Wednesday, May 14, 2025
முகப்பு பதிவு பக்கம் 99

கல்வியும் சாதியும்.. என் நினைவுக் குறிப்பு -1 | கருணாகரன்

நான் சமீபத்தில் ஒரு படம் பார்த்தேன். அந்த படத்தில் நான் ஈ புகழ் நானியும் நஸ்ரியாவும் சேர்ந்து நடித்திருப்பர். அந்த படத்தின் ஒரு சீனில் ஒரு நாடகம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்.

அந்த சீனில் ஒரு சின்ன பெண் செருப்பு துடைக்கும் சிறுவனை  “என்னுடன் விளையாட வா”என அழைப்பாள். அதற்கு அவன் “அய்யோ சின்னமா நீங்க என்ன, என் கூட விளையாட கூப்பிடுறீங்க, நீங்க எங்க நான் எங்க” அப்படின்னு சொல்லி அவன் தயங்குவான்.

உடனே அந்தப் பெண் அவள் அப்பாவிடம் போய்,” அப்பா பாலுவை என்னுடன் விளையாட சொல்லுங்கள், அவன் ஏன் எப்போதும் வேலை செய்து கொண்டே இருக்கிறான்”? எனக் கேட்க..

அதற்கு அவனுடைய அப்பா சொல்வார், அவன் படிக்கவில்லை அல்லவா அதனால் தான் இப்படி இருக்கிறான்.

அதற்கு அவள் ‘நீங்களும் தான் படிக்கல நீங்க நல்லா நிம்மதியா உட்கார்ந்து கொண்டு நகம் வெட்டிட்டு இருக்கீங்களே”என கேட்க அதற்கு அவர் சற்று கடுப்பாகி அவளை முறைப்பார்.

உடனே அவளும் எனக்கு தெரியும்பா! அவன் ஒரு கீழ் ஜாதியை சேர்ந்தவன் என்று, அதனால் தான் நீங்க அவனை எப்போதும் வேலை வாங்கிக் கொண்டே இருக்கீங்க, அப்புறம் ஜோஸ்வா டீச்சர் அவங்க சாதி தானே அவங்க படிச்சிருக்காங்களே என்று அவள் கேட்க..

அதற்கு அவளுடைய அப்பா சொல்வார் நானும் அதைத்தான் சொல்றேன், அவங்க படிச்சிருக்காங்க அதனால தான் நீங்க எல்லாரும் அவங்க பேச்சை கேக்குறீங்க இல்லன்னா எப்படி கேட்பீங்கன்னு..


படிக்க: பழங்குடியின அடிப்படையில் சாதி சான்றிதழ் கொடுக்க மறுக்கும் அரசு – பறிபோகும் பழங்குடி மாணவர்களின் உயர்கல்வி.


அத கேட்டு அந்த பெண் சரிதான் படிச்ச எல்லாரும் சமம் ஆயிருவோமில்ல சூப்பரான ஐடியா இது அப்படின்னு சொல்லி வேக வேகமாக பாலுவை நோக்கி ஓடுவாள். அங்க அவன்  ஷூக்கு பாலிஷ் போட்டுக் கொண்டிருப்பான். அவனிடம் சென்று “வா படிக்கலாம் பள்ளிக்கூடம் நோக்கி போகலாம்” எனக் கூற அவன் “சின்னமா என்ன என்னைய வந்து கூப்பிடுறீங்கன்னு மறுபடியும் தயங்குவான். உடனே அவள் படிச்சா எல்லாரும் எல்லாருக்கும் சமமாகிருவாங்களாமான்டா எங்க அப்பா  சொன்னாரு, நீயும் படிச்சிட்டேன்னா நானும் உன் கூட வந்து நல்லா விளையாடலாம்ல படிக்கலாம் அப்படின்னு சொல்லி அவனைக் கையை பிடித்து பள்ளிக்கூடத்துக்கு கூட்டிட்டு போற மாதிரி அந்த நிகழ்வு முடியும்.

இது அந்த படத்தின் இருக்கக்கூடிய ஒரு வலிமையான ஒரு நிகழ்வாகும், அதே நேரம் அது ஒரு நேர்த்தியான ஒரு படைப்பும் கூட..

இதில் இருக்கும் செய்தி படித்தால் எல்லாரும் எல்லாருக்கும் சமமாய் ஆகி விடுவார்கள் என்பது தான். இந்த படம் சொன்ன செய்தியை நான் என் சிறு வயதில் கேட்டிருக்கிறேன். அதுவும் நான் 3-வது படிக்கும் போது.

எங்களுடைய ஊர் சுமார் ஒரு 600-க்கும் மேற்பட்ட வீடுகளைக் கொண்ட ஒரு நடுத்தர கிராமம் ஆகும். அதே நேரம் பெரிதளவு மருத்துவ வசதியோ இல்லை கல்வி குறித்த அக்கறையோ இல்லாத காலம் அது. அப்பொழுதெல்லாம் எங்கள் வீட்டில் ஐந்து மணிக்கு மேல் ஆகிவிட்டால் டியூசன் எடுக்க ஆரம்பித்து விடுவார் எனது அம்மா. அது அவர்களுடைய சேவையாக நினைத்து அவர் இதை எப்போதும் பண்ணுவார்..

ஒருமுறை அவ்வாறு டியூசன் எடுத்துக் கொண்டிருக்க என் வீட்டில் அருகில் நின்று கொண்டிருந்த சிலர், எனது அம்மாவிடம் “எப்படியாவது எங்க பயங்களையும் சரி பிள்ளைகளையும் சரி ஓரளவுக்கு படிக்க வைத்துவிடுனு”, புன்னகையுடன் சொல்லிவிட்டு வேறு விஷயங்களை நோக்கி பேச ஆரம்பித்தனர்.

அப்போது அந்த தெருவின் உள்ளே  ஒரு நபர் வந்தார். அவர் ஒரு ரெட்டியார். அவர்களை போல மனிதர்கள் எங்கள் தெருவிற்கு வருகிறார்கள் என்றால், அதற்கு அப்பொழுது ஒரு காரணம் தான் இருக்கும். எப்படி நோகாமல் வேலைக்கு ஆட்களை தேடுவது என்பது தான் அந்த காரணம்.

அவர் எங்கள் வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்த என் சித்தியை பார்த்து பெயர் சொல்லிக் கூட அவரை அழைக்காமல் ஏதோ ஒரு வார்த்தையை, அதுவும் ஒரு தரம் கெட்ட வார்த்தையை போட்டு அழைக்க, அது என்னை திக்குமுக்காட செய்தது.

இத்தனைக்கும் என் சித்தி அந்த நபரை விட வயதில் பெரிய ஆள், ஆனாலும் அவர் பயன்படுத்திய சொற்கள் என்னையும் சரி என்னுடன் இருந்தவர்களையும் சரி இடிபோல் தாக்கியது. அவரின் பேச்சுக்கு  என் சித்தி என்ன பதில் சொல்வாள் என நான் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தேன்.

அவள் எப்போதும் இந்த மாதிரி தரக்குறைவாக தன்னை உடன் இருந்தவர்களை யாராவது பேசினால் உடனே கோபத்தில் தாக்கி விடுவாள் இதுதான் அவருடைய நடைமுறை.


படிக்க: கால் மேல் கால் போட்டு உட்காரலாமா?


இதுதான் அன்றும் நடக்கும் என நான் அப்போது நம்பினேன்  ஆனால் நடந்தது என்னவோ வேறு.அவர் தன்னை அப்படி அழைத்ததும் அதனைப் கேட்ட என் சித்தி “சொல்லுங்க எஜமா என கையை குப்பிக்கொண்டு உடலையும் சற்று வளைத்துக் கொண்டு அவருக்கு பதில் சொல்ல அந்த உடல் நலிவும் பேச்சும் எங்களை திக்கு முக்காட செய்தது.

அந்த நபர் “உன் புருஷன் எங்க இருக்கான், அவனை எல்லாம் தேடி இந்த தெரு பக்கம் எல்லாம் நான் வர வேண்டி இருக்கு, ஆவன உடனே கூட்டிட்டு வா! வீட்டுல இருக்கானா வேற எங்கேயும் போய்ட்டானா என சொல்ல”…

அதற்கு அவன் சாமி வீட்லதான் இருக்காரு,  நான் உடனே வர சொல்றேன் நீங்க வீட்டுக்கு போங்க, எனக் கூற நான் அப்போது என் அம்மாவை பார்த்தேன். அதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டே அவள் சற்று முகத்தை இறுக்கமாய் வைத்துக் கொண்டே “பிள்ளைகளா படிங்க இதையெல்லாம் கண்டுக்க கூடாது. இப்படி தான் பேசுவாங்க அதனை எல்லாம் இப்ப நம்ம பாத்துட்டு இருந்தா நம்மளால படிக்க முடியாது, படிக்கிற வேலையை மட்டும் தான் இப்ப பாக்கணும் சரியா அப்படின்னு சொல்லி எங்களுக்கு பாடம் எடுக்க ஆரம்பித்தார்.

அப்போது அந்த நபர் சுற்றி முற்றி மற்றவர்களையும் சற்று ஏளனமாக பேச இவர்களும் ஐயா, அப்படியெல்லாம் இல்ல இல்லையா, எஜமான்னு கைய கட்டிட்டு எனத்தெனத்தியோ பேச ஒருவாறு அந்த பேச்சு எப்படியோ முடிந்தது..

அவரும் சற்று வேகமாக அந்த தெருவை விட்டு கிளம்ப ஆரம்பிக்க, அப்போது என் அம்மாவை பார்த்து என்ன டீச்சரமா பிள்ளைகளுக்கு பாடம் எடுக்கிறீர்களா? நன்றாக நடத்துறீங்க! போல என்று சொல்ல.. எங்க அம்மாவும் அதற்கு ஆமாம் தம்பி, எப்படியோ பசங்க ஓரளவுக்கு படிச்சிட்டு இருக்காங்க நமக்கு அது தான் முக்கியம் அப்படின்னு சொல்லி அவங்க சொன்னாங்க.

எனக்கு அவர் மற்றவரிடம் பேசிய பேச்சுக்கும் எனது அம்மாவிடம் அவர் பேசிய பேச்சுக்கும் மிகுந்த இடைவெளி இருந்ததை நான் கவனித்தேன். எங்கள் எங்கள் தெரு பெரிய நபர்களை துளியும் மதிக்காத அந்த நபர் எனது அம்மாவை மட்டும் டீச்சர் அம்மா என சொன்னது எனக்கு மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அவர் அங்கிருந்து கிளம்பியதற்குப் பிறகு எனது அம்மா எங்களிடம் சொன்னார் நான் படித்தவள்,அதுவும் டிகிரி முடித்திருக்கிறேன். அதனால்தான் அவர் என்னை மரியாதையாக அப்படி பேசி விட்டு செல்கிறார், நம்முடன் இருந்தவங்கள அந்த மாதிரி அவரால பேச முடியல அப்ப படிப்பு அப்படிங்கறது எல்லாத்தையும் மாத்திரம். நமக்கு செயற்கையா அது ஒரு ஒரு மரியாதை அது வந்து கொடுக்கும். அதனால தயவு செஞ்சு எல்லாரும் நல்லா படிச்சிருங்க அப்படி படிச்சா மட்டும் தான் நம்மள ஓரளவு  எல்லாரும் மதிப்பாங்க இல்லன்னா அது கூட கஷ்டம் என்றார்..
என்று அவர் சொன்ன அந்த வார்த்தை என்னை மட்டுமல்ல என் உடன் இருந்தவர்களை ஆழமாக யோசிக்க வைத்தது.

கல்வி ஒரு முழுமையான சமத்துவத்தை போதிக்காது என்றாலும் ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி கற்க ஆரம்பிக்கும் போது கல்வி தன்னை முழுமைப்படுத்தி கொள்கிறது. அது சாதிக்கு எதிரான பாலின பேதத்திற்கு எதிரான ஒரு போரை இந்த சமூகத்திலும் சரி வீட்டிலும் சரி மிக ஆழமாக அது நடத்த துணிகிறது. …

அப்படி நான் இந்த  சமூகத்தில் நடத்திய, நடத்திக் கொண்டிருக்கிற ஒரு நீண்ட போரின் சில களங்களை இனி நாம் பார்ப்போம் .

கருணாகரன்

கருப்புப் பண ஒழிப்பு 2.0: மக்கள் சேமிப்பை சூறையாடும் சதித்திட்டம்!

டந்த மே 19-ஆம் தேதி, ரிசர்வ் வங்கி புழக்கத்தில் உள்ள இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதிக்குள், வங்கிகளில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள கால அவகாசமும் வழங்கியுள்ளது. 2024 நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி, ஏழு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு பணமதிப்பழிப்பு என்ற நடவடிக்கையின் மூலம் மீண்டும் “கருப்புப் பண ஒழிப்பு” நாடகத்தை கையிலெடுத்துள்ளது மோடி அரசு.

நாள் ஒன்றுக்கு ஒரு நபர் 20,000 ரூபாய் மதிப்பிலான இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை ரொக்கமாக மாற்றிக்கொள்ளலாம்; எந்த ஆவணமும் தேவையில்லை; எந்த வங்கிக் கிளையிலும் மாற்றிக் கொள்ளலாம்; 20,000 ரூபாய்க்கு மேல் மதிப்பிலான இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் அவர்களுடைய வங்கிக் கணக்கில் செலுத்திக் கொள்ளலாம் என வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கி.

0-0-0

சங்கிகளும், நடுநிலை என்ற போர்வையில் செயல்பட்டுக்கொண்டு ஆர்.எஸ்.எஸ் கருத்துகளை பிரச்சாரம் செய்யும் “தமிழ் பொக்கிஷம்” போன்ற யூடியூப் சேனல்களும் ஆர்.பி.ஐ.யின் நடவடிக்கையை கருப்புப் பண ஒழிப்பின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ற கருத்தை பிரச்சாரம் செய்துவருகின்றன.

படிக்க : பற்றி எரிகிறது மணிப்பூர் | மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் – நேரலை!

ஆர்.பி.ஐ.யின் வழிகாட்டு நெறிமுறைகளை, இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை கருப்புப் பணமாக பதுக்கி வைத்துள்ளவர்கள் பின்பற்ற முடியாது. எனவே, இந்நடவடிக்கை மூலம் கணக்கில் காட்டாமல் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளாக பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணத்தை ஒழிக்க முடியும் என்று ஊடகங்களில் கதையளந்துவருகிறது காவிக் கும்பல்.

மேலும், தேர்தல்களின்போது அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதற்காக 2,000 ரூபாய் நோட்டுகளை அதிகம் பயன்படுத்துகின்றனர் என்றும், 2,000 ரூபாய் நோட்டுகளை தற்போது திரும்பப் பெறுவதன் மூலம் இத்தகைய சட்டவிரோத பணப் பரிமாற்றத்தைத் தடுத்துவிடுவதுதான் மோடியின் திட்டம் என்றும் புல்லரிக்கும் வகையிலான கதைகளையும் சங்கிகள் கூறிவருகிறார்கள்.

தமிழ்நாட்டு பா.ஜ.க கும்பல் கருப்புப் பண ஒழிப்பு என்பதை வைத்து, தி.மு.க.வினரை தாக்கிப் பிரச்சாரம் செய்துவருகிறது. பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, “2024 தேர்தலுக்காக மூட்டை மூட்டையாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை தி.மு.க.வினர் கட்டி வைத்திருக்கிறார்கள். ஆர்.பி.ஐ. அறிவிப்பு அவர்களுக்கு பாதிப்பு என்பதால்தான் தமிழக முதல்வர் கோபப்படுகிறார்” என்று கூறியிருக்கிறார்.

ஆனால், இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதை ஒட்டி ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், சங்கிகளின் கதைகளெல்லாம் சொல்லப்படவில்லை. மாறாக, ஐந்நூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டபோது பொருளாதாரத்தின் நாணயத் தேவையை பூர்த்தி செய்யவே இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. மற்ற நோட்டுகள் போதுமான அளவில் கிடைத்தவுடன் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டன என மட்டுமே கூறப்பட்டுள்ளது.

மேலும், ஏற்கெனவே ரிசர்வ் வங்கியால் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டு வந்துள்ளன. 2018 மார்ச் 31 அன்று புழக்கத்தில் இருந்த இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பானது 6.73 லட்சம் கோடி ரூபாய். இது புழக்கத்திலுள்ள ரூபாய் நோட்டுகளில் 37.3 சதவிகிதம். இது 2023 மார்ச் அன்று 3.62 லட்சம் கோடி ரூபாயாக குறைந்திருக்கிறது. இது புழக்கத்திலுள்ள ரூபாய் நோட்டுகளில் 10.8 சதவிகிதம் மட்டுமே ஆகும்.

ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி பார்த்தால், 2016-ஆம் ஆண்டில் புதிய ரூபாய் நோட்டுகளை முழுமையாக அச்சடித்துவிட்டு பழைய ஐந்நூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்து இருக்கலாம் அல்லவா? இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை நாணயத் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்று அச்சடித்து விநியோகித்துவிட்டு அதை மீண்டும் ஏன் திரும்ப பெற வேண்டும்? இதில்தான் காவி-கார்ப்பரேட் கும்பலின் சதித்தனம் அடங்கியிருக்கிறது

இரண்டாவது “சர்ஜ்ஜிகல் ஸ்டிரைக்”!

2024 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, மக்கள் மத்தியில் மோடியின் பிம்பத்தை ஊதிப்பெருக்கும் முயற்சிதான் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறும் நடவடிக்கை. சங்கிகளின் மொழியில் கூறினால், இது “இரண்டாவது சர்ஜிக்கல் ஸ்டிரைக்”.

2019 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்களில் மோடி, புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 40 இராணுவ வீரர்களின் புகைப்படங்களை வைத்து மக்களிடையே தேசவெறியைத் தூண்டி, தேசத்திற்கு பாதுகாவலனாக தன்னை முன்னிறுத்திக் கொண்டதைப் போல, தற்போது நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் கருப்புப் பண முதலைகளை ஒழித்துக் கட்டுபவராக மீண்டும் தன்னை முன்னிறுத்திக் கொள்கிறார்.

ஆனால், 2016இல் மேற்கொள்ளப்பட்ட “முதலாவது சர்ஜிக்கல் ஸ்டிரைக்கே” ஊத்திக் கொண்டது என்பதுதான் வரலாறு. இதை ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.  2017-18 ஆம் ஆண்டிற்கான ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கையில், பணமதிப்பழிப்பு செய்யப்பட்ட 15.41 லட்சம் கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகளில், ஜூன் 30, 2017க்குள் 15.31 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நோட்டுகள் திரும்பி வந்ததாக தெரிவித்துள்ளது. அதாவது, 99 சதவிகிதம் திரும்பி வந்துவிட்டன. 100 சதவிகிதம் நோட்டுக்கள் திரும்பி வந்துவிட்டதாக தெரிவிக்கிறார், முதலாளித்துவ பொருளாதார அறிஞர் ஆனந்த் சீனிவாசன். இவையெல்லாம் மீண்டும் மீண்டும் அம்பலப்படுத்தப் பட்டவைதான்.

மேலோட்டமாக பார்த்தால் மீண்டும் ஒரு பணமதிப்பழிப்பு என்பது கோமாளித்தனமாகத் தெரியும். ஆனால், தங்களது இணைய வானரப்படைகள் மூலம் எதையும் நம்பவைத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் மோடி அரசு களமிறங்கியுள்ளது. மேலும், சாதாரண மக்களிடம் இன்றளவும் கருப்புப் பணத்தை பற்றி உள்ள தவறான புரிதல்கள் சங்கிகளின் பிரச்சாரத்திற்கு அடிப்படையாக உள்ளன. நாட்டின் வளர்ச்சிக்கு கருப்புப் பணம் தடையாக இருக்கிறது என்றும், அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கட்டுக்கட்டாக கருப்புப் பணத்தை மூட்டையாக கட்டியும், சூட்கேசில் அடைத்தும் மர்மமாக மறைத்து வைத்திருப்பதாகவும் நம்புகின்றனர். அந்த கருத்துகளையே ஊடகங்கள் விதைக்கின்றன.

கார்ப்பரேட்டுகள்தான் பெரும் கருப்புப் பண முதலைகள்!

அரசியல்வாதிகளிடமும் அதிகாரிகளிடமும் கருப்பு பணம் இல்லை என்று நாம் கூறவில்லை. இவர்கள் தங்களிடம் உள்ள பெரும்பாலான கருப்புப் பணத்தை முதலீடுகளாகவும் சொத்துகளாகவும் மாற்றி வைத்துள்ளனர். விதிவிலக்காக சிலர் ரொக்கமாக வைத்து இருக்கலாம். அது ஒப்பீட்டளவில் மிகக் குறைந்த அளவு. இவையே சில இடங்களில் போலீசில் பிடிபடுகின்றன. சமீபத்தில்கூட, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் யோஜனா பவன் என்ற அரசு அலுவலகத்தில் சூட்கேசில் கட்டுக்கட்டாக 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மொத்த கருப்புப் பணத்தில், அரசியல்வாதிகளிடமும் அதிகாரிகளிடமும் இருக்கும் பணம் மிகக் குறைவான அளவுதான். வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணம் 120 இலட்சம் கோடி ரூபாய் வரை இருக்கலாம் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இவ்வளவு பணத்தை பதுக்கி வைத்திருப்பர்களா? சிலர் இருக்கலாம். பெரும் அளவிலான கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்பது அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகள்தான்.

கார்ப்பரேட் முதலாளிகள் இலட்சக்கணக்கான கோடிகள் கருப்புப் பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருந்து, அவற்றை தங்களுடைய பினாமி நிறுவனங்கள் மூலம் அந்நிய முதலீடுகளாக இந்தியாவில் முதலீடு செய்து வருகின்றனர். மிகப்பெரும் அளவிலான கருப்புப் பணம் சுழன்று கொண்டே இருக்கிறதே தவிர, எங்கும் நிலையாக பதுக்கி வைக்கப்படவில்லை.

கோமாளித்தனமல்ல, கார்ப்பரேட்டுகளுக்கு விருந்து!

இரு பணமதிப்பழிப்பு நடவடிக்கைகளையும் விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பெரும்பாலானோர், முட்டாள்தனமான நடவடிக்கை என்ற விமர்சனத்தையே முன்வைக்கின்றனர். பாசிசக் கும்பலை குறைத்து மதிப்பீடுகின்றனர்.

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், “அதிக அளவில் பரிமாற்றத்திலிருந்த ரூ.500, ரூ.1,000 பணமதிப்பு நீக்கம் என்ற முட்டாள்தனமான முடிவை மூடி மறைக்க ரூ.2,000 நோட்டு கட்டுக்கட்டாக அறிமுகம் செய்யப்பட்டது” என்றும்; மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரரான துஷார் காந்தி, “நவீன துக்ளக்கின் உச்சகட்ட முட்டாள்தனம்” என்றும் கூறியுள்ளனர்.

இது முட்டாள்தனமான நடவடிக்கை அல்ல. காவிக் கும்பலின் மிகப்பெரிய சதித்திட்டமாகும். கருப்புப் பணத்தை ஒழிப்பதாக கூறிக்கொண்டு, யார் கருப்புப் பணத்தின் ஊற்றுக் கண்களோ அவர்களிடம் (அம்பானி, அதானி, வேதாந்தா போன்ற கார்ப்பரேட் முதலாளிகளிடம்) மக்களின் சேமிப்பை ஒட்ட சுரண்டி ஒப்படைப்பதாகும். மேலும் இது கருப்புப் பண முதலைகளின் மீதான தாக்குதல் அல்ல. மக்களின் மீதான பாசிசத் தாக்குதலாகும்.

பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை, “மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பு ஏற்படுத்தாமல் கிளீன் நோட் பாலிசியில் உயர்ந்த மதிப்பு கொண்ட இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுகிறார்கள். இன்னும் 10 வருடங்களில் 500 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற்று விடுவார்கள். உயர்ந்த மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும்போது, மக்கள் ஆன்லைன் பரிவர்த்தனையை நோக்கி செல்ல ஆரம்பிப்பார்கள்” என்று கூறியுள்ளார்.

2016 பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் போது மோடி தன் உரையில், பணப்பொருளாதாரத்தை அழித்து அனைவரையும் வங்கிப் பொருளாதாரத்துக்குள் கொண்டு வரப்போகிறேன் என்று கூறியிருந்தார்.

அதாவது, மோடி அரசு பணப் பரிவர்த்தனைகளை படிப்படியாக ஒழித்து, டிஜிட்டல் பரிவர்த்தனைக்குள் மக்களை நெட்டித் தள்ளி வருகிறது. 2016 பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. 2017 ஜனவரியில் 0.45 கோடியாக இருந்த டிஜிட்டல் பரிவர்த்தனைகள், 2023 ஜனவரியில் 804 கோடியாக மிகப்பெருமளவு அதிகரித்துள்ளது.

இதன் மூலம் மக்களின் பணம் வங்கிகளில் குவிக்கப்படுகிறது. 2011ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்ள வங்கிகளில் 50 லட்சம் கோடி ரூபாயாக இருந்த டெபாசிட்டுகள், 2021 மார்ச் இறுதிக்குள் 150 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டி விட்டது. டெபாசிட்டுகள் 5 ஆண்டுகளுக்கு 50 லட்சம் கோடி ரூபாய் என்ற விகிதத்தில் அதிகரிப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

படிக்க : செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்த ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழ்நாட்டிலிருந்து விரட்டியடி! | மக்கள் அதிகாரம்

ஒருபுறம், மக்களின் சுருக்கு பையிலும் சேமிப்பு உண்டியல்களிலும் இருக்கும் பணம் உட்பட வங்கிகளில் மலை போல குவிக்கப்பட்டு வருகிறது. மறுபுறம், பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கான முயற்சிகள் மோடி அரசால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதாவது, அம்பானி, அதானி, வேதாந்தா போன்ற கார்ப்பரேட் கும்பல்கள் மக்களின் சேமிப்பை சூறையாடுவதற்கு மோடி அரசே வழியேற்படுத்திக் கொடுக்கிறது.

