Sunday, November 9, 2025
முகப்பு பதிவு பக்கம் 352

பொதுப் பாதையில் இறுதி ஊர்வலம் செல்லக் கூடாது : இருளர்களை ஒடுக்கும் ஆதிக்க சாதித் திமிர் !

“எங்க ஊர்ல சாவு ஏற்பட்டாலே பகீர்னு இருக்குங்க. துக்கம் ஒருபுறம் இருந்தாலும் ஆதிக்க சாதிக்காரங்க வசவுகளை கேட்டுக்கொண்டு அவர்கள் தெரு வழியாக சவத்தை எப்படி கொண்டு செல்ல போகிறோம் என்று நினைக்கும் போது பகீர்னு இருக்குங்க” என்கிறார் இருளர் குடியிருப்பை சேர்ந்த ஒரு பெண்.

இது நடப்பது திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்தேக்கத்தை அடுத்த ரங்காபுரம் கிராமத்தில் உள்ள இருளர் குடியிருப்புப் பகுதி. இந்த தீண்டாமைக் கொடுமை குறித்து மேலும் விவரிக்கிறார்கள் இப்பகுதி இருளர் இன மக்கள்.

“எங்களுக்கு மின்சாரம், அம்மா வீடு, கழிவறை என்று எல்லா வசதிகளும் கிடைத்திருக்கிறது. ஆனால், பொது வழியில் பிணத்தைக் கொண்டு போகக் கூடாது என்றும் அதனால் தங்களது ஐஸ்வர்யம் கெட்டுப் போகிறது என்றும் இங்கு இருக்கும் வன்னியர்கள் கூறுகிறார்கள்.

சொல்லப்போனால், நாங்கள் வெடி வைப்பதில்லை பூ தூவுவதில்லை, ஏன் பறை கொட்டுவது கூட இல்லை. அமைதியான ஊர்வலம் செல்லக்கூட அனுமதிக்க அவர்கள் விரும்புவதில்லை. பிணத்தை அங்கேயே நடுரோட்டில் வைத்து விடலாமா என்று கூட தோன்றும் அளவுக்கு அவர்கள் எங்களைத் திட்டித் தீர்க்கிறார்கள்.

அவர்களது மயானத்தை நாங்கள் பயன்படுத்தக் கூடாது எனக்கூறி எங்களுக்கு என்று சிறு பகுதியை ஒதுக்கி கொடுத்தனர். ஆனால் இப்போது அங்கும் அவர்களின் தேவைகளுக்காக மண்ணைத் தோண்டி எடுக்கின்றனர். எங்களது தேவையெல்லாம் பிணத்தைக் (அமைதியாக, வசவின்றி) கொண்டு செல்ல ஒரு சாலை, அடக்கம் செய்து பாதுகாக்க சிறு பகுதி” எனக் கூறுகின்றனர் இப்பகுதி மக்கள்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

ஆரம்ப காலங்களில் சுமார் 25 வருடங்களுக்கு முன் பூப்பறிக்கவும், தங்களது வயல்களில் வேலை செய்யவும் இருளர்கள் தேவைப்பட்டதால் தங்களது குடியிருப்பின் ஒரு ஓரத்தில் குடியேற இருளர்களை வன்னியர்கள் அனுமதித்துள்ளனர்.
தற்போது வயல் வேலைகள் குறைந்துள்ளதாலும், தொழிற்சாலைகளை நோக்கி இருளர்கள் வேலைக்கு சென்று விடுவதாலும் தம்மை மீறி இருளர்கள் வளர்ந்து விடுவதாக எண்ணி அஞ்சுகின்றனர் ஆதிக்க சாதியினர். “ஒரு நாள் முழுவதும் உழைத்தாலும் ஆதிக்கச் சாதியினர் தரும் கூலி ரூ. 80-ஐத் தாண்டாது. அதுவும் வருடத்தில் சில மாதங்களே கிடைக்கும். நாங்கள் வெளியில் சென்று மூட்டை தூக்கினாலும், தொழிற்சாலைக்கு சென்றாலும் ரூ.600 வரை சம்பாதிப்போம்” என்கின்றனர் இருளர் இன மக்கள்.

படிக்க:
சாதி வெறியை ஊதிவிடும் தேவராட்டம்
♦ நூற்றாண்டு கால சுடுகாட்டு பிரச்சினையைத் தீர்க்க வழிகாட்டிய மக்கள் அதிகாரம் !

ஒரே கிராமத்தில் வசித்தாலும், விழாக்காலங்களில் இருளர்கள் தீ மிதிக்கக்கூடாது. ஐந்து வருடங்களுக்கு முன்பு நடந்த தீமிதி திருவிழாவில் ஆதிக்க சாதியினர் தீ மிதித்து அவர்களுக்கு ஏற்பட்ட கால் கொப்புளங்களுக்கு இருளர்கள் தீ மிதித்து தீட்டு ஏற்படுத்தியதுதான் காரணம் எனக் கூறி தடை விதித்துள்ளனர். பொங்கல் விளையாட்டு போட்டிகளில் இருளர் குழந்தைகள் கலந்து கொள்ளவோ அல்லது வேடிக்கை பார்க்கவோ கூட அனுமதி இல்லை.

ஊரின் கடைசிப் பகுதி என்பதால் ஆதிக்கச் சாதியினர் தெருவைக் கடந்துதான் இருளர்கள் வேலைக்குச் சென்று வர வேண்டியுள்ளது. பைக்கில் சென்றால், “இருளப் பசங்க பைக்ல பொறுமையாத்தான் போகணும்”னு சட்டம் பேசுவது, அதிகாலை நான்கு மணிக்கு மேலே ரோட்டில் வழிவிடாமல் கட்டில் போட்டு படுத்துக்கொள்வது என பாதையை பயன்படுத்த முடியாத அளவுக்குத் தொல்லை கொடுக்கின்றனர்.
32 குடியிருப்புகளைக் கொண்டுள்ள இருளர்கள் 100 குடும்பங்களைக் கொண்ட ஆதிக்க சாதியினருக்கு பயப்படுவது இயல்பே. பெரும்பாலானோர் அவர்களின் வீடுகளில் வேலை செய்பவர்களாகவே உள்ளனர்.

“நீங்க ஏன் பயப்படுறீங்க தைரியமா பிணத்தை பொது வழியில் கொண்டு போங்க. திட்டினா கேஸ் கொடுங்க” என்று கூறும் ஆதிக்க சாதியினரும் இருக்கின்றனர்.

வேறு சிலர் “நீங்க எதுக்கு இப்படி அவமானப்படணும்? கலெக்டரிடம் மனு கொடுத்து தனிச் சாலை போட்டுக் கொள்ளுங்கள். நாங்களும் கையெழுத்துப் போட்டுத் தருகிறோம்” என்றும் சொல்கின்றனர்.

இருளர் கிராமத்தில் 20 இளைஞர்கள் வரை இருக்கின்றனர். இவர்களில் எவரும் பத்தாவது தாண்டியது கிடையாது. எழுதப்படிக்க ஓரிருவருக்குத்தான் தெரியும். அதில் ஆறுமுகம் எனும் ஆட்டோ ஓட்டும் வாலிபர் தனது ஊர் மக்களோடு சென்று அதிமுக – எம்.எல்.ஏ ஏழுமலையைச் சந்தித்து தங்களது கோரிக்கையை வாய்மொழியாக கூறியுள்ளனர். மேலும் கலெக்டரிடம் மனு அளிக்க உள்ளதாக தெரிவிக்கிறார் ஆறுமுகம்.

இவர்களுக்கு மிக அருகிலேயே நயப்பாக்கம் எனும் இருளர் கிராமம் உள்ளது. அங்கு சுமார் 50 வீடுகள் உள்ளன. அவர்கள் தனிக் கிராமமாக இருப்பதால் இவ்விதம் சாதிய பிரச்சனைகள் ஏற்படுவது இல்லை எனத் தெரிவிக்கின்றனர். மேலும் ரங்காபுரத்தில் உள்ள இருளர்களது பிரச்சனையின் காரணமாக போராட்டம் ஏதேனும் நடக்கும் பட்சத்தில் அவர்களும் அதில் ஒத்துழைப்பு தருவார்கள் என நம்பிக்கையுடன் இருக்கின்றனர் இப்பகுதி மக்கள்.

“ஊர் மக்கள் போராடி தங்களது கோரிக்கையை பெறத் தயாராக உள்ளனர். ‘நீங்க சொல்லுங்க சார் நாங்க இப்ப கூட போராட்டம் பண்ண தயார்’ என்று சொல்றாங்க. ஆனா அவர்களை வழிநடத்தவும் அரசியல்படுத்தவும் வேண்டி உள்ளது” என்கிறார் இப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.

ஊதியத்தை உயர்த்து : பெங்களூரு ஆயத்த தொழிலாளர்கள் மே நாள் பேரணி !

0

யத்த ஆடைத் துறையில் 20 ஆண்டுகளாக மஞ்சுளா பணிபுரிந்து வருகிறார். துணிகளைப் பிரித்துக் கொடுப்பது, சில பகுதிகளை தைத்துக் கொடுப்பதாக தொடங்கியது அவரது வேலை. இன்று பெங்களூருவில் பீன்யா தொழிற்பேட்டையில் தரம் சரிபார்ப்பவராக பணியாற்றுகிறார்.

ரூ. 8,300 ஊதியத்தை கொண்டு என்னால் வாடகையும் கொடுக்க முடியவில்லை அன்றாட வாழ்க்கை தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியவில்லை என்கிறார் அவர். குறைந்தபட்சமாக ரூ. 11,000 ரூபாய் எனக்கு கொடுக்க வேண்டும். ஆனால் என்னுடைய ஊதியத்தை அவர்கள் உயர்த்தவில்லை என்று அவர் கூறுகிறார்.

உலகத் தொழிலாளர் நாளான மே 1 அன்று மஞ்சுளாவைப் போன்ற ஆயத்த ஆடைத்தொழிலாளர்கள், அரசாங்கத்தின் செயலின்மையை அம்பலப்படுத்தவும் குறைந்த அளவு ஊதியத்தை வழங்க கோரியும் பேரணி – பொது கூட்டத்தை நடத்தினர்.

அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்த அளவு ஊதியமாக ரூ. 11,587 வழங்குமாறு மாநில அரசாங்கத்தின் வரைவு அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது. இதை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி ஆயத்த ஆடை தொழிலாளர் சங்கமும் இந்திய தொழிலாளர் சங்கமும் (Hind Mazdoor Sabha) ஆயத்த ஆடை தொழிலாளர் பேரணியை நடத்தினர். மேலும் இந்த அடிப்படையில் 2018 – 19 ஆண்டிற்கான ஊதியத்தை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்தியா முழுவதும் உள்ள ஆஷா – கிராமப்புற மருத்துவ பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் ஆயத்த ஆடை தொழிலாளர்கள் என அனைவருக்கும் குறைந்த அளவு ஊதியமாக ரூ. 18,000 அளிக்க வேண்டும் என்பதே கர்நாடகா அரசாங்கத்திடம் அவர்களது நீண்ட கால கோரிக்கை.

20 ஆலைகளிலிருந்து 1000 தொழிலாளர்களாவது பேரணியில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்ப்பதாக ஆயத்த ஆடை தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.சரோஜா கூறினார். பீன்யா தொழிற்பேட்டை, கனகபுரா மற்றும் மைசூரிலிருந்தும் கூட அவர்கள் வருகிறார்கள் என்று அவர் மேலும் கூறினார்.

நிறுவனங்களின் எதிர்வினை :

கர்நாடகாவின் குறைந்த அளவு ஊதிய வழங்கல் சட்டத்தின்படி ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறையாவது ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு முறை கர்நாடக அரசு ஊதிய உயர்வை வெளியிட்ட போதும் அது தங்களுக்கு உகந்ததல்ல என்று முதலாளிகள் எதிர்ப்பதால் அரசாங்கம் பின்வாங்கி விடுகிறது.

ஊதிய உயர்வை நடைமுறைப்படுத்த கோரி ஆயத்த ஆடை தொழிலாளர்கள் நீதிமன்றங்களுக்கும் நடந்திருக்கின்றனர். பெங்களூருவில் குறைந்தது 1,200 ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்களானது இருக்கின்றன. அவற்றில் பெரும்பாலும் பணிபுரிவது பெண்கள் தான். அவர்களில் 70 விழுக்காட்டிற்கும் மேல் திறன் குறைந்த தொழிலாளர்களாக உள்ளனர்.

படிக்க:
பெண் தொழிலாளிகளின் மே தினம் 2016 – படங்கள் !
♦ அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கிய போராட்டங்கள்

திறன் உள்ள தொழிலாளர்களுக்கு ரூ.14,000மும், திறன் குறைந்த தொழிலாளர்களுக்கு ரூ. 11,500  சொச்சமும் குறைந்த அளவு ஊதியமாக வழங்க 2018, பிப்ரவரி மாதத்தில் தொழிலாளர் ஆணையம் வரைவு அறிக்கையை வெளியிட்டது.

எங்களுக்கு அது காட்டுப்படியாகாது என்று மீண்டுமொருமுறை நிறுவனங்கள் கூறிவிட்டதால் இதுவரை அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று சரோஜா கூறினார்.

வேறு முயற்சி :

விரைவிலேயே தொழிலாளர் ஆணையமும் தன்னுடைய அறிவிப்பை திரும்ப பெற்றுக்கொண்டது. வரைவு அறிவிப்பை வெளியிட்டு பங்குதாரர்களிடம் கருத்து கேட்பதற்கு பதிலாக அரசாங்கமே புதிய குழுவை உருவாக்கி குறைந்த அளவு ஊதிய சட்டத்தின் வேறொரு பிரிவின் கீழ் ஊதிய உயர்வு பற்றி தனக்கு அறிவுறுத்தலாம் என்று அது பல்டி அடித்தது.

அதன் பின்னர் ஆயத்த ஆடை நிறுவனங்கள் , அரசு தரப்பு மற்றும் ஆயத்த ஆடை தொழிலாளர்கள் தரப்பு பிரதிநிதிகளைக் கொண்ட முத்தரப்பு குழு ஒன்றை அமைக்க அரசாங்கம் முடிவு செய்திருக்கிறது என்று தொழிலாளர் ஆணையத்தை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

ஆனால் அரசாங்கத்தால் ஒரு ஆண்டாக எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை என்று ஆயத்த ஆடை தொழிலாளர் சங்கம் குறிப்பிட்டிருக்கிறது. கடந்த ஆண்டு மே மாத சட்ட மன்ற தேர்தலைத் தொடர்ந்து தற்போதைய நாடாளுமன்ற தேர்தல் என்று குழு கூட்டத்தை நடத்தாமல் அரசாங்கம் சாக்குபோக்கு சொல்லிக்கொண்டிருக்கிறது என்று சரோஜா கூறினார்.

ரூ. 8,000-லிருந்து 11,000 ரூபாயாக ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று வரைவு அறிக்கை வெளிவந்த பின் 2018-19-ம் ஆண்டிற்கான ஊதிய உயர்வு நிலுவைத்தொகை 1,800 கோடி ரூபாய்க்கும் மேலிருப்பதாக தொழிலாளர் சங்கம் கணக்கிடுகிறது.

மே தினப் பேரணியில் பெண்களுக்கெதிரான வன்கொடுமைகளை கண்டிக்கும் தொழிலாளர்கள்.

அதே நேரத்தில் கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மட்டுமே தொழிலாளர்களுக்கு ஒரே நம்பிக்கையாய் உள்ளது. அரசாங்கத்தின் குறைந்த அளவு ஊதிய உயர்வு வரைவு அறிக்கையை 34 துறைகளுக்கு உறுதி செய்து தீர்ப்பளித்த நீதிமன்றம் 8 வாரங்களுக்குள் 6 விழுக்காடு ஆண்டு வட்டியுடன் நிறுவனங்கள் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்று கூறியது.

நீதிமன்றத்தின் தீர்ப்பு இப்பொழுதான் வந்திருக்கிறது. சரியான முடிவு எடுப்பது குறித்து பேசி வருகிறோம் என்று தொழிலாளர் ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

(நடைமுறையில்) ரூ.18,000 ஊதிய உயர்வை அடைவதற்கு நீண்ட காலம் பிடிக்கும் என்பதை சரோஜாவும் ஏற்றுக்கொள்கிறார். அரசாங்கம் தருவதாக ஒப்புக்கொண்ட ரூ. 11,500-ஐ ரூபாயையே அவர்களால் கொடுக்க முடியவில்லை என்றால் ரூ. 18,00 ருபாய் கொடுப்பதற்கு வாய்ப்புகள் குறைவு தான் என்று அவர் கூறினார். ஆனால் திறன் உள்ள தொழிலாளர்களுக்கு ரூ. 14,000 கொடுப்பதை அவர்கள் நடைமுறைப்படுத்தினால் ரூ. 18,000-ஐ  நடைமுறைப்படுத்துவதை நோக்கிய முதல் படியாக இருக்கும் என்று அவர் நம்புகிறார்.

படிக்க:
மோடி அரசுக்கு செருப்படி – பெங்களூரு தொழிலாளிகள் போர் !
♦ தோழர் சீனிவாசராவ் சிலையை உடைத்த தேர்தல் அதிகாரிகள் !

இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டால் முதலாளிகளின் மனம் வாடும். தொழிலாளர்கள் பாடுபட்டு சேர்த்த சேம நிதியை பண முதலைகள் சூறையாட மோடி கொண்டு வந்த திட்டத்தை முறியடித்ததும் இதே பெங்களூரு ஆயத்த ஆடை தொழிலாளர்களின் போர்குணமிக்க போராட்டம் தான்.

ஒவ்வொரு முறையும் தொழிலாளர்கள் ஒன்றுட்டு கோரிக்கைக்கு போராட முன்வரும் போதும் அரசாங்கமும் நீதிமன்றங்களும் ஏதாச்சும் செய்வது போல பாவ்லா செய்து போராட்டங்களை நீர்த்து போக செய்கின்றன. சரியான தலைமையும், தோழமையும் இல்லாத போராட்டங்கள் ஒன்று வன்முறைக்குள்ளாகும் அல்லது நீர்த்து போகும். ஆயத்த ஆடை தொழிலாளர்களின் போராட்டத்தில் கருத்திலும் காலத்திலும் பங்கு பெறுவோம்.


கட்டுரையாளர்: நயன்தாரா நாராயணன்
தமிழாக்கம் : சுகுமார்
நன்றி : ஸ்க்ரால்

கால்டுவெல் காலத்து புத்தக விளம்பரங்கள் எப்படி இருக்கும் ?

ஆன்லைனில் புத்தக விளம்பரம் இன்று, அச்சுக்கலை நுழைந்த நாளில் அன்று (19-ம் நூற்றாண்டு) புத்தக விளம்பரம் | பொ. வேல்சாமி

ண்பர்களே…

பொ.வேல்சாமி
இன்றைய காலகட்டத்தில் புத்தகங்களை வாசகர்களிடம் சேர்ப்பதற்கான விற்பனை வழிமுறைகள் எத்தனையோ வகையான நவீன முறைகளாக வளர்ந்து விட்டதை நாம் அனைவரும் அறிவோம். ஏட்டுச்சுவடிகளாக இருந்த நூல்கள் புத்தகங்களாக அச்சு வாகனம் ஏறிய அந்தக் காலத்தில் (19-ம் நூற்றாண்டு) எப்படி இருந்தது என்பதைக் காட்டும் அன்றைய “விளம்பரங்களை” பாருங்கள் நண்பர்களே….

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

குறிப்பு : 1873-லும் 1880-லும் உரையுடன் அச்சிடப்பட்ட யாப்பருங்கலக் காரிகை நூலின் பெறுவதற்கான விளம்பரங்கள் அந்த நூல்களின் முதல் பக்கத்திலும் கடைசிப் பக்கத்திலும் இடம்பெற்றிருந்தன. அதிலுள்ள விளம்பர வரிகள் சுவை பயப்பனவாகவும் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

*****

“கால்டுவெல்” லண்டனிலிருந்து அனுப்பிய அவருடைய புகைப்படம்.

ண்பர்களே….

கால்டுவெல் அவர்கள் தன்னுடைய இறுதிக் காலத்தில் தன்னுடைய சென்னை நண்பர் ஜோசப் சத்திய நாடார் M.A.,M.L., அவர்களுக்கு அனுப்பி வைத்தார். அந்தப் படத்தை 1906 -இல் தான் வெளியிட்ட “தமிழ்” என்ற நூலில் தமிழறிஞர் செல்வகேசவ முதலியார் வெளியிட்டுள்ளார். இந்நூலில் கம்பருடைய உருவச் சிலையும் சிவஞான முனிவருடைய உருவச் சிலையும் கண்டுபிடிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக செல்வகேச முதலியார் குறிப்பிடுகின்றார்.

(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)

நன்றி : முகநூலில் பொ. வேல்சாமி

பொ.வேல்சாமி: தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.

தோழர் சீனிவாசராவ் சிலையை உடைத்த தேர்தல் அதிகாரிகள் !

திருத்துறைப்பூண்டி அருகில் ஆலத்தம்பாடி கரும்பியூரில் தோழர் பி. சீனிவாச ராவ் சிலை தரை மட்டமாக தகர்க்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறைகளின் படி தலைவர்களின் சிலைகளை மூடுவது வழக்கம். ஆனால் இங்கு அதிகாரிகளோ, தேர்தல் விதிமுறையைக் காரணம் காட்டி சிலையை அதன் பீடத்தோடு தகர்த்து வீசியிருக்கிறார்கள்.

டெல்டா விவசாயிகளின் உரிமைகளுக்காகப் போராடி, வாழ்ந்து மறைந்த தோழர் சீனிவாச ராவின் பெயர் தஞ்சை மண்ணில் இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அடிமைப்பட்டுக் கிடந்த டெல்டா மக்களை தலைநிமிரச் செய்த தன்னிகரில்லாத தலைவர். தன் வாழ்நாளையே பொதுவுடைமைத் தத்துவத்திற்கும், உழைக்கும் மக்களின் முன்னேற்றத்திற்கும் அர்ப்பணித்துக் கொண்டவர். இவரைப் பற்றி ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம்.

கர்நாடகாவில் உள்ள குடகு நாட்டில் பிராமணக் குடும்பத்தில் பிறந்து, இளம் வயதில் சுதந்திரப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அந்நிய துணி எரிப்புப் போராட்டத்தில் மக்களோடு சேர்ந்து பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தினார். ஆங்கிலேயர்களால் தடியாலும், பூட்ஸ் காலாலும் மிருகத்தனமாக தாக்கப்பட்டார். அத்தனை அடி உதைகளையும் அஞ்சாத நெஞ்சோடு எதிர்க்கொண்டார். பிறகு “நியூ ஏஜ் ” பத்திரிகையில் முழுநேரமாகப் பணிபுரிந்து பொதுவுடைமைக் கருத்துக்களை தன் எழுத்தின் மூலம் மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் மகத்தான பணியை செய்தார்.

பிறகு டெல்டா மாவட்டத்தில் கம்யூனிசத்தையும், விவசாய சங்கத்தையும் உருவாக்க தமிழகம் அனுப்பி வைக்கப்பட்டார். தமிழ்நாடு முழுவதும் கிராமம், கிராமமாகச் சுற்றி அலைந்து பிரச்சாரம் செய்து அயராமல் உழைத்தார். அப்போதுதான், வயல்களில் கூலி விவசாயிகள், சிறு குறு விவசாயிகள், பண்ணையடிமைகளாய் குறைந்த கூலிக்கு அவர்களின் உழைப்பும், ரத்தமும் உறிஞ்சப்படுவதை கண்டு கொதித்தார்.

சூரியன் உதிக்குமுன் வயலுக்கு சென்று மறையும் வரை வேலை செய்யும் உழைப்புச் சுரண்டலை கடுமையாக எதிர்த்தார். தோளிலே போட வேண்டிய துண்டை இடுப்பிலே கட்டி கூனிக்குறுகிப் போவதைக் கண்டு அதிர்ந்து போனார். அதை மாற்ற மக்களிடமே தங்கி அவர்களில் ஒருவராக மாறவே பல்வேறு போரட்டங்களை நடத்தினார். முதலில் விவசாயிகள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.”வெள்ளை உருவம், அழுக்குப்படியாத சட்டை, மொழிப் பிரச்சனை, உயர்ந்த படிப்பறிவு, பார்ப்பனத் தோற்றம் ஆகியவை மக்களிடமிருந்து இவரை தனிமைப்படுத்தியது. அந்த எண்ணத்தை உடைக்க விவசாயிகளோடு சேர்ந்து வயலிலே வேட்டியை சுருட்டிக்கட்டி களை பறித்தார். அவர்களின் கஷ்ட, நஷ்டங்களில் எப்போதும் கூடவே இருந்தார். “கூலி உயர்வு” கேட்டு முதன்முதலில் விவசாயிகளை பண்ணையார்களுக்கு எதிராகக் கேள்வி கேட்க வைத்தார்.

படிக்க:
நூல் அறிமுகம் : தென்பறை முதல் வெண்மணி வரை
♦ பண்ணையடிமைத்தனத்திற்கு எதிராக பி.எஸ். தனுஷ்கோடி

வயலில் நாள் முழுதும் நெளியும் புழுக்களாக இல்லாமல் உரிமைகளுக்காகப் போராட வைத்தார். கீழத்தஞ்சையில் மாடு மேய்க்கும் சிறுவன், மாதர் குல கூலியாட்கள், பண்ணையாள் வரை அடிமைத்தனத்தில் பணிபுரிந்தவர்க்கு “ஆண்டான் அடிமை” என்னும் நிலையை மாற்றி அவர்களை வென்றெடுத்தார். களப்பாள் குப்பு, இரணியன், மணலி கந்தசாமி போன்ற தோழர்களை வீறுகொண்டு எழச் செய்தார். திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற பகுதிகளில் இருந்த சாணிப்பால், சவுக்கடி போன்ற வன்முறைக்கு எதிராகக் கடுமையாக போராடினார்.

ஆதிக்க சாதி தெருக்களில் கூட நடக்க விடாத மக்களை “மாதர் சங்கம், கூலி விவசாய தொழிலாளர் சங்கம், சிறு குறு விவசாயிகள் சங்கம் போன்ற அமைப்புகளை உணர்வுப்பூர்வமாக தட்டியெழச் செய்து மக்களுக்கு புத்துயிர் ஊட்டினார். ஆரம்ப காலக்கட்டத்தில் படிப்பறிவு இல்லாத பாமர மக்கள் மத்தியில் அமாவாசை ஒன்றுதான் எளிதாக புரிந்து கொள்ளும் நாள். அன்று இரவு நேரங்களில் சிவப்பு தலைப்பாகை, சிவப்பு வண்ண அடையாளங்களை அணிந்து தென் பறை என்ற இடத்தில் கூடுவதற்கு ஏற்பாடு செய்தார். கிராமப்புறங்களில் தங்கிய இடங்களில் எல்லாம் ஏழ்மை நிலையறிந்து அவர்கள் உண்ணும் உணவான நண்டு, நத்தை, குளத்து மீன், நீராகாரம் போன்றவற்றை மக்களோடு மக்களாக உண்டு உணர்வுப்பூர்வமாக அவர்களுக்கு வழிகாட்டி அமைப்புக்களை ஏற்படுத்தினார்.

நிலப்பிரபுத்துவ கொடுமைகளுக்கு அஞ்சி வாழ்ந்த மக்கள் மத்தியில் எண்ணற்ற சிரமங்களுக்கு நடுவில் எள்ளளவும் முகம் சுளிக்காமல் பொறுமையின் சிகரமாக மக்களுக்காவே வாழ்ந்தார். தன் குடும்பத்தை விட்டு, தான் யார் என்று கூட சொல்ல விரும்பாமல் டெல்டா மண்ணிலே உயிர் விட்டார்.

இத்தகைய தியாகத் தோழரின் சிலையை தேர்தல் விதிமுறை என்று கூறி இடித்துள்ளனர் காவிகளின் எடுபிடி அதிகாரிகள். தேர்தல் ஆணையம் சிலைகளை மூட உத்தரவிட்டால், கம்யூனிஸ்ட்டுகளின் சிலையை உடைப்பதற்கான கொழுப்பு காவி கொடுக்கும் தைரியத்தில்தானே வருகிறது ? இவ்வளவு நாளும் காவிக் கும்பலிடமும் கார்ப்பரேட் கும்பலிடமும் பொறுக்கித் தின்ன இந்த அதிகாரிகள்தான் இன்று ’நேர்மையான’ தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகளாம்!

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தமிழ்நாட்டில் மட்டும் தேர்தல் நடவடிக்கை என்ற பெயரில் பார்ப்பனியத்தை எதிர்த்த பெரியார், கம்யூனிச உணர்வை ஊட்டிய சீனிவாச ராவ் போன்றோரை மக்களிடமிருந்து பிரிக்க நினைக்கிறது ஆர்.எஸ்.எஸ் காவிக் கும்பல். சாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் வன்முறைகளைத் தமிழ்நாட்டில் அரங்கேற்றி தனது ஆதரவு தளத்தை விரிவுபடுத்தும் முயற்சியாக முற்போக்காளர்களின் சிலைகளை சேதப்படுத்தியும் அகற்றியும் வருகிறது. இதற்கான முதல் முன்னோட்டம்தான் திரிபுராவில் லெனின் சிலை உடைப்பும், தமிழகத்தில் பெரியார் சிலை உடைப்பு.

தோழர் சீனிவாச ராவ் சிலை உடைப்பைக் கண்டித்து கரம்பியம் பகுதி மக்கள் தன்னெழுச்சியாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தின் உத்தரவு என்று கூறி நழுவப் பார்த்துள்ளனர். ஆனால் மக்கள் விடாப்பிடியாக போராடியதால் தேர்தல் நடத்தை விதிகள் முடிந்த பின்னர் அதனை மீண்டும் கட்டித் தருவதாகக் கூறிவிட்டு சென்றுள்ளனர்.

இத்தகவல் மக்கள் அதிகாரம் தோழர்களுக்கு தாமதமாகத்தான் கிடைத்துள்ளது. உடனடியாக அங்கு சென்று இது குறித்து அப்பகுதி மக்களிடம் தகவல் சேகரிக்கப்பட்டுள்ளது. மேலும் தோழர் சீனிவாச ராவ் சிலை உடைப்பை கண்டிக்கும் விதமாகவும், சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவ ஏற்பாடு செய்யும் வகையிலும், போராட்ட முன்னெடுப்புகள் துவங்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட தலைமையில் உள்ள தோழர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த தோழர்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள ஜனநாயக சக்திகள் ஆகியோருடன் இது குறித்து பேசப்பட்டு வருகிறது.

கார்ப்பரேட் வேதாந்தா நிறுவனம் டெல்டா பகுதியில் ஹட்ரோகார்பன் எடுக்க துடித்துக் கொண்டிருக்கிறது. கார்ப்பரேட்டும், காவி பாசிசமும் மக்களை துரத்திக் கொண்டிருக்கிறது. கார்ப்பரேட் காவி சுரண்டலுக்கு எதிராகப் போராடிய முன்னோடிகளின் சிலைகளைக் கூட அவர்கள் விட்டுவைக்க விரும்பவில்லை. மீண்டும் ஆதிக்க சாதியும், பார்ப்பனியமும் துளிர் விட்டு தலை தூக்க ஆரம்பித்து இருக்கிறது. அதை எதிர்க்கொள்ள தோழர் சீனிவாச ராவ் சென்ற புரட்சிப் பாதையில் நம் பணியைத் தொடர்வோம்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருவாரூர் மாவட்டம்.
தொடர்புக்கு : 82207 16242

தாய்மொழியைக் கேட்டதும் ஆனந்த வெறி அவன் தலைக்கேறியது !

உண்மை மனிதனின் கதை | முதல் பாகம் | அத்தியாயம் – 12

னால் தவழ்வது முற்றிலும் கடினமாக இருந்தது. கைகள் நடுங்கின, உடலின் சுமையைத் தாங்க மாட்டாமல் துவண்டு மயங்கின. இளகிய வெண்பனியில் சில தடவை அவன் முகம் புதைய விழுந்தான். புவியின் ஈர்ப்புச் சக்தி பல மடங்கு அதிகமாகி விட்டதும் போல அவனுக்குத் தோன்றியது. அதை எதிர்த்து வெல்வது அசாத்தியமாக இருந்தது. சற்று நேரமாவது, ஒரு அரை மணி நேரமாவது படுத்து இளைப்பாற வேண்டும் என்ற ஆசை அடக்க முடியாத படி எழுந்தது. எனினும் இன்று மிக வலிய கவர்ச்சி அலெக்ஸேயை முன்னே இழுத்தது.

உடலைப் பிணித்த அயர்வை மதியாமல், அவன் மேலே மேலே தவழ்ந்து முன்னேறினான், விழுந்தான். பசியையோ, அவன் உணரவில்லை. எதையும் அவன் காணவில்லை. பீரங்கிக் குண்டு வீச்சையும் துப்பாக்கி வெடிகளையும் தவிர வேறு எந்த ஒலியும் அவன் காதில் படவில்லை. உள்ளங்கைகள் தாங்க வலுவற்றுப் போனதும் அவன் முழங்கைகளை ஊன்றித் தவழ முயன்றான். இது மிகவும் அசௌகரியமாக இருந்தது. அப்போது அவன் நீண்டுப் படுத்து, முழங்கைகளால் வெண்பனியை அழுத்திப் புரண்டு முன் செல்ல முயற்சி செய்தான். இதில் அவனுக்கு வெற்றி கிட்டிற்று. இவ்வாறு புரண்டு உருண்டு முன்னே செல்வது அதிகச் சுளுவாயிருந்தது. அதற்குப் பெரும் பிரயாசைத் தேவைப்படவில்லை. தலை மட்டுந்தான் மிகவும் கிறுகிறுத்தது. ஒவ்வொரு நிமிடமும் தன்னுணர்வு தப்பியது. புரள்வதை அடிக்கடி நிறுத்தி, வெண்பனியில் உட்கார்ந்து, தரையும் காடும் வானும் சுழல்வது நிற்கும் வரை காத்திருக்க நேர்ந்தது.

பசியையோ, அவன் உணரவில்லை. எதையும் அவன் காணவில்லை. பீரங்கிக் குண்டு வீச்சையும் துப்பாக்கி வெடிகளையும் தவிர வேறு எந்த ஒலியும் அவன் காதில் படவில்லை.

தன்னவர்களிடம் போய்ச் சேர வாய்க்குமா என்பது பற்றி இப்போது அலெக்ஸேய் எண்ணவே இல்லை. உடம்பு இயங்கும் நிலைமையில் இருக்கும் வரை தவழ்ந்தும் புரண்டும் முன்னேறிக் கொண்டிருப்போம் என்பதை அவன் அறிந்திருந்தான். பலங்குன்றிய எல்லாத் தசைகளதும் அந்தப் பயங்கர உழைப்பின் விளைவாக அவனுக்குக் கணப்பொழுது நினைவு தப்புகையிலும் அவனுடைய கைகளும் உடல் முழுவதும் முன்போன்றே சிக்கலான இயக்கங்களைத் தொடர்ந்து செய்துகொண்டும் போயின, அவன் பீரங்கிக் குண்டு வீச்சு நடந்த திசையை, கிழக்கை நோக்கி வெண்பனியில் புரண்டு சென்ற வண்ணமாயிருந்தான்.

அந்த இரவை அவன் எப்படிக் கழித்தான், மறு நாள் காலையில் எவ்வளவு நேரம் புரண்டுச் சென்றான் என்பது அலெக்ஸேய்க்குத் நினைவில்லை. துன்புறுத்தும் அரை மறதியில் எல்லாம் அமிழ்ந்து விட்டது. தனது இயக்கப் பாதையில் கிடந்த தடைகள் மட்டுமே அவனுக்கு நினைவிருந்தன: வெட்டப்பட்ட பொன்னிறப் பைன் அடிமரம், அதிலிருந்து கசிந்த அம்பர் நிறக் கீல், வெட்டுக் கட்டைகளின் அடுக்கு, சுற்றிலும் சிதறியிருந்த மரத்தூளும் சிறாய்களும், வெட்டுப் பகுதியில் துலக்கமாகத் தெரிந்த ஆண்டு வரைப்படிவுகள் கொண்ட ஏதோ அடிக்கட்டை ஆகியன இவை…

வெளிச் சத்தம் ஒன்று அலெக்ஸேயை அரை மறதியிலிருந்து சுய நினைவுக்குக் கொணர்ந்தது. அவன் உட்கார்ந்து சுற்று முற்றும் கண்ணோட்டினான். மரங்கள் வெட்டப்பட்ட பெரிய வெளியின் நடுவே தான் இருப்பதை அவன் கண்டான். வெயிலொளி அதை முழுக்காட்டிக் கொண்டிருந்தது. ரம்பத்தால் அறுக்கப்பட்ட இன்னும் துண்டுப் போடப்படாத மரங்களும் கட்டைகளும் அடுக்குகளாக வைக்கப்பட்ட விறகுக் கட்டைகளும் எங்கும் காணப்பட்டன.

திட்டமாக விளங்காத அபாய உணர்வுக்கு உள்ளான அலெக்ஸேய் சுற்றிலும் நோக்கினான். மரங்கள் அண்மையில்தான் அறுக்கப்பட்டிருந்தன. எனவே, இங்கே ஆள் நடமாட்டம் இருப்பதாகத் தெரிந்தது. ஒரு வேளை ஹிட்லர் படையினர் காப்பகங்களும் அரண்களும் அமைப்பதற்காக இங்கே காட்டைத் திருத்துகிறார்களோ? அப்படியானால் விரைவில் இங்கிருந்து அப்பால் போய்விட வேண்டும். மரம் வெட்டிகள் எந்தக் கணத்திலும் வந்து விடக்கூடுமே. ஆனால், வலி என்னும் விலங்கால் மாட்டப்பட்டிருந்த உடல் கல்லாகச் சமைந்து விட்டது போலிருந்தது. அசையத் திராணி இல்லை.

தொடர்ந்து தவழ்ந்து செல்வதா? இதை அவன் முடிவு செய்வதற்குள், காட்டு வாழ்க்கை நடத்திய நாட்களில் அவனுக்குள் செவ்வைப்பட்டிருந்த இயல்பூக்கம் அவனை எச்சரிக்கை கொள்ளச் செய்தது. தன்னை யாரோ கவனமாக, வைத்த கண் வாங்காமல் உற்றுப் பார்ப்பதை அவன் காணவில்லை. ஏதோ ஒரு விலங்கு என்று நினைத்தான். ஆனாலும் தான் பின் தொடரப்படுவதை அலெக்ஸேய் புலன்கள் அனைத்தாலும் உணர்ந்தான்.

கிளை மடமடத்தது. அலெக்ஸேய் திரும்பிப் பார்த்தான். நீலச்சாம்பல் நிறப் பைன் மரத்தின் அடர்ந்த சுருட்டை முடிகள் காற்றுப் போக்குக்கு இசையச் சார்ந்திருந்தன. ஆனால், சில கிளைகள் பொது இயக்கத்துக்கு ஏற்ப இசையாமல் தமக்கே உரிய தனி வகையில் நடுங்கியதை அலெக்ஸேய் கண்ணுற்றான். கிளர்ச்சிப் பெருக்குள்ள தணிந்த கிசுகிசுப்பு, மனித கிசுகிசுப்பு அங்கிருந்து வருவது போன்று அவனுக்குத் தோன்றியது.

படிக்க:
மே தின சிறப்புக் கதை : சிலந்தியும் ஈயும் !
மோடியின் “அரசியல் இல்லாத” நேர்காணல்கள் தெரிவிப்பது என்ன ?

அலெக்ஸேய் மார்புப் பையிலிருந்து துருப்பிடித்த ரிவால்வரை எடுத்தான். அதன் குதிரையைச் சுடுநிலைக்குக் கொண்டு வர இரண்டு கைகளாலும் அவன் சிரமப்பட வேண்டியிருந்தது. குதிரை கிளிக்கிட்டதும் பைன் மரக்கிளைகளிடையே யாரோ திடுக்கிட்டுப் பின்னே நகர்ந்தது போலப்பட்டது. சில மர முடிகள் யாரோ அவற்றில் இடித்துக் கொண்டது போல பின்னுக்குச் சாய்ந்தன. அப்புறம் சந்தடி எல்லாம் அடங்கிப் போயிற்று.

“என்ன அது? விலங்கா, மனிதனா?” என்று எண்ணமிட்டான் அலெக்ஸேய். புதர்களுக்குள் யாரோ கேள்விக் குறிப்புடன் “மனிதனா?” என்று கேட்பது போல அவனுக்குத் தோன்றியது. அப்படிப் தோன்றியதோ அல்லது மெய்யாகவே புதருக்குள் யாரேனும் ருஷ்ய மொழியில் பேசினார்களோ? ஆமாம், ருஷ்ய மொழியில். ருஷ்ய மொழி பேசப்பட்டதால் அவனுக்கு ஆனந்த வெறி திடீரென்று தலைக்கேறி விட்டது. அங்கே இருப்பவர்கள் நண்பர்களா பகைவர்களா என்று சிறிதும் சிந்தித்துப் பார்க்காமல் வெற்றி முழக்கம் செய்து துள்ளி எழுந்து நின்றான், குரல் வந்த பக்கம் பாய்ந்தான், அக்கணமே ரிவால்வாரை வெண்பனியில் நழுவ விட்டுவிட்டு முனகலுடன் வெட்டுண்ட மரம் போல் விழுந்துவிட்டான்….

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

மோடிக்கு குடை பிடிக்கும் தேர்தல் ஆணையம் : கேலிச்சித்திரங்கள்

0

டந்துகொண்டிருக்கும் மக்களவை தேர்தலை கண்காணித்துக் கொண்டிருக்கும் இந்திய தேர்தல் ஆணையம், பாஜக உறுப்பினர் போல மோடிக்கு சேவை ஆற்றும் பணியை கூடுதலாக செய்துகொண்டிருக்கிறது.

எதிர்க்கட்சி தலைவர்களின் பேச்சுக்களை உன்னிப்பாக கவனித்து உடனடியாக ‘கடமை’ ஆற்றும் ஆணையம், இந்திய வரலாற்றில் எந்த பிரதமரும் செய்யாத இழிவான பிரச்சாரத்தில் மோடி இறங்கியபோதும் அதை கண்டுகொள்ளவில்லை. மாறாக, மோடி பேசியதில் எந்த குற்றம் குறையும் இல்லை என ‘நற்சான்றிதழ்’ அளித்திருக்கிறது.

படிக்க :
♦ செயற்கை நுண்ணறிவு : அறிவியல் உலகில் அறம் சார்ந்த கேள்விகள்
♦ ஸ்லீப்பர் செல் சங்கிகளின் நஞ்சு பரப்புத் தளமாகும் வாட்சப் குழுக்கள் !

கடந்த பிப்ரவரி மாதம் மகாராஷ்டிராவில் பேசிய மோடி, முதல்முறையாக வாக்களிக்கும் வாக்காளர்கள் தங்களுடைய வாக்குகளை புல்வாமா தாக்குதலில் பலியான வீரர்களுக்கு காணிக்கையாக்கும்படி பேசினார். இது தேர்தல் விதிமுறைகளை மீறுவதாக புகார் அளிக்கப்பட்டது.

அதுபோல, ஏப்ரல் 1-ம் தேதி பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, முசுலீம் வாக்குகள் அதிகமாக உள்ள கேரளத்தின் வயநாடு தொகுதியில் ராகுல் போட்டியிடுகிறார். முசுலீம்கள் ராகுலுக்கு வாக்களிப்பார்கள். இந்துக்கள் பாஜக -வுக்கு வாக்களிப்பார்கள் என பேசினார். ஒரு நாட்டின் பிரதமர் வாயிலிருந்து வந்த இத்தகைய பிரிவினைவாத பேச்சின் மீதும் புகார் தரப்பட்டது.

பிறகு, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது ‘மிஷன் சக்தி’ ஏவுகணை சோதனை வெற்றிகரமாக முடிந்திருப்பதாக நேரலையில் தோன்றி அறிவித்தார்.

ஏப்ரல் 21-ம் தேதி ராஜஸ்தானில் பேசிய மோடி, ‘பாகிஸ்தானின் அணு ஆயுத தாக்குதல் பயமுறுத்தலை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்; இந்தியா வைத்திருக்கும் அணு ஆயுதங்கள் தீபாவளியில் வெடிக்க அல்ல’ என்றார்.

வாரணாசியில் புதிய இந்தியாவில் பயங்கர வாதத்துக்கு இடமில்லை என்றார். இப்படி பிரதமருக்குரிய எந்தவித மாண்போ கண்ணியமோ இல்லாத மோடியின் தேர்தல் பிரச்சாரங்கள் குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அனைத்து புகார்களையும் விசாரித்த மோடியின் தேர்தல் ஆணையம், ‘நற்சான்றிதழ்’ அளித்துள்ளது. தனது ஐந்தாண்டு கால ஆட்சியில் அனைத்து சுயேட்சையான அமைப்புகளையும் தனது அடிவருடி அமைப்புகளாக மாற்றிவிட்ட மோடி அரசு, தேர்தல் ஆணையத்தையும் விழுங்கி செறித்துவிட்டது. இதை பிரபல கார்ட்டூனிஸ்டுகள் தங்களுடைய கருத்து படங்களில் வெளிப்படுத்தியுள்ளனர்.

அதன் தொகுப்பு இங்கே…

 


கட்டுரை : – கலைமதி
நன்றி: ஸ்க்ரால்

மே நாள் – உரிமைகளை மீட்டெடுக்க உத்தியை வகுக்க வேண்டிய தருணம் !

0
வங்கதேச பெண் ஆயத்த ஆடை தொழிலாளர்களின் மே தினப் போராட்டம். “சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு கொடு, பெண் தொழிலாளர்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளைத் தடுத்திடு” என்று முழக்கமிடும் பெண்கள்

தொழிற்சங்க தலைவர்கள் சடங்கிற்காக அனல் பறக்கும் உரை நிகழ்த்துவதற்கோ அல்லது உழைக்கும் வர்க்கத்தை சாந்தப்படுத்துவதற்காக ஆளும் வர்க்கங்கள் கூறும் வெறும் ஆறுதல் சொற்களுக்காகவோ மட்டுமல்ல மே நாள்.

“எட்டு மணி நேரம் வேலை” உரிமை என்பது ஏதோ ஆளும் வர்க்கங்களாலோ அரசினாலோ மனமிரங்கி கொடுக்கப்பட்டதல்ல. மாறாக உழைக்கும் வர்க்கத்தால் போராடி பெறப்பட்டது என்பதை நினைவுப்படுத்துவதற்கே மே நாள். உள்நாட்டிலும் உலகம் முழுவதிலும் உழைக்கும் வர்க்கத்தின் முன் நிற்கும் சவால்கள் பற்றி ஆழ்ந்து சிந்திக்கவும் இழந்து போன உரிமைகளை மீட்டெடுக்கவும், இருக்கும் ஒன்றிரண்டு உரிமைகளையும் காப்பாற்றிக்கொள்ளவும் தேவைப்படும் உத்தியை வகுக்கும் தருணமும் கூட இந்த மே நாள்தான்.

இந்தியாவில் இந்நாளுக்கான சிறப்பிற்கு பல காரணங்கள் உண்டு. தற்போது, இந்திய உழைக்கும் வர்க்கமும் இதர இந்தியாவும் புதிய ஒன்றிய அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கும் கட்டத்தில் இருக்கின்றனர். வெற்றி பெரும் கட்சியின்(களின்) கொள்கைகள் அவர்களின் கவனத்திற்குரியதாக இருக்கிறது. பெரிய தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களது கோரிக்கைகளை கட்சிகளின் தேர்தலறிக்கையில் இடம் பெற வலியுறுத்தியுள்ளன.

உலக தொழிலாளர் கழகம் தொடங்கப்பட்டு இன்றோடு நூறு ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடுவதையும் இந்நாள் நினைவு கூறுகிறது.

உலக தொழிலாளர் கழகமும் அதன் உறுப்புகளான உலக தொழிலாளர் உடன்படிக்கைகள் மற்றும் மாநாடுகள், உலகளாவிய கோட்பாடுகள் மற்றும் விதிகளை மட்டும் வலியுறுத்தவில்லை. நாடுகள் அளவிலும் அவற்றை அமல்படுத்த உறுதியான அடிப்படைகளை அளிக்கிறது.

படிக்க:
தேர்தல் மாற்றங்கள் தொழிலாளர்களின் நிலையை மாற்றிவிடுமா | சே. வாஞ்சிநாதன்
♦ தொழிலாளர் பிரச்சினை : சங்கமாகத் திரண்டால் மட்டும் போதுமா ?

இந்தியாவிலும் வேலை நேரத்தை முறைப்படுத்தக் கோரியே தொழிலாளர் இயக்கங்கள் தோற்றம் கொண்டன. பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பிய முதலாளிகள் உலகம் முழுதிலும் உள்ள அவர்களது போட்டியாளர்கள் செய்தது போலவே எவ்வளவுக்கெவ்வளவு தொழிலாளர்களை அதிக நேரம் பிழிகிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு தங்களது இலாபம் அதிகரிக்கும் என்று எண்ணினார்கள்.

மெட்ராஸ் தொழிலாளர் சங்கம் உட்பட நாட்டின் பல்வேறு தொழிலாளர் அமைப்புகளும் தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களின் வேலைத்தன்மையை சற்றே மாற்ற கோரிக்கொண்டிருந்த நிலையில் அன்றைய ஆங்கிலேய காலனி அரசும் தனியார் நிறுவனங்களும் தொழிலாளர் உரிமைகளையும் சங்கமாய் திரளும் உரிமையையும் முற்றிலும் மறுத்தன.

தொடர்ந்து நடந்த பல்வேறு போராட்டங்களினாலும், அரசியல் சூழலாலும் சிற்சில தொழிற்சங்க உரிமைகளுடன் இந்திய தொழிற்சங்கச் சட்டம் – 1926 உருவாக்கப்பட்டது. ஆனால் இச்சட்டத்தின்படி தொழிற்சங்கங்களை தனியார் நிறுவனங்கள் கட்டாயம் அங்கீகரிக்க வேண்டிய அவசியமில்லை. மேலும் தொழிலாளர் சார்பாக தங்களுடன் தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை செய்வதையும் அவர்கள் அங்கீகரிக்கவில்லை.

நிலைமையை மேலும் மோசமாக்கும் வகையில் சங்கம் கட்டும் உரிமை மற்றும் கூட்டமாக சேரும் உரிமை போன்ற ஐநா உடன்படிக்கைகளில் இந்திய அரசு கையெழுத்திடவில்லை. இந்திய அரசு, சங்கம் கட்டும் உரிமையை அடிப்படை உரிமையாக 19(1)(c) சட்ட பிரிவின் கீழ் அங்கீகரித்திருக்கிறது. ஆயினும் இந்த உடன்படிக்கைகளில் கையெழுத்திடுவது என்பது வேலை நிறுத்தம் செய்யும் உரிமை உட்பட ஒட்டுமொத்த உரிமையையும் கொடுக்க வேண்டி வரும் என்ற காலனியாதிக்க கால சிந்தனையாகும்.

விடுதலைக்கு பிறகு ஊதிய உயர்வுக் கோரிக்கைகளையும் வேலை நிறுத்தங்களையும் குறைத்துக்கொள்ளுமாறு உழைக்கும் வர்க்கத்திடம் இந்திய அரசு அறிவுறுத்தியது. இதன் மூலம் மூலதனம் பெருகுமென்றும் அது தொழிற்துறை வளர்ச்சிக்கு தேவை என்றும் மேலும் நீண்ட கால நோக்கில் தொழிலாளர் வர்க்கத்திற்கு நன்மை பயக்கும் என்றும் கூறியது.

மேலும் தன்னுடைய தொழிலாளர் நிறுவனங்களின் மூலம் தொழிற்துறையில் நேரடியாக தலையிட்டு தொழிலாளர் இயக்கங்களை அரசு கட்டுப்படுத்தியது. ஆயினும் தொழிலாளர்கள் குறைந்தபட்ச ஊதியம், ஒப்பந்த முறையை ஒழித்தல், ஊக்கத்தொகை, பேறுகால சலுகைகளை உள்ளிட்ட சமூக பாதுகாப்புத்திட்டங்கள் மற்றும் நிரந்தர வேலை ஆகியவற்றைக் கோரி தீவிரமான போராட்டங்களில் ஈடுபட்டனர்.

உலகமயமாக்கமும் தொழிலாளர் போராட்டமும்

வேலைவாய்ப்பு குறைந்து போனதற்கு தொழிலாளர் நலச்சட்டங்கள் மற்றும் தொழிலாளர்கள் அமைப்புகளின் போராட்டங்களையே காரணமாக நவ தாராளவாத பொருளாதார அறிஞர்கள் கூறுகின்றனர். தொழிலாளர் வேலை பறிப்பு, உற்பத்தியை நிறுத்துதல், தொழிற்சாலைகளை மூடுதல் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களின் தாக்குதல்களால் பல இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்திருப்பது பற்றி அவர்களுக்கு கவலையில்லை.

மறுபுறத்தில் தொழிற்துறையின் மூடிய மற்றும் அதிகாரத்துவ பொருளாதார கட்டமைப்பில் சிக்கலிருப்பதாக தொழிற்துறை பொருளாதார நிபுணர்கள் கண்டனர். அரசு நேரடி தலையீட்டின் கீழ் அனைவராலும் அனைவர்க்கும் வளர்ச்சி என்ற நேருவின் பொருளாதார கொள்கை முதலாளித்துவ பொருளாதார நிபுணர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இது அனைத்தும் சேர்ந்து மீண்டுமொரு பொருளாதார சீர்திருத்தத்திற்கு வித்திட்டது.

1990-களுக்குப் பிறகு உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், பன்னாட்டு பெருநிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு மூலதனம் ஆகியவை பெரும் வர்த்தக சீர்திருத்தம் செய்வதற்கு பெரும் அளவிலான தொழிலாளர் நலச்சட்டம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களை வலியுறுத்தின. அதாவது அதுவரை தொழிலாளர் வர்க்கம் பாடுபட்டு போராடிப் பெற்ற அனைத்து உரிமைகளையும் நீர்த்து போகச் செய்வதுதான் அவர்களது கோரிக்கை.

தொழிலாளர் நலச்சட்ட சீர்திருத்தங்களை கொண்டு வருவதில் பெஸ்லே மற்றும் பர்கீஸ் (Besley and Burgess – BB) என்ற வெளிநாட்டு முதலாளித்துவ பொருளாதார அறிஞர்களின் ஆய்வுக்கட்டுரை முதன்மையாக பங்காற்றியது எனலாம். தொழிலாளர்களுக்கு ஆதரவான சட்டங்கள்தான் தொழிற்துறை வளர்ச்சி இன்மைக்கும், வேலை வாய்ப்புகள் அதிகரிக்காததிற்கும், ஏழ்மைக்கும் காரணம் என்று கூறினர்.

தவறான வழிமுறைகளால் உருவாக்கப்பட்ட இந்த ஆய்வறிக்கை பொதுமக்கள் மற்றும் அரசியல் ஆளுமைகளின்பால் தாக்கம் செலுத்தியது. இதன் விளைவாக ஆள் எடுத்தல் – தூக்குதல், குறைந்த கூலி, தொழிலாளர் சட்டங்களின் வலுவைக் குறைத்தல், சமூக பாதுகாப்பை வலுவிழக்கச் செய்தல் மற்றும் தொழிற்சாலை கண்காணிப்புகள் குறைப்பு உள்ளிட்ட பாரிய அளவிலான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தியாவில் நவ தாராளவாத உலகமயமாக்கத்திற்குப் பிறகு சிறுபான்மை தொழிளார்களுக்காவது இருந்த நலச்சட்டங்கள் கூட கடுமையான பதிப்புக்குள்ளாகியிருக்கின்றன. சமீபத்தில் வெளிவந்த BB ஆய்வறிக்கை அவர்களது ஆய்வடிப்படையிலான சீர்திருத்தங்கள் தொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக கூறியிருக்கிறது.

அதே நேரத்தில் பல்வேறு அரசியலமைப்பு வழிகாட்டுதலின் படி தொழிலாளர்களுக்கு ஆதரவாக பல்வேறு தீர்ப்புகளை கொடுத்து வந்த நீதித்துறையும் உலகமயமாக்கத்தின் அலைக்கு தப்பவில்லை. சட்டங்களிலும் நீதித்துறையிலும் பல்வேறு சீர்திருந்தங்கள் கொண்டு வரப்பட்டன. இது செயில் (SAIL) தீர்ப்பிலும், தமிழ்நாடு அரசு ஊழியர்களின் வேலை நிறுத்த உரிமைக்கு எதிரான தீர்ப்பிலும், உமாதேவி எதிர் கர்நாடக அரசு என்ற தீர்ப்பிலும் வெளிப்பட்டுள்ளது.

சமத்துவமின்மையும் கடுமையான போராட்டமும்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் என இரு பிரிவினருக்கும் நிலைமைகள் ஒன்று போலவே இருந்தன. ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சியும் பொருளாதார சீர்திருத்தங்களும் இன்று அவர்களை அமைப்புசார் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் இருவரது வாழ்நிலைகளிலும் பாரிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.

இது தொழிலாளர் சந்தையில் ஏற்றத்தாழ்வை கடுமையாக அதிகரித்துவிட்டது. அரசு நிர்வாகத்தின் மீதான உழைக்கும் வர்க்கத்தின் கோபத்தையும் தூண்டி விட்டிருக்கிறது. புதிதாக உருவான படித்த நடுத்தர வர்க்கத்தின் தனிநபர் கனவுகள் மூலம் மென்மேலும் இது பரவலாகியிருக்கிறது.

படிக்க:
மனித குலத்தை எச்சரிக்கிறது மேதின வரலாறு ! பத்திரிக்கைச் செய்தி
♦ உலகைக் குலுக்கிய மே தினம் | படங்கள் !

இந்த ஏற்றத்தாழ்வுகள் பிரிக்காலிலிருந்து மாருதி சுசூகி வரை இரத்தமயமான போராட்டங்களுக்கு வித்திட்டது மட்டுமல்லாமல் தொழிற்துறை வன்முறைக்கும் இட்டுச்சென்றது. அதே நேரத்தில் உலகமய உத்திக்கு பொருத்தமான நவீன இணைய வர்த்தக பொருளாதாரம் தற்பொருளாதாரவாத “தொழில்முனைவோர்” என்ற புதிய ஒரு வகுப்பினை உருவாக்கியது.

மறைந்துள்ள மூலதனத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்பு நெருக்கடிக்குள் இவர்கள் மெதுவாக தள்ளப்படுகிறார்கள். அது அவர்களை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் உடைந்து போக செய்கிறது.

இன்றைய சிக்கல் என்னவெனில் நிறுவனத்தின் தவறான முடிவோ அல்லது சீரமைப்போ கூட முதலில் தொழிலாளர்களின் வயிற்றில்தான் விழுகிறது. அதாவது தொழிலாளர்தான் அனைத்து சிக்கல்களையும் சுமக்க வேண்டும். மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் தேசிய ஊதியத்தில் தொழிலாளர்களது பங்களிப்பு குறைந்து கொண்டே வருகிறது என்பது வர்க்க அடிப்படையிலான தர்க்கத்துக்கு வலு சேர்கிறது.

அமைப்புசார் தொழிற்சாலைகளில் ஒப்பந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 1992-93 களில் 12 விழுக்காட்டிலிருந்து 2016 -ல் 30 விழுக்காடாக அதிகரித்துவிட்டது. தொழிற்சாலையின் மதிப்பில் கூலியின் பங்கு என்பது கடந்த முப்பதாண்டுகளில் குறைந்து கொண்டே வருகிறது. தொழிற்சாலைகளில் தொழிலாளர்களின் உண்மையான கூலி உயராமலே இருக்கிறது. அது கிராமப்புறங்களில் எதிர்மறைக்கு சரிந்திருகிறது. இது பரவலாகி வரும் ஏற்றத்தாழ்வை காட்டுகிறது. பணியிடங்களில் தொழில்சார் பாதுகாப்பு மற்றும் உடல்நலம் குன்றி வருகிறது. குறிப்பாக பொதுத்துறை நிறுவனங்களில் அடிக்கடி விபத்து நிகழ்கிறது.

பழைய தொழிலாளர் உரிமைகளை பாதுகாக்கவும் புதிதாக உரிமைகளைப் பெறவும் தொழிலாளர் உரிமைகளை நீர்த்து போக செய்யும் பல்வேறு நடவடிக்கைகளை எதிர்த்தும் தொழிற்சங்க கூட்டமைப்புகளால் இதுவரை 17 முறை இந்திய அளவில் வேலை நிறுத்தங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால் இந்தியாவில் தொழிற்சங்க இயக்கங்களில் நண்பன் – எதிரி என்ற அரசியல் சங்கமத்தால் பிரிவினைகள் பல நடந்துள்ளதை ஆய்வுகள் சுட்டுகின்றன.

தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை மையப்படுத்துகின்றன. ஆனால் பிற அரசு சாரா நிறுவனங்கள் தொழிற்சங்கங்கள் போராடி பெற்ற உரிமைகளை பறிபோகச் செய்வதாக தொழிசங்கங்கள் சந்தேகிக்கின்றன. அதே சமயத்தில் பெரும்பான்மையான அமைப்புசாரா தொழிலாளர்களை தொழிற்சங்கங்கள் கண்டுகொள்ளவில்லை என்று தொழிற்சங்கங்களை குடிமை சமூக அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.

தொழிலாளர் உரிமைகள் காலியாகி கொண்டிருக்கும் இந்நேரத்தில் இந்த அமைப்புகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டு நிற்கின்றன. எப்படி இருப்பினும் தொழிலாளர் அமைப்புகள்தான் தொழிலாளர்களுக்கானவை. தொழிலாளர் உரிமைகளை பாதுகாத்திட குறைந்தது தொழிலாளர் ஐக்கியப்பாடு இன்றியமையாதது என்பதை தொழிலாளர் அமைப்புகளுக்கு உணர்திடவே மே நாள்.

உலகின் பல்வேறு சக்திகள் உலகத் தொழிலாளர் கழகத்தினை ஏற்றுக்கொள்வதில் தயக்கம் காட்டினாலும் 100 ஆண்டுகளாக இது நிலைத்திருக்கிறது. இது தொடர்ந்து “நல்ல உலகமயமாக்கத்திற்கும், நிறுவனமயப்படுத்தப்பட்ட மக்களாட்சிக்காகவும் நாகரீகமான வேலைசூழலுக்காகவும்” பரிந்துரைத்து வருகிறது. மோசமான ஆனால் முற்றிலும் நம்பிக்கையற்று போகாத உலக சூழலில் அதை புத்தாக்கம் செய்வதற்கான நாளே மே நாள்.

ஐக்கியநாடுகள் சபையின் உலக தொழிலாளர் கழகம் பரிந்துரைக்கும் நல்ல உலக மயமாக்கமோ, நல்ல நிறுவனமயப்படுத்தப்பட்ட மக்களாட்சியுமோ வெறும் கானல்நீர் என்பதுதான் யதார்த்தம். தொழிலாளி வர்க்க விடுதலை என்பது முதலாளித்துவத்தை வீழ்த்தியெறியும் வர்க்கப் போராட்டத்தில்தான் சாத்தியம்.

 


கட்டுரையாளர்:
தமிழாக்கம் : சுகுமார்
நன்றி : தி வயர்

எம் அற நூல் ஆண்டவன் அருளியதல்ல ! மனிதன் எழுதியது !

ந்த நூல் ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றை உடையது. அக்காலத்தில் எழுந்த எந்தவொரு அறநூலை விடவும் முற்போக்கானதாக, ஆழம்கொண்டதாக அமைகிறது.

இன்றுள்ள எம் நவீன வாழ்வுக்கும் பொருந்திப்போகும் அறக்கருத்துக்களை தன்னகத்தே கொண்டது. உலகம் முழுவதுமுள்ள அறிஞர்களால் போற்றப்படுவது. எமது சூழலில் எல்லா நூல்களுக்கும் தலை நூலாக ஏற்புப் பெற்றது.

எம் அனைவர் வீட்டிலும் கட்டாயம் இருக்கவேண்டிய ஒரு நூலாக அது கருதப்படுகிறது. அதன் பாடல்கள் திருமண மந்திரங்களாகப் பயன்படுகின்றன. அந்நூலின் வரிகளை அழகுற எழுதி சட்டகமிட்டு சுவர்களில் மாட்டுகிறார்கள்; கல்லில் பொறிக்கிறார்கள்; வாகனங்களில் ஒட்டுகிறார்கள்.

ஆனால், அந்நூலின் பாடல்களைப் பாடிக்கொண்டோ, அந்நூலை ஆதராம் காட்டியோ எவரும் பள்ளிவாசல்களை உடைப்பதில்லை; அந்நூலின் கருத்துக்களைச் சொல்லி இளைஞர்களை மூளைச்சலவை செய்து குண்டைக்கட்டிக்கொண்டு வெடித்துச் சாகவைக்க எவராலும் முடியவில்லை; அந்நூலின் பெண்ணடிமைக் கருத்துக்களை எடுத்துக்காட்டி பெண்களை அடக்கியொடுக்க எவராலும் முடிவதில்லை; அந்நூலின் அறத்தினைப் பரப்புவதாய்ச்சொல்லி நியாயம் தேடிக்கொண்டு எந்த இராணுவமும் நாடுகளைப்பிடித்து பேரரசை உருவாக்கவில்லை; அந்நூலில் வாக்களிக்கப்பட்ட நிலத்தை மீட்கவென கொலை வெறியாட்டத்தை எவரும் நிகழ்த்தவில்லை; அந்நூலின் பெயரால் சிறுவர்கள் முடிமழிக்கப்பட்டு இயற்கைக்கு மாறாக துறவுக்குக் கட்டாயப்படுத்தப்படவில்லை.

அதற்கு என்ன காரணம்?

அந்நூலின் காலப்பொருத்தம் பற்றி பட்டிமன்றங்கள் நிகழ்கின்றன. அந்நூலின் பெண்ணடிமைக் கருத்துக்களை பெண்ணியவாதிகள் எந்த அச்சமுமின்றி நார் நாராய் கிழிக்கிறார்கள். அந்நூலின் நல்லவற்றை ஏற்றுப் போற்றி அல்லவற்றை தயக்கமின்றி நீக்கி அனைவரும் கொண்டாடுகிறார்கள்.

அதன் குறைகளைச் சுட்டிக்காட்டத் தயங்கி, அதற்கு மாற்று விளக்கம் கொடுத்து சப்பைக்கட்டுக் கட்டவேண்டிய இழிநிலை பொதுவாக ஏற்படுவதில்லை.

வரலாற்று – மொழியியல் ஆய்வுகளை, திறனாய்வுகளை செய்வதற்கு, மக்கள் உணர்வுகளைத் தூண்டாத வெறும் ஆய்வுப்பொருளாக அறிஞர்களால் அதனைப் பயன்படுத்த முடிகிறது.

படிக்க :
♦ தெய்வம் தொழாஅள் : பெண்ணடிமைத்தனமா ? பார்ப்பனிய எதிர்ப்புக் குரலா ? – வி.இ. குகநாதன்
♦ திருக்குறளில் நடந்த திருவிளையாடல்கள் பாகம் – 2 | பொ. வேல்சாமி

எப்படி?

அந்நூல் மக்களைப் பண்படுத்த உதவுகிறது. அந்நூலை வன்முறையைத் தூண்டுவதற்குப் பயன்படுத்த முடியவில்லை.

அது சமூகத்தின் அறம், பொருள், இன்பம் எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தும் அறங்களைப் போதித்தும் கூட அதன்பெயரால் ஒடுக்கும் அதிகாரபீடங்கள் உருவாக முடியவில்லை.

ஏன்?

ஏனெனில், அதனை கேள்விகளுக்கு அப்பாற்பட்ட கடவுள் ஓதிக்கொடுத்தார் எனும் பொய் அதனைச்சுற்றிக் கட்டமைக்கப்படவில்லை. விமர்சனங்களுக்கோ மாற்றங்களுக்கோ அப்பாற்பட்ட புனிதப் பிரதியாக அதனை எவரும் எவருக்கும் அறிமுகப்படுத்துவதில்லை.

மனிதரால் ஆக்கப்பட்டவை ஆபத்தற்றவை. ஏனெனில் அவை கேள்விகளுக்கும் மாற்றங்களுக்கும் ஏற்புக்கும் மறுப்புக்கும் இடம்கொடுப்பவை.

கடவுளின் பெயரால் ஆக்கப்பட்டவை ஆபத்தானவை. அவை அணுவாயுதங்களை விடவும் ஆபத்தானவை.

நன்றி : முகநூலில் – Muralitharan Mayuran Mauran

புள்ளியியலில் குழந்தைத்தனமான நம்பிக்கை கொண்ட பெட்டி | பொருளாதாரம் கற்போம் – 17

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 17

அரசியல் பொருளாதாரத்தின் கொலம்பஸ்
அ.அனிக்கின்

மூலச்சிறப்புடைய அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படையான விஞ்ஞானக் கோட்பாட்டைப் பெட்டி வளர்ச்சியடையாத வடிவத்தில் எடுத்துக் கூறினார். கூலியும் உபரி மதிப்பும் (நில வாரம், லாபம், வட்டி) ஒரு பண்டத்தின் விலையில் தலைகீழ் நிலையில் உறவு கொண்டிருக்கின்றன; கடைசியில் அதன் விலையை நிர்ணயிப்பது அதற்காகச் செலவிடப்பட்டிருக்கும் உழைப்பின் அளவு தான் என்று அவர் கூறினார்.

உற்பத்தி மட்டம் மாறாத நிலையில் இருக்கும் பொழுது கூலியை உயர்த்துவது உபரி மதிப்பை பாதிக்கும்; அதைப் போல உபரி மதிப்பை அதிகரிப்பது கூலியை பாதிக்கும். இதிலிருந்து ஒரு பக்கத்தில் தொழிலாளர்களின் வர்க்க நலன்களுக்கும் மறு பக்கத்தில் நில உடைமையாளர்கள், முதலாளிகளின் வர்க்க நலன்களுக்கும் இடையே உள்ள அடிப்படையான எதிர்ப்பை அங்கீகரிப்பதற்கு ஒரு காலடி எடுத்து வைத்தால் போதும். இந்த இறுதி முடிவையே மூலச் சிறப்புடைய அரசியல் பொருளாதாரத்தில் ரிக்கார்டோ செய்தார். பெட்டி இந்தக் கருத்துக்கு மிகவும் நெருக்கமாக ஒரு வேளை ஆய்வுரையில் அவ்வாறு வராதிருக்கலாம் – பிரபலமான அரசியல் கணிதம் என்ற நூலில் வருகிறார். இதை அவர் 1670-களில் எழுதினார்; இப்புத்தகத்திலும் கூட இந்தக் கருத்து கருவடிவத்தில் தான் இருக்கிறது.

எனினும் மொத்தமாகப் பார்க்கும் பொழுது, பெட்டி அரசியல் கணிதத்தின்பால் கொண்டிருந்த தீவிரமான ஆர்வம் அவரைத் தமது பொருளாதாரத் தத்துவத்தை வளர்க்க முடியாதபடி செய்தது ; முதலாளித்துவப் பொருளாதாரத்தின் அடிப்படையான விதிகளை அவர் புரிந்து கொள்ள முடியாதபடி செய்தது. ஆய்வுரையிலிருந்த பல சிறப்பான ஊகங்களை அவர் மேலும் வளர்த்துச் செல்லவில்லை. இப்பொழுது எண்கள் அவரைக் கவர்ந்தன. எல்லாவற்றுக்கும் அவையே திறவு கோலாகத் தோன்றின.

அவருடைய தனித்தன்மையைக் குறிக்கும் சொற்றொடர் ஆய்வுரையில் முன்பே இடம் பெற்றிருந்தது . ”முதலில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய வேலை கணக்கிடுவதே…” இது அவருக்கு ஒரு பொன் மொழியாக, மந்திரமாக மாறியது . கணக்கிட வேண்டும்; எல்லாம் தெளிவாகிவிடும் என்றார், புள்ளியியலை உருவாக்கியவர்கள் அதனுடைய அபாரமான சக்தியில் குழந்தைத்தனமான நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.

நாம் மேலே கொடுத்திருப்பது பெட்டியின் முக்கியமான பொருளாதாரப் புத்தகங்களின் மொத்த உள்ளடக்கமும் அல்ல. அது இதைக் காட்டிலும் வளமானது. அவர் அன்று முற்போக்காக இருந்த முதலாளி வர்க்கத்தின் உலகப் பார்வையைத் தம்முடைய கருத்துக்களில் எடுத்துக் கூறினார். உற்பத்தியின் கோணத்திலிருந்து முதலாளித்துவ உற்பத்தியை ஆராய்ந்து பொருளாதார நிகழ்வுகளை முதன் முறையாக மதிப்பிட்டவர் பெட்டி. இதுதான் வாணிப ஊக்கக் கொள்கையினரைக் காட்டிலும் அவரிடமிருந்த மாபெரும் சாதகம். அதனால் அவர் மக்கள் தொகையில் உற்பத்தியில் சம்பந்தமில்லாத பகுதியினர் மீது விமரிசனப் போக்கைக் கடைப்பிடிக்கிறார்; அவர்களில் மதகுருக்கள், வழக்குரைஞர்கள், அதிகாரிகள் ஆகியோரைக் குறிப்பிட்டு எழுதுகிறார். வியாபாரிகள், கடைக்காரர்களிலும், தங்களால் யாருக்கும் பயனில்லாமல் இருக்கின்றவர்களை அகற்றி அவர்களின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்க முடியும் என்று ஊகிக்கிறார்.

படிக்க:
Trust WHO ஆவணப்படம் : உலக சுகாதார நிறுவனத்தின் மறுபக்கம் !
♦ சோஷலிசம் என்பது வெறும் போதனை மட்டுமே அல்ல | மார்க்ஸ் பிறந்தார் இறுதி பகுதி

மக்கள் தொகையில் உற்பத்தியில் ஈடுபடாத குழுவினரைப் பற்றி விமர்சன ரீதியான அணுகுமுறையைக் கடைப் பிடிப்பது மூலச்சிறப்புடைய அரசியல் பொருளாதாரத்தின் உயிரோட்டமாக மாறியது.

ஒரு மனிதரை உருவாக்குவது அவருடைய நடைச் சிறப்பு என்பது பழைய பிரெஞ்சுப் பழமொழி. பெட்டியின் இலக்கிய நடை அசாதாரணமான வகையில் புதுமையும் தற்சிந்தனையும் கொண்டு விளங்கியது. இத்தனைக்கும் அவர் இலக்கிய நுட்பங்களிலும் உத்திகளிலும் தேர்ச்சி உடையவரல்ல. அவர் சுருக்கமாக, நேரடியாக, எத்தகைய சொல்லலங்காரமும் இல்லாமல் எழுதினார். துணிச்சலான கருத்துக்களை துணிச்சலான, கட்டுத்தளைகளை மீறிய நடையில் எழுதினார்; சுற்றி வளைக்காமல் சொல்ல விரும்பிய கருத்தை மட்டும் எளிமையான சொற்களில் சொன்னார். அவர் எழுதிய மிக நீளமான புத்தகம் கூட எண்பது பக்கங்களில் முடிந்து விடுகிறது.

விஞ்ஞானப் பேரவையின் ஸ்தாபக உறுப்பினர்களில் பெட்டியும் ஒருவர். அதன் சாஸனத்தில் ”… சோதனைகளைப் பற்றிய எல்லா அறிக்கைகளிலும்….. நடந்தவை மட்டும், முன்னுரை, விளக்கம், சொல்லணிகள் முதலியன இல்லாமல் வெளிப்படையாகப் பதிவு செய்யப்பட வேண்டும்” என்று விதிக்கப்பட்டிருந்தது.

இது இயற்கை விஞ்ஞானத்துக்கு மட்டுமல்லாமல் சமூக விஞ்ஞானத்துக்கும் பொருந்தக் கூடியதென்று பெட்டி கருதி அதை அப்படியே பின்பற்ற முயன்றார். அவர் எழுதியவற்றில் பல ”பரிசோதனைகளைப் பற்றிய அறிக்கைகளை” நமக்கு நினைவுபடுத்துகின்றன. (நவீன பொருளியலாளர்களும் பிற சமூக விஞ்ஞானங்களைச் சேர்ந்த நிபுணர்களும் இந்த விதியைப் பின்பற்றுவது தவறல்ல.)
பெட்டியின் புத்தகங்களின் எளிமையான நடை அவருடைய குறிப்பிடத்தக்க ஆளுமையை, கட்டுப்படுத்த முடியாத சுபாவத்தை, அரசியல் வேகத்தை நாம் பார்க்க முடியாது தடுப்பதில்லை.

பணக்கார நில உடைமையாளரான பெட்டி பெரிய டோபாவும், தரையில் புரளும் பட்டு அங்கியும் அணிந்த போதிலும் (அவருடைய வாழ்க்கையின் பிற்பகுதியில் வரையப்பட்ட ஓவியங்களில் ஒன்றில் அவர் இப்படித் தோற்றமளிக்கிறார்) பெருமளவுக்குக் கரடுமுரடான சாமான்யராகவும், ஓரளவுக்குக் கிண்டலான பேச்சுடைய மருத்துவராகவும் கடைசிவரை இருந்தார். அவரிடம் அதிகமான செல்வம் இருந்தது, பட்டங்கள் இருந்தன; ஆனால் அவர் முடிவில்லாதபடி சிந்தனையில் மட்டுமல்லாமல் உடலாலும் பாடுபட்டார்.

அவருக்குக் கப்பல் கட்டுவதில் தீவிரமான ஆசை இருந்தது; எப்பொழுதும் புது விதமான கப்பல்களைப் பற்றித் திட்டங்கள் தீட்டிக் கொண்டும் முடிவில்லாமல் கட்டிக்கொண்டும் இருந்தார். அவருடைய தனிப்பட்ட கூறுகள் அவரிடம் காணப்பட்ட நேரெதிர்ப் பண்புகளைப் பகுதியளவுக்கு விளக்குகின்றன. சோம்பேறிகளையும் அடுத்தவரைச் சுரண்டி வாழ்பவர்களையும் அவர் வெறுத்தார். முடியாட்சியைப் பற்றியும் கூட அவர் கறாரான அணுகுமுறையைக் கடைப்பிடித்தார். அரசவையோடு நெருக்கமாக இருப்பதற்கு அவர் முயற்சி செய்தார்; அதே சமயத்தில் அவருடைய எழுத்துக்கள் அரசருக்கோ அல்லது அரசாங்கத்துக்கோ மகிழ்வூட்டியிருக்க முடியாது. அரசர்கள் பிற நாடுகளை ஆக்கிரமிக்கின்ற யுத்தங்களை விரும்புகிறார்கள்; அவர்களைத் தடுப்பதற்குரிய சிறந்த வழி அவர்களுக்கு எந்த வகையிலும் பணம் கொடுக்காமலிருப்பதே என்று அவர் எழுதியது அதற்கு உதாரணம்.

(தொடரும்…)

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

பா.ஜ.க.வுக்கு ஆப்பு வைக்கும் கோமாதா !

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதற்கு மற்ற மாநிலங்களுக்கு என்ன காரணங்கள் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், உத்திரபிரதேசத்தின் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கப்போவது மாடுகள்தான்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, யோகி ஆதித்யநாத் உ.பி. முதல்வராக பதவியேற்றபிறகு, அம்மாநிலத்தில் செயல்பட்டுவந்த, உரிமம் பெறாத மாட்டிறைச்சி நிலையங்களுக்கு தடை விதித்தார். உண்மையில் ‘உரிமம் பெறாத’ என்பது பெயரளவுக்குதான். மற்றபடி அனைத்து மாட்டிறைச்சி கூடங்களுமே மூடப்பட்டன.

அப்புறம் மாடுகளை என்ன செய்வது? கறவை நின்று போன மாடுகளைதான் விவசாயிகள் விற்பார்கள். அதை விற்க முடியாது என்றால்? “ஒரு மாட்டை பராமரிக்க வேண்டுமானால் மாதம் 5 முதல் 7 ஆயிரம் வரை செலவாகும். அந்த பசு பால் தந்தால், அந்த வருமானத்தில் செலவழிக்கலாம். கறவை நின்றுபோன மாடுகளுக்கு எப்படி தொடர்ந்து செலவு செய்ய முடியும்? இதற்கு முன்பு, கறவை நின்ற மாடுகளை விற்றுவிடுவோம். இப்போது இந்த பசு பாதுகாவலர்களின் கண்காணிப்பினால் எந்த வியாபாரியும் மாடுகளை வாங்க முன்வருவதில்லை. வாகனங்களில் ஏற்றிக்கொண்டு வெளியூருக்குச் செல்வது மேலும் அபாயமானதாக மாறிவிட்டது. ஆக, தெருவில் விடுவதைத் தவிர எங்களுக்கு வேறு என்ன வழி இருக்கிறது?” என்று கேட்கிறார்கள் விவசாயிகள்.

இப்படி விவசாயிகளால் தெருக்களில் கைவிடப்படும் மாடுகள்தான் இப்போது பிரச்னை. ஏதோ ஐம்பது, நூறு இல்லை… பல்லாயிரம் மாடுகள் உ.பி.யின் அனைத்து பகுதிகளிலும் அலைந்து திரிகின்றன. இது கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் பலவிதமான இன்னல்களை உருவாக்குகின்றன. எந்த பயிர் பச்சையையும் விட்டு வைப்பதில்லை. கூட்டம், கூட்டமாக சென்று பயிர்களை தின்று, துவைத்து, நாசம் செய்துவிடுகின்றன மாடுகள். இதனால், விவசாயிகள் இரவு, பகல் பாராது ஷிப்ட் முறையில் வெள்ளாமை வயல்களை காவல் காத்து வருகின்றனர்.

படிக்க :
♦ யோகி ஆதித்யநாத் : பசுவைக் கொன்றவர்களுக்கு வழக்கு ! போலீசைக் கொன்றவர்களுக்கு விடுதலை !
♦ அந்தக் காலத்துல இருந்து மாட்டுக்கறி சாப்பிட்டுனுதான் இருக்கோம் | நேர்காணல் காணொளி

உத்திரபிரதேசம் மற்றும் மத்தியபிரதேசம் மாநிலங்களுக்கு இடையில் யமுனை ஆற்றங்கரையை ஒட்டியுள்ள ’சன்வாரா’ என்ற கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி அசோக் குமார். பொழுது சாயும் நேரம் வரையிலும் வயலை காவல் காப்பது இவரது வேலை. அதன்பிறகு, இரண்டாவது ஷிப்டில் இரவு முழுவதும் இந்த சௌகிதார் வேலையைச் செய்பவர் அவருடைய 65 வயது அப்பா.

“நைட் எல்லாம் ஒரு பொட்டு கண்ணை மூட முடியாது. கூட்டம் கூட்டமா மாடுங்க வந்து நாசம் பண்ணிடும்’’ என்கிறார் அந்த 65 வயது முதியவர்.

கடந்த ஜனவரி மாதத்தில், தங்கள் விவசாய வயல்களை நாசம் செய்த மாடுகளின் 14 உரிமையாளர்களை கிராம மக்கள் உள்ளூர் பள்ளிக்கூடத்தில் சிறைபிடித்து பூட்டி வைத்தனர். போலீஸ் வந்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து 14 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். ஒருநாள் சிறைவாசத்துக்கு பிறகு அனைவரும் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அதே ஜனவரியில், வயலில் மேய்ந்த மாடுகளை விரட்டிய விவசாயிகளை காளைகள் தாக்கியதில் வெவ்வேறு இடங்களில் நான்கு விவசாயிகள் கொல்லப்பட்டனர்.

இப்படியாக இந்த மாடுகள் கிராமப்புறங்களின் விவசாயத்தை குலைத்து, நிம்மதியை கெடுத்து, பொருளாதாரத்தை சூறையாடி மக்களுக்குள் புதிய பூசல்களை உருவாக்கியிருக்கிறது. விளையப்போகும் கோதுமை அறுவடையை மனதில் கொண்டு தீட்டி வைக்கும் திட்டங்களை எல்லாம் மாடுகள் வந்து நாசம் செய்துவிடுகின்றன. போட்ட முதலும் வீணாகி, மீண்டும் கடன் வாங்க வேண்டியிருக்கிறது. ‘மாடுகள் பயிர்களை நாசம் செய்வதால் வயலை சுற்றி மின் வேலி அமைக்க வங்கிகள் கடன் தர வேண்டும்’ எனக்கேட்டு விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர்.

உண்மையில் இந்த மாடுகளால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் அனைவருமே ‘இந்து’ விவசாயிகள்தான். இத்தனை காலம் வரை பசு மாட்டை ‘கோமாதா’ என கும்பிட்ட இவர்கள், இப்போது வயலின் அறுவடையை காலி செய்ய வரும் பசு கூட்டத்தை கையில் கிடைக்கும் கல்லையோ, கட்டையையோ தூக்கி அடிக்கிறார்கள். கெட்ட வார்த்தைகளால் திட்டி சாபம் விடுகின்றனர்.

“இதுக்கு முன்னாடி எங்க மாடுகளை முஸ்லிம்கள் வந்து இறைச்சிக் கடைக்கு வாங்கிட்டுப் போவாங்க. ஆனால் இப்போ, எங்க பசு மாடுகளை நாங்களே லத்தியை வெச்சு அடிச்சு நொறுக்க வேண்டிய சூழ்நிலையை யோகி ஆதித்யநாத் உருவாக்கிட்டார். சில நேரங்கள்ல மண்ணெண்ணையை கொண்டு தீயை உருவாக்கி மாடுகளை விரட்டுறோம். வேற என்ன செய்றது? நாங்க இப்படி நடந்துக்கலன்னா, எங்க பயிர் எல்லாம் நாசமாயிடும். அப்புறம் எங்க பிள்ளைங்க பட்டினியில சாக வேண்டியிருக்கும்” என்கிறார் உ.பி.யின் மதுரா மாவட்டத்தில் உள்ள சஜாத்பூர் என்ற கிராமத்தை சேர்ந்த மகாவீர் சிங் என்ற விவசாயி.

“எங்க விவசாயிங்க எல்லாம் மாடுகளை பார்த்தாலே அடிச்சு நொறுக்குறாங்க. ‘இறைச்சிக் கூடங்கள்ல மாடுகளை துன்புறுத்துறாங்க’ன்னு சொல்லிதான் ஆதித்யநாத் விற்பனையை தடுக்கிறார். ஆனால், இப்போ விவசாயிகளே அதைத்தானே செய்யுறோம்?! இதுக்கு எப்பவும் போல இருக்க விட்டா, நாங்க பாட்டுக்கும் வயசான மாடுகளை விற்போம். பணப்புழக்கம் இருக்கும். நிம்மதியா இருப்போமே..” என்று கேட்கிறார்கள் பல விவசாயிகள்.

படிக்க :
♦ மோடி : அடிமைகளின் மகாராஜா ! மகாராஜாக்களின் அடிமை !! புதிய கலாச்சாரம் மின்னிதழ்
♦ மாட்டுக்கறித் தடையால் ஆதாயம் யாருக்கு ? – மனலி சக்ரவர்த்தி

மாநிலம் முழுவதும் 10 ஆயிரம் கோசாலைகள் அமைக்கப்பட்டிருப்பதாக அரசு கூறினாலும், உண்மையான எண்ணிக்கை இவ்வளவு இல்லை என்கின்றன செய்திகள். இருக்கும் கோசாலைகளும் பிரச்னையின் தீவிரத்தை குறைக்கவில்லை.
வெவ்வேறு நகரங்களுக்கு இடையிலான தேசிய நெடுஞ்சாலை, எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலைகளில் திரியும் இந்த மாடுகள் உ.பி.யில் போக்குவரத்து நெரிசலையும், விபத்துகளையும் அடிக்கடி ஏற்படுத்துகின்றன. அதிவேகமாக வாகனத்தில் வந்துகொண்டிருக்கும்போது திடீரென வந்து நிற்கும் மாட்டு கூட்டம் வாகன ஓட்டிகளை பதற செய்து, மோசமான விபத்துகளுக்கு வழிவகுக்கிறது. கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் லக்னோ-ஆக்ரா எக்ஸ்பிரஸ் சாலையில் இப்படி 35 விபத்துக்கள் நடந்திருக்கின்றன.

‘இந்த பிரச்னை எங்கள் துறை தொடர்பானது இல்லை’ என்று உ.பி.யின் விவசாயத் துறை கை கழுவிவிட்டது. கால்நடை பராமரிப்புத்துறையோ, ‘தெருவில் திரியும் மாடுகளை பராமரிப்பது எங்கள் துறையின் பணி என்று எந்த விதிமுறையிலும் இல்லை’ என்று சொல்லிவிட்டது. ‘சாலையில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் மாடுகளை ஓட்டுவதும், அடிபட்டு கிடக்கும் மாடுகளை அப்புறப்படுத்துவதும்தான் எங்கள் வேலையா?’ என்று கேட்கிறது போக்குவரத்து காவல்துறை.

மொத்தத்தில் மாட்டிறைச்சி கடைகளுக்கு விதிக்கப்பட்ட தடை உ.பி.முழுமையையும் பெரும் சூறாவளியாக ஆட்டிப்படைக்கிறது. குறிப்பாக உ.பி.யின் கிராமப்புற வாக்கு வங்கியாக இருக்கும் விவசாயிகள், கடந்த இரு தேர்தல்களில் பா.ஜ.க.வின் பக்கம் நின்றனர். இப்போது நேர் எதிராக திரும்புவதைத் தவிர அவர்களுக்கு வேறு வாய்ப்பு இல்லை.

நன்றி : முகநூலில் – பாரதி தம்பி

நீதியை நிலைநாட்ட நான் வீசும் வாள் வெறும் இரும்புத்துண்டா ?

சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாடகம் | பாகம் – 13


காட்சி : 19

இடம் : விருந்து நந்தவனம்
உறுப்பினர்கள் : சாந்தாஜி, இந்துமதி, மோகன், பாலாஜி, பகதூர்.

(இந்துமதி சோர்ந்து நிற்க, சாந்தாஜி வந்து)

சாந்தாஜி : இப்படி வைத்துக் கொண்டிராதே முகத்தை என் பேச்சைக் கேளம்மா, உன் நன்மைக்குத்தான் இந்த ஏற்பாடு.

இந்துமதி : என் நன்மை? தேள் கொட்டுவது தேக ஆரோக்யத்துக்கா அப்பா? எதற்காகப்பா என்னை இப்படி வாட்டுகிறீர்கள்?

சாந்தாஜி : பைத்தியக்காரப் பெண்ணே ! நானும் கிளிப் பிள்ளைக்குச் சொல்லுவது போல் சொல்லிவிட்டேன். அவன் கேட்கவில்லை .

இந்துமதி : அதற்காக?

சாந்தாஜி : அதற்காகத்தான் இந்த ஏற்பாடு. பகதூர் வருவான்; அவனிடம் சிரித்துப் பேசு. அவன் உன்னைக் கல்யாணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று கேட்பான்.

இந்துமதி : ஆஹா! அதற்கென்ன சம்மதிக்க வேண்டும்? அதுதானேயப்பா உமது கட்டளை?

சாந்தாஜி : ஏனம்மா இப்படிக் கோபித்துக் கொள்கிறாய்? பகதூர் . துஷ்டனல்ல. கெளரவமான குடும்பம். அடக்கமானவன். கொஞ்சம் அசடு. அவ்வளவுதான். மேலும் …

இந்துமதி : என்னமோ அப்பா! எனக்கு இந்தப் பேச்சே வேதனையாக இருக்கிறது.

சாந்தாஜி : என்ன , மகா வேதனை? நான் என்ன , உன்னை பகதூரைக் கல்யாணம் செய்து கொள் என்றா கூறுகிறேன்? பாவனைக்கு ஒப்புக்கு ஒரு வார்த்தை அப்படிச் சொல். பிறகு பாரேன் அந்த முரட்டு மோகன் அலறி அடித்துக் கொண்டு என்னிடம் வருவான். வாளைத் தொடுவதில்லை என்று சத்தியம் செய்து தருவான். நான் கொஞ்ச நேரம் பிகு செய்வது போல் செய்துவிட்டு, பிறகு சம்மதிப்பேன். பயல் பெட்டிப் பாம்பாகி விடுவான். இந்தத் தந்திரத்தால்தான் மோகனை நம் வழிக்குக் கொண்டு வர முடியும்?

இந்துமதி : தந்திரம் கூட எனக்குக் கசப்பாகத்தான் இருக்கிறது. நான் ஒப்புக்குக் கூட எப்படி பகதூரைக் கல்யாணம் செய்துக் கொள்வதாக கூறுவேன்?

சாந்தாஜி : கூறித்தான் ஆக வேண்டும். உனக்குத் தெரியாது. இந்தக் காதல் இருக்கிறதே அது ஒரு மாதிரியான வெறி. வேறு ஒருவன் அந்தக் காதலை தட்டிப் பறித்துக் கொள்வான் என்று தெரிந்தால் போதும். காதலால் தாக்குண்டவன் காலடியில் விழுந்தாவது காரியத்தைச் சாதித்துக் கொள்ள முயல்வான். இது, பாலாஜி சொன்னது.

இந்துமதி : பாலாஜி சொன்னது … பாழாய்ப்போன பாலாஜி. நல்ல யோசனை சொன்னான் உமக்கு சரி. கொஞ்ச நேரம் நெருப்பிலே நிற்கிறேன். வேறு வழியில்லை…

சாந்தாஜி : அப்படிச் சொல். நீ எப்போதும் நல்ல பெண். அதோ யாரோ வருகிறார்கள். நீ போ! உடைகளை அணிந்து கொண்டு வா.

(பாலாஜியும் பகதூரும் வருகின்றனர்)

பாலாஜி : நமஸ்காரம் சாந்தாஜி! நமஸ்காரம்.

சாந்தாஜி : நமஸ்காரம்.

பாலாஜி : இவர்தான் நான் சொன்ன பகதூர்

(பகதூரை அங்குள்ள ஆசனத்தில் அமரச் செய்துவிட்டு )

நான் தங்கள் பூஜை அறையைப் பார்க்க வேண்டும் சாந்தாஜி.

சாந்தாஜி : ஆஹா அதற்கென்ன? வா, உள்ளே காட்டுகிறேன்.

(பாலாஜியும், சாந்தாஜியும் போக பகதூர் பாடத்தை ஆரம்பிக்கிறான்.)

பகதூர் : மயிலே! குயிலே மானே! தேனே!  மதிமுகவதி கலர்முகவதி…

இந்துமதி : இது என்ன அஷ்டோத்திரமா? சகஸ்ரநாமமா?

பகதூர் : இல்லை …. வந்து …

இந்துமதி : என்ன இல்லை. பாலாஜி கற்றுக் கொடுத்த பஜனையோ? ஏன் மறைக்கிறீர்? எனக்கும் இஷ்டம்தான் கூறும்.

பகதூர் : இந்து!

இந்துமதி : ஏன்?

பகதூர் : ஒன்றுமில்லை .

இந்துமதி : அவர்கள் போய்விட்டார்கள் என்று பயமா? பயப்படாதீர்கள். நான் பகலிலே இப்படியே தானிருப்பேன். பாதி ராத்திரியிலேதான் …

பகதூர் : பாதி ராத்திரியிலே என்ன இந்து அது?

இந்துமதி : ஏன் உங்களுக்குத் தெரியாதா? பாலாஜி சொல்லவில்லையா?

பகதூர் : என்ன இந்த விஷயம் எனக்கு ஒன்றும் தெரியாதே

இந்துமதி : தெரியாதா? விளையாடுகிறீர். தெரியாமலா இருக்கும். தெரிந்துதான் இருக்கும். பாலாஜி சொல்லி இருப்பாரே.

பகதூர் : அந்தப் பாழாய்ப்போன பாலாஜி ஒன்றுமே சொல்லவில்லையே. பாதி ராத்திரியிலே என்ன நடக்கும்? சொல்லேன்..

இந்துமதி : சொல்ல முடியாது. சொன்னால் நீங்களும் என்னைக் கல்யாணம் செய்து கொள்ள முடியாது என்று சொல்லி விடுவீர்கள்.

பகதூர் : எனக்கொன்றும் விளங்கவில்லையே!

இந்துமதி : நான் அழகாக இருக்கிறேனா, இல்லையா?

பகதூர் : எது போல இருக்கிறாய்

இந்துமதி : இருக்கிறேனல்லவா? நடுஜாமம் மணி அடித்ததும் …

பகதூர் : அடித்ததும்

இந்துமதி : ஊகூம்.. நான் சொல்ல மாட்டேன்.

பகதூர் : நான் சாந்தாஜியைக் கூப்பிடுகிறேன். எனக்கு இங்கிருக்கப் பிடிக்கவில்லை.

இந்துமதி : ஏன் வந்தீர்கள்?

படிக்க:
தேர்தல் மாற்றங்கள் தொழிலாளர்களின் நிலையை மாற்றிவிடுமா | சே. வாஞ்சிநாதன்
சென்னை மெட்ரோ : பணிப்பாதுகாப்பு இல்லை ! பயணம் மட்டும் பாதுகாப்பாக இருக்குமா ?

பகதூர் : அதுவா இந்து? நான் உன்னைக் காதலிக்கிறேன்.

இந்துமதி : காதலியுங்களேன். அதனால் என்ன?

பகதூர் : உன்னுடைய அழககைக் கண்டு…

இந்துமதி : மயங்கிவிட்டிருப்பீர்கள்.

பகதூர் : இல்லை ! அழகைக் கண்டு, அன்பு கொண்டு, உன்னைத் தவிர வேறொரு மங்கையைக் கனவிலும் கருதுவதில்லை என்று தீர்மானித்து விட்டேன். முக்கனியே! சக்கரையே! தேனே பாலே! உன்னை நான் என் உயிர் போலக் காதலிக்கிறேன்.

இந்துமதி : இவ்வளவுதானா? இன்னும் ஏதாவது உண்டா?

பகதூர்: இந்தச் சோலையிலே இந்து.. மாலையிலே உலாவுகிறோம். என்னைக் கணவனாக ஏற்றுக் கொள்ளச் சம்மதமாக் கண்ணே ?

இந்துமதி : எனக்குச் சம்மதந்தான். வேறு யார் இவ்வளவு தைரியமாக என்னைக் கல்யாணம் செய்து கொள்ள முன்வருவார்கள்?

பகதூர் : சுந்தரி ! சுகுந்தா சுகுணவதி சுப்ரதீபா! உன்னைக் கல்யாணம் செய்து கொள்ள மன்னாதி மன்னர்கள் மண்டியிடுவார்களே. அப்படியிருக்க தைரியம் என்ன தேவைப்படுகிறது?

இந்துமதி : மறந்துவிட்டீரோ? பாதி ராத்திரியிலே…

பகதூர் : ஐயோ! பாதி ராத்திரியிலே என்ன?

இந்துமதி : என்னவா? பாதி ராத்திரியிலே, நான் பாதி உடல் புலியாக மாறுவேன்.

பகதூர் : ஐயையோ!

இந்துமதி : அது தெரிந்துதான் என்னை யாரும் கல்யாணம் செய்து
கொள்ள முன்வரவில்லை. நானும் உம்மைக் காதலிக்கிறேன்.

(பகதூர் பயந்து ‘புலி, புலி’ என்று ஒட, மோகன் வர, சாந்தாஜி, பாலாஜி வருதல்)

இந்துமதி : விருந்து முடிகிற நேரத்திலே வந்தீரே.

மோகன் : இந்து! பகதூர் பாக்யசாலி! மராட்டிய மண்டலத்திலேயே இப்போது இப்படித்தான் யார் யாருக்கோ எதிர்பாராத யோகம் அடிக்கிறது. மந்தியிடம் மலர் மாலையைத் தருகிறார்கள். தாமரைத் தடாகத்திலே எருமை தாண்டவமாடுகிறது.

சாந்தாஜி : மோகனா! என்னடாப்பா, சந்தோஷமான நாளிது. சச்சரவு செய்யாதே.

மோகன் : சச்சரவா? சேச்சே … எப்படிப்பட்ட இன்ப நாளிது. ஸ்ரீமதி இந்துமதிக்கும் ஸ்ரீஜத் பகதூருக்கும் திருமணம் நிச்சயிக்கப்படும் நன்னாள். வீர, தீரமுள்ள பகதூரை விவேக சிந்தாமணியாம் இந்துமதி அம்மையார் பராக்கிரமம் மிகுந்த பாலாஜியின் முன்னிலையில், சகல கலா பண்டிதர் சாந்தாஜி ஆசிர்வாதத்துடன் மணாளராகத் தேர்ந்தெடுக்கும் மங்களகரமான மாலை; சுயம்வர வேளை.

இந்துமதி : கேலி செய்தது போதும். உங்களுக்கு ஒரு துண்டு இரும்பினிடம் இருக்கும் பற்றை விட இது ஒன்றும் கேலிக்கிடமான விஷயமில்லை.

சாந்தாஜி : அப்படிக் கேள் இந்து, அப்படிக் கேள். இன்னொரு தடவை கேள். ஒரு பெண்ணின் பிரேமைக்காக ஒரு வாளைத் துறந்துவிடக் கூடாதா என்று கேள்.

மோகன் : இந்து, உன்னை இதுவரை அறிந்து கொள்ளாதது என் குற்றம் தான். பகதூருக்கு ஏற்றவள்தான் நீ. அவன் வாள் ஏந்தமாட்டான். வாள் ஓர் இரும்புத் துண்டு அல்லவா? பேஷ் இந்து.. சுதந்திரப் போருக்காக நான் ஏந்தும் வாள் ஒரு இரும்புத்துண்டு அல்லவா? எவ்வளவு அற்புதமான அறிவு உனக்கு. வலியோர் எளியோரை வாட்டும் போது, நீதியை நிலைநாட்ட நான் வீசும் வாள் ஒரு இரும்புத்துண்டு . வீழ்ச்சியுற்ற இனத்தை மீண்டும் எழுச்சி பெறச் செய்வதற்காக விளங்கும் வாள் ஒரு இரும்புத்துண்டு. வீரம், நாட்டுப்பற்று இரண்டுமற்ற நீ, இத்தனை நாட்களாக என்னிடம் உண்மையான காதல் கொண்டதாக நடித்து, ஆயிரம் தடவை ‘அன்பரே! அன்பரே!’ என்று அர்ச்சித்து என்னிடம் இருக்கும் பிரேமைக்காக எந்தக் கஷ்ட நஷ்டத்தையும் ஏற்றுக் கொள்ளத் தயார் என்று சத்தியம் செய்து கொடுத்து, உன் வஞ்சகத்தால் என்னைப் பித்தனாக்கி, இன்று பணத்தாசை கொண்டு படாடோபத்தில் ஆசை வைத்து, பகதூரைக் கல்யாணம் செய்து கொள்ளச் சம்மதித்த நீ, ஒரு மாமிசப்பிண்டம். இதோ, ஒரு எலும்புக்கூடு. உனக்கேற்ற மணாளன். இவன் கையிலே அந்த இரும்புத்துண்டு இல்லை ; இவனுடன் கூடி வாழ்.

(போகிறான். பகதூரும் பாலாஜியும் போகின்றனர்.)

இந்துமதி : அப்பா! உங்களால் வந்தது இவ்வளவும், அவர் இனி என்னை ஏறெடுத்துப் பார்க்கமாட்டார். ஐயோ! நீங்கள் இந்த விபரீதமான விளையாட்டை ஏன் ஏற்பாடு செய்தீர்கள்? அவருக்கு என் மீது வீணான சந்தேகம் ஏற்பட்டு விட்டதே. நானும் துடுக்குத்தனமாகப் பேசி விட்டேன். அவர் எவ்வளவு கோபமாகப் போய்விட்டார் பார்த்தீர்களா? நான் என்ன செய்வேன்?

சாந்தாஜி : கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டது போல் ஆகிவிட்டது. இனிமேல் நான் என்ன செய்வேன்? அந்தப் பாலாஜி யோசனையால் கெட்டேன்.

இந்துமதி : அப்பா!

(தொடரும்)

நன்றி: Project Madurai

முந்தைய பகுதி: சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்

தேர்தல் மாற்றங்கள் தொழிலாளர்களின் நிலையை மாற்றிவிடுமா | சே. வாஞ்சிநாதன்

நிரந்தரத் தொழிலாளர் முறையை ஒழித்துக்கட்டும் NEEM & FTE திட்டங்களுக்கு முடிவு கட்டுவோம்! கூலி அடிமைமுறையைத் தீவிரப்படுத்தும் கார்ப்பரேட் காட்டாட்சியை (GATT) தூக்கியெறிவோம்! என்ற முழக்கத்தின் கீழ் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில் கும்மிடிப்பூண்டியில் 133-வது, மேநாள் பேரணி – பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இப்பொதுக்கூட்டத்தில், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சே. வாஞ்சிநாதன்  பங்கேற்று உரையாற்றினர். அவர் தனது உரையில், நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததுபோன்று எவ்வித உரிமைகளும் அற்ற நிலைக்கு தொழிலாளி வர்க்கம் தள்ளப்பட்டிருப்பதையும்; தொழிலாளர்கள் என்றில்லை விவசாயிகள், நெசவாளிகள், சிறுதொழில் செய்வோர் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பிரிவைச் சேர்ந்த உழைக்கும் மக்களின் வாழ்வுரிமைகள் பறிக்கப்பட்டிருப்பதையும் எடுத்துரைத்தார். நினைத்துப் பார்க்கவியலாத அளவுக்கு பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் பெருகியிருப்பதையும் சுட்டிக்காட்டிய அவர், இந்த ஏற்றத்தாழ்வுகளை எந்தச் சட்டத்தைக் கொண்டு நீக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார். தேர்தல் அரசியலில் முன்னூறுக்கும் ஐநூறுக்கும் ஜனநாயகம் விலை பேசப்படுவதையும் எள்ளி நகையாடியதோடு, தேர்தல் மாற்றங்கள் தொழிலாளர்களின் நிலையை மாற்றிவிடுமா? என்றக் கேள்வியையும் முன்வைத்தார் அவர்.

அவரது முழுமையான உரையைக் காண…

பாருங்கள்! பகிருங்கள்!!

சென்னை மெட்ரோ : பணிப்பாதுகாப்பு இல்லை ! பயணம் மட்டும் பாதுகாப்பாக இருக்குமா ?

வேலை வாய்ப்பில் வறட்சி நிலவும் ஒரு தேசத்தில் கிடைத்த வேலையை எப்படியாவது தக்க வைத்துக் கொள்வது பெரும் போராட்டமாகி வருகிறது. நிர்வாகத்தின் அடக்குமுறைகள், அவமானங்கள் அனைத்தையும் எதிர்கொண்டு அடங்கிக் கிடந்தாலும் அந்த வேலையும் இனி இல்லை எனும் ஒரு நிலையை வந்தடைந்திருகிறார்கள் சென்னை மெட்ரோ ரயில் பணியாளர்கள். அதுதான் தவிர்க்கவியலாமல் அவர்களை போராட்டத்தில் பயணிக்க வைத்திருக்கிறது.

வளர்ச்சி -வேலைவாய்ப்பு என்ற கோஷத்தை முன் வைத்து 10.06.2009 அன்று ரூ.19,058 கோடியில் தொடங்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 59% நிதியை ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு நிறுவனமும் (Japan International Cooporation Agency – JICA) மத்திய அரசு 20%, மாநில அரசு 21% நிதியையும் வழங்கின. இதற்காக 2000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.  சென்னையில் வாழ்ந்த பல்வேறு குடிசைவாசிகள், வணிக வளாகங்கள், நடுத்தர மக்களின் குடியிருப்புகளை விழுங்கிவிட்டு பிரம்மாண்டமாக எழுந்து நிற்கிறது சென்னை மெட்ரோ ரயில். தற்போது அதன் நிரந்தரப் பணியாளர்களையும் விழுங்கத் துடிக்கிறது மெட்ரோ நிர்வாகம்.

மெட்ரோ பணியாளர்கள் 8 பேரை சட்டவிரோதமாக நீக்கியிருக்கிறது. மேலும் நிரந்தர பணியாளர்கள் 250 பேரை தூக்கியெறிய துடித்துக் கொண்டிருக்கிருக்கிறது.  இந்த வேலை நீக்கத்தை எதிர்த்து கடந்த 27.04.2019 அன்று கால வரையறையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்து போராடினார்கள் மெட்ரோ பணியாளர்கள்.

மெட்ரோ ஊழியர்களின் போராட்டம் ஏன்?

கடந்த 2013 –ம் ஆண்டு முதல் கட்டமாக 750 பேர் வேலைக்கு ஆட்கள் தேவை என்று அறிவித்தார்கள். அதன் அடிப்படையில் ஒரு இலட்சத்திற்கும் மேலானோர் ஆன்லைனில் விண்ணப்பித்து தேர்வு எழுதினர். அதில் 322 பேரை தேர்வு செய்து 250 பேரை மட்டும் வேலைக்கு அமர்த்தினார்கள். மீதமிருப்போரை தேவைப்பட்டால் எடுத்துக் கொள்வோம் என்று காத்திருப்போர் பட்டியலில் வைத்தார்கள்.

அப்பொழுதே தங்களுக்கு வேலை வழங்கப்படாததை எதிர்த்து 72 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்கள். இந்த வழக்கில் 2014 இறுதியில் மீதமிருப்பவர்களை பணிக்கு அமர்த்தாமல் புதிய அறிவிப்புகள் எதுவும் வெளியிடக் கூடாது என்று தீர்ப்பு வழங்கி இருக்கிறது நீதிமன்றம்.

ஆனால், கடந்த 2016 முதல் மெல்ல மெல்ல ஒப்பந்தப் பணியாளர்களை பணிக்கு அமர்த்தியுள்ளது மெட்ரோ நிர்வாகம். ஒப்பந்தப் பணியாளர்கள் உள்ளே வர ஆரம்பித்ததும் நிரந்தர பணியாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த படித்தொகை தருவதை நிறுத்தி விட்டிருக்கிறார்கள். 7 வது ஊதிய உயர்வு கமிசனின் சம்பள உயர்வும் இல்லை. மாறாக வாங்கிய சம்பளத்தையும் குறைத்து விட்டார்கள். பதவி உயர்வும் இல்லை. இப்படியாக கொத்தடிமை முறையிலான உழைப்புச் சுரண்டலைத் தீவிரப்படுத்தியது நிர்வாகம்.

கோயம்பேடு மெட்ரோ தலைமையகத்தின் முன்பு பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுக்கும் தொழிற்சங்க நிர்வாகிகள் – கோப்புப் படம்.

“தொடர்ந்து ரயிலை இயக்குபவர்களையும் ஒப்பந்த முறையில் எடுக்க ஆரம்பித்தார்கள்.” இதற்கெதிராக ஜுலை 2018-ல் மெட்ரோ ஊழியர்களின் போராட்டம் தொடங்குகிறது. “எங்கள் போராட்டத்தினால் பயணிகள் பாதிக்கப்படக் கூடாது என்று சுழற்சி முறையில் போராட்டத்தை தொடர்ந்தோம். அதாவது இரண்டாவது ஷிஃப்ட் பணியாளர்கள் முதல் ஷிஃப்டிலும், முதல் ஷிஃப்டை முடித்தவர்கள் இரண்டாவது ஷிஃப்டிலும் என்று தொடர்ச்சியாக 15 நாட்கள் நடந்த இந்தப் போராட்டத்தில் நிர்வாகம் இறங்கி வந்து உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுகிறோம். ஆனால் ஒப்பந்த முறையில் ஆட்கள் எடுப்பதைப் பற்றி பேசக் கூடாது என்றார்கள். ஒப்பந்த முறையால் தமிழக இளைஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று எதிர்த்தோம். இதனால் நாங்கள் தொடர்ந்து பழி வாங்கப்பட்டோம்” என்கிறார்கள் பணியாளர்கள்.

படிக்க:
தொழிலாளர் பிரச்சினை : சங்கமாகத் திரண்டால் மட்டும் போதுமா ?
♦ சென்னை மெட்ரோ : நவீன ரயிலை இயக்கும் தொழிலாளிகளின் அவல நிலை !

ஒரு மாதமாகியும் கோரிக்கையை நிறைவேற்றவில்லை. ஆனால் ஒடுக்குறை மட்டும் தொடர்ந்தது. இதற்கெதிராக சங்கம் தொடங்கி போராடலாம் என முடிவெடுத்து கடந்த 2018 அக்டோபர் 30-ல் சங்கத்தை பதிவு செய்து  சி.ஐ.டி.யு மற்றும் சதர்ன் ரயில்வேயின் டி.ஆர்.இ.யூ-வோடு இணைத்துக் கொண்டோம். பின்னர் எங்களின் 21 அம்ச கோரிக்கையை எழுதி நிர்வாகத்திடமும், தொழிலாளர் நலத்துறையிடமும் கொடுத்தோம்.

இந்த காலகட்டத்தில் மெட்ரோ வேலைகளில் முழுவதும் ஒப்பந்தப் பணியாளர்கள் நிரம்பி விட்டார்கள். ரயில் ஓட்டுநர்கள், ட்ராக் பராமரிப்பு, பவர் சப்ளை, ஹவுஸ் கீப்பிங் என அனைத்து துறைகளிலும் ஒப்பந்தப் பணியாளர்கள். இந்த ஒப்பந்த நிறுவனங்கள் எல்லாம் அதிகாரிகளின் பினாமிகள். ஆந்திரா, கர்நாடகாவைச் சேர்ந்த நிறுவனங்கள் இவை.

டெண்டர் கொடுக்கும் முறையே இந்நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்கும். உதாரணமாக, ரயில் ஓட்டுநருக்கு முன் அனுபவம் இருக்க வேண்டும், ஒப்பந்தம் எடுக்கும் நிறுவனத்திற்கும் அனுபவம் இருக்க வேண்டும் என்பது விதி. இதனை மாற்றி மெட்ரோவில் எந்த வேலை பார்த்தாலும், எந்த டெண்டர் எடுத்திருந்தாலும் பரவாயில்லை என்று அறிவித்தார்கள்.

பெங்களூரில் ஹவுஸ்கீப்பிங் டெண்டர் எடுத்த BVG india limited என்ற நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டது. முதல் டெண்டர் அறிவிப்பில் மெட்ரோவில் ரயிலை இயக்கும் நிறுவனம் வேண்டும் என்று விளம்பரம் கொடுத்ததும் கியாளிஸ் என்ற சர்வதேச நிறுவனம் உள்ளே வந்தது. இதனை தடுக்க இம்மாதிரி முறைகேடாக மாற்றி ஒதுக்குகிறார்கள். இது 2016 -ல் நடந்தது.  இதுகுறித்து ஆர்.டி.ஐ போட்டால் எந்த தகவலும் வரவில்லை.

இந்த முறைகேடான டெண்டரால் தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணம் ஊழல் அதிகாரிகளால் வீணாகிறது. இன்னொரு பக்கம் நம்முடைய மக்களுக்கு கிடைக்க வேண்டிய வேலைகளும் பறிக்கப்படுகிறது. இதற்காகவா வீட்டை இழந்தோம். நிலத்தை இழந்தோம். பத்து ஆண்டுகளாக டிராபிக்கில் சிக்கித் தவித்தோம். எல்லாம் நமக்கு வேலை கிடைக்கும், வேலைக்கு சுலபமாக ரயிலில் செல்லலாம் என்று நினைத்தோம். ஆனால் அப்படித்தான் இருக்கிறதா என்றால் இல்லை.

டெல்லி மெட்ரோவில் மினிமம் டிக்கெட் ரூ.6 அதிகபட்சம் 34 ரூபாய். இங்கு மினிமம் ரூ. 10 அதிகபட்சம் ரூ.70 என்று பிடுங்குகிறார்கள். இந்தியாவில் எந்த மெட்ரோவிலும் இப்படி ஒரு கட்டணம் இல்லை. இவர்களுடைய நோக்கம் சேவை இல்லை. மெட்ரோ என்ற ப்ராஜெக்ட் எடுத்து அதன் மூலம் இவர்கள் பாக்கெட்டை நிரப்பிக் கொள்ள வேண்டும் என்பதுதான்.

முறைகேடான டெண்டர் மூலம் முதலில் பராமரிப்பு, இரண்டாவது ரயிலை இயக்குவது ஆகியவற்றை இந்நிறுவனங்களுக்கு ஒப்படைத்து விட்டார்கள். இப்போது மூன்றாவது நிலையக் கட்டுப்பாடு டெண்டர். அதில் அண்டர் கிரவுண்ட் ஸ்டேசன் ஆபத்து நிறைந்தது. எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம். இதனை நிர்வகிக்க இரண்டு ஆண்டுகள் பயிற்சி கொடுப்பார்கள். தீ விபத்து, லிஃப்டில் மாட்டிக் கொண்டவர்களை எவ்வாறு மீட்பது, ரயில் திடீரென நின்றால் என்ன செய்வது என்று எல்லா வகையிலும் பயிற்சி பெற்றவர்களை எடுத்து விட்டு எந்த பயிற்சியும் இல்லாத நபர்களை ஒப்பந்த முறையில் நியமித்து இருக்கிறார்கள்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

நிலையக் கட்டுப்பாட்டிற்கு எந்த டெண்டரும் அறிவிக்கவில்லை. முழுக்க முழுக்க சட்டவிரோதமாக நடந்தவைதான். ஓப்பன் டெண்டர் விட்டு ஆட்களை எடுத்தால் ஊழியர்கள் கேள்வி கேட்போம். அதைவிட பெரிய பிரச்சனை, 2013-ல் செலக்ட் ஆன காத்திருப்பு பட்டியலில் உள்ள நபர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்ற தீர்ப்பு  ஓப்பன் டெண்டருக்கு பிரச்சனையாக உள்ளது.

அதைவிட முக்கியம் இதே காலகடத்தில் மெட்ரோவில் ஜூனியர் எஞ்சினியருக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இதுவே கடைசி அறிவிப்பு. இந்த சூழலில் பாதிக்கப்பட்ட அந்த நபர்கள் மீண்டும் நீதிமன்றத்தை நாடி “எங்களுக்கு வேலை வழங்காமல் புதியதாக ஆட்களை எடுக்கக் கூடாது என்ற தீர்ப்பு உள்ளபோது வேலை வாய்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். இது நீதிமன்ற அவமதிப்பு என்று வழக்கு போடுகிறார்கள்.  இதனை விசாரித்த நீதிபதி சத்திய நாராயணன் பென்ச் இவர்களுக்கு உடனடியாக வேலை கொடுக்க வேண்டும் இல்லையென்றால் உங்களை கைது செய்ய வேண்டிய நிலை வரும்” என்று மெட்ரோவிற்கு கண்டனம் தெரிவிக்கிறது.

மெட்ரோ சார்பாக “எங்களுக்கு இப்போதைக்கு ஆட்கள் தேவைப்படவில்லை. வேண்டுமானால் அடுத்த கட்ட மெட்ரோவிற்கு எடுத்துக் கொள்கிறோம்” என்று சொன்னது. இதனை மனதில் கொண்டுதான் ஓப்பன் டெண்டர் கொடுக்கவில்லை.

ஏற்கனவே டெண்டர் எடுத்த BVG india limited மற்றும் KCIC (Karnataka commercial and industrial corporation)  ஆகிய இந்த இரண்டு கம்பெனிகளும் அதிகாரிகளுடைய பினாமி கம்பனி. இதனைக் கொண்டு ஒன்றரை ஆண்டுகள் ஓட்டிவிட்டார்கள்.

இப்போது இந்த நிலைய கட்டுப்பாடு வேலைக்கு டெண்டர் விட்டால் தகுதியான கம்பெனி போட்டிக்கு வந்து விடும், பல்வேறு நடைமுறை சிக்கல் இருப்பதால்,  டெண்டர் விடாமல் மறைமுகமாக கே.சி.ஐ.சி கம்பெனிக்கு கொட்டேசன் கொடுத்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 29 தேதி 17 ஸ்டேசனுக்கு அனுமதி கொடுத்து விட்டார்கள்.

இதன் பின்னர் இந்த 17 நிலையங்களிலும் யாரும் போகக் கூடாது. அந்த நிலையங்களுக்கு கே.சி.ஐ.சி கம்பெனியில் இருந்து ஆட்களை நியமித்துக் கொள்வார்கள் என்று சொன்னார்கள். இதற்கு ஒரு ஆளுக்கு ரூ.68,000 தருவதாகச் சொல்லி ஆர்டர் காப்பியும் கொடுத்து விட்டார்கள். இந்த ஆர்டர் காப்பி யூனியன் கைக்கு கிடைத்து விட்டது

இதே வேலையை செய்ய நிரந்தர ஊழியர்கள் நாங்கள் ரூ.28,000 பெறுகிறோம். ஆனால் தனியாருக்கு ரூ.68,000 தருவதாக சொல்கிறார்கள். ஆனால், ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் வெறும் ரூ.18,000. அப்படியெனில் ரூ.50,000 எங்கே செல்கிறது?.

ஏற்கனவே மெட்ரோவில் பயணிக்க ஆட்கள் இல்லாமல் தள்ளாடும் சூழலில் ரூ.68,000 சம்பளம் கொடுப்பது யாரை வாழவைக்க? இதில் பல கோடிகள் வரை ஊழல் நடப்பதாக ஐயத்தை ஏற்படுத்துகிறது. இதைப்பற்றி ஊடகங்களும் வாயைத் திறக்கவில்லை.

இதனை எதிர்த்து சி.ஐ.டி.யூ சங்கத்தலைவர் தோழர் சௌந்தராஜன், “நிர்வாகத்திற்கு இழப்பு ஏற்படும் வகையில் தாங்கள் அவுட் சோர்சிங் முறையில் ஆட்களை எடுப்பதாக தெரிய வருகிறது. இதனை பரிசீலிக்குமாறு கேட்டு கடிதம் எழுதுகிறார்.

அதேபோல் இந்த கே.சி.ஐ.சி நிறுவனத்திற்கும் ஒரு கடிதம் எழுதுகிறார். “நீங்கள் டெண்டரே எடுக்காமல் மறைமுகமாக ஆட்களை நியமிக்க முயற்சி செய்கிறீர்கள். ஆனால் நீங்கள் நியமிக்க இருக்கும் வேலைக்கு ஏற்கனவே செலக்ட் ஆகி 40 பேர் வெளியில் இருக்கிறார்கள். உயர் நீதிமன்ற உத்தரவும் இருக்கிறது. எனவே நீங்கள் மேன் பவர் சப்ளை செய்வது தவறு” என்று எழுதுகிறார்.

இந்த கடிதம் நிர்வாகத்திற்கும், டெண்டர் எடுத்த கம்பெனிக்கும் சென்ற பிறகு ஆத்திரம் தலைக்கேறி ஊழியர்களை பழி வாங்கும் நோக்கத்தோடு சம்பள குறைப்பு, ஷிஃப்டு டைம் மாற்றம், எட்டு மணி நேர வேலை 14 மணி நேரம் மாற்றம், விடுப்பு இல்லை, எதற்கெடுத்தாலும் ஒழுங்கு நடவடிக்கை. அதேபோல் பெண் தொழிலாளர்களை 4 மணிக்கு வர சொல்லி பழி வாங்கினார்கள். அவர்களுக்கு வாகன வசதி எதுவும் செய்து தரப்படவில்லை. இன்னும் சொல்ல முடியாத அளவிற்கு பழி வாங்கும் போக்கை மேற்கொண்டது நிர்வாகம். எப்படி பி.எஸ்.என்.எல். என்ற மாபெரும் நிர்வாகம் தனியார்மயமாக்கப்படுவதை எதிர்த்த ஊழியர்கள் வேட்டையாடப்பட்டார்களோ அதேதான் இங்கும் நடக்கிறது.

இதற்கு காரணம் யூனியன்தான் என்று பொறுப்பில் இருந்த 8 பேரை டிசம்பர் 3-ம் தேதி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்கள். மேலும் “நீங்கள் சி.எம்.ஆர்.எல். பற்றி தவறாக வெளியில் சொல்லி இருக்கிறீர்கள்” என்று போலியான விசாரணை நடத்துகிறார்கள். யூனியன் ஆரம்பிப்பதற்கு முன்னர் சம்பளத்துக்காக போராடியவர்கள் இன்று ஊழலை எதிர்க்க ஆரம்பித்து விட்டார்கள் என்பதுதான் இவர்கள் பழி வாங்கும் நடவடிக்கைக்கு காரணம். இவர்களுடைய நோக்கம் எப்படியாவது யூனியனை காலி செய்ய வேண்டும். நிர்வாக முறைகேடுகளுக்கு எதிராக கேள்வி எழுப்புவோரை அச்சுறுத்த வேண்டும் என்பதுதான்.

படிக்க:
சென்னை மெட்ரோ ரயிலின் வியர்வை மணம் !
♦ நீட் கொடுமைகள் 2019 : இன்னும் எவற்றையெல்லாம் சகித்துக் கொள்ளப் போகிறோம் ?

இந்த சஸ்பென்டை எதிர்த்து தொழிலாளர் நலத்துறையை அணுகி தொழிற்தாவா கொடுக்கிறோம். இதேசமயத்தில் உயர் நீதிமன்றத்தில் “இந்த சஸ்பெண்ட் செல்லாது. இதனை ஸ்குவாஷ் செய்யுங்கள்” என்று வழக்கு போடுகிறோம். தொழிலாளர் நலத்துறை பேச்சு வார்த்தைக்கு அழைக்கிறார்கள். இந்த பேச்சுவார்த்தை ஜனவரியில் தொடங்கி ஏப்ரல் வரை ஐந்து கட்ட பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. தொழிலாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கு நிலுவையில் இருக்கும்போது யார் மீதும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று சட்டம் இருக்கிறது. இதனை தொழிலாளர் துறை ஆணையர் திரு. ஜானகிராமன் ஒவ்வொரு முறையும் பேச்சு வார்த்தையின்போது மெட்ரோ நிர்வாகத்திடம் வலியுறுத்தினார்.

ஆனால் நிர்வாகமோ “எங்களுக்கென்று தனியாக சட்டம் வைத்திருக்கிறோம்” என்று சொல்லியது. அதனையும் தொழிலாளர் துறை ஆணையர் கண்டித்திருக்கிறார்.  அதனை எல்லாம் மீறி ஏப்ரல் 26 ம் தேதி 8 பேரையும் டிஸ்மிஸ் செய்தது நிர்வாகம்.

டிஸ்மிஸ் செய்தி அறிந்த தொழிலாளர்கள் 8 பேரும் இயக்குனரை பார்க்க செல்கிறார்கள். அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. சரியாக இரண்டு மணிக்கு அமைதியான முறையில் உள்ளிருப்பு போராட்டம் தொடங்கி மாலை ஐந்து மணி வரை தொடர்கிறது. 6 மணியாகியும் மெட்ரோ இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால் வெளியில் வரவில்லை.

அதற்குள் பணியில் இருந்த அனைத்து ஊழியர்களும் வந்து விட்டார்கள். போராட்டத்திற்கு வந்த சில ஊழியர்களை வரவிடாமல் தடுத்த அதிகாரிகள் இரண்டு ஊழியர்களை கடுமையாகத் தாக்கி கொலை மிரட்டலும் விடுத்திருக்கிறார்கள். அதனையும் மீறி ஊழியர்கள் அனைவரும் வரவே போராட்டம் தீவிரமடைந்தது.

இதற்கு காரணம் யாருக்கும் பணிப்பாதுகாப்பு இல்லை என்பதுதான். ஏற்கனவே அனைத்து வேலைகளும் ஒப்பந்த முறையாகிவிட்ட நிலையில், நிரந்தரப் பணியாளர்கள் இருப்பது நிலையக் கட்டுப்பாடு பணி மட்டும் தான். அதனையும் தனியாருக்கு விட வேண்டுமானால் இருப்பவர்களை வெளியேற்றினால்தான் சாத்தியம். அதனால்தான் “எங்களிடம் உபரியாக 130 ஊழியர்கள் இருக்கிறார்கள்” என்று தமிழக அரசுக்கு கடிதம் எழுதுகிறது மெட்ரோ.

இதுகுறித்து அதிகாரிகளை கேட்டால், “வெளியில் வேலைக்கு போங்க. உங்களை யாரும் சி.எம்.ஆர்.எல் -லில் இருங்க என்று சொல்லவே இல்லையே” என்று திமிராக பேசுகிறார்கள். இதுதான் நிரந்தர ஊழியர்களை போராட்டத்தை நோக்கி தள்ளி விட்டது.

கடந்த 30-ம் தேதி குறளகத்தில் உள்ள தொழிலாளர் துறை அலுவலகத்தில் நடந்த முத்தரப்பு பேச்சு வார்த்தையில் தொழிலாளர் துறை அலுவலர் “டிஸ்மிஸ் செய்தது தவறு. அவர்களை உடனடியாக பணியில் சேர்க்க வேண்டும்” என்கிறார். ஆனால் நிர்வாகம் சேர்க்க முடியாது என்று மறுக்கவே அடுத்த நாள் மீண்டும் பேச்சு வார்த்தை தொடர்ந்தது. அதில் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று நிர்வாகம் ஒப்புக்கொண்டதால் தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெற்றிருக்கிறார்கள்.

தனியார்மயம் புகுத்தப்பட்ட பிறகு யாருக்கும் வேலை நிரந்தரம் இல்லை என்பதுதான் விதி. அரசு-தனியார் கூட்டு முதலீட்டில் தொடங்கப்பட்ட மெட்ரோ மட்டும் தப்புமா என்ன? தொடங்கவிருக்கும் இரண்டாம் கட்ட மெட்ரோவிற்கு சுமார் ரூ.69,180 கோடி என்று மதிப்பிட்டு இருக்கிறார்கள். நிரந்தர பணியாளர்கள் எடுக்கும் திட்டமே இல்லை. எல்லாமே ஒப்பந்தம். அதற்கான முன்னோட்டமே தற்போது தொழிலாளர்கள் மீது ஏவப்படும் அடக்குமுறை!

பணிப்பாதுகாப்பு இல்லாத மெட்ரோ ரயில் திட்டத்தில் பயணப் பாதுகாப்பு மட்டும் இருக்குமா என்ன? அனைத்தும் ஒப்பந்த தொழிலாளர்களைக் கொண்டு வேலைகள் நடக்கும் போது இந்த உயர்திறன், எச்சரிக்கை தேவைப்படும் பணிகள் எந்த அளவு அபாயத்தில் நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். தனியார்மயம், தாராளமயம், உலகமயத்தின் மற்றுமொரு ஊழல் மற்றும் சுரண்டல் திட்டத்திற்கு மெட்ரோவும் ஒரு சான்று!

– வினவு செய்தியாளர்.

நூல் அறிமுகம் : உரைகல் | தொ பரமசிவன்

‘உரைகல்’ என்ற இந்த நூலில் பேராசிரியர் தொ.ப. அவர்கள் வெவ்வேறு தருணங்களில் எழுதிய கட்டுரைகள், மதிப்பீடுகள், அணிந்துரைகள், பேட்டிகள், உரைகள் ஆகியவை தொகுக்கப்பட்டுள்ளன. அழகான நடையில் சிறியசிறிய சொற்றொடர்களில் கடினமான கருத்துக்களைப் புரிந்துகொள்ளும்படி விளக்குவது பேராசிரியரின் வழக்கம். இந்த நூலும் அவ்வாறே உள்ளது.

பேராசிரியர் தொ.ப. அவர்களுடன் உரையாடும்போது வரலாற்றுச் செய்திகள், தொல்லியல் கண்டுபிடிப்புகள், நாட்டார் வழக்காற்றியல் தரவுகள், பழந்தமிழ் இலக்கிய மேற்கோள்கள், தற்கால இலக்கியச் சிந்தனைகள், மொழியியல் கருத்துக்கள், தாம் களஆய்வு மேற்கொண்ட அனுபவங்கள் போன்றவற்றை அவர் இயல்பாகச் சொல்வதைப் பல காலகட்டங்களில் நான் கண்டிருக்கிறேன். அவருடைய எழுத்துக்களும் அவ்வாறே நம்மோடு உரையாடுவதுபோலவே அமைந்துள்ளன. குழப்பம் ஏதும் விளைவிக்காது சொல்வதைப் பிறருக்கு விளங்கும்படிச் சொல்ல வேண்டும் என்ற அக்கறையோடு கூறப்படுபவை அவை. தம்முடைய மேதாவிலாசத்தைப் பிறருக்குப் பறைசாற்ற வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு எப்போதும் இருந்ததில்லை. இந்த நூலைப் படிப்பாரும் அதனை நன்கு உணரலாம்.

… தொ.ப. அவர்களுக்கு நாட்டார் வழக்காற்றியல் புலம் மீது தனித்த அக்கறையும் மரியாதையும் உண்டு. அவருடைய நூல்களில் மக்களிடையே வழக்கிலுள்ள சொற்கள், உறவு முறைகள், பழக்கவழக்கங்கள், நாட்டார் சமய நடவடிக்கைகள், நாட்டார் தெய்வங்கள் ஆகியவை குறித்த கட்டுரைகள் பல. இந்த நூலில் ‘சடங்கு’ குறித்து ஒரு கட்டுரை இடம்பெற்றுள்ளது. பட்டம் கட்டுதல், புனித எண்கள் குறித்த சடங்குச் சொல்லாடல்கள், சடங்கின்போது ஒரு சொல்லைத் திரும்பத் திரும்பச் சொல்லுதல், சூலுற்ற பெண்ணுக்கு மடிநிரப்பும் சடங்கு செய்தல், காதணி விழாவில் காதரிசி வழங்குதல், பூப்புச் சடங்கில் தீட்டுக் கழிப்பு போன்றவை பற்றிய குறிப்புக்கள் இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ளன. திராவிடச் சாதிகளில் இன்னும் வழக்கிலுள்ள சடங்கு நடவடிக்கைகளை ஆய்வு செய்வோருக்கு இக்கட்டுரை தரும் தகவல்கள் முக்கியமானவை. ‘பேரக் குழந்தைகள் குறித்த கட்டுரையில் பேரன், பேத்தி என்ற சொற்களின் பொருண்மைகள், நம்பிக்கை, சடங்குகள், கேலி செய்யும் உரிமை போன்றவற்றைச் சுவையாகச் சொல்வதோடு நிகழ்காலத்தில் குழந்தைகள் தாத்தா பாட்டியிடமிருந்து அந்நியப்பட்டுவிட்டதையும் சுட்டிக் காட்டுகிறார் பேராசிரியர். (நூலின் அணிந்துரையிலிருந்து)

மரபு – புதுமை என்கிற இரண்டு சொற்கள் அடிக்கடிப் பேசப்படுகிற சொற்கள். இன்றைக்கு நாம் எங்கே நின்று கொண்டிருக்கிறோம்? நம்முடைய நாடு எங்கே நின்று கொண்டிருக்கிறது? இந்த நாட்டினுடைய பெருவாரியான மக்களின் ஆசைகள் – கோபங்கள் – ஏக்கங்கள் – தாகங்கள் நம்பிக்கைகள் – கனவுகள் இவைகளெல்லாம் என்னென்ன? என்பதெல்லாம் பற்றி உங்களுக்குத் திட்டவட்டமான கருத்துக்கள் இருக்குமென்று நினைக்கிறேன்.

பன்னாட்டு மூலதனமுடைய பெரிய நிறுவனங்கள் இந்தியாவுக்குள் இறங்கி இருக்கின்றன. எந்த தேசத்திலே உப்பெடுப்பதற்காக காந்தியடிகள் பெரிய போராட்டத்தை நடத்தினாரோ அந்த தேசத்தில் அதே மாநிலமாகிய குஜராத்தில் உப்பெடுத்து விற்பதற்காக கார்கில் இண்டியா என்ற வெள்ளைக்காரக் கம்பெனியை கூட்டி வந்தார்கள். உப்பெடுப்பதற்கு 50,000 ஏக்கர் நிலத்தைக் கொடுத்தார்கள். உப்புச்சத்தியாக்கிரகம் ஒரு வரலாற்றுக் காரியமாகப் பேசப்படுகிற தேசத்தில், உப்பெடுக்க மறுபடியும் அவனைக் கூட்டிக்கொண்டு வந்தார்கள். நாட்டின் நிலைமையைச் சொல்ல இன்றைக்கு இது ஒன்று போதும். இன்னொன்றையும் சொல்ல வேண்டும். அதே குஜராத் மாநிலத்தில் 50,000 மக்கள் திரண்டு எழுந்து நிலத்தைக் கொடுக்கக் கூடாது என்று போராடினார்கள். அரசாங்கம் எல்லாவிதப் பாதுகாப்பும் கொடுத்தபிறகும் கூட கார்கில் இண்டியா நிறுவனம் உப்பெடுக்கிற தொழிற்சாலையை நம்மால் நடத்த முடியாது என்று விட்டுவிட்டுப் போய்விட்டது. அதுவும் இன்றைய இந்தியாதான்.

சரி. மரபு என்கிற செய்தியைப் பற்றிப் பேசுவோம். மரபு என்று சொன்னவுடன் ராஜா, ராணி, கோட்டைகள் வேகமாக வந்து கொண்டிருக்கிற குதிரைகள் என்று எல்லோரும் ஏதோ ஒரு பழைய காலத்தை நினைக்கக் கூடாது. மரபு என்பது வழிவழியாக வருகிற ஒரு வழக்கம். ஆனால் அது வெறும் வழக்கம் அல்ல. அந்த வழக்கம் உருவாக பல ஆண்டுகாலம் ஆகி இருக்கின்றது. மரபுகள் உருவாக பல நூற்றாண்டு காலம் ஆகி இருக்கின்றது. மரபுகள் பேணப்பட வேண்டியன என்கிற கருத்து நம்முடைய அறிஞர்களால் 2000 ஆண்டுகளுக்கு முன்பே வைக்கப்பட்டிருக்கிறது.  (நூலிலிருந்து பக். 86 – 87)

சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி என்று சொல்வார்கள். சயின்ஸ் என்றால் என்ன? டெக்னாலஜி என்றால் என்ன? விஞ்ஞானத் தொழில் நுட்பம் அவ்வளவுதான். ஆர்க்கிமிடிஸ் மிதத்தல் விதியை கண்டுபிடிக்கும் முன்பே மனிதன் படகைக் கண்டுபிடித்துவிட்டான். ரோமானியக் கலங்கள் பூம்பூகார் துறைமுகத்தில் வந்து நின்றாயிற்று. அது டெக்னாலஜி. மிதத்தல் விதியைக் கண்டுபிடித்தது சயின்ஸ். பாரம்பரியமான அறிவுத் தொகுதி முழுக்க தொழில்நுட்ப ரீதியாக அமைந்தது. அதனால் காலிலே புண்ணானதும் மருந்தை அரைத்துக் கட்டினால் அம்மருந்து பயனளிக்காமல் போவதில்லை. பக்க விளைவுகளையும் உண்டாக்காது. ஏனென்றால் அது பல்லாயிரக்கணக்கான முறை சோதனை செய்யப்பட்டது.

ஆனால் விஞ்ஞானக் கோட்பாடுகள் அடுத்த ஐந்தாண்டில் மற்றொரு விஞ்ஞானியால் நிராகரிக்கப்படுகிறது. கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்த விஞ்ஞானத்தை நம் தலையில் கட்டினான். என்ன நடந்தது? ஏன் எதற்கு என கேள்வியில்லாமல் பாரம்பரிய மரபுகள் எல்லாவற்றையும் நிராகரித்தோம். பண்பாட்டின் சல்லிவேர்கள் அறுந்து போயின. அறுந்து போகப் போக வேரிலே சிக்கல் ஏற்பட்டது. வேரில் புழு தாக்கினால் அது கொழுந்தில் தெரியும். வேரிலே வெக்கை கட்டியதால் மேலேயிருக்கும் முடி வாடுகிறது. நம்முடையே குழந்தைகளிடத்திலே இளைஞர்களிடத்திலே இளம் பெண்களிடத்திலே மாறுதல் ஏற்படுகிறது. பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை வெவ்வேறு பிராண்ட் சோப்பை மாற்றச் சொல்கிறார்கள். வெவ்வேறு பிராண்ட் என்றாலும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் இந்துஸ்தான் லீவர், கோத்ரேஜ் அண்ட் பாயிஸ் என எல்லாம் ஒரே இடத்திலிருந்து வரும். (நூலிலிருந்து பக்.91-92)

சீர்திருத்தம் என்பதே மரபை மீறிய புதுமைதான். ஊறிப்போன விசயத்தை முதலில் உடைத்தது சித்தர்களின் ககலகமரபும் ராமனுஜர் மரபும் ராமானுஜர் மரபு மென்மையானது. ஆனால் ஆழமான வேர்களைக் கொண்டது. இவர்கள் இரண்டு பேரும் பெற்ற வெற்றி சிறியது. ஆனால் வரலாற்றில் அவற்றின் பாதிப்பு இருந்தது. மறு நூற்றாண்டிலே நம் மரபிலே ஒரு விபத்து நடந்தது. மலிக்காபூர் வடக்கே இருந்து படையோடு வந்து விட்டான். சிறிய குடிசையில் தீவிபத்து என்றால் தெருவின் மனநிலையே மாறிவிடும். யார் வீட்டிற்குள்ளும் யாரும் புகுந்து தண்ணீர் எடுப்பர். அதுபோல மலிக்காபூர் வந்ததும் சித்தர்களின் கலக மரபு விரிவடையாமல் நின்றுவிட்டது. அந்த நெருப்பின் மீது இந்த நெருப்பு தண்ணீராக வந்து விழுந்தது.

படிக்க:
செயற்கை நுண்ணறிவு : அறிவியல் உலகில் அறம் சார்ந்த கேள்விகள் !
நீட் கொடுமைகள் 2019 : இன்னும் எவற்றையெல்லாம் சகித்துக் கொள்ளப் போகிறோம் ?

திட்டமிட்ட தீர்க்கமான வெற்றியினை மரபுகளை நிராகரிப்பதில் பெற்றவர் தந்தை பெரியார் ஒருவர்தான். நிராகரிக்கப்பட வேண்டிய மரபுகளை நிராகரிப்பதில் பெரிய வெற்றியை பெரியார்தான் பெற்றார். பிரசன்ஸ் ஆப் திங்ஸ் என்பது போல ஆப்சன்ஸ் ஆப் திங்ஸ் என்பதையும் பார்க்க வேண்டும். உண்மையைப் போல இன்மையும் ஆய்வுக்குரிய விசயம். சிறுபான்மை மக்களுக்கு பெரியாரின் அருமை பெரியாரின் இறப்புக்குப் பின் தான் தெரிந்தது. பெரியார் இருந்தபோது பெரியாரின் பணியின் வீச்சினை உணரவில்லை. பெரியார் இறந்த பிறகுதான் தமிழ்நாட்டில் சிறுபான்மையினருக்கு ஏற்பட்ட உணர்வு நெருக்கடிகள் இவ்வளவு காலம் நம்மைக் காப்பாற்றியது, அரசியல் சட்டம் அல்ல. பெரியாரும் அவரது சிந்தனைகளும்தான் என்பதை உணர்ந்தார்கள். சித்தர்களில் சிலர்தான் கடவுளை நிராகரித்தார்கள். ராமனுஜர் கடவுளை நிராகரிக்கவில்லை. பெரியார் ஒருவர்தான் விஞ்ஞானப்பூர்வமாக துணிச்சலாக கடவுளை நிராகரித்தார். (நூலிலிருந்து பக். 94 – 95)

நூல்:உரைகல்
ஆசிரியர்: தொ.பரமசிவன்

வெளியீடு: கலப்பை பதிப்பகம்,
9/10, முதல் தளம், இரண்டாம் தெரு,
திருநகர், வடபழனி, சென்னை – 600 026.
மின்னஞ்சல் : kalappai.in@gmail.com

பக்கங்கள்: 144
விலை: ரூ 130.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

இணையத்தில் வாங்க: udumalai| puthinambooks

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

கீழைக்காற்று விற்பனையகத்தின் புதிய முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

செயற்கை நுண்ணறிவு : அறிவியல் உலகில் அறம் சார்ந்த கேள்விகள் !

0

செயற்கை நுண்ணறிவு குறித்து நடந்து வரும் ஆராய்ச்சிகள் எந்தளவுக்கு வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறதோ அதே அளவுக்கு புதிய கேள்விகளையும், அறம் சார்ந்த ஊசலாட்டங்களையும் ஏற்படுத்துகின்றது. செயற்கை நுண்ணறிதிறன் தன் வளர்ச்சியின் ஊடாக தன்னுணர்வு சார்ந்த முடிவெடுக்கும் ஆற்றலை மெல்ல மெல்ல அடைந்து வருகின்றது. கூகிள், பேஸ்புக், ஐபிஎம் போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்கள் இந்த திசையிலான ஆராய்ச்சிகளுக்கு ஏராளமாக செலவிட்டு வருகின்றது. எதிர்காலத்தில் மனிதப் பண்புகள் கொண்ட இயந்திரங்கள் (Humanoids) தன்னுணர்வுடன் முடிவெடுக்கும் ஆற்றலை அடையும் திசையில் ஆராய்ச்சிகள் முன்னேறி வருகின்றன. அதற்கு முன், நாய் பூனை போன்ற பிராணிகளுக்கு ஒப்பான தன்னுணர்வு கொண்ட எந்திரங்கள் செயல்பாட்டுக்கு வரும் சாத்தியங்களும் அதிகரித்துள்ளன.

செயற்கை நுண்ணறிவு என்று பொதுவாக அழைக்கப்பட்டாலும், அதனுள் மூன்று பிரிவுகள் உள்ளன. ”துணைபுரியும் நுண்ணறிவு” (Assisted intelligence) – மிக எளிதான தானிமயமாக்கும் (Automation) போக்கு. தொழிற்சாலைகளில், ஐடி துறைகளில் இன்னபிற பணியிடங்களில் மனிதர்களை ஈடுபடுத்தும் ஒரே விதமான செயல்களை இயந்திரங்களைக் கொண்டு மாற்றீடு செய்வது. விரிவாக்கப்பட்ட நுண்ணறிவு (Augmented intelligence) – இது மனிதர்கள் உள்ளீடு செய்யும் தரவுகள் மற்றும் மனிதர்களின் செயல்பாடுகளில் இருந்து கற்பது போன்றவற்றின் மூலம் ஒரு முடிவை எடுக்கும் திறன் கொண்டது. தானிமயமாக்கப்பட்ட நுண்ணறிவு (Autonomous intelligence) – இங்கே மனிதர்களின் இடையீடு தேவையில்லை; தானிமயமான கார் மற்றும் மனித இயந்திரங்கள் இதற்கான உதாரணம்.

இம்மூன்று துறைகளிலும் நடந்து வரும் ஆராய்ச்சிகள் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு தன்னுணர்வுடன் முடிவெடுக்கும் ஆற்றலை செயற்கை நுண்ணறிவு பெறும் நிலையை – அதாவது செயற்கை மூளை என்கிற நிலையை – நோக்கி நகர்ந்து வருகின்றது. உள்ளீடு செய்யப்பட்ட மற்றும் திரட்டப்பட்ட மின்தரவுகளை ஆழ்நிலைக் கற்றலுக்கு உட்படுத்துவது (Deep learning), இயந்திரக் கற்றல் முறையின் மூலம் ஆராய்வது (Machine Learning) போன்ற தொழில்நுட்ப உத்திகளின் மூலம் செயற்கை நுண்ணறிவு சுயேச்சையான முடிவுகளை எடுக்கும் நிலைக்கு உயர்ந்து வருகிறது. நிதி நிறுவனங்களில் இந்த முறை தற்போது அமல்படுத்தப்பட்டும் வருகின்றது.

படிக்க:
ஸ்லீப்பர் செல் சங்கிகளின் நஞ்சு பரப்புத் தளமாகும் வாட்சப் குழுக்கள் !
சாதி வெறியை ஊதிவிடும் தேவராட்டம்

அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியகத்திலிருந்து சுமார் 320 மில்லியன் அமெரிக்கர்களின் பொருளாதார நடவடிக்கைகள் குறித்த மின் தரவுகளை செயற்கை நுண்ணறிதிறன் கொண்டு ஆய்வு செய்த ப்ரைஸ் வாட்டர் கூப்பர் என்கிற நிறுவனம், அதன் மூலம் வாடிக்கையாளர் செயல்பாடுகள், சிந்தனைப் போக்கு, ஆளுமை, முடிவெடுக்கும் முறைமை (pattern) போன்றவை குறித்த வரைபடம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் அமெரிக்க நிதி நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட வாடிக்கையாளர் குறித்து எம்மாதியான முடிவை எடுக்கலாம் என்கிற பரிந்துரையை வழங்குகின்றது. போலவே, ஓட்டுனர் இல்லா தானியங்கி மகிழ்வுந்துகள் மேலை நாடுகளில் சிறிய அளவுகளில் பயன்பாட்டுக்கு வந்து விட்டன. இவற்றை மேலும் அன்றாடப் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான ஆராய்ச்சிகளும் நடந்து வருகின்றன. மருத்துவ ஆலோசனை, சட்ட ஆலோசனை என இதுகாறும் மனிதர்கள் மட்டுமே செய்யக் கூடிய வேலைகள் எனக் கருதப்பட்ட பல வேலைகளில் தற்போது இயந்திரங்கள் அமர்வது சாத்தியமே என்கிற நிலை எட்டப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் ஏற்பட்டு வரும் இந்த வளர்ச்சிப் போக்குகள் அனைத்தும் மிக விரைவில் தன்னுணர்வு கொண்ட மனித இயந்திரங்களின் பயன்பாடு சாத்தியமே என்பதற்கு கட்டியம் கூறுகின்றன. தன்னுணர்வு (Cognition) என்பதைக் குறித்த ஆராய்சிகளுக்கு உளவியல், உயிரியல், உடலியல், நரம்பியல் துறைகளில் நடந்து வரும் ஆய்வு முடிவுகள் மேலும் செறிவூட்டுகின்றன. மனித மூளையின் தன்னுணர்வு எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது என்பதைக் குறித்த ஆராய்ச்சிகளுக்கே செயற்கை நுண்ணறிதிறன் பயன்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது உயிரியல் துறையிலும் கணினித் துறையிலும் நடக்கும் ஆராய்ச்சிகள் ஒன்றை ஒன்று செழுமைப்படுத்தி முன்னேறிக் கொண்டிருக்கின்றன. இதன் மூலம் எட்டப்படும் ஒவ்வொரு மைல்கல்கள் ஒவ்வொன்றும் மனித மூளையைக் குறித்த புதிய புரிதல்களை ஏற்படுத்துவதோடு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் அடைய வேண்டிய புதிய இலக்கையும் நிர்ணயிக்கின்றன.

மனித மூளையானது ஒரு குறிப்பிட்ட பிரச்சினை அல்லது சிக்கலுக்கான முடிவை தர்க்கப்பூர்வமாக சிந்திப்பதன் மூலமும், விவரங்களைப் பகுத்தாராய்வதன் மூலமும் எடுக்கின்றது. இதற்கு அடிப்படை தரவுகள். தரவுகளை ஒப்பீடு செய்வதன் மூலம் (inductive reasoning) அல்லது பொருந்தாதவற்றைக் கழிப்பதன் மூலம் (deductive reasoning) ஒரு குறிப்பான சூழலுக்கு ஒரு குறிப்பான முடிவை எடுக்கிறது. அவ்வாறு எடுக்கப்படும் முடிவுகள் கால தேச வர்த்தமானங்களுக்கும், குறிப்பான சமூக பொருளாதார சூழலுக்கும் தொடர்புடையதாகவும் வரலாற்று மற்றும் கலாச்சார ரீதியில் ஒரு மனித மூளையின் கற்றல் திறனுக்கு உட்பட்டதாகவும் இருக்கும். எவ்வாறாயினும், மூளையின் தன்னுணர்வானது ஒரு குறிப்பிட்ட முடிவை எடுப்பதற்கு மிக ஆதாரமானது தரவுகள் அல்லது விவரங்கள். மனித மூளையின் செயல்பாடுகள் குறித்து நவீன அறிவியலுக்கு ஏற்றபட்டு வரும் புதிய புரிதல்கள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத் துறையில் நடக்கும் ஆய்வுகளை அடுத்தடுத்த கட்டங்களுக்கு உயர்த்திச் சென்றுள்ளது. இதன் விளைவாகவே சுயேச்சையான தன்னறிவு கொண்ட மனித இயந்திரங்கள் நடைமுறைப் பயன்பாட்டுக்கு வரும் நாள் தொலைவில் இல்லை என்கிறார்கள் இத்துறையைச் சேர்ந்த வல்லுநர்கள்.

இப்போது ஒரு அறம் சார்ந்த கேள்வியை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. சுயமாய் சிந்திக்க முடிந்த, தன்னுணர்வு கொண்ட, பகுத்தறியும் ஆற்றல் கொண்ட, ”ஒன்றை” அஃறிணையாய்க் கருதுவதா உயர்திணையாய்க் கருதுவதா என்கிற கேள்வி எழுகின்றது. செயற்கை நுண்ணறிதிறனின் அடுத்த கட்டம் விலங்குகளின் தன்னுணர்வுக்கு ஒப்பான நிலையை அடையும் என்கிற போது, விலங்குகளுக்கென்று வகுக்கப்பட்டுள்ள சட்ட நெறிமுறைகளையும், உரிமைகளையும் இயந்திர மனிதர்களுக்கும் பொருத்துவதா என்கிற விவாதம் அறிவியல் தொழில்நுட்ப உலகில் எழுந்துள்ளது.

மேற்குலகில் உள்ள சட்டங்களின் படி முதுகெலும்புள்ள விலங்குகள் (vertebrate animals) உயிராபத்து கொண்ட பரிசோதனைகளுக்கு பயன்படுத்தப்படுவதற்கு ஏராளமான கட்டுப்பாடுகள் உள்ளன. அதே போல் உயிரியலின் நரம்பியல் துறையில் மனித மூளையின் திசுக்களைக் கொண்டு நடத்தப்படும் ஆராய்ச்சிகளும் கடும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகின்றன. சுயேட்சையாய் சிந்திக்கும் ஆற்றலும் தன்னுணர்வும் கொண்ட தனியொரு உருப்பொருள் (entity) என்கிற விளக்கத்திற்கு இயந்திய மனிதர்கள் வெகு விரைவில் பொருந்தக் கூடும்.

மகிழ்ச்சி, துயரம், ஏக்கம், வியப்பு, காதல், கருணை, அச்சம், கோபம், வீரம் போன்ற உணர்வுகளற்ற, வலி போன்ற உணர்ச்சிகளற்ற ஒரு ”ஜடம்” என்ன தான் தன்னுணர்வோடு முடிவுகள் எடுத்தாலும், சுயேட்சையாய் சிந்திக்கத் தெரிந்திருந்தாலும், இறுதியில் ”அது” வெறும் இயந்திரம் தானே என்கிற ஒரு தர்க்கமும் முன் வைக்கப்படுகின்றது. ஆனால், இங்கே ஒரு சிக்கலான கேள்வியும் எழுகின்றது. அவ்வாறான உணர்வுகளும், உணர்ச்சிகளும் கொண்ட ”ஒன்றை” உருவாக்கியிருக்கிறோம் என்பதை நாம் எப்படி அறிந்து கொள்வது? “அதுவாகவே” சொல்ல வேண்டும் – அல்லது தனது உரிமைக்காகவும், தனக்கு ஏற்பட்ட பாதிப்பிற்காகவும் குரல் எழுப்ப வேண்டும்; அடிப்படையில் “தான்” என்கிற சுயத்தை பிரகடனப்படுத்த (Manifest) தெரிந்திருக்க வேண்டும். ஆனால், ஒரு விலங்கை ஒத்த தன்னுணர்வு கொண்ட இயந்திர மனிதனால் அவ்வாறான பிரகடனகப்படுத்தல் சாத்தியமா?

இந்த கேள்வியை நவீன அறிவியல் தீர்க்காத வேறு சில கேள்விகள் மேலும் சிக்கலாக்குகின்றன. உதாரணமாக உள்ளுணர்வு அல்லது பிரக்ஞை (consciousness) குறித்த ஒரு அறுதியான முடிவை நவீன அறிவியல் இன்னும் எட்டவில்லை. இதில் சற்றே நெகிழ்வாக (லிபரல்) சிந்திக்க கூடிய தரப்பினர் ஒரு விளக்கத்தை வைக்கிறார்கள். அதாவது, தரவுகளைக் கையாள்வதில் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட முறைமையை நெறிப்படுத்தப்பட்ட கவனக்கட்டுப்பாட்டுடன் கையாண்டு நீண்டகாலத் திட்டமிடலுக்கான ஆற்றல் கொண்டிருப்பது உள்ளுணர்வுக்கான ஒரு இலக்கணம் என்கிறார்கள் (guided attentional capacities and long-term action-planning). இந்த ஒழுங்கமைக்கப்பட்ட முறைமை எனப்படுவது ஒரு குறிப்பிட்ட விவரத்தை அது நிலவும் புறநிலைக்கு தக்கபடி புரிந்து கொள்வது என்கிறார்கள்.

இதே கேள்விக்கு பழைமைவாத தரப்பு வேறு ஒரு விளக்கத்தை முன்வைக்கிறார்கள். உள்ளுணர்வுக்கு சில குறிப்பான உயிரியல் தன்மைகள் இருக்க வேண்டும்; விலங்கினங்களில் காணப்படுவதை ஒத்த கட்டுமானத்தோடு கூடிய மூளை இருக்க வேண்டும். பழமைவாத தரப்பினரின் விளக்கத்தை ஏற்பதாக இருந்தால் செயற்கை மூளை என்பது உடனடி சாத்தியம் கிடையாது – ஆனால், லிபரல் தரப்பினரின் விளக்கத்தை நவீன அறிவியல் உறுதிப்படுத்தும் பட்சத்தில் ஏறத்தாழ இயந்திர மனிதர்கள் அந்த நிலையை அடையும் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு மனிதனைப் போன்றே உணர்வுப் பூர்வமாகவும், உணர்ச்சிகரமாகவும், தர்க்கரீதியிலும், தரவுகளின் அடிப்படையில் முடிவெடுக்கும் ஆற்றலை ஒரு இயந்திரம் பெறுவது – அதாவது இயந்திரம் முழுமையான ”மனித” நிலையை அடைவதற்கான வளர்ச்சிப் போக்கு மேலும் பல சிக்கலான கேள்விகளையும் எழுப்புகின்றன. உதாரணமாக தனது இருப்புக்காகவும், பெருக்கத்திற்காகவும் ”அவை” மனிதர்களோடு முரண்படும் நிலை ஏற்படுமா? இந்த முரண்பாடு இறுதியில் பூமி யாருக்கானது என்கிற திசையை நோக்கிச் செல்லுமா?

படிக்க:
செயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம் – புதிய கலாச்சாரம் சிறப்பு வெளியீடு
ஆதார் : பார்ப்பனியத்தின் டிஜிட்டல் பாசிசம் !

இதை ஒட்டி ஹாலிவுட் திரைப்பட பாணியில் ஏராளமான சதிக் கோட்பாடுகளை மேற்குலக ”ஹீலர் கோஷ்டிகள்” உருவாக்கி வருகின்றனர். எனினும், நவீன அறிவியலின் பாய்ச்சலான முன்னேற்றம் இதுகாறும் அஞ்ஞானத்தில் இருளில் பதுங்கியிருந்த “மர்மங்களை” பகல் வெளிச்சத்திற்கு இழுத்து வந்துள்ளது; செயற்கை நுண்ணறிவு என்பது அறிவியலின் வளர்ந்து வரும் அம்சம் என்பதையும், இது முன்னேறும் வேகத்தையும் கணக்கில் கொண்டு பார்த்தால் வெகு விரைவில் எஞ்சியுள்ள “அமானுஷ்யங்களுக்கும்” விடை கிடைக்கும் என உறுதியாக நம்பலாம்.

சாக்கியன்

மேலும் படிக்க: AIs should have the same ethical protections as animals