கூடங்குளம் அணு உலைகளில், அவற்றின் எரி பொரு ளாகிய  யுரேனியத்தை நிரப்பி இயங்கச் செய்வதற்கும், அணு மின் உற்பத்தியைத் தொடங்குவதற்கும் இருந்த தடைகள் அகற்றப்பட்டுள்ளன. “நாறவாய்” நாராயணசாமிகள் கூறுவதைப் போல உடனடியாக இல்லாவிட்டாலும், சில மாதங்களில் அணு மின் உற்பத்தி தொடங்கிவிடும்.

இது, அணுசக்தி எதிர்ப்பு மக்கள் இயக்கம் மற்றும் அதன் தலைமையிலான இடிந்தகரை  கூடங்குளம் வட்டாரக் கிராமங்களின் அணு மின் நிலையத்துக்கு எதிரான மக்கள் போராட்டங்களுக்கு நிச்சயமாகப் பின்னடைவுதான். ஆனால், இப்பின்னடைவு மீளமுடியாததோ, நிரந்தரமானதோ அல்ல. இப்பின்னடைவி லிருந்து மீண்டு, போராட்டங்களைச் சரியான திசையில் முன்னெடுப்பதற்கு முதன்மையான கடமை ஒன்றிருக்கிறது. இப்போராட்டங்களை வழிநடத்திய முன்னணியாளர்கள், அவற்றிலிருந்து சரியான அனுபவங்களையும் படிப்பினைகளையும் பெற்றாக வேண்டும்.

முதலாவதாக, போராட்டங்களுக்கு அணிதிரண்ட மக்கள் மீது, அவர்களை வழிநடத்திய தலைமை மற்றும் முன்னணியாளர்கள் முழு நம்பிக்கை வைக்கவில்லை. அம்மக்களைப் பற்றிய குறை மதிப்பீடு கொண்டிருந்தார்கள். இது மத்திய தர அறிவுஜீவி வர்க்கத்தினர் உழைக்கும் மக்கள் மீது வழக்கமாகக் கொண்டிருக்கும் கீழானதொரு கண்ணோட்டம்தான். “என்னதான் எடுத்துச் சொன்னாலும் மக்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள். மேலும், எல்லா உண்மைகளையும் மக்களிடம் சொல்லக் கூடாது; சொல்லவேண்டிய அவசியம் இல்லை; சொன்னால் பயந்து விடுவார்கள்; போராடத் துணியமாட்டார்கள்; போராட முன் வரமாட்டார்கள்; பின்வாங்கி விடுவார்கள்” என்று அறிவுஜீவிகள் கருதுகிறார்கள்.

உண்மையில் இது அறிவுஜீவிகளிடமே உள்ள குறைபாடு; இருப்பதையும் இழந்துவிடுவோம் என்ற அச்சம் தான் இதற்குக் காரணம். உண்மையில் உழைக்கும் மக்கள் பாட்டாளிகள் மட்டுமல்ல; வரலாற்றுப் படைப்பாளிகள்.

கூடங்குளம் போராட்டம் : அனுபவங்களும் படிப்பினைகளும்கூடங்குளம் அணுஉலைகளையும், அணு மின்நிலையத்தையும் இழுத்து மூடவேண்டும், அவை வரவிடாமல் செய்ய வேண்டுமானால், எத்தகைய எதிரிகளை எதிர்த்துப் போராடி முறியடிக்க வேண்டும் என்ற உண்மை அங்கு போராடும் மக்களிடம் சொல்லப்படவே இல்லை. கூடங்குளம் திட்டம், ஆட்சியாளர்கள், அமெரிக்கரஷ்யா முதலிய மேலைநாடுகள், இந்திய ஆளும் வர்க்கங்கள் ஆகியோருக்கு எவ்வளவு முக்கியமானது; என்ன விலை கொடுத்தாவது, என்ன காரியம் செய்தாவது கூடங்குளம் திட்டத்தை நிறைவேற்றியே தீரவேண்டும் என்பதில் எவ்வளவு மூர்க்கமாகவும் உறுதியாகவும் அவர்கள் இருக்கிறார்கள் என்கிற விவரம் போராடும் மக்களைச் சென்றடையவே இல்லை.

கூடங்குளம் திட்டத்தைத் தொடர்ந்து அதுபோன்ற 60க்கும் மேற்பட்ட அணு மின் திட்டங்கள், அவற்றுக்கான அணுஉலைகள், 70 இலட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் நிறுவப்பட அணிவகுத்து நிற்கின்றன. உற்பத்தி செய்து குவிக்கப்பட்டுள்ள பேரழிவு ஆயுதங்களை விற்றுத் தீரவேண்டும்; அப்போதுதான் மேலை நாடுகளின் ஆயுதத் தொழிற்சாலைகளும் இயந்திரங்களும், மூலதனமும் இடைவெளியின்றிச் சுழன்று, கொழுத்த இலாபமீட்ட முடியும்; அதற்காக கோடிக்கணக்கான மக்கள் செத்து மடிந்தாலும் கவலையில்லை என ஏகபோக ஆயுத உற்பத்தியாளர்கள் வெறிபிடித்து அலைவதைப் போல, மேலைநாடுகளில் காலாவதியாகிப் போன தொழில்நுட்பம், துருப்பிடித்து ஓட்டை உடைசலாகிப் போன நாசகார அணுசக்தி உலைகளை “நம்” தலையிலே கட்டிக் “காசா”க்கிக் கொள்ளத் துடிக்கிறார்கள். அவர்கள் அடிக்கும் கொள்ளையில் பங்கு போட்டு ஆதாயம் அடைவதற்காக, தனியார்துறையில் பல அணு மின் நிலையங்களை நிறுவக் காத்திருக்கிறார்கள், டாடா, அம்பானி, அதானி முதலிய தேசங்கடந்த இந்தியத் தரகு முதலாளிகள். பேரழிவு ஆயுத வியாபாரிகளைப் போல, இவர்களின் கொள்ளை இலாபவெறிக்கு எவ்வளவு கோடி மக்களையும் அணு  உலைகளுக்குக் காவு கொடுக்கவும் தயாராய் உள்ளனர், இந்திய ஆட்சியாளர்கள்.

அடுத்து, எட்டுமாதங்கள், ஒரு சிறு அளவுகூடச் சட்டவிரோதமான வன்முறையில்  கூடங்குளம் அணுமின் திட்ட எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் ஈடுபடவில்லை. பால்குடம் எடுப்பதும், பட்டினி கிடப்பதும் என்ற அமைதி வழியிலேயே, காந்திய வழியிலேயே போராடி வருவதாகத் திரும்பத் திரும்ப உதயக்குமார் முதலியவர்கள் மன்றாடினர். ஆனால், “மூட்டைப் பூச்சிகளை நசுக்குவதற்குப் பீரங்கி வண்டிகளின் அணிவகுப்பா?” என்ற தோரணையில், “மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு!” என்று பெயர் பெற்ற “தி இந்து” நாளேடே வியந்து தலையங்கம் தீட்டியது; அந்த அளவு கூடங்குளம் அணுஉலைகளையும், அணுமின் நிலையத்தையும் திறந்து மின்உற்பத்தியில் ஈடுபடுவதற்கு எந்த எல்லைவரையும் போவது என்று ஆட்சியாளர்கள் வலிந்து நிற்பதைக் கண்டு போராடிய மக்கள் அதிர்ச்சியுற்றனர்.

அதிரடிப்படை உட்பட ஆயுதந்தாங்கிய மத்திய, மாநிலப் போலீசுப் படைகள், உளவுப் பிரிவுகள் ஆகியவற்றின் 7,000 படையினர் குவித்துச் சுற்றி வளைக்கப்பட்டனர். 144 உத்திரவு பிறப்பிக்கப்பட்டு, குடிநீர், மின்சாரம், பால் முதலிய உணவுப் பொருட்கள் வழங்கீடு, போக்குவரத்தைத் தடை செய்து முற்றுகையிடப்பட்டது.  அந்நிய நாட்டு மக்கள் மீது பாய்ந்து குதறுவதற்குத் தயார் நிலையில் இருப்பதைப் போல முப்படைகளும் குவிக்கப்பட்டன. அந்நிய நாடுகளிடம் நிதி பெற்று, அந்நிய நாடுகளின் சதிக்கு உடன்பட்டு கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிராக மக்கள் போராடுவதாக அவதூறும் விசாரணையும் நடந்தது. போதாதென்று “நக்சலைட்டு பீதி” பரப்பப்பட்டு, கைது நடவடிக்கைகள் ஏவிவிடப்பட்டன.

ஏற்கெனவே தலைக்குமேல் தொங்கும் வாளாக போராட்ட முன்னணியாளர்கள் மீது தேசத்துரோகம் மற்றும் அரசு மீது போர் தொடுத்தல், அரசுக்கு எதிராகச் சதி உட்பட நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இப்போது அவற்றின் கீழ் பலரைக் கைது செய்து பணயக் கைதிகளாக்கி, காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தை விலக்கிக் கொள்ளும்படி ஆட்சியாளர்கள் நிர்பந்தித்தனர். மும்பையிலுள்ள கிறித்துவத் திருச்சபை கார்டினல் மூலம் பேரங்கள் நடத்தி, நிர்பந்தங்கள் செய்து, மதுரை மண்டல ஆயர் ஃபெர்ணான்டோவைத் தூது அனுப்பி காரியத்தைக் கச்சிதமாக முடித்தனர், ஆட்சியாளர்கள்.

இவற்றையெல்லாம் போராடும் மக்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால், போராட்ட முன்னணியாளர்கள் எதிர்பார்த்திருக்க வேண்டும்; மக்களை எச்சரித்திருக்கவும் வேண்டும். “நாமென்ன மாவோயிசத் தீவிரவாதிகளைப் போலத் துப்பாக்கி ஏந்தியா போராடுகிறோம். காந்திய வழியில் அமைதியான போராட்டங்களைத் தானே நடத்துகிறோம். ஆட்சியாளர்களும் அவ்வாறுதான் இருப்பார்கள்” என்று எண்ணி ஏமாந்து போனார்கள், போராடிய மக்கள்.

கூடங்குளம் போராட்டம்: அனுபவங்களும் படிப்பினைகளும்ஆனால், நாட்டை மீண்டும் காலனியாக்கித் தருவதற்குத் தவணை முறையில் கையூட்டுப் பெறுவதென்று பேரங்கள் பேசி முடித்து விட்டார்கள், ஆட்சியாளர்களும் ஆளும் வர்க்கங்களும். “எங்கள் வனங்களை அழிக்காதீர்கள், எங்கள் இயற்கை வளங்களை வேட்டையாடாதீர்கள், எங்கள் மண்ணைப் பிடுங்கிக் கொண்டு, எங்களை வெளியே துரத்தாதீர்கள்” என்று நிராயுதபாணிகளாக நின்று முழக்கமிடும் ஒடிசா பழங்குடி மக்களுக்குத் துப்பாக்கிக் குண்டுகளை பரிசாக வழங்குகிறார்கள் ஆட்சியாளர்கள். எல்லாம் எதற்காக?

வேதாந்தா மற்றும் போஸ்கோ போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் இரும்பு, செம்பு, பித்தளை, அலுமினியம் முதலிய தாதுப்பொருட்களை வரைமுறையின்றிக் கொள்ளையடித்து, பல இலட்சம் கோடி ரூபாய் இலாபமீட்டுவதற்குத்தான். அதேபோன்றுதான் உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மலிவு விலையில் தடையற்ற மின்சாரம் வழங்குவதை உறுதிப்படுத்துவதற்காக நாடு முழுவதும் 60க்கும் மேற்பட்ட அணுமின் நிலையங்களை நிறுவிட ஆட்சியாளர்கள் மக்களின் வாழ்வாதாரங்களை மட்டுமல்ல, மக்கள் உயிர்களையும் பலியிடத் துடிக்கிறார்கள்.

இறுதியாக, இவ்வாறான கொடூரமான எதிரிகளை எதிர்த்து முறியடிக்க வேண்டுமானால் நாடு முழுவதும் பரந்துபட்ட மக்களின் ஆதரவைப் போராடும் மக்கள் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் சிங்கூர், நந்திகிராமம் போராட்டங்களுக்கு திரண்டதைப்போன்று பரவலான மக்கள் ஆதரவைத் திரட்டியிருக்கவேண்டும். ஆனால், கூடங்குளம்  இடிந்தகரை வட்டாரத்திலிருந்து விலகிப் போகப் போக அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்திற்கு எதிர்ப்பு கடுமையாகிக் கொண்டே போகிறது. ஓரிரு சிறு கட்சிகள், சிறு ஏடுகள் தவிர அனைத்து ஓட்டுக் கட்சிகளும் செய்தி ஊடகங்களும் எதிர்த்தரப்பில் நிற்கின்றனர். அது மட்டுமல்ல, பரந்துபட்ட உழைக்கும் மக்களும் கூட அணு மின் சக்திக்கு ஆதரவான பொய்ப் பிரச்சாரத்துக்குப் பலியாகி எதிர் அணியாக நிற்கிறார்கள். கடலூர், தூத்துக்குடி, கொச்சி, சென்னைஎண்ணூர் துறைமுகங்களில் இராட்சத பெட்டகங்களை இறக்குமதி செய்து, உள்நாட்டுப் பகுதிகளுக்கு எடுத்துச் செல்லும் தொழிலாளர்களுக்குத் தெரியாது, அவற்றின் உள்ளே அடைக்கப்பட்டுள்ள பொருட்கள் நமது நாட்டின் அத்தியாவசியத் தேவைகள் அல்ல. நமது மக்களின் உயிர்களைப் பலிவாங்கும் மருத்துவக் கழிவுகள், இரசாயனக் கழிவுகள், அணுக் கழிவுகள் என்று.

இவ்வாறான உண்மைகளை உழைக்கும் மக்கள் புரிந்து கொண்டு ஆட்சியாளர்களுக்கும் ஆளும் வர்க்கங்களுக்கும் எதிராக நிச்சயம் எழுச்சியுறுவார்கள். கூடங்குளத்திலிருந்து வெகுதொலைவிலுள்ள சென்னை மக்களிடம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணி போன்ற புரட்சிகர இயக்கங்கள் அணு சக்தி  அணு உலை எதிர்ப்பு இயக்கத்தை எடுத்துச் சென்றபோது கூட முதலில் கடும் எதிர்ப்பையே கண்டார்கள். ஆனால், அவர்கள் பிரச்சார முயற்சியில் அழுந்தி நின்று இயக்கத்தைத் தொடர்ந்தபோது, ஆதரவு தருபவர்களாக மக்கள் மாறினர்.

இதற்கு மாறாக கூடங்குளம் போராட்ட முன்னணியாளர்கள் ஜெயலலிதா போன்ற பிழைப்புவாதக் கழிசடைகளின் மீது நம்பிக்கை வைக்கும்படி சொன்னார்கள். இப்போது அவர்கள் நம்ப வைத்து வஞ்சகம் செய்து விட்டதாகப் புலம்புகிறார்கள். ஆக, மக்கள், மக்கள் மட்டுமே நம்பிக்கைக்குரிய மகத்தான சக்தி என்ற கொள்கையில் ஊன்றி நிற்கும்போதுதான் இலட்சியத்தை எட்டமுடியும் என்பது கூடங்குளம் போராட்டங்கள் நமக்குக் கற்றுத் தரும் படிப்பினை.

_________________________________________

– புதிய ஜனநாயகம், மே-2012

__________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: