Friday, June 12, 2026
முகப்பு பதிவு பக்கம் 791

அணு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணைய மசோதா: முழு மோசடி !

அணு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணைய மசோதா: முழு மோசடி!

அணு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணைய மசோதா: முழு மோசடி!இந்தியாவில் ஏற்கெனவே இயங்கிவரும் மற்றும் புதிதாக நிறுவப்படும் அணு உலைகளின் பாதுகாப்புத்தன்மையைக் கண்காணிக்கவும் உறுதி செய்யவும் புதிய சட்டத்தையும், அச்சட்டத்தின் கீழ் செயல்படத்தக்க புதிய ஆணையம் ஒன்றையும் உருவாக்கும் நோக்கத்தோடு அணு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணைய மசோதாவைத் தயாரித்து, அதனை நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக முன்வைத்திருக்கிறது, காங்கிரசு கூட்டணி அரசு.  இதுநாள்வரை இந்தியாவிலுள்ள அணு உலைகளின் பாதுகாப்புத்தன்மையைக் கண்காணித்துவந்த அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தைவிட, புதிதாக உருவாக்கப்படும் ஆணையம் எந்தவொரு அமைச்சகத்துக்கும் கட்டுப்படாமல் சுதந்திரமாகச் செயல்படும் என்றும்; அணுஉலைகளை இயக்குவதற்கு அனுமதி வழங்கவும், கொடுக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யவும்; அணு உலைகள் எந்த அளவிற்கு கதிர்வீச்சை வெளியிடலாம் எனத் தீர்மானிக்கவும்; அணு உலைகளை ஆய்வு செய்யவும், அணு உலைகளை இயக்கும் நிர்வாகத்திற்கு வழிகாட்டவும் உள்ளிட்டு இவ்வாணையத்திற்குப் பலவிதமான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மைய அரசு தெரிவித்திருக்கிறது.

ஜப்பானின் ஃபுகுஷிமா அணு உலையில் ஏற்பட்ட விபத்து அணு உலைகளைப் பற்றிய அச்சத்தை மக்கள் மத்தியில் மிகத் தீவிரமாக ஏற்படுத்தியிருப்பதால், அவர்களின் அச்சத்தைப் போக்கும்விதமாக அணு உலைகளின் பாதுகாப்புத் தன்மையைக் கண்காணிக்க சுதந்திரமான ஆணையம் உருவாக்கப்படும் என பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் உறுதியளித்திருந்தார்.  அந்த உறுதிமொழியைச் செயல்படுத்தும்விதத்தில்தான் இந்தப் புதிய சட்டமும், ஆணையமும் உருவாக்கப்படுவதாக காங்கிரசு கூட்டணி அரசு தெரிவித்திருக்கிறது.

அணு மின்சாரத்திற்கு மாற்று வேறு எதுவும் கிடையாது என ஆளும் கும்பலும் அதிகார வர்க்கமும் அடித்துப் பேசி வரும் நிலையில்; அமெரிக்கா மற்றும் பிரான்சிலிருந்து அணு உலைகளை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தங்கள் முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில்; ஜெய்தாபூர், கூடங்குளம், கல்பாக்கம், கைகா என நாட்டின் பல்வேறு பகுதிகளில் அணு உலைகளுக்கு எதிரான போராட்டங்கள் பரவிவரும் நிலையில், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அணு பாதுகாப்பு ஒழுங்குமுறை மசோதா மற்றும் அதன்கீழ் உருவாக்கப்படவுள்ள ஆணையத்தின் சொல்லிக் கொள்ளப்படும் சுதந்திரம், நடுநிலை, ஒளிவுமறைவற்ற தன்மை பற்றி அறிந்துகொள்வது  மிகவும் அவசியமானதாகிவிடுகிறது.

இம்மசோதாவின்படி அணு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் உருவாக்கப்படுவதற்கு முன்பாக அணு பாதுகாப்பு கவுன்சில் என்ற அமைப்பு ஏற்படுத்தப்படும்.  இக்கவுன்சிலின் தலைவராக பிரதமரும், 5 அல்லது 6 மைய அமைச்சர்கள் அக்கவுன்சிலின் உறுப்பினர்களாகவும் இருப்பர்.  இந்த கவுன்சில் அணு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு ஒரு தேடுதல் கமிட்டியை அமைக்கும்; அக்கமிட்டி அலசி ஆராய்ந்து ஆணையத்தின் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படத் தகுதி வாய்ந்த நிபுணர்களை கவுன்சிலுக்குப் பரிந்துரைக்கும்.  அப்பரிந்துரையின்படி கவுன்சில் ஆணையத்தை நியமிக்கும்.  இப்படிச் சுற்றி வளைக்காமல் நேரடியாகச் சொன்னால், அணு பாதுகாப்பு கவுன்சிலுக்கு, அதாவது பிரதமருக்கும் அமைச்சர்களுக்கும் நெருக்கமானவர்கள், அணுசக்தி தொடர்பான மைய அரசின் விருப்பங்களுக்குத் தலையாட்டுபவர்கள் மட்டும்தான் இந்த ஆணையத்தின் தலைவராகவும் உறுப்பினர்களாகவும் வரமுடியும்.

இவ்வாணையத்தின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் மட்டுமல்ல, ஆணையத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரமும் கவுன்சிலுக்கு உண்டு.  இக்கவுன்சில் தரும் வழிகாட்டுதல்களுக்கும் உத்தரவுகளுக்கும் ஆணையம் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என இம்மசோதாவில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.  தற்பொழுது அணு உலைகளின் பாதுகாப்பைக் கண்காணித்துவரும் அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் அணுசக்தி அமைச்சகத்துக்கும் அணுசக்தி கமிஷனுக்கும் கட்டுப்பட்டது என்றால், புதிதாக அமையவுள்ள ஆணையம் பிரதமரின் தலைமையில் அமைக்கப்படும் கவுன்சிலுக்குக் கட்டுப்பட்டது.  இதிலெங்கே சுதந்திரமும், ஒளிவுமறைவற்ற தன்மையும் உள்ளது? இவ்வாணையம் புதிய மொந்தை பழைய கள்ளு என்பது தவிர வேறெதுவும் இல்லை என்பதை இம்மசோதாவின் பல்வேறு விதிகளும் எடுத்துக் காட்டுகின்றன.

இவ்வாணையத்தின் செயல்பாடுகள் இந்திய அரசின் சர்வதேசக் கடப்பாடுகளுக்கு ஊறு விளைவிக்காதவாறு இருக்க வேண்டும் என இம்மசோதாவின் 20ஆவது பிரிவு குறிப்பிடுகிறது.  அணு சக்தித் துறையைப் பொருத்தவரை இந்தியாவின் சர்வதேசக் கடப்பாடு என்பது அமெரிக்காவின் அணு ஆற்றல் மேலாதிக்கத்திற்குத் தாளம் தட்டுவது தவிர வேறெதுவும் கிடையாது.  மேலும், அமெரிக்கா மற்றும் பிரான்சைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து அணு உலைகளை வாங்குவதற்குப் போடப்பட்டுள்ள இறக்குமதி வர்த்தக ஒப்பந்தங்கள், இது தொடர்பாக மைய அரசு அளிக்கும் வாக்குறுதிகளைக்கூட இந்த விதியின்படி இந்தியாவின் சர்வதேச கடப்பாடுகளாகி விடுகின்றன.  இதனால் பிரான்சிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள சர்ச்சைக்குரிய ஆறு அணு உலைகள் மற்றும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள பழைய தொழில்நுட்பத்தில் அமைந்த 10,000 மெகாவாட் திறனுள்ள  அணு உலைகளின் பாதுகாப்புத் திறன் குறித்து ஆணையம் கேள்வி கேட்க முடியாது என அம்பலப்படுத்தியிருக்கிறார், அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஏ.கோபாலகிருஷ்ணன்.  அதாவது, இவ்விதியின்படி, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகபோக நிறுவனங்கள் இந்தியாவிற்கு விற்கவுள்ள அணு உலைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் ரப்பர் ஸ்டாம்பாக இந்த ஆணையம் செயல்படும் என்பதுதான்.

அணுசக்தி தொடர்பாகப் போடப்பட்டுள்ள 123 ஒப்பந்தம் உள்ளிட்ட சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் அணு உலைகளை இறக்குமதி செய்வதற்கான வியாபார ஒப்பந்தங்களை நாடாளுமன்றத்துக்குத் தெரிவிக்காமலேயே, அதன் ஒப்புதலைப் பெறாமாலேயே கள்ளத்தனமாகப் போட்டுக் கொண்டு வந்த மன்மோகன் சிங் கும்பல், ஆணைய உறுப்பினர்கள் கடிதம் எழுதுவதற்குக்கூட சுதந்திரம் வழங்கவில்லை.  இம்மசோதாவின் பிரிவு 20 (ஞு)இல் அணு உலைகளின் ஆற்றல் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த விவரங்களைக் கேட்டுப் பெறுவதற்கு இந்த ஆணையத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் அந்நிய நாட்டு நிபுணர்களுக்குக் கடிதம் எழுத வேண்டுமென்றால், அதற்குக்கூட அரசின் அனுமதியைப் பெற வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

‘‘இந்த ஒழுங்குமுறை ஆணையம் நாட்டின் இறையாண்மைக்கு, ஒற்றுமைக்கு, பாதுகாப்புக்கு, அந்நிய நாடுகளுடன் இந்தியா கொண்டுள்ள நட்புறவுக்கு, பொது ஒழுங்கிற்கு, நன்னடத்தைக்கு, நன்னெறிகளுக்கு எதிராகச் செயல்படக் கூடாது” என இம்மசோதாவின் 21ஆவது பிரிவு வரையறுக்கிறது.  அணு உலைகள் நாட்டு மக்களின் உடல் நலத்திற்கும், நாட்டின் சுற்றுப்புறச் சூழலிற்கும் கேடு விளைவிக்காதபடி இயங்குவதைக் கண்காணிக்க உருவாக்கப்படும் ஆணையத்திற்கு இத்துணை நிபந்தனைகள் விதிக்க வேண்டிய அவசியமென்ன?  மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல அணு உலைகளின் பாதுகாப்புக்கும் நாட்டின் இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் முடிச்சு போட வேண்டிய அவசியமென்ன?

அணுக்கதிர் வீச்சின் அபாயங்களை முன்னிறுத்தி அணு உலைகளை எதிர்ப்பதை நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானதாகவும் நாட்டின் இறையாண்மைக்கு விடப்படும் சவாலாகவும் ஆளும் கும்பல் முத்திரை குத்துகிறது.  இந்த அடிப்படையில்தான் கூடங்குளம் அணு உலையை எதிர்த்துப் போராடி வரும் மீனவர்கள் மீது தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.  எனவே, ஒழுங்குமுறை ஆணையம் நாட்டின் இறையாண்மைக்கு, பாதுகாப்புக்கு எதிராகச் செயல்படக் கூடாது என்ற நிபந்தனையின் பொருள் ஆணையம் சுற்றுப்புறச் சூழல் பிரச்சினைகளையோ, மக்களின் உடல் நலம் சார்ந்த பிரச்சினைகளையோ காட்டி அணு உலைகள் இயங்குவதற்குத் தடை விதிக்க முடியாது என்பதுதான்.

ஆணையம் பொதுநலனுக்கு எதிராகச் செயல்படுவதாக மைய அரசு கருதினால், ஆணையத்தின் தலைவரையும் பிற உறுப்பினர்களையும் பதவி நீக்கம் செய்வதோடு, ஆணையத்தையே கலைத்துவிடுவதற்கும்; குறைந்தபட்சம் ஆறு மாத காலத்திற்கு ஆணையத்தின் பொறுப்புகளை மைய அரசு தானே எடுத்துக் கொள்ளுவதற்கும் ஏற்ப இம்மசோதாவில் விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.  ஆணையத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் தப்பித்தவறிக்கூட அரசின் அணுக் கொள்கைகளுக்கு எதிராக நடந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தோடுதான் இப்படிபட்ட எதேச்சதிகார விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.  இது மட்டுமின்றி, கலைக்கும் அதிகாரத்தை மைய அரசு தனது கையில் வைத்துக் கொண்டு, சுதந்திரமாகச் செயல்படும்படி ஆணையத்தை உருவாக்கப் போவதாகத் தம்பட் டம் அடிப்பது கடைந்தெடுத்த பித்தலாட்டத்தனம் தவிர வேறில்லை.

அணு உலைகள் அனைத்துமே நாட்டின் வளர்ச்சிக்காகவும் பொது நலனுக்காகவும்தான் செயல்படுத்தப்படுவதாகவும், அவற்றை எதிர்த்துப் போராடுபவர்கள் பொது நலனுக்கு எதிரானவர்களாகவும் ஆளுங்கும்பலால் சித்தரிக்கப்படுகிறார்கள்.  இந்த அடிப்படையில் பார்த்தால் பொது நலன் என்ற போர்வையில் அபாயம் நிறைந்த அணு உலைகளைத்தான் மைய அரசு பாதுகாக்கத் துடிக்கிறது என்பது விளங்கும்.

சிவில் அணு உலைகளைப் பெயரளவில் கண்காணிக்கும் அதிகாரம் கொண்டுள்ள இந்த ஆணையம், இராணுவ நோக்கங்களுக்காகச் செயல்பட்டு வரும் அணு உலைகள் இருக்கும் பக்கம் தலைவைத்துக் கூட படுக்க முடியாது; சிவில் அணு உலைகளின் பாதுகாப்புத் தன்மை குறித்த அம்சங்களில்கூட, அவ்வணு உலைகள் தொடர்பான அனைத்து விசயங்களையும் பொதுமக்களுக்குத் தெரிவிக்கக் கூடாது என்றும் இம்மசோதாவில் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.  மேலும், அணு மின் நிலைய வளாகத்துக்குள் நடக்கும் விபத்துக்களுள் இந்த ஆணையம் முக்கியமானவையாகக் கருதுவதை மட்டும் வெளியுலகுக்கு அறிவித்தால் போதும் என்றும் இம்மசோதா தெளிவுபடுத்தியிருக்கிறது.  இது, அணு உலையில் இருந்து அவ்வப்போது வெளிப்படும் கதிர்வீச்சுக் கசிவால் ஏற்படும் சிறு சிறு விபத்துக்களையும், அதனால் அங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்களும், அணு உலை இயங்கும் பகுதியில் வசிக்கும் மக்களும் பாதிக்கப்படுவதையும் குழிதோண்டிப் புதைக்கும் சதி தவிர வேறெதுவும் கிடையாது.

அணு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணைய மசோதா: முழு மோசடி!‘சுதந்திரமாக’ச் செயல்படவிருக்கும் இந்த ஆணையம், அரசாங்கம் அமைக்கும் விசாரணை கமிசன்களைப் போல, அரசின் ஊதுகுழலாகத்தான் செயல்படும்.  கூடங்குளம் அணு மின்நிலைய பிரச்சினையையொட்டி அமைக்கப்பட்டுள்ள முத்துநாயகம் கமிட்டியின் செயல்பாடுகளுக்கும் இந்த ஆணையத்தின் செயல்பாடுகளுக்கும் இடையே பெருத்த வேறுபாடு எதுவும் இருக்கப் போவது கிடையாது என இப்பொழுதே நாம் அடித்துச் சொல்லிவிடலாம்.

இதுவொருபுறமிருக்க, நாடாளுமன்றத்தில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டுள்ள அணு விபத்து காப்பீடு சட்டத்தில், “அணு உலையின் வடிவமைப்பில் தவறு இருந்து, அதனால் விபத்து நேரும் பட்சத்தில் அந்த உலையை விற்பனை செய்த நிறுவனத்திடமிருந்து அந்த அணு உலையை இயக்கும் நிறுவனம் குறைந்தபட்ச இழப்பீடு கேட்பதற்கு” ஏற்ப விதிகள் உருவாக்கப்பட்டிருந்தன.  இந்த விதிகளை அச்சட்டத்தில் மன்மோகன்சிங் தானே முன்வந்து சேர்க்கவில்லை.  போபால் படுகொலை தீர்ப்பு மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்த கோபமும், வெறுப்பும் இப்படிபட்ட விதியை அச்சட்டத்தில் சேர்க்க வேண்டிய கட்டாயத்தை மன்மோகன் சிங்கிற்கு ஏற்படுத்தியது.

இந்த விதியை அச்சட்டத்திலிருந்து நீக்க வேண்டும் என அமெரிக்கா கொடுத்த நெருக்குதலையடுத்து, இந்த விதியை நீர்த்துப் போகச் செய்துவிடும் திருத்தங்களை நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காகத் தற்பொழுது முன்வைத்துள்ளது, மன்மோகன் சிங் கும்பல்.  மன்மோகன் சிங் இந்தத் திருத்தத்தை அறிவித்துவிட்டுதான், ஒபாமாவைச் சந்திக்க கடந்த மாதம் விமானம் ஏறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அணு விபத்துக்களால் பாதிக்கப்படும் மக்கள் அணு உலைகளைத் தயாரித்து விற்ற நிறுவனத்திடமிருந்து நேரடியாக நட்ட ஈடு கோருவதற்கு வழிவகை செய்யும் பிரிவையும் இந்தச் சட்டத்திலிருந்து நீக்க வேண்டுமென்றும் அமெரிக்கா நிர்பந்தித்து வருகிறது.  மன்மோகன் ஒபாமாவைச் சந்தித்தபொழுது, அமெரிக்கா கோருவதையெல்லாம் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என அவரிடம் வாக்குறுதி அளித்துவிட்டுத் திரும்பியதோடு, இந்த மாதத்திற்குள் அணு விபத்து காப்பீடு சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிவிடுவேன் எனச் சபதமும் போட்டுள்ளார்.

அணு உலைகளின் பாதுகாப்புத் தன்மை குறித்த தகவல்களையும் உண்மைகளையும் மூடிமறைக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள மசோதாவை அணு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணைய மசோதா என அழைக்கிறார்கள்.  அணு விபத்து காப்பீடு சட்டத்தில் இந்தியாவிற்கு அணு உலைகளை விற்கும் ஏகபோக நிறுவனங்களிடமிருந்து விபத்துக்கான நட்ட ஈடு பெறுவதைத் தடுக்கும் சட்டத்திற்கு அணு விபத்து காப்பீடு சட்டம் எனப் பெயரிடுகிறார்கள். இது, அருவெறுக்கத்தக்க பித்தலாட்டத்தனமும் கிரிமினல்தனமும் கொண்டதுதான் மன்மோகன் சிங் கும்பல் என எடுத்துக் காட்டுகிறது.

____________________________________________________

–    புதிய ஜனநாயகம், டிசம்பர் – 2011
_________________________________________________________

அணு உலையை ஆதரிக்கும் வல்லுநர்களின் பொய்யுரைகள்!

அணு உலையை ஆதரிக்கும் வல்லுநர்களின் பொய்யுரைகள்!கூடங்குளம் அணு உலை தொடர்பான விவாதம், ‘அணுசக்தி பாதுகாப்பானதா, இல்லையா?’ என்ற சட்டகத்துக்குள்ளேதான் பெரும்பாலும் நடந்து வருகிறது. கூடங்குளம் அணு உலையை நிறுவுவதாக இருக்கட்டும், அணு மின்சாரம்தான் ஒரே மாற்று என்று மன்மோகன் சிங்  தற்போது எழுப்பும் கூக்குரலாக இருக்கட்டும், இவை மறுகாலனியாக்க கொள்கைக்கும், பன்னாட்டு முதலாளிகளின் கொள்ளைக்கும் ஏற்ப நமது நாட்டின் மீதும் மக்களின் மீதும் திணிக்கப்பட்ட முடிவுகள். இந்த உண்மையை மறைத்துவிட்டு, தேசத்தின் மீதும் அறிவியலின் மீதும் உள்ள மாளாக் காதலின் காரணமாகத்தான் இம்முடிவுகள் எடுக்கப்பட்டதைப் போல அரசும் அதிகாரவர்க்கமும் நடிக்கின்றன. இதனை அம்பலப்படுத்துவதுதான் இப்பிரச்சினையில் கேந்திரமானது.

‘ஏன் கூடாது கூடங்குளம் அணுஉலை’ என்ற தலைப்பில் சுவராத் ராஜு, எம்.வி.ரமணா என்ற இரு இயற்பியலாளர்கள் இந்து நாளேட்டில் (12, நவ.) ஒரு கட்டுரை எழுதியிருக்கின்றனர். அறிவியல் தொழில்நுட்ப ரீதியான கேள்விகளுக்குப் பின், அறிவியல் தெரியாத பாமர மக்களின் சார்பில் இறுதியாக அவர்கள் எழுப்பியிருக்கும் ஒரு கேள்வி முக்கியமானது.  “கூடங்குளம் உலை அத்தனை பாதுகாப்பானதென்றால், ‘கூடங்குளம் அணு உலையில் விபத்து ஏற்பட்டால் அதனைத் தயாரித்த ரசிய நிறுவனம் சல்லிக்காசு கூட இழப்பீடு தரவேண்டாம்’ என்று இந்தியரசிய ஒப்பந்தத்தின் 13ஆவது ஷரத்து கூறுகிறதே, அது ஏன்?” என்று அவர்கள் கேட்டிருக்கிறார்கள்.

விற்பனை செய்யப்பட்ட ஒரு பொருளில் உற்பத்தி சார்ந்த குறைபாடு  (manufacturing defect)  இருந்து அதனால் பாதிப்பு ஏற்பட்டால், உற்பத்தி செய்த நிறுவனத்திடம் இழப்பீடு கோருவதென்பது மிகச் சாதாரணமான நுகர்வோர் உரிமை. மின்விசிறி முதல் விமானம் வரை எல்லாப் பொருட்கள் விசயத்திலும் உள்ள இந்த உரிமை அணு உலைக்கு மட்டும் கிடையாதாம். “உற்பத்திக் குறைபாட்டினால் விபத்து நேர்ந்தாலும் கம்பெனி பொறுப்பல்ல” என்ற சட்டத் திருத்தத்தை ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டிருக்கும் அணு உலை பாதுகாப்பு சட்டத்தில் செய்ய வேண்டும் என்று அமெரிக்க, பிரெஞ்சு கம்பெனிகள் நிர்ப்பந்திக்கின்றன. இதனை ஏற்று அச்சட்டத்திற்கு திருத்தமும் கொண்டு வந்திருக்கிறார் மன்மோகன் சிங். (தி இந்து, நவ.12)

‘விபத்துக்கு வாய்ப்பே இல்லை’ என்று கூறும் பன்னாட்டு முதலாளிகள் இழப்பீடு பற்றி ஏன் அஞ்ச வேண்டும்? ஏனென்றால், அணுஉலை விபத்து சிறியதாக இருந்தாலும் அழிவு போபாலைக் காட்டிலும் பெரியதாக இருக்கும். இழப்பீடு பெரும் தொகையாக இருக்கும். பன்னாட்டு முதலாளிகள் தங்களது இலாபத்தைப் பணயம் வைக்க மாட்டார்களாம். ஆனால், கூடங்குளம் மக்களை உயிரைப் பணயம் வைக்கச் சொல்கிறது, அரசு.

இதற்காக விஞ்ஞானிகள், வல்லுநர்கள் என்ற பட்டங்களைச் சுமந்து திரியும் அயோக்கியர்களை அமர்த்தி அணுஉலைக்கு ஆதரவாகக் கூவச் சொல்கிறது. இந்த ‘வல்லுநர்கள்’தான் நாட்டைக் கெடுப்பதில் முன்னோடிகள். சாதாரண பாட்டரி கம்பெனி என்று மக்கள் நம்பிக் கொண்டிருந்த யூனியன் கார்பைடு நிறுவனத்திற்குள் நச்சு வாயுவை உற்பத்தி செய்யத் திட்டம் வகுத்துத் தந்த விஞ்ஞானி, அதற்கு ஒப்புதல் தந்த அதிகாரி, மூச்சுத் திணறி இறந்த மக்களின் சவப்பரிசோதனை அறிக்கையில்கூட தில்லுமுல்லு செய்த மருத்துவர்களென எல்லா அயோக்கியர்களும் ‘வல்லுநர்கள்’தான். ஆபத்தான இரசாயன ஆலைகளுக்கு அனுமதி வழங்குவது முதல் காடுகளை அழித்துச் சுரங்கம் தோண்டச் சுற்றுச்சூழல் அனுமதி தருவது வரை எல்லாப் பித்தலாட்டங்களையும் முதலாளிகளுக்கு செய்து கொடுப்பவர்களும், விவசாயிகளுக்கே தெரியாமல் மரபீனி மாற்றம் செய்யப்பட்ட விதைகளைப் புகுத்தி,  விவசாயப் பல்கலைக்கழகங்களைப் பன்னாட்டு நிறுவனங்களின் அடியாள் கழகங்களாக மாற்றி விவசாயிகளின் குடியைக் கெடுப்பதும் விஞ்ஞானிகளும் வல்லுநர்களும்தான்.

விஞ்ஞானத்தை நம்புவது வேறு, விஞ்ஞானிகளை நம்புவதென்பது வேறு. கூடங்குளத்தில் போராடும் மக்களையெல்லாம் பகுத்தறிவற்ற மூடர்கள் போல தனது (தினமணி) கட்டுரையில் சித்தரித்து, ‘கெக்கெக்கே’ என்று சிரிக்கிறார் நெல்லை சு.முத்து என்ற எழுத்தாளர். ஸ்ரீஹரிகோட்டாவில் சூடம் கொளுத்தி ஏவுகணை பத்தவைக்கும் கோமாளிகளுக்கு இவ்வளவு கொழுப்பு தேவையில்லை.

அணு உலையை ஆதரிக்கும் வல்லுநர்களின் பொய்யுரைகள்!அணுகுண்டுக்கே அல்லேலுயா பாடியவரும்,  இந்தியஅமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் எனும் அடிமை ஒப்பந்தத்தின் ஆதரவாளரும், தினமலரால் நேர்மையின் இருப்பிடம் என்று போற்றப்படுபவருமான அப்துல் கலாம் கூடங்குளம் மின் நிலையத்துக்குள் இரவு 1.30க்கு நுழைந்து அதிகாலை 4 மணி வரை ஆய்வு நடத்தி விட்டு, ‘கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது’ என்று 40 பக்க அறிக்கையை உடனே வெளியிட்டிருக்கிறார்.

‘கலாம்தான் இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி’ என்று நம்பும் பழ.நெடுமாறனால் கூட, அக்னி ஏவுகணையை விஞ்சும் வேகத்தில் கலாம் தயாரித்திருக்கும் இந்த அறிக்கையை நம்ப முடியவில்லை. ரசிய நிறுவனமான “ஆட்டம் ஸ்ட்ராய் எக்ஸ்போர்ட்” டின் இணையதளத்தில் கம்பெனி விளம்பரத்துக்காக அவர்கள் வெளியிட்டுள்ள விவரங்களையே சுட்டுத் தயாரிக்கப்பட்டிருப்பதுதான் கலாமின் அறிக்கை.

கூடங்குளம் பகுதி நிலநடுக்கத்தாலும் சுனாமியாலும் பாதிக்கப்படாது என்றும், நாகப்பட்டினத்தை 2004இல் தாக்கிய சுனாமி கன்னியாகுமரி மாவட்டத்தைத் தாக்கவில்லை என்றும் கலாம் கூறுகிறார். அரசு புள்ளிவிவரப்படியே கன்னியாகுமரியைத் தாக்கிய சுனாமியால் மாண்டவர்களின் எண்ணிக்கை 808. இப்பகுதியில் இதுகாறும் ஏற்பட்டுள்ள நிலநடுக்கங்கள் குறித்த விவரங்களையும் கூடங்குளம் போராட்டக் குழுவினர் பட்டியலிட்டுள்ளனர். சுனாமியின்போது, குமரிமுனை திருவள்ளுவர் சிலையின் உயரத்துக்கு133 அடிக்கு  அலைகள் எழும்பின. ஆனால், கூடங்குளம் உலை 13.5 மீட்டர் (சுமார் 42 அடி) உயரத்தில் இருப்பதால், சுனாமி அலைகள் இதனைத் தாக்காது என்கிறார் கலாம். 133ஐ விட 42 பெரிது என்பது கலாமின் கண்டுபிடிப்பு போலும்!

உலகம் முழுவதும் நடந்துள்ள அணு உலை விபத்துக்கள் இதுவரை ஆறே ஆறுதான் எனவும், இந்தியாவில் இதுவரை ஒன்றுகூட நடைபெறவில்லை என்றும்  கூறுகிறார் கலாம். ஆனால், 1947இலிருந்து 2008 வரை உலகெங்கிலும் 76 விபத்துகள் நடந்துள்ளன. இவற்றில் 56 விபத்துகள் 1986இல் செர்நோபில் விபத்துக்குப் பிறகு நடந்தவை.

4, மே 1987இல் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உலைத்தண்டு சிதைந்து 2 ஆண்டுகள் மூடல். செலவு 300 மில்லியன் டாலர். 10, செப். 1989தாராப்பூர் அயோடின் கசிவு  கதிர்வீச்சு 700 மடங்கு. செலவு 78 மில்லியன் டாலர்.  3, பிப். 1995 கோட்டா ராஜஸ்தான்  ஹீலியம்/கனநீர் கசிவு 2 ஆண்டு மூடல். செலவு 280 மில்லியன் டாலர். 22, அக். 2002  கல்பாக்கம்100 கிலோ சோடியம் (கதிர் வீச்சு) கசிவு. செலவு 30 மில்லியன் டாலர். (பொன்.ஏழுமலை, தினமணி, 24 நவ.) இவை இந்தியாவில் நடந்த சில விபத்துகள். இவற்றில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர்; இறந்தவர்கள் பலர்.

மிகப்பெரும் விபத்துகளாக மாறியிருக்க வேண்டியவை, தொழில்நுட்ப வல்லுநர்களின் சமயோசிதத்தால் தடுக்கப்பட்டிருக்கின்றன என்பதே உண்மை. கல்பாக்கம் உள்ளிட்ட எல்லா அணுஉலைகளைச் சுற்றியும் வாழும் மக்கள் கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். காற்றில் கலந்துள்ள கதிரியக்கத்தின் அளவு என்ன என்பதை வேறு யாரும் அளவிடுவதை அரசு அனுமதிப்பதே இல்லை. தேசத்தின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை என்று இவை தடை செய்யப்படுகின்றன.

செர்னோபில் விபத்தில் இறந்தவர்கள் வெறும் 57பேர் மட்டும்தான் எனப் புளுகுகிறார் கலாம். புற்றுநோய் வந்து 70,000 பேர் உயிரிழந்ததாகவும், இன்றும் பல்லாயிரம் பேர் அதன் பாதிப்பினால் புற்றுநோய்க்கு ஆளாகியிருப்பதாகவும் அமெரிக்காவின் நியுயார்க் அகாடமி ஆஃப் சயின்ஸ் கூறுகிறது. உலகெங்கும் உள்ள 136 அணு உலைகளைச் சுற்றி வாழும் மக்கள் மத்தியில் செய்யப்பட்ட மருத்துவ ஆய்வில், அவர்களிடையே புற்றுநோயும், ஊனமும் மிக அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.

ஃபுகுஷிமா விபத்துக்குப் பின் ரசிய அணுஉலைகளைச் சோதித்த அந்நாட்டு விஞ்ஞானிகள், “நிலநடுக்கம், தீ,  வெள்ளத்தை எதிர்கொள்ளும் திறன் நமது உலைகளுக்கு இல்லை” என்று அந்நாட்டு அரசுக்கு அறிக்கை கொடுத்துள்ளனர். கலாமோ கூடங்குளம் உலை 100 சதவீதம் பாதுகாப்பானது என்று கூறுகிறார். இந்த விசயத்தில் அணுசக்தித் துறை தலைவர் முகர்ஜியை, கலாமுக்கே அண்ணன் என்று சொல்லலாம். ஃபுகுஷிமா விபத்து பற்றி தொலைக்காட்சியில் செய்தி வந்த மறுகணமே, “இது விபத்தல்ல, ஜப்பானிய விஞ்ஞானிகள் சோதனை செய்கிறார்கள்” என்று இவர் இந்தியாவிலிருந்து அறிக்கை விட்டார். இதனைக் கேட்டு ஜப்பானிய விஞ்ஞானிகளே வெலவெலத்து விட்டனர்.

அணு உலையை ஆதரிக்கும் வல்லுநர்களின் பொய்யுரைகள்!கலாம், முகர்ஜி போன்ற வல்லுநர்களின் பொய்களுக்கு மறுப்பெழுத பக்கங்கள் போதாது. கலாமின் பொய்களைக் காட்டிலும் கீழ்த்தரமானது, அவர் கூடங்குளம் மக்களுக்கு சிபாரிசு செய்திருக்கும் பத்து அம்சத் திட்டம். “கூடங்குளத்தில் மருத்துவமனை, சாலை, தொழிற்சாலை, பள்ளி, விளையாட்டு மைதானம், 200 கோடிக்கு வளர்ச்சித் திட்டம் ” என்று பயாஸ்கோப் காட்டுகிறார் கலாம். ஓட்டை விலை பேசுவதையும், ஒரு பெண்ணின் மானத்தை விலை பேசுவதையும் விடக் கேவலமாக மக்களின் உயிரை விலை பேசுகிறார் இந்த ‘விஞ்ஞானி’. கூடவே, கூடங்குளம் உலைக்கு தண்ணீர் கொண்டுவரும் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக, பேச்சிப்பாறை அணையிலிருந்து குடிநீர் கொண்டுவர வேண்டும் என்று கூறி இரு மாவட்ட மக்களுக்கும் சிண்டு முடிகிறார்.

அணுசக்தியை ஆதரிக்கும் அனைவரும் இதன் உற்பத்தி செலவு மற்றெல்லாவற்றையும் விடக் குறைவானது, சுற்றுச் சூழலை மாசுபடுத்தாதது என்றும் கூறுகின்றனர். ஆடு கால்பணம், சுமை கூலி முக்கால்பணம் என்பதுதான் அணுசக்தி. உற்பத்திச்செலவு குறைவு. அணுக்கழிவைப் பராமரிக்கும் செலவு  அதிகம். அணு உலை 30 ஆண்டுகளில் மூடப்பட்டு விடும். அது தோற்றுவித்த கழிவின் கதிர்வீச்சு 25,000 ஆண்டுகள் நீடிக்கும். அதனைப் பாதுகாக்க பல்லாயிரம் கோடி செலவு. இதுதான் சுற்றுச்சூழலுக்கும் எதிர்கால சந்ததிக்கும் அணுஉலை விட்டுச்செல்லும் பரிசு.

கூடங்குளம் உலையின் அணுக்கழிவுகள் ரசியாவுக்குக் கொண்டு செல்லப்படும் என்று முதலில் ஒப்பந்தம் போடப்பட்டது. பின்னர், அது கூடங்குளத்திலேயே மறுசுழற்சி செய்யப்படும் என்றார் கூடங்குளம் உலையின் இயக்குநர் காசிநாத் பாலாஜி. கழிவைப் பாதுகாப்பாக ரயில் மூலம் வேறு இடத்துக்கு கொண்டு போய் விடுவோம் என்றது அணுசக்தித் துறை. அக். 7 அன்று பிரதமரைச் சந்தித்தபோது அணுக்கழிவை ஒரு சிறிய கண்ணாடிப் பந்துக்குள் உருக்கி அடைத்து விடுவோம் என்று சொல்லியிருக்கிறார் எஸ்.கே.ஜெயின். பயன்படுத்தப்படும் யுரேனியத்தில் 25% கழிவாகத் தங்கும் என்கிறார் அப்துல் கலாம். இரண்டு வாரங்களுக்குள் இத்தனை முரண்பட்ட பதில்கள் தரப்பட்டதாக அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க  ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் அம்பலப்படுத்துகிறார்.

இந்த அணுக்கழிவிலிருந்துதான் அணு ஆயுதம் தயாரிக்கப்படுகிறது என்பதால், இது தேசப் பாதுகாப்பு இரகசியமாகிவிட்டது. இது பற்றி நம் நாட்டு மக்களுக்கு கூற மறுக்கும் அரசு, இதே விவரத்தை ஆண்டுதோறும் அமெரிக்காவுக்கு எழுதிக் கொடுக்கவும், அமெரிக்காவின் அடியாளான சர்வதேச அணுசக்தி முகமை இந்திய அணுஉலைகளைச் சோதனையிடவும் அனுமதிப்பதாக ஏற்றுக் கொண்டிருக்கிறது.

கூடங்குளம் மக்களுக்கு விளக்கமளிப்பதற்காக மத்திய அரசு அனுப்பி வைத்த வல்லுநர் குழுவிடம் 49 கேள்விகளைப் போராட்டக் குழுவினர் கொடுத்திருக்கின்றனர். அவற்றுக்கு வெளிப்படையாக பதிலளிக்காமல், “இந்தக் கேள்விகளையெல்லாம் உங்களுக்கு யார் தயாரித்துக் கொடுத்தார்கள்?” என்று எதிர்க்கேள்வி எழுப்பியிருக்கிறது வல்லுநர் குழு.

இந்திய அரசின் இந்த அணுஉலைக் காதல் எப்போது உருவானது? இரான்இந்தியா எரிவாயுக் குழாய் திட்டம் கையெழுத்தாகவிருந்த சூழ்நிலையில், 2005 இல் இந்தியாவுக்கு வந்த அமெரிக்க வெளியுறவு செயலர் கண்டலிசா ரைஸ், “இரானுடன் சகவாசம் வேண்டாம். அமெரிக்காவிலிருந்து அணுஉலை தருகிறோம், அணுசக்திதான் சுற்றுச்சூழலுக்கு நல்லது” என்று அறிவுரை கூறினார். “அப்படியிருக்கும்போது 30 ஆண்டுகளாக அமெரிக்காவில் ஏன் ஒரு அணுஉலை கூட அமைக்கவில்லை?” என்று அந்த அம்மையாரை மன்மோகன் கேட்கவில்லை.

2050ஆம் ஆண்டுக்குள் ஆயிரம் மெகாவாட் திறனுள்ள 208 உலைகளை நாம் சுயசார்பாக அமைக்க முடியும் என்றும் யாரையும் சார்ந்திருக்கத் தேவையில்லை என்றும் 2004இல் இந்திய அணுசக்தி துறை கூறியது. 2005இல் அமெரிக்காவின் உபதேசத்தைக் கேட்டபின், “அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போடாவிட்டால் ஒரு அணு உலைகூட இயங்க முடியாது” என்று பல்டியடித்தார் மன்மோகன். இப்போது, 2050க்குள் 1000 மெகாவாட் திறனுள்ள 655 உலைகளை அமைத்து, 6.5 லட்சம் மெகாவாட் அணுமின்சாரத்தை உற்பத்தி செய்யப்போவதாகப் பேசியிருக்கிறார் மன்மோகன். அதாவது இந்தியாவின் 3000 கி.மீ. நீளக் கடற்கரையில் 55 கி.மீட்டருக்கு ஒரு அணுஉலை! (டாக்டர்.கோபாலகிருஷ்ணன், முன்னாள் தலைவர், அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம், )  பேரழிவுக்கு இதைக் காட்டிலும் குறுக்கு வழி உண்டா?

ஜெர்மனி அணு உலைகளை மூடுகிறது. பிரான்சும் ஜப்பானும் குறைக்கின்றன. இந்தியா அதிகரிக்கிறது. இந்தியாவில் தயாரிக்கப்படும் உலைகளைப் போல 4 மடங்கு விலையில் இவை அமெரிக்க, பிரெஞ்சு கம்பெனிகளிடமிருந்து இறக்குமதி செய்யப்படுவதாகச் சொல்கிறார், கோபாலகிருஷ்ணன்.

அணு உலையை ஆதரிக்கும் வல்லுநர்களின் பொய்யுரைகள்!வால்மார்ட்டுக்காக சிறுவணிகர்களை அழிப்பதையும், போஸ்கோவுக்காக காடுகளை அழிப்பதையும் முன்னேற்றம் என்று சொல்வதைப் போலத்தான், அணு உலைக்காக மக்களை அழிப்பதையும், அணுஉலைகளை இறக்குமதி செய்து உள்நாட்டு அணுஅறிவியலை அழிப்பதையும் முன்னேற்றம் என்கிறார் மன்மோகன் சிங். “அணு உலை வேண்டாமென்பவர்கள் மின்சாரம் வேண்டாமென்று சொல்வார்களா?” என்று மிரட்டுகிறார்கள் கலாம் ரசிகர்கள். மின்சாரத்தைப் போற்றுவதற்காக உயர்அழுத்த மின்கம்பியை முத்தமிடவா முடியும்?

மக்களை மரணத்தின் விளிம்பில் நிறுத்தியாவது உற்பத்தி செய்தே ஆகவேண்டிய இந்த மின்சாரத்தால் பயனடைபவர்கள் யார்? “1995 இல் இந்தியாவின் மின் உற்பத்தித் திறன் 81,000 மெகாவாட். அப்போது 52% கிராமங்களுக்கு மின்வசதி கிடையாது. இன்று உற்பத்தித்திறன் 1.82 லட்சம் மெகாவாட். இன்றும் 42% கிராமங்கள் இருட்டில்தான் உள்ளன” (இந்தியா டுடே, நவ.30, 2011) சிறு நகரங்களும் சிறு தொழில்களும் மின்வெட்டால் மடிந்து கொண்டிருக்கின்றன. பெருநகரங்களில் பன்னாட்டு நிறுவனங்களின் தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், நுழைவாயில் முதல் கக்கூசு வரை குளிர்சாதன வசதி செய்யப்பட்ட ஷாப்பிங் மால்கள், நட்சத்திர விடுதிகள், பணக்காரர்களின் வீடுகள் ஆகியவற்றுக்குத்தான் தடையற்று மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. உன்னுடைய முன்னேற்றத்துக்காகவும், ஆதாயத்துக்காவும், சொகுசுக்காகவும் நாங்கள் ஏன் அழியவேண்டும் என்பதுதான் நம்முடைய கேள்வி.

கடைசியாக, “அறிவியலுக்காக மேரி க்யூரி தியாகம் செய்யவில்லையா?” என்று கேட்டிருக்கிறார் கலாம். அவருடைய வாதத்தின்படி போபாலில் கொல்லப்பட்ட மக்கள் வேதியியலின் முன்னேற்றத்துக்காகத் தியாகம் செய்தவர்கள். ஹிரோஷிமாவில் கொல்லப்பட்ட மக்கள் அணு விஞ்ஞானத்தின் முன்னேற்றத்துக்காக உயிர் கொடுத்த தியாகிகள்!

அப்படியானால், குண்டு வீசியவர்கள்? அவர்களை விஞ்ஞானிகள் என்று யாரும் அழைத்ததில்லை. எனினும், அப்துல் கலாம் விஞ்ஞானி என்றுதான் அழைக்கப்படுகிறார். இடக்கரடக்கலாக இருக்கக்கூடும்!

__________________________________________________

-புதிய ஜனநாயகம், டிசம்பர் – 2011

__________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

ரங்கநாதன் தெரு: அங்காடிகளுக்கு “சீல்”! அதிகாரவர்க்கத்துக்கு…?

தி.நகர் ரங்கநாதன் தெரு : அங்காடிகளுக்கு சீல் ! அதிகாரவர்க்கத்துக்கு ...?       தமிழ்நாட்டில் 1970களிலிருந்து படிப்படியாக அதிகரித்து வந்த நகரமயமாக்கம், கடந்த பத்தாண்டுகளில் அதிக வேகம் பிடித்தது. குறிப்பாக தலைநகர் சென்னைக்கு பிழைப்பு தேடி தினமும் வந்து குவியும்  மக்களின் தொகையும், புதிதாக முளைக்கும்  குடியிருப்புகளும், இதைச் சார்ந்து எழுப்பப்படும் உயரமான வணிக வளாகங்களும் சேர்ந்து சென்னையைத் திணறடித்து வருகின்றன.

சென்னையில் கட்டப்படும் புதிய கட்டிடங்களை ஒழுங்குபடுத்துவதற்கென சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ) ஆகிய இரண்டு அமைப்புகள் உள்ளன.

இவ்விரு அமைப்புகளும் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமலும், உரிய காற்றோட்டத்துடனும், தீவிபத்திலிருந்து மக்களைக் காக்கவும் விதிமுறைகளை வகுத்துள்ளன. வணிக வளாகங்களுக்குத் தரை தளத்தில் வாகன நிறுத்தம், கடைக்கு முன் 40 அடி அகலம் வரை சாலை, போதிய இடைவெளியுடன் படிக்கட்டுகள், 2 தளங்களுக்கு மேற்பட்டிருப்பின் கட்டாயமாக தீ அணைப்பு கருவிகள், அவசர காலத்தில் வெளியேறும் வாயில்கள், இரு கட்டடங்களுக்கிடையே 5 முதல் 11 அடி வரை இடைவெளி ஆகியவை இருக்க வேண்டுமென விதிமுறைகள் உள்ளன.

ஆனால் பெரும்பாலான வணிக வளாகங்கள் இவ்விதிகளை மயிரளவும் மதிப்பதில்லை. சென்னை தியாகராய நகரிலுள்ள ரங்கநாதன் தெரு, இதற்கு தகுந்த சாட்சி. நெருக்கமாக எழுந்து நிற்கும் கட்டிடங்கள் அடைத்து நிற்கும் அத்தெருவில் தீவிபத்து ஏற்பட்டால் உயிர் தப்புதல் மிகவும் கடினம். தீயணைப்பு வண்டிகளே நுழையமுடியாத அத்தெருவிலுள்ள சரவணா ஸ்டோரில் இரண்டாண்டுக்கு முன் நடந்த தீவிபத்தில்  அக்கடை ஊழியர்கள் இருவர் இறந்துள்ளனர்.

எவ்வாறு விதிமுறைகளை மதிக்காமல் கட்டபட்ட கும்பகோணம் பள்ளி யின் தீவிபத்து 96 குழந்தைகளைக் கொன்றதோ, அதைவிட மோசமான  நிலைமையில்தான் ரங்கநாதன் தெரு உள்ளது. இத்தெருவில் எழும்பியிருக்கும் கட்டுமானங்களில் நடந்துள்ள விதிமீறல்கள் தெளிவாகத் தெரிந்தபோதும்,  இக்கடைகளுக்கு சீல் வைப்பதாக மாநகராட்சி மிரட்டுவது,  ஒப்புக்கு சில கடைகளின் சிறுபகுதிகளை  இடிப்பது, வியாபாரிகள் நீதிமன்றத் தடை பெற்று பழைய நிலையே தொடர்வது என  இந்த நாடகம் தொடர்ந்து கொண்டுள்ளது.

இந்நிலையில்  சி.எம்.டி.ஏ.வும் மாநகராட்சியும், கடந்த அக்டோபர் 31ஆம் நாள் ரங்கநாதன் தெருவிலும், அதையொட்டியுள்ள உஸ்மான் சாலையிலுமுள்ள 25 கடை வளாகங்களுக்கு சீல் வைத்தன. இதனை எதிர்த்து அப்பகுதிப் பெருவணிகர்கள் நீதிமன்றத்தில் முறையீடு,  கடை அடைப்பு என எதிர்ப்புக் காட்டி வருகின்றனர்.

அதிகரித்து வந்த நகர்மயமாக்கத்தாலும் நிலத்தரகுக் கும்பல்களாலும் சென்னை போன்ற பெருநகரங்களில்  சதுரஅடி மனையின் விலை பல ஆயிரங்களுக்கு உயர்ந்ததும் கட்டுமானங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த விதிமுறைகள் வணிகர்களால் மீறப்பட்டன. போதிய இடைவெளியோ, வாகன நிறுத்தமோ இல்லாமல் இவர்கள் கட்டிய பல அடுக்குமாடி கடைகளுக்கெல்லாம் மாநகராட்சி அதிகாரிகள் ஒப்புதல் தந்தனர்.

இவற்றுடன் நில்லாமல்  அதிகார வர்க்கம் 1988இல் நகர ஊரமைப்பு சட்டத்தின்  கட்டிட விதிமுறைகளில் பல திருத்தங்களைச் செய்து, விதிமுறைகளைத் தளர்த்த முயன்றது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்குகள் கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலமாக தொடர்ந்து இழுக்கப்பட்டு வந்துள்ளது. இவ்வழக்குகளில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, புதிய கட்டிடங்களில் விதிமுறைகள் மீறப்படுகின்றதா என்பதைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளைக் கொண்டு கண்காணிப்புக் குழு ஒன்று 2007இல் ஏற்படுத்தப்பட்டது.

2007இல் இருந்து இவ்வாண்டு வரை விதிகளை மீறிக் கட்டப்பட்ட கட்டிடங்கள்  6438 என ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. ஆனால் கண்காணிப்புக் குழுவோ ‘தாராளமாக’ ஆய்வு செய்து  விதிமுறைகள் மீறப்பட்டுள்ளவை 64 மட்டுமே எனக் கண்டறிந்தது. உடனே அவற்றை இடித்திடாமல், “நோட்டீஸ் அனுப்பினோம், பதில் இல்லை” என்று நீதிமன்றத்தில் பசப்பியது, குழுவின் அறிக்கை. விதிமீறல்களுக்குப் பக்க பலமாக இருந்த 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உட்பட 33 அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையையும் இக்குழு  எடுக்கவில்லை.

தி.நகர் ரங்கநாதன் தெரு : அங்காடிகளுக்கு சீல் ! அதிகாரவர்க்கத்துக்கு ...?அதிகாரிகள் மட்டுமல்ல; ஓட்டுக்கட்சிகளும், விதிமுறை மீறல்களுக்கு துணையாக உள்ளன. தங்கள் லாபவெறிக்கு இடைஞ்சலாக விதிமுறைகள் உள்ளன என பெருவணிகர்கள் கருதியபோது, 1999இல் தி.மு.க.அரசும், 2002 இல் அ.தி.மு.க. அரசும் மாற்றி மாற்றி அவசர சட்டங்களைப் போட்டு அதுவரை நடந்துள்ள விதிமீறல்களுக்கு ‘தப்புக்குத் தக்கபடி அபராதம்’ என ‘முறைப்படுத்தி’ சட்டவிரோத, பொதுமக்களுக்கு ஆபத்தான கட்டிடங்களைக் காக்க முயன்றன.

1988இல் தொடரப்பட்ட பொதுநல வழக்கு நிலுவையில் இருக்கும்போதே 1999இல் தி.மு.க. அரசு கொண்டுவந்த நியாயமற்ற சட்டம் செல்லாது எனத் தீர்ப்பு கொடுத்த உச்ச நீதிமன்றமோ, 1999இல் விதிமுறைகளை மீறிய கட்டிடங்களுக்கு மட்டும் அபராதம் கட்டிக் காப்பாற்ற வழிகாட்டியது.

மாநகரங்களில் விதிமுறைகள் மீறல் என்பது பல பத்தாண்டுகளாகவே இருந்துவருவதுதான் என்றாலும், தனியார்மயதாராளமயமாக்கலுக்குப் பிறகு அதன் தன்மை பெரிதும் மாறியுள்ளது. சில்லரை வணிகத்தில் சரவணா ஸ்டோர்ஸ் போன்ற சிலர் ஏகபோகமாக வளர்ந்தார்கள். இந்தப் புதுப்பணக்கார வர்க்கம், ஆபத்தான கட்டிடத்தால் தங்கள் ஊழியர்கள் மட்டுமல்ல, வாடிக்கையாளர்கள் கூட விபத்து ஏதேனும் ஏற்பட்டால் பாதிக்கப்படுவரே என்றெல்லாம் கவலைப்படுவதில்லை. அவர்களுக்கு தேவை லாபம் ஒன்றுதான். தீயணைப்புக் கருவி வைக்கும் இடத்தில் கூடுதலாக ஒரு பீரோவை நிறுத்தலாமே என்றுதான் சிந்திக்கின்றனர்.

பிற துறைகளில் எவ்வாறு தனியார்மயம் ஊழலை ஊதிப் பெருக்கியதோ, அதேபோல மாநகராட்சி அதிகார வர்க்கமும் இப்புதுப்பணக்கார வர்க்கத்துடன் கைகோர்த்து ஊழலை இன்னொரு பரிமாணத்துக்கு எடுத்துச் சென்றன. தனியார்மயம் தீவிரமான பின்னரோ, நடப்பிலுள்ள சட்டங்கள், விதிமுறைகள் எல்லாம் தங்கள் லாபத்துக்கு இடையூறாக இருப்பதால், அவற்றை திருத்திடுமாறு பணக்கார வணிகர்கள் அரசைக் கோருகின்றனர். சீல்வைப்பினை அடுத்து  இவ்வணிகர்கள் கூடி அரசுக்கு அதைத்தான் கோரிக்கையாக வைக்கின்றனர். இக்கடைகளை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் குடும்பங்கள் உள்ளதாக அரசை நிர்ப்பந்திக்கின்றனர், அதுவரை அதே தொழிலாளர்களை கொத்தடிமைகளாக நடத்தி வந்த அண்ணாச்சிகள்.

போனால் போகிறதென்று பேருக்கு 64 கட்டடங்களை மட்டும் கண்டறிந்த அதிகாரிகள், ஒரே நாளில் அவற்றை இடித்துத் தள்ளாமல் அவர்களுக்கு 60 நாள் அவகாசமும், தீபாவளி விற்பனைக்காக கூடுதல் அவகாசமும் கொடுத்ததும் ஏன்? இதே அதிகார வர்க்கம் கூவம் நதிக்கரையிலும், பட்டினப்பாக்கத்திலும் குடிசைகளில் வாழ்ந்த மக்களிடம் இதே தாராளத்தைக் காட்டியதா?

விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டுள்ள ரங்கநாதன் தெருவிலுள்ள கடைகளுக்கு சீல் வைத்துள்ள  இந்நடவடிக்கைக்கு எதிராக வணிக சங்க தலைவர் வெள்ளையன் “தியாகராய நகரை வியாபார மண்டலமாக அறிவிக்க வேண்டும்” என்கிறார். ஆனால்,வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் கூவம் நதிக்கரையோர குடிசைகளை அரசு  இடித்துத் தள்ளிய போது, அது குடியிருப்புப் பகுதியாக அறிவிக்கப்படவில்லை. கோடிகளில் புரளும் பெருவணிகர்களுக்கு ஒரு நீதியும் சாமானியர்களுக்கு ஒரு நீதியுமாகத்தான் அரசு அணுகுகிறது. வளர்ச்சித் திட்டங்களுக்காக விரட்டி அடிக்கப்படும் சாமானியர்களிடம் ‘வளர்ச்சிக்காக தியாகத்தை’க் கோரும் நீதித்துறை, விதிமீறல் கட்டிடங்கள் அனைத்தையும் இடிக்கவோ, துணை நின்ற அதிகாரிகளைக் கைது செய்ய உத்தரவிடவோ முன்வரவில்லை.  இக்கோரிக்கைகள் மக்கள் போராட்டமாக மாறாத வரை அதிகார வர்க்கத்தின் ஊழலும், பெருமுதலாளிகள்பெரு வணிகர்களின் விதிமீறல்முறைகேடுகளும், நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு என்ற நாடகமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

____________________________________________________

–    புதிய ஜனநாயகம், டிசம்பர் – 2011

_________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

உர விலையேற்றம்: விவசாயத்தைச் சூறையாடும் தனியார்மயத் தாக்குதல்!

இந்திய விவசாயம் பெரும்பாலும் இரசாயன உரங்களையே நம்பியுள்ளது. போதிய அளவு மழை பெய்திருந்தாலும், தற்போது உரத் தட்டுப்பாடு  விலையேற்றத்தால்  இந்திய விவசாயிகள் தத்தளிக்கின்றனர். குறிப்பாக, காவிரி டெல்டா மாவட்டங்களின் தற்போதைய சம்பா நெல் சாகுபடி கடுமையான உரத் தட்டுப்பாட்டில் சிக்கியுள்ளது. பயிருக்கு மணிச்சத்தும் தழைச்சத்தும் கிடைக்க சம்பா நெல் நடவுப் பணியின் போது டி.ஏ.பி. உரம் அடியுரமாக இடப்படும். ஆனால் டி.ஏ.பி. உரம் கிடைக்காமலும், உரத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாலும் பெரும் அவதிக்கு விவசாயிகள் ஆளாகியுள்ளனர். கடந்த ஆண்டு 50 கிலோ எடை கொண்ட டி.ஏ.பி. உரம் ரூ.585க்கு விற்பனை செய்யப்பட்டது. இது தற்போது ரூ.825 வரை விற்கப்படுகிறது. மேலும் உயரும் என்று கூறப்படுகிறது. டி.ஏ.பி. உரத்தில் ஏற்கெனவே 18:46 என்ற அளவில் இருந்த மணிச்சத்து, தழைச்சத்து விகிதம் தற்போது 16:44 என்ற அளவில் உரக் கம்பெனிகளால் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்கெனவே 100 கிலோ பயன்படுத்தப்பட்ட இடத்தில்,  தற்போது 110 கிலோ உரத்தைப் பயன்படுத்த வேண்டியுள்ளது.

தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து என்ற மூன்று வகையான உரங்கள் விவசாயத்திற்கு அடிப்படையான உரங்களாகும். இதில் முதலிரண்டு வகை உரங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகின்றன. சாம்பல் சத்து எனப்படும் பொட்டாஷ் உரம் மட்டும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் தயாரிக்கப்படும் உரங்களுக்கு, ஆண்டுதோறும் பல்லாயிரம் கோடி ரூபாய்களை மானியமாக ஒதுக்கும் இந்திய அரசு, அவற்றை உர நிறுவன முதலாளிகளிடமே நேரடியாகக் கொடுத்து வருகிறது.

இதுவரை உரங்களின் விலையைக் கட்டுப்படுத்தி வந்த இந்திய அரசு, இந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில், சௌமித்ரா சௌத்திரி கமிட்டியின் பரிந்துரையின் பேரில் உரங்களின் விலைகளை உரக் கம்பெனிகளே தீர்மானித்துக் கொள்ளலாம் என்று  அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, உர நிறுவன பெருமுதலாளிகள் இணைந்து உருவாக்கியுள்ள தங்களது கூட்டமைப்பின் மூலம் (கார்ட்டெல்கள்) உரங்களின் விலையைத் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றியுள்ளனர். ஒரு மூட்டை டி.ஏ.பி.யின் விலை ரூ. 480லிருந்து ரூ.900ஆக உயர்த்தப்பட்டுள்ளது. யூரியாவின் விலையும் பத்து சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

இது மட்டுமின்றி, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொட்டாஷை  கள்ளச் சந்தைக்காரர்கள் பதுக்கிக் கொண்டு, செயற்கையாக தட்டுப்பாட்டை ஏற்படுத்தி பொட்டாஷின் விலையை ரூ. 290இலிருந்து ரூ. 450ஆக உயர்த்தியுள்ளனர். கலப்பு உரம் தயாரிக்க பொட்டாஷ் அத்தியாவசியமென்பதால், கலப்பு உரத்தின் விலை ரூ. 320லிருந்து ரூ.720ஆக, அதாவது இருமடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக, தமிழ்நாடு முழுவதும் 26 உர நிறுவனங்கள் பொட்டாஷ் சேர்க்காமலேயே கலப்பு உரம் என்று சொல்லி விவசாயிகளிடம் மோசடி செய்து விற்றுள்ளன.

சிமென்ட் கம்பெனிகள் எவ்வாறு கார்டெல் அமைத்துக் கொண்டு அரசையும் மக்களையும் ஆட்டிப் படைக்கின்றனவோ, அதேபோலத்தான் இன்றைக்கு உரக் கம்பெனி கார்டெல்களும் செயல்படுகின்றன. உர நிறுவனங்கள் மட்டுமன்றி, உர விற்பனை ஏஜென்சிகளும் விவசாயிகளைச் சுரண்டிக் கொழுக்கின்றன. இந்தத் திடீர் விலை உயர்வைப் பயன்படுத்தி உரங்களைப் பதுக்கி வைத்துக் கொண்டு, செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கியும், பதுக்கிய உரங்களை மிக அதிக விலையில் விற்றும் கொள்ளை லாபமடிக்கின்றனர். இவ்வாறு கந்துவட்டிக்காரன் போல உரமுதலாளிகளும், ஏஜென்டுகளும் இந்திய விவசாயிகளை ஒட்டச் சுரண்டுகின்றனர்.

உரவிலையேற்றம் : விவசாயத்தைச் சூறையாடும் தனியார்மயத் தாக்குதல்!

இந்திய அரசு, விவசாயிகளின் நலனைக் காப்பதாகக் கூறிக் கொண்டு  ஆண்டுதோறும் ஒரு இலட்சம் கோடி ரூபாய் வரை உர மானியமாக உரக் கம்பெனிகளுக்குக் கொடுக்கிறது. இதுவும் போதாதென்று, மோசடியான கணக்குகளைக் காட்டி உரக் கம்பெனிகள் கோடிகோடியாக ஊழல் செய்திருப்பதை மத்திய தணிக்கைக் கட்டுப்பாட்டு அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. ஆனாலும், உர முதலாளிகளின் கொள்ளைக்குக் கூட்டாளியாக உள்ள அரசு, இவர்கள் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

“”கடந்த இரண்டு ஆண்டுகளாக உரம் தொடர்பாக மத்திய அரசு எடுத்து வரும் கொள்கை முடிவுகள் அரசுக்கும் உர உற்பத்தியாளர்கள் மற்றும் கள்ளச்சந்தைக்கும் உள்ள இரகசிய தொடர்பைக் காட்டுவதாக உள்ளது” என்று சி.பி.எம். கட்சியின் விவசாய சங்கத் தலைவர் வரதராஜன் கூறுகிறார்.

உற்பத்திச் செலவைவிடக் கூடுதலாக 50 சதவீத விலையை வேளாண் உற்பத்திப் பொருட்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று தேசிய விவசாயிகள் ஆணையம் அரசுக்குப் பரிந்துரைத்தது. அதன்படி பார்த்தால், ஒரு குவிண்டால் நெல்லுக்கு 2,000 ரூபாய் வரை அரசு தர வேண்டும். ஆனால், தற்போது நெல்லுக்குக்  கிடைப்பதோ குவிண்டாலுக்கு ரூ. 1,100 மட்டும்தான். நெல்லுக்கும் வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கும் உரிய விலை நிர்ணயம் செய்ய மறுக்கும் அரசு, உர முதலாளிகளின் பரிந்துரைகளை மட்டும் உடனே ஏற்றுச் செயல்படுத்துகிறது.

விவசாயத்திற்கு வழங்கப்பட்டுவரும் மானியங்களைப் படிப்படியாகக் கைவிடுவது என்ற தனியார்மயக் கொள்கையை ஏற்று நடத்திவரும்  அரசு, இப்போது உர விலையை முதலாளிகளே தீர்மானித்துக் கொள்ளையடித்துக் கொள்ள தாராளமாக அனுமதித்துள்ளது. இந்நிலையில், சில விவசாய சங்கங்கள் உரத்திற்கான மானியத்தை விவசாயிகளிடமே கொடுக்க வேண்டும் என  கோரிக்கை வைக்கின்றன. முதலாளிகளுக்குக் கொள்ளையடிக்க சுதந்திரம் கொடுத்துவிட்டு, மானியத்தை விவசாயிகளிடம் கொடு என்பது, தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிப்பதைப் போலத்தான்.

ஏற்கெனவே தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் (100 நாள் வேலைத் திட்டம்) காரணமாக விவசாய வேலைகள் செய்ய ஆட்கள் கிடைப்பது அரிதாகி வருவதால், சிறு விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்காமலும், விலை வீழ்ச்சியாலும் கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர். சென்ற ஆண்டு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.14 ஆயிரம் விற்ற மஞ்சளின் விலை இந்த ஆண்டு ரூ.4 ஆயிரம்தான். இவ்வாறு பல்வேறு நெருக்கடிகளைச் சுமந்து கொண்டிருக்கும் விவசாயிகளின் முதுகில் பாறாங்கல்லை ஏற்றி வைத்ததுபோல, வரைமுறையற்ற உர விலைக் கொள்ளை எனும் புதிய தாக்குதலை விவசாயிகளின் மீது இந்திய அரசு தொடுத்துள்ளது. விவசாயிகள் விவசாயத்தை விட்டு ஓட்டம்பிடிக்கும் வண்ணம் தனியார்மயமும் தாராளமயமும் சேர்ந்து தொடுத்திருக்கும் இத்தாக்குதலை முறியடிக்காமல்,  இந்தியாவின் ஆகப் பெரும்பான்மையான விவசாயிகளையோ, விவசாயத்தையோ  காப்பாற்ற முடியாது.

________________________________________________

புதிய ஜனநாயகம், நவம்பர் – 2011

_________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

இரண்டரை லட்சம் விவசாயிகள் தற்கொலை: அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள் – பி.சாய்நாத்

இரண்டு லட்சம் விவசாயிகள் தற்கொலை
படம் நன்றி thehindu.com

“விவசாய தற்கொலை என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  ஓட்டுப் பொறுக்கி கட்சிகளும், நாட்டை ஆள்பவர்களும் இதன் மீது சிறிதும் கவலைப்பட்டதாக தெரியவில்லை.  இது தொடர்பாக பத்திரிகையாளர் திரு பி.சாய்நாத் அடிக்கடி எழுதி வருகிறார்.  சமீபத்திய புள்ளி விபரங்களின்படி விவசாயத்துறைக்கு  அமைச்சராக இருந்தவரின் மகாராஷ்டிரா மாநிலம் வெட்கி தலைகுனியும் நிலையில் உள்ளது என்ற வகையில் தொகுப்பான விபரங்களை வெளியிட்டுள்ளார்.  அதை வினவு வாசகர்களுக்காக மொழிபெயர்த்து தருகிறோம்.”

கடந்த 16 வருடங்களில் இரண்டரை லட்சத்திற்கும் (கால் மில்லியனுக்கும்) அதிகமாக, இந்தியாவில் பதிவாகியுள்ள விவசாய தற்கொலைகளில் பெரும்பாலானவை மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், மற்றும் சட்டீஷ்கர் மாநிலங்களில் நடைபெற்றுள்ளது.

இரண்டரை லட்சம் விவசாயிகள் தற்கொலை
மருத்ராவ் தோகே என்ற இந்த விவசாயி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக தனது மனைவியின் தாலியை (மங்களசூத்ரா) அடகு வைப்பதற்காக கவலையுடன் பார்த்துக் கொண்டிருக்கும் காட்சி - படம் நன்றி thehindu.com

2010-ம் ஆண்டில் தன்னுயிரை மாய்த்துக் கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கையை  மேற்படி 5 மாநிலங்களில் முந்தைய வருட விபரங்களோடு ஒப்பிடுகையில் 2009-ல் 62 சதவீதமாக இருந்தது 2010ல் 66.49 சதவீதமாக உயர்ந்திருப்பதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் தெரிவிக்கிறது.  2009-ம் ஆண்டோடு ஒப்பிடும் போது இந்த பெரிய மாநிலங்களில் உயர்ந்துள்ள தற்கொலை எண்ணிக்கைகள் விபரம்: மகாராஷ்டிரா(+ 269),  கர்நாடகா (+ 303), ஆந்திரப் பிரதேசம் (+ 111). தேசிய அளவில் உள்ள புள்ளி விபரங்கைள பார்க்கையில் கடந்த 8 வருடங்களில் விவசாயிகள் தற்கொலை என்பது சராசரியாக 30 நிமிடத்திற்கு ஒன்று என்ற விகிதத்தில் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.

2008-ல் 14 மாநிலங்களில் 2010-ல் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் 4 மாநிலங்களில் 5 அல்லது சில எண்ணிக்கையில் குறைந்துள்ளது.  அதே சமயம் 2010-ல் கீழ்காணும் மாநிலங்களில் அத்தகைய தற்கொலைகள் பெரும் அளவில் குறைந்துள்ளது.  சதீஷ்கர் (-676), தமிழ்நாடு (-519), ராஜஸ்தான் (-461), மற்றும் குறிப்பிட்ட அளவு குறைந்துள்ள மாநிலங்கள் மத்தியப் பிரதேசம் (-158), புதுச்சேரி (-150), உத்திரப்பிரதேசம் (-108), மேற்கு வங்கம் (-61), மற்றும் குஜராத் (-65).  ஆனால் ஒட்டுமொத்த நிலவரம் என்பது கவலையளிக்கும் விதமாகவே உள்ளது.

1995-ல் முதன் முதலாக தேசிய குற்றங்கள் பதிவு அமைப்பு என்பது விவசாய தற்கொலைகளை பட்டியலிட்டது.  இந்த விபரங்களில் மேற்சொன்ன 5 பெரிய மாநிலங்கள் 56.04 சதவீதத்தை தன்னகத்தே கொண்டிருந்தது.  2010-ல் 66.49 சதவீதமாக உள்ளது. மகாராஷ்டிராவின் கதை என்பது எச்சரிக்கையூட்டுவதாக உள்ளது.  அந்த மாநிலத்தில் 1995 முதல் 2002 வரையிலான காலத்தில் 20,066 விவசாயிகள் தன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.  அடுத்த 8 ஆண்டுகளில் இதே மாநிலத்தில் இந்த எண்ணிக்கை30,415 என உயர்ந்துள்ளது.  பின்னால் உள்ள காலத்தை பார்க்கிற போது வருடத்திற்கு 1155 வீதம் இந்த மாநிலத்தில் மட்டும் தற்கொலை எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது.  குறிப்பாகச் சொல்லப்போனால் இந்த காலத்தில்தான் பிரதம மந்திரி நிவாரண உதவிகள், முதலமைச்சர் நிவாரண உதவிகள் மற்றும் 2008-ம் ஆண்டு கடன் தள்ளுபடிகள் என்ற நடவடிக்கைகளுக்கு தொகைகள் அதிகம் ஒதுக்கப்பட்டது.

