கேள்வி: //என் வீட்டில் உள்ள பெண்களை பார்த்து, பெண்களை முடக்குவதற்கான ஏற்பாடாகத் தான் பூச்சூடுதல், நகையணிதல், பொட்டு வைத்தால், தாலி அணிதல் ஆணாதிக்க சமூகத்தால் உண்டாக்கப்பட்டிருக்கிறது என்கிறேன். என்னைத் தான் ஏளனமாக பார்க்கின்றனர். நான் என்ன செய்து அவர்களை மாற்றுவது?//
– துழாயன்
அன்புள்ள துழாயன்,
வெறும் கருத்து உரையாடலில் பெண்களை மாற்றி விட முடியாதது மட்டுமல்ல, அது எதிர் விளைவைத்தான் ஏற்படுத்தும். சராசரி வாழ்வில் அதாவது ஆணாதிக்க சமூகத்தில் அடிமையாக வாழும் பெண்களிடம் எடுத்த எடுப்பிலேயே அப்படி பேசுவது பலனளிக்காது. பெண்களின் அடிமைத்தனத்தை பேணிப் பாதுகாப்பது குடும்பமும், சொந்த பந்த உறவுகளும்தான். அதை உறுதி செய்யும் வண்ணமே பெண்கள் பார்க்கும் சீரியல்களும், பார்ப்பனிய சமூகத்தின் மரபு – சம்பரதாயங்கள் – சடங்குகள் இருக்கின்றன. ஆக வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் பெண்களை அவர்களே விரும்பி ஏற்கச் செய்யும் அடிமைத்தனம் செல்வாக்கு செலுத்துகிறது. பெண்கள் அலங்காரங்களை துறப்பதற்கு முன்னர் அவர்கள் சமூக வெளியில் அரசியல் ஆளுமையை வரித்துக் கொள்ள வேண்டும். இந்த துறத்தலையும் வரித்தலையும் நிறைவேற்றுவது எப்படி?
மாதிரிப் படம்
முதலில் பெண்களை அரசியல் நிகழ்வுகளுக்கு அழைத்து வரவேண்டும். அது ஒரு பொதுக்கூட்டமோ, அரங்கக் கூட்டமோ, இல்லை ஆர்ப்பாட்டமாகக் கூட இருக்கலாம். இவற்றில் அவரது சிறு உலகிற்கு வெளியே உள்ள பெரிய உலகம் கொஞ்சம் கொஞ்சமாக திறக்கப்படும். தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தின் பிரச்சினைகள் சில அவளது கண்பார்வைக்கு கொண்டு செல்லப்படும். முக்கியமாக இத்தகைய சமூகப் பிரச்சினைக்கு கவலை கொண்டு இப்படி சிலர் வாழ்கிறார்களே என்ற உண்மையும் கவனத்திற்கு வரும்.
இதற்கு அடுத்தபடியாக சாதி மறுப்பு – புரட்சிகரத் திருமணங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அங்கே தாலி, அலங்காரங்கள் இன்றி எளிமையாக நடக்கும் திருமண நிகழ்வும், பெண்ணடிமைத்தனம் – ஆணாதிக்கம் குறித்து பேசப்படும் உரைகளும், மணமக்கள் ஏற்கும் உறுதி மொழியும் பெண்களது அக உலகை விசாலமாக்கி அசை போடவைக்கும்.
நமக்குத் தெரிந்து இத்தகைய திருமண விழாவிற்கு வரும் புதிய பெண்கள் இந்த சுயமரியாதை திருமண முறைகளை விரும்புவதும், தங்களுடைய வாழ்விலும் அது போன்று நடக்காதா என்றும் யோசிக்கிறார்கள். சமூகத்தில் சகல சம்பரதாயங்களோடு நடக்கும் திருமணங்கள் அதே சம்பரதாயங்கள், சீர்வரிசைகளால் நின்று போவதோ, சண்டை நடப்பதோ குறித்து இந்த தருணத்தில் அவர்கள் சீர் தூக்கி பார்க்கிறார்கள்.
இன்னும் நமது சமூகத்தில் கைம்பெண்களுக்கு பூ, பொட்டு அழித்து, தாலி அகற்றும் சடங்குகள் நடக்கின்றன. மாதவிடாய் காலத்தில் அலங்காரம் அதிகம் செய்யக் கூடாது, கோவிலுக்கு செல்லக்கூடாது என்பதும் பின்பற்றப்படுகின்றன. இவை குறித்தெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக பேச வேண்டும். பெரியார், இதர முற்போக்கு நூல்களை படிக்க ஆர்வமேற்படுத்துதல் ஆகியவையும் அவசியம். இதையே விரும்பிப் படிக்கும் வண்ணம் நாவல்களையும் படிக்கத் தரலாம்.
முதலில் பெண்களை அரசியல் நிகழ்வுகளுக்கு அழைத்து வரவேண்டும். அது ஒரு பொதுக்கூட்டமோ, அரங்கக் கூட்டமோ, இல்லை ஆர்ப்பாட்டமாகக் கூட இருக்கலாம்.
இறுதியாக நீங்கள் ஒரு இயக்கத்தில் செயல்பாட்டாளராக இருந்தால் உங்கள் அரசியல் செயல்பாடுகளுக்கு அவர்களையும் அழைத்துச் செல்ல வேண்டும். இங்கே மக்கள் எப்படி வாழ்கிறார்கள், என்ன பிரச்சினை, இந்த சமூகம் எப்படி இயங்குகிறது என்பது பற்றி ஒரு துவக்கம் இருக்கும். அது அடிமைத்தனம் என்ற ஆயுள் சிறையை விட்டொழித்து சமூக சுதந்திரவெளியில் ஒரு ஒளியூட்டும் ஆளுமையாக மாறுவதற்கு வழி அமைத்துத் தரும்.
பெண்களுடன் நேரம் ஒதுக்கி அரசியல் சமூக பண்பாட்டு பிரச்சினைகளை அறிமுகப்படுத்தி விவாதிக்க வேண்டும். இதன் போக்கில் அலங்காரங்கள் எனும் வெற்று ஜோடனைகள் தானாகவே துறந்து தனது ஆளுமை எது என ஒரு பெண் விரும்பி தரிக்க முடியும். இந்த நீண்ட நிகழ்ச்சிப் போக்கிற்கு ஓரிரு வருடங்கள் கூட ஆகலாம். பொறுமையுடன் முயலுங்கள்!
நன்றி!
♦ ♦ ♦
(கேள்வி பதில் பகுதிக்கு நிறைய கேள்விகளை நண்பர்கள் கேட்கிறார்கள். மகிழ்ச்சி. கூடுமானவரை உடனுக்குடன் பதிலளிக்க முயல்கிறோம். சில கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு கூடுதலான நேரம் தேவைப்படுகிறது. கொஞ்சம் காத்திருங்கள்.)
வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்: கேள்விகளை பதிவு செய்யுங்கள்
கேள்வி : //இந்த நாட்டில் அரசியல் அமைப்புச் சட்டம் தோல்வியுற்றதாகக் கொண்டாலும், நாடு தழுவிய ஒரு கட்சி அல்லது அமைப்பு இல்லாமல் மாநில அளவில் எப்படி நாடு முழுவதும் மக்களை ஒன்று திரட்டுவது?//
– பெ. கண்ணன்
அன்புள்ள கண்ணன்,
நாடு தழுவிய புரட்சிகரக் கட்சி இல்லாமல் மாநில அளவில் மட்டும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு கட்சி நாடு முழுவதும் மக்களை ஒன்று திரட்டுவது கடினம்தான். ஆனால் பிரச்சினைகள் என்ற அளவில் அவ்வப்போது நாடு முழுவதும் உள்ள அரசியல் முன்னணியாளர்கள் உரையாடுகிறார்கள்.
தமிழகத்தில் ஐ.ஐ.டி சென்னை வளாகத்தில் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் தடை செய்யப்பட்டபோது, சூரஜ் எனும் மாணவர் தாக்கப்பட்ட போது, “கோ பேக் மோடி” எனும் ஹேஷ்டாக் வைரலான போது இப்படி சில தருணங்களில் குறைந்த பட்சம் இணையத்திலாவது அந்த சங்கமம் நடந்திருக்கிறது. தென்னிந்தியாவைச் சேர்ந்த டிவிட்டர் வாசிகள் பலர் திராவிடஸ்தான் தேவை எழுந்திருப்பதாக கூட அப்போது பேசினர். மோடி – பாஜக எதிர்ப்பில் உறுதியாக இருக்கும் தமிழகத்தை வாழ்த்தியும் பிற மாநிலத்தவர் பேசியிருக்கின்றனர்.
அதே போன்று பாடகர் கோவன் கைது செய்யப்பட்ட போதும் இந்திய அளவில் எதிர்ப்பு உருவானது, பல நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடந்ததும் உண்மை. இப்படி நாடு தழுவிய அளவில் இந்துத்துவ எதிர்ப்பிற்கு ஒரு ஐக்கியம் உள்ளது. அந்த ஐக்கியத்தின்படி ஒத்த பார்வை கொண்ட மாற்று அமைப்புகள் ஒரு முன்னணியாக சேர்ந்து பாஜகவை எதிர்த்து ஒரு மாற்றை இந்திய அளவில் செயல்படுத்துவதற்கு நிறையவே வாய்ப்பு இருக்கிறது. பாசிச சூழல் நெருங்கி வரும் இந்நேரம் இத்தகைய இணைவு காலத்தின் கட்டாயம்.
இதன் போக்கில் ஒரு புரட்சிகரக் கட்சி தோன்றுவதற்கும் அது இந்திய அளவில் செயல்படுவதற்கும் உகந்த சூழல் வரலாம். அல்லது இந்திய அளவில் இல்லாமல் சில மாநிலங்களிலாவது செயல்படும் சூழல் வரலாம். காத்திருப்போம். மற்றபடி சித்தாந்த ரீதியாக ஐக்கியம், புரட்சியை எவ்வழியில் அடைய முடியும் என்ற தெளிவு ஆகியவற்றில் இந்தியா முழுவதும் உள்ள புரட்சிகர அரசியல் பேசுவோரிடம் ஒரு ஒற்றுமை உருவாவதும் முக்கியம்.
♦ ♦ ♦
கேள்வி : //நரேந்திர மோடி அவர்களே தமிழ் சமஸ்கிருதத்தை விட மூத்த மொழி என்று கூறுகிறார். தற்போது சமஸ்கிருத மேம்பாட்டிற்கு18 பல்கலைக் கழகங்கள் உள்ளன. இந்திய அரசு மேலும் ஒரு தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகம் தொடங்க நிதித்துறையும் நிதி ஆயோக்கும் ஒப்புதல் தருகிறது.
ஆனால், சமஸ்கிருதத்தை மூத்த மொழியாகவும், உலக அளவில்10 கோடி மக்கள் பேசும் மொழிக்கு ஒரு பல்கலைக் கழகம் கூட மத்திய அரசு ஏற்படுத்த அக்கறை காட்டவில்லை. இதை ஏன் தமிழகத் தலைவர்கள் கண்டிக்கவில்லை?//
– ஆ.ரா.அமைதி ஆனந்தம்
அன்புள்ள நண்பருக்கு,
இந்தி பேசும் மாநிலங்களான பீகார், சட்டீஸ்கர், ஹரியாணா, ஹிமாச்சல் பிரதேசம், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தர்காண்ட், உத்திரப் பிரதேசம், தில்லி யூனியன் பிரதேசம் ஆகியவையோடு குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் இந்துத்துவ பிற்போக்குத்தனம் வலுவாக இருக்கிறது. இவற்றை பசுப்படுகை மாநிலங்கள் என்றும் அழைக்கலாம். இம்மாநிலங்களில் பெரும்பாலானவற்றில் பாஜக-வே ஆள்கிறது. ஆர்.எஸ்.எஸ்-ன் தலைமையிடமான நாக்பூர், மராட்டியத்தில்தான் இருக்கிறது.
இம்மாநிலங்களில் சங்க பரிவாரம் வைத்திருக்கும் அத்தனை திட்டங்களுக்கும் பெரு வரவேற்பு இருக்கிறது. பசுப்புனிதம், மாட்டுக்கறிக்கு தடை, மதமாற்றத் தடை, லவ் ஜிகாத், முசுலீம் எதிர்ப்பு, தலித் ஒடுக்குமுறை, கிறித்தவ எதிர்ப்பு, கம்யூனிச எதிர்ப்பு, பாபர் மசூதி இடிப்பு, ராமன் மீதான வழிபாடு என்று நிறைய ஆர்.எஸ்.எஸ் அஜண்டாக்கள் இங்கே பெரும் வரவேற்புடன் இருக்கின்றன. இம்மாநிலங்களுடன் இப்போது மேற்கு வங்கம், ஒரிசாவும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து வருகின்றன. அங்கேயும் சங்க பரிவாரத்தின் செல்வாக்கு வளர்ந்து வருகிறது.
இம்மாநிலங்களில் இருக்கும் பாஜக-வின் வாக்கு வங்கியோடு தமிழகத்தை ஒப்பிட்டால் அது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடுதான்.
எனவே இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு, பார்ப்பனயமாக்கம், பள்ளிகளில் யோக வழிபாடு, கல்வி – வரலாற்றில் இந்துத்துவ திணிப்பு அனைத்தும் இம்மாநிலங்களில் வரவேற்பு பெற்று பாஜக-வின் அரசியல் செல்வாக்கை உயர்த்தும். சமீப காலமாக பொருளாதார நெருக்கடி இந்தியாவில் பரவி வரும் போது மத்திய அரசாங்கத்தின் பார்வை இத்தகைய பண்பாட்டு பிற்போக்குத்தனங்களின் பால் செல்வது அவர்களுக்கு திசை திருப்பவும் வசதியாக இருக்கிறது. சில மாநிலங்களில் காங்கிரசு ஆட்சியில் இருந்தாலும் அவர்களும் மிதவாத இந்துத்துவாவையே தமது அரசியல் செல்நெறியாக கொண்டிருக்கின்றனர். தற்போது ஜெய்ராம் ரமேஷ், அபிஷேக் மனுசிங்வி, சசிதரூர் ஆகிய காங்கிரசு தலைவர்கள் மோடியிடம் சரணாகதியே அடைந்திருக்கின்றனர்.
ஆக வட மாநிலங்களில் தமது வாங்கு வங்கியை தக்க வைக்க பாஜக இப்படி நடந்து கொள்வது இயல்பான ஒன்று. அதாவது தமிழகத்தையும், தமிழையும் புறக்கணிப்பதற்கு இப்படி ஒரு அடிப்படை இருக்கிறது. மற்றபடி சமஸகிருதத்தை விட தமிழ் மூத்த மொழி என்று மோடி பேசவில்லை. பொதுவில் தமிழ் மூத்த மொழி என்றுதான் பேசியிருக்கிறார். தமிழகத்தில் அ.தி.மு.க தவிர்த்து மற்ற வாக்கரசியல் கட்சிகள் இந்துத்துவ கொள்கைகளை அவ்வப்போது விமரிசிக்கத்தான் செய்கின்றனர். இருப்பினும் இக்கட்சிகள் பாஜக-வை திட்டம் சார்ந்து எதிர்க்கின்றனவே அன்றி பாஜக – ஆர்.எஸ்.எஸ் -ஐ ஒட்டு மொத்தமாக கொள்கை சார்ந்து போதுமான அளவு விமரிசிப்பதில்லை. வாக்கரசியலுக்கு வெளியே உள்ள அமைப்புகள், ஜனநாயக சக்திகள்தான் கொள்கை சார்ந்து எதிர்க்கின்றனர். அந்த அழுத்தம் அதிகமாகும் போது பெரிய கட்சிகளும் எதிர்க்கும்.
தமிழுக்கும், சமஸ்கிருதத்திற்கும் ஈராயிரம் ஆண்டிற்கு மேலாக பகை உள்ளது. இந்தப் போரில் சமஸ்கிருதம் மக்கள் மொழியாக உருவெடுக்கவில்லை. தமிழ் இன்றும் மக்களிடையே நிலைத்து இருக்கிறது. இது இந்துத்துவவாதிகளின் கண்ணை உறுத்துவது இயல்பான ஒன்றுதான். நாம் போரைத் தொடர்வோம்.
♦ ♦ ♦
வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்: கேள்விகளை பதிவு செய்யுங்கள்
ஹரப்பா நாகரிகம் என்றழைக்கப்படும் சிந்துச் சமவெளி நாகரிக (Indus Valley Civilisation – IVC) மக்களின் மரபு வழி அடையாளம் குறித்த மர்மம் மற்றும் சர்ச்சைகளுக்கு கடந்த வியாழனன்று (05-09-2019) வெளியிடப்பட்ட இரண்டு மரபணு ஆய்வுகள் மறுக்கவியலாத பதிலை அளித்துள்ளன. மேலும், ஆரியர்களின் வருகை படையெடுப்பின் விளைவானதா அல்லது இடம்பெயர்வு குடியேற்றத்தின் மூலமானதா என்கிற கேள்விக்கும் விடையளித்துள்ளன.
சிந்துச் சமவெளி நாகரிகம் உலகின் மிகப் பழமையான நாகரிகங்களில் ஒன்று. தற்போதைய ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வடமேற்கு இந்தியாவின் பகுதிகளில் தோராயமாக கி.மு3300 முதல் கி.மு1300 வரை (5000 ஆண்டுகளுக்கு முன்) செழித்திருந்த இந்நாகரிகம் மெசபடோமிய மற்றும் எகிப்திய நாகரிகங்களின் சமகாலத்தியதும் அளவில் அவற்றைவிடப் பெரியதுமாகும்.
சிந்துச் சமவெளி நாகரிக மக்கள் யார், எங்கிருந்து வந்தனர், அவர்களுடைய நாகரிகம் என்ன? வட மற்றும் தென்னிந்திய மக்களின் மூதாதையர்கள் யார்? என்ற இரண்டு கேள்விகளுக்கும் இரண்டு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன.
மத்திய ஆசியாவிலிருந்து சிந்துச் சமவெளி நாகரிகத்தின் இறுதிக் காலத்தில் படையெடுத்தோ அல்லது இடம்பெயர்ந்தோ வந்த ஆரியர்களின் மொழியே இந்தோ-ஐரோப்பிய மொழியான சமஸ்கிருதம். அவர்களின் கலாச்சாரமே வேத கலாச்சாரமும் வேதங்களும் என்பது மொழியியல் மற்றும் தொல்லியல் ஆய்வறிஞர்களின் கருத்து. குறிப்பாக சிந்து சமவெளி நாகரீகம் வேத நாகரீகம் அல்ல என்பது தொல்லியல் ஆய்வறிஞர்களின் கருத்து.
