Tuesday, August 5, 2025
முகப்பு பதிவு பக்கம் 385

எங்களை கவர்மெண்ட் பெருசா கண்டுக்கவே மாட்டாங்க | சத்துணவு டீச்சருடன் உரையாடல்

நீங்க அங்கன்வாடியில் வேலை செய்றீங்க என்று தெரியும். நீங்க எப்ப முதல்ல வேலையில ஜாயின் பண்ணீங்க? எவ்வளவு வருஷம் ஆகுது? எவ்வளவு சம்பளம்?

ஆமா.. நான் அங்கன்வாடியில் டீச்சரா இருக்கேன். 1992 ல இந்த வேலையில சேர்ந்தேன். நான் சேரும்போது எனக்கு 200 ரூபாய் சம்பளம். இப்ப 27 வருஷம் சர்வீஸ் ஆகிடிச்சி. இப்ப எனக்கு கைக்கு கெடைக்கிற சம்பளம் 13000.

இவ்வளவு வருஷம் சர்வீஸ் இருக்கு ஆனா உங்களுக்கு 13000 தான் சம்பளம்னு சொல்றீங்க. கவர்ன்மெண்ட் வேலையெல்லாம் இத்தனை வருஷம் சர்வீஸ் இருந்ததுனா நிறைய சம்பளம் கிடைக்குமே.. நீங்க சேரும்போதே டீச்சரா தான் சேர்ந்தீங்களா? இல்ல ப்ரொமோஷன் கிடைச்சு வந்தீர்களா?

மத்த கவர்மெண்ட் வேலை மாதிரியெல்லாம் இது கிடையாது. நான் சேரும்போதே டீச்சராதான் சேர்ந்தேன். இத்தனை வருஷம் ஆயிடுச்சு இன்னும் ஒரு பிரமோஷன் கூட கொடுக்கல. எங்களை கவர்மெண்ட் பெருசா கண்டுக்கவே மாட்டாங்க.

உங்களுக்கு மட்டும்தான் ப்ரமோஷன் கெடைக்கலையா இல்ல மத்த எல்லாருக்கும் இதே நிலைதானா?

எனக்கு மட்டுமில்ல.. எல்லாத்துக்கும் இதே நிலைமைதான். போன வருஷம் வரைக்கும் எங்க புரமோஷன் பற்றி எதுவுமே பேசவில்லை. கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் 91வது வருஷம் சேர்ந்தவர்களுக்கு புரமோஷனுக்கு ஆர்டர் வந்தது. இப்பதான் 92 வது வருஷம் சேர்ந்தவங்களோட லிஸ்ட் எடுக்க ஆரம்பிச்சுருக்காங்க. இவங்க சொல்றபடி பார்த்தா அடுத்த வருஷம் மார்ச் மாசம் இல்லன்னா ஏப்ரல் மாசம் எங்களுக்கு புரமோஷன் கிடைக்கும். எனக்கு முன்னாடி ஒரு அக்கா இங்க வேலை செஞ்சாங்க. அவங்க புரமோஷன் வாங்கும்போது அவங்களுக்கு சர்வீஸ் 33 வருசம். அப்படின்னா பார்த்துக்கங்க எங்களை எந்த நிலைமையில் நடத்துறாங்கன்னு.

உங்க சென்டர்ல மொத்தம் எத்தனை பேர் வேலை செய்றீங்க? அவங்களுக்கெல்லாம் என்ன சம்பளம்? இப்ப புதுசா வேலைக்கு எடுக்கும் போது என்ன சம்பளம் கொடுக்குறாங்க?

எங்க சென்டர்ல மொத்தம் ரெண்டு பேரு. அதுல நான் டீச்சர் அப்புறம் ஒரு ஆயாம்மா. எனக்கு இப்போதைக்கு கைக்கு 13000 கிடைக்குது. அதுக்கு மேல பிஎஃப் 1500 பக்கம் பிடிக்கிறாங்க. அப்புறம் ஆயாவுக்கு 7000 ரூபா சம்பளம், 700 ரூபா பிஎஃப் புடிக்கிறங்க. இப்போ புதுசா சேர்ந்த டீச்சர்களுக்கு மொத்தமே 7000 தான் சம்பளம். இதில் என்ன கூத்துனா புதுசா வேலைக்கு சேர்வதற்கு 2 லட்சம் இல்லனா 3 லட்சம் வரைக்கும் கட்சிக்காரர்களுக்கு லஞ்சம் கொடுக்கணும். என்கிட்ட யாராவது வந்து இந்த வேலையில் சேரலாமா.. சேர்ந்தா நல்லதானு கேட்டா, நான் கண்டிப்பா சேரவேண்டாம்னுதான் சொல்லுவேன்.

 உங்களுக்கு சம்பளம் எல்லாம் மாச மாசம் சரியா கொடுக்கறாங்களா?

அதெல்லாம் சரியா வந்துரும். கொஞ்சம் வருஷம் முன்னாடி வரைக்கும் ஆபீஸ்ல போய் கையெழுத்து போட்டு வாங்கணும். இப்ப கடைசியா ஒரு நாலஞ்சு வருஷமா பேங்க் அக்கவுண்ட்ல நேரடியாக சம்பளம் ஏறிடும். ரெண்டு பிட்டா சம்பளம் போடுவாங்க ஒரு டைம் 3000 ரூபா ஏறும் இன்னொரு டைம் 8500 ரூபாய் ஏறும்.

அது ஏன் அப்படி? எதனால் இரண்டு பிட்டா போடறாங்க?

மொத்தமா பார்த்த எங்களுக்கு மூணு எடத்துல இருந்து சம்பளம் வருது. ஒன்னு மத்திய அரசு, இவங்க 3000 ரூபாய் கொடுக்குறாங்க. அது ஃபர்ஸ்ட் டைம் அக்கவுண்ட்ல ஏறிடும். இரண்டாவது வர்ற 8500 ரூபாய் மாநில அரசும் உலக வங்கியும் சேர்ந்து கொடுக்கிறதா சொல்றாங்க. இவங்க ரெண்டு பேரும் எவ்வளவு கொடுக்குறாங்கன்னு தான் தெரியல. மூணு மாசம் முன்னாடி மோடி ஒரு அறிவிப்பை கொடுத்தாங்க. மத்திய அரசு கொடுக்கிற 3000 ரூபாயோட 1500 சேர்த்துக் கொடுக்கறதா சொன்னாங்க ஆனா இதுவரைக்கும் அதை செய்யல.

மத்த மாநிலங்கள் எல்லாம் அங்கன்வாடி சம்பளம் எவ்வளவு தெரியுமா?

எங்க மீட்டிங்ல சொல்லி இருக்காங்க. பாண்டிச்சேரி 26,000 ரூபாய் சம்பளம் கொடுக்கறதா சொல்றாங்க. வெவ்வேறு மாநிலத்தில் வெவ்வேறு மாதிரி சம்பளம் கொடுப்பாங்க போல.

இந்த உத்தரபிரதேசம் பீகார் ராஜஸ்தான் மாதிரி மாநிலங்கள் எல்லாம் ரொம்ப கம்மியா தான் சம்பளம் கொடுக்கிறதா சொல்றாங்க அத பத்தி ஏதாவது தெரியுமா?

ஆமா ஒரு மீட்டிங்ல எங்க மேடம் சொன்னாங்க. அந்த மாநிலங்களில் 1500 ரூபாய் 2000 ரூபாய் சம்பளம் கொடுக்கிறார்களாமாம்.

அது ஏன் அந்த மாநிலங்களில் மட்டும் இவ்வளவு கம்மியா சம்பளம் கொடுக்கிறார்கள்?

இந்த அங்கன்வாடி எல்லா மாநிலங்களிலும் ஒரே மாதிரி கிடையாது. இப்ப தமிழ்நாட்டுல எடுத்துட்டோம்னா காலைல எட்டரை மணில இருந்து சாயந்திரம் நாலு மணி வரைக்கும் பள்ளிகூடத்தில இருக்கணும். ஆனா அந்த உத்தர பிரதேசம் பீகார் ராஜஸ்தான் மாதிரி மாநிலங்கள் எல்லாம் காலைல 11 மணி வரைக்கும் தான் அவங்களுக்கு வேலையாம். அதே நேரத்துல இங்கு தமிழ்நாட்டில் பசங்களுக்கு சத்துணவு சமைச்சு குடுக்கணும். அங்க எப்படின்னா காலையில பால் பிஸ்கட் மட்டும் கொடுப்பாங்க போல. அப்புறம் கஞ்சி கொடுப்பாங்க போல. இதனால தான் அவங்களுக்கு சம்பளம் கம்மியா கொடுக்கிறதா எங்க மீட்டிங்ல சொல்றாங்க. எங்க மேடம் கூட அடிக்கடி திட்டுவாங்க நீங்க 7000 சம்பளம் வாங்கிட்டு ஒரு வேலையும் செய்யறதில்ல அப்படின்னு. ஆனா எங்கள காலையில எட்டரை மணியிலிருந்து சாயந்திரம் நாலு மணி வரைக்கும் நல்லா வேலை வாங்கிடுவாங்க. மத்தபடி அவங்க மாநிலங்களில் என்ன நடக்குதுன்னு தெரியல.

உங்க சென்ட்ரல் மொத்தம் எத்தனை குழந்தைகள் இருக்காங்க?

இப்போதைக்கு எங்க சென்டர்ல 26 குழந்தைங்க இருக்காங்க. இந்த நம்பர் வருஷா வருஷம் மாறிட்டே இருக்கும். ஏன்னா அந்த ஊர்ல பிறக்கிற குழந்தைங்க நம்பர் மாறிக்கிட்டே இருக்கும். ஒரு வருஷம் எல்லாம் எங்க சென்டர்ல 36 குழந்தைங்க இருந்தாங்க. இப்ப 26 பேர் இருக்காங்க.

உங்களோட வேலையை பத்தி கொஞ்சம் சுருக்கமா சொல்லுங்களேன்?

முதல் வேலை என்னன்னா அந்த ஊர்ல இருக்க 3 லிருந்து 5 வயசுக்குள்ள இருக்க குழந்தைகள அங்கன்வாடி மையத்தில் சேர்க்கணும். அந்த குழந்தைகளுக்கு சத்துணவு கொடுக்கணும். இந்த சத்துணவுக்காக அரிசி அப்புறம் சத்து மாவு இதெல்லாம் ஆபீஸ்ல இருந்து அங்கன்வாடி மையத்துக்கு அவங்களே அனுப்பிடுவாங்க. சாப்பாட்டுக்கு தேவையான காய்கறி இதெல்லாம் நாமே வாங்கிக்கணும். இது எவ்வளவு செலவாகுதோ அது ஆபிஸ்ல பில் கொடுத்து பணம் வாங்கிக்கணும். ஆபீஸில் இருந்து முட்டையும் கொடுத்துடுவாங்க.

அப்புறம் பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுக்குற மாதிரி சின்னச்சின்ன பாட்டு அப்புறம் கேம்ஸ் இதெல்லாம் சொல்லி கொடுப்போம். இந்த வேலையெல்லாம் இல்லாம ஊர்ல இருக்கிற கர்ப்பிணி பெண்கள் எத்தனை பேர், அவங்க சரியா ஹாஸ்பிட்டல் போறாங்களா, அப்புறம் புதுசா பொறந்த குழந்தை எத்தனை, அந்த குழந்தைகள் எல்லாம் சரியா தடுப்பு ஊசி போடறாங்களா அப்டின்னு கணக்கு எழுதி வைக்கணும்.

படிக்க:
அங்கன்வாடி
எட்டு வழிச் சாலைன்னு நிலத்த பிடுங்குறான் ராமர் சிலைன்னு வீட்ட இடிக்கிறான் !

இந்த கர்ப்பிணி பெண்களுக்கு சத்து மாவு கொடுக்கணும் பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி போட சொல்லி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். அதுக்கப்புறம் போலியோ சொட்டு மருந்து போடறதுக்கும் வருஷா வருஷம் நாங்க தான் போகணும். அப்புறம் அடிக்கடி விழிப்புணர்வு முகாம்கள் நடத்தணும். சத்துணவு குறித்து விழிப்புணர்வு, இளமகளிர் அவர்களுக்கான சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு இந்த மாதிரியான வேலைகளை செய்யணும்.

ஏற்கனவே சொன்ன மாதிரி கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், இளமகளிர் இவங்க குறித்த தகவல்கள் எல்லாத்தையும் சேகரித்து அதை அறிக்கையாக தயார் செஞ்சு ஆபீஸ்ல கொடுக்கணும். இந்த ரிப்போர்ட் தான் மிகப் பெரிய வேலை. வருஷம் ஃபுல்லா ரிப்போர்ட்ட எழுதிட்டே இருப்போம். அந்த ரிப்போர்ட் வச்சு அடிக்கடி மீட்டிங் நடக்கும் அந்த மீட்டிங்கில் தான் முடிவு பண்ணுவாங்க எந்த ஊர்ல என்ன மாதிரி முகாம் நடத்தலாம் அப்படிங்கறது எல்லாம். இந்த மீட்டிங் நடத்துவதற்கு எல்லாம் தனியாக காசு குடுக்க மாட்டாங்க. அந்த சாப்பாட்டு செலவு மாதிரி அதுக்கு மட்டும் காசு கொடுப்பாங்க.

இந்த மாதிரி மீட்டிங் எல்லாம் ஒரு மாதத்திற்கு எத்தனை தடவை நடக்கும்?

ஆபீஸ் மீட்டிங் வந்து பாத்தீங்கன்னா ஒரு வாரத்துக்கு இரண்டாவது நடக்கும். அப்புறம் அந்த முகாம் மாதிரி நடந்ததெல்லாம் மாசத்துக்கு ஒன்னு பண்ணிடுவோம்.

இந்த மோடி அரசாங்கம் பாத்தீங்கன்னா ஒரு திட்டம் கொண்டு வரதா சொன்னாங்க. அதாவது கர்ப்பிணி பெண்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த சத்துணவு சத்துமாவு போன்ற பொருள்களை நிறுத்திட்டு நேரடியாக அவங்க அக்கவுண்ட்ல பணம் போடற மாதிரி திட்டம் கொண்டு வரதா சொன்னாங்க. இத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க உங்க ஆபீஸ்ல ஏதாவது சொன்னாங்களா?

ஆமாம் இந்த மாதிரி ஒரு திட்டம் வர்றதா ஆபீஸ்ல சொன்னாங்க. எங்களை பொறுத்த வரைக்கும் இந்த திட்டம் வந்துச்சுன்னா நல்லது தான்னு சொல்லுவோம். ஏன்னா எங்களுக்கு வேலை குறையும். ஆனால் இந்தத் திட்டம் முழுசா நடைமுறைக்கு வரும் என்று தெரியல. அதுக்கப்புறம் ஆபீஸ்ல இதை பத்தி பெருசா ஏதும் சொல்லல. மத்தபடி இன்னொரு செய்தி வேணும்னா சொன்னாங்க. அதாவது இந்த கர்ப்பிணி பெண்களுக்கு சத்து மாவு கொடுக்கிற வேலையை எங்க கிட்ட இருந்து வாங்கி இந்த செவிலியர்களுக்கு கொடுக்கிறதா சொன்னாங்க. அதுவுமில்லாம கர்ப்பிணி பெண்களுக்கு உதவித்தொகை 18,000 கொடுக்கிறார்கள் அதுல 4000 ரூபாக்கு சத்துமாவு மட்டுமே அப்புறம் வேற ஏதோ பொருள்கள் எல்லாம் சேர்த்து 2000 இதெல்லாம் போக மீதி 12000 தான் அவங்க அக்கவுண்ட்ல போடுவாங்க.

செவிலியர் என்றால் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருக்கிறவங்களா?

இல்ல,அவங்க இல்ல. அதாவது ரொம்ப சின்ன குக்கிராமங்களில் செவிலியர்ன்னு சொல்லிட்டு ஒரு சின்ன கட்டடம் கட்டி அதுல ஒருத்தர் இருப்பாங்க. ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு போகமுடியாதவர்கள் இங்க போய் பாப்பாங்க. இவங்க கிட்ட செக்கப் எல்லாம் பண்ணிக்குவாங்க. ஏதாவது பெரிய பிரச்சனைனா ஹாஸ்பிடல் போக சொல்லி சொல்லிடுவாங்க. இப்ப பார்த்தீங்கன்னா இந்த ஊர்ல ஒரு அஞ்சு அங்கன்வாடி மையங்கள் இருக்கு அதுல ஒரு செவிலியர் மையம் இருக்கு. இப்ப எங்களுக்கு வர வேண்டிய மருந்துகள் எல்லாம் இந்த செவிலியர் மூலமாக வரும்.

இது சரியா வரும்னு உங்களுக்கு தோணுதா? 5 சென்டர்ல 5 டீச்சர் 5 ஆயாம்மா மொத்தம் 10 பேர் செஞ்சுகிட்டு இருந்த வேலையை ஒரு நர்ஸ் செய்ய முடியுமா?

அது கண்டிப்பா முடியாது தான். ஏன்னா, இங்கே ஒவ்வொரு வீட்டுக்கும் சத்துமாவு கொடுக்குறதுக்கு ரொம்ப கஷ்டபட வேண்டி இருக்கும். ஒரு சிலர் சென்டர்கே வந்து வாங்கிட்டு போயிடுவாங்க. ஒரு சிலர்லாம் நாலஞ்சு தடவை சொல்லி விடனும் அப்ப தான் வருவாங்க. இல்லனா அவங்க வீட்டுல இருந்து யாராவது வந்து வாங்கிட்டு போவாங்க. ரொம்ப முடியாத டைம்ல நாங்களே வீட்டுக்கு போய் கொடுக்கணும். நம்ம தமிழ்நாட்டுல ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் பெண்களோட பேறுகால இறப்பு இதெல்லாம் குறைவாக இருக்கிறதுக்கு இந்த சத்துமாவு ரொம்ப முக்கியமான காரணம். இப்போ இதை செவிலியர் கிட்ட கொடுத்தாங்கன்னா எல்லாருக்கும் போய் சேர்வது கஷ்டம்தான்.

கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி அங்கன்வாடி மையங்கள் எண்ணிக்கையை தமிழக அரசு அதிகரிச்சது. ஆனா புதுசா ஆளுங்க எடுக்கலைன்னு சொல்லி சொல்றாங்க அது உண்மையா?

ஆமா. மூணு வருஷத்துக்கு முன்னாடி இருக்கிற மையங்களோட எண்ணிக்கையை அதிகரிச்சாங்க. அதாவது இந்த ஊர்ல இதுக்கு முன்னாடி 2 மையங்கள் இருந்தது இப்ப பார்த்தீங்கன்னா அது ஐந்தா மாறி இருக்கு. ஆனா உடனே அதற்கான ஆளுங்கள போடல. பக்கத்துல இருக்க மையங்களில் வேலை செய்யுற டீச்சர்களை இன்னொரு மையத்தையும் சேர்த்து பார்க்க சொன்னாங்க. நான் கூட இங்க பக்கத்துல இருக்கிற மையத்தை ரெண்டு வருஷம் பாத்துட்டேன். அதுக்கு தனியா சம்பளம் ஏதும் கொடுக்கல. அப்புறம் இப்போதான் புதுசா ஆள் போட்டாங்க. அப்புறம் புதுசா ஏதும் கட்டிடம் கட்டல. இப்ப நாங்க இருக்கிற மையம் கூட வாடகை கட்டிடம்தான்.

இப்போ எல்கேஜி மற்றும் யுகேஜி தொடங்க போறதா சொல்றங்க.. அத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?

ஆமா.. அது உண்மைதான். எங்க ஆபீஸ்ல அத பத்தியும் சொன்னாங்க. தொடக்க பள்ளி அருகில் உள்ள மையங்கள் மட்டும் இது வரும் போல.

பள்ளிக்கூடத்த விட்டு தள்ளி இருக்க அங்கன்வாடி மையங்கள் என்ன ஆகும்.?

அத பத்தி தெரில. ஆனா பக்கத்துல இருக்க பள்ளிக்கூட ஹெட் மாஸ்டர் எல்லா மையங்களுக்கும் போன் பண்ணி எத்தன குழந்தைகள் இருக்கங்கன்னு விவரம் கேட்டுட்டு இருக்காங்க.

இந்த திட்டம் வந்துச்சுனா உங்களுக்கு வேலை போகாதா?

ஆமா.. அதுக்கு நெறய வாய்ப்பு இருக்கு. இங்க ஸ்கூல் பக்கத்துல இருக்க அங்கன்வாடில வேலை செய்ற அக்கா கூட போலம்பிட்டு இருந்தாங்க. அதும் இல்லாம இந்த திட்டம் வந்தா அதுல டிகிரி முடிச்சவங்கள வேலைக்கு வைக்கிறதா சொல்லிட்டு இருக்காங்க.

அப்போ.. கூடிய சீக்கிரம் உங்க மையத்தையும் மூடிடுவாங்க!!

அது தெரில..ஆனா மொத்தமா 70000 அங்கன்வாடி மையங்கள் மூட போறதா சொன்னாங்க. அது எந்தெந்த மையம்னு தெரில.

அப்போ.. அதுல வேலை செய்யறவங்களோட கதி என்ன?

இதையும் எங்க மீட்டிங்கில பேசினோம். அதுக்கு ஒன்னும் கவலை பட வேண்டாம்னு சூப்பர்வைசர்லாம் சொன்னாங்க. அங்கன்வாடி மையத்த மூடிட்ட்டாலும் அதுல வேலை செய்யற ஆளுங்களை வேற ஏதாவது வேலைக்கு மாத்திடுவாங்க.. இல்லனா சம்பளம் கொடுத்து வீட்ல உடகார வச்சிடுவங்கன்னு..

இவ்ளோ நாள் அங்கன்வாடில வேலை செய்துட்டு திடீர்னு அவங்கள வேற வேலைக்கு அனுப்பினா, அத செய்ய முடியுமா??

அது கஷ்டம் தான். ஆனா வேர வழி இல்லை. இதையே நம்பிட்டு இருக்கவங்களுக்கு எந்த வேலை கொடுத்தாலும் செஞ்சிதான் ஆகணும்.

அப்போ இன்னும் ரெண்டு மூணு வருஷத்துல அங்கன்வாடி அப்டின்னு ஒன்னு இல்லாமலே போய்டுமா?

அது எப்படி போகும்.

ஆமா.. உங்ககிட்ட இருந்த ஒவ்வொரு வேலையும் வேற இடத்துக்கு மாத்திட்டே போனா கடைசில உங்களுக்கு எந்த வேலையும் இருக்காது. அப்றம் அங்கன்வாடி எதுக்கு. இப்போ வேலை செய்துட்டு இருக்க ஆளுங்களை வேலைய விட்டு தூக்கினா கூட சம்பளம் கொடுத்து வீட்ல உடகார வைக்கலாம். ஆனா இருக்க எல்லா மையங்களையும் படிப்படியா குறைச்சி கடைசியா எல்லைத்தையும் மூடிடுவாங்க.

ஆமா.. அப்படித்தான் நடக்கும்.

– சக்திவேல்

கேள்வி பதில் : ஓட்டுப் போடுவது மட்டுமே பாஜக – வை தோற்கடிக்கும் ஒரே வழியா ?

பாஜக-வை தோற்கடிக்க மக்கள் முன் உள்ள வழி ஓட்டு மட்டுமே உள்ளது. ஓட்டு போடாமல் இருந்தால் பாசிச பிஜேபி- க்கு வெற்றி உறுதியாகிவிடாதா? மாற்று வழி என்ன?

– சுந்தரராஜன் பரசுராமன்

ன்புள்ள பரசுராமன்,

டிசம்பர் 6, 1992-ஆம் ஆண்டில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது பாரதிய ஜனதா ஆட்சியில் இல்லை. பாபர் மசூதி இடிக்கப்பட்ட குற்ற வழக்கு அன்று ஆரம்பித்து இன்று வரை தொடர்கிறது. குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. இந்த இடைக்காலத்தில் காங்கிரஸ் அரசாங்கங்கள் மத்தியில் ஆண்டிருக்கின்றன.

அதேபோன்று நாடு முழுவதும் சங்க பரிவாரங்கள் நடத்திய கலவரங்கள் பலவற்றில் இந்துத்துவா குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டது இல்லை. 2002-ம் ஆண்டில் நடந்த குஜராத் கலவரம் தொடர்பான குற்றவாளிகள் இன்று விடுவிக்கப்பட்டு வருகிறார்கள். குஜராத் முசுலீம் மக்களை இனப்படுகொலை செய்த அந்தக் கலவரத்திற்கு பிறகும் கூட இருமுறை காங்கிரஸ் அரசு மத்தியில் ஆட்சி செய்திருக்கின்றது.

