Friday, May 16, 2025
முகப்பு பதிவு பக்கம் 106

பாசிஸ்டுகளின் துருப்புச் சீட்டாகும் இடஒதுக்கீடு: சங்கப்பரிவாரங்களும் தம்பிமார்களும்!

பெரும்பான்மை மக்களிடம் சிறுபான்மையினராக உள்ள ஒருதரப்பு மக்களை, அவர்களின் எதிரிகளாகக் காட்டுவதும், மொழி, இனம், மதம், பண்பாடு என பலவகைகளிலும் அச்சிறுபான்மை சமூகத்தினரை ‘அந்நியர்களாக’ச் சித்தரித்து பெரும்பான்மை மக்களிடம் வெறுப்புணர்வை உருவாக்குவதும் பாசிஸ்டுகளின் பொது வழிமுறையாகும்.

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் முன்வைக்கும் இந்துதேசியமும் சரி, சீமான் கும்பல் முன்வைக்கும் ‘தமிழ்தேசிய’மும் சரி, ஒருதரப்பு மக்களை எதிரிகளாகக் காட்டி கட்டமைக்கப்படும் பாசிச அரசியலே. தமது பாசிச அரசியலைக் கட்டமைக்க அவர்கள் பல்வேறு விவகாரங்களை, தமது அரசியல் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி வருகிறார்கள். அவற்றில், இடஒதுக்கீடு இன்று முக்கியமானதாக மாறியிருக்கிறது.

1990-ல் மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டபோது, இது ‘இந்துதேசத்தை பிளவுபடுத்தும்’ முயற்சி என்று கொதித்தது ஆர்.எஸ்.எஸ். மண்டல் கமிஷனுக்கு எதிராக வடமாநிலங்களை வன்முறைக்காடாக்கியது சங்கப்பரிவாரக் கும்பல். எந்த இடஒதுக்கீடு இந்துதேசத்தை பிளவுபடுத்தும் என்று நஞ்சைக் கக்கியதோ, இன்று அதே இடஒதுக்கீட்டை இந்துராஷ்டிரத்தை நிறுவுவதற்கு தமது அரசியல் கருவியாக பயன்படுத்திக்கொள்ள விழைகிறது பாசிசக் கும்பல்.

இன்னொருபக்கம், தமிழினத்தின் ஒற்றுமைக்கு பெருந்தடையாக உள்ள சாதியை ஒழிப்பது பற்றி பேசாமல், சாதி அடையாளத்தை பெருமிதமாகக் கருத வேண்டும் என்கிற சீமான், ‘தமிழனை ஒன்றிணைப்பதற்கும்’ ‘வந்தேறிகளுக்கு எதிராக போர் புரியவும்’ இடஒதுக்கீட்டை கையிலெடுத்துள்ளார்.

சங்கிகளின் மதவெறி துருப்புச் சீட்டு!

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதையொட்டி, தமது வாக்குவங்கியை அதிகரிக்கும் நோக்கத்தில் எஸ்.சி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை 15-லிருந்து 17 சதவிகிதமாகவும் எஸ்.டி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை 3-லிருந்து 7 சதவிகிதமாகவும் உயர்த்தியிருக்கிறது பா.ஜ.க. அரசு. மேலும், முஸ்லிம்களுக்கு இருந்த 4 சதவிகித இடஒதுக்கீட்டை ரத்துசெய்த பா.ஜ.க, அதை லிங்காயத்துக்கள் மற்றும் ஒக்கலிகா சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கு தலா 2 சதவிகிதமாக பிரித்து வழங்கியுள்ளது.

இதன்மூலம் ஒரேநேரத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்ச்சியைக் கிளறிவிடுதோடு, கர்நாடகத்தில் மிகப்பெரிய வாக்குவங்கியைக் கொண்டுள்ள லிங்காயத்துக்கள் மற்றும் ஒக்கலிகர் சமூகத்தை தன் பக்கம் திரட்டும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது பா.ஜ.க.


படிக்க: முஸ்லீம் மக்களுக்கான இடஒதுக்கீட்டை ஒழித்துகட்ட துடிக்கும் பாசிச பாஜக!


முஸ்லிம்களின் 4 சதவிகித இடஒதுக்கீடு ரத்துசெய்யப்பட்டதை கர்நாடக காங்கிரஸ் எதிர்த்துள்ளது. காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் 4 சதவிகித இடஒதுக்கீட்டை மீண்டும் கொண்டுவரப்போவதாக அறிவித்துள்ளார் காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமார்.

சாமராஜ் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் டி.கே.சிவக்குமாரின் அறிவிப்பை சுட்டிக்காட்டி பேசிய அமித்ஷா, “அப்படியானால் யாருடைய இடஒதுக்கீட்டைக் குறைத்து முஸ்லிம்களுக்கு 4 சதவிகித இடஒதுக்கீட்டைத் தருவீர்கள்? லிங்காயத்துகள், ஒக்கலிகர்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டு அளவைக் குறைப்பீர்களா” என மத மோதலைத் தூண்டும்வகையில் கேள்வியெழுப்பியுள்ளார்.

கர்நாடகாவில் கையாண்ட இதே உத்தியை பா.ஜ.க பிற மாநிலங்களுக்கு விரிவுபடுத்தும் திட்டத்தில் உள்ளது. அமித்ஷா தெலுங்கானாவில் தான் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில், “கல்வி மற்றும் வேலைவாய்ப்பிலும், அரசின் சமூக நலத்திட்டங்களிலும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது. இதுபோன்ற இரட்டைச் சலுகைகளை பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் ரத்து செய்யும்” என்று அறிவித்துள்ளார்.

கடந்த ஜனவரியில், காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில், ஆர்.எஸ்.எஸ்-ன் பழங்குடி அமைப்பான ஜன்ஜாதி சுரக்‌ஷா மஞ்ச் மிகப்பெரிய வன்முறை வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்துவிட்டிருந்தது. நாராயண்பூர் மாவட்டத்தில், 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கிறித்தவ மதத்திற்கு மாறிய பழங்குடிகளுக்கு எதிராக நடைபெற்ற தாக்குதல்களில் 400-க்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். “தாய்மதத்திற்கு திரும்ப வேண்டும் அல்லது வசிப்பிடத்தைவிட்டு வெளியேற வேண்டும்” என்பது வன்முறையில் ஈடுபடும் ஆர்.எஸ்.எஸ் குண்டர் அமைப்பின் முழக்கம். மதம்மாறிய பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை ரத்துசெய்ய வேண்டும் என்பதும் அக்கும்பலின் முக்கிய பிரச்சாரமாக உள்ளது.

சங்கப்பரிவார அமைப்புகளுள் ஒன்றான விஷ்வ ஹிந்து பரிஷத், மதம் மாறிய எஸ்.சி, எஸ்.டி.க்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்துசெய்ய வேண்டுமென பல பிரச்சார இயக்கங்களை நடத்தியுள்ளது. அண்மையில்கூட, கடந்த மார்ச் 4-5 தேதிகளில் உத்தரப்பிரதேசத்தில், “இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய எஸ்.சி.க்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமா?” என்ற தலைப்பில் ஒரு மாநாட்டை நடத்தியுள்ளது.

பார்ப்பன-உயர்சாதி மேலாதிக்கத்திற்கு எங்கே பங்கம்வந்துவிடுமோ என்று ஒருகாலத்தில் இடஒதுக்கீட்டை எதிர்த்த ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க, இன்று சமூகநீதி வேடம்போடுகிறது. ஆனால், வாக்குவங்கி அரசியலுக்காகக்கூட பா.ஜ.க. அறிவித்துள்ள இடஒதுக்கீட்டு பலன்கள் அம்மக்களை சென்றடையப் போவதில்லை. “எல்லாம் தனியார்மயம்” என்ற தாரக மந்திரத்தை உயிர்மூச்சாக அமல்படுத்திவரும் மோடி ஆட்சியில், அரசு வேலைவாய்ப்புக்கு எங்கே போய் நிற்பது? கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் அரைகுறையாக அமல்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த இடஒதுக்கீட்டுக்கும் குழிபறிப்பதற்கு உயர்சாதி ஏழைகளுக்கான (EWS) 10 சதவிகித இடஒதுக்கீடு என்ற அம்பை எய்துள்ளது பாசிசக் கும்பல். இதன்மூலம் மீண்டும் இந்திய சமூகத்தில் பார்ப்பன மேலாதிக்கம் முற்றுமுழுதாக நிலைநாட்டப்பட இருக்கிறது.

இவை எதுகுறித்தும் நாம் சிந்திக்கமுடியாதபடி மதவெறியை நம் மண்டைக்குள் திணித்துவருகிறது பாசிசக் கும்பல்.

தம்பிகளின் இனவெறி துருப்புச் சீட்டு!

உசிலம்பட்டியில் நடைபெற்ற கூட்டமொன்றில் பேசிய சீமான், தமிழ்நாட்டில் மட்டும்தான் கர்நாடகம், ஆந்திரா, கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கப்படுவதாகவும், ஆனால் அந்த மாநிலங்களில் வாழக்கூடிய தமிழர்களுக்கு அம்மாநில அரசுகள் இடஒதுக்கீடு வழங்குவதில்லை என்று பொருள்படும்படியும் பேசியிருந்தார்.

“நான் இங்கிருக்கிற ரெட்டியாருக்குக் கொடுப்பேன். தெலுங்குச் செட்டியாருக்குக் கொடுப்பேன். கன்னடச் செட்டியாருக்குக் கொடுப்பேன். நாயுடுக்கு கொடுப்பேன். ஆனால், ஆந்திராவுக்குப் போவேன். கர்நாடகாவுக்குப் போவேன். இங்கிருக்கிற கன்னடர்களுக்கு நான் இவ்வளவு கொடுத்திருக்கேன். இங்க ஒன்னேகால் கோடி என் தமிழன் இருக்கான். அவனை நீ ஓ.பி.சி.ல வச்சிருக்க. out of backward (அவுட் ஆஃப் பேக்வேர்ட் கிளாஸ்)ன்னு வச்சிருக்க. அதில்லாம நாங்க இடஒதுக்கீடு கொடுப்பத போல கொடு என்பேன்” என்று தனது உரையில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Other backward class (அதர் பேக்வேர்ட் கிளாஸ்) என்பதை out of backward caste (அவுட் ஆஃப் பேக்வேர்ட் கிளாஸ்) என்று சீமான் குறிப்பிட்டிருப்பதன் மூலம், அவருக்கு இடஒதுக்கீடு பற்றிய அடிப்படை அறிவே இல்லையென்பதை வெளிப்படுத்தியுள்ளார் என்றும், சீமானை உட்காரவைத்து ஓ.பி.சி (OBC) என்றால் other backward class என்று எழுதப் பயிற்றுவிக்க வேண்டும் என்றும் சமூக ஊடகங்களில் பலரும் வருத்தெடுத்துவிட்டனர்.


படிக்க: அருந்ததியர் மக்களை வந்தேறி என்ற சீமான் | மக்கள் அதிகாரம் கண்டனம்


யூடர்ன் போன்ற சில வலைதளங்களை நடத்துவோர், பிற மாநிலங்களில் வாழும் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை என்ற சீமானின் கூற்று அடிப்படையிலேயே பொய் என்பதை அம்பலப்படுத்தினர். எந்தெந்த சாதிப்பட்டியலில் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது என்ற ஆதாரங்களையும் வெளியிட்டனர். மேலும் ஓ.பி.சி இடஒதுக்கீட்டுப் பிரிவானது ஒன்றிய அரசின் வகைப்படுத்தல் எனவும், மாநிலங்களின் இடஒதுக்கீட்டு வகைப்பாட்டின் கீழ் வருவதில்லை எனவும் அம்பலப்படுத்தியிருந்தனர்.

எப்படி இருந்தபோதிலும் சீமானின் பேச்சு, “தற்குறித்தனமாக உளருகிறார்” என்று நையாண்டி செய்து கடந்துசெல்லப்பட்டதே தவிர, சீமான் கையிலெடுத்துள்ள அபாயகரமான அரசியலைப் பற்றி எந்த ஒரு பொதுவிவாதமும் நடத்தப்படவில்லை.

சீமான் ஏதோ ஒன்றும் தெரியாமல் உளரவில்லை. கர்நாடகத்திலோ, ஆந்திரத்திலோ தமிழை பூர்விகமாகக் கொண்டவர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது என்பது சீமானுக்கு தெரியாததல்ல. out of backward (அவுட் ஆஃப் பேக்வேர்ட் கிளாஸ்) என்ற சொல்லாடலை சீமான் தெரிந்து உதிர்த்திருந்தாலும் சரி, தெரியாமல் தற்குறித்தனமாகவே கூறினாலும் சரி, அதற்கு பின் ஒரு கேடான நோக்கம் உள்ளது.

கன்னடம், தெலுங்கு, மலையாளம் பேசும் சாதிகளுக்கு இடஒதுக்கீடு கொடுப்பதால்தான் இங்குள்ள ‘தமிழ்க் குடிகளுக்கு’ (சாதிகளுக்கு) வாய்ப்பு பறிக்கப்படுகிறது. ஆனால், நமது ‘தமிழ்க் குடிகளுக்கு’ அந்த மாநிலங்களில் இடஒதுக்கீடு கொடுக்கப்படுவதில்லை என்று இனவெறியைத் தூண்டிவிடுவதுதான் சீமான் உரையின் நோக்கம்.

இனவெறியைத் தூண்டிவிடுவதற்கு கூட சீமானால் எப்படி இவ்வளவு பெரிய அண்டப் புளுகுகளை அவிழ்த்துவிட முடிகிறது என்று சிலருக்கு கேள்வி எழலாம். தனது உரைக்கு கைதட்டி விசிலடிக்கும் கூட்டத்திற்கு நாம் சொல்வதைக் கண்மூடித்தனமாக நம்பும் அளவிற்குதான் ‘பொது அறிவு’ உள்ளது என்ற நம்பிக்கையே அவ்வாறு பேசுவதற்கு சீமானுக்கு தைரியம் கொடுத்தது. ஆனால், கேட்பவர்கள் தனது தம்பிமார்கள் மட்டுமில்லை என்பதை மறந்துபோனதுதான் சீமான் செய்த பிழை.

ஆகவே இடஒதுக்கீடு பற்றிய சீமானின் பேச்சை ஏதோ உளறலாகப் புரிந்துகொள்ளக்கூடாது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில், அருந்ததியர்கள் விஜயநகரப் பேரரசு காலத்தில் தமிழ்நாட்டில் தூய்மைப் பணி செய்வதற்காக கொண்டுவரப்பட்ட ‘வந்தேறிகள்’ என்று பேசியது ஜனநாயக சக்திகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மக்கள் அதிகாரம் உள்ளிட்டு பல்வேறு அமைப்பினர் சார்பில் சீமானது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தபட்டது. ஆதித்தமிழர் பேரவை சார்பில் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

அதன் பிறகும் அருந்ததியர் மக்களுக்கு எதிரான இனவெறி பிரச்சாரத்தை சீமானது தம்பிமார்கள் தொடர்ந்தார்கள். ஏப்ரல் மாதத் தொடக்கத்தில், பத்திரிகையாளர் சந்திப்பில் ஒன்றில் பேசிய சீமான் தெலுங்குக் குடியான அருந்ததியர்களுக்கு உள் இடஒதுக்கீடு கொடுத்ததால் ஆதித் தமிழ்க் குடிகளின் இடஒதுக்கீடு பறிபோனதாகப் பேசினார்.

“ஏற்கெனவே போராடித்தான் ஆதித்தமிழ்க் குடிகள் 18 சதவிகிதம் இடஒதுக்கீடு வைத்திருக்கிறோம். அதில் 3 சதவிகிதம் உள் இடஒதுக்கீடாக அருந்ததியினருக்கு ஏன் கொடுத்தீங்க? தனி இடஒதுக்கீட்டை உருவாக்கித் தர வேண்டியதுதானே. முழுவதும் வஞ்சகம், துரோகம், ஏமாற்று” என்று பேசினார்.

அருந்ததியின மக்களுக்கு எதிராக பிற ஒடுக்கப்பட்ட பட்டியல் சமூக மக்களைத் தூண்டிவிடுவது, இதன்மூலம் சாதியக் கலவரங்கள் மூண்டெழுந்தால், அதை ‘இன உரிமைப் போராக’ சித்தரித்து அதில் தனது தலைமையை நிறுவ முயற்சிப்பது ஆகியவைதான் சீமானின் சதித்திட்டம்.

சாதிகளையே, தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட சாதிகள், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிற மொழிகளைப் பூர்வீகமாகக் கொண்ட சாதிகள் என இரண்டாகப் பிரித்து, தன்னை தமிழ் சாதிகளுக்கான பிரதிநிதியாகவும், தி.மு.க. மற்றும் திராவிட அமைப்புகளை பிற மொழியைப் பூர்விகமாகக் கொண்ட சாதிகளின் பிரதிநிதியாகவும் காட்டி அரசியல் செய்வதுதான் சீமானின் ‘குடிதேசிய அரசியல்’. இந்த மொழிவழி சாதிவெறி அரசியலைத்தான் ‘தமிழ்த்தேசிய அரசியல்’ என்று அழைத்துக் கொள்கின்றனர் சீமானின் தம்பிமார்கள்.

இதனால்தான், தமிழ்பேசும் வன்னியர்கள், கவுண்டர்கள், தேவர் ஆகிய ஆதிக்க சாதிவெறியர்கள் பறையர், பள்ளர் போன்ற தமிழ்பேசும் ஒடுக்கப்பட்ட சாதிகளைத் தாக்கும்போதெல்லாம் அண்ணன் பெரிதாக சவுண்டுவிடுவதில்லை; அதேநேரம் நாயுடு ஆதிக்க சாதிவெறியர்களால், பறையர் சமூக மக்களுக்கு கோவில்நுழைவு மறுக்கப்படும் காந்தாரியம்மன் கோவில் பிரச்சினையை இன உரிமைப் போராக மடைமாற்றத் துடிப்பார்கள்.

Out of backward (அவுட் ஆஃப் பேக்வேர்ட் கிளாஸ்) என்று சீமான் தன் தம்பிகளுக்கு வகுப்பெடுத்துக் கொண்டிருந்த அதே கூட்டத்தில் தேவர் சாதியைச் சார்ந்த ஒரு தம்பி, வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இடஒதுக்கீடு குறித்து கேள்வி எழுப்பிய போது, “அதைப் பற்றி கேட்கக் கூடாது. உனக்கு 20.5 சதவிகிதம் வேணும்னு கேளு அண்ண உனக்காக வந்து நிக்குறேன்” என்று பேசினார். வன்னியருக்கு உள் ஒதுக்கீடு கொடுக்கலாம் தவறில்லை. ஆனால், அருந்ததியினர்களுக்கு கொடுக்கக் கூடாது என்பதுதான் சீமானின் ‘தமிழ்த்தேசிய அரசியல்’.

ஆண்ட பெருமைபேசும் தமிழ்ச் சாதிகள் ஐக்கியப்படும்போது, சீமான் தான் கூறும் தமிழ்த்தேசியத்தை வென்றெடுக்க முடியும். அந்த பொன் நாளுக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் தம்பிமார்கள்.


பால்ராஜ்

ஆசிரியர்கள் போராட்டம்: அரசுவேலை வழங்க எந்த ஆட்சியும் தயாராக இல்லை!

டந்த ஐந்து நாட்களுக்கு முன்னதாக சென்னை நுங்கம்பாக்கம் கல்வி வளாகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டனர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நடந்த தொடர் போராட்டத்தில் 40-க்கும் மேற்பட்டோர் மயங்கிவிழுந்தனர். போராட்டம் தீவிரமாவதை உணர்ந்த அரசு அதிகாரிகள் அவர்களை கலைந்து செல்ல வலியுறுத்தினர்.

கலைந்து செல்ல மறுத்த ஆசிரியர்கள், துறைசார்ந்த அமைச்சர் நேரில் வந்து வாக்குறுதி கொடுக்க வேண்டும் என்றும் தங்களுக்கான பணி நிரந்தர ஆணையை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து போராடினர். அதன் விளைவாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்களை சந்தித்தார்.

வழக்கம்போல ”10 நாட்களில் உங்கள் பிரச்சினைகள் முடித்து வைக்கப்படும்” என்று கூறியதோடு துறைசார்ந்த நடவடிக்கையையும் உடனே மேற்கொள்வதாக நம்பிக்கை வார்த்தைகளைக் கூறி தற்காலிகமாக ஆசிரியர்களின் போராட்டத்தை திரும்பப்பெற வைத்தார்.

இப்போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: ”நாங்கள் அனைவரும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோம். எங்களுக்குரிய அரசுப்பணியை வழங்காததோடு மீண்டும் எங்களுக்கு ஒரு போட்டி தேர்வு வைத்து அதில் தேர்ச்சிபெற்றால்தான் அரசுப்பணி என்பது எந்த வகையில் சரியாகும். நாங்கள் 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு (TET) எழுதியபோது இதுபோன்ற எந்த நிபந்தனைகளும் இல்லை. அதன்பின் 2018 ஆம் ஆண்டுதான் ஆசிரியர் தகுதி தேர்வில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது. அந்த மாற்றங்கள், 2013 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற எங்களுக்கு எப்படி பொருந்தும்”.


படிக்க: ஒப்பந்த செவிலியர்களின் மகப்பேறு விடுப்பு உரிமையை பறித்துள்ளது திமுக அரசு!


மேலும், “இந்த பிரச்சினையை இதற்கு முந்தைய முதலமைச்சர் எடப்பாடி  பழனிச்சாமி கவனத்திற்கும் எடுத்துச் சென்றோம். ஆனால் அவர் எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. அப்போதைய எதிர்கட்சி தலைவரும் இப்போதைய தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க ஸ்டாலின், அவருடைய தேர்தல் வாக்குறுதி 177-ல் 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு மீண்டும் போட்டி தேர்வு தேவையற்றது என்றும் அவர்களுக்கான அரசுப்பணியை வழங்க திமுக அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ளும் என்றும் கூறியிருந்தார்” என்று அந்த ஆசிரியர் கூறினார்.

”2018-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை 149-இல் இருந்து ஆசிரியர் தகுதி தேர்வு 2013-இல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார். அந்த அடிப்படையில் நாங்கள் அவருக்கு வாக்களித்தோம். ஆனால் ஆட்சியில் அமர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுகுறித்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக இதுபோன்ற பலவிதமான  போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். ஆனால் எங்கள் பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு கிடைத்தபாடில்லை” என்றும் ஆசிரியர்கள் வேதனை தெரிவித்தனர்.


படிக்க: “சம வேலை சம ஊதியம்” கோரிய இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் உணர்த்துவது என்ன?


இப்படி தூய்மைப் பணியாளர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், பேராசிரியர்கள் என அனைவரும் தங்களுடைய தற்காலிக பணியை நிரந்தரம் செய்யக்கோரி பல வழிகளில் அன்றாடம் போராடி வருகின்றனர். அப்படி போராடும்பட்சத்தில் நூறு இருநூறு பேரை மட்டும் அவ்வப்போது பணிக்கமர்த்தி போராட்டத்தை தணிய வைக்கிறது அரசாங்கம்.

இவற்றுக்கெல்லாம் காரணம் ஒன்றுதான். பொது கட்டமைப்புகளை வலுப்படுத்தினால் தனியார்மய கொள்கையை அமல்படுத்தமுடியாது. இதை நன்கு புரிந்துகொண்ட அரசியல்வாதிகள் தங்களுடைய தேர்தல் வெற்றிக்காக ”பணிநிரந்தரம் செய்வது” போன்ற வெற்று வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள்.


சித்திக்

ஒப்பந்த செவிலியர்களின் மகப்பேறு விடுப்பு உரிமையை பறித்துள்ளது திமுக அரசு!

0

ர்வதேச செவிலியர் தினம் என்று கூறப்படும் மே 12-அன்று, சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நிரந்தர செவிலியர்களின் சம்பளத்திற்கு இணையாக சம வேலைக்கு சம ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த செவிலியர்கள் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) மூலம் தற்காலிகமாக பணிக்கு அமர்த்தப்பட்ட செவிலியர்களின் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு உரிமையை திமுக அரசு தற்போது பறித்துள்ளது. 2021-ஆம் ஆண்டு செவிலியர்களின் கடும் போராட்டத்தின் விளைவாகப் பெறப்பட்ட உரிமை அது.

கடந்தாண்டு நவம்பரில், தேசிய சுகாதார இயக்கத்தின்கீழ் (NHM) ஒப்பந்த செவிலியர்களுக்கு மகப்பேறு விடுப்பின்போது ஊதியம் வழங்க முடியாது என்று சுகாதாரத்துறை சுற்றறிக்கை வெளியிட்டது. கடந்த மே 2 அன்று, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் (எம்.ஆர்.பி) நியமிக்கப்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் உட்பட அனைத்து ஒப்பந்த செவிலியர்களுக்கும் அவுட்சோர்ஸ் செய்யப்பட்டவர்களுக்கும் இந்த சுற்றறிக்கை பொருந்தும் என்று தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கம் அறிவித்துவிட்டது.

மேலும், எம்.ஆர்.பி-யால் நியமிக்கப்பட்ட ஒப்பந்த செவிலியர்களுக்கு வழங்கப்பட்ட மகப்பேறு விடுப்பு ஊதியத்தை மீட்டெடுக்குமாறு சுகாதாரத்துறை அனைத்துத் துறைத் தலைவர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது. இப்போது நிரந்தர செவிலியர்கள் மட்டுமே ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்புக்கு தகுதியானவர்களாக உள்ளனர்.


படிக்க: பணி நிரந்தரம் கோரி செவிலியர்கள் மாநிலம் முழுவதும் தொடர் போராட்டம்!


2015-ஆம் ஆண்டுமுதல் சுமார் 13,000 செவிலியர்கள் அரசு மருத்துவமனைகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஒப்பந்தப்படி, இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டு காலமுறை ஊதியம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 2,000 செவிலியர்கள் மட்டுமே பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.

3,000-க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிரந்தர பணியாளர்கள் இல்லை. ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து எம்.ஆர்.பி செவிலியர்களை முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரிய செவிலியர் ஊழியர் சங்கம் (TNMNEA) மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

“கொரோனா தொற்று உச்சக்கட்டத்தில் இருந்தபோது தங்கள் உயிரைப் பணயம் வைத்த செவிலியர்களை அரசாங்கம் உடனடியாக பணியில் நியமிக்க வேண்டும். குறைந்தபட்ச சம்பளம் ₹18,000 மற்றும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும். அரசு அனைத்து பொருட்களின் விலையையும் உயர்த்தி வருகிறது; ஆனால் சம்பளத்தை உயர்த்தி வழங்க மறுக்கிறது” என்று அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கத்தின் (AIDWA) துணைத் தலைவர் வாசுகி அவர்கள் கூறினார்.

மேலும், “அரசின் கருணையால் தொழிலாளர் நலச் சட்டங்கள் இயற்றப்படவில்லை; கடினமாக போராடி பெறப்பட்டவை அவை. மகளிர் அமைப்புகளின் நீண்ட போராட்டத்துக்குப் பிறகே ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு உரிமை வழங்கப்பட்டது. நிரந்தரத் தொழிலாளர்களுக்கு மட்டுமே மகப்பேறு விடுப்பு என்பது என்ன நியாயம்?” என்று வாசுகி கேள்வி எழுப்பினார்.


படிக்க: கொரோனா காலத்தில் உயிரை பணயம் வைத்து பணியாற்றிய செவிலியர்களை கைவிடும் தமிழக அரசு !


தினமும் 12 – 14 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்தாலும் செவிலியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் வழங்கப்படுவதில்லை. நோயாளிகளை கவனிப்பது மட்டுமல்லாமல், தரவு உள்ளீடு (Data entry) போன்ற நிர்வாக பணிகளிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர். மேலும், மகப்பேறு காலத்திலும் கூட விடுப்பின்றி வேலை செய்யவேண்டிய கட்டாயத்தையும் தற்போது ஏற்படுத்தியிருக்கிறது மு.க. ஸ்டாலினின் திமுக அரசு.

திமுக தனது 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியில் 356-வது வாக்குறுதியாகக் கூறியிருந்த  ”அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படுவதோடு, ஒப்பந்த நியமன முறையில் தற்போது பணியாற்றும் மருத்துவர்களும், செவிலியர்களும் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள்” என்ற வாக்குறுதி என்னவாயிற்று என்று போராடிய செவிலியர்கள் கேள்வி எழுப்பினர்.

ஏற்கெனவே, கடந்த டிசம்பர் 31-ஆம் தேதியுடன் கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட பணி நிரந்தரம் செய்யப்படாத 2472 செவிலியர்களை தமிழ்நாடு அரசு பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, பணிநீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி கடந்த ஜனவரி 1-ஆம் தேதியிலிருந்து தமிழ்நாடு முழுவதும் தர்ணா, ஆர்ப்பாட்டம், முற்றுகை உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆனால், திமுக அரசோ பணி நிரந்தரம் செய்ய மறுத்துவிட்டது.

பாஜக-வை எதிர்க்கும் தேர்தல் கட்சிகள்கூட, தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கைகளை அமல்படுத்தியே தீரும் என்பதை செவிலியர்கள் மீதான திமுக அரசின் தாக்குதல் நமக்கு உணர்த்துகிறது.


பொம்மி

தி கேரளா ஸ்டோரி: முஸ்லீம் வெறுப்பிற்கான மற்றுமொரு கருவி!

மீபத்தில் “தி கேரளா ஸ்டோரி” என்ற முஸ்லீம் வெறுப்பு திரைப்படம் வெளியானது. இது கேரளா, தமிழ்நாடு உள்ளிட தென்னிந்திய மாநிலங்களில் பெரிதளவில் தாக்கம் ஏற்படுத்தவில்லை என்றாலும், பாசிஸ்டுகளால் முஸ்லீம் வெறுப்புணர்வு ஊட்டப்பட்டிருக்கும் வட மாநிலங்களில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது.

கல்லூரிகளிலேயே படத்தை திரையிடுவதும், பெண்களுக்கு காவித் துப்பட்டா அணிவித்து படத்திற்கு அழைத்து சென்றதும் நடந்தது. சமீபத்தில் ராஜஸ்தான் திரையரங்குக்குள் நுழைந்த இந்துத்துவ பயங்கரவாதியான சாத்வி பராசி, முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்பு கருத்தைப் படம் பார்க்க வந்தவர்களிடம் பிரச்சாரம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்கில் பரவியது. அவரது வெறுப்பு பேச்சுக்கு படம் பார்க்க வந்திருப்போரும் ஆமோதித்து கரகோஷங்கள் எழுப்பிய சம்பவங்களும் நடந்தன.

இப்படத்தை வைத்து முஸ்லீம்களுக்கு எதிரான மத வெறுப்பையும் பிரிவினைவாதத்தையும் ஏற்படுத்தத் துடித்துக் கொண்டிருக்கிறது இந்துத்துவ கும்பல். இதற்கு சமீபத்தில் நடத்த இரண்டு சம்பவங்களே சான்று.

ஜம்மூவில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஒன்றில் மாணவர் ஒருவர், அதே கல்லூரியில் பயிலும் இந்து மாணவர்களால் தாக்குதலுக்குள்ளாகியிருக்கிறார்.


படிக்க: என்.சி.ஆர்.பி-ன் தரவு: உண்மையான ‘’குஜராத் ஸ்டோரி’’


அக்கல்லூரியில் “தி கேரளா ஸ்டோரி” படத்தை வைத்து முஸ்லீம்கள்மீது நடத்த திட்டமிட்டிருந்த தாக்குதல்களில், மாணவர் ஒருவர் படுகாயமடைந்தார். அரசு மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் இந்து மாணவர்கள் சிலர், கல்லூரியின் வாட்ஸ் அப் குழுக்களில், “தி கேரளா ஸ்டோரி” கட்டாயமாக பார்க்க வேண்டிய திரைப்படம் என்று பதிவிட்டனர். மேலும், இதனை கல்லூரி விடுதியில் பார்க்கவும் திட்டமிட்டுள்ளனர். முதலாமாண்டு படிக்கும் முஸ்லீம் மாணவர் ஒருவர், “கல்லூரி குழுக்களில் இதுபோன்ற செய்திகளை பகிர வேண்டாம்” என தெரிவித்திருக்கிறார்.

முஸ்லீம் மாணவரின் எதிர்ப்பு இந்து மாணவர்களை ஆத்திரமடையச் செய்திருக்கிறது. அம்மாணவனை தாக்க திட்டமிட்ட இந்து மாணவர்கள் வெளியில் இருந்து கூலிப்படையை அழைத்து வந்திருக்கின்றனர். கூலியாட்கள் கல்லூரிக்குள் நுழைவதை தடுத்து நிறுத்த முயன்ற இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் கடுமையான தாக்கப்பட்டனர். அதில் மாணவர் ஒருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

“தி கேரளா ஸ்டோரி” படம் வெளியானபோது இப்படத்திற்கு எதிராக கல்லூரியில் போராட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த எதிர்ப்புணர்வுதான் இந்துத்துவா குண்டர்களின் ஆத்திரத்தை கிளப்பிவிட்டிருக்கிறது.

***

இதேபோல கடந்த மே 13-ஆம் தேதி, மகாராஷ்டிரா மாநிலத்தின் அகோலா எனும் பகுதியில், “தி கேரளா ஸ்டோரி” தொடர்பாக எழுந்த சர்ச்சையில் முஸ்லீம்களை இந்துமதவெறி குண்டர்கள் தாக்கியதில் ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார்.

தீவிர வலதுசாரியான கரண் சாஹூ என்பவர் தனது இன்ஸ்டாகிராமில் முகமது நபியை கேலி செய்து பதிவிட்ட பிறகுதான் முஸ்லீம்களுக்கு எதிரான இவ்வன்முறை வெறியாட்டங்கள் கட்டவீழ்த்துவிடப்பட்டிருக்கின்றன.

இதுகுறித்து முஸ்லீம் மக்கள் அளித்த புகாரை போலீஸ் ஏற்றுகொள்ள மறுத்துவிட்டதால், முஸ்லீம் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம் குறித்த செய்தியோடு, முஸ்லீம்கள் இந்துக்களின் கோவில்களை இடிப்பதாக வதந்திகளும் இந்துக்கள் அதிகமாக வாழும் அருகாமை பகுதிகளில் வேகமாக பரவியது. இதனையடுத்து அங்கு திரண்ட இந்துமதவெறி குண்டர்கள் முஸ்லீம்களை தாக்க ஆரம்பித்ததோடு, மசூதிக்குள் நுழைந்து அட்டூழியமும் செய்தனர்.


படிக்க: ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ : காவிகளின் வெறியாட்டத்தை மறைக்கும் அக்னிகோத்ரி !


இந்துமதவெறி குண்டர்கள் நடத்திய தாக்குதலில் 40 வயதான விலாஸ் கெய்க்வாட் என்ற நபர் கொல்லப்பட்டார். தலித் சமூகத்தைச் சேர்ந்த இவர் கலவரம் நடத்த இடத்தில் ஆட்டோ ஓட்டி சென்றபோது முஸ்லீம் என்று கருதி பாசிசக் கும்பலால் தாக்குதலுக்குள்ளானார். விலாஸ் கெய்க்வாட் தன்னை தாக்கவந்த கும்பலிடம், “தான் முஸ்லீம் அல்ல” என்று மீண்டும் மீண்டும் கூறிய பிறகும் அவர் கடுமையாக தாக்கப்பட்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறினார்கள்.

அப்பகுதி கலவரக்காடானது. பல இருசக்கர வாகனங்கள், கடைகள் அனைத்தும் சூறையாடப்பட்டன. கலவரம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவுசெய்து கைது செய்த 28 பேரில் பெரும்பான்மையானவர்கள் முஸ்லீம்கள்தான். வன்முறையை நடத்திய இந்துத்துவ குண்டர்களை கைது செய்யாமல் தாக்கப்பட்ட முஸ்லீம்களை குற்றவாளிகளாக்குவது ஆளும் பாசிஸ்டுகளின் அடியாளாக போலீசுத் துறை இருப்பதையே காட்டுகிறது. வன்முறை நடந்ததையடுத்து அகோலா பகுதியில் 144 ஊரடங்கு உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ளது.

“தி கேரளா ஸ்டோரி”யை வைத்து தென்னிந்தியாவில் மத பிரிவினையை ஏற்படுத்த திட்டமிட்டிருந்த பாசிசக் கும்பல் மண்ணைக் கவ்வியிருக்கும் அதேவேளையில், வட இந்தியாவில் இதன் தாக்கமும் இதை அடிப்படையாக வைத்து முஸ்லீம் மக்களுக்கு எதிரான கலவரங்களும் அதிகரித்து வருகின்றன. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜீ அரசு இத்திரைப்படத்திற்கு தடை விதித்ததைப்போல நாடு முழுவதும் இப்படத்தைத் தடை செய்ய முற்போக்கு ஜனநாயக சக்திகள் குரலெழுப்புவது அவசியம்!


ஸ்வாதி

ஹூண்டாயின் ₹20,000 கோடி முதலீடு யாருக்கானது?

தென்கொரிய  நிறுவனமான ஹூண்டாயின்  ‌ இந்திய ‌கிளையான “ஹூண்டாய்  மோட்டார் இந்தியா” சார்பாக ₹20,000 கோடி  முதலீடு செய்ய இருப்பதாக  அந்நிறுவனம் கூறியுள்ளது. மேலும், மின்னூர்தி உற்பத்திக்கான புதிய தொழிற்சாலை மற்றும் ‌‌தமிழ்நாடு அளவில்  100 இடங்களில் சார்ஜர் பாயிண்டுகள் ஆகியவற்றை‌  நிறுவ உள்ளதாகவும் ஹூண்டாய்  மோட்டார் கூறியுள்ளது.

ஹூண்டாயின் இப்புதிய முதலீடு குறித்து, “மாற்று எரிபொருள் மூலம் ‌சுற்றுசூழலை  பாதுகாக்கும் வகையில் ஹூண்டாயின் முதலீடு அமைந்துள்ளது” என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.

அந்நிறுவனத்தை பாராட்டியுள்ள  முதல்வர் ஸ்டாலின்,  “தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்த்திட வேண்டும் என்ற நமது இலட்சிய இலக்கினை அடைவதற்கு இந்த முதலீடு ஒரு பாய்ச்சலாக அமைந்துள்ளது. நாட்டின் ‌ ஆட்டோ மொபைல் ‌துறையில்  தமிழ்நாட்டின் பங்கு 34 சதவீதம்.  ஹூண்டாயின் வளர்ச்சியோடு தமிழ்நாடும் வளர்கிறது. தொழிற்துறை முதலீட்டை ஈர்ப்பதற்கு அதற்குரிய வசதிகளை  தமிழ்நாடு அரசு  செய்து கொடுக்கும்” என்று கூறியுள்ளார்.

மேலும், இந்த  ஒப்பந்தம் மூலம் பல ஆயிரக்கணக்கான பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு பெருகும் என  அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மையில், மேற்கண்ட  ஒப்பந்தங்கள் ‌ மூலம் வேலைவாய்ப்பு பெருகும், மாநிலத்தின் பொருளாதாரம் ஒரு டிரில்லியானாக‌ வளரும்  என்பதெல்லாம்  கடைந்தெடுத்த  பித்தலாட்டம். புதிய  ஆலைக்கான  இருபதாயிரம் கோடி முதலீடு  எங்கிருந்து வந்தது? எப்படி  வந்தது? ‌என்பதை  புரிந்து  கொள்வதின்  மூலம் சொல்லப்படும் வேலைவாய்ப்பு என்பது மோசடி  என்பதை  யாவரும்  அறியலாம்.


படிக்க: தென்கொரியா ஹூண்டாய் தொழிலாளர் போராட்டம் !


பூந்தமல்லி அடுத்த பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில்  திருபெருமந்தூர் அருகில் உள்ள ‌ இருங்காட்டுகோட்டை சிப்காட்டில்  இயங்கிவரும்  ஹூண்டாய் கார் தொழிற்சாலை  200  ஏக்கர்  பரப்பளவில் பிரம்மாண்டமாய்  அமைந்துள்ளது. இந்த ஆலை கடந்த  1998-ஆம் ஆண்டு ₹4000 ‌கோடி  முதலீட்டில் தொடங்கப்பட்டது.  தொடங்கும்போது 1 பிளானட்டாக இருந்த ஆலை இன்றோ இரண்டு  பிளானட்டுகளாக விரிவடைந்துதிருக்கிறது. இன்றைக்கு ஆண்டொன்றுக்கு, 7 இலட்சம் காருக்கு மேல் உற்பத்தி செய்யப்படுவதுடன்,  கார் விற்பனையிலும்  ஏற்றுமதியிலும் இந்தியாவில் இரண்டாம் நிலையில் உள்ள  பெரும்  நிறுவனமாக ஹூண்டாய் திகழ்கிறது.

இதற்கெல்லாம் என்ன காரணம் என ‌கேட்டால், அரசின் வரிவிலக்கு, நவீன தொழில்நுட்பம், அதிகாரிகளின் திட்டமிடல், விளம்பர உத்தி மற்றும்  இன்னும்  இதர காரணிகள் என பட்டியல் ‌ இடுகின்றன முதலாளித்துவ பத்திரிகைகள். ஆனால் இவையெல்லாம்  உண்மையில் இரண்டாம்பட்ச காரணிகள் தான்.  உண்மையான  காரணம் , தொழிலாளி வர்க்கத்தின் “உழைப்பு ‌ சக்தி”யே ஆகும்.

மார்க்சின்  வார்த்தைகளில்  சொல்வதென்றால், “ஒரு  பொருளின்  மதிப்பு அதாவது பரிவர்த்தனை மதிப்பு, அதற்கு  செலுத்தப்பட்ட உழைப்பு சக்தி,  கச்சா பொருட்கள், இயந்திர தேய்மானம், இட வாடகை இன்னும் இதரவற்றை  கணக்கிட்டு மதிப்பு தீர்மானிக்கப்படுகிறது” என்கிறார். அதன்படி  தனது  உற்பத்திக்கு, ஆலைக்குள் வரும்  அனைத்து  பொருட்கள் மற்றும் சாதனங்களுக்கும் உரிய விலை கொடுத்து வாங்கும் முதலாளித்துவம், ஒன்றுக்கு மட்டும்  உரிய விலை கொடுப்பதில்லை அல்லது விலையை  தானே தீர்மானிக்கிறது. அதுதான்  தொழிலாளி வர்க்கத்தின் உழைப்பு சக்தி.

இன்னும் சற்று எளிமையாக பார்ப்போம். ஒரே வேலைக்கு டிரெய்னி, அப்ரெண்டீஸ், ஒப்பந்த தொழிலாளி, நிரந்தர தொழிலாளி என  நான்கு விதமான விலைகளில் உழைப்பு சக்தியை  வாங்கும்  முதலாளித்துவம், எதை அடிப்படையாகக் கொண்டு விலையை தீர்மானிக்கிறது? இதை ஒரு கணக்கின் மூலம் பார்க்கலாம்.  நிரந்தர தொழிலாளி என்போர் மிக மிக சொர்ப்பம். இவர்களை தவிர்த்து மேற்கண்ட  மூன்று பிரிவினர் தான் ஆலை இயங்குவதற்கு அச்சாணி என்றால் மிகையாகாது. இத்தொழிலாளர்களுக்கு மாதம் ₹20,000 கூலி என வைத்துக் கொள்வோம். அப்படி என்றால் நாளொன்றுக்கு ₹666, ஒரு மணி நேரத்திற்கு ₹84 ஆகும்.

இப்போது  ஹூண்டாயின் உற்பத்தியோடு ஒப்பிடுவோம். ஹூண்டாய் ஆலையில் 8 மணி நேர வேலைக்கு  400  கார்களை அசெம்பிள் ஆகுகிறது.  தற்போதுள்ள தொழில்நுட்பம் மற்றும் இயந்திர திறனை வைத்து பார்த்தால், நமது தொழிலாளி நாளொன்றுக்கு பெறும் ஊதியமான ₹666  பண மதிப்புக்கு   இரண்டு  மணி நேர உழைப்பு சக்தியே போதுமானது. மீதமுள்ள  ஆறு மணி நேர உழைப்பை  முற்றிலும் இலவசமாக  பெற்றுக் கொண்டு  உழைப்பு சக்தியை உரிய விலை கொடுத்து வாங்கியதாக  கணக்கிட்டு தனது பொருளை விற்பனை  செய்கிறது முதலாளித்துவம்.


படிக்க: வாழ்க்கை : மாருதி, ஹூண்டாயைச் சுமக்கும் மனிதர்கள் !


ஆக, உயிருள்ள மனிதனின் உழைப்பு  சக்தி  சரக்காக, பண்டமாக,  மாறியுள்ளதை நாம்  முதலில்  புரிந்து கொள்ள வேண்டும்.  அன்றாடம்  ஆலை வாயிலில்  ஒப்பந்ததாரர்கள்  மற்றும் அதிகாரிகள்  “இன்றைக்கு மேன் பவர் (man power)  சரியாக  வந்துவிட்டதா?” என கேட்பார்கள். இதுதான், உயிருள்ள உழைப்பை  செலுத்தும்  மனிதன்  ஏதோ செங்கல்  ஜல்லியைப்‌ போல சடப்பொருளாக  மாற்றப்பட்டுள்ளதை இதன் மூலம் புரிந்துகொள்ள முடியும். இதற்காக ஒட்டுமொத்த சமூகத்தையே தனக்கு  ஏற்றவாறு மாற்ற முனைகிறது  முதலாளித்துவ வர்க்கம்.

அதன்படி, நமது நாட்டில் கடந்த கால் நூற்றாண்டுக்கும்  மேலாக நடைமுறையில் இருக்கும் உலகமயமாக்கல் கொள்கையானது நாட்டின் முதுகெலும்பு என சொல்லப்படும்  விவசாயத்தையும் சிறு தொழில்  – சிறு‌ வணிகத்தையும்  அழித்து  பெரும்பான்மையான மக்களின் வாழ்வாதாரம்  மற்றும் உரிமைகளை  பறித்து  பிழைப்புக்காக  நகர்புறங்களை நோக்கி – குறிப்பாக சொல்வதென்றால் தொழிற்பேட்டைகளை நோக்கி விரட்டுகிறது.  இன்னும் எளிமையாக சொல்வதென்றால், மக்கள் தங்கள் சொந்த காலில் நிற்கும் வேலையையும், தொழிலையும் அழித்துவிட்டு கூலி அடிமையாக மாற்றுகிறது.

மேலும், இக்கொள்கையின் மூலம் எப்போதும் சந்தையில் உழைப்பு  சக்தி மலிவாக இருக்கும்படி அரசு பார்த்து கொள்கிறது. இதனால், மாத ஊதியம்‌  ₹15,000 அல்லது ₹20,000  கிடைப்பதே  பெரிய  விசயம் என்ற எண்ணத்தை  ஏற்படுத்தி  தொழிலாளியின்  மீதான  சுரண்டலை சுதந்திரமாக நடத்துகிறது  முதலாளித்துவம்.


படிக்க: சென்னை ஹூண்டாய் ஆலையில் போராட்டம்!


நாம் முன்னரே விளக்கிய ஹூண்டாயின் இருபதாயிரம் கோடி முதலீட்டின் மோசடியை இப்போது  குறிப்பாக  ஆராய்வோம். தமிழ்நாடு முழுவதும் உள்ள  தொழிற்பயிற்சி  கல்லூரிகள் மற்றும்  பொறியியல் கல்லூரிகளில் படித்த மாணவர்கள்   ஹூண்டாயில்  ஒரு வருடம்  அப்ரெண்டீஸ், இன்னொரு வருடம் டிரெய்னி பயிற்சிகளை முடித்த பிறகு வெளியேறிவிட‌ வேண்டும். அடுத்த வருடம் புது அணி (batch) மாணவர்கள் இதை செய்வர். இவ்வாறு, முடிவே இல்லாமல் இளம்தொழிலாளிகளுக்கு  வேலை  கொடுப்பதின் பேரில்  அவர்களை ஒட்ட சுரண்டுகிறது ஆலை நிர்வாகம்.

மறுபுறம்  கிராமப்புறங்களில் இருந்து  விவசாயத்தால் வருமானம் இழந்தவர்கள் மற்றும் பள்ளி கல்வியில்  இடை நின்றவர்கள், நெசவு தொழில் நலிவுற்று போனதால் தொழிலில் இருந்து  விரட்டப்பட்டவர்கள் என பல்லாயிர கணக்கானோர் ஒப்பந்த தொழிலாளியாக   அதாவது  கூலி அடிமையாக மாற்றப்படுகின்றனர். இவ்வாறு மனித தன்மையற்ற,  கொடூரமான முறையில் தொழிலாளி வர்க்கத்தின் மீதான உழைப்பு சுரண்டலின் விளைவே முன்பு சொன்ன இருபதாயிரம் கோடி முதலீட்டுக்கான பணம். இது ஹூண்டாய் நிறுவனத்திற்கு மட்டுமல்ல; ரெனால்ட் நிசான், ராயல் என்ஃபீல்டு, யமஹா ஆகிய நிறுவனங்கள் அனைத்திற்கும் பொருந்தும்.