“கருப்புப் பணம்”, “கள்ளப் பணம்”, “ஊழல் ஒழிப்பு” போன்ற பெயரில் மக்கள் முன் தங்கள் பிம்பத்தை நிறுத்திக் கொள்வது மட்டுமல்லாமல், மக்களை டிஜிட்டல் பரிவர்த்தனைக்குள் நெட்டித் தள்ளி கார்ப்பரேட் கும்பல்கள் மக்களின் பணத்தை சூறையாட வழியேற்படுத்திக் கொடுக்கிறார்கள் காவி பாசிஸ்டுகள்.

எனவே, காவி பாசிஸ்டுகளின் கருப்புப் பண ஒழிப்பு நாடகத்தையும், அதற்கு பின்னால் திரைமறைவில் மக்களின் சேமிப்பை சூறையாடுவதற்காக உள்ள சதித்திட்டத்தையும் அம்பலப்படுத்தி பிரச்சாரங்களையும் போராட்டங்களையும் கட்டியமைக்க வேண்டியது சமூக அக்கறை கொண்ட ஒவ்வொருவரின் கடமையாகும்.

– சிவராமன்
புதியஜனநாயகம்
ஜூன் 2023

பழங்குடியின அடிப்படையில் சாதி சான்றிதழ் கொடுக்க மறுக்கும் அரசு – பறிபோகும் பழங்குடி மாணவர்களின் உயர்கல்வி.

பிச்சை எடுத்தாவது கல்வி கற்கவேண்டும் என்ற மரபுக் கொண்ட இந்த தமிழ் மண்ணில், கல்வி பெறுவதற்கான சாதி சான்றிதழ் இல்லாததால் பல ஆண்டுகளாக ஆதியன் பழங்குடியின மக்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு வருகிறது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தொகுதி கச்சனம் பஞ்சாயித்துக்கு உட்பட்ட ஆப்பரக்குடி என்ற கிராமத்தில் 485 க்கும் மேற்பட்ட ஆதியன் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். நாடோடியாக அலைந்து திரிந்த  ஆதியன் பழங்குடியின மக்களில் சிலர் கடந்த  40 ஆண்டுகளாக ஆப்பரக்குடியில் தங்களுக்கு என்று  குடிப்பிருப்புகளை அமைந்துக் கொண்டு  பிளாஸ்டிக் விற்பனை, பாசிமணி, திருஷ்டி பொருட்கள் விற்பது என பல்வேறு வேலைக்கு சென்று வருகின்றனர். இச்சமூக மக்களின் பிரதான வேலையாக இசை கருவி செய்து தருவதும், இசை கருவி வாசிப்பதென தமிழ்நாட்டியின் பல்வேறு பகுதிகளில் இசை கருவி வாசிக்கவும் சென்று வருகின்றனர். இருவர்களுக்கு  என்று சொந்தமாக பட்டா நிலம் கூட கிடையாது கோவில் நிலத்தில் தான் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.

இந்த கிராமத்தைச் சேர்ந்த 7 மாணவர்கள்  12 வகுப்பு பொதுத்தேர்வில்  நல்ல மதிப்பெண் பெற்றிருந்த போதிலும்  ”சாதி சான்றிதழ்” இல்லாததால் கல்லூரி சேர முடியாத அவலநிலையில் உள்ளனர். இது தொடர்பாக கலெக்டரிடம் மனு கொடுத்த போதும் இதுவரை அதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளாமல் இருந்து வருகிறது.

படிக்க : பீகார்: ‘பசுப் பாதுகாப்பு’ என்ற பெயரில் மீண்டும் ஒர் படுகொலை!

வறுமை கோட்டிற்கு கீழ்வாழும் இச்சமூக மக்கள் கடந்த 20 ஆண்டுகளாகதான் தங்களின் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முயன்று வருகின்றனர். குடும்ப வறுமையை தாண்டி மாணவர்கள் பள்ளிக்கு சென்றிருந்தாலும் சாதி சான்றிதழ் இல்லாததால் அவர்களால் 8 வகுப்பை தாண்டி படிக்க முடியாத சூழல் உள்ளது.  எட்டாம் வகுப்பு வரை மாணவர்களின் மாற்றுச் சான்றிதழில் ஆதியன் பழங்குடி என்று இருப்பதை  எட்டாம் வகுப்பு முடியும் போது MBC என்று பள்ளி நிர்வாகம் சுழித்து மாற்றிவிடுவதாகவும் பெற்றோர் மற்றும் மாணவர்கள் கூறுகின்றனர்.  மன்னார்குடி வருவார் கோட்டாச்சியர் அலுவலகம் சென்றாலும் பிற்படுத்தப்பட்டோர் அடிப்படையில் தான் சாதி சான்றிதழ் வழங்கமுடியும் என்று அதிகாரிகள் கூறுகின்றர்.

ஆதியன் பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தபோதிலும் இவர்களுக்கு திருவாரூர் மாவட்ட நிர்வாகமோ மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை சேர்ந்த ஜோகி சமூகம் என்று சாதி சான்றிதழ் வழங்கியுள்ளது.

ஆனால் எதன் அடிப்படையில் இவர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு சேர்ந்தவர்  என்று சான்றிதழ் வழங்கப்பட்டது என்று ஆதராம் இல்லை. ஜோகி சமூகம் என்பது வட மாநிலத்தில் வசிக்கும் ஒரு சமூக பிரிவு மக்கள் ஆகும். மக்களின் உண்மையான வாழ்க்கை நிலையை நேரில் சென்று அரசு அதிகாரிகள் பார்வை இடமால் யாரோ சொல்லியதை வைத்து இந்த சான்றிதழில் வழங்கி இருப்பதாக ஊர் பொதுமக்கள் கூறுகின்றனர்.இதனால் அரசு தரக்கூடிய இடஒதுக்கீடு மற்றும் அரசு சலுகைகளை கூட இச்சமூக மக்கள் பெறமுடியாத நிலையில் உள்ளனர்.

ஆனால் திருவாரூர் மாவட்டத்திற்குள் திருவாஞ்சியம் பகுதியில் வசிக்கும் ஆதியன் சமூக மக்களுக்கு பழங்குடி அடிப்படையில் சான்றிதழ் வழங்கியுள்ள மாவட்ட நிர்வாகம் அதே மாவட்டத்தில் ஆப்பரக்குடியில் வசிக்கும் ஆதியன் சமூக மக்களுக்கு மட்டும் பழங்குடி அடிப்படையில் சான்றிதழ் கொடுக்க மறுக்கிறது. ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன் திருவாஞ்சியத்தில் வசிப்பதால் பழங்குடி அடிப்படையில் சான்றிதழும் தம்பி ஆப்பரக்குடியில் வசிப்பதால் MBC  அடிப்படையில் சான்றிதழ் என வெவ்வேறு பெயர்களில் மாவட்ட நிர்வாகம் சான்றிதழ் வழங்கியுள்ளது.

ஒரே சமூகத்தை சேர்ந்த மக்கள் அதே  மாவட்டத்தில் வெவ்வேறு பகுதியில் வசிப்பதால் வெவ்வேறு சாதி சான்றிதழ் வழங்கி இருக்கும் முறை என்பது அரசின் அலட்சிய போக்கை தெளிவாக காட்டுகிறது. ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன் திருவாஞ்சியத்தில் வசிப்பதால பழங்குடி சான்றிதழும் தம்பி ஆப்பரக்குடியில் வசிப்பதால் MBC  அடிப்படையில் சான்றிதழ் என வெவ்வேறு பெயர்களில் மாவட்ட நிர்வாகம் சான்றிதழ் வழங்கியுள்ளதாக ஊர் மக்கள் கூறுகின்றனர்.

நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, திருச்சி போன்ற மாவட்டங்களில் வசிக்கும் ஆதியன் சமூக மக்களுக்கு பழங்குடியினர் அடிப்படையில் சாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஆப்பரக்குடி, மன்னார்குடி, திருத்துறைபூண்டி, விளத்தூர் போன்ற பகுதியில் வசித்து வரும் ஆதியன் சமூக மக்களுக்கு மட்டும் பழங்குடி அடிப்படையில் சாதி சான்றிதழ் வழங்காமல் காலம் தாழ்த்திவருகிறது மாவட்ட நிர்வாகம். இது தொடர்பாக பல முறை மன்னார்குடி வருவாய் கோட்டாச்சியர் அலுவலகம் அலைந்தும் இவர்களும் தீர்வு கிடைக்கவில்லை.

இதைபற்றி ஆப்பரக்குடி பகுதியில் வசிக்கும் ஒருவரிடம் பேசிய போது ”நீங்கள் எங்களை பற்றி செய்தி சேகரிக்க வந்துள்ளீர்கள் எங்களுக்கும் சாதி சான்றிதழ் கிடைத்திருந்தால் உங்களை போல்  எங்கள் பிள்ளைகளும் நன்றாக படித்துவிட்டு நல்ல நிலைமைக்கு வந்து உங்களை போல் செய்தியாளராக ஆகி இருப்பார்கள் என்று கூறினார். 70 க்கும் மேற்பட்ட மனுக்கள் அரசிடம் கொடுத்தப் போதும் இதுவரை எங்களுக்கான நீதி கிடைக்கவில்லை, நாங்கள் எங்கள் நாடோடி வாழ்க்கையை  விட்டுவிட்டு எங்கள்  பிள்ளைகளை படிக்கவைக்க விருப்புகிறோம் ஆனால் இந்த அரசு எங்களுக்கு பழங்குடி அடிப்படையில் சாதி சான்றிதழ் வழங்காமல் வேறு பெயரில் சாதி சான்றிதழ் வழங்கி எங்களின் பிள்ளைகளின் படிப்பை பறித்து வருகிறது 30 ஆண்டுகாளக போராடியும் பயன் ஏதுமில்லை” என்று கூறினார்.

ஆப்பரக்குடியை சேர்ந்த மாணவர்கள் கபடி மற்றும் சிலம்பம் போன்ற விளையாட்டுகளை விளையாடும் திறன் கொண்ட மாணவர்களாக இருந்த போதிலும் சாதி சான்றிதழ் இல்லாததால்  உயர்கல்வி சேர முடியாத நிலையுள்ளது. தற்போது ஆப்பரக்குடியில் இருந்து 80 மாணவர்கள் பள்ளியில் கல்வி படித்துவரும் நிலையில் சாதி சான்றிதழ் இல்லாததால் அவர்களின் எதிர்கால வாழ்க்கையையும் கேள்விகுறியாக்கி உள்ளது.  சாதி சான்றிதழ் வழங்க வேண்டிய மன்னார்குடி வருவாய் கோட்டாச்சியர் அலுவலகமும் மாவட்ட நிர்வாகமும்  மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்காமல் மாணவர்களின் கனவுகளை சீரழித்துவருகிறது.

கடந்த வாரம் திருவண்ணாமலை – திருக்கோவிலூர் எடப்பாளையம் கிராமம், எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற மாணவி 12 வகுப்பு பொதுத்தேர்வில் 375 மதிப்பெண் பெற்றிருந்த போதும் பன்னியாண்டி அடிப்படையில் பழங்குடி சாதி சான்றிதழ் இல்லாததால் உயர்கல்வி சேர முடியாத மனஉளைச்சலில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இடஒதுக்கீடு பெறுவதற்கு அடிப்படையாக உள்ள சாதி சான்றிதழ் அரசு முறையாக வழங்காமல் அந்த சமூக மக்களின் வாழ்க்கையை தொடர்ச்சியாக படுகுழியில் தள்ளிவருகிறது.

படிக்க : இந்திரா காந்தியின் எமர்ஜென்சியும் சங்கப் பரிவாரத்தின் ஆதரவும்!

அனைத்துக் கல்லூரிகளிலும் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு முடியபோகும் நிலையில் இதுவரை ஆப்பரக்குடி மாணவர்களுக்கு பழங்குடியினர் அடிப்படையில் சாதி சான்றிதழ் வழங்கவில்லை.  இதனால்  கல்லூரி சேர விண்ணபிக்க முடியாமலும், கல்லூரி கலந்தாய்வில் சாதி சான்றிதழ் ஒப்படைக்க முடியாமலூம்  மாணவர்கள் தவித்துவருகின்றனர்.

பல கோடி செலவு செய்து கலைஞர் கோட்டம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறக்கும் திராவிட மாடல் அரசு சொந்த மாவட்டத்தில் கல்விக்காக ஏங்கி கொண்டிருக்கும் மாணவர்களை கண்கொண்டு பார்க்க மறுக்கிறது.

சமூக நீதி அரசு, கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசு என்றெல்லாம் மேடைகளில் பேசும் திமுக அரசு உடனடியாக இந்த பிரச்சனையில் தலையிட்டு சாதி சான்றிதழ்காக போராடும் மாணவர்களுக்கு பழங்குடியினர் அடிப்படையில் சாதி சான்றிதழ் கிடைப்பதை உறுதிச் செய்யவேண்டும்.

வினவு களச்செய்தியாளர்

இட ஒதுக்கீட்டைத் தடை செய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

0

மெரிக்காவில், கடந்த ஜூன் 29 அன்று, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பல்கலைக்கழக சேர்க்கையில் இனத்தை ஒரு காரணியாகக் கருத முடியாது என்று‌ அது கூறியுள்ளது.

அமெரிக்காவில் இட ஒதுக்கீட்டை உறுதியான நடவடிக்கை (affirmative action) என்று கூறுவார்கள். இதனை நேர்மறை பாகுபாடு (positive discrimination) என்றும் அழைப்பார்கள்.

அமெரிக்காவில் கறுப்பினத்தவர் பல நூற்றாண்டுகளாக அடிமைகளாக நடத்தப்பட்டனர். அங்கு சட்டரீதியாக அடிமை முறை ஒழிக்கப்பட்டுப் பல ஆண்டுகளாகியும் இன்னும் இனப் பாகுபாடு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இதன் காரணமாக, கறுப்பின மற்றும் இலத்தீன் இன மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை அதிகப்படுத்தும் பொருட்டு, அங்கு உறுதியான நடவடிக்கை கொள்கைகள் (affirmative action efforts) என்ற பெயரில் இன அடிப்படையிலான இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுகிறது. மாணவர் சேர்க்கையின்போது அவர்கள் இனத்தை அறிந்து கொள்ளும் வகையில் விண்ணப்பப்படிவங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கும். கல்வி நிறுவனங்களில் பன்முகத்தன்மையை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த முறை 1960-களில் இருந்து பின்பற்றப்பட்டு வருகிறது.


படிக்க: அமெரிக்க கருப்பின மக்கள் மீது தொடரும் நிறவெறித் தாக்குதல் !


கன்சர்வேடிவ் சட்ட நிபுணரான எட்வர்ட் ப்ளூம் தலைமையில் இயங்கும் “நியாயமான சேர்க்கைக்கான மாணவர்கள்” (Students for Fair Admissions) என்ற அமைப்பு இன அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று இரண்டு வழக்குகளை உச்ச நீதிமன்றத்தில் தொடுத்திருந்தது. இவ்வமைப்பு இட ஒதுக்கீட்டுக்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டு வரும் அமைப்பாகும்.

ஹார்வர்டின் சேர்க்கைக் கொள்கை ஆசிய அமெரிக்க (Asian Americans) விண்ணப்பதாரர்களுக்கு எதிராகச் சட்டவிரோத பாகுபாடு காட்டுவதாகக் கூறி ஒரு வழக்கு தொடரப்பட்டிருந்தது. வடக்கு கரோலினா பல்கலைக்கழகம் வெள்ளை மற்றும் ஆசிய அமெரிக்க விண்ணப்பதாரர்களுக்கு எதிராகச் சட்டவிரோத பாகுபாடு காட்டுவதாகக் கூறி மேலுமொரு வழக்கு  தொடரப்பட்டிருந்தது.

உச்ச நீதிமன்றம் ஹார்வர்ட் தொடர்பான வழக்கில்  6-2 என்ற கணக்கிலும், வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்திற்கு எதிரான வழக்கில் 6-3 என்ற கணக்கிலும் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கியது.

தலைமை நீதிபதி ஜான் ஜி ராபர்ட்ஸ் தனது தீர்ப்பில் “மாணவர்களை தனிநபர்களாக அவர்களின் அனுபவங்களின் அடிப்படையில் மதிப்பிட வேண்டும்; இனத்தின் அடிப்படையில் அல்ல. பல பல்கலைக்கழகங்கள் நீண்ட காலமாக இதற்கு நேர்மாறாகச் செய்துள்ளன. அவ்வாறு செய்ததன் மூலம், ஒரு தனிநபரை மதிப்பிடுவதற்கு அவரது திறமைக்கு மாறாக அவரது தோலின் நிறத்தை உரைகல்லாக பயன்படுத்தியுள்ளனர். நமது அரசியலமைப்பு அதைச் சகித்துக்கொள்ளாது” என்று கூறியுள்ளார்.


படிக்க: கருத்துரிமை, ஊழல், சுரண்டல், நிறவெறி – தோழர் கலையரசனின் உலகச் செய்திகள் !


அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கடுமையாகச் சாடியுள்ளார். அவர் “அமெரிக்காவில் பாகுபாடு இன்னும் நீடிக்கிறது. இன்றைய தீர்ப்பு அதை மாற்றிவிடாது. இது அனைவரும் அறிந்த உண்மையாகும்” என்று கூறியுள்ளார்.

முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சித்துள்ளார். அவர்‌ “அனைத்து மாணவர்களுக்கும் வெற்றி வாய்ப்பை உறுதி செய்ய உறுதியான நடவடிக்கை (affirmative action) போன்ற கொள்கைகள் அவசியம். சமத்துவ சமூகத்தை நோக்கிய பாதையில் உறுதியான நடவடிக்கை (affirmative action) ஒருபோதும் முழுமையான தீர்வாக இருக்கவில்லை. ஆனால் அமெரிக்காவின் பெரும்பாலான முக்கிய நிறுவனங்களிலிருந்து பல தலைமுறையாகத் திட்டமிட்டு விலக்கப்பட்ட எங்களுக்கு, நாங்களும் தகுதியானவர்கள் தான் என்று நிரூபித்துக் காட்ட இது எங்களுக்கு வாய்ப்பளித்தது” என்று கூறியுள்ளார்.

பாசிஸ்ட் டொனால்ட் டிரம்ப் “இது அமெரிக்காவுக்கு ஒரு சிறந்த நாள்” என்று இத்தீர்ப்பு குறித்துக் கூறியுள்ளார்.

ஏற்கனவே அரிசோனா, கலிபோர்னியா, புளோரிடா, இடாஹோ, மிச்சிகன், நெப்ராஸ்கா, நியூ ஹாம்ப்ஷயர், ஓக்லஹோமா மற்றும் வாஷிங்டன் ஆகிய ஒன்பது மாகாணங்களில் பொதுக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இன அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்யும் இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பானது கறுப்பின மக்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் செயலாகும். அமெரிக்கச் சமூகத்தில் நிலவும் இனப் பாகுபாட்டைப் பாதுகாத்து நிலை பெறச் செய்வதற்கான பாசிச‌ இனவெறி நடவடிக்கையாகும்.


பொம்மி

நெஞ்சமெல்லாம் லிங்கன் | நினைவுப் பகிர்தல் | நேரலை

நெஞ்சமெல்லாம் லிங்கன் | நினைவுப் பகிர்தல்

01.07.2023 | மாலை 5 மணி
ரிப்போர்ட்டர்ஸ் கில்டு, சேப்பாக்கம், சென்னை.

பாகம் : 1

பாகம் 2:

வழக்குரைஞர் சங்கர சுப்பு

வழக்குரைஞர் சத்ய சந்திரன்

வழக்குரைஞர் கிருஷ்ணகுமார்,
MHAA, செயலாளர்.

வழக்குரைஞர் ரஜினிகாந்த்,
மாநில துணைப் பொதுச்செயலாளர், வி.சி.க.

வழக்குரைஞர் ஜான்சன்

தோழர் கு.பாரதி,
தென்னிந்திய மீனவர் சங்கம்.

தோழர் பிரின்ஸ் கஜேந்திர பாபு,
பொதுப்பள்ளிக்கான மாநில மேடை.

முனைவர் பகத்சிங், ஆய்வாளர்.

தோழர் மனிதி செல்வி

தோழர் தியாகு,
பொதுச் செயலாளர்,
தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்.

தோழர் ரமணி,
மாநிலப் பொதுச்செயலாளர்,
சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி.

வழக்குரைஞர் பாவேந்தன்,
தமிழக மக்கள் முன்னணி.

தோழர் அதியமான்,
மாநிலச்செயலாளர்,
AICCTU.

தோழர் சாலமன்,
மாநிலக்குழு உறுப்பினர்,
அம்பேத்கர் பொதுவுடமை முன்னணி.

தோழர் அமிர்தா,
மக்கள் அதிகாரம்,
மாநில தலைமைக்குழு உறுப்பினர்.

மற்றும் தோழர் லிங்கனுடன் இணைந்து பணியாற்றிய சமூக இயக்கங்களைச் சார்ந்த தோழர்கள்.

தலைமை: இராமு(எ)மருது, தொடக்க உரை: கார்க்கி வேலன்,
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: புளியந்தோப்பு மோகன், நிறைவுரை: மகிழன்

7358556847, 9710392882, 9840327140, 8939136163, 9025870613

பீகார்: ‘பசுப் பாதுகாப்பு’ என்ற பெயரில் மீண்டும் ஒர் படுகொலை!

0

டந்த ஜூன் 28 அன்று பீகாரின் சரண் மாவட்டத்தில் மாட்டிறைச்சியை வாகனத்தில் கொண்டு சென்றதாக் கூறி முஸ்லீம் ஒருவரை ஒரு கும்பல் அடித்துக் கொலை செய்துள்ளது. பக்ரீத் பண்டிகைக்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

சரண் மாவட்டத்தின் மஜ்வாலியா கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் ஜஹிருதீன் அம்மாவட்டத்தில் உள்ள நாகரா (Nagara) எலும்பு தொழிற்சாலைக்கு சென்று கொண்டிருந்தார். பத்ராஹா பஜார் அருகே சென்று கொண்டிருந்த போது அவரது கன்டெய்னர் லாரி பழுதானது. ஜஹிருதீன், அவரது உதவியாளர் மற்றும் சில தொழிலாளர்கள் வாகனத்தை சரிசெய்ய முயன்றனர்.

அப்போது அங்கு வந்த சுமார் 40 பேரைக் கொண்ட கும்பல் அவர்களுக்கு உதவுவதாகக் கூறியது. பின்னர் வாகனத்தில் இருந்து துர்நாற்றம் வீசியதால் கன்டெய்னரைத் திறக்கும்படி கட்டாயப்படுத்தியது. விலங்குகளின் எலும்புகள் லாரியில் இருப்பதாகவும், மருத்துவ நோக்கங்களுக்காக அதை நகராவில் உள்ள தொழிற்சாலைக்கு கொண்டு செல்வதாகவும் லாரியில் இருந்தவர்கள் பதிலளித்தனர். இதனையடுத்து அந்த கும்பல் அவர்களை தாக்கத் தொடங்கிவிட்டது.


படிக்க: மகாராஷ்டிரா: முஸ்லீம் மக்களை படுகொலை செய்யும் பசு குண்டர் படை!


அச்சமடைந்த உதவியாளரும் மற்ற தொழிலாளர்களும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். ஜஹாருதீனின் காலில் இரும்பு கம்பி பொருத்தப்பட்டிருந்ததால் அவரால் ஓட முடியவில்லை. அந்த கும்பல் அவரை கொடூரமாக தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த ஜலால்பூரின் உள்ளூர் போலீசு இதில் தலையிடவில்லை.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஜாஹிருதீன் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக பீகார் போலீசு கூறியது. கன்டெய்னரில் இருந்து மீட்கப்பட்ட எலும்புகளின் மாதிரிகள் தடயவியல் சோதனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இறந்தவர் மாட்டிறைச்சியை கொண்டு சென்றாரா என்பதை உறுதிப்படுத்த விசாரணை நடந்து வருவதாகவும் போலீசு தெரிவித்தது.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் 8 பேர் மீதும் அடையாளம் தெரியாத 30 பேர் மீதும் முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி கூறினார். 20 சந்தேகநபர்கள் (suspects) கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஏனையவர்களை கைது செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


படிக்க: ‘பசு பாதுகாப்பு’ எனும் ஆயுதத்தை சுழற்றும் பாசிஸ்டுகள்!


பீகார் விலங்குகள் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுச் சட்டம், 1955, பசுக்கள் மற்றும் கன்றுகளை கெல்வதைத் தடை செய்கிறது. ஆனால் 15 வயது அல்லது அதற்கு மேற்பட்ட அல்லது ஊனமுற்ற மாடுகளை வெட்ட அனுமதிக்கிறது. இது போன்ற பசுவதை தடைச் சட்டங்கள் ‘பசு பாதுகாப்பு’ என்ற பெயரில் சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்த ஏதுவாக இருக்கின்றன.

மார்ச் 2023-இல், இதே சரண் மாவட்டத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் ‘பசு பாதுகாப்பு’ கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். அதேபோல் 2019 ஆம்-ஆண்டில், சரணில் கால்நடை திருட்டு சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் கிராம மக்களால் அடித்துக் கொல்லப்பட்டனர்; ஒருவர் படுகாயமடைந்தார்.

