Tuesday, June 23, 2026
முகப்பு பதிவு பக்கம் 115

பேருந்து நிழற்குடையும் இந்திய ஜனநாயகமும்

சில மீட்டர்களுக்கு மேல் நம்மால் எதையும் பார்க்கமுடியாது என்ற அளவிற்கு மழை கொட்டிக் தீர்க்கிறது. அந்த கனமழையிலிருந்து பாதுகாப்பாக ஒதுக்க ஒரு நிழற்குடை கூட அங்கே இல்லை. கையில் யாரிடமும் குடையில்லை. மாணவர்களும் ஆசிரியர்களும் மழையில் நனைந்துகொண்டு நிற்கிறார்கள். எப்போது வேண்டுமானாலும் மின்னல் தாக்கலாம் என்ற மிக ஆபத்தான முறையில் மரத்தடியில் நிற்கிறார்கள். இந்த அவல நிகழ்வு கடந்த ஆகஸ்ட் மாதம், விருதுநகர் மாவட்டத்தின் சிவலிங்கபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தான் நடந்தது.

இந்த பள்ளியில் சுற்றுப்புற 10 கிராமங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துவருகிறார்கள். சிவலிங்கபுரம் கிராமத்தின் சாலையில் இருந்து சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் இந்த அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. சாலையில் இருந்து பள்ளிக்கு செல்ல ஒழுங்கான சாலை வசதியும் இல்லை. மாணவர்கள் மழைக்காலத்தில் பாதுகாப்பாக நிற்க, வெயில் காலத்தில் இளைப்பாற நிழற்குடையும் இல்லை. அதனால் சாலையோரத்தில் ஒரு நிழற்குடை அமைத்துத்தரச் சொல்லி சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாக கோரிக்கை வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அந்த பள்ளி மாணவர்கள் பயன்படுத்தி வந்த பழைய நிழற்குடையை நீர்நிலை ஆக்கிரமிப்பு என்று சொல்லி ஏழாண்டுகளுக்கு முன்னால் இடித்துவிட்டார்கள். ஆனால் புதிய நிழற்குடையை கட்ட அருகில் உள்ள நிலத்தின் பட்டாதாரர்கள் சம்மதிக்கவில்லை. இந்த பிரச்சினையை தீர்க்கச் சொல்லி கடந்த இரண்டு ஆண்டுகளாக வட்டார வளர்ச்சி அலுவலர், தாசில்தார், ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், நீதிமன்றம் என அனைவரின் கதவுகளையும் தட்டிவிட்டார்கள், ஊர் மக்கள். ஆனால் இந்த அரசியல்வாதிகளுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் கடைக்கோடி கிராமங்களில் தங்களது புத்தகப்பைகளில் கனவுகளை சுமந்துத் திரியும் மாணவர்களின் அவலநிலை புரிவதில்லை.


படிக்க: முனகுவது கூட இனி தேசத்துரோகம்!


2012-ஆம் ஆண்டு தாம்பரம் அருகே தனியார் பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டை வழியே விழுந்து 7 வயது சிறுமி ஒருவர் இறந்தார். இந்த விபத்திற்கு பிறகுதான் உயர்நீதிமன்றம் பள்ளி வாகனங்களை முறைப்படுத்த உரிய விதிமுறைகளை உருவாக்குமாறு தமிழக அரசிற்கு உத்தரவிட்டது. ஆனால், அது சம்பந்தமான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 8 பேரையும் இந்த ஆண்டு (2023) செங்கல்பட்டு நீதிமன்றம் விடுதலை செய்தது.

ஒரு உயிர் போனால்தான் இந்த அதிகார வர்க்கத்திற்கு உரைக்குமா? ஒரு குறிப்பிட்ட விசயத்தில் அதிகார வர்க்கத்தின் மனசாட்சியை உடைத்துப்பார்க்க ஒவ்வொரு முறையும் எளிய மக்களின் உயிர்கள் பலிகொடுக்கப்படவேண்டுமா?

ஒவ்வொரு அதிகாரியும் ஒருவரை மாற்றி ஒருவரை கைகாட்டுகிறார்கள். “அரசு அலுவலகங்களில் ஒரு கோப்பு ஒரு மேசையில் இருந்து மற்றொரு மேசைக்கு செல்லவே நீண்ட காலமாகும்” என்ற சொல்லாடல் இந்திய அதிகார வர்க்கத்தின் சிவப்பு நாடாத்தனத்தை (Red Tapism) சரியாகவே எடுத்துக்காட்டுகிறது.

கிராமப்புற மாணவர்களின் கல்வி என்பது பள்ளிக்கூடத்தின் உள்கட்டமைப்பையும், ஆசிரியர்களின் திறனையும் மட்டுமே சார்ந்திருக்கவில்லை. கூடுதலாக, வெவ்வேறு கிராமங்களில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவர்களின்‌ பயணத்திற்கான போக்குவரத்து வசதிகள், அவற்றின் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவற்றையும் சார்ந்து தான் இருக்கிறது. பள்ளிக்கு சென்று வர போதிய பேருந்து வசதி இல்லை, மாணவர்கள் நிற்பதற்கு பேருந்து நிழற்குடை இல்லை, நல்ல சாலை வசதி இல்லை என்பது போன்ற பிரச்சினைகள் கிராமப்புறங்களில் பொதுவான ஒன்றுதான் என்ற அலட்சியப்போக்கு இங்கே நிறைய நபர்களுக்கு உண்டு. ஆனால், எளிய மக்களின் ஒரு சிறு கோரிக்கையும் அவர்களின் மிக அடிப்படையான அவசியமான தேவைகளை பிரதிபலிக்கிறது என்பதை இந்த அதிகாரிகள் புரிந்துகொள்வதில்லை. ஏனெனில், இந்த அதிகாரிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல. மக்களுக்கு முற்றிலும் அந்நியமானவர்கள்.


படிக்க: தலைவிரித்தாடும் கார்ப்பரேட் உலகம்! அழிந்து கொண்டிருக்கும் மானுடம்!


ஒரு சிறு நிழற்குடைக்காக கோரிக்கை மனுக்களோடு அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படும் மக்கள் தங்களது சொந்த அனுபவத்தில் இருந்து இந்த அதிகார வர்க்கம் தங்களுக்கு எத்தனை அந்நியமானது என்பதை புரிந்துகொள்கிறார்கள். தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குறுதிகளும் தங்களால் தேர்ந்தெடுக்கப்படாத அதிகாரிகளின் சப்பைக்கட்டுகளும் ஒன்றுக்கொன்று பொருந்தாமல் இருப்பதை புரிந்துகொள்கிறார்கள். இத்தனை மனுக்களுக்கு பிறகும் அலைச்சலுக்கு பிறகும் தங்களது பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கு நிழற்குடை வரதாதது ஏன் என்ற மிகவும் எளிய கேள்வியை அந்த கிராமப்புற மக்கள் கேட்கிறார்கள்.