இப்படிப்பட்ட தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் நாசகர நிறுவனத்தை தான் சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்கிறது தி.மு.க அரசு. ஆக, சமூக நீதி பேசும் திராவிட மாடல் என்றாலும் சரி காவி சித்தாந்தத்தை உயர்த்தி பிடிக்கும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க பாசிஸ்டுகள் என்றாலும் சரி மறுகாலனியாக்க கட்டமைப்புக்குள் உள்ள அனைத்து கட்சிகளுமே கார்ப்பரேட்டுகளின் ‌கைக்கூலிகளே!

எனவே பா.ஜ.க-விற்கு மாற்று தி.மு.க என்ற மயக்கத்தில் இல்லாமல் கார்ப்பரேட் கொள்ளைகளுக்கு எதிராகப் போராட வேண்டும்.


ஆ.கா.சிவா

மரக்காணம் – விழுப்புரம் கள்ளச்சாரய மரணம் | தோழர் மருது வீடியோ

ந்த அரசு கள்ளச்சாரயத்தை பாதுகாக்கிறதா? அரசு அதிகாரிகள் இக்குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவில்லை என்றால் மாவட்ட கண்காணிப்பாளர் உட்பட பல போலீஸ்காரர்களை ஏன் பணியிடை மாற்றம் இடைநீக்கம் செய்யப்பட்டார்கள். இந்த அரசு செய்த கொலையை மறைப்பதற்காக ₹10 லட்சம் இழப்பீடு வழங்கப்படுகிறதா?

இன்று நாங்கள் டாஸ்மாக்கை எதிர்த்து போராட தயாராக இருக்கிறோம்; ஆனால் மற்ற கட்சி இயக்கங்கள் தி.மு.க அரசை எதிர்த்தால் பி.ஜே.பி வந்துவிடும் என்று கூறிக்கொண்டு ஒன்றிணைய தயங்குகிறார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் நாங்கள்  தி.மு.க அரசின்  பல்வேறு தவறுகளை கண்டித்துப் போராடி வருகிறோம். அரசு செய்யும் தவறை தவறு எனவும் சரியை சரி எனவும் பேசுவதுதான் கம்யூனிஸ்டுகளின் வேலை; அதை துறந்து ஓடிய கோவன் ஆளும் வர்க்க தி.மு.க அரசின் அனுதாபி என்பதை தவிர வேறுயாராக இருக்க முடியும்.

மேலும்..

காணொலிகளை பாருங்கள்! பகிருங்கள்!!

தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை: தேசிய கல்விக் கொள்கை 2020-இன் மாறுபட்ட வடிவமே!

பா.ஜ.க அரசால் 2020-ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட “புதிய கல்விக் கொள்கை”க்கு எதிராக தமிழ்நாட்டின் தனிச்சிறப்பான அம்சங்களை கணக்கில் கொண்டு மாநில கல்விக் கொள்கை ஒன்றை வகுக்கப் போவதாக தி.மு.க அரசு கூறி வந்தது. அதனடிப்படையில் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை உருவாக்க குழுவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் அக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஜவஹர் நேசன். இது மாநிலம் முழுவதும் பேசுபொருளாகி உள்ளது.

2021-22ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்த போது, இந்த குழுவின் உருவாக்கம் பற்றி அறிவிக்கப்பட்டது. ஆனால் அறிவிப்பு வெளியான சுமார் 8 மாதங்களுக்கு பின்னர் தில்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையில் புதிய கல்விக் கொள்கைக்கான குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது.

குழு அமைக்கப்பட்ட ஓராண்டு காலத்திற்குள் தனது பரிந்துரையை அரசுக்கு அளிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த குழு “தமிழ்நாடு மாநிலத்தின் எதிர்கால கல்விக் கொள்கையை வகுப்பதில் பெரும் பங்காற்றும்” என்று பலவாறாக பேசப்பட்டது. ஆனால், இந்த குழு ஜனநாயகமற்ற முறையில் செயல்படுவதாக கூறித்தான் ஜவஹர் நேசன் தனது ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த கடிதத்தில், “ரகசியமாகவும், ஜனநாயகமற்ற முறையிலும் செயல்படும் தலைமையைக் கொண்டதாலும், சில மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் அதிகார எல்லைமீறல்களாலும், முறையற்ற தலையீடுகளாலும், உயர்நிலைக் கல்விக் குழு சரியாகச் செயல்பட முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது. தேசியக் கொள்கை 2020-இன் அடியைப்பின்பற்றி மாநிலக் கல்விக்கொள்கையை வடிவமைக்கும் திசையில் குழு முன்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது” என்று கூறியுள்ளார்.


படிக்க: தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படும் புதிய கல்விக் கொள்கை : ஆசிரியர் உமா மகேஷ்வரி உரை !


இதற்கிடையில், ”தலைமை செயலகத்திலேயே ஒரு மீட்டிங் நடத்தி தேசிய கல்வி கொள்கையில் உள்ள அம்சங்களை இதில் இணைத்து கொள்கை உருவாக்குங்கள்” என அதிகாரிகள் கூட்டத்தைக் கூட்டி நிர்பந்தித்ததாகவும்,  இதை கேள்விகேட்ட ஜவஹர் நேசனை முதல்வரின் முதன்மை செயலாளர் உதயசந்திரன் ஒருமையில் பேசியும் குழுவை கலைத்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதை அறம் ஆன்லைன் அம்பலப்படுத்தி செய்தி எழுதியுள்ளது.

இந்த அளவு ஒன்றிய அரசுக்கும் அதன் கொள்கைகளுக்கும் விசுவாசத்தை காட்டும் அதிகாரிகளின் கை குழுவில் ஓங்கியுள்ளது. ஆனால் இந்த குழுவும் கூட தி.மு.க அரசு செய்யும் கண்துடைப்பு வேலைதான் என்பதையும் நாம் அம்பலப்படுத்த வேண்டும்.

இதிலிருந்து  காவிக் கொள்கையில் பா.ஜ.க-வும் தி.மு.க-வும் வேறுபட்டிருந்தாலும் கார்ப்பரேட் கொள்கையில் பா.ஜ.க-வும் தி.மு.க-வும் ஒன்றுதான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

சமீபத்தில் வெளியான மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 140 கோடி மக்கள் வாழ்கின்றனர். இதில் கணிசமான எண்ணிக்கையில் பள்ளிக் கல்வி, உயிர் கல்வி, தொழில்க் கல்வி என பயின்று வருகின்றனர். இந்தியாவின் 2022-ஆம் ஆண்டுக்கான பள்ளிக் கல்விக்கான சந்தை மதிப்பு மட்டுமே 43 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். வருங்காலத்திலும் இந்த கல்வியின் சந்தை மதிப்பு மிக அதிகமாகும். இதனைக் கணக்கில் கொண்டு தான், கார்ப்பரேட்கள் கல்விச் சந்தையை கைப்பற்ற துடிக்கின்றன.

இந்த கார்ப்பரேட்களின் ஆதரவை பெற்று கட்சியை வளர்த்து அதன் மூலமாக தங்களது வயிறு வளர்க்கத்தான் கல்வியை தனியார் கார்ப்பரேட்களின் கைகளில் ஒப்படைக்கும் கொள்கையை அனைத்து ஓட்டுக் கட்சிகளும் செய்து வருகின்றன. ஏனெனில் இந்த அத்தனை ஓட்டுச் கட்சிகளும் புதிய தாராளவாத கொள்கையை ஏற்றுக்கொண்டவைதான். எந்த கட்சிகளிடமும் புதிய தாராளவாத கொள்கைக்கு மாற்று ஏதுமில்லை. அதனால் அந்த கட்சிகளால் கார்ப்பரேட்களின் நிதி மூலதன ஆதிக்கத்தை எதிர்க்க முடியாது. அதனால் தான்  இந்த ஓட்டு அரசியல் அமைப்புக்குள் மக்களின் எந்த அடிப்படை உரிமையையும் பெறமுடியாது என்று சொல்கிறோம்.

ஆனால் தி.மு.க ஆட்சிக்கு வந்த கடந்த இரண்டு ஆண்டுகளாக புதிய கல்விக் கொள்கையை வெவ்வேறு பெயர்களை வைத்து அமல்படுத்திக்கொண்டுதான் இருக்கிறது. இதை இந்த சமூகத்தில் ஓட்டுப் கட்சிகளுக்கு பரிவாக பேசும் தாராளவாதிகளே ஒப்புக்கொள்கிறார்கள்.


படிக்க: புதிய கல்விக் கொள்கையை கமுக்கமாக அனுமதிக்கும் தி.மு.க !


“ஒருபக்கம், மாநிலத்திற்காக தனித்துவமான கல்வி கொள்கையை உருவாக்க குழுவை அமைத்துவிட்டு, மற்றொரு பக்கம், யு.ஜி.சி, என்.சி.இ.ஆர்.டி ஆகியவை கொடுக்கும் பரிந்துரைகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. 2020-ஆம் ஆண்டில் தேசிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது 3 ஆண்டுகள் முடியப்போகிற நிலையில், புதிய கல்விக் கொள்கையின் பல கூறுகளை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. இதை அரசும், குழுவும் கருத்தில் எடுத்துகொண்டனவா என்று தெரியவில்லை,” என்கிறார் மாநிலக் கல்விக்கான பொது மேடையைச் சேர்ந்த பிரின்ஸ் கஜேந்திரபாபு.

ஆனால், இப்படி புதிய கல்விக் கொள்கையின் அம்சங்களை நடைமுறை படுத்துவது அதிகாரிகள் தானே தவிர தி.மு.க அரசு இல்லை என்ற வகையில் வாய் கூசாமல் பேசுகிறார் “மதிப்பிற்குரிய தாராளவாதியான” பிரின்ஸ் கஜேந்திரபாபு.

“நான் முதல்வன் திட்டம் ஆகட்டும், இல்லம் தேடி கல்வி ஆகட்டும் கடந்த மூன்று ஆண்டுகளாக புதிய கல்விக் கொள்கை என்பது தமிழ்நாட்டில் நடைமுறைக்கு வந்துவிட்டது. ஆனால், இல்லை என்று சொல்லி அதிகாரிகள் அமைச்சரையும் அமைச்சரவையையும் நம்ப வைக்கின்றனர். எனவே, உடனடியாக அமைச்சரவை இது குறித்து விவாதிக்க வேண்டும். அப்போதுதான், அமைச்சர்களுக்கு தெரிந்து இது நடக்கிறதா அல்லது தெரியாமல் நடக்கிறதா என்று தெரியவரும்” என்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

அதாவது அமைச்சருக்கும் அமைச்சரவைக்கும் தெரியாமலே அதிகாரிகள் புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் நடைமுறை படுத்திவருகிறார்கள் என்றும் இதனை தனி ஆணையம் அமைத்து விசாரணை செய்தால் தான் உண்மை வெளிவரும் என்று பேசியுள்ளார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

மாதச் சம்பளம் வாங்கிக்கொண்டு, குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து கொண்டு தி.மு.க அரசு செய்யும் அத்தனை வேலைகளுக்கும் இணையத்தில் முட்டுக்கொடுக்கும்  இணைய உ.பி-கள் கூட தி.மு.க ஆட்சிக்கு இத்தனை விசுவாசமாக நடந்துகொள்ள மாட்டார்கள்.

விதவிதமான பெயர்களில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதும்; அதனை மறைக்க மாநிலத்திற்காக தனித்துவமான கல்வி கொள்கையை உருவாக்க குழு அமைப்பதும்; அதை உயர்மட்ட அதிகாரிகளின் கைகளில் ஒப்படைப்பதும் எல்லாம் கல்வியைத் தனியார்மயப்படுத்தும் தி.மு.க-வின் கார்ப்பரேட் விசுவாசமே. அதே நேரத்தில் மக்களிடம் தனது முகமூடி அம்பலப்பட்டுவிடாமல் இருக்க அது செய்யும் ஜோடிப்பு வேலைகள் தான் இது என்பதும் நமக்குத் தெரியாமலில்லை.


படிக்க: இல்லம் தேடிக் கல்வி கொள்கை என்ற பெயரில் திணிக்கப்படும் புதிய கல்விக் கொள்கை! | புமாஇமு கண்டனம்!


தமிழ்நாட்டில் எந்த அரசாங்கம் அமைந்தாலும் அவை அமைக்கும் குழுக்களில்  ஆதிக்கம் செலுத்துபவராக இருக்கும் பேராசிரியர் இராமனுஜத்தை இந்த குழுவில் நுழைத்த போதே தி.மு.க-வின் வேடம் கலைந்து விட்டது. இந்த பேராசிரியர் இராமனுஜம் தான், தற்போது தி.மு.க அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வரும் தேசிய கல்வி கொள்கையின் ஒரு அங்கமான எண்ணும், எழுத்தும் திட்டத்தின் மூளையாக செயல்படுபவர். இதிலிருந்து கார்ப்பரேட்களுக்கு கல்வியை படையல் வைக்கும் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதையே தனது ஆட்சியின்  நலனுக்கு உகந்தது என்று ‘சரியான முடிவில்’ தி.மு.க அரசியல் செய்கிறது. ஆனால் இந்த so called அப்பாவி தாராளவாதிகள் தான் தி.மு.க ஆட்சியாளர்களுக்கு எதுவும் தெரியாது என்று முட்டுக்கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இப்படி முட்டுக் கொடுக்கும் தாராளவாதிகளுக்கு தெரிவான‌ நோக்கமிருக்கிறது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இவை அனைத்தையும் கடந்து நாம் கவனிக்க வேண்டியது, “இந்த உயர்நிலைக் குழு உருவாக்கும் மாநிலக் கல்விக் கொள்கை, பெயரில் மட்டும் மாற்றம் கொண்ட தனியார்மய, வணிகமய, கார்ப்பரேட், சந்தை, சனாதன சக்திகளின் நலன்களைக் கொண்டிருக்கின்ற தேசிய கல்விக் கொள்கை 2020-இன் (புதிய கல்விக் கொள்கை) மற்றொரு வடிவமாகவே இருக்கும்” என்று ஜவஹர் நேசன் வெளியிட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த வார்த்தைகளைத்தான். இவை கார்ப்பரேட்களுக்கு கல்விச் சந்தையை திறந்துவிடுவதையே நோக்கமாக வைத்து இந்த மத்திய மாநில அரசுகளும் அதிகார வர்க்கமும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்ற அபாயமான உண்மையை சொல்வதாக உள்ளன.


ராஜன்

இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) முதலாவது மாநாட்டின் 53-வது ஆண்டு நிறைவு!

இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்)
முதலாவது மாநாட்டின் 53-வது ஆண்டு நிறைவு!

எல்லா வண்ணத் திரிபுவாதங்களையும் முறியடித்து
போல்ஷ்விக்மயமான கட்சியைக் கட்ட உறுதியேற்போம்!

1970-ஆம் ஆண்டு மே 15-16 தேதிகளில் கொல்கத்தா – கார்டன் ரீச் பகுதியின் ரயில்வே காலனியிலுள்ள ஒரு வீட்டின் முதல் மாடியில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்)–யின் முதலாவது மாநாடு நடத்தப்பட்டது. இன்றுடன் மாநாடு நடந்து 53 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்)-யின் முதலாவது மாநாடு, இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் எட்டாவது மாநாடும் ஆகும்.

இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் ஏழாவது மாநாடு, மார்க்சிஸ்ட் (CPM) கட்சியாக இருந்தபோது நடத்தப்பட்டது. அதன் பின்னர் நக்சல்பாரி எழுச்சி மார்க்சிஸ்ட் கட்சியின் நவீன திரிபுவாதத்தை திரைகிழித்ததை தொடர்ந்து உண்மையான புரட்சிகர கட்சியாக உருவாகிய இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) தன்னுடைய முதலாவது மாநாட்டை நடத்தியது. அந்த அடிப்படையில் கம்யூனிச இயக்க வரலாற்றில், அது வரலாற்று சிறப்புமிக்க மாநாடு ஆகும்.

