Wednesday, July 30, 2025
முகப்பு பதிவு பக்கம் 225

முதலாளித்துவம் உருவாக்கும் முரண் நிலை || உலகப் பட்டினிக் குறியீடு

லகு தழுவிய அளவில் சத்தான உணவு கிடைக்காமல், அரைகுறை பட்டினியால் உடல் மெலிவுற்று, வயதுக்கு ஏற்ற வளர்ச்சியும் உயரத்திற்கு ஏற்ற எடையும் இன்றி நோஞ்சான்களாக உயிர்வாழும் ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், அன்றாடம் ஊட்டமான உணவு கிடைக்காமல் வெந்ததைத் தின்று உயிர் வாழும் மக்களைக் கொண்ட நாடுகள் அடங்கிய தரவரிசைப் பட்டியல், உலக பட்டினிக் குறியீடு 2020 எனும் பெயரில் வெளியாகியிருக்கிறது.

வழமை போலவே, இந்தியா இந்தப் பட்டியலில் பின்தங்கி இருப்பதோடு − 107 நாடுகளைக் கொண்ட பட்டியலில் இந்தியா 94 ஆவது இடத்தில் உள்ளது − நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான் (88−ஆவது இடம்) இலங்கை (64),வங்கதேசம் (75), நேபாளம் (73), மியான்மர் (78) ஆகிய சிறிய, வறிய நாடுகளைவிட மிக மோசமான நிலையில் இருப்பதை அக்குறியீடு அம்பலப்படுத்தியிருக்கிறது.

கடந்த ஐந்தாண்டுகளில், அதாவது வளர்ச்சி நாயகன் என விளம்பரப்படுத்தப்பட்ட திருவாளர் மோடியின் ஆட்சியில் உயரத்திற்கு ஏற்ற எடை அற்ற இந்தியக் குழந்தைகளின் எண்ணிக்கை அதற்கு முந்தைய ஐந்தாண்டுகளைக் காட்டிலும் 2.2 சதவீதம் அதிகரித்திருப்பதையும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியிருக்கிறது. இதுவொருபுறமிருக்க, பன்னாட்டு உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனமும், தேசிய மாதிரி கணக்கெடுப்பு நிறுவனமும் தனித்தனியாக வெளியிட்டிருக்கும் அறிக்கைகள், இந்தியக் கிராமப்புறங்களில் நான்கில் மூன்று பேர் சத்தான, சரிவிகித உணவுக்கு வழியின்றி வாழ்வதாகக் குறிப்பிட்டுள்ளன.

படிக்க :
♦ ஏழைகளை பட்டினிச் சாவுக்குத் தள்ளும் ஆதார் !
♦ ஜார்கண்ட் – தொடரும் பட்டினி மரணங்கள் !

சத்தான சரிவிகித உணவுக்கு வழியில்லாத கிராமப்புற இந்திய மக்கள், உயரத்திற்கு ஏற்ற எடையும், வயதுக்கு ஏற்ற வளர்ச்சியும் இல்லாத இந்தியக் குழந்தைகள் என்ற இந்த விவரமெல்லாம் காட்டுவதென்ன? கோடிக்கணக்கான இந்தியக் குடும்பங்கள் அடிப்படை உணவுத் தேவையைக்கூட ஈடுசெய்து கொள்ள முடியாத வறுமையின் பிடியில் சிக்கியிருக்கிறார்கள் என்பதுதான்.

உலகப் பட்டினிக் குறியீட்டில் இந்தியாவிற்கு அளிக்கப்பட்டிருக்கும் இத்தரவரிசை இடம், கரோனா பாதிப்புகளுக்கு முந்தைய கணிப்பாகும். இப்பெருந்தொற்று தீவிரப்படுத்தியிருக்கும் நிச்சயமற்ற நிலையைக் கணக்கில் கொண்டால், எதிர்காலத்தில் இந்தியா இந்தத் தரவரிசைப் பட்டியலில் இன்னும் கீழே சரிந்து விழக்கூடும்.

அரைகுறை பட்டினி என்ற இந்த அவலத்தை, அபாயத்தை எதிர்கொள்ள வேண்டுமென்றால், ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை, சமையல் எண்ணெய் மட்டுமின்றி, பருப்பு வகைகள், தானியங்கள் உள்ளிட்ட அத்தியாவசியமான ஊட்டச்சத்து அளிக்கக்கூடிய உணவுப் பொருட்களை மானிய விலையில் அனைவருக்கும் கிடைக்கும்படி ரேஷன் விநியோகத்தை விரிவுபடுத்த வேண்டும்.

கர்ப்பிணிப் பெண்கள், பால் கொடுக்கும் தாய்மார்கள், ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் ஆகியோருக்காக நடைமுறைப்படுத்தப்படும் பல்வேறு விதமான சத்துணவுத் திட்டங்களை விரிவுபடுத்த வேண்டும். மிகவும் முக்கியமாக, கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைகளுக்கான வேலைவாய்ப்புத் திட்டங்களையும், அவர்களது வாழ்க்கைச் செலவுகளை ஈடுகட்டக்கூடிய கூலியையும் உத்தரவாதப்படுத்த வேண்டும்.

ஆனால், மோடி அரசோ இதற்கு நேர் எதிர் திசையில், ரேஷன் விநியோகத்தில் உணவுப் பொருட்களுக்குப் பதிலாகப் பணப் பட்டுவாடாவைக் கொண்டுவர முயலுகிறது. அத்தியாவசிய உணவுப் பொருள் பாதுகாப்புச் சட்டத்தைத் திருத்தி, பதுக்கலுக்கும் விலை உயர்வுக்கும் வழி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. தொழிலாளர் நலச் சட்டத்தில் கொண்டுவந்திருக்கும் சீர்திருத்தங்கள் மூலம் வேலை உத்தரவாதத்தையும், குறைந்தபட்ச கூலி கொடுப்பதையும் இல்லாது ஒழித்திருக்கிறது.

சுருக்கமாகச் சொன்னால், இச்சீர்த்திருத்தங்கள் மூலம் ஏழைகளை, அடித்தட்டு மக்களைத் தமது வயிற்றைச் சுருக்கிக்கொண்டு வாழச் சொல்கிறது, மோடி அரசு. இப்படிப்பட்ட ஆட்சியில் பட்டினிச் சாவுகள் நடக்கத் தொடங்கினாலும் ஆச்சரியங்கொள்ள முடியாது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ற விதத்தில் பட்டினிக் குறியீடு தர வரிசை குறையாதது துரதிருஷ்டவசமானது என அங்கலாய்த்துக் கொள்கிறார்கள், முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள். ஆடு கொழுக்கட்டும் என ஓநாய்களும், நரிகளும் வேண்டுமானால் காத்துக் கிடக்கலாம். ஆனால், கார்ப்பரேட் முதலாளி வர்க்கம் இந்த நியதியை ஏற்றுக் கொள்வதில்லை.

அம்பானி உலகக் கோடீசுவரர்களின் பட்டியலில் எந்தளவிற்கு முன்னேறிச் செல்கிறாரோ, அந்தளவிற்கு இந்தியாவில் ஏழ்மையும் பட்டினியும் அதிகரிக்கவே செய்யும். இதுதான் முதலாளித்துவ சமூக விதி. கம்யூனிசப் புரட்சியாளர்கள் கூறிவரும் இந்த உண்மையைத்தான் உலகப் பட்டினிக் குறியீடு 2020−ம் எடுத்துக்காட்டியிருக்கிறது.

மேகலை

டிசம்பர் 2020 – மின்னிதழை தரவிறக்கம் செய்ய : இங்கே அழுத்தவும்

7.5 சதவீத இட ஒதுக்கீடு : புண்ணுக்குப் புனுகாகிவிடக் கூடாது || புதிய ஜனநாயகம்

மிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தமிழகத்திலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டிருப்பதைத் தனது தனிப்பட்ட சாதனையாகக் காட்டிக்கொள்ள முயலுகிறார், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. ‘அவர் தனியொருவனாகச் சிந்தித்து இந்தச் சாதனையைப் படைப்பதற்கு‘ அனிதா தொடங்கி ஜோதிஸ்ரீ துர்கா வரையில் 16 மாணவ−மாணவிகள் தமது உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டியிருந்தது என்பதை நாம் மறந்துவிட முடியாது.

ஆங்கில வழி மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் பெருக்கத்திற்குப் பிறகு அரசுப் பள்ளி மாணவர்கள், குறிப்பாகத் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைப்பது அரிதாகிப் போனது. தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டபோதும், நுழைவுத் தேர்வு ரத்து செய்த பிறகும் இந்த நிலை மாறவில்லை. மோடி அரசு−உச்சநீதி மன்றக் கூட்டணியால் திணிக்கப்பட்ட நீட் தேர்வு இந்த நிலையை மேலும் மோசமாக்கியிருப்பதோடு, ஏமாற்றமடைந்த மாணவர்களைத் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கும் தள்ளிவிட்டிருக்கிறது.

தாமதமாகக் கொண்டுவரப்பட்டாலும் இந்த இட ஒதுக்கீடு வரவேற்கத்தக்கது என்றபோதும்,  அரசுப் பள்ளிகளில் படித்துவரும் ஏழை மற்றும் கீழ் நடுத்தர வரக்க மாணவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது இந்த ஒதுக்கீடு சொற்பமானதுதான். அதேசமயத்தில், இந்தச் சொற்பமான ஒதுக்கீடும் எளிதாகக் கிடைத்துவிடவில்லை.

படிக்க :
♦ INI – CET : 11 கல்லூரிகளுக்கு நீட் விலக்கு – தமிழகத்துக்குக் கிடையாதா ?
♦ 7.5% உள் ஒதுக்கீடு சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் : ஏழை மாணவர்களுக்கு இது போதுமா ?

நீதிபதி கலையரசன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப் பரிந்துரைத்ததை அ.தி.மு.க. அரசு 7.5 சதவீதமாக வெட்டியது. இந்த வெட்டப்பட்ட ஒதுக்கீடிற்கும் ஆளுநர் ஒப்புதல் தராமல் இழுத்தடித்தார். அ.தி.மு.க. அரசோ ஆளுநருக்கு அரசியல் அழுத்தம் தர மறுத்து ஒதுங்கிக் கொண்டது. உயர்நீதி மன்றத்தில் வழக்கு, எதிர்க்கட்சிகளின் போராட்ட அறிவிப்பு, ஆளுநரின் அடாவடித்தனத்திற்கும் அ.தி.மு.க. அரசின் மெத்தனத்திற்கும் எதிராகத் தமிழக மக்கள் மத்தியில் எழுந்த வெறுப்பு−கோபம் ஆகியவற்றுக்குப் பிறகுதான் அ.தி.மு.க. அரசு அவசரச் சட்டத்தைப் பிறப்பித்தது. இந்த இட ஒதுக்கீடை மறுப்பதோ இழுத்தடிப்பதோ பா.ஜ.க.வைப் பதம் பார்த்துவிடும் என உரைத்த பிறகுதான் ஆளுநர் தமிழக அரசின் இட ஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் தந்தார். இந்த அழுத்தங்கள் எல்லாம் இல்லாமல் போயிருந்தால், இந்த இட ஒதுக்கீடும் எழுவர் விடுதலையைப் போலவே ஆளுநர் மாளிகையிலேயே அமுக்கப்பட்டிருக்கும்.

தனியார் “மெட்ரிகுலேஷன்” மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளிகளிலும் கார்ப்பரேட் பயிற்சி மையங்களிலும் இலட்சக்கணக்கான ரூபாயைச் செலவழித்துப் படிக்கும் நடுத்தர மற்றும் மேல்தட்டு மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரி இடங்களை அப்படியே வாரிச் சுருட்டிக் கொள்வதை அனுமதிப்பது அநீதியானது என்ற நிலையிலிருந்து இந்த இட ஒதுக்கீடை ஆதரிக்கலாமேயொழிய, நீட் தேர்வை மறைமுகமாக முட்டுக் கொடுப்பதற்கும் அல்லது நீட் தேர்விற்கான எதிர்ப்பை மழுங்கடிப்பதற்குமான கருவியாக இந்த இட ஒதுக்கீடைப் பயன்படுத்தும் முயற்சிகளையும் நாம் அனுமதிக்க முடியாது. ஏனென்றால், நீட் தேர்வின் மூலம் திணிக்கப்பட்டிருக்கும் சமத்துவமின்மையை, பாரபட்சத்தை இந்த இட ஒதுக்கீடு இம்மியளவுகூட ரத்து செய்துவிடவில்லை.

தனியார் பயிற்சி மையத்தில் தனது மகள் பகவதியைச் சேர்க்கத் தனது அற்ப சொத்துக்களை விற்றதோடு, கடனாளியாகவும் ஆகிவிட்ட சமுத்திரக்கனி

இந்த ஒதுக்கீடின் அடிப்படையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 227 மாணவர்களுக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 86 மாணவர்களுக்கும் அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 12 மாணவர்களுக்கும் தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் 80 மாணவர்களுக்கும் இடம் கிடைக்கும் வாய்ப்பு உருவாக்கப்பட்டிருந்தாலும், நீட் தேர்வில் கிடைக்கும் மதிப்பெண்ணின் அடிப்படையில்தான் மாணவர் தேர்வு நடைபெறும். இந்த நீட் தேர்வு சி.பி.எஸ்.இ., பாடத் திட்டப்படி நடைபெறுவதால், மாநிலப் பாடத் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நீட் தேர்வுக்காக அரசு பயிற்சி மையத்திலோ அல்லது தனியார் பயிற்சி மையத்திலோ சேர்ந்து இத்தேர்வுக்குத் தயாராவது தவிர்க்கவியலாத கட்டாயமாகிவிடுகிறது. குறிப்பாக, அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டாம் முறையாக நீட் தேர்வு எழுத வேண்டுமென்றால், அவர்கள் தனியார் பயிற்சி மையத்தில் மட்டும்தான் சேர முடியும்.

இந்த ஆண்டு நீட் தேர்வில் 664 மதிப்பெண்களை எடுத்து, இந்திய அளவில் அரசுப் பள்ளி மாணவர்களில் முதலிடம் பெற்றிருக்கும் தேனி மாவட்டம் ஜீவித்குமார் கடந்த ஆண்டு நீட் தேர்வில் எடுத்த மதிப்பெண் 193 தான். அம்மாணவன் இரண்டாம் முறையாக நீட் தேர்வு எழுதுவதற்கு நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் பயற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி எடுப்பதற்குப் பலரும் உதவியிருக்கிறார்கள்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தெங்கலம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த பகவதி, கடந்த ஆண்டு நீட் தேர்வில் 111 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்ததால், மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. இந்த ஆண்டு அவர் தனியார் பயிற்சி மையத்தில் சேருவதற்காக, விவசாயக் கூலித் தொழிலாளியான அவரது தாய் சமுத்திரக்கனி, தன்னிடமிருந்த மூன்று கறவை மாடுகளையும் விற்றதோடு, கந்துவட்டிக்கும் கடன் வாங்கியிருக்கிறார்.

இட ஒதுக்கீடின் கீழ் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருக்கும் பகவதியின் கதையிது. இது போன்று அற்பமான சொத்தையும் விற்ற, கடனும் பட்ட துயரக் கதைகள் இன்னும் எத்துணை எத்துணையோ!

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த 6,692 மாணவ−மாணவிகள் இந்த ஆண்டு நீட் தேர்விற்கு அரசு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றதில் 1,615 பேர் தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்ச்சி அடைந்தவர்களுள் 405 பேருக்குத்தான் இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்லூரிகளிலோ பல் மருத்துவக் கல்லூரிகளிலோ இடம் கிடைக்கும்.

இடம் கிடைக்காதவர்களும், நீட் தேர்வில் தேர்ச்சி அடையாதவர்களும் எதிர்வரும் ஆண்டில் நீட் தேர்விற்குத் தயாராக வேண்டுமெனில் அவர்கள் அனைவரும் தனியார் பயிற்சி மையத்திற்குச் செல்ல வேண்டியிருக்கும். இந்நிலையில் அவர்களுள் எத்துனை பேருக்கு ஜீவித்குமாருக்குக் கிடைத்த உதவி போல கிடைக்கும்? எத்துணை பேரால் கையில் இருக்கும் அரைக்காசு சொத்தை விற்றோ, அல்லது கந்து வட்டிக்குக் கடன் வாங்கியோ தனியார் பயிற்சி மையத்தின் கட்டணங்களைக் கட்ட முடியும்?

படிக்க :
♦ ரஜினி ரசிகர்களே ! இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை !
♦ கமல்ஹாசன் – சூரப்பாவின் #நேர்மை, #திறமை, #அஞ்சாமை !!

இந்த 7.5 சதவீத ஒதுக்கீடு 405 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைப்பதை உத்தரவாதப்படுத்தியிருக்கிறது என்பது எந்தளவிற்கு உண்மையோ அந்தளவிற்கு மருத்துவராக வேண்டும் எனக் கனவு காணும் அரசுப் பள்ளி  மாணவர்களின் குடும்பங்களின் மீது பொருளாதாரச் சுமையை ஏற்றி வைக்கும் என்பதும் உண்மையாகும். குறிப்பாக, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்படும் மாணவர்களுக்கு அரசு உதவிகள் கிடைத்தாலும், அவர்களது குடும்பங்கள் பெரும் கடன் சுமையில் சிக்குவது தவிர்க்க முடியாதது. எனவே, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை இன்னும் வலுவாக எழுப்ப வேண்டும் என்பதைத் தான் 7.5 சதவீத இட ஒதுக்கீடிற்குப் பிறகான நிலைமைகள் ஏற்படுத்தியிருக்கின்றன.

நீட் தேர்வை ரத்து செய்யக் கோருவதோடு, கல்வி தனியார்மயமாகியிருக்கும் சூழலில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசுக் கல்லூரிகள் அனைத்திலும் உரிய இட ஒதுக்கீட்டை நிர்ணயித்துத் தொடர வேண்டும் என்றும் கோர வேண்டும்.

இந்த உடனடிக் கோரிக்கைகளுக்காக மாணவர்களையும் பெற்றோர்களையும் அணி திரட்டுவதை முதன்மைப்படுத்துவதற்குப் பதிலாக, அரசுப் பள்ளி மாணவர்கள் இந்த இட ஒதுக்கீடைப் பயன்படுத்திக் கொள்ளுவதற்கு ஏற்ற விதத்தில் அவர்களுக்கு உதவுவதை முன்னிலைப்படுத்துவதையும்; நீட் தேர்வைத் தடுத்து நிறுத்துவதில் படுதோல்வியடைந்து நிற்கும் அ.தி.மு.க., தனது தோல்வியை மறைத்துக் கொள்ள இந்த 7.5 சதவீத இட ஒதுக்கீடைப் பயன்படுத்துவதையும் அனுமதிக்கக் கூடாது.

ரஹீம்

டிசம்பர் 2020 – மின்னிதழை தரவிறக்கம் செய்ய : இங்கே அழுத்தவும்

வெட்கக்கேடு : மத்தியப் பிரதேசம் பாலியல் குற்ற வழக்கு

உ.பி. மாநிலம் ஹாத்ரஸில் நடந்த பாலியல் வன்முறை சம்பவத்தில் பாதிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட தாழ்த்தப்பட்ட பெண்ணை, அம்மாநில அரசும், போலீசும், சாதிவெறியர்களும் அவமதித்ததை நாடே காறி உமிழ்ந்து போராடிவரும் வேளையில், ம.பி. மாநில உயர்நீதி மன்றம் அப்போராட்ட உணர்வை எள்ளி நகையாடும் விதத்தில் ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

பாலியல் வன்முறைக்குப் பலியாகி நீதி கேட்டு நிற்கும் பெண்ணிடம், தன்னை அக்கொடுமைக்கு ஆட்படுத்திய காமுகனைச் சகோதரனாக ஏற்றுக்கொள்ளும்படியான உத்தரவை வழங்கி, இயற்கை நீதியைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிட்டது, அந்நீதிமன்றம்.

படிக்க :
♦ போராட்டங்களின் நோக்கம் || உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்த பார்வை !
♦ ஹதராஸ் பாலியல் வன்கொலை : நள்ளிரவில் எரிக்கப்பட்ட ‘நீதி’ !

சில வழக்குகளில் குற்றவாளிகளுக்குப் பிணை வழங்குவதற்கு நீதிமன்றங்கள் நிபந்தனைகளை விதிப்பது வழமையானதுதான். ஆனால், ம.பி. மாநிலத்தின் உஜ்ஜைனி மாவட்டத்தில் பாலியல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த விக்ரம் பார்க்கி என்பவரின் பிணை மனு மீதான வழக்கில் நீதிபதி ரோஹித் ஆர்யா, குற்றவாளிக்குப் பிணை வழங்குவதற்கு விதித்திருக்கும் நிபந்தனைகளோ மிகவும் அருவெறுக்கத்தக்க ஆணாதிக்கத் திமிரும், பாதிக்கப்பட்ட பெண்ணைக் கூனிக்குறுகச் செய்யும் வக்கிரமும் நிறைந்தவையாக உள்ளன.

அவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட விக்ரம், தனது பாலியல் இச்சைக்கும் வன்முறைக்கும் பலியான பெண்ணின் வீட்டிற்குத் தனது மனைவியுடன் சென்று, அப்பெண்ணிற்கு இனிப்புக்களை வழங்கி, அப்பெண்ணைத் தனது கையில் ராக்கி கயிற்றைக் கட்டிவிடக் கோரவேண்டும். மேலும், ராக்கி கட்டி விடும் தங்கைக்கு அண்ணன் பணம் தரும் வழக்கமான சடங்கைக் குறிப்பிட்டு, பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு குற்றம்சாட்டப்பட்டவர் 11,000 ரூபாய் பணம் தந்து அவரது ஆசீர்வாதத்தைப் பெற வேண்டும்; பாதிக்கப்பட்ட பெண்ணின் மகனிடம் துணிகள் மற்றும் இனிப்புகள் வாங்க 5,000 ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் − இவைதான் அந்நீதிபதி விதித்திருக்கும் நிபந்தனைகள்.

ஆணாதிக்கத் திமிர் நிரம்பிய தீர்ப்பை வழங்கிய ம.பி. உயர் நீதிமன்ற நீதிபதி ரோஹித் ஆர்யா.

ஆதிக்க சாதியினர் நடத்தும் கட்டப் பஞ்சாயத்துகளில் பாலியல் குற்றவாளிகளை விடுவிக்கக் கோவிலுக்கு அபராதம் செலுத்தக் கூறும் நாட்டாண்மைத்தனத்தை ஒத்தது ம.பி. உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு.

தன் மீது பாலியல் வன்முறையை ஏவிய குற்றவாளியை, பாதிக்கப்பட்ட எந்தப் பெண்ணாவது சகோதரனாக ஏற்றுக்கொள்ள முன்வருவாரா? தன் மீது பாலியல் வன்முறையை ஏவிய குற்றவாளியையே கணவனாக ஏற்கச் சொல்லும் கட்டப் பஞ்சாயத்துத் தீர்ப்பைக் காட்டிலும் அருவெறுக்கத்தக்க விதத்திலும், பொறுப்பற்ற விதத்திலும், தன்னிச்சைப்படி வழங்கப்பட்டிருக்கும் இந்தப் பிணை உத்தரவு, பாதிக்கப்பட்ட பெண்ணைப் பாதுகாத்து, அவருக்கு நீதி வழங்குவதற்குப் பதிலாக, அவரை அவமானகரமான விதத்தில் தண்டிக்கிறது.

பாலியல் வன்முறைக்குப் பலியான பெண்களும், அவரது குடும்பத்தாரும் அதனைப் புகாராகக் கொடுக்க முன்வருவதே அசாதாரணமானது. அப்படிப் புகாராகக் கொடுக்கப்படும் வழக்குகள் போலிசு நிலையத்தைத் தாண்டி நீதிமன்றப் படிக்கட்டைத் தொடுவதும் போராட்டம் நிறைந்தது. மேலும், பாலியல் ரீதியிலான தாக்குதலுக்கு உள்ளாகும் பெண்களை ஒழுக்கங்கெட்டவர்கள் போலச் சித்தரித்து, அவர்களையே குற்றவாளியாக்குவது; ஆதிக்க சாதிவெறி மற்றும் மதவெறியை முகாந்திரமாகக் கொண்டு அக்குற்றத்தை நியாயப்படுத்துவதோடு, குற்றவாளிகளை நாயகர்களாக விளம்பரப்படுத்துவது என இப்படிப்பட்ட பலவாறான தடைகளைப் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள் எதிர்கொண்டு வரும் நிலையில் வழங்கப்பட்டிருக்கும் இப்பிணை உத்தரவு, பாலியல் குற்றவாளிகளுக்கு மனத் துணிவை அளிக்கக்கூடியது. இப்படிப்பட்ட உத்தரவுகள் வழங்கப்படும் நாட்டில் பாலியல் குற்றங்கள் குறைவதற்கு ஏதாவது வாய்ப்புண்டா?

நிர்பயா வழக்கில் பாலியல் வன்முறையை ஏவிய குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை விதித்த இந்திய நீதித்துறையிலிருந்தா இப்படிப்பட்டதோர் உத்தரவு என யாரும், குறிப்பாகப் பெண்கள் வியப்படையத் தேவையில்லை. நிர்பயா வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு விதிவிலக்கு. மேலும், அச்சமயத்தில் அப்பாலியல் வன்முறைக்கு எதிராக நடுத்தெருவுக்கு வந்த நகர்ப்புறத்தைச் சேர்ந்த மேட்டுக்குடி மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்தின் கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுப்பதற்காக, வர்க்கச் சார்போடு வழங்கப்பட்ட தீர்ப்பு அது. பாதிக்கப்பட்ட பெண் எந்தச் சாதி, எந்த வர்க்கம், குற்றவாளிகள் எந்தச் சாதி எந்த வர்க்கம் என்பதற்கு ஏற்பத்தான் பாலியல் வழக்குகளில் தீர்ப்புகள் அளிக்கப்படுகின்றன என்பதற்கு நம் கண் முன்னே பல எடுத்துக்காட்டுக்கள் உள்ளன.

பாலியல் வன்முறை வழக்குகளில், இந்திய நீதிமன்றம் மற்றும் நீதிபதிகளின் மனச்சான்றை இந்தியக் கிரிமினல் சட்டங்களைவிட, தந்தை வழி சமூக அமைப்பின் ஆணாதிக்க மனோபாவம்தான் ஆட்டிவைக்கிறது என்பதற்கு ம.பி. உயர்நீதி மன்றத்தால் வழங்கப்பட்டிருக்கும் இந்தப் பிணை உத்தரவு மற்றுமோர் உதாரணம்.

முத்து
புதிய ஜனநாயகம்

புதிய ஜனநாயகம் டிசம்பர் 2020 மின்னிதழ் தரவிறக்கம் செய்ய : இங்கே அழுத்தவும்

டிச 8 : நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் || மக்கள் அதிகாரம் பங்கேற்பு !

த்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் மசோதாக்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராடிவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக டிசம்பர் 8 அன்று நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்தனர். அதனையொட்டி நேற்று (டிசம்பர் 8) தமிழகம் முழுவதும் பல்வேறு முற்போக்கு, ஜனநாயக, புரட்சிகர அமைப்புகளும், கட்சிகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் அதிகாரம் அமைப்பினரும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

கோவை :

 “கார்ப்பரேட் கொள்ளைக்காக விவசாயிகளை காவு கொடுக்கும் வேளாண் சட்டத் திருத்தத்தை எதிர்த்து, டிசம்பர் – 8, 2020 அகில இந்திய வேலை நிறுத்தத்தில் பங்கெடுப்போம் ! டெல்லி விவசாயிகள் போராட்டத்தை ஆதரிப்போம்!!”  என்ற தலைப்பில் கோவையில் மக்கள் அதிகாரம் தலைமையில் ஜனநாயக அமைப்புகள் பங்கேற்புடன் 8.12.2020 அன்று காலை 11 மணிக்கு, கோவை பவர் ஹவுஸ் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இதில் மக்கள் அதிகாரம் கோவை பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜன் தலைமை தாங்கினார். சி.பி.ஐ. (எம்.எல்) ரெட் ஸ்டார், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மக்கள் ஜனநாயக குடியரசுக் கட்சி, தமிழர் திராவிடர் கழகம், அகில இந்திய புரட்சிகர பெண்கள் அமைப்பு, மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் கண்டன உரையாற்றினர்.

தகவல்
மக்கள் அதிகாரம்
கோவை மண்டலம்
94889 02202

000

உளுந்தூர்பேட்டை :

வேளாண் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் டிசம்பர் 8-ம் தேதி நடைபெற்ற வேலாஇநிறுத்தப் போராட்டத்தில், மக்கள் அதிகாரம் உளுந்தூர் பேட்டை வட்டாரம் சார்பாக  தோழர்கள் வினாயகம், மணிபால், சங்கர், சுபாஷ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்களைப் போலீசு கைது செய்தது.

தகவல்
மக்கள் அதிகாரம்
உளுந்தூர்பேட்டை

பாரத் பந்த் : வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறு ! திருச்சி பு.ஜதொ.மு – புமாஇமு போராட்டம் !

மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நடத்தப்பட்ட தர்ணா போரட்டத்தில் திருச்சி பு.ஜ.தொ.மு, பு.மா.இ.மு பங்கேற்பு !

டந்த டிசம்பர் 8, மதியம் 1 மணி அளவில் திருச்சி BHEL ஆலை வாயிலில் CITU, NDLF, LLF, DTS/AITUC, INTUC, BCEU, DR.AWU, DK, MLF ஆகிய தொழிலாளர் சங்கங்கள் சார்பில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி தர்ணா போராட்டம் நடைபெற்றது.

தொழிலாளர்கள் போரட்டத்தில் பெண்கள், சிறுவர்கள், தொழிலாளர்கள் என 300 க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர். இப்போராட்டத்தை சிஐடியு தோழர்கள் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர். விவசாயிகளுக்கு மட்டுமல்ல அனைத்து மக்களுக்கும் தீங்கு விளைவிக்க கூடிய விவசாய சட்டத்தை ரத்து செய்யக் கோரியும், மோடி அரசை கண்டித்தும் எழுச்சிகரமான கண்டன முழக்கங்கள் எழுப்பபட்டன. அதனை தொடர்ந்து போராட்டத்தில் கலந்து கொண்ட தொழிற்சங்க தலைவர்கள் மோடி அரசையை கண்டித்தும், வேளாண் சட்டத்தில் உள்ள பிரச்சனைகளை விளக்கியும் உரையாற்றினார்கள்.

படிக்க :
♦ வேளாண் சட்டத் திருத்தம் : சந்தை ஒரு பிணம் தின்னும் கழுகு !
♦ பிகார் : வேளாண் மசோதாவுக்கு ரத்த சாட்சியாக நிற்கும் விவசாயிகள் !

அதில் பு.ஜ.தொ.மு சார்பாக தோழர் உத்திராபதி, பொதுச்செயலாளர் (BPWU) பேசுகையில் “தனியார்மயம், தாராளமயம், உலகமயம் கொள்கையை பின்பற்றத் தொடங்கிய நாள் முதலே தொழிலாளர் விரோத, மக்கள் விரோத சட்டங்களை இந்த அரசு அமுல்படுத்தி வருகிறது. குறிப்பாக மோடி தலைமையிலான அரசு விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குகிறேன் என்று கூறிவிட்டு குறைந்தபட்ச ஆதார விலையைக் கூட உத்தரவாத படுத்தாமல், அதற்கு மாறாக விவசாயிகளுக்கு எதிராக சட்டத் திருத்தத்தை கொண்டு வந்துள்ளது.

கார்ப்பரேட்டுகளுடன் கூட்டு சேர்ந்து கொண்டு சாதாரண மக்களிடமிருந்து வரிப்பணத்தை புடுங்கி கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சலுகை அளிப்பதாகவே மோடி அரசின் செயல்பாடுகள் உள்ளன. இதைப்பற்றி சிந்திக்க விடாமல், சாதி – மதக் கலவரங்கள், ராமர் கோயில் கட்டுவது, இந்திய-சீனப் போர் பிரச்சனையை கிளறிவிட்டு மக்களை பிளவுபடுத்துவது என கார்ப்பரேட் – காவி சித்தாந்தத்தை வேகமாக அமுல்படுத்தி வருகின்றனர். எனவே நாம் காவி-கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த தொடர்ச்சியாகப் போராட வேண்டும்” என்று கூறி தனது கண்டன உரையை நிறைவு செய்தார்.

இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக தோழர்களும் கலந்து கொண்டனர்.

தகவல்
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி,
திருச்சி

எனது பாவ்லோஸ் தனியொருவனாக அவர்களைத் தோற்கடித்துவிட்டான் !

‘‘எனது பாவ்லோஸ் தனியொருவனாக அவர்களைத் தோற்கடித்துவிட்டான்!’’ − இதுவொரு அசாதாரணமான வெற்றி முழக்கம். இவ்வெற்றி முழக்கத்தைக் கண்ணீர் மல்க ஏதென்ஸ் நகர நீதிமன்றத்தில் முழங்கியவர் முற்போக்கு ராப் பாடகர் பாவ்லோஸ் ஃபைஸாஸின் தாய் மேக்டா. அதேசமயத்தில் அந்நீதிமன்றத்திற்கு வெளியே கூடியிருந்த 50,000−க்கும் அதிகமான தொழிலாளர்களும், ஆசிரியர்களும், பல்வேறு இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவாளர்களும், பொதுமக்களும், ‘‘நாஜிக்களைச் சிறையில் அடை!’’, ‘‘பயந்தால் வெற்றிபெற முடியாது!’’ என முழக்கமிட்டனர்.

கிரீஸ் நாட்டில் செயல்பட்டு வந்த பொன் விடியல் (Golden Dawn) என்ற நவீன நாஜிக் கட்சி ஒரு கிரிமினல் குற்றக் கும்பல் எனத் தீர்ப்பளிக்கப்பட்டு, அக்கட்சியின் ஒட்டுமொத்த உயர்மட்டத் தலைமையும் ஏதென்ஸ் நகர குற்றவியல் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட அக்டோபர் 7, 2020 அன்று அந்நீதிமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் அரங்கேறிய அற்புதமான காட்சி இது.

இத்தீர்ப்பு நவீன நாஜிக் கட்சியான பொன் விடியலைக் கலகலக்க வைத்துவிட்டாலும், ‘‘பாசிச அபாயம் இன்னும் முடிவுக்கு வந்துவிடவில்லை’’ என்ற பிரச்சாரத்தை அந்நாட்டின் இடதுசாரிக் கட்சிகளும், முற்போக்கு அறிவுத் துறையினரும் தொழிலாளர்களும் பொதுமக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல ஆயுத்தமாகி வருகின்றனர்.

படிக்க :
♦ பிரான்ஸ் : வலதுசாரி அரசியலுக்குத் தயாராகும் ‘லிபரல் ஜனநாயகம்’
♦ ஐரோப்பிய யூனியன் வலதுசாரி எம்.பி-க்களை வைத்து நாடகமாடும் மோடி அரசு !

அதே வேளையில், அந்நாஜிக் கும்பலை மறைமுகமாக ஆதரித்து வந்த கிரீஸின் ஆளுங்கும்பலோ இத்தீர்ப்பை வெளிப்படையாக எதிர்க்க முடியாமல் ஆதரிப்பது போல பாவனை செய்து வருகிறது. மேலும், இத்தீர்ப்பை கம்யூனிஸ்டுகளுக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதிப் பீதியடைந்துள்ள ஆளும் வர்க்கத்தின் எடுபிடிகள், ‘‘தீவிர வலதுசாரிக் கட்சியின் தலைவர்கள் தண்டிக்கப்பட்டதைப் போலவே, தீவிர இடதுசாரிக் கட்சித் தலைவர்களும் தண்டிக்கப்பட வேண்டும்’’ என்ற விஷமத்தனமான பிரச்சாரத்தை நடத்தத் தொடங்கியுள்ளனர்.

கிரீஸ் நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் முன்னும் இப்பொழுது இந்தக் கேள்விதான் எழுப்பப்படுகிறது. நீங்கள் எந்தப் பக்கம், தேனீக்கள் பக்கமா அல்லது ஓநாய்கள் பக்கமா?

***

கிரீஸில் நவீன நாஜிக் கட்சி, அதனின் பாசிச கிரிமினல் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டதைக் கேள்விப்படும்போது, நமது நாட்டில் இந்து மதவெறி அமைப்புகளின் தலைவர்களும் அவர்களது அடியாட்படையும் கடந்த முப்பது ஆண்டுகளாக நடத்தியிருக்கும் பாசிச கிரிமினல் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்படாமல், சட்டப்படியே விடுதலை செய்யப்பட்டிருப்பதையும்; இந்து மதவெறியர்கள் குற்றக் கும்பலாக மக்கள் மத்தியில் அம்பலமாகாமல், அப்பழுக்கற்ற தேசியத் தலைவர்களாகப் பூனைப் படை பாதுகாப்போடு உலா வருவதையும் ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை. இதற்கான பின்னணியையும் காரணத்தையும் ஆராயும் முன், பொன் விடியலின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் சுருக்கமாகப் பார்த்துவிடுவோம்.

நாஜிசத்தின் துதிபாடியும், நாஜிக்கள் நடத்திய யூத இனப் படுகொலையை மறுக்கும் கும்பலைச் சேர்ந்தவருமான நிகோலாவோஸ் மிக்கேலோலியாகோஸ் என்ற பாசிஸ்டால் பொன் விடியல் கட்சி 1980−களில் தொடங்கப்பட்டாலும், அக்கட்சி 2008−க்குப் பின் கிரீஸில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டுதான் செல்வாக்குப் பெறத் தொடங்கியது. அச்சமயத்தில் கிரீஸை அதுவரை ஆண்டு வந்த ஆளும் வர்க்கக் கட்சிகள் பொதுமக்களின் நம்பிக்கையை இழந்திருந்தன என்பதோடு,  நகர்ப்புற உதிரிப் பாட்டாளி வர்க்கம் மற்றும் குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் பிற்போக்குப் பிரிவு மத்தியில் பொன் விடியல் செல்வாக்குப் பெறுவதற்கான சூழலையும் ஏற்படுத்தியிருந்தன.

பாசிச எதிர்ப்புப் போராளியும் ராப் பாடகருமான பாவ்லோஸ் ஃபைஸாஸ்.

இப்பொருளாதார நெருக்கடியிலிருந்து பொதுமக்களின் கவனத்தைத் திசை திருப்ப அண்டை நாடுகளான துருக்கி, மாசிடோனியா ஆகியவற்றுக்கு எதிராகத் தேசிய வெறியைத் தூண்டிவிட்டு வந்த ஆளும் வர்க்கக் கட்சிகள், வேலைவாய்ப்பு தேடி எகிப்திலிருந்து வெளியேறி கிரீஸில் தஞ்சமடைந்திருந்த எகிப்திய மீனவர்களை, கிரீஸ் மக்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கவந்த எதிரியாகச் சித்தரித்து வந்தன. இந்த தேசிய வெறியையும், செயற்கையாக உருவாக்கப்பட்ட எதிரிகளையும் பயன்படுத்திக் கொண்டுதான் பொன் விடியல் கட்சி செல்வாக்குப் பெறத் தொடங்கியது.

இந்து மதவெறியோடு, பாகிஸ்தானுக்கு எதிரான இந்து தேசிய வெறியைக் கிளறிவிடுவது; வங்கதேச முஸ்லிம் அகதிகளைச் சட்டவிரோத ஊடுருவல் பேர்வழிகளாகவும் தீவிரவாதிகளாகவும் சித்திரிப்பது என்ற ஆர்.எஸ்.எஸ்.−பா.ஜ.க.வின் அரசியலோடு ஒப்பிட்டுப் பார்த்தால், பொன் விடியல் கட்சியின் சித்தாந்தத்தையும் அரசியல் நடவடிக்கைகளையும் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.

ஆர்.எஸ்.எஸ். தனது அரசியல் திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ள ஒருபுறம் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க., என்றொரு அரசியல் கட்சியையும், மற்றொருபுறம் முஸ்லிம்களையும் முற்போக்கு அறிவுத்துறையினரையும் தாக்க குண்டர் படைகளையும் உருவாக்கி இறக்கிவிட்டிருப்பதைப் போலவே, பொன் விடியலும் இயங்கி வந்தது. அந்நவீன நாஜிக் கட்சி ஒருபுறம் தன்னைத் தேசியவாதக் கட்சியாகக் காட்டிக்கொள்ள தேர்தல்களில் போட்டியிட்ட அதேசமயம், மற்றொருபுறம் எகிப்திய மீனவர்களையும், தொழிற்சங்கத் தலைவர்களையும் தாக்க குண்டர் படையினைக் கட்டியிருந்தது.

பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து நடத்தப்பட்ட மே 2012 நாடாளுமன்றத் தேர்தல் அக்கட்சிக்குப் பெரும் திருப்பு முனையாக அமைந்தது. அத்தேர்தலில் பதிவான வாக்குகளில் 7.0 சதவீத வாக்குகளைப் பெற்ற அக்கட்சிக்கு 21 நாடாளுமன்ற இடங்கள் கிடைத்தன. அதன் பின் நடந்த மூன்று தேர்தல்களிலும் (ஜூன் 2012, ஜனவரி 2015, செப்.2015) இரட்டை இலக்க இடங்களை வென்றது அக்கட்சி.

பொன் விடியல் கட்சியின் நிறுவனத் தலைவர் நிகோலாவோஸ் மிக்கேலோலியாகோஸ்

இந்த அரசியல் செல்வாக்கை பொன் விடியல் கட்சி இரண்டு வழிகளில் பயன்படுத்திக் கொண்டது. போலிஸ், இராணுவம், சிவில் அதிகார வர்க்கம் மற்றும் திருச்சபைகளில் தனக்கான ஆதரவை நிறுவிக்கொண்ட அதேசமயம், இந்த ஆதரவைப் பயன்படுத்திக் கொண்டு தெருக்களில் எகிப்திய மீனவர்களையும் தொழிற்சங்கத் தலைவர்களையும் கம்யூனிஸ்டுகளையும் குறிவைத்துத் தாக்குவதைத் தீவிரப்படுத்தியது.

இத்தாக்குதல்களின் மூலம் கிரீஸ் சமூகத்தில் பாசிச பயங்கரவாத பீதியை உருவாக்க முயன்ற அதேசமயம், தேசிய வெறியைத் தூண்டிவிடுவதன் மூலம் செல்வாக்கு இழந்துவிட்ட வலதுசாரி ஓட்டுக்கட்சிகளின் இடத்தைப் பிடித்துவிடுவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது பொன் விடியல்.

கிரீஸின் கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்திற்கு பொன் விடியலின் அரசியல் எழுச்சியும் சமூகத்தில் அதன் ஆதரவு தளம் விரிவடைவதும் தேவையாக இருந்ததால், அரசு இயந்திரம் அதன் வெறுப்பு அரசியல் நடவடிக்கைகளையும் கிரிமினல் குற்றங்களையும் கண்டும் காணாமல் நடந்துகொண்டது.

நாடாளுமன்ற கம்யூனிஸ்டு கட்சிகள் பொன் விடியலின் நடவடிக்கைகளை ஆளும் வர்க்கத்திற்குள் நிலவும் முரண்பாடாகத்தான் கருதினார்களேயொழிய, பாசிச அதிகாரம் நிறுவப்படுவதை நோக்கி நாடு தள்ளப்படுவதாக அக்கட்சிகள் உணரவில்லை. தேர்தல்களுக்கு அப்பாலும் செயல்படும் புரட்சிகர கம்யூனிஸ்டுகளும் முற்போக்கு அறிவுத்துறையினரும்தான் இப்பாசிச அபாயத்தை உணர்ந்திருந்தனர்.

இந்தச் சூழ்நிலையில்தான், 2013−ஆம் ஆண்டில் ராப் பாடகர் பாவ்லோஸ் ஃபைஸாஸின் படுகொலை நடந்தது. பாவ்லோஸ் தனது இசை நிகழ்ச்சிகளில் பொன் விடியலின் குறுகிய தேசிய வெறியையும் வெறுப்புப் பேச்சுக்களையும் அம்பலப்படுத்திப் பாடி வந்தார். இந்து மதவெறிக் கும்பல் தபோல்கர், கல்புர்கி, பன்சாரே, கௌரி லங்கேஷ் ஆகியோரைப் படுகொலை செய்ததன் மூலம் தம்மை எதிர்க்கும் அறிவுத்துறையினர் மத்தியில் பீதியை உருவாக்க முயன்றதைப் போலவே பாவ்லோஸின் படுகொலையும் நடந்தது. அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றால், பாவ்லோஸ் தெருவில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.

அரசின் துணை இராணுவப் படைக்குள் ஊடுருவியிருக்கும் பொன் விடியலின் ஆதரவாளர்கள்

எனினும், நவீன நாஜிக் கும்பல் எதிர்பார்த்ததைப் போல பாவ்லோஸின் படுகொலை கிரீஸ் மக்களிடையே பீதியை உருவாக்கவில்லை. மாறாக, பொன் விடியலுக்கு எதிராகத் தொழிலாளர்கள், அறிவுத்துறையினர் மத்தியில் கனன்று கொண்டிருந்த வெறுப்பையும் கோபத்தையும் கிளறிவிட்டது. நவீன நாஜிக் கும்பல் மட்டுமின்றி, அப்பொழுது கிரீஸை ஆண்டுகொண்டிருந்த வலதுசாரி அரசாங்கமும் பாவ்லோஸின் படுகொலையை அரசியலற்ற தனிப்பட்ட படுகொலையாகக் காட்டிவிடவே முயன்றது. எனினும், இப்படுகொலைக்கு எதிராக மக்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்பின் காரணமாக அம்முயற்சியெல்லாம் தோற்றுப்போய், பாவ்லோஸின் படுகொலைக்குப் பொன் விடியலின் தலைமை மீது வழக்குத் தொடுக்கப்பட்டது.

இவ்வழக்கு மக்களின் போராட்டத்துக்குக் கிடைத்த முதல் வெற்றி என்றால், அந்நாஜிக் கும்பல் பாவ்லோஸைப் படுகொலை செய்வதற்கு முன்பாக பாகிஸ்தானிலிருந்து கிரீஸுக்குக் குடிபெயர்ந்த ஷாஸத் லுக்மானைப் படுகொலை செய்தது மற்றும் கே.கே.ஈ. என்ற இடதுசாரி தொழிற்சங்கத் தலைவர்கள் மீதும், எகிப்திய மீனவர்கள் மீதும் கொலைவெறித் தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட குற்ற வழக்குகளும் பாவ்லோஸ் படுகொலை வழக்கோடு இணைக்கப்பட்டது, மக்களுக்குக் கிடைத்த இரண்டாவது வெற்றியாகும். இம்மூன்று வழக்குகளிலும் பொன் விடியல் கட்சியின் நிறுவனத் தலைவர் நிகோலாவோஸ் மிக்கேலோலியாகோஸ் மற்றும் அக்கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டு 68 பேர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் தொடுக்கப்பட்டன.

ஏறத்தாழ ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துவந்த இந்த வழக்கில் முதல் இரண்டு ஆண்டுகள் முழுவதும் நாஜிக் கும்பலின் கையே ஓங்கியிருந்தது. குறிப்பாக, அதிகார வர்க்கத்திலும், அரசிலும் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்திக் கொண்டும், நீதிமன்ற வளாகத்திற்குள்ளும் வெளியேயும் பாசிச குண்டர்களைத் திரட்டி வந்து பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக வாதாடி வந்த வழக்குரைஞர்களையும் சாட்சிகளையும் அச்சமூட்டுவதன் வழியாகவும் வழக்கை நீர்த்துப் போகச் செய்ய முயன்றது.

எனினும், இடதுசாரி தொழிற்சங்கங்கள் மற்றும் முற்போக்கு அறிவுத்துறையினர் இவ்வழக்கையொட்டி கிரீஸெங்கும் நடத்திய ஆர்ப்பாட்டங்களும், கருத்தரங்குகளும் வழக்கை முறையாக நடத்தவில்லையென்றால், அது பொதுமக்களின் கிளர்ச்சிக்கு வழிவகுத்துக் கொடுத்துவிடும் என்ற நிர்பந்தத்தை அரசாங்கத்திற்கு உருவாக்கின. குறிப்பாக, வழக்கு விசாரணையின்போது நாஜிக் கும்பலின் கிரிமினல் குற்றங்களுக்கு எதிராகக் கிடைத்த ஒவ்வொரு சாட்சியத்தையும் பொதுமக்களின் மத்தியில் பிரச்சாரமாகக் கொண்டு சென்றதன் மூலம், அந்நாஜிக் கும்பலை ஆதரித்துவந்த பிரிவினர்கூட அவர்களைக் கைவிடும் நிலையை உருவாக்கின. இதன் காரணமாக 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்நாஜிக் கட்சி ஒரு இடத்தைக்கூட வெல்லமுடியாமல் தோல்வியைத் தழுவியது. மேலும், பல்வேறு நகரங்களில் அது தனது அலுவலகங்களைக் கைவிடக்கூடிய நிலையும் ஏற்பட்டது.

இவ்வழக்கு விசாரணை நடந்துவந்த சமயத்தில் கிரீஸின் அரசியல் களத்தில் இரண்டு மாற்றங்கள் நடந்தன. 2015−ஆம் ஆண்டு ஜனவரியிலும், செப்டெம்பரிலும் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் இடதுசாரிக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. 2019−ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலோ வலதுசாரிக் கட்சியான புதிய ஜனநாயகம் பெரும்பான்மை பெற்று ஆட்சியில் அமர்ந்தது.

இதன் பின் இக்குற்ற வழக்குகளில் இருந்து நாஜித் தலைவர்களைக் காப்பாற்றும் முயற்சியாக, ‘‘இக்கிரிமினல் குற்ற வழக்குகளுக்கும் பொன் விடியல் கட்சித் தலைமைக்கும் தொடர்பில்லை’’ என அரசு வழக்குரைஞரை வாதாட வைத்தது, வலதுசாரி அரசு. எனினும், அந்நாஜிக் கட்சியின் சித்தாந்தத்திற்கும் இப்படுகொலைகளுக்கும் தாக்குதல்களுக்கும் உள்ள தொடர்பை பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக வாதாடிய வழக்குரைஞர்கள் பல்வேறு சாட்சியங்களின் வழியாக நிரூபித்ததை நீதிமன்றத்தால் மறுக்க இயலவில்லை. மேலும், நாஜிக் குற்றக் கும்பலுக்கு எதிரான இவ்வழக்கை ஐரோப்பாவின் மற்ற நாடுகளைச் சேர்ந்த முற்போக்கு−ஜனநாயக சக்திகளும் ஆதரித்து இயக்கங்களை எடுத்து வந்ததால், சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்திக் கொண்டு நாஜிக் குற்றவாளிகளுக்கு ஆதரவாகத் தீர்ப்பளிக்க முடியாத நிலை கிரீஸில் உருவாகியிருந்தது.

இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நவீன நாஜி கிரிமினல்கள் அனைவரும் கொலை உள்ளிட்ட கிரிமினல் குற்றங்களுக்காக மட்டும் தண்டிக்கப்படவில்லை. பொன் விடியல் கட்சி என்ற பெயரில் ஒரு நாஜி குற்றக் கும்பலை நடத்தி வந்தனர் என்ற அடிப்படையிலும் தண்டிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, இக்கட்சியின் நிறுவனத் தலைவர் மற்றும் ஆறு செயற்குழு உறுப்பினர்களுக்கு, நாஜி சித்தாந்த அடிப்படையில் குற்றக் கும்பலை இயக்கி வந்தனர் என்ற குற்றத்திற்காக 15 ஆண்டு கால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முற்போக்கு ராப் பாடகர் பாவ்லோஸைக் கொன்ற நாஜி குற்றவாளிக்கு ஆயுட்கால சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. கிரீஸில் தஞ்சமடைந்திருக்கும் எகிப்திய மீனவர்களைத் தாக்கிய குற்றவாளிகளுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த குற்றக் கும்பலில் உறுப்பினராக இருந்தனர் என்ற அடிப்படையில் மற்ற குற்றவாளிகளுக்கு ஐந்து முதல் பத்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

இட்லரின் நாஜிசம் மற்றும் முசோலினியின் பாசிச சித்தாந்தங்களால் இனப்படுகொலையையும் கொடூர அடக்குமுறைகளையும் சந்தித்த ஐரோப்பிய நாடுகளில் பாசிசத்திற்கு எதிரான சட்டங்கள் இருந்தாலும், நவீன நாஜிசத்திற்கு எதிராக கிரீஸ் மக்களின் உணர்வுபூர்வமான போராட்டமும், அதனை ஆதரித்ததோடு தலைமையேற்றும் நடத்திய முற்போக்கு அறிவுத்துறையினர், தொழிற்சங்கங்கள் மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் பங்களிப்பும் இல்லையென்றால் பாசிசத்திற்கு எதிரான இந்தச் சிறிய வெற்றிகூட சாத்தியப்பட்டிருக்காது.

***

கிரீஸோடு இந்தியாவை ஒப்பிட்டால் இங்குள்ள நிலைமைகள் அனைத்துமே தலைகீழாக இருக்கின்றன. அத்வானியின் ரத யாத்திரையின் போது நடத்தப்பட்ட முஸ்லிம் எதிர்ப்புக் கலவரங்கள், பாபர் மசூதி இடிக்கப்பட்டதையடுத்து நடந்த மும்பய் இந்து மதவெறிக் கலவரம், 1990−களின் இறுதியில் நடந்த கோவை கலவரம், 2002−இல் குஜராத்தில் நடந்த முஸ்லிம் இனப் படுகொலை, பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்கள் தாக்கப்படுவது, பன்சாரே, கௌரி லங்கேஷ், தபோல்கர் மற்றும் கல்புர்கி படுகொலைகள், மாலேகான், சம்ஜௌதா குண்டு வெடிப்புகள் எனக் கடந்த முப்பது ஆண்டுகளில் சங்கப் பரிவாரக் கும்பலால் நடத்தப்பட்ட ஒவ்வொரு படுகொலையிலும், பயங்கரவாத கிரிமினல் குற்றங்களிலும் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ்.−பா.ஜ.க. தலைவர்களுள் ஒருவர்கூட நீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை.

கிரீஸ் நீதிமன்றம், பொன் விடியல் கட்சியை நாஜி குற்றக் கும்பல் என முத்திரை குத்தி அதன் தலைவர்களைத் தண்டிக்கிறது. இந்திய நீதிமன்றங்களோ இந்து மதவெறி பாசிஸ்டுகளின் கொள்கைகளையும் சித்தாந்தங்களையுமே தீர்ப்புகளாக பாபர் மசூதி நில உரிமை வழக்கிலும், பாபர் மசூதி இடிப்பு வழக்கிலும் வழங்கின.

கிரீஸில் பொன் விடியல் கட்சிக்கு எதிரான வழக்குகள் ஒன்றாக இணைக்கப்பட்டு நடந்ததென்றால், இந்தியாவிலோ குஜராத் முஸ்லிம் இனப் படுகொலை வழக்குகள் இந்து மதவெறி பாசிஸ்டுகளுக்குச் சாதகமாகத் தனித்தனி வழக்குகளாக விசாரிக்கப்பட்டு இழுத்தடிக்கப்படுகின்றன. இந்த இனப்படுகொலையில் மோடியின் பாத்திரம் குறித்து, உச்சநீதி மன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு மோடிக்கு யோக்கியன் பட்டத்தைக் கொடுத்தது. உச்சநீதி மன்றமும் அதனை அங்கீகரித்தது.

பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் இந்து மதவெறிக் கும்பலால் அப்பாவி முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல்கள் ஒவ்வொன்றிலும் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களே குற்றவாளிகளாக வழக்கில் சேர்க்கப்பட்டனர்.

படிக்க :
♦ சட்டப்பூர்வமாகும் பசுப் பாதுகாப்பு காவி குண்டர் படை !
♦ பாஜக மாநிலங்களில் அமல்படுத்தப்படும் பசுப் பாதுகாப்பு சட்டங்கள் !

அதிகார வர்க்கம், போலிஸ், நீதித்துறை உள்ளிட்ட அரசு இயந்திரம் இந்து மதவெறி பாசிசக் கும்பலுக்குச் சாதகமாக மட்டுமின்றிக் கைத்தடியாக நடந்து வருவது பல்வேறு வழக்குளில் வழியே அம்பலமாகியிருப்பது எந்தளவிற்கு உண்மையோ, அதே அளவிற்கு இவ்வழக்குகளில் நீதி மறுக்கப்பட்டு பாசிச குற்றவாளிகள் விடுதலை செய்யப்படும்போது சட்டப்பூர்வ எதிர்க்கட்சிகளும் இந்திய மக்களும் அமைதி காத்து அல்லது வெறும் அறிக்கை போரை நடத்திவிட்டு ஒதுங்கிக் கொண்டுவிடுவதையும் நாம் காணவே செய்கிறோம்.

இந்து மதவெறி பாசிச கும்பலுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்குகளில் குற்றவாளிகளைத் தண்டிக்கக் கோரிப் பெரும் மக்கள் திரள் போராட்டங்கள் இந்தியாவில் நடந்திருக்கிறதா? பாபர் மசூதி நில உரிமை வழக்கிலும் பாபர் மசூதி இடிப்பு வழக்கிலும் தீர்ப்பு என்ற பெயரில் மாபெரும் அநீதி இழைக்கப்பட்டபோது, அதனை எதிர்த்தும் கண்டித்தும் போராடிய அமைப்புகளை விரல்விட்டு எண்ணிவிடலாம் இல்லையா!

இந்து மதவெறி பாசிஸ்டுகளை அரசியல் களத்தில் வீழ்த்துவது கிடக்கட்டும், தனிமைப்படுத்தித் தண்டிக்க வேண்டுமென்றாலும், இந்திய மக்கள் இந்து மதவெறி பாசிச எதிர்ப்பு அரசியலின் கீழ் அமைப்புரீதியாக அணிதிரட்டப்பட வேண்டும். இதனைச் சாதிக்கும் சித்தாந்தத் திறன் கொண்ட புரட்சிகர−ஜனநாயக சக்திகளோ பலவீனமாக உள்ளன. இடதுசாரிக் கட்சிகளால் வழிநடத்தப்படும் தொழிற்சங்கங்களோ தமது பொருளாதாரக் கோரிக்கைகளுக்கான போராட்டங்களுக்கு அப்பால் செல்ல மறுக்கின்றன.

நாடாளுமன்ற இடதுசாரிக் கட்சிகளும் அறிவுத்துறையினரும் முதலாளித்துவக் கட்சிகளோடு கூட்டுச் சேர்ந்து தேர்தல்களில் பா.ஜ.க.வை வீழ்த்துவதை மட்டுமே தமது அரசியல் நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றனர். இந்திய அரசியல் அரங்கில் காணப்படும் இந்தப் பலவீனங்கள்தான் ஆர்.எஸ்.எஸ். − பா.ஜ.க. கும்பலின் பலமாகும்.

செல்வம்

புதிய ஜனநாயகம் டிசம்பர் 2020 மின்னிதழ் தரவிறக்கம் செய்ய : இங்கே அழுத்தவும்

நூல் அறிமுகம் : பன்னாட்டுச் சந்தையில் பாரத மாதா || மு. சங்கையா | காமராஜ்

ந்திய நாட்டு ஆட்சியாளர்கள் உலகம் முழுவதும் திவாலாகிப் போன தாராளவாத கொள்கைகளை தீவிரமாக நடைமுறைப்படுத்துவதால் நமது நாட்டில்  ஏற்பட்டுள்ள தீய விளைவுகளை இந்த நூலில் தோழர் சங்கையா சிறப்பாக அம்பலப்படுத்தியுள்ளார்.

“உலக வங்கி ஓர் அறிமுகம்” என்ற முதல் கட்டுரையில் இருந்து 21 தலைப்புகளில் எண்ணற்ற புள்ளிவிவரங்களில் ஏராளமான தகவல்கள், வரலாற்று சான்றாதாரங்கள் ஆகியவற்றின் மூலம் உலக வங்கி தோன்றிய விதம்,  முதல் உலக வர்த்தக நிறுவனம் உருவான கதை, பெருவணிகம் முதல் சில்லறை வர்த்தகத்தில் கூட வால்மார்ட் நுழைந்த கதை, அன்னிய நேரடி முதலீடு நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறு ஆக்கிரமித்துள்ளது என்பதைப் பற்றியும், நீர் வளம், நிலவளம், கனிம வளம், வனவளம், இந்திய நாட்டின் இயற்கை செல்வங்கள் அனைத்தையும் கார்ப்பரேட் கும்பல் கபளீகரம் செய்து வருகிறது என்பதைப் பற்றி சரியான  விவரங்களோடு சான்றாதாரங்களை முன்வைத்து ஒரு பாட்டாளி வர்க்க பார்வையோடு இந்த நூல் எழுதப்பட்டிருக்கிறது.

விவசாயம் – மருத்துவம் – உயர்கல்வி சகல துறைகளிலும் கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை இந்த நூல் அலசுகிறது. கார்ப்பரேட் கம்பெனிகளின் அரசியல் அதிகாரம் எந்தஅளவுக்கு வளர்ந்துள்ளன என்பதை நூலில் உள்ள கட்டுரைகள் நமக்கு தெளிவுபட கூறுகிறது.

படிக்க :
♦ நூல் அறிமுகம் :- ஆர்.எஸ்.எஸ்: இந்து தீவிரவாத கட்டமைப்பின் வேர்
♦ நூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா | காமராஜ்

கார்ப்பரேட் நிறுவனங்கள் எத்தகைய அநியாயத்தையும் துணிந்து செய்யக் கூடியவர்கள். கொள்ளை இலாபம் கிடைக்கும் என்றால் எவ்வளவு பேரையும் கொல்ல தயங்கமாட்டார்கள், என்பதை இந்நூலில் ஆதாரத்தோடு அம்பலப்படுத்தி உள்ளார் தோழர் சங்கையா.

“ஒளிராத இந்தியா “என்ற கட்டுரையில் அரசு பொதுத்துறை நிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு அன்னிய நிறுவனங்களிடம் தாரைவார்த்துக் கொடுத்த பாரதிய ஜனதா கட்சியின் “ஒளிர்கிறது இந்தியா” என்ற முழக்கம் எவ்வளவு பித்தலாட்டம் ஆனது என்பதை தோலுரித்துக் காட்டியுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் மதவாத அரசியலில் இருந்து காங்கிரஸ் கட்சி வேறுபட்டு இருப்பதாக கணித்த இடது வலது கம்யூனிஸ்ட் கட்சிகள் அவர்களின் 61 பாராளுமன்ற உறுப்பினர்களும் முற்போக்கு கூட்டணி அரசை தாங்கிப்பிடிக்கும் தூண்களாக மாறினர். பொன்மான் வேடமிட்டு வந்திருக்கும் டாக்டர் மன்மோகன் சிங் ஒரு பொய்மான் என்பதை கூட உணராதவர்களாக இருந்தனர். பாசிச பாஜக கும்பலுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் பொருளாதாரக் கொள்கையில் எந்த வேறுபாடும் இல்லை, அதை இந்த கட்டுரையில் நூல் ஆசிரியர் ஆணித்தரமாக நிறுவியுள்ளார்.

கட்டுப்பாடு எதுவும் இல்லாமல் நமது நாட்டில் கடை பரப்பிய பன்னாட்டு தேசங்கடந்த கார்ப்பரேட் தொழில்நிறுவனங்கள், மத்திய ஆட்சியாளர்களின் கொள்கைகள் இவற்றின் விளைவாய் நாட்டு மக்களின் வருவாயில் உள்ள ஏற்றத்தாழ்வு மலைக்கும் மடுவுக்குமான இடைவெளியை போல அதிகரித்துள்ளது. உலகமயத்தின் வரவால் இந்திய தரகு முதலாளிகளின் அசுர வளர்ச்சியும், விரல்விட்டு எண்ணத்தக்க புதிய பணக்காரர்களின் பெருக்கமும், இந்தியாவில் ஏழ்மையை, ஊழலை, லஞ்சத்தை, வேலையில்லா திண்டாட்டத்தை பன்மடங்கு அதிகரிக்கச் செய்துள்ளது என்ற விவரங்களை எளிய முறையில் விறுவிறுப்பாக இந்நூலில் விளக்கியுள்ளார்.

தண்ணீர்! தண்ணீர்! என்ற கட்டுரையில் தண்ணீர் மனிதர்களுக்கும், அனைத்து உயிரினங்களுக்கும்,  தாவரங்களுக்கும் இயற்கை கொடுத்த கொடை. அது பயன் மதிப்பு உள்ளது, தண்ணீர் பரிவர்த்தனை பண்டம் அல்ல. காற்றைப்போல், சூரிய ஒளியைப் போல் புவிக் கோளத்தின் வாழ்கின்ற அனைவருக்கும் பொதுவானது. உலக முதலாளித்துவம் தண்ணீரை சரக்காக, விற்பனைப் பண்டமாக மாற்றி சந்தையிலே முன் நிறுத்தி வெற்றி பெற்றுள்ளது. உலக வர்த்தக அமைப்பு,  வர்த்தகம் மற்றும் சேவை சம்பந்தமான பொது ஒப்பந்த விதிகளில் (General Agreement on Trade and services) தண்ணீரையும் ஒரு பண்டமாக தனது திட்டத்தில் சேர்த்துக்கொண்டது. தேவையான சான்றாதாரங்கள் அனைத்தையும் இந்தக் கட்டுரையில் முன்வைத்து கார்ப்பரேட் கும்பலின் மனிதகுல விரோத தண்ணீர்க் கொள்ளையை அம்பலப்படுத்தியுள்ளார்.

ஆற்று வளங்களையும், நீர் ஆதாரங்களையும் கார்ப்பரேட் கும்பல் எவ்வாறு கபளீகரம் செய்து உள்ளது என்ற விவரங்களை ஆறுகள் விற்பனைக்கு…… என்ற கட்டுரையில் பல்வேறு தரவுகளோடு நிறுவியுள்ளார்.

வன வேட்டை……. என்ற கட்டுரையில் இயற்கையின் அற்புதக் கொடைகள் ஆன காடு, மலை,  நதி, தாதுமணல், ஆற்று மணல் என இந்தியாவின் இயற்கைச் செல்வங்கள் அனைத்தையும் கார்ப்பரேட் குழும நிறுவனங்களுக்கு தாரை வார்த்துவிட்ட, ஆட்சியாளர்கள் நாட்டின் வளங்களையும் ஒன்றைக்கூட விட்டுவைக்கவில்லை.

பழங்குடியினர் அடிப்படையில் வனவாசிகள், காடுகளே அவர்களது வாழ்வாதாரம்; தேன்,  பழங்கள், இலை, மூலிகைகள் அவற்றை சேகரிப்பது வேட்டையாடுவது, விவசாயம் என்று எளிய வாழ்க்கை வாழ்பவர்கள்.

படிக்க :
♦ நூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி
♦ ஆர்.எஸ்.எஸ். உருவாக்கிய இந்து நம்பிக்கை !

20 லட்சம் கோடி மதிப்புள்ள கனிம வளங்களை கபளீகரம்செய்வதற்காக கார்ப்பரேட் கொள்ளையர்கள் மலைவாழ் மக்களை அவர்களது வாழ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்துவதற்காக, அவர்களது வாழ்வாதாரத்தை நாசம் செய்வதற்காக கார்ப்பரேட் நிறுவனங்களும், அரசும், கூலிப்படையும் இடைவிடாத தாக்குதலை  எளிய மக்கள் மீது நடத்திக்கொண்டிருக்கிறார்கள். மாவோயிஸ்ட் புரட்சியாளர்கள் மலைவாழ் மக்களின் வாழ்க்கை ஆதாரத்தை பாதுகாக்க களத்தில் நின்று போராடி வருகிறார்கள்.

மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தில் இருந்து அன்னியப்படுத்தி,  ஆதிவாசி மக்களை அப்புறப்படுத்துவதற்காக பசுமை வேட்டை என்ற  கொடிய போர் நடத்தப்படுகிறது. சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியினர்  அவர்களது வாழ்வாதாரத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுஅகதி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஜிண்டால், மிட்டல், எஸ்ஸார் குழுமம், வேதாந்தா, டாட்டா போன்ற பெரும் குழும நிறுவனங்கள் வன வளங்களை கைப்பற்றுவதற்கான போட்டியில் இறங்கியுள்ளன. என்ற விவரங்களை இந்த கட்டுரையில் தெளிவாக விளக்கியுள்ளார்.

தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்ற கொள்கைகள் பொருளாதார மட்டத்தில்தான் ஆட்சி செலுத்துகிறது என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. அவற்றின் சமூக விளைவுகள் மிகவும் அபாயகரமானவை. இந்தக் கொள்கைகளின் விளைவாய் வேலை இல்லாத் திண்டாட்டம் முன்னெப்போதையும்விட பன்மடங்கு அதிகரித்துள்ளது. மத வெறி, சாதி வெறி, இன வெறி போன்ற பாசிசத்திற்கான விதைகளின் விளைநிலமாக இந்தியா மாற்றப்பட்டுள்ளது.

கார்ப்பரேட் காவி பாசிசக் கும்பல் விரும்பும் எதிர் புரட்சியை  தாராளமய பொருளாதாரக் கொள்கைகள் விரைவுபடுத்தி வருகிறது. இன்றைய நெருக்கடியின் தோற்றுவாய் எது? தாராளமய கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வருவதால் இந்திய சமூக பொருளாதார நிலை எவ்வாறு பாதித்துள்ளது? நெருக்கடியில் இருந்து மீள்வது எப்படி? போன்ற பல்வேறு வினாக்களுக்கு “பன்னாட்டு சந்தையில் பாரதமாதா “என்ற இந்த நூல் விடை அளிக்க முயற்சி செய்துள்ளது.

பல்வேறு தரவுகள், சான்றாதாரங்கள், புள்ளிவிவர அட்டவணைகள்  ஆகியவற்றை தொகுத்துத் தந்திருப்பது இந்த நூலின் சிறப்பு. சொல்ல வேண்டிய செய்திகளை எளிய முறையில் விறுவிறுப்பாக நூலில் சங்கையா விளக்கியுள்ளார். சாமானிய மக்களின் வாழ்வாதாரங்களை பாதுகாக்க நாடாளுமன்றத்திற்கு வெளியே சக்தி மிக்க மக்கள் தொடர் போராட்டங்களை கட்டமைக்க வேண்டிய காலத்தின் அவசியத்தை இந்த நூல் உணர்த்துகிறது.

கார்ப்பரேட் பாசிச கும்பலின் பொருளாதார அடிப்படையை புரிந்து கொள்ள நூல் பெரிதும் பயன்படும். ஆளும் வர்க்கம் தங்களின் பொருளாதார நெருக்கடியை பரந்துபட்ட உழைக்கும் மக்களின் மீது திணிக்கிறது. பெரும்பான்மையான மக்களின் வாழ்வாதாரம் மிகப்பெரும் கேள்விக்குறியாகி நிற்கிறது.

நாட்டை நாசம் செய்யும் இந்த கொள்கைகளை தடுத்து நிறுத்த, சமூக மாற்றத்திற்காக போராடும் பாட்டாளி வர்க்கத்திற்கு வலிமையான கருத்து ஆயுதமாய் இந்த நூல் பயன்படும்.

நூலாசிரியர் குறிப்பு :

தோழர் மு.சங்கையா, பிஎஸ்என்எல் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சங்கத்தின் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். இவரது முதல் படைப்பான “லண்டன் ஒரு பழைய சாம்ராஜ்யத்தின் அழகிய தலைநகரம்” என்ற பயணக் கட்டுரை நூலுக்கு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் 2013 சிறந்த பயண இலக்கியம்  என்றவிருதைப் பெற்றது.

நூல் : பன்னாட்டுச் சந்தையில் பாரத மாதா
ஆசிரியர் : எம். சங்கையா
பதிப்பகம் : வாசிப்போர் களம்
தொடர்புக்கு : 94861 00608
விலை : ரூ. 225
பிரதிகளுக்கு :  வாசிப்போர் களம், மதுரை.
அலைபேசி: 94861 02431

நூல் அறிமுகம் : எஸ் காமராஜ்,
மாநிலத் துணைச் செயலாளர் – அகில இந்திய பிஎஸ்என்எல் அதிகாரிகள் சங்கம், ஆலோசகர் – தேசிய தொலைதொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கம்

disclaimer

போராட்டங்களின் நோக்கம் || உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்த பார்வை !

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லியின் ஷாஹீன் பாக் பகுதியில் முஸ்லீம்களும், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட ஜனநாயக சக்திகளும் இணைந்து நடத்திய போராட்டம் குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு, நகரத்தின் இயக்கத்திற்கு முன்னுரிமை அளித்து, மக்களின் போராட்ட உரிமையைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது. தங்களின் வாழ்வுரிமை மற்றும் வாழ்வாதாரங்கள் பறிக்கப்படுவதை எதிர்த்துப் பொதுமக்களும், ஜனநாயக, புரட்சிகர இயக்கங்களும் முன்னெடுக்கும் போராட்டங்களுக்குச் சட்டம்ஒழுங்கைக் காட்டி அதீதமான தடைகள், கட்டுப்பாடுகளை விதித்துவரும் அரசுக்கும், போலீசுக்கும் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் இத்தீர்ப்பு மிகப்பெரும் சலுகையாகும்.

இத்தீர்ப்பை விமர்சித்து டெல்லி பல்கலைக்கழகத்தில் இந்தி மொழி ஆசிரியராகப் பணியாற்றிவரும் ஆபூர்வானந்த் ஆங்கில இந்து நாளிதழில் (அக்.13, 2020) எழுதிய கட்டுரை பு.ஜ. வாசகர்களுக்காகச் சுருக்கி வெளியிடப்படுகிறது.

ஆசிரியர் குழு, புதிய ஜனநாயகம்

*****

ஷாஹீன் பாக் போராட்டம் நமக்குக் கடந்த கால நிகழ்வு அன்று. டெல்லி − ஷாஹீன் பாக் போராட்டம் குறித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த சமீபத்திய உத்தரவானது, மக்களைச் சட்டபூர்வமாகவே மென்மேலும் அடிபணிய வைப்பதற்கு அரசுக்கு அல்லது அரசாங்கத்திற்கு உதவும். ‘‘சுயாதிபத்தியமிக்க ஜனநாயக ஆட்சியில் (Self−ruled democracy) நடக்கும் போராட்டங்களைக் காலனிய காலத்தில் அரசை எதிர்த்து நடந்த போராட்டபாணி மற்றும் வழிமுறைகளுடன் ஒருபோதும் சமப்படுத்த முடியாது’’ என்ற ஆபத்தான கருத்தைக் கூறியுள்ளது, உச்ச நீதிமன்றம்.

இங்கு சொல்லப்பட்டுள்ள சுயாட்சி (Self ruled) என்பது ஒரு கண்ணி.

பேராசிரியர் அபூர்வானந்த்.

காலனியாக்கும் சபலம் பிரிட்டிஷாருக்கு மட்டுமே உரித்தானதல்ல. அரசானது தன்னளவிலேயே அச்சுறுத்தி நிர்பந்தப்படுத்தக் கூடியதாக இருக்கும் போது, மக்கள் தங்களது இறையாண்மையைப் பறிகொடுத்து விடாமலிருக்க எந்நேரமும் மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு இருக்க வேண்டியுள்ளது. இந்த சுயாட்சியில், சுயம் என்பவர் யார் என்ற கேள்வியை எழுப்ப வேண்டிய நிர்பந்தத்தில் நாம் இருக்கிறோம். இந்த சுயம் அல்லது சுயாட்சி நமது பன்முகத் தன்மையை உள்ளடக்கிய ஒன்றா?

சமத்துவத்தை மீட்டெடுப்பதற்கான முயற்சி

அதிகாரத்தை எதிர்த்து நிற்பது அல்லது போராடுவது என்பது குடியுரிமையின் அல்லது பொதுமக்கள் திரளின் உள்ளார்ந்த அம்சம். உத்தரவுகள் இடுவதற்காகப் போராட்டங்களைக் கட்டமைக்க முடியாது. போராட்டங்கள் என்பது பேச்சுரிமையின் செயல்வடிவம். என்ன பேச வேண்டும், எப்படிச் சொல்ல வேண்டும் என்பதை நீங்களும், நானுமே முடிவு செய்ய முடியும். இவ்விடயங்களில் உங்களுக்கோ அல்லது எனக்கோ ஆணையிடுவதற்கு அரசாங்கத்தை அனுமதிக்க முடியாது. ஆனால், உச்ச நீதிமன்றமோ கெடுவாய்ப்பாக ஷாஹீன் பாக் போராட்டத்தின் சரியான தன்மை மீதான தனது தீர்ப்பின் மூலம் இதைத்தான் செய்ய முயற்சித்திருக்கிறது.

நீங்கள் பேசும்போது, அதனை மனதாரக் கேட்பவர் இருக்க வேண்டுமென எதிர்பார்ப்பீர்கள். ஆனால்,  உரையாடலுக்கான சூழல் இல்லாத நிலையின் காரணமாகவே போராட்டங்கள் நடைபெறுகின்றன. பேச்சுவார்த்தை சமத்துவத்தை முன்தேவையாகக் கோருகிறது. மக்கள், தாம் சமத்துவமற்ற சூழலுக்குள் தள்ளப்படுகிறோம் என உணருவதன் காரணமாகவே போராடுகிறார்கள். போராட்டங்கள்  சமத்துவத்தைப் பெறுவதற்கான அல்லது மீட்டெடுப்பதற்கான முயற்சியே!

போராட்டங்கள் நெருக்கடியை உருவாக்குவதில்லை. அரசாங்கங்கள் சட்டப்பூர்வமாகவே பாரபட்சமான சட்டங்களை நிறைவேற்றுவதன் வழியாக நெருக்கடியை உருவாக்குவதால்தான், போராட்டங்கள் எழுகின்றன. போராட்டங்கள் சமூகத்தின் சமநிலையைக் குலைப்பதில்லை. மாறாக, சமநிலை குலைக்கப்பட்டதால்தான் போராட்டங்கள் வெடிக்கின்றன. சமூகத்தின் சமநிலையைக் குலைக்கும் வண்ணம் குடியுரிமைச் சட்டத்திருத்தம் 2019 உருவாக்கப்பட்டிருப்பது உண்மையில்லையா? அச்சட்டத்தின் உள்ளார்ந்து இருக்கும் தீவிரமான பாரபட்ச உணர்வுதான் முஸ்லிம்களை மட்டுமல்ல, இதர பிரிவினரையும் வீதிக்குக் கொண்டு வந்தது.

போலீசின் செயல்பாடு

இந்தச் சட்டம் முஸ்லிம்களை மட்டும் சிறுமைபடுத்தவில்லை. பாரபட்சத்தையும், அசமத்துவத்தையும் சட்டபூர்வமாக்கியதன் மூலம் இந்தியாவை இழிவுபடுத்துகிறது. அங்கிருந்த போராட்டக்காரார்கள் தங்களுக்கான உரிமைகளுக்காக மட்டும் போராடவில்லை, அனைவரின் நலன் என்ற உலகு தழுவிய கொள்கைக்காகவும் போராடினார்கள்.

முஸ்லிம்களும், சமத்துவமுள்ள குடியுரிமை என்ற கோட்பாட்டில் நம்பிக்கையுள்ளவர்களும் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்ய வீதியில் இறங்கியபோது, போலீசால் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கப்பட்டார்கள். இப்பிரச்சினையைக் கூர்ந்து கவனிப்பவர்கள்,போலீசின் இரக்கமற்ற கொடூரத்தை உத்திரப் பிரதேசத்திலும், ஜாமியா மிலியா இஸ்லாமியாவிலும் மற்றும் அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்திலும் கண்டனர். சட்ட ஒழுங்கைப் பேணுவதற்காக அல்லாமல், போராட்டக்கார்களுக்குப் பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும் எனும் நோக்கிலேயே போலீசு நடவடிக்கை எடுக்கப்பட்டது.   உத்தரப்பிரதேச மாநில முதல்வர்  யோகி ஆதித்யநாத், போராடியவர்களைப் பொறுக்கிகளைப் போல் நடத்தியதோடு, ‘வன்முறை’யில் ஈடுபட்டோரைப் பழிவாங்குவேன் என வன்மத்தையும் கக்கினார்.

டெல்லியில் நடந்த தொடர் போராட்டத்தின் போது குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக முழங்கும் மூதாட்டி.

மூத்த வழக்குரைஞர்கள் இந்திரா ஜெய்சிங்கும் காலின் கன்ஸால்வஸும் போராட்டக்காரர்கள் மீதான போலீசு நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் உச்ச நீதிமன்றத்தை அணுகிய போது, ‘‘தெருவில் நடக்கும் வன்முறைகள் முதலில் நிறுத்தப்பட வேண்டும்’’ என்றது அந்நீதிமன்றம்.  இதன் மூலம் நீதிமன்றம் மக்களின் போராடும் உரிமையை நிராகரித்ததோடு, மக்களையும் கைவிட்டது.

இத்தகைய சாத்தியமற்ற சூழல்தான் கற்பனைத் திறன்மிக்கதான ஷாஹீன் பாக் போராட்டத்தை வழிநடத்தியது. போராட்டக்காரர்கள், தலைநகரின் மையத்தில் அமையாத புறநகர்ப்பகுதியில் ஓர் இடத்தை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானது பற்றி நீதிமன்றம் எண்ணியிருக்க வேண்டும் என மிகச் சரியாகவே அவதானிக்கப்பட்டிருக்கிறது.

நாடெங்கிலும் நடந்த பல ஷாஹீன் பாக் போராட்டங்கள் கொண்டாடப்பட்ட அதேசமயம், இந்திய சமூகத்தின் மற்ற பிரிவினர் போராடக்கூடிய இடங்கள், இந்திய முஸ்லிம் பெண்களுக்குப் பாதுகாப்பற்றதாக, வசதியற்றதாக இருக்கும் சூழலைப் பற்றி உச்ச நீதிமன்றம் சிந்தித்திருக்க வேண்டாமா? சமூகத்தில் மிகப்பெரும் நம்பிக்கையின்மை நிலவி வருவதோடு, அந்த நம்பிக்கையின்மையை இந்த இந்துப் பெரும்பான்மை அரசு மென்மேலும் தீவிரப்படுத்தி வருவதுதான் ஷாஹீன் பாக் தேர்வானதற்குக் காரணமாகும்.

இரு உரிமைகளின் சமன் நிலை

ஷாஹீன் பாக் போராட்டத்தாலும், அப்போராட்டத்தால் அப்பகுதி சாலைகளைப் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டதாலும், தனது நடமாடும் உரிமை முடக்கப்பட்டதாக மூக்கைச் சிந்திய யாரோ ஒரு குடிமகன் தாக்கல் செய்த மனுவைத்தான் உச்ச நீதிமன்றம் விசாரித்தது. நடமாடும் உரிமையையும் போராடும் உரிமையையும் சமப்படுத்திய உச்ச நீதிமன்றம், அவையிரண்டுக்கும் இடையே ஒரு சமநிலை இருக்க வேண்டுமெனக் கருதியது. நீண்ட நாள் போராட்டம் போக்குவரத்து நெரிசல்களை உருவாக்குவதோடு, மக்களின் நடமாடும் உரிமையை மீறுவதாக உள்ளது என நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள வைக்கப்பட்டது.

போராட்டத்தின் காரணமாக போக்குவரத்து  தடைப்பட்டதா அல்லது டெல்லி மற்றும் உத்தரப்பிரதேச போலீசார் தலைநகருக்குச் செல்லும் மாற்றுப் பாதைகளை முற்றிலும் முடக்கியதால் போக்குவரத்து நெரிசல் உருவானதா என்பதைக் கண்டறிய வேண்டிய தேவையை நீதிமன்றம் உணரவில்லை. குறிப்பிட்ட சாலைகளை முடக்கி, பாதசாரிகளுக்கு ஏன் அசௌகரியத்தை உருவாக்குகிறீர்கள் என்ற கேள்வியை நீதிமன்றம் போலீசிடம் கேட்கவில்லை. போராட்டம் நடந்துவந்த சமயத்தில் இக்கேள்வி கேட்கப்பட்டபோது, இக்கேள்விக்குப் ‘‘பாதுகாப்பு நடவடிக்கை’’ என போலீசு பதில் அளித்திருந்தது.

படிக்க :
♦ டெல்லி சலோ : தன்னெழுச்சி அல்ல ! வர்க்கரீதியாக அணி திரட்டப்பட்ட விவசாயிகளின் பேரெழுச்சி !
♦ டெல்லி விவசாயிகள் மீதான ஒடுக்குமுறையை நிறுத்து ! மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்

போராட்டக்காரர்களுக்கு எதிரான பகைமை உணர்வைப் பிறரிடம் உருவாக்குவதற்காக இப்பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படவில்லையா? போராடுபவர்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டுவதற்கான புத்திசாலித்தனமான நடவடிக்கையாக இது கையாளப்படவில்லையா? சமுகத்தின் ஒரு பிரிவினருக்கு எதிராக இன்னொரு பிரிவினரை போலீசு ஏன் திருப்பி விடவேண்டும்?

போராட்டத்தைக் கைவிடுவதற்குப் போராட்டக்காரர்களை இணங்கச் செய்ய மத்தியஸ்தர்களை அனுப்பி வைப்பதுதான் சரியானது என முடிவு செய்த உச்ச நீதிமன்றம், ‘‘நீங்கள் போராட்டக்காரர்களுடன் ஏன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை, உங்களின் அமைச்சர்கள் போராட்டக்காரர்களுக்கு எதிராக ஏன் விஷத்தைக் கக்குகிறார்கள், அவர்களுக்கு எதிராக ஏன் வன்முறையைத் தூண்டிவிடுகிறார்கள்?’’ என்ற சாதாரண கேள்விகளைக் கூட அரசாங்கத்திடம் கேட்கவில்லை.

கருத்து மாறுபாடுகளை அனுமதிக்காத ஜனநாயகம், ஜனநாயகமே இல்லை என நீதிமன்றம் ஏற்றுக் கொண்டாலும், போராட்டங்கள் கால வரம்பற்றதாக இருக்கக் கூடாது என்றும், ஒதுக்கப்பட்ட இடங்களில்தான் போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் கூறுகிறது. போராட்டங்கள் இன்பம் தரக்கூடிய பொழுதுபோக்கிற்காக நடத்தப்படுவதில்லை. மாறாக, அநீதியான கட்சி அல்லது அதிகாரத்தை தங்களுடன் உரையாடல் நடத்துமாறு பணிய வைக்க வேண்டும் என்பதற்காக பல இன்னல்களை அமைதிவழியில் போராடுபவர்கள் எதிர்கொள்கிறார்கள் என்பதை உணர்ந்தறிய வேண்டும்.

போராட்டங்கள் கால வரம்பைக் கொண்டிருக்க முடியாது. அநீதி வரம்பற்றதாக இருக்கும் போது, போராட்டங்களும் கால வரம்பற்றதாகவே இருக்கும்.


தமிழாக்கம் : பாவெல்

புதிய ஜனநாயகம் டிசம்பர் 2020 மின்னிதழ் தரவிறக்கம் செய்ய : இங்கே அழுத்தவும்

குற்றவியல் சட்டத் திருத்தம் : மறுகாலனியாதிக்கத்துக்கு ஏற்ப மறுவார்ப்பு !

ரோனா ஊரடங்கு முற்றிலுமாக விலக்கப்படாத நிலையிலேயே வேளாண் விளைபொருள் சட்டத் திருத்தம், அத்தியாவசியப் பொருட்கள் சட்டத் திருத்தம், தொழிலாளர் நலச் சட்டத் திருத்தம் மற்றும் புதிய கல்விக் கொள்கை ஆகியவற்றை நிறைவேற்றிய மோடி அரசு, அதனைத் தொடர்ந்து இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவற்றை உள்ளடக்கிய கிரிமினல் சட்டத் தொகுப்பையும் திருத்த முனைந்திருக்கிறது.

கிரிமினல் சட்டங்களைத் திருத்தும் பொறுப்பு இந்திய சட்ட ஆணையத்திடம் ஒப்படைக்கப்படுவதுதான் வழமையான நடைமுறை. இதற்கு முன் செய்யப்பட்ட திருத்தங்கள் அனைத்தும் இந்திய சட்ட ஆணையம் அளித்த பரிந்துரைகளை பரிசீலித்த பிறகுதான் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், இம்முறையோ இந்திய சட்ட ஆணையம் புறக்கணிக்கப்பட்டு, டெல்லி தேசிய சட்டப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ரன்பீர் சிங் தலைமையில் ஐந்து பேர் கொண்ட ஒரு குழுவை நியமித்திருக்கும் மோடி அரசு, ஆறு மாதங்களுக்குள் அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டுமென்று அக்குழுவிற்குக் கெடுவும் விதித்திருக்கிறது.

இக்குழு 300-க்கும் மேற்பட்ட கேள்விகள் அடங்கிய கேள்விப் பட்டியலை ஆங்கிலத்தில் வெளியிட்டு, ஒவ்வொரு கேள்விக்கும் 200 வார்த்தைகளுக்கு மிகாமல் தங்களுடைய கருத்தைத் தெரிவிக்க வேண்டும் என்று தமது இணையதளத்தில் அறிவித்திருக்கிறது.

படிக்க :
♦ மோடியின் கருப்பு சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் !
♦ ஊபா – ஆள்தூக்கி ஒடுக்குமுறைச் சட்டத்தின் பொன் விழா

மைய அரசின் இந்நடவடிக்கைக்கு கருத்துக்களைவிடப்  பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள்தான் எழுந்துள்ளன. ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் 16 பேர்,  100 வழக்குரைஞர்கள் மற்றும் முன்னாள் ஆட்சிப் பணியாளர்கள், கல்வியாளர்கள், அறிவுத்துறையினர் உள்ளிட்ட 150 பேர் இக்குழுவின் செயல்பாடுகளை நிறுத்த வேண்டுமென்றும்,  பல்வேறு தட்டுக்களைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய வகையில் இக்குழு புனரமைக்கப்பட வேண்டுமென்றும் மத்திய உள்துறை அமைச்சகத்திற்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

‘‘முதல் ஐந்து சட்ட ஆணையங்கள் மூன்றில் ஒரு பங்கு  குற்றவியல் சட்டங்களைத் திருத்துவதற்கே பத்தாண்டுகள் எடுத்துக்கொண்ட நிலையில், இக்குழு 6 மாதத்திற்குள் எப்படித் திருத்தங்களைச் செய்து முடிக்க முடியும்?’’ என இந்திய மற்றும் வெளிநாட்டு வாழ் சட்ட நிபுணர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

இத்துணை எதிர்ப்புகளையும் சந்தேகங்களையும் மாற்று ஆலோசனைகளையும் புறந்தள்ளிவிட்டு, இக்குழுவைத் தடையின்றிச் செயல்பட அனுமதித்திருக்கிறது, மைய அரசு.

***

தற்போதுள்ள குற்றவியல் சட்ட அமைப்பு இன்றைய ஜனநாயக நடைமுறைக்குப் பொருந்தாமல் இருக்கிறதாம். அதனால், ஜனநாயகத்தை மேம்படுத்தவும், விரைவாக நீதி கிடைப்பதை உத்தரவாதப்படுத்தும் முகமாகவே குற்றவியல் சட்டத்தைத் திருத்த வேண்டியிருப்பதாகக் கூறுகிறது, மோடி அரசு. இத்திருத்த நடவடிக்கைக்கு மோடி கற்பிக்கும் இந்நியாயம் குரூரமான நகைச்சுவை தவிர வேறில்லை.

ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவாரத்தைப் பொருத்தவரை, இந்தியச் சட்டங்கள் ஒவ்வொன்றையும் மட்டுமல்ல, இந்திய அரசியல் சாசனத்தையே திருத்த வேண்டும் என்பதுதான் அதன் நோக்கம். வாஜ்பாயி ஆட்சியின்போதே இதற்கான முயற்சி எடுக்கப்பட்டது. அரசியல் சாசனச் சட்டத்தைத் திருத்துவது தொடர்பாகவும், நாடாளுமன்ற ஆட்சி முறையில் மாற்றங்கள் கொண்டுவருவது தொடர்பாகவும் பரிசீலிக்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி வெங்கடாசலய்யா தலைமையில் ஒரு கமிட்டியும் அமைக்கப்பட்டது.

ரண்பிர் சிங்

இக்கமிட்டி அமைக்கப்பட்டதற்கு எதிராகப் பலத்த எதிர்ப்பு எழுந்ததன் காரணமாகவும், அப்போது கூட்டணிக் கட்சிகளை நம்பியே பா.ஜ.க., ஆட்சியை ஓட்டிக் கொண்டிருந்ததாலும், அதனின் ஆசை நிராசையாகிப் போனது. மேலும், அந்த அனுபவத்திலிருந்து அரசியல் சாசனத்தை அதிரடியாக அல்லது பலவந்தமாகத் திருத்துவதற்குப் பதிலாக, அதனை உள்ளிருந்தே தனது நோக்கங்களுக்கும் அரசியல் திட்டங்களுக்கும் ஏற்ப சிறுகச் சிறுகத் திருத்துவது எனத் தனது தந்திரோபாயத்தை மாற்றியும் கொண்டது.

2014, 2019 நாடாளுமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க. மக்களவையில் தனிப் பெரும்பான்மையோடு ஆட்சியமைத்தவுடன் காஷ்மீருக்குச் சிறப்புரிமை அளிக்கும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது. பொது சிவில் சட்டம் என்ற தனது நயவஞ்சகமான திட்டத்தை அமலாக்கும் முதல் அடியாக, முத்தலாக் மண முறிவை கிரிமினல் குற்றமாக்கிச் சட்டமியற்றிவிட்டது.

குற்றவியல் சட்டத் தொகுப்பைத் திருத்துவதற்கு மோடி அரசால் அமைக்கப்பட்டிருக்கும் குழுவையும், அக்குழு திருத்தம் தொடர்பாக முன்வைத்திருக்கும் கேள்விகளையும் இந்த அடிப்படையில்தான் பார்க்க வேண்டும்.

***

குற்றவியல் சட்டத் தொகுப்பைத் திருத்துவதற்கு மோடி அரசிற்கு இரு காரணங்கள் உள்ளன. ஒன்று, நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, நாட்டின் வளங்கள் அனைத்தையும் மென்மேலும் தனியார்மயப்படுத்துவதுதான் தீர்வு என மோடி அரசு கருதுகிறது. மேலும், ‘‘ஏக் பாரத் ஷ்ரேஷ்ட பாரத்’’ என்ற போர்வையில் இந்தியாவின் பன்முகத்தன்மையை அழித்து இந்து இந்தியாவை உருவாக்கிவிடவும் விழைகிறது. இவற்றுக்கெல்லாம் எழக்கூடிய எதிர்ப்புகளை எதிர்கொள்ளுவதற்குப் பழைய சட்டங்கள் பயன்படாது என்று அது கருதுகிறது.

இந்த அடிப்படையில்தான் வேளாண்மை தொடர்பான சட்டங்களில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புச் சட்டம் நீர்த்துப் போக வைக்கப்பட்டிருக்கிறது. கேந்திரமான பொதுத்துறை நிறுவனங்களின் எண்ணிக்கை நான்காகக் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கார்ப்பரேட் முதலாளிகள் மீண்டும் வங்கித் தொழிலில் ஈடுபடுவதற்கு ஏற்ப சட்டத் திருத்தம் கொண்டுவரும் முயற்சிகள் தொடங்கப்பட்டுவிட்டன. ஒரே நாடு ஒரே வரி, ஒரே நாடு ஒரே கல்விக் கொள்கை, ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு மற்றும் தேசியப் புலனாய்வு முகமை ஆகியவற்றின் மூலம் மாநில அரசுகளின் உரிமைகள் ஒவ்வொன்றாக உருவப்பட்டு, மாநில அரசுகள் முனிசிபாலிட்டிகளாக மாற்றப்படுகின்றன.

குடியுரிமைச் சட்டத் திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றின் மூலம் சிறுபான்மை மதத்தினரை, குறிப்பாக முஸ்லிம்களைச் சட்டபூர்வமாகவே இரண்டாம்தர குடிமக்களாக மாற்ற முயற்சிக்கிறது.

தொகாடியா

இவை தொடர்பாக எழக்கூடிய அமைதி வழியிலான எதிர்ப்புகளையும்கூடக் கிரிமினல்மயமாக்குவது என்ற நோக்கில்தான் குற்றவியல் சட்டத் தொகுப்பையும் திருத்த முயலுகிறது, மோடி அரசு. டெல்லி-ஷாஹின்பாக் போராட்டத்தை மோடி அரசு எதிர்கொண்ட விதத்தை இங்கு நினைவுபடுத்திக் கொண்டால், இத்திருத்தத்தின் நோக்கத்தை நாம் எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.

வாஜ்பாய் ஆட்சியின் போதே, விசுவ இந்து பரிஷத்தைச் சேர்ந்த பிரவீன் தொகாடியா முன்னெடுத்த  ‘‘சிந்தனை உச்சி மாநாடுகள்’’ பல நடத்தப்பட்டன.  ஆர்.எஸ்.எஸ்.-ன் அனுதாபிகள் பங்கெடுத்த இம்மாநாடுகளில் குற்றவியல் சட்டத்தில் செய்யப்பட வேண்டிய திருத்தங்கள் மற்றும் காலத்திற்கேற்ற வகையில் மனு ஸ்மிருதியை அமலாக்குவது குறித்துத்தான் விவாதிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே இக்குழுவையும், இக்குழு இணைய வழியில் நடத்தும் கருத்துக் கேட்பு நாடகத்தையும் காண முடியும்.

***

காவல்துறையின் அத்துமீறல்களுக்கு எதிராகக் கடுமையான சட்டங்கள், கண்காணிப்புப் பொறியமைவுகளை உருவாக்க வேண்டுமென ஒடுக்கப்பட்ட மக்களிடையே பணிபுரியும் அரசியல் கட்சிகளும், மனித உரிமை அமைப்புகளும் தொடர்ந்து கோரி வருகின்றன. ஆனால், குற்றவியல் சட்டத் திருத்தத்திற்கான குழு தயாரித்துள்ள கேள்விப்பட்டியலில் இது குறித்து எந்தக் கேள்வியும் இடம்பெறவில்லை. மேலும், இப்பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துவரும்  எந்தவொரு அமைப்பிற்கும் பிரதிநிதித்துவமும் கொடுக்கப்படவில்லை.

பெண் பிரதிநிதி ஒருவர்கூட இடம்பெறாத இக்குழு, பெண்கள் தொடர்பான பிரச்சினைகளில் நடைமுறையில் இருந்துவரும் சட்டங்களையும் நீர்த்துப் போகச் செய்யும் வகையில் கேள்விகளை முன்வைத்திருக்கிறது. குறிப்பாக, பாலியல் வன்புணர்வு அல்லாத பாலியல் சீண்டல்கள் உள்ளிட்ட பாலியல் குற்றங்களை வகைப்படுத்தும் 354-A, B, C, D ஆகிய சட்டப்பிரிவுகளை மறுபரிசீலனைக்கும் உட்படுத்தும் கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மேலும், மண உறவில் நடக்கும் வன்புணர்வுக்கு (Marital rape) அளிக்கப்பட்டிருக்கும் விதிவிலக்கை நீக்குவது, ‘‘கௌரவக் கொலை’’ எனப்படும் சாதி ஆணவப் படுகொலை உள்ளிட்ட வன்கொடுமைகளுக்குத் தொகுப்பான சட்டம் உருவாக்குவது ஆகிய கோரிக்கைகள் இருந்துவரும் நிலையில், இவற்றுக்கெல்லாம் தனிச்சட்டம் தேவையா எனக் குதர்க்கம் நிறைந்த கேள்வியை முன்வைத்திருக்கிறது.

2014- நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ‘‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு புதிய சட்டத்தை இயற்றும் போதும், அதற்கு ஈடாக 10 பழைய சட்டங்களை நீக்குவோம்’’ என்றும், காலப்பொருத்தமற்ற காலனிய காலச் சட்டங்கள் ஏராளமாக இருப்பதாகவும், ஒரு நாளுக்கு ஒரு சட்டம் என்ற வீதத்தில் அவற்றை எல்லாம் நீக்கப் போவதாகவும் மோடி கூறினார்.

‘‘இந்த அடிப்படையில் மோடி ஆட்சியின் முதல் ஐந்தாண்டுகளில் சுமார் 3,500 காலாவதியான சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் இது நடந்துள்ளதாகவும்’’ இந்தியா டுடே ஆங்கில ஏட்டின் இணையதளம் கூறுகிறது. ‘‘சுதந்திரத்திற்கு முந்தைய பழைய மற்றும் பொருத்தமற்ற சட்டங்கள் பலவும் காலனித்துவ மரபின் துரதிர்ஷ்டவசமான பகுதியாக இருந்தன என்றும் அவற்றை ரத்து செய்வது அரசாங்கத்தின் முன்நோக்கு அணுகுமுறையைப் பிரதிபலிக்கும் ஒரு முற்போக்கான நடவடிக்கை என்றும்’’ சட்ட அமைச்சகம் மார்தட்டிக்கொண்டதையும் அவ்விணைய தளம் சுட்டிக் காட்டியிருக்கிறது.

படிக்க :
♦ பொதுத்துறை வங்கிகளை தொடர்ந்து கூட்டுறவு வங்கிகளை கொள்ளையிட களமிறங்கும் மோடி அரசு !
♦ குஜராத் கலவரம் : பரிசுத்தமானவர் மோடி – நானாவதி கமிஷன் அறிக்கை !

காலப் பொருத்தமற்ற சட்டங்களைப் பற்றி அங்கலாய்த்துக் கொள்ளும் மோடி அரசு, ஆங்கிலேயக் காலனிய அரசால் உருவாக்கப்பட்ட தேசத்துரோக வழக்கு சட்டப்பிரிவு 124 A-வைப் பற்றி என்ன கருதுகிறது? அந்தச் சட்டத்தின் தாய்வீடான பிரிட்டனிலேயே 2009-ம் ஆண்டில் இச்சட்டம் நீக்கப்பட்ட பிறகும் கூட, இந்தியாவில் இன்னும் நடைமுறையில் இருப்பதைப் பற்றி மோடி அரசு அக்கறை கொள்ளவில்லை என்பதோடு, தனது அரசிற்கு எதிராகச் சட்டபூர்வ வழிகளில், அமைதியான முறையில் போராடுபவர்களையும் ஒடுக்குவதற்கு இந்தக் காலனிய காலச் சட்டப்பிரிவைத்தான் வகைதொகையின்றிப் பயன்படுத்தி வருகிறது. இதன் காரணமாகவே, ரன்பீர்சிங் குழுவும் கூட இந்தச் சட்டத்தை நீக்க வேண்டும் என்ற கருத்தை வெளிப்படுத்தவில்லை. மாறாக, தேசத்துரோகக் குற்றச்சாட்டைக் கையாளும் 124 ஏ-இன் வரையறை, நோக்கம் மற்றும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் இச்சட்டப் பிரிவைத் திருத்தங்களிலிருந்து தவிர்த்துவிடலாமா அல்லது ஏதேனும் திருத்தம் தேவையா எனத் தந்திரமான கேள்வியை  எழுப்பியுள்ளது.

124 ஏ மற்றும் உபா போல ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வரும் கருப்புச் சட்டங்களை இக்குழு தவிர்ப்பது ஒருபுறமிருக்க, திருத்தம் என்ற போர்வையில் சாதாரண கிரிமினல் சட்ட நடைமுறைகளை இன்னும் கடுமையாக்கத் திட்டமிடுகிறது. எடுத்துக்காட்டாக, தற்போதுள்ள இந்திய சாட்சியச் சட்டத்தின்படி, போலீசு முன் கொடுக்கப்படும் ஒப்புதல் வாக்குமூலம் சாட்சியாக எடுத்துக் கொள்ளப்படாது. தற்போது அந்த ஒப்புதல் வாக்குமூலத்தை சாட்சியாக ஏற்றுக்கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை சட்டமாக்கப்படுவதும் கொட்டடிச் சித்திரவதைகளுக்கு லைசென்சு வழங்குவதும் ஏறத்தாழ ஒன்றுதான்.

ஒரு குற்றம் நடைபெறும்போது, அக்குற்றத்தைச் செய்தவருக்கு அக்குற்றம் தொடர்பான சட்டங்கள் குறித்த புரிதலை கணக்கில் எடுத்துக்கொள்ளுவது கிரிமினல் சட்டத் தொகுப்பில் உள்ளார்ந்த அம்சமாக உள்ளது. இந்த அடிப்படையில், சிலவகை குற்றங்களுக்கு தண்டனை அளிக்கும்போது குற்றஞ்சுமத்தப்பட்டவரின் சட்டம் குறித்த புரிதல் கணக்கில் கொள்ளப்படும். எனினும், சிலவகை குற்றங்களுக்கு தண்டனை அளிக்கும்போது குற்றஞ்சுமத்தப்பட்டவரின் புரிதலைக் கணக்கில் கொள்ள வேண்டிய அவசியமில்லை. ரன்பீன் சிங் குழுவினர், பின்னதன் அடிப்படையில் தண்டிக்கப்படும் குற்றங்களின் பட்டியலை விரிவுபடுத்த வேண்டும் என்ற ஆலோசனையை முன்வைத்திருக்கிறது. இதன் நோக்கம் அரசுக்கு எதிரான எந்தவொரு போராட்டத்திற்கும், அதில் கலந்துகொண்ட ஒவ்வொருவருக்கும் உள்நோக்கம் கற்பித்துவிட முடியும்.

இக்குழு வெளியிட்டிருக்கும் கேள்விகள் அடங்கிய பட்டியல் ஆங்கில மொழி தவிர, வேறெந்த இந்திய மொழியிலும் வெளியிடப்படவில்லை. ஒரு சட்டத்தை எதற்காகத் திருத்த வேண்டியிருக்கிறது, எந்த அடிப்படையில் திருத்த வேண்டியிருக்கிறது எனும் ரீதியில் விளக்கங்கள் அளிக்கப்படாமல், பொத்தாம் பொதுவாகக் கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மேலும் இக்கேள்விகளும் ஆங்கிலம் தெரிந்தவர்களோ, பொதுவான சட்ட அறிவு கொண்டவர்களோ பதில் அளிக்கமுடியாதபடி தயாரிக்கப்பட்டிருக்கின்றன. இத்திருத்த நடைமுறையில் இருந்து சாதாரண பொதுமக்களை விலக்கிவைக்க வேண்டும் என்ற நோக்கம் தவிர, வேறெந்த காரணமும் இதன் பின் இருக்க முடியாது.

கிரிமினல் சட்டத் திருத்தம் பற்றித் தனது கருத்துக்களை ஃபிரெண்டலைன் இதழில் முன்வைத்திருக்கும் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி செல்லமேஸ்வர், ‘‘கிரிமினல் சட்டத் தொகுப்பைத் திருத்த எடுக்கும் முயற்சிகள் அனைத்தும், கிரிமினல் சட்டங்களுக்கும் அரசியல் சாசனத்திற்கும் இடையேயான உறவைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்த உறவானது தனிமனித உரிமை, சமூகக் கட்டுப்பாடு என்ற இரட்டைத் தன்மையால் ஆளப்படுகிறது என்பதையும் இந்த இரண்டு போக்குகளுக்கும் இடையே அறிவுப்பூர்வமான சமநிலை நிலவ வேண்டும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். இந்த இரண்டு போக்குகளும் ஒன்றுக்கொன்று எதிரானவையும் அல்ல, ஒன்றைவிட்டு மற்றொன்று தனித்து இயங்கக்கூடியதும் அல்ல. இந்த இரட்டைத்தன்மையும், அவை ஒன்றையொன்று சார்ந்து இயங்குவதும் செயல்பூர்வமான அரசியல் ஜனநாயகத்திற்கு இன்றியமையாதவை’’ எனக் குறிப்பிடுகிறார்.

ஆனால், இன்று நமது நாட்டில், மோடியின் ஆட்சியின் கீழ் நடப்பதென்ன? தேசிய நலன், பொது நலன் என்ற பெயரிலும், வளர்ச்சி என்ற பெயரிலும் தனிமனித உரிமைகள் மட்டுமல்ல, பொதுமக்களின் சமூகப் பொருளாதார வாழ்வாதார உரிமைகளும் பறிக்கப்படுகின்றன. கருப்புப் பணத்தை ஒழிப்பது என்ற பெயரில் மோடி அரசு அமல்படுத்திய பணமதிப்பு நீக்கமும், வரி ஏய்ப்பைத் தடுப்பது என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட ஜி.எஸ்.டி. வரி விதிப்பும்; திறமை வாய்ந்த மாணவர்களைத் தேர்ந்தெடுப்பது என்ற போர்வையில் திணிக்கப்பட்ட நீட் தேர்வும்; இறுதியாக, கரோனாவை ஒழிப்பது என்ற பெயரில் மோடி அரசு அமல்படுத்திய தேசிய ஊரடங்கும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை மேலும் நாசப்படுத்தியதைத் தாண்டி வேறெந்த பலனையும் தரவில்லை.

இவ்வாறான நிலையில்தான் கிரிமினல் சட்டத் தொகுப்பைச் சீர்திருத்தக் கிளம்பியிருக்கிறது, மோடி அரசு. இதன் பொருள், காலனிய கால அடக்குமுறைச் சட்டங்களை மறுகாலனியாதிக்கத்திற்கு ஏற்பவும், இந்தி, சமஸ்கிருதத் திணிப்பு, குடியுரிமைத் திருத்தச் சட்டம் உள்ளிட்ட தனது காவித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்றவாறும் திருத்தியமைப்பதாக அமையுமேயொழிய, மக்களின் அரசியல் ஜனநாயக உரிமைகளை வலுப்படுத்துவதாகவோ, பாதுகாப்பதாகவோ அமையாது.

 


வாகை

புதிய ஜனநாயகம் டிசம்பர் 2020 மின்னிதழ் தரவிறக்கம் செய்ய : இங்கே அழுத்தவும்

கார்ப்பரேட்டுகள் வங்கி தொடங்குவதற்கான பரிந்துரை : பின்புலம் என்ன? || AIBEA

அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் (AIBEA) சுற்றறிக்கையின் தமிழாக்கம்

கேள்வி :

கார்ப்பரேட்டுகள் வங்கி தொடங்குவதற்கான அனுமதி – இந்திய ரிசர்வ் வங்கியின் குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ளதன் பின்புலம் என்ன?

பதில் :

கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பெரிய தொழில் நிறுவனங்கள் தாங்களாகவே தங்களது சொந்த வங்கிகளை தொடங்க அனுமதிக்கப்படலாம் என்ற பரிந்துரையினை ரிசர்வ் வங்கி குழு ஒன்று அளித்துள்ளது. இதன் மீது அதிக அளவில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இது ஒரு மோசமான எண்ணமாகும். ஏனெனில், இந்த விஷயத்தில் இந்தியாவுக்கு கசப்பான அனுபவங்கள் உள்ளன.

தனியார் வங்கிகளின் தவறான நிர்வாகம் என்பது நமது நாட்டில் ஒரு புதிய செய்தியல்ல. பல்வேறு சமயங்களில் ஏதாவது ஒரு தனியார் வங்கி பிரச்சினைகளில் சிக்கிக் கொள்வதை நாம் பார்க்கிறோம்.

படிக்க :
♦ வங்கி மோசடியாளர்களது ரூ.68,607 கோடி மதிப்பிலான கடன்கள் தள்ளுபடி !
♦ அதிகரிக்கும் வங்கி மோசடிகள் : மோடி ஆட்சியின் சாதனை !

சில மாதங்களுக்கு முன்னால், யெஸ் வங்கி நெருக்கடியில் சிக்கியதையும், அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் தலையீட்டினால், பாரத ஸ்டேட் வங்கியிடமிருந்து முதலீட்டினைப் பெற்று எவ்வாறு மீண்டு வந்தது என்பதனையும் பார்த்தோம். இப்போது லக்ஷ்மி விலாஸ் வங்கி DBS வங்கிக்கு தாரை வார்க்கப்பட்டிருக்கிறது.

கடந்த காலங்களைப் பார்க்கும் போது இதுபோன்று ஒரு பெரிய பட்டியலே உள்ளது. 1930, 1940 மற்றும் 1950-களில் நமது நாட்டில் அனைத்து வங்கிகளும் தனியார் வங்கிகளாகவே இருந்தன. அவற்றில் சில அந்நிய வங்கிகளாகவும் இருந்தன. பல தனியார் வங்கிகள் தோல்வியடைந்து, மூடப்பட்டன.

இந்த வங்கிகளில் தங்களது சேமிப்புகளை வைத்திருந்த அப்பாவி மக்கள் தங்களது பணத்தினை இழந்தனர். 1913 தொடங்கி 1960 வரை 1639 வங்கிகள் இவ்வாறு தோல்வியடைந்து மூடப்பட்டுள்ளன. 1939 மற்றும் 1940 ஆம் ஆண்டுகளில் அதிகபட்சமாக முறையே, 117 மற்றும் 107 வங்கிகள் திவாலாகியுள்ளன.

பல போராட்டங்கள் அக் காலத்தில் நடைபெற்றன. நாடாளுமன்றத்திலும் விவாதங்களை அன்றைய ஏ.ஐ.பி.இ.ஏ பொதுச் செயலாளர் பிரபாத்கர் போன்றோர் முன்னெடுத்தனர். வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் 45 ஆவது பிரிவில் ஓர் திருத்தம் கொண்டு வர இந்தப் போராட்டங்கள் மற்றும் முயற்சிகளின் காரணமாக இருந்தன.

வாராக்கடன் புகழ் மெஹுல் சோக்ஸி, விஜய் மல்லையா மற்றும் நீரவ் மோடி.

இதன் மூலம், பொதுநலனுக்காக எந்த ஒரு வங்கியின் செயல்பாடுகளிலும் ரிசர்வ் வங்கி தலையிடலாம் என்றும், நலிவடைந்த வங்கியினை வேறொரு வங்கியுடன் இணைக்கலாம் என்று திருத்தம் செய்யப்பட்டது.

இந்தத் திருத்தத்தின் மூலம், வங்கிகள் திடீரென மூடப்படுவது நிறுத்தப்பட்டது. அன்றிலிருந்து நமது நாட்டில் எந்த ஒரு வங்கியும் மூடப்படவில்லை . நலிவடைந்த எல்லா வங்கிகளும், அவற்றின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டு, வேறு வங்கிகளுடன் இணைக்கப்பட்டன.

1961 முதல் 1968 வரை, தோல்வியடைந்த 263 வங்கிகள் வேறு ஏதாவது ஒரு வங்கியுடன் இணைக்கப்பட்டன. எந்த ஒரு வங்கியும் மூடப்படவில்லை . இதில் அதிகபட்சமாக 1964 இல் 82 வங்கிகள் வேறு ஏதாவது ஒரு வங்கியுடன் இணைக்கப்பட்டன.

1969 – வங்கிகள் தேசியமயமாக்கலின் பொற்காலம் துவங்கியது. வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டால்தான் மக்களின் பணம் பாதுகாக்கப்படுவது மட்டுமின்றி, அந்தப்பணம் தனியாரின் லாபவேட்டைக்குப் பதிலாக தேசத்தின் வளர்ச்சிக்குப் பயன்படும் என்ற கருத்து வலுப்பெற்றது.

அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி அவர்கள், டாட்டா, பிர்லா போன்ற பலம் வாய்ந்த தொழில் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருந்த 14 பெரிய தனியார் வங்கிகளை தேசியமயமாக்கினார்.

தனியார் வங்கிகளின் நஷ்டங்களை விழுங்கிய மக்கள் பணத்தினைக் காக்கும் நீலகண்டன் போல் பொதுத்துறை வங்கிகள் அமைந்தன.

வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட பின், தோல்வியடைந்த பல்வேறு தனியார் வங்கிகள் பொதுத்துறை வங்கிகளுடன் இணைக்கப்படுவதைப் பார்க்கிறோம்.

பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகளின் நஷ்டம் என்னும் விஷத்தினை விழுங்கி, வங்கிகளில் வைப்புத்தொகையாக இருக்கும் மக்களின் மதிப்புமிக்க சேமிப்பினைக் காக்கும் ஆபத்தாண்டவர்களாக உருவெடுத்துள்ளன.

1969 தொடங்கி 2020 வரை 25 தனியார் வங்கிகள் பல்வேறு பொதுத்துறை வங்கிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.

பெருகி வரும் வராக்கடன்கள் இன்று பெரும் பிரச்சினையாக உள்ளது; யார் உண்மையான குற்றவாளிகள்?

இந்த வராக்கடன்களின் பின்னால் இருப்பவர்கள், கார்ப்பரேட்டுகளும், வேண்டுமென்றே கடன்களை திரும்பச் செலுத்தாதவர்களும்தான் என்பதும் அனைவருக்கும் தெரியும்.

இந்த வகையில் 2001 முதல் 2019 வரை தள்ளுபடி செய்யப்பட்ட வராக்கடன்களின் அளவு ரூ.6,94,037 கோடிகளாகும். இதில் 2014 முதல் 2019 வரை மட்டும் தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களின் அளவு மட்டும் ரூ.5,48,734 கோடிகள்.

படிக்க :
♦ பெற்றோர் சம்மதத்துடனான காதல் திருமணத்தைத் தடுத்து நிறுத்திய யோகி அரசு !
♦ குவாட் கூட்டணி : சீனாவிற்கு எதிரான இராணுவ முஸ்தீபு !

IBC – திவால் சட்டத்தின் மூலம் பயனடைந்தவர்கள் யார்? மற்றும் இழப்பினை சந்தித்தது யார்?

திவால் சட்டம் என்ற பெயரில், கடன்களை திரும்பச் செலுத்தாத கார்ப்பரேட் முதலாளிகள், வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய மிகப்பெரிய கடன் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த வராக்கடன்கள் பிற கார்ப்பரேட் நிறுவனங்களிடம் மிகக்குறைந்த விலைக்கு விற்கப்பட்டுள்ளன.

இவ்வாறாக, இந்த செயல்முறையில், வங்கிகள் இழப்பினை சந்திப்பவையாகவும், கார்ப்பரேட் முதலாளிகள் பயனடைபவர்களாகவும் உள்ளன.

உதாரணமாக,
ALOK INDUSTRY யின் ரூ.30,200 கோடி கடனை REILANCE நிறுவனம் ரூ.5,052 கோடிக்கு வாங்கியுள்ளது (83% தள்ளுபடி).

MONNET ISPAT நிறுவனத்தின் ரூ.11,478 கோடி கடனை JSW நிறுவனம் ரூ. 2,892 கோடிக்கு வாங்கியுள்ளது. (75% தள்ளுபடி).

ELECTRO STEEL நிறுவனத்தின் ரூ.13,958 கோடி கடனை VEDANTA நிறுவனம் ரூ.5,320 கோடிக்கு வாங்கியுள்ளது (62% தள்ளுபடி).

மொத்தத்தில் கடன்களை திரும்பிச் செலுத்தாத கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களின் அளவு ரூ.68,607 கோடிகள்.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்ட வராக்கடன்களுக்காக நிதி ஒதுக்குவதன் காரணமாக வங்கிகளின் லாபம் குறைகிறது.

இந்தக் குற்றவாளிகளிடமும், கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களிடமும், ஏமாற்றுக்காரர்களிடமும் நாம் வங்கிகளை ஒப்படைக்க முடியுமா? என்பதே இன்று எழுந்துள்ள கேள்வி.

வங்கிகள் மக்களின் பணத்தைக் கையாளுகின்றன. மக்களின் சேமிப்பைக் கையாளுகின்றன. இந்தக் கார்ப்பரேட்டுகளிடம் வங்கிகளை ஒப்படைப்பது மிகவும் ஆபத்தானது. நமக்கு மிகவும் மோசமான அனுபவம் உள்ளது.

கடந்த காலம் கசப்பானது
நிகழ்காலம் மகிழ்ச்சியளிப்பதாக இல்லை.
எதிர்காலம் பேரழிவு தருவதாக இருக்கும்

மக்கள் பணம் மக்கள் நலனுக்கே
கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிப்பதற்கல்ல

AIBEA சுற்றறிக்கை

தமிழாக்கம் : ஆர். மகாதேவன்
காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம், அம்பாசமுத்திரம்

டிச 8 : நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் | மக்கள் அதிகாரம் பங்கேற்பு!!

PP Letter head06.12.2020

பத்திரிகை செய்தி

டிசம்பர் 8 : நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்வோம் !

வேளாண் திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி கடும் பனியில் ஒரு கோடி விவசாயிகள் தில்லியை முற்றுகையிட்டு இருக்கிறார்கள். ஆனால் இந்தியாவின் பிரதமர் என்று கூறப்படும் நரேந்திர மோடியோ வாரணாசியில் ஆடல் பாடல்களை ரசித்துக் கொண்டிருக்கிறார். வயதானவர்கள் முதல் சின்னஞ்சிறு குழந்தைகள் வரை போராடிக் கொண்டிருக்கிறார்கள். மோடி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை அடிக்கல் நாட்ட தயாராகிக் கொண்டிருக்கிறார்.

பேச்சுவார்த்தையின்போது அரசு கொடுத்த உணவையோ தேநீரையோ ஏற்றுக்கொள்ள முடியாது என்று  அறிவித்து நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த வேளாண் சட்டத்திருத்தங்கள் மூலம் கொஞ்சநஞ்சம் வாழ்ந்து கொண்டிருக்கிற விவசாயியின் வாழ்க்கையை மொத்தமாக அழிக்கப்படும். அரிசி, பருப்பு காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயரும்.

படிக்க :
♦ உங்கள் ரயில் பயணங்களைப் பதம்பார்க்கக் காத்திருக்கும் அம்பானிகள் !
♦ அதானியின் வளர்ச்சிக்கு பழவேற்காடு பலிகிடா !

யார் செத்தால் நமக்கென்ன அதானி அம்பானியை உலக பணக்காரன் ஆக்கியே தீருவேன் என்று வெறியோடு அலையும்   மோடி, அமித்ஷா கார்ப்ரேட் –  காவி பாசிச கும்பலுக்கு முடிவுகட்ட வேண்டும் எனில் தில்லியில் விவசாயிகளின் வீரஞ்செறிந்த போராட்டத்தைப் போன்று  இந்தியா முழுமையும் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும். அந்தவகையில் AIKSCC அறைகூவல் விடுத்துள்ள நாடு முழுவதுமான இந்த வேலைநிறுத்தத்தில் பங்குபெறுவது சோறு தின்னும் அனைவரின் கடமை.

இந்த பொது வேலை நிறுத்தத்தை மக்கள் அதிகாரம் ஆதரிப்பதுடன் AIKSCC-யுடன் அன்றைய தினம் தமிழகம் முழுவதும் போராட்டங்களில் பங்கு பெறும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தோழமையுடன்,

தோழர்  வெற்றிவேல் செழியன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.
99623 66321

குவாட் கூட்டணி : சீனாவிற்கு எதிரான இராணுவ முஸ்தீபு !

மெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நான்கு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை இராணுவமயமாக்கும் நோக்கில் அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட திட்டம்தான் நான்குமுனை பாதுகாப்புப் பேச்சுவார்த்தை (Quadrilateral Security Dialogue). இது சுருக்கமாக, ‘‘குவாட்’’ (Quad) என்றழைக்கப்படுகிறது. இது, சீனாவுக்கு எதிராகச் செயல்படும் ஒரு இராணுவக் கூட்டணியாக 2017−ம் ஆண்டின் இறுதியில் மாற்றம் அடைந்தது. சீனா−அமெரிக்காவிற்கு இடையேயும் சீனா−இந்தியாவிற்கு இடையேயும் முறுகல் நிலை தீவிரமடைந்திருக்கும் நிலையில், இக்கூட்டணி நாடுகளின் அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டம் கடந்த அக்டோபர் 6 அன்று ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் நடந்தது.

இக்கூட்டம் நடந்து முடிந்த ஓரிரு வாரங்களுக்குள்ளாக, அதுவும் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுவதற்குச் சற்று முன்னதாக, ‘‘அடிப்படையான பரிமாற்றமும் ஒத்துழைப்பும்’’ (Basic Exchange and Cooperation Agreement for Geo−spatial Cooperation − BECA) எனும் ஒப்பந்தம் கடந்த அக்டோபர் 27−ஆம் தேதியன்று இந்தியா−அமெரிக்காவிற்கு இடையே கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தை சீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு எதிரான இந்தியாவின் பாதுகாப்புக் கவசமாக வருணித்த அமெரிக்கத் தரப்பு, இந்த ஒப்பந்தம் குறித்து விடுத்த பத்திரிகை செய்திகள் அனைத்திலும் சீன எதிர்ப்பையே மையப்படுத்தியிருந்தது.

படிக்க :
♦ ”கம்யூனிச” சீனா எதிர்கொள்ளும் புதிய எதிரி : கம்யூனிசம் !
♦ அமெரிக்க வர்த்தகப் போரை சீனா எதிர் கொள்வது எப்படி ?

இந்த ஒப்பந்தத்தின்படி, ஒரு நாட்டின் போர் விமானங்களும் போர்க்கப்பல்களும் மற்ற நாட்டின் விமானத் தளங்களிலும் துறைமுகங்களிலும் தங்கி, எரிபொருளை மீண்டும் நிரப்பிக் கொள்வதோடு, பராமரிப்பு மற்றும் பழுது நீக்க வேலைகளையும், உணவு, நீர், உடை, மருத்துவம் மற்றும் இதர தொழில் நுட்ப சேவைகளைச் செய்து கொள்ள முடியும்.

இந்திய ஆளும் வர்க்கமும் ஆளும் வர்க்கக் கட்சிகளும் பாகிஸ்தானையும், சீனாவையுமே ‘‘தேசிய எதிரிகளாக’’க் கட்டமைத்துள்ளன. இந்த இரு நாடுகளுக்கு அப்பால் இந்தியாவின் எதிரிகளாகச் சித்தரிக்க எந்தவொரு நாடும் இல்லாததால், இந்த ஒப்பந்தத்தால் பெரிதும் பயனடையப் போவது அமெரிக்கா மட்டும்தான். குறிப்பாக, சீனாவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தனது இராணுவத் தளங்களை இந்தியாவில் அமைத்துக் கொள்ளும் அமெரிக்காவின் திரைமறைவான ஏற்பாடுதான் இந்த ஒப்பந்தம்.

குவாட் கூட்டணி தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவிற்கு வந்த அமெரிக்க அரசுச் செயலர் மைக் பாம்பியோவுடன் (இடமிருந்து மூன்றாவது) இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.

1998−2004 வாஜ்பாயி ஆட்சியில், அமெரிக்காவின் ஏவுகணை தாக்குதல் பாதுகாப்புத் திட்டத்தில் இந்தியாவை இணைக்கும் முயற்சிகள் தொடங்கின. அதன்பின், 2004−14 வரையில் நடந்த காங்கிரசின் முற்போக்கு ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. மோடி பிரதமரான பின் 2016−இல் இந்தியா−அமெரிக்காவிற்கு இடையே கையெழுத்தான ‘‘இராணுவத் தளவாடப் பரிமாற்றத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (Logistics Exchange Memorandum of Agreement − LEMOA)’’  2018−ஆம் ஆண்டில் முழுமையாக நடைமுறைக்கு வந்தது. இதனையடுத்து, 2018, செப்டெம்பரில் நிறைவேற்றப்பட்ட ‘‘கோம்காசா’’ (Communications Compatibility and Security Agreement − COMCASA) எனும் ஒப்பந்தம், அமெரிக்கா மற்றும் அதன் இராணுவக் கூட்டாளி நாடுகளின் கப்பற்படையுடன் இந்தியக் கடற்படை இணைந்து செயல்படுவதற்கான ஏற்பாடுகளைக் கொண்டிருந்தது. இந்த கோம்காசா ஒப்பந்தப்படிதான் தற்போது குவாட் கூட்டணியின் சார்பில் ‘‘மலபார் பயிற்சி’’ எனப்படும் கடற்படை போர்ப் பயிற்சி அரபிக் கடலிலும் வங்காள விரிகுடாவிலும் நடைபெறுகிறது.

இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக, குவாட் கூட்டணி ஓர் இராணுவக் கூட்டணியாக உருவாகியிருக்கிறது. இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு ஐரோப்பா கண்டத்தில் சோவியத் ரஷ்யாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்துவதற்கு, மேற்கு ஐரோப்பிய முதலாளித்துவ நாடுகளை இணைத்துக்கொண்டு அமெரிக்கா உருவாக்கிய நேட்டோ இராணுவக் கூட்டணியைப் போன்றே, குவாட் கூட்டணியை சீனாவிற்கு எதிராக உருவாக்க அமெரிக்கா திட்டமிட்டிருப்பதாகக் கூறும் முதலாளித்துவ நிபுணர்கள், குவாட் கூட்டணியை ஆசியாவின் நேடோ என்றே குறிப்பிடுகின்றனர்.

இந்தியா−அமெரிக்கா இடையே அரசியல்−பொருளாதார−இராணுவ ஒத்துழைப்பு வலுப்படுவதை இந்திய ஆளும் வர்க்கமும், அதன் அறிவுத் துறையினரும் விரும்பினாலும், இன்றைய உலகமயச் சூழலில், சீனாவிற்கு எதிராக அமெரிக்காவால் உருவாக்கப்பட்டிருக்கும் நேட்டோ போன்றதொரு குவாட் கூட்டணியில் இந்தியா பங்குபெறுவது பாரதூரமான பின்விளைவுகளை ஏற்படுத்திவிடுமோ என்றும் ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவினர் ஐயங்கொண்டுள்ளனர். குறிப்பாக, முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான எம்.கே.நாராயணன் உள்ளிட்டோரும், இந்து நாளிதழ் உள்ளிட்ட தேசிய ஊடகங்களின் ஒரு பிரிவும், ‘‘குவாட் கூட்டணியில் இணைந்தாலும், இந்தியா தெற்காசிய பிராந்திய விவகாரங்களில் சுயேச்சையான முடிவுகள் எடுத்துச் செயல்படுத்த வேண்டும். சீனாவிற்கு எதிராக இராணுவரீதியான தாக்குதலை மட்டுமே தீர்வாகக் கருதாமல், சீனாவை உலக அரங்கில் தனிமைப்படுத்த அரசு தந்திர வழிகளில் முயற்சிக்க வேண்டும்’’ என எச்சரிக்கை கலந்த ஆலோசனைகளை முன்வைத்து வருகிறார்கள்.

குவாட் கூட்டணித் தலைவர்கள்: இடமிருந்து ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரீசன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டிரம்புடனான மோடியின் தனிப்பட்ட நட்பையும்; குவாட் கூட்டணியில் இந்தியா இணைந்திருப்பது மற்றும் மலபார் பயிற்சி உள்ளிட்டு அமெரிக்க இராணுவத்துடன் இணைந்து இந்திய இராணுவம் மேற்கொண்டுவரும் போர்ப் பயிற்சிகள் ஆகியவற்றையும் சீனாவிற்கு எதிரான தனது ராஜதந்திர வெற்றியாகக் காட்டிக்கொண்டு வரும் மோடி அரசும், ஆர்.எஸ்.எஸ். கும்பலும் இந்த எச்சரிக்கைமிக்க ஆலோசனைகளை ஒரு பொருட்டாகக் கருத மறுக்கின்றன. குறிப்பாக, இந்தியா−சீனா இடையேயான எல்லைப் பிரச்சினை கடந்த சில மாதங்களாகத் தீவிரமடைந்திருக்கும் நிலையில், இப்பிரச்சினையில் மோடி அரசின் நடவடிக்கைகள் எதிர்க்கட்சிகளாலேயே கேள்விக்குள்ளாக்கப்பட்டு வரும் நிலையில் குவாட் கூட்டணி, மலபார் போர் பயிற்சி ஆகியவற்றை எதிர்த்தரப்பின் வாயை அடைக்கும் அரசியல் பிரச்சாரமாக முன்னெடுத்து வருகிறது ஆர்.எஸ்.எஸ்.

இன்னொருபுறமோ குவாட் கூட்டணி ஒப்பந்த விதிகள் ஆசிய−பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் நலனுக்கு ஏற்றவாறு மட்டுமே இந்தியா செயல்பட முடியும்; இந்தியா தன்னிச்சையாக முடிவெடுத்து செயல்பட முடியாது என்றவாறே அமெரிக்க அதிகார வர்க்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளன. இவை காரணமாக எம்.கே.நாராயணன் உள்ளிட்டோர் கூறிவரும் எச்சரிக்கை கலந்த ஆலோசனைகள் நடைமுறையில் காகித எச்சரிக்கைகளாகவே முடிந்துபோகக் கூடும்.

படிக்க :
♦ அமெரிக்கா : நீதியில்லையேல், அமைதியில்லை !
♦ பொலிவியா ஆட்சிக் கவிழ்ப்பு : அமெரிக்காவின் நாட்டாமை !

இன்றைய உலகளாவிய உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலியில் மிகமிக வலுவான இடத்தை சீனா பெற்றிருக்கிறது. சீனாவின் இந்த வலு காரணமாகவே அமெரிக்கா உள்ளிட்ட எந்தவொரு நாடும் சீனாவைப் பொருளாதாரரீதியாகத் தனிமைப்படுத்த இயலாமல் திணறி வருகின்றன. இவ்வாறான நிலையில் சீனாவை இராணுவரீதியாக அச்சுறுத்திப் பணிய வைப்பதைத்தான் அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் முன்னெடுக்கிறது. இதற்கு இந்தியா−சீனா இடையேயும் சீனா−ஜப்பான் இடையேயும், சீனா−தென்கொரியா இடையேயும் நிலவிவரும் எல்லைப் பிரச்சினைகளைப் பயன்படுத்திக் கொள்ள முனைகிறது. எனினும், அமெரிக்காவின் இம்முயற்சியை ஐரோப்பிய நாடுகளே முழுமையாக ஏற்றுக் கொள்ள மறுத்துவரும் வேளையில், இந்தியாவை ஆளும் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனக் கும்பல் அமெரிக்காவிற்கு அடியாள் வேலை பார்க்க முனைப்பாக இறங்கியிருக்கிறது.

உலகின் மிகப்பெரிய தொழிற்கூடமான சீனா, மேற்காசிய நாடுகளிலிருந்து பெருமளவு எண்ணெயை இறக்குமதி செய்துவரும் நிலையில், எண்ணெய்க் கப்பல்கள் சீனாவுக்குச் செல்ல முடியாதபடி இந்தியப் பெருங்கடல், தென்சீனக் கடல் ஆகியவற்றில் ஆதிக்கம் செலுத்துவதன் மூலம் சீனாவைப் பொருளாதாரரீதியாகக் கழுத்தை நெரிக்கத் திட்டமிடும் அமெரிக்க வல்லரசு, அதற்காகத் தொடர்ந்து பல தடைகளை ஏற்படுத்தி வருகிறது. இதற்கெதிராக சீனா, ஈரானிய எண்ணெயைத் தனது நட்பு நாடான பாகிஸ்தானிலுள்ள குவாதர் துறைமுகத்துக்குக் கொண்டுவந்து, பின்னர் அங்கிருந்து மேற்கு சீனா வரை எண்ணெய்க் குழாய், இரயில் மற்றும் சாலை இணைப்புகள் மூலம் கொண்டு செல்ல சீனா − பாகிஸ்தான் பொருளாதாரத் தாழ்வாரம் (CPEC) எனும் திட்டத்தைச் செயல்படுத்துகிறது. சீனா − பாகிஸ்தான் பொருளாதாரத் திட்டத்தின் வழித்தடமானது, இந்திய – சீன எல்லை மோதல் நடந்த இடத்திற்கு அருகே சீனாவின் அக்சாய் சின், சியாச்சின் வழியாகவும் செல்கிறது.

ஆர்.எஸ்.எஸ்.-இன் திட்டத்தை நிறைவேற்றுவது மற்றும் சீனாவைச் சீண்டுவது என்ற அடிப்படையில்தான் காஷ்மீருக்கான சிறப்புத் தகுதியை நீக்கி, அம்மாநிலத்தை யூனியன் பிரதேசங்களாகக் கூறுபோட்டு, சீனாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள லடாக் பகுதியை மத்திய மோடி அரசு தனது நேரடிக் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு சென்றிருக்கிறது.

இந்தப் பின்னணியிலிருந்துதான் இந்தியா−சீனா இடையே டோக்லாம் பகுதியிலும், லடாக் மற்றும் கல்வான் பகுதியிலும் எல்லைப் பிரச்சினை வெடித்திருப்பதையும், அங்கு இரு நாடுகளுமே தமது படைகளைக் குவித்து வருவதையும், கல்வான் பள்ளத்தாக்கில் மோதல் நடந்திருப்பதையும் காண வேண்டும். ஆர்.எஸ்.எஸ்.−இன் திட்டத்தை நிறைவேற்றுவது மற்றும் சீனாவைச் சீண்டுவது என்ற அடிப்படையில்தான் காஷ்மீருக்கான சிறப்புத் தகுதி நீக்கமும், அம்மாநிலம் யூனியன் பிரதேசங்களாகக் கூறு போடப்பட்டு, சீனாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள லடாக் பகுதியை மத்திய மோடி அரசு தனது நேரடிக் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு சென்றிருக்கிறது. மேற்குலக ஏகாதிபத்திய நாடுகள் காஷ்மீர் விவகாரத்தில் மோடி அரசைக் கண்டிப்பது போலப் பாசாங்கு செய்துவருவதையும் இந்தப் பின்னணியிலிருந்துதான் காண வேண்டும்.

இன்றைய உலகமயச் சூழலில் பொருளாதார ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் சீனாவுடன் இந்தியா இணைந்திருக்க வேண்டியிருக்கிறது. இதற்கு உடனடியான மாற்று ஏற்பாடு ஏதும் இல்லாத நிலையில், சீனாவுடனான வர்த்தக உறவுகளைத் துண்டித்துக் கொண்டால் இந்தியாவின் தொழிற்துறை உற்பத்தி பெரும் பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும். இதன் காரணமாகவும் பொருளாதாரத் தேக்கம் உள்ளிட்ட பிற காரணங்களாலும், இலங்கை, பாகிஸ்தான், மியான்மர் உள்ளட்ட இந்தியாவின் அண்டை நாடுகளில் சீனாவின் அரசியல்−பொருளாதார செல்வாக்கு அதிகரித்திருப்பதன் காரணமாகவும் சீனாவுடனான எல்லைப் பிரச்சினையைப் போர் மூலம் தீர்த்துக் கொள்ள இயலாத நிலைமையில்தான் மோடி அரசு உள்ளது.

சீனாவுடன் இந்தியா போருக்குச் செல்வதென்பது சுய அழிவுப் பாதையாகவே அமையும் என்றாலும், அரசியல் நோக்கங்களுக்காக சீனாவை எதிர்த்து மோடி அரசு சவடால் அடிக்க வேண்டியிருக்கிறது. நீண்டகாலமாக சீன எதிர்ப்பு, பாக். எதிர்ப்பு பிரச்சாரம் நடத்தப்பட்டுள்ளதாலும், நீண்டகாலமாக பிரிட்டன், அமெரிக்கா ஆகிய மேற்கத்திய ஏகாதிபத்திய விசுவாசத்தாலும் இந்தப் பாதையிலிருந்து இந்தியா விலகிச் செல்ல விரும்பவில்லை. இந்த திரிசங்கு நிலை காரணமாகவே, ஒருபுறம் ரசியா மூலம் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது, இன்னொருபுறத்தில் அமெரிக்காவின் குவாட் கூட்டணியில் இணைந்து போர்ப் பயிற்சிகளை மேற்கொள்வது என்ற இரட்டைக் குதிரைகளில் இந்தியா சவாரி செய்துவருகிறது.

மனோகரன்
புதிய ஜனநாயகம்

 

புதிய ஜனநாயகம், டிச. 2020 மின்னிதழ் தரவிறக்கம் செய்ய: இங்கே அழுத்தவும்

டெல்லி விவசாயிகள் மீதான ஒடுக்குமுறையை நிறுத்து ! மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்

த்திய மோடி அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டெல்லியில் போராடும் விவசாயிகள் மீதான ஒடுக்குமுறையை நிறுத்தவும், கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவும் வலியுறுத்தும் வகையில் கடண்டஹ் 03-12-2020 அன்று காலை 11 மணியளவில் சாஸ்திரி பவன் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது !

இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்த் தேச மக்கள் முன்னணி, மக்கள் அதிகாரம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாலெ) – செந்தாரகை, மக்கள் ஜனநாயக குடியரசுக் கட்சி ஆகிய அமைப்புகள் கலந்து கொண்டன.

“கார்ப்பரேட்களுக்கு ஆதரவான, உழவர்களுக்கும் மக்களுக்கும் எதிரான புதிய வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெறு !

தில்லியில் போராடும் உழவர்கள் மீதான ஒடுக்குமுறையை நிறுத்திடு !” ஆகிய  முழக்கங்களின் கீழ் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

படங்கள் :

தகவல் : மக்கள் அதிகாரம், சென்னை

ஆத்ம நிர்பர் அல்ல ! இது கார்ப்பரேட் நிர்பர்

புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2020
தலையங்கம்

டப்பு நிதியாண்டின் (2020−21) முதல் இரண்டு காலாண்டுகளில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி சுழியத்திற்குக் கீழாக வீழ்ச்சியடைந்திருப்பதையடுத்து, நாடு பொருளாதார மந்த நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்ற எச்சரிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கிறது.

இதற்குச் சற்று முன்னர்தான், உலகப் பட்டினிக் குறியீடு தரவரிசைப் பட்டியலில் இந்தியா, தனது அண்டை நாடுகளைவிடப் பின்தங்கி, 94−ம் இடத்தில் இருக்கும் அறிக்கை வெளியானது. இவற்றுக்கு இணையாகவே வேலையிழப்பு, வேலையில்லா பட்டாளத்தின் எண்ணிக்கை அதிகரிப்பு, ஊதிய வெட்டு, அத்தியாவசிய உணவுப் பொருட்களில் விலை உயர்வு எனப் பொருளாதாரமும் மக்களின் வாழ்நிலையும் அபாயத்தில் இருப்பதைக் காட்டும் அம்சங்கள் யாவும் முதலாளித்துவப் பத்திரிகைகளில் பேசு பொருளாக இருந்து வருகின்றன.

படிக்க :
♦ 101 இராணுவத் தளவாடங்கள் இறக்குமதி ரத்து : ஆத்மநிர்பாரா ? கார்ப்பரேட் நிர்பாரா ?
♦ கார்ப்பரேட்டுகளின் பலிபீடத்தில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு !

இவற்றையெல்லாம் நிவர்த்தி செய்யும் அருமருந்தைப் போல சுயசார்பு இந்தியா திட்டத்தின் (ஆத்ம நிர்பர் பாரத்) மூன்றாவது தவணை குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது, மோடி அரசு. இத்தவணையில் அறிவிக்கப்பட்ட 2.65 இலட்சம் கோடி ரூபாய் பெறுமான பொருளாதார திட்டங்களையும் சேர்த்து, மூன்று தவணைகளிலும் 30 இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு (நாட்டின் மொத்த உற்பத்தியில் 15 சதவீதம் அளவிற்கு) சிறப்புப் பொருளாதாரத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பதாகவும், இத்திட்டங்களின் விளைவாக, கரோனா பொதுமுடக்கத்திற்குப் பிறகு இந்தியப் பொருளாதாரம் வலுவான வளர்ச்சியைக் கண்டுவருவதாகவும் கூறியிருக்கிறார், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

இச்சிறப்புப் பொருளாதாரத் திட்டங்களாலும் அதனால் ஏற்பட்டு வருவதாகக் கூறப்படும் வலுவான வளர்ச்சியாலும் இந்திய மக்கள் கை மேல் கண்ட பலன் என்ன? தொழிலாளர் சேமநல நிதித் திட்டத்திலிருந்து சமீபத்தில் 30,800 நிறுவனங்கள் வெளியேறிவிட்டதால், ஏறத்தாழ 18 இலட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்திருக்கக்கூடும் என்றொரு மோசமான செய்தி வெளியாகியுள்ளது. இப்புள்ளிவிவரம்தான் இந்திய உழைக்கும் மக்கள் எதிர்கொண்டுவரும் துயரத்தின் குறுக்குவெட்டுத் தோற்றம்.

ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட இரண்டு தவணைத் திட்டங்களாலும் அடித்தட்டு மக்களுக்குப் புழுத்துப்போன ரேஷன் அரிசியும், கோதுமையும் கிடைத்ததைத் தாண்டி வேறெதுவும் கிடைக்கவில்லை என்ற நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த மூன்றாவது தவணையில் பலனடையப் போகிறவர்கள் யார்?

எலெக்ட்ரானிக்ஸ், மருந்து, கைபேசி உள்ளிட்ட பத்து துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு அவற்றின் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக அடுத்த ஐந்தாண்டுகளில் 1.45 இலட்சம் கோடி ரூபாய் ஊக்கத்தொகை மானியம்; ரியல் எஸ்டேட் துறையை மீட்பதற்காக 2 கோடி ரூபாய் வரையிலான மதிப்புகொண்ட வீடுகள் விற்பனையின்போது 20 சதவீதம் வரை வருமான வரி விலக்கு; சிமெண்ட், இரும்பு உள்ளிட்ட கட்டுமான  நிறுவனங்களின் விற்பனையை ஊக்குவிக்க பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 18 இலட்சம் வீடுகளைக் கட்ட 18,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு;

உர மானியம் என்ற பெயரில் உர நிறுவனங்களின் கஜானாவை நிரப்ப 65,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு; சர்க்கரை ஆலை அதிபர்கள் கரும்பு விவசாயிகளுக்குத் தர வேண்டிய நிலுவையைப் பற்றிக் கவலைப்படாமல், அவ்வாலைகளின் ஏற்றுமதியை ஊக்குவிக்க 5,900 கோடி ரூபாய் ஒதுக்கீடு என நீளுகிறது இந்தப் பட்டியல்.

இந்தச் சலுகைகளைப் பயன்படுத்திக் கொண்டு தொழில் நிறுவனங்கள் புதிய முதலீடுகளைச் செய்து உற்பத்தியை அதிகரிக்குமாம்; உற்பத்தியை அதிகரிப்பதற்காகப் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுமாம்; வேலைவாய்ப்பு அதிகரிக்கும்போது மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்து இந்தியப் பொருளாதாரம் மீட்சிப் பாதையில் நடைபோட ஆரம்பிக்குமாம். கொக்கு தலையில் வெண்ணையை வைத்துப் பிடிக்க முயற்சிப்பதற்கும் இதற்கும் ஏதேனும் வேறுபாடு உண்டா? பொருளாதார நிபுணரான மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோதே, “அரசாங்கம் அளிக்கும் சலுகைகளை கார்ப்பரேட் முதலாளிகள் மக்களுக்குத் திருப்பி அளிப்பதில்லை” எனக் கூறியதை நினைவில் கொண்டால், மோடி அரசு அளித்திருக்கும் சலுகைகளின் விளைவு என்னவாக இருக்கும் என்பதை நாம் ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியமேயில்லை.

பொருளாதார மந்தத்தாலும், கரோனா ஊரடங்கு முடக்கத்தாலும் மக்கள் எதிர்கொண்டு வரும் துயரங்களைத் துடைப்பதைவிட, கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் இலாபங்கள் சரியக்கூடாது என்பதில்தான் மோடி அரசு கண்ணும் கருத்துமாக இருக்கிறது. அதனால் அவர்களுக்குச் சலுகைக்கு மேல் சலுகையாக வாரி வழங்கும் இச்சிறப்புப் பொருளாதாரத் திட்டங்களை ஆத்ம நிர்பர் (சுயசார்பு) என அழைப்பதைவிட, கார்ப்பரேட் நிர்பர் என அழைப்பதே பொருத்தமானதாக இருக்கும்.

புதிய ஜனநாயகம்

புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2020 இதழ் தரவிறக்கம் செய்ய : இங்கே அழுத்தவும்

பெண்களுக்கான ஜீன்ஸ் பாக்கெட்டில் செல்போன் நுழைவதில்லை ஏன் ?

ரலாறு முழுக்க பெண்களின் ஆடைகளில் பாக்கெட்டுக்கு ஏன் இடமில்லாமல் போனது என்பதற்கும் ஆண்கள் ஆடைகளில் ஏன் இடமிருந்து என்பதற்கும் பின்னால் ஓரு அரசியல் இருக்கிறது.

வீட்டிலிருந்து எப்போது புறப்பட்டாலும் வீட்டைப்பூட்டிய பின் சாவி அண்ணனின் கைக்கோ அல்லது அப்பாவின் கைகளுக்கோ தான் போகும். அப்படித்தான் கார் சாவியும். ஏனெனில் அவர்களிடம்தான் சட்டைப்பை இருக்கும். அப்போது நம்மிடம் கிட்டெ இல்ல. அன்று பெண்களிடம் கைப்பை பெருமளவில் இல்லையென்றாலும், இன்று பெண்களிடம் கைப்பை இருக்கும் காலத்திலும் சாவி இடம்பெருவது என்னமோ அந்த சொக்காயில் தான்.

படிக்க :
♦ பெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் !
♦ லாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் !

அந்தக்காலத்தில் நமது பாட்டியெல்லாம் ஓரு சுருக்குப் பை தான் வைத்திருந்து பாத்திருப்போம். அவரவர்களுக்கு  தேவையானது எல்லாம் அந்த பைக்குள் தான் இருக்கும். ஆனால் தாத்தா எப்போவும் பட்டாப்பட்டி கால் டிரோசர் பையிலும்,  சட்டையிலும்தான் காசு வைத்திருப்பார். ஆனால் நமது பாட்டியிடம் நாம், “ஏன் பாட்டி நீயும் சட்டை பையில் வைக்காம சுருக்கு பைல வெச்சிருக்க?” என்று கேட்டதில்லை. ஏனெனில் அக்கேள்வி இயல்பாகவே நமக்குத் தோன்றுவதில்லை.

17-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் எல்லாம், யாருடைய ஆடையிலும் பாக்கெட் இல்லை. எல்லாரும் பணத்தை இடுப்புத் துணியோடு சுற்றி முடிச்சு போட்டுதான் வைத்திருந்தார்கள். தொழில் புரட்சிவந்து தான் இந்த இடுப்புத்துணி முடிச்சை  சட்டைப்பையாக மாற்றியது. 17-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்த சட்டைப்பை என்பது ஆடையில் ஓரு அடையாளத்தைப்  பெற்றது. அதுவும் ஆண்களுக்கு மட்டுமே.

ஏன் என்றால் ஆண் வேலை செய்து பணம் ஈட்டுபவர். பணத்தை வைக்க பாக்கெட் தேவை என்பதால் அவர்கள் உடையில் பாக்கெட் இடம்பெற்றது. அன்று பெண்களின் நிலைமை வீட்டு வேலையும், குழந்தைகளை பராமரிப்பது மட்டுமே என இருந்தது. அதற்குப் பிறகு தான் பெண்கள் தனது பொருட்களையும், தேவைகளையும் வைக்க துணியாலான ஓரு பையை தைத்தார்கள். அதில் அவர்களுக்கு தேவையான எல்லாம் வைத்துக்கொண்டார்கள்(இன்று பெண்கள் பயன்படுத்தும் பர்ஸ் அல்லது ஹான்டு பேக்  போன்று).

பொருளாதார ரீதியாக பெண்கள் ஆண்களைச் சார்ந்து இருப்பதையே, ஆண்களுக்கு மட்டும் ஆடைகளில் பாக்கெட்டுகள் வடிவமைக்கப்படுவது வெளிப்படுத்தியது. ஆண் பெண் ஏற்றத்தாழ்வு  ஆடைகளிலும் வெளிப்பட்டது.

19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ‘Suffragettes Suit’ என்ற அமைப்பும் அதன் ஆதரவாளர்களும் பெண்களின் ஆடைகளிலும் சட்டைப்பை வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி வந்தனர். ஆனால் உற்பத்தி மற்றும் வடிவமைப்பு ஆண்களின் கைகளில் இருந்ததால் அவர்கள் அதை எதிர்த்தனர். அதன் பின் 1910-ல் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து பெண்களின் ஆடையிலும் குறைந்தது 6 சட்டைப்பைகள் இருக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை  ‘Suffragettes Suit’  இயக்கத்தின் மூலம் எல்லா இடங்களிலும் பேசப்பட்டது.

பிறகு 20-ம் நூற்றாண்டில், இரண்டாம் உலகப்போரின் மூலம் பெண்கள் இராணுவத்தில் ஈடுபட்டு போரை எதிர்கொண்டு பொருளும் ஈட்டினர். பெண்கள் போரை எதிர்கொள்ளவும்,  காயங்களை தடுப்பதற்கும், பணத்தை சேமிக்கவும் அவர்களின் ஆடையில் இடம் பிடித்தது பெரிய சட்டைப்பை. உலகப்போர்  1940ல் முடிவுற்ற பின் பெண்கள் ஆடையின் மேல் அதீத ஈர்ப்பும், உடலமைப்பிலும் கவனம் செலுத்தினர். அதன் பின் பெண்களின் கைப்பை நவநாகரிகம் என்று போர்வையில் மிண்டும் பிரபலமானது. திரும்பவும் சட்டைப்பை சடங்காக மாறியது.

இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்ட அமெரிக்கப் பெண்கள்

தற்போது பெண்கள் பொருளாதார ரீதியாக சுதந்திரமடைவதற்கான சூழல் ஓரளவிற்கு சாத்தியமாகியிருக்கும் நிலைமையிலேயே,  இன்றைக்கும் பெண்களின் ஆடைகளில் பாக்கெட் என்பது போலியாக வடிவமைக்கப்பட்ட ஓரு அங்கமாகவோ அல்லது பயன்படாத நிலையிலோதான் இடம்பெறுகிறது. பெண்கள் ஆண்களுக்கு நிகராக உடுத்தும் ஜீன்ஸ் கூட பாக்கெட் அளவு சராசரி ஆண்களின் பாக்கெட்டைவிட 48% நீளம் குறைவாகவே வடிவமைக்கப்படுகிறது. பெண்களுக்கு இருக்கும் பொருளாதார சுதந்திரம் பெயரளவிலானதுதான் என்பதை அந்த பாக்கெட்டின் அளவே நமக்குப் பறைசாற்றப்படுகிறது.

இன்றும் பெண்கள் சட்டைப்பை புரட்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இன்ஸ்டாகிராமில் #ithaspockets என்ற “டேக்”-ல் பல ஆயிரம்  பேர் பாக்கெட் உள்ள பெண்களின் உடைகளை பதிவிட்டு பின்தொடர்கிறார்கள். பெண்கள் வாங்கும் ஆடைகளில் பாக்கெட் அவசியம் வேண்டும் என 78℅ பெண்கள் விரும்புகின்றனர்.

படிக்க :
♦ ஹிட்லரின் நியூரெம்பர்க் சட்டங்களின் மறுவடிவம்தான் ‘லவ் ஜிகாத்’ தடைச் சட்டம் !
♦ டெல்லி பேரணி : முடக்கத் துடிக்கும் போலீசு ! அடங்க மறுக்கும் விவசாயிகள் !!

பெண்கள் தங்கள் மீதான சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில், ஆடை வடிவமைப்பாளர்கள், “Perfect Pants answer this call. பெரிய, பயன்படுத்த கூடிய பைகள் கொண்ட உடை” என்று விளம்பரப்படுத்தும் காலம் விரைவில் வரும்.

வரலாறு முழுவதும், பெண்களின் உரிமைகளில் முன்னேற்ற காலங்களுடனும், பாலின சமத்துவத்துடனும் பாக்கெட்டுகள் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. பாக்கெட்டுகள் சுயேட்சை மற்றும் பொருளாதார அதிகாரத்தை குறிக்கின்றன. அடுத்த முறை உங்கள் அலைபேசியை உங்கள் பேண்ட் பாக்கெட்டில் பொருத்த முயற்சிக்கும்போது, ​​தோல்வியுற்றால், நீங்கள் பல நூற்றாண்டுகள் நீடித்த போரின் ஒரு பகுதியாக இருப்பதை அறிந்து கொள்ளுங்கள்

சிந்துஜா 
சமூக ஆர்வலர்