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இது போன்ற பாசிச தாக்குதல்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. பாசிசத்தை வீழ்த்தாமல் இதுபோன்ற வன்முறை வெறியாட்டங்களைத் தடுக்க முடியாது.


பொம்மி

கால் மேல் கால் போட்டு உட்காரலாமா?

ழக்குரைஞர் ஒருவரைச் சந்திப்பதற்காக கீழமை  நீதிமன்றத்திற்கு வண்ண உடையில்  சென்றிருந்தேன். நான் பார்க்க வேண்டிய வழக்குரைஞர் நீதிமன்றத்திற்குள் இருந்தார். நான் நீதிமன்றத்திற்கு வெளியே கொஞ்ச தூரம் தள்ளி வெளியே போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தேன். நான் அமர்ந்திருந்த பெஞ்சுக்கு எதிரில் இருந்த நீதிமன்றத்தில் யாரும் இல்லை, நீதிமன்ற பணிகள் எதுவும் நடைபெறவில்லை . அரை மணி நேரம் ஆனது, செல்பேசியில் செய்திகள் பார்த்துக் கொண்டிருந்தேன்.

திடீரென பெண் காவலர் ஒருவர் வந்தார். “சார் கால் மேல கால் போட்டு உட்காராதீங்க ” என்று சொல்லிவிட்டுச் சென்றார். எனக்குச் சுருக்கென்று கோபம் வந்தது.  நான் கால் மேல் கால் போட்டிருந்ததை எடுக்கவே இல்லை . பத்து நிமிடம் என்னைப் பார்த்துக் கொண்டே  இருந்தார். பிறகு நானே அவரிடம் நேரில் சென்று கேட்டேன்.

“ஏன் கால் மேல கால் போட கூடாதுன்னு சொன்னீங்க?”

“ஜட்ஜ் வருவாங்க”

“நீதிமன்றத்தில்  எந்த நடவடிக்கையும் இல்லாமத்தான இருக்கு . நீதிபதி வரும் பொழுது யாராவது அவரை அவமரியாதை செய்வார்களா? அந்த குறைந்த பட்சம் நாகரிகம் கூட இல்லாமலா நாங்க இருக்கிறோம்?”

“அதை என்கிட்ட சொல்லாதீங்க ஜட்ஜ் கிட்ட சொல்லுங்க”

“நான் கால் மேல கால் போட்டு உட்கார்ந்திருக்கிற போது மற்றவர்களை எப்படி அவமானப்படுத்தும்?

எத்தனை நாளைக்கு செருப்பு போடாதீங்க, கால் மேல கால் போடாதீங்க ,  கூளை கும்பிடு போடுன்னு  சொல்லிட்டே இருப்பீங்க?” என்றேன் காட்டமாக.

அதற்கு அந்தப் பெண் காவலரிடம் பதில் ஏதுமில்லை.


படிக்க: செந்தில் பாலாஜி கைது! THE UNCONDITIONAL SUPPORT அரசியல்!


கடந்த 13 வருடமாகச் சென்னையில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களுக்குப் பலமுறை சென்று வந்திருக்கிறேன். நீதிமன்ற வளாகத்தில் கால் மேல் கால் போட்டு உட்காரக் கூடாது என்று யாரும் சொன்னது இல்லை.

கால் மேல் கால் போட்டு உட்காருவது என்பது போலீசின் அதிகாரத்தைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது என்பது தான் பிரச்சனை. என்னிடம் பேசிய அந்த பெண் போலீசு நீளமாக முடி வளர்க்காமல் கட்டிங் செய்திருந்தார். முடி வளர்ப்பது தேவையற்றது என்று கருதி முடிவெடுத்த அவரால் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து இருப்பது சாதாரண செயலாக, இது ஒரு மனிதனின் தனிப்பட்ட உரிமையாகக் கருத முடியவில்லை.

இது சாதிய, அதிகார வர்க்கப் புத்தி!

ஆண்டைத் தனமான கலாச்சாரங்களின் குரல்கள் ஒலிக்கும் போதெல்லாம் அவற்றின் செவிட்டில் அறைவதே நம்முடைய முதல் வேலையாக இருக்க வேண்டும்.


மருது

பற்றி எரிகிறது மணிப்பூர் | மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் – நேரலை!

பற்றி எரிகிறது மணிப்பூர்! பற்ற வைத்தது காவி பாசிஸ்டுகள்!

கண்டன ஆர்ப்பாட்டம்

இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருவள்ளுவர் சிலை அருகில்
நேரம் : காலை 10.30 மணி
நாள் : 01.07.23

ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி அம்பானி-அதானி பாசிசத்தை வீழ்த்தாமல் வாழ்வில்லை என்பதை மீண்டும் நிரூபிக்கிறது மணிப்பூர்.

பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியை கட்டியமைப்போம்!
பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசை உருவாக்கப் போராடுவோம்!

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
மக்கள் அதிகாரம்,
மதுரை மண்டலம்.

புதிய ஜனநாயகம் – ஜூலை 2023 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகத்தின் ஜூலை – 2023 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..

சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.240
இரண்டாண்டு சந்தா – ரூ.480
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,200

புதிய ஜனநாயகம் – ஜூலை 2023 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் !

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல்: puthiyajananayagam@gmail.com

அச்சு இதழ் விலை: ரூ.20 + தபால் செலவு ரூ.5 : மொத்தம் ரூ.25
G-Pay மூலம் பணம் செலுத்த: 94446 32561

வங்கி மூலம் செலுத்த:
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444.

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

♦ தலையங்கம்: நீட் தேர்வு: பிரபஞ்சன்களும் அனிதாக்களும்!
♦ ஒடிசா ரயில் விபத்து: மறுகாலனியாக்கத்தின் கோரமுகம்!
♦ லுலு ஹைப்பர் மார்க்கெட்: எல்லா மாடலும் கார்ப்பரேட் சேவைக்கே! கார்ப்பரேட் சேவையில் ‘எம்மதமும் சம்மதமே’!
♦ அமுல் விரிவாக்கத்துக்குப் பின்னே அம்பானியின் ஏகபோக விருப்பம்!
♦ கழண்டது முகமூடி: பாசிசக் கும்பலின் தோல்வி முகமும் பாசிச எதிர்ப்பு சக்திகளின் செயலூக்கமிக்க போராட்டமும்!
♦ தோழர் லிங்கன் – ஒரு லட்சிய மீனவன் நம்மை விட்டுப் பிரிந்தார்!
♦ துருக்கி தேர்தல் முடிவு: தேவை, பாசிசத்திற்கு எதிரான மாற்று ஜனநாயகத் திட்டம்!
♦ தெலுங்கானா: பாசிச எதிர்ப்பு அறிவுத்துறையினர் – செயல்பாட்டாளர்கள் மீது தொடரும் வேட்டை!
♦ ரஷ்யா: ஒரு நாளைக்குள் முடிந்த பிரிகோஜியின் ‘ஆட்சிக்கவிழ்ப்பு சதி’!
♦ மதுரை வழக்கறிஞர்கள் கைது: வெறியாட்டம் போடும் என்.ஐ.ஏ!
♦ புரட்சிகரப் பாதையை நிலைநாட்டிய பு.ஜ.தொ.மு.வின் 25 ஆண்டுகள்!
♦ படக்கட்டுரை: அமெரிக்காவிலும் கிழிந்தது மோடியின் முகமூடி!
♦ ஒரு அடியாளின் அமெரிக்கப் பயணம்!

இந்திரா காந்தியின் எமர்ஜென்சியும் சங்கப் பரிவாரத்தின் ஆதரவும்!

0

ஜூன் 25, 1975 அன்று அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி நாடு முழுவதும் அவசர நிலையை (எமர்ஜென்சியை) பிரகடனப்படுத்தினார். அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு தற்போது 48 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 2014-ஆம் ஆண்டில் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பதற்கு முன்புவரை, இந்திரா ஆட்சியின் எமர்ஜென்சி காலம் தான் ‘சுதந்திர’ இந்தியா வரலாற்றில் மிக மோசமான அத்தியாயமாகக் கருதப்பட்டது.

ஆண்டுதோறும் ஜூன் 25 அன்று எமர்ஜென்சி காலத்தில் தாங்கள் தான் இந்தியாவைக் காப்பாற்றியதாக பா.ஜ.க-வும் ஆர்.எஸ்.எஸ்-உம் முகநூலில் பதிவுகளை வெளியிட்டு தங்களைத் தாங்களே பாராட்டிக் கொள்கின்றனர். அடல் பிஹாரி வாஜ்பாய், மொரார்ஜி தேசாய் மற்றும் பிற தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதாக ஜூன் 26, 1975 அன்று வெளியான செய்தித்தாள்களின் முதல் பக்கங்களைப் படங்களாக வெளியிடுவர்.

கம்யூனிஸ்டுகளும் நக்சல்பாரி புரட்சியாளர்களும் தான் ஜன சங்கத் தலைவர்களை விட பெரும் அடக்குமுறைக்கு ஆளாகினர் என்று உளவுத்துறை அறிக்கைகளும் மத்திய உள்துறை அமைச்சக தரவுகளும் சுட்டிக்காட்டுகின்றன. அப்படியானால் செய்தித்தாள்களின் முதல் பக்கங்களில் பெயர் இடம்பெற்ற அடல் பிஹாரி வாஜ்பாய் எமர்ஜென்சி காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டாரா என்று கேட்டால் இல்லை என்பது தான் பதில்.

ஆம்; அவசரநிலை அமலில் இருந்த 20 மாதங்களின் பெரும்பகுதியைப் பரோலில் தனது வீட்டிலே கழித்தார் வாஜ்பாய். தன்னை பரோலில் விடுவித்தால் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் பங்கேற்க மாட்டேன் என உறுதிமொழி அளித்துள்ளார்.


படிக்க: துரோகி சாவர்க்கர் விடுதலை வீரரா?


இந்த உண்மைகளை ஆதாரங்களுடன் வெளியிட்டவர்கள் கம்யூனிஸ்டுகள் அல்ல. பா.ஜ.க-வின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமிதான். ஜூன் 13, 2000 அன்று “தி இந்து”வில் வெளியான “எமர்ஜென்சியின் கற்றுக்கொள்ளப்படாத பாடங்கள்” (The Unlearnt Lessons of Emergency) என்ற கட்டுரையில், பல ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஜனசங்கத் தலைவர்கள் இந்திரா காந்தியுடன் எவ்வாறு ரகசிய பேச்சுவார்த்தை நடத்தினர் என்பதை சுப்பிரமணியன் சுவாமி விரிவாக வெளிப்படுத்தியுள்ளார்.

அதே கட்டுரையில், ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் டிசம்பர் 1976 வாக்கில் இந்திரா காந்தியின் எமர்ஜென்சிக்கு வெளிப்படையான ஆதரவை அறிவிக்கும் ஆவணத்தில் கையெழுத்திடுவதற்கான முடிவை எவ்வாறு எடுத்தனர் என்பதையும் சுவாமி விவரிக்கிறார்.

அதேபோல, உளவுத்துறையின் அப்போதைய தலைவர் டி.வி.ராஜேஸ்வர் தனது “இந்தியா – முக்கியமான ஆண்டுகள்” (India – The Crucial Years) என்ற‌ புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களின் சரணடைவு முடிவை விவரித்துள்ளார். இந்திரா காந்தியின் அப்போதைய தகவல் ஆலோசகர் எச்.ஒய்.சாரதா பிரசாத்தின் மகன் ரவி விஸ்வேஸ்வரய்யாவும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களின் சரணடைவை ஆவணப்படுத்தியுள்ளார்.


படிக்க: சாவர்க்கர் ஒரு அதிதீவிர சாதிவெறியர் : இந்துத்துவ ஆவணங்களிலிருந்து ஆதாரம் !


பாலாசாகேப் தியோராஸ் (Balasaheb Deoras) என்று அழைக்கப்படும் ஆர்.எஸ்.எஸ்-இன் அப்போதைய சர்சங்சாலக்கான மதுகர் தியோராஸ் (Madhukar Deoras) எரவாடா சிறையில் இருந்து இந்திரா காந்திக்கு எழுதிய கடிதங்கள் மிகவும் முக்கியமானவை. (ஆர்.எஸ்.எஸ்-இன் தலைவரை சர்சங்சாலக் – Sarsanghchalak – என்று கூறுவார்கள்). வினோபா பாவேவுக்குக் கடிதம் எழுதிய தியோராஸ், தன்னை விடுதலை செய்வது குறித்து பரிசீலிக்க இந்திராவை வற்புறுத்துமாறு கேட்டுக் கொண்டார். எமர்ஜென்சியின் போது ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஜனசங்கம் ஆற்றிய பங்கின் உண்மைத்தன்மையைப் புரிந்துகொள்ள இந்த கடிதங்கள் நமக்கு உதவுகின்றன.

தியோராஸ் இந்தியில் எழுதிய “இந்து சங்கதன் அவுர் சட்டவாடி ராஜ்நீதி” (Hindu Sangathan aur Sattavadi Rajneeti) என்ற புத்தகத்தின் முடிவில் இந்த கடிதங்கள் இணைப்புகளாக இடம்பெற்றுள்ளன. இந்த கடிதங்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகளை பிரம்ம தத் எழுதிய “ஐந்து தலை பூதம்: ஜனதா கட்சியின் தோற்றத்தின் ஒரு உண்மை விவரிப்பு” (Five Headed Monster: A Factual Narrative of the Genesis of Janata Party) என்ற புத்தகத்தில் காணலாம். அதேபோல பிரதினவ் அனில் மற்றும் கிறிஸ்டோப் ஜாஃப்ரெலோட் எழுதிய “இந்தியாவின் முதல் சர்வாதிகாரம்” (India’s First Dictatorship) என்ற புத்தகத்திலும் இக்கடிதங்களைக் காணலாம்.

முதல் கடிதம் (ஆகஸ்ட் 22, 1975)

ஜூன் 25, 1975-இல் இந்திரா காந்தி எமர்ஜென்சியை பிரகடனம் செய்தார். அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 15 அன்று செங்கோட்டையில் அவர் ஆற்றிய சுதந்திர தின உரையின்போது தனது நடவடிக்கைகள் நாட்டின் பாதுகாப்புக்கு அவசியமானது என்றும், அதை எதிர்ப்பவர்கள் துரோகிகள் என்றும் அனைத்து சர்வாதிகாரிகளையும் போலவே அவரும் கூறினார். அவரது பேச்சையும் சர்வாதிகாரத்தையும் நாடு முழுவதுமுள்ள ஜனநாயக சக்திகள் கண்டித்தனர்.

இருப்பினும், தியோராஸ் ஆகஸ்ட் 22, 1975 அன்று இந்திரா காந்திக்கு எழுதிய முதல் கடிதத்தில் இந்திராவின் ஆகஸ்ட் 15 உரையை வெளிப்படையாகப் பாராட்டியுள்ளார். இன்னும் ஒருபடி மேலே சென்று, உரையின் நேர்த்தியைப் பாராட்டுகிறார். ஆர்.எஸ்.எஸ் பற்றிய தவறான கருத்துக்களை அகற்றுவதற்காக இந்திராவுக்கு கடிதம் எழுதுவதாகவும், ஆர்.எஸ்.எஸ் இந்துக்களுக்கான அமைப்பை உருவாக்க முயற்சிப்பதாகவும் ஒருபோதும் இந்திரா அரசாங்கத்திற்கு எதிரானது அல்ல என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

இறுதியில், “இதை மனதில் கொண்டு ஆர்.எஸ்.எஸ் மீதான தடையை நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்குப் பொருத்தமாகத் தோன்றினால் உங்களை நேரில் சந்திப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும்” என்று எழுதினார்.

எனவே, முதல் கடிதத்தில் எமர்ஜென்சியை அமல்படுத்துவதில் தனது உடன்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். ஆர்.எஸ்.எஸ் மீதான தடையை நீக்க வலியுறுத்துகிறாரே தவிர எமர்ஜென்சியை நீக்குவதற்கு அல்ல.

இரண்டாவது கடிதம் (நவம்பர் 10, 1975)

தியோரஸின் முதல் கடிதத்தை இந்திரா காந்தி கண்டு கொள்ளவில்லை.

ஊடகங்களும் உச்ச நீதிமன்றமும் இந்திரா காந்திக்கு அடிபணிந்து நடந்தன. இந்திரா காந்தியின் தேர்தல் வெற்றி செல்லாது என்ற அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு ரத்து செய்தது. உச்ச நீதிமன்றத்தை இந்த பரிதாபகரமான நிலைக்குத் தள்ளியதற்காக இந்திராவை அனைத்து ஜனநாயக சக்திகளும் கண்டித்தனர்.

அந்த சமயத்தில் தான், நவம்பர் 10, 1975 அன்று தியோரஸ் இந்திராவுக்கு தனது இரண்டாவது கடிதத்தை எழுதுகிறார்.

அதில் அவர் “உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அமர்வு உங்கள் தேர்தல் வெற்றி செல்லுபடியாகும் என்று தீர்ப்பளித்துள்ளதற்கு நான் உங்களை வாழ்த்துகிறேன்” என்று எழுதுகிறார்.

கடிதம் முழுவதும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பானது அரசாங்கத்திற்கோ அவசரநிலைக்கோ எதிரானது அல்ல என்று இந்திரா காந்தியை நம்பவைக்க முயல்கிறார். இறுதியில், “லட்சக்கணக்கான ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களின் தன்னலமற்ற முயற்சிகளை அரசாங்கத்தின் வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல பயன்படுத்தலாம்” என்று கூறிவிட்டு ஆர்.எஸ்.எஸ் மீதான தடையை நீக்குமாறு அவர் மீண்டும் கேட்டுக் கொள்கிறார்.

மூன்றாவது கடிதம் (பிப்ரவரி 24, 1976)

தியோரஸின் இரண்டாவது கடிதத்தையும் இந்திரா காந்தி கண்டு கொள்ளவில்லை.

1976-ஆம் ஆண்டு பிப்ரவரி இறுதியில் இந்திரா காந்தி வினோபா பாவேவின் ஆசிரமத்திற்குச் செல்லத் திட்டமிடப்பட்டிருந்தபோது தியோராஸ் மூன்றாவது கடிதத்தை எழுதுகிறார் (வினோபா பாவே ஆர்.எஸ்.எஸ்-க்கும் இந்திரா காந்திக்கும் நெருக்கமானவர்). அதில் அவர், ஆர்.எஸ்.எஸ்-க்கு ஆதரவாக தலையிடுமாறும், தடையை நீக்க இந்திராவை வற்புறுத்துமாறும் கேட்டுக் கொண்டார்.

இதன் நீட்சியாக, ஜூன் 25, 1976 (எமர்ஜென்சியின் ஓராண்டு நிறைவு நாள்) அன்று உத்தரப்பிரதேச ஜனசங்கம் இந்திரா காந்தி அரசாங்கத்திற்குத் தனது முழு ஆதரவை அறிவித்தது. மேலும் எந்தவொரு அரசாங்க விரோத நடவடிக்கைகளிலும் பங்கேற்க மாட்டோம் என்றும் உறுதியளித்தது. உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தில் ஜனசங்கத்தை சேர்ந்த 34 தலைவர்கள் காங்கிரசில் இணைந்தனர்.

இவை மட்டுமல்ல, ஆர்.எஸ்.எஸ் அரசாங்கத்துடன் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்காக 1977-ஆம்‌ ஆண்டு ஜனவரி இறுதியில் சரணடைதல் ஆவணத்தில் கையெழுத்திட முடிவு செய்திருந்தது. ஆனால் அதற்கு முன்பாகவே இந்திரா காந்தி எமர்ஜென்சியை விலக்கிக் கொண்டதால், சரணடைவு ஆவணத்தில் கையெழுத்திட வேண்டிய அவசியம் எழவில்லை.

எமர்ஜென்சி காலத்தில் ஆர்.எஸ்.எஸ்-இன் உண்மை முகம் இதுதான். மக்களின் உரிமைகளை இந்திரா திட்டமிட்டு நசுக்கியபோது, ‘ஜனநாயகம்’ கொல்லப்பட்ட போது, ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஜனசங்கத்தினர் அந்த அடக்குமுறையில் மறைமுகமாக பங்கேற்பதாக உறுதியளித்து அதன்மூலம் தங்களை சிறையிலிருந்து விடுவித்துக்கொள்ள முயன்றனர்.

சங்கப் பரிவார கும்பல்கள் மன்னிப்பு கடித இழிபுகழ் சாவர்க்கரின் அடித்தோன்றல்கள் ஆயிற்றே. மன்னிப்பு கடிதங்கள் எழுதுவதென்பது அவர்கள் டி.என்.ஏ-விலேயே ஊறிப் போன ஒன்றுதான்.

நன்றி: தி நியூஸ் மினிட்


பொம்மி

செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்த ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழ்நாட்டிலிருந்து விரட்டியடி! | மக்கள் அதிகாரம்

29.06.2023

செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்த ஆளுநர்!
ஆளுநர் மாளிகையைப் பூட்டு!
R.N.
ரவியை தமிழ்நாட்டிலிருந்து விரட்டியடி!

பத்திரிகை செய்தி

ஆர். என் .ரவி  தனக்கு இல்லாத அதிகாரத்தை பயன்படுத்தி செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்திருக்கிறார்.கேரளாவின் கவர்னராக இருக்கக்கூடிய முகமது ஆரிப் கான் இதேபோன்று மாநில அமைச்சரவையின் கருத்து கேட்காமல் ஒரு அமைச்சரை நீக்கியதை எதிர்த்து கேரள அரசு கொடுத்த வழக்கில்,  ஆளுநர்  தவறு நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது.

மாநில அரசின்  அமைச்சரவை முடிவுக்கு கட்டுப்பட்டவர் ஆளுநர் என்பதை  உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் வழியாக நாம் அறிய முடியும். இந்திய அரசியலமைப்பை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று செயல்படக்கூடிய ஆர்எஸ்எஸ் பாஜக பாசிச கும்பலின் உளவாளியான ரவி,  அரசியல் சாசன எந்திரம் பழுதாகிவிடும் என்று கூறுவது நகைக்கத் தக்கது.

ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றம் செல்வதாக தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். அரசின் உறுப்புகள் அனைத்தும் பாசிச மயமாகிக் கொண்டிருக்கிற இந்தச் சூழலில் பாசிச கும்பலின் நடவடிக்கைகளை மக்கள் திரள் போராட்டங்கள் இன்றி ஒருபோதும் எதிர் கொள்ள முடியாது.


படிக்க: செந்தில் பாலாஜி கைது! – மக்கள் அதிகாரம் கண்டனம்


தமிழ்நாட்டுக்கு எதிராகவும் தமிழுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்படக்கூடிய இந்த ஆளுநர் ஆர் என் ரவியை இனியும் தமிழ்நாட்டில் வைத்திருக்கக் கூடாது.

ஆளுநர் மாளிகையை விட்டு ரவியை உடனடியாக வெளியேற்றக் கூடிய வேலைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்வது தமிழ்நாடு அரசின் நடவடிக்கையாக இருக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

பாசிச ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலுக்கு எதிரான அரசியல் போராட்டத்தை தமிழ்நாடு முன்னெடுக்க வேண்டும்.

தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு –  புதுவை.
9962366321

ஓஷன்கேட் நீர்மூழ்கிக் கப்பல் விபத்தும், ஊடகங்களின் ஒப்பாரியும்!

ண்மையில் வட அட்லாண்டிக் பெருங்கடலுக்குள் மூழ்கிய டைட்டானிக் கப்பலைப் பார்வையிடச் சென்ற ஐந்து கோடீஸ்வரர்கள் இறந்த சம்பவமானது, ஒரு வாரத்திற்கும் மேலாக மிகப்பெரும் பேசுபொருளாக இருந்தது. எந்தப் பக்கம் திரும்பினாலும் ஊடகங்களிலும் சமூக வலைதளச் சானல்களிலும் இதையே நம் கண்முன் நிறுத்திக் காட்டி நமது கவனத்தைப் பறித்தார்கள் என்றே சொல்லலாம்.

கடந்த ஜூன் 18 அன்று, மூழ்கிய டைட்டானிக் கப்பலைப் பார்வையிட ஒஷன்கேட் நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான (CEO) ஸ்டாக்டன் ரஷ், பிரிட்டிஷ் தொழிலதிபர் ஹமிஷ் ஹார்டிங், பாகிஸ்தானிய கோடீஸ்வரர் ஷாஜதா தாவூத் மற்றும் அவரது மகன் சுலேமான் தாவூத், பிரெஞ்சு நாட்டைச் சார்ந்த பால் ஹென்றி நர்கோலெட் ஆகியோரை ஏற்றிச் சென்ற ஒஷன்கேட் நிறுவனத்திற்குச் சொந்தமான “டைட்டன்” நீர்மூழ்கிக் கப்பல் கடலுக்குள் காணாமல் போனது.

படிக்க : இந்தியாவில் 2022 ஆம் ஆண்டு 194 பத்திரிகையாளர்கள் ஒடுக்கப்பட்டுள்ளார்கள்!

நீர்மூழ்கிக் கப்பலில் சென்ற ஐந்து பேரையும் மீட்கப் பல மில்லியன் டாலர்கள் செலவு செய்யப்பட்டு இதுவரை இல்லாத அளவிலான தீவிரமான ஆழ்கடல் மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பல்வேறு நாடுகளின் கடலோரப் படைகள் இந்த மீட்புப்பணியில் இணைக்கப்பட்ட போதிலும் அவர்களை மீட்க முடியாமல் பின்னர் அவர்கள் இறந்ததாக அறிவிக்கப்பட்டது.

டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் இப்படியொரு விபத்தைச் சந்தித்தற்கு காரணமான, ஓஷன்கேட் நிறுவனம் செய்த தவறுகள் என்ன என்பது குறித்துப் பேசிய மரைன் டெக்னாலஜி சொசைட்டியின் (Marine Technology Society – MTS) உறுப்பினர் ஓட்டோ ஸ்கோஃபீல்ட், “செல்வந்தர்களுக்கு போதுமான பாதுகாப்பை உறுதிப்படுத்த, ஐந்து கீழ்த்தட்டு மக்களைக் கடலின் அடிப்பகுதிக்கு அனுப்பும் மிக முக்கியமான கட்டத்தை நிறுவனம் சோதித்துப் பார்க்காமல் விட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

“ஓஷன்கேட், குறைந்தபட்ச ஊதியம் பெறும் தொழிலாளர்கள் மற்றும் வேலையில்லாதவர்களை அரசாங்க நலத்திட்டத்தின் மூலம் பயன்படுத்திச் சோதிக்காமல், கோடீஸ்வரர்களை ஏற்றி சோதித்துள்ளது” என்று மேட்டுக்குடி வர்க்கத்தின் உச்சபட்சத் திமிரோடு பேசியுள்ளார்.

மேலும், “சில வீடற்ற மக்களை வைத்து சோதனை நடத்தியிருந்தால் அதிக மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கும்; பல செல்வந்தர்களின் மரணம் தடுக்கப்பட்டிருக்கும்” என்று கூறியதோடு “ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளைப் பயன்படுத்துவது சிறந்ததாக இருந்திருக்கும்” என்று அரக்கத்தனமான ஆலோசனைகளையும் சொல்லியுள்ளார்.

படிக்க : பெரியார் பல்கலை: கருஞ்சட்டைக்கு விதித்த தடை நீக்கம்! இது தமிழ்நாடு! ஆர்.என்.ரவியே வெளியேறு! | பு.மா.இ.மு

இந்த ஓஷன்கேட் நீர்மூழ்கி விபத்து குறித்து ஊடகங்களில் பேசிக் கொண்டிருந்த அதேநேரத்தில்தான் துனிசியாவில் இருந்து 46 புலம்பெயர் தொழிலாளர்களுடன் இத்தாலிக்குப் புறப்பட்ட கப்பல் விபத்துக்குள்ளாகி 37 பேர் மாயமானார்கள். பெரும்பாலும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வேலையில்லா திண்டாட்டம், பசிக் கொடுமை முதலியவற்றிலிருந்து தப்பிக்க நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் ஐரோப்பா போன்ற கண்டங்களுக்குக் கடல்வழியாகப் பயணிக்கின்றனர். விபத்துக்குள்ளான துனிஷியக் கப்பலில் இருந்து பெரும்பாலானோர் தப்பித்துக் கரை சென்றுசேருவதே அரிதுதான்.

ஆனால், கோடீஸ்வர முதலாளிகள் தங்கள் ஆழ்கடல் இன்பச் சுற்றுலாவின்போது செத்துப்போன துயரத்தை நம் மீது திணிக்கும் இந்த ஊடகங்கள் ஏதும் துனிஷிய புலம்பெயர் தொழிலாளர்களின் சாவு குறித்து சீண்டுவதில்லை.

சாவின் துயரத்தைச் செய்தியாக்குவதிலும் வர்க்க பாசத்தை வெளிப்படுத்துகின்றன இந்த ஆளும் வரக்க ஊடகங்கள்!

துலிபா

ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு காவிக்கொடிக்கு வணக்கம் செலுத்திய கலெக்டர்!

ந்தியா முழுவதும் அரசு நிர்வாகத்தில் பணியாற்றக் கூடிய அரசு அதிகாரிகளை ஆர்.எஸ்.எஸ் பாஜக கும்பல் தன்வயப்படுத்தி கொண்டு தங்களுடைய இந்துராஷ்டிர நோக்கங்களுக்குப் பயன்படுத்தி வருகிறது. அதைபோல் பல அரசு உயர் அதிகாரிகள் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பார்ப்பனிய சித்தாந்தங்களை உள்வாங்கியவர்களாகவும், அதை சுயமான முறையில் நடைமுறைப்படுத்த முயற்சி செய்பவர்களாகவும் உள்ளனர்.

அந்த வகையில் மத்தியப் பிரதேசத்தில் நடந்த ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சி ஆணையர் ஆகிய இரு அரசு உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டு காவிக்கொடிக்கு வணக்கம் செலுத்திய நடவடிக்கையானது எதிர்க்கட்சி தலைவர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்செயலைப் பல அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டித்துள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தில் தற்போது சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்றது வருகிறது. இந்நிலையில் ஜூன் 11 அன்று சாட்னாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பானது நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடுகள் செய்திருந்தது. அந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரான அனுராக் வர்மா மற்றும் நகராட்சி ஆணையரான ராஜேஷ் ஷாஹி ஆகியோர் அரசு அதிகாரிகளுக்குப் போடப்பட்டிருக்கும் உத்தரவுகளை மதிக்காமல் கலந்து கொண்டார். அதுமட்டுமல்லாமல் ஆர்.எஸ்.எஸ்-சின் பகவத்துவஜம் எனப்படும் காவிக்கொடிக்கு வணக்கம் செலுத்தும் முறையைப் பின்பற்றியதோடு அதன் மேல் உறுதிமொழியும் ஏற்றுள்ளனர் அரசு அதிகாரிகள்.

இதுதொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியான நிலையில் பலரும், அரசு உயர் அதிகாரிகளின் செயல்களுக்குக் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். ஒரு மதவெறி அமைப்பின் நிகழ்ச்சியில் அரசு உயர் அதிகாரியான மாவட்ட ஆட்சியரும், நகராட்சி ஆணையரும் எப்படிக் கலந்து கொள்ள முடியும் அதற்கான அதிகாரம் யார் வழங்கியது என்ற கேள்விகளும் தற்போது எழுந்துள்ளது.


படிக்க: மோடியிடம் கேள்வி கேட்ட பத்திரிகையாளரை ட்விட்டரில் தாக்கும் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. சங்கிகள்!


குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரான கே.கே.மிஸ்ரா “இதுபோன்ற ஆர்.எஸ்.எஸ் ஆதரவு நடத்தை அரசு ஊழியர்களிடம் இருந்தால் எந்த வகையில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும். இதுபோன்ற அதிகாரிகள் எவ்வாறு பாரபட்சமின்றி ஜனநாயக ரீதியாக பணியாற்றுவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். அதைபோன்று காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் விவேக் தன்கா, “இதுபோன்ற அதிகாரிகளைத் தேர்தல் பணிகளிலிருந்து விலக்கி வைக்க வேண்டும், ஒருபோதும் அவர்களைத் தேர்தல் பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கக் கூடாது” எனத் தேர்தல் ஆணையத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார். அத்துடன், இந்த இருவர் மீதும் மாநிலத் தலைமைச் செயலாளர் இக்பால் சிங் பெயின்ஸ் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாறு பல அரசியல் கட்சிகள் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்த நிலையிலும் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதில் என்ன தவறு இருக்கிறது? என்கிறார் மாவட்ட ஆட்சியர் அனுராக் வர்மா. மாநில அரசின் அட்வகேட் ஜெனரல் பிரசாந்த் சிங்குடன்தான் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிக்குச் சென்றதாகவும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட ஒரு பொதுநிகழ்ச்சி என்பதால் நான் அதில் பங்கேற்றேன் என்றும் கூறியுள்ளார்.

பின் நகராட்சி ஆணையர் ராஜேஷ் ஷாஹி அளித்துள்ள விளக்கத்தில் “எல்லோரும் ஒன்றைச் செய்யும் போது நாம் மட்டும் செய்யாமல் இருக்க முடியாது என்பதால் கையை மடக்கி ‘துவஜ்’ செய்தோம். இதில் தவறு இருப்பதாக நாங்கள் உணரவில்லை” என்றார். இவர்கள் இருவரின் மீது இதுவரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவும் அம்மாநில அரசு முன்வரவில்லை.

ஏற்கனவே மத்தியப் பிரதேசத்தில் ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்களில் அரசு அதிகாரிகள் பங்கேற்பதற்கு 1981-ஆம் ஆண்டே அன்றைய காங்கிரஸ் அரசு தடை விதித்தது. “மத்தியப்பிரதேச மாநில சிவில் சர்வீஸ் சட்டம் 1965-இன் படி “ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கம் உட்பட எந்த மதம் சார்ந்த அமைப்புகளின் நிகழ்விலும் அரசு ஊழியர்கள் பங்கேற்பது பிரிவு 5(1) இன் கீழ் நடத்தை விதிகளை மீறுவதாகக் கருதப்படும்” எனச் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


படிக்க: தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பலின் அடியாள்படையாக செயல்படும் தமிழ்நாடு போலீசு!


மேலும் “ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அரசு ஊழியர்கள் மீது துறைசார்ந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டவுடன், பணியிலிருந்து நீக்கலாம்” என்றும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்தத் தடைகளை 2006-ஆம் ஆண்டு பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பதவியேற்றதும் நீக்கிவிட்டார். “ஆர்எஸ்எஸ் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு இந்தக் கட்டுப்பாடு பொருந்தாது” என்று கூறிவிட்டார். இதனால் இந்த இரு அதிகாரிகள் மீதும் நிர்வாக ரீதியான எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலையே இருக்கிறது.

இதுபோன்று மாநில அரசாங்கங்கள் சட்டங்களைத் திருத்தி கட்டுப்பாடுகளைத் தளர்த்தி இவர்களைப் போன்ற ஆர்.எஸ்.எஸ் ஆதரவு அரசு அதிகாரிகளை பணியில் நீட்டித்திருக்க வைப்பது ஏன் என எண்ணிப்பார்க்க வேண்டும். பாசிஸ்ட்டு-களுக்கு பார்ப்பனிய இந்துமதவெறி கருத்துக்களைக் கொண்டவர்கள் வெறும் அரசியல்வாதிகளாக இருந்தால் மட்டும் போதாது, மக்களை நேரடியாகக் கட்டுப்படுத்தக்கூடிய சித்தாந்த ரீதியான பயம் கொள்ளாத இதேபோல் ‘துணிச்சலாக’ செயல்படும் அரசு அதிகாரிகளும் தேவை. பா.ஜ.க கட்சியானது ஒருவேளை ஆட்சியிலிருந்து தூக்கி எறியப்பட்டால் இதுபோன்ற சித்தாந்த ரீதியான அரசு அதிகாரிகளின் உதவியோடே மீண்டும் தங்களுடைய ஆட்சியை நிறுவுவார்கள்.

அரசு அதிகாரிகள் எந்த ஒரு அரசியலும் சாராத நபர்கள் எனக் கூறிய நாட்கள் முடிந்து இன்று வெளிப்படையாக தங்களை ஆர்.எஸ்.எஸ் ஆதரவு நபர்களாகக் காட்டிக் கொள்வதோடு நேரடி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருவதென்பது மிக ஆபத்தானது. எனவே தேர்தலில் மட்டும் பாசிசத்தை வீழ்த்தினால் போதாது. அரசு கட்டமைப்பில் இருக்கும் இதுபோன்ற ஆர்.எஸ்.எஸ் சிந்தனை கொண்ட நபர்களைத் துடைத்தெறிய இக்கட்டமைப்புக்கு மாற்றானதை நோக்கி நாம் நகர வேண்டும்.

நன்றி: தீக்கதிர்


சித்திக்

ஜனநாயகத்தை மறுக்கும் தெற்காசிய பல்கலைக்கழகம்!

0

ஜூன் 16 அன்று, டெல்லியின் தெற்காசியப் பல்கலைக்கழகத்தில் (எஸ்.ஏ.யூ) முன்னறிவிப்பின்றி நடந்த உதவித்தொகை குறைப்புக்கு எதிரான மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த நான்கு பேராசிரியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். சக ஊழியர்களுக்கு எதிராகவும், நிர்வாகத்திற்கு எதிராகவும், பல்கலைக்கழகத்தின் நலனுக்கு எதிராகவும் மாணவர்களைத் தூண்டி விட்டதாக இந்த நால்வர் மீது பல்கலைக்கழகம் குற்றம் சாட்டியுள்ளது.

37 ஆண்டுகாலமாக இருக்கும் தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பின் (சார்க்) ஒரே சாதனையாகக் கருதப்படும் தெற்காசியப் பல்கலைக்கழகம், தெற்காசியப் பிராந்தியத்தில் சர்வதேச சட்டக் கல்வி பயில முக்கிய இடமாகக் கருதப்படுகிறது. ஆண்டுதோறும், முதுகலை பட்டப்படிப்பிற்கு ஒவ்வொரு துறையிலும் 15 இந்திய மாணவர்கள் மற்றும் சார்க் கூட்டமைப்பின் மற்ற ஏழு உறுப்பு நாடுகளைச் சேர்ந்த 15 மாணவர்கள் என மொத்தம் 30 மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பரில், முதுகலை மாணவர்களுக்கான மாதாந்திர உதவித்தொகையை ₹ 5,000-தில் இருந்து ₹ 3,000-மாகக் குறைக்கப் பல்கலைக்கழகம் முடிவு செய்தது. அதை எதிர்த்து எஸ்.ஏ.யூ மாணவர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடங்கினர். உதவித்தொகையை ₹ 7,000 ஆக உயர்த்த வேண்டும் என்று மாணவர்கள் கோரினர். மேலும், பல்கலைக்கழகத்தில் சட்டரீதியாக அமைக்கப்படும் குழுக்களில், குறிப்பாகப் பாலின உணர்திறன் மற்றும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான குழுக்களில் போதுமான மாணவர் பிரதிநிதித்துவம் வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தினர்.

இதற்குப் பல்கலைக்கழகம் செவிசாய்க்க மறுத்ததால் போராட்டம் தொடர்ந்தது. அதே ஆண்டு அக்டோபர் 13 அன்று, பல்கலைக்கழகத்தின் தற்காலிக தலைவர் (Acting President) அலுவலகத்தின் முன்பு நடைபெற்ற மாணவர் போராட்டத்தைக் கலைக்க டெல்லி போலீசை வளாகத்திற்குள் வரவழைத்தது பல்கலைக்கழக நிர்வாகம். தலைவர் (பிரசிடென்ட்) என்பது துணை வேந்தருக்கு நிகரான பதவியாகும்.


படிக்க: நாளந்தா பல்கலைக்கழகத்திற்கு புதிய வேந்தர் நியமனம்: காவிமயமாக்கல் தடைப்பட போவதில்லை!


பல்கலைக்கழக வளாகத்தினுள் போலீசை அழைக்கும் முடிவை எதிர்த்து 13 பேராசிரியர்கள் பல்கலைக்கழகத்திற்குக் கடிதம் எழுதினர். மீண்டும், நவம்பர் 1 அன்று, பேராசிரியர்கள் குழு ஒன்று தற்காலிக தலைவர், தற்காலிக துணைத் தலைவர் மற்றும் தற்காலிக பதிவாளரைச் சந்தித்து நிலைமையைச் சரிசெய்யுமாறு வலியுறுத்தினர்.

பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பதிலாக, நவம்பர் 4 அன்று, ஐந்து மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க (வெளியேற்றுதல் / இடைநீக்கம் செய்தல்) பல்கலைக்கழகம் முடிவு செய்தது. 15 ஆசிரிய உறுப்பினர்கள் இந்த முடிவைக் கடுமையாகக் கண்டித்து பல்கலைக்கழகம் தொடர்பான அனைவருக்கும் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பினர்.

இதனிடையே, நவம்பர் 5 அன்று மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். நவம்பர் 7 முதல் அது காலவரையற்ற உண்ணாவிரதமாக மாறியது. உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற பல மாணவர்களின் உடல்நிலை மோசமடைந்தது. அவர்களில் பலருக்கு இரத்த சர்க்கரை அளவு மற்றும் இரத்த அழுத்தம் மிகவும் குறையத் தொடங்கியது. சில மாணவர்கள் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.

நவம்பர் 22 அன்று உண்ணாவிரதத்தின் போது, பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்த ஐந்து மாணவர்களில் ஒருவரான அம்மார் அகமது (Ammar Ahmad) மயங்கி விழுந்தார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. ஜனவரி 17, 2023 வரை அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மாணவர்களின் தொடர் போராட்டத்தால் பல்கலைக்கழக நிர்வாகம் அம்மார் அகமதுவின் மருத்துவச் செலவில் ஒரு பகுதியினை ஏற்றுக் கொண்டது. அவர் தற்போது வரை பேச்சாற்றல் பாதிக்கப்பட்டு, சுயமாக எழுந்து நடக்க முடியாத நிலையில் உள்ளார்.

மாணவர்கள் போராட்டம் 2022 டிசம்பரில் குளிர்கால விடுமுறை தொடங்கியதாலும் பல்கலைக்கழக வளாகத்தை சாணக்கியபுரியில் இருந்து மைதான்கரிக்கு மாற்றும் பணி தொடங்கியதாலும் முடிவுக்கு வந்தது.

இதனையடுத்து ஆசிரிய உறுப்பினர்களுக்குக் காரணம் கேட்கும் குறிப்பாணைகள் (show-cause notice) வழங்கப்பட்டன. டிசம்பர் 30, 2022 தேதியிட்ட ஒரு காரணம் கேட்கும் குறிப்பாணையில், “பேராசிரியர்கள் தெற்காசியப் பல்கலைக்கழக மாணவர்களால் நடத்தப்படும் மார்க்சிய படிப்பு வட்டமான அய்ஜாஸ் அகமது படிப்பு வட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கிறார்களா?” என்று விளக்கம் கேட்கப்பட்டது.


படிக்க: மோடி குறித்த பிபிசி ஆவணப்படம்: திரையிட்ட மாணவர்களை ஒடுக்கும் டெல்லி பல்கலை!


மே 19, 2023 அன்று, இந்த போராட்டத்தில் பேராசிரியர்களின் பங்கு குறித்து விசாரிக்கப் பல்கலைக்கழகம் ஒரு உண்மை கண்டறியும் குழுவை அமைத்தது. அக்குழு அதே நாளில் 132 முதல் 246 கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளிக்குமாறு பேராசிரியர்களை உளவியல் ரீதியாக துன்புறுத்தியது. உண்மை கண்டறியும் குழுவின் முன்பாக அமர்ந்து பதிலளிக்க பேராசிரியர்கள் நிர்பந்திக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து கால அவகாசம் எதுவும் வழங்கப்படாமல், ஜூன் 16 அன்று நான்கு பேராசிரியர்கள் மட்டும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த இடைநீக்க உத்தரவில் எந்த குற்றச்சாட்டும் குறிப்பிடப்படவில்லை. இடைநீக்கம் செய்யப்பட்ட காலக்கெடு குறித்தும் அதில் குறிப்பிடப்படவில்லை.

“நான்கு பேரை மட்டும் குறிவைத்து பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்ததாகத் தெரிகிறது. பிரச்சினைகளை சுமுகமாகத் தீர்ப்பதற்காக நாங்கள் நிர்வாகத்திடம் பேச முயன்றோம்” என்று இடைநீக்கம் செய்யப்பட்ட பேராசிரியர்களில் ஒருவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்-யிடம் கூறினார்.

மற்றொரு பேராசிரியர் “இடைநீக்க கடிதத்தில் நடவடிக்கைக்கான சரியான காரணத்தைப் பல்கலைக்கழகம் வழங்கவில்லை. தவறான நடத்தை என்ன என்பதை அவர்கள் எங்களிடம் சொல்லவில்லை. (இப்பிரச்சினை குறித்து) அக்டோபரில் 13 பேர் நிர்வாகத்திற்கு எழுதினார்கள்; நவம்பரில் 15 பேர் எழுதினார்கள். ஏன் நான்கு பேர் மீதுமட்டும் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று ஆச்சரியமாக இருக்கிறது” என்று கூறினார்.

பல்கலைக்கழக வளாகங்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்கும் படிப்பு வட்டங்கள் செயல்படுவதென்பது ஒரு இயல்பான நிகழ்வாகும். இருப்பினும், தெற்காசியப் பல்கலைக்கழகம் இதை ‘சட்டவிரோதமானது’ என்று கருதி அதற்கு விளக்கம் கோருகிறது. பாசிச இருளால் சூழப்பட்டு ஜனநாயக வெளிகள் விழுங்கப்படுவதையே இந்நிகழ்வு நமக்குக் காட்டுகிறது.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம் (JNUTA), கல்வி உரிமைக்கான அகில இந்திய மன்றம், பொதுப் பள்ளி அமைப்புக்கான மாநிலத் தளம் – தமிழ்நாடு மற்றும் ஹைதராபாத் பல்கலைக்கழக ஆசிரியா்கள் சங்கம் என நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஆசிரியா் குழுக்கள் இந்த இடைநீக்க உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியுள்ளனர். இந்த பாசிச நடவடிக்கையை எதிர்த்து அனைத்து ஜனநாயக மற்றும் புரட்சிகர சக்திகளும் குரல் கொடுக்க வேண்டியது அவசியமாகும்.


பொம்மி

கார்ப்பரேட் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கப்போகும் திராவிட மாடல் அரசாங்கம்!

ற்போது காவிரி டெல்டா உட்பட தமிழ்நாட்டின் ஆறு இடங்களில் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றது போல் இராட்சத அரவை ஆலைகளை நிறுவி, நேரடியாக விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்து அதனை அரைத்து, அரிசி விநியோகம் செய்வதற்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகக் கழகத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளன.

இதற்காக வருகிற ஜூன் 27ம் தேதி 15 ஆண்டுகளுக்கான ஒப்பந்த அடிப்படையில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.

ஏற்கனவே அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலையானது, நெல்லை சாகுபடி செய்யும் செலவுகளுடன் ஒப்பிடும்போது குறைவு தான். அரசு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்து கொள்முதல் செய்யும்போதே நெல் விவசாயிகளின் நிலை மோசமாக இருக்கிறது.

குறிப்பாக டெல்டா பகுதிகளில் தான் அதிக அளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது கார்ப்பரேட் நிறுவனங்கள் நெல் கொள்முதல் செய்தால், இதுவரை விவசாயிகளுக்கு கிடைத்து வந்த குறைந்தபட்ச ஆதார விலையே இல்லாமல் போய்விடும். இதனால் விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறிவிடுவார்கள். பின்னர் அந்த விவசாய  நிலங்களை எளிதாக மீத்தேன், ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு அரசும், கார்ப்பரேட் நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்ளும்.


படிக்க: ரத்து செய்யப்பட்ட வேளாண் சட்டங்கள் மறைமுகமாக நடைமுறை படுத்தப்படுகின்றன!


இந்த மாத தொடக்கத்தில் இருந்து பொன்னி, பச்சரிசி, பாஸ்மதி உள்ளிட்ட அனைத்து அரிசி ரகங்களும் விலை உயர்ந்துள்ளன. மூட்டை ஒன்றுக்கு 300 ரூபாய் விலை ஏற்றம் இருப்பதாக வணிகர்கள் கூறுகின்றனர். ஒரு கிலோவுக்கு ரூ.2 முதல் ரூ.10 வரை விலை உயர்ந்துள்ளது.

வணிகத்திற்கு தேவையான அளவு தமிழ்நாட்டில் அரிசி உற்பத்தி இல்லாமல் இருப்பதும் அரிசியை பதுக்கல் செய்வதும் தான் அரிசி விலை உயர்வுக்கு காரணம் என்று

அரசு கூறுகிறது. இந்த கார்ப்பரேட் நிறுவனங்களால் பல ஆயிரக்கணக்கான அரிசி மூட்டைகளை பதுக்கி அரிசி விலையை செயற்கையாகவே அதிகரிக்க செய்யவும் முடியும்.

மேலும் இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் அரிசியை அதிக விலைக்கு அரசிடமே விற்பனை செய்யக்கூடிய நிலையும் உருவாகும். இதனால்

நியாய விலைக் கடைகளில் விநியோகம் செய்யும் இலவச அரிசியும் ரத்து செய்யப்படும்.

அரசே நெல் கொள்முதல் செய்யும்போதே இந்த நிலை எனில், கார்ப்பரேட் நிறுவனங்கள் நெல் கொள்முதல் செய்து, அரிசியாக விற்பனை செய்யும் போது நிலமை மிகவும் மோசமாகும்.

ஒருபுறத்தில் அரசு நிர்ணயித்து வைத்துள்ள நெல்லுக்கான ஆதார விலையை விட குறைவான விலையே விவசாயிகளுக்கு கிடைக்கும்.

இன்னோரு புறத்தில் அரிசியின் விலை தற்போது உள்ளதை விட இன்னும் அதிகமான விலையில் தான் மக்களுக்கு கிடைக்கும்.


படிக்க: மாநிலங்களுக்கு அரிசி கோதுமையை வழங்க எப்.சி.ஐ-க்குத் தடை!


ஒன்றிய பா.ஜ.க தலைமையிலான அரசாங்கம் கொண்டு வர முயற்சி செய்து, விவசாயிகளின் போர்க்குணமிக்க போராட்டத்தால் முறியடிக்கப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை மறைமுகமான வழியில் கார்ப்பரேட் நெல் கொள்முதல் நிலையம் என்ற பெயரில் திராவிட மாடல் அரசாங்கம் அறிமுகம் செய்ய உள்ளது.

கார்ப்பரேட் சேவையில் பா.ஜ.க- விற்கு சற்றும் சளைக்காமல் தனது பங்களிப்பை சிறப்பாக செய்து வருகிறது திராவிட மாடல் அரசாங்கம்.

டெல்லியை முற்றுகையிட்ட விவசாயிகள் போராட்டத்தைப் போல, தமிழ்நாட்டின் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடக்கூடிய விவசாயிகளின் போராட்டத்தை கட்டி அமைக்காமல் இது போன்ற கார்ப்பரேட் திட்டங்களை முறியடிக்க முடியாது.

செய்தி ஆதாரம் – தி இந்து தமிழ்


ராஜன்