இதனை 1947-க்கு பிந்தைய இந்திய வரலாற்று முழுவதிலும் பார்க்கலாம். ஏன் அதற்கு முன்பே பிரிட்டிஷ் காலனிய ஆட்சியின் போதும் கூட பார்க்கலாம். இன்றைக்கு கேரளாவில் பாரதிய ஜனதாவிற்கு ஒரு எம்.எல்.ஏ மட்டும் இருக்கிறார்.

ஆனால் சபரிமலையில் பெண்கள் நுழையலாம் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து இன்றுவரை அங்கே ஆயிரக்கணக்கான பக்தர்களோடு சங்க பரிவார குண்டர்களும் இணைந்து பெண்களை அனுமதிக்க மறுக்கிறார்கள். அன்றாடம் பதட்டத்தையும் பற்ற வைக்கிறார்கள்.

கேரளாவை ஆள்வது மார்க்சிஸ்ட் கூட்டணி ஆட்சி. அது மதவாதத்திற்கு எதிரான ஆட்சியும் கூட. ஆனாலும் அங்கே சபரிமலை பிரச்சனையில் இந்துமதவெறியர்கள் செல்வாக்குடன் மக்களை திசை திருப்புகிறார்கள். தமிழகத்தில் கூட கவுன்சிலர் தேர்தலில் கூட வாக்குகளை பெற முடியாத கட்சி என்ற என்ற புதிய பழமொழிக்கு சொந்தமான பாரதிய ஜனதா கட்சி ஊடகங்களில் கொண்டாடப்படுகிறது. மட்டுமல்ல ஊடகங்களை தன் பிடியிலும் வைத்திருக்கிறது. அனைத்து தொலைக்காட்சிகளிலும் அன்றாடம் நடக்கும் மாலை நேர விவாதங்களில் சேனல் ஒன்றுக்கு இரண்டு நபர்கள் வீதம் நேரடியாகவோ சமூக ஆர்வலர் பேரிலும் இறக்கப்படுகிறார்கள்.

மேகாலயா உயர் நீதிமன்ற நீதிபதி ஒரு தீர்ப்பில் இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுக்கிறார். முன்னாள் ஐ.ஏ.எஸ் ஐ.பி.எஸ் மற்றும் ராணுவ அதிகாரிகள் அனைவரும் பாஜக-வில் சேர்கிறார்கள்.

இந்து அறநிலையத்துறை கோவில்களில் சிலைகள் திருடப்படுவதை விசாரிக்கும் பொன்மாணிக்கவேல் வீட்டு திருமணத்திற்கு எச் ராஜா வந்து ஆசிர்வாதம் தருகிறார். ரப்பர் ஸ்டாம்பாகவே இருந்தாலும் அரசியல் சாசன பதவிகள் என்று மதிக்கப்படும் ஆளுநர்கள் ஜனாதிபதிகள் ஆர்.எஸ்.எஸ் விழாக்களில் கலந்து கொள்கிறார்கள். கடைசியாக கலந்து கொண்டவர் காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி.

தமிழக அமைச்சர் மா.ஃபா பாண்டியராஜனோ, ஆர்.எஸ்.எஸ்-ஐ சொக்கத்தங்கம் என்று சொல்கிறார். எனவே பாரதிய ஜனதாவை தோற்கடிப்பது என்பது தேர்தல் மூலமாக மட்டுமே முடியுமா என்பதைப் பரிசீலியுங்கள்.

படிக்க:
♦ தேர்தல் புறக்கணிப்பு ஏன் ? தீர்வுதான் என்ன ?
♦ ஐந்து மாநிலத் தேர்தலில் பாஜக தோல்வி : மகிழ்ச்சியடையலாம் ! எனினும் மெத்தனம் கூடாது !

அதேநேரம் 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடித்த மோடி அரசு இன்று நீதித்துறை, நிதித்துறை, ராணுவம், ஊடக நிறுவனங்கள் என அனைத்துத் துறைகளையும் இந்துத்துவ மயமாக்கி வருகிறது. அந்த மயமாக்கத்திற்கு அவர்கள் ஆட்சியில் இருப்பது ஒரு முக்கியமான காரணம் தான் மறுக்கவில்லை.

ஆனால் அதைவிட முக்கியமானது மேற்கண்ட அரசு இயந்திரங்கள் அனைத்தும் நெடுங்காலமாகவே இந்துத்துவாவின் செல்வாக்கோடு இயங்கி வருவதாகவும் இருக்கிறது. அதனால் மோடி அரசு இத்தகைய பார்ப்பனிய பாசிச நிகழ்ச்சி நிரலை அதிவேகமாகச் செய்து வருகிறது.

எனவே பாஜகவை தோற்கடிப்பது என்பது தேர்தல் மூலம் நடக்கக் கூடிய ஒன்றல்ல. மக்களைப் பொறுத்தவரை பாஜகவை தோற்கடிப்பது தேர்தல் மூலம் தான் என்று ஒரு சிலர் கருதலாம். சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தலில் முடிவுகளின் போதும் நாம் அதைப் பார்த்தோம். ஆனால் அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி கூட மிதவாத இந்துத்துவ அரசியலில் பேசியதாக விமர்சிக்கப்பட்டது. ஓரளவிற்கு அது உண்மையும் கூட.

அதேநேரம் ஆட்சியில் இல்லாத போது சங்க பரிவாரங்கள் மூர்க்கமாக தமது மதவெறி அரசியலை நிகழ்ச்சி நிரலில் கொண்டு வருகின்றனர். இங்கே இங்கே எச் ராஜா அந்தப் பணியினை அவ்வப்போது செய்து வருகிறார்.

தேர்தல் அரசியல் மூலமாக பாரதிய ஜனதாவை தோற்கடிப்பதற்கு ஓரளவு பங்கு இருப்பதாக மட்டும் சொல்லலாம். மற்றபடி அதனுடைய சித்தாந்தத்திற்கு பலியாக இருக்கின்ற மக்களை பல்வேறு பார்ப்பனிய பண்பாட்டு எதிர்ப்புப் போராட்டங்களின் ஊடாக அரசியல் படுத்த வேண்டியது முக்கியம். ஏனெனில் நாமெல்லாம் இந்துக்கள் என்று அவர்கள், இல்லாத இந்து மதத்தின் பிரதிநிதியாக தங்களை முன்வைக்கிறார்கள். உண்மையில் இந்து மதத்தில் இருப்பதெல்லாம் சாதி பேதமும் வர்க்க பேதமும் பாலின பேதமும் தான். இந்த முரண்பாட்டை புரியவைத்து மக்களை மீட்பது அவசியம்.

ஜல்லிக்கட்டு தடையை நீக்குவதற்கு தமிழக மக்கள் நடத்திய போராட்டம் பாரதிய ஜனதா அரசோடு நீதிமன்றத்தையும் பணிய வைத்தது. அதேபோன்று பெங்களூரு ஆயத்த ஆடை தொழிலாளிகளின் போராட்டம் அவர்களுக்கு உரிய சேமநல நிதியை மீட்டு வந்தது. இதேபோன்று மகாராஷ்டிரா மத்தியப் பிரதேசத்தில் விவசாயிகள் போர்க்குணத்துடன் போராடியதன் விளைவாக இன்று விவசாயக் கடன்கள் ரத்து செய்யப்படுவதையும் பார்க்கிறோம். எனவே பொருளாதாரப் பிரச்சனையாக இருந்தாலும் சரி, பண்பாட்டு பிரச்சனையாக இருந்தாலும் சரி அதில் பார்ப்பனியத்திற்கு எதிரான வெற்றி என்பது வீதியில், ஊரில் பொதுமக்கள் நடத்தும் போராட்டத்தோடு இணைக்கப்பட்டிருக்கிறது.

இதே கருத்தை “இனவாதம், வகுப்புவாதத்தை கருத்தியல் ரீதியாக தோற்கடிக்காமல் வீழ்த்த முடியாது” என பேராசிரியர் பிபன் சந்திராசில சான்றுகளோடு முன் வைக்கிறார். அமெரிக்காவில் 1864-ம் ஆண்டிலேயே அடிமை முறை, சட்டத்தால் ஒழிக்கப்பட்டாலும் இன்று வரை கருப்பின மக்கள் மீதான பேதமும், அடக்கு முறையும் தொடர்வதைப் பார்க்கிறோம். ஜார் ஆண்ட ரசியாவில் யூதர்கள் மீதான அடக்குமறை அதிகம் இருந்தது. அதை சித்தாந்தம், நடைமுறை என இரு அரங்கிலும் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்துப் போராடியது. அந்தப் போராட்டத்தின் பலனால்தான் 1917 புரட்சி முடிந்த பிறகு யூத மக்கள் மீதான ஒடுக்குமுறையை ரசியாவில் துடைத்தெறிய முடிந்தது. 1984 பாராளுமன்றத் தேர்தலில் இரு இடங்களில்தான் பாஜக வெற்றி பெற்றிருந்தாலும் அதன் வகுப்புவாத  செல்வாக்கு அப்படியே இருந்தது. 2004-ம் ஆண்டில் வாஜ்பாயி தலைமையில் தேர்தலை சந்தித்த பாஜக தோற்கடிக்கப்பட்டாலும் அவர்களுடைய இந்துத்துவம் வலுவாகி பின்னர் 2014-ல் மோடி தலைமையில் வெற்றி பெற்றது. கடைசியாக கேரளாவில் தேர்தல் வெற்றி பெறாத பாஜக அங்கே நடுத்தர வர்க்கத்தின் மத்தியில் வகுப்புவாதத்தை பரவலாக்கி வருகிறது, இதை தடுக்கா விட்டால் அதற்கு நாமே பொறுப்பு என்கிறார் பிபன் சந்திரா.

இதை அவர் எழுதிய ஆண்டு 2008. தற்போது 2018-லும் அதுதான் நிலைமை!

பாரதிய ஜனதா ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களது அழுத்தத்திற்கு ஏற்பவே மற்ற கட்சிகள் செயல்படுகின்றனர். அந்த கட்சிகள் மதச்சார்பற்ற கட்சிகளாக இருந்தாலும் இதுதான் நியதி. தமிழக சிறையில் அப்பாவிகளான முஸ்லீம் மக்கள் ஏராளம் பேர் இருக்கிறார்கள். இவர்கள் தி.மு.க மற்றும் அ.தி.மு.க அரசுகள் சிறையில் அடைக்க காரணமே பா.ஜ.க.முன்வைக்கும் இந்துத்துவா அரசியலின் மீதான பயம்தான்.

எனவே பார்ப்பனிய பாசிசத்தை வீழ்த்துவதற்கும், அதை மற்ற மதசார்பற்ற கட்சிகளுக்கு புரியவைப்பதற்குமே கூட மக்கள் அரங்கில் பாஜக வீழ்த்தப்படுவது நிபந்தனை. தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தை எடுத்துக் கொண்டால் அது மூடப்பட்டது மக்களின் போராட்டத்தால். இன்றைக்கு திறக்கப்படுவது என்பது நீதிமன்றத்தின் பெயரால் பாஜக செய்கிறது.

இன்றும் இதை எதிர்த்து முறியடிக்கும் சக்தி மக்களின் கையில்தான் உள்ளது. திமுக முதலான எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருந்தாலும், இல்லை என்றாலும் இத்தகைய போராட்டத்திற்கு தார்மீக ஆதரவைத்தான் தருவார்களே அன்றி நேரடி பங்கேற்பை அல்ல.

ஆகவே ஓட்டுப் போடுவது மக்களிடம் உள்ள ஒரே வழி என்பதும் தவறு. தேர்தல் அரசியலைத் தாண்டிய மக்கள் அரங்கில் இந்துத்துவா சக்திகளை தனிமைப்படுத்தும் போது மட்டுமே அந்த வெற்றியும் மக்களுக்கு கிடைக்கும்.

உங்கள் கேள்விகளை அனுப்ப:

தங்களின் கேள்விகளை பதிவு செய்யுங்கள்

வாழ்க்கை முழுவதும் உன்னைப் போல் உழைப்பேன் ! போய் வா தோழனே !!

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 39

மாக்சிம் கார்க்கி
நிகலாய் இவானவிச் அவளை உணர்ச்சி வெறியோடு வந்து சந்தித்தான்.

“இகோரின் நிலைமை மோசமாயிருக்கிறது” என்றான் அவன்; “ரொம்ப மோசமான நிலை! அவர்கள் அவனை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய்விட்டார்கள். லுத்மீலா இங்கே வந்திருந்தாள். உங்களை வரச் சொன்னாள்…”

“ஆஸ்பத்திரிக்கா?”

பதறிப்போன உணர்ச்சியோடு நிகலாய் தனது மூக்குக் கண்ணாடியைச் சரி செய்து கொண்டே, ரவிக்கை அணிந்து கொள்வதில் தாய்க்கு உதவினான்.

”இதோ – இந்தக் கட்டையும் எடுத்துச் செல்லுங்கள்” என்று தனது வெதுவெதுப்பான ஈரப்பசையற்ற கரத்தால் தாயின் கைவிரல்களை அழுத்திப் பிடித்துக்கொண்டு நடுநடுங்கும் குரலில் சொன்னான் அவன், “நிகலாய் வெஸோவ்ஷிகோவுக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்து முடித்து விட்டீர்களா?”

”ஆமாம்.”

”இகோரைப் பார்க்க நானும் வந்திருக்கிறேன்.”

தாய் களைப்பினால் மயங்கிப் போய் இருந்தாள். நிகலாயின் பதைபதைப்பு அவளது உள்ளத்தில் ஏதோ வரப்போகும் ஒரு ஆபத்தை அறிவுறுத்தும் பயத்தை எழுப்பிவிட்டது.

“அவன் செத்துக்கொண்டிருக்கிறான்” என்று இருண்ட எண்ணம் அவளது மனத்துக்குள்ளே துடிதுடித்துக்கொண்டிருந்தது.

வெளிச்சம் நிறைந்து சுத்தமான அந்தச் சிறு அறைக்குள்ளே நுழைந்ததுமே, வெள்ளை நிறமான தலையணைகளின் மீது சாய்ந்துகொண்டு நிகலாய் கரகரத்த குரலில் சிரித்துக்கொண்டிருப்பதைத் தாய் கண்டாள். கண்டவுடன் அவளுக்கு ஒரு பாரம் நீங்கியது போலிருந்தது. அவள் வாசற்படியிலேயே நின்று இகோர் டாக்டரிடம் என்ன சொல்கிறான் என்பதைக் கேட்டாள்.

“நோயாளிக்கு வைத்தியம் பார்ப்பது என்பது, சீர்திருத்தம் பண்ணுவது மாதிரிதான்…”

“உன் அசட்டுப் பேச்சைவிடு, இகோர்!” என்று கலங்கிய குரலில் சொன்னார் டாக்டர்.

“ஆனால், நானோ புரட்சிக்காரன்! சீர்திருத்தங்களைக் கண்டாலே எனக்குப் பிடிக்காது…”

டாக்டர் இகோரின் கையை மீண்டும் அவனது மடிமீது மெதுவாக வைத்துவிட்டு எழுந்து நின்றார்; ஏதோ சிந்தித்தவாறே தமது தாடியைத் தடவி விட்டுக்கொண்டார். இகோரின் முகத்திலுள்ள வீக்கத்தைக் கவனித்துப் பார்த்தார்.

தாய்க்கு அந்த டாக்டரைத் தெரியும். அந்த டாக்டர் நிகலாயின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர். அவரது பெயர் இவான் தனீலவிச். அவள் இகோரிடம் சென்றாள், அவன் தன் நாக்கை நீட்டி அவளை வரவேற்றான். டாக்டர் அவள் பக்கம் திரும்பினார்.

”அதென்ன, நீலவ்னா, உங்கள் கையிலிருப்பது என்ன?”

“புத்தகங்களாயிருக்கும்” என்றான் இகோர்.

”இவன் படிக்கக் கூடாது” என்றார் அந்தக் குட்டி டாக்டர்.

“இந்த டாக்டர் என்னை முட்டாளாக்கப் பார்க்கிறார்” என்றான் இகோர்.

அவனது நெஞ்சிலிருந்து குறுகிய ஈரமான மூச்சு கரகரப்புடன் மோதிக் கொண்டு வந்தது. அவனது முகத்தில் துளித்துளியாக வியர்வை பூத்திருந்தது. தனது கையை உயர்த்தி நெற்றியைத் துடைத்துக் கொள்வதே அவனுக்குப் பெரும் சிரமமாயிருந்தது. விசித்திரமாய் அசைவற்றிருந்த அவனது வீங்கிப்போன கன்னங்கள் அகன்ற அன்பு ததும்பும் முகத்தை விகாரப்படுத்தி, அவனது முகவடிவை உயிரற்ற முகமூடியைப்போல் உணர்வற்றுப் போகச்செய்தான். அவனது கண்கள் மட்டும் அந்த வீக்கத்துக்குள்ளாகப் புதைந்து போய், தெளிவாக இரக்கம் ததும்பும் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தன.

“ஓ! விஞ்ஞானியே! எனக்கு ஒரே களைப்பாயிருக்கிறது. கொஞ்சம் கீழே படுத்துக் கொள்ளலாமா?” என்று டாக்டரைப் பார்த்துக் கேட்டான் அவன்.

“கூடாது. நீ படுக்கக் கூடாது” என்று விறைப்பாகப் பதில் சொன்னார் டாக்டர்.

“நீ வெளியே போன நிமிஷத்திலேயே நான் படுத்துக்கொள்ளப் போகிறேன்”

”அவனைப் படுக்க விடாதீர்கள். நீலவ்னா தலையணைகளை ஒழுங்காக வையுங்கள். அவனைத் தயைசெய்து பேச விடாதீர்கள். பேசுவது மிகவும் ஆபத்தானது.”

தாய் தலையை அசைத்தாள். டாக்டர் விடுவிடென்று நடந்து வெளியே போனார். இகோர் தன் தலையைப் பின்னால் சாய்த்துக் கண்களை மூடினான்; கை விரல்கள் பிசைந்து கொண்டிருப்பதைத் தவிர, அவனிடம் வேறு எந்த அசைவும் காணப்படவில்லை. அந்தச் சிறு அறையின் வெண்மையான சுவர்கள் ஏதோ ஒரு இனந்தெரியாத மங்கிய சோக பாவத்தையும் வறண்ட குளிர்ச்சியையும் வெளியிட்டுக் கொண்டிருப்பதாகத் தோன்றியது. அங்கிருந்த பெரிய ஜன்னலின் வழியாக வெளியேயுள்ள மரங்களின் உச்சிக்கிளைகள் தெரிந்தன. இருண்டு மண்படிந்த அந்த இலைகளின் மத்தியிலே மஞ்சள் நிறப்பழுப்பு அங்குமிங்குமாக சிதறிக் கிடந்தது; இலையுதிர் காலத்தின் வரவை அது அறிவுறுத்தியது.

”மரணம் என்னை வேண்டா வெறுப்பாக, கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கொண்டு வருகிறது” என்று அசையாமலும் கண்களைத் திறவாமலும் சொன்னான் இகோர், “அவள் எனக்காக வருத்தப்படுகிறாள் என்பது எனக்கு நன்றாய்த் தெரிகிறது. நான் எல்லோருடனும் அவ்வளவு சுமூகமாகப் பழகினேன்!”

“பேச்சை நிறுத்து, இகோர் இவானவிச்” என்று அவனது கரத்தை வருடிக்கொண்டே மன்றாடிக் கேட்டுக் கொண்டாள் தாய்.

”கொஞ்சம் பொறு, நான் நிறுத்திவிடுகிறேன்…”

மிகுந்த சிரமத்தோடு அவன் மீண்டும் பேச முயன்றான். அவனுக்கு மூச்சுத் திணறியது. தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பதற்குச் சக்தியற்று இடையிடையே பேச்சை நிறுத்தி ஆசுவாசப்படுத்திக்கொண்டான்.

“நீ பிரிந்து போகிறாய். எப்பொழுதும் நீ உழைத்த மாதிரியே, ஓய்ச்சல் ஒழிவின்றி. நமது கொள்கையிலே சலனபுத்தியின்றி, என்னுடைய வாழ்க்கை முழுதும் நானும் உன்னைப்போல் உழைத்துக்கொண்டிருப்பேன். போய் வா, தோழனே!”

“நீங்கள் எங்களோடு சேர்ந்திருப்பது ஒரு பெரிய மகத்தான காரியம். உங்கள் முகத்தைப் பார்ப்பதற்கே ஆனந்தமாயிருக்கிறது. சமயங்களில் நானாக நினைத்துக்கொள்வேன் – இவள் கதி என்னவாகும்? நீங்களும் – எல்லோரையும் போலவே – ஒருநாள் சிறைக்குள் போவீர்கள். அதை நினைக்கும்போது எனக்கு உங்கள் மீது அனுதாபம் ஏற்படும். சரி, சிறைக்குப் போவதற்குப் பயப்படுகிறீர்களா?”

”இல்லை” என்று சர்வ சாதாரணமாகச் சொன்னாள் அவள்.

“ஆமாம். நீங்கள் பயப்பட மாட்டீர்கள். ஆனால், சிறைவாசம் ரொம்ப மோசமானது. சிறைவாசம்தான் என்னை இந்தக் கதிக்கு ஆளாக்கிவிட்டது. உண்மையைச் சொல்லப்போனால் நான் சாகவே விரும்பவில்லை …..”

“நீ சாகப் போவதில்லை” என்று சொல்ல நினைத்தாள். ஆனால் அவனது முகத்தைப் பார்த்தவுடன் அவள் அதைச் சொல்லாமலேயே மெளனமானாள்.

“என்னால் இன்னும் உழைக்க முடியும்… ஆனால், என்னால் உழைக்க முடியாதுபோனால் – அப்புறம் நான் உயிர் வாழ்வதில் எந்த அர்த்தமும் கிடையாது – உயிர் வாழ்வது முட்டாள்தனம்…”

தாய் பெருமூச்செறிந்தாள். தன்னையும் அறியாமல் அந்திரேயினுடைய பிரியமான வாசகத்தை நினைத்துப் பார்த்தாள், “இதெல்லாம் உண்மைதான். ஆனால் இது மட்டும் ஆறுதல் தராது.” அன்று முழுவதுமே அவளுக்கு ஓயாத ஒழியாத வேலை. எனவே அவள் களைத்துப் போயிருந்தாள். மேலும் அவளுக்கு ஒரே பசி. அந்த நோயாளியின் கரகரத்த முனகல் பேச்சு அந்த அறை முழுதும் நிரம்பி, அறையின் சுவர்களைத் தொட்டுத் தடவி ஊர்ந்து சென்றது. ஜன்னலுக்கு வெளியே தெரியும் மரத்தின் கிளைகள் கறுத்துத் திரண்டு பயங்கரமாகக் கவிந்து சூழ்ந்த கார்மேகங்களைப்போல் தோன்றி தம்முடைய கருமையால் வியப்பூட்டின. அந்தியின் அசைவின்மையில், சோகமயமாய், இருளை எதிர்நோக்கி எல்லாமே விசித்திரமாக அமைதியடைந்தன.

”எனக்கு எவ்வளவு மோசமாயிருக்கிறது” என்று கூறிவிட்டுக் கண்களை மூடி மௌனத்தில் ஆழ்ந்தான் இகோர்.

“தூங்கு. தூங்கினால் கொஞ்சம் சுகமாயிருக்கும்” என்று போதித்தாள் தாய்.

அவனது சுவாசத்தை பரிசீலனை செய்து பார்த்துவிட்டு அவள் சுற்றுமுற்றும் பார்த்தாள்; சோகத்தின் விறைப்பான பிடிப்பிலே சிக்கி, சிறிது நேரம் அப்படியே அசையாது உட்கார்ந்திருந்தாள். பிறகு அரைத் தூக்கத்தில் ஆழ்ந்தாள்.

வாசல் நடையில் கேட்ட ஏதோ ஒரு சத்தத்தில் அவள் விழித்தெழுந்தாள். விழித்தவுடன் துள்ளியெழுந்து இகோரைப் பார்த்தாள். அவனது கண்கள் விழித்திருப்பதைக் கண்டாள்.

“நான் தூங்கிப் போய்விட்டேன், என்னை மன்னித்துவிடு” என்று மெதுவாகக் கூறினாள் அவள்.

“மன்னிக்கப்படவேண்டியது நான்தான்’ என்று அவன் மெதுவாகச் கூறினான்.

இரவு நேரத்தின் இருள் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தது. அந்த தரை சில்லிட்டுக் குளிர்ந்தது. ஏதோ ஒரு விபரீதமான இருள் எல்லாவற்றின் மீதும் படர்ந்து கவிந்திருந்தது. நோயாளியின் முகமும் இருண்டு போயிருந்தது.

ஏதோ கரகரப்புக் கேட்டது. தொடர்ந்து லுத்மீலாவின் குரலும் வந்தது.

”இரண்டு பேரும் இருட்டில் உட்கார்ந்து ரகசியமாக பேசுகிறீர்கள்? விளக்கு ஸ்விட்ச் எங்கே இருக்கிறது?”

திடீரென அந்த அறையில் கண்ணைக் கூசும் வெள்ளிய ஒளி நிறைந்து பரவியது. அறையின் மத்தியில் நிமிர்ந்து நிற்கும் நெட்டையான லுத்மீலாவின் கரிய உருவம் தெரிந்தது.

இகோரின் உடம்பு முழுவதிலும் ஒரு நடுக்கம் குளிர்ந்து பரவியோடியது. அவன் தன் கையை நெஞ்சுத் தடத்துக்குக் கொண்டு போனான்.

”என்ன இது?” என்று கத்திக்கொண்டே லுத்மீலா அவன் பக்கம் விழுந்தடித்து ஓடினாள்.

அவன் தனது அசைவற்ற கண்களால் தாயைப் பார்த்தான். அந்தக் கண்கள் முன்னைவிட விரிவும் பிரகாசமும் பெற்றிருப்பதுபோல் தோன்றின.

அவன் தன் வாயை அகலத் திறந்தான்; தலையை உயர்த்தினான். தன் கையை மெதுவாக நீட்டினான். தாய் அவனது கையைத் தன் கையில் வாங்கி அவனது முகத்தையே மூச்சு விடாமல் பார்த்தாள். திடீரென்று அவனது கழுத்தும் பலமாக வலித்துத் திருகி வளைந்தது. அவன் தன் தலையைப் பின்னோக்கி வைத்துக்கொண்டே உரத்த குரலில் கத்தினான்.

“என்னால் முடியாது! எல்லாம் முடிந்து போயிற்று!”

அவனது உடம்பு லேசாக நடுங்கியது. அவனது தலை தோள்பட்டை மீது சரிந்து சாய்ந்தது. அவனது படுக்கைக்கு மேலாக நிர்விசாரமாக எரிந்து கொண்டிருக்கும் விளக்கு அவனது அகலத் திறந்த கண்களில் உயிரற்றுப் பிரதிபலித்தது.

”என் கண்ணே!” என்று லேசாக முணுமுணுத்தாள் தாய்.

லுத்மீலா அந்தப் படுக்கையை விட்டு மெதுவாக விலகிச் சென்று ஜன்னலருகே போய் நின்றாள். நின்று வெளியே வெறித்துப் பார்த்தாள்.

“அவன் இறந்துவிட்டான்!” என்று திடீரென்று வழக்கத்துக்கு, மாறான உரத்த குரலில் வாய்விட்டு கத்தினாள் அவள்.

அவள் தன் முழங்கைகளை ஜன்னல் சட்டத்தின் மீது ஊன்றி சாய்ந்து நின்றாள். பிறகு திடீரென்று யாரோ அவள் தலையில் ஓங்கி அறைந்துவிட்ட மாதிரி, அவள் தன் முழங்காலைக் கட்டியுட்கார்ந்து முகத்தை இரு கைகளாலும் மூடி, பொருமிப் பொருமி விம்மியழ ஆரம்பித்தாள்.

தாய் இகோரின் விறைத்துக் கனத்த கைகளை அவன் மார்பின் மீது மடித்து வைத்தாள். அவனது தலையைத் தலையணை மீது நேராக நிமிர்த்தி வைத்தாள். பிறகு அவள் தன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு லுத்மீலாவிடம் போனாள்; அவளருகே குனிந்து அவளது அடர்ந்த கேசத்தைப் பரிவோடு தடவிக்கொடுத்தாள். லுத்மீலா தனது மங்கிய விரிந்த கண்களை மெதுவாக அவள் பக்கம் திருப்பினாள்; உடனே எழுந்து நின்றாள்.

“நாங்கள் இருவரும் தேசாந்திர சிட்சையின்போது ஒன்றாக வாழ்ந்தோம்” என்று துடிதுடித்து நடுங்கும் உதடுகளோடு சொன்னாள் அவள். “நாங்கள் இருவரும் ஒன்றாகவே அங்கு சென்றோம். சிறைவாசத்தை அனுபவித்தோம் …… சமயங்களில் அந்த வாழ்க்கை எங்களுக்குத் தாங்க முடியாததாகவும் வெறுப்பூட்டுவதாகவும் இருக்கும்: எத்தனையோ பேர் மனமொடிந்து போனார்கள்…..” ,

வறண்ட உரத்த தேம்பல் அவளது தொண்டையில் முட்டியது. அவள் அதை அடக்கிக்கொண்டு தன் முகத்தைத் தாயின் முகத்துக்கு அருகிலே கொண்டு வந்தாள், அந்த முகத்திலே படிந்த சோகமயமான பரிவுணர்ச்சியால், அவளது தோற்றம் இளமை பெற்றிருப்பதாகத் தோன்றியது.

“அவனது கேலியும் கும்மாளமும் என்றும் வற்றி மடியாதவை” என்று அவள் விரைவாகக் கூறினாள்; கண்ணீர் பொங்கிச் சிந்தாது இடையிடையே பொருமி விம்மினாள். ”அவன் எப்போதுமே சிரித்துச் சிரித்துக் கேலி பேசுவான். தைரியமற்றவர்களை ஊக்குவிப்பதற்காக தனது சொந்தக் கஷ்டங்களையெல்லாம் வெளியே கட்டாயம் பொறுத்து மறைத்துக் கொள்வான். எப்போதுமே நல்லவனாகவும் அன்போடும் சாதுரியத்தோடும் நடந்து கொள்வான். அங்கே தேசாந்திரப் பிரதேசமான சைபீரியாவிலே சோம்பேறித்தனம் மக்களை லகுவில் ஆட்கொண்டு குட்டிச் சுவராக்கும். அவர்களைக் கீழ்த்தரமான உணர்ச்சிகளுக்குக் கொண்டு செலுத்தும். இந்த மாதிரி நிலைமையை அவன் எவ்வளவு சாமர்த்தியமாக எதிர்த்துப் போராடினான் தெரியுமா? அவன் எவ்வளவு அற்புதமான தோழன் என்பது மட்டும் உங்களுக்குத் தெரிந்தால்……. அவனது சொந்த வாழ்க்கை படுமோசமான துக்க வாழ்க்கைதான், என்றாலும் யாருமே அந்த வாழ்வைப் பற்றி அவன் கூறிக் கேட்டது கிடையாது, கேட்டதே கிடையாது! நான் அவனுக்கு மிகவும் நெருங்கிய சிநேகிதி. அவனது அன்புக்கு நான் பெரிதும் கடமைப்பட்டவள். அவன் தனது அறிவுச் செல்வத்தால் எனக்கு என்னென்ன வழங்க முடியுமோ அத்தனையையும் வரையாது வாரி வழங்கினான். என்றாலும் அவன் களைப்புற்றுத் தன்னந்தனியனாக இருக்கும்போது கூட அவன் மீது பாச உணர்ச்சி காட்ட வேண்டும் என்றோ, அல்லது தான் செய்யும் உதவிக்குப் பிரதியாக அவனை நான் கவனிக்க வேண்டுமென்றோ அவன் கொஞ்சம் கூட, இம்மியளவுகூட. கேட்டதும் கிடையாது; எதிர்பார்த்ததும் கிடையாது…”

அவள் இகோரிடம் போய் அவனது கரத்தை முத்தமிடுவதற்காகக் குனிந்தாள்.

”தோழா; என் அன்பான, இனிய தோழனே! உனக்கு நன்றி. என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நான் உனக்கு நன்றி செலுத்துகிறேன்” என்று வருத்தத்துடன் மெதுவாகச் சொன்னாள். “நீ பிரிந்து போகிறாய். எப்பொழுதும் நீ உழைத்த மாதிரியே, ஓய்ச்சல் ஒழிவின்றி. நமது கொள்கையிலே சலனபுத்தியின்றி, என்னுடைய வாழ்க்கை முழுதும் நானும் உன்னைப்போல் உழைத்துக் கொண்டிருப்பேன். போய் வா, தோழனே!”

அவளது உடம்பு பொருமலினால் குலுங்கியது. தன் தலையை இகோரின் பாதங்களுக்கருகே வைத்துக்கொண்டாள். தாய் இடைவிடாது மெளனமாக அழுது கொண்டிருந்தாள். என்ன காரணத்தினாலோ அவள் கண்ணீரை அடக்க முயன்றாள். லுத்மீலாவைத் தேற்ற. பலமாகத் தேற்ற விரும்பினாள். இகோரைப் பற்றி துயரமும் பாசமும் கலந்த அருமையான வார்த்தைகளைச் சொல்ல எண்ணினாள். கண்ணீரின் வழியாக அவனது அமிழ்ந்துபோன முகத்தை, அவனது கண்களை, முழுதும் மூடாது அரைக்கண் போட்டுத் தூங்குவது போல் தோன்றிய அவன் கண்களை. இளம் புன்னகை பதிந்து நின்ற அவனது கரிய உதடுகளை – எல்லாம் பார்த்தாள். எல்லாமே அமைதியாகவும் வேதனைதரும் ஒளி நிரம்பியதாகவும் இருந்தது.

இவான் தனீலவிச் வழக்கம் போலவே விடுவிடென்று உள்ளே வந்தான். திடீரென அந்த அறையின் மத்தியில் நின்றுவிட்டான். தனது கைகளை விருட்டென்று பைகளுக்குள் சொருகிக் கொண்டு நடுநடுங்கும் உரத்த குரலில் கேட்டான்:

“இது எப்போது நிகழ்ந்தது?”

யாரும் பதில் சொல்லவில்லை. அவன் தன் நெற்றியைத் துடைத்துக் கொண்டான்; லேசாகத் தள்ளாடியவாறு இகோரின் பக்கம் நடந்து சென்றான். அவனிடம் கரம் குலக்கிவிட்டு ஒரு பக்கமாக ஒதுங்கி நின்று கொண்டான்.

“எதிர்பாராதது எதுவும் நடக்கவில்லை. இவனது இருதயம் இருந்த நிலைமைக்கு, இந்த மரணம் ஆறு மாதங்களுக்கு முன்பே நேர்ந்திருக்க வேண்டியது… குறைந்தபட்சம்…..”

இடத்திற்குப் பொருந்தாத. ஓங்கிய, உரத்த அவனது குரல் திடுமென்று நின்றது.

அவன் சுவரோடு சாய்ந்து கொண்டு தன் தாடியை விறுவிறுவென்று திருகித்திரித்தான்; அடிக்கடி கண் சிமிட்டியபடி படுக்கையருகே சூழ்ந்து நின்றவர்களையே பார்த்தான்.

“இவனும் போய்விட்டான்!” என்று அமைதியாகக் கூறினாள்.

லுத்மீலா எழுந்து ஜன்னலருகே சென்று அதைத் திறந்தாள். அவர்கள் எல்லோருமே சிறிது நேரத்தில் அந்த ஜன்னல் பக்கம் வந்து, ஒருவருக்கொருவர் நெருங்கி நின்று இலையுதிர்கால இரவின் முகத்தை வெறித்து நோக்கினார்கள். மரவுச்சிகளுக்கு மேலாக விண்மீன்கள் மினுமினுத்தன. நட்சத்திரக் கூட்டம் வான மண்டலத்தின் ஆதியந்தமற்ற விசாலப் பரப்பையும் விரிவையும் அழுத்தமாக எடுத்துக் காட்டியது.

படிக்க:
புதிய தொடர் : பொருளாதாரம் கற்போம்
சீக்கிய மக்கள் படுகொலை 1984 : ஆண்டுகள் 34 கடந்த பின் காங்கிரசு தலைவருக்கு தண்டனை !

லுத்மீலா தாயின் கரத்தைப் பற்றி எடுத்தாள். வாய் பேசாமல் அவள் தோள்மீது சாய்ந்தாள். டாக்டர் தலையைக் குனிந்து, தனது மூக்குக் கண்ணாடியைத் துடைத்தவாறே நின்றார். ஜன்னலுக்கு வெளியே பரந்து கிடக்கும் அமைதியின் வழியாக, நகரின் ஓய்ந்து கலைத்துப்போன இரவின் ஓசைகள் கேட்டன. குளிர் அவர்களது முகத்தைத் தொட்டுத் தடவி, தலைமயிரைக் குத்திட்டுச் சிலிர்க்கச் செய்தது. லுத்மீலா தனது கன்னத்தில் ஒரு துளி கண்ணீர் வழிந்தோட உடல் எல்லாம் நடுங்கினாள். வெளியே வராந்தாவிலிருந்து உருவமற்ற பயபீதிச் சத்தங்களும், அவசர அவசரமாகச் செல்லும் காலடியோசையும், முக்கலும் முனகலும் ஒலித்தன. எனினும் அவர்கள் மூவரும் வாய் பேசாது சலனமற்று அந்த ஜன்னல் அருகிலேயே நின்று இருளை வெறித்து நோக்கியவாறு இருந்தார்கள்.

தான் அங்கிருக்கத் தேவையில்லை என்று உணர்ந்த தாய், அவளது பிடியிலிருந்து விடுபட்டு விலகி வாசலுக்கு வந்தாள். அங்கு நின்றவாறே அவள் இகோருக்கு வணக்கம் செலுத்தினாள்.

“நீங்கள் போகிறீர்களா?’ என்று எங்குமே பார்க்காமல் அவளை அமைதியாகக் கேட்டார் டாக்டர்.

“ஆமாம்…”

தெருவுக்கு வந்தவுடன் அவள் லுத்மீலாவைப் பற்றியும் அவளது அடங்கிப்போன அழுகையைப் பற்றியும் எண்ணிப் பார்த்தாள்.

“அவளுக்கு எப்படி அழுவது என்றுகூடத் தெரியவில்லை …”

சாவதற்கு முன்னால் இகோர் பேசிய வார்த்தைகள் நினைவுக்கு வரவும் ஓர் ஆழ்ந்த பெருமூச்சு அவள் வாயைப் பிளந்துகொண்டு வெளியேறியது. தெரு வழியாக மெதுவாக நடந்து வரும்போதே அவள் அவனது துடியான கண்களையும், அவனது கம்பீரத்தையும், வாழ்க்கையைப் பற்றி அவன் சொன்ன கதைகளையும் நினைவுகூர்ந்தாள்.

“நல்லவனுக்கு, வாழ்வதுதான் சிரமமாயிருக்கிறது. சாவதோ லகுவாயிருக்கிறது. நான் எப்படிச் சாகப் போகிறேனோ?” என்று அவள் நினைத்தாள்.

அவளது மனக்கண் முன்னால், அந்த வெள்ளைச் சுவர் சூழ்ந்த, வெளிச்சம் நிறைந்த ஆஸ்பத்திரி அறையில் டாக்டரும், லுத்மீலாவும் ஜன்னல் முன்னால் நிற்கின்ற காட்சியும். அவர்களது முதுகுப்புறத்தில் இகோரின் இறந்துபோன கண்கள் வெறித்து நோக்குவது போன்ற காட்சியும் தெரிந்தன. திடீரென அவளுக்கு மனிதகுலத்தின் மீது ஓர் ஆழ்ந்த அனுதாப உணர்ச்சி ஏற்பட்டு மேலோங்கியது. வேதனை நிறைந்த பெருமூச்சோடு அவள் நடையை எட்டிப் போட்டாள். ஏதோ ஒரு மங்கிய உணர்ச்சி அவளை முன்னோக்கித் தள்ளிச் சென்றது.

“நான் சீக்கிரமே போக வேண்டும்” என்று துக்கத்துடன் நினைத்துக் கொண்டாள், எனினும் ஒரு துணிவாற்றல் பொருந்திய சக்தி, அவளது மனத்துக்குள் இருந்து அவளை முன்னால் உந்தித் தள்ளியது.

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

புதிய தொடர் : பொருளாதாரம் கற்போம்

4

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 1

மேல்நிலைக் கல்வி அல்லது இளங்கலை பட்டப் படிப்பில் ஒரு மாணவர் பொருளாதாரம் பயில்கிறார் என்றால் என்ன நினைப்போம்? பாவம் அவருக்கு வேறு படிப்பு கிடைக்கவில்லை, அறிவியல், கணக்கு, வணிகவியல் படிக்கும் அளவுக்கு அறிவில்லையென கருதுவோம். இந்தியாவில் வரலாறும், பொருளாதாரமும் அப்படி புறக்கணிக்கப்படும் படிப்பாக மாறிவிட்டது.

ஆனால் சமூக வாழ்வில் விலைவாசி, பங்குச் சந்தை, பண மதிப்பு, வங்கி, வணகம், வரி என பொருளாதாரம் சார்ந்து பேசுகிறோம், பாதிக்கப்படுகிறோம். பொருளாதாரம் என்றால் என்ன என்பதை வேலைக்கு போன பிறகு அறிய விரும்புகிறோம். அப்போது படிக்க நினைத்தாலும் பொருளாதார இலக்கண வார்த்தைகளும், குழப்பமான பொருளியல் துறைகளும் நம்மை புரிந்து கொள்ள விடாமல் அச்சுறுத்துகின்றன.

இதில் முதலாளித்துவ உலகம் பொருளாதாரத்தை பல்வேறு துறைகளில் பிரித்ததோடு அதன் முழுமையை விலக்கி வைத்து விட்டு ஒரு சூத்திரமாக மாற்றி விட்டது. மேலும் அந்த முழுமை மனித சமுதாயத்தின் சமூக இயக்கம், வரலாறோடு தொடர்புடையது, அடிப்படையானது எனும் தத்துவப் புரிதலையும் தவிர்த்து விடுகிறது. எல்லாம் சேர்த்துப் பார்த்தால் பொருளாதாரம் என்பதை அறிய விரும்பினாலும், அறிய முடியாமல் இருக்கிறது.

மார்க்சிய அறிஞர்கள் பொருளாதாரத்தை அதன் வரலாற்று வளர்ச்சியில் வைத்து உள்ளது உள்ளபடி விளக்குகிறார்கள். இன்றைய முதலாளித்துவ பொருளாதாரத்தின் அடிப்படையை ஆய்ந்து கண்டவர் மார்க்ஸ். பின்னர் அந்த ஆய்வு முடிவுகள் சோசலிசம் எனும் யதார்த்தமாக மாறுவதற்கு உதவின. இன்றைக்கும் முதலாளித்துவம் ஒழிக எனும் முழக்கம் அதன் கருவறையில் ஒலிப்பதைக் கேட்கிறோம். சோசலிச நாடுகளின் வீழ்ச்சிக்கு பிறகும் மார்க்சை தேடிப்பிடித்து படிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்றைய பொருளாதார நெருக்கடிகளை புரிந்து கொள்வதற்கே மார்க்ஸ் பலருக்கும் தேவைப்படுகிறார்.

நிற்க. இந்நூல் மார்க்சின் கண்டுபிடிப்பை பற்றியதல்ல. அவருக்கு முன்னால் பொருளாதாரம் என்பதும் அதன் பல்வேறு அம்சங்களை விளக்கிய அறிஞர்களைப் பற்றியும் ஒரு கதை போல எளிமையாக பொது வாசகருக்கு விளக்குகிறார் இந்நூலாசிரியர்.

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் எனும் இந்நூலை படித்து முடித்த பிறகு நாம் நவீன பொருளாதாரத்தை நன்கு புரிந்து கொள்ளலாம். பொருளாரத்தை பயில விரும்பும் வாசகர்கள் இந்நூலை ஆழ்ந்து படியுங்கள். அதன் தொடர்புடைய செய்திகள், வரலாற்றை தேடிப் படியுங்கள். வெளியாகும் பகுதி குறித்து இங்கேயே விவாதியுங்கள். தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு பதில் அளியுங்கள்!

வாருங்கள் சேர்ந்து படிப்போம்!

நட்புடன்
வினவு

றிமுகம்:

அ.அனிக்கின்
பொருளாதாரச் சிந்தனையின் வளர்ச்சியைப் பற்றி எல்லா மொழிகளிலும் நூற்றுக்கணக்கான புலமை சான்ற புத்தகங்கள் இருக்கின்றன; இந்தத் தொகுப்புடன் இன்னும் ஒரு புத்தகத்தைச் சேர்ப்பது ஆசிரியருடைய நோக்கம் அல்ல. இந்தப் புத்தகம் எல்லோரும் விரும்பிப் படிக்கக்கூடிய கட்டுரைகளின் வடிவத்தில் எழுதப்பட்டிருப்பதால், மிகவும் முக்கியமான வாழ்க்கை வரலாற்று விவரங்களிலும் விஞ்ஞானச் செய்திகளிலும் குறிப்பான வகையில் கவனம் செலுத்துவது சாத்தியமாயிற்று; அத்துடன் இந்த நூலில் இன்று இன்னும் அதிக கவனத்தைப் பெற்றிருக்கும் பிரச்சினைகளைப் பற்றி முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டிருக்கிறது.

இந்தப் புத்தகம் அரசியல் பொருளாதாரத்தைப் பற்றி எந்தவகையிலும் சிறப்பான அறிவு இல்லாமலிருக்கக்கூடிய பொது வாசகருக்காக எழுதப்பட்டிருக்கிறது. அரசியல் பொருளாதாரம் என்பது உலர்ந்துபோன, சுவையற்ற பாடம் என்று நினைப்பது சிலருக்கு வழக்கம். எனினும் கவர்ச்சியான பிரச்சினைகளையும் இரகசியங்களையும் பொறுத்தவரை, இயற்கையோடு ஒப்பிடும்பொழுது சமூகத்தின் பொருளாதார அமைப்பு குறைந்த எண்ணிக்கையைக் கொண்டிருக்கவில்லை. சமீபகாலத்தில் சரிநுட்பமான விஞ்ஞானங்கள், இயற்கை விஞ்ஞானங்கள் ஆகிய துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள் – பொருளாதாரப் பிரச்சினைகளைப் பற்றி கவனம் செலுத்துவது குறிப்பிடத்தக்க வகையில் மிகச் சாதாரணமாகிவிட்டது.

பொருளாதார விஞ்ஞானத்தின் தொடக்க நிலையில், மனிதகுலத்தின் பண்பாட்டின் மீது அழியாத முத்திரையைப் பதித்துச் சென்ற தனிச்சிறப்புடைய சிந்தனையாளர்களை, விரிந்த பரப்பும் தற்சிந்தனையும் கொண்ட விஞ்ஞான, இலக்கியத் திறமைமிக்க மாபெரும் அறிவாளிகளை நாம் காண்பது தற்செயலானதல்ல.

சென்ற காலப் பொருளியலாளர்களும் இன்றைய காலமும்

மனிதர்களின் வாழ்க்கையில் பொருளாதாரம் எப்பொழுதுமே மிக முக்கியமான பங்கு வகித்து வந்திருக்கிறது; இன்று இது குறிப்பிடத்தக்க அளவுக்கு உண்மையாகும்.

பண்டைக்கால மக்கள் அரசியலையும் மத்தியகால மக்கள் கத்தோலிக்க சமயத்தையும் அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்தார்கள் என்று கூறுவது எவ்வளவு பொருளற்றது என்று மார்க்ஸ் சொல்லியிருக்கிறார். மனிதகுலம் எப்பொழுதுமே “பொருளாதாரத்தில் வாழ்ந்திருக்கிறது”; அரசியல், மதம், விஞ்ஞானம் மற்றும் கலை ஆகியவை பொருளாதாரத்தை ஆதாரமாகக் கொள்வதன் மூலமாக மட்டுமே வாழ முடிந்திருக்கிறது. கடந்த காலத்தில் பொருளாதாரம் வளர்ச்சி இல்லாமலிருந்ததனால்தான் இந்தக் காலங்களைப் பற்றி இப்படிப்பட்ட கருத்துக்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது. நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் நவீன பொருளாதாரம் இன்றியமையாத பங்கு வகிக்கிறது.

பிரான்சுவா கெனே.

இன்றைய உலகம் என்பது உண்மையில் இரண்டு வெவ்வேறான உலகங்களாகும்; சோஷலிஸ்ட், முதலாளித்துவ உலகங்களாகும். இவை ஒவ்வொன்றும் தனியான பொருளாதார அமைப்பையும் அரசியல் பொருளாதாரத்தையும் கொண்டிருக்கின்றன. காலனி ஆட்சியிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டிருக்கும் வளர்முக நாடுகள் உலக அரங்கில் மென்மேலும் முக்கியமான பாத்திரத்தை வகிக்கின்றன. எந்தவிதமான வளர்ச்சிப் பாதையைப் பின்பற்றுவது என்று முடிவு செய்ய வேண்டிய அவசியம் இந்த நாடுகளுக்கு மென்மேலும் அவசரமானதாகி வருகிறது. அரசியல் பொருளாதார வரலாற்றைப் படிப்பது, நவீன உலகத்தின் பிரச்சினைகளைப் புரிந்து கொள்வதற்கும் அரசியல் பொருளாதாரம் ஒருவருடைய சொந்த உலகப் பார்வையின் இணைந்த பகுதி என்று புரிந்து கொள்வதற்கும் உதவுகிறது.

முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தின் மூலச் சிறப்புடைய நூல்கள் -குறிப்பாக ஆடம் ஸ்மித், டேவிட் ரிக்கார்டோ எழுதிய நூல்கள் – பொருளாதாரம் என்பது புறவய விதிகள் இயங்குகின்ற அமைப்பு என்ற கோட்பாட்டை முதலாவதாக உருவாக்கி வளர்த்தன. இந்த விதிகள் மனித எண்ணத்திலிருந்து சுதந்திரமானதாக, ஆனால் மனிதர்கள் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றன. அரசின் பொருளாதாரக் கொள்கை இந்த விதிகளுக்கு விரோதமாக இல்லாமல் இவற்றைச் சார்ந்திருக்க வேண்டும் என்று இவர்கள் நம்பினார்கள்.

படிக்க:
சீக்கிய மக்கள் படுகொலை 1984 : ஆண்டுகள் 34 கடந்த பின் காங்கிரசு தலைவருக்கு தண்டனை !
நூல் அறிமுகம் : வகுப்புவாதம் ஒர் அறிமுக நூல் – பிபன் சந்திரா

வில்லியம் பெட்டி, பிரான்சுவா கெனே, இன்னும் மற்ற அறிஞர்கள் பொருளாதார நிகழ்வுப் போக்குகளைப் பற்றி அளவுரீதியாக ஆராய்வதற்குரிய அடிப்படையை அமைத்தார்கள். அவர்கள் இந்த நிகழ்வுப் போக்குகளை ஒருவகையான வளர்சிதைவு மாற்றம் என்ற ரீதியில் ஆராய்ந்து அவற்றின் திசையையும் செயல் எல்லையையும் சுட்டிக்கூற முயன்றார்கள். மார்க்ஸ் சமூக உற்பத்திப் பொருளின் புனருற்பத்தி என்ற தனது கோட்பாட்டில் அவர்களுடைய விஞ்ஞான சாதனைகளைப் பயன்படுத்தினார். நுகர்வுப் பண்டங்களுக்கும் உற்பத்திச் சாதனங்களுக்கும் இடையே உள்ள சமநிலை, குவித்தல் மற்றும் நுகர்வுக்கிடையே உள்ள அளவு வீதங்கள், வெவ்வேறு பிரிவுகளுக்கிடையே உள்ள உறவுகள் நவீன பொருளாதாரத்திலும் பொருளாதார ஆராய்ச்சிகளிலும் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. இவர்கள் பொருளாதார விஞ்ஞானத்தின் முன்னோடிகள். இவர்கள் எழுதிய நூல்கள், நவீன பொருளாதாரப் புள்ளியியலைத் தோற்றுவித்தன; அதன் முக்கியத்துவத்தைப் பற்றி எவ்வளவு சொன்னபோதிலும் அது மிகையானதல்ல.

வில்லியம் பெட்டி.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதற்பாதியில் பொருளாதார ஆராய்ச்சி கணிதவியல் முறைகளை உபயோகிக்க முயற்சி செய்தது. இந்த முறைகள் இல்லையென்றால் இன்று பொருளாதார விஞ்ஞானத்தின் பல பிரிவுகளின் வளர்ச்சியை நினைத்துப் பார்க்கக்கூட முடியாது. பிரெஞ்சுப் பொருளாதார நிபுணரான அன்டுவான் குர்னோ இந்தத் துறையின் முன்னோடிகளில் ஒருவர்.

முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தின் மூலவர்களும் குட்டிமுதலாளித்துவ மற்றும் கற்பனாவாத சோஷலிசத்தைப் பேசியவர்களும் முதலாளித்துவப் பொருளாதாரத்தில் உள்ள முரண்பாடுகள் பலவற்றை ஆராய்ந்தார்கள். முதலாளித்துவ சமூகத்துக்குப் பெருந்தீங்கு விளைவிக்கின்ற பொருளாதார நெருக்கடிகளின் காரணங்களைப் புரிந்து கொள்வதற்கு முதன்முதலாக முயற்சி செய்தவர்களில் ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த பொருளாதார நிபுணரான ஸிஸ்மான்டியும் ஒருவர். மாபெரும் கற்பனாவாத சோஷலிஸ்டுகளான சான்-சிமோன், ஃபூரியே, ஓவன் மற்றும் அவர்களைப் பின்பற்றியவர்கள் முதலாளித்துவத்தை மிக ஆழமான விமர்சனத்திற்கு உட்படுத்தினார்கள்; சமூகத்தை சோஷலிச ரீதியில் புனரமைப்புதற்குரிய திட்டங்களைத் தயாரித்தார்கள்.

வி.இ.லெனின் எழுதியது போல, ”மனித குலத்தின் மிகச்சிறந்த அறிஞர்கள் முன்னர் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில்களைக் கொடுத்ததில்தான் மார்க்சின் மேதாவிலாசம் அடங்கியிருக்கிறது. தத்துவஞானம், அரசியல் பொருளாதாரம், சோஷலிசம் ஆகியவற்றின் மாபெரும் பிரதிநிதிகளின் போதனைகளின் நேரடியான, உடனடியான தொடர்ச்சியாகவே அவருடைய தத்துவம் தோன்றியது1.”

வி.இ.லெனின்.

மூலச் சிறப்புடைய முதலாளித்துவ அரசியல் பொருளாதாரம், மார்க்சியத்தின் தோற்றுவாய்களில் ஒன்றாக இருந்தது. எனினும் மார்க்சின் போதனை அரசியல் பொருளாதாரத்தில் புரட்சிகரமான திருப்புமுனையாக இருந்தது. மூலதனம் என்பது ஒரு சமூக உறவு; விலைக்குப் பெறப்பட்ட பாட்டாளி வர்க்கத்தினரின் உழைப்பைச் சுரண்டுவதே அதன் சாராம்சம் என்பதை மார்க்ஸ் எடுத்துக் காட்டினார். அவர் உபரிமதிப்பு பற்றிய தன்னுடைய கோட்பாட்டில் இந்தச் சுரண்டலின் தன்மையை விளக்கிக் கூறி முதலாளித்துவத்தின் வரலாற்று ரீதியான போக்கை – அதன் பகைமையான வர்க்க முரண்பாடுகள் தீவிரமடைந்து இறுதியில் மூலதனத்தின் மீது உழைப்பு வெற்றியடைவதை எடுத்துக்காட்டினார். எனவே மார்க்சின் பொருளாதாரத் தத்துவம் இயக்கவியல் ரீதியான ஒருமையைக் கொண்டிருக்கிறது; அது அவருக்கு முன்பிருந்தவர்களின் முதலாளித்துவக் கருதுகோள்களை நிராகரிக்கிறது; அவர்கள் உருவாக்கியவற்றில் சரியானவையாக இருக்கும் ஒவ்வொன்றையும் படைப்பாற்றலோடு வளர்த்துச் சென்றது. இந்த ஒருமையை எடுத்துக்காட்டுவதும் விளக்குவதுமே இந்தப் புத்தகத்தின் முக்கியமான நோக்கம்.

விஞ்ஞான சோஷலிசம் மார்க்சிய-லெனினியத்தின் பொருளாதாரக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. இந்தக் கொள்கைகளை முழுமையாகப் புரிந்து கொள்வதற்கும் படைப்பாற்றலோடு வளர்த்துச் செல்வதற்கும் அவற்றின் தோற்றுவாய்களையும் மூலவேர்களையும் விளக்குவது மிகுந்த முக்கியத்துவமுடையதாகும்.

(தொடரும்…)

அடுத்த பகுதியில் பார்க்க இருக்கும் தலைப்பு : மார்க்சும் அவருக்கு முன்பிருந்தவர்களும்.

அடிக்குறிப்பு:
1) V.I. Lenin, collected Works, Vol. 19, p.23

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ

அம்மா அருளிய இட்லி 1 ரூபாய் ! அப்பல்லோவில் அம்மா சாப்பிட்டது 1.17 கோடி ரூபாய் !

“செத்தும் கொடுத்தார் வள்ளல் சீதக்காதி” என்பார்கள். ஜெயலலிதாவோ உயிரோடு இருந்த போதும் இறந்த போதும் கொள்ளையடித்த ஊழல்கள் மளிகைக் கடை பில் போல வந்து கொண்டே இருக்கின்றன.

ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்து வருவது தெரிந்ததே. தமிழகத்தில் ஆதித்யா சானலுக்கு அடுத்தபடியாக காமடியில் போட்டி போடுவது ஆறுமுகசாமி சானல் செய்திகள்தான். அதில் ஜெயலலிதா இட்லி சாப்பிட்டது, குலோப் ஜாமுன் ருசித்தது இன்ன பிற வரலாற்று விவரங்கள் எல்லாம் ஊடகங்களின் பக்கங்களை நிரப்பி வருகின்றன.

அதில் லேட்டஸ்ட் சமாச்சாரம் அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா 75 நாட்கள் இருந்தபோது செலவழிக்கப்பட்ட மருத்துவக் கட்டணம், மளிகைக் கடை பட்டியல் போல வெளிவந்திருக்கிறது. பட்டியலின் மொத்தக் கட்டணம் 6.85 கோடி ரூபாய். இந்தக் கட்டண விவரங்களை நகல் ரசீதுகளுடன் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் ஆணையத்தில் தாக்கல் செய்திருக்கிறது.

அப்பல்லோவில் ’அம்மா’

அதில் ஜெயா தங்கிய அறைக் கட்டணம் 24 லட்சம், சசி அண்ட் கோ, அரசு அதிகாரிகள் அன்ட் கோ தங்கிய அறை வாடகை ஒரு கோடியே 24 லட்சம், உணவுக் கட்டணம் ஒரு கோடியே 17 லட்சம், மருத்துவர்களின் பரிந்துரை 21 லட்சம், மருந்துகளுக்கு 30 லட்சம் என்பவை அடக்கம். இன்னும் நர்சிங், மருந்து, இன்ஜியனிரிங் என பட்டியல் நீள்கிறது. இந்த கட்டணத்தில் ஆறு கோடி ரூபாய்க்கான காசோலையை அதிமுக கட்சி கொடுத்திருக்கிறதாம். மீதியை கொடுக்க வேண்டுமாம். ஊழல் கட்சியாக இருந்தாலும் அப்பல்லோ மருத்துவமனையிடம் காசை காசோலையாக கொடுத்திருக்கறார்கள். ஜெயா உயிரோடு இருந்து, சசிகலாவும் வெளியே இருந்தால் அப்பல்லோ இப்படி தைரியமாக காசு வாங்கியிருக்குமா என்ன?

படிக்க:
♦ அன்னலட்சுமி – திருவோட்டுத் தமிழன் !
♦ அம்மா மட்டுமா ஊழல்… ஊடக மாமாக்களின் கட்டுரை காவியங்கள்

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது இட்லி, பொங்கல், கேசரி, வடை, ரவா கிச்சடி, குலோப் ஜாமுன், காபி, பிஸ்கட், பழச்சாறு, தயிர் சாதம் உள்ளிட்டவைகளை சாப்பிட்டார் என்று மருத்துவர்கள் ஆணையத்தில் வாக்குமூலம் அளித்து இருந்தனர். அதேபோன்று ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போதும் அதிமுக செய்தி தொடர்பாளர்கள் அம்மா இன்று இட்லி சாப்பிட்டார், நேற்று பொங்கல் சாப்பிட்டார், நாளை அல்வா சாப்பிடுவார் என்றெல்லாம் அடித்து விட்டனர்.  இதை வைத்துப் பார்த்தாலும் இந்த சரவண பவன் அயிட்டங்களை தினசரி முழுங்கினாலும் 75 நாட்களுக்கு நாளொன்றுக்கு ஆயிரம் ரூபாய் வைத்தாலும் இலட்ச ரூபாயை தாண்டியிருக்காது. பிறகு எப்படி 1.17 கோடி செலவானது என்பது மக்களின் கேள்வி

ஜெயலலிதா மட்டும் இப்படி சாப்பிட்டிருந்தால் அவர் 75 நாட்கள் தங்கியிருக்கத் தேவையில்லை. இரண்டு நாட்களிலேயே பரலோகம் போய் சேர்ந்திருப்பார். மாறாக எப்படி ஜெயலலிதா கொடநாடு போனால் கோட்டை முதல் தோட்டம் வரை அப்படியே  ஊட்டிக்கு செல்லுமோ அது போன்று அப்பல்லோ மருத்துவமனையிலும் தமிழக அரசும், தோழி சசிகலா பரிவாரமும் சென்று முகாமிட்டனர். அதற்கும் சேர்துத்தான் இந்த ஒரு கோடியே…. உணவு செலவு. இதுபோக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், காவல் அதிகாரிகள், ஊடகங்கள் என அனைவரும் தின்று தீர்த்த கணக்கும் இந்த மெஸ் பில்லில் அடக்கம்.

அதிலும் குறிப்பாக இந்த ஒரு கோடியே 17 லட்சத்தில் யாரெல்லாம் எவ்வளவு சாப்பிட்டு இருக்கிறார்கள் என்பதையும் பட்டியல் போட்டிருக்கிறார்கள் . 48 லட்சம் ரூபாயில் மீடியாக்கள் சாப்பிட்டு இருக்கின்றன. அதனால்தான் அன்று அம்மா மருத்துவமனை அனுபவத்தை தந்தி டிவி முதல் புதிய தலைமுறை வரை அழுது கொண்டே கவரேஜ் செய்தார்கள் போலும். அழுதாலும் தின்பதற்கு அவர்கள் குறைவைத்து விடவில்லை.

அடுத்து அரசு அதிகாரிகள் தின்ன செலவு 20 லட்சம், போலீஸ் அதிகாரிகள் 26 லட்சம், விஐபிக்கள் 18 லட்சம், ஜெயலலிதா வீட்டில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் கட்சிக்காரர்கள் 17 லட்சம் என மொத்தமாக 1 .17 கோடி  ரூபாயில் சாப்பிட்டு தீர்த்திருக்கிறார்கள்.

படிக்க:
♦ அப்பல்லோவில் அம்மா : அறை எண் 2008-ல் கடவுள் !
♦ அப்பல்லோ மருத்துவமனையின் கொடூர முகம் ! வீடியோ

இந்த பட்டியலில் பார்த்தால் கட்சிக்காரர்கள்தான் எண்ணிக்கையில் அதிகம் இருக்க வேண்டும். அவர்களை விட மீடியா அதிகம் தின்றிருக்கிறது. அதிகார வர்க்கம் மொத்தமாக சேர்த்தால் 46 லட்சத்திற்கும் தின்று தீர்த்திருக்கிறது. ஆக இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அழுது இழந்த கலோரியை விட தின்று சேர்த்த கலோரி அதிகம் எனத் தெரிகிறது. அந்த 75 நாட்களும் அப்பல்லோ மருத்துவமனை சமையல் அறையில் மணமும், பணமும் அதிகம் வீசியிருக்கிறது.

அப்பல்லோ மருத்துவமனையில் அம்மா சாப்பிட்டது ஒன்றே கால் கோடி ரூபாய் என்றால் அம்மா அறிமுகப்படுத்திய அம்மா உணவகத்தில் இட்லி ஒரு ரூபாய், சாம்பார், எலுமிச்சை, கறிவேப்பிலை சாத வகைகள் ஐந்து ரூபாய்க்கும் தயிர் சாதம் 3 ரூபாயிலும் விற்கப்படுகிறது.

தமிழனை திருவோட்டுத் தமிழனாக்கிய திருட்டு ’அன்னலட்சுமி’

2013-ம் ஆண்டில் சென்னையில் அம்மா உணவகம் அறிமுகப்படுத்தப்பட்ட போது 10 இடங்களில் திறந்தார்கள். அதற்கு உத்தேசமாக ஓராண்டு 3 கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிட்டார்கள். ஒவ்வொரு உணவகத்திலும் நூற்றுக்கணக்கான மக்கள் சாப்பிடுவார்கள். அப்படி 10 இடங்களிலும் சேர்ந்து 365 நாட்கள் சாப்பிட்டாலும் அதற்கு இவர்கள் கொடுத்த கணக்கின்படி மூன்று கோடி ரூபாய்தான் செலவு. ஆனால் ஏழை மக்களுக்காக அம்மா உணவை அறிமுகப்படுத்திய போயஸ் தோட்டத்து அம்மா மருத்துவமனையில் தங்கியபோது அவரும் அவரது பரிவாரமும் ஒன்றேகால் கோடி ரூபாய்க்கு சாப்பிட்டிருக்கின்றனர்.

சமீபத்தில் எடப்பாடி, ஓபிஎஸ் இரட்டையர்கள் அம்மா உணவகம் சென்று சீன் போட்ட போது அங்கே புதிய தட்டு ஒன்றில் சரவணபவனில் இருந்து வருவிக்கப்பட்ட இட்லி பொங்கலை சாப்பிட்டார்கள். இந்த சீனை ஒப்பிட்டாலும் அப்பல்லோவில் மெஸ் கணக்கு சரியாகத்தான் வந்திருக்கிறது.

இந்தியா முழுவதும் மத்திய அரசும் மாநில அரசுகளும் இணைந்து மதிய உணவு திட்டத்தை அரசுப்பள்ளிகளில் அமல்படுத்துகின்றனர். அதில் ஆரம்பப் பள்ளியில் படிக்கும் ஒரு குழந்தைக்கு உணவு செலவாக 4 ரூபாய் 13 காசை நிர்ணியத்திருக்கிறார்கள். இதையே நடுநிலைப் பள்ளியின் குழந்தைக்கு ஆறு ரூபாய் 18 காசு என நிர்ணயித்திருக்கிறார்கள்.

படிக்க:
♦ ஜெயா எப்படிச் செத்தால் நமக்கென்ன ?
♦ ஜெயா பெயரை நீக்கு – அதிமுக சொத்துக்களைப் பறிமுதல் செய் ! மக்கள் அதிகாரம்

ஒன்று முதல் ஐந்து வரை படிக்கும் குழந்தைகள் ஒரு மதிய உணவில் 50 கிராம் காய்களையும் 100 கிராம் அரிசியையும், 20 கிராம் பருப்பையும், ஐந்து கிராம் எண்ணையையும், 12 கிராம் புரதத்தையும் பெறுகிறார்கள்.

ஆறு முதல் எட்டு வரை படிக்கும் குழந்தைகள் ஒரு நாளைக்கு 75 கிராம் காய்கறி, 30 கிராம் பருப்பு, 150 கிராம் அரிசி, 20 கிராம் புரதம் , 7.5 கிராம் எண்ணையையும் பெறுகிறார்கள்.  யோசித்துப் பாருங்கள் நான்கு ரூபாயிலும், ஆறு ரூபாயிலும் ஒரு குழந்தைக்கு என்ன தந்துவிட முடியும்? ரேசன் அரிசையை மட்டும் சோறாக போட்டுவிட்டு பேருக்கு அதில் ரெண்டு பருப்பும், ஒரு காய்ஞ்ச கத்திரிக்காய் துண்டும் இருக்கும். தமிழகத்தில் ஒரு முட்டை போடுகிறார்கள். மற்ற மாநிலங்களில் அதுவும் இல்லை.

இதனால்தான் என்னவோ உலக பட்டினி அட்டவணையில் உள்ள நாடுகளின் தரவரிசையில் இந்தியா கடைசி இடங்களில் இருக்கிறது. இங்கே 20 கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள் பட்டினி கணக்கிலும் சத்துக் குறைவு பட்டியலிலும் வருகிறார்கள்.

அம்மா பரிவாரம் அப்பல்லோவில் ஒண்ணே கால் கோடி ரூபாயில் சாப்பிடும் பொழுது நமது குழந்தைகள் பட்டினி கிடக்காமல் பிரியாணியா சாப்பிட முடியும்?

– மதன்

சீக்கிய மக்கள் படுகொலை 1984 : ஆண்டுகள் 34 கடந்த பின் காங்கிரசு தலைவருக்கு தண்டனை !

ஒருவெறுப்பின் விதைகள் வேகமாக வளர்ந்து விட்டன
எங்கு பார்த்தாலும் ரத்தவாடை அடிக்கிறது!

1984-ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக கட்டவிழ்க்கப்பட்ட கலவர வழக்கில் தீர்ப்பு வழங்கிய டெல்லி உயர்நீதிமன்றம், குஜராத், கந்தமால், முசாஃபர் நகர், மும்பையில் நடந்த பெருந்திரள் கொலைகளும் அதே பாணியில் நடைபெற்றுள்ளதாக கோடிட்டு காட்டுகிறது.

சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் 2003-ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை வழங்கி டிசம்பர்  17-ஆம் தேதி தீர்ப்பளித்தது டெல்லி உயர்நீதிமன்றம்.

சீக்கியர்களுக்கு எதிரான கலவரம். (கோப்புப் படம்)

நீதிபதி எஸ். முரளிதர், நீதிபதி வினோத் கோயல் ஆகியோர் அடங்கிய அமர்வு, பிரிவு 120பி (சதித்திட்டம் தீட்டுதல்), பிரிவு 302 (கொலை), பிரிவு 436 (வீடு உள்ளிட்டவற்றை அழிக்கும் நோக்கத்தோடு தீ வைத்தல்), 153 ஏ (இரு சமூகங்களுக்கிடையே பகையை தூண்டுதல்) மற்றும் 153 பி (தேச ஒற்றுமைக்கு எதிராக குற்றங்களில் ஈடுபடுதல்) ஆகிய இந்திய தண்டனை பிரிவுகளின் கீழ் சஜ்ஜன் குமாருக்கு தண்டனை வழங்கியது. இதன் அடிப்படையில் அவருக்கு ஆயுள் தண்டனை அளிப்பதாக நீதிபதிகள் அறிவித்தார்கள்.

இந்திய தண்டனை சட்டப் பிரிவுகள் 320, 436, 153 ஏ, 295-ன் படி அதாவது பத்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ஒரு இலட்ச ரூபாய் அபராதமும், அபராதம் செலுத்த முடியாத நிலையில் ஓராண்டு சிறையும் மூன்று ஆண்டு கடுங்காவல் தண்டனையும் மேலும் இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் அனுபவிக்க வேண்டும்.

தேச பிரிவினை, குஜராத், கந்தமால், மும்பை, முசாஃபர் நகரில்நடந்த பெருந்திரள் கொலைகள்!

சஜ்ஜன் குமார்.

தண்டனை அறிவிப்பின் போது, “1984 -ஆம் ஆண்டு நவம்பர் தொடக்கத்தில் தூண்டப்பட்ட கலவரத்தால் டெல்லியில் மட்டும் 2,733 பேர் கொல்லப்பட்டார்கள். நாடுமுழுவதும் 3,350 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள் (அரசு அறிவிப்பின் படி இந்தக் கணக்கு). அதுதான் முதலும் கடைசியுமான பெருந்திரள் குற்றம் என சொல்ல முடியாது. 1984 நவம்பரில் அப்பாவி சீக்கியர்களுக்கு எதிரான கொலைகள்  பிரிவினையின்போது நடந்த வலி மிகுந்த சம்பவங்களை நினைவு படுத்துகின்றன” என சுட்டிக்காட்டியதோடு, குஜராத்தில் நடந்த முசுலீம் இனப்படுகொலை, ஒடிசா கந்தமாலில் நடந்த கொலைகள், பாபர் மசூதி இடிப்புக்குப் பின் மும்பையில் நடந்த கொலைகள், உத்தர பிரதேச மாநிலம் முசாஃபர் நகரில் நடந்த படுகொலைகள் ஒரே பாணியில் நடத்தப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

மும்பய்க் கலவரம். (கோப்புப் படம்)

“சிறுபான்மையினரை குறிவைத்து, ஆதிக்கத்தில் உள்ள அரசியல் கட்சிகள், சட்டத்தை அமலாக்குகிறவர்களின் துணையுடன் இந்தப் படுகொலைகள் நடத்தப்பட்டிருக்கின்றன” எனக் கூறிய நீதிபதிகள், “பெருந்திரள் கொலைகளைச் செய்த கிரிமினல்கள் அரசியல்வாதிகளின் ஆதரவைப் பெற்றதோடு, விசாரணையில் இருந்தும் தண்டனையில் இருந்தும் தப்பினார்கள். இதுபோன்ற கிரிமினல்களை நீதியின் முன் நிறுத்துவது நமக்கு பெரும் சவாலாக உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய பதில் பெறுவதற்குள் தசாப்தங்கள் கடந்து விடுகின்றன. இது நமது  நீதிமுறையை வலுப்படுத்த வேண்டியதை சுட்டிக்காட்டுகிறது. ‘மனிதநேயத்துக்கு எதிரான குற்றங்கள்’ அல்லது ‘இனப்படுகொலைகள்’ எனப்படுபவை  நமது உள்நாட்டு குற்ற சட்டத்தின் ஒரு பகுதியாகவே உள்ளன. இந்த ஓட்டையை நாம் உடனடியாக கவனிக்க வேண்டும்” என்றனர்.

முசாஃபர்நகர் கலவரம். (கோப்புப் படம்)

மத அடிப்படையில் மக்களைக் கொல்வதும் நிறுவனமயமாக்கப்பட்ட வன்முறையும் நமது நாட்டுக்கு புதிதல்ல. கடந்த கால நினைவுகளை கிளறிய நீதிமன்றம், 1947-ஆம் ஆண்டின் கோடை காலத்தில் நடந்த பிரிவினையின் போது, நாடு மிக மோசமான பெருந்திரள் கொலைகளைப் பார்த்தது, பல இலட்சக்கணக்கான சீக்கியர்கள், முசுலீம்கள் மற்றும் இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

அம்ரிதா ப்ரீதம்.

பிரிவினையின்போது இளம் கவிஞராக இருந்த அம்ரிதா ப்ரீதமின் கவிதைகளை நீதிபதிகள் மேற்கோள் காட்டினர். லாகூரிலிருந்து இரண்டு குழந்தைகளுடன் இந்த நாட்டுக்கு அம்ரிதா ப்ரீதம் மேற்கொண்ட துயரமான பயணத்தை ’வாரிஸ் ஷாவுக்கு கவிதை’ என்ற தலைப்பில் கவிதையாக எழுதியிருந்தார்.

“வெறுப்பின் விதைகள் வேகமாக வளர்ந்துவிட்டன
எங்கு நோக்கினும் ரத்தத்துளிகள்
நஞ்சு பாய்ந்த தென்றல் காட்டில் உள்ள மூங்கில் குழல்களை பாம்புகளாக மாற்றிவிட்டன
அவைகளின் நஞ்சு, ஒளியும் வண்ணமும் மிக்க பஞ்சாபை நீலமாக மாற்றிவிட்டன”

வழக்கின் பின்னணி

1984-ஆம் ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதி இந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்தி தன்னுடைய இரண்டு சீக்கிய பாதுகாவலர்களால் படுகொலை செய்யப்பட்டார். அதன் பின், 37 ஆண்டுகள் கழித்து, இந்த நாடு மாபெரும் மனித துயரை மீண்டும் எதிர்கொண்டது. நவம்பர் 1 முதல் நவம்பர் 4 வரையான நான்கு நாட்களில் டெல்லியில் மட்டும் 2733  சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள்.  அவர்களின் வீடுகள் அழிக்கப்பட்டன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த வன்முறையில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள்.

இந்த படுமோசமான குற்றங்களுக்குப் பின்னால் இருந்த பலர் அரசியல்வாதிகளின் அரவணைப்பைப் பெற்றனர். இருபதாண்டு காலமாக விசாரணையிலிருந்தும் தண்டனையிலிருந்து தப்பினார். பத்துக்கும் மேற்பட்ட கமிட்டிகள், கமிஷன்கள் அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டபின்,  2005-ஆம் ஆண்டில் இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டது.

சுட்டுக் கொல்லப்பட்ட இந்திரா காந்தி. (கோப்புப் படம்)

தற்போதைய மேல் முறையீடு சிபிஐ விசாரித்த தென்மேற்கு டெல்லியில் ராஜ் நகர் பகுதி-1 ல் நடந்த ஐந்து சீக்கியர்களின் படுகொலை மற்றும் ராஜ் நகர் பகுதி-2ல் நடந்த குருத்வாரா எரிப்பு குறித்தது.  அப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சஜ்ஜன் குமார் உள்ளிட்ட ஆறு பேர் மீது 2010-ஆம் ஆண்டு வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை தொடங்கியது. மூன்று ஆண்டுகள் கழித்து விசாரணை நீதிமன்றம், ஐந்து பேரை குற்றவாளிகளாக அறிவித்தும் சஜ்ஜன் குமாரை விடுவித்தும் தீர்ப்பளித்தது. ஐவரில் மூவர் மீது ஆயுதம் ஏந்தி கலவரத்தில் ஈடுபட்டது, கொலை செய்தது போன்ற குற்றங்களும் இருவர் மீது ஆயுதம் ஏந்தி கலவரம் செய்தல் என்ற குற்றமும் நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் சொன்னது.  சஜ்ஜன்குமார் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐ மேல்முறையீடு செய்தது. தண்டனை பெற்றவர்களும் விடுவிக்கக்கோரி மேல்முறையீடு செய்தார்கள்.

படிக்க:
உ.பி. இந்துமதவெறிக் கலவரம் : மோடியின் நரபலி அரசியல் !
நூல் அறிமுகம் : வகுப்புவாதம் ஒர் அறிமுக நூல் – பிபன் சந்திரா

இந்த மேல்முறையீட்டு வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் சஜ்ஜன் குமாரை சதித்திட்டம் தீட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் குற்றவாளி என தீர்ப்பளித்தது. மற்ற ஐவரின் மேல் முறையீட்டில் விசாரணை நீதிமன்றம் அளித்த தண்டனையை உறுதி செய்த நீதிமன்றம், சதித்திட்டம் தீட்டியது தொடர்பாக கூடுதல் தண்டனையையும் அறிவித்தது.

சாட்சியங்களின் மன உறுதி!

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள், மூன்று சாட்சியங்களின் மன உறுதி மற்றும் விடாமுயற்சியின் பலனாக நீதியின் முன் நிறுத்தப்பட்டனர். ஜக்திஷ் கவுர் –  கொல்லப்பட்ட ஐவரில் இவருடைய கணவர், மகன் மற்றும் மூன்று உறவினர்கள் அடங்குவர். ஜக்‌ஷிர் சிங் – கவுரின் உறவினர் –  நிர்ப்ரீத் கவுர், இவர் குருத்வாரா எரிக்கப்படுவதையும், வன்முறை கும்பலால் அவருடைய அப்பா உயிரோடு எரிக்கப்பட்டதையும் பார்த்தவர்.

ஒடிசா கந்தமால் கலவரம். (கோப்புப் படம்)

தீர்ப்பின் இறுதியில் நீதிபதிகள் இவ்வாறு தெரிவித்தனர்… “1984-ஆம் ஆண்டு நடந்த படுகொலை ‘மனிதநேயத்துக்கு எதிரான குற்றங்கள்’.  சமூகத்தின் கூட்டு மனசாட்சியின் முன் அவை அதிர்ச்சியை நீண்ட காலத்துக்கு ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். இந்த நீதி கிடைக்க 30 ஆண்டுகள் ஆனது என்பதை மறுக்க முடியாது. நமது குற்றவியல் நீதி அமைப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதும் அது நிமிர்ந்து நிற்கிறது. ஜனநாயகம், சட்டத்தின் வழியில் நடைபெறும் போது இத்தகைய பெருந்திரள் குற்றங்களைச் செய்தவர்கள் நீதியின் முன் நிறுத்த முடியும். நீதி வேண்டி பாதிக்கப்பட்டு பொறுமையோடு காத்திருக்கும் எண்ணற்றவர்களுக்கு ‘உண்மை வெல்லும்;  நீதி கிடைக்கும்’ என்பதை உறுதிசெய்ய வேண்டும்”.

குஜராத் கலவரம். (கோப்புப் படம்)

அபூர்வமாக அரசியல் கொலைகள் குறித்து நீதிமன்றங்கள் உணர்ச்சி பெருக்கோடு தராசை உயர்த்திப் பிடித்து தீர்ப்பு எழுதுவதுண்டு. ஆனால் காலம்தாழ்த்திய நீதியால் என்ன பயன்? சீக்கிய படுகொலை பாணியில் நான்கைந்து பெருந்திரள் படுகொலைகள் நடந்துவிட்டன. ஒருவேளை நீதித்துறை அரசியல் தலையீடு அற்றதாக இருந்து, சீக்கிய படுகொலைகளுக்கு நீதி உடனடியாக கிடைத்திருந்தால், அதே பாணியிலான கும்பல் கொலைகளுக்கு இந்தியாவில் இடமிருந்திருக்காது. ஜனநாயகத்தில் அப்படி நடக்க சாத்தியமே இல்லை. குஜராத் படுகொலைகளுக்கு நீதி கிடைக்க இன்னும் முப்பதாண்டுகள் காத்திருக்க வேண்டும் அல்லது நீதியே கிடைக்காமலும் போகலாம் என்பதைத்தான் இந்தத் தீர்ப்பு மறைமுகமாகக் கூறுகிறது.

தமிழாக்கம்: அனிதா
நன்றி: நியூஸ்கிளிக்

நூல் அறிமுகம் : வகுப்புவாதம் ஒர் அறிமுக நூல் – பிபன் சந்திரா

குப்புவாதம் அடிப்படையில் ஒரு கருத்தியலாகப் பார்க்கப்படுகின்றது. இந்நூலில் நான் வாதிட்டுள்ளதைப்போல, வகுப்புவாதத்தை மண்ணைக் கவ்வச் செய்து, அடியோடு அழிக்க வேண்டுமானால், மக்கள் மனங்களில் இருந்து வகுப்புவாத எண்ணங்களை வேரோடு கிள்ளியெறிய வேண்டியதும், இதற்கென வகுப்புவாத கருத்தியலுக்கு எதிரான தொடர் போராட்டங்களை மேற்கொள்ள வேண்டியதும் அவசியமாகிறது. நமது சொந்த அனுபவங்கள் மட்டுமல்ல, அனைத்து நாடுகளின் அனுபவங்களும் நமக்கு இதையே உணர்த்துகின்றன. உதாரணமாக, ஹிட்லர் தன் சுயசரிதையை எழுதியபோதே அவரது இன அடிப்படைவாதக் கொள்கைகள் முழுமையாக இடம் பெற்றுவிட்டன. ‘மெயின் கெம்ப்’ என்ற அந்தப் புத்தகம் ஹிட்லர் பதவிக்கு வருவதற்கு வெகுகாலம் முன்பாகவே வெளியிடப்பட்டுவிட்டது. அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதே அவர் நோக்கம். அவரும் மற்ற வலதுசாரித் தலைவர்கள் போலத்தான் என்று பலரும் நினைத்தார்கள். ஆனால், தனது இன அடிப்படைவாதக் கொள்கைகள் மூலம் தனது கருத்தியல் உள்ளடக்கத்தை அலட்சியப்படுத்துவது எத்தகைய ஆபத்தாக முடியும் என்பதை நிரூபித்து விட்டார். (இதேபோல, இந்த மத வகுப்புவாதத்தைப் புரிந்து கொள்ள, எம்.எஸ். கோல்வால்கர் எழுதிய ‘தி வி. (The We), வி.டி. சவார்க்கர் எழுதிய ‘இந்துத்துவா’ ஆகிய புத்தகங்களையும், இஸ்லாமிய வகுப்புவாதத்தைப் புரிந்து கொள்ள முகமது அலி ஜின்னாவின் 1937க்குப் பிந்தைய ‘உரைகளையும் வாசிக்க வேண்டும்.)

இதேபோல், கருத்தியல் ரீதியாகத் தோற்கடிக்காமல் இனவாதம், வகுப்புவாதங்களை அகற்ற முடியாது என்று, மற்றொரு உதாரணம் அமெரிக்கா. அங்கு 1864 லேயே ஆபிரகாம் லிங்கனால் அடிமைமுறை ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆனாலும், அங்கு அடிமை – உடைமையாளர்களின் கருத்தியல் தொடர்ந்ததுடன், அங்கு அடிமைகளாக வாழ்ந்த கருப்பின மக்களுக்கு ஏராளமான துயரங்கள் தொடர்ந்தன. 20 ஆம் நூற்றாண்டில் குறிப்பாக, 1945-க்குப் பிறகு, கருப்பின மக்களுக்கு மேலும் பல உரிமைகள் வழங்கப்பட்ட பின்னர்தான் நிலைமை ஓரளவுக்கு சீரடைந்தது. கருப்பினத்தவர் – வெள்ளையர், அறிவு ஜீவிகள் – பொதுமக்கள் என இன ஒதுக்கலுக்கு எதிராக ‘அமெரிக்கர்கள் ஒன்றிணைந்து மேற்கொண்ட கடுமையான கருத்தியல் போராட்டங்களுக்குப் பின்னர்தான் இது சாத்தியமாகியது. அந்த நாட்டில் இன ஒதுக்கல் முறை மங்கத் தொடங்கி, கருப்பின மக்களின் சமூக நிலை மேம்படத் தொடங்கிவிட்டபோதும், இன ஒதுக்கலை முற்றிலும் அகற்ற மேற்கொள்ள வேண்டியவை இன்னும் மீதமுள்ளன.

‘இனவாதம், வகுப்புவாதம், சாதியம் போன்ற கருத்தியல்கள் அகற்றப்படுவதற்கு மிகவும் விரிவான, நீண்டகால நோக்கில் முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும். சோவியத் யூனியனில் யூதர்களுக்கு எதிரான இன ஒதுக்கல் (anti-semitism) ஒழிக்கப்பட்டதை ஒரு நல்ல உதாரணமாகக் கொள்ளலாம். ஜார் ஆண்ட ரஷ்யாவில் யூதர்களுக்கு எதிரான இனவெறி கடுமையாகப் பின்பற்றப்பட்டது. இதற்கு எதிராக, கம்யூனிச இயக்கம் போராடியது. இதன் முக்கியத் தலைவர்களில் பலர் யூதர்கள். 1917க்குப் பிறகு, சோவியத் புரட்சி நடந்து புதிய அரசு உருவானதும், லெனின் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் இதர முக்கியத் தலைவர்கள் பள்ளிகளிலும், ஊடகங்களிலும், கலை உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும், அனைத்து வடிவங்களிலும் யூத இன ஒதுக்கலைக் கடுமையாகத் தாக்கினர். என்றாலும் அவ்வப்போது நெருக்கடி ஏற்படும் தருணங்களில் வெடித்துக் கிளம்புகிறது, சோவியத் சமூகத்தின் ஒரு சக்தியாக நிலைத்து விட்டது.

கேலிச்சித்திரம்: ஓவியர் முகிலன்.

துரதிர்ஷ்டமாக, இந்த உண்மையை நமது மதச்சார்பற்ற சக்திகள் போதுமான அளவுக்கு உணர்ந்து கொள்ளவில்லை. அவர்கள் வகுப்புவாதச் சக்திகளையும், கட்சிகளையும் அரசியல் ரீதியாக எதிர்த்து வந்திருக்கிறார்கள். ஆனால், வகுப்புவாதக் கருத்தியலை அம்பலப்படுத்தவோ, எதிர்க்கவோ இல்லை. வகுப்புவாதக் கட்சிகள் ஒவ்வொரு முறை அரசியல் பின்னடைவைச் சந்திக்கும்போதும் அவர்கள் பெரும் திருப்தி அடைகிறார்கள். ஆனால், உதாரணமாக, 2004 இல் பா.ஜ.க. தோற்கடிக்கப்பட்டுவிட்டபோதும், வகுப்புவாதம் 2004-க்கு முன்பிருந்ததைப் போன்றே இன்றும் வலுவாக நீடிக்கிறது. – கடந்த காலத்திலிருந்து மேலும் சில உதாரணங்களை நோக்கும்போது இந்த அம்சம் மேலும் மேலும் தெளிவாகிறது. – காந்திஜியின் உயிர்த்தியாகம், 1951-52 பொதுத் தேர்தலில் நேரு மேற்கொண்ட வலுவான பிரச்சாரம் ஆகியவற்றின் காரணமாக 1950களின் தொடக்கத்தில் தேர்தல் ரீதியாக வகுப்புவாதக் கட்சிகள் பலவீனமடைந்திருந்தன. தேர்தல் ரீதியாக அவர்கள் இருப்பு காலியானது. நாடாளுமன்றத்திலும் இடதுசாரிக் கட்சி முக்கிய எதிர்க்கட்சியாக அமர்ந்தது. இதைப்பார்த்து நேருவும், இடதுசாரிகளும் பெரும் திருப்தி கொண்டனர். ஆனால், 1959 இல் ஜபல்புர் கலவரம் மூலம் வகுப்புவாதிகள் தமது சுயரூபத்தைக் காட்டினர். 1960-62 காலகட்டத்தில் ஏற்பட்ட இந்திய-சீன நெருக்கடி மற்றும் போர்களின் விளைவாக வகுப்புவாத சக்திகள் மங்கத் தொடங்கியபோது மீண்டும் ஆழ்ந்த தூக்கத்தில் மூழ்கினர். இதேபோல, 1984 தேர்தலில் பாஜக ஒன்றிரண்டு இடங்களைக் கூடப் பெற முடியவில்லை . ஆனால், வகுப்புவாத கருத்தியல் தொடர்ந்து வளர்ந்தது. 1980களின் தொடக்கத்தில், பா.ஜ.க. மேற்கொண்ட காத்மண்டு முதல் கன்னியாகுமரி வரை கங்கை நீர் யாத்திரை முயற்சி வெற்றிபெறவில்லை . 1984 இல் இராமர் பிறந்த இடப்பிரச்சினை தொடர்பாக உ.பி.யிலும், பீகாரிலும் சிறு சிறு ரத யாத்திரைகளை மேற்கொண்டது. இவற்றை மதச்சார்பற்ற சக்திகள் அலட்சியப்படுத்தின. ஆனால், இந்த யாத்திரைகள் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து 1988 இல் ராமர் பிறந்த இடம் தொடர்பாக அகில இந்திய அளவில் ஒரு ரத யாத்திரை மேற்கொள்ளும் துணிச்சலை பாஜக பெற்றது. வகுப்புவாதக் கருத்தியல் பரவலாக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் காலதாமதம் ஏற்பட்டுவிட்டது என்றபோதும் நாடு இப்போதுதான் விழித்துக் கொண்டுள்ளது.

ஒருவகையில், வகுப்புவாதக் கருத்தியலை அலட்சியப்படுத்தியதன் விளைவாகவே, 1947இல் தேசப் பிரிவினை ஏற்பட்டது. 1936-37 தேர்தலில் அகில இந்திய அளவில் 3 விழுக்காடு இடங்களும் சட்டமன்றங்களில் 11 விழுக்காடு இடங்களும் முஸ்லீம் லீக் பெற்றிருந்தது. இந்த வகுப்புவாதம் தோற்றத்தை அப்போது மதச்சார்பற்ற சக்திகள் அலட்சியப்படுத்தின. 1945 இல் இது அச்சுறுத்தத்தக்க அளவு வலுவாக வளர்ச்சியடைந்தபோதுதான் அவர்கள் ஆழ்துயலில் இருந்து விழித்தனர். ஆனால், இது காலம் கடந்த விழிப்பு.

படிக்க:
ஆஸ்திரேலியா நிலக்கரிச் சுரங்கத்தில் சொந்தப் பணத்தை போடுவாராம் அதானி !
இந்துத்வா கும்பலின் சுதேசிப் பித்தலாட்டம்!

இதேபோல, 1940களிலேயே பஞ்சாபிலும், வட இந்தியாவிலும் ஆர்.எஸ்.எஸ். துளிர்விடத் தொடங்கியிருந்தது. ஆனால், இது குறைந்த அளவிலான மக்கள் கவனத்தையும், அரசியல் வெளியையும் கொண்டிருந்ததால், ஒரு அழிவு சக்தியாக இது வளர்ச்சியடையும் என்று பார்க்கப்படவில்லை. 1946-47ஆம் அண்டுகளில் ஏற்பட்ட இனப்படுகொலைகளிலும், தொடர்ந்து காந்திஜி படுகொலையிலும் இந்த சக்திகளின் கைவரிசையைக் காண நேர்ந்தபோது, எத்தகைய அளவுக்கு ஆர்.எஸ்.எஸ். வளர்ந்துவிட்டது என்பதை நாடு உணர்ந்தது.

தற்காலத்திலும் மூன்று உதாரணங்களைக் காட்டலாம். 2002 இல் குஜராத் படுகொலைகளைக் கண்டு ஒட்டுமொத்த நாடே நிலை குலைந்தது. இந்த படுபாதகச் செயல்களுக்கு நரேந்திர மோடிதான் காரணம் என்று சரியாகக் குற்றமும் சாட்டியது. ஆனால், இதன் மூல வேர் மோடியிடம் இல்லை . மாறாக, நீண்ட காலமாக, 1970 களிலிருந்தே குஜராத் சமுதாயம் வகுப்புமயப்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதன் விளைவுகளை அறுவடை செய்தவர் மட்டுமே மோடி.

இதேபோல, 1950களின் தொடக்கத்திலிருந்தே பஞ்சாபில் வகுப்புச் சாயம் தோய்க்கப்பட்டு வந்துள்ளது. 1980 கள், 90 களில் பிந்தரன்வாலேக்கள் உருவானது, வகுப்புக் கலவரங்கள் வெடித்தது ஆகியன முந்தைய பஞ்சாபில் வகுப்புவாதக் கருத்தியல் பரவத் தொடங்கியதன் கூட்டு விளைவுகளே.

இறுதியாக, கேரளாவைக் குறிப்பிட விரும்புகிறேன். கடந்த 15-20 ஆண்டுகளில் இங்கு பா.ஜ.க. ஒரு இடம்கூட பெற முடிந்ததில்லை. ஆனால், அங்கும் நடுத்தர மக்கள் மனதில் வகுப்புவாதம் பரவி வருவதையும் நாம் அலட்சியப்படுத்தப் போகிறோம் என்றால், இதற்கு நாமே பொறுப்பு. (பிபன் சந்திரா, 2008 இல் எழுதியுள்ள இந்நூலுக்கான முன்னுரையிலிருந்து…)

பிபன் சந்திரா, இமாசலப்பிரதேசத்தின் காங்ராவில் பிறந்தவர். லாகூரின் ஃஃபார்மன் கல்லூரி மற்றும் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பயின்றவர். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறைப் பேராசிரியராக இருந்தவர். நேஷனல் புக் டிரஸ்டின் தலைவராக பதவி வகித்தவர். அரசியல் பொருளாதாரம், தேசியம், காலனியம், வகுப்புவாதம் ஆகிய துறைகளில் பல நூல்களை எழுதியிருக்கிறார்.

நூல்: வகுப்புவாதம் – ஓர் அறிமுக நூல்

ஆசிரியர்கள்: பிபின் சந்திரா
தமிழில்: மூ. அப்பணசாமி

வெளியீடு: நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா,
நேரு பவன், 5, இன்ஸ்டிடியூஷனல் ஏரியா பேஸ் – 2, வஸந்த் குஞ்ச், புது தில்லி – 110070.

பக்கங்கள்: 134
விலை: ரூ.60.00

வினவு மின் நூல்கள் (e books)

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு:
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி: 99623 90277

 

ஆஸ்திரேலியா நிலக்கரிச் சுரங்கத்தில் சொந்தப் பணத்தை போடுவாராம் அதானி !

ந்திய சுரங்க பன்னாட்டு நிறுவனமான அதானி குழுமம், ஆஸ்திரேலியாவின் கலிலீ படுகையில் உள்ள தனது சிறிய நிலக்கரிச் சுரங்கத்திற்கு தன் சொந்த நிதியையே பயன்படுத்திக் கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது. சுமார் 30-க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச வங்கிகள் மற்றும் கடன் நிறுவனங்கள், கடன் தர மறுத்துள்ள சூழலில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆஸ்திரேலிய கூட்டாட்சியின் வளங்கள் துறை அமைச்சர் ’மாட் கானவன்’, அதானி குழுமத்தை ஆஸ்திரேலியாவின் சிறிய போர்வீரன் என்று வர்ணித்திருக்கிறார். அக்குழுமத்தின் தற்போதைய சுருக்கப்பட்ட புதிய செயல்திட்டத்தின் பொருளாதார ஆதாயங்களையும் அவர் பாராட்டியிருக்கிறார்.

அதானி சுரங்க நிறுவனம் தனது செயல்திட்டத்தைச் சுருக்குவது என்பது முதன்மையாக நடந்துள்ளது. அதானி சுரங்க நிறுவனத்தின் தலைமைச் செயலர் ’லூகாஸ் டவ்’ கூறுகையில், “இந்த புதிய சுரங்கம் அமைக்க சுமார் 2 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் செலவு பிடிக்கும். துவக்கத்தில் இச்சுரங்கத்தில் இருந்து ஆண்டுக்கு 15 மில்லியன் டன் அனல் நிலக்கரி எடுக்கப்படும். பின்னர் திட்டம் படிப்படியாக ஆண்டுக்கு 27.5 மில்லியன் டன் எடுக்கும் அளவுக்கு விரிவாக்கப்படும்” என்று தெரிவித்தார்.

அதானியுடனான மோடி

முன்னதாக, கடந்த 2010-ம் ஆண்டில் இந்நிறுவனம், ஆண்டுக்கு 60 மில்லியன் டன் அனல் நிலக்கரி தோண்டி எடுக்கும் வகையில் திட்டமிட்டிருந்தது. அதற்காக சுமார் 16.5 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர் முதலீடு செய்யவும் திட்டமிட்டிருந்தது. அதை ஒப்பிடும் போது தற்போதைய முதலீடு மிகவும் குறைவானது. எடுக்கப்படும் நிலக்கரியை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்வதற்காகவே அதானியின் அப்பாட் நிலக்கரி துறைமுக முனையம் உருவாக்கப்பட்டது. துறைமுகத்திற்கு நிலக்கரி எடுத்துச் செல்லும் வகையில், சுமார் 388 கிமீ தூரத்திற்கு புதிய ரயில்பாதை அமைக்கப்படுவதற்கு முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போதைய சுருக்கப்பட்ட திட்டத்தின் படி ஏற்கனவே இருக்கும் ரயில்வே உட்கட்டமைப்பை பயன்படுத்திக் கொள்ள அதானி குழுமம் அனுமதி பெற வேண்டும்.

ஆனால், இரண்டு பில்லியன் ஆஸ்திரேலிய டாலர் மதிப்பு கொண்டதாக இருந்தாலும், சுரங்க வேலைகள் கண்டிப்பாக முன்னேறும் என்பதற்கு இப்போது வரையிலும் எந்தவித உத்தரவாதமும் இல்லை. ஒரு புதிய நிலக்கரி சுரங்கத்தை திறப்பது என்பது சமூக அளவிலும், சுற்றுச் சூழல் அடிப்படையிலும் பொறுப்பற்ற தன்மையுடையதே ஆகும். ஏற்கனவே பருவநிலை மாறுபாடு குறித்த சர்வ அரசுகளின் குழு அளித்துள்ள அறிக்கையின்படி ஆஸ்திரேலியா தமது மாசுபாட்டு அளவைக் குறைக்கும் நடைமுறையில் எதிர்பார்த்த வகையில் முன்னேற்றத்தைக் காட்டவில்லை என்பது கண்கூடு. நடப்பு 2018-ம் ஆண்டு நான்காவது மிகச் சூடான ஆண்டாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொருளாதாரம் எவ்விதத்திலும் மேலேறாத சூழலில், சமீபத்திய ஆற்றல் பொருளாதாரம் மற்றும் நிதி ஆய்வு நிறுவனத்தின் (IEEFA) அறிக்கை, நிலக்கரி பொருளாதாரம் மிகப்பெரும் சரிவை சந்தித்திருக்கிறது என்பதை சுட்டிக் காட்டுகிறது. ஆசியச் சந்தைகள் மலிவான அதிக திறன்மிக்க மாற்று எரிசக்தியை நோக்கி மாறிக் கொண்டிருக்கின்றன என்பதையும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. இந்தியாவில் ஏற்கனவே நடைமுறையிலிருக்கும் அனல் நிலக்கரி சக்தியின் உற்பத்திச் செலவு ஒரு மெகாவாட்டுக்கு 60-80 அமெரிக்க டாலர்களாக இருக்கிறது. புதிய வகை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்திச் செலவை விட நிலக்கரி சக்தி உற்பத்தி இருமடங்கு அதிக செலவு கொண்டதாகும். அதானி குழுமத்தின் நிலக்கரிகள் வாங்கப்படும் குஜராத்தில் உள்ள முந்திரா நிலக்கரி ஆற்றல் நிலையம், ஏற்கனவே குறைவான உற்பத்தி திறனோடு இயங்கிவருகிறது. கூடுதலாக குறிப்பிடத்தக்க காலகட்டத்திற்கு மூடப்பட்டிருந்தது.

அதானி குழுமம் ஆரம்பத்தில் போடப்பட்ட 388 கிமீ ரயில் பாதை இணைப்புத் திட்டத்தைக் கைவிட முடிவு செய்துள்ளது. அதோடு ஏற்கனவே உள்ள ஆரிசோன் ரயில் கட்டமைப்பை பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கலாம். எனினும் சுரங்கத்திற்கும் ஆரிசோன் ரயில் கட்டமைப்பிற்கும் இடையில் இருக்கும் சுமார் 200 கிமீ இடைவெளியை இணைக்கச் செலவு செய்ய வேண்டியது வரும். ஆரிசோன் குழுமத்துக்கு, அதானி குழுமத்தின் கோரிக்கைக்கு செவி சாய்க்கும் கடப்பாடு இருந்தாலும், அதன் கோரிக்கை மனுவை பார்வையிடவோ, ஏற்றுக் கொள்ளவோ இல்லை.

சுற்றுச் சூழல் மற்றும் தனிச்சிறப்பான பிரச்சினைகள் :

அதானி குழுமத்தின் சுற்றுச்சூழல் மேலாண்மைப் பிரச்சினைகள் ஏற்கனவே நீடிக்கும் குறிப்பிடத்தக்க பிரச்சினையாகும். குறிப்பாக அப்பாட் பாயிண்ட் முனையத்துக்கு அருகில் உள்ள காலெய் பள்ளத்தாக்கின் சதுப்பு நிலங்களில் உள்ள நீர் கெடுதல் போன்ற பிரச்சினைகள் நீடிக்கின்றன. இந்த செயல்திட்டம் மாற்றப்பட்டதன் காரணமாக இவை எதுவும் இல்லாமல் போகப் போவதும் இல்லை.

எதிர்ப்பு தெரிவிக்கும் ஆஸ்திரேலிய மக்கள்.

பாரம்பரிய உடைமையாளர்களின் ஒப்புதலைப் பெறுவதும் சிக்கல் நிறைந்ததாகவே இருக்கிறது. 12 பேர் கொண்ட பூர்வீகக் குழு இரண்டாக பிரிந்து கிடக்கிறது. ஏற்கனவே இருக்கும் அதானியின் தனிச்சிறப்பான நில உபயோக ஒப்பந்தத்தை எதிர்த்து வங்கன் மற்றும் ஜகலின்காவ் மக்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அங்கிருக்கும் குழுவினர் இந்த ஒப்பந்தத்திற்கு உண்மையில் ஒப்புதல் தராத நிலையில், பூர்வீக மக்களின் கருத்தை ஒதுக்கித் தள்ளி சுரங்கத்திற்கு அனுமதி பெறுவது என்பது சமூக ரீதியிலும், கலாச்சார ரீதியிலும் மோசமான நிலையையே ஏற்படுத்தும். இந்த ஒப்பந்தத்தை நீதிமன்றம் செல்லாததாக அறிவித்து விட்டால், இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவது கடினம்.

படிக்க:
மோடி அரசு: அதானி குழுமத்தின் ஏஜென்சி!
மோடி – முதலாளிகளின் தலைவன் தொழிலாளிகளின் பகைவன்

ஆகவே, அதானி குழுமம் இந்த சுருக்கப்பட்ட குயின்ஸ்லாந்து நிலக்கரி சுரங்கத்தில், தானே முதலீடு செய்வது என்பது அவரது உறுதியைக் காட்டுகிறது. அதே நேரம், வேகமாக மாறிவரும் காலநிலை மாற்றம் மற்றும் மாறி வரும் ஆற்றல் துறை மற்றும் அவை கோரும் விரிந்த சமூக மற்றும் சுற்றுச் சூழல் பொறுப்புகளை புரிந்து கொள்ளாமல் அதனை எதிர்க்கவும் செய்கிறது என்பதையே காட்டுகிறது.

சமந்தா ஹெப்பர்ன், டீக்கின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டீக்கின் சட்டப் பயிலகத்தில், ஆற்றல் மற்றும் இயற்கை வளச்சட்டத்திற்கான மையத்தின் இயக்குனராக பணி புரிகிறார்.

அதானியின் ஆஸ்திரேலிய சுரங்கம் செயல்படுவதில் செய்யப்பட்டுள்ள சுற்றுச் சூழல் வரம்புமீறல்கள், சட்டரீதியான வரம்பு மீறல்கள் ஒருபுறமிருக்க, இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டும், குறைந்து வரும் நிலக்கரி சந்தையை கணக்கில் கொண்டும் பல வங்கிகளும் கடன் நிறுவனங்களும், நிதி வழங்க மறுத்துள்ளன. அதானி குழுமமும் தனது பணத்தைப் போடுவதாகக் கூறியுள்ளது.

அதானி குழுமத்தின் பணம் என்பது அதானியின் இந்திய நிறுவனங்களின் பெயரில் வாங்கியுள்ள இந்திய வங்கிகளிலிருந்து பெற்ற பணமாகவோ, அல்லது இந்திய வங்கிகளுக்குத் திருப்பிச் செலுத்தப்பட வேண்டிய பணமாகவோதான் இருக்க முடியும். கேப்பையிலும் நெய் வடிக்கும் திறன் கொண்ட நிதிமூலதன நிறுவனங்களே அதானியின் நிலக்கரிச் சுரங்கத்திற்கு பணம் தர மறுத்துள்ளன என்றால், இந்திய வங்கிகளில் உள்ள நமது சேமிப்புப் பணத்தை வைத்தே ஆஸ்திரேலியாவில் அதானி சூதாட இருக்கிறார்.

சூதாட்டத்தில் ஜெயித்தால் லாபம் அதானிக்கு, தோற்றால் நாமம் நமக்கு !

தமிழாக்கம்: நந்தன்
மூலக்கட்டுரை: The Conversation

கேள்வி பதில் : யோகி ஆதித்யநாத் பற்றி ஒரு சரியான அலசலை தருவீர்களா ?

யோகி ஆதித்யநாத் பற்றி ஒரு சரியான அலசலை தருவீர்களா …?

– எஸ். செல்வராஜன்

ன்புள்ள செல்வராஜன்,

யோகி ஆதித்நாத் காவிப் படையில் இருக்கும் ஒரு ரவுடி சாமியார். அவரைப் பற்றி வினவு தளத்தில் நிறைய கட்டுரைகள் உள்ளன. அவற்றிலிருந்து சில இணைப்புகளைத் தருகிறோம், படியுங்கள்!

*****

படிக்க: மோடி ஆசியுடன் போட்டியிடும் சன்னியாசி ரவுடி

“கோரக்பூரை கடந்த பதினைந்து ஆண்டுகளாக கட்டுப்படுத்திக் கொண்டிருப்பது யோகி ஆதித்யநாத். 1999-ம் ஆண்டிலிருந்து அவர் கோரக்பூர் பாராளுமன்றத் தொகுதியில் தொடர்ந்து வென்று வருகிறார். இம்முறையும் அவரே வேட்பாளர், அவரே வெற்றி பெறுவார் என்று பரவலாக கருதப்படுகிறது. கோராக்நாத் மடத்தின் தலைமை பூசாரியாகவும் இருக்கும் ஆதித்யநாத், ஹிந்து யுவ வாஹினி என்கிற குண்டர் படை ஒன்றை சொந்தமாக நடத்தி வருகிறார்.

உ.பி.யின் கொலைகார முதல்வர் யோகி ஆதித்யநாத்.

ஹிந்து யுவ வாஹினியின் மூலமாக சிறு சிறு உள்ளூர் தகராறுகளில் தலையிடும் ஆதித்யநாத் கடந்த பத்தாண்டுகளில் சிறிதும் பெரிதுமாக சில பத்து கலவரங்களை நடத்தியிருக்கிறார். தானே முன்னின்று 2007-ம் ஆண்டு கோரக்பூரில் கலவரம் ஒன்றை ஒருங்கிணைத்து நடத்தி அதற்காக சிறை சென்றும் திரும்பியிருக்கிறார். கலவரங்களின் ஊடாக இந்து முசுலீம் மக்களிடையே பிளவுண்டாக்கி இந்துக்களின் காப்பாளராக தன்னை நிலை நிறுத்தியிருக்கிறார். தற்போது கிழக்கு உத்திரபிரதேசத்தின் சில பல சட்டமன்றத் தொகுதிகளது வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் அளவிலான செல்வாக்கையோ ஆதிக்கத்தையோ அவர் அடைந்துள்ளார்.”

*****

படிக்க: ரவுடி யோகி ஆதித்யநாத் : பார்ப்பனிய பாசிசத்தின் ஜனநாயகம்

“அவர்கள் (முஸ்லீம்கள்) ஒரு இந்துப் பெண்ணை எடுத்துக் கொண்டால், நாம் நூறு முசுலீம் பெண்களை எடுத்துக் கொள்வோம்” – இது கண்களில் கொலை வெறியும் கைகளில் சூலாயுதமும் காவி உடையும் காதில் கடுக்கனும் போட்டுக் கொண்டு திரியும் ஒரு சாமியாரின் பிரச்சார உரை. சுவாமி அசிமானந்தா, சாத்வி ஜோதி, சாத்வி ப்ரக்யா, சுவாமி சாக்‌ஷி மகராஜ் உள்ளிட்ட சாமியார்களைப் பற்றி உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தால், இந்த சாமியாரைக் குறித்து அதிர்ச்சி அடைய மாட்டீர்கள். ஆனால் மேற்சொன்ன சாமியார்களை விட அபாயகரமான சாமியாரைக் குறித்து தான் நாம் இப்போது பேசிக் கொண்டிருக்கிறோம். அவர் வேறு யாருமல்ல,  கடந்த ஞாயிற்றுக் கிழமை 19.03.2017 உத்தரப் பிரதேசத்தின் முதல்வராகப் பதவியேற்றிருக்கும் யோகி ஆதித்யநாத் தான் அவர்.

*****

படிக்க: உ.பி முதல்வரின் ஹிந்து யுவவாகினி மீது பாலியல் வன்முறை வழக்கு

“ஆதித்யநாத் ஆட்சிக்கு வந்தவுடன், திடீர் பசுப் பாதுகாவலர்களாக மாறிய இந்தக் கும்பல், மாநிலத்தில் பல்வேறு அங்கீகரிக்கப்பட்ட மாடு வெட்டும் தளங்களையும் இழுத்து மூடியது. ஆண், பெண் இருவர் ஒன்றாக அருகில் நின்று பேசிக் கொண்டிருந்தாலே உடனடியாக அங்கு சென்று அவர்களைத் துன்புறுத்துவதும், போலீசில் ஒப்படைப்பதும் என ரோமியோ எதிர்ப்புப் படையாக ரவுடித்தனம் செய்து வந்தது. இந்த ரோமியோ எதிர்ப்புப் படைதான் தற்போது ஒரு பெண்ணை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளது.”

*****

படிக்க: கோராக்பூர் குழந்தைகள் படுகொலை – மரணத்தின் நிறம் காவி

நாளை ஆகஸ்டு 15 -ம் தேதி. இந்தியா “சுதந்திரமடைந்து” நாளையோடு 70 ஆண்டுகள் நிறைவடைகின்றன. எழுபது ஆண்டு இந்திய சுதந்திரத்தை எழுபது பிஞ்சுக் குழந்தைகளைப் பலியிட்டுக் கொண்டாடி உள்ளது பாரதிய ஜனதா. கடந்த ஒரு வாரத்திற்குள் பாரதிய ஜனதா ஆளும் உத்திர பிரதேச மாநிலத்தின் கோரக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் எழுபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் அநியாயமாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

படிக்க: காவி பயங்கரவாதிகள் ஆட்சியில் காவி மயமாகும் உத்திரப்பிரதேசம் !

இந்த காவி மயமாக்கும் செலவுகளை வைத்து பல ஆயிரம் விவசாயிகளின் விவசாயக் கடனை ரத்து செய்திருக்கலாம். ஆனால் பார்ப்பன பாசிச பாஜக அரசுக்கோ விவசாயிகளை விட காவி மயம் தான் முக்கியம் என்பதற்கு இதை விட வேறு சான்றுகள் தேவையில்லை.

செத்துப் போன ஜெயா ஆட்சி அமைத்தவுடன் ஜோசியக்காரக் கூட்டம் சொன்னபடி அவருக்கு ‘ராசியான’ பச்சை உடையை அணிவதை வழக்கமாக்கினார். பிறகு தமிழகத்தின் பல்வேறு அரசு இடங்களில் பச்சை திணிக்கப்பட்டது. அதே போன்று ‘இந்து ராஷ்டிரத்தை’ நிலை நாட்டுவதற்கு கொலைகள் போக இப்படி காவி பெயிண்ட் அடிக்கும் வேலையை யோகி செய்து வருகின்றார். பெயிண்ட் அடிப்பதில் கூட பாசிஸ்டுகள் எப்படி ஒரே மாதிரி சிந்திக்கிறார்கள் பாருங்கள்!

*****

படிக்க: உ.பி காவி தர்பார் : 1200 போலி மோதல் கொலை – 160 பேர் NSA – வில் கைது ! சிறப்புக் கட்டுரை

இந்து ராஷ்டிரம் எப்படி இருக்கும் என்பதை இரத்த சாட்சியங்களுடன் சொல்கிறது உத்திரப் பிரதேசம். ஆட்சிக்கு முன் கலவரங்களின் மூலம் அச்சுறுத்திய பாஜக இப்போது கைது, கொட்டடிக் கொலை மூலம் தொடர்கிறது. திகைக்க வைக்கும் விவரங்கள், கைதுகள், கதைகள்….!

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும்  கேட்கலாம்:

தங்களின் கேள்விகளை பதிவு செய்யுங்கள்

நூற்றாண்டு கால சுடுகாட்டு பிரச்சினையைத் தீர்க்க வழிகாட்டிய மக்கள் அதிகாரம் !

100 ஆண்டு காலமாக  சுடுகாடு இல்லாத  கிராமம் ! மக்கள்  அதிகாரத்தை கையிலெடுத்ததால் அடிப்படை பிரச்சினை தீர்ந்தது !

ருமபுரி மாவட்டம் 7-வது மைல் கிராமத்தை சேர்ந்த  தாழ்த்தப்பட்ட மக்கள்  100 ஆண்டு காலமாக இறந்தவர்களை  புதைப்பதற்கு  இடம் இல்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் அந்த கிராமத்துக்கு அருகாமையில் உள்ள வழித்தடத்தில் உடலை அடக்கம் செய்து வந்தனர்.

அவ்வாறு அடக்கம் செய்யும் போது, அருகாமையில் உள்ள ஆதிக்கசாதியினர் பிரச்சினை செய்து  உடலை புதைக்கவிடாமல்  தடுத்து வந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள மக்கள் அதிகாரம் தோழர்கள் அப்பகுதி மக்களிடம் கையெழுத்து பெற்று வட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர். அதனை பெற்றுக்கொண்ட துணை வட்டாட்சியர் அப்பகுதி மக்களின் குடும்ப அட்டை  நகலை எடுத்து வந்து கொடுத்தால் நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறினார்.

அவ்வாறு  குடும்ப அட்டை  நகலை  கொடுத்து ஒருவாரம் ஆகியும்  எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் அக்கிராம மக்கள் மீண்டும்  வட்டாட்சியரை   சந்தித்து கேட்கும் போது, அந்த நகலை சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு அனுப்பாமல் அந்த மனு கிடப்பில் போடப்பட்டிருந்தை பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு அருகில் இருந்த அதிகாரியை அழைத்து இந்த மனுவை சம்பந்தப்பட்ட  விஏஓ-விடம் அனுப்பி வைக்குமாறு கூறிவிட்டு, எதற்கும் கலெக்டரை பாருங்கள் என்று கூறினார்.

அவருடைய  பேச்சிலே  அலட்சியம்  மேலோங்கி இருந்ததை பார்த்த கிராம மக்கள் “நாம்  ஏன்  கலெக்டரை  சந்திக்க  வேண்டும். கலெக்டர் நமது கிராமத்தை  நோக்கி வரவேண்டும்” என்று  முடிவு செய்து, “இவருடைய வார்த்தையே பிரச்சினையை  தீர்ப்பதாக இல்லை, இனியும்  அதிகாரிகளை நம்பினால் பிரச்சினை தீராது; இதனால்  அலட்சியம் காட்டும் அதிகாரிகளை அம்பலப்படுத்துவது..” என்று  முடிவு  செய்தனர். அதனடிப்படையில் மக்கள் சார்பில் 10.11.2018 அன்று அப்பகுதி முழுவதும் சுவரொட்டி ஒட்டப்பட்டது.

அடுத்த நாளே பி.டி.ஒ, தாசில்தார், வி.ஏ.ஒ  என அதிகாரிகள் அலறி  அடித்து கிராமத்திற்கு படையெடுத்தனர். அப்போது அப்பகுதி மக்களிடத்தில், கிராம மக்கள்  முடிவு செய்து இடத்தை காட்டினால் அந்த இடத்தை அளந்து பட்டா போட்டு  தருவதாகக் கூறிவிட்டு சென்றனர். அன்று மாலையே அந்த கிராம மக்கள், மற்றும் மக்கள் அதிகாரத் தோழர்கள் என ஒன்று கூடி சுடுகாட்டிற்கு  இடத்தை ஒதுக்குவதற்காக ஜனநாயகப் பூர்வமாக முடிவு எடுத்து அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.  பிடிஒ-யும்  உங்களுக்கான பிரச்சினையை உடனடியாக  தீர்த்து வைக்கிறோம் என்று கூறிய வகையில் அதற்கான பணி நடந்து வருகிறது.

பிறகு அக்கூட்டத்தில் மக்கள் அதிகாரம் தருமபுரி மண்டல குழு உறுப்பினர், தோழர் சிவா  பேசும்போது “மக்கள்  அனைவரும்  ஒற்றுமையாக  இருந்து  அதிகாரத்தை  கையிலெடுத்தால்  அனைத்து  அடிப்படை  பிரச்சினைகளும்  தீரும், அதிகாரிகளைத் தேடி  நாம்  செல்லத் தேவையில்லை;  மக்களுக்காகதான் அதிகாரிகள். எனவே  நம்மை  தேடி  அவர்கள் வரவேண்டும்” என்று பேசினார். நாம்  ஒற்றுமையாக  இருந்ததால்தான் சாதிக்க முடியும் என்பதை  இந்த  போராட்டத்தில் அப்பகுதி மக்கள் அனுபவப் பூர்வமாக உணர்ந்துள்ளனர்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தருமபுரி மண்டலம். தொடர்புக்கு; 97901 38614

வாசகர் புகைப்படம் – இந்த வாரத் தலைப்பு : ஆட்டோ இலக்கியம் !

1

லுவலகத்திற்கு இருசக்கர வாகனங்களிலோ, பேருந்திலோ சென்று கொண்டிருக்கும் போது நம்மைக் கடந்து செல்லும் ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள், லாரிகளின் பின்னால் எழுதப்பட்டிருக்கும் கவித்துவமான வாசகங்களைக் கண்டிருப்போம். வாசித்ததும் ’அட.. செமையா இருக்கே..’ என நம்மை துள்ளச் செய்யும் வாசகங்கள் பல அவற்றில் கண்டிப்பாக இருக்கும். இலக்கியங்களில் பல வகை உண்டு. அதில் நாட்டார் இலக்கியத்தோடு தொடர்புடை வாய்மொழி இலக்கியம் தொட்டு நவீன சமூகவலைத்தள மீம்கள் வரை பழமையும் புதுமையும் இருக்கின்றன. அதில் அதிகம் கவனிக்கப்படாத ஒன்றுதான் ஆட்டோ இலக்கியம்.

ஒருமுறை மதுரையில் ஒரு ஆட்டோ வாசகம் இன்ப அதிர்ச்சியை தந்தது. அதில் வழக்கமாக சாமி, அம்மன் பெயரில் துணை என்று இருக்கும் இடத்தில் பொது மக்களே துணை என்று இருந்தது. சில பல வருடங்களுக்கு முன்பு வரை ஆட்டோவில் “சீறும் பாம்பை நம்பலாம், பெண்ணை நம்பாதே” போன்ற பிற்போக்கு வாசகங்களே அதிகம் இருந்தன. இடையில் அவை மாறியிருந்தால் இன்னமும் அத்தகைய சாயல் கொண்ட வாசகங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

ஆட்டோக்களில் ”மெதுவாகப் போ ரோட்டில் ! காத்திருக்கிறாள் மனைவி வீட்டில்!” என்பது போன்ற அக்கறையுடன் எச்சரிக்கும் வாசகங்கள் தொடங்கி, ”சுமக்க நானிருக்க நடைபயணம் ஏன் ?” என்பது போன்ற மார்கெட்டிங் வாசகங்களும் எழுதப்பட்டிருக்கும்.  இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்டு பல்வேறு வாகனங்களில், “தொடர்ந்து வா தொட்டு விடாதே”, ”சத்தமிடு, முத்தமிடாதே” போன்ற வாகனக் காதல் எச்சரிக்கை வாசகங்களும் இடம்பெற்றிருக்கும்.

வாகனத்தின் பின்னால் எழுதியிருக்கும் வாசகங்களைப் போல லாரிகள், பேருந்துகளின் பக்கவாட்டிலுள்ள பேட்டரி பெட்டியில், “தினமும் என்னைக் கவனி” என்பது போன்ற கவன ஈர்ப்புத் தீர்மானங்களும் இடம் பெற்றிருக்கும்.

படிக்க:
காத்திருப்பு | வினவு வாசகர்களின் புகைப்படங்கள் !
♦ உங்களுக்குப் பிடித்த தேநீர்க் கடை | வாசகர் புகைப்படங்கள்

இந்த வாரம் நமது வாசகர் புகைப்படங்களுக்கான தலைப்பு “ஆட்டோ இலக்கியம்.” ஆட்டோ என்பது ஒரு குறியீடுதான். இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டு அனைத்து வாகனங்களிலும் எழுதப்பட்டுள்ள ஈர்க்கத்தக்க வாசகங்களை, அந்த வாகனத்தோடு சேர்த்து புகைப்படம் எடுத்து அனுப்புங்கள். வாகனங்களோடு வாகன ஓட்டுநர்களையும் இணைத்து எடுக்கலாம். வாகனங்களில் சே குவேரா, அம்பேத்கர், பெரியார் முதல் ஏசுநாதர் வரை படங்கள் ஒட்டப்பட்டிருக்கும். அதிலும் அரிதாக மார்க்ஸ், லெனின் படங்களையும் பார்க்க  முடியும்.

மாமூலான வாசகங்கள் பல இருந்தாலும் முடிந்த அளவிற்கு வித்தியாசமான, கவித்துவமான வாசகங்களை, தேடிப்பிடித்து புகைப்படம் எடுத்து அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம். வெளிநாடுகளில் இருக்கும் நண்பர்களும் அங்கே இருக்கும் வாகனங்களில் காணப்படும் வாசகங்களை – படங்களை – வித்தியாசமான வடிவமைப்பை படம் எடுத்து அனுப்புங்கள். எந்த ஊர் வாசகங்கள் சிறப்பாக வருகின்றன என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம் !

படங்கள் எங்களை வந்து சேர வேண்டிய கடைசி நாள் 25-12-2018

vinavu@gmail.com வினவு மின்னஞ்சல் அல்லது
வினவு வாட்ஸ்அப் எண்ணுக்கு (91) 97100 82506 உடன் அனுப்புங்கள்.
கூடவே உங்களைப் பற்றிய விவரங்களையும் மறவாமல் அனுப்புங்கள்!
தெரிவு செய்யப்படும் படங்கள் வரும் வார இறுதியில் வெளியிடப்படும்.
அடுத்த வாரம் இன்னொரு தலைப்பு!

புகைப்படங்களை எடுக்கப் போகும் மக்கள் பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்துக்கள்! உங்கள் படங்களைக் காண ஆவலுடன் காத்திருக்கிறோம்.

வாழ்வதிலுள்ள இன்பத்தோடு சாவதின் அவசியமும் சேர்ந்துதானே வருகிறது

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 38a

மாக்சிம் கார்க்கி
”ஏதாவது தின்னக் கொடுங்களேன் – எனக்கு இருக்கிற அகோரப் பசியை உங்களால் கற்பனை கூடப் பண்ண முடியாது” என்று திடீரெனச் சொன்னான் நிகலாய்.

”அம்மா. அதோ அரங்கிலே கொஞ்சம் ரொட்டி இருக்கிறது” என்றான் இகோர். “அப்புறம் வெளியே ஹாலுக்குப் போய், இடதுபுறம் இருக்கும் இரண்டாவது கதவைத் தட்டுங்கள். ஒரு பெண் வந்து திறப்பாள். அவளை இங்கே வரச் சொல்லுங்கள். வரும்போது தின்பதற்கு என்னென்ன இருக்கிறதோ, அதையெல்லாம் கொண்டுவரச் சொல்லுங்கள்.”

“எல்லாவற்றையும் ஏன் கொண்டுவரச் சொல்கிறாய்?” என்று கேட்டான் நிகலாய்.

“நீ ஒன்றும் கவலைப்படாதே. அப்படி ஒன்றும் அதிகமிராது.”

தாய் வெளியே சென்றாள். கதவைத் தட்டினாள். பதிலில்லை. அந்த அமைதியில் அவள் இகோரைப் பற்றி நினைத்தாள்.

”அவன் செத்துக்கொண்டுதான் இருக்கிறான்…”

“யாரங்கே?” என்று அறைக்குள்ளிருந்து யாரோ கேட்டார்கள்.

”இகோர் இவானவிச்சிடமிருந்து வந்திருக்கிறேன்’’ என்று அமைதியாகப் பதில் சொன்னாள் தாய். “அவன் உங்களை அவனது அறைக்கு வரச் சொன்னான்.”

”இதோ வருகிறேன்” என்று கதவையே திறக்காமல் உள்ளிருந்தவாறே பதில் சொன்னாள் அந்தப் பெண். தாய் ஒரு கணம் நின்றாள். பிறகு மீண்டும் கதவைத் தட்டினாள். உடனே கதவு திறக்கப்பட்டது. ஒரு நெட்டையான மூக்குக் கண்ணாடியணிந்த ஸ்திரீ ஹாலுக்குள் வந்தாள். தனது உடுப்பிலுள்ள மடிப்புக்களை விரித்துத் தடவிவிட்டுவிட்டு வெடுக்கென்று தாயைப் பார்த்துக் கேட்டாள் அவள்.

“உங்களுக்கு என்ன வேண்டும்?”

“இகோர் இவானவிச் என்னை அனுப்பினான்.”

“சரி, புறப்படுங்கள். உங்களை நான் பார்த்திருக்கிறேனே” என்று அமைதியாகக் கூறினாள் அவள். “சௌக்கியமா? இங்கே ஒரே இருட்டாகயிருக்கிறது.”

தாய் அவளைப் பார்த்தாள். இதற்கு முன் அவளைச் சில தடவை நிகலாய் இவானவிச்சின் வீட்டில் பார்த்திருப்பதாக அவளுக்கு ஞாபகம் வந்தது.

“இவர்கள் எல்லாம் நம்மைச் சேர்ந்தவர்கள்!” என்று நினைத்துக் கொண்டாள்.

அந்தப் பெண் பெலகேயாவைத் தனக்கு முன்னால் போகச் சொன்னாள்.

“அவனுக்கு ரொம்ப மோசமாக இருக்கிறதா?” என்று கேட்டாள் அவள்.

“ஆமாம். அவன் படுத்திருக்கிறான். அவன் தின்பதற்கு ஏதாவது கொண்டு வரச் சொன்னான்.”

“அது ஒன்றும் அவசியமில்லை.”

அவர்கள் இகோரின் அறைக்குள் நுழைந்ததுமே அவனது கரகரத்த சுவாசம் அவர்கள் காதில் விழுந்தது;

அவன் தனது அடுத்த கண்ணால் தாயைப் பார்த்தான். அவனது உதடுகள் மட்டும் லேசாகப் புன்னகை புரிந்தன. தாய் அவனது தலைப் பக்கமாகக் குனிந்து பார்த்தாள். திடீரென்று நெஞ்சில் பாய்ந்த அனுதாப வேதனையில் அவளது கண்களில் கண்ணீர் துளிர்த்துவிட்டது.

“நான் என் மூதாதையர்களிடம் போய்ச் சேரப்போகிறேன். தோழா…! லுத்மீலா வசீலியெவ்னா. இந்த ஆசாமி கொஞ்சங்கூட மரியாதையில்லாமல், அதிகாரிகளிடம் உத்தரவு வாங்காமல், சிறையிலிருந்து வெளியே வந்துவிட்டான். முதலில் இவனுக்கு ஏதாவது தின்னக் கொடுங்கள். அப்புறம் இவனை எங்காவது கொண்டுபோய் மறைத்து வைக்க வேண்டும்.”

அந்தப் பெண் அவன் கூறியதை ஆமோதித்துத் தலையை அசைத்தாள், நோயாளியைக் கூர்ந்து பார்த்துக்கொண்டே சொன்னாள்:

“இவர்கள் வந்தவுடனேயே எனக்குச் சொல்லியனுப்பியிருக்க வேண்டும். இகோர், அது சரி நீங்கள் இரண்டு பொழுது மருந்தைக்கூடச் சாப்பிடாமல் விட்டிருக்கிறீர்களா? வெட்கமாயில்லை? தோழரே, என்கூட வாருங்கள். இகோரை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போவதற்குச் சீக்கிரமே ஆட்கள் வந்துவிடுவார்கள்.”

“அப்படியென்றால், நீங்கள் என்னை ஆஸ்பத்திரியில் கொண்டு போடுவது என்றே தீர்மானித்துவிட்டீர்களா?”

“ஆமாம். நான் அங்கு வந்து உங்களுக்குத் துணையிருப்பேன்”

“அங்கே கூடவா! அட கடவுளே!”

“உஷ்! போதும் அசட்டுத்தனம்.”

அவள் பேசிக்கொண்டே இகோரின் மார்பின் மீது கிடந்த போர்வையை இழுத்துச் சரி பண்ணினாள். நிகலாயைக் கூர்ந்து கவனித்தாள். மருந்து பாட்டில்களைத் தூக்கிப் பார்த்து எவ்வளவு மருந்து மிஞ்சியிருக்கிறது என்பதைப் பார்த்தாள். நிதானமாக அடக்கமான குரலில் பேசினாள். லாவகமாக நளினத்தோடு நடமாடினாள். அவளது முகம் வெளுத்திருந்தது. புருவங்கள் மூக்குக்கு மேலே கூடியிருந்தன. தாய்க்கு அவளது முகம் பிடிக்கவே இல்லை. அந்த முகத்தில் அகந்தை தொனிப்பதாக அவளுக்குத் தோன்றியது. அந்தப் பெண்ணின் கண்களில் களிப்போ பிரகாசமோ இல்லை. மேலும் அவள் அதிகார

தோரணையிலேயே பேசினாள்.

“சரி, நாங்கள் இப்போதைக்கு உங்களை விட்டுச் செல்கிறோம்” என்று தொடங்கினாள் அவள். ஆனால் நான் சீக்கிரமே திரும்பிவந்து விடுவேன். இகோருக்கு இந்த மருந்தில் ஒரு கரண்டி கொடுங்கள். அவனைப் பேசவிடாதீர்கள்.”

நிகலாயைக் கூட்டிக்கொண்டு அவள் வெளியே சென்றாள்.

”அதிசயிக்கத்தக்க பெண் அவள்!” என்று பெருமூச்சுடன் சொன்னான் இகோர். “அதிசாமர்த்தியமான பெண்: அம்மா. நான் உங்களையும் அவளோடு சேர்த்துவிட வேண்டும். அவள் அடிக்கடி களைத்துச் சோர்ந்து விடுகிறாள்.”

“பேசாதே. இந்த மருந்தைச் சாப்பிடு” என்று மிருதுவாகச் சொன்னாள் தாய்.

அவன் மருந்தைச் சாப்பிட்டுவிட்டு ஒரு கண்ணை மூடிக் கொண்டான்.

“எப்படியும் நான் சாகத்தான் போகிறேன். வாயை மூடிப் பேசாதிருந்தாலும் சாகத்தான் போகிறேன்” என்றான் அவன்.

அவன் தனது அடுத்த கண்ணால் தாயைப் பார்த்தான். அவனது உதடுகள் மட்டும் லேசாகப் புன்னகை புரிந்தன. தாய் அவனது தலைப் பக்கமாகக் குனிந்து பார்த்தாள். திடீரென்று நெஞ்சில் பாய்ந்த அனுதாப வேதனையில் அவளது கண்களில் கண்ணீர் துளிர்த்துவிட்டது.

“எல்லாம் சரிதான் – இது இயற்கைதானே! வாழ்வதிலுள்ள இன்பத்தோடு சாவதின் அவசியமும் சேர்ந்துதானே வருகிறது’ என்றாள் அவன்.

தாய் அவனது நெற்றியின் மீது கை வைத்துப் பார்த்துவிட்டு மெதுவாகச் சொன்னாள்:

“உன்னால் கொஞ்ச நேரம்கூடச் சும்மா இருக்க முடியாதா?”

அவன் தன் கண்களை மூடி, தனது நெஞ்சுக்குள் கரகரக்கும் சுவாசத்தைக் கேட்பதுபோல் இருந்தான். பிறகு உறுதியோடு பேசத் தொடங்கினான்.

”சும்மா இருப்பதில் அர்த்தமே இல்லை, அம்மா. அதனால் எனக்கு என்ன லாபம்? என்னவோ இன்னும் கொஞ்ச விநாடி கால வாதனை. அப்புறம் உங்களைப் போன்ற அற்புதமான பெண்மணியோடு சில வார்த்தைகள் பேசும் ஆனந்தம்கூட எனக்கு அற்றுப்போய்விடும். அடுத்த உலகத்திலுள்ளவர்கள், இந்த உலகத்தில் உள்ளவர்களைப்போல் அவ்வளவு நல்லவர்களாயிருக்க முடியாது. அது மட்டும் நிச்சயம்.

தாய் ஆர்வத்தோடு குறுக்கிட்டுப் பேசினாள்:

”அந்த சீமாட்டி திரும்பவும் வருவாள். வந்து நான் உன்னைப் பேச விட்டதற்காக, என்னைக் கண்டிப்பாள்.”

“அவள் ஒன்றும் சீமாட்டியில்லை. அவள் ஒரு புரட்சிக்காரி. நம் தோழி. ஒரு அதிசயமான பெண். அவள் கோபிக்கப் போவது என்னவோ நிச்சயம். அவள் எல்லோரையும்தான் கோபித்துப் பேசுகிறாள்.”

அவன் மிகுந்த சிரமத்தோடு உதடுகளை அசைத்துக் கொண்டு தனது அண்டை வீட்டுக்காரியின் வாழ்க்கையைப் பற்றிப் பேச ஆரம்பித்தான். அவளது கண்கள் களிப்பெய்தி நகைத்தன. அவள் வேண்டுமென்றே அவளைக் கேலி செய்ததாகத் தாய் கருதினாள். அவனது நீலம் பாரித்த ஈரம் படிந்த முகத்தைப் பார்த்துவிட்டு, பயபீதியோடு தனக்குத்தானே நினைத்துக் கொண்டாள்.

”இவன் செத்துக் கொண்டிருக்கிறான்.”

லுத்மீவா திரும்ப வந்தாள். உள்ளே நுழைந்தவுடன் அவள் கதவை ஜாக்கிரதையாகத் தாழிட்டுவிட்டுத் தாயின் பக்கம் திரும்பினாள்.

“உங்களுடைய தோழர் சீக்கிரமே உடை மாற்றிக்கொள்ள வேண்டும். என் அறையை விட்டுக் கூடிய சீக்கிரம் போக வேண்டும். எனவே நீங்கள் உடனே போய் அவனுக்கு மாற்று உடைகள் வாங்கி வாருங்கள். இந்தச் சமயத்திலே சோபியாவும் இல்லாது போய்விட்டாள். அது ஒரு பெரிய சங்கடம். ஆட்களை இனம் மாற்றி வேஷம் போடுவதில் அவள்தான் மிகவும் கைதேர்ந்தவள்.”

”அவள் நாளைக்கு வருகிறாள்” என்று கூறிக்கொண்டே சவுக்கத்தை எடுத்துத் தோளின் மீது போட்டுக்கொண்டாள் தாய்.

அவளுக்கு எப்போதெப்போதெல்லாம் வேலை செய்யச் சந்தர்ப்பம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் அவளது இதயத்தில், அந்த வேலையைச் சீக்கிரமாகவும் திறம்படவும் முடிக்க வேண்டும் என்ற ஆர்வம் நிரம்பித் ததும்பும். அந்த வேலையைத் தவிர அந்தச் சமயத்தில் வேறு எதைப் பற்றியுமே அவள் சிந்திக்கமாட்டாள்.

“நான் உங்களை இப்படி வெளியே விரட்டியடிக்கிறேன் என்பதை எண்ணி மனம் புண்பட்டுப்போகாதீர்கள். அவனோடு பேசிக் கொண்டிருப்பது அவனுக்கு ரொம்ப ஆபத்து. அவன் பிழைக்கக்கூடும் என்றே நான் இன்னும் நம்புகிறேன்…”

”அவனை எந்த மாதிரி உடை தரிக்கச் சொல்ல உத்தேசம்?” என்று காரியார்த்தமான குரலில் தனது புருவங்களைச் சுழித்துக்கொண்டே கேட்டாள் தாய்.

“அதைப் பற்றிக் கவலையில்லை. அந்தத் தோழர் இன்றிரவு போயாக வேண்டும்.”

“இராத்திரிவேளைதான் மோசமானது. தெருவிலே ஜனநடமாட்டமே இருக்காது. போலீசாரும் விழிப்பாயிருப்பார்கள். இவனும் அப்படியொன்றும் கெட்டிக்காரப் பேர்வழியில்லை – உங்களுக்குத் தெரியாதா?”

இகோர் கரகரத்துச் சிரித்துக் கொண்டான்.

“நான் உன்னை ஆஸ்பத்திரியில் வந்து பார்க்கட்டுமா?” என்று கேட்டாள் தாய்.

இருமிக்கொண்டே தலையை அசைத்து ஆமோதித்தான் அவன்.

“நீங்களும் நானும் இவனது படுக்கையருகே மாறி மாறித் துணைக்கு இருக்கலாமா?” என்று தனது கரிய கண்களால் தாயைப் பார்த்துக் கொண்டே கேட்டாள் லுத்மீலா. ”உங்களுக்குச் சம்மதம்தானே? சரி, இப்போது எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாகப் போய்வாருங்கள்.”

அவள் அதிகாரம் கலந்த அன்போடு தாயின் கரத்தைப் பற்றி அவளை வாசல் நடைக்குக் கூட்டிச் சென்றாள். வாசல் நடையைக் கடந்து வெளியே வந்ததும், லுத்மீலா நின்றுகொண்டே பேசினாள்:

“நான் உங்களை இப்படி வெளியே விரட்டியடிக்கிறேன் என்பதை எண்ணி மனம் புண்பட்டுப்போகாதீர்கள். அவனோடு பேசிக் கொண்டிருப்பது அவனுக்கு ரொம்ப ஆபத்து. அவன் பிழைக்கக்கூடும் என்றே நான் இன்னும் நம்புகிறேன்…”

படிக்க:
மோடி ஆட்சியில் வேலை இழப்பு – சிறுதொழில் அழிவு அபாய கட்டத்தை எட்டியது !
எட்டு வழிச் சாலைன்னு நிலத்த பிடுங்குறான் ராமர் சிலைன்னு வீட்ட இடிக்கிறான் !

அவள் தன் கரங்களை இறுகப் பற்றி அழுத்தினாள். அவள் பிடித்த பிடியில் எலும்புகளே நொறுங்கும் போலிருந்தது; கைகளைப் பிடித்தவாறே அவள் கண்களை மூடினாள். இந்தப் பேச்சு தாயைக் கலவரப்படுத்தியது.

”அட கடவுளே என்ன சொல்லுகிறீர்கள்?” என்று குழறினாள் தாய்.

”சரி போகிற போது எங்கேயாவது ஒற்றர்கள் நிற்கிறார்களா என்று பார்த்துக்கொண்டு போங்கள்” என்று மெதுவாகச் சொன்னாள் லுத்மீலா. அவள் தன் கரங்களைத் தன் முகத்துக்கு நேராக உயர்த்தி நெற்றிப் பொருத்துக்களைத் தேய்த்துவிட்டுக்கொண்டாள். அவளது உதடுகள் துடித்தன, முகம் காந்தமடைந்தது.

“எனக்குத் தெரியும்’’ என்று பெருமிதத்தோடு சொன்னாள் தாய்.

வெளிவாசலுக்குச் சென்றவுடன் அவள் ஒரு நிமிஷம் அங்கேயே நின்று தன்னுடைய துப்பட்டியைச் சரி செய்துகொண்டே சுற்றுமுற்றும் கூர்மையோடு, எனினும் வெளிக்குத் தெரியாமல் கவனித்துக் கொண்டாள். கூட்டத்தில்கூட ஒற்றர்களை அடையாளம் கண்டு தீர்மானிப்பதில் அவள் அநேகமாக தவறுவதே இல்லை. அவர்களது எடுப்பாய்த் தெரியும் கவனமற்ற நடை, அவர்களது அசாதாரணமான பாவனைகள், சோர்வும் எரிச்சலும் நிறைந்த அவர்களது முகபாவம், இவற்றிற்கெல்லாம் பின்னால் மோசமாக ஒளிந்து கொண்டிருக்கும் அவர்களது கூரிய கண்களிலே மறைந்து கிடக்கும். குற்றம் நிறைந்த அச்சம் கொண்ட நோக்கு – யும் அவள் நன்கு தெரிந்து வைத்திருந்தாள்.

ஆனால் இந்தத் தடவையோ அவள் அந்த மாதிரி முகங்கள் எதையும் காணவில்லை. எனவே தெரு வழியாக அவசர அவசரமாக நடந்து சென்றாள். அவள் ஒரு வண்டியை வாடகைக்குப் பிடித்துக்கொண்டு, வண்டிக்காரனை மார்க்கெட்டுக்கு ஓட்டிச் செல்லும்படி உத்தரவிட்டாள். மார்க்கெட்டில் அவள் நிகலாய்க்காக வாங்க வேண்டிய துணிமணிகளைத் தேர்ந்தெடுப்பதில் விடாப்பிடியாய் பேரம் பேசி விலையைக் குறைத்துக் கேட்டாள். அத்துடன் தன்னுடைய குடிகாரக் கணவனால்தான் இந்த மாதிரியான நிலைக்குத் தான் வந்துவிட்டதாகவும், அவனுக்கு மாதாமாதம் ஒவ்வொரு புதுச்சட்டை துணிமணி எடுத்துக் கொடுக்க நேர்ந்துவிட்டதாகவும் ஒரு பொய்க்கதையையும் கடைக்காரனிடம் கூறினாள். அவளது கட்டுக்கதையைக் கேட்டு, கடைக்காரர்கள் கொஞ்சம்கூட மசியவில்லை. இருந்தாலும் அதுவே அவளுக்கு ஒரு பெரும் ஆனந்தத்தைத் தந்தது. வழியிலே அவளுக்கு இன்னொரு எண்ணம் உதித்தது. நிகலாய்க்குப் புதிய துணிமணிகள் வாங்க வேண்டிய அவசியத்தைப் போலீஸ்காரர்களும் உணரக் கூடுமென்றும், எனவே அவர்கள் தங்களது ஒற்றர்களை மார்க்கெட்டுக்கும் அனுப்பியிருக்கக் கூடுமென்றும் அவள் நினைத்தாள். எனவே புறப்பட்டுச் சென்றது போலவே மிகுந்த ஜாக்கிரதையோடும் கவனத்தோடும் அவள் இகோரின் அறைக்குத் திரும்பி வந்தாள். பிறகு அவள் நிகலாவுடன் நகரின் எல்லை வரை காவலாகச் சென்றாள்.

அவர்கள் தெருவில் ஆளுக்கொரு பக்கமாக நடந்து சென்றார்கள். நிகலாய் தலையைத் தாழ்த்திக்கொண்டு தத்தித் தத்தி நடந்து செல்வதையும், அவன் அணிந்திருந்த நீளமான பழுப்பு நிறக் கோட்டினால், அவனது கால்கள் அடிக்கடி முட்டிக்கால் தட்டிக் கொள்வதையும், மூக்கின் மீது வந்து விழுந்து மறைக்கும் தொப்பியை அவன் அடிக்கடி பின்னால் தள்ளிவைத்துக் கொள்வதையும் கண்டு தாய்க்குச் சிரிப்பாயும் மகிழ்ச்சியாயும் இருந்தது. ஆள் நடமாட்டமே அற்ற ஒரு சந்தில், அவர்கள் சாஷாவைச் சந்தித்தார்கள். நிகலாயைப் பார்த்துத் தலையை அசைத்து விடைபெற்றுக்கொண்டு தாய் வீட்டுக்குத் திரும்பினாள்.

“ஆனால் பாவெல் மட்டும் இன்னும் சிறையிலேயே இருக்கிறான் …. அந்திரேயும்…” என்று துக்கத்தோடு நினைத்துக்கொண்டாள் அவள்.

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

மாற்று ஊடகம் இல்லையே என்று கவலைப்படும் நண்பர்களுக்கு….. | மு.வி. நந்தினி

3

“நாய் மனிதர்களை கடித்தால் செய்தியல்ல, மனிதன் நாயைக் கடித்தால்தான் செய்தி” எதைச் செய்தியாக்க வேண்டும் என ஊடக பாடம் எடுப்பவர்கள் தவறாமல் சொல்லும் உதாரணம் இது.

பாராமுகம் பார்ப்போம் – மு.வி.நந்தினி
அதாவது செய்தி படிப்பவர்களுக்கு சுவாரஸ்யமாக இருக்க வேண்டும்; படிப்பவர்களுக்கு சிறந்த பொழுதுபோக்காக அமைய வேண்டும். தினத்தந்தி, தினமலர் போன்ற அதிகம் விற்பனையாகும் நாளிதழ்கள் மேற்கூறிய ஊடக பாடத்துக்கு மிகச் சிறந்த உதாரணங்கள். படிக்கும் வாசகருக்காக அவை செய்திகளை சுவாரஸ்யமாக்கி தருன்றன.

ஒரு பெண்ணை நால்வர் பாலியல் வன்புணர்வு செய்த செய்தி, படிக்கிறவர்களுக்கு கவலையையோ, கோபத்தையோ உண்டாக்காமல் வெறுமனே அந்த நேர அரட்டைக்குரிய பொருளாகிறது. முதலாளித்துவம் இதைத்தான் விரும்புகிறது. ஒரு செய்தி படிக்கிறவர்களின் சிந்தனையை தூண்டிவிடக்கூடாது என்பதில் அது கண்ணும்கருத்துமாக இருக்கிறது.

தமிழ் செய்தி ஊடகங்களைப் பொறுத்தவரை அடுத்தவர் துயரம், படிப்பவருக்கு நுகர்வாக பறிமாறப்படுவது ஒரு புறம் நடக்கிறது. இன்னொரு புறம், கட்சி செய்திகள், அரசு தரப்பு செய்திகள், பத்திரிகை சந்திப்புகள் இவை மட்டுமே செய்திகள் ஆகின்றன. அதாவது, இந்தச் செய்திகளைப் படிக்கும் பெரும்பாலான மக்களின் துன்பங்கள், துயரங்கள், இன்னல்கள் ஒருபோதும் செய்தியாவதில்லை.

உதாரணத்துக்கு தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து எத்தனை செய்தி ஊடகங்கள் களத்துக்குச் சென்று செய்தி சேகரித்து வெளியிட்டன என ஆராய்வோம்.  ஒரு சில புலனாய்வு பத்திரிகைகள் மட்டுமே நேரடியாக மக்களைச் சந்தித்து செய்தி சேகரித்த வெளியிட்டன. செய்தி ஊடகங்களின் களச் செய்தி சேகரிப்பு என்பது, துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை அமைச்சர்கள் சந்தித்தபோது உடன் போனது, பிரபலங்கள் மருத்துவமனைக்குச் சென்றபோது அவர்கள் பின்னால் போனது என்பதாகத்தான் இருந்தது.

துப்பாக்கிச் சூட்டால் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்கள், எதனால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என துப்பாக்கிச்சூட்டின் பின்னணி, விளைவுகள் குறித்து எந்த செய்தி ஊடகமும் களத்திலிருந்து மக்களுக்கு உண்மையைச் சொல்லவில்லை. அப்போதும் வினவு களத்திலிருந்து செய்திகளை வழங்கியது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களைக் கூட பார்க்க விடாமல் அரசு மருத்துவமனை முன்பு மக்களை போலீசு தடுத்து நிறுத்திய போது (23.05.2018) எங்களையும் சுடு என மார்பைக் காட்டி நிற்கும் ஒருவர். – படம் : வினவு செய்தியாளர்

தமிழகத்தை மாறி மாறி ஆளும் இரண்டு கட்சிகளும் தங்களுக்கு எதிராக செயல்படும் ஊடகங்களை துடைத்தெறிவதை கடந்த காலங்களில் தீவிரமாகப் பின்பற்றின. காலப்போக்கில் தன்னைத்தானே தணிக்கை செய்துகொண்டு ஊடகங்கள் எப்படியாவது பிழைத்திருந்தால் போதும் என்கிற நிலைக்கு வந்துவிட்டன.

இன்றைய நிலையில் மத்திய – மாநில அரசுகளின் பி.ஆர். ஓக்களாக செயல்படுவது லாபகரமானது என்பதை ஊடகங்கள் கண்டுகொண்டுவிட்டன. விளம்பர வருவாய், கணிசமான வாசகர்கள் என லாபம் கொழிக்கும் ஊடகங்கள்கூட அரசு மூலம் கிடைக்கும் விளம்பர வருவாயையும் மறைமுகமாகக் கிடைக்கும் இன்னபிற சலுகைகளையும் இழக்கத் தயாராக இல்லை.

இந்த நிலையில் ஒரு மாற்று ஊடகத்தின் தேவை பெருவாரியான மக்களின் பெருங்கனவாக இருக்கிறது. பெரும் ஊடகங்கள் செய்தியை நுகர்பவர்களாக மக்களை மாற்றிவிட்டபோதும்கூட, அதே மக்கள் ‘உண்மைக்காக’ ஏங்குகிறவர்களாகவும் இருக்கின்றனர். மக்களின் உண்மைக்கான ஏக்கத்தை தீர்த்து வைக்கும் முன்னெடுப்பாக ‘வினவு’ தளத்தை நான் பார்க்கிறேன். சமீபத்தில் வினவு நடத்திய கருத்து கணிப்பில் கலந்துகொண்ட பெரும்பாலானவர்கள் இந்தக் கருத்தை பிரதிபலித்திருந்தார்கள்.

படிக்க:
தமிழக தொலைக்காட்சிகளும் அடிமை பத்திரிகையாளர்களும் !
♦ கஜா புயல் : கதவுல தொத்திகிட்டிருக்கும் போதே கடலோட போயிருக்கலாம் !

ஒரு குறிப்பிட்ட சித்தாந்ததை பேசும் வலைத்தளமாக தொடங்கப்பட்ட பத்தாண்டுகளில் மாற்று ஊடகமாக, மக்கள் ஊடகமாக வினவு பரிணமித்திருக்கிறது. இது திட்டமிட்ட வளர்ச்சியா என்றெல்லாம் தெரியாது; ஆனால், தமிழ்ச் சமூகத்துக்கு தேவையான வளர்ச்சியாகவே நான் பார்க்கிறேன்.

ஊடகத்துறையில் பதினான்கு ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கிவருகிற வகையில், நாளிதழ்கள்-காட்சி ஊடகங்கள்-இதழ்கள்-இணைய இதழ்களை கவனித்துக் கொண்டிருக்கிறேன். தமிழ் ஊடகங்கள் உள்ளடக்கத்தில், குறிப்பாக அச்சு இதழ்கள் மிக பின்தங்கிய நிலையில் இருக்கின்றன. தமிழ் ஊடகங்களுக்கு மறுமலர்ச்சி தேவை. அதை அவர்கள் உணர்ந்து செய்கிறார்களோ இல்லையோ, வினவு அதைச் செய்து கொண்டிருக்கிறது.

படம் – வினவு செய்தியாளர்

எப்போதெல்லாம் சமூகம் புதிய மாற்றத்துக்கு தயாராகிறதோ அப்போது ஊடகம் மறுமலர்ச்சி காண்கிறது. சமூக நீதி பேசி தமிழ் சமூகத்தின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட பெரியார், கொள்கைகளை பரப்புவதற்காக பயன்படுத்திய ஊடகத்தின் தமிழ் ஊடக மொழிக்கு புத்துயிர் கொடுத்தார்.  பார்ப்பனர் மொழியில் இயங்கிக்கொண்டிருந்த தமிழ் ஊடகங்களை பெரியார் மீட்டார்; சீர்திருத்தம் செய்தார். ஊடக மொழியை அனைவருக்குமானதாக மாற்றினார். இன்றளவும் இது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த சீர்திருத்தமும்கூட தன்னை புதுப்பித்துக்கொள்ள கோருகிறது. ஆனால், பெருமுதலாளிய ஊடகங்களில் அதைச் செய்வாரில்லை. வினவு அதைச் செய்ய முனைந்திருக்கிறது.

அறிவியல், மருத்துவம், சமூகவியல், வரலாறு, பொருளாதாரம், கல்வி, பண்பாடு என முக்கியமான, ஆழமான கருத்துக்களையுடைய கட்டுரைகளை வினவு வெளியிட்டுவருகிறது. ஆங்கிலம் வழியே படிக்க முடியாத பல கட்டுரைகள், புரிகிற மொழியில் வினவில் காணமுடியும். சிறுபத்திரிகைகளும்கூட ஆழமான கட்டுரைகளை வெளியிடுகின்றன. மொழிநடைதான் அவற்றில் முக்கியமான பிரச்சினை. சிறுபத்திரிகை கட்டுரைகள் அறிவுஜீவிகளுக்காக எழுதப்படுபவை. அதுமக்களுக்கான ஊடகம் அல்ல. சிக்கலான கருத்தையும் எளிய மக்கள் புரிந்துகொள்ளும் விதமாக வினவு எழுதுகிறது.

வெகுஜென ஊடகங்களில் பணியாற்றிய எனக்குத் தெரியும்…வினவில் வெளிவரும் பல கட்டுரைகளை தமிழ் இதழ்களில் பார்க்கவே முடியாது. இதையெல்லாம் படிக்க மாட்டார்கள் என ஒதுக்கித் தள்ளிவிடுவார்கள். ஆனால், வினவில் படிக்கிறார்கள். இதைத்தான் சீர்திருத்தம் என்கிறேன்.

ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழில் நம்பர் ஒன் நாளிதழான தினத்தந்தியில் தலையங்க பகுதியே கிடையாது. அதுபோல, நடுப்பக்க கட்டுரைகளும் வராது. தினமணியைத் தவிர, சமீப ஆண்டுகளில்தான் தமிழ் நாளிதழ்களில் நடுப்பக்க கட்டுரைகளும் தலையங்கமும் வரத் தொடங்கியிருக்கிறது.

பெரிய கட்டுரைகளையெல்லாம் யார் படிக்கப் போகிறார்கள் என படிப்பவர்களை குறைத்து மதிப்பிட்டன ஊடகங்கள். அல்லது அவர்களுக்கு அறிவூட்ட இவர்கள் தயாராக இல்லை. இந்த லட்சணத்தில் ஆழமான அறிவியல் கட்டுரையோ, வரலாற்றுப் பதிவோ அச்சேற இன்னும் பத்தாண்டுகள் ஆகலாம். அதற்குள் அச்சு ஊடகங்கள் காலாவதியாகிவிடும்.

கஜா புயல் பாதிப்பால் குடிநீர் இன்றி அவதிப் பட்டுவந்த பட்டுக்கோட்டை, கறம்பயம், ஜீவா காலனி மக்கள் சாலை மறியல். படம் – வினவு செய்தியாளர்

அதுபோல, நூறாண்டுகால வரலாற்றைக் கொண்ட தமிழ் நாளிதழ்கள் செய்யத் துணியாத மற்றொரு விசயம், களச்செய்தி சேகரித்தல். கஜா புயலுக்கு பின் வந்த நாளிதழ்களைப் புரட்டிப்பாருங்கள். களத்திலிருந்து மக்கள் பிரச்சினையை சொன்ன செய்திகள் மிக மிக சொற்பமாகத்தான் இருக்கும். புயல் போன்ற பேரிடர் பாதிப்பு செய்தியிலும்கூட, சுவரஸ்யமானது மட்டுமே செய்தியாக்கும் அவலத்தை தமிழ் ஊடகங்கள் செய்து வருகின்றன.

ஒரு ஊரில் நான்கு பேர் இறந்தால் செய்தியாகும், நானூறு பேர் பட்டினி கிடப்பது சுவாரஸ்யமற்ற செய்தி. அது அச்சேறாது. நான்கு லட்சம் மரங்கள் வீழ்ந்தது தலைப்புச் செய்தியாகாது, வீழ்ந்த மரத்தை பிடுங்கி நடலாம் என்பது தலைப்புச் செய்தியாகும். அரசு என்ன செய்கிறது என மக்கள் கேட்பது செய்தியாகாது;  ‘இவர்கள்தான் ஹீரோக்கள்’ என தன்னார்வலர்களுக்கு கூடுதல் கவரேஜ் தரப்படும். எளிமையாக சொல்வதென்றால் தி இந்து ஆங்கில பதிப்புக்கும் தி இந்து தமிழ் பதிப்புக்கு உள்ள வேறுபாடு.

அரசுக்கு நோகக்கூடாது என நினைக்கிறார்களா அல்லது தமிழ் ஊடக ஆசிரியர்களின் சட்டியில் உள்ள சரக்கே அவ்வளவுதானா அல்லது இரண்டுமே கூடவா என்பதை ஊடக மாணவர்கள் யாராவது ஆராய்ந்து பட்டம் வாங்கலாம்.  கஜா புயல் தொடர்பாக வினவு களச்செய்தியாளர்கள் சேகரித்த செய்திகளை படித்த உந்துதலே, தமிழ் ஊடகங்களின் நிலையை எழுதக் காரணம். ஆங்கில ஊடகங்களுக்கு இணையாக (வேறு உதாரணங்கள் இல்லை என்பதால்) வினவின் களச்செய்திகள் தரத்துடன் அமைந்துள்ளன.  சொல்லப்போனால் பல களச்செய்திகள் வினவு தளத்தில் வெளியாகி ஒரு வாரம் கழித்து ஆங்கில ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

 

கஜா புயலில் சேதமான மாமரங்கள் – இடம் : வெங்கடாபுரம். படம் – வினவு செய்தியாளர்

உதாரணத்துக்கு  கஜா புயலில் சாய்ந்த மாமரங்கள் குறித்த செய்தி வினவு தளத்தில் வெளியாகி, ஐந்து நாட்கள் கழித்து இந்து ஆங்கில பதிப்பிலும் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழிலும் வெளியானது. உண்மையை, மக்களின் உணர்வுகளை, இன்னல்களை ஆதாரத்துடன் சொன்ன விதத்தை தரம் என்கிறேன். உண்மையைச் சொல்லத்தான் ஊடகங்கள் தேவை. புனைவுகளை சேர்த்து சுவாரஸ்யம்கூட்டி தரப்படுவது செய்தியாக இருக்காது. அதில் தரமும் இல்லை; அறமும் இல்லை. வினவு இந்த இரண்டையும் கவனத்தில் கொண்டு செயல்படுகிறது.

அதிகாரத்தில் இருப்பவர்களை சிவில் சமூகத்தின் பிரதிநிதியாக கண்காணிப்பதே ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகத்தின் பணி என அறிவுஜீவிகள் வரையறுத்தார்கள். இன்றைய ஊடகங்கள் சிவில் சமூகத்தை கைகழுவிட்டு, அதிகாரத்தோடு நெருக்கமாகிவிட்டன. மாற்று ஊடகத்தின் தேவையை அவை தானாக உருவாக்கியிருக்கின்றன.

மக்களின் பிரதிநிதியாக, மாற்று ஊடகமாக தன்னுடைய பணியைச் செம்மையாக செய்துகொண்டிருக்கிறது வினவு. ஆறு களச்செய்தியாளர்களை வைத்துக்கொண்டு, கஜா புயல் தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட செய்திப்பதிவுகளை தந்திருக்கிறது வினவு. லாபநோக்கத்தோடு செயல்படும் வெகுஜென ஊடகத்தால் இதை நிச்சயம் செய்யமுடியாது. மக்களுக்காக செயல்படுகிறவர்களால் மட்டுமே இதைச் செய்ய முடியும்.

மு.வி.நந்தினி
மாற்று ஊடகம் இல்லையே என்கிற பெருங்கனவைப் பற்றி பெருமூச்சோடு பேசிவிட்டுச் செல்கிற நாம், வினவு தொடர்ந்து இயங்க உதவ வேண்டும். மக்களின் ஊடகம் மக்களின் நிதியால், ஆதரவால்தான் இயங்க முடியும். அதை உணர்ந்து வினவு இயங்க நிதி கொடுங்கள். நமக்கான ஊடகத்தை கட்டியெழுப்புவோம்.

மு.வி.நந்தினி கடந்த 14 ஆண்டுகளாக தமிழின் பல இதழ்களில் பத்திரிகையாளராக பணியாற்றியிருக்கிறார். தற்போது டைம்ஸ் தமிழ் டாட் காம் இணையதளத்தின் ஆசிரியராக இருக்கிறார். சுற்றுச்சூழல், சமூகம், இந்துத்துவ அரசியல், பெண்ணியம் சார்ந்து எழுதிவருகிறார். வினவு கருத்தாடல் பகுதியில் பாரமுகம் பார்ப்போம் எனும் தலைப்பில் எழுதுகிறார்.

உங்களுக்குப் பிடித்த தேநீர்க் கடை | வாசகர் புகைப்படங்கள்

”உங்களுக்குப் பிடித்த தேநீர்க் கடை” என்ற தலைப்பில் வாசகர்கள் அனுப்பியுள்ள புகைப்படங்களின் தொகுப்பு !

அயராது உழைத்து ஓய்ந்தப் பின் இரவு  பதினொரு மணிக்கு கடைக்குச் சென்றாலும் வாங்க தம்பி காபி வேணுமா டீ வேணுமானு கேக்குற அந்த குரல் ஒட்டு மொத்த சோர்வையும் நீக்கி புத்துணர்வளிப்பதாக இருக்கும்..
இடம் – எஸ்.ஆர்.பி. டூல்ஸ் பஸ் ஸ்டாப், தரமணி, சென்னை.
படம் – கோகுலன் கிருஷ்ணமூர்த்தி

மனோகர் அண்ணன். எங்கள் கம்பெனி அருகில் இருக்கும் டீக்கடை மாஸ்டர். ஸ்டைலாக டீ போடுவார். புகைப்படம் எடுக்கவா எனகேட்ட போது வெட்கத்துடன் கொடுத்த போஸ். 
– படம்
@el_profesor_KK, சென்னை)

பால் டீ. மதுரையின் சிறப்பு. தமிழகத்தின் பல ஊர்களைப் போல தேனீர் டிகாஷனில் பாலை கலக்காமல், நேரடியாக பாலில் தேத்தூளை போட்டு கொதிக்க விடுவர். முன்னதாகவே தண்ணீர் பாலில் கலக்கப்பட்டு விடும் என்பது “தொழில் நுணுக்கம்”… படம்: இரணியன், மதுரை

தேநீர் அருந்துபவர்களும், தேநீர் போடுபவர்களும் சுறுசுறுப்பாக இருக்கும் அலீஃப் டீஸ்டால், தில்லை நகர், திருச்சி.
படம்: செழியன், திருச்சி

கம்பிகள் தடுத்தாலும் தேநீர் கிடைக்கும். சென்னை பல்கலை வளாகம், சென்னை. படம்: இளவேனில் துரை, சென்னை

ஞாயிறு, செவ்வாய், வெள்ளி – பருத்திப்பால்; திங்கள், வியாழன் – சிறுபருப்பு பாயாசம்
புதன், சனி – சம்பா கோதுமை. இடம் : மேற்கு தாம்பரம் மார்க்கெட், சென்னை.
படம்: சாக்ரடீஸ், சென்னை

நயமான தேநீரை நீங்கள் சுவைப்பதற்கு காத்திருக்கிறது, பாலாடை போர்த்திய பால் பாத்திரம்.
படம்: பிரதிவ், திருச்சி

வெறிச்சோடிப்போன தெருவால் வாடும் பலகாரங்கள்
படம்: பிரதிவ், திருச்சி

சவுதி அரேபியா, அல் ஜுபைல் எனும் தொழில் நகரத்திலுள்ள டீ கடை. இந்தக் கடை பணியாளர்கள் அனைவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள். இங்கே, டீயுடன் சேர்த்து வழங்கப்படும் முட்டை புரோட்டா மற்றும் சான்ட்விச் ரொம்ப பிரபலம். நாளொன்றுக்கு 3000 ரியால் அல்லது 54,000 ரூபாய்க்கு வியாபாரம் நடைபெறுகிறது.
படம்: அபுபக்கர் சித்திக், சவுதி அரேபியா

கிராமத்து தேநீர்க்கடைதான் எவ்வளவு அழகாக இருக்கிறது!
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தாலுகா, ஆலக்குடி கிராமத்து டீக்கடை.
கஜா புயல் செய்தி சேகரிப்பின் போது எடுக்கப்பட்டது.
படம்: வினவு புகைப்பட செய்தியாளர்

காலியான டம்ளர்… காத்திருக்கிறது அடுத்த சுற்றில் மற்றொருவரின் களைப்பாற்ற… படம்: எழில், சென்னை

பிரிவினையை எதிர்த்த மன்டோவின் படத்தை வெளியிட உதவுவேன் : பாகிஸ்தான் அமைச்சர்

டிகரும் இயக்குநருமான நந்திதா தாஸ் இயக்கத்தில் எழுத்தாளர் சதக் அசன் மண்டோவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு வெளியான படம் ‘மண்டோ’.

பிரிட்டீஷ் ஆட்சியின் ஒன்றுபட்ட இந்தியாவில் பிறந்த சதக் அசன் மண்டோ, மத அடிப்படையில் நாடுகள் பிரிவதை எதிர்த்தார். தன்னுடைய படைப்புகளில் மதங்களின் அடிப்படையில் பாகிஸ்தான், இந்தியா என நாடுகள் பிரிந்தபோது ஏற்பட்ட படுகொலைகள், அது ஏற்படுத்திய உளவியல் அழுத்தங்களை பதிவு செய்தவர் மண்டோ. பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானில் வசித்த மண்டோ, மத அடிப்படைவாதிகளால் கடும் விமர்சனத்துக்கு ஆளானவர்.

மாண்டோவின் வாழ்க்கையின் சில முக்கியமான சம்பவங்களை வைத்து நந்திதா தாஸ் இயக்கிய ‘மண்டோ’ படம் இந்தியாவில் வெளியானது, விமர்சன ரீதியாக வரவேற்பையும் பெற்றது. நவாசுதீன் சித்திக் மற்றும் ரசிகா துகால் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மண்டோ மும்பையில் வசித்த நாட்களைப் பதிவு செய்வதோடு, பிரிவினையின் போது பாகிஸ்தானுக்கு சென்றதையும் இந்தப்படம் பேசுகிறது.

ஆனால், பாகிஸ்தானில் மண்டோ படம் வெளியிட அனுமதிக்கப்படவில்லை. இதுகுறித்து நந்திதா தாஸ் அளித்த பேட்டி ஒன்றியில், “பிரிவினைக்கு எதிரான கருத்துக்கள், ஆட்சேபனைக்குரிய காட்சிகள் பாகிஸ்தானின் சமூக கட்டுப்பாடுகளுக்கு எதிராக உள்ளதாகக் கூறி பாகிஸ்தான் சென்ஸார்போர்டு மண்டோ படத்தை வெளியிட அனுமதிக்கவில்லை” என தெரிவித்திருந்தார். மேலும், “கேட்க வேண்டிய குரல்களை ஒடுக்குவது எங்கு நடந்தாலும் ஆபத்தானதே” எனவும் விமர்சித்திருந்தார்.

படிக்க:
♦ நூல் அறிமுகம் : தேசப்பிரிவினைக்கு காரணம் யார் ?
♦ இந்தியா குறித்து பாகிஸ்தான் மக்கள் என்ன நினைக்கிறார்கள் ?

இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில், “பாகிஸ்தானில் மண்டோ படம் வெளியாகதது வருத்தம் அளிக்கிறது” என நந்திதா தாஸ் தெரிவித்திருந்தார். இந்தப் பதிவுக்கு பதிலளித்திருக்கும் பாகிஸ்தானின் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் ஃபவாத் சவுத்ரி, “பாகிஸ்தானில் இந்தப் படத்தை வெளியிட முயற்சிக்கிறேன். கமர்ஷியல் தன்மை குறைவாக மண்டோ படத்தை அவருடைய நாட்டில் வெளியிட நிச்சயம் எவராவது முன்வருவார் என நம்புகிறேன்” என எழுதியுள்ளார்.

மண்டோ படம் வெளியாவது குறித்து பாகிஸ்தானின் சென்ஸார் போர்டின் தலைவர் தன்யால் கிலானி, ‘மண்டோ படத்துக்கு சென்ஸார் போர்டு சான்றிதழ் இன்னும் தரப்படவில்லை. பாகிஸ்தானில் வெளியிட விரும்பும் விநியோகஸ்தர்கள், சென்ஸார்போர்டு அனுமதி கேட்டு விண்ணப்பிக்கலாம்’ என தெரிவித்துள்ளார்.

இதனிடைய மண்டோ படத்தை வெளியிட கோரி செயல்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள், மண்டோவின் மகள்கள் உள்ளிட்ட பலர் இணைந்து கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஒடுக்குமுறைக்கும் மதவாத அடிப்படைவாதத்துக்கும் பெயர் பெற்ற பாகிஸ்தான், எதிர்க் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள தயாராகி வருகிறது. ஜனநாயக நாடாக சொல்லிக் கொண்ட இந்தியா இந்துத்துவாதிகளில் கையில் சிக்கி, எதிர்க்கருத்துக்களை சொல்லவே கூடாது என அடிப்படைவாதத்துக்கு தயாராகி வருகிறது.

தமிழாக்கம்: கலைமதி
நன்றி: ஸ்க்ரால்