Saturday, August 16, 2025
முகப்பு பதிவு பக்கம் 281

அக்காக்கிய் – ஒரு அரசு எழுத்தனின் அறிமுகம் | மேல் கோட்டு | புதிய குறுநாவல் தொடர்

நிக்கொலாய் கோகல்

மேல்கோட்டு | The Overcoat | குறு நாவல் – பாகம் – 01

அறிமுக குறிப்பு: 1842-ல் எழுதப்பட்ட இந்த அவல நகைச்சுவை குறுநாவல் புரட்சிக்கு முந்தைய ஜாரிச ரஷ்யாவின் சமூகநிலையையும், அங்கு நிலவிய அவலமும் அற்பத்தனமும் நிறைந்த வாழ்க்கையை திரைவிரித்துக் காட்டுகிறது.

இன்றும் உலகம் முழுவதுமே அவலமும் அற்பத்தனமும் விரவிக் கிடக்கிறது. அதற்கு எந்த வர்க்கமும் விதிவிலக்கல்ல. இந்தக் குறு நாவலைப் படிப்பதன் மூலம் நம்மைச் சுற்றியுள்ள அற்பத்தனங்கள் மட்டுமின்றி நமக்குள்ளேயே வீற்றிருக்கும் அற்பவாதியையும் அடையாளம் காணமுடிந்தால், அற்பவாதத்தில் இருந்து நாம் விடுபடுவது எளிது தானே!

நிக்கொலாய் கோகல் (1809-1852).

ஆசிரியர் குறிப்பு: நிக்கொலாய் கோகல் (1809-1852)- பெயர் பெற்ற யதார்த்தவாத எழுத்தாளர். ருஷ்ய இலக்கியத்தில் விமர்சன யதார்த்தவாதத்துக்கு அடிகோலியவர் கோகல். அவரது ‘தராஸ் புல்பா’, ‘உயிரற்ற ஆன்மாக்கள்’, ‘அரசு ஆய்வாளர்’ முதலிய படைப்புக்கள் பல அயல் மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன. ‘மேல்கோட்டு’ (1839-1841) என்ற கதை கோகலின் ‘பீட்டர்ஸ்பர்க் கதைகள்’ என்ற தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது.

♥ ♥ ♥

… அந்தத் துறையில் – எந்தத் துறையில் என்று பெயர் குறிப்பிடாமலிருப்பதே நல்லது. துறைகள், ரெஜிமெண்டுகள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றை விட, ஒரு வார்த்தையில் சொன்னால் அதிகார நிறுவனங்கள் எல்லாவற்றையும் விட அதிக ரோசமுள்ளவை உலகிலே வேறு எவையுமே கிடையாது. இந்தக் காலத்தில் ஒவ்வொரு தனிமனிதனும் தனக்கு ஏற்படும் சொந்த அவமானத்தைச் சமூகம் முழுவதற்கும் இழைக்கப்பட்ட அவமானமாகக் கருதுகிறான். எதோ ஒரு நகரத்தின் போலீஸ் கமிஷனர் (எந்த நகரமோ, எனக்கு நினைவு இல்லை) சமீபத்தில் அதிகாரிகளுக்கு விண்ணப்பம் அளித்ததாகவும், அரசு ஆணைகள் அனைத்தும் மீறப்பட்டு விட்டனவென்றும், தனது புனிதத் திருப்பெயர் வேண்டுமென்றே வீணாக இழுக்கப்பட்டிருக்கிறதென்றும் அதில் தெளிவாகக் குறிப்பிட்டதாகவும் கேள்விப்பட்டேன். தனது குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக அவன் காதல் வருணனைகள் மிகுந்த நூல் ஒன்றின் பிரம்மாண்டமான தொகுப்பை (அந்த நூலில் அநேகமாகப் பத்து பக்கங்களுக்கு ஒரு தடவை எவனோ போலீஸ் கமிஷனர் – சில கட்டங்களில் குடிமயக்கத்துடன் இருக்கும் நிலையில் – வருணிக்கப்படுகிறான்) விண்ணப்பத்துடன் சேர்த்து அனுப்பினானாம். ஆகவே எல்லாவிதமான மனக் கசப்பையும் தவிர்க்கும் பொருட்டு நாம் இதை ஒரு துறை என மட்டுமே அழைப்போம்.

நல்லது. ஏதோ ஒரு துறையில் ஒரு எழுத்தன் வேலை செய்துவந்தான். அவன் வெகுவாகக் குறிப்பிடத்தக்க குணாம்சங்கள் வாய்ந்தவன் எனக் கூற முடியாது. கொஞ்சம் குட்டை, கொஞ்சம் அம்மைத் தழும்புள்ளவன், கொஞ்சம் செம்முடியன், கொஞ்சம் மந்தப் பார்வையன் போன்ற தோற்றமுள்ளவன், நெற்றி உச்சியில் சிறு வழுக்கையும் இரண்டு கன்னங்களிலும் சுருக்கங்களும் விழுந்தவன், மூல நோயாளி போன்ற சோகை பிடித்த நிறத்தினன்… அதற்கு நாமென்ன செய்வது? எல்லாம் பீட்டர்ஸ்பர்க் பருவ நிலையின் கோளாறு. அவனுடைய பதவியைப் பொருத்தவரை (நமக்குத்தான் எல்லாவற்றுக்கும் முன்பு பதவியைத் தெரிவித்து விடுவது அவசியமாயிற்றே), சாசுவதப் பட்டம் பெற்ற ஆலோசகன் என்று அழைக்கப்படும் பதவி அது.

நமது அரசாங்க நிர்வாகத் துறையிலுள்ள பதினான்கு பதவிகளில் ஒன்பதாவதான இந்தப் பதவியை, பதிலுக்குத்தாக்க முடியாதவர்கள் மேலெல்லாம் பாய்ந்து பிடுங்குவது என்ற பாராட்டுக்குரிய வழக்கம் கொண்ட பல வித எழுத்தாளர்கள் எள்ளி நகையாடியும் இகழ்ந்தும் வந்திருப்பது யாவரும் அறிந்ததே. இந்த எழுத்தனின் குலப்பெயர் பஷ்மாச்கின். இந்தப் பெயர் செருப்பு என்று பொருள்படும் பஷ்மாக் என்ற ருஷ்யச் சொல்லின் அடியாகப் பிறந்திருக்க வேண்டும் என்பது பெயரிலிருந்தே தெள்ளத் தெளிவாகப் புலப்படுகிறது; ஆனால் எந்தக் காலத்தில், எந்த வழியில் இப்பெயர் பஷ்மாக்கிலிருந்து கிளைத்தது என்பது ஒன்றுமே தெரியவில்லை.

படிக்க :
“போராட்டக்காரர்களை பார்த்தவுடன் சுட்டுத்தள்ளுங்கள்” : ரயில்வே அமைச்சர் !
மீண்டும் திறக்கப்படும் நோக்கியா ஆலை : தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை கொடு !

அவனுடைய தகப்பன், பாட்டன் மட்டுமல்ல, மைத்துனன் உள்பட பஷ்மாச்கின்கள் அனைவருமே காலணிகள் அணிந்தே நடந்தார்கள், அதிகமாய்ப் போனால் ஆண்டுக்கு மூன்று தடவை மட்டுமே காலணி அடிகளைப் பழுதுபார்த்துக்கொண்டார்கள். அவன் பெயர் அக்காக்கிய் அக்காக்கியெவிச். இது கொஞ்சம் விசித்திரமான பெயர் என்றும் தேடிப் புனையப்பட்டதென்றும் வாசகர்கள் நினைக்கக் கூடும். ஆனால் நாம் இந்தப் பெயரைத் தேடவே இல்லை எனவும் தாமாகவே ஏற்பட்ட நிலைமைகளின் காரணமாக அவனுக்கு வேறு எந்தப் பெயரும் சூட்ட இயலாது போயிற்று எனவும் உறுதி கூறுகிறோம். நடந்தது இதுதான்:

அக்காக்கிய் அக்காக்கியெவிச் பிறந்தது, என் நினைவு சரியாக இருந்தால், மார்ச்சு 23-ம் தேதி இரவில். அவனது காலஞ்சென்ற தாய், ஒரு எழுத்தனின் மனைவி, மிக நல்லவள். குழந்தைக்குப் பெயரிடுவதற்கு வேண்டிய எல்லா ஆயத்தங்களையும் அவள் செய்தாள். கதவுக்கு எதிரே அவள் படுத்திருந்தாள். செனெட் துறை தலைமை எழுத்தன் இவான் யெரோஷ்கின் – மிக அருமையான மனிதர், குழந்தையின் ஞானத் தந்தை – அவளுக்கு வலப்புறம் நின்றிருந்தார். இடப்புறம் நின்றாள் ஞானத் தாய் அரீனா பேலப்ரூஷ்கவா, அபூர்வ குணவதி. குழந்தைக்கு இடுவதற்கு மூன்று பெயர்கள் தாய்க்கு முன் வைக்கப்பட்டன. மோக்கிய், ஸோஸ்ஸிய் என்பன அவற்றில் இரண்டு; இல்லாவிட்டால் தியாகி ஹோஸ்தஸாத்தின் பெயரைக் குழந்தைக்கு வைக்கலாம் எனச் சொல்லப்பட்டது. “ஊஹும்! எல்லாமே சரியில்லாத பெயர்கள்” என்று எண்ணினாள் தாயார்.

அவளுக்கு மகிழ்ச்சியாக இருக்கட்டுமென்று நாள்காட்டியில் மற்றொரு பக்கம் திருப்பப்பட்டது; அதிலும் மூன்று பெயர்கள் இருந்தன: திரிபீலிய், தூலா, வரகாசிய என. “நல்ல கண்ணராவிதான் போ! பெயர்களைத்தான் பாரேன்! உண்மையில், இந்த மாதிரி நான் என்றைக்கும் கேள்விப்பட்டது கிடையாது! வரதாத் என்றோ வரூஹ் என்றோ இருந்தாலாவது பரவாயில்லை. இங்கேயோ, திரிபீலிய், வரகாசிய் என்றல்லவா இருக்கின்றன!” என முதிய தாய் அங்கலாய்த்தாள். இன்னொரு பக்கத்தைப் புரட்டினார்கள். பாவ்ஸிக்காகிய், வாஃத்தீஸிய் என்ற பெயர்கள் வந்தன. “ஊம், இப்போது தெரிந்து கொண்டேன் தலையெழுத்து இதுதான் என்று. அப்படியானால் அப்பாவின் பெயரே குழந்தைக்கும் இருந்துவிட்டுப் போகட்டும். அவன் அப்பா பெயர் அக்காக்கிய், ஆகவே மகனையும் அக்காக்கிய் என்றே அழைப்போம்” என்றாள் தாயார். இவ்வாறு வாய்த்ததே அக்காக்கிய் அக்காக்கியெவிச் என்னும் பெயர்.

குழந்தைக்கு ஞானஸ்தானம் செய்விக்கப்பட்டது. அப்போது அவன் அழுத அழுகையையும் முகத்தைக் கோணிக் கொண்டு வலித்த வலிப்பையும் பார்த்ததால், தான் ஒரு காலத்தில் பட்டம் பெற்ற ஆலோசகனாகப் பதவி வகிக்கப் போவதை அவன் முன்னரே உணர்ந்திருந்தது போலத் தோன்றியது. ஆக, இது இவ்விதமே நிகழ்ந்தது.

இந்தச் சேதியை நாம் இவ்வளவு விளக்கக் காரணம், இது இன்றியமையாத முறையில் நேர்ந்தது என்பதையும் குழந்தைக்கு வேறு பெயர் சூட்ட எவ்வகையாலும் முடிந்திராது என்பதையும் வாசகர்கள் தாமே கண்டு கொள்வதற்காகத்தான்.

(தொடரும்)

                                                                                                          அடுத்த பாகம் »

குடியுரிமை திருத்தச் சட்டம் : இந்துக்களின் உரிமையையும் பறிக்கும் சதி | காணொளி

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டம் வலுப் பெற்று வருகிறது. இது இசுலாமியர்களுக்கு எதிரானதாகவே காட்டப்பட்டும் பேசப்பட்டும் வருகிறது. உண்மையில் இது ஒட்டுமொத்த நடுத்தர ஏழை மக்களின் உரிமைகளைப் பறிப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட சட்டம் என்பதை விவரிக்கிறார் மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு !

பாருங்கள் ! பகிருங்கள் !

ஏழைகளை பட்டினிச் சாவுக்குத் தள்ளும் ஆதார் !

0

பாகியா பிர்ஜியா ஒரு சிக்கலை சரி செய்ய வேண்டிய சூழலில் உள்ளார். 42 வயது விவசாய தொழிலாளியான இவருக்கு அந்தியோதயா அன்ன யோஜனாவின் (ஏழ்மையான இந்தியர்களுக்கு உணவுப் பாதுகாப்பை வழங்கும் திட்டம்) கீழ் 35 கிலோ உணவு தானியங்கள் ஒவ்வொரு மாதமும் கிடைக்கின்றன. பாதிக்கப்படும் பழங்குடிப்பிரிவில் இருப்பதால் பிர்ஜியாவிற்கு இது வழங்கப்படுகிறது.

ஆனால் மாநில தலைநகரான ராஞ்சிக்கு மேற்கே 180 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லடேகர் மாவட்டத்தின் தொலைதூர மகுவாடாண் (Mahuadanr) தொகுதியில் வசிக்கும் அவருக்கு சற்று நடந்து செல்லும் தொலைவில் உள்ள சகோதரரின் குடும்பத்தின் ஏழு உறுப்பினர்களுடன் தானியங்களை பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. குடும்ப அட்டை இல்லாததால் அவரது சகோதரரர் குடும்பம் இந்தியாவின் பொது பகிர்மான அமைப்பிலிருந்து விலையில்லா உணவு தானியங்களைப் பெற முடிவதில்லை.

நவம்பர் 30 முதல் டிசம்பர் 20 வரை ஐந்து கட்டங்களில் ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல் நடந்து டிசம்பர் 23-ம் தேதியில் முடிவு வெளியாகவுள்ளது. இந்நிலையில் 2014 மற்றும் 2018-க்கு இடையில் PDS-ல் உள்ள போலிப் பயனாளிகளை நீக்குவதற்காக நடத்தப்பட்ட செயல்முறையினால் உணவு தானியங்களைப் பெற முடியாத நிலையில் ஒரு பகுதி ஏழை மக்கள் உள்ளனர். தொழில்நுட்பத்தை சார்ந்துள்ள இந்த தீர்வானது சில நேரங்களில் பயனாளிகளுக்கான கதவை சட்டவிரோதமாக அடைத்துள்ளது.

புள்ளிவிவரங்கள் என்ன கூறுகின்றன?

ஜார்கண்டின் நலிவடைந்த 3.3 கோடி மக்களில் 71% அல்லது 2.33 கோடி மக்களை பாதுகாப்பதில் PDS அமைப்பு தோல்வியடைந்துள்ளது. ஜார்கண்டில் 2015 மற்றும் 2019 -க்கு இடையில் பட்டினி மற்றும் மானிய விலை உணவு தானியங்கள் கிடைக்காததால் 23 மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக உணவுப் பாதுகாப்பு குறித்து செயல்படும் உணவுக்கான உரிமை என்ற அமைப்பு கூறுகிறது.

நான்கு நாட்களாக பலமுறை இதுகுறித்து தொடர்பு கொண்ட போதும் உணவு, பொது பகிர்மானம் மற்றும் நுகர்வோர் விவகாரங்களுக்கான மாநிலப் பொறுப்பாளரான அமிதாப் கவுசலை தொடர்பு கொள்ள இயலவில்லை.

PDS -ன் இயலாமை, ஜார்க்கண்டின் உயர் வறுமை விகிதம், தேசிய சராசரியான 7.4%, ஒப்பிடும் போது 9.2% வேலையின்மை விகிதம், தேசிய சராசரியான 75.4% ஒப்பிடும் போது 70.3% கல்வியறிவு விகிதம் மற்றும் நாட்டின் சில மோசமான ஊட்டச்சத்து குறியீடுகளுடன் இணைந்து கடுமையான ஊட்டச்சத்து நெருக்கடிக்கு வழி வகுத்திருக்கிறது.

குன்றிய வளர்ச்சி  பாதிப்பில் நாட்டிலேயே மூன்றாவது இடத்தில் ஜார்கண்ட் உள்ளது என்றும் 15-49 வயது பெண்களிடையே கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் இரத்த சோகை உள்ளது என்றும் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 2015-16 தெரிவித்துள்ளது. விளைவாக ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம் 1,000 பிறப்புகளுக்கு 29 இறப்புகள் என நாட்டிலேயே 14-வதாக இருக்கிறது.

பாரதிய ஜனதா தலைமையிலான அரசாங்கத்தின் மீது இந்த நெருக்கடி கடுமையாக உள்ளது. பட்டினியால் இந்த மரணங்கள் நடக்கவில்லை என்று முதலமைச்சர் ரகுபார் தாஸ் முதலில் மறுத்தாலும் வேறு வழியில்லாமல் இந்த இறப்புகளுக்கான காரணங்களைக் கண்டறிந்து சரியான நடவடிக்கைகளை பரிந்துரைக்க ஒரு குழுவை நியமிக்க ஆணையிட்டார்.

ஆதாரின் தொடர்பு :

தினசரி கூலியாக ரூ. 150 -க்கு மாதம் 12-15 நாட்கள் வேலை தேடி சம்பாதிக்கும் கைம்பெண் பிரிஜா தனியாக வசிக்கிறார். அவரது சகோதரரின் குடும்பத்தின் ஏழு உறுப்பினர்களில் எவருக்கும் ஆதார் இல்லை என்பதால், விலையில்லா உணவு தானியங்களை பெறுவதற்கு குடும்ப அட்டை இல்லை.

நவம்பர் 30 வரை மாநில மக்கள்தொகையில் 91.3% பேர் ஆதார் ( தேசிய எண்ணிக்கை 89.6% ) பெற்றிருப்பதாக இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (Unique Identification Authority of India) அறிக்கை கூறுகிறது.

பிரிஜாவின் சகோதரரின் குடும்பத்தைப் பொறுத்தவரை, ஆதார் அட்டைகளைப் பெற வேண்டுமென்றால் 120 கி.மீ தூரத்தில் உள்ள மாவட்ட தலைமையகத்திற்கு பயணிக்க வேண்டும். உள்ளூர் அதிகாரிகள் ஆதாரில் சேர்க்க மறுக்கிறார்கள் – இதற்கு பணம் செலவாகும்.

ஆதாருக்கான செலவினங்களை பிரிஜா பட்டியலிட்டார்: ஒவ்வொருவருக்கும் பேருந்து கட்டணம் ரூ. 80 மற்றும் சேர்க்கைக்கு தலா ரூ. 300 – 400. ஆதார் பதிவு இலவசம் என்று விதிகள் கூறுகின்றன. ஆனால் முகவர்கள் மற்றும் தொகுதியில் உள்ள அரசாங்க அதிகாரிகள் கூட அந்த கட்டணத்தை கேட்டதாக பிர்ஜியா கூறினார்.

இது போன்ற பயணத்திற்கான செலவு என்பது கிட்டத்தட்ட அவர்களது ஒரு மாத வருமானத்தைக் குறிக்கும்.

“அவர்களால் சந்தையில் இருந்து எதையும் வாங்க முடியாது என்பதால், எனக்கு கிடைக்கும் உணவு தானியத்திலிருந்து கொடுத்து உதவி செய்கிறேன்” என்று அவர் கூறினார்.

அவரது சகோதரர் டிசம்பர் 2018-ல் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். மேலும் அவரது சகோதரரின் மனைவி உள்ளூர் சந்தையில் ஓரிரு உணவகங்களில் தட்டுக்கழுவி நாளைக்கு சுமார் ரூ. 100 சம்பாதித்தார். குடும்பம் உணவு இல்லாமல் அந்த மாதத்தில் ஓடியது.

புத்தாண்டன்று, அவரது சகோதரருடன் இருந்த அவரது தாயார் புத்னி இறந்தார். அவர் இறப்பதற்கு முன்பு பல நாட்கள் உணவு இல்லாமல் அந்த குடும்பம் எப்படி இருந்தது என்பதை விவரித்தார்.

மாண்டு போன அவரது தாயாரை கிராமவாசிகள் பார்க்கும்வரை அவர் பட்டினியால் வாடியுள்ளார். வேலை தேடுவதிலிருந்து உள்ளூர் பள்ளிக்கு செல்வதுவரை பல்வேறு காரணங்களுக்காக அவரது குடும்ப உறுப்பினர்கள் அப்போது வீட்டில் இல்லை.

படிக்க:
♦ உலகப் பட்டினிக் குறியீடு : ஆப்பிரிக்க நாடுகளின் ‘தரத்தில்’ இந்தியா
♦ உணவு மானியம் : வாரி வழங்குகிறதா இந்திய அரசு ?

ஒவ்வொரு மாதமும் புத்னி போன்ற PVTG உறுப்பினர்களுக்கு நேரடியாக வீட்டு வாசலில் உணவுப்பொருள்கள் வழங்கப்படும், என்ற ஒரு பெயரளவிலான திட்டம் ஜார்கண்ட் அரசாங்கத்திடம் இருந்தாலும், அது அனைவரையும் சென்றடையவில்லை. ஒரு கிலோ மீட்டருக்கும் சற்று குறைவான தூரத்தில் உள்ள நியாய விலை கடைக்கு சென்று தனது உணவுப்பொருள்களுக்காக ஒவ்வொரு மாதமும் வரிசையில் நிற்க வேண்டும்.

அவரது தாயார் இறந்த போதிலும் அவருக்கான உணவு தானியங்களை உள்ளூர் நியாய விலை கடை அதிகாரிகள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.

“நான் அவர்களிடம் பல முறை சென்றிருக்கிறேன், ஆனால் எங்களுக்கு ஆதார் அட்டைகளையும் வழங்க முடியாது என்று அவர்கள் கூறுகிறார்கள்” என்று பிரிஜா கூறினார். சத்தீஸ்கரின் எல்லையில் தன்னுடய கிராமம் இருப்பதை சுட்டிக்காட்டிய அவர், “நாங்கள் அந்த பக்கத்தைச் சேர்ந்தவர்கள். இந்த இடத்தை சேர்ந்தவர்கள் அல்ல எனவே நாங்கள் வெளியாட்கள் என்று அவர்கள் எங்களிடம் கூறுகிறார்கள்” என்று மேலும் கூறினார். தனது குடும்பம் நான்கு பத்தாண்டுகளாக ஜார்க்கண்டில் வாக்களித்துள்ளது என “வெளியாட்கள்” என்ற குற்றச்சாட்டுகளுக்கு பிர்ஜியா பதிலளித்தார்.

மக்களிடம் சொந்த வீட்டு முகவரிக்கான ஆவணங்கள் இருந்தால் போதும், நாட்டில் எங்கு வேண்டுமானாலும் எந்த நிலையிலும் ஆதார் எண்ணுக்கு விண்ணப்பிக்க விதிகள் அனுமதிக்கின்றன.

ஜார்கண்ட் முழுவதும் பிர்ஜியாவின் கதையை காண முடிகிறது. ஆண்டு குடும்ப வருமானம் ரூ. 27,000 என்ற வறுமைகோடு வரையறையின் படி ஜார்கண்டின் மக்கள் தொகையில் 39.1% வறுமையில் வாழ்கின்றனர். சத்தீஸ்கருக்குப் பிறகு நாட்டில் அதிக எண்ணிக்கையிலான ஏழைகள் ஜார்கண்டில் உள்ளனர்.

பாகியா பிரிஜாவின் குடும்பத்தைப் போலவே, ஜார்க்கண்டின் பல PDS சிக்கல்களுக்கு ஆதார் காரணமாக உள்ளது. போலிகளை உண்மையான பயனாளிகளிடமிருந்து பிரிக்க உதவும் என்ற மைய அரசின் நீண்டகால கூற்றுக்கு ஏற்ப, குடும்ப அட்டைக்கு ஆதாரை கட்டாயமாக்கிய மாநிலங்களில் ஜார்கண்டும் ஒன்றாகும்.

பிப்ரவரி 2018 -ல் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்ட தரவுகளின்படி, 2013 மற்றும் 2017 -க்கு இடையில் நீக்கப்பட்ட 2.75 கோடி போலி குடும்ப அட்டைகளில் 4,53,000 குடும்ப அட்டைகள் ஜார்கண்டை சேர்ந்தவை. PDS பகிர்மானத்தை இன்னும் துல்லியமாகவும், பயனுள்ள முறையிலும் திறமையாகவும் கொண்டு சேர்ப்பதற்கு தான் இந்த செயல்முறை என்று அரசாங்கம் கூறியது.

உண்மையில், PDS -ஆதார் இணைப்பு என்பது பிரிஜா போன்ற பயனாளிகளுக்கு புதிய சிக்கல்களை தான் கொண்டு வந்துள்ளது.

டிசம்பர் 2017-ல், ஜார்க்கண்டின் சிம்டேகா மாவட்டத்தில், ஆறு மாதங்களுக்கு நியாய விலைக்கடையில் தானியங்கள் மறுக்கப்பட்டதால் 11 வயது சந்தோஷி குமார் பட்டினியால் இறந்த செய்தியை ஊடக அறிக்கைகள் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தன. அவரது குடும்ப அட்டை அரசாங்கத்தால் நீக்கப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்தது.

உயிரியளவியல் சரிபார்ப்பு:
குடும்ப அட்டைகளை ஆதாரோடு கட்டாயமாக இணைப்பது மட்டுமல்லாமல் மின்னணு விற்பனை முனை (point-of-sale) கருவி மூலம் PDS பயனாளிகள் சரிபார்ப்பை 2016-ம் ஆண்டில் ஜார்கண்ட் அரசு தானியங்கிமயமாக்கியது. உணவுப் பொருள்களை வழங்கும் போது பயனாளிகளின் அடையாளத்தை உறுதிப்படுத்த உயிரியளவியல் முறையை பயன்படுத்தும் படி ஒவ்வொரு நியாய விலைக் கடைகளும் வலியுறுத்தப்பட்டன.

இருப்பினும், இந்த ஆரவாரமான நடைமுறை குடும்பங்களை பட்டினியின் விளிம்பிற்கு கொண்டு சென்று விடும்.

மகுவாடாண்டிற்கு (லாட்டிஹார் மாவட்டம்) வடக்கே 150 கி.மீ தொலைவில் உள்ள கார்வா மாவட்டத்திலுள்ள பெஷ்கா கிராமத்திலுள்ள 28 வயதான சகிலா பீபியின் குடும்பம், ஏப்ரல் 2018 -லிருந்து 20 மாதங்களில் 8 மாதங்களுக்கு உணவுப்பொருள்களை நியாய விலைக்கடையில் பெறவில்லை. மாநில தேர்தல்களை முன்னிட்டு ஆகஸ்ட் 2019 -க்குப் பிறகுதான் மீண்டும் நிலைமை சரியானது.

படத்திலுள்ளவாறு அவரது குடும்ப அட்டையில் உள்ள சில உள்ளீடுகளில் நீல நிற மை அடையாளம் உள்ளன.

28 வயதான ஷகிலா பீபி தனது குடும்ப அட்டையை காட்டுகிறார். இது ரேஷன் பொருள்கள் பகிர்மானத்தில் உள்ள இடைவெளிகளைக் காட்டுகிறது.

மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஆதார் அட்டையை வைத்திருந்தாலும், உணவுப்பொருள்களை வாங்க அவை போதுமானதாக இல்லை என்பதை அவர் உணர்ந்திருக்கிறார்.

“ஒவ்வொரு முறையும் நான் நியாயவிலை கடைக்குச் செல்லும்போது, என் கட்டைவிரலை கருவி சரியாக அடையாளம் காட்டாது. கடைக்காரரும் திரும்பி மறுபடியும் வரும்படி என்னிடம் சொல்லுவார்” என்று அவர் கூறினார். அவர் மீண்டும் வருவார். மீண்டும் திருப்பி அனுப்பப்படுவார்.

“உணவு தானியங்கள் முடிந்துவிட்டன, அடுத்த மாதம் நான் திரும்பி வர வேண்டும் என்று அவர் கூறுவார்” என்று கூறினார். ஆனால் அடுத்த மாதம் திரும்பிச் செல்லும்போது முந்தைய மாத பொருள்களை இனி கொடுக்க முடியாது என்று கடைக்காரர் கூறுவார்.

ஷகிலா பீபிக்கு நான்கு இளம் குழந்தைகள் உள்ளனர் – மூத்த குழந்தைக்கு 13 வயதாகிறது. இளைய குழந்தைக்கு எட்டு வயதாகிறது. ஆனால் அவரது கணவருக்கு நிலையான வேலை இல்லை என்பதால் அவரது குடும்பதிற்கும் நிலையான வருமானமும் கிடையாது.

அவரது குடும்பத்திற்கு சொந்தமான இரண்டு ஏக்கர் விவசாய நிலத்தில் அரிசி, சோளம் மற்றும் குளிர்காலத்தில் கடுகு ஆகியவற்றை அவர்கள் பயிரிடுகிறார்கள். ஆனால் நியாய விலைக்கடை பொருள்கள் கிடைக்கவில்லை என்றால் கடந்த ஆண்டு கையிருப்பில் இருந்து மிச்சமான அரிசியை கொண்டு சமாளிக்க வேண்டும்.

ஷகிலா பீபி நாளுக்கு இரண்டு முறை அரிசியைக் கொதிக்க வைத்து தனது குழந்தைகளுக்கு கஞ்சித் தண்ணியை பரிமாறுகிறார். சில நாட்களில், அவர் தனது குழந்தைகளுக்கு சிறிது உப்பு சேர்த்து உணவளிப்பார். மற்ற நாட்களில் சோறுடன் கடுகு இலை சட்னி செய்து கொடுப்பார்.

ஷகிலா பீபி அவரது குழந்தைகளுடன்.

மாவட்ட சட்ட சேவைகள் ஆணையத்தின் (District Legal Services Authority) உறுப்பினரும் கிராமவாசியுமான கலாமுதீன் அன்சாரியிடம் செல்லும் வரை இது தொடர்ந்தது. ஏதோ தவறு இருப்பதை அன்சாரி உணர்ந்தார். அவர் ஷகிலா பீபியிடம் விதிகளை சுட்டிக்காட்டினார்: உயிரியளவியல் அடையாளம் பொருந்தவில்லை என்றால் பயனாளியை நேரில் சரி பார்தது பொருள்களை கடைக்காரர் கொடுக்க வேண்டும்.

“எந்தவொரு சூழ்நிலையிலும் பயனாளிகளுக்கு பொருள்களை நியாயவிலை கடைக்காரர்கள் மறுக்க முடியாது என்று விதிகள் தெளிவாகக் கூறுகின்றன” என்று அன்சாரி கூறினார். “உண்மையில், அடையாளம் பொருந்தாத நிலையில் ஒரு பதிவேட்டின் மூலம் பயனாளிகளின் விவரங்களை கவனித்து அவர்களுக்கு உரிய பொருளை கடைக்காரர் வழங்க வேண்டும்.”

புகார் கொடுத்தப்பின் குறைந்தது இரண்டு மாதங்களாவது உணவுப்பொருள்கள் ஷகிலா பீபிக்கு கிடைக்கவில்லை. கடைக்காரர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை, ஆனால் ஜூன் மாதத்திலிருந்து அவர் தனது பொருட்களை தவறாமல் பெறத் தொடங்கினார். POS கருவி அவரது கட்டைவிரலை இன்னும் ஏற்கவில்லை. ஆனால் இப்போது ஒரு முறை கடவுச்சொல்லைப் பெற்று அடையாளத்தை சரிபார்த்து கொள்கிறார்.

படிக்க:
♦ குடியுரிமை திருத்தச் சட்டம் : தமிழகமெங்கும் மாணவர்கள் போராட்டம் !
♦ ஜார்கண்ட் : ஆதாரை இணைக்கவில்லை என்றால் மரணம் !

தொழில்நுட்பம் ஒரு தீர்வல்ல :
ஷகிலா பீபியின் மண் வீட்டிலிருந்து சற்று தொலைவில் தூசி நிறைந்த, சீரற்ற சாலையின் புதர்களைத் தாண்டி ஹலிமா அன்சாரியின் வீடு உள்ளது.

POS கருவி 28 வயதான ஹலிமா அன்சாரியின் கட்டைவிரல் ரேகையை ஏற்காததால் நியாய விலைக்கடை பொருள்கள் ஏப்ரல் மாதத்திலிருந்து ஒன்பது மாதங்கள் கிடைக்கவில்லை. அதே ஒரு முறை கடவுச்சொல்லைப் பயன்படுத்தி, ஷகிலா பீபிக்கு சில நாட்களுக்கு பிறகு பொருள்களை கடைக்காரர் மீண்டும் கொடுக்க தொடங்கினார்.

முதல் இரண்டு மாதங்களுக்கு உணவுப்பொருள்கள் சீராக கிடைத்ததில் ஹலிமா அன்சாரிக்கு மட்டற்ற மகிழ்ச்சி. “இது பார்ப்பதற்கு எளிமையானதாகத் தோன்றியது” என்று அவர் கூறினார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு சிக்கல் ஒன்று இருப்பதை உணர்ந்தார்.

சரக்கு வண்டி ஓட்டுனரான அவரது கணவர் கைப்பேசியை வேலைக்கு எடுத்துச்செல்ல வேண்டும். வழக்கமாக ஜார்கண்டிலிருந்து ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் பிற மாநிலங்களுக்கு சரக்குகளை ஓட்டி செல்கிறார். எனவே, அவர் இரண்டு முதல் மூன்று மாதங்கள் வேலையில் ஈடுபடுகிறார் என்று அவர் விளக்கினார்.

