Wednesday, June 17, 2026
முகப்பு பதிவு பக்கம் 80

மோடிக்கு காவடி தூக்கும் கோதி (Godi) மீடியா

மோடியின் பத்தாண்டு கால ஆட்சியில் பல்வேறு பொதுத்துறை நிறுவங்கள் தனியார்வசம் சென்றுள்ளன, திட்டமிட்டு அவை திவாலும் ஆக்கப்பட்டு வருகின்றன.

அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை, தேர்தல் ஆணையம், நீதித்துறை என அனைத்தும் பா.ஜ.க வுக்கு ஆதரவாக மாறிவிட்டன. இவற்றின் வரிசையில் சில இந்திய ஊடகங்களும் வந்துள்ளன. இந்த செய்தி எவராலும் மறுக்க முடியாத உண்மையாக தற்போது மாறியுள்ளது.

நாளுக்கு நாள் இந்திய மீடியாக்கள் பா.ஜ.க-வுக்கு ஆதரவாக செயல்படுவது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதனால் கோதி மீடியா (GODI MEDIA) என்ற சொல் தினமும் சமூக வலைதளங்களில் தென்படுகிறது. இதை நிறுவும் விதத்தில் வட இந்திய ஊடகங்களைப் பற்றி ”THE NEWS MINUTE” இணையதளத்தில் ஆய்வுக்கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி நடந்த முக்கியான விவதாங்களில் எந்த மாதிரியான செய்திகள் பேசுபொருளாக இருந்தன என்பதைப் பற்றியது தான் அந்த ஆய்வு.

இந்த ஆய்வுக்கட்டுரையின் தொடக்கத்தில், ஊடக சுதந்திரத்தைப் பற்றிய 180 நாடுகளின் பட்டியலில் இந்தியா 161-வது இடத்தில் இருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது.


படிக்க: பாசிஸ்டுகளின் அதிகாரப்பூர்வ ஊதுகுழலான “காவி” டிடி நியூஸ்


பிப்ரவரி 1 ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 12 ஆம் தேதி வரையில் ஆறு சேனல்களையும், அதில் இருந்து ஆறு நெறியாளர்களையும் தேர்வு செய்து, அவர்கள் நடத்திய விவாதங்கள் ஆய்வு செய்யப்பட்டன. ”கோதி மீடியாக்களில்” (GODI MEDIA) நடந்த விவாதங்களை ஆறுவகையாக பிரித்துள்ளனர்.

  • எதிர்க்கட்சிகளுக்கு எதிரான விவாதங்கள்
  • அரசுக்கு ஆதரவான விவாதங்கள்
  • இந்து-முஸ்லீம்கள் பற்றியது
  • பிரிவினைவாத அரசியல்
  • அரசுக்கான கேள்விகள்
  • கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

இந்த ஆய்வுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட கோதி மீடியாக்களின் (GODI MEDIA) நெறியாளர்கள்

  1. ரிப்ப்ளிக் டிவியின் அர்னாப் கோஸ்வாமி
  2. நியூஸ் 18 இந்தியாவில் இருந்து அமிஷ் தேவ்கன்
  3. ஆஜ் டக் சேனலில் இருந்து சுதிர் சௌத்ரி
  4. டைம்ஸ் நவ் பாரத் என்ற சேனலில் இருந்து சுசாந்த் சின்கா
  5. சிஎன்என் நியூஸ் 18 சேனலில் இருந்து ராகுல் சிவ்சங்கர்
  6. டைம்ஸ் நவ் சேனலில் இருந்து நவிகா குமார்

இவர்களின் செயல்பாடுகள் கீழே விளக்கப்பட்டுள்ளன.

  1. ரிபப்ளிக் டிவியின் அர்னாப் கோஸ்வாமி, ரிபப்ளிக் வோல்ட் ஷோ என்ற விவாத நிகழ்வில் 137 விவாதங்களை நடத்தியுள்ளார். அதில் 73 விவாதங்கள் எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவும், அரசுக்கு ஆதரவாக 32 விவாதங்களும் நடத்தியுள்ளார். 12 விவாதங்கள் பாகிஸ்தானை மையப்படுத்தி செய்துள்ளார். அதில் பாகிஸ்தானில் நடக்கும் தேர்தல் முறையைப் பற்றியும், அந்நாட்டு இராணுவத்திற்கு குண்டு வைக்க வேண்டும் என்றும் கூட தனது வெறுப்பை கக்கியுள்ளார்.
  2. நியூஸ்18 இந்தியாவில் நடைபெற்ற, ஆர் பார் (Aar Paar) நிகழ்ச்சியில், அமிஷ் தேவ்கன் 49 விவாதங்களை நடத்தினார். அதில் 25 விவாதங்கள் எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவும், 15 விவாதங்கள் மோடி அரசுக்கு ஆதரவாகவும், 4 விவாதங்கள் மதவாத பிரச்சனைகளைப் பற்றியும், 2 விவாதங்களில் எதிர்க்கட்சியைப் பாராட்டியும், 3 விவாதங்கள் மற்ற பொதுவான விசயங்கள் குறித்தும் நடத்தியுள்ளார்.
  3. சுதிர் சௌத்ரி, தனது ஆஜ் டக் (Aaj Tak) நிகழ்ச்சியில் பிளாக் அண்ட் ஒயிட் நிகழ்ச்சியில், எதிர்க்கட்சிகளுக்கு எதிராக 27 விவாதங்களையும், மோடி அரசுக்கு ஆதரவாக 15 விவாதங்களையும், மதப் பிரச்சினைகள் தொடர்பாக 2 விவாதங்களையும், பாகிஸ்தானைப் பற்றி ஒரு விவாதத்தையும், மற்ற தலைப்புகளில் 8 விவாதங்களையும் நடத்தியுள்ளார்.
  4. சுஷாந்த் சின்ஹா (டைம்ஸ் நவ் பாரத்) தனது நியூஸ் கி பாத்ஷாலா நிகழ்ச்சியில், 50 விவாதங்களை நடத்தியிருக்கிறார். அதில், காங்கிரஸிலிருந்து விஜேந்தர் சிங் வெளியேறியதை “முக்கா-மார் ஜாட்கா” என்று வர்ணித்து, எதிர்க்கட்சிகளைத் தாக்கி பேசியுள்ளார்.
  5. ராகுல் ஷிவ் சங்கர் (CNN News18) தனது ஹார்ட் ஃபேக்ட்ஸ் (Hard Facts) நிகழ்ச்சியில் 90 விவாதங்களை நடத்தியுள்ளார். இதில், 37 விவாதங்கள் எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவும், 27 விவாதங்கள் அரசுக்கு ஆதரவாகவும், 12 விவாதங்கள் இந்து-முஸ்லிம் மதப் பிரச்சினைகள் பற்றியும், 12 விவாதங்கள் மற்ற தலைப்புகளைப் பற்றியும் இருந்தன. ஒரே ஒரு நிகழ்ச்சியில் மட்டுமே அவர் பாஜக அரசை கேள்வி எழுப்பி, தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக வெளிவந்துள்ள செய்திகள் பா.ஜ.க கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று பேசினார்.
  6. நவிகா குமார் (டைம்ஸ் நவ்) தனது நிகழ்ச்சியான தி நியூஷூரில் (The Newshour) மொத்தம் 51 விவாதங்களை நடத்தியுள்ளார். அதில் 33 விவாதங்கள் எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவும், 12 விவாதங்கள் மோடி அரசாங்கத்தை பாராட்டியும் இருந்தன.

படிக்க: ஒளிபரப்பு சேவை (ஒழுங்குமுறை) மசோதா 2023: கருத்து சுதந்திரத்திற்கு கட்டப்படும் கல்லறை!


பிப்ரவரி 1 முதல் ஏப்ரல் 12 வரை மொத்தம் 429 விவாதங்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 52 சதவீத விவாதங்கள் எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவும், 1.1 சதவீத விவாதங்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பை பற்றியும், 27 சதவீத விவாதங்கள் மோடியை பாராட்டுவதாகவும், 5.6 சதவீத விவாதங்கள் மத பிரிவினைவாதத்தைப் பற்றியும், 12.5 சதவீத விவாதங்கள் பிற விசயங்களைப்பற்றியும், 1.4 சதவீத விவாதங்கள் மோடி அரசை கேள்வி எழுப்புவதாக அமைந்துள்ளன.

எதிர்க்கட்சிகளுக்கு எதிராக நடைபெற்ற 52 சதவீத விவாதங்களில் இந்தியா கூட்டணியில் உள்ள பிரச்சினைகளையும், மதுபான முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பற்றியும், ராகுல் காந்தியின் கருத்தை திரித்தும் பேசப்பட்டுள்ளன.

பா.ஜ.க என்ற ஒரு கட்சி மட்டுமே 6000 கோடி மதிப்பிலான தேர்தல் நிதிப்பத்திரங்களை கார்ப்பரேட்டுகளிடமிருந்து பெற்றுள்ளதைப் பற்றி பேசாமல், எதிர்க்கட்சிகள் வாங்கியுள்ள தேர்தல் பத்திரங்களைப் பற்றி மட்டுமே திட்டமிட்டு இந்த ஊடகங்கள் பேசியுள்ளன. இந்த ஊடகங்கள் ஞானவாபி மசூதி பற்றிய முஸ்லீம்களுக்கு எதிரான நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றும், சனாதன தர்மத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் இருக்கின்றன என்றும் கூறியும் தனது ”கோடி மீடியா“ பட்டத்தை நிலைநாட்டியுள்ளன.

ஆக மொத்தத்தில் கோதி மீடியாக்கள், எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவும் மோடி அரசுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறார்கள் என்பதை இந்த ஆய்வு ஆணித்தனமாக நிரூபிக்கிறது. நாட்டின் நான்காவது தூண் என்று கருதப்படும் ஊடகமானது எந்த அளவிற்கு மோடி அரசுக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை இந்த ஆய்வு திரைகிழித்து நமக்கு காட்டியுள்ளது.


