Friday, July 3, 2026
முகப்பு பதிவு பக்கம் 277

இந்தியாவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் போராட்டங்கள் ஏன் நடக்கவில்லை ?

1

இந்தியாவில் அனைத்து உயிர்களுக்கும் முக்கியத்துவம் உள்ளதா?

மினியாபோலிசில் ஜார்ஜ் ஃபிளாய்டின் மரணம் உலகின் மனசாட்சியை உலுக்கியுள்ளது. அமெரிக்காவில் இனவெறி மற்றும் போலீசு மிருகத்தனத்தை கண்டிக்க அனைத்து தரப்பு அமெரிக்கர்களும் இன – நிற பேதமில்லாமல் பெரிய அளவில் எதிர்ப்பு பேரணிகளில் பங்கெடுத்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டங்களின் போது சில கொள்ளை மற்றும் வன்முறை போன்ற விரும்பத் தகாத நிகழ்வுகள் இருந்தன. ஆனால் பெருமளவில் போராட்டங்கள் அமைதியாகவே நடத்தப்பட்டன. மேலும் அந்நாட்டில் ஆழமாக வேரூன்றியுள்ள இனவெறி மீது கவனம் செலுத்தி விவாதம் தூண்டப்பட்டது.

ஜார்ஜ் ஃபிளாய்ட் 47 வயதான ஆப்பிரிக்க-அமெரிக்கர். அவர் போலீசு காவலில் இறந்தார். போலீசு அதிகாரி டெரிக் சவுவின்  ஃபிளாய்டின் கழுத்தில் சுமார் ஒன்பது நிமிடங்கள் முழங்காலில் மண்டியிட்டு அழுத்திய போதும், ஃப்ளாய்ட் “என்னால் சுவாசிக்க முடியவில்லை” என தன்னை விடுவிக்குமாறு அதிகாரியிடம் கெஞ்சிக் கேட்டுக்கொண்டார். டெரிக் சவுவின் கைகளில் சிக்கி, மனிதத்தன்மையற்ற முறையில் நடத்தப்பட்ட ஜார்ஜ் ஃபிளாய்டின் இறுதி தருணம், உலகெங்கிலும் உள்ள மக்களின் சமூக மற்றும் தார்மீக உள்ளுணர்வை உலுக்கியுள்ளது. போலீசு மிருகத்தனத்திற்கும், அதிகப்படியான  அதிகாரத்தனத்துக்கும் எதிராக கண்டனங்களையும் போலீசு சீர்திருத்தங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளன.

ஜார்ஜ் ஃபிளாய்டின் மரணம் வரலாற்று ரீதியாக நீண்டகாலமாக உள்ள இனத்தை அடிப்படையாகக் கொண்ட இழிவை அம்பலப்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவம் ஒவ்வொரு நாட்டிலும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களை குறிவைக்கும் போலீசு மிருகத்தனங்கள் குறித்த உரையாடலைத் தூண்டியுள்ளது. உலகளவில்  ‘ஜார்ஜ் ஃபிளாய்ட் தருணங்களுக்கு’ இணைகள் உள்ளன.

ஜார்ஜ் ஃபிளாய்டின் மரணம், இந்தியாவில் மத சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள் மற்றும் தலித்துகளுக்கு எதிரான ஒரு பக்கச் சார்பான போலீசு நடவடிக்கையை ஒத்திருக்கிறது. முஸ்லிம்களுக்கு எதிரான இந்த தப்பெண்ணம் ஆதிக்க சித்தாந்தத்தால் ஆதரிக்கப்படுகிறது. அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது இந்திய அரசின் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

போராட்டக்காரர்களால் அமெரிக்காவில் ஏற்பட்ட சீற்றத்திற்கு பதிலளிக்கும் விதமாக, போலீசு மிருகத்தனத்தை குறைக்க அரசு பல திட்டங்களை முன்வைத்துள்ளது. அதில் விவாதிக்கப்படும் மிக முக்கியமான இரண்டு எதிர்வினைகள்.. முதலாவதாக மினியாபோலிஸ் காவல்துறையில்  நிதி ஆதாரத்தை வெட்டுவது, இரண்டாவதாக போலீசு படையை கலைத்துவிட்டு, புதிதாக விதிமுறைகளுக்கு உட்பட்டு ஒரு படையை உருவாக்குவது.

மினியாபோலிஸ் நகர சபை போலீசு படை கலைக்கப்படும் எனக் கூறியது, இன்று பாதுகாப்பு என்ற பெயரில் ஆபத்தான ஆயுதமேந்திய போலீசுடன் இணக்கமாக உள்ள பல நாடுகளில் சிந்திக்க முடியாத ஒன்றாகும்.  அமெரிக்காவில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக, இந்தியாவில் நிலைமை உள்ளது. போலீசின் அதீத அதிகாரம், மற்றும் சலுகை என்ற நிலையில், கட்டாய ஆதாரங்களை எதிர்கொள்வதில்கூட சிக்கல் உள்ளது.

மிகச் சமீபத்திய உதாரணம் வாஜா யூனுஸ் என்ற 27 வயது இளைஞர்,  2003-ல் போலீஸ் காவலில் இறந்தார். அவர் மகாராஷ்டிராவில் உள்ள பர்பானியில் வசித்தவர், டிசம்பர் 2, 2002 அன்று கட்கோபர் குண்டுவெடிப்பில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். அவர் ஒரு மென்பொருள் பொறியாளராக இருந்தார். குற்றம் சாட்டப்பட்ட நால்வருடன் கைது செய்யப்பட்டார். யூனுஸ் காவலில் இருந்து தப்பித்ததாக போலீசார் கூறினாலும், ஜனவரி மாதம் விசாரணை நீதிமன்றத்தின் முன் முதல் வழக்கு சாட்சியாக அவருடன் கைதான டாக்டர் முகமது மாடின், ஜனவரி 6, 2003 அன்று யூனுஸ் தாக்கப்பட்டதைக் கண்டதாக சாட்சி கூறினார்.

அதைத் தொடர்ந்து, அவர் மீண்டும் கண்டுபிடிக்கப்படவேயில்லை. 2003 ல் யூனுஸ் உடன் குற்றம் சாட்டப்பட்டவரின் புகாரின் அடிப்படையில், போலீஸ்காரர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. நான்கு காவல்  அதிகாரிகள் முதன்மையான குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு சேவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். இருப்பினும் இந்த மாத தொடக்கத்தில் அவர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டனர்.

குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேருக்கும் எதிராக உயர் நீதிமன்றம் 2004 ல் ஒழுங்கு விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த விசாரணை ஒருபோதும் மேற்கொள்ளப்படவில்லை, அதற்கு பதிலாக குற்றம் சாட்டப்பட்ட நான்கு காவல்துறை அதிகாரிகள் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு மாறாக மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டனர்.

அப்பாவி வாஜா யூனுஸ் மீதான மோசமான தாக்குதல் மற்றும் சித்திரவதை ஒரு தவறி நிகழ்ந்த சம்பவம் அல்ல. பயங்கரவாத தாக்குதல்களில் முஸ்லிம் இளைஞர்கள் “இயற்கை” சந்தேக நபர்களாக கருதப்படுவது இந்தியாவில் ஒரு இயல்பான நடவடிக்கையாக, அந்த சமூகத்தை களங்கப்படுத்தும் நடவடிக்கையாக ஆகிவிட்டது,. பல அப்பாவி முஸ்லீம் இளைஞர்கள் UAPA அல்லது POTA போன்ற கடுமையான சட்டங்களின் கீழ் கைதாகி, பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டு, அவர்களுக்கு எதிராக எந்த ஆதாரமும் கிடைக்காத போதும் பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் விடுவிக்கப்படுகிறார்கள்.

ஒரு இயந்திர பொறியாளரான முகமது சலீம் அன்சாரி, 2016 ல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். பயங்கரவாத தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ், 23 ஆண்டுகள் சிறையில் இருந்த அவரை, உச்ச நீதிமன்றம் விடுவித்தது. அன்சாரி, மற்ற மூன்று முஸ்லீம்களுடன், மே 17 அன்று ஜெய்ப்பூர் சிறையிலிருந்து வெளியேறினார், மே 11 அன்று உச்சநீதிமன்றம் அவர்கள் அனைவரையும் விடுவித்தது, அவர்களின் ஆயுள் தண்டனையை ஒதுக்கி வைத்து, உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டது. பாபர் மஸ்ஜித் இடிப்பின் முதல் ஆண்டு நினைவு நாளில் ரயில்களில் ஐந்து குண்டுவெடிப்புகளைத்  தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட 16 பேரில் அவர்கள் அடங்குவர், இந்த குண்டுவெடிப்பு இரண்டு பயணிகளைக் கொன்றது; எட்டு பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவருக்கும் பயங்கரவாத மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டனர்.

2015 ஆம் ஆண்டில் நிகழ்ந்த மற்றொரு சம்பவத்தில், ஹிங்கோலியைச் சேர்ந்த ஷோயப் கான் (28), யவத்மாலைச் சேர்ந்த மவுலானா முஜீப்-உர்-ரஹ்மான் (30), மற்றும் பூசாத் பகுதியைச் சேர்ந்த அப்துல் மாலிக் (23) ஆகியோரை மகாராஷ்டிரா காவல்துறையினர் கைது செய்து, அவர்களின் வழக்குகள் மகாராஷ்டிராவின் பயங்கரவாத எதிர்ப்புப் படைக்கு மாற்றப்பட்டன. ஜூன் 2019-இல், அவர்கள் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டனர்; சிறையிலிருந்து ஒரு கொடூரமான காலகட்டத்துக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர்.

ஊடகங்களும் காவல்துறையும் இந்தியாவில் முஸ்லீம் இளைஞர்களை பயங்கரவாத சித்திரத்தை தீட்டி, மூவரும் “ஜிஹாதி” பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டினர். தங்களுக்கு சாதகமான அறிக்கையை பெற வேண்டும் என்பதற்காக, போலீசு காவலில் தனக்கு நேர்ந்த சித்திரவதைகளில் ஒரு மோசமான கதையை கான் விவரித்தார். டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோசியல் சயின்ஸின் 2012 ஆய்வில், மகாராஷ்டிரா மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 10.6 விழுக்காடாக இருந்தாலும், அவர்கள் சிறைகளில் 30 விழுக்காட்டுக்கும் அதிகமானவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. முஸ்லீம்களுக்கு எதிரான காவல்துறை மற்றும் புலனாய்வு அமைப்புகளின் சார்புத்தன்மையான நடவடிக்கையால் TADA மற்றும் MCOC சட்டங்களின் கீழ் காவல்துறை பல கைதுகளைச் செய்தது,  அரசு ரகசியங்கள் சட்டத்தின் கீழ்கூட கைதுகள் அரங்கேறின.

இந்த எல்லா நிகழ்வுகளிலும் இயங்கும் பொதுவான இழை அதன் மத அடையாளத்தின் காரணமாக சமூகம் எதிர்கொள்ளும் அவமானமும் களங்கமும் ஆகும். தாங்கமுடியாத சித்திரவதைக்குப் பின்னர் போலீசு அல்லது நீதித்துறை காவலில் இழந்த ஆண்டுகள் ஒருபோதும் மீட்கப்படாது, அவை எப்போதும் வீணடிக்கப்படுகின்றன. சித்திரவதை மற்றும் களங்கம் பாதிக்கப்பட்டவர்களை அவர்களின் வாழ்நாள் முழுவதும் பயமுறுத்துகிறது. போலீசு காவலில் முஸ்லீம் இளைஞர்கள் பலியிடப்படுவது தற்செயல் நிகழ்வு அல்ல, ஆனால் முஸ்லீம் சமூகத்துடன் போலீசு  நடவடிக்கைகளைப் பார்க்கும்போது நன்கு நிறுவப்பட்ட வடிவத்தை காண முடியும். வகுப்புவாத கலவரம் மற்றும் கும்பல் கொலை ஆகியவற்றின் பின்னணியில் இது தெளிவாகிறது. பாதிக்கப்படக்கூடிய சமூகங்களை குறிவைத்து வகுப்புவாத கலவரங்களின் போது காவல்துறையின் பக்கச்சார்பான தன்மையை சுட்டிக்காட்டும் ஏராளமான ஆய்வுகள் மற்றும் ஆணைய அறிக்கைகள் உள்ளன.

ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கை (1998) பம்பாய்  போலீசு படை கலவரத்தை ‘சார்புத்தன்மையுடன் கட்டப்பட்டது’ என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, இது 1992 ல் பம்பாயில் நடந்த கலவரத்திலும் மகாராஷ்டிராவின் பிற இடங்களிலும் வெளிப்பட்டது. நீதிபதி டி.பி.மடோனின் கமிஷன் பிவாண்டி கலவர(1970)த்தில் காவல்துறையின் பங்கு குறித்து கடுமையான கட்டுப்பாடுகளை நிறைவேற்றியது.

சீக்கிய எதிர்ப்பு கலவரத்தில், மூன்று விசாரணை கமிஷன்கள் – நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் (1987), நீதிபதி ஜெயின்-டி.கே. அகர்வால் கமிட்டி (1990), மற்றும் நீதிபதி ஆர்.எஸ். நருலா பனல் (1994) தங்கள் அறிக்கைகளை சமர்ப்பித்தார்கள். அனைத்து விசாரணை கமிஷன்களும் ஒருமனதாக 72 போலீசு அதிகாரிகளை குற்றஞ் சாட்டியுள்ளன, மேலும் காவல்துறையின் பாரபட்சமான பங்கை தெளிவாக கோடிட்டுக் காட்டின. இதேபோல், 20021 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தில் காவல்துறையின் பாகுபாடான பங்கைப் பற்றி பயங்கரமான அதிர்ச்சிகளைத் தரும் பல அறிக்கைகள் உண்மை அறியும் குழுக்களால் பகிரப்பட்டுள்ளன.

2014க்குப் பிறகு நிகழ்த்தப்பட்ட கும்பல் கொலை வழக்குகளில், காவல்துறையினர்  பல மட்டங்களில் இருந்தனர். பாதிக்கப்பட்டவர்களை இரத்தவெறி கொண்ட கும்பலிலிருந்து பாதுகாப்பதில் இருந்து, குற்றவாளிகள் தண்டனையின்றி சுதந்திரமாக விலகிச் செல்ல அனுமதிக்கும் மோசமான விசாரணைகள் மற்றும் உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள் தாங்களே கடுமையான குற்றத்துக்கு ஆளாகுதல் ஆகியவற்றில் போலீசின் பங்கு இருந்தது. உதவியற்ற நிலையில் இரத்தம் வழிந்து கொண்டிருந்த முகமது காசிம் மற்றும் சாமியுதீன் ஆகியோரை அவசரமாக இழுத்துச் செல்லும் குற்றவாளிகளுக்கு ஹப்பூர் காவல்துறையினர் பாதுகாப்பு கொடுத்ததை நினைவிலிருந்து யாராலும் அழிக்க முடியாது.

ஆல்வாரில் உள்ள ரக்பர் கான் மூன்று மணிநேரம் காவல்துறை தாமதமாக வந்ததால் உயிரை இழந்தார், அந்த நேரத்தில் ரக்பர் கான் கும்பலால் தாக்கப்பட்ட பின்னர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ரத்தம் வழிய உயிரை விட்டார். அப்பாவி உயிர்களைக் காப்பாற்றுவதற்கும், நீதி வழங்குவதற்கும் காவல்துறை ஒரு தடையாக இருந்ததை நிரூபிக்கப்பட்ட இதுபோன்ற பல சம்பவங்கள் கூறுகின்றன.

இந்த சம்பவங்கள் நிச்சயமாக அதிர்வுகளை ஏற்படுத்திய போதிலும், இந்தியாவில் ஏன்  பெரிய அளவில் ‘ஜார்ஜ் ஃபிளாய்ட் தருணம்’ வரவில்லை என்பது பற்றி சிந்திக்க வேண்டும். அதாவது கருப்பினத்தாரின் உயிர்கள் முக்கியத்துவம் உள்ளவை என்கிற வரிசையில் பெரிய அளவிலான ஆர்ப்பாட்டங்கள் அல்லது இயக்கம் ஏன் இங்கே ஏற்படவில்லை? அரசியல் அறிவியலாளர் சுஹாஸ் பால்ஷிகரின் புத்திசாலித்தனமான நுண்ணறிவால் இதற்கு விளக்கம் கிடைக்கிறது. இதுபோன்ற எந்தவொரு எதிர்ப்பும் அல்லது கருத்து வேறுபாடுகளும் வளர்ந்து வரும் ஜனநாயகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன என்று அவர் விளக்கினார்.

விளிம்பு மக்களின் உரிமைகளுக்கான அக்கறை அல்லது குரல்களை, ஒழுங்கு அல்லது தேசத்திற்கு அச்சுறுத்தலாகக் காட்டுவதன் மூலம் அரசு சீராக செய்து வருகிறது. கவனமாக கட்டமைக்கப்பட்ட இந்த விவரிப்பு, விளிம்பு மக்களின் அவலங்கள் எவ்வளவு கொடூரமாக மீறப்பட்டாலும் பெரிய சமூகத்தில் பச்சாத்தாபத்தை உருவாக்குவதற்கான ஒரு தடையை உருவாக்கியுள்ளது. இந்த கொள்கை முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் தலித்துகள் போன்ற இரண்டாம் தர குடிமக்களின் சமூகத்தை உருவாக்குவதற்கான மைய யோசனையுடன் இணைந்திருக்கும் மேலாதிக்க சித்தாந்தத்துடன் ஒத்துப்போகிறது; ஆகவே, அமெரிக்காவின் பெரும்பாலான இடங்களில் எதிர்ப்பாளர்களின் சீற்றமும் வேதனையும் எதிரொலித்தன, சில இடங்களில் காவல்துறையினர் போலீசு மிதமிஞ்சி நடந்துகொண்டதை அடையாளமாக ஒப்புக் கொள்ள மண்டியிட்டார்கள். மன்னிப்பு கேட்க இது அவர்களின் வழி. ஆனால் இந்திய அரசோ எதிர்ப்பாளர்களை மிகவும் மோசமாக நடத்தியது.

சமீபத்திய உதாரணம் காவல்துறையினர் குடியுரிமை எதிர்ப்பு சட்ட எதிர்ப்பு போராட்டங்களை கையாண்ட முறை. அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் அப்பாவி மாணவர்கள் மீது காவல்துறையினர் கையெறி மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தினர். இது பார்வை இழப்பு மற்றும் சில மாணவர்களின் மூட்டு இழப்பு போன்ற கடுமையான காயங்களுக்கு வழிவகுத்தது. போர்ட்லேண்ட் மற்றும் சியாட்டில் தற்காலிகமாக எதிர்ப்பாளர்கள் மீது கண்ணீர்ப்புகை பயன்பாட்டை தடைசெய்துள்ள நிலையில் இதுவும் உள்ளது.

டெல்லியில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவர்கள் மீது கொடூரமான ஒடுக்குமுறை நடந்தது, இதற்காக காவல்துறை விமர்சனத்திற்கு உள்ளானது. பொதுச் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்காக போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் சொத்துகள் எடுத்துக் கொள்ளப்படும் என்று எச்சரிக்கும் சுவரொட்டிகளையும் பெயர்களையும் வெளியிட்டது உத்தரபிரதேச போலீசு.  உயர்நீதிமன்றம் இந்த வழக்கை எடுத்துக் கொண்டது மற்றும் அரசாங்கம் “தனியுரிமை, மரியாதை மற்றும் சுதந்திரத்தை பாதிக்கிறது” என்பதைக் கண்டறிந்து அதை “சட்டவிரோத நடவடிக்கை” என்று அழைத்தது.

சஃபூரா சர்கார்

ஐந்து மாத கர்ப்பிணியாக இருக்கும் ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவி சஃபூரா ஸர்கர் கைது செய்யப்பட்டதன் மூலம் இந்தியாவில் காவல்துறையினர் எவ்வளவு மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொள்கிறார்கள் என்பதை அறிய முடியும். அவர் மற்ற மாணவர்களுடன் தேசிய குடிமக்கள் பதிவு (என்.ஆர்.சி) மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவு (என்.ஆர்.பி) ஆகியவற்றிற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

ஜார்ஜ் ஃபிளாய்டின் மரணத்திற்குப் பிறகு, கலிபோர்னியாவின் ஆளுநர் கழுத்தில் அழுத்தி பிடிக்கும் வழிமுறையை கைவிடுமாறு மாநில காவல்துறை பயிற்சித் திட்ட நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார். கொடிய  மோதல் கொலைகளின் அபாயத்தைக் குறைக்க சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான புதிய கொள்கைகள் குறித்து பிற அரசாங்கங்கள் விவாதித்தன. போலீசாரால் கைது செய்யப்பட்டு போலீசு காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு காயங்கள் அல்லது இறப்புகளைக் குறைப்பதே இந்த நடவடிக்கைகள். அத்தகைய நடவடிக்கைகளுக்கு பதிலாக, உத்தரபிரதேசத்தில் மோதல் கொலைகள் அல்லது கூடுதல் நீதித்துறை கொலைகள் மாநில கொள்கையாக பயன்படுத்தப்படுகின்றன. உச்சநீதிமன்றத்தின் கட்டாய தலையீட்டின் காரணமாக, இரண்டு வருட காலப்பகுதியில் 3,500 க்கும் மேற்பட்ட போலீசு மோதல் கொலைகளும் குற்றவாளிகள் கிட்டத்தட்ட 80 பேர் கொல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த சந்திப்புகள் பெரும்பாலும் முஸ்லீம் இளைஞர்களை குறிவைத்து முஸ்லீம் சமூகத்தை அவர்களின் வாழ்க்கை மற்றும் சுதந்திரத்திற்காக அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

மேலே முன்னிலைப்படுத்தப்பட்ட இந்த சிக்கல்கள் பொறுப்புக்கூறல் மற்றும் ஜனநாயக நிறுவனங்களுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளன. ஜனநாயக நிறுவனங்கள் செழித்து, நியாயத்துடன் செயல்பட, ஒருபுறம் பங்கேற்பு ஜனநாயகம் இருக்க வேண்டும், அங்கு மக்களுக்கு அச்சமின்றி பங்கேற்கவும் சுதந்திரம் உள்ளது. மறுபுறம் நிறுவன உள்கட்டமைப்பை உருவாக்கி, முதலீடு செய்து ஊக்குவிக்கும் ஒரு அரசு. சமூகத்தின் விளிம்புநிலை பிரிவுகளின் உரிமைகள் மீறப்படுவதில் தங்கள் பச்சாதாபத்தையும் சீற்றத்தையும் வெளிப்படுத்த தனிநபர்கள் பொது இடங்களை குடிமக்களாக மீட்டெடுக்க வேண்டும். இந்த ஆர்ப்பாட்டங்கள் அல்லது குரல்களை அரசால் ஒடுக்க முடியாது. பொறுப்புக் கூறலுக்காக ஜனநாயக நிறுவனங்களை அரசு தீவிரமாக வளர்த்து வலுப்படுத்த வேண்டும். உலகெங்கிலும் அடக்குமுறை மற்றும் அடிமைத்தனத்தின் நினைவுச் சின்னங்களை அகற்றுவதற்கான போக்கு அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் கோட்சே மற்றும் மனு சிலைகள் தற்போதைய சித்தாந்தத்தின் கீழ் வழிபடப்படுகின்றன. மேலும் இந்தியா மிகப்பெரிய ஜனநாயகம் என்று புகழப்படும்போது இது கவலைக்குரிய விடயமாகும். இந்தியாவும் ஜார்ஜ் ஃபிளாய்டுக்கு அளித்த ஆதரவிலிருந்து உத்வேகம் பெற்று சுதந்திரம், நீதி மற்றும் சகோதரத்துவத்திற்கு ஆதரவாக தனது சொந்த அரசையும் மக்களையும் மீட்டுக் கொள்ளும் என்று நம்புவோம்.

கட்டுரை: நேஹா தப்பாடே
தமிழாக்கம்: கலைமதி
நன்றி: சப்ரங் இந்தியா

ஊரடங்கில் மக்களின் துன்பங்களை எழுதிய பத்திரிகையாளர்கள் மீது அரசுகள் வழக்கு !

0

மீபத்தில் மோடியின் வாரணாசி தொகுதியில் ஊரடங்கினால் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் சிரமங்களை பதிவு செய்ததற்காக ஸ்க்ரோல் இணைய தளத்தின் நிர்வாக ஆசிரியர் சுப்ரியா சர்மா மீது முதல் தகவல் அறிக்கையை உ.பி போலீசு பதிவு செய்திருக்கிறது. ஊரடங்கின் போது மக்கள் படும் துன்ப துயரங்களையும், அரசு இயந்திரத்தின் நிர்வாக சீர்கேடுகளையும், இலஞ்ச ஊழல் முறைகேடுகளையும் அம்பலப்படுத்தியதற்காக இந்தியா முழுவதும் குறைந்தது 53 ஊடகவியலாளர்கள் மீது கடுமையான அடக்குமுறைகளை மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் தொடுத்திருக்கின்றன.

மோடியின் வாரணாசி தொகுதியில் மோடி தத்தெடுத்த ஒரு கிராமத்தில் ஊரடங்கு சமயத்தில் அந்த மக்கள் தங்களது அடிப்படை தேவைகளுக்கே கடுமையாகப் போராடி வந்த சூழலை ஸ்க்ரால் இணையதளத்தின் ஆசிரியர் சுப்ரியா சர்மா அங்கு சென்று மக்களின் வாழ்நிலையை கண்டறிந்து எழுதினார். மோடி தத்தெடுத்த கிராமத்தின் நிலையை அம்பலப்படுத்தியதைக் கண்டு கடுப்படைந்த யோகி ஆதித்யநாத் அரசு, சுப்ரியா சர்மாவிற்கு நேர்காணல் அளித்த பெண் குடும்பத்தை மிரட்டி, சுப்ரியாவுக்கு எதிராக புகாரளித்து வழக்கு தொடரச் செய்துள்ளது. தமது வாழ்நிலையை வெளிப்படையாக எழுதியதன் மூலம், தம்மை பொதுவெளியில் அசிங்கப்படுத்தியதாக அந்தப் பெண் புகாரளித்துள்ளார்.

இத்தகைய முதல் தகவலறிக்கைகள் தொடங்கி கைது நடவடிக்கைகள், நீதிமன்ற சம்மன்கள், உடல் ரீதியான தாக்குதல்கள், சொத்துக்களை அழித்தல் மற்றும் கோவிட் -19 குறித்த அறிக்கைக்கு எதிரான அச்சுறுத்தல்கள் வரை என கடந்த மார்ச் 25 முதல் 2020 மே 31 வரை பல்வேறு ஊடகவியலாளர்கள் ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டதாக புது டில்லியைச் சேர்ந்த உரிமைகள் மற்றும் அபாயங்கள் பகுப்பாய்வுக் குழு (Rights & Risks Analysis Group -RRAG)என்ற தனியார் சிந்தனைக்குழாம் அமைப்பு கூறியிருக்கிறது.

உ.பி-யில் 11 பேரும், ஜம்மு காஷ்மீரில் 6 பேர், இமாச்சல் பிரதேசத்தில் 5 பேரும், தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஒடிஸா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தலா 4 பேரும், பஞ்சாப், டெல்லி, மத்தியப்பிரதேசம், கேரளாவில் தலா இருவரும், அந்தமான், அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து மற்றும் தெலுங்கானாவில் தலா ஒருவரும் ஒடுக்குமுறைக்கு உள்ளானதாக ”இந்தியா: கோவிட்-19 ஊரடங்கின் போது ஊடகத்தின் மீதான ஒடுக்குமுறை” என்ற ஆய்வறிக்கையில் அந்த சிந்தனைக்குழாம் அமைப்பு கூறியிருக்கிறது.

“தொற்றுநோயின் தொடக்கத்திலிருந்தே கோவிட்-19 குறித்து தவறான தகவல் வெளியிடுவதாக கூறி ஊடக சுதந்திரத்தை இந்திய அரசாங்கம் நசுக்க முயன்றது. 31.03.2020 அன்று, தொற்றுநோய் பற்றிய திறந்த விவாதத்தில் உச்சநீதிமன்றம் தலையிட மறுத்து விட்டாலும் கூட பல்வேறு தவறான நிர்வாகக் குறைபாடுகள், ஊழல் முறைகேடுகள், புலம் பெயர்ந்தோர், தொழிலாளர்கள் மற்றும் வறிய குடிமக்கள் மீதான பட்டினிக் கொடுமைகள், மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு போதுமான பாதுகாப்பு உடைகளும், கருவிகளும் இல்லாதது போன்ற செய்திகளை தெரிவித்த ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறையை முழுவீச்சுடன் அரசு தொடங்கியது”என்று RRAG-ன் இயக்குனர் சுஹாஸ் சக்மா கூறினார்.

எனவே தான், உலகிலேயே ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தான இடமாக இந்தியா மாறியுள்ளது. இந்தியாவின் தேசிய ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு ஊடகவியலாளர்கள் கேடு விளைவிப்பதாக அரசு மற்றும் அரசியல்வாதிகள் குற்றம் சாட்டுவதற்கு நீண்ட காலம் எடுக்கவில்லை என்றும் சுஹால் சக்மா கூறினார்.

ஐபிசி, தகவல் தொழில்நுட்ப சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம், மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் பட்டியல் பழங்குடியினர் / பட்டியல் சாதியினர் (வன்முறைகளைத் தடுக்கும்) சட்டம் மற்றும் சட்டவிரோத செயல்பாடுகள் (தடுப்பு) சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் கீழ் குறைந்தது 22 ஊடகவியலாளர்கள் மீது முதல் தகவல் அறிக்கைகள் (எஃப்.ஐ.ஆர்) தாக்கல் செய்யப்பட்டுள்ளன. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பட்டினிக் கொடுமைகள், அவர்களுக்கு ரேஷன் வழங்குவதில் நிர்வாகத்தின் தோல்வி, புலம்பெயர் தொழிலாளர்கள் கூட்டம் கூடுதல், புலம்பெயர்ந்தோருக்கான துயர் நீக்க முகாம்களை நடத்துவதில் முறைகேடுகள், தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் நிர்வாக குளறுபடிகள் போன்றவற்றை வெளியிட்டதற்காகவோ அல்லது ஆளும் கட்சி அல்லது முதலமைச்சர்களை விமர்சித்ததற்காகவோ, இந்த வழக்குகள் புனையப்பட்டுள்ளன. அதிலும் ஒரு சில ஊடகவியலாளார்களை மிரட்டுவதற்கு மட்டுமே பல்வேறு முதல் தகவலறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் குறைந்தது 10 ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 4 பேர் உச்சநீதிமன்றத்தால் கைது நடவடிக்கையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். ஊழல் மற்றும் இலஞ்ச முறைகேடுகள், உணவுப்பொருள் மற்றும் பாதுகாப்புக்கருவிகள் தட்டுப்பாடு போன்றவற்றை அம்பலப்படுத்தியது முதல்,“கோவிட்-19 நோயாளிகளிடம் கைப்பேசியில் மட்டுமே பேசிய குடும்பத்தினர் ஏன் தனிமைப்படுத்தப்பட்டனர்?” என்று டிவிட்டரில் கேள்வி எழுப்பியது வரை அனைத்திற்கும் கோவிட்-19 பற்றி வதந்தி பரப்பியதாகவும், ஊரடங்கை மீறியதாகவும் கூறி இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

முசாஹர் (Musahar) சமூகத்தினர் (தலித்) உணவில்லாமல் புல்லை சாப்பிடுவதை வெளியிட்டது, தவறான தகவல் வெளியிடுவதாக குற்றச்சாட்டு, நிர்வாகத்தின் பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகக் குற்றச்சாட்டு அல்லது பி.பி.இ கருவிகள் போதுமான தரத்தில் இல்லை என்று கூறும் அதிகாரபூர்வ கடிதத்தை வெளியிட்டது போன்ற காரணங்களுக்காக ஏழு ஊடகவியலாளர்களுக்கு நீதிமன்ற சம்மன் அனுப்பப்பட்டது.

போலீஸ் காவலில் இருந்த இருவர் உட்பட ஒன்பது ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர். ஒடிசாவில் கிராமத் தலைவர் ஒருவரால் (சர்பஞ்ச்) ஒரு ஊடகவியலாளர் பிணைக் கைதியாக்கப்பட்டிருந்தார். தெலுங்கானாவில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ குறித்து எழுதியதற்காக மற்றொரு பத்திரிகையாளரின் வீடு இடிக்கப்பட்டது. ஊரடங்கின் போது “வனவிலங்குகளை வேட்டையாடும் போக்கு அதிகரித்ததாக” ஒரு கட்டுரையை வெளியிட்டதற்கு அருணாச்சல பிரதேசத்தில் ஒரு பெண் ஊடகவியலாளார் அச்சுறுத்தப்பட்டிருக்கிறார்.

ஊடகங்கள் மீதான தாக்குதல்கள் அனைத்திலும் இந்திய பத்திரிகை கவுன்சில் தலையிடுமாறு RRAG பரிந்துரைத்திருக்கிறது. மேலும் அரசியல் கட்சியினர் ஊடக சுதந்திரத்தில் தலையிடுவதை தடுத்து ஊடகவியலாளர்கள் பயமில்லாமல் பணி செய்வதற்கான நிலைமைகளை உருவாக்க இந்திய அரசாங்கத்திற்கு வலியுறுத்தி உள்ளது.

இந்தியாவைப் பொருத்தவரை மோடி அரசாங்கத்திற்கு ஜால்ரா அடிக்கும் அளவிற்கு தான் ஊடக சுதந்திரம் இருக்கிறது. இந்நிலையில், ஊடக சுதந்திரத்திற்காக மோடி அரசாங்கத்திடம் கெஞ்சுவது என்பது ஆட்டை பாதுகாக்க ஓநாயிடமே முறையிடுவது போல தான். கொரொனா காலத்தில் மக்கள் படும் வதைகளை சமூகத்திற்கு தெரிவிக்க வேண்டுமானால் பத்திரிகையாளர்கள் அமைப்பாய் திரண்டு அரசை எதிர் கொள்வதும் அதற்கு மக்கள் ஆதரிப்பதும் அத்தியாவசியமானதாகும்.

– சுகுமார்

நன்றி: 55 Journalists Face Persecution for Highlighting People’s Suffering During Lockdown

யோகா செய்தால் கொரோனா எப்படி ஸ்வாகா ஆகும் ? கேலிச்சித்திரம்

வீட்டிலிருந்தே குடும்பத்துடன் யோகா செய்யுங்கள் ! நாங்கள்(பா.ஜ.க) நாட்டை ஸ்வாகா செய்கிறோம் !

கேலிச்சித்திரம் : மு.துரை

நுண்கடன் நிறுவனங்களின் அடாவடிக்கு முடிவு கட்டுவோம் ! மக்கள் அதிகாரம்

PP Letter head

பத்திரிக்கைச் செய்தி

20.06.2020

கொரோனா முடக்கத்தால் கோடிக்கணக்கான மக்கள் வருமானத்தையும்             வாழ்வாதாரத்தையும் இழந்திருக்கும் நிலையில் அரசுத்துறை, தனியார்துறை வங்கிகள் நிதிநிறுவனங்கள் அனைத்தும் கடன் தவணைகளை வரும் ஆகஸ்ட் 31 வரை வசூலிக்கக்கூடாது என மத்திய மாநில அரசுகளும், ரிசர்வ் வங்கியும் அறிவித்துள்ளன. மாவட்ட ஆட்சியர்களும் இதனை நாளிதழ்கள் வாயிலாக அறிவித்துள்ளனர். ஆனால் இவற்றை சற்றும் சட்டை செய்யாமல் நுண்கடன் நிறுவனங்களும், நிதிநிறுவனங்களும் அடாவடித்தனமான வசூல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன், அச்சுறுத்தி அவமானப்படுத்துகின்றனர்.

இது குறித்து எண்ணற்ற புகார்கள் வருகின்றன. பல பெண்கள் தொலைபேசியிலேயே கதறியழுகின்றனர். வேறு வழியின்றி புகார் கொடுக்கச் சென்றால் காவல்துறையினர் புகாரை வாங்க மறுப்பதுடன் மோசமாக அவமானப்படுத்துகின்றனர். அரசின் அறிவிப்பை சுவரொட்டியாக அச்சிட்டு ஒட்டியதற்காக மக்கள் அதிகாரம் தோழர்கள் மூவர் மீது சீர்காழி போலீசார் வழக்குப் போட்டு சிறையிலடைத்துள்ளனர்.

படிக்க:
அடாவடி நுண்கடன் நிறுவனங்களைக் கண்டித்து சுவரொட்டி ஒட்டிய மக்கள் அதிகாரம் தோழர்கள் கைது !
♦ முதலாளித்துவத்தின் அழிவுப்பாதையை வெளிக்கொணர்ந்த கொரோனா – நோம் சாம்ஸ்கி

கார்ப்பரேட் முதலாளிகள் வாங்கிய லட்சக்கணக்கான கோடி ரூபாய் கடன்களை மத்திய அரசு ஓசைப்படாமல் தள்ளுபடி செய்கிறது. ஆனால் ஏழை எளிய மக்கள் தாங்கள் வாங்கிய கடன்களை எப்பாடு பட்டாவது திருப்பிச் செலுத்தி விடுகின்றனர். இதனை அரசின் புள்ளிவிவரங்களே மெய்ப்பிக்கின்றன.

கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக வருமானத்தையும் வாழ்வாதாரத்தையும் இழந்து மக்கள் உணவுக்கே அல்லாடிக் கொண்டிருக்கும் நிலையில்  நிதிநிறுவனங்கள் கடன் வசூல் என்ற பெயரில் ரவுடித்தனமான முறையில் நடந்து கொள்வதை அரசும் மாவட்ட நிர்வாகங்களும் உடனே தடுத்து நிறுத்துவதுடன் அத்துமீறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் மக்கள் வீதிகளில் திரளும் கட்டாயம் ஏற்படும். இது மேலும் கொரோனா பரவலுக்கே வழிவகுக்கும்.

இவண்,
காளியப்பன்,
மாநிலப்பொருளாளர்,
மக்கள் அதிகாரம்.

அடாவடி நுண்கடன் நிறுவனங்களைக் கண்டித்து சுவரொட்டி ஒட்டிய மக்கள் அதிகாரம் தோழர்கள் கைது !

ன்பார்ந்த நண்பர்களே பொதுமக்களே வணக்கம்,

கடந்த நான்கு மாத காலமாக கொரோனா பிரச்சனையில் வாழ்க்கையை ஓட்ட முடியாமல் பலரும் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறோம். வேலை இல்லை காசு இல்லை. பல குடும்பங்கள் தவித்துக் கொண்டிருக்கின்றன இந்நிலையில் நுண் கடன் நிதி நிறுவனங்களால் சுய உதவி குழு கடன் மற்றும் வாகன கடன்களுக்காக வீட்டுக் கடனுக்காக நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கியவர்கள் மிரட்டப்படுகிறார்கள்.

இதில் ரிசர்வ் வங்கி கடந்த ஜூன் 8ஆம் தேதியன்று ஆகஸ்ட் 31 வரை தவணையும் வட்டியும் கட்ட தேவையில்லை, மீறி கட்டாயப்படுத்தும் வங்கிகள் நிதி நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். என்று அறிவிப்பும் செய்திருந்தது.

இந்நிலையில் இந்த அறிக்கையை மீறி பல இடங்களில் நுண்கடன் நிதி நிறுவனங்கள் ஊழியர்கள் மற்றும் வங்கி அதிகாரிகள் சுய உதவி குழுக்கள் போன்றவை மிரட்டி பணம் பறிப்பதை எதிர்த்து மக்கள் அதிகாரம் சார்பில் சுவரொட்டி இயக்கத்தை மேற் கொண்டது.

கடலூர் மண்டலத்தில் சீர்காழி வட்டார பகுதியில் கடந்த 17 ஆம் தேதி இரவு போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்த தோழர்கள் கிஷோர் மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகியோரை போலீஸ் மிரட்டி செல்போனையும் இரு சக்கர வாகனத்தையும் பறித்துக் கொண்டு காலையில் ஆறு மணிக்கு ரவியுடன் வரவேண்டுமென்று விரட்டி அனுப்பியதோடு மட்டுமல்லாமல் சில இடங்களில் போஸ்டரையும் கிழித்தனர்.

அதிகாலையில் வட்டார ஒருங்கிணைப்பாளர் ரவி மற்றும் கிஷோர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் காவல் நிலையம் சென்ற போது அங்கே கிஷோரும் தமிழ்ச்செல்வன். வட்டார ஒருங்கிணைப்பாளர் ரவி ஆகியோர் மீது பொய் வழக்குப் போட்டது. போலீஸ் இரவுவரை இழுத்தடித்து இரவு 9 மணிக்கு கீழமை நடுவர் நீதிமன்றத்தில் முன்பாக ஆஜர்படுத்தியது. அப்போது முதல் தகவல் அறிக்கையை பார்த்த நீதிமன்ற நடுவர் தேவையில்லாத காரணங்களை கூறி உள்ளீர்கள் என்று விமரிசித்தார்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

வட்டார ஒருங்கிணைப்பாளர் ரவி மீதான குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லை எனவே அவரை விடுதலை செய்கிறேன் என்றார். இவை மட்டுமில்லாமல் பொய் வழக்கை பற்றியும், போலீசாரின் தவறுகள் பித்தலாட்டங்களை பற்றியும் கடுமையாக விமர்சனம் செய்த நீதிமன்ற நடுவர், பின்னர் கிஷோர் மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரையும் சீர்காழி கிளைச் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இந்த செய்தி கிராமங்களிலுள்ள பொதுமக்கள் மத்தியில் காட்டுத்தீயாக பரவியது பல இடங்களில் பொதுமக்கள் சுய உதவிக்குழு ஊழியர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்து விரட்டி அடித்து வருகிறார்கள்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சீர்காழி – நாகை மாவட்டம்.
கடலூர் மண்டலம்.
தொடர்புக்கு : 98434 80587.

முதலாளித்துவத்தின் அழிவுப்பாதையை வெளிக்கொணர்ந்த கொரோனா – நோம் சாம்ஸ்கி

நோம் சாம்ஸ்கி (Naom Chomsky) ஏகாதிபத்தியம், புதிய தாராளவாதம் மற்றும் இராணுவ-தொழில்துறை-ஊடக கூட்டிற்கு எதிரான இவரது விமர்சனங்களுக்காக உலகம் முழுவதும் அறியப்பட்டவர். இவர் ஒரு அமெரிக்க மொழியிலாளர் மற்றும் அரசியல் செயல்பாட்டாளர். ‘தி வயர்’ இணையதளத்திற்காக, சமூக ஆராய்ச்சிக்கான டிரைகாண்டினெண்டல் இன்ஸ்டிடியூட்டில் பணிபுரியும் ஜிப்சன் ஜான் மற்றும் பி.எம். ஜித்தீஷ் இருவரும் நோம் சாம்ஸ்கியிடம் நடத்திய நேர்காணலின் (தி வயர் இணைய தளத்தில் 18-05-2020 வெளியானது) தமிழாக்கம்.

***

  • உலகின் செல்வ வளமிக்க மிக சக்திவாய்ந்த நாடான அமெரிக்கா இந்த நாவல் கொரோனா நோய்த்தொற்றுப் பரவலை எதிர்கொள்வதில் ஏன் தோல்வியடைந்துள்ளது? இத்தோல்வி ஒரு அரசியல் தலைமை சார்ந்த தோல்வியா அல்லது ஒரு கட்டமைப்பின் தோல்வியா? மேலும், இந்த கொரோனா நோய்த்தொற்றின் நெருக்கடியிலும், டொனால்ட் டிரம்பின் மீதான மக்களின் நன்மதிப்பானது மார்ச் மாதத்தின் போது உண்மையில் உயர்ந்திருந்தது. இது நடக்கவிருக்கும் அமெரிக்கத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என நீங்கள் கருதுகிறீர்களா?
நோம் சாம்ஸ்கி

இதற்கு விடையளிக்கும் முன், சற்று பின்னோக்கிச் சென்று இந்த தொற்றுநோயின் மூலக்காரணங்களை காண்பது மிக முக்கியமானது என கருதுகிறேன். உண்மையில், இது எதிர்பாராதது அல்ல. 2003-ஆம் ஆண்டில் சார்ஸ் (SARS) கொள்ளைநோய்க்குப் பின்னர், இதனை ஒத்த மற்றுமொரு தொற்றுநோய் வருவதற்கான சூழலையும் அது அநேகமாக சார்ஸ் கோரானா வைரஸின் வகையாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால், அதுபற்றிய அறிவு போதுமானதாக இல்லை. யாராவது இதற்காக ஏதாவது செய்ய வேண்டும். மருந்துக் கம்பெனிகள் இதற்கு ஆர்வம் காட்டவில்லை. அவை சந்தையின் வழிகாட்டுதலில் செயல்படுகின்றன, எல்லாவற்றிலும் இலாபத்தை எதிர்ப்பாக்கின்றன. அரசாங்கம் இந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும், ஆனால், அது புதிய தாராளவாதக் கொள்கைகளால் தடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு மையத்திற்கு (Centres for Disease Control) வழங்கும் நிதிகளை தொடர்ந்து குறைத்ததன் மூலமும், அமெரிக்க உளவு நிறுவனம் மற்றும் சுகாதார அதிகாரிகளின் முன்னெச்சரிக்கைகள் அனைத்தையும் ஒதுக்கித்தள்ளியதன் மூலமும், இந்த நிலைமையை டிரம்ப் மேலும் மோசமாக்கினார். ஆகையால், அமெரிக்கா எந்த முன் தயாரிப்பின்றி தனித்திருந்தது. ஆனால், சீன விஞ்ஞானிகள் இந்த நோயை உருவாக்கும் நோய்க்கிருமியை மிக விரைவாகக் கண்டுபிடித்து, அதன் மரபணுவை வரிசைப்படுத்தி, அது தொடர்பான எல்லா தகவல்களையும் பொது சமூகத்திற்கு  ஜனவரி 10-ஆம் தேதி தெரியப்படுத்தினர்.

மேலும், ஒரே சமயத்தில் பெரும்பாலான நாடுகள் வினையாற்றியிருந்தால், இப்பிரச்சினையை மிக சுலபமாகக் கட்டுக்குள் கொண்டு வந்திருக்க இயலும். ஆனால், அமெரிக்க உளவுத்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்த முறையான எச்சரிக்கைகள் யாவற்றையும் டிரம்ப் அலட்சியப்படுத்தியதோடு, இதனை வெறும் ஒரு காய்ச்சல் என்றும் அது தானாகவே மறைந்துவிடும் என்றும் கூறினார். இறுதியாக இந்தப் பிரச்சினையில் அவர் கவனம் செலுத்திய போது, அதாவது மார்ச் மாதத்தில், நிலைமை மிகவும் காலம் கடந்ததாகிவிட்டது, பத்தாயிரக்கணக்கான அமெரிக்கர்கள் இறந்து போய் விட்டனர், இந்தத் தொற்று நோய் பரவல் கைமீறிய நிலைக்கு சென்று விட்டது.

இதனால், அவை, முதலாளித்துவக் கோட்பாடு, முதலாளித்துவ வகையிலான காட்டுமிராண்டித்தனமான புதிய தாராளவாதம் மற்றும் மக்கள் நலனில் எந்த அக்கறையுமில்லாத ஒரு அரசாங்கம் ஆகிய மும்முனைத் தாக்குதலால் அமெரிக்கா பாதிக்கப்பட்டுள்ளது.

ஒரு ஜனாதிபதி ஒரு நிலைப்பாட்டை எடுக்கும்போது, அவர் அளிக்கும் ஒப்புதலில் எப்போதுமே ஒரு ஆதாயம் இருக்கும். ஆனால், டிரம்ப் விசயத்தில் அது விரைவாக மறைந்துவிடும். இதற்கு காரணம், கிரிமினல்தனமான குளறுபடியான அவரது செயல்பாடுகள். வருகின்ற தேர்தலில் அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை இவை வெகுவாக பலவீனப்படுத்தினாலும், நவம்பர் மாதத்திற்கு முன்னதாக பல சம்பவங்கள் நிகழக்கூடும்.

படிக்க:
♦ பீமா கொரேகான் வழக்கை முடிக்க மோடி அரசு செய்யும் மோசடிகள் – அம்பலப்படுத்துகிறது அம்னெஸ்டி
♦ கோவிட் நோய் எவ்வாறெல்லாம் வெளிப்படலாம் ? | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா 

  • பல நாடுகளுக்கு தொற்றுநோயைக் கண்காணிக்கவும் அதற்கெதிராகப் போராடவும் டிஜிட்டல் தொழில்நுட்பமும் அரசின் கட்டுப்பாடும் உதவுகின்றன, ஆனால், அதிகரித்துவரும் அதிகாரத்துவக் கட்டுப்பாடு மற்றும் அரசின் கண்காணிப்பு பற்றிய கவலையை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். நீங்கள் இதை ஏற்கிறீர்களா?

இங்கே இவ்வாறு விவாதப் பிரதிவாதங்கள் செய்கின்ற சக்திகள் இருக்கின்றன. ஒருபுறம், வணிக உலகமும் அதன் புள்ளியியல் நிபுணர்களும் மிக அதிகமான அதிகாரத்துவக் கட்டுப்பாடுகளைக் கொண்ட ஒன்றை (அவர்கள் தீர்மானித்து வைத்திருக்கின்ற ஒன்றை) நிறுவ முயல்கின்றனர். மற்றொருபுறம், மிகவும் நியாயமான மற்றும் சுதந்திரமான உலகத்தை நோக்கி செல்ல விரும்புகின்றன மக்கள் சக்திகள். இறுதியில் என்ன நடக்கும் என்பது இந்த இரு சக்திகளுக்கு இடையிலான போராட்டத்தில்தான் அமைந்துள்ளது.

  • தற்போதைய சூழலில் ஏழை மக்களின் அவல நிலையிலிருந்து அவர்களை மேம்படுத்த என்ன விதமான பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்? ஒரு புதிய சமூகஜனநாயக அணுகுமுறை அல்லது அரசாங்கங்களால் மேற்கொள்ளப்படும் அதிக சிக்கன நடவடிக்கைகள் மற்றும் பிணையெடுப்புகள் இவற்றில் எது அதற்கு சாத்தியமானது?

எவ்விதமான பொருளாதார நடவடிக்கைகள் தேவை என்பது நமக்கு தெரியும். தற்போதைய நெருக்கடிகளில் இருந்து என்ன வெளிவரும் என்பது நமக்கு தெரியாது. கடந்த 40 ஆண்டு புதிய தாராளவாதக் கால முதலாளித்துவக் காட்டுமிராண்டித்தனத்தின் பயனாளர்கள்தான், தற்போதைய தொற்றுநோய் மற்றும் அதன் விளைவுகளுக்கு காரணமானவர்கள். தங்களது சொந்த நலனிற்காக கட்டியமைத்த இந்தக் கட்டமைப்பு தொற்றுக்குப் பின் இதுவரை இல்லாத கடுமையான வடிவத்தில் வெளிவருவதை உறுதிப்படுத்த இடைவிடாமல் அவர்கள் செயல்படுகிறார்கள்.

மற்றொருபுறம், மிகவும் வித்தியாசமான மற்றும் சிறந்த உலகை உருவாக்கக்கூடிய பிரபலமான மக்கள் சக்திகள் ஒரு அமைப்பாக வடிவம் பெற்று வருகின்றன. அமெரிக்காவின் பெர்னி சாண்டர்ஸ் மற்றும் ஐரோப்பாவின் யானிஸ் வாரோஃபாகிஸ் (Yanis  Varoufakis) ஆகியோரால் துவக்கப்பட்ட முற்போக்கு சர்வதேசத்துடன் அது, சர்வதேச அளவில் நடந்து வருகிறது. இப்போது கிழக்கு உலகமும் அதில் இணைந்து வருகிறது.

இந்த நெருக்கடி எவ்வளவுக்கு எவ்வளவு தீவிரமடைகிறதோ, அந்த அளவிற்கு நிலைமை மோசமடையும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்த பெருந்தொற்றில் இருந்து மீள்வது என்பது மிக பயங்கரமான இழப்புகளுக்கு பின்னரே நடக்கும். உலகம் இப்போதைய போக்கிலேயே இயங்கினால், மிக நீண்டகாலத்தில் அல்ல வெகுவிரைவாகவே, துருவப் பகுதியில் உள்ள (அண்டார்ட்டிக்கா) பனிக்கட்டிகளும் இமயமலையில் பனிப்பாறைகளும் உருகுவதைத் தடுக்க முடியாது; அல்லது புவி வெப்படைதலின் பிற மோசமான விளைவுகள், தெற்காசியாவை மனிதர்கள் வாழ்வதற்கு தகுதியற்றதாக மாற்றுவதையும் தடுக்க முடியாது. இந்த பயங்கரமான நிலையை உலகம் இன்னும் 50 ஆண்டுகளுக்குள் அடைந்துவிடும் என்று மிக அண்மை கால அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

  • ராப் வால்லஸ் (Rob Wallace) போன்ற தொற்றுநோயியல் நிபுணர்கள் லாபத்தினால் உந்தப்படும் முதலாளித்துவக் தர்க்கம் வன உயிரினச்சூழலின் மீது படையெடுத்ததையும், னித சமூகத்திற்கும்வன உயிரிகளுக்கும் இடையில் மோதல்கள் அடிக்கடி நடப்பதையும், இதனால் வைரஸ் கிருமிகள் மனித இனத்தை தாக்குவதற்கு வழிவகுப்பதையும் குறிப்பிட்டுக் காட்டுகிறார். ஆகையால், முதலாளித்துவ நெருக்கடி ரு சுகாதார நெருக்கடியின் வடிவத்தில் வெளிப்பட்டுள்ளது. இதனால், மனித சமூகம் பழையஇயல்பு நிலைக்குச் செல்ல முடியாது என்று கூறுகிறார். இது குறித்த உங்களது கருத்து?
ராப் வால்லஸ்

ராப் வால்லஸின் கூற்று முற்றிலும் சரியே. வன உயிரினங்களின் வாழ்விடங்களை அழித்தொழிப்பது மற்றும் மீட்டிருவாக்கம் செய்ய இயலாத அளவிற்கு நிலத்தை அழிப்பது போன்றவை அதிகரிக்க அதிகரிக்க, கண்கூடாக நாவல் கொரோனா வைரஸ் விசயத்தில் நாம் பார்த்த, இனம் விட்டு இனம் பரவும் இத்தகையை பரவல்களின் அபாயத்தை அதிகரிக்கவே செய்யும். தடைகளற்ற முதலாளித்துவத்தின் தற்கொலைப் போக்குகள் சுகாதார நெருகக்டியின் மூலமாக இன்னும் பலவழிகளில் அம்பலப்பட்டுள்ளது. 2003-ம் ஆண்டு சார்ஸ் தொற்றுநோய் பரவலின் போது, விஞ்ஞானிகள் மற்றொரு கொரோனா வைரஸ் தொற்றுநோய் ஏற்பட வாய்ப்பிருப்பதை எச்சரிக்கை செய்தனர், அதற்காக நாம் தயாராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால், யார் அவ்வாறு செய்ய முடியும்?

மிகப்பெரிய சூப்பர் பணக்கார மருந்து கம்பெனிகள் இவற்றை செய்வதற்கான மூலாதாரங்களைக் கொண்டிருந்தன, ஆனால், இலாபம் என்ற இயல்பான முதலாளித்துவ கோட்பாட்டினால் தடுக்கப்பட்டன. அரசாங்கம் இதில் அடியெடுத்து வைக்க முடியும், ஆனால், அது புதிய தாராளவாத பிளேக் நோயினால் தடுக்கப்பட்டுள்ளது. இதனால், தனது மேலாதிக்கத்தால் கட்டுப்படுத்தப்படும் உலகத்தில் அரசாங்கம் தலையிடக் கூடாது என தனியார்துறை அரசாங்கத்தை நிர்பந்திக்கிறது. ஆனால், தற்போது நடைபெறுவதைப் போன்று, இந்த கார்ப்பரேட் துறை பணக்காரர்கள் உருவாக்கிய நெருக்கடியில் இருந்து அவர்களைக் காப்பாற்றுவதை மட்டுமே அரசாங்கம் செய்துவருகிறது.

தற்போது கணிக்கப்பட்டுள்ளது போல, இப்போது இருப்பதைக் காட்டிலும் மிக தீவிரமான ஒரு தொற்றுநோய் – புவி வெப்பமாவதால் மிகவும் பெருக்கப்பட்ட ஒரு தொற்று நொய் – வரலாம். விஞ்ஞானிகளுக்கு இதனை எப்படி எதிர்கொள்வது என்று தெரியும், ஆனால், யாராவது செயல்பட தயாராக இருக்க வேண்டும். நம் கண் முன்னே இருக்கும் சரியான பாடங்களில் இருந்து கற்றுக்கொள்வதற்கு நாம் தயாராக இல்லையெனில், அதன் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்.

பெரிய மருந்து கம்பெனிகளும் அரசாங்கமும் தான் இதற்கான ஒரே வாய்ப்புகள் என தற்செயலாக கூட நாம் கருதக்கூடாது. பொதுமக்களின் வரிப்பணத்தில் இருந்து பெரிய அளவில் மானியம் பெறுகின்ற பெரிய மருந்து கம்பெனிகள் தேவையா என்பது நியாயமான கேள்வி. தனியார் மேலாதிக்கத்திற்கும் குவிக்கப்பட்ட செல்வத்திற்கும் சேவை செய்யும் நிலைமைக்கு மாறாக, மனிதத் தேவைகளுக்கும் சமூகத்திற்கும் சேவை செய்யவைக்க, தொழிலாளர்கள் மற்றும் சமூகத்தின் கட்டுப்பாட்டிற்கு ஆட்படும் வகையில் இவற்றை ஏன் சமூக உடைமையாக்கக் கூடாது?

படிக்க:
♦ தாய் மொழி வழிக் கற்றல் – அவசியம் ஏன் ?
♦ கொரோனா பணி நியமன ஊழல் – சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கண்டனம் !

  • வைரஸ் நோய்த்தொற்றை எதிர்த்து சிறப்பாக போராடுவதற்கு நாடுகளிடையே ஒற்றுமை தேவைப்படுகிறது. ஆனால், இனவாதம், அந்நியர் மீதான வெறுப்பு சார்ந்த பழிபோடும் நாடகங்கள், சீனாவை மிரட்டுவது, உலக சுகாதார நிறுவனத்திற்கான நிதிகளை நிறுத்துவது, ஈரான் மற்றும் வெனிசுலா நாடுகளுக்கு மிகப்பெரும் பொருளாதார தடைகளை விதிப்பது, மருத்துவ உபகரணங்களுக்காக சண்டையிடுவது போன்ற பல நடவடிக்கைகளை காண்கிறோம். பேட்ரிக் காக்பர்ன் (Patrick Cockburn) இது அமெரிக்க மேலாதிக்கத்தின் சரிவு என்கிறார். நீங்கள் இதனை ஏற்கிறீர்களா?

மேற்கூறியவற்றுள் பெரும்பாலானவை டிரம்ப் நிர்வாகத்தின் அருவருப்பான பக்கமும் ஏகாதிபத்தியத்தின் வழக்கத்திற்கு மாறான குரூரமான வடிவமும் ஆகும். ஆனால் இதைக் காட்டிலும் மிக அதிகமான துலக்கமாக வெளிப்படுகின்ற நடவடிக்கைகளும் உள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தை எடுத்துக் கொள்ளுங்கள், அதன் மிக பணக்கார மற்றும் மிக வலிமைவாய்ந்த நாடான ஜெர்மனி, இந்த நெருக்கடியை நன்றாகவே சமாளித்து வருகிறது. அந்நாட்டிலிருந்து தெற்கில் மிக தொலைவில் இல்லாத நாடான இத்தாலி இந்த நோய்த்தொற்றினால் பெரிதும் பாதிப்படைந்துள்ளது. ஆனால் ஜெர்மனி தனது மருத்துவ சேவைகளை இத்தாலிக்கு வழங்குகிறதா? இதுநாள் வரை வழங்கியதாக தகவல் இல்லை.

நல்வாய்ப்பாக, இத்தாலி கியூபாவிடமிருந்து கணிசமான உதவியைப் பெறுகிறது. இதுதான் உண்மையான சர்வதேசியத்திற்கான ஒரு எடுத்துக்காட்டு, இது முதல்முறையாக நடைபெறுவது அல்ல. இச்சூழ்நிலைகள் எவ்விதமான சர்வதேசியம் தேவைப்படுகிறது என்பதையும் நம்மையெல்லாம் அழிக்கும் சுயநலத்தின் தன்மையையும் நமக்குக் காட்டுகிறது.

டிரம்ப், அமெரிக்காவிற்கு கடுமையான தீங்கை விளைவித்துக் கொண்டுள்ளார் என்பதில் எந்த சந்தேகமுமில்லை எனினும் அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு பாரதூரமான சேதத்தை அவரால் கூட விளைவிக்க முடியாது. அமெரிக்காவின் சக்தியோ மிக வலிமையானது. இராணுவ ஆதிக்கத்தில், அதன் வலிமை ஒப்பிட முடியாதது. பிற நாடுகள் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிக்கும் ஒரே நாடு அமெரிக்காதான், மற்ற நாடுகள் எவ்வளவு தான் எதிர்ப்பு தெரிவித்தாலும் இந்த மூன்றாம் நாட்டின் பொருளாதாரத் தடைகளுக்குக் கட்டுப்படுகின்றன.

இசுரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான “இந்த நூற்றாண்டிற்கான ஒப்பந்தத்தை” அமெரிக்கா வெளியிட்ட போது, அதில் உள்ள விதிமுறைகளை மற்றவர்களும் பின்பற்ற வேண்டிய முறையாக மாறிவிட்டது. வேறு எந்த நாடாவது இந்த ஒப்பந்தத்தை வெளியிட்டிருந்தால், மற்ற நாடுகள் – இதனை கண்ணில் பட்டிருக்கும் பட்சத்தில் – அதை கேலிக்குரியதாகவே பார்த்திருப்பார்கள்.

அமெரிக்காவைச் சார்ந்த பன்னாட்டு நிறுவனங்கள் உலகத்தின் பாதி செல்வத்தைக் கட்டுப்படுத்துகின்றன, மேலும், ஒவ்வொரு பொருளாதார வகையிலும் முதல் இடத்தையோ சில சமயங்களில் இரண்டாம் இடத்தையோ வகிக்கின்றன.

பிற நாட்டினருக்கு அமெரிக்காவைப் பார்க்கப் பிடிப்பதில்லை; அல்லது இன்னும் மோசமாகவே பார்க்கிறார்கள். இது நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. ஆனால், அவர்கள் அமெரிக்காவைக் கண்டு அஞ்சுகிறார்கள்; உலகளாவிய அரங்கில் அமெரிக்காவை எதிர்த்து நிற்கும் தீவிரமான போட்டியாளர்கள் யாரும் இல்லை.

★★★

மூலக்கட்டுரை நன்றி : தி வயர்

தமிழாக்கம்: மலரவன், சமூக அரசியல் ஆர்வலர்

பீமா கொரேகான் வழக்கை முடிக்க மோடி அரசு செய்யும் மோசடிகள் – அம்பலப்படுத்துகிறது அம்னெஸ்டி

0

பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 11 செயற்பாட்டாளர்களுக்காக குரல் கொடுத்துவரும் வழக்கறிஞர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்களின் கணினிகள் ஸ்பைவேர் எனப்படும் வேவு பார்க்கும் பொருளின் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்ததை அம்னெஸ்டி இண்டர்நேசனல் அமைப்பு கண்டறிந்துள்ளது.

கடந்த ஜூன் 15, 2020 அன்று அம்னெஸ்டி இண்டர்நேசனல் அமைப்பு – சிட்டிசன்ஸ் லேப் எனும் இணையச் செயற்பாட்டாளர் குழுவுடன் இணைந்து ஒரு அறிக்கையை வெளியிடுள்ளது. அதில் பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் 11 சமூக ஆர்வலர்களுக்காக குரல்கொடுக்கும் வழக்கறிஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் 9 பேரின் கணினிகள் வேவு பார்க்கப்படுவதை தமது ஆய்வுகள் உறுதிப்படுத்தியிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

ஜனவரி 1, 2018 அன்று நடந்த பீமா கொரேகான் வன்முறைக்கு முந்தைய நாள் நடந்த எல்கர் பரிஷத் மாநாட்டை ஏற்பாடு செய்ததாகக் கூறி 5 சமூகச் செயற்பாட்டாளர்களை 2018-ம் ஆண்டு ஜுன் மாதத்தில் கைது செய்தது போலீசு. அதனைத் தொடர்ந்து அந்த வழக்கில் மேலும் 6 சமூகச் செயற்பாட்டாளர்களையும் இணைத்து அவர்களையும் அடுத்தடுத்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளது போலீசு.

கைது செய்யப்பட்ட 11 பேரில் ஒருவர் மட்டுமே எல்கர் பரிஷத்தோடு தொடர்புடையவர். மற்றவர்கள் தொடர்ச்சியாக மனித உரிமைப் பிரச்சினைகளுக்காகவும், மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்காகவும், தொழிற்சங்க உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்த ‘குற்றத்திற்காக’ இத்தகைய போலி வழக்குகளில் சிக்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் தடைசெய்யப்பட்ட இந்திய பொதுவுடைமைக் கட்சி (மாவோயிஸ்ட்)-யோடு தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளது போலீசு.

படிக்க:
♦ கொரோனா தொற்று அபாயம் : தோழர் வரவர ராவை விடுதலை செய் !
♦ கோவிட் நோய் எவ்வாறெல்லாம் வெளிப்படலாம் ? | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா 

மேலும் பிரதமர் நரேந்திர மோடியைக் கொல்வதற்கு திட்டமிட்டதாகவும் அரசாங்கத்தை நிலைகுலையச் செய்யும் சதியில் பங்கெடுத்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு ஆதரவாக போலி கடிதங்களையும் அவர்களது கணினிக்குள் வைத்து வழக்கை ஜோடித்தது போலீசு.

கைது செய்யப்பட்டவர்களின் கணினிகளின் வன்தகட்டின் (Hard Disk) நகலை புனே போலீசு நீதிமன்றத்துக்கும் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கும் கொடுத்தது. அதனை வாங்கி ஆய்வு செய்த கேரவன் பத்திரிகை, அந்த வன்தகட்டில் ‘மால்வேர்’ என சொல்லப்படும் தகவல் திருட்டு மென்பொருட்கள் இருந்ததையும் அதன் மூலம் கோப்புகள் கையாளப்பட்டதையும் இந்த ஆய்வு அம்பலப்படுத்தியது.

இந்த ‘மால்வேர்’களை இயக்குபவர்கள், இதன் மூலம், தொலைவிலிருந்தே கணிணிக்குள் தங்களுக்குத் தேவையான ஆவணங்களை நுழைக்க முடியும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அவர்களது கணினியிலிருந்து கைப்பற்றப்பட்டதாக சொல்லப்படும் கடிதங்கள் இப்படித்தான் கணினிக்குள் கொண்டு வந்திருக்கப்பட வேண்டும் என கணினி பாதுகாப்பு வல்லுனர்களும் வழக்கறிஞர்களும் குறிப்பிடுகின்றனர்.

கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், வாட்சப் நிறுவனம், இஸ்ரேலின் மென்பொருள் நிறுவனமான என்.எஸ்.ஓ. உருவாக்கிய பெகாசஸ் என்னும் வேவுபார்க்கும் மென்பொருள் பயன்படுத்தப்பட்டு நூறுக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களின் வாட்சப் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டதாகக் கூறி அந்நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுத்தது. என்.எஸ்.ஓ நிறுவனமோ, தாம் அரசாங்கங்களுக்கு மட்டும்தான் அத்தகைய வேவுபார்க்கும் தொழில்நுட்பங்களை வழங்குவதாகத் தெரிவித்தது.
அச்சமயத்தில் இந்தியாவில் பத்துக்கும் மேற்பட்டோர் அந்த பெகாசஸ் ‘மால்வேர்’ செயலி மூலமாக கண்காணிக்கப்பட்டிருப்பதாக வாட்சப் நிறுவனம் தெரிவித்தது. பாதிக்கப்பட்ட நபர்களுக்குத் தொடர்பு கொண்டு தாம் பிரச்சினை குறித்து தெரிவித்துவிட்டதாகக் கூறியிருக்கிறது வாட்சப். அந்த வகையில் வாட்சப் தொடர்பு கொண்டவர்களுல் பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்காக குரல் கொடுத்த மூன்று செயற்பாட்டாளர்களும் அடங்குவர்.

இதன் தொடர்ச்சியாக, கைது செய்யப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்கும் சமூகச் செயற்பாட்டாளர்களும் வழக்கறிஞர்களும் கண்காணிக்கப்படலாம் என்ற சந்தேகத்தின் பெயரில், இவ்வழக்குகளுக்காக குரல் கொடுப்பவர்களின் கணிணிகளை அம்னெஸ்டி இண்டர்நேசனல் எனும் மனித உரிமைகள் அமைப்பும், சிட்டிசன்ஸ் லேப் என்ற இணையச் செயற்பாட்டாளர்கள் குழுவும் இணைந்து ஆய்வு செய்தன. இவர்கள் அனைவருக்குமே, கடந்த 2019 ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் மின்னஞ்சல்கள் மூலம் மால்வேர்கள் அனுப்பப்பட்டுள்ளன. அந்த மின்னஞ்சல்களில் இருக்கும் இணைப்பை அழுத்தினால் அது பின்னணியில், ‘நெட்வயர்’ எனும் வணிகரீதியான வேவுபார்க்கும் மென்பொருளை கணினியில் நிறுவும். அதன் மூலம் கணினி, கைப்பேசி ஆகிய அனைத்தையும் வேவுபார்க்க முடியும்.

வழக்கறிஞர்களும் சமூகச் செயல்பாட்டாளர்களுமான, நிகல்சிங் ரத்தோட், டிக்ரி ப்ரசாத் சௌகான், யக் மோஹித் சவுத்ரி, ராகினி அகுஜா, கல்வியாளரான பார்த்த சாரதி ரே, பத்திரிகையாளரான பி.கே.விஜயன், ஜக்லக் எனும் மனித உரிமைகள் அமைப்பின் வழக்கறிஞர்களான ஷாலினி கெராம், இஷா கந்தெல்வால் ஆகியோரின் மின்னஞ்சல் முகவரிகளுக்கும் ஜக்லக் அமைப்பின் அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கும் மால்வேர் அனுப்பப்பட்டிருக்கிறது.

இந்த மின்னஞ்சல்கள் அனைத்தும் அச்சமயத்தில் முக்கியமாக பேசப்படும் விவகாரங்கள் குறித்து தலைப்பிடப்பட்டு அனுப்பப்பட்டிருக்கின்றன. அது குறித்த ஆர்வத்தில் செயல்பாட்டாளர்கள் இணைப்பை அழுத்தினால் அந்த மால்வேர் மறைமுகமாக தரவிறக்கப்பட்டு பின்னணியில் இருந்து செயல்பட ஆரம்பிக்கும். அனுப்பப்படும் மின்னஞ்சல்கள், கணினி செயல்பாடுகள் உள்ளிட்ட அனைத்தையும் கண்காணிப்பதோடு, இந்த மால்வேரை அனுப்பியவர்கள் விரும்பும் கோப்புகளை கணினிக்குள் நுழைக்கவும் வழியேற்படுத்திக் கொடுக்கவல்லவை.

பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேரின் மீதும் ஊபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளான பின்னரும்கூட 11 பேரும் பிணை வழங்கப்படாமல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் 60 வயதுக்கு மேற்பட்டவரகள். இந்தியச் சிறைகளில் கொரோனா தொற்று பெருமளவில் பரவிக் கொண்டிருக்கையில் அதற்கு மத்தியிலும் இவர்களுக்கு பிணை வழங்க நீதிமன்றங்கள் மறுத்து வருகின்றன.

புனே போலீசுத்துறையின் வசம் இருந்த இந்த வழக்கை, அமித்ஷாவின் உள்துறைச் செயலகத்தின் கீழ் உள்ள தேசிய புலனாய்வு முகமை (NIA) கடந்த ஜனவரி 24, 2020 அன்று மராட்டிய அரசிடமிருந்து தன்னிச்சையாக எடுத்துக் கொண்டது. இந்த வழக்கை NIA கையிலெடுத்தவுடன் பீமா கொரேகான் வழக்கில் கலவரத்தைத் தூண்டிய வலதுசாரி கிரிமினல்களாகிய மிலிந்த் ஏக்பொடே மற்றும் சாம்பாஜி பீடே ஆகிய இருவரின் மீதான குற்றச்சாட்டுகளையும் புறக்கணித்தது.

தேசிய புலனாய்வு முகமைக்கு என ஒரு காவிப் பின்னணி இருக்கிறது. கடந்த 2014-ம் ஆண்டிலிருந்தே ஆளும் பாஜக – சங்க பரிவாரக் கும்பலுக்கு ஆதரவாக பல்வேறு வழக்குகளை நீர்த்துப் போகச் செய்தது. பல மாநில அரசுகளாலும் நடத்தப்பட்டு வந்த வழக்குகளை தன்னிச்சையாக கையெலெடுத்துக் கொண்டு, காவிக் கும்பலுக்கு ஆதரவான வகையில் வழக்கை திசை மாற்றிக் கொண்டு போவதே இதன் வாடிக்கையாக இருந்துவருகிறது. மராட்டிய தீவிரவாத எதிர்ப்புப் படைப்பிரிவினரால் வெற்றிகரமாக புலனாய்வு செய்யப்பட்ட மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சாத்வி பிரக்யா சிங் விடுவிக்கப்பட்டது அதற்கு நல்ல உதாரணம். இந்த வழக்கில் குற்றவாளிக்குச் சாதகமாக நடந்து கொள்ளுமாறு அரசுத் தரப்பு வழக்கறிஞரிடம் பேரம் பேசியது அச்சமயத்தில் வெளிவந்து என்.ஐ.ஏ-வின் யோக்கியதை அம்பலமாகியது.

செயற்பாட்டாளர்களின் கணிணிக்குள் அந்த ஆவணங்கள் எப்படி சென்றன என்பதை கேரவன் பத்திரிகை நடத்திய ஆய்வு அம்பலப்படுத்தியிருக்கிறது. செயற்பாட்டாளர்களுக்கு ஆதரவாக உள்ளவர்களின் கணிணிகள் கண்காணிக்கப்படுவது அம்னெஸ்டி அமைப்பு நடத்திய ஆய்வில் அம்பலமாகியுள்ளது.

மோடியின் பாசிச ஆட்சியில் மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும் உரிமைகளுக்காகவும் போராடுபவர்களை கண்காணிப்பதும், பொய் வழக்குகள் போட்டு முடக்குவதும் தொடர்ந்து வருகிறது. சமீபத்தில், சி.ஏ.ஏ. எதிர்ப்புப் போராளிகளை டில்லி போலீசு விரட்டி விரட்டி வேட்டையாடுவதில் இருந்தே புரிந்து கொள்ள முடியும்.

இவை எங்கோ யாருக்கோ நடக்கிற ஒன்று என ஒதுக்கியிருந்தால், இந்தக் கைதுகள் அனைத்தும் படுகொலைகளாக மாறும் நாள் வெகுதொலைவில் இல்லை. அன்று நமக்குக் குரல் கொடுக்கவென யாரும் இருக்கப் போவதில்லை !


– நந்தன்
செய்தி ஆதாரம்: ஸ்க்ரால். 

கோவிட் நோய் எவ்வாறெல்லாம் வெளிப்படலாம் ? | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா 

கோவிட் நோய் எவ்வாறெல்லாம் வெளிப்படலாம் ?
  • அதீத காய்ச்சல் (Fever)
  • இருமல் (cough)
  • மூக்கு ஒழுகுதல் (running nose)
  • தொண்டை வலி (sore throat)
  • உடல் சோர்வு/ தலைவலி (malaise/ headache)
  • நுகர்தல் திறன் இழப்பு/குறைபாடு (Anosmia)
  • சுவைத்தல் திறன் இழப்பு/ குறைபாடு ( Aguesia)

போன்ற அறிகுறிகள் தென்பட்டால் கோவிட் நோயாக இருக்கலாம்.

தாங்கள் கோவிட் நோய் கட்டுப்பாட்டு மண்டலத்திற்குள் இருந்து மேற்சொன்ன அறிகுறிகள் தோன்றினால் உங்களை நீங்களே பரிசோதனைகளுக்கு உட்படுத்திக்கொள்வது சிறந்தது.

கோவிட் நோய் பின்வரும் படிநிலைப்படியே பெரும்பாலானோருக்கு வருகிறது.

காய்ச்சல்( fever) ( முதல் மூன்று நாட்கள்)
⬇️
இருமல்( cough with or without sputum) ( நான்கு முதல் ஏழு நாட்கள்)
⬇️
மூச்சு விடுவதில் சிரமம் ( shortness of breath) ( நான்கு முதல் ஏழு நாட்கள்) Respiratory rate more than 20 per minute
⬇️
ஆக்சிஜன் குறைபாடு ( Hypoxia) spO2 less than 95%
⬇️
மூச்சுத்திணறல் ( எட்டு முதல் பதினான்கு நாட்கள்)( Breathlessness)
⬇️
தீவிர மூச்சுத்திணறல் நிலை ( எட்டு முதல் பதினான்கு நாட்கள்) ( Acute respiratory distress syndrome)
⬇️
நுரையீரல் சுவாச செயலிழப்பு ( Respiratory Failure )
⬇️
மரணம் ( code BLACK)

எனவே காய்ச்சல், இருமல், மூச்சு விடுவதில் சிரமம் ஆகிய மூன்று முக்கிய அறிகுறிகளை முதல் வாரத்தில் பிடித்து எவ்வளவு சீக்கிரம் பரிசோதனை செய்து மருத்துவமனையை அடைகிறோமோ அது நல்லது.

முதல் வார அறிகுறிகளை அலட்சியம் செய்து பின்னாடி இரண்டாவது வாரம் மருத்துவமனையை அடைவது ஆபத்து.

படிக்க:
♦ கொரோனா பணி நியமன ஊழல் – சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கண்டனம் !
♦ சாவர்க்கர், இரு தேசக் கோட்பாடு மற்றும் இந்துத்துவா | ராம் புனியானி

***

கொரோனா “டேஞ்சர் சைன்ஸ்” கொரோனா அபாய அறிகுறிகள் அனைவரும் அறிய வேண்டியவை !

கொரோனா தொற்று “பாசிடிவ்” என்று கண்டறியப்பட்டவர்களும் அவர்களை கவனித்துக்கொள்பவர்களின் பிரத்யேக கவனத்திற்கு ;

❌ தொடர் இருமல்
❌தொடர்ந்து காய்ச்சல் (102 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் அடிப்பது)
❌ மூச்சு விடுவதில் சிரமம்
❌ நெஞ்சுக்கூடு பகுதியில் தொடர்ந்து வலி/அழுத்துவது போன்ற உணர்வு
❌ எழமுடியாத அளவு சோர்வு
❌ மன நிலையில் குளறுபடி
❌ பகல் நேரம் அதிக உறக்க உணர்வு வந்து உறங்குவது
❌வலிப்பு
❌ முதலில் ஆரம்பித்த தொற்று அறிகுறிகளான காய்ச்சல் / இருமல் போன்றவை மூன்று நாட்களுக்கு பிறகும் தொடர்வது
❌ முகம் மற்றும் உதடுகள் நீல நிறத்தில் மாறுவது

மேற்சொன்ன அபாய அறிகுறிகளை அனைவரும் அறிந்து வைத்திருப்பது அவசியம். இருப்பினும் கண்டெய்ண்மெண்ட் பகுதிகளில் வசிப்பவர்களும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களும் கட்டாயம் இவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

மேற்சொன்ன அறிகுறிகள் தென்பட்டால் உடனே அரசு மருத்துவமனையில் அட்மிட் ஆக வேண்டும்.

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

கொரோனா பணி நியமன ஊழல் – சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கண்டனம் !

நாள்: 17.06.2020

கொரோனா காலத்திலும் பணி நியமனத்தில் ஊழலா? சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கண்டனம்.

கொரோனா பரவல் அதிகமாகியுள்ள நிலையில், மருத்துவர்களையும், மருத்துவ ஊழியர்களை வெளி கொணர்தல் முறையில், ஜென்டில் மேன் என்ற நிறுவனத்தின் மூலம் தமிழக அரசு நியமித்து வருகிறது.

மூன்று மாதத்திற்கு மட்டுமேயான இந்த தற்காலிக நியமனத்திற்கு, ஒரு மாத ஊதியத்தை கமிஷனாக இந்நிறுவனம் கோரி வருகிறது. இது கடும் கண்டனத்திற்குரியது.

அந்நிறுவனத்தின் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நிறுவனத்திடம் இப்பொறுப்பை வழங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு தார்மீக பொறுப்பேற்று அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும்.

ஊழியர்களை எம்ஆர்பி மூலம் நேரடியாக நியமிக்க வேண்டும். ஆடியோ ஆதாரம் இணைக்கப் பட்டுள்ளது.

 

டாக்டர் ஜி.ஆர். இரவீந்திரநாத்
பொதுச்செயலாளர்,
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்.
9940664343

நன்றி : ஃபேஸ்புக்கில் Ravindranath GR 

சாவர்க்கர், இரு தேசக் கோட்பாடு மற்றும் இந்துத்துவா | ராம் புனியானி

0

சாவர்க்கர் மீண்டும் செய்திகளில் வந்துள்ளார். கர்நாடகாவில் உள்ள எதிர்கட்சிகள், பெங்களூருவில் உள்ள ஏலாஹன்கா மேம்பாலத்திற்கு சாவர்க்கர் பெயர் சூட்ட எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பல இந்தியர்களை, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்ள சாவர்க்கர் தூண்டுதலாக இருந்தார் என கடந்த மே மாதம் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

ஓராண்டுக்கு முன்னர்தான், மராட்டிய தேர்தலுக்கு ஓட்டு சேகரிக்கையில், சாவர்க்கருக்கு பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என்று தனது தேர்தல் அறிக்கையில் பாஜக கூறியிருந்தது. பாஜகவின் எதிர்த் தரப்பினர், சாவர்க்கரை இந்து தேசியவாத சித்தாந்தியாகவும், இந்துத்துவா என்ற சொல்லைப் பயன்படுத்தி குறிப்பான வழியில் இந்துக்களை வரையறுத்த ஒரு வகுப்புவாதியாகவே பார்க்கின்றனர். முஸ்லீம் லீக்கின் தனி பாகிஸ்தான் கோரிக்கையை சித்தாந்த ரீதியில் ஏற்புடையதாகச் செய்த “இரு தேசக் கோட்பாட்டிற்கு”- கோட்பாட்டு அடித்தளமிட்டவர்.

அந்த சாவர்க்கர் துவக்கத்தில் இருந்தே வகுப்புவாத மனநிலை கொண்டிருந்தார் என்பதற்கு அவர் சிறுவனாக இருந்த போது மசூதி மீதான அவரது குழுவினர் தாக்குதலே சான்று. இந்துத்துவா வட்டாரங்களுக்குள்ளும் கூட அவர் இரண்டு விசயங்களுக்காக பாராட்டப்படுகிறார். முதலாவது, 1857 போராட்டங்களை “முதல் சுதந்திரப் போர் எனக் குறிப்பிட்ட அவரது நூல். மற்றொன்று அந்தமான் தீவுகளின் செல்லுலார் சிறையில் அடைக்கப்படும் முந்தைய காலகட்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு அவர் காட்டிய எதிர்ப்பு. தனது சட்டப் படிப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர், பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்திற்கு விசுவாசமாக இருப்பேன் என உறுதிமொழி எடுக்க சாவர்க்கர் மறுத்தது உண்மைதான்.

சாவர்க்கர் பிரிட்டிஷ் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டார். அது அவருக்கு 50 ஆண்டு சிறைதண்டனை பெற வழிவகுத்தது. அது அவருக்கு பெரும் துன்பத்தை விளைவித்தது. ஆனால் உண்மை என்னவெனில், அங்கு அவர்மட்டும் தனியாக அடைக்கப்படவில்லை. செல்லுலார் சிறையின் பெரும்பான்மையான சிறைவாசிகள் கொடூரங்களையும் துன்புறுத்தல்களையும் அனுபவித்தனர். ஆனால் அவர் சிறையிலிருந்த போது, பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு மன்னிப்பு மனுக்கள் அனுப்ப முடிவெடுத்தவர்களில் சாவர்க்கரும் ஒருவர். அவரது மனுக்களில் தனது கடந்தகால நடவடிக்கைகளுக்காக மன்னிப்பு மட்டும் கேட்கவில்லை. கூடுதலாக, பிரிட்டிஷ் அரசு எந்த வகையில் விரும்புகிறதோ அந்த வகையில் சாம்ராஜ்ஜியத்திற்கு ஆதரவாக இருப்பதாக உறுதியும் அளித்தார்.

சாவர்க்கரின் ஆதரவாளர்கள் அவரது மன்னிப்புகளை “சாதுரியமான செயல்” என்று நியாயப்படுத்துவதோடு அவரை மராட்டிய மன்னன் சிவாஜியோடும் ஒப்பிடுகின்றனர். உண்மை என்னவெனில், அந்தமான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், சாவர்க்கர் பிரிட்டிஷாருக்கு முழு விசுவாசமாகவே இருந்தார். அதற்காக அவர்களிடமிருந்து மாதம் ரூ. 60 ஓய்வூதியத் தொகை பெற்றார். சுருக்கமாகச் சொன்னால், சுதந்திரப் போராட்டத்தை பலவீனமடையச் செய்ததைத் தவிர, அவர் “சாதுர்யமாக” செயல்பட்டதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.

படிக்க:
♦ கொரோனா தொற்று அபாயம் : தோழர் வரவர ராவை விடுதலை செய் !
♦ தன் மீது கருணை காட்டுமாறு மன்றாடிய சாவர்க்கர் !

இந்து தேசியவாதம் எனும் பிரிவினை சித்தாந்ததை முன்வைத்ததன் மூலம் பிரிட்டிஷ் ஆட்சியின் நுகத்தடியைத் தூக்கியெறிவதற்கான இந்தியாவின் போராட்டத்தைச் சிதைப்பதற்கான விதையை ஏற்கெனவே விதைத்திருந்தார். ஹிந்து தேசம், முசுலீம் தேசம் என தேசங்களின் கோட்பாட்டை பரப்புரை செய்தார். இந்தியாவை தனது தந்தையர் பூமியாகவும், புனித பூமியாகவும் யார் ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களே இந்து என வரையறுக்கவும் செய்தார். அவர் முன்னிலைப்படுத்திய இந்துத்துவா எனும் சொல், மெதுமெதுவாக இந்துயிசத்துக்கு ஒத்த பொருளுடைய சொல்லாகியது. சாவர்க்கரின் பார்வையில், இந்துத்துவா என்பது இந்துத் தன்மையின் முழுமை. ஆனால், இந்துயிசம் மதமாக இருக்கையில், இந்துத்துவா ஒரு அரசியலாக இருக்கிறது. அது ஆரிய இனம் என்று சொல்லப்படும் இனத்தின் மேன்மையையும், பிராமண கலாச்சாரத்தையும் முதன்மைப்படுத்தும் அரசியலாகும்.

சாவர்க்கர் தனது காலகட்டத்தில் நடந்த எந்த ஒரு முக்கியமான பிரிட்டிஷ் எதிர்ப்பு இயக்கங்களிலும் பங்கேற்கவில்லை என்ற உண்மையை அவரது ஆதரவாளர்கள் மேல்பூச்சு பூசி கடந்து செல்கின்றனர். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்க இந்தியர்களை சாவர்க்கர் ஊக்கமூட்டியதாக அவரைப்பற்றி மோடி கூறியதற்கு முரணாக இது இருக்கிறது.

1942-ம் ஆண்டு இந்து மகாசபையின் ஆதாரவாளர்களுக்கு தங்களது பணியிடங்களில் இருந்துகொண்டு வேலை செய்யுமாறும், பிரிட்டிஷ் அரசுக்கு தடங்கல் ஏற்படுத்தும் எதையும் செய்யவேண்டாம் என்றும் சாவர்க்கர் வழிகாட்டுதல் கொடுத்தார். அச்சமயத்தில் பிரிட்டிஷ் இராணுவத்துக்கு லட்சக்கணக்கான இந்துக்களை சேர்ப்பதில் முக்கியப் பங்காற்றியதன் மூலம் பிரிட்டிஷாரின் போர் தயாரிப்புகளுக்கு உதவி செய்தார்.

சுபாஷ் சந்திர போஸ் விவகாரத்தில் ஒரு சுவாரசியமான முரண்பாடு பற்றி குறிப்பிடுவது இங்கே மிகவும் அவசியமானது. சாவர்க்கர்தான் சுபாஷ் சந்திர போஸுக்கு ஒரு இராணுவத்தை உருவாக்குமாறு அறிவுரை வழங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால் உண்மை என்னவெனில், சுபாஷ் சந்திர போஸ் தனது இந்திய தேசியப் படையைக் கொண்டு பிரிட்டிஷை எதிர்த்துப் போரிடுகையில், சாவர்க்கர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியப் படைக்கு ஆள்சேர்த்துக் கொண்டிருந்தார்.

பகத்சிங்குடனான அவரது முரண்பாடும் சமமான அளவில் கவனிக்கத்தக்கது. சாவர்க்கரின் மன்னிப்பு மனுக்கள், பிரிட்டிஷாரிடம் மன்னிப்புக் கோரியதோடு, அவர்களோடு இணைந்து பணிபுரிவதை முன்வைத்தன. ஆனால் பகத் சிங் பிரிட்டிஷாருக்கு எழுதிய கடிதத்தில், அவர் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்ப்பதாலும், ஒரு கலகக்காரனாக, அவர் படையினரின் துப்பாக்கிச் சூட்டை எதிர்கொள்ள வேண்டுமென்றும், சாகும்வரை தூக்கிலிடப்படக் கூடாது என்றும் எழுதினார்.

இன்று, பிரிவினைக்காக இந்து தேசியவாதிகள் முசுலீம்களையும், காந்தியையும் குற்றம் சாட்டுகின்றனர். காங்கிரஸ் கட்சி “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கையில், இந்து மகாசபை முசுலீம் லீக்கோடு கூட்டணி வைத்து வங்காளம், சிந்து, மற்றும் வட மேற்கு முன்னணி மாகாணம் ஆகியவற்றில் அமைச்சரவையை உருவாக்கியது என்ற உண்மையை மக்கள் தெரிந்து கொள்ள இந்து தேசியவாதிகள் விரும்பவில்லை.

இந்து மகாசபை சிந்து மாகாணத்தில் முசுலீம் லீக்கோடு கூட்டணி அமைச்சரவையில் பங்கெடுத்திருந்த காலத்தில்தான், சிந்து சட்டசபை பாகிஸ்தான் உருவாக்கத்துக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றியது. இந்தியாவைப் பிரிப்பதில் பிரிட்டிஷாருக்கு இந்து மகாசபையையும் முசுலீம் லீக்கையும் விட மிகச் சிறந்த கூட்டாளிகள் இருந்திருக்க முடியாது.

சாவர்க்கரைப் புகழ்பவர்கள், அவரது வாழ்க்கையின் முதல் பாகத்தில் – சிறையில் அடைக்கப்படுவதற்கு முந்தைய காலகட்டத்தில் – கவனம் செலுத்துகின்றனர். பிரிட்டிஷாருக்கு எதிரான அவரது முயற்சிகள் எதுவாக இருந்தாலும், அப்போதும் அவர் அடிப்படையில் ஒரு வகுப்புவாதியாகவே இருந்தார். உதாரணத்திற்கு, 1857-ம் ஆண்டு நடைபெற்ற போரை, கிறிஸ்தவர்களுக்கு எதிராக இந்துக்களும் முசுலீம்களும் இணைந்ததாகப் பார்த்தாரே அன்றி விவசாயிகளின் காலனிய எதிர்ப்புக் கலகமாகப் பார்க்கவில்லை. ஆர்.எஸ்.எஸ். சாவர்க்கரை “இந்து தேசியவாதத்தின் தந்தை” என்று குறிப்பிடுகிறது. ஆனால் ஆர்.எஸ்.எஸ்.-க்கும் சாவர்க்கருக்கும் இடையில் சில மாற்றுக் கருத்துக்களும் உள்ளது. உதாரணத்திற்கு சாவர்க்கர் பசுவை பயன்பாடுள்ள விலங்காகப் பார்த்தாரே ஒழிய புனிதமிக்கதாகப் பார்க்கவில்லை.

படிக்க:
♦ அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்றவரின் அனுபவம் !
♦ கொரோனா பணியில் மரித்த செவிலியர் தங்கத்திற்கு அஞ்சலி !

சாதிய பாலியல் படிநிலைகளை அடிப்படையாகக் கொண்ட இந்து புனிதநூல்களை உயர்த்திப் பிடித்த சாவர்க்கர், புத்த மதம் மற்றும் அஹிம்சையினைக் கடுமையாக விமர்சித்தார். அஹிம்சைக் கோட்பாடே இந்தியாவை பலவீனமாக்கியதாக எண்ணினார். அவரது எழுத்துக்களில் அவர் தெளிவான ஆணாதிக்கவாதியாகவே இருந்தார். அதன் காரணமாகவே கடும் பழமைவாத, வகுப்புவாத அரசியலுக்கு அடித்தளமிட்டார். உதாரணத்திற்கு, மராட்டிய மன்னன் சிவாஜி, அவனது படையினரால் அவனுக்குப் பரிசாகக் கொண்டு வரப்பட்ட கல்யாணின் மருமகளை திருப்பியனுப்ப முடிவெடுத்ததை சாவர்க்கர் விமர்சித்தார். அந்தப் பெண் அவமானப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் அது மட்டுமே இந்து கோபத்திற்குப் பழிதீர்த்திருக்கும் என்று சாவர்க்கர் கருதினார்.

காந்தியின் கொலையில் சாவர்க்கரின் பங்கு குறித்தும் பல்வேறு கோணங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. இந்தக் குற்றத்திற்காக அவர் விசாரிக்கப்பட்டதோடு, உறுதியான ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் இந்தக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டார். காங்கிரஸ் தலைவரான சர்தார் வல்லபாய் படேல், இந்தக் கொலை இந்து மகாசபையின் தீவிரவாதப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டது என்பதில் தெளிவாக இருந்தார்.

இன்னும் சாவர்க்கரை புகழ்பாடுவதற்கான முயற்சிகள் தொடர்கின்றன. அவரது உருவப்படம் ஏற்கெனவே நாடாளுமன்றத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது… ஆனால் இந்தியாவுக்கு அத்தகைய அடையாளம் தேவையா என்பதுதான் கேள்வி. இந்து தேசியவாதிகளுக்கு அவர் ஏற்கெனவே ஒரு அடையாளமாக இருக்கிறார். ஆனால் அவர் இந்திய தேசியவாதிகளுக்கு, மதச்சார்பற்ற- ஜனநாயக இந்தியாவுக்கான போராட்டத்தில் தன்னை எப்போதும் அடையாளப்படுத்திக் கொள்ளாத ஒருவர். இந்து தேசியவாதிகள் அவரது பிரிட்டிஷ் எதிர்ப்பு வாழ்க்கையின் குறுகிய பகுதியை ஒளிவட்டமிட்டுக் காட்டி, அவரை மேன்மைமிக்க நிலையில் வைக்கப் பார்க்கின்றனர். இதுவரை அவர் அடிப்படையான வகுப்புவாதியாகவே இருந்திருக்கிறார். மேலும் தனது வாழ்க்கையின் பெரும் பகுதியில், முசுலீம் லீக்குடன் கூட்டணி வைத்து பிரிட்டிஷாரின் பிரித்தாளும் கொள்கையின் நோக்கமாகிய இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கான தர்க்கத்தை வழங்கினார்.


கட்டுரையாளர் : ராம் புனியானி
தமிழாக்கம் :
– நந்தன்
செய்தி ஆதாரம்: நியூஸ் கிளிக். 

அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்றவரின் அனுபவம் !

ந்த அனுபத்தை எழுதலாமா. அல்லது இது பலரை பயமுறுத்திவிடுமா என்று பல சிந்தனைகளுக்கு பிறகு இந்த எழுத்து யாரோ ஒருவருக்கு பயனுள்ளதாக இருக்க நிறைய வாய்ப்புகள் இருப்பதாக கருதி இதனை இங்கே பதிவு செய்கிறேன்.

நான் மனோபாரதி. அடையாறில் ஒரு ‘ப்ராண்டிங் ஏஜென்சி’ நடத்தி வருகிறேன். மார்ச் மாதம் லாக்டவுன் அறிவிக்கும் முன்பிருந்தே கோவிட்-19 தொடர்பான எல்லா விஷயத்திலும் ரொம்பவே கவனமாகவும் சூதனமாகவும் இருக்க பழகிக் கொண்டோம். லாக்டவுன் அறிவித்த பின்பு மே மாதம் வரை அலுவகத்திற்கு தேவையான அத்தியாவசிய வேலைகளை மட்டும் தேவையான நபர்களை வைத்து செய்து கொண்டோம். யாரும் அலுவலகத்திற்கு வரவில்லை. அரசு சில தளர்வுகளை கொண்டுவந்த பின்பு மே மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து நான்காவது வாரம் வரை மட்டும் அலுவலகத்திலிருந்து வேலை செய்தோம்.

மே 29ம் தேதி மாலை எனக்கு லேசான காய்ச்சல் இருப்பது போன்ற உணர்வு உள்ளுக்குள் ஏற்பட்டது. பயத்தின் காரணமாக அன்று இரவு திருவான்மியூரில் நான் எப்போதும் செல்லும் மருத்துவரிடம் சென்று செக்-அப் செய்துகொண்டபோது எனது உடலில் 97.1 temperature இருந்தது. ஜுரம் இல்லை, சளி இல்லை, தலைவலி இல்லை, இருமல் இல்லை. டாக்டர் மூச்சு விடச் சொல்லி பார்க்கும்போது ‘மூச்சு விடும்போது difficulty இருக்கா?’ என்று கேட்டார்.

‘அப்படி எதுவும் இல்லை டாக்டர். உங்களுக்கு எதுவும் தெரியுதா? கோவிட் இல்ல-ல்ல’ என்று பதட்டத்துடன் கேட்டேன்.

‘ஆன்டி-பயாடிக் தர்றேன். ஜுரம் இல்ல. அதனால இப்போதைக்கு ஏதும் சொல்ல முடியாது’ என்று கூறி ஒரு ஊசியும் சில மாத்திரைகளும் கொடுத்தார்.

மே 30ம் தேதி உடலில் சோர்வு ஏற்பட்டது. வீட்டில் சமைத்த உணவின் ருசி தெரியவில்லை. சமைக்கும் வாசனையும் சரியாக உணர முடியவில்லை. அன்று முழுவதும் உடல் சோர்வாகவே இருந்தது. பயம் அதிகரித்திருந்தது. அதன் காரணமாக வீட்டில் இருக்கும் மற்ற நண்பர்களுக்கு எதுவும் பரவிட கூடாது என்பதற்காக என்னை தனி அறையில் தனிமைப்படுத்திக்கொண்டேன். எனக்கென தனி தட்டும், நான் பயன்படுத்தும் கழிவறையை வேறு யாரும் பயன்படுத்த வேண்டாம் என்றும், தனியாக வாட்டர் பாட்டிலில் தண்ணீர் பிடித்தும் வைத்துக்கொண்டேன். அன்று மாலை ஒரு அரைமணி நேரத்திற்கு உள்ளுக்குள் ஜுரம் இருப்பதாக உணர்ந்தேன். நெற்றியில் கழுத்தில் கை வைத்து பார்த்தபோது உடலில் உஷ்ணம் எதுவும் இல்லை. அன்றிரவு தூக்கம் சரியாக இல்லை. முனகிக் கொண்டும் அனத்திக் கொண்டும் இருந்தேன். மறுநாள் மே 31 காலை 5 மணி முதல் 7:30 மணிவரை தூங்கினேன்.

படிக்க:
♦ கொரோனா பாதித்தவர்களுக்கு என்ன சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன ?
♦ ஏப்ரல் மாதத்தில் மட்டும் 12 கோடி இந்திய மக்கள் வேலையிழப்பு !

மே 31 காலை 8.30 மணிக்கு, முன்னர் சென்ற அதே டாக்டரிடம் சென்றேன். தூக்கமில்லை என்றும் அவ்வப்போது ஜுரம் வருவதுபோல் ஒரு உணர்வு இருப்பதையும் சுவையோ வாசனை உணர்வோ இல்லை என்பதையும் இரவில் தூக்கமில்லாமல் தவிப்பதையும் சுட்டிக் காட்டினேன். 98.3 temperature இருந்தது. மூச்சு விடுவதில் சிக்கல் எதுவும் இல்லை தெளிவாக இருப்பதாக டாக்டர் சொன்னார். மீண்டும் ‘கோவிட் 19’ இருக்கிறதா என்று கேட்டேன். அதிகமான ஜுரம் மற்றும் ‘ரன்னிங் நோஸ்’ இருந்தால் மட்டும் உடனே டெஸ்ட் எடுத்து விடுங்கள் என்று கூறினார். ஊசி போட்டுக் கொண்டேன். சில மாத்திரைகளை மாற்றி எழுதினார். தூக்கம் வர மாத்திரை கேட்டேன். வேணாம் என்று கூறி, ‘நிறைய தண்ணீர் குடிங்க. நல்லா சாப்புடுங்க’ என்று மட்டும் கூறி அனுப்பி வைத்தார். அன்றிரவு தூக்கம் சரியாக இல்லை. இரவில் புலம்பியதாக நண்பன் கூறினான். பயம் அதிகமாக இருந்தது.

ஜூன் 1 மாத்திரைகளை சரியாக எடுத்துக் கொண்டேன். முந்தைய தினம் போன்றே காலை 5 மணிமுதல் 8:30 மணிவரை தூங்கினேன். அதற்குமேல் உடல் சோர்வாக இருந்தது. பகல் முழுதும் சுறுசுறுப்பாக இருந்தேன். இரவில் மீண்டும் தூக்கம் வரவில்லை. ஜுரம் இல்லை. சளி இல்லை. தலைவலி இல்லை. சுவை மற்றும் வாசனை உணர்வு இல்லை. இருமல், தும்மல் இல்லை. விடிந்ததும் ஊருக்கு கிளம்பிவிடுவது என்று முடிவெடுத்துக் கொண்டேன். எனக்கு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சொந்த ஊர்.

ஜூன் 2. காலையில் டிராவல்ஸ்-ல் பேசி வாடகை கார் ஒன்று பேசிவிட்டு அதன் தகவல்களை வைத்து இ-பாஸ் அப்ளை செய்தேன். 30 நிமிடத்தில் கிடைத்தது. மதியம் 2.30 மணிக்கு தேவையாக உடை, லேப்டாப், ஏற்கனவே வாங்கிய மாத்திரைகளை மட்டும் எடுத்துக் கொண்டு கிளம்பினேன். கும்பகோணம் தாண்டி திருப்பனந்தாள் என்னும் ஊரில் கார்-ஐ நிறுத்தி இரண்டு இட்லி சாப்பிட்டு மாத்திரை போட்டுக் கொண்டேன். வலங்கைமான் செக்-போஸ்ட்-இல் போலீஸ் நிறுத்தினார்கள். இ-பாஸ்க்காக நான் கொடுத்த என்னுடைய அத்தனை தகவல்களையும் மீண்டுமொருமுறை சரிபார்த்தார்கள். என்னுடைய அம்மா நீடாமங்கலத்தில் துணை வட்டாட்சியராக இருந்ததாலும், அப்பா நீடாமங்கலத்தில் இந்தியன் வங்கியில் துணை மேலாளராக இருந்ததாலும் அங்கே இருக்கும் போலீஸ்காரர்களுக்கு எங்கள் குடும்பத்தை ஏற்கனவே பரிட்சயமாக தெரிந்திருந்தது. சென்னையிலிருந்து வந்திருந்த காரணத்தினால் மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று temperature செக் செய்துவிட்டு வீட்டுக்கு செல்லும்படியும் செய்யவில்லையென்றால் மறுநாள் காலை மருத்துவ குழு வீட்டுக்கே வந்து அழைத்துச் செல்லும் என்றும் அறிவுறுத்தினார்கள். அதனால் என் அப்பாவுக்கு போன் செய்து மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு வரும்படி கூறினேன்.

மன்னார்குடி வந்து சேர்ந்தபோது மணி இரவு 10.30. அங்கே எனக்கு temperature 98.4. என்னுடைய தகவல்கள் மீண்டும் ஒருமுறை சரி பார்க்கப்பட்டது. நான் வந்த காரை அனுப்பிவிட்டு நானும் அப்பாவும் மட்டும் அங்கே கோவிட்-19 டூட்டி-யில் இருந்த SI-யுடன் பேசிக்கொண்டிருந்தோம். அவரும் அப்பாவுக்கு நன்றாக தெரிந்தவர். மன்னார்குடி அரசு மருத்துவமனையில் Pregnancy Ward இருப்பதனால் கோவிட்-19 சோதனை கிட் அவர்களுக்காக ரிசர்வ் செய்யப்பட்டிருக்கிறது என்றும் உடனடியாக நாங்கள் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்திற்கு செல்ல வேண்டும் என்றும் கூறினார். மணி 11 ஆகிவிட்டதால், காலை செல்லலாம் என்று நாங்கள் வீட்டுக்கு வந்துவிட்டோம்.

மாதிரிப் படம்

ஜூன் 3. காலை 10 மணி. திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம். voluntary testing கொடுப்பதற்கு வந்திருப்பதாக பெயரை பதிவு செய்துகொண்டோம். டெஸ்ட் எடுத்து ரிசல்ட் வரும்வரை இரண்டு நாள் அங்கேயே தங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். அதற்கு தயாராகவே வந்திருந்ததால் அங்கேயே தங்கிவிட்டேன். மதியம் 3.15 மணியளவில் கோவிட்-19 டெஸ்ட் எடுத்தார்கள். அன்றிரவு தூக்கம் சரியாக வரவில்லை. சரியான நேரத்தில் சாப்பாடு தந்தார்கள். இத்தனை பெரியவர்களையும் குழந்தைகளையும் டெஸ்ட் செய்யும் இடம் இன்னும் கொஞ்சம் சுத்தமாக பராமரிப்பட்டிருக்கலாம்.

ஜூன் 4. மதியம் 4.30 மணி. ஒரு நம்பரில் இருந்து அழைப்பு வந்தது. கோவிட்-19 பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்திருப்பதாகவும் சிறிது நேரத்தில் 108 ஆம்புலன்சில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்திலிருந்து திருவாருர் மெடிக்கல் காலேஜ்-க்கு அழைத்து செல்வார்கள் என்றும் கூறினார்கள். அதற்கு முன் என் சென்னை முகவரி, ஆபிஸ் முகவரி, மன்னார்குடி வீட்டு முகவரி என்று எல்லாவற்றையும் கேட்டு பெற்றுக்கொண்டார்கள். அதே போல் நான் சந்தித்த நபர்கள், கூட தங்கியிருக்கும் நண்பர்கள் எல்லோருடைய தகவல்களும் வாங்கிக் கொண்டார்கள். 6:30 மணிக்கு திருவாரூர் மெடிக்கல் காலேஜில் தனி வார்டு-ல் சேர்த்தார்கள்.

எனக்கு ரிசல்ட் வரும்வரை இருந்த பதட்டம் ரிசல்ட் வந்ததும் இல்லை. சரி. பாசிட்டிவ் என்று வந்துவிட்டது. இனி சரியாவதை பற்றி யோசிப்போம் என்று மட்டும் நினைவில் நிறுத்திக் கொண்டேன்.

ஜூன் 4ம் தேதியிலிருந்து ஜூன் 13ம் தேதி வரை திருவாரூர் மெடிக்கல் காலேஜில் தங்கி சிகிச்சை பெற்றேன்.

ஜூன் 4. உடல் சோர்வைத் தவிர எனக்கு எந்த அறிகுறியும் இல்லை. பசி இல்லை. முக்கியமாக எனக்கு சத்து இல்லை. கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு மேலாக சரியாக சாப்பிடாததால் உடம்பு ரொம்ப சோர்வாக இருந்தது. இன்னொன்று மாத்திரை எடுத்துக் கொண்டதால் வாய் கசப்பாகவும் அதனால் சாப்பிட முடியாத நிலைமை இருந்தது. அன்றிரவு இசிஜி, XRAY, Blood Test, Pulse, Temperature, BP எடுத்தார்கள். எல்லாமே நார்மல்.

படிக்க:
♦ கொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே !
♦ O -க்ரூப் ரத்தம் இருப்பவர்களுக்கு கொரோனா வராது என்பது உண்மையா ! | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா 

ஜூன் 5. டாக்டர்களிடம் சென்று பசிக்காகவும் உடல் சோர்வுக்காகவும் மருந்து கேட்டேன். இந்த ப்ராசஸ்-ல் இது வரத்தான் செய்யும், பல்லை கடித்துக் கொண்டு நன்றாக சாப்பிட்டு விடுங்கள் சரியாகி விடும் என்று கூறினார்கள். அன்றிரவுதான் வாழ்க்கையின் கோரமான பூதத்தை சந்தித்தேன். இருமல் ஆரம்பமானது. இருமல் என்றால் பேய் தனமான இருமல். இருமினால் எல்லோருக்கும் தொண்டையை அட்ஜஸ்ட் செய்த திருப்தி இருக்கும் அல்லவா. இது அப்படியில்லை. நெஞ்சில் துப்பாக்கியால் துளைத்ததுபோல ஒரு வலி, எவ்வளவு இருமினாலும் போதுமானதாக இல்லை. அதுமட்டுமின்றி சளி இருக்கா இல்லையா வெளியே வருமா வராதா என்ற சந்தேகத்தில் இருமி இருமி இரண்டு கண்களும் பிதுங்கி வெளியே நின்றது. சாதாரண ஜுரத்துக்கே நமக்கு யாரவது ஒத்தாசையாக இருந்து பார்த்துக் கொண்டால் நன்றாக இருக்கும் என்றிருக்கும். இது ஒரு கையறு நிலை. யாரும் நெருங்ககூட முடியாது.

ஜூன் 6. எனக்கு வயது 31. இத்துணை வருடத்தில் இப்படி ஒரு கோரமான கொடூரமான ஒரு இருமலை நான் உணர்ந்ததே இல்லை. கிட்டத்தட்ட மரணம் நெருங்குகிறது என்று ஒவ்வொரு இருமலுக்கு இடையிலும் நான் தீர்க்கமாக நம்பினேன். இன்னும் கொஞ்சம் அதிகமாக இருமினால் என் உயிர் பிரிந்துவிடும் என்று பயம் வலுத்துக் கொண்டே இருந்தது. நெஞ்சு வலி வேறு. இரவு உறங்கச் சென்றால் தூக்கத்தில் உயிர் பிரிந்துவிடும் என்று பயமாக இருந்தது. இருமலுக்கு மாத்திரை தந்தார்கள். சீக்கிரமே தூக்கமும் வந்துவிட்டது. நீண்டநாட்களுக்கு பிறகு ஆழ்ந்த உறக்கம்.

ஜூன் 7. இந்த ஒரு நாளில் மட்டும் நான் வாழ்வது அன்றுதான் கடைசி என்று என்னவோ சொல்லிக் கொண்டே இருந்தது. இருமலுடன் சேர்ந்து சளியும் வெளிவரத் துவங்கியது. சளியுடன் ரத்தம் அதிகமாக வந்தது. அதுதான் பயத்தை அதிகமாக்கி பீதியின் உச்சத்துக்கே கொண்டு சென்று விட்டது. பல நேரங்களில் இதுபோல் நடக்கும். வானிலை மாற்றம், பனிக்காலம் என பல சந்தர்ப்பங்களில் இப்படி ரத்தம் வரும். ஆனால் கொரோனாவை சிவப்பு கலரிலேயே நிறைய இடத்தில் காட்டி விட்டதால் பீதியாகிவிட்டது. இருமல், மரணபயம், பசியின்மை, உடல் சோர்வு, மாத்திரை, தூக்கம்.

ஜூன் 8. இருமல் வெகுவாக குறைந்திருந்தது. கால்களை தரையில் ஊன்றினால் நிதானமாக நடக்க முடிந்தது. கொஞ்சம் வலிமையாக இருப்பதாக உணர்ந்தேன். ஏதாவது சாப்பிட வேண்டும் போல் இருந்தது. முட்டையும் மதிய உணவும் சாப்பிட்டு நன்றாக தூங்கினேன். எழுந்து இரவு உணவு சாப்பிட்டு மீண்டும் தூங்கினேன்.

ஜூன் 9. ஜுரம் இல்லை. இருமல் இல்லை. சளி இல்லை. சுவாசப் பிரச்சனை இல்லை. பசித்தது. உடல் ஆரோக்கியமாக மாறுவதாக உணர்ந்தேன். நன்றாக சாப்பிட்டேன். மாத்திரை எடுத்துக் கொண்டேன். நன்றாக தூங்கினேன்.

ஜூன் 10 முதல் ஜூன் 12ம் தேதி வரை எல்லாமே மாறிவிட்டது. நன்றாக சாப்பிட்டேன். முழுக்க எனெர்ஜியுடன் இருந்தேன். எல்லோருக்கும் போன் போட்டு நன்றாக இருப்பதாக சொன்னேன். தூக்கம் வரும்போது தூங்கினேன். ஜூன் 12ம் தேதி காலை 7 மணிக்கு எனக்கு இரண்டாவது டெஸ்ட் எடுக்கப்பட்டது. ஜூன் 13ம் தேதி காலை நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்தது. அன்று மதியம் 12 மணிக்கு திருவாரூரிலிருந்து கிளம்பி 1:00 மணிக்கு மன்னார்குடிக்கு 108 ஆம்புலன்ஸ்-ல் டிராப் செய்தார்கள். நிம்மதியாய் ஒரு குளியலை போட்டுவிட்டு மதிய உணவு சாப்பிட்டு தூங்கினேன். வாழ்க்கை வழக்கம் போல் மீண்டும் அழகானது.

உணவு.
காலை 6 மணிக்கு மஞ்சள் கலந்த பால்
காலை 8.30 மணிக்கு நெல்லித்தண்ணி, கபசுர குடிநீர், பொங்கல் (அ) இட்லி, சாம்பார்.
காலை 11 மணிக்கு வாழைப்பழம், அவித்த முட்டை (அ) சாத்துக்குடி ஜூஸ்.
மதியம் 12.30 மணிக்கு காய்கறி சூப்
மதியம் 1.30 மணிக்கு சாம்பார், சாதம், ரசம்,கூட்டு, நீர் மோர்
மாலை 4 மணிக்கு மஞ்சள் பால், சுண்டல், பிஸ்கட்
இரவு 9 மணிக்கு ஏதாவது உப்மா மற்றும் சாம்பார் அல்லது முட்டை குழம்பு.

சிகிச்சை.
ஜூன் 4 முதல் 13 வரை சிகிச்சையில் இருந்தேன். காலை ஒரு 12 மாத்திரைகளும், மதியத்திற்கு 4 அ 5 மாத்திரைகளும், இரவு 4 அ 5 மாத்திரைகளும் தந்தார்கள். சத்துக்கு, பாரா செட்டமால், சளி, இருமல், ஜிங்க் என்று தனி தனி மாத்திரைகள். அதில்லாமல் ஊசி எதுவும் போடவில்லை. தினமும் மருத்துவர்கள் PPE கிட் அணிந்து உள்ளே வந்து நலம் விசாரிப்பார்கள். சந்தேகத்தை பூர்த்தி செய்வார்கள். நம்பிக்கை சொல்வார்கள். எந்த இடத்திலும் யாருமே பயமுறுத்தவே இல்லை.

நான் சிகிச்சைக்காக சேரும்போது 11 பேர் இருந்தோம் நான் வெளிவந்த நாளில் 57 பேர் இருந்தார்கள். இதில் யாருமே உயிருக்காக போராடவெல்லாம் இல்லை. இதற்கு முழு பொறுப்பு மருத்துவர்களுடையது. 10, 10 நாளாக யாரோ குணமாகி போய்க் கொண்டே தான் இருக்கிறார்கள். ஆனால் இங்கே இருக்கும் மருத்துவர்களுக்கு எங்கள் முகமெல்லாம் ஞாபகம் இருக்குமா தெரியாது. வாய்ப்புகள் இருந்திருந்தால் நிச்சயம் அவர்கள் கைகளில் ஒரு முத்தமிட்டு வந்திருக்க ஆசைப்பட்டேன். அவ்வளவு பேரும் ஏதோ போருக்கான வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதில் சீக்கிரம் வென்று விடுவார்கள் என்று நம்புவோம்.

இந்த வைரஸ் கிருமி நம்மில் யாருமே எதிர்பார்க்காதது. இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. ஆனால் இந்த மருத்துவர்களுக்குதான் எவ்வளவு நம்பிக்கை. எல்லாத்தையும் ஒரு கை பார்க்கிறேன் பார் என்று ஒவ்வொரு வருடமும் நல்ல மாணவர்களை தேர்ச்சி செய்து அனுப்பி வைத்துவிட்டு அடுத்த பேட்ச் மாணவர்களுக்கு தயாராகும் ஆசிரியர்கள் போல பலரையும் குணப்படுத்தி அனுப்பிவிட்டு நம்பிக்கையோடு அடுத்தடுத்த நோயாளிகளை வைத்தியம் பார்க்க பறந்துகொண்டிருக்கிறார்கள்.

தேவதைகள் என்றால் அப்படித்தானே.

சிகிச்சை கட்டணம்
Rs.0/- (ஜூன் 3 – ஜூன் 13, 2020)

நன்றி என் குடும்பம், நண்பர்கள் மற்றும் என்னுடைய பிசினஸ் க்ளையன்ட்ஸ். இவர்கள் தந்த நம்பிக்கையும் செய்த பிரார்த்தனைகளும்தான் எனக்கு மீண்டும் மீண்டும் என் மீதும் இந்த வாழ்க்கையின் மீதும் அதீத நம்பிக்கையை தந்துகொண்டே இருந்தது. அவர்கள் அனைவருக்கும் என் நன்றிகளும் முத்தங்களும்.

– Mano Bharathi
14.06.2020

நன்றி : ஃபேஸ்புக்கில் மரு பிரபு மனோகரன் 

டெக்ஸாமெத்தாசோன் : கொரோனா சிகிச்சையில் ஒரு முன்னேற்றம் !

Finally டெக்ஸாமெத்தாசோன் என்ற ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள மருந்து ஒன்று கொரோனா வைரஸ் தொற்றி, தீவிர பாதிப்புக்கு உள்ளான நோயாளிகளின் உயிர் காக்கப் பயன்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளது.

மிக குறைந்த அளவு தரக்கூடிய ஸ்டீராய்ட் மருந்தான டெக்ஸாமெத்தாசோன், கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் என்று பிரிட்டன் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

வென்டிலேட்டரில் உள்ள நோயாளிகளுக்குக் கொடுத்தால் மூன்றில் ஒரு பங்கு மரணங்களைக் குறைத்திருக்கலாம் எனக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

படம் : நன்றி – பி.பி.சி

பிரிட்டனில் கொரோனா வைரஸ் தொற்று தொடங்கிய காலத்தில் இருந்தே இந்த மருந்தைப் பயன்படுத்தியிருந்தால் 5 ஆயிரம் உயிர்களைப் பாதுகாத்திருக்க முடியும் என்கிறது இந்த ஆய்வுக் குழு.

ஏராளமான கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள ஏழை நாடுகளுக்கு இந்த மருந்து பெரிய அளவில் உதவியாக இருக்கும்.

இதில் மிக குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இது ஏதோ புதிய, விலை உயர்ந்த மருந்து அல்ல என்பதுதான். ஏற்கனவே சந்தையில் உள்ள, மிக மிக விலை மலிவான மருந்து இது.

அதாவது 20 மாத்திரைகளின் விலை வெறும் ரூ. 3.74 தான். இந்த மருந்து 1960களில் இருந்து பயன்பாட்டில் உள்ளது. ஆர்த்திரிட்டிசிற்கும் ஆஸ்துமாவிற்கும் அளிக்கப்பட்டுவந்த ஸ்டீராய்ட் மருந்து இது.

படிக்க:
♦ சென்னை மக்கள் உதவிக் குழு : 50 நாட்களைக் கடந்து தொடரும் நிவாரணப் பணிகள் !
♦ கொரோனா : சென்னை மக்களை காக்க வலியுறுத்தி மக்கள் அதிகாரம் கோரிக்கை மனு !

மனித உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடும்போது, அந்தப் போராட்டம் அளவு கடந்து செல்லுமானால், அதுவே உடலுக்கு சேதம் ஏற்படுத்துவதாக மாறிவிடும். இந்த சேதாரத்தைத் தடுப்பதற்கு இந்த மருந்து உதவி செய்வதாகத் தெரிகிறது.

நோய்க்கு எதிராக உடல் ஆற்றும் மிதமிஞ்சிய எதிர்வினைக்குப் பெயர் ‘சைட்டோகைன் புயல்’ (cytokine storm). இந்த மிதமிஞ்சிய எதிர்வினை மரணத்தையும் ஏற்படுத்தக்கூடியது. இந்த சேதாரத்தைத் தடுப்பதற்கு இந்த மருந்து உதவி செய்வதாகத் தெரிகிறது.

தற்போது உலகில் கொரோனாவுக்கு ரெம்டிசீவர் மருந்து மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. இதன் விலை இன்னும் தெளிவாகவில்லை. இந்த மருந்து கொரோனா அறிகுறிகளை 15 நாட்களில் இருந்து 11 நாட்களாகக் குறைக்கிறது என்பது மட்டுமே தெரியவந்துள்ளது. மரணத்தைக் குறைக்கிறதா என்பதைப் பற்றி முழுமையாகத் தெரியவில்லை.

ஆனால், கொரோனாவைப் பொறுத்தவரை எதையும் முழுமையாகச் சொல்ல முடியாது என்பதையும் மனதில் கொண்டு இந்தச் செய்தியைப் படிக்கவும்.

இது தொடர்பான பிபிசி செய்திக்கான லிங்க் கீழே.

  • டெக்ஸாமெத்தாசோன்: கொரோனா வைரஸ் நோயாளிகள் உயிர் காக்கும் முக்கிய கண்டுபிடிப்பு

நன்றி : ஃபேஸ்புக்கில் முரளிதரன் காசி விஸ்வநாதன் 

கொரோனா பணியில் மரித்த செவிலியர் தங்கத்திற்கு அஞ்சலி !

னசோர்வோடு நீங்கள் 29 வார்டுக்கு சென்றால் இந்த தங்கமான செவிலியரை காணலாம், ஆனால் இப்போது காணமுடியாது…

ஒதுக்கப்பட்ட மக்கள் வாழ்ற மாதிரிதான் septic ward29 இருக்கும், சீழ்பிடித்த கரங்கள், கால், கைகள் வெட்டப்பட்டு, அழுகிய நிலையில், அந்த துர்நாற்றத்தில் யாராலும் இருக்கவே இயலாது, ஆனால் தான் வாழ்ந்த வரையிலும், தன்னுடைய சேவை அனைத்தும் அந்த விளிம்புநிலை மக்களுக்காகவே இருந்தார்.

வார்டின் ஒரு பக்கத்தில் பெயர், ஊர் தெரியாத unknown நோயாளிகளை அக்கறையுடன் உணவளித்து பார்த்து கொள்வார்.

டாக்டர் நீங்க சாப்படிங்களா, டீ குடிக்கிறீங்களனு ஒவ்வொரு முறையும் ward ல் செல்லும் போது கூறுவார், இப்பொழுது எந்த மாணவருக்கு, போராசிரியருக்கு யார் கூறுவார் இப்படி💔,….

மூத்த செவிலியர் என்ற எந்தவிதமான அகங்காரம் இல்லாமல் சிரித்தப்புன்னகையோடே இருப்பார், அவரின் வேலையில் அசாத்திய பொறுப்புணர்வு வெளிப்படும்..

படிக்க:
♦ தோழர்கள் வரவர ராவ், சாய்பாபாவை விடுதலை செய் ! உலகளாவிய அறிஞர்கள் கூட்டறிக்கை !
♦ விமான நிலையம் தனியார்மயம் : இலாபம் வந்தால் அதானிக்கு ! நட்டம் வந்தால் அரசுக்கு !

She was very helpful & nice human being taking care of patient. she is one of the dedicated staff nurse.

சில தேவதைகள் தங்கமாக நடந்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணியபோதெல்லாம் தங்கம் staff மட்டுமே கண்ணில் தோன்றுவார்கள்..

இன்றைக்கு தங்கம் தங்கமே
மீளாதுயரில் நானும்,
சென்றுவாருங்கள் தங்கமே😥
என்றும் உங்கள் நினைவில் நாங்கள்.
#ripstaffthangam💔

IOT,MMC RGGGH
(முன்னால் முதுநிலை மருத்துவமாணவர்கள்)

மரு பிரபு மனோகரன்
14/06/2020

நன்றி : ஃபேஸ்புக்கில் மரு பிரபு மனோகரன் 

தோழர்கள் வரவர ராவ், சாய்பாபாவை விடுதலை செய் ! உலகளாவிய அறிஞர்கள் கூட்டறிக்கை !

0

பேராசிரியர் ஜி.என். சாய்பாபா, மற்றும் செயற்பாட்டாளர் வரவர ராவ் ஆகியோரை சிறையிலிருந்து விடுவிக்குமாறு உலகம் முழுவதும் இருந்து கிட்டத்தட்ட 100 புகழ்பெற்ற அறிவுஜீவிகள் இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டேவுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவர்கள் இருவரும் “ஜோடிக்கப்பட்ட வழக்குகளில்” கைது செய்யப்பட்டிருப்பதாகவும், பெரும் கூட்டம் நிரம்பி வழியும் மராட்டிய சிறைகளில் அவர்கள் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
நோம் சோம்ஸ்கி, ஜுடித் பட்லர், பார்தா சாட்டர்ஜி, ஹோமி. கே.பாபா, ப்ரூனோ லட்டூர், ஜெரால் ஹார்னெ, ங்கூகிவா தியாங்கோ ஆகியோரும் கையெழுத்திட்டோரில் அடங்குவர். மேலும் பேராசிரியர் சாய்பாபா, போலியோ பாதிப்புகளின் காரணமாக 90% உடல் செயலிழந்த நிலையில் போதுமான மருத்துவப் பராமரிப்பு கிடைக்கப் பெறாமல் இருப்பதாகக் கூறியுள்ளனர்.

கவிஞர் வரவர ராவ் மற்றும் பேராசிரியர் சாய்பாபா(வலது).

அந்த அறிக்கையில், “அவர் (தீவிரமான கணைய ஒவ்வாமை, இருதய நோய்கள், அதிக ரத்த அழுத்தம், பித்தப்பை கற்கள், மயக்கமடைதல் உள்ளிட்ட) பல்வேறு உயிருக்கு ஆபத்தான நோய்களால் துன்புற்று வருகிறார். மேலும் சிறையிலடைக்கப்பட்டதிலிருந்து அவரது இரண்டு கைகளின் பெரும்பாலான இயக்கத்தை இழந்திருக்கிறார். கோவிட்-19 பெருந்தொற்று சமயத்தில், சிறை அதிகாரிகளின் தொடர்ச்சியான கவனமின்மை என்பது அவருக்கு ஒரு மரண தண்டனை வழங்கப்பட்டதற்குச் சமானமாகும். பேராசிரியர் ஜி.என். சாய்பாபாவை மருத்துவப் பிணையில் உடனடியாக விடுவிகுமாறு இந்திய அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிறோம். அதன் மூலமாக அவரால் முறையான மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ளவும் கொரோனா பரவலிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் முடியும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கை “பீமா கொரேகான் வழக்கு தொடர்பாக மோடி அரசால் அறிவுஜீவிகள் மீது தொடுக்கப்படும் தேசந்தழுவிய அடக்குமுறையின் ஒரு பகுதியாகவே” குடிமையியல் உரிமைச் செயல்பாட்டாளரும், புகழ்பெற்ற அறிவுஜீவியுமான 80 வயது கவிஞர் வரவர ராவ்-வும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடுகிறது.

கடந்த மே28 அன்று வரவர ராவ் சிறையில் மயக்கமடைந்ததையும் அதைத் தொடர்ந்து அவர் மும்பை ஜே.ஜே மருத்துவனையில் சேர்க்கப்பட்டதையும் சுட்டிக் காட்டியுள்ள அறிக்கை, ”அவரது நிலையை சமன் செய்யும் முதல்கட்ட சிகிச்சைகளுக்குப்” பிறகு கடந்த ஜூன் 1 அன்று மீண்டும் சிறைக்கு அனுப்பி அரசாங்கம் “பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டதாகவும்” குறிப்பிட்டிருக்கிறது. “அவரது குடும்ப உறுப்பினர்களைக் கூட அவரை சந்திக்கவோ, தொலைபேசியில் பேசவோ அனுமதிக்கவில்லை. இத்தகைய மோசமான சூழலில், வரவர ராவின் மனைவி தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றத்தில் அவரை பிணையில் வெளியே விடக் கோரி ஒரு மனுவை தாக்கல் செய்தார். ஆனால் நீதிமன்றம் அவரை விடுவிக்க மறுத்துவிட்டது. எனினும், இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 21, சிறைவாசிகள் உட்பட அனைத்து குடிமக்களுக்கும் உயிர்வாழும் உரிமையை வழங்கியிருக்கிறது.” என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

படிக்க:
♦ கொரோனா தொற்று அபாயம் : தோழர் வரவர ராவை விடுதலை செய் !
♦ பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டேவுக்கு பிணை மறுக்கப்பட்டது ஏன் ?

“ஜி.என். சாய்பாபா மற்றும் வரவர ராவ் ஆகியோரின் உடல் நிலை மற்றும் சிறைச்சாலைகளில் கோவிட்-19 பரவல் ஆகியவற்றை வைத்துப் பார்க்கையில், அவர்களது உயிருக்கு பெரும் ஆபத்து இருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம். அவர்களை உடனடியாக பிணையில் வெளிவிட்டு, அவர்களின் உயிர் வாழும் உரிமையை அவர்க்ளுக்கு வழங்குமாறு உங்களை கேட்டுக் கொள்கிறோம். “ என்று அந்த அறிக்கை கோருகிறது.

முழு அறிக்கையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

***

ஜோடிக்கப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் சிறை வைக்கப்பட்டிருக்கும் அறிவுஜீவிகளும் சமூக நீதி செயற்பாட்டாளர்களுமான பேராசிரியர் ஜி.என். சாய்பாபா மற்றும் வரவர ராவ் ஆகியோரை விடுவிக்குமாறு கீழே கையெழுத்திட்டுள்ள நாங்கள் கோரிக்கை வைக்கிறோம்.

பெருங்கூட்டம் நிரம்பி வழியும் மராட்டிய சிறைகளில் கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ள சூழலில் அவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

முறையான மருத்துவ பராமரிப்போ, தனது சக்கர நாற்காலி கூட கிடைக்கப் பெறாமல் இந்தியப் பேராசிரியர் ஜி.என். சாய்பாபா இந்தியாவில் உள்ள சிறையில் தற்போது நலிவுற்றிருக்கிறார். பேராசிரியர் சாய்பாபா, போலியோ பாதிப்புகளின் காரணமாக 90% உடல் செயலிழந்த நிலையில் சிறையில் அவர் நகர்வதற்கு – குளிக்கச் செல்வது போன்ற அடிப்படையான உடல்ரீதியான இயக்கங்களின் – உதவி செய்யக்கூட ஏற்பாடு செய்ய சிறை அதிகாரிகள் தொடர்ச்சியாக மறுத்து வந்துள்ளனர்.

அவர் (தீவிரமான கணைய ஒவ்வாமை, இருதய நோய்கள், அதிக ரத்த அழுத்தம், பித்தப்பை கற்கள், மயக்கமடைதல் உள்ளிட்ட) பல்வேறு உயிருக்கு ஆபத்தான நோய்களால் துன்புற்று வருகிறார். மேலும் சிறையிலடைக்கப்பட்டதிலிருந்து அவரது இரண்டு கைகளின் பெரும்பாலான இயக்கத்தை இழந்திருக்கிறார். கோவிட்-19 பெருந்தொற்று சமயத்தில், சிறை அதிகாரிகளின் தொடர்ச்சியான கவனமின்மை, அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டதற்குச் சமானமாகும். பேராசிரியர் ஜி.என். சாய்பாபாவை மருத்துவப் பிணையில் உடனடியாக விடுவிக்குமாறு இந்திய அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிறோம். அதன் மூலமாக அவரால் முறையான மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ளவும் கொரோனா பரவலிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் முடியும்.