ஹலிமா அன்சாரி, சரக்கு வண்டி ஓட்டுனரான அவரது கணவர் தொடர்ந்து பல மாதங்களாக வேலையில் இருக்கும் போது பொருள்களை வாங்க முடியாது.

இதன் பொருள் அவரால் இனி OTP-ஐ பயன்படுத்த முடியாது. “எங்களால் இன்னொரு கைப்பேசியை வாங்க முடியவில்லை என்று கடைக்காரருக்கு நிலைமையை விளக்கினேன். ஆனால் அவர் செவிசாய்க்கவில்லை.” என்று ஹலிமா அன்சாரி கூறினார்.

ஒருமுறை கடவுச்சொல்லை சார்ந்து இருப்பது என்பது உணவு தானியங்களின் ஒதுக்கீட்டை பெறுவதில் மக்களுக்கு புதிய சிக்கல்களை உருவாக்கியுள்ளது என்று DLSA உறுப்பினர் கலாமுதீன் அன்சாரி கூறினர்.

“கார்வாவில் (Garhwa) மொபைல் போன் இணைப்பு இல்லாத சில கிராமங்கள் உள்ளதால் நெட்வொர்க்குடன் இணைக்க நெடுஞ்சாலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் கிராமவாசிகள் உள்ளனர் – சிலநேரங்களில் 5-6 கிமீ தூரம் சென்று கூட ஒருமுறை கடவுச்சொல்லிற்காக காத்திருக்கிறார்கள்” என்று அவர் கூறினார். இந்த புகார்களுக்கு கருத்து தெரிவிக்க பெஷ்கா கிராமத்தில் உள்ள நியாய விலைக்கடை முகவரான வீரேந்திர துபே மறுத்துவிட்டார்.

ஆதாரும் பயனாளர் நீக்கமும் :
நவம்பர் 2019-ல், மும்பையைச் சேர்ந்த சமூக தாக்க அறிவுறுத்தல் குழுவான டால்பெர்க் (Dalberg) நடத்திய ஒரு கணக்கெடுப்பின் முடிவுகள் ஆதார் இணைப்பினால் ஏற்பட்ட பயனாளர் நீக்கங்களை சுட்டிக்காட்டின.

ஆதார் கட்டாயமாக இணைக்கப்பட்டுள்ள சேவைகளில் ஆதார்-பி.டி.எஸ் இணைப்பு சேவைதான் மிகவும் மோசமானது என்பது அனுபவபூர்வமாக மக்களுக்கு தெரிந்தது. ஆதார் இணைப்பினால் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக சலுகைகள் பறிக்கப்பட்ட ஆறாவது மாநிலம் ஜார்கண்ட் (5.9%) என்று கணக்கெடுப்பு காட்டுகிறது.

நாடு தழுவிய அளவில், கடைசியாக PDS-ன் கீழ் உணவு தானியங்களைப் பெற முயற்சித்த 1.5% பயனர்களுக்கு உயிரியளவியல் அடையாள சோதனை தோல்வியையே தந்துள்ளது.

குறைபாடுகள் இருந்தாலும் ஆதாருக்கு அதிக வரவேற்பு இருப்பதாக அறிக்கை கூறியிருக்கிறது: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் PDS, ஓய்வூதியம் மற்றும் ஊதியங்கள் போன்றவை ஆதார் முறையாக வழங்கியுள்ளதாக 80% பயனர்கள் கருதுகின்றனர். ஆதார் இணைப்பு சிக்கலால் பதிக்கப்பட்டவர்களில் 67 விழுக்கட்டினர் ஆதார் குறித்து மன நிறைவு கொண்டதாக கூறினர்.

“கிடைத்தால் போதும் என்று எண்ணுவதால் பல மாதங்களாக தவறவிட்டவர்கள் கூட ஆதார் அவர்களுக்கான சேவையை மறுப்பதாக உணரவில்லை” என்று அறிக்கை கூறியது. “நல்ல நோக்கங்களுடன் ஆதார் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது” என்ற நம்பிக்கையை பலர் வைத்திருந்தனர். எனவே, இதன் விளைவாக ஏற்படும் எந்தவொரு சிக்கலும் இறுதியில் தீர்க்கப்படும் என்றே அவர்கள் நம்புகின்றனர்.

ஊட்டச்சத்தில் சமரசம் :
திறனற்ற PDS நடைமுறை ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஊட்டச்சத்து நெருக்கடியை அதிகரிக்கும் என்று பிரச்சாரகர்கள் மத்தியில் இப்போது ஒரு அச்சம் அதிகரித்து வருகிறது. அப்பகுதியில் உள்ள பெரும்பாலான குடும்பங்கள் ஒருபோதும் பழங்களை வாங்குவதில்லை, சிலர் மட்டுமே காய்கறிகளை தவறாமல் வாங்குகிறார்கள் என்று கார்வாவைச் சேர்ந்த DLSA உறுப்பினர் அன்சாரி கூறினார்.

மாதிரிப் படம்.

உலகளாவிய பட்டினி குறியீடு – 2018 ஆய்வு மற்றும் குடிமை சமூக அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின் படி இந்தியாவில் “கடுமையான” பட்டினி சிக்கல் இருப்பதாகவும், அது அதன் அண்டை நாடுகளான வங்கதேசம், நேபாளம் மற்றும் இலங்கையை விட மோசமாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. ஜார்க்கண்டின் 59.3% மக்கள் மட்டுமே ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட முடியும் என்றும், 50.3% மக்களுக்கு போதுமான உணவு இல்லை என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

தீவிர வறுமை முதல் இரத்த சோகை பாதிப்புக்குள்ளான பகுதிகள் வரை – ஜார்க்கண்ட் போன்ற ஒரு மாநிலத்தில் மோசமான ஊட்டச்சத்துக்கு பங்களிக்கும் உள்ளார்ந்த காரணிகள் உள்ளன, என்று உணவு உரிமை பிரச்சாரத்தின் மாநில அமைப்பாளாரும், ஜார்க்கண்ட் அரசாங்கத்தால் மாநிலத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் பட்டினி சிக்கலை ஆய்வு செய்ய ஏற்படுத்தப்பட்ட குழுவின் உறுப்பினருமான அஸ்ரஃபி நந்த் பிரசாத் கூறினார்.

இதற்கிடையில், உணவு தானியங்கள் மறுக்கப்படுவதுடன் சேர்ந்து அரசின் மோசமான ஊட்டச்சத்து திட்டமும் நிலைமையை மோசமாக்கியுள்ளது. “கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் போன்ற அரசாங்கத்தின் திட்டங்கள், அதை செயல்படுத்துவதில் பல சிக்கல்களைக் கொண்டுள்ளன” என்று அவர் கூறினார். “பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவு கூட சரியாக வழங்கப்படுவது இல்லை” என்றும் கூறினார்.


கட்டுரையாளர்  : Kunal Purohit
தமிழாக்கம்  : சுகுமார்
செய்தி : ஸ்க்ரால். 

குலக் கல்வித் திட்டம் :  ஜாதியைக் காப்பாற்ற அரை நாள் !

தராஸ் மாகாண முதலமைச்சராக இருந்த ராஜாஜி, 1953-ல் மாகாணத்தில் உள்ள கிராமப்புற துவக்கப் பள்ளிக்கூடங்களில் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன்படி, கிராமப்புற குழந்தைகள் பாதி நாளை பள்ளியிலும் மீதி நாளை தந்தையின் பாரம்பரிய தொழிலைக் கற்கவும் செலவழிக்க வேண்டும்.

அதாவது, கோவிலில் பணியாற்றுபவர் குழந்தை கோவிலிலும் விவசாயக் கூலியின் குழந்தை வயல்காட்டிலும் தோட்டியின் மகன் அந்தக் கலையைக் கற்பதிலும் மீதி நாளை செலவிடலாம்.

‘குலக்கல்வித் திட்டம்’ என இதனைப் பெயரிட்டு, தி.க., தி.மு.க. போன்ற கட்சிகளும் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே ஒரு பிரிவினரும் கடுமையாக எதிர்த்தனர். இது மிகப் பெரிய அரசியல் புயலாக உருவெடுத்தது. இந்தத் திட்டத்தை எதிர்த்து கடுமையான, மிகப் பெரிய போராட்டங்கள் மாகாணத்தில் நடக்க ஆரம்பித்தன.

இதற்கு ஒரு வருடத்திலேயே ராஜாஜியின் அரசு வீழ்ந்தது. அதற்குப் பிறகு அவர் அரசியல் அதிகாரத்தைப் பெறவே முடியவில்லை. ஆனால், இந்தச் சர்ச்சையை அடுத்து தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் பிராமணரல்லாதோர் எழுச்சிக்கான காலம் துவங்கியது. இதன் உச்சமாக காமராஜர், கட்சியின் தேசியத் தலைவராக, கிங் மேக்கராக உயர்ந்தார்.

ராஜாஜி ஜாதியைக் காப்பாற்றத்தான் இந்தத் திட்டத்தைக் கொண்டுவந்தாரா எனச் சிலர் கேட்கக்கூடும். அவர் என்ன நினைத்தார் என யாருக்குத் தெரியும்? அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதை வைத்துத்தான் இது குலக்கல்வித் திட்டம் எனக் குறிப்பிடப்பட்டது.

படிக்க :
கர்நாடகா : பள்ளியில் பாபர் மசூதி இடிப்பு நாடகம் – ஆர்.எஸ்.எஸ். அபாயம் !
“இப்போதாவது எழுந்து நில்லுங்கள்” : அருந்ததி ராய் அறிக்கை !

பெரும் ஆதாரங்களைத் திரட்டி இந்த வரலாற்றை, ஒரு சிறிய புத்தகமாக முன்வைத்திருக்கிறார் டி. வீரராகவன். புத்தகத்தின் தலைப்பு Half a Day for Caste: Education and Politics in Tamilnadu (1952-55). நவீன தமிழ்நாட்டு அரசியலில் ஆர்வம் கொண்டவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது. தமிழகத்தில் ஜாதி எதிர்ப்புப் போரில், கல்வியின் பங்கையும் லேசாக கோடிகாட்டுகிறது நூல்.

புத்தகத்தின் ஆசிரியர் டி. வீரராகவன் (1958-2009) சென்னை ஐஐடியில் பேராசிரியராக இருந்தவர். சென்னை பெருநகர தொழிற்சங்க வரலாறு என்ற அற்புதமான ஆய்வுநூலை எழுதியவர். வீரராகவன் ஒரு இடதுசாரி என்பதை மனதில் வைத்து, இந்த நூலை அணுக வேண்டும்.

இந்த நூலை எடிட் செய்திருப்பவர் வரலாற்றாசிரியர் ஏ.ஆர். வேங்கடாசலபதி. ஒரு விரிவான, அட்டகாசமான பதிப்புக் குறிப்பையும் எழுதியிருக்கிறார். முன்னுரை எழுதியிருப்பது கோபால்கிருஷ்ண காந்தி.

இவை எல்லாம் சேர்ந்தே 165 பக்கங்கள்தான். விலை ரூ. 250 ரூபாய். இப்போதே பதிவு செய்பவர்களுக்கு ஜனவரி 1-ம் தேதியிலிருந்து புத்தகங்களை அனுப்புவார்களாம்.

நூலை பதிவு செய்வதற்கான இணைப்பு : Half a Day for Caste: Education and Politics in Tamilnadu (1952-55)

நன்றி : முரளிதரன் காசி விஸ்வநாதன் முகநூல் பதிவிலிருந்து…

குடியுரிமை திருத்தச் சட்டம் : தமிழகமெங்கும் மாணவர்கள் போராட்டம் !

குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டங்கள் கிளந்தெழுந்து நடைபெறுகின்றன. அதிலும் டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல், இந்திய மாணவர் சமூகத்திடையே பெரும் கோபத்தை உருவாக்கியது.

இதன் தொடர் விளைவாக தமிழகத்திலும், போராட்டங்கள் பற்றிப் பரவ ஆரம்பித்துவிட்டன. தமிழகம் முழுவதும் பல்வேறு கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். மாணவர்களின் போராட்ட உணர்வை மழுங்கடிக்க கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் தடைகளைத் தாண்டி மாணவர் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த போராட்டங்களின் தொகுப்பை இங்கே தருகிறோம்…

***

சென்னை பல்கலையில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் !

மாணவர்கள் சென்னை பல்கலைக் கழக வளாகத்துக்குள்ளேயே நேற்று (17.12.2019) காலை முதல் தங்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் போலீசு குவிக்கப்பட்டது. மேலும் போராட்டத்தில் மாணவர்களை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்த மாணவர்கள் கார்த்திகேயன் மற்றும் சுப்பையா ஆகியோரை போலீசு கைது செய்துள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க கோரியும், குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்தும், இன்றும் மாணவர்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

பல்கலைக் கழக நுழைவு வாயிலில் முழக்க அட்டைகளுடன் போராடும் சென்னை பல்கலைக் கழக மாணவர்கள்.
மாணவர்களை ஒடுக்கவும் மிரட்டவும் குவிக்கப்பட்டுள்ள போலீசார்.
இரவிலும் தொடரும் மாணவர்கள் போராட்டம்.

 

***

திருச்சி பெரியார் ஈவெரா கல்லூரி மாணவர் போராட்டம் !

திருச்சியில் 17.12.2019 அன்று பெரியார் ஈவெரா கல்லூரியில், குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக பெரியார் ஈவெரா கல்லூரி  மாணவர் கூட்டமைப்பு சார்பாக வாயிற் கூட்டம் நடைபெற்றது.

சக மாணவர்கள் மத்தியில் போராட்ட நியாயத்தை விளக்குகின்றனர்
கல்லூரி வாயில் முன்பு முழக்கமிடும் மாணவர்கள்.

***

கவின் கலைக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் !

சென்னை கவின் கலைக் கல்லூரி மாணவர்கள், 17.12.2019 அன்று காலை குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மீதான எதிர்ப்பை, தங்களது நுண்கலைகள் மூலம் வெளிப்படுத்தினர்.

வண்ணங்களையும், தூரிகைகளையும் ஆயுதமாக்கிய மாணவர்கள்.

 

இந்துவா, கிருத்துவனா, இசுலாமியனா, சீக்கியனா என்பது முக்கியமில்லை. நான் மனிதன்.

 

மேலும் படங்களுக்கு :

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் !

மாநிலக் கல்லூரி மாணவர்கள் 17.12.2019 அன்று தங்களது கல்லூரி வளாகத்திற்குள் ஒன்று கூடி, குடியுரிமை திருத்தச் சட்டதின் மீதான தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

***

தேசிய குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் !

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மோடி அரசு கொண்டுவந்த தேசிய குடியுரிமை சட்டத்தை எதிர்த்து இன்று (18.12.2019) போராட்டம் நடத்தப்பட்டது.

இதில் டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது கொடூரமான தாக்குதல் நடத்திய போலீசை கண்டித்தும். மதரீதியாக இஸ்லாமியர்களையும், இனரீதியாக ஈழத்தமிழர்களை இந்தியாவில் இருந்து அகற்ற கூடாது எனவும். மத பிளவை ஏற்படுத்தும் CAA சட்டத்தை தடை செய்ய வேண்டும்! ஆகிய கோரிக்கைகளை தங்களது போராட்டத்தில் முன்வைத்தனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்:
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி.
கடலூர் மாவட்டம் தொடர்புக்கு: 97888 08110.

***

சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் பேரணி, ஆர்ப்பாட்டம், கலெக்டரிடம் மனு!

சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் 17.12.2019 அன்று திரண்டு, மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டிற்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து, திருவள்ளூர் பேருந்து நிலையம் முதல் ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாக சென்றனர்.

பின்னர் அங்கு நுழைவு வாயிலில் சுமார் 15 நிமிடம் ஆர்ப்பாட்டம் நடத்திய பின், மாணவர்கள் தங்கள் கோரிக்கை மனுவை ஆட்சியரிடம் அளித்தனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தொகுப்பு :

காட்டுப் பன்றிகளிடமிருந்து விவசாயத்தைக் காப்பாற்று – உடுமலை விவசாயிகள் !

திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம் வட்டாரங்களில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள கிராம பகுதிகளில் விவசாய நிலங்களில் காட்டுப்பன்றிகள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்துவதை தடுத்து நிறுத்தக்கோரி டிசம்பர்-17 அன்று உடுமலை வனச்சரக அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து உடுமலை பகுதியின் மக்கள் அதிகாரம் அமைப்பு இப்போராட்டத்தில் பங்கேற்றது.

சின்னமனூர் தொடங்கி உடுமலை வரையில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள வனவோரக் கிராமங்களில் வனவிலங்குகளால் ஏற்படும் விவசாய பாதிப்பு பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்சினையாக நீடித்து வருகிறது.

”தொடர்ந்து நாங்கள் காட்டுப் பன்றிகளால் பெருத்த சேதத்தை சந்தித்து வருகிறோம். மாலை ஆறு மணி ஆனால் வயல்வெளிகளில் நூற்றுக்கணக்கான பன்றிகள் படையெடுத்து நிற்கின்றன. விவசாயிகள் செய்வதறியாது திகைத்து வருகிறோம். நாங்கள் எங்கள் பயிர்களை காப்பாற்ற ஏதாவது வேலி அமைத்தால், பன்றிகளைத் தாக்கினால் வனத்துறையினர் உடனடியாக எங்கள் மீது பொய் வழக்கு போடுகின்றனர். காட்டு பன்றிகளின் படையெடுப்பைக் கட்டுப்படுத்த வேண்டும் என பலமுறை புகார் கொடுத்தும் வனத்துறையினர் கண்டுகொள்ளவில்லை.” என்கின்றனர், இப்பகுதி விவசாயிகள்.

படையெடுத்து வரும் காட்டுப்பன்றிகளைக் கட்டுப்படுத்த இரும்புக்கூண்டு.

விவசாயிகள் தொடர்ச்சியாக போராடும்பொழுது, நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதியளிப்பதும் பெயருக்கு ஒரு சில கூண்டுகளை வைத்து பன்றிகளைப் பிடிக்கிறோம் என்று பத்திரிகைகளில் விளம்பரம் கொடுப்பதுமாகத்தான் வனத்துறை இப்பிரச்சினையை அணுகி வருகிறது. நிரந்தர தீர்வு காணும் நோக்கில் வனத்துறையோ அரசோ எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முன்வருவதில்லை என்பதுதான் விவசாயிகளின் மிக முக்கியமான குற்றச்சாட்டாக இருக்கிறது. ஏற்கெனவே, விவசாயம் நலிவடைந்து வரும் சூழலில் அதனையும் சமாளித்து விவசாயம் செய்ய முற்பட்டால் வனவிலங்குகளால் பயிர்செய்ய செலவிட்ட பணத்தைக்கூட திரும்ப எடுக்க முடியாமல் நட்டத்தை சந்திக்க வேண்டியிருப்பதாகவும் கூறுகின்றனர்.

வனப்பகுதியில் வேட்டை மிருகங்களான புலி, கழுதைப் புலி, சிறுத்தை, செந்நாய் போன்ற விலங்கினங்கள் அழிந்து போனதால், காட்டுப்பன்றிகளின் எண்ணிக்கை பல்மடங்கு பெருகியிருப்பதாகவும்; பல்வேறு காரணங்களால் வனத்திலுள்ள இயற்கை வளங்கள் அழிந்துபோனதால், உணவுத்தேவைக்காக மலையடிவாரங்களிலுள்ள விவசாய நிலங்களுக்குள் காட்டுப்பன்றிகள் படையெடுத்து வருவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

படிக்க:
மீண்டும் திறக்கப்படும் நோக்கியா ஆலை : தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை கொடு !
முசுலீம்களை மட்டுமல்ல இந்துக்களையும் செல்லாக்காசாக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் !

காட்டுப்பன்றிகள் மட்டுமின்றி, பெருங்கூட்டமாக படையெடுத்துவரும் மயில் போன்ற வனவிலங்குகளாலும் மலையடிவாரத்தில் பயிரிடப்படும் நிலக்கடலை, சோளம், மக்காசோளம் உள்ளிட்ட பயிர்களை பாதுகாக்க முடியாமல் விவசாயிகள் பெருத்த நட்டத்தை சந்தித்து வருகின்றனர். வனவிலங்குகளால் விவசாய நிலங்களில் பாதிப்பு ஏற்பட்டதை ஆதாரங்களுடன் முறையிட்டால், வனத்துறையின் சார்பில் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென்ற நடைமுறை இருந்த போதிலும் பல்வேறு காரணங்களால் வனத்துறையினர் இழப்பீடு வழங்காமல் இழுத்தடிக்கப்படுவதாகவும் குற்றஞ்சுமத்துகின்றனர், விவசாயிகள்.

மிக முக்கியமாக, தமிழகத்தில் காட்டுப்பன்றிகள் வனவிலங்குகள் என்ற பட்டியலில் இடம்பெற்றிருப்பதால் விவசாய நிலங்களுக்குள் நுழைந்து நாசப்படுத்தும் காட்டுப்பன்றிகளிடமிருந்து தம்மை தற்காத்துக் கொள்ளும் நோக்கில்கூட அவற்றை விவசாயிகளால் தாக்கிவிட முடியாது. அவ்வாறு விவசாயிகளால் காட்டுப்பன்றிகள் தாக்கப்படும்பொழுது, பாதிக்கப்பட்ட விவசாயிகளின் மீது வனப்பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் கொடுமையையும் சந்தித்து வருகின்றனர், வனவோர விவசாயிகள்.

மகாராஷ்டிரா உள்ளிட்ட வடமாநிலங்களில் காட்டுப்பன்றிகளை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதால், அவற்றால் பிரச்சினை ஏற்படும் போது விவசாயிகள் காட்டுப்பன்றிகளை வேட்டையாடுகின்றனர். ஆனால், இங்கே அது சட்டவிரோதம்.

இந்நிலையில்தான், “வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்குள் நுழையாதவாறு வனத்துறையின் சார்பில் வேலி அமைக்க வேண்டும்; உணவுத் தேவைக்காக வனத்தை விட்டு வெளியேறும் நிலையை மாற்றுவதற்கு வனச்சூழலை பராமரிக்க வேண்டும்; வனவிலங்குகள் பட்டியலிலிருந்து காட்டுப்பன்றிகளை நீக்கவேண்டும்” என்ற விவசாயிகளின் தொடர் போராட்டத்தின் ஓர் அங்கமாக, உடுமலை வனச்சரகர் அலுவலக முற்றுகைப்போராட்டத்தை உடுமலை வட்டார விவசாயிகள் நடத்தியிருக்கின்றனர்.


தகவல்:
மக்கள் அதிகாரம்,
உடுமலை.

வரலாற்றில் நெஞ்சையள்ளும் தமிழக உயர்நீதிமன்றம் | பொ.வேல்சாமி

0

சென்னை உயர்நீதிமன்றத்தை முன்வைத்து நீதித்துறையின் வரலாற்றை சுவைபடக் கூறும் புத்தகத்தின் PDF வடிவம்…

நண்பர்களே….

பொ.வேல்சாமி

”சாதிக்கு ஒரு நீதி” என்று வாழ்ந்து வந்த இந்திய – தமிழ்நாட்டு மக்களுக்கு பொதுவான “நீதி” என்பதை காலனியாதிக்கவாதிகள் தான் உருவாக்கிக் கொடுத்தனர் என்ற வரலாற்று நிகழ்வை யாவரும் பொதுவாக அறிந்துள்ளனர். அத்தகைய நீதி வழங்கும் போக்கு ஆங்கிலேயர் ஆட்சி காலங்களில் எப்படி படிப்படியாக உருவாக்கப்பட்டு நிலைபெற்றது என்பதை சுவைபடப் பேசும் ஒரு நல்ல நூல் இது.

படிப்பவர்களுக்கு வியப்பளிக்கும் பல செய்திகள் நூலில் உள்ளன. வாசிப்புச் சுவை குறையாமல் நூல் முழுமையும் எழுதி செல்கிறார் மாவட்ட நீதிபதியாக இருந்த திரு.சி.இராமகிருட்டிணன் அவர்கள். இத்தகைய நூலை நண்பர்கள் அனைவரும் பார்க்க வேண்டும் படிக்க வேண்டும் என்ற ஆசையில் உங்களுக்கு இந்நூலின் இணையதள இணைப்பைக் கொடுத்துள்ளேன்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

நூலை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள சுட்டியை அழுத்தவும் :

வரலாற்றில் நெஞ்சையள்ளும் தமிழக உயர்நீதிமன்றம்

பொ.வேல்சாமி : தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.
எழுதிய நூல்கள்:

  • பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
  • கோவில் நிலம் சாதி
  • பொய்யும் வழுவும்

மீண்டும் திறக்கப்படும் நோக்கியா ஆலை : தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை கொடு !

பின்லாந்து நிறுவனமான நோக்கியா ஆலை கடந்த 2006-ம் ஆண்டில் ரூ 650 கோடி முதலீட்டில் திருபெரும்பதூர்-சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ஆலையை அமைத்து உற்பத்தியை துவங்கியது 10,000 -க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அதில் பணிபுரிந்து வந்தார்கள்.

நாள் ஒன்றுக்கு 1 லட்சத்திற்கும் அதிகமான மொபைல்கள் உற்பத்தி செய்யப்பட்டது. அப்படி உற்பத்தி செய்து குறிப்பிட்ட மொபைல்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் பூரண வரி விலக்கு அளிக்கப்பட்டது. இதற்காக மாநில அரசு வருடத்திற்கு ரூ-600 கோடி மானியம் அளித்தது இந்த மானியம் 2006-ல் துவங்கி, 2014-ம் ஆண்டு வரை, வரிசலுகையை பெற்று, கொள்ளை லாபம் ஈட்டியது அந்நிறுவனம்.

இதற்கிடையில் நிறுவனம் சார்பாக முறையாக கட்ட வேண்டிய வரியினை செலுத்தாமல் ஏய்த்து வந்தது. இதற்கு எதிராக, மத்திய அரசின் வருமான வரித்துறையினர் நடவடிக்கை எடுக்க முற்பட்ட போது ஆலையில் உற்பத்தியை படிப்படியாக குறைத்துக் கொண்டே வந்த நிர்வாகம், தொழிலாளர்களை VRS-என்ற பெயரில் சட்டவிரோதமான முறையில் வெளியேற்றியது. இதற்கேற்ப, ஆலைக்குள் இருந்த சங்க நிர்வாகிகளை ஊழல்படுத்தி தனது கைப்பாவையாக மாற்றி, எல்லாம் சட்டப்படி நடத்துவதாக நாடகமாடியது.

குறிப்பாக 5000-க்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்களை அதுவும் 22-25 வயது உள்ளோரை VRS-திட்டத்தில் வேலையை பறித்தது சட்டபடியும், நடைமுறைப்படியும் எதிரானதாகும் என்பதனை தொழிலாளர்களுக்கு உணர்த்தியது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி. மாநிலக் குழுவின் வழிகாட்டுதலை, ஏற்று 102 தொழிலாளர்கள் ஒன்றிணைந்து நிர்வாகத்தின் சட்ட விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கையை எதிர்த்து திருப்பெரும்புதூர் ACL(தொழிலாளர் உதவி ஆணையர்) முன்னிலையில் தொழிற்தாவா எழுப்பப்பட்டு, நிர்வாகம் சமரச பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டது.

படிக்க:
நோக்கியா தொழிலாளிகளுக்காக களமிறங்கிய பு.ஜ.தொ.மு
அமித் ஷாவின் குடியுரிமை மசோதா இந்து ராஷ்டிரத்துக்கானது !

சட்டத்தையே மதிக்காத நிர்வாகம், சமரச பேச்சுவார்த்தைக்கு வந்து விடுமா? 4, 5 முறை வாய்தா போட்டும் நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. அதைக் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து நடத்தி வந்தோம்.

தற்போது நோக்கியா ஆலையை சால்காம்ப் நிறுவனம் ரூ 215 கோடிக்கு வாங்க இருப்பதாகவும் 2019-2020 ஆண்டில் ரு-1,300 கோடி முதலீடு செய்து 10,000 பேருக்கு வேலை வழங்க இருப்பதாகவும், மேற்படி திருப்பெரும்புத்தூர் பகுதியை மின்னணு உற்பத்தியின் மண்டலமாக அறிவிக்க இருப்பதாகவும் தமிழக அரசின் தொழிற்துறை சார்பாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா நிர்வாகத்தின் சட்டவிரோத ஆலை மூடலை எதிர்த்தும் மீண்டும் வேலை வழங்கக் கோரி வழக்கு நடத்திவரும் நிலையில், மேற்படி அறிவிப்பின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு, வேலையை உத்ரவாதப்படுத்துவது இயற்கை நியதிப்படியும், சட்டத்தின் படியும் அரசின் பொறுப்பாகும் என பு.ஜ.தொ.மு வழிகாட்டியது.

அதன் அடிப்படையில் 09/12/2019 அன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து வேலைகேட்டு போராடி வரும் நோக்கியா தொழிலாளர்களுக்கு, வேலையை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தமிழ்நாடு.

ஆடம் ஸ்மித் : 18-ம் நூற்றாண்டு பொருளாதாரச் சிந்தனையின் உயர்ந்த சிகரம்

0

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் – பாகம் 48

டியுர்கோ – மனிதர்

அ.அனிக்கின்

டியுர்கோவுக்கு இன்னும் ஐம்பது வயதாகவில்லை. ஆனால் அவர் உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டு வந்தார். அவருக்கு ஏற்பட்டிருந்த வாதநோய் அதிகமான வேதனையை ஏற்படுத்தியது. அவர் இருபது மாதங்கள் பதவியிலிருந்தார். அவற்றில் ஏழு மாதங்களைப் படுக்கையில் கழித்தார். ஆனால் அவருடையய வேலை சிறிதும் தடைப்படவில்லை, ஒரு நாள் கூட நின்றுவிடவில்லை.

அவர் படுக்கையிலிருந்தபடியே நகல் சட்டங்களையும் அறிக்கைகளையும் கடிதங்களையும் சொல்ல மற்றவர்கள் எழுதிக் கொண்டிருந்தார்கள். அவர் படுக்கையறையிலேயே அதிகாரிகளுக்குப் பேட்டியளித்தார், உதவியாளர்களிடம் உத்தரவுகளைத் தெரிவித்தார். சில சமயங்களில் அரசரின் தனி அறைக்குள் அவரை சோபா நாற்காலியில் வைத்துத் தூக்கிக் கொண்டு போவார்கள்.

அவர் தன்னுடைய நோயை அலட்சியமாகக் கருதினார். ஆனால் நோய் அவரைப் பிடிவாதமாகத் துன்புறுத்தி வந்தது. சில சமயங்களில் அவர் முட்டுக் கட்டைகளைப் பயன்படுத்தியே நடமாட முடிந்தது; அவர் தமது முட்டுக் கட்டைகளைப் பற்றி கிண்டலாகக் ”கால்கள்” என்று சொல்வதுண்டு. அவர் பதவியிலிருந்து ஓய்வு கொடுக்கப்பட்டுச் சரியாக ஐந்து வருடங்களுக்குப் பிறகு 1781 -ம் வருடம் மே மாதத்தில் ஈரல் நோயினால் மரணமடைந்தார்.

டியுர்கோ பதவியிலிருந்து கீழே இறக்கப்பட்டதையும் தம்முடைய சீர்திருத்தங்கள் கைவிடப்பட்டதையும் அமைதியோடு பொறுத்துக் கொண்டது அவருடைய நண்பர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவருடைய கடிதங்கள் தணிக்கையாவது பற்றிக் கூட அவர் கேலியாகப் பேசினார். பதவியிலிருந்து ஓய்வு கிடைத்தது ஒரு வகையில் அவருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது போலும். அவர் சப்ளை அதிகாரியாகவும் அமைச்சராகவும் சுமார் பதினைந்து வருடங்களைக் கழித்துவிட்டார். இந்தக் காலமுழுவதும் படிக்கவோ, விஞ்ஞான ஆராய்ச்சி செய்யவோ நண்பர்களைச் சந்திக்கவோ அவருக்கு ஓய்வு கிடையாது. இப்பொழுது அவருக்கு நேரம் கிடைத்தது. டியுர்கோ தன்னுடைய கடிதங்களில் இலக்கியத்தையும் இசையையும் விவாதிக்கிறார், பௌதிகத்திலும், வான இயலிலும் தான் செய்துவரும் ஆராய்ச்சிகளைப் பற்றி எழுதுகிறார்.

1778 -ம் வருடத்தில் பிரெஞ்சு இலக்கியப் பேரவையின் தலைவர் என்ற முறையில் அவர் தன்னுடைய புதிய நண்பரான பெஞ்ஜமின் பிராங்க்ளினைப் பேரவையின் உறுப்பினராக்கி கௌரவித்தார். புரட்சி செய்த அமெரிக்கக் குடியேற்றங்களின் தூதராக வந்த பிராங்க்ளினுக்காக வரிவிதிப்பதைப் பற்றிய குறிப்புகள் என்ற தமது கடைசிப் பொருளாதார நூலை எழுதினார். பிரெஞ்சு சமூகத்தின் மற்ற பகுதியினரைப் போலவே அவரும் இந்தக் காலகட்டத்தில் அமெரிக்க விவகாரங்களில் தீவிரமான அக்கறை எடுத்துக் கொண்டார். அட்லாண்டிக் மாகடலுக்கு அப்பால் ஏற்பட்டிருக்கும் புதிய குடியரசு நலிவுற்ற நிலப்பிரபுத்துவ ஐரோப்பாவில் செய்யப்பட்ட தவறுகளையும் குறைகளையும் தவிர்க்கக் கூடும் என்று மனமார்ந்த நம்பிக்கையோடு எதிர்பார்த்தார்.

