Friday, June 12, 2026
முகப்பு பதிவு பக்கம் 646

தண்ணீர் தாகத்திற்கா… லாபத்திற்கா…?

6

ண்ணீர் இயற்கையின் சொத்து. அதனை யாரும் உருவாக்க முடியாது. ஆனால் நீரை விற்பனைப் பண்டமாக மாற்ற வேண்டும் என்று சொல்கிறது காட்ஸ் (GATS) ஒப்பந்தம். இதில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.

மத்திய அரசின் புதிய நீர்க் கொள்கையின்படி நிலம் உங்களுக்கு சொந்தமாக இருப்பினும் அதற்கு கீழே இருக்கும் நீர் அரசுக்குத்தான் சொந்தம். இதுவரை ஆற்று நீரை மட்டுமே முதலாளிககுக்கு தாரை வார்த்த அரசு இப்போது நிலத்தடி நீரையும் தாரை வார்க்க உள்ளது.

thanneer-front thanneer-back

இந்நிலையில் 2005-ம் ஆண்டு வெளியிடப்பட்ட “தண்ணீர் தாகத்திற்கா அல்லது இலாபத்திற்கா” என்ற மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் வெளியீட்டை கீழைக்காற்று வெளியீட்டகம் 2-ம் பதிப்பாக கொண்டு வந்துள்ளது.

பெக்டெல், சூயஸ் போன்ற நிறுவனங்களின் உலகளாவிய ஆதிக்கம், மறுபுறம் அரசுத் துறைகளை வேண்டுமென்றே நட்டத்தில் ஓட வைத்து தனியாருக்கு மாற வைப்பது போன்றவற்றை  அம்மா குடிநீருக்கு பழகும் எவரும்  புரிந்து கொள்வது எளிதாக இருக்கும். காசு இருந்தால் மருத்துவம், தண்ணீர் என எல்லா சேவைகளும் தனியாருக்கு தாரை வார்க்கப்படுவதை விரிவாக விளக்குகிறது இந்நூல்.

இந்தப் புத்தகம் மணற்கொள்ளை எப்படி ஆற்றின் போக்கை பாதிக்கிறது, நீரை உறிஞ்சி வைக்கும் பாக்டீரியாக்கள் எப்படி காணாமல் போகிறது போன்றவற்றையும் விளக்குகிறது.  நிலத்தடி நீர்மட்டம் குறைவது, ரியல் எஸ்டேட் கொழுப்பது போனவற்றையும் புரிந்து கொள்ள  முடிகிறது.

தண்ணீர் தனியார்மயத்துக்கெதிராக உலகின் பல்வேறு பகுதிகளில் நடந்த போராட்டங்களில், பொலிவியாவின் கொச்சபம்பாவும், தென்னாப்பிரிக்க மக்களி “ப்ரீ பெய்டு” முறைக்கு எதிராக நடத்திய போராட்டம்,  பிலிப்பைன்சின் போராட்டங்களையும் விவரிக்கிறது இந்நூல். நீரை உறிஞ்சி லாபம் சம்பாதிக்க முடியாவிட்டாலும் முதலாளிகள் எப்படி நட்ட ஈடு என்ற பெயரில் அநியாயமாக மக்களின் வரிப்பணத்தில் இருந்து காசு வாங்கிக் கொண்டு சென்றார்கள் என்பதை புத்தகம் அம்பலப்படுத்துகிறது.

இந்திய அளவில் கோக்கிற்கும், பெப்சிக்கும் தண்ணீர் எப்படி தாரை வார்க்கப்பட்டுள்ளது , குறிப்பாக தமிழகத்தில் காணாமல் போன ஆறுகள் பற்றியும் சென்னையில் மறைந்து போன 48 ஏரிகளைப் பற்றியும் விளக்குகிறார்கள். தில்லி, திருப்பூர், சென்னை என்ற நகர உதாரணங்களும், தாமிரபரணி கோக்கிற்கு தாரை வார்க்கப்பட்டதையும், பெப்சிக்கு பாலாறு தாரை வார்க்கப்பட்டதையும் பற்றி சொல்கிறார்கள்.

தண்ணீர் இனிமேல் விற்பனைப் பண்டம் தான் என்பதை இன்று எல்லோரும் ஏற்றுக் கொள்ள வைக்கப்பட்டிருக்கிறோம். அதுதான் இந்த பத்தாண்டில் நடந்துள்ள மாற்றம். ஆனால் எல்லா தண்ணீரும் விற்பனைக்குத்தான் என்ற நிலை வந்தால் எப்படி சமாளிக்க முடியும்.

இருக்கும் விலைவாசியில் சாப்பாட்டுக்கு வழியில்லாத ஏழைகள், தண்ணீரை குடித்து பசியாற்றுவது கூட இனி சாத்தியமற்ற நிலை என்ற சூழலில் இப்புத்தகம் அவசியம் படிக்க வேண்டிய ஒன்று. தனியார்மய காலத்தில் ஓட்டுச்சீட்டு அரசியலால் இதற்கு தீர்வு கிடையாது என்பதையும், ஒப்பந்தங்கள் எல்லாமுமே அதிகாரிகளால் மட்டுமே கையெழுத்திடப்படுகிறது, அதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கிறது என்பதை காட் ஒப்பந்தம் மூலமாக நிரூபித்திருக்கிறது புத்தகம்.

தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்க கூடாது என்ற நமது மரபும், தண்ணீர் கேட்டவனுக்கு மோரே கலக்கிக் கொடுத்த பழைய மரபும் அழிந்து, ‘தண்ணீர் இல்லை’ என தேநீர்க் கடைகளும் கைவிரிக்கும்படி மாறி வரும் சூழல், நமது தண்ணீர் உரிமையை பாதுகாக்க நம்மை அழைக்கின்றன.

தண்ணீர் தாகத்திற்கா இலாபத்திற்கா?

கீழைக்காற்று வெளியீட்டகம்
சென்னை – 600002
044-28412367

விலை : ரூ 30/-
பக்கங்கள் : 72

விடியும் வரை கொண்டாட்டம் ! விடிந்த பிறகு சொர்க்கம் !

14

வ்வொரு பதினாறு வருடமும் ஹேப்பி நியுஇயரும் வைகுண்ட ஏகாதேசியும் ஒன்றாக வருகின்றன! இந்தவகையில் 2015, விடிய விடியக் கொண்டாட்டம்! விடிஞ்ச பிறகு சொர்க்கவாசல்! என்று டபுள் டமாக்காவாக இருந்தது.

கர்நாடக சங்கீதம்
நாரத கான சபாவில் இருந்து மியுசிக் அகடமி வரைக்கும் ஒரே கூட்டம்!

வைகுண்ட பெருமாளின் சொர்க்க வாசலும் ஈசிஆர் பாற்கடலும் பக்த கோடிகளுக்கும் பல்வேறு ரிசார்ட்டுகளுக்கும் ஒரு சேர அருள் பாலித்தன. இதில் உள்ள சிறப்பு அம்சங்களை அனுபவிக்கிற பல்வேறு சமூகக் கூட்டங்களின் உற்சாகத்தைப் பரிசீலிப்பது அவசியமானதாகும்.

பொதுவாக மார்கழி என்றாலே மகா உற்சவமாக இருக்கும்! போன வாரம் கூட பாம்பே ஜெயஸ்ரீ ராகமாலிகாவில் பிருகாக்களையும் சங்கதிகளையும் அள்ளி வீசினார். நாரத கான சபாவில் இருந்து மியுசிக் அகடமி வரைக்கும் ஒரே கூட்டம்! மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு ‘மார்கழி’ என்று காலம் போட்டு காலம் காலமா எழுதிட்டு வர்றா!

ஒவ்வொரு வருடமும் இஷை தாகத்தை புதுமையான முறையில் வழங்கி வரும் சபாக்கள் இந்த முறை கேண்டின் பலகாரங்களிலும் பல புதுமைகளைப் புகுத்தியுள்ள அரிய தகவலை மவுண்ட் ரோடு ஒரு பக்கத்துக்கு எழுதியிருந்தது. இந்த முறை ராகி தோசையும் கோதுமை இடியாப்பமும் உலர் பழங்களில் (கிஸ்மிஸ் என்று கெஸ்) செய்யப்பட்ட போளியும், மியுசிக் அகடமி கேண்டினில் அறிமுகப்படுத்தியிருக்கிறார்களாம். புதினா இடியாப்பம், ஆப்பிள்-ஆனியன் சேவையும் ரசிக சிகாமணிகளுக்காக கொண்டு வந்திருக்கிறார்களாம்.

இப்படிப்பட்ட இந்த சங்கீதக் கூட்டம் ஹேப்பி நியுஇயரை இரவு 10 மணி ஸ்பெசல் கச்சேரியுடன் கொண்டாடியிருக்கிறார்கள்! இந்த முறை கச்சேரியின் தீம், பன்னிரெண்டு ராசிகளை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு ராகங்களை, ஆலாபனம் செய்வதாகும்.

புத்தாண்டு கச்சேரியில் பாரம்பரிய (!!) சிற்றுண்டிகளும் மசாலா டீயும் பானகமும் வழங்கப்பட்டிருக்கின்றன. சமூகத்தின் 3% உயர்ந்த அடுக்கான இவர்களின் புதுவருடக் கொண்டாட்டம் இவ்விதம் இருக்கிறது.

இவ்விடத்தில் ஒரு சம்பவத்தை நினைவு கூர்வது அவசியமாகும். ‘தானே’ புயல் கடலூர் மாவட்டங்கள் முழுவதையும் முற்றிலும் உருக்குலைந்த சமயம் ஒரு மார்கழி மாதம் தான் என்று நினைக்கிறேன். அன்று விழுந்த முந்திரி விவசாயம் இன்றளவும் எந்திரிக்கவில்லை. காற்றாலும் மழையாலும் வேரோடு பிடுங்கெறியப்பட்ட அக்காலத்தில் நடுத்தரவர்க்கமாக இருந்த பல விவசாயக் குடும்பங்கள் கடனாளியாக உரிய நிவாரணமின்றி இன்றளவும் சின்னபின்னமாகி சிதறிப் போயிருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையிலும் கூட ஹம்சர்வர்தினி ராகம் பாடியதால் தான் ‘தானே’ புயல்-மழை வந்திருக்கிறது என்று அன்றைய காலகட்டத்தில் உச்சி முகர்ந்து உவமை பாடிய இசைக்கூட்டத்திற்கு புயல் மழையே ராக தாள விளைவாக இருக்கிறதென்றால் ஹேப்பி நியுஇயரை சும்மா விட்டுவிடுவார்களா? நிற்க.

புத்தாண்டு உணவு
ஒரு வேளை மழை வரவில்லையென்றால்உங்கள் இரவு உணவை , மாடியில் சில அலங்கரிக்கப்பட்ட விளக்குகளோடு நட்சத்திரங்களுக்கு கீழே உண்ணலாம்

இவ்விதம் இசை ஞானம் உள்ளவர்களுக்கு புதுவருடம் பத்து மணி கச்சேரியோடு ஆரம்பிக்கிறது என்றால் அது இல்லாதவர்கள் என்ன செய்ய? அதற்கும் 15 வழிகளில் வழக்கத்திற்கு மாறான முறையில் புத்தாண்டைக் கொண்டாட மவுண்ட் ரோடு கீழ்க்கண்ட விதம் அறிவுறுத்தியிருக்கிறது. முதலில் அங்கே சொடுக்கி படித்துவிட்டு இங்கு வந்து படிக்கவும்.

  1. ஒரு வேளை மழை வரவில்லையென்றால்உங்கள் இரவு உணவை , மாடியில் சில அலங்கரிக்கப்பட்ட விளக்குகளோடு நட்சத்திரங்களுக்கு கீழே உண்ணலாம். (மாடியே இல்லாதவர்கள் என்ன செய்யலாம்? சிவாஜி படத்தில் ரஜினிகாந்த் இவ்விதம் ஆணவத்தோடு ச்சீ ஆவணத்தோடு பாடியிருக்கிறார் “கிராமத்து குடிசையிலே கொஞ்சம் காலம் தங்கிப் பாருலே! கூரையின் ஓட்டை விரிசல் வழி நட்சத்திரம் எண்ணிப் பாருலே!”)
  2. 2015-ல் சாதிக்க வேண்டியதை பேப்பர் லாந்தரில் எழுதி, நட்ட நடுராத்திரியில் பறக்கவிடலாம்.
  3. பாத் டப்பில் அதிக நுரையுடன் வாசனைத் திரவியங்கள் ஒரு பக்கம்! வைன் ஒரு பக்கம்! படிக்க புத்தகம் ஒரு பக்கம்! என்று புத்தாண்டைக் கொண்டாடலாம். (ஏற்கனவே ஜெயமோகன் சுந்தர ராமசாமிக்கு பாத் டப்பில் குளிப்பது மிகவும் பிடிக்கும் என்று இரங்கல் உரையில் எழுதியதாக ஞாபகம்!)
  4. நடுநிசியில் டிவிடி பிளேயரில் சினிமா போட்டு பார்க்கலாம். கிராவிட்டி, பெர்சி ஜாக்சன், சீ ஆப் மான்ஸ்டர்ஸ் மற்றும் ராசி போன்ற படங்கள்.
  5. மாலை நேரத்தை குடும்பத்துடன் பெற்றொர்கள், தாத்தா, பாட்டி மற்றும் உறவினர்களுடன் செலவிடலாம். முதலாளித்துவம் கூட்டுக்குடும்பத்திற்கு வேட்டுவைத்து அழித்தது கூட தெரியாமல் இப்படியொரு அட்வைசு. ஐந்து இலக்க சம்பளம் வாங்கும் மென்பொருள் வேலை பார்ப்பவர்களே குழந்தைகளை விட்டு விட்டே வேலை பார்க்கிற பொழுது தாத்தா பாட்டிக்கு எங்க போக?
  6. ஒரு கேக்கை வாங்கிக்கொண்டு தெருவில் ஸ்ட்ரேஞ்சர்ஸுடன் (அதாவது முன்பின் தெரியாதவருடன்) கொண்டலாம். உங்களுக்கு நாய், நரி பிடிக்கும் என்றால் அவைகளுக்கு உணவளித்து கொண்டாடலாம். திரிஷாவெல்லாம் இப்படித்தான்!
  7. புத்தாண்டு உணவு
    ஒரு பீசா ஆர்டர் செய்தோ அல்லது நூடுல்ஸ் சமைத்தோ கொண்டாடிவிட்டு தூங்கச் செல்லலாம்

    குடிப்பதாக இருந்தால் உங்களுக்கு தெரியாதவர்களுடன் சேர்ந்து குடிக்கலாம். அதாவது உங்களின் நண்பர்களின் நண்பர்களுடன்.

  8. நீங்கள் வேலையில் இருந்தால் நைட் வீட்டிற்கு திரும்பும் பொழுது உங்களது வாட்ச் மேனுக்கு வாழ்த்து சொல்லி கிப்ட் கொடுங்கள். இதனால் அவர் திருப்தியாக உணர்வதோடு உங்களையும் எளிதில் விட்டுவிடுவார்.
  9. பன்னிரெண்டு பேப்பர்களை எடுத்து வைத்துக்கொண்டு 2014-ல் ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு நேர்ந்த மோசமான விசயங்களை எழுதி வீட்டிற்குள்ளேயோ அல்லது பால்கனியிலேயோ ஒவ்வொரு மாதத் தாளையும் ஒவ்வொன்றாக எரியுங்கள்! இது சிம்பாலிக்காக உங்களது மோசமானவைகளை அழித்து புது வாழ்வு தொடங்குவதை குறிக்கும்!
  10. ஒரு வேளை துரதிர்ஷ்டவசமாக இரவு வேலை பார்க்க நேர்ந்தால் உங்களை வெளிப்படுத்தும் விதத்தில் தீமாக உடையணிந்து கொள்ளலாம்!
  11. பார்டிக்கு செல்வதாக இருந்தால் காக்ரா, லெஹேனா மற்றும் ஒன்பது முழ சேலையை அணிந்து செல்லலாம். இதனால் அனைவரின் கவனமும் உங்கள் மீது திரும்பும்!
  12. தனிமையில் புத்தாண்டைக் கொண்டாடுங்கள். ஒரு பீசா ஆர்டர் செய்தோ அல்லது நூடுல்ஸ் சமைத்தோ கொண்டாடிவிட்டு தூங்கச் செல்லலாம். அந்த இரவு உங்களுடையது!
  13. உங்களுக்கு நீங்களே கடிதம் எழுதிக்கொள்ளலாம். இந்த வருடம் என்ன நடந்தது? அடுத்த வருடம் என்ன நடக்க வேண்டும் என பல இத்யாதிகள். ஒரு வேளை யாரேனும் படித்துவிடுவார்கள் என்று பயந்தால் futureme.org என்ற தளத்திற்கு சென்று நீங்களே எழுதி உங்களது மெயிலுக்கு அனுப்பிக்கொள்ளலாம். முடிந்தால் கவிதை எழுதுங்கள்!
  14. டெக்னாலஜிக்கு நோ சொல்லுங்கள். இன்று செல்போன், லேப்டாப், டெஸ்க்டாப், டேப்ளாய்டு, பேப்ளாய்டு (என்னென்னு தெரியலையே!) போன்றவைகளை அணைத்து வைத்துவிட்டு காலையில் வாழ்த்து சொல்லலாம்.
  15. யாருக்காவது கால் செய்து பேசலாம்! இந்த வருடத்தில் உங்களது நண்பர்களுடன் தொடர்பு அறுந்து போயிருந்தால் பலப்படுத்தலாம்!

மேலே உள்ள பதினைந்து அம்சக் கோட்பாடுகள் சொல்கிற செய்தி என்ன? எவ்வளவு நுகர முடியுமோ அவ்வளவு நுகருங்கள் என்பதே! அது மொட்டை மாடியிலே சாப்பிடு, பீசா ஆர்டர் பண்ணு! பாத் டப்பில் வைனோட குளி, வித்யாசமா குடி! டிரஸ் வாங்கு, பார்டிக்கு போ, டிவிடியில் படம் பாரு! அதுதவிர தனிநபராக மனிதர்கள் தங்களை அன்னியப்படுத்திக் கொள்ள கடிதம் எழுதி எரிக்கச் சொல்லிவிட்டு குடும்பத்தோடு பேசி மகிழ் என்று முரண்பட்டு நிற்கிறது. சமூகத்தின் லும்பன் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பல்வேறு மேட்டுக்குடி உதிரி வர்க்கங்களின் புதுவருடம் இப்படித்தான் இருக்கப்போகிறது. இது இரண்டாவது வகை.

இதில் மூன்றாம் தரப்பாக சமூகத்தின் அடித்தட்டைச் சேர்ந்த இளைஞர் பிரிவு புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் கணிசமான அளவு மதுவிற்கு பலியாகியிருக்கிறது. இவர்கள் யாரும் மேலே சொன்ன விதத்தில் புத்தாண்டை அறிந்தவர்கள் கிடையாது. கடின உடல் உழைப்பில் ஈடுபடுகிற இளைஞர்கள், மாணவர்கள் உள்பட ஒவ்வொரு புத்தாண்டிற்கும் மதுவிற்கு அறிமுகப்படுத்தப்படுகிற கலாச்சாரம் பெருகி வந்திருக்கிறது.

திரைப்படங்களும், சின்னத்திரையும், பத்திரிக்கைகளும், இதை ஒரு கலச்சாரமாகவே நிறுவியிருக்கின்றன. ஆளும் வர்க்கம் புத்தாண்டு மது விற்பனையை டார்கெட் போட்டு விற்கின்றது!

இனி சமூகத்தின் மறுபக்கத்தைப் பார்ப்போம். மெரினா கடற்கரை, கிழக்கு கடற்கரை சாலை, அண்ணா சாலை, பூந்த மல்லி நெடுஞ்சாலையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் மதுவோடு ஆரம்பித்து 12 மணிக்கு உச்சநிலை அடைந்து சரியாக இரவு ஒருமணிக்கு நட்சத்திர விடுதிகள் மற்றும் ரிசார்ட்டுகளின் சுருதி குறைகிற அதே இரவு ஒரு மணிக்கு திருப்பதி தேவஸ்தானத்தில் சொர்க்கவாசல் நடை திறக்கப்பட இருக்கிறது!

இந்த ஆண்டு பல இலட்சணக்கான பக்தர்கள் சொர்க்கம் போகும் பொருட்டு சொர்க்கவாசல் திறப்பிற்காக கிலோ மீட்டர் வரிசையில் காத்திருக்கின்றனராம். இப்படி இருந்தாலும் இரவு ஒரு மணியிலிருந்து காலை ஐந்து மணி வரை விஐபி தரிசனம் மட்டும் தான் திருப்பதியில் அனுமதிக்கப்படுமாம்.

ஐந்து மணிக்கு பிற்பாடுதான் ஏழை பக்தர்களால் மோட்சம் செல்ல முடியும்! இந்த நான்கு மணி நேரத்தில் இந்துப் பார்ப்பனியம் பணம் படைத்த வர்க்கங்களைத்தான் முதலில் மோட்சம் செல்ல அனுமதிக்கிறது. இதற்கும் ஆன்லைனில் டிக்கட் வாங்குவது முன் நிபந்தனையாகும்.

ஆளும் வர்க்கம் எப்படி ஏழைகளைச் சுரண்டி நிவாரணம் என்ற பெயரில் ரொட்டித்துண்டை வீசியெறிந்துவிட்டு தரகுமுதலாளிகளுக்கு பாய் விரிக்கிறதோ அதே போல வரிசையில் காத்திருக்கிற ஏழை பக்தர்களுக்கு காபி, டீ, பால் கொடுத்துவிட்டு பணம் படைத்தவர்களை முதலில் மோட்சம் செல்ல அனுமதிக்கிறது திருப்பதியின் வைகுண்ட ஏகாதேசி!

கோயிலும் கோலமும்
மக்கள் கோவிலுக்கும் போகிறார்கள், கோலமும் போடுகிறார்கள். இதில் மதம் எது, மார்கெட் எது என்று பிரித்து பார்ப்பது கடோபநிதத்தை புரிந்து கொள்வதை விட கஷ்டம்.

தமிழ்நாட்டில் ஏற்கனவே பார்த்த சாரதி கோயிலில் பக்தர்கள் மோட்சம் அடைந்த சம்பவமும் நடந்தேறியிருக்கிறது. கூட்ட நெரிசலில் பக்தர்கள் மிதிபட்டு இறந்திருக்கிறார்கள். இங்கு தான் ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ கும்பல் ஒரு தத்துவார்த்த கேள்வியை எழுப்புகிறது. தமிழ்நாட்டில் பெரியாரின் நாத்திக மரபு இருப்பது உண்மையென்றால் கோயிலில் ஏன் இத்தனைக் கூட்டம்?

இது போக புத்தாண்டு கிறித்தவ கொண்டாட்டம், அதை இந்துக்கள் கொண்டாட கூடாது, கோவில்களை நள்ளிரவில் திறக்க கூடாது என்று வருடா வருடம் இந்துமுன்னணியும், இத்துப் போன இராம கோபாலானும் அலறுகிறார்கள், அறிக்கை விடுகிறார்கள். என்ன பயன்?

மக்கள் கோவிலுக்கும் போகிறார்கள், கோலமும் போடுகிறார்கள். இதில் மதம் எது, மார்கெட் எது என்று பிரித்து பார்ப்பது கடோபநிதத்தை புரிந்து கொள்வதை விட கஷ்டம்.

இக்கும்பலின் பித்தலாட்டத்தை இனங்காணுவது எப்படி? இதற்குத்தான் இன்றைய முதலாளித்துவம் முன்னணியில் வைத்திருக்கிற புத்தாண்டு கொண்டாட்டங்களை முதலில் பரிசீலனை செய்தோம்.

கோயிலில் மட்டுமா கூட்டம்? ஈசிஆர் பீச்சில் ரிசார்ட்டுகளில் பப்புகளிலும் தான் ஒரே கூட்டம்! டாஸ்மாக்கில் எதைவிடவும் கூட்டம்! மறுகாலனியாதிக்கம் தனியார்மயம் தாராளமயம் வழங்கியிருக்கிற அதி உன்னத தரிசனங்களின் விளைவுகள் இவை!

கடவுளை நம்புவன் முட்டாள் என்றால் கடவுளை உருவாக்கியவன் அயோக்கியன் என்றார் பெரியார். அப்படி கடவுளை உருவாக்கி பார்ப்பனியத்திற்கு தலைமையேற்கிற 3% கூட்டம் கச்சேரி என்றும் பதினைந்து வழிகளில் புத்தாண்டு கொண்டாட்டம் என்றும் வணிக உத்தியில் முதலாளித்துவத்தோடு இலட்சமண ரேகையாக நிற்கின்றன!

எஞ்சியிருக்கிற இடைநிலைச் சாதிகளும் தலித்துகளும் கூடையில் இட்ட நண்டுகளாக ஒருவரையொருவர் மேல் எழும்பா வண்ணம் பார்ப்பனியத்தின் படிநிலை அடுக்கில் சிக்குண்டு கிடக்கிறார்கள்!

இவ்விதம் ஆளும் வர்க்கம், மக்களை ‘ஜனநாயகம் குறித்துத் தொல்லைப்பட முடியாதபடி’, ‘அரசியல் குறித்துத் தொல்லைப்பட முடியாதபடி’ வைத்திருப்பதன் அவசியம் தான் புத்தாண்டும் ஏகாதேசியும்.

நுகர்வுக் காலாச்சாரமும் ‘நூல்’ கலாச்சாரமும் பின்னிப் பிணைத்திருப்பதை பார்ப்பனிய எதிர்ப்பு, முதலாளித்துவ மறுப்பு கட்டியெழுப்புவதன் மூலமே முறியடிக்க இயலும்.

அதற்கு ரங்கநாதனையும் ரத்தன் டாடாவையும் கேள்வி கேட்கும் உரிமையை மக்களுக்கு கற்றுத் தருவது வேண்டும்.

– இளங்கோ.

செய்தி ஆதாரங்கள்

  1. காஞ்சிபுரம் வைகுண்டபெருமாள் கோயில்: பரமபத வாசல் நாளை அதிகாலை 5 மணிக்கு திறப்பு
  2. Chennai Margazhi season
  3. A change of tune with healthy bites
  4. 15 unusual ways into 2015
  5. புத்தாண்டு வைகுண்ட ஏகாதசியை கொண்டாட திருமலை தயாராகிறது!
  6. Usher in the New Year, Carnatic style

டி.சி.எஸ் ஆட்குறைப்பு – ஜெர்மனியிலிருந்து ஒரு கடிதம்

3

ஐ.டி துறையில் பணி புரியும் இந்திரன் என்ற இந்த நண்பர்  டி.சி.எஸ் ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு எதிரான வினவு, பு.ஜ.தொ.மு பிரச்சாரக் கட்டுரைகளை படித்து விட்டு தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.  டி.சி.எஸ்சில் வேலை செய்யும் அவரது நண்பர் தனக்கு 32 வயது ஆகி விட்டதால் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் தன்னையும் வேலையை விட்டு தூக்கி விடுவார்கள் என்று பயப்படுவதாகவும், அதை எதிர்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று கேட்பதாகவும் கூறினார். 

இந்தியாவில், டி.சி.எஸ்சிலும், பிற ஐ.டி நிறுவனங்களிலும் யூனியன் (தொழிற்சங்கம்) அமைப்பதற்கான நடைமுறைகளை தெரிந்து கொள்ள அவரது நண்பர் ஆவலாக இருப்பதாக கூறினார்.

இந்திரன் ஐரோப்பிய நாடு ஒன்றில் வேலை செய்வதாகவும், அங்கு தொழிற்சங்கங்கள் மூலம் ஊழியர்கள் பெற்றிருக்கும் உரிமைகள் பற்றியும் விளக்கினார்.

அவற்றை தொகுத்து மின்னஞ்சலில் அனுப்பியிருக்கிறார்.

not-cricket

TCS வேலை பறிப்பு

பீகாரை சேர்ந்த என் பள்ளி பருவ நண்பன் ஒருவன், எங்கள் பள்ளி சார்ந்த watsapp குரூப்பில் திடீரென்று 26,000 பேர் டி.இ.எஸ்-ல் இருந்து விரட்டப்பட இருக்கிறார்கள் என்று பகிர்ந்தான். என் பள்ளிக்கூட நண்பர்கள் அனைவருமே ஐ.டி சார்ந்த தொழில் புரிகிறோம்.அவனிடம் வேலை பாதுகாப்பு பற்றி கேட்டதற்கு அதுபற்றி சரிவர தெரியவில்லை, நிறுவனத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி  பேசிக் கொள்கிறார்களாம்.

அவற்றை கீழே தொகுக்கிறேன்,

  1. 26,000 பேரை நீக்குகிறார்கள்.
  2. முதலீட்டாளர்களிடம் லாபக் கணக்கை காண்பிக்க, ஆட்குறைப்பு செய்து, பிறகு குறைந்த சம்பளத்தில் புதியவர்களை இணைப்பது.
  3. ஆறு முதல் எட்டு வருடம் வரை அனுபவம் உள்ளவர்களை மட்டும் நீக்குகிறார்கள்.
  4. இரண்டு மாத சம்பளம் மட்டும் தரப்படும்.
  5. union (தொழிற்சங்கம்) ஆரம்பித்தால், Nasscom blacklist (நாஸ்காம் கருப்புப் பட்டியல்) செய்து விடுவார்கள் மற்றும் அனுபவ சான்றிதழ் தரமாட்டார்கள் அல்லது தவறாக சித்தரிக்கப்படும்.
  6. 54,000 புதிய பி.ஈ. மாணவர்களை வேலைக்கு சேர்க்க போகிறார்கள்.

hall-meetingஅனைவருக்கும் இதை கேட்கும்போதே அதிர்ச்சி. வேலை பாதுகாப்பு மற்றும் வேலை இழப்பு பற்றி பள்ளி படிப்பிலோ அல்ல நான்கு வருட பி.ஈ. படிப்பிலோ சொல்லி தரவில்லை, தினமும் படிக்கிற செய்திகளிலும் இதைப் பற்றி பேசவில்லை. வேலை பாதுகாப்பு பற்றி அடிப்படைக் கல்வி கொஞ்சமும் இன்றி அறிவு அற்றவர்களாக இருக்கிறோம் என்று உணர்வதற்கே இவ்வளவு காலம் ஆகிவிட்டது.

என்ன பிரச்சனை?

நமது ஐ.டி ஊழியர்களுக்கு திறமையின்மை, புது தொழில் நுட்பம் சார்ந்த அறிவு இல்லாதது, புது யுத்திகள் உருவாக்க தெரியாதது, நிறுவன மேலாண்மை இல்லாதது, புதிய productகள் உருவாக்க தெரியாதது, போன்றவற்றை தள்ளி வைத்துவிடுவோம்.

கடந்த 20 வருடங்களாக நமது நாட்டு ஐ.டி நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அவர்கள் சொல்லும் வேலையை, அவர்கள் தேவைக்கு ஏற்றாற்போல் build (கட்டியமைத்து) செய்துவந்தனர். ஆனால் கடந்த ஐந்து வருடங்களாக தங்கள் தேவைகளை ஒரு system (அமைப்பாக) ஆக அல்லது process (செயல்முறை) ஆக standardisation (தகுதரம்) செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே, வேலை செய்வதற்கு திறமையான ஊழியர்கள் தேவையின்றி போகிறார்கள்.

மேலும், தற்பொழுது இந்திய நிறுவனங்களுக்கு அவ்வளவாக மிக பெரிய project-கள் (பத்து வருட அல்ல பதினைந்து வருட) வரத்து குறைந்துவிட்டது .

இந்த பிரச்சனையால் இன்னும் சில வருடங்களில் கம்பெனி restructure (மறுசீரமைப்பு) என்ற பெயரில் மேலும் பல்லாயிரம் வேலை இழப்புகள் இந்தியா முழவதும் பல பெரிய நிறுவனங்களில் நிகழலாம்.

ஜெர்மன் வேலை பாதுகாப்பு முறை!

why-unionஇதே சூழ்நிலையை சென்ற வருடம் ஜெர்மனியில் நான் சந்தித்தபோது. வேலை பாதுகாப்புப் பற்றிய அறிவு இல்லாத ஒரு சூனியமாக தான் இருந்தேன். என் கம்பெனி சி.ஈ.ஓ company restructre (நிறுவன மறுசீரமைப்பு) பற்றி பேசும்போது, ” இன்னும் ஆறு முதல் எட்டு மாதங்களில் உங்களில் சிலர் வேலை இழக்கலாம்” என்று வெளிப்படையாகவே சொல்லிவிட்டார் . எங்களிடம் சொல்லும்போது முன்பே union (தொழிற்சங்கம்) இல் கூறிவிட்டுத்தான் எங்களிடம் தகவலை தெரிவித்து இருக்கிறார் .

ஜெர்மனியில் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேரும் போதே நீங்கள் அந்த கம்பெனியின் தொழிற்சங்கத்தில் தன்னாலயே இணைந்து விடுவீர்கள் மற்றும் உங்களுக்கு ஓட்டு உரிமையும் உண்டு.

ஜெர்மன் இழப்பு தொகை?

உங்களுடைய தற்போதைய மாத சம்பளம் * ௦.5 (குறைந்த பட்சம்) * உங்கள் அனுபவ வருடங்கள் + Negotiation (பேச்சு வார்த்தை)

உதாரணமாக , உங்களுக்கு மாத சம்பளம் 2000 euro மற்றும் நான்கு வருட அனுபவம் இருந்தால் – ( 2000 * 0.5 * 4 = 4000 euro )

Negotiation (பேச்சுவார்த்தை) – குழந்தைகளின் படிப்புக்கான பணம், உங்களின் எதிர்கால வேலைக்கான தகுதியை வளர்த்துகொள்ள பணம், அரசாங்கத்துக்கு கடிதம் (மூன்று மாதம் கழித்து 60% சம்பளத்தை அரசாங்கம் மாதம் மாதம் தங்களுக்கு புது வேலை வரும் வரை தரும்)

எங்களுக்கு “௦.5” (குறைந்த பட்சம்)-ஐ உயர்த்தி “1” தந்தார்கள் . குழந்தைகள் இருந்தால் கூடுதலாக 2000  யூரோ தந்தார்கள். இந்தியாவில் உள்ள என் நண்பர்கள் இதை லாட்டரி என்றே வர்ணித்தார்கள்.

recession (பொருளாதார சுணக்கம்) வந்தால் ?

log-off-your-silenceஇந்த அடிப்படையில்தான் வாரன் பஃபெட் சென்ற முறை recession வந்தபோது ஒரு கருத்தை வெளியிட்டார் , “ஒருவன் தன் சம்பளத்தின் ஒரு பகுதியை எப்போதும் சேமிக்க வேண்டும். recession அல்லது வேறு காரணத்தினால் வேலை இழப்பு ஏற்பட்டால், எட்டு மாதம் முதல் பதினாறு மாதம் வரை அந்த சேமிப்பு பணம் உதவும்” என்று கூறினார்.

தற்போது டி.சி.எஸ்-இல் நிலவும் இரண்டு மாத சம்பளம் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவது உண்மையானால் இவர்கள் எப்படி சமாளிப்பார்கள் என்று தோன்றுகிறது.

இந்த நீண்ட கடிதத்தின் இலக்கு டி.சி.எஸ்-ல் பணிபுரியும் நண்பர்களுக்கு union (தொழிற்சங்கம்) எப்படி ஆரம்பிப்பது? எப்படி செயல்படுவது? Nasscom blackmark (நாஸ்காம் கருப்புப் பட்டியல்)-ஐ எப்படி சமாளிப்பது? நிறுவனத்தில் இருந்து எப்படி தங்கள் settlement பணத்தை வாங்குவது? போன்றவற்றை Facebook மற்றும் தங்கள் வலைதளத்தில் சாமானியர்களுக்கு புரியும்படியாக தெரிவிக்க வேண்டுகிறோம்.

இப்படிக்கு,

இந்திரன்

____________________________

இந்திரன் மற்றும் இலட்சக்கணக்கான இந்திய ஐ.டி துறை ஊழியர்களின் பிரச்சனைக்கு தீர்வாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் வினவு தோழர்கள், ஐ.டி ஊழியர்கள் மத்தியில் பிரச்சார இயக்கம் நடத்தி வருகிறோம். தொழிற்சங்கம் அமைத்து செயல்படுவது, நாஸ்காம் மிரட்டலை எதிர்கொள்வது, நிறுவனத்தின் ஊழியர் சுரண்டலை முறியடிப்பது இவற்றை விளக்கும் அரங்கக் கூட்டம் ஒன்றை பு.ஜ.தொ.மு ஏற்பாடு செய்து வருகிறது. கூட்டம் நடைபெறும் தேதி மற்றும் இடம் விரைவில் அறிவிக்கப்படும்.

இந்திரன் விவரிக்கும் ஜெர்மனி போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளில் தொழிலாளர்களுக்கு உள்ள உரிமைகள், 19-ம் நூற்றாண்டு முதல் நீண்ட போராட்டங்களின் மூலம் வென்றெடுக்கப்பட்டவை. 1789 ஃபிரெஞ்சு புரட்சி, 1871 பாரிஸ் கம்யூன், 1917 ரசிய புரட்சி ஆகியவை இந்தப் போராட்ட பாரம்பரியத்தின் உந்து சக்திகள்.

ஐரோப்பிய நாடுகளில் வேறு வழியில்லாமல் தொழிலாளர் உரிமைகளை அங்கீகரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் டாடா, இன்ஃபோசிஸ் போன்ற முதலாளிகளை தமது தரகர்களாக வைத்துக் கொண்டு, இந்திய அரசை தமக்கு சாதகமாக செயல்படும்படி வளைத்து இந்திய மக்களை சுரண்டி வருகின்றனர்.

இதை மாற்றுவது ஐ.டி துறை ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து உழைக்கும் மக்கள் அமைப்பாக அணி திரள்வதன் மூலம் சாத்தியமாகும்.

தொழிற்சங்கமாய் திரள்வோம்!
லே ஆஃப் எனும் கார்ப்பரேட் ஒடுக்குமுறையை முறியடிப்போம்!

தொடர்பு  கொள்ளுங்கள்:

பேஸ்புக் : https://www.facebook.com/VinavuCombatsLayoff
தொலைபேசி : 90031 98576
மின்னஞ்சல் : combatlayoff@gmail.com

– வினவு, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, சென்னை

மதச்சார்பற்ற அறிஞர்களின் நரியை பரியாக்கும் முயற்சி

3

இந்திய அரசியல் சட்டம் மதச்சார்பற்றதா? பொது சிவில் சட்டம் குறித்த உண்மைகள் – 5

“ஒரு நாடு, ஒரு மக்கள் ,ஒரு சட்டம்” என்ற முழக்கத்தின் கீழ் இந்துச் சட்டத்தையே அனைவருக்குமான சிவில் சட்டமாகத் திணிக்க பாரதீய ஜனதா முயற்சிக்கின்றது. காங்கிரசு மற்றும் ஐக்கிய முன்னணியைச் சேர்ந்த கட்சிகள் அனைத்தும் இந்திய மதச் சார்பின்மையின் பெயரால் பொதுசிவில் சட்டத்தை எதிர்க்கின்றன.

இவர்கள் ஒருபுறம் இருக்க, வலது இடது போலி கம்யூனிஸ்டுகள், இசுலாமியப் பழமைவாதத்தை எதிர்க்கும் சீர்திருத்தவாதிகள், பெண்ணுரிமை இயக்கங்கள், சில புரட்சிகர இயக்கங்கள் மற்றும் பல அறிவு ஜீவி்கள் போன்றோர், பொது சிவில் சட்டம் குறித்த விவாதத்தில் தெரிவிக்கும் கருத்துகள் நமது பரிசீலனைக்கு உரியவை.

  • சென்ற டிசம்பர் மாதம் டெல்லியில் நடைபெற்ற அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் (மார்க்சிஸ்டு கட்சியுடன் இணைந்தது ) மாநாடு, பொது சிவில் சட்டம் குறித்த தனது கருத்தைத் தீர்மானமாக நிறைவேற்றியுள்ளது. அதற்கு நம்பூதிரிபாடு ஒரு பொழிப்புரை எழுதியுள்ளார்.
    “ஒரு பொது சிவில் சட்டத்தை உடனே நிறைவேற்றுவதோ அல்லது ஷரியத் சட்டத்தை அப்படியே பாதுகாப்பதோ இரண்டுமே இந்தியப் பெண்களின் உடனடித் தேவை அல்ல; மாறாக, ஒவ்வொரு மதத்தின் தனிநபர் சட்டமும், ‘ஜனநாயகம், சமூக நீதி, ஆண்- பெண் சமத்துவம்’ போன்ற நவீனக் கொள்கைகளுக்கு எதிராகப் பெண்களின் உரிமையில் எந்த அளவுக்குக் குறிக்கிடுகின்றன என்பது ஆய்வு செய்யப்பட வேண்டும். ஏதேனும் ஒரு மதத்தின் தனிநபர் சட்டம் அவ்வாறு இந்தியப் பெண்ணின் உரிமையில் குறுக்கிட்டால் அது பொருத்தமான வகையில் திருத்தப்படவேண்டும்.”
    அதாவது மதச்சார்பற்ற உரிமையியல் சட்டம் இப்போது தேவையில்லை. மதச்சட்டங்களையே சீர்திருத்தி ஜனநாயகத்தன்மை கொண்டவையாக மாற்றினால் போதும் என்கிறார் நம்பூதிரிபாடு.
  • மா.லெ (செங்கொடி) குழுவின் பத்திரிகையான ‘ரெட் ஸ்டார்’ நம்பூதிரியின் நிலைப்பாட்டை வேறு வார்த்தைகளில் கூறுகிறது.
    “ஒருபடித்தான உரிமையியல் சட்டம் மொத்த சமூக மாற்ற நிகழ்வுப் போக்குடன் உருவாக்கப்பட வேண்டிய ஒன்று. அதை மட்டும் தனியாக உருவாக்குவதோ மேலிருந்து திணிப்பதோ முடியாது. ஒவ்வொரு மதத்தின் தனிநபர் சட்டங்களுக்குள்ளும் ஏற்படுகின்ற மாற்றத்தினூடாகவும், சமூகத்தில் நடைபெறும் முற்போக்கான போராட்டங்களின் விளைவாகத் தோன்றும் அந்தந்த மதத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் போராட்டங்களினூடாகவும் அது உருவாகி நடை முறைக்கு வருகிறது.”
  • இசுலாமியப் பழமைவாதிகளுக்கெதிராகப் போராடி வரும் அஸ்கார் அலி எஞ்சினியர் என்ற அறிஞரும் எந்தவொரு சிவில் சட்டமும் மேலிருந்து திணிக்கப்படுவதை எதிர்க்கிறார். ஒவ்வொரு மதத்தின் தனிநபர் சட்டமும் அம்மதத்தைச் சேர்ந்தவர்களது போராட்டத்தால் ஜனநாயகப் படுத்தப்படவேண்டும் என்ற கருத்தையே முன் வைக்கிறார். சிவில் வாழ்க்கையின் மீது மதம் செலுத்தும் அதிகாரத்தை மறுக்காமல் மதக் கோட்பாடுகளின் துணைகொண்டே அவற்றை ஜனநாயகப்படுத்த இயலும் என்று கருதுகிறார்.
    மேற்குலகின் கோட்பாடான மதச்சார்பின்மையை நமது நாட்டுக்கு அப்படியே பொருத்தவியலாது என்றும் வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் நமது மதச் சார்பின்மையின் ரகசியம் என்றும் “பின் – நவீனத்துவ காலத்தில், இன்று மேற்குலகம் புரிந்து கொண்டுள்ள உண்மையை இந்தியர்களாகிய நாம் பல நூற்றாண்டுகளாகவே அறிந்திருக்கிறோம்” என்றும் கூறுகிறார். (இந்து 11.6.96)
  • மது கிஷ்வர்
    பெண்ணியவாதி மது கிஷ்வர்

    எந்தவொரு சமூகமும் கட்டாயத்தின் கீழ் தங்கள் மரபுகளைச் சீர்திருத்துமாறு செய்யக் கூடாது; மதத் தனிநபர் சட்டமும் இருக்கட்டும், மதச்சார்பற்ற சிவில் சட்டமும் இருக்கட்டும்- தனக்கு எது தேவை என்பதைப் பெண் தீர்மானிக்கட்டும் என்கிறார் பெண்ணியவாதி மதுகீஷ்வர்.

  • தமது மரபுகளை உயர்த்திப் பிடிக்கும் உரிமை ஒவ்வொரு சமூகத்திற்கும் உண்டு என்றும், எந்தவொரு அரசு உருவாக்குகின்ற சட்டத் தொகுப்பும் அதிகாரமயமாக்கலும் மட்டுமே பயன்படும் என்றும், அது பன்முகத்தன்மைக்கு எதிரானது என்றும் வாதிடுகிறார்கள் பின் நவீனத்துவ அறிஞர்கள்.
  • சிவில் சட்டம் குறித்த விவாதமெல்லாம் வெட்டிப் பேச்சு என்றும், இந்தச் சட்டங்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் கிராமப் பஞ்சாயத்துகள் பல பிரச்சினைகளில் தீர்ப்பு வழங்கிக் கொண்டிருக்கின்றன என்றும் சிலர் கூறுகின்றனர்.
  • மதச்சார்பற்ற, ஜனநாயகரீதியிலான சிவில் சட்டமொன்று தேவை என்று கருத்தளவில் ஏற்றுக் கொள்பவர்கள் பலரும், இந்து மதவெறிச் சக்திகள் மேலோங்கியிருக்கும் இன்றைய தருணத்தில் அதை நடைமுறைப்படுத்தவியலாது என்றும், காலம் கனியும் வரை காத்திருக்க வேண்டுமென்றும் கூறுகின்றனர்.
  • “மதச்சார்பற்ற சிவில் சட்டத்திற்காகப் போராடுவதில் உள்ள பிரச்சினை என்னவென்றால் இசுலாமியப் பெண்கள் உள்ளிட்ட யாருமே இன்று அந்தக் கோரிக்கையை ஆதரிக்க மாட்டார்கள் என்பதுதான்” – இது மார்க்சிஸ்டு கட்சி சார்ந்த அறிவு ஜீவிகள் சிலரின் வாதம்.
  • “சாதி ஒழிப்பு, மதச்சார்பின்மை ஆகய எதையும் தனியே உருவாக்க முடியாது. அவை ஒட்டு மொத்தச் சமூக மாற்றத்தின் அங்கமாகும். எனவே இன்றைய சமூக எதார்த்தங்களிலிருந்து துண்டிக்கப்பட்ட முறையிலான எந்தவொரு விவாதத்தையும் நாம் எதிர்க்க வேண்டும்” எனகிறது ‘ரெட் ஸ்டார்’ பத்திரிக்கை.
  • ஒரு சீரான சிவில் சட்டம் என்ற பெயரில் சிறுபான்மை மக்கள் மீது இந்துச் சட்டத்தைத் திணிக்கும் முயற்சியைக் கண்டிப்பதாகக் கூறுவதுடன் தமது பணி முடிந்தது என்று சிலர் பொருள் செறிந்த முறையில் மவுனம் சாதிக்கின்றனர்.

மேற்கூறிய நிலைப்பாடுகள் மற்றும் நிலைப்பாடற்ற குழப்பங்கள் பற்றிப் பரிசீலிப்போம்.

மதத்தை ஜனநாயகப்படுத்தும் முயற்சி

மனிதனின் சிவில் வாழ்க்கையின் மீது மதம் செலுத்துகின்ற அதிகாரத்தைப் பறித்து விஞ்ஞானபூர்வமான, ஜனநாயக பூர்வமான முறையில் சமூகத்தை மாற்றியமைக்க வேண்டும் என்பதுதான் மதச்சார்பின்மையின் சாரம்.

அஸ்கர் அலி எஞ்சினியர்
மதச்சார்பற்ற இஸ்லாமிய அறிஞர் அஸ்கர் அலி எஞ்சினியர்

சிவில் வாழ்க்கையின் மீது மதம் செலுத்தும் அதிகாரத்தை எற்றுக் கொண்டு, அந்தந்த மதக்கோட்பாடுகளில் உள்ள ஒரளவு முற்போக்கான அம்சங்களைத் தேடிக் கண்டுபிடித்து அவற்றின் துணைகொண்டு மதச்சட்டத்தை ஜனநாயகப்படுத்தலாம் என்பது அஸ்கர் அலி எஞ்சினியர் நிலைப்பாடு.

இந்த வழிமுறையைப் பின்பற்றி ஒருதார மணமுறைக்கு ஆதரவாகவும், முத்தலாக்கிற்கு எதிராகவும் பல ஆதாரங்களை குர்ஆன் மற்றும் நபிகள் வழங்கிய தீர்ப்புகளிலிருந்து எடுத்து எழுதுகிறார் எஞ்சினியர். வேறு பல இசுலாமியச் சீர்திருத்தவாதிகளும் இவ்வாறே செய்கிறார்கள்.

அதே நூல்களிலிருந்து வேறு சில ஆதாரங்களைக் காட்டியோ, அல்லது ஒரு சொல்லுக்கு வேறு விதமாகப் பொருள் கூறியோ இவர்களுக்கு மறுப்பு தெரிவிக்கிறார்கள் இசுலாமியப் பழமைவாதிகள். தொடர்ந்து இவர்களுக்கிடையே நடக்கின்ற அடுத்தடுத்த சுற்று விவாதங்கள் மதநூல்களின் பொருள் விளக்க ஆய்வாக வீழ்ச்சி அடைகின்றனவேயன்றி, சமூகத்தின் தேவை குறித்த அல்லது பிரச்சினை குறித்த அறிவுபூர்வமான விவாதமாக வளர்ச்சி அடைவதில்லை.

எனவே, நவீன யுகத்தின் தேவைகளுக்கு 1000, 2000ஆண்டுகளுக்கு முற்பட்ட குர்ஆனிலோ, பைபிளிலோ, ஸ்மிருதிகளிலோ விடை இருக்கிறதா என்று தேடுவதும், அவ்வாறு இருப்பதாகக் கூறுவதும் மதத்திற்கு முற்போக்கு முலாம் பூசுவதற்கு மட்டுமே பயன்படுகிறது. இந்த முயற்சி, வரலாற்று ரீதியில் மோசடியாகவும், நடைமுறையில் கோமாளித்தனமாகவும் முடிகிறது.

இந்து மதத்தின் ‘நல்ல’ கோட்பாடுகளின் துணைகொண்டே அதனைச் சீர்திருத்திவிட முடியும் என்று வாதிட்ட காந்திக்கு பெரியார் அளித்த மறுப்புரை இங்கே நினைவு கூறத்தக்கது.

மார்க்சிஸ்டுகளின் மோசடி!

அடுத்து நம்பூதிரிபாடு முன்வைக்கும் தீர்வுக்கு வருவோம். “ஜனநாயகம், சமூக நீதீ, -ஆண் –பெண் சமத்துவம் போன்ற நவீனக் கொள்கைகளுக்கு எதிராக ஒவ்வொரு மதமும் எந்த அளவு குறுக்கிடுகிறதோ அந்த அளவுக்கு அந்தந்த மதத்தனிநபர் சட்டங்கள் திருத்தப்படவேண்டும்” என்கிறார் நம்பூதிரிபாடு.

ஈ.எம்.எஸ் நம்பூதிரிபாடு
ஈ.எம்.எஸ் நம்பூதிரிபாடுவின் ஆலோசனை தெரிந்தே செய்யப்படும் மோசடி

அதாவது சிவில் வாழ்க்கை மீது மதம் செலுத்தும் அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்காமலேயே, தனிநபர் சட்டம் என்ற பெயரில் இந்தியக் குடிமக்களின், குறிப்பாகப் பெண்களின் முதுகில் சவாரி செய்ய இந்திய அரசியல் சட்டம் மதங்களுக்கு அளித்துள்ள உரிமையைக் கேள்விக்குள்ளாக்காமலேயே, ‘சர்வதர்ம சம்பாவ’ என்ற இந்திய மதச்சார்த்தபின்மைக் கோட்பாட்டின் எல்லைக்குள் நின்றபடியே மதச்சட்டங்கள் ஜனநாயகப்படுத்த வழி சொல்கிறார் ஈ.எம்.எஸ்.

ஆனால் மதக்கோட்பாடுகளை அறிவியல் பூர்வமான ஆய்வுக்கு உட்படுத்த எந்த மதவாதி ஒப்புக் கொள்வான்? மதவாதி ஒப்புக் கொள்வது இருக்கட்டும். நமது அரசியல் சட்டமே அதை ஒப்புக் கொள்ளவில்லையே. அவ்வாறு ஒப்புக் கொள்வதாக இருந்தால், “சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்று கூறும் 14-வது பிரிவையும், பால் வேறுபாடுகளுக்காக யாரிடமும் அரசு வேற்றுமை பாராட்டக்கூடாது” என்று கூறும் 15- வது பிரிவையும் பயன்படுத்தி மதத் தனிநபர் சட்டங்கள் அனைத்தையும் ஒழித்திருக்க முடியும்; அல்லது திருத்தியிருக்க முடியும்.

பொது ஒழுங்கு, நலவாழ்வு மற்றும் ஒழுக்க நெறி ஆகியவற்றின் அடிப்படையில் மதச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் உரிமையை சட்டப்பிரிவு 25(1) அரசுக்கு அளிக்கிறது. இருந்தபோதிலும் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி மதங்களின் தீயொழுக்கங்களை ஒழிப்பதற்கு அரசு முயலவில்லை.

இந்து தனிநபர் சட்டத்தில் ஏற்கனவே செய்யப்பட்டுள்ள தேவதாசி ஒழிப்பு போன்ற சீர்திருத்தங்களும் கூட எப்படிச் செய்யப்பட்டன? இந்து மதத்தில் நிலவும் தேவதாசி முறை என்ற ஒழுக்கக் கேட்டை சட்டப்பிரிவு 25(1) அளிக்கின்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசு ஒழிக்கவில்லை. மாறாக “தேவதாசி முறை இந்துமதத்தின் அத்தியாவசியமான நம்பிக்கை அல்ல” என்ற மதவாதிகளின் கூற்றின் அடிப்படையில்தான் திருத்தப்பட்டது.

ஜனநாயகம், சமூகநீதி, பெண்ணுரிமை ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் மதச்சட்டங்களைத் திருத்தியமைக்கலாம் என்று நம்பூதிரிபாடு முன்வைக்கும் ஆலோசனை தெரிந்தே செய்யப்படும் மோசடியாகும். இத்தகைய சட்டத்திருத்தம் எதையும் மார்க்சிஸ்டு கட்சி எம்.பி.க்கள் யாரும் இன்றுவரை பாராளுமன்றத்தில் முன்மொழிந்ததில்லை என்ற உண்மை இந்தப் பித்தலாட்டத்தை மேலும் அம்பலப்படுத்துகிறது.

இது ஒருபுறமிருக்க, சிவில் வாழ்க்கை மீது மதம் செலுத்தும் அதிகாரத்தை ஏற்றுக்கொண்டு, அதில் சீர்திருத்தங்கள் கோருவதன் வாயிலாக மதச் சீர்திருத்தவாதியாக அவதாரம் எடுக்கிறாரல் நம்பூதிரிபாடு.

மதத்திற்குள்ளிருந்தே அதை ஜனநாயகப்படுத்த முடியுமா?

அம்பேத்கர்
இந்து சட்டத்தை சீர்திருத்த முயன்று தோற்கடிக்கப்பட்டார் அம்பேத்கர்

மதச்சார்பற்ற மதிப்பீடுகளை அளவுகோலாகக் கொண்டு மதக் கோட்பாடுகளை ஆய்வு செய்யக்கூடாது என்பதுதான் மதவாதிகளின் நிலைப்பாடு. இதன்படி ஷரியத்தின் ஆணாதிக்கம் பற்றி ஒரு நாத்திகனோ, அல்லது பிற மதத்தவனோ பேசக்கூடாது.

“கருவறைக்குள் யாரை விடலாம், யாரை விடக்கூடாது என்பதை இந்துக்களாகிய நாங்கள் எங்கள் மதத்திற்குள் பேசிக் கொள்கிறோம். நாத்திகர்களான நக்சலைட்டுகளுக்கு இதில் தலையிடுவதற்கு உரிமை கிடையாது” என்பது கருவறை நுழைவுப் போராட்டத்திற்கெதிராக இந்து முன்னணி முன்வைத்த வாதங்களில் மிக முக்கியமானதொன்று ஆகும்.

இனம், பால், வர்க்கம் என்ற முறையில் எந்த மதத்தைதச் சேர்ந்த மக்களையும் அணுகவும், மதத்தின் பெயரால் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள நுகத்தடிகளை அகற்றவும் மதச்சார்பற்றவர்களுக்கும் ஜனநாயகவாதிகளுக்கும் உரிமை உண்டு. இத்தகைய போராட்டத்தின் மூலம்தான் மதச்சார்பின்மை நிலைநாட்டப்படுகிறது.

மாறாக, மதச்சார்பான முறைகள் மூலம் மதச்சார்பற்ற சட்டத்தை உருவாக்க முயலும் அணுகுமுறை, இலக்கிற்கும் அதை அடைவதற்கான வழிமுறைக்கும் இடையில் உள்ள இயங்கியல் உறவை மறுதலிக்கிறது.

ரெட் ஸ்டாரின்’ அணுகுமுறையில் இது பிரதிபலிப்பதைக் காணலாம். “ஒவ்வொரு மதத்தின் தனிநபர் சட்டங்களுக்குள்ளும் ஏற்படும் மாற்றம்” என்பதை மதச்சார்பின்மையை நோக்கிய முன்னேற்றமாகச் சித்தரிக்கிறது ‘ரெட்ஸ்டார்’.

உண்மை அதுவல்ல; உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி, நாகரிகத்தின் வளர்ச்சி, முற்போக்கான சக்திகளின் போராட்டங்கள் ஆகியவற்றின் தாக்குதலால் நிலைகுலைந்து வரும் மதம், தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும், மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும், கடைப்பிடிக்கும் தந்திரம்தான் சீர்திருத்தம்.

எல்லா சீர்திருத்தங்களையும் போலவே இவையும் அந்தந்த மதத்தைச் சார்ந்த மக்களுக்குச் சில புதிய நிவாரணங்களை வழங்கத்தான் செய்யும். இது சீர்திருத்ததின் விளைவு, நோக்கம் என்ன என்பதுதான் பிரச்சினை.

பலதார மணம், தேவதாசி முறை, கோயிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் நுழைவதற்கான தடை போன்றவற்றை இந்து சனாதனிகள் மனமுவந்து விலக்கிக் கொள்ளவில்லை; ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு இவை எதிராக இருக்கின்றன என்ற காரணத்தால் சட்டத்திருத்தம் செய்யவுமில்லை.

அம்பேத்கருக்கு எதிராக இந்து – முசுலீம் கூட்டணி!

மாறாக, சிவில் வாழ்க்கை மீது மதம் செலுத்தும் அதிகாரத்தை முற்றிலுமாகப் பிடுங்க வேண்டும் என்று அம்பேத்கர் கூறியபோது மதப் பகைமைகளை மறந்து இந்து சனாதனிகளும், இசுலாமியப் பழமைவாதிகளும் அம்பேத்கருக்கு எதிராக ஓரணியில் திரண்டார்கள்.

பாகிஸ்தான் மதவாதம்
அம்பேத்கர், பெரியார், ஜின்னா (1940-ல்) – பாகிஸ்தானில் முத்தலாக் மணவிலக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

கடவுளர்கள், வழிபாட்டு முறைகள், பண்பாடுகள் ஆகியவற்றால் ஒன்றுக்கெதிராக நின்று கொண்டிருந்த கூட்டத்தை ‘இந்துச் சட்டம்’ என்ற பட்டியில் அடைப்பதன் வாயிலாகத்தான் சனாதன தருமத்தைக் காப்பாற்றவியலும் என்ற நிலைமை இருந்ததால் அந்த லட்சியத்தை அடைவதற்காகச் சில சில்லறைச் சீர்திருத்தங்களுக்கு உடன்பட்டார்கள்.

இதன் துணை விளைவாக ‘முசுலீம் தனிநபர் சட்டம்’ என்பதையும் ஏற்க வேண்டியிருக்கும் என்று தெரிந்தும் கூட, மேற்படி சீர்திருத்தங்களுக்கு இந்து சனாதனிகள் உடன்படக் காரணம் ஒன்றுதான். மதச்சார்பற்ற சிவில் சட்டம் என்ற பேயிடமிருந்து இந்து மதத்தைக் காப்பாற்றுவது தான் அது.

இனி பாகிஸ்தானின் உதாரணத்தைக் காண்போம். ‘மதச்சார்பற்ற’ இந்தியாவின் முசுலீம் தனிநபர் சட்டம் ‘முத்தலாக்’ முறையிலான மணவிலக்கை ஏற்றுக் கொள்கிறது. ஆனால் இசுலாமியக் குடியரசான பாகிஸ்தானிலோ முத்தலாக் மணவிலக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இசுலாமியப் பெண்களுக்கு ஆதரவான இந்த நிலை மதச்சார்பற்ற ஜனநாயக மதிப்பீடுகளின் பால் பாகிஸ்தான் அரசுக்கும் மதவாதிகளுக்கும் உள்ள காதலைக் காட்டுகிறதா, அல்லது மதச்சார்பற்ற அரசாக மாறிவிடாமல் தடுப்பதற்கு அவர்கள் கொண்டிருக்கும் எச்சரிக்கையுணர்வைக் காட்டுகிறதா?

ஆளும் வர்க்கங்கள் மற்றும் பிற்போக்கு மதவாத சக்திகளின் இத்தகைய சூழ்ச்சிகளைக் கண்டு புரட்சியாளர்களுக்குரிய எச்சரிக்கையுணர்வைப் பெறுவதற்குப் பதிலாக சீர்திருத்தவாதிகளைப் போல மகிழ்ச்சி அடைகிறது, ‘ரெட் ஸ்டார்’.

மதச் சட்டங்களைச் சீர்திருத்தி ஜனநாயகப்படுத்தும் வித்தையும், நரியைப் பரியாக்கும் வித்தையும் ஒன்றே. நரியைப் பரியாக்குவதாக நம்பூதிரி கூறுவதில் வியப்பில்லை; நக்சல்பாரிப் புரட்சியாளர்கள் என்று கூறிக் கொள்ளும் சிலரும் அதே நம்பிக்கையைக் கொண்டிருப்பதுதான் வேடிக்கை!

(தொடரும்…)

  1. பொது சிவில் சட்டம் – மாயையும் உண்மையும்
  2. பொது சிவில் சட்டத்தை பார்ப்பனிய இந்து மதம் எதிர்க்கிறது
  3. ‘ஐவருக்கும் தேவி அழியாத பத்தினி’ – இந்திய அரசின் மதச்சார்பின்மை
  4. மரத்தில் மறைந்தது மா மத யானை

சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்தக் கட்டுரை இடம் பெற்றுள்ள நூல் கிடைக்கும்

இந்திய அரசியல் சட்டம் மதச்சார்பற்றதா?

பொது சிவில் சட்டம் குறித்த உண்மைகள்

வெளியீடு :
கீழைக்காற்று
சென்னை – 600 002
044-28412367

விலை : ரூ 40
பக்கங்கள் : 64

ஏசு நாதர் போராட மாட்டாரா ?

267

லகமே ஓய்வெடுக்கும் நள்ளிரவு முழுக்க ஓய்வில்லாமல் எனது ஆலை இயந்திரத்தை இயக்கிவிட்டு, வெளி உலகம் எந்திரமாய் இயங்கிக்கொண்டிருக்கும் காலைப் பொழுதில் நானோ தூங்கி கொண்டிருந்தேன்.

ஏசு கிறிஸ்து
“உங்களின் சகல துன்பங்களையும் கர்த்தராகிய யேசு போக்குவார்”

ஆமென்… உங்களை கர்த்தர் ஆசிர்வதிப்பாராக. உங்களின் சகல துன்பங்களையும் கர்த்தராகிய யேசு போக்குவார். நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். கர்த்தரை நேசியுங்கள். உங்கள் பாவங்களை உடனடியாக மன்னிப்பார். இறுதியாக உங்களுக்கு ஏதேனும் கடன் தொல்லை, குடும்ப பிரச்சனை, நிம்மதியின்மை, எதுவாக இருந்தாலும் எங்களிடம் வந்து சொல்லுங்கள். உங்களுக்காக நாங்கள் ஜெபிக்கிறோம். உங்கள் வாழ்வில் கஷ்டம் நீங்கி ஒளி பிறக்கும்” என

பிரசங்கம் செய்து கொண்டிருந்த சத்தம் கேட்டு, எழுந்து வெளியே சென்று பார்த்த போது எனது வீட்டின் முன் பெரிய வண்டி நின்று கொண்டிருந்தது. அதில் மைக் செட் கட்டப்பட்டிருந்தது. சுமார் 10 பேர் கையில் பிரசுரம், புத்தகம், சாக்லேட், என அனைவருக்கும் வீடு வீடாக சென்று கொடுத்துக் கொண்டிருந்தனர்.

நானும் அவர்கள் அருகில் சென்றேன். எனக்கும் ஒரு புத்தகம், சாக்லேட் கொடுத்தார்கள். அங்கே மைக்கை பிடித்து பேசிக்கொண்டிருந்தவரிடம் சென்று,

“ஐயா ஒரு நிமிடம்” என்றேன்.

“ம்….. சொல்லுங்கள்” என்றார்.

“பிரச்சனை இருந்தால் எங்களிடம் சொல்லுங்கள் என்று கூறினீர்கள், அதான் வந்தேன்” என்றேன்.

அவரும் மிகுந்த மகிழ்ச்சியோடு,

“ம்…! வாங்க! வாங்க! என்ன பிரச்சனை” என்று ஆவலாக கேட்டார்.

“ஐயா போன வாரம் கரண்டு பில் விலைய ஏத்திட்டாங்க. அத கொஞ்சம் குறைக்க முடியுமா” என்றேன்.

அவருடைய மகிழ்ச்சியான முகம் சற்று சுருங்கியது. சிறிது நேரம் யோசித்து விட்டு,

“ம்…! கண்டிப்பாக, ஆண்டவராகிய யேசு கிறிஸ்து தங்களின் ஜபத்தால் மனமுருகி அந்த அதிகாரத்தை கொண்ட மனிதரிடம் நெருங்கி தங்களின் கஷ்டத்தை வெளிப்படுத்தி….”

இடையே நான் குறுக்கிட்டு, தன்மையாக “ஐயா கொஞ்சம் நில்லுங்க. கரண்ட் பில்ல குறைக்க முடியுமா? முடியாதா?” எனக் கேட்டேன்.

அதற்கு அவர் “கண்டிப்பா முடியும்பா, அதுக்கு நீங்கள் ஆண்டவரிடம் ஜெபித்தால் விலை குறையும்” என்றார்.

“நான் இங்கே ஜெபித்தால் தமிழக அரசு எப்படி விலைய குறைக்கும்?”

“நீங்கள் ஜெபிக்கும் போது அந்த அதிகாரம் கொண்ட நபரிடம் யேசு சென்று உங்கள் கஷ்டங்களை எடுத்து கூறுவார். உடனே அவரும் மனமிறங்கி விலையை குறைத்து விடுவார்.”

“நீங்க சொல்றபடி, ஒ.பன்னீர்செல்வத்திட்ட இயேசு சொல்லி, அவரு விலைய குறைச்சுருவாரா?”

(பதில் கூறாமல் சிரித்து மழுப்புகிறார்).

“ஐயா, கூடங்குளம் மக்கள் இன்னைக்கில்ல, 3 வருஷமா ஆண்டவரை ஜெபித்துக்கொண்டுதான் இருக்காங்க. ஆனாலும் அந்த அணுவுலைய மூட முடியலையே. இப்ப மேலும் ரெண்டு அணு உலைய வேற புதுசா வைக்க போராங்காளாமே!”

அவரால் எந்த பதிலும் சொல்ல முடியாமல் திணறிய போது, அவருடன் வந்திருந்த இன்னொருவர் எனது கையை இருக பிடித்து,“ஐயா எனக்கு மூனு பிள்ளைங்க. நான் எந்த வேலைக்கும் போகல. இருந்தாலும் எனக்கு எந்த கஷ்டமும் இல்ல. நான் நல்லா இருக்கிறேன்” என்றார்.

“ஐயா நீங்க நல்லா இருக்கிங்க. ஆனா என் பிரச்சன இன்னும் தீரலையே. இந்த தெருவுக்கு நான் குடி வந்து 6 வருசத்துக்கு மேல ஆகுது. இந்த ரோடு மழ பெஞ்சா தண்ணியும், சேறுமா வந்து நிக்குது. வீட்டுக்குள்ள வரைக்கும் சாக்கடை கலந்த மழை தண்ணி வருது! நாங்க குடிக்கிற தண்ணி தினந்தோறும் வருவதில்ல! இருக்கிற பிரச்சனைல, இப்ப வேற கேஸ் வாங்கனும்னா, அக்கோண்ட் வேணுமாம்! எதோ பாம் எழுதி தரணுமா… இதெல்லாத்துக்கும் மேல விலவாசி ஏறிக்கிட்டே போகுது. ஆனா கம்பெனில, எங்க சம்பளத்த மட்டும் யேத்த மாட்டேங்குறாங்க. இத எங்க போய் சொல்றது?”

(என்னுடைய பதிலை கேட்டவுடன் அவரை பின்தள்ளிவிட்டு மீண்டும் பழைய நபரே பதிலை கூற ஆரம்பித்தார்.)

“ரோடு சரியில்ல, தண்ணி வரல, கரண்டு பில் யேறி போச்சுனா! இதுக்கெல்லாம் சம்பந்தப்பட்ட தலைவருங்க இருப்பாங்க. அவங்க கிட்ட போய் மனு கொடுங்க!”

“அதெல்லாம், பல தடவ கொடுத்துப் பாத்தாச்சு. ஒன்னும் நடக்கலீங்க!”

“ஒன்னும் நடக்கலன்னா, அதுக்கு மேல நீங்க போராடித்தான் ஆகனும்! எங்களால ஒன்னும் செய்ய முடியாது. நாங்க ஜெபிப்போம். அவ்வளவுதான் எங்க வேல பா!”

(இப்படி நானும் அவரும் பேசிக்கொண்டிருக்கும் போதே அவருடன் வந்திருந்த மற்றவர்கள் ஒருவர்பின் ஒருவராக வண்டியில் ஏறிக்கொண்டு, ஐயா, வாங்க! வாங்க! என்று அழைத்தனர். அவரும் கிளம்ப தயாரானார்.)

“நீங்க எல்லாரும் மக்கள் நல்லா இருக்கனும்னு தானே ஜெபிக்கிறீங்க! அப்போ வாங்க போராடலாம்” என்றதும்,

“நீங்க பெரிய ஆளய்யா! எங்கள ஆள வுடுங்க. எங்களுக்கு வேற வேலை இருக்குது!” எனக் கூறி வேனில் ஏறி சிட்டாக பறந்து விட்டனர்.
—————————————————————————————

யேசு நாதரே போராடாமல் எதுவும் கிடைக்காது என்று சொல்லிவிட்டார் என நினைத்துக்கொண்டு, மீண்டும் தூங்க ஆரம்பித்தேன். அரைமணி நேரத்தில் மீண்டும் ஒரு குரல், எனது செவியை கிழித்தது.

“சார்…. சார்….!”

தன்னார்வ அரசியல்
“2015-க்குள் பட்டினியை குறைக்க வேண்டும் – ஆயிரத்தாண்டு வளர்ச்சி இலக்கு” “எனக்கும் அதே நோக்கம்தான்”

யார் என்று எழுந்து பார்த்தால் சுமார் 15 பேர் இருப்பார்கள். வெள்ளை நிற தொப்பியுடன் கலக்கலான சட்டை பேண்டுடன் காலில் ஷூ (shoe)வுடன் நின்று கொண்டிருந்தனர். எனது, ஹவுஸ் ஓனர் எச்.டி.எஸ்.சி பேங்கில் இந்த வீட்டை அடமானம் வைத்து லோன் வாங்கியிருந்தார். திருப்பி கட்டாததால், ஜப்தி செய்ய வந்திருக்கிறார்களோ என திகைத்து போனேன்.

“என்ன வேணும் சார்?”

“உங்க வீட்டில் பாத்ரூம் இருக்குதா?”

“ங்….இருக்குதே”

“உங்களுக்கு ரோடு வசதி தண்ணி ஒழுங்கா வருதா?”

“ரோடு சரியில்ல. மழை பேஞ்சா சேறும் சகதியும்தான் மிஞ்சும். தண்ணி எடுக்க தினந்தோறும் சண்டதான் வரும்.”

“இல்ல சார். நாங்க உங்களுக்கு ஒரு இலவசமான பயிற்சி தந்து வேலையும் தருகிறோம். அதுக்கு 8-வது படித்திருந்தால் மட்டும் போதும். நீங்க, உங்க தம்பி தங்கச்சி யாரா இருந்தாலும் பரவாயில்ல.”

“நீங்க யாருங்க?”

“நாங்க வேல வாங்கி கொடுக்கிற ஒரு இன்ஸ்டியூட் வச்சிருக்கோம்.”

“அது கவர்மெண்டா? தனியாரா?”

“இது தனியார்தான். ஆனா கவர்மெண்டுக்கு ரிப்போர்ட் அனுப்புவோம்.  நீங்க ஏன் இந்த வேலைய செய்றீங்க. இதனால உங்களுக்கு என்ன இலாபம்?”

“இது ஒரு சேவை சார். வேலை இல்லாதவங்களுக்கு வேல கொடுக்கிறோம்ல”

“இதெல்லாம் கவர்மெண்ட் தானே செய்யனும். எல்லாதுக்கும் வேல கொடுக்கறது கவர்மெண்ட் வேல தான. அதுக்குதானே நாம ஓட்டுப்போட்டு எம்.பி, எம்.எல்.ஏ-ன்னு தேர்ந்தெடுத்து வச்சிருக்கோம்.”

“சார் அரசியல் எல்லாம் பேசாதீங்க? நோ பாலிடிக்ஸ், பிளீஸ். ஏதோ எங்களால முடிஞ்சத செய்றோம்.”

“சரிங்க சார். நீங்க வேலை இல்லாதவங்களுக்கு வேல கொடுக்கறதா சொல்றீங்க. அதுக்கு ஏன் இப்படி தெருத்தெருவா சுத்தறீங்க. இப்பதான் நோக்கியாவிலும், பாக்ஸ்கானிலும் 15,000 பேருக்கு மேல வேல இல்லாம போச்சு. அவங்களுக்கு கொடுக்க வேண்டியதுதானே.”

“இல்ல சார். அவங்கெல்லாம் ஐ.டி. பீல்ட சேந்தவங்க. நாங்க வந்து பிட்டரு, டர்னரு, வெல்டரு ட்ரெயின்ங் மட்டும்தான் கொடுக்கிறோம்.”

“பரவால்ல சார். நீங்க தான் ட்ரெயினிங் கொடுக்கிறீங்கல்ல. அவங்களும் கத்துப்பாங்க.”

“இல்ல சார். அவங்க காண்டக்ட் நம்பர் எங்கிட்ட இல்ல.”

“நான் வாங்கித்தரவா?”

“அவர். இல்ல சார். அவங்க வேற ஊரு. நாங்க இந்த ஊர்ல இருக்கறவங்களுக்கு மட்டும்தான் சொல்லித்தறோம். ஏன்னா எங்க இன்ஸ்டியுட் இங்க தான் இருக்குது. நாங்க தேட்ற ஆளுங்களுக்கு வயசு 30க்குள்ள இருக்கனும் சார். அவங்களுக்கு எல்லாம் வயசு அதிகமா இருக்கும்.”

“வேல எப்படி சார். ஈ.எஸ்.ஐ, பி.எஃப், சம்பளம், நிரந்தரம் (PERMANENT) என எல்லா இருக்கும்தானே?”

“அதெல்லாம் அவங்க கம்பெனி ரூல். அதுல நாங்க தலையிட மாட்டோம். எங்க வேலயே உங்களுக்கு வேல வாங்கி தர்றதோட முடிஞ்சிடும் சார்.”

“அப்ப நீங்க ஆள மட்டும் கொண்டு போய் தள்ளிடுவீங்க. அதன்பிறகு என்ன ஆனாலும் நீங்க கண்டுக்க மாட்டிங்கதானே. கொறஞ்சது ஒருத்தருக்காவது, நிரந்தர வேலை உங்களால் வாங்கித்தர முடியுமா?”

“இல்ல சார். அங்க அவங்களோட பெர்பாமன்ஸ் படி நிரந்தரம் பண்ணுவாங்க.”

“அப்படின்னா நீங்க ட்ரெயினிங் கொடுக்கிறேன்னு சொல்ற பிர்லா கம்பெனியிலேயே 20 வருசமா கான்ட்ராக்டிலதானே வேல செய்றாங்க.”

“இப்பல்லாம் வேல கிடைக்கறதே பெரிய விசயம். இதுல நீங்க பர்மெனட்ன்னு பேசுறீங்களே சார். எதோ எங்களால் முடிஞ்சது வேல வாங்கித்தறோம். அதுவே பெரிய விசயம்.”

“பர்மெனன்ட் இல்லனா கூட பரவால்ல சார். தொடர்ச்சியா அங்கயே வேல கொடுப்பாங்கல்ல.”

“அதுக்கு நான் உத்தரவாதம் கொடுக்க முடியாது சார். அப்படியே உங்கள வேலைய விட்டு தூக்கிட்டா எங்க கிட்ட வாங்க. உங்களுக்கு வேற வேல வாங்கித்தாறோம்.”

“அப்ப இப்படியே ஒவ்வொரு கம்பெனியா சுத்திக்கிட்டே இருந்தா எப்பதான் சார் நாங்க செட்டில் ஆகுரது” என்று கேட்டவுடன், பதில் சொல்ல முடியாமல் ரொம்ப நேரம் யோசித்து விட்டு

“ஓகே சார் உங்களுக்கு வாய்ப்பிருந்தா யாரையாவது அனுப்புங்க” என கூறிவிட்டு ( இந்த விவாதம் சென்று கொண்டிருந்த போதே கூட வந்த அனைவரும் ஒவ்வொருத்தராக சென்றுவிட்டனர் ) வந்த வழியே அவர்கள் சென்று விட்டனர்.

சமீபத்தில், மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்கட்டணத்தை உயர்த்துவது குறித்து மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் என்ற பெயரில் நாடகம் நடத்தியதையும், மின்சாரத்துறை நட்டத்திற்கு காரணம் அரசு தனியாரிடம் மின்கொள்முதல் செய்வது தான் என்பதை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தை ஒத்துக்கொள்ள வைத்ததையும் மனித உரிமை பாதுகாப்பு மையம், புரட்சிகர அமைப்புகளான புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் போராட்டம் தான் மக்களிடம் அம்பலப்படுத்தியது.

மின்கட்டண உயர்வு மட்டுமல்ல மற்ற எல்லா பொருள்களின் விலைவாசி உயர்வு, வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகள் தற்கொலை என மக்களின் கழுத்தை நெறிக்கும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணம் அரசின் தனியார்மய-தாராளமயக் கொள்கைகள் தான்.

மக்களின் பிரச்சனைகளுக்கு காரணம் யார்? அதற்கு தீர்வு என்ன? இந்த அரசு யாருக்கானது? என்பதை மக்களுக்கு புரிய வைத்து, மக்களை அரசியல்படுத்தி அரசுக்கு எதிராக மக்களை கேள்வி கேட்க வைத்து போராட வைப்பதே இன்றைய தேவையாக உள்ளது. அதை விடுத்து, பிரச்சனைக்கான காரணத்தை உணராத வகையில் திசை திருப்பி எதிர்த்து கேள்வி கேட்காத வண்ணம் மக்களின் போர்க்குணத்தை மழுங்கடித்து அடிமைகளாக்கும் வேலையை இது போன்ற பல்வேறு மத நிறுவனங்களும், என்.ஜி.ஓ.க்களும் செய்து வருகின்றன.

– புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, கும்மிடிப் பூண்டி.

வேடிக்கை பார்த்தால் வெள்ளாறு செத்துவிடும் !

0

vellaru-devankudi-notice

டலூர மாவட்டம், விருத்தாசலம் அருகிலுள்ள வெள்ளாற்றுப் பகுதியில் மணல்கொள்ளையால் பாதிக்கப்பட்டு குண்டும் குழியுமாக மாறிய தேவங்குடி, பவழங்குடிக்கு செல்லும் சாலையைப் பராமரிக்காத, புதிதாக சாலை போடாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும்,

  • வெள்ளாற்று மணல் கொள்ளையில் ரூ 150 கோடி மோசடிக்கு உடந்தையான அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மீது கிரிமினல் வழக்குப் போடு-சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடு

என்பதை வலியுறுத்தியும் கடந்த 26-12-2014 வெள்ளியன்று காலை 11 மணி முதல் மதியம் 1.30 மணி வரை கருவேப்பிலங்குறிச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

vellaru-demo-1வெள்ளாற்றுப் பாதுகாப்பு இயக்கமும், மனித உரிமை பாதுகாப்பு மையமும் இணைந்து நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாதிக்கப்பட்ட கிராமங்களிலிருந்து டிராக்டர்களில் திரண்டு வந்த பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். இவை தவிர அங்கு கூடிய பிற பகுதி மக்களும் ஆர்வமாக ஆர்ப்பாட்ட உரைகளையும் முழக்கங்களையும் கேட்டனர்.

vellaru-demo-3

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ம.உ.பா.மைய மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் புஷ்பதேவன் தலைமை ஏற்றார். வெள்ளாற்றுப் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் மருங்கூர் பஞ்சமூர்த்தி மற்றும் கருவேப்பிலங்குறிச்சி ஓய்வு பெற்ற ஆசிரியர் இளங்கோவன், நேமம் சுப்பிரமணி, கார்மாங்குடி அறிவரசன், கோபாலகிருஷ்ணன், சிவபிரகாஷ், மேலப்பாலையுர் சசிகுமார், கீரனூர் ராஜவன்னியன், மருங்கூர் பாலமுருகன் ஓய்வுபெற்ற ஆசிரியர் இராஜகோபால், மதகளிர்மாணிக்கம் தமிழரசன், விருத்தாசலம் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பாளர் தோழர் முருகானந்தம், பவழங்குடி ஓய்வுபெற்ற ஆசிரியர் சிறுத்தொண்ட நாயனார், உழவர் மன்றத்தைச் சேர்ந்த தெய்வக்கண்ணு  ஆகியோர் பேசினர்.

வெயிலையும் பொருட்படுத்தாமல் காலை 11 மணிமுதல் மதியம் 1.30 மணிவரை மக்கள் கூடி நின்று கலையாமல் உரைகளைக் கேட்டனர்.

vellaru-demo-4இறுதியாக ம.உ.பா.மைய மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ உரையாற்றினார்.

மணல்கொள்ளையர்களுக்கு அதிகார வர்க்கம் எப்படி துணைபோகிறது, கொள்ளையைத் தடுக்க வேண்டிய கண்காணிக்க வேண்டிய அதிகாரிகளே எப்படி உடந்தையாகச் செயல்படுகிறார்கள் என்பதையும், இவர்கள் மீது வழக்கு தொடுத்து தண்டிப்பதற்கு இவர்களிடமே மனு கொடுத்து நாம் போராட வேண்டியிருக்கிறது என்பதையும் விளக்கியதுடன் அதிகார வர்க்க்மும் அரசியல்வாதிகளும் மக்களுக்கு தேவையற்ற சதைப்பிண்டங்களாக இருப்பதோடு, நமக்கு எதிராகவும் செயல்படுகின்றனர் என்பதை எளிமையாக விளக்கிப் புரிய வைத்தார்.

“இவர்கள நம்பிப் பயனில்லை. மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை எஸ்.பி. வனத்துறை, கனிம வளத்துறை, வருவாய்த்துறை என மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய இந்த அதிகார வர்க்கமோ மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு மக்களுக்கு எதிராகவே செயல்படுகின்றனர்” என்பதை விளக்கிப் பேசியபோது மக்கள் கைதட்டி ஆரவாரித்து ஆதரவளித்தனர்.

“மந்திரி வருகிறார் என்றால் சாலைகளைச் சரிசெய்யும் அதிகாரிகள் லட்சக்கணக்கான மக்கள் போகும் சாலைகளைச் சரிசெய்யாத்து ஏன்? மந்திரிகளால் மக்களுக்கு ஏதாவது பலனுண்டா? எம்.எல்.ஏ., எம்.பிக்களால் மக்களுக்கு ஏதாவது நல்லது நடந்த்துண்டா? மக்களின் பிரச்சினைகளைக் காது கொடுத்துக் கேட்கவாவது செய்கின்றார்களா?” எனக் கேள்வி எழுப்பி, இந்த மக்கள் விரோத அரசமைப்பை அம்பலப்படுத்தினார்.

“ரோடு போடவில்லை எனில் அடுத்த கட்டமாக நெடுஞ்சாலைத்துறையை முற்றுகையிடுவோம்” என்று விளக்கிப்பேசினார்.

மணல் அள்ளுவதில் நடக்கும் சட்டவிரோதச் செயல்களையும் இதற்குத்துணைபோகும் அதிகாரிகளின் தேசத்துரோகத்தையும் தோலுரித்து, உடனடியாக வழக்குப் பதியவும், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவும் வேண்டியதை விளக்கிப் புரிய வைத்தார்.

vellaru-demo-2ஆர்ப்பாட்டத்தில் பேசிய விவசாயிகள் “வெள்ளாறு எங்கள் ஆறு என்பதை அடிக்கடி சொல்லிப்பாரு. இது நமது பகுதியில் ஓடுகிறது. இதற்கு நாம்தான் உரிமையாளர்கள். நாம்தான் பயனடைகிறோம். ஆற்று மணல்கொள்ளையால் ஆற்றுநீர் பாதிப்படைகிறது. நிலத்தடி நீர் மட்டம் குறைகிறது. இதன் காரணமாக கடல்நீர் உள்ளே வரும். விவசாயம் பாதிக்கப்படும். குடிநீர் கிடைக்காது. எனவே நாம் எச்சரிக்கையடைந்து மணல்குவாரியை மூடியே ஆக வேண்டும். மணல்குவாரியை நிரந்தரமாக மூடும்வரை நாம் போராடியே தீரவேண்டும்” என ஆதங்கத்துடன் பேசினர்.

ஆறு சாகிறதே என விவசாயிகளின் தனது வேதனைகளை அங்கே வார்த்தைகளில் வடித்தனர். இது, தொடர்ச்சியான மக்களது போராட்டத்தின் வீச்சு.

ஆர்ப்பாட்டத்திற்கு நிதி கொடுங்கள் என்று அறிவித்தவுடனே பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்களும் தங்களது பெயரையும் ஊரையும் சொல்லி 50, 100 என கையில் உள்ளதை அள்ளித்தந்தனர்.

வெள்ளாற்றுப் பாதுகாப்பு இயக்கமும் மனித உரிமைப் பாதுகாப்பு இயக்கமும் மனித உரிமை பாதுகாப்பு மையமும் ஒவ்வொரு கிராமத்திலும் பிரச்சாரம் செய்ததை ஒட்டி கிராம மக்களும், பெருமளவில் பொதுமக்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

vellaru-devankudi-banner

தகவல்
மனித உரிமை பாதுகாப்பு மையம்,
விருத்தாச்சலம்

முந்தைய பதிவுகள்

TCS டிசிஎஸ் : ஒரு இன்பக் கனவின் துன்பக் கதை !

31

35 வயதில் வாழ்க்கையை திரும்ப ஆரம்பிக்க முடியுமா?

14 வருடங்களாக தடுப்பலைகளில் எதிர் நீச்சல் போட்டு, அழுது, சிரித்து, சோர்ந்து போய், இரவு முழுதும் கண் விழித்து வேலை பார்த்தது எல்லாம் இப்போது அர்த்தமில்லாமல் ஆகியிருக்கிறது.

இனிமேல் புதிதாக தொடங்க வேண்டுமாம். இன்னொரு நிறுவனத்தில் வேலை தேடி, அங்கும் படிப்படியாக உள்ளே பொருந்தி போய், நமது திறமைகளை வளர்த்துக் கொண்டு, வாழ்க்கையை மறு கட்டமைப்பு செய்ய வேண்டுமாம். இது சாத்தியமா?

டி.சி.எஸ் ஆட்குறைப்பு
ஒரு லெட்டரை கையில கொடுத்து, செட்டில்மென்டையும் கொடுத்து, ஆல் த பெஸ்ட் வேற இடத்தில வேலையப் பாருங்கன்னு அனுப்பிட்டாங்க

இப்படி ஒரு நாள் வரும்னு நினைச்சே பார்த்ததில்ல. ஒரு லெட்டரை கையில கொடுத்து, செட்டில்மென்டையும் கொடுத்து, ஆல் த பெஸ்ட் வேற இடத்தில வேலையப் பாருங்கன்னு அனுப்பிட்டாங்க. “இது மேனேஜ்மென்ட் முடிவு, நான் ஒண்ணும் செய்ய முடியாது. பாருங்க, நானே மன உளைச்சலில் இருக்கிறேன்” ன்னு எச்.ஆர் முறிச்சி சொல்றாரு. எத்தனையோ கடிதங்களில், நீங்க இல்லாம இதை நாம சாதிச்சிருக்க முடியாதுன்னு இவங்க சொன்னதெல்லாம் வெறும் வார்த்தைதானா!

யார்கிட்ட போய் சொல்றது, அடுத்து என்ன என்று தெரியவில்லை.

பக்கத்து இருக்கைகளில் இருக்கறவங்க மனசில, நமக்கும் இது போல நடந்திடுமோன்னு ஒரு பயம்; இது வரை நடக்கலைன்னு ஒரு நிம்மதி; நம்மைப் பார்த்து அழவா, சிரிக்கவான்னு ஒரு குழப்பம்; வாழ்த்து சொல்லி, ஒரு செண்ட் ஆஃப் கொடுத்து அனுப்பிடலாம்னு முயற்சிக்கிறாங்க. அவங்க மேல போட்டியோ, பொறாமையோ எனக்கு இல்லை.

எனக்கு ஏன் இப்படி நடந்தது? கல்லூரியில் ஆரம்பிச்சி இந்த இடத்தை வந்தடைய அப்பப்பா எவ்வளவு உழைப்பு, போட்டிகள். அத்தனையும் ஒரு நொடியில் நொறுங்கி விட்டது.

டி.சி.எஸ் – இந்தப் பெயரை நான் கேள்விப்பட்டது கல்லூரி முதலாம் ஆண்டில். எங்கள் மாவட்டத்திலேயே மிகவும் பிரபலமானது எங்கள் கல்லூரிதான். இங்கு படித்தால் அடுத்து நேரே டி.சி.எஸ்தான் என்று விளம்பரம் செய்திருந்தார்கள். டி.சி.எஸ் என்றால் டாடா கன்சல்டன்சி சர்வீஸ் என்பதையும் அங்குதான் தெரிந்துகொண்டேன்.

டி.சி.எஸ் ராக்ஸ்
இங்கு படித்தால் அடுத்து நேரே டி.சி.எஸ்தான் என்று விளம்பரம் செய்திருந்தார்கள்.

பலரின் ரெக்கமன்டேசனுக்கு பிறகு பாங்க் மேனேஜர் கல்விக்கடனுக்கு ஒப்புதலளிக்க, கடனுடன் ஆரம்பித்த கல்லூரி வாழ்க்கை விரைவாக மூன்றாம் ஆண்டை அடைந்தது. அடுத்து காம்பஸ் இன்டர்வியு.

அந்த வயசுக்கே உண்டான சுய சந்தேகம், நாம உண்மையிலேயே வொர்த்துதானா, நம்மையும் ஒரு ஆளா மதிப்பாங்களான்னு கேள்விகள். அதை நிரூபிச்சிக்க ஆட்ட சவடால்கள், போட்டிகள், ஓட்டங்கள், வேகங்கள், தேர்வுகளில் மதிப்பெண் கூடுதல்/குறைவு என்று ஓடிக் கொண்டிருந்தாலும், ஒரு வேலை என்பதுதான் அல்டிமேட் அங்கீகாரம் என்று தோன்றியது.

டி.சி.எஸ் தான் எங்கள் கல்லூரியில் அதிக நபர்களை வேலைக்கு எடுக்கும் நிறுவனம். அதில் அடித்து பிடித்து எப்படியாவது இடம்பிடித்து விடவேண்டும். மூன்றாம் ஆண்டு ஆரம்பித்ததில் இருந்தே சில ஆயிரங்கள் செலவு செய்து போட்டித் தேர்வுகளுக்கான பல புத்தகங்களை வாங்கி குவித்திருந்தேன்.

எங்களுக்கு முன்னர் டி.சி.எஸ்-ல் வேலைக்கு சேர்ந்து, இப்பொழுது வெளியேற்றப்படவிருக்கும் இருக்கும் சீனியர்கள் அவ்வப்போது கல்லூரிக்கு வருவார்கள்.

“தம்பி எப்படியாவது கேம்பஸ்ல செலக்டாயிருங்கடா. அவ்வளவு தான், லைஃப் செட்டிலாகிரும். நம்ம சீனியர் கலை தெரியும்ல. இப்ப யு.எஸ் போயிட்டாரு. “

“அப்டிடியூட்க்கு இப்பவே பிரிப்பேர் பண்ண ஆரம்பிச்சிருங்க. ஆர்.எஸ்.அகர்வால்னு ஒரு புக். அதை வாங்கிக்கோ. அதிலருந்துதான் கேப்பான்”

“பர்ஸ்ட் த்ரீ மன்த்ஸ் திருவனந்தபுரத்தில ட்ரெயினிங் போடுவாங்கடா. அப்புறம் சென்னை இல்ல பெங்களூர்ல போடுவாங்க. எப்படியும் சென்னைக்கு வந்திரலாம்”.

எங்களின் ‘வளர்ச்சி’க்கு அவர்களால் முடிந்த அளவு வழிகாட்டினார்கள்.

டி.சி.எஸ் சென்னை
“பர்ஸ்ட் த்ரீ மன்த்ஸ் திருவனந்தபுரத்தில ட்ரெயினிங் போடுவாங்கடா. அப்புறம் சென்னை இல்ல பெங்களூர்ல போடுவாங்க. எப்படியும் சென்னைக்கு வந்திரலாம்”.

அப்பாவுக்கோ வேற கவலை – “எல கடைல வச்சி அந்த மேனஜரை பாத்தேன். மூணாவது வருசத்துல ஏதோ இன்டர்வியூ நடக்குமாம்ல. நடந்துச்சானு கேட்டான்?”. இப்படித்தான் அப்பாவை ஏற்றிவிடுவார் அந்த பேங்க் மேனேஜர். மூன்றாண்டுகளில் பேங்க் லோனும் என்னுடன் சேர்ந்து வளர்ந்திருந்தது.

“நம்ம தென்காசி சித்தப்பா பையன் இப்படித்தான் …காம்ப்ஸ்.. அமெரிக்கா. எப்பிடியாவது பல்லக் கடிச்சிட்டு ஒரு ரெண்டு வருஷம் நல்லா பிரிப்பேர் பண்ணிட்டா லைஃப்ல செட்டில் ஆகிறலாம்“ என பல சக்சஸ் ஸ்டோரிகளை எடுத்துவிடுவார்கள் சொந்தக்கார ஷிவ்-கேராக்கள். “உங்க பையன் கையில தான் எல்லாம் இருக்கு” என்று தான் அநேகமாக முடிப்பார்கள். அந்த சமய்ங்களில் எல்லாம், பொருள் தெரியாத பார்வையில் என்னை பார்ப்பார் அப்பா.

காம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைத்தால் தான் வாழ்க்கை. அதை இழந்தால் அவ்வளவுதான் என்ற நிலைமை. வேலை இல்லை என்பதோடு எதற்கும் லாயக்கில்லாதவன் என்ற முத்திரையும் ஊரார், உறவினர்கள் மத்தியில் குத்தப்படும். கல்விக்கடன் வேறு. வெளிய போய் ஃபார்ம் நிரப்பி அனுப்பி, தெருத்தெருவா சுத்தி கம்பெனி கம்பெனியா ஏறி இறங்கணுமான்னு ஒரு பதட்டம்.

கல்விக் கடனை அடைக்க வேண்டும், வீட்டை இடிச்சிட்டு பெரிய வீடா கட்டணும்; அக்கா திருமணம்; ஊர் உறவு மத்தியில எப்படியும் ஒரு ஆளா ஆகவேண்டும்; இதை விட எனக்கு பெரிய ஆசைகள் அப்போது இருக்கவில்லை. இதை நிறைவேற்ற இருக்கும் ஒரே வழி இந்த கேம்பஸ் இன்டர்வியூ; அதுதரப்போகும் ஐ.டி துறை வாழ்க்கை.

அதைப்பெற கடினமாக உழைத்தேன். “டி.சி.எஸ் இன்டர்வியூ கொஸ்டீன்ஸ்” என்று கூகுளில் தேடினால் எத்தனை பக்கம் கிடைக்கும்.அதில் என்னென்ன்ன கேள்விகள் இருக்கும் என்பது வரை எனக்கு அப்போது அத்துப்படியாகியிருந்தது.

எனது முன்னேற்றத்துதாக உழைப்பதாக நினைத்துக்கொண்டு என்னை அறியாமலேயே டி.சி.எஸ்சின் தேவைக்கு உகந்த புராடக்ட்டாக (Product – செய்பொருள்) நான் மாறிக்கொண்டிருந்தேன். அதற்குத்தான் அத்தனை செலவு, அத்தனை முயற்சி.

”யூ ஆர் எ புராடக்ட். யூ ஹவ் டூ செல் யுவர்செல்ஃ” என்று பின்னாட்களில் இதே நிறுவனத்தில் எனக்கு வகுப்பெடுத்தார்கள். ஆனால் அவர்கள் சொன்னது “யூஸ்&த்ரோ புராடக்ட்” (பயன்படுத்தி விட்டு எறியும் பொருள்) என்பதை அவர்கள் மறைத்து விட்டார்கள். எனக்கும் அப்போது தெரிந்திருக்கவில்லை.

இங்கிலீஷ் மீடியம்
இங்கிலீஷ் மீடியம்னு பணத்த கொட்டி படிக்க வெச்சாலும் இங்கீலிஸ்ல பேசணும்னு வாயத் தொறந்தா காத்துதான் வந்து கொண்டிருந்தது.

அடுத்த பிரச்சனை ஆங்கிலம். அப்பா, இங்கிலீஷ் மீடியம்னு பணத்த கொட்டி படிக்க வெச்சாலும் இங்கீலிஸ்ல பேசணும்னு வாயத் தொறந்தா காத்துதான் வந்து கொண்டிருந்தது. அதை சரிசெய்ய சில “ஷிவ்-கேரா”க்களின் ஆலோசனைப்படி தினமும் காலை மாலை மூன்று டோஸ் இந்து பேப்பரை எனக்குள் திணித்துக்கொண்டிருந்தேன். கூடுதலாக “மை நேம் இஸ்….” செல்ஃப் இன்ட்ரோவை மனப்பாடம் செய்துவிட்டிருந்தேன்.

கேம்பஸ் இண்டர்வியூக்கான அந்த நாளும் வந்தது. இரண்டாம் ஆண்டில் படித்த எலெக்ட்ரானிக்ஸ் பாடத்திலிருந்து ஒரு அடிப்படைக் கேள்வி. தேர்வு எழுதியதோடு அதை மறந்து விட்டிருந்தேன். இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியாகியிருந்த புதிய தொழில்நுட்பம் பற்றிய ஒரு கேள்வி என அடுக்கடுக்கான பல கேள்விகள்.

சட்டை எல்லாம் வேர்வையில் நனைந்திருந்தது. இண்டர்வியூ நடந்த ஏ.சி அறைக்குள்ளும் அவ்வளவு வேர்த்திருக்கிறது, டி.சி.எஸ் வேலை இல்லை என்று ஆகி விட்டது! சர்வாங்கமும் தளர்ந்து சோர்வாக வெளியில் வந்தேன். யாரிடமும் பேசவே பிடிக்கவில்லை. நேராக வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். “சில சமயம் ஸ்ட்ரெஸ் இண்டர்வியூன்னு வைப்பாங்க, அதுமாதிரி கேட்டிருப்பாங்க. பரவாயில்ல விடு, வேற கம்பெனில கிடைச்சிரும்”னு நண்பர்கள் ஆறுதல் சொன்னாங்க.

இரண்டு நாட்களில் முடிவை அறிவித்திருந்தார்கள். 50 பேர் பட்டியலில் என் பெயருமிருந்தது. அதல பாதாளத்திலிருந்து சிகரத்தில் ஏறி விட்டது போல இருந்தது. ஜிவ்வென்று பறந்தது மனம். கனவில் நடப்பது போல அந்த மாலை கழிந்தது. வீட்டுக்கு வந்து நல்ல சேதியைச் சொல்லி விட்டு செட்டில் ஆனேன். டாடாவின் கரங்களுக்குள் விழுந்து விட்டேன். இனிமேல் நமக்கு விடிவுகாலம்தான் என்று நினைத்துக் கொண்டேன்.

இன்று மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வந்திருக்கிறேன். மீண்டும் வேலை தேட வேண்டும். மீண்டும் இன்டர்வியூ; வங்கிக்கடன்; கல்விக்கு பதிலாக வீடு, கார் கடன். ஆனால் இப்பொழுது 21 வயது இளைஞன் அல்ல நான். என் இளமையை நிறுவனத்தின் வளர்ச்சிக்காகவே செலவிட்டு தளர்ந்திருக்கிறேன்.

இருண்ட வாழ்க்கை
ஏதாவது சொல்லி சமாளிக்கலாம். நாளை மறுநாள்? அதற்கு அடுத்த நாள்?. வாழ்க்கையே இருண்டது போல் இருக்கிறது.

இனி கல்லூரி நாட்களைப்போல என்னால் மாற முடியாது. அப்படி என்னை தயார்படுத்திக் கொண்டாலும் என் முன் உள்ள வாய்ப்புகள் மிகக்குறைவு.

பணிநீக்கம் செய்யப்பட்ட எங்களுக்கு வேறு நிறுவனங்களில் வேலை கிடைக்க வாய்ப்பில்லை. ஓரிருவருக்கு கிடைத்தாலும் அதற்கு போட்டி அதிகமாக இருக்கும். வேறு நிறுவனங்களிலும் வேலைநீக்க நடைமுறையை தொடர்ந்தால் எம்மை போன்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இன்னும் போட்டி அதிகரிக்கும். என்ன செய்வது என்று குழப்பமாக இருக்கிறது.

பள்ளிமுடிந்து வரும் குழந்தையிடம் என்ன சொல்வது? நாளை அலுவலகத்திற்கு செல்லவில்லையா என்று கேட்டால் என்ன பதில் சொல்வது? ஏதாவது சொல்லி சமாளிக்கலாம். நாளை மறுநாள்? அதற்கு அடுத்த நாள்?. வாழ்க்கையே இருண்டது போல் இருக்கிறது.

பேரண்ட் டீச்சர் மீட்டிங்-ன் போது நமக்கு மரியாதை கொடுப்பார்களா? ஃபாதர் நேம் என்ன என்ற கேள்விக்கு அடுத்த வழமையான கேள்வியான “வாட் இஸ் யூவர் ஃபாதர்?” என்று கேட்டால் மற்ற குழந்தைகளின் முன்னால் என் குழந்தை கஷ்டப்பட்டுவிடுவானோ என்று எனக்கு கவலையாக இருக்கிறது. முன்னர் எனக்கும் இது நேர்ந்திருக்கிறது. நிறுவனத்திற்கு வந்த புதிதில். அப்பா தள்ளுவண்டி கடை வைத்திருக்கிறார் என்று சொல்ல கூச்சப்பட்டு “பிசினஸ்” செய்கிறார் என்று பொதுவாக சொல்லியிருக்கிறேன்.
இதென்ன அபத்தம்? வேலையே இல்லை என்றான பிறகு தற்போதைய பள்ளியில் படிக்கவைக்க முடியுமா? அவர்கள் கேட்கும் பணத்தை கொடுக்கமுடியுமா? என்பதுதானே கவலைப்பட வேண்டிய விசயம்.

நான் தவறு செய்துவிட்டேன். வேலை நீக்கம் செய்யும்போதே நிறுவனத்துடன் எதிர்த்து போராடியிருக்க வேண்டும். போராடினால் வேலை கிடைத்திருக்குமா? தெரியவில்லை. ஆனால் இப்பொழுது போல வேலைக்கான வாய்ப்பு முழுமையாக அடைக்கப்பட்டிருக்காது என்பது நிச்சயம். இப்போதைய மன உழைச்சலுக்கு பதிலாக போராட்ட உணர்வு இருந்திருக்கும். என் சுயமரியாதையை காப்பாற்றிக் கொண்டிருப்பேன்.

தொடரும்……

(ஐ.டி துறை நண்பர்களின் உண்மைக்கதைகள் இங்கே இடம்பெறுகின்றன)

– ரவி.

தொழிற்சங்கம்
மன உழைச்சலுக்கு பதிலாக போராட்ட உணர்வு இருந்திருக்கும். என் சுயமரியாதையை காப்பாற்றிக் கொண்டிருப்பேன்.

தொழிற்சங்கமாய் திரள்வோம்!
லே ஆஃப் எனும் கார்ப்பரேட் ஒடுக்குமுறையை முறியடிப்போம்!

பேஸ்புக் : https://www.facebook.com/VinavuCombatsLayoff
தொலைபேசி : 9003198576
மின்னஞ்சல் : combatlayoff@gmail.com

– வினவு, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, சென்னை

கொலைகார அரவிந்தர் ஆசிரமம் முற்றுகை – புதுச்சேரி பு.ஜ.தொ.மு

0

பாலியல் வன்கொடுமைக் கூடாரமான புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமம் முற்றுகை!

டந்த 18.12.2014 அன்று புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமக் குடியிருப்பில் வசிக்கும் ஒரே குடும்பத்தில் பெற்றோர், 5 மகள்கள் என மொத்தக் குடும்பமும் கடலில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததில் தாய் உட்பட 3 பேர் இறந்துள்ளனர். தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மயக்க நிலையில் இருந்த ஒரு பெண்ணை இருவர் வன்புணர்ச்சி செய்த கொடுமையும் நடந்துள்ளது.

அரவிந்தர் ஆசிரமம் தற்கொலை
ஆசிரமக் குடியிருப்புக் கட்டிடத்தின் மேல் ஏறி தற்கொலைக்கு முயன்றனர் (படம் : நன்றி thehindu.com )

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரசாத், தனது மனைவி மற்றும் 5 மகள்களுடன் 1970-களின் துவக்கத்தில் ஆசிரமத்தில் தங்கி சேவை செய்து வந்தார். அரவிந்தர் மேல் உள்ள பற்றால், அவரின் 5 மகள்களும் ஆசிரமத்திற்கு சொந்தமான பள்ளியிலேயே படித்து, ஆசிரம விடுதியில் தங்கி சேவை செய்து வந்தனர்.

கடந்த 2002 -ம் ஆண்டில் ஆசிரமத்தைச் சேர்ந்த சிலர் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வருவதாகக் கூறி, ஆசிரம நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும், நிர்வாகம் நடவடிக்கை எதுவும் எடுக்காமல், புகார் கூறிய பெண்களில் ஒருவர் மீது நடவடிக்கை எடுத்தது. ஆனால், அவர்களுக்கு பாலியல் தொந்தரவுகள் தொடர்ந்த வண்ணம் இருந்தது. அதைப் பொறுக்க முடியாமல் சகோதரிகள் 5 பேரும், 2004-ம் ஆண்டு காவல்துறையில் புகார் தெரிவித்தனர்.

அந்தப் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், ஆசிரமத்தில் நடப்பவைகளை வெளியில் சொல்லக் கூடாது என்ற ஆசிரம விதியை மீறிவிட்டதாகச் சொல்லியும், விசாரணை என்ற பெயரில் கட்டப் பஞ்சாயத்து செய்தும், அந்தப் பெண்கள் மீதே குற்றம் சுமத்தி, ஆசிரமத்தை விட்டு வெளியேறச் சொல்லி நடவடிக்கை எடுத்தது. தனக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட அநீதிகளுக்கு எதிராக உள்ளூர் நீதிமன்றம் முதல், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் வரை சென்று தொடர்ந்து 12 ஆண்டு காலம் வரை போராடியும் இறுதியில் தோல்வியே கண்டனர். மேலும், ஆசிரம விடுதியில் இருந்து வெளியேற மறுத்துப் போராடிய அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு தொடரப்பட்டு, கட்டாய வெளியேற்றம் செய்ய உத்தரவிட்டது உச்சநீதி மன்றம்.

தாங்கள் நேசித்த ஆன்மீகப் பணியில், தாங்கள் தேடிய அமைதி கிடைக்காமல், பாலியல் தொந்தரவுகளின் மூலம் அமைதியற்ற வாழ்க்கையையே வாழ்ந்தனர். மேலும், தாங்கள் நம்பிய அரசும், நீதிமன்றமும், நீதியை மறுத்து கைவிட்டதால் தாங்கள் இந்த முடிவை எடுத்ததாக, தற்கொலையில் இருந்து காப்பாற்றப்பட்டவர்கள் குமுறி வெடிக்கின்றனர். தனக்கு இழைக்கப்பட்ட அநீதியால் மனம் நொந்து, இந்த தற்கொலை சம்பவத்திற்கு 2 நாட்களுக்கு முன்னேயே தாங்கள் வசித்து வந்த ஆசிரமக் குடியிருப்புக் கட்டிடத்தின் மேல் ஏறி தற்கொலைக்கு முயன்றனர். அப்போது காவல்துறை தடுத்து காப்பாற்றி விட்டனர். அவர்களின் இரண்டாவது முயற்சியில் 3 பேர் இறந்துவிட்டனர்.

அரவிந்தர் ஆசிரமம் பாதுகாப்பு
ஆசிரமத்திற்கு அரச பாதுகாப்பு. (படம் : நன்றி thehindu.com )

இந்த தற்கொலை மரணங்களை, ஆசிரமத்திற்கு எதிராகப் போராடி வெற்றி பெற முடியாததால் இந்த முடிவை எடுத்தனர் என சுருங்கிப் புரிந்து கொள்ளக் கூடாது. ஏனெனில், இன்று இந்தியாவில் உள்ள அனைத்து ஆசிரமங்களும், மடங்களும், ஆதினங்களும் இந்திய நாட்டின் எந்த சட்டத்திற்கும் கட்டுப்படாத வகையில் தனி சாம்ராஜ்ஜியங்களை நடத்தி வருகின்றன. இவை, பாலியல் வக்கிரங்களின் ஒட்டு மொத்த உருவமாகவும், காமக் களியாட்டக் கூடாரங்களாகவும், நிதி, ஊழல், முறைகேடுகளுக்குப் பெயர் போனதாகவும் மாறிவிட்டன. இதற்கு, புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமும் விதிவிலக்கல்ல.

புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்திற்கு கிட்டத்தட்ட ரூ 7500 கோடிக்கும் மேல் சொத்துக்கள் உள்ளது. ஆசிரமத்திற்கு சொந்தமான, ஆரோவில் என்ற பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் ஆசிரமத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. இங்குள்ள தொழிலாளர்களின் பிரச்சினைகள் எதுவும், புதுச்சேரி தொழிலாளர் துறையின் பார்வைக்குக் கூட வராது. ஆசிரமத்தின் அதிகாரம் வானளாவியதாக இருப்பதால், தொழிலாளர் துறையும் தலையிட முடியாது. அது மட்டுமின்றி, ஆசிரமத்திற்கு சொந்தமாக சொகுசு பங்களாக்கள், பால் பண்ணை, பள்ளிக்கூடங்கள், பழ – காய்கறித் தோட்டங்கள், பெட்ரோல் பங்க், பேக்கரி மற்றும் பல்பொருள் அங்காடிகள் என பல தொழில்கள் உள்ளன.

அரவிந்தர் ஆசிரமம்
புதுச்சேரியின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் முதல் கவர்னர், அரசு அதிகாரிகள் வரை ஆசிரம நிர்வாகத்தின் யோக்கியதையைப் பற்றிப் பேசுவதே இல்லை. (படம் : நன்றி ndtv.com)

புதுச்சேரியின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் முதல் கவர்னர், அரசு அதிகாரிகள் வரை ஆசிரம நிர்வாகத்தின் யோக்கியதையைப் பற்றிப் பேசுவதே இல்லை. இது போன்ற பிரச்சினைகள் எழும் போது கூட அதைப் பற்றி மூச்சு கூட விடுவதில்லை. இந்த தற்கொலை சம்பவத்திலும் அதே நிலைமை தான். ஆனால், இந்த அநீதியை எதிர்த்துப் போராடும் சமூக ஜனநாயக சக்திகளின் போராட்டத்தை, சட்டம் – ஒழுங்கு சீர்குலைவு எனச் சொல்லி, சட்டம் – ஒழுங்கைக் காப்பாற்ற கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கவர்னர் அறிவிக்கிறார் எனில், இதிலிருந்து அரவிந்தர் ஆசிரமத்தின் அதிகாரங்களைப் புரிந்து கொள்ள முடியும். இப்படிப்பட்ட அதிகாரம் கொண்ட ஆசிரமத்தைத் தான் தனியொரு குடும்பமாக நின்று 12 ஆண்டுகள் போராடி தோற்றிருக்கின்றனர் பாதிக்கப்பட்டவர்கள்.

அதனால் தான், இது தற்கொலை அல்ல! புதுச்சேரி அரசும், நீதிமன்றமும் அரவிந்த் ஆசிரமும் நீதியை மறுத்து திட்டமிட்டு செய்த படுகொலை! என நாம் சொல்கிறோம்.

புதுச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரமம், காமக் களியாட்டக் கூடாரமாகவும், நிதி ஊழல் உள்ளிட்ட முறைகேடுகளின் ஒட்டு மொத்த உருவமாகவும் திகழ்கிறது. ஆசிரமத்தில் நடக்கும் விசயங்களை வெளியில் சொல்லக் கூடாது என்ற ஆசிரம விதியிலிருந்தே, இது மர்மங்களின் கூடாரம் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

இந்த விசயங்களை மக்களுக்கு உணர்த்தும் வகையில்,

அரவிந்தர் ஆசிரமம் - பு.ஜ.தொ.மு முற்றுகை

  • அரவிந்தர் ஆசிரமத்தில் பாலியல் வன்கொடுமையால் 3 பெண்கள் தற்கொலை!
  • இது தற்கொலையல்ல! அரசு நடத்திய படுகொலை!

மத்திய மாநில அரசுகளே!

  • அரவிந்தர் ஆசிரமத்திற்குச் சொந்தமான சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்!
  • ஆசிரமம் என்ற பெயரில் காமக் களியாட்டம் நடத்திய ஆசிரம நிர்வாகிகளைக் கைது செய்!
  • அரவிந்தர் ஆசிரமத்தை அரசே ஏற்று நடத்து!

அரவிந்தர் ஆசிரமம் - பு.ஜ.தொ.மு முற்றுகைஉழைக்கும் மக்களே

  • முற்றும் துறந்த ஆன்மீகவாதிகளுக்கு சொகுசு பங்களா, பால்பண்ணை, பழக்காய்கறித் தோட்டங்கள் எதற்கு?
  • மடங்கள், ஆதினங்கள், ஆசிரமங்கள், கோயில்களின் சொத்துக்களை மக்கள் போராட்டத்தின் மூலம் பறித்தெடுப்போம்!

அரவிந்தர் ஆசிரமம் - பு.ஜ.தொ.மு முற்றுகைஎன்ற முழக்கங்களின் கீழ் 23.12.2014 அன்று அரவிந்தர் ஆசிரமம் முற்றுகை என அறிவித்து, போலீசு போட்டிருந்த இரண்டு அடுக்குப் பாதுகாப்பில், முதல் அடுக்குப் பாதுகாப்பை மீறி, ஆசிரமத்தை நோக்கி புதுச்சேரி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தோழர்கள் முன்னேறினர். ஆசிரமத்தில் அருகில் தடுப்பரண்களை ஏற்படுத்தி தோழர்களைத் தடுத்து கைது செய்து மாலையில் விடுவித்தது போலீசு.

இந்த முற்றுகை பக்தி, ஆன்மீக சேவை என்று சொல்லிக் கொண்டு உழைக்கும் மக்களை அறியாமை இருளில் தள்ளும் அரவிந்தர் ஆசிரமத்திற்கு எதிரான போராட்டத்தின் துவக்கப் புள்ளி தான். நமது தொடர்ந்த போராட்டத்தின் மூலம், உழைக்கும் மக்களை விழிப்படையச் செய்யும் வரை தொடரும் வகையில் அடுத்த கட்ட போராட்டங்களுக்கு ஆயத்தமாகி வருகிறது புதுச்சேரி புஜதொமு.

தகவல்:

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி

மேலும் படிக்க

வேலை வாய்ப்பு அலுவலகங்கள் – நேரடி ரிப்போர்ட்

2

kanchiளர்ச்சி, முன்னேற்றம், வேலை வாய்ப்பு என்கிறது தனியார் மய, தாராள மய, உலகமயக் கொள்கை. மேக் இன் இந்தியா என்ற பெயரில் இந்தியாவக்கு பன்னாட்டு நிறுவனங்களை கொண்டு வருவதன் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெருக்கலாம் என்கிறார் மோடி. ஆனால், வேலை வாய்ப்பு வழங்குவதற்காக செயல்பட்டு வரும் அரசின் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் நிலை என்ன?

வேலை தேடும் இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் வேலைக்கு செல்கிறார்களா? அவர்களுக்கு, இந்த அலுவலகம் எவ்வாறு உதவுகிறது? வேலையற்ற இளைஞர்கள் அரசின் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் செயற்பாட்டைப்பற்றி என்ன கருதுகிறார்கள்?

சென்னை மாநகர் மற்றும் புறநகர் காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு அலுவலங்களுக்கு சென்றோம்.

வேலைவாய்ப்பு அலுவலக ஊழியர்கள், வேலைத்தேடி அலுவலகத்திற்கு வரும் இளைஞர்கள், அவர்களுடன் வந்த பெற்றோர், உறவினர் மற்றும் அலுவலகத்தின் அருகில், ஆன்லைன் பதிவு மற்றும் ஜெராக்ஸ் கடை வைத்திருப்பவர்களிடமும் உரையாடினோம். அவர்களின் வாக்குமூலங்களை கேளுங்கள்!

ஜனனி, கொளத்தூர், சென்னை, (2011-ல் பி.காம்):

ஜஸ்ட், ரிஜிஸ்டர் பண்ணி வைக்கிறேன். வேலை, கிடைக்குமா கிடைக்காதா என்பது எனக்கு தெரியாது. இது வீட்டெல இருக்குறவங்க விருப்பம். எனக்கு, அப்பா இல்ல. பொண்ணாச்சே, புருஷன் பாத்துக்குவானோ இல்லையோனு அம்மாவுக்கு பயம். ஏதாவது எதிர்த்து சொன்னா அம்மா கோபப்படும்.

காண்ட்டீபன்,சென்னை. (B,E, 2014):

நான், அவரேஜ் பாஸ் 75%. கேம்பஸூல வேலைக்கு, ஆவல. 90% எடுத்தவனே அங்க க்யூல நிக்கிறான். இங்க ரிஜிஸ்தர் பண்ணி வைச்சா, கவர்மென்ட் எக்ஸாம் போது இந்த நெம்பர் கேக்கிறான், அதுக்காக இது.

guindy
அரசு வேலை வாய்ப்பு அலுவலகம், கிண்டி

சேகர், காஞ்சிபுரம், வயது 45 (SSLC)

பதிவு செய்து 18 வருடமாக ஒரு லெட்டர்கூட வரல. கூட இருந்தவங்களெல்லாம் வேலைக்கு போய்ட்டாங்க. எனக்கு வராததக்கு என்ன காரணம்னே தெரியல. 30, 40 முறை வந்து போயிருக்கேன். 10-வது பாஸ். கவர்மெண்ட் வேலையில்லானாலும் எதாவது சின்ன தொழிலுக் குடுத்தாக்கூட பொழைச்சிக்குவேன். வேலை எதுவும் இல்ல. 45 வயசாயிடுச்சி. என்கூட இருந்தவங்க எல்லாம், வாத்தியாரு, போலிசு, எல்ஐசி னு பெரிய பெரிய வேலை செய்றாங்க, என்னை மதிக்கமாட்டாறங்க. என் பையன் வக்கீலுக்கு படிக்கிறான் செங்கல்பட்டுல. ஒருபொண்ணு 10வது செய்யூர்ல படிக்குது. இன்னொரு பொண்ணு 8 வது படிக்கிது. என் பையனே வேலைவாங்கிடுவான் ஆனா எனக்கு வேலை கிடைக்காது உண்மைதான். வாழ்க்கையே தலைவலியா இருக்கு. உள்ளப்போய் எழுதிக்கொடுத்துட்டு வந்திடுறேன் சார். (இவர் ஒரு தலித்)

வசந்தா, வயது 45, காஞ்சிபுரம். வேலைவாய்ப்பு அலுவலகம் எதிரில் பிரவுசிங் சென்டர் வைத்து நடத்துபவர்.

நிறையபேருக்கு கவர்மெண்டு மேல இருந்த நம்பிக்கையே போயிடுச்சி, அதுவும் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு கூட்டம் குறைஞ்சதுக்கு காரணமா சொல்லலாம், அதில்லாம இப்ப நிறையபேருக்கு கம்பியூட்டர் தெரிஞ்சி இருக்கறதாலே ஆன்லைனிலயே பதிவு, அடிஷனல், ரினிவல் பண்ணிடுறாங்க. வர்றவங்கள்ல, ஊனமுற்றவர்கள், விதவைகள் நம்பிக்கையோடு வந்து, போறது பாக்கறதுக்கு கவலையா இருக்கும்.

ராமு, முதியவர், காஞ்சிபுரம்:

என் பேத்திக்காக வந்திருக்கேன். இதுவரைக்கும் எங்க குடும்பத்துல ஒருத்தருக்கும் வேலை கிடைக்கல. நான் அந்த காலத்துலயே 8-வது படிச்சிருக்கேன். நான் பாக்கறவங்கள்ள பலபேரு ஒரே குடும்பத்துல நிறைய கவர்மெண்ட் வேலையில இருக்காங்க. ஏன்? நமக்கு மட்டும் கிடைக்க மாட்டேன்ங்குதுனு தெரியல. பேத்திக்கு வேலை கிடைச்சிடும்னு நம்பிக்கையெல்லாம் இல்லை. நிறைய படிக்க வைச்சிருக்கேன் எம்புள்ளய, கவர்மெண்ட் வேலையா இருந்தா நிரந்தரமா இருக்கும். சம்பளம் கம்மியா இருந்தாலும், வேலைநேரம் கரெக்டா இருக்கும், பொம்பள புள்ளக்கி சரியானதா இருக்கும்னு தான் அலைய வேண்டியதா இருக்கு.

விஜியா, காஞ்சிபுரம். படிப்பு M.COM

ரினிவலுக்காக வந்திருக்கேன். கண்டிப்பா வேலை கிடைக்காதுனு தெரியும். இருந்தாலும், பார்மலிட்டிக்காக வந்தேன். இல்லைனா எப்படியாவது எங்களையே குறை சொல்லிடுவாங்க. பதிவு பண்ணி வச்சிருக்கலாம் இல்லயானு. எங்கப்பா, விவசாயம் பாக்கறாரு. நான் வாலாஜாபாத் ல கடையில கேசியரா வேலைப் பாக்கிறேன். இந்த வேலையை முடிச்சிட்டு கடைக்கு போய்டனும். 2007-ல் பதிவு செய்தேன். இதுவரைக்கும் ஒரு கார்டு கூட வரல. கேட்டா, உள்ளிருக்கறவங்க சரியா பதில் சொல்ல மாட்டேன்றாங்க. அதியே தெரிஞ்சிரும், வேலை கிடைக்காதுனு. என் பிரண்ட்சுக்கும் யாருக்கும் இதுவரைக்கும் வேலை கிடைக்கல. ஆனா சிலரு மட்டும் டிஎன்பிசி எழுதி செலக்ட் ஆகி இருக்காங்க. எனக்கும் அதுலயும் அதிர்ஷ்டம் இல்ல.

துரை, வயது 55, காஞ்சிபுரம். வேலைவாய்ப்பு அலுவலகம் எதிரில் பிரவுசிங் சென்டர் நடத்துகிறார்:

துரை காஞ்சி
துரை, காஞ்சிபுரம்

போன கவர்மெண்ட்ல வேலைவாய்ப்பு அலுவலகப் பட்டியலின் மூப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தாங்க. ஆனா, இந்த கவர்மெண்ட்ல அப்படி கிடையாது. எல்லாத்தையும் டி.என்.பி.சி, ஓபன் கால்ஃபார், அதனால, அதுமேல நம்பிக்கை போய்டுச்சி. கண்டக்டர், டிரைவர் வேலைகளுக்கும் பதிவு செய்த மூப்பு அடிப்படையில அப்ப எடுத்தாங்க. இப்ப, இன்னிக்கி லைசன்ஸ் எடுத்தவன்கூட வேலைக்கு அப்ளை பண்ற சூழ்நிலையா மாத்திட்டாங்க. அதனால, பதிவு செய்து வைத்தும் எந்த பிரயோசனமும் இல்லாத நிலைமை. இதனால, பதிவு பண்ணவங்களும் வேலை கிடைக்காது என்ற மனநிலைமைக்கு வந்துட்டாங்க. அதனால, அலுவலகத்துக்கு வரது சுத்தமா குறைஞ்சிபோச்சி.

தினேஷ் வயது 30 காஞ்சிபுரம்:

எல்லாரும் சொல்றாங்க, கலப்பு திருமணம் செய்துகிட்டவங்களுக்கு முன்னுரிமை இருக்குனு. அதானல என் மனைவியோட பத்தாவது படிப்பை பதிவு செய்ய காத்திட்டு இருக்கோம்.

காமாட்சி, வயது 30, காஞ்சிபுரம்: இரண்டு குழந்தைக்கு தாய், பிரவுசிங் சென்டரில் வேலைபார்ப்பவர்.

எம்பிளாய்மெண்ட் எதிர்ல 6 மாசமா வேலை பார்க்கிறேன். நானும் 12-வது முடிச்சிட்டு பதிவு செய்து வச்சிருக்கேன். 10 வருடமாக காத்திருக்கேன். கவர்மெண்ட் வேலைன்னு சொல்றது படித்த பெண்களுக்கு சிறந்த கணவன் மாதிரி. அது எல்லோருக்கும் கிடைக்கிறது இல்ல. ஆனா அது பெரிய கனவா இருக்கு. நம்பிக்கையில பதிவு செய்து வைத்திருக்கிறேன். என்னப் பொறுத்தவரைக்கும் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சிருச்சினு சொல்றது பொய். அப்போ வெள்ளைக்காரன்கிட்ட அடிமையா இருந்தோம். இப்ப, அரசியல்வாதிங்ககிட்ட அடிமையா இருக்கோம். இதப் பத்தி நிறைய பேசலாம், என் குடும்பம், குழந்தைகள் இல்லனா நிறைய பேசுவேன்.

காஞ்சி காமாட்சி
காமாட்சி, காஞ்சிபுரம்

எவ்ளோ அநியாயம் நடந்தாலும் தட்டிக் கேட்டமுடியாம கிடக்கிறேன். என் குடும்பம் குழந்தைகளை நினைச்சி. பெண்களுக்கு தனியார்கிட்ட வேலைக்குப் போன எந்த மதிப்பும் கிடையாது. மதிப்பு இல்லனாலும் சம்பளம் தேவையாயிருக்குறதால போக வேண்டி இருக்கு. அதுக்குதான் படித்த பெண்களுக்கு கண்டிப்பாக கவர்மெண்ட் வேலை கொடுக்கணும் உறுதியா சொல்லுவேன். ஆனா, நம்ம கவர்மெண்ட் கொடுக்கும் என்ற நம்பிக்கை குறைஞ்சிட்டே வருது. நப்பாசையில காத்திட்டுருக்கேன். இதுவரைக்கும் ஒரு லெட்டர்கூட வரல.

ஆனந்தன், வயது 53, காஞ்சிபுரம். தன்மகளுடன் வந்திருந்தவர், ஆட்டோமொபைல் கடை நடத்துகிறார்.

என் கைத்தொழில் எனக்கு கைகொடுத்து, என் குடும்பத்தையும், என் குழந்தைகளின் படிப்புக்கும் பெருந்துணையாயிருந்தது. அதை வைச்சி, என் பொண்ணை நல்லா படிக்க வைச்சிட்டேன். ஆனா, கவர்மெண்ட் வேலை கிடைக்குமானு தெரியல.அப்படியே, கிடைச்சாலும் அந்தப் பேப்பர் இல்ல, இந்தப் பேப்பர் இல்லனு அனுப்பிடுறாங்களாம். அதனாலதான் பதிவு செய்ய வேண்டியது நம்ம கடமை. என் குடும்பத்துலயே கவர்மெண்ட் வேலைனு இவதான் முதல்ல பதிவு செய்ய வந்திருக்கா. ஏன்னா? நிரந்தரமான வேலை, தனியார்கிட்ட போனா எப்ப மூடுவானு தெரியாது. பாண்டிச்சேரில ஒருகம்பெனி, மெட்ராசுல நோக்கியா இதெல்லாம் பாக்கும்போது நம்ம கொழந்த படிச்சிட்டு நல்ல வேலைக்குப் போகணும்னு ஆசைப்படறது தப்பா? அந்த ஆசைதான் எல்லாருக்கும் இருக்கு. எனக்கும் இருக்கு. என் தொழில என் பொண்ணு தொடர முடியாது. வெளியதான் வேலைக்கு போயாகணும். நம்பிக்கையோட பதிவு செய்துட்டு போறோம். மூணு வருசம் கழிச்சி வரசொல்லிட்டாங்க.

ரேவதி, இன்ஜினியரிங் முடித்த மாணவி: மேலே பார்த்த ஆனந்தனின் மகள்.

எங்கப்பாவின் ஆசைக்காகத்தான் பதிவு பண்றதுக்கு வந்தேன். என் பிரண்ட்செல்லாம் கிண்டல் பண்ணீனாங்க. கவர்மெண்ட்ல வேலையெல்லாம் கிடைக்காது. ஐ.டி கம்பெனிகளின் கேம்பஸ்லதான் ஒர்த்துனு சொன்னாங்க, நிறைய பேர் செலக்ட் ஆகி வேலைக்குப் போயிட்டாங்க, ஆரம்பத்துல 15ஆயிரம் சம்பளம் வாங்கறாங்க. இருந்தாலும், கேம்பஸ்ல செலக்ட் ஆனாலும் எம்பிளாய்மெண்ட் நெம்பர் கேட்பாங்கனுதான் பதிவு பண்ண வந்திருக்கேன். பார்மாலிடிக்காகத்தான் பதிவு பண்றேன். பெரிய அளவுல நம்பிக்கையெல்லாம் இல்ல. அப்பாவுக்காத்தான் வந்தேன்.

கோமதி நாயகம், 55, கிண்டி அரசு வேலை வாய்ப்பு அலுவலகம். ஊர், திருநெல்வேலி.

பெண்ணுக்காக வந்தேன். Msc IT,-யில 85%, ctc கம்பெனியில் வேலை. 5 வருஷமா அங்கு புரமோஷன் இல்ல, சம்பளமும் பெரிசா ஏத்தல. இப்ப 35,000 ரூ சம்பளம். தினமும், இரவு 12.45 க்குதான் வருது. கவர்மென்ட் வேலை கிடைச்சா 10 to 5 வேலை. நாளைக்கு கல்யாணம் முடிஞ்சி நடுராத்திரிக்கு போனா மாப்பள ஒத்துக்குவானா? இப்ப டிரைவரெ 10 பவுன் நகை டூவிலர் கேக்குறான். எங்க சாதியில பொண்ணுக்கு கல்யாணம் பண்ண 10 லட்சம் வேணும். அதன் பிறகு நான் ஊரோட போகவேண்டியதுதான். ஆனால்,இங்க பதிவு பண்றதுக்கே அலையவுடறாங்க.

தெய்வசிகாமணி, வயது 50, காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு அலுவலக ஊழியர்.

சென்னை  சாந்தோம் mnc ஆள் பிடித்தல்
பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆள் பிடிக்கும் கவுன்சிலிங் கூட்டம் – அரசு வேலை வாய்ப்பு அலுவலகம், சாந்தோம்.

இப்ப கவர்மெண்ட் வேலையெல்லாம் கிடைக்காது. பாதிக்கு பாதியா குறைச்சிட்டாங்க, எங்க ஆபிசுலயே 32 பேர் வேலை செய்யணும். ஆனா, 16 வேலை காலியா இருக்கு. பல லட்சம் பதிவாளர்களை டீல் பண்றது 16 பேருதான். அதில 4 பேரு அதிகாரி, 4 பேர்தான் எழுத்தர். மீதிப்பேர் கீழ்நிலை ஊழியர்கள்.

இதுமட்டுமில்லாமல், பிரைவேட் கம்பெனிக்காரனுகளுக்கு ஆள் சேர்த்துவிடனும்.
சுத்துப்பட்டுல இருந்து சென்னையில இருக்கிற கம்பெனிக்காரங்க வரைக்கும் தனக்கு தேவையான ஆட்களை தெரிவு செய்துக் கொள்ள நாங்கதான் ஏற்பாடு செய்து தரணும். அதுக்கான லெட்டருல கலெக்டர் அனுமதி கையெழுத்துப் போட்டு அனுப்பிடுவாரு.
பிறகு, பதிவு செய்திருக்கறவங்களை கூப்பிடுவோம். அவங்ககிட்டயேயும், தனியார் வேலைக்கு போறதால உங்களுடைய எம்பிளாய்மெண்ட் மூப்பு எதுவும் பாதிக்காது. தொடர்ந்து புதுப்பிக்கிணும்னு தைரியம் சொல்வோம். அது போல, கோல்கேட் கம்பெனியிலிருந்து செக்யுரிட்டி கம்பெனி வரைக்கும் எல்லா தனியார் நிறுவனங்களுக்கும் ஏற்பாடு செய்து தர்றோம். கம்பெனியில இருந்து ஜிஎம், எச்ஆர்ஒ, நிறையப் பேர் வருவாங்க. அவங்களுக்கு தேவையானவங்கள எடுத்துக்குவாங்க.

இப்ப, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகம், சென்னை மாவட்ட தொழில்நுட்ப வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் சென்னை, மதுரையில் உள்ள மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்துள்ளவர்களின் எண்ணிக்கை 85 லட்சத்தை தாண்டிவிட்டது.

விரைவில், தமிழ்நாட்டில் அனைத்து வேலை வாய்ப்பு அலுவலகங்களும் வேலைக்கு வழிகாட்டும் மையங்களாக மாற்றப்பட இருக்கின்றன. இந்த மையங்களில் பதிவுதாரர்களின் திறமை, ஆர்வம், மனோபாவம் ஆகியவை கண்டறியப்பட்டு அதற்கேற்ற படிப்பை படிக்கவோ, தொழில் பயிற்சியை பெறவோ உளவியல் ரீதியாக கல்வி ஆலோசனைகள் வழங்கப்படும். இதற்காக, தனியார் நிறுவனங்களைப் போன்று உளவியல் பரிசோதனை (சைக்கோமெட்ரிக் டெஸ்ட்) திறனாய்வு சோதனை (ஆப்டிடியூடு டெஸ்ட்) போன்ற பரிசோதனைகளை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கிண்டி வேலைவாய்ப்பு அலுவலகம்
என்றாவது கிடைத்து விடுமா?

HDFC bank இன்சுரன்ஸ் பாலிசி ஏஜெண்ட்

கவர்மெண்ட் வேலையில்லைனா என்னா? இன்சுரன்ஸ் பாலிசி பிடித்துக் கொடுத்தால் கமிஷன் வரும் தெரியுமா உங்களுக்கு? இருக்கறதுலேயே அதிகமா சம்பாதிக்கறது யாருனு பாத்திங்கனா, எல்ஐசி மற்றும் இன்சுரன்ஸ் ஏஜெண்டுகள் தான். குறைந்தது 2 லட்சம் மாசத்துக்கு சம்பாதிக்கலாம்.

ஒரு அரை மணிநேரத்துல நீங்க பாலிசி பேசிப் போட்டுடலாம். இன்சுரன்ஸ், ஜஸ்ட் ஒரு லைப் கவர்தான். 5 ஆயிரம் கொடுத்து வாங்குற செல்போனுக்கே ரூ- 100 க் கொடுத்து கவர் போட்டுடுறோம். அதமாதிரிதான் இது, லைப் கவர்னு பேசறோம்.
hdfc bank, இன்சுரன்ஸ் ஏஜண்டா டோனி மனைவி சாக்சி இருங்காங்க. நிறைய பேரு லட்சக்கணக்குல சம்பாதிக்கிறாங்க. எல்லாரையும் லிஸ்ட் அவுட் பண்ண முடியாது. மேலும், சென்னையில லிடிங்ல இருக்கற சொர்ணலட்சுமியோட டார்கெட் பாத்திங்கனா 88 லட்சம் அப்ப அவங்களுக்கு மாசத்துக்கு எவ்ளோ கமிஷன் வரும். ரூ 25லட்சம். இதுல, வேலையினு பாத்தா, ஜம்முனு உட்கார்ந்துக்கினு பிரண்டுங்கிட்ட பேசப்போறோம். ஏஜண்டாக மாறி சம்பாதிக்கப்போறோம்.

என்றார்.

இறுதியில் வேலை வாய்ப்பு அலுவலகத்தின் பயன் இதுதான். வேலை கிடைக்காது என்று நிச்சயமாக தெரிந்தும், வேறு வழியின்றியும், நமக்கு ஏதேனும் அதிர்ஷம் கிடைக்காதா என்ற ஏக்கத்திலிருந்தும் இளைஞர்கள் இந்த பாழடைந்த அரசு கட்டிடத்திற்குள் வந்து செல்கின்றனர். அவர்களின் நிச்சயமற்ற வாழ்க்கையை மேலும் அச்சுறுத்தி இத்தகைய காப்பீடு தரகர்கள் பணம் பறிக்கின்றனர்.

தனியார் மயம் வந்தால் நாட்டில் தேனும் பாலும் வெள்ளமென ஓடுமென கனவு கண்டவர்கள் இந்த இளைஞர்களை சந்தித்து பேச வேண்டும். எவருக்கும் தனியார் நிறுவனங்களில் நிரந்தர வேலையோ, பணி பாதுகாப்போ இருக்குமென்பதை ஏற்கவில்லை. அதே நேரம் அரசு வேலைகள் பாதுகாப்பானது என்றாலும் அங்கே வேலையே கிடைக்காது என்பதும் அவர்கள் அறிந்த ஒன்றுதான்.
ஏதோ கிடைக்கும் வேலையை வைத்துக் கொண்டு கனவில் மட்டும் ஒரு நல்ல வேலை கிடைக்குமென்ற நம்பிக்கையின்பாற்பட்டு இங்கே வருகிறார்கள். ஒரு வகையில் நமக்கு அப்பாற்பட்ட சக்தி என்று கடவுளையும், மதத்தையும் நம்பி சாத்திரம் சடங்கு செய்யும் அப்பாவி ஆத்தீக நபர்களின் செயலோடும் இதை ஒப்பிடலாம்.

ஏழு கோடி தமிழ் மக்களில் 80 இலட்சம் பேர் வேலை வாய்ப்பு அலுவலகங்கில் பதிவு செய்திருக்கிறார்கள் என்பதே உண்மை நிலையை காட்டுகிறது. வெந்ததை தின்று விதி வந்தால் சாவோம் என்றே நம் மக்களின் வாழ்க்கை கடந்து போகிறது என்பதன் சாட்சியங்களாக வேலை வாய்ப்பு அலுவலகங்கள் நிற்கின்றன.

இந்த விதியை மாற்ற முடியும் என்று இளைய சமூகம் வெடித்தெழாத வரை இங்கே வேலையும் இல்லை, வாழ்க்கையும் இல்லை.

– வினவு செய்தியாளர்கள்

குரோம்பேட்டை டாஸ்மாக் முற்றுகை – செய்தி, புகைப்படங்கள்

0

“ஊத்திக் கொடுப்பதும், சீரழிப்பதுமா… அரசின் வேலை?” என்ற கேள்வியை முன்வைத்து கடந்த இரண்டு மாதங்களாக உழைக்கும் மக்களிடையே பிரச்சாரத்தில் ஈடுபட்டனர் சென்னை பெண்கள் விடுதலை முன்னணி தோழர்கள். பேருந்து, இரயில், உழைக்கும் மக்கள் பகுதிகள், கடைவீதிகள் என அனைத்துத் தரப்பினரிடமும் பிரச்சாரமும் வசூலும் மேற்கொள்ளப்பட்டது. பிரச்சாரத்தின்போது பெண்களிடம் பலத்த ஆதரவினை காண முடிந்தது.

wlf-tasmac-siege-10பிரசுரம், இன்றைய தமிழக நிலை, அதற்கான தீர்வு மற்றும் ஏற்ற படத்துடன் (ஓவியம்) பேசியது. மக்களிடம் சிறந்த வரவேற்பைப் பெற்றது.

பகுதிப் பெண்கள் பலர், பிரசுரத்தை நம்மிடம் காட்டி, “இந்தப் படத்தை போஸ்டர் அடிச்சி, வீட்டுக்குவீடு ஒட்டணும்மா” என்று கூறியதிலிருந்து இது விளங்கும்.

பேருந்துப் பிரசாரத்தின்போது, ஒருவர் “சரியான விசயந்தான், (பஸ்ஸிலிருந்தவர்களை நோக்கி) முக்கியமான பிரச்சினையப் பத்தி பேச வந்திருக்காங்க, பேசமா கவனியுங்க” என்று கூறியது, மேலும்,”தாராளமா வசூல் போடுங்க” என்று ஊக்குவித்தது என பலவிதமான ஆதரவைக் காண முடிந்தது.

wlf-tasmac-siege-05பேருந்துகளில் பேசும்போது, பலர் தோழர்களிடம், “சாராயக்கடைய முடூணும் சரி, இலவசங்களை ஏன் வேணாங்கிறீங்க?”, “டாஸ்மாக் இல்லனா, அரசுக்கு வருமானம் இருக்காதே, மறுபடியும் எல்லாத்தையும் வெலை ஏத்திடமாட்டாங்களா?” என்று பல கேள்விகளை முன் வைத்தனர்.

அதற்கு, தோழர்கள் பொறுமையுடன், “குடும்பமே சீரழிந்து, குடியால கணவரை இழந்தபிறகு இலவசம் எதுக்கு, இலவசமா கொடுக்கவேண்டிய, கல்வி, மருத்துவம், தண்ணீர், வேலை இதெல்லாம் தனியாருக்கு கொடுத்துட்டு, சாராயக்கடையை மட்டும் அரசு நடத்தும்னா, மக்கள் மேல அக்கறையில்லாத அரசு எதுக்கு?” என்று விளக்கிப் பிரச்சாரத்தை தொடர்ந்தனர்.

இதன் மூலம், பேருந்தில் பிரச்சாரத்தினை மக்கள் நன்கு கவனிக்கின்றனர் என்பதை உணர முடிந்தது. பல பேருந்துகளில், நடத்துனர்களும், ஓட்டுநர்களும் ஆதரவளித்தனர். “சீக்கிரம், பேசிடுங்கமா டைம் ஆச்சி கெளம்பணும்” என்றும், சிலர், “பேச, நேரம் இல்ல, எல்லார்கிட்டயும் நோட்டீசு குடுத்துடுங்க, நேரம் ஆயிடுச்சி கத்துவாங்க” என்று தங்களால் முடிந்த ஆதரவை தர யாரும் மறக்கவில்லை.

wlf-tasmac-siege-02கடைவீதியில் பிரச்சாரத்தின்போது, மளிகைக் கடைக்காரர் ஒருவர், “இந்த நாடு திருந்தாது, அரசியல்வாதிகள கேள்விக்கேட்க முடியாது, கேட்டா… துட்டு வாங்கிட்டுதானே ஓட்டுப் போட்டே வாயை முடூ னு சொல்வானுங்க, இவனுங்களையும் மாத்த முடியாது” என்று விரக்தியுடன் பேசினார்.

அதற்கு, தோழர்கள் “நீங்க, சொல்றதுஎல்லாம் கரெக்டுதான், இந்த நிலைமைக்கு நம்மள தள்ளிவிட்டது யாரு, எதையும் யோசிக்கவிடாம போதையில வெச்சிருக்கறது யாரு, இத நாம எல்லாருக்கும் விளக்க வேணாமா, அதுக்கான தீர்வு காண வேண்டாமா, இதனால, நம்ம புள்ளங்கதானே பாதிக்கபோவுது அப்ப நம்ம முன்ன நின்னு செயல்பட வேணாமா” என்று விளங்க வைத்தனர்.

அம்பேத்கர் பகுதியில் ஒரு குடும்பத்திடம் பேசியபோது, “சரியான விஷயம்மா, எங்க ஏரியாவுல பல குடும்பம் பாதிக்கப்பட்டுகிட்டிருக்கு, சாப்பாடு ஆக்க வைச்சிருந்த காசு, பரவாயில்ல, இந்தாங்க வைச்சிக்கிங்க எங்களோட ஆதரவு இதுக்கு எப்பவுமே உண்டு” என்று தன்னிடம் இருந்த 100 ரூபாயைக் கொடுத்து சிலிர்க்க வைத்தார்.

ராமதாஸ் கட்சியை சேர்ந்த ஒருவர், “எங்கம்மா, நாங்களும் பூரண மதுவிலக்கு கொண்டு வரணும்னு போராடுனோம், அதெல்லாம் முடியாது, குடிக்கிறவனே திருந்தினாதான் உண்டு. பொம்பளங்க நீங்க முழுவீச்சா செய்யறது ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று நிதி கொடுத்துதவினார்.

அதைப்போல, வைகோ கட்சியை சேர்ந்த ஒருவரும், “எங்க ஆதரவு உங்களுக்கு எப்பவும் உண்டு, எங்க தலைவரு எல்லாத்துக்கும் நடைபயணமாக போறாரு, ஆனா ஒண்ணும் வேலைக்கு ஆகமாட்டேங்குது” என்றார்.

இப்படியாக, காலை முதல் மாலை வரை பெண்கள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

பிரச்சாரத்தின்போது தொப்பி, பேட்ச், மற்றும் முழக்கம் பொருந்திய ஏப்ரான்களை அணிந்துச் சென்றது, ஜெயலலிதா வேடமிட்ட தோழர் தன் கழுத்தில் சாராயப் பாட்டில்களை மாலையாக அணிந்து வந்தது, பார்ப்போரை, இவர்கள் முழுமூச்சாக இறங்கி வேலைசெய்கிறார்கள் என்பதை உணரவைத்தது.

வண்டியை நிறுத்திவிட்டு இளைஞர்கள், நிதி கொடுத்துவிட்டு பிரசுரம் பெற்று சென்றது என்று பல அனுபங்களை கற்றுத் தந்தது இந்த இயக்கப்பிரச்சாரம்.

ஆர்ப்பாட்டம்

இப்படியாக முழுவீச்சில் நடைபெற்ற பிரச்சாரத்தைத் தொடர்ந்து, 24.12.12 அன்று நாகல்கேணியில் உள்ள டாஸ்மாக் கடையை முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் இறங்கியது, பெண்கள் விடுதலை முன்னணி.

wlf-tasmac-siege-13காலை 11 மணிக்கு முற்றுகை ஆர்ப்பாட்டம் என்று சுவரொட்டிகள் மூலம் தெரிந்துக் கொண்ட போலீசு நாகல்கேணியில் உள்ள எந்த கடை என்று திணறி, மூன்று கடைகளையும் இழுத்து மூடி அடைத்து காவல் காத்து கிடந்தது.

குழந்தைகள், பெண்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் என்று 70 மேற்பட்டவர்களால் நாகல்கேணி டாஸ்மாக் எதிரில் தொடங்கியது முற்றுகை ஆர்ப்பாட்டம்.

இழுத்து மூடுவோம்! இழுத்து மூடுவோம்!,
தமிழகமெங்கும், டாஸ்மாக் கடைகளை
இழுத்து மூடுவோம்! இழுத்து மூடுவோம்!

ஊத்திக் கொடுக்கும் தமிழக அரசே!
தாலி அறுக்குது டாஸ்மாக் கடைகள்!
டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடுவோம்!
இழுத்து மூடுவோம்!

என்று முழக்கங்கள் நாகல்கேணியை அதிர செய்தன.

wlf-tasmac-siege-05தலைமை தாங்கிய தோழர் அமிர்தா ஆற்றிய உரையில்,

“பெரும்பான்மையான தோல் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் தொழிலாளிகள் நிறைந்த இந்த பகுதியில் 3 டாஸ்மாக் கடைகள் எதற்கு?” என்று கேள்வி எழுப்பினார்.

“சரியான குடிநீர் வசதி இல்லை. 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வருவதே சிரமமா இருக்கு. பக்கத்துல பள்ளிகூடம் இருக்கு. பள்ளிக் கூடத்தில படிக்கற மாணவர்களுக்கு எப்படி சாராயம் கொடுக்குது அரசு. வேலைக்கு போயிட்டு பெண்கள் நிம்மதியா வீடு சேர முடியல. வழியில குடிச்சிட்டு அம்மணமா படுத்துகிடக்கிறாங்க. சீண்டி சில்மிஷம் பண்றாங்க.  இதையெல்லாம் பெண்கள் அனுபவிக்க வேண்டியிருக்கிறது” என்று சுட்டிக்காட்டினார்.

மேலும்,  சாராயக்கடைகளால் இளம் விதவைகள் கிராமமே உருவாகி இருப்பதை இடித்துரைத்தார். “பர்மிஷன் கேட்கும்போது, போலிசு 24,25 வேணாம்மா, எம்.ஜி.ஆர். நினைவுநாளும், கிறிஸ்மசும் வருது தொந்தரவு பண்ணாதீங்க, ஜனங்க கொண்டாடட்டும்” என்று கூறிய அவலத்தை எடுத்துரைத்தார்.

wlf-tasmac-siege-06“அரசு சட்டப்படியே 3 கி.மீ தூரத்துக்கு ஒரு சாராயக் கடைதான் இருக்கணும், ஆனா இங்க அரை கி.மீட்டருக்கு 3 கடை இருக்கு. தனது சட்டத்தையே அமல்படுத்த வக்கற்றது” என்று அரசை தோலுரித்தார்.

“பக்கத்துல,கேரளத்துல படிப்படியா மதுவிலக்கு என்ற பேச்சுனா இருக்கு, ஆனா தமிழகத்துல டார்கெட் குறைஞ்ச காரணத்தை அலசவும், சரக்கு விற்பனை அதிகரிக்கவும் அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றனர்” என்று அதிகாரிகளை அம்பலப்படுத்தினார். மாணவர்களும், வயது வித்தியாசமின்றி குடித்து, ஆபாசப் படங்களைப் பார்த்து சீரழிவதையும், இதனால் தொடரும் பாலியல் வன்கொடுமைகளையும் உதாரணங்களுடன் விளக்கினார்.

தற்போது, நாகல்கேணியில் உள்ள சாராயக்கடைகளை பெண்கள் விடுதலை முன்னணிக்கு பயந்து மூடிவைத்திருப்பதே நம் போராட்டத்துக்கு வெற்றியின் முதல்படிதான்” என்றார்.

மேலும், “தமிழகமெங்கும் அரசு நடத்தும் சாராயக் கடைகளை மூடும்வரை போராட்டம் முழுவீச்சில் தொடரும்” என்று கூறி முடித்தார்.

இடைவிடாத முழங்கங்களுடன் ஆர்ப்பாட்டம் தொடர்ந்தது.

wlf-tasmac-siege-11சாராயக்கடைகளை பூட்டிவிட்டு வந்த டாஸ்மாக் ஊழியரே எங்கள் பின்னால் நின்று சரியான போராட்டம்தான் என்று கூறினார்.

காற்றில் பறந்த பேனரை எழுத்துக்கள் மறையாதவாறு தடுத்து நின்றது பெண் போலிசு .

இது எல்லார் வீட்டிலும் குடியால் பாதிப்பு உள்ளதை உணரவைத்தது.

ஆர்ப்பாட்டத்தில், ஜெ வேடமணிந்த தோழர் பாட்டில் மாலையுடன் இருந்தது அனைவரையும் நின்று யோசிக்க வைத்தது.

பகுதி மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது ஆர்ப்பாட்டம்.

ஆர்ப்பாட்டத்துக்கு வெளியே நின்ற பெண் ஒருவர், போலிசைக் காட்டி, “மத்தவங்ககிட்ட எப்படி நடத்துப்பானுங்க? இவங்ககிட்ட எவ்ளோ மரியாதைப் பாத்தியா?” என்று மற்றவரிடம் கூறி சிரித்தார்.

ஆர்ப்பாட்டம் முடிந்து, டீக்குடிக்க நின்ற தோழர்களிடம், ரோந்து சென்ற போலீசு வண்டி அருகில் வந்து “எங்கம்மா, போகணும், நாங்க வண்டியில விட்டுடட்டுமா?” என்று பவ்வியமாக பம்மியது போலிசு.

“வேணா சார்… நாங்க பஸ்சுக்காக காத்திருக்கோம், வந்ததும் போயிடுவோம்” என்றனர் தோழர்கள் கறாராக.

பஸ்ஸில் ஏறியதும், கண்டக்டர் முதல் பயணிகள் வரை அனைவரும், “முடிச்சிட்டீங்களா, இப்படி செஞ்சாதான் மூடுவானுங்கமா, தொடர்ந்து செய்யுங்கமா” என்று உற்சாகத்துடன் ஆதரவளித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற்றவர்களை மக்கள் விஐபியைப் போல பார்த்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்
பெண்கள் விடுதலை முன்னணி,
சென்னை

தலித்துக்களை உருவாக்கியது முசுலீம்கள் – ஆர்.எஸ்.எஸ்

10

”முசுலீம் ஆட்சியாளர்களும் மாட்டுக் கறி தின்பவர்களுமான அந்நிய படையெடுப்பாளர்கள் சன்வார்வன்ஷிய ஷத்ரியர்களின் ஹிந்து பெருமிதத்தை உடைப்பதற்காக மாட்டைக் கொல்வது, அதன் தோலை உரிப்பது, அதன் மீதங்களை கண்காணாத இடத்தில் எறிவது போன்ற கீழ்த்தரமான வேலைகளைச் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தினார்கள். பெருமிதம் மிக்க ஹிந்து கைதிகளுக்கு இந்த மாதிரியான வேலைகளைக் கொடுத்ததன் மூலம் தோலை உரிக்கும் (charma-karma) சாதி என்ற பிரிவையே அந்நியப் படையெடுப்பாளர்கள் தான் உண்டாக்கினர்” – இது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அதிகார வரிசையில் இரண்டாம் இடத்திலிருக்கும் அதன் பொதுச் செயலாளர் பையாஜி ஜோஷியின் வார்த்தைகள்.

பையாஜி ஜோஷி
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அதிகார வரிசையில் இரண்டாம் இடத்திலிருக்கும் அதன் பொதுச் செயலாளர் பையாஜி ஜோஷி.

மற்றொரு முக்கிய ஆர்.எஸ்.எஸ் தலைவரான சுரேஷ் சோனி, “தலித்துகளின் துவக்கம் என்பது துருக்கிய, இசுலாமிய மற்றும் முகலாய சகாப்தத்தில் உள்ளது. இன்றைக்கு இருக்கும் வால்மீகி, சுதர்ஷன், மஜ்ஹாபி சீக்கியர்கள் மற்றும் அதன் 624 உட்கிளைகளும் பிராமணர்கள் மற்றும் ஷத்ரியர்களின் மேல் நிகழ்த்தப்பட்ட மத்திய கால அல்லது இசுலாமிய கால கொடுங்கோன்மையின் விளைவுகளே” என்கிறார்.

பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் விஜய் சோன்கர் ஷாஸ்த்ரி எழுதி கடந்த செப்டம்பர் மாதம் வெளியான மூன்று நூல்களுக்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் எழுதிய முன்னுரைகளில் தான் மேலே உள்ள வியாக்கியானங்கள் இடம்பெற்றுள்ளன. ’ஹிந்து சர்மாகார் ஜாதி, ஹிந்து கத்திக் ஜாதி, ஹிந்து வால்மீகி ஜாதி’ என்ற மூன்று நூல்களின் பேசு பொருட்களும் மேலே உள்ள முன்னுரை பகுதியின் விரிவாக்கம் தான்.

மத்திய காலத்திற்கு முன் சூத்திர ஜாதியார் தீண்டத்தகாதவர்களாக கருதப்படவில்லை என்றும், முசுலீம் படையெடுப்பு மற்றும் இசுலாமிய கொடுங்கோன்மைகளுக்குப் பின் வந்த காலத்தில் தான் தலித்துகள், இந்திய முசுலீம்கள் மற்றும் ஆதிவாசிகள் உருவாகினர் என்றும், அதன் பிறகே தீண்டாமை இந்திய சமூகத்திற்கு அறிமுகம் ஆனது என்பதே மேற்கண்ட நூல்களின் சாரமான வாதங்கள்.

இந்திய வரலாறு பற்றியோ, பார்ப்பனிய சனாதன தர்மம் குறித்தோ, பார்ப்பனிய பாசிச அரசியலைப் பற்றியோ எந்த அறிமுகமும் இல்லாத நண்பர் ஒருவரிடம் மேலே உள்ள வியாக்கியானங்களை சொல்லிக் கொண்டிருந்தேன். அவர் ’பாமரத்தமான’ கேள்வி ஒன்றை முன்வைத்தார்.

தலையில் தண்ணி தெளித்தல்
“பார்ப்பானுக வழக்கமா செய்யிற மாதிரி ஓரு யாகத்த நடத்தி தலையில தண்ணி தெளிச்சி தீட்டுக் கழிச்சி தீண்டக் கூடியவங்களா மாத்தியிருக்கலாம்லெ?”

”சரி ஒரு பேச்சுக்காக பாய்ங்க தான் மாட்டைக் கொல்ல வச்சி தலித்துகளை உருவாக்கி தீண்டாமையை கொண்டாந்தாங்கன்னே வச்சிக்கலாம். இவங்க பார்ப்பானுக வழக்கமா செய்யிற மாதிரி ஓரு யாகத்த நடத்தி தலையில தண்ணி தெளிச்சி தீட்டுக் கழிச்சி தீண்டக் கூடியவங்களா மாத்தியிருக்கலாம்லெ? பொண்ணு குடுத்து பொண்ணு எடுத்திருக்கலாம்லே? ஆனா இவய்ங்க பாய்ங்க செஞ்ச ‘கொடுமைய’ ஏத்துக்கிட்டாய்ங்க. அப்படின்னா அந்தக் ‘கொடுமை’ இவய்ங்களுக்கு ரொம்ப ‘இன்பமான கொடுமையா’ இருந்திருக்கும் போலயே?”

இப்படி ‘மேலோட்டமாக’ சிந்திக்கும் ‘பாமரர்கள்’ ஏராளமானோரை ஈரோட்டுக் கிழவன் தமிழ்ச் சமூகத்திற்கு கொடையளித்து விட்டுச் சென்றிருப்பதாலேயே உள்ளொளியின் நுண்ணுணர்வு மிக்கவர்கள் தமிழர்களின் மேல் தீராத வெறுப்பில் உழல்கிறார்கள். போகட்டும்.

“சதுர் வர்ணம் மயா சிருஷ்டம்” அதாவது, நான்கு வர்ணங்களையும் நானே படைத்தேன் என்று பகவத் கீதையில் பெருமை பீத்துகிறான் மாயக் கண்ணன். பல்லாயிரம் சாதிகளை உள்ளடக்கிய நான்கு பிரதான வர்ணங்களும் பிரம்மாவின் எந்தெந்த உறுப்புகளில் இருந்து பிறந்தார்கள் என்று பட்டியலிடுகிறது புருஷ ஸூக்தம். பிராம்மண, ஷத்ரிய, வைஸ்ய மற்றும் ஷூத்ர என்ற நான்கு வர்ணங்களால் வடிவமைக்கப்பட்ட சமுதாய அமைப்பிற்கு வெளியே இருந்த பழங்குடியினர் பற்றி ரிக்வேதத்தில் குறிப்புகள் உள்ளன.

மனு உள்ளிட்ட ஸ்மிருதிகள் வர்ணங்களின் கீழ் வருவோருக்கான தெளிவான சட்ட விதிமுறைகளை வகுத்துக் கொடுத்துள்ளன. சமூகத்தை மேலோர் கீழோர் என்று கோடு கிழித்துப் பிரித்துப் போட்டதோடு அல்லாமல், யாரை யார் மணக்கலாம், யார் செத்தால் யார் தூக்க வேண்டும், யார் கைப்பட்ட உணவு தீட்டு என்பது வரையிலும் தெளிவான வரையறைகளை மனு ஸ்மிருதி வகுத்துக் கொடுத்துள்ளது.

மனு ஸ்மிருதி
மனு உள்ளிட்ட ஸ்மிருதிகள் வர்ணங்களின் கீழ் வருவோருக்கான தெளிவான சட்ட விதிமுறைகளை வகுத்துக் கொடுத்துள்ளன.

”இருபிறப்பாளர் சாதிப் பெண்ணோடு உடலுறவு கொண்ட ஒரு சூத்திரனின் ஆண்குறியை சிதைத்து விட வேண்டும், அவனது பொருட்கள் மற்றும் நிலத்தைக் கைப்பற்றிவிட வேண்டும் (VIII 374)” என்கிறது மனுஸ்மிருதி. இன்றைய தைலாபுரத் தோட்டத்து மாம்பழங்களின் விதைகள் எங்கேயிருந்து வந்தவை என்பது புரிகிறதா?

”புனிதமான திருமண பந்தத்திற்கு சொந்த சாதிப் பெண்ணே ஒரு பிராமணனுக்கு பரிந்துரைக்கப்படுகிறாள். ஆசைக்காக இதர மூன்று சாதிகளிலிருந்து மனைவியைக் கொள்ளலாம். அவளின் மதிப்பு மரியாதை என்பது சாதியைப் பொறுத்திருக்கும் (III 12)” – ஜெயேந்திர விஜயேந்திர தேவநாத மைனர் பொறுக்கித் தனங்கள் அந்தரத்தில் தொங்கும் மாங்காய்கள் அல்ல, பிரம்மாவின் மகனான மனுவே தெளிவாக ரூட்டுப் போட்டுக் கொடுக்கிறார்.

என்னதான் சூத்திரச்சி அழகாக இருந்தாலும், ஆசைப்பட்டு வைப்பாட்டியாக வைத்துக் கொள்ளலாமே தவிர அதிகாரபூர்வ தகுதியைக் கொடுக்க நினைத்தால்? அதற்கும் மனுவின் சட்டம் உள்ளது.

”கஷ்டமான காலத்தில் கூட ஒரு பிராமணனோ அல்லது ஒரு ஷத்ரியனோ (சட்டப்பூர்வமாக) ஒரு சூத்திர மனைவியை மணந்ததாக வரலாறு இல்லை. ஆசை என்னும் போதை வசப்பட்டு ஒரு தாழ்ந்த சாதிப் பெண்ணை மணக்கும் ஓர் இருபிறப்பாளன் தன்னையும், தனது ஒன்பது தலைமுறை பரம்பரையையும் சூத்திரர்களாக தரம் தாழ்த்திக் கொள்கிறான்(III 14-15)”

சம்புகன் வதம்
சூத்திரனான சம்பூகன் தவமியற்றியதைக் கண்ட ராமன் அவனது தலையை துண்டித்து தர்மத்தை நிலைநாட்டினானாம்

விஷ்ணு புராணம் சாதிப் படிநிலையை மட்டுமின்றி, தீட்டு போன்ற தீண்டாமையின் நுணுக்கமான அம்சங்களை வரையறுத்துள்ளது. “இரு பிறப்பாளனின் சவத்தைச் சுமக்க ஒரு சூத்திரனை அனுமதிக்க கூடாது. அதுபோல, ஒரு சூத்திரனின் சவத்தை ஓர் இருபிறப்பாளன் சுமக்கக் கூடாது. தந்தை அல்லது தாயின் சவத்தைப் பிள்ளைகள் சுமக்க வேண்டும். இறந்தவர் தங்களது தந்தையே என்றாலும் அந்த இரு பிறப்பாளனின் சவத்தை சூத்திரர்கள் சுமக்கக் கூடாது(XIX 1-4)” என்கிறது விஷ்ணு புராணம்.

வேதங்களும், ஸ்மிருதிகளும் காட்டிய வழியில் பீடு நடை போட்ட ராமனின் ராஜ்ஜியத்தை மீண்டும் கொண்டு வர நினைக்கிறார்கள் இந்துத்துவ பாசிஸ்டுகள். ராமனை தேசிய நாயகனாக ஏற்காதவர்களை விபச்சார விடுதியில் பிறந்தவர்கள் என்கிறார் ஒரு மத்திய அமைச்சர். இவர்கள் ராமனைப் போற்ற வேண்டிய தேவை ஏன் வந்தது? அதற்கு பல்வேறு இந்துத்துவ அரசியல் உள்நோக்கங்கள் இருந்தாலும், ராமன் இவர்களின் அன்றைய வடிவமாகவே இருந்திருக்கிறான்.

கிருதயுகத்தில் (சத்யுகம்) பிராமணர்களுக்கும், திரேதா யுகத்தில் பிராமணர்கள் மற்றும் ஷத்ரியர்களுக்கும், திரேதா யுகத்தில் பிராமண, ஷத்ரிய, வைசிய குலத்தவர்களுக்கும் தவம் செய்யும் உரிமை உள்ளது என்கிறது ராமாயணம். கலியுகத்தில் சூத்திரர்களும் தவம் செய்யலாமாம். சத்யுகத்தில் ஒழுங்காக இருந்த தர்மம், பின்னர் ஒவ்வொரு யுகமாக பிற வருணத்தவர் தவத்தில் ஈடுபட ஈடுபட குறைந்து கடைசியாக கலியுகத்தில் சூத்திரன் தவம் செய்யத் துவங்கியதும் முற்றிலுமாக குலைந்து போகும் என்கிறது ராமாயணம். இதை ராமனிடம் சொல்பவர் நாரதர்.

இந்த விளக்கங்களின் அடிப்படையில், தனது ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் சூத்திரனான சம்பூகன் தவமியற்றியதைக் கண்ட ராமன் அவனது தலையை துண்டித்து தர்மத்தை நிலைநாட்டினானாம். இது தான் ராம ராஜ்ஜியத்தின் சிறப்பு. இந்த ராஜ்ஜியத்தைக் கொண்டு வர வேண்டும் என்பது தான் மோடி உள்ளிட்ட இந்துத்துவ பாசிஸ்டுகளின் உள்ளக் கிடக்கை.

தாங்கள் பேசும் மகத்தான பொற்காலம் குறித்து யோக்கியத்தோடு சொல்லிக் கொள்ள எதுவும் இல்லை என்ற நிலையில் வரலாற்றை தாங்கள் நினைத்தவாறெல்லாம் திருத்தி எழுதி வருகிறார்கள் இந்துத்துவ பாசிஸ்டுகள்.

அவர்கள் அப்படியே செய்யட்டும். ஆனால், நமக்குச் சில விளக்கங்கள் தேவைப்படுகிறது.

முசுலீம்கள் வந்த பின்பு தான் தீண்டாமை, சாதிப் பிளவுகள், பழங்குடியினம் உண்டானது என்பதே ஆர்.எஸ்.எஸ் டவுசர்கள் இனிமேல் பள்ளிகளில் சொல்லிக் கொடுக்கப் போகும் வரலாறென்றால், மனு ஸ்ம்ருதி பகவத் கீதை, புருஷ ஸூக்தம், ரிக் வேதம் போன்ற பார்ப்பனிய ஹிந்து தண்டனைத் தொகுப்புகளை எழுதிய மாமுனிகள் முசுலீம்களுக்கு பிறந்தவர்கள் என்பதை அறிவிக்கவேண்டும்.

ஒருக்கால் தலித்துக்களை வேட்டையாடும் ஆதிக்க சாதி இந்துக்கள் மறுபுறம் முசுலீம்களையும் பகைவர்களாக கருதுவதற்கும் அந்த அடிப்படையில் அந்த சாதிக் கட்சிகளை அணிதிரட்டுவதற்கும் இந்துமதவெறியர்களுக்கு இந்த புதிய ‘வரலாற்றுக் கண்டுபிடிப்பு’ உதவி செய்யும். ராமதாஸ் போன்றோர் ஏற்கனவே அப்படித்தான் இருக்கிறார்கள்.

மாப்பிளா கலகம்
1921-ம் ஆண்டு மாப்பிளா போராட்டத்தை வெள்ளை இராணுவம் ஒடுக்கியது, வெள்ளையனின் காலை நக்கி அதை வரவேற்றனர் நம்பூதிரிப் பார்ப்பன துரோகிகள்.

சூத்திரன் தவம் செய்தானென்பதற்காக சம்பூகனின் தலையைத் துண்டித்த ராமனின் தந்தை தசரதன் 64 ஆயிரம் பெண்டாட்டிகளைக் கட்டியும் பிள்ளையில்லாமல் அசுவமேத யாகம் செய்தான். யாகம் செய்து குழந்தை எப்படிப் பிறந்தது? வால்மீகி ராமாயணத்தில் இருந்து ஆதாரங்களை எடுத்துக் கொடுக்கிறார் பண்டிதர் நாதத்தையர்

”தசரதனின் மூத்த மனைவியாகிய கோசலை மூன்று வெட்டில் அக்குதிரையை (அதாவது அசுவமேத யாகத்தில் பயன்படுத்தப்பட்டது) மிக உற்சாகத்தோடு கொன்றாள். அவள் கலங்கா நெஞ்சோடு ஒரு நாளிரவை அக்குதிரையோடு கழித்தாள். ஹோதா, அத்வர்யு முதலிய இருத்துவிக்குகள் இராச பாரியைகளைப் புணர்ந்தார்கள். இதன் காரணமாக தசரதனின் ராஜபத்தினிகள் கர்ப்பம் தரித்தார்கள்”

ஆர்.எஸ்.எஸ் சொல்லித் தரும் புதிய வரலாற்றை புரிந்து கொள்ள நமக்குத் தேவைப்படும் விளக்கங்கள் எல்லாம், அந்த புரோகிதர்கள் மாறுவேடம் பூண்டு வந்த முல்லாக்களா என்பதே ஆகும்.

வேதகாலத்தில் மட்டுமல்ல, கேரளத்தில் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வரை நம்பூதிரிப் பார்ப்பனர்களை விட்டு எந்தெந்த சாதியினர் எத்தனை அடி விலகி நிற்க வேண்டும் என்பதில் இருந்து சண்டாள சாதியினர் எச்சில் துப்ப கழுத்தில் மண் சட்டியைக் கட்டிக் கொண்டே திரிய வேண்டும் என்பது வரை தீண்டாமையை தெளிவாக வரையறுத்து வைத்திருந்தனர். விவேகானந்தரே அந்த முடை நாற்றம் பொறுக்காமல் கேரளத்தை பைத்தியக்காரர்கள் விடுதி என்றார்.

நம்பூதிரி பார்ப்பனர்கள் கீழ்ச்சாதியினரின் மேல் அமுக்குப் பேய்களைப் போல் அழுந்திக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில் தான் மாப்ளா முசுலீம்கள் தாழ்த்தப்பட்ட ஈழவர்களின் தோளோடு தோள் நின்று நிலவுரிமைக்காக போர்க்குரல் எழுப்பினர். கேரளத்தின் வரலாற்றில் தாழ்த்தப்பட்ட மக்கள் முதன் முறையாக சுதந்திரக் காற்றை அந்தப் போராட்டத்தினூடாகவே சுவாசித்தனர். 1921-ம் ஆண்டு மாப்பிளா போராட்டத்தை வெள்ளை இராணுவம் ஒடுக்கியது, வெள்ளையனின் காலை நக்கி அதை வரவேற்றனர் நம்பூதிரிப் பார்ப்பன துரோகிகள்.

விஜய் சோன்கர் ஷாஸ்த்ரி
வரலாறே கூட திருத்தி எழுதப்படுகிறது. ஏன்? (விஜய் சோன்கர் ஷாஸ்த்ரி)

இன்று நமக்கு நன்றாகத் தெரியும் வரலாறே கூட திருத்தி எழுதப்படுகிறது. ஏன்?

தலித்துகளையும் ஆதிவாசிப் பழங்குடிகளையும் காலாட்படையாக கொண்டே 2002-ம் ஆண்டு குஜராத்தின் ரத்த வெறியாட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்தனர் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள். அவர்களுக்கு தலித்துகள் தேவைப்படுகிறார்கள்.

ஒருகாலத்தில் அவர்ணர்களாக சமுதாயத்திற்கு வெளியே நிற்கவைக்கப்பட்ட தலித்துகளையும் பழங்குடியினரையும் இன்றைக்கு “நீங்களும் இந்துக்கள் தான்” என்று அழைப்பதே அப்பாவி இசுலாமியர்களுக்கு எதிராக கொலைவாளை ஏந்தும் கூலிகளாக அவர்களை அமர்த்திக் கொள்வதற்காகத் தான்.

குஜராத்தில் ஓடிய ரத்த வெள்ளம் இந்தியாவை மூழ்கடித்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர்களின் கடமை. சுடலை மாடனுக்கு சுருட்டும் சாராயமும் படைத்து கோழியை அறுத்துக் கொண்டாடும் எதார்த்தமான ஹிந்து மக்களின் எளிமையான மத நம்பிக்கைகள் வேறு, ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத கும்பல் புகுத்த நினைக்கும் வர்ணாசிரம அடிப்படையிலான பார்ப்பனிய மதவெறி வேறு என்பதை நாம் வேறுபடுத்திப் புரிந்து கொள்ள வேண்டும்.

குறிப்புகள்:

1.  இருபிறப்பாளர் : பார்ப்பனர்கள். பூணூல் போடும் சடங்கிற்கு பிறகு பார்ப்பனர்கள் மீண்டும் ஒரு பிறவி எடுத்தவர்கள் என்று சாத்திரங்கள் சொல்கின்றன.

2. ராமன் பிறப்பு மற்றும் அசுவமேத அசிங்களை அறிந்து கொள்ள : இந்து மதம் எங்கே போகிறது?

3. பார்ப்பனிய சனாதன தருமம் தீண்டாமை மற்றும் சாதிக் கொடுங்கோன்மையை எப்படியெல்லாம் காலங்காலமாக வளர்த்தெடுத்து வந்தது என்பதைப் பற்றிய அடிப்படைப் புரிதலுக்கு இரண்டு நூல்களைப் பரிந்துரைக்கிறோம்.
அ) அசல் மனுதரும சாஸ்திரம் (1919 பதிப்பில் உள்ளபடி) – தி.க வெளியீடு
ஆ) காலம் தோறும் பிராமணீயம் – அருணன்.

– தமிழரசன்

இரண்டு தொழிலாளிகள் பலி – கும்மிடிப்பூண்டி சூர்யதேவ் தாலிபான்கள்

1

கும்மிடிப்பூண்டி ‘சூர்யதேவ்’ ஆலை முதலாளியின் லாபவெறிக்கு 2 தொழிலாளர்கள் பலி, 3 பேர் படுகாயம் !

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் இயங்கிவரும் ‘சூர்யதேவ்’ இரும்பு உருக்கு ஆலையில் கடந்த 24.12.2014 அன்று ரசாயன கழிவு அடைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கேன் வெடித்து சிதறியதில்

  • அருகில் இருந்த தொழிலாளி ஒருவர் உடல் சிதறி அங்கேயே உயிரிழந்தார்.
  • இன்னொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
  • படுகாயமடைந்த இரண்டுபேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
  • மேலும் ஒருவர் தனது காது கேட்கும் திறனை இழந்துள்ளார். இவரை யாரும் கண்டுகொள்ளவில்லை.
கும்மிடிப்பூண்டி சூர்யதேவ் தொழிற்சாலை
கும்மிடிப்பூண்டி சூர்யதேவ் தொழிற்சாலை

இவர்கள் அனைவருமே வடமாநிலத் தொழிலாளிகள். அதில் செவி திறன் இழந்தவர் உட்பட நான்கு பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். மாதச் சம்பளம் வெறும் ரூ.6000/-க்கு குடும்பத்தோடு உழைக்க வந்தவர்கள் ’சூர்யதேவ்’ ஆலை முதலாளியின் லாபவெறிக்கு ஈவு-இரக்கமின்றி ‘படுகொலை’ செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் அறிந்த புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தோழர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தோம். செல்லும் வழியில் கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தபோது உதவி ஆய்வாளர் அலமேலு அவர்கள் “தகவல் தெரியும், அது ஒன்றுமில்லை கெமிக்கல் கொட்டிடிச்சி” என்றார். 5 தொழிலாளர்களின் வாழ்க்கை சிதறடிக்கப்பட்ட செய்தி சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் காவல் நிலையத்தில் எந்த சலனத்தையும் ஏற்படுத்தியிருக்கவில்லை.

மாலை 04.00 மணி

உடனே பத்திரிகையாளர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. ‘சூர்யதேவ்’ இரும்பு உருக்கு ஆலைக்கு சென்றபோது அங்கு எந்த பதட்டமும் இல்லாத சூழ்நிலை தான் காணப்பட்டது; ஆலை வழக்கம் போல இயங்கிக் கொண்டிருந்தது. கேட்டில்  செக்யூரிடியிடம் விசாரித்தபோது எதுவும் தெரியாதவர்களைப்போல “ஒன்றும் இல்லை” என்றே கூறினர். ஆலைக்குள் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை.

மாலை 04.15 மணி

சிறிது நேரத்தில், பத்திரிகையாளர்களும் வந்துவிட்டனர். அவர்களும் ஆலைக்குள் அனுமதிக்கப்படவில்லை. பத்திரிகையாளர்களும், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தோழர்களும் வலுக்கட்டாயமாக ஆலைக்குள் நுழைந்தோம்.

செல்லும் வழியில் ஆச்சரியம் என்னவென்றால் ஆலை எப்போதும்போல இயங்கிக்கொண்டிருக்கிறது. சற்றுநேரத்திற்கு முன்பு அவர்களது சக தொழிலாளர்கள் தங்கள் உயிரையும், உடல் உறுப்புகளையும் இழந்ததற்கான அறிகுறி இல்லாமல் (தென்படாமல்) நிர்வாகம், மற்ற தொழிலாளிகளை வேலைவாங்கிக்கொண்டிருந்தது. இப்படி மனித மாண்புகளைக் கூட மறக்கடித்து தனது இடைவிடாத லாபச் சுரண்டலை தொடர்ந்து கொண்டிருந்தது சூர்யதேவ்.

சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவு சென்றதும் ஆலையின் மறுபுறம் கழிவுகளை கொட்டுவதற்காகவே பல ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டிருந்தது.

மாலை 04.30 மணி

முகேஷ் அகர்வால்
கொலைகார சூர்யதேவ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் முகேஷ் அகர்வால்

விபத்து ஏற்பட்ட இடத்தை கண்டுபிடிப்பதற்குக் கூட இவ்வளவு நேரம் ஆகி விட்டது.

ஏதோ ‘இரண்டு உயிர்கள் போய் விட்டன, 2 பேர் படுகாயமடைந்து விட்டனர்’ என்று செத்த எலியை ஒதுக்கித் தள்ளுவது போல தள்ளி தடயங்களை மறைக்க முயற்சித்திருக்கிறது நிர்வாகம்.

விபத்து ஏற்பட்ட இடம் அடையாளம் தெறியாமல் மணலால் மூடப்பட்டிருந்தது. சற்று உற்று பார்த்தபின் தெரிந்தது, தொழிலாளிகளின் ரத்தமும், சதையும் மண்ணோடு மண்ணாக கலந்திருப்பது.

அருகே ஒரு ‘செல்போன்’ உருகிய நிலையில் சிதறி கிடந்தது. அங்கு வெடித்துச் சிதறிய ‘பிளாஸ்டிக் கேன்’ 200 மீட்டருக்கு அப்பால் துண்டு துண்டாக கிடந்தது.

விபத்து நடந்தபோது தொழிலாளிகள் எப்படி துடித்துபோய் இருப்பார்கள் என்று நினைத்து பார்த்தாலே மனம் கொதிக்கிறது; நவீன தொழில்நுட்பத்தில் இயங்குவதாக பீத்திக் கொள்ளும் சூர்யதேவுக்கு கற்கால மனித உணர்வு கூட இல்லை என்பதை நினைத்து பதறுகிறது.

மாலை 05.00 மணி

15 நிமிட ஆய்விற்கு பிறகு மீண்டும் நுழைவாயிலுக்கு வந்தபோது மணி 05:00, அப்போதுதான் பொன்னேரி ஆர்.டி.ஓ,  வட்டாட்சியர், மற்றும் கும்மிடிப்பூண்டி காவல் துறை ஆய்வாளர் சேகர் ஆகியோர் தொழிற்சாலைக்குள் ஆய்வு செய்ய நுழைகிறார்கள். பிணத்திலும் அரிசி பொறுக்கும் அதிகார வர்க்கம், தொழிலாளர்களின் கொலையையும் இன்னொரு சடங்காக கருதி முடிந்த வரை ஆதாயம் பார்த்து, முதலாளியை பாதுகாக்க வந்து கொண்டிருக்கிறது.

நாங்கள் அங்கே சாலையோரம் அழுதுகொண்டிருந்த ஒரு பெண்மணியையும் ஒரு வாலிபரையும் விசாரிக்க முயற்சித்தோம். நமது மொழி அவர்களுக்கு தெரியவில்லை. இந்தி தெரிந்த நபர் ஒருவர்மூலம் விசாரித்தோம். அவர்கள் கூறியது

“ நாங்கள் ஒரிசா மாநிலத்தை செர்ந்தவர்கள். விபத்தில் செத்தவர் பெயர் எம்.டி.அப்தாப். காயமடைந்தவர்கள்: அப்தாபின் தந்தை எம்.டி.மோலின் (இவர் 25.12.2014. தேதியன்று மருத்துவமனையில் உயிரிழந்தார்), சகோதரன் எம்.டி.அலாம், மற்றொருவர் எங்கள் பக்கத்து ஊரைச் சேர்ந்த கிருஷ்ணதாஸ். இப்போ நாங்க எங்கே போகணும், எப்படி போகணும் ஒண்ணும் புரியாம நிக்கிறோம்.” என்று தங்களுடைய சோகத்தையும், இயலாமையையும் வெளிப்படுத்தினர்.

இவர்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போது தலையை தொங்க போட்டுக்கொண்டு சோகமாக ஒருவர் அந்த இடத்திற்கு வந்தார். அவரிடம் விசாரித்தபோது தனது பெயர், எம்.டி. அபுதசாம் என்றும், விபத்து நடந்தபோது அங்கு இருந்ததாகவும், விபத்தின் அதிர்ச்சியால் தனது வலது பக்கம் காது செவிடாகிவிட்டது, யாரும் கண்டுகொள்ளவில்லை என்றும் கூறினார்.

“இது என்ன கொடுமை? மருத்துவமனைக்கு செல்லாமல் இங்கே என்ன செய்றிங்க?” என்று பதறினோம்.  நமது தோழர்கள் அவரை ‘சூர்யதேவ்’ ஆலை வாயில் முன்பு அழைத்துச் சென்று மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல ஏற்பாடு செய்யுமாறு வலியுறுத்தினோம். பலன் ஏதும் இல்லை. உடனே ’கேட்டை’(Gate) இழுத்து மூடினோம்.

பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும்வரை வாகனங்கள் வெளியே செல்ல அனுமதிக்க முடியாது என்றோம்.

மாலை 05.45 மணி

ஆலைக்குள் ஆய்வு செய்துகொண்டிருந்த (ரேட் பேசிக்கொண்டிருந்த) ஆர்.டி.ஓ, மற்றும் காவல் துறை ஆய்வாளருக்கு தகவல் தெரிந்து, ஆய்வாளர் சேகர் மெயின் கேட்டிற்கு வந்தார்.

வந்ததுமே என்ன? ஏது? என்று விசாரிக்காமல் “லாரியை ஏன் மறிக்கிறீங்க? மரியாதயா எல்லோரும் ஓரமா விலகுங்க!” என்றார். தொழிலாளர் உயிரைப் பற்றி அக்கறை இல்லாத போலீசுக்கு முதலாளியின் லாப வெள்ளம் தடைப்படுகிறது என்றதும் பொத்துக் கொண்டு வருகிறது.

பாதிக்கப்பட்டவர் இதுவரை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்படவில்லை என்று எவ்வளவு விளக்கிச் சொன்னாலும் ஆய்வாளர் சேகரின் காதில் விழவில்லை. அவர் கவனம் முழுவதும் லாரிகளை உடனே வெளியே அனுப்பவேண்டும் என்பதிலேயே இருந்தது.

“ஒரு தொழிலாளி தனது ஒரு காது செவிடாகி தவிக்கிறார், அவரை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வரை இந்த இடத்தை விட்டு நகரமாட்டோம்” என்று உறுதியாக நின்றோம்.

ஆய்வாளர் சேகருக்கு வந்தது பார் கோவம்! “என்ன? சொல்றத கேட்கமாட்டீங்களா? அவ்வளவு அக்கறையா இருந்தா 108-க்கு போன் செஞ்சி அனுப்பவேண்டியதுதானே!” என்று சீறினார். தொழிலாளிக்கு 108 ஆம்புலன்ஸ், முதலாளிக்கு ஆய்வாளர் சேகரின் தனிப்பட்ட பாதந்தாங்கும் சேவை என்பதுதான் இந்திய அதிகார வர்க்கத்தின் நடைமுறை.

“அப்போ உங்களுக்கு இங்கே என்ன வேலை? நீங்க கிளம்புங்க நாங்க பாத்துக்கிறோம்” என்று எதிர்த்து நின்ற பிறகு, இதற்கு மேல் அம்பலப்பட்டுவிடுவோம் என்று அஞ்சி நிர்வாகத்திடம் பேசி வாகன ஏற்பாடு செய்து செவி இழந்த தொழிலாளி எம்.டி.அபுதசாம் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

அதன் பிறகு, வேறு வழியில்லாமல் கவனக்குறைவால் நேர்ந்த விபத்து என்று வழக்கு பதிவு செய்து ‘சூர்யதேவ்’ நிர்வாகத்தின் மேலாளர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். ஆலை எப்போதும் போல இயங்கிக்கொண்டே இருக்கிறது.

தொழிலாளர் வாழ்க்கையை கழிப்பறை காகிதம் போல மதித்து, சட்டவிரோதமாக வேலைக்கு வடமாநிலத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி, அவர்கள் உயிர் விடுவதை தனது மயிர் உதிர்ந்தது போல நடத்தியிருக்கிறது. சூர்யதேவ். இது போன்ற படுகொலைகள் தொடர்கதையாகி வருகிறது. முதலாளியின் லாப வெறிக்கு தொழிலாளர்கள் கொத்துக்கொத்தாக பலியிடப்படுகின்றனர்.

தொடரும் ஆலைச்சாவுகளை தடுக்க ஆலை வேறுபாடுகளை கடந்து தொழிலாளி வர்க்கமாய் அணிதிரண்டு, முதலாளித்துவ பயங்கரவாதத்தை எதிர்த்து முறியடிக்க களம் இறங்கவேண்டும். .

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
திருவள்ளூர் மாவட்டம்- 9444213318.

படங்கள், வீடியோ : இணையத்திலிருந்து

அப்பார்ட்மெண்ட் பிராமணர்கள் – ஒரு கடிதம்

179

blorebrahmincolonyஅன்பு வினவு நண்பர்களுக்கு,

வணக்கம்.

என்னை நினைவிருக்கிறதா? ஐந்தாண்டுகளுக்கு முன்பு நானும் ஒரு கட்டுரை அனுப்பினேன். அதில் மகளிர் தினம் பற்றி என் அனுபவங்கள் எழுதியிருந்தேன். தனிப்பட்ட விவரங்களை வெளியிடாமல் அதை மாற்றி எழுத கேட்டிருந்தீர்கள். அப்போது அதெல்லாம் எனக்குத் தெரியவில்லை. பிறகு நிறைய கற்றுக் கொண்டேன்.

இந்த ஆண்டுகளில் பெண் என்ற வரம்பைத் தாண்டி சுயமா வாழவும், போராடவும் நிறைய கற்றுக் கொண்டேன். கிடைக்கும் நேரத்தில் இணையத்தில் இருப்பேன், உங்க கட்டுரைங்களும் படிப்பேன்.

சமீபத்தில் பூர்வாசிரம பிராமணர் கடிதம் படித்தேன். அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் கலந்து ரசித்தேன். இந்த மாதிரி சமூகத்தில் ஒரு நண்பர் மாறி வந்து கலப்பு திருமணமெல்லாம் செய்ஞ்சாருன்னா நம்பவே முடியலை, வாழ்த்துக்கள்! அத்தோடு உங்கள மாதிரி தீவிர கொள்கைக்காரர்களோடு அவர் இணைந்திருப்பது இன்னும் மகிழ்ச்சி. சரி அதிர்ச்சி எதற்கு என்று கேக்குறீங்களா?
அதுக்குத்தான் இந்த கடிதம்.

கணவருக்கு சிறுசேரி ஐ.டி நிறுவனமொன்றில் வேலை. எனக்கு தி.நகர் தனியார் பள்ளியில் ஆசிரியர் வேலை. அப்போது எங்கள் குழந்தைக்கு வயது நான்கு. அடுத்த வருடம் அவனை ஒரு பள்ளியில் சேர்க்கணும். இதெல்லாம் யோசித்து ஒரு ஏரியாவில் வாடகை வீடு பார்த்து குடி போனோம். இதெல்லாம் மூணு வருடத்துக்கு முன்பு உள்ள நிலை.

அது பார்க்க ரொம்ப அழகான அப்பார்ட்மெண்ட். சிங்கிள் பெட் ரூம் என்றாலும் வெளியே டு வீலர் பார்க்கிங், குழந்தைகள் விளையாட வசதி, காற்றோட்டமான குடியிருப்பு, எங்க பட்ஜெட்டுக்கு ஏத்த வாடகைன்னு எல்லாம் பொருந்தி வந்தது.

எங்களுக்கு பூர்வீகம் தென்மாவட்டம். அங்க இருக்கும் மக்கள் மாதிரி அன்னியோன்யமாய் இல்லாட்டாலும் இங்கேயும் ஓரளவுக்கு நல்லாத்தான் பழகுவாங்கன்னு எதிர்பார்த்தேன். ஆரம்பத்தில் அப்பார்ட்மெண்ட் பெண்கள் சினேகமாக சிரிச்சாங்க. என்ன ஏதுன்னு பொதுவா பேசிக்குவாங்க. சரி நல்லாத்தான் போகுதுன்னு நினைச்சேன். ஆனா அது கொஞ்ச நாளைக்குத்தான்.

எங்கள் அப்பார்ட்மெண்டில் 30 வீடுங்க, மூன்று ஃபுளோரில் இருக்கு. தரை தளத்துல முகப்பு கேட்டுக்கு உள்புறம் அழகான குரோட்டன்ஸ் செடியெல்லாம் நிறைய வச்சருந்தாங்க. ஒரு நாள் நான் ஸ்கூலுக்கு கிளம்பிய போது எதிர்த்த வீட்டு அம்மா நிறுத்தி கேட்டார்.

brahmin“பூச்செடி நன்னா வளரணுமுன்னு, மீன் கழுவுன தண்ணியெல்லாம் ஊத்றேளாமே”!?”

எனக்கு தூக்கி வாரிப் போட்டது. மீன் கழுவன தண்ணியை சிங்குல ஊத்தாம பூச்செடிக்கு ஏன் ஊத்தப்போறேன்?

“யார் சொன்னாங்க மேடம்” திருப்பிக் கேட்டேன்.

பக்கத்து வூட்டு மாமிதான்ன்னு அந்த அம்மா சொன்னாங்க. சரி அவுங்ககிட்ட கேக்குறேன்னு எரிச்சலுடன் சட்டுனு திரும்பினேன். உடனே அந்த அம்மா இல்லையில்லை அப்படி சட்டுபுட்டுன்னு கேக்காதீங்கோ, சும்மா இட்டுக்கட்டி சொன்னதாக்கும், மீன் தண்ணியெல்லாம் அங்க ஊத்தக் கூடாதுன்னு சொல்ல வந்தேன்னு சொன்னாங்க.

இப்படியெல்லாமா மனிதர்கள் இருப்பாங்க! இதுக்கு என்ன பதில் சொல்றதுன்னே அப்ப புரியல. கொஞ்ச நாட்களல்ல நான் நிறைய புரிஞ்சுகிட்டேன்.

அங்க இருக்குறவங்க யார், என்ன சாதின்னு ஆரம்பத்துல தெரியாது. அது தேவையுமில்லை. என்னென்ன வெலை பார்க்குறாங்கன்னு மட்டும்தான் தெரியும். பக்கத்து வீட்டு குழந்தைகள் என் குழந்தையோட விளையாட வீட்டுக்கு வருவாங்க. ஆனா அந்த அப்பார்ட்மெண்டுல என்னமோ கண்ணுக்குத் தெரியாத பிரிவினை, என்னண்ணு சொல்லத் தெரியாத ஒரு அலர்ஜி இதையெல்லாம் நானே கொஞ்ச நாள்ல உணர்ந்தேன். கணவருக்கும் இதே மாதிரி சில அனுபவங்கள்.

அப்பார்ட்மெண்டுல 20 வீடுகள்ள பிராமிண்ஸ் இருந்தாங்க. ஐஞ்சு வீடு நான்-பிராமின்ஸ், மூன்று வீடுகள்ள கத்தோலிக்ஸ், இரண்டுல நார்த் இன்டியன்ஸ் இருந்தாங்க. எங்க வீட்டுல ஜீசஸ், மாதா படங்கள பார்த்துட்டு ஆரம்பத்திலேயே நாங்க இன்னாருன்னு அவங்க கண்டு பிடிச்சிருப்பாங்க போல. மதம் மட்டுமில்ல, சாதியும் அவுங்களுக்கு முக்கியமில்லையா?

தூத்துக்குடியா, தூத்துக்குடியில எங்க-ன்னு ஆரம்பிச்சு தெரு, டோர் நம்பர் வரைக்கும் போவாங்க. இதுதான் நோக்கமான்னு தெரிஞ்சாச்சு, பிறகு எதுக்கு தயக்கம்? நான் மீனவர் சமுதாயம், கணவர் நாடார்னு ஒரே போடா போட்டுருவேன். இப்ப நடுத்தர வர்க்கமா மாறினாலும் ஒரு மீனவச்சிக்கு இருக்கும் சுயமரியாதை எங்கிட்ட நிறையவே இருக்குன்னு நினைக்கிறேன்.
அவங்களுக்கு கருவாட்டு சாதி பிடிக்காதுன்னாலும் எங்களோட மாறிப்போன வர்க்கம் காரணமா சகிச்சுக்கிட்டாங்க போல. இது மேலும் எனக்கு அறுவெறுப்பை உண்டாக்கிச்சு.

பிராமின்ஸ் வீடுகள்ள இருக்கும் குழந்தைங்க எங்க வீட்டுக்கு எப்பவாச்சும் வருவாங்க, சாக்லேட், பாக்கட் சிப்ஸ் கொடுத்தா சாப்பிடுவாங்க. பரவாயில்லயே நல்லாத்தானே பழகுறாங்கன்னு ஆரம்பத்துல நினைச்சேன். பிறகு பார்த்தா அவங்க பேக்டு ( உறை போட்ட) உணவு மட்டும்தான் சாப்பிடுவாங்க, வடை, பணியாரம்முனு இதர பதார்த்தங்கள கொடுத்தா நாசுக்கா தவிர்ப்பாங்க. ஒருநாள் ஏன் என்னென்னு கேட்டப்பிறகுதான் சொன்னாங்க. நம்ம கைபட்ட பதார்த்தம் அவங்களுக்கு தீட்டாம். அதே மாதிரி தண்ணியும் குடிக்க மாட்டாங்க. இதெல்லாம் அந்த குழந்தைங்க சரளமா செய்யுறதப் பாத்து எனக்கு இன்னும் அதிர்ச்சி. எப்படியெல்லாம் டிரெயினிங் கொடுத்துருக்காங்க!

மாசத்துக்கு ரெண்டு நாளாவாது முழு அப்பார்ட்மெண்டையும் கழுவி ஊத்துவாங்க. ஏதோ பிரதோஷம், இன்னும் வாய்க்குள் நுழையாத சடங்கு சாஸ்திரமுன்னு சொல்லி தண்ணி இல்லாத ஊருல வெள்ளமா ஊத்துவாங்க. காலைல ஸ்கூலுக்கு கிளம்பும் போது இவங்க ஊத்துண தண்ணியல விழாம கவனமாக பாத்துப் போகணும். மற்றவர்களுக்கு இப்படி இடையூறு செய்யுறமேன்னு கொஞ்சம் கூட நினைக்கமாட்டாங்க.

rentஇவங்க வீட்டுல வேலை செய்யுற பெண்கள் 50, அறுபது வயசானாலும் ஏன்டி, போடின்னுதான் கூப்பிடுவாங்க. கொடுமை என்னண்ணா அவங்க பசங்களும் அப்படித்தான் கூப்பிடுவாங்க. காலையில் வேலைக்கு வந்தா அப்பார்ட்மெண்ட் வெளி கேட்டுக்கு பக்கத்துல செருப்பை கழட்டிவிட்டுத்தான் இந்த பெண்கள் வரணும். இவங்க சமையலறையில அந்த பெண்கள் நுழைய கூடாது. பாத்திரங்களையெல்லாம் குளியலறையில்தான் கழுவணும். பழையது, மிஞ்சனதெல்லாம் யூஸ் அண்ட் த்ரோ டப்பாக்களில்தான் கொடுப்பாங்க.

அவங்க குழந்தைங்க எங்க வீட்டுக்கு வர மாதிரி (அதுலயும் நிறைய கட்டுப்பாடு) என் குழந்தை அவங்க வீட்டுக்கு போக மாட்டான். இது குழந்தை தன்மையிலேயே அவனே தெரிஞ்சிக்கிட்ட விசயம்கிறதால பல நாட்கள் நான் உடைஞ்சு போயிருக்கேன். குழந்தைங்கள விடுங்க, நாங்களே ஒரு ஆத்திர அவசரத்துக்கு அவங்க வீட்டுக்கு போயி மணிய அழுத்துனா வீட்டு ஜனங்க அத்தன பேரும் வாசலை மறிச்சுக்கிட்டு என்ன, என்னன்னு கேப்பாங்க. எதா இருந்தாலும் வாசலிலேயே பேசி முடிச்சிக்கலாம், வீட்டுக்குள்ள என்ன வேலைங்குற மாதிரி இருக்கும்.

வீட்டுக்கு யார் வந்தாலும் வாங்க, உக்காருங்கன்னு சொல்லி பழகுனவங்களுக்கு இது ரொம்ப நெருடலா இருக்கும். ஒரு முறை நான் சொன்ன நான் – பிராமின் குடும்பத்துல ஒருத்தங்க பொங்கலுக்கு அப்பார்ட்மெண்ட் பார்க்கிங் ஏரியாவுல ஒரு ஓரத்துல கோலமெல்லாம் போட்டு, அடுப்பு மூட்டி பொங்கல் சமைச்சாங்க. பொங்கலோ பொங்கல்னு குழந்தைகள் கும்மாளமும் வேடிக்கையுமா இருந்தது. பிறகு ஆளுக்கொரு இலையில பொங்கல கொடுத்து சாப்பிடச் சொன்னாங்க. பிராமண குழந்தைங்க அவங்களுக்கு கொடுக்கப்பட்ட இன்ஸட்ரக்சனை மறந்துட்டாங்களான்னு தெரியல, சாப்பிட்டாங்க. என்ன இருந்தாலும் குழந்தைங்க இல்லையா!

பிறகென்ன நான்கைந்து வீடுகள்ள கதவ சாத்திட்டு அடி உதை, எதுக்கு சாப்பிட்டேன்னு! பொங்கல் போட்ட அந்த பெண் அவ எனக்கும் தோழிதான், இத கேட்டு அவங்கிட்ட போய் சண்டை போட்டா! நீங்க குழந்தைங்கள ஆச்சாரமா வளர்க்கிறதா இருந்தா வீட்டுக்குள்ள பூட்டி வச்சு வளருங்க, எங்க்கிட்ட வந்தா இப்படித்தான் பொங்கல கொடுப்போம், அதை மறைச்ச வைச்சு சாப்பிடுற பழக்கம் எங்களுக்கு இல்லேன்னா.

கத்தோலிக்ஸ் பொதுவா பொட்டு, பூவெல்லாம் வைப்பாங்க. எனக்கு அது விருப்பமில்லேன்னாலும் எப்பவாச்சும் வைப்பேன். அப்ப முறைச்சு பாப்பாங்க. ஒரு நாள் தலை குளிச்சிட்டு சாம்பிராணி போட்டேன். உடனே வெளிய வந்து நீங்களெல்லாம் சாம்பிராணி போடுவேளான்னு கேட்டாங்க. வந்த புதிசில் என் கணவர் வேட்டியுடன் சென்ற போது நீங்களெல்லாம் வேட்டி கட்டுவேளான்னு கேட்டாங்க. அவரோ நாங்க மட்டும்தான் வேட்டி கட்டி பழக்கமுணு சொன்னாரு.

இது மாதிரி சின்ன விசயங்கள் நிறைய இருக்கு. எதுக்கு சொல்றேன்னா இதெல்லாம் அவங்களுக்கு பாத்தியப்பட்ட சமாச்சாரங்கள்னு ஒரு நினைப்பு. குங்கும பொட்டு வைக்காதது, வகிடெடுத்து பொட்டு வைக்காதது, மஞ்சள் பூசி குளிக்காதது இதெல்லாம் அவங்க கருத்துப்படி ஒழுக்கமில்லாத பெண்களோட குணம்.

அந்த பிராமின் வீடுகள்ள ஒருத்தரு ஏதோ சில கோவில்கள்ல ஐயரா இருக்காரம். அவரு செல்போன், பைக்குனு அல்ட்ரா மாடர்னா இருந்தாலும் வீட்டு பெண்கள் பீரியட்ஸ்னா அபார்ட்மென்ட் தரை தளத்துல ஒரு சேரைப் போட்டு உக்காருவாங்க. ஒரு பெண்ணா எனக்கு அது பயங்கர கூச்சமாவும், வெறுப்பாவும் இருக்கும். மூணு வேளையும் ஓட்டல் சாப்பாடு வாங்கி கொடுப்பாங்க. வீட்டுல எதாவது துணிமணி கேட்டாங்கன்னா கொடியில இருந்து கம்பு வைச்சு எடுத்துக் கொடுப்பாங்க. இதெல்லாம் 21-ம் நூற்றாண்டுல சென்னையில ஒரு நவீன குடியிருப்புல நடக்குது!

kanchiபிராமின் வீட்டு பசங்க எல்லாம் சிபிஎஸ்இ பள்ளிக்கூடத்துலதான் படிக்கிறாங்க. என்னோட பையனை ஸ்டேட் போர்டு பள்ளிக்கூடத்துல அதுவும் சாதாரண மக்கள் படிக்கும் பள்ளின்னு கேட்டு தெரிஞ்சிகிட்டு நாசுக்கா ஆனா ரொம்ப கீழா பேசுவாங்க. அங்க படிக்கிற பிள்ளைங்களெல்லாம் மக்காச்சே, சிபிஎஸ்இ இல்லேன்னா பியூச்சர் பாழாச்சே, மத்த படிப்பெல்லாம் வேஸ்ட்டாச்சேன்னு இதுதான் அல்டிமேட் உண்மை போல பேசுவாங்க. அதே மாதிரி வெளிய போனா உடுப்பி, கிராண்ட் ஸ்வீட்ஸ், கிருஷ்ணா ஸ்வீட்ஸ்ன்னு ரொம்ப ஆச்சாரமான சைவக் கடையா பாத்துத்தான் சாப்பிடுவாங்க!

இதன் மறுபுறமும் உண்டு. தள்ளு வண்டியில் வரும் கடைக்காரர்களிடம் இவர்கள் பேரம் பேசும் சித்ரவதைய தனியா சொல்லணும். பத்து ரூபாய்க்கு ஐந்து விதமான காய் வாங்கி அதில் ஐம்பது காசு மிச்சம் பிடிக்க பிளான் பண்ணுவாங்க. காய்க்காரரிடம் வத்தலும், தொத்தலுமாய் இருக்கே, என்னா இவளோ ரேட்டு என்று ஆரம்பித்து நாலணா, எட்டணாவுக்க்கு உலக அரசியலே பேசுவாங்க. மற்றவர்களிடம் சாதாரணமாக பேசும் அந்த வியாபாரிகள் இவர்களை மட்டும் ஜன்ம எதிரி போல நடத்துவாங்க. ஆனால் அவர்களுக்கிடையே தினமும் வியாபாரம் நடந்துதான் வருகிறது.

எங்கள் அப்பார்ட்மெண்ட் பிராமணர்கள் மின்வாரியம், தலைமைச் செயலகம், இன்சூரன்சுன்னு பல அரசு, தனியார் துறைகளில் நல்ல சம்பளத்துடன் வாழ்றவங்கதான். ஆனா பாத்தீங்கன்னா ரேசன் பொருட்கள் ஒன்று விடாமல் வாங்கி வருவாங்க. அதில் பொங்கல் இலவச வேட்டி, சேலை, மளிகை பொருட்கள் கூட அடக்கம். நாங்களெல்லாம் ரேசன் கடைகளில்தான் கால்வயிற்று கஞ்சியுடன் வளர்ந்து ஆளானவங்கதான். ஆனா இன்னைக்கு ஒரு நடுத்தர வர்க்க வாழ்வு கிடைத்ததும், வறுமைக் கோடுக்கு கீழே இருக்கும் மக்களின் பங்கை நாம எடுக்க கூடாதுங்கிறதெல்லாம் யோசிக்காமலே செய்கிறோம். அவங்களோ எந்த குற்ற உணர்வும் அடையறதில்லை.

இவங்களோட ஆச்சார அனுஷ்டாங்களாவது உண்மையான்னு பார்த்தால் அது இன்னும் போலியா இருக்கும். ஒரு வீட்டில் கையில் ஏதோ ஜபமாலை வைத்துக் கொண்டு எதிரில் குட்டி ஹோமம் மாதிரி ஒன்றில் (நெருப்பு கிடையாது) ஏதோ எடுத்து போட்டு கொண்டிருப்பார் ஒருவர். எதிரில் ஷேர் மார்கெட் சானல் ஓடிக் கொண்டிருக்கும். அதுல ஷேர் விலைகளை பாத்துகிட்டு இங்கே மந்திரம் ஓதிகிட்டு………எப்படி இது?

எங்களைப் போன்ற பின்தங்கிய சமூகத்தின் முதல் தலைமுறை அறியாத பங்கு மார்கெட்டெல்லாம் அவர்களுக்கு அத்துப்பிடி. இதர வருமானங்களை இதற்கென்றே ஒதுக்கி பணம் சேர்க்கிறார்கள். அதில் கோவில் பூசாரியாக இருக்கும் ஐயரும் உண்டு. பிராமண வீட்டு பெண்கள் பகலில் எல்லா சேனலிலும் சீரியல் பாப்பாங்க. கைகளில் இருக்கும் நோட்டுக்களில் ராம மந்திரமோ ஏதோ ஒன்றோ எழுதிக் கொண்டே இருப்பார்கள். இதுல எது உண்மை?

Kalady Avani Avittamகோடைகாலத்தில் தண்ணீரில்லை, தினமும் ஒரு குடிநீர் லாரி நிரப்ப வேண்டும் என்று ஆயிரம் ரூபாய் சேர்த்து மெயின்டெனன்சுக்கு மொத்தம் 2000 ரூபாய் வாங்கினார்கள். என் கணவர் யதேச்சையாக வாச்மேனிடம் தினமும் லாரி வருகிறாதா என்று கேட்டு, ஒரு நாள் விட்டு ஒரு நாள் வருகிறது என்று அவர் சொன்னார். அவருக்கு பிறகு வந்த புது வாச்மேனோ குடிநீர் லாரி வாரத்துக்கு ஒரு தடவைதான் வருகிறது என்றார். ஆத்திரமடைந்த கணவர் அங்கேயே இவர்களை திட்டி விட்டு சென்றார். அடுத்த நாள் அந்த வீட்டு பெண்கள் என்னிடம் வந்து குழந்தைங்க ஸ்கூலுக்கு போகும் போது திட்ட வேண்டாமென கேட்டுக் கொண்டார்கள். இது என்னன்னு சொல்ல?

அந்த அப்பார்ட்மெண்ட் அசோசியேசன் தலைவர், செயலர், பொருளாளர் எல்லாம் இவங்கதான். அனேகமா பிரமாணரல்லாதோரிடம் மட்டும்தான் அவங்க அதிக பணம் வசூலிக்கிறாங்க. அதை வைத்து அப்பார்ட்மெண்ட் கிளீனிங் இதர செலவு என்று அவர்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்களை இலவசமாக வேலை செய்ய வைக்கிறாங்க. இந்த டெக்னிக்கெல்லாம் எங்கேயும் பாக்கவே முடியாது.

இப்போது என் குழந்தை இந்த சூழலில் ஒன்ற முடியாமல் தனியா தவிக்கிறான். அவனோட உலகில் இது ஒரு பொதுவிதி போல புரிந்து கொள்ளப்படுது. பிராமண வீட்டு குழந்தைகள் மற்ற குழந்தைகள் போல ஏதாவது கெட்ட வார்த்தை பேசினாலும் அதில் பெரிய வித்தியாசம் இருக்கு. மற்றவர்கள் பேசுவது பிடிவாதம், அடம், சேட்டை என்று மட்டும் போகும். இவர்களோ தங்களது ஏசுதலில் ஒரு போலிஸ்காரரது தோரணையோடு அதிகாரமாக திட்டுவாங்க. அதாவது மற்ற குழந்தைகளெல்லாம் இவர்களை விட கீழே என்பதா அந்த தொனி இருக்கும்.

முக்கியமான ஒன்று உண்டு. இந்த குடியிருப்பில் பிராமண உரிமையாளர்கள் வீடு விற்றாலோ, வாடகைக்கு விட்டாலோ அது பிராமணர்களுக்கு மட்டும்தான். ஏழெட்டு பிராமணரல்லாதோருக்கு சொந்தமான வீடுகளில் மட்டும் எங்களைப் போன்றோரை குடி வைக்கிறாங்க.

உங்கள் கட்டுரையில் கிழக்கு புத்தக பத்ரி, எழுத்தாளர் ஜெயமோகன் கட்டுரைகளை சேர்த்திருந்தீர்கள். அதையும் படித்தேன். என்ன தோணுதுன்னா இவங்களெல்லாம் எங்கேயாச்சும் ஒரு பிராமண குடும்பத்தையாவது நேரில் பார்த்தோ இல்லை பழகியோ பாத்திருப்பாங்களோன்னு சந்தேகமா இருக்கு.

எங்க அப்பார்ட்மெண்ட விடுங்க. கணவர் வேலைபார்க்கும் சிறுசேரி ஐடி கம்பெனிய எடுத்துக்கங்க. இங்க மேனேஜர் லெவலில் இருக்கிறவங்கள்ல 90 சதவீதம் பிராமணருங்கதான். இதெல்லாம் எப்படி மத்தவங்களுக்கு தெரியும்?

ஆவணி அவிட்டம்முனு ஒரு நாளில்தான் பிராமணர்கள் பூணூல் மாத்துறாங்களாம். அதுக்கு அவங்க அத்தனை பேரும் விடுமுறை எடுப்பாங்களாம். அப்படி எடுக்கும் போது உங்களுக்கும் அவிட்டமான்னு சக பிராமண மனிதர்களை அடையாளம் கண்டு கொள்றாங்க. போலவே மத்த டெக்கிசுக்கும் நம்ம ஆபிசுல, டீம்ல யாரு பிராமின், நான் பிராமின்கிறது தெரிஞ்சு போகும்.

இப்படி சொல்லலாம்ணு தோணுது. பிராமணர்கள் மத்த சாதிக்காரங்கிட்ட என்ன சாதின்னு கேட்டு தெரிஞ்சுக்குவாங்க, பிராமணங்க மட்டும் என்ன சாதின்னு அவங்களே சொல்லுவாங்க.

கணவரு ஆபிசில் ஒரு பிரமாண பெண் மேனேஜர் ஆன்சைட்டுக்கு போன கணவருடன் சேர அமெரிக்கா போறாங்க. அங்க சைவ உணவு சரவண பவன் எங்க இருக்கமுணு பாத்து வீடு பார்க்கிறாங்க. அதிலயும் கருப்பர்கள் இல்லாத வெள்ளையினத்தவர் மட்டும் வாழும் குடியிருப்பா பாத்து போறாங்க. இதுக்காக அவங்க டீமே ஒரு நாள் இணையத்துல கூகிள்ள தேடிப் பாத்தாங்களாம்.

பிரதமரா மோடி ஜெயிச்சதோ, முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைச்சதோ இந்த ஐ.டி துறை பிராமணர்கள் பகிரங்கமாக ஆபிசுல கூடி கொண்டாடியிருக்காங்க. என் கணவர மாதிரி ஆளுங்களெல்லாம் வினவு கட்டுரைகளை கூட திருட்டுத்தனமா படிக்க வேண்டிய நிலையை இதோடு ஒப்பிட்டு பார்க்கிறேன்.

பிறகு ஆபிசில இருக்கும் பிராமணர்களோட பாடி லேங்குவேஜ், கம்யூனிகேசன், அப்ரைசில் ரேட்டிங் எல்லாமே ரொம்ப நுட்பமா அவங்களோட குணத்தை காட்டுற மாதிரி இருக்கும். அதையெல்லாம் சொல்லி புரிய வைக்கிறது ரொம்ப சிரமம். இதனால எல்லா பிராமணருங்களும் இப்படித்தான்னு சொல்லலை. ஆனா அவங்க கண்டிப்பா விதி விலக்காத்தான் இருப்பாங்கன்னு நினைக்கிறேன்.

DSC_0055பிரமாணரல்லாதோருகிட்ட சாதி உணர்வு நிச்சயமா இருக்கு. இல்லேங்கல. எங்க அப்பார்ட்மென்டிலேயே அவங்க கூட நான் எஸ்சியான்னு கண்டு பிடிக்க ரொம்ப கஷ்டப்பட்டாங்க. மீனவர்னு தெரிஞ்சப்பிறகு பெரிய பாதிப்பில்லேன்னு விட்டுட்டாங்க போல. ஆனா அவங்கிட்ட இருக்குற சாதி உணர்வு ரொம்ப வெளிப்படையானது, கொஞ்சம் வெள்ளேந்தியாவும் இருக்கும். அதாவது கொஞ்சம் பேசி கூட மாத்த முடியும். ஆனா பிராமின்ஸ்கிட்ட இருக்கும் சாதி உணர்வுங்கிறது ஒரு ஆடிட்டர் பேலன்ஸ் ஷீட் போட்டு பைனான்ஸ் நிலைமைய கண்டுபிடிக்கிற மாதிரி ரொம்ப ஆழமா இருக்கும்.

எங்க மாவட்டங்கள்ல் இருக்கும் அரிவாளத் தூக்குறவங்க ஒரு கணம்தான் மிருகமாக இருக்காங்க. இவங்களோ அரிவாளையும் தூக்குறதில்ல, ஆனா ஆயுசு பூராவும் ஏதோ ஒரு சாஃப்ட் வேரை வச்சு மத்தவங்களை துன்புறுத்துறாங்க. அது என்ன, எப்படின்னெல்லாம் என்னால விரிச்சு சொல்ல முடியல.

சரி, வினவு, ஒரு போராட்ட குணம் கொண்ட மீனவப் பெண்ணான நானே இப்ப ரொம்ப களைச்சு போயிட்டேன். இனியும் இங்க குடியிருக்க மனமில்லை. கணவர் மீன் வாங்க செல்லும் போது நல்ல சாளை மீனா, சுறா மீனா, ஆந்திரா நண்டா பாத்து வாங்குங்கன்னு கத்திகிட்டே சொல்லுவேன். ஏம்மா அப்படி கத்தி அவங்கள வம்புக்கு இழுக்குறேன்னு அவர் கேட்பார். அதெல்லாம் அடிபட்ட ஒருத்தியோட சின்ன சின்ன எதிர்ப்புகள்தான். ஆனா அதெல்லாம் நம்ம மனக்காயங்கள குணமாக்காது.

வேற வழி? இப்ப வேறு வீடு பார்த்துட்டு போகப் போறோம். ஆனா ஒரு கண்டிசன் உண்டு. அந்த அப்பார்ட்மெண்டுல மெஜாரட்டியா பிராமின்ஸ் இருக்க கூடாது.

இவங்க கிட்ட நாடோ, அதிகாரமோ இருந்தா எப்படி இருக்குமுணு என் கணவர் அடிக்கடி சொல்வார்! அத நினைக்கவே பீதியா இருக்கு.

அன்புடன்
மாலா

குறிப்பு: இந்த கடிதம் வெளியிடத் தகுந்ததுன்னா வெளியிடுங்க. பிறகு இந்த கிறிஸ்மசுக்கு உங்களை விருந்துண்ண அழைக்கிறோம். உங்களுக்கு மதம் இல்லேன்னாலும் இன்னைக்கு சர்ச் மாறியிருந்தாலும் ஆரம்பத்துல ஏசுநாதரும் ஏழைகளுக்காக பாடுபட்டவருன்னு ஏத்துக்கிவீங்கள்ல? எனக்கு ஏசுநாதரும் வேணும், பெரியாரும் வேணும். என் குழந்தை படிக்கிற மிஷனரி பள்ளியில அவன் இந்த வருடம் மாறுவேடப் போட்டியில பெரியார் வேஷத்தோடதான் போனான். தாடி வச்சா தாகூரான்னு என் காது படவே அவங்க பேசுனாங்க. எனக்கு என்ன தோணுதுன்னா பெரியாரோ உங்கள மாதிரி கட்சிங்களோ இருந்தாதான் ஜீசஸ் பாதுகாப்பா இருப்பாருன்னு தோணுது. இந்த அப்பார்ட்மெண்டுல இதுதான் கடைசி கிறிஸ்மஸ்!

(ஊர், பெயர், அடையாளங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன – வினவு)