இந்திய ஆட்சியதிகாரம் மறந்தும்கூட ஜனநாயக இல்லாத ஒன்றாக இருக்கிறது என்பதுதான் இதற்கான பதில். ஜனநாயகம் என்பது தேர்தலுக்கு ஒருமுறை ஓட்டுப் போடுவது அல்ல. ஜனநாயகம் என்பது நம்மை நாமே ஒழுங்கமைத்துக் கொள்வதும், ஆட்சி செய்து கொள்வதும் தான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஒரு மக்கள் கூட்டத்தின் மிக அடிப்படையான தேவைகளையும், சமூக முன்னேற்றத்திற்கான தேவைகளையும் அந்த மக்களே திட்டமிட்டுக்கொள்வதும், அதனை நிறைவேற்றிக்கொள்ளும் அதிகாரம் உடையதாக இருப்பதும் தான் ஜனநாயகம்.

ஒரு குறிப்பிட்ட பகுதியின் மக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை திட்டமிட்டு நிறைவேற்றிக்கொள்ளவும், தூத்துக்குடி ஸ்டெர்லைட், டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டம், பரந்தூர் விமான நிலையம் போன்ற தங்களுக்கு வேண்டாத நாசகர திட்டங்களை நிராகரிக்கவும் அதிகாரம் படைத்ததாக இருக்கவேண்டும். இந்த வேர்மட்ட ஜனநாயகம் இல்லாத வரையில் ஒரு சிறிய நிழற்குடைக்காவும் சாலை வசதிக்காவும் வருடக்கணக்காக மக்கள் அலைக்கழிக்கப்படுவதை எந்நாளும் மாற்ற முடியாது.


சீனிச்சாமி



கோவை: சைதன்யா பள்ளியை அரசுடைமையாக்கு!

கோவை: ஸ்ரீசைதன்யா தனியார் பள்ளி மாணவிகளுக்கு பொறிக்கி ஆசிரியர்கள் பாலியல் தொல்லை! பள்ளியை உடனே கையகப்படுத்து!

ந்திய அளவில் ஸ்ரீ சைதன்யா கல்வி நிறுவனம் 500-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட பள்ளிகளை நடத்தி வருகிறது. அதன் தலைமையிடம் தெலுங்கானாவைச் சேர்ந்த ஹைதராபாத்தில் உள்ளது.

அதில் கோவை மாவட்டம் சின்னவேடம்பட்டி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சைதன்யா டெக்னோ தனியார் பள்ளியில் கடந்த ஆறு மாதங்களாக  மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது தற்போது அம்பலமாகியுள்ளது.

பாலியல் தொல்லை கொடுத்த உடற்கல்வி ஆசிரியர் முரளிதரன் (35) மற்றும் ஆசிரியராக உள்ள பள்ளி நிர்வாக அதிகாரி விஜயகுமார் ஆகியோர் மீது மாணவிகளும் பெற்றோர்களும் பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், மாணவிகளும் பெற்றோர்களும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அவசர உதவி மையம் எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளனர். மாவட்ட கலெக்டர், குழந்தை பாதுகாப்பு அதிகாரிகள், போலீசு அதிகாரிகள் விசாரணை நடத்திய பின் முரளிதரன் (35) மற்றும் விஜயகுமார் ஆகிய இருவரையும் போக்சோவில் கைது செய்துள்ளனர். மாணவிகளின் புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் பள்ளி துணை முதல்வர் அஞ்சிபாபுவும் (38) போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.


படிக்க: சின்மயா மிஷன் பள்ளி சாதி புத்தி – வன்கொடுமை சட்டம் பாயுமா? | மருது வீடியோ


மாணவிகளின் பெற்றோர் பள்ளி மாணவிகளிடம் விசாரித்தபோது இந்த இரண்டு ஆசிரியர்களும் மாணவிகளிடம் அத்துமீறி பேசுவது, தவறாக தொடுவது போன்ற செயலில் ஈடுப்பட்டது அம்பலமாகியுள்ளது.

காமவெறிப்பிடித்த இந்த பொறுக்கிகள் பத்து, பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இதனை வெளியே கூறினால் மாணவிகளின் பெற்றோரிடம் அவர்களைப் பற்றி தவறாகக் கூறி விடுவதாக மிரட்டியுள்ளனர்.

பள்ளி முதல்வர் கிளாடிஸ் டியானா அவர்களை தொடர்பு கொண்டபோது “Punishment கொடுத்ததற்கு இப்படி மாணவிகள் பொய் சொல்கிறாகள்” என்று கூறினார். “அப்படியென்றால் ஏன் இரு ஆசிரியர்கள் கைது கைது செய்யப்பட்டனர்” என்று கேட்டதற்கு அழைப்பைத் துண்டிதுவிட்டார். பெண் ஆசிரியர்களே மாணவிகள் மீதான பாலியல் தொல்லைக்கு உடந்தையாக இருப்பது இந்த சமூகத்தின் அவலத்தைக் காட்டுகிறது. சைதன்யா பள்ளி நிர்வாகம் ஆறு மாதத்திற்கும் மேலாக மாணவிகள் மீதான பாலியல் தொல்லைக்கு உடந்தையாக இருந்துள்ளது. இதே தான் சின்மயா பள்ளியிலும் நடைபெற்றது. அங்கு பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் மாணவி தற்கொலை செய்துக்கொண்டார்.

***

தனியார் பள்ளியில் தான் கட்டுப்பாடு, ஒழுக்கநெறி கற்றுக்கொடுக்கப்படுவதாகவும் சரியான கல்வி கொடுக்கப்படுவதாகவும் ஒரு பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், தனியார் பள்ளி எனும் கல்வி சிறைச்சாலையால் தான் பல மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொள்வது இதுநாள்வரை அரங்கேறி வருகிறது.

சின்மயா (மிதுன் சக்ரவர்த்தி), கலாச்சேத்ரா (ஹரி பத்மநாதன்), பத்ம சேசாத்ரி(சிவசங்கர் பாபா) என தனியார் பள்ளிகளின் பாலியல் சுரண்டல் தொடர்ந்து கொண்டே தான் போகிறது. கார்ப்பரேட் கும்பல்களும், சாமியார் கும்பல்களும் தனியார் கல்வி நிறுவனங்களை நடத்தி மாணவிகள் மீது பாலியல் சுரண்டலை அரங்கேற்றி வருகின்றனர். இந்த கும்பலை பாதுகாக்கும் வேலையை அதிகார வர்க்கம் திறம்பட செய்து வருகிறது. தனியார் பள்ளிகளை அரசு கையகப்படுத்தாமல் மாணவிகளுக்கெதிரான பாலியல் சுரண்டல் ஒழியப்போவதில்லை.

தொடர்ந்து தனியார் பள்ளிகள் மீது பல குற்றசாட்டுகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால், அதற்கு இன்னும் முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை. தனியார் பள்ளிகளை காப்பாற்றுவதுதான் அரசின் கொள்கையாகவும், கடமையாகவும் இருக்கும் போது இவையாவும் சாத்தியமில்லை. தனியார் பள்ளிகளை அரசுடைமையாக்குவது மட்டுமே ஒரே தீர்வு.

ஆறு மாதத்திற்கும் மேலாக மாணவிகளுக்கு பாலியல் தொல்லை!
உடந்தையாக இருந்த பள்ளி நிர்வாகத்தை மக்கள் அதிகாரம் கண்டிக்கிறது!
ஸ்ரீ சைதன்யா பள்ளியை உடனே அரசு கையகப்படுத்த வேண்டும்!


மக்கள் அதிகாரம்
கோவை மண்டலம்
94889 02202



முனகுவது கூட இனி தேசத்துரோகம்!

அருந்ததிராய், சௌகத் உசேன் மீது வழக்குப்பதிவு!
இனி முனகுவது கூட தேசத்துரோகமாக கருதப்படலாம்!

தைத் தின்றால் பித்தம் தெளியும் என்பதைப் போல யார் மீதெல்லாம் வழக்கு பதிந்தால் மாற்றுக் கருத்துக்களை ஒழிக்க முடியும் என்று வெறி கொண்டு அலைகிறது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பல்.

தேர்தல் நெருங்க நெருங்க இந்து ராஷ்டிர கனவின் மீது யாரெல்லாம் கல்லெறிவார்கள் என்று எதிர்பார்த்து, எதிர்பார்த்து அவர்களை எல்லாம் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக அடக்கியும் ஒடுக்கியும் வருகிறது மோடி அரசு. அதற்கு கடந்த ஒன்பதரை ஆண்டு கால பாசிச மோடி அரசே சாட்சி.

2010-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், சுதந்திரம்; அது மட்டுமே ஒரே வழி (AZADI ; the only way) என்ற தலைப்பிலான கருத்தரங்கம் டெல்லியில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசியதற்காக எழுத்தாளர் அருந்ததிராய் மற்றும் காஷ்மீர் மத்திய பல்கலைக்கழகத்தின் மேனாள் பேராசிரியர் சேக் சவுகத் உசேன் ஆகியோர் மீது ஏறத்தாழ 13 ஆண்டுகள் கழித்து இப்போது வழக்கு பதிவு செய்ய டெல்லியின் துணைநிலை ஆளுநர் அனுமதி அளித்திருக்கிறார்.

குஜராத் கலவரத்தை முன் நின்று நடத்தியவர் பிரதமராகவும் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடையவர் உள்துறை அமைச்சராக இருக்க கூடிய இந்த ஜனநாயக நாட்டில் தான் அருந்ததி ராய் மற்றும் சவுகத் உசேன் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153 A வகுப்பு விரோதத் தூண்டுதல், 153 B தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரான பேச்சு, 505 வகுப்பு அல்லது சமூகத்துக்கு எதிராக குற்றம் செய்யத் தூண்டும் உட்கருத்துடன் பேசுவது ஆகிய பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.


படிக்க: பீமா கோரேகான் பொய் வழக்கின் ஐந்து ஆண்டுகள் நிறைவு!


இந்திய அரசியலமைப்பின் 19(1) பிரிவானது குடிமக்களுக்கு தங்களின் உணர்வுகளை பேசவும் வெளிப்படுத்தவும் உரிமையை வழங்குகிறது. பாசிச மோடியின் ஆட்சிக்காலத்தில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிஸ்டுகளுக்கு எதிராகப் பேசுவதற்கான அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்டு எப்போது வேண்டுமானாலும் மரணமும் வழக்குகளும் வரலாம் என்ற நிலை வந்து விட்டதையே இச்சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.

13 ஆண்டுகளுக்குப் பின் ஏன் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதே மையமான கேள்வியாகும்.

2024-இல் எப்படியாவது வென்று பாசிச கனவான இந்துராஷ்டிரம் அமைக்க வேண்டும், அதை எதிர்ப்போரை எல்லாம் இப்போதே ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதே அதற்கான பதில்.

இது போலத்தான் பீமா கோரேகான் வழக்கில் மடிக்கணினி, செல்பேசியை ஹேக் செய்து தகவல்கள் பொய்யாக சொருகப்பட்டது கண்டறியப்பட்டு அம்பலமான பிறக்கும் கூட அவ் வழக்கில் பலர் இன்னும் சிறையில் இருக்கின்றார்கள். நடுக்குவாத நோயால் பாதிக்கப்பட்டு உறிஞ்சி குழல் கேட்டு செத்துப் போனார் பாதிரியார் ஸ்டேன் சாமி.

சுதா பரத்வாஜ், ஆனந்த் தெல்தும்டே, வரவர ராவ் என சிலர் நீண்ட நெடிய ஒரு சட்டப் போராட்டத்திற்கு பிறகு பிணையில் வந்திருந்தாலும் நோய்த் தொற்று காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டு சாகாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட எடுத்துக்காட்டுகள் மூலம் மாற்றுக் கருத்துக்களை ஒழித்து விடலாம் என கனவு காண்கிறது மோடி – அமித்ஷா பாசிச கும்பல்.

பீமா கோரேகான் முதல் சுற்று என்றால் இப்போது இரண்டாவது சுற்று தொடங்கியிருக்கிறது. சுற்றுகளின் எண்ணிக்கை அதிகம் ஆகலாம். கைதுகளின் எண்ணிக்கை ஒருபோதும் குறையப் போவதில்லை..

முன் தீர்ப்புகளின் அடிப்படையில் நீதிமன்றங்களும் அரசும் செயல்படுவது வழக்கம். பல் வந்த் சிங் எதிர் பஞ்சாப் மாநில அரசு என்ற வழக்கில் காலிஸ்தான் ஜிந்தாபாத் என்று முழக்கமிட்ட ஒருவர் மீது தேசத்துரோக சட்டம் பதியப்பட்டது – இந்த வழக்கின் சாரம்சம். வன்முறை நடவடிக்கைகள் ஏதுமில்லாத முழக்கமிடுதல் என்பது ராஜ துரோக நடவடிக்கை அல்ல என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறது உச்ச நீதிமன்றம்.


படிக்க: பீமா கொரேகான்: ஹேக்கிங் செய்யப்பட்ட ஸ்டான் சுவாமியின் கணினி!


மக்களுக்கு உரிமைகளை கொடுக்க வேண்டும் என்ற முன் தீர்ப்புகளின் அடிப்படையில் செயல்படுவதற்கு ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த அரசு அல்ல இது.

இந்து ராஷ்டிரத்தை அமைக்க வேண்டும் என்பதற்காக அனைத்து அரசு கட்டுமானங்களையும் மலைப்பாம்பு போல இறுக்கி, அடக்கி, நொறுக்கி கொண்டிருக்கிற மோடி அமித்ஷா கும்பலின் பாசிச ஆட்சி இது. எந்த சாட்சியும் எந்த சான்றாவணங்களும் இல்லாமல் தான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது, அனைத்து வகை சாட்சிகளும் ஆவணங்களும் இருந்த போதும் மோடியும் அமித்ஷாவும் தப்பித்துக் கொண்டனர். சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டது என்று பொய்யாகச் சொல்லி பிணையில் வெளிவந்த குண்டு வெடிப்பு குற்றவாளி பிரக்யாசிங் தாகூர் நாடாளுமன்ற உறுப்பினராகி இப்பொழுது நடனமாடிக் கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட இந்து ராஷ்டிரத்துக்கான முன் தீர்ப்புகளின் அடிப்படையில் தான் அருந்ததிராயின் மீதும் இப்போது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இனி முனகுவதும் கூட தேசத்துரோகமாக கருதப்படலாம், எச்சரிக்கை!


மருது



இஸ்ரேலை ஆதரிக்கும் இந்துத்துவ பாசிஸ்டுகள் | தோழர் மருது

இஸ்ரேலை ஆதரிக்கும் இந்துத்துவ பாசிஸ்டுகள் | தோழர் மருது

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!



