Tuesday, August 5, 2025
முகப்பு பதிவு பக்கம் 386

ஸ்டெர்லைட்டை திறக்காதே ! தூத்துக்குடியில் கருப்புக் கொடி எதிர்ப்பு | தஞ்சை – விழுப்புரம் ஆர்ப்பாட்டம் !

ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க எடுக்கப்படும் முயற்சிகளைக் கண்டிக்கும் விதமாக நாளை (19-12-2018) தமிழகமெங்கும் கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பைத் தெரிவிக்க ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு அறைகூவல்.

எதிர்வரும் 21-12-2018 அன்று தூத்துக்குடி மாவட்ட மக்கள் அனைவரும் ஸ்டெர்லைட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க இருப்பதாக பத்திரிகையாளர் சந்திப்பில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகர் அரிராகவன் தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர் சந்திப்பின் காணொளி:

*****

மிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதியளிக்கப்பட்டதைக் கண்டித்து மக்கள் அதிகாரம் சார்பில் நேற்று (17.12.2018) ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

*****

விழுப்புரத்தில்…

டெல்லி பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு அநீதியானது, “ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட தனி சட்டம்  இயற்று !” என்று மக்கள் அதிகாரம் சார்பாக தடையை மீறி விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் 17.12.2018 அன்று காலை 11 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தோழர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

போராட்டத்தில் கலந்து கொண்ட பெண் தோழர் ஒருவரை கழுத்தைப் பிடித்து தள்ளும் போலீசார்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
விழுப்புரம் மண்டலம்.

*****

தஞ்சையில்…

“ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட தனிச்சட்டமியற்று !” என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழகமெங்கும் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக தஞ்சை ரயிலடியில் 17.12.2018 அன்று காலை 11:00 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னதாக இந்த ஆர்ப்பாட்டம் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், போலீசு அனுமதி மறுத்து கடிதம் ஒன்று அளித்திருந்தது. இருப்பினும் மக்களின் அத்தியாவசிய பிரச்சினைகளுக்காக போலீசின் அனுமதிக்காக காத்திருக்க முடியாது என்ற அடிப்படையில் மக்கள் அதிகாரம் தோழர்கள் போராட்டத்தை நடத்தினர். இதில் சிபிஐ கட்சித் தோழர்கள் மற்றும் சில ஜனநாயக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதை சற்றும் எதிர்பார்க்காத போலீசு டிஎஸ்பி தலைமையில் வந்து ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்தியது. மேலும் “நீங்கள் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துவது தவறு..” என போராடுபவர்களை மிரட்டப்பார்த்தது. “மக்கள் தங்கள் கோரிக்கைக்களுக்காக போராடுவது உங்களுக்கு சட்டவிரோதமா..” என கேட்டதும் “நீங்கள் நீதிமன்றம் சென்று கேளுங்கள்.. எங்களுக்கு மேலிடத்து அழுத்தம்..” எனக் கூறினார் டிஎஸ்பி.  “ஒவ்வொரு பிரச்சினைக்கும் நீதிமன்றத்தை எப்படி அணுக முடியும். கருத்துச்சுதந்திரம் என்பதற்கே இது விரோதமானது அல்லவா…” என தோழர்கள் கேட்டதற்கு பதில் சொல்ல இயலாமல் அனைவரையும் கைது செய்தது போலீசு. அவர்களை மண்டபத்தில் அடைத்து வைத்திருந்து பின்னர் மாலை விடுவித்தது போலீசு.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தஞ்சை மண்டலம்.

கேள்வி பதில் : ஐந்து மாநில தேர்தலில் வாக்களிக்காத மக்களின் மனநிலை என்ன ?

தேர்தல் நடந்த 5 மாநிலங்களில் மொத்த வாக்காளர்களில் எத்தனை சதம் மக்கள் இக்கட்சிகளுக்கு வாக்களித்துள்ளார்கள் ? வாக்களிக்காதவர்களை என்ன கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்? அவர்களின் மனநிலை என்னவாக இருக்கும்?

– அழகிரிசாமி.

ன்புள்ள அழகிரிசாமி,

ஐந்து மாநில தேர்தல்களில் வாக்களித்தோர் சதவீதம் பின்வருமாறு :
மத்தியப் பிரதேசம் 75%, தெலுங்கானா 73.20%, இராஜஸ்தான் 74%, சட்டிஸ்கர் 76% மிசோரம் 80%

இந்திய தேர்தல் நிலவரங்களை பார்க்கும் போது மேற்கண்ட ஐந்து மாநிலங்களில் பதிவாகியிருக்கும் வாக்கு சதவீதம் கொஞ்சம் அதிகம்தான். வழக்கமாக 65 சதவீத அளவிலான வாக்குப்பதிவே இங்கு அதிகம். மிசோரம் மாநிலம் ஒரு பாராளுமன்ற தொகுதியை மட்டும் கொண்டிருப்பதால் அங்கே 80% வாக்கு பதிவை விதிவிலக்காக வைத்துக் கொள்ளலாம். இதை தவிர்த்து விட்டு பார்த்தால் மற்ற நான்கு மாநிலங்களிலும் சராசரியாக 75 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. மீதம் உள்ள 25 சதவீத மக்கள் வாக்களிக்கவில்லை

பொதுவில் தேர்தல் காலத்தில் கிராமப்புறங்களில் வாக்களிக்கும் விகிதம் அதிகமாகவும், நகரப்புறங்களில் குறைவாகவும் இருக்கும். நகர்ப்புறங்களிலும் நடுத்தர வர்க்கம் மற்றும் மேல்தட்டு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தோர் மத்தியில் வாக்களிக்காதவர்கள் கணிசமாக இருப்பார்கள். வாக்களிக்காத இவர்கள் யாரும் அரசியல் பூர்வமாக தேர்தலை புறக்கணிப்பார்கள் அல்ல. ஒருவகையில் வாக்குச்சாவடி சென்று எந்த வேட்பாளருக்கும் ஆதரவில்லை என நோட்டா பட்டனில் வாக்களிக்கும் மக்கள் கூட கொஞ்சம் அரசியல்ரீதியாக எதிர்ப்பை காட்டுகிறார்கள் என்று சொல்லலாம்.

மேலும் வாக்களிக்காத இப்பிரிவினர் தேர்தலன்று வாக்களிப்பதை கூட ஒரு சுமையாகவும் சிரமமாகவும் கருத கூடியவர்களே!

கிராமப்புறங்களில் சாதி மத பிடிமானம் மற்றும் உள்ளூர் பிரமுகர்களின் செல்வாக்கு காரணமாக அதிகமான மக்கள் வாக்களிக்கிறார்கள். நகர்ப்புறங்களில் அத்தகைய நிலை இல்லை. பொதுவில் அரசியல் என்றாலே சாக்கடை, அரசியல்வாதிகள் என்றாலே கழிசடை என்ற கருத்து நடுத்தரவர்க்கத்தின் மத்தியில் ஆழமாக பதிய வைக்கப்பட்டிருக்கிறது.

இன்னொருபுறம் கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் வாக்களிக்கும் மக்கள் யாரும் இந்த ஜனநாயக அமைப்பின் மீது தீராத நம்பிக்கை கொண்டிருப்பதால் வாக்களிக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. அவர்களை பொருத்தவரை இந்த அமைப்பின் மீது எந்த நம்பிக்கையும் இல்லை என்பதை அவர்களது வாழ்வியல் அனுபவமே சொல்கின்றன. அதிகபட்சம் ரேசன் கார்டு, சாதிச்சான்றிதழ், நலத்திட்டங்களை பெறுவது தவிர அவர்களுக்கு இந்த அரசியல் அமைப்பில் இடமில்லை. அந்த அளவைத் தாண்டி இம்மக்கள் உலகில் அரசியல் பிடிமானம் இல்லை.

படிக்க:
♦ தேர்தல் புறக்கணிப்பு ஏன் ? தீர்வுதான் என்ன ?
♦ தேர்தல் புறக்கணிப்பால் என்ன பயன் ? வாசகர் விவாதம்

மேலும் வாக்களிக்கும் மக்கள் அதை ஒரு சடங்காகவும் காலம் காலமாக செய்ய வேண்டிய கடமையாகவும் கருதுகிறார்கள். சில நேரம் அந்தந்த காலகட்டத்தின் தேவைகள் விருப்பங்கள் எதிர்பார்ப்புகள் காரணமாக கூட அவர்கள் வாக்களிக்கலாம். இதே காரணங்களை வைத்து அவர்கள் தேர்தலை சில நேரம் புறக்கணிக்கவும் செய்யலாம். அல்லது காசு வாங்கிக்கொண்டு வாக்கு அளித்தாலும் அந்த மக்களும் தேர்தல் மற்றும் அரசியல் அமைப்பின் மீது நம்பிக்கை கொண்டு வாக்களிப்பதில்லை. அது ஒரு நாள் கூத்து, விழா என்ற வகையில் வாக்களிக்கிறார்கள். தேர்தல் முடிந்து தமது தொகுதியில் தேனாறும் பாலாறும் ஓடும் என்ற கனவெல்லாம் அவர்களிடம் இல்லை. வாக்களிப்பது என்பது கோவிலுக்கு சென்று வழிபடுவது போல ஒரு சடங்காக மாறிவிட்டது.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் தேர்தலில் வாக்களிக்காத மக்கள் அரசியல் அற்ற முறையிலும், வாக்களித்தவர்கள் தேர்தலைத் தாண்டி அரசியல் ரீதியாக இந்த அமைப்பை ஓரளவிற்கேனும் புரிந்தவர்களாவும் இருக்கிறார்கள். வாக்களிக்காத நபர்களுக்கு இந்த அமைப்பு வழங்கியிருக்கும் இடம் உரிமை சலுகை எவையும் வாக்களிக்கும் மக்களுக்கு இருப்பதில்லை. எதிர்காலத்தில் நோட்டாவின் விகிதம் அதிகரித்தாலும் அதை தூக்குவதற்கு கட்சிகளும், அரசும் கண்டிப்பாக முயலும். மேலும் நோட்டா என்பது இந்த தேர்தல் அரசியல் அமைப்பின் மீதான நம்பிக்கையை தக்கவைக்கும் நோக்கிலும் வைத்திருக்கிறார்கள். தனிப்பட்ட வேட்பாளரின் குணநலன்கள் காரணமாக தொகுதியில நல்ல வேட்பாளர் இல்லை என்றே நோட்டாவை தெரிவு செய்யச் சொல்லி பிரச்சாரம் நடக்கிறது.

ஆகவே தேர்தலை அரசியலற்று புறக்கணிக்கும் மக்களிடமும், தேர்தலை அரசியலற்று ஆதரிக்கும் பெரும்பான்மை மக்களிடமும் நாம் தொடர்ந்து பிரச்சாரத்தை செய்ய வேண்டியிருக்கிறது. மக்களுக்கான உரிமைகள், ஜனநாயகம் இந்த தேர்தல் அமைப்பில் இல்லை என்பதை அவர்களது சொந்த அனுபவத்தினூடாகவும், அதற்கான மாற்றுக்களை முன்வைத்தும் நடக்கும் அந்த பிரச்சாரத்தினூடாக மக்கள் விழிப்புணர்வு அடைவார்கள்.

உங்கள் கேள்விகளை அனுப்ப:

தங்களின் கேள்விகளை பதிவு செய்யுங்கள்

அவனது கண்கள் மட்டும் உணர்ச்சியோடும் உவகையோடும் ஒளிவீசிக் கொண்டிருந்தன !

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 38

மாக்சிம் கார்க்கி
ப்போதும் வேலையிலிருந்து குறிப்பிட்ட நேரத்துக்கு வீடு திரும்பி வரும் நிகலாய், ஒரு நாள் வழக்கத்துக்கு மாறாக நேரம் கழித்துத் திரும்பி வந்தான். வந்தவன் தன்னுடைய உடுப்புகளைக்கூட களையாமல் கைகளைப் பதறிப்போய் பிசைந்து கொண்டே சொன்னான்:

“நீலவ்னா! நம்முடைய தோழர்களில் ஒருவன் சிறையிலிருந்து தப்பி ஓடி விட்டானாம். யாராயிருக்கலாம்? என்னால் கண்டுபிடிக்க இயலவில்லை …..”

தாயின் உடம்பு ஆட்டம் கண்டு அசைந்தது.

”பாவெலாயிருக்குமோ?” என்று ஓர் ஆசனத்தில் உட்கார்ந்துக் கொண்டே மெதுவாகக் கேட்டாள் அவள்.

”இருக்கும்!” என்று தோளை அசைத்துக் கொண்டே சொன்னான் நிகலாய்: “ஆனால் அவனை மறைத்து வைப்பதற்கு நாம் என்ன செய்வது? அவனை எங்கே கண்டுபிடிப்பது? அவனைக் கண்டுபிடித்து விடலாம் என்ற நம்பிக்கையோடு நான் தெருத் தெருவாய்ச் சுற்றி அலைந்தாய்விட்டது. அலைந்தது முட்டாள்தனம்தான். ஆனால், நாம் ஏதாவது செய்தாக வேண்டுமே. நான் பழையபடியும் போகிறேன்……”

‘நானும் வருகிறேன்” என்று கத்தினாள் தாய்.

“பாவெல் நன்றாகத்தான் இருக்கிறான். சௌக்கியமாயிருக்கிறான். அவன்தான் எங்களுக்குத் தலைவன் மாதிரி இருக்கிறான்; அதிகாரிகளோடு பேசுகிறான்; பொதுவாக, அவன்தான் உத்தரவு போடுகிறான். எல்லோரும் அவனை மிகவும் மதிக்கிறார்கள்.”

“நீங்கள் இகோரிடம் போய், அவனுக்கு ஏதாவது விஷயம் தெரியுமா? என்று தெரிந்து கொண்டு வாருங்கள்” என்று சொல்லிவிட்டு, அவன் அவசர அவசரமாக வெளியேறினான்.

தாய் தன் தலைமீது ஒரு சவுக்கத்தை எடுத்துப் போர்த்திக்கொண்டு அவனைத் தொடர்ந்து தெருவுக்கு விரைந்து சென்றாள். அவள் மனத்தில் நம்பிக்கை நிறைந்திருந்தது. அவளது கண்கள் செவ்வரி படர்ந்து அசைந்தன; அவளது இதயம் படபடத்துத் துடித்து, ஓடுகின்ற மாதிரி அவளை வேகமாக விரட்டியடித்தது. அவள் தன் தலையைக் குனிந்தவாறே எதிரிலுள்ள எவற்றையுமே பார்க்காமல் நான் எதிர்பார்த்துச் செல்வதை எதிரே கண்டுவிடலாம் என்ற எண்ணத்தோடேயே சென்று கொண்டிருந்தாள்.

”நான் அங்கே அவனைக் கண்டுவிட்டேன் என்றால் — அவளது இந்த நம்பிக்கையே அவளை விரட்டி விரட்டி முன்னேறச் செய்தது.

பொழுது உஷ்ணமாயிருந்தது. அவளும் களைத்துப்போய் மூச்சுவிடத் திணறினாள். இகோரின் வீட்டுப் படிக்கட்டுக்குச் சென்றவுடன் அவளால் ஒரு அடிகூட முன்னே செல்ல முடியவில்லை. அவள் நின்றாள். சுற்றுமுற்றும் பார்த்தாள். திடீரென ஒரு கூச்சலிட்டுக் கண்களை மூடிக்கொண்டுவிட்டாள். அந்த வீட்டு வாசலில், தனது பாக்கெட்டுக்குள் கைகளை விட்டுக் கொண்டு நிகலாய் வெஸோவிஷிகோவ் நிற்பது போலத் தோன்றியது. அவள் மீண்டும் பார்த்தபோது அங்கு யாரையுமே காணோம்.

“இது என் மனப் பிராந்திதான்!” என்று நினைத்துக்கொண்டே படியேறினாள். காதுகளைத் தீட்டிக் கேட்டாள். வெளிமுற்றத்தில் யாரோ மெல்ல மெல்ல நடக்கும் காலடியோசை அவள் காதில் விழுந்தது. அவள் படியேறி மேலே சென்று கீழே பார்த்தாள். மீண்டும் அதே முகம். அதே அம்மைத் தழும்பு. விழுந்த முகம் தன்னைப் பார்த்ததும் புன்னகை புரிந்தவாறு நிற்பதைக் கண்டாள்.

“நிகலாய்! நிகலாய்!” என்று கத்திக்கொண்டே ஏமாற்றத்தால் வேதனையடைந்த இதயத்தோடு அவனை நோக்கி ஓடினாள். “நீ போ, போ” என்று தன் கையை ஆட்டிக்கொண்டே அமைதியாகச் சொன்னான் அவன்.

அவள் விடுவிடென்று மாடிப் படியேறி இகோரின் அறைக்கு வந்தாள். அங்கு அவன் ஒரு சோபாவில் படுத்திருப்பதைக் கண்டாள்.

“நிகலாய் ஓடி வந்துவிட்டான் – சிறையிலிருந்து” என்று அவள் திக்கித் திணறினாள்.

”எந்த நிகலாய்?” என்று கரகரத்த குரலில் கேட்டுக்கொண்டே தலையணையிலிருந்து தலையைத் தூக்கினான்; “இரண்டு நிகலாய் இருக்கிறார்களே”

“வெஸோவ்ஷிகோவ் அவன் இங்கே வந்து கொண்டிருக்கிறான்.

“சபாஷ்!”

இந்தச் சமயத்தில் நிகலாய் வெஸோவ்ஷிகோவே அறைக்குள் வந்து விட்டான். உள்ளே வந்ததும் அவன் கதவைத் தாழிட்டான்; தன் தொப்பியை எடுத்துவிட்டு, தலையைத் தடவிக் கொடுத்தான். லேசாகச் சிரித்துக்கொண்டே நின்றான். இகோர் முழங்கைகளை ஊன்றி எழுந்து கொண்டு, தலையை அசைத்தவாறு சொன்னான்.

”வருக வருக ……”

நிகலாய் பல்லைக் காட்டிப் புன்னகை புரிந்தவாறே தாயிடம் நெருங்கி அவள் கையைப் பற்றினான்.

‘நான் மட்டும் உன்னைச் சந்தித்திராவிட்டால், மீண்டும் சிறைக்கே திரும்பி போயிருப்பேன். எனக்கு நகரில் யாரையுமே தெரியாது. தொழிலாளர் குடியிருப்புக்குத் திரும்பிப் போயிருந்தாலோ ஒரே நிமிஷத்தில் அவர்கள் என்னைப் பிடித்திருப்பார்கள். ஏனடா முட்டாள்தனமாய் சிறையிலிருந்து தப்பியோடி வந்தோம் என்று நினைத்துக் கொண்டு அங்குமிங்கும் சுற்றித் திரிந்தேன். திடீரென்று நீலவ்னா தெரு வழியாக ஓடிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். உடனே அவளுக்குப் பின்னாலேயே நானும் ஓடி வந்தேன்.

”சரி, நீ எப்படி வெளியே வந்தாய்?” என்று கேட்டாள் தாய்.

அவன் அந்தச் சோபாவின் ஓரத்தில் உட்கார்ந்துகொண்டு தோளைக் குலுக்கிக் கொண்டு பேசத்தொடங்கினான்.

”சந்தர்ப்ப விசேஷம்தான்! கிரிமினல் கைதிகள், சிறையதிகாரியைப் பிடித்து உதைத்துக்கொண்டிருந்தார்கள். அப்போது நான் காற்று வாங்கியவாறு வெளியே உலாவிக் கொண்டிருந்தேன். அந்தச் சிறையதிகாரி ஒரு தடவை எதையோ திருடினான் என்பதற்காக, அவனுக்கு போலீஸ் படையிலிருந்து கல்தா கொடுத்தார்கள். இப்போதோ இந்தப் பயல் ஒவ்வொருத்தனையும் நோட்டம் பார்த்துத் திரிவதும், உளவு சொல்வதுமாகவே இருந்தான். இவனால் யாருக்குமே நிம்மதி கிடையாது. எனவேதான் அவர்கள் அவனைப் பிடித்து மொத்தினார்கள். ஒரே குழப்பமாக இருக்கவே, சிறையதிகாரிகள் விசில்களை ஊதிக்கொண்டு நாலாபக்கங்களிலிருந்தும் ஓடி வந்தார்கள். நான் சிறைக் கதவுகள் திறந்து கிடப்பதைப் பார்த்தேன். அதற்கு அப்பாலுள்ள மைதானச் சவுக்கத்தையும் ஊரையும் பார்த்தேன். மெதுவாக கனவில் நடப்பது மாதிரி நடந்து வெளியே வந்தேன். தெருவுக்குள் பாதி தூரத்துக்கு மேல் வந்த பிறகுதான் எனக்கே நினைவு தெரிந்தது. உடனே யோசித்தேன், எங்கே போவது? திரும்பிப் பார்த்தேன். அதற்குள் சிறைக் கதவுகள் மூடிவிட்டதைக் கண்டேன்…”

“ஹும் என்றான் இகோர். “ஏன் ஐயா நீங்கள் பேசாமல் திரும்பிப் போய்க் கதவைத் தட்டி, அவர்களைக் கூப்பிட்டு, “ஐயா. என்னை மன்னியுங்கள், கனவான்களே நான் ஏதோ சிறு பிழை செய்துவிட்டேன். பொறுத்தருளுங்கள்’ என்று சொல்லி பழையபடியும் உள்ளே போயிருக்கலாமே.”

“ஆமாம்” என்று கூறிச் சிரித்தான் நிகலாய். ”அது முட்டாள்தனம். யாரிடமும் எதுவும் சொல்லாமல் நான் இப்படி ஒடிவந்துவிட்டதானது, என்னுடைய தோழர்களுக்குச் சரியென்று பட்டிராது. சரி. அப்படியே போய்க்கொண்டிருந்தேன். எதிரே ஒரு சவ ஊர்வலம் சென்று கொண்டிருந்தது. ஒரு குழந்தையைப் புதைப்பதற்காகப் போய்க் கொண்டிருந்தார்கள். அவர்களோடு நானும் சேர்ந்து, சவப்பெட்டிக்குப் பக்கமாகச் சென்று என் தலையைத் தொங்கவிட்டவாறு, யாரையுமே நிமிர்ந்து பார்க்காமல் நடந்துவந்தேன். இடுகாட்டில் நான் கொஞ்ச நேரம் உட்கார்ந்து காற்று வாங்கினேன். அப்புறம் திடீரென எனக்கு ஒரு யோசனை வந்தது……”

“ஒரே ஒரு யோசனைதானே?” என்று கேட்டுவிட்டு, பெருமூச்செறிந்தான் இகோர். “உன் தலையிலே பல யோசனைகளுக்குத்தான் இடமிருக்காதே என்று நினைத்தேன்.”

வெஸோவ்ஷிகோவ் வாய் நிறைந்து சிரித்தான். தலையை அசைத்துக் கொண்டு பேசினாள்.

“ஓ! என் மூளை முன்னை மாதிரி காலியாய் இல்லை! என்ன இகோர் இவானவிச் உனக்கு இன்னும் சிக்குக் குணமாகவில்லையா?”

படிக்க:
ரஃபேல் ஊழல் : உச்சநீதிமன்றம் பார்க்க மறுத்த உண்மைகள் !
இந்தியாவிலிருந்து 45 இலட்சம் கோடி டாலரை பிரிட்டன் திருடியது எப்படி ?

”ஒவ்வொருவரும் தம்மால் முடிந்ததைச் செய்கிறார்கள்” என்று ஈரமாய் இருமியவாறு பதிலளித்தான் இகோர்: சரி உன் கதையை ஆரம்பி.”

“அப்புறம் நான் இங்கே இருக்கிற பொதுஜனப் பொருட்காட்சி சாலைக்குள்ளே நுழைந்தேன். உள்ளே சென்று அங்குமிங்கும் சுற்றிப் பார்த்தவாறே யோசித்தேன். இனிமேல் எங்கே போவது என் மீது எனக்குக் கோபம்கூட வந்தது. அத்துடன் பசி வேறே, மீண்டும் தெருவுக்கு வந்தேன். மனமே கசந்துபோய், எரிச்சலோடு நடந்து வந்தேன். போலீசார் ஒவ்வொருவரையும் கூர்ந்து கூர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். “சரிதான், என்னை மாதிரி மண்ணுப் பிறவியாக இருந்தால்…! நான் சிறிது நேரத்தில் எவனாவது ஒரு நீதிபதி முன்னால்தான் இழுத்துப் செல்லப்படுவேன் என்று நினைத்தேன். இந்தச் சமயத்தில் திடீரென்று என்னை நோக்கி நீலவ்னா ஓடிவருவது தெரிந்தது. நான் ஒரு பக்கமாக ஒதுங்கி நின்றேன்; பிறகு அவளைப் பின் தொடர்ந்தேன். இவ்வளவுதான் விஷயம்.”

”நான் உன்னைப் பார்க்கவில்லையே” என்று குற்றம் செய்து விட்டவள் மாதிரிக் கூறினாள் தாய். அவள் நிகலாயைக் கூர்ந்து பார்த்தாள். அவள் முன்னைவிட மெலிந்துபோய் இருப்பதாக அவளுக்குப்பட்டது.

அங்குள்ள தோழர்கள் கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள் என்று தலையைச் சொறிந்துக்கொண்டே சொன்னான் நிகலாய்.

“சரி. சிறை அதிகாரிகளைப் பற்றி உனக்குக் கவலை இல்லையா? அவர்கள் மீது உனக்கு அனுதாபம் கிடையாதா? அவர்களும்தான் கவலை பட்டுக்கொண்டிருப்பார்கள்” என்றான் இகோர். அவன் வாயைத் திறந்து உதடுகளை அசைத்தான். காற்றையே கடித்துச் சுவைத்துத் தின்பது மாதிரி இருந்தது அவனது வாயசைப்பு. ‘சரி, வேடிக்கைப் பேச்செல்லாம் இருக்கட்டும், முதலில் உன்னை எங்காவது ஒளித்து வைக்க வேண்டுமே. அது ரொம்ப நல்ல காரியம்தான். ஆனால் லேசில் நடக்கிற காரியமா? நான் மட்டும் எழுந்து நடக்க முடிந்தால் அவன் பெருமூச்சு விட்டவாறே தன் கைகளை மார்பின் மீது வைத்து, நெஞ்சைத் தடவிக் கொடுத்துக் கொண்டான்.

”நீ ரொம்பச் சீக்காயிருக்கிறாய், இகோர் இவானவிச்!” என்று தலையைத் தாழ்த்திக்கொண்டே கூறினான் நிகலாய். தாய் பெருமூச்சு விட்டாள். அந்த அடைசலான சிறு அறையை கவலையோடு பார்த்தாள்.

”அது என் சொந்த விஷயம்” என்றான் இகோர். “அம்மா, நீங்கள் அவனிடம் பாவெலைப் பற்றிக் கேளுங்கள். சும்மா இன்னும் பாசாங்கு செய்து கொண்டிராதீர்கள்.”

நிகலாய் பல்லைக் காட்டிச் சிரித்தான்.

“பாவெல் நன்றாகத்தான் இருக்கிறான். சௌக்கியமாயிருக்கிறான். அவன்தான் எங்களுக்குத் தலைவன் மாதிரி இருக்கிறான்; அதிகாரிகளோடு பேசுகிறான்; பொதுவாக, அவன்தான் உத்தரவு போடுகிறான். எல்லோரும் அவனை மிகவும் மதிக்கிறார்கள்.”

நிகலாய் வெஸோவ்ஷிகோவ் சொல்வதைக் கேட்டவாறே தலையை அசைத்துக்கொண்டாள் தாய். நீலம் பாரித்து உப்பியிருந்த இகோரின் முகத்தையும் கடைக்கண்ணால் பார்த்தாள். அந்த முகமே அசைவற்று, உணர்ச்சியற்றுத் தட்டையாயிருப்பது போலத் தோன்றியது அவளுக்கு. அவனது கண்கள் மட்டும்தான் உணர்ச்சியோடும் உவகையோடும் ஒளி வீசிக்கொண்டிருந்தன.

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

ரஃபேல் ஊழல் : உச்சநீதிமன்றம் பார்க்க மறுத்த உண்மைகள் !

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டஸால்ட் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே கடந்த 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் முடிவானது. இதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதால்,  நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் உச்ச நீதிமன்றம் டிசம்பர் 14-ம் தேதி தள்ளுபடி செய்தது.

முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, அருண் சோரி, வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் ஆகியோரும் ரஃபேல் போர் விமானங்களை வாங்கியதில் நடந்துள்ள முறைகேட்டை விசாரிக்கக் கோரி மனுதாக்கல் செய்திருந்தனர். உச்சநீதிமன்றம் மனுக்களை தள்ளுபடி செய்திருக்கும் நிலையில், அவர்கள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், ‘உச்சநீதிமன்றம் மனுக்களை தள்ளுபடி செய்திருப்பதால், மோடி அரசு முறைகேடு செய்யவில்லை என அர்த்தமாகிவிடாது’ என தெரிவித்துள்ளனர்.

கூட்டறிக்கையில், “ நீதிமன்றத்தின் சுதந்திரமான மேற்பார்வையில் ரஃபேல் ஒப்பந்தம் குறித்து விசாரணை  கோரிய  எங்கள் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பது எங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளது. நாங்கள்  ஒப்பந்தம் தொடர்பான பல்வேறு புகார்களை சிபிஐ-யிடம் சமர்பித்த பிறகு,  உச்சநீதிமன்றத்தை அணுகினோம்” எனக் கூறியுள்ள இவர்கள், அந்த விவரங்களை தந்துள்ளனர்.

1. பிரதமர் மோடி, 36 ரஃபேல் ஜெட் விமானங்களை வாங்க, ஏப்ரல் 10, 2015 அன்று கையெழுத்திட்டார். இந்திய விமானப் படையின் தலைமையகங்களில் இருந்தும் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலின் அனுமதி பெறாமலேயே 36 ஜெட் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் போட்டப்பட்டது. பாதுகாப்பு தொடர்பான கொள்முதலுக்கு இந்த இரண்டு அனுமதிகளும் கட்டாயம் தேவை. ஆனால், அந்த விதி மீறப்பட்டிருக்கிறது.

2. பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலின் அனுமதியுடன் இந்திய விமானப் படை 126 போர் விமானங்கள் வேண்டும் என நீண்ட காலமாக கோரி வருகிறது. அதற்கான டெண்டர்கள் அறிவிக்கப்பட்டு, ஆறு நிறுவனங்கள் பங்கேற்று, அதில் இரண்டு நிறுவனங்கள் தேர்வாகின. குறைந்த அளவிலான டெண்டர் தொகை அடிப்படையில் டஸால்ட் என்ற நிறுவனத்துக்கு ஒப்பந்தம் போனது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் 126 விமானங்கள் வாங்கப்படும் என்றும் இதில் 18 விமானங்கள் பறக்கும் நிலையில் வாங்கப்படும் என்றும் மீதியுள்ள விமானங்களை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் நிறுவனம் மூலம் தொழில்நுட்ப பரிமாற்றத்தின் படி தயாரித்துக் கொள்ளலாம் என ஒப்பந்தம் சொன்னது.

3. மார்ச் 25, 2015-ல், டஸால்ட் நிறுவனத்துடனான ஒப்பந்த பேச்சுவார்த்தை 95% நிறைவடைந்துவிட்டதாகவும் விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் டஸால்ட் நிறுவனத்தின் செயல் அதிகாரி, இந்திய விமானப் படையின் உயர் அதிகாரிகள் மற்றும் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் அதிகாரிகள் உள்ளிட்டோர் அறிவித்தனர். இந்த ஒப்பந்தம் குறித்து மேலதிக தகவல்கள் எதுவும் அப்போது சொல்லப்படவில்லை. இந்நிலையில், ஏப்ரல் 10-ம் தேதி பிரதமர் மோடி பிரான்சு அதிபருடன் 36 விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் தன்னிச்சையாக கையெழுத்திட்டார். அதாவது, 126 விமானங்கள் 36 விமானங்களாக குறைப்பட்டன. 36 விமானங்களும் பறக்கக்கூடிய நிலையில் கொள்முதல் செய்யப்படும் எனவும் ஒப்பந்தம் சொன்னது. ‘உள்நாட்டு உற்பத்தி பங்குதாரர்’ என்கிற புதுவிதி உள்ளே சொருகப்பட்டு தொழில்நுட்பத்தை பரிமாறிக்கொள்வதும் ‘மேக் இன் இந்தியா’ முழக்கமும் கைவிடப்பட்டன.

அதே நேரத்தில் அனில் அம்பானி, ‘ரிலையன்ஸ் டிபன்ஸ்’ என்ற புது நிறுவனத்தை தொடங்கி, ரஃபேல் ஒப்பந்தத்தில் கூட்டாளியாக நுழைகிறார். உள்நாட்டு உற்பத்தி பங்குதாரர் என்ற பெயரில் மொத்த ஒப்பந்தமும் ரிலையன்ஸ் நிறுவனத்து தரப்படுகிறது.  இந்த ஒப்பந்தத்தில் அப்போதைய பிரான்ஸ் அதிபராக கையெழுத்திட்ட ஹோலாண்டே சமீபத்தில் அளித்த பேட்டியில், முன் அனுபவம் இல்லாத புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தை அளிக்கும் முடிவை எடுத்தது முழுக்க முழுக்க இந்தியாவே என்றார்.  பிரான்ஸ் அரசுக்கும் இதற்கு தொடர்பில்லை என்றும் கூறினார்.

4. அதன் பிறகு, 36 ரஃபேல் விமானங்களின் அதிகபட்ச விலை 5.2 பில்லியன் யூரோக்கள் என பேச்சுவார்த்தை குழுவின் மூன்று மூத்த அதிகாரிகளால் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், பிரதமர் தலைமையிலான பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவை குழு விமானங்களின் விலை 8. 2 பில்லியன் யூரோக்கள் என தன்னிச்சையாக உயர்த்தியது. இறுதியாக இந்த ஒப்பந்தம் 7.2 பில்லியன் யூரோக்களில் வந்து முடிந்தது. ஒப்பந்தப்படி, ஒரு விமானத்தின் விலை ரூ. 1650 கோடியாக உள்ளது. பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், 2015 ஏப்ரல் 10-ம் தேதி அளித்த பேட்டியில், 126 விமானங்கள் 90 ஆயிரம் கோடிக்கு வாங்கப்படுவதாக, (அதாவது ஒரு விமானத்தின் விலை ரூ. 715 கோடி) சொல்லியிருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தகுந்தது.

மேலே குறிப்பிட்ட இந்த உண்மைகளின் அடிப்படையில் எங்களுடைய புகாரை, நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரிக்கக் கோரி சிபிஐ-யிடம் அளித்தோம். ஆனாலும் எங்களுடைய புகாரின் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்யவில்லை.

நீதிமன்றம் டிசம்பர் 14-ம் தேதி அளித்திருக்கும் தீர்ப்பு, நாங்கள் மனுவில் அளித்த, ஆவணப்படுத்தியிருந்த உண்மைகளை கணக்கில் கொள்ளவே இல்லை. விசாரணை கோரும் எங்களுடைய கோரிக்கையையும் அது பரிசீலிக்கவில்லை.

முரண்பாடாக, நாங்கள் இந்த ஒப்பந்தத்தையே கேள்விக்குள்ளாக்குவதாக அணுகி, அரசு சீல் வைக்கப்பட்ட உறைகளில் கொடுத்த தகவல்களின் அடிப்படையில், அதுகுறித்து எங்களுக்கு தெரிவிக்கப்படாமல் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  உண்மையில், தீர்ப்பில் சொல்லப்பட்டிருக்கும் சில விசயங்கள் ஆவணங்களில் இல்லை என்பதோடு முழுவதுமாக தவறானவை.

சிஏஜி அறிக்கை குறித்த தவறு

நீதிமன்றம் தனது ஆணையின் 25-வது பத்தியில் இப்படி சொல்லியிருக்கிறது,

“விமானங்களின் விலை விவரங்கள், மத்திய தணிக்கை ஆணையத்திடம் பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளன. மேலும், மத்திய தணிக்கை ஆணையத்தின் அறிக்கை பொது கணக்கு கமிட்டியால் ஆய்வு செய்யப்பட்டது.  சிஏஜி அறிக்கையின் ஒரு பகுதி மட்டுமே நாடாளுமன்றத்தில் தரப்பட்டது, பொது பார்வைக்கும் வந்தது…”

மேலே குறிப்பிட்ட அனைத்து தகவல்களும் ஆவணங்களிலோ, உண்மையில் சரியானதாகவோ இல்லை. பொது கணக்கு கமிட்டி ஆய்வு சமர்பிக்கப்படவில்லை என்பதோடு, சிஏஜி அறிக்கையின் ஒரு பகுதி நாடாளுமன்றத்திலோ, பொது பார்வைக்கோ வைக்கப்படவில்லை.  இந்த தவறான கூற்று மத்திய அரசு அளித்த தகவலின் அடிப்படையில்(எங்கள் பார்வைக்கு வராதது) கூறப்பட்டுள்ளது. சொல்லப்பட்ட மூன்று விவகாரங்களிலும் ஆதாரமற்ற பொய்கள் சொல்லப்பட்டிருக்கும் நிலையில் மூடப்பட்ட உறைகளில் அளிக்கப்படும் தகவல்களின் அடிப்படையில் தீர்ப்புகள் வழங்கப்படுவது எந்த அளவுக்கு ஆபத்தானவை என்பதற்கு இந்த கூற்று எடுத்துக்காட்டுகிறது.

தனது சுருக்கமான தீர்ப்பில் அடிப்படையிலேயே தவறான தகவல்களை நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது.

இந்திய விமானப் படை அதிகாரிகளின் சாட்சியங்களில் உள்ள தவறுகள்

நீதிமன்றம் அதே பத்தியில் இந்திய விமானப் படையின் தலைவர், விமானத்தின் விலையை வெளிப்படையாக கூறுவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என கூறியதாக குறிப்பிட்டுள்ளது.  இந்த கூற்று ஆவணப்படுத்தப்படவில்லை. அதோடு இதை நீதிமன்றம் எங்கிருந்து பெற்றது என்பதும் புரியவில்லை. அதோடு, விமானப்படை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடைமுறைகள் மற்றும் விலை குறித்து நீதிமன்றத்தின் முன் சாட்சியம் அளித்ததாக நீதிமன்றம் கூறுகிறது.

இந்த கூற்றும் உண்மையில்லை, விமானப்படை அதிகாரிகளிடம் நீதிமன்றம் ஒரே ஒரு கேள்வியைக் கேட்டு பதிலைப் பெற்றது. ரஃபேல் விமானங்கள் 3வது,  4வது,  5வது தலைமுறையை சேர்ந்தவையா என்பதும் எப்போது கடைசி பேச்சுவார்த்தை நடந்தது என்பது மட்டும்தான் கேட்கப்பட்டது.  பேச்சுவார்த்தை குறித்தோ, விலை குறித்தோ எந்தவொரு கேள்வியும் கேட்கப்படவில்லை. அவர்களும் பதில் சொல்லவில்லை. நீதிமன்றத்தில் அப்படியொரு விசாரணை நடைபெறவே இல்லை.

கொள்முதல் நடைமுறையில் இருந்த முதன்மையான விசயங்களை கண்டுகொள்ளவே இல்லை

126 விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் நிறுத்தப்பட்டு, 36 விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் போடப்படுவதாக அரசு தெரிவித்த தகவலை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. டஸால்ட் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி, பேச்சுவார்த்தை 95 சதவீதம் முடிவடைந்துவிட்டதாகவும் ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் எனவும் 2015, மார்ச் 25-ம் தேதி நேர்காணல் அளித்தார். மேலும் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் தாங்கள் நிறைவும் மகிழ்ச்சியும் பெறுவதாகவும் தெரிவித்திருந்தார். அவர் அளித்த வீடியோ நேர்காணலை நீதிமன்றத்தில் ஆதாரமாக அளித்திருந்தோம். அதை நீதிமன்றம் முற்றிலுமாக புறக்கணித்துவிட்டது.

மேலும் கொள்முதல் செய்வதில் விதிமீறல் செய்யப்பட்டிருப்பது குறித்து நாங்கள் எழுப்பிய புகாரை நீதிமன்றம் கண்டுகொள்ளவில்லை. ஏப்ரல் 10-ம் தேதி பிரான்ஸ் அரசுடன் 36 விமானங்கள் வாங்கப்போவதாக பிரதமர் ஒப்பந்தம் செய்துகொண்டார். இந்திய விமானப்படை 36 விமானங்கள் வேண்டுமென கேட்கவுமில்லை, பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலின் ஒப்புதலையும் பெறவில்லை. விதிமுறைகள் பின்பற்றவில்லை என்பதை நாங்கள் சுட்டிக்காட்டியிருந்தோம். புதிய ஒப்பந்தம் செய்யப்பட்டதாக பிரதமர் தன்னிச்சையாக அறிவித்தார்.

36 விமானங்கள் விலை பற்றி நீதிமன்றம் கூறுகையில், இந்த விலை நிர்ணயம், புதிய விமானங்களின் அடிப்படை விலை மற்றும் அதன் இதர கூடுதல் விலை பற்றிய ஒப்பீட்டு விபரங்களை நாங்கள் கவனமாக ஆய்வு செய்ததில் அது RFP, IGA எனப்படும் ஒப்பந்த நடைமுறைகளின் வழி காட்டுதல்படியே செய்யப்பட்டுள்ளது என்கிறது.

விதிமுறைகளைப் பற்றி கண்டுகொள்ளாமல், நீதிமன்றம் அபாயகரமான முடிவை எடுக்கிறது. 75-வது பிரிவில் இப்படி கூறுவதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டுகிறது, “பரிந்துரைக்கப்பட்ட நடைமுறையிலிருந்து ஏதேனும் விலகல் நேரிட்டால் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலுக்கு பாதுகாப்பு கொள்முதல் நடைமுறை மூலம் ஒப்புதல் தர அனுப்ப வேண்டும்”.  அதாவது அரசு நினைத்தால் என்ன வேண்டுமானால் செய்துகொள்ளலாம், (இந்த விசயத்தில் பிரதமர்) இறுதியில் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலின் ரப்பர் ஸ்டாம்ப் குத்தப்பட்டால் முடிந்தது என்பதைத்தான் நீதிமன்றம் சொல்கிறது.

விலை மாற்றத்தை கண்டுகொள்ளவில்லை !

விலை குறித்து நீதிமன்றம் இப்படிச் சொல்கிறது…

நாங்கள் விலை குறித்தும் விலைகளின் ஒப்பீடு குறித்தும் முழுமையாக ஆராய்ந்தோம். அதிகாரிகள் அளித்த தகவல்களையும் ஆராய்ந்தோம். 36 ரஃபேல் விமானங்களை வாங்குவதில் பராமரிப்பு மற்றும் ஆயுதங்களை உள்ளடக்கிய தொகுப்பில் வணிக லாபங்கள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தார்கள். விலைகளை ஒப்பீடு செய்வது நீதிமன்றத்தின் பணியல்ல. மேலும் இதுபற்றி மேலதிக தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது அது பற்றி மேற்கொண்டு கூற இயலாது

விமானத்தின் விலை திடீரென 5.2 பில்லியனிலிருந்து 8. 2 பில்லியன் யூரோவாக விலை உயர்த்தப்பட்டது குறித்து நாங்கள் அளித்த விவரங்களை நீதிமன்றம் விசாரிக்கவில்லை.  பேச்சுவார்த்தை குழுவில் இடம்பெற்றிருந்த மூன்று அதிகாரிகள்,  இந்த ஒப்பந்தத்தை எதிர்த்த காரணத்துக்காக இடமாற்றம் செய்யப்பட்டார்கள். ஆனால், இல்லாத சிஏஜி அறிக்கை குறித்து மீண்டும் மீண்டும் நீதிமன்றம் மேற்கோள் காட்டுகிறது.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துடன்
அனில் அம்பானியின் நிறுவனத்தை சேர்த்து குழப்பிக்கொள்கிறது !

2012-ம் ஆண்டிலிருந்தே ரிலையன்ஸ் நிறுவனம் டஸால்ட் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்ததாக அனில் அம்பானியின் நிறுவனத்துடன் நடந்த ஆப்செட் ஒப்பந்தம் குறித்து நீதிமன்றம் சொல்கிறது.  டஸால்டுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது முற்றிலும் வேறுபட்ட முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம்.  அந்த பேச்சுவார்த்தைக்கும் 2015-ம் ஆண்டு ரஃபேல் ஒப்பந்தத்தின் போது தொடங்கப்பட்ட அனில் அம்பானியின் நிறுவனத்துக்கும் தொடர்பு இல்லை.

பாதுகாப்பு கொள்முதல் நடைமுறையின் படி, பாதுகாப்பு அமைச்சரின் ஒப்புதலின் கீழ் ஆப்செட் ஒப்பந்தங்கள் போடப்படவேண்டும் என்பதையும் நீதிமன்றம் கண்டுகொள்ளவில்லை.

இந்த தகவல்களின் அடிப்படையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த 36 ரஃபேல் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தில் நீதிமன்றம் தலையிடத் தேவையில்லை என நீதிமன்றம் முடிவுக்கு வருகிறது.  “தனிநபர்களின் முன்முடிவுகளை வைத்து நீதிமன்றம் விசாரிக்க முடியாது” என அது சொல்கிறது.

நாங்கள் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என கோரவில்லை. சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழுவின் சுதந்திரமான விசாரணையை கோரினோம்.  உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு லலிதா குமாரி வழக்கில் இதற்கான வழிமுறைகளை கூறியுள்ளது. அதாவது குற்றம் நடந்திருக்கிறது என கருதப்பட்டால், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, விசாரிக்கப்பட வேண்டும்.  இந்த ஒப்பந்தத்தின் மூலம் பெரும் பகுதியான பணம் ஆப்செட் ஒப்பந்தம் என்ற பெயரில் கமிஷனாக தரப்பட்டுள்ளது என்பது எங்களுடைய புகார். இந்த பணம் கைமாறுவதற்கென்றே ஆப்செட் ஒப்பந்தம் என்கிற புதிய வழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவே எங்களுடைய குற்றச்சாட்டு.

அரசு குற்றமற்றது என சொல்லவில்லை

நிலைமை இப்படியிருக்க, நீதிமன்றம் அளித்த தீர்ப்பு எங்களை அதிர்ச்சியடைய வைத்தது; ஏமாற்றம் தந்தது. நீதிமன்றம் நாங்கள் அளித்த சான்றுகளை ஆராயவில்லை; ஆராய்ந்ததாகவும் சொல்லவில்லை. அரசின் ஒப்பந்தங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என்ற அரசியலமைப்பு சட்டத்தின் 32-வது பிரிவைக் காரணம் காட்டி, எங்கள் மனு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.  எனவே, இந்த தீர்ப்பை ஒப்பந்தத்துக்கு உச்சநீதிமன்றத்தின் நற்சான்று என எடுத்துக்கொள்ள முடியாது.

நாங்கள் அளித்த புகாரில் கூறியுள்ளது போல, இது ஒரு மோசடி ஒப்பந்தம்.  இந்த ஒப்பந்தம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதோடு, பொதுமக்களின் பணத்தையும் வீணடிக்கக்கூடியது. ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் என்ற பொதுத்துறை நிறுவனத்துக்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தக்கூடியது.  அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு ஒரு பெருந்தொகையை கமிஷனாக கொடுப்பதற்கென்றே இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. இதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டும்.

பரிமாறப்படும் புன்னகைகளின் பொருள் என்ன ?

பெருந்தலைகளின் தொடர்பிருந்த போபர்ஸ் மற்றும் பிர்லா சஹாரா வழக்குகளில் வழங்கப்பட்டதைப் போல, இந்தத் தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. சுதந்திரமான விசாரணையை நீதிமன்றம் இந்த வழக்குகளை நிறுத்தி வைத்ததோடு, வழக்குகளை மூடவும் உதவியது. அதுபோல இந்த வழக்கின் தீர்ப்பும் உள்ளது.

படிக்க:
இந்திய இராணுவத்திற்கான செலவு : தேசப் பாதுகாப்பிற்கா – கார்ப்பரேட்டுகளை கை தூக்கவா ?
மோடி அரசின் பாசிசத்திற்கு பச்சைக் கொடி காட்டும் உச்சநீதி மன்றம்

ஆனால் மக்களின் மனதில் உள்ள ஐயங்களைப் போக்க வேண்டுமானால் ஒரு சுதந்திரமான விசாரணை நடத்தி உண்மைகளை வெளிக் கொண்டு வர வேண்டியது மிகவும் அவசியம். ஆனால், பொதுமக்கள் மனதில் எழுந்துள்ள சந்தேகங்களை போக்கும் விதமாக முழு விசயங்களும் வெளியே வர வேண்டும். அதற்கு சுதந்திரமான விரிவான விசாரணை தேவை.

ரஃபேல் ஒப்பந்தத்தின் முறைகேடுகளை தெள்ளத்தெளிவாக சுட்டிக்காட்டிய பிறகும் உச்சநீதிமன்றம் கண்களை மூடிக்கொண்டு தீர்ப்பு எழுதியதன் மூலம், மோடியின் ஊழலுக்கு துணைபோயிருக்கிறது. மோடி கும்பல் அம்பானிகளுக்கு நாட்டை தாரைவார்க்க தயாராகிவருகிறது.

தமிழாக்கம்: அனிதா
நன்றி: தி வயர்

ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடு ! தமிழகமெங்கும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு பசுமைத்தீர்ப்பாயம் அனுமதி வழங்கியுள்ளது. அவ்வாறு அனுமதி அளிப்பதற்கு தமிழக அரசும் துணைபோயுள்ளது. மக்களை பசுமைத் தீர்ப்பாயம் மற்றும் நீதிமன்றம் என அலைகழிப்பதன் மூலம் ஒரு முட்டு சந்துக்குள் நிறுத்தப்பார்கிறது எடப்பாடி அரசு.

இதனை கண்டிக்கும் விதமாகவும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வகையில் தனிச்சட்டமியற்ற வலியுறுத்தியும் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் இன்று (17.12.2018) தமிழகமெங்கும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது அதன் பதிவுகள்.

*****

திருச்சியில்…

மிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் ஸ்டெர்லைட்டை ஆலையை நிரந்தரமாக மூட தனிச் சட்டம் இயற்ற வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது.

அதனடிப்படையில் திருச்சியில் தலைமை தபால் நிலையம் முன்பாக சிக்னல் பகுதியிலிருந்து 60 -க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கினைப்பாளர் தோழர் செழியன் தலைமையில் தமிழக விவசாயிகள் சங்க திருச்சி மாவட்ட தலைவர் சின்னதுரை, மகஇக செயலர் தோழர் ஜீவா, ம.க.இ.க பாடகர் தோழர் கோவன் உட்பட பலர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த போராட்டத்தில் பங்கேற்ற தோழர்கள் தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் படுகாலை செய்யப்பட்ட 14 பேர் உருவ படத்தை அணிந்து ஊர்வலமாக நடந்து வந்ததும், ஆர்ப்பாட்ட இடத்தில் துப்பாக்கியால் சுட்டு வீழ்ந்து கிடப்பது போன்று காட்சி படுத்தியதும், பொது மக்கள் மத்தியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராளிகளின் தியாகத்தை நினைவுபடுத்தும் விதமாக அமைந்தது.

இதனால் திருச்சியின் முக்கிய சிக்னல் பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. அருகில் இருந்த BSNL ஊழியர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் நமது போராட்ட பிரசுரங்களை கேட்டு வாங்கிப் படித்தனர் மற்றும் இந்த போராட்டத்திற்கு ஆதரவும் தெரிவித்தனர்.

போலீசு மத்திய அரசின் அலுவலகம் ழுன்பு போராட்டம் நடத்த அனுமதி இல்லை எனக்கூறி மறுத்து அனைவரையும் கைது செய்தது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்
திருச்சி மண்டலம். தொடர்புக்கு : 94454 75157.

*****

தர்மபுரியில்…

“ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட தனிச் சட்டம் இயற்று !” என்ற முழக்கத்தின் அடிப்படையில் தருமபுரி காமராஜர் சிலை அருகில் டிசம்பர் – 17, 2018 அன்று காலை 11 மணிக்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

‘ஸ்டெர்லைட்டை மூடுவதுதான் எங்கள் நோக்கம்’ என பசப்பு வார்த்தை பேசும் தமிழக அரசின் போலீசு இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுத்தது. மேலும் போராட்டத்தில் ஈடுப்பட்ட தோழர்களை மிகவும் கேவலமாக ஆபாச வார்த்தையில் திட்டி, தரதரவென்று இழுத்து குண்டர்களை  கைது செய்வது போல் இழுத்துச் சென்றது.

அதிலும் குறிப்பாக இன்ஸ்பெக்டர் இரத்தினக் குமார் போராட்டத்தில் ஈடுபட்ட தோழர்களின் கழுத்தை கொலைவெறியுடன் நெருக்கினார். “உங்களை விடமாட்டேன்டா…” என கத்திக் கொண்டே ஆபாசவார்த்தைகளில் திட்டத் தொடங்கினார் இன்ஸ்பெக்டர் இரத்தின குமார்.

போராடும் தோழர்களை வாகனத்தில் அடைத்து ஏற்ற முற்பட்ட போது ஒரு காரில் எப்படி 40 பேர் ஏறமுடியும் என கேட்டதும்; “ஏறுங்கடா தே….பசங்களா” என ஒரு ரவுடியைப் போல நடந்துகொண்டார் இந்த இன்ஸ்பெக்டர்.

போலீசு தாக்கியதில் இரண்டு தோழர்களுக்கு கையில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்ட போலீசு தற்போது தோழர்களை தருமபுரி B1 காவல் நிலையத்தில் அடைத்துள்ளது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்
தருமபுரி மண்டலம், தொடர்புக்கு : 97901 38614.

*****

கோவையில்…

கோவை மண்டல மக்கள் அதிகாரம் சார்பாக கோவை டாடாபாத் பவர்ஹவுஸ் அருகில் இன்று(17.12.2018) காலை 11 மணி அளவில் டெல்லி பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவு அநீதியானது! ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட தனிச்சட்டம் இயற்று ! என்ற முழக்கத்தை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம், எட்டு மணிநேர தொழிலாளர் இயக்கம் உட்பட பல அமைப்புகள்  பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் நாசகர ஸ்டெர்லைட் ஆலையை விரட்ட தமிழக அரசு  உடனடியாக தனி சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும் தூத்துக்குடி மக்கள் மட்டும் போராடி வெல்ல முடியாது. அவர்களோடு தமிழக மக்கள் கரம் கோர்த்து வீதியில் இறங்க வேண்டிய நேரமிது.! என அறைகூவல் விடுக்கப்பட்டது !

தமிழக அரசுக்கும் ஆலையை விரட்டுவது தான் நோக்கம் என சொல்கிறது, ஆனால் அதே நோக்கத்திற்க்காக போராடிய மக்கள் அதிகாரத்தினர் 26 பேரை தற்போதுவரை கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

ஆர்ப்பாட்டத்தில் எழுப்பபட்ட முழக்கங்கள் :

தமிழக அரசே! தமிழக அரசே !
கொலைகார ஸ்டெர்லைட்டை
நிரந்தரமாக விரட்டியடிக்க
தனிச்சட்டம் இயற்றிடு!

ஏற்காதே! ஏற்காதே!
ஸ்டெர்லைட்டை திறக்கச்சொல்லும்
பசுமைத் தீர்ப்பாயத்தின்
அநீதியான உத்தரவை
ஏற்காதே ஏற்காதே!

கண்டிக்கின்றோம்! கண்டிக்கின்றோம்!
நாசகார ஸ்டெர்லைட்டை
ஆதரிக்கும் பா.ஜ.க. அரசை
வன்மையாகக் கண்டிக்கிறோம்.

விடமாட்டோம் ! விடமாட்டோம்!
ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக
விரட்டாமல் ! விடமாட்டோம் !

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில்
கொல்லப்பட்ட தியாகிகளுக்கு
பதில் சொல்! பதில் சொல் !
தமிழக அரசே பதில் சொல்

தடுக்காதே தடுக்காதே
தூத்துக்குடி மக்களின்
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை
தடுக்காதே! தடுக்காதே!

கோயலும் அகர்வாலும் கூட்டாளி!
கார்ப்பரேட்டும் மோடியும் பங்காளி!
நம்பாதே! நம்பாதே!
இந்த அரசைமைப்பையே நம்பாதே!

இங்கிலாந்து கம்பெனிக்காக
சொந்த நாட்டு மக்களை
சுட்டுக்கொன்றது போலீசு !
வாழ்வை அழிக்குது தீர்ப்பாயம்
இதுக்கு பெயரா ஜனநாயகம்?

ஓயாது ! ஓயாது !
கொலைகார ஸ்டெர்லைட்டை
நிரந்தரமாக விரட்டாமல்
மக்கள் போராட்டம் ஓயாது !

சட்டமியற்று ! சட்டமியற்று  !
நாசகார ஸ்டெர்லைட்டை
நிரந்தரமாக விரட்டியடிக்க
தமிழக அரசே சட்டமியற்று !

தகவல் :
மக்கள் அதிகாரம்
கோவை, தொடர்புக்கு : 95858 22157

*****

விருத்தாச்சலத்தில்…

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆணையத்தை கண்டித்தும்! சட்டமன்றத்தில் கொள்கை முடிவெடுத்து சிறப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தியும்! மக்கள் அதிகாரம் சார்பில் விருதையில் இனறு அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் 150-க்கும் மேற்ப்பட்டோர் கலந்துகொண்டனர்…

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் வட்டார ஒருங்கிணைப்பாளர் தோழர் முருகானந்தம் தலைமை தாங்கினார்.

அவரைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் தோழர் முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர ஒருங்கிணைப்பாளர் தோழர் வே.மா.அருள், இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியைச் சார்ந்த தோழர் கோகுல் திருஷ்டிபன், CPM.(ML) மக்கள் விடுதலை அமைப்பைச் சார்ந்த தோழர் ராமர், CPM-விடுதலை அமைப்பைச் சார்ந்த தோழர் தனவேல், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி அமைப்பின் மாவட்ட செயலாளர் தோழர். மணியரசன், மாணவர்களின் கல்வி உரிமைகான பெற்றோர் சங்கத்தின் செயலாளர் வ.அன்பழகன், மக்கள் உரிமை பாதுகாப்பு மைய மாவட்ட செயலாளர் தோழர் புஷ்பதேவன் மற்றும் மக்கள் அதிகாரம் கடலூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் பாலு ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்:
மக்கள் அதிகாரம்
விருத்தாசலம், தொடர்புக்கு : 97912 86994.

*****

மதுரையில்…

ஸ்டெர்லைட் திறக்க அனுமதித்த டெல்லி பசுமை தீர்ப்பாயம் உத்தரவு அநீதியானது ஸ்டெர்லைட்டை மூட தனி சட்டம் இயற்றக் கோரி தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் சார்பில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

 

அதன் ஒரு பகுதியாக மதுரை மண்டலத்தில் ஒருங்கிணைப்பாளர் தோழர் குருசாமி தலைமையில் மதுரை ரயில்வே சந்திப்பில் இன்று (17.12.2018) ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

ஆர்ப்பாட்டத்திற்காக பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து மக்கள் அதிகாரம் தோழர்கள் சென்றார்கள். அவர்களை ஆர்ப்பாட்டம் செய்யவிடாமல் வழிமறித்த போலீசு கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்
மக்கள் அதிகாரம்
மதுரை.

அங்கன்வாடி பணியாளர்களை வதைக்கும் சதிகார அரசு !

ரசுப்பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் அதாவது எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து உள்ளார். நீட் தேர்வு பிரச்சனை உச்சத்தில் இருந்த நேரத்தில் பள்ளிக் கல்வி துறையில் அதிரடி மாற்றங்களை உருவாக்க போகிறோம் என்று இவர்கள் ஆடிய ஆட்டங்களில் இதுவும் ஒன்று. இது தொடர்பாக சில காலங்களுக்கு முன்பு இன்னொரு அறிவிப்பும் வந்தது. அதாவது முதல் வகுப்பில் ஒரு குழந்தை சேர வேண்டும் என்றால் மழலையர் வகுப்பில் கலந்து கொண்டதற்கான சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும்.

சரி.. இந்தத் திட்டம் எங்கிருந்து தொடங்கியது என்று பார்ப்போம். இந்தத் திட்டமானது தமிழக அரசால் தொடங்கப்பட்ட திட்டம் கிடையாது. 2016-ம் ஆண்டில் மோடி அரசால் உருவாக்கப்பட்ட கல்விக் கொள்கை திட்ட வரைவுக்குழுவின் அறிக்கையில் சொல்லப்பட்ட பரிந்துரைகளில் இதுவும் ஒன்று. அதாவது 6 வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு மழலையர் கல்வியை வழங்குவது. அதாவது நன்கு வரையறுக்கப்பட்ட பாடத்திட்டத்தினைக் கொண்ட ஒரு கல்வியை வழங்குவது. சரி, இது இந்தக் குழுவால் தான் முதன்முதலில் பரிந்துரைக்கப்பட்டதா என்றால், அதுவும் கிடையாது. இளம் குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் கல்விக்கான கொள்கை (Early Child Care and Education policy – ECCE) 12-10-2013 அன்று மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்தக் கொள்கைப்படி 6 வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் கல்வியினை மத்திய மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். இந்தத் திட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் (Ministry of women and child development) கீழ் இயங்கும் என்று சொல்கிறது இந்த அரசாணை.

இந்த அரசாணை வெளியிடப்பட்டுச் சில மாதங்களில் காங்கிரஸ் ஆட்சியை இழந்து மோடி தலைமையில் அரசு அமைந்தது. அதன் பிறகு இந்த அரசானை கிடப்பில் போடப்பட்டது. 2016-ம் ஆண்டில் இந்த அரசாணையை அடிப்படையாகக் கொண்டுதான் 6 வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு மழலையர் கல்வி வழங்குவது தொடர்பாகப் பரிந்துரைகள் கொடுக்கப்பட்டது. இன்னும் அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்படாத வரைவு திட்டத்தின் பரிந்துரைகளை ஏற்கெனவே மோடி அரசு அமல்படுத்த தொடங்கி விட்டது. அதன் வெளிப்பாடுதான் தமிழகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் இந்த அறிவிப்பும்.

சரி.. குழந்தைகளுக்குக் கல்வி கொடுப்பது நல்ல செயல் தானே என்று கேட்கலாம். அது நல்லதா கெட்டதா என்பதைக் கூறும் அளவுக்கு நான் மருத்துவரோ மனோதத்துவ நிபுணரோ கிடையாது. ஒரு வேலை இந்தப் பரிந்துரைகளை கூறியவர்கள் அனைத்தும் அறிந்த மகான்களாக இருக்கலாம். இங்கு கூறவரும் முக்கியமான விசயம் என்னவென்றால், இந்தத் திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படப் போகிறது என்பதைப் பற்றித்தான்.

ஏற்கனவே கூறி இருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மற்றுமொரு முக்கியான திட்டம் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவை திட்டம் (Integrated Child Development Service). கிராமப் புறங்களில் காணப்படும் அங்கன்வாடி மையங்கள் இந்தத் திட்டத்தின் கீழ்தான் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறைத்தல், மகப்பேறின் போது நடக்கும் இறப்புகளின் விகிதம் குறைத்தல் போன்றவற்றில் ஆரம்பச் சுகாதார மையத்திற்கு இணையாகப் பங்காற்றியவர்கள் இந்த அங்கன்வாடி பணியாளர்கள். அது மட்டுமல்லாது, போலியோ ஒழிப்பு, மக்களிடையே சுகாதார விழிப்புணர்வு என இவர்களின் பங்களிப்பு நீண்டு கொண்டே செல்லும். ஆனால் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்கள் அல்ல இவர்கள். மற்ற அரசு அதிகாரிகளைப் போல எந்தச் சலுகையும் இவர்களுக்கு வழங்கப்படுபவது கிடையாது. இது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபாடும். தமிழக்தில் பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு இவர்கள் சில சலுகைகளைப் பெற்று உள்ளனர். அதே வேளையில் மற்ற மாநிலங்களில் இவர்களுக்கு மாத ஊதியம் என்பது கூட கிடையாது. மாதம் தோறும் ஒரு குறிப்பிட்ட பணம் வெகுமானமாக வழங்கப்படும். அதாவது இவர்கள் ஊழியர்களாக மதிக்கப்படுவது கிடையாது. தன்னார்வலர்களாக மட்டுமே பார்க்கப்படுகிறார்கள். இந்த அங்கன்வாடி பணியாளர்கள் மேற்சொன்ன பணிகளைத் தாண்டி, மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேர்தல் பணிகள் என மற்ற வேலைகளையும் செய்யப் பணிக்கப்படுகிறார்கள்.

மழலையர் கல்வி அறிவிப்புக்கும் இந்த அங்கன்வாடி பணியாளர்களுக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி வரும். ஆம்.. இந்தத் திட்டம் அங்கன்வாடி பணியாளர்களைக் கொண்டுதான் செயல்படுத்தப்படப் போகிறது. ஏற்கனவே அவர்களுடைய உழைப்புக்கான ஊதியத்தைக் கொடுக்காமல் அவர்கள் உழைப்பைச் சுரண்டி வரும் அரசு மேலும் அவர்களின் பணிச்சுமையை அதிகரிக்கப் போகிறது.

2015-ம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 0-6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 16 கோடி. அதில் 3-6 வயது உள்ள குழந்தைகள் 7.54 கோடி. அதில் 3.6 கோடி குழந்தைகள் 13.47 இலட்சம் அங்கன்வாடி மையங்களில் பதிவு செய்துள்ளனர். அதாவது ஒரு மையத்திற்கு 27 குழந்தைகள். ஒரு அங்கன்வாடி மையம் என்று எடுத்துக் கொண்டால் அதில் இரு ஊழியர்கள் இருப்பார்கள். ஒருவர் சமையல் பணியாளர் இன்னொருவர் குழந்தைகளைக் கவனித்துக் கொள்பவர். சமையல் பணியாளருக்குக் கல்வித் தகுதி தேவையில்லை. குழந்தை பராமரிப்பில் உள்ளவருக்குக் குறைந்தபட்ச கல்வித்தகுதியாகப் பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். தற்போதைய நிலையில் தமிழகத்தில் ஒரு அங்கன்வாடி ஊழியர் 10 முதல் 14 ஆயிரம் வரை ஊதியம் பெறுகிறார். சமையல் பணிகளைப் புரிபவருக்கு மாதம் 7 ஆயிரம் ஊதியம் தரப்படுகிறது. இது தமிழத்தில் மட்டும்தான், உ.பி, பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற வட மாநிலங்களில் மாதம் 1000 முதல் 2000 ருபாய் வரை இவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது.

அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம். ( கோப்புப் படம்)

தமிழகத்தைப் பொறுத்த வரை மாத ஊதியம் என்று வழங்கப்பட்டாலும் அதைப் பெறுவதற்குப் பல போராட்டங்கள் செய்துள்ளனர். எனக்குத் தெரிந்த ஒரு அங்கன்வாடி ஊழியர் பணியில் சேர்ந்தது 1998-ம் வருடம். இப்போது அவர் பெறும் ஊதியம் 12,000 அவருக்கு இன்னும் ஒரு பதவி உயர்வு கூட வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 20 ஆண்டு காலப் பணியில் அவருடைய ஊதியம் 1000-ல் இருந்து 12000 ஆக உயர்ந்து இருக்கிறது. இதில் இருந்தே இவர்களை அரசு எவ்வாறு நடத்துகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

சில வருடங்களுக்கு முன்பு, தமிழக அரசு தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கையைக் கணிசமாக உயர்த்தியது. எங்கள் ஊரில் அதற்கு முன்பு இருந்த ஒரு அங்கன்வாடி மையம் இப்பொழுது மூன்றாக அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பினை செய்த அரசு அதற்குத் தேவையான கட்டிடங்களையோ, புதிய ஊழியர்களையோ பணியமர்த்தவில்லை. புதிதாகத் தொடங்கப்பட்ட மையங்கள் பெரும்பாலும் வாடகை வீடுகளில் நடந்து வருகிறது. புதிதாக ஊழியர்கள் இல்லாத காரணத்தால், அருகில் உள்ள மையத்தில் ஏற்கனேவே பணிபுரியும் ஊழியர்கள் இரண்டு மையத்தினையும் சேர்த்து கவனிக்கும் படி பணிக்கப்பட்டார்கள். அப்படிக் கவனிப்பதற்கு கூடுதல் ஊதியம் ஏதும் வழங்கப்படவில்லை. இரண்டாவது மையத்திற்குத் தேவையான உணவுகளை முதல் மையத்தில் இருந்து தயாரித்து எடுத்துச் செல்ல வேண்டும். இன்றளவும் அனைத்து மையங்களுக்கும் ஊழியர்கள் நிரப்பப்படவில்லை. அனைத்து மையங்களும் அரசு கட்டிடத்தில் இயங்காமல், இன்றும் பல மையங்கள் தனியார் இடங்களில் வாடகைக்கு இயங்கிக் கொண்டு இருக்கிறது. இந்த நிலையில்தான் இந்த புதுத் திட்டமானது அமல்படுத்தப்படப்போகிறது.

புதுக்கோட்டை – கீரமங்கலம் அருகே உள்ள மேற்பனைக்காடு வடக்கு கிராமத்தில் சிதிலமடைந்துக் கிடக்கும் அங்கன்வாடியின் அவலக்காட்சி.

தமிழகத்தைப் பொறுத்த வரை அங்கன்வாடி ஊழியர்களின் பணிச்சுமை அதிகரிப்பது என்பது இது முதல் முறை அல்ல. தமிழக அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு இளமகளிருக்கு இலவச சானிடரி நாப்கின் வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்தது. அந்தத் திட்டம் அங்கன்வாடி மையங்கள் மூலமே செயல்படுத்தப்படுகிறது.

அங்கன்வாடி பணியாளர்கள் சரியான முறையில் நடத்தப்படாததற்கு முக்கியக் காரணம், இந்த ஊழியர்கள் அனைவரும் பெண்கள். இரண்டாவது இவர்கள் பெரிய அளவு கல்வித்தகுதி இல்லாதவர்கள். மேற்கண்ட காரணிகளால் இவர்களின் குரல் வெகுவாக வெளியே வருவதில்லை.

இப்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள மழலையர் கல்வித்திட்டம் அமல்படுத்தப்படுமானால் இவர்களின் பணிச்சுமை வெகுவாக அதிகரிக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அது மட்டுமல்லாது இதற்குத் தனிப் பாடத்திட்டம் திட்டமிடப்பட்டுள்ளதால், கல்வி தகுதி அற்ற ஊழியர்கள் வேலை இழக்கவும் நேரிடலாம். எந்த வித கட்டமைப்பு வசதிகளும் செய்யாமல் இந்த ஊழியர்களுக்கான சரியான ஊதியம் அளிக்காமல் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படுவது என்பது மிகப்பெரிய அநீதி ஆகும்.

இதில் இன்னும் ஒரு விசயத்தையும் கவனிக்கலாம். இந்தத் திட்டத்தின் மூலம் பல இலட்சக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். ஆனால் அதை விடுத்து ஏற்கனவே உள்ள ஊழியர்களின் பணிச்சுமையை அதிகரித்து வருகிறது இந்த அரசு. அதேவேளையில், பெரும் பண முதலைகளுக்குப் பல சலுகைகள் அளித்து இங்கே வந்து தொழில் தொடங்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கு என்று கேட்டு நாடகம் நடத்திக் கொண்டு இருக்கிறது இந்த அரசுகள்.

படிக்க:
அங்கன்வாடி
இந்தியாவிலிருந்து ரூ. 45 லட்சம் கோடியை பிரிட்டன் திருடியது எப்படி ?

அங்கன்வாடி என்றாலே உடனே நினைவுக்கு வருவது சத்துப்பாப்பாதான். கிராமப்புற மாணவர்களுக்கு இது நன்றாக தெரிந்து இருக்கும். ஊருக்கு ஊர் இதன் பெயர் மாறுபடலாம். அங்கன்வாடிப் பணியாளர்கள் நடத்தும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு முகாம்களில் முட்டைகோஸ் தலையுடன், முட்டை கண்ணுடன், கேரட் மூக்கையும், பீன்ஸ் காதுகளையும், பப்பாளி வயிறையும், முருங்கை கை கால்களையும் கொண்டு முகாமின் நாயகியாக அமர்ந்து இருப்பவர்தான் சத்துப்பாப்பா. இந்த சத்துப்பாப்பாவை உருவாக்கும் அங்கன்வாடி பணியாளர்களின் உழைப்பையும் உயிரையும் சேர்த்து உறிஞ்சும் வேலையைத்தான் இந்த சதிகார அரசுகள் செய்து வருகின்றன.

– சக்திவேல்

இந்தியாவிலிருந்து 45 இலட்சம் கோடி டாலரை பிரிட்டன் திருடியது எப்படி ?

ந்தியா மீதான காலனியாதிக்கம் குறித்து பிரிட்டனில் ஒரு பொதுவான கதை சொல்லப்படுகிறது. அந்த பயங்கரமான கதை என்னவெனில், ‘பிரிட்டனுக்கு இந்தியாவில் எந்தவித பொருளாதார நலனும் கிட்டவில்லை. சொல்லப்போனால் இந்தியாவை நிர்வகித்ததில் பிரிட்டனுக்குத்தான் செலவு’. அதாவது பிரிட்டன் தன்னுடைய இரக்க குணத்தின் காரணமாக நீண்ட காலம் இந்தியாவில் தாக்குப்பிடித்தது!

உத்சா பட்னாயக்.

பிரபல பொருளாதார நிபுணரான உத்சா பட்னாயக், சமீபத்தில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஒரு ஆய்வறிக்கையை தாக்கல் செய்துள்ளார். அந்த அறிக்கை, மேற்சொன்ன கதையை தவிடுபொடியாக்குகிறது. 1765 முதல் 1938 வரையான இரண்டு நூற்றாண்டு கால வரி மற்றும் வர்த்தக விவரங்களை கணக்கிட்ட பட்னாயக், 45 டிரில்லியன் டாலர் (45 இலட்சம் கோடி டாலர்) களை இந்தியாவிலிருந்து பிரிட்டன் சுரண்டிக்கொண்டு போனதாக தெரிவிக்கிறார்.

இது மிகப்பெரிய தொகை. உதாரணத்துக்கு 45 டிரில்லியன் டாலர் என்பது, இன்றைய இங்கிலாந்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட 17 மடங்கு அதிகமாகும்.

இந்தியாவை பிரிட்டன் எப்படி சுரண்டியது ?

வர்த்தகத்தின் மூலமாக இந்த சுரண்டல் நடந்தது. காலனியாக்கத்துக்கு முன் பிரிட்டன் இந்தியாவிடமிருந்து அரிசி, துணி உள்ளிட்ட பொருட்களை காசு கொடுத்து வாங்கியது. காசு என்பது அந்தக் காலத்தில் வெள்ளியாக தரப்பட்டது. 1765-ஆம் ஆண்டு இந்த நிலைமை மாறியது. கிழக்கிந்திய கம்பெனி,  துணைக்கண்டத்தை ஆக்கிரமித்து இந்திய வர்த்தகத்தில் ஏகபோகத்தை நிறுவியது.

கிழக்கிந்திய கம்பெனி. (கோப்புப் படம்)

அந்த சுரண்டல் அமைப்பு எப்படிப் பட்டது தெரியுமா? கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் வரியை வசூலித்தது. இந்த வரி வருவாயிலிருந்து ஒரு பெரும் பகுதியை இந்தியாவிலிருந்து பொருட்களை வாங்கப் பயன்படுத்தியது. வேறு வார்த்தைகளில் சொல்லப்போனால், தங்கள் பணத்திலிருந்து பொருட்களை வாங்குவதற்கு பதிலாக, பிரிட்டன் வர்த்தகர்கள் ‘இலவசமாக’ பொருட்களை வாங்கிக்கொண்டு போனார்கள். விவசாயிகளும் நெசவாளர்களும் வரியை கட்டினார்கள்; அதில் ஒரு பகுதியை திரும்பப் பெற்று பொருட்களையும் கொடுத்தார்கள்.

இது ஒரு முறைகேடு – மிகப் பெரும் அளவில் நடந்த திருட்டு!

இந்தியர்களுக்கு என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை. வரி வசூலிப்பவர் வேறொருவராக இருந்தார், தங்களிடமிருந்து பொருட்களை வாங்குகிறவர் மற்றொருவராக இருந்தார். ஒருவரே இதைச் செய்திருந்தால், அவர்களால் கண்டுபிடித்திருக்க முடிந்திருக்கும்.

திருடப்பட்ட சில பொருட்கள் பிரிட்டனில் விற்கப்பட்டன. மீதியிருந்தவை வேறு நாடுகளுக்கு மறு ஏற்றுமதி செய்யப்பட்டன. பிரிட்டன் தன்னுடைய தொழில்மயமாக்கலுக்கு தேவையான இரும்பு, தார், மரக்கட்டை போன்ற பொருட்களை ஐரோப்பிய நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்தது. இப்படி மறு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வதன் வாயிலாக பிரிட்டன் தன்னுடைய நிதி புழக்கத்தை மேம்படுத்திக்கொண்டது. இந்தியாவில் அமைப்பாக்கப்பட்ட திருட்டின் மூலமே பிரிட்டனில் தொழில் புரட்சி சாத்தியமானது.

உலகைப் பங்கு போடும் பிரிட்டிஷ் பிரெஞ்சு ஏகாதிபத்தியங்கள்.

இதில் முக்கிய விசயம், பிரிட்டிசார் திருட்டு பொருட்களை மற்ற நாடுகளுக்கு விற்கும்போது தாங்கள் ‘வாங்கிய’ விலையைவிட அதிகம் வைத்து விற்றனர். பொருளின் உண்மையான மதிப்பை மட்டுமல்லாது, அதன் மீது வந்த இலாபத்தையும் தங்கள் பைக்குள் போட்டுக்கொண்டார்கள்.

பிரிட்டிஷ் அரசு இந்திய துணைக்கண்டத்தை 1847-ஆம் ஆண்டு கையகப்படுத்திக்கொண்டபின், காலனியர்கள், வரி வசூலிப்பது – வாங்குவது என்ற அமைப்பில் ஒரு சிறப்பு திருப்பத்தை கொண்டுவந்தார்கள். கிழக்கிந்திய கம்பெனியின் ஏகபோகம் உடைபட்டவுடன், இந்திய உற்பத்தியாளர்கள் தங்களுடைய பொருட்களை நேரடியாக மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்டார்கள்.  ஆனால், ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான பணத்தை இலண்டனில் மட்டுமே செலுத்த முடியும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

அது இன்னொரு வகையான சுரண்டல். இந்தியாவிலிருந்து பொருட்களை வாங்க விரும்பும் மற்ற நாடுகளுக்கென்று, பிரிட்டிஷ் அரசு பிரத்யேகமான பணத்தாளை அறிமுகப்படுத்தியது. அந்தப் பணத்தாளை தங்கம் அல்லது வெள்ளி கொடுத்து வாங்கிக்கொண்டு, இந்திய பொருட்களை இலண்டனிலிருந்து வாங்கிக்கொள்ளலாம்.  இந்திய வியாபாரிகள் பொருட்களை விற்பதன் மூலம் சேர்த்த பணத்தாளை உள்ளூர் காலனி அலுவலகத்தில் கொடுத்து, இந்திய பணத்தை பெற்றுக்கொள்ளலாம். இந்த பரிமாற்றத்தின் போது, வரிப்பணம் பிடித்தம் செய்துகொள்ளும் பிரிட்டிஷ் அரசு. மீண்டும் இந்தியர்கள் சுரண்டப்பட்டார்கள், மோசடி செய்யப்பட்டார்கள்.

படிக்க:
கொலைகார ஸ்டெர்லைட் ஆலையில் நிகழ்ந்த சில விபத்துக்கள் – ஒரு பார்வை !
மதுரை : கிரானைட் கொள்ளை கிரிமினல்களுக்கு ஆதரவாக பாஜக தாமரை யாத்திரை !

20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கிட்டதட்ட மூன்று தசாப்தங்களாக, கணிசமான அளவில் இந்தியாவின் உபரி வர்த்தகம் மற்ற நாடுகளுடன் நடந்துகொண்டிருந்தபோதும், தேசிய கணக்குகளில் பற்றாக்குறை இருப்பதாகக் காட்டியது பிரிட்டிஷ் அரசு. ஏனெனில் இந்திய ஏற்றுமதியின் உண்மையான வருவாய், பிரிட்டன் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.

இப்படி உருவாக்கப்பட்ட ‘பற்றாக்குறை’ என்பதை பிரிட்டனின் சொத்தாக இந்தியா இருந்தது என்பதற்கான ஆதாரமாகவும் கொள்ளலாம்.  இந்திய உற்பத்தியாளர்களின் பெரும்பகுதியான வருமானத்தை பிரிட்டன் இடையிட்டு பறித்துக்கொண்டது. இந்தியா பொன் முட்டையிடும் வாத்தாக இருந்தது. அதே நேரத்தில், ‘பற்றாக்குறை’ என்ற காரணம், இந்தியா வேறு வழியில்லாமல் பிரிட்டனிடமிருந்து கடன் வாங்கி இறக்குமதி செய்யும் நிலைக்கு தள்ள உதவியது. எனவே, ஒட்டுமொத்த இந்திய மக்களும் தேவையில்லாமல்  தங்கள் காலனியாளர்களுக்கு கடனாளிகளாகும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இது பிரிட்டிஷ் கட்டுப்பாட்டை மேலும் உறுதியாக்கியது.

இந்த மோசடி முறையிலிருந்து பெற்ற செல்வத்தை பிரிட்டன் தனது ஏகாதிபத்திய வன்முறைகளுக்காகப் பயன்படுத்தியது. 1840களில் சீனாவில் ஊடுருவவும், 1857ல் நடந்த இந்திய சிப்பாய் கலகத்தை ஒடுக்கவும் இந்திய சுரண்டல் பணத்தை பயன்படுத்தியது. இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம்,  இந்திய வரிவசூலை வைத்து தன்னுடைய போர் செலவை செய்தது பிரிட்டன் அரசு. பட்னாயக் இப்படி குறிப்பிடுகிறார், “இந்திய எல்லைக்கு வெளியே பிரிட்டன் நடத்திய போர்களுக்கான நிதி, இந்திய வருமானத்தை முழுமையாகவும் முதன்மையாகவும் சார்ந்தே இருந்தது”.

இவை மட்டுமல்ல, இந்தியாவிலிருந்து கிடைத்த நிதி புழக்கத்தைப் பயன்படுத்தி,  ஐரோப்பாவுக்கும் ஐரோப்பாவின் குடியேற்றங்கள் நிகழ்ந்த கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற பகுதிகளுக்கும் முதலாளித்துவத்தை நீட்டிக்க நிதியளித்தது பிரிட்டன். எனவே, பிரிட்டனின் தொழில்மயமாக்கல் மட்டுமல்ல, மேற்குலகின் தொழில்மயமாக்கலும் காலனிநாடுகளிடமிருந்து உறிஞ்சப்பட்ட ரத்தத்திலிருந்தே நடந்தது.

1765 முதல் 1938 வரை காலனியாக்க இந்தியாவின் பொருளாதாரத்தை மூன்று தனித்துவமான காலங்களாக இனம்கண்டுள்ள பட்னாயக், அந்தக் காலக்கட்டத்திலிருந்து உறிஞ்சப்பட்ட வருவாயை கணக்கிட்டு, தற்போது வரை அதற்கான குறைந்தபட்ச வட்டியை கூட்டியுள்ளார்.  அதன்படி, 44.6 டிரில்லியன் டாலர்கள் இந்தியாவிடமிருந்து சுரண்டியிருக்கிறது பிரிட்டன். இந்த மதிப்பு தோராயமானது என தெரிவிக்கும் இவர், காலனியாக்க காலத்தில் பிரிட்டன் அரசு, இந்தியாவின் தலையில் கட்டிய கடன்கள் இதில் சேர்க்கப்படவில்லை என்கிறார்.

இது மிக மிகப் பெரிய தொகை. ஆனால், இந்த சுரண்டலின் உண்மையான மதிப்பு கணக்கிடப்பட முடியாதது. ஜப்பான் செய்ததுபோல் இந்தியா தன்னுடைய வரி வருவாயையும் அந்நிய செலாவணியையும் முன்னேற்றத்துக்கு பயன்படுத்தியிருந்தால், வரலாறு வேறுமாதிரியாக இருந்திருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. இந்தியா பொருளாதார அதிகார மையமாக உருவாகியிருக்கும். நூற்றாண்டுகால வறுமையும் வேதனையும் தடுக்கப்பட்டிருக்கும்.

கன்சர்வேடிவ் வரலாற்றாசிரியர் நியால் ஃபெர்குசான்.

இப்படிப்பட்ட கசப்பான பின்னணி இருக்க, பிரிட்டனில் உள்ள ஆற்றல் மிக்க சில நபர்கள் சில புனைகதைகளை கிளப்பி விட்டனர். கன்சர்வேடிவ் வரலாற்றாசிரியர் நியால் ஃபெர்குசான், பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவின் ‘முன்னேற்ற’த்துக்கு உதவியது என்றார். டேவிட் கேமரூன் பிரதமராக இருந்தபோது, பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவிற்கு உதவியாக இருந்தது என்பதை வலியுறுத்தினார்.

அதிகார மட்டத்திலிருந்து கிளப்பட்ட இந்த புனைவு வெகுமக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது. 2014-ஆம் ஆண்டு பிரிட்டன் மக்களிடையே நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், 50% மக்கள் காலனியாதிக்கம் அந்தந்த நாடுகளுக்கு உதவியது என கருத்துச் சொன்னார்கள்.

200 ஆண்டுகால பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியாவின் தனிநபர் வருமானம் உயரவே இல்லை. உண்மையில், 19 நூற்றாண்டின் மத்திய காலத்தில் பிரிட்டிஷ்  தலையீட்டின் விளைவால் இந்தியாவின் வருமானம் பாதியாகக் குறைந்தது. 1870 முதல் 1920 வரையிலான காலக்கட்டத்தில் இந்தியர்களின் ஆயுட்காலம் குறைந்தது. பத்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் உருவாக்கிய பஞ்சத்தின் காரணமாக உயிரிழந்தார்கள்.

பிரிட்டன் இந்தியாவை முன்னேற்றவில்லை. பட்னாயக்கின் ஆய்வில் தெரியப்படுத்துவது என்னவெனில், பிரிட்டன் இந்தியாவால் முன்னேறியது.

படிக்க:
மாட்சிமை தாங்கிய பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் வீதிகளில் மரணிக்கும் வீடற்றவர்கள் !
இந்து மதம் : ஏகாதிபத்திய சந்தையை உறுதிப்படுத்த உருவாக்கப்பட்ட ஓர் கட்டமைப்பு !

இது பிரித்தானியர்களிடம் என்ன கோருகிறது? மன்னிப்பு? நிச்சயமாக. இந்த இழப்பை ஈடுசெய்ய முடியுமா? பட்னாயக் கணக்கிட்டிருக்கும் இழப்பை ஈடுசெய்யும் அளவுக்கு பிரிட்டனிடம் போதுமான பணம் இல்லை. அதே நேரத்தில், என்ன நடந்தது என்பது குறித்து உண்மையைச் சொல்லத் தொடங்கலாம். பிரிட்டன் தன்னுடைய அதிகாரத்தை இந்தியா மீது செலுத்தி சுரண்டியதே தவிர, இரக்ககுணத்தின் காரணமாக இந்தியாவை ஆளவில்லை என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும். நமது பள்ளிப்பாடங்களில் சொல்லித்தரப்படுவதுபோல, நீராவி என்ஜினிலிருந்து வலிமையான அமைப்புகள் வரையான தொழிற்துறை வளர்ச்சி தானாக நடந்துவிடவில்லை. இது வன்முறை மூலமாக அடுத்தவர் நிலத்திலிருந்து அடுத்த மக்களிடமிருந்து திருடப்பட்டத்திலிருந்து உருவானது.


(கட்டுரையாளர் ஜாசன் ஹிக்கெல், இலண்டன் பல்கலைக்கழக கல்வியாளர்.)
தமிழாக்கம்: கலைமதி
நன்றி
: அல்ஜசீரா

கொழுப்பு என்றாலே அது ஆபத்தானதா ! – மருத்துவர் BRJ கண்ணன்

அறிவியல் – ஆரோக்கியம் ! – கொழுப்பு பற்றிய மெய்யான உண்மை!

கொழுப்பும் கொலஸ்ட்ராலும் ஒன்றா?

“கொழுப்பு ரொம்ப நல்லது. எவ்ளோவேனா சாப்பிடுங்க” என்று நான் சொல்லப்போவது இல்லை. ஆனால் நீங்கள் நினைக்கும் அளவிற்கு கொழுப்பு மிகவும் மோசமானது அல்ல என்பதையே சொல்லப் போறேன்.

கொழுப்பு என்றால் என்ன? அதில் நிறைய வகைகள் இருக்கு. அதில் ஒன்றுதான் கொலஸ்ட்ரால். ஆனால் கொழுப்பு, கொலஸ்ட்ரால் இரண்டும் ஒன்று என பேசிக்கொண்டிருக்கிறோம். அது சரியல்ல.

நாம் சரிவிகித உணவு சாப்பிட வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். இதில் 25-30% உணவு கொழுப்பிலிருந்து வர வேண்டும். ஆனால் நாம் இப்போது சாப்பிடுவதில் 8-10% தான் கொழுப்பு இருக்கிறது. இந்த 10 சதவீதத்தை எப்படி முப்பது சதவீதமாக கூட்டிக்கொள்வது?

முதலில் ரத்தத்தில் இருக்கும் கொழுப்பு என்பது என்னவென்று பார்க்கலாம். ரத்தத்தில் LDL என்ற கெட்ட கொழுப்பு உள்ளது. “அதை சப்பிடாதே, இதை சாப்பிடாதே, கொலஸ்ட்ரால் கூடிடும்” என்று பயமுறுத்துகிறார்கள் அல்லவா ? அவர்கள் கூறும் விசயம் இந்த எல்.டி.எல் கொலஸ்ட்ரால்தான். இயல்பான நிலையில் இது 160-க்கு கீழே இருக்க வேண்டும். இதற்கு மேல் சென்றால் இது ‘அதிகம்’ என்று சொல்லலாம். ரத்தத்துல இருக்கும் அனைத்துக்கும் ஒரு வரையறை இருக்கிறது. சர்க்கரை, புரதம், சோடியம், பொட்டாசியம் எதுவாக இருந்தாலும் இதுக்கு கீழ போனால் ’குறைவு’, அதுக்கு மேல போனால் ‘அதிகம்’னு ஒரு ரேஞ்ச் வைத்திருப்பார்கள்.

உதாரணத்துக்கு சர்க்கரையை எடுத்துக் கொண்டால், நீங்கள் சாப்பிட்ட பிறகு பார்த்தால் கூட 140mg க்கு மேல் தாண்டாது. ஒருவருக்கு 150,160 mg தாண்டிவிட்டால் அவருக்கு ’சர்க்கரை நோய்’ எனச் சொல்ல மாட்டோம். அது 200-ஐ தாண்டினால் மட்டும்தான் அவருக்கு ‘சர்க்கரை நோய்’ என்று சொல்லுவோம்.  சரி அப்படியே 200-ஐ தாண்டினால் அடுத்த நாளே மாரடைப்போ  சிறுநீரகக் கோளாறோ வந்து விடுமா? வராது.

அது 200-த்தாண்டி அதிக நாட்கள் நீடித்தால்தான் நோயே வரும். இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளவேண்டியது, நமது ரத்தத்தில் இருக்கும் உட்கூறுகள் இயல்பான வரையறையை தாண்டி விட்டதெனில் அடுத்த நாளே நமக்கு நோய் வந்துவிடாது. நம் உடம்பு அதனை சரி செய்வதற்கு ஒரு வாய்ப்புக் கொடுக்கும். ஒருவருக்கு எல்.டி.எல் பார்க்கிறீர்கள். 180 இருக்கு. உடனே டாக்டரை பார்க்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. உடனே அவருக்கு அட்டாக் வரப் போவதும் இல்லை. உடனே சரி செய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனால் எல்.டி.எல். அதிகமானால் அட்டாக் வரும். சிலர் வீடியோவில் சொல்வது போல் கொழுப்பு இருந்தால் பாதிப்பு இல்லை என்று சொல்வது தவறு. எல்.டி.எல். அதிகமானால் இருதய நோய், பக்கவாதம் வரும்.

எல்.டி.எல். – எச்.டி.எல். – ட்ரைக்லிசெரைட்ஸ் – ட்ரான்ஸ்ஃபாட் என்ன வேறுபாடு?

ஆனால், இந்த அதிக எல்.டி.எல் என்பது நம்மிடம் எவ்வளவு பொதுவாக இருக்கிறது ? இருதய நோயோ, பக்கவாதமோ வந்த உங்கள் உறவினர், நண்பரிடம் கேட்டுப்பாருங்கள். கொழுப்பு அளவு, அதில் உள்ள எல்.டி.எல் அளவு எவ்வளவு இருக்கு என கேட்டுப்பாருங்கள். இயல்பாகத்தான்இருக்கும். இதுதான் உண்மை. ரொம்ப சிலருக்குத்தான் இந்த இயல்பு நிலையைத்தாண்டி அதனால் பக்கவாதம் வரும்.

இருதய நோயாளிகளுக்கு மட்டுமே மருத்துவம் பார்க்கக்கூடிய ’கார்டியாக் ஸ்பெசலிஸ்டாக’ இருந்தாலும், மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு பேர்தான் அப்படி வருவார்கள். எனில், பாக்கி 98% மாரடைப்பு பிரச்சினைக்கு வருபவர்களுக்கு இரத்தத்தில் எல்.டி.எல். கொலஸ்ட்ரால் இயல்பு நிலையில்தான் இருக்கிறது. இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்ன வெனில், இந்த எல்.டி.எல். கொலஸ்ட்ரால் ஆபத்தானதுதான். ஆனால் அதிக எல்.டி.எல். கொலஸ்ட்ரால் ஒருவருக்கு வருவது அரிதானது.

இந்த எல்.டி.எல்-லுக்கும், உணவுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? சிறிது இருக்கிறது. உணவிலேயே கொழுப்புள்ள வகைகளான தேங்காய், நல்லெண்ணெய், மாமிசங்கள் ஆகியவற்றால் கொலஸ்ட்ரால் கொஞ்சம் அதிகமாக வாய்ப்பிருக்கிறது. ஆனால் நேரடித் தொடர்பு கிடையாது. நாம் சாப்பிடும் அளவுக்கு ஏற்ற மாதிரி கூடுமா என்றால் இல்லை.

நம் இரத்தத்தில் இன்னொரு மோசமான கொழுப்பு இருக்கு. அது ’ட்ரைக்லிசெரைட்ஸ்’. அது 200mg-க்கு கீழே இருக்க வேண்டும். மேலே போனால் அதிக ‘ட்ரைக்லிசெரைட்ஸ்’ என்று சொல்வோம். இது பரவலாக பலருக்கும் வரக்கூடியது. 100 பேருக்கு இந்த டெஸ்ட் எடுத்தால் 60 பேருக்கு இது இருக்கும். ஆனால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க மறந்து விட்டோம். மீண்டும் உங்கள் நண்பர்களிடம் கேட்டுப் பாருங்கள். கொலஸ்ட்ரால் ரிப்போர்ட் எடுத்தவர்களிடம் டி.ஜி. எவ்வளவு இருக்கிறது என்று கேட்டுப் பாருங்கள். “ஆமாங்க, 220, 250 இருந்தது”என்று சொல்வார்கள். அதற்கும் இருதய நோய்க்கும், பக்கவாதத்துக்கும் சம்பந்தம் இருக்கிறது. அது எதனால் வருகிறது?

நம்ம உணவில் இருக்கும் கொழுப்பினால் வருகிறதா? இல்லை. அது உணவில் இருக்கும், கார்ப்போஹைட்ரேட், மாவுப் பொருட்களால் வருகிறது. எல்.டி.எல். கொலஸ்ட்ராலை விட ‘ட்ரை க்லிசெரைட்ஸ்’ அதிக பிரச்சனையாக இருக்கிறது. அது எதில் இருந்து வருகிறது ? மாவுப் பொருட்களில் இருந்து வருகிறது. ஆக, இந்த மாவுப் பொருட்களை உட்கொள்வதைக் குறைத்தால் இந்த ’ட்ரைக்லிசெரைட்ஸ்’-ம் குறைந்து விடும்.

அடுத்தது மூன்றாவதாக ஒரு கொழுப்பு இருக்கிறது. அது HDL  கொழுப்பு. அது நல்ல கொழுப்பு. அதாவது இந்த ஹெச்.டி.எல் 45 – 50mg இருந்தால் பக்கவாதமோ, மாரடைப்போ வரும். அது ரொம்ப குறைவு. குறைந்தது இதன் அளவு 40 இருக்க வேண்டும். அதற்கு கீழே இருந்தால் கொஞ்சம் அபாயம். ஆனால் இந்த ஹெச்.டி.எல். அளவை அதிகரிக்க மாத்திரையோ மருந்தோ எதுவுமே கிடையாது. உடற்பயிற்சி செய்தால் கூடும். நல்ல கொழுப்புள்ள உணவுகளை சாப்பிட்டால் அது கூடும். கொழுப்பு உணவுகளை சாப்பிட்டால் எல்.டி.எல். கூடும். ஆனால், குறைவாகத்தான் கூடும். கூடவே ஹெச்.டி.எல்.-ம் கூடும். இதிலிருந்தே தெரிகிறது கொழுப்புள்ள உணவுகளை எல்லாம் நாம பயமில்லாமல் எடுத்துக் கொள்ளலாம்.

இன்னொரு மோசமான கொழுப்பு இருக்கு. அது ‘ட்ரான்ஸ்ஃபாட்’. இது உருமாறிய கொழுப்பு. இயற்கையான உணவுகளில் இக்கொழுப்பு கிடையாது. செயற்கையாக நாம் தயாரிக்கும் பண்டங்களால் உருவாகிறது. இரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலைப் பற்றி தெரிந்துகொண்டோம்.

உண்ணும் உணவுக்கும் கொழுப்புக்கும் என்ன சம்பந்தம்?

இப்போது உணவுக்கு வருவோம்.  உணவு என வரும்போது கொலஸ்ட்ரால் என்று பேசாமல் கொழுப்பு என்று பேசியாக வேண்டும். உணவுல இருக்க கொழுப்பை விரிவாக இரண்டு விதமாக பிரிக்க வேண்டும். அவை நிறைவுற்ற கொழுப்பு (Saturated Fat), நிறைவுறாத கொழுப்பு (Unsaturated Fat). இந்த இரண்டையும் அதிகமாக சாப்பிட்டால் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் கூடும் வாய்ப்பு உண்டு.

ஏனெனில், இந்த நிறைவுற்ற கொழுப்பு இரத்தத்தில் இருக்கும் கொழுப்பைக் கூட்டும் வாய்ப்பு அதிகம். இந்த நிறைவுற்ற கொழுப்பு எதில் இருக்கிறது ?. பால், நெய், வெண்ணை, தேங்காய், முட்டை மாமிசம் இவற்றில் எல்லாம் இருக்கிறது. ஆனால் முன்னர் குறிப்பிட்டது போல நேரடி தொடர்பே கிடையாது. உதாரணத்திற்கு தேங்காயை எடுத்துக் கொள்வோம். தேங்காய சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என பலரும் கூறுகின்றனர்

“இவன் தேங்காய் நிறையா சாப்பிடுவான், நிறைய தேங்கா சாப்ட்டு கொலஸ்ட்ரால கூட்டிக்கிட்டான்”னு யாரையாவது கேள்விப் பட்டிருக்றீர்களா?  இருக்காது. ஆனால் எப்படி இதை உண்மை என நம்பிக் கொண்டு இருக்கிறீர்கள். இந்த தென்னை மரம் மனுதனோடு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றது.

உலகில் சில மரங்கள் ஒருசில பகுதியில் இருக்கும். சில வேறு பகுதியில் மட்டும் இருக்கும். ஆனால், தென்னை மரங்கள் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் இருக்கின்றன. தென்னையிலிருந்து வரும் தேங்காய் அவ்வளவு மோசமானதாக இருந்திருந்தால், ஒன்று அதை சாப்பிட்டு, மனிதன் அழிந்திருக்க வேண்டும். இல்லை மனிதன் அதை வளர்க்காமல் விட்டிருக்க வேண்டும். இதிலேர்ந்தே அது மோசமானது இல்லை என்பது நமக்கு புரிகிறது அல்லவா ?

தேங்காய் சாப்பிட்டு கொலஸ்ட்ரால் கூடியதாகவோ, அல்லது தேங்காய் எண்ணெயோ, தேங்காயோ சாப்பிட்டு மாரடைப்பு வந்ததாகவோ ஒரு ஆய்வும் சொல்லவில்லை. இதான் உண்மை.

அடுத்து பாலுக்கு வருவோம். கொழுப்புள்ள முழு பால் குடிப்பது நல்லதா? அதில் உள்ள கொழுப்பையெல்லாம் எடுத்தி விட்டு தரப்படும் ’ஸ்கிம்முடு பால்’ குடிப்பது நல்லதா? கொழுப்போடு சேர்ந்த பாலை குடிப்பதுதான் நல்லது. இதோ இரண்டு வாரம் முன்னால்கூட ஒரு மருத்துவ அறிக்கை வந்திருக்கிறது. அதிலும் இதுதான் சொல்லப்படுகிறது. இது நானாக சொல்வது கிடையாது. விஞ்ஞானம் சொல்வதையேதான் நான் சொல்கிறேன். ஆகவே, நாளை நீங்கள் பால் குடிக்கப் போகிறீர்கள் எனில், கெட்டியாக அப்படியே முழு பாலை குடியுங்கள். ஒன்றும் தவறில்லை.

அதே மாதிரிதான் மாமிசங்கள். மாமிசம் என்றாலே கொழுப்பு அதிகமாக இருக்கும் என நமக்குத் தெரியும். அதில் கொழுப்புதான் இருக்கிறது. கார்போஹைட்ரேட் கிடையாது. ஆனால், குறிப்பாக இந்த மட்டன் மேல், ஒரு தப்பான பார்வை இருக்கிறது. “மட்டன் சாப்பிடாதே” என்று ஆலோசனை கூறுவார்கள். சிலர் நெஞ்சு வலியோடு வருவார்கள். என்ன பிரச்சினை எனக் கேட்டால், “முந்தா நேத்து கொஞ்சம் மட்டன் சாப்பிட்டேன். அதான் அட்டாக் வந்திருச்சிங்க” எனக் கூறுவார்கள்.

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. கோழி இறைச்சியில எவ்வளவு கொழுப்பு இருக்கிறதோ, அதைவிட மட்டனில் இருக்கும் கொழுப்பு அதிகம்தான். கோழியை 100 கிராம் சாப்பிட்டால் மட்டனை 50 கிராம் சாப்பிடுங்கள். அவ்வளவுதான் வித்தியாசமே தவிர, மட்டனை ஏதோ விசம் மாதிரி பார்க்கக் கூடாது.

சுருக்கமாகக் கூறினால், நம்மிடையே இருக்கும் கொழுப்புள்ள உணவுகள் பெரும்பாலும் பாதுகாப்பானவைதான். நாம் அளவாக, முன்னரே சொன்னது போல் 30% சாப்பிட்டோம் எனில், நமது உடலில் எல்.டி.எல். அதிகரிக்க வாய்ப்பே கிடையாது. வெறுமனே ”இதை சாப்டாதே, அதை சாப்டாதே” எனக் கூறுவது மிக மிக தவறு. சொல்லப்போனால் இந்த மாதிரி சொல்லி பயமுறுத்தி, கொழுப்பு சாப்பிடுவதற்குப் பதிலாக அரிசியையும் கோதுமையும் சாப்பிட்டு வியாதியை கொண்டு வந்திருக்கிறோம் என்பதுதான் உண்மை.

எந்த ஆயில் நல்ல ஆயில் ?

எண்ணெய் குறித்து கொஞ்சம் வருவோம். எந்த ஆயில் நல்ல ஆயில்? நான் எல்லோருக்கும் சொல்வேன். நம்ம பாரம்பரிய எண்ணெய்தான் நல்ல எண்ணெய். நாம் தமிழகத்தில் என்ன எண்ணெய் உபயோகிக்கிறோம் ? நல்லெண்ணெய், கடலை எண்ணெய் உபயோகிக்கிறோம். நம் கேரள நண்பர்கள் தேங்காய் எண்ணை உபயோகிக்கிறார்கள். வட இந்தியர்கள் இந்த கடுகெண்ணெய் உபயோகிக்கிறார்கள்.  அதெல்லாம் நல்லதுதான். இதெல்லாம்தான் வருடக்கணக்கில் நமது மரபணுக்களில் இருக்கிறது. அதை மாற்ற வேண்டிய அவசியம் கிடையாது.

இந்த நல்லெண்ணெய் உண்மையிலேயே நல்லது. நிறைவுற்ற கொழுப்பு அதில் இல்லை. நிறைவுறாத கொழுப்புதான் இருக்கிறது. எந்த எண்ணெயாகவும் இருக்கட்டும். எண்ணெயில செய்யப்பட்ட பொருட்களை அன்றைக்கே சாப்பிட்டால்தான் நல்லது. அதனால் கெட்ட கொழுப்பு கூடும் வாய்ப்பு கிடையாது. எண்ணெயில் செய்த பொருட்களை வைத்து, நான்கைந்து நாட்கள் கழித்து உண்ணும் போதுதான் நல்ல எண்ணெய் கெட்ட எண்ணெயாக மாறுகிறது.

எப்படியெனில், நாம் அனைவரும் மிகவும் பயப்பட வேண்டிய ஒரு கொழுப்பு இருக்கிறது. அது   டிரான்ஸ்ஃபேட்.  எந்தப் பொருளும் கெடாமல் இருக்க வேண்டுமெனில் அதில் ஒன்று அதிகமான உப்பு இருக்க வேண்டும். அல்லது அதிகமான ட்ரான்ஸ்ஃபேட் இருக்க வேண்டும். நெய்யோ, எண்ணெயோ, வெண்ணெயோ, இயற்கையாக நமக்கு எப்படிக் கிடைக்கிறதோ, அதை அப்படியே வைத்து உணவுப் பொருட்களை செய்தால் விரைவில் கெட்டுப் போய்விடும்.

எந்த ஒரு திண்பண்டமும் கெடாமல் இருக்கிறதெனில் அதில் டிரான்ஸ் பேட் இருக்கிறது எனப் பொருள். அதற்கு என்ன பொருள் ? அனைத்து பேக்கரி உணவுகள்,  கேக், சிப்ஸ், முறுக்கு, காரசேவு என கடையில் போய் நாம் வாங்கும் பொட்டலம் போடப்பட்ட  உணவுப் பொருட்கள் அனைத்திலும் ‘டிரான்ஸ்ஃபேட்’ இருக்கிறது. இந்த உண்மையை நாம் அதிகமானோர் உணரவில்லை. நாம் சாப்பிடும் பிஸ்கட், ஐஸ்கிரீம் என அனைத்திலும் இருக்கிறது. ஆகவே இந்த மாதிரி உணவுகளை எப்போதாவது சாப்பிடலாம். ஆனால் தினமும் சாப்பிட்டால் அது மிகப்பெரிய தவறு.

ஏன் பொரித்த உணவுகளைஅதிகமா சாப்பிடக்கூடாதுனு எனக் கூறுகிறோமெனில், பொரிக்கும்போதுதான் அந்த எண்ணையின் தன்மை மாறுகிறது. அனைத்து எண்ணெய்க்கும் ’ஸ்மோக் பாயிண்ட்’ என்றொரு எல்லை இருக்கிறது. எண்ணையை சூடு செய்யும்போத், அது கொதித்து ஆவியா மாறும் நிலை. அந்த அளவுக்கு ஆவியா மாறும் நிலைமைக்குப் போகாமல், அதற்கு முன்னரே பண்டங்களை தயாரித்தால் அதில் அவ்வளவு ஆபத்து கிடையாது. ஆவியாகத் தொடங்கிய பின் பண்டங்கள் தயாரிக்கும்போதுதான், அந்த எண்ணையின் தன்மை மாறி கெட்ட எண்ணெயாக மாறுகிறது. அதில் ’டிரான்ஸ்ஃபேட்’ உருவாகிறது. இதுதான் பிரச்சினை. இதே எண்ணையை மீண்டும் மீண்டும் சூடு படுத்தினால் என்ன ஆகும்?

அதில் HNE என சொல்லக் கூடிய நச்சுப் பொருட்கள் உருவாகின்றன. இந்த நச்சுப் பொருட்கள் அதிகமானால், அது நேரடியாக இதயத்தைத் தாக்கும். நேரடியாக மூளையைத் தாக்கும். ’அல்ஜீமர் டிசீஸ்’ என சொல்லக் கூடிய நோய் வரும். புற்றுநோய்க்குக் கூட அது அடிப்படையாக இருக்கிறது. ஆகவே, எண்ணெயை ஒருதடவைக்கு மேலே சூடு படுத்தக்கூடாது.

ஆகவே, தாளிப்பதற்கு, பொரிப்பதற்கு, குழம்பு வைக்கையில்க் எண்ணெயை பயன்படுத்தலாம் தவறில்லை. ஆனால்,  ஒரு முறை பயன்படுத்தின எண்ணெயை வைத்திருந்து மீண்டும் பயன்படுத்தினாலே, அந்த எண்ணெயில் செய்த பலகாரங்களை வைத்து சாப்பிட்டாலோதான் பிரச்சினை.

பருப்பு சாதம் சாப்பிடலாம். நன்றாக நெய் ஊற்றி சாப்பிடலாம். அதில் தவறு கிடையாது. ஆனால் எண்ணெயில செய்த பலகாரங்களை வைத்து சாப்பிடுவது போல இருந்தால், இப்போதாவதுதான் சாப்பிட வேண்டும். மிக்சர், காராசேவு, சிப்ஸ் பின்னர் விளம்பரப்படுத்துகிறார்களே குர்குரே, ஹால்திகிராம் சினாக்ஸ் என அனைத்திலும் ட்ரான்ஸ்ஃபேட் இருக்கிறது. இந்த ’டிரான்ஸ்ஃபேட் மிகவும் ஆபத்தானது என்பதை நினைவில் கொள்ளவும். பல நாள் வைத்து உண்ணும் தின்பண்டங்களில் மற்றும் எளிதாக நமக்கு கிடைக்கும் பொருள் கெடாமல் இருக்கிறது என்றால் அதில் டிரான்ஸ்ஃபேட் இருக்கிறது என்று பொருள். அதை நாம் கூடுமான வரையில் தவிர்ப்பது நல்லது.

இந்த எண்ணெயைப் பற்றி பேசும்பொழுது, பலரும் பொதுவாக கேட்கும் கேள்வி, “வடை சாப்பிடலாமா?”  வடை மிகவும் நல்ல உணவுப் பொருள்தான். வடை உளுந்து அல்லது வேறு ஏதாவது பருப்பில்தான் செய்யப்படுகிறது. அதில் வேண்டிய அளவு புரதமும், கார்போஹேட்ரேட்டும் இருக்கிறது. எண்ணெயில் செய்யப்படுவதால் கூடவே கொழுப்பின் கூறுகளும் வருகின்றன.

ஆக, கொழுப்பு, புரதச் சத்து, மாவுச்சத்து கலந்த உணவுதான் வடை. அதனால் வடையில் எவ்வித பிரச்சினையும் இல்லை. நீங்கள் வீட்டில் செய்தால் 5 வடை கூட சாப்பிடலாம், ஒன்றும் செய்யாது. ஆனால் வெளியில் மட்டும் வாங்கிச் சாப்பிடக் கூடாது.

ஏனெனில், முதலில், அவர்கள் எந்த எண்ணெயை பயன்படுத்துகிறார்கள் என்பது தெரியாது. இரண்டாவதாக, அந்த எண்ணெயை அதிகமாக கொதிக்க வச்சி, அதுல டிரான்ஸ்ஃபேட்ஸ் உருவாகுற மாதிரி செய்வார்கள். மூன்றாவது, அதே எண்ணெயை மறுபடியும் மறுபடியும் உபயோகப்படுத்துவார்கள். காலையில கொதித்த எண்ணையை ஆறவச்சி மதியம் பயன்படுத்துவார்கள். மதிய எண்ணெயை இரவுக்குப் பயன்படுத்துவார்கள். இரவு எண்ணையை அடுத்தநாள் காலையில பயன்படுத்துவார்கள்.

எங்காவது, எப்போதாவது வெளியே செல்லும்போது 2 வடை, பஜ்ஜி போன்றவை சாப்பிட்டால் தவறில்லை. சில காலையில் 11 மணிக்கு 2 வடை, ஒரு டீ,  மாலை 4 மணிக்கு 2 பஜ்ஜி, 1 டீ என சாப்பிடுவார்கள். இது தவிர்க்கப்பட வேண்டும்.

வீட்டில் நமக்குத் தெரியும் என்பதால் அது நல்ல எண்ணெயாக இருக்கும் வாய்ப்பு அதிகம். ஆனால் வெளியில் வாங்கி சாப்பிடும் பொருட்களில் உள்ள எண்ணெய் குறித்து அச்சப்படவேண்டும். கொஞ்சமும் யோசித்துப் பார்க்காமல் நாம் சில பொருட்களின் மீது முத்திரை குத்தி வைத்துவிடுகிறோம். நாம் அனைத்து கொழுப்பையும் மாற்றி மாற்றி சாப்பிட்டால், எதுவும் நமது உடலில் பெரியதாக தங்காது.

ஒன்றை குறிப்பாக புரிந்து கொள்ளவேண்டும். நம்மால் அதிக கொழுப்பை சாப்பிட முடியாது. ஒரு கோப்பை பழச்சாறில் 300 கலோரி இருக்கிறது என வைத்துக் கொள்வோம். அதை 5 நிமிடத்தில் நாம் குடித்துவிடுவோம். அதே 300 கலோரி இருக்கும் நல்லெண்ணையோ, நெய்யோ, வெண்ணையோ கொடுத்தால் நம்மால் சாப்பிட முடியாது. கொழுப்பு உணவுவகைகளும் சரி, புரதங்களும் சரி, நம்மை சாப்பிடத் தூண்டாது. சாப்பிட்டது போதும் என சொல்ல வைக்கும். ஆனால், இந்த கொழுப்பையும் மாவுப் பொருட்களையும் சேர்த்த பண்டங்கள் தயாரித்தால் அது நம்மை அதிகம் உண்ண வைக்கிறது. எனவே, நாம மாவுப் பொருட்களை தவிர்ப்போம் என முடிவெடுத்தாலே கொழுப்பு உணவுகளை அதிகம் சாப்பிட மாட்டோம்.

உருளைக் கிழங்கை வைத்து ‘பிங்கர் பிரை’ என்றொரு உணவை செய்கிறார்கள். “நான் உருளைகிழங்கு அதிகமாக சாப்பிட மாட்டேன்” என முடிவெடுத்துவிட்டால், அதிகம் சாப்பிடமுடியாது. பீட்சா, பர்கர் இவற்றில் எல்லாம் பெரிய ’பன்’ இருக்கும். பீட்சாவுல பெரிய அளவு ஆக்கிரமிப்பது இந்த ரொட்டிதான். அதில் டிரான்ஸ்ஃபேட்-டும் இருக்கிறது. ஆகவே, இது போன்ற கண்ணுக்குத் தெரியும் மாவுப் பொருட்களை சாப்பிடமாட்டேன் என முடிவு செய்து விட்டால், கண்டிப்பாக உங்களால் அதிகம் கொழுப்பு சாப்பிட முடியாது.

உங்களிடம் ஒரு கிலோ சிக்கன் கொடுத்தால் அனைத்தையும் உங்களால் சாப்பிட முடியாது. அதிகபட்சம் 200, 300 கிராம் அளவோடு நிறுத்திக் கொள்வோம். இதே சிக்கனை பிரியாணியோடு வைத்தால்  இரண்டையும் மற்றி மாற்றி சாப்பிட்டு முடித்து விடுவோம். ஆகவே மாவுப் பொருட்களை அதிகமாக எடுத்துக் கொள்ள மாட்டேன் என சபதம் எடுத்துக் கொண்டாலேயே, கொழுப்பை நீங்கள் அதிகமாக சாப்பிட முடியாது.

அதனால் பயமில்லாமல் தினமும் இரண்டு தேக்கரண்டி நெய் விட்டுக் கொண்டு சாப்பிடலாம், வெண்ணெய் சாப்பிடலாம், தேங்காய் சாப்பிடலாம், நல்லெண்ணை சாப்பிடலாம். ஆனால் இவை அனைத்தும் வேண்டிய அளவுக்குதான். அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

கொழுப்பு மீதான நமது பயத்தைத் தவிர்ப்போம். சரிவிகித உணவில் 30% வரை கொழுப்பு இருக்கலாம் என நாம் ஏற்கனவே பார்த்தது போல அந்த அளவுக்கு மட்டும் எடுத்துக் கொண்டால் நமக்கு நோய் வரும் வாய்ப்பு குறைகிறது.

காணொளியைக் காண

நன்றி: மருத்துவர் BRJ கண்ணன்,
இதயத்துறை மருத்துவர், (Senior Interventional Cardiology)
வடமலையான் மருத்துவமனை, மதுரை.

கடவுளைக் கொண்டும் நம்மை ஏமாற்றி விட்டார்கள் !

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 37

மாக்சிம் கார்க்கி
ரு நெசவுத் தொழிற்சாலையைச் சேர்ந்த பள்ளிக்கூடத்தில் நதாஷா ஆசிரியை வேலை பெற்றாள். தாய் அவளுக்கு அவ்வப்போது சட்டவிரோதமான பிரசுரங்களையும் பத்திரிகைகளையும் அறிக்கைகளையும் கொண்டு போய்க் கொடுத்துவிட்டு வருவாள்.

இதுவே அவளது வேலையாகிவிட்டது. மாதத்தில் எத்தனையோ தடவைகளில், அவள் ஒரு கன்னியாஸ்திரி மாதிரியோ, அல்லது துணிமணி, ரிப்பன், லேஸ் முதலியனவற்றை விற்கும் அங்காடிக்காரி போலவோ, அல்லது செயலுள்ள பட்டணக்கரைக் குடும்பப் பெண் மாதிரியோ, பக்திமயமான புண்ணிய ஸ்தல யாத்திரிகை போலவோ மாறுவேஷம் தரித்துக் கொள்வாள். தோளிலே ஒரு பையையாவது; கையிலே ஒரு டிரங்குப் பெட்டியையாவது தூக்கிக்கொண்டே அவள் அந்த மாகாணம் முழுவதும் சுற்றித்திரிந்தாள். ரயிலாகட்டும், படகாகட்டும், ஹோட்டலாகட்டும், சத்திரம் சாவடிகளாகட்டும். எங்குப் போனாலும் அவள்தான் அங்குள்ள அன்னியர்களிடம் மிகுந்த அமைதியோடு முதன்முதல் பேச்சைத் தொடங்குவாள். கொஞ்சம் கூடப் பயனில்லாமல் தன்னுடைய அனுபவ அறிவினாலும், சுமூகமாகப் பழகும் தன்மையாலும் அவர்களது கவனத்தையெல்லாம் தன்பால் கவர்ந்துவிடுவாள்.

ஜனங்களோடு பேசுவதிலும் அவர்களது கதைகளையும் குறைபாடுகளையும், அவர்களைப் புரியாது மயங்கவைக்கும் விஷயங்களையும் கேட்டுத் தெரிந்துகொள்வதிலும் அவள் விருப்பம் கொண்டாள். வாழ்க்கையில் மிகவும் சலித்துப்போய், காலத்தின் கோலத்தால் தமது வாழ்க்கையில் அடிமேல் அடி வாங்கியதை எதிர்த்து அவற்றைத் தவிர்ப்பதற்கு, தன் மனத்தில் எழும் தெள்ளத் தெளிவான கேள்விகளுக்கு விடையும் மார்க்கமும் தெரியாமல், அதைத் தெரிந்து கொள்வதற்கு இடைவிடாது துடியாய்த் துடித்துக் கொண்டிருக்கும் மக்களில் யாரையேனும் கண்டால், தாய்க்கு ஒரே ஆனந்தம் உண்டாகும். கும்பிக் கொதிப்பைத் தவிர்ப்பதற்காக மனிதர்களால் நடத்தப்படும் அமைதியின்மை நிறைந்த போராட்ட வாழ்க்கைச் சித்திரங்கள் அவளது கண் முன்னால் திரை விரித்துப் படர்ந்து தெரியும்.

எங்குப் பார்த்தாலும் மனிதர்களை ஏமாற்றி ஏதாவது ஆதாயம் பார்ப்பதற்காக வென்று செய்யும் கொச்சையான அப்பட்டமான முயற்சிகளையும் சொந்த சுயநலத்துக்காக மக்களைக் கசக்கிப் பிழிந்து அவர்களது கடைசிச் சொட்டு ரத்தம் வரையிலும் உறிஞ்சிக் குடிப்பதையும் அவள் தெள்ளத் தெளிவாகக் காண முடிந்தது. உலகத்திலே அமோகமான வளமும் செல்வமும் நிறைந்திருப்பதையும் அதே சமயத்தில் பெரும்பான்மையான மக்கள் இந்தச் செல்வவளத்துக்கு மத்தியிலேயும் கூட அரைப்பட்டினி குறைப்பட்டினியாக உயிர் வாழ்வதையும் எப்போதும் தேவையின் நிர்ப்பந்தத்துக்கு ஆளாகி வாழ்வதையும் அவள் கண்டாள்.

தேவாலயங்களிலோ பொன்னும், வெள்ளியும் நிறைந்து கிடந்தன. அவற்றால் ஆண்டவனுக்கு எந்தப் பிரயோஜனமும் இருக்கவில்லை. அதே சமயத்தில், அந்த கோயில்களின் வாசல்களிலே பிச்சைக்காரர்கள் நடுநடுங்கிக்கொண்டே, தங்களுடைய கைகளிலே வந்து விழும் பிச்சைக்காசுக்காகப் பயனின்றிக் காத்துக்கிடந்தார்கள். இதற்கு முன்பு கூட அவள் இது மாதிரிக் காட்சிகளைக் கண்டிருக்கிறாள்; பணம் படைத்த தேவாலயங்களையும் பொன்னாபரணம் கொண்ட உடைகளை அணிந்த பாதிரிகளையும் அவள் கண்டிருக்கிறாள். இந்த நிலைமை பிச்சைக்காரர்களின் குடிசைகளுக்கும், கிழிந்து பழங்கதையாய்ப் போய் மானத்தை மறைக்கக்கூட இயலாத அவர்களது துணிகளுக்கும் எதிர்மறைவான காட்சியாயிருப்பதையும் அவள் கண்டிருக்கிறாள். ஆனால் முன்பெல்லாம் அவள் இந்த மாதிரி எதிரும் புதிருமான வித்தியாசத்தை இயற்கை நியதி என்று கருதிச் சாமாதானம் அடைந்தாள். இப்போதோ இந்த நிலைமை அவளால் தாங்க முடியாததாயிருந்தது. பணக்காரர்களைவிட ஏழைகட்கு தேவாலயம் அருகிலேயும் தேவைமிக்கதாயும் இருப்பதாக அவளுக்குத் தோன்றியது. எனவே பிச்சைக்காரர்களுக்கு இழைக்கும் எந்தக் கொடுமையையும் அவளால் பொறுக்க முடியவில்லை.

அவள் பார்த்த கிறிஸ்துநாதரின் சித்திரங்களிலிருந்தும், கிறிஸ்துவைப் பற்றி அவள் கேள்விப்பட்டிருந்த கதைகளிலிருந்தும், கிறிஸ்துநாதர் எளிய உடைகள் தரித்து ஏழைகளின் நண்பராகவே இருந்தார் என்பதை அவள் அறிந்திருந்தாள். ஆனால், இந்தத் தேவாலயங்களிலோ கிறிஸ்துநாதரின் உருவத்தை அவர்கள் பளபளக்கும் பொன்னாலும், சரசரக்கும் பட்டைகளாலும் அலங்கரித்திருந்தார்கள்; பிச்சைக்காரர்கள் அவரது அருளை நாடி தேவாலயத்துக்கு வந்தால் அந்தப் பட்டுப் பட்டாடைகள் அவர்களைப் பார்த்துச் சீறிச் செருமுவதாகவே அவளுக்குத் தெரிந்தது. அப்போதெல்லாம் அவள் ரீபின் சொன்ன வாசகத்தைத் தன்னையும் அறியாமல் நினைத்துக் கொள்வாள்.

”கடவுளைக் கொண்டும் நம்மை ஏமாற்றிவிட்டார்கள்!”

அவள் தன்னையும் அறியாமலே வரவரப் பிரார்த்தனை செய்வதைக் குறைத்துவிட்டாள். ஆனால் கிறிஸ்துவைப் பற்றி அதிகமாக நினைத்தாள். அதுமட்டுமல்லாமல், கிறிஸ்துநாதரின் பெயரையே சொல்லாமல், அவரைப் பற்றித் தெரிந்துகூடக் கொள்ளாமல், அதே சமயத்தில் அவள் தனக்குள்ளாகக் கருதியது போல், கிறிஸ்துநாதரின் கொள்கைகளின்படி வாழ்ந்து, அவரைப்போலவே இந்த உலகத்தை ஏழைகளின் சாம்ராஜ்யமாகக் கருதி இவ்வுலகின் சகல செல்வங்களையும் மக்கள் குலத்தோர் அனைவருக்கும் சரிநிகர் சமானமாகப் பங்கீடு செய்ய வேண்டும் என்று விரும்பி வாழ்கின்ற மக்களைப் பற்றியும் அவள் அதிகமாகச் சிந்தித்தாள். அவளது மனம் இந்த எண்ணத்தின் மீதே பதிந்து படிந்தது. அவளது சிந்தனைகள் அவளது மனத்துக்குள்ளாகவே விரிந்து வளர்ந்து அவள் பார்க்கின்ற பொருளனைத்தையும் கேட்கின்ற விஷயங்கள் அனைத்தையும், அணைத்து ஆரத்தழுவி, வரவரத் தீட்சண்ணியம் பெற்று வளர்ந்தோங்கின. அந்தச் சிந்தனைகள் வளர்ந்தோங்கி, ஒரு பிரார்த்தனையின் பிரகாசத்தோடு விளங்கின.

இந்த இருள் சூழ்ந்த உலகத்தின் சகல திசா கோணங்கள் மீதும் நமது சர்வஜன சமூகத்தின் மீதும், வாழ்க்கையின் மீதும், ஒளிய பிரவாகத்தை எங்கெங்கும் ஒரே சமனமாகப் பாய்ச்சி ஒளி செய்தன. நான் என்றென்றும் ஒரு மங்கிய பரிவுணர்ச்சியோடு நேசித்து வந்த கிறிஸ்துநாதர் – துக்கம் கலந்த இன்பமும் பயங்கலந்த நம்பிக்கையும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த குழப்ப உணர்ச்சியோடு நேசித்து வந்த அதே கிறிஸ்துநாதர் – தன்னருகே நெருங்கி வந்துவிட்டது போன்று தாய்க்குத் தோன்றியது. இப்போதோ இயேசுகிறிஸ்து முன்னைவிட உயர்ந்த ஸ்தானத்தில் கண்ணெட்டும் தூரத்தில் ஒளிரும் முகத்தோடு மகிழ்வாய் வீற்றிருப்பதுபோல் அவளுக்குத் தோன்றியது. மனிதர்களின் நண்பராக கிறிஸ்துவின் பெயரைக் கூட மரியாதையின் காரணமாகச் சொல்லக்கூசிய மக்கள், அவருடைய திருநாமத்துக்காகத் தங்கள் இரத்தத்தைத் தாராளமாகச் சிந்தினார்கள். அந்தப் புனித இரத்தத்தால் கழுவப்பெற்று, புத்துணர்ச்சி பெற்று, உண்மையாகவே அவர் மீண்டும் உயிர்தெழுந்து வந்துவிட்டது போல் அவளுக்குத் தோன்றியது. தனது சுற்றுப் பிரயாணங்களை முடித்துவிட்டு, அவள் திரும்பி வந்து நிகலாயைச் சந்திக்கும்போது மிகுந்த உணர்ச்சியையும் உவகையும் கொண்டவளாக இருப்பாள். வழியெல்லாம் அவள் கண்ட விஷயங்களும் கேட்ட விஷயங்களுமே அந்த உவகைக்குக் காரணம். தனது கடமையை நிறைவேற்றிவிட்ட திருப்தியில் அவள் மனம் குதூகலித்து நிறைவுபெறும்.

“இந்த மாதிரிச் சுற்றித் திரிந்து எவ்வளவோ விஷயங்களைக் காண்பது மிகவும் நன்றாயிருக்கிறது” என்று ஒருநாள் மாலை அவள் அவனிடம் சொன்னாள். ”இவற்றால் நாம் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஜனங்களே வாழ்க்கையின் கடைக்கோடிக்கே தள்ளிச் செல்லப்பட்டிருக்கிறார்கள். வாழ்வின் எல்லைக் கோடியிலே அவர்கள் என்ன நடந்திருக்கிறது என்பதொன்றும் தெரியாது தட்டுத் தடுமாறித் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தங்களைப் பிறர் ஏன் இப்படி நடத்த வேண்டும் என்பதை மட்டும் அவர்களால் நினைத்து நினைத்து அதிசயப்படாமலிருக்க முடியவில்லை. அவர்களை ஏன் இப்படி விரட்டியடிக்க வேண்டும். எல்லாமே நிறையப் பெருகிக் கிடக்கும்போது அவர்கள் மட்டும் ஏன் பசியால் வாட வேண்டும்? எங்குப் பார்த்தாலும் கல்வியறிவு நிறைந்திருக்கும்போது, அவர்கள் மட்டும் ஏன் அஞ்ஞான இருளில் ஒன்றுமறியாத பாமரர்களாயிருக்க வேண்டும்? மக்களைப் பணக்காரன் என்றோ ஏழை என்றோ கருதாமல் தனது அன்பு மிக்க குழந்தைகளாகக் கருதும் அந்தத் தயாபரன், அந்தக் கடவுள் எங்கு போனார்? தங்களுடைய வாழ்க்கையைப் பற்றி மக்கள் சிந்திக்கும்போது அவர்களுக்கு ஆத்திரம்தான் பொங்குகிறது. இந்த அநீதியைத் தவிர்க்க ஏதேனும் செய்யாவிட்டால், அந்த அநீதியே தங்களைத் துடைத்துத் தூர்த்து அழித்துவிடும் என்பதை அவர்கள் உணர்கிறார்கள்.

மக்களது வாழ்க்கைக்கு இழைக்கப்படும் அநீதிகளைப் பற்றி அந்த மக்களிடமேதான் பேச வேண்டும் என்ற ஆசை அவளுக்கு எத்தனையோ சமயங்களில் எழுவதுண்டு. சமயங்களில் இந்த ஆசையை அடக்கியாள்வதே அவளுக்குப் பெரும்பாடாய்விடும்.

தாய் சித்திரப் புத்தகங்களைக் குனிந்து பார்த்துக்கொண்டிருப்பதை நிகலாய் கண்டுவிட்டால் உடனே லேசாகப் புன்னகை புரிவான்; அவளுக்கு உலகத்து அசிசயங்களில் ஏதாவது ஒன்றைப் பற்றிச் சொல்லுவான். மானுடத்தின் அசகாயத் துணிச்சலைக் கண்டு வியந்துபோய் அவள் திடுக்கெனக் கேட்பாள்.

“இப்படியும் நடக்க முடியுமா?”

தனது தீர்க்கதரிசனத்தின் உண்மையின்மீது தான் கொண்டுள்ள அசைக்க முடியாத, ஆணித்தரமான உறுதியோடு நிகலாய் அவளைத் தனது கண்ணாடியணிந்த கண்களால் அன்பு ததும்பப் பார்ப்பான், பார்த்தவாறு எதிர்காலச் சித்திரத்தை விளக்கிச் சொல்லத் தொடங்குவான்.

”மனிதனுடைய ஆசைகள் அளவு கடந்தவை. அவனது சக்தியோ வற்றி மடியாதது என்றாலும் கூட, இந்த உலகத்தில் ஆத்மபலம் சிறிது சிறிதாகத்தான் பெருகுகிறது. ஏனெனில், இன்று சுதந்திரமாக இருக்கப் பிரியப்படுபவர்கள் எல்லாம் அறிவைச் சேகரிப்பதைவிட பணத்தையே சேகரிக்க வேண்டிய நிலைமையில் இருக்கிறார்கள். ஆனால், மாந்தர்கள் இந்தப் பேராசையைத் தொலைத்து, தங்களை அடிமைப்படுத்தும் பலவந்தமான உழைப்பிலிருந்து விடுதலை பெற்றால்……”

இந்த வார்த்தைகளின் அர்த்தத்தை அவளால் கண்டுகொள்ள முடியவில்லை. என்றாலும் அவற்றைத் தூண்டிவிடும் அமைதி நிறைந்த நம்பிக்கை மட்டும் அவளுக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரியத் தொடங்கியது.

”உலகத்தில் சுதந்திரமாக இருப்பவர்கள் மிகச் சிலரே; அதுதான் துர்ப்பாக்கியம்!” என்றாள் அவள்.

படிக்க:
கொலைகார ஸ்டெர்லைட் ஆலையில் நிகழ்ந்த சில விபத்துக்கள் – ஒரு பார்வை !
அன்றே கொன்றது கஜா புயல் நின்று கொல்கிறது அரசு !

அவளுக்கு இதுமட்டும் புரிந்தது. பேராசையிலிருந்தும் குரோதத்திலிருந்தும் தம்மை விடுவித்துக் கொண்டவர்கள் அவளுக்குத் தெரியும். அந்த மாதிரியானவர்கள் மட்டும் அதிகமாக இருந்தால் வாழ்க்கையின் இருளும் பயங்கரமும் தொலைந்து போகும், வாழ்க்கை எளிமையாகவும் ஒளிபெற்றும் மகோந்நதமாகவும் விளங்கும்.

“கொடியவர்களாகும் நிர்ப்பந்தத்துக்கு மக்கள் ஆளாகிறார்கள்!” என்று துயரத்தோடு சொன்னான் நிகலாய்.

அதை ஆமோதித்து அந்திரேய் முன்னர் சொன்ன வார்த்தைகளை எண்ணி, தலையை அசைத்துக்கொண்டாள் தாய்.

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட தனிச் சட்டம் இயற்று ! மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் | நேரலை

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உடனடியாக ஆவன செய்யவேண்டும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடந்த சனிக்கிழமை (15-12-2018) தீர்ப்பளித்தது.

இதனைக் கண்டித்து, ”டெல்லி பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவு அநீதியானது!
ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட தனிச்சட்டம் இயற்று !” என்ற முழக்கத்தின் கீழ் தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் அமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது.

சென்னையில் அண்ணாசாலை தலைமை தபால் நிலையம் முன்பாக மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ! நேரலை !

பாருங்கள் பகிருங்கள் !

கொலைகார ஸ்டெர்லைட் ஆலையில் நிகழ்ந்த சில விபத்துக்கள் – ஒரு பார்வை !

ஸ்டெர்லைட் நச்சு ஆலையில் நடந்த விபத்துகளில் சிலவற்றை தமது முகநூல் பக்கத்தில் தொகுத்து பதிவிட்டிருக்கிறார், கப்பிக்குளம் ஜெ.பிரபாகர்.

02.01.1997 அன்று 7 சிலிண்டர்கள் வெடித்து 40 தொழிலாளர்கள் உயிர்தப்பினர்.

03.05.1997 அன்று கந்தக அமிலக் குழாய் வெடித்து ஒருவர் உடல் வெந்து சாவு.

05.07.1997 அன்று ஸ்டெர்லைட் நச்சுப்புகையால் அருகிலுள்ள ரமேசு பூ கம்பெனியில் வேலைபார்த்த 165 பெண் தொழிலாளர்கள் மயக்கம், பலருக்கு கருச்சிதைவு.

30.08.1997 அன்று செம்புக் கலவை உலை வெடித்து பனை உயரத்துக்கு தீ. திருநெல்வேலியைச் சேர்ந்த பெருமாள், தூத்துக்குடி சங்கர் என்ற இரண்டு தொழிலாளர்கள் எலும்புக்கூடாயினர். 3 பேர் படுகாயம்.

14.02.1997 அன்று ஆலையில் தீ விபத்து. கரும்புகை பரவலால் சுற்று வட்டாரத்திலுள்ள மக்களுக்கு மூச்சுத் திணறல்.

16.04.1998 அன்று நள்ளிரவில் பயங்கர விபத்து. 6 பேர் கருகினர். அதில் 3 பேர் நிகழ்விடத்தில் சாவு.

19.11.1998   அன்று கந்தக அமில குழாய் வெடித்து 5 பொறியாளர்களும் ஒரு கூலித் தொழிலாளியும் உடல் வெந்து தனியார் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பெற்றனர்.

26.12.1998 அன்று எண்ணெய் சேமிப்புத் தொட்டி வெடித்து தீ விபத்து.

(மாதிரி படம்)

02.03.1999 அன்று நச்சுப் புகையால் அருகிலுள்ள அகில இந்திய வானொலி நிலையத்தின் அரசு ஊழியர்கள் 11 பேர் மயக்கம். அரசு மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை.

21.09.2008 – நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை நல்லாத்துக்குடியைச் சேர்ந்த சம்பூர்ண ஆனந்த் என்பவரது மகன் பொறியாளர் விஜய் (24) கூலிங் பிளாண்ட்டின் ஒரு பகுதி திடீரெனஇடிந்து விழுந்ததால் உயிரிழந்தார். இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்ட மெக்கானிக் பிரிவு ஒப்பந்த ஊழியர் கேரளாவைச் சேர்ந்த கணேசன் படுகாயம் அடைந்தார்.

18.09.2010 – திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அருகிலுள்ள ஊத்துமலை கிராமத்தினை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் (21) ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் வாகன ஓட்டுனராகபணியாற்றி வந்தார். அமிலம் ஏற்றி, இறக்கும் போது உடலில் கொட்டியதால் தூத்துக்குடி AVM தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

12.10.2010 சிகிச்சை பலனின்றி முத்துக்கிருஷ்ணன் உயிரிழந்தார்.

03.03.2011 – ஸ்டெர்லைட் ஆலை தீ விபத்தில் ரதீஷ் என்ற ஒப்பந்த தொழிலாளிக்கு 35 விழுக்காடு தீக்காயத்தோடு உயிருக்குப் போராடி வந்தார்.

படிக்க:
ஆய்வுக்குழு கிடக்கட்டும் ! ஸ்டெர்லைட்டை மூட தனிச்சட்டம் இயற்று ! மக்கள் அதிகாரம்
பாஜக – ஸ்டெர்லைட் : இருபதாண்டு கால புனிதக் காதல் !

31.05.2011 – ஸ்டெர்லைட் ஆலையின் உள்ளே ஏற்பட்ட மின்கசிவால் அமலநாதன்(28) என்ற தொழிலாளி உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

13.08.2011 – ஸ்டெர்லைட் ஆலை மின் கசிவால் தங்கப்பாண்டி (32) படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்ட விபத்தில் தனது கையை இழந்தவர்

17.08.2011 – ஸ்டெர்லைட் ஆலையின் உள்ளே கந்தக-டை-ஆக்சைடு வாயுக்கசிவு ஏற்பட்டதால் தொழிலாளர்கள் பீதி அடைந்தனர். பாதிப்பின் விபரங்கள் தெரியவில்லை.

14.09.2011 – ஸ்டெர்லைட் ஆலையில் அமிலத்திற்குள் விழுந்து ஒப்பந்த தொழிலாளியான தூத்துக்குடி, இந்திரா நகர், 3வது மைல் பகுதியைச் சேர்தவர் சுப்பையா மகன் பாண்டியன் (43) உயிரிழந்தார். பாஸ்பரிக் ஆசிட் பிளாண்ட் பொறியாளரான தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை அருகே உள்ள தீர்த்தாம்பட்டியைச் சேர்ந்த செங்கராய பெருமாள் மகன் சுரேஷ்குமார் (25) படுகாயமடைந்தார்.

10.10.2011 – ஸ்டெர்லைட் ஆலையில் சல்பர் டை ஆக்சைடு ஆசிட் பிளான்டில் திடீரென மின்சாரம் தடைபட்டதால் வாயுக் கசிவு ஏற்பட்டது. அப்போது அங்கு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர்களுக்கு தொழிற்சாலையில் உள்ள முதல் உதவி சிகிச்சை மையத்தில் சிகிச்சைஅளிக்கப்பட்டது.

09.09.2012 – ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரே அமைந்துள்ள ஸ்டெர்லைட் நிறுவன மின் உற்பத்தி நிலையத்தில் மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதால் தீ விபத்துஏற்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையின் தேவைக்காக இதில் தினமும் 80 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

22.02.2013 – தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் 4வது கப்பல் தளத்தில், ஸ்டெர்லைட் ஆலைக்கு தேவையான மூலப்பொருளான தாமிரத் தாது, கப்பலிலிருந்து நேரடியாக லாரியில்இறக்கும் போது, உடல் மீது கொட்டியதால் லாரியின் கிளீனரான தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகே உள்ள சிந்தலக்கட்டை கிராமத்தைச் சேர்ந்த மயிலேறி மகன் கருப்பசாமி(23) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

08.03.2013 – ஸ்டெர்லைட் ஆலை பாஸ்பரிக் அமில உற்பத்தி பிரிவில் மின்கசிவால் அமலன்(30) என்ற தொழிலாளி படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மாதிரி படம்

18.03.2013 – ஸ்டெர்லைட் தொழிற்சாலையில், 60 அடி உயரத்திலிருந்து இரவு 8 மணிக்கு தவறி விழுந்து படுகாயம் அடைந்த தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர், வெயிலுகந்தம்மன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாசானமுத்து மகன் சுவாமிநாதன் (45) உயிரிழந்தார். இவர் 17 வருடங்களாக ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் வெல்டராக பணிபுரிந்து வந்தார்.

23.03.2013 – ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து அதிகாலை முதல் நச்சு வாயு வெளியேறியது. தூத்துக்குடியிலுள்ள பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். செடி, கொடிகள் கருகின.

24.03.2013 – ஸ்டெர்லைட் ஆலையில் வேலை செய்த பீகார் மாநிலத்தை சேர்ந்த சுகதி மேதா மகன் கைலாஷ் மேதா (45) ஆலைக்குள் மயங்கி விழுந்தார். ஏ.வி.எம்.மருத்துவமனையில்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

26.03.2013 சிகிச்சை பலனின்றி கைலாஷ் மேதா  உயிரிழந்தார். இயற்கை மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

17.06.2018 ஸ்டெர்லைட் ஆலையில் நச்சு வாயுக்கசிவு ஏற்பட்டு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவித்தார்.

(உதவி : ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம், கடலோர மக்கள் கூட்டமைப்பு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழு, வினவு, மனித உரிமை பாதுகாப்பு மையம், அகில இந்திய மீனவர்சங்கம், மதிமுக இணையத்தள நண்பர்கள், மற்றும் பூவுலகின் நண்பர்கள்)

முகநூலில் :  Kappikulam J Prabakar

இதையும் பார்க்க:

ஒரு அமெரிக்கரின் மாஸ்கோ மருத்துவ அனுபவம் !

து மாஸ்கோவில் வாழும் ஒரு அமெரிக்கரின் அனுபவம். இது இன்சூரன்ஸ் (காப்புறுதி) அடிப்படையிலான அமெரிக்க சுகாதார அமைப்பு முறையையும் சோவியத் கடந்த காலத்திலிருந்து ரஷ்யாவில் எஞ்சியுள்ள அனைவருக்குமான  பொதுசுகாதார முறையையும் ஒப்பிடுகிறது. கடந்த 30ஆண்டுகளில், ரஷ்யா மெதுவாக முதலாளித்துவ அமைப்பாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதுஆனால் அங்கே அமல்படுத்தப்பட்ட பல சமூக நல நடவடிக்கைகளை ஒரே இரவில் தூக்கி எறிய முடியாமல் அவை தொடர்கின்றன. நம் நாட்டில் அரசு மருத்துவமனைகள் தொடர்வது போல.

*****

ன்று மற்றொன்றை அவ்வளவு எளிதாக பதிலீடு செய்வதில்லை என்று ஹெகல் தத்துவத்தின் வரலாறு பற்றிய சொற்பொழிவுகளிலும், ஆன்மாவின் தோற்றப்பாட்டியல் (Phenomenology of Spirit) என்ற நூலிலும் சுட்டிக்காட்டினார். மாறாக, அது முன்னெடுக்கப்பட்டு, தொடர்ச்சியான பரிணாம வளர்ச்சியில் ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு மாற்றப்படுகிறது.

பொதுமருத்துவமானது இன்றும் ரசியாவில் சோசலிசத்தின் மிச்ச சொச்சமாக நீடித்து வருகிறது.

சோவியத் யூனியன் இது போன்றதுதான்; அது முற்றிலும் மறைந்து போகவில்லை, அது வாழ்ந்து, இன்றும் நவீன ரஷ்யர்களின் நலன்களைக் காக்கிறது. உணவு மற்றும் குடியிருப்பு தொடர்பாக நான் இதைப் பற்றி விவாதித்தேன், இப்போது இதை சுகாதார நலத்துடன் தொடர்புபடுத்தி விவாதிக்க நான் விரும்புகிறேன்.

இது தொடர்பாக, இரண்டு கதைகள், ஒன்று என்னுடையது மற்றொன்று மாஸ்கோ புறநகர் பகுதியில் ஒரு அச்சு நிறுவனம் நடத்தி வரும் என் நண்பர் அலெக்ஸி என்னிடம் கூறியது.

முதலில் என் கதை :

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, தெருவில் மெதுவாக பாதசாரிகள் சாலையைக் கடக்கும் இடத்தில் நடந்து கொண்டிருந்தபோது ஒரு கார் என் மீது மோதியது. திரைப்படங்களில் பார்ப்பதைப் போல், நான் மேலே தூக்கி வீசப்பட்டு, சுமார் பன்னிரண்டு அடிகள் முன்னால் எறியப்பட்டு ஒரு பொம்மை போல் விழுந்தேன். அப்போது 69 வயதாகியிருந்த எனக்கு நடந்தது மிகவும் மோசமாக இருந்திருக்கலாம். நான் இறந்திருக்கலாம், ஆனால், பிழைத்து விட்டேன்.

ஒரு பழைய, நன்றாக பராமரிக்கப்படாத ஆம்புலன்ஸ் வந்தது, ஆனால் உண்மையில், அப்போதிருந்த வலியில் எனக்கு அதன் தோற்றத்தைப் பற்றிய அக்கறை குறைவாகவே இருந்திருக்க வேண்டும். அவர்கள் எனக்கு வலிநீக்கியும், இரத்த அழுத்தத்திற்கு மருந்துகளையும் கொடுத்தார்கள். மருத்துவமனையில் அவர்கள் எனக்கு எக்ஸ்ரே உள்ளிட்ட பல சோதனைகள் செய்தார்கள். என் தோள்பட்டைகள் இரண்டும் விலகியிருந்தன. ஆனால் இடதுபக்கம் முறிந்ததுவிட்டதா என்பதை அவர்கள் உறுதியாகக் கூறவில்லை. இறுதியாக, “பந்து இணைப்பு” முறிந்ததைக் காட்டும் ஒரு எம்.ஆர்.ஐ எனக்கு எடுக்கப்பட்டது. அதற்கு ஒரு பெயர் இருக்கிறது, ஆனால் எனக்கு ஞாபகம் இல்லை.

அவர்கள் என் கைகளை மீட்டனர், ஒரு வயதான பெண் என் உடலின் மேல்பகுதியை கட்டினாள்… பழைய பாணியிலான மெல்லிய சல்லாத்துணிக்கட்டு. நான் திருப்பி அனுப்பப்பட்டேன்.

என் அவசரகால சிகிச்சைக்கு நான் என்ன செலவு செய்தேன்? எதுவுமில்லை, முற்றிலும் ஒன்றுமில்லை. என் பாஸ்போர்ட்டை கூட அவர்கள் கேட்கவில்லை. நான் அமெரிக்கன் என்பதும் ஒரு பொருட்டில்லை. நான் எந்த செலவும் செய்யவில்லை. துடிப்போடு செயல்பட்டு வரும் “புதின்கேர்”, சரியாக சொல்வதென்றால் புதினின் ரஷ்யாவில் அமல்படுத்தப்பட்டு வரும் “சோவியத் பராமரிப்பு”(Soviet Care)க்கு நன்றி.

நான் அமெரிக்காவில் இருந்திருந்தால், என் அவசரகால சிகிச்சைக்கு நான் நிறைய பணம் செலவு செய்திருப்பேன். எவ்வளவு என்று எனக்கு தெரியாது, ஆனால் என்னால் செலவு செய்ய முடிந்ததை விட அதிகமாக இருந்திருக்கும் என்று எனக்கு தெரியும். நான் ஒரு வக்கீலை வாடகைக்கு அமர்த்தி, அந்த கார் ஓட்டுனர் மீது நிச்சயமாக வழக்கு தொடர்ந்திருப்பேன். சில ஆண்டுகள் கழித்து நான் உயிருடன் இருந்தால், கணிசமான அளவு பணம் நிச்சயமாக எனக்கு வழங்கப்பட்டிருக்கும்.

இது சோவியத் முறை அல்ல. நீங்கள் ஓட்டுனர் மீது வழக்குத் தொடுக்கப் போவதில்லை. உங்கள் மருத்துவ பில்களுக்கு பணம் செலுத்துவதற்கு மட்டுமே அவர் கடமைப்பட்டவர். என் மருத்துவ பில்கள் சுமார் இருநூறு டாலர்கள் வந்தது. ஒவ்வொரு முறை டாக்டரைப் பார்க்க சுமார் ஐம்பது டாலர்கள், பின்னர் கட்டு அகற்றப்பட்டபோது ஒரு சிறப்புக் கவணின் விலை. ரஷ்யாவில் வழக்காடுவது என்பது அமெரிக்காவில் இருப்பது போல் இல்லை என்பது மட்டுமல்ல, மருத்துவ செலவினமும் அங்கிருப்பது போல் இல்லை.

அலெக்ஸி அவரது மகளுக்கு ஃபிரான்ஸ் ஆல்ப்ஸில் பனிச்சறுக்கு செய்யும் போது உடல்நிலை சரியில்லாமல் போய், பின்னர் சிறுநீர் பாதை நோய்த்தொற்றாக மாறியதைக் குறித்து என்னிடம் கூறினார். அதற்கான சிகிச்சைக்கு எவ்வளவு செலவானது என்று அவர் தெரிவித்தார். ரஷ்யாவில் நடத்தப்பட்ட அதே சோதனைகளுக்கு மூன்று யூரோக்கள் செலவானது, பிரான்சிலோ ஐம்பது யூரோக்கள். மாஸ்கோவில் காலையில் சோதனை செய்யப்பட்டது, மதியம் பரிசோதனை முடிவுகள் வந்தது. பிரான்சில் அவர்கள் இரண்டு நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.

சோவியத் காலத்தின்போது அமைக்கப்பட்ட புகழ்பெற்ற சுகாதார விடுதியான “மினரல் வாட்டர்ஸ்”-லிருந்து வந்திருக்கும் அவரது தந்தையைப் பற்றி அவர் என்னிடம் கூறுகிறார். வழக்கமாக, தங்களின் விருப்பத்தின் பேரில் அங்கே சென்று தண்ணீரைக் குடித்து, ஓய்வு எடுத்து, உள்ளூர் ஆட்டுக்குட்டி கறியை நிறைய சாப்பிட்டார்கள். இன்று, ஒரு மருத்துவரின் மருந்துச் சீட்டு தேவை, ஆனால் சிகிச்சை அதே தான் மற்றும் செலவும் அதே தான்… ..முற்றிலும் எதுவுமில்லை.

படிக்க :
♦ இலவச மருத்துவத்தின் முன்னோடி சோவியத் யூனியன் !
♦ “பாராளுமன்றத்திற்கு சென்ற பால்காரம்மா”: சோவியத் யூனியனின் அற்புதங்கள்!

மருந்துகளின் மலிவான விலையைக் கண்டு எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. Ciproset, அமெரிக்காவில் விலையுயர்ந்த, மருந்துச்சீட்டு தேவைப்படும் ஒரு மருந்து, நான் இங்கே 300 ரூபிள் (சுமார் ஐந்து டாலர்கள்) கொடுத்து மருந்துச்சீட்டு தேவையில்லாமல் கடையில் வாங்குகிறேன். அனைத்து ஆண்டிபயாடிக்குகளுக்கும் இது பொருந்தும்.

சமீபத்தில் எனக்கு பல்வரிசை மாற்ற வேண்டியிருந்தது; மூன்று பற்கள். பற்கள் உட்பதிப்பு செய்யுமாறு பல்மருத்துவர் என்னிடம் கூறினார். அதற்கான செலவு, 1,65,000 ரூபிள் என்பது  ஒரு ஏழை வயதான பெண்மணிக்கு நிச்சயமாக அதிகம்தான். நான் சொல்லிக்கொண்டிருக்கும் தற்போதைய நேரத்தில் பரிமாற்ற விகிதம் டாலருக்கு 58 ரூபிள் ஆகும் (அதாவது செலவு 3 பற்களை மாற்ற சுமார் $3,000).

அமெரிக்காவில்  வீட்டுக்கு வந்ததும் என் மகளும் ஒரு உள்பதிப்பு வைத்திருக்கக் கண்டேன் – ஒரு முன்பல்லுக்கு செலவு 10,000 அமெரிக்க டாலர்கள் .

ரஷ்யா பல் மருத்துவத்திற்கான ஒரு மருத்துவ சுற்றுலா மையமாக மாறியுள்ளது…… சோவியத் யூனியனுக்கு நன்றி – புடினின் ரஷ்ய மக்கள் மீது இன்னும் ஒளி வீசும் சிவப்பு நட்சத்திரத்திற்கு நன்றி.

மேரி மேட்ஸ்கர் ரஷ்யாவில் வாழும் நியூயார்க்வாசி

நன்றி:  new-democrats 
Countercurrents.org தளத்தில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம் .

திருடித் தின்னும் மிருகம் | அ.முத்துலிங்கம்

ப்பிரிக்காவில் ஒரு சின்னக் குற்றம் செய்த சிறுமியின் புகைப்படத்தை என் வீட்டில் கடந்த இருபது வருடங்களாக மாட்டி வைத்திருக்கிறேன். சின்னக் குற்றம் என்று சொன்னால் அங்கே பலருக்கு விளங்காது. ஆப்பிரிக்காவில் குற்றங்களை ஆண்பால் பெண்பால் என்று பிரித்திருப்பார்கள். பாரதூரமான குற்றம் என்றால் அது ஆண்பால்; சிறு குற்றம் என்றால் அது பெண்பாலாக இருக்கும்.

எழுத்தாளர் அ. முத்துலிங்கம்
உதாரணமாக கொலை, கொள்ளை, வன்புணர்ச்சி, தீவைத்தல் போன்ற குற்றங்கள் ஆண்பால். சிறுகளவு, வாய்ச்சண்டை, கடனைத் தீர்க்காமல் இருப்பது போன்றவை பெண்பால். ஆண்குற்றத்துக்கு பெரிய தண்டனையும், பெண்குற்றத்துக்கு சிறிய தண்டனையும் கிடைக்கும்.

சிறுமியின் படத்தை பார்க்கும்போதெல்லாம் அது ஒருவகையில் என் சின்ன வயதை நினைவுபடுத்தியது. என் பழைய காலத்தை மட்டுமல்லாது நிகழ் காலத்தையும் வருங்காலத்தையும் கூட என்னால் அந்தப் படத்தில் பார்க்க முடிந்தது. வீட்டுக்கு வருபவர்கள் யார் இந்தச் சிறுமி என்று திரும்ப திரும்ப கேட்பார்கள். ஏதோ பதில் சொல்லி அவர்களை சமாளித்தேன்.  நான் படத்தை சோமாலியாவில் பிடித்தேன். தற்செயலாக அபூர்வமான படமாக அது அமைந்துவிட்டது.

சூரியன் நின்ற திசையும் மரத்தின் நிழலும் நான் எடுத்த கோணமும் எப்படியோ பொருந்தி அந்தக் கணம் பதிவாகியிருந்தது. சிறுமியின் பாதி முகம்தான் படத்தில் தெரியும், மீதியில் மரத்தின் நிழல் விழுந்திருந்தது. அந்தப் பாதிப் படத்திலும் அவள் திகைப்பும் தந்திரமான கண்களும் குதூகலமும் சீராக தெரிந்தது.

மாதிரிப் படம்

நான் பார்த்த சிறுமிக்கு விளையாட்டில் அதிக ஆர்வம். எப்பவும் ஓடியபடியே இருந்தாள். அவர்களுடையது ஒரு சின்னக் குடும்பம். என் சோமாலிய நண்பர்தான் என்னை அங்கே அழைத்துப் போயிருந்தார். இந்தச் சிறுமியும் இவள் தம்பியும் ஒரு கோழியை துரத்திக் கொண்டிருந்தார்கள். கோழி விளையாட்டுப் பொருளா அல்லது அன்றைய இரவு உணவா என்பது தெரியவில்லை. எங்களைக் கண்டதும் அப்படியே நின்றார்கள்; கோழி ஓடிவிட்டது. கோழிக்கு பெரிய மகிழ்ச்சி உண்டாகவில்லை. பக்கத்திலேயே நின்று மேய்ந்தது. தாயார் குடிசைக்குள் ஏதோ வேலையில் இருந்தார். சின்னப் பையன்தான் தகப்பனைக் கூட்டிவர ஓடினான்.

நண்பர் என்னை அங்கே கூட்டிச் சென்றது சோமாலியர்களின் புல்லுப் பானையை காண்பிப்பதற்கு. அவர்கள் ஒருவித புல்லில் பானை செய்து அதில்தான் தண்ணீர் பிடித்து வருவார்கள். வெளிப்புறத்தில் பிசின் பூசி இறுக்கமாக நீக்கல் இல்லாமல் இருக்கும். தகப்பன் வருமுன்னர், தனியாக இருக்கும் சந்தர்ப்பத்தை நழுவவிடாமல் சிறுமி நண்பரிடம் என்னவோ சொன்னாள். அவர் மொழிபெயர்த்தார்.

‘அப்பா இன்றைக்கு என்னை அடித்தார்.’

‘ஏன் அடித்தார்?’

‘நட்சத்திரம் மறைந்த பிறகு நான் எழுந்ததற்கு.’

இரவு நட்சத்திரங்கள் மறையுமுன்னர் அவள் எழுந்து தண்ணீர் எடுத்துவர வேண்டும் என்பது விதி என்றார் நண்பர். அவள் கைகளைப் பார்த்தேன். தழும்பு தழும்பாக அடி விழுந்த காயங்கள். விரல்கள் சிவப்பாக இருந்தன. உள்ளங்கை காய்த்துப்போய் தடித்து கட்டைபோல கிடந்தது. ஒரு சிறுமியின் கைபோலவே இல்லை.

படிக்க:
♦ ஜய் பொல்சானரோ : அமேசான் பழங்குடிகளை அழிக்க வந்த பிரேசிலின் மோடி
♦ என்னைக் கொல்லட்டும், என்னை உதைக்கட்டும் | அ.முத்துலிங்கம்

தண்ணீர் பிடித்து வருவது என்பது பெண்களின் வேலை. உலகத்தின் எந்த மூலையில் தேடினாலும் அது பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட பணி. அதிகாலையில் எழும்பியதும் இந்தச் சிறுமி புல்லுக்குடத்தை துக்கிக்கொண்டு தண்ணீர் பிடித்துவர பல மைல்கள் நடப்பாள். அதில் அவள் தவறினால் அவளுக்கு பெரிய தண்டனை கிடைக்கும். தகப்பனிடம் ஒட்டகம் இருந்தது. அது சும்மாதான் நிற்கும் ஆனால் அதில் போய் தண்ணீர் பிடித்துவர முடியாது. ஓர் ஆண் தண்ணீர் எடுத்து வந்தால் அது பெரிய அவமானமாகப் போய்விடும்.

தகப்பன் சிறுமியை அழைத்து புல்லுப்பானையை கொண்டுவரச் சொன்னார். அவர் எங்களுக்கு முன்னால் அவளை அழைத்தவிதம் அவளுக்கு பிடிக்கவில்லை. சிரித்த முகம் கறுத்தது. நண்பர் நிலத்தைப் பார்த்து சிரித்தார். தகப்பன் சிறுமியை ‘திருடித் தின்னும் மிருகமே’ என்று அழைத்ததாகச் சொன்னார். ஏன் அப்படி அழைத்தார் என்று கேட்டபோது அவர் நீண்ட முறைப்பாடுகள் வைத்தார்.

தண்ணீர் பிடித்து வருவது என்பது பெண்களின் வேலை. உலகத்தின் எந்த மூலையில் தேடினாலும் அது பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட பணி.

முக்கியமான குற்றச்சாட்டு பக்கத்து வீட்டுக்காரர்களின் ஆட்டுப் பாலை திருட்டுத்தனமாகக் கறந்து குடித்து விடுகிறாள் என்பது. அவள் எப்பொழுது பார்த்தாலும் ஏதாவது சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறாள். சிறுத்தை பாடுபட்டு ஒரு விலங்கை கொன்றால் அதை கழுதைப்புலி திருடித் தின்றுவிடும். இவளும் அதுபோலவே இருக்கிறாள். இப்பொழுதெல்லாம் பெண்குற்றம் செய்கிறாள். விரைவில் ஆண்குற்றம் செய்யத் தொடங்கி விடுவாள்.

சிறுமி கொண்டுவந்த புல்லுப் பானையை ஒரு படம் பிடித்தேன். பிறகு தகப்பனை  எடுத்தேன். அவர் தொப்பி அணிந்து நீண்ட உடையுடன் காணப்பட்டார். அவருடைய ஒரு கண் நீரில் மிதப்பதுபோல இருந்தது. அவராகவே பையனை தூக்கிவைத்துக் கொண்டு ஒரு படம் எடுக்கச் சொன்னார். சிறுமி அவர் முகத்தை பார்த்தபடியே நின்றாள். எங்கே தன்னை கூப்பிடுவாரோ என்ற ஏக்கம் முகத்தில் தெரிந்தது. ஆனால் அவர் அழைக்கவே இல்லை. நான் ‘சிறுமியும் நிற்கட்டுமே’ என்று சொன்னபோது அவருக்கு அது எப்படியோ கேட்காமல் போய்விட்டது.

தகப்பன் தன் ஆட்டு மந்தையை காட்ட நண்பரை அழைத்துச் சென்றார். மந்தை என்பது இருபதுக்கு  குறைவான ஆடுகள்தான். அதுதான் அவர்களுடைய செல்வம். அந்த வருமானத்தில்தான் குடும்பம் நடந்தது. தகப்பன் போனபின்னர் நான் சிறுமியை படம் பிடித்தேன். அவளுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை சொல்லமுடியாது. அப்பொழுது எறித்த சூரியனின் வெளிச்சம் முழுவதையும் அவள் கண்கள் வாங்கிவிட்டன. அந்தப் புகைப்படத்தை அவள் பார்க்கப் போவதில்லை. அது அவளுக்கு தெரியும். எனக்கும் தெரியும். அவள் தகப்பனை ஏமாற்றிவிட்டதுதான் மகிழ்ச்சிக்கான காரணம். கண்களில் தந்திரம் இருந்தது. ரத்தம் கீழேயிருந்து பாய்ந்து அவள் இருதயத்தையும் தாண்டி முகத்துக்கு போனது. அந்தப் படத்தைத்தான் நான் இன்னமும் பாதுகாத்தேன்.

தகப்பன் தூரத்தில் திரும்பி வருவது தெரிந்ததும் அவளில் மாற்றம் ஏற்பட்டது. கைகளை மறைத்து அணிந்திருந்த முழு நீளச்சட்டையின் விளிம்பை இழுத்து வாயை துடைத்தாள். தகப்பன் நெருங்க நாலைந்து இலையான்கள் அவருடன் கூடவே பறந்தன. அவர் சிறுமியிடம் ஏதோ சொல்ல அவள் குடிசைக்குள் துள்ளிக்கொண்டு ஓடினாள். சிறிது நேரத்தில் இரண்டு நீண்ட குவளைகளில் கால்பாகம் நிறைத்த தேநீரைக் கொண்டுவந்து தந்தாள். ஒரு அலுமினியத் தட்டில் ஆட்டுப்பாலில் செய்த வெண்ணெய் கட்டிகளும் வந்தன. நாங்கள் தேநீரைக் குடித்து, சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு புறப்பட்டோம்.

அதுவரைக்கும் கண்ணில் படாத சிறுமி பாய்ந்து வந்து தட்டை எடுத்துக்கொண்டு திரும்பினாள். திரும்பிய அதே சமயம் தன் பின்பக்கத்தை காட்டிக்கொண்டு பிளேட்டில் இருந்த அத்தனை வெண்ணெய்கட்டிகளையும் ஒரு கையால் அள்ளி வாயிலே திணித்தாள். பிறகு ஒன்றுமே நடக்காதது போல வெறும் பிளேட்டை விசிறிக் கொண்டு போய் குடிசையினுள் எறிந்துவிட்டு ஓடினாள்.

தோடம்பழம்

நாங்கள் வாகனத்தை அணுகுமுன்னர் அக்காவும் தம்பியுமாக ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு அதை நெருங்கினார்கள். பக்கக் கண்ணாடியில் சிறுமி தன் முகத்தைப் பார்த்து கைவிரல்களால் தலையை சீவினாள். கதவை திறந்ததும் அதைப் பிடித்துக் கொண்டு நின்றாள். இவள் கதவை பிடிக்காவிட்டால் அது விழுந்துவிடும் என்பதுபோல. வீட்டுக்கு வந்த விருந்தாளிகள் பத்து நாட்கள் கழித்து அவர்களைப் பிரிந்து போவதுபோல அந்தச் சிறுமியின் கண்களில் துக்கமும் ஏக்கமும் இருந்தது. நாங்கள் அவர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை. அப்படியும் எங்கள் பிரிவு அவளுக்கு தாங்க முடியாததாக  இருந்தது.

நண்பர் தன் பையில் இருந்த ஒரு தோடம்பழத்தை எடுத்துச் சிறுவன் கையில் கொடுத்தார். அவன் அதை கைகளில் பொத்திக்கொண்டு வேகமாக ஓடினான். அவள் துரத்தினாள். புள்ளியாகத் தெரியும்வரை ஓடினார்கள். அவள் எப்படியாவது அதைப் பறித்து விடுவாள் என்று தோன்றியது. அவன் அப்பொழுது அழுவான். தகப்பன் சிறுமிக்கு தழும்பு வரும்படி தண்டனை கொடுப்பார். அதற்கு முன்னர் அது ஆண்குற்றமா பெண்குற்றமா என்பதை தீர்மானிப்பார்.

நன்றி :அ.முத்துலிங்கம்
எழுத்தாளர் முத்துலிங்கத்தின் இணைய தளம்

எழுத்தாளர் அறிமுகக் குறிப்பு:
இலங்கையில் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்ததன் பின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டட்ர்ட் மனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்தி செய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்தேன். 2000ம் ஆண்டில் ஓய்வு பெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.

அறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல்கள் என எழுதியிருக்கிறேன்.

(அ.முத்துலிங்கத்தின் தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகளை அவரது அனுமதியுடன் இங்கே வெளியிடுகிறோம்.)

சொமேட்டோ ஊழியர் செய்தது தவறா ? பொங்கும் சமூகத்தோடு ஒரு உரையாடல் !

து ஒரு பரபரப்பான சாலை. வாகனங்கள் போகும் இறைச்சல் மட்டும் நமக்கு கேட்கிறது. இக்காட்சியை மாடியிலிருந்து ஒரு செல்பேசி கேமரா மூலம் பார்க்கிறோம். விரைந்து செல்லும் வாகனங்களை தவிர்த்து விட்டு சாலையோரத்தில் ஒரு இருசக்கர வாகனம் நிற்கிறது. அதில் ஒருவர் அமர்ந்தவாறு உண்கிறார்.

” சீட்டிங்” என தலைப்பிட்டு பகிரப்பட்ட வீடியோவின் முகப்பு.

அவரது சீருடை சொமேட்டோ நிறுவனத்தின் ஊழியர் என தெரிவிக்கிறது. அவரது பணி உணவுகளை ஓட்டல்களில் இருந்து பெற்று வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சேர்ப்பது. இருசக்கர வாகனத்தின் பின்னால் உணவுப் பொதிகள் இருக்கும் பெட்டகத்திலிருந்து அவர் ஒருசில பொட்டலங்களை எடுக்கிறார். அவற்றை கவனமாக திறந்து சில கவளங்களை கரண்டியினால் உண்கிறார். பிறகு பொட்டலங்களை கவனமாக மூடி வைக்கிறார். இக்காட்சி ஓரிரு நிமிடங்கள் ஓடுகிறது.

கடந்த ஒருவாரத்தில் இந்த வீடியோ காட்சி இந்தியாவின் பல்வேறு மொழிகளில் பரவியிருக்கிறது. பலரும் பொங்கியிருக்கின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக உணவுகளை வினியோகிக்கும் சீருடை அணிந்த இளைஞர்களை நாம் நகர சாலைகளில், தேநீர்க் கடைகளில், சாலையோர உணவகங்களில், சிறு-நடுத்தர-பெரிய உணவகங்களின் வாகன நிறுத்துமிடத்தில் காணலாம். அங்கே நின்று கொண்டு தங்களது செல்பேசியில் வரும் உணவு ஆர்டர் குறித்து விரல்களால் எழுதிக் கொண்டிருப்பார்கள்.

இத்துறையில் புதிய நிறுவனங்கள் வருடாவருடம் ஆன்லைன் சந்தையில் நுழைகின்றன. அதையொட்டி அவர்கள் வெளியிடும் சலுகைத் திட்டங்கள் அண்டசராசரத்திற்கு போட்டியாக ஆண்ட்ராய்டுகளில் பளிச்சிடுகின்றன. செல்பேசியில் ஆய்வு நடத்தி நுகர்வு கலாச்சார யோகத்தில் தான் மட்டும் மலிவாக செலவழிப்பதாக நம்பும் நடுத்தரவர்க்கம் இத்தகைய சலுகை தள்ளுபடி லேகியங்களை விரல் நுனியில் வைத்திருக்கும்.

பல அலுவலகங்களில் இதற்கான வாட்ஸ்அப் குழுக்கள் இருக்கின்றன. இன்று என்ன ஸ்பெஷல், 300 ரூபாய் பிரியாணி 100 ரூபாய்க்கு எங்கே கிடைக்கிறது, என்று பர்கரா, பீட்சாவா, உயர்தர டிகாஷன் காஃபியா என்று அவர்கள் அன்றைய பொழுதைக் கழிக்கிறார்கள். இப்படியாக கொஞ்சம் அதிகப்படியான மாதச் சம்பளம் வாங்கும் வசதியுள்ள நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கையில் ஆன்லைன் உணவு விநியோக ருசி நுழைந்து விட்டது.

ஆகவே முன்னர் கண்ட அந்தக் காட்சி செல்பேசி வழியே மக்களிடையே பரவியது ஆச்சரியமில்லை. கூடவே அந்த வீடியோ அந்த உணவு செயலிகளை பயன்படுத்துவோரிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதும் ஆச்சரியம் இல்லை. ஏனெனில் கையேந்தி பவன்களில் சுத்தமில்லை, சுகாதாரம் இல்லை, சேவையில்லை என்றெல்லாம் சலித்துக் கொள்ளும் நடுத்தர வர்க்கத்திற்கு நம்பகமான அதி சுவை அறுசுவை உணவு அனுபவத்தை இந்த ஆன்லைன் ஆப்புகள் தருகின்றன. ஆகவே அவர்கள் தமக்கு வழங்கப்படும் உணவு இப்படியெல்லாம் எச்சிலாக்கப்படுகிறதா எனக் குமுறுகிறார்கள்.

சமூக வலைதளங்கள் வளர்ந்து விட்ட இக்காலகட்டத்தில் யூடியூபில் நுகர்வுக் கலாச்சார ஆய்வுகளுக்கு என்றே பல சேனல்கள் இருக்கின்றன. அரசியல் செய்திகளை விட இத்தகைய அறுசுவை செய்திகளை ‘அறிவார்ந்து’ சொல்லும் போது சந்தையில் உங்களுக்கென்று ஒரு இடம் கிடைத்து விடுகிறது. இத்தகைய சேனல் சித்தர்கள் இப்படி வைரலாகும் வீடியோக்களை வைத்து ஒரு வாரத்தில் ஒரு பத்து பதினைந்து வீடியோக்களை தேற்றி விடுகிறார்கள். அதுவும் உணவு சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் அவர்கள் பயங்கரமாக ஆய்வு செய்து உண்மையை கண்டுபிடித்தே ஆகவேண்டிய கட்டாயக் கடமையிலும் இருக்கிறார்கள். சரி பார்சல் உணவை பிரித்து சாப்பிடுவதில் என்ன உண்மையை கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது?

சம்சா, ஜிலேபி, பானிபூரி, லட்டு என்று நாம் அறிந்த இந்தி வாலாக்கள் பலர் இந்த உணவு உண்ணும் காட்சியைப் பார்த்து கொதித்து எழுந்து விட்டார்கள். வாடிக்கையாளருக்கு உணவை சேர்க்கும் ஒருவர் இப்படியெல்லாம் நடந்து கொள்ளலாமா, வாடிக்கையாளர் என்பவர் பகவான் இல்லையா என்று காந்தி சொன்ன பொன்மொழிகளை எல்லாம் நினைவுகூர்கிறார்கள். பரவாயில்லை இந்த மட்டாவது காந்தி அவர்களிடம் தங்கியிருக்கிறாரே!

உலகெங்கிலும் உணவு விநியோகம் இப்படிப்பட்ட ஆன்லைன் மூலமாக நடக்கிறது என்றாலும் இத்தகைய எச்சில் சமாச்சாரம் எங்கேயும் இல்லை என இணையத்தில் பீறாய்ந்து தெரிவிக்கிறார்கள்.

இந்த உணவு உண்ணும் காட்சி எந்த நகரத்தில் எடுக்கப்பட்டது என்பது முதல் பிரச்சனை. அதில் பலரும் மும்பை தில்லி கொல்கத்தா பெங்களூரு என்று ஒரு சுற்று இந்தியா முழுவதும் புனித யாத்திரை சென்று விட்டு பிறகு மதுரைக்கு வருகிறார்கள். சொமேட்டோ நிறுவனமே அந்த வீடியோவில் உள்ளவர் மதுரையில் பணியாற்றும் தனது ஊழியர், அவர் செய்தது தவறு என்று ஒத்துக் கொண்டு விளக்கம் அளித்து விட்டது. அதன் பிறகே, இந்தப் புலனாய்வுப் புலிகள் இக்காட்சி மதுரையில் எடுக்கப்பட்டது என்பதை பிரேக்கிங் நியூசாக தருகிறார்கள்.

இந்திவாலாக்கள் மட்டுமல்ல தமிழ் கொழுக்கட்டைகளும் யூ டியூப்பில் சோசியல் டிரெண்டிங், சோசியல் ஃபண்டிங் என்று ஏகப்பட்ட சேனல்கள் நடத்துகிறார்கள். சுமேட்டோ நிறுவனத்தின் விளக்க கடிதத்தைப் போட்டு ஊழியரின் வீடியோவைப் போட்டு, பிறகு அவரது முகத்தை போட்டு நாலு தமிழ் வார்த்தைகளை தப்பும் தவறுமாக பேசி மாபெரும் ஊழலை கண்டு பிடிக்கிறார்கள். இதையே கிராபிக்ஸ் நேர்த்தியில் நிறுவனமயமான பெரும் யூடியூப் சானல்கள் செய்கின்றன. காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்பதால் தூ தூ வென துப்பித் தள்ளுகிறார்கள்.