ஆனால் இந்துத்துவ சார்பு அறிஞர்களோ, இந்தக் கருத்துக்கள் முதலில் ஐரோப்பிய ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்டதைக் காரணம் காட்டி, காலனியவாதிகள் இந்தியர்களை பிரித்தாள்வதற்காக பரப்பிய கருத்தாகக் கூறி வருகின்றனர். மேலும், திராவிடர்கள் முந்தி வந்தனர், ஆரியர்கள் பிந்தி வந்தனர் என்பது போன்ற வாதங்கள் எல்லாம் வெளியில் இருந்து வந்து ஆட்சியைப் பிடித்த ஆங்கிலேயர்கள் தங்களது ஆதிக்கத்திற்கு ஒரு தார்மீக நியாயத்தைக் கற்பிப்பதற்காக எடுத்த முயற்சிகளின் ஒரு பகுதியே என்பதுதான் இந்த இந்துத்துவ அறிஞர்களின் வாதம்.
“சமஸ்கிருதமே இந்திய மொழிகள் அனைத்திற்கும் தாய், வேத நாகரிகமும் அதன் கலாச்சாரமுமே எல்லா இந்தியப் பண்பாடுகளுக்கும் மூலம். இந்தியப் துணைக்கண்டத்தின் முதல் நாகரிகமான சிந்து சமவெளி நாகரிகம் ஒரு வேத நாகரிகமே. அதனடிப்படையிலேயே இந்நாடு இந்தியா என்றழைக்கப்படுகிறது. அனாதிக்காலம் தொட்டு இங்கே இந்து மதமும் சமஸ்கிருதமும் நிலவி வந்தது” என்பதே இந்துத்துவ அரசியலின் அடிப்படை. இந்தப் பின்னணியில்தான் அவர்கள் சிந்துச் சமவெளி நாகரிகம் வேத நாகரிகம் என்று நிறுவ முற்படுகின்றனர்.
ஹரியானா மாநிலத்தின் ராக்கிகர்ஹி என்ற இடத்தில் வளர்ச்சியடைந்த ஹரப்பா நாகரிக கால நகரம் இருந்துள்ளது. அவ்விடத்தில் தொல்பொருள் அகழ்வாய்வில் ஈடுபட்ட ஆய்வாளர்கள் சிந்துச் சமவெளி நாகரிக காலத்தைச் சேர்ந்த இடுகாட்டில் ஆண், பெண் இருவரின் எலும்புக்கூடுகளை கண்டுபிடித்தனர். அதில் பெண்ணின் எலும்பை மரபணு ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். இவ்வாய்வறிக்கை செல்(Cell) என்ற அறிவியல் ஆய்விதழில் வெளியாகியுள்ளது.
இரண்டாவது, அறிவியல் (science) ஆய்விதழில் வெளியான “தெற்காசியா மற்றும் மத்திய ஆசிய மக்களின் மரபணு உருவாக்கம்” என்ற ஆய்வறிக்கை. இது மத்திய ஆசியா மற்றும் தெற்காசியாவின் வடபகுதியில் (குறிப்பாக ஈரான், ரஷ்யா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில்) கண்டெடுக்கப்பட்ட 300 முதல் 8000 ஆண்டுகள் வரை பழமையான 523 மரபணுத் தொகுப்புக்களை தற்போதைய தெற்காசிய மக்களின் மரபணுவுடன் ஒப்படுவதன் மூலம் முழுதுமாக மத்திய, தெற்காசிய மக்களின் வம்சாவளி, கலாச்சாரம் மற்றும் மொழி நகர்வுகள் குறித்து ஆராய்கிறது.
இதில் சிந்துச்சமவெளி நாகரிக மக்கள் மற்றும் இந்திய வம்சாவளிகள் குறித்தும் “வெளிப்புற மாதிரி”யின் (Outlier Model) மூலம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதாவது நேரடியான சிந்துசமவெளி நாகரிக மனிதர்களின் மரபணுவைக் கொண்டு செய்யப்படவில்லை. அதோடு தொடர்பிலிருந்த பிற நாகரிகங்களில் அவற்றோடு பொருந்தாத ஆனால் சிந்துசமவெளி நாகரிகத்தோடு பொருத்தபாடுடைய 11 மரபணுக்களைக் கொண்டு செய்யப்பட்டது. தொல்லியலில் கண்டெடுக்கப்பட்ட பண்டைய மனிதர்களின் மரபணு பற்றிய ஆய்வுகளிலேயே மிகப்பெரும் ஆய்வு இதுவாகும்.
சிந்துச் சமவெளி நாகரிகத்தில் வசித்தவர்களிடம் ஸ்டெப்பி புல்வெளி மற்றும் பண்டைய ஈரானிய வேளாண்குடிகளின் மரபணு இல்லை. பழங்கால தென்னிந்திய வேட்டைச் சமூகம் மற்றும் பழங்கால விவசாயத்திற்கு முந்தைய (புதிய கற்கால) ஈரானிய சமூகம் ஆகிய கலப்பின மரபணுவைக் கொண்டிருப்பதை இவ்விரு ஆய்வு முடிவுகளும் தெரிவிக்கின்றன.
சிந்துச் சமவெளி மக்களிடம் ஈரானிய வேளாண்குடிகளின் மரபணு இல்லை என்பதை இந்த ஆய்வு அறிக்கை நிறுவுயிருப்பதன் மூலம் இந்தோ – ஐரோப்பிய மொழி பேசும் மக்கள் சிந்துச் சமவெளி நாகரிகத்திற்கு முற்பட்ட காலத்திலேயே ஈரானில் இருந்து வந்து இந்திய மூதாதையினருடன் கலந்தனர் என்றும், இவர்களே பின்னர் வேளாண்மையில் ஈடுபட்டு சிந்துச்சமவெளி நாகரிகமாக வளர்ச்சியடைந்தனர் என்றும் இந்துத்துவ அறிஞர்களால் பரப்பப்பட்டுவந்த கூற்று தவறானது என்பது தற்போது ஆதாரத்துடன் நிருபணமாகியுள்ளது.
1 of 4
குடியேற்றம் தொடர்பான ஆய்வு முடிவுகளை விளக்கும் விளக்கப் படம்
இரானிய வேளாண் மூதாதையர் நகர்வு
ராக்கிகர்ஹி பகுதி
கண்டெடுக்கப்பட்ட ஹரப்பா காலகட்ட எலும்புக்கூடு
இந்தோ-ஐரோப்பிய மொழி ஈரானிலிருந்து வரவில்லை எனும்போது ஸ்டெப்பி புல்வெளி மேய்ப்பர்களின் மூலம் மட்டுமே வந்திருக்க முடியும். சிந்துச் சமவெளி நாகரிக மக்களிடம் ஸ்டெப்பி புல்வெளி நாடோடி மேய்ப்பர்களின் மரபணுவும் இல்லை என்பதிலிருந்து சிந்துச்சமவெளி நாகரிகம் வேத (ஆரிய) நாகரிகம் அல்ல என்பதும் உறுதியாகிவிட்டது.
“தற்கால வட இந்தியர்களிடம் குறிப்பாக இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பங்களை பயன்படுத்தும் இந்திய புரோகித சமூகங்களில் (குறிப்பாக பார்ப்பன, பனியா மேல்சாதியினர்) இந்த ஸ்டெப்பி வம்சாவளி மரபணு மிக அதிகமாகக் காணக்கிடைக்கிறது” என்கிறது science இதழில் வெளியான ஆய்வு.
சிந்துச் சமவெளி மக்களிடம் இல்லாத மரபணுக் கூறு இன்றைய வட இந்திய மக்களின், மேலதிகமாக பார்ப்பன- பனியா மேல் சாதியினரின் மரபணுக்களில் காணப்படுவதன் காரணம் என்ன?
இன்றைய நவீன இந்தியர்கள் அனைவருமே வடஇந்திய மூதாதையர் (Ancestral Noth Indians – ANI) மற்றும் தென்னிந்திய மூதாதையர் (Ancestral South Indians – ASI) ஆகிய இரு வம்சாவளியின் வழித்தோன்றல்களே. இவ்விரு வம்சாவளியினரும் சிந்துச் சமவெளி நாகரிகத்தின் அழிவிற்குப் பின்னரே தோன்றினர் என்பதும் தற்போது உறுதியாகியுள்ளது.
“சிந்துச்சமவெளி நாகரிகத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, அம்மக்கள் வடமேற்கில் இருந்த இனக்குழுக்களுடனும் மற்றும் ஸ்டெப்பி வம்சாவளியுடனும் கலந்து ‘வடஇந்திய மூதாதையர்’ உருவாகினர். மேலும் தென்கிழக்கு குழுக்களுடன் கலந்து ‘தென்இந்திய மூதாதையர்’ உருவாகினர்” என்கிறது science இதழில் வெளியான ஆய்வு அறிக்கை.
அதாவது, இந்தோ-ஐரோப்பிய (இந்தோ-ஆரிய) மொழிகளை இந்தியாவுக்குக் கொண்டுவந்த ஸ்டெப்பி நாடோடி மேய்ப்பர்கள் கிமு 2000 முதல் கிமு 1500 வரையிலான காலப்பகுதியில் தான் அதாவது ஹரப்பா நாகரிக வீழ்ச்சிக்குப் பின்னர்தான் வந்தனர் என்பதை இவ்விரு ஆய்வுகளும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன. மக்கட்தொகுப்பு மரபணு (Population Genetics) ஆய்வில் ஏற்கெனவே நிருபிக்கப்பட்டிருந்த இக்கருத்து மீண்டும் உறுதியாகியுள்ளது.
இதன் மூலம் ஆரியப் படையெடுப்பு – அதாவது, ஆரியர்களின் படையெடுப்பினால்தான் சிந்துச் சமவெளி நாகரிகம் அழிந்தது என்ற கருதுகோல் தவறென்று நிருபிக்கப்பட்டுள்ள, அதேவேளையில் குடியேற்றங்கள் மூலமான ஆரியர் வருகை உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆரியர்கள் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன் இங்கே வந்து சேர்ந்தனர், தங்களுடன் சமஸ்கிருதத்தையும், இன்னபிற வேத கலாச்சாரங்களையும் சுமந்து வந்தனர் என்பதை தற்போது வெளியாகியிருக்கும் இவ்விரண்டு ஆய்வுகளும் உறுதிபடக் கூறுகின்றன. ஏற்கெனவே இந்த உண்மைகளை தொல்லியல் மற்றும் மொழியியல் ஆய்வுகள் நிறுவி உள்ளன. தற்போது மறுக்கவியலாத வகையில் மரபணு ஆய்வுகளும் அதே முடிவுக்கு வந்தடைந்துள்ளன. வந்தேறி ஆரியர்களின் பண்பாட்டுக் கலாச்சாரமே இன்றைய வேத – பார்ப்பன கலாச்சாரம் என்பதும் நிறுவப்பட்டுள்ளது.
இவை மட்டுமின்றி இந்தியாவில் வேளாண்மை எப்போது தோன்றியது என்ற கேள்விக்கான விடைதேடலுக்கும் ஒளியை வழங்கியுள்ளன இந்த ஆய்வுகள். ஹரப்பா நாகரிகத்துக்கும் மிக முற்பட்ட காலத்தில் மத்திய ஆசியாவின் அனடோலியா என்ற ஆசியா மைனர் (தற்போதைய துருக்கி) அல்லது ஈரானில் இருந்துதான் விவசாயம் பண்டைய இந்தியாவுக்கு வந்திருக்க வேண்டும் என்றுதான் இதற்கு முன் கருதப்பட்டது. தற்போதைய ஆய்வின் மூலம், சிந்து சமவெளி மனிதரில் பண்டைய ஈரானிய விவசாயக் குடி சமுகத்தின் மரபணு இல்லை என்பது நிரூபிக்கப்பட்டதால், இந்திய சமூகம் தனிசுயமாக (Indigenously) விவசாய சமூகமாக முன்னேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.
“தெற்காசியாவில் இரண்டாவது மிகப் பெரிய மொழிக் குழுமமான திராவிட மொழிக் குழுமத்தின் தோற்றம் பற்றிய கேள்விக்கும் இந்த ஆய்வு விடையளித்துள்ளது. தென்னிந்திய மூதாதையருக்கும் (ASI) தற்போதைய திராவிட மொழிகளுக்கும் இடையில் உள்ள இணையுறவை வைத்துப் பார்க்கும்போது தென்னிந்திய மூதாதையர் என்பவர்கள், சிந்துச் சமவெளி நாகரிகம் (IVC) மறையத் துவங்கியபோது கிழக்கிலும் தெற்கிலும் பரவி, மிக ஆதிகால தென்னிந்திய மூதாதைகளான வேட்டை சமூக குழுக்களுடன் (AASI) கலந்தனர். இவர்கள், ஆரம்பகால திராவிட மொழிகளைப் பேசியிருக்கக்கூடும்” என்கிறது Science இதழில் வெளியான ஆய்வறிக்கை. அதாவது, இம்மண்ணின் தொல்குடி மக்கள் பேசிய மொழி திராவிட மொழியே என்றும் அது சமஸ்கிருதத்தை விட தொன்மையானது என்பதும் மீண்டுமொருமுறை உறுதியாகியுள்ளது.
இந்துத்துவ அரசியலின் அச்சாணியை இந்த ஆய்வுகள் முறித்துள்ளதால் அதற்கு முட்டுக் கொடுக்கும் முயற்சிகள் பல முனைகளில் இருந்தும் வந்துள்ளன. ராக்கிகர்ஹி எலும்புக்கூட்டில் ஸ்டெப்பி புல்வெளி மனிதனின் மரபணு இல்லை என்பதை மட்டும் வைத்துக்கொண்டு, ஆரியர்கள் வெளியிலிருந்து வரவில்லை என்பதாக தி பிரிண்ட் இணைய இதழ், தி எகனாமிக் டைம்ஸ், தி வீக் போன்ற பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. இதை ஆர்.எஸ்.எஸ்-ன் ஆர்கனைசர் உள்ளிட்ட பல இந்துத்துவ தளங்கள் மீள்பதிவிட்டிருந்தன.
“சிந்து சமவெளி நகரங்கள் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வசிக்கும் இடங்களாக இருந்தன என்று தொல்பொருள் சான்றுகள் கூறுகின்றன. அதனால், ஒரு நபரின் மரபணுவைக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வு மற்ற மக்களுடன் பொருந்த வேண்டியதில்லை. இறந்தவர்களைப் புதைக்கும் பழக்கம் சமூகத்தின் ஒரு பிரிவினரிடம் மட்டுமே இருந்திருக்கும்” என்று விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஜொனாதன் மார்க் கெனோயர் கூறுகிறார். இவற்றை எடுத்துக்காட்டி இந்த ஆய்வுகளிலிருந்து முடிவுக்கு வரவேண்டிய அவசியமில்லை என சில இந்துத்துவ அறிஞர்கள் வாதிடுகின்றனர்.
ரிக் வேதத்தில் குறிப்பிட்டுள்ள இறந்த உடல்களை எரிக்கும் முறைகளைக் கொண்டு, வேதகாலத்திற்கு முற்பட்ட சிந்துச் சமவெளி நாகரிகத்தில் இறந்தவர்களைப் புதைக்கும் பழக்கம் சமூகத்தின் கீழ்நிலையிலிருந்த பிரிவினரிடம் மட்டுமே இருந்திருக்கும். அதனால் அது மொத்த மக்கட்தொகையின் மரபணுவுடன் பொருந்த வேண்டியதில்லை என்று ஆர்.எஸ். பிஸ்த் போன்ற ஆய்வாளர்கள் கூற்றை சுட்டிக்காட்டி வாதிடுகின்றனர்.
மாதிரிப்படம்
இறந்தவர்களை எரிப்பதென்பது ஓரிடத்தில் தங்காமல் அலைந்து திரியும் நாடோடிகளின், குறிப்பாக ஸ்டெப்பி புல்வெளி நாடோடிகளின் வழக்கமாகும். ஓரிடத்தில் நிலையாக குடியிருக்கும் மக்களிடம் பெரும்பாலும் புதைக்கும் வழக்கம், நடுகல் நடும் வழக்கம் போன்றவை இருந்துள்ளன. மேலும், வேதமே சிந்துச்சமவெளி நாகரிகத்தின் அழிவிற்கு பின்னர் தான் வந்தது என்றான பிறகு அந்நாகரிகத்தில் வேதத்தில் குறிப்பிட்டுள்ள எரிக்கும் வழக்கம் இருந்திருக்கும் என்று வாதிடுவதை என்னவென்பது? இத்தகைய சிந்தனை மாட்டு மூளைகளுக்கு மட்டுமே சாத்தியம்.
மேலும், கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான இந்திய தேசிய அறக்கட்டளையின் (INTACH) சார்பில் கடந்த வெள்ளியன்று (06-09-2019) இவ்விரு ஆய்வறிக்கையின் பதிப்பித்த ஆய்வாளர் குழுவைச் சேர்ந்த இந்தியர்கள் இருவரைக் கொண்டு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. பேராசிரியர் வசந்த் ஷிண்டே மற்றும் நீரஜ் ராய் இருவரும் ராக்கிகர்ஹி மரபணு ஆய்வு முடிவைக் கொண்டு ஆரியர்களின் குடியேற்றம் என்பது இல்லை என நிரூபணமாகிவிட்டது என்றும் சிந்து சமவெளி நாகரிகம் வேத நாகரிகமே என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். அதோடு, இந்தியாவிலிருந்து வெளியேறி குடியேறிய (Out of India migration theory – OIT) கருதுகோளுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதாகவும் கதையளந்தனர்.
முரண்நகையாக, பேராசிரியர் வசந்த் ஷிண்டே மற்றும் நீரஜ் ராய் இருவரும் இணை ஆசிரியர்களாக இருக்கும் Science இதழில் வெளியான ஆய்வறிக்கை ஸ்டெப்பி புல்வெளி மேய்ச்சல் இனத்தைச் சேர்தோரும் அவர்களுடைய மொழியான சமஸ்கிருதமும், வேத நாகரிகமும் வெளியிலிருந்து வந்ததாக உறுதியாகக் கூறுகிறது. இந்த இரண்டாவது ஆய்வறிக்கையைப் பற்றி இவர்களும் சரி, இந்துத்துவ ‘அறிஞர்’ குழாமும் சரி, வாய் திறக்கவே இல்லை.
இந்தியா முழுமைக்கும் ஒற்றைப் பண்பாடு, கலாச்சாரத்தை திணிக்கும் நோக்கில் சமஸ்கிருதமயமாக்கப்படுகிறது. ஆனால் அறிவியல் ஆய்வுகளோ, நம்முடைய இந்தியப் பண்பாடு ஒற்றை மூலத்தைக் கொண்டதல்ல; மாறாக பன்முக மூலத்தைக் கொண்டது என நிருபிக்கின்றன.
ஒற்றைக் கலாச்சாரக் கருத்துருவாக்கத்தை மக்களிடம் பரப்புவதன் மூலம் இந்துத்துவ முனைவாக்கம் தெடர்ந்து நடைபெற்றுவருகிறது. இந்தியாவிற்கு வெளியிலிருந்து வந்த மதங்கள், கலாச்சாரங்களை பிரித்தொதுக்குவதன் மூலம் இம்முனைவாக்கம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
அஸ்ஸாமில் தற்போது தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒரே நாளில் 19 இலட்சம் மக்களை குடியுரிமையற்றவர்கள் என இரண்டாம் நிலைக்கு தள்ளியுள்ளது இந்துத்துவ பாசிசம். இந்தியா முழுமைக்கும் தேசியக் குடிமக்கள் பதிவேடு திட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் இந்து, பௌத்த, சீக்கியர் தவிர பிற மக்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் பாஜக தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளார்.
சமஸ்கிருதமே இந்திய மொழிகள் அனைத்திற்கும் தாய், வேத நாகரிகமும் அதன் கலாச்சாரமுமே எல்லா இந்தியப் பண்பாடுகளுக்கும் மூலம் என்ற இந்துத்துவத்தின் அச்சாணியை அறிவியல் முறித்துவிட்டது. அதன் முதுகெலும்பை முறிப்பதற்கு அவர்களது ஆயுதத்தை நாம் கையிலெடுக்க வேண்டும். இந்தியாவிற்கு வெளியிலிருந்து வந்த முதல் வந்தேறி கலாச்சாரமான ஸ்டெப்பி புல்வெளி மரபணு கொண்டவர்களிடமிருந்து பிரித்தொதுக்குதலை துவங்குமாறு நாம் கோரவேண்டும். அறிவுத்தளத்திலும் தெருவிலும் அதை வீழ்த்தி பன்முகத் தன்மையை மீட்டெடுக்கவில்லையெனில் கலாச்சாரத் திணிப்பு தவிர்க்கவியலாததாகி நாம் இரண்டாம் குடிமக்களாக்கப்படுவோம்.
இருபதாம் நூற்றாண்டில் வேறு எந்த தமிழறிஞரும் செய்திராத ஒரு பெரும் தமிழ்ப்பணியை சிறப்பாகச் செய்து முடித்தவர் அறிஞர் மு. அருணாசலம் ஆவார். ஒன்பதாம் நூற்றாண்டு தொடங்கி பதினேழாம் நூற்றாண்டு வரையிலான தமிழ் இலக்கிய வரலாற்றை 15 நூல்களில் 5,404 பக்கங்களில் அரிய தகவல்களைப் பதிவு செய்துள்ளார். இந்நூல்களுக்கான பொருளடக்கத்தை இறுதியாக 417 பக்கங்களில் பார்க்கர் நிறுவனம் பகுத்து தொகுத்துக் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வளவு பக்கங்களையும் எப்படி ஒரு மனிதன் படிக்க முடியும் என்று நீங்கள் மலைக்க வேண்டாம். இந்நூற்களில் உள்ள முன்னுரைகளை ( குறிப்பாக 13, 14-ம் நூற்றாண்டு முன்னுரைகள் ) நீங்கள் படித்துவிட்டு தொடர்ந்து இந்த நூல்களில் உள்ள பொருளடக்கப் பக்கங்களைப் புரட்டினால் உங்களுக்குத் தேவையான பகுதிகளை கண்டெடுத்து தேவையான பொழுது படித்துக் கொள்ளலாம்.
தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட செய்தியை நீங்கள் படிக்க வேண்டும் என்று விரும்பினால் கடைசியில் கொடுக்கப்பட்டுள்ள பொருளடக்கம் சார்ந்த நூலைப் புரட்டி அந்தப் பகுதி எந்த தொகுதியில் எந்த பக்கத்தில் உள்ளது என்பதை உடனே தெரிந்து கொள்ளலாம். ஆகவே இந்நூலின் தொகுதிகளைக் கண்டு திகைப்படைய வேண்டியதில்லை.
1 of 6
(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)
பொ.வேல்சாமி : தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.
எழுதிய நூல்கள்:
அசோக் லேலாண்ட் -ல் மிகை உற்பத்தி ! வேலை நாட்களைப் பறிக்கும் சதியை முறியடிப்போம் !
அன்பார்ந்த தொழிலாளர்களே !
இலாபத்தை தின்னது, நிர்வாகம்! வயித்து வலி மருந்து தொழிலாளிக்கா?
அசோக் லேலாண்ட் நிர்வாகம் உலகமயமாக்கத்திற்கு பிந்தைய 26 ஆண்டுகளின் உற்பத்தியை சாரமாக பார்த்தால் லேலாண்டின் மிகை உற்பத்தி கொள்கையை புரிந்து கொள்ள முடியும். தேவையை விட அதிகமாக தின்றால் வயிற்று வலி ஏற்படும் என்பது எப்படி இயற்கை விதியோ முதலாளித்துவ மிகை உற்பத்தியால் சந்தையில் தேக்கம் ஏற்பட்டுள்ளது.
இதுபோல நாடு முழுவதும் உள்ள ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மிகை உற்பத்தி செய்து பெருவாரியான வாகனங்களை சந்தையில் தள்ளியுள்ளது. மிகை உற்பத்தியால் தற்காலிக தேக்கத்தை சந்தித்து நிற்கிறது,ஆட்டோமொபைல் சந்தை!
ஆண்டு
உற்பத்தி
வர்த்தகம்
இலாபம்
1993 – 94
24,226 வாகனங்கள்
1,181 கோடி
35 கோடி
2003 – 04
48,654 வாகனங்கள்
3,527 கோடி
194 கோடி
2018 – 19
1,97,366 வாகனங்கள்
29,165 கோடி
1,983 கோடி
2016 – 19 (3 ஆண்டு)
5,17,305 வாகனங்கள்
77,327 கோடி
4,923 கோடி
ஆட்டோமொபைல் சந்தையில் ஏற்பட்டுள்ள தேக்கத்திற்கு பிரதான காரணம் சந்தையை கணக்கில் கொள்ளாத, இலாபத்தை மட்டும் மையமாகக் கொண்ட முதலாளித்துவ மிகை உற்பத்தி கொள்கையே ஆகும்.
ஆட்டோமொபைல் வீழ்ச்சி, பொருளாதார மந்தம்: மத்திய அரசின் சதித்திட்டம்!
மற்றொருபுறம் மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான ஆட்சியானது சிறு குறு முதலீட்டாளர்கள், விவசாயிகள், தொழிலாளர்களை ஒழித்துக்கட்ட பலமுனைகளில் திட்டமிட்டு கார்ப்பரேட் கும்பலை வாழவைக்க இடையறாது வேலை செய்து வருகிறது. குறிப்பாக, பணமதிப்பு நீக்கம் முதல் GST வரிக் கொள்கை, விவசாயிகளின் விளைபொருளுக்கு விலை தீர்மானிக்காமல் இருப்பது, 44 தொழிலாளர் சட்டங்களை குப்பைத் தொட்டிக்கு அனுப்பும் சட்ட திருத்தங்கள் என்று தடாலடியாக செயல்பட்டு வருகிறது.
மத்திய அரசு உள்நாட்டு மக்களின் தொழில்களை பறித்து கார்ப்பரேட் கொள்ளையரிடம் தாரை வார்க்க செயல்பட்டு வருகிறது. இதனால் பொது மக்கள் கையில் பணப்புழக்கம் குறைந்து வாங்கும் சக்தியும் குறைந்துவிட்டது. காவிகள் தீவிரப்படுத்தும் இந்த பொருளாதாரக் கொள்கை பெருவாரியான ‘சூத்திரவாளை’ குறிவைத்தே நகர்த்தப்படுகிறது. மக்களின் பொருளாதாரம் மீட்சியடையும் என்பதற்கு எந்த அடிப்படையுமில்லை.
*மத்திய அரசின் கார்ப்பரேட் ஆதரவு பொருளாதாரக் கொள்கை, முதலாளிகளின் மிகை உற்பத்தி கொள்கை இரண்டு காரணங்களால் இன்று நாடு பொருளாதார மந்தம், ஆட்டோமொபைல் வீழ்ச்சி என்று வீழ்ந்து கிடக்கிறது.* இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு சட்டவிரோதமாக வேலை நாட்கள் – குறைப்பு, சம்பள வெட்டு, ஆட்குறைப்பு -ஆலை மூடல் என்று தொழிலாளர் வர்க்கத்தின் மீதான தாக்குதல் நடைபெற்று கொண்டிருக்கிறது.
அசோக் லேலாண்டில் மட்டும் முதலாளித்துவத்தின் நிபந்தனையற்ற உற்பத்தியால் 2017-ம் ஆண்டு வாரத்தில் 6-வது வேலை நாளை சட்டவிரோதமாக பறித்துக் கொண்டது, தற்போது சந்தை நிலைமையைக் காட்டி வாரத்தில் ஐந்தாவது நாள் வேலைகளையும் பறிக்கத் திட்டமிட்டு போனஸ் வழங்காமல் சங்கத்தை நிர்ப்பந்திக்கிறது, லேலாண்டு நிர்வாகம்.
தொழிற்சங்க தலைமைகள் தொழிலாளர் வர்க்கத்தின் தியாகம் செறிந்த போராட்ட வரலாற்றை வசதியாக மறந்துவிட்டு, கார்ப்பரேட் நிர்வாகத்திடம் நடப்பு காலாண்டில் இலாபம் குறைந்த கதையை கேட்டுக்கொண்டு தொழிலாளர் வாழ்நிலையை மறந்து விட்டனர். இதனால் வேலை நாள் பறிப்பு, உற்பத்தி உயர்வு – உள்ளிட்ட தொழிலாளர்கள் மீதான தாக்குதல் தினந்தோறும் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது.
அசோக் லேலாண்டின் லாபம் குறைகிறது என்று சட்டவிரோதமான வேலைநாட்கள் குறைப்புக்கு முன் தொழிற்சங்கங்கள் சரணாகதியாகிவிட்டது. இதனால் ஒசூரில் பிற ஆலை நிர்வாகங்கள் இதையே முன்னுதாரணமாக காட்டி பல விதமான அடக்குமுறைகளை ஏவி வருகின்றன.
காண்ட்ராக்ட், தற்காலி தொழிலாளர்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டவர்கள் வேலை இழந்துள்ளனர். பணியில் இருப்பவர்களில் மாதத்தில் சரிபாதி வேலை நாட்கள் பறிக்கப்பட்டுள்ளனர். இச்சூழலில் மொத்த தொழிலாளர்களும் உரிமை பறிப்புக்கு எதிராக அரசியல் எழுச்சி ஏற்படுத்த வீதியில் திரளவேண்டிய தேவை முன் வந்துள்ளது.
முதலாளித்துவத்தின் லாபவெறி பிடித்த மிகை உற்பத்தி கொள்கையால் தொழிலாளர்களின் சட்டபூர்வ உரிமைகள் பறிக்கப்படுவது மட்டுமில்லாமல் நாட்டின் பொருளாதாரமே ஸ்தம்பித்து நிற்கிறது. ஆகையால், மத்திய அரசின் கார்ப்பரேட் ஆதரவு பொருளாதாரக் கொள்கைக்கும் முதலாளித்துவ இலாபவெறி பிடித்த மிகை உற்பத்தி கொள்கைக்கும் ஓர் முடிவு கட்டினால் தான் சிறு – குறுந்தொழில்கள், விவசாயம் ஆகியவற்றை பாதுகாக்க முடியும். மக்கள் கையில் பணப்புழக்கம் ஏற்படும். மக்கள் வாழ முடியும். தொழிலாளர்களின் சட்ட உரிமைகள் கூட பாதுகாக்க முடியும் என்பது தற்போது வெளிச்சமாகி விட்டது.
தகவல் : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – அணிகள்,
அசோக் லேலாண்ட் – 1 & 2 , ஒசூர்.
தொடர்புக்கு : 97880 11784.
வெள்ளை அமெரிக்க அரசின் ஆதிக்கத்தின் கீழ் தங்களுடைய மண்ணை, மொழியை, பண்பாட்டை இழந்து, இன்றுவரை தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட பகுதிகளில் வறுமையில் வாழ்ந்தபடி தொடர்ந்து போராடி வரும் அமெரிக்கக் கண்டங்களைச் சார்ந்த பழங்குடி அமெரிக்க இந்தியர்களின் வாழ்வையும் வரலாற்றையும் முன்வைக்கும் விதத்தில் விடியல் வெளியிடும் மூன்றாவது நூல் இது. … பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெள்ளை அமெரிக்க அரசிற்கு எதிராக நடந்த போரில் நேரடியாகப் பங்கேற்ற பழங்குடியினரின் வாய்மொழி வரலாற்றுப் பதிவுகள் இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன. (நூலின் பதிப்புரையிலிருந்து…)
மாபெரும் சூ யுத்தம் என்பது அமெரிக்க இராணுவத்தின் படையணிகளால் 1876 மார்ச் மாதத்திலிருந்து 1877 மே மாதம் வரை பதினைந்து மாதங்களாக டெட்டோன்கள் அல்லது மேற்குப் பிரதேசத்தைச் சேர்ந்த பழங்குடிகள், சூ பழங்குடிகள் மற்றும் வடக்குப் பிரதேசத்தைச் சேர்ந்த சேயென் பழங்குடிகள் ஆகிய பல்வேறு பழங்குடி இந்தியர்களின் { இந்நூல் முழுவதிலும் இந்தியர்கள் என்று குறிப்பிடப்படுபவர்கள் அமெரிக்காவில் வாழும், செவ்விந்தியர்கள் என்று அறியப்பட்டிருக்கும் பழங்குடி இந்திய மக்களே. ஆசியாவின் துணைக்கண்டமாகிய இந்தியாவில் வாழும் மக்கள் அல்ல – (தமிழ் மொ-ர்) } மீது மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான யுத்தங்களையும் மோதல்களையும் உள்ளடக்கியதாகும்.
தற்காலத்திய மான்டானா, வியோமிங், நெப்ராஸ்கா மற்றும் தெற்கு டகோட்டா ஆகியவற்றின் பகுதிகள் உள்ளிட்ட பரந்த நிலப்பரப்பில் நிகழ்ந்த பல்வேறு நிலைகளிலான பதினைந்து மோதல்களை இந்தப் போர் உள்ளடக்கியிருந்தது. சூ பழங்குடிகளாலும் சேயென் பழங்குடிகளாலும் (அது போலவே பிற பழங்குடிகளாலும்) உரிமை கொண்டாடப்பட்ட மாபெரும் வடக்குச் சமவெளியில் வெள்ளையர்கள் கட்டுப்படுத்த முடியாத அளவில் பரவியதுதான் இந்தப் போருக்குக் காரணமாக இருந்தது. இந்தப் போரின் முடிவில் பழங்குடிகளுக்கிடையிலான ஒற்றுமை சீர்குலைந்தது. பழங்குடி மக்கள் டகோட்டா பிரதேசம், நெப்ராஸ்கா, மற்றும் இந்தியப் பிரதேசம் (தற்போதைய ஓக்லஹோமா) ஆகியவற்றில் அவர்களுக்கென ஒதுக்கித்தரப்பட்ட (ரிசர்வேசன்) {அமெரிக்காவின் வெள்ளை அரசாங்கத்தால் இந்தியர்களுக்கென ஒதுக்கித் தரப்பட்ட நிலப்பரப்புகள் ஏஜென்சிகள் என்றும், இந்த நிலப்பரப்புகளில் குடியேறும் இந்தியர்கள் எஜென்சி இந்தியர்கள் என்றும் அழைக்கப்பட்டார்கள் (மொ-ர்)} பகுதிகளில் சிதறிப் போனார்கள் அல்லது கனடாவுக்கு அகதிகளாகச் சென்றார்கள்.
மாபெரும் சூ போரில் ஈடுபட்ட டெட்டோன் சூ பழங்குடிகள் அல்லது லகோட்டா பழங்குடிகள் மற்றும் வடக்கே பிரதேசத்தைச் சேர்ந்த சேயென் பழங்குடிகள் ஆகிய இரு பழங்குடிகளும் வெவ்வேறு மொழிகளைப் பேசுபவர்களாக இருந்தபோதிலும் 1870-களின் மத்தியில் ஒன்றையொன்று பாதிக்கக் கூடியவையாக அமைந்திருந்த, ஒத்த தன்மைகளைக் கொண்ட இணையான பண்பாட்டுப் போக்குகளைக் கொண்டிருந்தார்கள். மேற்குப் பகுதியிலிருந்த மாபெரும் ஏரிகளை ஒட்டிய நிலப் பகுதியில் ஒரு காலத்தில் வாழ்ந்தவர்களான அல்கோங்கிய மொழி பேசும் சேயென் பழங்குடிகள் பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், எருமைக் கூட்டங்களை வேட்டையாடுவதற்கென மிஸ்ஸோரி நதியின் கிழக்குப் பகுதியிலுள்ள புல்வெளிகளில் குடியேறினார்கள். குதிரைகளின் வரவு அதிகரித்ததன் காரணமாக அவர்கள் மேற்கு நோக்கி இடம் பெயர்வதும் தொடர்ந்து நீடித்தது. (நூலிலிருந்து பக்.7-8)
அன்றிரவு அவர்கள் புறப்பட்டார்கள்; பகல் நேரத்தில் இந்தியர்களின் முகாமை அடைவதற்காக மெதுவாகப் பயணம் செய்தார்கள். உயரமான அந்தக் குன்றை அடைந்ததும், இந்தியர்களின் முகாம் எங்கே இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காக ஜெனரல் மைல்லை அந்தக் குன்றின் மேல் அவர்கள் கூட்டிச் சென்றார்கள், அவர் அதைப் பார்த்துவிட்டுக் கீழே இறங்கிவந்தார். கீழே ஆற்றுக்குப் பக்கத்தில் இருந்த இராணுவப் படைகளிடம் அவர் திரும்பிச் சென்றார். இந்தியர் ஒருவர் அந்தக் குன்றின் மேல் ஏறி வருவதை அவர்கள் கண்டார்கள். அவர் முகாமிற்குத் திரும்பிப் போனார்.
ஆனால் முகாமில் எதையும் தெரியப்படுத்தாமல் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு தன் குடும்பத்தினருடன் அங்கிருந்து கிளம்பிப் போய்விட்டார். உளவு பார்ப்பவர்கள் இருவரை மேலே முகாமிற்குப் பக்கத்தில் ஜெனரல் மைல்ஸ் அனுப்பி வைத்தார். முகாம் அவர்களது பார்வையில் பட்டதும் அவர்களில் ஒருவர் திரும்பி வந்தார்; முகாம் அமைதியாக இருப்பதாகவும், ஆள் நடமாட்டம் ஏதுமில்லை என்றும் அவர் தெரிவித்தார். ஓடையில் குதிரைகளைத் தளர்நடையில் ஓட்டிக் கொண்டு அவர்கள் மேலே வந்தார்கள். மேலே வந்து சேர்ந்ததும் குறிப்பிட்ட இடத்தின் வழியாகப் பாய்ந்து சென்று தாக்குதல் நடத்தினார்கள்.
சில குதிரைகள் சிப்பாய்களுடன் கீழே விழுந்தன. (1900-இல்) நடன இல்லம் இருந்த இடத்தில்தான் முதல் தோட்டா வெடித்தது. இந்தியர்களின் குதிரைகள் நாலா திசைகளிலும் மிரண்டோடுவதையும், பெண்களும் குழந்தைகளும் பைன் மரங்களிடையே மறைந்து கொள்வதற்காக குன்றுகளை நோக்கி ஓடுவதையும் நீங்கள் பார்த்திருக்க முடியும். அப்போது வெளிச்சம் முழுமையாக வந்திருக்கவில்லை.
சண்டை நடந்து கொண்டிருந்தபோது, இந்தியர்கள் ஓடைப் படுகையில் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். உளவுப் பணி செய்து வந்த ‘கூனன்’ என்ற பெயர் கொண்ட இந்தியரொருவர் மைல்ஸுடன் இருந்தார். அவர் உரக்கக் கூவியபடியே அந்த இந்தியர்களை நோக்கி இறங்கி வரத் தொடங்கினார். இந்தியர்கள் உடனே சுடுவதை நிறுத்தினார்கள். சுடுவதை நிறுத்தும்படி மைல்ஸும் ஆணையிட்டார். பிறகு ‘நொண்டி மானும் ‘ வேறு சிலரும் ஓடையை விட்டு மேலே வந்தார்கள். ‘நொண்டி மான் அவரைப் பார்க்க விரும்புவதாகவும், அவருடன் சமாதானம் செய்து கொள்ள விரும்புவதாகவும் மைல்ஸிடம் ‘கூனன்’ வந்து சொன்னார்.
ஓர் அதிகாரியை அழைத்துக்கொண்டு ‘நொண்டி மான் இருந்த இடத்திற்கு மைல்ஸ் சென்றார். அவர்களுடைய ஆயுதங்களைக் கீழே போடுமாறு மைல்ஸ் அவர்களிடம் சொன்னார். ‘நொண்டி மான்’ தனது துப்பாக்கியைக் கீழே போட்டார். தங்கள் துப்பாக்கிகளையும் குதிரைகளையும் அவர்கள் ஒப்படைத்து விட வேண்டும் என்றும், அவை கியோக்கிற்குக் கொண்டு செல்லப்படும் என்றும் அவர்களிடம் அவர் சொன்னார். ‘நொண்டி மானின்’ மகன் ஒரு போர்க் கவசத்தை அணிந்திருந்தார்.
‘நொண்டி மான்’ தனது துப்பாக்கியைக் கீழே வைத்த போது, அது வெடிப்பதற்குத் தயாரான நிலையில் இருந்தது. அப்போது ‘ நொண்டி மானின் ‘ மகன் சொன்னார், “ நான் ஒரு போராளி. என்னுடைய துப்பாக்கியை யாரிடத்திலும் நான் தரமாட்டேன். ஏற்கனவே அவர்கள் என் பாட்டியைக் கொன்று விட்டார்கள்.” வயது முதிர்ந்த பெண்ணொருத்தியை அவர்கள் கொன்றிருந்தார்கள். ‘நொண்டி மானின்’ மகனிடம் ‘ வெள்ளை எருது ‘ தன் குதிரையைச் செலுத்தினார்.
அவருடைய துப்பாக்கியைப் பறிப்பதற்காக அதை இறுகப் பற்றினார். அந்த அதிகாரி ‘நொண்டி மானின்’ கையைப் பிடித்துக்கொண்டார். ஆனால் தனது துப்பாக்கியை அவர் கைவிட மறுத்தார். அதைத் தந்து விடும்படி அவரை இணங்கச் செய்வதற்கு “ நொண்டி மான் முயற்சி செய்தார். ஆனால் அவரால் முடியவில்லை. அப்போது ”சரி மகனே,” என்று சொல்லிவிட்டு ‘ நொண்டி மான்’ ஓடிப் போய்த் தனது துப்பாக்கியை எடுத்து மைல்ஸை நோக்கிச் சுட்டார். ‘நொண்டி மானின்’ மகன், ‘வெள்ளை எருதுவைச் சுட முயற்சி செய்தார். ஆனால் துப்பாக்கிக் குழலை ‘ வெள்ளை எருது’ விலக்கித் தள்ளினார். ஒரு சிப்பாய் ஓடிப்போய் ‘நொண்டி மானின்’ மகனைச் சுட்டார். ஆனால் குறி தவறிவிட்டதால் ஒரு சிப்பாய் கொல்லப்பட்டார். தங்கள் துப்பாக்கிகளால் சுட்ட பிறகு “ நொண்டி மானும்’, அவருடைய மகனும் ஓடைக்கு ஓடினார்கள்.
ஆனால் அவர்கள் அங்கே போய்ச் சேர்ந்தபோது “ நொண்டி மானின்’ மகன் பலவீன மடைந்தவரைப்போல் தனது துப்பாக்கியைக் குழல் பகுதியைப் பற்றி இழுத்துக் கொண்டு வந்தார். உடனே அவருடைய தந்தை அவருக்கு உதவியாக அவருடைய தோளைப் பற்றித் தூக்கிக் கொண்டார். பிறகு யாரோ சிலர் சுடத் தொடங்கினார்கள். எல்லோரும் வீழ்த்தப்பட்டார்கள். சிப்பாய்கள் ஓடிப் போய்ப் பார்த்தபோது, ‘நொண்டி மானின்’ மகன் எழ முயற்சித்தார். ஆனால் அவர் மிகவும் பலவீனமாக இருந்தார். (உளவுப் பணி செய்து வந்த) பாப் ஜாக்சன் அவரைத் தலையில் சுட்டார். (நூலிலிருந்து பக்.162-163)
நூல் : போர் நினைவுகள் : 1876 – 1877 (பழங்குடி அமெரிக்க இந்தியர்களின் மனப்பதிவுகள்) தொகுப்பு : ஜெரோம் ஏ. கிரீன் தமிழில் : வி. நடராஜ்
வெளியீடு : விடியல் பதிப்பகம், 23/5, ஏ.கே.ஜி. நகர், 3-வது தெரு, உப்பிலிபாளையம் – அஞ்சல்,
கோயம்புத்தூர் – 641 015. தொலைபேசி எண் : 0422 – 2576 772 ; 94434 68758 மின்னஞ்சல் : vidiyal@vidiyalpathippagam.org
குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 4 | பாகம் – 07
ஆறு வயதுக் குழந்தைகளின் மகிழ்ச்சிகளும் வருத்தங்களும்
ஆனால் இந்த அதிசயம் எனக்கு வருத்தத்தையும் அளித்தது. எல்லாக் குழந்தைகளின் மனதும் அமைதியாக இல்லை. பலருக்குப் பல கஷ்டங்கள் உள்ளன என்பது எனக்குத் தெரியும், இதைப் பற்றி மறைக்காமல் குழந்தைகள் எழுதுவார்களென நான் எதிர் பார்த்திருக்க வேண்டும். என் அன்புச் சிறுவனே, சிறுமியே! உண்மையிலே இப்படிப்பட்ட துக்கமா உங்களை ஆட்கொள்கிறது?
“மலர்கள், பறவைகள், என் மாஷா பொம்மை எனக்கு மகிழ்ச்சி தருகின்றன. மாஷா புத்திசாலிப் பெண். நன்கு படிக்கிறாள், நான் சொல்வதைக் கேட்கிறாள். நாங்கள் சேர்ந்து தூங்குகிறோம், நான் அவளுக்குக் கதை சொல்கிறேன். விரைவில் அம்மா திருமணம் செய்து கொள்ளப் போகிறாள். இதில் எனக்கு சம்மதமில்லை. என்னை போர்டிங் பள்ளியில் சேர்க்கப் போவதாக அம்மா சொன்னாள். அங்கு நன்றாயிருக்குமாம். ஆனால் நான் அம்மாவுடன் இருக்க விரும்புகிறேன். இரவில் அம்மா தூங்கும் போது நான் விழித்தெழுந்து அழுகிறேன்.”
அந்தத் தாய்க்கு மகளின் இக்கட்டுரையைக் காட்டுவதா? நிச்சயமாகக் கூடாது! அவளை எனக்குத் தெரியும் – அவள் தன் விருப்பப்படி செயல்படக் கூடியவள், அவளது அழகால், மனதின் முரட்டுத்தனத்தையும் இரக்கமற்ற தன்மையையும் மூடி மறைக்க முடியாது. அவள் தன் மகளின் திறந்த மனதைப் பற்றி அறிந்தால், குடும்ப ரகசியத்தை வெளிப்படுத்தியதற்காக ஒருவேளை தண்டிக்கலாம். அந்தத் தாயோடு கலந்து பேச வேண்டுமா? ஆம், கட்டாயம் பேச வேண்டும். போர்டிங் பள்ளியில் மகளைச் சேர்க்காமலிருக்க ஒருவேளை அவளை ஒப்புக் கொள்ளச் செய்ய முடியலாம். தன் குழந்தையின் மகிழ்ச்சியையும் இன்பத்தையும் பறித்துக் கொண்டு சொந்த மகிழ்ச்சியைப் பெற முடியாது என அவளுக்கு சொல்வேன்.
ஆறு வயதுச் சிறுமி தாயன்பு இல்லாமல் அவதியுறும் போது அது என்ன மகிழ்ச்சி? இன்னமும் தந்தையின் அன்பையும் அரவணைப்பையும் உணராத ஒரு குழந்தையை மறுக்கும் ஆணிற்குப் பெண்ணின் அன்பைப் பெற அருகதையில்லை என்று சொல்லலாமா? என் அன்புச் சிறுமியே! சொந்தத் தாயின் தாக்குதலிலிருந்து உனது மென்மையான இதயத்தை என்னால் காப்பாற்ற இயலுமா?..
“எனக்கு எது மகிழ்ச்சி தருகிறது என்று என்னால் இன்னமும் சொல்ல முடியாது. அம்மா என்னை உலாவ அழைத்துச் செல்லும் போது மகிழ்ச்சியடைகிறேன். என் தாய் பத்திரிகைத் துறையில் இருக்கிறாள், எனக்கு ஏராளமான சுவாரசியமான விஷயங்களைச் சொல்கிறாள். ஆனால் அம்மா சில சமயங்களில் அழுகிறாள், இது எனக்கு வருத்தம் தருகிறது. அப்பா அம்மாவோடு சண்டை போட்டு, பிரிந்து செல்ல வேண்டும் என்கிறார். முன் போல் அப்பா என்னுடன் நட்புக் கொள்வதில்லை. இனி என்ன நடக்குமென எனக்குத் தெரியாது. இன்னொரு நகரத்திற்குப் போகலாம் என்கிறார் அம்மா. எனக்கு இதில் மிகவும் வருத்தம்.”
ஓ, சிறுவனே, நீ உன் அப்பாவை எப்படி நேசிக்கிறாய் என்று எனக்குத் தெரியும். நீ அவரைக் கண்டு பெருமிதம் அடைகிறாய். “என் அப்பா…. நானும் அப்பாவும்… அப்பா சொன்னார்” என்றெல்லாம் நீ அடிக்கடி பேசுவதை நான் கேட்டிருக்கிறேன். அந்த அப்பாவா உன்னுடன் அன்பாக நடந்து கொள்ள விரும்பவில்லை?! எளிதில் காயம்பட்டு விடக் கூடிய உன் இதயத்தை விடத் தன் சொந்த உணர்ச்சிகளின் மீதா இந்த அப்பா அதிக அக்கறை காட்டுகிறார்?! இது சுய நலமல்லவா! உனது மேன்மை, அம்மாவின் மீது உனக்குள்ள பிடிப்பு ஆகியவற்றைப் பொருட்படுத்தாமலா இவர் உன் அம்மாவைத் தாழ்த்துகிறார்?! கண்டிப்பாக உனது இதயத்தின் இந்தக் கூக்குரலை உனது அப்பாவிற்குக் காட்டுவேன். “அப்பாவாக இருப்பது என்றால் என்ன? உன்னால் என் இடத்தில் இருக்க முடியுமா? எனது மிக நெருங்கிய முதல் நண்பனாகத் திகழும் அப்பாவை இழப்பதை உன்னால் தாங்க முடியுமா?” என்று சில கேள்விகளை நீ உன் அப்பாவிடம் கேள். உன்னால் அப்பாவிடம் இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்க முடியுமா?
பெரியவர்களின் யோசனையின்மை, ஒழுங்கீனம், தம் குழந்தைகளின் பாலான கவனமின்மை முதலியவற்றை அம்பலப்படுத்தவல்ல கேள்விகளை ஏன் குழந்தைகளால் அவர்களிடம் கேட்க முடியாது? எனதருமை சக ஆசிரியர்களே, உங்கள் வகுப்பிலுள்ள ஒரு ஆறு வயதுக் குறும்புக்காரச் சிறுவன் ஒரு நாள் வகுப்பு முடிவில் எழுந்து தீவிர முகபாவத்துடன் பின்வரும் கேள்விகளை உண்மையாகக் கேட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்: “ஏன் இப்படி தயாராகாமல் பாடம் நடத்த வருகின்றீர்கள்? ஏன் இந்த மாதிரி சலிப்பான, பழைய முறையில் பாடங்களை நடத்துகின்றீர்கள்? எங்களுடைய வளர்ப்பிற்கு ஏன் உங்களை நீங்களே முற்றிலுமாக அர்ப்பணித்துக் கொள்ளவில்லை? இது எவ்வளவு நாள் நீடிக்கப் போகிறது?” நீங்கள் என்ன செய்வீர்கள்? ஒரு வேளை இப்படிச் சொல்வீர்களோ: “ஏ, கள்ளப் பையனே! என்னோடு இப்படிப் பேச என்ன தைரியம் உனக்கு?” இந்த நகைச்சுவையைக் கண்டு பொங்கியெழுந்திருப்பீர்களோ! இப்படி நீங்கள் செய்தால் அது முரட்டுத்தனமான நடவடிக்கையாக இருக்கும். மாறாக, வெட்கத்தால் தலை குனிந்து, முகம் சிவக்க, குற்ற உணர்வோடு “இனி அப்படிச் செய்ய மாட்டேன், வேண்டுமானால் பாருங்களேன்” என்று கூறுவது சிறப்பாக இருக்கும்.
இன்னமும் தந்தையின் அன்பையும் அரவணைப்பையும் உணராத ஒரு குழந்தையை மறுக்கும் ஆணிற்குப் பெண்ணின் அன்பைப் பெற அருகதையில்லை என்று சொல்லலாமா? என் அன்புச் சிறுமியே! சொந்தத் தாயின் தாக்குதலிலிருந்து உனது மென்மையான இதயத்தை என்னால் காப்பாற்ற இயலுமா?
அன்பான பெற்றோர்களே, இதே மாதிரியான உங்கள் குறும்புக்கார மகன் உங்களிடையே வேற்றுமைகளைக் கண்டுணர்ந்து பின்வருமாறு கூறினால் நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்: “அன்புள்ள அப்பா! அம்மா! நான் ஒன்றும் உங்களுடன் வந்து ஒட்டிக்கொள்ளவில்லை. நீங்கள் தான் என்னைப் பெற்றெடுத்தீர்கள். எனவே தாயன்பிற்கும், தந்தையின் கவனிப்பிற்கும், குடும்ப மகிழ்ச்சிக்கும் எனக்கு உரிமையுண்டு. நான் மனதார, நெஞ்சாரத்தான் உங்களுடன் ஒன்றி விட்டேன்! எனது உரிமை, உணர்வுகள் மீது இரக்கம் காட்டுங்கள்!” “தேவையில்லாத விஷயத்தில் தலையிடாதே! நாங்கள் எங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொண்டால் உனக்கென்ன?” என்று ஒரு வேளை நீங்கள் பதில் சொல்வீர்களோ! இதன் மூலம் மகிழ்ச்சியாக, சந்தோஷமாக இருப்பதற்கு குழந்தைக்கு உள்ள மிகப் புனிதமான உரிமையை நீங்கள் மிதித்து அழிப்பவர்களாவீர்கள். அல்லது ஒரு வேளை தந்தை வெட்கத்தால் முகம் சிவக்க, தாய் கண்ணீர் சிந்த “ஆம், மகனே, நாங்கள் உன் முன் குற்றமிழைத்து விட்டோம்! உனது உரிமையையும் உணர்வுகளையும் பற்றி மறந்து விடாமல், மேற்கொண்டு எப்படி வாழுவது என்று சிந்திப்போம்” என்று மகனிடம் கூறியிருப்பீர்களோ!
அன்புள்ள ஆசிரியர்களே, பெற்றோர்களே, அஞ்சாதீர்கள்! இப்படிப்பட்ட இக்கட்டான நிலைமை உங்களுக்கு எப்போதுமே ஏற்படாது, ஏனெனில், உங்கள் குழந்தைகளுக்கு உரிமை உண்டு என்றாலும் இம்மாதிரியான கேள்விகளை எப்போதுமே கேட்கமாட்டார்கள். நாம் நமது குழந்தை வளர்ப்புப் பணியைச் செம்மையுறச் செய்ய வேண்டுமென அவர்கள் மட்டும் நம்மிடம் கண்டிப்பாகக் கோரினால் நமது வாழ்க்கையின் பல சமூகப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விடுமென நான் உறுதியாக நம்புகிறேன். நமது கெட்ட, சிந்தனையற்ற வளர்ப்பின் பயனாய் இன்றைய சிறுவர்களிலிருந்து சில சமயங்களில் துஷ்டர்களும் அறிவிலிகளும் வளர்ந்தால் அதற்குக் காரணம் பெரியவர்களை, பொறுப்பற்ற வளர்ப்பாளர்களை, தாய் தந்தையரை உரிய தருணத்தில் “திருத்த” குழந்தைகளால் முடியாமல் போனதேயாகும். நம்மை நாமே கேள்விகளைக் கேட்டுக் கொள்ளுமாறு குழந்தைகள் நமக்குச் சொல்கின்றனர், இவர்களின் எதிர்காலம் இக்கேள்விகளுக்கான பதில்களைப் பொறுத்துள்ளது.
விரைவில் மணியடிக்கும். குழந்தைகள் அழகிய தாள்களை என் மேசை மீது அடுக்குகின்றனர்.
“நாளை எனக்குப் பிறந்த நாள். எனவே நான் மகிழ்ச்சியடைகிறேன். நமது சிறுவர்களின் கெட்ட நடத்தை எனக்கு வருத்தம் தருகிறது. அவர்கள் நேற்று சண்டை போட்டுக் கொண்டு தாழ்வாரத்தில் ஒருவரையொருவர் அடிக்க ஆரம்பித்தனர். இப்படிச் செய்யலாமா?” (இயா)
“குழந்தைகளுடன் சேர்ந்து விளையாட என்னை முற்றத்திற்கு அனுப்பும் போது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு நல்ல நண்பர்கள் உள்ளனர். எங்கள் வீட்டு முற்றம் பெரியது. ஆனால் அம்மா என்னை எப்போதாவது தான் விளையாட அனுப்புவார். ஐந்து நிமிடம் கழித்ததும் திரும்பக் கூப்பிடுவார். எனக்கு ஒரே வருத்தமாயிருக்கும்!” (சூரிக்கோ )
“இன்றைய விழா எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. எனக்கு எல்லா எழுத்துகளும் தெரியும், என்னால் படிக்க முடியும். விரைவில் விடுமுறை வந்ததும் கிராமத்திற்குச் சென்று பாட்டி, தாத்தாவுடன் பொழுதைக் கழிப்பேன் என்பதும் எனக்கு சந்தோஷம் தருகின்றன. எது எனக்கு வருத்தம் தருகிறது என்று தெரியவில்லை. எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் இறந்தது எனக்கு வருத்தம் தந்தது. என்னோடு விளையாட கீவி மாமாவிற்குப் பிடிக்கும், அவர் அன்பானவராய், சந்தோஷமானவராய் இருந்தார்.” (தாத்தோ)
“அப்பா வெளியூர் வேலையை முடித்து விட்டுத் திரும்பியது எனக்கு மகிழ்ச்சியாய் உள்ளது. அவர் குழந்தைகள் பாட்டிசைக் குழுவோடு பிரான்ஸ் நாட்டிற்குச் சென்றிருந்தார். எனக்கும் அம்மாவிற்கும் பாட்டிகளுக்கும் பரிசுகளைக் கொண்டு வந்தார். வீட்டில் ஒரே மகிழ்ச்சி. படிக்கக் கற்றுக் கொண்டதும் எனக்கு மகிழ்ச்சி தருகிறது. பாட்டிக்கு உடம்பு சரியில்லாதது எனக்கு வருத்தம் தருகிறது.” (கோச்சா)
“முதலில், எனக்கு எதெல்லாம் மகிழ்ச்சி தருகிறது என்று சொல்கிறேன். பள்ளிக்கு என்னைக் கூட்டிச் செல்லும் போது சந்தோஷமாய் உள்ளது. பாடங்கள், நண்பர்கள், ஆசிரியர் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர்களைச் சந்திக்கும் போது நான் மகிழ்கிறேன். உடம்பு சரியில்லாமல் பள்ளிக்கு வராதிருந்த போது நான் மிகவும் வருத்தப்பட்டேன். மழை பெய்யும் போதும் எனக்கு வருத்தமாயிருக்கும். மழைக்காலம் எனக்குப் பிடிக்காது. அப்போது முற்றத்தில் விளையாட முடியாது.” (தாம்ரீக்கோ)
“அன்புள்ள அப்பா! அம்மா! நான் ஒன்றும் உங்களுடன் வந்து ஒட்டிக்கொள்ளவில்லை. நீங்கள் தான் என்னைப் பெற்றெடுத்தீர்கள். எனவே தாயன்பிற்கும், தந்தையின் கவனிப்பிற்கும், குடும்ப மகிழ்ச்சிக்கும் எனக்கு உரிமையுண்டு. நான் மனதார, நெஞ்சாரத்தான் உங்களுடன் ஒன்றி விட்டேன்! எனது உரிமை, உணர்வுகள் மீது இரக்கம் காட்டுங்கள்!”
“தேன்கோ ஒரு மிக அழகிய பேட்ஜை எனக்குப் பரிசளித்தான். தேன்கோ என்னை சந்தோஷப்படுத்தினான். தேன்கோ, உனக்கு நன்றி! அம்மாவும் என்னை சந்தோஷப்படுத்தினாள். சனிக்கிழமை என்னை உலாவ அழைத்து செல்வதாக அவள் கூறியிருக்கிறாள். நாங்கள் மலையில் ஏறுவோம். அப்பா நேற்று நேரங்கழித்து வந்தார், நான் தூங்கி விட்டேன். சீக்கிரம் வந்து என் சைக்கிளை ரிப்பேர் செய்து தருவதாகச் சொல்லியிருந்தார். இது எனக்கு வருத்தமளித்தது.” (வாஹ்தாங்)
இந்த அழகிய தாள்கள் எனக்கு எவ்வளவு விஷயங்களைச் சொல்கின்றன!…
இனிய, மின்சார மணி ஒலிக்கிறது.
“குழந்தைகளே, இரண்டு இரண்டு பேராக நில்லுங்கள்! உலாவச் செல்லலாம்!”
ஆனால் அங்கு என்ன நடக்கிறது? தேயாவைச் சுற்றிக் குழந்தைகள் கூட்டம். அவள் நாற்காலியில் உட்கார்ந்திருந்ததால் அவள். தலையே தெரியவில்லை. எல்லோரும் எதையோ பார்க்கின்றனர், எதைப் பற்றியோ விவாதிக்கின்றனர். சிலர் பின்னாலிருந்து குதிக்காலால் எம்பிப் பார்க்கின்றனர். சிறுவர்கள் சிறுமியரைத் தள்ளிக் கொண்டு தேயாவை நோக்கிச் செல்கின்றனர்.
“சாஷா! போய் என்ன விஷயமென்று பார்த்துவிட்டு வா!”
“என்னவென்று எனக்குத் தெரியும்!” என்கிறான் சாஷா.
“தேயா தன் முடிகளை எண்ணுகிறாள்!”
“என்ன?!”
“நேற்றும் அவள் தன் முடிகளை எண்ணினாள்.”
தேயாவை என்னிடம் கூப்பிடுகிறேன். குழந்தைகள் புடை சூழ அவள் என்னிடம் வருகிறாள்.
”தேயா, நீ என்ன செய்கிறாய்?”
“என் முடிகளை எண்ண விரும்புகிறேன். இதோ இவ்வளவு முடியை எண்ணி விட்டேன்.”
ரிப்பனால் கட்டப்பட்டுள்ள ஒரு பிடி முடியைக் காட்டுகிறாள்.
தேயாவின் தலையில் எவ்வளவு முடி இருக்க முடியும் என்று குழந்தைகள் விவாதிக்கின்றனர்: 500, 1000, மில்லியன், டிரில்லியன்… இவை சிறுவர்களின் கணிப்புகள்.
“நீ முடியை எண்ணுவது நல்லது தான். உன் தலையில் எவ்வளவு முடி உள்ளது என்று தெரிந்து கொள்வது சுவாரசியமாயிருக்கும். பூங்காவிற்குப் போகலாம் வாருங்கள். அங்கே தொடர்ந்து எண்ணலாம்.”
நானும் எனது குழந்தைகளும் அதிசய நாட்டில் வாழவில்லையா என்ன?
கேள்வி: //டாலர் என்றால் என்ன? அது மட்டும் எப்படி உலகம் முழுவதும் இருக்கிறது? அதன் மதிப்பு எப்படி மதிப்பிடப்படுகிறது? அது எந்த மதிப்பீட்டின் பெயரில் அச்சடிக்கப் படுகிறது?//
– சந்திரன்
அன்புள்ள சந்திரன்
டாலர் என்ற பெயரில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா, சிங்கப்பூர், தைவான் மற்றும் அமெரிக்காவை உள்ளிட்டு 20 நாடுகள் தமது செலவாணியை வைத்துள்ளன. ஆனால் உலகம் முழுவதும் டாலர் என்றால் அமெரிக்காவின் டாலரைத்தான் குறிப்பிடுகிறார்கள். அது உலக செலவாணி போல செல்வாக்குடன் இருக்கிறது. மேலும் கரீபியன் நெதர்லாந்து, கிழக்கு திமோர், ஈக்வெடார், மார்ஷல் தீவுகுள், சிம்பாவே போன்ற சில சிறிய நாடுகளும் கூட அமெரிக்க டாலரை அதிகாரப்பூர்வ செலவாணியாக வைத்துள்ளன.
இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் இருந்து அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் செல்வாக்கு உலகம் முழுவதும் வளர்ந்து வந்தது. சமூக ஏகாதிபத்தியமான சோவியத் யூனியன் 90-களில் வீழ்ச்சி அடைந்த பிறகு அமெரிக்காவே ஒற்றைத் துருவ வல்லரசாக உலகில் செல்வாக்கு செலுத்தி வருகிறது. 1971-ம் ஆண்டு வரை பெரும்பான்மை நாடுகள் தமது செலவாணி அச்சடிப்பை தங்கத்தின் இருப்பைக் கொண்டு நடத்தின. அதன்பின் எவ்வளவு அன்னியச் செலவாணி (டாலர்) இருக்கிறது என்பதை வைத்து (கூடவே தங்கம், கடன் பத்திரங்கள்) செலவாணியை அச்சடிக்கிறார்கள். மேலும் ஒரு நாட்டில் செல்வ மதிப்பு என்பது அது எத்தனை டாலர் வைத்திருக்கிறது என்பதை வைத்து மதிப்பிடப்படுகிறது.
இது தொடர்பாக புதிய ஜனநாயகம் கட்டுரை ஒன்றின் பகுதியை கீழே தருகிறோம்.
‘‘அமெரிக்கா டாலர்களை உற்பத்தி செய்கிறது; உலகின் பிற பகுதியினர் அந்த டாலர்களால் வாங்கப்படும் பொருட்களை உற்பத்தி செய்கின்றனர்” என டாலரின் ஆதிக்கம் பற்றிக் கூறுகிறார், ஹென்றி லியூ என்ற பொருளாதார அறிஞர். உலகின் பிற பகுதியினர் என்பதில் சீனா, இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் மட்டுமல்ல; ரசியா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய வல்லரசு நாடுகளும் அடங்கும்.
இன்று உலகப் பொருளாதாரம் அமெரிக்கா என்ற ஒற்றை இஞ்சினில் ஓடிக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா விழுந்தால், வளர்ந்து வரும் நாடுகள் மட்டுமல்ல, பிற மேல்நிலை வல்லரசுகளும் சேர்ந்தே விழ வேண்டியதுதான். இந்த நாடுகள், தமது உற்பத்திப் பொருட்களின் சந்தைக்காக மட்டும் அமெரிக்காவைச் சார்ந்திருக்கவில்லை. ஏற்றுமதி வர்த்தகத்தின் மூலம் தாம் ஈட்டும் டாலரில் பெரும்பகுதியை அமெரிக்க அரசு வெளியிடும் கடன் பத்திரங்களில்தான் முதலீடு செய்கின்றன. அதனால்தான், அமெரிக்கப் பொருளாதாரத்தைத் தேள் கொட்டினால், இவர்களுக்கு நெறி கட்டிவிடுகிறது.
அமெரிக்கா இந்த நாடுகளை இரண்டு வழிகளில் பயன்படுத்திக் கொள்கிறது. இந்நாடுகளில் இருந்து மிகவும் மலிவான விலையில் நுகர்பொருட்களை இறக்குமதி செய்து, தனது சந்தைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறது. அமெரிக்காவின் இந்த இறக்குமதி சார்ந்த கொள்கையால் அதிகரித்துக் கொண்டே போகும் வர்த்தகப் பற்றாக்குறையை (ஏற்றுமதியைவிட இறக்குமதி அதிகரிப்பதால் ஏற்படும் பற்றாக்குறை) டாலரை அச்சடித்தோ அல்லது தனது நாட்டில் முதலீடு செய்யப்படும் டாலர்களைக் கொண்டோ ஈடுகட்டிக் கொள்கிறது. வர்த்தகப் பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்கு மட்டுமின்றி, அந்நிய நாடுகளில் அதிக வட்டியில் முதலீடு செய்வதற்கும், தனது போர்ச் செலவுகளுக்கும்கூடத் தனது நாட்டுக் கடன் பத்திரங்களில் பிற நாடுகள் முதலீடு செய்யும் டாலர்களைப் பயன்படுத்தி வருகிறது.
டாலரின் மேலாதிக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு, பிற நாடுகளின் உழைப்பையும், சேமிப்பையும் உறிஞ்சிக் கொழுக்கும் ஒட்டுண்ணியாக அமெரிக்க ஏகாதிபத்தியம் வாழுகிறது என்பதைதான் இது எடுத்துக் காட்டுகிறது. டாலருக்குப் போட்டியாக வேறொரு நாணயம் சர்வதேச செலாவணியாக வராதவரை அமெரிக்காவின் இந்த ஒட்டுண்ணித்தனம் கேள்விகேட்பாரின்றிச் செல்லுபடியாகும்.
பொருட்களை உற்பத்தி செய்வதைவிட, டாலரை இடையறாது அச்சடித்து, அதனை வெளியே புழக்கத்தில் விடுவதுதான் இப்பொழுது அமெரிக்காவில் இலாபகரமான வர்த்தகம் எனக் குறிப்பிடுகிறது எக்கானமிஸ்ட் என்ற இதழ். இதுநாள்வரை அமெரிக்காவில் அச்சடிக்கப்பட்ட மொத்த டாலரில் ஏறத்தாழ 70 சதவீத டாலர்கள் அமெரிக்காவுக்கு வெளியேதான் சுற்றிக் கொண்டுள்ளன. இதில் ஒரு 5 சதவீத டாலரை அமெரிக்கா திரும்பப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டாலே அதன் பொருளாதாரம் நிலைகுலைந்து போய்விடும் எனக் கூறப்படுகிறது. எனினும், எண்ணெய் வளம் டாலருக்கு மட்டும் விற்கப்படுவது என்ற அலாதியான ஏற்பாட்டின் காரணமாகவும், தனது இராணுவ பலத்தைக் கொண்டும் டாலரின் புழக்கத்தையும், அதன் மேலாதிக்கத்தையும் அமெரிக்கா பாதுகாத்து வருகிறது.
டாலருக்கு மாற்றாக வரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட யூரோ பிராந்தியத்தைச் சேர்ந்த ஜெர்மனியின் பொருளாதார வளர்ச்சி, இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் வெறும் 0.1 சதவீதம்தான். அதே யூரோ பிராந்தியத்தைச் சேர்ந்த பிரான்சிலோ இந்த ஆண்டின் பொருளாதார வளர்ச்சி சுழியமாகத்தான் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த ‘வளர்ச்சிக்கு’க்கூட இந்த நாடுகள் அமெரிக்காவைதான் நம்பியுள்ளன. அது மட்டுமின்றி, ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த கிரீஸ், ஸ்பெயின், போர்த்துகல், இத்தாலி உள்ளிட்டு 17 நாடுகள் அமெரிக்காவைவிட மோசமாகப் பொதுக் கடன் பிரச்சினையில் சிக்கித் திண்டாடி வருகின்றன. தனது உறுப்பு நாடுகளைக்கூடக் கைதூக்கிவிட முடியாத நிலையில் உள்ள ஐரோப்பிய யூனியன், அமெரிக்காவுக்கும் டாலருக்கும் மாற்றாக வர தற்சமயம் வாய்ப்பில்லை.
உலகப் பொருளாதாரம் அமெரிக்கா என்ற ஒற்றை இஞ்சினையே நம்பி இருப்பதால், அமெரிக்காவின் டாலரும், அதன் சந்தையும் சரிந்துவிடாமல் காப்பதில் ஏனைய நாடுகள் அதிக அக்கறை காட்டுகின்றன. தனக்கு மிகக் குறைந்த விலையில் உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்யவும், குறைந்த வட்டியில் கடன் கொடுக்கவும் ஏனைய நாடுகள் தயாராக இருப்பதால், அமெரிக்க ஏகாதிபத்தியம் மைனரைப் போலக் கவலையின்றி இருக்கிறது.
டாலருக்கு மாற்றாக வேறொரு நாணயம் சர்வதேச செலாவணியாக வர வேண்டும் என்றால், அமெரிக்காவிற்குக் கடன் கொடுத்துள்ள நாடுகள் தமது டாலர் முதலீடுகளைத் திரும்பப் பெற வேண்டிய நிலை ஏற்படும். இப்படித் திரும்பப் பெறும் முதலீடுகளை மறு முதலீடு செய்ய ஒரு இடம் வேண்டும். அமெரிக்காவுக்கு பதிலாக தங்களது பொருட்களை நுகர்வதற்கான வேறொரு சந்தையையும் அவர்கள் தேட வேண்டும். இதற்கான வாய்ப்புகள் இப்போதைக்கு இல்லை என்பதால் டாலரின் மேலாதிக்கத்திற்கு பெரிய அச்சுறுத்தல் ஏதும் தற்சமயம் ஏற்பட வாய்ப்பில்லை.
அமெரிக்கா போண்டியாகிவிட்டது என்பது இன்று உலகறிந்த உண்மை. எனினும், அந்த உண்மையை ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் உலக முதலாளித்துவப் பொருளாதாரம் அனைத்தும் அடுத்த கணமே போண்டியாகிவிடும். எனவே, கடவுள் இருக்கிறார் என்று ஒப்புக் கொள்வதைத் தவிர மற்ற நாட்டு அரசுகளுக்கு வேறு வழி இல்லை.
இனி, அமெரிக்காவுக்குப் பொருளை விற்றவர்கள் பில்லைக் கொடுத்துப் பணம் கேட்டால் அமெரிக்க அரசு இப்படி வெளிப்படையாகவே பதில் சொல்லக்கூடும், “ கனவான்களே, ஒரு நாள் பொறுத்துக் கொள்ளுங்கள். மெசின் ஓடிக் கொண்டிருக்கிறது; டாலர் நோட்டுகள் காய்ந்தவுடன் எடுத்து வெட்டி, எண்ணி, கட்டித் தந்து விடுகிறோம்’’. கடவுள் மீது நம்பிக்கை இருப்பவர்கள் பிரசாதத்தையும் நம்பித்தானே ஆக வேண்டும்.”
முழுமையான கட்டுரையை கீழே உள்ள இணைப்பில் படிக்கலாம்.
இந்தக் கட்டுரை 2008-ம் ஆண்டில் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் தொடர்ச்சியாக அடுத்தடுத்த ஆண்டுகளில் ஏற்பட்ட சிக்கலை விளக்கும் வண்ணம் எழுதப்பட்டது. இன்றைக்கு அந்த நெருக்கடி மேலும் தீவிரமாகியிருக்கிறது. விரைவிலேயே அமெரிக்காவை மையமாக வைத்து ஒரு பெரும் நெருக்கடி வரும், முதலாளித்துவ உலகில் அதை தடுத்து நிறுத்த எந்த சீர்திருத்தங்களும் இல்லையென முதலாளித்துவ அறிஞர்களே எழுதி வருகின்றனர்.
அதன் அறிகுறியாக அமெரிக்கா சீன வர்த்தகப் போர், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முரண்பாடு, ரசியா தனியாக எண்ணெயை ஏற்றுமதி செய்வது, ஈரானுக்கு எதிரான அமெரிக்கத் தடை என நிறைய பிரச்சினைகள் சமீப மாதங்களில் அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் டாலரின் ஏகபோகம் கேள்விக்குள்ளாக்கப்பட்டாலும் அமெரிக்கா வீழ்ந்தால் மொத்த உலகமும் விழ வேண்டியிருக்கும் என்ற சுழலில் முழு உலகமும் சிக்கியிருக்கிறது.
2008 அமெரிக்க நெருக்கடி குறித்த கட்டுரையை கீழே படிக்கலாம்.
(கேள்வி பதில் பகுதிக்கு நிறைய கேள்விகளை நண்பர்கள் கேட்கிறார்கள். மகிழ்ச்சி. கூடுமானவரை உடனுக்குடன் பதிலளிக்க முயல்கிறோம். சில கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு கூடுதலான நேரம் தேவைப்படுகிறது. கொஞ்சம் காத்திருங்கள்.)
வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்: கேள்விகளை பதிவு செய்யுங்கள்
“என் குழந்தையை நல்ல வாசகராக்க நான் எப்படி உதவுவது?” வாசிப்பு குறித்த ஆய்வை செய்யும் என்னிடம் சில பெற்றோர்கள் அவ்வப்போது கேட்கும் கேள்வி இது.
“உங்கள் குழந்தையுடன் சேர்ந்து படியுங்கள். புத்தகங்களை அவர்களுடன் சேர்ந்து ரசிப்பதானாலும் சரி, இணைந்து செய்யுங்கள். வாசிப்பு பழக்கத்தை கற்றுக்கொடுப்பது குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஆசிரியர்களிடம் கற்றுத்தருவதை விட்டுவிடுங்கள்” இதே ஆலோசனையைத்தான் அவர்களிடம் நான் கூறுவேன்.
அதிக செயல்திறன் கொண்ட ஆசிரியர்களின் கல்வியறிவு பயிற்சிகள் தொடர்பான எனது ஆய்வு, அதுபோலவே ஒரு பெற்றோராக எனது அனுபவங்களின் அடிப்படையில் இந்த பதிலை கூறுகிறேன்.
சொற்களை படிப்பது, எழுதுவது, பேசுவது மற்றும் விளையாடுவதற்கான உறுதியான அடித்தளம் சிறு வயதிலேயே புத்தகங்கள் மீதான அன்பை வளர்க்கிறது. பின்நாட்களில் அந்தக் குழந்தையை வெற்றிகரமான வாசகராகவும் மாற்றுவதை உறுதியான சான்றுகள் தெரிவிக்கின்றன.
ஆனால், ஒரு குழந்தை படிக்கக் கற்றுக்கொள்ளாதபோது என்ன நேரும் அல்லது படிக்கத் திணறும்போது என்ன நடக்கும்? இந்தப் பிரச்சினை அதிகமாக உள்ளது. 8-ம் வகுப்பு மாணவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே படிக்கின்றனர் அல்லது தர நிலைக்கு மேலே உள்ளனர்.
ஆசிரியர்களின் பங்கு :
நியூயார்க், ஒஹியோ, மிசோரி, மேரிலேண்ட் பகுதிகளில் உள்ள அதிக செயல்திறன் கொண்ட நகர்ப்புற பகுதிகளில் உள்ள பள்ளிகளில் வாசிக்க சிரமப்படும் மாணவர்களின் வாசிக்கும் திறனை அதிகரிக்க ஆசிரியர்கள் வெற்றிகரமாக உதவியுள்ளனர் என்பது குறித்து ஆய்வு செய்திருக்கிறேன். அவர்களில் பலர் குழந்தைகளை பல முறை பத்திகளை படிக்க வைக்கின்றனர்.
இரண்டாம் வகுப்பிலிருந்து பள்ளி இறுதிவரை படிக்கத் திணறுபவர்களை மேற்கண்ட செயல்முறை மேம்படுத்துவதாக ஆசிரியர்கள், ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குழந்தைகளைப் பொறுத்தவரை இது புதிய பாடல் வரிகளை கற்றுக்கொண்டு, பாடலைப் பார்த்து பாடுவதைப் போல. மீண்டும் மீண்டும் ஒரு பத்தியை படிக்கும்போது அவர்கள் அதை கவனிக்கிறார்கள், எழுத்துக்களை கண்களால் தொடரும்போது, புத்தகத்தில் உள்ள தொடர்களை தொடும்போது அவர்கள் அனுபவம் பெற்ற வாசகர்களாக மாறிவிடுகிறார்கள்.
கேட்பது, பார்ப்பது, தொடுவது போன்ற உணர்வுகளை செயல்படுத்துவதன் மூலம் அவர்களால் ஒரேமாதிரியான வார்த்தைகளை எளிதாகவும் வேகமாகவும் சரளமாகவும் வாசிப்பதை அதிகப்படுத்துகிறது. ஒவ்வொரு நாளும் 10 நிமிடங்கள், 15 நிமிடங்கள் தொடரும்போது, இந்த உத்தி சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. தர அளவில் மில்லியன் கணக்கிலான குழந்தைகள் படிக்கமுடியாத நிலையில் இருக்கும்போது, இது முக்கியத்துவம் பெறுகிறது.
உளவியல் நிபுணர் ராபர்ட் ஜி ஹெக்கிள்மேன் 1960-களில் மீண்டும் மீண்டும் படிக்கும் உத்தியை கண்டறிந்தார். இந்த உத்தியைப் பயன்படுத்தி பதின்பருவத்தினரின் வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்த முனைந்தபோது, அவர்களின் தர நிலை மூன்றாவது நிலைக்கு சென்றதை அவர் ஆய்வின் முடிவில் கண்டார். வாசிப்பதில் பிரச்சினையுள்ள நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 24 மாணவர்களிடம் இந்த உத்தியை மீண்டும் மீண்டும் செயல்படுத்தினார் ஹெக்கிள்மேன்.
‘நரம்பியல் பதிவு உத்தி (Neurological Impress Method)’ என இதை பெயரிட்டு அழைத்த இவர் அளித்த 7.5 மணி நேர பயிற்சிக்குப் பிறகு மாணவர்கள் இரண்டு தர நிலையில் உயர்ந்திருந்தனர்.
2016-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மற்றொரு ஆய்வில் இதே முடிவை ஆய்வாளர்கள் கண்டனர். அதை அவர்கள் ‘இருமுறை வாசிப்பு உத்தி (Read Two Impress)’ என அழைத்தனர்.
இந்த புதிய பெயர், இந்த உத்தியில் செய்யப்பட்ட மாற்றத்தைக் கூறியது. தனக்குச் சொல்லித்தருபவர் படித்த பின், குழந்தைகள் ஒவ்வொரு பக்கத்தையும் சத்தமாகப் படிக்க வேண்டும். கூடுதலாக, இந்த உத்தி குழந்தைகள் சிறந்த வாசிப்பாளர்களாகவும் தன்னம்பிக்கை உள்ளவர்களாகவும் வாசிப்பதில் கூடுதல் நேரத்தை செலவிடுகிறவர்களாகவும் மாற்றுகிறது.
குடும்பங்களை மேம்படுத்துதல் :
‘இருமுறை வாசிப்பு உத்தி’யில் இதுவரை குழந்தைகளின் குடும்பங்களை ஈடுபடுத்தியது இல்லை. அதோடு, இந்த முறையில் எந்த மாதிரியான நூல்களைப் பயன்படுத்தினால் மாணவர்களின் கலாச்சாரம் மற்றும் மொழியறிவில் அது பிரதிபலிக்கும் என்பது குறித்தும் ஆராயப்படவில்லை.
குடும்பங்களில் இந்த உத்தியை பயன்படுத்துவது எவ்வகையில் குழந்தைகளின் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் என்கிற ஆய்வை நானும் ஜோஷ்வா மைக்கேல் மற்றும் கிரிஸ்டினா அக்கர்மேன் ஆகியோரும் இணைந்து செய்தோம். நார்த் ஈஸ்டர்ன் நகரத்தில் உள்ள பள்ளியில் பத்து வாரங்களுக்கு இந்த ஆய்வை மேற்கொண்டோம்.
இதிலும் சில பிரச்சினைகளை எதிர்கொண்டோம். உதாரணத்துக்கு, ஒரு குழந்தையின் பாட்டி, தனக்கே வாசிக்கும் பழக்கம் இல்லை என்னும்போது, நான் எப்படி என்னுடைய பேரக்குழந்தைக்கு உதவு முடியும் எனக் கேட்டார்.
அவருடன் சேர்த்து இருபத்தைந்து இரண்டாம் தர நிலையைச் சேர்ந்த குழந்தைகளின் உறவினர்கள் ஐந்து பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டனர்.
பயிற்சியில் கலந்துகொண்ட பலர் பலவித யோசனைகளையும் தெரிவித்தனர். இதையே பள்ளிகள் தோறும் முழு பள்ளிக்கும், ஆசிரியர் குழுவினருக்கும் பயிற்சியாக அளிக்கக்கூடாது என்ற முடிவையும் நாங்கள் எட்ட உதவியது இது.
இந்த ஆய்வின் முடிவில் குடும்பங்கள் சேர்ந்து புத்தகங்களை வாசிக்கும்போது, அது அவர்களுடைய கலாச்சாரத்திலும் மொழியிலும் பிரதிபலித்தது. அவர்கள் மேலும் ஒன்றாக இணைந்து வாசிப்பதில் மகிழ்ந்தனர். குழந்தைகள் சிறந்த வாசிப்பாளர்களாக மாறியதில் பெற்றோர் பெருமை கொண்டனர் என்பதையும் நாங்கள் கண்டறிந்தோம்.
இன்று (06.09.2019) அகழ்வாராய்ச்சி ஆய்வுகளில் மிக முக்கியமான நாள். சிந்துச் சமவெளியில் வசித்த மக்கள் எங்கிருந்து வந்தவர்கள் என்ற கேள்விக்கு மரபணு ரீதியாக ஓரளவுககு விடை கிடைத்திருக்கிறது. இது தொடர்பாக இரு கட்டுரைகள் உலகின் மிகச் சிறந்த ஆய்விதழ்களில் வெளியாகியிருக்கின்றன. முதலாவது கட்டுரை ‘The Genomic Formation of South and Central Asia’ என்ற தலைப்பில் Science இதழிலும் இரண்டாவது கட்டுரை Cell இதழிலும் வெளியாகியிருக்கிறது. இந்தக் கட்டுரை, ஹரப்பாவில் கிடைத்த எலும்புக்கூட்டை மரபணு ரீதியாக ஆய்வுசெய்து முடிவுகளை வைத்து எழுதப்பட்ட கட்டுரை.
முடிவுகள் இதுதான். அதாவது, ஹரப்பா நாகரீகத்தில் வசித்தவர்களிடம் ஸ்டெப்பி புல்வெளி மற்றும் இரானிய விவசாயிகளின் மரபணு இல்லை. இதன் அர்த்தம் என்னவென்றால், ஸ்டெப்பி புல்வெளி மரபணுவைக் கொண்டவர்கள், ஹரப்பா நாகரீகம் மறைந்த பிறகே இந்தியாவுக்கு வந்திருக்கிறார்கள். அவர்களுடன்தான் இந்தோ – ஐரோப்பிய மொழியும் இந்தியாவுக்கு வந்திருக்கிறது.
இரானிய விவசாயிகளின் மரபணுவும் இல்லை என்பதற்கு அர்த்தம், விவசாயம் உலகில் எங்கும் தோன்றும் முன்பே மேற்காசியாவிலிருந்து மனிதர்கள் இந்தியாவுக்கு வந்து, ஹரப்பா நாகரீகத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
ஆகவே ராக்கிகடியில் கிடைத்த டிஎன்ஏ முடிவுகளின்படி, ஹரப்பா நாகரிகத்தில் வசித்தவர்கள் ஆரம்பகால இந்தியர்களும் மேற்காசியாவிருந்து வந்தவர்களும்தான். அவர்கள் வாழ்ந்த காலத்தில் இந்தோ – ஆரிய மொழிகளைப் பேசிய ஸ்டெப்பி புல்வெளிவாசிகள் இந்தியாவில் இல்லை.
இதற்கடுத்த மற்றொரு விஷயமும் முக்கியமானது. அதாவது “Our findings also shed light on the origin of the second-largest language group in South Asia, Dravidian…The strong correlation between ASI ancestry and present-day Dravidian languages suggests that the ASI, which we have shown formed as groups with ancestry typical of the Indus Periphery Cline moved south & east…after the decline of the IVC to mix with groups with more AASI ancestry, most likely spoke an early Dravidian language.” என்று குறிப்பிட்டிருக்கிறது.
இதைச் சுருக்கமாக தமிழில் சொன்னால், “எங்களது கண்டுபிடிப்பு இன்னொரு விஷயத்தையும் சுட்டிக்காட்டுகிறது. அதாவது, தெற்காசியாவில் இரண்டாவது மிகப் பெரிய மொழிக் குழுமமான திராவிட மொழிக் குழுமத்தின் தோற்றம் பற்றியது இது. ஆதிகால தென்னிந்திய மூதாதையருக்கும் (ASI) தற்போதைய திராவிட மொழிகளுக்கும் இடையில் உள்ள பரஸ்பர ஒற்றுமையை வைத்துப் பார்க்கும்போது ஒரு விஷயம் புலனாகிறது.அதாவது, ஆதிகால தென்னிந்திய மூதாதையர் என்பவர்கள், சிந்துச் சமவெளி நாகரிகம் (IVC) மறையத் துவங்கியபோது கிழக்கிலும் தெற்கிலும் பரவி, மிக ஆதிகால தென்னிந்தியர்களுடன் (AASI) கலந்தனர். இவர்கள், ஆரம்பகால திராவிட மொழிகளைப் பேசியிருக்கக்கூடும் ”
2. சிந்துச் சமவெளி மக்களுக்கும் தென்னிந்தியர்களுக்கும் தொடர்பு உண்டு. இவர்கள் ஆரம்பகால திராவிட மொழிகளைப் பேசினர்.
இது தொடர்பாக மேலும் படிக்க, மிகவும் புகழ்பெற்ற Early Indians புத்தகத்தை எழுதிய டோனி ஜோசப்பின் ட்விட்டர் பக்கத்தை பார்க்கவும்.
Friends, the book I have been working on for long is out. Check in your favourite bookstore, or Amazon/Flipkart. It answers fundamental & long-debated questions about us in a comprehensive manner, starting from 65,000 years ago. Do read and pass the word! pic.twitter.com/0lzQTSIqc7
இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், தி பிரிண்ட் இணைய இதழும் தி எகனாமிக் டைம்ஸ் இதழும் இதனைத் தவறாக ரிப்போர்ட் செய்திருப்பதுதான். அதாவது, ராக்கிகடி எலும்புக்கூட்டில் ஸ்டெப்பி புல்வெளி மனிதனின் டிஎன்ஏ இல்லை என்பதை வைத்துக்கொண்டு, ஆரியர்கள் வெளியிலிருந்து வரவில்லை என்பதாக எழுதியிருக்கிறார்கள்.
தந்தை பெரியார் சிந்தனையை உயர்த்திப் பிடிப்போம் ! கார்ப்பரேட் காவி பாசிசத்தை போராடி வீழ்த்துவோம் !
தந்தை ஈ.வெ.ரா. பெரியாரின் 141 – வது பிறந்த நாள் – அரங்கக் கூட்டம்
நாள் : 15.09.2019 ஞாயிறு மாலை 5.30 மணி
இடம் : மூட்டா அரங்கம், காக்கா தோப்பு, மதுரை.
தலைமை :
தோழர் கதிரவன்
மாநில செயற்குழு உறுப்பினர், மக்கள் கலை இலக்கியக் கழகம்.
வரவேற்புரை :
தோழர் இராமலிங்கம்
அமைப்பாளர், ம.க.இ.க. மதுரை மாவட்டம்.
கருத்தாளர்கள் :
பேராசிரியர் மு. இராமசாமி
நிறுவனர், நிஜ நாடக இயக்கம். மதுரை.
வழக்கறிஞர் பெ. கனகவேல்
செயலாளர், சமநீதி வழக்குறைஞர்கள் சங்கம்.
தோழர் N. வீரபாண்டியன்
முன்னாள் மாநிலச் செயலாளர் AIBSNLAE, தமிழ்நாடு.
இந்தியா பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள், பண்பாடு, பழக்க வழக்கங்கள் கொண்ட நாடு ஆனால், கரும்புத் தோட்டத்தில் மதயானை புதுந்ததுபோல் காவி கார்ப்பரேட் கும்பல் குறிப்பாக தமிழக மக்கள் மீது கடும் தாக்குதலை தொடுத்திருக்கிறது.
ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே மொழி, ஒரே ரேசன் கார்டு இப்படி அறிவிப்புகள் தொடர்கின்றன. மேலும் ஒரே… ஒரே என்று தொடர்ந்தால் அது ஒரே கட்சி ஒரே தலைவன் என்று போய் நிற்கும்! ஒரே கட்சி பாரதிய ஜனதா. ஒரே தலைவர் மோடிதான்! பாரதிய ஜனதா பிற அரசியல் கட்சிகளைப் போன்றதல்ல, பிரதமர் மோடியும் பிற கட்சித் தலைவர்களைப் போன்றவர் அல்ல. ஆர்.எஸ்.எஸ். இயக்கும் ஒரு கட்சி தான் பாரதிய ஜனதா! கார்ப்பரேட் காவி பாசிசத்தின் அரசியல் அடையாளம்தான் பிரதமர் மோடி!
ஒரு தேசிய இனத்தின் அடையாளம் மொழி. சமஸ்கிருதம்-இந்தி திணிப்பு ஏதோ தற்செயலானது அல்ல. திட்டமிட்ட திணிப்பு. 1937-ல் அப்போதைய சென்னை மாகாண பிரதமர் இராஜாஜி இந்தியை பள்ளிகளில் கட்டாயப் பாடம் என அறிவித்தார். இது தமிழர்களுக்கான கல்வி மறுப்பு. தமிழுக்கு அழிவு. இதை அனுமதிக்க முடியாது என தந்தை பெரியார் மக்களைத் திரட்டிப் போராடினார். சுமார் 2,250 பேர் கைது செய்யப்பட்டனர். வரலாற்றில் முதன்முதலில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட இந்தி எதிர்ப்பு போராட்டம் இதுவே! பெரியாருக்கு இரண்டு ஆண்டு சிறை! 2,000 ரூபாய் அபராதம்.
இன்றைக்கு மீண்டும் இந்தி – சமஸ்கிருதத் திணிப்பு! தமிழ் இனம், மொழியின் மீது காவி கார்ப்பரேட்டுகளின் அடுத்தடுத்து தாக்குதல்! கடந்த ஐந்து ஆண்டுகளில் தலித்துகள், இசுலாமியர்கள், பெண்கள் மீது தாக்குதல் அதிகரித்து வருகிறது. சென்ற ஆண்டு ஆர்.எஸ்.எஸ் கும்பல் கேரளாவில் ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் நுழையக் கூடாது என கூச்சல் கூப்பாடு. ஆர்ப்பாட்டம்!
வாழ்நாள் முழுவதும் தந்தை பெரியார் பார்ப்பனியத்தை எதிர்த்துப் போராடினார். பார்ப்பனியம் என்பது வெறும் சாதி மட்டுமல்ல, இந்துத்துவாவின் சிந்தாந்த உள்ளடக்கம். நாளை அமைக்கப்போவதாகச் சொல்லும் “இந்து ராஷ்டிரத்தின்” மனுநீதி! அதுதான் அவர்களின் அரசியல் சட்டம்.
கேரளாவில் வைக்கம் போராட்டம் வரலாற்று சிறப்புமிக்கது. போராட்டத்தை பெரியார் தலைமை தாங்கி நடத்தினார். 1924 ஆம் ஆண்டு வைக்கம் போராட்டம் வெடித்தது. வைக்கம் மகாதேவன் கோயிலைச் சுற்றி உள்ள வீதிகளில் ஈழவர், தீயர், புலையர், பறையர் நடக்கக் கூடாது என சட்டம் இருந்தது. மீறினால் தண்டிக்கப்படுவார்கள்! அந்த தீண்டாமைக் கொடுமைச்சட்டம் ரத்துச் செய்யப்பட்டது. போராட்டகளத்தில் பெரும் வெற்றியை ஈட்டினார் பெரியார்!
பெரியார் வெறும் கடவுள் மறுப்பாளர் மட்டுமல்ல! சமூகநீதி, பெண் உரிமை, பெண் விடுதலை, மூடநம்பிக்கை ஒழிப்பு, மொழி உரிமை, தேசிய இன உரிமை, பண்பாட்டு உரிமை, சம உரிமை, சம வாய்ப்பு என அவரது களம் பரந்து விரிந்தது சமூகத்தின் அத்தனை நிகழ்வுகளையும் பகுத்துப் பார்க்கும் தொகுப்புத்தான் பெரியார் ! எங்கெல்லாம் ஒடுக்குமுறை இருந்ததோ அங்கெல்லாம் சென்று போராடும் போராளியாக களத்தில் நின்றார்!
இன்று கார்ப்பரேட் காவி பாசிச இருள் படர்ந்து வருகிறது. பெரியார் சிந்தனை சுடரை ஏந்துவோம்! கார்ப்பரேட் காவிப் பாசிச சக்திகளை போராடி வீழ்த்துவோம்!
தகவல் : மக்கள் கலை இலக்கியக் கழகம், மதுரை, தொடர்புக்கு : 97916 53200
‘குற்றாலத்தில் இடி, இடித்து.. கும்பகோணத்தில் மழை பெய்த’ கதையாக மோடி செய்த டிமாண்டைசேஷன் அத்தனை தொழில்களையும் பதம் பார்த்துவிட்டது. இதில் இன்னொரு உதாரணம் இந்தக் கதை.
எப்போதும் நான் முடிவெட்டுவது வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு டீஸண்ட்டான சலூன் கடையில். ஏஸி வசதியுண்டு என்பதாலும், செலவும் நமக்குக் கட்டுப்படியாகும் அளவுக்கு இருப்பதாலும் தொடர்ந்து வாடிக்கையாளராக மாறிப் போனேன். அந்தக் கடையைத் திறந்து 2 வருடங்கள்தான் ஆனது.
சென்ற மாதம் கடைசியில் கடைக்குச் சென்றபோது புது ஆட்கள் கடையை மராமத்து பணிகளைச் செய்து கொண்டிருந்தார்கள். என்னைப் பார்த்தவுடன் “திங்கள்கிழமை அன்னிக்கு புதுசா ரீ ஓப்பன் செய்றோம் ஸார். வந்திருங்க..” என்றார்கள்.
மாதிரிப்படம்
சரி.. விநாயகர் சதுர்த்தி அதுவுமா பெரியப்பனுக்கு முடியைக் காணிக்கையாக்கிருவோம் என்று நினைத்து நேற்றைக்குச் சென்றேன். கடையில் அனைவருமே புதுமுகங்கள். “எங்கப்பா பழைய ஆள்..?” என்றேன். “அவர் கடையை வித்திட்டுப் போயிட்டாருங்க. நாங்க இப்போ புதுசா வாங்கியிருக்கோம்..” என்றார்கள்.
அதிர்ச்சியாக இருந்தது. பழைய நண்பரான கார்த்திகேயன் மிகவும் சின்சியரான மனிதர். நமக்குப் பிடித்தால் மட்டும்தான் டிவியை ஆன் செய்வார். இல்லையென்றால் நிறுத்திவிடுவார். இடையில் செல்போனில் அழைப்பு வந்தாலும் எடுக்க மாட்டார். கடைக்குள் இருந்து யாராவது பேசிக் கொண்டேயிருந்தால் “பத்து நிமிஷம் கழித்து பேசுவோம்…” என்று பேச்சை நிறுத்துவார். இந்த மாதிரி குணங்களே நமக்கு மிகவும் பிடித்திருந்தது.
இப்போதைய புதிய ஆட்களும் அதே கட்டணத்தைத்தான் வாங்கினார்கள். முடி வெட்டுதல், ஷேவிங், டையிங் மூன்றுக்கும் சேர்த்து 300 ரூபாய்தான். ஸ்பீடு இல்லை என்றாலும் சரியாகவே இருந்தது இவர்களின் வேலை.
நன்றி சொல்லிவிட்டு அவர்களிடத்திலேயே பழைய முதலாளியான கார்த்திகேயனின் போன் நம்பரை வாங்கி அவரை அழைத்தேன்.
தொழிலை விட்டுவிட்டுச் சென்ற கதையைக் கேட்டேன். ஒரு பாட்டம் அழுது தீர்த்தார்..
“4 லட்சம் ரூபா செலவு செஞ்சு அட்வான்ஸ் கொடுத்து புது கலர் அடிச்சி, சோபா வாங்கி.. பெரிய, பெரிய டீலக்ஸ் கடைகள்ல இருக்குற மாதிரி எக்யூப்மெண்ட்ஸெல்லாம் வாங்கி வைச்சேன் ஸார்.. கடைல ஆளும் போட்டிருந்தேன். உங்களுக்கே தெரியும். கடைக்கு செலவே மாதம் 35,000 ஆச்சு.
முதல்ல நல்லாத்தான் இருந்துச்சு.. தினத்துக்கு 2000-ல் இருந்து 3000-ரூபா வரைக்கும் வந்துக்கிட்டிருந்தது. அப்புறம் அந்த டிமாண்டடிசேஷன் வந்துச்சு பாருங்க. அன்னிக்கு ஆரம்பிச்சது பிரச்சினை.
அதுவே அவங்களுக்கு வசதியா போனதால முதல் ஆளா ஷேவிங்குக்கு மட்டும் வர்ற ஆட்கள் மட்டும் சுத்தமா நின்னுட்டாங்க. அப்புறம் முடி வெட்டுறது.. டை அடிக்க.. பேஷ் ப்ளீச்சீங் செய்யன்னு மட்டும் வந்தவங்களும் மாசத்துக்கு ஒரு தடவைன்னு குறைய ஆரம்பிச்சாங்க..
இப்போ டை அடிக்கவும் ஷாம்பூ மாதிரியே ஜெல் வர ஆரம்பிச்ச உடனேயே அதுக்கு இருந்த கூட்டமும் குறைய ஆரம்பிச்சிருச்சு.. பிளீச்சிங்கிற்கு வந்தவங்களும் காசில்லை.. காசை மிச்சப்படுத்தணும்னு குறைய ஆரம்பிச்சாங்க.
இப்போ கடைசி சில மாதங்களாக வந்தவங்க எல்லாரும் முடி வெட்டுறதுக்கு மட்டும்தான். அதுலேயும் முடி வெட்டும்போது தேவைன்னா ஷேவிங் செய்வாங்க.. இப்படி பிஸினஸ் ஆட்கள் குறையக் குறைய.. எனக்கும் வரவு குறைஞ்சது..
முதல் ஆளா கடைல வேலை பார்த்த பையனை நிறுத்தினேன். நான் ஒரே ஆளே வேலை செஞ்சேன். காலை, மதியம், ராத்திரின்னு 3 பேர் மட்டுமே வர ஆரம்பிச்சாங்க.. ஒரு நாள் 1000-ம்ன்னா அடுத்த 3 நாட்களுக்கு 300 ரூபாய்க்கு மேல வரலை.. இதுல கடை வாடகை.. என் குடும்பச் செலவு.. இப்படி எல்லாமே பற்றாக்குறைல ஓடுச்சு..
ஏற்கெனவே விழுப்புரம் பக்கத்துல இருக்குற என் சொந்த ஊர்ல இருக்குற விவசாய நிலத்தை அடமானமா வைச்சு கடன் வாங்கித்தான் இதை ஆரம்பிச்சேன். இப்போ கடனையும் அடைக்க முடியலை.. இந்த எட்டு மாசமா கடன் வாங்கித்தான் வாழ்க்கையை ஓட்டிக்கிட்டிருக்கேன். இதுக்கு மேலேயும் முடியல ஸார்..
அந்த 4 லட்சம் ரூபாய் கடன் இப்போ ஐந்தரை லட்சமா ஆகியிருக்கு. இப்போவரைக்கும் வட்டியைத்தான் நான் கட்டியிருக்கேன். அடுத்து என்ன செய்றதுன்னு தெரியலை ஸார்..
வீட்டம்மா புள்ளைகளைக் கூட்டிக்கிட்டு விழுப்புரத்துக்கே போயிட்டாங்க. எனக்கும் என்ன செய்றதுன்னு தெரியாமல் கடையை கை மாத்திவிட்டுட்டு வந்துட்டேன்.
கடைக்கு கொடுத்த அட்வான்ஸ், வீட்டுக்குக் கொடுத்த அட்வான்ஸ்ன்னு ஒரு லட்சம் ரூபாதான் கைல இருக்கு. இதை வைச்சு என்ன செய்றதுன்னு தெரியாமல் உக்காந்திருக்கேன் ஸார்..” என்றார்.
எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை..!
நான் உட்பட மக்கள் பலரும் காசை மிச்சப்படுத்துவது தவறில்லைதான். ஆனால் திடீரென்று அது நிறுத்தப்பட்டால், இப்படி கடன் வாங்கி தொழில் செய்பவர்களின் நிலைமை பரிதாபமாகத்தான் இருக்கும்.
கட்டணத்தைக் குறைத்தால் அவர்களுக்குக் கட்டுப்படியாவதில்லை. கடை வாடகையே 15000 ரூபாய். கடையில் வேலை பார்க்க வருபவர்களுக்கு 15000 ரூபாய் சம்பளம் கொடுத்தாக வேண்டும். அதற்குக் குறைந்து யாரும் வருவதில்லையாம்.
மின் கட்டணம், பராமரிப்புக் கட்டணம், குடும்பச் செலவுகள் என்று பார்த்தால் இது போன்ற ஒரு கடைக்காரருக்கு மாதம் 50000 ரூபாய் வருமானம் வந்தால்தான் அவரால் பிழைப்பை நடத்த முடியும்.. இல்லையெனில்..?
நல்லா போயிட்டிருந்த எல்லா தொழில்களிலும் மண்ணையள்ளிப் போட்டது மோடி என்னும் கேடியின் இந்த டிமாண்ட்டிசேஷன் என்னும் நாணய மதிப்பிழப்புத் திட்டம்தான். அது அப்போது தெரியவில்லை. இப்போது பல தொழில்களையும் அது அழித்துக் கொண்டிருக்கிறது.
கடைசியில், இதன் முடிவு என்னவாகத்தான் இருக்கும் என்று யாருக்காச்சும் தெரியுமா..?
சென்னை பல்கலையில் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தைச் சேர்ந்த மாணவர் கிருபாமோகன் நீக்கம் ! சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் !
சென்னை பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு மாணவர் கிருபாமோகன் தத்துவவியல் – பவுத்தத் துறையில் சேர்ந்துள்ளார். கடந்த ஒருமாதமாக கல்லூரிக்கு முறையாகச் சென்று பயின்று வந்த நிலையில், இருவாரங்களுக்கு முன்னர் ஒருநாள் அவரது துறைத்தலைவர் அழைத்து, கிருபா மோகனை கல்லூரியில் இருந்து வெளியேற்ற ஆளுநர் மாளிகை மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர் தரப்பில் இருந்து தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் தனது பணிக் காலத்தில் இத்தகைய அழுத்தத்தை சந்தித்ததில்லை எனவும் தெரிவித்தார். அதற்குக் காரணமாக கிருபா மோகன் அதே கல்லூரியில் கடந்த ஆண்டு இதழியல் படிக்கையில் கல்லூரியில் இயங்கும் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தில் செயல்பாட்டாளராக இருந்ததுதான் காரணம் என்றும் தெரிவித்தார்.
மாணவர் கிருபாமோகன்
கடந்த வாரத்தில் கிருபா மோகனைக் கூப்பிட்டு அவரது சேர்க்கைக்கான ஆவணங்கள் பற்றாக்குறையாக இருப்பதைக் காரணம் காட்டி, அவரை கல்லூரியில் நீக்குவதாக ஒரு கடிதத்தை நீட்டியிருக்கிறார் துறைத் தலைவர்.
ஆனால், உண்மையான காரணம், கல்லூரி வளாகத்தில் பல்கலைக்கழக மாணவர்களின் அடிப்படை பிரச்சனைக்கு குரல் கொடுப்பது என்பதோடு மட்டும் அல்லாமல் ஹைட்ரோகார்பன், எட்டுவழிசாலை, அணுக்கழிவு, பொள்ளாச்சி மாணவிகளை சீரழிந்த கும்பலுக்கு எதிராக போராட்டம் தொடங்கியது என தொடர்ந்து மாணவர்களுக்காகவும் சமூகத்துக்காகவும் போராடியுள்ளார். கல்லூரியில் உள்ள ஆசிரியர்களை மிரட்ட வந்த ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பலை, மாணவர்களைத் திரட்டி விரட்டியடித்துள்ளார். இதுதான் RSS- BJP சங்கிகளுக்கு பிரச்சினை. அதனால்தான் ஆளுனர் மாளிகையில் இருந்து எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்ற்னர். சென்னை பல்கலைக்கழகத்தின் இந்நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணாமலை பல்கலைக்கழக அனைத்து மாணவர் கூட்டமைப்பு சார்பாக 06.09.2019 அன்று போராட்டம் நடத்தப்பட்டது. இதில் மாணவர்களின் கோரிக்கையாக:
மாணவர் கிருபாமோகனை பல்கலைக்கழகத்தில் எந்தவித நிபந்தனைகளும் இன்றி அனுமதிக்க வேண்டும்.
இதற்கு காரணமான ஆளுநர் பன்வாரிலால் புரோகித், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
மாணவர்களின் கருத்திலோ, உரிமைகளிலோ பல்கலைக்கழக நிர்வாகம் தலையிடக்கூடாது.
என போராட்டத்தில் மாணவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
1 of 4
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல்: புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி கடலூர் மாவட்டம் தொடர்புக்கு: 97888 08110
உண்மை மனிதனின் கதை | மூன்றாம் பாகம் | அத்தியாயம் – 05
ஸ்தாலின் கிராத்! செய்தி அறிக்கையில் இந்தச் சொல் இன்னும் குறிக்கப்படவில்லை. ஆயினும் எல்லோருடைய வாய்களிலும் ஒலித்தது. 1942-ம் ஆண்டு இலையுதிர் காலத்தில் இந்தப் பெயர் கலவரத்துடனும் வேதனையுடனும் கூறப்பட்டது. நகரைப் பற்றி அல்ல, மரண ஆபத்தில் இருந்த நெருங்கிய நண்பனைப் பற்றி பேசுவது போல அதைப் பற்றி மக்கள் பேசிக் கொண்டார்கள். அந்த நகரின் அருகே ஸ்தெப்பியில் எங்கோ இருந்தாள் ஓல்கா. எத்தகைய துன்பங்களை அவள் அனுபவிக்க நேரிடுமோ, யார் கண்டது? இந்தக் காரணத்தினால் பொதுவாக எல்லோருக்கும் ஏற்பட்டிருந்த கலவரம் மெரேஸ்யேவுக்கு இன்னும் அதிகமாக உண்டாயிற்று. ஓல்காவுக்கு அவன் இப்போது தினந்தோறும் கடிதம் எழுதினான். ஏதோ ஒரு போர்க்களத் தபால் நிலையத்துக்கு விலாசம் இடப்பட்டிருந்த அவனது கடிதங்களுக்கு என்ன பொருள் இருக்க முடியும்? பின்வாங்கலின் அமளி குமளியில், வோல்காப் பிரதேச ஸ்தெப்பி வெளிகளில் தொடங்கியிருந்த அரக்கப் போரின் நரக நெருப்பில் இந்தக் கடிதங்கள் அவளுக்குப் போய்ச் சேருமா?
விமானிகளின் ஆரோக்கிய நிலையம் மிதிபட்ட எறும்பு புற்றுப் போலப் பதற்றமும் பரபரப்பும் அடைந்தது. ஒன்றுமே அறிவுக்கு எட்டவில்லை. வழக்கமாகப் படுக்கைவிட்டெழும் நேரத்துக்கு ஒரு மணி முன்னதாக, காலை ஏழு மணிக்கு வானொலிச் செய்தியைக் கேட்க மிக மிகச் சோம்பல் உள்ளவர்கள் கூடச் சென்று குழுமினார்கள். செய்தி விவரங்களில் விமானிகளின் சாகசச் செயல்களை குறிப்பிடுகையில் எல்லோர் முகங்களிலும் ஏக்கம் குடிகொண்டது. மனத்தாங்கல்களுடன் அவர்கள் மருத்துவத் தாதியிடம் குற்றம் பிடித்தார்கள், சிகிச்சை முறையையும் சாப்பாட்டையும் குறைக் கூறிச் சிடுசிடுத்தார்கள். போர் இவ்வளவு மும்முரமாக நடந்து கொண்டிருக்கையில் தாங்கள் ஸ்தாலின் கிராத் ஸ்தெப்பி வெளிகளில் சமர் புரிவதற்குப் பதிலாக இங்கே கண்ணாடி நீர் ஏரிக் கரையில், காட்டின் அமைதியில் வெயில் காய்ந்து கொண்டிருப்பதற்கு ஆரோக்கிய நிலைய நிர்வாகிகளே பொறுப்பாளிகள் என்பது போலிருந்தது விமானிகள் நடந்து கொண்ட விதம். முடிவில் இளைப்பாறுபவர்கள் தங்களுக்கு ஓய்வு தெவிட்டிவிட்டது என்று அறிவித்து, தங்களை உரிய காலத்துக்கு முன்பே போரிடும் படைப்பிரிவுகளுக்கு அனுப்பும்படி கோரினார்கள்.
விமானப் படைக்கு ஆட்கள் திரட்டும் குழுவினர் மாலைத் தறுவாயில் வந்தனர். இராணுவ மருத்துவச் சேவைப் பிரிவைச் சேர்ந்த சில கமாண்டர்கள் புழுதிபடிந்த மோட்டாரிலிருந்து இறங்கினார்கள். விமானப்படையில் பிரசித்தி பெற்றிருந்த முதல் வரிசை இராணுவ மருத்துவர் மிரொவோல்ஸ்க்கிய் முன் சீட்டிலிருந்து அதன் பின்புறத்தைப் பிடித்துக் கொண்டு சிரமத்துடன் எழுந்தார். பாரியான பருத்த சரீரமுள்ள இந்த மருத்துவர், விமானிகள் பால் தகப்பனார் போன்று பரிவு காட்டி வந்தமையால் அவர்களுடைய அன்புக்கு உரியவராக இருந்தார். விடுமுறையை நடுவில் நிறுத்திவிட்டு உடனே படைப்பிரிவு திரும்ப விருப்பம் உள்ள உடல் நலம் பெற்ற விமானிகளை தெரிந்தெடுக்கப்படுவது மறுநாள் காலையில் தொடங்கும் என்று இரவுச் சாப்பாட்டு நேரத்தில் அறிவிக்கப்பட்டது.
அன்று மெரேஸ்யேவ் பளபளவென்று விடியும்போதே எழுந்து, வழக்கமான உடற்பயிற்சி செய்யாமல் காட்டுக்குப் போய், காலை சிற்றுண்டி நேரம் வரை அங்கே சுற்றிக் கொண்டிருந்தான். சிற்றுண்டி வேளையில் அவன் எதையுமே சாப்பிடவில்லை. தட்டுக்களில் எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிட்டதற்காக உணவு பரிமாறுபவள் அவனைக் கடிந்து கொண்டாள். அதற்காக அலெக்ஸேய் அவளிடம் துடுக்காகப் பேசினான். அந்தப் பெண் அவனுக்கு நல்லதைத் தவிர வேறு எதையும் விரும்பவில்லை என்றும் அவளிடம் அவமரியாதையாகப் பேசுவது முறையல்ல வென்றும் ஸ்த்ருச்கோவ் கூறவே, அலெக்ஸேய் சடக்கென்று எழுந்து சாப்பாட்டு அறையிலிருந்து வெளியே போய்விட்டான். வழக்கத்தைவிட அதிகமாக நொண்டி நடந்தவாறு தன் அறைக்குப் போய்க் கதவைத் தாழிட்டுக் கொண்டான்.
தேர்வுக் குழுவினர் ஹாலில் உட்கார்ந்து கொண்டார்கள். நுரையீரல் கொள்ளளவுமானி, வலிமைமானி, பார்வைச் சோதனைக்கான எழுத்துப் பட்டியல் முதலிய எல்லாவகைச் சாதனங்களும் அங்கே கொண்டுவரப்பட்டன. அடுத்த அறையில் ஆரோக்கிய நிலையத்தினர் எல்லோரும் குழுமியிருந்தார்கள். விடுமுறை முடிவதற்குமுன் படைப்பிரிவுகளுக்குத் திரும்ப விரும்பியவர்கள், அதாவது அநேகமாக இளைப்பாறுவோர் எல்லாருமே, மிக நீண்ட வரிசையாக அங்கே நின்றிருந்தார்கள். ஆனால் ஸீனா ஒவ்வொருவரது பெயரையும் தேர்வுக் குழுவிடம் போக வேண்டிய நேரத்தையும் குறித்த சீட்டுக்களை எல்லோருக்கும் வினியோகித்து அவர்களைக் கலைந்து போகும் படி கேட்டுக்கொண்டாள். முதல் நபர்கள் தேர்வுக் குழுவிடம் போய் வந்ததும், குழுவினர் பரிவுடனேயே பார்வையிடுவதாகவும் மட்டுமீறிக் குற்றம் கண்டுபிடிக்கவில்லை என்னும் வதந்தி பரவியது. வோல்கா பிரதேசத்தில் தீவிரமாகியிருந்த பிரமாண்டமான போருக்கு மேலும் மேலும் பிரயாசை தேவைப்பட்ட போது தேர்வுக் குழுவினர் எப்படிக் குற்றம் கண்டுபிடிப்பார்கள்? முன்வாயிலுக்கு எதிரே செங்கல் கைப்பிடிச் சுவர் மேல் கால்களை ஆட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தான் அலெக்ஸேய். எவனாவது வாயிலிருந்து வெளியே வந்ததும் விசேஷ அக்கறையும் இல்லாதவன் போன்ற பாவனையுடன் “என்ன ஆயிற்று?” என்று கேட்பான்.
மெரேஸ்யெவுக்கு முன்பு தேர்வுக் குழுவிடம் போனான் புர்நாஸியான். கதவருகே கைத்தடியை வைத்துவிட்டு, இடமும் வலப்புறமுமாகத் தள்ளாடாமலும் குட்டைக் காலை அருத்திச் சாயாமலும் இருக்க முயன்றவாறு, உற்சாகத் தோற்றத்துடன் உள்ளே சென்றான். வெகுநேரம் அங்கே இருந்தான். முடிவில் கோபச் சொற்கள் திறந்த ஜன்னல் வழியே அலெக்ஸேயின் காதுகளுக்கு எட்டின. அப்புறம் எரிச்சலுடன் புடைச்சலுமாக வெளியே பாய்ந்து வந்தான் புர்ஸியான். கொடிய பார்வையால் அலெக்ஸேயை உறுத்து நோக்கிவிட்டு, அவன் பக்கம் திரும்பாமலே கெந்திக் கெந்தி நடந்து பூங்காவுக்கும் சென்றான்.
“சடங்கு பாராட்டும் அலுவலர்கள், பின்புலப் பெருச்சாளிகள்! விமானங்களைப் பற்றி இவர்கள் என்னத்தைக் கண்டார்கள்? இதென்ன, பாலே நடனம் என்று எண்ணி விட்டார்களோ? ஒரு கால் குட்டையாம்…… பாழாய்ப் போகிற எனிமாக் குழாய்கள், இன்ஷெக்ஷன் ஊசிகள்!” என்று அவன் வாய் பொரிந்து கொட்டியது.
கேள்வி: //முஸ்லிம்களை ஆர்எஸ்எஸ் – பிஜேபி கும்பல் வெறுக்க காரணம் என்ன?//
– வடிவேல்
அன்புள்ள வடிவேல்,
இந்து – முசுலீம் பிரிவினை என்பது நமது நாட்டில் சென்ற நூற்றாண்டில்தான் உருவானது. அதற்கு முன் வரலாற்றில் இந்தப் பிரிவினை எங்கும் இல்லை. முகலாயர் ஆட்சியின் போது பல இந்து தளபதிகள் அவர்களிடம் வேலை பார்த்தனர். அதே போன்று மராட்டிய சிவாஜியின் படையில் முசுலீம் தளபதிகளும் உண்டு. ராஜபுத்திர இந்து மன்னர்கள், தக்காண முசுலீம் சுல்தான்கள் இன்னபிற வட்டார அரசர்களும் கூட இரு மதத்து மன்னர்களை தமது நலன் சார்ந்து அவ்வப்போது ஆதரித்தும் எதிர்த்தும் வந்திருக்கின்றனர்.
முதல் இந்திய சுதந்திரப் போர் 1857-ல் நடைபெற்ற போது கிளர்ச்சியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அன்றைய மொகலாய வம்சத்து கடைசி பேரரசரான பகதூர் ஷா-வை இந்தியாவின் அரசராக பிரகடனம் செய்தனர். முகலாயர்களின் பச்சை பிறைக் கொடி தேசியக் கொடியாக காலனியாதிக்க எதிர்ப்பிற்கு பயன்படுத்தப்பட்டது. பின்னாளில் தீவிர இந்துத்துவவாதியாக வீழ்ந்து போன சாவர்க்கரே இதற்கு ஆதாரம். அவர் எழுதிய “எரிமலை அல்லது முதல் இந்திய சுதந்திரப் போர்” எனும் நூலில் அவர் பகதூர்ஷாவை இந்தியப் பேரரசர் என்றும் பச்சைக் கொடியை தேசியக் கொடி என்றும் வருணிக்கிறார். இதை சங்கிகளாலேயே மறுக்க முடியாது.
முதல் இந்திய சுதந்திரப் போருக்கு பிறகு இந்தியா நேரடியாக இங்கிலாந்து ஆட்சியின் கீழ் வந்தது. அதற்கு முன் கிழக்கிந்திய கம்பெனியே இந்தியாவை ஆண்டது. முதல் இந்திய சுதந்திரப் போரின் படிப்பினைகளில் ஒன்றாக ஆங்கிலேயர்கள் இந்தியாவில் பிரித்தாளும் சூழ்ச்சியை பின்பற்றத் துவங்கினார்கள். அது சாதி ரீதியாகவும் இருந்தது, மத ரீதியாகவும் இருந்தது. முதன்மையாக இந்து முஸ்லீம் பிரிவினை ஆங்கிலேயர்களின் திட்டத்தில் இருந்தது.
இதே காலகட்டத்தில் இந்திய அரசியலில் படித்த இந்து ஆதிக்க சாதி நடுத்தர வர்க்கத்தினர் செயல்பட ஆரம்பித்தனர். அவர்கள் இயற்கையாகவே இந்துமத வழக்கங்களை அரசியலில் பின்பற்ற ஆரம்பித்தனர். காங்கிரஸ் கட்சியின் திலகர் அதற்கோர் சான்று. ஆங்கிலேயர்களின் ஆரம்ப கால ஆட்சியால் மராத்திய சித்பவன பார்ப்பனர்கள் அதிகாரத்தை இழந்தனர். மராத்திய பேஷ்வாக்கள் இந்த சாதியைச் சார்ந்தவர்கள். அவ்வகையில் திலகர், 1925-ல் ஆர்.எஸ்.எஸ்-ஐ ஆரம்பித்த ஹெட்கேவார் அனைவரும் சித்பவன பார்ப்பனர்களே. காங்கிரசுக் கட்சியில் காந்தி தலைமையேற்ற பிறகும் அரசியலில் இந்துமயமாகும் போக்கு அதிகம் இருந்தது. வந்தே மாதரம் தேசிய கீதமாக்கப்பட்டதும் கூட அப்படித்தான். காங்கிரசு மிதவாத முறையில் இந்துத்துவ மயத்தை முன்வைத்தது என்றால் அதையே தீவிரமாக இந்து மகா சபாவும், ஆர்.எஸ்.எஸ்-ம் முன்வைத்தன.
இவர்கள் தோன்றுவதற்கு முன்பு 1905-ல் வங்காளம் முசுலீம்கள் அதிகம் கொண்ட கிழக்கு வங்காளம், இந்துக்கள் அதிகம் வாழும் மேற்கு வங்காளம் என்று இரண்டாக பிரிக்கப்பட்டது. அப்போது ஆங்கில ஆளுநராக கர்சன் இருந்தார். இத்தகைய மதரீதியான பிளவை மக்கள் ஒன்றிணைந்து எதிர்த்து போரிட்டு மாற்றினார்கள். கர்சனும் தனது உத்திரவை திரும்ப பெற்றுக் கொண்டார். இதையடுத்து ஆங்கிலேயர்களின் பிளவு படுத்தும் அரசியல் முன்னிலும் அதிகமாய் நடக்கத் துவங்கியது.
சாவர்க்கர் – ஜின்னா – காந்தி
காங்கிரசின் இந்துமதச் சார்பு முஸ்லீம் லீகை தோற்றுவித்தது. லிபரல் கொள்கைகளைக் கொண்ட நாத்திகவாதியான ஜின்னா அதன் தலைவராக இருந்தார். மற்றொரு புறம் ஆங்கிலேயர்களை எதிர்க்காமல் முசுலீம்களை மட்டும் எதிர்ப்பதை கொள்கையாகக் கொண்டு இந்து மகாசபாவும், ஆர்.எஸ்.எஸ்-ம் ஆங்கிலேயர்கள் ஆதரவுடன் வளர ஆரம்பித்தன. இவ்விரண்டு அமைப்புகளும் அதனாலேயே தடை செய்யப்படாமல் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்பட்டன. கம்யூனிஸ்டுகள் தடை செய்யப்பட்டது போல இவர்கள் நடத்தப்படவில்லை. இந்து மதவெறி அமைப்புகளும் பதிலுக்கு இந்திய சுதந்திரத்திற்காக எந்த போராட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை. ஆங்கிலேயரை ஆதரித்தன.
இந்தப் போக்கினால் இந்தியா, இந்து – முஸ்லீம் என பிளவுபட ஆரம்பித்தது. அதன் உச்சமாய் 1947-ல் பிரிவினை காலத்தில் இலட்சக்கணக்கான இந்து முஸ்லீம் மக்கள் கொல்லப்பட்டனர். இரு மதங்களிலும் வன்முறை கோரத் தாண்டவமாடியது. பிரிவினையின் போது காந்தி பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்தார்; அவரை ஒழித்தால்தான் இந்துக்களுக்கு நிம்மதி என்று இந்து தீவிரவாதியான கோட்சே காந்தியைக் கொன்றார். அப்போது ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப்பட்டாலும் பின்னாளில் அதன் கம்யூனிச எதிர்ப்பு காரணமாக தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.
அன்று முதல் இன்று வரை ஆர்.எஸ்.எஸ் தனது இருப்பிற்கு முசுலீம் விரோதத்தை அடிப்படையாக வைத்திருக்கிறது. 47 முதல் இன்று வரை நடந்த இந்து முஸ்லீம் கலவரங்களுக்கு இந்துமதவெறியர்களே முதன்மைக் காரணம். அதன் போக்கில் முஸ்லீம்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் அல்ல, அவர்கள் இந்து – இந்தியப் பண்பாட்டிற்கு விரோதமானவர்கள், இந்துக்கள் புனிதமாக கருதும் கோமாதவை வேண்டுமென்றே வெட்டித் தின்பவர்கள், மாட்டுக்கறி தின்பதால் அவர்கள் உடலில் துர்நாற்றம் வீசுகிறது, பாகிஸ்தானை ஆதரிப்பவர்கள், கிரிக்கெட்டில் பாகிஸ்தான் வென்றால் கை தட்டுபவர்கள், தாடி வைத்து குல்லா அணிந்து லுங்கி கட்டுபவர்கள் என்று ஏகப்பட்ட அவதூறுகளை உருவாக்கி அவற்றை பொது சமூகத்திற்கும் கடத்தி வைத்திருக்கிறார்கள். அதனால்தான் இன்றும் ஆதிக்க சாதி இந்துக்கள் தமது வீடுகளை முஸ்லீம்களுக்கு பொதுவில் வாடகைக்கு விடுவதில்லை.
எந்த ஒரு பாசிசக் கட்சிக்கும் கற்பனையான ஒரு எதிரி தேவை. ஜெர்மனியின் ஹிட்லர் யூதர்களை எதிர்த்தது போல இங்கே இந்துமதவெறியர்கள் முஸ்லீம்களை முதன்மையாக வைத்திருக்கிறார்கள். பட்டியலில் முஸ்லீம்களுக்கு அடுத்தபடியாக கிறித்தவர்களும், கம்யூனிஸ்டுகளும் இருக்கிறார்கள்.
பசுப்படுகை எனப்படும் இந்தி மாநிலங்களில் முஸ்லீம்கள் சிறுபான்மை என்றாலும் சில இடங்களில் கணிசமாக வாழ்கிறார்கள். வர்த்தக ரீதியில் அவர்களோடு போட்டி போடும் இந்துமதத்தைச் சேர்ந்த நகர்ப்புறத்து வணிகர்கள், சிறு முதலாளிகள், நடுத்தர வர்க்கம் ஆகியோரை தனது முஸ்லீம் எதிர்ப்பு அரசியலுக்கு ஆர்.எஸ்.எஸ் – பாஜக வென்றெடுத்து வைத்திருக்கிறது. இதனால் முஸ்லீம்கள் அப்பகுதிகளில் இரண்டாம் தரக் குடிமக்களாக வாழ்கிறார்கள் என்பது மிகையில்லாத உண்மை.
எனவே பொதுக்கருத்தியலில் முஸ்லீம்களுக்கு எதிராக உருவாக்கப்பட்டிருக்கும் மாயை, பொய்களை நாம் அகற்றும் வண்ணம் தீவிரமாக பிரச்சாரம் செய்ய வேண்டும். ஏனெனில் இந்துமதவெறி என்பது முஸ்லீம்களுக்கு மட்டுமல்ல, உழைக்கும் இந்துக்களுக்கும் எதிரிதான்.
ஆர்.எஸ்.எஸ்-ன் அவதூறுகளை இணைப்பில் உள்ள தொடரில் விரிவாக பார்க்கலாம்.
(கேள்வி பதில் பகுதிக்கு நிறைய கேள்விகளை நண்பர்கள் கேட்கிறார்கள். மகிழ்ச்சி. கூடுமானவரை உடனுக்குடன் பதிலளிக்க முயல்கிறோம். சில கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு கூடுதலான நேரம் தேவைப்படுகிறது. கொஞ்சம் காத்திருங்கள்.)
வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்: கேள்விகளை பதிவு செய்யுங்கள்