டியுர்கோ.

அவருடைய பழைய நண்பரான ட அன்வில் கோமகள், திருமதி ஹெல்வெடியஸ் (காலஞ்சென்ற தத்துவஞானியின் விதவை) ஆகியோருடைய வரவேற்புக் கூடங்களுக்கு அவர் தொடர்ந்து போய்க் கொண்டிருந்தார். அங்கே அதிகமான சுதந்திரச் சிந்தனை கொண்டவர்களும் அறிவு இயக்கத்தினரும் கூடுவது வழக்கம். மனிதனின் பகுத்தறிவைப் போற்றிய இந்த மாமனிதரின் அறிவு கடைசிவரையிலும் கூர்மையாகவும் தெளிவாகவும் இருந்தது.

டியுர்கோ தன்னுடைய சொந்த வாழ்க்கையில் ஓரளவுக்குக் கடுகடுப்பாகவும் கவர்ச்சியற்றவராகவும் இருந்தார். அவரிடம் நெகிழ்ச்சி இல்லை; அளவுக்கு மீறி ஒரே நோக்கமுடையவராக இருந்தார் என்று அவரைக் குறை சொல்வதுண்டு. இதனால் அவரோடு தனிமுறையில் பழகுவது அவருக்கு நெருக்கமானவர்களுக்குக் கூட கடினமாக இருந்தது; அவரை நன்கு அறியாதவர்களுக்கோ அது அச்சமூட்டுவதாக இருந்தது.

அவர் மனிதர்களிடமுள்ள இரட்டை வேடத்தையும் சிந்தனையின்மையையும் முரண்பாட்டையும் கண்டு ஆத்திரமடைந்தார். டியுர்கோ அரசவைக்குரிய வழக்க மரபுகளை ஒரு போதும் கற்றுக் கொள்ளவில்லை. வெர்சேய் அரண்மனையைச் சேர்ந்தவர்கள் அவருடைய ஊடுருவிப் பார்க்கின்ற பழுப்பு நிறக் கண்கள், அகன்ற நெற்றி, மாண்பார்ந்த உருவம், அவருடைய தலையின் சமநிலை, ரோமாபுரிச் சிலையைப் போன்ற அவருடைய “வீறமைதியான” தோற்றத்தைக் கண்டு தடுமாற்றமடைந்தார்கள், மிகவும் அதிகமாக பயந்தார்கள் என்று அவருடைய வாழ்க்கை வரலாற்றாசிரியர் எழுதுகிறார்.

வெர்சேய் அரசவைச் சூழலுக்குள் அவர் பொருந்தவில்லை. அவரிடம் பல திறமைகள் இருந்தன, டாலைரான் வர்ணிக்கின்ற ஒரு திறமை அவரிடம் இல்லை. சிந்தனையை வெளிப்படுத்துவதற்கல்ல – அதை மறைப்பதற்கே மொழியை உபயோகிக்க வேண்டும் என்பது அந்தத் திறமை. அது அவரிடம் சிறிதும் கிடையாது.

படிக்க:
காவிகளின் பிடியிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்டெடுப்போம் – புமாஇமு திருச்சி அரங்கக்கூட்டம் !
♦ “இப்போதாவது எழுந்து நில்லுங்கள்” : அருந்ததி ராய் அறிக்கை !

***

அத்தியாயம் பத்து

ஆடம் ஸ்மித் : ஸ்காட்லாந்து அறிஞர்

ரசியல் பொருளாதாரத்தை நிறுவிய அறிஞர்களில் ஒருவரின் வாழ்க்கையோடு தொடர்புடைய இரண்டு விழாக்கள் சமீபத்தில் கொண்டாடப்பட்டன. 1973-ம் வருடத்தில் ஆடம் ஸ்மித்தின் 250வது பிறந்த தின விழாவும் 1976-ம் வருடத்தில் அவர் எழுதிய நாடுகளின் செல்வம் என்ற மாபெரும் புத்தகம் வெளியிடப்பட்டு 200 ஆண்டுகள் நிறைவடைந்ததும் கொண்டாடப்பட்டன. ஸ்காட்லாந்தைச் சேர்ந்த அந்த மாபெரும் அறிஞர் மீதும் பொருளாதார விஞ்ஞானத்தில் அவர் வகித்த அதிகச் சிறப்பான பாத்திரத்தின் மீதும் உலகத்தின் கவனம் திருப்பப்பட்டது.

விக்டோரியா காலத்தைச் சேர்ந்த ஆங்கிலப் பொருளியலாளரும் கட்டுரையாளருமான வா. பேஜ்காட் 1876-ம் வருடத்தில் பின் வருமாறு எழுதினார்: ”ஆடம் ஸ்மித்தின் அரசியல் பொருளாதாரத்தைப் பற்றி அநேகமாக முடிவில்லாத அளவுக்கு எழுதப்பட்டிருக்கிறது; ஆனால் ஆடம் ஸ்மித்தைப் பற்றி அநேகமாக எழுதப்படவில்லை. இத்தனைக்கும் அவர் மனிதப் பிறவிகளில் அதிகமான அளவுக்கு விசித்திரம் நிறைந்தவராக இருந்தார். மேலும், அவர் எப்படிப்பட்ட மனிதர் என்பதைப் பற்றி ஒன்றுமே தெரிந்து கொள்ளாமல் அவருடைய புத்தகங்களை அநேகமாகப் புரிந்து கொள்ள முடியாது”.(1) 

இதற்குப் பிறகு ஆடம் ஸ்மித் பற்றிய ஆராய்ச்சி அதிகமாக வளர்ச்சியடைந்துவிட்டது என்பது உண்மையே. எனினும் 1948-ம் வருடத்தில் ஆங்கில நிபுணரான அ. கிரேய் பின்வருமாறு கூறினார்: “ஆடம் ஸ்மித் 18-ம் நூற்றாண்டின் ஒப்பற்ற மேதைகளில் தலை சிறந்தவர், 19-ம் நூற்றாண்டில் அவருடைய நாட்டிலும் அதற்கு வெளியேயுள்ள உலகத்திலும் வன்மையான தாக்கத்தை ஏற்படுத்தியவர் என்பதும் சுலபமாகப் புரிந்து கொள்ளக் கூடியதே. எனவே அவருடைய வாழ்க்கை விவரங்களைப் பற்றி நமக்கு மிகவும் குறைவான செய்திகளே தெரிந்திருப்பது ஓரளவுக்கு வியப்பைத் தருவதே…. அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதுபவருக்குச் செய்திகள் குறைவாகவே இருப்பதனால் ஆடம் ஸ்மித்தின் வாழ்க்கை என்ற பெயரில் அந்தக் காலத்தின் வரலாற்றை எழுத வேண்டிய அவசியம் அவருக்கு ஏற்படுகிறது. (2) 

ஒவ்வொரு யுகமும் தன்னுடைய தேவைகளுக்கேற்ப மனிதனை உருவாக்குகிறது. முதலாளித்துவப் பொருளாதாரத்தின் நடைமுறை வளர்ச்சியால் நிர்ணயிக்கப்பட்ட இங்கிலாந்தின் அரசியல் பொருளாதாரம் தன் வளர்ச்சியில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தை எட்டியிருந்தது. அந்தக் கட்டத்தில் பொருளாதார அறிவை முறைப்படுத்திப் பொதுமையாக்குவது. ஒரு பொருளாதார முறையை உருவாக்குவது அவசியமாயிற்று. இந்தப் பணியை நிறைவேற்றுவதற்கு ஸ்மித் தனிப்பட்ட முறையிலும் அறிவுத்துறையிலும் மிகச் சிறந்த தகுதிகளைக் கொண்டிருந்தார்.

அவரிடம் சூக்குமமாகச் சிந்திக்கும் திறமையும் ஸ்தூலமான விஷயங்களைப் பற்றி கவர்ச்சிகரமாகப் பேசக் கூடிய ஆற்றலும் அதிர்ஷ்டவசமாக இணைந்திருந்தன; கலைக்களஞ்சியத்தைப் போன்ற விரிவான புலமையும் அறிவுத்துறையில் அதிகமான நேர்மையும் மனச்சான்றிலிருந்து இம்மியளவும் விலகாத தன்மையும் கொண்டிருந்தார்; மற்றவர்களுடைய கருத்துக்களை அதிகமான சுதந்திரத்தோடும் விமர்சனக் கண்ணோட்டத்தோடும் எடுத்தாள்கின்ற திறமையைக் கொண்டிருந்தார். அறிவுத்துறையிலும் பொது விவகாரங்களிலும் அவரிடமிருந்த ஒரு வகையான துணிச்சல் பேராசிரியர்களுக்குரிய நிதானம், ஒழுங்கு முறையோடு கலந்து வெளிப்பட்டது.

சாதாரணமாகவும் எளிமையாகவும் தோன்றுகின்ற ஆனால் மனிதனுக்கு மிகவும் அடிப்படையான நிகழ்வுகளின் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதையும் விளக்குவதையும் பொருளாதார விஞ்ஞானம் சாத்தியமாக்குகிறது, அல்லது அவ்வாறு புரிந்து கொள்வதற்கு முயற்சிகளைச் செய்கிறது.

பணம் அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு ஆகும். அதைத் தன்னுடைய கைகளால் தொடாதவர்கள் அல்லது அது என்ன என்று தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால் பணம் பல இரகசியங்களைக் கொண்டிருக்கிறது. பொருளியலாளர்களுக்கு இந்தப் பிரச்சினை முடிவில்லாத அளவுக்குப் பன்முகத் தன்மையைக் கொண்டதாகும்; இது இன்னும் பல வருடங்களுக்கு அவர்களுடைய கவனத்துக்கு உரியதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஆடம் ஸ்மித் அன்றாடம் நடைபெறுகின்ற பொருளாதார நிகழ்வுகளைப் புத்தார்வக் கற்பனையோடு பார்க்கின்ற குறிப்பிடத்தக்க உணர்ச்சியைக் கொண்டிருந்தார். வாங்குவதும் விற்பனை செய்வதும், நிலத்தைக் குத்தகைக்கு விடுவதும் தொழிலாளர்களை வேலைக்குச் சேர்ப்பதும், வரிகளைக் கட்டுவதும் உறுதிச் சீட்டுகளைக் கழிவோடு பெற்றுக் கொள்கின்ற எல்லா நடவடிக்கைகளுமே அவருடைய பேனாவில் ஒருவித விசேஷமான அர்த்தத்தையும் அக்கறையையும் பெற்றன.

படிக்க:
வெளிநாடு வாழ் இந்தியர்களின் பொருளாதார பங்களிப்பு | உலகத் தமிழர்கள் ஒருங்கிணைப்பு | கேள்வி – பதில் !
♦ அதிகரிக்கும் வங்கி மோசடிகள் : மோடி ஆட்சியின் சாதனை !

அவற்றைப் புரிந்து கொள்ளாமல் ”கௌரவமான” மேல் வட்டாரங்களான அரசியல் மற்றும் அரசாங்கத் துறைகளில் நடப்பது என்ன என்பதைத் தெரிந்து கொள்ள முடியாது என்பது வெளிப்பட்டது. பைரனும் பூஷ்கினும் வாழ்ந்த காலத்தில் அரசியல் பொருளாதாரத்தின் மீது அதிகமான அக்கறை ஏற்பட்டதற்குக் காரணமே ஆடம் ஸ்மித் என்பது உண்மையாகும்.

ஸ்மித் வளர்ச்சியடைந்து கொண்டிருந்த தொழில்துறை முதலாளி வர்க்கத்தின் நலன்களை வெளிப்படுத்தினார், ஆனால் அவர் நிபந்தனையற்ற முறையில் அதற்காக ஒரு போதும் வாதாடவில்லை என்பது முக்கியமான அம்சமாகும். அவர் தன்னைப் பொறுத்தவரை, அறிவுத்துறையில் பாரபட்சமின்றி ஆராய்வதற்கும் சுதந்திரமான முடிவுகளுக்கு வருவதற்கும் முயற்சி செய்தார் என்பது மட்டுமல்லாமல், பெருமளவுக்கு அவற்றைச் சாதிக்கவும் செய்தார். இந்த குணாம்சங்களே அவர் ஒரு பொருளாதார முறையை உருவாக்குவதற்குத் துணை புரிந்தன. அவர் முதலாளித்துவ சமூகத்தின் உள்ளமைப்பை ஊடுருவிப் பார்க்க முயற்சி செய்தார் (3)

என்று மார்க்ஸ் ஆடம் ஸ்மித்தைப் பற்றி எழுதுகிறார். அவருடைய புத்தகம் மனிதகுலப் பண்பாட்டின் மகத்தான சாதனையாகும், 18-ம் நூற்றாண்டில் பொருளாதாரச் சிந்தனையின் உயர்ந்த சிகரமாகும்.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

 (1)  Bageliot’s Historical Essays, N.-Y., 1966, p. 79.
 (2) A. Gray, Adam Smith, London, 1948, p. 3.
 (3)  K. Marx, Theories of Surplus-Value, Part 1/1, Moscow, 1968, P. 165.

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

முசுலீம்களை மட்டுமல்ல இந்துக்களையும் செல்லாக்காசாக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் !

1

முஸ்லிம்கள் மீதான தாக்குதலின் ஒரு பகுதியாக நரேந்திர மோடி அரசாங்கம் நிறைவேற்றிய குடியுரிமை (திருத்த) மசோதா, இந்தியர்களில்  மிகவும் ஏமாற்றப்பட்டவர்கள் இந்துக்கள்  என்பது ஒரு முக்கியமான அனுமானமாக உள்ளது. ஏனென்றால் அடுத்ததாக வரும் தேசிய குடிமக்களின் பதிவேட்டில் (என்.ஆர்.சி), நூற்றுக்கணக்கான மில்லியன் குடிமக்கள் விரைவில் தங்கள் தேசியத்தை நிரூபிக்க வரிசையில் நிற்பார்கள். அவர்களில் பெரும்பாலோர் இந்துக்களாக இருப்பார்கள்.

சமீபத்தில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா குறித்த தொலைக்காட்சி விவாதத்தின் போது, பாஜக சார்பு பேச்சாளர் ஒருவர் இந்த அரசாங்கம் முஸ்லிம்களை வெறுக்கவில்லை என்று என்னிடம் உறுதியளித்தார்.  குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றுவதால் பாதுகாப்பு கோரும் முஸ்லிம்களுக்கு எதிரான எந்தவொரு பாகுபாடும் உருவாகாது எனவும் அவர் தெரிவித்தார். இந்த வியக்கத்தக்க அறிவிப்புக்கான ஆதாரமாக, இந்தியா 2015-ல் அட்னான் சாமிக்கு குடியுரிமையை வழங்கியதை அவர் கூறினார்.  நான் அப்போது கிட்டத்தட்ட தொலைக்காட்சியில் சத்தமாக சிரித்தேன்.

லண்டனில் பிறந்த பணக்கார, புகழ்பெற்ற பாகிஸ்தான் குடிமக்களுக்கு அன்புக்காக எந்த அரசாங்கமும் இத்தகைய குடியுரிமையை வழங்கும். நான் எனது இந்தியாவிற்காகவும், என் சக இந்தியர்களுக்கும் – முஸ்லீம் மற்றும் இந்து மற்றும் அனைவருக்குமாக அக்கறை செலுத்துகிறேன். குறிப்பாக ஏழ்மையான, காகிதமில்லாத, ஆவணமற்றவர்களுக்காக நான் கவலை கொள்கிறேன்.

NRC மற்றும் CAB ஆகியவை ஒரே மோசமான விதைகளின் இரட்டையர்கள்; ஆனால் அவை வேறுபட்டவை. CAB என்பது இந்திய அரசியலமைப்பு மீதான தெளிவான ஒரு கருத்தியல் யுத்தம் மற்றும் ஒரு பிரச்சார கருவி.

கருத்தியல் – ஏனென்றால் அது குடியுரிமைக்கான ஒரு அடையாளமாக துன்புறுத்தப்பட்ட, இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மை சமூகங்களை மூன்று முசுலீம் பெரும்பான்மை நாடுகளிலிருந்து பாதுகாப்பதாகக் கூறி ‘மதம்’ என்பதை சட்ட முன்மாதிரியாக நிறுவுகிறது. ஆனால், முசுலீம்களை அதிலிருந்து வெளியேற்றுகிறது. முசுலீம்களை வெல்வதற்கு, அவர்களுக்கு அரசியலமைப்பு தந்திருக்கிற உரிமைகளை  மறுப்பது, அச்சத்தை பரப்புவது, அவர்களுக்கு தூக்கமில்லாத இரவுகளை வழங்குவது உள்ளிட்டவற்றைச் செய்வது. இந்தியாவை அழித்து பிளவுபடுத்தி, காவி பார்வையுடன் முன்னேறுவது. இதுதான் அந்தக் கருத்தியல் யுத்தம்.

அடுத்தது பிரச்சாரம் – ஏனெனில் மத்திய உள்துறை அமைச்சர் இந்துக்களிடம் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் என்.ஆர்.சி.யால் பயப்பட ஒன்றுமில்லை என்று கூறிக்கொண்டே இருக்கிறார். உண்மை என்னவென்றால், என்.ஆர்.சி நம் அனைவரையும் அழித்துவிடும். இந்துக்களையும் கூட.

அரசாங்கத்தின் CAB – NRC திட்டம் அனைத்து இந்தியர்களின் பயம், கீழ்ப்படிதல் மற்றும் அடிமைப்படுத்துதலின் விவரிப்பையும் ஆட்சியையும் முன்வைக்கிறது. குடியுரிமை என்பது ஒரு தேசத்தைச் சேர்ந்த மிக அடிப்படையான மனித உரிமை, இந்த பரந்த கிரகத்தில் ஒரு சிறிய இடத்தை உங்கள் நாடு என்று கூறுவது, அதன் பாதுகாப்பிற்கு உரிமை பெறுவது.

இந்தியா முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை செயல்முறைப்படுத்துவதாக அரசாங்கம் அச்சுறுத்துகிறது. விலக்கி வைக்கப்பட்ட இந்துக்கள் குடியுரிமை சட்டத்தின் மூலம் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் எனவும் பிரச்சாரம் செய்கிறது. அமித் ஷாவே பிசைந்து உருவாக்கிய பிரசாத லட்டு எனவும் சொல்லப்படுகிறது. டிசம்பர் 9, 2019 அன்று மக்களவையில் மசோதாவை அறிமுகப்படுத்திய உள்துறை அமைச்சர் பேசியதைக் கேளுங்கள். அவர் தேர்ந்தெடுத்த சொற்களில் கவனம் செலுத்துங்கள்; அவரது உடல் மொழியைப் பாருங்கள். ஒரு இடைக்கால சர்வாதிகாரி ஒருவரை கற்பனை செய்யுங்கள். அவர் விரும்பும் போது குடியுரிமையை வழங்குவார் அல்லது குடியுரிமையை பறிப்பார். அவர் உங்களை மகிழ்ச்சி படுத்தும்போது, “நாங்கள் அவர்களுக்கு குடியுரிமையைக் கொடுப்போம்; அவர்களுக்கு நாங்கள் குடியுரிமையைக் கொடுப்போம்” . ‘நாம்’ -மதிப்பிற்குரிய ‘நாங்கள்’.

இது ஒரு கருத்தியல் திட்டத்தின் குருட்டுத்தன்மையை எடுத்துக்காட்டுகிறது. அது தனது சொந்த உரிமை கோரல்களை, அதாவது இந்துக்களைக் கூட கவனிப்பதில்லை. CAB மற்றும் NRC இரண்டின் தெளிவான இலக்கு முசுலீம்கள். அது நம்மை ஆச்சரியப்படுத்தவில்லை. இந்த அரசாங்கம் இந்திய முசுலீம்களின் உரிமைகளைத் தகர்த்து, பறிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்துத்துவா திட்டத்திற்கு முசுலீம்களை விரட்டுவது முக்கியம். அதைப் பற்றி தொடர்ந்து பேசுவது கடினமானது. அதுதான் அவர்கள் யார் என்பதைக் காட்டுகிறது. இதுதான் அவர்களின் கீழ்த்தரமான அரசியல் வகைமை. அதிலிருந்து வேறுபட்டதை நாம் எதிர்பார்க்கக்கூடாது.

ஆனால் அசாமில் இருந்து கற்றுக் கொள்ளுங்கள்,  இந்தத் திட்டத்துக்கு ஏற்கெனவே லட்சக்கணக்கான இந்தியர்கள் விலை கொடுத்துள்ளனர்; மேலும் பல மில்லியன் கணக்கானவர்கள் இதற்கான விலையைச் செலுத்துவார்கள். அசாமில் இருந்து வரும் இதயத்தை உடைக்கும் படங்களை நினைவு கூருங்கள். இவர்கள் அனைவரும் மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பவர்கள்; அவநம்பிக்கையான மக்கள். ஆம், லட்சக் கணக்கில் இந்துக்களும் உள்ளனர். அசாமில் உள்ள என்.ஆர்.சிக்கு ஒரு குறிப்பிட்ட உள்ளூர் வரலாறு மற்றும் பகுத்தறிவு இருந்தது. பாஜக அதை வகுப்புவாதமாக்க முயன்றது. அதன் இந்து-முஸ்லீம் கண்ணோட்டத்தை அசாமி-பெங்காலி என்ற பிழையான கோட்டின் மீது மிகைப்படுத்தியது; உச்சநீதிமன்றம் அதை மனிதாபிமானமற்ற முறையில் நடைமுறைப்படுத்தியது. மேலும், அங்குள்ள பரிதாபகரமான சோகமான குழப்பத்தைப் பாருங்கள். இந்தியாவின் பிற பகுதிகளில், என்.ஆர்.சி பெரிய அளவில் மிகப்பெரும் குழப்பத்தை உருவாக்கும்.

என்.ஆர்.சி செயல்படுத்த தொடங்கியவுடன், அமித் ஷாவும் அவரது அதிகாரிகளும் வேறுவிதமாக முடிவு செய்யும் வரை நாம் அனைவரும் குடிமக்கள் அல்லாதவர்களாக குறைக்கப்படுவோம். அந்தத் தருணத்தை நீங்கள் கற்பனை செய்து பாருங்கள். அனைத்து (முஸ்லீம்) ‘கரையான்களையும்’ மற்றும் ‘ஊடுருவல்காரர்களையும்’ ஒரு தேசிய என்.ஆர்.சி  மூலம் விரட்டுவோம் என உள்துறை அமைச்சர் பலமுறை மிரட்டியுள்ளார், ஆனால் CAB மூலம் இந்துக்களை காப்பாற்ற சத்தமாகவும் தெளிவாகவும் சபதம் செய்தார். இந்த கூற்று உண்மையில் எப்படி இருக்கும் என்பதை ஆராய்வோம்.

என்.ஆர்.சியின் அசாம் வார்ப்புருவைப் பொறுத்தவரை, நிரூபிக்கப்படும் வரை நாம் அனைவரும் குடிமக்கள் அல்லாதவர்களாக கருதப்படுவோம். இந்துக்களும் கூட.

♦ 3.3 கோடி அசாம் குடியிருப்பாளர்கள் அனைவரும் என்.ஆர்.சி.க்கு விண்ணப்பிக்க வேண்டியிருந்தது என்பதை நினைவில் கொள்க. இந்துக்களும் கூட.

♦ நம் நாடு நம்முடையது என்பதை நிரூபிக்க நாம் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கும். இந்துக்களுக்கும் கூட.

♦ அஸ்ஸாமில் உள்ள என்.ஆர்.சி-யிலிருந்து வெளியேறிய எந்த இந்துவும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று உள்துறை அமைச்சர் கூறுகிறார், ஏனெனில் குடியுரிமை திருத்த சட்டம் என்ற சர்க்கஸின் மாஸ்டரே அவர்தான்.

♦ வாழ்த்துக்கள். ஏறக்குறைய நீங்கள் அங்குதான் இருக்கிறீர்கள். இப்போது என்ன?

♦ அசாமில் உள்ள என்.ஆர்.சி-யிலிருந்து 19 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர், வட இந்தியாவைச் சேர்ந்த பெங்காலி அல்லாத இந்துக்கள் உட்பட 12 லட்சம் இந்துக்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

♦ அவர்கள் ஒவ்வொருவரும் இந்திய குடிமக்கள் என்று கூறிக்கொண்டனர். ஆனால் அவர்கள் பங்களாதேஷில் இருந்து மத ரீதியாக துன்புறுத்தப்பட்ட அகதிகள் என்று கூறுமாறு CAB கோருகிறது.

♦ 12 லட்சம் பேர் தங்கள் ஆவணங்கள் மோசடியானவை என்று சொல்ல வேண்டியிருக்கும், அவர்கள் பொய் சொன்னார்கள். அதனால்தான் CAB அவர்களுக்கு எந்தவொரு சட்ட நடவடிக்கையிலிருந்தும் விலக்கு அளிக்கிறது.

♦ இந்த இந்துக்களும் 1971-க்கு முன்னர் அசாமுக்கு வந்ததாகக் கூறியவர்கள். என்.ஆர்.சிக்கான இறுதி கெடுவும் அதுவே.

♦ ஆகவே, 1971 க்கு முந்தைய லட்சக்கணக்கான இந்த இந்துக்கள், பெங்காலி அல்லாதவர்கள் உட்பட, முதலில் தாங்கள் கிழக்கு பாகிஸ்தானியர்கள் என்று அறிவிக்க வேண்டும், பின்னர் 1) நான் இந்தியன் என்று பொய் சொன்னேன். 2) பங்களாதேஷால் துன்புறுத்தப்பட்டதாகக் கூறுபவர்கள், நான் பொய் சொன்னேன், ஏனென்றால் நான் உண்மையில் 1971 க்குப் பிறகு வந்தேன், பங்களாதேஷ் பிறந்ததும் 3) நான் மத ரீதியாக துன்புறுத்தப்பட்டேன் என சொல்ல வேண்டும்.

அதனுடைய நல்ல அதிர்ஷ்டத்துக்கு வாழ்த்துகள்.

மேலே உள்ள அனைத்தையும்  கவனித்துக்கொள்வதற்கு CAB ‘விதிகள்’ எவ்வாறு உருவாக்கப்படுகின்றன என்பது எனக்கு வியப்பளிக்கிறது.

இந்தியாவின் பிற பகுதிகளில் என்.ஆர்.சி செயல்படுத்தப்பட்டாலும், CAB வந்த பிறகும், எந்த வித்தியாசமும் இருக்காது. காகிதமில்லாத ஏழை தமிழ் இந்து என்.ஆர்.சிக்கு என்ன சொல்லப் போகிறார்? நான் உண்மையில் ஒரு ஆப்கானி. மோசமான விஷயம் என்னவென்றால், பங்களாவின் ஒரு வார்த்தையும் பேச முடியாது, ஆனால் நான் உண்மையில் வங்க தேசத்தைச் சேர்ந்தவன்.. அடிப்படையில், இந்தியாவில் ஒவ்வொரு காகிதமற்ற ஏழை இந்துவும் எப்படியாவது பாதுகாக்கப்படுவார் ஏனெனில் CAB இங்கே உள்ளது என்பது அபத்தமான பிரச்சாரம்.

ஒரு சர்வாதிகார அரசாங்கத்திற்காக குடியுரிமை பெறுவதற்கான தணிக்கைக்கு நாம் அனைவரும் வரிசையில் நிற்க வேண்டும் என்பதே என்.ஆர்.சி திட்டம் ஆகும். முசுலிம்கள் மிகவும் பயப்படுகிறார்கள், ஏனென்றால் அவர்கள் வகுப்புவாத என்.ஆர்.சி இயந்திரங்களால் குறிவைக்கப்பட்டிருக்கிறார்கள்; குறிப்பாக பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில். ஆனால், அனைவரும் வரிசையில் நிற்க வேண்டியிருக்கும். யோசித்துப் பாருங்கள். இந்த நாட்டில் யாருக்கு ‘குடியுரிமை’ ஆவணங்கள் இல்லை? ஏழைகள், கிராமப்புறங்கள், நிலமற்றவர்கள், குடியேறியவர்கள், வீடற்றவர்கள், பெண்கள். இந்துக்களுக்கும் கூட. NRC-CAB திட்டம் ஒரு பிளவுபட்ட சித்தாந்தத்தின் சேவையில் மக்கள் விரோத அரசியல் கருவியாகும்.

படிக்க:
“இப்போதாவது எழுந்து நில்லுங்கள்” : அருந்ததி ராய் அறிக்கை !
’அறிவிக்கப்படாத அவசரநிலை’ : மாணவர்கள் மீது காவி போலீசின் தாக்குதல் !

அசாமில் மட்டும் என்.ஆர்.சி.க்கு ரூ. 1,220 கோடிக்கு மேல் செலவாகும் என்பதால், இந்தியா முழுவதிலும் இது ரூ. 50,000 அல்லது 60,000 கோடிக்கு மேல் செலவு பிடிக்கலாம். ஊர்ந்து செல்லும் பொருளாதாரம் மற்றும் வேலையின்மையை பெரிதாகி வரும் சூழலில், இது பைத்தியக்காரத்தனமான ஆளுகை. இதன் நோக்கம் என்னவென்றால், பாஜக இந்து-முசுலீம் உறவை ஒரு வகையான கொதிப்பிலேயே வைத்திருக்க வேண்டும். எல்லோரும் என்றென்றும் ஒரு இந்து அல்லது ஒரு முசுலீம் என்பதை உறுதிசெய்து, வெங்காய விலையை மறக்கச் செய்து, 2024 தேர்தலில் பாஜக வெற்றிபெற உதவ வேண்டும். நாடு முழுவதும் பெரும் குழப்பம் இருக்கும். இதன் தாக்கத்தை முசுலீம்கள் தாங்குவர், ஆனால் இந்தியாவின் பரந்த இந்து மக்களும் இதன் இணை சேதத்தை சந்திப்பார்கள். குடிமக்களாகிய நம்முடைய எல்லா உரிமைகளும் என்றென்றும் அழிக்கப்படும்.

இந்தியர்களாகிய நாம் இதைப் பார்க்க முடியாவிட்டால், இப்போது CAB-NRC திட்டத்தை எதிர்க்காவிட்டால், நாம் அனைவரும் விரைவில் மும்மடங்கு ஆவணங்களை வைத்துக்கொண்டு வரிசையில் நிற்க வேண்டியிருக்கும். பணமதிப்பழிப்புக்குப் பின் நாம் எப்படி முட்டாள்களாக வரிசையில் நின்றோம் என்பதை நினைவில் கொள்க. எனது 12 வயது மகன் ஈதிற்காக தனக்கு கிடைத்த பழைய 500 ரூபாய் தாளைப் பற்றி இன்னமும் வருத்தப்படுகிறான். ஒரு மழை நாளில் அதை தனது உண்டியலில் மறைத்து வைத்தான். பணமதிப்பழிப்பு பற்றி அவனுக்கு எதுவும் தெரியாது, எனவே பயனற்ற அந்தத் தாள் அப்படியே தேங்கிவிட்டது.

இது இப்போது எனது மேசை டிராயரில் உள்ளது. நம் காலத்தின் நினைவுச்சின்னம். நான் அவனுக்கு ஒரு புதிய ரூபாய் தாளை கொடுக்கவில்லை. பாசிசம் குறித்து அவன் அறியவேண்டும் என நான் விரும்புகிறேன். இந்த CAB-NRC கனவைத் தடுக்க இந்துக்களும் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் சீக்கியர்களும் இன்று ஒன்றுபடாவிட்டால், அந்த நள்ளிரவு நேரத்தில் எங்கள் தாத்தா, பாட்டி மற்றும் பெரிய தாத்தா பாட்டி எங்களுக்காக ஒன்றாக வென்ற விலைமதிப்பற்ற சுதந்திரத்தை காட்டி கொடுத்தவர்களாகிவிடுவோம். நாம் பிளவுபட்ட தேசமாக இருப்போம். ஜின்னா அவரது கல்லறையிலிருந்து சிரிப்பார். எங்களுக்குத் தெரிந்த இந்தியா நம் காலத்தின் நினைவுச் சின்னமாக இருக்கும்.


கட்டுரை :  ஃபரா நக்வி
தமிழாக்கம் : கலைமதி
நன்றி : தி வயர்

சுத்த சைவம் – சுத்த அபத்தம் !

மரக்கறி மட்டும் உண்ணும் உணவு முறை குறித்த எனது கருத்து !

விலங்குக்கு உயிர் இருக்கிறதென்றால், பயிருக்கும் தான் உயிர் இருக்கிறது. விலங்கு மூலம் கிடைப்பது கறி என்றால், செடிகள் மூலம் கிடைப்பதும் கறி தான். ஆட்டுக்கறி தவறென்றால், காய் கூட்டுக்கறியும் தவறு தான்.

எந்தக் கீரை வந்து காதில் கூறியது? என்னைப் பறித்து உண்ணடா மானிடா என்று.. விளையும் பயிரில் எந்தப் பயிர் கூறியது? என்னை மட்டும் மூன்று வேலை உண்ணடா மானிடா என்று…

பயிரை நாடி வரும் பூச்சியை கொன்றேன், பூச்சிக்கொல்லி வைத்து.. பூச்சியை நாடி வந்த எலியைக்கொன்றேன், எலிக்கொல்லி வைத்து.. நெற்கதிரை உண்ண வந்த கொக்குக்கு க்ரேன் பாய்சன் வைத்து..

நெருக்கம் நெருக்கமாக மூச்சு முட்டுமாறு நடப்பட்ட நெற்பயிரில் இருந்து வந்த அரிசியில் ஒன்றாவது கூறியதா? என்னை மட்டும் தான் நீ சாப்பிட்டு உயிர் வாழ வேண்டும் மானிடா என்று.

கொல்லக்கூடாது என்றால், ஒரு உயிரையும் கொல்லக்கூடாது!

டெங்கு, மலேரியா, சிக்கன்குனியா நோய்களைத்தரும் கொசுக்களுக்கும் உயிருண்டு அறிவோம். உயிரைக்கொல்வது தவறென்போர் இனி ஒரு போதும் மஸ்கிட்டோ கில்லரை ஆன் செய்யக்கூடாது..

டைபாய்டு, வயிற்றுப்போக்கு நோய்களைத்தரும் கரப்பான்பூச்சிகளுக்கும் உயிருண்டு அறிவோம். இனி ஒரு போதும் ஸ்ப்ரே அடித்து அவற்றை கொல்லக்கூடாது.

உயிர்களைக் கொல்லக்கூடாது என்றால்… பாக்டீரியாவுக்கும் உயிர் உண்டு, அதுவும் இனப்பெருக்கம் செய்கிறது. வைரஸ்-க்கு கூட உயிர் உள்ளது! பூஞ்சை காளானுக்கு உயிர் உள்ளது !

ஆண்டிபயாடிக், ஆண்ட்டி வைரல், ஆண்ட்டி ஃபன்கல் மாத்திரைகள் எதுவும் எடுக்காமல் இருக்க வேண்டும்…

ஒரு கிளாஸ் தண்ணீரில் பல கோடி நுண்ணுயிர் உண்டு. தண்ணீரை கொதிக்க வைத்து வடிகட்டி அவற்றை கொன்று குடிப்பதேன்? மீண்டும் கூறுகிறேன் உணவுக்காக அன்றி பல்வேறு காரணங்களுக்காக உயிர்கள் உலகில் பலியாகின்றன. அடுத்தவன் உணவுத் தட்டில் எட்டிப்பார்ப்பது அநாகரீகம்.

மரக்கறி மட்டும் சாப்பிட விரும்பும், மானுடர் அதை மட்டும் சாப்பிடட்டும். விலங்குக்கறி மட்டும் சாப்பிட விரும்பும் மானுடர், அதை மட்டும் சாப்பிடட்டும். மரக்கறியோடு விலங்குக்கறியும் சேர்த்து சாப்பிட விரும்பும் மானிடர்
இது இரண்டையும் சேர்த்து சாப்பிடட்டும்.

உணவுப் பரிசோதனையை தன் வாழ்நாள் முழுவதும் செய்து வந்த மகாத்மா காந்தியால் கூட பாலுக்கும், முட்டைக்கும் சிறந்த மாற்று கூற முடியவில்லை.

மனிதன் இயற்கையில் ஒரு அனைத்துண்ணி. அவன் மரக்கறியும்; விலங்குக்கறியும் உண்ணப் படைக்கப்பட்டவன்.

படிக்க :
மாட்டுக்கறி சாப்பிடலேன்னா நீ மனுசனே இல்ல – ஆய்வு முடிவு !
♦ பாரதமாதாவின் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் | படக்கட்டுரை

ஐந்து வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் வருடம் தோறும் எழுபது லட்சம் பேர் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் இறந்து வரும் நம் தேசத்தில், பால் கூட உண்ணாத மரக்கறி முறையால், இன்னும் பல குழந்தைகளை கொன்றொழிக்கும் அபாயம் இருக்கிறது.

மகாத்மா காந்தி அவர்கள் பால் கூட உண்ணாத முறையில் ஐந்து வருடங்கள் இருந்து, பிறகு உயிருக்கு அபாயமான சூழலில் மருத்துவர்களின் பலவந்தத்தில் ஆட்டுப்பால் அருந்த ஆரம்பித்தார்.

மிருக வதை தவறு. அதை அனைவரும் எதிர்க்கிறோம் ஆனால் உணவுக்காக மிருகங்களை உண்பது தவறாகாது. அதுவே சிறந்தது.

இன்றும் முட்டை தரும் புரதத்துக்கு இணையில்லை. உலகின் வேறு உணவுப்பொருட்களில் உள்ள புரதச்சத்தை முட்டை கொண்டே கம்பேர் செய்வார்கள்.
Egg has complete protein. இன்றும் இரும்புச்சத்து ஏறுவதற்கு சிறந்த உணவு மிருக மாமிசம் மற்றும் கல்லீரல் / செவரொட்டி தான்.

மாதிரிப் படம்

பால் கூட உண்ணாத, மரக்கறி உணவுமுறையில் வெகுநாட்கள் சப்ளிமெண்ட் இல்லாமல் நீடிக்க முடியாது. B complex விட்டமின்களுக்கு,
புரதச்சத்துக்கு என சப்ளிமெண்ட் எடுக்க வேண்டும். நாட்டில் அனைவராலும் சப்ளிமெண்ட் எடுக்க முடியாது.

காரணம் அன்றாட உணவுக்கே இங்கு பாதி பேருக்கு வழியில்லை. எனவே அறிவுக்கும் உடலுக்கும், ஆரோக்கியத்துக்கும் பொருந்தாத இந்த உணவு முறை குறித்து உங்கள் குழந்தையோ, வீட்டில் இருப்போரோ பேசி வந்தால் அவர்களுக்கு தெளிவாக புரிய வைத்து விடுங்கள்.

அது உங்கள் பொறுப்பு.

மரக்கறி + விலங்குக்கறி + பால் பொருட்கள் = உடலுக்கு சிறந்தது.

மரக்கறி + பால் பொருட்கள் = தனிப்பட்ட விருப்பம் / சப்ளிமெண்ட்டுகளுடன் தனிப்பட்ட எண்ணத்தில் தொடர முடியும்.

மரக்கறி மட்டும் = நீண்ட நாள் சப்ளிமெண்ட் இல்லாமல் தொடர்வது உடலுக்கு உயிருக்கு ஆபத்து / கட்டாயம் சப்ளிமெண்ட்கள் அவசியம்.

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

காவிகளின் பிடியிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்டெடுப்போம் – புமாஇமு திருச்சி அரங்கக்கூட்டம் !

0

காவிகளின் பிடியிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்டெடுப்போம் !
அரங்கக் கூட்டம் – புமாஇமு – திருச்சி

”அதிகரிக்கும் சாதி – மத – இன ரீதியான தாக்குதல்கள், திணிக்கப்படும் புராண – இதிகாச குப்பைகள், காவிமயமாகும் உயர்கல்வி நிறுவனங்கள் காவிகளின் பிடியிலிருந்து உயர்கல்வியை மீட்போம்” என்னும் தலைப்பில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் சார்பில் கடந்த டிச-12 அன்று திருச்சியில் அரங்கக்கூட்டம் நடைபெற்றது.

உரையாற்றும் பிரித்திவ், அரங்கத்தில் பேராசிரியர் மன்சூர் மற்றும் தோழர் கணேசன்.

பு.மா.இ.மு.வின் மாவட்ட அமைப்பாளர் தோழர் பிருத்திவ் தலைமையில் நடைபெற்ற இந்த அரங்கக்கூட்டத்தில், CCCE அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், பேராசிரியர் பி.மு.மன்சூர் மற்றும் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் ஆகியோர் உரையாற்றினர்.

தோழர் பிருத்திவ் தனது தலைமை உரையில், ”இன்று அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. சார்பு ஆட்களையே முதல்வர்களாகவும் துணைவேந்தர்களாகவும் நியமித்து வருகிறார்கள். காவி பிடியில் கல்வி செல்கிறது என்றால் இன்னொரு பக்கம் கார்ப்பரேட்டுகள் கல்வியையே கொள்ளை அடித்து செல்கிறார்கள். இந்த கார்ப்பரேட் கொள்ளையையும் வேலையின்மையையும் பற்றி சிந்திக்கவிடாமல் இந்துத்துவா பிரச்சாரத்தை கிளப்பி மக்களை திசைதிருப்பி விடுகிறார்கள்.” என்பதை அம்பலப்படுத்தினார்.

பேராசிரியர் பி.மு.மன்சூர்.

திருச்சி CCCE அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் தமிழ்த்துறைத் தலைவருமான பேராசிரியர் பி.மு.மன்சூர் பேசுகையில், ”நாட்டில் தற்போது நிலவும் வேலையின்மை மிக மோசமாகவுள்ளது. பட்டபடிப்பு படித்து வந்தாலும் இங்கு வேலையில்லை. ஆனால் இவர்கள் கொண்டு வரும் புதிய தேசிய கல்விக்கொள்கை ஏழை, கிராமப்புற மாணவர்கள்  இனி படிக்கவே முடியாத அளவுக்கு மாற்ற போகிறது. பார்ப்பனியம் அந்த காலத்தில் எவ்வாறு நம்மை அடிமை படுத்தி வந்ததோ, அதே போல் இன்று மீண்டும் அதற்கான வேலைகளை பல வழிகளில் செய்து வருகிறது” என்பதனை விரிவாக விளக்கினார்.

தோழர் கணேசன் .

இதனைத்தொடர்ந்து உரையாற்றிய, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன், ”இந்த காலகட்டத்தில் நம் நாடு முழுக்க அச்சம் குடிகொண்டு இருக்கிறது. இந்த அச்சத்திற்கு எதிராக JNU மாணவர்கள் போராட்டம் முன்னுதாரணமாக இருக்கிறது. மாணவர்கள் மாபெரும் பேரணி சென்று பாராளுமன்றத்தையே முற்றுகையிட்டு போராடுகின்றனர்.  சென்னை ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா லத்திப் தற்கொலை, பனராஸ் இந்து பல்கலைக்கழகத்தில் RSS-ன் அராஜகம், உயர் கல்வி நிறுவனங்கள் முழுக்க காவிபிடியில் சென்று கொண்டிருக்கிறது. இவ்வேளையில் இதனை முறியடிக்க JNU மாணவர்கள் போராட்டம் நமக்கு வழிகாட்டுகிறது. அந்த வகையில் இந்த காவிக் கும்பலை விரட்டுவோம்” என்றார்.

தோழர் சுரேஷ்.

இறுதியாக புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் திருச்சி மாவட்ட  பொருளாளர் தோழர் சுரேஷ் வழங்கிய நன்றியுரையோடு அரங்கக்கூட்ட நிகழ்வுகள் நிறைவுற்றன. பேராசிரியர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த அரங்கக்கூட்ட நிகழ்வுகள், காவிகளின் பிடியிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்டெடுப்பதற்கு, ஆசிரியர்கள் – மாணவர்கள் – பெற்றோர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டியதன் அவசியத்தை இக்கூட்டம் உணர்த்தியது.

படிக்க:
அதிகரிக்கும் வங்கி மோசடிகள் : மோடி ஆட்சியின் சாதனை !
அமித் ஷாவின் குடியுரிமை மசோதா இந்து ராஷ்டிரத்துக்கானது !


தகவல்: புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
திருச்சி.
தொடர்புக்கு : 99431 76246.

திருச்சி அரசு ஆதி திராவிடர் கல்லூரி மாணவியர் விடுதியில் போராட்டம் !

0

திருச்சி கண்டோன்மெண்ட் பகுதி ரெய்னால்ட்ஸ் சாலையில் உள்ளது அரசு ஆதி திராவிடர் கல்லூரி மாணவியர் விடுதி. இங்கு வெளியூர்களில் இருந்து வந்து பல்வேறு கல்லூரிகளில் படிக்கும் கல்லூரி மாணவிகள் தங்கியுள்ளனர். இவ்விடுதியில் சேர்வதற்கு மாணவிகளிடம் 5,000 முதல் 10,000 வரை பணம் வாங்கிக் கொண்டுதான் சேர்க்கிறார்கள்.

இதனால் பணம் கொடுக்க முடியாத மாணவிகள் பலருக்கும் இவ்விடுதிகளில் இடம் கிடைக்கவில்லை. இப்படி மாணவிகளிடம் பணத்தை வாங்கிக் கொண்டு தரமான உணவு, குடிநீர், கழிப்பிடம் அமைத்து கொடுக்கவில்லை. இங்கு உள்ள போர்வெல்லில் அடிக்கடி மோட்டார் பழுதாகி விடுகிறது. இப்படி மோட்டார் பழுதாகும் போதெல்லாம் அதற்கும் மாணவிகளிடம் பணம் கேட்டு நிர்பந்திக்கிறார் விடுதி காப்பாளர்.

16.12.2019 அன்று காலை முதலே தண்ணீர் வரவில்லை. இயற்கை உபாதைகளை கழிப்பதற்கும் கூட வெளியிலிருந்து வாட்டர் பாட்டிலில் தண்ணீர் வாங்கி பயன்படுத்துவதுதான் நிலைமையாக இருந்து வந்தது. இதை சரிசெய்ய விடுதி காப்பாளரிடம் முறையிட்ட போது அரசிடமிருந்து பணம் வரவில்லை நீங்கள் அனைவரும் சேர்ந்து பணம் கொடுங்கள், சரிசெய்து தருகிறேன் என்றுள்ளார். தற்காலிகமாக தண்ணீர் ஏற்பாடு செய்து தரவும் முடியாது என்று கூறியிருக்கிறார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள் மாலையில் காலி பக்கெட்டுகளுடனும், அழுக்கு துணிகளுடனும் விடுதி முன் உள்ள சாலையில் அமர்ந்து இரவு வரை போராட்டம் நடத்தினர். உடனே போலிசு விடுதிக்குள் செல்லுங்கள் என்று மிரட்டியது. மாணவிகள் அதற்கெல்லாம் அஞ்சாமல் தொடர்ந்து போராடினர். இறுதியாக தாசில்தார் வந்து சரி செய்து கொடுக்கிறேன் என்று உறுதியளித்தார். அதன் பிறகு உடனே தண்ணீர் லாரி வந்தது. பம்பு செட் சரி செய்யப்பட்டது. கழிவறை சுத்தம் செய்யப்பட்டது.

இன்று நாடெங்கும் மாணவர்களின் போரட்டம் எழுச்சியுற்று வருகிறது. அது பொருளாதார கோரிக்கையோ, அரசியல் கோரிக்கையோ இந்த பாசிச அரசு அதை தீர்ப்பதற்கு வக்கற்றுப் போயுள்ளது. நாடெங்கும் நடக்கும் இந்நிகழ்வுகள் உணர்த்துவது ஒன்றுதான் போராட்டமே நம்முன் உள்ள ஒரே தீர்வு.

படிக்க:
ஆதி திராவிடர் நலத்துறை விடுதிகளின் அவல நிலை ! பிரேசில் பழங்குடியினரிடம் போராடக் கற்போம் !
அரசு ஆதி திராவிடர் நல மாணவர் விடுதிகள் – நவீன சேரிகள் !

தகவல்:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
திருச்சி. தொடர்புக்கு : 99431 76246.

’அறிவிக்கப்படாத அவசரநிலை’ : மாணவர்கள் மீது காவி போலீசின் தாக்குதல் !

0

காஷ்மீரில் தொடங்கி அசாம் உள்ளிட்ட வடமாநிலங்களில் மையம் கொண்ட இராணுவ – போலீசு அடக்குமுறை இப்போது டெல்லியில் உச்சம் கண்டுள்ளது. மக்கள் விரோத சட்டங்களை அமலாக்கிக் கொண்டிருக்கும் காவி அரசு, தார்மீக கோபத்தை வெளிப்படுத்தும் மக்களை அடக்கி ஒடுக்க இராணுவம் – போலீசை பயன்படுத்திவருகிறது.

குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டதைக் கண்டித்து டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை அமைதி வழியில் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர். மாணவர்களின் போராட்டத்தை திசை திருப்பும் வகையில், டெல்லி போலீசின் உதவியுடன் களமிறங்கிய குண்டர்படை மூன்று பேருந்துகள், இரண்டு இருசக்கர வாகனங்களை கொளுத்தி வன்முறையைத் தூண்டியுள்ளது.

இதைக் காரணமாக வைத்து அனுமதியில்லாமல் பல்கலைக்கழக வளாகத்துக்குள் புகுந்த டெல்லி போலீசு மாணவர்களை அடித்து உதைத்ததோடு, நூறுக்கும் மேற்பட்ட மாணவர்களை கைது செய்துள்ளது. பல்கலைக்கழகத்துக்குள் கண்ணீர் புகை குண்டுகளையும் வீசியுள்ளது.

பல்கலைக்கழகம் உள்ள பகுதியில் குடியிருப்புவாசிகள் சிலர் போலீசுடன் மோதலில் ஈடுபட்டதாகவும் அவர்கள் பேருந்துகளை எரித்ததாகவும் சொல்லப்பட்ட நிலையில் மெரினா போராட்டத்தின் போது குடிசைகளை போலீசே எரித்ததுபோல,பேருந்துகளை டெல்லி போலீசு எரிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது.

இந்த ‘அரங்கேற்ற வன்முறை’ சம்பவத்துக்குப் பின் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்த போலீசு, ஊழியர்களையும் மாணவர்களையும் அடித்து நொறுக்கியுள்ளது. பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அதிகாரி வாசிம் அகமது கான், போலீசு அத்துமீறி உள்ளே நுழைந்து ஊழியர்களை மாணவர்களையும் அடித்து வலுக்கட்டாயமாக வளாகத்துக்குள்ளிருந்து துரத்தியதாகக் கூறியுள்ளார்.

படிக்க:
குடியுரிமை திருத்தச் சட்டம் : முற்றுகை | மனுஷ்ய புத்திரன் கவிதை
♦ கம்பம் : குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறு ! 2000 பேர் ஆர்ப்பாட்டம்

போலீசு அத்துமீறி அமைதியான போராட்டத்தை களைக்கும் வீடியோ…

கல்லூரிக்குள் நுழையும் போலீசு தாக்குதலிலிருந்து மாணவிகளை காப்பாற்றும் பொருட்டு, அரணாக நின்ற மாணவர் ஒருவரை மிகக் கடுமையாக நான்கைந்து போலீசு தாக்குவதும், மாணவிகள் அதை எதிர்த்து நிற்கும் வீடியோவும் போலீசின் ஒடுக்குமுறையை சொல்லும் ஆவணமாகியிருக்கிறது; சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டிருக்கிறது.

போலீசு தாக்குதலிலிருந்து தப்பிக்க நூலகத்துக்குள் மறைந்திருந்த மாணவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளையும் போலீசு வீசியுள்ளது. பின் நூலகத்துக்குள் நுழைந்து மாணவர்களை தாக்கியதோடு, ஜன்னல்கள் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கியுள்ளது. வளாகத்தில் இருந்த மசூதிக்குள் மறைந்திருந்த மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது போலீசு. கும்பலாக மாணவர்களை அழைத்துச்சென்ற காவலர்கள் அவர்களை வேறு இடத்துக்கு அழைத்துச் சென்றும் மிகக் கடுமையாக தாக்கியுள்ளனர்.

“மாலை 6.10 மணியளவில் கையெறி குண்டை வீசியது காவல்துறை. புகை மண்டலம் சூழ்ந்த நிலையில், மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் துடித்தனர். கண்ணீர் புகை குண்டுகளை வளாகத்துக்குள் வீசினர். உள்ளே புகுந்து, அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரையும் அடித்து நொறுக்கினர். கண்ணாடி கதவுகளை உடைத்தனர்” என்கிறார் சட்டம் பயிலும் மாணவர் சயிஃபுல் இஸ்லாம்.

கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்திக்கொண்டிருந்த மாணவர்களுக்கு ‘பாடம் புகட்டும்’ வகையில் இந்தத் தாக்குதலை போலீசு நடத்தியிருக்கிறது. குறிப்பாக, காஷ்மீரிகள் போன்ற தோற்றத்தில் இருந்த மாணவர்களை தனி அறையில் அடைத்து அடித்ததாகவும் டெலிகிராப் நாளிதழ் தெரிவிக்கிறது. ஞாயிறு மாலை 6 மணிக்கு கல்லூரிக்குள் நுழைந்த போலீசு இரவு 11 மணிவரை அங்கேயிருந்துள்ளது.

படிக்க:
குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறு ! ஆர்ப்பாட்டம் ! நேரலை !
♦ ஜே.என்.யூ : வலதுசாரிகளின் பிடியில் நிர்வாகம் !

துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டதாகவும் அது என்ன என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை என மாணவர்கள் கூறிய நிலையில், அருகில் உள்ள ஹோலி ஃபேமிலி மருத்துவமனை இயக்குனர் ஜார்ஜ், குண்டடிபட்ட நிலையில் ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதுபோல, டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா, போலீசு அதிகாரிகள் பேருந்துக்குள் தீ வைக்கும் காட்சிகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ‘போலீசை கொளுத்தவைத்து, பாஜக தனது கேவலமான அரசியலை முடித்துள்ளது’ என அந்த டிவிட்டில் தெரிவித்துள்ளார் அவர்.

கல்லூரியின் எட்டாவது நுழைவாயில் அருகே, பிபிசி செய்தியாளர் புஸ்ரா ஷேக்கின் மொபைல் போனை பிடுங்கிய டெல்லி போலீசு அவரை லத்தியால் அடித்துள்ளது.

“என்னுடைய போனை வாங்கிய போலீசு அதை உடைத்துவிட்டது. என்னை கேவலமாகப் பேசியதோடு லத்தியாலும் தாக்கியது. நான் இங்கே செய்தி சேகரிக்கத்தான் வந்தேன், விளையாட வரவில்லை” என அவர் தெரிவித்துள்ளார். பிபிசி செய்தியாளர் தாக்கப்பட்டத்தை மாணவிகள் சிலரும் பார்த்துள்ளனர்.

நள்ளிரவில் கைது செய்யப்பட்ட மாணவர்களை அடைத்து வைத்திருந்த கல்காஜி காவல் நிலையத்தின் முன் மாணவர்கள், ஆசிரியர், வழக்கறிஞர்கள் குழுமினர். ஆனால், அவர்களிடம் மாணவர்களின் கைது குறித்து முறையான பதிலை அளிக்க மறுத்துள்ளது போலீசு.

மத்திய டெல்லி காவல் அலுவலக வளாக நுழைவாயிலில் மாணவர்களின் பெற்றோர் தர்ணாவில் இறங்கினர். மாணவர்களை விடுவிக்கக் கோரியும் பல்கலைக் கழகத்திலிருந்து போலீசை வெளியேற்றக் கோரியும் அவர்கள் முழக்கமிட்டனர். இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், பீம் ஆர்மி உள்ளிட்ட அரசியல் அமைப்பினரும் கலந்துகொண்டனர். பெருந்திரளான பொதுமக்களும் இதில் கலந்துகொண்டனர்.

“உள்துறை அமைச்சரின் அனுமதி இல்லாமல் பல்கலைக்கழகத்துக்குள் ஒருவரால் நுழைய முடியுமா?” எனக் கேள்வி எழுப்பினார் பிருந்தா காரத். நள்ளிரவில் மெட்ரோ சேவையும் நிறுத்தப்பட்டது.

ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து, அலிகர் முசுலீம் பல்கலைக்கழகம், பாட்னா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். இடதுசாரி மாணவர் அமைப்புகள், சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் மாணவர் அமைப்புகள் திங்கள்கிழமை போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தன.

தமிழகத்திலும் அனைத்துப் பகுதி மாணவர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். சென்னையில் நியூ கல்லூரி மாணவர்கள், ஐ.ஐ.டி மாணவர்கள், லயோலா கல்லூரி மாணவர்கள் போரட்டம் நடத்தியுள்ளனர். தமிழகம் முழுவதும் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் பல இடங்களில் இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மோடி – ஷா-வின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி காவல்துறை, தானே புனைந்து உருவாக்கிய திட்டத்தின்படி, வெறியாட்டத்தை நடத்தி முடித்துள்ளது. இனி இந்தியாவை ஆட்சி செய்யப்போவது இராணுவமும் போலீசுமே என பாசிஸ்டுகள் நேரடியாக நடத்திக்காட்டிக் கொண்டுள்ளனர்.


கலைமதி
நன்றி : டெலிகிராப் இந்தியா, நியூஸ் லாண்ட்ரி, த க்விண்ட்

நூல் அறிமுகம் : பிரம்ம சூத்திரமும் பகவத்கீதையும்

சென்னை ராமகிருஷ்ண மடம், பாதராயணரின் பிரம்ம சூத்திரம் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பை வெளியிட்டுள்ளது. இந்நூலை மொழிபெயர்த்து விளக்கவுரையும் எழுதியவர் சுவாமி ஆசுதோஷானந்தர் எனப் பதிப்புரையில் சொல்லப்பட்டுள்ளது. பிரம்ம சூத்திரத்திற்குத் தமிழில் பல மொழிபெயர்ப்புகள் உள்ளனவெனினும், புதிதாக வந்த தமிழ் மொழிபெயர்ப்பு என்பதனால் விருப்புடன் அதனைப் படித்தேன். இந்நூலைப் படிக்கும் போது, குறிப்பிட்ட சில பிரச்சினைகள் உறுத்தலாகத் தென்பட்டதால், அதனை இக்கட்டுரையில் பதிவு செய்யலாம் என விழைகிறேன்.

பிரஸ்தான திரயம்

பண்டைய இந்தியாவில் வேதாந்தத் தத்துவம் உருவானதற்கு ஒரு நீண்ட நெடிய வரலாறு உண்டு. வேதாந்தத் தத்துவத்திற்கு மூவகை நூல்கள் அடிப்படை நூல்களாக விளங்குகின்றன. இம்மூவகை நூல்களை ப்ரஸ்தான த்ரயம் என்று வைதீகர்கள் குறிப்பிடுகின்றார்கள். இவற்றில் வேதங்கள், உபநிடதங்கள் முதல் வகைப்பட்டவை இவற்றை சுருதி பிரஸ்தானம் என்பர். சுருதிகள் என்பவை யாராலோ இயற்றப்பட்டவை என்றோ, எழுதப்பட்டவை என்றோ வைதீகர்கள் ஒப்புக்கொள்வது கிடையாது. பிரபஞ்ச வெளியில் ஒலி வடிவில் நிலவிய பாடல்களை வேத ரிஷிகள் காதுகளால் கேட்டுப்பதிவு செய்தார்கள் என்பது சுருதிகளுக்கு அவர்கள் வழங்கும் விளக்கம். இப்படிப்பட்ட ஒரு விளக்கம் நிச்சயமாகப் பிற்காலத்தியது என்று யூகிக்க முடியும். வைதீக மரபு உருவெடுத்த பின், அதற்குப் பல வகை நூல்களும் பல வித விளக்கங்களும் உருவான பின்னர், ஏதோ ஒரு வகையில் அதன் தொன்மையையும் புனிதத்தையும் காப்பாற்றவேண்டும் என்பதற்காகவே சுருதி பிரஸ்தானம் என்ற, அதாவது ரிஷிகளால் கேட்பட்ட பூர்வீகத்தை, வைதீகர்கள் உருவாக்கியிருக்க வேண்டும் என்று யூகிக்கலாம். அதாவது, இது மற்ற நூல்களைப் போல மானுடப் பிறவிகளால் எழுதப்பட்ட நூல் அல்ல (அபௌருஷ்ய) என்ற ஒரு புனித அந்தஸ்தை ஏற்றியுள்ளார்கள்.

வேதாந்தத்தின் இரண்டாவது முக்கியமான நூலாக பகவத் கீதை சொல்லப்படுகிறது. இதனை ஸ்மிருதி பிரஸ்தானம் என்பர். வேதங்களுக்கும் உபநிடதங்களுக்கும் மிகப்பிந்திய காலத்தைச் சேர்ந்தது பகவத் கீதை. பிராமண இலக்கியங்களான வேத உபநிடதங்கள், அவற்றிற்கு இணையாக சிராமணத் தத்துவங்கள் எனப்படும். ஆசீவகம், சமணம், பௌத்தம், இவற்றுக்குப்பின் தோன்றிய ராமாயண மகாபாரதம் என்ற வரிசையில் கடைசியாகத் தோன்றியது பகவத் கீதை. இத்தனை காலங்கள் பின்னால் தோன்றியது என்பதைக் குறிப்பதற்கும், அது பல விசயங்களில் வேத உபநிடதங்களிலிருந்து விலகிச் சென்றது என்பதைக் குறிப்பதற்குமே, அது ஸ்மிருதி பிரஸ்தானம் என்ற இரண்டாம் நிலை அந்தஸ்தில் வைத்துச் சொல்லப்படுகிறது.

படிக்க :
இங்கிலாந்துத் தேர்தலில் தடம் பதித்த இந்துத்துவா : வி.இ.குகநாதன்
குடியுரிமை வழங்கு, இல்லையெனில் எங்களைக் கொன்று விடு – இலங்கைத் தமிழ் அகதிகள் !

மேற்குறித்த இருவகை நூல்களைக் கடந்து, மூன்றாவது நிலையில் தோற்றம் பெற்ற நூலே பாதராயணரின் பிரம்ம சூத்திரம் ஆகும். உண்மையில் வேதாந்தம் என்ற தத்துவம் உருவானதில் இந்நூலே முடிவான பாத்திரம் வகித்தது. வேதங்களின் முடிவு, வேதங்களின் சாரம் என்ற அர்த்தங்களைக் கொண்டதாக இத்தத்துவம் பெயரிடப்பட்டுள்ளது. சிராமணத் தத்துவங்கள் மட்டுமின்றி, சார்வாகம், சாங்கியம், யோகம், வைசேடிகம், நியாயம் போன்ற தத்துவங்களும் இக்காலத்தில் நிலைபெற்றுவிட்டதால், வைதீக மரபுக்கென ஒரு தத்துவத்தை உருவாக்கிக் காட்டவேண்டிய அவசியம் இக்காலத்தில் ஏற்பட்டுவிட்டதென்று இங்கு நாம் கணக்கிட முடியும்.  (நூலிலிருந்து பக்.3-4)

ஆளும் வர்க்கம் நேரடியான அதிகாரத்தின் மூலம் ஆதிக்கத்தை நிலைநாட்டுகிறது, ஆளும் வர்க்கம் மக்களுடைய ஒப்புதலைப் பெற்றுக்கொண்டு ஆதிக்கத்தை நிலைநாட்டுகிறது (Force and content). இந்த இரு வடிவங்களையும் ஆளும் வர்க்கம் எந்த அளவு வெற்றிகரமாகப் பயன்படுத்துகிறதோ அந்த அளவுக்கு அதனால் நீண்டகால ஆதிக்கத்தை நிறுவ முடிகிறது என்பது கிராம்சியின் அணுகுமுறை. அதுபோன்ற ஒரு பார்வை இந்த நூலிலும் (இந்திய வரலாற்றில் பகவத்கீதை – பிரேம்நாத் பசாஸ்) இருக்கிறது. கிராம்சியின் கருத்து இதில் நேரடியாகச் சொல்லப்படவில்லை. ஆனால் எப்படி இந்தியாவின் ஆளும் வர்க்கம் குறிப்பாக பகவத்கீதையில் நேரடி அதிகாரத்தின் வழியும் உளவியல் ரீதியான அதிகாரத்தை வழியாகவும் மக்களை அதிகாரம் செய்ய நினைத்தது என்ற செய்தியைச் சொல்லுகிறார்.

கிராம்சி சொல்லாத, வஞ்சகம், சதி என்ற ஒன்றையும் கூடுதலாக அடிக்கடி அவர் இந்த நூலில் சொல்லுகிறார். வஞ்சகம், சதி வரலாற்றில் நிகழ்ந்திருக்கிறது. இது பிராமணர் சதி. இது கிருஷ்ணனின் வஞ்சகம். இது இந்துத்துவத்தின் வஞ்சகம் என்று சொல்லக்கூடிய விவாதம் இந்த நூலில் வலுவாக இருக்கிறது. நமக்கொரு பிரச்சினை எழுகிறது. வஞ்சகம் சதி என்ற விஷயத்திற்கு வரலாற்றில் எந்த அளவுக்குப் பாத்திரம் இருக்கிறது? இந்திய வரலாற்றில் இதற்கு பாத்திரம் இருக்கிறதா? என்ற கேள்விகள் எழுகின்றன. வஞ்சகம், சதி என்பது பிரெஞ்சுப் புரட்சியிலிருந்து வந்த கருத்து. வரலாற்றை விளக்க பிரெஞ்சுப் புரட்சி காலத்தில் அதுவும் ஒரு கருவியாகப் பயன்பட்டது. இந்தியாவில் பெரியார் முதலான பலர் இந்த வஞ்சகம், சதி என்ற கருத்தை எடுத்துப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

இந்து மதத்தின் சில நூல்கள் மக்களைக் கைவசம் வைத்துக் கொள்வதற்கு மேலாதிக்க நிலையிலிருந்து சாம, பேத, தான, தண்டம் என்ற சொற்களைச் சொல்லுகின்றன. மக்களைக் கையில் வைத்திருக்க சாம, பேத, தான தண்டத்தைக் கையில் வைத்திருக்க வேண்டும் என்று சொல்வது, மதத்தை எப்பொழுதும் ஒரு கருவியாக வைத்துக்கொள் என்று சொல்வது என்பன இதுபோன்ற அரசியல் விஷயங்களில் மிகப் பழைய காலத்திலேயே பதிவாகி உள்ளன. நேரடி அதிகாரம், மறைமுகமான கருத்தியல் செல்வாக்கு இவற்றுடன் வஞ்சகம் சதி போன்ற விஷயங்களும் இந்திய வரலாற்றில் பணிபுரிந்திருக்கின்றன என்பதையும் கணக்கிலெடுத்துத்தான் சிந்திக்க வேண்டி இருக்கிறது. (நூலிருந்து பக்.24)

நூல் : பிரம்ம சூத்திரமும் பகவத்கீதையும்
ஆசிரியர் : ந.முத்துமோகன்

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை – 600 098.
தொலைபேசி எண் : 044 – 2624 1288 | 2625 1968 | 2625 8410
மின்னஞ்சல் : info@ncbh.in

பக்கங்கள்: 24
விலை: ரூ 15.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : panuval