அதிலும் சில சேனல்கள் மிகத் திறமை வாய்ந்த அறிஞர் பெருமக்களை அழைத்து வருகிறார்கள். ஆன்லைனில் உண்மைகளை கண்டுபிடிக்கும் அந்த நிபுணர்கள் லேசுப்பட்டவர்கள் அல்ல. விக்கிபீடியாவை நம்பி 2.0–வே இருக்கும் போது ஜிலேபி வாலாக்கள் மட்டும் நிபுணர்கள் இல்லை என்றால் எப்படி? அந்த அறிஞர்கள் ஃபேக்ட் செக்கிங்கை செய்வார்களாம்.

சேனலின் நெறியாளர் நின்றுகொண்டே ஜாலியாக இது எப்படி நடந்தது? யார் செய்தது? எது உண்மை? என்ன தீர்வு? என்ற கேள்விகளை தலை அசைத்து, தோள் குலுக்கி, கை  ஆட்டி, வார்த்தைகளைக் காட்டி பேசுகிறார்.

தவறுக்கு மன்னிப்புக் கேட்கும் சம்பந்தபட்ட பணியாளர்.

இதில் உள்ள ஞானம் என்னவென்றால் சொமேட்டோ நிறுவனமே இதை தீர விசாரித்து உண்மையை வெளியிட்டு விட்டது. அது ஊடகங்கள் முதல் தனிநபர்கள் வரை இரண்டாம் சுற்று வைரலாகியிருக்கிறது. அனேகமாக மூன்றாம் சுற்று அந்த மதுரைக்காரரின் பாவமன்னிப்பு மறுவாழ்வு பிரவேசமாக இருக்கலாம்.

சொமேட்டோ நிறுவனம் கொடுத்துள்ள விளக்கத்தின்படி அந்த ஊழியரிடம் விரிவாக பேசிய பிறகு அவரும் தவறை ஒத்துக் கொண்டாராம். பிறகு அவரை பணிநீக்கம் செய்திருக்கிறார்கள். இடைக்காலத்தில் அந்த ஊழியரின் பரிதாபத்திற்குரிய முகம் அனைத்து ஊடகங்களிலும் யூடியூப் சேனல்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பரவிவிட்டது. மதுரைக்காரரப் பய நமது மதுரை நகரத்தை கேவலப்படுத்தி விட்டான் என்று மதுரை வாசகர்கள் சிலர் மதுரைக்கு மானம் போனதாக பின்னூட்டத்தில் கூறுகிறார்கள். ஆனால் இதே மதுரையில் உள்ள பன் புரோட்டா கடை குறித்த வீடியோக்களை பார்த்த இந்தி வாலாக்கள், மாவு பிசையும் போது மாஸ்டரின் முழுக்கையும் வேர்வையோடு கலக்கிறது உவ்வே என்று இழித்திருப்பதால் பாசக்கார மதுரையர்கள் இதற்காக ரொம்பவும் வருந்த தேவையில்லை.

ஃபேஸ்புக்கிலோ தான் சாப்பிட்ட எச்சில் உணவை வாடிக்கையாளருக்கு கொடுக்க நினைத்தது எவ்வளவு பெரிய ஆரோக்கியக் கேடு என்று மருத்துவ விழிப்புணர்வையும் சேர்த்து விடுகிறார்கள். வெண்ணெய் திருடிய கண்ணனை போற்றும் நாட்டில் ஒரு அண்ணன் துன்ன உணவிற்காக இத்தனை பெரிய மகாபாரதப் புராணமா?

என்ன இருந்தாலும் அவர்கள் முகத்தை வெளியிட்டது தவறு என சிலர் மனிதாபிமானம் காண்பிக்கிறார்கள். அதுவும் கண்டிஷன் அப்ளையுடன். யூடியூப் இந்தி வாலாக்கள் மற்றும் ஆங்கில ஊடகங்களில் மறுமொழி போடுபவர்கள் அனைவரும் இந்த டெலிவரி பாய்-க்கு உரிய வகுப்பு, விழிப்புணர்வு, எச்சரிக்கை அளிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். பணமதிப்பழிப்பிலும், ஜி.எஸ்.டி.யிலும் சில நூறுபேரே கொல்லப்பட்ட நாட்டில், பல ஆயிரம் வாழ்க்கை அழிந்த நாட்டில் ஒரு ஃபிரைடு ரைசை ஒரு ஸ்பூன் சாப்பிட்டதற்கு என்னமா ஒரு அறச்சீற்றம்?

அந்த ஊழியரை பணி நீக்கம் செய்த சொமேட்டோ நிறுவனம் இனி கவனமாக இருப்போம் என வாக்குறுதியும் அளித்திருக்கிறது. யூடியுப் வீடியோக்களில் வந்த இந்தி வாலா வரலாற்று நிபுணர்கள் அந்த எச்சரிக்கையை பயங்கரமாக ஆய்வு செய்து கண்டுபிடித்திருக்கிறார்கள். அது என்ன தெரியுமா? இனிமேல் உங்களுக்கு ஹோட்டலிலிருந்து இருசக்கர வாகனத்தில் எடுத்து வரப்படும் உணவுக்கு சீல் வைக்கப் போகிறார்களாம். அந்த உரை இல்லாத உணவை நீங்கள் ஏற்கக்கூடாதாம். சரி டெல்லி செட்டு என்று போலிகளுக்கு பெயர்போன நாட்டில் ஒரு சீலை பிய்த்து இன்னொரு சீலை போடுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? தொலைபேசியில் ஏடிஎம் பின் நம்பர் கேட்டாலே சொல்லும் நாட்டில் ஒரிஜினல் சீலா, டூப்ளிகேட் சீலா என்பதெல்லாம் எம்மாத்திரம்?

அந்த மதுரைக்கார சொமெட்டோ ஊழியர் தனது பசி வேகத்தினாலும் அல்லது ருசி மோகத்தினாலும் அந்த உணவை கொஞ்சம் ருசி பார்க்க நினைத்திருக்கலாம். எப்படியோ இருந்து விட்டு போகட்டும். இவை எல்லாவற்றையும் கணக்கில் கொண்டாலும் கூட அந்த ஊழியர் செய்த தவறு மாபெரும் தவறு அல்ல. மேலும், இந்தியா முழுவதும் இப்படி உணவு விநியோகத்தை செய்து வரும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களில் மிக அரிதினும் அரிதாக ஓரிருவர் செய்யக்கூடிய தவறு தான் இது. இதற்கு மேல் இதை மாபெரும் அறச்சீற்றமாக ஆய்வு செய்வதுதான் அலுப்பூட்டுகிறது.

சமீப ஆண்டுகளாக வேலைவாய்ப்பு குறைந்திருக்கும் சூழலில் ஏதோ ஒரு வேலையில் சேர்ந்து பிழைப்பை நடத்த மாட்டோமா என இளைஞர்கள் வெறுப்புடன் வாழ்கிறார்கள். அப்படி கிடைத்தது தான் இந்த வேலை. தினசரி பத்து அல்லது இருபது சவாரிகள் சென்றால் சில நூறு ரூபாய் சம்பளம் கிடைக்கும். அதிலும் ஆயிரத்தெட்டு நிபந்தனைகள் அவர்களுக்கு இருக்கிறது.

ஸ்விக்கி ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம்.

சமீபத்தில் ஸ்விக்கி ஊழியர்கள் தமது நிறுவனத்தை எதிர்த்து சென்னையில் வேலை நிறுத்தம் செய்தார்கள். அந்நிறுவனம் ஊழியர்களுக்கு வழங்கி வந்த கட்டணத்தை குறைத்தது காரணமாக அவர்கள் போராடினார்கள். அது தொடர்பான ஊடக வீடியோக்களில் அவர்களது பணிச் சிரமத்தை முன்வைக்கிறார்கள். உரிமையாளர் யார் என்றே தெரியாத இந்த நிறுவனங்கள் இவர்களை கூட்டாளிகள் என்று வேறு அழைக்கிறதாம். அல்வாவும், பிரியாணியும் முக்கால் விலையில் தள்ளுபடி வரும்போதே உறைத்திருக்க வேண்டும், இந்த தள்ளுபடியின் பலிகடா யார் என்று!

அம்பானியின் மகள் திருமணம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் நடக்கிறது. அம்பானியின் ஆன்டிலியா மாளிகை இருக்கும் மும்பைக்கு அருகில் இருக்கும் மராத்வாடா பகுதியில் மகளுக்கோ மகனுக்கோ திருமணம் செய்ய முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இப்படி வாழ்க்கை, மகிழ்ச்சி, தொழில், உழைப்பு அனைத்திலும் இரு வேறுபட்ட பிரதேசங்களாக நமது சமூகமும் நாடும் பிரிந்திருக்கிறது

சமீப ஆண்டுகளாக சிவில் சமூகத்தில் நடக்கும் வன்முறைகளைப் பாருங்கள். செல்பேசி வாங்குவதற்காக, திருட்டு சோனி பிளேஸ்டேஷன் வாங்குவதற்காக, ஆடம்பட வாழ்க்கை நடத்த வேண்டிய செலவுகளுக்காக நடக்கும் கொலைகள், பைக் ரேஸில் பங்கெடுத்து துடிப்பை நிலைநாட்டுவதற்காக அப்பாவை நச்சரித்து அதிஉயர் விலையில் பைக்கை வாங்கிய இளைஞர் அதே ரேசில் பலி, குன்றத்தூர் அபிராமி என எங்கே எந்த குடும்பத்தில் வன்முறை வெடிக்கும் என்பது தெரியாமல் இந்த சமூகம் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த ஓட்டத்தில் நான் என்னுடைய எதிர்கால வாழ்க்கையில் எங்கே இருக்கிறேன் என்று வேலை பார்க்கும் அல்லது வேலை தேடும் அனைவருக்கும் ஒரு பதட்டம் எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது. பிடித்த வேலை கிடைக்காமல் கிடைத்த வேலையில் பயணிக்கும் இளைஞர்களும் நமது எதிர்பார்ப்பு கற்பனைத் திறத்திற்கு ஏற்ப சோர்வடைகிறார்கள். சில தருணங்களில் குறுக்கு வழியில் பயணித்தால் வசதியை எட்ட முடியும் என்ற சித்த வைத்திய கதைகளையும் நம்புகிறார்கள்.

படிக்க:
இணைய வணிகத்தின் பின்னால் வதைபடும் அடிமைத் தொழிலாளர்கள் !
ஏண்ணே ! வெற்றிகரமான தோல்வின்னா என்னான்னே ?

ஆம். நாம் வாழும் சமூகத்தில் மதிப்பீடுகள் அருகி வருகிறது. அந்த அருகுதலை ஏற்றத்தாழ்வாய் பிரிந்திருக்கும் சமூகம் அதி வேகப்படுத்தி வருகிறது. இருப்போரும் இல்லாதோரும் சேர்ந்து பயணிக்கும் சமூகத்தில் இரக்கமோ, மனிதாபிமானமோ, கடமை உணர்வோ நாம் கருதும் தரத்தில் இருப்பதில்லை. ஆர்டர் செய்த உணவு தாமதமாக கொண்டு வந்தார் என்று வீட்டு நாயை விட்டு கடிக்க வைக்கும் ஆத்திரம் அந்த மேன்மகனது பசிவெறியில் இருக்கிறது. அதே பசிவெறி அலைந்து திரிந்து உடலை புண்ணாக்கி பைக்கில் வரும் ஒரு ஊழியருக்கு இருக்கக் கூடாது என்கிறார்கள் இந்தக் கனவான்கள்.

வாடிக்கையாளருக்கு தரவேண்டிய உணவை மதுரை சொமெட்டோ ஊழியர் எச்சில்படுத்துவதை ஆய்வு செய்த அறிஞர் பெருமக்கள் ஒன்றை மட்டும் பார்க்க மறுக்கிறார்கள். அந்த அளவுக்கு தன் மீதும் தன் வேலை மீதும் மதிப்பில்லாமல் அவர் இருந்திருக்கிறாரே அது ஏன்? அவரது ஊதியம் என்ன, அவரது இடைவெளி நேரம் என்ன, அவர் உண்பதற்கு சொமெட்டே நிறுவனம் என்ன ஏற்பாடு செய்திருக்கிறது இவையெல்லாம் சரியாக இருந்தால் அவர் அந்த தவறினை செய்திருக்க வாய்ப்பிருந்திருக்காது.

சென்னையில் போராட்டம் செய்த ஸ்விக்கி டெலிவரி ஊழியர்கள், உணவு வாங்கும் இந்தி வாலாக்கள் தம்மை மரியாதையுடன் நடத்துவதாகவும், உள்ளூர் மக்கள்தான் மரியாதை இன்றி நடத்துவதாக கூறுகிறார்கள். நாக்கில் பதிந்து விட்ட ருசி விசுவாமித்திரர் போல வெறியுடன் வெளிப்படுகிறது. உணவைக் கொண்டு வரும் ஊழியர் தாமதாமாக வந்தாலோ, உணவு  சூடு ஆறினாலோ, இல்லை பொட்டலித்திலிருந்து ஒழுகினாலோ அவ்வளவுதான். அந்த ஊழியரின் அந்த நாள் மூட் அவுட்டாகிவிடும்.

இத்தகைய ஆய்வு எதுவும் தேவைப்படாமலேயே அந்த இளைஞர் உணவு உண்ணும் காட்சியை பெரிதுபடுத்தாமல் போய் இருக்கலாம். ஆனால் வாஷிங் மெஷினிலிருந்து அல்ட்ரா மாடர்ன் நவீன தொலைக்காட்சி வரையிலும் வெள்ளிக்கிழமை ஆன்லைன் கியூ வரிசையில் நின்று புத்திசாலித்தனமாக முதலில் வாங்குவதை ஷேர் செய்யும் நாடிது! அதே நாட்டில்தான் கோரக்பூரில் குழந்தைகள் மருத்துவமனையில் சாகின்றன. விவசாயிகள் இலட்சக்கணக்கில் தலைநகரம் சென்று போராடுகிறார்கள். மல்லையாவும், நீரவ் மோடியும் வங்கி பணத்தை முழுங்கி விட்டு வெளிநாடுகளில் உலா வருகிறார்கள்.

ஆளும் வர்க்கம் மக்களை எச்சக்கலை போல நடத்துவதற்கு வராத கோபம் ஒரு பரிதாபத்திற்குரிய தவறைச் செய்த ஒரு ஊழியர் மேல் வருவதுதான் நம்முடைய கோபம்.

– இளநம்பி

சத்துணவில் வெங்காயமும் பூண்டும் தீட்டாம் ! இந்துத்துவ இஸ்கான் கும்பலின் கொழுப்பு !

ரசு உத்தரவிட்டாலும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் மதிய உணவில் பூண்டையும், வெங்காயத்தையும் சேர்க்க முடியாது என “அட்சய பாத்ரா” எனும் என்.ஜி.ஓ. நிறுவனம் மறுத்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் மதிய உணவு வழங்கும் திட்டம் கடந்த 2002-ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. அரசு மற்றும் அரசு ஆதரவுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைகிறார்கள். இங்கு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க கர்நாடக அரசு பல்வேறு என்.ஜி.ஓ. அமைப்புகளோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு அத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது.

அதில் ஒரு என்.ஜி.ஓ-தான் “அட்சய பாத்ரா”. இந்நிறுவனம் இந்துத்துவா அமைப்பான “இஸ்கான்” (ISCKON) அமைப்பின் துணை நிறுவனமாகும். கர்நாடகத்தின் மிகப்பெரிய மதிய உணவு வழங்குனராக இந்த என்.ஜி.ஓ செயல்பட்டு வருகிறது. அரசாங்கத்திடமிருந்து பெறப்படும் பணம் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க நன்கொடைகள் பெறுவதன் மூலமாக கர்நாடகாவில் மட்டும் சுமார் 4.43 இலட்சம் பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கி வருகிறது.

இந்நிறுவனம் தங்களது நம்பிக்கையின்படி ’சாத்விக’ உணவுகளையே சமைக்கவும் உண்ணவும் செய்வார்களாம். அந்த அடிப்படையில் கடந்த 16 ஆண்டுகளாக மாணவர்களுக்கு சமைத்து வழங்கும் உணவில் வெங்காயம் மற்றும் பூண்டை அறவே தவிர்த்து வருகிறது.  ஏனெனில் அவை ’தமஸ்’ வகைப்பட்ட உணவுகளாம்.

இந்நிலையில், அரசால் பரிந்துரைக்கப்பட்ட உணவுப் பட்டியலில் உள்ளபடி உணவு வழங்கவேண்டும் என மதிய உணவு வழங்கல் திட்டத்தின் அலுவலர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் இந்த நிறுவனம் அரசுடன் 2018-19-ம் ஆண்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையெழுத்திட மறுத்து, சாத்விக உணவுகளையே தாம் தொடர்ந்து வழங்கப் போவதாகத் தெரிவித்திருக்கிறது.

இது குறித்து கர்நாடக அரசின் மதிய உணவுத் திட்டத்தின் கூடுதல் இயக்குனர் எம்.ஆர். மாருதி கூறுகையில் “சமீபத்தில்தான் அந்நிறுவனத்திடம் வெங்காயம் மற்றும் பூண்டை உணவில் சேர்க்கக் கூறி வழிகாட்டுதல் அனுப்பினோம். மதிய உணவில் வெங்காயமும், பூண்டும் சேர்ப்பது ஊட்டச்சத்தை மட்டுமல்ல, உணவின் சுவையையும் அதிகரிக்கும். இதனை கருத்தில் கொண்டே நாங்கள் அந்நிறுவனத்தை மாநில அரசு தரும் பட்டியலின்படி உணவு வழங்கக் கேட்டிருக்கிறோம். ஆனால் அவர்கள் எங்கள் கடிதத்திற்கு இன்னும் பதிலளிக்கவில்லை.” என்றார்.

கர்நாடகத்தில் மொத்தம் 71 என்.ஜி.ஓ. நிறுவனங்கள் மதிய உணவு திட்டத்தை செயல்படுத்துகின்றன. சுமார் 9.31 இலட்சம் மாணவர்கள் இந்த மதிய உணவுத் திட்டத்தின் கீழ பயனடைகின்றனர். இதில் 4.43 இலட்சம் மாணவர்களுக்கான உணவை அட்சய பாத்ரா என்.ஜி.ஓ. வழங்கி வருகிறது. இத்திட்டத்தில் இணைந்திருக்கும் பிற தன்னார்வ நிறுவனங்களும், அறக்கட்டளைகளும் அரசாங்கம் தரும் பட்டியலை ஏற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் ‘அட்சய பாத்ரா’ என்.ஜி.ஓ. மட்டும் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

‘அட்சய பாத்ரா’ தனது அதிகாரப்பூர்வ செய்தி வெளியீட்டில், “மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசின் மனித வளத்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ள ஊட்டச்சத்துக்கள் இருக்கும்படியான உணவையே நாங்கள் வழங்குகிறோம் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளது.

அதாவது “பூண்டையும் வெங்காயத்தையும் சேர்க்க முடியாது. உன்னால் ஆனதைப் பார்” என்பதையே நாசூக்காக தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த ஆண்டு மதிய உணவு வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துள்ளதன் மூலம், “பள்ளி மாணவர்களை பட்டினி போட்டுவிடுவேன், ஜாக்கிரதை” என மறைமுகமாக மிரட்டியுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ஆதிக்க சக்திகள் தமது கட்டுப்பாட்டில் வைத்து மிரட்டுவதற்கான ஏற்பாடுதான் இந்துத்துவா என்.ஜி.ஓ.-க்கள் என்பதை ‘அட்சய பாத்ரா’ தெளிவாக உணர்த்தியிருக்கிறது.

கர்நாடக மதிய உணவுத் திட்டம்

சமூக வலைதளங்களில், ஆர்.எஸ்.எஸ்., பாஜக மற்றும் பல்வேறு இந்துத்துவவாதிகள் “அட்சய பாத்ரா”-வுக்கு ஆதரவு அளித்து வருகின்றன. இந்த ”தொண்டு நிறுவனத்தின்” மத நம்பிக்கையை குமாரசாமி அரசு பறிக்க நினைப்பதாக கூச்சலிடுகின்றனர். இது தொண்டு நிறுவனத்தின் மத நம்பிக்கையா? அல்லது சனாதன தர்மமா?

இந்து சனாதன கும்பலான இஸ்கான் அமைப்பின் ஒரு பிரிவான ‘அட்சய பாத்ரா’ நடைமுறைப்படுத்துவது சுத்தமான பார்ப்பனியமே. வட இந்திய பார்ப்பனமயமாக்கப்பட்ட ஜெயின்களின் நம்பிக்கையின் படி வெங்காயம், பூண்டு ஆகியவை தமஸ் குணத்தைக் கொண்ட காய்கறிகள். அதாவது ‘சூத்திர’ காய்கறிகள். இந்தக் காய்கறிகளை உட்கொண்டால் கெட்ட உணர்ச்சிகள் உண்டாகுமாம். அதன் காரணமாக இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது என்பது இந்த பார்ப்பன சனாதனிகளின் கோட்பாடு. காய்கறிகளிலும் கூட தமது சாதிய வன்மத்தைக் காட்டுகிறார்கள்.

“இஸ்கான் அமைப்பைச் சேர்ந்தவர்களையோ அல்லது ”அக்சய பாத்ரா”-வைச் சேர்ந்தவர்களையோ யாரும் பூண்டையும், வெங்காயத்தையும் தின்னச் சொல்லவில்லையே. இவர்களது சனாதன தர்மம் வகுத்துத்தந்த விதிப்படி சூத்திரர்களாகவும், பஞ்சமர்களாகவும் ஆக்கப்பட்ட இலட்சக்கணக்கான உழைக்கும் வர்க்கத்தின் வாரிசுகள்தானே? இந்த ’சூத்திரக் காய்கறிகளை’ சமைத்துப் போடுவதற்கு இவர்களுக்கு என்ன கேடுவந்தது?” என நீங்கள் கேட்கலாம். ஆனால் இவர்கள் சூத்திரக் காய்களை சமைக்கக்கூட மாட்டார்களாம். அவ்வளவு ஆச்சாரமாம் ! ஏனெனில் சூத்திரனை தொட்டாலே தீட்டுதான் அல்லவா?

படிக்க:
ஆச்சாரமான அய்யராத்து உணவகங்கள் – அருவெறுப்பின் உச்சம் !
இந்து சாதி அமைப்புதான் முதலாளித்துவத்தின் தாய் – அருந்ததி ராய்

ஆனால் இந்த என்.ஜி.ஓ. நிறுவனம் மதிய உணவுத் திட்டத்திற்காக ஆயிரக்கணக்கானோரிடம் நன்கொடை பெறுகிறது. இந்த ஆயிரக்கணக்கானோரில் 99% ‘சூத்திரர்களும்’ ‘பஞ்சமர்களும்’தானே ! அவர்கள் இரத்தத்தில் ‘சூத்திரக்’ காய்கறிகளான வெங்காயமும் பூண்டும் கலந்தில்லாமல் இருக்குமா ? இவர்களுக்கு ‘சூத்திரன்’ கசக்கிறானாம். சூத்திரக் காய்கறி கசக்கிறதாம். ஆனால், சூத்திர பஞ்சமர்களின் பணம் மட்டும் இனிக்கிறதாம் இந்தக் கும்பலுக்கு.

இணையத்தில் அட்சய பாத்ரா-வுக்கு ஆதரவாக லாவணி பாடும் இந்துத்துவக் கும்பல், கர்நாடக அரசுக்கு 4.43 இலட்சம் மாணவர்களின் உணவுக்கு அட்சய பாத்ரா நிறுவனம் வழங்கும் பங்களிப்பின் அருமை தெரியவில்லை எனக் கூறிவருகிறது. அதாவது 4.43 இலட்சம் மாணவர்களுக்கு அட்சய பாத்ரா அமைப்பு போனால் போகட்டும் என பொங்கிப் போடுகிறதாம். கர்நாடக அரசுக்கு அதன் அருமை புரியவில்லையாம்.

ஆனால் உண்மை என்ன ? இலட்சக்கணக்கான ‘சூத்திர’ மாணவர்களைக் காட்டிதான் இந்த ‘அட்சய பத்ரா’ என்.ஜி.ஓ. ஆயிரக்கணக்கான ‘சூத்திரர்களிடம்’ பணம் பெற்று தனது நிறுவன தொந்தியையும், தமது இந்துத்துவ அரசியல் நோக்கையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது என்பதுதானே உண்மை.

இந்தப் பார்ப்பனக் கொழுப்பை கொத்தி எடுக்காமல் நமது குழந்தைகளுக்கு சத்துணவும் கிடையாது, சமத்துவமும் கிடையாது.


நந்தன்
செய்தி ஆதாரம் : நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

 

இதையும் பாருங்களேன்…
அண்ட சராசரம் கண்டு நடுங்கிட இந்து தினமணி ஜிஞ்சக்க.. ஜிஞ்சா.. – பாடல்