பேராசிரியர் சாய்பாபா மே 9, 2014 அன்று டில்லி பல்கலைக்கழக வளாகத்திலிருந்து வெளியேறியதும் கடத்திச் செல்லப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்தியாவில் தடைசெய்யப்பட்ட அரசியல் கட்சியான இந்திய பொதுவுடைமைக் கட்சி (மாவோயிஸ்ட்)-னுடனான இவரது தொடர்புகளை நிரூபிக்கும் ஆவணங்களையும், கடிதப் போக்குவரத்தையும் கண்டெடுத்ததாக போலீசு குற்றம் சாட்டியது. ஆனால் சாய்பாபாவுக்கு எதிரான நீதிமன்ற வழக்கு விசாரணையில், அவர்களால் இந்தக் குற்றச்சாட்டுக்கோ அல்லது அவர் “அரசின் மீது போர் தொடுத்த” குற்றச்சாட்டுக்கோ தெளிவான ஆதாரங்களை முன்வைக்க முடியவில்லை.

“ஜி.என். சாய்பாபாவுக்கு எதிராக வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் ஜோடிக்கப்பட்டவை மற்றும் அவரது வழக்கு விசாரணை, சர்வதேச வழக்கு விசாரணை தரத்தில் நடத்தப்படவில்லை.” என தாம் நம்புவதாக அம்னெஸ்டி இண்டர்நேசனல் என்னும் அமைப்பு சாய்பாபாவுக்கு தண்டனை வழங்கப்பட்டதன் மீதான தனது கருத்தைக் கூறியுள்ளது.

படிக்க:
♦ கர்ப்பிணி சஃபூரா ஸர்கரை விடுவிப்பதற்கான போராட்டம், இந்தியாவின் ஆன்மாவுக்கான ஒரு போர் !
♦ கொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே !

நம்பகத்தன்மை அல்லது விசாரணை, தண்டனை ஆகியவற்றைத் தாண்டி, முறையான மருத்துவ பராமரிப்பும் மருத்துவப் பிணையும் பெற பேராசிரியர் சாய்பாபா-வுக்கு உரிமை இருக்கிறது. தற்போது இந்திய சிறை அமைப்புகளில் கொரோனா வைரஸ் காட்டுத் தீ போல பரவி வருகையில், ஆயுள் தண்டனை என்பது சர்வசாதாரணமாக மரண தண்டனையாக மாறிவிடும்.

அவரது கால்களின் பயன்பாட்டைத் முடக்கியுள்ள போலியோ பாதிப்புகளால் துன்புற்றுவரும் நிலையில், பேராசிரியர் சாய்பாபா சக்கர நாற்காலியில் பிணைக்கப்பட்டுள்ளார். தனது இயலாமையையும் கடந்து, அவர் ஓய்வற்ற சமூக நீதி செயல்பாட்டாளராகவும், உறுதியான மனித உரிமைகள் பாதுகாவலராகவும் இருந்துவந்தார். ‘ஆபத்திலிருக்கும் அறிவுத்துறையினர்’ என்ற அமைப்பின் சமீபத்திய அறிக்கை, பேராசிரியர் சாய்பாபா, “தனிச்சிறப்பான சமூகங்களின் இடப்பெயர்வு மற்றும் சுற்றுச் சூழல் பேரழிவுகளை ஏற்படுத்தி கனிம வளங்களைக் கொள்ளையிடும் தேசிய மற்றும் பன்னாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான போராட்டங்கள் நடத்தும் மற்றும் விசாரணை மேற்கொள்ளும் இயக்கங்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுடன் இணைந்து செயல்பட்டுள்ளார்” என்று குறிப்பிடுகிறது.

அவரது செயல்பாடுகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் மனித உரிமைக்கான அவரது ஆதரவு ஆகியவற்றின் காரணமாகவே பேராசிரியர் சாய்பாபா கைது செய்யப்பட்டதாக சர்வதேச அளவில் புகழ்பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராய் உள்ளிட்டு, பலரும் கூறியிருக்கின்றனர்.

கூடுதலாக, அவரது தாய் மொழியான தெலுங்கில் கடிதங்கள் பெறவோ, அனுப்பவோ சிறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. ஆங்கிலத்தில் பேசத் தெரியாத அவரது தாய் அவரைப் பார்க்க வருகையில், அவரையும் ஆங்கிலத்திலேயே பேச வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். தனக்கு விருப்பமானவர்களோடு தொடர்புகொள்வது மறுக்கப்பட்டதோடு, மருத்துவ பராமரிப்பும் மறுக்கப்பட்டதொரு அரசியல் சிறைவாசியான தனது மகன் சிறையில் துன்புறுகையில், தற்போது அந்தத் தாய் தனது மரணப் படுக்கையில் இறுதிநிலை புற்றுநோயுடன் போராடிவருகிறார்.

இந்த பெருந்தொற்று காலத்தில் சாய்பாபாவின் பிணைக்கான கோரிக்கை மனுவை நிராகரித்துள்ளது நீதிமன்றம். விடுவிக்கப்பட்டால் சாய்பாபா யாரோடு தங்குவாரோ அந்த சகோதரர், கோவிட்-19 பாதிப்புக்காகத் தனிமைப்படுத்தப்பட்ட மண்டலத்தில் வசிப்பதாக அவர்கள் கூறுகின்றனர். ஆனால் அது பொய். சிறையில் கோவிட்-19 நோய்த் தொற்றுவதற்கான பேராபத்தில் பேராசிரியர் சாய்பாபா இருப்பதாகவே தெரிகிறது.

தற்போது பேராசிரியர் சாய்பாபா சிறையில் அவ்வப்போது நினைவு தப்புவதும் நினைவு திரும்புவதும் என்ற நிலையில் இருக்கிறார். உதவிக்கு ஆள் இல்லாமல் கழிவறைக்குக் கூட செல்ல முடியாதநிலையில் இருக்கிறார். அவருக்கு உதவி வழங்க தொடர்ந்து மறுக்கப்படுகிறது. சாய்பாபாவை மோசமாக நடத்தும் இந்திய அரசாங்கம் மற்றும் நீதித்துறையின் கொடூரத்தால் மிகவும் கலக்கமடைந்துள்ளோம். அவரது சிறைக்காவலர்கள் தொடர்ச்சியாக அவருக்கு முறையான மருத்துவ பராமரிப்பு வழங்குவதற்கு தங்களது இயலாமையையோ, அல்லது ஆர்வமின்மையையோ வெளிப்படுத்தியுள்ளனர். அதன் காரணமாகவும், கொரோனா வைரஸ் தற்போது இந்திய சிறைகளில் பரவிவருவதன் காரணமாகவும், பேராசிரியர் சாய்பாபாவை சிறையிலிருந்து உடனடியாக விடுவிக்குமாறு கீழே கையெழுத்திட்டிருக்கும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

80 வயதான கவிஞர் வரவர ராவ், புகழ்பெற்ற அறிவுஜீவியும் குடிமையியல் உரிமைச் செயல்பாட்டாளருமாவார். கடந்த 60 ஆண்டுகளாக, ஒடுக்கப்பட்டவர்களுக்காக உறுதியான கடப்பாட்டோடு செயல்பட்டுவருகிறார். பல பத்தாண்டுகளாகவே இந்திய அரசு பல போலி வழக்குகளில் இவரை இணைத்ததன் மூலம், இவரது குரலை ஒடுக்க நினைக்கிறது. கடந்த 45 ஆண்டுகளில், 25 பொய் வழக்குகள் அவர் மீது போடப்பட்டுள்ளன.

விசாரணைக் காவல் காலத்திலேயே சுமார் 8 ஆண்டுகள் சிறையில் செலவிட்டுள்ளார். ஆனால் முந்தைய அனைத்து வழக்குகளிலும் விடுவிக்கப்பட்டுள்ளார். பீமா கொரேகான் வழக்கு தொடர்பாக மோடி அரசால் அறிவுஜீவிகள் மீது தொடுக்கப்பட்ட தேசந்தழுவிய அடக்குமுறையின் ஒரு பகுதியாகவே கடந்த நவம்பர் 2018-ல் வரவர ராவ் மீண்டும் கைது செய்யப்பட்டார். தற்போது மராட்டிய மாநிலம், நாவி மும்பையின் தலோஜா சிறையில் விசாரணைக்காக அடைக்கப்பட்டுள்ளார். பல சர்வதேச அறிஞர்களும் PEN போன்ற சர்வதேச அமைப்புகளும் அவரது விடுதலைக்காக குரல் கொடுத்து வருகின்றன.

18 மாத நீதிமன்ற காவலுக்குப் பிறகும், அவருக்கு எதிராக எவ்வித குற்றச்சாட்டும் பதியப்படவில்லை. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலின் மையப் புள்ளியாக மராட்டிய மாநிலம் இருக்கிறது என்பதையும் கணக்கில் எடுப்பது முக்கியமானது. மும்பை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பொது நல வழக்கு ஒன்றில் மும்பை தலோஜா சிறையில் சிறைவாசி ஒருவர் கோவிட்-19 நோய்க்கு பலியாகியிருப்பதை ஏற்றுக் கொண்டுள்ளது அரசாங்கம். கோவிட்-19 பெருந்தொற்றைக் கருத்தில்கொண்டு பார்க்கையில், பல்வேறு மருத்துவ சிக்கல்களில் துன்புற்றுவரும் வரவர ராவ், மிகவும் பலவீனமான மருத்துவ நிலையில் இருக்கிறார்.

சமீபத்தில், மே28, 2020 அன்று வரவர ராவ் சிறையில் மயக்கமடைந்தார். அவர் நிலை மோசமானதும் மும்பை ஜே.ஜே மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். அரசாங்கம் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டது. அவரது நிலையை சமன் செய்யும் முதல்கட்ட சிகிச்சைகளுக்குப் பிறகு கடந்த ஜூன் 1 அன்று மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டார். அவரது குடும்ப உறுப்பினர்களைக் கூட அவரை சந்திக்கவோ, தொலைபேசியில் பேசவோ அரசாங்கம் அனுமதிக்கவில்லை. இத்தகைய மோசமான சூழலில், வரவர ராவின் மனைவி தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றத்தில் அவரை பிணையில் வெளியே விடக் கோரி ஒரு மனுவை தாக்கல் செய்தார். ஆனால் நீதிமன்றம் அவரை விடுவிக்க மறுத்துவிட்டது. எனினும், இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 21, சிறைவாசிகள் உட்பட அனைத்து குடிமக்களுக்கும் உயிர்வாழும் உரிமையை வழங்கியிருக்கிறது.”

ஜி,என். சாய்பாபா மற்றும் வரவர ராவின் நலிவுறும் ஆரோக்கிய நிலைமைகளையும், சிறைகளில் கோவிட்-19 பரவிவரும் நிலைமைகளையும் கருத்தில் கொண்டு, நாங்கள் அவர்க்ள் இருவரின் உயிருக்கும் பெரும் ஆபத்து இருப்பதாகவே நம்புகிறோம். அவர்களது உயிர்வாழும் உரிமையைக் காக்க அவர்களை உடனடியாக பிணையில் வெளியே விடுமாறு நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.


– நந்தன்
செய்தி ஆதாரம்: தி வயர். 

விஞ்ஞானத்தின் பிடியில் கடவுள் சிலைகள் ! | கலி. பூங்குன்றன்

விஞ்ஞானத்தின் பிடியில் கடவுள் சிலைகள் !

ந்திரம் என்பது 6 அங்கங்களைக் கொண்டதாம்! மந்திரத்தை கூறியவர் 1 – ரிஷி, 2 அந்த மந்திரத்திற்கான உச்சரிப்புகள் -சந்தஸ், 3. அந்த மந்திரத்திற்கான – தேவதை, 4. மந்திரம் அடங்கியுள்ள பகுதி – பிஜம், 5. மந்திரத்தின் ஆற்றல் – சக்தி, 6. இவை அனைத்தையும் ஒருங்கிணைப்பது – கீழகம் போன்றவையாம். ஆனால் இன்றைய நிலை என்ன?

அதாவது ‘இந்த உலகம் கடவுளுக்கு அடக்கம், கடவுள் மந்திரத்திற்கு அடக்கம், மந்திரம் பார்ப்பனர்களுக்குள் அடக்கம், ஆகவே பார்ப்பனர்கள்தான் கடவுளை விட உயர்ந்தவர்கள் என்று கூறும் பார்ப்பனர்கள், எந்த வித பெரும் பிணி, பீடை, பெருநாசம் போன்றவற்றையும் மந்திரத்தால் அடக்கிவிடுவோம் என்கிறார்கள். வைணவப் பார்ப்பனர் கூறுகிறார் – துளசி தீர்த்தம் போதும் பெரு நோய் ஓட என்று! சைவப் பார்ப்பனர் கூறுகிறார் வில்வமே பெருநோய்க்கு மருந்து என்று! இடைப்பட்ட மக்கள் வேப்பிலை, துளசி, வில்வம் என மூன்றையும் தண்ணீரில் போட்டு மஞ்சள் கலந்து தெளிக்கிறார்கள். கேட்டால் எந்த நோயும் அண்டாது என்கிறார்கள்.

ஆனால் இங்கே ஒரு வேடிக்கை, கோவில்களில் ஆல்கஹால் (சாராயம்) கலந்த கிருமி நாசினியைத் தெளிக்கிறார்கள். ஏன் தெரியுமா? பொதுவாகவே கோவில்களில் பூஜை செய்யும் கற்சிலைகள்மீது நெய், பால், தயிர் உள்ளிட்ட பல பொருட்களை ஊற்றிக் கொட்டி அதை பிசுபிசுப்பாகவே வைத்திருப்பார்கள். காற்றில் எந்த ஒரு கிருமிகள் வந்தாலும் மிகவும் எளிதாக இந்த பிசுபிசுப்புகளில் ஒட்டிக்கொள்ளும், ஆகவே, கரோனா தொற்று முடிவிற்கு வரும்வரை சிலைகளில் எந்த ஒரு பொருளாலும் அபிஷேகம் செய்யமாட்டார்களாம். முடிந்தவரை சிலைகளை நன்றாக பிசுபிசுப்பு நீக்கி சுத்தப்படுத்தி காய வைக்க வேண்டும். பிசிபிசுப்பு நீங்க ஆல்கஹால் கலந்த திரவம் மட்டுமே பயன்படுத்தவேண்டும். வெறும் தண்ணீரை ஊற்றிக் கழுவினால் பிசுபிசுப்பு போகாது. இவர்கள் கூறுவதுபோல் இலை, மஞ்சள், தண்ணீர் போன்றவைகளை ஊற்றி கழுவினால் கிருமிகள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
கும்பகோணம் மகாமகக் குளத்தில் அதிகம் பேர் நீராடி அந்த நீர் மிகவும் சீர்கெட்டுவிட்டதாகவும், அப்பகுதி சேறுகளில் ஊறுவிளைவிக்கும் நுண்ணுயிர்கள் அதிகம் உள்ளது என்றும் கூறி மாவட்ட நிர்வாகம் கிருமிநாசினி தெளிக்க முயன்றபோது, இதே பார்ப்பனர்கள் என்ன கூறினார்கள்?

கும்பகோண மகாமகக் குளத்து நீரின் புனிதத் தன்மையைக் கேலி செய்வதா? நோய்ப்பிணி நீக்கும் தெய்வீகக் குளத்து நீர் மாசடைந்து விட்டது என்றும், அதன் கரைப்பகுதியில் கிருமிநாசினி தெளிக்கவேண்டும் என்றும் கூறுவது கோடிக் கணக்கான இந்துக்களின் நம்பிக்கைக்கு எதிரானது. கோடிக் கணக்கில் அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் கூடும் மக்கள் இருந்த போதிலும் உத்தரப்பிரதேச அரசு கிருமிநாசினி தெளிப்பதில்லை காரணம் அவர்கள் மத உணர்வுகளைப் புண்படுத்தமாட்டார்கள்; மேலும் கும்பமேளாவில் கூடும் மக்களின் ஆன்மீகப் பலத்தால் அவர்களுக்கு எந்த நோயும் அண்டாது. ஆனால், தமிழகத்தில் ஆளும் அரசு இந்து விரோத செயல்களைச் செய்கிறது என்றெல்லாம் சமூக வலைதளங்களில் பொங்கித் தள்ளவில்லையா?

அதில் பலர், இந்து அறநிலையத்துறை அரசின் கைகளில் இருப்பதால்தான் இதுபோன்ற நம்பிக்கைச் சீர்குலைவு நடவடிக்கையில் இறங்குகிறார்கள். ஆகவே, அரசு கோவில் நிர்வாகத்தை நிர்வகிப்பதைக் கைவிட்டு பக்திமான்கள் மற்றும் கடவுள் நம்பிக்கை கொண்ட கோவில் நிர்வாகிகளின் கைகளிலேயே ஒப்படைக்க வேண்டும் என்று முழங்கினார்கள்.

படிக்க:
கர்ப்பிணி சஃபூரா ஸர்கரை விடுவிப்பதற்கான போராட்டம், இந்தியாவின் ஆன்மாவுக்கான ஒரு போர் !
♦ கொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே !

இன்று என்ன நடக்கிறது? சிலைகளுக்கு எண்ணெய்ப் பிசுபிசுப்பு நீங்க முதலில் கொதிநீரை ஊற்றிக் கழுவுகிறார்கள். பின்னர் அதை ஏர் டிரையர் என்னும் காயவைக்கும் கருவி கொண்டு காயவைக்கிறார்கள். அதன் பிறகு சாராயக் கலவை அதிகம் கொண்ட கிருமிநாசினி கொண்டு தூய்மைப் படுத்துகிறார்கள். கரோனா தொற்று முடியும் வரை சிலைக்கு சந்தனம், குங்குமம் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு அலங்காரம் செய்யமாட்டார்களாம். அதே போல் மாலைகள் மற்றும் இதர அலங்காரப் பொருட்களை சாத்த மாட்டார்களாம். முக்கியமாக பக்தர்கள் கொண்டுவரும் எந்த பொருளையும் சாமிக்கு படைக்க மாட்டார்களாம். பக்தர்களே தூரமாக நின்று சிலைக்கு முன்னால் அவற்றைக் காண்பித்துவிட்டு அப்படியே சென்றுவிடவேண்டுமாம். பார்ப்பன அர்ச்சகர் தட்டில் விழும் காசையும் நோட்டையும் கையில் கிளவுஸ் போட்டு சில்லறைகளைத் தனியாக பிரித்து கொதிநீரில் போடுவார்களாம். ரூபாய் நோட்டுகளை அயன்பாக்ஸில் வைத்து தேய்த்துக் கொள்வார்களாம்.

அர்ச்சகர்கள் பெரும்பாலும் முகக்கவசத்தோடுதான் அர்ச்சனைத் தட்டை நீட்டுவார்கள். இன்னும் எத்தனைப் பாதுகாப்பு? இதிலிருந்து என்ன தெரிகிறது? பார்ப்பானுக்கு நன்றாகத் தெரியும் கற்சிலைக்கு எந்த சக்தியும் கிடையாது. அதனால்தான் சிலைக்கு அருகில் இருந்து பூஜை செய்யும் தனக்குக் கரோனா நோய்த்தொற்று வந்துவிடுமோ என பயந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள இவ்வளவும் செய்கிறார்கள்.

கரோனா பல கெடுதல்களைச் செய்துள்ளது – ஆனாலும் கடவுள் சக்தி என்ற பொய்யைத் துடைத்துத் தூர எறிந்து விட்டது என்பது மட்டும் உண்மையே!

நன்றி : ஃபேஸ்புக்கில் கலி. பூங்குன்றன்