அந்த மாநாட்டில் நாடெங்கிலும் இருந்து 52 கட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொள்ள இருந்த நிலையில், போலீசு அடக்குமுறை காரணமாக 35 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 21 தோழர்களை கொண்ட கட்சியின் மத்தியக் கமிட்டி அமைக்கப்பட்டது. மத்தியக் கமிட்டியில் இருந்து ஒன்பது தோழர்களைக் கொண்ட அரசியல் தலைமைக் குழு அமைக்க முடிவாகியது.

இந்த மாநாட்டில் தான் தோழர் சாரூ மசும்தார் பொதுச் செயலராக தெரிவு செய்யப்பட்டார். தமிழகத்தைச் சேர்ந்த தோழர் அப்பு, மத்தியக் கமிட்டி உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதோடு மட்டுமல்லாமல், அரசியல் தலைமைக் குழு உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்டார்.


படிக்க: நக்சல்பாரி இயக்கத்தின் வரலாறு !


1967 நக்சல்பாரி எழுச்சிக்குப் பின், இந்திய அரசானது நக்சல்பாரி இயக்கத் தலைவர்களை குறிவைத்து வேட்டையாடியது. நக்சல்பாரி இயக்கத்தின் ஆதரவாளர்கள் உள்ளிட்டு அனைவரும் போலீசாரால் குறிவைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்; சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சூழலில் தான் முதலாவது மாநாடும் நடந்தது. மாநாட்டிற்குப் பின் அரசின் மிருகத்தனமான அடக்குமுறையால் கட்சி நசுக்கப்பட்டது.

கட்சி நசுக்கப்பட்டாலும் அதன் அரசியலும் சித்தாந்தமும் நாடு முழுவதும் பற்றிப் பரவியது. கிராமப்புறங்களில் நிலப்பிரபுகளுக்கு எதிரான விவசாயிகளின் ஆயுதந்தாங்கிய போராட்டங்களும் தொழிற்சாலைகளில் நக்சல்பாரி தொழிற்சங்கங்களின் “கெரோ” போராட்டங்களும் நாடெங்கும் பரவின. நாடு முழுவதும் அரசு அலுவலர்கள் வேலைகளைத் துறந்து, மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளைத் துறந்து நக்சல்பாரி இயக்கத்துடன் தம்மை இணைத்துக் கொண்டனர். விவசாயிகளை அணிதிரட்ட கிராமங்களை நோக்கி சென்றனர்.

இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விரைவில் இடது சந்தர்ப்பவாத பாதையில் சறுக்கி விழுந்தது. பெரும் இழப்புகளை சந்தித்தது. இடது சந்தர்ப்பவாதத்தை நிராகரிப்பது என்ற பெயரில் வலது சந்தர்ப்பவாதப் போக்குகள் தோன்றி மா-லெ கட்சி பல குழுக்களாக பிளவுபட்டது.

53 ஆண்டுகளில் நாட்டில் எத்தனையோ கட்சிகளும் இயக்கங்களும் உருவாகி அழிந்துவிட்டன. ஆனால் நக்சல்பாரி இயக்கம் இன்னும் அழியாமல் ஒளிவீசிக் கொண்டிருக்கிறது.

நக்சல்பாரிகளுக்கு எதிரான அரசின் அடக்குமுறைகள் இன்றுவரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்துமதவெறி பாசிஸ்டுகளான ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல், நக்சல்பாரிகளை ஈவிரக்கமின்றி ஒழித்துக் கட்டப்பட வேண்டியவர்களாக அறிவித்துள்ளது. நக்சல்பாரி என்ற சொல் நாளேடுகளில், தொலைக்காட்சிகளில், இணையதளங்களில் அன்றாடம் அடிபடுகிறது.


படிக்க: இந்தியப் புரட்சியின் இடிமுழக்கமான நக்சல்பாரி எழுச்சியை நினைவுகூர்வோம் !


இந்தியாவை இந்துராஷ்டிரமாக மாற்றுவதை நோக்கி நாலுகால் பாய்ச்சலில் முன்னேறி வருகிறது பாசிசக் கும்பல். அதற்காக நிலவுகின்ற போலி ஜனநாயக அரசுக் கட்டமைப்பை தகர்த்தெறிந்து பாசிச ஆட்சியை நிறுவ பாசிசக் கும்பல் முயலவில்லை. மாறாக, போலி ஜனநாயக அரசுக் கட்டமைப்பை ஒத்திசைவாக்கல் மூலம் தன்னுடைய இந்துராஷ்டிர ஆட்சிக்கான அரசுக் கட்டமைப்பாக மாற்றிக்கொண்டு வருகிறது, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல்.

நாடாளுமன்ற போலி ஜனநாயக அரசுக் கட்டமைப்பின் மூலமே, பாசிசக் கும்பலை வீழ்த்திவிட முடியும் என ஓட்டுக் கட்சிகளும், பல அமைப்புகளும் இயக்கங்களும் கூறி வருகின்றன. அதை நோக்கி செயல்பட்டு வருகின்றன. இந்த சூழலில், நாடாளுமன்ற போலி ஜனநாயக அரசுக் கட்டமைப்புக்கு வெளியே மக்கள் அணிதிரள்வதற்கான ஒரே மையமாக நக்சல்பாரி இயக்கம்தான் உள்ளது. மேலும், இந்துமதவெறி பாசிஸ்டுகளை முறியடிக்க வேண்டிய வரலாற்றுக் கடமையும், பாசிஸ்டுகளின் சித்தாந்த எதிரிகளான நக்சல்பாரி வாரிசுகளிடமே உள்ளது.

இன்று, நக்சல்பாரி இயக்கங்களில் வலது, இடது சந்தர்ப்பவாதம், வலது சந்தர்ப்பவாத – நவீன அராஜகவாதம் போன்ற பல வண்ணத் திரிபுவாத போக்குகள் நிலவுகின்றன. பல வண்ணத் திரிபுவாதங்களையும் எதிர்த்து விடாப்பிடியான சித்தாந்தப் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. இதன் மூலமே நாடு முழுவதும் உள்ள மா-லெ குழுக்களை ஒன்றிணைத்து, ஒன்றுபட்ட புரட்சிகர மா-லெ கட்சியாக வளர்த்தெடுக்க முடியும். இதுவே நக்சல்பாரி புரட்சியாளர்களின் அவசர, அவசியமான கடமையாக உள்ளது.

இம்மகத்தான கடமையை நிறைவேற்ற, எண்ணற்ற தியாகிகளின் உதிரத்தால் சிவந்த நக்சல்பாரி புரட்சிப் பாதையில் தொடர்ந்து முன்னேறிச் செல்ல உறுதியேற்போம்!

ட்ரோன் மூலம் பழங்குடி கிராமங்களின் மீது குண்டு வீசும் மோடி அரசு!

மூன்று வருடங்களாக, பழங்குடி மக்கள் வாழும் கிராமங்கள் மீது ஆளில்லா கலன்கள் (ட்ரோன்) மூலம் குண்டுகளை வீசி பாசிச பயங்கரவாத தாக்குதல் நடத்தி வருகிறது மோடி அரசு. கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி, சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டத்தில் உள்ள பட்டும், கவுருகட்டா, மீனாகட்டா, ஜப்பாகட்டா ஆகிய கிராமங்களின் மீதும் ட்ரோன் மூலம் குண்டுகளை வீசியுள்ளது.

ரஷ்யா போன்ற நாடுகள், போரில்தான் ட்ரோன் மூலம் குண்டுகளை வீசுகின்றன. ஆனால் மோடி அரசு, நம் நாட்டு மக்கள் மீதே ட்ரோன் மூலம் ஈவிரக்கமற்ற முறையில் குண்டுகளை வீசுகிறது.
நான்கு கிராமங்களில் குண்டுகள் வீசப்பட்ட பிறகு, இந்திய விமானப் படையினர் மூன்று ஹெலிகாப்டர்களிலிருந்து துப்பாக்கி சூடும் நடத்தியுள்ளனர். இது பழங்குடி மக்கள் மீதான மோடி அரசின் பாசிச பயங்கரவாத தாக்குதல் ஆகும். இத்தாக்குதல்களில் பலர் காயமடைந்துள்ளனர். குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன; பயிர்கள் அழிந்துள்ளன. உயிரிழப்புகள் ஏற்படவில்லை.

மோடி அரசு, பழங்குடி கிராமங்களின் மீது ட்ரோன் மூலம் குண்டுகளை வீசுவது இது நான்காவது முறையாகும். 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் தலா ஒரு முறையும், 2023 ஆம் ஆண்டில் இதுவரை இரண்டு முறையும் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. கடந்த ஜனவரி 11 அன்று நடத்தப்பட்ட மூன்றாவது தாக்குதலில், தெலுங்கானா- சத்தீஸ்கர்- ஒடிசா எல்லைப்புற கிராமங்களை, சி.ஆர்.பி.எப். கிரேஹவுண்ட் மற்றும் கோப்ரா கமோண்டோக்கள் மாவட்ட ரிசர்வ் படையுடன் கூட்டு சேர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

பழங்குடி மக்களை அச்சுறுத்தி, அவர்கள் வாழும் இடங்களை விட்டு வெளியேற்ற வேண்டும் என்பதே இத்தகைய பாசிச பயங்கரவாத தாக்குதல்களின் நோக்கமாக உள்ளது.


படிக்க: மேற்கு சிங்பூமில் ஜார்க்கண்ட் அரசை எதிர்த்து பழங்குடிகள் போராட்டம்!


சத்தீஸ்கர், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளுக்கு கீழே கோடிக்கணக்கான டன் அளவில் புதைந்து கிடக்கும் கனிம வளங்களை, அம்பானி, அதானி, வேதாந்தா, ஜிண்டால் போன்ற கார்ப்பரேட் கும்பல்கள் சூறையாடுவதற்கு பழங்குடி மக்கள் தடையாக இருக்கிறார்கள். போராட்டங்களை கட்டியமைக்கிறார்கள். எனவேதான் மோடி அரசு பழங்குடி மக்களின் மீது போர் தொடுத்துள்ளது. இது, கார்ப்பரேட்டுகளின் கனிமவளக் கொள்ளைக்கான போராகும்.

இதனை மக்கள் மத்தியில் நக்சலைட் பீதியூட்டி மறைக்கிறது மோடி அரசு. கடந்த மார்ச் மாதத்தில் பஸ்தருக்கு வந்த அமித்ஷா, போராளிகளை ஒழிப்போம் என்று முழங்கினார். அதன் பிறகு தான் பஸ்தர் மாவட்ட கிராமங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது. இப்பாசிச பயங்கரவாத தாக்குதல்கள் ஆபரேஷன் சமதன் – ப்ரஹார் (Operation Samadhan – prahar) திட்டத்தின் ஒரு பகுதியாகும். உச்சநீதிமன்றத்தால் சல்வாஜூடும் சட்டத்திற்கு புறம்பானது எனக் கூறி நிறுத்தப்பட்ட பிறகு, பழங்குடி மக்கள் மீதான பாசிச பயங்கரவாத தாக்குதல் பல்வேறு வடிவங்களில் தொடுக்கப்பட்டு வருகிறது. அதில் ஒன்று தான் சமதன் – ப்ரஹார் திட்டம் ஆகும்.

துணை இராணுவப் படைகள் மூலமாக ஆபரேஷன் கிரீன் ஹண்ட் என்ற பெயரிலும், சல்வாஜூடும் மூலமாக காங்கிரஸ் ஆட்சியிலும் பழங்குடி மக்கள் மீது பயங்கரவாத தாக்குதல் கட்டவிழ்த்துவிடப்பட்டது. போலி எண்கவுண்டர்களில் நூற்றுக்கணக்கானோர் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் விசாரணைக் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டு சித்தரவதை செய்யப்பட்டனர். பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர்.

தற்போது மோடி அரசு, பழங்குடி மக்கள் மீது பயங்கரவாத தாக்குதல்களை தொடுப்பதில் ஒரு புதிய வடிவத்தை கையில் எடுத்துள்ளது. அது, ட்ரோன் மூலம் குண்டுகளை வீசுகிறது. தற்போது பழங்குடி மக்களை அச்சுறுத்தி வெளியேற்றுவதற்காக குண்டுகள் வீசப்பட்டாலும், வருங்காலங்களில் மக்களை கொல்லும் நோக்கத்தில் குண்டுகளை வீசவும் வாய்ப்பு உள்ளது.


படிக்க: ஒடிசா: ஜிண்டால் எஃகு ஆலைக்காக இடிக்கப்பட்ட பழங்குடி மக்களின் வீடுகள்!


பழங்குடி மக்களுக்கு ஆதரவாக போராடும் சமூக செயற்பாட்டாளர்களும் மோடி அரசால் பாசிச ஒடுக்குமுறைக்கு ஆளாகி வருகின்றனர். பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா, மகேஷ் திக்ரிம் ஹேம் மிஸ்ரா, பிரசாந்த் ராஹி மற்றும் விஜய் திக்ரி ஆயுள் தண்டனைகளை அனுபவித்து வருகின்றனர். பழங்குடி மக்களுக்காக போராடிய ஸ்டேன் சாமி சிறையில் சித்தரவதைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

மேற்கூறிய மோடி அரசின் பாசிச பயங்கரவாத தாக்குதல்களால் பழங்குடி மக்களை ஒடுக்கிவிட முடியாது. கனிம வளங்களை சூறையாட முடியாது. மோடி அரசின் பாசிச பயங்கரவாத தாக்குதல்களையும், அம்பானி – அதானி போன்ற கார்ப்பரேட்டுகளின் கனிமவள சூறையாடலுக்கு எதிராகவும் உறுதியாக போராடி வருகின்றனர், பழங்குடி மக்கள். அவர்களுடன் தோளோடு தோள் நிற்பது நம் கடமை.

ஆயிஷா

தற்போது நேரலையில் | மே 15 மதுரை மாநாடு

சுற்றிவளைக்குது பாசிசப்படை: வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! மாநாடு தற்போது நேரலையில்..

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசம் முறியடிப்போம்!
பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைப்போம்!

பாருங்கள்! பகிருங்கள்!!

தேர்தல் பரப்புரைகளில் மட்டுமே ஈடுபடும் பாசிஸ்டு மோடி!

0

ள்ளாட்சித் தேர்தல் முதல் நாடாளுமன்றத் தேர்தல் வரை ஒவ்வொரு தேர்தலிலும் மோடியின் முகம்தான் முன்னிருத்தப்பட்டு வருகின்றது. அனைத்து தேர்தல்களிலும் பாஜகவுக்கு போடப்படும் ஓட்டுக்கள் நேரடியாக தமக்கே வருகின்றது என்று மோடியே சொல்லிக்கொள்வார். மோடி தான் பாஜகவின் முதன்மை பிரச்சார கருவி என்பதில் எவ்வித இரகசியமுமில்லை.

மோடி பிரதமாராக பதவியேற்றதிலிருந்து கடந்த ஒன்பது ஆண்டுகளில், தேர்தல் நடக்கவிருக்கும் மாநிலங்களுக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். தேர்தலுக்கு முந்தைய மாதங்களில் எண்ணற்ற அரசியல் பேரணிகளின் உரையாற்றுகிறார்.

பல்வேறு இடங்களில் திறப்பு விழாக்களில், சாதாரண நிகழ்வுகளின் மோடி கலந்துகொள்வது ஒருவித வாக்கு சேகரிக்கும் உத்தியாக பார்க்கப்படுகிறது. அதற்கான பல்வேறு அலப்பறைகளை பாஜக செய்திருக்கிறது. அதற்கு பெங்களூரு பையப்பனஹள்ளியில் சர்.எம்.விஸ்வேஸ்வரய்யா டெர்மினல் திறப்பு விழா ஒரு உதாரணம். மார்ச் 2021-இல் டெர்மினலின் அனைத்து பணிகளும் முடிந்து தயாராக இருப்பதாக அதிகாரிகள் கூறினாலும், அதை திறப்பதை 15 மாதங்கள் தள்ளிப்போட்டு ஜூன் 2022-இல் மிகப்பெரிய விளம்பரம் செய்யப்பட்டு மோடி அதைத் திறந்து வைத்தார். அதன் பிறகுதான் அது பொதுமக்களுக்கு முழுமையாகத் திறக்கப்பட்டது. இது பலரின் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டது.

படிக்க : மோடியின் மன் கி பாத்: கேட்க ஆள் இல்லையென்றால் அபராதமா?

கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காலத்தில், பாரத் பயோடெக் நிறுவனத்தில் நடைபெற்ற கோவிட்-19 தடுப்பூசி சோதனை மதிப்பாய்வு செய்வதற்கான நரேந்திர மோடி நவம்பர் 29 அன்று ஒரு மணி நேரம் ஹைதராபாத் சென்றார். மூன்று நாட்களுக்கு முன்புதான் ஹைதரபாத் போலீசு மோடி வருகையை உறுதிசெய்தது.

2023-ம் ஆண்டு மார்ச் கடைசி வாரத்தில், பெங்களுரு மெட்ரோவின் பர்பிள் லைன் ஒயிட்ஃபீல்டில் இருந்து கே.ஆர் புரம் வரையிலான வழித்தட திறப்பு விழா “அவசரமாக” நடந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், மோடி வழக்கமான ஆரவாரத்துடன் மெட்ரோ பயணத்தை மேற்கொண்டார். உள்ளூர் பாஜக அரசாங்கம் அதைப் பரவலாக விளம்பரப்படுத்தியது. மோடி இந்த பாதையை திறந்து வைத்து 11 நாட்களுக்குப் பிறகு, தாழ்வாரத்தில் மற்றும் டிக்கெட் கவுண்டர் அருகே தண்ணீர் தேங்கி இருந்தது. கட்டுமானப்பணிகள் இன்னும் முடிவடையவில்லை என்பதையே இது காட்டுகிறது.

பெங்களூரு – மைசூரு விரைவுச் சாலையை மோடி திறந்து வைத்து பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு, மழையினால் சேதமடைந்த அதிவேக நெடுஞ்சாலையின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்து சந்தி சிரித்தன.

அதே நாளில், அவர் தார்வாட்டில் ஐஐடி வளாகத்தைத் திறந்து வைத்தார், இது ஒரு அதிகாரப்பூர்வ நிகழ்வாகும், ஆனால் பஸ்வராஜ் பொம்மை அரசாங்கம் மாநிலம் முழுவதிலும் இருந்து பாஜகவினரை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைத்து சென்றுதால் அது பாஜகவின் கட்சி நிகழ்ச்சியாக மாறிவிட்டது.

***

2014-ம் ஆண்டு பிரதமராக பதவியேற்றதில் இருந்து மோடி அதிக நேரம் செலவழித்த மாநிலம் கர்நாடகா.

2023 ஆண்டு ஜனவரி 12 முதல், தேர்தலுக்கு முன்புவரை எட்டு முறை கர்நாடகாவிற்கு பயணம் செய்துள்ளார் மோடி. கர்நாடக தேர்தலுக்கு முன்பான ஒவ்வொரு நாளும் ஏப்ரல் 29 முதல் மே 8 வரை, மோடி மூன்று நான்கு பேரணிகளில் உரையாற்றினார்.

“கடந்த ஆண்டு மழைவெள்ளத்தால் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டபோதும், அவர்கள் தங்களது உடமைகளை இழைந்தபோதும் மோடி கர்நாடகத்தின் பக்கம் திரும்பிக்கூட பார்க்கவில்லை. மாநிலத்திற்கு ஒரு ரூபாய் கூட நிவாரண நிதியை ஒதுக்க அக்கறை காட்டவில்லை. தேர்தலுக்கு நன்றி, பிரதமர் மோடி மாநிலத்தில் சுற்றுலாப் பயணியாக மாறியுள்ளார்” என்று காங்கிரஸ் கட்சியின் கர்நாடக பிரிவு விமர்சனம் செய்துள்ளது.

“பசவராஜ் பொம்மை அரசாங்கம், வாடகைப் பேருந்துகளில் ஆட்களை ஏற்றிச் செல்வதற்கும், பங்கேற்பவர்களுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்வதற்கும் அரசாங்க பணத்தை ஏன் செலவழிக்க வேண்டும்” என்று எதிர்கட்சி மற்றும் சிவில் சமூகம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஐஐடி-தர்வாட்டின் புதிய வளாகத்தை திறந்து வைப்பதற்கு மார்ச் 12 அன்று மோடி வந்திருந்தார். அந்த திறப்பு விழாவிற்கு ஆட்களை ஏற்றிச் செல்வது, மதிய உணவுகள், மேடை அமைத்தல், பிராண்டிங், விளம்பரங்கள் மற்றும் பிற தளவாடங்கள் ஆகியவற்றிற்காக பொம்மை தலைமையிலான பாஜக அரசு ஒட்டுமொத்தமாக ரூ.9.49 கோடி செலவிட்டதாக ஆர்டிஐ தகவல் தெரிவிக்கின்றது.

அரசாங்கத்தின் சொந்த ஒப்புதலின்படி, கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்துகளுக்கு மக்களை அழைத்துச் செல்ல ரூ.2.83 கோடி செலவழித்துள்ளது, அதே நேரத்தில் மதிய உணவு வழங்க ரூ.86 லட்சம் செலவிடப்பட்டது. ஒலி, எல்இடி விளக்குகள் மற்றும் சிசிடிவி பொருத்துதல்கள் ரூ.40 லட்சம் மற்றும் சுமார் ரூ.4.68 கோடி செலவில் ஜெர்மன் கூடாரம், மேடை, ‘கிரீன் ரூம்’ மற்றும் தடுப்புகள் அமைத்தது. இந்த நிகழ்வின் பிராண்டிங்கிற்காக கூடுதலாக ரூ.61 லட்சம் செலவிடப்பட்டது.

இதுபோன்று தேர்தல் பரப்புரைக்காக மோடி பயணம் செய்யும் செலவுகளோ பலகோடி. அதில், சில இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.

  • மோடியின் நகரப் பயணத்திற்காக பெங்களூரு சிவில் அமைப்பு ரூ.24 கோடி செலவிட்டுள்ளது.
  • மோடியின் யோகா தின வருகைக்காக கர்நாடகா குடிமை அமைப்புகள் ரூ.56 கோடி செலவிட்டுள்ளது.
  • கர்நாடகாவில் மோடியின் கலபுர்கி பயணத்தின்போது சில மணிநேரங்களுக்கு 11.18 கோடி செலவிடப்பட்டது.
  • பெலகாவியில் மோடியின் நிகழ்ச்சிக்காக கிட்டத்தட்ட ரூ.14 கோடி செலவு; ஆட்களை ஏற்றிச் செல்லவே ரூ.3 கோடி செலவிடப்பட்டுள்ளது.
  • பிப்ரவரி 27 அன்று பிரதமரின் வருகையின் போது கர்நாடக அரசு 36.43 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது.
  • தார்வாட் ஐஐடி திறப்பு விழாவிற்கு ரூ.9.5 கோடி செலவிடப்பட்டது.

இன்னும் பட்டியல் நீண்டுகொண்டே போகும்….

பிரதமர் மோடி பங்கேற்கும் பிரமாண்டமான விழாக்களுக்கும், மோடியின் தேர்தல் பிரச்சாரத்திற்காகவும் மறைமுகமாக பொது மக்கள் பணம் செலவிடப்படுவதாக கர்நாடகாவில் உள்ள எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

***

மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், 2022 டிசம்பரில் தேர்தலுக்கு முந்தைய மாதங்களில் 50-க்கும் மேற்பட்ட அரசியல் பேரணிகளில் பிரதமர் உரையாற்றினார்.

குஜராத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதிலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது பாஜக. மோடி பிரச்சாரம் செய்ய அதிக நேரம் ஒதுக்குவதற்காக மட்டுமே இமாச்சலப் பிரதேசத்திற்கான அட்டவணையை அறிவித்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு குஜராத்துக்கான அட்டவணைக்கான அறிவிப்பை தாமதப்படுத்தியது. குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் பதிவான வாக்குகள் ஒரே நாளில் – டிசம்பர் 8, 2022 அன்று எண்ணப்பட்டன.

படிக்க : தற்கொலையை ’நகைச்சுவை’யாக்கும் பாசிஸ்டு மோடி!

நாம் இன்னும் பின்னோக்கிச் சென்றால், 2019 பொதுத் தேர்தலுக்கு முன் மாதிரி நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பு கடந்த 30 நாட்களில் மோடி 157 திட்டங்களைத் தொடங்கி வைத்தார் என்று NDTV தொகுத்த தரவுகள் தெரிவிக்கின்றன.

கர்நாடகா தேர்தல் முடிவடைந்திருக்கும் நிலையில், பாஜகவின் தலைமை பிரச்சாரகராக தேர்தலுக்கு முந்தைய பிரச்சாரங்களுக்கான கடந்த கால சாதனையை மோடி முறியடித்துள்ளார். எனினும் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது.

மோடி, வெளிநாடுகளுக்கு செல்வதில் துவங்கி உள்நாட்டுக்குள் தேர்தல் பிரச்சாரங்களில் பல்வேறு சாதாரண திறப்பு விழா நிகழ்வுகளில் கலந்து கொள்வது வரை உழைக்கும் மக்களின் வரிப்பணத்தை வீணடித்து வருகிறார். அரசு நிகழ்ச்சிகள் போல் காட்டிக்கொண்டு, தனது சொந்த கட்சியின் காவி அடிதளத்தை விரிவாக்க அரசு பணத்தை பயன்படுத்தி கொண்டுள்ளார் பாசிஸ்டு மோடி என்பதையே இந்த செலவுகளும் நிகழ்ச்சிகளும் நமக்கு உணத்துகிறது.

காளி
செய்தி ஆதாரம்: த வயர்

காவிகளின் கற்பனைகளை பொடியாக்கிய, கர்நாடக உழைக்கும் மக்கள்!

ந்து ராஷ்டிரத்தின் தென்னிந்திய நுழைவாயிலாக கர்நாடகத்தை பிடித்துவிட்டோம் என்றும் அடுத்து கேரளா, தெலுங்கானா, தமிழ்நாடு என ஒவ்வொரு மாநிலங்களாக ஆட்சியைக் கைப்பற்றுவோம் என்றும் கொக்கரித்துக் கொண்டிருந்த காவி பாசிஸ்டுகளின் முகத்தில் கரியை அள்ளிப் பூசியுள்ளார்கள் கர்நாடக உழைக்கும் மக்கள்.

பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸ்தான் ஆட்சியைக் கைப்பற்றும் என்று குறிப்பிட்டாலும், தேர்தல் நெருங்க நெருங்க “கர்நாடகத் தேர்தல் முடிவுகளை யாரும் கணிக்க முடியாது”, “காங்கிரஸ் வென்றாலும் பெரும்பான்மை பெறுவது சந்தேகமே” என்று திட்டமிட்டே பாசிஸ்டுகளுக்கு சாதகமாக பிரச்சாரம் செய்தன மைய ஊடகங்கள்.

அனைத்து கருத்துருவாக்கங்களையும் மீறி, ஆட்சியமைக்கத் தேவையான 113 இடங்களைவிட 22 இடங்கள் கூடுதலாகப் பெற்று 135 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது காங்கிரஸ். சென்ற சட்டமன்றத் தேர்தலில் 104 இடங்களில் வென்ற பா.ஜ.க., அதைத் தக்கவைத்துக் கொள்ளக்கூட முடியாமல் 66 தொகுதிகளுக்கு சரிந்திருக்கிறது.

இது காங்கிரஸின் தேர்தல் வெற்றி என்ற வரம்பைத் தாண்டி, நாடு முழுக்கவும் உள்ள ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க எதிர்ப்புணர்வு கொண்ட மக்கள், தங்களின் வெற்றியாகக் கொண்டாடித் தீர்த்து வருகிறார்கள்.

படிக்க : கர்நாடகா : குடகில் ஆயுதப் பயிற்சி அளிக்கும் பஜ்ரங் தள் !

குறிப்பாக, தமிழ்நாடு, கேரளா போன்ற தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் “தெற்கு பா.ஜ.க.வை நிராகரித்துவிட்டது” (The South Rejects BJP), “பா.ஜ.க அல்லாத தென்னிந்தியா” (BJPmukthsouthindia) போன்ற முழங்கங்களை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். உண்மையில் குஜராத், உ.பி போன்ற மாநிலமல்ல கர்நாடகா, “இது வேறு” என்று பாசிஸ்டுகளுக்கு கர்நாடக உழைக்கும் மக்கள் வகுப்பெடுத்திருப்பதுதான் இந்த தேர்தல் முடிவுகளாகும்.

கர்நாடகத்திலும் கரைசேராத மோடி அலை!

மோர்பி பால விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியான பிறகும், “மோடி” என்ற பிம்பத்தை முன்னிறுத்தி குஜராத்தை பாசிஸ்டுகளால் மீண்டும் வெல்ல முடிந்தது. “நான் உருவாக்கிய குஜராத்” என்ற முழக்கம் எடுப்பட்டது. ஆனால், “கர்நாடகத்தில் மோடிக்கு மவுசு இல்லை; கர்நாடகா குஜராத்தும் இல்லை” என்று காட்டியிருக்கிறது இத்தேர்தல் முடிவுகள்.

காங்கிரஸ் முன்வைத்த “40 சதவிகிதம் சர்க்கார்”, “இரட்டை ஊழல் சர்க்கார்” போன்ற முழக்கங்களை எதிர்கொள்ள முடியாமல், முழுக்கமுழுக்க “மோடி” என்ற பிம்பத்தையும், “தேசியவாதம் – இந்துத்துவம்” என்ற ஆயுதங்களையும் கைக்கொண்டே பாசிச பா.ஜ.க தேர்தலை எதிர்கொண்டது. பா.ஜ.க.வின் தோல்வி இந்த ஆயுதங்களெல்லாம் கர்நாடகத்தில் வேலைக்கு ஆகவில்லை என்பதையே அம்பலமாக்கியிருக்கிறது.

“சாலை, குடிநீர் வடிகால் போன்ற வளர்ச்சித் திட்டங்கள் குறித்துப் பேசத்தேவையில்லை. இந்து – முஸ்லீம் பிரச்சினை குறித்தும், இந்து தர்மம் குறித்தும் பேசி தேர்தலைச் சந்திப்போம். ஒரு முஸ்லீம் வாக்குகூட எங்களுக்குத் தேவையில்லை” என்று வெளிப்படையாகவே அறிவித்தார் முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா. பா.ஜ.க.வின் இந்த தேர்தல் உத்திக்கு கை மேல் பலனாகத்தான் முடிவுகள் வெளியாகியுள்ளன.

‘பாரதப் பிரதமர்’ மோடியே பங்கேற்று பிரச்சாரம் செய்த 20 பேரணிகள், அமித்ஷா பங்கேற்ற 30 பேரணிகள், பா.ஜ.க.வின் மையத் தலைமை வழிகாட்டி நடத்தப்பட்ட 30,000 பொதுக்கூட்டங்கள் அத்தனையும் புஸ்வானம். “என்னை 92 முறை காங்கிரஸ் இழிவுபடுத்தியுள்ளது” என்றார் மோடி; 93-ஆவது முறையாக கர்நாடக மக்களும் காரித் துப்பியுள்ளார்கள்.

2014-ஆம் ஆண்டு தொடங்கி மோடி இதுவரை வளர்ச்சியின் முகமாகவே பாசிஸ்டுகளால் முன்னிறுத்தப்பட்டிருகிறார்; அமித்ஷா போன்றோர் வெளிப்படையாக முஸ்லீம் எதிர்ப்பு பிரச்சாரங்களில் ஈடுபட்டாலும் மோடி அவ்வாறு செய்வதில்லை. இந்த கர்நாடகத் தேர்தலில், மோடியின் பிரச்சாரங்களிலும் காவி நெடி தூக்கலாக வீசின.

“பஜ்ரங் தள் அமைப்பை தடைசெய்வோம்” என காங்கிரஸ் கொடுத்த வாக்குறுதியை விமர்சித்து, “ஆஞ்சநேயரையே அவமதித்துவிட்டார்கள், இந்த காங்கிரஸை தண்டிக்க வேண்டும்” என்றார் மோடி. மேடைக்கு மேடை “ஜெய் பஜ்ரங்பலி” என்று முழங்கினார்.

உத்தரப்பிரதேசத்தில் ராமனைப் போல, கர்நாடகத்தில் (பஜ்ரங்பலி) ஆஞ்சநேயரை முன்னிறுத்தும் இந்த முழக்கம் எடுபடும் என்று பலரும் கருதினார்கள். ஆனால், கர்நாடக மக்களோ “தாங்கள் வணங்கும் ஆஞ்சநேயர் வேறு, ஆர்.எஸ்.எஸ். வானரங்கள் வேறு” என்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்கள்.

“தி கேரளா ஸ்டோரி” படத்தை எல்லோரும் பார்க்க வேண்டும் என்றார் மோடி. ஆனால், அது தென்னிந்தியா முழக்க போனியாகமலே போனது.

