Monday, June 29, 2026
முகப்பு பதிவு பக்கம் 225

ஜாலியன் வாலாபாக் நினைவிடம் : கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை ?

சுதந்திரப் போராட்டத்தில் காட்டிக் கொடுத்ததையும், வெள்ளைக்காரனின் காலை நக்கிப் பிழைத்ததையும் தாண்டி ஒன்றும் செய்திடாத சங்க பரிவாரக் கும்பலின் கையில் தியாகத்தின் சின்னத்தைக் கொடுத்தால் அதன் கதி என்னவாகும் ? குரங்கு கையில் கிடைத்த பூமாலையின் கதிதான் ஆகும். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள, ஜாலியன் வாலாபாக் தியாகிகள் நினைவிடத்தை புணரமைப்பதாகக் கூறி விடுதலைப் போரின் அந்த தியாகச் சின்னத்தை கேளிக்கை மைதானமாக மாற்றியுள்ளது.
ஜாலியன் வாலபாக்கில் நடந்த மூர்க்கத்தனமான படுகொலைகள் தான் நமக்கு பகத்சிங்கைத் தந்தது. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் மிக முக்கியமான அடையாளமாக அது பராமரிக்கப்பட்டு வந்தது. இத்தகைய நினைவிடங்கள், அந்த வரலாற்றுச் சம்பவங்களை நினைவில் ஏற்றிக் கொள்ளவும், அங்கு நிகழ்ந்த கொடூரத்தை உணரவும், தியாகிகளை நினைவுகூரவும் தான் அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.
உலகம் முழுவதும் இதுதான் நடக்கிறது. ஆனால், சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்காதது மட்டுமல்ல காட்டிக்கொடுத்த வரலாறும் கொண்ட ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் அந்த நினைவிடத்தின் தியாக உணர்வை அழித்து அதை கேளிக்கைக்கான இடமாக மாற்றியமைத்தது பற்றிதான் இக்கட்டுரை பேசுகிறது.
அமிர்தசரஸில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவிடமானது, இரண்டு ஆண்டுகள் மறுசீரமைப்பு நடந்த பிறகு, நாட்டுப்பற்றைத் தூண்டும் என்று எதிர்பார்க்கக் கூடிய ஒரு தோற்றத்தைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால், இந்த திட்டம் அனைத்து தரப்பிலிருந்தும் குறிப்பாக, தியாகிகளின் குடும்பங்களிலிருந்தும் அதிருப்தியை பெற்றிருக்கிறது. தங்கள் முன்னோர்களின் தியாகத்தை, கண்ணைக் கூசச் செய்யும் பகட்டான விளக்குகள் மற்றும் சுவரோவியங்கள் மூலமாக அழிக்கும் முயற்சி இது என்ற குற்றம்சாட்டியிருக்கின்றனர்.
படிக்க :
ஜாலியன்வாலாபாக் படுகொலையும் உத்தம் சிங்கின் இருபதாண்டு கால காத்திருப்பும் !
ஜாலியன்வாலா பாக் படுகொலையின் நாட்குறிப்புகள் !
கொடூரமான வன்முறையினால் தங்களது இன்னுயிரை இழந்தவர்களுக்கான ஒரு நினைவுச் சின்னத்திற்குப் பதிலாக, அரசாங்கம் இந்த நினைவிடத்தை ஒரு பொழுதுபோக்கு இடம்போல மாற்றிவிட்டது என குற்றம்சாட்டியுள்ளனர்.
ஜாலியன் வாலாபாக் தேசிய நினைவு அறக்கட்டளை மே 1, 1951 அன்று அமைக்கப்பட்டது. 1961, ஏப்ரல் 13-ம் தேதியன்று அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு முன்னிலையில் அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் இதை தொடங்கி வைத்தார். அப்போதிருந்து, ஜாலியன் வாலாபாக்கில் பல பழுதுகள் ஏற்பட்டுள்ளன. அவற்றை அந்தந்த அரசுகள் சரி செய்து வந்தன. ஆனால், அதன் சாரம் ஒருபோதும் சிதைக்கப்படவில்லை. 2019-ல் ஜாலியன் வாலாபாக் படுகொலை 100 ஆண்டுகளை நிறைவு செய்தபோது, மத்திய அரசு ரூ.20 கோடி மதிப்பீட்டில் இதை மறுசீரமைப்பு செய்யப்போவதாக அறிவித்தது.
புதுப்பிக்கப்பட்ட ஜாலியன் வாலாபாக் நினைவிடம் பற்றிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட பின் அது வைரலாகி, குறிப்பாக அதன் மாற்றப்பட்ட நுழைவு வாயில், வெளியேறும் வழி,  தாமரைகுளம் மற்றும் தியாகிகளின் நினைவாக 28 நிமிட ஒலி மற்றும் ஒளி நிகழ்ச்சி ஆகியவை குறித்து பொதுமக்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். வரலாற்று ஆசிரியர்கள் முதல் எதிர்க்கட்சித் தலைவர்கள், எழுத்தாளர்கள், உள்ளூர்வாசிகள், புலம்பெயர்ந்த பஞ்சாபியர் மற்றும் உலகெங்கிலும் உள்ள மக்கள் என அனைவரும் ஜாலியன் வாலாபாக் நினைவுச் சின்னத்தை கேளிக்கைக் கூடமாக மாற்றியதன் மீது தமது கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருக்கின்றனர்.
தியாகிகளின் நினைவாக அதன் உண்மையான சாராம்சத்திற்கு ஏற்ப ஜாலியன் வாலாபாக் நினைவுச் சின்னம் மீட்டெடுக்கப்படாத வரை எதிர்காலத்தில் “தேசிய மற்றும் மாநில அளவில்” நடத்தப்படும் அனைத்து நிகழ்ச்சிகளையும் புறக்கணிக்கப்போவதாக தியாகிகளின் சந்ததியினர் அறிவித்துள்ளனர்.
புனரமைப்புத் திட்டத்தில் தியாகிகளின் குடும்பத்தினரை ஈடுபடுத்தாததற்காகவும், சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அரசு வழங்கும் தாமிரப் பட்டயம், சான்றிதழ்கள் மற்றும் பிற வசதிகளையும் வழங்க வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையை புறக்கணித்ததற்காகவும் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் மற்றும் அறக்கட்டளையின் பிற உறுப்பினர்களையும் அவர்கள் கடுமையாக விமர்சித்தனர்.
ஜாலியன் வாலாபாக் சுதந்திரப் போராட்ட வீரர்கள் அறக்கட்டளையின் தலைவரும், ஜாலியன் வாலாபாக்கில் வீரமரணம் அடைந்த லாலா வசூ மாலின் கொள்ளுப் பேரனுமான சுனில் கபூர், மத்திய அரசு இந்த நினைவிடத்தில் செய்துள்ள மாற்றங்களைக் கடுமையாக எதிர்ப்பதாக தி வயர் நிறுவனத்திடம் தெரிவித்தார்.
“ஜாலியன் வாலாபாக் நுழைவாயில் இப்போது ஒரு திருமண மண்டபம் போல் காட்சியளிக்கிறது. காடி விளக்குகள் மற்றும் அதன் சூழல் ஒரு வணிக வளாகத்தை (Shopping Mall) உங்களுக்கு நினைவூட்டுகிறது. இப்போது இது நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் பாரம்பரியத்தை சித்தரிக்கவில்லை. புதிதாக புதுப்பிக்கப்பட்ட இந்த நினைவிடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து தேசிய மற்றும் மாநில அளவிலான விழாக்களையும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்” என்று அவர் கூறினார்.
ஜாலியன் வாலாபாக் தேசிய நினைவு அறக்கட்டளை நிகழ்வுகளில் தியாகிகளின் குடும்பத்தினரை ஒருபோதும் சேர்க்கவில்லை என்றும், அப்படி சேர்த்திருந்தால் இந்த மாற்றங்களுக்கு எதிராக அவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பார்கள் என்றும் கபூர் கூறினார். புனரமைப்பில் உள்ள மூன்று முக்கிய குறைபாடுகளை சுட்டிக்காட்டிய அவர், “ஜாலியன் வாலாபாக் செல்லும் சந்து சுவர்கள் புடைப்புச் சிற்பங்களுடன் முற்றிலும் மாற்றப்பட்டதும், நீண்ட நுழைவாயிலின் திறந்த நிலையிலான மேல்புறம் இரும்பு கிரில்களால் மூடப்பட்டுள்ளதும் விடுதலை வேட்கைக்கான உத்வேக உணர்வூட்டுவதை தடைப்படுத்துகிறது. அது ஜெனரல் டயரின் வீரர்கள் எவ்வாறு மக்கள் வெளியேற்றத்தைத் தடுத்து ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றனர் என்ற கொடூரத்திற்கான ஒரு சான்றாகும். அந்த உணர்வை இப்போது அழித்துவிட்டனர்.
இரண்டாவதாக, அவர்கள் ‘ஷஹீதி கூ’ (தியாகியின் கிணறு) மூலத்தை சிதைத்து அதை கண்ணாடியால் மூடினர். மூன்றாவதாக தியாகிகளின் புகைப்படங்களையும் அவர்கள் அகற்றிவிட்டனர். இது மிகவும் அவமானகரமானது. விடுதலைக்கான போராட்டங்களில், பஞ்சாபிகள் தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்தனர் என்பது மறுக்க முடியாத வரலாற்று உண்மை. இந்த அரசாங்கம் அந்த வரலாற்றை என்றென்றும் துடைத்தெறிய விரும்புகிறது” என்று அவர் மேலும் கூறினார்.
ஜாலியன் வாலாபாக் படுகொலையில் தனது முப்பாட்டனார் லாலா வாசூ மால் வீரமரணம் அடைந்தபிறகு, அவர்களின் குடும்பத்தில் எந்த மணமகளும் பாரம்பரிய சிவப்பு வளையல்களை அணிந்ததில்லை, இது பயங்கரவாதத்தை நினைவு கொள்ளும் வகையிலான ஒரு அடையாளம் என்று சுனில் கபூர் குறிப்பிட்டார். ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போக்கை மாற்றிய அப்படுகொலையுடன் அவர்கள் தொடர்பு கொண்டிருந்ததைக் குறிக்கும் குடும்ப வழக்கம் இன்னும் அப்படியே உள்ளது.
ஜாலியன் வாலாபாக் அருகே உள்ள கடைக்காரர்கள் குழுவும் கட்டுமான தளம் பொதுமக்களுக்காக மூடப்பட்டதால், அவர்களும் இந்த மாற்றங்களுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்க முடியவில்லை என்று கூறினர். “மாற்றப்பட்ட சந்து கண்டு நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். இது ஒரு ஹோட்டல் நுழைவாயில் அல்லது ஒரு கேளிக்கை பூங்கா போல் தெரிகிறது” என்று ஒரு கடைக்காரர் கூறினார். “ஒரு சோகமான மற்றும் கடந்த காலத்தின் அந்த வரலாற்று உணர்வைக் காண முடியவில்லை. இது பெரும் தவறு” என்றார் மற்றொருவர்.
மத்திய அரசின் ‘முயற்சியை’ பாராட்டும், ஜாலியன் வாலாபாக் ஷாஹீத் பரிவார் சமிதியின் தலைவர் மனிஷ் பெஹல்கூட, “ சந்து மாற்றப்பட்டிருக்கக் கூடாது” என்று சுட்டிக்காட்டினார்.
“இந்த நிகழ்ச்சியில் அரசாங்கம் எங்களை கௌரவித்தது, எங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், குறுகிய பாதை அதன் அசல் தன்மையை இழந்துவிட்டதாக நான் கூட உணர்கிறேன். முன்னதாக, ஜாலியன் வாலாபாக் ‘நானக் ஷாஹி’ செங்கற்களை (சிறிய, மெல்லிய செங்கற்கள்) கொண்டிருந்தது; ஆனால் அவையும் அகற்றப்பட்டுள்ளன. தியாகியின் கிணறு இன்னும் ஒரே மாதிரியாக உள்ளது; ஆனால் சந்து மாற்றம் பொதுமக்களுக்குப் பிடிக்காத ஒன்று” என்று 75 வயதான அவர் கூறினார்.
மனிஷ் பெஹலின் தாத்தா லாலா ஹரி ராம் பெஹலும் இந்த படுகொலையில் வீரமரணம் அடைந்தார். அப்போதிருந்து சுதந்திரத்திற்கான போராட்டத்தில் அவரது குடும்பம் முன்னணியில் உள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூட ஜாலியன் வாலாபாக் இப்படி சீரமைக்கப்பட்டதை விமர்சித்து ட்வீட் செய்தார், “சுதந்திரத்திற்காக போராடாதவர்கள், போராடியவர்களைப் புரிந்து கொள்ள முடியாது.” என்று தெரிவித்திருக்கிறார்.
ஆச்சரியம் என்னவென்றால், முற்றிலும் மாறாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் “எனக்கு இது மிகவும் நன்றாக இருக்கிறது”. என்றூ குறிப்பிட்டிருக்கிறார். குறிப்பாக, ஆகஸ்ட் 14 அன்று, கேப்டன் அமரீந்தர் சிங்கும் அமிர்தசரஸில் ஜாலியன் வாலாபாக் நூற்றாண்டு நினைவுப் பூங்காவை திறந்து வைத்த விழாவில் பங்கேற்றார்.
பொதுமக்களின் கோபத்திற்கு பதிலளித்த அமிர்தசரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் குர்ஜீத் சிங் அஜ்லா, “பா.ஜ.க தலைவர் ஷ்வெயிட் மாலிக் இந்த திட்டத்தின் அறங்காவலராக இருந்தார், மேலும் அவர்தான் மத்திய அரசுடன் தொடர்புகளை பராமரிப்பதுடன், முழு வளர்ச்சியையும் கண்காணித்தார். நாங்கள் ஒருபோதும் அறக்கட்டளையில் பணிகளில் ஈடுபடவில்லை. திறப்பு விழா நாளன்றுதான் நாங்கள் அழைக்கப்பட்டோம். உண்மை என்னவென்றால், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்துடன் பாஜக-வுக்கு எந்த தொடர்பும் இல்லை. அவர்கள் வரலாற்றில் எந்த பங்களிப்பும் செய்யவில்லை. அதனால்தான் அவர்கள் அதை அழிக்க விரும்புகிறார்கள்” என்று கூறினார்.
மேலும், சீரமைப்பின்போது புனரமைப்புத் தளம் முழுவதும் பொதுமக்களுக்கு மூடப்பட்டிருந்தது என்பதை சுட்டிக் காட்டினார்.
இதற்கிடையில், மாநிலங்களவை எம்.பி-யும் முன்னாள் பா.ஜ.க பஞ்சாப் தலைவருமான ஷ்வெயிட் மாலிக், ஜாலியன் வாலாபாக் நினைவு அறக்கட்டளையின் அறங்காவலராகவும் இருந்தார். அவரை தொடர்பு கொள்ள தி வயர் இணையதளம் பலமுறை முயற்சி செய்தபோதிலும் கருத்து தெரிவிக்க அவர் கிடைக்கவில்லை. அவரது அலைபேசி எண் அணைக்கப்பட்டது.
வரலாறு
பக்ரி சம்பல் ஜாட்டா முதல் ஜாலியன் வாலாபாக் வரை என்ற தனது புத்தகத்தில், அதன் ஆசிரியர் டாக்டர் பிரேம் சிங் 1919-ம் ஆண்டின் தொடக்கத்தில், பிரிட்டிஷ் பேரரசை உலுக்கிய மக்கள் போராட்டத்தின் அரங்காக பஞ்சாப் மாறியது என்று எழுதினார்.
ரௌலட் மசோதா நாட்டில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது, 1919, மார்ச் 18-ம் தேதியன்று வைஸ்ராய் கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட பின்னர், அது ரௌலட் சட்டம் என்று அழைக்கப்பட்டது.
அன்று கவுன்சிலின் மூன்று இந்திய உறுப்பினர்கள் தங்கள் ராஜினாமாவை அறிவித்தனர். அவர்கள் மதன் மோகன் மாளவியா, மசார்-உல்-ஹக் மற்றும் முகமது அலி ஜின்னா ஆகியோர் ஆவர்.
அரசாங்கம் “அராஜகவாத மற்றும் புரட்சிகர இயக்கங்களைக்” கையாளுவதற்கு  அதற்கு “அவசரகால அதிகாரங்கள்” வழங்கப்பட வேண்டும் என்று இந்த மசோதா தெளிவாகக் கூறியது.
இந்த மசோதாவின் அதிகாரப்பூர்வ விளக்கம், அரசாங்கக் கொள்கை மீதான விமர்சனத்தின் லேசான வெளிப்பாடு கூட தண்டனைக்குரியதாக ஆக்கப்படலாம் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. இதற்குமேல் குற்றப் புலனாய்வுத் துறையின் சாதாரண கான்ஸ்டபிள் கூட பொதுமக்களில் யார் ஒருவர் மீதும் தேசத்துரோகக் குற்றம் சாட்ட அதிகாரம் இருந்தது. ஆனால், குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு நீதிமன்றத்தை அணுக உரிமை இல்லை. அவரால் ஒரு பிளீடரை நியமிக்க முடியாது. மேல்முறையீடு செய்ய முடியாது. பத்திரிகைகளின் மீதான ஒடுக்குமுறை அவலநிலையும் இதேபோலத்தான் இருந்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டிய கடமை போலீசுத்துறைக்கு இல்லை.
படுகொலை
1919 பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் ரௌலட் மசோதாவுக்கு எதிரான போராட்டம் தொடங்கிய போது, பஞ்சாபில் ரௌலட் மசோதாவுக்கு எதிரான கடுமையான எதிர்ப்பு வளர்ந்தது என்று டாக்டர் பிரேம் சிங் குறிப்பிடுகிறார்.
ஜாலியன்வாலா பாக் தியாகிகள் நினைவிடம் அஞ்சலி செலுத்தும் ஜாலியன்வாலா பாக் தியாகிகளின் குடும்ப உறுப்பினர்கள்.
கர்னல் ரெஜினால்ட் எட்வர்ட் ஹாரி டயர் ஏப்ரல் 13-ம் தேதியன்று காலை ஜலந்தர் கன்டோன்மெண்டில் இருந்து அமிர்தசரஸ் நகருக்கு இராணுவத்தின் ஒரு படைப்பிரிவுடன் புறப்பட்டார். சீக்கியர்களின் அறுவடைத் திருநாளான பைசாகியை மக்கள் கொண்டாடிக் கொண்டிருந்தனர். அத்தோடு டாக்டர் சத்யபால் மற்றும் டாக்டர் சைபுதீன் கிட்ச்லு ஆகியோர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து மாலை 4 மணிக்கு நடைபெற உள்ள பொதுக்கூட்டத்திற்காக ஜாலியன் வாலாபாக்கில் கூடுவதற்கும் மக்கள் முடிவு செய்திருந்தனர். ரௌலட் மசோதாவுக்கு எதிராகப் போராடியதற்காக இந்த இரு தலைவர்களும் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தனர். இது மக்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
ஏப்ரல் 13 மாலை வாக்கில், சில நிமிடங்களில் நூற்றுக்கணக்கான இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் பாக் சுவர் வளாகத்தைச் சுற்றி கிடந்தனர். குறுகலான பாதைகளில் தப்பிக்க முயன்றவர்கள்தான் முதலில் சுடப்பட்டனர். அந்த இடத்திலேயே இருந்த கர்னல் டயர், அதிகபட்ச எண்ணிக்கையிலான மக்கள் இருந்த இடங்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார். சுவரில் ஏற முயன்றவர்களும் இதேபோல் சுடப்பட்டனர். பாக் அருகில் உள்ள தெருக்களில் பல சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
படிக்க :
பட்டேல் சிலைக்கு 3000 கோடி – ஜாலியன் வாலாபாக் நினைவிடத்திற்கு 1 ரூபாய் கூட இல்லை !
ஜாலியன்வாலா பாக் நூற்றாண்டு : தொடருகிறது விடுதலைப் போராட்டம் !
படுகொலைக்குப் பின்னர், டயர் தான் 1,650 சுற்றுகள் சுட்டதாக ஹண்டர் கமிஷனின் முன் ஒப்புக்கொண்டார். கவச வாகனங்ளை பாக் உள்ளே எடுத்துச் செல்ல முடிந்தால், அவற்றை எடுத்துச் சென்று சுடுவதற்கு பயன்படுத்தியிருப்பேன் என்றும் அவர் ஒப்புக்கொண்டார். அவரது வெடிமருந்துகள் தீர்ந்துவிட்டதால் துப்பாக்கிச் சூடு நிறுத்தப்பட்டதாக அவர் கூறினார். குற்றவாளிகளை தண்டிக்க விரும்புவதாக அவர் ஒப்புக்கொண்டார், ஏனெனில் அவர்கள் அவரது உத்தரவுகளை மீறி அங்கு கூடியிருந்தனர். ஏப்ரல் 14-ம் தேதி, இறந்தவர்களின் உடல்களை அடக்கம் மற்றும் தகனம் செய்ய அரசு அனுமதி அளித்தது. ஆனால், இறுதி ஊர்வலம் எதுவும் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால் ஊர்வலம் நடத்த முடியவில்லை.

இதுதான் ஜாலியன் வாலாபாக்கின் கொடூர வரலாறு. ஆனால் அந்தக் கொடூரத்தின் சாட்சியாக விளங்கிய தளத்தை கேளிக்கை விடுதியைப் போல அலங்கோலப்படுத்தியிருக்கிறது, வெள்ளைக்காரனின் கைக்கூலியாகத் திரிந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தேர்தல் பிரிவான பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு.

இதனைக் கண்டித்து பல்வேறு வரலாற்றாசிரியர்களும் அரசியல் தலைவர்களும் தெரிவித்த கண்டன செய்திகள் :

  • ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் முன்னாள் பேராசிரியர் சமன் லால் இந்த மறுசீரமைப்பை “வரலாற்றின் சிதைவு” என்றழைத்தார். “ஜாலியன் வாலாபாக்கிற்கு வருகை தரும் மக்கள் வலி மற்றும் வேதனையுடன் செல்ல வேண்டும். அவர்கள் (ஆட்சியாளர்கள்) இப்போது ஒரு அழகான தோட்டத்துடன், அதை ரசிக்கத்தக்க ஒரு இடமாக மாற்ற முயற்சித்திருக்கிறார்கள். அது ஒரு அழகான தோட்டமல்ல” என்று லால் மேலும் கூறினார்.
  • கிம் ஏ வாக்னர், லண்டனில் வாழும் வரலாற்றுப் பேராசிரியர்  ‘அமிர்தசரஸ் 1919 – அச்சத்தின் பேரரசு மற்றும் படுகொலையினை செய்வது’ என்ற நூலின் ஆசிரியருமாவார். அவர் புதுப்பித்துள்ளதைப் பார்த்ததும், (படுகொலை) “நிகழ்வின் கடைசி தடயங்கள் திறம்பட அழிக்கப்பட்டுவிட்டன” என்று ட்வீட் செய்தார்.
  • எதிர்க்கட்சித் தலைவர்கள் ராகுல் மற்றும் யெச்சூரி, இந்த நடவடிக்கையை “தியாகிகளுக்கு அவமதிப்பு” என்று விமர்சித்தனர்.
  • “இது நினைவுச் சின்னங்களை கார்ப்பரேட் மயமாக்குவது. (நினைவுகளை அழித்தொழிக்கும்) நவீன கட்டிடங்களாக கட்டி முடிப்பார்கள். பாரம்பரிய உணர்வுகளும் மதிப்பும் அழிக்கப்பட்டிருக்கும். தியாகிகளின் காலகட்டத்துடனும் அந்த தியாக உணர்வைப் பெறுவதும் என்பதுடன் போட்டு குழப்பிக் கொள்ளாமல் இவற்றைப் பார்த்து கடந்து செல்ல வேண்டும்” என வரலாற்றாய்வாளர் எஸ்.இர்ஃபான் ஹபீப் ட்வீட் செய்துள்ளார்.

நாகராசு
செய்தி ஆதாரம் :
The Wire

திமுக அரசு பட்ஜெட்டும் அரசுப் பள்ளிகளின் நிலைமையும் || சிறப்புக் கட்டுரை

ள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. “அரசுப் பள்ளிகளை நவீனப்படுத்தவும், அவற்றின் தரத்தை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளிகள் வறுமையின் அடையாளமல்ல, அவற்றைப் பெருமையின் அடையாளமாக மாற்றுவோம்”என நடப்புச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் அவர் அறிவித்திருக்கிறார்.
கடந்த பத்தாண்டுகளில் அரசுப் பள்ளிகள், குறிப்பாக ஆரம்பப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து, தனியார் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் பல அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன. தேசிய கல்விக் கொள்கையின்படி அரசுப் பள்ளிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மாணவர்கள் இல்லை என்றால், அத்தகைய பள்ளிகளை மூடிவிட்டுப் பல கிராமங்களுக்கு மையத்தில் பள்ளி வளாகத்தை உருவாக்க வேண்டும் என ஒன்றிய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. அதிமுக அரசும் அக்கொள்கையை ஏற்றுக் கொண்டது.
குறிப்பாக ஜூலை 04, 2019 அன்று தமிழகத்தில் 1,848 பள்ளிகளில் 10-க்கும் குறைவான மாணவர்கள் பயில்வதாகவும், அவற்றை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது.
படிக்க :
தமிழகத்தில் அதிகரித்து வரும் தனியார் பள்ளி கட்டணக் கொள்ளை !
♦ தமிழகத்தின் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழ்மொழி புறக்கணிப்பு!
ஜூலை 18, 2019 அன்று தமிழகத்தில் 1248 அரசு பள்ளிகள் மூடப்பட்டு, நூலகங்களாக மாற்றப்படும். நூலகங்களில் பணியாற்ற ஆசிரியர்களுக்கு பயிற்சி தேவையில்லை. அங்குள்ள ஆயாக்களே பணியாற்றுவார்கள் என கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாக செய்தி வெளியானது.
ஆனால் அதனை மறுத்து, “பள்ளிகளை மூடும் நோக்கம் அரசிற்கு இல்லை. மூடப்போவதும் இல்லை. மாணவர்களே இல்லாத பள்ளிகள் நூலகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும். அங்கே ஒரு ஆசிரியர் இருப்பார். அங்கிருக்கும் மாணவர்களுக்கேற்ப அந்த ஆசிரியர் தொடர்ந்து பணிகளை ஆற்றுவார்” என ட்விட்டரில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து இருந்தார்.
மேற்கூறிய சம்பவங்கள் அதிமுக அரசு தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த எடுத்த முயற்சிக்கான துலக்கமான எடுத்துக்காட்டுகள்.
கொரோனா வந்தபிறகு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. கொரோனா காலத்தில் வேலையிழந்து, வருமானத்தையும் வாழ்வாதாரத்தையும் இழந்த ஏழை, எளிய விளிம்பு நிலைக் குடும்பங்களைச் சார்ந்தவர்கள் தனியார் பள்ளிகளில் படித்து வரும் தங்கள் குழந்தைகளைக் கட்டணம் செலுத்திப் படிக்க வைக்க இயலாததால், அரசுப் பள்ளிகளில் சேர்க்கத் துவங்கினர். இதுவரையில் 2 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளிலிருந்து அரசுப் பள்ளிகளுக்கு வந்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
இதற்கு அரசுப் பள்ளிகளின் தரம் உயர்ந்ததுதான் காரணம் என்று சொல்லி விட முடியாது. ஏழை, எளிய குடும்பங்களின் வாழ்க்கைத் தரம் சரிந்ததால் ஏற்பட்ட மாற்றம் இது.
கொரோனா தொற்றுக் காலத்தில் அதிக பாதிப்புக்குள்ளானது கல்வி. தேசிய அளவில் ஆரம்பக் கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை பயிலும் 24.7 கோடி மாணவர்களுடைய கல்வி பாதிக்கப்பட்டு, மனஉளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். இந்தச் சவாலை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு, அரசுப் பள்ளிகளில் நிலவும் சில பிரச்சினைகளைப் புரிந்து கொண்டாக வேண்டும்.
தமிழக அரசுப் பள்ளிகளின் நிலைமை:
தமிழ்நாட்டில் உள்ள மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை 58,897. இதில் 35,621 பள்ளிகள் தொடக்கப் பள்ளிகளாகவும், 9,392 பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 5,788 பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 8,096 பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் உள்ளன.
அரசுப் பள்ளிகளை பொருத்த வரை 24,310 தொடக்கப் பள்ளிகள்; 7,024 நடுநிலைப் பள்ளிகள்; 3,135 உயர்நிலைப் பள்ளிகள்; 3,110 மேல்நிலைப் பள்ளிகள் உட்பட மொத்தம் 37,579 பள்ளிகள் உள்ளன.
தனியார்ப் பள்ளிகளைப் பொருத்த வரை தொடக்கப் பள்ளிகள் 5089, நடுநிலைப் பள்ளிகள் 763, உயர்நிலைப் பள்ளிகள் 2046, மேல்நிலைப் பள்ளிகள் 3764 உட்பட மொத்தம் 12,382 பள்ளிகள் உள்ளன.
அரசு உதவிப் பெறும் பள்ளிகளைப் பொருத்த வரை தொடக்கப் பள்ளிகள் 5021, நடுநிலைப் பள்ளிகள் 1508, உயர்நிலைப் பள்ளிகள் 589, மேல்நிலைப் பள்ளிகள் 1210 உட்பட மொத்தம் 8328 பள்ளிகள் உள்ளன.
தமிழ்நாட்டுப் பள்ளிகளில் உள்ள 5.6 லட்சம் ஆசிரியர்களில், 2.27 லட்சம் பேர் அரசுப் பள்ளிகளிலும், 77 ஆயிரம் பேர் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும், 2.53 லட்சம் பேர் தனியார்ப் பள்ளிகளிலும் பணிபுரிகின்றனர். மற்ற பிரிவுகளில் 4,552 ஆசிரியர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.
மொத்தம் 37,579 பள்ளிகள் உள்ள அரசுப் பள்ளிகளில் 2.27 லட்சம் ஆசிரியர்கள் தான் பணிபுரிகின்றனர். ஆனால், 12,382 பள்ளிகள் உள்ள தனியார் பள்ளிகளில் 2.53 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 45,93,422 பேரும், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 22,25,308 பேரும், தனியார்ப் பள்ளிகளில் 64,15,398 பேரும், மற்ற பள்ளிகளில் 83,755 மாணவ, மாணவிகளும் உள்ளனர்.
மொத்தம் 37,579 பள்ளிகள் உள்ள அரசுப் பள்ளிகளில் 45,93,422 மாணவ, மாணவிகள் தான் படிக்கின்றனர். ஆனால், 12,382 பள்ளிகள் உள்ள தனியார் பள்ளிகளில் 64,15,398 மாணவ, மாணவிகள் தான் படிக்கின்றனர்.
அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை தனியார் பள்ளிகளின் எண்ணிக்கையை விட 3 மடங்கு அதிகமாக உள்ளது. ஆனால், மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையிலும், ஆசிரியர்களின் எண்ணிக்கையிலும் தனியார் பள்ளிகள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
மேற்கூறியவற்றில் இருந்து பார்க்கும்போது தமிழக மாணவ மாணவிகள் அரசுப் பள்ளிகளை விட தனியார் பள்ளிகளை நோக்கிதான் செல்கின்றனர். இதை இப்படிக்கூட கூறலாம், இலவசக் கல்வி படிப்படியாக ஒழிக்கப்பட்டு காசு இருந்தால்தான் படிக்க முடியும் என்ற நிலை படிப்படியாக உருவாக்கப்படுகிறது.
2019-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், தமிழகத்தில் 2,391 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்ற தகவலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், பள்ளிக் கல்வித் துறையிடம் சமர்ப்பித்துள்ளனர்.
அரசின் கணக்கின்படியே பள்ளிகளின் நிலைமை இவ்வளவு மோசம் என்றால், உண்மை நிலவரம் இதைவிட மோசமாக இருக்கும். பள்ளிக் கல்வித் துறை அரசாணை நிலை எண் படி, 20 மாணவர்களுக்கு 1 சிறுநீர் கழிவறையும், 50 மாணவர்களுக்கு 1 மலக்கழிவறையும் இருக்க வேண்டும். இந்த அரசாணைகள் எல்லாம் காகிதத்தில்தான் உள்ளது. நடைமுறையில் எந்த பள்ளிக் கூடத்திலும் அமலாக்கத்திற்கு செல்லவில்லை.
உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் தங்களின் மேல்நிலைப் படிப்புக்கு செல்வது குறைவதன் மூலம், தமிழ்நாட்டின் இடைநிற்றல் விகிதமும் அதிகரிக்கிறது என்பதை நம்மால் உணர முடிகிறது. அதாவது, 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் அதிகரித்துள்ளது. இவர்கள் 9,10-ம் வகுப்போடு தங்களின் பள்ளிக் கனவையே இழக்கின்றனர். 2019-20-ல் தமிழ்நாட்டின் மொத்த உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் 9.6 % ஆக உள்ளது.
தமிழ்நாட்டில் ஆரம்பப் பள்ளிகளில், மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் 16% ஆக உள்ளது. இப்படி பல மாணவ, மாணவியர் இடைநிற்றலுக்கு உள்ளாவதால், குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிகை அதிகரித்து வருகிறது
இந்தளவுக்கு இடைநிற்றல் மாணவ மாணவியர் அதிகரிப்பதன் பின்னணியில் வேலைவாய்ப்பின்மையால் குடும்பத்தில் நிலவும் வறுமை உட்பட வெவ்வேறு குடும்ப சூழ்நிலை போன்றவை உள்ளது. 10-ம் வகுப்பு முடித்தவுடன் பலர் குழந்தைகள், குழந்தைத் தொழிலாளராக சென்று விடுகின்றனர்.
இப்படி இடைநிற்றல் அதிகமாவதால், குழந்தைத் தொழிலாளர்கள் அதிகமாவதை போல குழந்தைத் திருமணங்களும் அதிகளவில் நடைபெறுகின்றன. இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் 15 லட்சம் குழந்தை திருமணங்கள் நடைபெறுவதாக யுனிசெஃப் கூறுகிறது. தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் திருமணம் செய்துகொள்ளும் 4 பேரில் ஒருவருக்கு குழந்தை திருமணம் நடைபெறுவதாக தெரியவந்துள்ளது.
படிக்க :
இழிவாகப் பார்க்கப்படும் தாய்மொழி வழிக் கல்வி : ஒரு பெற்றோரின் அனுபவம் !
இந்துத்துவத்தை கற்பிக்க தனி கல்வி வாரியம் அமைக்கும் மோடி அரசு !
இப்படிப்பட்ட மோசமான நிலைமையில்தான் தமிழக அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு உள்ளது. அரசுப் பள்ளிகளை நாடி வருகிற, தனியார் சுயநிதிப் பள்ளிகளிலிருந்து விலகி வருகிற மாணவர்களைத் தக்கவைக்கவும், மேலும் மேலும் அதிகமானோரை ஈர்க்கவும் அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்துவதோடு கல்வித் தரத்தையும் உயர்த்த வேண்டும். தமிழகத்தில் பல மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையைத் தக்கவைப்பதோடு அதிகரிக்கவும் சமூகப் பார்வையோடு பல ஆசிரியர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.
‘குடி’மகன்களை வெளியேற்றிய முகப்பேர் பள்ளி
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ‘அம்பத்தூர் நகராட்சி தொடக்கப் பள்ளி’ 1935-ல் தொடங்கப்பட்டது. 2009-ல் இப்பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை 45. அவ்வாண்டு தலைமை ஆசிரியராக எஸ்.கிருஷ்ணவேணி பொறுப்பேற்றபோது, பள்ளி நிறைவடைந்து ஆசிரியர்களும் மாணவர்களும் வெளியேறும் முன்பாகவே சிலர் மதுபாட்டில்களுடன் பள்ளிக்குள் ‘குடி’யேறிவந்தார்கள். ஆசிரியர்கள் அச்சத்தோடு வெளியேறினார்கள். அப்பகுதி சமூக ஆர்வலர்களைச் சந்தித்துத் தலைமையாசிரியர் நிலைமையை எடுத்துக் கூறினார். அவர்களது தலையீட்டைத் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ‘குடி’மகன்கள் தடுக்கப்பட்டார்கள், பள்ளிக்குச் சுற்றுச் சுவரும் கட்டப்பட்டது.
ஆசிரியர்கள் செலவில் காலைச் சிற்றுண்டியும் சீருடையும் கொடுத்தனர். சில புரவலர்கள் மூலம் 100 நாற்காலிகளும் 12 மேஜைகளும் பெறப்பட்டன. பள்ளியின் தோற்றம் மாற்றப்பட்டது. குழந்தைகளுக்கு ஆங்கில மொழிப் பயிற்சி தனியாக அளிக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் உள்ள ஆர்வலர்கள் மூலம் 6 மடிக்கணினிகள், 6 மேசைக் கணினிகளுடன் கணினிப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. மாவட்ட ஆட்சியரை அழைத்து பள்ளி ஆண்டு விழா நடத்தப்பட்டது.
புளியமரப் பள்ளி என்று ஏளனமாகப் பார்க்கப்பட்ட காலம் போய், தலைநிமிர்ந்த புளியமரம் என முகப்பேரின் அடையாளமாக, அனைவரும் தேடி வரும் பள்ளியாக இது உள்ளது. இப்பள்ளி மாணவர் எண்ணிக்கை கொரோனாவுக்கு முன்பு 110 ஆக உயர்ந்திருந்தது. கரோனாவுக்குப் பிறகு மேலும் 90 மாணவர்கள் சேர்ந்திருக்கிறார்கள். இப்பள்ளியின் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டியுள்ளது. 2017-ல் இப்பள்ளியின் கட்டமைப்பை மேம்படுத்த மாநகராட்சி ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்தது. ஆனால், அந்தத் தொகை இன்னும் பள்ளிக்கு வந்துசேரவில்லை.
பெற்றோர் தேடி வரும் திருவெற்றியூர் பள்ளி
ராமநாதபுரம் மாவட்டம் திருவெற்றியூரில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளி 1975-ல் தொடங்கப்பட்டது. 2013-ல் இப்பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை 203. அவ்வாண்டு தலைமையாசிரியராக ஆ.முத்துச்செல்வி பொறுப்பேற்றார். தினமும் பள்ளி நேரம் முடிந்த பிறகு, மாணவர்களுக்குத் தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளையும் கற்பிக்க ஒன்றரை மணி நேரம் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன. மாணவர்களுக்கு நாடகம், சிலம்பு, பறை போன்ற கலைகளிலும் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பள்ளியைச் சார்ந்த 7 மாணவர்கள் தேசியத் தகுதி – உதவித்தொகைத் தேர்வில் கடந்த ஆண்டு வெற்றிபெற்றார்கள்.
பள்ளி ஆசிரியர்கள் மேற்கொண்ட முயற்சியால், 2020-ல் மாணவர்கள் எண்ணிக்கை 392ஆக உயர்ந்தது. தற்போது அப்பள்ளியில் மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 662. இப்பள்ளியில் குழந்தைகளைச் சேர்ப்பதற்குப் பெற்றோர் தினமும் வருகிறார்கள். இடநெருக்கடி, ஆசிரியர் பற்றாக்குறை இருந்தாலும் மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப் படுகிறார்கள்.
தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினர் 3 புதிய வகுப்பறைகளை 2019-2020-ல் கட்டிக் கொடுத்திருக்கிறார். ஊராட்சி நிர்வாகமும் நிதியுதவி செய்தது. அதேநேரம், தேவையான ஆசிரியர்களை நியமனம் செய்வதோடு, பள்ளியின் கட்டமைப்பை மேம்படுத்திடவும் அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
முன்மாதிரியான மதரசா பள்ளி
சென்னை அண்ணா சாலையில் காயிதே மில்லத் பெண்கள் கல்லூரி வளாகத்தின் ஒரு பகுதியில், அரசு மதரசா மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. 1849-ல் தொடங்கப்பட்ட பள்ளி இது. ஏழை, எளிய குழந்தைகளின் கல்விக்காக ஆற்காடு நவாப் 23 ஏக்கர் பரப்பளவு இடத்தை இப்பள்ளிக்கு அளித்தார். 2017-ல் இப்பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை 140. அதேநேரம், தலைமை ஆசிரியர் கே.சுந்தரவடிவேல் தலைமையில், ஆசிரியர்கள் வீடுவீடாகச் சென்று பிரச்சாரம் செய்த பின்னணியில், மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்பள்ளியில் மிகப்பெரிய மைதானம் உள்ளது. மாணவர்களுக்குக் கால்பந்து, ஹாக்கி, தடகளச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆங்கிலமொழி சிறப்புப் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவுக்கு முன்பு இப்பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை 302. தற்போது மாணவர்கள் எண்ணிக்கை 369ஆக உயர்ந்துள்ளது. அனைத்து சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளும் இந்தப் பள்ளியில் படித்து வருகிறார்கள்.
இப்பள்ளியின் கட்டமைப்பை மேம்படுத்தி, ஆசிரியர்களை நியமித்து, கல்வித் தரத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்தால், மாணவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. சென்னை மாநகரத்தின் மையமான பகுதியில் பெரும் பரப்பளவில் இயங்கி வரும் இப்பள்ளியை முன்மாதிரிப் பள்ளியாக மேம்படுத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மூன்று பள்ளிகளைப் பற்றி தி இந்துவில் செய்தி வெளியாகி உள்ளது.
மேற்கூறிய மூன்று பள்ளிகளும் ஆசிரியர்களின் முன்முயற்சியால் சிறப்பாக இயங்கி வருகிறது. ஆனால் அங்கேயும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாதது, ஆசிரியர் பற்றாக்குறை போன்ற பிரச்சனைகள் உள்ளன. இப்பிரச்சனைகளை களைய தற்போது உள்ள தி.மு.க அரசின் செயல்பாடுகளைப் பற்றி பார்ப்போம்.
தற்போது தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பள்ளிக்கல்வி சம்மந்தமான சில விவரங்கள் பின்வருமாறு :
பள்ளிக் கல்விக்கு மொத்தமாக ரூ.32,599.54 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அனைத்து ஆசிரியர்களுக்கும் தொழில்நுட்ப வசதியுடன் கண்காணிக்கக் கூடிய மற்றும் ஆதாரங்கள் அடிப்படையிலான பயிற்சி வழங்க ஏதுவாக 413 கல்வி ஒன்றியங்களுக்கும் தலா 40 தொடுதிரை கையடக்க கணினிகள் 13.22 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட உள்ளது.
2025-ம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டில் உள்ள 8 வயதிற்குட்பட்ட அனைத்து மாணவர்களும் எண்ணும் எழுத்தும் இயக்கம் ரூ.66.70 கோடி மதீப்பீட்டில் தீவிரமாக செயல்படுத்தப்படும்.
அரசுப்பள்ளி மாணவர்கள் கணினித் திறன்களை இளம் வயதிலேயே பெறுவதை உறுதிசெய்ய 1,784 அரசு நடுநிலைப் பள்ளிகளில் ரூ.114.18 கோடி மதிப்பீட்டில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படும். மேலும், 865 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.20.76 கோடி செலவில் ஸ்மார்ட் வகுப்பறைகள் துவங்கப்படும்.
மேலே கூறியவைகளில் இருந்து பார்க்கும் போது, பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளான கழிவறை, குடிநீர், காற்றோட்டமான அறைகளை ஏற்படுத்துவது மற்றும் தேவையான ஆசிரியர்களை நியமிப்பதுதான் தற்போது உள்ள அவசியமான மற்றும் அத்தியவசியமான தேவை. அதைப் பற்றி எல்லாம் இந்த பட்ஜெட் கவலைப்படவில்லை. இடைக்காலப் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.34,161 கோடி தற்போது இந்த பட்ஜெட்டில் ரூ.32,599 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 37,579 பள்ளிகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வருடந்தோறும் ஒரு பள்ளிக்கு ரூ.10 இலட்சம் வீதம் ரூ.3,758 கோடி ஒதுக்கினாலே போதும், 5 வருடத்தில் தமிழகத்தில் உள்ள எல்லா அரசுப் பள்ளிகளிலும் தேவையான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த முடியும். அப்படிப்பட்ட சிந்தனை முறையும் இந்த அரசுக்கு கிடையாது.
ஆனால், இந்த பட்ஜெட்டில் சென்னையில் மெட்ரோ இரயில் இரண்டாம் கட்டத் திட்டப் பணிகள் தொடங்கப்படும் என்றும், கோவை மற்றும் மதுரை மாவட்டங்களிலும் மெட்ரோ திட்டப் பணிகள் தொடங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மெட்ரோ இரயிலில் சாதாரண ஏழை மக்கள் யார் பயணிக்கிறார்கள்? கட்டண உயர்வு காரணமாக காலியாகதான் சென்று கொண்டிருக்கிறது. சாதாரண மக்கள் பயன்பெறும் வகையில் பேருந்து மற்றும் இரயில்வே போக்குவரத்தை அமைப்பதே மக்களுக்கு உதவிகரமான திட்டமாக இருக்கும்.
கோடிக்கணக்கான ரூபாய்களை கொட்டி கட்டப்படும் மெட்ரோ இரயில் சேவைகள் மேட்டுக்குடிகளுக்கு மட்டுமே பயன்படுகிறது. அப்படிப்பட்ட திட்டத்திற்கு கோடிக்கணக்கான ரூபாய்களை கடன் வாங்கி கொட்டும் மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு இலவசமான கல்வி கொடுப்பதற்கு தேவையான அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை அதிக நிதி ஒதுக்கி பலப்படுத்த தயங்குகின்றன.
ஏனென்றால், யார் ஆட்சிக்கு வந்தாலும் அரசை இயக்குவது தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற கொள்கைகளே. அரசுப் பள்ளிகளுக்கு அதிக நிதி ஒதுக்கி, அதன் கட்டமைப்பை பலப்படுத்திவிட்டால் மக்கள் எல்லாரும் தன் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில்தான் சேர்ப்பார்கள். அதன் விளைவாக கல்வியை விற்பனை சரக்காக்குவது என்ற திட்டம் நிறைவேறாது அல்லவா?
படிக்க :
புதிய கல்விக் கொள்கையை கமுக்கமாக அனுமதிக்கும் தி.மு.க !
புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் அண்ணா பல்கலை || CCCE
அதனால்தான், அரசுப் பள்ளிகளுக்கு ஒதுக்கும் நிதி படிப்படியாக குறைக்கப்படுகிறது. அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு ஒன்னும் இல்லாமல் ஆக்கப்படுகிறது. மக்களிடமும் தனியார் பள்ளிகள்தான் தரமான பள்ளிகள் என்ற சிந்தனை ஏற்படுத்தப்படுகிறது. அதனால், அவர்களும் தன் பிள்ளைகளை கடன் வாங்கியாவது தனியார் பள்ளிகளில் படிக்க வைக்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
அரசுப் பள்ளிகள் வறுமையின் அடையாளமல்ல, அவற்றைப் பெருமையின் அடையாளமாக மாற்றுவோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுவது எல்லாம் வெற்று வாய்ச்சவடால்தான்.
இப்படிப்பட்ட நிலைமைகளில் அரசுப் பள்ளிகளில் கல்வி சொல்லிக் கொடுப்பதை சேவையாக கருதும் சமூக அக்கறை உள்ள ஆசிரியர்களால்தான், சில பள்ளிகள் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து அரசின் உதவி இல்லாமல் சிறப்பாக செயல்படுகின்றன.
ஆனால், அனைவருக்கும் தரமான, இலவசமான, விஞ்ஞானப்பூர்வமான கல்வி கொடுக்க வேண்டிய அரசானது அக்கடமையிலிருந்து விலகி நிற்கிறது.

அமீர்
செய்தி ஆதாரம் : தி இந்து, UDISE + ஆய்வறிக்கை.

அரங்கேறும் பாசிச சர்வாதிகாரம் || புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2021 மின்னிதழ் !

அன்பார்ந்த வாசகர்களே !
”நொறுங்கும் நாடாளுமன்ற ஜனநாயகம்! அரங்கேறும் பாசிச சர்வாதிகாரம்” என்ற தலைப்பில் தற்போது விற்பனையில் உள்ள புதிய ஜனநாயகம் 2021 செப்டம்பர் இதழ் தற்போது மின்னிதழ் வடிவில் வினவு இணைய தளத்தில் கிடைக்கப் பெறுகிறது.
மின்னிதழுக்கான பணம் ரூ.20-ஐ புதிய ஜனநாயகம் அலுவலகத்தின் G-Pay எண்  94446 32561-ல் செலுத்திவிட்டு, பணம் செலுத்தியதற்கான பரிவர்த்தணை விவரத்தை vinavu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் பெயர், தொடர்பு எண், மாவட்டத்தை குறிப்பிட்டு மின்னஞ்சல் அனுப்பவும். உங்களது மின்னஞ்சலுக்கு புதிய ஜனநாயகம் மின்னூல் அனுப்பி வைக்கப்படும்.

நன்றி !

– புதிய ஜனநாயகம்

செப்டம்பர் மாத இதழ் குறித்த விவரம் அறிய : இங்கே அழுத்தவும்.

மோசடியாளர்களிடமிருந்து மீட்கப்பட்ட எல்.ஐ.சி மீண்டும் மோசடியாளர்கள் கையில் ?

0
யுள் காப்பீட்டு நிறுவனத்திற்கு (LIC) வயது 66. இந்நிறுவனத்தின் பிறப்புக்கு காரணம், 1956-க்கு முன்னால் உள்நாட்டு – வெளிநாட்டு தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் செய்த மோசடிகளும் ஊழல்களுமே ஆகும். மோசடி, ஊழல்கள் மூலம் மக்களின் சேமிப்பைச் சூறையாடிய தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், இவைகளை தேசியமயமாக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியும் அகில இந்திய காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் நடத்திய தொடர் போராட்டங்களின் விளைவே எல்.ஐ.சி. நிறுவனத்தின் பிறப்பு.
மோசடி தனியார் காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து அரசுடைமையாக்கப்பட்டு இந்தியா முழுவதும் ஒருங்கிணைந்த முறையில் உருவாக்கப்பட்ட நிறுவனம் தான் எல்.ஐ.சி
அன்றைய நேரு தலைமையிலான அரசால் துவங்கப்பட்ட இந்நிறுவனத்தின் இன்றைய மதிப்பு ரூ.38,04,640 கோடி. இதன் வளர்ச்சி சுமார் ரூ.1 லட்சத்திற்கு மேற்பட்ட நிறுவன ஊழியர்களின் உழைப்பாலும் சிற்றூர்கள், கிராமங்கள் மற்றும் சாதாரண அடித்தட்டு மக்கள் வரை ரத்த நாளங்களாக செயல்பட்டதன் விளைவாக LIC நிறுவனமானது இன்று அசுர வேகத்தை எட்டியுள்ளது என்றால் அது மிகையாகாது.
படிக்க :
LIC தனியார்மயம் : சூறையாடப்படவிருக்கும் மக்களின் காப்பீட்டு நிதி!
LIC தனியார்மயம் : பொன் முட்டையிடும் வாத்தை அறுக்கும் மத்திய அரசு
தேசியமயமாக்கத்திற்கு முன்பு காப்பீட்டுத் துறையிலிருந்த 245 தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் சாதிக்காத சாதனையை ஒரு அரசு நிறுவனம் நிகழ்த்தி உள்ளது. குறைவான முதலீட்டில் இந்த அளவு அபரிமிதமான வருவாயை ஈட்டியதற்கு, பாலிசிதாரர்களுக்கு உரிய முறையில் வாக்குறுதி அளிக்கப்பட்ட வகையில் கடமை தவறாமல் மோசடி செய்யாமல் ஊழல் இல்லாமல் நேர்மையுடன் இறப்பு உரிமங்களை முதிர்ச்சி தொகைகளைக் கொண்டுபோய் சேர்த்தன் மூலம் அவர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக இன்று வரை திகழ்ந்து வருகிறது LIC நிறுவனம். இதுவே, பாலிசிதாரர்களை LIC-யுடன் தொடர்ந்தும் இடைவிடாமலும் பயணிக்க வைக்கிறது.
மேலும் இதன் வருவாய் மற்றும் உபரி,  அதன் சொந்த வளர்ச்சிக்கும் அரசு நிறுவனங்களில் முதலீட்டிற்கும், அரசின் நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்கும், மக்கள் நலத் திட்டங்களுக்கும் உதவுகிறது. இந்நிறுவனம் அரசுடமையாக்கப்படாமல் இருந்திருந்தால்,  இதன் வருவாயும் உபரியும் தனியாரின் பணப்பெட்டியை நிரப்பும். மக்கள் நலத் திட்டங்களுக்கு பயன்படாமல் போகும்.
கொரோனா மரணங்கள் நிறைந்த 2020-21-ம் ஆண்டு காலத்தில் கூட இறப்பு உரிமம் 98.62% முதிர்வுத் தொகையில் 89.78% கொண்டு போய் சேர்த்துள்ளது, LIC நிறுவனம். இந்த நேர்மையை, ஏமாற்று பேர்வழிகளான தனியார் காப்பீட்டு நிறுவனங்களிடம் எதிர்பார்க்க முடியுமா?
முடியாது என்பதைத் தெரிந்தேதான் பாசிசக் கும்பல், LIC காப்பீட்டு நிறுவனத்தின் பங்குகளை நிதி தேவைக்காக விற்கப்போவதாக கூவுகிறது. இது எவ்வளவு பெரிய அயோக்கியதனம்? மேலும், வாக்களித்த மக்களின் [பாலிசிதாரர்களின்] சேமிப்பை சூறையாடி தனியாருக்கு தாரை வார்ப்பது எவ்வளவு பெரிய துரோகம் ?
இவர்களின் நோக்கம் அரசின் நிதி தேவையை நிறைவு செய்வது அல்ல. கார்ப்பரேட்களின் நிதித் தேவையை நிறைவு செய்வதே. ஒன்றிய மாநில அரசுகளின் நிதி தேவையை பூர்த்தி செய்து, பல்வேறு மக்கள் திட்டங்களில் முதலீடுகள் செய்து, பங்கு சந்தை சரியும் போதெல்லாம் அதில் முதலீடு செய்து, நட்டமில்லாமல் இயங்கிவரும் LIC-யின் வருவாய் மற்றும் உபரி அதன் சந்தாதாரர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் செல்வதிலிருந்து  மடைமாற்றி கார்ப்பரேட்டுக்களுக்கு அள்ளிக் கொடுப்பதே, எல்.ஐ.சி தனியார்மயத்தின் நோக்கம்.
LIC நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யப்படுவதை தடுத்து நிறுத்தத்தவறினால், அதன் வருவாயும், உபரியும், சொத்தும் தனியாருக்கு போய் சேரும். இதனால், மக்களின் நலத் திட்டங்களோ, நாட்டின் பொருளாதார தேவைகளோ நிறைவேறாது. மேலும் அதில் போடப்பட்ட மூலதனத்தின் எதிர்காலம் கேள்விக்குறி தான்.
மேலும், பாலிசிதாரர்களின் இறப்பு உரிமத் தொகை, முதிர்ச்சித் தொகை உரிய முறையில் உரிய நேரத்தில் போய் சேராது அல்லது முற்றிலும் சேராமலும் போகலாம். இதற்கு தனியார் நிறுவனங்களின் கடந்த கால ஊழல் மிக்க, மோசடி மிக்க செயல்பாடுகளே சிறந்த உதாரணம்.எல்.ஐ.சி உருவாக்கப்பட்டதே இந்த மோசடிகளுக்கு முடிவு கட்டத்தானே !
LIC நிறுவனம் என்பது தேசத்தின் சுயப் பொருளாதாரத்தையும் மக்கள் நலத் திட்டங்களையும் நிறைவேற்றும் அட்சயப்பாத்திரம். இதை காவிக் கும்பல் களவாடி கார்ப்பரேட்களின் கஜானாவில் சேர்ப்பதை ஒரு போதும் அனுமதிக்கலாகாது.
ஏனெனில், ஒவ்வொரு வருடமும் LIC-க்கு வரும் உபரித் தொகையிலிருந்து ஒன்றிய அரசுக்கு வரும் 5% ஈவுத் தொகையும் மீதமுள்ள 95% பாலிசிதாரர்களுக்கு கிடைக்கும் போனசும் இனி கிடைக்காது.
மேலும், பொதுத்துறை – அரசுத்துறை நிறுவனங்கள் வங்கிகளின் பங்குகள் வீழ்ச்சி அடையும்போது அவைகளை ஓடிப்போய் தாங்கிப் பிடிக்கும் ஆபத்பாண்டவனாக LIC இருக்கிறது. இனி அப்படி ஒரு பொருளாதார பெரும் சக்தி அரசின் கைகளில் இருக்காது.
நாட்டின் பொருளாதாரத்தை ஒரு குறிப்பிட்ட வகையில் ஈடுசெய்யும் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார மந்தம் உற்பத்தி சரிவு பொது முடக்கம் வேலையிழப்பு, வேலையின்மை போன்ற சூழலிலும் LIC  பாதிப்பு இல்லாமல் இயங்குகிறது என்றால் பாலிசிதாரர்களின் தொடர்ச்சியான இடைவிடாத பங்களிப்பும் ஊழியர்களின் அயராத உழைப்புமே ஆகும். மேலும், இதுவரை அரசுக்கு கடனாக, முதலீடாக ரூ.26,86,527 கோடியை வழங்கியிருக்கிறது. அரசின் பல்வேறு திட்டங்களுக்கு ரூ.4 லட்சம் கோடி வரை முதலீடு செய்திருக்கிறது எல்.ஐ.சி நிறுவனம்.  இவை அனைத்தையும் மக்களிடம் இருந்து மறைந்து விட்டது பாசிச மோடி அரசு.
படிக்க :
’ஹேர்கட்’ பெயரில் பொதுத்துறை வங்கிகளில் கார்ப்பரேட் கொள்ளை !
பொதுத்துறை வங்கி தனியார்மயம் : லாபம் தனியாருக்கு ! இழப்பு மக்களுக்கு !
LIC போன்ற நிறுவனங்களுக்கு மூலதனத் திரட்டல் தேவை இல்லை என்பதையும்  இது ஒரு தொழில் நிறுவனம் இல்லை என்பதையும், இந்நிறுவனம் பல்வேறு தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறது என்பதையும், ஒன்றிய அரசு மூடி மறைத்து வரும் பித்தலாட்டத்தையும் நாம் அனைவரும் உணர்ந்து போராட தவறினால் மக்களின் வரிப்பணத்தில் உருவான ஜீவ ஊற்றான LIC-யை தங்கள் அப்பன் வீட்டு சொத்துக்களைப்போல விற்பதைத் தடுக்க முடியாது.
எனவே, இந்த கார்ப்பரேட் – காவி பாசிசக் கும்பலுக்கு குலைநடுக்கம் ஏற்படும் வகையில் மக்களின் தீவிர போராட்டங்களை வீதிக்கு வீதி கட்டியமைப்பது மூலமே மக்களின் நிறுவனங்களின் பறி போகாமல் பாதுகாக்கவும் தொடர்ந்து மக்கள் நிறுவனமாக நீடிக்கவும் முடியும் !!

கதிரவன்

புதிய ஜனநாயகம் செப்டம்பர் – 2021 அச்சு இதழ் !

அன்பார்ந்த வாசகத் தோழர்களே,
னவரி 2021 இதழ் வெளிவந்த பிறகு, கொரோனா ஊரடங்கினாலும் இதர காரணங்களாலும் கடந்த ஆறு மாதங்களாக புதிய ஜனநாயகம் இதழ் வெளிவராமல் இருந்தது. வாசகத் தோழர்களின் தொடர்ச்சியான வலியுறுத்தலால், கார்ப்பரேட் − காவி பாசிசம் அரங்கேறிவரும் இன்றைய காலகட்டத்தின் அரசியல் தேவையை உணர்ந்து பெரும் முயற்சியில் ஆகஸ்டு 2021 இதழைத் தயாரித்து வெளியிட்டோம்.
தமிழகத்தில், 35 ஆண்டுகளுக்கு மேலாக மார்க்சிய − லெனினிய அரசியல் ஏடாக புதிய ஜனநாயகம் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. ஜனநாயக அரசியல் சக்திகள், திராவிட, தலித்திய, பெண்ணிய, தமிழின அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள், விவசாய சங்க, தொழிற்சங்க தோழர்கள் − என பல்வேறு தரப்பினரின் ஆதரவோடு புதிய ஜனநாயகம் இதழ் இயங்கி வந்தது.
பல நூறு தோழர்களின் கடுமையான, அயராத உழைப்பு புதிய ஜனநாயகத்தில் பொதிந்துள்ளது. தமிழகத்தில் தனக்கென ஒரு பெரும் அரசியல் வாசகர் வட்டத்தைக் கொண்டுள்ளது எனில், அது புதிய ஜனநாயகம் இதழ் மட்டுமே. அந்த வகையில், புதிய ஜனநாயகத்திற்கு ஆறு மாதகால ‘இடைவெளி’ என்பது அதன் வாசகத் தோழர்களுக்குப் பேரிழப்பாகும்.
புதிய ஜனநாயகம் இதழ் மீண்டும் வெளிவரவுள்ள செய்தியைக் கேட்ட பலரும் எமக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். சில நண்பர்கள் ரூ.1,000, ரூ.5,000 − என நன்கொடைகளை வழங்கியுள்ளனர். பல வாசகர்கள் ‘‘புதிய ஜனநாயகம் இனி வெளிவராது எனக் கருதியிருந்தோம்; இதழைப் பார்த்த பின்னர் மகிழ்ச்சியாக இருக்கிறது’’; ‘‘அரசியல் பேசுவதற்கு ஆளே இல்லாமல் இருந்த சூழலில், புதிய ஜனநாயகத்தைப் பார்க்கும்போது உற்சாகமாக இருக்கிறது’’ − என கருத்துத் தெரிவித்துள்ளனர்.
சில வாசகர்கள் 5 படிகள், 10 படிகள் என கேட்டு வாங்கி தமது நண்பர்களிடம் கொடுத்துள்ளனர். சில வாசகர்கள், புதிய ஜனநாயகம் ஆகஸ்டு 2021 இதழ் குறித்த வாசகர் கடிதங்களையும் அனுப்பியுள்ளனர். இத்தோழர்கள் அனைவருக்கும் எமது நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகத் தோழர்களின் இத்தகைய நல்லாதரவு எமக்கு பெரும் உற்சாகத்தையும் உந்துதலையும் அளித்துள்ளது. இனி, புதிய ஜனநாயகம் இதழ் முறையாக மாதந்தோறும் முதல் தேதியில் வெளிவரும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
திருச்சி உள்ளிட்ட சில பகுதிகளில் நேரடி சந்தாக்களுக்கு இதழை விநியோகம் செய்துவந்த சிலர் கலைப்புவாத − சீர்குலைவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதோடு, பொறுப்பிலிருந்தும் விலகிவிட்டதால், அந்த நேரடிச் சந்தாதாரர்களுக்கு இதழைக் கொடுக்க இயலவில்லை என்று முகவர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே நேரடியாக சந்தா செலுத்திய வாசகர்கள், தங்களுக்கு இன்னமும் இதழ் கிடைக்கவில்லை எனும் பட்சத்தில், எமது அலுவலக எண்ணுக்குத் தொடர்பு கொண்டு தெரிவித்தால், இதழ் முறையாகக் கிடைக்க ஆவன செய்கிறோம்.
கடும் நிதி நெருக்கடியில்தான் தற்போதையை புதிய ஜனநாயகம் இதழைக் கொண்டுவந்துள்ளோம். நிதி நெருக்கடியை ஈடு செய்ய நன்கொடை மற்றும் சந்தா சேகரிக்கும் பணியை முகவர்கள் மூலம் மேற்கொண்டு வருகிறோம். புதிதாக பெற்றுக் கொள்ளப்படும் சந்தாக்கள் ஜனவரி 2022 முதல் நடைமுறைக்கு வரும். வாசகத் தோழர்கள் நன்கொடை மற்றும் சந்தா செலுத்தி ஆதரித்து, இதழ் வளர்ச்சிக்குத் தொடர்ந்து உதவுமாறு கோருகிறோம்.
– நிர்வாகி
000
புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2021 இதழ் அச்சுப் பிரதியாக வெளிவந்திருக்கிறது. இதழை வாங்குவதற்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் !!
தொடர்பு விவரங்கள் :
தொலைபேசி : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com
விலை : ரூ.20 + தபால் செலவு ரூ. 5 = ரூ.25
G-Pay மூலம் பணம் கட்ட :  94446 32561
வங்கி கணக்கு விவரம்,
Bank: SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444.
நொறுங்கும் நாடாளுமன்ற ஜனநாயகம் அரங்கேறும் பாசிச சர்வாதிகாரம்
இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
  1. நொறுங்கும் நாடாளுமன்ற ஜனநாயகம் அரங்கேறும் பாசிச சர்வாதிகாரம்!
  2. பாசிச மோடி அரசுக்கு எதிராக வளர்ந்துவரும் போராட்டங்கள்!
  3. பத்திரிகை செய்தி : பார்ப்பனரல்லாத அர்ச்சகர் பயிற்சிபெற்ற மாணவர்களில் 24 பேர் அர்ச்சகராக நியமனம்! சரியான அரசியல் தலைமை, தொடர்ச்சியான போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி!
  4. “திராவிட மாடல்” ஆட்சி : கார்ப்பரேட் சேவை! காவியுடன் சமரசம்!!
  5. கார்ப்பரேட் சேவையில் கழக ஆட்சி!
  6. காவி பாசிசத்துடன் சமரசம் செய்துகொள்ளும் தி.மு.க. அரசு!
  7. வெள்ளை அறிக்கையா? கட்டண உயர்வுகளுக்கான முன்னறிவிப்பா?
  8. தேசியக் கடல் மீன்வள மசோதா – 2021 : கடல்வள பேரழிப்பின் ஒரு அங்கம்!
  9. காஷ்மீர் சிறப்பு உரிமை ரத்து செய்யப்பட்டதன் இரண்டாம் ஆண்டு : துளிர்விடுகிறது விடுதலை முழக்கம்!
  10. பெரு நாட்டில் ‘சோஷலிஸ்டு’க் கட்சியின் வெற்றி : இது, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான வெற்றியா?

பணமாக்கல் திட்டத்திற்கு முட்டுக் கொடுக்கும் இந்து தமிழ் தலையங்கம் !

மோடி அரசின் தேசிய பணமாக்கல் திட்டம் “தவிர்க்கவியலாத” தீங்காம்,  முட்டுக்கொடுப்பதில் முன்னிலை வகிக்கும் இந்துதமிழ் திசை !
‘நடுநிலை’ பத்திரிக்கை என்று வாய் கூசாமல் தம்பட்டமடித்து திரியும் இந்துதமிழ் திசை, தினமலர், தினமணி வரிசையில் தானும் பா.ஜ.க சார்பு நாளிதழ்தான் என்று அடிக்கடி அம்பலப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த வாரம் ஒன்றிய அரசு அறிவித்த தேசிய பணமாக்கல் திட்டத்தைப் பற்றி, “மத்திய அரசின் பொருளாதாரச் சீரமைப்பு : தவிர்க்கவியலாத தீங்கு” என்று ஆகஸ்ட் 31 அன்று தலையங்கம் ஒன்றைத் தீட்டியிருக்கிறது.
மக்களின் பொதுச் சொத்துக்களான இரயில்வே, நெடுஞ்சாலைத்துறை, மின்சாரத்துறை, தொலைத்தொடர்பு, விமான நிலையங்கள் மற்றும் விளையாட்டுத் திடல்கள் போன்றவற்றை கார்ப்பரேட்டுகளுக்குக் குத்தகைக்கு விடும் மோடி அரசின் இந்நடவடிக்கை பலரையும் அதிர்ச்சிக்கும் கோபத்திற்கும் ஆளாக்கியுள்ள நிலையில் இதை நேரடியாக நியாயப்படுத்தி எழுத முடியாத இந்துதமிழ் திசை “தவிர்க்கவியலாத தீங்கு” என தனது தலையங்கத்தில் மிக நூதனமாக முட்டுக் கொடுக்க முயற்சித்திருக்கிறது.
படிக்க :
“பணமாக்கல் திட்டம்” : கார்ப்பரேட்டுகளுக்கு இந்தியாவை தாரைவார்க்கும் திட்டம் !
நாட்டை விற்பனை செய்யும் தேசிய பணமாக்கல் திட்டம் || கண்டன ஆர்ப்பாட்டம்
கட்டுரையில், “மத்திய அரசின் பொருளாதாரச் சீரமைப்புத் திட்டத்துக்கு எதிர்க் கட்சிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பு எழுந்திருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. பெருநிறுவனங்களுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது என்ற தொடர் குற்றச்சாட்டுகளுக்கு வலுசேர்க்கும் சான்றாகவே இத்திட்டத்தை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்” என்று எதிர்க்கட்சிகளின் வாதங்களில் உள்ள நியாயத்தையும் எடுத்துக் காட்டுவதுபோல் “நடுநிலையோடு” தொடங்குகிறது. ஆனால், அதற்கு அடுத்த பத்தியிலேயே தனது நரித்தனத்தைக் காட்ட ஆரம்பித்துவிடுகிறது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மோடி அரசின் இத்திட்டம் குறித்து “70 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட சொத்துக்களை ஏழே ஆண்டுகளில் அழிக்கிறது பா.ஜ.க” “மூன்று நான்கு தொழிலதிபர்களுக்கு மட்டுமே பரிசாக அளிக்கப்படுகிறது இந்தக் குத்தகை” என்று விமர்சிப்பதை அப்படியே எடுத்துக் காட்டும் தலையங்கம்; தொடர்ந்து, “காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும் பொதுத்துறை முதலீடுகள் விற்கப்பட்டுள்ளன. இப்போதும் கூட, தனியார்மயத்துக்குத் தாங்கள் எதிரியல்ல என்றே ராகுல் காந்தி விளக்கம் அளித்திருக்கிறார்” என்று ராகுல் காந்தி பேசியதை சுட்டிக்காட்டியும் “காங்கிரஸ், பா.ஜ.க இரண்டுமே தனியார்மயத்துக்கு ஆதரவாளர்கள்தான் என்பதையும் சேர்த்தே இந்தப் பிரச்சனையை அணுக வேண்டியிருக்கிறது” என்று எழுதியிருப்பதன் மூலமும் இத்திட்டத்திற்கெதிரான வாதங்கள் எல்லாவற்றையும் நீர்த்துப்போகச் செய்யக் கூடிய வகையில் மிகவும் தந்திரமாக தலையங்கத்தை அமைத்திருக்கிறது.
மோடி கொண்டு வந்த பணமாக்கல் என்ற தேசத்துரோக திட்டத்திற்கு காங்கிரஸ் மட்டுமா எதிர்ப்பு தெரிவித்தது. ஒட்டுமொத்த இந்திய மக்களையுமே அது அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அனைவரது கண்டனங்களையும் பெற்றுள்ளது. அனைத்து தொழிற்சங்கங்களும் இத்திட்டத்திற்கு எதிராக தங்களது போராட்டங்களைத் தொடங்கியிருக்கிறார்கள். மொத்தத்தில் “பா.ஜ.க vs இந்திய மக்கள்” என்ற பிரச்சனையை வெறுமனே “மோடி vs காங்கிரஸ்” என்று திருப்பிவிட்டு இறுதியாக காங்கிரசைக் கொண்டே அவர்களது வாதங்களை மொக்கையாக்கும் வகையில் திட்டமிட்டு எழுதியுள்ளது இந்துதமிழ் திசை.
இன்று நேற்றல்ல, இந்த உத்திக்கு ஒரு வரலாறே உண்டு. நீட், ஜி.எஸ்.டி, புதிய கல்விக் கொள்கை என்று பா.ஜ.க ஒவ்வொரு நாசகாரத் திட்டங்களைக் கொண்டுவரும் போதும் இத்திட்டங்களுக்கு எதிராக வெளிப்படும் மக்களின் எதிர்ப்புகளை வெறும் பா.ஜ.க-வைப் பிடிக்காத எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பாகச் சித்தரிப்பதும்  “இதெல்லாம் காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே கொண்டுவரப்பட்ட திட்டங்கள்தான். பா.ஜ.க அதை நடைமுறைப்படுத்துகிறது. ஆனால், காங்கிரஸ் தேர்தல் அரசியலுக்காக சந்தர்பவாதமாக அதை எதிர்க்கிறது” என்று பேசுவதும் சங்க பரிவாரங்கள் நீண்டகாலமாக மேற்கொண்டுவரும் உத்திகள். தற்போது பணமாக்கலுக்கு முட்டுக்கொடுக்கும் இந்துதமிழ் திசை தனது தலையங்கத்திற்கு பயன்படுத்தும் உத்தியும் அதேதான்.
இந்த அரசுக் கட்டமைப்பிலுள்ள காங்கிரஸ் உள்ளிட்ட ஓட்டுக் கட்சிகள் அனைத்தும் தனியார்மயத்துக்கு (கார்ப்பரேட்மயத்துக்கு) எதிரானவைகள் அல்ல, மாறாக அதனை அமல்படுத்துவதில் அவர்களிடம் அணுகுமுறையில்தான் வேறுபாடு என்பதை நாம் நீண்ட காலமாகச் சொல்லி வருகிறோம். கொள்கை அளவில் இக்கட்சிகளெல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். தன்னை எதிர்ப்பதற்கு எதிர்க் கட்சிகளிடம் எந்த மாற்றுக் கொள்கையும் இல்லாத (இருக்கமுடியாத) இந்த நிலைதான் உண்மையில் பா.ஜ.க-வை எதிரியே இல்லாத கட்சியாக நிலைநிறுத்தியிருக்கிறது.
ஆனால், நீண்ட காலம் இப்படியே பா.ஜ.க-வால் சாமாளிக்க முடியாது. அதன் மூர்க்கமான மறுகாலனியாக்கத் திட்டங்களின் அமலாக்கம் நாடெங்கும் உழைக்கும் மக்களின் கடுமையான எதிர்ப்புக்கு ஆளாகி வருகிறது. டெல்லி சலோ விவசாயிகளின் வீரம் செறிந்த போராட்டம் அதற்கு ஒரு முன்மாதிரி. அத்தோடு இக்கார்ப்பரேட்மயமாக்கல் திட்டங்களுக்கு எதிராகப் படைக்கலத் தொழிலாளர்கள், வங்கி-காப்பீடு நிறுவன ஊழியர்கள், மின்சாரத்துறை ஊழியர்கள் உள்ளிட்டு பல்வேறு பொதுத்துறை தொழிலாளார்களின் போராட்டங்களும் வெடித்துக் கிளம்பிக் கொண்டிருக்கின்றன.
இதை இந்துதமிழ் திசையாலும் கூட மறுப்பதற்கு முடியவில்லை. ஆகையினால் வேறுவழியில்லாத நிலையில்தான் பா.ஜ.க இதுபோன்ற திட்டங்களைக் கொண்டு வருவதாகவும் மற்றபடி ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க சார்பு அமைப்புகளுக்கே இதில் உடன்பாடு இல்லை என்றும் புளுகித் தள்ளுகிறது.
அதற்குச் சான்றாக “ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் தொடர்புடைய பாரதீய மஸ்தூர் சங்கத்திடமிருந்தும் கூட இம்முடிவுக்கு எதிர்ப்பு வந்துள்ளது” என்று எழுதுகிறது. ஆர்.எஸ்.எஸ்-ன் தொழிற்சங்கமான பி.எம்.எஸ் கூட போலியாகவாவது தனது எதிர்ப்பைக் காட்டித்தான் ஆகவேண்டும் என்ற அளவிற்கு தொழிலாளர் பெருந்திரளது எதிர்ப்பு இருக்கிறது என்பதுதான் உண்மை நிலை.
மேலும் “மத்திய அரசின் இந்த முடிவு இன்றைய பொருளாதார நெருக்கடி மிகுந்த சூழலில் தவிர்க்க முடியாதது என்பதை எல்லோருமே ஏற்றுக் கொள்கிறார்கள்” என்று வேறு எழுதுகிறது. எல்லோருமே ஏற்றுக் கொண்டால் ஏன் ஆர்.எஸ்.எஸ்-ன் தொழிற்சங்க அமைப்பு கூட எதிர்ப்பு தெரிவிக்கிறது என்பதை இந்துதமிழ் திசைதான் விளக்க வேண்டும். இரண்டாவதாக பொதுத்துறைகளை விற்பதற்கு காரணம் பொருளாதார நெருக்கடிதான் என்பது பா.ஜ.க-வே சொல்லாத கருத்தாகும்.
நாடு வளர்ச்சியடைய வேண்டுமென்றால் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது அவசியம், ஆனால் அதற்கான நிதி அரசிடம் இல்லை. ஆகவே பொதுத்துறைகளை குத்தகைக்கு விட்டு ரூ.6 லட்சம் கோடி நிதி திரட்டும் முயற்சியாகவே பணமாக்கல் திட்டம் கொண்டுவரப்படுகிறது என்பதுதான் பா.ஜ.க-வின் வாதம். கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வரிச்சலுகைகள் கொடுக்கவும் வாராக்கடன் தள்ளுபடி செய்யவும் நிதி இருக்கிறது; ஆனால் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு நிதி இல்லையா? என்பது நமது வாதம்.
மேலும், இந்த துறைகள் அனைத்தும் நட்டத்தில் இயங்குவதால் அரசால் இதனை நடத்த முடியவில்லை என்றும் ஒரு வாதம் வைக்கிறார்கள். எல்லா தனியார் கார்ப்பரேட் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் 5ஜி-க்கு விண்ணப்பித்துக் கொண்டிருக்கும்போது பி.எஸ்.என்.எல்-க்கு 4ஜி தொழில் நுட்பத்திற்குக் கூட அனுமதி தரப்படவில்லையே இது தானே அதன் நட்டத்திற்கு காரணம். ஆகவே இது திட்டமிட்டு அரசால் ஏற்படுத்தப்பட்ட நட்டம் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.
தனியார் கார்ப்பரேட் மின் உற்பத்தி நிறுவனங்களை ஊக்குவித்தும் அரசு மின் உற்பத்தியை திட்டமிட்டே நாசமாக்கியும்; பின்னர் அரசே தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கி மானிய விலைக்கோ அல்லது இலவசமாகவோ கூட கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சலுகை வழங்கியது போன்றவைதானே மின்சாரத்துறை நட்டத்திற்கு காரணம். இவையெல்லாம், பொதுத்துறை நிறுவன ஊழியர்களே அரசின் மீது வைக்கும் குற்றச்சாட்டு.
1991-ல் தனியார்மய – தாராளமயம் – உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகள் அமலுக்கு வந்தபின் அரசே திட்டமிட்டு பொதுத்துறை நிறுவனங்களை சீரழிக்க ஆரம்பித்தது. வாஜ்பாய் தலைமையிலான இதே பா.ஜ.க ஆட்சிக் காலத்தில்தான் பொதுச் சொத்துக்களை இலக்கு வைத்து விற்பதற்கென்றே பங்கு விலக்கல் துறை (ministry of dis-invesment) என்று தனி அமைச்சகமே உருவாக்கப்பட்டது. தற்போது முதலீடுகள் மற்றும் பொதுச்சொத்துக்களை நிர்வகிக்கும் துறை DIPAM (department of investment and public asset management) என்ற பெயரில் நிதியமைச்சகத்தின் கீழ் இத்துறை இயங்கி வருகிறது.
இப்படி திட்டமிட்டு உள்கட்டமைப்புகளை சிதைத்துவிட்டு அதையே காரணமாக வைத்து பொதுச் சொத்துக்களைக் கார்ப்பரேட்டுகளுக்கு விற்பதும் குத்தகைக்கு விடுவதும் நடக்கிறது. இதில், கேலிக்கூத்து என்னவென்றால் இதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து இதே உள்கட்டமைப்புகளை மேம்படுத்தப்போவதாக சொல்வதுதான்.
இதற்குள் எல்லாம் போகாமல் வசதியாக “பொருளாதார நெருக்கடி” என்று பா.ஜ.க-வே சொல்லாத தகவலை எடுத்துக் கொண்டு முட்டுக்கொடுக்கிறது இந்துதமிழ் திசை.
கடைசியாக “மாற்று வாய்ப்புகள் என்னென்ன இருக்கின்றன என்பது குறித்து எதிர்ப்பாளர்களிடமிருந்து குறிப்பிடத்தக்க வகையில் எந்த ஆலோசனைகளும் முன்வைக்கப்படவில்லை” என்று எழுதுகிறது. இங்கே கூட எதிர்ப்பாளர்கள் என்று எதிர்க் கட்சிகளை மட்டுமே சித்தரிக்கிறது இந்துதமிழ் திசை. நாம் முன்பே கூறியதைப் போல காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளிடம் தனியார்மயமாக்கத்துக்கு மாற்றுக் கொள்கை இல்லை என்ற தைரியத்தில்தான் இவ்வாறு எழுதுகிறது.
மேலும் “நெருக்கடியான நேரத்தில் மாற்றுத்தீர்வுகளை முன்வைக்காமல் அரசின் முடிவைக் கேள்விக்குள்ளாக்குவது; மேலும் புதிய நெருக்கடிகளை நோக்கித் தள்ளிவிடும் அபாயம் நிறைந்தது” என்று வேறு நம்மை எச்சரிக்கிறது இந்துதமிழ் திசை.
படிக்க :
விவசாயிகளின் போராட்டத்தை இழிவுபடுத்தும் இந்து தமிழ் திசை !
ரஜினியின் கருத்துச் சுதந்திரத்திற்காக களமிறங்கும் இந்து தமிழ் திசை
வளர்ச்சி, முதலீடுகளை ஈர்த்தல் என்ற பெயரில், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மானிய விலையில் கொடுக்கப்படும் நிலம், மின்சாரம், நீர் உள்ளிட்ட கொள்ளைக்கார சலுகைகளை நிறுத்து ; பொதுத்துறை வங்கிகளிலிருந்து இலட்சக்கணக்கான கோடி ரூபாய்களைக் கடனாய் கொடுப்பதை நிறுத்து ; வாங்கிய கடனைக் கட்டாமல் ஏமாற்றும் கார்ப்பரேட் முதலைகளின் சொத்துக்களை பறிமுதல் செய் ; அதில் கிடைக்கும் நிதியை வைத்துப் பொதுத்துறைகளை பலப்படுத்து என்று நாம் சொல்கிறோம். நடுநிலை ஏடான இந்துதமிழ் பா.ஜ.க-வுக்கு இதனை சிபாரிசு செய்யுமா?
பா.ஜ.க கொண்டுவரும் திட்டங்களுக்கெல்லாம் நைச்சியமாக முட்டுக்கொடுத்துக் கொண்டே தமக்கு தாமே ‘நடுநிலை’ என்று வேறு நாமகரணம் சூட்டிக் கொள்கின்றன இந்துதமிழ் திசை போன்ற நாளேடுகள். எதிரியைக் கூட நம்பிவிடலாம். நடுநிலை என்று கழுத்தில் தோளில் போட்டுக் கொண்டே கழுத்தருக்கும் இந்து தமிழ் திசை போன்ற கிரிமினல் கும்பலிடம் என்றும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் !!

பால்ராஜ்
செய்தி ஆதாரம் : இந்து தமிழ்

நாகரிக வளர்ச்சியும் ஆடைகளின் வரலாறும் !!

னித பரிணாம வளர்ச்சியின் முக்கியக் குறியீடு இன்று நாம் பயன்படுத்தும் ஆடை. ஏட்டில் உள்ள வரலாற்றின் படி, சமூகத்தில் நிலவும் வர்க்கம், சாதி, மதம், நாகரிகம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை உள்ளடக்கியே ஆடை நாகரீகம் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏட்டில் வரலாறு பதியப்படாத காலத்திலும் மனிதன் வாழ்ந்தானே. இன்னும் கொஞ்சம் பின்னோக்கிச் சென்றால் மனிதன் தோன்றியபோது மேற்கூறிய பேதங்கள் எதுவும் இல்லையே.
முதன் முதலில் தென் ஆப்பரிக்காவில் மனித இனம் தோன்றியது. அந்த ஆரம்ப காலகட்டங்களில் ஆடை பற்றிய சிந்தனையெல்லாம் யாருக்கும் எழவில்லை. அதற்கு அங்குள்ள தட்பவெட்ப நிலையும் கூட ஓரு காரணம். அதன் பின் அங்கிருந்து இடம்பெயரந்த மக்கள் ஐரோப்பா, சைபீரியா போன்ற குளிர் பிரதேசத்தில் குடியேறினர்.
கடும் வெப்பத்தை பார்த்தவர்களுக்கு – குளிரை எதிர்கொள்ள – உடலைத் தயார் படுத்த வேண்டிய தேவையிருந்தது. மனித உடலை இயற்கையின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கவே ஆடைகள் தோன்றின.  விலங்கை வேட்டையாடி மாமிசத்தை உட்கொண்டவர்கள், அதன் தோலை கடும் குளிரில் இருந்து உடலைப் பாதுகாத்துக் கொள்ள தோலை உடுத்திக் கொண்டனர். இப்படி தான் உலகின்  முதல் ஆடை உருவானது.

படிக்க :

ஜீன்ஸ் : ஆடையின் வரலாறும் – பொதிந்துள்ள உழைப்பின் வரலாறும் !

பெண்களுக்கான ஜீன்ஸ் பாக்கெட்டில் செல்போன் நுழைவதில்லை ஏன் ?

இதனை மனிதன் எவ்வாறு கண்டுபிடித்தான். குளிர் பிரதேசங்களில் வாழும் விலங்குகள் எப்படி அந்த குளிரை தாக்கிக் கொள்கின்றன என்பது பற்றி சிந்திக்கையில், அவற்றின் தோலும் அதன் மேல் இருந்த அடர்த்தியான ரோமங்களும் குளிரிலிருந்து பாதுகாக்கும் தன்மை உள்ளவை என்பதை அனுபவப் பூர்வமாக உணர்கிறான். கூர்மையான கற்கள், மரங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி அவற்றில் துளையிட்டு தனது  உடல்பாகங்களுக்கு ஏற்றவாறு நார்கள், கொடிகள் மூலம் இறுக்கிக் கட்டி ஆடையாக்கிக் கொண்டான்.
ஆடை பற்றிய வரலாறு என்ன சொல்கிறது? ஆடையை வடிவமைக்க மனிதர்கள் எந்த பொருளை பயன்படுத்தினர் என்ற கேள்விக்கு நாம் துருக்கியிலுள்ள கட்ல்ஹோக் செல்ல வேண்டும். கட்ல்ஹோக் உலகின் மிகப் பழமையான மனித நாகரிகங்களில் ஒன்று. கிமு 7100 முதல் கிமு 5700 வரை மக்கள் வாழ்ந்த நாகரிகம் அது. கட்ல்ஹோக் மக்கள் ஆளி(Flax) செடிகளை விளைவித்து அதிலிருந்து ஆடைக்கான மூலப்பொருளை எடுத்துப் பயன்படுத்தினர் என்று ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்துள்ளனர். அது தான் நாம் இன்று பயன்படுத்தும் கைத்தறி ஆடையான லினன்(Linen).
ஜார்ஜியாவின் காகசஸ் மலைகளில் உள்ள ஒரு பழங்கால குகையில் தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள் 34,000 வருடங்களுக்கு மேல் பழமையானதாகக் கருதப்படும் ஆளி இழைகளைக் கண்டுபிடித்தனர். இந்த கண்டுபிடிப்பு தான் மனிதர்களால் பயன்படுத்தப்பட்டதாக அறியப்பட்ட துணி மற்றும் நூலின் பழமையான மாதிரிகளைக் குறிக்கிறது என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
அர்மேனியாவில் கண்டெடுக்கப்பட்ட வைக்கோலாலான பெண்கள் உடை
உலகில் முதன் முதலில் மனிதன் பயன்படுத்திய ஆடை ஆர்மீனயாவில் அரேனி குகையில் கண்டு எடுக்கப்பட்ட ஓரு பெண்ணின் பாவாடை. இது சுமார் 5900 ஆண்டுகளுக்கு முன்னர் வைக்கோலால் (Straw) பின்னப்பட்ட இந்தப் பாவாடைதான் இதுவரை நடந்த அகழாய்வில் கிடைத்த தொன்மையான ஆடை. இதைப் போன்றே உலகின் பழமையான கால்சட்டை சீனாவிலுள்ள யாங்காய் கல்லறைகளில் கண்டெடுக்கப்பட்டது. சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னால் குதிரை சவாரி செய்ய பயன்படுத்தப்பட்ட கால்சட்டை என ஆராய்ச்சி முடிவு சொல்கிறது.
அப்படியே வரலாற்றை இன்னும் புரட்டினால் அது நம்மை எகிப்து நோக்கி பயணிக்க வைக்கிறது. எகிப்தியர்கள் ஆடை வடிவமைப்பில் முன்னோடிகளாக திகழ்ந்து உள்ளனர். எகிப்தியர்கள் நாணல், பாப்பிரஸ், பனை போன்ற செடிகளிலிருந்து ஆடைக்கான மூலப்பொருளை கண்டுபிடித்தனர். எகிப்தியர்கள் கோடைக்காலத்தில் குளிர்ச்சிக்கான ஆடைகளைப் பயன்படுத்தினர். உலகில் முதன் முதலில் நெசவு செய்யப்பட்ட ஆடை எகிப்தில் உள்ள தார்கன் என்று இடத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டது.
சுமார் 5000 ஆண்டுகள் பழமை வாயந்த இந்த ஆடைக்கு “தார்கன் ஆடை”என்று பெயர். கடந்த 2015ம் ஆண்டு கார்பன் டேட்டிங் செய்ததில் இதன் வயது கிமு 3482-3102 வரை இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.
ஆடைகளின் வரலாற்றில் நாம் ஆசியா நோக்கி நமது பயணத்தை தொடரலாம். ஆசியா என்றதும் சீனா தான் முதலில் கண்ணிற்கு தெரிவது. சீன வரலாற்றின் படி , கிமு 27-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பேரரசி ஹிஸ் லி ஷி தான் பட்டு நூலை (silk) நெசவு நாராக கண்டுபிடித்த முதல் நபர்.அந்தக் கதை கொஞ்சம் சுவாரசியமானது.
பேரரசி ஒரு நாள் மல்பெரி மரத்தின் கீழ் தேநீர் குடிக்கும் போது, ​​ஒரு பட்டுப்பூச்சிக் கூடு (cocoon) அவரது கோப்பையில் விழுந்து. அது மெல்ல பிரிந்து நூல் அவிழத் தொடங்கியது. அதைப் பார்த்த ராணி அரண்மனையில் உள்ளவர்களை அது குறித்து ஆராய உத்தரவிட்டார்.

இப்படி கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் தான், பட்டாடைகள் ஆசியா முழுவதும் உள்ள பிற பகுதிகளை சென்ற அடையத் தொடங்கின. பட்டு நூல்கள் மிக வலுவாகவும், பளப்பாகவும், விலையுயர்ந்தாகவும் இருந்தது. இதை அறிந்த சீனர்கள் பட்டுடன் செடி ,கொடிகளிலிருந்து இயற்கை சாயத்தை கண்டுபிடித்து பல வண்ணங்களான பட்டு ஆடைகளை உலகிற்கு அறிமுகப்படுத்தினர். இதன் மூலம் பட்டும், சாயமும் உலகம் முழுதும் அறியப்பட்டது.

இந்திய துணைக் கண்டத்தில் ஆடைகளின் வரலாறு சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் முந்தையது. இந்தியர்கள் உள்ளூரில் வளர்க்கப்பட்ட பருத்தியால் ஆன ஆடைகளை அணிந்துள்ளனர். ஹரப்பா காலத்தில் கிமு 2500-ல் கூட பருத்தி பயிரிடப்பட்டு பயன்படுத்தப்பட்ட முதன்மையான இடங்களில் இந்தியாவும் ஒன்றாகும்.
சிந்து சமவெளி நாகரிகத்திற்கு அருகிலுள்ள தளங்களில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட சிலைகள், பாறை வெட்டு சிற்பங்கள், குகை ஓவியங்கள் மற்றும் கோவில்கள் மற்றும் நினைவுச்சின்னங்களில் காணப்படும் மனித கலை வடிவங்களில் பண்டைய இந்திய ஆடைகளின் தடங்களைக் காணலாம். ஆனால் அவர்கள் பயன்படுத்திய ஆடைகள் எதுவும் நமக்கு கிடைக்கவில்லை.
இந்திய வேதாகமங்களில் (Scripture) உடைகளை மனித உடலைச் சுற்றி போர்த்தக்கூடிய உருவங்களே காணப்படுகிறது. பாரம்பரிய இந்திய உடைகள் பெரும்பாலும் உடலைச் சுற்றி பல்வேறு வழிகளில் கட்டப்பட்டன.

படிக்க :

சிந்துச் சமவெளி நாகரிகம் வேத நாகரிகம் அல்ல – மரபணு ஆய்வு முடிவுகள் !

கீழடி : ‘‘ஆரிய மேன்மைக்கு ’’ விழுந்த செருப்படி !

தென் இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்தில் நெசவு செய்ததும் சாயம் ஏற்றுவதும் நம் முன்னோருக்கு தெரிந்து இருக்கிறது என்பதற்கான ஆதாரம் ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு, கொடுமணல் போன்ற இடங்களில் பயன்படுத்தியத்தன் சான்று கிடைத்துள்ளது. ஆதிச்சநல்லூரில் கிடைத்த இரும்பாலான நூற்புக்கதிர்கள்,அரிக்கமேட்டில் கிடைத்த சுடுமண்ணால் செய்யப்பட்ட நூற்புக்கதிர்கள், கொடுமணலில் கிடைத்த நூற்பு உருளைகள் போன்றவை தமிழகத்தில் பண்டைக்காலத்தில் நெசவு செய்யப்பட்டதற்கான ஒரு மிகப் பெரிய சான்று.
இப்படி ஒவ்வொரு மனிதச் சமூகங்களிலும் ஒவ்வொரு நாகரிங்களிலும் அந்தச் சமூக நிலைமைகளுக்கு ஏற்ப ஆடைகள் மற்றும் நாகரிகங்களின் வளர்ச்சி நடைபெற்றது. நாகரிக வளர்ச்சியையும் சமூக மாற்றங்களையும் இன்றும், நமக்கு ஆடைகள் அடையாளம் காட்டுகின்றன அல்லவா ?

 

சிந்துஜா சுந்தர்ராஜ்
சமூக ஆர்வலர்

disclaimer

புதிய கல்விக் கொள்கையை கமுக்கமாக அனுமதிக்கும் தி.மு.க !

கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள தனியார் தொண்டு நிறுவனத்துக்கு அனுமதி !
பின்வாசல் வழியாக புதிய கல்விக் கொள்கையை அனுமதிக்கும் தி.மு.க அரசு !
யிரக்கணக்கான ஏழை மக்களின் கல்வியுரிமையைப் பறித்து, அவர்களைத் தற்குறிகளாக்கி, இந்தியாவின் மொத்தக் கல்விச் சந்தையையும் கார்ப்பரேட்டுகளிடம் தூக்கிக் கொடுப்பதையும் இருக்கும் கொஞ்சநஞ்ச அறிவியல் பூர்வமான கல்வியையும் ஒழித்து காவிமயத்தை கல்வியில் புகுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட “புதிய கல்விக் கொள்கை 2020”-ஐ கடந்த ஜீலை மாதம் மோடி அரசு நிறைவேற்றியது.
தற்போது நாட்டிலேயே முதல் முறையாக கர்நாடக மாநிலத்தில் அக்கல்விக் கொள்கை அமல்படுத்தப்படவுள்ளது. இதுகுறித்துப் பேசிய கர்நாடக முதல்வர் பசுவராஜ் பொம்மை “மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு மாணவர்களுக்கும் புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு சேர்ப்பதே அதன் வெற்றி” என்று கூறியுள்ளார். கர்நாடக அரசின் இந்த அறிவிப்புக்குப் பின், அதன் கூட்டணி ஆட்சியுள்ள புதுச்சேரியிலும் கூட புதிய கல்விக் கொள்கை 2020-ஐ அமல்படுத்துவதைப் பற்றிய ஆலோசனை நடந்து வருகின்றது.
படிக்க :
‘சிங்காரச் சென்னை’ : ஆர்.கே நகர் வீடுகளை இடித்த திமுக அரசு !
நாசகர கிடெக்ஸ் நிறுவனத்துக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் திமுக அரசு !
அதேபோல, “சமூக நீதியின் மண்” என்று திராவிட இயக்கத்தினர் பெருமைப்பட்டுக் கொள்ளும் தமிழ்நாட்டிலும் இது படிப்படியாக அமுலுக்கு வரவிருப்பதற்கான சமிக்ஞைகள் தென்படுகின்றன. தேர்தலுக்கு முன்பிருந்தே தி.மு.க., சமூக நீதி பறிபோகிறது, மாநில உரிமை பறிபோகிறது, இந்தி, சமஸ்கிருதம் திணிக்கப்படுகிறது, குலக்கல்வி முறை அமுலுக்கு வருகிறது போன்ற அளவில் மட்டுமே புதிய கல்விக் கொள்கையை எதிர்த்துப் பேசியது.
அக்கொள்கையிலிருக்கும் கார்ப்பரேட் நலன்களையும், அது எப்படி இந்து ராஷ்டிரத்துக்கான கல்விக் கொள்கையாக இருக்கிறது என்பதையும் முழுமையாக மக்களிடம் அம்பலப்படுத்தவோ, பேசவோ இல்லை. தி.மு.க கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்யும் கட்சி தான் என்பது ஏற்கெனவே வெளிப்படையாகத் தெரிந்தாலும், காவிகளுடன் சமரசம் செய்து கொள்ளும் போக்கு இப்போது அதிகரித்து வருகிறது, என்பதை இடைக்குறிப்பாக இங்கே சொல்லலாம்.
அகஸ்தியா நிறுவனத்துக்கு அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கை
கடந்த மே மாதம் தி.மு.க ஆட்சி அமைந்ததிலிருந்து புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதில் அது உறுதியாக இருப்பதாக எல்லா ஊடகங்களிலும் செய்திகள் பரவின. ஆனால், அது முழு உண்மையல்ல. அதற்குச் சில உதாரணங்களைப் பார்ப்போம்.
மே 17-ம் தேதி, அப்போதைய ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு ‘கலந்து கொள்ளாததைப்’ பற்றிப் பேட்டியளித்த தமிழ்நாட்டின் கல்வியமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “இது புறக்கணிப்பல்ல” “கலந்துகொள்ளாமைதான்” “இதை (புதிய கல்விக் கொள்கை) வைத்து நாங்கள் அரசியல் செய்ய விரும்பவில்லை, அவர்களுடன் (ஒன்றிய அரசுடன்) நாங்கள் சண்டையிட விரும்பவில்லை” என்று கூறியுள்ளார். மேலும் அதே பேட்டியில், புதிய கல்விக் கொள்கையில் “திருத்தம் வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.
ஏராளமான மக்கள் விரோதச் சட்டங்களை மூர்க்கமாக அமலாக்கி வரும் ஒன்றிய அரசுடன் சண்டையிடாமல் புதிய கல்விக் கொள்கையை மட்டும் எப்படி முறியடிக்க முடியும்? புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று ஒருபுறம் முழங்கும் தி.மு.க., “திருத்த”த்தைப் பற்றிப் ஏன் பேச வேண்டும்? ஒருபுறம் மோடி அரசைக் கடுமையாக எதிர்ப்பதுபோலக் காட்டிக் கொண்டு அதனுடன் இணக்கமாக நடந்து கொள்ளும் தி.மு.க-வின் இந்தச் சமரசப் போக்குதான் தமிழக மக்கள் மனதில் இருக்கும் பா.ஜ.க எதிர்ப்புணர்வை மழுங்கடிக்கிறது என்பதை இங்கே நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.
அகஸ்தியா பன்னாடுத் தொண்டு நிறுவனத்தின் தலைவர் ராம்ஜி ராகவன்
கல்வியில் அரசின் பாத்திரத்தை ஒழித்துக்கட்டும் நோக்கில், “கற்றல், கற்பித்தல் பணிகளில் தொண்டு நிறுவனங்களை ஈடுபடுத்த வேண்டும்” என்று புதிய கல்விக் கொள்கை கூறுகிறது. அந்த அடிப்படையில் கடந்த ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில், அகஸ்தியா என்ற பன்னாட்டுத் தொண்டு நிறுவனம் (Agastya International Foundation)12 மாவட்டங்களில் கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டது. இதற்கு அப்போது கடும் எதிர்ப்புகள் கிளம்பின. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க-வும் இதை எதிர்த்தது.
தற்போது தி.மு.க அரசோ, அதே அகஸ்தியா நிறுவனத்திற்கு 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு கணிதம், அறிவியல் பாடங்களை இணையவழியில் பாடம் நடத்த அனுமதி வழங்கியுள்ளதோடு, அந்நிறுனத்திற்கு “ஒத்துழைப்பை வழங்க வேண்டும்” என்று மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு உத்திரவிட்டு சுற்றறிக்கையும் அனுப்பியுள்ளது. மேலும், 18 மாவட்டங்களில் அறிவியல் ஆய்வு மையங்களை அமைக்கவும் அந்நிறுவனத்திற்கு அனுமதியளித்துள்ளது.
இன்னொருபுறம், இந்த அகஸ்தியா தொண்டு நிறுவனத்தின் தலைவர் ராம்ஜி ராகவன் என்பவர் ஒன்றிய மோடி அரசின் கல்விக்குழு உறுப்பினராகவும், பிரதமரின் அறிவியல் ஆணையத்தின் உறுப்பினராகவும் இருந்தவர். இப்படிப்பட்ட, ஆர்.எஸ்.எஸ் பின்புலம் கொண்ட இந்த அமைப்புக்கு ‘திராவிட’ தி.மு.க அனுமதியளித்துவிட்டு, இதை எதிர்த்து சட்டப்பேரவையில் கடந்த வியாழன் அன்று (26.08.2021) கேள்வியெழுந்தபோது, “மாணவர்களிடத்தில் அவர்கள் கொள்கையை திணிப்பதை அனுமதிக்க மாட்டோம்” என்று பதிலளித்துள்ளார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. ஆர்.எஸ்.எஸ் சார்பு கல்வி நிறுவனத்துக்கு அனுமதியளிப்பார்களாம், ஆனால் அவர்கள் கொள்கையைத் திணிப்பதைத் தடுப்பார்களாம். இந்த வெட்கக் கேட்டை என்னவென்று சொல்வது?
படிக்க :
♦ திமுக-வின் எதிரி ஆர்.எஸ்.எஸ் அல்ல – பாஜக மட்டுமே || ர.முகமது இல்யாஸ்
♦ ஆர்.எஸ்.எஸ் – பாஜகவின் நிகழ்ச்சிநிரலுக்கு பின் செல்லும் திமுக || மக்கள் அதிகாரம்
ஏழை மக்களின் கல்வியுரிமை மீதான கொடிய தாக்குதலான புதிய கல்விக் கொள்கையை அமலாக்கும் நோக்கில், கல்வியை அரசு கைகழுவுவதற்கான முதல்படிதான் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைக் கொண்டு கற்பித்தல் பணிகளை மேற்கொள்வது. இதற்காகத்தான் கற்றல், கற்பித்தல் பணிகளில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை 20-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் கடந்த ஆண்டிலிருந்து ஈடுபடுத்தி வருகின்றன. எனவே, திமுக அரசின் இந்த நடவடிக்கை என்பது புதிய கல்வி கொள்கை 2020-ஐ பின்வாசல் வழியாக அனுமதிப்பதன் தொடக்கமே அன்றி வேறொன்றுமில்லை.
தேர்தலின்போது நீட் எதிர்ப்பு, புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, தமிழ்நாட்டுக்குத் தனிக் கல்விக் கொள்கை உருவாக்கப்படும் – என்று தி.மு.க வாய் கிழியப் பேசியதெல்லாம் வெறும் ஓட்டுப் பொறுக்கத்தான் என்பது அடுத்தடுத்து நிரூபணமாகி வருகிறது.
பாசிச எதிர்ப்பு என்பது வெறும் பாஜக எதிர்ப்பு அல்ல; மாறாக, கல்வி, மருத்துவம், ஆட்சி அதிகாரம், கலாச்சாரம் ஆகிய துறைகளில் சங்க பரிவார பாசிச கும்பலின் மறைமுகமான ஆதிக்கத்தை முறியடித்தும் தான். இந்தப் பணிதான் முக்கியமானதும் கூட !!

துலிபா
செய்தி ஆதாரம் : இந்து தமிழ்

நாட்டை விற்பனை செய்யும் தேசிய பணமாக்கல் திட்டம் || கண்டன ஆர்ப்பாட்டம்

தருமபுரி :
தேசிய பணமாக்கல் திட்டம் : பொதுத்துறை நிறுவனங்கள் அழிப்பு !
நெடுஞ்சாலை, மின்சாரம், ரயில்வே, விமான நிலையம், நிலக்கரி, துறைமுகம், கனிமவளம் அனைத்தும் கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்ப்பு ! 
கார்ப்பரேட் காவி பாசிசத்தை ஒழிக்காமல் வாழ்வே இல்லை !!
என்ற முழக்கத்தின் கீழ் மக்கள் அதிகாரம் சார்பாக தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நேற்று (செப்டம்பர் 1, 2021)  நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மக்கள் அதிகாரம் அமைப்பின் வட்டார ஒருங்கிணைப்பாளர் தோழர் சிவா தலைமை தாங்கினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி நகரச் செயலாளர் தோழர் லட்சுமணன், மக்கள் ஜனநாயக இளைஞர் முன்னணியின் தோழர் பெரியண்ணன், மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் முத்துக்குமார், பென்னாகரம் பகுதி மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர் கோபிநாத் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இறுதியாக மக்கள் அதிகாரம் மண்டலக் குழு உறுப்பினர் தோழர் அருண், நன்றி உரையாற்றினார்.
தகவல்
மக்கள் அதிகாரம்
தருமபுரி மண்டலம்
9790138614
000
மதுரை :
ன்றிய அரசின் தேசிய பணமாக்கல் திட்டத்தை கண்டித்து செப்டம்பர் 1, 2021 அன்று காலை 10.30 மணி அளவில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மக்கள் அதிகாரம், மதுரை மண்டலம் சார்பாக ஒன்றிணைக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு ஜனநாயக முற்போக்கு இயக்கங்களின் பிரதிநிதிகளும் தோழர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் தோழர் குருசாமி தலைமை தாங்கி நடத்தினார். கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவதற்கு தனித்தனியாக போராடினால் தீர்வு இல்லை ஒன்றிணைந்து போராடுவோம் என பேசி முடித்தார்.
அடுத்ததாக, CPI (M) கட்சியின் மதுரை மாநகர செயலாளர், தோழர் விஜயராஜன் கண்டன உரையாற்றும் போது, “இன்று எல்.ஐ.சி.-யை தனியார்மயமாக்க துடிக்கிறார்கள். வெறும் 5 கோடி ரூபாய் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட எல்.ஐ.சி. நிறுவனம் இன்று 50 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வளர்ந்துள்ளது. அதற்கு காரணம் முக்கியமாக அது உழைக்கும் மக்களின் பணம், அதில் வேலை செய்த தொழிலாளர்களின் உழைப்பு. இது இரண்டையும் கார்ப்பரேட்டுகளுக்கு தூக்கிக் கொடுக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு துறைகளையும் தனியார்மயமாக்க விரைவாக செயல்படுகிறார்கள். இதற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்” என பேசி முடித்தார்.
திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த தோழர் திலீபன் செந்தில் பேசும்போது
அம்பானி அதானி போன்ற முதலாளிகளுக்கும், கார்ப்பரேட் கும்பலுக்கும் சேவை செய்வதே காவி பரிவாரத்தின் ஒரே வேலை என்பதை அழுத்தமாகப் பேசினார்.
தமிழ்ப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பேரறிவாளன் ஆற்றிய கண்டன உரையில், எல்லா துறைகளையும் தனியார்மயம் ஆக்கும் காவிக் கும்பலை அதை விரிவாக மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டியுள்ளது என்பதை வலியுறுத்தும் விதமாக பேசினார்.
புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பைச் சேர்ந்த தோழர் குமரன்,  அவர்கள் பேசும்போது அம்பானி அதானிகளுக்கு இந்து மதவெறிக் கும்பலின் சேவையே இந்த பணமாக்கும் திட்டம். இத்திட்டத்தால் ஏற்படவிருக்கும் கட்டண உயர்வுகள் நேரடியாக மக்களை பாதிக்கும் என்பதை அம்பலப்படுத்தி பேசினார்.
அடுத்ததாக மக்கள் அதிகாரத்தின் போடி பகுதி பொறுப்பாளர் தோழர் கணேசன் அவர்கள் பேசுகையில், “வீடுதோறும் இந்த பிரச்சனையை எடுத்துச் சொல்லி அம்பலப்படுத்துவோம். கார்ப்பரேட் காவி பாசிசத்தை விரட்டியடிப்போம்” என்பதை வலியுறுத்தி பேசினார்.
படிக்க :
♦ “பணமாக்கல் திட்டம்” : கார்ப்பரேட்டுகளுக்கு இந்தியாவை தாரைவார்க்கும் திட்டம் !
♦ கார்ப்பரேட் நலத் திட்டங்கள் : மக்கள் மீதான மோடி அரசின் பொருளாதார யுத்தம் !
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர், தோழர் ராமலிங்கம் உரையாற்றுகையில், இந்த ஒட்டுமொத்த கட்டமைப்பும் தனியார்மயம் தாராளமயம் உலகமயத்தை பாதுகாக்கிறது. இதை வீழ்த்தாமல் நமக்கு வாழ்வில்லை என்பதை ஆழமாக விளக்கிப் பேசினார்.
தமிழ்தேச மக்கள் முன்னணி சார்பாக தோழர் மேரி அவர்கள் இந்த ஆர்ப்பாட்ட நிகழ்வில் கலந்து கொண்டார்.
மதுரை பகுதி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பைச் சேர்ந்த தோழர் ரவி அவர்களின் நன்றியுரையுடன் கூட்டம் முடிந்தது.
மக்கள் அதிகாரம்,
மதுரை மண்டலம்,
78268 47268.

அரியலூரைப் பாலைவனமாக்கும் நாசகர சிமெண்ட் ஆலைகள் !

தென்கரையில் கொள்ளிடத்தின் வடஎல்லையில் வெள்ளாறு என்ற டெல்டா  பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் – தமிழ்நாட்டின் சிறிய மாவட்டங்களில் ஒன்றான –  அரியலூர் அமைந்துள்ளது. தொண்ணூறுகளின் கடைசி வரை விவசாயத்தில் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.
அரியலூர் மாவட்டத்தின் மேற்குப்பகுதியில் சிறுதானியப் பயிர்களான கம்பு, கேழ்வரகு, எள்ளு, சோளம், நிலக்கடலை, கொண்டக்கடலை, முந்தரி ஆகிவையும் டெல்டா பகுதிகளை ஒட்டியுள்ள நிலப்பரப்பில் நெல்லும் கரும்பும் அதிக அளவில் பயிரிடப்பட்டு வந்தன. மேலும், கொத்தமல்லி மற்றும் மிளகாய் என இரண்டுக்கும் பிரசித்தி பெற்ற மாவட்டமாகவும் அது அறியப்படுகிறது.
இப்படி அனைத்து வகையான பயிர்களும் விளைய முக்கியமான காரணம் அங்குள்ள நில அமைப்பு மற்றும் அங்குள்ள மண்ணின் தன்மையாகும். கரிசல் மண், மணல் மண், வண்டல் மண், செம்மண், சுண்ணாம்பு மண் என அனைத்து வகையான மண்ணும் பரவலாக அங்கு காணப்படுகிறது. இப்படி இயற்கையாகவே செழிப்போடு அமைந்த காரணத்தாலேயே அரியலூரானது கார்ப்பரேட்டுகளின் கோரப்பிடியிலும் சிக்கியது.
இம்மாவட்டத்தைச் சுற்றியுள்ள சுமார் 70 கி.மீ சுற்றளவு கொண்ட பகுதிகளில் பவளப் பாறைகள் மற்றும் சுண்ணாம்புப் பாறைகள் பூமிக்கு அடியில் உள்ளன. இந்தச் சுண்ணாம்புப் பாறைகள் அதிக செலவில்லாமல் சிமெண்ட் தாயரிப்பதற்குப் பயன்படுகிறது என்பதை அறிந்து கொண்ட பல்வேறு தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் இவ்விடத்தை பாலைவனமாக மாற்றி வருகின்றன.
படிக்க :
கார்ப்பரேட்டுகளின் பலிபீடத்தில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு !
சுற்றுச் சூழலை அழிக்க வரும் “சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா – 2020” !
1979-ம் ஆண்டில் தமிழ்நாடு அரசு டான்செம் (TANCEM – Tamilnadu Cement Corporation Limited) என்ற சிமெண்ட் ஆலை ஒன்றை முதன்முதலில் அரியலூரில் நிறுவியது. அதன்பிறகு 90-களில் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயயம் என்ற மறுகாலனியக் கொள்கைகள் அமுலாக்கப்பட்ட பின், வேறுசில தனியார் நிறுவனங்களும் சிமெண்ட் கம்பெனிகளை நிறுவத் தொடங்கின.
முதலில் ராம்கோ என்ற தனியார் நிறுவனம் நிலங்களை கையகப்படுத்தி சுண்ணாம்புக்கல் எடுப்பதற்கான சுரங்கங்களையும் அதை சிமெண்டாக மாற்றுவதற்கான தொழிற்சாலையையும் நிறுவியது. அதன்பிறகு ஒன்றன் பின் ஒன்றாக இந்தியா சிமெண்ட், டால்மியா சிமெண்ட், செட்டிநாடு சிமெண்ட், அல்ட்ராடெக் சிமெண்ட் போன்ற நிறுவனங்கள் சுமார் எட்டு இடங்களில் அரியலூரைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆக்கிரமித்தன. பூமியில் சுரங்கத்தை அமைத்து கிட்டத்தட்ட 100 அடிக்கு மேல் தோண்டி சுண்ணாம்புக்கல்லை வெளியில் எடுத்து தொழிற்சாலைகளில் சிமெண்ட் தாயரித்து வருகின்றன.
தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களின் தொழிற்சாலைகள் நிறுவப்பட்ட ஆரம்ப காலங்களிலிருந்து இன்று வரை அங்குள்ள மக்கள் அதை எதிர்த்துப் போரடி வருகிறார்கள். காற்று மாசுபாடு, நீர் மாசுபாடு, மண் மாசுபாடு என அனைத்து வகையான கொடூரங்களையும் இம்மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் அனுபவித்து வருகிறார்கள். ஆனால், இதையெல்லாம் சிறிதும் பொருட்படுத்தாமல் இலாபவெறி பிடித்த கார்ப்பரேட் நிறுவனங்கள் தொடர்ந்து தங்கள் சுரண்டலைத் தீவிரப்படுத்தி வருகின்றன. அதைப்போலவே பல்வேறு விதிமீறல்களும் கொடூரங்களும் நிகழ்ந்து கொண்டு வருவதைக் கண்டுகொள்ளாமல் அரசும் அவர்களின் காவலாளியாகச் செயல்படுகிறது.
அரியலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்படும் சிமெண்ட் ஆலைகள் :
செந்துறை ஒன்றியத்தில் ராம்கோ சிமெண்ட் ஆலையின் யூனிட் 1 மற்றும் யூனிட் 2 ஆகியவை அமைந்துள்ளன. மேலும் அரியலூர் ஒன்றியத்திலும் ராம்கோ சிமிண்ட் ஆலையின் யூனிட் 1 மற்றும் யூனிட் 2 ஆகியவை அமைந்துள்ளன.
டால்மியா சிமெண்ட் ஆலைகள் கல்லக்குடியிலும் (டால்மியாபுரம்) தாமரைக்குளத்திலும் அமைந்துள்ளன. தளவாயில் இந்தியா சிமெண்ட் ஆலை அமைந்துள்ளது. கீழபழுவூரில் செட்டிநாடு சிமெண்ட் ஆலையின் யூனிட் 1, யூனிட் 2 செயல்படுகிறது. அரியலூரில் ரெட்டிப்பாளையத்தில் அல்ட்ராடெக் சிமெண்ட் ஆலைகள் உள்ளன. அரியலூரில் தமிழக அரசின் டான்செம் ஆலையும் செயல்படுகிறது.

 

சிமெண்ட் தொழிற்சாலைகளால் நேரடியாக பாதிக்கப்படும் கிராமங்கள் :
செந்துறை ஒன்றியத்தின் கீழ், வீராக்கன், வஞ்சினபுரம், உஞ்சினி, துளார், தளவாய், சிறுகளத்தூர், சிறுகடம்பூர், செந்துரை, சன்னாசிநல்லூர், பொன்பரப்பி, பிலாகுறிச்சி, பெரியாக்குறிச்சி, பரணம், பாளையகுடி, நமங்குணம், நல்லம்பாளையம், நக்கம்பாடி, நாகல்குழி, மருவத்தூர், மணப்பத்தூர், மணக்குடையான், குமிலியம், குழுமூர், கீழமாளிகை, இரும்பிலிகுறிச்சி, அயன்தத்தனூர், அசாவீரன் குடிக்காடு, ஆனந்தவாடி, ஆலத்தியூர், ஆதனக்குறிச்சி ஆகிய கிராமங்கள் பாதிக்கப்படுகின்றன.
அரியலூர் ஒன்றியத்தின் கீழ், அருங்கால், அஸ்தினாபுரம், ஆண்டிப்பட்டாகாடு, ஆலந்துறையார் கட்டளை, இடையத்தாங்குடி இராயம்புரம், இலுப்பையூர், உசேனாபாத், எருத்துக்காரன்பட்டி, ஓட்டக்கோவில், கடுகூர், கயர்லாபாத், கருப்பிலலாக்கட்டளை, கல்லங்குறிச்சி, காவனூர், கோவிந்தபுரம், சிறுவளூர், சீனிவாசபுரம் சுண்டக்குடி, சுப்புராயபுரம், சென்னிவனம், தவுத்தாய்குளம், தாமரைக்குளம், தேளூர், நாகமங்கலம், புங்கங்குழி, புதுப்பாளையம், பெரியதிருக்கோணம், பெரியநாகலூர், பொட்டவெளி, மணக்கால், மணக்குடி, மேலக்கருப்பூர், ரெட்டிப்பாளையம், வாலாஜாநகரம், விளாங்குடி, வெங்கடகிருஷ்ணாபுரம் ஆகிய கிராமங்கள் பாதிக்கப்படுகின்றன.
அரியலுரை மையமாகக் கொண்டு செயல்படும் இந்த சிமெண்ட் ஆலைகள் ஆண்டுக்கு சுமார் 50 மில்லியன் மெட்ரிக் டன் சிமெண்ட் உற்பத்தி செய்கின்றன.
1 மெட்ரிக் டன் சிமெண்ட் தாயரிப்பதற்கு 1.5-ல் இருந்து 2 மெட்ரிக் டன் சுண்ணாம்புக்கல் – அதாவது 1:1.5 – 2.0 என்ற அளவில் – தேவைப்படுகிறது. இம்மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 250 சுரங்கங்கள் உள்ளன. இப்படி பூமிக்கு அடியில் சுரங்கங்கள் அமைப்பதற்கு சில ‘வரம்புகளும்’ அரசின் தரப்பில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இவ்விதிகள் எதுவும் பின்பற்றப்படுவதில்லை.
சுரங்கம் அமைக்கும் பகுதியைச் சுற்றி சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கப் பசுமைப் பகுதி ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும். உதாரணத்துக்கு, 100 ஏக்கரில் சுரங்கங்கள் அமைக்கப்பட்டால் அதில் 33% பரப்பில் பசுமைப்பகுதியை உருவாக்கிப் பாரமரிக்க வேண்டும். ஆனால், இங்குள்ள நிறுவனங்களோ வெளிப்புறத்தில் வெறும் 5-10 ஏக்கர் அளவு மட்டும் சில மரங்களை நட்டு பசுமைப் பரப்பு எனக் காண்பிக்கிறார்கள்.
மேலும், சுரங்கங்கள் தோண்டுவதற்கு அந்தந்த நிலத்திற்கு ஏற்றவாறு 50 மீட்டர், 40 மீட்டர் என ஆழம் வரையரையறுக்கப்படுகிறது. ஆனால், இது எதையும் ஒரு பொருட்டாகக் கூட மதிக்காமல் சுண்ணாம்புக்கல் இருக்கும் வரை பூமியைத் தோண்டும் வேலையைச் செய்கின்றன இக்கார்ப்பரேட்டுகள். இதனால் நிலநடுக்கம் மற்றும் கடல்நீர் உட்புகும் அபாயம் ஏற்பட அதிகவாய்ப்பு இருக்கிறது என அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இப்படிச் சுண்ணாம்புக் கல்லுக்காக அடி ஆழம் வரை தோண்டப்பட்டு காலவதியான சுரங்கத்தை – அதாவது முழுவதுமாக சுண்ணாம்புக் கல்லை எடுத்தபிறகு – மூடாமல் அப்படியே விட்டுவிட்டு அடுத்த சுரங்கம் தோண்ட சென்று விடுகிறார்கள். இதில் முக்கியமான விசயம் என்னவென்றால் இப்படி அளவுக்குமீறி தோண்டுவதால் சுரங்கத்தை மூடுவதற்கு மண்ணும் இருப்பது இல்லை.
இதுமட்டுமல்லாமல் சுரங்கத்தை மூடாமல் இருப்பதற்கு மற்றுமொரு காரணமுள்ளது. மேலே குறிப்பிட்ட அனைத்துத் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களும் சொந்தமாக மின் உற்பத்தி (Thermal Plant) ஆலையை வைத்துள்ளன. இப்படித் தோண்டப்படும் சுரங்கத்தில் கிடைக்கும் தண்ணீரை மின் ஆலைகளுக்குக் குளிர்விப்பானாக அவை பயன்படுத்திக் கொள்கின்றன.
ராம்கோ நிறுவனமானது, சிமெண்ட் உற்பத்தி தொழிற்சாலை மட்டுமல்லாமல் சுண்ணாம்புக்கல் கழுவும் ஆலை மற்றும் சுண்ணாம்பு கல் தூய்மித்தல் ஆலை என இரண்டு ஆலைகளை வைத்துள்ளது. இந்தச் சுண்ணாம்புக்கல்லை கழுவுவதற்கும் சுரங்கத்தில் இருக்கும் தண்ணீரைத்தான் பயன்படுத்துகிறார்கள். இப்படிச் சுத்திகரித்து வெளிவரும் ஆலைக்கழிவுகள் ஆறுகளில் விடப்படுகிறது.
சுண்ணாம்புக்கல்லைக் கழுவும் ஆலையில் பயன்படுத்தப்படும் பாலிமர் (polymer) எனும் வேதிப்பொருள் கலந்த நீரை, சுரங்கம் தோண்டப்பட்ட 200 அடி ஆழ பள்ளங்களில் விடப்படுவதினால் நிலத்தடிநீர் மாசுபடுகிறது. இப்படி மாசுப்படுத்தப்பட்ட தண்ணீரைக் குடிப்பதினால் அங்குள்ள மக்கள் புற்றுநோய் தோல்நோய், சிறுநீரகப் பிரச்சனை போன்றவற்றிற்கு ஆளாகி வருகிறார்கள்.
சுண்ணாம்புக் கல்லின் புழுதி மண், வெப்பக்காற்று, சிமெண்ட் புழுதி – என இவையனைத்தும் அங்குள்ள காற்றை மாசுபடுத்துகிறது. முக்கியமாக அங்கு அதிகமாகப் பயிரிடப்படும் முந்திரி முதல் வாழை பயிர் வரை பூ வைக்கும் நேரத்தில் அதன்மீது புழுதி படிவதினால் பூ கருகி மகசூல் கிடைப்பது இல்லை.
இரவு நேரங்களில் ஆலைகளிலிருந்து திறந்துவிடப்படும் புகையால், சுமார் 15 கிலோமீட்டர் சுற்றளவு தொலைவிலுள்ள மக்களுக்கு சுவாச பாதிப்புகள் ஏற்படுகிறது. வெளிவரும் புகைப் படிமங்கள் வீடுகளின் மீதும் நீர்நிலைகளின் மீதும் படிந்து மாசுபடுத்துவது அன்றாட நிகழ்வுகளில் ஒன்றாக உள்ளது.
விவசாய நிலங்கள் பக்கத்தில் இருந்தால் 50 மீட்டர் தள்ளி சுரங்கத்தை அமைக்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், அதுவும் பின்பற்றப்படுவது கிடையாது. விவசாயம் துளியளவும் நடைபெறக் கூடாது என விவசாயிகளுக்கு பல்வேறு முறையில் துன்புறுத்துகின்றன இந்நிறுவனங்கள். விவசாய நிலங்களை ஒட்டியே சுரங்கங்கள் தோண்டி மண்சரிவை எற்படுத்துவது, சுற்றியுள்ள நிலங்களை வாங்கிவிட்டு விவசாயிகள் பயன்படுத்தி வரும் வழிகளை ஆக்கரமிப்பு செய்வது என விவசாயிகள் மீது கொடூரமான தாக்குதல் தொடுக்கின்றன இந்நிறுவனங்கள்.
இவற்றைலெல்லாம் தாண்டி சுரங்கத்திலிருந்து ஆலைகளுக்குச் சுண்ணாம்புக் கல்லை எடுத்துச் செல்லும்போது லாரிகளில் அளவுக்கு மீறி கொண்டு செல்லப்படுகிறது. இப்படி எடைகள் அதிகமாக ஏற்றிச் செல்லப்படும் லாரிகள் மக்கள் பயன்படுத்தும் அதே சாலையைப் பயன்படுத்துவதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு அதிகமனோர் இறக்கிறார்கள். இப்படி ஒரு லாரி பஸ் மீது மோதி விபத்து நடந்ததால் ஒரே நேரத்தில் 13 பேர் இறந்து இருக்கிறார்கள்.
சாலையில் மண்சகதி மேடுகள், லாரிகள் தொடர்வண்டி போல வரிசையாக செல்வதால் மற்ற எந்தப் போக்குவரத்தும் நடைபெறாத சூழல் அங்குள்ளது. குறைந்தபட்சம் லாரிகள் மீது தார்பாய்கள் கூடப் போடுவது கிடையது.
ஆரம்பத்தில் நிலத்தை விவசாயிகளிடமிருந்து அடிமாட்டு விலைக்கு வாங்கும்போது அங்குள்ள மக்களுக்கு வேலைவாப்பு கொடுக்கிறோம் என்றும் பெரிய அளவில் மருத்துவமனை கட்டித் தருகிறோம் என்றும் கூறிவிட்டுப் பின்னர் சொன்ன எதையும் செய்தது கிடையாது.
சிமெண்ட் தொழிற்சாலைகள் மூலம் கிடைக்கும் வருவாய் மிக அதிகமானதாக இருந்தாலும் அரியாலூர் மாவட்டத்தின் வளர்ச்சிக்கான எந்தச் செயல்பாடுகளையும் இந்நிறுவனங்கள் செய்தது கிடையாது. முழுக்க முழுக்க இங்குள்ள கிராமங்களை சிமெண்ட் ஆலைகள் சுரண்டுவதற்குரிய ஒரு வேட்டைக் காடாக மட்டுமே பார்க்கின்றன. “இப்படிப்பட்ட இயற்கைப் பேரழிவின் விளைவால் அடுத்த தலைமுறைகள் வாழ மண் கூட எங்கள் பகுதியில் கிடையாது” என்று அப்பகுதி மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.
இதையெல்லாம் தாண்டி சுரங்கத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களின் நிலையோ இன்னும் பரிதாபத்துக்குரியதாக உள்ளது. வேலை நேரங்களில் முறையான பாதுகாப்பின்மை, முறையான ஊதியம் வழங்கப்படாமல் இருப்பது, வேலை நேரத்தை விட அதிகளவு உழைப்பைச் சுரண்டுவது, ஒப்பந்தமுறையின் அடிப்படையில் ஆட்களை தேர்ந்தெடுப்பது, கேள்வி கேட்டால் வேலையை விட்டு தூக்குவது – எனப் பல இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.
ஒரு வாரத்திற்கு முன்பு சுரங்கத்திற்குள் ஒருவர் மர்மமான முறையில் இறந்தபோதும் கூட மருத்துவமனைக்குச் செல்லும் வழியில்தான் இறந்தார் என்று அந்நிறுவனமும், அவர் இதய அடைப்பால்தான் இறந்தார் என்று உடற்கூறு ஆய்வில் பொய்யான தகவலை மருத்துவமனையும் தெரிவிக்கிறது. இதை எதிர்த்து தன்னிச்சையாக சுமார் 500 பேர் போரட்டத்தில் ஈடுப்பட்டனர். ஆனால், வழிநடத்த முறையான அமைப்பு இல்லாத காரணத்தால் போரட்டம் அடுத்த கட்டதை நோக்கிச் செல்லவிடாமல் மக்களை அங்கிருக்கும் உள்ளூர் அரசியல்வாதிகள் புகுந்து கலைத்து விட்டார்கள்.
இப்படி அரியாலூரின் மேற்குப்பகுதியை சிமெண்ட் ஆலைகள் ஆக்கிரமித்துச் சுரண்டி வரும் நிலையில், கிழக்குப் பகுதியான ஜெயங்கொண்டத்தில் நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதற்கு 25 ஆண்டுக்கு முன்பே நிலத்தை கையகப்படுத்தி அதற்கான வேலைகளில் ஈடுப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இதைத்தாண்டி ஜெயங்கொண்டம், டி.பழூர், ஆண்டிமடம் போன்ற பகுதிகளில் 10 இடங்களில் ‘ஹைட்ரோ கார்பன் ஆழ்துளை கிணறுகள்’ அமைக்க ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அனுமதி கேட்டுள்ளது. இப்படி அந்த மாவட்டமே கார்ப்பரேட் பகாசுர நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாற்றப்பட்டுள்ளது.
பெயர் அளவில் நடத்தபடும் கருத்துக் கேட்புக் கூட்டத்திலும் பணம் கொடுத்து ஆட்கள் வரவழைக்கப்பட்டு ஆலைகளுக்கு ஆதரவான கருத்துகளை உருவாக்கி, ஆலைகள் தொடர்ந்து எந்த இடையூறும் இன்றி நடைபெற அரசு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் துணையாக நிற்கிறார்கள். சமீபத்தில் ரெட்டிபாளையம், முனியக்குறிச்சி பகுதியில் நடந்த கருத்துக் கேட்புக் கூட்டத்திலும் மக்களுக்கு இச்சிமெண்ட் ஆலைகளினால் ஏற்படும் எந்தவொரு பாதிப்பையும் பேச வாய்ப்பு வழங்காமல் முழுக்க ழுழுக்க ஆலைகளுக்கு ஆதரவான கூட்டமாகவே மடைமாற்றம் செய்யப்பட்டது.
சுற்றியுள்ள நிலங்களை – அதாவது கோயில் நிலங்கள், நீரோடைகள், புறம்போக்கு நிலங்கள் ஆகியவற்றை – அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் துணையுடன் தேவையில்லாத நிலங்கள் எனக் கூறி ஆக்கிரமிப்பு செய்துள்ளன இந்நிறுவனங்கள்.
அடுத்ததாக செந்துறை என்ற பகுதியில் சுரங்கம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தி வைத்துள்ளனர். மேலும், புதுபாளையம் கிராமத்தில் 120 அடிக்கு மேல்தான் சுண்ணாம்புக்கல் இருக்கிறதென்று அவ்வளவு அடிவரையிலும் மண்ணை எடுக்க திட்டம் போடப்பட்டுள்ளது. இப்படி 120 அடி வரைக்கும் வெறும் மண்ணை மட்டும் எடுத்தால் பெரும் நிலச்சரிவு ஏற்படும் என்று மக்கள் அதை எதிர்த்து வருகிறார்கள்.
ஆசியாவிலேயே அதிகளவில் சிமெண்ட் உற்பத்திக்கான நிலமாக உள்ள அரியலூரும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களும் இக்கார்ப்பரேட் ஓநாய்களின் இலாப வெறிக்காக தாரைவார்க்கப் பட்டிருப்பதைப் பற்றியும், இங்குள்ள மக்களின் எதிர்ப்பைப் பற்றியும் இம்மியளவும் வெளியேத் தெரியாமல் அரசு ஒருபுறம் மூடிமறைத்து வருகிறது. இன்னொருபுறம் இதுபற்றி ஊடகங்களும், மேலோட்டமாகவும் சிமெண்ட் ஆலைகளின் பெயர்களைக் கூடக் குறிப்பிடாமலும் செய்திகளை வெளியிட்டு இக்கார்ப்பரேட்டுகளுக்குச் சேவை செய்து வருகின்றன.
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக உருவான இயற்கை வளங்களை ஒரே நொடிப்பொழுதில் சுரண்டிக் கொழுக்கும் இக்கார்ப்பரேட்டுகள், நிலத்தையும் நீரையும் காற்றையும் நஞ்சாக்கி, அரியலூரையே மக்கள் வாழத் தகுதியற்ற பாலைவனமாக்கி வருகின்றன.
படிக்க :
அரியலூர் : ராம்கோ சிமெண்ட் ஆலைக்கு துணைபோகும் மாவட்ட நிர்வாகம் !!
ராம்கோ ராஜாவுக்கு அடியாளாக போலிக் கம்யூனிஸ்டு தளபதிகள் !
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் எந்தக் கட்சியின் ஆட்சியமைந்தாலும், இந்நாசகர கார்ப்பரேட்டுகள் அரியலூரைப் பாலைவனமாக்குவது நாளுக்குநாள் தீவிரமடைந்துதான் வருகிறதே ஒழிய, குறைந்தபாடில்லை. அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் கைக்குள் போட்டுக் கொண்டுள்ள இந்நிறுவனங்கள் எல்லாவித அட்டூழியங்களையும் செய்து வருகின்றன. இந்த விவகாரத்தில் மட்டுமல்ல கூடங்குளம் தொடங்கி தூத்துக்குடி ஸ்டெர்லைட் வரை இங்கு இருக்கும் அரசு, அரசியல் கட்சிகள், நீதிமன்றங்கள், அதிகார வர்க்கம், போலீசு, சட்டங்கள் – இவையெல்லாம் நாசகர கார்ப்பரேட்டுகளுக்குச் சேவை செய்வதையும் அதற்காக மக்களை ஒடுக்குவதையும் நாம் கண்கூடாகப் பார்த்து வருகிறோம்.
இந்த மக்கள் விரோத, சுற்றுச்சூழல் விரோத முதலாளித்துவ அரசமைப்பை மாற்றியமைக்காமல் பெரு நிறுவனங்களின் அராஜக – லாபவெறி மிக்க நடவடிக்கைகளால் மக்களுக்கு ஏற்படும் வாழ்வாதாரப் பிரச்சினைகளை தீர்க்க முடியாது !

மா. கார்க்கி

அனல் மின் நிலைய நிலக்கரி மாயம் : அளவா ? தரமா ? ஊழலா ?

சென்ற வாரம் தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அனல்மின் நிலையத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த 2.30 லட்சம் டன் நிலக்கரியைக் காணவில்லை என்றார். உடனே நாமெல்லாம் அடடா நமக்கு ஒரு மீம்ஸ்-க்கு மெட்டீரியல் கிடைத்துவிட்டது என்று குதூகலித்தோம். நமக்கும் இந்த கொரோனாவால் வாழ்க்கை ரொம்பவும் போரடித்துக் கிடக்கிறது. பொண்டாட்டி, காதலியைத் தவிர வேறு யாருக்கும் முத்தம் கூட கொடுக்க முடியாத துயரம் தமிழகத்தை வாட்டுகிறது. ஒரு பக்கம் கொரோனா இன்னொரு பக்கம் ஸ்கேன்டல் வீடியோ.
செந்தில் பாலாஜி சொன்னபோதே எனக்கு ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிந்தது; இது ஏதோ inventory சமாச்சாரம்; ஆனால், அமைச்சர் அதை கில்மா சம்பவம் போல ஆக்கி தன் பங்குங்கு சிக்ஸர் அடிக்க முயல்கிறார் என்று. இப்போது படித்தால், நடந்த சம்பவம் அதுதான்.
நிலக்கரியை எரித்து அதிலிருந்து நாம் மின்சாரம் உற்பத்தி செய்கிறோம். அதைச் செய்பவை அனல் மின் நிலையங்கள். ரொம்ப டெக்னிக்கலாக மண்டையைப் போட்டு குடையாதீர்கள். எனக்கு அது என்ன என்று விளக்கமாக சொல்ல வரும்; ஆனால் உங்களுக்கு போரடிக்கும். இங்கு இந்த கிணறு காணாமல் போன சம்பவம் மட்டும் என்ன என்று பார்ப்போம். படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்க வேண்டும் அல்லவா; அதனால் வருடத்துக்கு இழப்பு மட்டும் சில ஆயிரம் கோடிகள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அதெல்லாம் கரண்ட் பில்லாக நமது தலையில்தான் விடிகிறது. இப்படி சொன்னால்தான் ஷாக் அடித்த மாதிரி புரியும்.
படிக்க :
அனல் மின் நிலையம் : அதானிக்காக தளர்த்தப்படும் காற்று மாசுபாடு வரம்புகள் !
வடசென்னை அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளி மரணம் !
இந்த நிலக்கரி கொள்முதல் என்பது பொன் முட்டையிடும் வாத்து. வாத்து என்பது கூட தவறு, பொன் லத்தி போடும் யானை. சுமக்கத்தான் நாம் இருக்கிறோமே அப்புறம் என்ன. நமக்குக் கிடைக்கும் உள்ளூர் நிலக்கரி தவிர்த்து பெரும்பாலான நிலக்கரியை நாம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்கிறோம். இந்தோனேஷியா பெரிய சப்ளையர்.
எந்த ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றாலும், அதற்கு ஒரு தர நிர்ணய அளவீடு இருக்கும் அல்லவா? கத்திரிக்காய் வாங்கினால் முத்தலாக இருக்கக் கூடாது, சீனி வாங்கினால் இனிப்பாக இருக்க வேண்டும் மண்ணு மாதிரி இருக்கக் கூடாது, ஒரு குவார்ட்டர் சரக்கடித்தால் அட்லீஸ்ட் ஒரு மணி நேரத்துக்கு போதை இருக்க வேண்டும் என்பது மாதிரி. இது மாதிரி நிலக்கரிக்கும் தர அளவுகோல் இருக்கிறது. அதற்கு நிலக்கரியின் calorofic value (குத்துமதிப்பாக சொன்னால் எரிதிறன்) என்று பெயர்.
நாம் நிலக்கரி வாங்குவதற்கு ஒரு கம்பெனிக்கு ஆர்டர் தருகிறோம் என்று சொன்னால், எங்களுக்கு கிலோவுக்கு இவ்வளவு எரிதிறன் உள்ள நிலக்கரி வேண்டும் என்று சொல்லுவோம். அவர்கள் அதற்குத் தகுந்தாற்போல் விலை சொல்லுவார்கள்.  உதாரணத்துக்கு, எரிதிறன் அளவு ஒரு கிலோ நிலக்கரிக்கு 6500 KCL என்பது தர நிர்ணயம். இந்த 6500 KCL என்கிற அளவுக்கு பதிலாக அந்த கம்பெனி 5000 KCL திறன் கொண்ட நிலக்கரியை சப்ளை பண்ணிவிட்டால் என்ன நடக்கும்? நீங்கள் உற்பத்தி செய்கிற மின்சாரம் குறையும். அதனால் நாம் என்ன செய்வோம், சரி உன்னுடைய சாமானில் சூடு கம்மியாக கிளம்புகிறது அதனால் விலையைக் குறைத்துக்கொள் என்று சொல்வோம். பேரம் நடக்கும் விலைக்குறைப்பு நடக்கும். இதுதான் உலக நடைமுறை.
ஆனால், அரசுக் கொள்முதலில் என்ன நடக்கும் என்றால், கரி என்னவோ 5000 KCL கரிதான் ஆனால், விலை மட்டும் 6500 KCL கரிக்கு என்ன விலையோ அதை இறுதி செய்து, மீதி தொகைக்கு பேரம் நடந்து கட்டிங் கைமாறும். டாக்குமென்டில் எல்லாம் 6500 KCL கரி என்றுதான் இருக்கும். ஆனால், சப்ளை என்னவோ 5000 KCL கரிதான். ஒரு ஆண்டிற்கு எவ்வளவு நிலக்கரி நாம் இறக்குமதி செய்கிறோம் என்று கணக்கு பண்ணி பார்த்தால், இந்த கட்டிங் மட்டுமே பல்லாயிரம் கோடிகளில் இருக்கும். அதனால்தான் அந்தத் துறைக்கு மந்திரி, உயரதிகாரி என்று கடை மட்டம் வரை எல்லாரும் போட்டி போடுவார்கள். ரெண்டு வருடம் இருந்தாலே லைஃப் டைம் செட்டில்மென்ட் இல்லையா அதான்.
அனுபவசாலியான செந்தில் பாலாஜியை தளபதி அங்கு நியமித்திருப்பதன் சூட்சுமம் புரிகிறதா? துரைமுருகன், எ.வ.வேலுக்கு அடுத்து செந்தில் பாலாஜி கையில்தான் நல்ல பேட் இருக்கிறது. சிக்ஸர்கள் பறக்கும். சரி நாம் சம்பவ இடத்துக்குப் போவோம்.
உதாரணமாக, 100 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க 80,000 டன் 6500 KCL நிலக்கரி தேவைப்படும் என்றால் அதே மின்சாரத்தை 5000 KCL கொண்டு தயாரிக்க 1 லட்சம் டன் நிலக்கரி வேண்டும். இப்படிக் கூடுதலாக செலவான நிலக்கரிதான் கிணறு காணாமல் போன கதை.
பேப்பரில் இருப்பது சூடு உள்ள நிலக்கரி, குடோனில் இருப்பது சூடு குறைந்த நிலக்கரி. அனல் மின் நிலையத்தில் இருப்பவன், நிறைய கரியை அள்ளிப்போட்டு கொளுத்திதான் தனது இலக்கை எட்டியிருப்பான். தயாரித்த மின்சாரம் இவ்வளவு அதற்கு எரித்த கரி இவ்வளவு என்று கடைசியாக கணக்கு பார்க்கையில் 2.30 லட்சம் டன் நிலக்கரி கூடுதலாக எரிக்கப்பட்டிருப்பது தெரிகிறது. அதைத்தான் நிலக்கரியைக் காணவில்லை என்கிறார் மந்திரி. அவருக்கு இந்த சம்பவம் தெரியாதா? நன்றாகத் தெரியும். பிறகு ஏன் அப்படி சொல்கிறார். அப்படி சொன்னால்தான் அது சென்சேஷனல் செய்தி.
நான் மேலே சொல்லியிருப்பது கொள்முதல் ஊழல் மட்டுமே. அங்கு நடக்கும் ஒவ்வொரு செயலுமே ஊழலாக, பொறுப்பற்ற தன்மையாக இருக்கிறது. படிப்பதற்கே சலிப்பாக இருக்கிறது. ஒவ்வொரு நிர்வாக நடைமுறையிலும் பெரிய பெரிய ஓட்டைகள். தெரிந்தே விட்டு வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு கொள்முதலின் போதும், sample basis-ல் அவற்றின் எரிதிறனை சோதிக்க சரியான சோதனைக் கூடங்களே இல்லை. போர்ட்டில் இருந்து கரியை அனல் மின் நிலையத்துக்கு கொண்டு வருவதில் வீணாகும் கரி முதல், அதை முறையாக குவித்து வைக்காமல் வீணாகும் கரி வரை சில ஆயிரம் கோடிகள் வீணாகின்றன.
அடுத்து அனல் மின் நிலைய உபகரணக் கொள்முதல். தரமற்ற பொருட்களை வாங்கி பொருத்துவது. அது அடிக்கடி பழுதாகும். மீண்டும் கொள்முதல். அவற்றை பராமரிக்கும் கம்பெனிக்கு தொடர்ந்து maintenance contract. அரசு இதில் ரொம்பவும் கண்டிப்பாக இருக்க முடியாது. எப்போது மின்சாரத்தை நிறுத்தினால், அரசு அடிவாங்கும் என்று அதிகாரிகளுக்குத் தெரியும். அதனால் அவர்களை ராஜா போலத்தான் நடத்த வேண்டும். அரசின் பங்குக்கு அரசின் ஊழல், அதிகாரிகளின் பங்குக்கு அவர்களின் ஊழல். எந்த accountability யும் இல்லை.
படிக்க :
சுற்றுச் சூழலை சீரழிக்கும் அனல் மின் நிலையங்கள் – கண்டுகொள்ளாத அரசு !
ரூ.1,60,000 கோடி மின் வாரிய கடன் : அதிக தனியார் கொள்முதல் விலையே காரணம் !
செந்தில் பாலாஜி வந்து அப்படியே சிஸ்டத்தை நட்டு நிமிர்த்தி விடுவார் என்று நான் நம்பவில்லை. நமக்கு விசிலடிப்பதற்கு சில வாய்ப்புகளைத் தருவார் அவ்வளவே. மடியில் கனமில்லை வழியில் பயமில்லை என்று சொல்லியிருக்கிறார் முன்னாள் மந்திரி தங்கமணி. கூடுதலாக இந்த பற்றாக்குறையை ஒன்றும் திமுக வந்து கண்டுபிடிக்கவில்லை; 2020-ம் ஆண்டே கவனத்துக்கு வந்ததுதான் என்கிறார். சரி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், கொஞ்சம் தேர்தல் வேலைகளில் பிஸியாக இருந்துவிட்டேன் என்கிறார். மந்திரியை விடுங்கள், நிர்வாகத்துக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இருக்கிறார்களே அவர்கள் என்ன சொல்கிறார்கள்? தேர்தல் பாஸ், இந்த கொரோனா வேறு அதான். ஹி.. ஹி.. ஹி.. என்கிறார்கள்.

முகநூலில் : Karl Max Ganapathy
disclaimer

புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் அண்ணா பல்கலை || CCCE

தேசிய கல்விக் கொள்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும்
அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் !
ண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப்  பதவியேற்றுள்ள பேரா. வேல்ராஜ் பல்கலைக்கழக மேம்பாட்டிற்காக சில முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். அதில் ‘கலவை கற்றல்-கற்பித்தல் (Blended Teaching and Learning) முறையும், இரண்டு வகையான பொறியியல் பாடதிட்டமும் கொண்டுவரப்போவதாக தெரிவித்துள்ளார்.
கலவை கற்றல்-கற்பித்தல் முறையைப் பற்றி குறிப்பிடும்போது, ‘ஒரு பாடத்தில் புலமை பெற்ற 4 அல்லது 5 பேராசிரியர்களைக் கொண்டு பாடம் எடுக்கப்பட்டு அது பதிவு செய்யப்படும். அந்த வீடியோவை மற்ற பேராசிரியர்கள் மாணவர்களுக்கு விளக்குவார்கள்’ என்று கூறியுள்ளார்.
மேலும் ‘பொறியியல் படிக்கும் மாணவர்களில் 20% மாணவர்களால்  மட்டும்தான் பாடத்தினை புரிந்து கொள்ள முடிகிறது மீதமுள்ள 80% மாணவர்களுக்குப் பாடம் புரியவில்லை என்பதால் 20% மாணவர்களுக்கு ஒரு பாடத்திட்டமும் (இது முதுகலை படிப்பு மற்றும் ஆராய்ச்சி) 80% மாணவர்களுக்கு மற்றொரு பாடத்திட்டமும் (திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு) கொண்டுவரப்படும்’ என்று கூறியுள்ளார்.
படிக்க :
UGC-ன் புதிய வகை கற்றல் – கற்பித்தலுக்கான வழிகாட்டுதலைப் புறக்கணிக்கப்போம் || CCCE
RSS-BJP ன் அறிவியல் புறக்கணிப்பும் இந்துராஷ்ட்ரா வெறியுமே கொரோனா பேரழிவிற்கு காரணம் || CCCE
மே மாதத்தில் கலவை கற்றல் முறை (Blended Learning-BL) பற்றிய அறிக்கையை பல்கலைக்கழக மானிய குழு (UGC) வெளியிட்டு அதன்மீது கருத்து கேட்டிருந்தது. அதில் ஒரு பாடத்தில் 30 சதவிகிதத்திலிருந்து 70 சதவிகித வகுப்புகளை இணைய வழியில் (online) நடத்தலாம் என்றும் மீதமுள்ள வகுப்புகளை மரபு வழியான (face to face) முறையில் நடத்தலாம் என்றும் வழிகாட்டியிருந்தது.
மேலும், பல்கலைக்கழகங்கள் இணையவழிக் கற்பித்தலுக்கான பாடங்களைத் தயாரித்துக் கொள்ளவதற்கான பொதுவழிகாட்டுதலையும் (IPSIT model) கொடுத்திருந்தது. பல்கலைக்கழக மானியக் குழுவின் இந்த வழிக்காட்டுதலுக்கு இந்தியா முழுவதிலும் உள்ள பல ஆசிரியர் அமைப்புகளும் கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இணையக் கட்டமைப்பு இல்லாமை, இத்திட்டத்திற்கு பின்னாலுள்ள தனியார்களின் லாபநோக்கம், ஆசிரியர்களின் வேலையிழப்பு ஆகியவற்றை முன்னிறுத்தி தமிழ்நாட்டிலுள்ள ஆசிரியர் சங்கங்களும், CCCE உள்ளிட்ட பல உயர்கல்வி அமைப்புகளும் கலவை கற்றல்-கற்பித்தல் முறையை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு கல்வி தொடர்பாக வந்துள்ள பல அறிக்கைகள் (NSSO report, USDIE report, Azim premji University report  மற்றும் பல்வேறு அமைப்புகளின் அறிக்கைகள்) இணைய வழியிலான கற்றல்-கற்பித்தலின் வழியே, வசதி படைத்தவர்கள் மட்டுமே கல்வி பெற முடிகிறதென்றும், சமுதாய – பொருளாதார நிலையில் பின்தங்கிய, கிராமப்புற, விவசாய பின்புலத்திலிருந்து வரக்கூடிய மாணவர்களால் கல்வியை சரிவர தொடர முடியவில்லை என்றும் நிரூபித்திருக்கின்றன.
சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய இணையவழித் தேர்வில் ஏராளமான மாணவர்கள் தோல்வியடைந்தற்குக் கூட இணையக் கட்டமைப்பு போதாமையும் ஒரு காரணமாக பேசப்பட்டது.
இணையவழிக் கற்றல் முறையின் பாதிப்புகள் குறித்து போதுமான ஆதாரங்கள் இருந்தும், துணைவேந்தர் கலவை கற்றல்-கற்பித்தல் முறையை நடைமுறைப்படுத்தப் போவதாக கூறுவதை எவ்வாறு எடுத்துக் கொள்வது?
‘பொறியியல் படிக்கின்ற மாணவர்களுக்கு பாடங்கள் புரிவதில்லை, திறமையானவர்களாக இருப்பதில்லை’ என்ற குற்றச்சாட்டுகள் கடந்த பத்தாண்டுகளாகவே குறிப்பாக திறன் மேம்பாட்டு (Skill development) அறிவிப்புகளுக்குப் பிறகு பலராலும் முன்வைக்கப்படுகிறது. ஆனால், பெரும்பான்மை மாணவர்களுக்கு பொறியியல் பாடங்கள் புரியாமல் இருப்பதற்கும், துறை சார்ந்த திறமைகள் எதிர்பார்க்கின்ற அளவிற்கு இல்லாமல் போனதற்கும் காரணம் என்ன என்பதைப் பற்றி இந்த மேதைகள் வாய்திறப்பதில்லை.
பல்கலைக்கழகங்களின் ஊழல் முறைகேடுகள், கொள்ளையடிப்பதையே இலக்காகக் கொண்ட தனியார் கல்லூரிகளுக்கு முன்னுரிமை, தகுதியற்ற ஆசிரியர்கள் நியமனங்கள், குறைந்த சம்பளத்திற்கும் மோசமான பணி சூழலிலும் வேலைச் செய்யும் தனியார் கல்லூரி ஆசிரியர்கள், ஆய்வகங்கள் உள்பட போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத கல்லூரிகள் ஆகிய காரணங்களை, மாணவர்களின் பொறியியல் திறமைக் குறைபாடுகளுக்கான பிரதானக் காரணிகளாகக் கூறலாம்.
பொறியியல் கல்லூரிகளை கண்காணிக்கும் AICTE மற்றும் அண்ணா பல்கலைக்கழகமோ, இப்பிரச்சனைகளைப் பற்றி பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. ஆனால், உயர்கல்வித் துறை அதிகாரிகளோ அல்லது கல்விச் சந்தையின் லாபத்தினால் வழிநடத்தப்படும் ‘கல்வியாளர்களோ’ மாணவர்களைக் குற்றஞ்சுமத்துகிறார்கள். துணைவேந்தரோ பாடத்திட்டத்தினை பிரிப்பதன் மூலம் இப்பிரச்சனையை சரிசெய்ய முடியும் என்ற தீர்வை முன்வைக்கிறார்.
கடந்த முப்பதாண்டு கால தனியார்மயக் கொள்கைகளின் விளைவால் பணம் உள்ளவனுக்கே தரமான கல்வி என்ற நிலை எதார்த்தமாகியுள்ளது. கூடவே சமூக – பொருளாதார நிலைமைகளில் மிகவும் ஏற்றத்தாழ்வான இந்திய சூழலில் இரண்டு வகையானப் பாடத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதென்பது மேற்படிப்புகள் மற்றும் ஆராய்ச்சி படிப்பென்பது ஒரு சாராருக்கும், பொறியியலின் அடிமட்ட வேலைகள் மற்றொரு பிரிவினருக்குமானது எனும் பிரிவினையையே ஏற்படுத்தும்.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் கூறியுள்ள இரண்டு திட்டங்களுமே உயர்கல்வி குறித்து NEP-2020 அறிக்கையினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள பிரதான வழிகாட்டுதல்களாகும் (Skill based training, vocationalisation of education, online education, ODL). தேசிய கல்விக்கொள்கை 2020-ஐ தமிழ்நாடு அரசு அமல்படுத்தப் போவதில்லை என உயர் கல்வி அமைச்சர் பொன்முடி சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். கூடவே, மாநிலத்திற்கு என தனியான கல்விக் கொள்கையை உருவாக்கப்போவதாகவும் மாநில அரசு அறிவித்துள்ளது.
படிக்க :
தமிழகப் பல்கலைக் கழகங்களில் பறிபோகும் 69 சதவிகித இடஒதுக்கீடு || CCCE
வல்லரசுக் கனவும் மாட்டுச்சாணி ஆய்வும் !! || CCCE
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரின் அறிவிப்பு மாநில அரசின் நிலைப்பாடிற்கு எதிராக உள்ளது. இது கல்வியாளர்கள் மத்தியில் குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
புதிய தொழில்நுட்பங்கள் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த உதவும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதுபோல சுயசார்பு மற்றும் வேலைவாய்ப்பிற்கான பாடத்திட்டத்தினை கொண்டு வருவதையும் நாம் வரவேற்கிறோம். ஆனால், பொறியியல் கல்வியின் தரத்தினை மேம்படுத்த தடையாக உள்ள மேற்சொன்ன பிரச்சனைகளை களைவதற்குப் பதிலாக தொழில்நுட்பத்தையும் பாடத்திட்டத்தையும் தீர்வாக முன்னிறுத்துவது சிக்கலை இன்னும் ஆழப்படுத்தவே செய்யும் எனக் கருதுகிறோம்.
பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்பு குழு,
தமிழ்நாடு CCCE-TN

மேக்கேத்தாட்டு அணை : கர்நாடகம் நோக்கி மக்கள் அதிகாரம் பேரணி !

மேக்கேத்தாட்டு அணை தமிழகத்தின் மீதான தாக்குதலை முறியடிப்போம்!
கார்ப்பரேட் – காவி பாசிசத்தை வீழ்த்துவோம்!
காவிரி உரிமையை மீட்க தமிழகத்தில் பேரழுச்சியை உருவாக்குவோம்!
மேற்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் கர்நாடகா மேக்கேதாட்டு நோக்கி 30.8.2021 – அன்று காலை 11 மணிக்கு அஞ்செட்டி பேருந்து நிலையம் அருகில் பேரணி – ஆர்ப்பாட்டம் தொடங்கியது.
ஆர்ப்பாட்டத்தில் அஞ்செட்டி வட்டார ஒருங்கிணைப்பாளர் தோழர் சரவணன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாக தோழர் சத்தியநாதன் மாவட்ட அமைப்பாளர் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தர்மபுரி மற்றும் தோழர் சங்கர், மாநில ஒருங்கிணைப்பு குழு, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, ஓசூர் ஆகியோர் உரையாற்றினர். இறுதியாக, மக்கள் அதிகாரம் தோழர் கோபிநாத் சிறப்புரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு பேருந்து நிலையத்திலிருந்து மேக்கேதாட்டு நோக்கி பறையிசை முழங்க நடைபயணம் தொடங்கியது. இதனைக் காண கடைவீதியில் நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம் நடக்குமிடத்திற்கு அருகில் குழுமினர். மேக்கேத்தாட்டு நோக்கி நடைபயணத்திற்கு போலீசார் ஏற்கனவே அனுமதி மறுத்திருந்த நிலையிலும் தடையை மீறி பேரணி செல்ல பெண்கள் குழந்தைகளோடு சென்றனர்.
படிக்க :
மேக்கே தாட்டு நோக்கி நடைபயணம் || மக்கள் அதிகாரம் பிரச்சாரம்
மேக்கேதாட்டு அணை கட்டுவதை தடுத்து நிறுத்து || மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !
போலீசுத்துறை தடுப்புகளை அமைத்து தோழர்களைக் கைது செய்து மண்டபத்தில் வைத்தது. இதில் 60-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கைதாகினர். குழந்தைகளை கைது செய்து வண்டியில் ஏற்ற மறுத்தது போலீசு. குழந்தைகளை எங்களோடு அழைத்து செல்ல அனுமதிக்கவில்லை என்றால் போராட்டத்தின் தன்மை மாறும் என்று முழுக்கமிட்ட பிறகு, திருமண மண்டபம் வரை அழைத்து வந்தனர். பிறகு மண்டபத்தில் குழந்தைகளை விட மறுத்தனர். அங்கும் போலீசை எதிர்த்து போராட்டம் நடத்தப்பட்டது. ஒரு கட்டத்தில் மண்டபத்தில் வெளியே இருந்தவாரே கையொப்பம் பெற்று விடுதலை செய்தனர்.
இப்போராட்டம் மூலம் எடுக்கப்பட்ட பிரச்சாரங்களால் பகுதி மக்களிடையே மேக்கேதாட்டு அணை குறித்த விரிவான புரிதலை ஏற்படுத்த முடிந்தது. குறிப்பாக நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாரை குவித்து காலை முதலே அஞ்செட்டி கடைவீதி பகுதிகளில் பரபரப்பை ஏற்பதுத்தியது போலீசு. இதனையடுத்து மக்கள் அதிகாரம் தோழர்கள் பறையடித்து முழக்கமிட்டுக் கொண்டு பேரணியாக வந்தது பகுதி மக்களிடையே பெருத்த வரவேற்பை ஏற்படுத்தியது.
மேக்கேதாட்டு விவகாரத்தில் பாஜக – காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அனைத்தும் கர்நாடக மக்களிடம் இனவெறியைத் தூண்டி அரசியல் ஆதாயத்திற்காக மேக்கேதாட்டு  அணை கட்ட முயற்சித்து வருகிறது. மற்றொருபுறம் கார்ப்பரேட் முதலாளிகளிடம் தண்ணீர் வினியோகத்தை ஒப்படைப்பதற்கான ஒரு பகுதியாக  மேக்கேதாட்டு அணை திட்டம் உள்ளது என்பதை அம்பலப்படுத்தி, ஓட்டுக் கட்சிகளின் பின்னால் சென்று பிரச்சினையை தீர்க்க முடியாது. தமிழகத்தில் ஓர் மக்கள் எழுச்சியை ஏற்படுத்த வேண்டும் என்கிற அடிப்படையில் மக்களுக்கு அறைகூவல் விடுத்து நடத்திய இந்த நடைபயண போராட்டம் பல்வேறு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

This slideshow requires JavaScript.

மேக்கேதாட்டு-வில் எக்காரணத்தைக் கொண்டும் அணை கட்ட அனுமதிக்க மாட்டோம். என்கிற வகையில் தமிழகத்தில் போராட்டம் நடத்துவதற்கு தடை இருக்கக் கூடாது. இதன்மூலம் தமிழக மக்களிடம் ஒரு பேரெழுச்சியைக் கொண்டு வரவேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த பேரணி நடைபெற்றது.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தருமபுரி மண்டலம்.

9790138614

கார்ப்பரேட் நலத் திட்டங்கள் : மக்கள் மீதான மோடி அரசின் பொருளாதார யுத்தம் !

நாட்டு மக்கள் மீது இந்திய ஆட்சியாளர்கள் நடத்தும் பொருளாதார யுத்தம் !
நேஷனல் மானிடேசன் பைப் லைன் (National monetization pipe) என்ற திட்டத்தின் பெயரில் தேசத்தின் சொத்துக்களை இந்திய பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரைவார்க்க முழு வேகத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அரசு.
1950-ல் கலப்பு பொருளாதாரம் என்ற பெயரில் பொருளாதாரத் திட்டங்களை வகுத்து அரசுக்கு வழிகாட்ட திட்ட கமிஷன் நிறுவப்பட்டது. பாரதிய ஜனதா கட்சி இந்திய ஒன்றியத்தின் ஆட்சியைப் பிடித்தவுடன் 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் திட்டக்கமிஷன் கலைக்கப்பட்டு அரசின் பொருளாதாரக் கொள்கைகளை வகுத்தளிக்க நிதி ஆயோக் என்ற புதிய அமைப்பு பாஜக-வால் உருவாக்கப்பட்டது.
நிதி ஆயோக் பரிந்துரையின்பேரில் தற்போது இந்திய நாட்டின் கேந்திரமான செல்வ வளங்களை தனியாருக்கு தாரை வார்க்க முனைப்புடன் களமிறங்கியுள்ளது மோடி அரசு. நிதி ஆயோக் அமைப்பு உருவாக்கப்பட்டதன் நோக்கமும் இதுதான்.
இந்திய துணை கண்டத்தின் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் கடுமையான உழைப்பால் உதிரத்தால்; தேசபக்த அறிவுத் துறையின் மிகப்பெரிய பங்களிப்பால்; இந்திய மக்களின் வரிப்பணத்தை கொண்டு உருவாக்கப்பட்ட கேந்திரமான கட்டமைப்புகளை கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபவெறிக்கு ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர் ஒன்றிய ஆட்சியாளர்கள்.
படிக்க :
“பணமாக்கல் திட்டம்” : கார்ப்பரேட்டுகளுக்கு இந்தியாவை தாரைவார்க்கும் திட்டம் !
பழைய வாகன அழிப்புக் கொள்கை : மோடியின் புதிய கார்ப்பரேட் சேவை !
167 ஆண்டுகள் பாரம்பரியமிக்க இந்திய ரயில்வே துறையை கார்ப்பரேட் வசம் ஒப்படைக்க உள்ளனர். ரயில்வே இருப்புப் பாதைகள் 1,15,000 கிலோமீட்டர் தனியார் கரங்களுக்கு செல்ல இருக்கிறது. காடுகளை சீர்செய்து மலைகளை குடைந்து இந்திய ரயில்வே துறைக்கான இருப்புப் பாதைகளை இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் குறுக்கும் நெடுக்குமாக உருவாக்கிட இரத்தமும் வியர்வையும் சிந்தியிருக்கிறது இந்திய தொழிலாளி வர்க்கம். ரயில்வேக்கு சொந்தமான 4.75 ஹக்டேர் நிலங்களும் கார்ப்பரேட் கம்பெனிகளின் அடங்காத அகோரப் பசிக்கு இரையாகப்போகிறது.
இந்திய ரயில்வே துறையை தனியாருக்கு தாரைவார்த்து ரூ.1.5 லட்சம் கோடி பணம் திரட்ட முடிவு செய்துள்ளனர். ரயில்வே பயணக் கட்டணம் பல மடங்கு உயர இருக்கிறது. ஏழை எளிய மக்களுக்கு பயன்பட்டு வந்த ரயில் பயணம் இனி எட்டாக்கனியாகி விடப்போகிறது. மும்பையிலிருந்து அகமதாபாத் ஏசி கட்டணம் ரூ.1,289-யை ரயில்வே துறை வாங்குகிறது, அதே தூரத்திற்கு தனியார் தேஜஸ் ரயில் கட்டணம் ரூ.2,389 வசூலிக்கப்படுகிறது. தனியார் மயத்தினால் ஏற்படப் போகும் விளைவுகளுக்கான ஒரு உதாரணம் இது.
நூற்றுக்கணக்கான ரயில்வே நிலையங்களை முற்றிலும் தனியார் வசம் ஒப்படைக்க உள்ளார்கள். 50 ரயில்வே நிலையங்களை மறுசீரமைப்பு என்ற பெயரில் வரும் மார்ச் மாத இறுதிக்குள் தனியாரிடம் ஒப்படைக்க கால இலக்கு நிர்ணயித்துள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலைகள் கார்ப்பரேட் வசம் செல்லவிருக்கின்றன. அதன் மூலம் ரூ.1,60,000 கோடி நிதி திரட்ட திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களின் கரங்களில் ஒப்படைக்க உள்ளனர். ரூ.1.6 லட்சம் கோடி மதிப்புள்ள 26,700 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட கேந்திரமான தரைவழிப் போக்குவரத்தை தாரை வார்க்க உள்ளனர். நெடுஞ்சாலைத் துறையில் சுங்கக் கட்டணம் 200 விழுக்காடு உயர்ந்துள்ளது. டோல் கட்டணம் என்ற பெயரில் மிகப்பெரிய வழிப்பறி கொள்ளை நடந்து வருகிறது. இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் மாபெரும் தரைவழி வழித்தடங்களை உருவாக்கி அளப்பரிய சாதனை படைத்தது தொழிலாளர் வர்க்கம்.
“நீரோடை நிலம் கிழிக்க,
நெடு மரங்கள் நிறைந்து பெரும் காடாக,
பெரு விலங்கு நேரோடி வாழ்ந்திருக்க,
பருக்கைக் கல்லின் நெடும் குன்றில் பிலஞ்சேர,
பாம்பு கூட்டம் போராடும் பாழ் நிலத்தை,
அந்நாளில் புதுக்கியவர் யார்”
என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.
இந்திய உழைக்கும் மக்கள் பச்சை இரத்தம் சிந்தி உருவாக்கிய இந்த மாபெரும் வழித்தடங்களை கார்ப்பரேட் கொள்ளையர்களிடம் ஒப்படைக்க உள்ளனர். நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பு, பரிமாற்றம், சுங்கத் செயல்பாட்டு பரிமாற்றம், பராமரிப்பு மற்றும் மேம்பாடு போன்ற அனைத்து வருவாய் உரிமைகளையும் தனியாருக்கு கொடுக்க உள்ளனர்.
மின்சாரமும் தனியார்வசம் ஒப்படைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. 42,300 கிலோமீட்டர் மின் வழித்தடங்களை தனியாருக்கு தாரைவார்க்க முடிவு செய்துள்ளனர். நீர்மின் உற்பத்தி, ஆறு ஜிகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி, காற்றாலை என அனைத்து மின் உற்பத்திகளையும், மின் வினியோகக் கட்டமைப்பையும் விற்று பணமாக்க முடிவு செய்துள்ளனர்.
இந்திய தொலைத்தொடர்பு சந்தை முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனத்தின் ஏகபோகமாக மாற்றப்பட்டு வருகிறது. ஜியோ நிறுவனத்தின் வர்த்தக கழுத்தறுப்புப் போட்டியை எதிர்கொள்ள இயலாமல் ஐடியா – வோடபோன் உள்ளிட்ட பல்வேறு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வெளியேறி வருகின்றனர். அரசு பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் புத்தாக்கம் செய்வதற்காக அமைச்சரவை கூடி எடுத்த முடிவை கூட மோடி அரசு நடைமுறைப்படுத்த மறுத்து வருகிறது. 4G அலைக்கற்றை மூலம் பி.எஸ்.என்.எல் நிறுவனம் சேவை வழங்க தேவையான கருவிகளை கொள்முதல் செய்வதற்கு முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர்.
பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு சொந்தமான 67,000 செல்போன் டவர்கள் இந்திய துணைக்கண்டம் முழுவதும் உள்ளது. தேசிய பணமாக்கும் திட்டத்தின் மூலம் இந்த செல்போன் கோபுரங்களை, ஏகபோகமாக கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் ஜியோ நிறுவனத்திற்கு தாரைவார்க்க முயற்சித்து வருகின்றனர். நாடெங்கும் 7 லட்சம் கிலோமீட்டர் ஆப்டிகல் பைபர் கேபிள்கள் கொண்ட வலைப்பின்னல் பி.எஸ்.என்.எல் நிறுவனத்திடம் உள்ளது. இந்த ஆப்டிகல் பைபர் வலைப்பின்னலை தனியார் நிறுவனங்களுக்கு  தாரை வார்க்க முடிவு செய்துள்ளனர்.
அரசு பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை ஒழித்துக் கட்டி அதன் சொத்துக்களை ஜியோ நிறுவனம் கைப்பற்றிவிட்டால், இந்திய தொலைத்தொடர்புச் சந்தை முகேஷ் அம்பானியின் ஏகபோகமாக மாறிவிடும். பிற நிறுவனங்களை முடக்குவது முதல் அனைத்துவிதமான தகிடுதத்தங்களிலும் ஈடுபட்டு ஏகபோகமாக ஜியோ உருவானால், கட்டணங்களை பன்மடங்கு உயர்த்தி பெரும்பான்மை மக்களை சுரண்டி கொழுக்கும். தனிநபர் சுதந்திரம் – தேசத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறிவிடும். ரயில்வே துறைக்கு இணையாக பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு நாடு முழுவதும் கேந்திரமான இடங்களில் உள்ள நிலங்கள், கட்டிடங்களை அடிமாட்டு விலைக்கு தனியார்வசம் ஒப்படைக்க உள்ளனர்.
விளையாட்டு மைதானங்களை கூட விட்டு வைக்கவில்லை மோடி அரசு. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறையை தனியார் வசம் கொடுப்பதன் மூலம் ரூ.20,000 கோடி நிதி திரட்ட திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய புகழ்பெற்ற விளையாட்டு மைதானங்கள் அரங்கங்கள் என அனைத்தும் தனியாருக்கு தாரை வார்க்கப்பட உள்ளன. புகழ்பெற்ற ஜவகர்லால் நேரு ஸ்டேடியம் தனியார் கரங்களுக்கு மாற இருக்கிறது.
அடுத்ததாக, கடல்வழி போக்குவரத்தையும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரைவார்க்க திட்டமிட்டு உள்ளனர். நாடெங்கிலும் உள்ள முப்பத்தியோரு துறைமுகங்களும் கார்ப்பரேட் வசம் செல்ல இருக்கிறது. நிலக்கரி சுரங்கங்களை தாரைவார்த்து ரூ.30,000 கோடி திரட்டும் திட்டம் நடைமுறைக்கு வரவிருக்கிறது. 25 விமான நிலையங்கள் 160 நிலக்கரி சுரங்கங்கள் உள்ளிட்டவற்றை தனியார் வசம் ஒப்படைக்க உள்ளனர்.
மக்களுக்கு வழங்கிக் கொண்டிருந்த அனைத்து சேவைகளையும் வணிக மயமாக்குவது, கேந்திரமான அனைத்து தொழில் வளங்களையும் கார்ப்பரேட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பது என்ற ஒன்றிய மோடி அரசின் இந்த முடிவால் இந்திய நாட்டில் வாழ்கின்ற கோடான கோடி ஏழை எளிய மக்கள் மீது மிகப்பெரிய பொருளாதார தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது.
இந்திய நாட்டு தொழிலாளி வர்க்கத்தின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாக்கும் நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது. மின் கட்டணம், ரயில் கட்டணம், போக்குவரத்து கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட உள்ளது. கேந்திரமான கட்டமைப்புகள் சிதைக்கப்படுவதன் விளைவாய் நாடு மிகப்பெரிய நெருக்கடியை சந்திக்க உள்ளது.
அம்பானிக்கு, அதானிக்கு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு எது நல்லதோ அதுதான் இந்த நாட்டுக்கு நல்லது என்கின்ற அடிப்படையில் பொருளாதாரத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. ஆகப் பெரும்பான்மையான மக்களுக்கு இத்தகைய வளர்ச்சியினால் எள் முனை அளவு கூட பயனில்லை; மாறாக வறுமையின் கோரப்பிடியில் மக்களை தள்ளி இருக்கிறது.
கார்ப்பரேட் – காவி பாசிச கும்பலின் பொருளாதார வளர்ச்சியானது வேலை வழங்காத வளர்ச்சி மட்டுமல்ல வேலையை பறித்துக் கொள்ளும் வளர்ச்சியாகவும் உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள், ரயில்வே மற்றும் மின்சாரம் ஆகிய துறைகள் தேசிய பணமாக்கும் திட்டத்தில் 66 விழுக்காடு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் கேந்திரமான பொதுத்துறை நிறுவனங்கள், அரசு சொத்துக்கள் அனைத்தும் இந்திய மக்களுக்கு சொந்தமானது. பாரதிய ஜனதா கட்சிக்கும், மோடிக்கும் சொந்தமில்லை என்று மோடி அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்திருக்கிறார், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி. நாட்டின் உள்கட்டமைப்பு சொத்துகளை விற்றும், தனியாருக்கு வருவாய் உரிமைகளை கொடுப்பதன் வாயிலாகவும் எதிர்வரும் 4 ஆண்டுகளில் ரூ 6 லட்சம் கோடி நிதி திரட்ட உள்ளதாக ஒன்றிய அரசின் நிதி அமைச்சர் கூறுகிறார்.
தேசிய பணமாக்கும் திட்டத்தின் நோக்கம் என்ன ?
நாட்டின் கேந்திரமான துறைகளை, உள்கட்டமைப்புகளை தனியாருக்கு ஒப்படைப்பதன் மூலமாக கிடைக்கப்போவதாக சொல்லப்படும் 6 லட்சம் கோடி நிதியை, நாடு முழுவதும் உள்ள உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கு பயன்படுத்த போகிறார்களாம்.
பொதுத்துறை அமைப்புகளை சிதைத்து; கட்டுமான துறைகளை சீரழித்து; தனியார்களிடம் விற்று; நீண்டகால குத்தகைக்கு விடுவதன் மூலமாக நிதி திரட்டபோவதாகவும்; அதைக்கொண்டு தனியாரிடம் கை மாறிய பிறகு அதே கட்டுமானத்தை சீர்செய்ய அந்த நிதியை பயன்படுத்தப்போவதாகவும் கூறியுள்ளார்கள்.
நாட்டு மக்களின் காதில் பூ சுற்றுகிறார் மோடி. அனைத்து உற்பத்தித் துறைகளையும் சீரழித்துவிட்டு எஞ்சியுள்ள சேவை துறைகளையும் தனியாருக்கு ஒப்படைக்க உள்ளனர். விட்டால் அரசு நிர்வாகம் முழுவதையும் 25 ஆண்டு கால குத்தகைக்கு கார்ப்பரேட் வசம் ஒப்படைத்தாலும் ஒப்படைப்பார் மோடி !
நாங்கள் மலைகளைத் தகர்தோம்;
பெரும் கற்களை உடைத்தோம்;
எங்கள் குருதியை சாந்தாக்கி;
பல திட்டங்களை கட்டினோம்;
இந்த உழைப்பு யாருடையது;
இதன் பலன்கள் யாருடையது;
என்று முதலாளித்துவ சுரண்டல் கொடுமையை அனல் கக்கும் தன் கவிதை வரிகளால் வினா எழுப்பினார் ஆந்திர புரட்சிக் கவிஞர் செரபண்ட ராஜ்.
படிக்க :
இஸ்ரோ முதல் ஐ.சி.எஃப் வரை மிரட்டப்படும் விஞ்ஞானிகளும் அதிகாரிகளும் !
கண்காணிப்பு முதலாளித்துவம் : நமது சுய சிந்தனையின் பெரும் எதிரி !
இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு பொதுத்துறை நிறுவனங்கள் மிகப்பெரிய பங்காற்றி வருகின்றன. பொதுத்துறை வங்கிகள், ஆயுள் காப்பீட்டுக் கழகங்கள், நாட்டு மக்களின் சேமிப்புக்கு பாதுகாப்பாக இருக்கின்றன. இவற்றை விற்பதன் மூலம், சொல்லிக் கொள்ளப்படும் நாட்டின் இறையாண்மையை செல்லாக்காசாக்கும் நடவடிக்கையில் ஆட்சியாளர்கள் இறங்கியுள்ளனர்.
இந்திய நாட்டை மறுகாலனியாக்கும் நடவடிக்கையில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். தனியார்மயம் – தாராளமயம் – உலகமயக் கொள்கைகளின் விளைவாய் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்த்த, சிலி, கிரீஸ் போன்ற பல்வேறு நாடுகள் திவாலாகி உள்ளன.
கோடான கோடி இளைஞர்களின் எதிர்காலம் இருள் சூழவுள்ளது. வேலையில்லா திண்டாட்டம் கூர்மையடையப் போகிறது. கார்ப்பரேட்  பாசிச கும்பலின் சுரண்டல் தீவிரமடைய உள்ளன. கார்ப்பரேட் குழும முதலாளித்துவ கும்பல் இந்துத்துவ பாசிச கும்பலின் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி நாட்டு மக்கள் மீது ஒரு பொருளாதார யுத்தத்தை தொடுத்துள்ளது. கார்ப்பரேட் கும்பலின் வாளும் கேடயமுமாய் இந்துத்துவ பாசிச கும்பல் உள்ளது.
நாட்டை இந்துராஷ்டிரத்தின் கீழ், ஏகாதிபத்தியங்களுக்கு மறுகாலனியாக மாற்றும் பாசிசக் கும்பலின் திட்டத்தை தடுத்து நிறுத்த, மீண்டும் ஒரு விடுதலைப் போரை துவக்க வேண்டியுள்ளது. கொடுமைகள் தாமே அழிவதில்லை. சமூக மாற்றத்திற்கான திசைவழியில் செல்வதன் மூலமே நாட்டை நாசமாக்கும் இந்த திட்டத்தை முறியடிக்க முடியும்.
கார்ப்பரேட் காவி பாசிச கும்பலின் ஆதிக்கத்தை உடைக்க, சாதி, மத சங்கிலிகளை தகர்த்தெரிந்து வர்க்கரீதியாக ஒன்றுதிரண்டு போராடுவதில்தான் உண்மையான மக்கள் வெற்றி கருக்கொண்டுள்ளது. புதிய வரலாறு படைக்க வேண்டிய மகத்தான பணி நம்முன் உள்ளது !!

இரணியன்

தம்மிடம் பணியாற்றிய ஆப்கான் ஊழியர்களைக் கைவிட்ட மேற்குலகம் !

0
மெரிக்கா தன் துருப்புக்களை ஆப்கானிலிருந்து திருப்பி அழைத்துக் கொள்வதாக அறிவித்ததிலிருந்து, பல்லாயிரக் கணக்கான ஆப்கான் மக்கள் காபூல் சர்வதேச விமான நிலையத்தை நோக்கி படையெடுத்தனர். அதன்பிறகு காபூல் விமான நிலையத்தின் மிகவும் கொடூரமான காட்சிகள் வெளியாகி உலகையே உளுக்கியது.
ஆப்கானிலிருந்து கிளம்பத் தயாரான விமானத்தின் வெளிப்புறத்தில் மக்கள் ஏறிக் கொள்ளும் காட்சியும், விமானம் உயரத்தில் பறக்கும்போது, சிலர் கீழேவிழுத்து இறக்கும் காட்சியும் காண்போர் நெஞ்சை உலுக்கியது.
பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட ஓர் அறிக்கையில், காபூல் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மக்களின் கூட்ட நெரிசலால் குறைந்தது ஏழு ஆப்கான் பொதுமக்கள் இறந்திருப்பார்கள் என்பதை உறுதி செய்துள்ளது.
தலிபான்கள் ஆப்கான் தலைநகரை கைப்பற்றிய பின்னர், ஒரே வாரத்தில் காபூல் விமான நிலையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் குறைந்தது 20 பேர் இறந்துள்ளனர் என்று கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி நேட்டோ அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த வாரத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆப்கான் விமான நிலையம் அருகே நிகழ்த்திய குண்டுவெடிப்பில் அப்பாவி பொதுமக்கள் பலியாகினர்.

படிக்க :
ஆப்கானிலிருந்து அமெரிக்கப் படைகள் விலகல் – பின்னணி என்ன ?
தாலிபான்களிடம் ஆப்கானை தாரைவார்த்த அமெரிக்கா !
அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “ஆப்கானிய மக்களுக்காக எங்களுடன் பணியாற்றிய தூதரக ஊழியர்களுக்கு அமெரிக்கா தனது தனிப்பட்ட கடமையை செய்யும். மேலும், விமானம் அனைவருக்கும் கிடைக்கும் ஏற்பாட்டை அமெரிக்கா அயராது செய்து வருகிறது” என்றார்.
அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் கூறுகையில், தலிபான்கள் கட்டுபாட்டில் ஆப்கான் முழுவதும் வந்த இரண்டே வாரத்தில், காபூலிலிருந்து 60 விமானங்களில் 8,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளார்கள் என்றும், நான்கு கண்டங்களில் உள்ள சுமார் 24 நாடுகளுடன் அமெரிக்கா ஆப்கான் மக்களுக்கு போக்குவரத்து ரீதியாக உதவ ஒப்பந்தமிட்டிருப்பதாகவும் கூறினார்.
மீதமுள்ள பெரும்பாலான அமெரிக்க துருப்புக்களை திரும்பப் பெறுவதற்கான ஆகஸ்ட் 31-ம் தேதிக்கான நேரம் நெருங்கிவிட்டது. இருப்பினும் அனைத்துப் படைகளையும் திரும்பிப் பெற முயற்சித்து வருகிறோம் என்றார்.
அமெரிக்க அதிகாரிகள் இப்படி கூறிவரும் நிலையில், ஆப்கானில் தூதரக ஊழியர்கள் மற்றும் அமெரிக்காவிற்கு உதவியர்களின் நிலையோ படுமோசமாக உள்ளது.
காபூலில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் வேலை செய்யும் உள்நாட்டு ஊழியர்களை அமெரிக்கா பாதுகாத்து ஆப்கானிலிருந்து வெளியே செல்ல உதவாததால், மிகவும் மனச்சோர்வு அடைந்துள்ளார்கள். மேலும், அமெரிக்க அரசின் துரோகத்தையும், அவநம்பிக்கையையும் வெளிபடுத்தியதாக தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
விமான நிலையத்திற்கு அருகிலுள்ள சோதனைச் சாவடிகளில் தூதரக ஊழியர்கள் தலிபான்களால் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். சிலர் தங்களின் குழந்தைகளிடமிருந்து முற்றிலும் பிரிந்துவிட்டனர். சிலர் கூட்ட நெரிசலில் விழுந்து காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் உள்ளனர். மேலும் பலர் வெயிலில் கொடுமையால் சோர்வடைந்து சாலையில் தஞ்சமடைந்துள்ளனர்.
மீண்டும் விமான நிலைய கூட்ட நெரிசலை எதிர்கொள்வதை விட “தலிபான்களின் தோட்டாவின் கீழ் இறப்பதே நல்லது” என்று ஒரு தூதரக ஊழியர் கூறினார். இங்கே “இறப்பதில் மகிழ்ச்சி ஆனால் கண்ணியத்துடனும் பெருமையுடனும் இறக்க வேண்டும்” என்று மற்றொரு தூதரக ஊழியர் கூறினார்.
ஆப்கானிஸ்தான் அமெரிக்க தூதரக ஊழியர் ஒருவர், “தலிபான்கள் எங்கள் வீட்டில் விசாரணை மேற்கொள்வதற்காக வீட்டு வாயிலில் குறியீடுகளை இட்டுச் சென்றுள்ளனர். நாங்கள் குடும்பத்துடன் வீட்டைவிட்டு தப்பி வந்துவிட்டோம். ஆனால், எங்களால் விமான நிலையத்திற்கு செல்ல முடியவில்லை” என்றார்.
அமெரிக்கா தன் துருப்புக்களை பின்வாங்கிய அதே நேரத்தில் தூதரகத்தில் பணிபுரிந்த ஆப்கானை சார்ந்த ஊழியர்களை வெளியேற்ற ஏற்பாடு செய்யவில்லை என்றும் அரசு உயர் அதிகாரிகளுக்கு மட்டும் முன் உரிமை வழங்கியதாகவும் ஒரு ஊழியர் குற்றம் சாட்டினார்.
000
காபூல் விமான நிலையத்தின் உள்ளே அமெரிக்க துருப்புகள் கட்டுப்பாட்டில் இருப்பதாலும், விமான நிலையத்தின் வெளியில் உள்ள அனைத்து பகுதிகளையும் தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் முயற்சிகள் முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை. தொடந்து இடையூறுகள் அதிகரிக்கிறது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு அதிகாரி ஜோசப் பொரெல் ஆகஸ்ட் 21 அன்று கூறியுள்ளார்.
மேலும், ஆகஸ்ட் இறுதிக்குள் ஆப்கானிலிருந்து கடைசி அமெரிக்க துருப்புகள் வெளியேறும் போது பல்லாயிரக்கணக்கான ஆப்கான் ஊழியர்கள் காபூலில் இருந்து வெளியேற்றுவது சாத்தியமற்றது, என்று பொரெல் கூறினார்.
ஆகஸ்டு மாத முதல் வாரத்தில் தலிபான்கள் முழு ஆப்கானையும் கைப்பற்றும் முன்பு, ஆப்கானில் இருந்த இங்கிலாந்து தூதரக அதிகாரிகள் வெளியேற உதவி செய்யப்பட்டது. மேலும், தூதரகத்தில் பணியாற்றிய அனைத்து ஊழியர்களின் வேலைகளும் உடனடியாக நிறுத்தப்பட்டது. ஆனால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தூதரகத்தில் பணிபுரிந்த சில ஊழியர்கள், தற்போது வேலை இழந்த நிலையில் தலிபான்களால் தாங்கள் கொல்லப்படுவோம் என்றும் அஞ்சுகிறார்கள்.
“நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோமா இல்லையா என்று யாரும் கேட்கவில்லை. எங்கள் உயிருக்கு ஆபத்து இருக்கிறதா இல்லையா என்று யாரும் அக்கறைப்படவில்லை” என்று இங்கிலாந்து தூதரகத்தில் பணியாற்றிய ஆப்கான்  ஊழியர் ஒருவர் கூறினார்.
படிக்க :
ஆப்கானிஸ்தான் குறித்து ஒரு சுருக்கமான பார்வை || சந்திரசேகரன்
தாலிபான்களின் கையில் ஆப்கானின் எதிர்காலம் ?
ஆனால், ஒரு நேர்காணலில் ஜேம்ஸ் ஹெப்பி, காபூல் விமான நிலையத்திற்கு அனைத்து ஊழியர்களும் வந்துவிட்டதாகவும், அவர்கள் உண்மையில் ஆப்கானைவிட்டு வெளியேறிவிட்டதாகவும் கூறினார். ஆனால், இந்தக் கூற்றை தூதரக ஊழியர்கள் மறுக்கின்றனர்.
“அது உண்மை இல்லை. வெளியேற்றப்படுவதற்கான செய்தி எங்களுக்கு வரவில்லை. எங்களை விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்ல யாரும் அனுப்பப்படவில்லை” என்று ஒரு தூதரக ஊழியர் கூறினார்.
000
அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆப்கானில் தங்கள் தூரகங்களில் பணிபுரிந்த ஆப்கான் பெரும்பான்மையான ஆப்கானியர்களை கைவிட்டுவிட்டன என்பதையே இந்த சம்பவங்கள் நமக்கு காட்டுகின்றன.
போர் ஆக்கிரமிப்பு என்பது அந்த நாட்டின் இயற்கை வளங்கள் முதல் மனித வளம் வரை அனைத்தையும் ஒட்டச் சுரண்டும் நோக்கத்திற்காக நடத்தப்படுபவையே. குறிப்பாக ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற 20 ஆண்டு ஆக்கிரமிப்பின் பின்னே ஜனநாயகம் எனும் நோக்கம் துளியும் கிடையாது.

அந்த மக்களை மனிதர்களாக மதிக்காமல், தாம் சுகிப்பதற்கான பொருளாகத்தான் அமெரிக்காவும் பிற ஏகாதிபத்தியங்களும் நினைக்கின்றன. தூதரக கட்டிடங்களில் உள்ள நாற்காலி, மேஜையைப் போலவே அந்த ஊழியர்களையும் கைவிட்டுச் சென்றிருக்கின்றன இந்த மேற்கத்திய வல்லரசுகள். ஏகாதிபத்தியங்கள் தங்கள் நலனுக்கு உதவாத எந்த நாட்டு அரசையும், அதன் மக்களையும் கைவிட்டுவிடும் என்பதற்கு ஆப்கான் நாட்டில் இவர்களின் கீழ் பணியாற்றிய ஊழியர்களே துலக்கமான சான்று !!


சந்துரு
செய்தி ஆதாரம் : RT.COM