உயர்நீதிமன்றத்தில் தமிழ்? | | கருத்தரங்கம் | பார்கவுன்சில் அரங்கம்

உயர்நீதிமன்றத்தில் தமிழ்? | | கருத்தரங்கம் | பார்கவுன்சில் அரங்கம்

வழக்குரைஞர் கு.ஞா.பகவத்சிங் | உயர்நீதிமன்றத்தில் தமிழ்? | கருத்தரங்கம் | பார்கவுன்சில் அரங்கம்

வழக்குரைஞர் கோ.பாவேந்தன் | உயர்நீதிமன்றத்தில் தமிழ்? | கருத்தரங்கம் | பார்கவுன்சில் அரங்கம்

வழக்குரைஞர் கி.உ.சேல் முருகன் | உயர்நீதிமன்றத்தில் தமிழ்? | கருத்தரங்கம் | பார்கவுன்சில் அரங்கம்

திரு.அ.முகமது ஜியாவுதீன் | உயர்நீதிமன்றத்தில் தமிழ்? | கருத்தரங்கம் | பார்கவுன்சில் அரங்கம்

திரு.என்.ஆர்.இளங்கோ | உயர்நீதிமன்றத்தில் தமிழ்? | கருத்தரங்கம் | பார்கவுன்சில் அரங்கம்

முனைவர் ஏ.மா.சுதர்சன் நாச்சியப்பன் | உயர்நீதிமன்றத்தில் தமிழ்? -கருத்தரங்கம் | பார்கவுன்சில் அரங்கம்

வழக்குரைஞர் கயல் | உயர்நீதிமன்றத்தில் தமிழ்? | கருத்தரங்கம் | பார்கவுன்சில் அரங்கம்

முனைவர் ம.முத்துவேலு | உயர்நீதிமன்றத்தில் தமிழ்? | கருத்தரங்கம் | பார்கவுன்சில் அரங்கம்

வழக்குரைஞர் பி.எஸ்.அமல்ராஜ் | உயர்நீதிமன்றத்தில் தமிழ்? | கருத்தரங்கம் | பார்கவுன்சில் அரங்கம்

வழக்குரைஞர் ஜி.மோகன கிருஷ்ணன் | உயர்நீதிமன்றத்தில் தமிழ்? | கருத்தரங்கம் | பார்கவுன்சில் அரங்கம்

வழக்குரைஞர் எம்.வேல்முருகன் | உயர்நீதிமன்றத்தில் தமிழ்? | கருத்தரங்கம் | பார்கவுன்சில் அரங்கம்

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!



உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்கு! | தோழர் மருது

தமிழ்நாடு உயர்நீதி மன்றம்னு பெயர் மாத்தணும் | தோழர் மருது

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!



இடைநிலை – பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டத்தை ஆதரிப்போம்!

ரசு ‘அனைவருக்கும் கல்வி’ என்று சொல்லிக்கொண்டே கல்வியை கொடுக்கும் ஆசிரியர்களுக்கான அடிப்படை உரிமைகளை மறுத்து வருகிறது. அதன் தவிர்க்க முடியாத வெளிப்பாடு தான் டிபிஐ அலுவலகத்தில் ஆசிரியர்கள் நடத்திய போராட்டம். கல்வி பயிலும் மாணவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல், போதிய ஆசிரியர்களை நியமித்தல், ஆசிரியர்களுக்கான நியாயமான ஊதியத்தை வழங்குதல் போன்றவற்றிலிருந்து அரசு படிப்படியாக வெளியேறத் தொடங்கி விட்டது.

“சம வேலைக்கு சம ஊதியம்” என்ற நியாயமான கோரிக்கைக்கு 14 ஆண்டுகளாக தொடர் போராட்டத்தை ஆசிரியர்கள் நடத்தியும் இன்று வரை தீர்வு எட்டப்படவில்லை. படித்தவர்களுக்கே இந்த நிலை என்றால், பாமர மக்களின் நிலையை எண்ணிப் பார்த்தால் இந்த அரசு கட்டமைப்பின் கோர முகம் வெளிப்படும்.

கடந்த 2009 மே மாதம் பணியில் சேர்ந்தவர்களுக்கும் ஜூன் ஒன்றாம் தேதி பணியில் சேர்ந்தவர்களுக்குமான ஊதிய வேறுபாடு என்பது தற்போதைய சூழலில் 15 ஆயிரம். 14 ஆண்டுகளாகப் போராடியும் இதனைக் களையாமல் அரசு வஞ்சித்து வருகிறது. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் போராடிய ஆசிரியர்களை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின் திமுக ஆட்சி அமைந்ததும் ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.

வாக்குறுதி வெற்றுறுதியாக தான் நீடிக்கிறது. தற்காலிக ஆசிரியர்களும் பகுதி நேர ஆசிரியர்களும் தங்களை நிரந்தரமாக்கக் கோரி நடத்தும் போராட்டத்தை அவர்களின் பொருளாதாரக் கோரிக்கை என்ற கண்ணோட்டத்தில் பார்ப்பதனால் இப் போராட்டத்தின் பின்னுள்ள கல்வி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளின் வீரியத்தை பலரும் உணரவில்லை.


படிக்க: ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் கைதுசெய்த தமிழ்நாடு அரசு!


தற்போதைய சூழலில் அரசு பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர் எண்ணிக்கை என்பது மிகவும் சொற்பமானது. பகுதி நேர மற்றும் தற்காலிக ஆசிரியர் கொண்டு மாணவர்களுக்கு கல்வியை கற்பிப்பதும் போதிய அனுபவம் இல்லாத ஆசிரியர்களை கொண்டு வழங்கப்படும் கல்வியும் முழு பயனை அடைய உதவாது. அரசினுடைய தற்காலிக மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் பணி என்பது அரசு பள்ளியின் மீது அரசின் அக்கறையற்ற செயல்பாடுகளையே வெளிப்படுத்துகிறது. ஒரு பக்கம் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க மறுப்பதும் நியமிக்கப்பட்டவர்களுக்கு சம ஊதியம் தர மறுப்பதும் மறுபக்கம் பள்ளி உட்கட்டமைப்புக்கு பள்ளி மேலாண்மை குழு வாயிலாக நிதி திரட்டி மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ஆலோசனைகளை அள்ளி வீசுவதும் கல்வி வழங்குவதிலிருந்து அரசு வெளியேறி வருவதையே குறிக்கிறது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அரசு வழங்கும் விலையில்லா பொருட்கள் அனைத்துமே தனது ஓட்டு சீட்டு அரசியலுக்காக ஏழை எளிய மக்களிடம் விதைக்கப்படும் விதை போன்றது. ஆளும் வர்க்கமும் அரசியல் கட்சிகளும் கல்விக்கான அடிப்படை கட்டமைப்புகளான ஆசிரியர் நியமனங்கள் உள்ளிட்டவற்றை புறக்கணித்துவிட்டு, விலையில்லா பொருட்கள் மூலம் வழங்கப்படும் சலுகைகளால் மட்டுமே கல்விக்கான முழு இலக்கை எட்ட முடியும் என்ற பிம்பத்தை ஏற்படுத்துகின்றன.

அரசு மக்களிடமிருந்து பெரும் வரிப்பணத்தில் கல்விக்கு ஏன் போதுமான நிதி ஒதுக்கப்படுவதில்லை? தனியார் பள்ளிகளில் உள்ள கட்டமைப்பை அரசு பள்ளிகளில் உருவாக்க முடியாத ஒரு சூழல் ஏன் நிலவுகிறது? பள்ளிக்கூடங்கள்தான் எதிர்கால ஆளுமைகளை உருவாக்கக் கூடியது. அப்படிப்பட்ட பள்ளிக்கூடங்களும் ஆசிரியர்களும் அரசாலும் ஆளும் வர்க்க்த்தாலும் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறார்கள்.

திமுக அரசின் சமத்துவம் சமூக நீதி என்ற பிரச்சாரமும் விளம்பரமும் வீச்சாக பரப்பப்பட்ட அளவுக்கு அதன் செயல்பாடுகள் இல்லை என்பதே ஆசிரியர் போராட்டம் உணர்த்தும் உண்மை.

ஆசிரியர்கள் போராட்டம் என்பது திமுக அரசு தங்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்ற அடிப்படையில் தான் முன்னெடுக்கப்படுகிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.


படிக்க: DPI வளாகத்தில் நடைபெற்ற ஆசிரியர்களின் தொடர் போராட்டம்! | வீடியோ


”இந்த அரசாவது நம் பிரச்சினையை தீர்க்கும்” என்று நம்பிய ஆசிரியர்களுக்கு, குழு அமைக்கிறோம் ஆய்வு செய்கிறோம் அறிக்கை வரட்டும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் என்று அரசு தரப்பில் கூறப்படுவதெல்லாம் வெறும் திசைத்திருப்பல். இதை எல்லாம் உணர்ந்த காரணத்தினால்தான், ஆசிரியர்கள் போராட்ட களத்தில் உறுதியோடு நின்றார்கள்.

திமுக அரசின் விளம்பர வாய்ஜாலங்கள் பலனளிக்கவில்லை என்பதால் ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து வெளியேற்றியுள்ளது. கைது செய்த ஆசிரியர்களை குழு குழுவாக பிரித்து பல சமுதாயக் கூடங்களில் அடைத்து வைத்துள்ள போலீசு, அங்கு அவர்களுக்கு போதிய அடிப்படை வசதிகளைக்கூட ஏற்பாடு செய்யவில்லை. மேலும், கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் போலீஸ் வாகனத்திலேயே ஒரு நாள் முழுவதும் அடைத்து வைக்கப்பட்டு மீண்டும் போராடக் கூடாது என்று மிரட்டப்படுகிறார்கள்.

சமூகத்திற்கான நாளைய தலைமுறையை உருவாக்கும் ஆசிரியர்கள் போராட்டத்திற்கு சமூகத்தில் பெரியளவிற்கான ஆதரவுக் குரல்கூட வரவில்லை என்பது மேலும் கொடுமையான ஒன்றாக உள்ளது. இன்று நாம் ஆசிரியர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக நிற்கவில்லை என்றால், நாளை அரசு கல்வியை வழுங்குவதை ஒட்டுமொத்தமாக கைவிடுவதைக் கேள்விக் கேட்க யாரும் இருக்க மாட்டார்கள்.


சௌந்தர்



ஆப்கானை உருக்குலைத்த நிலநடுக்கம் | படக்கட்டுரை

டந்த அக்டோபர் 7 சனிக்கிழமையன்று, மேற்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4000-ஐ கடந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அடுத்தடுத்த நிலநடுக்கங்கள், நிலச்சரிவுகள், சிகிச்சை அளிப்பதில் உள்ள சிக்கல்கள் காரணமாக பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. தொடர் நிலநடுக்கங்களால் 10,000-க்கும் மேற்பட்ட ஆப்கன் மக்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. 2000-க்கும் அதிகமான வீடுகள் தரைமட்டமாகியுள்ளன. இதனால் மக்கள் தெருக்களில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.

மேற்கு ஆப்கானிஸ்தானின் ஹெராட் மாகாணத்தின் ஜெண்டா ஜான் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களை தேடும் ஆண்கள்.
ஆப்கனில் உள்ள ஹெராட்டில், நிலநடுக்கத்தில் இடிந்த வீடுகளின் எச்சங்களிலிருந்து உறவினர்களின் உடல்கள் மற்றும் உடமைகளை தோண்டி எடுப்பதற்காக கூடிய ஆப்கானிய மக்கள்.
நிலநடுக்கத்திற்குப் பிறகு தனது வீட்டின் இடிபாடுகளுக்கு அடியில் காணாமல் போன தனது குழந்தையை தேடும் ஆப்கானியர்.
ஆப்கானிஸ்தானின் ஜிந்தாஜன் மாவட்டத்தின் சர்புலாண்ட் கிராமத்தில் நிலநடுக்கத்திற்கு பின்னர் சேதமடைந்த வீட்டில் அமர்ந்துள்ள ஆப்கானிஸ்தானியர்கள்.
நிலநடுக்கத்தில் இறந்த உறவினரை ஆப்கானியர் ஒருவர் அடக்கம் செய்யும் காட்சி.
பக்திகா மாகாணம் ஷரானாவில் உள்ள மருத்துவமனையில், தனது இரண்டு குழந்தைகளைத் தவிர மொத்த குடும்பத்தையும் இழந்த ஹாவா என்ற பெண்.
நிலநடுக்கத்தில் இறந்தவர்களை புதைப்பதற்காக தோண்டப்படும் நீண்ட குழிகள்.
நிலநடுக்கத்தில் வீடுகளை இழந்த ஒரு குடும்பத்தினர் வெளிப்புறத்தில் தீமூட்டி குளிர் காயும் காட்சி.
கெயான் மாவட்டத்தில் உள்ள அஸோர் கலாய் கிராமத்தில் வீடுகளை இழந்த மக்கள் தற்காலிக கூடாரங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் மாகாணத்தின் ஸ்பெரா மாவட்டத்தில் நிலநடுக்கத்தால் இடிந்த வீடுகளின் இடிபாடுகளின் மேல் அமர்ந்துள்ள குழந்தைகள்.


தலைவிரித்தாடும் கார்ப்பரேட் உலகம்! அழிந்து கொண்டிருக்கும் மானுடம்!

தலைவிரித்தாடும் கார்ப்பரேட் உலகம்!
அழிந்து கொண்டிருக்கும் மானுடம்!

★ ஜாதி, மதம், இனம் எனும் அடையாள அரசியல், போதை, இணையதளம், சினிமா எனும் வலைப்பின்னலில் உலக மக்களை அடைத்துக்கொண்டிருக்கிறது கார்ப்பரேட் உலகம்!

★ லாபவெறி பிடித்த மிகை உற்பத்தி, ஆடம்பர நுகர்வு வெறி கலாச்சாரம் மற்றொரு பக்கம் கோடிக்கணக்கான மக்கள் பட்டினியின் பிடியில் தள்ளப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

★ தீவிரமாகும் கார்ப்பரேட் சுரண்டலால் வயிற்றுப்பிழைப்புக்காக ஓடிக்கொண்டிருக்கிறார்கள் மக்கள்!

★ மக்களுக்கு கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, இருப்பிடம் இதற்கு உத்தரவாதம் தர வேண்டிய அரசுகள் கார்ப்பரேட்களின் பொம்மைகளாக மாறி அம்பலப்பட்டு கொண்டிருக்கின்றன

★ கார்ப்பரேட் லாபத்திற்கான உற்பத்தியால் கூண்டுக்குள் அடைபட்டிருக்கும் விலங்குகளை விட மிக மோசமான வாழ்நிலையை எதிர்கொள்கிறார்கள், மக்கள்!

★ கார்ப்பரேட் கடைவிரித்திருக்கும் நகர வாழ்க்கையானது பொருளாதார சிக்கலை தாண்டி மனநிலை சிக்கல்களையும் உருவாக்கி கொண்டிருக்கிறது!

★ பெரும்பான்மை மக்கள் அடையாள அரசியல், இணையதளம், சினிமா, டிவி, போதை என ஏதோ ஒரு சீரழிவுக்குள் மூழ்கடிக்கப்பட்டு நிதானமாக சிந்திக்க முடியாமல் வாழ்வை தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள்!

★ கார்ப்பரேட்கள் அவற்றின் பொம்மை அரசுகள் வழங்கும் கல்வி, மருத்துவம் ஆனது மக்கள்  எதிர்கொள்ளும் பிரச்சனைகளை  தீர்க்கும் அடிப்படைகளை வழங்கவில்லை!

★ இயற்கை வளச்சுரண்டல் அதனால் ஏற்படும் சுற்றுச் சூழல் சீர்கேடுகளால் பாதிக்கப்படுவது மக்கள் தானே அன்றி கார்ப்பரேட்களோ அதிகாரவர்க்கத்தினரோ அல்ல!

★ கார்ப்பரேட் உடைமை வர்க்கத்தின் பேராசையால் உலகம் இடையறாது போர்களை சந்தித்துக்கொண்டிருக்கிறது. அப்பாவி மக்கள் செத்து கொண்டிருக்கிறார்கள்!

★ கார்ப்பரேட் கொள்ளையர்களின் தீராத சுரண்டல் லாப வெறி சொத்துக்குவிப்பை தடுத்து நிறுத்தாமல் மக்களின் ஓட்டத்தை தடுக்க முடியாது!

கார்ப்பரேட்களின் உற்பத்தி முறையானது லாபத்தை அடிப்படையாக கொண்டது, மக்கள் நலனை அடிப்படையாக கொண்டது அல்ல என்பதை புரிந்துகொள்வதற்கு இனியும் ஆதாரங்கள் தேடிக்கொண்டு இருக்க வேண்டியதில்லை!

★ உலகமக்கள் மீது கார்ப்பரேட்கள் நடத்தி கொண்டிருக்கும் சுரண்டல் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்!

★ மனித குலம் சந்தித்து கொண்டிருக்கும் இந்த நெருக்கடிகளுக்கு காரணம் உடைமை வர்க்கம் நடத்தும் சுரண்டல் கொள்ளை தான் என்பதை மிகச் சரியாக மார்க்சியம் வரையறுத்துள்ளது!

★ மார்க்சியத்தின் அடிப்படையான உபரி மதிப்பு – உற்பத்தி முறை, இயக்கவியல் என்ற பூதக்கண்ணாடி வழியாக பிரச்சனைகளை பரிசீலிக்கும் இளைஞர் கூட்டத்தை திரட்ட வேண்டும்!

கார்ப்பரேட் கும்பல் நடத்திக் கொண்டிருக்கும் ஜனநாயகம், தேர்தல், சர்வாதிகார ஆட்சி முறை நாடகங்களை திரைகிழித்து அம்பலப்படுத்த வேண்டும்!

★ மக்களைக் காப்பாற்ற ஒன்றிணைவோம்..
கார்ப்பரேட் சுரண்டலுக்கு முடிவு கட்டுவோம்!


புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்கள்.
பதிவு எண்: 24/KRI
தொடர்புக்கு: 97880 11784



காசா மீதான இஸ்ரேலின் பயங்கரவாத தாக்குதல்: படக்கட்டுரை

டந்த அக்டோபர் 7-ஆம் தேதி அன்று இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் குழுவினர் 5000 ராக்கெட்டுகளை ஏவினர். அதனையடுத்து, இஸ்ரேல் காசா மீது மூர்க்கத்தனமான தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் அரசின் இந்த கொடூர தாக்குதல்களுக்கு மோடி அரசும் மேற்குலக நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்த தாக்குதல்களில், காசாவில் பல குழந்தைகள் உட்பட 1,354 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், 6,049 பேர் காயமடைந்துள்ளனர். பல பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். பாலஸ்தீனியர்களின் வழிபாட்டுத் தளங்கள் மீது திட்டமிட்ட தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.

ஹமாஸ் குழுவால் சிறைபிடிக்கப்பட்ட அனைவரையும் விடுவிக்கும் வரை காசாவிற்கு மின்சாரம், எரிபொருள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகள் எதுவும் வழங்கப்பட மாட்டாது என்று கொலைகார இஸ்ரேலிய அரசு தெரிவித்துள்ளது. இதன் விளைவாக காசா இருளில் மூழ்கியுள்ளது.

இந்நிலையில், காசாவிலிருந்து வெளியாகும் கீழ்க்கண்ட புகைப்படங்கள் காசாவில் வாழும் பாலஸ்தீனிய மக்களின் மோசமான நிலைமையையும் இஸ்ரேல் மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கும் ஏகாதிபத்தியங்களின் இரத்தவெறியையும் நமக்கு உணர்த்துகின்றன.

ஹமாஸ் காவல்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்த சிறுமியை காசா பகுதியில் உள்ள பெய்ட் லாஹியாவில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லும் காட்சி.
காசா நகரில் இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஒருவருக்கு துக்கம் அனுசரிக்கும் உறவினர்.
காசாவின் கான் யூனிஸில் இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஒரு குழந்தையை உறவினர் அடக்கம் செய்யும் காட்சி.
அக்டோபர் 10 அன்று இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து இடிந்த குடியிருப்பு கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து ஒரு இளம் பெண்ணை பாலஸ்தீனியர்கள் மீட்ட புகைப்படம்.

காசா நகரில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனை அருகே குண்டுகள் விழுந்ததால் அச்சத்தில் மிரண்டு ஓடும் குழந்தைகள்.
வீடுகளை விட்டு வெளியேறும் பாலஸ்தீனியர்கள்.
காசாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கும் பள்ளி ஒன்றில் வான்வழித் தாக்குதல்களின் சத்தத்தைக் கேட்டு வானத்தைப் பார்க்கும் பாலஸ்தீனிய குழந்தைகள்.
காசாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான எல்லைக்கு அருகில் நிலைகொண்டுள்ள இஸ்ரேலியப் படை.
இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதல்களால் தகர்க்கப்பட்டுள்ள காசா பகுதிகள்.


ஐ ஜாலி ஸ்கூலுக்கு போ.. போறோம் | கள அனுபவம்

இருளர் மக்களின் பிள்ளைகளின் விருப்பத்தை
நிறைவேற்றியதில் ஏற்பட்ட மகிழ்ச்சி

டந்த வாரம் எனது மகன் படிக்கும் அரசு பள்ளியின் ஆசிரியருக்கு “கயிறு” என்ற சிறுகதை வெளியீட்டை வழங்கினேன். அந்த கயிறு புத்தகம் சாதி ரீதியான பிரச்சினைகளை மையப்படுத்தியது எனவும் குறிப்பிட்டேன். அப்போது அந்த ஆசிரியர் சாதி ரீதியாக பின்தங்கியுள்ள குழந்தைகள் பள்ளிக்கு வருவதில்லை என குறிப்பிட்டு வேதனைப்பட்டார். ஆசிரியரின் வேதனையை உணர்ந்தது மட்டுமல்ல, என்னிடம் சொன்னால் ஏதாவது முயற்சி எடுப்பார்கள் என்ற நோக்கத்தில் தான் அவர் அதனை வெளிப்படுத்தினார்.

உடனடியாக எனது வீட்டின் அருகாமையில் வசிக்கும் இருளர்-பழங்குடி மக்களின் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வர முயற்சி செய்தேன். இரண்டு நாட்களாக அக்குடும்பத்துடன் பேசி, அவர்களின் வாழ்க்கை முறை, வறுமை, அறியாமை, ஏழ்மை ஆகியவற்றை கண்கூடாக பார்த்தபோது அக்குடும்பத்தின் நிலை என்னை நொடிந்து போகச் செய்தது. பள்ளிக்கு அழைத்து செல்ல ஆசிரியர்களோ அல்லது  இதர நபர்கள் எவர் வந்தாலும் அம்மாணவர்கள் மரத்தில் ஏறிக் கொள்வதும், அங்கிருந்து ஓடி ஒளிந்துக் கொள்வதும் தொடர்ந்து வந்தது.

செவ்வாய் அன்று காலையில், நான் எனது நண்பருடன் சென்ற பொழுதும் அதே நிலை தான் தொடர்ந்தது. பெற்றோர் எவரும் வீட்டில் இல்லை. மீண்டும் மாலை நேரத்தில் மாணவர்களை சந்திக்க சென்றோம். பள்ளி மேலாண்மை குழு தலைவரையும் அழைத்துச் சென்றேன். சிறுவர்களின் தந்தை, “அச்சிறுவர்கள் பள்ளிக்கு போக மறுக்கிறார்கள். நான் என்ன செய்வது? நான் என் பிழைப்பை பார்பேனா, இவனுங்க பின்னாடி அலைவேனா?” என அலுத்துக் கொண்டார். என்னை தொந்தரவு செய்யாதீர்கள் என்றார். நான் அவர்கள் நிலையை புரிந்து கொண்டேன்..

அப்போது அங்குள்ள சிறுவர்கள் மீண்டும் மரத்தில் ஏறிக் கொண்டார்கள். சாக்லேட், கடலை மிட்டாய் வைத்துக் கொண்டு சிறுவர்களை அழைத்து சிறுவர்களுக்கு  வழங்கினேன். அந்த சிறுவர்களிடம், “நீங்கள் படித்தால் பஸ் ஓட்டலாம், கார் ஓட்டலாம், பைக் ஓட்டலாம்..” என்று பேச்சை தொடங்கினேன். பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர்களின் தாய், தந்தை மற்றும் உறவினர்கள் அனைவர் முன்னிலையிலும் பேசினேன்.

“எங்களுக்கு இருப்பது போல் தான் கை, கால், கண், மூளை எல்லாம் உங்களுக்கும் இருக்கிறது. அப்படி இருக்கும் பொழுது நீங்கள் ஏன் வறுமையில் வாழ வேண்டும். உங்கள் பிள்ளைகள் எங்களைப் போல் வாழ வேண்டும் என்றால்  படிக்க வேண்டும். உங்களுக்கு கல்வி பயில தேவையான அனைத்து வசதிகளும் உள்ளது. பள்ளியிலே காலை உணவு  வழங்கப்படுகிறது. நீங்கள் வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பெறுவதற்கும் உங்கள் மூன்று மகன்களின் எதிர்காலமும் நல்லபடியாக அமைவதற்கும் வாருங்கால சந்ததியினரும் வறுமையிலிந்து விடுபடுவதற்கும் உங்கள் பிள்ளைகள் கல்வி பயில வேண்டும். உங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புங்கள்”  என்று அழுத்தமாக பேசினேன்.


படிக்க : இருளர்கள் மீது தொடரும் போலீசின் வெறியாட்டங்கள் !


மறுநாள் காலை, அப்பிள்ளைகள் பள்ளிக்கு தயாராகிவிட்டார்களா என பார்க்கச் சென்றேன். அப்போது தான் தெரிந்தது அந்த சிறுவர்களுக்கு உடுத்திக்கொள்ள உடைகள் கூட இல்லை. உடனே எனது மகனின் உடைகளை எடுத்து வந்து கொடுத்து அணிந்து கொண்டு வரச் சொன்னேன். அதன் பிறகு என் வீட்டில் உள்ள எனது மகனின் உடைகளையும் என் நண்பனின் வீட்டில் இருந்து சில உடைகளையும் பெற்று கொடுத்தேன். கூடுதலாக அச்சிறுகளுக்கு முடி வெட்டுவதற்கு அவர்கள் தாயிடம் 100 ரூபாய் கொடுத்து அப்பிள்ளைகளை பள்ளியில் இறக்கிவிட்டேன்.

எனது இருசக்கர வாகனத்தில் இருந்து இறங்கிய இரு சிறுவர்களில் ஒருவன் “ஐ  ஜாலி ஸ்கூலுக்கு போ.. போறோம்” என்று சொல்லி வண்டியில் இருந்து குதித்தான். இதோ அடுத்தநாள் பள்ளியில் மகிழ்ச்சியாக காலை உணவு அருந்தி கொண்டிருக்கிறார்கள்.. அந்தத் தாயும் அளவில்லா மகிழ்ச்சியில் எனக்கு நன்றி சொன்னார். இது நாள் வரை, பொதுவுடமை இயக்கத்தில் இணைந்த பிறகு எத்தனையோ உதவிகளை பலருக்கு செய்து வந்திருக்கின்றேன், இந்த சம்பவம் போன்று ஒரு மகிழ்ச்சி இல்லை…

சாதி அனைவரையும் சமமாக நடத்தாது. ஒடுக்கப்பட்ட மக்கள் சிந்தனை ரீதியாக தனக்கு படிப்பு வராது, தான் வறுமையில் வாழ்வது தலையெழுத்து, நம் பிள்ளைகள் படிக்காது என தங்களை தாங்களே தாழ்த்திக் கொண்டுள்ள மனநோய்க்கு காரணமான இந்த சனாதன, பார்ப்பனிய  சமூக கட்டமைப்பை உடைத்தெறிய களமிறங்குவோம். பார்ப்பனிய எதிர்ப்பு போராளிகளின் மரபை உயர்த்தி பிடிப்போம். இந்த கொடுங்கோன்மைக்கு முடிவு கட்ட பார்ப்பனிய எதிர்ப்பு மரபை உயர்த்தி பிடிப்போம். பார்ப்பனிய சிந்தனையை ஒழிக்க சாவித்திரிபாய், அம்பேத்கர், பெரியார் வழியில்  பயணிப்போம்.


சௌந்தர்



காவிரி உரிமைக்காக திருவாரூரில் கடை அடைப்பு போராட்டம் – மக்கள் அதிகாரம் பங்கேற்பு

காவிரி உரிமைக்காக திருவாரூரில் கடை அடைப்பு போராட்டம் – மக்கள் அதிகாரம் பங்கேற்பு

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

நெல்லை: தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் காஜா பீடி நிறுவனம்!

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட காஜா பீடி நிறுவனம் 1960-களில் நெல்லை மேலப்பாளையத்தில் தனது கிளையை தொடங்கியது. பீடி நிறுவனமாக தொடங்கிய இந்நிறுவனம் தற்போது பல்வேறு பொருட்களை தயாரிக்கும் நிறுவனமாக தன்னை வளர்த்துக் கொண்டுள்ளது. அதன் வளர்ச்சிக்கு தொழிலாளிகள் உழைப்பை உறிஞ்சியதே காரணம். இதற்கான உதாரணமே மேலப்பாளையத்தில் நடந்த பீடித் தொழிலாளர்கள் போராட்டம்!

மேலப்பாளையத்தில் பல குடும்பங்கள் பீடித் தொழிலை நம்பியயே உள்ளனர். குறிப்பாக பெண்கள். ஆனால் பீடி சுற்றும் பெண்களுக்கு சம்பளத்தை ஒழுங்காக வழங்காதது, நிறுவனத்தில் வேலை  செய்யும் தொழிலாளர்களின் பிஎஃப் பணத்தில் முறைகேடு செய்வது, விடுமுறை நாட்களிலும் வேலை வாங்குவது உள்ளிட்ட பல்வேறு விதமான சுரண்டல்களை காஜா பீடி நிறுவனம் தொடர்ந்து நிகழ்த்துவதை கண்டித்து பீடித் தொழிலாளர்கள், சிஐடியு தலைமையில் ஒன்று திரண்டு 10/11/23 அன்று நெல்லை மேலப்பாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

போரை உடனே நிறுத்து! பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறு! | தோழர் ஆ.கா.சிவா

போரை உடனே நிறுத்து! பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறு!

தோழர் ஆ.கா.சிவா,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
பு.ஜ.தொ.மு,(மாநில ஒருங்கிணைப்புக் குழு)

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

2400-க்கும் மேற்பட்டோரை பலி கொண்ட நிலநடுக்கப் பேரிடர்: நிரந்தரத் துயரில் ஆப்கன் மக்கள்

மேற்கு ஆப்கானிஸ்தானில் அக்டோபர் 7, சனிக்கிழமையன்று ஏற்பட்ட 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் இதுவரை பொதுமக்கள் 2400 பேர் வரை மரணமடைந்துள்ளனர். மேற்கு ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகரில் இருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள ஜிந்தஜான் என்ற பகுதியில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ச்சியாக ஏற்பட்ட எட்டு நில அதிர்வுகளில் அங்கு 20 கிராமங்கள் முற்றிலும்  அழிந்துவிட்டன.

பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் உள்ள பிரச்சினைகள் காரணமாக ஒவ்வொரு மணிநேரத்திற்கும் உயிரிழப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதாரத் தடைகளாலும், தலிபான்களின் பிற்போக்கு அராஜக ஆட்சியாலும் துயருற்றுள்ள ஆப்கன் மக்களுக்கு இந்தப் பேரிடர் கொடும் துயரத்தை கொண்டு வந்து சேர்த்துள்ளது.

படிக்க : உலகையே உலுக்கும் மொராக்கோ நிலநடுக்கம் | படக்கட்டுரை

கடந்த 2021-ல் தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு, அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆப்கனுக்கு அளித்துவந்த உதவிகளை ஈவிரக்கமின்றி நிறுத்திக் கொண்டது. குறிப்பாக ஆப்கன் மத்திய வங்கிக்குச் சொந்தமான 7 பில்லியன் டாலர் நிதியை முடக்கியது. இந்த நடவடிக்கைகளானது 20 ஆண்டுகால போரை விட கொடுமையான துயரத்தில் ஆப்கனை சிக்க வைத்தது. மற்ற சர்வதேச சேவை நிறுவனங்களின் உதவிகளும் அமெரிக்காவின் செல்வாக்கின் அடிப்படையில் வெகுவாக குறைக்கப்பட்டு விட்டன. உலக உணவுத் திட்டத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட நிதி உதவிகளும் குறைக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக பட்டினியால் பல்லாயிரக்கணக்கான குழந்தைள் மடிந்தனர். 50% மக்கள் பட்டினியாலும், 95% ஆப்கானியர்கள் போதிய உணவின்றி வாழும் நிலைமைக்கு தள்ளப்பட்டனர். பட்டினிச் சாவுகளிலிருந்து தப்பித்துக் கொள்ள சிறுநீரகத்தை விற்கும் நிலைமைக்கு ஆளாக்கப்பட்டனர்.

இந்தச் சூழ்நிலையில் நிலநடுக்கப் பேரிடரானது தற்போதைய ஆப்கன் மக்களின் உணவுத் தேவையில் மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இயற்கைப் பேரழிவைச் சமாளிக்கும் அளவிற்கு மீட்புக் கருவிகளும் தலிபான் அரசிடம் இல்லை. இது அதிக உயிரிழப்புகளுக்கு வகுக்கும் என சர்வதேச மீட்புக் குழு தெரிவித்துள்ளது.

ஏகாதிபத்தியங்களின் வேட்டைக்காடாக தொடர்ச்சியாக இருந்துவந்த நிலையில், சுயேட்சையான பொருளாதாரத்தை கட்டியமைத்துக் கொள்ளாத நிலையில்தான் ஆப்கான் உள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இடத்தில் இன்று ரசிய, சீன ஏகாதிபத்தியங்கள் தலிபான்களின்  ஆதரவோடு ஆப்கனை ஆதிக்கம் செய்யத் தொடங்கியுள்ளன.

படிக்க : ஆப்கான்: பெண்களை பொதுவாழ்க்கையில் இருந்து அகற்றும் தாலிபான்கள்!

ஆப்கன் சுயேச்சையான பொருளாதாரத்தை கட்டியமைத்துக் கொள்வதில் கவனம் செலுத்துவதன் மூலம்தான் சொந்தநாட்டு மக்களை பாதுகாத்துக் கொள்ள முடியும். ஆனால் மதவாதக் கும்பலான தலிபான்கள் ஆட்சிக்கு வந்தவுடன் பெண் குழந்தைகள் கல்வி பயிலத் தடை, வேலைக்குச் செல்லத் தடை, கார் ஓட்டத் தடை, புர்கா அணியாமல், ஆண் துணையில்லாமல் வெளியே வரக்கூடாது என பிற்போக்குத்தனங்களை அமல்படுத்துவதில்தான் தீவிரமாக உள்ளனர். சொல்லப்போனால் பெண்களுக்கு ஆப்கன் ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலை. ஒரு கொடூரமான பிற்போக்கு அராஜக ஆட்சியைத்தான் நடத்தி வருகின்றனர். மக்கள் நலனைப் பற்றி தலிபான் கும்பலுக்கு எந்த அக்கறையும் இல்லை.

இப்போதைய துயரத்தை கடப்பதற்கு ஆப்கன் மக்களுக்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவும், உதவியும் தொடர்ச்சியாக வழங்கப்பட வேண்டும் என்பது உடனடித் தேவையாக உள்ளது.

இன்னொரு பக்கம் கொடுங்கோலாட்சி நடத்தும் தலிபான் கும்பலுக்கு எதிராகவும், ஏகாதிபத்தியக் கும்பல்களின் ஆதிக்கத்திற்கு எதிராகவும் கிளர்ந்தெழ வேண்டிய தேவையும் ஆப்கன் மக்களுக்கு அவசியமான ஒன்றாக உள்ளது. அதுதான் ஆப்கன் மக்களுக்கு நிரந்தரத் தீர்வாக அமையும்.

அய்யனார்