வெத்து வேட்டாய்ப் போன சாதிவெறி – மதவெறிக் கணக்குகள்!

முஸ்லீம்களின் நான்கு சதவிகித இடஒதுக்கீட்டை ரத்துசெய்துவிட்டு, அதை லிங்காயத்துகளுக்கும் ஒக்கலிகர்களுக்கும் தலா இரண்டு சதவிகிதமாக பிரித்து வழங்கியது; எஸ்.சி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை 15-லிருந்து 17 சதவிகிதமாகவும், எஸ்.டி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை 3-லிருந்து 7 சதவிகிதமாகவும் உயர்த்தியது – போன்ற சாதிரீதியான முனைவாக்கமும் பெரிதாக எடுபடவில்லை. லிங்காயத்துகள் மத்தியில் ஓரளவு வாக்குவங்கியைப் பெற்றாலும், ஒக்கலிகர்கள் மத்தியிலோ, தாழ்த்தப்பட்டோர், பழங்குடி மக்கள் மத்தியிலோ பா.ஜ.க போட்ட கணக்குகள் தப்பாகின.

திப்பு சுல்தானைக் கொன்றது உரி கவுடா, நஞ்சே கவுடா ஆகிய ஒக்கலிகர் சமூகத்தைச் சேர்ந்த இந்து மன்னர்கள்தான் என்றும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் லிங்காயத்துக்களுக்கும் ஒக்கலிகர்களுக்கும் வழங்கப்பட்ட 2 சதவிகித இடஒதுக்கீட்டைப் பறித்து மீண்டும் முஸ்லீம்களுக்கே வழங்கிவிடுவார்கள் என்றும், பி.எஃப்.ஐ அமைப்பை மீண்டும் கொண்டுவந்துவிடுவார்கள் என்றும் பிரச்சாரம் செய்தனர் பா.ஜ.க.வினர்.

முஸ்லீம் எதிர்ப்பையும், சாதிவெறி – இந்துமதவெறியையும் ஒருசேர தூண்டிவிட்ட இதுபோன்ற பிரச்சாரங்கள் பா.ஜ.க.வின் சிறந்த உத்திகள் என்று கணிக்கப்பட்டன. ஆனால், ஆர்.எஸ்.எஸ் வலுவாக உள்ள கடலோர கர்நாடகா (Coastal Karnataka) மாவட்டங்களைத் தவிர வேறெங்கும் இது எடுபடவில்லை.

ஒக்கலிகர்கள் அதிகம் வசிக்கும் பழைய மைசூர் பகுதிகளில், காங்கிரஸ் வேட்பாளர்களே வெற்றிபெற்றனர். மும்பை கர்நாடகா மாவட்டங்களில், லிங்காயத்துகளின் ஒருபகுதி வாக்குகள் காங்கிரஸூக்கு சென்றுள்ளன. பா.ஜ.க.வின் கோட்டையாகக் கருதப்படும் குடகு மாவட்டங்களில் ஏறத்தாழ அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. தப்பிப் பிழைத்தது கடலோரக் கர்நாடகா மட்டும்தான்.

வர்க்கப் பிரச்சினைகளை எதிரொலித்த வாக்குகள்!

பெரும்பாலான கிராமப்புறப் பகுதிகளில் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. பா.ஜ.க.விற்கு நகர்ப்புறங்களில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. குறிப்பாக, யாரும் எதிர்ப்பார்க்காத வகையில், பெங்களூரு பகுதியில் பா.ஜ.க வெற்றிபெற்றிருக்கிறது. 2018-ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், அங்கு அதிக தொகுதிகளையும் கைப்பற்றியிருக்கிறது.

“40 சதவிகிதம் சர்க்கார்” என்ற பிரச்சாரம் கர்நாடகா முழுக்க ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், படித்த பிரிவினர் வாழும் பெங்களூரு போன்ற நகர்ப்புற மாவட்டங்களில் பா.ஜ.க வெற்றி பெற்றிருப்பதை பலராலும் புரிந்துகொள்ள முடியவில்லை. “பா.ஜ.க தனது பிரச்சாரங்களை நகர்ப்புறத்தில் வீச்சாக கொண்டுசேர்த்துள்ளது” என்ற பொதுவான காரணத்தைத் தாண்டி பெரும்பாலான கணிப்பாளர்களால் இதை விளக்க முடியவில்லை.

பா.ஜ.க.வின் இந்துத்துவ அரசியலுக்கோ, வளர்ச்சி குறித்த வாய்ச்சவடால் அரசியலுக்கோ எந்த மக்கள் பிரிவினர் பலியாகிறார்கள் என்பதை ஆராயாமல் இதற்கு விடை காண முடியாது. அதிலும் “லிங்காயத்துகள், ஒக்கலிகர்கள் வாக்குவங்கி” என்று சாதிரீதியாக மட்டுமே பார்த்தால் நிச்சயம் பா.ஜ.க.வின் தோல்வியைப் பரிசீலிக்க முடியாது.

கர்நாடகத் தேர்தல் சாதிய – மத ரீதியான பிரச்சினைகளைத் தாண்டி வர்க்கப் பிரச்சினைகளை எதிரொலித்திருக்கிறது என்பதை புரிந்துகொள்ளும்போது மட்டுமே பா.ஜ.க.வின் தோல்வியையும் காங்கிரஸின் வெற்றியையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

மிகப்பெரும் கார்ப்பரேட் ஊடகங்களின் கருத்துக்கணிப்புகளைவிட, கர்நாடக தேர்தல் முடிவுகளை மிகத் துல்லியமாக எடைபோட்டது ஓர் சிறிய கன்னட செய்தித்தளமான “ஈ-தினா” (eedina.com)வின் கருத்துக்கணிப்பாகும்.

படிக்க : கர்நாடக தேர்தல்: பாசிஸ்டுகளின் தோல்வி – நாம் இறுமாந்து இருக்க முடியுமா? || தோழர் மருது

ஏப்ரல் 26 மற்றும் 27 தேதிகளில் அது வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள், காங்கிரஸ் 132 முதல் 140 இடங்களைப் பெறும் என்றும், பா.ஜ.க. 57 முதல் 65 இடங்களைப் பெறும் என்றும், மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் 19-25 இடங்களுக்குள் பெறும் என்றும் கணித்திருந்தது. ஏறத்தாழ தற்போதைய முடிகளுக்கு நெருக்கமான கணிப்பாக இதுவொன்றுதான் இருக்கிறது.

“இக்கணிப்புகள் தொலைபேசி மூலம் நடத்தப்படாமல் நேருக்கு நேர் மக்களிடம் உரையாடுவதன் மூலம் பெறப்பட்டது” என்கிறார் ஈ-தினாவுக்கு வழிகாட்டியாக இருந்த யோகேந்திர யாதவ்.

மேலும், இக்கருத்துகணிப்பு மக்களின் வர்க்க நிலையை ஆராய்ந்ததன் அடிப்படையில் நடத்தபட்டதுதான் சிறப்புக்குரிய விசயம். அனைத்து சாதிகளிலும் உள்ள மக்கள் எந்த வகையான பொருளாதார நிலையில் உள்ளவர்கள் என்பதை இக்கருத்துக்கணிப்பு மிகத்தெளிவாக பதிவுசெய்தது. அது பல முக்கியமான அம்சங்களை வெளிக்காட்டியது.

அனைத்து சாதிகளிலும் மேட்டுக்குடிகள் மத்தியிலும் அதிக சம்பளம் பெறும் குடும்பத்தினர் மத்தியிலும் பா.ஜ.க.விற்கு பெரும்பளவு ஆதரவு இருப்பதையும், ஏழைகள், சொற்ப சம்பளம் பெற்று வாழ்க்கை நடத்தும் குடும்பங்களிடம் காங்கிரஸுக்கு அதிக ஆதரவு இருப்பதையும் ஈ தினாவின் கருத்துக்கணிப்புகள் வெளிப்படுத்தியது.

224 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 204 தொகுதிகளில் 41,169 பேரிடம் நேரில் சென்று பதிலைப் பெற்றதில், விவசாயத் தொழிலாளர் – அன்றாடங்காய்ச்சிகளில் 50 சதவிகிதம் பேர் காங்கிரஸூக்கும், 29 சதவிகிதம் பேர் பா.ஜ.க.வுக்கும் வாக்களிப்போவதாக கூறியுள்ளனர். வியாபாரிகள், சொந்தமாக தொழில் செய்பவர்களில் 43 சதவிகிதம் பேர் பா.ஜ.க.வையும் 30 சதவிதம் பேர் காங்கிரஸையும் ஆதரிக்கின்றனர். அதிக அளவும் ஊதியம் பெறுவோரில் குறைவானர்களே காங்கிரஸை ஆதரிக்கின்றனர். குறைந்த அளவு ஊதியம் பெறுவோரில் அதிகமானோர் காங்கிரஸை ஆதரித்துள்ளனர்.

பா.ஜ.க.வின் உறுதியான வாக்குவங்கிகளாகக் கருதப்படும் முற்படுத்தப்பட்ட சாதிகளிலேயே மிகவும் ஏழைகள் 34 சதவிகிதம் பேர் காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். லிங்காயத்துகளில் பணக்காரர்களில் 24 சதவிகிதமும் ஏழைகளில் 32 சதவிகிதமும் காங்கிரஸை ஆதரித்துள்ளனர். அதேநேரம், பட்டியல் இனத்தவர்களில் ஏழைகளில் 31 சதவிகிதம் காங்கிரஸையும், பணக்காரர்களில் 4 சதவிகிதம் பேர் பா.ஜக.வையும் ஆதரித்துள்ளனர்; முஸ்லீம்களில்கூட முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களில் 22 சதவிகிதம் பேர் பா.ஜ.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஈ-தினா கருத்துக்கணிப்பின் துல்லியம், அதன் ஆய்வு எந்த அளவுக்கு உண்மைக்கு நெருக்கமாக இருந்திருக்கிறது என்பதையே காட்டியுள்ளன. அந்த உண்மை, மதவெறியைத் தாண்டி வர்க்கப் பிரச்சினைகள்தான் தேர்தலில் எதிரொலித்துள்ளன என்பதையே காட்டுகின்றன.

தற்போது பா.ஜ.க தனது அடித்தளத்தை தக்கவைத்திருக்கும் கடலோரக் கர்நாடகத்தில்கூட நீண்டகாலமாக முஸ்லீம்களின் பொருளாதார வளர்ச்சியை, மேட்டுக்குடி, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த இந்துக்களுக்கு எதிராகக்காட்டி நீண்டகாலம் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் செயல்பட்டுவந்ததன் விளைவாக பா.ஜ.க வென்றிருக்கிறது.

அதேநேரம், ஹிஜாப் தடை, ஹலால் ஜிகாத், முஸ்லீம்களுக்கு இந்து கோயில்களை கூற்றி கடைவைக்க அனுமதி மறுப்பு போன்ற விவாகரங்களில் ஏழை – எளிய மக்களிடம் ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு எதிரான உணர்வே பிரதிபலித்தது என்பதை பல ஊடகங்களின் பேட்டிகளும் காட்டின.

திப்பு சுல்தானுக்கு எதிரான பிரச்சாரம், இடஒதுக்கீட்டுச் சலுகை அனைத்தையும் தாண்டி பழைய மைசூர் பகுதிகளில் ஒக்கலிகர்களின் ஓட்டுகள் காங்கிரஸுக்கு விழுந்ததற்கு காரணம், ஒக்கலிகர்களில் பெரும்பாலானவர்கள் விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள். “குஜராத்தின் அமுல் நிறுவனத்தை கர்நாடகத்தில் திணிப்பதன் மூலம் கர்நாடக பால் கூட்டுறவு நிறுவனமான நந்தினியை பா.ஜ.க அழிக்கிறது” என்ற காங்கிரஸின் பிரச்சாரமே ஒக்கலிகர்களின் காங்கிரஸ் ஆதரவுக்கு அடித்தளம்.

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மாதம் 10 கிலோ அரிசி, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை, மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு இலவச பேருந்துப் பயணம், வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு ரூ.3,000-ம், பட்டயதாரிகளுக்கு ரூ.1,500-ம் இரண்டு ஆண்டுகளுக்கு உதவித் தொகையாக கொடுப்பது போன்ற வாக்குறுதிகள் ஏழை எளிய மக்களை காங்கிரஸின் பக்கம் வென்றெடுத்தன. (இந்த வாக்குறுதிகளெல்லாம் காங்கிரஸ் தேர்தல் வியூக வகுப்பாளரான சுனில் என்பவரால் திட்டமிட்ட நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டன என்பது முக்கியமானது)

மாறாக, வறுமைகோட்டுக்கு கீழுள்ளவர்களுக்காக பா.ஜ.க அறிவித்த மூன்று இலவச எரிவாயு சிலிண்டர்கள் (யுகாதி, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு); தினமும் அரை நந்தினி பால், ஐந்து கிலோ சிறுதானியம் போன்றவை ஏழை மக்களால் புளுகு மூட்டைகளாகவே அணுகப்பட்டன. மாநிலத்தில் யூனிஃபார்ம் சிவில் சட்டம் அமல்படுத்தப்படும், பெண்களின் பாதுகாப்பிற்கு பெங்களூருவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய சிசிடிவி கேமராக்கள் வைக்கப்படும் போன்ற வாக்குறுதிகள் நகர்ப்புற வாக்களார்களை கவர்ந்துள்ளன.

தேர்தல் முடிவுகள் எதை வெளிப்படுத்துகின்றன?

பொருளாதார அம்சங்களின்றி, புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக மாநில கல்விக் கொள்கையை வடிவமைப்போம் என்ற வாக்குறுதி கன்னட மக்களின் இந்தி எதிர்ப்புணர்வையும், மேகேதாட்டு அணை கட்டும் வாக்குறுதி இனவெறியையும் தூண்டிவிட்டது அரசியல் ரீதியில் காங்கிரஸுக்கு வலுச்சேர்த்துள்ளது.

மேலும், “கர்நாடகத்தின் இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்த காங்கிரஸ் அனுமதிக்காது” என்று சோனியா காந்தி பேசிய விவாகரத்தில், “கர்நாடகம் என்ற ஒரு மாநிலத்திற்கு இறையாண்மை என்பதன் மூலம் காங்கிரஸ் பிரிவினைவாதம் பேசுகிறது” என்ற பா.ஜ.க.வின் பிரச்சாரம் பா.ஜ.க.வுக்கு எதிராகவே முடிந்துள்ளது. “ஒரே பாரதம்” என்ற காவிகளின் நிகழ்ச்சிநிரலுக்கு கர்நாடகம் பலியாகவில்லை என்பதன் நிரூபனங்களே இவை.

கர்நாடகத்தின் தேர்தல் வெற்றிகள், “மோடி என்ற பிம்பம், இந்துத்துவ அரசியல், இந்திய தேசியவாதம்” ஆகிய பா.ஜ.க.வின் அஸ்திரங்கள் பசுவளைய மாநிலங்களில் வேண்டுமானல் செல்லுபடியாகலாம், தென்னிந்தியாவில் செல்லுபடியாகாது என்பதை மட்டுமின்றி, வறுமை, வேலையின்மை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட மக்களின் வாழ்வாதரப் பிரச்சினைகள் நாளுக்கு முற்றிவருவதையும் வெடிக்கக் காத்திருக்கும் எரிமலை போல உழைக்கும் மக்கள் புழுங்கிவருவதையும் சேர்த்தே காட்டுகின்றன.

படிக்க : கர்நாடகா: பள்ளி வகுப்பறைகளில் காவி நிறம் அடிக்கும் பாஜக அரசு!

தேர்தலுக்காக இதுபோன்ற கவர்ச்சிவாத வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அள்ளி வீசினாலும், தனியார்மயம் – தாரளமயம் – உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகளை கைவிடாத காங்கிரஸ், நடைமுறையில் அதை அமலாக்குவது குதிரைக் கொம்பே. பேருக்காக சிலவற்றை அமலாக்கினாலும், வேறு பல துறைகளில் தீவிர மறுகாலனியாக்கத்தை அமல்படுத்தவே முற்படும். கொதித்துக் கொண்டிருக்கும் உழைக்கும் மக்கள் அப்போது காங்கிரஸுக்கு எதிராக திரளுவதும், அதை பா.ஜ.க. பயன்படுத்திக் கொள்வதும் நிச்சயம்.

இன்னொருபக்கம், தான் ஆட்சியில் இருந்ததைவிட இனிமேல்தான் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் தனது இந்துத்துவ நிகழ்ச்சிநிரலை தீவிரப்படுத்தும், மென்மையான இந்துத்துவப் போக்கைக் கடைபிடிக்கும் காங்கிரஸ், ‘இந்துக்களின் மனது புண்படாமல்’ அதை எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பதும் கேள்விக்குறி!

மறுகாலனியாக்கக் கொள்கைகளையும் இந்துத்துவ பாசிசத்தையும் வீழ்த்தும் பாதை தேர்தலுக்கு வெளியே வர்க்கப் போராட்டக்களத்திலும் மக்கள் எழுச்சியை உருவாக்குவதிலும் உள்ளது. கர்நாடக உழைக்கும் மக்களை அதை நோக்கி வழிநடத்திச் செல்ல வேண்டியது புரட்சிகர சக்திகளின் பொறுப்பாகும்.

ஆசிரியர் குழு
புதிய ஜனநாயகம்
14-05-2023

குகைகளில் தஞ்சம் அடையும் ஆப்கான் மக்கள் | படக்கட்டுரை

நெருக்கடியில் இருந்து இன்றும் மீளவில்லை ஆப்கான். விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்த அத்தியாவசிய பொருட்களின் விலை இன்னும் குறையவில்லை. இதனால், 2.83 கோடி மக்கள் அதாவது ஆப்கான் மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்ட மக்களில் 60 இலட்சம் பேர் நெருக்கடியின் அபாயகரமான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளும்தான்.

மத்திய ஆப்கானில் உள்ள மலைப் பிரதேசமான பாமியானில் ஆய்வினை நடத்தியுள்ள ஐ.நா.வின் அகதிகள் நிறுவனம், அங்கு குளிர்காலம் பல ஆண்டுகள் இல்லாத அளவு கடுமையாக நிலவுவதாக தெரிவித்துள்ளது. ஏற்கனவே வறுமையிலும் நெருக்கடியிலும் சிக்கித் தவித்துக் கொண்டிருப்பவர்களை இக்குளிர் மேலும் வாட்டியுள்ளது. கடும் குளிரில் இருந்து தப்பிக்க இருப்பிடம் இல்லாத பல குடும்பங்கள் குகைகளில் தஞ்சமடையும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இது குறித்து UNHCR வெளியிட்ட படங்கள்..

கடும் பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் தினசரி உணவு ரொட்டியும் தேநீரும்தான்.
வாடகை வீட்டிற்கு குடிபெயர முடியாததால், தனது மூன்று குழந்தைகளுடன் சிறு குகையில் தஞ்சம் அடைந்துள்ளார் ஃபாதீமா.
ஆப்கானின் மிகவும் குளிர்ச்சியான பாம்யானில், வாடகை வீட்டிற்கு செல்ல வழியில்லாமல், மக்கள் தஞ்சம் புகுந்திருக்கும் குகைகள்.
66 வயதான ஷய்மா பாம்யான் மாகாணத்தில் சிறு குகையில் வாழ்ந்து வருகிறார். கடுமையான நெருக்கடிக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு சிறு துணிக்கடை ஒன்றை நடத்திவந்தார். தாலிபான்களின் ஆட்சிக்கு வந்ததும் வியாபாரம் சரிந்தது, “மக்களிடம் வாங்குவதற்கு பணம் இல்லை” என்கிறார் ஷய்மா.
தனது நான்கு குழந்தைகளுக்கு மாவும் எண்ணெய்யும் வாங்கக்கூட பணம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் 27 வயதான விவசாயி ஜாவத், “எதிர்காலம் குறித்து சிறிதும் நம்பிக்கையில்லை” என்கிறார்.
நசீம் மற்றும் அவரது குடும்பம் பான்யானில் சிறு குகை ஒன்றில் வசித்து வருகின்றனர். கட்டட தொழிலாளியான நசீம், சில நாட்களாக வேலையில்லாமல் தனது குடும்பத்தினருக்கு அன்றாட உணவுக்கூட வழங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.

ஸ்வாதி
படக்கட்டுரை: அல்ஜஸீரா

அஸ்கர் அலி எஞ்சினியர்: மதவெறியை எதிர்த்த செயல் வீரர்!

அஸ்கர் அலி எஞ்சினியர் : மதவெறியை எதிர்த்து நின்ற மாமனிதர் ! – மீள்பதிவு

தீவிர மதவெறி எதிர்ப்பு செயல் வீரரும், ஆய்வாளரும், உறுதிமிக்க இசுலாமிய சீர்திருத்தவாதியுமான அஸ்கர் அலி எஞ்சினியர் மே 14, 2013 அன்று தனது 73-வது வயதில் இயற்கை எய்தினார்.

1980-களில் தீவிரம் பெற்ற பார்ப்பன இந்து மதவெறியையும் அதற்கு எதிர்வினையாக வலுப்பெற்ற இசுலாமிய மதவெறியையும் எதிர்த்துப் போராடிய அறிவுத் துறையினரில் எஞ்சினியர் மிகவும் முக்கியமானவர். இந்து மதவெறியை மட்டுமின்றி, இசுலாமிய மதவெறி, கடுங்கோட்பாட்டுவாதத்தை எதிர்ப்பதற்கும் அவரது எழுத்துகள் பெரிதும் பயன்பட்டன.

ஷியா இசுலாமின் ஒரு உட்பிரிவான தாவூதி போஹ்ரா சமூகத்தில் பிறந்தவர் அஸ்கர் அலி எஞ்சினியர். சையத்னா என்ற தலைமை மதகுருவின் சர்வாதிகாரத்திற்கு பெயர் போனது இந்த உட்பிரிவு. சையத்னா மொகியுத்தீன் என்ற தலைமை மதகுருவை வணங்க மறுத்து, தன் இளம் வயதிலேயே கலகத்தைத் தொடங்கியவர் அஸ்கர். 70-களில் சையத்னாவின் சர்வாதிகாரத்தை அம்பலப்படுத்தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டில் ஒரு கட்டுரை எழுதியதைத் தொடர்ந்து இவர் சமூக நீக்கம் செய்யப்பட்டு, சொந்த தாயைக் கூடப் பார்க்க முடியாமல் தடுக்கப்பட்டார். ஆறு முறை அஸ்கரின் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தினர் சையத்னாவின் கூலிப்படையினர். அவருடைய வீடும் அலுவலகமும் சூறையாடப்பட்டு தரை மட்டமாக்கப்பட்டது. ஆனால், அஸ்கர் அலி எஞ்சினியர் இறுதிவரை பணியவில்லை..

படிக்க : கர்நாடக தேர்தல்: பாசிஸ்டுகளின் தோல்வி – நாம் இறுமாந்து இருக்க முடியுமா? || தோழர் மருது

அஸ்கர் இறை நம்பிக்கையாளர். நாத்திகக் கோட்பாடு என்ற காரணத்தினால் மார்க்சியத்தை ஒதுக்கியதாகவும், பின்னர் மார்க்சியம் தன்னை வென்றெடுத்துவிட்டதாகவும் அவர் சொல்வாரென்று குறிப்பிடுகின்றனர் அவரது நண்பர்கள். “ஒடுக்கப்பட்டோரின் ஏக்கப் பெருமூச்சு, இதயமற்ற உலகத்தின் இதயம்” என்ற கோணத்தில் மதத்தின் பாத்திரத்தை முதன்மைப்படுத்தி மதிப்பிட்ட அஸ்கர், மத நிறுவனங்களின் பிடியிலிருந்து மதத்தை விடுவிக்க வேண்டுமெனக் கருதினார்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உருவான இசுலாமை, பிரபுக்குலத்தினர் தம் வர்க்க நலனுக்கேற்ப வளைத்ததையும், பெண்ணுரிமையைப் பறித்ததையும், துணைக்கண்டத்தில் அஷ்ரப், அஜ்லப் என்ற மேல்சாதி – கீழ்சாதி பிரிவினை பேணப்பட்டதையும் அவர் அம்பலப்படுத்துகிறார். காலனியாதிக்க எதிர்ப்பிலும் கூட, ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த ஏழை முசுலீம்களும் உலமாக்களும்தான் முன் நின்றனரேயன்றி, மேட்டுக்குடி முஸ்லிம்கள் அல்ல என்பதையும் தனது ஆய்வுகளில் ஆதாரபூர்வமாக அவர் விளக்குகிறார்.

1980-களில் ஷா பானு வழக்கில், குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி அந்த மூதாட்டிக்கு ஜீவனாம்சம் வழங்கப்பட்டதை எதிர்த்தும், முஸ்லிம் பெண்களின் மணவிலக்கு வழக்குகள் ஷரியத்தின்படி மட்டுமே தீர்ப்பளிக்கப்பட வேண்டும் என்றும் இசுலாமிய மதவாதிகள் எழுப்பிய கோரிக்கையை எதிர்ப்பதில் அஸ்கர் முன்னணியில் நின்றார். இந்தப் போராட்டம் இந்து மதவெறி சக்திகளை வளர்த்து விடுவதற்குத்தான் உதவும் என்று சாடினார்.

இந்து மதவெறியின் எதிர்விளைவாகத்தான் இசுலாமிய கடுங்கோட்பாட்டுவாதமும், தீவிரவாதமும் வலுப்பெற்றன என்ற போதிலும், சிறுபான்மை மதவெறியை அவர் மென்மையாக அணுகவில்லை. மதவெறியினால் ஏற்படும் பாதிப்புகளை, இந்து-முஸ்லிம் என்ற சட்டகத்திற்கு அப்பாற்பட்டு, உழைக்கும் வர்க்கத்துக்கு ஏற்படும் பாதிப்பு என்ற கோணத்திலேயே அவர் முதன்மையாக அணுகினார்.

“பதிலடி தரவேண்டும் என்று சில முஸ்லிம் இளைஞர்கள் கருதுவது நியாயமாகவே தெரிகிறது” என்று பிவாண்டி கலவரத்தைப் பார்த்த பின்னர் அஸ்கரிடம் தான் கூறியதாகவும், அதை அவர் கடுமையாக மறுத்ததாகவும் நினைவு கூர்கிறார், பத்திரிகையாளர் ஜோதி புன்வானி. 1993-இல் மும்பையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டிருந்த அச்சுறுத்தும் சூழலில், மும்பையின் குடிசைப் பகுதிகள் முழுவதிலும் அவர் முன்நின்று நடத்திய நல்லிணக்க பேரணியில் அஸ்கர் ஆற்றிய உரைகள் வர்க்க ஒற்றுமையைத்தான் வலியுறுத்துகின்றன.

மதக் கலவரங்கள் தொடர்பான அஸ்கரின் ஆய்வுகள் முன்மாதிரியானவை. ஜபல்பூர் கலவரத்தில் தொடங்கி வட இந்தியாவில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட கலவரங்களை அவர் நுணுக்கமாக ஆய்வு செய்திருக்கிறார். ஒவ்வொரு பிரச்சினையிலும் என்ன விதமான வர்க்க முரண்பாடுகள் அல்லது சமூக பொருளாதாரக் காரணிகள் எப்படி மத முரண்பாடுகளாகத் திரிக்கப்பட்டன என்பதை அவர் நிறுவுகிறார்.

“நாலு பெண்டாட்டி, முஸ்லிம் வாக்கு வங்கி, மதமாற்றம்” என்பன போன்ற இந்துத்துவ சக்திகள் பரப்பிய இசுலாமிய எதிர்ப்பு புனைவுகளுக்கும் அரை உண்மைகளுக்கும் சராசரி இந்துக்கள் எனப்படுவோர் பலியாகியிருந்த சூழலில், அவற்றை முறியடிப்பதற்கு நமக்கு ஆதாரங்கள் தேவைப்பட்டன. அவற்றை அரும்பாடுபட்டுத் திரட்டி நம் கையில் ஆயுதமாக வழங்கியவர்களில் முக்கியமானவர் அஸ்கர்.

இந்தியாவின் வரலாற்றையே இந்து-முஸ்லிம் மோதலின் வரலாறாகத் திரித்துக் காட்டும் சதியை இந்துத்துவ சக்திகள் மிகத் தீவிரமாக அரங்கேற்றி வந்த காலத்தில், ஆதாரபூர்வமாக அவற்றை மறுக்கும் எழுத்துகள் அஸ்கரிடமிருந்து வந்தன. மன்னர்களை அவர்களுடைய வர்க்க நலன்தான் இயக்கியதேயன்றி, மதமல்ல என்பதை அவர் வரலாற்று ஆதாரங்களுடன் நிறுவினார். மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு உழைக்கும் வர்க்கத்திடம் நிலவி வந்த ஒற்றுமையின் சான்றாக, சுஃபி மற்றும் வட இந்திய பக்தி இயக்க மரபுகளிடையே காணப்படும் ஒற்றுமையை அவர் வரலாற்றிலிருந்து எடுத்துக் காட்டினார்.

இசுலாமிய சீர்திருத்தவாதியாக இருந்தபோதிலும், எப்போதும் அவர் மதச்சார்பற்றவர்களுடன்தான் இணைந்து நின்றார். இறந்த பின்னரும் முற்போக்காளர்கள் துயிலும் இடுகாட்டில் தன்னைப் புதைக்க வேண்டும் என்றே அவர் விரும்பினார். “கொள்கையைக் கடைப்பிடிப்பதில் பாறை போன்ற உறுதியைக் கொண்டவர்” என்று தனது தந்தையை நினைவு கூர்கிறார் அவரது மகன் இர்பான் எஞ்சினியர்.

படிக்க : எங்கும் இந்துராஷ்டிர பிரச்சாரம் எதிலும் இஸ்லாமிய மதவெறி பிரச்சாரம்

எனினும், மதவெறியை எதிர்த்த போராட்டத்திற்கே தனது வாழ்நாளை அர்ப்பணித்த அந்த மனிதர், குஜராத் படுகொலை பற்றிய செய்திகளை மட்டும் கேட்க விரும்பவில்லை என்று கூறுகிறார் அவரது நண்பர் ஜாகிர் ஜன்முகமது. “அதில் அவருக்கு அக்கறையில்லை என்பதல்ல; எல்லா மனிதர்களுமே அடிப்படையில் நல்லவர்கள்தான் என்பது அஸ்கர் கொண்டிருந்த நம்பிக்கை. அவருடைய அந்த நம்பிக்கையைத் தகர்க்கும் விதத்தில் இருந்தன குஜராத்திலிருந்து வந்த செய்திகள்” என்று குறிப்பிடுகிறார் ஜன்முகமது

மனிதர்கள் அடிப்படையில் நல்லவர்கள் என்பன போன்ற அரூபமான நம்பிக்கைகள் தகர்வது தவிர்க்கவியலாததுதான். இருப்பினும், “பழகிய அண்டை வீட்டாரே கொலை செய்வது, வீடு புகுந்து சூறையாடுவது, கடைகளை அபகரித்துக் கொண்டு அகதிகளாகத் துரத்தியடிப்பது, கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து சிசுவைக் கொல்வது” போன்ற குஜராத் இனப்படுகொலையின் கொடூரங்களைக் கேட்டு அஸ்கரின் நல்லெண்ணமிக்க இதயம் நடுங்கியிருக்கக் கூடும்.

தனது ஆதாரமான நம்பிக்கை நழுவியதால் அவரை அழுத்தியிருக்கக் கூடிய துயரத்தின் சுமை, பொருள் முதல்வாதிகளாகிய நம் மீதும் இறங்குகிறது. அவரது மறைவு தோற்றுவிக்கும் துயரத்தைக் காட்டிலும் இது கனமானது.

சூரியன்
புதிய ஜனநாயகம் – ஜூன் 2013

கர்நாடக தேர்தல்: பாசிஸ்டுகளின் தோல்வி – நாம் இறுமாந்து இருக்க முடியுமா? || தோழர் மருது

மீண்டும் எம்.எல்.ஏ.க்கள் கட்சித் தாவினால் இன்றைக்கு மகிழ்ச்சி அடைபவர்கள் நாளைக்கு வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுவார்கள். கட்சி மாறி பிஜேபிக்கு சென்றால் நம்முடைய எதிர்காலம் என்ன ஆகும் என்று ஒவ்வொரு பிழைப்பு வாதியும் சிந்திக்கும் தருணம் எப்போது வரும் ? பாஜக பாசிஸ்டுகளுக்கு எதிரான அரசியலை மக்கள் ஏற்றுக் கொள்ளும் போது தான்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!