இந்த 14 ஆண்டுகாலத்தில் இடைவெளியே இல்லாது தொடர்ந்து விவசாயிகள் வாழ வழியில்லாமல் போன இதே மகாராஷ்டிரா மாநிலம் தனிநபர் வருவாய் கணக்கீட்டில் முதல் இடத்தை பிடிக்கும் அளவிற்கு உயர்ந்ததாகவும் சொல்லப்பட்டது.  ஒட்டுமொத்தமாக ரூ 74,027 என பார்க்கும் போது மிகச் சிறிய மாநிலங்களான ஹரியானா மற்றும் கோவாவிற்கு பின்னர் இடம் வகிக்கிறது இந்த மாநிலம். மத்திய விவசாய அமைச்சர் இந்த மாநிலத்திலிருந்துதான் தேர்வு செய்யப்பட்டுள்ளதோடு,  சொல்லப்பட்ட 10 ஆண்டுகளில் 6 முறை இந்த பதவி இந்த மாநிலத்தவருக்கு கிடைத்துள்ளது.

 __________________________________________________

 நன்றி – திரு பி.சாய்நாத், தி இந்து நாளிதழ்

 தமிழில் – சித்ரகுப்தன்

___________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

மூளைக் காய்ச்சல்: பட்டினி போட்டது அரசு! கொன்று போட்டது தொற்றுநோய்!!

மூளைக் காய்ச்சல் : பட்டினி போட்டது அரசு ! கொன்று போட்டது தொற்றுநோய் !!இந்தியாவின் புதுப் பணக்கார கும்பல் உ.பி.யின் நொய்டாவில் நடந்த எஃப்  1 கார் பந்தயப் போட்டியை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த அதே நேரத்தில், முதலாளித்துவப் பத்திரிக்கைகள் அப்பந்தயத்தை இந்தியாவின் பொருளாதார வல்லமையின் அறிகுறியாகப் பறைசாற்றிக் கொண்டிருந்த அதே நேரத்தில், கிழக்கு உ.பி. பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஏழைக் குழந்தைகளும் சிறுவர்களும் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர்.  இந்த மழைக்காலம் முடிவதற்குள் கிழக்கு உ.பி. பகுதியில் வாழ்ந்துவரும் ஏழை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொரு குழந்தையும் இந்த வாழ்வா, சாவா போராட்டத்தைச் சந்தித்துத்தான் தீர வேண்டும்.

இந்தத் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு, கிழக்கு உ.பி.யில் கோராக்பூர் நகரில் அமைந்துள்ள பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள குழந்தைகளுள் பெரும்பாலானவை, நோயின் தீவிரத்தால் அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் மெலிந்து உருக்குலைந்து போய் மரணத்தின் வாயிலில் உள்ளன.  பல குழந்தைகள் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்ட நிலையில், 15 நாட்களுக்கும் மேலாக நினைவு திரும்பாத நிலையில் மரணத்துடன் போராடி வருகின்றன.  “இந்த மருத்துவமனைக்குள் நுழைவது ஏதோ பிணவறைக்குள் நுழைவது போல இருக்கிறது;  நோயின் தீவிரத்தாலும், மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லாததாலும், பெற்றோர்கள் தம் கண் முன்னே தங்களது குழந்தைகள் சிறுகச்சிறுக சாவாதைப் பார்த்துக் கதறியபடியே உள்ளனர்” என இந்த அவலத்தை அம்பலப்படுத்தியிருக்கிறது, ஃபிரண்ட்லைன் இதழ்.

உயிரைக் கொல்லும் அபாயம் நிறைந்த இந்த மூளைக் காய்ச்சல் தொற்றுநோய் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தின்பொழுது  கிழக்கு உ.பி. பகுதியைத் தாக்கிக் கோரத் தாண்டவமாடும்.  அங்கிருந்து பீகார், அசாம், நேபாளம் எனப் பரவத் தொடங்கும்.  இந்தியா வல்லரசாகிக் கொண்டிருக்கிறது என்ற கூச்சல் நமது காதுகளைக் கிழித்துக் கொண்டிருக்கும் இந்தக் காலக்கட்டத்தில்தான், உ.பி. மாநிலத்தில் இந்தத் தொற்று நோய்க்கு 2007இல் 645 குழந்தைகளும், 2008இல் 537 குழந்தைகளும், 2009இல் 556 குழந்தைகளும், இந்த ஆண்டில் கடந்த அக்டோபர் மாதத்திற்குள் 465 குழந்தைகளும் பலியாகின.  பீகாரின் ஆறு மாவட்டங்களில் பரவியுள்ள இந்த நோய் காரணமாக இந்த ஆண்டு அக்டோபருக்குள் ஏறத்தாழ 200 குழந்தைகள் இறந்து போயுள்ளனர்.  மருத்துவமனையில் சேர்க்க வழியில்லாமல் நோய் தாக்கி வீட்டிலேயே இறந்து போய்விட்ட குழந்தைகளின் எண்ணிக்கை இப்புள்ளிவிவரத்தில் சேர்க்கப்படவில்லை என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

இந்த நோய் தாக்கி உயிர் பிழைத்த குழந்தைகளைவிட, இந்த நோய் தாக்கி இறந்த குழந்தைகளை ஒருவிதத்தில் அதிருஷ்டசாலிகள் என்றே கூறலாம்.  குரல் பறிபோதல், மூளை வளர்ச்சிக் குன்றிப் போதல், பிறர் பேசுவதைப் புரிந்து கொள்ளும் ஆற்றலை இழத்தல், கை கால்களை அசைக்க முடியாத அளவிற்கு மூட்டுகள் இறுக்கம் அடைதல், கண் பார்வை பறிபோதல் உள்ளிட்டுப் பல்வேறுவிதமான நரம்பு மற்றும் மூளை தொடர்பான பாதிப்புகளை இத்தொற்றுநோய் உயிர் பிழைக்கும் குழந்தைகளிடம் ஏற்படுத்தும் என்கிறார்கள் மருத்துவர்கள்.  இத்தொற்றுநோய் தாக்கிய நிலையில் கிடைக்கும் அற்பமான மருத்துவ வசதிகூட, இத்தொற்றுநோயால் ஏற்படும் பிந்தைய பாதிப்புகளுக்குக் கிடைப்பதில்லை.  இப்படிப் பாதிக்கப்படும் குழந்தைகள் பெற்றோர்களுக்குப் பெரும் சுமையாக மாறிவிடுகிறார்கள்.

1978ஆம் ஆண்டு தொடங்கி கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மூளைக் காய்ச்சல் நோய் உ.பி. மாநிலத்தைத் தாக்கி, ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான குழந்தைகளைப் பலி கொண்டு வருகிறது.  மூளைக் காய்ச்சல் உயிரைப் பறித்துவிடும் அபாயகரமான தொற்றுநோய் என்றபோதும், இதுவொன்றும் ஒழித்துக்கட்ட முடியாத, மருத்துவ உலகத்திற்கே சவால்விட்டு வரும் நோய் கிடையாது.  ஒவ்வொரு ஆண்டும் இந்நோய் தாக்கும் பகுதியைச் சேர்ந்த 15 வயதுக்கும் கீழான சிறுவர்களுக்கும், குழந்தைகளுக்கும் முறையாகத் தடுப்பூசிப் போடுவது; அப்பகுதியில் பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுகாதாரம் நிறைந்த கழிப்பிட வசதிகள், அங்கன்வாடிகள் மூலம் குழந்தைகளுக்குச் சத்தான உணவுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்வது, மிகவும் முக்கியமாக இந்நோயைப் பரப்பும் கொசுக்களை ஒழிப்பது என்பது போன்ற சாதாரண நடவடிக்கைகள் மூலமே இந்நோயை முற்றிலுமாக ஒழித்துக் கட்டிவிட முடியும்.

எனினும், கடந்த முப்பது ஆண்டுகளில் மைய அரசும் சரி, மாநில அரசும் சரி கொசு மருந்து அடிப்பதற்குக்கூடப் போதிய நிதியை ஒதுக்கியதில்லை என்பதுதான் கசப்பான உண்மை.   கிழக்கு உ.பி. பகுதியில் உள்ள கிராமப்புற மக்களுக்குத் திறந்தவெளிதான் கழிப்பிடங்கள்; அக்கிராமப்புறங்களில் கணக்குக் காட்டுவதற்காக, ஏனோதானோவென்று போடப்பட்டுள்ள  கையடி பம்ப் வழியாகக் கிடைக்கும் மாசுபட்ட தண்ணீரைத்தான், அப்பகுதி மக்கள் குடிப்பதற்கும் குண்டி கழுவுவதற்கும் ஒருசேரப் பயன்படுத்தி வருகின்றனர்.

கிழக்கு உ.பி. பகுதியைச் சேர்ந்த ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏறத்தாழ 10 இலட்சம் முதல் 20 இலட்சம் பேர்வரை வாழ்ந்து வருகின்றனர்.  எனினும், இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்கக்கூடிய அளவிற்கு ஓரளவு மருத்துவ வசதிகள் கொண்ட ஒரே அரசு மருத்துவமனை கோராக்பூரில்தான் உள்ளது.  கிழக்கு உ.பி. பகுதியிலிருந்து மட்டுமல்ல, மிகத் தொலைவிலுள்ள பீகாரின் கிராமப்புறங்களிலிருந்தும் நோய்வாய்ப்பட்ட குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு இம்மருத்துவமனைக்கு பெற்றோர்கள் ஓடிவருவதை இன்றும் காண முடியும்.  இந்தத் தொற்றுநோய் பெரும்பாலும் மிகவும் வறிய விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளைப் பாதிப்பதால், தனியார் மருத்துவமனைகள் இந்த நோய்க்குச் சிகிச்சை அளிப்பது பற்றி அக்கறை செலுத்துவதுதில்லை.

கோராக்பூரிலுள்ள பாபா ராகவ் தாஸ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இத்தொற்றுநோய்க்கான சிறப்பு மருத்துவமனையாகச் செயல்பட்டு வருகின்றபோதிலும், இந்நோய்க்குச் சிகிச்சை அளிப்பதற்கு ஏற்றவாறு போதிய எண்ணிக்கையில் சிறப்பு மருத்துவர்களோ, பிற சுகாதார ஊழியர்களோ இம்மருத்துவமனையில் பணியமர்த்தப்படவில்லை; அங்கு கிடைக்கும் மருத்துவ வசதிகளும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.  இத்தொற்றுநோய் தாக்கிய குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு குறைந்தபட்சம் 50 செயற்கை சுவாசக் கருவிகள் தேவைப்படும் நிலையில், அம்மருத்துவமனையில் 20 சுவாசக் கருவிகள்தான் செயல்படும் நிலையில் உள்ளன.  போதிய படுக்கை வசதிகள் இல்லாததால், ஒரே படுக்கையை இரண்டு, மூன்று குழந்தைகளுக்குப் பகிர்ந்து கொடுக்க வேண்டிய இக்கட்டான நிலையில் இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பீகார் மாநிலத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் போதிய அளவிற்குக் கழிப்பிட வசதிகளே கிடையாது எனும்பொழுது, அங்கு கிடைக்கும் மருத்துவ வசதிகளைப் பற்றி எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை. இத்தொற்றுநோய் தாக்கி அம்மாநிலத்தில் தற்பொழுது இறந்து போயுள்ள 200 குழந்தைகளுள் 12 குழந்தைகள் போதிய செயற்கை சுவாசக் கருவிகள் இல்லாததனால் மரணமடைந்திருக்கின்றன.

மூளைக் காய்ச்சல் : பட்டினி போட்டது அரசு ! கொன்று போட்டது தொற்றுநோய் !!‘‘இந்தத் தொற்றுநோயை ஒழித்துக் கட்டுவதற்குத் தேசிய அளவில் ஒரு செயல்திட்டத்தையும், அதற்கான நிதியையும் ஒதுக்க வேண்டும்” என அரசு மருத்துவர்கள் கோரி வரும் வேளையில், மத்திய, மாநில அரசுகளோ இந்நோய்க்கான தடுப்பூசி மருந்தைக்கூட முறையாகவும் தொடர்ச்சியாகவும் போதிய அளவிலும் வழங்குவதில்லை.  இந்நிலையில், இந்தத் தொற்றுநோய்க்கான தடுப்பூசி மருந்தைத் தயாரித்துவரும் பொதுத்துறை மருந்து நிறுவனம் தற்பொழுது தயாரிப்புச் செலவு கூடுவதைக் காட்டி இத்தடுப்பூசி மருந்தைத் தயாரிப்பதையே நிறுத்திக் கொண்டுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு ஏற்ப அதிகார வர்க்கமும் கடந்த பல ஆண்டுகளாகவே இத்தொற்றுநோய் பரவுவதையே ஏற்றுக் கொள்ள மறுத்து வருகிறது.  குறிப்பாக, கடந்த ஐந்து ஆண்டுகளில் மத்தியிலுள்ள காங்கிரசு கூட்டணி அரசும், உ.பி.யை ஆண்டு வரும் மாயாவதி அரசும் ஒருவர் மீது ஒருவர் பழி போடும் அரசியல் லாவணி கச்சேரியை நடத்துவதற்கு இத்தொற்றுநோய் தாக்குதலைப் பயன்படுத்திக் கொண்ட அளவிற்கு, இந்த நோயை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதில் அக்கறை காட்டியதில்லை.  இதனால் வெறுத்துப் போன கிழக்கு உ.பி. பகுதியைச் சேர்ந்த 500 பேர் இந்தத் தொற்றுநோயை ஒழிக்கும் நடவடிக்கைகளை எடுக்கக் கோரி, பேனா மைக்குப் பதிலாக தமது இரத்தத்தால் கடிதம் எழுதி மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பியிருக்கின்றனர்.

இந்தத் தொற்றுநோய் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான குழந்தைகளைத் தாக்கிப் பலி கொள்ளுவதற்கு மருத்துவ, சுகாதார வசதிகள் இல்லாதிருப்பது மட்டுமின்றி, அக்குழந்தைகள் சத்தான உணவு கிடைக்காமல் நோஞ்சன்களாக வளருவதும் முக்கிய காரணமாகும் என மருத்துவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.  “இக்குழந்தைகளுக்கு புரோட்டீன் சத்து நிறைந்த பருப்பு சூப்பு மற்றும் பால் போன்ற உணவுகளைக் கொடுக்க வேண்டும்; ஆனால், இவர்களின் வாழ்க்கை நிலைமையோ வெறும் சுடுகஞ்சி கொடுக்கக்கூடிய நிலையில்தான் உள்ளது” என இந்த அவலத்தை எடுத்துக் கூறுகிறார், பாபா ராகவ் தாஸ் மருத்துவமனையின் தலைமை உணவு நிபணர் நேஹா சிங்.  “எங்களின் வாழ்க்கையே அரைகுறை பட்டினி என்றிருக்கும்போது, எனது மகனுக்கு எப்படி சத்தான உணவைக் கொடுக்க முடியும்?” எனக் கேட்கிறார், சோனி சௌராஸியா என்ற தாய்.

சோனி சௌராஸியாவின் குடும்பம் மட்டுமல்ல, கிழக்கு உ.பி.யின் கிராமப்புறங்களில் வாழும் பெரும்பாலான விவசாயக் கூலிகளின், உதிரித் தொழிலாளிகளின் நிலைமை இதுதான்.  இந்த உண்மை தெரிந்திருந்தும், அந்த ஏழைக் குடும்பங்களுக்கு வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் குடும்ப அட்டைகளை வழங்க மறுத்து வருகிறது, உ.பி. மாநில அரசு.  மத்தியில் ஆளும் காங்கிரசு கூட்டணி அரசோ, ரேஷன் அட்டைகள் முழுவதையும் ஒழித்துக்கட்டிவிட நல்ல நாள் பார்த்துக் கொண்டிருக்கிறது.  இதற்காகவே, கிராமப்புறங்களில் நாளொன்றுக்கு 26 ரூபாய்க்கு மேல் கூலி பெறுபவர்களை ஏழைகளாகக் கருத முடியாது என வாதாடி வருகிறது.

உண்மை இவ்வாறிருக்க, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உ.பி. மாநில சட்டமன்றத் தேர்தலையொட்டி அம்மாநிலத்தில் பிரச்சாரம் செய்து வரும் ராகுல் காந்தியோ, மாயாவதியின் பிடியிலிருந்து ஏழை மக்களைக் காக்க வந்திருக்கும் ரட்சகனைப் போலத் தன்னைக் காட்டிக் கொள்கிறார்.  ஏழைகளின் குடிசைகளுக்குத் திக்விஜயம் செய்வது, அவர்களின் வீடுகளில் உணவருந்துவது என்ற மோசடி நாடகத்தை மீண்டும் நடத்திக் கொண்டிருக்கிறார்.

____________________________________________________

–    புதிய ஜனநாயகம், டிசம்பர் – 2011

_________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

கௌரவக் கொலைகள் – விடாது வரும் இந்திய சாதனை!

15

1990களில் வந்த பந்தம் என்ற திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பணக்கார, பாசமுள்ள, கண்டிப்பான, முன்னாள் ராணுவ தளபதியாக வருவார். செல்லமாக வளர்த்த மகள் தனது விருப்பத்துக்கு மாறாக காதலித்து திருமணம் செய்து கொண்டதும், அவளை வீட்டை விட்டே ஒதுக்கி வைத்து, அவள் நினைவு கூட மிஞ்சாத படி, வீட்டில் தொடர்புடைய எல்லா பொருட்களையும் அடித்து உடைத்து விடுவார். ஒரு கட்டத்தில் மகளின் கணவன் விபத்தில் இறந்து விட்டான் என்ற செய்தியைக் கேட்டதும், ஐஸ்கிரீம் கொண்டு வரச் சொல்லி தனது வெறுப்பை வெளிப்படுத்துவார்.

அதற்கு முன்பும், பின்பும் பல தமிழ் படங்களில் பணக்கார, ஆதிக்க சாதி தகப்பனார்கள், தமது அந்தஸ்துக்கு பங்கமாக, சாதிப் பெருமைக்கு இழுக்காக, மதத்திற்கு வெளியில் திருமணம் செய்து கொண்ட மகள்களை பல்வேறு விதமாக மனரீதியாகவும், நடைமுறையிலும், உடல் ரீதியாகவும் அழித்து விடுவதைப் பார்த்திருக்கிறோம். சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான காதல் திரைப்படத்தில் மெக்கானிக் இளைஞனுடன் ஓடிப் போய் விட்ட மகளை திரும்ப அழைத்து வரச் செய்து வன்முறை தாண்டவத்தை நிகழ்த்திக் காட்டுவார் சாராய வியாபாரி தந்தை.

இந்தியா முழுவதும் நடக்கும் இத்தகைய கௌரவக் கொலைகளைப் பற்றிய அதிகார பூர்வமான அரசாங்க புள்ளிவிவரங்கள் இல்லா விட்டாலும், இந்திய ஜனநாயக மகளிர் அமைப்பு வெளியிட்ட தகவல்களின்படி ஹரியானா, பஞ்சாப், உபி மாநிலங்கள் ஆண்டுக்கு 900 கௌரவக் கொலைகளுக்கும் நாட்டின் பிற பகுதிகள் சுமார் 100 முதல் 300 கொலைகளுக்கும் களமாக விளங்குகின்றன.

1. உத்தர் பிரதேசத்தின் பர்சானா போலீஸ் நிலைய பகுதிக்குட்பட்ட மேஹ்ரானா கிராமத்தின் ஜாட் சாதியைச் சேர்ந்த ரோஷ்னி என்ற 14 வயது பெண் ஜாதவ் சாதியைச் சேர்ந்த விஜேந்திர ஜாதவ் மற்றும் ராம் கிஷ்ன் உடன் 1991 மார்ச் 21ஆம் தேதி ஓடிப் போனார். மார்ச் 24ம் தேதி ரோஷினி ஊருக்குத் திரும்பிய பிறகு பஞ்சாயத்து விசாரணைக்கு அமர்ந்தது.

பஞ்சாயத்தில் ரோஷ்னி விஜேந்திரவுடன் வாழ விருப்பம் தெரிவித்ததை ஏற்காத பஞ்சாயத்து, அந்த இளைஞர்கள் மாற்று சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்ததால் மூன்று பேரையும் கொல்வதற்கு உத்தரவிட்டது. கிராம மக்கள் மூன்று பேரையும் அடித்து ஒரு மரத்தில் தூக்கில் போட்டார்கள். இதை தடுக்க முயன்ற போது கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் பலர் படுகாயமடைந்தார்கள். தடயங்களை அழித்து விடுவதற்காக மூன்று பேரின் உடல்களும் எரிக்கப்பட்டன.

போலீஸ் விசாரணை குழு, கொலைக்கு உத்தரவிட்ட தலைவர்களையும் சேர்த்து 53 பேர் மீது குற்றப்பத்திரிகை பதிவு செய்தது. வழக்கு விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவர்களில் 13 பேர் இயற்கையாக இறந்து போனார்கள்.

20 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரா நீதிமன்றம் ஒன்று அந்த தம்பதியையும் அவர்களது நண்பரையும் கொலை செய்த குற்றத்துக்காக 8 பேருக்கு மரண தண்டனையும், இன்னும் 27 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்தது. 5 பேரை நீதிமன்றம் விடுதலை செய்தது. குற்றம் சாட்டப்பட்ட இன்னும் மூன்று பேர் மீதான வழக்கு விசாரணை சிறுவர் நீதிமன்றத்தில் நடக்கிறது. அவர்கள் குற்றம் நடந்த சமயத்தில் 18 வயதுக்கும் குறைவானவர்கள். தண்டனை வழங்கப்பட்டவர்களில் பெரும்பான்மையினர் 60 வயதைத் தாண்டியவர்கள்.

2. 2010-ல் விமலா என்ற பெண் நியூ ்பிரெண்ட்ஸ் காலனியில் அவரது தந்தை மற்றும் கட்டிட காவலரால் கொல்லப்பட்டார். ஜலந்தரைச் சேர்ந்த ஹரியுடன் விமலா தொடர்பு வைத்திருந்ததால் இந்தக் கொலையை செய்திருக்கிறார்கள்.

3. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மேனகா என்பவரை அவரது விருப்பத்துக்கு மாறாக காளிதாஸ் என்பவருக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். ஒரு வாரத்துக்குப் பிறகு மேனகா வீட்டை விட்டு வெளியேறி தனது காதலர் சிவகுமாருடன் வாழப் போய் விட்டார். மானாமதுரை நகரத்துக்கு அருகில் வாழ்ந்த அவர்களை திருப்பி வரும்படி அன்பொழுகப் பேசி சிவகங்கைக்கு வரவைத்த பெற்றோர்களும் உறவினர்களும் சிவகுமாரை கொலை செய்தனர். அந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த மேனகா, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேனகா, சிவகுமார் இரண்டு பேருமே அகமுடையார் சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் அது கௌரவக் கொலை இல்லை என்று காவல்துறை வாதிட்டது.

4. மென்பொருள் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்த இளம் தம்பதியினர் தமது குடும்பத்தினரின் தாக்குதலுக்கு அஞ்சி காவல்துறை பாதுகாப்புடன் திருமணம் செய்து கொண்டனர். போலீஸ் கவனம் இருந்தும், அப்படி சாதிக்கு வெளியே திருமணம் செய்யத் துணிந்ததற்காக இரண்டு பேரும் கொல்லப்பட்டனர். இது நடந்தது நாட்டின் தலைநகரமான புதுதில்லியில்.

கௌரவக் கொலை என்பது பெற்றோரின் விருப்பத்துக்கு எதிராக திருமணம் செய்து கொள்ளும் அல்லது கள்ள உறவு வைத்துக் கொள்ளும் அல்லது ஒரே உட்பிரிவுக்குள் (கோத்ரம்)  திருமணம் செய்து கொள்ளும் அல்லது சாதிக்கு வெளியில் திருமணம் செய்து கொள்ளும் பெண்ணுக்கு வழங்கப்படும் மரண தண்டனை என்று வரையறுக்கப்படுகிறது.

பாரத ஞானமரபின் பாரம்பரிய பெருமைகளில் ஒன்றான இந்த கௌரவக் கொலைகள், 1947 இந்திய பிரிவினையின் போது பஞ்சாபில் பெருமளவில் நடந்தன. இந்திய பெண்கள் பாகிஸ்தானிய ஆண்களையும் பாகிஸ்தானிய பெண்கள் இந்திய ஆண்களையும் திருமணம் செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டனர். அப்படி கட்டாய மணமுடிக்கப்பட்ட பெண்களை வேட்டையாடி ‘வீட்டுக்கு’ அழைத்து வந்து குடும்ப கௌரவத்தை காப்பாற்றுவதற்காக அவர்களைக் கொல்வது பல இடங்களில் நடந்தது. ஒரு நாளைக்கு குறைந்தது 2 கௌரவக் கொலைகள் சராசரியாக அந்த காலகட்டத்தின் நடந்தன என்று சொல்லப்படுகிறது.

இப்போதெல்லாம் பெண்ணைக் கொல்வதோடு அவளை திருமணம் செய்யத் துணிந்த மருமகனையும் கொன்று போடுவது வழக்கமாக வளர்ந்திருக்கிறது.

இந்த கௌரவக் கொலைகள் கிராமங்களில் மட்டும்தான் நடக்கின்றன என்று நினைத்து விடக் கூடாது. பெரும்பான்மை கொலைகள் கிராமங்களில் நடந்தாலும், மேலே பார்த்த உதாரணங்களைப் போல பாரத தலைநகர் தில்லியிலும், முன்னேறிய மாநிலம் என்று கொண்டாடப்படும் தமிழ்நாட்டிலும் கூட இத்தகைய கொலைகள் அவ்வப்போது நடக்கின்றன. இந்தக் கொலைகள் குறிப்பிட்ட மதத்தில் மட்டும் நடக்கின்றன என்றும் சொல்ல முடியாது. முஸ்லீம்கள், இந்துக்கள், சீக்கியர்கள் என்று மூன்று மதங்களைச் சேர்ந்தவர்களிடையேயும் இந்த கொடூர பாரம்பரியம் இருக்கிறது.

இதற்கு ஆதரவாக, நவீன இந்தியாவின் முன்னேறிய பிரிவினர், இணையத்தில் விவாதம் செய்யும் அளவுக்கு வளர்ந்தவர்கள் தமது கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்கள். மாதிரிகள் சில:

‘தனது மாணவன் பணிவாக, புத்திசாலித்தனமாக, திறமையாக நடந்து கொள்ள வேண்டும் என்று ஒரு ஆசிரியர் எதிர்பார்ப்பது போல ஒவ்வொரு பெற்றோரும் தமது குழந்தைகளிடம் எதிர்பார்க்கிறார்கள். மாணவர்களோ, குழந்தைகளோ தவறான வழியில் போகும் போது, திரும்பி வர முடியாத வழியில் தவறிப் போகும் போது, கோபம் கட்டுமீறி போகிறது. பெற்றோர்களின் மனம் என்ற நீதிமன்றம் தவறிப் போனவர்களுக்கு மரண தண்டனை வழங்குகிறது. அதை நிறைவேற்றுவதன் பின் விளைவுகளை எதிர்கொள்ளவும் அவர்கள் தயாராகி விடுகிறார்கள்’

‘ஒரு பயங்கரவாதியையோ, கொலையாளியையோ, தேசத் துரோகியையோ, சமூக விரோதியையோ ஒரு பெண் தேர்ந்தெடுத்தால் அதன் விளைவுகளை அவள் எப்படி எதிர் கொள்ள முடியும். கௌரவக் கொலைகள் சட்டப்படி தவறாயிருந்தாலும் தர்மப்படி சரிதான்’

‘தவறு செய்யும் குழந்தைகளை கொல்வது சமூகக் குற்றம் என்றால் அப்படி தவறான வாழ்க்கைத் துணையை குழந்தைகள் தேர்ந்தெடுப்பதும் சமூகக் குற்றம்தான். பெற்றோர்களுக்கு பணிந்து நடப்பதுதான் எதிர்கால பாதுகாப்புக்கு நல்லது.’

‘பெற்றோர்களுக்கு எதிராக நடந்து கொண்டு, திருமணம் போன்ற சென்சிடிவான விஷயத்தில் பெற்றோரின் விருப்பத்துக்கு செயல்படுவது ஏற்றுக் கொள்ள முடியாதது. எந்த பெற்றோராலும் அந்த நேரத்தில் தமது கோபத்தை அடக்கிக் கொள்ள முடியாது. தமது பாரம்பரியத்தைக் காப்பாற்றிக் கொள்ள கொலை செய்வதுதான் ஒரே வழி என்று அவர்கள் நினைக்கலாம். அவர்களின் கௌரவத்தையும் பாரம்பரியத்தையும் காப்பாற்ற நாம் வேறு என்ன வழி காட்ட முடியும்?’

‘கௌரவக்கொலைகளை தடுக்கிறோம் என்ற போர்வையில் சமூகத்தில் ஒழுக்கமின்மையை ஊக்குவிக்கக் கூடாது. அனுபவமில்லாத குழந்தைகள் தமது  மனம் போன போக்கில் திருமணம் செய்து கொண்டு விவாகரத்தில் போய் மாட்டுவதை தடுக்க வழிகள் காணப்பட வேண்டும். பெற்றோர்களின் சம்மதத்துடன்தான் திருமணங்கள் பதிவு செய்யப்பட வேண்டும். பெற்றோர்கள் உடன் இருந்தால் மட்டும்தான் கோவில் பூசாரிகள் திருமணம் செய்து வைக்க வேண்டும். இல்லாவிட்டால், அத்தகைய திருமணங்கள் சட்டவிரோதமானவையாகவும், திருட்டுத் திருமணமாகவும் கருதப்பட வேண்டும்.’

‘பாரம்பரியம், குடும்ப கௌரவம் இவற்றைப் புறக்கணித்து செய்யப்படும் திருமணங்கள், இரண்டு தரப்பு குடும்பத்திலும் உணர்ச்சிகளை உசுப்பி விடுகின்றன. அவர்கள் கௌரவக் கொலைகள் செய்யவும் துணிகிறார்கள். பழக்க வழக்கங்களையும் பாரம்பரியங்களையும் பாதுகாக்க முடியாவிட்டாலும், அவற்றுக்கு ஆதரவு அளிக்க வேண்டியது நமது கடமை’

‘ஒரு மனைவி அமைதியாக இருந்தால் எந்த கணவனும் அவளை அடிக்கப் போவதில்லை. படிப்பறிவின்மையாலும், பேராசையாலும் பெண்கள் ஒத்துழைத்து நடக்காத போது, கணவன் மனைவியை அடிக்கிறார். இப்படிப்பட்ட நிலைமைகள் அத்தகைய நடவடிக்கைகளை நியாயப்படுத்துகின்றன”

“சவுதி அரேபியாவில் தாலிபான்கள் வேற்று மனிதனுடன் போனதற்காக ஒரு பெண்ணை பிடித்து அடித்துக் கீழே தள்ளுகிறார்கள். அதன் பிறகு கல்லெறியப்பட்டு அவள் கொல்லப்படுகிறாள். அது போல நமது நாட்டில் நடக்கிறதா? நாம் அவர்களை விட நாகரீகம் அடைந்தவர்கள். இத்தோடு திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்”

“பெண் உயர்ந்த சாதியைச் சேர்ந்தவளாக இருக்கும் போது இப்படி நடக்கிறது. தாழ்ந்த சாதியைச் சேர்ந்த ஒருவரை பெண் திருமணம் செய்யும் போது அவளது குடும்பம் தாழ்ந்த சாதி குடும்பத்துடன் உறவாட வேண்டியிருக்கும். அதன் பிறகு அவர்கள் தமது சாதியினரிடம் எப்படி புழங்க முடியும்? அவர்களுக்கு உதவி தேவைப்பட்டால் யார் செய்வார்கள்? குடும்ப வட்டங்களில் அவர்களின் அந்தஸ்து தாழ்ந்து விடுகிறது, அது வரை இருந்த மதிப்பை இழக்க நேரிடுகிறது. அந்த மதிப்பை மீண்டும் ஈட்டுவதற்கு என்ன வழி? இந்த தாழ்ச்சிக்கு காரணமான களையைப் பிடுங்கி எறிவதுதான் ஒரே வழி. அதனால் நான் கௌரவக் கொலைகளை எதிர்க்க மாட்டேன். இது பெற்றோர்களின் இயல்பான எதிர்வினைதான்”

“நம்முடைய சட்ட அமைப்பில் பாரம்பரிய பழக்கங்களும் சட்டமாக மதிக்கப்படுகின்றன. நீதிமன்றங்களும் அவற்றுக்கு பாதுகாப்பு அளிக்கின்றன. யாராவது அவற்றை மீறும் போது அவர் அதற்காக தண்டிக்கப்படுவது நியாயம்தான். நம்மை பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்கள் ஏன் நம்மை கொல்ல வேண்டும்? என்பது முக்கியமான கேள்வி? தற்கால தலைமுறை அவர்களை ஏன் ஏமாற்ற வேண்டும்? அதனால் கௌரவக் கொலைகள் ஓரளவுக்கு நியாயமானவைதான். சமூகத்தின் சட்டங்களை பின்பற்ற விரும்பாத ஒருவர் அந்த சமூகத்தில் வாழும் உரிமையை இழக்கிறார். இது சமூகத்தின் அடிப்படை கோட்பாடு”

சமூகத்தில் குடும்பத்தின் அந்தஸ்தை பாதுகாக்க குழந்தைகளை பலி கொடுப்பது போன்ற இத்தகைய கேடு கெட்ட பழக்கங்கள் முதலாளித்துவ நாடுகளில் இருந்தால் அது பரவலாக கண்டனம் செய்யப்பட்டு, குற்றவாளிகளுக்கு விரைவான தண்டனை வழங்கப்படுவதற்கான தேவையான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு விடும். அறிவியல், பொருளாதார, தொழில்நுட்ப, உள்கட்டமைப்பு வளர்ச்சி வெகுவாக முன்னேறி விட்டது என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் நம் நாட்டில், அந்த ஒளிரும் தகவல்களுக்குக் கீழே கொடூரமான அழுகிப் போன சமூகக் கட்டமைப்பின் கீழ் இத்தகைய பழமைவாத கொடூரங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஏன்?

‘சந்திரனுக்கு சந்திரயான் அனுப்பியாச்சு, பொக்ரானில் அணுகுண்டு வெடித்து வல்லரசு கிளப்பில் அங்கம் வாங்கியாச்சு? இந்த காலத்தில யார் சார் சாதி பார்க்கிறாங்க?’ என்று பேசுவதன் அபத்தம் இன்னும் ஏன் நீடிக்கிறது?

‘தகவல் தொழில் நுட்பத் துறையில் உலக அளவில் முன்னேற்றம், 8% வளர்ச்சி, பழைய மகாபலிபுரம் சாலையில் விண்ணை முட்டும் பளபளக்கும் கட்டிடங்கள், பெரு நகரங்களின் கிடுகிடு விரிவாக்கம் முன்னேற்ற ஒளி வீச, இன்னொரு பக்கம் பஞ்சாப்/அரியானாவில் பெண் குழந்தைகள் விகிதம் கடுமையாக சரிவு, தமிழ்நாட்டின் தெற்கு மாவட்டங்களில் சாதீய படுகொலைகள், கௌரவக் கொலைகள்’ என்று பழமை இருள் சூழ்ந்திருப்பது ஏன்?

அறிவியல் வளர்ச்சியின் மூலம் ஏற்பட்ட பிரம்மாண்ட தொழிற்புரட்சியில் பங்கேற்கும் ஒரு நாடு, தகவல் தொழில்நுட்ப புரட்சியில் முன்னணி பாத்திரம் வகிக்கும் ஒரு நாடு, இத்தகைய பழமையான பிற்போக்கு சமூக பழக்கங்களை உடைத்தெறிந்து நவீன விஞ்ஞான உலகத்துக்கு ஏன் வந்து விடவில்லை? ஹரியானா பிபிஓவில் வேலை செய்யும் இளைஞனுக்கு, காதலித்து திருமணம் செய்து கொண்ட தனது சகோதரியை கொன்று போடும் பொறுப்பு எப்படி ஏற்படுகிறது?

நம் பள்ளி வரலாற்றுப் பாடத்தை நினைவு படுத்திக் கொள்வோம்.

19ஆம் நூற்றாண்டில் நவீன ஆயுதங்களுடனும் படைப்பிரிவுகளுடனும் நாடு பிடிக்க வந்த ஆங்கிலேயர்கள், இந்தியாவில் அதிகாரத்தில் இருந்த வந்த பிற்போக்கு அரசுகளை முறியடித்து வென்று, தமது பொருளாதார ஆதிக்கத்தை நிலை நாட்டும் போது பிற்போக்குத் தனமான சமூக பழக்கங்கள் தாக்குதலுக்கு உள்ளாயின.  ராஜா ராம் மோகன் ராய் போன்ற இந்திய சீர்திருத்த வாதிகளின் துணையுடன் உடன் கட்டை ஏறுவதை தடை செய்வது, குழந்தை மணத்தை எதிர்ப்பது என்று சமூகத்தின் கசடுகளை ஒழிக்கும் கடமை அறிவியலையும் தொழில் நுட்பத்தையும் பின்பற்றி வந்த அரசுக்கு இயல்பாகவே போய்ச் சேர்ந்தது.

இப்படி ஆங்கிலக் கல்வியும், போராடுவதற்கான ஆயுதங்களும் பெறப்பெற்ற படைவீரர்களும், பொது மக்களும் 1857ல் முதல் சுதந்திர போரில் இறங்கினார்கள். மக்கள் எழுச்சியை சமாளிக்கத் திணறி ஒருவழியாக மீண்ட ஆங்கிலேய வர்த்தக ஆட்சியாளர்கள், அறிவியலும் பகுத்தறிவும் தொழிலுக்கும் வர்த்தகத்துக்கும் சரி, சமூகத்தை மதம், சாதி, மூட நம்பிக்கைகளின் பிடியிலேயே விட்டு வைப்பதுதான் தங்களுக்கு பாதுகாப்பு என்பதை உணர்ந்தார்கள்.  விக்டோரியா ராணியின் நேரடி ஆட்சிக்கு இந்தியாவை எடுத்துக் கொண்டு, மக்களை பழமை சங்கிலிகளில் கட்டுவித்து, அவர்களது உழைப்பைச் சுரண்டும் பணியை சிறப்பாக செய்து வந்தார்கள்.

பிரெஞ்சு புரட்சியின் போது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற முழக்கங்களை வைத்து நிலப்பிரபுத்துவ கசடுகளை ஒழித்துக் கட்டியது போல இந்தியாவில் நடைபெறாமல் பார்த்துக் கொண்டார்கள்.

1947-ல் ‘சுதந்திரம்’ பெற்ற, இந்திய/பன்னாட்டு முதலாளிகளின் பிரதிநிதியான காங்கிரசு அரசுகளும் பாதுகாப்பான அதே கொள்கைகளை பின்பற்றின. இந்திய சட்ட அமைப்பும், நீதி மன்றங்களும் மக்களின் நம்பிக்கைகளுக்கும் பாரம்பரிய பழக்கங்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று வகுத்துக் கொண்டார்கள்.

தொழிற்சாலைக்கு வரும் தொழிலாளியும், பிபிஓவுக்கு வரும் ஊழியரும் 21ஆம் நூற்றாண்டு தொழில் நுட்பத்துடன் உறவாடினாலும், வீட்டுக்குத் திரும்பியதும் அவரை கட்டிப் போட பழங்கால அடிமைச் சங்கிலிகளை விட்டு வைத்ததோடு அவற்றை உறுதி படுத்துவதற்கு தேவையான உதவிகளையும் செய்து வருகிறார்கள். நிறுவனத்திலேயே டபுள் சிறீ ரவிசங்கர் ஆன்மீக வகுப்பு, அலுவலகத்தில் சாதிரீதியான குழு சேர்ப்புகளை கண்டு கொள்ளாமல் விடுவது, ஆயுத பூஜைக்கு பரிசுகள் வழங்குவது என்று நவீன தொழில் நுட்ப சூழலில் அறிவியலுக்கு விரோதமான கொள்கைகளை தடையின்றி அனுமதிக்கிறார்கள்.

அதுதான் ஊழியர்கள் முழுமையான அறிவியல் பார்வை பெற வைத்து தமக்கு எதிராக போய் விடாமல் பாதுகாத்துக் கொள்ளும் ஒரே வழி. நீண்ட கால நோக்கில் அதுதான் இலாபகரமானது. ‘பிரீ மார்கெ’ட்டில் ஆகக் கூடிய லாபம் ஈட்டுவதுதானே உச்ச கட்ட நோக்கமாக இருக்க வேண்டும்!

இப்படியாக நிலப்பிரபுத்துவ பிற்போக்கு கொடுமைகளை ஒழித்துக் கட்டும் தகுதியையும் நேர்மையையும் மறுக்கும் இன்றைய முதலாளித்துவ அமைப்பு அவற்றுடன் கள்ளக் கூட்டு ஏற்படுத்தியுள்ளது.

அதனால்தான் நோக்கியாவைத் தொடும் கைகள் தாலியையும் விடாது பிடித்திருக்கின்றன. மவுசை இயக்கும் விரல்கள் அதற்கு ஆயுத பூசையையும் செய்கின்றன. மல்டி மீடியாவை களிக்கும் கண்கள் ஆதிக்க சாதி திமிரை விடாது கொண்டிருக்கின்றன. சமூக ரீதியான போராட்டமின்றி வளர்ச்சியின்றி வெறுமனே தொழில்நுட்பமும், பொருளாதார வளர்ச்சியும் மட்டும் முன்னேற்றத்தை சாதித்து விடாது. அந்த முன்னேற்றமும் எளியோரை வதைத்து வரும் முன்னேற்றம் என்பது வேறு விசயம்.

நம்நாட்டில் படித்தவர்கள், பண்புள்ளவர்கள் என்று தம்மைத்தாமே நினைத்துக் கொள்ளும் மேட்டுக்குடி துவங்கி நடுத்தர வர்க்கம் வரை இந்த கௌரவக் கொலைகளை செய்தோ இல்லை மறைமுகமாக நியாயப்படுத்தியோ வருகின்றன. இவர்கள்தான் வட மாநிலங்களில் காங்கிரசுக்கும், பா.ஜ.கவிற்கும் அடித்தளமாக இருக்கின்றனர். இந்த மாநிலங்களில் இருக்கும் அரசு, அதிகார, நீதிமன்ற, காவல்துறை அமைப்புகள் எல்லாம் கௌரவக் கொலைகளுக்கு தோதான முறையிலேயே செயல்பட்டு வருகின்றன.

அரசியல், பொருளாதார அரங்குகளில் மட்டும் போராடினால் போதாது சமூக அரங்கிலும் நாம் விடாப்பிடியாக போராடியாக வேண்டும் என்பதையே தொடரும் கௌரவக் கொலைகள் நமக்கு சொல்கின்ற உண்மை.

________________________________________________

அப்துல்
________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

அண்ணா ஹசாரே: ஒய் திஸ் கொலவெறி ஜெயமோகன்?

13

ஒய் திஸ் கொலைவெறிக்கு இணையாக தொலைக்காட்சி ஊடகங்களால் பிரபலப்படுத்தப்பட்ட சூப் சாங் அண்ணா ஹசாரே.

ஒய் திஸ் கொலைவெறியை மார்க்கெட் செய்தது சோனி நிறுவனம். அண்ணாவுக்கு டைம்ஸ் நௌ தொலைக்காட்சி. ஏற்கெனவே சோனி நிறுவனம் மார்க்கெட் செய்த பிரபல “சூப் சாங்” ஒன்று உண்டு. அது ஏ.ஆர்.ரஹ்மானின் வந்தே மாதரம். அதே போல இந்தியாவின் முதலாளித்துவ ஊடகங்களும் அண்ணாவுக்கு முன்னால் பல பெரியண்ணாக்களை மார்க்கெட் செய்திருக்கின்றன.

ஒய் திஸ் கொலவெறி ஜெயமோகன் ?
ஜெமோ கட்டுரையை வாசிக்க படத்தின் மீது அழுத்தவும்

கார்ப்பரேட் நிறுவனங்களால் ஸ்பான்சர் செய்யப்படும் சூப் சாங்குகள் வைரல் ஆகப் பரவுவது குறித்து மகிழ்ச்சி கொள்பவர்களுக்கு, அந்தக் காய்ச்சல் கொஞ்சநாளைக்கு அப்புறம் விட்டுவிடும்போது, அதைப் புரிந்து கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். சில மாதங்களுக்கு முன் ஹசாரே எழுச்சியால், “பாரதத்தின்” உடல் கொதித்தை காய்ச்சல் என்று புரிந்து கொள்ளாமல், “உள்ளொளியின் உக்கிரம்” என்று புரிந்து கொண்டவர்களும், காய்ச்சலில் பினாத்தியவற்றை கவிதையெனக் கொண்டாடியவர்களும் உண்டு. அவர்களில் முதல்வர் ஜெயமோகன். ஒப்புக்கொள்ள மறுப்பவர்கள் இன்றைய (23.12.2011) தினமணி நடுப்பக்க கட்டுரையையும், ஹசாரே குறித்த ஜெயமோகனின் முந்தைய எழுத்துகளையும் பார்க்கவும்.

 

இன்று ஹசாரேயை கார்ப்பரேட் ஊடகங்கள் கைவிட்டு விட்டன என்று கூட சொல்லமுடியாது. பழைய பில்டப் கொஞ்சம் குறைந்திருக்கிறது. சிலர் விமரிசனம் வேறு செய்கிறார்கள் என்பதுதான் ஜெமோவின் மனக்குமுறல்.

சென்ற முறை கார்ப்பரேட் முதலாளித்துவ ஊடகங்கள் ஹசாரே படத்தை நூறு நாள் ஓட்டியதற்கும், அதனை அரசு அனுமதித்ததற்கும் பல காரணங்கள் உண்டு. அவற்றில் தலையாயது காங்கிரசு அரசின் குறிப்பான ஊழல்களை மறைப்பதற்கு அண்ணாவின் பொதுவான ஊழல் ஒழிப்பு உதார் பயன்பட்டது என்பதே. இரண்டாவது காரணம், அண்ணா ஹசாரேயின் இயக்கமென்பது லவ் பெயிலியர் பாய்ஸுக்கான ஒரு சூப் சாங்தான் என்பது ஆளும் வர்க்கத்துக்கும் அரசுக்கும் தெளிவாகத் தெரியும். மூன்றாவது காரணம் கார்ப்பரேட் முதலாளிகளுடனான உறவில் மன்மோகன் சிங்கிடம் நிலவும் “ஆண்மைக்குறைவு”.

இத்தகைய “வரலாற்றுக் காரணங்கள்தான்” மைலாப்பூர் மாமியையும், லாஸ் எஞ்செல்ஸ் அம்பியையும், லெட்டர்ஸ் டு எடிட்டர் தாத்தாவையும் ஐ ஆம் அண்ணா என்று பாடவைத்தன. ஹிந்து சம்பிரதாயத்தின் வழிவந்த தீவட்டிகளான ஆர்.எஸ்.எஸ் காரர்கள், கிறித்தவத்துக்கே நெருக்கடி ஏற்படும் அளவுக்கு மெழுகுவர்த்தி கொள்முதல் செய்யவும் வைத்தன.

இப்போது நிலைமை கொஞ்சம் மாறிவிட்டது. சரத் பவாருக்கு அறை விழுந்ததும், “சிட்டியிலுள்ள டான்களெல்லாம்” கூடிப் பேசிவிட்டார்கள். “இது நல்லதல்ல. இன்று கன்னத்தில் அறை, நாளை நெற்றிப்பொட்டில் துப்பாக்கி என்று நிலைமை மோசமாகிவிடும்” என்று முதலாளிகள் கவலையுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே, “ஒரு அறைதானா” என்று உளறிவிட்டார் ஹசாரே.

சத்திய சோதனையை தலைக்கு வைத்துப் படுக்கும் அகிம்சாவாதிகளான கார்ப்பரேட் முதலாளிகள் இதைக் கேட்டு அதிர்ந்து விட்டார்கள். காந்தியப் பாதையிலிருந்து ஒரு நூல் வழுவினாலும் தங்களால் ஒப்புக்கொள்ள முடியாது என்பதை அண்ணாவுக்குப் புரிய வைத்து விட்டார்கள். மேலும் கார்ப்பரேட் ஊடகங்களை பணியவைப்பதற்கு எந்தெந்த இடத்தில் ஊசியால் குத்தவேண்டும் என்ற அக்குபஞ்சர் முறைகள் தெரிந்த அதிகாரிகளையும் காங்கிரசு அரசு களத்தில் இறக்கியிருப்பதால் ஊடகங்கள் அடக்கி வாசிக்கின்றன.

இதுதான் விசயம். ஆனால் ஜெயமோகனால் இதை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்?

“பவார் தாக்கப்பட்டபோது அண்ணா பேசிய சொற்களை வைத்து அவருடைய ஆளுமையை அழிக்கிறார்கள். ஊடகங்களும் அரசும் மெல்ல அவதூறு மற்றும் ஆளுமை அழிப்புத் தாக்குதல்களைத் தொடுக்கின்றன. அவர் அறிவுஜீவி அல்ல, எளிய மனிதர். அவருடைய பேச்சு திரிக்கப் படுகிறது” என்று தினமணியில் அரைப்பக்கத்துக்கு கண்ணீர் விட்டிருக்கிறார்.

தற்போது ஊடகங்கள் அண்ணாவின் ஆளுமையை ஏன் அழிக்கின்றன என்று ஆராய்ச்சி செய்யும் ஜெயமோகன், நேற்று இதே ஊடகங்கள் அண்ணா காலைக்கடன் முடிக்கும் காட்சி தவிர அனைத்தையும் ரியாலிடி ஷோவாக லைவ் ரிலே செய்தது ஏன் என்ற விசாரத்தில் ஈடுபட்டாரா தெரியவில்லை.  அண்ணாவை வீழ்த்துவதற்கு முதலாளிகளுக்கும் அறிவுஜிவிகளுக்கும் ஒரு நோக்கம் உண்டென்றால், உயர்த்தியதற்கான நோக்கம் என்ன? கார்ப்பரேட் சோசியல் ரெஸ்பான்சிபிலிடியா?

“அவர் மக்கள் நடுவே இருந்து உருவாகி வந்தவர். அவரது மொழி ராஜதந்திரிகளின் மொழி அல்ல” என்று ஜெத்மலானி போல வாதாடுகிறார் ஜெயமோகன். பவாரை அடித்தவுடன், ஒரு அறைதானா என்று கேட்ட அண்ணா, “அமாய்யா அப்படித்தான் கேட்டேன். அதிலென்ன தப்பு?” என்று சொல்லிவிட்டுப் போகவேண்டியதுதானே. “நான் அப்படி சொல்லவில்லை, இப்படி சொன்னேன்” என்று கோக்கு மாக்கு செய்கிறாரே அது அரசியல்வாதி வேலையில்லாமல் வேறு என்ன?

அண்ணா எப்போதும் தனக்குப் பக்கத்தில் ஒரு தேசியக் கொடி, மற்றும் கிரண்பேடி ஆகிய இரண்டு வஸ்துக்களை வைத்திருக்கிறார். கொடி மீது இதுவரை ஊழல் குற்றச்சாட்டு எதுவும் வரவில்லை. ஆனால் பேடியின் யோக்கிதை சந்தி சிரிக்கிறது. தன் மீது மதிப்பு வைத்து நம்பி அழைத்தவர்களையே, திருட்டு கணக்கு கொடுத்து ஏமாற்றியிருக்கிறார். கேட்டால் “ஊழல் பணத்தை திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்” என்கிறார். “திருட்டு கண்டுபிடிக்கப்பட்டால், திருப்பிக் கொடுப்பதே தண்டனை” என்று ஜன் லோக் பால் மசோதாவின் எத்தனையாவது ஷரத்து கூறுகிறது? உலகமே காறித்துப்பும் பேடியின் இந்தப் பித்தலாட்டம் இந்த எளிய மக்கள் சேவகருக்கு மட்டும் புரியவில்லையா? ஆ.ராஜாவுக்கு சிறை, கிரண் பேடிக்கு பிராயச்சித்தமா?

தங்கள் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டவுடன், “நாங்கள் பகிரங்க விசாரணைக்குத் தயார். தவறு செய்திருந்தால் எங்களை தூக்கிலிடுங்கள். ஆனால் லோக் பால் மசோதாவைக் காப்பாற்றுங்கள்” என்று உருகினார் கேஜ்ரிவால். கிரண்பேடி எந்த தூக்கில் தொங்குகிறார்? தூக்குதண்டனை, கசையடி முதலான எளிய காந்திய தண்டனை முறைகள் தவிர வேறு எதையும் அறியாத, அண்ணா ஹசாரேயின் முனியாண்டி விலாஸ் மூளைக்குள் இந்தக் கேள்வி எழவே இல்லையா?

“காந்தி காங்கிரசை கலைக்கச்சொன்னார், ராணுவத்தைக் கலைக்கச் சொல்லவில்லை”. எனவே அண்ணா காந்தியவாதிதான், முனியாண்டி விலாசும் உடுப்பி ஓட்டல்தான் என்று ஆதாரபூர்வமாக நிறுவுகிறார் ஜெயமோகன். காந்தி பிரிட்டிஷ் ராணுவத்துக்கே ஆள் சேர்த்துக் கொடுத்த மகான். அண்ணாவோ இந்திய ராணுவத்தில் ஒரு சிப்பாயாக இருந்தவர். எனவே அவர் காந்தியவாதியாகத்தான் இருக்க முடியும் என்பதை நாம் மறுக்கவில்லை.

“சிறந்த ஊழலற்ற நிர்வாகம்” என்று மோடிக்கு அவர் தெரிவித்த பாராட்டு, இந்து மதவெறியையோ குஜராத் படுகொலையையோ பெயர் சொல்லிக் கூட கண்டிக்காமல் வழுக்கிய அவரது ராஜதந்திரம், பிறகு குஜராத் ஊழல் மாநிலம் என்று விமரிசனம் செய்து தனது பழைய கூற்றை ரத்து செய்த சாதுர்யம், காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமை பற்றி பிரசாந்த் பூஷண் கூறிய கருத்தை எதிர்ப்பதில் அண்ணா காட்டிய உறுதி போன்ற பலவற்றுடன், இரண்டு பேருக்கும் வாய் பொக்கை என்ற உண்மையையும் கணக்கில் கொண்டு பார்த்தால் அண்ணா ஹசாரே ஒரு காந்தியவாதிதான். பாரிஸ்டர் பட்டம் பெற்ற பின்னர்தான் காந்திக்கு வாய் பொக்கையானது என்பது சிறியதொரு வேறுபாடு. அவ்வளவே.

ஹசாரே ஒரு காந்தியவாதி மட்டுமல்ல, அவர் ஜெபி யின் அவதாரம் என்கிறார் ஜெமோ. இந்திய அரசியலில் தனியாகத் தலையெடுக்க முடியாத ஜனசங்கம், 1970 களில் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் “முழுப்புரட்சி” இயக்கத்துக்குள் நுழைந்து, பாரதிய ஜனதாவாக பரிணாமம் பெற்றது. தற்போது மீண்டும் அதே காங்கிரசு கட்சியின் ஆட்சி. தனியார்மயக் கொள்கைகளாலும், ஊழல்களாலும் நாறிப்போயிருந்த போதிலும், காங்கிரசின் இடத்தைப் பிடிக்கும் வலிமை பாரதிய ஜனதாவுக்கு இல்லை. ராமன் பெயரிலான கோயிலோ, பாலமோ, பை பாஸ் சாலையோ தங்களுக்கு அதிகாரத்தைப் பெற்றுத் தராது என்பதும் நாக்பூரின் சர்சங்சாலக்குகளுக்கு தெரிந்திருக்கிறது. எனவே ஒளிந்து கொள்வதற்கு இன்னொரு ஜெ.பி இருந்தால் நல்லது என்பது அவர்களது வேட்கை.

படுகொலை மூலம் இந்துத்துவத்தின் சோதனைச் சாலையை மோடி உருவாக்கியிருந்தாலும், அந்த வழி அனைத்திந்திய அதிகாரத்தை பெற்றுத்தராது என்பது மோடிக்கே தெரிந்து விட்டது. மேலும், அத்தகைய இந்து கிராமத்தை அகிம்சை வழியில் ராலேகான் சித்தியில் அண்ணா ஏற்கெனவே உருவாக்கி விட்டார். அதனை ஆர்.எஸ்.எஸ் அன்றே அடையாளம் கண்டுவிட்டது. இதுதான் நாம் உருவாக்கவிருக்கும் இந்து ராஷ்டிரத்தின் மாதிரிக் கிராமம் என்ற முடிவுக்கும் வந்து விட்டது.

காந்திய சிந்தனையும் இராணுவ இதயமும் கொண்ட ஒரு மனிதரை ஆர்.எஸ்.எஸ் காரர் என்று நாம் புரிந்து கொள்வதற்கு, அவர் காக்கி டவுசரும் கருப்புக் குல்லாவும் அணிந்திருக்க வேண்டுமா என்ன?

கதர் ஆடையை மீறித் திமிரிக் கொண்டு வெளித்தெரியும் அவரது உடல்மொழியைப் பார்த்தாலே அவர் ஒரு “பாசிஸ்ட் நாட்டாமை” என்பதைப் புரிந்து கொள்ளலாம். அல்லது அவரது புகழ்பாடும் ஜெயமோகனின் எழுத்தைப் படித்து, அதில் வெளிப்படும் பதற்றத்தையும், ஆத்திரத்தையும், அசட்டுத்தனத்தையும் அடையாளம் கண்டால், அதிலிருந்தும் அண்ணா ஹசாரே யார் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

போர்டு பவுண்டேசனின் பினாமியான மகசேசே விருது பெற்றவர்கள், உலகவங்கியின் திட்டத்தை வழிமொழிபவர்கள், ஜிண்டால் உள்ளிட்ட கொள்ளைக்கார கார்ப்பரேட்டுகளின் பணத்தில் பொதுவாழ்வை சுத்தம் செய்ய வந்தவர்கள் .. .. என்பன போன்ற புறவயமாகத் தெரியும் உண்மைகளிலிருந்து ஹசாரே யார் என்பதை புரிந்து கொள்வது எளிய மக்களுக்கான வழி. அல்லது பகிரங்கமாக விவாதித்து முடிவுக்கு வரும் அறிவியல் பூர்வமான வழி.

“இலக்கியம்தான் எனது அரசியல்” என்று தேர்ந்து, அதன் வழியில் தேடிக் கண்டுணரும் அழகியல் உண்மையே அறுதி உண்மை என்று நம்பும் ஆன்மீகவாதிகள், தம் மனச்சாட்சியுடன் அந்தரங்கமாகப் பேசலாம். அல்லது தமது மனச்சாட்சியின் பவுதிக வடிவமான ஜெயமோகனுடனும் பேசலாம்.

________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

ஏர் இந்தியா ஊழலும் ஊடகங்களின் பாராமுகமும்

ஏர் இந்தியா ஊழலும் ஊடகங்களின் பாராமுகமும்பொதுத்துறை நிறுவனமான ஏர்இந்தியாவின் செயல்பாடுகள் குறித்து மைய அரசின் தணிக்கைத் துறை நாடாளுமன்றத்திற்கு அளித்துள்ள அறிக்கை, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அந்நிறுவனத்தைத் திட்டமிட்டு படுபாதாளத்திற்குள் தள்ளிவிட்டுள்ள சதித்தனத்தை அம்பலப்படுத்தியிருக்கிறது.  மைய அரசும், ஏர்இந்தியா நிர்வாகமும் அமெரிக்காவைச் சேர்ந்த விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங்கிற்கும், ஐரோப்பாவைச் சேர்ந்த விமானத் தயாரிப்பு நிறுவனமான ஏர் பஸ் நிறுவனத்திற்கும் மற்றும் விமான சேவைகளை நடத்திவரும் எமிரேட்ஸ், கிங் ஃபிஷர், ஜெட் ஏர்வேஸ் உள்ளிட்ட பல தனியார் நிறுவனங்களுக்கும் சாதகமாக எடுத்த முடிவுகளால், ஏர்  இந்தியா இன்று மீள முடியாத நட்டத்திலும் கடனிலும் சிக்கிக் கொண்டுவிட்டதாகத் தனது அறிக்கையில் குற்றஞ்சுமத்தியிருக்கிறது, தணிக்கைத் துறை.

2004ஆம் ஆண்டுக்கு முன்பு வரை இலாபத்தில் இயங்கிவந்த ஏர்இந்தியா நிறுவனம், அதன் பின், குறிப்பாக 2004இல் மன்மோகன் சிங் தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவியேற்ற பிறகுதான் நட்டமடையத் தொடங்கியது.  ஏர்இந்தியா நிறுவனம் தனது வியாபாரம் படுத்துப்போனதால் நட்டமடையவில்லை.  மாறாக, ஏர்இந்தியா நிறுவனத்திற்குரிய வர்த்தகச் சந்தையைத் தனியார் விமான நிறுவனங்களுக்குத் தாரை வார்த்துக் கொடுத்ததும்; தேவையேயில்லாத விதத்திலும் ஏர்இந்தியாவின் வருமானத்துக்கு மீறிய விதத்திலும் புதிய விமானங்களை வாங்கி அந்நிறுவனத்தின் கடன் சுமையை அதிகரித்ததும்தான் ஏர்இந்தியாவைப் போண்டியாக்கிவிட்டது.  ஏர்இந்தியா நிறுவனத்தை சர்வதேச தரத்துக்கு நவீனப்படுத்துவது எனக் கூறிக்கொண்டு, காங்கிரசு கூட்டணி இந்தச் சதித் திட்டத்தை அரங்கேற்றியிருக்கிறது.

1990களில் விமானச்சேவைத் தனியாருக்குத் திறந்துவிடப்பட்ட பின், ஏர்இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனங்களை நவீனமயமாக்குவதை மைய அரசு திட்டமிட்டே புறக்கணித்து வந்தது.  குறிப்பாக, ஏர்இந்தியாவிற்குப் புதிதாக 26 விமானங்களை வாங்க வேண்டும் என அந்நிறுவனம் 1996இல் வைத்த கோரிக்கையை எட்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் மைய அரசு பரிசீலிக்கத் தொடங்கியது.  மைய அரசின் இந்த திடீர் பாசத்தின் பின்னே ஏர்இந்தியாவின் நலன்களைவிட, அதன் அமெரிக்க அடிவருடித்தனம்தான் மறைந்திருந்தது.

2003ஆம் ஆண்டு இறுதியில் அமெரிக்க காங்கிரசைச் சேர்ந்த 43 உறுப்பினர்கள் அடங்கிய வர்த்தகக் குழு, ஏர்இந்தியாவிற்கு விமானங்கள் வாங்குவது தொடர்பாக இந்தியப் பிரதம மந்திரி அலுவலகத்துக்குக் கடிதம் எழுதியது.  இக்கடிதத்தை பிரதம மந்திரி அலுவலகம் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சருக்கு அனுப்பி வைத்த பின்தான் ஏர்இந்தியா நிறுவனத்திற்கு 28 விமானங்கள் வாங்குவது தொடர்பான கோப்பு தூசி தட்டி எடுக்கப்பட்டது.  இச்சமயத்தில் அமெரிக்காவின் போயிங் நிறுவனம் இந்தியப் பிரதம மந்திரி அலுவலகத்துக்கு எழுதிய கடிதத்தில், எத்தனை விமானங்கள் வாங்குகிறீர்களோ, அதற்கு ஏற்றபடி விலையை அனுசரித்துத் தர முடியும் எனத் தூண்டில் போட்டது.

போயிங்கிடமிருந்து இக்கடிதம் கிடைக்கப் பெற்ற அடுத்த சில மாதங்களுக்குப் பின் பதவியேற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, 28 விமானங்களுக்குப் பதிலாக 38,149 கோடி ரூபாய் செலவில் 68 விமானங்களை போயிங் நிறுவனத்திடம் வாங்கும் ஆலோசனையை ஆகஸ்ட் 2004இல் முன்வைத்தது.  பிரதமர் மன்மோகன் சிங் ஜூலை 2005இல் அணுசக்தி ஒப்பந்தம் மற்றும் இராணுவ ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவிற்குச் செல்லவிருந்தார்.  அவரது இந்தப் பயணத்திற்கு முன்பாக இந்த ஒப்பந்தத்தை முடித்துவிட வேண்டும் என்று இந்தியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இந்திய வெளியுறவுத் துறையைக் கேட்டுக் கொண்டதாக விக்கி லீக்ஸ் இணையதளம் அம்பலப்படுத்தியிருக்கிறது.

எனினும், விமானங்கள் வாங்குவது குறித்த ஒப்பந்தம் ஜூலை 2005க்கு முன்பாக முடிவாகவில்லை.  2005ஆம் ஆண்டின் இறுதியில்தான் கையெழுத்தானது.  குறிப்பாக, மன்மோகன் சிங் வெளியுறவு அமைச்சகத்தின் பொறுப்பை நவம்பர் 6, 2005இல் ஏற்றுக் கொண்ட பின், அடுத்த 54ஆவது நாளில், அதாவது டிசம்பர் 30, 2005 அன்று இந்த ஒப்பந்தத்தை சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகமும், பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை கமிட்டியும், பிரதமர் அலுவலகமும் அங்கீகரித்து ஒரே நாளில் கையெழுத்திட்டன.  இந்த ஒப்பந்தம் கையெழுத்தான அடுத்த இரண்டு மாதங்களிலேயே, ஐரோப்பாவைச் சேர்ந்த ஏர் பஸ் நிறுவனத்திடமிருந்து ஏறத்தாழ 8,339 கோடி ரூபாய் செலவில் 43 விமானங்களை இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு வாங்கும் ஒப்பந்தமும் முடிவானது.  அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மார்ச் 2006இல் இந்தியாவிற்கு வரவிருந்ததையொட்டியே, இந்த ஒப்பந்தங்களை முடிவு செய்வதில் இத்துணை வேகம் காட்டப்பட்டது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பதவியேற்ற பின், இந்தியாவிலிருந்து ஐரோப்பாவிற்கும் அமெரிக்கா, கனடா மற்றும் அரபு நாடுகளுக்கும் விமானச் சேவைகளை வழங்கும் உரிமங்கள் வெளிநாடுகளைச் சேர்ந்த பல தனியார் விமானப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு வாரி வழங்கப்பட்டன.  அரபு நாடுகளைச் சேர்ந்த விமான நிறுவனங்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு ஏர்இந்தியாவின் சந்தையை விழுங்கத் தொடங்கிய அதேசமயம், அரபு நாடுகள் ஏர்இந்தியா துபாய் வழியாக வட அமெரிக்க நாடுகளுக்குச் செல்லும் உரிமத்தை வழங்காமல் இழுத்தடித்தன.  இது மட்டுமின்றி, உள்நாட்டிலும் வருமானமிக்க வழித்தடங்களும், நேரங்களும் கிங் ஃபிஷர், ஜெட் ஏர்வேஸ் ஆகிய தனியார் விமான நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கப்பட்டன.  அதாவது, தனியார் பஸ் முதலாளிகளின் இலாபத்திற்காக அரசு போக்குவரத்துக் கழகம் மொட்டையடிக்கப்பட்டதைப் போல, ஏர்இந்தியாவும் இந்தியன் ஏர்லைன்ஸும் மொட்டையடிக்கப்பட்டன.  இதனால் இந்த நிறுவனங்களின் வருமானம் குறைந்து, அவை நட்டத்தில் தள்ளப்பட்ட நேரத்தில்தான், வெளிச் சந்தையில் கடன்வாங்கியாவது ஏறத்தாழ 47,000 கோடி ரூபாய் பெறுமான இந்த 111 விமானங்களையும் வாங்கும் ஒப்பந்தத்தை முடிவு செய்தது, மைய அரசு.

இதற்கு முன்பாக விமானம் வாங்கும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்பொழுது, தனது நிதி நிலைமையைக் கருத்தில்கொண்டு, வாங்கும் விமானங்களின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொள்ளும் விதியை ஒப்பந்தத்தில் சேர்த்துக் கொள்ளும் நடைமுறையை விமான போக்குவரத்து அமைச்சகம் கடைப்பிடித்து வந்தது.  ஆனால், இம்முறையோ ஒப்புக்கொள்ளப்பட்ட 111 விமானங்களையும் வாங்கிக் கொள்ளும்படி ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது.  மேலும், விமானங்கள் வாங்கும் ஒப்பந்தம் முடிவான பிறகு ஏர்இந்தியாவையும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தையும் ஒன்றாக இணைக்கும் முடிவும் அரசால் எடுக்கப்பட்டது.  விமானங்கள் வாங்குவதில் ஏற்கெனவே இருந்துவந்த நடைமுறையைப் பின்பற்றியிருந்தால்,  ஏர்இந்தியாவையும் இந்தியன் ஏர்லைன்ஸையும் ஒன்றாக இணைத்த பிறகு விமானங்களை வாங்கும் முடிவை எடுத்திருந்தால், நட்டத்தை ஒரு குறிப்பிட்ட அளவாவது குறைத்திருக்க முடியும் எனத் தணிக்கைத் துறை குறிப்பிட்டுள்ளது.

111 விமானங்களை வாங்கும் முடிவு, ஏர்இந்தியாவையும் இந்தியன் ஏர்லைன்ஸையும் இணைப்பது என்ற முடிவு  இவையிரண்டும் இப்பொதுத்துறை நிறுவனங்களை ஒழித்துக்கட்டிவிட வேண்டும் என்ற தீய நோக்கத்துடன்தான் எடுக்கப்பட்டுள்ளன.  மார்ச் 2006இல் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இந்தியாவிற்கு வருகை தந்தபொழுது, போயிங்குடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் அவருக்கு நினைவுப் பரிசைப் போல வழங்கப்பட்டது.  அதேசமயம், இந்த ஒப்பந்தங்களாலும், இணைப்பாலும் ஏர்இந்தியா நிறுவனம் இன்று 20,000 கோடி ரூபாய் நட்டத்திலும், 46,000 கோடி ரூபாய் கடனிலும் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

2ஜி அலைக்கற்றை விவகாரத்தோடு இதனை ஒப்பிட்டால், ஏர்இந்தியா நிறுவனத்தைத் திட்டம் போட்டு நட்டத்தில் சிக்க வைத்த பிரதமர் மன்மோகன் சிங், சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரஃபுல் படேல் தொடங்கி அதிகாரிகள் ஈறாக இந்த நம்பிக்கை துரோகத்தோடு தொடர்புடைய அனைவர் மீதும் விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும்.  ஆனால், எதிர்க்கட்சிகளும், கார்ப்பரேட் பத்திரிகைகளும் இந்தச் சதித்தனம் பற்றி வாய்திறக்க மறுக்கின்றன.  அதேபொழுதில், இந்த நட்டத்தைக் காட்டி, இந்நிறுவனத்தைத் தனியார்மயப்படுத்திவிட வேண்டும் என்ற பிரச்சாரத்தைதான் மும்மரமாக நடத்தி வருகின்றன.

ஏர் இந்தியா ஊழலும் ஊடகங்களின் பாராமுகமும்2ஜி விவகாரத்தில் தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவைக் குறிவைத்துத் தாக்கிய பத்திரிகைகள், ஏர்இந்தியாவை நட்டத்திற்குள் தள்ளிவிட்ட சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரஃபுல் படேலைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு, அவரே ஒரு பெரும் முதலாளி, பொருளாதாரப் பத்திரிகைகளுக்கு நெருக்கமான அன்பர் என்பதுதான் காரணம்.  2ஜி அலைக்கற்றை ஏலவிற்பனையில் நடந்த ஊழலைவிட, மிகப் பிரம்மாண்டமான அளவில் ஊழல் நடந்துள்ள கே.ஜி. எண்ணெய் வயல் ஊழலில் (பார்க்க: பு.ஜ; ஜூலை 2011) தொடர்புடைய முகேஷ் அம்பானியையும், பெட்ரோலியத் துறையின் முன்னாள் அமைச்சர் முரளி தியோராவையும் பத்திரிகைகள் மட்டுமல்ல, எதிர்க்கட்சிகளும், சி.பி.ஐ.யும், நீதிமன்றமும் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு அம்பானியின் பணபலமும் அரசியல் செல்வாக்கும் காரணமாகும்.  அவர்களின் இந்த செல்வாக்கு இவ்வூழல் தொடர்பான தணிக்கைத் துறையின் அறிக்கையை நீர்த்துப் போன வடிவத்தில் நாடாளுமன்றத்தில் அளிக்கும் அளவிற்குப் பா#ந்திருக்கிறது.

கார்ப்பரேட் பகற்கொள்ளை தொடர்பான ஊழல்களுள் ஒன்றிரண்டு மட்டுமே அரசியல் காரணங்களை முன்னிறுத்தி அம்பலப்படுத்தப்பட்டு, வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றன; எஞ்சியவை வெளியே தெரிந்த வேகத்திலேயே அமுக்கப்படுகின்றன என்பதற்கு ஏர்இந்தியா ஒப்பந்தம், கே.ஜி எண்ணெய் வயல் ஏலம், இஸ்ரோ ஊழல் எனப் பல உதாரணங்கள் நம் கண் முன்பே வலம் வருகின்றன.

________________________________________________

– புதிய ஜனநாயகம், நவம்பர் – 2011

_________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

தியாகத் தோழர் கிஷன்ஜிக்கு வீரவணக்கம்!

இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மாவோயிஸ்ட்)இன் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரான கிஷன்ஜி என்றழைக்கப்படும் தோழர் மலோஜுலா கோடேஸ்வரராவ், மத்திய ரிசர்வ் போலீசு படையினரால், 24.11.2011 வியாழனன்று படுகொலை செய்யப்பட்டு தியாகியானார். மேற்கு வங்க மாநிலம், மேற்கு மித்னாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த புரிசோல் காட்டுப் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் அவர் கொல்லப்பட்டதாக போலீசு தெரிவித்தது. துப்பாக்கிச் சண்டை நடந்ததாகக் கூறப்படும் இடம்,  ஜம்போனி போலீசு நிலையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவிலும், அரசு விவசாயப் பண்ணையிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும் உள்ள ஆள் நடமாட்டமும் போலீசு நடமாட்டமும் அதிகமுள்ள இடமென்பதால், அங்கே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாகக் கூறுவதே சந்தேகத்திற்குரியது என்று கூறியிருக்கின்றன, சில பத்திரிகைகள்.

முந்தைய நாளன்று, ஆயிரம் பேர்கொண்ட படையினர் கிஷன்ஜியைச் சுற்றி வளைத்துவிட்டதாகவும், ஆனால், இறுதி நேரத்தில் அவர் தப்பிவிட்டதாகவும் போலீசு செய்தி வெளியிட்டது. தோழர் கிஷன்ஜி நவம்பர் 23 அன்றே கைது செய்யப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, நவம்பர் 24 அன்று போலி மோதலில் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று தோழர் வரவரராவ் குற்றம் சாட்டினார். கொல்கத்தாவைச் சேர்ந்த ஏ.பி.டி.ஆர். என்ற சிவில் உரிமை அமைப்பின் தலைவரும், மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மம்தா அரசு நியமித்துள்ள குழுவின் உறுப்பினருமான சுஜாதோ பத்ரோவும், வலது கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் குருதாஸ் தாஸ்குப்தாவும் இது போலி மோதல் கொலை என்றே கூறியிருக்கின்றனர்.

இது போலி மோதல் கொலை அல்ல என்றும், குறிப்பான உளவுத் தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ‘சுத்தமான’ நடவடிக்கைதான் என்றும் கூறியிருக்கிறார், மத்திய ரிசர்வ் போலீசு படையின் டைரக்டர் ஜெனரல் விஜயகுமார். போலீசின் வாய் சுத்தம் நாம் அறிந்ததுதான் என்பது ஒருபுறமிருக்க, விஜயகுமார் தமிழகத்தில் இருந்தபோது, அவர் தலைமையிலான சிறப்பு அதிரடிப் படை வீரப்பன் பிணத்தைச் ‘சுட்டுக் கொன்ற கதை’யும் நமக்குத் தெரியும்.

தோழர் கிஷன்ஜியின் உடலை அடையாளம் காண்பதற்காக நவம்பர் 26 அன்று மித்னாபூர் மருத்துவமனைக்கு நேரில் சென்ற வரவரராவும், தோழர் கிஷன்ஜியின் அண்ணன் மகள் தீபாவும் கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டதற்கான அடையாளங்களாக அவரது உடல் முழுதும் காயங்கள் இருப்பதை உறுதி செய்திருக்கின்றனர். அவரது உடலில் 6 இடங்களில் தோட்டாக்கள் பாய்ந்திருப்பதாக பிரேதப் பரிசோதனை அறிக்கை கூறுகிறது. கொலை வழக்கு பதிவு செய்யப்படவேண்டும் என்றும் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கொல்கத்தா உயர்நீதி மன்றத்தில் தீபா மனு தாக்கல் செய்யவிருக்கிறார்.

தியாகத் தோழர் கிஷன்ஜிக்கு வீரவணக்கம் !

கிஷன்ஜி என்றழைக்கப்பட்ட தோழர் மலோஜுலா கோடேஸ்வரராவ் ஆந்திர மாநிலம், கரீம் நகர் மாவட்டத்திலுள்ள பெட்டபள்ளியைச் சேர்ந்தவர். கல்லூரிக் காலத்திலேயே முற்போக்கு மாணவர் சங்கத்தைத் துவங்குவதில் முன்நின்றதாகவும், 1975 அவசரநிலைக் காலத்தின்போதே தலைமறைவு வாழ்க்கையைத் தொடங்கிவிட்டதாகவும் ஒரு பேட்டியில் அவர் கூறியிருக்கிறார். மக்கள் யுத்தக் குழுவிலும், பின்னர் ஒன்றுபட்ட மாவோயிஸ்டு கட்சியிலும் தலைமைப் பொறுப்புகளில் இருந்து, 30 ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டிருந்த மூத்த தோழராக இருந்தபோதிலும், லால்கர் போராட்டத்தை ஒட்டித்தான் ஊடகங்களின் வாயிலாக அவர் அறிமுகமானார்.

லால்கர் போராட்டத்தின் போது, பொய் வழக்குகளில் போலீசால் கைது செய்யப்பட்ட பழங்குடிப் பெண்களை விடுவிக்கக் கோரி, அக்டோபர் 2009இல் சங்க்ரெயில் போலீசு நிலையத்தின் மீது தாக்குதல் தொடுத்து, இன்ஸ்பெக்டர் அதீந்திரநாத் தத்தாவைப் பிணையக் கைதியாகப் பிடித்தனர் மாவோயிஸ்டுகள். 14 பழங்குடிப் பெண்கள் விடுவிக்கப்பட்ட பின்னர், அந்த போலீசு அதிகாரியையும் விடுவித்தனர். மார்க்சிஸ்டு அரசை இந்த நடவடிக்கை கொதிப்புறச் செய்தது. இந்நடவடிக்கையின் போது, ஒரு கட்டம் போட்ட கைத்தறித் துண்டால் தலையைப் போர்த்திக் கொண்டு, தோளில் துப்பாக்கி தொங்க, தொலைக்காட்சி காமெராவுக்கு முதுகைக் காட்டியபடி ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார் ஒரு தோழர். ஒடிசலான உடல்வாகும், மென்மையான குரலும் கொண்ட அவர்,  ‘கிஷன்ஜி’ என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

பின்னர் பிப்ரவரி 2010இல், சில்டாவில் கிழக்குப் பிராந்திய ரைபிள்ஸ் முகாமின் மீது தாக்குதல் நடத்தி, 24 சிப்பாய்களைக் கொன்று, 47 நவீன ஆயுதங்களையும் மாவோயிஸ்டு படையினர் கொண்டு சென்ற போது, கிஷன்ஜிதான் இதற்கு காரணம் என்று போலீசு குற்றம் சாட்டியது. கிஷன்ஜிக்கு எதிரான தேடுதல் நடவடிக்கைகளை மே.வங்க அரசு முடுக்கி விட்டிருந்த நிலையிலும், அவர் ஊடகங்களுக்கு பேட்டியளித்த வண்ணமிருந்தார். மார்க்சிஸ்டு அரசினால் அவரைப் பிடிக்க முடியவில்லை.

ஆனால், “ஜங்கல் மகல் பகுதியிலிருந்து மத்தியமாநிலக் கூட்டுப் படைகளைத் திரும்பப் பெறுவோம், எல்லா அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்வோம், மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்” என வாக்குறுதி அளித்த மம்தாவின் அரசுதான் கிஷன்ஜியைப் பிடித்துச் சித்திரவதை செய்து கொன்றிருக்கிறது. இந்தப் படுகொலைக்கு மன்மோகன், சோனியா, சிதம்பரம், மம்தா ஆகியோர்தான் பொறுப்பு என்றும் மம்தாவும் மத்திய அரசும் கூட்டாக நடத்திய சதியின் விளைவாகத்தான் இந்தப் படுகொலை நடந்திருக்கிறது என்றும் மாவோயிஸ்டு கட்சியின் மத்தியக்குழுவின் சார்பில் தோழர் அபய் குறிப்பிட்டிருக்கிறார்.

2004இல் ராஜசேகர் ரெட்டியுடனான பேச்சு வார்த்தையை முறிந்தவுடனே, நல்லமலா காட்டுப் பகுதியை சுற்றி வளைத்து தோழர் ராமகிருஷ்ணாவைக் கொலை செய்ய முயற்சி நடந்தது. மாவோயிஸ்டுகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக ப.சிதம்பரம் நாடகமாடிக் கொண்டிருந்த போதே, கோப்ரா படையினரால் தோழர் ஆசாத் நயவஞ்சகமாகக் கைது செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். தற்போது மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, சிவில் உரிமை அமைப்பினர் சிலரை மம்தா அரசு நியமித்து, அவர்கள் இரண்டு சுற்றுகள் பேசிவிட்ட நிலையில், கூட்டுப்படைகள் தோழர் கிஷன்ஜியைப் பிடித்துக் கொலை செய்திருக்கின்றன.

அமைதி, சமாதானம், பேச்சுவார்த்தை என்று கூறிக் கொண்டு மாவோயிஸ்டு கட்சியின் தலைமையைக் கொன்றொழிப்பது, கட்சிக்குள் உளவாளிகளை ஊடுருவச் செய்வது என்ற உத்திகளையே மத்தியமாநில அரசுகளும் போலீசும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றன.   “கிஷன்ஜி பற்றிய தகவல்களை எங்களுடைய ஆதரவாளர்களே போலீசுக்கு கசிய விட்டிருக்கின்றனர். கடைசியாக நான் கிஷன்ஜியுடன் பேசியபோது, நம்முடைய ஆதரவாளர்களுக்குள்ளேயே எதிரிகள் ஊடுருவிவிட்டனர் என்று அவர் கூறினார்” என மாவோயிஸ்டு கட்சியின் மேற்கு வங்கச் செயலர் ஆகாஷ் தொலைபேசியில் கூறியதாக கொல்கத்தாவிலிருந்து வெளிவரும்டெலிகிராப் நாளேட்டின் (நவம்பர்,26) நிருபர் பிரணாப் மண்டல் குறிப்பிட்டிருக்கிறார்.

சிங்குர், நந்திகிராம் மக்கள் போராட்டங்களின் அரசியல் ஆதாயத்தை அறுவடை செய்து கொண்ட மம்தா பானர்ஜி, லால்கர் போராட்டத்தையும் விட்டு வைக்கவில்லை. லால்கரிலிருந்து துணை இராணுவத்தை திரும்பப் பெறவேண்டும் என்று சவடால் அடித்தார். ஆசாத்தின் கொலையைக் கண்டிப்பதாக நாடகமாடினார். ஜெயலலிதாவின் ஈழத்தாய் வேடத்தைப் போன்றதே மம்தாவின் இந்தப் ‘புரட்சி’ வேடம் என்பதை ஆளும் வர்க்கங்கள் புரிந்து வைத்திருந்தன. வங்கத்து அறிவுஜீவிகள் சிலருக்குத்தான் அது புரியவில்லை.

மம்தா பதவிக்கு வந்தவுடன், கூட்டுப்படை நடவடிக்கையை நிறுத்தாதது மட்டுமல்ல, மாவோயிஸ்டுகளை ஒழிப்பதற்கு சல்வா ஜுடுமைப் போன்ற 10,000 பழங்குடி இளைஞர்களைக்  கொண்ட சிறப்புப் போலீசு படை அமைப்பதாக அறிவித்தார். ஒருபுறம் பேச்சுவார்த்தைக்குத் தூதர்களை நியமித்து மாவோயிஸ்டுகளுடன் பேசச் சொல்லிவிட்டு, மறுபுறம் தலைவர்களைக் குறிவைத்து அழிக்கும் திட்டத்தையும் முடுக்கி விட்டார். அதன் விளைவுதான் தோழர் கிஷன்ஜியின் படுகொலை.

தன்னுடைய வாழ்க்கையை மக்களின் விடுதலைக்கு அர்ப்பணிப்பதென்று முடிவு செய்து புறப்பட்ட தோழர் கோடேசுவர ராவ், இன்னல்மிக்க தலைமறைவு வாழ்க்கையை ஏற்று, புரட்சி ஒன்றையே நோக்கமாகக் கொண்டு கிராமங்கள், நகரங்கள், காடுகள் என 33 ஆண்டு காலம் எங்கெங்கும் சுற்றிப் பணியாற்றி, கடந்த நவம்பர் 27 அன்று தியாகி கிஷன்ஜியாக பெட்டபள்ளிக்குத் திரும்பியிருக்கிறார். 33 ஆண்டுகளுக்குப் பின் தனது மகனைப் பிணமாகப் பார்க்க நேர்ந்த அவரது தாய் மதுரம்மா நெஞ்சம் வெடித்துக் கதற, திரண்டிருந்த தோழர்கள் “தியாகி கிஷன்ஜிக்கு செவ்வணக்கம்” என்று முழங்க, ஆயிரக்கணக்கான மக்களும் பல்வேறு அரசியல் அமைப்புகளின் தலைவர்களும் அஞ்சலி செலுத்த தோழர் கிஷன்ஜி விடைபெறுகிறார்.

தலையில் போர்த்திய துண்டும், முதுகில் தொங்கும் துப்பாக்கியுமாக அவர் முன்னே செல்கிறார்.  தோழர் கிஷன்ஜியின் தியாகத்தைப் பின்தொடர்வோம்! வீரவணக்கம் தோழர் கிஷன்ஜி!

____________________________________________________

–    புதிய ஜனநாயகம், டிசம்பர் – 2011

_________________________________________________________

சில்க் ஸ்மிதா – ரூப் கன்வர்: ஒரு தற்கொலை! ஒரு கொலை!!

சிலுக்கு
சில்க் ஸ்மிதா

முன்னுரை:

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிப்பதாகக் கூறும் “டர்ட்டி பிச்சர்” படம் சமீபத்தில் வெளியானதும் ரசிகர்களும், படைப்பாளிகளும் ஆளுக்கொரு உச்சு கொட்டி விட்டு சிலுக்கை நினைத்துக் கொண்டார்கள். சுமிதாவை தற்கொலைக்குத் தூண்டிய திரையுலகம் இன்றும் அப்படித்தான் இயங்குகிறது. சுமிதா தற்கொலை செய்வதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்னால் ராஜஸ்தானில் ரூப் கன்வர் எனும் பெண்மணி உடன்கட்டை ஏற்றிக் கொல்லப்பட்டாள். அந்தக் கொலை வழக்கில் யாரும் குற்றவாளி என்று நிரூபிக்கப்படவில்லை. ரூப் கன்வரை ஆண்டு தோறும் தொழும் காட்டுமிராண்டித்தனமும் இன்றும் குறையவில்லை. கற்பையும் விபச்சாரத்தையும் போற்றும் இந்து மதமும், இந்திய சமூகமும்தான் இந்த இரண்டு பெண்களின் மறைவுக்கு காரணம் என்றால் சண்டைக்கு வருவீர்களா? பதட்டப்படாமல் 1997-இல் எழுதப்பட்ட இந்த கட்டுரையை படியுங்கள்.

–    வினவு

_____________________________________________

”இந்தப் பாரம்பரியம் எங்கள் உயிரினும் மேலானது. உடன்கட்டையேறி உயிர் துறக்கும் விதவையானவள், உடலில் எத்தனை மயிர்க்கால்கள் உள்ளனவோ அத்தனை ஆண்டுகள், 3 கோடி ஆண்டுகள் சொர்க்கத்தில் வாழ்வாள்.”

உடன் கட்டையேற்றும் பழக்கத்துக்கு எதிராக பிரிட்டிஷ் பிரபு பெண்டிங் கொண்டு வந்த சீர்திருத்தச் சட்டத்தை விலக்கிக் கொள்ளக் கோரி மன்னர்களும், 120 பார்ப்பனப் பண்டிதர்களும் கை ஒப்பமிட்டு அளித்த மனுவில் கண்டுள்ள வாசகம் இது. விதவை வாழ்க்கையின் துன்பங்களையும், கட்டுப்பாடுகளையும் ஒப்பிடும்போது ‘சிறிது நேரம் சிரமப்பட்டாலும்’ போய்ச் சேர்ந்து விடுவதே ஒரு பெண்ணுக்கு நல்லது என்ற உண்மையையும் அந்த மனுவில் அவர்கள் குறிப்பிடத் தவறவில்லை.

தமது விருப்பத்துக்கு விரோதமாக ஒரு பெண்ணை உடன்கட்டையேற்றக்கூடாது என்று கூறிய அந்தச் சட்டம் நடைமுறையில் அமல்படுத்தப்பட்ட விதத்தை- உடன்கட்டையேறும் காட்சியை – எஸ்.ஸி. போஸ் (1881) கூறுகிறார்;

”நான் சிறுவனாக இருந்தபோது அத்தை உடன் கட்டையேறிய காட்சியை அழுது கொண்டே அம்மா என்னிடம் கூறியிருக்கிறாள்.

சவ ஊர்வலம் சுடுகாட்டை அடைந்தது. போலீஸ் இன்ஸ்பெக்டர் அத்தையிடம் வந்து உடன்கட்டையேற வேண்டாம் என்று எடுத்துச் சொன்னார். பயனில்லை. கொஞ்சம் தள்ளி நின்று என்ன நடக்கிறது என்று கண்காணிக்கத் தொடங்கினார். சிதையை 7 முறை சுற்றிவருமாறு புரோகிதர்கள் அத்தையிடம் கூறினர். ஒவ்வொரு சுற்று வரும்போதும் அவளுடைய கால்கள் தள்ளாடத் தொடங்கின. மயக்கமடையத் தொடங்கினாள். இன்ஸ்பெக்டர் மீண்டும் ஒரு முறை அத்தையிடம் வந்து பேசினார். அவளுக்கு எங்கே கேட்டிருக்கும்?

பிறகு அத்தையை சிதையின் மீது ஏற்றி கணவனின் பிணத்துக்கு அருகில் படுக்க வைத்தனர். ஒரு கையை கணவனின் தலைக்குக் கீழும், இன்னொரு கையை அவன் மார்பின் மீதும் வைத்து அணைத்தபடி படுத்திருந்தாள். ஹரி…. ஹரி… என்ற முனகல் அவள் வாயிலிருந்து கேட்டது.”

”பெண்ணே எழுந்திரு, உன் கணவன் இறந்து விட்டான். நீ அவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் முடிந்தன. இந்த உலகத்தில் உன் வாழ்க்கையைத் தொடர வந்துவிடு” என்று யாரேனும் ஒருவர் அந்த நேரத்தில் சொல்ல வேண்டும் என்பது சம்பிரதாயம். யாரும் சொல்லவில்லை.

”அத்தையின் மீது உடனே விறகுகளை அடுக்கினார்கள். தடியான ஒரு ஆள் விறகுகளை ஒரு அமுக்கு அமுக்கினான். சிதையைச் சுற்றியிருந்த மூங்கில்கள் சடசடவென எரியத் தொடங்கின. ஒரு உடலும், இன்னொரு உயிரும் சாம்பலாகும் வரை சுற்றியிருந்தவர்களின் கத்தல் ஓயவில்லை.”

வார்த்தைகளால் விவரிக்க முடியாத இந்தக் கொடூரத்தை, கட்டாயப்படுத்தி நிறைவேற்றும் உரிமையை மன்னர்களும், புரோகிதக் கும்பலும் மன்றாடிக்கேட்டபோதும் பெண்டிங் செவிசாய்க்கவில்லை.

புரோகிதர்கள் தங்கள் மனுவில் குறிப்பிடாமல் விட்ட ஒரு சம்பிரதாயத்தை பெண்டிங் குறிப்பிட்டார். ”உடன் கட்டையேறும் தாயை உயிருடன் கொளுத்துவது மகனின் கடமை. ஒரு வேளை அவள் குழந்தையில்லாத இளம் விதவையாக (சிறுமியாக) இருந்தால், தன்னை யார் கொளுத்தவேண்டும் என்பதை அவள்தான் கூறவேண்டும்” என்பதே அந்த சம்பிரதாயம்.

சிலுக்கு ஸ்மிதா – ரூப்கன்வர் : ஒரு தற்கொலை ஒரு கொலை !
சதிமாதாவாக ரூப் கன்வர்

ரூப் கன்வருக்கும் மகன் இல்லை. அவளுக்குத் திருமணமாகி ஒரு ஆண்டு கூட ஆகவில்லை. எனவே அவளை உயிருடன் கொளுத்தும் பொறுப்பை மைத்துனன் ஏற்றுக் கொண்டான். சுற்றிலும் நூற்றுக்கணக்கான ராஜாபுத்திரர்கள் நின்று ‘சதிமாதா கி ஜெய்’ என்று ஆர்ப்பரிக்க அவன் ரூப் கன்வருக்குத் தீ வைத்தான். தீயின் நாக்குகள் தன்னைத் தீண்டத் தொடங்கியதும் அவள் சிதையிலிருந்து தப்பி ஓட முயற்சித்தாள். ஆனால் கையில் வாளுடன் சிதையைச் சுற்றி நின்ற ராஜபுத்திர இளைஞர்கள் அவள் தப்பிவிடாமல் பார்த்துக் கொண்டார்கள்.

இவையெல்லாம் பம்பாய் பத்திரிகையாளர் குழுவொன்று சம்பவம் நடந்தவுடனே தியோரலா சென்று நேரில் திரட்டிய செய்திகள். ரூப் கன்வருக்கு போதைமருந்து கொடுத்திருந்தார்கள் என்பதும் அவர்கள் முன்வைத்த ஒரு குற்றச்சாட்டு.

சுடுகாட்டுக்குப் பெண்கள் செல்வது ‘இந்து’ பாரம்பரியம் இல்லையே. ரூப் கன்வர் ஏன் சென்றாள்? அவளை புடவை, நகைகள்  அணிவித்து அலங்கரித்தவர்கள் யார்?

அவளை உடன்கட்டை ஏற்றுவதற்கு முன்னால் அவளுடைய பெற்றோருக்குக் கூட செய்தி தெரிவிக்காததன் மர்மம் என்ன? என்று பல கேள்விகள் எழுப்பப் படுகின்றன. எனினும் கண்ணால் கண்ட சாட்சிகள் யாரும் இல்லையென்ற காரணத்தால் நீதிமன்றம் குற்றவாளிகளை விடுதலை செய்துவிட்டது. போலீசு தரப்பு சாட்சிகளே தங்கள் கூற்றை மறுத்து விட்டதால் வழக்குக்கு எந்த ஆதாரமும் இல்லையென்று தள்ளுபடி செய்துவிட்டார் நீதிபதி.

”நீதி வென்றது. ஒரு வேளை அவர்கள் தண்டிக்கப்பட்டிருந்தால் இந்திய ராணுவத்தின் ‘ராஜபுத்திரர் ரெஜிமென்ட்’ கலகத்தில் இறங்கியிருக்கும்” என்று எச்சரிக்கிறார்கள் தியோரலாவின் ராஜபுத்திரர்கள்.

”இதுவரை 8 ‘சதி’ வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டோருக்காக ஆஜராகியிருக்கிறேன். எல்லாவற்றிலும் நான்தான் ஜெயித்தேன். யாரும் தண்டிக்கப்பட்டதில்லை” என்று மார்தட்டுகிறார் குற்றவாளிகளுக்கு ஆஜரான வழக்கறிஞர்.

”குற்றவாளிகளைத் தப்பவிடுவதற்காக போலீசு திட்டமிட்டே வழக்கில் ஏகப்பட்ட ஓட்டைகளை உருவாக்கி வைத்திருந்தது” என்று குற்றம் சாட்டுகிறார்கள் மகளிர் அமைப்பினர்.

”நீதிபதி மனம் வைத்திருந்தால் குற்றவாளிகளைத் தண்டிக்கும் வாய்ப்பு இந்த வழக்கிலேயே இருந்தது” என்று முனகுகிறார்கள் அரசு வழக்கறிஞர்கள்.

”மகளிர் அமைப்பினர் சொன்னதைக் கேட்டு இதைக் ‘கொலை வழக்கு’ என்று பதிவு செய்ததுதான் தவறு. ”தற்கொலைக்குத் தூண்டுதல்” என்ற குற்றப்பிரிவில் வழக்கு போட்டிருந்தால் ரூப்கன்வர் கொளுத்தப்பட்ட போது அங்கே வேடிக்கை பார்த்தவர்கள் உள்ளிட்டு எல்லோரையும் உள்ளே தள்ளியிருக்கலாம். ‘சதி ஊர்வலத்தில் பங்கேற்பவர்களும் தற்கொலையைத் தூண்டும் குற்றத்தை செய்தவர்களே’ என்று கூறும் உயர்நீதிமன்றத் தீர்ப்பொன்று ஏற்கனவே உள்ளது ”என்று புது வியாக்கியானம் தருகிறார்கள் டெல்லி வழக்கறிஞர்கள்.

”தியோரலா சம்பவத்துக்குப் பிறகு ‘சதி’க்கெதிராகக் கொண்டு வரப்பட்ட சட்டம் ரொம்பக் கடுமையானது. ‘சதியை ஆதரிப்பவர்கள் உள்ளிட்டு எல்லோரையும் இச்சட்டத்தின் மூலம் தண்டித்துவிட முடியும். எனவே இனி குற்றவாளிகள் தப்ப முடியாது” என்கின்றனர் ராஜஸ்தான் அதிகார வர்க்கத்தினர்.

ஆனால் ரூப் கன்வர் கொளுத்தப்பட்ட இடம் சதி ஸ்தல் என்ற புனிதத் தகுதியுடன்தான் இருந்து வருகிறது. ரூப் கன்வர் கொளுத்தப்பட்ட நாளில் ஆண்டு தோறும் ‘சுன்ரிமகோத்ஸவ்’ என்ற விழா நடத்தப்பட்டுதான் வருகிறது. முதல் ஆண்டு விழாவில் ராஜஸ்தான் பா.ஜனதா முதல்வர் செகாவத் பங்கேற்றார்.

‘பாரம்பரியமிக்க’ தலைப்பாகையுடன் கையில் வாளேந்திய ராஜபுத்திர இளைஞர்கள் தங்கள் குலப்பெருமையை நிலைநாட்டும் அடுத்த சதிமாதாவைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

______________________

சிலுக்கு
சில்க் ஸ்மிதா

தமிழ்த் திரையுலகம் அடுத்த சில்க் ஸ்மிதாவைத் தேடிக்கொண்டிருக்கிறது. கற்பும் விபச்சாரமும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்தானே!

கொலையா தற்கொலையா என்ற ஆராய்ச்சி இங்கேயும் தொடர்கிறது. இருப்பினும் தற்கொலைதான் என்று கோப்பினை மூடிவிட்டது காவல்துறை. தற்கொலை என்றே வைத்துக்கொண்டால் ரூப் கன்வரைத் தற்கொலைக்குத் தூண்டிய குற்றவாளிகளைப் பிடிக்க முடியாதது போலவே, ஸ்மிதாவைத் தற்கொலைக்குத் தூண்டிய குற்றவாளிகளையும் பிடிக்க முடியவில்லையாம்.

ஆனால் இறந்த மறுநாளே ஸ்மிதா உயிர்த்தெழுந்தாள்- பத்திரிகைகளிலும், திரையரங்குகளிலும். ஆனால் இப்பொழுதும் அவளுக்கு முழு ஆடையை அனுமதிக்க பத்திரிகைகள் தயாராக இல்லை. இருப்பினும் எல்லோரும் கண்ணீர் வடிக்கத் தவறவும் இல்லை. அது வேசியைச் சாகக் கொடுத்த விடுதிக்காரியின் கண்ணீர். தரகுக் காசை இழந்த தரகனின் கண்ணீர். அவளுடன் கழித்த நாட்களை எண்ணி வாடிக்கையாளன் வடிக்கும் கண்ணீர். கண்ணீர் வற்றியது. தற்கொலைக்கு யார் காரணம் என்று கண்டுபிடிக்கப் போதிய ஆதாரமில்லாததால், எது காரணம் என்ற உளவியல் ஆய்வில் இறங்கினார்கள்.

”ஸ்மிதாவுக்குப் போதிய படிப்பறிவு இல்லை அதுதான் காரணம்” என்றார் நடிகை சுகாசினி. இனி கல்வியறிவு இல்லாத யாரையும் கவர்ச்சி நடிகையாக்கக் கூடாது என்றுதான்  கோடம்பாக்கத்தின் முடிவோ! அல்லது விபச்சாரம், அவமானம், ஆணாதிக்கம், முகத்துதி, துரோகம், நடிப்பு, நயவஞ்சகம் போன்ற திரையுலகின் அத்தனை இழிவுகளையும் தாங்கிக் கொண்டு உயிரோடிருப்பதற்குத் தேவையான அறிவைக் கல்வி அளித்துவிடுமா?

இதே- நியாயத்தை ரூப் கன்வருக்கும் பொருத்தலாம். தீயில் வெந்தது அவளுடைய மூடநம்பிக்கையின் விளைவு என்று வழக்கை முடித்து விடலாம். அதைத்தான் ராஜபுத்திரர்களும் விரும்புகிறார்கள். ”உடன் கட்டைப் பழக்கத்திற்காக இந்து மதத்தை ஏன் சாடுகிறீர்கள்? எல்லோருமா உடன் கட்டை ஏறுகிறார்கள்” என்று கேட்கிறார்கள் இந்து சனாதனிகள். ”ஸ்மிதாவின் தற்கொலைக்காகத் திரையுலகத்தை ஏன் குற்றம் சொல்கிறீர்கள், எல்லோருமா தற்கொலை செய்து கொள்கிறார்கள்?” என்பதுதான் சுகாசினி வகையறாவின் வாதம். சாக்கடையைக் குற்றம் சொல்லாதீர்கள். கொசுவர்த்தி வைத்துக் கொள்ளுங்கள். எத்தனை கிருமிகளுக்கும், புழுக்களுக்கும் இந்தச் சாக்கடை வாழ்வளிக்கிறது!

ஸ்மிதா போன்ற கல்வியறிவற்றவர்கள் எதிர்காலத்தில் தற்கொலை செய்துகொள்ளாமல் தடுக்க தாய்லாந்தின் முன்னுதாரணத்தைக் கோடம்பாக்கமும் பின்பற்றலாம். தாய்லாந்தில் எயிட்ஸ் நோயைக் கொண்டு வந்தவர்கள் அமெரிக்கர்கள்தான் என்பதால் லட்ச ரூபாய் கொடுத்தாலும் அமெரிக்க வாடிக்கையாளரை அனுமதிக்க மாட்டோம் என்கிறார்களாம் தாய்லாந்தின் படிப்பறிவற்ற விலைமாதர்கள். கல்வியறிவற்ற விலை மாதர்களால் தோன்றியுள்ள இந்த நெருக்கடியைச் சமாளிக்க அவர்களுக்கு ‘எயிட்ஸ் கல்வி’ அளிக்கும் பொருட்டு விளக்கப் படங்களுடன்  கூடிய கையேடு ஒன்றை வெளியிட்டுள்ளதாம் ஒரு தொண்டு நிறுவனம்.

அமெரிக்கர்கள்தான் எயிட்ஸ் பேர்வழிகள் என்பது தவறு. யார் வேண்டுமானாலும் அப்படி இருக்கலாம். எனவே அமெரிக்கர்களை மட்டும் புறக்கணிப்பது தவறு. நாம் எச்சரிக்கையாக இருப்பதும், ஆணுறையைப் பயன்படுத்தச் சொல்வதும்தான் தீர்வு என்கிறது அந்த எயிட்ஸ் ‘கல்வி’ நூல்.  எயிட்சுக்கெதிரான அமெரிக்கப் பிரச்சார முழக்கமும் இதுதான்; ”விளையாடுங்கள், வேண்டாமென்று சொல்லவில்லை; ஆனால் பாதுகாப்பாக விளையாடுங்கள்”

இதைத்தான் சுகாசினியும் சொல்கிறார். ஆனால் தியோரலாவின் ராஜபுத்திரர்கள் கேட்கிறார்கள், ”பாதுகாப்பாகக் கொளுத்துவது எப்படி?”

___________________________________________

புதிய கலாச்சாரம்,  ஜனவரி – 1997.

________________________________________   

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

ரூபர்ட் முர்டோச்: ஊடகங்களால் உலகை வேட்டையாடும் கிழட்டு நரி!

ரூபர்ட் முர்டோச்: ஊடகங்களால் உலகை வேட்டையாடும் கிழட்டு நரி!ஐந்து கண்டங்களிலும் தொலைக்காட்சி ஒளிபரப்பும் செயற்கைக் கோள்கள், ‘வால் ஸ்டிரீட் ஜர்னல்’, ‘டைம்ஸ் ஆப் லண்டன்’, ‘நியூயார்க் போஸ்ட்’ உள்ளிட்டு உலகெங்கும் 175 செய்தித்தாள்கள், அமெரிக்காவில் மட்டும் 35 தொலைக்காட்சி நிலையங்கள், 19 விளையாட்டு சானல்கள், டுவென்டியத் சென்சுரி பாக்ஸ் என்ற ஹாலிவுட் திரைப்பட நிறுவனம்… இத்தனைக்கும் சொந்தக்காரரான உலக ஊடக சாம்ராச்சியத்தின் சக்ரவர்த்தி ரூபர்ட் முர்டோச் குற்றவாளிக் கூண்டில் நிற்கிறார்.

ஊடக சுதந்திரம், பேச்சுரிமை, எழுத்துரிமை என்பவைகளின் இலக்கணத்தைப் படைத்து மனித குலத்துக்கு வழங்கியதாக பீற்றிக் கொள்ளும் மேற்கத்திய நாடுகளின் செய்தி ஊடகங்கள் அதிர்ச்சியில் வீழ்ந்திருப்பது போன்றதொரு போலித் தோற்றத்தைக் காட்டுகின்றன. நடக்கக் கூடாததும், நடக்கவே முடியாததும் நடந்து விட்டதைப் போன்ற ஒரு பாசாங்கு!

ரூபர்ட் முர்டோச்சின் ஊடக சாராஜ்ஜியத்தைச் சேர்ந்த ‘நியூஸ் ஆப் த வோர்ல்ட்’ எனும் பத்திரிகை போலீசுக்கு இலஞ்சம் கொடுத்து, லண்டன் குண்டு வெடிப்பு மற்றும் அமெரிக்காவில் நடந்த 9/11 தாக்குதல் போன்றவற்றில் இறந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுடைய தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டுள்ளது என்ற உண்மை அம்பலமாகியிருக்கிறது. அது மட்டுமின்றி, இங்கிலாந்து அரச குடும்பத்தினரின் தொலைபேசிகளையும் கூட முர்டோச்சின் பத்திரிகை கள்ளத்தனமாக ஒட்டுக் கேட்டிருக்கிறது. ராஜ குடும்பத்தின் அந்தரங்கத்திலேயே மூக்கை நுழைத்து விட்டார் ருபர்ட் முர்டோச் என்று போட்டி சாம்ராஜ்ஜியங்களைச் சேர்ந்த ஊடகங்கள் சாமியாடிக் கொண்டிருக்கின்றன.

இங்கிலாந்தில் ருபர்ட் முர்டோச்சின் மேல் நடந்து வரும் விசாரணைகளைப் போலவே, அமெரிக்கப் புலனாய்வுத் துறையும் தங்கள் நாட்டில் முர்டோச்சின் ஊடகங்கள் பின்பற்றிய முறைகேடான விவகாரங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறியிருக்கிறது.

முதலாளித்துவ தனிநபர் சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம் ஆகியவற்றுக்கிடையில் நடக்கும் மோதல் போன்று தோற்றமளிக்கும் இந்த நிகழ்வுகள் உண்மையில் எம்.ஜி.ஆர். – நம்பியார் கத்திச் சண்டை ரகத்தைச் சேர்ந்தவையே. புலனாய்வு என்ற பெயரில் மஞ்சள் மசாலாக்களை கடைவிரிக்கும் இதழியலுடன் இவை நேரடித்தொடர்பு கொண்டவை.

கடந்த 2002ம் ஆண்டு மார்ச் மாதம் லண்டனைச் சேர்ந்த மில்லி டோலர் என்கிற 13 வயது சிறுமி மர்மமான முறையில் காணாமல் போகிறார். முர்டோச்சிற்கு சொந்தமான ‘நியூஸ் ஆப் தெ வோர்ல்ட்’ பத்திரிகையின் சார்பாக களமிறங்கும் தனியார் துப்பறியும் நிபுணர் க்ளென் முல்கெய்ர், மில்லியின் தொலைபேசியை கள்ளத்தனமாக இயக்கி,  மில்லி எங்கோ இருக்கிறார் என்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார். மில்லியின் குடும்பமும் இதை நம்புகிறது. போலீசாரும், இதையே ஆதாரமாக வைத்து தமது புலனாய்வை தவறான திசையில் தொடருகிறார்கள். கடைசியில் அதே ஆண்டு நவம்பர் மாத வாக்கில் மில்லியின் சிதைந்த உடற்பாகங்கள் கண்டெடுக்கப்படுகின்றன. அதுவரை அக்குடும்பம் மில்லி உயிரோடு இருப்பதாகவே நம்பிக் கொண்டிருக்கிறது. போலீசாரும் அதே கோணத்தில் விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையே இக்கொலைச் சம்பவம் குறித்தும் விசாரணைகள் பற்றியும் ‘நியூஸ் ஆப் த வோர்ல்ட்’ பத்திரிகை பரபரப்பாக எழுதுகிறது.

அடுத்து 2005ம் ஆண்டு நவம்பர் வாக்கில் இளவரசர் வில்லியம்ஸின் மூட்டு வலி பற்றிய ஒரு செய்தியும் ‘நியூஸ் ஆப் த வோர்ல்ட்’ பத்திரிகையில் வெளியாகிறது. மிக இரகசியமாக வைக்கப்பட்டிருந்த மூட்டு வலி விசயம் வெளியானதையடுத்து அதிர்ச்சியடைந்த இங்கிலாந்து போலீசார், இது குறித்து விசாரணை ஒன்றை நடத்துகிறார்கள். ‘நியூஸ் ஆப் த வோர்ல்ட்’ பத்திரிகை தொலைபேசிகளை திருட்டுத்தனமாக ஒட்டுக் கேட்கிறது என்பது தெரிய வந்தாலும், அது நிரூபிக்கப் படவில்லை. 2002ல் இப்பத்திரிகை இழைத்த குற்றம் 2011 ஜூலையில்தான் ஆதாரபூர்வமாக பிடிபடுகிறது.

முர்டோச்சின் பத்திரிகை பல்வேறு தருணங்களில் போலீசாருக்கு லஞ்சம் கொடுத்தும், சட்டவிரோதமான வகையில் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டும் செய்திகளைத் திரட்டியுள்ளது என்பது இச்சம்பவங்களைத் தொடர்ந்து ஒவ்வொன்றாக வெளியே வருகிறது. லண்டன் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுடைய தொலைபேசிகளும், 9/11 இரட்டை கோபுரத் தகர்ப்பில் கொல்லப்பட்ட பிரிடிஷ் பிரஜைகளின் உறவினர்களின் தொலைபேசி உரையாடல்களும் கூட ஒட்டுக் கேட்கப் பட்டிருக்கின்றன என்று தெரிய வருகிறது. தொடர்ந்து நடந்த விசாரணைகளில் ‘நியூஸ் ஆப் த வோர்ல்ட்’ பத்திரிகை லண்டன் போலீசின் கணினிமயமாக்கப்பட்ட ஆவணங்கள் மொத்தத்தையும் லஞ்சம் கொடுத்து கள்ளத்தனமாக கைப்பற்றியிருக்கிறது என்ற உண்மையும் அம்பலமாகிறது. அதாவது, இங்கிலாந்தின் குடிமக்கள் யார் எப்போது எந்த வழக்கில் சிக்கியிருந்தாலும், அந்த விவரம் இப்போது முர்டோச்சினுடைய பத்திரிகையின் கைக்கு வந்துவிட்டது.

1969 இல் ‘நியூஸ் ஆப் த வோர்ல்ட்’ பத்திரிகையை விலைக்கு வாங்கிய முர்டோச், அதனை டேப்லாய்ட் வகையைச் சார்ந்த ஒரு பத்திரிகையாக மாற்றினார். வேறு விதமாகச் சொன்னால் அது ஒரு மஞ்சள் பத்திரிகை. முர்டோச்சுக்கே சொந்தமான இன்னொரு வாரப்பத்திரிகையான ‘தி சன்’ என்ற மஞ்சள் பத்திரிகையைக் காட்டிலும் கேவலமான பத்திரிகை இது. உலகம் முழுவதும் உள்ள பிரபலங்களின் படுக்கையறைச் செய்திகள், கள்ள உறவு பற்றிய கிசுகிசுக்கள் ஆகியவைதான் இப்பத்திரிகையின் மூலதனம்.

இன்றைக்கு விவகாரம் அம்பலமானவுடன் மேற்கத்திய முதலாளித்துவ ஊடகங்கள் காட்டும் ஆச்சர்யம்தான் உண்மையில் ஆச்சர்யப்படத்தக்கது. ஏதோ ரூபர்ட் முர்டோச் இத்தனை காலமாக யோக்கியமாகத் தொழில் செய்து வந்தவர் போலவும், இப்போதுதான் அவரது ஊழல்கள் வெளியாகியுள்ளது போலவும் இந்தப் பத்திரிகைகள் அங்கலாய்க்கின்றன. ஆனால், ரூபர்ட் முர்டோச் தனது தொழில் சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தியதிலாகட்டும், தனது கிளைகளான ஒவ்வொரு ஊடகங்களையும் வெற்றிகரமாக நடத்தியதாகட்டும் – அனைத்திலும் அவர் பின்பற்றியது பச்சை அயோக்கியத்தனமான வழிமுறைகள் தானென்பது அனைவருமே அறிந்து வைத்திருந்த ‘ரகசியம்’தான்.

ரூபர்ட் முர்டோச்: ஊடகங்களால் உலகை வேட்டையாடும் கிழட்டு நரி!
முர்டோச்சின் ஊடக ஏகபோகம். நன்றி - கார்டியன் (படத்தை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்)

ஐந்து கண்டங்களையும் தழுவி பல்வேறு நாடுகளில் 175க்கும் மேற்பட்ட செய்தித் தாள்கள், நூற்றுக்கணக்கான தொலைக்காட்சி சேனல்கள், இணையச் சேவை வழங்கும் நிறுவனங்கள், உலகெங்கும் செயற்கைக்கோள் தொலைகாட்சி சேவை வழங்கும் நிறுவனங்கள் என்று பரந்து விரிந்து கிடக்கும் ரூபர்ட் முர்டோச்சின் ஊடக சாம்ராஜ்ஜியத்தின் எல்லைகள் நமது கற்பனைகளை விஞ்சிய ஒன்று. 1953ல் ஆஸ்திரேலியாவில் அவரது தந்தையான கெயித் முர்டோச்சின் ஊடக நிறுவனத்தின் பொறுப்பிற்கு வரும் ரூபர்ட் முர்டோச், அடுத்த சில ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் அசைக்கமுடியாத ஒரு மீடியா மன்னனாகிறார்.

பின்னர், மார்கரெட் தாட்சரின் முழுமையான ஆதரவோடு இங்கிலாந்தைச் சேர்ந்த ‘நியூஸ் ஆப் த வோர்ல்ட்’ பத்திரிகையின் பங்குகளை வாங்குவதன் மூலம் அப்பத்திரிகையைக் கைப்பற்றுகிறார். எண்பதுகளின் துவக்கத்தில், ‘நியூஸ் ஆப் த வோர்ல்ட்’ பத்திரிகையின் வழமையான வடிவத்தை உதறி விட்டு அதனை ஒரு டேப்லாய்ட் வகைப்பட்ட பத்திரிகையாக மாற்றுகிறார்.

செய்திப் பத்திரிகை என்பதன் கடமை செய்திகளைச் சொல்வது எனும் இலக்கணத்தை உடைத்து, செய்திகளினூடாக மசாலாத் தூவப்பட்ட மலினமான கிசுகிசுக்களை விற்பனை செய்ததே முர்டோச்சின் பிரம்மாண்ட வளர்ச்சியின் அடிநாதமாக இருந்தது. இது துவக்கம். காலம் செல்லச் செல்ல, வெறும் கிசுகிசுக்கள் மற்றும் வலதுசாரி அரசியலின் வெறிகொண்ட துவேசப் பிரச்சாரங்கள் மட்டுமே செய்திப் பத்திரிகையின் முதன்மைச் செய்திகளாயின. சினிமாத் துறையினர், அரசியல்வாதிகள் போன்ற மேட்டுக்குடியினரின் கள்ளக்காதல் விளையாட்டுக்கள் பற்றிய கிசுகிசுக்களைத் தேடி அவரது பத்திரிகையாளர்கள் அலையும் தேவை இருக்கவில்லை. திரைப்பட, தொலைக்காட்சித் தயாரிப்பு நிறுவனங்களையும் முர்டோச்சே நடத்தி வந்ததால், பிரபலங்கள் தேடி வந்தனர்.

முர்டோச் தொடங்கி வைத்த வழிமுறைகளைப் பிற போட்டி பத்திரிகைகளும் பின்பற்றத் துவங்கியதால், ஆபாசத்தை விற்பதில் அவர்களுக்குள்ளேயே கழுத்தறுப்புப் போட்டிகள் துவங்கின. ‘கதைகள்’ கிடைக்காத சந்தர்பங்களில் எதேச்சையாக நடந்து விடும் குற்றச் சம்பவங்களை இட்டுக் கட்டி மசாலாத் தடவி வெளியிடுவது, நடந்தேயிராத செய்திகளை உருவாக்குவது, பிரபலங்களின் படுக்கையறை விவகாரங்கள், கள்ள உறவுகள் ஆகியவற்றைத் தனியார் உளவு நிறுவனங்கள் மூலம் துப்பறிந்து வெளியிடுவது, அதி நவீன புகைப்படக் கருவிகள் மூலம் அவர்களது அந்தரங்கங்களைப் படம் பிடித்துப்போடுவது போன்ற கீழ்த்தரமான வழிமுறைகளைக் கையாண்டனர். இத்தகைய புகைப்பட நிருபர்கள் ‘பாப்பராஸி’ என்றழைக்கப்பட்டனர். பிரபலங்களின் அரை அம்மண, அம்மணப் படங்கள், கள்ளக் காதல்கள் ஆகியவற்றை படமெடுத்து பத்திரிகைகளுக்கு விற்று கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் தொழில், ஒரு மாபெரும் ‘சுயதொழிலாக’ உலகமெங்கும் பரவத்தொடங்கியது. பிரிட்டிஷ் இளவரசி டயானாவின் காதல் விவகாரத்தை படம் பிடிப்பதற்காக பாப்பராஸிகள் அவரைக் காரில் துரத்த, அவர்களிடமிருந்து தப்புவதற்காக விரைந்த டயானாவின் கார் கவிழ்ந்து டயானா இறந்ததும், உடனே பாப்பராஸிக் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகள் பற்றிய விவாதத்தில் பத்திரிகை உலகம் இறங்கியிதும் 90களின் செய்திகள்.

ரூபர்ட் முர்டோச்: ஊடகங்களால் உலகை வேட்டையாடும் கிழட்டு நரி!தரத்தில் காமக் கிளுகிளுப்புக்கு இணையானதும் அதே அளவுக்கு சந்தையில் விலை போகக் கூடியதுமான பண்டம் – அச்சத்தையும் வெறுப்பையும் தூண்டும் துவேசப் பிரச்சாரம். ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த மக்களிடையே சிறுபான்மையினர் மீதான வெறுப்புணர்வையும் அச்சத்தையும் விசிறி விட்டதில் முர்டோச்சின் ஊடகங்களுக்கு பெரும் பங்கு உண்டு.

முர்டோச்சின் ஊடக நிறுவங்கள் தாம் இயங்கிய நாடுகள் அனைத்திலும், அங்கிருந்த வலதுசாரி பாசிஸ்டு கட்சிகளையும் அதன் தலைவர்களையுமே உயர்த்திப் பிடித்தன. இசுலாமியர்கள், இசுலாமிய நாடுகளின் மீது வெறுப்புப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டதில் முர்டோச்சின் ஊடகங்கள் தலைமைப் பாத்திரம் ஆற்றின. இந்த அச்சமும் வெறுப்புணர்வும்தான் இன்று வரையில் ஈராக்கில் சிதறும் உடல்கள் மேற்குலக மக்களின் மனசாட்சியை உலுக்காமல் இருப்பதற்கான உளவியல் ரீதியிலான அடிப்படை ஒன்றைத் தோற்றுவித்துள்ளது.

இங்கே தலித்துகள், இசுலாமியர்கள், தமிழ் உணர்வாளர்கள், கம்யூனிஸ்டுகள் மீதான வெறுப்புணர்வை ‘தினமலர்’ திட்டமிட்டே எப்படி தோற்றுவிக்கிறதோ, அதேபோல் மேற்கில் இசுலாமிய வெறுப்பை விதைத்ததில் முர்டோச்சின் ஊடக நிறுவனங்கள் பெரும் பங்காற்றியுள்ளன.

இரண்டாயிரமாவது ஆண்டின் பிற்பகுதியில் இருந்தே தனது பத்திரிகைகள் மற்றும் தொலைகாட்சிகளில், ‘இதோ சதாம் அணு ஆயுதம் தயாரிக்க அவரது விஞ்ஞானிகளிடம் சொல்லி விட்டார்’, ‘இதோ ஈராக்கில் அணு குண்டு பரிசோதனை நடந்து விட்டது’ என்பது போன்ற பச்சை புளுகுகளை அவிழ்த்து விடத் துவங்கினார் முர்டோச். சதாம் உசேனால் இந்த பூமிக்கே ஆபத்து என்பது போலெல்லாம் விரிந்த அந்தக் கதைகள் ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த சாதாரண மக்களின் மனங்களில் அவரை சாத்தானின் அவதாரம் என்று பதிய வைத்தது. சதாம் அழிக்கப் படவேண்டியவர் என்றும், இந்தப் போரினால் நாகரீக உலகத்து மக்களின் நலவாழ்வு பாதுகாக்கப்படும் என்றும் அம்மக்கள் நம்பும் அளவுக்கு உளவியல் ரீதியில் பிரச்சாரம் செய்யப்பட்டது. இதன் மூலம் போருக்கு ஆதரவாக உலகெங்கிலும் ஒரு பொதுக்கருத்தை உண்டாக்குவதில் முர்டோச் வெற்றியடைந்தார்.

ஈராக்கின் மேலான யுத்தம் துவங்கியதும் ஜார்ஜ் புஷ்ஷுக்கும், டோனி பிளேருக்கும் தனது முழுமையான ஆதரவைத முர்டோச் வெளிப்படையாகத் தெரிவித்தார். அமெரிக்கா இதுகாறும் நடத்தியுள்ள போர்களைப் பற்றிய செய்திகளை சாகசகக் கதைகள் போல் விவரித்து, போர் என்பது மனிதர்கள் கொல்லப்படும் கொடூர நிகழ்வு என்பதாக இல்லாமல் ஒரு சாகச விளையாட்டு என்பதாகப் பொதுபுத்தியில் பதியச் செய்தார். சர்வதேச அளவிலான பிற முதலாளித்துவ பத்திரிகைகளும் இதே பாணியில்தான் இயங்கின என்றாலும், முர்டோச்சின் பத்திரிகைகளே இதில் முன்னணியில் நின்றன.

போரின் முடிவில் அணு ஆயுதங்கள் ஏதும் ஈராக்கில் கண்டிபிடிக்கப் படவில்லை. ஆனால், முர்டோச்சின் பத்திரிகைகள் உள்ளிட்டு அந்தக் கதைகளைப் பரப்பிய எந்த முதலாளித்துவ ஊடகமும், இத்தகையதொரு பொய்யான பொதுக்கருத்தை உருவாக்கியதற்காக தண்டிக்கப்பட வேண்டும் என்று முதலாளித்துவ அறிஞர்களோ மேற்குலக ஜனநாயகவாதிகளோ கருதவில்லை. போரில் கொல்லப்பட்ட  ஈராக்கியர்களின் எண்ணிக்கை சுமார் பத்து லட்சம். இன்று அந்த நாடே வாழ்க்கையிழந்து நிற்கிறது. எனினும் முர்டோச் வெளியிட்ட செய்திகளுக்கு என்ன ஆதாரம் என்றோ, அதன் விளைவுக்கு என்ன பதில் என்றோ யாரும் கேட்கவில்லை.

பல்வேறு நாடுகளின் ஆளும் வர்க்கத்தோடும் அதிகார வர்க்கத்தோடும் முர்டோச் கொண்டிருந்த உறவும், செல்வாக்கும், அவரது மீடியா சாம்ராஜ்ஜியத்தின் அபரிமிதமான வீச்சும் அவருக்கு வரம்பற்ற பலத்தையும் திமிரையும் அளித்திருந்தன. ஈராக் மட்டுமல்லாமல், சிரியா, லிபியா, பாலஸ்தீனம் என்று அமெரிக்காவுக்கு அடங்காத இசுலாமிய நாடுகள் மீதும் அதன் தலைவர்கள் மீதும் விஷத்தைக் கக்கி, உலகெங்கும் மக்கள் மத்தியில் இசுலாமிய விரோதத்தை ஊட்டி வளர்க்கும் முர்டோச்சின் பத்திரிகை நிறுவனத்தில் இரண்டாம் பெரிய பங்குதாரர் சவூதி இளவரசர் அல்லாவி பின் தலால். (மதமா – வர்க்கமா என்கிற முரண்பாடுகள் எழும் போது முதலாளித்துவவாதிகள் எப்போதும் சரியான நிலையையே எடுக்கிறார்கள் என்பதற்கும் இது ஒரு எடுத்துக்காட்டு).

தற்போது முர்டோச்சின் வழிமுறைகள் அம்பலமாகியிருப்பினும் இதெல்லாம் முதலாளித்துவ உலகத்திற்கு புதிய செய்தியில்லை. இன்றைக்கு முர்டோச்சைக் கரித்துக் கொட்டிக் கொண்டிருக்கும் பிற முதலாளித்துவ ஊடகங்கள் பின்பற்றுவதும் இதே வழிமுறைகளைத்தான். ஆயினும், தற்போது எழுந்திருக்கும் சலசலப்புகளால் 168 வருடங்களாக வெளியாகி வந்த ‘நியூஸ் ஆப் த வோர்ல்ட்’ பத்திரிகையை நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு முர்டோக் ஆளாகியுள்ளார். விசாரணைக்கு ஆட்படுத்தப்பட்டு கைகட்டி நிற்கிறார்.

எப்பேர்பட்ட கொம்பனாக இருந்தாலும் அந்தத் தவறுக்கு தண்டனை உண்டு என்பதைப் போன்றும், மேற்கு நாடுகளில் நிலவும் தனிமனித உரிமை போன்ற ஜனநாயக விழுமியங்கள் இன்னமும் செத்துப் போகாமல் இருப்பதன் ஒரு சமகால சாட்சிதான் முர்டோச் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பது என்பது போலவும் சர்வதேச ஊடகங்கள் எழுதுகின்றன. ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த மக்களும் அவ்வாறே நம்பவைக்கப் படுகிறார்கள். உப்புத் தின்றவன் தண்ணி குடிப்பான்; தப்பு செய்தவன் தண்டனை அனுபவிப்பான். படம் முடிந்தது. ரசிகர்கள் வீட்டுக்குக் கிளம்பலாம என்று முதலாளித்துவ ஊடகங்கள் இதற்கு ஒரு ‘சுபம்’ போட்டு முடிக்கப் பார்க்கின்றன.

ஆனால், இது அத்தனை சுலபத்தில் கடந்து போகும் ஒரு பிரச்சினையல்ல. முர்டோச்சின் பாணியும் வழிமுறைகளும் அவருக்கு மட்டுமே சொந்தமானதாக இல்லை என்பது ஒரு புறம் இருக்க, இன்றைக்கு ‘குற்றங்கள்’ என்று அவர்மேல் சுமத்துப்பட்டுள்ள செயல்கள் எதுவுமே அவர் புரிந்துள்ள உண்மையான குற்றங்களின் நிழலைக் கூட தொடவில்லை என்பதே உண்மை.

அரச குடும்பத்தையே ஒட்டுக்கேட்டது, ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த மக்களின் தனிமனித உரிமையில் கைவைத்தது, போன்ற சில்லரை அத்துமீறல்கள்தான் இன்று இங்கிலாந்திலும் பிற மேற்கத்திய நாடுகளிலும் அதிர்ச்சியையும் சத்தியாவேசத்தையும் தூண்டியுள்ளது. ஈராக் பற்றி வெளியிட்ட புளுகுச் செய்திகளுக்காக அவரைத் தண்டிக்க வேண்டும் என்று எவரும் கோராததற்குக் காரணம், அது ஏகாதிபத்தியங்களின் விருப்பம் மற்றும் நலன் சார்ந்தது. இந்த அடிப்படையில் இருந்துதான் மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த இலட்சக்கணக்கான மக்களுடைய உயிர்களை விட அரச குடும்பத்தினர் மற்றும் தனிநபர்களின் ‘ப்ரைவசி’ மற்றும் தனிநபர் உரிமைகளை மேன்மையானதாகச் சித்தரிக்கும் அவர்களின் விசாரணைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ரூபர்ட் முர்டோச்: ஊடகங்களால் உலகை வேட்டையாடும் கிழட்டு நரி!நியூஸ் கார்பொரேஷன் நிறுவனத்தின் தலைமையை இன்னமும் முர்டோச் குடும்பத்தினரே ஆக்கிரமித்துள்ளனர். மேற்கத்திய கார்ப்பரேட் நிர்வாக முறையின் பார்வையில் மிகவும் பின்தங்கியதான இந்தக் குடும்ப ஆதிக்கமும், முர்டோச்சை நோக்கி எழும் விமர்சனங்களுக்கு ஒரு கூடுதல் காரணமாக இருக்கிறது. கூக்குரல்கள் அனைத்தும் இந்தத் ‘தலையை’ மட்டுமே குறிவைக்கின்றன. நியூஸ் கார்பொரேஷன் எனும் மொத்த உடலையும் இயக்கி அதன் நாளங்களில் இரத்தமாய்ப் பாய்ந்து கொண்டிருக்கும் ஏகாதிபத்திய நலன் குறித்த விவாதங்களே எழவில்லை என்பதிலிருந்து நாம் சில உண்மைகளைப் புரிந்து கொள்ள முடியும்.

மீளாத போர் வெறியில் மூழ்கிக் கிடக்கும் ஏகாதிபத்தியங்களுக்கு ரூபர்ட் முர்டோச்களின் தேவை தீர்ந்து விடவில்லை. சதாம் உசேனும், பின்லேடனும் ஒழிந்து விட்டார்கள். ஆனால், நாளையே வேறு ஒரு மூன்றாம் உலக நாட்டின் மீது ஆக்கிரமிப்புப் போரைத் துவக்குவதற்கு முன் மக்களின் பொதுபுத்தியைக் கட்டமைக்க வேண்டியிருக்கும். இசுலாமியர்கள் மேல் கருத்துக்களத்தில் தாக்குதல் தொடுத்து அவர்களைத் தனிமைப்படுத்த வேண்டியிருக்கும். அதற்கு ரூபர்ட் முர்டோச் கட்டாயம் தேவைப்படுவார்.

அவர் தயாரித்து வழங்கிய பாசிச பிரச்சார ஆயுதத்தின் பணி இன்னமும் நிறைவுறவில்லை. இறுகும் பொருளாதார நெருக்கடிகளுக்கான தீர்வை ஏகாதிபத்தியங்கள் போர்களினூடேதான் தேடிச் செல்லும். அப்போது பொறுத்தமான கதைகள் விதைக்கப்பட வேண்டும்; வில்லன்கள் குறித்த அச்சமூட்டும் வர்ணனைகள் செய்யப்பட வேண்டும்; மக்களின் பொதுக்கருத்தை நெம்பி வளைக்க வேண்டும் – அதற்கு நியூஸ் கார்ப்பொரேஷன் போன்ற பிரச்சார ஆயுதங்கள் வேண்டும். எனவேதான், படுக்கையறையை எட்டிப்பார்த்த ரூபர்ட் முர்டோச்சின் அநாகரீகங்கள் பரபரப்பாகப் பேசப்படும் அளவுக்கு அவரின் கொலைப் பாதகங்கள் பேசப்படுகிறதில்லை.

ரூபர்ட் முர்டோச் ஊடகத் துறையில் துவக்கி வைத்துள்ள போக்குகள் மேற்குலகம் மட்டுமே சம்பந்தப்பட்ட ஒன்றல்ல. அதன் பாதிப்புகளும், பிரதி பிம்பங்களும் உலகெங்கும் உள்ள முதலாளித்துவ ஊடகங்களின் செயல்பாடுகளில் வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. இந்தியாவில் தனியார் தொலைகாட்சி சேனல்கள் அனுமதிக்கப்பட்டு, இன்றைய தேதியில் சுமார் 600 தொலைக்காட்சி சேனல்களுக்கான லைசென்சுகளை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை வழங்கியிருக்கிறது.

மேற்கத்திய நாடுகளைப் போல் செய்திகளுக்கு மசாலா சேர்ப்பது, பரபரப்புக் கூட்டும் ‘Breaking News’ மற்றும் ‘Exclusive News’ போன்ற கழிசடைக் கலாச்சாரங்கள் தொன்னூறுகளின் மத்தியிலிருந்து ஸ்டார் குழுமத்தால் இந்தியாவுக்கு அறிமுகம் செய்யப்பட்டன. புதிய ரக உயர் நடுத்தரவர்க்கத்தினரின் நொறுக்குத் தீனிகளுக்கு இந்த பரபரப்பு பாணி செய்திகள் சுவை கூட்டின.

செய்தியையும் அதன் கண்ணோட்டத்தையும் பகுத்தறிய முடியாத வண்ணம், ரூபர்ட் முர்டோச்சின் பாணியை நகலெடுத்து ‘டைம்ஸ் நௌ’, ‘என்.டி.டி.வி.’, ‘ஐ.பி.என்.’, ‘டி.வி.9’, ‘ஹெட்லைன்ஸ் டுடே’ என்று புற்றீசல் போல ஊடக கார்பரேட்டுகள் தோன்றின. இவர்களின் செய்திச் சந்தையின் இயக்கத்திற்கான அச்சாணி, மலிவான முறையில் உணர்ச்சியையும் பரபரப்பையும் தூண்டுவது மட்டுமே என்றான பின்னால், இதுகாறும் போலியாகவாவது தூக்கிப் பிடிக்கப்பட்டு வந்த நேர்மை, புனிதம் போன்ற பழைய விஷயங்கள் தேவையற்றதாகின.

லண்டனைச் சேர்ந்த மாணவியான மில்லி டோலரின் மரணத்தில் ‘நியூஸ் ஆப் த வோர்ல்ட்’ பின்பற்றிய அதே வழிமுறைகளைத்தான் தில்லியைச் சேர்ந்த ஆருஷி என்கிற பள்ளி மாணவியின் மரணத்திலும் இந்திய ஊடகங்கள் பின்பற்றின. ரூபர்ட் முர்டோச்சின் ஊடகங்கள் உலகளவில் இசுலாமியர்கள் மீதும் இசுலாமிய நாடுகள் மீதும் வெறுப்புப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விடுகின்றன என்றால், இந்திய முதலாளித்துவ ஊடகங்களோ இசுலாமியர்கள் மீதும் பாகிஸ்தான் மீதும் அவதூறுப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளன. ஒவ்வொரு முறை இந்தியாவில் குண்டுகள் வெடிக்கும் போதும், செய்திச் சேனல்கள் விசாரணையேதுமின்றி இசுலாமியர்களை நோக்கியும் பாகிஸ்தானை நோக்கியும் விரலைச் சுட்டுகின்றன.

ரூபர்ட் முர்டோச்: ஊடகங்களால் உலகை வேட்டையாடும் கிழட்டு நரி!முர்டோச்சின் ஊடகங்கள் சொன்ன பேரழிவு ஆயுதங்கள் பற்றிய புளுகுகள் அம்பலமானதைப் போன்றே இந்திய ஊடகங்கள் இசுலாமியர்களைக் குற்றவாளிகளாக்கிய எத்தனையோ குண்டு வெடிப்புகளின் உண்மையான காரணம் இந்துத்துவ கும்பல்தான் என்கிற உண்மை அம்பலமாகியிருக்கிறது. தனது பொய்கள் அம்பலமான போது ரூபர்ட் முர்டோச் கடைபிடித்த அதே விதமான கள்ள மௌனத்தைத்தான் இந்திய ஊடகங்களும் கடைபிடிக்கின்றன.

மேற்கில் அன்றாட வாழ்வின் குரல்வளை மேல் அமர்ந்து அழுத்திக் கொண்டிருக்கும் பொருளாதார யதார்த்தத்தை பயங்கரவாத பீதியூட்டி மடைமாற்ற முடிகிறது. இங்கே தமது வாழ்வாதாரங்களைக் காப்பாற்றிக் கொள்ள போராட்டத்தில் இறங்கியுள்ள விவசாயிகள், ஆதிவாசி மக்களின் போராட்டங்களைப் பின்தள்ளுவதற்கு பயங்கரவாதம்  மட்டுமல்ல காந்தியவாதமும் ஊடகங்களுக்குப் பயன்படுகிறது.

நாட்டின் அரசியல் நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிப்பதிலும், திசை திருப்புவதிலும், அரசியல் தலைவர்களை உருவாக்குவதிலும் அழிப்பதிலும், ஊடகங்களின் பாத்திரம் முன் எப்போதைக் காட்டிலும் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. உணவு, உடை, பழக்க வழக்கங்கள், விருப்பு வெறுப்புகள், ரசனை, சிந்தனை முறை உள்ளிட்ட அனைத்தையும், அதாவது நமது ஆளுமையை அடக்கி ஆள்வதில், அல்லது வளைந்து உருவாக்குவதில் ஊடக முதலாளிகளின் பாத்திரம் முன் எப்போதைக் காட்டிலும் பன்மடங்கு அதிகரித்து விட்டது.

ரூபர்ட் முர்டோச் எனும் கிழவன் நமது தோளில் அமர்ந்து உத்தரவிடுகிறான். சிரிக்கவும், வெறுக்கவும், அழவும் சொல்லிக் கொடுக்கிறான். முன்னால் சென்று வழி காட்டுகிறான். பின்னால் நின்று கண்காணிக்கிறான்.

அவனைக் கூண்டில் ஏற்றிவிட்டதாகவும் தண்டிக்கப்போவதாகவும் சொல்லிக் கொள்கிறார்கள் பத்திரிகை சுதந்திரத்தின் காவலர்கள்.

____________________________________________________________________

– புதிய கலாச்சாரம், நவம்பர் – 2011

____________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

மோடியின் குஜராத்: காவி கிரிமினலின் தலைமையில் காக்கி கிரிமினல்கள்!

அடுத்த பிரதமராக வருவதற்குத் தகுதியானவர் என்று அம்பானி போன்ற யோக்கியர்களால் சிபாரிசு செய்யப்பட்டவரும், ஊழலற்ற ஆட்சி நடத்துகிறாரென அன்னா ஹசாரேவால் புகழப்பட்டவரும், திறமையான நிர்வாகி என்று சோ ராமஸ்வாமி அய்யருடைய பாராட்டைப் பெற்றவரும், அனைத்துக்கும் மேலாக ஜெயலலிதாவின் அன்புச் சகோதரருமான நரேந்திர மோடியை, “கிரிமினல்’ என்று தொலைக்காட்சி பேட்டிகளில் குற்றம் சாட்டி வருகிறார், மோடியினால் கைது செய்யப்பட்ட குஜராத் போலீசு அதிகாரி சஞ்சீவ் பட்.

மதநல்லிணக்கவாதி போலவும், மக்களின் நல்வாழ்வு தவிர, வேறு சிந்தனையே இல்லாத மனிதாபிமானி போலவும், வாடிய பயிரைக் கண்டு வாடும் வள்ளலாராகவும் தன்னைப் பற்றிய ஒரு சித்திரத்தை உருவாக்கி, தனது இனப்படுகொலைக் குற்றத்தை மறைத்து விடலாம் என்று கனவு கண்டு வரும் மோடிக்கு சஞ்சீவ் பட்டின் இந்தக்கூற்று ஒரு செருப்படி. சொல்லப்போனால், சஞ்சீவ் பட்டைச் சிறை வைத்ததன் விளைவாக மோடியின் குற்றங்கள்தான் புதிய வேகத்துடன் அம்பலமாகத் தொடங்கியிருக்கின்றன.

மோடியின் குஜராத் : காவி கிரிமினலின் தலைமையில் காக்கி கிரிமினல்கள் !ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட், மோடியின் குற்றத்தை நிரூபிக்க முயன்ற ஒரே காரணத்துக்காக, குஜராத் அரசினால் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டு, பின்னர் பொய்வழக்கில் கைது செய்யப்பட்டுச் சிறையிலும் வைக்கப்பட்டவர். 2002 இனப்படுகொலையின்போது அவர் அகமதாபாத் நகரின் உளவுத்துறை இணை ஆணையர். குஜராத் இனப்படுகொலை தொடங்கிய நாளான பிப்.27, 2002 அன்று மோடி நடத்திய உயர்மட்ட அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டவர். “”இந்துக்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்துவதைத் தடுக்காதீர்கள்” என்று மோடி அந்தக் கூட்டத்தில் வெளிப்படையாகவே உத்தரவிட்டதை, உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் பட் சாட்சியமளித்தார். அந்தச் சிறப்புப் புலனாய்வுக் குழுவும் மோடிக்கு ஆதரவாகச் செயல்படவே, தனது சாட்சியத்தையே உச்ச  நீதிமன்றத்தில் பிரமாண வாக்குமூலமாக அவர்  தாக்கல் செய்தார்.

தற்போது உச்ச நீதிமன்றத்தால் அமிகஸ் கியூரேவாக (நீதிமன்றத்தின் நண்பராக) நியமிக்கப்பட்ட ராஜு ராமச்சந்திரன், மோடியைக் குற்றத்திலிருந்து விடுவிக்கும் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கையை நிராகரித்திருக்கிறார். “”சஞ்சீவ் பட்டின் சாட்சியத்தை நிராகரிக்க முடியாது. அவரையும் பிற மூத்த போலீசு அதிகாரிகளையும் விசாரித்த பிறகுதான் மோடி குற்றவாளியா, இல்லையா என்ற முடிவுக்கு வர முடியும். முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் நடந்த நாட்களில், அகமதாபாத் போலீசு கட்டுப்பாட்டு அறையில் இரண்டு அமைச்சர்கள் இருந்திருக்கிறார்கள் என்ற உண்மை சஞ்சீவ் பட்டின் குற்றச்சாட்டுக்கு வலுச் சேர்க்கிறது”  என்று தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

“”பிப். 27 கூட்டத்தில் சஞ்சீவ் பட் கலந்து கொள்ளவே இல்லை” என்பது மோடியின் வாதம். இக்கூட்டத்திற்கான வருகைப்பதிவேடு அல்லது  கூட்டக் குறிப்புகளைக் காட்டித் தனது கூற்றை மோடி நிரூபிக்க வேண்டும். ஆனால், அத்தகைய ஆவணங்கள் எதுவும் இல்லை.  இனப்படுகொலைக் காலத்தின் பல ஆவணங்களைப் போலவே இவையும் மோடி அரசால் அழிக்கப்பட்டிருக்க வேண்டும். எனினும், சஞ்சீவ் பட்டின் கார் ஓட்டுனர் பந்த், மேற்சொன்ன கூட்டத்துக்கு சஞ்சீவ் பட்டை அழைத்துச் சென்றதாக ஏற்கெனவே வாக்குமூலம் அளித்திருந்ததால், அந்த ஓட்டுனரின் மீது தனது கவனத்தைத் திருப்பியது மோடி அரசு.

“”சஞ்சீவ் பட் தன்னை மிரட்டி மோடிக்கு எதிராகப் பொய் வாக்குமூலம் வாங்கிவிட்டதாக” அந்த ஓட்டுநரிடம் புகார் எழுதி வாங்கி, அந்தப் புகாரின் அடிப்படையில் சஞ்சீவ் பட்டைச் சிறை வைத்தார், மோடி. இப்படியொரு பொய்ப்புகாரைக் கொடுப்பதற்கு அந்த ஓட்டுனரைத் தூண்டியதாக குஜராத் காங்கிரசு தலைவர் அர்ஜுன் மோத்வாடியா, காங்கிரசின் சட்டத்துறைத் துணைத்தலைவர் விஜய் கினாரா ஆகியோர் மீதும் சதிக்குற்றத்தின் கீழ் வழக்கு தொடுத்திருக்கிறார்.

சஞ்சீவ் பட்டின் மாமியார் வீட்டில் மர்மத் திருடர்கள் புகுந்து, பணத்தையோ நகையையோ திருடாமல், ஆவணங்களை மட்டும் அள்ளிச் சென்றிருக்கின்றனர். இதுவரை திருடர்கள் பிடிக்கப்படவில்லை. பட் சிறையில் இருக்கும்போது அவருடைய வீடு சோதனையிடப்பட்டது. அவருடைய லாக்கரை உடைக்கவும் மோடி அரசு முயன்றிருக்கிறது. சஞ்சீவ் பட் பிணையில் வந்த சில நாட்களிலேயே, அவருடைய உறவினர் சிரெனிக்பாய் ஷா என்பவரை மர்ம நபர்கள் கடத்திச் சென்று தாக்கியிருக்கின்றனர். மோடிக்கு எதிரான வாக்குமூலத்தில் கார் ஓட்டுனர் பந்த் கையெழுத்திட்டபோது, உடனிருந்த சாட்சி ஷா என்பது குறிப்பிடத்தக்கது. தனக்கெதிரான சாட்சி குழந்தையானாலும், நாய்க்குட்டியானாலும் அனைத்தையும் கொன்றொழிக்கும் வக்கிரத்தில், தெலுங்கு சினிமா வில்லன்களையும்  விஞ்சிவிட்டார் நரேந்திர மோடி.

“”சஞ்சீவ் பட் கைது செய்யப்பட்டிருப்பது, 2002 முஸ்லிம் இனப்படுகொலை நடவடிக்கையின் கொள்கை ரீதியான தொடர்ச்சி. 2002 இனப்படுகொலை குறித்த திரைமறைவு உண்மைகளை வெளியிட்ட முதல் நேரடி சாட்சி ஹரேன் பாண்டியா. மோடியின் அன்றைய வருவாய்த்துறை இணை அமைச்சரான இவர், 2003இல் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இப்போது மோடிக்கு எதிரான இரண்டாவது நேரடி சாட்சி சஞ்சீவ் பட்” என்று கூறியிருக்கிறார் ஓய்வு பெற்ற குஜராத் டி.ஜி.பி. சிறீகுமார்.

மோடியின் குஜராத் : காவி கிரிமினலின் தலைமையில் காக்கி கிரிமினல்கள் !2002 இனப்படுகொலையின்போது குஜராத்தில் அமைச்சராக இருந்த ஹரேன் பாண்டியாவுக்கு மோடியுடன் முரண்பாடு ஏற்பட்டதன் காரணமாக, குஜராத் படுகொலை குறித்து விசாரணை நடத்திய முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சாவந்த் தலைமையிலான சிட்டிசன்ஸ் டிரிபியூனலின் முன் சாட்சியமளித்தார். பிப். 27 உயர் அதிகாரிகள் கூட்டத்தில் மோடி பேசியது என்ன என்பதை வாக்குமூலமாக தெரிவித்தார். இந்த தகவல் மோடிக்கும் கசிந்து விட்டது. இதனைத் தொடர்ந்து மார்ச் 23, 2003 அன்று பாண்டியா படுகொலை செய்யப்பட்டார். பழி முஸ்லீம் தீவிரவாதிகள் மீது போடப்பட்டது. அந்தக்கொலை வழக்கில் அன்று மோடி அரசால் கைது செய்யப்பட்ட அஸ்கார் அலி உள்ளிட்ட 11 பேரும் இப்போது விடுதலை செய்யப்பட்டுவிட்டனர்.

2004இல் சபர்மதி மத்திய சிறையின் கண்காணிப்பாளராக இருந்த சஞ்சீவ் பட்டிடம் அதே சிறையில் வைக்கப்பட்டிருந்த அஸ்கர் அலியும் மற்ற கைதிகளும் பேசியிருக்கின்றனர்.  பாண்டியாவைத் தாங்கள் கொல்லவில்லை என்றும் சோரபுதீன் கும்பலைச் சேர்ந்த துளசிராம் பிரஜாபதி என்பவன்தான் சுட்டுக் கொன்றதாகவும் கூறியிக்கின்றனர். உடனே இந்தத் தகவலை அன்றைய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தெரிவித்திருக்கிறார் சஞ்சீவ் பட். பதற்றமடைந்த ஷா இதுபற்றி யாரிடமும் பேசவேண்டாம் என்று பட்டிடம் எச்சரித்திருக்கிறார். பாண்டியா கொலையில் சோரபுதீன் கும்பல் மட்டுமின்றி உயர் போலீசு அதிகாரிகளுக்கும் அரசுத் தலைமையில் உள்ள சிலருக்கும் தொடர்பு இருப்பது தெரியவரவே, அவற்றை அதிகாரபூர்வமான கடிதமாக எழுதி உள்துறை அமைச்சருக்கே அனுப்பியிருக்கிறார் பட். உடனே அங்கிருந்து அவர் தூக்கியடிக்கப்பட்டார்.

பின்னர் 2005இல் சோரபுதீன் ஷேக்கும் அவர் மனைவி கவுசர் பீவியும் போலி மோதலில் குஜராத் போலீசின் பயங்கரவாத எதிர்ப்புப் படையினரால் கொலை செய்யப்பட்டனர். “”இந்தப் போலி மோதல் கொலையை” கண்ணால் கண்ட ஒரே சாட்சியான துளசிராம் பிரஜாபதியும் 2006இல் இன்னொரு போலி மோதலில் கொல்லப்பட்டான்.

பிரஜாபதியைக் கொல்வதற்காகவே, டி.ஐ.ஜி. வன்சாராவை அகமதாபாத்திலிருந்து எல்லைப்புற மாவட்டத்துக்கு  மாற்றியிருக்கிறார் மோடி.  “”தன்னை குஜராத் போலீசு போலி மோதலில் கொன்றுவிடும் என்று அஞ்சுவதாக”  கொல்லப்படுவதற்கு 14 நாட்கள் முன்னதாக உதய்பூர் மாவட்ட நீதிபதிக்கும், தேசிய மனித உரிமை ஆணையத்துக்கும் பிரஜாபதியே கடிதம் எழுதியிருக்கிறான்.

மோடியின் குஜராத் : காவி கிரிமினலின் தலைமையில் காக்கி கிரிமினல்கள் !தற்போது சோரபுதீன் கொலை வழக்கில் குஜராத் ஐ.பி.எஸ். அதிகாரிகள் வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன் ஆகியோருடன் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சோரபுதீன் கொலைக்கும் அமைச்சர் பாண்டியா கொலைக்கும் தொடர்பு இருப்பதாக சோரபுதீனின் கும்பலைச் சேர்ந்த ஆசம்கான், சென்ற ஆண்டு சி.பி.ஐ. இடம் வாக்குமூலம் தந்திருக்கிறான். இந்தக் கொலைகளின் பின்னணி குறித்த ஆதாரபூர்வமான ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாக சஞ்சீவ் பட் குஜராத் உயர் நீதிமன்றத்தில் சென்ற மாதம் மனு தாக்கல் செய்தார். அடுத்த மூன்றே நாட்களில் சஞ்சீவ் பட் கைது செய்யப்பட்டார்.

2002 இனப்படுகொலையின் போது கண்டதுண்டமாக வெட்டிக் கொல்லப்பட்ட காங்கிரசு கட்சியின் முன்னாள் எம்.பி. இஷான் ஜாப்ரி கொலையிலும் மோடிக்குத் தொடர்பிருப்பதாக பட் குற்றம் சாட்டியிருக்கிறார். ஜாப்ரியின் குடியிருப்புப் பகுதியான குல்பர்க் சொசைட்டி, கொலைக் கும்பலால் சுற்றி வளைக்கப்பட்டபோது, அது பற்றி நேரடியாக மோடிக்குத் தகவல் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் சஞ்சீவ் பட் கூறியிருக்கிறார்.

மோடியின் கிரிமினல் குற்றங்களை மட்டுமின்றி, அரசு எந்திரத்தில் ஊடுருவியிருக்கும் பார்ப்பன பாசிஸ்டுகள் இனப்படுகொலைக் குற்றவாளிகளைத் தப்பவைப்பதற்குச் செய்யும் சதிகளையும் அம்பலப்படுத்தியிருக்கிறார், சஞ்சீவ் பட்.

குஜராத் போலீசின் விசாரணை மாபெரும் பித்தலாட்டம் என்று அம்பலமானதைத் தொடர்ந்து, முன்னாள் சி.பி.ஐ. இயக்குநர் ராகவன் தலைமையில் ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து மிக முக்கியமான  குஜராத்  வழக்குகளை விசாரிக்கக் கூறியது, உச்ச நீதிமன்றம். அந்தச் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கை கொலைக் குற்றவாளிகளிடம் கள்ளத்தனமாக தரப்பட்டு விட்டது என்று சஞ்சீவ் பட் குற்றம் சாட்டியபோது, ராகவன் அதை மறுத்தார். ஆனால், குஜராத் அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் துஷார் மேத்தாவின் மின்அஞ்சல் முகவரியிலிருந்து சிறப்புப் புலனாய்வுக் குழுவின் வழக்கு விசாரணை குறித்த விவரங்கள் குல்பர்க் சொசைட்டி வழக்கின் கொலையாளிகளுக்கும், சென்னையில் உள்ள ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் எஸ்.குருமூர்த்திக்கும் அனுப்பப்பட்டிருக்கின்றன. 17.10.2010 தேதியிட்டு இந்து என்.ராமுக்கு குருமூர்த்தி அனுப்பியுள்ள மின் அஞ்சலின்படி, சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவர் ராகவன் உச்ச நீதிமன்றத்திற்குக் கொடுத்திருக்கும் “இரகசிய அறிக்கை’யின் நகலை குருமூர்த்திக்கும் அனுப்பி வைத்திருக்கிறார் என்று தெரிகிறது. மோடியைக் குற்றமற்றவர் என்று கூறும் ராகவனின் அறிக்கை குறித்த தனது பாராட்டையும் மேற்கூறிய மின் அஞ்சலில் ராமுக்கு தெரிவித்திருக்கிறார், குருமூர்த்தி. குஜராத் வழக்குகள் தொடர்பாக துக்ளக் சோ, இந்து ராம், குருமூர்த்தி ஆகியோரிடையே ஆலோசனை நடந்துள்ளதாகவும் அந்த மின் அஞ்சலில் குருமூர்த்தி கூறுகிறார். உச்ச நீதிமன்றத்தில் இந்த மின் அஞ்சல்களின் பிரதிகளை ஆவணங்களாக முன்வைத்திருக்கிறார், சஞ்சீவ் பட். (இந்துஸ்தான் டைம்ஸ், 23.10.2011)

கூடுதல் அட்வகேட் ஜெனரலாக இருந்து கொண்டு, குற்றவாளிகளைத் தப்ப வைப்பதற்கு கிரிமினல் வேலை செய்திருக்கும் யோக்கிய சிகாமணியான துஷார் மேத்தா, தன்னுடைய மின் அஞ்சல்களைச் சட்டவிரோதமான முறையில் திருடிவிட்டதாக சஞ்சீவ் பட்டின் மீது அகமதாபாத் சைபர் கிரைமில் வழக்கு பதிவு செய்திருக்கிறார் (தி இந்து, 24.10.2011). மின் அஞ்சல் குறித்து கேள்வி எழுப்பிய இந்துஸ்தான் டைம்ஸ் நிருபரிடம் “நினைவில்லை’ என்று பதிலளித்திருக்கிறார், என்.ராம். “”உனக்குப் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை” என்று பதிலளித்திருக்கிறார், குருமூர்த்தி.

சஞ்சீவ் பட்டைத் தொடர்ந்து மோடி அரசால் பழிவாங்கப்பட்டிருக்கும் இன்னொரு ஐ.பி.எஸ். அதிகாரி ராகுல் சர்மா. 2002 இனப்படுகொலைக்குப் பின்னர் அகமதாபாத் நகரின் கட்டுப்பாட்டு அறையின் இணை ஆணையராக நியமிக்கப்பட்டவர் ராகுல் சர்மா. தனக்கு ஒதுக்கப்பட்ட புலனாய்வுப் பணியின் அங்கமாகப் படுகொலை உச்சத்தில் இருந்த பிப்ரவரி 29 முதல் மார்ச் 3ஆம் தேதி வரையிலான நாட்களில் அகமதாபாத் நகரின் கைபேசி உரையாடல் விவரங்கள் அனைத்தையும் தனியார் செல்பேசி நிறுவனங்களிடமிருந்து திரட்டி, கமிசனர் பி.சி.பாண்டேயிடம் அந்தக் குறுந்தகடை அவர் ஒப்படைத்திருந்தார். அந்தக் குறுந்தகட்டின் நகல்களை நானாவதி கமிசன், பானர்ஜி கமிசன், சிறப்புப் புலனாய்வுக் குழு ஆகிய அனைவருக்கும் ராகுல் சர்மா கொடுத்து விட்டார். இதன் விளைவாக, அமைச்சர் மாயா கோத்னானி, விசுவ இந்து பரிசத் செயலர் ஜெய்தீப் படேல் ஆகியோர் கொலை வழக்கில் சிக்க நேர்ந்தது.

மோடியின் குஜராத் : காவி கிரிமினலின் தலைமையில் காக்கி கிரிமினல்கள் !இனப்படுகொலை நடந்த பிப். 28ஆம் தேதியன்று மோடி, ஜெய்தீப் படேலுடன் 5 முறையும், போலீசு கமிசனர் பாண்டேயுடன் 15 முறையும் பேசியிருக்கிறார். காலை 11 மணி முதல் நகரம் எரியத் தொடங்கிவிட்ட போதிலும், கமிசனர் மாலை 7 மணி வரை அலுவலகத்தை விட்டு வெளியே இறங்கவில்லை” என்று தனது வாக்குமூலத்தில் கூறியிருக்கிறார் கொலை செய்யப்பட்ட அமைச்சர் பாண்டியா. இந்தத் தொலைபேசி விவரங்களை விசாரணைக் கமிசன்களுக்குக் கொடுத்த ராகுல் சர்மாவின் மீது “அரசாங்க இரகசியத்தை’ அம்பலமாக்கியதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது , மோடி அரசு.

இனப்படுகொலையின் மையமாக இருந்த அகமதாபாத் நகரின் அன்றைய கமிசனர் பி.சி.பாண்டே, பின்னர் குஜராத்தின் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றார். மோடியின் கையாளான பாண்டே, சோரபுதீன் போலி மோதல் கொலை வழக்கின் விசாரணையில் தலையிட்டது மட்டுமின்றி, துளசிராம் பிரஜாபதியைக் கொல்வதற்கும் சதித்திட்டம் தீட்டிக் கொடுத்தார் என்று எழுத்துபூர்வமாகவே குற்றம் சாட்டியிருக்கிறார் டி.ஐ.ஜி. ரஜனீஷ் ராய். சோரபுதீன் கொலை வழக்கை விசாரித்து, வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன் ஆகிய ஐ.பி.எஸ். அதிகாரிகளையே கொலை வழக்கில் கைது செய்தவரான ரஜனீஷ் ராயை, பதவி இறக்கம் செய்ய முனைந்திருக்கிறது, மோடி அரசு.

சட்டப்படியும் மனச்சான்றின்படியும் நடக்க முயன்ற எந்தவொரு அதிகாரியையும் மோடி விட்டுவைக்கவில்லை. 2002 இனப்படுகொலையின் போது இந்து மதவெறிக் காலிகளைக் கைது செய்து இனப்படுகொலை நடக்காமல் தடுத்த விவேக் ஸ்ரீவத்ஸவா, ஹிமான்ஷு பட், எம்.டி. ஆன்டனி, பி.சி.தாகூர், குல்தீர் சர்மா போன்ற பல ஐ.பி.எஸ். அதிகாரிகள் வேட்டையாடப்பட்டிருக்கின்றனர். மோடியையும் தொகாடியாவையும் கொலை செய்ய முயன்ற பயங்கரவாதி என்று முத்திரை குத்தி போலீசால் கொல்லப்பட்ட  இஷ்ரத் ஜஹான் என்ற பெண்ணின் போலி மோதல் கொலை வழக்கை விசாரித்து வரும் ஐ.பி.எஸ். அதிகாரி சதீஷ் சந்திர வர்மா,  “”கொலை செய்யப்பட்ட அந்த அப்பாவிப் பெண்ணைப் பயங்கரவாதி என்று சித்தரித்து வழக்கை மூடுவதற்குத் தனது உயரதிகாரிகள்  முயற்சிப்பதாக” குஜராத் உயர் நீதிமன்றத்தில் பிரமாண வாக்குமூலமே தாக்கல் செய்திருக்கிறார்.

மோடியின் குஜராத் : காவி கிரிமினலின் தலைமையில் காக்கி கிரிமினல்கள் !

மேற்கூறிய விவரங்கள் அனைத்தும் ஆதாரபூர்வமானவை. இதில் பட்டியலிடப்படாத இன்னும் பல அதிகாரிகள் மோடி அரசால் வேட்டையாடப் பட்டிருக்கின்றனர். மோடி ஒரு இனப்படுகொலைக் குற்றவாளி என்பதைப் புரிந்து கொள்வதற்கு மேற்சொன்ன விவரங்கள் நமக்குத் தேவையில்லை.  அந்தக் குற்றவாளியை சட்டப்படி தண்டிக்க முயலும் நேர்மையான அதிகாரிகளுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் என்ன நேர்ந்து கொண்டிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதற்கு நமக்கு இந்த விவரங்கள் தேவை.

ஜெயலலிதாவிடம் எம்.எல்.ஏ. நாற்காலிகளை இரந்து பெற்று, வெட்கமே இல்லாமல் மோடியின் பக்கத்து நாற்காலியில் இளித்துக் கொண்டு அமரும் வலது, இடது போலி கம்யூனிஸ்டுகளைப் போன்ற பதர்களுக்கு மத்தியில், தனது உயிரையும் பணயம் வைத்து நீதிக்காகப் போராடும் சில போலீசு அதிகாரிகளும் இருக்கிறார்கள் என்ற உண்மையைத் தெரிந்து கொள்ள இவ்விவரங்கள் நமக்குத் தேவை.

சட்டத்தின் ஆட்சி, நேர்மை, நடுநிலை என்று ஊர்நாயம் பேசும் சோ, குருமூர்த்தி போன்ற பார்ப்பன பாசிஸ்டுகள், எல்லா விதமான கிரிமினல் வேலைகளிலும் ஈடுபடத் தயங்காதவர்கள் என்பதைப் புரிந்து கொள்வதற்கும் இவ்விவரங்கள் தேவை. அரசு அதிகாரத்தை பார்ப்பன பாசிஸ்டுகள் கைப்பற்றினால், மேலிருந்து கீழ் வரை அதனை எப்படி கிரிமினல் மயமாக்குவார்கள் என்பதை விளங்கிக் கொள்வதற்கும் இவ்விவரங்கள் நமக்குத் தேவை.

இவ்வளவு நயவஞ்சகனான மோடி என்ற கொலைகாரனை அன்புச் சகோதரராகப் போற்றும் ஜெயலலிதாவும், இந்த மோசடிப் பேர்வழியின் நிர்வாகத் திறமையைக் கொண்டாடும் ஊடகங்களும், பிரதமராக்க விரும்பும் ஆளும் வர்க்கமும்  எப்பேர்ப்பட்ட கிரிமினல்கள் என்பதைப் புரிந்து கொள்வதற்கும் கூட இந்த விவரங்களெல்லாம் நமக்குத் தேவைதானே!

________________________________________________

புதிய ஜனநாயகம், நவம்பர் – 2011

_________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

லிபிய ஆக்கிரமிப்பு: மறுகாலனியாதிக்கத்தின் புதிய சோதனைச் சாலை!

லிபியாவில் நடந்துள்ள ஆட்சிக்கவிழ்ப்பானது,  ஆப்பிரிக்க கண்டத்தில் ஏகாதிபத்தியவாதிகள் புதிய உத்தியுடன் தமது காலனியாதிக்க ஆக்கிரமிப்பைத் தொடர்வதை நிரூபித்துக் காட்டுகிறது. 2001இல் ஆப்கானில் நடந்த ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் போருக்கும்  2011இல் லிபியாவில் நடந்துள்ள ஆக்கிரமிப்புப் போருக்கும் உத்திகளிலும் வடிங்களிலும் பெருத்த வேறுபாடு உள்ளது.

பயங்கரவாதத்துக்கு எதிரான போர்  என்ற பெயரில் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்களால் ஆப்கான் சூறையாடப்பட்டது. அதற்கு முன்பு, பயங்கரவாதத்துக்கு எதிரான போர் மற்றும் பேரழிவுக்கான ஆயுதங்களை அழிப்பது  என்ற பெயரில் ஈராக் சூறையாடப்பட்டது. ஆனால் இத்தகைய குற்றச்சாட்டுகள் எதுவுமின்றி, “மனித உரிமைகளைக் காப்பது” என்ற பெயரில் ஆப்பிரிக்க கண்டத்தில் முதன்முறையாக லிபியா சூறையாடப்பட்டுள்ளது. அன்று, இராக் மீதான ஆக்கிரமிப்புப் போரை எதிர்த்து உலகெங்கிலும், ஏன் அமெரிக்காவிலேயே கண்டனங்களும் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் நடந்தன. ஆனால், லிபியா மீதான போர்த் தாக்குதலுக்கு எதிராக அவ்வாறு பரவலாக ஆர்ப்பாட்டங்கள் தொடரவில்லை. எதிர்ப்புகளை நீர்த்துப்போக வைக்கும் உத்தியுடன் அமெரிக்கா இந்த ஆக்கிரமிப்புப் போரை நடத்தியுள்ளது.

இராக், ஆப்கான் போலின்றி, அமெரிக்க வல்லரசின் தலைமையிலான ஏகாதிபத்திய நேடோ கூட்டணி நாடுகள் லிபியாவிலேயே விசவாசக் கூலிப் படையை உருவாக்கிக் கொண்டு ஆக்கிரமிப்புப் போரைத் தொடுத்தன. ஆளும் வர்க்க எதிர்த்தரப்பைப் பயன்படுத்திக் கொண்டு, அதிபர் கடாபிக்கு எதிரான அதிகாரப் போட்டியை மாபெரும் சர்வாதிகார எதிர்ப்பு  ஜனநாயகப் போராட்டமாகச் சித்தரித்தன. கடாபியின் ஆட்சியைத் தூக்கியெறிந்துவிட்டு லிபியாவின் எண்ணெய் வளத்தைக் கொள்ளயிடவும் மேலாதிக்கத்தை நிலைநாட்டவும் ‘கடாபியின் சர்வாதிகாரம்  மனித உரிமை மீறல்’ என்று ஏகாதிபத்தியங்கள் பெருங்கூச்சல் போட்டன.

லிபியாவில் எண்ணெய்வளம் பொதுச் சொத்தாக  நாட்டுடமையாக இருந்தது.  கடாபி ஒரு சர்வாதிகாரியாக இருந்தபோதிலும், ஏகாதிபத்தியங்களுடன் கள்ள உறவு கொண்டிருந்தபோதிலும் இதர ஆப்பிரிக்க  மேற்காசிய நாடுகளைப் போல எண்ணெய் வளத்தைத் தனியார்மயமாக்கவில்லை.  பல்வேறு மக்கள்நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வந்த சேமநல அரசாக கடாபியின் ஆட்சி நீடிப்பதை ஒழித்து, தனியார்மய கார்ப்பரேட்மய ஆட்சியை நிறுவ ஏகாதிபத்தியங்கள் விழைவதுதான், லிபியாவில் ‘மனித உரிமை மீறலுக்கு எதிரான போராக’ சித்தரிக்கப்பட்டது.

லிபியாவில் அரச படைகளுக்கும் அதை எதிர்த்துப் போராடும் கலகப் படைகளுக்கும் இடையே நடக்கும் போர் என்பது உள்நாட்டுப் போர்தானே தவிர, அது மனித உரிமை மீறல் விவகாரமோ, மனித இனப் படுகொலையோ அல்ல என்று ஆப்பிரிக்க ஒன்றியம் ( ஏ.யூ.) அமெரிக்காவின் வாதத்தையும் போர்த்தாக்குதலையும் எதிர்த்து பலமுறை கண்டனம் தெரிவித்தது. உள்நாட்டுப் போரின் வன்முறையை இனப்படுகொலையாகச் சித்தரித்து அமெரிக்காவும் நேடோ கூட்டணிப் படைகளும் தாக்குதல் நடத்துவதென்பது, நாடுகளின் இறையாண்மைக்கு எதிரானது என்று அது குற்றம் சாட்டியது. ஆப்பிரிக்க ஒன்றியத்தை நடுவராகக் கொண்டு லிபியாவின் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்த முன்வருமாறும், சமாதான வழியில் பிரச்சினையைத் தீர்க்குமாறும் ஐ.நா.விடம் கோரியது. கடாபியும் ஆப்பிரிக்க ஒன்றியம் முன்வைத்த திட்டத்துக்கு இசைந்தார். ஆனால், லிபியாவிலுள்ள அமெரிக்க விசுவாசக் கூலிப்படைகளும் அமெரிக்காவும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களும் இதனை ஏற்க மறுத்து தாக்குதலை நடத்தின.

லிபியாவில் உள்நாட்டுப் போர் மூர்க்கமாக நடந்து வந்த நிலையில், அமெரிக்கா மற்றும் நேடோ கூட்டணியின் வான்வழி குண்டுவீச்சுத் தாக்குதலை நியாயப்படுத்த,  “ நாங்கள் தாக்குதல் நடத்த இன்னும் ஒரு நாள் தாமதத்திருந்தால் பென்காசி நகரமே மயானமாக மாறியிருக்கும்; அந்த வட்டாரமே படுகொலைப் பிரதேசமாக மாறியிருக்கும்; பின்னர் உலகின் பொதுக்கருத்து எங்களுக்கு எதிராகத் திரும்பி,  நாங்கள் மனித உரிமையைக் காக்கத் தவறியவர்களாகக் குற்றம் சாட்டப்பட்டிருப்போம்” என்று கடந்த ஆகஸ்டு மாதத்தில் கூச்சலிட்டார், அமெரிக்க அதிபர் ஒபாமா. இராக்கில் பேரழிவுக்கான ஆயுதங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன என்று முன்பு அமெரிக்க அதிபராக இருந்த புஷ் கூசாமல் புளுகிக் கொண்டு ஆக்கிரமிப்புப் போரைத் தொடுத்ததைப் போல, இப்போது லிபியா மீது ஆக்கிரமிப்புப் போரைத் தொடுக்க புஷ் வழியில் அண்டப்புளுகை ஒபாமா அவிழ்த்துவிட்டார். அவரது முதல்நிலை உதவியாளரோ, ஒரு லட்சம் அப்பாவி மக்கள் கடாபியின் அரசுப் படைகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று கூசாமல் புளுகினார். முதலாளித்துவ ஊடகங்கள் இதை ஊதிப்பெருக்கி லிபியாவில் இரத்த ஆறு ஓடுவதாகப் பீதியூட்டின.  ஆனால், பென்காசி நகரில் பல்லாயிரக்கணக்கானோர் அரசுப் படைகளால் படுகொலை செய்யப்பட்டதாக ஒபாமா கூறியதற்கும், ஊடகங்களால் பீதியூட்டப்பட்ட செய்திகளுக்கும் இதுவரை எந்தவிதமான ஆதாரமும் இல்லை.

அதேசமயம், நேடோ படைகளும், அவற்றின் விசுவாச  லிபியக்  கூலிப்படைகளும்தான் அப்பட்டமான மனிதத்தன்மையற்ற படுகொலைகளில் ஈடுபட்டன. நேடோ படைகளின் தாக்குதலால் ஏறத்தாழ 50,000 லிபிய மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 50,000க்கும் மேற்பட்டோர் வீடுவாசல் இழந்து அகதிகளாகி நிற்கின்றனர். பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளும், குறிப்பாக அமெரிக்க ஆதரவு நைஜீரிய அதிபரும் கூட இப்படுகொலைகளைக் கண்டித்துள்ளனர். தொடரும் வன்முறைத் தாக்குதல்களால் போரில் சிக்கிய அப்பாவி லிபிய மக்களும், அண்டை நாடுகளிலிருந்து  லிபியாவில் பிழைப்புக்காக வந்த கருப்பின மக்களும் அகதிகளாகி, லிபியாவிலிருந்து  ஐரோப்பாவை நோக்கி படகில் தப்பிச் சென்றபோது, அவர்களைக் காப்பாற்ற எந்த ஏகாதிபத்தியமும் முன்வரவில்லை.

ஆப்பிரிக்காவிலுள்ள கென்யா நாட்டின் கருப்பினத் தந்தைக்குப் பிறந்த மகனாகத் தன்னை அறிவித்துக் கொண்ட அமெரிக்காவின் முதல் கருப்பின அதிபரான ஒபாமா, அக்கருப்பின அகதிகளைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மனித நேயம், மனித உரிமை பற்றி வாய்கிழியப் பேசும் ஏகாதிபத்திய நேடோ படைகளோ, ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலோ அவர்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. நடுக்கடலில் தத்தளித்த அவர்கள் உணவின்றி தண்ணீரின்றி பட்டினியாலும் நோயாலும் மாண்டுபோனார்கள்.

இனப்படுகொலையும் மனித உரிமை மீறலும் ஒரு நாட்டில் நடப்பதாகக் குற்றஞ்சாட்டி,  சர்வதேச சமூகம் என்று அழைக்கப்படும் அமெரிக்க  ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் இனி நேரடியாகத் தலையிட்டு ஆக்கிரமிப்புப் போரை நடத்தும் என்பதும், லிபியாவைப் போன்ற கதி இனி உலகின் பிற ஏழை நாடுகளிலும் நிகழும் என்பதும் இப்போது எழுதப்படாத விதியாகிவிட்டது.

அமெரிக்க விசுவாசக் கூலிப்படைகள் லிபியாவின் தலைநகர் திரிபோலியைக் கைப்பற்றியதும், ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள உகாண்டாவின் எல்.ஆர்.ஏ.  என்ற அரசு எதிர்ப்பு அடிப்படைவாத பிற்போக்கு கலகக் கும்பலை வீழ்த்த, “மனிதாபிமான நடவடிக்கை” என்ற பெயரில் அமெரிக்க இராணுவப் படைகள் உகாண்டாவில் நிறுத்தப்பட்டன. இதுமட்டுமின்றி, தெற்கு சூடான், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, காங்கோ ஜனநாயகக் குடியரசு ஆகிய நாடுகளிலும் அமெரிக்கப் படைகள் நிறுத்தப்பட்டு, அந்நாடுகளின் “பாதுகாப்புக்கும் நிலைத்த தன்மைக்கும் இப்படைகள் உதவும்” என்று அறிவித்துள்ளார், ஒபாமா. லிபியா மறுகாலனியாக்கப்பட்டதைத் தொடர்ந்து மாலி, சாட், நைஜர், பெனின், போஸ்ட்வானா, கேமரூன், மத்திய ஆப்பிரிக்கா, எத்தியோப்பியா, காபோன், ஜாம்பியா, செனகல், மொசாம்பிக், கானா, மாலாவி முதலான ஆப்பிரிக்க நாடுகளின் இராணுவப் படைகளுக்குப் பயிற்சி அளிக்கும் வேலையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. “எரிபொருள் விநியோகமுறையைப் பாதுகாப்பது” என்ற பெயரில் நைஜர் டெல்டா பகுதியிலும், கினியா வளைகுடாவிலும் அமெரிக்காவும் நேடோ கூட்டணிப் படைகளும் இராணுவப் பயிற்சிகளை நடத்தியுள்ளன. வட ஆப்பிரிக்கப் பிராந்தியத்தில் பெருமளவு மூலதனமிட்டு செல்வாக்கு செலுத்தும் சீனாவை வெளியேற்றிவிட்டு, மூல வளங்களைக் கைப்பற்றி மேலாதிக்கம் செலுத்துவது என்ற திட்டத்துடன்  வட ஆப்பிரிக்கப் பகுதியில் அமெரிக்கா நிரந்தரமாகப் படைகளை நிறுத்த ஏற்பாடு செய்துள்ளது.

ஆசிய கண்டத்தில் தெற்கு, தென்கிழக்காசிய நாடுகள் அமெரிக்க மேலாதிக்கத்துக்கு விசுவாசமாக இருப்பதால், இப்பிராந்தியத்தில் பிரச்சினை இல்லை. மேற்காசியாதான் அமெரிக்காவுக்கு தொடர்ந்து சிக்கலாக இருந்து வந்தது. இதில் இராக்கும் ஆப்கானும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. மேற்காசியாவில் அடுத்ததாக சிரியாவில் லிபியாவைப் போன்றதொரு ஆட்சிக் கவிழ்ப்பை அரங்கேற்ற அமெரிக்கா முயற்சிக்கிறது. அதைத் தொடர்ந்து இரான் மீது குறிவைத்துள்ளது.

ஆப்கானில் கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்கா தலைமையிலான கூட்டணிப் படையினர் 2,700 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும்,  இவர்களில் 1780 பேர் அமெரிக்கர்கள் என்றும் சி.என்.என். தொலைக்காட்சி கூறுகிறது. ஆனால், லிபியாவில் அத்தகைய இழப்புகள் எதுவுமில்லை.  லிபியாவில் தனது தரைப்படைத்  துருப்புகளை நிறுத்தாமல் ஆக்கிரமிப்புப் போரில் அமெரிக்கா வெற்றியைச் சாதித்துள்ளது. தமது விசுவாசக் கூலிப்படைகள் மூலமாகவும், அவற்றுக்கு ஆதரவாக வான்வழி  கடல்வழியே போர்த்தாக்குதலை நடத்தியும் லிபியாவை ஆக்கிரமித்துள்ளது, அமெரிக்கா.  இது, அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களுக்கும் ஏற்புடைய புதிய உத்தியாக அமைந்துள்ளதால்,  இந்தப் பாணியில் ஆக்கிரமிப்புப் போரையும் மேலாதிக்கத்தையும் நிறுவ அவை துடிக்கின்றன. அமெரிக்காவின் துணை அதிபரான ஜோ பிடன், “இப்போரில் அமெரிக்கா 200 கோடி டாலர்களைச் செலவிட்டது. ஆனால், ஒரு அமெரிக்கன்கூடக் கொல்லப்படவில்லை. கடந்த காலங்களைப் போலின்றி நாங்கள் முன்னேறிச் செல்வதைக் குறிக்கும் முக்கிய விசயம் இது” என்கிறார்.  ஒரு அமெரிக்கன்கூட சாகவில்லைதான்; ஆனால், அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்களின் தாக்குதலாலும் கூலிப் படைகளாலும் 50,000க்கும் மேற்பட்ட லிபிய மக்கள் கொல்லப்பட்டுள்ளார்களே, அவர்கள் மனிதர்கள் இல்லையா? ஏழை நாடுகளின் மனித உயிர்கள் மயிருக்குச் சமம் என்பதுதான் அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்கள் இப்போரின் மூலம் உலகுக்கு உணர்த்தியுள்ள செய்தி.

எல்லாவற்றுக்கும் மேலாக, லிபியாவின் அதிபர் கடாபியின் தலைக்கு விலை வைத்து, கடாபியைக் கொல்லுவோம் என்று பகிரங்கமாக அறிவித்தார், அமெரிக்க அரசுச் செயலரான ஹிலாரி கிளிண்டன். இப்படி ஒரு நாட்டின் அதிபரையே கொல்லுவோம் என்று அறிவிப்பது மனித உரிமைக்கு எதிரான அப்பட்டமான கிரிமினல் குற்றம். இருப்பினும், இக்காட்டுமிராண்டித்தனத்தை எதிர்த்து நாகரிக உலகின் எந்த நாடும் வாய்திறக்கவில்லை. லிபியாவின் அதிபராக இருந்த கடாபி, அமெரிக்காவின் தாக்குதலைத் தொடர்ந்து தலைநகர் திரிபோலியிலிருந்து சிர்டே நகருக்குத் தப்பிச் சென்றபோது, அவரது வாகனம் நேடோ படைகளால் குண்டுவீசித் தாக்கப்பட்டதும்,  அமெரிக்க விசுவாசக் கூலிப்படையினர்  அவரைச் சிறைபிடித்துச் சித்திரவதை செய்து கோரமாக கொன்றொழித்துள்ளனர். போர்க்கைதிகளைக் கொல்லக்கூடாது என்ற ஜெனிவா ஒப்பந்தத்திற்கு எதிரான அப்பட்டமான மனித உரிமை மீறல் இது.

கடாபியின் இனக்குழுவைச் சேர்ந்த தலைவர்கள், அவரது உடலை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய ஐ.நா.மன்றத்திடமும் அனைத்துலக பொதுமன்னிப்புக் கழகத்திடமும் வேண்டுகோள் விடுத்த போதிலும், அவை எதுவும் ஏற்கப்படவில்லை. கடாபியின் உடலை அரை நிர்வாணமாக்கி இழிவுபடுத்தியதோடு, இறைச்சிக் கூடத்தில் கிடத்தி கெட்டழுக வைத்து அவமானப்படுத்தி, அதைப் புகைப்படம் எடுத்து, அக்காட்டுமிராண்டித்தனத்தைப் பெருமிதமாகக் கொண்டாடின, நேடோவின் கூலிப்படைகள். அன்று காலனியாதிக்கவாதிகள் விடுதலைப் போராளிகளைப் பொது இடத்தில் தூக்கில் போட்டு பிணத்தை வல்லூறுகள் தின்ன விட்டதைப் போல, கடாபியை இழிவுபடுத்திக் கொன்றொழித்துள்ளதன் மூலம் உலகில் யாராவது இத்தகைய ஆக்கிரமிப்பை எதிர்த்தால், இந்தக் கதிதான் ஏற்படும் என்று இன்றைய ஏகாதிபத்தியவாதிகள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

முதலாளித்துவ ஜனநாயகத்தின் உன்னதத்திற்கு உதாரணமாகக் காட்டப்படும் அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் நாகரிகமும், மனிதநேயமும், ஜனநாயகமும் உயிரினும் மேலானதாக மதிக்கப்படுவதாக ஒரு மூடநம்பிக்கை பரப்பப்படுகிறது. இது வெறும் பிரமை என்பதை லிபியாவில் நடந்துள்ள ஆட்சிக் கவிழ்ப்பு  ஆக்கிரமிப்புப் போரும் கடாபியின் படுகொலையும்,  அதைத் தொடர்ந்து ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சூறையாட ஏகாதிபத்தியவாதிகள் வகுத்துள்ள புதிய வடிவிலான காலனியாதிக்க ஆக்கிரமிப்புத் திட்டங்களும் அம்பலப்படுத்திக் காட்டுகின்றன. ஏகாதிபத்தியங்கள் ஏறத்தாழ 50,60 ஆண்டுகளுக்கு முன்பு பின்பற்றிய நவ காலனிய போர்த்தந்திர உத்தியை இப்போது கடாசி எறிந்துவிட்டு, புதிய வடிவிலான அப்பட்டமான காலனியாதிக்கத்தை மறுகாலனியாதிக்கத்தை  செயல்படுத்தத் தொடங்கியுள்ளன.

காட்டுமிராண்டித்தனம், சூறையாடல், இனவெறி, ஆக்கிரமிப்பு, போர்வெறி முதலான மத்தியகாலத்தின் இழிந்த பண்புகளை இன்றைய ஏகாதிபத்திய மறுகாலனியாதிக்கவாதிகள் போற்றிப் புகழ்கின்றனர். நாடு பிடிக்கும் போர்களை நடத்திய நெப்போலியனும் அலெக்சாண்டரும் இப்போது அவர்களின் குலதெய்வங்களாகியுள்ளனர்.

லிபியா மீது அமெரிக்கா தலைமையிலான நேடோ கூட்டணிப் படைகள் ஆக்கிரமிப்புப் போரை தொடுத்ததும், பிரான்சின் போலி சோசலிசக் கட்சியின் மூத்த தலைவரான டொமினிக் ஸ்டாரஸ்கான், “ வடக்கே ஆர்டிக் துருவத்தின் பனிப்பகுதியிலிருந்து தெற்கே சகாரா பாலைவனத்தின் மணற்பகுதிவரையிலான பிராந்தியம் இனி ஐரோப்பா கண்டமாகத் தொடர்ந்து நீடிக்கும். ஐரோப்பாவையும் ஆப்பிரிக்காவையும் பிரிக்கும் மத்தியத் தரைக்கடலை இனி ஐரோப்பாவின் உள்நாட்டுக் கடலாக மாற்ற வேண்டும். நாடு பிடிக்கும் போரில் ரோமானியர்களும் நெப்போலியனும் சாதித்ததைப் போல, ஆப்பிரிக்கக் கண்டத்தை  மீண்டும் அபகரிக்க வேண்டும்” என்று தனது காலனியாதிக்க வெறியை வெளிப்படையாகக் கக்கினார். “ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள அல்ஜீரியாவைத் தனது காலனியாக வைத்திருந்த பிரான்ஸ், அல்ஜீரியா அன்னியக் காலனி அல்ல என்றும், அது பிரான்சின் புறக்கடைப் பிராந்தியம் என்றும் அன்று அறிவித்தது. அதைப்போன்ற நிலை இனி ஆப்பிரிக்க கண்டத்தில் உருவாகும்” என்று அவர் பூரிப்புடன் குறிப்பிட்டார்.

பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போர், பேரழிவு ஆயுதங்களை ஒழித்தல், போக்கிரி அரசுகளைத் தண்டித்தல், ஜனநாயகம்  மனித உரிமையை நிலைநாட்டுதல், போரில் சிக்கிய சிவிலியன்களைப் பாதுகாத்தல் என்ற முகாந்திரங்களையும் நியாயவாதங்களையும் முன்நிறுத்தி ஏழை நாடுகள் மீது ஆக்கிரமிப்புப் போர் தொடுக்கவும், படையெடுக்கவும், அவற்றைத் தனது மறுகாலனியாக்கவும், அதற்காக முந்திக் கொண்டு தாக்கவும் தனக்குச் சிறப்பு உரிமை உண்டு என்று சொல்லிக் கொண்டு திரியும் அமெரிக்காதான் உலகின் முதல் எதிரி என்பதை லிபியா மீதான ஆக்கிரமிப்புப் போர் மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளது. இதுவரை காணாத காட்டுமிராண்டித்தனமும் கொடூரமும் நவீனமும் கொண்ட புதிய உத்தியுடன் போர் தொடுத்து, ஏழை நாடுகளை மறுகாலனியாக்கிவரும் அமெரிக்க மேல்நிலை வல்லரசையும் அதன் தலைமையிலான ஏகாதிபத்தியங்களையும் உலகெங்குமுள்ள  உழைக்கும் மக்கள் ஓரணியில் திரண்டு போராடி வீழ்த்த வேண்டிய உடனடிக் கடமையை லிபியா மீதான ஆக்கிரமிப்புப் போர் மீண்டும் வலியுறுத்துகிறது.

____________________________________________________

–    புதிய ஜனநாயகம், டிசம்பர் – 2011

_________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

சசிகலா நீக்கம்: பாசிச ஜெயாவை போற்றும் பார்ப்பன ஊடகங்கள் !

50
சசிகலா நீக்கம்: பாசிச ஜெயாவை போற்றும் பார்ப்பன ஊடகங்கள்!
சசிகலா நீக்கம்: பாசிச ஜெயாவை போற்றும் பார்ப்பன ஊடகங்கள்!
ஜெயலலிதா – சசிகலா

கூடங்குளம், பால் பேருந்து கட்டண உயர்வு, முல்லைப் பெரியாறு முதலான மக்களின் உயிராதாரமான பிரச்சினைகளுக்காக தமிழகத்தில் தீவிரமான போராட்டங்கள் வளரும் காலத்தில் சசிகலா நீக்கம் குறித்த செய்தி ஊடகங்களின் மாபெரும் சென்சேஷனாக முன்வைக்கப்படுகிறது.

அ.தி.மு.கவிலிருந்தும் அதன் அடிப்படை உறுப்பினர்கள் தகுதியிலிருந்தும் சசிகலா மற்றும் அவரது கணவர் நடராஜன் உள்ளிட்ட பன்னிரெண்டு உறவினர்கள் அடங்கிய மன்னார்குடி கும்பல் நீக்கப்பட்டது குறித்து பார்ப்பன ஊடகங்கள் மகிழ்வதோடு துள்ளிக் குதிக்கின்றன. தினமலர், தினமணி, தி ஹிந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா, எக்ஸ்பிரஸ் முதலான பார்ப்பன பத்திரிகைகளும், சோ, சு.சாமி, பா.ஜ.க முதலான பார்ப்பனக் கும்பல்களும் இதை ஆரவாரத்துடன் ஆதரிப்பதோடு அதற்கு பொருத்தமான கிசுகிசு செய்திகளையும் விரிவாக முன்வைக்கின்றன. இறுதியில் ஜெயாவின் அனைத்து பாவங்களுக்கும் இந்த மன்னார்குடி கும்பல்தான் காரணமென்றும் இனி அவர் எந்த நெருக்கடியுமின்றி ‘நல்லாட்சி’யை தொடருவார் என்றும் மக்களுக்கு மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றன.

எம்.ஜி.ஆரால் திட்டமிட்டு தமிழக அரசியலுக்குள் பாசிச ஜெயா திணிக்கப்பட்ட போதும் பின்னர் அவர் வாரிசு சண்டையில் வெற்றி பெற்ற போதும் பார்ப்பன ஊடகங்கள் அவரை மற்ற திராவிட அரசியல்வாதிகளிலிருந்து வேறுபட்டு இருப்பவர் என்று போற்றிக் கொண்டாடின. நாகரீகமானவர், கான்வென்டு கல்வி கற்றவர், ஊழலற்றவர், குடும்ப பந்தங்கள் இல்லாதவர், படித்தவர், பண்பாளர், தமிழினித்தின் தனித்தன்மையை மறுத்து பாரத ஒற்றுமையை போற்றுபவர், இன வெறி இல்லாதவர், இந்துமத ஆன்மீக விசயங்களை சமரசமின்றி பின்பற்றுபவர் என்பதாக இவை நீண்டன.

திராவிட இயக்கங்களையும், தமிழ்நாட்டையும் எப்போதும் இந்தியாவுக்கு எதிரான சந்தேகப்பட்டியலில் வைத்திருக்கும் இந்திய ஊடகங்கள் அதற்கு மாற்றாக அ.தி.மு.கவையும், ஜெயாவையும் முன்னிருத்தின. பிராமணர் சங்கம், ஜெயேந்திரன், ஆர்.எஸ்.எஸ், இந்துமுன்னணி போன்ற அவாள் கட்சிகளெல்லாம் ஜெயாவை முன்னுதாரமாண இந்து அரசியல்வாதியாக போற்றி வந்தன.

90களில் ஜெயா ஆட்சியைப் பிடித்ததும் பின்னர் சசிகலா நட்பு உறுதியடைந்ததும், தொடர்ச்சியாக ஜெயா சசிகலா கும்பல் முழு தமிழ்நாட்டையும் தடுப்பார் யாருமின்றி மொட்டையடித்து கொள்ளையடித்ததுமான காலத்தில் இந்த பார்ப்பன ஊடகங்கள் அணுகுமுறை எப்படி இருந்தன?

இந்த ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக சசிகலாவை மட்டும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்திய பார்ப்பன ஊடகங்கள் பாசிச ஜெயாவை மட்டும் அதிலிருந்து நீக்கி சுத்தமானவர் என்று அறிவித்தன. அதாவது சசிகலாவின் மன்னார்குடி கும்பல்தான் 91-96 வரையிலான ஆட்சிக்காலத்தில் நடந்த ஊழல் நடவடிக்கைகளுக்கு காரணம், ஜெயலலிதா அதை தடுக்க முடியாதபடி கட்டுண்டு கிடந்தார் என்றுதான் அவர்கள் சித்தரித்தார்கள்.

பின்னர் தேர்தலில் படுதோல்வியுற்று புறக்கணிப்ப்பட்ட காலத்தில் இந்த பார்ப்பன கிச்சன் காபினெட் சசிகலாவை மட்டும் குறிவைத்து தனிமைப்படுத்தின. அதற்கு தோதாக அப்போது இதே போல சசிகலாவை நீக்கியதாக ஜெயா அறிவித்தார். பின்னர் சேர்ந்து கொண்டார். 2001இல் ஆட்சிக்கு வந்த போதும் பார்ப்பன ஊடகங்கள் இந்த எச்சரிக்கையை தொடர்ந்து ஓதிக்கொண்டே வந்தன. அப்போதும் இதே போன்று நாடகம் நடந்தது. இடையில் பிரிந்து போன ஜெயா பின்னர் சசிகலாவுடன் சேர்ந்து கொண்டார்.

இப்போது 2011இல் ஜெயா ஆட்சியைப் பிடித்த பிறகும் பார்ப்பன ஊடகங்கள் நேர்மையான ஊழலற்ற ஆட்சிக்கு “மன்னார்குடி மாஃபியாவை” நீக்குமாறு விரும்பின. ஒரு வேளை அப்படி முற்றிலும் விலக்காவிட்டாலும் ஆட்சி அதிகார அமைப்புகளிலிருந்து அவர்களை தள்ளி வைக்கமாறு கோரின. துக்ளக் சோ இது குறித்து பலமுறை புலம்பியிருக்கிறார். தற்போது சசிகலா நீக்கத்திற்காக ஜெயாவுக்கு பாராட்டுமழை பொழிந்திருக்கும் சு.சாமி மாமாவும் அப்படித்தான் அடிக்கடி பேசி வந்தார். மன்னார்குடி மாஃபியா என்ற வார்த்தையே சு.சாமி அறிமுகப்படுத்திய ஒன்று.

இப்போது ஆட்சியில் அசுரபல பெரும்பான்மையுடன் இருக்கும் அ.தி.மு.க அரசை மன்னார்குடி கும்பல்தான் கட்டுப்படுத்துகிறது, தலைமை செயலகத்தில் சசிகலாவின் பினாமியான பன்னீர்செல்வம் என்ற அதிகாரிதான் உண்மையான தலைமை செயலாளராக ஆட்சியை, அதிகாரிகளை தீர்மானிக்கிறார், இதனால் பல நல்ல அதிகாரிகள் அதிருப்தி அடைந்து மத்திய அரசு வேலைகளுக்கு மாற்றுமாறு கோரினர், அமைச்சர்கள் – அதிகாரிகள் அனைவரும் சசிகலா கும்பலின் விருப்பத்தின்படியே நடந்து கொண்டனர், இறுதியில் பெங்களூரூ சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு வந்து ஜெயா ஆட்சியை இழந்தால் யாரை கொண்டுவருவது, அதற்கு சசிகலா செய்து வந்த முயற்சிகள் உளவுத்துறை மூலம் ஜெயாவுக்கு வந்து அவர் கோபம் அடைந்தார் முதலான பல செய்திகள் கிசுகிசு பாணியில் பார்ப்பன ஊடகங்களில் பிரச்சாரம் செய்யப்படுகின்றன.

இவற்றில் உண்மை இருக்கலாம், இல்லாமலிருக்கலாம். ஆனால் சசிகலாவின் நட்புதான் ஜெயாவின் எல்லா தவறுகளுக்கும் அடிப்படை காரணமென்று பார்ப்பன ஊடகங்கள் சித்தரிக்கும் சதிதான் நாம் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான அரசியலாகும்.

இந்த ஆட்சியிலேயே ஜெயா கொண்டு வந்துள்ள தலைமைச் செயலக இட மாற்றம், அண்ணா நூலக இட மாற்றம், சமச்சீர்கல்வியை தடை செய்ய உச்சநீதிமன்றம் வரை சென்றும், பழையை பாடபுத்தகங்களை அச்சிட்டும் செய்த வக்கிர செலவு, மக்கள் நலப் பணியாளர்களை நீக்கியது, ஈழத்தாயாக வேடம் போட்டு பின்னர் மூவர் தூக்கை உறுதி செய்தது, கூடங்குளத்தில் போராடும் மக்களை ஆதரிப்பது போல பின்னர் எதிர்த்தது, பால் விலை, பேருந்து கட்டண உயர்வை அதிரடியாக உயர்த்தியது என்று ஏகப்பட்ட பாசிச தர்பாரை நாம் அன்றாடம் தரிசித்து வருகிறோம்.

இந்த பாசிச தர்பாருக்கும் சசிகலா நட்புக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா? என்றால் நிச்சயமாக இல்லை. இவையெல்லாம் பாசிச ஜெயா அவரளவிலேயே தனிப்பட்ட முறையிலேயே செய்த காட்டு தர்பார் நடவடிக்கைகள். இப்போது விடுங்கள், முந்தைய ஆட்சியில் கரசேவைக்கு ஆளனுப்பியது, மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வந்து சிறுபான்மை மக்களை அச்சுறுத்தியது, ஆடு கோழி பலி தடைச்சட்டம் கொண்டு வந்து சூத்திர-பஞ்சம மக்களை பார்ப்பனியமயமாக்க முயன்றது, ஈழம் என்று பேசுபவரை தடா,பொடாவில் உள்ளே தள்ளி கொடுமைப்படுத்தியது, ஆர்.எஸ்.எஸ் போற்றும் நடவடிக்கைகளை மனங்குளிரச் செய்தது, சாலைப்பணியாளர் நீக்கம், ஒரிரவில் இலட்சக்கணக்கான அரசு ஊழியர்களை பதவி நீக்கம் செய்தது முதலான நடவடிக்கைகள் காட்டுவது என்ன?

இவையெல்லாம் ஜெயலலிதாவை ஒரு பார்ப்பன பாசிஸ்ட் என்பதுடன் இவையனைத்தம் அவரது முழு விருப்பத்திலிருந்து மட்டுமே பிறந்திருக்கிறது என்பதையம் நாம் புரிந்து கொள்ளலாம். எனில் சசிகலாவின் நட்புக்கு எந்த பங்குமில்லையா என்றால் அப்படி இல்லை.

இதில் ஜெயாவையும் சசிகலாவையும் பிரித்து பார்த்து புரிந்து கொள்வது சரியல்ல. ஏனெனில் அ.தி.மு.க என்றொரு ஓட்டுப் பொறுக்கி கட்சி, அழகிரி ஃபார்முலாவுக்கு முன்னரேயே கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தலில் அதே ஃபார்முலாவை கண்டுபிடித்து அறிமுகம் செய்த கட்சி, மாவட்ட அளவிலும் உள்ளூர் அளவிலும் சாராய ரவுடிகள், மணல் மாஃபியாக்கள், மதுக்கடை உரிமையாளர்கள், சுயநிதிக் கல்லூரி முதலாளிகள், ரியல் எஸ்டேட்டில் கோடிகளைக் குவிப்பவர்கள் கொண்ட கட்சியை தொடர்ந்து நடத்தவும், காசை வீசி தமது அரசியல் நடவடிக்கைகளை செய்து கொள்ளவும் ஊழல் என்பது அ.தி.மு.கவிற்கு அத்தியாவசியமான ஒன்று.

ஊழல் என்றொரு வஸ்து இல்லாமல் அ.தி.மு.கவோ இல்லை கான்வென்டு சீமாட்டி ஜெயாவோ இல்லை. முந்தைய ஆட்சிக் காலத்தில் ஜெயா-சசி கும்பல் மட்டும் கொள்ளையடிக்கவில்லை, அவர்களது உள்ளூர் தளபதிகள் அனைவரும் மும்முரமாக கொள்ளையடித்தார்கள். அந்தக் கொள்ளையும் அந்தக் கொள்ளையின் விளைவாக உருவான ஒரு ஒட்டுண்ணிக் கும்பலும்தான் அ.தி.மு.கவின் அஸ்திவாரம்.

90களில் இந்தக் கொள்ளை பாரம்பரிய முறைகளில் நேரடிப் பணம், நேரடி சொத்து குவிப்பு, என்று நடந்த போது ஏற்பட்ட பிரச்சினைகள் இப்போது இல்லை. ஊழல் என்பது ஒரு சூட்கேசில் வைத்து கொடுக்க்கப்படும் பணமாக நடப்பில் இல்லை. அது ஸ்விஸ் வங்கி போன்று தேசங்கடந்தும் ரியல் எஸ்டேட், சுயநிதிக் கல்லூரிகள், சாராய ஆலைகள் என்று சட்டபூர்வமாகவும் மாறிவிட்ட பிறகு பழைய பாணியில் சொத்து சேர்த்து பிடிபடும் நிலைமையில் ஜெயலலிதா இன்று இல்லை.

எனவே ஜெயா சசிகலாவின் நட்பு என்பது உறவுப்பூர்வமாக இருக்கிறது என்பதை விட தொழில் பூர்வமாக, அதிகார பங்கு பூர்வமாக பிணைக்கப்பட்டிருப்பது என்பதுதான் உண்மை. இதில் அவர்களது தனிப்பட்ட உறவு என்பது இத்தகைய மாபெரும் அதிகார சாம்ராஜ்ஜியத்தின் மேல்தான் நடமாடுகிறது என்பது முக்கியம். எனவே இங்கு சசிகலா போய்விட்டார் என்றால் அந்த ஊழல் சாம்ராஜ்ஜியத்தில் ஏதோ பங்கு பிரிக்கும் சண்டை நடக்கிறது என்றுதான் பொருளே தவிர மாறாக அங்கு ஊழலே பிரிந்து போய்விட்டது என்பது பாமரத்தனம்.

மேலும் அரசு, சாராய ஆலைகள், தொலைக்காட்சி தொழில் என்று ஏகப்பட்ட முறையில் பிணைக்கப்பட்டிருக்கும் ஜெயா சசிகலா நட்பு என்பது அப்படி ஒரு குழயாடிச் சண்டையால் பிரிந்து போகும் ஒன்றல்ல. அதனால்தான் இதற்கு முன்னர் அவர்கள் அப்படி பிரிந்திருந்தாலும் கூடிய சீக்கிரத்தில் ஒன்று சேர்ந்தார்கள். இந்த ஒன்றுகூடலை சாதித்தது மேற்படி பிரிக்க முடியாதபடி இருக்கும் ஊழல் சாம்ராஜ்ஜியத்தின் நலனை அப்படி கைவிட்டு விட முடியாதபடி இருக்கும் நிர்ப்பந்தம்தான்.

இப்போது சசிகலா நீக்கப்பட்டாலும் விரைவில் அவர் சேர்க்கப்படலாம். ஒருவேளை அப்படி சேராமல் இருக்கும் பட்சத்தில் சொத்து வாரிசுரிமைச் சண்டை நடக்கும். அப்படி ஒரு சண்டை நடக்கும் பட்சத்தில் இருவருக்கும் அது பாதகம் என்பதால் தோழிகள் மீண்டும் இணையவே வாய்ப்பிருக்கிறது. மேலும் பெங்களூருவில் நடக்கும் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயா தண்டிக்கப்பட்டாலும் அவரது பினாமி மூலம் ஆட்சி தொடரும் என்பதோடு தொடர்ந்து அதிகார மையமாக அவரே இருப்பார். அதில் ஏதாவது செய்து ஜெயாவை நீக்கிவிட்டு அ.தி.மு.கவை கைப்பற்றலாம் என்றால் அதற்கு தேவைப்படும் நட்சத்திர முகம் கொண்ட தலைமைக்கு பொருத்தமாக சசிகலா கும்பலிடம் யாருமில்லை. இப்படியாக ஜெயா சசிகலா நட்பு என்பது யாரும் பிரிக்க முடியாதபடி சேர்ந்திருக்கிறது.

அடுத்து ஜெயாவின் விருப்பத்திற்கு மாறாக சசிகலா மட்டும்தான் ஆட்சியை நடத்தினார், ஊழல் செய்தார் என்பது பச்சையான பொய். இருவரும் அதை மனமொப்பி சேர்ந்துதான் செய்திருக்கிறார்கள், செய்கிறார்கள், செய்வார்கள். அதிலும் குறிப்பாக இதில் முடிவு செய்யும் உரிமை பாசிச ஜெயாவிடமே இருக்கிறது. அதற்கு ஆதாரமாகத்தான் இந்த ஆட்சியிலும், இதற்கு முன்னரும் அவர் மேற்கண்ட பாசிச நடவடிக்கைகளை பட்டியல் இட்டோம். இவையெல்லாம் ஜெயா என்றொரு தனிநபர் குறிப்பிட்ட வர்க்க, சாதி, மத பிரிவினரின் நலனுக்காக எடுத்த பாசிச நடவடிக்கைகள். இதில் சசிகலா கும்பல் முடிவெடுத்திருக்கிறது என்று யாரும் சொல்ல முடியாது.

ஒட்டு மொத்தமாக பாசிச ஜெயாவின் காட்டு தர்பாரை நியாயப்படுத்துவதற்காகவே பார்ப்பன ஊடங்கள் சசிகலா கும்பலை மட்டும் குறிவைத்து தாக்குகின்றது. மேலும் பார்ப்பன புரோக்கர்கள், பா.ஜ.க முதலான பார்ப்பனியக் கட்சிகளும் சசிகலா கும்பலை வர்க்க ரீதியாகவும், சாதி ரீதியாகவும் வெறுக்கின்றன. இது புதுப் பணக்காரன் பரம்பரைப் பணக்காரன் மேல் கொண்டிருக்கும் பகையைப் போன்றதுதான். அ.தி.மு.க ஒரு பார்ப்பனியக் கட்சி என்பதோடு தரகு முதலாளிகளின் கட்சி என்ற நிலைக்கு கொண்டுவந்து சாதித்திருப்பவர் ஜெயலிலிதா எனில் அதற்கு பொருத்தமான தொண்டர் குண்டர் ரவுடி படைகளை உருவாக்கி தீனி போட்டு உள்ளூர் தளபதிகளை வைத்து அ.தி.மு.கவின் மக்கள் முகத்திற்கு உருவம்கொடுத்தது சசிகலா கும்பல்தான்.

இப்படித்தான் இரண்டின் நலனும் பிரிக்க முடியாதபடி ஒன்றிணைத்திருக்கின்றன. இதில் சசிகலாவை தவிர்த்து மற்ற ஊழல் தளபதிகளை நீக்குமாறு பார்ப்பன ஊடகங்கள் கோரவில்லை. ஏனெனில் அந்த் தளபதிகளெல்லாம் அம்மா காட்டும் திசையில் ஐந்தடி பள்ளத்தில் விழுந்து வணங்கக் கூடியவர்கள் என்பதால் அவர்களுக்கு பிரச்சினை இல்லை. இடையில் சசிகலா கும்பல் புரட்சித்தலைவியன் கிச்சன் காபினெட்டாக இருப்பதுதான் அவர்களுடைய கவலை. அதனால்தான் மன்னார்குடி கும்பலை தூக்கி எறிந்து விட்டு பார்ப்பனர்களின் கிச்சன் காபினெட்டை திணிக்க அவர்கள் துடிக்கிறார்கள்.

அதன் பொருட்டே சசிகலா நீக்கத்தை அவர்கள் விண்ணதிர கொண்டாடி மகிழ்கிறார்கள். இதன் மூலம் பாசிச ஜெயாவின் குற்றங்களுக்கு அவர் காரணமில்லை என்று சொல்வதன்மூலம் அவரது காட்டு தர்பார் நடவடிக்களை தொடருவதற்கு மக்களிடையே ஒரு நல்லெண்ணப் பிரச்சாரத்தையும் மேற்கொள்கிறார்கள். பார்ப்பன ஊடகங்களின் இந்த சதியை நாம் புரிந்துகொள்வதோடு முறியடிப்பதும் அவசியம்.ஃ

நம்மைப்பொறுத்த வரை ஜெயா சசிகலா கும்பல் என்பது ஜெயாவின் தலைமையில் இயங்கக்கூடிய ஒரு பாசிச கும்பல்தான். ஒட்டு மொத்தமாக இந்த கும்பலை தூக்கி ஏறிவதுதான் நமது கடமையாக இருக்க வேண்டுமே அன்றி நல்ல பாம்புகளுக்கிடையே கெட்ட பாம்பு, ‘நல்ல பாம்பு’ என்று தேடுவது அறிவீனம். அப்படி தேடச்சொல்லி தமது நலனை நியாயப்படுத்தும் பார்ப்பன ஊடகங்களை பலரும் புரிந்து கொள்ளவில்லை.

அரசியல் என்றால் அதை ஒரு கிசுகிசு நடவடிக்கைகள் போல கற்றுத்தரும் இந்த ஊடகங்களின் செல்வாக்கிலிருந்து நாம் விடுபடுவதும், மக்கள் நலனிலிருந்து அரசியல் என்றால் என்னவென்று புரிந்து கொள்வதும்தான் இந்த பிரச்சினையை புரிந்து கொள்ள உதவும். பதிவுலகில் பலரும் இதை ஒரு கிசுகிசு நடவடிக்கையாக பேசி விவாதிப்பது பலன்தராது. மாறாக பார்ப்பன ஊடகங்களின் பிரச்சாரத்தை மறைமுகமாக ஏற்றுக் கொள்வதாகவே அவை மாறும்.

________________________________

தொடர்புடைய பதிவுகள்: