பொதுத்துறை வங்கிகளின் எதிர்காலம் என்னவாக இருக்கும்? – இந்தக் கேள்வி பொருளாதார நிபுணர்கள், வங்கி ஊழியர்கள் மத்தியில் மட்டுமல்ல, அவ்வங்கிகளை நம்பியிருக்கும் சேமிப்புதாரர்கள், சிறுதொழில் முனைவோர், சிறு வியாபாரிகள், விவசாயிகள் உள்ளிட்ட பல தரப்பட்ட மக்கள் பிரிவினர் மத்தியிலும் எழுந்து நிற்கிறது. காரணம், வாராக் கடனால் பொதுத்துறை வங்கிகள் அடைந்துவரும் நட்டம்.
ஜூன் 2014-இல், மோடி அரசு பதவியேற்ற சமயத்தில், 2,19,000 கோடியாக இருந்த பொதுத்துறை வங்கிகளின் மொத்த வாராக் கடன், அவரது நான்கு ஆண்டு கால ஆட்சியின் முடிவில், மார்ச் 2018-இல் 8,97,000 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது.
இந்தச் சுமையின் காரணமாக, பொதுத்துறை வங்கிகள் நட்டம் என்ற கருந்துளைக்குள் தள்ளப்படுகின்றன.
2017-18 ஆம் நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகள் வாராக் கடன் சுமையைச் சமாளிக்க தமக்குக் கிடைத்த இலாபத்திலிருந்து 2,70,000 கோடி ரூபாய் ஒதுக்கியதன் விளைவாக, அவை அந்த நிதியாண்டில் மட்டும் அடைந்த நட்டம் 85,369 கோடி ரூபாய். கடந்த நான்கு ஆண்டுகளில் வாராக் கடனுக்காகப் பொதுத்துறை வங்கிகள் தமது இலாபத்திலிருந்து 6,67,001 கோடி ரூபாயை ஒதுக்கியிருப்பதோடு, ஏப்.2014 முதல் செப்.2017 வரையிலான மூன்று ஆண்டுகளில் 2,41,000 கோடி ரூபாய் பெறுமான வாராக் கடன்களைத் தள்ளுபடியும் செய்திருக்கின்றன.
பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் ஒன்பது இலட்சம் கோடி ரூபாய் அளவிற்குப் பெருத்துப் போயிருப்பதற்கு முந்தைய காங்கிரசு கூட்டணி அரசுதான் காரணமென்று கூறி, தன்னை யோக்கியனைப் போலக் காட்டிக் கொள்ள முயலும் பா.ஜ.க. கூட்டணி அரசு, புதிய திவால் சட்டத்தின் கீழ் இக்கடன்களைத் தம்பிடி பாக்கியில்லாமல் கறாராக வசூலிப்பது போலக் காட்டி வருகிறது.
மோடியின் ஆட்சியில் நேரடி வரி வருவாய் அதிகரித்துவிட்டது, வேலைவாய்ப்பு பெருகிவிட்டது, வறுமை குறைந்துவிட்டது, கக்கூசுகளின் எண்ணிக்கை கூடிவிட்டது என்றெல்லாம் நடத்தப்படும் பிரச்சாரங்களில் எந்தளவிற்கு உண்மை இருக்கிறதோ, அதே அளவு உண்மைதான் வாராக் கடன்களை வசூலிப்பதிலும் காணக் கிடைக்கிறது.
படிக்க:
♦ வங்கிகளின் வாராக்கடன் : இடிதாங்கிகளா பொதுமக்கள் ?
♦ வங்கி மறுமுதலீடு : தரகு முதலாளிகளுக்கு அளிக்கப்படும் கடன் தள்ளுபடி !
இந்திய திவால் ஆணையம் ஜூன் 30, 2018 அன்று வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரத்தின்படி, வங்கிக் கடனைச் செலுத்தத் தவறிய 32 நிறுவனங்களின் வழக்குகள், அந்நிறுவனங்ளை வேறு நிறுவனங்களுக்கு விற்பனை செய்ததன் மூலம் தீர்த்து வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த 32 நிறுவனங்களும் வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய கடன் நிலுவை 89,402 கோடி ரூபாய். இந்த நிறுவனங்களை வேறு நிறுவனங்கள் வாங்கியதன் மூலம் வங்கிகளுக்குக் கிடைத்த தொகை 49,783 கோடி ரூபாய். வங்கிகள் தள்ளுபடி செய்த கடன் தொகை, அதாவது இந்த விற்பனை மூலம் வங்கிகள் அடைந்த நட்டம் 39,619 கோடி ரூபாய்.
மேலும், வங்கிக் கடனைச் செலுத்தாத 136 நிறுவனங்களை வேறு எந்தவொரு நிறுவனமும் வாங்கிக் கொள்ள முன்வராததால், அந்த 136 நிறுவனங்களும் திவால் என அறிவிக்கப்பட்டு இழுத்து மூடப்பட்டுவிட்டன. இந்த 136 நிறுவனங்களும் வங்கிகளுக்குத் தர வேண்டிய மொத்தக் கடன் நிலுவை 57,646 கோடி ரூபாய். இதில் வங்கிகள் தள்ளுபடி செய்திருக்கும் தொகை 44,966 கோடி ரூபாய்.
இவையிரண்டையும் சேர்த்து, திவால் சட்டத்தின் கீழ் வங்கிகள் அடைந்திருக்கும் நட்டம் 84,585 கோடி ரூபாய்.
இந்தத் திவால் சட்டம் வங்கிகளைக் காப்பாற்றும் நோக்கில் கொண்டுவரப்படவில்லை. அதற்கு மாறாக, கடன் வாங்கி ஏப்பம் விட்ட கார்ப்பரேட் முதலாளிகளைக் கடன் நிலுவைகளைத் திருப்பிச் செலுத்துவதிலிருந்து தப்ப வைக்கவும், கடன்பட்டிருக்கும் நிறுவனங்களைத் தள்ளுபடி விலையில் கார்ப்பரேட் முதலாளிகள் வாங்கி, தொழிலில் தமது ஏகபோகத்தை நிலைநாட்டிக் கொள்வதற்கு ஏற்றவகையிலும்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது.
விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெஹுல் சோக்ஸி உள்ளிட்ட பல தரகு முதலாளிகள் சட்டவிரோதமான முறையில் வங்கிப் பணத்தை ஏப்பம்விட்டனர் என்றால், திவால் சட்டம் அந்தக் கொள்ளையைச் சட்டபூர்வமாக்கியிருக்கிறது. இந்த வகையில் வங்கிப் பணத்தை ஏப்பம்விட்ட தரகு முதலாளிகளின் ஊழலைவிட மிகப்பெரும் ஊழலை, மோசடியைச் சட்டபூர்வமாகவே நடத்திவருகிறது, மோடி அரசு.
திவால் சட்டம் வங்கிகளைத் திவாலாக்குகிறது
முதலாவதாக, கடன்களைத் திருப்பிச் செலுத்தாமல் உள்ள நிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு விற்பதற்குத் தரகு வேலை செய்கிறது இச்சட்டம். இதன் கீழ் ஏலத்திற்கு வரும் நிறுவனங்களின் வாராக் கடன் எவ்வளவு இருக்கிறதோ, அதனை ஈடுசெய்யக்கூடிய வகையில் அந்நிறுவனங்கள் விற்கப்படுவதில்லை.
ஏலத்தில் கலந்துகொள்ளும் நிறுவனங்கள் கூறும் விலையை ஏற்றுக் கொள்வதா, நிராகரிப்பதா என்று மட்டுமே வங்கிகள் தீர்மானிக்கின்றன. குறிப்பாக, கிடைத்தவரை இலாபம் என்பதுதான் இந்தச் சட்டத்தின் அடிப்படை என்பதால், வந்த விலைக்கு நிறுவனத்தை விற்றுவிட்டு, மீதமுள்ள வாராக் கடன் தொகையைத் தள்ளுபடி செய்ய வேண்டிய கட்டாயத்தில் வங்கிகள் தள்ளப்பட்டுள்ளன.
உதாரணமாக, 29,500 கோடி ரூபாய் கடன் நிலுவை வைத்திருக்கும் அலோக் இண்டஸ்ட்ரீஸ் என்ற ஜவுளி உற்பத்தி நிறுவனத்தை, விமல் பிராண்ட் ஜவுளி வணிகத்தை நடத்திவரும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம், 5,050 கோடி ரூபாய் கொடுத்து கையகப்படுத்தியிருக்கிறது. இந்த விற்பனையில் வங்கிகள் தமது கடன் நிலுவையில் 83 சதவீதத்தைத் தள்ளுபடி செய்தன. (பைனான்சியல் எக்ஸ்பிரஸ், ஜூன் 2018)
பூஷண் ஸ்டீல்ஸ் நிறுவனத்தை டாடா ஸ்டீல்ஸ் 35,200 கோடி ரூபாய் கொடுத்துக் கையகப்படுத்தியது. இந்த ஏல விற்பனையில் வங்கிகள் பூஷன் ஸ்டீல்ஸ் திருப்பிச் செலுத்த வேண்டிய 56,079 கோடி ரூபாய் கடன் நிலுவையில் 37 சதவீதம் தள்ளுபடி செய்தன. (எக்கனாமிக் டைம்ஸ், மே 19, 2018)
13,175 கோடி ரூபாய் கடன் நிலுவை வைத்திருக்கும் எலெக்ட்ரோ ஸ்டீல்ஸ் நிறுவனத்தை கொலைகார வேதாந்தா நிறுவனம் 5,320 கொடுத்துக் கையகப்படுத்தியதில், வங்கிகள் தள்ளுபடி செய்த தொகை 7,855 கோடி ரூபாய்.
ரிசர்வ் வங்கியால் திவால் சட்டத்தின் கீழ் ஏலத்திற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள பூஷண் ஸ்டீல்ஸ், அலோக் இண்டஸ்ட்ரீஸ், எஸ்ஸார் ஸ்டீல்ஸ் உள்ளிட்ட 12 பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் விற்பனை மூலம் வங்கிகளுக்கு ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல் நிலுவைத் தொகை திரும்பக் கிடைக்கும் எனக் குறிப்பிட்டு, “இனி வங்கிகள் உங்களைத் துரத்தப் போவதில்லை, நீங்கள்தான் வங்கிகளைத் துரத்தப் போகிறீர்கள்” எனப் பீற்றிக் கொண்டிருக்கிறார், நிதியமைச்சர் அருண் ஜெட்லி.(இந்து, அக்.29, பக்.15)
இந்த விற்பனையின் மூலம் வங்கிகளுக்கு ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கிடைக்கக்கூடும் என்பது உண்மைதான். ஆனால், இந்த 12 நிறுவனங்களின் மொத்த வாராக் கடனில் வங்கிகள் தள்ளுபடி செய்யவுள்ள தொகை என்ன என்பதும், அதனை நிதியமைச்சர் ஏன் சொல்ல மறுக்கிறார் என்பதும்தான் கேள்வி. இந்த 12 நிறுவனங்களில் மொத்த நிலுவையான 2,29,180 கோடி ரூபாயில், வங்கிகள் 47 சதவீதத்தைத் தள்ளுபடி செய்ய வேண்டியிருக்கும் என ரிசர்வ் வங்கி குறிப்பிட்டிருக்கிறது. இந்த விற்பனையில் வங்கிகள் பாதிக்குப்பாதி நட்டமடையவுள்ளன எனில், அருண் ஜெட்லி மக்களின் காதில் பெரிய தாமரைப் பூவையல்லவா சுற்றப் பார்க்கிறார்!
வங்கிகளிடம் கடன் வாங்கி, அதனைத் திருப்பிச் செலுத்த முடியாத விவசாயிகள் குண்டர்களாலும், போலீசாலும் தாக்கப்படுகிறார்கள். கல்விக் கடன் வாங்கிய பெற்றோர்களும், மாணவர்களும் வங்கி அதிகாரிகளால் அவமதிக்கப்படுகிறார்கள். கடனில் வாங்கப்பட்ட இரு சக்கர வாகனங்கள் தூக்கப்படுகின்றன. அரசு மற்றும் தனியார் வங்கிகளிலும் நிதி நிறுவனங்களிலும் கடன் வாங்கிய சாமானிய மக்கள் எதிர்கொள்ளும் இத்தகைய அவமானங்கள், தண்டனைகள் எதையும் கார்ப்பரேட் முதலாளிகள் மீது திவால் சட்டம் திணிக்கவில்லை. மாறாக, திவால் சட்டத்தின் கீழ் ஏலத்திற்கு வரும் நிறுவனங்களைக் கடன்கார முதலாளிகள்கூட அடிமாட்டு விலைக்கு வாங்கிப்போட்டுக் கொள்வதற்கு அனுமதிக்கிறது, இச்சட்டம்.
வாராக் கடனை வசூலிக்கும் பொருட்டு ஏலத்தில் விடப்பட்ட எஸ்ஸார் ஸ்டீல்ஸ் இதற்கொரு உதாரணம். வங்கிகளுக்கு 45,000 கோடி கடனைத் திருப்பிச் செலுத்தாத எஸ்ஸார் ஸ்டீல்ஸ் நிறுவனத்தைத் தேசங்கடந்த தொழில் கழகமான ஆர்சலர் மிட்டல் 42,000 கோடி ரூபாய்க்கு வாங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆர்சலர் மிட்டல் நிறுவனத்தின் யோக்கியதை என்ன?
அந்நிறுவனம் பங்குதாரராக இருந்த உத்தம் கல்வா ஸ்டீல்ஸ் நிறுவனமும், கஸ்ட்ராய் சர்வீசஸ் நிறுவனமும் இந்திய வங்கிகளிடம் வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்தாததால் வாராக் கடன் நிறுவனங்களாகப் பட்டியல் இடப்பட்டிருக்கின்றன. மேலும், ஆர்சலர் மிட்டல் பங்குதாரராக உள்ள ஹெச்.பி.சி.எல்.-மிட்டல் எனர்ஜி நிறுவனமும் இந்திய வங்கிகளில் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்தாமல் வாராக் கடனாளியாக இருந்து வருகிறது.
இதனைவிட அயோக்கியத்தனம் ஒன்றும் எஸ்ஸார் ஸ்டீல்ஸ் ஏலத்தின்போது நடந்தது. அந்நிறுவனத்தை ஏலத்தில் எடுக்க நியூமெட்டல் நிறுவனமும் போட்டியிட்டது. இந்த நியூமெட்டல் நிறுவனத்தின் முக்கியமான பங்குதாரர்களுள் ஒருவர் ரேவந்த் ருயா. இவர் எஸ்ஸார் ஸ்டீல்ஸ் நிறுவனத்தைத் தொடங்கி நடத்திவந்த ருயா குடும்பத்தைச் சேர்ந்தவர்.
ஒருபுறம் எஸ்ஸார் ஸ்டீல்ஸ் நிறுவனத்தை நடத்திவரும் ருயா குடும்பம் வங்கிகளுக்குப் பட்டை நாமம் போடுகிறது. இன்னொருபுறத்தில், ஏலத்திற்குக் கொண்டுவரப்பட்ட எஸ்ஸார் ஸ்டீல்ஸ் நிறுவனம் தமது கையைவிட்டுப் போகாமல் இருக்க கொள்ளைப்புற வழியில் மூக்கை நுழைக்கிறது, ருயா குடும்பம்.
பினாமிகளை வைத்து ஏலத்தில் எடுப்பதைவிடக் கேடுகெட்ட சூது இது. ஆனால், திவால் சட்டமோ இந்த சூதைச் சட்டபூர்வ நடவடிக்கையாகக் கருதி அங்கீகரிக்கிறது.
மோடி அரசு வாராக் கடன்களை வசூலிப்பதில் கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்துக்குக் காட்டிவரும் இவை போன்ற சலுகைகளெல்லாம் ஒருபுறமிருக்கட்டும். வாராக் கடன் குறித்த ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.வின் கருத்தே கார்ப்பரேட்டுகள் நடத்திவரும் வங்கிக்கொள்ளைக்குச் சாதகமானது.
‘‘தவணை தவறிய கடன்களை வாராக் கடன்கள் என வரையறுப்பதே, மேற்கத்திய நாடுகளின் விதிகளை ஏற்றுத்தான். அதுவே, நம் நாட்டு நிதி, வங்கித் தொழில் சூழலுக்கு ஏற்ற விதிகள் அல்ல” எனக் குறிப்பிடுகிறார், ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தவாதியான குருமூர்த்தி. (துக்ளக், 25.4.2018) வாராக் கடன்கள் குறித்த வரையறையை மட்டுமல்ல, வாராக் கடன்கள் இருப்பதையே இதன் மூலம் மறுக்க முயலுகிறார், குருமூர்த்தி.
படிக்க :
♦ ரிசர்வ் வங்கியா ? ரிலையன்ஸ் வங்கியா ?
♦ நரேந்திர மோடி – நீரவ் மோடி : ஹம் ஆப் கே ஹை கோன் ?
மேலும், விஜய் மல்லையா திட்டமிட்டு வங்கிகளை ஏமாற்றவில்லையென்றும், வியாபாரத்தில் நட்டமேற்பட்டதால்தான் அவரது கடன்கள் முடங்கின என்றும் எழுதி விஜய் மல்லையாவிற்கு வக்காலத்து வாங்கும் குருமூர்த்தி, அவர் நம்பும்படியான வங்கி உத்தரவாதம் அளித்தால், அதை ஏற்று, அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கடனைத் திரும்பப் பெற்று, வழக்குகளை முடித்துக் கொள்வதுதான் உத்தமம் என மோடி அரசுக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறார். (துக்ளக், 25.7.2018)
இப்படிப்பட்ட உத்தமர்களின் ஆட்சி திருடர்களைத்தான் பாதுகாக்குமேயொழிய, பொதுச் சொத்துக்களையோ, பொதுப் பணத்தையோ நிச்சயமாகப் பாதுகாக்காது. இந்த உண்மையைத் திவால் சட்டத்தைவிட, “விஜய் மல்லையா இலண்டனுக்குத் தப்பிச் சென்ற” கதை துலக்கமாக அம்பலப்படுத்துகிறது.
மல்லையாவை வழியனுப்பி வைத்த மோடி
விஜய் மல்லையா வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தடுத்து நிறுத்தக் கோரும் நோட்டீசை அனைத்து விமான நிலையங்களுக்கும் கடந்த அக்.16, 2015 அன்று சி.பி.ஐ. அனுப்பி வைத்தது. பிறகு, இந்த நோட்டீஸ் விஜய் மல்லையாவைத் தடுக்கத் தேவையில்லை, அவரது வருகை குறித்துத் தகவல் தெரிவித்தால் போதும் என்றவாறு மாற்றம் செய்யப்பட்டது.
இந்த மாற்றம்தான், மார்ச் 2, 2016 அன்று விஜய் மல்லையா தனது சொத்துபத்துக்கள், இத்யாதி, இத்யாதிகளோடு, மிகவும் எளிதாக, சாதாரண பயணியைப் போல விமானம் ஏறி இலண்டனுக்குத் தப்பிச் செல்வதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தது.
‘‘மிகவும் முக்கியமான இந்த வழக்கில், பிரதமர் மோடிக்குத் தெரியாமல், அவரின் ஒப்புதல் இல்லாமல் நோட்டீசில் மாற்றம் நடந்திருக்காது. மோடிக்கு நெருக்கமான, குஜராத் பிரிவைச் சேர்ந்த ஏ.கே.ஷர்மா என்ற சி.பி.ஐ. அதிகாரிதான் நோட்டீசை மாற்றினார்” என வெளிப்படையாகவே குற்றஞ்சுமத்தியிருக்கிறார், ராகுல் காந்தி.
இக்குற்றச்சாட்டுக்கு எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதையாக ஒரு விளக்கத்தை அளித்திருக்கிறது, சி.பி.ஐ. “ஒரு இளம் அதிகாரி தடுக்கவும் என்பதற்குப் பதிலாகத் தகவல் தெரிவிக்கவும்” எனத் தவறாக நோட்டீசைத் திருத்திவிட்டதாக நகைக்கத்தக்க பதிலை அளித்துப் பிரதமர் அலுவலகத்தைக் காப்பாற்ற முயன்றது, சி.பி.ஐ. இந்தப் பதிலை ஊரே காறித் துப்பிய பிறகு, “விஜய் மல்லையாவைத் தடுத்துக் கைது செய்வதற்கு சி.பி.ஐ.யிடம் போதுமான ஆதாரங்கள் இல்லை” என வெளிப்படையாகவே விஜய் மல்லையாவிற்கு ஆதரவான விளக்கத்தை அளித்தது. முழுக்க நனைந்த பிறகு முக்காடு தேவையில்லைதானே!
விஜய் மல்லையாவைக் காப்பாற்ற சி.பி.ஐ. எட்டடி பாய்ந்தால், அருண் ஜெட்லியின் நிதியமைச்சகமோ பதினாறு அடி பாய்ந்தது. நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நிதியமைச்சர் அருண் ஜெட்லியை விஜய் மல்லையா சந்தித்தது, அப்பொழுது தான் இலண்டனுக்குச் செல்லவிருப்பதை அருண் ஜெட்லியிடம் விஜய் மல்லையா தெரிவித்தது மட்டுமல்ல, இவ்விவகாரத்தில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா நடந்துகொண்ட விதம் விஜய் மல்லையாவைக் காப்பாற்ற நிதியமைச்சகம் உள்ளடி வேலை செய்திருப்பதைப் பச்சையாகவே அம்பலப்படுத்திவிட்டது.
விஜய் மல்லையா இலண்டனுக்குத் தப்பிச் செல்வதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக, பிப்ரவரி 28, 2016, ஞாயிறு அன்று, ஸ்டேட் பாங்க் அதிகாரிகள், உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் துஷ்யந்த் தவேயைச் சந்தித்து, விஜய் மல்லையாவைத் தப்பிச் செல்லவிடமால் தடுப்பது குறித்து ஆலோசனை கேட்டிருக்கிறார்கள்.
“மறுநாளே உச்ச நீதிமன்றத்தை அணுகி, அவரைத் தடுப்பதற்குரிய ஆணையைப் பெறுமாறு” கூறியிருக்கிறார், தவே. ஆனால், வங்கி அதிகாரிகள் உடனடியாக அணுகாமல் தாமதம் செய்ததைப் பயன்படுத்திக்கொண்ட விஜய் மல்லையா, மார்ச் 2 அன்று நாட்டைவிட்டு வெளியேறித் தப்பினார்.
இந்த தாமதத்திற்கும் நிதியமைச்சகத்துக்கும் தொடர்பில்லை; வங்கி அதிகாரிகள்தான் காரணம் என நம்புவதற்குக் காதில் தாமரைப் பூவைத்தான் நாம் சுற்றிக்கொள்ள வேண்டும்.
காங்கிரசை விஞ்சும் மோடி
முந்தைய காங்கிரசு கூட்டணி அரசுதான் வங்கிப் பணத்தைக் கடனாக வாரிவாரியிறைத்து, வங்கிகளின் மீது வாராக் கடன் சுமையை ஏற்றிவைத்தது எனக் குற்றஞ்சுமத்தி வருகிறது, மோடி-அருண் ஜெட்லி கும்பல். இந்த உண்மையை யாரும் மறுக்க முடியாதுதான். அதேசமயம், காங்கிரசின் தயவில் கடன் வாங்கிவிட்டு, வங்கிகளை ஏமாற்றி வரும் கார்ப்பரேட் முதலாளிகளை மோடி அரசாங்கம் ஒதுக்கி வைத்துவிட்டதா என்ன?
96,000 கோடி ரூபாய் அளவிற்கு வங்கிக் கடன் வைத்திருக்கும் அதானி குழுமம், ஆஸ்திரேலியாவில் நிலக்கரிச் சுரங்கத்தை வாங்குவதற்குத் தரகு வேலை பார்த்த பிரதமர் மோடி, அதற்காக ஸ்டேட் பாங்க் மூலம் அதானிக்கு 100 கோடி டாலர் வரை கடனாகக் கிடைப்பதற்கும் ஏற்பாடுகளைச் செய்தார்.
1,25,000 கோடி ரூபாய் அளவிற்கு வங்கிக் கடன் வைத்திருக்கும் அனில் அம்பானியின் திருபாய் அம்பானி குழுமத்திற்கு 30,000 கோடி ரூபாய் பெறுமான ரஃபேல் போர் விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஒப்பந்தம் கிடைப்பதற்குத் தரகு வேலை பார்க்கிறார், பிரதமர் மோடி.
இவை ஒருபுறமிருக்க, மோடி பிரதமராகப் பதவியேற்ற பிறகு அதானி குழுமம், தனது கடன் தவணைகளைச் செலுத்துவதற்காக வங்கிகள் மூலம் 15,000 கோடி ரூபாய் மறு அடமானக் கடன் (refinance) பெற்றது. நாட்டிலேயே முதல் பெரும் கோடீசுவரர் என்ற பட்டத்தோடு வலம் வரும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் கேஸ் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திற்கு 4,500 கோடி ரூபாய் மறு அடமானக் கடன் வழங்கப்பட்டிருக்கிறது.
ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த சமயத்தில், பெருமளவு வாராக் கடன்களை வைத்திருக்கும் நிறுவனங்கள் குறித்துப் பிரதமர் அலுவலகத்திற்கு அறிக்கை அளித்திருக்கிறார். “இந்த அறிக்கையின் மேல் பிரதமர் அலுவலகம் என்ன நடவடிக்கை எடுத்தது என்பதை இதுவரையில் நான் அறியவில்லை” என வாராக் கடன் குறித்த நாடாளுமன்ற விசாரணைக் குழுவிடம் சமீபத்தில் தெரிவித்திருக்கிறார், ரகுராம் ராஜன்.
அவர் அனுப்பிய அறிக்கையில் நிரவ் மோடி, மெஹுல் சோக்ஸி ஆகியோரின் பெயர்களும் இருந்ததாகக் குற்றஞ்சுமத்தியிருக்கிறது, காங்கிரசு.
அனுமான ஊழலும் உண்மை ஊழலும்
2ஜி அலைக்கற்றை விற்பனையில் அரசுக்கு ஏற்பட்டதாகக் கூறப்பட்ட நட்டத்தை ஊழல் எனக் குற்றஞ்சுமத்தலாம் என்றால், வாராக் கடன் தள்ளுபடியால் பொதுத்துறை வங்கிகள் அடைந்துவரும் நட்டத்தையும் ஊழல் என்றுதான் குற்றஞ்சுமத்த முடியும்.
அரசின் கொள்கை முடிவு என்றாலும், 2ஜி அலைக்கற்றைகளைக் குறைந்த விலைக்கு விற்றது முறைகேடானது என்றால், திவால் சட்டத்தின் கீழ் தள்ளுபடி செய்யப்படும் வாராக் கடன்களும் முறைகேடானதுதான்.
படிக்க:
♦ கார்ப்பரேட் கொள்ளைக்கு திறந்து விடப்பட்ட வங்கிகள் | தோழர் விஜயகுமார் உரை
♦ 2ஜி வழக்கில் பார்ப்பன நரித்தனங்கள்
அலைக்கற்றை விற்பனையில் 30,000 கோடி ரூபாய் முதல் 1.76 இலட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டதாகச் சொல்லப்பட்ட பல நட்டக் கணக்குகளும் அனுமானங்கள்தான். ஆனால், வாராக் கடன் தள்ளுபடியில் அப்படியான அனுமானக் கணக்குகள் எதுவுமில்லை. மோடி அரசு பதவியேற்ற மூன்றே ஆண்டுகளில் 2,41,000 கோடி ரூபாய் பெறுமான வாராக் கடன்களைப் பொதுத்துறை வங்கிகள் தள்ளுபடி செய்திருப்பதாக நிதியமைச்சகம் நாடாளுமன்ற மேலவையில் ஒப்புக் கொண்டிருக்கிறது. (பிஸினஸ் டுடே, ஏப்.4, 2018).
இதோடு, பொதுத்துறை வங்கிகள் கடந்த நான்காண்டுகளில் வாராக் கடன்களை ஈடுகட்ட தமது இலாபத்திலிருந்து ஒதுக்கிய தொகையும் கணக்கிட்டால், பொதுத்துறை வங்கிகள் அடைந்திருக்கும் நட்டம் ஏறத்தாழ 9 இலட்சம் கோடி ரூபாய்.
அனுமானமாக ஊதிப் பெருக்கப்பட்ட 2ஜி ஊழல் தொகையைக் காட்டிலும் ஐந்து மடங்கிற்கு மேல் பெரியது மோடி ஆட்சியில் நடந்துள்ள வாராக் கடன் ஊழல்.
பிரதமர் நரேந்திர மோடி தன்னை நாட்டின் காவலாளி என அடிக்கடி பீற்றிக் கொள்வார். உண்மையில் அவர் கஜானா கொள்ளையன் என்பதைத் திவால் சட்டமும், வாராக் கடன் தள்ளுபடிகளும் அம்பலப்படுத்திவிட்டன.
– ஆர்.ஆர்.டி.
புதிய ஜனநாயகம், நவம்பர் 2018
மின்னூல்:

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com
புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்