ஆதன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



மே தினத்தில் சூளுரைப்போம்!

மே தினத்தில் சூளுரைப்போம்!

தொழிலாளி வர்க்கம் ரத்தம் சிந்தி, உயிரைத் துறந்து நிலைநாட்டிய 8 மணி நேர வேலை உரிமை பறிக்கப்பட்டு வருகிறது. இந்திய தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற 44 தொழிலாளர் சட்டங்களும் 4 தொகுப்பு விதிகள் என சுருக்கப்பட்டு காலாவதியாகி வருகின்றன.

பணி நிரந்தரம், வேலைக்கேற்ற ஊதியம், சம வேலைக்கு சமஊதியம் உள்ளிட்ட அனைத்து  அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு தொழிலாளர் வர்க்கமே நாடோடியாக்கப்பட்டு வருகிறது.

விலைவாசி உயர்வு வரலாறு காணாத வகையில் உயர்ந்து விட்டது, விலைவாசிக்கு இணையாக ஊதியம் மட்டும் உயரவில்லை. ஆனால் கல்வி, மருத்துவம், இருப்பிடம் குடிநீர் ஆகிய அனைத்து சேவைகளும் விலை பொருளாகிவிட்டது. தொழிலாளி வர்க்கம் மொத்த உரிமைகளையும், வாழ்வுரிமையையும் பறிகொடுத்து விட்டு நவீன கொத்தடிமைகளாக்கப்பட்டு வருகிறது.

வாழ்வாதாரம் இழந்த உழைக்கும் மக்கள் காண்டிராக்ட்- நீம் என்கிற அத்துக்கூலியாகவும், கட்டிடத் தொழிலாளி, தூய்மைப் பணியாளர், ஜிக் தொழிலாளர்கள், என பல்வேறு வகைப்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்களாக எந்த  உரிமைகளும் இல்லாமல் இருக்கிறார்கள்.

நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயிகள் போண்டியாகி விவசாயத்தை விட்டு  தலைதெறிக்க ஓடுகிறார்கள். விவசாயிகள் தற்கொலை என்பது சாதாரண ‘செய்தி’ யாகி விட்டது. சிறு தொழிலும், சிறுவணிகமும் நூலிழையில் பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கின்றன.

மறுபுறத்தில் கார்ப்பரேட்டுகள் தொழிற்சாலை கட்ட நிலமும், கடனும் வழங்கப்படுகிறது. இயற்கை வளத்தையும், மனிதவளத்தையும் இரக்கமின்றி சுரண்ட அனைத்து கதவுகளும் அகலமாகத் திறக்கப்பட்டுள்ளது.


படிக்க: வேலையில்லாத் திண்டாட்டம் – யார் காரணம்: வட மாநிலத் தொழிலாளியா? முதலாளித்துவ இலாபவெறியா?


நாட்டின் செல்வத்தை உருவாக்குகின்ற உழைக்கும் மக்கள் தனது உழைப்பின் பலனை நுகர்வது சொற்பமாகிவிட்டது.

கார்ப்பரேட் முதலாளிகள் நாட்டின் செல்வத்தை உறிஞ்சிக் கொள்வது தொடர்ந்து அதிகரித்து வருவதால் செல்வத்தை படைக்கும் உழைக்கும் மக்களுக்கும் அதனை சுரண்டி கொழுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் இடையிலான சமத்துவமின்மை அதிகரித்து வருகிறது.

75 ஆண்டு கால ‘ஜனநாயக’ ஆட்சியில் சட்ட உரிமைகள் பறிப்பு, இயற்கை வளக் கொள்ளை ஆகிய அட்டூழியங்களுக்கு ராஜபாட்டை போட்டுள்ள தனியார்மய- தாராளமய – உலகமயக் கொள்கை என்பது கார்ப்பரேட் கொள்ளையர்களுக்கானது  என்பது இன்றைய நிதர்சனம். குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வரும் ஆர்.எஸ்.எஸ். – பா. ஜ. க ஆட்சி அப்பட்டமான முறையில் கார்ப்பரேட்டுகளின் அடியாளாக செயல்பட்டு வருகிறது. இந்த அயோக்கியத்தனத்தை மூடிமறைத்து திசை திருப்புவதில் பார்ப்பன ( இந்து ) மதவெறியும், சாதிவெறியும் காவி – கார்ப்பரேட் பாசிஸ்டுகளின் முக்கிய ஆயுதமாக இருக்கின்றன.

நம்மை தலையெடுக்க விடாமல் நவீன கொத்தடிமைகளாக வைத்திருக்கும் இந்த அவலத்தை ஒழித்துக்கட்ட உழைக்கும் வர்க்கமாக ஒன்றிணைந்து வீதியில் இறங்கி போராடுவதை தவிர வேறு வழி இல்லை.

போர்வெறியும், பாசிச அடக்குமுறையும் ஏகாதிபத்திய முதலாளிகளின் சர்வதேச கொள்ளைக்கு வழிவகுக்கிறது. இந்த கேடுகெட்ட முதலாளித்துவத்தை வீழ்த்தும் வர்க்கப்போராட்டத்துக்கு தலைமையளிப்பது தொழிலாளி வர்க்கத்தின் சர்வதேச கடமையாகும்.  முதலாளித்துவத்துக்கு மாற்று சோசலிசம் தான் என்பதை  இந்த 138 – வது மே தினம் நினைவூட்டுகிறது.

சோசலிசமே தீர்வு என்கிற உணர்வோடு இந்திய நாட்டில் புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுக்க தொழிலாளி வர்க்கத்தை அறைகூவி அழைக்கிறோம்.

முதலாளித்துவம் கொல்லும்!
கம்யூனிசமே வெல்லும்!

இவண்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(மாநில ஒருங்கிணைப்புக் குழு)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பாசிசத்தின் உச்சம் தொட்ட தேர்தல் ஆணையம் | தோழர் ரவி

பாசிசத்தின் உச்சம் தொட்ட தேர்தல் ஆணையம் | தோழர் ரவி

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பேரிடர் நிதி, பிச்சை அல்ல! தமிழ்நாட்டின் உரிமை!

பேரிடர் நிதி, பிச்சை அல்ல!
தமிழ்நாட்டின் உரிமை!

தமிழ்நாட்டுக்கு நிதி கொடுக்காத பாசிச பாஜக வேண்டாம்!

28.04.2024

கண்டன அறிக்கை

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி உதவித்தொகையாக கோரியிருந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு உதவித்தொகையாக ரூ.275 கோடி மட்டுமே ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளது. இதனை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிப்பதுடன் தமிழ்நாடு அரசு கேட்ட பேரிடர் உதவித்தொகையை உடனடியாக ஒன்றிய அரசு விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.

அதே நேரத்தில், இரண்டாம் கட்டத்தேர்தல் நடைபெற உள்ள கர்நாடகத்துக்கு ரூ.3,454 கோடி வறட்சி உதவித் தொகையாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. கர்நாடகத்தில் வறட்சி உதவித் தொகை கோரி காங்கிரஸ் போராட்டத்தை முன்னெடுத்த நிலையில் இந்த நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. கடும் வறட்சி நிலவுவதால் ரூ.35,162 கோடி கோரியிருந்தது கர்நாடக அரசு.

கர்நாடகத்தில் நடைபெற உள்ள இரண்டாம் கட்ட தேர்தலை முறைகேடாக எதிர்கொள்வதற்காகவே திட்டமிட்டு இந்த நிதி இப்பொழுது விடுவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இல்லாத விஷயத்தில் கூறியதாக சொல்லி மதவெறுப்புப் பேச்சுக்களை உமிழ்ந்து கொண்டிருக்கும் மோடியின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை தேர்தல் ஆணையம். மோடியின் மோசடி மற்றும் வெறுப்பு பேச்சுக்கள் தேர்தல் ஆணையத்தின் விதிமீறல்களில் ஒருபோதும் வரப்போவதில்லை. ஏனென்றால் இந்தத் தேர்தலே ஒரு மேட்ச் பிக்சிங் தேர்தல் தான்.


படிக்க: மோடியின் வெறுப்பு பேச்சு: செவிடாகிப் போன தேர்தல் ஆணையம்


கடந்த 10 ஆண்டுகளில் ஒட்டுமொத்த நாட்டையே பேரழிவுக்கு உள்ளாக்கிய மோடி – அமித்ஷா பாசிச கும்பல், மக்கள் போராட்டங்களின் முன்பு தோற்றுவிட்டது. இப்போது தேர்தலிலும் அம்பலப்பட்ட பிறகு சில ஆயிரம் கோடிகளை வீசி வெற்றி பெற்று விடலாம் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருக்கிறது.

ரூபாய் 38 ஆயிரம் கோடி உதவித்தொகையாக கேட்ட நிலையில் தமிழ்நாட்டுக்கு வெறும் ரூ.275 கோடியை பிச்சை காசு போல வீசி உள்ளது பாசிச பா.ஜ.க அரசு.

கார்ப்பரேட்டுகளுக்கு பல லட்சம் கோடிகள் வாரிக் கொடுத்த மோடி – அமித்ஷா பாசிச கும்பல், நிதி விடுவிக்க மறுப்பதன் மூலம் தமிழ்நாட்டின் கழுத்தை அறுக்கிறது.

தமிழ்நாட்டு மக்களின் வரிப் பணத்தை எல்லாம் பிடுங்கி வைத்துக் கொண்டு பேரிடர் காலங்களில் கூட எவ்வித உதவியும் செய்வதில்லை என்றால் எதற்காக இந்த ஒன்றிய அரசு என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டும். கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியை விட மிகக் கொடூரமான ஆட்சியயை அல்லவா இந்த மோடி – அமித்ஷா பாசிச கும்பல் நடத்திக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டினைத் தொடர்ந்து வன்மத்துடனும் எதிரியாகவும் கருதி செயல் பட்டுக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க தமிழ்நாட்டில் இருந்து முற்றாக துடைத்தெறியப்பட வேண்டும்.

தமிழ்நாட்டுக்கு நிதி கொடுக்காத பாசிச பா.ஜ.க நமக்கு வேண்டாம் என்ற முழக்கம் தெருவெங்கும் வீடுகள் தோறும் ஒலிக்கட்டும்!

வேண்டாம் பி.ஜே.பி வேண்டும் ஜனநாயகம் என்ற முழக்கத்தை முன் வைப்போம்! ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி -அதானி பாசிசத்தை வீழ்த்துவோம்!


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



அமெரிக்க மாணவர்களின் போராட்டம்! இன அழிப்புக்கு எதிரான இன்னுமொரு ஒளிக்கீற்று!

பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் இன அழிப்பு போரானது, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் மற்றும் அரசுகளின் தீவிர எதிர்ப்புக்கு மத்தியில் 200 நாட்களுக்கும் மேலாக பாலஸ்தீனியர்களை கொன்று வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் நடத்திவரும் போருக்கு எதிராக அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழக மற்றும் கல்லூரி மாணவர்களின் போராட்டம் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. அரசின் பல்வேறு ஒடுக்குமுறைகளையும் கடந்து நடைபெற்று வரும் இப்போராட்டமானது, இஸ்ரேலின் இன அழிப்புப் போருக்கு எதிராக போராடும் மக்களுக்கும் பாலஸ்தீனிய மக்களுக்கும் நம்பிக்கையளிக்கக்கூடிய ஒளிக்கீற்றாகும்.

கடந்த ஆண்டு அக்டோபர் 7–இல் துவங்கிய காஸாவின் மீதான இஸ்ரேலின் இன அழிப்பானது ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இதுவரை 14,500 குழந்தைகள் 8,400 பெண்கள் மற்றும் 141 பத்திரிக்கையாளர்கள் உட்பட 34,000-க்கும் அதிகமான பாலஸ்தீனிய மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 77,000 பேர் மேல் காயமடைந்துள்ளனர். 8,000-த்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

காஸாவிற்கு எதிராக இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இந்த இன அழிப்புப் போரை நிறுத்தக் கோரி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் மக்கள் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் காஸாவிற்கு எதிரான இஸ்ரேலின் போர் மற்றும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தக்கோரி அமெரிக்காவின் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளதானது முக்கிய நிகழ்வாகக் கருத்தப்படுகிறது.

ஏனெனில், இஸ்ரேலின் இந்தப் போரானது அமெரிக்காவின் பதிலிப் போர். எனவே, அமெரிக்காவிலேயே இதற்கு எதிராக உறுதியான போராட்டம் வெடித்திருப்பது இந்த இன அழிப்புப் போருக்கு எதிரான முத்தாய்ப்பான நடவடிக்கையாகும்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது மட்டுமல்லாமல், அமெரிக்கா தொடர்ந்து இஸ்ரேலுக்கு அளித்து வரும் ஆதரவை நிறுத்தக் கோரியும் போராட்டப் பதாகைகளை ஏந்தியுள்ளனர். இந்தப் போரின் துவக்கம் முதல் அமெரிக்காவானது மிகப்பெரிய அளவில் இராணுவ உதவிகளை இஸ்ரேலுக்குச் செய்து வருகிறது. அமெரிக்கா அனைத்து வகையான இராணுவ உதவிகளையும் நிறுத்த வேண்டும், இந்தப் போரில் இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்கி வரும் நிறுவனங்கள் மற்றும் இந்தப் போரினால் ஆதாயம் அடையக் கூடிய நிறுவனங்களில் அமெரிக்கா செய்துள்ள முதலீடுகள், பத்திரங்கள் ஆகியவற்றைத் திரும்பப் பெற வேண்டும் போன்ற கோரிக்கைகளை அம்மாணவர்கள் முன்வைத்துள்ளனர்.


படிக்க: அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பற்றிப் படரும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்


மேலும், இப்போராட்டத்தை மட்டுப்படுத்தும் நோக்கில், இப்போராட்டத்தின் மையமாக விளங்கும் கொலம்பியா பல்கலைக்கழக வளாகத்தில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்; யேல் பல்கலைக்கழகத்தில் 50 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமன்றி, அமெரிக்கா முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு எதிராக கைது மற்றும் பணி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளை ஜோ பைடன் அரசு மேற்கொண்டு வருகிறது. இதனைக் கண்டித்து, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என்பதற்காகவும் அம்மாணவர்கள் போராடி வருகின்றனர்.

இந்தப் போராட்டமானது, அங்குள்ள இஸ்லாமிய ஆதரவு மற்றும் யூத எதிர்ப்பு கொண்ட மாணவர்களால் நடத்தப்பட்டு வருகிறது என்று அமெரிக்க வெள்ளை மாளிகையும், முதலாளித்துவ ஊடகங்களும் மற்றும் அமெரிக்காவிலுள்ள இஸ்ரேல் ஆதரவு குழுக்களும் அவதூறு செய்து வருகின்றனர்.

இதனை மறுக்கும் வகையில் அப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர் ஒருவர் பிபிசி-க்கு அளித்துள்ள பேட்டியில், “நாங்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நிற்கிறோம், அனைத்து மக்களுக்கும் ஆதரவாக நிற்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

1960-களில் நடைபெற்ற வியட்நாம் போருக்கு எதிராகவும், வளைகுடா போருக்கு எதிராகவும், அமெரிக்காவில் நடைபெறும் நிறவெறித் தாக்குதலுக்கு எதிராகவும் மற்றும் பிற இன அழிப்புப் போருக்கு எதிராகவும் தொடர்ச்சியாக போராடியவர்கள் அமெரிக்க மாணவர்கள். அவற்றுடன் ஒப்பிடுகையில் தற்போது நடைபெறும் போராட்டங்களின் அளவும் வீச்சும் குறைவே என்கிறார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர் ஒருவர். இம்மாணவர்களின் போராட்டத்தை சிறுமைப்படுத்தும் வகையிலும் கொச்சைப்படுத்தும் வகையிலும் ஜோ பைடன் அரசு அவதூறு செய்தும் போராட்டத்தை ஒடுக்கியும் வருவது கடும் கண்டனத்திற்குரியதாகும்.

காஸாவில் நடக்கும் போர் தொடர்பான துயரச் செய்திகளும், புகைப்படங்களும், காணொளிகளும் ஒவ்வொரு நாளும் நம் மனதை உலுக்குகின்றன, மனித மாண்பைக் கேள்விக்குள்ளாக்குகின்றன. உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்காவின் இந்த பதிலிப் போரானது, நமது சம காலத்தில் ஒரு இனத்தையே அழிவை நோக்கி இட்டுச் சென்றுள்ளது. அநாதையாக்கப்படும் குழந்தைகளின் கதறல்களும், தாய்மார்களின் குமுறல்களும் சொல்லி மாளாதவை. இத்தகைய உணர்வுகளின் வெளிப்பாடுகளில் ஒன்றுதான் அமெரிக்க மாணவர்களின் போராட்டங்கள். நமது நாட்டிலும் இது போன்ற போராட்டங்களைக் கட்டியெழுப்புவதும், அவற்றை இஸ்ரேலின் இன அழிப்புக்கு எதிரான உலகப் பேரியக்கத்துடன் இணைத்துக் கொள்வதுமே, காஸாவிற்கு எதிரான போரை நிறுத்துவதற்கான முயற்சியாக இருக்கும்.


பாரி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பற்றிப் படரும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்

1. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டின் நகரின் டெக்சாஸ் பல்கலைக்கழக வளாகத்தில் பாலஸ்தீன ஆதரவு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மெரிக்காவின் சிகாகோ, கலிபோர்னியா, நியூயார்க், பிரான்சிஸ்கோ உள்ளிட்ட முக்கிய நகரங்களில் காசா மீதான இனப்படுகொலைப் போரை நிறுத்தக்கோரி பாலஸ்தீனத்தை ஆதரித்து அமெரிக்க மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டம் அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கும் பற்றிப் படர்ந்துள்ளது.

ஏப்ரல் 17 அன்று பாலஸ்தீனத்தை ஆதரித்து நியூயார்க்கின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏப்ரல் 18 அன்று கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஹார்வர்டு, யேல், ஐவி லீக் ஸ்கூல், தெற்கு கலிபோர்னியா, டெக்சாஸ் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களுக்கும் போராட்டம் பரவியுள்ளது.

இஸ்ரேலுக்கான அமெரிக்க ராணுவ உதவியை நிறுத்துதல், போர்நிறுத்தம், ஆயுத விநியோகம் மற்றும் போரினால் பயனடையும் நிறுவனங்களில் இருந்து பல்கலைக்கழக முதலீடுகளைத் திரும்பப் பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாலஸ்தீன ஆதரவு மாணவர்களை போலீசு கைதுசெய்து வருவதாலும், போராட்டத்தைக் கலைக்கும் வேலையில் போலீசு ஈடுப்பட்டு வருவதாலும் மாணவர்களுக்கும் போலீசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.

ஏப்ரல் 22 அன்று யேல் பல்கலைக்கழகத்தில் மொத்தம் 47 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், ஏப்ரல் 23 அன்று இரவு நியூ யோர்க் பல்கலைக்கழகத்தில் 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் 24 அன்று, எமர்சன் கல்லூரி மாணவர்கள் 108 பேரை போலீசு கைது செய்துள்ளது. அதேபோல் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் டெக்சாஸிலும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்ததைத் தொடர்ந்து மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, 34,300 க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் இஸ்ரேல் அரசால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். காசாவில் உள்ள பாலஸ்தீனர்களுக்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தும் விதத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக போராடும் மாணவர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டின் நகரின் டெக்சாஸ் பல்கலைக்கழக வளாகத்தில் பாலஸ்தீன ஆதரவு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காசா மீதான இஸ்ரேலின் போருக்கு ஆதரவளிக்கும் முதலீடுகளை நிறுத்த வேண்டும் என்ற ஒருமித்த கோரிக்கையுடன் கூடாரங்களை அமைத்து போராடி வரும் மாணவர்கள்.
டெக்சாஸ் மாநில துருப்புக்களின் வரிசையை முறைத்துப் பார்க்கும் பாலஸ்தீன ஆதரவு மாணவர்.
தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழக வளாகத்தில் கூடாரங்களை எடுத்துச் செல்லும் மாணவர்கள்.
நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஒரு ஆர்ப்பாட்ட முகாமுக்கு அருகிலுள்ள வேலியில் பாலஸ்தீனிய கொடிகள் வரிசையாக காணப்படுகின்றன.
ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பாலஸ்தீன ஆதரவு மாணவர்களை கலைக்க முயலும் டெக்சாஸ் மாநில துருப்புக்கள்.
தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பூங்காவில் (Alumni Park) பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்களை லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசார் சுற்றி வளைத்தனர்.
கொலம்பியா பல்கலைக்கழக வளாகத்தில் இரவைக் கழிக்க தயாரான மாணவர்கள்.
பறிமுதல் செய்யப்படுவதைத் தடுப்பதற்காக கூடாரத்தை சுற்றி எடுத்துச் செல்லும் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழக மாணவர்கள்.
தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழக வளாகத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆக்கிரமிப்பைத் தொடங்கியதை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

புகைப்படங்கள்: அல் ஜசீரா


ராஜேஷ்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



தோல்வி பயத்தால் மதவெறுப்பை கக்கும் மோடி | தோழர் ரவி

தோல்வி பயத்தால் மதவெறுப்பை கக்கும் மோடி | தோழர் ரவி

 

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube,



அர்ஜெண்டினா: கல்வி உரிமையை பாதுகாப்பதற்காக திரண்ட மக்கள்

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவில் உள்ள 57 அரசு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் இணைந்து, “இலவசமாக வழங்கப்பட்டு வரும் பல்கலைக்கழகக் கல்வியைப் பாதுகாப்பதற்காக” நேற்று (23-04-2024) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொழிலாளர் சங்கங்கள், எதிர்க்கட்சிகள், தனியார் பல்கலைக்கழகங்கள் ஆகியவை இணைந்து ப்யூனஸ் அயர்ஸ் (Buenos Aires) மற்றும் பிற முக்கிய நகரங்களான கோர்டோபா (Cordoba) போன்றவற்றில் நடந்த போராட்டங்களுக்கு தங்களுடைய ஆதரவை ஆதரவளித்துள்ளன. இது டிசம்பரில் பதவியேற்ற அர்ஜெண்டினாவின் ஜனாதிபதி ஜேவியர் மிலேக்கு எதிரான மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்களில் ஒன்றாகும்.

அர்ஜெண்டினாவின் தலைநகரில் மட்டும் சுமார் 1,00,000 பேர் வந்ததாக போலீசு தெரிவித்தது, ஆனால் போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் 5,00,000 மக்கள் பங்குபெற்றதாக தெரிவித்தனர். ஆசிரியர் சங்கம் ஒன்று நாடு முழுவதும் பத்து இலட்சம் போராட்டக்கார்ர்கள் போரட்டத்தில் கலந்து கொண்டனர் என்று தெரிவித்துள்ளது. தலைநகரையே இந்த போராட்டம் முடக்கியது. பல நகரங்கள் மக்கள் போராட்டத்தால் ஸ்தம்பித்தன.

போராட்டத்தில் கலந்து கொண்ட மூன்றாம் ஆண்டு மருத்துவ மாணவர் பாப்லோ விசென்டி (22) புவெனஸ் அயர்ஸில் உள்ள ஏஜென்ஸ் பிரெஞ்சு-பிரஸ் செய்தி நிறுவனத்திடம், ”பல்கலைக்கழக அமைப்பின் மீது இந்த அரசு மிருகத்தனமான தாக்குதலை நடத்தியுள்ளது தான் எங்களது இந்த போராட்டத்திற்கு காரணம்” என்று கூறினார்.

மேலும் ”பணம் இல்லை என்ற பொய்யான கதையை சொல்லி அதன் மூலம் இலவச கல்வியை தடுக்கப்பார்க்கிறார்கள். அரசிடம் பணம் இருக்கிறது அதை பொதுக் கல்விக்காக செலவிட வேண்டாம் என்று நினைக்கிறது” என்றார்.

கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் ஜேவியர் மிலே வெற்றி பெற்றார். பட்ஜெட் பற்றாக்குறையை பூஜ்ஜியமாகக் குறைப்பதாக உறுதியளித்தார்.

ஆனால் ஜேவியர் மிலே மக்களின் அடி மடியில் கைவைத்துள்ளார். போக்குவரத்து, எரிபொருள் மற்றும் எரிசக்திக்கான மானியங்களை அவரது அரசாங்கம் குறைத்து மக்களை நெருக்கடிக்கு தள்ளியுள்ளது.

ஏப்ரல் 23, 2024 அன்று, லட்சக்கணக்கான அர்ஜெண்டினா மக்கள் தங்கள் பாடப்புத்தகங்களை கையிலேந்தி தேசிய கீதத்தைப் பாடினார்கள்.
மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் அர்ஜெண்டினாவின் சக்திவாய்ந்த தொழிற்சங்கங்கள் மற்றும் இடதுசாரி அரசியல் கட்சிகளுடன் ஒருங்கிணைந்து போராடினார்கள்.
டிசம்பரில் ஜேவியர் மிலே ஆட்சிக்கு வந்ததில் இருந்து தலைநகரை உலுக்கிய மற்ற போராட்டங்களை விட, பியூனஸ் அயர்ஸ் நகரத்தில் நடந்த இந்த போராட்டம் மிகப்பெரியது.
பட்ஜெட் நெருக்கடியை காரணம் காட்டி பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் நிதியை நிறுத்தியதை கண்டித்து பதாகைகளை ஏந்தி நிற்கும் மக்கள்.
“நீங்கள் ஏன் பொதுக் கல்விக்கு மிகவும் பயப்படுகிறீர்கள்?” “பல்கலைக்கழகம் தன்னை தற்காத்துக் கொள்ளும்!” என்று மாணவர்கள் முழங்கினார்கள்.
ஒரு மாணவர் அணிவகுப்பின் போது, “அறிவியல் இல்லாமல் எதிர்காலம் இல்லை” என்று எழுதப்பட்ட பலகையை வைத்திருந்தார்.
ஜேவியர் மிலே தனது ஜனாதிபதி மாளிகையில் இருந்து பல்கலைகழகங்களுக்கான பட்ஜெட் குறைப்பை அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொழிலாளர்கள் புவெனஸ் அயர்ஸின் தெருக்களில் திரண்டனர்.
தலைநகரில் மட்டும் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டதாக பியூனஸ் அயர்ஸ் பல்கலைக்கழகம் கூறுகிறது.
சுமார் 22 இலட்சம் மக்கள் அர்ஜெண்டினாவின் பல்கலைக்கழக அமைப்பில் படிக்கின்றனர்.


ஆதன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube,



ஷர்மிளா தற்கொலை – போலீசே காரணம் | தோழர் மருது

பள்ளிக்கரணை சாதிய வன்மம்
| ஷர்மிளா தற்கொலை – போலீசே காரணம் | தோழர் மருது

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube,



இம்முறை மகளிர் தினத்தில் கொண்டாட்டம் இல்லையே, ஏன்?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த மார்ச் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

கேள்வி: இந்தாண்டு மகளிர் தினத்தில் சமூக வலைத்தளங்களில், ‘‘எங்களால், மகளிர்தின வாழ்த்து கூற முடியவில்லை மன்னித்துவிடுங்கள்’‘ என்ற கோணத்தில் நிறைய பதிவுகளை காண முடிந்தது. இதிலிருந்து மகளிர்தின கொண்டாட்டத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தோன்றுகிறது. இதை எப்படி பார்ப்பது?

ர்வதேச உழைக்கும் மகளிர் தினம் என்பது கொண்டாட்டமாக இருக்கக் கூடாது, போராட்ட வடிவமாக இருக்க வேண்டும் என்று புரட்சிகர சக்திகள் பல ஆண்டுகளாக கூறி வருகின்றனர். அதற்கேற்ப இந்தாண்டு மகளிர் தினம் பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு, பாலஸ்தீனத்தில் பெண்கள் கொல்லப்படுவது குறித்தெல்லாம் பேசும் அரசியல் சார்ந்த நிகழ்வாக அனுசரிக்கப்பட்டதை பல நிகழ்வுகளில் காண முடிந்தது. முன்பெல்லாம் அரசியல் சக்திகள் மட்டுமே, பெண்கள் மீதான அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் நாளாக மகளிர் தினத்தை கடைப்பிடித்துவந்த நிலையில் இந்தாண்டு மாணவர்கள், இளைஞர்கள் என பல தரப்பினர் அவ்வாறு அணுகினர்.

குறிப்பாக, இந்த ஆண்டு மகளிர் தினமான மார்ச் 8 -க்கு சில நாட்களுக்கு முன்புதான் ஜார்கண்ட் மாநிலத்தில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண்மணி அவரது கணவன் முன்னிலையிலேயே கொடூரமாக பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட சம்பவமும் புதுச்சேரியை சேர்ந்த ஆர்த்தி என்ற 9 வயது குழந்தை கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவமும் நடந்தேறியது. அதேபோல் சர்வதேச அளவில், காசா பகுதியில் வாழும் பாலஸ்தீன மக்கள் மீது பாசிச இஸ்ரேல் அரசு நடத்திவரும் இனஅழிப்பு போரில் 25,000-க்கும் மேற்பட்ட பெண்களும் குழந்தைகளும் படுகொலை செய்யப்பட்டுள்ளது போன்றவை, மகளிர் தினத்தில் கொண்டாட என்ன இருக்கிறது? என்ற கேள்வியை இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்ததை காண முடிந்தது.

இதனால்தான், சமூக வலைதளங்களில் மகளிர் தினத்தன்று பலர், ‘‘எவ்வளவு முயன்றாலும் எங்களால் மகளிர் தினத்திற்கு வாழ்த்து தெரிவிக்க முடியவில்லை’‘ என்று வேதனையுற்றனர்.

ஆனால், இந்த மாற்றம் மகளிர் தினத்தில் மட்டும் ஏற்படவில்லை, சமீப காலங்களாகவே முன்பு கொண்டாட்டமாக பார்க்கப்பட்டுவந்த பல சிறப்பு நாட்கள் தற்போது சமூகத்தின் அநீதிகளை அம்பலப்படுத்துவதற்கான நாளாகவும் போராட்ட நாளாகவும் மாறிவருகிறது. சான்றாக, கடந்தாண்டு ஜுலை மாதம் மணிப்பூரில் குக்கி இன பெண்கள் இருவரை, மெய்தி இன வெறியர்கள் கொடூரமான முறையில் நிர்வாணமாக்கி அடித்து இழுத்துச்செல்லும் காட்சிகள் வெளியாகி ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது. அதற்கு அடுத்ததாக ஆகஸ்ட் மாதத்தில் ‘சுதந்திர தினம்’ அன்று இளைஞர்கள் பலரும் மணிப்பூர் நிகழ்வை மேற்கோள் காட்டி, ‘‘இந்த நாட்டிற்கு சுதந்திர தினம் ஒரு கேடா’‘? என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. மோடியின் கொடூரமான பாசிச பேயாட்சியில் மக்கள் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் அனைத்திற்கும் எதிராக உறுதியாக போராட வேண்டும் என்ற உணர்வை பெற்று வருகிறார்கள் என்பதையே இவைக் காட்டுகின்றன.

அதேப்போல், உலகம் முழுவதுமே மக்கள் இந்நிலைக்கு வந்துள்ளனர். கடந்தாண்டு தொழிலாளர் தினத்தை எடுத்துகொள்வோம், உலகம் முழுக்க செங்கொடிகள் ஏந்தி தொழிலாளர்கள் போராட்டங்களையும் பேரணிகளையும் நடத்தினர். சமூகத்தின் அநீதியும் சுரண்டலும் ஒடுக்குமுறையும் தீவிரமடையும்போது, அதற்கு எதிராக கிடைக்கும் சிறு விசயங்களை கூட மக்கள் ஆயுதமாக கையிலெடுக்கின்றனர். அதற்கான சான்றுதான் இந்தாண்டு மகளிர் தினம்.


பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

(புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



இது ஒரு மேட்ச் பிக்சிங் தேர்தல்!

இஸ்லாமியர் மீதான வெறுப்பு பிரச்சாரம்,
சூரத் தொகுதியில் மோசடித் தேர்தல்!

இது ஒரு மேட்ச் பிக்சிங் தேர்தல்!

”வேண்டாம் பிஜேபி; வேண்டும் ஜனநாயகம்”
என்ற முழக்கம் வீதி தோறும் ஒலிக்கட்டும்!

22.04.2024

பத்திரிகை செய்தி

ந்த நாடு விடுதலை அடைந்ததாக சொல்லப்படுகின்ற 77 ஆண்டு கால வரலாற்றில், 1952 ஆம் ஆண்டு முதல் இப்போது வரை நடைபெறுகின்ற 72 ஆண்டு காலத்தில் தேர்தல் வரலாற்றில் இதுவரை எப்போதும் இல்லாத மாபெரும் மோசடிகளும் வெறுப்பு பிரச்சாரங்களும் தலைவிரித்தாடுகின்றன. தோல்வி பயத்தால் பாசிச மோடி – அமித்ஷா கும்பல் மேற்கொண்டு வரும் இந்த நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்தவுடன் கலவரங்களை உருவாக்குவதற்கான வெறுப்பு பேச்சுகளையும் மோசடிகளையும் நொடிக்கு ஒரு முறை அரங்கேற்றி வருகிறது பாசிச பா.ஜ.க.

“காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்துக்களின் சொத்துகளை பறித்து இஸ்லாமியர்களுக்கு கொடுத்து விடுவார்கள் என்றும் ஊடுருவியவர்கள், அதிக குழந்தை பெற்றுக் கொள்பவர்கள்” என்று பேசி இருப்பதெல்லாம் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வின் தொண்டர் அல்ல. இந்த நாட்டின் பிரதமர் என்றும் மாபெரும் தலைவர் என்றும் தன்னைத்தானே வர்ணித்துக் கொள்கின்ற நரேந்திர மோடி தான் இப்படிப்பட்ட அருவருக்கத்தக்க வெறுப்பு பேச்சை பேசிய நபர்.

திட்டமிட்டு பொய்யை வெறுப்பு பிரச்சாரமாக கிளப்புவதன் மூலம் கலவரங்களை உருவாக்கி அதன் மூலம் இந்து முனைவாக்கத்தை ஏற்படுத்தி ஓட்டுகளை அறுவடை செய்ய வேண்டும் என்பதே பாசிச ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வின் நோக்கம்.

கலவரங்களை உருவாக்குவதை அடிப்படையாக வைத்து பேசக்கூடிய நரேந்திர மோடி போன்றோரின் பேச்சுகளையும், அண்மையில் தெலுங்கானா பா.ஜ.க-வின் வேட்பாளர் ஒருவர் மசூதி மீது வில்லெறிவது போன்று செய்கை செய்தது போன்ற மத வெறி தூண்டும் நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் ஒருபோதும் தடுத்து நிறுத்துவதில்லை.


படிக்க: தில்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் மருந்து வழங்க மறுக்கும் பாசிச மோடி அரசு!


குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்த காங்கிரஸ் வேட்பாளரின் மனு கையெழுத்து இல்லை என்று சொல்லி நிராகரிக்கப்படுகிறது. சுயேட்சை வேட்பாளர்கள் அனைவரும் சொல்லி வைத்தாற்போல் ஒரே நாளில் வேட்பு மனுவை திரும்ப பெறுகிறார்கள். ஆக சூரத் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளரின் வேட்பு மனு மட்டும் ஏற்கப்பட்டு அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். எதற்கு இந்த நாட்டில் தேர்தல் நடத்த வேண்டும்? பா.ஜ.க-வே அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றதாக அறிவித்து விட்டு செல்வது தான் பாக்கி.

கடந்த மாதம் 31ஆம் தேதி தில்லியின் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, இது மேட்ச் பிக்சிங் தேர்தல் என்றார். இது மேட்ச் பிக்சிங் தேர்தல் தான் என்பதை ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வின் பாசிச நடவடிக்கைகள் துலக்கமாக எடுத்துக்காட்டுகின்றன. பாசிச ஆர்எஸ்எஸ் – பாஜகவின் உறுப்புகளாக செயல்படும் அனைத்து துறைகளுக்கும் இந்தத் தேர்தலை நடத்துவதற்கான தகுதி இருக்கிறதா என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டும்.

வெறுப்பு பிரச்சாரங்களையும் மோசடிகளையும் முதலீடாக வைத்து மேற்கொள்ளப்படும் பாசிச ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வுக்கு எதிரான பரப்புரைகளை எதிர்க்கட்சிகள் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

”வேண்டாம் பி.ஜே.பி;
வேண்டும் ஜனநாயகம்”
என்ற முழக்கம் ஒலிக்கட்டும். பாசிச பி.ஜே.பி-யின் அடக்குமுறை கோட்டை நொறுங்கட்டும்!


தோழமையுடன்,
தோழர் மருது,
செய்தித்தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
99623 66321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



ஓட்டுக்கு பணம் கொடுப்பது – வாங்குவது சரியா?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த மார்ச் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

கேள்வி: கட்சிகள் ஓட்டுக்குக் காசு கொடுக்கிறார்கள், மக்கள் காசுக்கு ஓட்டுப் போடுகிறார்கள் இந்த நிலைமை மாற வேண்டும் என்று பல ஜனநாயக சக்திகள் கருதுகின்றனர். ஓட்டுக்குக் காசு கொடுப்பதால் மட்டுமே பல ஆயிரம் கோடி செலவிடப்பட்டும் தமிழ்நாட்டின் தேர்தல் அரசியல் களத்தை வடநாட்டு ஊடகங்களும் பா... உள்ளிட்ட பார்ப்பன கட்சிகளும் இழிவாகப் பேசுகின்றன. ஓட்டுக்குக் காசு கொடுக்கும் நிலைமை எப்போது மாறும்?

ந்தப் பிரச்சினையிலும், கேள்வியிலும் பலவிதமான பார்வைகள் அணுகுமுறைகள் உள்ளன. ஆகையால், தமது கட்சிக்கு ஓட்டுப் போட கட்சிகள் காசு கொடுப்பது, மக்கள் அதை வாங்குவது என்ற இந்தப் பிரச்சினையை பொதுவாக மதிப்பீடு செய்வது தவறாகும்.

இன்று, ஓட்டுக்குக் காசு கொடுக்கமாட்டோம் என்று சீமான் சொல்கிறார். ஒரு காலத்தில் இராமதாசும் அப்படி சொன்னவர்தான். கமல்ஹாசன், இப்போது விஜய் போன்ற பலரும் அவ்வாறு சொல்கிறார்கள். இது ஒரு ஃபேஷனான வார்த்தையாகத்தான் இருக்கிறதே தவிர, தேர்தல் நேர்மையாக நடக்க வேண்டும் என்ற உணர்வில் இருந்து வருகின்ற கருத்துகள் அல்ல. இதனை மக்களும் நன்கறிவார்கள்.

இந்திய தேர்தல் அரசியலில், ஓட்டுக்குக் காசு கொடுக்க மாட்டோம் என்று சொல்கின்ற தலைவர்களை நேர்மையான தலைவர்களாகக் கருதுவதும் ஓட்டுக்குக் காசு வாங்கும் மக்களைப் பிழைப்புவாதிகளாகக் கருதுவதும் தவறாகும். ஒட்டுக்குக் காசு கொடுப்பதன் பின்னணியை புரிந்துக்கொள்வதன் மூலம்தான் இதை முழுமையாக புரிந்துக்கொள்ள முடியும்.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் நமது நாட்டைக் கொள்ளையிடுவதற்கேற்ப இந்திய நிலப்பிரபுக்கள், தரகு அதிகார வர்க்க முதலாளிகளுக்கு அதிகாரம் வழங்குகின்ற வகையில் உழைக்கும் மக்களை அடக்கி ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்டதுதான், நமது நாட்டின் அரசியல் கட்டமைப்பு. 1947 அதிகார மாற்றத்திற்குப் பின்னர், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மட்டும் கொள்ளையிடும் வகையில் இருந்த இந்தக் கட்டமைப்பானது பல ஏகாதிபத்தியங்களும் கொள்ளையடிப்பதற்கேற்ப மாற்றியமைக்கப்பட்டது.

நிலப்பிரபுக்கள், தரகு அதிகார வர்க்க முதலாளிகள் தங்களுக்கிடையே அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள உருவாக்கப்பட்ட இந்திய நாடாளுமன்றத்திற்கான தேர்தல் என்பது எந்தக் காலத்திலும் ஜனநாயகமாக இருந்ததில்லை. அன்று முதல் இன்றுவரை, தேர்தலின் போது, நாட்டை முன்னேற்றுவது குறித்து கட்சிகள் பேசினாலும், ஓட்டு வாங்குவது என்பது இந்த ஜனநாயக வழிமுறை அல்லாத பல்வேறு வழிமுறைகளில் நடந்தேறி வருகிறது.

இதில், முதன்மையானது, உள்ளூரில் அதிகாரம் செலுத்தும் நிலப்பிரபுக்கள், பண்ணையார்கள், ஜமீன்தார்கள் சொல்பவர்களுக்குத்தான் ஏழை மக்கள், தலித் மக்கள் ஓட்டு போட வேண்டும், மாற்றி வேறொருவருக்கு ஓட்டுபோட்டால் தலித் மக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும், தலித் குடிசைகள் எரியும், அவர்கள் மீது கும்பல் வன்முறைகள் நடந்தேறும் என்கிற நிலைமையாகும். இதுதான், சுதந்திர இந்தியாவின் தேர்தல் நிலைமை. நிலப்பிரபுக்களின் கூலிப்படைகளால் தலித் மக்கள் மீது அடுத்தடுத்த படுகொலைகள் நடத்தப்படும் பீகாரில், 1989-இல் தலித் கூலி விவசாயிகள் தங்களது உரிமைகளைப் பெறுவதற்கு, ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிட்டதையடுத்து, தன்வார்-பிட்டா கிராமத்தில் வாக்களிக்கச் சென்ற 22 தலித் கூலி விவசாயிகள் ரஜபுத்திர நிலப்பிரபுக்களால் படுகொலை செய்யப்பட்டது இதன் உச்சமான நடவடிக்கைகளில் ஒன்று. இன்றைக்கும் தலித் அமைப்புகள் பல கிராங்களில் கொடியேற்ற முடியாது என்பதுதான் எதார்த்தமான நிலை.

தலித் மக்களின் பிரதிநிதித்துவம் தேர்தல் அரசியல் அரங்கில் எதிரொலிப்பதை தடுக்க முடியாத நிலைமை உருவானதுடன் இணைந்ததுதான் ஆதிக்கச் சாதியினர் கட்சி தொடங்கி தங்களது சாதி வாக்குகளைத் தக்கவைத்துக் கொள்ள முனைவதாகும். ஒவ்வொரு பகுதியிலும் அதிகமான மக்கள் எந்த சாதியைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனரோ அதற்கேற்ப கட்சிகள் வேட்பாளர்களைத் தீர்மானிக்கின்ற நிலைமைதான் இன்றும் செல்வாக்கு செலுத்துகிறது.


படிக்க: உச்சநீதிமன்றத்தால் மோடி அரசுக்கு நெருக்கடியா?


அதிகார பலமும், சாதி பலமும் செல்வாக்கு செலுத்த முடியாத பொதுவான மக்களுக்குத்தான் ஓட்டுக்குக் காசு கொடுக்கும் முறை ஆரம்ப காலங்களில் மேற்கொள்ளப்பட்டது. 1990-களுக்கு முன்பு டீ-வடை கொடுத்ததும்,  சாராயம் கொடுத்தும் ஓட்டுவாங்கியதானது படிப்படியாக வளர்ந்து இலவசப் பொருட்கள் கொடுப்பது, காசு கொடுப்பதாகப் பரிணமித்து, இப்போது 10,000-20,000 ரூபாய் வரை கொடுக்கும் நிலைக்கு உயர்ந்துள்ளது.

இதில், தமிழ்நாட்டிற்கும் பிற மாநிலங்களுக்கும் இடையிலான வேறுபாடு என்பது கொடுக்கப்படும் பணத்தின் அளவு மட்டுமே. மற்றபடி அனைத்து மாநிலங்களிலும் ஓட்டுக்குக் காசு கொடுக்கும் முறை உள்ளது.

என்னதான் இருந்தாலும் காசுக்காக ஓட்டுப் போடுவது இழிவானதல்லவா என்று நம்மில் பலருக்கு கேள்வியெழலாம்?

ஆனால், நம்மில் பலரும், படித்தவர்களும், நடுத்தர வர்க்கப் பிரிவினரும் காசு வாங்கி ஓட்டுப் போடுவதில்லை, நேர்மையான அரசியல்வாதிகள் காசு கொடுத்து ஓட்டு வாங்குவதில்லை என்று கருதுகிறோம். அப்படியெனில், உரிமையை நிலைநாட்டுவதற்குதான் தேர்தல் என்று புரிந்து கொண்டு மக்கள் ஓட்டுப் போடுகிறார்கள் என்று சொல்ல முடியுமா?

விவசாயிகள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் போன்ற உழைக்கும் மக்களில் ஒரு சிறு பிரிவினர், அதிகபட்சம் 10-20 சதவிகித வாக்காளர்கள்தான், கட்சிகள் அறிவிக்கும் வாக்குறுதிகளையும் அவர்களது கடந்தகால நடைமுறைகளையும் பார்த்து வாக்களிக்கின்றனர். இதில் கூட கடன் தள்ளுபடி, ஊதிய உயர்வு, வேலைவாய்ப்பு போன்ற சில உடனடி நலன்களை மட்டுமே கருத்தில் கொள்கின்றனர்.

மற்றபடி, காசு வாங்காமல் ஓட்டுப் போடுவதாகக் கருதப்படும் பெரும்பான்மையான மக்கள் சாதி, மதம், ஆதிக்கம் ஆகியவற்றைப் பார்த்துதான் ஓட்டுப் போடுகின்றனர்.

சீமான் கும்பலும், பார்ப்பன ஊடகங்களும் சொல்வதைப்போல, மக்கள் காசுக்கு ஓட்டுப் போடுவதால்தான் நாட்டைக் கொள்ளையடிக்க விரும்புகிறவர்கள், ஊழல் அரசியல்வாதிகள் வெற்றி பெறுகிறார்கள் என்று சொல்வதெல்லாம், பிரச்சினையை தலைகீழாக விளக்குவதாகும்.

தேர்தல் என்பது எந்தவகையிலும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில்லை, அடக்குமுறைகளைத் தடுக்கப் போவதும் இல்லை என்ற நிலையில், தங்களைக் கொள்ளையடிப்பவர்களைத் தேர்வு செய்வதுதான் தேர்தல் என்றாகிவிட்ட நிலையில், காசு கொடுக்காமல் ஓட்டு வாங்குவதன் இன்னொரு வடிவம்தான், பா.ஜ.க-வின் இந்துத்துவ அரசியல். தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக இந்துமத போதையை ஏற்றிவிடுகிறது, சங்கப் பரிவார கும்பல்.

அதாவது, இனத்தைச் சொல்லி ஓட்டுவாங்குவது, சாதியைச் சொல்லி ஓட்டு வாங்குவது, இந்து மதவெறியூட்டி ஓட்டுவாங்குவது, அதிகாரத்தைப் பயன்படுத்தி மிரட்டி ஓட்டுவாங்குவது ஆகியவை நிலப்பிரபுத்துவ-பண்ணையாதிக்க அடிமைத்தனமாகும். காசு கொடுத்து ஓட்டு வாங்குவது தனியார்மய-தாராளமயத்தினால் உருவான காரியவாதமாகும். இவை இரண்டிற்கும் ஜனநாயகத்திற்கும் தொடர்பில்லை.


படிக்க: எதிர்க்கட்சிகள் இல்லாமல் தேர்தல் நடத்த மோடி திட்டமா?


ஆகையால், சாதி, அதிகாரம், மதம் ஆகியவற்றைக் காட்டி ஓட்டு வாங்குபவர்களும் இந்திய அரசியல் அமைப்பும் தேர்தலும் ஜனநாயகமானவை என்று இன்னமும் கருதிக் கொண்டிருப்பவர்களும்தான் ஓட்டுக்கு காசு கொடுப்பதைக் குற்றம் சொல்கிறார்கள்.

இப்படிக் கூறுவது, ஓட்டுக்குக் காசு வாங்குவதை நியாயப்படுத்துவதாக தோன்றலாம். ஆனால், இந்திய தேர்தல் முறையில் எது நியாயம், எது அநியாயம் என்பதுதான் நமது முதன்மையான கேள்வி.

மேலே குறிப்பட்டதுபோல, இந்திய ஜனநாயகம் என்பதே கார்ப்பரேட் முதலாளிகள் மக்களைக் கொள்ளையடிக்க உருவாக்கப்பட்டதாகும். எந்தக் கட்சிக்கும் இதில் கொள்கை வேறுபாடு கிடையாது. அதிகார பலம், பண பலம், சாதி ஆதிக்கம் ஆகியவற்றைப் பாதுகாக்கும் இந்த அரசியலின் அடிப்படையில் நடக்கும் தேர்தலில் அவை அனைத்தும் வெளிப்படத்தானே செய்யும். அதனால்தான், சமூகத்தில் நிலவும் ஊழல், முறைகேடுகள், போலித்தனம், ஏமாற்று, மோசடி, பாலியல் வக்கிரங்கள், சாதி ஆதிக்கங்கள் அனைத்தும் தேர்தலிலும் வெளிப்படுகிறது.

இதில், ஓட்டுக்கு காசு வாங்குவதை மட்டும் குற்றம் என்று சொல்வதன் மூலம் என்ன சொல்லவருகிறார்கள் என்பதுதான் நமது கேள்வி. அப்படியெனில், மதவெறியைத் தூண்டி ஓட்டுக் கேட்பதையோ, சாதிவெறித் தூண்டி ஓட்டுக் கேட்பதையோ ஏன் இதே அளவிற்கு எதிர்ப்பதில்லை என்பதையும் சேர்த்துப் பார்க்க வேண்டும்.

அப்படியெனில், காசு, சாதி, மதம் ஆகியவற்றுக்காக ஓட்டுப் போடும் நிலைமை எப்போதுமே மாறாதா? நேர்மையான தேர்தல் எப்போதுதான் நடக்கும்? என்று கேட்டால், நாட்டின் அரசியல் அதிகாரத்திற்காக நடப்பதுதான் தேர்தல். இப்போது இருக்கும் தேர்தல்முறை என்பது கார்ப்பரேட் அரசியலுக்குத்தான் உகந்ததாக உள்ளது. இதன் மூலம் கார்ப்பரேட் முதலாளிகள், ஏகாதிபத்தியங்கள், அவர்களுக்கு துணைபுரிகின்ற உள்ளூர் ஆதிக்கச் சக்திகளுக்கானதாக உள்ளது.

விவசாயிகள், தொழிலாளர்கள், நெசவாளர்கள், மீனவர்கள், சிறு தொழில்முன்வோர், வியாபாரிகள் உள்ளிட்ட நாட்டின் கோடான கோடி மக்களுக்கான கட்டமைப்பாக இந்தியாவின் அரசியல் கட்டமைப்பும் அதற்கான தேர்தலும் இல்லை. இவர்களது பிரதிநிதிகள் பங்கேற்கும் வகையில் அரசியல் கட்டமைப்பு இல்லை.

அவ்வாறு உழைக்கும் மக்களுக்குத் தேவையான உரிமைகளை நிலைநாட்டுகின்ற வகையிலான அரசியல் அமைப்பை உருவாக்கும் போது, அதற்காகப் போராடும் போது, அந்த அரசியல் அமைப்புக்கான தேர்தலில்தான் சாதி, மதம், காசு, அதிகாரம் ஆகியவற்றிற்கு இடமில்லாத, உண்மையில் ஜனநாயக பூர்வமான தேர்தலை நடத்த முடியும். இன்றைக்கு இருக்கும் அரசியல் கட்டமைப்புக்கான தேர்தலில் இந்த ஜனநாயக வழிமுறைகளை எதிர்ப்பார்ப்பது சாத்தியமில்லை.

ஆகையால், தேர்தல் ஜனநாயகமாக நடக்க வேண்டும் என்பதைவிட, அரசியல் அமைப்பு ஜனநாயகமானதாக இருக்க வேண்டும் என சிந்திப்பது பொருத்தமாக இருக்கும்.


பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

(புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பாட்டாளி வர்க்கத்தினுடைய வர்க்க அமைப்பின் அதிஉயர் வடிவமே கட்சி | | லெனின் 154

தோழர் லெனினுடைய 154 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு “லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகள்” நூலில் இருந்து இந்த கட்டுரையை வெளியிடுகிறோம்.

ட்சியானது, தொழிலாளர் வர்க்கத்தினுடைய அமைப்பு ரீதியாக திரட்டப்பட்ட படைப்பிரிவாகும். ஆனால், கட்சியானது தொழிலாளர் வர்க்கத்தின் ஒரே அமைப்பு அல்ல. இன்னும் எண்ணற்ற பிற அமைப்புகளையும் பாட்டாளி வர்க்கம் கொண்டுள்ளது. அவை: தொழிற்சங்கங்கள், கூட்டுறவுச் சங்கங்கள், தொழிற்சாலைகளில் உள்ள அமைப்புகள், நாடாளுமன்றக் குழுக்கள், கட்சி சாரா மகளிர் அமைப்புகள், பத்திரிகையாளர் குழுக்கள், கலாச்சார அமைப்புகள், கல்வி அமைப்புகள், இளைஞர் கழகங்கள்; பகிரங்கமான புரட்சிகர நடவடிக்கை காலங்களில் அமைக்கப்படும் புரட்சிகரமான போரிடும் அமைப்புகள், பாட்டாளி வர்க்கம் அதிகாரத்திலிருக்குமானால் அரசு அமைப்பின் வடிவமான சோவியத் பிரநிதிகள் அமைப்பு – இன்னும் பிற. இந்த அமைப்புகள் இல்லாமல் பாட்டாளி வர்க்கமானது மூலதனத்தின் ஆளுகையை எதிர்த்து வெற்றிகரமாகப் போரிட முடியாது.

இவற்றுள் மிகமிகப் பெரும்பான்மையான அமைப்புகள் கட்சி சாராதவை. இவற்றுள் சில அமைப்புகளே கட்சியைப் பின்பற்றுபவை. மிகச் சிலவே கட்சியிலிருந்து உதித்த அமைப்புகளாக உள்ளன. குறிப்பிட்ட சில நிலைமைகளில், இந்த அமைப்புகள் தொழிலாளர் வர்க்கத்திற்கு முற்றிலும் அவசியமானவையாக இருக்கின்றன. ஏனென்றால், அவை இல்லாமல் போனால், போராட்டத்தின் பலவகைப்பட்ட அரங்குகளில் பாட்டாளி வர்க்கத்தினுடைய வர்க்க பலாபல நிலைகளை உறுதிப்படுத்துவது சாத்தியமில்லாமல் போய்விடும். அவை இல்லாமல் போனால், முதலாளித்துவக் கட்டமைவிற்குப் பதிலாக சோசலிசக் கட்டமைவை நிறுவுவதைத் தனது இலட்சியமாகக் கொண்டுள்ள பாட்டாளி வர்க்கத்தை எஃகுறுதிமிக்கதாக்குவது சாத்தியமில்லாமலே போய்விடும்.

ஆனால் இத்தகைய அமைப்புகள் பல்கிப் பெருகியுள்ள நிலைமைகளில் அந்த அமைப்புகளின் மீது கட்சியின் ஒரே தலைமையை எவ்வாறு செல்வாக்கு பெறும்படி செய்வது? இந்த அமைப்புகள் எண்ணற்றவையாகப் பெருகியுள்ள காரணத்தால், தலைமையில் வெவ்வேறான போக்குகள் தோன்றுவதற்கு இட்டுச் செல்லாதா? இப்படி நடக்காமலிருக்க உத்திரவாதம் என்ன? இந்த அமைப்புகள் ஒவ்வொன்றும் அவற்றிற்குரிய தனிச்சிறப்பான துறையில் அவற்றின் வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றன. ஆகவே, இந்த அமைப்புகளின் வேலைகள் மற்றதன் வேலைகளைத் தடங்கல் செய்யாது என்று வாதிக்கப்படலாம். அது உண்மை என்பது நிச்சயம். ஆனால், இந்த அமைப்புகள் எல்லாம் ஒரே வர்க்கத்திற்காக, பாட்டாளி வர்க்கத்திற்காக இருப்பவை. ஏனென்றால், இவை அனைத்தும் ஒரே வர்க்கத்திற்குச் சேவை செய்பவை. இதனால் அவை அனைத்தும் ஒரே திசைவழியில் வேலை செய்பவையாக இருக்கவேண்டும் என்பதும் உண்மைதான். அப்படியானால் பின்வரும் கேள்விகள் நம்முன் எழுகின்றன: இந்த அமைப்புகளுடைய வேலைகள் எல்லாம் எந்த வழியில் செல்வது என்பதைத் தீர்மானிப்பது யார்? தேவையான அளவிற்கு தனக்கு அனுபவம் உண்டு என்ற காரணத்தால், தன்னால் இத்தகைய பொதுவழியை வகுத்துத் தர முடியும் என்பதோடு மட்டுமல்லாமல், தனக்குப் போதிய செல் வாக்கும் அந்தஸ்தும் உண்டு என்ற காரணத்தால், தலைமையின் ஒற்றுமையைச் சாதிப்பதற்கும், ஒவ்வொன்றும் மற்றொன்றுக்குத் தடங்கல் ஏற்படாமல் தடுக்கவும், இந்தப் பொது வழியை நடைமுறையில் நிறைவேற்றும்படி இந்த அமைப்புகளையெல்லாம் தூண்டிவிடவும் தகுதியுடைய மைய அமைப்பு எங்கே? அது எது?

அந்த அமைப்புதான் பாட்டாளி வர்க்கத்தினுடைய கட்சி என்று நான் வலியுறுத்திக் கூறுகிறேன்.


படிக்க: மே தினம் குறித்து தோழர் லெனின்


இவற்றைச் செய்வதற்கான எல்லா தகுதிகளும் கட்சியிடம் உள்ளன. இந்த தகுதிகள் அதற்கு இருப்பதற்கான காரணங்களை இனி நான் கூறுகிறேன்.

முதல் காரணம்: தொழிலாளர் வர்க்கத்தினால் சோதித்து தெரிவு செய்யப்பட்ட தலைசிறந்த தொழிலாளர்களின் அணிதிரளும் மையமாக கட்சி விளங்குகிறது. பாட்டாளி வர்க்கத்தினுடைய கட்சிசாரா அமைப்புகளுடன் இதற்கு நேரடியான பிணைப்புகள் உள்ளன. இதுமட்டுமல்லாமல், கட்சியானது வழக்கமாக அந்த அமைப்புகளை வழிநடத்திச் செல்வதாகவும் இருக்கின்றது.

இரண்டாவது காரணம்: தொழிலாளர் வர்க்கத்தில் சோதித்து தெரிவு செய்யப்பட்ட தலைசிறந்த தொழிலாளர்களின் அணிதிரளும் மையம் என்ற முறையில் கட்சி இருக்கிறது. இதனால் தமது வர்க்க அமைப்புகளின் ஒவ்வொரு வடிவத்திலுமானவற்றை வழிநடத்திச் செல்லும் ஆற்றலுடைய தலைவர்களுக்கான பயிற்சிப் பள்ளியாக கட்சி விளங்குகிறது.

மூன்றாவது காரணம்: தொழிலாளர் வர்க்கத்தின் தலைவர்களுக்கான தலைசிறந்த பயிற்சிப் பள்ளி என்ற முறையில் இருப்பதற்குக் காரணம் அதனுடைய அனுபவமும் செல்வாக்கும்தான். இதனால், பாட்டாளி வர்க்கத்தினுடைய போராட்டத்தின் தலைமையை மையப்படுத்தும் ஆற்றலுடைய அமைப்பாக கட்சியால் மட்டுமே இருக்க முடிகிறது.

இவ்வாறான மையப்படுத்தலின் மூலம், தொழிலாளர் வர்க்கத்தினுடைய கட்சிசாரா அமைப்புகள் அனைத்தையும் ஒன்று பாக்கியில்லாமல் கட்சியின் துணை அமைப்புகளாக மாற்றும் ஆற்றலுடையதாக கட்சி விளங்குகிறது. இத்துடன், இந்த கட்சி சாரா அமைப்புகளை, கட்சியை வர்க்கத்துடன் இணைக்கும் இடமாற்றி அனுப்பும் வார்பட்டையாகவும் (transmission belt) திகழ்கிறது.

இதனால்தான், பாட்டாளி வர்க்கத்தினுடைய வர்க்க அமைப்பின் அதிஉயர் வடிவமே கட்சி என்று நான் வலியுறுத்திக் கூறுகிறேன்.


படிக்க: பாட்டாளியை புரட்சியாளனாக வளர்த்தலின் அவசியம் பற்றி ! – லெனின்


கட்சிசாரா அமைப்புகளான தொழிற்சங்கங்கள், கூட்டுறவுச் சங்கங்கள், இன்னும் இதுபோன்ற அமைப்புகளை அதிகார பூர்வமாக கீழ்ப்படுத்தி வைக்கவேண்டும் என்று நிச்சயமாக இதற்குப் பொருள்படாது. அப்படியானால், இதன் பொருள் என்ன? இந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், இந்த அமைப்புகளில் சந்தேகத்திற்கே இடமின்றி செல்வாக்குள்ளவர்களாக விளங்குபவர்களுமான கட்சி உறுப்பினர்கள், இந்தக் கட்சிசாரா அமைப்புகளை அவையவற்றின் வேலைகளைச் செய்கையில், பாட்டாளி வர்க்க கட்சியை நெருங்கிவரும்படி ஈர்க்க வேண்டும் என்பதும், கட்சியின் அரசியல் தலைமையை மனமுவந்து ஏற்றுக் கொள்ளும்படி அவற்றைச் செய்ய வேண்டும் என்பதும்தான். இதற்காக, தங்களால் இயன்றதனைத்தையும் கட்சி உறுப்பினர்கள் செய்ய வேண்டும் என்பதுதான்.

கட்சி என்பது “பாட்டாளி வர்க்கத்தினுடைய வர்க்க அமைப்பின் அதிஉயர் வடிவமே” என்றும், மற்றெல்லா பாட்டாளி வர்க்க அமைப்பு வடிவங்கள் இடையேயும் அதன் அரசியல் தலைமையை விரிவுபடுத்தியே தீரவேண்டும் என்றும் லெனின் சொல்வது இதனால்தான். (தொகுதி 25, பக் 194; “இடதுசாரி கம்யூனிசம்- ஒரு இளம் பருவக்கோளாறு” என்ற நூல் )

இதனால்தான், கட்சிசாரா அமைப்புகளின் “சுயேச்சை, நடு நிலைமை” என்பனவற்றை முன்னிறுத்தும் சந்தர்ப்பவாதக் கோட்பாடானது, லெனினியத்தின் கோட்பாட்டிற்கும் நடைமுறைக்கும் முழுக்க முழுக்க ஒவ்வாததாக இருக்கிறது. ஏனென்றால், இந்தச் சந்தர்ப்பவாத கோட்பாடுதான் கட்சியிலிருந்து தனிமைப்பட்டுள்ள சுயேச்சையான நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பத்திரிகை யாளர்களையும் உருவாக்குகிறது. ஏற்கெனவே சூன்யவாதிகளாகவும் கட்சி மறுப்பியல்வாதிகளாகவும் தரங்குறைந்துவிட்ட குறுகிய மனப்பான்மையினரான தொழிற்சங்கத் தலைவர்களையும் கூட்டுறவுச் சங்க நிர்வாகிகளையும் உருவாக்குகிறது.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube,



தில்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் மருந்து வழங்க மறுக்கும் பாசிச மோடி அரசு!

சிறையில் உள்ள தில்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு
இன்சுலின் மருந்து வழங்க மறுக்கும் பாசிச மோடி அரசு!

22.04.2024

கண்டன அறிக்கை

துபானக் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் மருந்து வழங்கவும் கூட தடைவிதித்து இருக்கிறது பாசிச மோடி அரசு. இதற்கு எதிராக திகார் சிறைக்கு முன்பு ஆம் ஆத்மி கட்சியின் தொண்டர்கள் போராடி வருகிறார்கள்.

கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் கொடுப்பதை மறுத்துவிட்டு சர்க்கரை அளவைக் கூட்டுவதற்கு அவர் மாம்பழங்கள் அதிகம் உண்கிறார் என்ற பச்சை பொய்யை நீதிமன்றத்தில் தெரிவித்தது அமலாக்கத்துறை.

சிறையில் உள்ள ஒரு மனிதனுக்கு மருத்துவ உரிமை மறுப்பது என்பது அந்த மனிதனைக் கொல்வதற்கு சமம். ஆக விசாரணை இன்றி தனக்கு எதிரானவர்களை கொன்று கொண்டிருக்கிறது பாசிச மோடி -அமித்ஷா கும்பல் என்பதே உண்மை.

பீமா கோரேகான் வழக்கில் பொய்யாகக் கைது செய்யப்பட்ட ஆனந்த்தெல்தும்டே, வரவரராவ் உள்ளிட்ட பல்வேறு அறிவு ஜீவிகளுக்கும் சிறையில் எவ்வித மருத்துவமும் செய்ய அனுமதிக்காமல் அவர்களை குற்றுயிராக்கியது.

அதே வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்பார்கின்சன் என்ற நடுக்கு வாத நோயால் பாதிக்கப்பட்ட பாதிரியார் ஸ்டேன்ஸ்வாமிக்கு ஸ்ட்ரா கொடுக்காமல் பலிவாங்கியது இதே மோடி அரசுதான்.


படிக்க: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது! || மக்கள் அதிகாரம் கண்டனம்


இந்த நாட்டின் மக்களுக்காக போராடுபவர்களையும் தனக்கு கீழ்படியாதவர்களையும் பொய் வழக்கில் கைது செய்து அவர்களுக்கு பிணை வழங்காமல் இருப்பதும் சிறையில் அவர்களுக்கு மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை மறுத்து சித்திரவதை செய்வதன் மூலம் மோடி – அமித்ஷா பாசிச கும்பல் தனது பாசிச நடவடிக்கைகளை மேலும் மேலும் கொடூரமாக்குகிறது.

இந்தக் கொடூரச் செயல்பாடுகளை நீதிமன்றங்கள் உட்பட யாரும் கேள்வி கேட்க முடியாத வகையில் அரசுக் கட்டமைப்பை பாசிசமயமாகிக் கொண்டிருக்கிறது.

இது அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்பான பிரச்சனை அல்ல; தங்களின் அரசுக்கு எதிராக போராடுபவர்களுக்கும் அரசுக்கு கீழ்படிய மறுப்பவர்களுக்கும் இதுதான் கதி என்று அறிவிக்கிறது பாசிச கும்பல்.

இதனை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிப்பதுடன் உடனடியாக உச்ச நீதிமன்றம் தலையிட்டு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது.

மேலும் மோடி – அமித்ஷா பாசிசக் கும்பலின் இந்த பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக மாபெரும் மக்கள் இயக்கங்கள் கட்டியமைக்கப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



அமெரிக்க – இந்திய சதுரங்க ஆட்டத்தின் கீழ் இலங்கை! | வீடியோ

அமெரிக்க – இந்திய சதுரங்க ஆட்டத்தின் கீழ் இலங்கை! | வீடியோ

 

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube,