Friday, June 26, 2026
முகப்பு பதிவு பக்கம் 163

‘சோசலிச’, ‘ஜனநாயக’ முகமூடிகளின் துரோகத்தில் செழித்துவளரும் பாசிச சக்திகள்!

சுமார் ஒன்றிரண்டு மாத கால அளவிற்குள் அமெரிக்கா, இத்தாலி, இஸ்ரேல், பிரான்ஸ், ஸ்வீடன், பிரேசில் ஆகிய நாடுகளில் நடைபெற்ற தேர்தல்களில், பாசிச சக்திகள் வலுவடைந்து வருகின்ற நிகழ்வுப் போக்கை காணமுடிகிறது. இது அந்நாடுகளின் உழைக்கும் வர்க்கத்திற்கு மட்டுமல்ல, சர்வதேச அளவிலும் தாக்கத்தைச் செலுத்தக்கூடிய அச்சமூட்டும் போக்காகும்.

ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் நெருக்கடியின் விளைவாகவே, உலகெங்கிலும் புற்றீசல் போல பாசிச சக்திகள் வளர்ந்துவருகிறார்கள் என்பதை நாம் அறிவோம். அதேநேரம், அவர்கள் மக்கள் ஆதரவைப் பெற்று ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதை நோக்கி முன்னேறுவதற்கு, இதுநாள் வரை அந்நாட்டை ஆண்ட ‘ஜனநாயக’, ‘சோசலிச’ முகமூடி அணிந்த ஆளும் வர்க்க கட்சிகளே காரணமாக இருக்கின்றன. மேற்சொன்ன ஒவ்வொரு நாடுகளிலும் இதை நாம் பார்க்க முடிகிறது!

இத்தாலி: ஆட்சி அதிகாரத்தில் முசோலினியின் வாரிசுகள்!

1922 அக்டோபரில் பாசிஸ்ட் முசோலினி இத்தாலியில் அதிகாரத்திற்கு வந்தான். சரியாக நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, அவனது வாரிசுகள் மீண்டும் அதிகாரத்திற்கு வந்துள்ளனர். இத்தாலியில் சென்ற மாதம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ‘இத்தாலியின் சகோதரர்கள்’ கட்சி (இ.ச.க.) தலைமையிலான கூட்டணி 46 சதவிகித வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது. இ.ச.க.வின் தலைவரான ஜியார்ஜியா மெலோனியை பிரதமராக தேர்ந்தெடுத்துள்ளனர்.

படிக்க : பாசிஸ்டுகளின் பிரச்சார பீரங்கியாகும் ‘டிவிட்டர் 2.0’!

2018-இல் நான்கு சதவிகித வாக்குகளை மட்டும் பெற்ற இ.ச.க.வானது, தற்போது 26 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது. அரசு இயந்திரம் மற்றும் சமூகத்தில் ஊடுருவியுள்ள நவ-நாஜி பாசிசக் குழுக்களின் ஆதரவே இவ்வசுர வளர்ச்சிக்கு காரணமாகும். மேலும், மெலோனி முசோலினியின் பாசிசக் கட்சியின் நேரடி வழித்தோன்றலான ‘இத்தாலிய சமூக இயக்கம்’ (Movimento Sociale Italiano) என்ற அமைப்பின் இளைஞர் பிரிவிலிருந்து வந்தவராவார்.

மேலும், இக்கட்சி முழுவதும் வெறிபிடித்த வன்முறை எண்ணம் கொண்ட பாசிஸ்டுகளால் நிரம்பி வழிகிறது. காசாபவுண்ட் (Casapound) போன்ற வெறிபிடித்த நவ-நாஜி குழுக்களுடன் இக்கட்சி நெருங்கிய உறவுகளைப் பேணுகிறது.

இத்தாலியில் நீண்ட காலமாக நிலவும் பொருளாதார நெருக்கடிகள், ஆளுங்கட்சிகள் மீதான மக்களின் அதிருப்திகளைத் தமக்கு சாதமாகப் பயன்படுத்திக் கொண்டுதான் இந்த பாசிச கும்பல் ஆட்சிக்கு வந்துள்ளது; நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு கார்ப்பரேட் நலன்சார்ந்த பொருளாதாரத் திட்டங்கள்தான் காரணம் என்ற உண்மையை மறைத்து, புலம்பெயர்ந்தோர் – அகதிகளால்தான் இத்தாலியர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்ற பொய் பிம்பத்தை அவர்கள் பரப்பியுள்ளார்கள்; முசோலினியின் காலத்திய “கடவுள்-குடும்பம்-தாயகம்” என்ற தேசிய-இனவெறி முழக்கத்தை மீண்டும் அவர்கள் உயிர்ப்பித்துள்ளார்கள்.

இக்கும்பலின் நச்சுப் பிரச்சாரத்திற்கு இத்தாலிய தொழிலாளர் வர்க்கத்தின் ஒருபகுதியும் பலியாகியிருப்பதுதான் வேதனைக்குரிய விசயம். கம்யூனிஸ்ட் மறுமலர்ச்சிக் கட்சி (Rifondazione communista) போன்ற போலி கம்யூனிஸ்ட் கட்சிகள் தொழிலாளர் வர்க்கத்தினர் மத்தியில் வர்க்க அரசியலைப் பரப்பாமல், ஆளும் வர்க்கக் கட்சிகளோடு கூட்டணி வைத்துக்கொண்டு துரோகமிழைத்ததுதான் பாசிஸ்டுகளின் செல்வாக்கிற்கு அடிப்படையாகும்.

பிரான்ஸ், ஸ்வீடன்: வளர்ந்துவரும் நவ-பாசிஸ்டுகள்!

இத்தாலியைப் போல, பிரான்ஸ் மற்றும் ஸ்வீடனிலும் பாசிசக் கும்பல்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன; இந்நாடுகளில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் ஆட்சியைக் கைப்பற்றவில்லை என்றாலும், மக்கள் மத்தியில் தங்களுக்கான ஆதரவு தளத்தை விரிவுப்படுத்தியுள்ளன. தேர்தல் முடிவுகளிலும் இது பிரதிபலித்தது.

ஸ்வீடன் ஜனநாயகவாதிகள் கட்சி (Sweden Democrats) நவ-நாஜிகளால் நிறுவப்பட்டதாகும். இக்கட்சியினர் யூத இன எதிர்ப்பை தங்களுக்கான ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர். பிரான்ஸில் மரின் லு பென் தலைமையிலான தேசிய பேரணி கட்சி (National Rally) வளர்ந்துவருகிற பாசிசக் கட்சியாகும். 2015-ஆம் ஆண்டு பாரிஸில் நடத்தப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிறகு, பிரான்ஸ் மக்களிடம் வளர்ந்துவரும் முஸ்லிம் எதிர்ப்பு மனநிலையை இவர்கள் அறுவடை செய்துகொண்டனர்.

வளர்ந்துவரும் வேலையின்மைக்கு புலம்பெயர்ந்தோரைக் காரணமாகக் காட்டுவது உலகெங்கும் உள்ள நவ பாசிஸ்டுகள் கையாளும் பொதுவான உத்தியாகும். ஸ்வீடன் ஜனநாயகவாதிகள் கட்சியும் பிரான்ஸின் தேசிய பேரணியும் இதை தீவிரமாக கொண்டுசெல்கின்றன. பிரான்ஸில் கருப்பின நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், புலம்பெயர்ந்தோர் எதிர்கொள்ளும் ஆபத்துகளைப் பற்றி அவையில் பேசியபோது, இப்பாசிசக் கும்பலைச் சேர்ந்தவர்கள், “ஆப்பிரிக்காவுக்கு திரும்பிப் போ” என்று அவரை நோக்கி முழக்கமிட்டுள்ளனர். புலம்பெயர்ந்த அகதிகளுக்கு எதிரான இத்தகைய வெறிப்பேச்சுகள், அடுத்தகட்டமாக அவர்கள் மீதான தாக்குதலாக மாறவும் வாய்ப்புள்ளதை இப்பாசிசக் கும்பல்களின் நடவடிக்கைகள் உணர்த்துகின்றன.

இஸ்ரேல்: யூத இனவெறி பாசிசம்!

அண்மையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இஸ்ரேலின் முன்னாள் பிரதமரான பெஞ்சமின் நெதன்யாகு, யூத இனவெறி பாசிசக் கட்சியான மத சியோனிசக் கட்சியுடன் (Religious Zionism) கூட்டணி அமைத்ததன் மூலம் பிரதமர் பதவியை மீண்டும் கைப்பற்றியுள்ளார்; நெதன்யாகு இப்பாசிசக் கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பதானது, பாலஸ்தீனர்கள் மீதான யூத இனவெறி தாக்குதலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துள்ளது என்றே கூறவேண்டும்.

நெதன்யாகு ஒரு யூத இனவெறியாளர். தொடர்ச்சியாக 12 ஆண்டுகள் இந்த யூத இனவெறியைப் பயன்படுத்தித்தான் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டார். 2021-ஆம் ஆண்டில் ஆட்சியைக் கைப்பற்றிய பென்னட் மற்றும் லபீட் ஆகியோரும் யூத இனவெறியாளர்களே. தற்போது மீண்டும் நெதன்யாகு ஆட்சியைக் கைப்பற்றியுள்ளார்.

போலி கம்யூனிஸ்ட் கட்சி, அரபுக் கட்சி மற்றும் தீவிர வலதுசாரிக் கட்சி என பல வண்ணக் கட்சிகளுடன் கூட்டணி கட்டி, 2021-இல் ஆட்சியைக் கைப்பற்றிய பென்னட் கும்பல் தலைமையிலான ஆட்சி நீடிக்கவில்லை. தோல்வியைத் தழுவியிருந்த நெதன்யாகு, தீவிர யூத இனவெறிப் பிரச்சாரம் செய்தார். காஸாவைச் சேர்ந்த பாலஸ்தீனியர்களுக்கு பென்னட் அரசாங்கம் பணி ஒப்புதல் வழங்கிய நாடகத்தைக் காட்டி இனவெறி தூபம் போட்டார். அதன் விளைவாக, ஆளுங்கட்சியின் கொறடாவான இடிட் சலீம், “சித்தாந்த ரீதியாக இஸ்ரேல் அரசு சமரசம் செய்வதாக”க் கூறி அரசாங்கத்திலிருந்து வெளியேறினார்.

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான மசோதா மீது நடைபெற்ற வாக்கெடுப்பில், அதை எதிர்த்து ஒருவர் கூட வாக்களிக்கவில்லை. ஆளும் கூட்டணி கட்சியினரே மக்கள் மத்தியில் இருந்து வந்த எதிர்ப்பை சமாளிக்க முடியாமல், ஆட்சியைக் கலைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதையே இந்நிகழ்வு பறைசாற்றியது.

இதுவரை இஸ்ரேலில் நடந்துள்ள ஆட்சி மாற்றங்கள் அனைத்தும் யூத இனவெறியர்களுக்கு இடையிலான நாய்ச்சண்டையின் வெளிப்பாடுகளே அன்றி வேறல்ல. ஆனால், பாலஸ்தீனியர்களுக்கு எதிரான யூத இனவெறியானது வீழ்ச்சியடைந்து வரும் வாழ்க்கைத் தரம் மற்றும் அதிகரித்து வரும் சமூக சமத்துவமின்மை ஆகியவற்றின் மீதான மக்களின் கோபத்தைத் திசைதிருப்பி, பாசிசத்தை நோக்கி நகர்ந்துக் கொண்டிருப்பது புதிய போக்காகும்.

தற்போது நெதன்யாகுடன் கைகோர்த்துள்ள பாசிஸ்டுகள், நீதித்துறையின் அதிகாரத்தைக் குறைப்பது மற்றும் சட்டமியற்றுவர்களின் கைகளில் அதிகாரத்தைக் குவிப்பது என நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பயன்படுத்தியே பாசிச எதேச்சதிகாரத்தைக் கொண்டுவர எத்தனிக்கிறார்கள்.

’கடவுள்-குடும்பம்-தாயகம்’ என்ற முசோலினியின் தேசிய இனவெறி முழக்கத்தை மீண்டும் கடைவிரிக்கும் மெலோனி

அமெரிக்கா: நீறுபூத்த நெருப்பாக பாசிச அபாயம்!

அமெரிக்காவில் டிரம்ப் தலைமையிலான வெள்ளை நிறவெறி பாசிச கும்பல், மீண்டும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக இரத்த வெறிபிடித்த ஓநாயைப் போல காத்துக்கிடக்கிறது. அண்மையில் நடைபெற்ற செனட் சபை தேர்தலில் பைடன் தலைமையிலான ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றிருந்தாலும், டிரம்ப் தலைமையிலான குடியரசுக் கட்சி ஏற்கெனவே பெற்றிருந்த 21 இடங்களில் 20 இடங்களைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. பிரதிநிதிகள் சபை தேர்தலில் ஜனநாயகக் கட்சியை விட அதிகமான இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

இதன்விளைவாக, 2024-இல் நடக்க இருக்கும் அதிபர் தேர்தலிலும் போட்டியிடப்போவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். உட்கட்சித் தேர்தல் நடத்தி அதிபர் வேட்பாளரை அறிவிப்பதுதான் அமெரிக்காவில் பின்பற்றப்படும் ஜனநாயக மரபாகும்; ஆனால் உட்கட்சித் தேர்தல் நடத்துவதற்கு முன்னதாக, மக்கள் மத்தியில் தனக்கு உருவாகி உள்ள ஆதரவு மனநிலையை அறுவடை செய்து கொள்வதற்காக, தன்னை அதிபர் வேட்பாளராக அறிவித்துக் கொண்டுள்ளார் டிரம்ப். அதிபர் தேர்தலில் போட்டியிடும் தனது முடிவைப் பற்றி “அமெரிக்காவின் மறுபிரவேசம் இப்போதே தொடங்குகிறது” என தேசிய வெறியைத் தூண்டி பிரச்சாரம் செய்துவருகிறார்.

வெள்ளை நிறவெறி பாசிசக் குழுக்களான பிரவுட் பாய்ஸ் (Proud boys), கு க்ளக்ஸ் கிளான் (Ku  Klux Klan), நியோ-கான்ஃபெடரேட் (Neo-Confederate), நியோ-நாஜி (Neo-Nazi), ரேசிஸ்ட் ஸ்கின்ஹெட் (Racist Skinhead), கிறிஸ்டியன் ஐடண்டிட்டி (Christian Identity) போன்ற பல வண்ண வெள்ளை நிறவெறி பாசிசக் குழுக்கள் டிரம்ப்பை ஒருமனதாக ஆதரிக்கின்றன.

2021 ஜனவரி 06-ஆம் தேதி நடந்த அமெரிக்க நாடாளுமன்றத் தாக்குதல் மூலமாக ஆட்சிக் கவிழ்ப்பு சதி அரங்கேற்றத்திற்கு பிறகு டிரம்ப்பை ஆதரிக்கும் வெள்ளை நிறவெறி பாசிசக் குழுக்களின் சமூக வலைத்தளப் பிரச்சாரங்கள் முன்பைவிட அதிகரித்துள்ளன. 2022-ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் வரை முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமில், பாசிசக் கருத்துகளைப் பரப்பிய 750 சமூக ஊடகக் கணக்குகள், பக்கங்கள் மற்றும் குழுக்களைக் கண்டறிந்து நீக்கியுள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால், சமூக வலைத்தளங்களில் கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம், பாசிஸ்டுகளின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தி விட முடியாது என்பதே நடைமுறை எதார்த்தம்.

பிரேசில்: லூலாவின் வெற்றி தற்காலிகமானதே!

பிரேசிலில் அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில், பாசிஸ்ட் பொல்சனாரோ தோல்வியடைந்திருப்பதையும் லூலா வெற்றி பெற்றிருப்பதையும் உலகெங்கிலும் உள்ள போலி கம்யூனிஸ்டுகள் முக்கியத்துவமுள்ள வெற்றியாக கொண்டாடிவருகின்றனர்.

எனினும், ஏழு லட்சம் மக்களின் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்த கொரோனா நோய்த்தொற்று பரவலில் அலட்சியம் காட்டியது, அமேசான் காடுகளின் பெரும்பகுதியை எரித்து அங்கிருக்கும் பழங்குடியினரை வெளியேற்றியது, நல்வாழ்வுத் திட்டச் செலவினங்களைக் குறைத்தது போன்ற மக்கள் விரோத செயல்பாடுகளை அரங்கேற்றிய பின்னரும், பொல்சனாரோவுக்கு 49.1 சதவிகித வாக்குகள் கிடைத்துள்ளது.

மேலும், லூலா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும், ஆளுநர்கள் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் பொல்சனாரோ கட்சியே பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. அதனைப் பயன்படுத்தி லூலாவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற விடாமல் முட்டுக்கட்டை இடுவதன் மூலம், ஆளும் கூட்டணியின் மீது அதிருப்தியை ஏற்படுத்தி, பொல்சனாரோ கும்பல் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

சுவிசேஷ கிறிஸ்துவ வெறியைப் பரப்பும் பொல்சனாரோவுக்கு அம்மதப்பிரிவினர் மத்தியில் மிகப்பெரிய ஆதரவுதளம் உள்ளது. எனவே தேர்தல் பிரச்சாரங்களில் சுவிசேஷ கிறிஸ்துவர்களின் ஆதரவைப் பெறுவதற்காக, லூலா அம்மதக் கோட்பாடுகளை ஆதரித்துப் பேசினார். ‘இடதுசாரி’ என்று அழைக்கப்படும் லூலாவின் உண்மை முகம் இதுதான்.

பொல்சனாரோவை எதிர்க்க வேண்டும் என்பதற்காக இணைந்துள்ள ஆளும் கூட்டணிக் கட்சிகளும், கொள்கை ஏதுமற்ற பிழைப்புவாதக் கட்சிகளாகவே உள்ளன. இவையெல்லாம், எந்த நேரத்திலும் கூட்டணியை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இத்துடன், பொல்சனாரோ கும்பலின் தூண்டுதலில் சுவிசேஷ கிறிஸ்துவர்கள் வன்முறை கும்பல்கள் சிறுபான்மையினத்தவருக்கு எதிராக கலவரங்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. பிரேசிலின் இந்தத் தேர்தல் முடிவு வருவதற்கு முன்னதாக, சமூக ஊடகங்களில் இராணுவ சதி மற்றும் வன்முறை எழுச்சிக்கு சுவிசேஷ கிறிஸ்துவ வெறிக்கும்பல்கள் அழைப்பு விடுத்தன. “நாங்கள் குண்டர்கள் அல்ல; நாங்கள் உங்கள் சுதந்திரத்திற்காகப் போராடும் பிரேசிலியர்கள்”, “இராணுவத் தலையீடு அல்லது கம்யூனிசம்!”, “இராணுவ தலையீடு இல்லாமல் இந்த நாட்டில் எதுவும் மாறாது!” போன்ற கம்யூனிச எதிர்ப்பு, சர்வாதிகார ஆதரவுப் பிரச்சாரத்தை மேற்கொண்டன. எனவே, லூலாவின் வெற்றி நீர்க்குமிழியை ஒத்ததே!

முகமூடிகளை கிழித்தெறிவோம்!

உலகெங்கிலும் பல நாடுகளில், பாசிசக் கும்பல்கள் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிவருகின்றன. தீவிர வலதுசாரி பிற்போக்குக் கும்பல்களும் சரி, சோசலிஸ்டுகள், ஜனநாயகவாதிகள், கம்யூனிஸ்டுகள் என்ற போர்வையில் இருக்கும் ஆளும் வர்க்கத்தின் இன்னொரு பிரிவினரானாலும் சரி தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்ற மறுகாலனியாக்கத்தையே தங்களது கொள்கையாக வைத்துள்ளன.

படிக்க : சிறிதெனினும், சிவப்பு இவர்களை அச்சுறுத்துகிறது!

ஆனால், மறுகாலனியாக்கக் கொள்கைகளைத் தீவிரமாக அமல்படுத்தியதன் மூலம் மக்களின் வாழ்வாதாரங்கள் மென்மேலும் கீழ்நிலைக் கொண்டு செல்லப்படுகிறது. தீவிர வலதுசாரி பாசிசக் கும்பல்கள் கார்ப்பரேட் நலன் சார்ந்த இக்கொள்கைதான் மக்களது வாழ்வாதார பறிப்புக்கு காரணம் என்பதை மறைத்து இன, தேச, மத, நிறவெறிகளைத் தூண்டி மீண்டும் மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வரத் துடிக்கின்றன.

ஜனநாயக முகமூடி தரித்த கும்பல்களோ, இந்த மறுகாலனியாக்க கொள்கைகளையே நடைமுறைப்படுத்திக் கொண்டு, அவற்றை எதிர்ப்பதாக நாடகமும் ஆடுகின்றன. மேலும், ஊழல் முறைகேடுகளில் சிக்கிச் சீரழிந்துள்ளன. இந்த சீரழிவும் துரோகமும்தான், பாசிச கும்பல்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு அடிப்படையாக அமைகின்றன. பாசிச சக்திகளை முறியடிக்கும் போராட்டம், இத்தகைய கட்சிகளின் முகமூடிகளைக் கிழித்தெறிவதில் இருந்தே தொடங்கப்பட முடியும்!

அமீர்

சிறிதெனினும், சிவப்பு இவர்களை அச்சுறுத்துகிறது!

ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் பன்முனை பயங்கரவாத தாக்குதல்கள்!

வம்பர் 20-ஆம் தேதி அன்று, பழைய சோவியத் தயாரிப்பு ஏவுகணை ஒன்று போலந்தின் மீது விழுந்து சேதம் ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து ரஷ்யா, நேட்டோ நாடு ஒன்றின் மீது ஏவுகணையை வீசியதன் மூலம் மூன்றாம் உலகப் போரைத் தொடங்கிவைத்துவிட்டது என்ற பீதியூட்டும் பிரச்சாரம் மேற்கத்திய ஊடகங்களால் பரப்பப்பட்டது.

இப்பிரச்சாரத்திற்கு ரஷ்யா உடனடியாக மறுப்பு தெரிவித்தது. சற்றுநேரத்தில், அந்த ஏவுகணை உக்ரைனின் வான்வழித் தாக்குதலை சமாளிக்கும் ஏவுகணைதான் (சோவியத் தயாரிப்பு ஏவுகணை உக்ரைனிடமும் உண்டு) என்றும், இலக்கு தவறி போலந்தின் மீது விழுந்துள்ளதும் தெரியவந்தது. அதன்பிறகு, போலந்தின் அதிபர், நேட்டோவின் பொதுச்செயலர், அமெரிக்க அதிபர் பைடன் என பலரும் இந்நிகழ்வை ‘எதிர்பாராத விபத்துதான்’ என்று பேட்டிகொடுக்கத் தொடங்கினர்.

இந்நிகழ்வைப் போன்றே, பிரிட்டிஷ் செய்தி ஊடகம் ஒன்று, புடின் ஆட்சியைத் தூக்கியெறியுமாறும் புடினைக் கொல்லுமாறும் ரஷ்யாவில் இருக்கும் பாசிச ஆதரவு தத்துவவியலாளர் அலெக்சாண்டர் டுகின் அழைப்பு விடுத்ததாக செய்தி வெளியிட்டது; சிறிது நேரத்தில், தான் அவ்வாறு சொல்லவில்லை என்று டுகின் மறுப்பு தெரிவித்ததால், அது போலிச்செய்தி என்று அம்பலமானது.

உலக அளவில் பரவிய இந்த இரண்டு செய்திகளும் சில மணி நேரங்களில் உலகையே நிலைகுலைய வைக்கும் அளவிற்கான பெரும் ‘செய்தி அணுகுண்டு’களாக திகழ்ந்தன என்றால் மிகையில்லை. எந்நேரத்திலும் மூன்றாம் உலகப்போர் மூண்டுவிடலாம் என்று அஞ்சுவதற்கான சூழல் உண்மையிலேயே நிலவுவதுதான் இத்தகைய போலிச் செய்திகள் பரப்புவதற்கான அடிப்படையாக உள்ளது.


படிக்க : பாசிஸ்டுகளின் பிரச்சார பீரங்கியாகும் ‘டிவிட்டர் 2.0’!


சரிந்துவரும் தனது ஒற்றைத் துருவ உலக மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்காகவும் தனக்கு போட்டியாக வளர்ந்துவரும் ரஷ்யாவை அடக்குவதற்காகவும் அமெரிக்கா மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் உலகப் போராக வளர்வதற்கான சூழலை உருவாக்குகின்றன. தற்போது ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யாவை பயங்கரவாத நாடாக அறிவித்திருப்பதானது இந்த உலகப்போர் அபாயத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. ரஷ்யாவும் அமெரிக்காவும் அணுஆயுத நாடுகளாக இருப்பதால், உலகப் போர் மூண்டால் அது அணு ஆயுதப் போராகவும் இருக்கும் என்று உலகமே பீதியில் உறைந்துள்ளது.

ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான நாய்ச்சண்டையில், உலகெங்கிலும் உழைக்கும் மக்கள் மீது அநீதியான பயங்கரவாதப் போர்கள் திணிக்கப்படுகின்றன. ரஷ்யாவும் உக்ரைனும் இப்போரில் நேரடியாக பாதிக்கப்படுகின்றன என்றாலும், இப்போர் சர்வதேச வர்த்தகத்திலும் உலகப் பொருளாதாரத்திலும் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தால் மறைமுகமாக எல்லா நாடுகளுமே பாதிப்புக்கு உள்ளாகின்றன.

ரஷ்ய-உக்ரைன் போர் என்பது ஏகாதிபத்தியங்கள் நம் மீது திணித்திருக்கும் பயங்கரவாதத்தின் ஒரு வடிவம் மட்டுமே. இன்னும் எண்ணற்ற தளங்களில், வடிவங்களில் ஏகாதிபத்தியங்களால் உழைக்கும் மக்கள் மீது பயங்கரவாதங்கள் ஏவப்படுகின்றன. அவை எல்லாவற்றையும் இனம்காணும்போதுதான், ஏகாதிபத்திய முதலாளித்துவக் கட்டமைப்பு வீழ்த்தப்பட வேண்டிய அவசியத்தையும், அதை வீழ்த்தும் வழிவகைகளையும், சோசலிசத்தின் கட்டாயத்தையும் நாம் உணர்ந்திட முடியும்!

சூழலியல் அவசரநிலை: உயிர்கோளத்தையே அச்சுறுத்தும் பயங்கரவாதம்!

அண்மையில், அண்டாலாண்டிக் கண்டத்தில் உருகிவருகின்ற 120 கி.மீ. அகலம் கொண்ட ‘த்வைட்ஸ் பனிப்பாறை’ எதிர்பார்த்த காலத்தைவிட இன்னும் வேகமாக உருகி கரைந்துவிடும் என்று சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். புவி வெப்பமயமாதலின் விளைவாக ஏற்பட்டிருக்கும் ‘காலநிலை மாற்றம்’ அல்லது ‘சூழலியல் அவசரநிலை’-இன் ஒரு அங்கம்தான் வடதுருவத்தில் உள்ள பனிப்பாறைகள் உருகுதல். இமயமலையில் இருக்கும் பனி உருகி ஒவ்வொரு ஆண்டும் வழக்கத்தைவிட அதிகமாக வெள்ளம் கரைபுரண்டோடுவதை நாம் பார்க்கிறோம்.

1992-இல் உருவாக்கப்பட்ட ’காலநிலை மாற்றத்திற்கான ஐ.நா-வின் கட்டமைப்பு மாநாட்டில்’ 165 நாடுகள் பங்கேற்றன. புவி வெப்பமயமாதலை 1.5 டிகிரி செல்சியஸ் குறைக்கும் வகையில், பசுமைக் குடில் வாயுக்கள் மற்றும் கரியமில வாயுக்களின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இம்மாநாடு கூட்டப்பட்டது. இம்மாநாட்டில், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காக தொழில்துறையில் முன்னேறிய நாடுகள் (ஏகாதிபத்திய நாடுகள்) செய்ய வேண்டிய கடமைகள், மற்ற நாடுகள் செய்ய வேண்டிய கடமைகளை வரையறுத்து ‘கியோட்டோ நெறிமுறைகள்’ உருவாக்கப்பட்டது.

இதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பாரிஸ் உடன்படிக்கையானது, 2030-ஆம் ஆண்டுக்குள் மேற்கண்ட வாயுக்களின் உமிழ்வை 50 சதவிகிதம் குறைக்க வேண்டுமென முடிவு செய்தது. இவ்வொப்பந்தம் ஏகாதிபத்திய நாடுகளுக்கு சார்பாக, ஏகாதிபத்திய நாடுகள் மற்றும் பிற நாடுகளுக்கு இடையிலான வேறுபாடுகள் – கட்டுப்பாடுகளைக் குறைத்து கியோட்டோ நெறிமுறைகளை முறியடித்துவிட்டது.

பாரிஸ் உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டிருந்தாலும் அதனை நடைமுறைப்படுத்த எந்த நாடும் தயாராக இல்லை. இதற்காக ஆண்டுதோறும் நடக்கும் மாநாடுகள் எல்லாம் தோல்வியில் முடிவடைந்து வருகின்றன. அண்மையில், எகிப்தில் நடைபெற்ற சி.ஒ.பி-27 மாநாடு இன்னொரு அரட்டை மடமாகவே அமைந்திருந்தது.

மொத்தத்தில், உலக மக்கள் மீது தொங்கிக் கொண்டிருக்கும் சூழலியல் நெருக்கடி என்பது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

காலநிலை மாற்றத்தை நாம் எங்கோ தொலைதூர ஐரோப்பிய நாடுகளுக்கும் பனிமலைகளுக்கும் பொருத்திப் புரிந்துகொள்ள வேண்டியதில்லை. சென்ற மாதம் டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்தபோது, என்ன நடந்தது என்பதைக் கவனித்தால் புரிந்து கொள்ள முடியும். பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன; வீடுகளை விட்டு வெளியில் வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. இதைப்போலவே, இந்த ஆண்டு அனல் காற்று வீசியபோது ஆந்திரா போன்ற மாநிலங்களில் பகலில் வெயிலில் நடமாட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டனர். அடிக்கடி புயல் வெள்ளம் அதிகரித்து வருகிறது.

இவையெல்லாம், அவசரநிலை அறிவிப்புகள் அல்லவா? இவற்றை மீறினால் நாம் உயிரிழப்புகளைச் சந்திப்போம் என்பதுதானே எதார்த்த நிலைமை. இந்த எதார்த்த நிலைமைதான் பயங்கரவாதமாகும்.

இந்த பயங்கரத்தை நம்மீது திணித்த குற்றவாளிகள் யார்? வரைமுறையின்றி இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பவர்கள்; ஏரி குளம் ஆறுகளை ஆக்கிரமித்தல், அவற்றை அழித்தல்; காற்று மாசுபாட்டுக்குக் காரணமான தொழிற்சாலை, வாகனப் போக்குவரத்து அதிகரிப்பு; கடற்கரைகள், காடுகளை அழித்து சொகுசு விடுதிகளைக் கட்டுதல் போன்ற பல நடவடிக்கைகளின் சூத்திரதாரிகள் யார். இவர்கள்தான் ஏகாதிபத்தியவாதிகள், கார்ப்பரேட் பெரு நிறுவனங்கள். இவர்களின் லாபவெறியின் விளைவாகவே நம் மீது சூழலியல் அவசரநிலை என்ற பயங்கரவாதம் திணிக்கப்பட்டுள்ளது.

மறுகாலனியாக்க கொள்கைகளே பயங்கரவாதம்தான்!

’தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம்’ என்ற புதிய தாராளவாதக் கொள்கை கொண்டுவரப்பட்டபோது, அதை நாம் பின் தங்கிய நாடுகளை மேல்நிலை வல்லரசுகளுக்கு அடிமைப்படுத்தும் மறுகாலனியாக்க கொள்கை என்றோம். அப்போது உலகெங்கும் ஆட்சியில் இருந்த தாராளவாதிகளும் போலி சோசலிஸ்டுகளும் தாம் நடைமுறைப்படுத்துவது “மனித முகம் கொண்ட தாராளமயம்” என்று வருணித்தார்கள். ஆனால் மறுகாலனியாக்கத்திற்கு மனித முகம் கிடையாது. ஏனென்றால், அது மக்களை எப்போதும் அச்சத்திலேயே வைத்திருக்கிறது.

வேலையின்மை, விலைவாசி ஏற்றம் போன்றவற்றில் மட்டுமல்ல, வரைமுறையற்ற இயற்கைச் சுரண்டலால், சுற்றுச்சூழல் பேரழிவுகள் அதிகரித்து மக்கள் அச்சத்தில் வாழ்கின்றனர்; வனவிலங்குகளின் தாக்குதல் காட்டோர மக்களை அச்சுறுத்துகிறது. பழங்குடியினர் காடுகளைவிட்டு வெளியேற்றப்படுகின்றனர்; வேலை எப்போது பறிபோகும் என்று அச்சத்தில் உழல்கிறான் தொழிலாளி; கலவரங்களும், படுகொலைகளும் கும்பல் கொலைகளும் அதிகரித்து வருகின்றன. நாள்தோறும் நடந்துவரும் விபத்துகள், கிரிமினல் குற்றங்கள், பாலியல் அடக்குமுறைகள் இந்த சமூகம், வாழத் தகுதியற்றதாக மாறிவிட்டதை உணர்த்துகின்றன.

இந்த சூழல்தான் மறுகாலனியாக்க பயங்கரவாதமாகும். பயங்கரவாதம் என்பது மக்களை எப்போதும் அச்சத்திலேயே வைத்திருப்பதாகும். எப்போது எங்குக் குண்டுவெடிக்கும் என்று பதட்டத்திலேயே மக்களை இருக்க வைக்க ஆங்காங்கே குண்டுவெடிப்புகளை நிகழ்த்துவது, கலவரங்களை நடத்துவது, இனப்படுகொலைகளை அரங்கேற்றுவது பயங்கரவாதத்தின் வழிமுறைகளாகும்.

தனியார்மயம்-தாராளமயம்-உலகமயத்தையும் அமெரிக்காவின் கொள்கைகளையும் ஏற்கமறுக்கும் நாடுகள் மீது அமெரிக்கா தொடுத்துவருவதுதான் பயங்கரவாதப் போர்களாகும். நாடுகள் மீது பொருளாதாரத் தடை என்பதைவிட கொடிய பயங்கரவாதம் இருக்கிறதா? ஆப்கான், ஈராக், ஈரான், சூடான் என பல நாடுகளில் அமெரிக்கா கொன்று குவித்த குழந்தைகள், அப்பாவிகள் எத்தனை இலட்சம் பேர். இவையெல்லாம், பயங்கரவாதம் இல்லையா?

000

1990-களில் ‘தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம்’ எனும் மறுகாலனியாக்கக் கொள்கைகள் நடைமுறைக்கு கொண்டுவரப்படுவதற்கு முன்பு, கல்வி என்பது அரசு மக்களுக்கு இலவசமாக வழங்கும் சேவையாக இருந்தது. குடிநீர் அனைவருக்கும் பொதுவானது. ஆறுகள், சாலைகள் என அனைத்தையும் பொதுவாகவே பார்த்துப் பழகினோம். இவற்றை அடிப்படை உரிமைகள் என்றும் மக்களுக்கு இவற்றை இலவசமாக வழங்குவது அரசின் கடமை என்றும் முதலாளித்துவ அறிஞர்களும்கூட பேசினர். இவற்றை ‘நேருவின் சோசலிசம்’ என்று இந்தியாவிலும் ‘இளஞ்சிவப்பு சோசலிசம்’ என்று தென்னமெரிக்க நாடுகளிலும் பேசினார்கள்.


படிக்க : கோவை கார் வெடிப்பு சம்பவம்: புஸ்வானமானது பா.ஜ.க.வின் பீதி அரசியல்!


1990-களின் தொடக்கத்தில் மறுகாலனியாக்க கொள்கைகள் அமல்படுத்தப்பட்டபோது அதை நாம் எதிர்த்தோம். தண்ணீரும் காற்றும் கூட தனியாராகப் போகிறது என்றோம். மெட்ரிக் பள்ளிகள் உருவாக்கப்பட்டபோது, இதனைக் கல்வி தனியார்மயமாக்கத்தின் ஆரம்பம் என்றோம், அரசு கல்வி வழங்குவதில் இருந்து விலகுகிறது என்றோம். பலரும் அப்படியெல்லாம் நடக்குமா என்று கேட்டார்கள். இப்போது “குடிப்பதற்கு கேன் தண்ணீர் இல்லையா” என்று கேட்பது இயல்பாகத் தோன்றுகிறது, அரசுப் பள்ளிகளைவிட மெட்ரிக் பள்ளிகளை கவுரவமாகப் பார்க்கின்றோம். ஆம், சகல துறைகளிலும் தனியார்மயத்திற்கு நாம் அடிமைப்பட்டு விட்டோம்.

கல்வி, சாலை, மருத்துவம், தண்ணீர், காற்று அனைத்தும் தனி உடைமையாகி (முதலாளித்துவ உடைமை) மக்களிடமிருந்து அந்நியமாக்கப்படுகின்றன. அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகள் இவற்றை தொழில்களாக்கி வளைத்துப் போடுகின்றார்கள். இத்தகைய கார்ப்பரேட் கும்பல்களுக்கு சேவை செய்வதற்காகவே, பல்வேறு நாடுகளிலும் பாசிஸ்டுகள் ஆட்சியதிகாரத்திற்கு வந்துகொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் அது மோடி.

மறுகாலனியாக்கம் ஏவியுள்ள நுகர்வுவெறிப் பண்பாடு!

1990-களுக்குப் பின்னர் வளர்ந்து வரும் மறுகாலனியாக்க பயங்கரவாத நிலைமைகளுக்கேற்ப, ஒவ்வொரு நாட்டிலும் பிற்போக்கு சக்திகள் வளர்ந்து வந்துள்ளன. இவையும் மறுகாலனியாக்கமும் இணைந்த ஆட்சி முறைதான் பலநாடுகளில் உள்ள பாசிசக் கட்சிகளின் செல்வாக்கும் அவற்றின் வளர்ச்சியுமாகும். ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.; அம்பானி-அதானி பாசிசமும் அத்தகையதுதான். ஆகையால், மறுகாலனியாக்கத்தையும் ஏகாதிபத்தியத்தையும் கார்ப்பரேட் ஆதிக்கத்தையும் எதிர்க்காமல் பாசிசத்தை எதிர்ப்பது என்ற ஒன்று இல்லை.

இந்த மறுகாலனியாக்க பயங்கரவாதத்தையும் பாசிசத்தையும் மக்கள் உணராமல் தடுப்பதற்கு கலை, இலக்கியம், பண்பாடு, மதம், கலாச்சாரம் என பல தளங்களில் வினைபுகிறது ஏகாதிபத்தியம். மது, கஞ்சா, அபின் போன்ற போதைப் பொருட்கள் அதிகரித்திருப்பது ஒரு வடிவம் என்றால், நுகர்வுக் கலாச்சாரம் இன்னொரு வடிவமாகும்.

சந்தையின் தொடர்ச்சியான வளர்ச்சி காரணமாக அன்றாடம் புதுப்புது தொழில்நுட்பங்களைப் புகுத்தி சுரண்டுகிறது ஏகாதிபத்தியம். 2.0, 3.0 என்று இந்த வளர்ச்சிக்குப் பெயரிடுகின்றனர். ஒரு கட்டத்திற்கு மேல் புதிய கருவியைப் புகுத்துகின்றனர். இம்மாற்றங்களைச் செய்யாமல் ஒரு நொடி கூட முதலாளித்துவத்தால் உயிர்வாழ முடியாது. நாளும் வளர்ந்துவரும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக தன்னியல்பாகவும் இந்த மாற்றங்கள் நடந்தேறுகின்றன. இதன் ஒரு வெளிப்பாடுதான், “பயன்படுத்து-வீசியெறி” (Use and Throw) என்ற கலாச்சாரமாகும். இந்தக் கலாச்சாரம்தான் இருசக்கர வாகனம் முதல் ஃபோன்வரை அனைத்திலும் கையாளப்படுகின்றன.

நுகர்வுக் கலாச்சாரத்தின் “பயன்படுத்து-வீசியெறி” என்ற இந்த பண்பு நுகர்வு வெறியை வளர்க்கிறது. பெண்கள் மீதான பாலியல் அடக்குமுறையை புதிய நிலைமைக்கு உயர்த்தியுள்ளது. சுயநலம், ஆபாசம், ஆணாதிக்கம், சாதி ஆதிக்கம் ஆகியவை அனைத்தும் பெண்கள் மீதான பாலியல் அடக்குமுறைகளைப் புதிய பரிணாமத்திற்கு கொண்டு சென்றுள்ளன.

கேரளத்தில் நபரலி கொடுத்த பின்னர், பெண் உறுப்புகளை தனியாக சமைத்து உண்டதையும், டெல்லியில் காதலியைக் கொலை செய்த காதலன் அவரது உடலை 37 துண்டுகளாக வெட்டி நாய்களுக்கு வீசியுள்ளதையும் அவ்வப்போது அரங்கேறும் கும்பல் பாலியல் வன்முறைகளும் இந்தவகையிலானவை. பா.ஜ.க. என்ற பாசிச கும்பல் பெண்களுக்கு எதிராக செய்துவரும் கும்பல் வன்முறைகள் இதன் பாசிச வடிவம்.

உடலும் உணர்வும் மானமும்கூட சரக்காக…

நமது குழந்தைகள் ஆண்ட்ராய்டு ஃபோனை லாவகமாக கையாள்வதைப் பார்த்து பெற்றோர்களாகிய பலரும் பூரிப்படைகின்றனர். ஆண்ட்ராய்டு ஃபோனை பயன்படுத்தத் தடுமாறுகின்ற இளைஞர்கள் கூட தங்களை ‘திறமை’யற்றவர்களாகக் கருதிக் கொள்கின்றனர். இந்த ஆண்ட்ராய்டு ஃபோன் வழி செயல்பாடுகள் முன்னேற்றம், வளர்ச்சியின் அடையாளங்களாகக் காட்டப்படுகின்றன.

ஆனால், ஆண்ட்ராய்டு ஃபோனையும் சமூக ஊடகங்களையும் பயன்படுத்தத் தொடங்கிய பின்னர், நாம் ‘மெய்நிகர் உலகத்தில்’ வாழப் பழகிக்கொண்டோம். உரிமைகள் பறிக்கப்படுவதை, ஒரு வீடியோவாக பின்னணி இசையுடன் பார்க்கும் தொழிலாளி அதிலிருந்து பெரும் உணர்வை, மெய்யான உலகத்தில் சகதொழிலாளர்கள் போராடுவதைப் பார்த்து பெறுவதில்லை. அதனால்தான் சமூக ஊடகங்களில் புரட்சி பேசுபவர்கள் நடைமுறையில் தொழிலாளர் பாதிக்கப்படும்போது நேரில் சென்று போராடுவதில்லை. மெய்யான உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம், மெய்நிகர் உலகத்தின் மூலமாக உணர்வு பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இது தலைகீழ் வளர்ச்சியல்லவா?

000

தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் தொடங்கியபோதே, அத்துடன் சேர்ந்து உருவான வறுமையும் பட்டினியும் தொழிலாளி வர்க்கத்தை உடல் உறுப்பு விற்பனையாளர்களாக மாற்றிவிட்டது; உடல் உறுப்புகளை திருடுவது இன்று பெரும் தொழிலாக மாறிவிட்டது. பிரபலமாக அழைக்கப்படும் சிவப்பு சந்தை (Red Market) என்பது அதுதான். உடல் உறுப்புகளைத் திருடுவதற்காகவே உலகெங்கும் வலைப்பின்னல் கொண்ட சர்வதேச மாஃபியா கும்பல்கள் பல இயங்குகின்றன.

இச்சமுதாய விரோத மாஃபியா தொழிலை எந்தவிதச் சட்டங்களைக் கொண்டும் தடுக்க முடியவில்லை. இன்னொருபக்கம், கருப்பை வாடகையும் கருமுட்டை ‘தானமும்’ இன்று சட்டப்பூர்வமாகவே அனுமதிக்கப்படுகிறது.

உடல் உறுப்பு மட்டுமல்ல, இளம் பெண்களையும், பெண் குழந்தைகளையும் திருடி அவர்களை பாலியல் பண்டங்களாக வியாபாரம் செய்யும் அவலமும் சர்வதேச கிரிமினல் கும்பல்களால் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆப்ரிக்கா, ஆசியா, தென்னமெரிக்கா ஆகிய கண்டங்களைச் சேர்ந்த பின் தங்கிய நாட்டு மக்களே இவர்களது சந்தைகளாக உள்ளன. பெரும் பஞ்சத்திலும் பொருளாதார நெருக்கடியிலும் தவிக்கும் ஆப்கான் மக்கள் தமது சிறுநீரகங்களையும் தங்கள் வீட்டுப் பெண் குழந்தைகளையும் இந்த மாஃபியா கும்பல்களிடம் விற்றுதான் பட்டினிக்கு நிவாரணம் தேடுகிறார்கள்.

அனைத்தையும் சந்தையாக்கிய முதலாளித்துவம் மனிதனது உடலையும் உணர்வையும் மானத்தையும் கூட சந்தைக்கானதாக, சரக்குகளாக மாற்றியுள்ளது.

டிஜிட்டல் பாசிச அடக்குமுறை!

நுகர்வுவெறிப் பண்பாடு ஒருபுறம் நம்மைச் சிதைத்துக் கொண்டிருக்கிறது என்றால், அதையும் மீறி தமது உரிமைகளுக்காகவும் பறிக்கப்படும் வாழ்வாதாரத்திற்காகவும் போராடக் கிளம்பும் மக்களை ஒடுக்குவதற்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இன்றைய சகாப்தத்தில் உழைக்கும் வர்க்கம் எதிர்கொள்ளும் புதிய அடக்குமுறையாக அமைந்திருக்கிறது டிஜிட்டல் பெருந்திரள் கண்காணிப்பு (Digital Mass Surveillance).


படிக்க : நேர்காணல் : ஒக்கிப் புயலின் ஐந்தாம் ஆண்டு – மீளா துயரத்தில் மீனவர் வாழ்க்கை!


டிஜிட்டல் பெருந்திரள் கண்காணிப்பை புரிந்துகொள்வதற்கு நாம் வேறெங்கும் போக வேண்டியதில்லை. மோடி அரசு கொண்டுவந்த ஆதார் அட்டையே அதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும். அடையாள அட்டையின் மூலம் குடிமக்களை டிஜிட்டல் கண்காணிப்பிற்கு கொண்டுவருவதற்காக பலநாட்டு அரசுகளும் முயன்றுவருகின்றன. ஆனால் மக்களிடையே எதிர்ப்பு உள்ளது. முதன்முதலாக ஆதாரின் மூலம் இதை நடைமுறைப்படுத்திய பெருமை பாசிச மோடி அரசையே சேரும்.

ஆதார் மூலம் கைவிரல் ரேகைகள், கருவிழி என அனைத்து உயிரி அடையாளங்களும் பதிவு செய்யப்படுகிறது. ஆதார் இல்லாமல் இருப்பது குற்றமாக்கப்படுகிறது. இப்போது நாம் டிஜிட்டல் கோடு (Digital Code) ஆகியிருக்கிறோம். இதன் மூலம் மறைமுகமாக நமது தனியுரிமைகள் அனைத்தும் அழிக்கப்படுகின்றன.

கம்ப்யூட்டர் கோடுகளுக்குள் (குறியீடுகள்) அனைத்தும் சேகரிக்கப்படுகின்றன. நாம் எங்கு இருக்கிறோம், யாருடன் பேசிக் கொண்டிருக்கிறோம், என்ன உண்கிறோம் என அனைத்தும் தரவுகளாக (டேட்டா – Data) சேகரிக்கப்படுகின்றன.

உலக அளவில் இந்த தரவு சேகரிப்பு மிகப்பெரும் வணிகமாக உள்ளது. ஆண்ட்ராய்ட் ஃபோன்களைப் பயன்படுத்தும் அனைவரது தரவுகளும் நம்மை அறியாமலேயே சேகரிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அடுத்தவன் படுக்கையறைக்குள்ளே செல்வது மட்டுமல்ல, அவனது வாயிலும் வயிற்றிலும் மலத்திலும் சென்று தகவல்களை உற்பத்தி செய்து, திருடும் இந்த அயோக்கியத்தனத்திலும் ஏகபோக ஆதிக்கமும் அதற்கான போட்டியும் வந்துவிட்டது.

தெருவில் நடந்துகொண்டிருக்கும் ஒரு மனிதன் என்ன மனோநிலையில் பயணித்துக் கொண்டிருக்கிறான் என்பதையும் அடுத்த நொடி அவன் என்ன செய்யப் போகிறான் என்ற வரையிலும் ஊகித்து அறியும் செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு கேமராக்கள் (Artificial Intelligence Surveillance Cameras) பெரும்பாலான நாடுகளில் புழக்கத்திற்கு வந்துவிட்டன. நமது நாட்டிலும் அதன் ஆதிக்கம் அதிகரித்துவருகிறது. குற்றங்களைத் தடுக்கவும் குற்றவாளிகளைப் பிடிக்கவும் இக்கேமராக்கள் பயன்படுகிறது என்று கூறப்பட்டாலும், இது மக்கள்திரள் புரட்சியாளர்களை இனங்கண்டு ஒடுக்குவதற்காக அவதரித்த டிஜிட்டல் அடக்குமுறைக் கருவியே.

மொத்த சமூகத்தையும் டிஜிட்டல் வலைக்குள் சிக்கவைத்து, ஆளும் வர்க்கங்களும் அரசுகளும் எங்கும் நீக்கமற தங்களது கண்காணிப்பை விரிவுப்படுத்தியிருக்கும் இந்த நிலைதான் டிஜிட்டல் பாசிச பயங்கரவாதமாகும்.

சிவப்பு: ஏகாதிபத்தியவாதிகளின் குலைநடுக்கம்! 

ஏகாதிபத்தியங்களின் பன்முனை பயங்கரவாத தாக்குதல்களை நாம் மட்டும் எதிர்க்கவில்லை. முதலாளித்துவ அறிவுஜீவிகளில் ஒருபகுதியினரும் சோசலிசத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சமூக நலனை முன்னிறுத்தி சிந்திக்கக் கூடிய பிரிவினர்களும் அவற்றை எதிர்க்கவே செய்கிறார்கள். ஆனால், அவர்கள் மாற்றாக எதை முன்வைக்கிறார்கள்?

முதலாளித்துவத்தின் வழியே ஏகாதிபத்தியம், நாடாளுமன்ற ஜனநாயகத்தின் வழியே பாசிசம். இவை இரண்டிலும் இரண்டாவது கூறுகளுக்கெதிராக, முதலாவது கூறுகளை வலுப்படுத்த வேண்டும் என்று சொல்கிறார்கள். தான் உருவாக்கிய சட்டங்களையும் நெறிமுறைகளையும் முதலாளித்துவமே தகர்த்தெறிய முயலும்போது, சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்க வேண்டுமெனக் கோருபவர்கள் இவர்கள்தான்.

முதலாளித்துவ ஜனநாயகம் ஒரு வழிமுறையாக இருந்தது என்றால் அது படைத்தளித்திருப்பதுதான் மறுகாலனியாக்க பயங்கரவாதம். நாடாளுமன்ற ஜனநாயகத்தின் வழியே சோசலிசத்தை அடைவோம் என்றனர் போலி கம்யூனிஸ்டுகள், இன்றோ உலகெங்கும் பாசிச பயங்கரவாதம் புற்றீசலாய் கிளம்பியிருக்கிறது.

முதலாளித்துவத்தையும் அதன் நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் கட்டிக்காத்துக் கொண்டே பாசிசத்தையும் ஏகாதிபத்தியத்தையும் எதிர்ப்பதாக மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டிருப்பது மோசடி அல்லவா? இவ்வாறு சொல்லும்போது, நமக்கு பாசிசத்தை எதிர்ப்பதைப் பற்றிய அடிப்படை அறிவுகூட இல்லை என்கின்றனர். வறட்டுவாதிகள் என்கின்றனர். நண்பர்களே, நாடாளுமன்ற ஜனநாயகத்தின் வழியே பாசிசம் வளர்கிறது என்ற உண்மை ஒரு அடிப்படை அறிவு இல்லையா?

நாடாளுமன்ற ஜனநாயகத்திற்குள் நம்மை இழுப்பவர்களின் கூற்றுகள் எல்லாம் சிவப்பு சாயம் பூசப்பட்ட ஏகாதிபத்தியம் மற்றும் பாசிசத்தின் வார்த்தைகளே!

இங்கிலாந்தில் உள்ள கன்சர்வேட்டிவ் கட்சியும்சரி லேபர் கட்சியும் சரி; அமெரிக்காவில் இருக்கும் குடியரசுக் கட்சியும் சரி ஜனநாயகக் கட்சியும் சரி – இவர்கள் நேரடியாக ஏகாதிபத்தியவாதிகள் என்று பறைசாற்றிக்கொண்டனர். இவர்கள் அனைவரது ஒருமித்த கருத்து கம்யூனிசம் தோற்றுவிட்டது என்பதுதான். ஆனால், இன்றளவும் சிவப்பு என்றாலே அஞ்சுகின்றனர்.

உலகத்தின் பெரிய முதலாளிகளின் பட்டியலில் சீன முதலாளிகள் இடம்பெறுகின்றபோது, இந்த ஏகாதிபத்திய கொள்கையை அப்படியே பின்பற்றும் சீனா, தன்னை ‘கம்யூனிச நாடு’ என்று நாகூசாமல் பிரச்சாரம் செய்கிறது. ஆனால், தனது நாட்டில் மாவோவின் கலாச்சாரப் புரட்சி பற்றிய புத்தகங்களுக்கு தடை விதித்துள்ளது. சிவப்பின் போர்வையிலே தன்னை பாதுகாத்துக்கொள்ளும் போலிகளுக்குகூட சிவப்பென்றால் அச்சம் வரத்தான் செய்கிறது.

தம்மால் வீழ்த்தப்பட்டதாகவும், இல்லாது ஒழிந்துவிட்டதாகவும் சொல்கின்ற கம்யூனிசத்தை – சிவப்பை – பார்த்து இவர்கள் இன்றளவும் பயப்படுவதை எப்படி புரிந்துகொள்வது? ஏனெனில் சிவப்பு சாகவில்லை என்பது இந்த ஏகாதிபத்திய பிணங்களுக்குத் தெரியும். உலகெங்கும் கார்ப்பரேட் சுரண்டலையும் வல்லரசுகளின் ஆதிக்கத்தையும் எதிர்த்துப் போராடும் கோடானகோடி உழைக்கும் மக்களின் போராட்டங்களில் சிவப்பு உயிர்வாழ்வதை நம்மைவிட நமது வர்க்க எதிரிகள் தெளிவாகப் பார்க்கிறார்கள்.


படிக்க : டெல்லி கொலை வழக்கு: மனித விழுமியங்களைத் தின்னும் மறுகாலனியாக்கம்!


2018 முதல் 2022 வரை சிறிய நாடான ஹெய்தியில் நடைபெறும் மக்கள் போராட்டமாக இருக்கட்டும்; இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு எதிரான உழைக்கும் மக்களின் போராட்டமாக இருக்கட்டும்; டெல்லிச் சலோ போராட்டமாக இருக்கட்டும் – எத்தனை அடக்குமுறைகள் வந்தாலும் மக்கள் வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள். இந்தப் போராட்டக்காரர்கள் சிவப்பின் பக்கம் திரும்பினால் என்ன ஆகும் என்பதுதான், ஏகாதிபத்தியவாதிகளை அச்சுறுத்துகிறது.

இவ்வாறெல்லாம் நாம் விளக்கும்போது, “நீங்கள் எத்தனை பேர் இருக்கிறீர்கள். பத்துபேர் சேர்ந்துவிட்டால் புரட்சி செய்துவிட முடியுமா” என்று நம்மைப் பார்த்துக் கேட்கின்றனர். “உங்களால் எதையும் செய்ய முடியாது” என்றும் கூறுகின்றனர். இது இவர்கள் நமக்கெதிராக உதிர்க்கும் வார்த்தைகள் அல்ல, சோசலிசமும் புரட்சியும் சாத்தியமில்லை என்று அவர்கள் கருதுகிறார்கள்.

முதலாளித்துவம் செத்துவிட்டது, அதன் பிணம் அழுகி நாறுவதுதான் ஏகாதிபத்தியமும் பாசிசமும், இந்தப் பிணத்தை அப்புறப்படுத்து என்று சொல்கிறது கம்யூனிசம்; இல்லை, இந்த சமுதாயத்திற்குள்ளேயே (பிணத்திற்குள்ளேயே) குடியிருக்கலாம் என்கின்றனர் ஏகாதிபத்தியவாதிகள். பிணம் புழுபுழுத்துப் போவதைக் காட்டி, இவை வளர்ச்சியின் அடையாளங்கள் என்கின்றனர், ஏகாதிபத்தியவாதிகள்; இதனுடன் சமாதான சகவாழ்வு வாழலாம் என்கிறது போலி கம்யூனிசம்.

புரட்சியெல்லாம் இனி வராது, இந்த முதலாளித்துவக் கட்டமைப்பை இனியும் தூக்கியெறிய முடியாது என்று சொல்லிக்கொண்டே, நாடு முழுவதும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துகின்றனர்; தெருவெங்கும் கண்காணிப்புக் கேமராக்களை வைக்கின்றனர்; பேசுவதற்கும் எழுதுவதற்குமான உரிமைகளை மறுக்கின்றனர். ஜனநாயகத்தை அதன் வாசனைகூட தெரியாமல் அழிக்கின்றனர்.

சிறிதெனினும், சிவப்பு இவர்களை அச்சுறுத்துகிறது!


தங்கம்

புதிய ஜனநாயகம் இதழை ஆதரிப்போம்! | வழக்கறிஞர் இன்குலாப் | வீடியோ

க்களுடைய பிரச்சினைகளில் சுருக்கமாக யார் எதிரி யார் விரோதி என்பதை தெள்ளத்தெளிவாக காட்டுகின்ற ஒரு கண்ணாடியாக புதிய ஜனநாயகம் இதழ் வெளியிவந்து கொண்டிருக்கின்றது. எனவே அனைவரும் இந்த இதழை சந்தா செலுத்தி வாங்கி படிக்கவேண்டும். இந்த இதழ் போராளிகளுக்கு ஓர் போர் ஆயுதமாக திகழ்கிறது.

புதிய ஜனநாயகம் இதழுக்கு தனது ஆதரவை இக்காணொலியில் பதிவு செய்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் இன்குலாப் அவர்கள்…

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.240
இரண்டாண்டு சந்தா – ரூ.480
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,200

புதிய ஜனநாயகம் இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் !

தொலைபேசி : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

இந்தி – அரசு பணியில் வட இந்தியர் திணிப்பு ! ஆர்.எஸ்.எஸ்.இன் ஐந்தாம் படை வேலை | மருது வீடியோ

ங்கிருக்கும் தமிழகர்கள், வடமாநில தொழிலாளர்களுக்கு அநியாய விலைக்கு வீட்டை வாடகைக்கு விடுகிறார்கள். இங்கிருக்கும் தமிழனை வேலைக்கு வைத்தால் ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் கேட்பார்கள் என்பதனால், ஒட்டுமொத்தமாக மாதம் 5000, 10000 கொடுத்து கூலி அடிமையை போல அவனை சுரண்டுவது யார்? நீ சொல்லக்கூடிய பச்சை தமிழன் ஆந்தை தமிழன் மூத்தக்குடி தமிழ்குடி இவர்கள் தானே செய்துகொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டு முதலாளிகள் ஏன் வட இந்தியர்களை விரும்பிகிறார்கள் என்றால், அடிக்கடி யூரின் போகமாட்டான், விடுப்பே எடுக்கமாட்டான், வருடத்தில் ஒருமாதம் ஊருக்கு போய்விட்டு வந்துவிடுவான். எவ்வித பிரச்சினையும் பன்னமாட்டான் சங்கமாக சேரமாட்டான். இவனை கொத்தடிமையாக வைத்து சுரண்டலாம். இந்த மோசமான ஒரு சுரண்டல் நோக்கத்திற்காகத்தான் இங்கிருக்கக்கூடிய தமிழ் முதலாளிகள் அவர்களை வரவேற்கிறார்கள் வைத்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களை கொத்தடிமைகளாக சுரண்டப்படும் அவலத்தை தமிழ்மின்ட் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் மருது அவர்கள்!

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

பாசிசத்தை வீழ்த்த நாம் தோழர் ஸ்டாலினாக மாறவேண்டும்! | சிக்கந்தர் | கனியமுதன் | வீடியோ

துரை மாட்டுத்தாவணி அருகில் ராமசுப்பு அரங்கத்தில், டிசம்பர் 21 பட்டாளி வர்க்க ஆசான் தோழர் ஸ்டாலின் பிறந்தநாளன்று “ஸ்டாலின் சகாப்தம்” ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டது. ஆவணப்படம் உருவாக்கிய எழுச்சியில் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய, எஸ்.டி.பி.ஐ கட்சியின் மதுரை மாவட்ட பொருளாளர் சிக்கந்தர் அவர்கள், ஸ்டாலினுக்கு விழா எடுக்கிறோம். ஆனால், பாசிசத்தை வீழ்த்த நாம் எப்போது ஸ்டாலின் ஆக மாறப்போகிறோம் என்று கேள்வி எழுப்பினார். நம்மிடம் ஒரு சோர்வு நிலவுகிறது கௌரிலங்கேஷ், கல்புர்க்கி என சுட்டுக்கொல்லப்பட்டவுடன் அமைதியாகி விட்டோம். பாசிசம் இந்தியா முழுவதும் ஊடுருவியுள்ளது. போராடினால் அடிப்பார்கள், உதைப்பார்கள், கொல்லுவார்கள் அந்த தியாகத்திற்கு நாம் தயாராகாமல் நமது வருங்கால சந்ததியை காப்பாற்ற முடியாது. கூட்டமைப்பு கட்டுகிறோம் ஆனால் தொடர்ச்சியாக போராடுகிறோமா என்றால் இல்லை. ஆகவே பாசிசத்தை வீழ்த்த தொடர்ந்து பணி செய்ய வேண்டியுள்ளது என்பதன் அவசியத்தை உணர்த்தினார்.

படிக்க : இந்தியாவின் பாசிஸ்டுகளை தோழர் ஸ்டாலின் வழியில் வெல்லவேண்டும்! | நாகை திருவள்ளுவன் | வீடியோ

இக்கூட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் கனியமுதன் அவர்கள், போராட்டத்தின் மூலமாகத்தான் அனைவரையும் ஒன்றுபடுத்த முடியும். கற்பி! போராடு! ஒன்று சேர்! என்பதுதான் அம்பேத்கர் முன்வைத்தது. அதேபோல் பாசிசத்திற்கு எதிராக கற்பித்துக் கொண்டு போராடினால்தான் மக்களை ஒன்றுபடுத்த முடியும் என பேசி முடித்தார்.

பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, மதுரையில் நடைபெற்ற அரங்கக் கூட்டத்தில் சிக்கந்தர், கனியமுதன் ஆகியோர் ஆற்றிய உரையை காணொலி வடிவில் வெளியிடுகிறோம்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

பாசிஸ்டுகளின் பிரச்சார பீரங்கியாகும் ‘டிவிட்டர் 2.0’!

ணையவெளியில் மக்களிடையே பேசுபொருளாக இருக்கும் ஒன்று, டிவிட்டரில் பிரபலமாவதை (trending) நாம் பார்த்திருப்போம், இன்று டிவிட்டரே மக்களிடையே பிரபலமான விவாதப் பொருளாக மாறியுள்ளது; உலகப் பெரும்பணக்காரரான எலான் மஸ்க், டிவிட்டரின் தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்றதிலிருந்து, ‘டிவிட்டர் 2.0’ என்ற பெயரில் மேற்கொண்டுவரும் மறுஒழுங்கமைப்பு நடவடிக்கைகளே அதற்கு காரணமாகும்.

44 பில்லியன் (4,400 கோடி) டாலர் கொடுத்து டிவிட்டரின் அதிகப் பங்குகளை வாங்கியதன் மூலம் கடந்த அக்டோபர் இறுதியில், டிவிட்டரை முழுமையாக தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார் எலான் மஸ்க். ஒரு கார்ப்பரேட் முதலாளி குறிப்பிட்ட நிறுவனத்தைக் கைப்பற்றுவது அவ்வளவு முக்கியத்துவமிக்க நிகழ்வாக இதுவரை விவாதிக்கப்பட்டதில்லை. ஆனால் எலான் மஸ்க் டிவிட்டரை கைப்பற்றிய நிகழ்வு சர்வதேச அளவில் எளிதாக கடந்து செல்லப்படவில்லை.

டிவிட்டரை கைப்பற்றிய உடன், ‘பறவை விடுவிக்கப்பட்டது’ (The bird is freed) என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார் மஸ்க். மேலும், தாம் எதிர்கால சந்ததிக்கு ஒரு பொதுவான டிஜிட்டல் தளத்தை ஏற்படுத்தித் தர விரும்புவதாகவும், பணம் சம்பாதிக்கும் நோக்கத்திற்காக அல்லாமல், மனித குலத்திற்கு உதவுவதற்காகவே டிவிட்டரை வாங்கியுள்ளதாகவும் பிரகடனப்படுத்தினார்.

படிக்க : கருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு ! சங்கிகளைக் கதறவிட்ட தமிழக டிவிட்டர் டிரண்டிங் !!

ஆனால், எலான் மஸ்க் அடிப்படையிலேயே தீவிர வலதுசாரியாக அறியப்படுபவர்; சீர்திருத்தக் கொள்கைகளை முன்வைக்கும் கட்சிகளைக்கூட ‘இடதுசாரி அபாயம்’ என்ற அளவில் கடுமையாக விமர்சிக்கும் ஜனநாயக விரோதி; வெள்ளை நிறவெறியன்; குடியரசுக் கட்சி மற்றும் பாசிஸ்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர். இக்காரணங்களால் அவர் டிவிட்டரை கைப்பற்றியிருப்பது, தொழில் விரிவாக்க நடவடிக்கை என்பதைத் தாண்டி அரசியல் நடவடிக்கையாகவே அறியப்படுகிறது; மேலும் உலகெங்கும் உள்ள லிபரல் ஜனநாயகவாதிகளே, இந்நிகழ்வை அபாயகரமானதாகவும் கருத்து சுதந்திரத்துக்கு ஆபத்தானதாகவும் பார்க்கின்றனர்.

டிவிட்டர் மறுஒழுங்கமைப்பின் பின்னணி

எலான் மஸ்க் டிவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்ற பிறகு, அந்நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் பணியாற்றியவர்கள் உள்ளிட்டு ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டார்கள். வாரநாட்கள் முழுமையும் (7 நாட்கள்) வேலைநாட்களாகவும் வேலைநேரம் 12 நேரமாகவும் மாற்றப்பட்டது. சம்பளம், கூடுதல் வேலைநேரம், வேலை உத்தரவாதம் ஆகியவை குறித்து எந்தக் கேள்வியும் கேட்கக்கூடாது எனவும் புதிய விதிகளுக்கு கட்டுப்பட விரும்பாதவர்கள் 36 மணிநேரத்தில் தங்கள் வேலையைத் துறந்துவிட்டு வெளியேறலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நடவடிக்கைகள் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த அறிவிப்புக்கு பிறகு, இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிவிட்டர் ஊழியர்கள் பணியைத் துறந்து வெளியேறியுள்ளனர்.

எலான் மஸ்க்கின் இத்தகைய நடவடிக்கைகள் முக்கியத்துவம் வாய்ந்த சமூக ஊடகமாக அறியப்படும் டிவிட்டரை நாசமாக்கிவிடும் என்று விமர்சிக்கப்படுகிறது. ‘டிவிட்டருக்கு இரங்கல்’ (#riptwitter) என்ற ஹேஷ்டேக் பயனர்களால் பிரபலமாக்கப்பட்டது.

பிரபலங்களின் அதிகாரப்பூர்வமான டிவிட்டர் கணக்குகளுக்கு இதுவரை வழங்கப்பட்டுக் கொண்டிருந்த ப்ளூ டிக் அடையாளத்திற்கு, இனி 8 டாலர் கட்டணம் செலுத்த வேண்டுமெனவும், அத்தொகையை செலுத்தும் அனைவருக்கும் ப்ளூ டிக் அங்கீகாரம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது, எலான் மஸ்க் மேற்கொண்ட மற்றொரு நடவடிக்கை. இந்த சந்தா சேவை அறிமுகமான உடனே டிவிட்டர் தளம் முழுவதும் போலி கணக்குகளால் நிரம்பி வழிய ஆரம்பித்தது. எனவே அச்சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

எலான் மஸ்க் மேற்கொண்டுவரும் இந்நடவடிக்கைகள், லாபநோக்கம் கருதி செய்யப்படும் முட்டாள்தனமான காரியங்கள் என்றே பொதுவாக அறியப்படுகிறது. இதை மறுப்பதற்கில்லை. எலான் மஸ்க்கிற்கு சொந்தமான நிறுவனங்களின் பணிச்சூழலைப் பற்றி தெரிந்துகொண்டால், மற்றொரு கோணத்தில், இந்நடவடிக்கை தனது அரசியல் நோக்கத்தை ஈடேற்றிக்கொள்ள எலான் மஸ்க் மேற்கொண்டு வரும் மறுஒழுங்கு நடவடிக்கையாகவும் உள்ளது என்பதை புரிந்துகொள்ள முடியும்.

எலான் மஸ்க் எவ்வாறு ஒரு வெள்ளை நிறவெறி கொண்டவனோ, அதைப் போலவே அவனது நிறுவனங்களில் உயர்பதவி வகிப்பவர்கள் பலரும் வெள்ளை நிறவெறியர்கள். மஸ்கின் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் கருப்பினத்தவர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுவது குறித்து பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். மஸ்கின் நிறுவனங்களில் பணியாற்றி இன, நிற பாகுபாடு காரணமாக வெளியேறியவர்கள் அப்பணியிடச் சூழலை அம்பலப்படுத்தி கட்டுரைகளும் எழுதியுள்ளனர். இதிலிருந்து நோக்கும்போது, எலான் மஸ்க் மேற்கொள்ளும் பணி நீக்க நடவடிக்கை டிவிட்டர் நிறுவனத்தை வெள்ளை நிறவெறியர்களின் ஆதிக்கத்திற்கு கொண்டுவருவதன் ஒருபகுதியாக இருக்கலாம் என்று கருதத் தோன்றுகிறது.

மஸ்க் வாதாடும் ‘பேச்சு சுதந்திரம்’ யாருக்கானது?

‘பேசுவதற்கான சுதந்திரமே ஒழிய, பிரபலத்திற்கான சுதந்திரமல்ல’ (freedom of speech but not freedom of reach) என்ற பெயரில், கடந்த 18-ஆம் தேதி புதிய கொள்கையொன்றை அறிவித்தார் மஸ்க். இக்கொள்கையின்படி, வெறுப்பைப் பரப்பும் கருத்துகள் டிவிட்டரிலிருந்து நீக்கப்படும் என்றும், அதுபோன்ற பதிவுகளின்மூலம் கிடைக்கும் வருவாயை டிவிட்டர் விரும்பவில்லை என்றும் அறிவித்தார்.

கேட்பதற்கு கவர்ச்சியாக இருந்தாலும், அடுத்தடுத்து மஸ்க் மேற்கொண்ட நடவடிக்கைகள் அவர் அறிவித்த கொள்கையைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் இருந்ததோடு, மஸ்க் வாதாடும் பேச்சு சுதந்திரம் யாருக்கானது என்பதையும் அம்பலப்படுத்திவிட்டது. தடைசெய்யப்பட்டிருந்த டொனால்ட் டிரம்ப்பின் டிவிட்டர் கணக்கை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவந்தது அதில் முக்கியமானதாகும்.

2021 அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்களால் வெள்ளை மாளிகை தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது. தமது பதிவுகளின் மூலம், ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு அறைகூவல் விட்டார் என்பதால், அப்போதைய டிவிட்டர் நிறுவனம் டிரம்ப்பின் கணக்கை முடக்கியது. இன்று, டிரம்ப்புக்கு ‘பேச்சு சுதந்திரம்’ கிடைத்துள்ளது.

டிரம்ப்பை போலவே, வன்முறை மற்றும் வெறுப்பு பேச்சுகள் காரணமாக தடைசெய்யப்பட்ட டிவிட்டர் கணக்குகள் பலவற்றை மஸ்க் தற்போது விடுவித்துள்ளார். கிறிஸ்துவ மதவெறியைப் பரப்புகிற நையாண்டி வலைத்தளமான பாபிலோன் பீ மற்றும் மாற்று பாலினத்தவர் குறித்து இழிவாக பேசிய கனடாவைச் சேர்ந்த உளவியல் நிபுணர் ஜோர்டன் பீட்டர்சன், யூத எதிர்ப்பு பேச்சுக்காக விமர்சிக்கப்பட்ட அமெரிக்கப் பாடகர் கன்யே வெஸ்ட், பெண்களைப் பற்றி மிக இழிவாக பேசிய பிரிட்டன் முன்னாள் குத்துச் சண்டை வீரர் ஆண்ட்ரூ டேட் போன்றோரின் டிவிட்டர் கணக்குகள் அதில் குறிப்பிடத்தக்கவை.

மஸ்க் டிவிட்டரை வாங்கியதிலிருந்து ஒரு வார காலம்வரை அதன் செயல்பாடுகளை ஆய்வுசெய்த ‘டிஜிட்டல் வெறுப்புகளுக்கு எதிரான மையம்’ (Centre for Countering Digital Hate) எனும் அமைப்பு டிவிட்டரில் வெறுப்புப் பேச்சுகளைப் பரப்புவோர் தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறுகின்றது.

இன்னொரு பக்கம், பாசிச-சர்வாதிகார அரசுகளுக்கு எதிராக குரலெழுப்பும் ஊடகக் கணக்குகள் முடக்கப்பட்டு வருகின்றன. அண்மையில், இஸ்ரேலின் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக பாலஸ்தீனத்தில் செயல்பட்டு வந்த டிவிட்டர் ஊடகக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

எலான் மஸ்க்கை கொண்டாடும் பாசிஸ்டுகள்!

டிவிட்டர் உலகம் முழுவதும் சுமார் 40 கோடி (396.5 மில்லியன்) பயனர்களைக் கொண்டுள்ளது. இது மற்ற சமூக ஊடகங்களைக் காட்டிலும் குறைவே என்றாலும் அரசியல் கருத்துரையாடல்களுக்கான முக்கிய ஊடகமாக டிவிட்டர் விளங்குகிறது. விளையாட்டு வீரர்கள், நடிகர்கள், அரசியல்வாதிகள், அறிவுத்துறை பிரபலங்கள் ஆகியோரே டிவிட்டரின் பெரும்பகுதி பயன்பாட்டாளர்கள். இணையவெளியில் பலராலும் விவாதிக்கப்படும் கருத்துக்களை பிரபலமாக முன்னிறுத்தும் ‘டிரெண்டிங்’ எனப்படும் வசதி டிவிட்டரில்தான் உள்ளது.

பிற்போக்காளர்களை அம்பலப்படுத்தவும், பாசிச-சர்வாதிகார அரசுகளின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக கருத்து தெரிவிக்கவும் ஜனநாயக சிந்தனை கொண்ட குட்டிமுதலாளித்துவ சக்திகளுக்கு டிவிட்டர் குறிப்பிட்ட அளவிற்கு பயன்பட்டுவந்தது. அதேநேரம், வெறுப்பு பேச்சுகள், வன்முறையைத் தூண்டும் பதிவுகளை வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுப்பதில் மற்ற சமூக ஊடகங்களைக் காட்டிலும் டிவிட்டர் முனைப்புக் காட்டியது. இக்காரணங்களாலேயே உலகெங்கிலும் உள்ள வலதுசாரி பிற்போக்காளர்கள் டிவிட்டரை தாக்கி வந்துள்ளனர்; ஆனால், இன்று டிவிட்டரை எலான் மஸ்க் கைப்பற்றியதை, அவர்கள் அனைவரும் பெருமகிழ்ச்சியோடு வரவேற்றுக் கொண்டாடுகின்றனர்.

டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதைத் தொடர்ந்து, “டிவிட்டர் இப்போது நல்ல கைகளில் உள்ளது என்பதை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கருத்து தெரிவித்துள்ளார் டிரம்ப். மேலைநாட்டு பாசிஸ்டுகள் மட்டுமல்ல, சங்கப்பரிவாரத்தைச் சேர்ந்த கோயபல்சுகளுள் ஒருவரான விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி, கங்கனா ரனாவத் என நம் நாட்டு பாசிசக் கும்பலும் டிவிட்டர் 2.0-வை வரவேற்றுள்ளனர்.

படிக்க : பொய்களை பரப்பும் முகநூல் மார்க்கை தொடர்ந்து ட்விட்டர் மஸ்க் | ஆர்.எம்.பாபு

இதற்குரிய காரண-காரியங்களை விளங்கிக்கொள்ள நாம் சிரமப்படத் தேவையில்லை. விஷயம் சுலபமானது. வெள்ளை நிறவெறியனும் பழமைவாதியுமான எலான் மஸ்க் டிவிட்டரை கைப்பற்றியிருப்பதால், இனி தங்களது கருத்துகளை தடையின்றி பரப்புவதற்கு ஒரு பிரச்சார பீரங்கி கிடைத்துள்ளதாக பல வண்ணப் பாசிஸ்டுகளும் பூரிப்படைகிறார்கள்.

பாசிச ஆட்சிக்கான தயாரிப்பு

கடந்த மே மாதம், நான் இனி (அதாவது, அடுத்த தேர்தலில்) ஜனநாயகக் கட்சியை ஆதரிக்கப்போவதில்லை, குடியரசுக் கட்சியையே ஆதரிப்பேன் என்றார் எலான் மஸ்க். டிவிட்டர் எலான் மஸ்க் கட்டுப்பாட்டுக்கு வந்து சில வாரங்கள் கூட ஆகாத நிலையில், அடுத்துவரும் அதிபர் தேர்தலில் தாம் போட்டியிடப்போவதாக முந்திக்கொண்டு அறிவிக்கிறார் டிரம்ப். அமெரிக்க தேர்தல் பிரச்சாரம் ஆரம்பமாகிவிட்டதை நாம் சொல்லாமலே புரிந்துகொள்வோம்.

அதானி என்.டி.டி.வி-ஐ சதித்தனமாக கைப்பற்றியதும், டிவிட்டரை எலான் மஸ்க் கைப்பற்றியதும் சாரம்சத்தில் ஒன்றுதான். ஊடகங்களை பாசிஸ்டுகளின் ஊதுகுழலாக மாற்றுவதன் மூலம் அவர்கள் மக்களிடையே தங்களுக்கு ஆதரவாக கருத்துருவாக்கத்தை மேற்கொள்ள விழைகிறார்கள்.

ஏகாதிபத்திய உலகக் கட்டமைப்பானது இன்று தீர்க்க முடியாத அரசியல்-பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ளது. இனியும் ஜனநாயக முகமூடி அணிந்து கொண்டு தங்களது சுரண்டலை நடத்த முடியாது என்ற நிலைக்கு ஆளும் வர்க்கங்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஆகவே, ஆளும் வர்க்கங்களில் ஆகப் பிற்போக்கான ஒரு பிரிவினர் பாசிசக் குழுக்களை ஊட்டி வளர்த்து வருகின்றனர்; பாசிச வெறியர்களை ஆட்சிக்கட்டிலில் ஏற்றுவதற்கும் முயன்று வருகின்றனர். அவ்வாறான ஆளும் வர்க்கப் பிரிவில் குறிப்பிடத்தக்க கார்ப்பரேட் முதலாளியே எலான் மஸ்க்.

மதி

புதிய ஜனநாயகம் இதழை ஆதரிப்போம்! | நாகை.திருவள்ளுவன் | வீடியோ

புதிய ஜனநாயகம் இதழ் மாத இதழாக தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. மார்க்சிய – லெனினிய அரசியல் ஆயுதத்தை ஏந்தி உழைக்கும் மக்கள் விடுதலையை சாதிக்க வேண்டும் என்று பயணித்துக்கொண்டிருக்கிறது புதிய ஜனநாயகம். அனைத்து முற்போக்காளர்களும், ஜனநாயக சக்திகளும், உழைக்கும் மக்களும் அவசியம் படிக்கவேண்டிய இதழ் புதிய ஜனநாயகம். இந்த இதழுக்கு ஆதரவளிப்பதும், சந்தா செலுத்தி இதழை படிப்பதும் நமது கடமை!

புதிய ஜனநாயகம் இதழுக்கு தனது ஆதரவை இக்காணொலியில் பதிவு செய்கிறார் தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் அவர்கள்…

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!

சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.240
இரண்டாண்டு சந்தா – ரூ.480
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,200

புதிய ஜனநாயகம் இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் !

தொலைபேசி : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

குடிநீர் தேக்க தொட்டியில் மலம் – ஆதிக்கசாதி திமிர்! | மருது வீடியோ

புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்காடு என்ற ஊரில் மக்கள் போராடி பெற்ற நீர்தேக்க தொட்டியில் மலம் கலந்த கொடூரம். குடிநீர் தொட்டியில் சிறுநீர் கழிப்பது, மலம் கழிப்பது, கழிவு பொருட்களை கொட்டுவது போன்ற தீண்டாமை செயல்கள் சமூகத்தில் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கெதிராக பல வழக்குகளும் போலீசுத்துறையால் பதிவு செய்யப்படுகிறது. ஆனால், இக்குற்றங்களில் ஈடுபட்ட ஒருவராது தண்டிக்கப்பட்டிருக்கிறார்களா என்பதுதான் கேள்வி. தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மலம் கழித்துவிட்டு வருவதுதான் மேல்சாதியா?. கடுமையான நடவடிக்கை எடுக்காமல் இந்த ஆதிக்கசாதி பார்ப்பனிய மனோபாவத்தை ஒழிக்க முடியாது.

புதுக்கோட்டை சாதிய வன்கொடுமை, நம்ம ஸ்கூல் திட்டம் போன்றவற்றை பற்றி ரெட் பிக்ஸ் செய்திஊடகத்திற்கு அளித்த பேட்டியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் மருது அவர்கள்…

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

டெல்லி கொலை வழக்கு: மனித விழுமியங்களைத் தின்னும் மறுகாலனியாக்கம்!

டந்த நவம்பர் 14-ஆம் தேதி டெல்லியில் அப்தாப் என்பவன் தான் காதலித்த பெண்ணை கொலை செய்து, உடலை 35 துண்டுகளாக வெட்டி குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்த செய்தி இணையத்தில் பரவியது. பலரும் இச்சம்பத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்த அதே நேரத்தில், கணிசமானவர்கள் இந்த சம்பவத்தை நகைச்சுவையாகக் கடந்து சென்றனர். இவ்வாறு கடந்து சென்றவர்களைப் புரிந்துகொள்ள வேண்டுமெனில் முதலில் அப்தாப்பையும் இந்த சமூகத்தையும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

கொடூர கொலைகாரன் அப்தாப்

சில மாதங்களுக்கு முன்பு டெல்லியில் தனது காதலனோடு ‘லிவிங் டூகெதர்’ (மண ஒப்பந்தமின்றி சேர்ந்து வாழுதல்) உறவில் இருந்த ஷ்ரத்தா என்ற 27 வயது பெண்ணின் வீட்டை தொடர்பு கொண்ட அவளது நண்பன், ஷ்ரத்தா-வை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அவள் தன்னோடு பேசி பல மாதங்கள் ஆகிறது என்றும் கூறினார். இதனையடுத்து அவளது சமூக வலைத்தள பக்கங்களும் பயன்பாட்டில் இல்லாததைக் கண்டு சந்தேகமடைந்த ஷ்ரத்தாவின் தந்தை விகாஸ் போலீசுக்கு புகார் அளித்துள்ளார்.

அவ்விசாரணையின்போது ஷ்ரத்தா ஆறு மாதங்களுக்கு முன்பே அவளது காதலனால் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறாள் என்பது தெரியவந்தது. இதற்கான விசாரணையில், ‘ஷ்ரத்தாவை எப்படி கொன்றேன்’ என்பது பற்றி போலீசிடம் அப்தாப் சொன்ன தகவல்கள் ஒவ்வொன்றும் நமது ரத்தத்தை உறைய வைக்கின்றன.

படிக்க : ஆணாதிக்க வெறி: காதலியை 35 துண்டுகளாக வெட்டி கொன்ற கொடூரம்!

அப்தாப் மற்றும் ஷ்ரத்தா ஆகிய இருவரும் கடந்த 2019-ஆம் ஆண்டு ‘பம்பிள் டேட்டிங் செயலி’ (டேட்டிங் செயலி என்பதே சாராம்சத்தில் ஆணுக்குப் பெண்ணையும், பெண்ணுக்கு ஆணையும் அளிக்கும் ஒரு பாலியல் புரோக்கர் செயலிதான்) மூலமாக சந்தித்துள்ளனர். இதனையடுத்து மும்பைக்கு வந்த ஷ்ரத்தா, அப்தாப்பின் கம்பெனியிலேயே வேலைக்குச் சேர்ந்துள்ளாள். சில மாதங்கள் கழித்து ‘லிவிங் டூகெதர்’ உறவில் இருக்க முடிவு செய்த இவர்கள் மும்பையில் வீடு எடுத்து கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரே வீட்டில் தங்கி வசித்து வந்துள்ளனர்.

கடந்த மே 14-ஆம் தேதி அன்று அப்தாபும் ஷ்ரத்தாவும் மும்பையில் இருந்து டெல்லிக்கு வந்து, வாடகைக்கு ஒரு வீடு எடுத்து தங்கியுள்ளனர். ஷ்ரத்தா தொடர்ந்து தன்னை திருமணம் செய்துகொள்ள சொன்னதாலும் அதனை அப்தாப் மறுத்து வந்ததனாலும் இவர்கள் இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை வந்துள்ளது.

இந்நிலையில், மே 18-ஆம் தேதி அன்று இரவு இருவருக்கும் இடையில் ஏற்பட்ட சண்டையை அடுத்து அப்தாப் ஷ்ரத்தாவின் நெஞ்சில் ஏறி உட்கார்ந்து அவளது கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளான்.

ஒரு கொலையைச் செய்துவிட்டு கொஞ்சமும் சலனம் அடையாத அப்தாப், ஷ்ரத்தாவின் உடலை அப்படியே புதைத்தால் மாட்டிக்கொள்வோம் என்பதனால் உடலை எவ்வாறு அப்புறப்படுத்துவது என்று இரவு முழுக்க கூகுளில் தேடியுள்ளான். அவளது உடலைத் துண்டு துண்டாக வெட்டி அப்புறப்படுத்துவது என்று முடிவு செய்தவன், அன்று இரவு ஷ்ரத்தாவின் உடல் இருந்த அதே அறையில் படுத்து தூங்கியுள்ளான்.

மறுநாள் முன்னூறு லிட்டர் குளிர்சாதன பெட்டி, கறுப்பு நிற பிளாஸ்டிக்பைகள், கறி வெட்டும் கத்தி முதலியவற்றை வாங்கி வந்து, ஷ்ரத்தாவின் உடலை கழிவறைக்கு எடுத்து சென்று துண்டு துண்டாக வெட்டியுள்ளான். பாதிக்கு மேல் வெட்ட முடியாததால் இடையில் நிறுத்திவிட்டு சொமேட்டோ-வில் உணவு வாங்கி சாப்பிட்டுவிட்டு பின்னர் மீண்டும் வெட்டியுள்ளான். ஏற்கெனவே தான் ஒரு சமையற்காரன் என்பதால் ஷ்ரத்தாவின் உடலை வெட்டுவது தனக்கு கடினமாக இருக்கவில்லை என்று அப்தாப் போலீசிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியுள்ளான்.

சத்தம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக குழாயில் தண்ணீரை திறந்து விட்டு உடலை வெட்டியிருக்கிறான். இதனால் அந்த வாடகை வீட்டில் கட்டணமின்றி வழங்கப்படும் முதல் 20,000 லிட்டர் (ஏறக்குறைய ஒரு நாளுக்கு 35 வாளி) தண்ணீர் தீர்ந்ததுடன் மேலும் மாதம் 300 ரூபாய் தண்ணீர் கட்டணம் வந்துள்ளது.

இவ்வாறு தொடர்ந்து இரண்டு நாட்களாக ஷ்ரத்தாவின் உடலை குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதற்கு ஏற்ற அளவில் 35 துண்டுகளாக வெட்டியுள்ளான். விரைவில் நாற்றம் அடிக்க தொடங்கிவிடும் என்பதால் அவளது ஈரல், குடல் போன்ற உறுப்புகளைத் துண்டு துண்டாக நறுக்கி அன்று இரவே காட்டில் வீசிவிட்டு, பிற பாகங்களை வெட்டி தனித்தனி பிளாஸ்டிக்பையில் போட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைத்துள்ளான். அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக முகத்தை எரித்து குளிர்சாதன பெட்டியில் வைத்து அதனை அவ்வப்போது ‘ரசித்து வந்திருக்கிறான்’.

அன்றிலிருந்து தொடர்ந்து 16 நாட்களுக்கு இரவு இரண்டு மணிக்கு நடைபயிற்சி செய்வது போல் சென்று ஷ்ரத்தாவின் உடல் பாகங்களைக் கொண்ட பிளாஸ்டிக் பையை அகற்றிவிட்டு சுற்றியுள்ள நகரப் பகுதியிலுள்ள நாய்களுக்கு வீசியுள்ளான். மேலும், காட்டில் வீசினால் விலங்குகள் தின்றுவிடும் என்பதற்காக பல பாகங்களைக் காட்டில் எறிந்துள்ளான்.

இந்த நாட்களில் அவனின் வீட்டிற்கு உணவு கொடுக்கும் தொழிலாளர்கள், நண்பர்கள், பெண்கள் என பலர் வந்து சென்றுள்ளனர். ஆனால், யாருக்கும் ஷ்ரத்தாவின் உடல் பாகங்கள் வீட்டில் இருந்தது தெரியாது. இத்தனைக்கும் கோடை காலம் என்பதால் அவளது உடல் விரைவாக அழுகி நாற்றம் எடுக்க தொடங்கியிருக்கிறது. அந்த வாடையை ஊதுபத்தி, அறை ஸ்ப்ரே போன்றவற்றால் மறைத்திருக்கிறான். நண்பர்கள் வரும்போது அவளது உடலை ஒளித்து வைத்திருக்கிறான். மேலும் யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக குறிப்பிட்ட காலம் வரையில் ஷ்ரத்தாவின் சமூக வலைதள கணக்குகளை அப்தாபே இயக்கி வந்துள்ளான்.

ஷ்ரத்தாவின் வெட்டப்பட்ட உடல் பாகங்கள் இருந்த அதே குளிர்சாதனப் பெட்டியில்தான் அவனுக்கு தேவையான பால், காய்கறிகள், ஐஸ்கிரீம் போன்ற உணவுப் பொருட்கள் இருந்திருக்கிறது. ஆனால், அவற்றை தினமும் இயல்பாக பயன்படுத்தி இருக்கிறான். கைது செய்யப்படும் வரை அவன் அந்த வீட்டில்தான் தனியாக இருந்திருக்கிறான்.

ஷ்ரத்தாவை முதன்முதலில் பார்த்த அதே ‘பம்பிள் டேட்டிங் செயலி’ மூலம் மேலும் பல பெண்களைச் சந்தித்த அப்தாப், கூறுபோடப்பட்ட ஷ்ரத்தாவின் உடல் அந்த வீட்டில் இருக்கும் போதே இன்னொரு பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்து அவளுடன் உடலுறவு வைத்திருக்கிறான்.

ஆனால், இதில் எதை நினைத்தும் அவன் கொஞ்சம்கூட குற்ற உணர்வு அடையவில்லை. உண்மை அம்பலமாகி அவனை போலீசு விசாரிக்கும்போது முகத்தில் எந்தவித சலனமும் இன்றி பதில் கூறியிருக்கிறான் அப்தாப். விசாரணையின்போது லாக்கப்பில் இரவு முழுவதும் அப்தாப் நிம்மதியாக தூங்கினான் என்று அவனை விசாரித்த போலீசார் கூறுகின்றனர்.

தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி ஷ்ரத்தா தொந்தரவு செய்ததால்தான் அவளைக் கொன்றதாக அப்தாபே வாக்குமூலம் கொடுத்ததோடு, “அவளைக் கொல்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே, நான் ஷ்ரத்தாவைக் கொல்ல வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன்” என்றும் கூறியுள்ளான்.

படிக்க : பாலியல் குற்றவாளிகளுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்கும் கேரள நீதிமன்றத்தின் ஆணாதிக்க தீர்ப்பு !

மேலும், இதற்கு முன்பே பலமுறை அப்தாப் அவளை அடித்து தாக்கியிருக்கிறான். இதனால் 2020-ஆம் ஆண்டு “அப்தாப் தன்னை கொலை செய்துவிடுவான்” என்று ஷ்ரத்தா போலீசில் புகார் அளித்துள்ளாள். அங்கு அவள் கைப்பட எழுதிய கடிதமும் தற்போது வெளியாகி இருக்கிறது.

நமக்குள் ஒளிந்திருக்கும் அப்தாப்கள்!

எப்படி ஒருவனால் மூன்று ஆண்டுகள் ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்ந்தப் பெண்ணை இவ்வளவு கொடூரமாக கொலை செய்துவிட்டு கொஞ்சமும் குற்ற உணர்வுமின்றி இருக்க முடியும் என்பது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஆனால், அதனைவிட அதிர்ச்சிகரமானது என்னவெனில் நம்மில் பலரால் இதை எளிமையாக கடந்து செல்ல முடிகிறது என்பதுதான்.

செய்தி நிறுவனங்களின் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிடப்பட்ட ஷ்ரத்தா கொலை வழக்கு பதிவின்கீழ் வக்கிரக் கருத்துகள் கொட்டிக்கிடந்தன. “முரட்டு பசங்க தானடீ கேட்டீங்க” என்பது போன்ற கருத்துகளை ஏறக்குறைய அனைத்து கணக்கிலும் காணமுடிந்தது. மேலும், குளிர்சாதனப் பெட்டியில் ஷ்ரத்தா உடல் இருந்தது பற்றிய ஏராளமான மீம்கள் வைரலாகின. இதனைக் கண்டு பல முதலாளிய லிபரல் பத்திரிகைகளே அதிர்ச்சி அடைந்து, மனிதர்கள் மத்தியில் மனநிலை மோசமானதாக மாறியிருக்கிறது என்று செய்திகளை வெளியிட்டன.

கல்லூரி மாணவர்களிடம் இதைப் பற்றி பேசும்போது சிலர், இந்த செய்தியை விரைவாக கடந்து சென்றனர். சிலர் ஷ்ரத்தாவுக்காக சிறு அனுதாபத்தை மட்டும் வெளிப்படுத்தினர். ஆனால், சிலர், “ஷ்ரத்தாவின் சித்திரவதை தாங்காமல்தான் அந்த நொடி என்ன செய்வது என்று தெரியாமல் அப்தாப் கொலை செய்திருப்பான்” என்று அப்தாபுக்காகவும் வாதாடியது அதிர்ச்சி அளித்தது. குறிப்பாக, ஷ்ரத்தாவிற்கு எதிராகவும் அப்தாபை அரவணைத்தும் பேசியவர்கள் பெண்கள்தான்.

எப்படி இவர்களால் அப்தாபை அங்கீகரிக்க முடிகிறது? கொடூரமான கொலையைச் செய்த அப்தாப் எந்தவித சலனமும் இன்றி இயல்பாக கடந்து செல்கிறான். அந்த கொடூரத்தைக் கேள்விப்பட்ட இந்த சமூகமும் சலனமே இன்றி அப்தாபை கடந்து செல்கிறது. உண்மையில் அவ்வாறு அப்தாபை இந்த சமூகத்தால் கடந்து செல்ல முடிகிறதென்றால், அதன்பொருள், அனைவருக்குள்ளும் ஒரு அப்தாப் இருக்கிறான் என்பதுதான்.

அப்தாப் என்பவன் தனிமனிதன் கிடையாது. கலாச்சார ரீதியாக சீரழிந்து கொண்டு வருகின்ற ஒரு சமூகத்தின் பிரதிநிதி. அவனைப் பிரதிநிதித்துவப்படுத்த முழுமையாகவோ அரைகுறையாகவோ தங்களுக்குள்ளும் அப்தாப்-களை கொண்டிருக்கிற பல மனிதர்கள் இங்கு உள்ளனர்.

மனித சாரத்தை அழிக்கும் மறுகாலனியாக்கம்!

அப்தாப் அரங்கேற்றிய கொடூரத்திற்கு காரணம் தேடும் பலரும் அவனிடமே தேடலைத் தொடங்கி அவனோடே முடித்துவிடுகின்றனர். ஆனால், எப்படி ஒருவனால் தன்னை காதலித்த பெண்ணைக் கொன்று உடலை கூறு போட முடியும் என்ற கேள்வியை இந்த சமூகத்தில் இருந்துதான் தொடங்க வேண்டும்.

1990-களில் இந்தியா தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டது. பொதுவெளியில் பொருளாதாரக் கொள்கை என்று பார்க்கப்பட்ட மறுகாலனியாக்கம் அரசியல், கலாச்சாரம் ஆகியவற்றிலும் மிகப்பெரிய தாக்கம் செலுத்தியது. மனித உணர்வுகள் ஒவ்வொன்றும் பண்டமாகி சரக்காக மாற்றப்பட்டன. அதிலும் ஏற்கெனவே பார்ப்பனிய-ஆணாதிக்க மனநிலை கொண்ட இந்தியாவில் அது காட்டுமிராண்டித்தனமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது.

அப்படி மறுகாலனியாக்கக் கொள்கைகளால் காட்டுமிராண்டியாக மாற்றப்பட்ட மனிதர்களின் பிரதிநிதிதான் அப்தாப். முழுக்க முழுக்க முதலாளிய சீரழிவுகளால் வளர்க்கப்பட்ட இவன், குற்றத் தொடர் நிகழ்ச்சிகளைப் (web series) பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அவற்றில் ஒன்றான அமெரிக்கக் குற்றத் தொடர் நிகழ்ச்சியான “டெக்ஸ்டர்”தான் ஷ்ரத்தாவை கொலை செய்ய தன்னை தூண்டியது என்று வாக்குமூலம் அளித்துள்ளான். இவையன்றி அப்தாபுக்கு பலவகை போதை பழக்கங்களும் இருந்துள்ளன.

மேலும், அப்தாப் ஷ்ரத்தாவை சந்தித்தது டேட்டிங் செயலியின் மூலம்தான். இந்த பாலியல் புரோக்கர் செயலிகளை அரசு எந்தவகையிலும் தடை செய்யவில்லை என்பது, இங்கு கவனிக்க வேண்டிய விசயமாகும். இந்த செயலிகள் மட்டுமல்ல, வீடியோ கேம்கள், ஆபாச பாலியல் வீடியோக்கள் என பலவகைகளில் இந்த சமூகம் நாள்தோறும் சீரழிக்கப்படுகிறது.

ஷ்ரத்தாவை காதலிக்கத் தொடங்கிய அப்தாப், ஷ்ரத்தாவிடம் எதிர்பார்த்தது திருமண உறவை அல்ல, எந்தவித பொறுப்புகளுக்கும் கடமைப்படாத ‘லிவிங் டூகெதர்’ உறவாகும். அதாவது, பாலியல் இச்சைக்காக மட்டுமே மேற்கொள்ளும் ஒரு உறவாகும். ஆனால், ஷ்ரத்தா இந்த உறவு முறையை மீறி தன்னை திருமணம் செய்துகொள்ளும் படியும் பிற பெண்களிடம் பேச வேண்டாம் என்றும் சொன்னதெல்லாம் ’லிவிங் டூகெதர் கோட்பாட்டிற்கே எதிரானது’.

தான் விரும்பும் ஒரு கலாச்சாரத்தின் ‘நெறிமுறைகளை’ ஷ்ரத்தா மீறியதை அப்தாப்பால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் கொஞ்சமும் குற்ற உணர்வின்றி அப்தாப் அவளைக் கொலை செய்துவிட்டான்.

இந்த சீரழிவு வக்கிரக் கலாச்சாரத்திற்கு பலியானது அப்தாப் மட்டுமல்ல. ஒட்டுமொத்த சமூகமும் கொஞ்சம் கொஞ்சமாக காட்டுமிராண்டியாக மாறி வருகிறது. குற்றங்கள் யாவும் தீவிரமடைவதோடு வக்கிரமாக மாறி வருகின்றன. பாலியல் வல்லுறவுகள், கூட்டு பாலியல் பலாத்காரமாகவும் உடலை எரிப்பதாகவும் சிதைப்பதாகவும் பரிணமித்து வருகிறது. ஷ்ரத்தா கொலைக்கு பின்னரும் அதே போன்று கொன்று உடலைத் துண்டுதுண்டாக வெட்டிய இரண்டு சம்பவங்கள் உத்திரப்பிரதேசத்தில் அரங்கேறின.

படிக்க : ஆணாதிக்க சமூகத்தால் பொருளாதாரம் மற்றும் பாலியல் ரீதியாக ஒடுக்கப்படும் பெண்கள் !

முற்போக்கு, பெண்ணியம், சுதந்திரம், நவீனம், அறிவியல், முன்னேற்றம் என்ற பெயர்களில் விழுமியங்கள் அற்ற சமுதாயத்தை மறுகாலனியாக்க பண்பாடு உருவாக்குகிறது. இதன் பொருள், மனித விழுமியங்கள் அற்றுப்போவது மட்டுமல்ல, விலங்கினங்களுக்கு இல்லாத ஒரு கொடூர மனவியல் நோயாளிகளாக புதிய இளந்தலைமுறையினர் மாற்றப்படுகின்றனர். ஆண்ட்ராய்டு ஃபோன்களும் அதில் வரும் மெய்நிகர் உலகமும் மனிதர்கள் ஒருவரை ஒருவரிடமிருந்து பிரிக்கின்றது. கூடிவாழும் மனிதப் பண்பையே அழிக்கிறது.

இதில் இருந்து சமூகத்தையும் நம்மையும் மீட்டுக் கொள்வதற்கு ஒரே வழி, சோசலிசம்தான். அந்த உன்னத சமுதாயத்தைப் படைக்கும் போராட்டத்தின் மூலமாக மனித விழுமியங்களை மீட்டெடுக்கவும், மறுகாலனியாக்கத்தை மாய்க்கவும் வேண்டும்.

இதன் தொடக்கக் கட்டமாக, இந்த பாலியல் வக்கிரங்களுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்; இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் பொதுவிவாதங்கள் நடத்தப்பட வேண்டும்; மது-போதை சீரழிவு, ஆண்ட்ராய்டு காட்சி போதை, ஆபாச சினிமா சீரழிவு, பார்ப்பன-ஆணாதிக்கக் கலாச்சாரங்களுக்கு எதிராக சரியான மனித விழுமியங்களை உயர்த்திப் பிடிக்க வேண்டும். இத்தகைய பண்பாட்டு சீரழிவுகளைப் பரப்பும் ஊடகங்கள், செய்தி நிறுவனங்களுக்கு எதிராகவும் இதனைக் கட்டிக்காக்கின்ற இந்த அரசுக்கு எதிராகவும் போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும். அப்படிப்பட்ட போராட்டங்களின் வழியாக ஒரு சமூக மாற்றத்திற்கு நம்மை ஈடுபடுத்திக் கொள்வதே தீர்வு!

துலிபா

“பீமா கோரேகானில் நடந்த நிகழ்ச்சிக்கும் வன்முறைக்கும் எவ்வித தொடர்புமில்லை” – மூத்த போலீசு அதிகாரி வாக்குமூலம்!

0
பீமாகோரேகான் வெற்றித் தூண்.

“பீமா கோரேகானில் நடந்த நிகழ்ச்சிக்கும் வன்முறைக்கும் எவ்வித தொடர்புமில்லை”
– வழக்கு விசாரணையில் ஈடுபட்ட மூத்த போலீசு அதிகாரி ஒப்புதல் வாக்குமூலம்!

புனே அருகே உள்ள பீமா கோரேகான் கிராமத்தில் ஜனவரி 1, 2018 அன்று வெடித்த வன்முறைக்கும், எல்கர் பரிஷத் நிகழ்ச்சிக்கும் எவ்விதத்தொடர்பும் இல்லை என்று ஒரு மூத்த போலீஸ் அதிகாரி நீதித்துறை ஆணையத்திடம் கூறியதாக தி வயர் டிசம்பர் 27 அன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பீமா கோரேகான் வன்முறை தொடர்பான குற்றச்சாட்டின் பெயரில் 16 ஆர்வலர்கள், கல்வியாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் கைதுசெய்யப்பட்டு தற்போது வரை பெரும்பாலானோர் சிறையில் உள்ளனர்.

பீமா கோரோகான் போரின் 200-வது ஆண்டு நினைவுக்கான நடைபெற்ற எல்கர் பரிஷத் நிகழ்ச்சியை இந்த 16 ஆர்வலர்கள் தான் ஏற்பாடு செய்துள்ளார்கள் என்று போலீசுத்துறை குற்றம் சாட்டியது. அந்த நிகழ்வில் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாகவும், அந்த காரணமாகவே நிகழ்ச்சிக்கு அடுத்தநாள் மிகப்பெரிய வன்முறை வெடித்ததாகவும் அவர்கள் மீது குற்றச்சாட்டை சுமத்தியது.

படிக்க : பீமா கொரேகான்: ஹேக்கிங் செய்யப்பட்ட ஸ்டான் சுவாமியின் கணினி!

பீமா கோரேகான் வன்முறை தொடர்பான ஒன்பது வன்கொடுமை வழக்குகளை விசாரித்து வந்த துணைப் பிரிவு போலீசுத்துறை அதிகாரி கணேஷ் மோர், அவர் அதிகார எல்லைக்குட்பட்ட ஒன்பது வழக்குகளையும் விசாரித்ததில் எல்கர் பரிஷத் நிகழ்ச்சிக்கும், வன்முறைக்கும் எந்த தொடர்புமில்லை என்பதைக் காட்டுகிறது என்று ஓய்வு பெற்ற நீதிபதி ஜே.என்.படேல் தலைமையிலான இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட ஆணையத்திடம் கூறினார்.

சமீபத்தில் பணியிலிருந்து ஓய்வு பெற்ற மோரே ஜனவரி 1, 2018 அன்று அப்பகுதியில் ஏற்பாடுகளுக்குப் பொறுப்பான மூத்த அதிகாரியாக இருந்ததாக Rediff தெரிவித்துள்ளது. “பீமா கோரேகான் கிராமத்தில் இருந்து சுமார் 3.5 கிலோமீட்டர் தொலையில் இருக்கும் வடு புத்ருக் என்ற கிராமத்தில் தான் பணியில் இருந்தபோது, காவிக் கொடிகளுடன் சுமார் 1,200 பேர் கொண்ட கூட்டத்தை தடுத்து நிறுத்தி கலைத்ததாக அவர் கமிஷனிடம் கூறியுள்ளார். இதனை உறுதிபடுத்தும் விதமாக, இந்த சம்பவத்திற்கு முன்பு வெறுப்பு பேச்சு மூலம் இந்துமதவெறி அமைப்பின் தலைவர்களான மிலிந்த் எக்போட் மற்றும் சம்பாஜி பிடே ஆகியோர் வன்முறையை தூண்டியதாக தலித் குழுக்களும் அரசியல் ஆர்வலர்களும் குற்றம் சாட்டினார்கள்.

கடந்த 31 டிசம்பர், 2017 அன்று புனேவில் உள்ள ஷானிவார் வாடாவில் எல்கர் பரிஷத் நிகழ்வு நடத்தியதன் விளைவாக, அடுத்தநாள் ஜனவரி 1, 2018 அன்று கலவரம் நடந்ததற்கு எந்த ஆதாரமும், தகவலும் எனக்கு கிடைக்கவில்லை” என்று வன்முறையில் வழக்கு விசாரணையில் ஒருவரான வழக்கறிஞர் ராகுல் மகரே தெரிவித்தார்.

டிசம்பர் 27, 2022 அன்று, ஆணையத்திடம் இந்த வழக்கில் மகாராஷ்டிரா அரசு ஆதாரங்களை நசுக்குவதாக மகரே குற்றம் சாட்டினார். “வன்முறையில் மிலிந்த் எக்போட் மற்றும் மனோகர் குல்கர்னி என்கிற சாம்பாஜி பிடே ஆகியோரின் நேரடிப் பங்கை தெளிவாகக் காட்டும் ஆதாரங்களை நாங்கள் சுட்டிக்காட்டியுள்ளோம். அவர்களின் அமைப்பு பீமா கோரேகான் பகுதியில் பணியாற்றதை பாதிக்கப்பட்டவர்கள் பதிவுசெய்த எஃப்.ஐ.ஆர்.கள் சுட்டிக்காட்டுகின்றன” என்றார்.

படிக்க : பீமா கொரேகான் வழக்கு : புனே போலீசு செய்த சைபர் கிரைம் அம்பலமானது !

2018 ஆம் ஆண்டில் பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சமூக செயற்பாட்டாளர்களில் ஸ்டான் சுவாமி அதிகார வர்க்கத்தினரின் ஒடுக்குமுறையின் காரணமாக சிறைத் தண்டனையில் இருக்கும்போதே மரணமடைந்தார். அவரது கணினியிலும் ஸ்டான் சுவாமி, ரோனா வில்சன், வரவர ராவ், ஹனி பாபு ஆகியோரின் கணினிகளிலும் பொய்க்குற்றம் சுமத்துவதற்காக வேண்டுமென்றே ஹேக்கர் மூலம் தவறான ஆதாரங்களை உள்நுழைத்துள்ளார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ள நிலையில், தற்போது எல்கர் பரிஷத் நிகழ்ச்சிக்கும் அதை தொடர்ந்து நடந்ததாக கூறப்படும் வன்முறை சம்மபவத்திற்கும் எவ்விதத் தொடர்பும் கிடைக்கவில்லை என்று அதிகாரவர்க்கத்தில் இருக்கும் ஒரு போலீசு அதிகாரியே கூறியிருப்பது மேலும் அதிர்ச்சியை அளிக்கிறது.

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க உள்ளிட்ட காவிக் கும்பலும், அரசு அதிகார வர்க்கமும் பீமா கோரேகான் நிகழ்ச்சியை முகாந்திரமாக வைத்து ஸ்டான் சுவாமி உள்ளிட்ட 16 சமூக செயற்பாட்டாளர்களை ஒடுக்குவதற்கு திட்டமிட்டு இந்த நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள் என்ற சித்திரத்தையே, தற்போதைய மூத்த போலீசு அதிகாரியின் ஒப்புதல் வாக்குமூலம் நமக்கு உணர்த்துகின்றது.

கல்பனா
செய்தி ஆதாரம் : The wire, Rediff, Scroll

இந்தியாவின் பாசிஸ்டுகளை தோழர் ஸ்டாலின் வழியில் வெல்லவேண்டும்! | நாகை திருவள்ளுவன் | வீடியோ

துரை மாட்டுத்தாவணி அருகில் ராமசுப்பு அரங்கத்தில், டிசம்பர் 21 பட்டாளி வர்க்க ஆசான் தோழர் ஸ்டாலின் பிறந்தநாளன்று “ஸ்டாலின் சகாப்தம்” ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டது. ஆவணப்படம் உருவாக்கிய எழுச்சியில் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன், “மோடியை பிரதமர் ஆக்கியது அம்பானி அதானி தான் ஆதலால் இது அம்பானி அதானிகளின் தேசம்.

எப்படி பெரியாரின் பெயர் கேட்டால் சங்கிகள் அலறுகிறார்களோ அதேபோல்தான் ஸ்டாலின் பெயர் கேட்டால் உலக முதலாளித்துவம் அலறுகிறது. செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன் உலக பாட்டாளி வர்க்கத்தின் தலைவர் ஆனார். சிறுவயதிலேயே மார்க்சியம் படித்ததற்காக தண்டிக்கப்பட்டார். பாசிசத்தை வீழ்த்தி சோசியலிசத்தை நிருவிக்காட்டினார்.

அதேபோல் இந்தியவின் பாசிஸ்டுகளை நாம் வீழ்த்த வேண்டும். ஹிட்லரின் படுகொலைகளை நேரடியாக ஆதரித்தன இந்த ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி கும்பல். பல்வேறு பாசிச படைகளையும் வைத்துக்கொண்டு கார்ப்பரேட்டுகளுக்கு தரவு ஏஜென்ட் வேலை பார்ப்பதுதான் இவர்களின் வேலை. ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி கும்பல் இந்தியாவை சூறையாடிக் கொண்டுள்ளார்கள்; இவர்கள் அனைவரையும் நாம் ஒன்றுபட்டு வீழ்த்துவோம்” என பேசி முடித்தார்.

பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, மதுரையில் நடைபெற்ற அரங்கக் கூட்டத்தில் நாகை திருவள்ளுவன் அவர்கள் ஆற்றிய உரையை காணொலி வடிவில் வெளியிடுகிறோம்.

காணொலியை பாருங்கள் ! பகிருங்கள் !!

‘அவுட் சோர்சிங்’ எனும் நவீன கொத்தடிமை முறை!

னிதனின் இன்றைய அடிப்படைத் தேவைகளில் முக்கியமானது கல்வி, மருத்துவம் சுகாதாரம், வேலை வாய்ப்பு ஆகும். இவை அனைத்தும் காசு உள்ளவனுக்கே என்ற படுமோசமான நிலையில் நாம் வாழ்ந்து வருகிறோம். குறிப்பாக, சுகாதாரக் கட்டமைப்பை ஒழித்துக்கட்டும் நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழக அரசு மனிதவள மேம்பாட்டுத்துறை அக்டோபர் 18-ந்தேதி புதிய அரசாணை 115-இன் அடிப்படையில் 5 பேர் அடங்கிய மனிதவள சீர்த்திருத்தக்குழு அமைப்பதை எதிர்த்த பிறகு, அதன் வரம்பு ரத்து செய்து புதிய வரம்பு வெளியிடப்படும் என கூறினார் முதல்வர். ஆனால் அதன் தொடர்ச்சியாக அரசு அலுவகங்களில் ஆணையர்கள், பொறியாளர், மேலாளர், சுகாதார ஆய்வாளர் ஆகிய பணியிடங்கள் மட்டுமே தமிழக அரசிடம் இருக்கும். மீதமுள்ள பணியிடங்கள் அனைத்தும் தனியார் வசம் ஒப்படைக்கும் வகையில் அரசாணை எண் 152-ஐ கொண்டு வந்துள்ளது.

இதனை எதிர்த்து போராடும் தொழிலாளர்களை பார்த்து 115, 152  ஆகிய அரசாணைப்படி தான் நாங்கள் நடந்து கொள்வோம். கொரோனா காலங்களில் வேலைக்கு ஆட்கள் தேவை இருந்ததால் பணியில் சேர்த்தோம். தற்போது அவசியம் இல்லை என்பதால் வெளியேற்றுவோம் என மிரட்டுகின்றனர் ஆட்சியாளர்கள். தங்கள் நியாமான கோரிக்கைகாகப் போராடினால் போராட்டத்தை கைவிட்டு வேலைக்கு வரவில்லை என்றால் அடுத்த நாளில் இருந்து வேலைக்கு வரவேண்டாம் எனவும் அச்சுறுத்தும் அயோக்கியத்தனங்கள் பல இடங்களில் அரங்கேறுகிறது.

படிக்க : BYJU’S செயலியும், பகற்கொள்ளையும் | தோழர் ரவி வீடியோ

இந்த அரசாணையின் மூலம் மாநகராட்சி பணிகள் தனியாரிடம் ஒப்படைப்பது, நிரந்தர பணியிடங்கள் குறைப்பு, காலி பணியிடங்கள் நிரப்பத்தடை, அவுட் சோர்சிங் முறையில் பணி நியமனம் ஆகியவற்றை செய்யும் வகையில் தமிழக அரசு அரசாணையை கொண்டு வந்துள்ளது. இந்த அரசாணையின் மூலம் துப்புரவு தொழிலாளர்கள், செவிலியர்கள், 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் ஆகிய அனைவரையும் மேன் பவர் ஏஜென்சிகள் மூலம் தனியார் முதலாளிகளிடம் நவீனக் கொத்தடிமைகளாக்கும் வேலையை அரசே செய்து வருகிறது.

தமிழ்நாட்டின் 20 மாநாகராட்சிகளில் மறுசீரமைப்பு எனச்சொல்லி சுமார் 10 ஆண்டுகாலம் வேலை செய்த 32,500 பேரில் சுமார் 28 ஆயிரம் பேர் வேலையை விட்டு துரத்தி அடிக்கும் சதி வேலைகளை செய்கிறது திமுக அரசு.

மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையை ஒழித்துக்கட்டும் இந்த நடவடிக்கையை கண்டித்து துப்புரவு தொழிலாளர்கள், செவிலியர்கள், 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் என அனைவரும் பலக் கோரிக்கைகளை வைத்து தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போரட்டத்தை எப்படி முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என திட்டம் போடும் தமிழக அரசோ, இவர்களின் கோரிக்கைகளை தீர்க்க எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

சுகாதாரத்துறையின் பல்வேறு பிரிவுகளின்கீழ் வேலைசெய்து வந்தாலும் இவர்கள் அனைவருக்கும் உள்ள பிரச்சினை ஒன்றுதான். அதாவது உரிமை மறுப்பு, பணிப் பாதுகாப்பின்மை, வேலை உத்தரவாதம் இல்லாத நிலையாகும்.

கொரோனா காலத்தில் அவுட் சோர்சிங் முறையில் (அயல் பணி முறையில், வெளி முகமை முறையில்) இவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். கொரோனா, புயல் வெள்ளம் போன்ற நெருக்கடியான, பேரிடர் காலங்களில் இவர்களின் சேவை என்பது மிக மகத்தானது. குறிப்பாக செலிவியர்கள்தான் கொரோனா பெருந்தொற்று காலங்களில் இருந்து மனித உயிர்களை மீட்டெடுத்ததில் தங்கள் உயிரை பணயம் வைத்து வேலை பணிபுரிந்தனர். அதில் பலர் இறந்துபோனார்கள்.

கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட நெருக்கடியான காலகட்டத்தில் பணியில் அமர்த்தப்பட்ட இவர்களை நிரந்தரமாக்குவோம் என  நாடகமாடியது எடப்பாடி அரசு. அதை எதிர்த்து போராடிய தி.மு.க ஆட்சிக்கு வந்தபிறகு அதே நாடகத்தை அரங்கேறுகிறது.

இவர்கள் நோக்கம் என்னவெனில் அனைவரையும் தனியார் முதலாளிகளுக்கு அவுட் சோர்சிங் முறை மூலம் ஒப்பந்தத் தொழிலாளர்களாக்கி கொத்தடிமையாக்குவதே. சேவைத் துறையில் வேலை செய்யும் இந்தத் தொழிலாளார்களுக்கு சீருடை, குடிநீர், கழிவறை, பாதுகாப்பு உபகரணங்கள், உணவு சாப்பிடும் இடம் போன்ற அத்தியாவசிய தேவைகளை செய்யாத அவல நிலையை எதிர்த்து தொழிலாளர்கள் போராடுகின்றனர்.

செவிலியர், துப்புரவு தொழிலாளர்களைப் போற்றி மாலை அணிவித்து, பூ தூவி ஒருநாள் மரியாதை செய்தார்களே தவிர, இவர்களின் பிரச்சினைகளை தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே உண்மை.

“அவுட் சோர்சிங் மற்றும் ஒப்பந்த முறையின் மூலம் வேலையில் சேர்ந்தவர்களை எல்லாம் உடனடியாக நிரந்தரமெல்லாம் செய்ய முடியாது. அன்றைய தேவைக்கு அவர்களை பயன்படுத்தினோம் தற்போது தேவையை கருதிதான் வேலை கொடுக்க முடியும். போதிய நிதியில்லை. அதனால் அனைவருக்கும் வேலை எல்லாம் கொடுக்க முடியாது” என கூறுகிறார் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

நிதியில்லை என்று கூறும் இவர்கள்தான் அரசு மருத்துவமனைகளில் அடிப்படை உதவி பணிகளை மேற்கொள்ளும் கிறிஸ்டல் ஸ்மித் குவாலிட்டி போன்ற தனியார் நிறுவனத்திற்கு தமிழக அரசு மாதம் ரூ.3,200 கோடி கொடுத்து கொள்ளையடிக்க ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறது.

படிக்க : பொள்ளாச்சி: ‘இங்கே வந்து பிரச்சாரம் செய்யும் அளவுக்கு தைரியம் வந்துடுச்சா’ – மக்கள் அதிகாரம் தோழர்கள் மீது பா.ஜ.க அடாவடித்தனம்!

மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையில் புகுத்தப்படும் காண்டிட்ராக் மற்றும் அவுட் சோர்சிங் முறையால் அவர்களுக்கு மட்டும் பாதிப்பு ஏற்பட போவதில்லை. ஒட்டுமொத்த  அரசு மருத்துவ சுகாதாரக் கட்டமைப்பை ஒழித்துக்கட்டி தனியார் முதலாளிகள் கொள்ளை அடிக்கும் வகையிலான ஏற்பாட்டை செய்வதே இவர்களின் வேலை.

உலகம் முழுவதும் பொதுச் சுகாதாரத்திற்கு குறைந்த நிதி ஒதுக்கும் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. இவ்வளவு கேடுகேட்ட நிலையில் வைத்துவிட்டு வல்லரசு வாய் சவடால் அடிப்பதை தவிர வேறு எதை செய்யவில்லை. சேவைத்துறைக்கு நிதி ஒதுக்குவது நிறுத்து என கட்டளை இடுகிறது உலக வங்கியும், உலக வர்த்தக கழகமும்; அதனை அமல்படுத்துகிறது திராவிட மாடல் தி.மு.க அரசு.

எனவே, தங்கள் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க தனித்தனியாக நடத்தப்படும் அனைத்துப் போராட்டங்களையும் ஒருங்கிணைத்து, அரசின் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கைக்கு எதிரானப் போராட்டமாக வளர்தெடுப்பது நமது கடமையாகும்.

புவன்

BYJU’S செயலியும், பகற்கொள்ளையும் | தோழர் ரவி வீடியோ

ல்வித்துறையில் ஓர் மிகப்பெரிய நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது இந்த BYJU’S செயலி. இந்த செயலி கல்வித்துறையில் என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கிறது, அதனால் எவ்வளவு பாதிப்புகள் ஏற்படுகிறது என்பதை நாம் பார்க்க வேண்டியது அவசியம்.

BYJU’S செயலி மக்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்தும், இச்செயலியின் கார்ப்பரேட் கொள்ளையை குறித்தும் இந்த காணொலியில் விளக்குகிறார் பு.மா.இ.மு.வின் மாநில ஒருங்கிணைப்பு குழு தோழர் ரவி அவர்கள்…

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

கோவை கார் வெடிப்பு சம்பவம்: புஸ்வானமானது பா.ஜ.க.வின் பீதி அரசியல்!

கோவை உக்கடம் பகுதியில் உள்ள கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் அருகில் கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி காரில் இருந்த சிலிண்டர் வெடித்துச் சிதறியது. அதில் ஜமேஷா முபீன் என்ற முஸ்லிம் இளைஞர் உயிரிழந்தார். கார் வெடித்தது வெறும் விபத்தல்ல; இதன் பின்னணியில் பெரிய சதித்திட்டம் உள்ளது என்ற கோணத்தில் இது தொடர்பான வழக்கு என்.ஐ.ஏ.வால் விசாரிக்கப்பட்டு வருகிறது.

கார் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்த உடனேயே, விசாரணை தொடங்கப்படாத நிலையில், “கோவையில் மீண்டும் தீவிரவாதம் தலைதூக்கிவிட்டது”, “பயங்கரவாதத்தின் ஆணிவேர் அகற்றப்பட வேண்டும்”, “இவ்வழக்கை உடனடியாக என்.ஐ.ஏ.விடம் ஒப்படைக்க வேண்டும்” என்று பரபரப்பூட்டி முஸ்லிம் எதிர்ப்புக் கூச்சலிட்ட பாஜக, ஒன்றியத்தில் தனக்கிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழக அரசுக்கு நெருக்கடியும் கொடுத்தது.

பா.ஜ.க. கோரியபடி, தற்போது என்.ஐ.ஏ இவ்வழக்கை விசாரித்துவருகிறது. கோவையை பயங்கரவாத நகரம் போல காட்டி போலீசு கெடுபிடியை அதிகரிக்கச் செய்த வகையில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது; அப்பாவி இளைஞர்கள் பலரும் பா.ஜ.க.வின் பீதியூட்டும் பிரச்சாரத்தால் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ளனர். ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வின் கூலிப்படையைப் போல செயல்படும் என்.ஐ.ஏ. தமிழகம் முழுவதும் தேடுதல் வேட்டையை நடத்தி பீதியூட்டி வருகிறது.


படிக்க : கோவை கார் எரிவாயு உருளை வெடிப்பு வழக்கு | மக்கள் அதிகாரம் கண்டன அறிக்கை!


ஆனால், பா.ஜ.க.வும் அதன் பார்ப்பன சங்கி ஊடகங்களும் எதிர்ப்பார்த்த வகையில் தமிழகம் பீதிக்கு உள்ளாகவில்லை; முஸ்லிம் மக்களின் மீது யாரும் வெறுப்புணர்ச்சி கொள்ளவில்லை; ‘நமது ஊரில் குண்டுவெடித்துவிடுமோ’ என்று யாரும் அச்சப்படவும் இல்லை. பா.ஜ.க. ஆளும் பசுவளைய மாநிலங்களைப் போல அல்லாமல், தமிழகத்தில் முஸ்லிம் மக்களுக்கும் இந்து மக்களுக்கும் நிலவுகிற நல்லிணக்கமே அதற்கு முக்கிய காரணமாகும். மற்றொரு பக்கம், இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படாத காரணத்தால், இதை விவாதிப்பதிலும் மக்கள் அக்கறை கொள்ளவில்லை.

‘முஸ்லிம் எதிர்ப்பு இந்துத்துவ வெறியை கிளறிவிட நினைக்கும் பா.ஜ.க.வின் திட்டம் தமிழகத்தில் பலிக்காது’, ‘ஆர்.எஸ்.எஸ். அமைப்பைப் போல பயங்கரவாத அமைப்பு இருக்க முடியுமா’- என்றவாறு பா.ஜ.க.வை தாக்குதல் (Offensive) நிலையிலேயே சமூக ஊடகங்களில் தமிழக மக்கள் அணுகினர்.

தினமணி, இந்து தமிழ்திசை, துக்ளக் போன்ற பா.ஜ.க. ஆதரவு பார்ப்பன ஊடகங்கள், அக்கட்சியின் எடுபிடியான சில சில்லறை அமைப்புகள் மட்டுமே தீவிரமான பீதி அரசியலைப் பரப்பின. பா.ஜ.க.வின் கூட்டணி கட்சிகளான பா.ம.க.வும், தே.மு.தி.க.வும் கூட சில பொதுவான அறிவிப்புகளுடன் முடித்துக் கொண்டன. தி.மு.க. எதிர்ப்பரசியலைப் பேசியே காலத்தை ஓட்டிவரும் அ.தி.மு.க. தொடக்கத்தில் ஒன்றிரண்டு அறிவிப்புகளை வெளியிட்டது. அத்துடன் அதுவும் பயங்கரவாத பீதியூட்டிப் பேசுவதை நிறுத்திக் கொண்டது.

பி.எஃப்.ஐ. மீது தடை, எஸ்.டி.பி.ஐ. மீது சோதனை, பா.ஜ.க. அலுவலகங்கள் மீது பெட்ரோல் குண்டுவீச்சு, தற்போது கோவை கார் வெடிப்பு – என தொடர்ச்சியான சம்பவங்களை ஒட்டி, ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வினர் தீவிரமான முஸ்லிம் எதிர்ப்பு பிரச்சாரங்களைக் கட்டியமைத்த போதும் தமிழகத்தின் பொதுநிலைமை இதுதான்.

தீவிரவாதப் போக்கிற்கு பலியான யாரோ ஒரு இஸ்லாமிய இளைஞர் அவ்வாறு செய்திருக்கலாம் என்ற கருத்தே தமிழக மக்களின் பொதுமனநிலையாக இருந்தது. இதனைத் தாண்டி முஸ்லிம் தீவிரவாதிகள் தமிழகத்தில் நுழைந்துவிட்டதாக எந்த பொதுகருத்தும் தமிழக மக்களிடையே உருவாகவில்லை. அவ்வாறு உருவாக்குவதற்காக பா.ஜ.க.வும் சங்கப் பரிவாரக் கும்பலும் அடுத்தடுத்து வீசிய அம்புகளெல்லாம் புஸ்வானமாகின.

சான்றாக, 2021-ஆம் ஆண்டு வரை (அதாவது தி.மு.க. ஆட்சிக்கு முன்) தமிழக உளவுத்துறையில் சிறப்பு வாய்ந்த அதிகாரிகள் பணியில் இருந்ததாகவும்; தற்போது உளவுத்துறையில் 60 சதவிகிதம் குறிப்பிட்ட மதம் (முஸ்லிம்) சார்ந்த அதிகாரிகளே இருப்பதால், இவ்வழக்கின் உண்மைகள் வெளிக்கொண்டு வரப்படவில்லை என்றார் அண்ணாமலை.

அதைத்தொடர்ந்து, தமிழகப் போலீசு துறையை தொடர்ச்சியாக இழிவுப்படுத்தும் வகையில் பேசிவரும் அண்ணாமலையைக் கண்டித்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு கண்டன அறிக்கை வெளியிட்டார். இதுவரை தமிழகத்தில் எந்த எதிர்க்கட்சி தலைவர்களும் இவ்வாறு ஒரு போலீசு உயரதிகாரி கண்டனம் தெரிவிக்கும் அளவிற்கு தரந்தாழ்ந்து சென்றதில்லை என்றே தெரிகிறது.

இக்கண்டனத்திற்கு பிறகு பேசிய அண்ணாமலை, தமிழ்நாட்டு போலீசார் திறமையானவர்கள்தான், போலீசுத்துறையை வழிநடத்தும் டிஜிபி உள்ளிட்ட உயரதிகாரிகள் மட்டுமே தவறான வழிகாட்டுதலில் செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டினார்.

“இந்துக்களின் பண்டிகை நாளான தீபாவளியன்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர்” என்று எச்.ராஜா, வானதி சீனிவாசன், அர்ஜூன் சம்பத் போன்ற கழிசடைகள் தொண்டையைக் கிழித்துக் கொண்டிருந்தாலும், அவையெல்லாம் இந்து மக்களாலேயே சீந்துவாரின்றி ஒதுக்கப்பட்டன.

சிறுபான்மையினருக்கு எதிராக பிரச்சாரம் செய்வதோடு, இச்சம்பவத்தைப் பயன்படுத்தி, தி.மு.க. அரசுக்கும் நெருக்கடி கொடுக்கலாம் என்று கனவு கண்டது சங்கி கும்பல். ஆனால், குண்டுவெடிப்பு சம்பவமே பீதியூட்டவில்லை என்பதை கவனிக்காத இந்த கும்பல், இதனைப் பயன்படுத்தி தி.மு.க.விற்கு நெருக்கடி கொடுப்பதாக நினைத்துக் கொண்டதுதான் நகைப்புக்குரியது.

“அக்டோபர் 23-ஆம் தேதி நடந்த கார் வெடிப்பு தீவிரவாதத் தாக்குதல் என்பது சில மணி நேரங்களிலேயே தெரிந்துவிட்டது. ஆனால், சம்பவம் நடந்த நான்கு நாட்கள் கழித்துதான் விசாரணை என்.ஐ.ஏ.வுக்கு ஒப்படைக்கப்பட்டது. இது ஏன்” என்று கேள்வி எழுப்பினார் ஆளுநர் ரவி. ஆனால், குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்த உடனேயே என்.ஐ.ஏ.வே தானாக முன்வந்து விசாரணையைத் தொடங்கிவிட்டது, தமிழக அரசும் நான்கு நாள் இடைவெளியிலேயே வழக்கை என்.ஐ.ஏ.விடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்துவிட்டது. இதனையெல்லாம் அமைச்சர் தங்கம் தென்னரசு எடுத்துக்காட்டிப் பேசியது சங்கிகளைப் பார்த்துக் காறித்துப்புவதாக இருந்தது.

கோவையில் தீவிரவாதிகளின் தற்கொலைப்படைத் தாக்குதல் திட்டம் வெற்றிகரமாக நிறைவேறியிருந்தால் தமிழக அரசு கலைக்கப்பட்டிருக்கும் என்று வெளிப்படையாகவே மிரட்டினர் பா.ஜ.க.வினர். ஆனால், இதையெல்லாம் கேட்பதற்குக் கூட தமிழகத்தில் ஆள் இல்லாமல் போய்விட்டது என்பதுதான் குண்டுவெடிப்பு தொடர்பாக சங்கப் பரிவாரக் கும்பலின் பிரச்சாரத்தின் நிலைமை.

இஞ்சி தின்ற குரங்கு வாயெரிச்சலில் செய்வதறியாமல் குதிப்பதுபோல், இம்மதவெறிக் கும்பல் தங்கள் நோக்கங்களை ஈடேற்றிக்கொள்ள முடியாமல், மூக்குடைபடுகிறோமே என்ற பதற்றத்தில் சகட்டு மேனிக்கு உளறிக் கொண்டிருந்தது.

000

வடமாநிலங்களைப் போல தமிழகத்திலும் முஸ்லிம் மக்களை பெரும்பான்மை மக்களிடமிருந்து தனிமைப்படுத்துவது, தி.மு.க. ஆட்சியைக் கலைத்து பா.ஜ.க. ஆட்சியை நிறுவுவது ஆகியவைதான் சங்கப் பரிவாரக் கும்பலின் உடனடி நோக்கங்களாகும். இந்த நோக்கங்களை ஈடேற்ற கோவை குண்டுவெடிப்புப் பிரச்சினையைப் பயன்படுத்த இயலாமல் போனது சங்கப்பரிவாரக் கும்பலுக்கு பெருத்த அடியாகும்.

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து மட்டும், அரியலூர் பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை, திருவாரூரில் கருணாநிதியின் பெயரை தெருவுக்கு வைப்பதற்கு நடந்த முயற்சி, ஆ.ராசா மனுதர்மத்தை அம்பலப்படுத்தியது உள்ளிட்டு பல்வேறு நிகழ்வுகளைப் பயன்படுத்தி மதவெறி, தி.மு.க. எதிர்ப்பரசியலை மேற்கொண்டது எதுவும் பலனளிக்கவில்லை. பா.ஜ.க.வினரே பெட்ரோல் வெடிகுண்டுகளை தங்களது வீடுகளில் வீசிவிட்டு பீதியூட்ட மேற்கொண்ட கேடுகெட்ட முயற்சிகளெல்லாம் உடனுக்குடன் அம்பலப்பட்டுப் போனது.

பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக, மாநில அரசு வரியைக் குறைக்க வேண்டும் என்றும் விலைவாசியைக் குறைக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டங்களைச் செய்வது; இந்தி மொழிக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டே, காசி தமிழ்ச் சங்கமம் என்ற பெயரில் விழா நடத்துவது, ஆளுநர் மூலமாக தமிழைப் பார்ப்பனியத்துடன் முடிச்சுப் போட்டு இழிவுபடுத்துவது; பி.எஃப்.ஐ. தடை, எஸ்.டி.பி.ஐ. அலுவலங்களில் சோதனை ஆகிய அனைத்தும் அரசியல் ரீதியாகவும் கருத்தியல் ரீதியாகவும் தோல்வியடைந்து வருகின்றன. அந்தவகையில்தான் கோவை குண்டுவெடிப்புச் சம்பவத்திலும் பா.ஜ.க.விற்கு இந்த பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தின் பார்ப்பன எதிர்ப்பு மரபு இதற்கு காரணமாக இருந்தாலும், இந்த நேர்மறைக் கூறை வைத்து மட்டுமே பா.ஜ.க.வால் தமிழகத்தை வெற்றிக் கொள்ள முடியாது எனக் கருதி இறுமாந்திருக்க முடியாது.

தமிழகத்தில் சித்தாந்தரீதியாக ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலால் காலூன்ற முடியவில்லை என்றபோதும், அமைப்பு ரீதியாக தங்களுடைய அடித்தளங்களை விரிவுபடுத்தி வருகின்றது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. நீதித்துறை, போலீசுத்துறை, கல்வித்துறை என அரசின் கட்டுமானங்கள் அனைத்திலும் ஆர்.எஸ்.எஸ். தனது ஆட்களை வேகமாக நுழைத்துக் கொண்டிருக்கிறது. அரசுப் பள்ளிகளிலும்கூட ஆர்.எஸ்.எஸ். ஷாகா நடத்தப்படுகின்றன. கோவையில் ஜனநாயக சக்திகள் கோட்சேவை விமர்சிக்கத் தடை, மோகன் பகவத்தின் தமிழக வருகையை ஒட்டி மதுரை துணை வட்டாட்சியர் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டது, இந்து முன்னணி எதிர்ப்பு தெரிவித்ததால் உணவுத் திருவிழாவில் மாட்டுக்கறிக்கு தடை, கள்ளக்குறிச்சி மெட்ரிக் பள்ளிக்கு எதிரான போராட்டத்தில் போலீசின் செயல்பாடு உள்ளிட்டு பல்வேறு நிகழ்வுகள் அதற்குச் சான்றுகளாக உள்ளன.


படிக்க : மதக் கலவரத்தைத் தூண்டும் பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜகவினரை கைது செய் || ஆர்ப்பாட்டம்


இன்னொருபக்கம், ரவுடிகளையும் கிரிமினல் குற்றவாளிகளையும் தங்களது கட்சியில் இணைத்துக் கொள்வது, சாதி அமைப்புகளை வளைப்பது, செல்வாக்குள்ள மாற்றுக் கட்சி நபர்களை விலைபேசி வாங்குவது போன்ற நடவடிக்கைகள் மூலம் சங்கப் பரிவாரக் கும்பல் தமது அமைப்புகளை வலுப்படுத்தி வருகிறது. ஓட்டுச் சீட்டு அரசியல் உருவாக்கியுள்ள பிழைப்புவாத சிந்தனையை மூலதனமாக்கிக் கொண்டும், காசை வாரியிறைத்தும் தெருவுக்குத் தெரு பிள்ளைப் பிடிப்பதைப்போல உறுப்பினர் சேர்க்கும் பணியில் வெறித்தனமாக ஈடுபடுகிறது பா.ஜ.க.

ஆகையால், இந்த பாசிஸ்டுகளை அரசியல்ரீதியாக மட்டுமல்ல, அமைப்புரீதியாக முறியடிப்பதும் அவசியமாகும். பெரும்பான்மை மக்களை அரசியல்ரீதியாக வென்றெடுத்த பின்னர்தான் பாசிஸ்டுகள் ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற முடியும் என்று கருதி நாம் அலட்சியமாக இருக்க முடியாது. அரசுக் கட்டுமானத்தில் கட்டமைத்துவரும் வலைப்பின்னலும், பிழைப்புவாத பொறுக்கி அரசியலின் மூலம் தாம் சேர்த்துவரும் குறிப்பிட்ட அளவு மக்கள் அடித்தளமுமே பாசிஸ்டுகள் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற போதுமானது.

எனவே, தமிழகத்திலுள்ள பாசிச எதிர்ப்பு சக்திகள் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பலை அமைப்புரீதியாக முறியடிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்-இளைஞர்கள், சிறுவணிகர்கள் உள்ளிட்டு அனைத்து தரப்பு உழைக்கும் மக்களையும் காவி கும்பலுக்கு எதிராக அமைப்புரீதியாக அணிதிரட்டி பாசிஸ்டுகளின் ஒவ்வொரு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் போராடுவதன் மூலமே பாசிசத்தை வேரடி மண்ணோடு பிடுங்கி எறிய முடியும்!


வெண்பா

பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் போராட்டம்! பாராமுகம் காட்டிவரும் தமிழக அரசு!

ப்பந்த அடிப்படையில் பணி உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 26.12.2022 அன்று காலை 10 மணி முதல் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கல்லூரி கல்வி இயக்குனரகம் முன்பு பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் முற்றுகைப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அப்போராட்டத்தை தலைமையேற்று நடத்திவரும் பார்வையற்ற பட்டதாரி இளைஞர் சிங்காரவேலன் கூறுகையில், “நாங்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இவ்வகையான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறோம். எந்த அரசும் தற்போது வரை எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற துளியும் முயற்சி எடுக்கவில்லை. இந்த சமூகநீதி பேசும் ஆட்சியில், ஏதாவது நடக்குமா என்பதும் சந்தேகத்திற்கு உரியதுதான். ஏன் என்றால், அமைச்சரை பார்த்து எங்கள் பிரச்சினையை முன்வைக்கலாம் என வந்தோம். அவரை பார்க்க முடியாது என்றனர். துறைச் செயலாளரை பார்க்க முயன்றால் ஒரு சில நபர்கள் மட்டும் வாருங்கள் என்று கூறி தவிர்த்துவிடுகிறார்கள். ஆனால், எங்கள் கோரிக்கையோ நாங்கள் அனைவரும் சந்திக்க வேண்டும் என்பதுதான். ஆனால், கடைசி வரை அலுவலகத்தின் வாசலிலேயே அமர்ந்து முழக்கமிட்டு சோர்ந்து நாங்களாகவே திரும்பிபோக வேண்டும் என்பதுதான் ஆட்சியாளர்கள், அதிகாரிகள் நினைப்பது. அதுதான் நடக்கவும் செய்கிறது.

படிக்க : கௌரவ விரிவுரையாளர்கள் : உயர்கல்வித் துறையின் நவீனக் கொத்தடிமைகள்!

பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டாதாரிகளாகிய நாங்கள், கல்லூரி படிப்பை முடிப்பதற்கும் பட்டம் பெற்று ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவதற்கும் பொருளாதார ரீதியாக சமூக ரீதியாக பலகட்ட இன்னல்களை சந்தித்து வந்துள்ளோம். குறிப்பாக பார்வையற்றவர்களை பெற்றோர்கள் பராமரிப்பதே கடினமான நினைக்கும்  சூழ்நிலையில் எங்களை படிக்க வைத்து பட்டம் பெற துணை நின்ற பெற்றோர்கள் வயதுமூப்பின் காரணமாக இன்று கடுமையான பொருளாதார  இன்னல்களை சந்தித்து வருகின்றன. பல ஆயிரம் செலவு செய்து படித்து இன்று வரை ஒரு உத்தரவாதமான வேலை ஒன்றும் கிடைக்கவில்லை என்ற சூழ்நிலை எங்களுக்குள் பல கேள்விகளை எழுப்புகிறது. அனைத்து தடைகளையும் கடந்து இன்று பி.ஏ, பி.எட், எம்.எட், பி.எச்.டி, ஆகிய படிப்புகளை படித்தும், நெட்(NET), செட்(SET), டெட் (TET) ஆகிய தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் அதற்கு உண்டான தகுதியை வைத்திருந்தாலும், எங்களை புறக்கணிக்கவே செய்கின்றனர்.

அதன்படி தேர்ச்சி பெற்று ஆசிரியராக இருக்கும் நாங்கள். தனியார் கல்லூரிகளில் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்துவந்தோம். அதன்பின் கொரோனா பெருந்தொற்றை காரணம்காட்டி  அவர்களும் எங்களை நீக்கிவீட்டனர். இந்த பொருளாதார நெருக்கடி சூழலில்தான் அரசு அறிவித்துள்ள கௌரவிரிவுரையாளர்கள் காலிபணியிடத்தில் பார்வையற்ற பட்டாதாரியாகிய எங்களுக்கு முன்னுரிமை மற்றும் எண்ணிக்கையின் அடிப்படையில் இட ஒதுக்கீடு தர வேண்டும் என்று போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்து வருகிறோம்” என்றனர்.

அரசு ஏற்கெனவே நடைமுறைபடுத்தி கொண்டிருக்கும் நூறு பேருக்கு ஒருவர் என காலிபணியிடத்தை ஒதுக்குவது என்பது எந்த வகையில் சரியானது தமிழ் பாடத்தை மெஜராக முடித்த பார்வையற்ற பட்டதாரிகளே இருநூறு பேர் இருக்கிறோம் என்று நிலைமையை எடுத்து முன்வைக்கிறார் பட்டதாரி ஒருவர்.

இப்படி அரசும் தனியார் கல்வி நிறுவனங்களும் எங்களை பணி அமர்த்தாமல் புறக்கணிப்பதால் உயர்படிப்பு படித்த பல பார்வையற்ற பட்டதாரிகள் பேருந்துகள் மற்றும் இரயில்களில் கடலை மிடாய், பர்பி, மிட்டாய் விற்பது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டனர். தற்போதைய சூழ்நிலையில் நாங்களும் அந்நிலைக்கே தள்ளப்படுவோம் என கவலையோடு அரசை நோக்கி கேள்வி எழுப்புகிறோம் என்றார்.

“பி.ஏ முடிச்சோம் சார், ஏம்.ஏ முடிச்சோம் சார், பி.ஏட் முடிச்சோம் சார், எம்.ஏட் முடிச்சோம் சார்”; “வேலை மட்டும் இல்ல சார்” என்று முழக்கமிட்டது சுற்றி நின்றவர்களை திகைக்க செய்தது. நன்றாக கண் தெரியும் நாமே ஒரு பட்டபடிப்பு மட்டுமே முடித்துள்ளோம். ஆனால் பார்வையற்ற இவர்களோ தகுதித் தேர்வு வரை முடித்துள்ளார்களே என்று.

படிக்க : கூலி அடிமைகளாக மாற்றப்படும் ஆசிரியர்கள்! நொறுங்கி விழுந்து கொண்டிருக்கும் அரசு கல்வி கட்டமைப்பு!

அப்போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பார்வையற்ற பட்டதாரிகள் இருவர் ஏன் நம்மைவிட போலீஸ்காரர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்று ஒருவர் கேட்க மற்றொரு கண்பார்வையற்ற நாம் குண்டு போட்டு விடுவோம் என்றுதான் என்று கூறினார். மேலும் ஏன் அமைச்சர், துறைச் செயலாளர் கீழ் இறங்கி நம்மிடம் பேச்சுவார்தை நடத்த வரவில்லை என்று ஒருவர் கேட்க, வந்து நின்று பேசினால் கால்கள் வழிக்கும் அல்லவா என்று அதிகாரிகளை கடிந்துகொண்டனர். இறுதி வரை யாரையும் சந்திக்க முடியாத நிலையில் மூன்றுபேர் மட்டும் அதிகாரியை சந்தித்து கோரிக்கையை வைத்தனர். வழக்கம்போல், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி பார்வையற்றவர்களை ஊமையாக்கிவிட்டனர் அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும்.

அனைத்து அரசுத்துறை பணிகளும் தனியார்மயமாக்கப்படுவது தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இச்சூழ்நிலையில் இவர்கள் நடைமுறைப்படுத்தி கொண்டுவரும் கான்ட்ரக்ட் வகையிலான ஒப்பந்த வேலையையாவது கொடுங்கள் என்று நம்மை இந்த நிலையை மறைமுகமாக ஏற்றுக்கொள்ள வைக்கின்றனர். அதுதான் இனி இயல்புநிலையாக மாறும் என்பதிலும் நமக்கு மாற்றுக்கருத்து இல்லை.

வினவு செய்தியாளர்கள்