Tuesday, July 29, 2025
முகப்பு பதிவு பக்கம் 226

பாசிச குற்றக் கும்பலை தண்டிப்பது எப்படி ? || புதிய ஜனநாயகம் டிசம்பர் 2020 மின்னிதழ் !

வாசகத் தோழர்களுக்கு,

செவ்வணக்கம் !

தொடர்ந்து நீடித்துவரும் நிர்வாகச் சிக்கல்களின் காரணமாக எம்மால் ஆகஸ்டு 2020 முதல் நவம்பர் 2020 முடியவுள்ள நான்கு இதழ்களையும் அச்சிதழாகவோ மின்னிதழாகவோ வெளியிட முடியவில்லை. டிசம்பர் 2020 இதழையும் அச்சில் கொண்டுவர இயலாத நிலை நீடிப்பதால், அவ்விதழை மின்னிதழாக வெளியிடுகிறோம். இம்மின்னிதழை வாசகர்கள் எவரும் கட்டணம் எதுவுமின்றி இலவசமாக வாசிக்கவும், பதிவிறக்கம் செய்து கொள்ளுவதற்கும் ஏற்றபடி வெளியிட்டிருக்கிறோம்.

வாசகர்கள் எமது இந்த இக்கட்டான நிலையைப் புரிந்துகொண்டு தொடர்ந்து ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும், இம்மின்னிதழுக்கு நன்கொடை அளிக்க விரும்பும் வாசகர்கள் எமது  ஜி பே (G-Pay – 94446 32561) சேவையை பயன்படுத்த வேண்டுகிறோம்.

ஆசிரியர் குழு  –  புதிய ஜனநாயகம்

புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2020

இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :

♠ தலையங்கம் : கார்ப்பரேட் நிர்பர்
♠ 7.5% இட ஒதுக்கீடு: புண்ணுக்கு புனுகாகிவிடக் கூடாது!
♠ “எனது பாவ்லோஸ் தனி ஒருவனாக அவர்களைத் தோற்கடித்துவிட்டான்!”
♠ பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு: நரியைப் பரியாக்கிய காவித் திருவிளையாடல்!
♠ இந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா?
♠ குவாட் கூட்டணி: சீனாவிற்கு எதிரான இராணுவ முஸ்தீபு!
♠ எது அபாயகரமானது ? கரோனாவா? ஆர்.எஸ்.எஸ்.-இன் அவதூறா?
♠ குற்றவியல் சட்டத்திருத்தம் : மறுகாலனியாக்கத்துக்கு ஏற்ப மறுவார்ப்பு!
♠ போராட்டங்களின் நோக்கம்
♠ வெட்கக்கேடு!
♠ முதலாளித்துவம் உருவாக்கும் முரண் நிலை!
♠ மீண்டும் முருங்கைமரம் ஏறுகிறது வேதாளம்!
♠ இந்திய தேசிய ஜோதியில் தமிழகம் கலக்க மறுப்பதேன்?

டிசம்பர் 2020 – மின்னிதழை தரவிறக்கம் செய்ய : இங்கே அழுத்தவும்

டெல்லி சலோ : தன்னெழுச்சி அல்ல ! வர்க்கரீதியாக அணி திரட்டப்பட்ட விவசாயிகளின் பேரெழுச்சி !

வம்பர் 26, 27 ஆகிய தேதிகளில் வட இந்தியாவில் இருக்கும் 400-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள், சமூக செயல்பாட்டு இயக்கங்கள் இணைந்து மூன்று விவசாய சட்டங்களையும் மின்சார சட்டம் 2020-ஐயும் திரும்பப் பெறக்கோரி டெல்லியை நோக்கி “டெல்லி சலோ” என்ற முற்றுகை-பேரணியை அறிவித்திருந்தனர்.

இதனை ஒட்டி பஞ்சாப், ஹரியானா, உத்தர்காண்ட், உத்திரப் பிரதேசம், இராஜஸ்தான் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியை நோக்கி புறப்படுதற்கு தங்களைத் தயார்படுத்தியும் அணிதிரட்டியும் வந்தனர். 400-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து அமைத்திருந்த கூட்டமைப்பின் மூலம் பிரதமருக்கு எழுதியிருந்த கடிதத்தில், அமைதியான முறையில் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்ய டெல்லிக்குள் அனுமதிக்குமாறு கேட்டிருந்தனர். விவசாயிகளுடன் மோதல் அணுகுமுறையைக் கைவிடுமாறும் ராம்லீலா மைதானத்தில் கூடுவதற்கு அனுமதிக்குமாறும் விவசாய சங்கத் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

மேலும், “உங்கள் அமைச்சரவையில் உள்ள மூத்த அமைச்சர்களுடன் மூன்று விவசாய சட்டங்கள், மின்சாரச் சட்டம் 2020 திருப்பப் பெறுவது தொடர்பான எங்களது கோரிக்கை குறித்து நேர்மையான விவாதத்தை நடத்துவதற்கு இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளையும் அழைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று அந்தக் கடிதத்தில் பிரதமருக்கு தெரிவித்திருந்தனர்.

படிக்க :
♦ விவசாயிகளின் போராட்டத்தை இழிவுபடுத்தும் இந்து தமிழ் திசை !
♦ இன்றைய பாசிச நிலை குறித்து மோடியின் முன்னாள் பக்தர் !

இருப்பினும் விவசாயிகளை ஒடுக்க வேண்டும் என்ற பாசிசத் திமிருடன்தான் மோடி அரசு விவசாயிகள் டெல்லியில் நுழைவதற்கு அனுமதி மறுத்தது. விவசாய சட்டங்கள் மூலமாக தங்களது வாழ்வாதாரமே பறிபோய்விடும் என்பதை உணர்ந்த விவசாயிகள் பேரணிக்கு அனுமதி மறுத்ததற்காக கவலைப்படவில்லை.

விவசாயிகள் டெல்லியில் குவிவதைத் தடுக்கும் வகையில், போராட்டத்தை ஒடுக்கும் நோக்கத்தில், அரியானா, உத்தர்காண்ட், உத்திரப் பிரதேச மாநிலங்களில் ஆட்சி புரியும் பா.ஜ.க. கூட்டணி அரசுகள் முன்னதாக விவசாய சங்கத் தலைவர்கள் 100-க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்தன. இருப்பினும் இந்த கைதுகளை கண்டு விவசாயிகள் அஞ்சவோ, பின்வாங்கவோ இல்லை.

நவம்பர் 26 அன்று அதிகாலை முதலே ஹரியானா, பஞ்சாப், உத்திரப் பிரதேசம், உத்தர்காண்ட், இராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு பல திசைகளில் இருந்து விவசாயிகள் பேரணியாக வரத்தொடங்கினர். டிராக்டர், லாரி மற்றும் இருசக்கர வாகனங்களில் இலட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியை நோக்கி புறப்பட்டனர்.

ஸ்வராஜ் இந்தியா அமைப்பின் தலைவர் யோகேந்திர யாதவ் தலைமையில் உத்திரப் பிரதேசம் வழியாக வந்த விவசாயிகள் போலீசால் தடுக்கப்பட்டதை அடுத்து பிளாஸ்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டு அங்கேயே நிரந்தரமாக அமர்ந்தனர். டெல்லி-அரியானா, பஞ்சாப்-அரியானா ஆகிய இரண்டு எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் நுழைவதற்கு போலீசார் ஏற்படுத்தியிருந்த தடைகளை அகற்றி, டெல்லிக்குள் நுழைவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசு தடையை ஏற்படுத்திய போது அரியானா விவசாயிகளின் ஒருபிரிவினர் டெல்லியின் எல்லையில் உள்ள பானிபட் சுங்க வளாகத்தின் அருகிலும், பஞ்சாப் விவசாயிகள் கர்னாலில் முகாமிட்டனர்.

இதனால், ஆங்காங்கே முகாமிட்டிருந்த ராஜஸ்தான் மற்றும் உத்திரப் பிரதேச விவசாயிகள் பிரதம மந்திரி மோடியின் உருவ பொம்மைகளை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்பின்னர் பானிபட்-சோனிபட் எல்லையில் குவிந்திருந்த விவசாயிகள் போலீசின் தடையரண்களை வீசியெறிந்தும், அகற்றியும் டெல்லியை நோக்கி விரைந்தனர். இதேபோல கானூராய் பகுதியில் முகாமிட்டிருந்த விவசாயிகள் பஞ்சாப் – அரியானா எல்லையில் இருக்கும் தடையரண்களை அகற்றுவதற்காக போலீசுடன் நேருக்கு நேர் மோதி முன்னேறினர்.

அரியானா-டெல்லி எல்லையில் சின்குனூர் பகுதியில் முகாமிட்டிருந்த விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைக்க முயற்சித்தது போலீசு. ஆனால், கண்ணீர் குண்டுகளை வீரத்துடன் எதிர்க்கொண்டு போராடினர். பஞ்சாப் அரியானா எல்லையில் போலீசு அனுமதி மறுத்ததால் அங்கு குவிந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள், ஒரு கட்டத்தில் போலீசார் எழுப்பியிருந்த தடையரண்களை தூக்கியெறிந்து முன்னேறினர்.

கண்ணீர் புகை குண்டுகளை வீசுதல், குளிர்ந்த தண்ணீரை விவசாயிகள் மீது பீய்ச்சி அடித்தல், தடியடி நடத்துதல், தடுப்பரண்களை அமைத்து விவசாயிகள் நுழைய விடாமல் தடுத்தல், முள்வேலிகளை அமைத்து தடுத்து நிறுத்துதல், புல்டோசர்களைக் கொண்டுவந்து விவசாயிகளை முன்னேறவிடாமல் தடுத்தல்; சாலைகளில் பாறைகளை போட்டு விவசாயிகள் வரும் வாகனங்கள் செல்லவிடாமல் தடுத்தல், சாலைகளில் பள்ளம் தோண்டி வைத்தல் போன்ற போலீசின் அனைத்து அடக்குமுறைகள், தடைகளையும் மீறி இலட்சக்கணக்கில் விவசாயிகள் அணிதிரண்டு வந்தனர்; போலீசின் தடைகள் அனைத்தையும் முறியடித்தனர்; பல இடங்களில் போலீசுடன் மோதலில் ஈடுபட்டனர்.

பஞ்சாபில் இருந்து வந்த விவாயிகள் குர்தா-பைசாமா அணிந்த விவசாயிகள் தலையில் பச்சை வண்னத்தில் டர்பன் அணிந்திருந்தனர். மற்ற பகுதிகளில் இருந்து செங்கொடியையும் விவசாய சங்கக் கொடிகளையும் ஏந்தி விவசாயிகள் வந்தனர்.

பஞ்சாபில் இருந்து அரியானா எல்லைக்குள் நுழைய முயன்ற விவசாயிகளை அரியானா போலீசு தடுத்து நிறுத்திய போது “நாங்கள் எல்லாம் டெல்லியை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். அரியானா அரசு எங்களைத் தடுத்து நிறுத்த முயற்சிக்கிறது. அவர்கள் எங்களைத் தடுத்து நிறுத்துவதற்கு என்னவேண்டுமானாலும் செய்ய முயற்சிக்கலாம், நாங்கள் துப்பாக்கிக் குண்டுகளை எதிர்கொள்வதற்கும் தயாராக இருக்கிறோம். என்ன நடந்தாலும் எங்களுக்கு பொருட்டல்ல, நாங்கள் டெல்லியை அடைந்தே தீருவோம்” என்று அவர்கள் ஆவேசமாகத் தெரிவித்தனர்.

இலட்சக்கணக்கில் விவசாயிகள் தொடர்ந்து திரள்வதைக் கண்டு அஞ்சிய மோடி அரசு, விவசாயிகளை டெல்லிக்குள் விட்டு, சில மைதானங்களில் வைத்து அவர்களைக் கைது செய்துவிடலாம் என்று கருதியது. ஆனால், டெல்லியில் ஆளும் கெஜ்ரிவால் அரசு அதற்கு ஒத்துழைக்க மறுத்ததால் இந்தத் திட்டம் பயனளிக்கவில்லை. விவசாயிகள் கோரிய மைதானத்திற்கு அனுமதி கொடுக்காமல் வேறு இடங்களைக் காட்ட முயற்சித்தது. அதனையும் விவசாய சங்கத் தலைவர்கள் ஏற்கவில்லை.

விவசாயிகளின் போராட்டத்திற்கு சமூகத்தின் அனைத்து பிரிவு உழைக்கும் மக்களும் தங்களது ஆதரவை வழங்கத் தொடங்கினர். டெல்லியில் இருக்கும் முசுலீம்கள் மசூதிகளில் விவசாயிகளுக்கு உணவு தயாரிக்கப்பட்டது. பல இடங்களில் விவசாயிகளுக்கு தங்குமிடங்களை மக்கள் வழங்கினர். “அன்னதாதா” என்று விவசாயிகளை மரியாதையாகவும் உயர்வாகவும் மதிப்பு தெரிவித்தனர்.

விவசாயிகள் இலட்சக்கணக்கில் குவிந்ததை அடுத்து டெல்லி முதல்வரான கெஜ்ரிவாலும் மேற்குவங்க முதல்வாரான மம்தா பேனர்ஜியும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அறிவிப்பை வெளியிட்டனர்.

நவம்பர் 26-ம் தேதி அகில இந்திய தொழிற்சங்கங்கள் மோடி அரசின் தொழிலாளர் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரியும் பொதுத்துறைகள், வங்கிகளை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்ப்பதை எதிர்த்தும் நடத்திய அகில இந்திய வேலை நிறுத்தம் இந்த விவசாயிகள் போராட்டத்திற்கு மேலும் உத்வேகத்தை அளித்தது.

விவசாயிகளின் டெல்லி சலோ போராட்டத்தின் ஒரு பகுதியாக, விவசாய சட்டங்களையும் மின்சார சட்டம் 2020-ஐயும் திரும்பப் பெறக்கோரி வடமாநிலங்களின் பல பகுதிகளில் விவசாயிகள் போராட்டங்களில் இறங்கினர். குறிப்பாக, பா.ஜ.க-வின் செல்வாக்கிற்கு உட்பட்ட ‘பசுவளையம்’ என்றழைக்கப்படும் மாநிலங்களின் விவசாயிகள்தான் இதில் முக்கியமான பங்காற்றினர்.

உத்திரப் பிரதேசத்தில், லக்னௌ உள்ளிட்ட பல இடங்களில் விவசாயிகள் குடில் அமைத்து தர்ணா போராட்டங்களில் ஈடுபட்டனர். முசாபர் நகர், மீரட், பாக்பட், கௌதம் புத்நகர், ஜான்சி, ஜலௌன்  போன்ற இடங்களில் போராட்டங்கள், சாலை மறியல்கள் நடந்து வருகின்றன. டெல்லியை நோக்கி குடும்பம் குடும்பாகவும் பெண்களும் திரண்டு முகாமிட்டுள்ளனர். விவசாய சட்டத்தைத் திரும்பப் பெறும் வரை ஊர் திரும்பப் போவதில்லை என்று முழங்குகின்றனர்.

000

மங்கா சாராய் பகுதியில் இருந்து வந்திருக்கும் செக்சாகெனரியன் பல்கர் சிங் என்ற விவசாயி, “எங்கள் குரல் எதிரொலிக்கும் வரை நாங்கள் டெல்லியிலேயே இருப்போம். இது எங்களுக்கான போராட்டம் மட்டுமல்ல, எதிர்கால தலைமுறையினருக்கான போராட்டம். இன்று நான் போராடத் தவறினால், நான் எனது குழந்தைகளின் முகத்தையும் அவர்களது சந்ததிகளின் முகத்தையும் பார்க்க முடியாது. நாங்கள் இந்த தர்ணாவை நடத்துவதில் உறுதியாக இருக்கிறோம். இதற்காக ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் 20-25 பேர் அணி அணியாக திரண்டு வந்திருக்கிறோம். இதற்காக 20 நாட்களுக்கும் மேலாக கிராமங்களில் தங்கி வேலை செய்தோம். ஒருகால், இப்போது செல்லும் விவசாயிகள் சொந்த ஊருக்கு செல்ல விரும்பினால் இன்னொரு அணியினர் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வருவார்கள்” என்று தெரிவித்தார்.

தனது தந்தையுடன் டெல்லியை நோக்கிச் சென்று கொண்டிருந்த நவ்ஜித் சிங் என்ற 15 வயது பள்ளி மாணவன், புதிய விவசாய சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிராக இருக்கின்றன என்பதில் அவன் உறுதியாக இருந்தான். “நான் எவ்வளவு நாட்கள் தேவையோ அவ்வளவு நாட்கள் டெல்லியிலேயே தங்கியிருப்பேன். எனது பள்ளி திறந்து நான் சென்றாலும் தேவைப்படும் போது திரும்பவருவேன். நான் எனது குடும்பம் மற்றும் விவசாயிகளுடன் யுத்தக் களத்தில் இருக்கிறேன். இன்று எங்களுக்கு வந்திருக்கின்ற இந்த பிரச்சினைக்கு எதிராக நான் போராடாவிட்டால், வேறு யார் போராடுவார்கள்?” என்று அம்மாணவன் வினவுகிறான்.

நவ்ஜித் சிங்கைப் போலவே பல இளைஞர்கள் மாணவர்கள் போராட்டத்தில் மிகவும் ஆர்வமாக இருந்தனர். மத்திய அரசுக்கு எதிரான ஒரு நீண்ட போராட்டத்திற்கு அவர்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.

சுர்ஜித் கவுர் என்ற 85 வயது மூதாட்டி விவசாயி பெண்களை அணிதிரட்டிய அனுபவத்தை பி.பி.சி. தொகுப்பறிக்கை விளக்குகிறது. அந்தப் பகுதியில் இருக்கும் விவசாய பெண்களை வீடுவீடாக சென்று அணிதிரட்டுகின்றனர். டெல்லியிலேயே பல நாட்கள் தங்கி போராட்டத்தில் ஈடுபடுவதற்காக வீடுவீடாக சென்று உணவுதானியங்கள், பொருட்களை சேகரிக்கின்றனர். இந்தப் போராட்டம் நமது நிலத்தையும் வாழ்வாதரத்தையும் காப்பதற்காக நடக்கும் போராட்டம் என்று அந்த பகுதியில் உள்ள இளம்பெண்களுக்கு விளக்குகின்றனர் இந்த விவசாய சங்கத்தின் பெண்கள். “இன்று நாங்கள் போராடுகிறோம்; நாளை எங்களது மகள்களும் மருமகள்களும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். எங்களது நிலத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் வரை ஊர் திரும்ப மாட்டோம்” என்று முழங்குகிறார் சுர்ஜித் கவுர்.

மோடி ஆட்சிக்கு வந்த பின்னர், விவசாயிகள் போராட்டம் அதிகரிக்கத் துவங்கிவிட்டது. குறிப்பாக, கடந்த ஆண்டு, குறைந்தபட்ச ஆதரவிலை, நில கையகப்படுத்தும் சட்டம் போன்றவற்றிற்காக அப்போது விவசாயிகள் போராட்டத்தை நடத்தினர். இலட்சம் விவசாயிகள் டெல்லியை நோக்கி அணிதிரண்டனர். உடனடியாக மோடி அரசு பணிந்தது.

இப்போது, மூன்று விவசாய சட்டங்கள் மற்றும் மின்சார சட்டம் 2020 ஆகியவை விவசாயிகளை முற்றிலுமாக விவசாயத்தை விட்டு விரட்டியடித்துவிடும் என்று உணர்த்தியுள்ளது. அதனால், பா.ஜ.க. செல்வாக்குள்ள மாநிலங்களிலேயே பா.ஜ.க.விற்கு எதிராக விவசாயிகள் திரும்பியுள்ளனர் என்பதை நாம் உணர வேண்டும். மத ரீதியாக உழைக்கும் வர்க்கத்தை பிரித்துவிடலாம் என மனப்பால் குடித்துக் கொண்டிருந்த மோடிக்கு, வர்க்கரீதியா அணிதிரண்டு மரண அடியைக் கொடுத்துள்ளனர் விவசாயிகள்.

பா.ஜ.க. ஆளும் அரியானா, உத்திரப் பிரதேசத்தில் இருந்து இலட்சக்கணக்கான விவசாயிகள் மோடி அரசுக்கு எதிராக அணிதிரள்வதை அந்த மாநில அரசுகளாலும் இந்து மதவெறியர்களாலும் தடுக்க முடியவில்லை.

பாசிச மோடி அரசை உலுக்கியிருக்கும் விவசாயிகளின் இந்தப் பேரெழுச்சி, தன்னெழுச்சியாக உருவானது அல்ல. வர்க்கக் கோரிக்கைக்காக வர்க்கரீதியாக ஒருங்கிணைக்கப்பட்ட விவசாயிகளின் பேரெழுச்சி இது. நவம்பர் 26 அன்று நடத்தப்பட்ட தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு விவசாயிகள் சங்கம் நேரடியான ஆதரவு தருவதும், விவசாயிகளின் போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் நேரடியாக ஆதரவு தருவதும் ஆளும்வர்க்கத்தை அச்சமுறச் செய்திருக்கிறது.

பாசிசத்தை வீழ்த்துவதையும், பணியச் செய்வதையும் – கட்சிகளுக்கிடையிலான ஐக்கியம் என்பதைத் தாண்டி – வர்க்கரீதியிலான அணிதிரட்டலின் மூலம்தான் சாதிக்க முடியும் என்பதை விவசாயிகளின் இந்தப் போராட்டம் நிரூபித்துள்ளது.

மகேஷ்

செய்தி ஆதாரம் : The Wire, பிபிசி

விவசாயிகளின் போராட்டத்தை இழிவுபடுத்தும் இந்து தமிழ் திசை !

தினமலர், தினமணி போன்ற பார்ப்பன நாளிதழ்களின் செய்திகளில் பகிரங்கமாகவே “நூல்” இழையோடுவது கண்ணுக்குத் தெரிந்துவிடும். ஆனால் “இந்து தமிழ் திசை” எனும் “நடுநிலை” நாளிதழின் செய்திகளில் சற்று உற்று நோக்கினால்தான் அதில் இழையோடும் ‘நூலை’ அடையாளம் காண முடியும். ஒவ்வொரு நாளும் இந்து தமிழ் திசையை ஆராய்ந்தால் அன்றாடம் ஒரு அங்கவஸ்திரம் நெய்யும் அளவிற்கு ‘நூலை’க் கண்டெடுக்க முடியும். அந்த அளவிற்கு பாஜக – சங்க பரிவாரக் கும்பலுக்குச் சார்பான ‘நடுநிலை’ செய்திகளை வெளியிட்டுவருகிறது இந்து தமிழ்திசை.

சாதாரணமாக தினமணி, தினமலரில் செய்திகளின் தலைப்பிலும், கொடுக்கப்படும் தகவல்களிலுமே பார்ப்பன சார்பு நிலை பகிரங்கமாகத் தெரியும். ஆனால் இந்து தமிழ் திசையைப் பொருத்தவரையில், பார்ப்பன சார்பு நிலையை நைச்சியமாக, பூசி மொழுகினாற்போல, “நடுநிலையாக” வெளிப்படுத்துவதில் தனிச்சிறப்பான வல்லமை கொண்ட நாளிதழாகும்.

படிக்க :
♦ முருகன் – பாஜக – தமிழ் இந்து | ஒரு நாடகக் காதல் கதை !
♦ பதஞ்சலியும் கொரோனா மருந்தும் : தரங்கெட்டுப் போன தமிழ் இந்து நாளிதழ் !

எதை வெளியிட வேண்டும்; அதை எந்தப் பக்கத்தில், எந்த இடத்தில் வெளியிடவேண்டும்; எந்த தலைப்பில் வெளியிட வேண்டும் என்பதிலேயே தனது வாசகர்கள் அந்தச் செய்தியை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை தீர்மானித்து வெளியிடும் “சாணக்கியத்தனம்” கொண்ட பத்திரிகை அது.

டெல்லியில் தற்போது நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டத்தைப் பற்றி பெரும்பாலான தொலைக்காட்சி ஊடகங்கள், பொய்களைச் சொல்வதையும், இருட்டடிப்பு செய்வதையும் மேற்கொண்டு வருகின்றன. செய்தி நாளிதழ்களும் தனது பங்குக்கு விவசாயிகளின் போராட்டத்தைக் குறித்த தவறான பார்வை ஏற்படும்படியான செய்திகளையும் அரசியல் அறிக்கைகளையும் வெளியிட்டு வருகின்றன.

கடந்த வாரத்தில் விவசாயிகள் மீது டெல்லி போலீசு தாக்குதல் தொடுத்ததையும், விவசாயிகள் அதைக்கண்டு அஞ்சாமல் எதிர்கொண்டு நிற்பதையும் ஊடகங்கள் மறைத்தாலும், சமூக வலைத்தளங்களில் அதுகுறித்து பல்வேறு படங்களும், காணொலிகளும் வெளியிடப்பட்டன.

வீரஞ்செறிந்த விவசாயிகளின் போராட்டத்தை எவ்வளவு மட்டம் தட்ட முடியுமோ அந்த அளவிற்கு மட்டம்தட்டி தான் செய்தி வெளியிட்டு வந்துள்ளது இந்து தமிழ் திசை நாளிதழ். ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, நேற்றைய (30-11-2020) நாளிதழில் வந்த செய்திகளை மட்டும் எடுத்துப் பார்க்கலாம்.

விவசாயிகள் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த பகுதியில், பொதுமக்கள் சிலர் தங்களது உடைமைகளைத் தூக்கிச் செல்லும் காட்சியை புகைப்படம் எடுத்துப் போட்டு, “பொதுமக்கள் தங்கள் உடைமைகளை சுமந்தபடி நேற்று சிங்கு எல்லைப் பகுதியை சிரமத்துடன் நடந்தபடியே கடந்தனர் ” என தலைப்பிட்டு வெளியிட்டிருக்கிறது.

விவசாயிகள் டெல்லிக்குள் நுழைய அனுமதிக்குமாறு போராடிக் கொண்டிருக்கையில், சாலையை தோண்டிப் போட்டு பாதையை முடக்கிய டெல்லி போலீசை அம்பலப்படுத்தாமல், விவசாயிகளின் பிரச்சினை குறித்தும் இந்தப் போராட்டம் குறித்தும் மேலோட்டமாகத் தெரிந்த சாதாரண மக்களின் மத்தியில், விவசாயிகளின் போராட்டத்தால்தான் சாதாரண மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருப்பது போல அந்த புகைப்படத்தை சித்தரித்துள்ளது.

மேலும் இந்த வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு அறிவில்லாததால் தான், எதிர்க்கட்சிகளின் தவறான வழிகாட்டுதலின் அடிப்படையில் விவசாயிகள் போராடுகின்றனர் என்று திட்டமிட்டு தொலைக்காட்சி ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டு விவாதங்களும் நடத்தப்படுகின்றன.

நேற்றைய “இந்து தமிழ் திசை”யும் ஒரு செய்திப் பதிவில் “வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகள்” என்று மோடி பேசியதை விளாவரியாக எழுதியுள்ளது. ஒரு நாட்டின் பிரதமர் பேசியதை வெளியிட்டால் தப்பா? என்று யாரேனும் கேட்கலாம். சரிதான், பிரதமர் பிரபலமானவர்; அவர் பேசியதை வெளியிடுவது அவசியமானது என்றே எடுத்துக் கொள்வோம்.

ஆனால் எத்தனை பேருக்கு ரமேஷ் சந்தியைத் தெரியும் ? ரமேஷ் சந்தி என்பவர் “நிதி ஆயோக்”-ன் உறுப்பினர். பெரிய வேளாண் விஞ்ஞானியைப் போல, “மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தை விவசாயிகள் புரிந்து கொள்ளாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்” என்று இவர் கருத்துக் கூறியதை அப்படியே தலைப்பாகப் போட்டு செய்தி வெளியிட்டிருக்கிறது இந்து தமிழ் திசை.

விவசாயிகளின் வீரஞ்செறிந்த போராட்டங்களை இழிவுபடுத்தும் விதமாக, “விவசாயிகள் என்ற போர்வையில் அரசியல் ஆதாயத்துக்காக சில கட்சிகள் போராட்டம்” என்று வானதி சீனிவாசன் பேசியதையும் ஒரு செய்தியாக வெளியிட்டிருக்கிறது. காயத்ரி ரகுராம், மதுவந்தி என ஒவ்வொரு நாளும் ஒருவரின் அரைவேக்காட்டு அறிக்கைகளை வெளியிட நேர்ந்து கொண்டிருக்கிறது போலும், இந்து தமிழ் திசை.

பஞ்சாபில் உள்ள அமிர்தசரசில் சீக்கியர்களின் பொற்கோவில் உள்ளது பற்றி நமக்குத் தெரியும். அங்கு ராம் தீர்த்தக் கோவில் இருப்பது பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? யாருக்கும் தெரியாத அந்த ராம் தீர்த்தக் கோவிலில் நடந்த விழாவைப் பற்றி ஒரு செய்தியை வலிந்து வெளியிட்டிருக்கிறது தமிழ் திசை.

அக்கோவிலின் பிரகாரத்தில் சில சுற்றுலாப் பயணிகள் நின்று செல்பி எடுக்கும் படத்தைப் போட்டு, இந்தக் கோவில் திருவிழா விமரிசையாக நடைபெற்றதாக செய்தி வெளியிட்டிருக்கிறது. யாருக்கும் பெரிதாக அறிமுகம் இல்லாத கோவிலில் அதுவும் குறிப்பாக பஞ்சாபில் உள்ள ஒரு கோவிலில் கூட்டமே இல்லாமல் ஆங்காங்கே ஒரு சிலர் நின்று செல்பி எடுக்கும் புகைப்படத்தைப் போட்டு, விழா விமரிசையாக நடந்ததாகச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன ?

பஞ்சாப் விவசாயிகள் குடும்பத்துடன் டெல்லிக்கு சென்று போராடுகின்றனர். சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை டெல்லிக்கு இலட்சக்கணக்கில் திரண்டிருக்கும் செய்திகள் குறித்து எழுதுவதற்கும் சொல்வதற்கும் ஏராளமான விசயங்கள் உள்ளன. தங்களது வாழ்வாதாரமே பறிபோகிறது என்ற நிலையில் போர்க்கோளம் பூண்டுள்ளனர் பஞ்சாப் விவசாயிகள். அந்தச் செய்திகளை வெளியிடாமல் இருட்டடிப்பு செய்துவிட்டு, பஞ்சாப் மக்களின் உணர்வோடு கலந்திருக்கும் இந்தப் போராட்டம், வெறும் விவசாய சங்கங்களின் போராட்டம் என்பதாகவும், மக்கள் இந்தப் போராட்டம் குறித்த பெரிதாக அக்கறையின்றி இருப்பது போலவும் ஒரு தோற்றத்தை வாசகர் மத்தியில் உண்டாக்க மறைமுகமாக முயற்சிக்கிறது.

மொத்தத்தில் விவசாயிகளின் போராட்டம், விவசாயிகளின் அறிவின்மை காரணமாகவும், பிற எதிர்க்கட்சிகளின் தூண்டுதல் காரணமாகவும், சாதாரண மக்களுக்கு துன்பத்தைத் தரும் வகையிலும்  நடைபெறுகிறது என்பதையே நைச்சியமாக வாசகர்கள் மனதில் ஏற்றுகிறது இந்து தமிழ் திசை.

000

விவசாயிகளின் டெல்லி போராட்டச் செய்திகள் என்பது ஒரு உதாரணம்தான். இந்து தமிழ் திசை நாளிதழின் ஒவ்வொரு செய்தியை எடுத்துப் பார்த்தாலும், அதில் அப்பட்டமான பார்ப்பன, கார்ப்பரேட் சார்பு நிலையை அடையாளங்காண முடியும். அதே போல, தமிழகத்திற்கான ஆர்.எஸ்.எஸ். – பாஜக-வின் நிகழ்ச்சிநிரலை அச்சரம் பிசகாமல் நிறைவேற்ற அரும்பாடு பட்டுவருகிறது “தமிழ் திசை”.

திராவிட கட்சிகளின் மீதான வெறுப்புப் பிரச்சாரம், மதரீதியான முத்திரைகள் ஆகியவற்றின் மீதுதான் இந்தத் தேர்தலை எதிர்கொள்ள திட்டமிட்டிருக்கிறது சங்க பரிவாரக் கும்பல். சங்க பரிவாரத்தின் இந்த நிகழ்ச்சிநிரலையும் நேற்றைய நாளிதழில் வெகு சிறப்பாக நிறைவேற்றியிருக்கிறது தமிழ் திசை.

“தனி அலுவலகம், நூற்றுக்கணக்கான ஊழியர்கள் நியமனம் ஐ.டி. நிறுவனங்கள் போல செயல்படும் அரசியல் கட்சிகளின் தகவல் தொழில்நுட்ப அணிகள்” என்ற தலைப்பில் மற்றொரு செய்தியை வெளியிட்டிருந்தது. இதில் திமுக-வையும், அதிமுகவையும் மட்டும் குறிப்பிட்டிருக்கும் தமிழ் இந்து, பாஜக பற்றி வாய்திறக்கவில்லை. இந்தியாவில் ஐ.டி.-விங்கிற்கும், இணைய ட்ரோல் படைக்கும் முன்னோடிக் கட்சி பாஜக தான். அதனை வைத்துத்தான் மோடி என்ற ஊதிப் பெருக்கப்பட்ட பிம்பம் நடுத்தரவர்க்கத்தினரிடையே பிரபலப்படுத்தப்பட்டது.

ஆனால், இதைப் பற்றியெல்லாம் பேச மறந்துள்ள இந்து தமிழ்திசை, அதிமுகவும் திமுகவும்தான் மக்களை “மயக்க” ஐ.டி.விங்கிற்கு பெரும் செலவு செய்து வருவதாக ஒரு சித்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்ற கருத்தாக்கத்தை உருவாக்க பாஜக முயற்சி செய்து கொண்டிருக்கையில், இந்து தமிழ்திசை ஒருபடி மேலே போய் திமுக மீது ஏற்கெனவே இந்து விரோத கட்சி என்ற முத்திரை இருப்பதாக ஒரு சித்திரத்தை நேற்று வெளியான செய்தி ஒன்றில் உருவாக்கியிருக்கிறது.

“தீபாவளிக்கு வாழ்த்து… கோவிலுக்காக போராட்டம்.. ‘இந்துவிரோதக் கட்சி’ என்ற முத்திரையை அகற்ற களமிறங்கும் திமுக” என்ற ஒரு கட்டுரையை செய்தி போல வெளியிட்டுள்ளது. இதில் கொடுமை என்னவென்றால், தமிழகத்தில் பாஜகவிற்கு வேல் யாத்திரை மூலம் ஆதரவு பெருகிவருவதாக எழுதியிருப்பதுதான். பாஜகவிற்கு தமிழகத்தில் கிடைத்து வரும் செல்வாக்கைக் கண்டு அஞ்சி விலுக்குச் செல்லாத திமுகவினரும், கோவிலுக்குச் சென்று வருவதாகவும் எழுதியிருக்கிறது. திமுகவிற்கும் தி.க-விற்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு தமிழ் திசையில் கட்டுரையாளர்கள் இருக்கமாட்டார்கள் என்று எடுத்துக் கொண்டு பார்க்கையில் இது முழுக்க முழுக்க பாஜகவின் ஊதுகுழல் வேலையைத் தவிர வேறு எதுவும் அல்ல என்பதை புரிந்து கொள்ளமுடியும்.

தேர்தல் நெருங்க நெருங்க, இந்து தமிழ்திசை எனும் ‘நடுநிலை’ நாளிதழின் யோக்கியதை இன்னும் அம்பலமேறும் என எதிர்பார்த்துக் காத்திருக்கலாம். கத்திரிக்காய் முற்றும்போது சந்தைக்கு பகிரங்கமாக வந்துதானே தீரவேண்டும் !

மகேஷ்
செய்தி ஆதாரம் : இந்து தமிழ் திசை – 30-11-2020 நாளிதழ்

சந்தர்ப்பவாதத்தை களைய மார்க்சிய லெனினியத்தை கசடற கற்போம் !

உட்கட்சிப் போராட்டம் ||  இறுதி பாகம்

பாகம் – 14

சீன கம்யூனிஸ்ட் கட்சியில் ஐரோப்பிய சமூக ஜனநாயகத்திற்கு பாராம்பரியம் இருந்ததில்லை; ஆனால் சீன மென்ஷ்விசத்திற்கு ஒரு பாராம்பரியம் இருந்திருக்கிறது.

இந்த ரக போலி மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்களை, போலி போல்ஷ்விக்குகளை அவர்கள் வார்த்தைகளை வைத்து, பொதுவான தோற்றத்தை வைத்துக் கண்டுபிடிப்பது முடியாத காரியம். பேச்சில் மற்றவர்களைக் காட்டிலும் அதிகமான மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் பதங்களை உபயோகப்படுத்தக் கூடும். வெளிக்கு அதிக புரட்சிகரமானவர்களாகவும், அதிக கடுமையாக உழைப்பவர்களாகவும், விசேஷமான சுமூகத் தன்மையும், அதிக நட்பும் கொண்டவர்களாகவும் தோற்றமளிப்பார்கள். அவர்கள் எல்லாவற்றிற்கும் மேலாக யதார்த்தத்தை வைத்து சோதிப்பது அவர்கள் வேலையை விமர்சன உணர்வுடன் பரீட்சிப்பது என்றால் ஒரேநடுக்கமாக நடுங்குகின்றனர். வேறெதைக் கண்டும் இவர்கள் அஞ்சுவதில்லை .

அதனால் இந்த ரகத்திலுள்ள நபர்களைக் கண்டுபிடித்து அவர்களுடைய உண்மையான முகலட்சணத்தை நடைமுறையின் மூலம், அவர்கள் வேலையின் மூலம், பிரச்சினைகளை புரிந்து கொள்வதிலும் சமாளிப்பதிலும் கைக்கொள்ளும் முறை மூலம், அவர்கள் வேலையின் பலனை பரிசீலிப்பதன் மூலம், அம்பலப்படுத்துவதும் அவசியமாகிறது. உண்மையாக அவர்கள் வார்த்தை அளவில்தான் மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்டுகள்; நடைமுறையில் நடவடிக்கையில் அல்ல.

வழக்கமாக அவர்கள் நடைமுறையிலிருந்து வழுவாத மார்க்சிஸ்ட் -லெனினிஸ்ட் கோட்பாடுகளினால் வழிகாட்டப்படுவதில்லை. வேலை செய்யும் பொழுது தங்கள் நடவடிக்கைக்கு புத்தகங்களை, மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் மேற்கோள்களை, தீர்மானங்களிலிருந்து பகுதிகளை, பொதுவான கருத்துக்களை, தத்துவங்களை ஆதாரமாகக் கொள்கின்றனரே அல்லாமல், நடைமுறை அனுபவம், அல்லது நடைமுறைவேலை கற்றுக் கொடுப்பதை அல்ல.

பிரச்சினைகளைப் பற்றியும், கொள்கை பற்றியும் முடிவுகள் எடுப்பதில், யதார்த்தத்திலிருந்தோ அல்லது நிலவும் யதார்த்த நிலைமையை, ஆராய்ந்தறிவதிலிருந்தோ அவர்கள் அணுகுவதில்லை; புத்தகங்களிலுள்ள சூத்திரம் சரித்திரப் பூர்வமான ஒப்புவமைகள், சோவியத் யூனியனிலிருந்து அல்லது ஐரோப்பிய நாடுகளிலிருந்து உதாரணங்கள், இன்னும் இதர உவமைகளிலிருந்து அணுகுகின்றனர். இவ்வாறு யதார்த்த வேலையில் அடிக்கடி தவறு செய்கிறார்கள்; இறுதியாக அவர்களுக்கு சரியாக வேலை செய்ய முடிவதில்லை. நடைமுறையில் அவர்கள் எண்ணத்திற்கும் வார்த்தை அளவில் ஆதியில் செய்யும் பிரகடனங்களுக்கும் விளைவுகள் நேர்முரணாகத்தானிருக்கும்; அவர்களுடைய வேலை முறையை நீங்கள் கவனித்து வந்து, அவர்கள் வேலையையும் அதன் பலனையும் விமர்சனப் பூர்வமான சோதனைக்கு உட்படுத்தினால் அவர்கள் உண்மை முகம் அம்பலமாகும். “மூன்றுவித பாங்கு திருத்தம் செய்யும் இயக்கம்” பற்றி தோழர் மாசேதுங் செய்த பிரசங்கத்தில் இம்மாதிரியான ஆளை வெகு வன்மையாக விமர்சித்துள்ளார்.

இம்மாதிரி நபருடைய ஆபத்து எதில் அடங்கியிருக்கிறது என்றால், அவர் உபயோகப்படுத்தும் எண்ணற்ற மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் பதங்களிலும், போல்ஷ்விசத்தை மேற்கோள் காட்டுவதிலும் அவரது உடன்பிறந்த மோசடியிலும்தான் அவர் பல தொழிலாளி விவசாயத் தோழர்களையும் திணறடித்து வழிதவறச் செய்வார்; முதிர்ந்த தோழர்கள், வேலை செய்து அனுபவம் பெற்றவர்கள். ஆனால் தத்துவத்தைப் பொறுத்தமட்டில் பாகுபாடு செய்து பார்க்கும் திறமையில் முதிர்ச்சியில்லாதவர்கள் கூட அடிக்கடி இவர்களால் கவரப்பட்டு, வழிபிறழச் செய்யப்படுகின்றனர். இவ்வாறு கட்சியின் லட்சியத்தை பெரும் அபாயத்திற்கு இவர்கள் உள்ளாக்குகின்றனர்.

படிக்க :
♦ தவறுகளை ஒப்புக்கொள்ளும் போல்ஷ்விக் உறுதி வேண்டும்! | தோழர் ஸ்டாலின்
♦ கம்யூனிஸ்ட் கட்சியில் விசுவாசமும் கூட்டுத் தலைமையும் !

கட்சியின் கடந்தகால சரித்திரம் போல்ஷ்விக் கொள்கைக்கும் மென்ஷ்விக் கொள்கைக்கும் நிகழ்ந்த போராட்டங்கள் மலிந்த சரித்திரமாக நிகழ்கிறது. நமது கட்சியின் சரித்திரத்தில் இரண்டு கொள்கையும், இரண்டு பாரம்பரியமும் இருந்து வந்திருக்கிறது. ஒன்று போல்ஷ்விச கொள்கையும் பாரம்பரியமுமாகும்; மற்றது மென்ஷ்விச கொள்கையும் பாரம்பரியமுமாகும்; முன்னது மாசேதுங்கில் உருப்பெற்றிருக்கிறது; பின்னது கட்சியிலுள்ள பல்வேறு சந்தர்ப்பவாத கும்பல்களில் உருபெற்றிருக்கிறது.

நீண்டகால கட்டத்திற்கு இந்த இரண்டு கொள்கைக்கும் பாரம்பரியத்திற்கும் இடையில் கடுமையான போராட்டங்கள் நடந்தேறியுள்ளன. அதன் உள்ளடக்கம் மிகவும் செழுமையானது. இந்தப் போராட்டங்களில் கட்சியின் தவறான கொள்கை மென்ஷ்விக் கொள்கை மோலோங்கி, பல குறுகிய காலகட்டங்களில் தற்காலிக வெற்றிகளும் பெற்ற போதிலும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அது எப்பொழுதுமே தோற்கடிக்கப்பட்டது.

நமது கட்சி அடிக்கடி வேலை செய்யும் போக்கில் தவறான கொள்கையை சமாளித்தது. எனினும், சித்தாந்த ரீதியாக மென்ஷ்விக் முறை முற்றிலும் சமாளிக்கபடவோ, அல்லது அறவே ஒழிக்கப்படவோ அல்லது இறுதியான மரண உதை கொடுக்கப்படவோ இல்லை. இவ்வாறு, இவ்விதமான சித்தாந்தம், இவ்விதமான பாரம்பரியம், இன்னும் கட்சியில் சாகாமலிருந்து வருகிறது, சில காலகட்டங்களில், சில சூழ்நிலைகளில், அது வெடித்து மீண்டும் பேராபத்துக்கு உட்படுத்தக் கூடும்.

சித்தாந்த ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், செயல் முறைகளிலும் கட்சியிலுள்ள மென்ஷ்விசத்தின் மிச்ச சொச்சங்களை அறவே ஒழித்துக்கட்டுவதற்கு இதுதான் தருணம். கட்சியின் சரித்திரப் பூர்வமான அனுபவத்தைத் திறமையாகத் தொகுப்பதற்கும், குறிப்பாக இரு கொள்கைக்கும் இடையே நிகழ்ந்த போராட்டங்களைப் பற்றிய அனுபவத்தை தொகுப்பதற்கும் அதை கட்சி அங்கத்தினர்களுக்கும், ஊழியர்களுக்கும் போதனை அளிப்பதற்கு உபயோகப்படுத்துவதற்கும் இதுதான் தருணம்.

இந்த வழியில்தான் வியாதியைக் குணப்படுத்தி, நோயாளியைக் காப்பதற்கும், கட்சி அணியில் ஐக்கியம், கட்டுப்பாடு அடைவதற்கும், கட்சி பூராவும் தொடர்ச்சியான, சரியான தலைமையை உத்திரவாதம் செய்வதற்கும், எதிர்காலத்தில் சீனப்புரட்சியை வெற்றி பெற நடத்திச் செல்வதற்கும் கடந்த காலத்திலிருந்து கற்றுக்கொள்வதென்பது சாத்தியமாகும். இல்லாவிடில் நம்மை எதிர்நோக்கும் கடுமையான, சிக்கல் நிறைந்த மகத்தான காலத்தில், முன்னணி அரசியல் கட்சி என்ற முறையில் நமது சரித்திர பூர்வமான பணியை நாம் பூர்த்தி செய்ய முடியாமல் போவோம்.

நமது கட்சியிலுள்ள மென்ஷ்விசம் கட்சியிலுள்ள குட்டி பூர்ஷ்வா சித்தாந்தத்தின் பிரதிபலிப்பாகும்; அது பின்னதன் வளர்ச்சியடைந்த பிரதிபிம்ப வடிவமாகும்; அது ஒரு குறிப்பான சித்தாந்த நெறிமுறையாகும். கட்சியில் மென்ஷ்விசத்தையும், அதன் நெறிமுறையையும் வேரோடு கெல்லி எறிய குட்டி பூர்ஷ்வா சித்தாந்தத்தை விரட்டியடிக்க தொழிலாளி வர்க்க சித்தாந்தத்தை உபயோகிப்பதும், எல்லா வடிவங்களிலும் தொழிலாளி வர்க்க, குட்டி பூர்ஷ்வா கருத்துகளுக்கிடையில் பாகுபாடு செய்வதற்கு உதவுவதும் அவசியமாகிறது. இந்த மாதிரி வேலையை நாங்கள் செய்திருக்கிறோம்; சில இடங்களில் இன்னும் செய்து கொண்டிருக்கிறோம்.

தோழர் மாவோ

சென்ற வருஷத்திலிருந்து தோழர் மாசேதுங் எடுத்து விளக்கிய இந்த “மூன்று பாங்கு திருத்தம் செய்யும் இயக்கம்” நடந்து வந்திருக்கிறது. கட்சியில் இந்த சுயகல்வி, சுயவிமர்சன இயக்கத்திற்கு கடந்த இருபத்திரண்டு வருட சரித்திரத்திலேயே முன்பின் இணையில்லை. போல்ஷ்விக் பாதையில் நமது கட்சிக்கு இணையற்ற உத்வேகம் அளித்திருக்கிறது.

இந்த புனரமைப்பின் அடிப்படையில் நாம் மேலும் செல்ல வேண்டும்; இந்த இருபத்திரண்டு வருடகால செழுமைமிக்க சரித்திரப் பூர்வமான அனுபவத்தை தொகுக்க வேண்டும்; கட்சியின் சித்தாந்தத்திலிருந்து மென்ஷ்விசத்தின் மிச்ச சொச்சங்களை அறவே ஒழிக்க வேண்டும். நமது கட்சியின் போல்ஷ்விக் தரத்தை என்றென்றும் மேல் மட்டங்களுக்கு உயர்த்திக் கொண்டே போக வேண்டும். கட்சியைக் கட்டுவதில் இன்று அதுதான் நமது மையமான கடமையாகும்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சரித்திரம் சீனாவில் மார்க்சிஸம் – லெனினிஸம் வளர்ந்த வரலாறு; மார்க்சிஸ்டு – லெனினிஸ்டுகளுக்கும், பல்வேறு சந்தர்ப்பவாத குழுக்களுக்கும் நிகழ்ந்த போராட்டங்களின் சரித்திரமும் கூடத்தான். எதார்த்தத்தில் இந்த சரித்திரம் தோழர் மாசேதுங்கை மையமாகக் கொண்டுள்ளது.

கட்சியிலுள்ள பல்வேறு சந்தர்ப்பவாத கோஷ்டிகளின் சரித்திரம், கட்சியின் சரித்திரமாகிவிட முடியாது. கட்சியில் மென்ஷ்விக் கொள்கையும், அதன் பாரம்பரியமும் கட்சியினுடைய சித்தாந்தமாகவோ அல்லது அதன் பாரம்பரியமாகவோ அமைய முடியாது. நமது கட்சியின் உள்சரித்திரம் இந்த மாதிரியான சித்தாந்தம், பாரம்பரியத்தை எதிர்த்து நடத்திய போராட்டம் பற்றியும், அது எப்படி தோற்கடிக்கப்பட்டது, நசுக்கப்பட்டது என்பதை பற்றியும் ஆகும்.

இந்த பாரம்பரியத்தின் மிச்ச சொச்சங்களை வேரோடு கெல்லி எறிவதற்கு அதை அம்பலப்படுத்துவது மிகவும் அவசியம்; அதை நாம் மூடி மறைக்ககூடாது; உள்ளதை மறுக்கவும் கூடாது. அது கட்சிக்கு பிரயோஜனப்படாது. தீமைதான் விளைவிக்கும்.

எல்லா ஊழியர்களும், எல்லா கட்சி அங்கத்தினர்களும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த இருபத்திரண்டு வருடகால சரித்திரப் பூர்வமான அனுபவத்தை ஜாக்கிரதையாகக் கற்றறிய வேண்டும்; சீனப் புரட்சி பற்றியும், மற்ற விஷயங்களைப் பற்றியும் தோழர் மாசேதுங்கின் போதனைகளை ஜாக்கிரதையாக கற்றறிய வேண்டும்; மாசேதுங்கின் கருத்துக்களை ஆதாரமாகக் கொண்டு மாசேதுங்கின் சித்தாந்தத்தின் உதவியைக் கொண்டு கட்சியில் மென்ஷ்விக் சித்தாந்தத்தை வேரோடு கெல்லி எறியவும் வேண்டும்.

படிக்க :
♦ ஹிட்லரின் நியூரெம்பர்க் சட்டங்களின் மறுவடிவம்தான்  ‘லவ் ஜிகாத்’ தடைச் சட்டம் !
♦ தேசியக் குடிமக்கள் பதிவேடு : ஒரு கேடான வழிமுறை !

ஆயினும் நமது ஊழியர்களும், கட்சி அங்கத்தினர்களும் கீழ்கண்ட விஷயங்களைப் பற்றி உஷாராக இருக்க வேண்டும். சமீப வருடங்களில் கட்சிக்குள் ஊடுருவுவதற்கு சில ரகசிய ஏஜெண்டுகள் நுழைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த ஆட்களும் மார்க்சிஸ்டு – லெனினிஸ்டுகள் என்ற போர்வையில் தோன்றியிருக்கின்றனர்.

இவர்களுக்கும் மேலே கூறியுள்ள போலி மார்க்சிஸ்டு – லெனினிஸ்டுகளுக்கும் இடையில் கொஞ்சம் வித்தியாசமிருக்கிறது. இவர்கள் எல்லாம் எதிர்ப்புரட்சி நபர்கள். கட்சிக்குள் நுழையும் இந்த எதிர்ப்புரட்சிகாரர்கள் சம்பந்தப்பட்ட வரையில் நாம் அவர்களை சலித்து எடுக்கவேண்டும். இதற்கு அர்த்தமென்னெவென்றால், கட்சியில் புரட்சிக்காரர்களுக்கும் எதிர்ப்புரட்சிக்காரர்களுக்கு மிடையில் வரையறுப்பு செய்ய வேண்டும்.

கட்சியில் மென்ஷ்விசத்தின் மிச்ச சொச்சங்களை வேரோடு களைந்தெறிவதென்றால், தொழிலாளி வர்க்கத்திற்கும் குட்டி பூர்ஷ்வா வர்க்கத்திற்குமிடையில் வரையறுப்பு செய்வதாகும். இந்த இரு வரையறுப்புகளும் தெளிவாக வகுக்கப்பட வேண்டும். ஆனால் உபயோகப்படுத்தும் முறைகள் வேறாக இருக்க வேண்டும். முன்னது ஊழியர்களையும், கட்சி அங்கத்தினர்களையும் பரீட்சை செய்யும் போக்கில் கண்டுபிடிக்கப்படுகிறது; பின்னது புனரமைப்பு, அனுபவங்களை தொகுத்தல் ஆகிய முறைகளில் செய்யப்படுகிறது.

கட்சிக்குள் குட்டி பூர்ஷ்வா சித்தாந்தத்தையும், அதன் வழிமுறைகளையும், மார்க்சிசம், லெனினிசம் உதவி கொண்டு ஒழிப்பதும், விரோதியின் ஏஜெண்டுகளை சலித்து பிரித்தெடுப்பதும் கட்சியை பலப்படுத்துவதற்கும், உயர்த்து வதற்கும் நமது உடனடியான இரண்டு பெரிய கடமைகளாகும். அதன் வெற்றிகரமான சாதனை சித்தாந்தத்திலும், அமைப்பிலும் நம்மை நாமே தயாரித்துக் கொண்டுள்ளோம் என்று அர்த்தம். நம்மை எதிர்நோக்கும் பிரமாதமான காலகட்டத்தை நமது நிலைமையை பரிபூரணமாக ஸ்திரப்படுத்திக் கொண்டும், தயாரித்துக் கொண்டும் எதிர்கொள்ளலாம்.

மார்க்சியம் -லெனினியத்தை கசடறக் கற்றுக் கொள்ளுங்கள். கட்சிக்குள் எஞ்சியிருக்கும் சந்தர்ப்பவாத மிச்ச சொச்சங்களை ஒழியுங்கள். நம்மை யாராலும் வெல்லமுடியாது!

(முற்றும்)

பேராசான் எங்கெல்ஸ்  – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் !

3

பேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் !

மார்க்சிய பேராசான் எங்கெல்ஸ் பிறந்து 200 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. மார்க்ஸ் – எங்கெல்ஸ் இருவருக்கும் முந்தைய தத்துவஞானிகள் இந்த உலகைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்த தருணத்தில், இவர்கள் இந்த உலகை மாற்றுவதற்கான தத்துவத்தைப் படைத்தனர்.

மார்க்சின் பெயரைத் தாங்கியிருந்தாலும் மார்க்சியம் என்பது மார்க்ஸ், எங்கெல்ஸ் என்ற இரண்டு ஆளுமைகளின் பிரிக்க முடியாத பணியாகும். மார்க்சியம் எனும் சமூக ஆய்வுமுறையை உருவாக்குவதிலும், அதனை சமகாலத்திய முதலாளித்துவ சமூகத்தின் மீது பிரயோகித்து பாட்டாளி வர்க்கத்துக்கான சித்தாந்தத்தை படைப்பதிலும் இருவரின் பங்களிப்புகளும் ஒன்றுக்கொன்று  பிரிக்கவொன்னாதவை !

மார்க்சின் மேதைமை, விசயங்களை ஆழமாகவும் இலக்கியச் செறிவுடனும் ஆய்ந்தறியும் திறன் ஆகியவற்றோடு, எங்கெல்சின் கூருணர்வும், அறிவியலின் அனைத்துத் துறைகளிலும் அகழ்ந்து ஆய்ந்தறியும் அவரது அறிவுத்திறனும் இணைந்ததன் விளைபொருள்தான் மார்க்சியத் தத்துவம். இதில் எந்த  ஒரு அம்சம் குறைந்திருந்தாலும், மார்க்சியம் ஆழமானதாகவும் செறிவுமிக்கதாகவும் இருந்திருக்காது என்பதை உறுதிபடக் கூறமுடியும்.

படிக்க :
♦ சிறப்புக் கட்டுரை : மனிதகுலம் பிழைத்திருக்க சோசலிசம் ஒரு கட்டாயம் !
♦ கம்யூனிச எதிர்ப்பு எழுத்தாளர்கள்: அறிவாளிகளா, உளவாளிகளா?

“மனிதர்கள் தங்கள் வரலாற்றை உருவாக்குகிறார்கள். ஆனால், தாங்கள் விரும்பும்படியெல்லாம் அதை உருவாக்குவதில்லை. அவர்களால் தேர்ந்தெடுத்துக் கொள்ளப்பட்ட ‘சூழ்நிலைமை‘களில் அதை உருவாக்குவதில்லை. மாறாக, அவர்கள் நேரடியாக எதிர்கொள்ளும், கடந்த காலத்திலிருந்து கைமாற்றித் தரப்பட்ட, குறிப்பிட்ட ‘சூழ்நிலைமை‘களில்தான் அதை உருவாக்குகிறார்கள்” என்றார் மார்க்ஸ்.

இது மார்க்ஸ் எங்கெல்ஸ் இருவருக்குமே பொருந்தும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் அவர்கள் இருவரும் ஐரோப்பாவில் எதிர்கொண்ட மற்றும் அவர்களது கடந்த காலத்திலிருந்து அவர்களுக்குக் கைமாற்றிக் கொடுக்கபட்ட  சமூகச் சூழலிலிருந்துதான் அவர்கள் இருவருமே “மார்க்சியவாதிகளாக” பரிணமிக்கிறார்கள்.

“மார்க்ஸ் பிறந்தார்” எனும் நூலில் மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரும் வளர்ந்த ஜெர்மானிய சூழல் குறித்த தெளிவான சித்திரத்தைக் கொடுக்கிறார் அதன் ஆசிரியர் ஹென்றி வால்கோவ்.

மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரும் பிறந்த ரைன் பிரதேசத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் அங்கு சில அரசு அதிகாரிகள் கூட மிதவாத மற்று தீவிரவாதக் கருத்துக்களை இயல்பாகப் பேசுவது குறித்துக் குறிப்பிடுகிறார் அவர். அண்டை நாடான பிரான்சை உலுக்கிய புரட்சிப் புயல்களின் தாக்கம், ரைன் பிரதேசத்திலும் இருந்தது. பிரெஞ்சு பொருள்முதல்வாத, அறிவியக்கக் கருத்துக்கள் ஜெர்மனிக்குள் நுழையும் நுழைவாயிலாக ரைன் பிரதேசம் இருந்தது. மேலும் ரைன் பிரதேசம் ஜெர்மனியிலேயே தொழிற்துறையில் முன்னேறிய பிரதேசமாகவும் இருந்தது.

இத்தகைய சூழலில் வளர்ந்த எங்கெல்ஸ், தனது தந்தையின் நெருக்குதல் காரணமாக 17 வயதில் படிப்பை நிறுத்திவிட்டு, பிரெமென் நகரில் ஒரு வர்த்தக நிலையத்தில் பணிக்குச் சேர்ந்தார். பிரெமென் நகரம் எங்கெல்சுக்கு ஹெகலின் தத்துவத்தை  அறிமுகம் செய்தது. அங்கு பல்வேறு தத்துவவியல் மாணவர்களுடனும் ஹெகலியவாதிகளுடனும் விவாதிக்கிறார் எங்கெல்ஸ்.

ஹெகலிய தத்துவங்களை  நடைமுறையோடு பொருத்திப் பார்த்து படிப்படியாக பொருள்முதல்வாதக் கருத்துக்களை முன்னெடுக்கிறார். கடவுள் மறுப்பு உள்ளிட்ட சமூகத்திற்கு ‘அன்னியப்பட்ட’ கொள்கைகளைப் பேசும் எங்கெல்சைக் கண்டு அஞ்சியது அவரது குடும்பம்.

1842-ம் ஆண்டில் 22 வயதான எங்கெல்சை மான்செஸ்டருக்கு அனுப்புகிறது அவரது குடும்பம். தங்களது மகன், தொழிற்சாலைகள் நிரம்பிய மான்செஸ்டர் நகருக்குச் சென்றால் ‘வழி’க்கு வந்துவிடுவார் என்று எண்ணினார்கள்.  ஆனால் நேரெதிராக மான்செஸ்டர் எங்கெல்சை ஒரு மார்க்சியவாதியாக வளர்த்தெடுத்தது.

தொழிற்துறை வளர்ச்சியடைந்த இங்கிலாந்தில் எங்கெல்ஸ் தங்கியிருந்தபோது அவர் மீது அங்கிருந்த தொழிலாளர்களின் இயக்கமான சார்ட்டிஸ்ட் இயக்கம் பெரும் செல்வாக்கு செலுத்தியது. அதில் உத்வேகத்துடன், பகிரங்கமாகவே செயல்பட்ட எங்கெல்ஸ், அந்த இயக்கத்தின் பலவீனங்களைச் சுட்டிக் காட்டத் தவறவில்லை.  சட்டப்பூர்வமாக புரட்சியைக் கொண்டுவர விரும்புகின்றனர் என்று அவர்களை விமர்சித்தார்.

1843-ம் ஆண்டில் “அரசியல் பொருளாதாரத்தின் மீதான  விமர்சனத்தின்  உருவரை” என்ற தனது முதல் பொருளாதாரக் கட்டுரையை வெளியிடுகிறார் எங்கெல்ஸ். தனது மூலதனம் நூலில் பல இடங்களில் இதிலிருந்து மேற்கோள் காட்டி எழுதியிருக்கிறார் மார்க்ஸ்.

தனது தந்தை பங்குதாரராக இருந்த ஆலையில் பொறுப்புமிக்கப் பணியில் இருந்தாலும்  தனது ஓய்வு நேரங்களை ”வியர்வைக் கூடங்கள்” என்றழைக்கப்பட்ட தொழிலாளர்களின் குடியிருப்புகளில் செலவிடுகிறார் எங்கெல்ஸ். தொழிலாளர்களின் வாழ்நிலைமை, குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து மார்க்ஸ் நடத்தி வந்த பத்திரிகைக்கு தொடர்ந்து கட்டுரைகள் எழுதி அனுப்பினார் எங்கெல்ஸ்.

“சமூக ஒழுங்கின் எந்த ஒரு நலனும் கிடைக்கப் பெறாது, அனைத்துக் கேடுகளையும் தாங்கிக் கொள்ளும் ஒரு வர்க்கம்” என தொழிலாளர் வர்க்கத்தை விளிக்கும் எங்கெல்ஸ், “அத்தகைய ஒரு வர்க்கம் சமூக ஒழுங்கை மதிக்க வேண்டும் என யாரால் கோர முடியும் ?” என்று தனது பாட்டாளிவர்க்க நிலைப்பாட்டில் இருந்து முதலாளிவர்க்கத்தை நோக்கிக் கலகக் குரலை எழுப்பினார்.

1844-ம் ஆண்டில் மார்க்சை இரண்டாம் முறை சென்று சந்திக்கும் முன்னரே, எங்கெல்ஸ் ஒரு முழுமையான பொருள்முதல்வாதியாக, விஞ்ஞான சோசலிஸ்டாக மாறியிருந்தார். தனது அயராத உழைப்பின் மூலம், “இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை” என்ற நூலை 1845-ம் ஆண்டில் வெளியிட்டார். தொழிலாளர்களின் வாழ்நிலையைப் பிரதிபலிக்கும் அற்புதமான படைப்பு என அதனைப் புகழ்ந்தார் மார்க்ஸ்.

அந்த சந்திப்பிலேயே மார்க்சும் எங்கெல்சும் இணைபிரியா நண்பர்களாகினர். ஒருவரை மற்றொருவர் கலந்தாலோசித்துவிட்டுதான் தங்களது படைப்புகளைக் கொண்டு வருகின்றனர்.  ஜெர்மன் தத்துவஞானம், புனித குடும்பம் உள்ளிட்ட படைப்புகளை இருவரும் இணைந்து படைத்தனர்.

மார்க்சின் எழுத்துக்களின் முதல் விமர்சகராக எங்கெல்ஸ் இருந்தார். அதாவது மார்க்ஸ் எனும் மாமேதையின் எழுத்துக்கள் அனைத்துமே எங்கெல்சின் கரங்களால் செழுமைப்படுத்தப்பட்ட பின்னர்தான் நூலாக வெளிவந்திருக்கிறது. அந்த அளவிற்கு மார்க்சிய சிந்தனையில் மார்க்சுடன் ஒன்றியவராக இருந்தார் எங்கெல்ஸ். ஒருமுறை மார்க்ஸ், பெர்க்லன் ஜீமர் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் எங்கெல்ஸை தனது ”மற்றொரு பிரதி” யாகக் (Alter Ego) குறிப்பிடுகிறார். அந்த அளவிற்கு மார்க்சின் சிந்தனையில் ஒன்றியிருந்தார் எங்கெல்ஸ்.

எங்கெல்ஸ் பல்வேறு தனித்திறன்களை தன்னகத்தே கொண்டவராக இருந்தார். தத்துவத்தில் மட்டுமல்ல, வரலாறு, மொழி, இலக்கிய  விமர்சனம், அரசியல், பொருளாதாரம் என அனைத்துத் துறைகளிலும் வல்லுனராக இருந்தார்.

அறிவியலின் மீது தீராக் காதல் கொண்டவராக இருந்தார் எங்கெல்ஸ். இயற்பியல், இரசாயனவியல், உயிரியல், இயற்கை விஞ்ஞானம், வானவியல், மருத்துவம், புவியியல், மானுடவியல் என அனைத்துத் துறைகளிலும் பேரார்வம் கொண்டவராகவும், அறிவியலுலகின் கண்டுபிடிப்புகளைப் பொருத்திப் பார்த்து தனது தத்துவ அறிவை செழுமைப்படுத்துபவராகவும் இருந்தார்.

அறிவியலின் துணை கொண்டு கிடைக்கும் எதார்த்த உலகின் பருண்மையான, நுண்ணியமான தரவுகளை அடிப்படையாகக் கொண்டு  இயங்கியல் பொருள்முதல்வாதத்தை செழுமைப்படுத்தினார் எங்கெல்ஸ்.

மார்க்சும் எங்கெல்சும் இயங்கியல் பொருள்முதல்வாதத்தை சமூகத்திற்குப் பொருத்தியதும் அறிவியலின் துணை கொண்டுதானே அன்றி, தங்களது மூளையில் தோன்றிய கற்பனைகளைக் கொண்டு அல்ல. மார்க்சும் எங்கெல்சும் மானுடவியலாளர் மார்கன் மற்றும் இயற்கை அறிவியலாளர் டார்வின் உள்ளிட்டவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளில் இருந்துதான் தனது தத்துவத்தை வளர்த்தெடுக்கிறார்கள்.

1849-ம் ஆண்டு மார்க்சும் ஜென்னியும் ஜெர்மனிலிருந்து வெளியேறி இங்கிலாந்திற்குக் குடிபெயர்ந்தனர். அங்கு அவர்களது வாழ்க்கைக்கு உதவி புரிவதற்காகவே, தனது தந்தையின் மான்செஸ்டர் ஆலையில் எழுத்தராக பணிக்கு சேர்கிறார்.

மார்க்சின் சமூக ஆய்வுக்கு உதவி செய்யும் நோக்கிற்காகவே தனது வாழ்வின் 20 ஆண்டுகாலத்தை எழுத்தராகவே கடந்தார். இந்தக் காலகட்டங்களில் தொடர்ச்சியாக மார்க்சின் படைப்புகளுக்கு உதவி புரிந்ததோடு, பல்வேறு கட்டுரைகளையும் எழுதியுள்ளார். களத்தில் தொழிலாளர் அமைப்புகளை ஒருங்கிணைக்கும் பணியையும் மேற்கொள்கிறார் எங்கெல்ஸ்.

இந்தக் காலகட்டத்தில் தான் முதலாளித்துவ மூலதனத்தின் சுரண்டலையும், குரூரத்தையும், கயமைத்தனத்தையும் அம்பலப்படுத்தும் மாபெரும் படைப்பான மூலதனத்தை மார்க்ஸ் எழுதிக் கொண்டிருக்கிறார். பிற்போக்குத் தத்துவங்களைத் தோலுரித்துத் தொங்கவிட்டுக் கொண்டிருந்த மார்க்சின் பார்வையை, அரசியல் பொருளாதாரத்தின் பக்கம் மடைமாற்றிவிட்டவர்  எங்கெல்ஸ். மார்க்ஸ் தனது நூலுக்கான தயாரிப்பின் போது சந்தித்த அனைத்து கடுமையான பிரச்சினைகளையும் எங்கெல்சுடன் விவாதித்தார். மார்க்சின் மனசாட்சியாக, மார்க்சின் எழுத்துக்களுக்கு கூரிய விமர்சகனாகத் திகழ்ந்தார் எங்கெல்ஸ்.

மார்க்சின் ஆய்வுக்காக தனது சொந்த ஆய்வுகளின் மீதான அக்கறைகளை ஒதுக்கி வைத்தார் எங்கெல்ஸ். மார்க்ஸ் இதை நினைத்து பலமுறை வருத்தமடைந்தார்.  1867-ம் ஆண்டில் தனது மூலதனம் நூலின் முதல் தொகுதியின் அச்சுப்படிகளை திருத்திய பின்னர், மார்க்ஸ் எங்கெல்சுக்கு எழுதிய கடித்ததில், “ இந்தத் தொகுதியின் வேலை முடிந்துவிட்டது. உங்கள் உதவியினால் மட்டுமே இது சாத்தியமாயிற்று. உங்களுடைய தியாகம் இல்லையென்றால் மூன்று தொகுதிகளையும் எழுதுவதற்கு அவசியமான ஏராளமான வேலையை என்னால் ஒருபோதும் செய்து முடித்திருக்க இயலாது. நன்றிப் பெருக்குடன் உங்களை நெஞ்சாரத் தழுவுகிறேன்.” என்று எழுதுகிறார்.

சுமார் இருபதாண்டுகள் மான்செஸ்டரில் தனது தந்தையின் ஆலைச் “சிறையில்” பணியாற்றிய பிறகு அங்கிருந்து தம்மை விடுவித்துக் கொண்ட எங்கெல்ஸ், லண்டனுக்குச் சென்று மார்க்ஸ் தங்கியிருந்த இடத்திற்கு அருகிலேயே குடியேறினார்.

இதற்குப் பின்னான காலகட்டத்தில் எங்கெல்ஸ் தமது இயற்கை குறித்த தமது அறிவியல் ஆய்வையும், மானுடவியல் குறித்த ஆய்வையும் தொடர்ந்தார். இயற்கையின் இயக்கவியல் என்ற நூலை எழுதும் பணியில் ஈடுபட்டார். அப்போதும் மார்க்சின் படைப்புகளுக்கு உதவி புரிவது குறையவில்லை. மாறாக அதிகரித்தது.

மார்க்சியத்தைத் திரித்தும், அதனை முழுமையாகப் படிக்காமல் அதன் மீது விமர்சனம் என்ற பெயரில் காழ்ப்புணர்ச்சியை அள்ளி வீசிய சமகாலத்தவர்களுக்கு எங்கெல்ஸ் மார்க்சியத்தின் உச்சிமுகட்டில் நின்று சம்மட்டியடி கொடுத்தார். அவரது  அத்தகையதோர் ஆகச் சிறந்த படைப்புதான் “டூரிங்குக்கு மறுப்பு” எனும் நூல். மார்க்சியத் தத்துவத்தை சகல துறைகளுக்கும் பொருத்தி, அதனை விரிவாக விளக்கினார். மார்க்ஸ் கூறியபடி அவரது “Alter Ego” தான் எங்கெல்ஸ் என்பதை அந்த நூல் நிரூபிக்கிறது.

மார்க்சுக்கு சற்றும் குறையாத அளவிற்கு மார்க்சியத்திற்கு பங்களிப்பு செய்துள்ள எங்கெல்ஸ், மார்க்ஸ் இருக்கும்போதும் சரி , மறைந்த பின்னும் சரி எப்போதும் தன்னடக்கத்துடனேயே இருந்துவந்தார் என்பது அவரது எழுத்துக்களில் வெளிப்பட்டிருக்கும்.

படிக்க :
♦ மார்க்ஸ் – எங்கெல்ஸ் : இணைபிரியா இரட்டையர்கள் !
♦ எங்கெல்ஸ் 200 : நாம் ஏன் எங்கெல்ஸை பயில வேண்டும் | தோழர் லெனின்

எங்கெல்ஸ் மீதும் அவரது மேதைமை மீதும் மார்க்ஸ் பெருமதிப்புக் கொண்டிருந்தார். ஒருமுறை மார்க்ஸ் எங்கெல்சுக்கு எழுதிய கடிதத்தில், “முதலாவதாக எல்லாமே எனக்குத் தாமதமாகத்தான் தெரிகிறது, இரண்டாவதாக, நான் எப்பொழுதும் உங்களுடைய காலடிகளைப் பின்தொடர்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும்.” என்று குறிப்பிட்டிருப்பதாகக் கூறுகிறார் வால்கோவ்.  அந்த அளவிற்கு எங்கெல்சின் அறிவுக்கூர்மையை மதித்திருக்கிறார் மார்க்ஸ்.

”அறிவின் படைப்புச் சக்தியில், மென்மேலும் புதியனவற்றைத் தேடுகின்ற ஆராய்ச்சி சிந்தனையின் தகுதி மற்றும் ஆழத்தில், மேலான இயக்கவியல் ரீதியான நடையழகில், பொதுமைப்படுத்தல்களின் மணிச் சுருக்கச் செறிவில்” எங்கெல்சை மார்க்சுடன் ஒப்பிட முடியாது என்றாலும் வேறு சில விசயங்களில் எங்கெல்ஸ் மார்க்சைக் காட்டிலும் தகுதி மிக்கவராக இருந்தார். புதியனவற்றைத் தன்வயப்படுத்திக் கொண்டு திருத்தியமைப்பது, விஞ்ஞானம் மற்றும் கலாச்சாரத்தைப் பற்றிய மிகப் பல்வேறான துறைகளின் விவரங்களை மிகச் சுதந்திரமான முறையில் ஒருங்கிணைக்கக் கூடிய ஆற்றல்களில் தனிச்சிறப்பானவர் எங்கெல்ஸ்.

மார்க்ஸ் மரணமடையும் முன்னர், மூலதனம் நூலின் ஒரு பகுதியை மட்டுமே வெளியிட்டிருந்தார். மீதமுள்ள பகுதிகள் வெறும் கையெழுத்துப் பிரதிகளாகவே இருந்தன. மார்க்சின் மரணத்திற்குப் பின்னர் அவற்றை நூலாகக் கொண்டுவரும் மாபெரும் பொறுப்பு எங்கெல்ஸின் தோள்களின் மீது இறங்கியது. ‘மூலதனம்’ எனும் மனிதகுலத்தின் விடிவெள்ளியை நூல் வடிவில் வெளிக் கொண்டு வருவதற்காக தனது இறுதிக்காலம் வரை உழைத்தார் எங்கெல்ஸ்.

இதற்காக தனது இயற்கையின் இயக்கவியல் குறித்த ஆய்வைக் கைவிட்டார். தனது நண்பருக்காக அல்ல. மனித குலத்திற்கு மார்க்சியத்தின் மிகப்பெரும் கொடையான ‘மூலதனம்’ நூலை கொண்டு வருதற்காகவே தனது தனிப்பட்ட ஆய்வைக் கைவிட்டார் எங்கெல்ஸ்.

மார்க்ஸ் மரணமடைந்த பிறகு சர்வதேசத் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் எங்கெல்ஸ். மார்சியத்தைத் திரித்து பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை மழுங்கடிக்கத் துடித்த பல்வேறு முதாலாளித்துவ – ’சோசலிச’ காளான்களுக்கு எதிராகத் தொடர்ந்து போர் தொடுத்தார் எங்கெல்ஸ்.

சர்வதேச தொழிலாளிவர்க்க இயக்கத்தில், அவரே முழுப் பொறுப்பையும் வகித்தபோதிலும் அவர் முன்பிருந்த மாதிரியே அடக்கமானவராகவும், ஆர்ப்பாட்டமில்லாதவராக இருந்தார். “என்னுடைய காலஞ்சென்ற சமகாலத்தவர்களுக்கு, எல்லோரைக் காட்டிலும் மார்க்சுக்குக் கிடைக்க வேண்டிய கெளரவம் கடைசியாக எஞ்சியவன் என்ற முறையில் எனக்குக் கிடைக்க வேண்டும் என்று விதி முடிவு செய்திருக்கிறது” என்றார் அடக்கத்துடன்.

மார்க்சும், எங்கெல்சும் சுட்டிக்காட்டிய, சமூகத்தின் மீதான, இயற்கையின் மீதான முதலாளித்துவ சுரண்டல்கள் இன்றும் நீடிக்கின்றன. அவ்விருவரும் படைத்துத் தந்த மார்க்சியம் எனும் ஆய்வுமுறையை சரியாகப் புரிந்து கொண்டு பயன்படுத்தவல்லவர்களால் மட்டுமே இந்தச் சுரண்டலை ஒழிக்க ஒரு புரட்சியை நடத்த முடியும். அத்தகையதோர் பொன்னான கடமையை செய்துமுடிப்போமென தோழர் எங்கெல்ஸின் 200-ம் ஆண்டு நிறைவடையும் தருணத்தில் உறுதியேற்போம்.

வினவு

நவ. 26 பொது வேலைநிறுத்த போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்

வம்பர் 26 அன்று இந்தியா முழுவதும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனர். அதன் அடிப்படையில் பல்வேறு புரட்சிகர தொழிற்சங்கங்களும், அமைப்புகளும் தமிழகத்தில் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டக் காட்சிகள் :

திருநெல்வேலி :

நெல்லையில் இன்று மக்கள் அதிகாரம் சார்பாக நாடு தழுவிய தொழிலாளர் விவசாயிகளின் வேலைநிறுத்த போராட்டம், மறியல் போராட்டத்தை ஆதரித்து பாளை பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் தமிழர் உரிமை மீட்புக் களம் தோழர் லெனின் கென்னடி , திராவிட தமிழர் கட்சி தோழர்கள் தோழர் திருக்குமரன், தோழர் முத்துராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருநெல்வேலி.
கோவை :

வம்பர் 26 : வேளாண் திருத்த சட்டத்தை அனுமதியோம், தொழிலாளர் சட்ட மசோதாவை வீழ்த்த அணி திரள்வோம், கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவோம் என்ற முழக்கங்களின் அடிப்படையில் அகில இந்திய அளவில் நடைபெறும் தொழிலாளர் – விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் சாலை மறியல் நடைபெற்றது. இதில் கோவை மக்கள் அதிகாரம் பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜன் தலைமையில் கலந்து கொண்டனர். போலீசு போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை கைது செய்தது.

தகவல் :
மக்கள் அதிகாரம்
கோவை மண்டலம்
94889 02202

 

மதுரை :

26 நவம்பர் 2020 : நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தை ஆதரித்து மதுரையில் பல பகுதிகளில் நடந்த போராட்டங்களில் மக்கள் அதிகாரம் சார்பாக தோழர்கள் பங்கெடுத்துக் கொண்டார்கள்.

சமயநல்லூர் பகுதியில் சரியாக காலை 10.30 அளவில் தொழிலாளர் உரிமை பறிக்கும் சட்டத்திற்கு எதிராகவும், வேளாண் திருத்த சட்டத்திற்கு எதிராகவும்  “மறியல் போர்” என்ற முழக்கத்தை முன்வைத்து சிபிஎம் தோழர் காளிதாஸ் அவர்கள் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்த மறியல் போராட்டத்தில் மக்கள் அதிகாரம் தோழர்கள் கலந்து கொண்டனர்.

திருமங்கலம் பகுதியில் 10.30 மணி அளவில், சிபிஎம், சிபிஐ, சிஐடியு போன்ற தொழிற்சங்கங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் மக்கள் அதிகாரம் கலந்து கொண்டது.

சமயநல்லூர் பகுதியில் தோழர் ராமலிங்கமும் திருமங்கலம் பகுதியில் தோழர் குருசாமியும் கலந்து கொண்டு மக்கள் விரோத சட்ட திருத்தத்தை கண்டித்து தங்களுடைய கண்டனத்தை பதிவு செய்தனர்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
மதுரை

கோவில்பட்டி :
வம்பர் 26, நாடு தழுவிய தொழிலாளர்கள் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து தொழிற்சங்கங்கள் விவசாய சங்கங்கள் சார்பில் கோவில்பட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மக்கள் அதிகாரம் தோழர்கள் கலந்து கொண்டனர்.

 

தகவல் :
மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்

ஒசூர் :

ஒசூர் பகுதியில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பு.ஜ.தொ.மு (NDLF) தோழர்கள் பங்கேற்றனர். INTUC, CITU, AITUC, LPF ஆகிய தொழிற்சங்கங்களை  சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர். தொழிலாளர் நலச் சட்டத்தில் திருத்தம், புதிய வேளாண் கொள்கைகள் குறித்து கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

இப்போராட்டத்தை ஒட்டி, ஒசூர் சிப்காட் 1&2 பகுதியில் சுவரொட்டி மூலம் விரிவான பிரச்சாரம் செய்யப்பட்டது. பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன. போராட்டம் நடந்தபோது பெய்த மழை காரணமாக மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

 

தகவல் : பு.ஜ.தொ.மு, ஒசூர்

தேவை வரலாற்றுப்பூர்வமான படிப்பினை!

உட்கட்சிப் போராட்டம் || பாகம் – 13

பாகம் – 12

பிற்சேர்க்கை..

கட்சிக்குள் மென்ஷ்விக் சித்தாந்தத்தை ஒழிக்கவும்*

சீன தேச சரித்திரத்திலேயே மகத்தானதும் மிக முற்போக்கானதுமான சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தோன்றி இருபத்திரண்டு வருடங்கள் ஆகின்றன. இவை மகத்தான வருடங்கள்; இந்த இருபத்திரண்டு வருடங்களில் உலகத்திலும், சீனாவிலும் பல மகத்தான மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தோன்றிய காலத்திலிருந்து மூன்று பெரிய புரட்சிகளை – மூன்று புரட்சிகரமான யுத்தங்களை நடத்தியுள்ளது. முதல் பெரும் புரட்சி, வடதிசை படையெடுப்பு யுத்தம், நிகழ்கால ஜப்பானிய எதிர்ப்பு தேசிய புரட்சி யுத்தம் முதலியவை சீன கோமிங்டாங்குடன் சேர்ந்து கூட்டாக நடத்தப்பட்டது. ஆனால் பத்து வருட விவசாயப்புரட்சி, சீன சோவியத் பகுதிகளில் நிகழ்த்திய யுத்தம் ஆகியவை நமது கட்சியின் ஏகதலைமையில் நடத்தப்பட்டது. நமது கட்சியை பொறுத்தவரையில் மூன்று புரட்சிகரமான யுத்தங்களும் இன்றுவரை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. பத்து வருடங்களுக்கு மேலாக, பல கம்யூனிஸ்டுகள் ஆயுதங்களை கீழே வைக்கவேயில்லை. இந்த விஷயம் மட்டுமே, ஆயுதந் தாங்கிய போராட்டம்தான் பிரதான போராட்ட வடிவம்; சீனப் புரட்சியின் பிரதான அமைப்பு வடிவம் என்பதை இந்த ஒரு விஷயமே எடுத்துக்காட்டுகிறது. சீனப்புரட்சியின் தொடர்ச்சியும் வளர்ச்சியும் ஆயுதப் போரட்டத்திலிருந்து பிரிக்க முடியாதவை.

இந்த இருபத்திரண்டு வருடங்களில் ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து வரும், தேசம்பூராவும் பரந்துள்ள புரட்சிகரமான மூன்று யுத்தங்களில் ஒவ்வொரு அம்சத்திலும் நமது கட்சி கடுமையான சோதனைகளுக்கு உள்ளாகியுள்ளது. அது பல வெற்றிகளை அடைந்துள்ளது; பல தோல்விகளும் பெற்றுள்ளது. இதுவரை அது ரொம்பவும் நீண்ட தொல்லையான பாதையில் போயுள்ளது. ஆனாலும் சீன மக்கள் குடியரசு பிரதேசத்தில் வெல்லமுடியாத சக்தியாக அதனால் நிற்க முடிந்திருக்கிறது. சீன அரசியல் வாழ்விலும், சரித்திரப் பூர்வமான சம்பவங்களிலும் அது ஒரு முக்கியமானதும், தீர்மானகரமானதுமான அம்சமாக ஆகியுள்ளது.

நமது கட்சி பல்வேறு தொல்லை மிக்க நீண்ட நெடும்பாதைகளில் பிரயாணம் செய்துள்ள காரணத்தினாலும், பல்வேறு துறைகளில் கடும் சோதனைகளில் பரிசோதிக்கப்பட்டுள்ளதாலும், குறிப்பாக பலம் பெறும் அளவிற்கு அது புடம் போடப்பட்டிருக்கிறது. புரட்சிகரமான போராட்டங்களில் எல்லா அம்சங்களிலும் குறிப்பாக செழுமைமிக்க அனுபவம் பெற்றுள்ளது. இந்த இருபத்திரண்டு வருடங்களில் உலகத்திலுள்ள மற்ற எந்த கம்யூனிஸ்டு கட்சியைக் காட்டிலும் நமது கட்சி பல பிரமாதமான மாறுதல்களைக் கண்டும், பல்வேறு சிக்கலான வடிவங்களில் (அது ஆயுதப் போராட்டமானாலும் சரி, பொது மக்கள் போராட்டமானாலும் சரி, உள்நாட்டு யுத்தம் அல்லது சர்வதேச யுத்தம், சட்டபூர்வமான போராட்டம், அல்லது சட்டவிரோதமான போராட்டம், பொருளாதார போராட்டம் அல்லது அரசியல் போராட்டம், உட்கட்சிப் போராட்டம் அல்லது வெளிக்கட்சிப் போராட்டம்) புரட்சிகரமான போராட்டத்தில் செழுமைமிக்க அனுபவமும் பெற்றுள்ளது.

படிக்க :
♦ பகுத்தறிவும் ஜனநாயகமும் நாணயத்தின் இருபக்கங்கள் || லியூ ஷோசி
♦ புரட்சிக்குப் போதுமானதாக கட்சி நிறுவனம் இருக்க வேண்டும் ! | லெனின்

குறிப்பாக, இருபத்திரண்டு வருட நெடிய மிகக்கடுமையான சிக்கலான, புரட்சி போராட்டத்தில் நமது கட்சியும், நமது நாட்டின் தொழிலாளி வர்க்கமும், புரட்சிகரமான மக்களும் தோழர் மாசேதுங் அவர்களை தங்கள் சொந்த தலைவராக பெற்றுள்ளது குறிப்பிடத்தக்க விஷயம்.

நமது தோழர் மாசேதுங், இந்த இருபத்திரண்டு வருட காலத்திய பல தொல்லைமிக்க, சிக்கல் நிறைந்த புரட்சிப் போராட்டங்களில் நீண்டகாலமாக புடம் போடப்பட்டவரும், மார்க்சிய – லெனினிய போர்த்தந்திரம், செயல் தந்திரத்தை பூரணமாக கற்றறிந்தவரும், சீனத் தொழிலாளி வர்க்கம், சீன மக்கள் விடுதலை இலட்சியத்திற்கு அளவுகடந்த விசுவாசம் கொண்டவருமான உறுதிமிக்க மாபெரும் புரட்சிக்காரர்.

புரட்சிகரமான போராட்டங்களில் எல்லா அம்சங்களிலும் நமது கட்சிக்கு செழுமைமிக்க அனுபவம் கிடைத்துள்ளது; ஆனால் அந்த அனுபவம் இன்றுவரை முறையாகத் தொகுத்து வைக்கப்படவில்லை. மார்க்சிய – லெனினிய பொதுக் கோட்பாடுகளின் அடிப்படையில் நமது கட்சியின் போராட்ட அனுபவத்தின் சகல அம்சங்களையும் போதிய அளவுக்கு தொகுக்க வேண்டிய பணி நமது கட்சி முழுமையும் சேர்ந்த முக்கியமான பணிகளில் ஒன்றாக இன்னும் இருந்து வருகிறது.

ஏனெனில், கட்சி முழுமையையும் ஒன்றுபடுத்துவது, போதிப்பது, முன்கொண்டு செல்வது முதலியவற்றிற்கும், சீனப் புரட்சியில் வெற்றி பெறுவதற்கும் அத்தகைய அனுபவத்தை மார்க்சிய-லெனினியத்தின் அடிப்படையில் தொகுத்துக் கூறுவதும் மிக முக்கியமான காரியமாகும்.

நமது கட்சி தோழர்கள் நமது கட்சியின் சரித்திரப் பூர்வமான அனுபவத்தை உண்மையாகப் புரிந்து கொண்டால் அவர்கள் அளவு கடந்த நம்பிக்கையும், தீரமும் பெறுவார்கள்; அவர்களுடைய சொந்த வேலையையும், கட்சி முழுமையின் வேலையையும் வன்மையாக முன்கொண்டு செல்வார்கள். கடந்த காலத்தில் செய்யப்பட்ட பல தவறுகளை அவர்களால் தவிர்க்க முடியும். அவர்கள் வேலை, புரட்சி முதலியவற்றின் கால வரம்பை பல மடங்கு குறைக்க முடியும்.

லியூ ஷோசி

சீனப் புரட்சியின் அனுபவத்தைக்கொண்டு சீனப் புரட்சிக்காரர்களுக்கு போதனை கொடுக்க வேண்டும்; சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியின் அனுபவத்தைக் கொண்டு சீனக் கம்யூனிஸ்டுகளுக்கு போதனை அளிக்க வேண்டும். இந்த வழியில்தான் மேலும் நேரடியான நடைமுறைப் பலன் பெற முடியும். சீனப் புரட்சிப் போராட்டங்களின் செழுமைமிக்க அனுபவங்களை ஒதுக்கிவிட்டோமானால், இந்த இருபத்திரண்டு வருடகால மாபெரும் சரித்திரப் பூர்வமான சம்பவங்களில் நமது கட்சி நிகழ்த்திய போராட்டங்களின் அனுபவத்தை நாம் இகழ்ந்தால், இத்தகைய அனுபவங்களை கவனமாக ஆராய்ந்து, அவற்றிலிருந்து கற்றறிய வில்லையென்றால் நமக்கு வெகு தூரத்தில் நிகழ்ந்துள்ள அன்னிய புரட்சிகளை கற்றறிவதிலேயே கவனம் செலுத்துவதோடு நின்றுவிட்டால், அது தலைகீழ் பாடமாகும்; மேலும் கடுமையான பாதையில் பிரயாணம் செய்யவேண்டி வரும்; மேலும் படுதோல்விகள் பெற வேண்டி வரும்.

இந்த இருபத்திரண்டு வருடங்களில் நமது கட்சியின் போராட்ட அனுபவம் எளிமை மிக்கதாகவும், பல்வேறு வகைப்பட்டதாகவும் இருந்துள்ளது. அதை விபரமாக இப்பொழுது என்னால் விளக்க முடியாது. இந்த அனுபவங்களில் எல்லாம் எது மிக முக்கியமானது? உண்மையான மார்க்சிஸ்டு உண்மையான போல்ஷ்விக் என்றால் என்ன? என்ற விஷயத்தைப் பற்றிய தேயாகும். மார்க்சியம் ஒன்றால்தான் சீனாவைக் காப்பாற்ற முடியும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். சீனாவில் மார்க்சிஸ்டுகள் என்று தங்களைச் சொல்லி கொள்பவர்கள் பல பேர்கள் இருக்கின்றனர். ஆனால் உண்மையான மார்க்சியம் என்பது என்ன? போலி மார்க்சியம் என்ன? போலி மார்க்சிஸ்டு என்றால் என்ன? புரட்சிகரமான சீன பொதுமக்கள் மத்தியிலும், சீன கம்யூனிஸ்டு கட்சிக்குள்ளும் பல வருடங்களாக பூர்த்தியாக தீர்க்கப்படாத பிரச்சினையாகும்.

உண்மையான மார்க்சியத்திற்கும் போலி மார்க்சியத்திற்குமிடையில், உண்மையான மார்க்சிஸ்டுக்கும் போலி மார்க்சிஸ்டுக்கும் இடையில் வேறுபாடு இருக்கிறது. இந்த வேறுபாடு தன் மனப்பார்வையை அடிப்படையாகக் கொண்ட அளவு கோல் கொண்டோ அல்லது பல்வேறு நபர்கள் சொல்லிக் கொள்வதைக் கொண்டோ நிர்ணயிக்கப்படுவதில்லை! யதார்த்தமான அளவுகோல் கொண்டுதான் நிர்ணயிக்கப்படுகிறது. நமது கட்சி அங்கத்தினர்கள் உண்மையான மார்க்சிஸ்டுகளை, போலி மார்க்சிஸ்டுகளிடமிருந்து பாகுபாடு படுத்துவதற்கு யதார்த்த அளவுகோலை புரிந்து கொள்ளவில்லையென்றால், புரட்சியில் தெரியாமல் குருட்டுத்தனமாக போலி மார்க்சிஸ்டுகளைப் பின்பற்றிச் சென்றால், அதைக் காட்டிலும் அபாயகரமானது வேறு ஒன்றுமிருக்க முடியாது. நமது கட்சி கற்றுக்கொண்ட வேதனை நிறைந்த பல படிப்பினைகளுள் மிகவும் வேதனை நிறைந்த படிப்பினை இதுதான்.

கடந்த காலத்தில் நமது கட்சி தவிர்க்ககூடிய பல பின்வாங்குதலும் தோல்வியும் பெற்றிருக்கிறது; பல அனாவசியமான பக்க வழிகளில் பிரயாணம் செய்திருக்கிறது. இதற்கு மிக முக்கியமான காரணம், கட்சிக்குள் போலி மார்க்சிஸ்டுகள் இருந்தார்கள். பல கட்சி அங்கத்தினர்கள் தெரியாமல் கண்மூடித்தனமாக அவர்களைப் பின்பற்றி வந்தார்கள்; அதன் விளைவாக அத்தகையோர் சில அமைப்புகளிலும் இயக்கங்களிலும் தலைமை அமைப்புகளில் வீற்றிருக்க நேர்ந்தது; ஏன் சில சமயங்களில் கட்சி பூராவிலும் கூட அவ்வாறான நிலைமை ஏற்பட்டது. இவ்வழியில் புரட்சி இயக்கம் வேதனைமிக்க கஷ்டமான பாதையில் வழி நடத்திச் செல்லப்பட்டது. நமது கட்சி அங்கத்தினர்கள் எல்லோரையும் இந்த கடுமையான அனுபவம் பற்றி விசேஷமாக எச்சரிக்க வேண்டும்.

படிக்க :
♦ பி.எஸ்.என்.எல் சூறையாடப்பட்ட வரலாறு | சி.கே. மதிவாணன்
♦ முருக பக்தர்களே ! வேல் யாத்திரை அழைக்கிறது! வீதியிலிறங்கி கேள்வி எழுப்புவோம் !!

சீன கம்யூனிஸ்டுகள், கடும் போராட்டம், வீரமிக்க தியாகம் பிரச்சார அமைப்பு திறமை முதலியவற்றில், மற்ற எந்த நாட்டு கம்யூனிஸ்டுக்கும் இளைத்தவர்கள் அல்ல; கடந்த காலத்தில், பலவிதமான வேலைகளை  நாம் திறமையாக நிறைவேற்றியிருக்கிறோம். இலட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் மக்களை அமைப்பு ரீதியாக ஒன்றுபடுத்துவதில், 25000லீ, (8000 மைல்) நீண்ட பிரயாணத்தை மேற்கொண்டதில் எதிரியின் பின்னணியில் ஆறு ஏழு வருடங்களாக எதிர்ப்பு யுத்தத்தை உறுதியாக நீடிப்பதற்கு ரொம்ப கஷ்டமான நிலைமையில், உதவி எதுவுமின்றி தளங்கள் அமைப்பதில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். சீனக் கம்யூனிஸ்டுகளின், கடுமையாக உழைக்கும், புரட்சிகரமான உணர்வு ரொம்பவும் புகழ்ச்சிக்குரியது.

ஆனால் நீண்டகாலமாக, விஞ்ஞான ரீதியாக மார்க்சியம் லெனினியத்தில் நமது சித்தாந்த பயிற்சி மிகக்குறைவாக இருந்து வந்துள்ளது. நமது கடந்தகால சரித்திரத்தில் ரொம்பவும் நாம் கஷ்டப்பட்டது புரட்சிகரமான இயக்கத்தின் தலைமையில் எழுந்த தவறுகளினால்தான். அது ஓரளவுக்கு, சில சமயங்களில் விசேஷமாக தவிர்க்க கூடிய சேதத்தை இயக்கத்திற்கு விளைவித்தது. இந்த சரித்திரப் பூர்வமான படிப்பினையை நாம் நினைவில் வைக்க வேண்டும்; எதிர்காலத்தில் இந்த பிரச்சினையை அறவே தீர்த்து விடவேண்டும்.

புரட்சிகரமான இயக்கத்தின் பல்வேறு அம்சங்களின் வழிகாட்டுதலில், கோட்பாட்டில் விசேஷமான தவறுகள் செய்யாமலிருப்பதற்கு உத்திரவாதம் செய்ய முடியுமானால், அது சீனப் புரட்சிக்கு வெற்றியை உத்திரவாதம் செய்யும்; ஏனெனில் நமக்கு நல்ல புரட்சி உணர்வு இருக்கிறது; கடுமையாக உழைக்க உறுதியிருக்கிறது; சீனப் புரட்சியின் யதார்த்த நிலையும் வெகு சாதகமாயிருக்கிறது. புரட்சி நிச்சயமாக வெற்றியை நோக்கி படிப்படியாக முன்னேறுவதற்கு இவற்றுடன் சேர்ந்து சரியான மார்க்சிய-லெனினியத் தலைமை தேவை.

புரட்சிகரமான இயக்கத்தின் பல்வேறு அம்சங்களில் வழிகாட்டுவதில் கோட்பாட்டில் நமது கட்சி விசேஷமான பிழைகள் செய்யாமலிருக்க உத்தரவாதம் செய்வது எங்ஙனம்? இதற்கு தேவையானவையாவன:- நமது ஊழியர்கள்

எல்லோருக்கும் மேலாக நமது கட்சி அங்கத்தினர்கள் உண்மையான மார்க்சிய – லெனினியம், மார்க்சிஸ்டு லெனினிஸ்டுக்கும், போலி மார்க்சிஸ்டு லெனினிஸ்டுக்கும் உள்ள வித்தியாசங்களை பாகுபாடு செய்வதற்குத் தெரிய வேண்டும்; புரட்சி அணியிலும், கட்சியிலும் பல்வேறு விதமான போலிக் கம்யூனிஸ்ட் கருத்துக்களும், குழுக்களும் நசுக்கப்பட வேண்டும். இந்த இருபத்திரண்டு வருட காலத்தில் கட்சி பெற்றுள்ள அபிரிமிதமான சரித்திரப்பூர்வமான அனுபவம் தொகுக்கப் படவேண்டும்; நமது உஷார் உணர்வை அதிகப்படுத்துவதற்கு நமது ஆராய்ச்சி நன்கு அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். தோழர் மாசேதுங் வழிகாட்டுதல் நமது வேலையின் ஒவ்வொரு இணைப்பிலும், பகுதியிலும் ஊடுருவ வேண்டும்.

(தொடரும்)

* 1943-ம் வருடம் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 22வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் பொழுது லியூஷோசி எழுதிய கட்டுரை..

நூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா | காமராஜ்

தெளிந்த நீரோடை போல் எளிமையான உரைநடையில் தோழர் சங்கையா இந்த அரிய படைப்பை உருவாக்கியுள்ளார்.

இந்த நூலின் முதல் கட்டுரையான ‘மதமெனும் மந்திரக்கோல்’, மதங்களின் தோற்றுவாய் குறித்துத் தெளிவாக விளங்குகிறது. இந்து என்பது பூகோள அடையாளமாகவும், பின்னர் அதை மதத்தை குறிக்கும் சொல்லாக காலம் பதிவு செய்துவிட்டதையும் வரலாற்றுப் பின்னணியில் இந்த முதல் கட்டுரை விவரிக்கிறது.

இந்தியாவை மத ரீதியாகவும், சாதி ரீதியாகவும் பிளவுபடுத்தி கலவரங்களின் பூமியாக மாற்றி, காலத்துக்கேற்ற கோலமாக இந்து அரிதாரத்தை பூசிக் கொண்டனர் பார்ப்பனர்கள்.

படிக்க :
♦ நூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்
♦ நூல் அறிமுகம் : கோவில்கள், மசூதிகள் அழிப்பு உண்மையும் புரட்டும் !

ஹிந்து தேசியமே உண்மையான தேசியம். இந்துஸ்தானம், இந்து ராஷ்டிரம் என்ற கோட்பாட்டை சமூக அரசியல் தளங்களில் முன்வைக்கத் தொடங்கினர். அதன்மூலம் இஸ்ரேல், ஈரான், சவுதி அரேபியா போன்ற மதம் சார்ந்த கட்டளைகளால் ஆளப்படும் அரசை நிறுவுவதற்கு உடலளவிலும் அறிவுத் தளத்திலும் சாத்தியமுள்ள அவசியமான அனைத்து வழிகளிலும் தங்களைத் தயாரித்துக் கொள்வது என்ற இலக்கோடு ஆர்எஸ்எஸ் அமைப்பை தோற்றுவித்தனர்.

இந்துத்துவ பாசிச கொடுங்கோல் ஆட்சியை இந்திய மண்ணில் நிறுவிட தொலைநோக்கோடு பார்ப்பனிய கும்பல் ஆர்எஸ்எஸ் அமைப்பை உருவாக்கிய பின்னணியை இந்த நூல் தெளிவுபட கூறுகிறது.

பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள்,  பண்பாடுகள்,  மதங்கள் என்கின்ற பன்முகத்தன்மை கொண்ட இந்தியத் துணைக் கண்டத்தை இந்து – இந்தி -இந்தியா என்ற குடுவைக்குள் அடைத்து வைக்கவும், மனிதநேயமற்ற கோட்பாடான மனுதர்மத்தை அரசியல் சட்டமாக உருவாக்கவும் தற்போது கைப்பற்றியுள்ள அரசியல் அதிகாரத்தை தீவிரமாக பயன்படுத்துகிறது. இந்திய மக்களின் ஒற்றுமை வாழ்வு சிதறுண்டு போகச் செய்வதற்கான வெடிகுண்டுதான் இந்து ராஷ்டிரம் என்பதை இந்நூல் ஆசிரியர் வரலாற்றுப் பின்புலத்தோடு எடுத்துரைக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ், விசுவ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் போன்ற நூற்றுக்கணக்கான மதவெறி அமைப்புகளை உருவாக்கி களத்தில் பணியாற்றி வருகின்றனர். இத்தகைய வேலைத்திட்டத்தின் அடிப்படையில் மதவெறி கும்பல் மக்களை  மதவெறியின் அடிப்படையில் பிளவுபடுத்த அனைத்து சித்து வேலைகளைச் செய்து வருவதை பல்வேறு வரலாற்று தரவுகளோடு இந்நூல் விவரிக்கிறது.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு சலாம் போட்டு சோரம் போன இந்த ஆர்.எஸ்.எஸ். ‘மாவீரர்’களின் முக விலாசத்தையும் இந்நூலில் தோலுரித்துக் காட்டத் தவறவில்லை. இந்திராகாந்தி ஆட்சி காலத்தில் கொண்டுவந்த  நெருக்கடி நிலையை ஆதரித்து காவடி தூக்கியதை எடுத்துரைத்து  ‘விலை போன வீரம்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை ஆசிரியர் சங்கையா சுவைபட எழுதியுள்ளார்

“காந்தி-கோட்சே-ஆர்எஸ்எஸ்” என்ற கட்டுரையில், குற்றச்செயல்களில், வன்முறைகளில், கொலைச் சம்பவங்களில் ஆர் எஸ் எஸ் அமைப்பினர் மாட்டிக் கொள்ளும் பொழுது ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அந்தர்பல்டி அடிப்பதும், சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை நீக்கி விட்டதாக கூறி தங்களை புனிதர்களாக காட்டிக் கொள்வதும் தான் ஆர்எஸ்எஸ் கும்பலுக்கு வாடிக்கை என்பதை பல்வேறு வரலாற்று நிகழ்வுகளின் ஊடாக இந்நூல் நிறுவுகிறது.

சிந்திப்பதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை. ஆனால் ஆர்எஸ்எஸ் -பாஜக சித்தாந்தமே சிந்திக்காதே, கேள்வி கேட்காதே என்பதுதான். இந்திய வரலாற்றில் இதற்கு முன் எப்போதும் இருந்திராத வகையில் ஜனநாயகம், சமத்துவம், சமூக நீதி, ஆகியவற்றின் மீது கொடும் தாக்குதலை மதவெறி பாசிச கும்பல் நடத்திவருகிறது.

பாசிசத்துக்கு எதிராக ஐக்கிய முன்னணி அமைத்து மக்களைத் திரட்ட வேண்டிய காலத்தின் தேவையை, அவசரத்தை இந்நூலின் மூலம் தோழர் சங்கரய்யா வலியுறுத்துகிறார்.

எளிமையான சரளமான மொழிநடையை கைவரப்பெற்ற தோழர் சங்கையா அவர்களின் இந்தப் படைப்பு வரலாற்று நாவலை படிப்பது போல் ஆர்வத்தை தூண்டுகிறது. இந்துத்துவ பாசிச எதிர்ப்பு போராட்டக் களத்தில் களமாட வலிமையான கருத்து ஆயுதமாக நூல் திகழும் என்பதில் ஐயமில்லை.

நூல் : காவி என்பது நிறம் அல்ல
ஆசிரியர் : எம். சங்கையா
பதிப்பகம் : சித்தன் புக்ஸ் வெளியீடு
தொடர்புக்கு : 94451 23164
விலை : ரூ. 150
இணையத்தில் வாங்க : Common Folks

நூல் அறிமுகம் : எஸ் காமராஜ்,
மாநிலத் துணைச் செயலாளர் – அகில இந்திய பிஎஸ்என்எல் அதிகாரிகள் சங்கம், ஆலோசகர் – தேசிய தொலைதொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கம்

 

நவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள் அறைகூவல் !

தொழிலாளி வர்க்கம் தனது உயிரைக் கொடுத்துப் பெற்ற உரிமைகள் அனைத்தையும் தொழிற்துறை சட்டத் திருத்தங்களின் மூலம் பறித்து தொழிலாளர்களை கூலி அடிமைகளாக மாற்றும் வகையில் திட்டமிட்டு வருகிறது மோடி அரசு.

இதுவரையில் பெயரளவிலாவது இருக்கும் தொழிற்சங்க உரிமைகளை இனி சட்டப்பூர்வமாகவே இல்லாததாக்கி கார்ப்பரேட்டுகளின் உழைப்புச் சுரண்டலை சட்டப்பூர்வமாக்கியிருக்கிறது. இக்கொரோனா சூழலைப் பயன்படுத்திக் கொண்டு உழைக்கும் வர்க்கத்திற்கு எதிரான பல்வேறு சட்டங்களை இயற்றி அமல்படுத்திவருகிறது மோடி அரசு.

இதற்கு எதிராக நாடு தழுவிய அளவில் நவம்பர் 26 அன்று நடைபெறவிருக்கும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் புஜதொமு பங்கேற்கிறது. நம் வாழ்வாதாரத்தைக் காக்க உழைக்கும் மக்கள் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது.

பாருங்கள் ! பகிருங்கள் !

பாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு

திர்வரும் நவம்பர் 26 அன்று நடைபெறவிருக்கும் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்குமாறு தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் தியாகு அறைகூவல் விடுத்துள்ளார்.

தோழர் தியாகு தனது உரையில் (காணொலி கீழே), “இந்த நாடுதழுவிய வேலை நிறுத்தப்போராட்டம் வரலாற்று முக்கியத்துவமானது. தொழில் உறவுகள் சட்டம், சமூக பாதுகாப்புச் சட்டம் நல்வாழ்வு மற்றும் வேலை நிலைமைகள் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களை இந்திய அரசு முன்மொழிந்திருக்கிறது.

இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால், ஏற்கெனவே பெயரளவிலாவது இருக்கும் தொழிலாளர் நலச்சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை தொழிற்சங்க உரிமைகள் சட்டரீதியாகவே பறிக்கப்படும். கார்ப்பரேட்டுகளின் நலனுக்காகவே இந்த சட்ட திருத்தத்தைக் கொண்டு வருகிறது பாஜக அரசு.

படிக்க:
♦ இழந்த உரிமைகள் மீட்க வீதியில் இறங்குவோம் || தோழர் விஜயகுமார் உரை !
♦ பொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்

உழவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து அவர்களை விவசாயத்தில் இருந்தே விரட்டி , விவசாயத்தை கார்ப்பரேட்டுகள் கையில் ஒப்படைக்க்கும் சட்டங்கள் ஏற்கெனவே வந்துவிட்டன. சுற்றுச்சூழலை நாசமாக்கும் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. வேளாண் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுவிட்டது. மாணவர்களின் கல்வி உரிமைகள் பறிக்கப்படுகின்றன.

இந்த கொரோனா சூழலை பயன்படுத்திக்கொண்டு இத்தகைய மக்கள் விரோத சட்டங்களை அமல்படுத்துகிறது மத்திய மோடி அரசு. இது மக்களை ஓட்டாண்டிகளாக மாற்றும் முயற்சி, மக்களை மேலும் வதைக்கும் முயற்சி. இந்த மக்கள் விரோத சட்டங்களை எதிர்த்து போராடினால், அப்போராட்டங்களை ஊபா போன்ற ஆள்தூக்கிச் சட்டங்களைக் கொண்டு முடக்குகிறது மத்திய அரசு. போராட்டங்களை முன்னெடுக்கும் சமூகச் செயற்பாட்டாளர்களை சிறையில் தள்ளி மருத்துவ வசதி கூட ஏற்படுத்தித் தராமல் வதைக்கிறது மோடி அரசு.

இந்த பாசிச ஆட்சிக்கு எதிராக இந்திய தொழிலாளி வர்க்கம் முன்னெடுத்திருக்கும் நாடுதழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் உழைக்கும் மக்கள் அனைவரும் பங்கேற்று வெற்றிபெறச் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்”

 

பாருங்கள் ! பகிருங்கள் !

பொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்

வம்பர் 26 பொது வேலைநிறுத்தத்தில் நமது உரிமைகளைப் பாதுகாக்க அனைவரும் பங்கெடுக்க வேண்டும் என்று அகில இந்திய பாதுகாப்புத் துறை ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் தோழர் சி.ஸ்ரீகுமார் அறைகூவல் விடுத்திருக்கிறார். தனது உரையில் அவர் கூறியுள்ளதாவது :

“இந்திய மக்களுக்கு குறைந்த விலையில் நிறைவான சேவைகளை வழங்குவதில் பொதுத்துறை நிறுவனங்கள்தான் முன்னணியில் நிற்கின்றன. அந்த வகையில் இந்தியாவின் இராணுவத் தளவாடங்கள் மற்றும் உபரி பொருட்கள் தயாரிக்கும் பாதுகாப்புத் துறை தொழிற்சாலைகள்  மொத்தம் 41 உள்ளன. தமிழகத்தில் மட்டும் இத்தொழிற்சாலைகள் மொத்தம் 6 உள்ளன.

கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் ஆத்மநிர்பார் எனும் பெயரில், பாதுகாப்புத் துறையை தனியார்மயமாக்கும் சட்டத்தை அறிவித்தார் நிர்மலா சீத்தாராமன். அதனை எதிர்த்து பாதுகாப்புத்துறை ஊழியர்கள் சங்கங்கள் பல போராட்டங்களை நடத்தின.

பார்க்க :
♦ நவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம் || AIBEA
♦ இழந்த உரிமைகள் மீட்க வீதியில் இறங்குவோம் || தோழர் விஜயகுமார் உரை !

பாதுகாப்புத்துறை மட்டுமல்ல, மிகப்பெரிய அரசு நிறுவனமான ரயில்வேதுறையை தனியார்மயமாக்கத் திட்டமிட்டிருகிறது மோடி அரசு. ரயில்வேதுறையின் கீழ் 8 தொழிற்சாலைகள் உள்ளன. அதையும் தனியார்மயமாக்க திட்டமிட்டிருக்கிறது மோடி அரசு. இந்திய தொலைத்தொடர்பு துறையின் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை அழிக்கும் தனியார்மய சட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது. தற்போது 90ஆயிரம் ஊழியர்கள் விருப்ப ஓய்வு கொடுத்து அனுப்பிவிட்டனர்.

பொதுத்துறை வங்கிகள் கார்ப்பரேட்டுக்களால் கொள்ளையடிக்கப்படுகிறது. மிகப்பெரும் நிதி நிறுவனமாக எல்.ஐ.சி-யில் நிதிகளை தனியார்க்கு தாரைவார்க்கப் பார்கிறது மோடி அரசு.

தொழிலாளர்கள் போராடிப்பெற்ற 40 தொழிலாளர் நல சட்டங்களை திருத்தம் என்ற பெயரில் முற்றிலுமாக மாற்றிவிட்டார்கள். அந்த சட்டங்கள் நடைமுறைபடுத்தப்படும் போது நிரந்தர வேலை, ஓய்வூதியம், 8மணி நேரவேலை, சங்கம் வைக்கும் உரிமை ஆகிய அனைத்து உரிமைகளும் பறிக்கப்படும்.

எனவே விவசாயிகள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், என அனைவரும் நாட்டின் பொருளாதாரம், மக்களின் வாழ்வாதாரத்தை காக்க ஒன்றிணைந்து போராடுவது மிகவும் அவசியம்! எனவே நவம்பர் 26, 2020 அன்று நாடு தழுவிய அளவில் நடைபெறவிருக்கும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் அனைத்து உழைக்கும் மக்களும் பங்கேற்க வேண்டும்.”

பாருங்கள் ! பகிருங்கள் !

நவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம் || AIBEA

வம்பர் 26, 2020 அன்று நாடு தழுவிய அளவில் நடைபெறவிருக்கும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் சி.எச். வெங்கடாச்சலம் அறைகூவல் விடுத்திருக்கிறார். அவர் தனது உரையில் :

இந்தியாவில் கடந்த 50 வருடங்களாக தொழிலாளர்கள் போராடிப் பெற்ற சுமார் 40 தொழிலாளர் சட்டங்களை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது மோடி அரசு. அதற்கேற்ற வகையில் தொழிற்சங்கச் சட்டங்களைத் திருத்திவருகிறது மோடி அரசு.

தொழிற்சங்க சட்டம், தொழில் தகராறு சட்டம் உள்ளிட்ட அனைத்து சட்டங்களிலும் மாற்றங்களைச் செய்துவருகிறது அரசு. தொழிலாளர்களுக்கு பணிப் பாதுகாப்பு இல்லை, பணி நிரந்தரம் இல்லை, நிலையான ஊதியம் இல்லை, மகப்பேறு விடுப்புகள் கிடையாது, புதிய பென்சன் திட்டம் என்ற பெயரில் பழைய பென்சன் திட்டமே ஒழித்துக் கட்டப்படுகிறது. முதலாளிகளுக்கு ஏற்றவகையில் வேலை நேரம் அதிகரிக்கப்படுகிறது.

படிக்க :
♦ பி.எஸ்.என்.எல் சூறையாடப்பட்ட வரலாறு | சி.கே. மதிவாணன்
♦ இழந்த உரிமைகள் மீட்க வீதியில் இறங்குவோம் || தோழர் விஜயகுமார் உரை !

விவசாயத்தை அழிப்பதற்கான சட்ட திருத்தங்கள் கொண்டு வரப்படுகிறது. பொதுத்துறை வங்கிகளை பெரும் கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிக்கும் வகையில் திறந்துவிட்டு, திவாலாக்கி அவற்றை தனியாரின் கைகளில் ஒப்படைக்கும் வேலையில் இறங்கியிருக்கிறது மத்திய அரசு !

எதிர்வரும் நவம்பர் 26, 2020 அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தில் தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், உழைக்கும் மக்கள் என அனைவரும் பங்கேற்று இழந்த நமது உரிமைகளை மீட்டெடுக்க ஒன்றிணைவோம் ! போராடுவோம் !

கார்ப்பரேட்டுகளுக்காக சூறையாடப்படும் பொதுத்துறை வங்கிகள் :

தொழிலாளர் உரிமைகளை மீட்க ஒன்றிணைவோம் :

பாருங்கள் ! பகிருங்கள் !

பகுத்தறிவும் ஜனநாயகமும் நாணயத்தின் இருபக்கங்கள் || லியூ ஷோசி

உட்கட்சிப் போராட்டம் || பாகம் – 12

பாகம் – 11

தோழர்களுக்கிடையில் கோட்பாடற்ற தகராறுகளைத் தீர்க்க முயலும்பொழுது, நாம் வெறும் தகராறை பற்றிக் கொண்டு எப்பொழுதுமே ஆரம்பிக்கக் கூடாது; அவர்கள் வேலையை பரிசீலனை செய்து, தொகுத்து, உருப்படியான வழியில் கோட்பாட்டின் அடிப்படையில் எதிர்காலப் பாதை, வேலைக்கான திட்டம், பின்பற்ற வேண்டிய அரசியல் கொள்கை, திட்டங்கள் முதலியனவற்றை வகுத்து வைக்க வேண்டும். அவர்கள் செய்த வேலையைப் பற்றி தொகுத்துக் கூறும் பொழுதும், எதிர்காலப் பாதை, வேலைக்கான திட்டம், பின்பற்ற வேண்டிய கொள்கை, திட்டங்கள் முதலியனவற்றை வகுத்து வைக்கும் பொழுது, சில தோழர்களின் தவறான கருத்துக்களை நாம் விமர்சனம் செய்யலாம்; அதன் பிறகு இன்னும் அவர்கள் மாறுபட்ட கருத்துக்கள் கொண்டிருக்கிறார்களா என்று அவர்களைக் கேட்க வேண்டும். அவர்களுக்கு அபிப்பிராய பேதமிருக்குமானால் பின் அது கோட்பாடு சமபந்தமான தகராறு ஆகும்.

இவ்வாறு கோட்பாடற்ற தகராறு, கோட்பாடுள்ள தகராறின் மட்டத்திற்கு உயர்த்தப்படும். அவர்களுக்கு கோட்பாடு சம்பந்தமாக தகராறு இல்லையென்றால் பின் அவர்கள் செய்த வேலை பற்றி தொகுத்துக் கூறியது, இந்த எதிர்காலப் பாதை, வேலைக்கான திட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒன்று திரண்டு, எதிர்காலப் பாதையையும் திட்டங்களையும் நிறைவேற்றுவதற்கு ஒன்று கூடி போராடும்படியும், எல்லாவிதமான கோட்பாடற்ற தகராறுகளையும் கைவிடும்படியும் கேட்டுக் கொள்ளப்படுவார்கள். கடந்தகால வேலையை தொகுப்பது, இன்றைய லட்சியங்களை வரையறுப்பது, நிகழ்கால வேலையை முன்னேற்றிக் கொண்டு செல்வது ஆகியவை மூலம்தான் கோட்பாடற்ற தகராறுகள் தீர்க்கப்பட வேண்டும். இதுவன்றி வேறு வழிகளில் கோட்பாடற்ற தகராறுகளை தீர்க்க இயலாது.

கோட்பாடற்ற தகராறைத் தீர்ப்பதற்கு நீதிபதி பாத்திரத்தை என்றுமே எடுத்துக் கொள்ளக்கூடாது; ஏனெனில் அதற்கு தீர்ப்போ, முடிவோ சாத்தியமில்லை; தீர்ப்பு பொருத்தமற்றதானால் தகராறில் சம்பந்தப்பட்ட இருசாராரும் அதிருப்தி கொள்வார்கள்; தகராறு தொடரும்.

ஒரு தோழரை மற்றொரு தோழர் முழுக்க நம்புவதில்லை, அல்லது இன்னும் சந்தேகிக்கிறார் எனபன போன்ற விசயங்கள் விவாதத்திற்குக் கொண்டுவரக் கூடாது; ஏனெனில் அம்மாதிரி பிரச்சினைகள் மீது நடத்தப்படும் விவாதம் எவ்வித பலனும் அளிக்காது. இம்மாதிரி விசயங்களைத் தீர்ப்பதோ அல்லது ஒரு குறிப்பிட்ட தோழர் நம்பத் தகுதியானவர் என்று நிரூபிப்பதோ அல்லது மீதிருக்கும் ஒரு சந்தேகத்தை நிவர்த்தி செய்வதோ, அவருடைய வேலையில், போராட்டத்தில், நடைமுறையில்தான் செய்ய முடியும்.

கோட்பாடுள்ள போராட்டங்களில், கோட்பாடற்ற அம்சங்களை தோழர்கள் புகுத்தினால், கோட்பாடுள்ள பிரச்சினையை விவாதிப்பதைத்தான் வலியுறுத்த வேண்டும்; கோட்பாடற்ற அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடாது; இல்லாவிடில் கோட்பாடுள்ள பிரச்சினை பின்னணிக்குத் தள்ளப்பட்டுப் போகும்.

கோட்பாடுள்ள போராட்டம் என்ற திரைக்குப் பின்னால் ஒரு தோழர் கோட்பாடற்ற போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தால், நாம் அவர் சில விசயங்களில் கோட்பாட்டின்படி சரியென்பதை சுட்டிக்காட்ட வேண்டும்; அவர் உபயோகப்படுத்துகிறார் என்பதற்காக அத்தகைய கோட்பாடுகளை மறுக்கக் கூடாது. ஆனால் அவருடைய நிலையும், முறைகளும் தவறானவை என்பதை தக்க முறையில் சுட்டிக்காட்ட வேண்டும். இவ்வாறாக கோட்பாடுள்ள போராட்டம், கோட்பாடற்ற போராட்டமாக மாற்றப்படுவதைத் தடுக்க வேண்டும்.

மொத்தத்தில் உட்கட்சிப் போராட்டம் அடிப்படையில் சித்தாந்தம், கோட்பாடு சம்பந்தப்பட்ட போராட்ட, வாக்குவாத வடிவமாகும். கட்சிக்குள் எல்லாம் பகுத்தறிவுக்கு உட்பட்டிருக்க வேண்டும்; எல்லா விசயங்களும் பகுத்தாராயப்பட வேண்டும்; ஏதொன்றுக்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும்; இல்லையெனில் அது பிரயோஜனப்படாது. ஒரு விசயத்தை பகுத்தாராய்ந்துவிட்டோமானால் எதையும் கஷ்டமின்றி செய்துவிடலாம்.

கட்சிக்குள் பகுத்தறிவுக்குக் கட்டுப்படும் பழக்கத்தை வளர்க்க வேண்டும். இந்தக் காரணம் சரியானதா அல்லது அந்தக் காரணம் சரியானதா என்று நிர்ணயிக்கும் அளவுகோல், கட்சியின் நலனும் தொழிலாளி வர்க்கப் போராட்ட நலனுமாகும்; பகுதி நலனை முழுமைக்கு உட்படுத்துவதும், உடனடி நலன்களை நீண்டகால நலன்களுக்கு உட்படுத்துவதுமாகும். கட்சியின் நலனுக்கு, தொழிலாளி வர்க்க போராட்ட நலனுக்கு, கட்சி முழுமையின் நீண்டகால நலனுக்கு, தொழிலாளி வர்க்கப் போராட்ட முழுமையின் நீண்டகால நலனுக்கு, அனுகூலமானால் அக்காரணங்களும் கண்ணோட்டங்களும் சரியானவை; இல்லையெனில் அவை சரியானவையல்ல.

பகுத்தறிவுக்கு உட்படாத எந்தப் போராட்டமும் காரணமற்ற எந்தப் போராட்டமும், கோட்பாடற்ற போராட்டமாகும். பகுத்தறிவுக்கு உட்படாத எதுவும், பகுத்தாராய முடியாத எதுவும் தவறாகத்தானிருக்க வேண்டும். அம்மாதிரியான விசயங்களில் சரியான முடிவுக்கு வரமுடியாது; அதற்கு முடிவான தீர்வு காண முடியாது. பகுத்தாராய்ந்து விட்டபிறகும் இன்னும் நாம் ஒருமைப்பாடு ஏற்படுத்த முடியவில்லையென்றால், கட்சியின் நலனையும் தொழிலாளி வர்க்கப் போராட்ட நலனையும் மீறுவது யார் என்பது தெளிவாகும். அப்பொழுது திருந்தாமல், தவறுகளைத் தொடர்ந்து செய்து வரும் தோழர்கள் விசயத்தில் அமைப்பு முடிவு எடுப்பதென்பது அவசியமாகும்; விவாதத்திற்குள்ளான விசயம் கஷ்டமின்றித் தீர்க்கப்படும்.

விசயங்களைப் பகுத்தாராய ஏதுவாக இருப்பதற்கு உட்கட்சி ஜனநாயகமும், பிரச்சினைகளின் சிக்கலைத் தீர்க்க சாந்தமான விருப்பு, வெறுப்பு இல்லாத விவாதமும் அத்தியாவசியமாகிறது. அடக்கத்துடன் கற்றறிவதும், தோழர்களின் தத்துவப் பயிற்சியை அதிகப்படுத்துவதும், நிலைமையைப் பற்றி தெளிவான போதம் பெறுவதும், சம்பந்தப்பட்ட விசயத்தை துருவித் துருவி ஆராய்வதும், பிரச்சினைகளை வெகு கவனமாக பரிசீலிப்பதும் மிகமிக அவசியம். கவனக் குறைவாகவும், தன் மனப்போக்குடனும், கிளிப்பிள்ளை போன்றும் , நடைமுறையோடு சம்பந்தப்படாமலும் விசயத்தை பரிபூரணமாக ஆராயாமலும், நாம் விசயங்களை என்றுமே பகுத்தாராய முடியாது.

பகுத்தறிவுக்கு நாம் உடன்படவில்லையென்றால் அல்லது விசயங்களை பகுத்தாரயத் தவறினால் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மாறாக நாம் பலவந்தம், தந்திரங்கள், கட்சி அளிக்கும் அதிகாரம், ஏன் மோசடியைக் கூட கையாள வேண்டி வரும். அந்த விசயத்தில் உட்கட்சி ஜனநாயகம் இனி அவசியமில்லாது போய்விடும். ஏனெனில் உட்கட்சி ஜனநாயகத்திற்கு நாம் கூடி நடவடிக்கை எடுப்பதற்கு விசயங்களை பகுத்தாராய வேண்டும்.

இங்கு நான் “பகுத்தாராய்தல்” என்று கூறுவதற்கு பொருள் என்ன என்றால், தோற்றத்திற்கு உண்மையான பகுத்தாராய்தல் போன்று காணப்படுகின்ற, வெற்று விசயங்களை அல்ல; நடைமுறையில் பரிசோதிக்கப்பட்ட உண்மையான விசயங்கள், யதார்த்த உண்மைகள் என்பதே ஆகும். சில அறிவாளிகள் வீண் பேச்சுகளிலும் தவறான வாதங்களில் ஈடுபடுவதிலும் பழக்கப்பட்டுள்ளனர். விசயங்களை ஆதாரமாகக் கொள்ளாமல் அவர்களுக்கு நிறைய பேசமுடியும். இந்த பூலோகத்திலுள்ள எந்த விசயத்தைப் பற்றியும், அவர்களுக்குப் பேசமுடியும். அவர்களுடைய பேச்சு வெற்றுப் பேச்சு, கட்சியின் வறட்டுக் கோஷங்கள்; அதனால் எந்தவித பயனும் கிடையாது; கட்சிக்கும் புரட்சிக்கும் தீங்கு விளைவிக்க கூடியது. ஆதலின் பகுத்தறிவுக்கு உடன்பட்டு நடக்கும் நடைமுறையை வளர்ப்பதற்கு வெற்றுப் பேச்சு, வறட்டு கட்சி கோஷங்கள் முதலியவற்றை எதிர்ப்பதும், யதார்த்தத்திலிருந்து எழுகின்ற யதார்த்தமான பௌதீகப் பகுத்தறிவை ஆதரிப்பதும் அவசியமாகிறது. அதாவது “நமது தத்துவங்கள் பௌதீகவாதத்தின் அடிப்படையில் அமைந்தவை.”

எல்லாம் பகுத்தறிவுக்கு உடன்பாடுள்ளதாக இருக்க வேண்டும்; இல்லையெனில் உதவாது! தவறாக ஆராய்ந்தாலும் பயன்படாது! வெற்றுப் பேச்சில் காலங்கழித்தோமானால் அது இதைக்காட்டிலும் விரும்பத்தகாது. இது கொஞ்சம் கடினமான வேலை என்பது என்னமோ உண்மைதான். ஆனால் இந்த வழியாகத்தான் நாம் போல்ஷ்விக்குகள் என்ற தகுதியை பெறுகிறோம்.

போல்ஷ்விக்குகள் பகுத்தறிவுக்கு உடன்பாடுடையவர்கள்; உண்மையை ஆதரிப்பவர்கள்; பகுத்தறிவை தெளிவாக புரிந்து கொண்டிருக்கும் ஒருவித மனிதர்கள் இவர்கள்; பகுத்தறிவிற்கு இணங்க உண்மையான சிரத்தையுடன் மற்றவர்களுடன் பழகுகின்றனர். அவர்கள் பகுத்தறிவற்ற நியாயமற்ற போராட்ட ஸ்பெஷலிஸ்டுகள் அல்ல!

தோழர்களே! உட்கட்சிப் போராட்டங்களை எப்படி நடத்துவது என்பதற்கு நான் யோசனை கூறும் சில முறைகள் இவை.

உட்கட்சிப் போராட்டங்களை நடத்துவதற்கும், கட்சிக்குள் தவறான போக்குகளை எதிர்ப்பதற்கும், ஒவ்வொரு கட்சி அங்கத்தினரின் குறிப்பாக ஊழியர்களின், கட்சி உணர்வை பரிசீலிப்பதற்கும் இந்த முறைகளை தோழர்கள் அமல்நடத்த வேண்டும்; அப்பொழுதுதான் கட்சி மேலும் சித்தாந்த ரீதியாகவும், அமைப்புரீதியாகவும் உறுதிப்படும் என்று நான் அபிப்பிராயப் படுகிறேன். இதுவே நமது லட்சியம்.

(தொடரும்)

நிவார் புயல் : மக்களுடன் இணைந்து பேரிடரை எதிர்கொள்வோம் || மக்கள் அதிகாரம்

PP Letter head
பத்திரிகை செய்தி
23.11.2020
நிவார் புயல் : மக்களுடன் இணைந்து பேரிடரை எதிர்கொள்வோம்

நிவார் புயல் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களையும் டெல்டா பகுதியையும் தாக்கக்கூடும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து வருகிறார்கள். நிவார் புயலின் வேகம் 118 கிலோ மீட்டர் வரை இருக்கும் என்று கணித்துள்ளார்கள்.

பேரிடர் மீட்பு படை தயாராக இருப்பதாகவும் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மும்முரமாக இருப்பதாகவும் செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன.

இரவு நேரத்தில் ஏரியை திறந்து விட்டு சென்னை பெரு வெள்ளத்தினை உருவாக்கிய அரசால் அன்று ஏற்பட்ட மிகப்பெரிய பேரழிவை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. வர்தா புயலின் போது செயலிழந்து போய் கிடந்தது அரசு. ஒட்டுமொத்த டெல்டா மாவட்டங்களையும் புரட்டிப்போட்ட கஜா புயலின் போது அரசின் செயல்பாடு என்னவாக இருந்தது? மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர்கள் தன்னார்வலராக நூற்றுக்கணக்கில் வேலை செய்ததன் விளைவாகத்தான் மக்களுக்கு ஏற்பட்ட அந்த பாதிப்பிலிருந்து கொஞ்சமாவது அவர்களை மீட்க முடிந்தது.

உலகிலேயே மிகப் பெரிய கடற்படை என்று பீற்றிக் கொள்ளப்பட்ட பெருமை எல்லாம் ஓக்கிப் புயலில் சாயம் வெளுத்தது.

புதிய தாராளவாத கொள்கைகளுக்காக மொத்த நாட்டையே கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு விற்கக்கூடிய அரசு, இந்த நிவார் புயலில் இருந்து காப்பதாக கூறக்கூடிய  முன்னெச்சரிக்கை நடவடிக்கையும்  மக்களுக்கு முழுமையான தீர்வை தரப்போவதில்லை.

சென்னைப் பெருவெள்ளம், வர்தா புயல், கஜா புயல், ஒக்கிப் புயல் போன்ற பேரிடர் காலங்களில்  தன்னார்வலர்கள் மக்களுடன் இணைந்து எப்படி எதிர்கொண்டார்களோ அதைப் போன்ற ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மக்களாகிய நாம் மேற்கொள்ள வேண்டும் .

அதே நேரத்தில் பேரிடர் கால  நடவடிக்கைகளில் அரசு எந்திரத்தை ஈடுபடுத்துவதற்கான போராட்டங்களை மேற்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

தோழமையுடன்

தோழர் வெற்றிவேல் செழியன்
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு –  புதுவை
99623 66321

வரவர ராவ் உடல்நிலை மோசமானதற்கு என்.ஐ.ஏ. மட்டும்தான் காரணமா ?

புரட்சிகர எழுத்தாளர் தோழர் வரவர ராவ் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்துவந்த சூழலில், மும்பை உயர்நீதிமன்ற உத்தரவின் பெயரில் அவர் மும்பை நானாவதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரைச் சந்தித்த அவரது குடும்பத்தினருக்கு இதுவரை அவரது உடல்நிலை குறித்த அறிக்கை எதுவும் கொடுக்கப்படவில்லை.

பீமா கொரேகான் வன்முறை தொடர்பான எல்கர் பரிஷத் சதி வழக்கில், ஆந்திராவைச் சேர்ந்த புரட்சிகர கவிஞரும் எழுத்தாளருமான வரவர ராவையும் கைது செய்து சிறையிலடைத்தது அன்றைய பாஜக தலைமையிலான மராட்டிய அரசு.

கடந்த ஆண்டில் மராட்டிய மாநிலத்தில் சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்ததையடுத்து, புனே போலீசின் கையில் இருந்த இந்த வழக்கை பாஜக தனது கட்டுப்பாட்டில் இருக்கும் என்.ஐ.ஏ.வின் வசம் ஒப்படைத்தது.

படிக்க :
♦ கவிஞர் வரவர ராவின் விடுதலையைக் கோரி இளம் கவிஞர்கள் கடிதம் !
♦ இன்று ஸ்டான் சுவாமி, நாளை நாம் !

அதன் பின்னர், பல்வேறு சமூகச் செயற்பாட்டாளர்களையும் இந்த வழக்கின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தது என்.ஐ.ஏ. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் பெரும்பாலும் 70 வயதைக் கடந்தவர்களாக இருக்கும் சூழலில், கொரோனா தொற்று பரவத் துவங்கிய நேரத்திலும் இவர்கள் யாருக்கும் பிணை கொடுக்க எதிர்ப்பு தெரிவித்தது.

கடந்த மே மாதத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்ட வரவர ராவ்-க்கு முறையான மருத்துவ உதவிகள் எதுவும் வழங்காமல் இழுத்தடித்து வந்தது சிறை நிர்வாகம். மே மாதத்தில்,  சிறையில் சுயநினைவிழந்து கடுமையான உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார் வரவர ராவ்.

அதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் அவரது உடல்நிலையை முன் வைத்து அவருக்கு பிணை வழங்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தனர். இவ்வழக்கில் பதில்மனு தாக்கல் செய்த  என்.ஐ.ஏ. அவருக்கு பிணை வழங்க எதிர்ப்பு தெரிவித்தது.

அவர் மீது ஏற்கெனவே 24 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக நீதிமன்றத்தில் கூறி வாதாடியது. அவர் மீதான அந்த வழக்குகளில் 23 வழக்குகளில் அவர் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி அவரது வழக்கறிஞர் வாதாடிய பின்னரும் அவருக்குப் பிணை வழங்க மறுத்துவிட்டது உயர்நீதிமன்றம்.

அவரது உடல்நிலை கடும் பாதிப்புக்குள்ளாகி வந்திருந்த சூழலில், அவருக்கு அடிப்படை மருத்துவ வசதிகளை சிறை நிர்வாகம் ஏற்பாடு செய்து தருவதற்கே அவரது குடும்பத்தினரும், சமூக செயற்பாட்டாளர்களும் கடுமையாக போராட வேண்டியது இருந்தது.

தோழர் வரவர ராவ்

இந்தியா மட்டுமல்லாமல், உலக அளவிலான சமூக செயற்பாட்டாளர்களும், அறிவுத்துறையினரும் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தைத் தொடர்ந்துதான், அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாஜக-வின் அடியாளாக என்.ஐ.ஏ செயல்படுவது என்பது பகிரங்கமாகவே தெரிந்த விசயம் தான் என்றாலும் வெறும் என்.ஐ.ஏ. மட்டும்தான் வர வர ராவின் உடல்நிலை மோசமடைந்ததற்கான காரணமா ?

புனே போலீசின் கீழ் இந்த விசாரணை சென்று கொண்டிருந்த நிலையில், அதனை என்.ஐ.ஏ-விற்கு மத்திய பாஜக அரசு மாற்றியது. அதற்கு ஆட்சியதிகாரத்தில் இருந்த கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. சமூகச் செயற்பாட்டாளர்களை பழிவாங்கும் செயல் என்றும் மாநில உரிமையில் தலையிடும் போக்கு என்றும் விமர்சித்தன.

அன்று பாஜகவையும், என்.ஐ.ஏ.-வையும் கடுமையாக விமர்சித்த இக்கூட்டணி ஆட்சியில் இருக்கும் இந்த நிலையில்தான், வரவர ராவுக்கு சிறையில் முறையான மருத்துவம் கொடுக்கப்படவில்லை. அதுமட்டுமல்லாமல், அவரது உடல்நிலை குறித்த அறிக்கைகளை அவரது குடும்பத்தினருக்குக் கொடுக்க மறுக்கின்றது மருத்துவமனை நிர்வாகமும் சிறைத்துறையும்.

வரவர ராவ் தற்போது சிறைத்துறையின் பொறுப்பில் இருக்கிறார். சிறைத்துறை மாநில அரசின் பொறுப்பில் இருக்கிறது. சமூகச் செயற்பாட்டாளரான வரவர ராவிற்கு முறையான மருத்துவ உதவிகள் வழங்காதது மட்டுமல்லாமல்,  அவரது உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினர்கள் தெரிவித்த கருத்துக்களை உண்மைக்குப் புறம்பானவை என்றும் கூறி மறுத்திருக்கிறது மாநில அரசு.

மராட்டிய அரசு, தோழர் வரவர ராவை மருத்துவமனையிலும், ஒழுங்காகப் பராமரிக்கவில்லை. கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டு ஜே.ஜே. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வரவர ராவை சந்தித்த அவரது குடும்பத்தினர், மருத்துவமனையில் அவரது மோசமான நிலைமையில் பரமாரிக்கப்படுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவர் சிறுநீர் போனதைக் கூட சுத்தம் செய்யாமல் அவரை அதிலேயே இருத்தி வைத்திருந்தனர்.

தொடர்ந்து அவரது குடும்பத்தினரின் தொடர்ச்சியான வலியுறுத்தலைத் தொடர்ந்து  அவர் நானாவதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  அங்கு அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்ததா இல்லையா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லாமலேயே, அவரை மீண்டும் தாலேஜா சிறைக்கு மாற்றியது மராட்டிய அரசு. வரவர ராவை அவரது குடும்பத்தினர் சென்று சந்திக்கவும் அனுமதி மறுத்து வந்தது.

படிக்க :
♦ 101 இராணுவத் தளவாடங்கள் இறக்குமதி ரத்து : ஆத்மநிர்பாரா ? கார்ப்பரேட் நிர்பாரா ?
♦ “ஸ்வாட்டிங்” : சமூக செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தும் அமெரிக்க இராணுவம்!

தற்போது வரவர ராவின் உடல்நிலை குறித்து மும்பை உயர்நீதிமன்றத்தில், வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் வாதாடுகையில், அவர் கடுமையான சிறுநீர்ப் பாதைத் தொற்றால் துன்பப்படுவதையும் , மறதி நோயால் பாதிகப்பட்டிருப்பதையும்  சுட்டிக் காட்டி, சிறையில் சிறுநீரக மற்றும் நரம்பியல் மருத்துவர் இல்லாததையும் எடுத்துக் கூறியதைத் தொடர்ந்து உயர்நீதிமன்றம் அவரை 15 நாட்கள் நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கவேண்டும் என உத்தரவிட்டது.

நானாவதி மருத்துவமனையில் வரவர ராவ் சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் சூழலில் அவரைச் சந்தித்த அவரது மனைவியும் அவரது மூத்த மகளும், அவரது உடல்நிலையில் தற்போது சிறிது முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளனர். அவர் தங்களை அடையாளம் காண்பதாகவும் தெரிவித்துள்ளனர். இது நமக்கு ஆறுதலளிக்கும் செய்தி.

தற்போதும், அவரது பாதங்களிலும் முட்டியிலும் பூஞ்சைத் தொற்று ஏற்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள அவரது குடும்பத்தினர், வரவர ராவின் உடல்நிலை குறித்த வெளிப்படையான அறிக்கையை கொடுக்க நானாவதி மருத்துவமனை மறுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பவர்களை முடக்குவதிலும் ஒழித்துக் கட்டுவதிலும் ஆளும் வர்க்கக் கட்சிகள் அனைத்தும் ஒன்றுதான் என்பதையே இது அப்பட்டமாகக் காட்டுகிறது !


கர்ணன்
செய்தி ஆதாரம் : Mid Day, The Wire