டத்தில் இணைந்துள்ளார்கள்” என்கிறார்கள் போராட்டக் களத்தில் இருப்பவர்கள்.
“போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களை போலீசார் துன்புறுத்தமாட்டார்கள் என்று அரசு தரப்பு குழு உறுதியளித்தபோதிலும், கிராம இளைஞர் ஒருவரை டாரெம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றது” என மஞ்ச் தலைவர்கள் செய்தியாளர்களிடம் கூறியுள்ளனர். மேலும், சில்கர் கிராமத்திற்குள் யாரும் நுழையமுடியாதபடி, போலீசாரால் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். ஜூன் 5 அன்று ஆம் ஆத்மி கட்சி சார்பில் வந்த குழு ஒன்று டாரெம் பகுதியிலேயே நிறுத்தப்பட்டது. சில்கர் கிராமத்துக்குள் நுழையவிடாமல் தடுத்து நிறுத்தப்பட்ட அரசியல் ஆர்வலர்கள் சிலர் டாரெமிலே சாலை மறியல் போராட்டத்தை நடத்தி தங்களுடைய எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர். ஜூன் 6 அன்றும் கிராம மக்களின் போராட்டத்தில் கலந்துகொள்ள வெளியில் இருந்து சில்கர் வந்த எட்டு பேர் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
கிராம மக்களின் போராட்டத்திற்கு பெருகிவரும் ஆதரவினை கண்டு அஞ்சிய அரசாங்கம் ஜூன் 6 அன்று 144 தடை உத்தரவை பிறப்பித்தது. அப்பகுதியில் நான்கு பேர் கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதனை மீறி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்த சத்தீஸ்கர் பச்சாவ் அந்தோலன் என்ற சமூக ஆர்வ குழு ஒன்று பிஜாப்பூர் நகரத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டது.
போலீசின் அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் போராடிவரும் மக்களின் நோக்கம், தங்களது கிராமத்தில் அத்துமீறி முகாமிட்டிருக்கும் துணைராணுவப் படையின் முகாமை அகற்ற வேண்டும் என்பதுதான். வளர்ச்சி என்ற பெயரில் பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகள், மலைகளில் இருக்கும் கனிம மற்றும் இயற்கை வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரைவார்க்கும் நோக்கத்தில் செயல்படுகிறது மத்திய மாநில அரசுகள்.
அதை எதிர்த்துப் போராடும் மக்களை பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் என முத்திரை குத்தி ஒடுக்கும் வேலையைச் செய்து வருகிறது. இந்த அடக்குமுறைகளுக்கு எதிராக, போராடும் மக்களோடு துணைநிற்போம் !
விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தால் வழக்கா ? போலீசின் அடக்குமுறையை முறியடிப்போம் !
கடந்த ஜூன் 5-ம் தேதி அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு விடுத்த அறைகூவலை ஏற்று (AIKSCC) தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் தோழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் போராடிய மக்கள் அதிகாரம் தோழர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்போவதாக போலீசு தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி விவசாயிகளுக்கு ஆதரவான முழக்கத் தட்டியை பிடித்து இருந்த ஒரு பெண்ணின் வீட்டிற்கு அதிகாலை 5 மணிக்கு போலீசு சென்று மிரட்டி இருக்கிறது. சேத்துப்பட்டில் நமது போராட்டத்தில் கலந்து கொண்ட முதியவரின், இளைஞர்களின் முகவரி என்ன என்று விசாரித்துக் கொண்டு இருக்கிறது.
முழக்கத் தட்டியைப் பிடித்துக் கொண்டு வீட்டு வாசலில் யார் யார் இருந்தார்களோ அவர்கள் மீதெல்லாம் வழக்குப் போடுவோம் என்று கடந்த மூன்று நாட்களாக ஒவ்வொரு பகுதியிலும் விசாரணை செய்து கொண்டிருக்கிறது போலீஸ்.
கடந்த அதிமுக ஆட்சியில் வாசலில் கோலம் போட்டவர்கள் மீது வழக்கு தொடுத்தபோது கண்டனம் தெரிவித்த திமுக இப்போது ஆட்சியில் இருக்கிறது. ஆனால் விவசாயிகளுக்கு ஆதரவாக கோலம் போட்டார்கள், கையில் முழக்கத்தட்டி வைத்திருந்தார்கள் என்று இப்போது வழக்குப் போடுகிறது . திமுகவுக்கு கடந்த ஆட்சியில் ஜனநாயகமாகப் பட்டதெல்லாம் இந்த ஆட்சியில் ஜனநாயக விரோதமாக மாறி இருக்கிறது.
விவசாயிகளுக்கு ஆதரவாக வீட்டின் முன் கோலம் போடுவதற்கு கூட அனுமதி வாங்க வேண்டும் என்று புது விதி உருவாக்கி வைத்திருக்கிறது போலீஸ். போலீசின் அடக்குமுறைகளுக்கு எப்பொழுதும் பணியப் போவதில்லை. விவசாயிகள் போராட்டத்துக்கு உறுதியான ஆதரவை தெரிவிப்போம்.
தோழமையுடன் தோழர் சி.வெற்றிவேல் செழியன்
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
முத்துகுமாருடன் நீண்டநேர விவாதத்தை முடிக்கையில், அவர் என்னிடம் நான் ஒரு கேள்வி கேட்கட்டுமா என்றார். கேளுங்கள் என்று நான் கூறினேன்.
“நான் எனது மனைவியின் நகைகளை ஒரு அடகு கடைகாரரிடம் சிறிது காலத்திற்கு முன்னர் அடகு வைத்தேன். இப்போது எனக்கு வேலை இல்லை. என்னால் இப்போது தவணைக் கட்ட முடியாததற்காக ஏதாவது தள்ளுபடி செய்வார்களா?’’ என்று அவர் கேட்டார். வட்டி அதிகரித்து விட்டதால் அவரால் கடன் கட்ட இயலாத அச்சத்தில் இந்த கேள்வி வருகிறது. அவர் பெற்ற கடன் ரூ.1,20,000. அவரது மாத தவணையோ ரூ14,000.
அவரும் அவரது மனைவியும் திருப்பூரில் ஒரு நூற்பாலையில் வேலை செய்து வந்தனர். அது துணி ஏற்றுமதிக்காக உலக அளவில் பெயர் பெற்ற ஒரு நிறுவனம். 12 மணிநேர வேலைக்கு அவர்கள் ரூ.500 கூலியாக பெற்றுவந்தனர். தங்கிக் கொள்வதற்கு ஒரு வீடும் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. ஊரடங்கு இல்லாத நிலையிலும் கடனை உரிய தேதியில் கட்டுவது அவர்களுக்கு மிகவும் சிரமமான விசயம்தான். இப்போதோ ஊரடங்கால் அனைத்து வருமானத்தையும் இழந்துள்ளனர்.
“இந்த முறை ஏப்ரலில் ஊரங்கு அறிவிக்கப்பட்டதும் முதலாளி எங்களையெல்லாம் திருப்பி அனுப்ப முடிவெடுத்தார்” என்றார் முத்துகுமார். அவரது குரல் தமிழ்நாடு முழுவதும் உள்ள உழைப்பாளிகளின் பதற்றத்தை வெளிப்படுத்துகிறது.
சென்ற ஆண்டின் ஊரடங்கை பற்றி முத்துக்குமாரிடம் கேட்டபோது, “சென்ற ஊரடங்கின் போது எங்கள் முதலாளி எங்களை அங்கேயே சிலநாட்கள் தங்கவைத்திருந்தார். எங்களுக்கு சாப்பாட்டிற்கு அரிசியும் கொடுத்தார். செலவுக்கும் பணம் கொடுத்தார். ஆனால், தொடர்ந்து நிர்வகிக்க முடியாத போது, எங்களை வீட்டிற்கு திருப்பி அனுப்ப வேண்டியதாகிவிட்டது. அவ்வாறே இந்த முறை ஊரடங்கு அறிவிக்கப்பட்ட உடனேயே எங்களை அனுப்பிவிட்டார். இப்போது வேலையில்லாமல் ஒரு மாதம் ஆகிவிட்டது” என்றார்.
அவரும் அவரது மனைவியும் இறுதியாக கடந்த ஏப்ரல் மாதம்தான் கூலி பெற்றனர். அந்த முதலாளி கொடுத்த முன்பணத்திற்காக ஒரு வார சம்பளத்தை பிடித்துக்கொண்டார். ஊரடங்கு காலத்தில் அவர்களுக்கு வருமானமும் இல்லை.
“நாங்கள் வேலை செய்தால் கூலி கிடைக்கும், சில நாட்கள் வேலையில்லாதபோது எங்களுக்கு சம்பளம் கிடைப்பதில்லை. இது தினக்கூலி வேலைமுறை” என்கிறார் முத்துகுமார்.
மதுரைக்கு அருகில் உள்ள தனது சொந்த ஊரான வாடிப்பட்டிக்கு அவர் திரும்ப வந்துள்ளார். முத்துக்குமாரின் குடும்பத்தினர் அம்மா மற்றும் அவரது சகோதரர் வசிக்க கூடிய, பரம்பரையாக உள்ள வீட்டில் வாழ்ந்துவருகின்றனர். அவருடைய சகோதரர், கோயம்புத்தூரில் உள்ள ஒரு பெயிண்ட் அடிக்கும் கடையில் வேலை பார்த்து வருகிறார். அவரும் ஊரடங்கால் அங்கு பணியிழப்பு ஏற்பட்டதும் வீட்டிற்கு திரும்பிவிட்டார்.
“இந்த மாதத்தில் எல்லா பணமும் செலவாகிவிட்டது. அடுத்த மாதத்திற்கு எங்கள் அம்மாவின் சேமிப்பை சார்ந்திருக்க வேண்டியுள்ளது. என் அம்மா 100 நாள் வேலைதிட்டத்தில் கூலிவேலை செய்து சம்பாதித்துள்ளார். அதை நம்பித்தான் உள்ளோம்”, தேசிய ஊரக வேலைவாய்ப்பும்கூட கோவிட் இரண்டாம் அலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
முத்துகுமாரின் கதை தனிதன்மையானது அல்ல. மீண்டும் இப்போது வரை கோவிட் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மாநகரங்களில் வேலை இல்லாமல் போனதாலும் ஊரடங்கு பயமுறுத்துவதாலும் பலரும் வீட்டிற்கு திரும்பியுள்ளனர். வேலைவாய்ப்பின்மை பற்றிய இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம், இந்த ஆண்டு மே மாதத்தில் வேலையி்ன்மை மிக அதிகமாக பெருகிவருவது பற்றி தெளிவாக கூறுகிறது. தமிழ்நாட்டின் மொத்த உழைப்பு சக்தியில் முறைசார்ந்த பிரிவு 7% மட்டுமே வேலை கொடுக்கிறது. மற்ற 93% அமைப்பாக்கப்படாத தொழில் பிரிவுதான் பெரும்பாலான மக்களுக்கு வேலை கொடுக்கிறது.
மதுரை மாவட்டம், அழகர் கோயில் அருகில் வசிக்கும் பொன்னம்மாவின் வாழ்நிலை முத்துகுமாரின் நிலையை ஒத்ததுதான். இவருடைய குடும்பத்தினர், கோயமுத்தூரில் செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தனர். இவரும் இவருடன் வேலை பார்த்தவர்களையும் செங்கல் சூளையில் வேலை குறைந்ததன் காரணமாக அவர்கள் அனைவரும் மூன்று மாதத்திற்கு முன்னரே வீட்டிற்கு போகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். இப்போழுது சொந்த ஊரிலும் கூட வேலை கிடைக்காததால் அவரும் அவரது குடும்பமும் துயரமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுவருகிறது.
“நாங்கள் எங்கள் நகைகளை எல்லாம் அடகு வைத்துவிட்டோம். இன்னும் இந்த சில மாதங்கள் உயிர்வாழ எங்கள் வீட்டையும் அடமானம் வைத்துள்ளோம். வேலை தேட வெளியே செல்ல முயற்சித்தால் போலிசு எங்களை தடுத்துநிறுத்தி மோசமாக நடத்துகிறது. ஆகையால் என் கணவரும் என் மகனும் வேலை தேட செல்லவில்லை” என்றார் பொன்னம்மா.
தமிழ்நாடு அரசு கொடுத்த ரூ.2000 ஒரு மாத செலவுகளை சமாளிக்க சிறிது உதவிகரமாக இருந்தது. இருந்த போதிலும், ஊரடங்கு தொடர்ந்தால் மற்றும் வேலைவாய்ப்புக்கான வழி இல்லை என்றால் அவரது குடும்பம் மிக மோசமான நிலையை அடையும் என்பதில் அவருக்கு சந்தேகம் இல்லை. மேலும், அவர் கோவிட் தொற்று வந்துவிடுமோ என்பதிலும் பதட்டமாக உள்ளார்.
“ஊராட்சி அதிகாரிகள் வந்து எங்களை பார்வையிட்டு கைகளை முறையாக கழுவவும், முக கவசம் அணியவும் அறிவுறுத்தினர். வெளியே அதிகமாக எங்கும் போகவில்லை. காய்ச்சல் அல்லது இருமல் வந்தால் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லவேண்டும்” என்றனர்.
பல இளைஞர்கள் ஆலை மூடல் காரணமாக தமது சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். பலரும் உணவு விடுதிகள், கடைகள் மற்றும் பிற சேவைகள் போன்றவை மூட நிர்ப்ந்திக்கப்படுவதால் கிராம புறங்களில் கூட வேலை இழந்துள்ளனர். தேசிய ஊரக வேலை வாய்ப்பும் நிறுத்தப்பட்டுள்ளதால் கிடைக்கின்ற ஒரே வேலை விவசாய கூலி வேலைதான். ஆனால், அது எல்லா மாவட்டங்களிலும் கிடைப்பதில்லை.
2020 ஆம் ஆண்டில் முதல் கொரோனா ஊடரங்கில் கடன் பிரச்சனைக்கு எதிராக மதுரை பெண் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்
சிபிஐ எம்எல் (விடுதலை)-யின் மாவட்ட செயலாளர் இளையராஜாவின் கூற்றுப்படி, தேனி மாவட்டம் மற்றும் டெல்டா மாவட்டங்கள் உட்பட அங்கு நல்ல விவசாய வேலை வாய்ப்புகள் கிடைக்கும் அதே நேரத்தில், விவசாயம் என்பது விவசாயம் அல்லாத வேறு துறைகளிலிருந்து அதிகமாக வரும் வேலையாட்களுக்கு வேலையை ஏற்படுத்துவதில்லை. தனது மகனுடன் சேர்ந்து மாடு வளர்க்கும் முத்துகுமார், “பெரும்பாலான நிலங்கள் விற்பனை ஆகிவிட்டது மற்றும் நிலங்களின் மேல் மண் மற்ற பயன்பாட்டிற்கு வெட்டி எடுக்கப்பட்டுவிட்டது” என்கிறார். இப்போது பாறைகள் கூட மணலுக்காகவும் மற்ற பயன்பாட்டிற்காகவும் வெட்டி எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்கிறார். “விவசாயத்தை மறந்ததால், இப்போது நாங்கள் மாடு மேய்க்க இந்த பாறை நிலத்தில் சிரமப்படுகிறோம்” என்கிறார் அவர்.
கூலி வேலையை அதிகம் கோராத வகையில் தஞ்சாவூர் டெல்டா பகுதி விவசாயம் இயந்திரமயமாக்கப்படுகிறது. பல இளைஞர்கள் கேரளாவிற்கும் மற்ற மாநிலங்களுக்கும் வேலை தேடி தொலைதூரம் செல்லவேண்டியிருக்கிறது. எல்லைகள் மூடப்பட்டு பெருநகரங்கள் மூடப்பட்டு இருக்க பலரும் கிராமத்திற்கு திரும்ப வந்துள்ளனர்.
சென்ற ஆண்டைப் போல், இந்த ஊரடங்கு காலங்களில் செலவுகளை சமாளிக்க சிரம்படுகின்ற இந்த காலங்களில் அவர்கள் சந்திக்கின்ற தவணை, கடன், வட்டி போன்றவற்றை திரும்ப செலுத்துவதில் இந்த ஆண்டு முழுவதும் கூட கட்டமுடியாமல் போகலாம். கோவிட் பெருந்தொற்றைவிட இந்த ஊரங்குதான் அதிக அழிவை கொண்டுவரும் என்பதுதான் உழைக்கும் மக்களின் குடும்பங்களுக்கு முக்கியமான உள்ளுணர்வாக இருக்கிறது.
“கோவிட் பெருந்தொற்றால் இறக்கிறோமோ இல்லையோ ஊரடங்கு நீண்டு நாங்கள் வேலை கிடைக்காமல் போனால் பட்டினிச்சாவு நிச்சயம்” என்பதுதான் நான் நேர்காணல் மேற்கொண்ட போது பல உழைப்பாளி பிரிவினரும் தெரிவித்த கருத்துக்கள்.
குறைவான வருமானம் உள்ள அனேக குடும்பங்கள் தமிழ்நாட்டு அரசிடமிருந்து மே மாதத்திற்காக ரூ.2000 பெற்றுள்ளன. இன்னொரு தவனையாக ஜூன் மாதத்திற்கு ரூ.2000 தருவதாக உறுதியளிக்கப்பட்டு்ள்ளது. இருப்பினும், இந்த குறைந்தப் பட்ச தொகை அவர்களுடைய வாடகை தொகையையோ அல்லது கடன் தவணையையோ செலுத்த உதவாது. அவற்றுக்காக ஒரு மாதத்திற்கு பல ஆயிரம் ரூபாய்கள் செலுத்தவேண்டியதாக இருக்கிறது.
அரசாங்கம், நீண்ட ஒரு காலகட்டத்திற்கு உதவியை நீட்டிப்பு செய்து அடிப்படை வருமான வாழ்வாதாரத்திற்கு பொறுப்பு ஏற்கவில்லை என்றால் இந்த நிச்சயமற்றதன்மை மக்களை மேலும் கடனாளியாகும் நிலைக்கு தள்ளிவிடும்.
விவசாய தொழிலாளர்கள் அல்லாத கட்டுமான தொழிலாளர்கள் உள்ளிட்டு சிறு வியாபாரிகள், முறைசார தொழிலாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பாக்கப்படாத தொழிலாளர்கள் கூட்டமைப்பு, முதலமைச்சருக்கும் பிரதமருக்கும் உழைப்பாளர் குடும்பங்களுக்கு மாதம் தலா ரூ.10,000 வழங்க கோரி கடிதம் எழுதியுள்ளது. மேலும். அது கடனை திருப்பி செலுத்துவதற்கு ஒரு வருட கால அவகாசம் தரவேண்டும், வட்டியை தள்ளுபடி செய்யவேண்டும், வாடகை தொகையை கட்ட கூடுதல் ஆதரவு தரவேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது.
மூலக்கட்டுரை : தொழிலாளர் கூடம் தமிழாக்கம் : முத்துக்குமார் செய்தி ஆதாரம் : Countercurrents