Thursday, August 7, 2025
முகப்பு பதிவு பக்கம் 288

ஆரம்ப வகுப்பில் யாருக்கு வேண்டும் மதிப்பெண்கள் ?

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 6 | பாகம் – 08

“பள்ளியின் ஆன்மா“

வர்கள் பேசிவைத்துக் கொண்டா வருகிறார்கள்? திடீரென பத்து – பன்னிரண்டு மகிழ்ச்சிகரமான புன்முறுவல்கள் வெடிக்கின்றன.

“வணக்கம்!”

“வணக்கம்!”

கண்களை மூடியபடியே ஒவ்வொரு “வணக்கமும்” யாரால் சொல்லப்பட்டது என்பதை என்னால் யூகிக்க முடியும். வகுப்பில் உயிர் வந்துள்ளது, மலர்களின் மணம்…

“வணக்கம், குழந்தைகளே!” என்று ஒவ்வொருவரிடமும் கையை நீட்டுகிறேன்.

சாதாரணமாக, குழந்தை வகுப்பில் நுழைந்ததும் நேராக என்னிடம் வந்து முகமன் கூறுவான், நான் கை வேலையாக இல்லாமலிருந்தால் கை குலுக்குவோம். இது ஒரு பழக்கமாக எங்கள் வகுப்பில் நிலவி வருகிறது. குழந்தைகள் இந்தக் கை குலுக்கலைப் பெரிதும் மதிக்கின்றனர், இது நாள் பூராவும் எங்களது காரிய ரீதியான மற்றும் நட்பு ரீதியான கூட்டை பலப்படுத்துகிறது.

“இன்று நமக்கு நிறைய வேலைகள் உள்ளன. பெற்றோர்களும் விருந்தினர்களும் வரும் முன் இவற்றைச் செய்து முடிக்க வேண்டும்!”

“செய்து முடிப்போம்!”

“நாம் என்ன செய்ய வேண்டும், பாருங்கள்!”

நான் கரும்பலகையில் எழுதியுள்ளதைக் குழந்தைகள் வாய்விட்டுப் படிக்கின்றனர்:

முதல் பாடம்: ரகசிய பாக்கெட்டுகளை நிரப்பி ஒட்ட வேண்டும்.

இரண்டாவது பாடம்: கண்காட்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

மூன்றாவது பாடம்: மரங்களிடம் விடை பெற வேண்டும்.

நான்காவது பாடம்: எதிர்காலத்தைப் பற்றிப் பேச வேண்டும்.

பின்னர்?

”பின்னர் பெற்றோர்களும் விருந்தினர்களும் வருவார்கள். நாம் நமது நாடகத்தை நடித்துக் காட்டுவோம். பின்னர் ஒருவருடன் ஒருவர் விடை பெறுவோம்.”

“எனக்கு விடை பெற விருப்பமில்லை!”

“வாருங்கள், மணியடிப்பதற்காகக் காத்திராமல் வேலையைத் துவங்குவோம்!”

குழந்தைகள் டெஸ்குகளின் பின் அமருகின்றனர். ஒவ்வொருவரும் டெஸ்க் உள்ளிருந்து ஒரு பாக்கெட்டை எடுத்து காரியத்தில் இறங்குகின்றனர். உள்ளிருப்பதைப் பார்த்து, சரிசெய்து, ஒழுங்குபடுத்துகின்றனர். நான் ஒவ்வொருவரையும் அருகே அழைத்து, ரகசிய பாக்கெட்டில் என்ன இருக்கிறது என்று பார்த்து, அதில் குழந்தையைப் பற்றிய விவரங்களடங்கிய தாளைப் போட்டு, அதை ஒட்ட அனுமதி தர வேண்டும். – முதல் அரையாண்டு முடிவில் இதே போன்ற முதல் பாக்கெட்டுகளைப் பெற்றோர்கள் பெற்றனர். இது இரண்டாவது பாக்கெட். முதல் பாக்கெட்டைப் பற்றிய இவர்களுடைய கருத்துக்களை வைத்து பார்த்தால் இந்த இரண்டாவது பாக்கெட்டிற்காக இவர்கள் ஆர்வத்துடன் காத்திருக்க வேண்டும்.

இது என்ன ரகசிய பாக்கெட்? ஏன் பாக்கெட்? ஏன் ரகசியம்? இதற்கான பதில்கள் என்னிடம் உள்ளன, இவற்றிற்கு என் சிந்தனைகளும் பரிசோதனையும் ஆதாரம்.

பூர்வாங்கத் தயாரிப்பிற்காகப் பள்ளிக்கு வந்துள்ள ஆறு வயது மாணவர்களுக்கு மதிப்பெண்கள் போடக் கூடாது. எனது இளம் மாணவர்களுக்கு முதல் வகுப்பிலோ, இரண்டாவது வகுப்பிலோ, மூன்றாவது வகுப்பிலோ நான் நீண்ட நாட்களாகவே மதிப்பெண்களைப் போடுவதில்லை. என் கருத்துப்படி, மதிப்பெண்கள் காலுடைந்த போதனை முறையின் ஊன்றுகோல், ஆசிரியரின் அதிகாரத்தை நிலை நாட்டும் தடியாகும். ஊன்று கோல்களுடன் வகுப்பறையில் நுழைவது, ஆறு வயதுச் குழந்தைகளின் கண்களில் படும்படி தடியை வைத்து படிப்பு சொல்லித் தருவது என்பது எனக்கு போதனை முறையின் ஒழுங்கின்மையாகப்படுகிறது. இந்த மதிப்பெண்கள் யாருக்கு வேண்டும்?

“குழந்தைகளுக்கு!” என்று ஒரு சில ஆசிரியர்கள் கூறுவது காதில் விழுகிறது.

இல்லை, என்னருமை சக ஆசிரியர்களே! இவை குழந்தைகளுக்கு வேண்டவே வேண்டாம்! மதிப்பெண்கள் என்றால் என்ன, இவை எதற்காகக் கண்டு பிடிக்கப்பட்டன, யாருடைய வாழ்க்கையை இவை எளிதாக்குகின்றன என்பதெல்லாம் இவர்களுக்குத் தெரியாது. ஆசிரியர்களும் பெற்றோர்களுமாகிய நாம்தான் குழந்தைகளுக்கு மதிப்பெண்களைப் பற்றிச் சொல்லித் தருகிறோம், இவற்றின் மீது இவர்களுக்கு வெறியையே ஏற்படுத்துகிறோம், பின்னர் இவர்கள் நல்ல மதிப்பெண்கள் வாங்கப் பாடுபடும் போது, இந்த மதிப்பெண்களுக்காகப் படிக்கத் துவங்கும் போது, “பார்த்தீர்களா, குழந்தைகளுக்கு மதிப்பெண்கள் எப்படி அவசியம், இவை இல்லாவிடில் படிக்கவே மாட்டார்கள்” என்று கூறுகிறோம்.

நான் பல்வேறுவிதமான மதிப்பெண்களுடன் அன்றாடம் வகுப்பிற்கு வந்தால், இதோ தமது ரகசிய பாக்கெட்டுகளில் மூழ்கியிருக்கும் இந்த ஆறு வயதுக் குழந்தைகளுக்கு வாழ்க்கை எப்படியிருந்திருக்குமென என்னால் கற்பனை செய்து கூடப் பார்க்க இயலவில்லை. “சிக்கலான கணக்கைத் தரட்டுமா?” என்று எப்படி நான் அவர்களிடம் கூற முடியும்? நானே எப்படி “பிழை செய்யத்” துணிவது? பாடத்தில் வாழ்க்கைக் கோட்பாடும் காரிய ரீதியான உறவுகளின் கோட்பாடும்… குழந்தைகளின் முன்னோக்கிய அறிதல் வளர்ச்சிக் கோட்பாடும் எங்கு போயிருக்கும்? கசப்பையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தும் விதைகளை விதைத்து எப்படி நான் ஒவ்வொரு சிறுவனுக்கும் மகிழ்ச்சியைத் தரமுடியும்?

குழந்தைகளுக்கு மதிப்பெண்களே தேவையில்லை. ஏனெனில் படிப்பு என்பதை புதியவற்றை அறியும் முயற்சிகளின் வளர்ச்சிப் போக்காக நாம் மாற்றினால், நமது நிர்ப்பந்த நடவடிக்கைகளை அவர்கள் உணராமலிருந்தால் அவர்கள் மதிப்பெண்கள் இல்லாமலேயே படிப்பார்கள். தாங்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களை விட எவ்வளவு முன்னால் இருக்கிறோம் என்றோ அல்லது மற்றவர்களிடமிருந்து பின் தங்கியுள்ளோம் என்றோ அறிந்து கொள்வதும் மாணவர்கள் “புத்திசாலிகள்”, “மந்தமானவர்கள்” “நன்கு படிப்பவர்கள்”, “பின்தங்கியுள்ளவர்கள்” என்றெல்லாம் பிரிக்கப்படுவதைத் தெரிந்து கொள்வதும் குழந்தைகளுக்கு அவசியமே இல்லை.

ஒவ்வொரு குழந்தையின் மன நிலையையும், குறிப்பாக யாரையெல்லாம் வெறுமனே “மந்தமானவர்கள்”, “பின் தங்கியவர்கள்” என்று கருதுகின்றோமோ அவர்களின் மனநிலையை நம்மால் தெரிந்து கொள்ள முடியாததற்காக, இவர்களுக்கு (இப்போது விஞ்ஞானத்தில் கூறுகின்றார்களே அதே போல்) மிகவும் ஏற்புடைய தனிப்பட்ட முறையை ஏற்படுத்த முடியாமைக்காக மேற்கூறிய பிரிவு குழந்தைகள் முன் நம்மை வெட்கமடையச் செய்யவில்லையா? சுருட்டை முடியுடைய எனது வகுப்புச் சிறுவன் ஒருவன் முன், அவன் சோகமாகப் பார்க்கும் போது நான் வெட்கித் தலை குனிகிறேன். “என்னால் தனியாக ஒன்றும் செய்ய முடியாது! நீதான் பெரியவன் ஆயிற்றே, புத்திசாலி ஆயிற்றே. என்னைத் தொல்லையில் விடாதே!” என்று அக்கண்கள் என்னை நோக்கிக் கூறுவது போலிருக்கும்.

“அவன் மந்தமானவன், பின் தங்கியவன்” என்று ஆசிரியர் கூறுகிறார். ஆனால் இது நமது பலவீனத்தை நியாயப்படுத்துவதாகாதா? நாம் அவனை பலவீனமானவனாகக் கருதினால் நம்மை நாமே எப்படி மதிப்பிடுகிறோம்? நான் ஆசிரியர்கள் நடத்தும் பல பாடங்களைப் பார்த்திருக்கிறேன், அவர்களுக்கு நிச்சயமாக பெயில் மதிப்பெண் போட்டு அதை அவர்களின் உழைப்புப் பதிவேட்டில் எழுதலாம். இப்படிப்பட்ட ஆசிரியர்களால் “ஊன்று கோல்களும்”, “தடிகளும்” இல்லாமல் வகுப்பறையில் நுழைய முடியாது தான், இவர்களோ இம்மாதிரி பாடத்தை நடத்தி இப்பாடத்தில் தம் மாணவர்களுக்கு பெயில் மதிப்பெண்களையும் நல்ல மதிப்பெண்களையும் போடுகின்றனர்! என்ன விந்தை!

நெடுங்காலத்திற்கு முன், கையில் கம்புடன் குழந்தையை பள்ளிக்கு கூட்டிச் சென்று திரும்ப அழைத்து வருபவரை ஆசிரியர் என்றனர். ஆனால் பின்னர் இச்சொல் முற்றிலும் வேறு உள்ளடக்கத்தைப் பெற்றது: ஆசிரியர் என்றால் குழந்தைக்குப் படிப்பு சொல்லித் தந்து வளர்ப்பவர் என்றாயிற்று. ஆசிரியராக, குழந்தையை வளர்ப்பவராக மாறியதும் இவர் தன் கம்பை விட்டெறிந்தாரா? இல்லை! மத்திய கால ஓவியங்களிலும் படங்களிலும் ஆசிரியர் தன் வலது கையில் கம்பு அல்லது பிரம்புக் கட்டையும் இடது கையில் திறந்த புத்தகத்தையும் வைத்துக்கொண்டு குழந்தைகளுக்குக் கல்வி போதிப்பதைக் காணலாம். ஒரு வேளை நமது மதிப்பெண்கள் உருமாறிய கம்பு அல்லது பிரம்புக் கட்டோ? ஆரம்ப வகுப்பில் யாருக்கு மதிப்பெண்கள் வேண்டும்?

ஆறு வயதுக் குழந்தைகளுக்கா? அவர்களுக்கு இவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ளக் கூட விருப்பமில்லை. ஆனால் எல்லா இடங்களிலும் – பள்ளியிலும் வீட்டிலும் வெளியிலும் – அவர்கள் வாங்கிய மதிப்பெண்களைப் பொறுத்து தான் நாம் அவர்களை எடை போடுகிறோம், மதிப்பிடுகிறோம் என்று காட்டும் போது, குழந்தைகள் என்னதான் செய்வார்கள்? அவர்கள் நம்மை முழுமையாகச் சார்ந்திருப்பதைப் புரிந்து கொள்கின்றனர், நாம் இல்லாமல் வாழ அவர்கள் விரும்பவில்லை, அவர்கள் நம்மை நேசிக்கின்றனர், எனவே நம்மை திருப்திப்படுத்த, சந்தோஷப்படுத்த மதிப்பெண்களை நாடுவதைத் தவிர வேறு வழி அவர்களிடம் இல்லை.

இவ்வாறாக பிரச்சினை, குழந்தைகளுக்கு மதிப்பெண்கள் தேவை என்பதில் இல்லை; மதிப்பெண்கள் இருப்பதை ஆரம்ப வகுப்பு ஆசிரியர் மறந்து விட்டு, தன் அதிகாரத்தைக் குறிக்கும் தடியை வீசியெறிந்து விட்டு வெறுமனே வந்து குழந்தைகளுக்குக் கல்வி போதித்து வளர்க்க முடியுமா என்பதில்தான் பிரச்சினை அடங்கியுள்ளது. இதைச் செய்வது எளிதா?

இல்லை, தன் தடியையும் மதிப்பெண்களையும் விட்டுப் பிரிவது ஆசிரியருக்கு எளிதல்ல. ஏனெனில் எந்த கல்வி போதனை, குழந்தை வளர்ப்பு முறைக்கு ஆசிரியர் மிகவும் பழக்கப்பட்டு விட்டாரோ அந்த முறை இவற்றுடன் தொடர்புடையது. கல்வி முறையியலை மாற்றியமைப்பது என்றால் முறைகள், வழிகள், படிப்பு சொல்லித் தரும் வகைகளை மாற்றியமைப்பதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகளின் தொகுப்பு என்று பொருளாகாது; ஆசிரியர் தன்னையே, தன் கண்ணோட்டங்களை, கருத்துக்களை, தன் அனுபவத்தை மாற்றியமைக்க வேண்டும் என்பதுதான் இதன் பொருள்.

படிக்க:
பிஎம்சி வங்கி முறைகேடு : வெளியே தெரியும் பனிமுகடு !
துருக்கி : பள்ளிகளில் பரிணாம கோட்பாடு நீக்கம் ! ஜிகாதி கோட்பாடு சேர்ப்பு !

இப்படி முறையியலையும் இதன் மூலம் தன்னைத் தானேயும் மாற்றியமைப்பது யாருக்குப் பிடிக்காது தெரியுமா? யார் ஒரே மாதிரியாக, இயந்திரகதியில் வேலை செய்கின்றார்களோ, யாருக்கு முதல் வரிசையிலும் மூன்றாவது வரிசையிலும் உட்கார்ந்துள்ள குழந்தைகள் ஒரே மாதிரியானவர்களாகப் படுகின்றனரோ (இது எல்லோரையும் ஒரே மாதிரியாக அணுகும் ஆசிரியரின் வாழ்க்கையை எளிதாக்குகிறது) அந்த ஆசிரியருக்குப் பிடிக்காது.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

இந்துத்துவ சக்திகளுக்கு அயோத்தி முடிவல்ல ; இது ஒரு ஆரம்பம் !

0

யோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அறிவித்த உடனேயே, இது கடந்து செல்வதற்கான நேரம், முடிவுக்கான நேரம், தேசிய சிகிச்சை போன்ற கருத்துக்கள் சமூக ஊடகங்களில் வழிந்தோடின.

இந்தத் தீர்ப்பை ஒருமனதாக ஏற்று, கடந்த காலத்தை பின்னுக்குத்தள்ள வேண்டும் என தாராளவாதிகள் என்று அழைக்கப்படுவர்கள் இந்த வரிகளை முதன்மைப்படுத்தினர். அரசியல் கட்சிகளும் தங்கள் எதிர்விளைவுகளில் அடக்கிக் காட்டின. காங்கிரஸ் ஒரு படி மேலே சென்று, தீர்ப்பை வரவேற்பதாகக் கூறி, அமைதியைக் கோரியது.

பாரதிய ஜனதா கட்சியின் உத்தியோகபூர்வ தொனியும் இணக்கமானது. விசுவாசிகள் வெற்றியாளர்களாக ஒலிக்க தங்கள் முயற்சியைச் செய்தார்கள், ஆனால் பிரதமர் நீதிமன்றங்களின் நடுநிலைமையை பாராட்டி, ‘ஒத்திசைவான கலாச்சாரம்’, ‘பன்முகத்தன்மையில் ஒற்றுமை’ என்ற சொற்றொடர்களைப் பயன்படுத்தியதால், வெறுப்பு பிரச்சாரம் குறைந்தது. இடது, வலது மற்றும் மையங்களிடையே ஒருமித்த கருத்து இருப்பதாகத் தோன்றியது. இது ஒரு மகிழ்ச்சி அல்ல; ஆனாலும் ஒன்றாக வர வேண்டும். அது ஒரு மெய்நிகர் தேசிய குழு அணைப்பாக இருந்தது.

மிகவும் மனதைக் கவரக்கூடியதாக உள்ளது. ஒரு மாற்று சூழ்நிலையைக் கருத்தில் கொள்வோம்… இந்து அமைப்புகளின் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிபதிகள் அறிவிக்கிறார்கள். மேலும், அந்த இடத்தை முசுலீம் வாதிகளுக்கு திரும்ப அளிக்கிறார்கள். அல்லது அலகாபாத் உயர்நீதிமன்றம் மூன்றில் ஒரு பங்கு நிலத்தை முசுலீம்களுக்கு வழங்க வேண்டும் என்று சொன்னது, அதை முன்மாதிரியாகக் கொண்டு, இரண்டு தரப்புக்கு மூன்றில் இரண்டு பங்கு நிலமென பிரித்துக்கொண்டு, கோயிலையும் மசூதியை கட்டலாம் என தீர்ப்பளித்திருந்தால்…

பாபர் மசூதி குறித்து வழங்கப்பட்ட தீர்ப்பை செய்தித்தாளில் பார்க்கும் சாமியார்கள். (இடம் – அயோத்தி, படம் நன்றி : வயர்)

அப்போதும் இதுபோன்ற, இவ்வளவு தாராள மனப்பான்மை வெளிப்பட்டிருக்குமா? பக்தி மற்றும் சமரசத்தின் பல வெளிப்பாடுகளை நாம் கேள்விப்பட்டிருப்போமா? பாஜகவின் தலைவர்கள், அல்லது உண்மையில் வேறு எந்த கட்சியை சேர்ந்தவர்களிடமிருந்தும், தீர்ப்பையும் நீதிபதிகளின் மதிநுட்பத்தை புகழ்வதை இவ்வளவு வலுவாக வரவேற்று இருப்பார்களா? இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து சில இடங்களில் இணைய தடையும் மும்பையில் அதிகப்படியான போலீசு பாதுகாப்பும் இருந்தது. அங்கு 1992-93 ஆம் ஆண்டில் பாபர் மசூதி இடிப்புக்குப் பின்னர் ஏற்பட்ட கலவரங்களின் வடு இன்னும் மறையவில்லை.

ஒருவேளை கற்பனை செய்துபாருங்கள் தீர்ப்பு வேறொரு பக்கமாக இருந்திருந்தால், மாநிலத்தின் எதிர்வினை என்னவாக இருந்திருக்கும். வழக்கின் தீர்மானம் ‘இந்துக்களுக்கு’ திருப்திகரமாக இருந்தது; எனவே, அவர்கள் பெரிய மனதுடன் திளைப்பதில் வியப்பில்லை.

இது செயலற்ற ஊகம் அல்ல – இது துரதிர்ஷ்டவசமாக, இந்தியாவில் நிலவும் மிகக் கடுமையான யதார்த்தத்தின் பிரதிபலிப்பாகும். ‘தேசிய சமரசம்’ அல்லது உண்மையில் மூடல் என்பது பெரும்பான்மையினரின் கோரிக்கைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்படும்போதுதான் நடக்கிறது. இது தாராள மனப்பான்மையுடன் பெரும்பான்மை சமூகம் பி, மற்றும் சி-தர குடிமக்கள் அனைவருக்கும் தரும் ஒரு சைகை ஆகும். குடியுரிமையின் படிநிலை பற்றி ஒரு மிருகத்தனமான பாடம் கற்பிக்கப்பட்ட பின்னர், மில்லியன் கணக்கான மக்கள் நபர்கள் அல்லாதவர்களாக மாற்றப்பட்டதற்கு பின்னர், இது கையளிக்க வேண்டிய பரிசாகும்.

படிக்க:
அயோத்தி தீர்ப்பை ஏற்றுக் கொள்வது கடினமாக உள்ளது – முன்னாள் நீதிபதி வேதனை !
♦ பாபர் மசூதி – சபரி மலை – ஐ.ஐ.டி. – காவி பாசிசம் | வழக்கறிஞர் வாஞ்சிநாதன் உரை | காணொளி

உங்களுக்கு ஐந்து ஏக்கர் கிடைத்துள்ளது, இல்லையா? நீதிமன்றங்கள் மசூதி இடிப்பை சட்டவிரோத செயல் என்று கூறியுள்ளன, இல்லையா? குற்றவாளிகளுக்கு எதிரான குற்றவியல் வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது, இல்லையா? பின்னர் ஏன் இந்த புகார்கள்?

எல். கே. அத்வானி தனது ரத யாத்திரையைத் தொடங்கியபோது பல மில்லியன் இந்தியர்களின் வாழ்க்கை அழிக்கப்பட்டதன் வலி, வேர்வரை சென்றிருக்கிறது. இந்தப் பின்னணியில் ‘மூடுவதற்கான’ தாராள அழைப்புகளில் சூழ்நிலையை புரிந்துகொள்ள முடிகிறது. இரத்த யாத்திரையின் சங்கிலி தொடர் நிகழ்வுகள் நம்மை இந்த நிலைக்கு, அது சாலையின் முடிவல்ல என்றபோதும் கொண்டுவந்துள்ளது. மசூதியை வீழச் செய்ததன் மூலம் நவீன இந்தியாவின் மேற்கட்டுமானத்தை இடித்த, அத்வானி அப்போது ஒரு போர்வீரர், தற்போது வெளியேற்றப்பட்ட ஒரு வழிகாட்டியாக சுருங்கிப்போயிருக்கிறார்.

அவரால் இதை சாதிக்க முடியவில்லை. ஆனால், அவரின் சீடர்; அவரை வழியிலிருந்து தள்ளிவிட்டு அனைத்து எதிர்ப்பார்ப்புகளையும் கடந்து வெற்றி கண்டுள்ளார். முழுமையாக, உறுதியான தீர்மானத்துடன் நரேந்திர மோடி இந்தியாவை அனைத்து காலத்திற்குமாக மாற்ற விரும்பினார். மில்லியன் கணக்கான மக்களின் ஆதரவு அவருக்கு இருக்கிறது, அது மாறிவிட்டால் நிறுவனங்கள்கூட அவரை ஆதரிக்க காத்திருக்கின்றன.

எவ்வாறாயினும் இந்த நேரத்தில், எங்கள் கடந்த கால அனுபவங்கள் அனைத்தையும் மீறி, அவரை முக மதிப்பில் கொண்டு செல்வோம். மோடி உயர் பாதையில் செல்வதற்கு பெயர் பெற்றவர் – 2014 தேர்தலில் பொருளாதாரத்தில் கவனம் செலுத்தியதைக் கண்டோம் – பின்னர் தேர்தல் பிரச்சாரங்களில் மோசமான சொல்லாட்சியை நோக்கிய கூர்மையான திருப்பத்தையும் கண்டோம்… அவர் இன்னும் ‘ஒத்திசைவு கலாச்சாரம்’ வரிசையில் ஒட்டிக்கொண்டிருக்கிறாரா அல்லது வேறு வடிவத்திற்கு மாறுகிறாரா என்பதை வரவிருக்கும் பல தேர்தல்கள் காட்டும்… ஆனால் அதற்கு இன்னும் சிறிது காலம் இருக்கிறது.

இந்தத் தீர்ப்பு குறித்து ஆர்.எஸ்.எஸ். தலைமை திருப்தி தெரிவித்துள்ளது. மேலும், இதை வெற்றியாகவோ இழப்பாகவோ யாரும் பார்க்கக்கூடாது என்றும் சொன்னது. காசியும் மதுராவும்கூட இடித்து தள்ளப்படும் என முன்பு சொன்னதற்கு மாறாக, விசுவ இந்து பரிசத் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. அது தனது கடந்த கால திட்டம் எனவும் அது சொன்னது. இவை அனைத்தும் மிகவும் ஊக்கமளிக்கக்கூடியவையாக உள்ளன.

படிக்க:
கோட்சேவை பாடத்தில் சேர்க்க இந்து மகாசபா கோரிக்கை !
♦ பாபர் மசூதி இடிக்கப்படவில்லை என்றால், அதை உச்சநீதிமன்றமே இடித்திருக்குமா ? நீதிபதி ஏ.கே.கங்குலி

ஆனாலும், சந்தேகப்பட மட்டுமல்ல கவலைப்படவும் இடமுண்டு. இவை தெளிவான நிகழ்ச்சி நிரலோடு, அந்த இலக்கை நிறைவேற்ற முன்னேற வேண்டும் என்ற உறுதியுடன் கூடிய நிறுவனங்கள். அவர்கள் இந்தியா பற்றிய ஒரு பார்வையை தங்கள் மனதில் வைத்துள்ளனர். அதை நோக்கி அவர்கள் திட்டமிட்டு, தேவைப்பட்டால், மூர்க்கமாகவும் நகர்வார்கள். தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்த

மசோதார், பொது சிவில் சட்டம் மற்றும் பல அந்த இலக்கை அடைவதற்கான படிகள். ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக பல அரசியலமைப்பு விதிகளுக்கு ஒருபோதும் இணக்கமாக இருந்ததில்லை. மதச்சார்பின்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பது நிச்சயமாக அந்த விரோதப் போக்கிற்கு வழிவகுக்கும். சில நடவடிக்கைகள், அயோத்தி வழக்கு போன்றவை பல தசாப்தங்களாக நடக்கும், மற்றவை அவசர வேகத்துடன் நடக்கும்.

தீர்மானம் மட்டுமல்ல, நல்லிணக்கமும் மறுசீரமைப்பும் இருக்கும்போது உண்மையான சிகிச்சைமுறை நிகழ்கிறது. இரண்டுமே அதிகமாக குறிப்பிடப்படவில்லை. வெற்றிகரமான தன்மை இல்லாதது எல்லாம் முடிந்துவிட்டதற்கான அறிகுறி அல்ல. இது நடவடிக்கைகளில் ஒரு மந்தமானது, மூச்சு பிடிக்க நேரம் தேவைப்படக்கூடியது. இதன் பொருள் என்ன என்பதற்கான முழு தாக்கங்களையும் நாடு இன்னமும் புரிந்து கொள்ள முயற்சிக்கிறது. சிறுபான்மையினரைப் பொறுத்தவரை, அவர்கள் தீர்ப்பை தங்கள் மனதில் செயலாக்குவார்கள், மேலும் அவர்கள் எப்போதுமே தங்களுக்கு சொந்தம் என அழைத்த நிலத்தில் நிகழ்ந்த மாறுதல் நிலையைப் புரிந்துகொள்ள முயற்சிப்பார்கள். இது முஸ்லிம்களுக்கு மட்டுமானது இல்லை – இனி யாராவது சிலரின் கண் சில தேவலாயங்கள் மீது பட்டு, அவற்றை வீழ்த்த கோரினால் அதை யாரால் தடுக்க முடியும்?

இல்லை, இது முடிவு அல்ல. இது ஒரு மைல்கல் – மற்றும் முக்கியமான ஒன்று, சந்தேகத்திற்கு இடமின்றி – ஆனால் நீண்ட பயணத்தில் உள்ள பலவற்றில் ஒன்று. இங்கிருந்து, இந்துத்துவா திட்டம் புத்துணர்ச்சியுடன் புதிதாகத் தொடங்கும்…


கட்டுரை : சித்தார்த் பாட்டியா
கலைமதி
நன்றி : தி வயர்

மீத்தேன் : நீரியல் விரிசல் தொழில்நுட்பத்திற்கு இங்கிலாந்தில் தடை !

ங்கிலாந்தின் லங்காஷயர் பகுதியில் குவாட்ரில்லா என்ற நிறுவனம் கார்ப்பரேட் நீரியல் விரிசல் முறையில் மீத்தேன், ஷேல் கேஸ் உள்ளிட்ட ஹைட்ரோ கார்பன் இரசாயனக் கூட்டுப் பொருட்கள் துரப்பணவு செய்துவருகிறது. இப்பகுதிகளில் அடிக்கடி ஏற்பட்டுவரும் சிறு சிறு நிலநடுக்கங்களுக்கு  இந்நீரியல் விரிசல் தொழில்நுட்பம்தான் காரணம் எனக் கண்டறிந்த இங்கிலாந்து அரசு, கடந்த ஆகஸ்டு மாதத்தில் இத்தொழில்நுட்பமுறைக்குத் தற்காலிகத் தடை விதித்து உத்தரவிட்டது.

பூமியைத் துளையிட்டு, நிலத்தடி நீரை வெளியேற்றி, மணல் மற்றும் பல்வேறு இரசாயனக் கலவைகளைப் பூமிக்கடியில் அழுத்தத்துடன் செலுத்தி, அடிப்பகுதியில் வெடிப்புகளை ஏற்படுத்தி மீத்தேனையும், படிமப் பாறைகளிலிருந்து ஷேல் கேஸையும் விடுவித்துப் பிரித்தெடுப்பதே நீரியல் விரிசல் முறை. இத்தொழில்நுட்பம் நிலநடுக்கம் உள்ளிட்டுப் பல்வேறு சுற்றுச்சூழல் பேராபத்துக்களை உருவாக்கக்கூடியது எனச் சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்களும் சமூக இயக்கங்களும் கூறிவருவது உண்மைதான் என்பதை இங்கிலாந்து நாட்டு அனுபவம் நிரூபித்திருக்கிறது.

“நீரியல் விரிசல் முறையை மனித குலத்துக்குக் கிடைத்துள்ள மாபெரும் வரம் என்றும் ஷேல்வாயு தேடலில் எதையும் மிச்சம் வைக்க வேண்டாம்” என்றும் கூறிவந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையில் அமைந்திருக்கும் அரசுதான் தற்பொழுது இத்தொழில்நுட்பத்திற்குத் தற்காலிகத் தடையுத்தரவை விதித்திருக்கிறது.

“நீரியல் விரிசல் முறையால் இனி எதிர்காலத்தில் எந்த ஆபத்தும் இல்லை” என்று நிரூபிக்கும் வரை இந்தத் தொழிட்நுட்ப முறைக்குத் தடை விதிப்பதாக உத்தரவிட்டிருக்கிறார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன். “இத்தடையை நிரந்தரமாக்க வேண்டும்” எனப் பரிந்துரைத்திருக்கிறார், இங்கிலாந்தின் தொழில் மற்றும் திறன் செயலாளர் ஆண்ட்ரியா லீட்சன்.

படிக்க:
அயோத்தி தீர்ப்பை ஏற்றுக் கொள்வது கடினமாக உள்ளது – முன்னாள் நீதிபதி வேதனை !
♦ காவிரி டெல்டாவை எச்சரிக்கிறது நைஜர் டெல்டா !

எதிர்வரவுள்ள தேர்தலில் மக்களின் வாக்குகளைக் கவரும் நோக்கில் இங்கிலாந்து அரசு இத்தடையை விதித்திருப்பினும், இங்கிலாந்தில் ஷேல் கேஸ் எடுக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கும் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆணையம் (Oil and Gas Authority) அளித்திருக்கும் அறிக்கையில், “லங்காஷயர் பகுதியில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்திற்கு ஆபத்தான நீரியல் விரிசல் முறை தான் உடனடிக் காரணம்” என்பதை அறிவியல் ஆதாரங்களோடு உறுதிப்படுத்தி, இத்தொழில்நுட்பத்திற்கு எதிராக எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

“தற்காலிகமானது எனினும், இங்கிலாந்தின் செல்வாக்குமிக்க புதைபடிவ எரிபொருள் தொழிற்கழகங்களுக்கு எதிராக உள்ளூர் மக்களால் கடந்த பத்து ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் போராட்டத்தின் வெற்றி இத்தடையுத்தரவு” என்கிறார் புவியின் நண்பர்கள் அமைப்பின் தலைவர் க்ரைக் பேனட்.

இங்கிலாந்து அரசு இந்தத் தொழில்நுட்பத்திற்குத் தடை விதிப்பதற்கு முன்பாகவே ஸ்காட்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, வடக்கு அயர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இந்த ஆபத்துக்கள் நிறைந்த தொழில்நுட்பம் தடை செய்யப்பட்டுவிட்டது.

நீரியல் விரிசல் முறையால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களும் சுற்றுப்புறச் சூழல் கேடுகளும் கைப்புண் போல நிரூபணமான பிறகும்கூட, இந்திய அரசு இத்தொழில்நுட்பத்திற்குத் தடை விதிக்க மறுக்கிறது.  குறிப்பாக, தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதியில் இத்தொழில்நுட்ப முறையைக் கமுக்கமாகப் புகுத்தி, 271 இடங்களில் நீரியல் விரிசல் முறை மூலம் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதில் பெரும்பாலானவை ‘தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு இழிபுகழ்’ அனில் அகர்வாலின் வேதாந்தா நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் பரங்கிப்பேட்டைலிருந்து வேதாரண்யம் வரையிலும், விழுப்புரம் மரக்காணம் முதல் கடலூர் வரையிலும் 4,500 சதுர கி.மீ. பரப்பளவில் வேதாந்தாவிற்கும், சிதம்பரத்தை ஒட்டிய 731 சதுர கி.மீ. பரப்பளவில் அரசு நிறுவனமான ஓ.என்.ஜி.சி.க்கும் நீரியல் விரிசல் முறையை பயன்படுத்தி  ஹைட்ரோகார்பனை துரப்பணவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. 32 ஆண்டுகளுக்கு மீத்தேன் எடுப்பதும், அதன் பிறகு 100 ஆண்டுகளுக்கு நிலக்கரி எடுப்பதும் தான் இத்திட்டங்களின் முழுநோக்கமாகும்.

தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதியில் நீரியல் விரிசல் முறையின் மூலம் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்குத் தடை விதிக்கக் கோரியும், அப்பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக் கோரியும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதி மக்கள் போராடி வருகிறார்கள். தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு இயக்கங்களும், முற்போக்கு அறிவுத்துறையினரும் இத்தொழில்நுட்பம் பேரழிவை ஏற்படுத்தக்கூடியது என்பதை ஆதாரங்களோடு அம்பலப்படுத்தியிருக்கிறார்கள்.

படிக்க:
ஹைட்ரோ கார்பன் : தமிழகத்தைச் சுடுகாடாக்க மீண்டும் நுழைகிறது வேதாந்தா !
♦ அத்திவரதர் தரிசனக் கொள்ளை : தெய்வம் நின்று கொல்லுமா ?

எனினும், மைய பா.ஜ.க. அரசும், அதனின் அடிவருடியான தமிழக அ.தி.மு.க. அரசும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை எதிர்ப்பவர்களை வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என அவதூறு செய்துவருவது மட்டுமின்றி, “ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்பவர்கள் எல்லாம் விஞ்ஞானிகளா?” என எகத்தளமாகப் பரிகாசம் செய்தும் வருகின்றன.

நீரியல் விரிசல் முறைக்காக அரசு உருவாக்கியிருக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் சட்டபூர்வமாகச் செல்லாது என்று 2019-இல் தீர்ப்பளித்த இங்கிலாந்து உயர் நீதிமன்றம், “நீரியல் விரிசல் முறைக்கு எதிராக உள்ள அறிவியல்பூர்வமான ஆதாரங்களை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை” என்றும் அத்தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருந்தது.

அதேசமயம் தமிழக நீதிமன்றங்களும், நீதியரசர்களும் மக்களுக்கும் அறிவியல்  உண்மைகளுக்கும் விசுவாசமாக இருக்க வேண்டிய அறத்தைக் கைவிட்டு, நீரியல் விரிசல் முறை குறித்த பிரச்சாரங்கள், பொதுக்கூட்டங்கள், கருத்தரங்குகளுக்குப் பல்வேறு தடைகள், கட்டுப்பாடுகளை விதித்து, உண்மைகள் மக்களைச் சென்றடைந்துவிடாமல் தடுக்கும் அயோக்கியத்தனங்களில் இறங்கியுள்ளன.

இத்தகைய சூழலில்தான் இங்கிலாந்தில் அறிவியல் உண்மைகளின் அடிப்படையில் நீரியல் விரிசல் முறைக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கும் செய்தி வெளியாகியிருக்கிறது. இது உண்மை மக்கள் பக்கம் தான் இருக்கிறது  என்பதை நிறுவியிருப்பதோடு, ஹைட்ரோ கார்பன் திட்டம், நீரியல் விரிசல் முறை ஆகியவற்றுக்கு எதிராகத் தமிழக மக்களும் டெல்டா மாவட்ட விவசாயிகளும் நடத்திவரும் போராட்டங்களுக்கு ஒரு தார்மீக உத்வேகத்தையும் அளித்திருக்கிறது.


மேகலை

பாபர் மசூதி – சபரி மலை – ஐ.ஐ.டி. – காவி பாசிசம் | வழக்கறிஞர் வாஞ்சிநாதன் உரை | காணொளி

பாபர் மசூதி வழக்கு : நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்புகள் நல்லதல்ல | வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

சபரி மலையில் பெண்கள் வழிபட அனுமதி வழங்கிய உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்துத் தொடரப்பட்ட சீராய்வு மனுவை விசாரித்து தீர்ப்பு சொல்லாமல், 7 நபர் கொண்ட விரிவான பெஞ்சிற்கு மாற்றியமைத்ததன் காரணம் என்ன ?

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கியிருக்கும் தீர்ப்பு நியாயமானதா ?

– விடையளிக்கிறார் வழக்கறிஞர் வாஞ்சிநாதன்.

சுதர்சன் பத்மநாபனை இந்த அரசு கைது செய்யாது | வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா லத்தீஃப் தற்கொலைக்குத் தள்ளப்பட்டதில், சுதர்சன் பத்மனாபன் தான் மரணத்திற்குக் காரணம் என தற்கொலைக்கு முன் பாத்திமா குறிப்பிட்ட பின்னரும் சுதர்சன் பதமநாபனைக் கைது செய்ய இந்த அரசு தயங்குவது ஏன் ?  எச்.ராஜா , எஸ்.வி. சேகர் உள்ளிட்டோர் வெளிப்படையாக குற்றம் செய்தும் கைது செய்யப்படாமல்  தப்பியதன் பின்னணிதான் இதற்கும் என்பதை விளக்குகிறார் வழக்கறிஞர் வாஞ்சிநாதன்.

பாருங்கள் ! பகிருங்கள் !

அத்திவரதர் தரிசனக் கொள்ளை : தெய்வம் நின்று கொல்லுமா ?

அத்திவரதர் தரிசனக் கொள்ளை : தெய்வம் நின்று கொல்லுமா ?

கோயிலிலே குழப்பம் விளைவித்தேன். கோயில் கூடாது என்பதற்காக அல்ல. கோயில் கொடியவர்களின் கூடாரமாய் இருக்கக்கூடாது என்பதற்காக.” 1952-ல் வெளியான பராசக்தி திரைப்படத்தில் இடம்பெற்ற இந்த வசனத்தை இன்றைக்குத் தமிழகமெங்கும் மேடை போட்டுப் பேச வேண்டிய தேவையை சிதம்பரம் நடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தைத் தனியார் திருமண நிகழ்ச்சிக்கு வாடகைக்கு விட்ட தீட்சிதர்களின் முறைகேடும், அத்திவரதர் வைபவத்தில் அர்ச்சகர்கள், அதிகார வர்க்கம், தனியார் முதலாளிகள் கூட்டுச் சேர்ந்துகொண்டு அடித்த கொள்ளையும் உருவாக்கியுள்ளன.

”அத்திவரதர் வைபவத்துக்காக அரசு ஒதுக்கிய நிதி எவ்வளவு? சிறப்பு தரிசன அனுமதிச் சீட்டுக்களை விற்றதன் மூலம் கிடைத்த வருமானம் எவ்வளவு? பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்திய தங்கம், வெள்ளி நகைகள் எவ்வளவு?” என்பவை உள்ளிட்ட 28 கேள்விகளைச் சமூக ஆர்வலர்கள் சிலர் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டிருந்தனர். இதற்குச் ”சட்டப்பிரிவு 2(F)-இன்படித் தகவல் அளிக்க முடியாது” என்ற ஒற்றை வரிப் பதிலை, அதுவும் பதிலளிக்கும் அதிகாரியின் பெயர், பதவி எதையும் குறிப்பிடாமல் மொட்டைக் கடுதாசியைப் போலக் கொடுத்திருக்கிறது, மாவட்ட நிர்வாகம்.

அத்திவரதரைத் தரிசிக்க அலைமோதிய பக்தர்கள் கூட்டம்.

“கோவில் நிர்வாகம் வாங்கிய பல இலட்சம் ரூபாய் பெறுமான அங்கவஸ்திரங்கள் மற்றும் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்திய அங்கவஸ்திரங்கள்” குறித்து காஞ்சிபுரத்தைச் சேர்ந்த டில்லி பாபு கேட்டிருந்த கேள்விகளுக்குப் ”பதில் அளிக்க முடியாத நிலையில் இருப்பதாகத்” தெரிவித்துள்ளார் வரதராஜப் பெருமாள் கோயில் உதவி ஆணையர் தியாகராஜன்.

இவையெல்லாம் சாதாரண பக்தர்கள் தெரிந்துகொள்ளக்கூடாத தேவ இரகசியங்களா அல்லது பொதுமக்கள் அறிந்துகொள்ளக் கூடாத இராணுவ இரகசியங்களா? இக்கேள்விகளுக்குப் பதிலளிக்க மறுத்திருப்பதே, அத்திவரதரைக் காட்டிப் பக்தர்களிடம் பகற்கொள்ளையடித்திருப்பதை உறுதிப்படுத்துகிறது.

இந்தக் கொள்ளை சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை விற்பது தொடங்கி அர்ச்சகர்கள் தட்டில் விழுந்த காணிக்கை வரை பல வழிகளில் நடந்திருக்கிறது. எடுத்துக்காட்டாக, அத்திவரதர் முன்பாக உட்கார்ந்து தரிசிக்க 50,000; நின்று கொண்டே தரிசிக்க 30,000; அத்திவரதரோடு ‘செல்பி’ எடுத்துக்கொள்ள 10,000 என ரேட் நிர்ணயிக்கப்பட்டுப் பசையுள்ள பக்தாளிடமிருந்து கோடிக்கணக்கில் பணம் பிடுங்கப்பட்டிருக்கிறது.

தங்கம், வெள்ளி நகைகள் உள்ளிட்டு ஆயிரம், ரெண்டாயிரம் எனப் பக்தர்கள் தாராளமாகக் கொடுத்த காணிக்கைகள், உண்டியலுக்குப் பதிலாக அர்ச்சகர்களின் தட்டுகளில் விழுவதை உத்திரவாதப்படுத்தும் திட்டத்தோடு உண்டியல்களின் எண்ணிக்கை சொற்பமாகவே வைக்கப்பட்டன. எவ்விதக் கணக்கிற்குள்ளும் வராமல் நடந்த கொள்ளையிது.

படிக்க:
அத்தி வரதர் – பற்ற வைத்தது யார் ? கருத்துக் கணிப்பு
♦ சதிகளை முறியடித்து மீண்டும் கல்லூரியில் சேர்ந்த மாணவர் சுரேந்திரன் !

மிக முக்கியமாகச் சிறப்பு தரிசன அனுமதிச் சீட்டு விற்பனையின் மூலம்தான் கோடிகோடியாகக் கொள்ளையடித்திருக்கிறது, அர்ச்சகர்கள், அதிகாரவர்க்கம், முதலாளிகள் கூட்டணி. இந்த அனுமதிச் சீட்டுக்கள் ஒவ்வொன்றும் கள்ளச்சந்தையில் ரூ. 8,000-க்கு விற்கப்பட்டதாகவும், இந்த விற்பனை மூலம் மட்டும் இம்மூவர் கூட்டணி ரூ. 1,175 கோடி வரை கொள்ளையடித்திருக்கக் கூடும் எனச் செய்திகள் வெளிவந்துள்ளன.

குறிப்பாக, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மூன்று முன்னணி ஜவுளி நிறுவனங்கள் “ரூ. 10,000-க்குப் புடவை வாங்கினால் பாஸ் இலவசம்” எனச் சலுகை அளித்துக் கல்லா கட்டியதன் மூலம் மட்டும் ரூ. 200 கோடிக்கும் குறையாமல் இலாபம் பார்த்திருப்பதாகக் குறிப்பிடுகிறது, ஜூனியர் விகடன் இதழ்.

இந்தக் கொள்ளையை நடத்துவதற்காகவே அத்திவரதரின் வரலாறு, மகிமைகள் குறித்து கார்ப்பரேட் ஊடகங்கள் மூலம் பிரச்சாரம் நடத்தப்பட்டு, பக்தர்கள் மயக்கப்பட்டனர். இந்தக் கொள்ளையின் ஆதாரமாக இருந்த அத்திவரதர் ஆழ்ந்த சயனத்திற்குச் சென்றுவிட்டார். அவர் இனி படுத்தபடியும் கேட்கப் போவதில்லை, எழுந்து நின்றாலும் கேட்கப் போவதில்லை. பக்தர்களே, நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? பக்தியின் பெயரால் இன்னும் எத்தனை காலத்திற்கு ஏமாறப் போகிறீர்கள்?

– புதிய ஜனநாயகம் நவம்பர் 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

சில வேளைகளில் ஒரு நிமிடம் என்பதே எவ்வளவு நீடிக்கிறது !

உண்மை மனிதனின் கதை | நான்காம் பாகம் | அத்தியாயம் – 06

தாக்கும் சேனையின் பின்புலப் பாதைக்கு உயரே நடந்த விமானச் சண்டையின் இரைச்சலைக் கேட்டவர்கள் அதில் பங்கு கொண்டவர்கள் – சண்டையிடும் விமானங்களின் அறையில் இருந்தவர்கள் – மட்டுமே அல்ல.

சண்டை விமான ரெஜிமென்ட் கமாண்டர் கர்னல் இவனேவும் விமான நிலையத்தில் அலுவலகத்தின் திறன் மிக்க வானொலிக் கருவியில் இதைக் கேட்டுக் கொண்டிருந்தார். தாமே அனுபவம் மிக்க தேர்ந்த விமானி ஆதலால், சண்டை உக்கிரமாக நடக்கிறது, பகைவர்கள் அதிக பலமுள்ளவர்கள், வானைவிட்டுக் கொடுத்து விலக அவர்கள் தயாராயில்லை என்பதைக் கருவியில் கேட்ட ஒலிகளிலிருந்து அவர் புரிந்து கொண்டார். பாதைகளுக்கு மேலே பேதொத்தவ் கடினமான போர் நிகழ்த்திக் கொண்டிருக்கும் செய்தி விமான நிலையத்தில் விரைவாகப் பரவிவிட்டது. எவர்களுக்கெல்லாம் முடிந்ததோ அவர்கள் காட்டிலிருந்து திறப்பு வெளிக்கு வந்து கலவரத்துடன் தெற்கே பார்க்கலானார்கள். அங்கிருந்து தான் விமானங்கள் திரும்பி வர வேண்டியிருந்தது.

நீளங்கிகள் அணிந்த மருத்துவர்கள் போகிற போக்கில் எதனையோ சவைத்தவாறு சாப்பாட்டு அறையிலிருந்து வெளியே ஓடி வந்தார்கள். பின்புற முகடுகள் மேல் பிரம்மாண்டமான செஞ்சிலுவைகள் பொறித்த மருத்துவ உதவி லாரிகள் புதர்களுக்குள்ளிருந்து யானைகள் போல வெளியேறி, இயங்கும் எஞ்சின்கள் கடகடக்கத் தயாராக நின்றன.

மர முடிக் குவைகளின் பின்னிருந்து முதலில் வெளிப்பட்டு, வட்டம் இடாமல் கீழே இறங்கி விசாலமான திடல் நெடுக ஓடியது முதல் விமான ஜோடி – சோவியத் யூனியனின் வீரர் பெதோத்தவின் “எண் ஒன்றும்” அவரது பின்னோடியின் “அடுத்த இரண்டும்.” அவற்றை அடுத்து உடனேயே இறங்கிற்று இரண்டாவது இணை. திரும்பும் விமான எஞ்சின்களின் இயக்கத்தால் காட்டுக்கு மேலே வானம் தொடர்ந்து ஆர்த்தது.

“ஏழாவது, எட்டாவது, ஒன்பதாவது, பத்தாவது…..” என்று எண்ணினார்கள் விமான நிலையத்தில் நின்றவர்கள். மேலும் மேலும் அதிக இறுக்கத்துடன் வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் அவர்கள்.

இறங்கிய விமானங்கள் திடலிருந்து அகன்று தங்கள் காப்பிடங்களுக்குள் போய் அடங்கிவிட்டன. ஆனால் இரண்டு விமானங்கள் இன்னும் திரும்பவில்லை.

எதிர்பார்த்திருந்தவர்களின் கூட்டத்தில் நிசப்தம் குடி கொண்டது. ஒவ்வொரு நிமிடமும் கழிய மாட்டாமல் மெதுவாகக் கழிந்தது.

“மெரேஸ்யெவும், பெத்ரோவும்” என்று தணிந்த குரலில் சொன்னான் ஒருவன்.

திடீரென ஒரு பெண்ணின் குரல் திடல் முழுவதிலும் கேட்கும்படி களிப்புடன் கீச்சிட்டது:

“வருகிறது!”

எஞ்சினின் கடகடப்பு கேட்டது. பிர்ச் மர முடிகளின் பின்னிலிருந்து, தொங்கவிட்ட சக்கரங்களால் அவற்றை அனேகமாகத் துவைத்துக் கொண்டு பறந்து வந்தது. “பன்னிரண்டாவது” விமானம் அடிபட்டிருந்தது, அதன் வாலின் ஒரு துண்டு பிய்ந்திருந்தது, இடது இறக்கையின் வெட்டுண்ட முனை கம்பியில் இழுபட்டவாறு நடுங்கிற்று. விமானம் விந்தையான முறையில் தரையைத் தொட்டது, உயர எம்பிக் குதித்தது. மறுபடி தரையில் பட்டது, மீண்டும் எம்பிக் குதித்தது. அனேகமாக விமான நிலையத்தின் கோடிவரை இவ்வாறே குதித்துக் குதித்துச் சென்று திடீரென வாலை உயர்த்திக் கொண்டு நின்றுவிட்டது. ஏறுபடிகளில் நின்ற மருத்துவர்களுடன் மருத்துவ லாரிகளும் சில ஜீப் கார்களும் எதிர்பார்த்திருந்த கூட்டம் அனைத்தும் விமானத்தை நோக்கி விரைந்தன. விமானி அறையிலிருந்து யாரும் வரவில்லை.

வளைமுகடு திறக்கப்பட்டது. இருக்கையுடன் ஒண்டியபடி இரத்தக் குட்டையில் மிதந்தது பெத்ரோவின் உடல். தலை சக்தியின்றி மார்பின் மேல் துவண்டு தொங்கியது. நீண்ட வெளிர் முடியின் நனைந்த கற்றைகள் முகத்திற்குத் திரையிட்டிருந்தன. மருத்துவர்களும் நர்ஸ்களும் வார்களை அவிழ்த்தார்கள், இரத்தம் படிந்து குண்டுச் சிதறலால் ஊடறுக்கப்பட்டிருந்த பாராஷூட் பையை அகற்றினார்கள். அசைவற்ற உடலை வெளியே எடுத்துத் தரையில் கிடத்தினார்கள். பெத்ரோவின் கால்களில் குண்டுகள் தாக்கியிருந்தன, ஒரு கை சேதமுற்றிருந்தது. கருங்கறைகள் நீல விமானி உடையில் விரைவாகப் பரவின.

படிக்க :
அர்பன் நக்சல்களுக்கு எதிராக சி.ஆர்.பி.எஃப். நடவடிக்கை : அமித்ஷா !
பாபர் மசூதி விவகாரம் : வரலாற்றாசிரியர் டி. என். ஜா | நேர்காணல்

அங்கேயே பெத்ரோவின் காயங்களுக்கு உடனடியாகக் கட்டுக்கள் போடப்பட்டன. அவனை ஸ்டிரெச்சரில் கிடத்தி லாரியில் ஏற்றத் தொடங்கிவிட்டார்கள் ஆட்கள். அப்போது அவன் கண்களைத் திறந்தான். ஏதோ கிசுகிசுத்தான். ஆனால் அவனது ஈனக்குரல் ஒருவர் காதிற்கும் எட்டவில்லை. கர்னல் அவன் அருகே குனிந்தார்.

“எங்கே மெரேஸ்யெவ்?” என்று கேட்டான் பெத்ரோவ்.

“இன்னும் திரும்பவில்லை.”

ஸ்டிரெச்சர் மறுபடி தூக்கப்பட்டது. ஆனால் காயமடைந்தவன் தலையை விசையாக ஆட்டி. ஸ்டிரெச்சரில் இருந்து குதிக்க முயல்பவன் போன்று உடலை அசைத்தான்.

“நிறுத்துங்கள், என்னை அப்பால் கொண்டு போகாதீர்கள்! நான் போக மாட்டேன். மெரேஸ்யெவ் வரும்வரை காத்திருப்பேன். அவன் என் உயிரைக் காப்பாற்றினான்” என்றான்.

பெத்ரோவ் தீவிரமாக எதிர்த்தான், கட்டுக்களைப் பிய்த்து அறுத்துவிடுவதாக அச்சுறுத்தினான். எனவே கர்னல் கையை ஆட்டி, முகத்தைத் திருப்பிக்கொண்டு, “சரி, ஸ்டிரெச்சரைக் கீழே வையுங்கள். மெரேஸ்யெவிடம் பெட்ரோல் இன்னும் நிமிடத்திற்கு மேல் காணாது. அதற்குள் இவன் உயிர் போய்விடாது” என்று பற்களை கடித்துக் கொண்டே சொன்னார்.

தமது விமானமானியின் சிவப்பு வினாடி முள் டிக்டிக் கென்று ஒலித்தவாறு எண் வட்டத்தில் சுற்றி வருவதைக் கவனித்தார் கர்னல். எல்லோரும் மெரேஸ்யெவ் விமானம் வரவேண்டிய மங்கிய நீலக் காட்டின் பக்கமே பார்த்துக் கொண்டிருந்தார்கள். காதுகளை கூராக்கிக் கொண்டு உற்றுக் கெட்டார்கள். ஆனால் தொலைவில் கேட்ட பீரங்கிக் குண்டுகளின் முழக்கமும், அருகே மரத்தைக் கொத்திக் கொண்டிருந்த மரங்கொத்தியின் அலகோசையும் தவிர வேறு எந்த ஒலியும் கேட்கவில்லை.

சில வேளைகளில் ஒரு நிமிடம் எவ்வளவு நீடிக்கிறது!

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

பாபர் மசூதி இடிக்கப்படவில்லை என்றால், அதை உச்சநீதிமன்றமே இடித்திருக்குமா ? நீதிபதி ஏ.கே.கங்குலி

2

பாபர் மசூதி வழக்கில் மூன்று நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு பாபர் மசூதி இருந்த இடத்தில், ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என அளித்திருக்கும் தீர்ப்பு, மசூதி இடிப்புக்கு ஒரு பரிசை வழங்கியிருப்பதாக நீதிபதி ஏ.கே. கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். 2012-ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெற்றவர் ஏ.கே. கங்குலி.

பாஜக மற்றும் விசுவ இந்து பரிசத்தால் அணிதிரட்டப்பட்ட இந்துத்துவ காவிகள் 1992-ஆம் ஆண்டு, டிசம்பர் 6-ஆம் தேதி மசூதியை இடித்து தள்ளியது, ‘சட்டத்தின் ஆட்சியில் அதிர்ச்சிக்குரிய மீறல்’ என உச்சநீதிமன்றம் சொன்னது. ஆனால், நிலத்தை இந்து தரப்பினரிடம் ஒப்படைத்து. ‘நிகழ் தகவுகளின் சமநிலையை’ கருத்தில் கொண்டு, சன்னி வக்ஃப் வாரியத்தைவிட வி.எச்.பி தரப்பு அதிக உரிமை கோரலைக் கொண்டுள்ளதாகக் கருதியது.

முரண்பாடாக, 27 ஆண்டுகளுக்கு முன்பு மசூதி இடிக்கப்பட்டிருக்காவிட்டால் உச்சநீதிமன்றம் இந்து தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பளித்திருக்க முடியாது என்று கங்குலி கூறினார்.

முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் குமார் கங்குலி

“பாபர் மசூதி இடிக்கப்படாமல், இந்துக்கள் நீதிமன்றம் சென்று ராமர் அங்கு பிறந்தார் என்று சொல்லியிருந்தால், நீதிமன்றம் அதை இடிக்க உத்தரவிட்டிருக்குமா?” என கேட்கும் அவர், “நீதிமன்றம் அதைச் செய்திருக்காது” என்கிறார்.

உச்சநீதிமன்ற அமர்வு பாபர் மசூதி இடிப்பை குற்றம் என வர்ணித்தாலும், உச்சநீதிமன்றம் இடிப்புக்கு ஒரு பரிசை வழங்கியிருக்கிறது என்கிற நீதிபதி கங்குலி, “மிகவும் துரதிருஷ்டமான போக்கை இது ஊக்குவிக்கிறது…” என்கிறார்.

இந்த வழக்கில் தான் ஒரு நீதிபதியாக இருந்திருந்தால் மசூதியை மீள் அமைக்கும் உத்தரவை இட்டுப்பிருப்பேன் என்றும் அப்படியில்லை எனில், அந்த இடத்தில் மசூதியோ கோயிலோ கட்ட அனுமதித்திருக்க மாட்டேன். அதற்குப் பதிலாக, மருத்துவமனை, பள்ளி அல்லது கல்லூரி போன்ற பிற மதச்சார்பற்ற பணிகளுக்கு பயன்படுத்த ஒதுக்கியிருக்கலாம் என்றும் கூறுகிறார்.

பாபர் மசூதிக்கு அடியில் உள்ள அமைப்பு, இந்து அமைப்புதான் என்பதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை என்பதை தீர்ப்பு கூறவில்லை. நீதிபதிகள் மசூதியை கட்டவோ அல்லது நடுநிலையான நோக்கத்திற்கு அந்த இடத்தைப் பயன்படுத்தவோ அரசாங்கத்துக்கு ஆணை இட்டிருக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

படிக்க:
துருக்கி : பள்ளிகளில் பரிணாம கோட்பாடு நீக்கம் ! ஜிகாதி கோட்பாடு சேர்ப்பு !
♦ அயோத்தி தீர்ப்பு : சீராய்வு மனுதாக்கல் செய்ய முசுலீம் தரப்பு முடிவு !

“அங்கே மசூதி இருந்தது என்பது பிரச்சினை இல்லை. அது இடிக்கப்பட்டதும் பிரச்சினை இல்லை. நாம் அனைவரும் அது இடிக்கப்படுவதைப் பார்த்தோம்” என விமர்சித்தார் நீதிபதி.

அவரைப்பொறுத்தவரை, பாபர் மசூதி இடிப்பை இந்துக்கள் கொண்டாடக்கூடாது. “மசூதியை இடிப்பது என்பது இந்து நம்பிக்கை அல்லது மதத்தின் பகுதி அல்ல. ஒரு மசூதியை இடிப்பது முழுமையாக இந்து மதத்துக்கு எதிரானது” என்பது அவருடைய விளக்கம்.

இந்திய தொல்லியம் கழகம் அளித்தது என கூறிய முழுமையற்ற அறிக்கையின் அடிப்படையில் பாபர் மசூதிக்கு அடியில் உள்ள கட்டமைப்பு இந்து கட்டமைப்பு தான் என உச்சநீதிமன்றம் எப்படி முடிவுக்கு வந்தது? எனவும் கங்குலி கேள்வி எழுப்பினார்.

1900-களில் பாபர் மசூதி (படம் : நன்றி – பிரிட்டிஷ் அருங்காட்சியகம்)

“இப்போது உச்சநீதிமன்றம் மசூதிக்கு அடியில் ஏதோ ஒரு கட்டமைப்பு இருந்தது என்று கூறுகிறது. ஆனால், அங்கே கோயில் கட்டமைப்பு இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பு, கோயில் இடிக்கப்பட்டு, மசூதி கட்டப்பட்டது என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை எனக் கூறுகிறது. அங்கே, புத்த ஸ்தூபியோ அல்லது சமண கட்டமைப்போ அல்லது தேவாலயமோ இருந்திருக்கலாம். ஆனால், அது கோயிலாக இருந்திருக்க வில்லை. எனவே நிலம் இந்துக்களுக்கு அல்லது ராம் லல்லாவுக்குச் சொந்தமானது என்று எந்த அடிப்படையில் உச்சநீதிமன்றம் கண்டறிந்தது?”.

இசுலாம் நம்பிக்கையின் மேல் இந்து நம்பிக்கையை நீதிமன்றம் தேர்வு செய்திருப்பதாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து ஆய்வு செய்த சட்ட கல்வியாளர் ஃபைசான் முஸ்தபா போன்றவர்களின் கருத்துடன் ஒத்துப்போவதாக கங்குலி தெரிவித்தார். ‘ஒரு சாராரின் நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு வழக்கை நீங்கள் தீர்க்க முடியுமா?’ எனக் கேட்கிறார் அவர்.

படிக்க:
அயோத்தி தீர்ப்பை ஏற்றுக் கொள்வது கடினமாக உள்ளது – முன்னாள் நீதிபதி வேதனை !
♦ சிலி : புதிய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கு ! வீதியில் திரண்ட தொழிலாளர்கள் !

கடந்த வாரம் வந்த உச்சநீதிமன்ற தீர்ப்பில், இந்தியா வந்த பல்வேறு பயணிகள் பாபர் மசூதியில் இந்துக்கள் பிரார்த்தனை செய்ததாக எழுதியுள்ளனர். எனவே, நீதிமன்றம் ஒரு காலத்தில் பாபர் மசூதி இருந்த இடத்தில் இந்துக்கள் பிரார்த்தனைக்குரிய இடமாக பயன்படுத்தினர் என முடிவு செய்தது. முசுலீம் தரப்பு இது தங்களுடைய புனித இடம் என்பதற்கான பல்வேறு ஆவணங்களை சமர்பித்தனர். ஆனால், நீதிமன்றம் பயணிகள் எழுதியவை, முசுலீம் தரப்பினர் சமர்பித்த வருவாய் ஆவணங்களைவிட முந்தியவை எனக் கூறியது.

தீர்ப்பு ஒருமனதாக ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வால் கையெழுத்திடப்பட்டாலும், நீதிபதிகளில் ஒருவர் இந்தக் கேள்விக்கும் ஒரு தனிப்பட்ட பார்வையை பதிவு செய்துள்ளார். ‘இந்த சர்ச்சைக்குரிய இடம் ராமர் பிறந்த இடம் என்பது இந்து பக்தர்களின் நம்பிக்கையா?’ இந்தக் கேள்வியைக் கேட்ட நீதிபதியின் பெயர் வெளிப்படுத்தப்படவில்லை. தீர்ப்பின் 116-ஆம் பக்கத்தின் முடிவில் பின் இணைப்பாக,

“மசூதியை நிர்மாணிப்பதற்கு முன்பிருந்தே, அதன் பின்னரும் பாபர் மசூதி இருந்த இடமே ராமர் பிறந்த இடம் என இந்துக்கள் நம்பினர் என்பதன் அடிப்படையில் முடிவுக்கு வரப்பட்டுள்ளது” என எழுதப்பட்டுள்ளது.

இந்தக் குறிப்பு கையொப்பமிடப்படவில்லை என்பது தீர்ப்புகள் எழுதப்படும் முறையிலிருந்து விலகியிருக்கிறது என்பதோடு, “இது மிகவும் விசித்திரமானது மற்றும் மிகவும் தீவிரமானது. உச்ச நீதிமன்ற தீர்ப்பென்பது மிகவும் தீவிரமான விசயம்” என்கிறார் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கங்குலி.


கலைமதி
நன்றி : தி வயர்

நவீன வேதியியலின் கதை | பாகம் 02

நவீன வேதியியலின் கதை | பகுதி – 02

ரசவாதத்தின் மருட்சியில் இருந்தும் பிரமிப்பிலிருந்தும் எழுந்து வந்த வேதியியல் ஃபிலாஜிஸ்டன் சங்கிலியில் கட்டுண்டு கிடந்தது. பிளாக், பிரிஸ்ட்லி மற்றும் லவாய்சியர் ஆகியோரின் கண்டுபிடிப்புகளால் அது விடுவிக்கப்பட்டது.

ஃபிலாஜிஸ்டன் கருதுகோள் அறிவியல் ஆய்வுகளுடன் முரண்பட்டது என்பதால் அதை நிராகரித்த லவாய்சியர் கலோரிக் (caloric) கருதுகோளை முன்வைத்திருந்தார்.  பொருட்கள் வெப்பம் அடைவதற்கு  அவற்றின் உள்ளே இருக்கும் கலோரிக் என்ற திரவப் பொருள் தான் காரணம் என்றார்.

இந்தக் கருதுகோளுக்கு மிகத் துடிப்பான இளவயது ஆய்வாளர் ஒருவர் மூலம் ஆபத்து காத்திருந்தது. அவர் இங்கிலாந்தின் வேதியலாளர் ஹம்ஃப்ரி டேவி; பொருட்கள் வெப்பம் அடைவதற்கு அவற்றுள் இருக்கும் மூலக்கூறுகளின் நகர்வும் அதனால் ஏற்படும் உராய்வுமே  காரணம் என்று நினைத்தார்.

இரண்டு பனிக்கட்டிகளை ஒன்றோடு ஒன்று அழுத்தி உராயும்போது, உராயும் பரப்பில் புறவெப்பத்தின் தாக்கம் களையப்படுகிறது. அதே சமயம் பனிக்கட்டிகள் உருகுகின்றன. இது உராய்வின் மூலம் உருவாகும் வெப்பத்தால் ஏற்படுகிறது என்பதை டேவி நிருபித்தார். இந்த ஆய்வு முடிவை 1799- ம் ஆண்டு “வெப்பம், ஒளி மற்றும் ஒளிக் கலவைகள் பற்றிய கட்டுரை”- யில் பதிப்பித்தார்.

அதன் பின் டேவி வாயுக்களை தயாரித்து அவற்றை சோதிக்கும் பணியில் ஈடுபட்டார். வாயுக்களை அவர் முதலில் தன் மீதே பரிசோதித்து கொண்டார். ஒரு குறிப்பிட்ட வாயுவை அவர் உள்ளிழுத்த போது உணர்வின்மை ஏற்பட்டது. தற்போது மோட்டார் வாகனங்களில் இருந்து வெளியாகும் நச்சு தன்மை வாய்ந்த கார்பன் மோனாக்சைடு தான் அந்த வாயு. இதேபோல சிரிப்பூட்டும் வாயுவான நைட்ரஸ் ஆக்சைடையும் கண்டுபிடித்தார்.

வேதியலாளர் ஹம்பிரி டேவி

டேவி தனது குறிப்பேடுகளில் “டேவி மற்றும் நியூட்டன்” என்று எழுதி வைத்தார். டேவி தன்னை நியூட்டனுடன் ஒப்பிட்டுக் கொண்டதும், தம்மை வேதியியலின் நியூட்டன் என்று கருதிக் கொண்டதும் வெறுமனே தற்பெருமை மட்டுமல்ல. அது ஒரு கனவு. வேதியியல் துறையில் தாம் நியூட்டனைப் போன்று திருப்பங்களை, பாய்ச்சல்களை உருவாக்க வேண்டும் என்று கனவு கண்டார்.

இதனிடையே 1801-ம் ஆண்டு லண்டன் ராயல் சொசைட்டி அறிவியல் கழகம் தனது வேதியியல் நிறுவனத்தில் மக்களிடையே அறிவியல் விரிவுரைகளை நிகழ்த்த டேவியை பணியில் அமர்த்திக் கொண்டது. டேவியின் விரிவுரைகள் லண்டனில் பிரபலமாகி மக்களிடையே மிகுந்த செல்வாக்கைப் பெற்றன. இந்த விரிவுரைகளில் இருந்து மைக்கேல் ஃபாரடே உந்துதலைப் பெற்று, டேவியின் உதவியாளராக சேர்ந்ததும், அதன்பின் மின்னியல் துறையில் முக்கிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியதும் தனிக்கதை.

உலகமும், உலகில் உள்ள பொருட்கள் அனைத்தும் நீர், நிலம், காற்று, நெருப்பு ஆகிய அடிப்படை பொருட்களால் ஆனது – என்ற பல நூற்றாண்டுகளாக நிலவி வந்த கருத்து தகர்க்கப்பட்டு விட்டது. நீர் நிலம் காற்று ஆகியவையே கூட தனிமங்கள் என்ற அடிப்படைத் துகள்களால் ஆனவை – என்ற கருத்து உருவாகி விட்டது.

ஆனால், எல்லா இயற்கை பொருட்களில் இருந்தும் தனிமங்கள் எளிதாகப் பிரித்தறியப்பட்டு விடவில்லை. வடிகட்டுதல், அமிலத்தால் வினையூட்டுதல், வெப்பபடுத்துதல் போன்ற வேதியியலில் ஏற்கனவே அறியப்பட்ட செயல்முறைகளின் மூலம் சில இயற்கை பொருட்களிலிருந்து தனிமங்களை பிரித்தறிய இயலவில்லை.

படிக்க:
சிலி : புதிய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கு ! வீதியில் திரண்ட தொழிலாளர்கள் !
அறிவியல் கட்டுரை : நிலாவுக்குப் போலாமா ?

உதாரணமாக, இயற்கையில் கிடைத்த பொட்டாஷ் படிகத்திலிருந்து (Potash crystal) லவாய்சியர் தனிமத்தை பிரித்து எடுக்க முயற்சித்தார். அவர் பல்வேறு முறைகளை முயற்சித்தும், எவையும் பயனளிக்கவில்லை. பிரித்தறிவதற்கு புதிய வேதியியல் செயல்முறைகள் கண்டுபிடிக்கப்பட வேண்டியிருந்தது.

இந்த நேரத்தில் மிக முக்கியமான திருப்புமுனை வேறொரு துறையிலிருந்து வந்தது. அன்றைய காலத்தில் மின்னாற்றல், மின்சாரம் என்பது புதிய துறை. பெரும்பாலான ஆய்வுகள், நிலை மின்னாற்றலைப் (Static Electricity) பற்றியும் அதை பயன்படுத்திக் கொள்வதைப் பற்றியுமே இருந்தன. இயங்கு மின்னாற்றல் (Dynamic Electricity) இன்னும் கண்டுபிடிக்கப்பட இல்லை. மின்சாரத்தை தொடர்ச்சியாக வழங்கும் ஒரு அமைப்பு அல்லது கருவி இன்னும் கண்டுபிடிக்கப் படாமலிருந்தது.

இத்தாலியைச் சேர்ந்த அறிவியலாளர் அலெக்சாண்டரா வோல்டா(Alessandro Volta) 1799-1800 ஆம் ஆண்டு உலகின் முதல் மின்கலத்தை(Battery) கண்டறிந்தார். வோல்டா தாமிரம் மற்றும் துத்தநாக தகடுகள், நீர்த்த கந்தக அமிலத்தில் தோய்த்த துணி ஆகியவற்றை அடுக்கடுக்காக வைத்து தனது மின்கலத்தை(Voltaic pile) உருவாக்கினார். இது மின்சாரத்தை தொடர்ச்சியாக வழங்கக் கூடிய ஆற்றலைக் கொண்டிருந்தது. இயற்பியலில் (மின்னியல் துறையில்) புதிய பாய்ச்சலை ஏற்படுத்தியது.

ஹம்ஃப்ரி டேவி மின்னாற்றல் வேதிவினையின் விளைவாகதான் உருவாகிறது என்று நம்பினார். அதனால் அதன் தலைகீழ் விளைவாக – மின்சாரம் பாயும் போது அது வேதிவினையை தூண்டக்கூடும் என்று நினைத்தார். அதை தனது ஆய்வுகளில் பயன்படுத்த தலைப்பட்டார். மின்சாரத்தை நீரில் பாய்ச்சிய போது அதிலுள்ள மூலக்கூறுகளை பிரித்து ஹைட்ரஜன் ஆக்சிஜன் வாயுக்களை உருவாக்கியது. மின்னாற்பகுப்பு முறை (Electrolysis) தோற்றம் பெற்றது.

மின்கலத்தை கண்டுபிடித்த அலெக்சாண்டரா வோல்டா.

1807-ம் ஆண்டில் இதை காஸ்டிக் பொட்டாஷின் மீது பரிசோதித்துப் பார்க்கத் தீர்மானித்தார் ஹம்ஃப்ரி டேவி. பொட்டாசை நீரில் கரைத்து அதில் மின்சாரத்தை பாய்ச்சி முயற்சி செய்தார். அது பொட்டாசை விட்டுவிட்டு நீரை மட்டும் ஹைட்ரஜன் – ஆக்சிஜனாக பிரித்தது. பின்னர் பொட்டாஷை உருக்கி உருகிய நிலையில் மின்சாரத்தை பாய்ச்சி முயற்சி செய்தார். அது பிரிந்து புதிய தனிமம் பொட்டாசியம் (Potassium) கண்டறியப்பட்டு விட்டது.

பொட்டாசியத்தை கண்டுபிடித்த மறுநாளே அதே மின்னாற்பகுப்பு முறையை காஸ்டிக் சோடாவில் முயற்சி செய்தார். அதன் மூலம் சோடியம் தனிமத்தை கண்டறிந்தார். அடுத்த ஓராண்டுக்குள் பேரியம்(barium), கால்சியம்(calcium), மக்னீசியம்(magnesium), ஸ்ராண்டியம்(strontium) என்று ஆக மொத்தம் ஆறு தனிமங்களை கண்டறிந்தார் டேவி.

மின்வேதிப்பகுப்பின் மூலம் போரான்(boron), அயோடின்(iodine), லித்தியம்(lithium), சிலிகான்(silicon), அலுமினியம்(aluminum) ஆகிய மேலும் ஐந்து தனிமங்கள் வெவ்வேறு அறிவியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டன. ஐரோப்பா முழுவதும் இருந்த வேதியியலாளர்கள் இந்த புதிய செயல்முறை நுட்பத்தைப் பயன்படுத்தி மேலதிகமான தனிமங்களைக் கண்டுபிடிக்க துவங்கினர்.

தனிமங்கள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து ஓட்டி மூலக்கூறுகளாக இருக்கின்றன. அப்படி அவற்றை ஒன்றுடன் ஒன்று பிணைத்து வைத்துள்ள விசை எது என்ற கேள்வி எழுந்தது. மின்சாரம் சேர்ந்துள்ள மூலக்கூறுகளை பிரிக்கிறதென்றால் அவற்றுக்கிடையில் மின் விசை ஒன்று செயலாற்ற வேண்டும் என்று கருதினார் டேவி. இந்த கருதுகோள் பின்னர் பல ஆண்டுகளுக்குப் பிறகு இயற்பியலில் நிரூபிக்கப்பட்டது.

லவாய்சியரின் பட்டியலில் மேலும் தனிமங்கள் சேர்க்கப்பட்டு 19-ஆம் நூற்றாண்டின் முதற்பகுதியில் இயற்கையாக உருவாகும் 92 தனிமங்களில் 55 கண்டுபிடிக்கப் பட்டுவிட்டன. அவறுக்கு இடையிலான ஒற்றுமை, தொடர்புகள் மற்றும் உருப்படிவம் (pattern) என்ன? இந்தக் கேள்வி இன்னும் தீர்க்கப்படாமலே இருந்தது.

ஆங்கிலேய வேதியலாளரும், இயற்பியலாளருமான ஜான் டால்ட்டன் இதற்கு விடையளிக்க முற்பட்டார். அது வேதியியலில் மட்டுமின்றி இயற்பியலிலும் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தியது.

படிக்க:
பிஸியோகிராட்டுகள் | பொருளாதாரம் கற்போம் – 44
♦ துருக்கி : பள்ளிகளில் பரிணாம கோட்பாடு நீக்கம் ! ஜிகாதி கோட்பாடு சேர்ப்பு !

தனிமங்களிருந்து சேர்மங்களை உருவாக்கும் போது அவை ஒரு குறிப்பிட்ட நிறை விகிதத்திலேயே இணைகின்றன என்று அறிவியலாளர்கள் கண்டறிந்தனர். உதாரணமாக, ஒரு சோடியம் துகளும், ஒரு குளோரைடு துகளும் சேர்ந்து சோடியம் குளோரைடு உருவாகிறது. ஒரு ஆக்சிஜன் துகளும் இரண்டு ஹைட்ரஜன் துகளும் இணைந்து நீர் உருவாகிறது. இது அறுதி விகிதசம விதி (Law of definite proportions) எனப்படுகிறது.

இவ்வாறு நடக்க வேண்டுமெனில், ஒவ்வொரு தனிமமும் அதன் தனித்துவமான கட்டுமானத் துகளால் செய்யப்பட்டிருக்க வேண்டும். அவை தனித்துவமான அளவு, நிறை, பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும். வெவ்வேறு தனிமங்கள் வெவ்வேறு நிறை, பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும். அத்துகள்களை அவர் அணுக்கள் என்று அழைத்தார். பண்டைய இந்திய மற்றும் கிரேக்க தத்துவவியலாளர்கள் முன்வைத்த அணுக் கோட்பாட்டிற்கு மீண்டும் உயிர் கொடுத்தார் டால்டன்.

ஜான் டால்டன்

மேலும், இரண்டு தனிமங்கள் சேர்ந்து ஒன்றுக்கு மேற்பட்ட சேர்மத்தைத் தருவதைக் கண்டறிந்தார் டால்டன். அதில் முதல் தனிமத்தின் நிறையை நிலையானதாகக் கொண்டால் சேரும் இரண்டாவது தனிமத்தின் இரண்டு வெவ்வேறு நிறைகள் இரண்டு வெவ்வேறு சேர்மத்தை உருவாக்குகின்றன. இந்த இரு வேறு வினைகளில் இரண்டாவது தனிமத்தின் நிறைகளுக்கிடையான விகிதம் எளிய முழு எண்களின் விகிதத்திலிருக்கும் என்றார். இது மடங்கு விகித விதி (Law of multiple proportions) எனப்படுகிறது.

உதாரணமாக, 100 கிராம் கார்பனுடன், 133 கிராம் ஆக்சிசனுடன் வினைபுரிந்து ஒரு வகை ஆக்சைடையும் (கார்பன் மோனாக்சைடு), 266 கிராம் ஆக்சிசனுடன் வினைபுரிந்து மற்றைய வகை ஆக்சைடையும் (கார்பன்–டை-ஆக்சைடு) தருகின்றன. 100 கிராம் கார்பனுடன் வினைபடும் ஆக்சிசனின் நிறை விகிதமானது 266:133 = 2:1 எளிய முழு எண்களின் விகிதமாகும்.

முதல் முறையாக அணு நிறையின் அடிப்படையில் தனிமங்களை வரிசைப்படுத்தி வைத்தார் டால்டன். அவர் அணு நிறையை சரியாகக் கணக்கிடவில்லை என்றாலும் அறிவியியலுக்கு சரியான திசைவழியை உருவாக்கினார். இவற்றை 1808-ம் ஆண்டு தனது வேதியியல் தத்துவத்தின் புதிய அமைப்பு (A New System of Chemical Philosophy) நூலில் பதிப்பித்தார். தனிமங்கள் வெவ்வேறு அணு நிறையைக் கொண்டிருக்கின்றன என்பதை அப்போது மிகச்சில வேதியலாளர்களே ஏற்றுக் கொண்டனர்.

வெவ்வேறு தனிமங்களின் வெவ்வேறு அணு நிறைகள் குறித்த கருத்தை தீவிரமாக கொண்டிருந்த சில அறிவியலாளர்களில் ஸ்வீடனைச் சேர்ந்த ஜான்ஸ் ஜேக்கப் பெர்செலியசும் (Jöns Jacob Berzelius) ஒருவர். முன்னதாக, சிலிக்கான், தோரியம், சீரியம் மற்றும் செலினியம் ஆகிய தனிமங்களை கண்டுபிடித்திருந்தார் பெர்செலியஸ். டால்டனின் கோட்பாட்டை கேள்விப்பட்டவுடன் தனிமங்களின் அணு நிறை குறித்த தேடலில் (pursuit of atomic weights) ஈடுபட்டார். அணு நிறையை துல்லியமாகக் கண்டறியும் முயற்சியில் சுமார் பத்தாண்டுகள் 2000-க்கும் மேற்பட்ட தனிமங்கள் மற்றும் சேர்மங்களைக் கொண்டு செய்த அயராத சோதனைக்குப் பின் 45 தனிமங்களின் அணு நிறையை கண்டறிந்தார். அவை மற்ற வேதியியலாளர்களின் கணக்கீடுகளுடன் ஒத்துப்போகவில்லை என்பதால் பெரும்பாலானோர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஹைட்ரஜனைப் போன்ற எளிய தனிமங்களை தவிர மற்றவற்றின் நிறையில் ஒத்த கருத்து எட்டப்படவில்லை.

ஜெர்மானிய வேதியியலாளர் ஜோகன் டோபரீனர் (Johann Döbereiner) வேதிப்பண்புகளைக் கொண்டு தனிமங்களின் ஒத்த பண்புகளைக் கண்டறிய முற்பட்டார். லித்தியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றின் அணு நிறையும் பண்புகளும் சோடியம் அணுவுடன் நெருக்கமாக இருந்தது. இதே போன்று நான்கு ஒத்த பண்புகளைக் கொண்ட மும்மைத் (Triads) தனிமங்களைக் கண்டறிந்தார்.

இத்தாலிய வேதியியலாளர் ஸ்டானிஸ்லாவ் கன்னிசரோ (Stanislao Cannizzaro) அணு நிறையை அளப்பதற்கான புதிய முறையை முயற்சித்து வந்தார். சம பருமன் – கன அளவுள்ள (Volume) வாயுக்களில், சம எண்ணிக்கையில் துகள்கள் (அணுக்கள்) இருக்கும் என்பது ஏற்கனவே 1811-ல் இத்தாலியைச் சேர்ந்த வேதியியல் அறிஞர் அமேடியோ அவகாதரோவால் (Amedeo Avogadro) முன்மொழியப்பட்டு, நிரூபிக்கப்பட்டிருந்தது. ஒத்த பருமனில் வாயு நிலையில் அணு எடையை அளக்கும் முறையை முன்வைத்தார் கன்னிசரோ. ஜெர்மனியின் கார்ல்ஸ்ருஹே (Karlsruhe) நகரில் 1860–ல் நடந்த உலகின் முதல் வேதியியலாளர்கள் மாநாட்டில் கன்னிசரோ அணு நிறையை அளப்பதற்கான தனது புதிய முறையிலான நியமத்தை (Standard) சமர்பித்தார். இதன் மூலம் அணு நிறைகள் துல்லியமாக அளக்கப்பட்டன. ஆனால், இன்னும் வரிசைப் படுத்தப்படவில்லை.

இதற்கு அக்கம் பக்கமாக புதிய தனிமங்கள் கண்டுபிடிப்பும் நடந்து வந்தது. வேதியியலாளர்கள் பண்டைய காலத்திலிருந்தே கைக்கொள்ளும் சோதனை முறைகளில் ஒன்று சுடர் சோதனை (flame test). பண்டைய அரபு இரசவாதிகள் பொருட்களை நெருப்பில் இடும்போது வெவ்வேறு பொருட்கள் வெவ்வேறு நிறத்தில் எரிவதைக் கண்டறிந்தனர். ஆனால் தனிமங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க ஒரே நிறத்தின் சிறு நிறபேதங்களுடன் (small shades) பல தனிமங்கள் எரிந்தன. அவற்றை பிரித்தறிய இயலவில்லை.

வேதியியலாளர் ராபர்ட் பன்சென் (Robert Bunsen) மற்றும் அவரது நண்பரும் இயற்பியலாலருமான கிரிச்சாஃப்.

இந்தப் பிரச்சினையை ஜெர்மனியைச் சேர்ந்த வேதியியலாளர் ராபர்ட் பன்சென் (Robert Bunsen) தனது நண்பரும் இயற்பியலாலருமான கிரிச்சாஃபிடம் (Kirchhoff) விளக்கினார். கிரிச்சாஃப் இதற்கு தீர்வாக நிறப்பிரிகை (Spectroscope) கருவியை கொண்டு வந்தார். அதைக் கொண்டு இருவரும் எரியும் தனிமங்களை உற்று நோக்கினார்கள். பொருட்கள் எரியும் போது வெளியிடும் ஒளியை இந்த நிறப்பிரிகை கருவி மூலம் பிரித்து அதன் நிறமாலையை காணமுடிந்தது. இன்றைக்கு பொருட்களின் மீது இருக்கும் பார்கோடை (Barcode) போல் ஒரே நிறத்தின் வெவ்வேறு நிறபேதங்களை தெளிவாகப் பார்க்க முடிந்தது. இந்த ஸ்பெக்ட்ரோஸ்கோப்பைக் கொண்டு பன்சென், கிரிச்சாஃப் இருவரும் இணைந்து 1860-61 ஆண்டுகளில் சீசியம்(Caesium), ருபீடியம்(Rubidium) ஆகிய தனிமங்களைக் கண்டுபிடித்தனர்.

இதே நுட்பத்தைக் கொண்டு தாலியம் (Thallium), இண்டியம் (Indium) ஆகிய மேலும் இரண்டு தனிமங்கள் வெவ்வேறு அறிவியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும், வானியலாளர்கள் இந்தக் கருவியை விண்ணை நோக்கித் திருப்பி விண் பொருட்களின் நிறமாலையைக் காண தலைப்பட்டனர். விண் ஒளியை நிறப்பிரிகை செய்தபோது ஹீலியம் வாயு இருப்பது அதன் நிறமாலையிலிருந்து கண்டறியப்பட்டது.

1863–ம் ஆண்டு ஜான் நியுலேண்ட்ஸ் (John Newlands) என்ற பிரிட்டிஷ் அறிவியலாளர் தனிமங்களை அணு நிறை அடிப்படையில் வரிசைப் படுத்தினார். எந்த ஒரு தனிமமும், வரிசையிலுள்ள எட்டாவது தனிமத்தின் பண்புகளை ஒத்திருந்ததைக் கண்டறிந்தார். ஒத்த பண்புகளைக் கொண்ட எண்மைத் (Octaves) தனிமங்கள் என அவற்றை அழைத்தார். துரதிருஷ்டவசமாக சக அறிவியலாளர்கள் பலரால் இது ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

பெர்செலியஸ் மற்றும் கன்னிசாரோவின் அணு எடைகளைக் கொண்டு ஒரு முறையிலும், வேதியியல் பண்புகளைக் கொண்டு டோபரீனரின் மும்மைத் தனிமங்கள் மற்றும் நியூலாண்டின் எண்மைத் தனிமங்கள் அடிப்படையில் மற்றொரு முறையிலும் என வேதியியலாளர்கள் இரண்டு வழிகளில் தனிமங்களை தொகுத்து வந்தனர். உருப்படிவம் (Pattern) மற்றும் வரிசைப்படுத்தி தொகுப்பதில் (Grouping) குழப்பம் நீடித்து வந்தது. தனிமங்களின் எண்ணிக்கையும் 63-ஆக உயர்ந்து விட்டது.

இந்தப் பிரச்சினையை ஒரு சீட்டு விளையாட்டு முறை தீர்த்துவிட்டதென்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

(தொடரும்)

மார்ட்டின்

« முந்தைய பாகம்                                                                                      அடுத்த பாகம் »

செய்தி ஆதாரங்கள் :
Alchemy: how a tradition spanning millennia became modern chemistry
ஆண்டவனை அச்சுறுத்தும் புதிய தனிமங்கள் – அறிவியல் கட்டுரை
Chemistry: A Volatile History

சிலி : புதிய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கு ! வீதியில் திரண்ட தொழிலாளர்கள் !

சிலியில் நடந்து வரும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக சிலி தொழிலாளர் சங்கங்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளன

சிலி நாட்டில், அரசின் அரசியல் மற்றும் பொருளாதார கொள்கைக்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களுக்கு ஆதரவாக சிலியில் பல்வேறு முக்கியத் துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை(12-நவம்பர்-2019) வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

அன்டோபகஸ்டா நகரில், தொழிற்சங்கத் தலைமையிலான அணிவகுப்புக்குப் பின்னர் ஆயிரக்கணக்கான தொழிலாளர்காள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கப்பல்துறை, சுரங்கத்துறை, கட்டுமானம், கல்வி, அரசு ஊழியர்கள் மற்றும் பிற தொழிற்சங்க கூட்டமைப்புகளின் கூட்டணி சிலி ஜனாதிபதி செபாஸ்டியன் பினெராவுக்கு கடந்த வாரம் ஒரு இறுதி எச்சரிக்கையை அளித்தது. ஐந்து நாட்களில் கோரிக்கைகளுக்கு பதிலளிக்குமாறும் தவறினால் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை சமாளிக்கத் தயாராக இருக்குமாறு கூறினர். இதற்கு பினெரா பதிலளிக்கவில்லை.

சிலி அதிபர் பினெரா.

தொழிற்சங்கங்கள் ஊதியங்கள், ஓய்வூதியங்கள் மற்றும் தொழிற்சங்க ஏற்பாடு தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்தன. ஆனால், அவர்களின் முதன்மையான கோரிக்கை – சிலி முழுவதும் நடைபெறும் போராட்டங்களை  ஒன்றிணைக்கும் ஒரே கோரிக்கை  : பரந்துபட்ட மக்களின் பங்கேற்போடு ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்குவது.

வடக்கு சிலியில் உள்ள அன்டோபகாஸ்டாவில், கல்விப் பணியாளர்கள் சங்கத்தின் உள்ளூர் தலைவரான பமீலா பாசே இது குறித்துக் கூறுகையில் ” குடிமக்களின் பங்களிப்புடன் கூடிய ஒரு அரசியலமைப்பை நாங்கள் இதற்கு முன்னர்  கொண்டிருக்கவில்லை” என்றார்.

அரசாங்கம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (10-நவம்பர்-2019), இந்த புதிய அரசியலமைப்பிற்கான தனது ஆதரவை அறிவித்தது. ஆனால், இந்த செயல்முறை சட்டசபையில் கூடி விவாதித்தபின் நடைமுறைப்படுத்தப்படும் என்றது. இது போராட்டத்தில் ஈடுபவோரின் கோரிக்கைகளுக்கு எதிரானது. கடந்த செவ்வாயன்று (12 நவம்பர்) கருத்தியல் வேறுபாடுகளைக் கடந்து  நாடு முழுவதிலும் இருந்து எதிர்க்கட்சியைச் சேர்ந்த பதினான்கு அரசியல் கட்சிகள் அரசாங்கத்தின் முன்மொழிவை நிராகரித்து, புதிய அரசியலமைப்பிற்குத் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.

“மாற்றத்திற்கான தருணம் இது. குடிமக்கள், தங்களது குரல்கள் கேட்கப்படாமலும், மதிகப்படாமலும் இந்த அரசியல் பிரிவினரால் மிகவும் சோர்வடைந்து விட்டனர்” என்கிறார் பசாச்சே.

வடக்கு சிலியில் நடந்த ஒரு அணிவகுப்பில் ஒரு எதிர்ப்பாளர்  ஜனாதிபதி செபாஸ்டியன் பினெரா பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தும் வண்ணம் ஒரு எலும்புக்கூட்டை எடுத்துச் செல்கிறார்.

கடந்த செவ்வாயன்று (12-11-2019) வேலைநிறுத்த நடவடிக்கை ஒரு சில தொழிற்சங்க கூட்டமைப்புகளால் முதலில் முன்னெடுக்கப்பட்டது. எரிசக்தி, பெட்ரோலியம் மற்றும் செப்புத் துறை தொழிற்சங்கங்கள் தாங்களும் பங்கேற்பதாக அறிவித்தன. சாண்டியாகோ விமான நிலையத் தொழிலாளர்கள், வால்ப்பரிசோ மெட்ரோ தொழிலாளர்கள், வேளாண் தொழில் சங்கங்கள் மற்றும் பலரும் இதில் இணைந்தனர்.

நாட்டின் பல பகுதிகளில் செவ்வாய்க்கிழமை விடியற்காலையில் போராட்டங்கள், தடுப்புகள் மற்றும் சாலை முற்றுகைகள் தொடங்கின. சிலியின் 4,270 கி.மீ (2,653 மைல்) நீளத்திற்கு பிற்பகல் வரை வெகுஜன ஆர்ப்பாட்டங்கள், அணிவகுப்புகள் மற்றும் முற்றுகைகள் நடந்து கொண்டிருந்தன.

“இது வெறுமனே ஒரு தொழிற்சங்க இயக்கமோ அல்லது ஒரு சமூக இயக்கமோ மட்டுமல்ல. சிலி மக்கள் ஒட்டுமொத்தமாக வீதிகளில் இறங்கியுள்ளனர். அதனால்தான் இது மிகப்பெரியது ” என்று அன்டோபகாஸ்டாவைச் சேர்ந்த கப்பல்துறை தொழிலாளர் சங்கத் தலைவரான எட்வர்டோ ரோஜாஸ் கூறினார். ஆயிரக்கணக்கான மக்கள்  போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும், நகரத்தின் திறந்த பகுதியில் இருந்து இதை அவர் கூறினார். மேலும், ஆயிரக்கணக்கான மக்கள் அந்த பகுதியை நோக்கி திரண்டு வந்து கொண்டிருந்தனர்.

(கோப்புப் படம்)

ஆரம்பத்தில் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த தொழிற்சங்கங்களின் கூட்டணி 500,000 சிலி பெசோக்களை (635 அமெரிக்க டாலர்கள்) மாதாந்திர குறைந்தபட்ச ஊதியமாகவும், ஓய்வூதியமாகவும் முன்மொழிந்தது, தற்போது இது வெறும் 301,000 பெசோக்களாக (386 அமெரிக்க டாலர்கள்) தான் உள்ளது. இந்த திட்டங்களுக்கு போராட்டக்காரர்கள் மத்தியில் பரவலாக ஆதரவு பெருகியுள்ளது.

கடந்த வாரம், பினெரா அரசாங்கம், 350,000 பெசோக்கள் (444 அமெரிக்க டாலர்கள்) மாதாந்திர குறைந்தபட்ச ஊதியத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் மசோதாவை அறிவித்தது. ஆனால், இந்த தொகையானது  நாம் முன்வைத்த கோரிக்கையைவிட மிகக் குறைவு என்பதைத்தாண்டி, உண்மையில், அரசாங்கத்தின் இந்த மானியமானது, உண்மையான ஊதிய உயர்வு அல்ல, என்று தொழிற்சங்கங்கள் விரைவாக இந்த நடவடிக்கையை சுட்டிக்காட்டின. மேலும், 301,000 முதல் 350,000 பெசோ வரை சம்பாதிக்கும் தொழிலாளர்களை அரசாங்கம் வேறுபடுத்தி அவர்களுக்கேற்ற தொகையை செலுத்தும் என்றும் சுட்டிக்காட்டினர்.

அமைதியின்மையைத் தொடர்ந்து, அரசாங்கம் இந்த ஆண்டிற்கான பொருளாதார வளர்ச்சிக் கணிப்புகளைக் குறைத்தது. 2.4 முதல் 2.9 சதவிகிதம் என்றிருந்த அதன் ஆரம்ப கட்ட கணிப்பு 1.8 முதல் 2.2 சதவிகிதம் வரை தற்போது குறைந்துள்ளது என்று சிலி நிதியமைச்சர் இக்னாசியோ பிரியோன்ஸ் கடந்த வாரம் டிவிட்டரில் அறிவித்தார்.

டாலருக்கு நிகரான சிலியின் பெசோ கடந்த செவ்வாயன்று, ஒரு டாலருக்கு 800 பெசோக்களின் என்று வரலாற்றில் இல்லாத அளவு குறைந்தது.

பிரியோன்ஸ் பொருளாதாரத்தில் ஏற்படப் போகும் பின்னடைவு குறித்து எச்சரிக்கை விடுத்ததாகவும், “இயல்புநிலை” என்ற உணர்வுக்கு நாடு திரும்ப உதவுமாறு சிலி மக்களை வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

செவ்வாயன்று வேலைநிறுத்த நடவடிக்கைகளில் பங்கேற்கும் தொழிலாளர்கள் சிலி பொருளாதாரத்தின் மிக சக்திவாய்ந்த சில துறைகளான சுரங்கம், பொருளுற்பத்தி துறை  மற்றும் விவசாயத் துறையைச் சேர்ந்தவர்கள். நாட்டின் பொருளாதாரம் இயற்கை வளம் மற்றும் பிற ஏற்றுமதியை பெரிதும் நம்பியுள்ளதால் துறைமுக செயல்பாட்டை பெரிதும் நம்பியுள்ளது என்று தொழிற்சங்கத் தலைவர் ரோஜாஸ் குறிப்பிட்டார்.

சாரை சாரையாய் திரண்ட சிலி மக்கள். (கோப்புப் படம்)

“போராட்டங்கள் தொடங்கியதிலிருந்து இது எங்கள் மூன்றாவது வேலை நிறுத்தமாகும். அரிக்காவிலிருந்து பண்டா அரெனா வரை அனைத்து துறைமுகங்களும் செயலற்று நிற்கின்றன. சிலி துறைமுகப் பணியாளர்கள் சங்கத்தைச் சாராத பிற துறைமுகங்களும் இப்போராட்டத்தில் இணைந்துள்ளன” என்று அவர் கூறினார்.

சர்வதேச துறைமுகத் தொழிலாளர்கள் கவுன்சில், தாம் ஒரு சர்வதேச அளவிலான ஆதரவு புறக்கணிப்பைச் செய்யத் தயாராக இருப்பதாக எச்சரித்தது. ஐந்து கண்டங்களில் 125,000-க்கும் மேற்பட்ட கப்பல்துறை தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சபை, கடந்த வாரம் சிலி போராட்டக்காரர்கள் மற்றும் துறைமுகத் தொழிலாளர்களுக்கு எதிரான போலீசின் வன்முறை குறித்து ஒரு அறிக்கையில் தனது அக்கறையை தெரிவித்தது.

“துறைமுகத் தொழிலாளர் குடும்பத்திற்கு எதிரான அடக்குமுறை தீவிரமடையுமேயானால், சிலி குடியரசின் கப்பல்களில் இருந்து வரும் சரக்குகளை சர்வதேச அளவில் புறக்கணிப்போம்” என்று அந்த சபை தெரிவித்துள்ளது.

போலீசு மற்றும் இராணுவத்தினர் ஐவர் உட்பட, நெருக்கடியின் முதல் மூன்று வாரங்களில் குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டும், காயமடைந்துமுள்ளனர். இதில் ரப்பர் மற்றும் உலோக ஆயுதங்களைக்கொண்டு போலீசு தாக்கியதில் கண் பார்வை பாதிக்கப்பட்ட சுமார் 180-க்கும் மேற்பட்டோரும் இதில் அடக்கம்.

வடக்கு சிலியில் உள்ள அன்டோபகாஸ்டாவில் தொழிற்சங்கத் தலைமையிலான அணிவகுப்பில் லித்தியம் சுரங்கத் தொழிலாளர்கள் பங்கேற்கின்றனர்.

”சிலிக்கு தீவிர மாற்றம் தேவை, மக்கள் அந்த மாற்றத்தை செயல்படுத்த புதிய அரசியலமைப்பு கட்டமைப்பை உருவாக்க, அரசியலமைப்பு சட்டசபையில் மக்கள் பங்களிப்பைக் கோருகின்றனர்”, என்று அன்டோபகாஸ்டாவின் கலாச்சார தொழிலாளர்கள் சங்க அமைச்சகமான அன்ஃபுகல்ச்சுராவின் உள்ளூர் தலைவர் அலெஜான்ட்ரோ கார்சியா கூறினார்.

“அரசாங்கம் அறிவித்த நடவடிக்கைகளில் மக்களுக்கு உடன்பாடில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது” என்றார் அவர்.

படிக்க:
சிலி மக்கள் புரட்சி – கம்யூனிசம் 2.0 | கலையரசன்
சிலி நாட்டை அதிரவைத்த மக்கள் போராட்டம் !

கடந்த செவ்வாயன்று, போராட்டக்காரர்களால், “புரட்சியின் பிளாசா” என மறுபெயரிடப்பட்ட அன்டோபகாஸ்டாவின் “சோட்டோமேயர் பிளாசா”, தொழிற்சங்கக் கொடி, சிலி நாட்டுக் கொடி, தொழிற்சங்கக் கொடி மற்றும் எல்ஜிபிடி கொடிகளால் கலவையாக நிரப்பப்பட்டது.  அந்தோபகாஸ்டா பிராந்தியத்தின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளிலிருந்து பல மணிநேர அணிவகுப்பு நடந்துகொண்டிருந்தது. மைதானத்தில் கூட்டம் இரவில் இருமடங்காக அதிகரிக்கும் என்று ரோஜாஸ் எதிர்பார்க்கிறார்.

“இது இன்னும் பெருகும்…  ஒற்றுமையே வலிமை என்பதை நாங்கள் நிரூபிக்க விரும்புகிறோம்.” என்கிறார் ரோஜாஸ்


தமிழாக்கம் : மூர்த்தி
நன்றி : aljazeera

பிஸியோகிராட்டுகள் | பொருளாதாரம் கற்போம் – 44

0

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் – பாகம் 44

பிஸியோகிராட்டுகள்

அ.அனிக்கின்

பிஸியோகிராட்டுகள் தமது கொள்கையின் முதலாளித்துவ உள்ளடக்கத்தை நிலப்பிரபுத்துவ உடைகளைக் கொண்டு மறைத்துக் கொண்டது அந்தக் கொள்கையின் ஒரு கூறாகும். நிகரப் பொருளின் மீது மட்டுமே வரி விதிக்கப்பட வேண்டுமென்று கெனே விரும்பினார்; எனினும் அவர் பிரதானமாக ஆட்சியிலிருப்பவர்களின் நல்லெண்ணத்துக்கு வேண்டுகோள் விடுத்தார், நிலவரியின் மூலம் அதிகமான வருமானம் கிடைக்கும், அதிக வலுவான நிலப்பிரபுக்கள் ஏற்படுவார்கள் என்று அவர்களிடம் உறுதியாகக் கூறினார்.

அவருடைய ”தந்திரம்” பெருமளவுக்கு வெற்றியடைந்தது. அன்று ஆட்சியை வகித்தவர்களுடைய குருட்டுத்தனம் மட்டும் அதற்குக் காரணமல்ல; முதலாளித்துவச் சீர்திருத்தங்களின் மூலமாகத்தான் நிலப்பிரபுக்களை உண்மையிலேயே காப்பாற்ற முடியும் என்பதே அதற்குக் காரணம். இத்தகைய சீர்திருத்தங்கள் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டிருந்தன; ஆனால் அந்தச் சூழ்நிலைகள் வேறு விதமானவை என்பது உண்மையே. ஆனால் டாக்டர் கெனே இந்தக் கசப்பான மருந்தில் இனிப்பைச் சேர்த்து அழகான காகிதத்தைச் சுற்றி அதை மறைத்துக் கொடுத்தார்!

ஆரம்ப வருடங்களில் பிஸியோகிராட்டிய மரபு மிக அதிகமான வெற்றியைப் பெற்றது. கோமகன்களும் மார்கீஸ்களும் அதற்கு ஆதரவு கொடுத்தார்கள், அந்நிய நாடுகளைச் சேர்ந்த அரசர்களும் அதைப் பற்றி அக்கறை எடுத்துக் கொண்டார்கள். அதே சமயத்தில் டிட்ரோ உட்பட அறிவியக்கத்தைச் சேர்ந்த தத்துவஞானிகளும் அதை உயர்வானதாகக் கருதினார்கள். மேல் வர்க்கத்தைச் சேர்ந்த சிந்திக்கக் கூடியவர்கள், வளர்ச்சியடைந்து வருகின்ற முதலாளி வர்க்கம் ஆகிய இருவரது ஆதரவும் தங்களுக்குக் கிடைக்குமாறு செய்வதில் பிஸியோகிராட்டுகள் முதலில் வெற்றியடைந்தார்கள்.

அறுபதுக்களிலிருந்து பொறுக்கியெடுக்கப் பட்ட சிலர் மட்டுமே அனுமதிக்கப்பட்ட வெர்சேய் ”மாடியறை மன்றம்” தவிர பாரிஸ் நகரத்தில் மார்கீஸ் மிரா போவின் மாளிகையில் பொதுமக்கள் கலந்து கொள்ளக் கூடிய பிஸியோகிராட்டிய நிலையமும் ஆரம்பிக்கப்பட்டது. இங்கே கெனேயின் சீடர்கள் (அவர் எப்பொழுதாவது அபூர்வமாகவே வருவார்) தங்களுடைய ஆசானின் கருத்துக்களை விளக்கிக் கூறுவதிலும் பரப்புவதிலும் ஈடுபட்டிருந்தார்கள்; புதிய ஆதரவாளர்களைத் திரட்டினார்கள், பிஸியோகிராட்டுகள் குழுவில் மிக முக்கியமான சிலரில் டுபோன் டெ நெமூர் என்ற இளைஞர் இருந்தார்; (1) இவரோடு லெமெர்ஸியே டெ லா ரிவியேர் மற்றும் கெனேயின் மிக நெருங்கிய நண்பர்கள் சிலரும் உண்டு. இந்த சிலரைச் சுற்றி கெனேயுடன் அவ்வளவு நெருக்கம் இல்லாதிருக்கின்ற குழு உறுப்பினர்களும் பலவிதமான அனுதாபிகளும் ஆதரவாளர்களும் இருந்தனர்.

இவர்கள் மத்தியில் டியுர்கோ சிறப்பான இடத்தைப் பெற்றிருந்தார். அவர் பகுதியளவுக்கு பிஸியோகிராட்டுகளைச் சேர்ந்தவர்; ஆனால் ஆசானுடைய சார்பில் பேசுபவராக மட்டுமே அவரைக் கருத முடியாத அளவுக்கு சிறப்பும் சுதந்திரமும் கொண்ட சிந்தனையாளராக இருந்தார். கெனேயின் அமைப்பு கட்டிறுக்கமாக இருந்தபடியால் டியுர்கோவால் கூட அதை அப்படியே ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பது பிஸியோகிராட்டிய மரபையும் அதன் தலைவரையும் வேறு விதமாகப் பார்க்குமாறு நம்மை நிர்ப்பந்திக்கிறது.

கெனேயின் மாணவர்களின் ஒற்றுமையும் ஒருமைப்பாடும், தங்களது ஆசானிடம் அவர்கள் கொண்டிருந்த வரம்பற்ற பக்தியும் நமது மதிப்பைத் தூண்டுவது இயற்கையானதே. ஆனால் காலப்போக்கில் இதுவே இந்த மரபின் பலவீனமாக மாறியது. கெனேயின் கருத்துக்களை – அவருடைய வாக்கியங்களைக் கூட அப்படியே – திருப்பிச் சொல்லுவதும் விளக்கி எழுதுவதுமே அவர்களுடைய நடவடிக்கையாக இருந்தது. அவருடைய கருத்துக்கள் வறட்டுத்தனமான சூத்திரங்களாக மென்மேலும் இறுகிப் போய்விட்டன. மிராபோவின் மாளிகையில் வாரந்தோறும் செவ்வாய்க் கிழமை மாலையில் நடைபெற்ற கூட்டங்களில் புதிய சிந்தனையும் விவாதமும் நடைபெறுவதற்குப் பதிலாக ஆராதனைச் சடங்குகள் மென்மேலும் அதிகரித்தன. பிஸியோகிரஸி ஒரு வகையான மதமாக மாறிக் கொண்டிருந்தது, மிரா போவின் மாளிகை அதை வழிபடும் ஆலயமாக, செவ்வாய்க் கிழமை மாலைகள் பிரார்த்தனை நேரமாக மாறின.

படிக்க :
♦ கேள்வி பதில் : பாரத ரத்னா – சோசலிசம் – சீன அதிபர் வருகை !
♦ புதுச்சேரி – நெல்லையில் நவம்பர் 7 சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் – படங்கள் !

ஒத்த கருத்துடையவர்களின் குழுவாக முன்பு இருந்த அமைப்பு இப்பொழுது கண்டிப்பான வறட்டுச் சூத்திரத்தில் வெறித்தனமான நம்பிக்கை கொண்டவர்களின் கோஷ்டியாக மாறியது; தங்களிடமிருந்து மாறுபட்ட கருத்துக்கள் அனைத்தையும் அவர்கள் நிராகரித்தார்கள். பிஸியோகிராட்டுகளின் புத்தகங்களை வெளியிடுகின்ற பொறுப்பு டுபோனுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. அவர் தன்னிடம் வந்த ஒவ்வொரு பிரசுரத்திலும் பிஸியோக்ரஸிக்கு அழுத்தம் கொடுத்துத் “திருத்தி வெளியிட்டார்”. அவர் கெனேயைக் காட்டிலும் உயர்ந்த பிஸியோகிராட்டாகத் தன்னைக் கருதிக் கொண்டதும் கெனேயின் ஆரம்ப நூல்களை வெளியிடுவதற்கு மறுத்ததும் வேடிக்கையானதே (அவற்றை எழுதிய காலத்தில் கெனே இன்னும் சரியான பிஸியோகிராட்டாக இருக்கவில்லை என்று டுபோன் கருதினார்).

கெனேயின் குணாம்சத்தில் இருந்த சில கூறுகள் இத்தகைய நிலைமைகள் ஏற்படுவதற்கு உதவி செய்தன. டி. ரோஸென்பெர்க் தம்முடைய அரசியல் பொருளாதாரத்தின் வரலாறு என்ற புத்தகத்தில் பின்வருமாறு எழுதுகிறார்:

“அரசியல் பொருளாதாரத்தைப் படைத்தவர் என்ற பெருமையை கெனே வில்லியம் பெட்டியோடு பகிர்ந்து கொள்கிறார்; ஆனால் அவர் பெட்டியைப் போன்றிருக்கவில்லை. கெனே அசைக்க முடியாத கோட்பாடுகளைக் கொண்டவர்; அவர் வறட்டுச் சூத்திரவாதத்திலும் வறட்டுக் கோட்பாட்டுவாதத்திலும் அதிகமான நம்பிக்கை வைக்கத் தயாராக இருந்தார்” (2) கால வளர்ச்சியில் இந்தப் போக்கு இன்னும் அதிகரித்தது; தம் குழுவினரின் பக்தியும் இதை ஊக்குவித்தது. புதிய விஞ்ஞானத்தின் கருத்துக்கள் “சுயமாகவே தெளிவானவை” என்று அவர் நம்பியதனால், மற்ற கருத்துக்களை அவர் சகித்துக் கொள்ளவில்லை; அவருடைய குழுவினரும் அவரிடமிருந்த இந்தப் போக்கை அதிகமான அளவுக்கு பலப்படுத்தினார்கள். தன்னுடைய போதனை – காலம், இடம், நிலைமைகள் என்ற கட்டுப்பாடுகளை மீறி – எக்காலத்துக்கும் உரியவை என்று கெனே உறுதியாக நம்பினார்.

Doctor-Quesnay_Political-economy
பிரான்சுவா கெனே

அவரிடமிருந்த அடக்கம் சிறிதும் குறைந்து விடவில்லை, அவர் புகழைத் தேடவில்லை; ஆனால் புகழ் அவரைத் தேடி வந்தது. அவர் தன்னுடைய சீடர்களைக் குறைவாக மதிக்கவில்லை; ஆனால் அவர்களே தங்களைக் குறைவாக மதித்துக் கொண்டார்கள். தன்னுடைய வாழ்க்கையின் கடைசி வருடங்களில் கெனே சகித்துக் கொள்ள முடியாத அளவுக்குப் பிடிவாதம் உடையவரானார். அவர் தன்னுடைய எழுபத்தாறாம் வயதில் கணித ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்; வடிவியல் கணிதத்தில் தான் மாபெரும் கண்டுபிடிப்புகளைச் செய்திருப்பதாக அவர் நம்பினார். இந்தக் கண்டு பிடிப்புகள் அத்தனையும் குப்பையென்று அலம்பேர் கருதினார்.

இந்தக் கருத்துக்களை அவர் எடுத்துக் கூறிய புத்தகத்தை வெளியிட வேண்டாம், அவ்வாறு வெளியிட்டால் நகைப்புக்கு ஆளாக நேரிடும் என்று அவருடைய நண்பர்கள் வயோதிகரான கெனேயிடம் ஏகமனதாக எடுத்துச் சொன்னார்கள்; அதை வெளியிடுவதைத் தடுப்பதற்கு எல்லா முயற்சி களையும் செய்தார்கள். ஆனால் பலனில்லை. 1773-ம் வருடத்தில் அந்தப் புத்தகம் வெளியிடப்பட்ட பொழுது டியுர்கோ அதிகமாக வேதனைப்பட்டார். ”எல்லாவிதமான அதிர்ச்சிகளையும் ஒழிக்கின்ற அதிர்ச்சி இது. சூரியன் தன் ஒளியை இழந்துவிட்டது” என்று அவர் கூறினார். இதற்குப் பதில் கூறுவதற்கு ஒரு ருஷ்யப் பழமொழியை உபயோகிக்கலாம்: சூரியனிடமும் கரும்புள்ளிகள் உண்டு.

1774-ம் வருடம் டிசம்பர் மாதத்தில் கெனே வெர்சேயில் மரணமடைந்தார். அவர் காலி செய்த இடத்தை நிரப்புவதற்கு ஒருவரைக் கண்டு பிடிக்க பிஸியோகிராட்டுகளால் முடியவில்லை. மேலும் அதற்கு முன்பாகவே அவர்களுக்கு அதிகமான வீழ்ச்சி ஏற்பட்டுவிட்டது. 1774-1776-ம் வருடங்களில் டியுர்கோ பதவி வகித்த காலத்தில் அவர்களுடைய நம்பிக்கைகளும் நடவடிக்கைகளும் புத்துயிர் பெற்றன; ஆனால் அவர் பதவியிலிருந்து ஓய்வு கொடுக்கப் பட்ட பொழுது அவர்கள் பலமாக அடிவாங்கியது போல உணர்ந்தனர். உண்மையைச் சொல்வதென்றால் இது பிஸியோகிராட்டுகளின் முடிவாக இருந்தது.

படிக்க :
♦ அறிவியக்க சகாப்தம் | பொருளாதாரம் கற்போம் – 41
♦ கேள்வி பதில் : அறிவியல் வளர்ச்சி மனித வாழ்விற்கு பலனளிப்பதா ? அழிப்பதா ?

மேலும் 1776-ம் வருடத்தில் ஆடம் ஸ்மித் எழுதிய நாடுகளின் செல்வம் என்ற புத்தகம் வெளிவந்தது. இவர்களுக்கு அடுத்த தலைமுறையைச் சேர்ந்த பிரெஞ்சுப் பொருளியலாளர்கள் – ஸிஸ்மான்டி, ஸேய், முதலியோர் – பிஸியோகிராட்டுகளுக்குப் பதிலாக ஸ்மித்தை நோக்கித் திரும்பினார்கள். 1815ம் வருடத்தில் வயோதிகரான டுபோன் ஸேய்க்கு எழுதிய கடிதத்தில், கெனேயின் பாலைக் குடித்து வளர்ந்துவிட்டு இப்பொழுது “பாலூட்டிய செவிலியை” ஒதுக்குவதாகக் குறை கூறினார். கெனேயின் பாலைக் குடித்த பிறகு நான் அதிகமான ரொட்டியும் இறைச்சியும் சாப்பிட்டு வளர்ந்திருக்கிறேன், அதாவது ஸ்மித்தையும் மற்ற புதிய பொருளாதார நிபுணர்களையும் படித்து வளர்ந்திருக்கிறேன் என்று ஸேய் அவருக்குப் பதிலளித்தார்.

18-ம் நூற்றாண்டின் எழுபதுக்களில் பிஸியோகிராட்டுகளின் வீழ்ச்சிக்கு அவர்களுடைய குறைபாடுகள் மட்டும் காரணமென்று சொல்ல முடியாது. அவர்கள் மிகவும் கூர்மையாக விமர்சிக்கப்பட்டார்கள், எல்லாத் திசைகளிலிருந்தும் இப்படி விமர்சனங்கள் வந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும். அரசவையில் அவர்களுக்கிருந்த ஆதரவு போனதும் பிற்போக்குத்தனமான நிலப்பிரபுத்துவ சக்திகள் அவர்களைக் குறிவைத்துத் தாக்கின. அதே சமயத்தில் அறிவியக்கத்தின் இடதுசாரி அணியைச் சேர்ந்த எழுத்தாளர்களும் அவர்களைக் குறை கூறினார்கள்.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

 (1) பிரான்சில் புரட்சிக்குப் பிறகு டுபோன் நாட்டை விட்டு அமெரிக்காவுக்குப் போனார். அங்கே அவருடைய மகன் ஆரம்பித்த தொழில் காலப் போக்கில் ‘டுபோன் டெ நெமூர் அன்ட் கம்பெனி” என்ற பிரம்மாண்டமான இரசாயன ஏகபோகக் கம்பெனியாக வளர்ச்சியடைந்தது.

(2) டி. ரோஸென்பெர்க், அரசியல் பொருளாதாரத்தின் வரலாறு, முதல் புத்தகம், மாஸ்கோ , 1940, பக்கம் 88 (ருஷ்ய மொழியில் எழுதப்பட்டது).

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

கேக்குறேன்னு தப்பா நினைக்காதீங்க இங்க நல்ல பிரியாணி எங்க கிடைக்கும் ?

1

“ஐ லவ் யூ.” – இதுவரை என்னிடம் யாரும் சொல்லாத வார்த்தையை சொல்லிச்சு அந்தப் புள்ள.

இட் அது, பட் ஆனால், வாட் என்ன, மீனிங் அர்த்தம். இத திருக்குறள் மாதிரி ஒரு ரைமிங்கா பள்ளி வயசுல சொல்லி பழகின ஞாபகம். அம்புட்டுதான் நம்மோட ஆங்கில மொழி அறிவு. நெலமெ இப்புடி இருக்க ஒரிசா, ஹிந்தி, ஆங்கிலம் அத்தனையும் பேசுற அந்த புள்ளய பாத்ததும் பத்தடி தூரம் ஒதுங்கத்தான் தோணுச்சு. பெறவு வேற வழியில்லாம நெருங்கி பழக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுப் போச்சு.

“ஹாய் ஆண்டி. குட்மார்னிங்”

மொதமொத அந்த புள்ள வாயால இந்த வார்த்தைய கேட்டதும் கடும் கோவம் எனக்கு. பத்து வயசு இடைவெளிதான் இருக்கும் ரெண்டு பேத்துக்கும். அதுக்கு போயி ஆண்டின்னா கோபம் வராதா பின்னே. சரி ஆரம்பத்துலேயே முகத்த காட்ட வேண்டான்னு… வேண்டா வெறுப்பா சிரிச்சுகிட்டே தலையாட்டி வச்சேன்.

ஆனா அந்த புள்ள “ஆண்டி”ன்னு கூப்புட்டா அம்புட்டு அழகாருக்கும்.

பொண்ணுக்கு பூர்வீகம் ஒடிசா. கல்யாணம் முடிஞ்ச ரெண்டு வருசமா வாழ்க்கை சென்னையில. இந்த ரெண்டு வருசத்துல நண்பர்னு சொல்லிக்க சென்னையில யாரும் இல்ல. மொழி பிரச்சனையால அக்கம் பக்கம் பழகாம ஒண்டியாவே பொழுத கழிச்சிருக்கு இந்த புள்ள.

ஹாய், குட்மார்னிங், ஹவ்வார் யூ, பை….ய்ய்ய்…. இப்புடியே மூணு வாரம் ஓடிருச்சு. அன்னைக்கும் வழக்கம் போல பை….ய்ய்…. சொல்லிட்டு வெளிய போனாங்க கணவன் மனைவி ரெண்டு பேரும். போன ரெண்டு மணி நேரத்தில அந்த பொண்ணுக்கு கால் பாதத்துலேருந்து முட்டி வரைக்கும் மாவு கட்டு போட்டு கைத்தாங்கலா கூட்டிட்டு வந்தாரு வீட்டுக்காரு.

இங்கிலீஷுல “ஆண்டி வலி தாங்க முடியல ஆண்டி…..” ஓன்னு ஒரே அழுக.

ஒரு நிமிசம் என்ன செய்றதுன்னு புரியல. கனத்த ஒடம்பு வேற எப்புடியோ நானும் அவங்க கணவருமா சேந்து அந்த பொண்ண மாடிக்கி தூக்கிட்டோம். அன்னைக்கிக் கூட லீவு இல்லாமெ அலுவலகம் போக வேண்டிய நிர்பந்தம் அவங்க வீட்டுக்காரருக்கு. அடுத்து வந்த நாட்கள்ல அந்த பொண்ணுக்கு வாங்கிங் ஸ்டிக் உதவியோட சேத்து என்னோட உதவியும் கொஞ்சம் தேவப்பட்டுச்சு.

என்ன ஒரு பிரச்சனன்னா ஒருத்தர் சொல்றத ஒருத்தர் புரிஞ்சுக்க ரொம்ப செரமப்படுவோம். அந்த பொண்ணு தமிழ கொல பண்றது மாறி நானு ஆங்கிலத்த கொல பண்ணுவேன். ஒரே நாடு ஒரே மொழின்னு சொல்றாங்கலே அப்புடி இருந்துருந்தா இப்புடி ஒரு சோதன நமக்கு வந்துருக்காதேன்னு கூட அந்த சமயம் தடுமாறிப் போனேன். ஆனா தட்டுத்தடுமாறி புரிஞ்சுகிட்டு நாங்க பேசுன பேச்சு சுவாரசியத்தையும் எங்களுக்குள்ள ஒரு நெருக்கத்தையும் உண்டு பண்ணிச்சு.

படிக்க:
நீதித்துறை முதல் ஐஐடி வரையிலான காவி பாசிசத்தை எதிர்த்துநில் !
♦ பாபர் மசூதி விவகாரம் : வரலாற்றாசிரியர் டி. என். ஜா | நேர்காணல்

“ஆண்டி வீடு ராசி இல்ல அதான் காலு அடிபட்டுடுச்சோன்னு தோனுது.”

“வீடு ராசியான வீடுதான். அதுனாலதான் சின்னதா அடிபட்டுருக்குன்னு நெனச்சுக்குங்க” இத கேட்டதும் சிரிச்சுபுட்டா அந்த புள்ள.

“நீங்க பாசிட்டிவ் திங்கா.. பேசிறீங்க ஆண்டி”

“பாசிட்டிவா நெனச்சா மனசுக்கு தேவையில்லாத பயம் இருக்காதுல்ல”

“எங்களுக்கு முன்ன இந்த வீட்டுல இருந்தவங்க பிரச்சன இல்லாமெ நல்லாருந்தாங்களா ஆண்டி?”

சாவு இல்லாத வீடு எங்கருக்கு சொல்லுன்னு கேக்கனும்போல தோனுச்சு. ஓட்ட இங்கிலீசுல கேட்டு அர்த்தம் தப்பா போச்சுன்னா. அப்புடி வேண்டான்னு தோணவே

“இந்த ஏரியாவுல மழை வெள்ளம் புகுந்து 2016-ல எல்லார் வீட்டுலயும் எந்த  பொருளும் எடுக்க முடியாமெ சேதமா போச்சு அப்ப எல்லா வீட்டுக்கும் ராசிதான் காரணம்னு சொல்விங்க போலருக்கே?”

“சரிதான். ஸ்பீடு பிரேக் இருந்தத கவனிக்காமெ வண்டி ஓட்டுனது எங்க தப்புதான். ஆனா எங்க அம்மா ஒத்துக்கல ஊர்லேருந்து கெளம்பி வர்ராங்க. கணபதி ஹோமம் பண்ணனுங்குறாங்க. அவங்க ஓல்டு டைப் இதெல்லாம் புரிஞ்சுக்க மாட்டாங்க ஆண்டி. யாராவது ஒரு நல்ல ஐயரு தெரிஞ்சா சொல்லுவீங்களா?

நல்ல சாப்பாட்டு கட எங்கருக்கு, காய்கறி கட எங்கருக்குன்னு கேட்டது போல பொசுக்குன்னு கேட்டுருச்சு அந்த புள்ள.

“ஆத்தா அந்த இலாக்காவுக்கும் நமக்கும் ரொம்ப தூரம் எனக்கு அதெல்லாம் தெரியாது. நானு கோயிலுக்கே போறது கெடையாது.. ஆள விடுதாயி”-ன்னு ஓடியாந்துட்டேன்.

மாதிரிப்படம்

அடுத்த வாரம் கணபதி ஹோமம் க்ஷேமமா முடிஞ்சது. பூரி ஜெகநாதர் கோயில் பிரசாதமும் சேத்து வீட்டுக்கு எடுத்து வந்தாங்க அவங்க அம்மா.

“சாரி ஆண்டி” “எதுக்கு” “உங்க நம்பிக்கைய மதிக்காமெ நடந்துகிட்டதுக்கு. அம்மாவுக்கு தெரியாது நீங்க சாமி கும்பிட மாட்டிங்கன்னு பிரசாதம் குடுத்துட்டாங்க.”

“அய்யய்யோ இதுல என்ன இருக்கு. நீங்க சாமி பிரசாதமா நெனச்சு குடுத்திங்க.. நானு தின்பண்டமா நெனச்சு வாங்கிகிட்டேன். இதுல என்ன இருக்கு அதுக்காக நீங்க குடுக்காமெ இருந்துட போறீங்க. எனக்கு எந்த பிரச்சனையும் கெடையாது.”

அடுத்து வந்த ஆயுத பூசை, கோகுலாஷ்டமி எல்லாத்துக்கும் வீட்டுக்கு பலகாரம் வந்தது. கடகடன்னு நாளு ஓடிச்சி நடைபயிற்சி போனோம். ஒவ்வொரு நாளும் ஒரு வித பேச்சு எங்களுக்குள்ள.

“ஆண்டி தமிழ் நாட்டுல கலைஞர், அம்மா ஜெயலலிதா இவங்களதான் நெறைய பாக்க முடியுது .. மோடிய எங்கயுமே பாக்க முடியலையே ஏன்?”

“தமிழ் நாட்டுல திராவிட அரசியல்தான் மக்கள் மத்தியில செல்வாக்கு. அவங்க ரெண்டு பேருமே திராவிட கட்சிய சேந்தவங்க. மோடி மதவாத கட்சி மதத்த அடிப்படையா வச்சு பிரிவினைய ஏற்படுத்துறவரு.. அதனால அவரு செல்வாக்கு இங்க எடுபடல.

இன்னொரு முக்கியமான காரணம் பெரியாரு. இது பெரியாரு பெறந்த மண். இங்க சாதி மத அடிப்படையில ஆள் சேக்குறது அவ்வளவு ஈசியான காரியம் கெடையாது.”

பெரியாரா? பெரியாருன்னா யாரு அவருக்கு அரசியல்ல என்ன ரோலு?

“தனித்தனியா பிரிச்சு சொல்ல தேவையில்ல ஈசியா புரிஞ்சுக்கனுன்னா  பி.ஜே.பி-க்கி முதல் எதிரி தமிழ்நாட்டுல பெரியாருதான். தாடியும் கைத்தடியுமா முதுமையான ஆளு பெரியாரு இன்னைக்கி அவரோட கருத்து இளைஞர்கள் மத்தியில…” ஆர்வமா சொல்ல ஆரம்பிக்கும் போது நாங்க ஒரு கோயில கடந்து போனோம்.

“சாரி ஆண்டி ஒரு நிமிசம் வெய்ட் பண்ணுங்க சாமி கும்பிட்டு வந்தர்ரே”ன்னு வழியில இருந்த புள்ளையாரு கோயிலுக்குள்ள பொசுக்குன்னு போயிருச்சு அந்த பொண்ணு.

திரும்பி வந்ததும் “தமிழ் நாட்டுல கோயிலெல்லாம் நீட்டா சுத்தமா இருக்கு ஆண்டி எங்க பக்கம் கோமாதான்னு கோயிலுக்கு மாட்ட நேந்துவிட்டு பராமரிப்பு இல்லாம கோயில் வளாகம் பூறா சாணிய போட்டுவச்சு வர்ரவங்க அத மிதிச்சி ஒரே அசிங்கமா கெடக்கும். உங்க கோயில் சூப்பரா இருக்கு.”

படிக்க:
நூல் அறிமுகம் : ஈ.வெ.ரா. பெரியார் வாழ்வும் பணியும்
♦ இந்தியாவின் 4 இலாபகரமான நிறுவனங்கள் ! கருத்துப்படம் !

“மோடிதான் பசு புனிதம் அதோட கழிவு தீர்த்தம், மாடெல்லாம் வெட்ட கூடாதுன்னு சொல்றாறே?”

“மோடி வளர்ச்சின்னு பேசுறாரு மாட்ட பொருளாதாரமா பாக்க மாட்டேங்குறாரு. சம்திங்க ராங்க்”

“கேக்கனுன்னு நெனச்சேன் கணபதி ஹோம பூஜைக்கி எம்புட்டு காசு வாங்குனாரு ஐயரு”

“அதிகமாதா கேட்டாங்க பிறகு நாங்களும் ஒங்காளுங்கதான் பாத்து கேளுங்கன்னு அம்மா சொன்னதுக்கப்புறம் வந்தவங்க கொஞ்சம் கொறச்சுகிட்டாங்க.”

“ஐயரா நீங்க” மனசுகுள்ள படக்குன்னுச்சு எப்புடிடா நம்ம வீட்டு சாப்பாட்ட சாப்புட்டாங்க. ரொம்ப ஆச்சாரம் பாப்பாங்களேன்னு தோனுச்சு. அந்த பொண்ணே எம்மன ஓட்டத்த புரிஞ்சுகிச்சு.

“அம்மாதான் ஓல்டு டைப்பு ஆண்டி. பூஜா ஹோமம் அப்புடி இப்புடின்னு ஓவரா பண்ணுவாங்க. எனக்கு ஒங்களாட்டமும் இருக்க முடியல அம்மாவாட்டமும் இருக்க முடியல.. ரெண்டுக்கும் நடுவுல. வெளியூர் வேல, ப்ரண்ட்ஸ், பார்ட்டி அப்புடி இப்புடி கல்ச்சர் மாறி போச்சு. வீட்டுல நான்வெஜ் சமைக்கிறதில்ல ஆசப்பட்டா ஓட்டல்ல வாங்கி சாப்பிட்டுப்போம். கேக்க கூச்சமாருக்கு ஆண்டி. இந்த ஏரியாவுல நல்ல பிரியாணி எங்க கெடைக்கும்.”

“இப்பதான் எது வேணுமோ ஆர்டர் பண்ணுனா வீட்டுக்கே வருதே அப்பறமென்ன கவலை.”

“என்னோட ஹஸ்பெண்ட் ஃபேமிலி விவசாய பின்னணி. அவருக்கு தேவைக்கி அதிகமா இப்புடியெல்லாம் செலவு பண்ணா பிடிக்காது. எங்க அம்மா வீட்டுசைடுல மாச சம்பளம், பிசினசுன்னு கொஞ்சம் ஆடம்பரம். ஆரம்பத்துல எனக்கு அவர் கூட ஒத்து போக செரமமா இருந்துச்சு. போகப்போக எளிமைய புரிஞ்சுக்க அரம்பிச்சுட்டேன். இப்ப சந்தோசமா இருக்கேங்க ஆண்டி.”

“கேக்கவே ஆனந்தமா இருக்கு இதே சந்தோசம் உங்க வாழ்க்க பூறா இருக்கனும்”

“தேங்க்யூ! தமிழ்நாடுல எனக்கு ஒரு ப்ரண்ட்டு கெடச்சதுல ரொம்ப ஹாப்பி இருக்கு. ஐ லவ் யூ ஆண்டி”

இத்தன வயசுல மொதமுறையா அந்த வார்த்தைய கேட்டதும் கூச்சம் கலந்த சந்தோசத்தோட வீட்டுக்கு போனேன்.

– சரசம்மா

சர்வதேச ஆண்கள் தினம் | பெண்கள் இல்லாத ஊரில், ஆண்கள் சிறப்பாக வாழ இயலாது ! | ஃபரூக் அப்துல்லா

டந்த வாரம் 17 நாட்களே வயதான ஒரு பெண் சிசுவை உயிருடன் புதைத்து கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர், என்ற செய்தியைப் படித்ததில் இருந்து வெகு நாட்களாக எழுத வேண்டி இருந்த இந்த கட்டுரையை எழுத ஆரம்பிக்கிறேன்.

நான் மாவட்ட அளவிலான சுகாதார இயக்கத்தின் துணை மேலாளராக பணி புரிகையில் பல சிசு மரண ஆய்வுகளில் (Infant death audit) பங்கேற்றுள்ளேன். அந்த ஆய்வுகளில், ஒரு வயதுக்குட்பட்ட சிசுக்களின் மரணங்கள் அனைத்தும் அக்குவேறு ஆணிவேராக ஆராயப்படும்.

ஆட்சியர், இணை இயக்குநர் சுகாதாரம், துணை இயக்குநர் சுகாதார நலப்பணிகள், குழந்தைகள் மற்றும் மகப்பேறு நல துறைத்தலைவர்கள் போன்ற அனுபவத்திலும் அறிவிலும் சிறந்த மக்கள் ஆய்வு செய்வர்.

  • எங்கு தவறு நடந்தது?
  • அந்த சிசுவை காப்பாற்றியிருக்க முடியுமா?
  • யாருடைய தவறால் இது நடந்தது?

என்றெல்லாம் ஆராயப்பட்டு முடிவுகள் அந்த மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவர்களுக்கு செயல்வடிவமாக மாற்றி அனுப்பப்படும். இதன் மூலம் புது protocol கள் உருவாகும்.

இதில் பல நேரங்களில் அனுபவம் வாய்ந்த மக்கள் கூறக்கேட்டதுண்டு. “Unless proved otherwise, a female infant death should be considered as an infanticide” அதாவது வேறு காரணங்களினால் மரணமடைந்தது என்று நிரூபணமாகாதவரை, அனைத்து பெண் சிசு மரணமும் சிசுக்கொலையாகவே கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.

இந்த காலத்துலயுமா சார் இதெல்லாம் நடக்குது? என்று கேட்போருக்கு தான் இந்த செய்தியை பகிர்ந்துள்ளேன்.

சென்னை, ராம்நாடு முதலிய எட்டு மாவட்டங்களில் கடந்த மூன்று வருடங்களில் இல்லாத அளவு பெண் பிறப்பு குறைந்துள்ளது. நமது தமிழ்நாட்டில் ஒவ்வொரு 1000 ஆண்குழந்தைக்கும் 936 பெண் குழந்தைகள் மட்டுமே பிறக்கின்றன. அதுவும் சில மாவட்டங்களில் 900க்கும் கீழ் இருக்கிறது.

எதனால் இந்த ஏற்றத்தாழ்வு?

நமக்கு பக்கத்தில் இருக்கும் கேரளாவில் ஒவ்வொரு 1000 ஆண் பிள்ளைகளுக்கும் 1084 பெண் பிள்ளைகள் பிறக்கிறார்கள். ஆனால் நமது மாநிலத்தில் 936 : 1000 என்ற வேறுபாடு இருக்கிறது.

இது பாலின ஏற்றத்தாழ்வு (gender imbalance) நிலைக்கு வழிவகுக்கும். இங்கு நிலவும் இந்த பாலின ஏற்றத்தாழ்வுக்கு முக்கிய காரணம்.

1. வரதட்சணை தரும் பயம்.
2. பெண் குழந்தைகள் கடின வேலைகளுக்கு உதவ மாட்டார்கள்.
3. ஆண் பிள்ளைதான் வாரிசு. அவனால் தான் பரம்பரையை அடுத்த நிலைக்கு. கொண்டு செல்ல முடியும் என்ற மூடநம்பிக்கை. இதனால் வரும் சமூக அழுத்தம்.

இதனால் பெண் குழந்தைகள் கருவிலேயே கண்டறிந்து கொல்லப்படுகிறார்கள். ஸ்கேன் மூலம் குழந்தையின் பாலினம் கண்டறியப்படுகிறது. கண்டறியப்பட்டவுடன்
குறியற்ற பெண் சிசு என்றால் குறி எதுவும் இல்லாமல் கொல்லப்படுகிறது.

படிக்க:
அர்பன் நக்சல்களுக்கு எதிராக சி.ஆர்.பி.எஃப். நடவடிக்கை : அமித்ஷா !
♦ தமிழகத்தில் மீண்டும் தலையெடுக்கிறதா பெண் சிசுக்கொலை ?

மீறிப்பிறந்த பெண் குழந்தைகள் எங்காவது பொது நவீன கக்கூஸ்களில் கழிக்கப்படுகின்றன அல்லது குப்பைத்தொட்டியில் அந்த ஏரியா தெரு நாய்களுக்கு இரவு விருந்தாக்கப்படுகின்றன.

எனது இந்த பதிவின் முக்கிய நோக்கம், இந்த பாலின ஏற்றத்தாழ்வினால் நாம் சந்திக்கும் பிரச்சனைகளை பற்றி பேசுவது தான்.

உலகளாவிய ஆய்வுகளின் முடிவுகளில் ஆரோக்கியமான பாலின விகிதம் என்பது ஒவ்வொரு 1000 பெண் குழந்தை பிறப்பிக்கும் 1005 ஆண் குழந்தைகள் பிறக்க வேண்டும் என்பது தான்.

இந்த 1.05 என்ற பெண்களுக்கு ஆண்கள் விகிதம் அனைத்து வயதுகளிலும் சரியாக பராமரிக்கப்பட வேண்டும். ஆனால் இந்தியாவில் இந்த விகிதம் 1.07 முதல் 1.14 என்ற அளவில் அதிகமாக இருக்கிறது.

இதனால் என்ன நடக்கும் தெரியுமா?

♦ 15 முதல் 20 சதவிகிதம் ஆண்களுக்கு திருமணம் செய்ய பெண்கள் கிடைக்க மாட்டார்கள் இதனால் திருமணம் செய்யும் வயதைத்தாண்டி முதிர் கண்ணன்களாய் பல ஆண்கள் வாழும் நிலை ஏற்படும். இதை நாம் கண் கூடாக பார்த்து வருகிறோம்

இதன் விளைவாக ஆண்கள் மனத்தாழ்வு நிலைக்கு செல்ல வாய்ப்புண்டு. மது / புகை போன்ற வஸ்துக்களுக்கு அடிமையாவதுண்டு. திருமணம் அல்லாத உறவுகளை நாட அதிக வாய்ப்பு உருவாகிறது. திருமணமான பெண்களின் வாழ்க்கையில் நுழைந்து அவர்கள் வாழ்க்கையில் விளையாட வாய்ப்புள்ளது.

இவையனைத்தையும் அன்றாட நிகழ்வுகளில் நாம் கண்டுதான் வருகிறோம்.

♦ அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் நடந்த ஆய்வில் ஆண்கள் பிறப்பு விகிதம் சராசரியை விட அதிகமாக உள்ள இடங்களில் எல்லாம் கற்பழிப்பு குற்றங்கள் அதிகமாக நடந்தேறின என்கிறது ஆய்வு.

அதாவது ஆண்கள் விகிதம் அதிகமானால் பெண்களுக்கு எதிரான வண்புணர்வு / கற்பழிப்பு குற்றங்கள் அதிகமாகும் என்பதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம்.
இதை derangement in operational sex ratio என்கிறார்கள். அதாவது ஒரு குறிப்பிட்ட இடத்தில் எத்தனை குழந்தை பிறக்க வைக்கும் தகுதியுடைய ஆண்களும் பெண்களும் இருக்கிறார்கள் என்பதைப்பொறுத்து அங்கே ஆண்கள் மற்றும் பெண்களின் வாழ்க்கை அமையும் என்கிறார்கள்.

படிக்க:
இந்தியாவின் 4 இலாபகரமான நிறுவனங்கள் ! கருத்துப்படம் !
♦ டயாலிசிஸ் : ஒரு உயிர் காக்கும் சிகிச்சை | மருத்துவர் ஃபருக் அப்துல்லா

ஒரு ஊரில் வயதுக்கு வந்த பாலுறவுக்கு தகுதியான ஆண்கள் 100 பேர் இருக்கிறார்கள், இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அதே ஊரில் வயதுக்கு வந்த பாலுறவுக்கு தகுதியான வயதில் 80 பெண்கள் தான் இருக்கிறார்கள் என்றால் அங்கே

♦ திருமணத்திற்கு முன்பே பாலுறவு கொள்ளும் நிகழ்வுகள் (premarital sexual contact).
♦ அதனால் ஏற்படும் கர்ப்பங்கள் (premarital conception).
♦ அதனால் நிகழ்த்தப்படும் கருக்கலைப்புகள் (abortions),
என்று ஒரு வட்டம் நடந்து கொண்டே இருக்கும்.

மேலும் அந்த ஊர் பொருளாதாரத்தில் நலிவுற்று இருந்தால் அந்த இளைஞர்களுக்கு வேலை இல்லாததால் பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபடுவார்கள்.

சிறுபான்மையாக இருக்கும் பெண்கள் மீது Eve teasing கூட்டு பலாத்காரம்
போன்ற விசயங்களை மது / புகை / கஞ்சா போன்ற அடிமைத்தனங்களில் சிக்கி விளைவிப்பார்கள் என்கிறது ஆய்வு முடிவுகள்.

மேலும்,

♦ அந்த பகுதியின் பெண்களுக்கு சரியான கணவனை தேர்ந்தெடுக்க போதுமான வாயப்பு வழங்கப்பட மாட்டாது.
♦ சரியான படிப்பு இல்லாத, திருமணத்தகுதி இன்னும் வராத, உழைத்து தன்னை காப்பாற்ற இயலாத ஒருவரை கணவனாக அவள் ஏற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவாள்.
♦ இதனால் மிக அதிகமான அளவில் விவாகரத்துகள் இல்லறங்களில் நிகழும், பெண்களுக்கு எதிரான வன்முறைகள், வரதட்சணை கொடுமைகள் அதனால் கொலைகள், தற்கொலைகள் (ஆண் பெண் இருதரப்பிலும் நிகழலாம்) அதிகரிக்கும்.

ஒவ்வொரு நான்கு நிமிடத்திற்கு ஒரு பெண் குழந்தை என வருடம் 1,32,000 பெண் குழந்தைகளை கொல்லும் தேசமான நாம் இதைப்பற்றி சிந்தித்தே ஆக வேண்டும்.

யாராவது ஆண் குழந்தை தான் வேண்டும் என்று கேட்கும் தாய் இருந்தால்… இந்த பதிவை அவர்களிடம் படித்துக் காட்டுங்கள்.

பெண்கள் இல்லாத ஊரில் ஆண்கள் சிறப்பாக வாழ இயலாது…
இதுவே வரலாற்றுப்பாடம் …

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

பிஎம்சி வங்கி முறைகேடு : வெளியே தெரியும் பனிமுகடு !

பி.எம்.சி. வங்கி முறைகேடு : வெளியே தெரியும் பனிமுகடு !

காராஷ்டிரா மாநிலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி, எதிர்வரும் ஆறு மாத காலத்திற்கு எந்தவொரு வணிக நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என ரிசர்வ் வங்கி செப்டெம்பர் மாத இறுதியில் உத்தரவு பிறப்பித்ததோடு, அவ்வங்கியைத் தனது முழுக் கட்டுப்பாட்டின் கீழும் கொண்டுவந்திருக்கிறது. அவ்வங்கி கடன்களை வழங்கியதிலும் வாராக் கடன்களை ரிசர்வ் வங்கியின் ஆய்விலிருந்து மறைப்பதிலும் பல முறைகேடுகளைச் செய்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

அவ்வங்கியை ஒழுங்குபடுத்துவது என்ற பெயரில் ரிசர்வ் வங்கி எடுத்திருக்கும் இந்த நடவடிக்கையால் அவ்வங்கியை மோசடி செய்த கார்ப்பரேட் முதலாளிகளோ, அவர்களுக்குத் துணையாக இருந்த அதிகார வர்க்கமோ பாதிக்கப்படவில்லை. மாறாக, இந்தக் கசப்பு மருந்தால் உடனடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் அந்த வங்கியைப் பெரிதும் நம்பித் தமது பணத்தைப் போட்டு வைத்திருந்த மிகச் சாதாரணமான வியாபாரிகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர்தான்.

பி.எம்.சி. வங்கியின் முன்பாக அணிதிரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வாடிக்கையாளர்கள்.

அவ்வங்கியில் கணக்கு வைத்திருக்கும் யாரும் 1,000 ரூபாய்க்கு மேல் எடுக்க முடியாது என முதலில் உத்தரவிட்டது ரிசர்வ் வங்கி. இதனை எதிர்த்து அவ்வங்கியின் வாடிக்கையாளர்களும் பொதுமக்களும் போராடிய பிறகு, இந்தத் தொகை 10,000,- 25,000 என அடுத்தடுத்து அதிகரிக்கப்பட்டது. எனினும், இவ்வங்கியில் நிரந்தர வைப்புக் கணக்குகளில் (Fixed Deposits) தமது வாழ்நாள் சேமிப்பைப் போட்டு வைத்திருக்கும் பொதுமக்கள் தமது சேமிப்புத் திரும்பக் கிடைக்குமா என்ற அச்சத்தில் உறைந்துபோயுள்ளனர்.

இவ்வங்கியில் 74 இலட்ச ரூபாய் வரை சேமிப்புக் கணக்குகளில் போட்டு வைத்திருக்கும் தாமினி ஷா, “எனது மகள், தனது மேல்படிப்புக்காக வெளிநாடு செல்வதற்கு இந்தச் சேமிப்பைத்தான் நம்பியிருந்தேன். அவளின் கனவு சிதைந்துபோய்விடுமோ?” என அஞ்சிக் கொண்டிருக்கிறேன் என்கிறார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் சலிமா குரேஷி, “எனது கதிரியக்கச் சிகிச்சைக்கு இவ்வங்கியில் போட்டு வைத்திருக்கும் சேமிப்புக்களைத்தான் நம்பியிருக்கின்றேன். அது கிடைக்காமல் போனால், எனது சிகிச்சையை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை” என உடைந்துபோய்க் கூறுகிறார்.

“ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகளால் இவ்வங்கியில் போட்டு வைத்துள்ள பணத்தை எடுக்க முடியாததால், தினந்தோறும் வியாபாரத்தை நடத்த முடியாமல் தடுமாறுகிறோம்” எனக் கூறி, அவ்வங்கியின் கல்யாண் கிளையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள், காய்கறி வணிகர்கள்.

படிக்க:
எடப்பாடி கும்பலின் சாதிய திமிர்த்தனம் : மேலவளவு முருகேசன் கொலைக் குற்றவாளிகள் விடுதலை !
♦ ஏழைத்தாயின் மகன் # 2 – நீரவ் மோடியின் லண்டன் ‘அகதி’ வாழ்க்கை !

இப்படி ஓராயிரம் அழுகுரல்கள் கேட்டுவரும்போது, அரசோ, அவ்வங்கியின் முன்னாள் தலைவர் வார்யம் சிங், முன்னாள் மேலாண்மை இயக்குநர் ஜாய் தாமஸ் மற்றும் கடன் வாங்கி ஏப்பம் விட்ட ஹெச்.டி.ஐ.எல். நிறுவன முதலாளிகள் ராகேஷ் வாதவான், அவரது மகன் சாரங் வாதவான் ஆகிய நால்வரைக் கைது செய்திருப்பதையும், 3,500 கோடி ரூபாய் பெறுமான அக்கார்ப்பரேட் முதலாளிகளின் சொத்துக்களை முடக்கியிருப்பதையும் காட்டிச் சமாதானப்படுத்த முயலுகிறது.

எத்துணையோ வங்கி மோசடிகளைப் பார்த்திருக்கிறோம். ஆனால், பி.எம்.சி. வங்கி திவால் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் கதை தனி விதமானது. இந்த வங்கி கொடுத்திருக்கும் 8,880 கோடி ரூபாய் கடனில் அடிக்கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஹெச்.டி.ஐ.எல். குழுமத்திற்குக் கொடுத்துள்ள கடன் மட்டும் 6,500 கோடி ரூபாய். அதாவது, மொத்தக் கடனில் 73 சதவீதம். இப்படி ஒரே நிறுவனத்திற்குக் கடனை வாரிக்கொடுப்பது வங்கி விதிமுறைகளுக்கு எதிரானது என்கிறார்கள், நிதி ஆலோசகர்கள்.

பி.எம்.சி.வங்கியைப் பொருத்தவரை ஹெச்.டி.ஐ.எல். நிறுவனத்திற்குக் கடன் கொடுப்பதில் எந்தவொரு விதிமுறையும் பின்பற்றப்பட்டதே கிடையாது. காரணம், இந்த வங்கியை மறைமுகமாக இயக்கி வந்ததே அந்த நிறுவனம்தான். குறிப்பாக, தற்பொழுது கைது செய்யப்பட்டிருக்கும் இவ்வங்கியின் முன்னாள் தலைவர் வார்யம் சிங், ஹெச்.டி.ஐ.எல். நிறுவனத்தில் 2015-ஆம் ஆண்டு வரை அதன் இயக்குநர்களுள் ஒருவராக இருந்திருக்கிறார். அது மட்டுமல்ல, அந்நிறுவனத்திலும், அதன் குழும நிறுவனங்களிலும் பங்குதாரராகவும் இருந்திருக்கிறார். மேலும், ஹெச்.டி.ஐ.எல். நிறுவனத்தின் முதலாளியான ராகேஷ் வாதவானின் சகோதரரும் தற்பொழுது திவாலாகிவிட்ட திவான் ஹவுசிங் லிமிடெட் நிறுவனத்தின் தலைவருமான காலஞ்சென்ற ராஜேஷ் வாதவானும் இவ்வங்கியின் இயக்குநர்களுள் ஒருவராக இருந்திருக்கிறார்.

ஹெச்.டி.ஐ.எல்.-க்கு அளிக்கப்பட்டிருக்கும் கடன்களுள் பெரும்பாலானவை பி.எம்.சி. வங்கியின் இயக்குநர்களுக்கே தெரியாமல் சதித்தனமாக வழங்கப்பட்டிருக்கிறது. இந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் கடன்கள் ரிசர்வ் வங்கிக்குத் தெரியாமலும் மறைக்கப்பட்டு வரவு-செலவு அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, இந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட கடன்கள், 21,000-க்கும் அதிகமான போலி நிறுவனங்கள் பெயரில் கணக்குகள் தொடங்கப்பட்டு, அந்நிறுவனங்களுக்குக் கடன் கொடுத்தது போலக் காட்டப்பட்டிருக்கிறது. மேலும், ரிசர்வ் வங்கியின் ஆய்வின்போது வெறும் 200 கோடி ரூபாய் அளவிற்குத்தான் ஹெச்.டி.ஐ.எல். நிறுவனத்தின் வாராக் கடன் இருப்பதாக மோசடி அறிக்கைத் தரப்பட்டிருக்கிறது.

ஊரை அடித்து உலையில் போட்ட காசில் ஹெச்.டி.ஐ.எல். நிறுவன முதலாளி ராகேஷ் வாதவான் கட்டியிருக்கும் 22 அறைகளைக் கொண்ட சொகுசு பங்களா.

கடந்த ஏழு ஆண்டுகளாக நடந்துவந்திருக்கும் இம்மோசடிகள் ரிசர்வ் வங்கி உள்ளிட்ட எந்தவொரு அரசின் ஆய்விலும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுதான் ஆச்சரியமானது. இவ்வளவு ஏன், ஹெச்.டி.ஐ.எல். நிறுவனம் கடன் தவணைத் தொகையைத் திருப்பிச் செலுத்தி வருவது போலக் காட்டுவதற்காக, அந்நிறுவனத்திற்குப் புதிதாக 96 கோடி ரூபாய் அளவிற்குக் கடனாகக் கொடுத்து, அதனைத் தவணைத் தொகையாகத் திரும்ப வாங்கியிருக்கிறது, வங்கி நிர்வாகம்.

தவணைத் தொகையைக் கட்டத் தவறும் விவசாயிகளின் டிராக்டர்கள் தூக்கப்படுகின்றன. அவர்கள் அடித்து அவமானப்படுத்தப்பட்டுத் தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்கள். கல்விக் கடன் வாங்கிய மாணவர்கள், அவர்களது பெற்றோர்களின் புகைப்படங்கள் வங்கி வாசலில் ஓட்டப்பட்டு அவமதிக்கப்படுகிறார்கள். சிறுதொழில் நிறுவனங்கள் கடன் தவணை தவறும்போது சீல் வைக்கப்படுகின்றன. ஆனால், கார்ப்பரேட் முதலாளிகளுக்கோ கடனை வாரி வழங்குவதில் மட்டுமல்ல, கடன் தவணையைத் திருப்பிச் செலுத்துவதிலும் முறைகேடான சலுகைகள் காட்டப்படுகின்றன.

இம்மோசடிகளெல்லாம் ஏதோவொரு வங்கியில் மட்டும் நடைபெற்றிருப்பதாகக் கருத முடியாது. ரிசர்வ் வங்கி பி.எம்.சி. வங்கியையும் உள்ளிட்டு 24 நகரக் கூட்டுறவு வங்கிகளைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்திருக்கிறது. பல பொதுத்துறை வங்கிகள் புதிதாகக் கடன் கொடுப்பதற்குக் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. லட்சுமி விலாஸ் வங்கி, யெஸ் வங்கி உள்ளிட்ட தனியார் வங்கிகள் வாராக் கடன் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கும் இரகசியங்கள் பத்திரிகைகளில் கசிந்து வெளியே வருகின்றன.

“ஆசிய-பசிபிக் பகுதியிலேயே இந்திய வங்கிகள்தான் மிகவும் பலவீனமாக இருப்பதாகவும், இதற்கு ஒரு சில நிறுவனங்களுக்கே கடன்கள் வாரி வழங்கப்பட்டிருப்பதுதான் காரணமென்றும்” மூடிஸ் தர நிர்ணயக் கழகம் கூறியிருக்கிறது. இந்த மோசடிகளை மூடிமறைக்கும் நோக்கில்தான் பொதுத்துறை வங்கிகளை இணைத்திருக்கிறது, மைய அரசு.

படிக்க:
புதுச்சேரி – நெல்லையில் நவம்பர் 7 சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் – படங்கள் !
♦ PMC வங்கி முறைகேடு : டெபாசிட் பணத்தை இழந்த இருவர் மரணம்

பொருளாதார வளர்ச்சியைச் சாதிப்பது என்ற பெயரில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வங்கிக் கடன்கள் வாரி வழங்கப்பட்டன. அந்தக் கடன்கள் அனைத்தும் வாராக் கடன்களாக மாறிப் பொதுத்துறை வங்கிகள் திவால் நிலைக்குத் தள்ளப்பட்ட பின், அவற்றின் நிர்வாகம் சரியில்லை எனக் கூறப்பட்டு, அதற்குத் தீர்வாக வங்கிகளைத் தனியார்மயமாக்கும் திட்டம் அரங்கேற்றப்படுகிறது.

வங்கிகள் அரசின் கட்டுப்பாட்டிலும் ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பின் கீழும் இயங்கிவரும்போதே இத்துணை தூரத்திற்கு கார்ப்பரேட் கொள்ளை நடந்திருக்கிறது என்றால், பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப்பட்டால், பொதுமக்களின் சேமிப்புகளுக்கு என்ன பாதுகாப்பு கிடைக்கும்?

திருடனின் கையில் பெட்டிச் சாவியை ஒப்படைப்பதற்கும் வங்கி தனியார்மயத்திற்கும் இடையே வேறுபாடு காண முயலுவது மதியீனம்!

அறிவுமதி

– புதிய ஜனநாயகம் நவம்பர் 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

நீதித்துறை முதல் ஐஐடி வரையிலான காவி பாசிசத்தை எதிர்த்துநில் !

நீதித்துறை முதல் ஐஐடி வரையிலான காவி பாசிசத்தை எதிர்த்துநில் !

கண்டன ஆர்ப்பாட்டம்

பாபர் மசூதி – இறுதி தீர்ப்பு : முடிவல்ல – தொடக்கம் !

  • அடுத்து மதுரா – காசி !
  • உச்சநீதிமன்ற தீப்பு : வரலாற்றின் அடிப்படையில் அல்ல புராணங்களின் அடிப்படையே !
  • வாழ்க்கைக்காக போராடும் மக்களை அடக்கி சொற்ப ஜனநாயக உரிமையை பறித்த காவி பாசிச ஆட்சிக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் !

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வெளியிட்டது சிறுபான்மை இசுலாமிய மக்களின் உரிமையை பறிக்கும் விதமாகவும் புராண கட்டுக்கதைகளின் அடிப்படையில் உள்ளதை கண்டித்து திருச்சி மண்டல மக்கள் அதிகாரம் சார்பாக திருச்சி மரக்கடை பேருந்து நிறுத்தத்திலிருந்து முழக்க மிட்டு ஊர்வலமாக சிறிது தூரம் சென்று ராமகிருஷ்ணா தியேட்டர் அருகில் 19-11-2019 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தை தலைமையேற்று நடத்திய, மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த தோழர் ராஜா,  ”பாபர் மசூதி இடிக்கப்பட்டது அநீதியானது, தீர்ப்பு பற்றி பேச கருத்து சுதந்திரம் இல்லை. போலீசு அனுமதி மறுக்கிறது ஆர்ப்பாட்டபோஸ்டர்களை கிழிக்கிறது” என கண்டித்தும், ஆர்ப்பாட்டத்தில் பல கட்சியினர், அமைப்பினர் கலந்துகொண்டதற்கு நன்றியும்தெரிவித்தார்.

விடுதலை சிறுத்தை கட்சியின் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தோழர் தமிழாதன் மற்றும் தோழர் லாரன்ஸ், முரசு தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ம.ப. சின்னத்துரை, தந்தை பெரியார் திராவிடக் கழகம் மாநகரத் தலைவர் தோழர் வின்சென்ட், மக்கள் கூட்டணி தோழர் ஜோசப், அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தோழர் சம்சுதின், தமிழ் புலிகள் கட்சியின் தோழர் ஜான் பாட்ஷா, ம.க.இ.க. மாவட்ட செயலர் தோழர் ஜீவா, தோழர் பாடகர் கோவன், புஜதொமு நிர்வாகிகள் தோழர் சுந்தர்ராஜ், உத்திராபதி, பழனிச்சாமி, மணலிதாஸ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

”மோடி அரசு இந்திய நாட்டில் பல மொழி, கலாச்சாரம் பேசும் நாட்டில் மக்களிடம் பகைமையை வளர்க்கும் விதமாக இந்த தீர்ப்பு உள்ளது. இதை வி.சி.க. சார்பாக கண்டிக்கிறோம். மக்கள் அதிகாரம் மற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து நடத்துகின்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எங்கள் ஆதரவு எப்போது இருக்கும்” என தோழர் தமிழாதன் பேசினார்.

”முசுலீம் சட்டவாரியம் மறுசீராய்வு மனு தாக்கல் செய்கின்றனர். அதுவரை இந்த தீர்ப்பை அமுல்படுத்தக் கூடாது என்றும், Rss, BJP இந்தியாவில் இந்து ராஷ்டிடிரத்தை அமுல்படுத்துவதை அனுமதிக்கவிட மாட்டோம். சிறுபான்மை மக்களின் உரிமையை மறுக்கும் இந்த தீர்ப்பு மதச்சார்பற்ற நாடு மற்றும் அரசியலமைப்பின் மீது . நம்பிக்கையின் மீது விழந்த பேரிடியாக பார்க்க வேண்டுமென” தோழர் செழியன் பேசினார்.

முழக்கமிட்டு கொண்டே தோழர்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர். போலீசு ஊர்வலத்தை தடுத்தும், மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தோழர்கள், கட்சியினர் அனைவரும் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் சிறைவைக்கப்பட்டனர்.

படிக்க :
♦ பாபர் மசூதி விவகாரம் : வரலாற்றாசிரியர் டி. என். ஜா | நேர்காணல்
♦ பாபர் மசூதி இடிப்பு வழக்கு : உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்ப்போம் ! | காணொளி

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய தோழர்கள், தமிழ் புலிகள் கட்சி தோழர்கள், திராவிடர் விடுதலை கழகத் தோழர்களும் மண்டபத்திற்கு வந்து தங்களதுஆதரவை தெரிவித்து பேசினர். கொடி, பேனர் முழக்க அட்டை, முழக்கம் போன்றவை எழச்சியுடன் ஆர்ப்பாட்டம் இருந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் ஆர்ப்பாட்டத்த உரைகளை நின்று கவனித்தனர்.

“இது முடிவல்ல ! தொடக்கம்… !” என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தோழர்கள் சூளுரைத்தனர்.

 

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )


தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருச்சி மண்டலம்,
திருச்சி – 94454 75157.
மணப்பாறை – 99443 55790.
கரூர் – 97913 01097.

இந்தியாவின் 4 இலாபகரமான நிறுவனங்கள் ! கருத்துப்படம் !

இந்தியாவில் 4 மட்டுமே இலாபகரமான நிறுவனங்கள் !

♥ ரிலையன்ஸ் லிமிடெட்
♥ அதானி லிமிடெட்
♥ டாட்டா லிமிடெட்
♥ பிஜேபி பிரைவேட் லிமிடெட்

bjp-pvt-ltd

***

கருத்துப்படம் : வேலன்