Thursday, August 7, 2025
முகப்பு பதிவு பக்கம் 299

நூல் அறிமுகம் : இந்திய பொருளாதார மாற்றங்கள் – ஜெ. ஜெயரஞ்சன் கட்டுரைகள்

‘கருப்புப் பணக்காரர்களுக்கு எதிரான போர்’ என்று சென்ற வருடம் நவம்பர் 8 அன்று பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் மோடி (இப்படித்தான் இப்போதெல்லாம் அவருடைய கட்சிக்காரர்கள் அவரை விளிக்கிறார்கள்) அறிவித்தது சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முக்கியமான கொள்கை முடிவு. பேரழிவுமிக்க அணுஆயுதம்  வெடிக்கும்போது ஏற்படும் கதிரியக்கம்போல் வெகுஜனங்களின் எல்லாப் பகுதியினரையும் கண்ணுக்குப் புலப்படாத பல்வேறு வகைகளில் ஒவ்வொரு நாளும் தாக்கி வருகிறது அந்த முடிவு. அவர்கள் உழைத்து ஈட்டிய பணத்தை அவர்களே எடுத்துப் பயன்படுத்தமுடியாத கொடுமைக்கு நடுவிலும்கூட, துணிச்சல்கார மோடி நம்மைச் சுரண்டி கொழுத்திருக்கும் பணக்காரர்களின் அடிமடியில் கை வைத்துவிட்டார், இனியெல்லாம் சுகமே என்று இன்றும் அப்பாவித்தனமாக நம்பிக்கொண்டிருக்கின்றனர் பாமரர் பலர்.

அவர் நடத்திய ‘துல்லியத் தாக்குதல்’ பெரும்பான்மை மக்களின்மீது தொடுக்கப்பட்டது. கருப்புப் பணம் என்பது கற்றை கற்றையாக ரூபாய் நோட்டுகளாக சினிமாத்தனமாக சுவரின் மீதுள்ள ஓவியத்தைச் சுழற்றும்போது திறக்கும் கதவுக்குப்பின் சிவப்பு வெளிச்சத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதல்ல; அவை நிலமாக, தங்கமாக மாற்றப்பட்டுவிட்டன; அல்லது ஹவாலா மற்றும் பிற வர்த்தக மோசடி நடைமுறைகளின் மூலமாக வரியில்லா சொர்க்கபுரிகளுக்குச் சென்று மீண்டும் அன்னிய மூலதனமாக அரசு விரிக்கும் சிவப்புக் கம்பளங்களின் மீது நடந்துவந்து நம் பொருளாதாரத்திற்குள் வந்துவிடுகின்றன.

கருப்புப் பணம் உற்பத்திக்கு உதவிசெய்யும் வகையிலான கொள்கைகளை வகுத்து, அமைப்புகளை ஏற்படுத்தி, சட்டங்களை வளைத்தும் அவற்றின் ஓட்டைகளைப் பயன்படுத்தி, கம்பெனிகளின் கணக்குகளில் தில்லுமுல்லு செய்து வரி ஏய்ப்புச் செய்யும் முறைகளைச் சொல்லிக்கொடுத்துப் பிழைக்கும் பெரும்பாலான அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், வக்கீல்களும், ஆடிட்டர்களும் பத்திரிகையாளர்களும் இன்ன பிற ‘அறிவுஜீவிகளும் மோடியின் ‘தாக்குதலினால் சிறிதளவும் பாதிக்கப்படப்போவதில்லை என்றெல்லாம் மக்களுக்கு அவர்கள் புரியும் மொழியில், எளிமையாக ஆனால் கோட்பாடுகள் நீர்த்துப்போகாத வகையில் சொல்லிக் கொடுக்க வெகுசிலரே இருக்கின்றனர்; இருந்தனர்.

அந்த வெகுசிலரில் ஒருவர்தான் ஜெயரஞ்சன். ஏற்கெனவே தொலைக்காட்சி விவாதங்களின் வாயிலாக பரவலாக அறியப்பட்டவராக இருந்தபோதிலும், நவம்பர் 8-க்குப் பிறகு இவர் விவாதங்களில் எடுத்துவைத்த வாதங்களின் எளிமையும், ஆழமும், அவற்றின் பின்னிருந்த தார்மீகக் கோபமும் அவரை ஒரு தமிழ்கூறும் நல்லுலகின் சூப்பர் ஸ்டாராகவே மாற்றிவிட்டன என்றால் மிகையல்ல…

மோடியின் நடவடிக்கை குறித்து இவர் முன்வைத்த கூர்மையான வாதங்கள் காணொளிகளாக ஆயிரக்கணக்கில் பகிரப்பட்டிருக்கின்றன, ஆயினும், அச்சில் இதை ஆவணப்படுத்தி இன்னும் பரந்துபட்ட மக்களிடையே கொண்டு செல்லவேண்டிய தேவையை உணர்ந்து மின்னம்பலம் இணைய இதழுக்காக கட்டுரைகளாக ஜெயரஞ்சன் எழுதினார். அவற்றை ஒரு தொகுப்பாகக் கொண்டுவரும் மின்னம்பலத்தின் முயற்சி இந்த காலகட்டத்தின் வரலாற்றுத் தேவை. (நூலின் முன்னுரையிலிருந்து…)

ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (UNCTAD) தற்போது தனது ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ளது. இத்தகைய அறிக்கை வருடந்தோறும் வெளியிடப்படும் ஒன்றுதான்.  ஆனால் இந்த வருட அறிக்கை உலகைப் பிடித்திருக்கும் (குறிப்பாக, மேற்கு உலகம் மற்றும் சீனம்) மந்தநிலைக்கான காரணம் என்ன என்று அலசி ஆராய்ந்திருக்கிறது. ஆராய்ந்தபின், அது முன்வைக்கும் காரணம் இதுவரையிலும் கூறப்படாத ஒரு காரணமாகும்.

2015-ம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களின் அளவைவிட உலக அளவில் நடந்த வர்த்தகத்தின் அளவு குறைவு. இதனால் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் தேங்கியுள்ளன. இந்த நிலை 2016-ம் ஆண்டில் இன்னும் மோசமடையும், மோசமடைந்துள்ளது.

இதற்கு முதல் காரணமாக சுட்டப்படுவது, மேற்குலகில் ஏற்பட்டுள்ள  நிதி நெருக்கடியாகும். நிதி நெருக்கடியால் தேவையின் அளவு அதிகரிக்கவில்லை. சொல்லப்போனால் கடந்த சில வருடங்களாகவே, உலகளவில் ஏற்பட்ட தேவை அதிகரிப்பு என்பது வளரும் நாடுகளில் ஏற்பட்டதுதானே தவிர, வளர்ந்த நாடுகளில் தேவை உயரவேயில்லை. இந்தியா, சீனா போன்ற நாடுகளில் ஏற்பட்ட தேவையின் அதிகரிப்பு உலக அளவில் எதிரொலித்தது கவனத்தில் கொள்ளத்தக்கது. ஆனால் அதிலும் ஒரு மாற்றம் வந்துவிட்டது. சீனம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலும் உயர்ந்துவந்த தேவை தற்போது குறைந்துவிட்டது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்தது ஒரு காரணம். மற்றொன்று, உலகளவில் பண்டங்களின் விலையும் பெட்ரோலியப் பொருள்களின் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சியுமாகும்.

… பின் எதனால்தான் உலக வர்த்தகம் மந்தம் அடைந்துள்ளது? UNCTAD அறிக்கை கூறுவது யாதெனில், கூலி வருமானம் குறையத் தொடங்கியதால்தான் வர்த்தகம் குன்றியுள்ளது என்பதாகும். வளர்ந்த நாடுகளில் கூலி வருமானம் தேங்கிப்போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன அல்லது அவை குறையத் தொடங்கியுள்ளன. நாட்டின் மொத்த வருமானத்தில் கூலியின் பங்கு தொடர்ந்து குறைந்துகொண்டே வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது, மேற்கு உலக வர்த்தக நாடுகளில் நிலவும் சூழல்.

படிக்க:
சோவியத் யூனியனுக்கு வேலை தேடிச் சென்ற அமெரிக்கர்கள் ! | கலையரசன்
விவசாயிகளிடம் ரூ. 15,000 கோடி ஜி.எஸ்.டி பிடுங்கிய மோடி அரசு !

வளரும் நாடுகளில் கூலி மட்டம் மிகப்பெரிய சவாலை சந்திக்கிறது. உலக அளவில் நிலவும் போட்டி சந்தை காரணமாக கூலிமட்டம் தொடர்ந்து குறைவாகவே வைக்கப்படுகிறது. கூலி சிறிது உயர்ந்தாலும் குறைவான கூலி இடங்கள் நோக்கி தொழில்கள் இடம் பெயர்கின்றன. அவ்வாறு இடம் பெயர்ந்தால் மட்டுமே அத்தொழில் போட்டி சந்தையில் பிழைத்திருக்க முடியும். வேலைவாய்ப்பு அதிகரிக்கும் அதே நேரத்தில், கூலி மட்டம் குறைவாக இருக்க இதுவே காரணமாகும். குறைந்த கூலிக்காக தொழில்கள் நாடுவிட்டு நாடு செல்வதால் கூலி உயர்வு என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய்விடுகிறது.

வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளில் நிலவும் இத்தகைய சூழலால், 2002-07 ஆண்டுகளில் கூலியின் பங்கு என்பது உலக அளவில் குறைந்துபோனது. இதே காலகட்டத்தில் உலகப் பொருளாதாரம் நல்ல வளர்ச்சியைக் கண்டபோதும் கூலியின் பங்கு குறைந்துபோனதுதான் மிகவும் அவலம். (நூலிலிருந்து பக்.156-157)

நூல் : இந்திய பொருளாதார மாற்றங்கள் – ஜெ. ஜெயரசஞ்சன் கட்டுரைகள்
ஆசிரியர் : ஜெ. ஜெயரஞ்சன்

வெளியீடு : மின்னம்பலம் பதிப்பகம்,
44, 3-வது மெயின்ரோடு, கஸ்தூரிபா நகர், சென்னை – 600 020.
தொலைபேசி எண் : 044- 24421307 / 24422307
மின்னஞ்சல் : books@minnambalam.com

பக்கங்கள்: 162
விலை: ரூ 150.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

சின்னஞ்சிறு மனிதனின் இதயத்தைக் கவரும் பாடங்கள் !

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 5 | பாகம் – 05

குழந்தைகளின் வயதுச் சிறப்பியல்புகளுக்கேற்ற வேகத்தில் பாடம் நடத்தும் கோட்பாடு

சிரியர் எந்த வேகத்தில் பாடத்தை நடத்த வேண்டும் என்ற பிரச்சினை உள்ளதா என்ன? ஆசிரியரியல், போதனை முறை, தனிப்பட்ட முறைகள் ஆகியவை சம்பந்தமான பாட நூல்களின்படி பார்த்தால் இப்படிப்பட்ட பிரச்சினை எதுவும் இல்லை. ஒரு வேளை உண்மையிலேயே இல்லையோ? அப்படியெனில் இப்படிப்பட்டதொரு பரிசோதனையைச் செய்து பாருங்கள்: நீங்கள் அவசரப்படும் போது மிக மெதுவாகச் சென்று பாருங்கள். ஐந்து நிமிடங்கள் இப்படி நடந்து பாருங்கள் (இதற்கு மேல் அனேகமாக உங்களால் முடியாது), சாதாரண வேகத்தில் நடந்தால் ஏற்படுவதை விட இரு மடங்கு அதிக களைப்பு தோன்றும் என உறுதியாக நம்புகிறேன். அல்லது கூட இருப்பவருடன் மிக மெதுவாகப் பேசுங்கள்: நீங்கள் மட்டுமின்றி (சிந்தனையின் வேகத்திற்குத் தடையிடுவதால்) உங்களைக் கேட்பவரும் (நீங்கள் சொல்வதைப் புரிந்து கொள்ள மிகவும் பிரயாசைப்படுவதால்) களைத்துப் போவீர்கள். உங்களைக் கேட்பவர், அவருக்கு ஏற்ற அதிக வேகத்தில் பேசினால் கிரகிப்பதை விட மெதுவாகப் பேசும் போது குறைவாகவே கிரகிப்பார்.

ஆறு வயதுக் குழந்தையைக் குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்திற்கு ஓடாமல், அசையாமல், நேராக, அமைதியாக உட்காரச் சொல்லுங்களேன் பார்க்கலாம். இப்படிப்பட்ட “ஓய்வால்” குழந்தைக்கு ஏதாவது பயனுண்டா? இம்மாதிரியான ஒரு மணி நேர “ஓய்வை” அவனால் தாங்கத்தான் முடியுமா? குழந்தை ஓடுகிறான், குதிக்கிறான், அவசர அவசரமாக உரக்கப் பேசுகிறான், எப்போதும் எங்கோ விரைகிறான். ஆனால் இதையெல்லாம் அவன் வேண்டுமென்றே செய்யவில்லை. இவனுடைய வளர்ந்து வரும் தேவைகள் தான் இவ்வாறு ஓடவும் “பொங்கியெழவும்” வைக்கின்றன. அதனால் குழந்தையால் அங்குமிங்கும் ஓடித்திரியாமல், உணர்ச்சிகரமாக இல்லாமல் இருக்க முடியாது. அவன் வேகமாகத்தான் வளர்ந்து வலுப்பெறுகிறான், இந்த வேகம் அதிகமானதாக நமக்குப் படலாம், ஏனெனில் இது நமது அமைதியான வேகத்திற்கு ஏற்றதாயில்லை; ஆனால் இவ்வேகம் அவனுக்கு இயல்பானது, சாதாரணமானது. குழந்தைகளுக்கென தனியான உடற்கூறு ரீதியான வேகமும் மூளை ரீதியான வேகமும் உள்ளது என்பதை நமது அமைதி மறக்கச் செய்கிறது.

எனவே, பாடம் சொல்லித் தரும் வேகம், குழந்தைகளுடன் கலந்து பழகும் வேகம் எங்கெல்லாம் மெதுவான படக் காட்சிகளில் வரும் வேகத்தைப் போல் உள்ளதோ அங்கெல்லாம் குழந்தை களைப்படைவான், மெதுவாக நடக்கும்படி, அமைதியாக இருக்கும்படி, சத்தம் போடாதிருக்கும் படி அவனை கட்டாயப்படுத்தினால் எப்படிக் களைப்படைவானோ அதே மாதிரி களைப்படைவான். இறக்கைகள் மட்டும் இருந்தால் அவன் சிறகடித்துப் பறப்பான்!.. குழந்தைகளுடைய வளர்ச்சி வேகத்திற்கேற்ப, அவர்களுடைய உள்சக்திகளின் இயக்கத்திற்கேற்ப கல்வி போதிக்க வேண்டும்.

இசையில் உள்ளதைப் போன்றே கல்வி போதிக்கும் தத்துவத்திலும் நடைமுறையிலும் விஷயங்களைத் துல்லியமாகக் குறிப்பிடும் வழிகள் இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்!

எந்த ஒரு இசையமைப்பாளரும் இசையின் எந்தப் பகுதியை எப்படி, எந்த பாவனையில், எந்த வேகத்தில் இசைக்க வேண்டுமெனக் குறிப்பிடாமல் இசையை அமைப்பதில்லை. அப்போது தான் இசை முழுமை பெறும், கேட்பவரின் மனதையும் உணர்ச்சிகளையும் தொடும்.

சின்னஞ்சிறு மனிதனின் மனதையும் இதயத்தையும் பாடங்கள் கவருவதில் ஆசிரியர்களுக்கும் இதே மாதிரியான அக்கறையில்லையா என்ன! எனவே, ஒவ்வொரு போதனை விஷயத்தையும் (அல்லது “போதனை இசையையும்”) பாடத்தில் எந்த தொனியில், எந்த வேகத்தில் செய்வது என்று யோசித்து முடிவு செய்தால் நன்றாயிருக்குமோ! இவையெல்லாவற்றையும் வேகத்தின் நோக்கிலும் தொனியின் நோக்கிலும் தீர ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும். நான் தனிப்பட்ட முறையில் எப்போதோ இதை நன்கு உணர்ந்து கொண்டேன்.

சில ஆண்டுகளுக்கு முன் வரை கூட, கணக்குகளை எப்படி குழந்தைகளுக்குத் தருவது, இந்த “இசையை” வகுப்பில் எப்படி இசைக்கப் போகிறேன் என்பதைப் பற்றியெல்லாம் நன்கு யோசிக்காமலேயே என்னால் பாடத் திட்டத்தை தீட்ட முடிந்திருந்தது. எப்படிப்பட்ட உணர்வற்ற தொனியில், எப்படிப்பட்ட வேகத்தில் நான் எளிய கணக்குகளை என் குழந்தைகளுக்குத் தந்தேன் என்று இப்போது யோசித்துப் பார்க்கும் போது, இவற்றைப் போட அவர்கள் ஏன் அவ்வளவு கஷ்டப்பட்டார்கள், ஏன் அவ்வளவு விருப்பமின்றி பாடங்களில் கலந்து கொண்டார்கள் என்று எனக்குப் புரிகிறது. அந்த வகுப்புகளை – போதனை முறையை – இப்போது போதனை “இசை” என்று என்னால் சொல்ல முடியாது. முன்னர் என் பாடங்களை நான் பின்வருமாறு நடத்தினேன்.

“என்னைப் பாருங்கள்!” என்று வகுப்பைப் பார்த்துக் கூறினேன். சிறிது இடைவெளி.. “கவனமாகக் கேளுங்கள்!…”

சொல்லித் தரும் தொனியில் அழுத்தந் திருத்தமாக உச்சரித்தேன்: “6 உடன் எதைச் சேர்த்தால் 10 வரும்?”

கட்டளையிடும் குரலில் சொன்னேன்: “எல்லோரும் யோசியுங்கள்!…”

மெளனம்.

“யாருக்கு விடை தெரியுமோ கையைத் தூக்குங்கள்.”

எச்சரித்தேன்: “மற்றவர்கள்?”

கண்டிப்புடன் கூறினேன்!

“எல்லோரும்!… எல்லோரும்!…”

வகுப்பைச் சுற்றும் முற்றும் பார்த்தபடி சொன்னேன்: “சரி, லேரி! நீ சொல்!”

லேரி மெதுவாக, எச்சரிக்கையோடு சொல்கிறான்: “4 ஐக் கூட்ட வேண்டும்…”

நான் எரிச்சலோடு சொன்னேன்: “இல்லை, அப்படியில்லை! முழு பதிலைச் சொல்ல வேண்டுமென நான் சொல்லியிருக்கிறேன் அல்லவா!”

பின் மீண்டும் அதே மாதிரியான சொல்லித்தரும் தொனியில் அழுத்திக் கூறினேன்:

“ஆறுடன் சேர்க்க வேண்டும்….. கட்டளையிட்டேன்: தொடர்ந்து சொல்!” லேரி: “ஆறுடன் நான்கைச் சேர்த்தால் பத்து வரும்!” ஏளனமாக: “அப்படித்தான். உட்கார், எப்படி பதில் சொல்ல வேண்டுமென மறந்து விடாதே!”

இதே மாதிரியாகத் தொடரும்.

இதில் பொதுவாக விஞ்சி நிற்பது அதிகாரத் தொனி, பாடம் நடத்தப்படும் வேகம் மெதுவானது என்பதை எளிதாகக் கண்டுபிடிக்கலாம். புதியவற்றை அறியும் மகிழ்ச்சியும் ஆசிரியருடன் கலந்து பழகும் மகிழ்ச்சியும் குழந்தைகளுக்குக் கிட்டவில்லை என்பது ஒரு புறமிருக்க இப்படிப் பட்ட பாடங்கள் குழந்தைகளுக்குப் பிடிக்குமா என்ன!

இப்போது இதே மாதிரியான பாடத்தை இன்று நான் எப்படி நடத்துகிறேன் என்று பார்ப்போம்.

உறுதியோடு, விரைவாக, ஆர்வந்தரும் வகையில் சொல்கிறேன்:

“குழந்தைகளே! குனியுங்கள்! (சிறிது இடைவெளி.) கண்களை மூடுங்கள்!”

மெதுவான குரலில், சற்றே எச்சரிக்கும் குரலில் சொல்கிறேன்:

“கணக்கைத் திரும்பச் சொல்ல மாட்டேன்!“ ,

மெதுவாக, அமைதியாக, சிறு இடைவெளிகளுடன் சொல்கிறேன்:

“நான் ஒரு எண்ணை நினைத்திருக்கிறேன்…. அதனுடன் 6 ஐச் சேர்த்தால் 10 வரும்.” விளையாட்டுத் தொனியில் கேட்கிறேன்:

“நான் நினைத்துள்ள எண் எது? விரல்களால் காட்டுங்கள்!“

குழந்தைகள் தலையை உயர்த்தாமல், கண்களைத் திறக்காமல் விடையை விரல்களால் காட்டுகின்றனர். விரைவாக வகுப்பு முழுவதையும் சுற்றி வந்து, ஒவ்வொரு குழந்தையையும் அணுகுகிறேன், மெதுவாக விரல்களைத் தொட்டு சன்னமான குரலில் சொல்கிறேன் (விடை சரியானதாக இருந்தால்):

“சரி… நன்றி….. சரியான விடை… நல்லது!…”

விடை தவறாயிருந்தால் நம்பிக்கையேற்படுத்தும் தொனியில் (“உன்னால் முடியும்”) காதில் சொல்கிறேன்:

“தப்பு!… இன்னொரு முறை யோசி!… நான் உன்னிடம் திரும்பி வருகிறேன்!…”

எல்லோரையும் பார்த்து வந்ததும் உடனே உறுதியோடு:

“இரண்டாவது கணக்கு.” சிறு இடைவெளி. “10 லிருந்து எதைக் கழித்தேன் என்று மறந்து விட்டேன். ஆனால் எஞ்சியிருப்பது 7.”

கவர்ச்சிகரமாக, விரைவாக: “நான் மறந்து விட்ட எண் எது?” மீண்டும் ஒவ்வொரு குழந்தையையும் அணுகி காதில் மெதுவாகச் சொல்கிறேன்:

“சரி!… நன்றி!… இன்னும் ஒரு முறை யோசி!…” பின் மெதுவாக, ரகசியமாக சொல்கிறேன்: “விடுகதை சொல்லட்டுமா?”

குழந்தைகளும் தலையை உயர்த்தாமல், கண்களைத் திறக்காமல் சொல்கின்றனர்:

“சொல்லுங்கள்!”

உயிர்த்துடிப்போடு, உற்சாகமாக, சன்னமான குரலில் சொல்கிறேன்:

“ஒவ்வொரு வரும் 1-லிருந்து 5-க்குள் எதையாவது ஒரு எண்ணை நினைத்துக் கொள்ளுங்கள்!”

இடைவெளி (எண்ணை நினைத்துக் கொள்ள அவகாசம் தருகிறேன்).

மெல்லிய குரலில் கேட்கிறேன்: “நினைத்து விட்டீர்களா ?”

குழந்தைகள் சன்னமான குரலில் பதில் சொல்கின்றனர்:

“நினைத்துக் கொண்டோம்.”

“அந்த எண்ணோடு 3-ஐக் கூட்டுங்கள்.” இடைவெளி (கூட்ட நேரம் தருகிறேன்). சன்னமான குரலில்: “கூட்டி விட்டீர்களா?”

குழந்தைகள் மெதுவாக: “கூட்டிவிட்டோம்.” கவர்ச்சிகரமாக, சன்னமான குரலில்: “இன்னும் 2-ஐக் கூட்டுங்கள்… கிடைத்த விடையிலிருந்து நீங்கள் முதலில் நினைத்த எண்ணைக் கழியுங்கள்!… இன்னும் 1-ஐக் கழியுங்கள்.”

இடைவெளி. “உங்களுக்குக் கிடைத்த விடையைச் சொல்லட்டுமா?” குழந்தைகள் ஆர்வமாக: “சொல்லுங்கள்!”

உறுதியோடு, சந்தோஷமான குரலில் கூறுகிறேன்: “தலையை உயர்த்தி என்னைப் பாருங்கள்!”

பின் விரைவாக, தீர்மானகரமாக கரும்பலகையில் ஒரு எண்ணை எழுதி, குழந்தைகள் பார்க்காமலிருக்க மூடுகிறேன்.

உற்சாகமாக, விரைவாக: “என்ன விடை கிடைத்தது? எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கள்!”

கையை அசைத்ததும், குழந்தைகள் உரக்க, ஒரே குரலில் பதில் சொல்கின்றனர்:

“நான்கு!” உடனே கரும்பலகையை திறந்து காட்டுகிறேன். “என்ன, சரியா ?”

குழந்தைகள் வியப்போடும் மகிழ்ச்சியோடும்: “ஆம்!” நானும் மகிழ்ச்சியாக: ”நான் எப்படிக் கண்டு பிடித்தேன் என்று சொல்லட்டுமா?”

குழந்தைகள் மகிழ்ச்சியோடும் பொறுமையின்றியும்: “சொல்லுங்கள்!”

இதே போல் தொடரும்.

இந்த போதனை இசையின் வேகம் என்ன? இது உயிரோட்டமுள்ளது, விரைவாக முன் செல்லக் கூடியது.

தொனி எப்படிப்பட்டது? பிரதான தொனி, ஊக்கமூட்டி உற்சாகப்படுத்துவது, உறுதியளிப்பது, கவர்ச்சிகரமானது. முரட்டுத்தனம், எரிச்சல், பதட்டத்திற்கு இதில் இடமேயில்லை.

படிக்க:
ரூ. 4355 கோடி : பஞ்சாப் – மகராஸ்டிரா கூட்டுறவு வங்கி மோசடி !
விழுப்புரம் : கவர்மெண்டு கட்டுன வீட்டைக் காணோம் !

பாடம் நடத்தும் வேகமும் பாவனையும் தொனியும் குழந்தைகளிடம் கல்வியின் பாலான மகிழ்ச்சிகரமான உறவை வளர்ப்பதற்கும் அவர்கள் பாடங்களை முழுமையாக கிரகிக்கவும் பெரிதும் முக்கியமானது என்று நம்புகிறேன். எனவே, பாடவேளைகளில் பள்ளி மாணவர்களுக்கு எந்த வேகத்தில், எந்தத் தொனியில் பாடம் நடத்துவது, எந்த வேகத்தில் ஒரு வேலையிலிருந்து இன்னொரு வேலைக்கு மாறுவது என்பதையெல்லாம் விஞ்ஞான பூர்வமாக நிர்ணயிப்பது அவசியமாகி வருகிறது. இந்த விஷயத்தில் தான்தோன்றித்தனம், தன்னிச்சையான போக்கு, குறிப்பாக அறிவின்மை ஆட்சி செலுத்தக் கூடாது!

♦♦♦

தாழ்வாரத்தில் கரும்பலகையருகே ஒலிக்க வேண்டிய முன் தயாரிப்பையடுத்து தலா 35 நிமிடங்களுக்கு நான்கு பாடங்கள் நடக்கும் (ஜனவரி முதல் நான் மினி-பாடங்களை நடத்துவதில்லை). இரண்டு சிறு இடைவேளைகளும் ஒரு பெரிய இடைவேளையும் உண்டு. 122-வது பள்ளி நாளின் திட்டத்தில் நான் எழுதியுள்ளபடி இந்தப் பாடங்கள், இடைவேளைகளின் சாரத்தை விளக்குவேன்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

சிவாஜி முடிசூடுவதில் ஏற்பட்ட சாதிய சிக்கல்கள் !

0

காவிகள் மறைத்த சிவாஜி வரலாறு ! – பாகம் 3

ராட்டியர்களைக் குறித்த வரலாற்றாசிரியர் ஜாதுநாத் சர்க்காரின் படைப்புகளிலிருந்து கீழே உள்ள பகுதிகளை கொடுக்கிறோம். ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசராக சிவாஜியை ஏற்றுக்கொள்வதில் இருந்த சாதியரீதியிலான சிக்கல்களை தன்னுடைய இரண்டு நூல்களில் இவர் ஆய்வு செய்துள்ளார்.

மராட்டிய சமூகத்தை மட்டுமல்ல, உண்மையில் இந்திய சமூகம் முழுமைக்குமான ஒரு ஆழமான ஆய்வு, நாட்டுப்பற்று என்ற பெயரில் புறக்கணிக்கப்படுகின்ற சில உண்மைகளை அம்பலப்படுத்துகிறது. சிவாஜியின் வெற்றிக்கு மிகப்பெரிய தடைகளாக முகலாயர்களோ அல்லது யூசுப் அடில் ஷாவோ (பீஜப்பூர் சுல்தான்), சித்திகளோ (ஆப்பிரிக்க பாண்டு இனக்குழுவை சேர்ந்தவர்கள்) அல்லது பரங்கியர்களோ அல்ல, மாறாக சொந்த நாட்டு மக்களே என்பதை நாம் உணர்கிறோம்.

ஏதோ 17-ம் நூற்றாண்டில் நடந்தது மட்டுமல்ல இன்றும் ஒரு இந்தியரின் வாழ்வில் மிகவும் ஆதிக்கம் செலுத்துகின்ற சக்தி மதமோ, நாடோ அல்ல சாதிதான் என்பதை புரிந்துகொள்ளாத குருடராக நாம் இருக்க முடியாது. பாடநூல்களில் மட்டுமே இருக்கும் இந்துக்களின் நான்கு வருணப்பிரிவுகளும் அதற்கு பொதுப்படையாக கொடுக்கப்படும் தத்துவ விளக்கங்களையும் சாதியாக புரிந்து கொள்ளக்கூடாது. உண்மையில் சாதி இருக்கிறது. அது மனித சமூகப்பிரிவுகள் மற்றும் துணைப்பிரிவுகள் அதனிலும் பிரிவுகள் (இன்னும் சரியாக சொல்வதானால் மரத்தின் கிளைகள் அல்லது இலைகள் என்று கூட நான் கூற வேண்டும்!) என்று அதனுள் ஒவ்வொரு சாதியும் பிளவுப்பட்டு, அதற்குள் கொள்வினை கொடுப்பினை செய்துக்கொள்வதும், சாப்பிடுவதும், குடிப்பதுவுமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சமூக சக்தி தான் சாதி.

மேலும் பார்ப்பன சாதிகளில் ஒவ்வொரு துணைப்பிரிவும் கூட வைசியர் அல்லது சூத்திரர் போல முழுமையான தனிச்சாதிகளாக இருக்கின்றன. சான்றாக, வட இந்தியாவைச் சேர்ந்த கன்னியாகுப்ஜா மற்றும் சராயுபாரி பார்ப்பனர்கள். மகாராஷ்டிராவின் கொங்கனாஸ்தா மற்றும் தேசஸ்தா பார்ப்பனர்களை கூறலாம்.

சிவாஜிக்கு எதிரான தனிப்பட்ட பொறாமை:

பூணூலணியவும், சடங்குகளில் வேத உபநிடதங்களை உச்சரிக்கத் தகுதியுள்ள ஒரு சத்திரியனாக அங்கீகரிக்கப்படாதவரை தான் வெற்றிக்கொண்ட நிலப்பரப்புகளாலும், கொள்ளையடித்த புதையல்களாலும் சிவாஜி மனநிறைவு கொள்ளவியலாது. அந்த அங்கீகாரம் ஒரு பார்ப்பனரால் மட்டுமே அவருக்கு தர இயலும்.

பேஷ்வாக்கள் கொங்கன் பகுதியைச் சேர்ந்த பார்ப்பனர்கள். பேஸ்வா பார்ப்பனர்களின் உதிரம் தூய்மை குறைவானது என்று மேட்டு நிலத்தை (தேஷ்) சேர்ந்த பார்ப்பனர்கள் கருதினர். இதன் விளைவாக மராட்டியத்தில் பேஷ்வாக்களின் ஆட்சியின் அராசுக் கொள்கை தேசிய எல்லைகளை நோக்கி வழிகாட்டுவதற்குப் பதிலாக, ஒரு குடும்பம் அல்லது ஒரு சமூகக் குறும்பிரிவின் கவுரவத்தை மட்டும் உயர்த்திப் பிடிப்பதாகவே அமைந்தது.

படிக்க:
மராட்டியம் : வரலாறு பாடநூல்கள் காவி மயமாக்கப்பட்ட வரலாறு !
♦ விழுப்புரம் : கவர்மெண்டு கட்டுன வீட்டைக் காணோம் !

கிட்டத்தட்ட தனது நாட்களின் இறுதி வரை, பொறாமை, அவதூறு, அலட்சியம் மற்றும் மராட்டிய குடும்பங்கள் சிலவற்றின் எதிர்ப்பையும் கூட எதிர்த்து சிவாஜி போராட வேண்டி இருந்தது. சிவாஜியின் சொந்த சகோதரர் வியன்கோஜி 1666-ல் பிஜாப்பூர் மீது முகலாய படையெடுப்பின் போது அவருக்கு எதிராக சண்டையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவாஜியின் மத சகிப்புத்தன்மையும் சமமாக கருதும் போக்கு :

ஒரு இந்துத் தலைவராக இருந்ததால் அல்ல, மாறாக அவர் ஒரு சிறந்த கணவராகவும், சிறந்த அரசராகவும், மற்றும் நிகரற்ற தேசத்தைக் கட்டமைப்பவராகவுமிருந்ததால் மட்டுமே வரலாற்றில் தகுதியுள்ளவர்களின் மண்டபத்தில் ஒரு உயர்ந்த பீடத்தில் சிவாஜி நிற்கிறார். அவர் தனது தாயிடம் மரியாதையுடனும், தனது குழந்தைகளிடம் அன்பாகவும், மனைவிகளுக்கு உண்மையாகவும் இருந்தார். மற்ற பெண்களுடனான தனது உறவில் மிகவும் தூய்மையானவராக இருந்தார். போர்க்கைதிகளாக பிடிக்கப்பட்ட பேரழகிகள் கூட அவரால் அம்மா என்றே அழைக்கப்பட்டனர். அவரது தனிப்பட்ட வாழ்க்கையின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால், ஒரு மிகச்சிறந்த அரசராகவும், அமைப்பாளராகவும் தன்னுடைய மேதமையை பறைசாற்றியுள்ளார். மத வெறித்தனம் கோலோச்சிய அக்காலத்தில் அனைத்து மதங்களையும் தாராளமாக சகித்துக்கொள்ளும் கொள்கையை பின்பற்றினார்.

veer-shivajiஇந்துக்கள் மீது தேர்தல் வரி விதிக்கப்படுவதை எதிர்த்து அரங்கசீப்பிற்கு எழுதிய கடிதம், சிவாஜியின் தெளிவான தர்க்கம், பொறுமையான மனநிலை மற்றும் அரசியல் ஞானத்தின் தலைசிறந்த படைப்பாகும். அவர் ஒரு இந்து பக்திமான் என்றாலும், ஒரு முசல்மானிடத்திலும் உண்மையான புனிதத்தை அவரால் அடையாளம் காண முடிந்தது. எனவே அவர் பாபா யாகுத் என்ற இசுலாமிய புனித மனிதருக்கு கெலேசியில் தர்க்காவை நிறுவினார். அவரது சேவையில் அனைத்து மதங்களுக்கும் சம வாய்ப்புகள் கிடைத்தன. அவர் குவாசி ஹைதர் என்ற முஸ்லீம் செயலாளரை நியமித்தார். சிவாஜியின் மரணத்திற்குப் பிறகு டெல்லி சென்ற அவர் முகலாயப் பேரரசின் தலைமை நீதிபதியாக உயர்ந்தார்.

சிவாஜியின் படையில் பல்வேறு முஸ்லிம் தலைவர்கள் இருந்தனர். அவரது படைத்தலைவராக இருந்த சித்தி மிஸ்ரி ஒரு அபிசீனியன். எந்த ஒரு பெண்ணை தொடவோ அல்லது முஸ்லிம் பள்ளிவாசலையோ, ஆசிரமத்தையோ கொள்ளையடிக்கவோ கூடாதென மராட்டிய படைவீரர்களுக்கு கண்டிப்பான கட்டளை இருந்தது. படையெடுப்பின் போது கைப்பற்றப்படும் முஸ்லிம்களின் புனித நூலான குரான் மரியாதையுடன் முஸ்லிகளிடம் ஒப்படைக்க கட்டளையிடப்பட்டிருந்தது.

(ஜதுனாத் சர்காரின், ‘சிவாஜியின் வீடு’ நூலிலிருந்து)

சிவாஜியின் முடிசூட்டு விழா மற்றும் அதற்குப் பிறகு (1674-1676) :

சிவாஜி முடிசூடிக்கொள்ள விரும்பியது ஏன்?

சிவாஜி முடிசூடாமல் இருப்பதன் நடைமுறை சிக்கல்களை சிவாஜியும் அவரது அமைச்சர்களும் அவர் நீண்ட காலமாகவே உணர்ந்திருந்தனர். சிவாஜி, பல பகுதிகளைக் கைப்பற்றியதுடன் ஏராளமான செல்வங்களைச் சேகரித்திருந்தார் என்பது உண்மை. அவருக்கு ஒரு வலிமையான தரைப்படையும் கடற்படையும் இருந்தது. மேலும் ஒரு சுதந்திரமான இறையாண்மை கொண்ட நாட்டை போலவே மனிதர்களது வாழ்வையும் சாவையும் தீர்மானிக்கும் சக்தி அவருக்கிருந்தது. ஆனால் கோட்பாட்டளவில் அல்லது முகலாயப் பேரரசரை பொறுத்தவரை அவர் வெறும் நிலக்கிழார் மட்டுமே. எந்தவொரு அரசரடனுமான சரிசமமான அரசியல் அங்கீகாரத்தை அவரால் பெற முடியவில்லை.

படிக்க:
சிவாஜி முடிதரிக்க வேண்டுமாம் ! சூத்ரனுக்கு ராஜாபிஷேகமா ?
♦ காவிகள் மறைத்த சிவாஜி வரலாறு !

சிவாஜி வெறும் தனிப்பட்ட நபராக இருந்தவரை தன்னுடைய ஆதிக்கத்திலுள்ள மக்களின் விசுவாசத்தையும் பக்தியையும் கோர முடியவில்லை. ஒரு அரசருக்கு இருப்பது போல புனிதத்தன்மை அவரது வாக்குறுதிகளுக்கு இல்லை. அவர் எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திட முடியாது, சட்டப்பூர்வமாக மற்றும் நிரந்தரமாகவும் எந்த நிலத்தையும் அவரால் வழங்க முடியாது. அவரது வாளால் கைப்பற்றப்பட்ட பகுதிகள் அனைத்தும் அவரது சட்டபூர்வமான சொத்தாக மாற்ற முடியாது, நடைமுறையில் அவருக்கு அதிகாரம் இருக்கலாம். ஆனால் அவரது அதிகாரத்தின் கீழ் வாழும் மக்களால் முந்தைய அதிகார வர்க்கத்திடமிருந்த விசுவாசத்தை கைவிட முடியவில்லை அல்லது அவருக்கு கீழ்படிந்ததற்காக தேசத்துரோக குற்றச்சாட்டில் இருந்து விலக்கு பெற்றார்கள் என்பதையும் அவரால் உறுதிப்படுத்த முடியாது. அவருக்கான நிரந்தர அரசியல் ஆளுமையை ஒரு இறையாண்மையின் செயலாக சரிபார்க்கப்பட வேண்டும்.

காகா பட்டாவினால், சிவாஜி சத்திரியனாக அங்கீகரிக்கப்படுதல் :

ஆனால் இந்த இலட்சியத்தை அடைவதற்கு ஒன்று தடையாக இருந்தது. பண்டைய இந்து வேதங்களின்படி, சத்திரிய சாதியைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே சட்டப்பூர்வமாக அரசராக முடிசூட்டப்பட்டு இந்து சடங்குகளின் மரியாதைக்கு உரிமை கோர முடியும். போன்ஸலேக்கள் சத்திரியர்களோ, அல்லது வேறு இரட்டை பிறப்பு கொண்ட சாதியினரோ அல்ல மாறாக வெறும் உழவர்கள் தான். சிவாஜியின் கொள்ளு தாத்தாவும் அப்படியான ஒருவராக தான் இன்னமும் கருதப்படுகிறார். ஒரு சூத்திரன் எப்படி சத்திரியனுக்கான சடங்குகளுக்கு ஆசைப்பட முடியும்? சிவாஜி ஒரு சத்திரியன் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டால் மட்டுமே இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பார்ப்பனர்கள் அவரது முடிசூட்டு விழாவில் கலந்து கொண்டு அவரை வாழ்த்த முடியும்.

ஆகையால், எதிர்ப்புகள் அனைத்தையும் அமைதியாக்க முதலில் திறமையான ஒரு பண்டிதரின் ஆதரவைப் பெறுவது அவசியமாக இருந்தது, அப்படி ஒருவர் விஸ்வேஸ்வரில் வாழ்ந்து வருவது தெரிந்தது. பெனாரஸை சேர்ந்த அவரது பட்ட பெயர் காகா பட்டா. சர்ச்சைக்குரிய பெரும் சமற்கிருத அறிஞரான அவருக்கு நான்கு வேதங்களிலும், ஆறு தத்துவங்களிலும், அனைத்து இந்து மத இலக்கியங்களிலும் புலமை இருந்தது. பிரம்ம தேவா என்றும் அந்த காலத்தின் வியாஸர் என்றும் அவர் பிரபலமாக அறியப்பட்டார்.

சிவாஜியின் புத்திசாலித்தனமான செயலாளார் பாலாஜி ஆவ்ஜி மற்றும் இதர அதிகாரிகளால் புனையப்பட்ட போன்ஸ்லேயின் வம்ச வரலாற்றை காகா பட்டா ஏற்றுக்கொண்டார். சிவாஜி ஒரு தூய்மையான சத்திரியன் என்றும், உதய்பூரின் மகாராணாக்களின் நேரடி பாரம்பரியத்தை சேர்ந்தவர் என்றும், புராணக்கடவுளான இராமனின் பிரதிநிதி என்றும் அறிவித்தார்.

அவரது தடாலடியான இந்த அறிவிப்பிற்கு எராளமான பணம் கொடுக்கப்பட்டதுடன் சிவாஜியின் முடிச்சூட்டு விழாவின் முதன்மையான மதகுருவாகவும் அவர் மரியாதை செலுத்தப்பட்டார். அவரை வரவேற்க சதாரிவிலிருந்து பல மைல்களுக்கு அப்பால் சிவாஜியும் அவரது அதிகாரிகளும் சென்றனர்.

(சிவாஜியும் அவரது காலமும், நூலிலிருந்து – ஜாதுனாத் சர்கார்)

(தொடரும்)

இதன் முந்தைய பகுதிகள் :
காவிகள் மறைத்த சிவாஜி வரலாறு !
மராட்டியம் : வரலாறு பாடநூல்கள் காவி மயமாக்கப்பட்ட வரலாறு !


தமிழாக்கம் :
சுகுமார்
நன்றி : சப்ரங் இந்தியா 

விழுப்புரம் : கவர்மெண்டு கட்டுன வீட்டைக் காணோம் !

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஒன்றியத்திற்குட்பட்ட சோழகனூர் கிராமத்தில் சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக அதே ஊரைச் சேர்ந்த சரவணன் என்பவர் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வந்தார். இவர் அதிகாரிகளின் துணையோடு அவர்களுடன் கூட்டுச் சேர்ந்துகொண்டு இந்த கிராமத்தையே கபளீகரம் செய்திருக்கிறார். “கண்ணும் கண்ணும்” படத்தில் வரும் நடிகர் வடிவேலுவின் “கிணத்தைக் காணோம்” காமெடி காட்சியைப்போல “வீட்டையே காணோம்” என்று சோழகனூர் கிராம மக்கள் அலறியடித்து போராடியிருக்கிறார்கள்.

சோழகனூரில், வறுமைக்கோட்டிற்கு கீழே இருக்கும் மக்களுக்கு வீடு கட்டும் திட்டத்தின்கீழ் மத்திய மாநில அரசுகள் ஒதுக்கிய பசுமை வீடு மற்றும் தொகுப்பு வீடு கட்டித் தருவதில் சரவணன் கும்பல் பெரும் முறைகேடு செய்திருக்கிறது. இவ்வூரில் உள்ள இரு சமுதாயப் பிரிவினர்களுக்குமே சுமார் 15 வீடுகளைக் கட்டாமலேயே கட்டிமுடித்ததாகவும், மேலும் பத்து வீடுகள் அரைகுறையாக கட்டி உள்ள நிலையில் முழுமையாக முடிந்துவிட்டதாகவும் கணக்கு காண்பித்து மொத்தப் பணத்தையும் கொள்ளையடித்துள்ளனர். ஊராட்சி செயலாளர் முதல் வட்டார வளர்ச்சி அலுவலர் வரை இந்தக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

முக்கியமாக ஓவர்சீயர் என்று சொல்லக்கக்கூடிய  மேற்பார்வையிடும் அதிகாரியோ கட்டாத வீட்டை கட்டி முடித்து விட்டதாகவும், அதை தன் கண்ணால் பார்த்து விட்டதாகவும்  ஒப்புதல் அளித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.

இதுமட்டுமில்லாமல் 100 நாள் வேலை திட்டம், தெருவிளக்கு, பாசன வாய்க்கால்கள் அமைப்பது மற்றும் பராமரிப்பது, குடிதண்ணீர் வழங்குவது உட்பட அரசின் அத்தனை நலத்திட்டங்களிலும் முறைகேடு செய்து இந்த ஊராட்சியே ஊழலில் நாறிக் கொண்டிருக்கிறது.

மேலும், கிராம சபைக் கூட்டம் சரிவர நடத்துவது இல்லை. அப்படியே நடத்தினாலும் ஊருக்கு தெரிவிப்பதும் இல்லை. தனக்கு ஆதரவானவர்களை மட்டும் கொண்டு நடத்தியதாக கணக்குகாட்டி விடுவது.  இதனால் கிராமத்தின் வளர்ச்சிப்பணிகள், அரசின் நலத்திட்டங்கள் குறித்து எதுவும் தெரிந்துகொள்ளவும் முடியவில்லை. இதுவே இந்த ஊரின் எழுதப்படாத நடைமுறை. இறுதியாக தனது நண்பர் கட்டி வரும் கடைக்கு மக்கள் பயன்பாட்டில் இருக்கும் பேருந்து நிறுத்தக் கட்டிடம் இடையூறாக இருப்பதால் அதனை இடிக்கவும் துணிந்திருக்கிறார். இந்த சம்பவம்தான் மக்களுக்கு கொதிப்பை ஏற்படுத்தியது.

இத்தனை குற்றங்களையும் செய்த ஊராட்சி செயலாளர் மற்றும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கடந்த மாதம் மனு கொடுத்தபோது நடவடிக்கை எடுப்பதாக கூறிய மாவட்ட ஆட்சியர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் ஊராட்சியில் நடைப்பெற்றுள்ள வேலைகள் மற்றும் நிதி ஒதுக்கீடு போன்ற தகவல்களை கேட்டுபெற்று அதனடிப்படையிலும் உரிய ஆதாரங்களுடன் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவின் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கிராம மக்களின் இந்த நடவடிக்கைக்கு பிறகு மனு கொடுக்க யாரெல்லாம் சென்றார்களோ அவர்களை எல்லாம் ரவுடிகள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்களைக் கொண்டு மிரட்டியும், அதே சமயம் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவராக சந்தித்து பணத்தை திருப்பி தருவதாகவும் போராட்டத்திற்கு யார் கூப்பிட்டாலும் போக வேண்டாம் என்று அவர்களை பணிய வைக்கும் முயற்சியையும் செய்தனர். ஆனால் இந்தப் போராட்டத்தை வழி நடத்துவது மக்கள் அதிகாரம் அமைப்புதான் என்று தெரிந்த பிறகு அவர்கள் பின்வாங்கிக் கொண்டனர்.

நடந்திருப்பது ஊழல்… கொள்ளை… இந்த ஊழலுக்கு எத்தனை பேர் ஆரத்தி எடுப்பார்கள் என்று தெரியவில்லை.  இறுதியாக இவர்கள் கையில் எடுத்த ஆயுதம் சாதி. ஊராட்சி செயலாளரோ, தான் சார்ந்த சாதியைச் சொல்லி “என் வளர்ச்சி பிடிக்காமல் காழ்ப்புணர்வில் செய்கிறார்கள்” என்று புது புரளியை கிளப்பி சாதி மோதலை ஏற்படுத்தவும் முயற்சித்தார். அனைத்தும் இரு சமூகப் பிரிவு மக்களின் ஒற்றுமையால் முறியடிக்கப்பட்டது. ஏற்கெனவே அதே ஊரின் பள்ளிக்கூட பிரச்சினையில் அமைப்பின் வழிகாட்டலில் ஒற்றுமையுடன் போராடி வெற்றி பெற்றிருக்கிறார்கள் இப்பகுதி மக்கள்.

உண்மைநிலை இப்படி இருக்க சாதிய கண்ணோட்டத்தில் அணுகுவதாக சொல்வது நகைப்புக்குரியது. எந்தச் சாதியைக் காட்டி அனுதாபம் தேட செயலர் சரவணன் முயற்சிக்கிறாரோ அதே, “சுயசாதி” மக்களைத்தான் அதிகமாக சுரண்டி சொத்து சேர்த்திருக்கிறார். .

இப்பேர்பட்ட பகாசுர கொள்ளையில் ஈடுபட்ட – அதிகாரிகளுக்கு எதிராக கடந்த 25.09.2019-ம் தேதி மக்கள் அதிகாரம் சார்பில் சுவரொட்டி ஒட்டப்பட்டது. அதனைத்தொடர்ந்து  29-ம் தேதி பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பில் போராட்டம் நடத்தப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில் 30.09.2019 அன்று விழுப்புரத்திலிருந்து சோழகனூர் கிராமம் வழியாக செல்லும் அரசு பேருந்தை ஊர் மக்கள் சிறைபிடித்து, ஊழல் செய்த அதிகாரிகளையும், ஊராட்சி செயலாளரையும் கைது செய்ய வேண்டும்; இவர்கள் கொள்ளையடித்த சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி சுமார் மூன்று மணி நேரம் போராட்டம் நடத்தப்பட்டது.

தகவலறிந்து வந்த போலீசு, “அனைவரும் கலைந்து செல்லுங்கள், இல்லை என்றால் அனைவர் மீதும் வழக்குப்போட்டு சிறையில் தள்ளிவிடுவோம்” என்று மிரட்டியது. போலீசின் மிரட்டலுக்கு அஞ்சாத கிராம மக்கள், “கோடிகளில் ஊழல் முறைகேடு செய்துள்ளனர். அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாங்கள் மூன்று முறை மனு கொடுத்தும் ஊழல் குற்றவாளிகளின் மீது எந்த  நடவடிக்கையும் எடுக்கத் துப்பில்லை, பாதிக்கப்பட்ட எங்கள் மீது வழக்கு போடுவேன், கைது செய்வேன் என்கிறீர்களே வெட்கமாக இல்லையா? வழக்குப் போடுங்கள்… நாங்கள் அதற்கு தயாராகத்தான் இருக்கிறோம்” என்று சரமாரியாக கேள்வி கேட்ட மக்கள், “சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  வரும் வரை இங்கிருந்து கலைய மாட்டோம்” என்றவுடன் அவர்களுக்கு பதில் கூற முடியாமல் போலீசார் ஒதுங்கிக் நின்றனர்.

போராட்டம் தொடரவே AD மற்றும் BDO – வர, அவர்களிடம் நடந்த பேச்சுவார்த்தையில் “ஊர் பஞ்சாயத்தில் என்னென்ன முறைகேடுகள் நடந்துள்ளது என்பதை ஆய்வு செய்ய வேண்டும்; அதுவரை இந்த ஊராட்சி செயலாளர் மூலம் எந்த வேலையும் நடக்கக் கூடாது; ஆய்வு செய்து தண்டனை நிறைவேற்றும் வரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம், நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் அரசாங்கத்திற்கு எந்த ஒத்துழைப்பும் தர மாட்டோம், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்போம்” என்றும் மக்கள் உறுதியாகக் கூறினர்.

மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரிகள்.

மக்கள் போராட்டத்தின் வீரியத்தையும் நியாயத்தையும் அறிந்த அதிகாரிகள், “கண்டிப்பாக ஊராட்சி செயலாளரை  உடனடியாக இடமாற்றம் செய்வதாகவும், ஊழலில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகவும், இந்த ஊழல் முறைகேடுகளை 5 பேர் கொண்ட குழு அமைத்து விசாரணை நடத்துவோம்” என்றும் வாக்குறுதி அளித்தார்கள்.

அதிகாரிகள் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் போராட்டத்தை  தற்காலிகமாக கைவிடுவதாகவும், எந்த நடவடிக்கையும் இல்லை என்றால் மீண்டும் போராட்டத்தை தொடரலாம் என்றும் ஊர்மக்கள் முடிவெடுத்துள்ளனர். முதல் கட்டமான இந்த வெற்றி மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றாலும், சாதிய பாகுபாடுகளை கடந்து ஊழலுக்கு எதிராக  இரு பிரிவினரும் இணைந்து நடத்தியதால்தான் இது சாத்தியமானது என்பதை உணர்ந்திருக்கிறார்கள். இந்த ஊர் மக்களின் ஒற்றுமைக்கு கிடைத்த இரண்டாவது வெற்றியாகும்.

ஊழல் தனிநபர்களின் பிரச்சனையல்ல!

மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஊழல் – முறைகேடுகள் கோலியனூர் ஒன்றியத்தின் ஒரு முன்மாதிரிதான். இதே கோலியனூர் ஒன்றியத்தில் 45 பஞ்சாயத்துக்கள் உள்ளது. அதிலுள்ள சோழகனூர் பஞ்சாயத்தில் மட்டுமே இவ்வளவு முறைகேடுகள் என்றால் இந்த 45 பஞ்சாயத்திலும் எவ்வளவு கோடிகள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கும் என்பதை நினைத்துப்பாருங்கள்.

தமிழகம் முழுவதும், நாடு முழுவதும்  இந்த அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் இப்படித்தான் மக்களின் வரி பணத்தை சூறையாடி கொழுக்கிறார்கள். மற்றொருபுறம் கார்ப்பரேட்டுகளுக்கும் வாரி வழங்குகிறார்கள்.

அரசுக் கட்டமைப்பு ஏழை எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதாக கூறிக்கொண்டு, அதற்காக குறைந்தபட்சம் வகுக்கப்பட்ட கொள்கைகளையும், திட்டங்களையும் அவர்களே மதிக்காமல், அத்திட்டங்களை முழுமையாக அமுல்படுத்தாமலும், அதற்காக ஒதுக்கப்படும் சிறிதளவு நிதியையும் கொள்ளை அடித்துவிட்டு உழைக்கும் மக்களைப் பற்றி கவலையின்றி சுகபோகமாக வாழ்கின்றனர்.

படிக்க:
ஜம்மு காஷ்மீர் : இரும்புத்திரையை கிழிக்கும் இளைஞர் !
விவசாயிகளிடம் ரூ. 15,000 கோடி ஜி.எஸ்.டி பிடுங்கிய மோடி அரசு !

இந்த ஊழல் முறைகேட்டினை சிறிய பிரச்சனையாக நினைத்து நாம் கடந்துவிட முடியாது. ஒட்டுமொத்த சமுக பொராளாதாரத்தையே சீர்குலைக்கும் செயலாகும். கீழிருந்து மேல் வரை சீரழிந்து மக்களுக்கு எதிரியாகிப்போன இந்த கட்டமைப்பு தோற்றுவிட்டதன் வெளிப்பாடு. இதனை தூக்கியெறிய உழைக்கும் மக்களாக ஒன்று திரள்வோம்..  மக்கள் அதிகார கமிட்டிகளை கட்டமைப்போம்.. உங்கள் ஊரின் பிரச்சனைக்கு தீர்வு காண்போம்.!


தகவல்:
மக்கள் அதிகாரம்,
விழுப்புரம்.
தொடர்புக்கு : 94865 97801

சோவியத் யூனியனுக்கு வேலை தேடிச் சென்ற அமெரிக்கர்கள் ! | கலையரசன்

0

கலையரசன்

ரு காலத்தில் அதிக சம்பளத்துடனான வேலை வாய்ப்புகள் காரணமாக ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் புலம்பெயர்ந்து சென்று சோவியத் யூனியனில் குடியேறி இருந்தனர்! இன்று இதைச் சொன்னால் நம்புவதற்கு கடினமாக இருக்கும். ஆனால் முப்பதுகளில் இருந்த உலகம் வேறு.

அமெரிக்காவின் பங்குச் சந்தை நெருக்கடி காரணமாக, முதலாளித்துவப் பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அதே நேரம் சோவியத் சோஷலிச பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து கொண்டிருந்தது. அமெரிக்கப் பத்திரிகைகள் கூட அதைக் குறிப்பிடத் தவறவில்லை. உள்நாட்டில் வேலையில்லாப் பிரச்சினை அதிகரித்துக் கொண்டிருக்கையில், சோவியத் யூனியனில் நாளுக்கொரு தொழிற்சாலை திறக்கப் படுவதாக தெரிவித்துக் கொண்டிருந்தன. இனிமேல் உலகம் முழுவதும் சோவியத்தின் சோஷலிச பொருளாதார மாதிரியை பின்பற்றுவது தான் ஒரே வழி என்பது பொதுவான வெகுஜன கருத்தாக இருந்தது.

இருபதுகளின் பிற்பகுதியில் ஸ்டாலின் கொண்டு வந்த ஐந்தாண்டுத் திட்டம் காரணமாக சோவியத் யூனியனின் பொருளாதாரம் வளர்ந்து கொண்டிருந்தது. இது அன்று உலகம் முழுவதும் தெரிந்த உண்மை. சோவியத் பொருளாதாரம் எந்தளவுக்கு வளர்ந்தது என்றால், ஒரு கட்டத்தில் வேலை செய்வதற்கு தொழிலாளர்கள் கூட இல்லாத பற்றாக்குறை நிலவியது. சுரங்கத் தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக, ஜெர்மனியில் இருந்து ஒப்பந்தத் தொழிலாளர்கள் தருவிக்கப் பட்டிருந்தனர். ஏற்கனவே ஏராளமான ஜெர்மன் பொறியியலாளர்கள் அங்கு வேலை செய்து கொண்டிருந்தனர்.

ஸ்டாலினின் ஐந்தாண்டுத் திட்டத்தினை, சோவியத் யூனியனின் தொழிற்புரட்சி என்று அழைக்கலாம். நாடு முழுவதும் விவசாயத்தை இயந்திரமயமாக்குவது அடிப்படையாக இருந்தது. கூட்டுத்துவ பொருளாதாரக் கட்டமைப்பில் இது இலகுவாக சாத்தியமானது. இருப்பினும் ஒரு பிரச்சினை இருந்தது. போதுமான அளவு டிராக்டர்கள், இயந்திரங்கள் இருக்கவில்லை. அவற்றைப் புதிதாக உற்பத்தி செய்ய வேண்டி இருந்தது. அதற்காக புதிய தொழிற்சாலைகளை கட்ட வேண்டும். அதற்குத் தேவையான தொழிநுட்ப நிபுணர்கள், தொழிற்தேர்ச்சி தொழிலாளர்கள் போன்றவற்றுக்கும் பற்றாக்குறை நிலவியது.

அன்றைய சோவியத் யூனியனில் பொறியியலாளர்களுக்கும் பற்றாக்குறை நிலவியது. புரட்சிக்குப் பிந்திய சமுதாயத்தில், பொறியியலாளர் போன்ற அதிக சம்பளம் கிடைக்கும் மத்தியதர வர்க்க வேலைகள் உயர்வாகக் கருதப் படவில்லை. சோவியத் யூனியன் தொழிலாளர்களின் நாடு என்பதால், உடல் உழைப்பாளிகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப் பட்டது. ஒரே நிறுவனத்தில் பணியாற்றும் பொறியியலாளர் குறைவான சம்பளம் பெறுவதும், தொழிலாளி கூடுதலான சம்பளம் பெறுவதும் சாதாரணமான விடயம்.

அது மட்டுமல்ல, பொறியியலாளர், மருத்துவர் போன்ற மத்தியதர வர்க்க வேலைகளை செய்பவர்கள் குட்டி முதலாளித்துவ மனப்பான்மை கொண்டவர்களாக கருதப் பட்டனர். அதாவது, அவர்கள் உடல் உழைப்பாளிகளை விட அதிகம் சம்பாதிப்பதால் பாட்டாளி வர்க்கத்தை அவமதிப்பார்கள் என்பதும் பொதுப் புத்தியில் உறைந்திருந்தது. இது ஜார் மன்னன் காலத்தில் இருந்த வர்க்க ஏற்றத்தாழ்வாக இருந்தாலும், புரட்சி நடந்து பதின்மூன்று வருடங்களே நிறைவடைந்த நிலையில் வர்க்க முரண்பாடுகள் முற்றாக மறைந்திருக்கவில்லை.

இதனால் ஒரு தொழிற்சாலையில் பெரும் சேதம் விளைவிக்கும் விபத்து நடந்தால் முதலில் குற்றம் சாட்டப் படுபவர் ஒரு பொறியியலாளராக அல்லது முகாமையாளராக இருப்பார். அவர் வேண்டுமென்றே நாசகார வேலையில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப் படவும் இடமுண்டு. இது போன்ற காரணங்களினாலும் பலர் பொறியியலாளர் வேலை செய்ய முன்வராமல் இருந்திருக்கலாம். எது எப்படி இருப்பினும், உள்நாட்டில் இல்லாத மனித வளத்தை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் அன்றைய சோவியத் யூனியனில் ஏற்பட்டிருந்தது.

படிக்க:
ஹவ்டி மோடி : அமெரிக்காவின் இரட்டை முகம் ! கருத்துப்படம்
♦ முதலாளித்துவமும் பருவநிலை மாற்றமும் !

ஏராளமான இலங்கையர்கள், இந்தியர்கள், வளைகுடா அரபு நாடுகளுக்கு வேலை தேடிச் செல்வது போன்று தான், அன்றைய காலத்தில் அமெரிக்கர்கள் சோவியத் யூனியனுக்கு வேலை தேடிச் சென்றனர். அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி, வேலையில்லாப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சோவியத் யூனியன் பொன் விளையும் பூமியாகத் தெரிந்தது.

அன்றைய காலகட்டத்தில் முழு ஐரோப்பாவிலும் சோவியத் யூனியன் மட்டுமே பணக்கார நாடு என்று சொல்லும் தரத்தில் இருந்தது. பல மேற்கு ஐரோப்பிய நாடுகள் மிகவும் வறுமையான நிலையில் இருந்தன. அத்துடன் அமெரிக்காவில் ஏற்பட்ட முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியாலும் பாதிக்கப் பட்டிருந்தன. ஜெர்மனி, இத்தாலி, சுவீடன், நோர்வே, பிரித்தானியா போன்ற பல மேற்கத்திய நாடுகளில் இருந்து பொறியியலாளர்கள் வேலை தேடி சோவியத் யூனியனுக்கு சென்றனர்.

இருப்பினும், அமெரிக்க தொழில்நுட்ப அறிவுக்கு சோவியத் யூனியனில் அதிக மதிப்பு இருந்தது. ஆகையினால், சோவியத் யூனியன் நோக்கிப் புலம்பெயர்ந்தவர்கள் மத்தியில் அமெரிக்கர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அமெரிக்கர்களின் சோவியத் நோக்கிய புலம்பெயர்வு, மூன்று வகையாக நடந்தது. ஒன்று, தாமாகவே வேலை தேடிச் சென்றவர்கள். இரண்டு, வேலை வாய்ப்பு முகவர் நிறுவனங்கள் மூலம் ஒப்பந்தக் கூலிகளாக அனுப்பப் பட்டவர்கள். மூன்று, அமெரிக்க நிறுவனங்களின் முதலீட்டில் உருவான தொழிற்துறை கட்டுமானங்களில் பணியாற்ற அனுப்பப் பட்டவர்கள்.

அன்றைய அமெரிக்காவில் நிலவிய கொடூரமான இனவெறிக் கொள்கை காரணமாக, ஏராளமான கறுப்பின மக்களும் சோவியத் யூனியனில் குடியேற விரும்பினார்கள். அங்கு அவர்கள் சம உரிமை பெற்ற மனிதர்களாக சகோதரத்துவ உணர்வுடன் நடத்தப் பட்டனர். அந்த வாழ்க்கையை அமெரிக்காவில் நினைத்துப் பார்க்கவே முடியாமல் இருந்தது. மேலும் சர்வதேச மட்டத்தில், “இனப்பாகுபாடு பாராட்டும் முதலாளித்துவ அமெரிக்காவை விட, சகல இனத்தவரையும் சமமாக நடத்தும் சோஷலிச சோவியத் நாடு சிறந்தது” என்று சோவியத் அரசு பிரச்சாரம் செய்து கொண்டிருந்தது.

கறுப்பர், வெள்ளையர் பாகுபாடின்றி, தகுதி வாய்ந்த அனைவருக்கும் சோவியத் யூனியனில் வேலை வாய்ப்புக் கிடைத்தது. அமெரிக்காவில் தொழிற் தேர்ச்சி பெற்ற தொழிலாளர்கள், பொறியியலாளர்களுக்கு சோவியத் யூனியனில் நல்ல வரவேற்புக் கிடைத்தது. அதிக சம்பளமும் கிடைத்தது. சம்பளத்தில் ஒரு பகுதி அமெரிக்க வங்கிக் கணக்கில் வைப்பிலப் படும். அதை விட, மாதம் 200-300 ரூபிள்கள் கையில் கிடைக்கும்.

புலம்பெயர்ந்த அமெரிக்க தொழில்நுட்ப நிபுணர்களுக்கு வழங்கப்பட்ட சம்பளம், சராசரி சோவியத் சம்பளத்தை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகம். இது வெளிநாட்டு தொழில் முகவருடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப் பட்டது. மேலும், சோவியத் நாட்டில் உணவுப் பொருட்கள் மிகவும் மலிவு. மருத்துவ வசதி இலவசம். பிள்ளைகளுக்கான கல்வியும் இலவசம். இப்படியான ஒரு வாழ்க்கை கிடைத்தால் யார் தான் மறுக்கப் போகிறார்கள்? ஒப்பந்தப் படி, ஓர் அமெரிக்க வேலையாள் வருடத்தில் ஒன்பது மாதங்கள் வேலை செய்ய வேண்டும். மூன்று மாதங்கள் அமெரிக்கா சென்று வரலாம்.

சோவியத் யூனியனுக்கு புலம்பெயர்ந்து சென்ற அமெரிக்கர்களை மூன்று வகையாக தரம் பிரிக்கலாம். அதிகமாக பணம் சம்பாதிக்கலாம் என்ற நோக்கத்தில் சென்றவர்கள் தான் பெரும்பான்மை. குறிப்பிட்ட அளவினர் கம்யூனிச சித்தாந்தம் மீதான ஈடுபாடு காரணமாக சென்றனர். இவ்விரண்டு பிரிவினரும் யாருக்கும் எந்தத் தொந்தரவும் செய்யாமல் தாமுண்டு வேலையுண்டு என இருந்து விட்டனர். அதே நேரம், மலிவு விலையில் மது கிடைக்கிறது என்ற ஆசையில் சென்று, குடித்து விட்டு தகாராறுகளில் ஈடுபட்டவர்களும் உண்டு. அப்படியானவர்கள் எந்த மன்னிப்பும் இன்றி திருப்பி அனுப்பப் பட்டனர்.

படிக்க:
செனோத்டெல் : சோவிய‌த் பெண்களுக்கான ஒரு பெண்ணிய‌க் க‌ட்சி | கலையரசன்
♦ ஹாங்காங் போராட்டம் – நடந்தது என்ன ? | கலையரசன்

அன்றைய உலகப் பொருளாதார நிலைமையில், மிகப் பெரிய அமெரிக்க முதலாளித்துவ நிறுவனங்கள் கூட சோவியத் யூனியனில் முதலிடுவதற்கு தாமாக விரும்பி முன்வந்தன. இது இரண்டு தரப்பிற்கும் ஆதாயம் கிடைக்கும் விடயம். சோவியத் அரசுக்கு அந்நிய தொழில்நுட்ப அறிவு ஆதாயமாகக் கிடைக்கிறது. அமெரிக்க நிறுவனத்தை பொறுத்தவரையில் நிலையான பொருளாதாரத்தை கொண்ட நாட்டில் முதலிட்டு இலாபம் சம்பாதிக்க முடிகிறது.

இந்த முதலீடுகள் அனைத்தும் Joint Venture பாணியிலான கூட்டு முயற்சியாக அமைந்திருந்தன. அதாவது, புதிதாக உருவாக்கப்படும் தொழிலகம் ஒன்றில் சோவியத் அரசும், வெளிநாட்டு நிறுவனமும் சரிசமமான பங்குகளில் முதலீடு செய்யும். தொழிலகத்தில் உற்பத்தி அதிகரிக்கும் நேரம் விற்பனையால் கிடைக்கும் இலாபப் பணம் சரிசமமாக பங்கிடப்படும். ஒப்பந்த காலம் வரையில், குறிப்பிட்ட அமெரிக்க நிறுவனம் தனது பங்குகளுக்கான இலாபத்தை எடுத்துக் கொள்ளலாம். ஒப்பந்தம் முடிந்த பின்னர் தொழிலகம் முழுவதும் சோவியத் அரசுடமையாகி விடும்.

1929 -ம் ஆண்டு சோவிய‌த் அர‌சுக்கும் அமெரிக்க‌ Ford நிறுவ‌ன‌த்திற்கும் இடையில் ஓர் ஒப்ப‌ந்த‌ம் போட‌ப் ப‌ட்ட‌து. இத‌ன் விளைவாக‌, நிஸ்னி நொவ்கொரொத் (Nizhny Novgorod) ந‌க‌ரில் ஒரு பிர‌மாண்ட‌மான‌ கார் த‌யாரிக்கும் தொழிற்சாலை க‌ட்ட‌ப் ப‌ட்ட‌து. இத‌ற்காக‌ ப‌ல‌ நூற்றுக் க‌ண‌க்கான‌ அமெரிக்க‌ பொறியிய‌லாள‌ர்க‌ள், தொழில்நுட்ப‌ நிபுண‌ர்க‌ள் சோவிய‌த் யூனிய‌னில் த‌ங்கி இருந்து வேலை செய்த‌ன‌ர். இதற்காக புதியதொரு நகரம் நிர்மாணிக்கப் பட்டது. தொழிற்சாலையில் வேலை செய்வோர் தங்குவதற்கான வீடுகள் மட்டுமல்லாது, மருத்துவமனைகள், பாடசாலைகள் போன்றனவும் புதிதாக கட்டப் பட்டன.

ஒப்ப‌ந்த‌ப் ப‌டி, சோவிய‌த் அர‌சு முத‌லாவ‌து வ‌ருட‌ம் குறிப்பிட்ட‌ள‌வு போர்ட் கார்க‌ளை வாங்குவ‌தாக‌ தீர்மானிக்க‌ப் ப‌ட்ட‌து. இரண்டாவது வ‌ருட‌ம் அமெரிக்காவில் இருந்து த‌ருவிக்க‌ப் ப‌ட்ட‌ வாக‌ன‌ உதிரிப் பாக‌ங்க‌ள் சோவியத் யூனியனில் பொருத்த‌ப் ப‌டும். மூன்றாவது வருடம் சோவியத் உதிரிப் பாகங்களை கொண்டு அமெரிக்கக் கார் தயாரிக்கப் படும். நான்காவது வருடம் கார் முழுவ‌தும் சோவியத் தயாரிப்பாகவே இருக்கும்.

GAZ or Gorkovsky Avtomobilny Zavod
GAZ (Gorkovsky Avtomobilny Zavod) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட வாகனம் ஒன்றின் புகைப்படம்.

ஒப்பந்தப் படி, ப‌த்தாண்டுக‌ளுக்குள் போர்ட் நிறுவ‌ன‌ம் த‌ன‌து பேட்ட‌ன்ட் உரிமையையும், தொழில்நுட்ப‌ அறிவையும் சோவிய‌த் அர‌சிட‌ம் கொடுத்து விட‌ வேண்டும். திட்ட‌மிட்ட‌ ப‌டி ப‌த்தாண்டுக‌ளுக்குள் தொழிற்சாலை முழுவ‌தும் சோவிய‌த் வ‌ச‌மாகிய‌து. அன்று அமெரிக்க‌ர்க‌ள் க‌ட்டிய‌ கார் தொழிற்சாலை GAZ என்ற‌ பெய‌ரில் இப்போதும் இய‌ங்கிக் கொண்டிருக்கிற‌து. இடையில் முகாமைத்துவத்தில் பல மாற்றங்கள் நடந்திருந்தாலும், நிறுவனத்தின் பெயர் மாற்றப் பட்டிருந்தாலும், அது அமெரிக்கர்கள் கட்டிய தொழிற்சாலை என்ற வரலாற்று உண்மையை மறைக்க முடியாது.

ஸ்டாலின்கிராட் நகரில் டிராக்டர்கள் உற்பத்தி செய்வதற்காக கட்டப் பட்ட தொழிற்சாலை கூட அமெரிக்க தொழில்நுட்ப உதவியால் உருவானது தான். இன்று அது Volgograd Tractor Plant என்று அழைக்கப் படுகின்றது. அமெரிக்காவில் தொழிற்துறை வளாகம் கட்டுவதில் சிறந்து விளங்கிய, பிரபலமான Albert Kahn Associates Inc நிறுவனம் தான் அந்த டிராக்டர் தொழிற்சாலையை கட்டிக் கொடுத்தது. இதற்காக ஆயிரக் கணக்கான அமெரிக்க பொறியியலாளர்கள் தருவிக்கப் பட்டனர். முப்பதுகளில் உற்பத்தியை தொடங்கிய காலத்திலேயே மில்லியன் கணக்கான டிராக்டர்கள் உற்பத்தி செய்யப் பட்டு, சோவியத் நாடு முழுவதும் சேவையில் ஈடுபடுத்தப் பட்டன. இரண்டாம் உலகப்போரில் பெருமளவில் பாதிக்கப் பட்ட கட்டிடங்களில் டிராக்டர் தொழிற்சாலையும் ஒன்று. யுத்தம் முடிந்த பின்னர் மீளக் கட்டியெழுப்ப பட்டு தற்போதும் இயங்கிக் கொண்டிருக்கிறது.

சோவியத் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் அமெரிக்கர்கள் ஆற்றிய பங்களிப்பு மறைக்கப் பட்ட காரணம் என்ன? இரண்டாம் உலகப்போருக்கு பிந்திய காலத்தில் உருவான பனிப்போர், அமெரிக்காவையும், சோவியத் யூனியனையும் எதிரிகளாக்கி விட்டது. அதற்குப் பின்னர் எதிரி நாட்டுப் பிரஜைகள் தனது நாட்டில் இருப்பதை சோவியத் அரசு வெளிப்படுத்த விரும்பவில்லை. மறுபக்கத்தில், அமெரிக்க அரசு தனது நாட்டுப் பிரஜைகள் சோவியத் யூனியனின் இருந்தனர் என்ற தகவல்கள் முழுவதையும் இருட்டடிப்பு செய்தது. போரினால் பாதிக்கப் பட்ட அமெரிக்கப் பிரஜைகள் தாயகம் திரும்புவதற்கு உதவி கோரி தூதுவராலயத்திற்கு அனுப்பிய கடிதங்கள் கூட உதாசீனம் செய்யப் பட்டன.

இரண்டாம் உலகப்போர் தொடங்குவதற்கு ஓரிரு வருடங்களுக்கு முன்பிருந்தே புலம்பெயர்ந்த குடியேறிகளின் நிலைமை மிக மோசமாகி விட்டது. நாடு முழுவதும் நிலவிய போர்ச் சூழல் காரணமாக எல்லோர் மீதும் சந்தேகம் ஏற்பட்டது. தேசப் பாதுகாப்பை காரணமாகக் காட்டி நடந்த கைது நடவடிக்கைகளுக்கு வெளிநாட்டவரும் தப்பவில்லை. ஒரு சில அமெரிக்கர்கள் கைது செய்யப்பட்டதும், ஏனையோர் நாட்டை விட்டு வெளியேறி விட்டனர். மிகக் குறைந்த எண்ணிக்கையினர் மட்டுமே போர் முடிந்த பின்னரும் சோவியத் யூனியனில் தங்கி இருந்தனர்.

பின்குறிப்பு : இந்தக் கட்டுரைக்கான பல ஆதாரங்கள் அமெரிக்க ஊடகவியலாளர் H.R. Knickkerbocker எழுதிய De Roode Handel dreigt எனும் நூலில் இருந்து எடுத்திருக்கிறேன். நெதர்லாந்தில், டச்சு மொழிபெயர்ப்பின் இரண்டாம் பதிப்பாக A.W. Sijthoff’s uitgeversmij n.v. பதிப்பகத்தால் வெளியிடப் பட்டுள்ளது. தற்செயலாக ஒரு பழைய புத்தகக் கடையில் இந்த நூலை வாங்கினேன்.

கலையரசன்

கலையரசன் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர். வரலாறு, அரசியல், பண்பாடு ஆகியன குறித்து மார்க்சிய நோக்கில் கலையகம் தளத்தில் தொடர்ந்து எழுதி வருபவர். வெகுசன ஊடகப் பிரச்சாரத்தின் விளைவாக முதலாளித்துவக் கண்ணோட்டத்திற்கு தம்மையறியாமல் ஆட்பட்டிருக்கும் வாசகர்களை மீட்பதில் இவருடைய எழுத்தின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் : தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரியில் விநியோகம் !

“தமிழக மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் நூல்கள் இலவசமாய் வழங்க உதவுங்கள் !” என வாசகர்களுக்கு கோரிக்கை வைத்திருந்தோம். அதனை ஏற்று,  அறிவுடைநம்பி என்ற வாசகர், தஞ்சை குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி மாணவிகளுக்கு 150 புதிய கலாச்சாரம் இதழ்களை அன்பளிப்பாக வழங்க விருப்பம் தெரிவித்திருந்தார்.

இதன்படி, இதயத்தை மீட்பது எப்படி? மற்றும் போர்னோ : இருளில் சிக்கும் இளமை ஆகிய தலைப்பில் வெளிவந்த புதிய கலாச்சாரம் நூல்கள் தலா 50 அனுப்பி வைக்கப்பட்டன. மேற்கண்ட நூல்கள், தஞ்சை பகுதி ம.க.இ.க. தோழர்கள் உதவியுடன் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் விநியோகம் செய்யப்பட்டது. இதில் 20 பிரதிகள் கல்லூரி நூலகத்திற்கும் எஞ்சிய 80 பிரதிகள் மாணவிகளுக்கும் விநியோகம் செய்யப்பட்டது. மீதமுள்ள 50 நூல்கள் வரும் மாதத்தில் விநியோகிக்கப்படும்.

நீங்களும் உங்கள் பங்களிப்பாக புதிய கலாச்சாரம் வெளியீடுகளை மாணவர்களுக்கு வழங்குங்கள். நீங்கள் விரும்பிய கல்லூரிகளைத் தெரிவு செய்தும் பணம் அனுப்பலாம். கீழே உள்ள இணைப்பில் முழு விவரங்கள் உள்ளன. ஆதரவு தாருங்கள் !

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

1,500.006,000.00

SKU: N/A

இது விமானமல்ல பிடில் வாத்தியம் !

உண்மை மனிதனின் கதை | மூன்றாம் பாகம் | அத்தியாயம் – 10

ஞ்சிய குளிர்காலத்தையும் வசந்த காலத் தொடக்கத்தையும் மெரேஸ்யெவ் சிறப்புப் பயிற்சிப் பள்ளியில் கழித்தான்.

விமானிகளின் பெரிய குழு ஒன்று அந்தச் சமயத்தில் புதிதாக விமானப்படையில் சேர்க்கப்பட்டு இருந்த “லா-5″ ரக சோவியத் சண்டை விமானத்தைச் செலுத்துவதற்குச் சிறப்புப் பயிற்சி பெற்று வந்தது. அலெக்ஸேய் மெரேஸ்யெவும் இந்தக் குழுவில் சேர்க்கப்பட்டான். பயிற்சி ஆழ்ந்த முறையில் நடந்தது. எஞ்சின், சாமான் பகுதி ஆகியவற்றை விமானிகள் நுணுகி ஆராய்ந்து தேர்ந்தார்கள், இயந்திர நுட்பத்தைப் பயின்றார்கள். தான் இராணுவத்துக்கு வெளியே இருந்த ஒப்பு நோக்கில் குறுகிய காலத்துக்குள் சோவியத் விமானத் தொழில் எவ்வளவு தூரம் முன்னேறிவிட்டது என்று விரிவுரைகளைக் கேட்கையில் அலெக்ஸேய் வியந்தான்.

யுத்த ஆரம்பத்தில் துணிகரப் புதுப்புனையாகத் தோன்றியது இப்போது மீள வகையின்றிப் பழையதாகிவிட்டது. துடியான “லாஸ்தச்கா” விமானங்களும் லேசான “மிக்” விமானங்களும் உயர்வெளிச் சண்டைக்கு ஏற்ப அமைக்கப்பட்டு, யுத்தத்தின் ஆரம்ப நாட்களில் தலைசிறந்த படைப்புக்களாகக் கருதப்பட்டன. அவை இப்போது நீக்கப்பட்டு விட்டன. அவற்றின் இடத்தில் சோவியத் தொழிற்சாலைகளில் யுத்த நாட்களில் உருவமைக்கப்பட்டு நம்பமுடியாத அளவு குறுகிய காலத்தில் பழகிக் கொள்ளப்பட்ட அற்புதமான நவீன ரக “யாக்” விமானங்களையும் “லா-5” விமானங்களையும் இரட்டை இருக்கைகள் கொண்ட “இல்” விமானங்களையும் உற்பத்தி செய்தன. இந்த “இல்” விமானங்கள் பறக்கும் டாங்கிகள். இவை தரையோடு தரையாகத் தாழ்வாகப் பறந்து வெடிகுண்டுகளையும் மெஷின்கன் குண்டுகளையும் பீரங்கிக் குண்டுகளையும் நேரே பகைவரின் தலைகளில் பொழிந்தன. ஜெர்மன் படை இவற்றுக்கு “ஷ்வார்த்ஸேர் தோத்”, அதாவது “கருஞ்சாவு” என்ற திகில் நிறைந்த பெயரிட்டிருந்தது. போரிடும் மக்களின் பேரறிவிலிருந்து உதித்த புது இயந்திரங்கள் விமானப் போரை எல்லையின்றிச் சிக்கல்கள் நிறைந்ததாக ஆக்கியிருந்தன. தனது விமானம் பற்றிய அறிவும் துணிவு நிறைந்த மனோதிடமும் மட்டுமின்றி, போர்க் களத்துக்கு மேலே விரைவாகத் திசையறியவும், விமானப் போரைத் தனித்தனி உறுப்புப் பகுதிகளாகப் பிரித்து அறியவும் தனது சொந்தப் பொறுப்பில் பெரும்பாலும் உத்தரவுக்குக் காத்திராமலே போர்முறைத் தீர்மானங்களை மேற்கொள்ளவும் நிறைவேற்றவும் வல்லமையும் பெற்றிருப்பது இப்போது விமானிக்கு இன்றியமையாததாக இருந்தது.

இவை எல்லாம் அசாதாரண அக்கறைக்கு உரியவைகளாக இருந்தன. ஆனாலும் போர்முனையில் பயங்கரமான தாக்குப் போர்கள் தணியாத உக்கிரத்துடன் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன. அத்தகைய சமயத்தில், உயரமான, ஒளி நிறைந்த வகுப்பறையில் வசதியான கறுப்புப் பயிற்சி மேஜையருகே உட்கார்ந்து விரிவுரைகளைக் கேட்டுக் கொண்டிருக்கையில் அலெக்ஸேய் போர்க்களம் செல்வதற்கு, சண்டைச் சூழ்நிலைமைக்கு ஆவல் கொண்டு ஏங்கலானான்.

அலெக்ஸேயின் நல்லகாலம், மேஜர் ஸ்த்ருகோவும் அதே பள்ளியில் சிறப்புப் பயிற்சி பெற்று வந்தார். இருவரும் நெடுங்கால நண்பர்கள் என்ற முறையில் சந்தித்து அளவளாவினார்கள். ஸ்த்ருகோவ், அலெக்ஸேய்க்கு இரண்டொரு வாரங்கள் பின்பே பள்ளிக்கு வந்தார். ஆனால் உடனேயே அதன் தனி வகை வாழ்க்கை முறைக்குப் பழகிவிட்டார், போர்காலத்தில் வழக்கமாக எதிர்ப்படாத அதன் கண்டிப்பான சட்ட திட்டங்களுக்குத் தம்மை இசைவித்துக் கொண்டார். எல்லோரும் அவரைத் தம்மவராக மதிக்கலானார்கள். மெரேஸ்யெவின் மனநிலையை அவர் உடனே கண்டுகொண்டார். இரவுக் குளியலுக்குப் பிறகு அவர்கள் தங்கள் தங்கள் உறங்குமிடங்களுக்குச் செல்லுகையில் அவர் அலெக்ஸேயை விலாவில் இடித்து, “ஆத்திரப்படாதே, தம்பீ!. நாம் சேர்ந்து கொள்ளும் முன்பு யுத்தம் முடிந்து விடாது! பெர்லின் வரை முன்னேற இன்னும் எவ்வளவோ பாடுபட்டாக வேண்டுமே. அடி மேல் அடி வைத்து முன் செல்ல வேண்டும்! நாமும் சண்டை செய்வோம். தெவிட்டத் தெவிட்டச் சண்டை செய்வோம்” என்றார்.

மெரேஸ்யெவும் ஸ்த்ருகோவும் இருந்த வகுப்பு விமானிகள் பனிக்கால இறுதியில் பறப்புப் பயிற்சி தொடங்கலானார்கள். குட்டை இறக்கைகளும் சிறு உடலுமாக, வடிவமைப்பில் பறக்கும் மீனை ஒத்திருந்த “லா-5′ விமானத்தை அதற்குமுன்னரே அலெக்ஸேய் நன்கு அறிந்திருந்தான். இடைவேளைகளில் அடிக்கடி விமான நிலையத்துக்குப் போய், இந்த விமானங்கள் குறுகிய ஒட்டத்துக்குப் பின்னே வானில் கிளம்பி செங்குத்தாக உயரே செல்வதையும் இளநீல வயிறுகள் வெயிலில் மினுமினுக்கக் காற்றில் சுழல்வதையும் அவன் பார்ப்பதுண்டு. அவன் விமானத்தின் அருகே சென்று அதை நோட்டமிட்டான், அதன் இறக்கைகளைத் தடவினான், விலாவில் தட்டிக் கொடுத்தான் – ஏதோ அது விமானம் அல்ல போலவும், நன்கு பேணப்பட்ட அழகிய உயர் சாதிப் புரவி போலவும். இதற்குள் பறப்பு தொடங்கும் நேரம் வந்துவிட்டது. ஒவ்வொருவனும் விரைவில் தன் திறைமையைச் சோதித்துப் பார்க்க ஆசைப்பட்டான். இதற்காக வெளித் தெரியாத சச்சரவு தொடங்கிற்று. பயிற்சி ஆசிரியர் முதலில் ஸ்த்ருகோவை அழைத்தார். மேஜர் ஸ்த்ருகோவின் கண்கள் ஒளி வீசின. அவர் குறும்புப் புன்னகை புரிந்தார், இன்பக் கிளர்ச்சியுடன் சீழ்கையடித்தவாறே பாராஷூட் வார்களை இறுக்கிக் கொண்டு விமானி அறைக் கதவைச் சாத்தினார்.

படிக்க:
இனி 5 ரூபாய் இரயில் பயணம் வாய்ப்பேயில்ல ராஜா : இரயில்வே தனியார்மயம்
“ஆளில்லா கடையில ஏன் டீ ஆத்தணும்” – முடங்கிய ஆடியோ பொருள் விற்பனை !

பின்பு எஞ்சின் பயங்கரமாக இரைந்தது, விமானம் இடம் பெயர்ந்தது. இதோ அது வானவில் நிறங்களில் வெயிலில் பெருகிய வெண்பனித் துகள் படலத்தை வால்போலப் பின்னேவிட்டவாறு விமானத் திடலில் ஓடியது. அப்புறம் மேலே எழும்பி, இறக்கைகள் சூரிய கிரணங்கள் பட்டு மினுமினுக்க ஆகாயத்தில் தொங்கியது. ஸ்த்ருகோவ் விமான நிலையத்துக்கு மேலே நேர்க்குத்தான வில் வடிவக் கோடு வரைந்தார், சில அழகிய வளையங்கள் செய்தார், இறக்கைகள் கீழ்மேலாகும்படிப் புரண்டார், திட்டமிட்ட பயிற்சிக் கோவையின் எல்லா அம்சங்களையும் சிறந்த தேர்ச்சியுடன், உண்மையான கலையழகு திகழச் செய்துமுடித்தார், பார்வையிலிருந்து மறைந்தார், பின்பு திடீரெனப் பள்ளிக் கட்டிட முகட்டின் பின்னேயிருந்து வெளிப்பட்டு, எஞ்சின் இரைந்தொலிக்க, தொடங்கிடத்தில் காத்திருந்தவர்களின் தொப்பிகளை நசுக்கிவிடுபவர் போல அவ்வளவு தாழ்வாக முழுவேகத்துடன் விமானத் திடல் மேலே பாய்ந்து சென்றார். மறுபடி பார்வையிலிருந்து மறைந்தவர் மீண்டும் தென்பட்டுத் திண்ணமாகக் கீழிறங்கி உயரிய திறமையுடன் முப்புள்ளியிடத்தில் விமானத்தை இறக்கி நிறுத்தினார். குறும்பு செய்ய வாய்த்த சிறுவன் போன்று கிளர்ச்சி பொங்க, களி துள்ளியவாறு, இன்ப வெறியுடன் விமானி அறையிலிருந்து குதித்தார் ஸ்த்ருகோவ்.

“இது விமானமல்ல, பிடில் வாத்தியம்! கடவுளாணை, பிடில் வாத்தியம்! ச்சைக்கோவ்ஸ்கியின் கிருதிகளை அதில் வாசிக்கலாம்!…” என்று, முரட்டுத் துணிச்சலுக்காகத் தம்மைக் கடிந்து கொண்ட ஆசிரியரின் பேச்சை இடைமறித்தவாறு ஆரவாரித்தார் அவர். “மெய்யாகவே சொல்லுகிறேன். இதல்லவா வாழ்க்கை, அலெக்ஸேய்!” என்று மெரேஸ்யெவை இறுகக் கட்டித் தழுவினார்.

விமானம் உண்மையிலேயே அருமையானது என்பதில் எல்லோரும் ஒருமனதாயிருந்தார்கள். அப்புறம் மெரேஸ்யெவின் முறை வந்தது. இயக்கு நெம்படிகளுடன் பொய்க்கால்களை வார்களால் இறுக்கிக் கொண்டு வானில் கிளம்பியதுமே இந்தக் குதிரையை கால்கள் அற்றவனான தன்னால் சமாளிக்க முடியும். ஆனால் அது அளவுக்கு மேல் துடியானது என்றும் இதனிடம் விசேஷ எச்சரிக்கை கடைபிடிப்பது அவசியம் என்றும் அவன் உணர்ந்தான்.

தரையிலிருந்து மேலே எழும்புகையில், வழக்கம் போல விமானத்துடன் அற்புதமான, முழுமையான தொடர்பை அவன் உணரவில்லை. பறப்பின் இன்பத்தைத் தருவதோ, இந்தத் தொடர்பு தான். இந்த விமானம் சிறந்த அமைப்பு. ஒவ்வொரு அசைவையும் மட்டுமே அல்ல, சுக்கான்கள் மீதிருந்த கைகளின் நடுக்கத்தையும் கூட விமானம் உணர்ந்து வானில் அதற்கேற்ற இயக்கத்தை வெளிப்படுத்தியது. விமானியின் செயல்பாட்டுக்கு ஏற்பச் செயல்படும் பாங்கில் அது உண்மையிலேயே பிடில் வாத்தியத்தை ஒத்திருந்தது. ஆனால் தனது கால்களின் இழப்பின் ஈடுசெய்ய முடியாமை, தனது பொய்க்கால்களின் பாங்கின்மை, அலெக்ஸேய்க்கு இப்பொழுது தான் சுள்ளென உறைத்தது. இந்த விமானத்தை இயக்குவதில் பொய்க்கால் – அது எல்லாவற்றிலும் சிறந்ததாயிருப்பினும், எவ்வளவு நிறையப் பயிற்சி செய்த போதிலும் – உயிரும் உணர்வும் மீள் விசையும் உள்ள நிஜக்காலுக்கு மாற்று ஆக முடியாது என்பதை அவன் புரிந்து கொண்டான்.

விமானம் இலேசாகவும் பிகுவுடனும் காற்றைத் துளைத்துச் சென்றது. இயக்கு நெம்படிகளின் ஒவ்வொரு அசைவுக்கும் ஏற்ப நன்கு செயல்பட்டது. ஆயினும் அலெக்ஸேய் அதை இயக்குவதற்கு அஞ்சினான். நேர்க்குத்தான வளையங்களில் கால்கள் தாமதித்து விடுவதையும் விமானிக்கு ஒரு வகை மறிவினை போலப் பழக்கமாகிவிடுகிற முரணற்ற ஒத்திசையை தாம் பெற முடியவில்லை என்பதையும் அவன் கண்டான். இந்தத் தாமதத்தின் விளைவாக நுண்செயலுள்ள விமானம் பம்பரம் போலச் சுழலத் தொடங்கக் கூடும், ஆபத்து நேரக்கூடும். தளை பூட்டப்பட்ட குதிரைப் போல உணர்ந்தான் அலெக்ஸேய். அவன் பயங்கொள்ளி அல்ல. தன் உயிருக்காக அவன் நடுங்கவில்லை. பாராஷூட்டைக் கூடச் சரிபார்த்துக் கொள்ளாமல் அவன் விமானத்தில் கிளம்பியிருந்தான். ஆனால் தனது அற்ப அஜாக்கிரதை கூடத் தனக்குச் சண்டை விமானப் படையிலிருந்து சீட்டைக் கிழித்து விடும், தனது பற்றுக்குரிய வேலையை அடையும் வழியை மூடிவிடும் என்பதனாலேயே அவன் பயந்தான். இரு மடங்கு ஜாக்கிரதையுடன் மனஞ்சோர்ந்த நிலையில் விமானத்தைத் தரையில் இறக்கினான். கால்களின் வளையாமை காரணமாக அவன் பிரேக்கைச் சட்டெனப் போட்டு விடவே விமானம் வெண்பனி மீது சில தடவைகள் பாங்கின்றி எகிறிக் குதித்தது.

பேசா வாயனாய், முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு விமானத்திலிருந்து இறங்கினான் அலெக்ஸேய். தோழர்களும் ஆசிரியருமே கூட, மெய்ப்புக்கு நடித்தவாறு போட்டி போட்டுக் கொண்டு அவனைப் புகழவும் வாழ்த்தவும் தலைப்பட்டார்கள். இந்தத் தயவு அலெக்ஸேயின் மனத்தைப் புண்படுத்த மட்டுமே செய்தது. இப்போது, சண்டை விமானத்தில் ஏறி அமர்ந்த பிறகு, தான் லாயக்கற்றவன் என்று காட்டிக் கொண்டது, அவனது அடிபட்ட விமானம் பைன் மரமுடிகளில் மோதி நொறுக்கிய அந்த மார்ச் மாதக் காலைக்குப் பிறகு யாவற்றிலும் கொடிய விபத்தாக இருந்தது. அலெக்ஸேய் பகலுணவு கொள்ளவில்லை. இரவுச் சாப்பாட்டுக்கும் வரவில்லை. பகல் வேளைகளில் தூங்கும் அறைகளில் இருப்பது பயிற்சிப் பள்ளி விதிகளின் படிக் கண்டிப்பாகத் தடை செய்யப்பட்டிருந்தது. எனினும் அவன் கைகளைத் தலைக்குகீழே வைத்தவாறு, பூட்சுகளைக் கழற்றாமலே கட்டிலில் படுத்துக் கிடந்தான். அவனது துயரத்தை அறிந்திருந்த பள்ளி முறையதிகாரிக்கோ, வழியே சென்ற கமாண்டர்களுக்கோ அவனைக் கடிந்து கொள்ள மனம் வரவில்லை. ஸ்த்ருகோவ் வந்து பேச்சுக் கொடுக்க முயன்றார். பதிலொன்றும் கிடைக்காமல் அனுதாபத்துடன் தலையை ஆட்டிவிட்டுப் போய்விட்டார்.

ஸ்த்ருகோவ் போனதுமே, அனேகமாக அவரைத் தொடர்ந்தாற்போல, மெரேஸ்யெவ் படுத்திருந்த அறைக்குள் வந்தார் லெப்டினன்ட் கர்னல் கப்பூஸ்தின். இவர் பயிற்சிப் பள்ளியின் அரசியல் துணைத் தலைவர். குட்டையான, பாங்கற்ற உடலைமைப்புள்ளவர் இவர். பருத்த மூக்குக் கண்ணாடி போட்டிருப்பார். நன்கு பொருந்தும் படி சரிப்படுத்ததப்படாத, சாக்கு மூட்டைப் போன்ற இராணுவச் சீருடை அணிந்திருப்பார். வெளித் தோற்றத்தில் பாங்கற்ற இதே மனிதர் சர்வதேச பிரச்சனைகள் பற்றி விரிவுரைகள் ஆற்றும்போது, ஒரு மாபெரும் யுத்தத்தில் பங்கெடுத்துக் கொள்வது குறித்துக் கேட்போரின் உள்ளங்கள் பெருமையால் பூரிக்கும்படி செய்துவிடுவார். எனவே இவருடைய விரிவுரைகளை மாணவர்கள் விருப்புடன் கேட்பார்கள். ஆனால் தலைமையதிகாரி என்ற வகையில் இவரை அவர்கள் அவ்வளவாக மதிப்பதில்லை. இவர் இராணுவச் சார்பற்றவர், விமானப்படைக்கு தற்செயலாக வந்திருப்பவர், விமானப் பறப்பு பற்றி எதுவும் புரியாதவர் என்ற எண்ணமே இதற்குக் காரணம். மெரேஸ்யெவைக் கவனிக்காமலே கப்பூஸ்தின் அந்த அறையைச் சுற்றிக் கண்ணோட்டினார், காற்றை முகர்ந்து பார்த்தார். திடீரெனக் கோபங்கொண்டார்.

“யார் அவன் இங்கே சிகரெட்டுக் குடித்தவன்? அதற்காகத்தான் புகைக்கும் அறைகள் இருக்கின்றனவே. தோழர் சீனியர் லெப்டினன்ட், இதற்கு என்ன அர்த்தம்?” என்றார்.

படிக்க:
பகவத்கீதை – புராணக்கதைகளை பொறியியல் பாடத்திட்டத்திலிருந்து நீக்கு ! CCCE கண்டனம்
காஷ்மீர் நிலச் சீர்திருத்தம் : சிறப்புரிமைகளால் விளைந்த பெரும் பலன் !

“நான் புகை பிடிப்பதில்லை” என்று கிடையை மாற்றாமலே ஏனோ தானோவென்று பதில் சொன்னான் அலெக்ஸேய்.

“ஆமாம் கட்டிலில் நீங்கள் எதற்காகப் படுத்திருக்கிறீர்கள்? விதிகள் உங்களுக்குத் தெரியாதா? பெரிய அதிகாரி வந்த போது நீங்கள் ஏன் எழுந்திருக்கவில்லை?… எழுந்து நில்லுங்கள்.”

இது கட்டளை அல்ல. மாறாக, இது நயப்பாங்குடன், அமைதியாகக் கூறப்பட்டது. எனினும் அலெக்ஸேய் சோர்வுடன் அதற்குக் கீழ்படிந்து கட்டிலின் பக்கத்தில் எழுந்து நின்றான்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

புற்றுநோய் : திருட்டுத்தனத்தை மறைக்க ஊரை மிரட்டும் மான்சாண்டோ

0

ரவுண்டப் புற்றுநோயை ஏற்படுத்தும் – அம்பலப்படுத்திய ஆராய்ச்சியாளர்களை ஒடுக்கும் மான்சாண்டோ

லகின் மிகப்பெரிய வேளாண் வேதியியல் நிறுவனமான மான்சான்டோவின் தயாரிப்புகள் புற்றுநோயை உருவாக்குவதாக கூறிய ஆய்வாளர்களுக்கு எதிராக ஒரு முழுமையான போரினை அந்நிறுவனம் தொடங்கியுள்ளது. அரசாங்கத்தையும் ஊடகங்களையும் கைக்குள் போட்டுக்கொண்டு தன்னுடைய தயாரிப்புகளுக்கு எவ்வித சிக்கலும் ஏற்படாமல் ஏமாற்றி வருகிறது என்பதை சமீபத்தில் வெளியான ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

monsanto weed killer
மான்சாண்டோ நிறுவனத்தின் களைக் கொல்லி. (மாதிரிப்படம்)

உலக சுகாதார நிறுவன புற்றுநோய் ஆராய்ச்சி பிரிவான சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி மையம் 2015-ம் ஆண்டு மான்சான்டோவின் புகழ்பெற்ற களைக்கொல்லியான ரவுண்டப், மனிதர்களுக்கு புற்றுநோயை உருவாக்குகிறது என்பதைக் கண்டறிந்தது. தொடர்ந்து அதற்கு எதிராக பல்வேறு தளங்களில் மான்சாண்டோ நிறுவனம் பரப்புரை செய்து வருகிறது என்பதை அதற்கெதிரான பல்லாயிரக்கணக்கான வழக்குகளின் ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

‘ரவுண்டப்’ களைக்கொல்லியில் உள்ள கிளைபோசேட் என்ற வேதிப் பொருள் புற்றுநோயை உண்டாக்குகிறது என்பதை ஐ.ஏ.ஆர்.சி (IARC)கண்டறிந்தது.

ஐ.ஏ.ஆர்.சி.-யின் ஆய்வுகளை தவறு என்று கூறவும் கிளைபோசேட்டிற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கவும் அரசாங்கத்திற்கு எந்த அளவிற்கு நெருக்கடியை மான்சான்டோ கொடுத்தது என்பதை நிறுவனத்திற்குள் பரிமாறிக்கொள்ளப்பட்ட மின்னஞ்சல்கள், நிறுவன கோப்புகள் மற்றும் நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆவணங்களை ‘தி இண்டெர்செப்ட்’ இணையதளம் முதலில் வெளிக்கொணர்ந்தது.

அரசாங்கத்தை வளைத்தல் :

நிறுவனத்திற்கு சாதகமான முடிவை எடுக்க அமெரிக்க அரசாங்கத்தை அணுகப்போவதாக ஒரு ஆவணம் கூறுகிறது. முதலில் ‘ஐ.ஏ.ஆர்.சி’-யை அணுகி கிளைபோசேட் குறித்து தெளிவுப்படுத்த வேண்டும் என்று வற்புறுத்த திட்டத்தை வகுத்தது. மேலும் அதற்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம், வேளாண்மைத் துறை, அமெரிக்க வர்த்தக பிரதிநிதியின் அலுவலகம், வெளியுறவுத்துறை, சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் திணைக்களம் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆகியோர்களை தனக்கு சாதகமாக மாற்றியது குறித்தும் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இன்னொரு மின்னஞ்சல் பரிமாற்றத்தின் படி, ஐ.ஏ.ஆர்.சி. -யின் ஆய்வினை முறியடிக்க கிளைபோசேட்டிற்கு ஆதரவாக ஊடகங்களில் விளம்பரங்கள் மற்றும் கருத்துரையாடல்களையும் மான்சாண்டொ வெளியிட்டது.

Monsanto Glyphosate weed killer
மான்சாண்டோவிடம் இருந்து ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள். ஐரோப்பாவில் நடந்த போராட்டக் காட்சி விளக்கம்.

மேலும் கூலிக்கு ஆட்களை அமர்த்தி ஒரு கடிதத்தை எழுதச் செய்து அதை காங்கிரஸ் உறுப்பினரான ராப் அடெர்ஹோல்ட் (R-AL) பெயரில் பொது சுகாதார ஆராய்ச்சி நிறுவனமும் ஐ.ஏ.ஆர்.சி. -யின் மிகப்பெரிய புரவலருமான தேசிய சுகாதார நிறுவனங்களின் (NIH) தலைவருக்கு அனுப்புவதற்கு திட்டமிட்டது. அந்த கடிதத்தில் கிளைபோசேட் விவகாரத்தில் சரியான முடிவு எடுக்காவிட்டால் என்.ஐ.எச் -க்கான நிதி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்று எச்சரிக்கவும் திட்டமிடப்பட்டது.

மேலும் காங்கிரசு உறுப்பினர்களான ஜேசன் சாஃபெட்ஸ் (R-UT), ட்ரே கவுடி (R-SC) மற்றும் லாமர் ஸ்மித் (R-TX, இப்போது ஓய்வு பெற்றவர்) மற்றும் காங்கிரஸ் மேற்பார்வை மற்றும் அறிவியல் குழுக்களில் உள்ள குடியரசுக் கட்சி உறுப்பினர்களுடன் ஐ.ஏ.ஆர்.சிக்கு எதிரான பிரச்சாரத்திற்கு தொடர்ந்து ஒருங்கிணைப்பில் ஈடுபட்டது.

அது மட்டுமல்லாமல் கிளைபோசேட் பிரச்சினையில் கேள்வி எழுப்புவதற்கென்றே ஒரு முழுக்குழு கூட்டத்தையும் ஹவுஸ் சயின்ஸ் குழுத்தலைவராக ஸ்மித் அர்ப்பணித்தார். அதன் பின்னர் “ஐ.ஏ.ஆர்.சி ஆய்விலுள்ள குறைபாடுகளை சரிசெய்ய” வலியுறுத்தி நோர்வேயிலுள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு கடிதங்களை அனுப்பினார்.

வாஷிங்டன் மாநில சட்டமியற்றுபவர்களைக் (Washington State Legislature) கண்காணிக்கவும், அவர்களுடன் ஆலோசனை செய்யவும் இங்கிலாந்தின் தனியார் உளவுத்துறை அமைப்பான ஹக்லுய்ட்டுடன் மான்சாண்டொ ஒப்பந்தம் செய்ததாக இரண்டாவது ஆவண தொகுப்பு அம்பலப்படுத்தியிருக்கிறது. எவ்வித கூடுதல் கட்டுப்பாடும் மான்சாண்டோ மீது விதிக்கப்படாது என்று வெள்ளை மாளிகை அரசியல் ஆலோசகர் ஹக்லுய்ட்டிற்கு உறுதியளித்திருக்கிறார்.

படிக்க :
♦ ராஜஸ்தான் – மான்சாண்டோவின் வலையில் சிக்கிக்கொண்ட ஈ !
♦ ரொட்டிக்கு உப்பு சைட் டிஷ் : அம்பலமான யோகி அரசு !

விமர்சகர்களை பலி வாங்குதல் :

சமீபத்தில் ‘தி கார்டியன்’ பத்திரிகைக்கு கிடைத்த ஆவணங்களின் படி காங்கிரஸை வளைப்பதையும் தாண்டி கிளைபோசேட்டின் ஆபத்துக்கள் குறித்து தகவல் வெளியிடும் பத்திரிகையாளர்கள், ஆர்வலர்களை கண்கானிக்க இணைவு மையத்தை (fusion center) ஏற்படுத்தியது மான்சண்டோவின் அரசியல் மற்றும் பொருளாதார வல்லமையை காட்டுகிறது.

சான்றாக, மன்சண்டோவை அம்பலப்படுத்தி “ஏமாற்று வேலை: ஒரு களைக்கொல்லி, புற்றுநோய் மற்றும் விஞ்ஞானத்தின் ஊழல் பற்றிய கதை – Whitewash: The Story of a Weed Killer, Cancer, and the Corruption of Science” என்ற தலைப்பில் பத்திரிகையாளார் கேரி கில்லாம் (Carey Gillam) 2017-ம் ஆண்டில் ஒரு நூலை எழுதியிருந்தார். அதை எதிர்கொள்ள அந்த நூல் குறித்து மோசமான விமர்சனங்களை வைப்பதற்கான நடவடிக்கைகளையும் அது மேற்கொண்டது. “கேரி கில்லாம் நூல்” என்ற தலைப்பில் அவரது நூலிற்கு களங்கத்தை ஏற்படுத்தும் விதமான 20 வகையான நடவடிக்கைகளை பட்டியலிட்டு அதை மான்சாண்டோ பராமரித்தது குறிப்பிடத்தக்கது.

Whitewash: The Story of a Weed Killer, Cancer, and the Corruption of Science
பத்திரிக்கையாளர் கேரி கில்லாம்

மேலும் கூகிள் நிறுவனத்திற்கு பணத்தை வாரியிறைத்து கில்லாமின் நூலை குறித்த மோசமான விமர்சனங்களை கூகிள் தேடு பொறியில் வருமாறு மான்சாண்டோ செய்தது. “மான்சாண்டோவிற்கு என்னுடைய நூலை பிடிக்காது என்பதும், எனக்கும் பதிப்பாளர்களுக்கும் அழுத்தம் கொடுத்து காலி செய்ய அது வேலை பார்த்தது என்பது எனக்கு எப்போதுமே தெரியும். ஆனால் பழி வாங்க இவ்வளவு பணத்தையும், நேரத்தையும், பலத்தையும் இவ்வளவு பெரிய நிறுவனம் செலவிடும் என்பதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. இது மலைப்பூட்டுவதாக இருக்கிறது” என்றார் கில்லாம்.

டிவிட்டர் செயல்பாட்டாளரும், இசையமைப்பாளரும், நீண்ட நாட்களாக மாண்சண்டோவை விமர்சனம் செய்து வருபவரான நீல் யங்கையும் தொடர்ந்து அருகிலிருந்து இணைவு மையம் கண்காணித்து வந்தது. மேலும் அவரது பாடல் வரிகளையும் கூட அது ஆய்வு செய்தது.

மான்சண்டோவின் ‘ரவுண்டப்’ மற்றும் ‘ரேஞ்சர் ப்ரோ’ ஆகிய இரண்டு களைக்கொல்லிகளை பயன்படுத்தியதால் டிவெய்ன் ஜான்சன் என்ற அமெரிக்கருக்கு புற்றுநோய் ஏற்பட்டது. தொடர்ந்து நடத்திய வழக்கில் அவருக்கு 289 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க வேண்டும் என்று 2018, ஆகஸ்டு மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது. புற்றுநோய்க்கான அறிகுறிகளை பார்த்தப்பிறகு மான்சண்டோவிடம் அவர் விளக்கம் கேட்டதற்கு அந்நிறுவனம் பதிலேதும் கூறவில்லை. ஆனால் அது புற்றுநோயை ஏற்படுத்தும் என்று நிறுவனத்திற்குள் நடந்த மின்னஞ்சல் பரிமாற்றங்கள் கூறுகின்றன. இப்போது வாழ்நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் ஜான்சனுக்கு முன்னரே இந்த தகவலை சொல்லியிருந்தால் அவர் மருத்துவம் பார்த்து புற்றுநோயை சரி செய்திருக்க முடியும்.

படிக்க :
களைக் கொல்லி மருந்து கேட்டால் புற்று நோயைத் தரும் மான்சாண்டோ !
♦ இந்தியாவில் போலீசின் மனநிலை என்ன ? கருத்துக்கணிப்பு !

மான்சண்டோவின் மீது இதுபோன்று பல்லாயிரக்கணக்கான வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அவற்றில் ஜான்சன் போன்று விரல் விட்டு எண்ணக்கூடிய சிலருக்கு தற்காலிக வெற்றி கிடைத்திருக்கலாம். “வழக்கில் வெற்றிப்பெற்று விட்டேன். ஆனால் இழப்பீடு கிடைக்கும் வரை நான் உயிருடன் இருப்பேனா என்பது எனக்கு தெரியவில்லை” என்று டிவெய்ன் ஜான்சன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.ஏ.ஆர்.சி.-யின் ஆய்வின் அடிப்படையில் ஃப்ரான்ஸில் மட்டுமே மான்சண்டோவின் ‘ரவுண்டப்’ தடை செய்யப்பட்டுள்ளது. தவறான விளம்பரங்கள் செய்வது, தவறான பரிசோதனை முடிவுகளை வெளியிடுவது, தன்னை அம்பலப்படுத்துபவர்களை பழி வாங்குவது என அதன் கொடூரமான முகம் தொடர்ந்து அம்பலப்படுத்தப்பட்டாலும் அரசாங்கங்களையும் ஊடகங்களையும் விலை பேசியோ, மிரட்டியோ அது தொடர்ந்து அடிபணிய வைக்கிறது.


– சுகுமார்
நன்றி
: ஆர்.டி.  

பசுமை படர்ந்த தேயிலைத் தோட்டங்களில் புதைந்து கிடக்கும் தொழிலாளர்கள் !

மேற்குவங்கம், இந்தியா : இந்தியாவின் கிழக்குப்புறம் அமைந்துள்ள மேற்கு வங்காளத்தின் டாடர்ஸ் பகுதியின் பசுமையான மலையடிவாரத்தில், பரந்து விரிந்த தேயிலைத் தோட்டங்கள் உள்ளன, இவை பிரிட்டிஷ் ஆட்சிக்காலந்தொட்டே இங்கு இருந்துவருகிறது.

15 ஆண்டுகளுக்கு முன்பு வரை அந்தப் பகுதி மலைவாழ் மக்களில் பெரும்பான்மையானோருக்கு இந்த தோட்டங்கள் ஒரு வாழ்வாதாரமாக இருந்தது. இவை மெதுவாக மூடப்பட ஆரம்பித்தப்பின், அந்த பகுதியைச் சேர்ந்த பெருவாரியான தொழிலாளர்களுக்கு வேலையில்லாமல் போனது, இது அவர்களை கட்டாய இடப்பெயர்வுக்கு இட்டுச்சென்றது.

தன்னை டீ வித்தவன் என பெருமையாக கூறிக்கொள்ளும் இந்திய பிரதமர் மோடி, ‘தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும்’ என இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்குறுதியளித்தார்.

ஆனால், தொழிலாளர்களின் நிலை மாறவில்லை. பெரும்பாலானோர், குடிபெயர்ந்துவிட்டனர், எஞ்சியிருப்போர், தினக்கூலிகளாகயினர் -இவர்கள் அரசாங்கம் நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியத்தைவிட மிகவும் குறைவான ஊதியத்தையே பெறுகின்றனர்.

படிக்க:
சிந்து சமவெளி நாகரிகத்தின் தொடர்ச்சிதான் கீழடி நாகரிகம் !
காஷ்மீர் சிறப்புரிமைகள் ரத்து : வெற்றி யாருக்கு ?

கடந்த மாதம் (ஆகஸ்டு-2019)  நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டம் நாட்டிலுள்ள அனைத்துத் தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை வழங்குவதாக வாக்குறுதியளித்தது. ஆனால்,  இந்தச் சட்டம் தேயிலைத் தோட்டங்களில் இன்னும் அமல்படுத்தப்படவில்லை.

“தேயிலையின் சந்தை வீதமும் அதை உற்பத்தி செய்வதற்கான மொத்தச் செலவும் கட்டுப்படியாகாமல் பல தோட்டங்கள் மூடப்பட்டது… [அது] தொழிலாளர்கள் சம்பாதிக்க பிற ஆதாரங்களை தேடவேண்டும் என்று கட்டாயப்படுத்தியது” என்று நெயில் செத்திரி, என்ற அரசு அலுவலர் தெரிவித்தார்.

ஒரு நாள் வேலைக்குப் பிறகு தேயிலை விவசாயிகள் வீடு திரும்புகின்றனர். சிலர் அடிப்படை சுகாதாரப் பராமரிப்பை பெறுகின்றனர் என்றாலும், கூலிக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்களாக வேலை செய்பவர்களுக்கு இங்கு எந்த சலுகைகளும் கிடைப்பதில்லை.

மீனு லோகார், தேயிலை தோட்டம் மூடப்பட்டதால் அவரது குடும்பத்தினரால், புது டெல்லிக்கு அனுப்பப்பட்டார்.

பல பழங்குடியின குழந்தைகள் தங்கள் குடும்பத்தின் வருமானத்தை நிரப்புவதற்கு, பள்ளியை விட்டுவிட்டு, கிடைத்த வேலைகளை செய்கின்றனர். புகைப்படத்தில் உள்ள குழந்தைகள் சந்தையில் விற்கப்படும் மரக்கட்டைகளை கண்டுபிடிக்க அவர்களின் உயிரை பணயம் வைக்கிறார்கள். நிரம்பப் பாயும் நதி பல உயிர்களை காவு கொண்டுள்ளது.

அகிலா லோகார் : 35 ஆண்டுகளாக தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றிய பின்னர், நிர்வாகத்தின் தவறான நடத்தை மற்றும் முறைகேடுகள் உட்பட, தானும் அதேபோல் தவறாக நடத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டினார். இவரது மகன் சாரதா மொஹாலி, 22, இவர், டூர்ஸ் டிவி என்ற ஒரு யூடியூப் சேனல் மூலம் விவசாயிகளின் பிரச்சினைகளை வெளிச்சம் போட்டுக் காட்டி வருகிறார்.

ஒரு விவசாயி, வேலை நேரத்தின் இடைவேளையில், நிரம்பி வழியும் நதியைக் கவனிக்கிறார். தேயிலைத் தோட்டங்கள் மூடப்பட்ட பின்னர் டஜன் கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் அல்லது பட்டினியால் இறந்துள்ளனர்.

குவாரிகளில் இருந்து கற்கள் ஏற்றிச் சென்ற லாரி, டோஅர்ஸ் பகுதியில் உள்ள ஒரு ஆற்றை கடக்கிறது. கல் உடைப்பது பல விவசாயிகளுக்கு ஒரு மாற்று வருவாய் ஆதாரமாக உள்ளது.

தூரிவில் பீர்பாரா பகுதியில் கல் ஏற்றும் இடத்தில் ஒரு தொழிலாளி. 20 கி. மீ. தொலைவில் உள்ள பூடான் மலைப் பகுதியிலிருந்து கனரக கற்கள் வருகிறது, சிறிய சிறிய துண்டுகளாக இங்கு  உடைக்கப்பட்டு பிறகு ரயில் மூலம் நாட்டின் பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படும்.

டோஅர்ஸ் பகுதி பீர்பானில் உள்ள கல் உடைக்கும் இடத்தில் தொழிலாளர்கள் தங்கள் பணி நேரம் முடிந்த பிறகு ஒரு சமுதாயமாக குளிக்கும் காட்சி.

கல் உடைக்கும் தொழிலாளர்கள் பணி முடிந்து வீடு திரும்பும் காட்சி.

கற்களை ஏற்றிச்செல்லும் கூட்ஸ் ரயில் ஒரு பாலத்தின் இடையில் நிற்கிறது. இந்த ரயில் கற்களை நாடுமுழுவதும் கட்டுமானம் நடக்கும் இடங்களுக்கெல்லாம் எடுத்துச்செல்லும்.

புஷ்மா டி, தற்போது மூடப்பட்ட பண்டப்பாண்டி தேயிலைத் தோட்டத்தில் உள்ள ஒரு சமூகப் பணியாளர், தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக ஒரு கூட்டுறவை ஆரம்பித்திருக்கிறார்.

தேயிலைத் தோட்டங்கள் மூடப்பட்டபின், பல இளைஞர்கள் தங்கள் குழந்தைகளையும் விட்டுவிட்டு வேலை தேடி பிற இடங்களுக்கு சென்றுவிட்டனர். இந்த குழந்தைகளும் தங்கள் பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு தங்கள் சகோதரர்களையும் வீட்டையும் பராமரித்து வருகின்றனர்.

ஒரு பழங்குடி பெண் அரசாங்க சுகாதார நிலையத்தில் மருத்துவம் பெறுகிறார்.  ஊட்டச்சத்து குறைபாடும் தொற்று நோய்களும் இப்பகுதியில் பொதுவாக தென்படுபவை.


செய்தி ஆதாரம் : Plight of India’s tea plantation workers
தமிழாக்கம்  :
மூர்த்தி

குரல் மட்டுமே எஞ்சியிருக்கிறது | அ. முத்துலிங்கம்

எழுத்தாளர் அ. முத்துலிங்கம்
ந்தக் கட்டிடத்தை அணுகியதும் நான் பார்த்த காட்சி எதிர்பாராதது. அதிர்ச்சியூட்டுவதாகவும் இருந்தது. பனி தூவி முடிந்து, மழை தூற ஆரம்பித்த ஒரு ஜனவரி வியாழன் காலை நேரம். பொஸ்டன் நகரத்து 20 பார்க் பிளாஸா உயர் கட்டிடத்தின் வரவேற்பறை. நான் உள்ளே கால் வைக்கமுடியாதபடி வரவேற்பறையை மறித்து குறுக்காகப் படுத்தபடி கிடந்தன மனித உடல்கள். நான் என்ன செய்வதென்று அறியாது திகைத்துப்போய் நின்றேன்.

எனக்கு முன் நின்ற குளிராடை அணிந்த உயரமான பெண் தயங்காமல் தன் குதி உயர் காலணியை எட்டி எட்டி வைத்து ஒரு கையையோ, காலையோ, பிருட்டத்தையோ மிதித்துவிடாமல் எச்சரிக்கையாக நடந்தார். நானும் அவர் பின்னால் தொடர்ந்துபோய் வரவேற்பறை மின்தூக்கியினுள் நுழைந்துகொண்டேன். அவர் தனக்கு வேண்டிய தள பட்டனை அமுக்கினார். நான் என்னுடையதை அமுக்க மின்தூக்கி மேலெழும்பியது.

பாஸ்டன் நகரத்தின் பார்க் பிளாசா வளாகத்தின் வாயிலில் இசுரேலின் தாக்குதலைக் கண்டித்து போராட்டக்காரர்கள்.

அந்தக் கட்டிடத்தின் பத்தாவது மாடியில் இருந்துதான் இஸ்ரேல் நாட்டு துணை தூதரகம் இயங்கியது எனக்கு தெரியாது. இஸ்ரேல் காஸாவை தாக்கியதை தொடர்ந்து பாலஸ்தீனிய ஆதரவாளர்கள் தங்கள் எதிர்ப்பை வரவேற்பறையை ஆக்கிரமித்து வெளிப்படுத்தினார்கள். அவர்கள் அமைதி முறையில் இந்தப் போராட்டத்தை நடத்துகிறார்கள் என்று அந்த உயரமான பெண்மணி சொன்னார்.

எட்டாவது தளத்தில் நான் என் நண்பரைச் சொன்ன நேரத்துக்கு சந்தித்தேன். அவர் எப்படியோ எனக்கு முன்னால் வந்து காத்திருந்தார். அவருக்கு இந்த போராட்டம் பிடிக்கவில்லை என்பதால் கோபத்திலிருந்தார். காஸாவில் நடக்கும் போருக்காக இங்கே இவர்கள் ஏன் வீணாக வரவேற்பறையை தடுத்து படுத்திருக்கிறார்கள், இவர்களால் என்ன ஆகப் போகிறது என்பதுதான் அவர் வாதம். அவர்கள் அமைதி முறையில் தங்கள் சகோதரர்களுக்காக குரல் கொடுக்கிறார்கள். இந்த நாட்டில் மனச்சாட்சி என்று ஒன்று உள்ளவர்கள் அதைச் செய்யாவிட்டால் மனிதப் பிறப்பு என்பது எதற்கு என்றேன். மூன்று அடிதூரம் பொஸ்டன் காற்று எங்களைப் பிரித்தது, ஆனால் எங்கள் மனங்களோ பல மைல்கள் தூரத்தில் நின்றன.

பாஸ்டன் நகரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்யும் காட்சி. (கோப்புப் படம்)

நான் வந்த காரியத்தை முடித்துக்கொண்டு கீழே இறங்கியபோது இன்னொரு காட்சி கிடைத்தது. பொலீஸ் வண்டிகள் வெளியே நிற்க, நிறைய பொலீஸ்காரர்கள் கட்டிடத்தை சூழ்ந்துவிட்டார்கள். ஓர் உடலை நாலு பேர் சேர்ந்து காவினார்கள். இடது காலை ஒருவர் வலது காலை ஒருவர் இடது கையை ஒருவர் வலது கையை ஒருவர் என்று பிடித்து தூக்கிப்போய் வாகனத்தை நிறைத்தார்கள். சிலர் பதாகைகளை ஏந்தினார்கள். சிலர் இஸ்ரேல் ஒழிக என்று குரல் எழுப்பினார்கள். பெட்ரோல் கலந்த தண்ணீர் குட்டை பல வண்ணங்கள் எழுப்ப அதிலே நின்றபடி ஒரு பெண்மணி தன் குழந்தையுடன் சேர்த்து தன்னையும் பொலீஸ் வானில் ஏற்றும்படி கத்தியதை அன்று முழுவதும் என்னால் மறக்க முடியவில்லை.

படிக்க:
ஹேப்பி பர்த்டேவுக்கு காசு ! ஏகே47 இலவசம் !!
♦ காஷ்மீரின் சிறப்புரிமை ரத்து : இந்து ராஷ்டிரத்துக்கான முன்னோட்டம் !

எனக்கு பாலஸ்தீனிய கவிஞர் முகமட் டார்விஷ் ஞாபகத்துக்கு வந்தார். அவருக்கு காவல் அரண்கள் பிடிக்காது, அடையாள அட்டையையும் வெறுத்தார். அவை அடக்குமுறைகளின் சின்னம். ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் நாடுகளில்தான் காவல் அரண்கள் இருக்கும், அடையாள அட்டைகளும் புழங்கும். ஒரு காவல் அரண் காவலாளியிடம் சொல்வது போன்ற அவருடைய கவிதை பிரபலம்.

எழுதிக்கொள்
நான் ஒரு அரேபியன்
அட்டை எண் 50000
எனக்கு எட்டு பிள்ளைகள்
ஒன்பதாவது கோடை முடிவில் பிறக்கும்
எனவே, உனக்கு கோபமா?

எழுதிக்கொள்
நான் ஒரு அரேபியன்
நான் தோழர்களுடன் கல்லுடைக்கிறேன்
எனக்கு எட்டு பிள்ளைகள்
அவர்களுடைய ரொட்டியையும்
உடைகளையும் நோட்டுப் புத்தகங்களையும்
கல்லிலேயிருந்து
உடைத்து எடுத்துக்கொள்கிறேன்.

பொஸ்டன் நண்பரிடம் மேலே கூறிய கவிதையை சொல்லிக்காட்டியபோது அவர் கோவலனுக்கு ஓர் அடையாள அட்டை இருந்திருந்தால் அன்று ஒரு கொலையை தடுத்திருக்கலாம் என்றார். அடையாள அட்டையை தகவலுக்காக பயன்படுத்துவது வேறு, ஆனால் குறிப்பிட்ட மக்களை அடையாளப்படுத்தவும், அடிமைப்படுத்தவும், சிறுமைப்படுத்தவும் பயன்படுத்தினால் அது அரச பயங்கரவாதம்.

முகமட் டார்விஷ் அதைத்தான் எதிர்த்து குரல் எழுப்பினார். அநீதிக்கும் அடக்குமுறைக்கும் எதிரான குரல் அது. அதை மனிதன் செய்யாவிட்டால் அவன் பிறந்து பூமியில் ஓர் இடத்தை நிரப்பியதற்கான அர்த்தமே இல்லாமல் போய்விடும். மாவீரன் நெப்போலியன் சொன்னான் 10,000 பேருடைய மௌனத்திலும் பார்க்க ஒருவருடைய குரல் சத்தமாக ஒலிக்கும் என்று. நண்பர் அப்பொழுதும் சமாதானமாகவில்லை. ஐயாயிரம் மைல்களுக்கப்பால் நடக்கும் ஒரு போருக்கு இங்கே பொஸ்டனில் பனிச்சேற்றில் புரள்வதால் ஒன்றுமே நடக்காது என்பதுதான் அவர் நிலைப்பாடு. உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் ஒலிக்கும் ஆயிரமாயிரம் குரல்கள் அடக்குபவர்களின் ஆன்மாவைத் தொடும் என்றேன். அது போலவே நடந்தது. பத்து நாட்களில் காஸா போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

Mahmoud-darwish
முகமட் டார்விஷ்

நான் ஆப்பிரிக்காவில் வாழ்ந்த காலங்களில் அடிக்கடி காவல் அரண்களைக் கடக்க நேரிடும். துப்பாக்கியை நெஞ்சோடு அணைத்த காவலர்கள் அடையாள அட்டையை மேலும் கீழும் ஆராய்வார்கள். தலைகீழாக வெளிச்சத்தில் படித்துப் பார்த்து அப்படியும் திருப்தி வராமல் சுரண்டிப் பார்த்து உறுதிசெய்வார்கள். ஒரு எதிர் வார்த்தை பேசினால் அதுவே கடைசி வார்த்தையாக அமைந்துவிடக்கூடும். அந்தச் சமயங்களில் நான் என்னை மிகவும் கேவலமாக உணர்வேன். அப்படியெனில் அந்த நாட்டு மக்கள் எப்படி உணர்ந்திருப்பார்கள். ஓர் உண்மையான அரசு செயல்படும்போது அது இருப்பது தெரியக்கூடாது என்பார்கள். ஆனால் ஓர் அடக்குமுறை நாட்டில் ஒவ்வொரு கணமும் அரசுதான் அரசோச்சுவதை ஞாபகமூட்டியபடியே இருக்கும்.

மார்ட்டின் நியமொல்லர் என்பவரை எட்டு வருட காலம் ஹிட்லர் சிறையில் போட்டு அடைத்துவைத்தான். ஆனால் அவர் குரலை அடைத்துவைக்க முடியவில்லை. ஹிட்லரின் இன அழிப்புக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த மார்ட்டினுடைய குரல், அவர் 84-ல் இறந்துபோனாலும், ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அவருடைய கவிதை இன்றைக்கும் கேட்கிறது.

முதலில் அவர்கள் யூதரைத் தேடி வந்தார்கள்
நான் அவர்களுக்காகக் குரல் கொடுக்கவில்லை
ஏனென்றால் நான் யூதனில்லை.
பின்னர் அவர்கள் கம்யூனிஸ்டுகளை தேடி வந்தார்கள்
நான் அவர்களுக்காக குரல் கொடுக்கவில்லை
ஏனென்றால் நான் கம்யூனிஸ்டு இல்லை
பின்னர் அவர்கள் தொழில் சங்கத்தினரை தேடி வந்தார்கள்
நான் அவர்களுக்காக குரல் கொடுக்கவில்லை
ஏனென்றால் நான் தொழில் சங்கத்தவன் இல்லை
அடுத்து அவர்கள் என்னைத் தேடி வந்தார்கள்
அப்போது குரல் கொடுப்பதற்கு எனக்கு
ஒருவருமே இல்லாமல் போய்விட்டார்கள்.

எனக்கு ஓர் இளம் நண்பர் இருக்கிறார், பெயர் எம்.ரிஷான் ஷெரீப். நல்ல கவிஞர் அத்தோடு எழுத்தாளர். அவர் ஒருமுறை கொழும்பில் ஒரு பழைய புத்தகக் கடைக்கு போனார். மூன்று மணிநேரம் செலவழித்து பல அருமையான தமிழ்ப் புத்தகங்களை வாங்கி அவற்றை பையிலே நிரப்பிக்கொண்டு, அந்தப் பாரத்தில் பை தரையில் இழுபட, பஸ்சில் ஏறினார். புறக்கோட்டையை சமீபித்தபோது காவல் அரணில் பஸ்சை நிறுத்தி ஒவ்வொருவராக சோதனைபோட ஆரம்பித்தார்கள்.

படிக்க:
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை குறித்து லண்டனில் கூட்டம் நடத்தும் டிஐஜி வீ. பாலகிருஷ்ணன்
♦ உனக்கே தெரியாது … நீ எப்பேர்ப்பட்ட மனிதன் என்று !

சிங்களம் தெரியாதவர்கள், அட்டை இல்லாதவர்கள், தமிழர்கள் எல்லோரும் ஓரத்தில் வரிசையாக நிறுத்தப்பட்டார்கள். அவரை சோதித்த காவலனின் கையில் புத்தகம் அகப்பட்டுவிட்டது. ஏதோ கடத்தல்காரனை பிடித்ததுபோல அவன் பரபரப்பானான். நீண்ட விசாரணை நடந்தது. படையதிகாரியை கூப்பிட்டு அவரைக் கலந்தாலோசித்தான். பஸ்சிலே எல்லோரும் திரும்பவும் ஏறி உட்கார்ந்துகொண்டு இவருக்காக காத்து நின்றார்கள். இறுதியில் மூன்றுமணிநேரம் பரிசோதித்து வாங்கிய அத்தனை புத்தகங்களையும் பறித்துக்கொண்டு ‘ஓடடா’ என்று துரத்திவிட்டான். இந்த விவரங்களை அவர் என்னிடம் பகிர்ந்துகொண்டார். தமிழ் புத்தகம் வைத்திருந்த குற்றத்தை தவிர அவர் வேறு ஒன்றையும் செய்திருக்கவில்லை. அவருக்கு இனிமேல் காவல் அரணையும், அடையாள அட்டையையும் நினைக்கும்போது நடுக்கம் வராமல் வேறு என்ன செய்யும்.

இதை நான் எழுதிக்கொண்டிருக்கும் போது பொஸ்டன் குளோப் நாளிதழ் ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறது. வின்செஸ்டர் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் பிரியா சுந்தரலிங்கம் என்ற 17 வயது மாணவி கடந்த பதினொரு நாட்களாக உணவு உட்கொள்ளவில்லை. இலங்கை போரில் சிக்கி தினம் செத்துக்கொண்டிருக்கும் 300,000 தமிழ் மக்களுக்காக உண்ணாவிரதம் இருக்கிறார். அவருடைய தாயார் தன் மகள் பொஸ்டனில் இருந்தாலும் அவருடைய இதயம் முழுக்க ஈழத்து போரில் அல்லலுறும் மக்களிடம் இருப்பதாகக் கூறுகிறார். பிரியா கடைசி வேளை உணவை பிப்ரவரி இரண்டாம் தேதி இரவு உண்டார். ஒரு மாதகாலம் உணவு உட்கொள்ளாமல் தண்ணீர் மட்டுமே அருந்தப்போவதாக கூறுகிறார். ‘இனம் அழிகிறது. நிலம் அழிகிறது. ஒரு கலாச்சாரம் அழிகிறது. போரை நிறுத்த உலகம் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் நாம் எல்லாத்தையும் இழந்துவிடுவோம்’ என்று சொல்கிறார். அவருடன் சேர்ந்து 1100 அமெரிக்கர்கள் ஒருவேளை உணவைத் துறந்திருக்கிறார்கள். பத்தாயிரம் வேளை உணவைத் துறப்பது தங்கள் இலக்கு என்று கூறுபவரிடம் உண்ணாவிரதத்தால் என்ன பயன் என்று கேட்டால் உணவு துறப்பதும் உலகை நோக்கிய ஒருவித குரல்தான் என்று பதில் கூறுகிறார்.

படிக்க:
குரல் இருக்கிறது | அ.முத்துலிங்கம்
♦ சட்டவிரோதமான காரியம் | அ. முத்துலிங்கம்

கடந்த மாதங்களில் கனடாவில், இலங்கை தமிழின ஒழிப்பை எதிர்த்து பல கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்களும், மனிதச் சங்கிலித் தொடர்களும், மெழுகுவர்த்தி ஊர்வலங்களும், கனடிய அரசு தலையிட்டு போரை நிறுத்தவேண்டுமென்று கோரி நடந்துகொண்டிருக்கின்றன. சமீபத்தில் கனடாவில் மரண அஞ்சலிக் கூட்டங்களும் அதிகமாகி வருகின்றன. ஒவ்வொரு நாளும் கனடாவில் இருக்கும் உறவினர்களுக்கு இலங்கையிலிருந்து மரணச் செய்திகள் வருகின்றன. போர் நிலத்தை விட்டு புலம்பெயர்ந்தபோது வீதிகளில் குண்டுகள் விழுந்து இறந்தவர்கள் அதிகம். குழந்தைகள் பெற்றோரை இழந்து தவித்தன. கணவனே கதியென்று அவர் பின்னால் வந்த ஒரு பெண் கணவனை பறிகொடுத்துவிட்டு நிற்கிறார். ‘இரு என்றால் இருந்து, நில் என்றால் நின்று, வா என்று சொன்னபோது அவருடன் புறப்பட்டேன். இப்ப என்னைவிட்டுவிட்டு போய்விட்டார். நானும் செத்துப் போறேன்’ என்று தலையிலடித்து அழுகிறார் அந்தப் பெண். எனக்கு புறநானூறுப் பாடல்தான் நினைவுக்கு வருகிறது.

கலம் செய் கோவே, கலம் செய் கோவே
அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய
சிறு வெண்பல்லி போலத் தன்னொடு
சுரம் பல வந்த எமக்கும் அருளி
வியல் மலர் அகன் பொழில் ஈமத் தாழி
அகலிதாக வனைமோ
நனந்தலை மூதூர்க் கலம் செய் கோவே.

‘குயவனே, வண்டிச் சில்லில் ஒட்டியிருக்கும் பல்லி, வண்டி போகும் இடம் எல்லாம் போவதுபோல நானும் கணவர் பின்னால் அவர் சென்ற இடமெல்லாம் சென்றேன். இன்று என்னை விட்டுவிட்டு போய்விட்டார். அவரை புதைப்பதற்கு செய்யும் தாழியை பெரிதாகச் செய். எனக்கும் இடம் வேண்டும்.’

இரண்டாயிரம் வருடங்கள் முந்தைய புறநானூற்றுப் பெண்ணுக்கும் இன்றைய ஈழத்துப் பெண்ணுக்குமிடையில் எனக்கு வித்தியாசம் தெரியவில்லை.

Chettikulam-internment-campApril2009இவ்வளவு துன்பங்களுக்கு மத்தியிலும் ஒரு நல்ல செய்தி வந்திருக்கிறது. போரில் சிக்கி சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்படும் மக்களுக்கு அரசாங்கம் பாதுகாப்பு வழங்க தீர்மானித்திருக்கிறது. அது ‘நல்வாழ்வு கிராமங்கள்’ அமைக்கும் திட்டம். யாருக்கு நல்வாழ்வு என்பதை அதிகாரிகள் திட்டவட்டமாக அறிவிக்கவில்லை. யுத்த நிலத்திலிருந்து தப்பி வந்த மக்கள் வன்னிக்கு வெளியே தங்கள் புதுவாழ்வை தொடங்கலாம். வவுனியாவில் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் நாலு கிராமங்களும், 100 ஏக்கர் நிலப்பரப்பில் மன்னாரில் ஒரு கிராமமும் அமைக்கப்படும். இந்தக் கிராமங்கள் முழுக்க முழுக்க ராணுவக் கட்டுப்பாட்டில் இயங்குவதால் உச்சமான பாதுகாப்புக்கு உத்திரவாதம் உள்ளது என்று அரசாங்கம் சொல்கிறது.

உண்மையில் இவை கிராமங்கள் அல்ல, ஹிட்லரின் இன அழிப்பு வதை முகாம்கள் போல concentration camps தான் என்பதை அதிகாரிகள் மறுத்திருக்கிறார்கள். உயரமான முள்ளுக் கம்பி வேலிகள் இராதென்றும், அகதிகளின் புஜங்களில் அடையாள எண்கள் பச்சை குத்தப்படமாட்டாது என்றும் அவர்கள் உறுதியளித்திருக்கிறார்கள். இதிலே கவனிக்க வேண்டியது என்னவென்றால் இந்தக் கிராமங்களில் 39000 தற்காலிக வீடுகள், 7800 கழிப்பிடங்கள், தபால் நிலையங்கள், வங்கிகள், கடைகள் என்று கட்டுவதற்கு திட்டம் போடப்பட்டிருக்கிறது. வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் அகதிகள் வாழப்போவதால் தவறுதலாக விமானங்கள் அவர்கள் தலை மீது குண்டுகள் போடும் அபாயம் இல்லை.

அகதிகளின் பெயர்கள் சிங்களப் பெயர்களாக மாற்றப்படும் என்றும், அகதிப் பெண்களின் கர்ப்பம் அழிக்கப்படும் என்றும், பள்ளிக்கூடங்களில் சிங்களம் மட்டுமே பயிற்றுவிக்கப்படும் என்றும் வதந்திகள் கிளம்பியிருக்கின்றன. அவை எல்லாம் பொய். அத்துடன் இன்னொரு முக்கியமான விடயம். இந்த திட்டத்தை நுட்பமாக ஆராய்பவர்கள் நச்சு வாயுக் கிடங்குகளுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்பதை அவதானிக்கலாம். அரசாங்கம் எவ்வளவு விவேகத்துடனும், தீர்க்க தரிசனத்துடனும், கரிசனத்துடனும் இப்படியான தீர்வு வேலையை முன்வைத்தாலும் கத்துபவர்கள் கத்திக்கொண்டே இருப்பார்கள்; குறை சொல்பவர்கள் சொல்லத்தான் செய்வார்கள்.

இன்று காலை நான் கம்புயூட்டரில் இருந்தபோது என்னை ஒருவர் சாட்டில் (chat) அழைத்தார். சில நிமிடங்கள் பேசிய பிறகு எங்கள் உரையாடல் இப்படி முடிவுக்கு வந்தது.

உங்கள் நாட்டில் காவல் அரண்கள் உள்ளனவா?

இல்லை

அடையாள அட்டையை காட்டச் சொல்லி கேட்பார்களா?

இல்லை

அங்கே நீங்கள் சுதந்திரமாக எதற்காகவும் குரல்கொடுக்கலாமா?

கொடுக்கலாமே.

அப்ப அது நல்ல நாடாகத்தான் இருக்கவேண்டும்.

யோசித்துப் பார்த்தபோது இந்த முகம் தெரியாத நண்பர் சொன்னதில் அர்த்தம் இருந்தது. அதிகாரத்தை கையிலெடுத்தவர்கள்தான் அடுத்தவர் எப்படி வாழவேண்டும் என்பதை முடிவுசெய்வார்கள். அடக்குமுறை இல்லாத, அநீதிக்காக குரல் கொடுப்பதை தடை செய்யாத நாடு ஒருவருக்கு வாய்ப்பது அரிது. அதுதான் பொஸ்டன் மாணவியின் குரலும், வண்டிச்சக்கரத்து பல்லிபோல புருசனுடன் சென்று அவனைப் பலிகொடுத்த பெண்ணின் குரலும் ஒலிக்கின்றன.

மனிதன் எல்லாம் இழந்த நிலையில் அவனிடம் எஞ்சியிருப்பது அவனுடைய குரல் மட்டுமே. மார்ட்டின் நியூமொல்லரின் குரல் இன்னும் ஒலிக்கிறது. முகமட் டார்விஷின் குரல் அவர் இறந்தபின்னும் தொடர்கிறது. சு. வில்வரத்தினத்தின் தோப்பிழந்த குயிலின் குரல் இன்றைக்கும் கேட்கிறது. குரல் ஒலிக்குமட்டும் மனிதன் நம்பிக்கை இழப்பதில்லை.

அ. முத்துலிங்கம்

எழுத்தாளர் முத்துலிங்கத்தின் இணைய தளம்

எழுத்தாளர் அறிமுகக் குறிப்பு :
இலங்கையில் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்ததன் பின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டட்ர்ட் மனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்தி செய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்தேன். 2000ம் ஆண்டில் ஓய்வு பெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.

அறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல்கள் என எழுதியிருக்கிறேன்.

(அ.முத்துலிங்கத்தின் தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகளை அவரது அனுமதியுடன் இங்கே வெளியிடுகிறோம்.)

பெஞ்ஜமின் பிராங்க்ளினும் அமெரிக்க பொருளாதாரத்தின் வளர்ச்சியும் | பொருளாதாரம் கற்போம் – 37

0
Benjamin-Franklin

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் – பாகம் 37

அத்தியாயம் ஏழு | பெஞ்ஜமின் பிராங்க்ளினும் அட்லாண்டிக் மாகடலுக்கு அப்பால் அரசியல் பொருளாதாரத்தின் வளர்ச்சியும்

அ.அனிக்கின்

18-ம் நூற்றாண்டின் மாபெரும் சிந்தனையாளர்களில், எல்லாவற்றையும் உள்ளடக்கிய சிந்தனையாளர்களில் கடைசியாக வந்தவர்களில் ஒருவர் பிராங்க்ளின். வட அமெரிக்காவில் அவர் வகித்த பாத்திரத்தை அறிவு வளர்ச்சிக்குக் காரணமான மாபெரும் முன்னோடிகளோடு ருஷ்யாவில் லொமனோசொவ், இங்கிலாந்தில் நியூட்டன், பிரான்சில் டெகார்ட் போன்றவர்களோடு ஒப்பிடுவது அவசியம்.

அவர் ஒரு பெளதிக விஞ்ஞானி; நவீன மின்னியல் விஞ்ஞானத்தைப் படைத்தவர்களில் ஒருவர். தம் காலத்திய சமூகத்தின் புதிய, முதலாளித்துவ ஜனநாயகக் கருத்துக்களைத் தற்சிந்தனையோடு எடுத்துக் கூறிய தத்துவஞானி, எழுத்தாளர். அவர் அரசியல் மற்றும் சமுதாயத் தலைவர். அமெரிக்கப் புரட்சி மற்றும் புதிய அரசின் விடுதலைப் போராட்டத்தின் அதிகத் தீவிரமான தலைவர்களில் ஒருவர். புத்தகம் அச்சிடுவதே தன்னுடைய முக்கியமான தொழில் என்று கருதிய அந்தப் புகழ்மிக்க அமெரிக்கரின் ஈடுபாடுகள், பணிகள் ஆகியவற்றைப் பற்றிய இந்தப் பட்டியல் முழுமையானதல்ல.

அவர் தன்னுடைய தத்துவஞான, அரசியல் பணிகளின் சுற்றுவட்டத்துக்குள்ளாக அரசியல் பொருளாதாரப் பிரச்சினைகளைப் பற்றியும் எழுதினார். அமெரிக்கா என்ற புதிய உலகத்தில் பொருளாதாரச் சிந்தனையின் முன்னோடிகளில் அவரும் ஒருவர்.

அவர் வாழ்க்கையும் எழுதிய நூல்களும்

பிராங்க்ளின் எழுதிய சுயசரிதை குறிப்பிடத்தக்க வகையிலிருக்கின்ற வரலாற்று, இலக்கிய ஆவணமாகும். அவர் தன்னுடைய எழுபத்தொன்பதாம் வயதில் இந்தப் புத்தகத்தை எழுதினார். அதில் ஒரு அத்தியாயத்தில் தன்னுடைய நீண்ட வாழ்க்கையில் தனக்குத் தொடர்ச்சியாக மகிழ்ச்சி இருந்ததைப் பற்றி எழுதுகிறார். குடிமகன், அறிஞர், தனிப்பட்ட மனிதர் – இப்படி ஒவ்வொரு வகையிலும் அவர் மகிழ்ச்சியோடிருந்தார். அவருடைய வாழ்க்கையின் பிற்பகுதி முழுவதும் வட அமெரிக்காவின் சுதந்திரம் என்ற இலட்சியத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. அந்த இலட்சியம் அவருடைய வாழ்க்கைக் காலத்திலேயே வெற்றியடைந்தது. அவர் விஞ்ஞானத்துக்குச் செய்த சேவைகளை உலகம் முழுவதும் அங்கீகரித்தது. அவர் சொந்த வாழ்க்கையிலும் குடும்பத்திலும் மகிழ்ச்சியோடிருந்தார் (அவருடைய ஒரே மகனான வில்லியம் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற யுத்தத்தில் தன் தகப்பனாருக்கும் தாய்நாட்டுக்கும் விரோதமான எதிரிகளை – ஆதரித்ததை நாம் ஒதுக்கி விடலாம்).

பெஞ்ஜமின் பிராங்க்ளின்

ஒரு ஏழைப் பயிற்சியாளராக வாழ்க்கையைத் தொடங்கிய பிராங்க்ளின் தன்னுடைய வாழ்க்கையின் இறுதியில் பெரும் பணக்காரராக இல்லாவிட்டாலும் சுமாரான பணக்காரராக இருந்தார். அவருக்குப் பல வீடுகளும் அதிகமான நிலங்களும் சொந்தமாக இருந்தன. அந்தக் காலத்தில் குறிப்பாக அமெரிக்காவில் செல்வத்தின் முக்கியமான சின்னங்கள் இவைதான்.

பிராங்க்ளின் புதிய உலகத்தைச் சேர்ந்தவர். அங்கே, மார்க்ஸ் எழுதியிருப்பது போல், ”முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் அவற்றின் பிரதிநிதிகளோடு சேர்த்து இறக்குமதி செய்யப்பட்டு வரலாற்று மரபு இல்லாததை ஈடு செய்யும் விதத்தில் மிக அதிகமான இயற்கை வளத்தைக் கொண்டிருந்த மண்ணில் அவை வேகமாக விளைந்தன”. (1)

இங்கிலாந்திலிருந்த மத, அரசியல் ஒடுக்குமுறையைத் தாங்க முடியாமல் ஓடி வந்த பரிசுத்தவாதிகள் அங்கே முதன் முதலாகக் குடியேறியவர்களில் பெரும்பான்மையினர். அவர்களின் வழிவந்தவர்கள் கன்னி நிலங்களைப் பயிரிட்டு விவசாயத்தைத் தொடங்கினார்கள்; வெகு சீக்கிரத்தில் நகரங்களில் கைத்தொழில்களைத் தொடங்கினார்கள். அவர்களும் ஸ்பானிய ஆக்கிரமிப்பாளர்களைப் போலவே பணக் கடவுளை வழிபட்டார்கள் – ஆனால் அந்த முறை வேறுவிதமாக இருந்தது.

அவர்கள் வரலாற்றிலேயே மிகவும் முந்திய, அதிக முழுமையான முதலாளித்துவ ஜனநாயகத்தை ஏற்படுத்தினார்கள்; தனிநபர் சுதந்திரம், நிர்வாக அதிகாரத்தைத் தேர்ந்தெடுத்தல், சுதந்திரமான நீதித்துறை ஆகிய கருத்துக்களை அவர்கள் ஆதரித்தார்கள். ஆனால் இந்த ஜனநாயகத்தில் சட்டத்துக்கு முன்பு சம்பிரதாய ரீதியான சமத்துவம் அரசியல், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை மூடிமறைக்கும் திரையாகப் பயன்பட்டது; அங்கே சம்பிரதாயத்துக்கு விரோதமான கருத்துக்கள் ஒடுக்கப்பட்டன.

படிக்க:
அண்டப் புளுகு … ஆகாசப் புளுகு … ஆர்.எஸ்.எஸ். புளுகு !
♦ வளர்ந்து வரும் வலதுசாரி பயங்கரவாதம் – சில குறிப்புகள் | கலையரசன்

இந்தப் புதிய அமெரிக்க இனத்தில் செல்லரித்துப் போன நிலப்பிரபுத்துவ உயர் வகுப்பு இல்லை; அவர்கள் பட்டங்களையும் குடும்பங்களின் தனிச் சலுகைகளையும் ஏளனம் செய்தார்கள். ஹெர்மன் மெல்வில் எழுதிய இஸ்ரேல் பாட்டர் என்ற நாவலின் கதாநாயகனான அமெரிக்கன் விவசாயியாகவும் மாலுமியாகவும் இருப்பவன். அமெரிக்க சுதந்திரப் போர் நடைபெறும் காலத்தில் இங்கிலாந்துக்கு வந்தான். அவனால் ஆங்கில அரசவையினரைப் பார்த்து “சர்” என்று சொல்ல முடியவில்லை; மூன்றாம் ஜார்ஜ் மன்னரிடம் பேசும் பொழுது “மாட்சிமை பொருந்திய” என்று சேர்த்துச் சொல்ல முடியவில்லை என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் பென்சில்வேனியாவின் நில உடைமையாளர்களும் மஸாசூ ஸெட்ஸ் வணிகர்களும் ஆணவத்தில் ஆங்கிலப் பிரபுக்களுக்குச் சற்றும் குறைந்தவர்களல்ல.

USAமேற்கு ஐரோப்பாவோடு ஒப்பிடுகின்ற பொழுது அமெரிக்காவில் மத சுதந்திரமும் சகிப்புத் தன்மையும் நிலவும் என்று நம்பப்பட்டது. ஆனால் பிராங்க்ளின் பிறப்பதற்குச் சில வருடங்களுக்கு முன்பு அவருடைய சொந்த ஊரான போஸ்டன் நகரத்துக்கு மிக அருகேயுள்ள சேலம் என்ற இடத்தில் “சூனியக்காரிகள்” விசாரிக்கப்பட்டு சிரச் சேதம் செய்யப்பட்டனர். அங்கே வெவ்வேறு மதப்பிரிவுகளைப் பின்பற்றியவர்களும் ஒருவரோடொருவர் கூடி வாழவில்லை; தனித்தனியே பிரிந்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள்; அவர்களுடைய வாழ்க்கையில் மதகுருக்கள், திருச்சபை வட்டாரத்தைச் சேர்ந்த பணக்காரர்களின் ஈவிரக்கமற்ற ஆதிக்கம் எப்பொழுதும் மேலோங்கியிருந்தது. மதப் பாசாங்கில் அமெரிக்கர்கள் ஆங்கிலேயர்களையும் மிஞ்சிவிட்டனர். அவர்கள்தான் தேசிய ஒடுக்குமுறையை எதிர்த்து முதலில் போராடியவர்கள்; ஆனால் அவர்கள் ஈவிரக்கமற்ற வகையில் சிவப்பு இந்தியர்களை அழித்தார்கள்; தெற்கு மாநிலங்களில் அடிமைமுறையை ஏற்படுத்தினார்கள்.

இந்த விவசாயிகளும் கைவினைஞர்களும் அடிப்படையில் சுதந்திரத்தை நேசிப்பவர்களாக, வீரமானவர்களாக, சுறுசுறுப்பானவர்களாக இருந்தார்கள். இப்படிப்பட்ட பின்னணியிலிருந்து தான் பிராங்க்ளின் வந்தார். அந்தத் தேசியம் வளர்ச்சியடைந்து கொண்டிருந்தது; அதன் சிறப்புமிக்க அம்சங்கள் எல்லாவற்றையும் பிராங்க்ளின் ஈர்த்துக் கொண்டார். ஆனால் தன்னுடைய நாட்டின் முதலாளித்துவ வளர்ச்சியின் முரண்பாடுகளையும் அவருடைய ஆளுமை பிரதிபலித்தது. அவர் ஆழமான ஜனநாயக உணர்வோடு செல்வம் மற்றும் அதிகாரத்தை மதிப்பதையும் இணைத்துக் கொண்டார். அவர் வறட்டுத்தனமான மதக் கோட்பாடுகளையும் சடங்குகளையும் எதிர்த்தார். ஆனால் “தெய்வம் இருப்பதையும், அவர் உலகத்தைப் படைத்து அதைத் தன்னுடைய பேரருளால் காப்பதையும் ஒருபோதும் சந்தேகித்ததில்லை” என்று அவரே எழுதியிருக்கிறார். அவர் அடிமை முறையை எதிர்த்தார், தேசிய சுதந்திரத்துக்காகப் போர் புரிந்தார். எனினும் அவர் ஆங்கில- சாக்ஸானிய இனத்தின் விசேஷமான குறிக்கோளில் நம்பிக்கை கொண்டிருந்தார். அவர் எளிமையானவர், எல்லோரும் விரும்பும் தன்மைகளைக் கொண்டவர்; ஆனால் பல சந்தர்ப்பங்களில் குறுகிய மனம் படைத்த ஆசானாகவும் சிறு திறமான அறநெறியாளராகவும் அவருடைய வாசகர்களுக்கும் கேட்போருக்கும் தோன்றினார்.

படிக்க:
காஷ்மீர் : நான் இப்போது எனது வாழ்க்கையின் கடைசி தருணத்தில் இருக்கிறேன்
♦ சிரிப்பு , மகிழ்ச்சிக் கடவுளை அடிக்கடி பாடங்களுக்கு அழைக்க வேண்டும் !

பெஞ்ஜமின் பிராங்க்ளின் 1706-ம் வருடத்தில் போஸ்டன் நகரத்தில் ஒரு பரிசுத்தவாதியின் மகனாகப் பிறந்தார். அது பெரிய குடும்பம். தகப்பனார் சோப்பு, மெழுகுவத்திகள் தயார் செய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு எவ்வகையிலும் முறையாகக் கல்வி கற்பிக்கப்படவில்லை; அவர் பெட்டியைக் காட்டிலும் கூட அதிகமான அளவுக்கு சுயமாகக் கல்வி கற்றவர். ஒரு ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் இரண்டு வருடங்கள் படித்த பிறகு அவருடைய மூத்த சகோதரன் (அவருடைய தகப்பனாரின் முதல் மனைவியின் மகன்) நடத்தி வந்த அச்சகத்தில் பயிற்சி பெறுவதற்காக அனுப்பப்பட்டார். “… என்னுடைய சகோதரர் உணர்ச்சிவசப்பட்டவர்; என்னைப் பல முறை அடித்திருக்கிறார்; நான் அதைப் பற்றி மிகவும் ஆத்திரப்பட்டதுண்டு. அவர் என்னைக் குரூரமாகக் கொடுமைப்படுத்தியதுதான் சர்வாதிகாரத்தைக் கண்டு அருவருப்படையுமாறு எனக்கு போதித்தது என்று நினைக்கிறேன்; என் வாழ்நாள் முழுவதும் இந்த உணர்ச்சி என்னிடம் நிலைத்துவிட்டது.”(2)  

இந்தக் காலத்தில்தான் ஆற்றல், முன்முயற்சி, அசாதாரணமான உழைப்பு, அறிவு வேட்கை போன்ற அவருடைய தனித்தன்மை மிக்க பிற அம்சங்கள் வளர்ச்சியடைந்தன. அவர் ஏராளமான புத்தகங்களைப் படித்தார்; புலமைமிக்கவர்களோடு நெருங்கிப் பழகினார்; அவர் கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். மதத்தைப் பற்றி ஓரளவுக்கு விமரிசனத்தன்மை கொண்ட அணுகுமுறையைக் கடைப்பிடித்தார். அவர் தனது பதினேழாவது வயதில் குடும்பத்தையும் சொந்த ஊரையும்விட்டு வெளியேறினார். பென்சில்வேனியாவில் கிறிஸ்தவர்களில் ஒரு பிரிவினரான குவேக்கர்களின் தலைநகரமாக இருந்த ஃபிலடெல்ஃபியாவுக்குச் சென்றார். அங்கே ஒரு அச்சகத்தில் வேலைக்குச் சேர்ந்தார். இதற்கு ஒரு வருடத்துக்குப் பிறகு அச்சுக் கலையை சிறப்பாகப் பயில்வதற்கும் அச்சு இயந்திரங்கள் வாங்குவதற்காகவும் இங்கிலாந்துக்குப் போனார். அவருக்குப் பணமும் சிபாரிசுக் கடிதங்களும் அனுப்புவதாகச் சொல்லியிருந்தார்கள்; ஆனால் இந்த வாக்குறுதிகள் பேச்சோடு நின்றுவிட்டன.

பிராங்க்ளின் இங்கிலாந்தில் ஒன்றரை வருட காலத்துக்கு மேல் இருந்தார்; லண்டனிலுள்ள அச்சகங்களில் வேலை செய்து அச்சுக் கலையில் அறிவும் அனுபவமும் பெற்றார். 1726-ம் வருடத்தில் இளைஞர் பிராங்க்ளின், தன்னுடைய வயதுக்கு மீறிய முதிர்ச்சியோடு ஃபிலடெல் ஃபியாவுக்குத் திரும்பினார். அவரிடம் பணம் இல்லை; இங்கிலாந்திலிருந்து புத்தகங்களையும் அச்சு மாதிரிகளையும் கொண்டு வந்திருந்தார்; எல்லாவற்றிலும் மிக முக்கியமானது என்னவென்றால் அவரிடம் கருத்துக்களும் தன்னம்பிக்கையும் எதிர்காலத்தைப் பற்றி அதிகமான நம்பிக்கையும் நிறைந்திருந்தன.

அவர் முன்முயற்சி உடைய அச்சிடுபவர் என்ற முறையில் ஃபிலடெல்ஃபியாவில் வெகு சீக்கிரத்தில் கௌரவமான அந்தஸ்தைப் பெற்றார்; அந்த நகரத்தின் குடிகளில் மிகவும் சிறந்தவர்களில் ஒருவராகக் கருதப்பட்டார். அவரைச் சுற்றி விஞ்ஞானத்திலும் இலக்கியத்திலும் புதிய முயற்சிகளில் அக்கறை கொண்ட இளைஞர் குழு ஏற்பட்டது. அவர் தன்னுடைய வாழ்க்கை, நடவடிக்கைகளை ஒவ்வொரு நாளும் கடைசி நிமிடம் வரையிலும் கறாராக ஒழுங்குபடுத்தி அமைத்துக் கொண்டார். அவர் சோர்விலா ஊக்கத்தோடு ஈடுபட்ட ஒவ்வொரு துறையையும் குறித்துச் சொல்வது கூட இயலாது.

அவர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தை நிறுவினார்; முதல் விஞ்ஞானக் கழகத்தையும் பொது நூலகத்தையும் அமெரிக்காவிலேயே முதன்முறையாகத் தீயணைப்புப் படையையும் ஏற்படுத்தினார். அமெரிக்காவில் முதன் முதலாக தேசிய செய்தித்தாள் நடத்தியதும் அவரே. தபால் இலாகாவில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். 1754-ம் வருடத்தில் நடைபெற்ற அல்பனி காங்கிரசில் அவர் தன்னுடைய மாகாணத்தின் சார்பில் கலந்து கொண்டார். அமெரிக்காவிலுள்ள எல்லாக் குடியேற்றங்களையும் இங்கிலாந்தின் அரசரின் கீழ் – ஆனால் ஓரளவு சுயாட்சி அதிகாரத்தோடு ஒன்றுபடுத்தக் கூடிய திட்டத்தை முன்வைத்தார். ஆனால் லண்டனில் இருந்தவர்கள் அமெரிக்கக் குடியேற்றங்கள் ஒன்று சேர்ந்து விடுமோ என்று மிகவும் அதிகமாக பயந்து கொண்டிருந்த காரணத்தால் அவருடைய திட்டம் நிராகரிக்கப்பட்டது.

பிராங்க்ளின் இயற்கை விஞ்ஞானங்களைப் பற்றி அதிகமான அக்கறை எடுத்துக் கொண்டார்; அவர் தன்னுடைய கைகளைக் கொண்டு பல காரியங்களைத் திறமையாகச் செய்து கொள்ளக் கூடியவர். அவர் பூகம்பங்களின் தன்மையைப் பற்றி ஆராய்ந்தார்; நுட்பமான அமைப்புக் கொண்ட எரியுலையைக் கண்டுபிடித்தார். 1743-ம் வருடத்தில் மின்சாரத்தை உபயோகப்படுத்தும் சில பரிசோதனைகளைக் கண்டார். அந்தக் காலத்தில் ஊர் ஊராகச் சென்று வேடிக்கை காட்டுபவர்கள் இத்தகைய வித்தைகளைச் செய்வதுண்டு. அவர் இந்தப் பரிசோதனைகளில் மிகவும் அக்கறை எடுத்துக் கொண்டார்; உடனே தனக்கு வழக்கமான உற்சாகத்தோடும் வேகத்தோடும் அவற்றைச் செய்தார்; ஐந்து அல்லது ஆறு வருடங்களுக்குள் நிலைமின் இயல் சம்பந்தமான ஆயிரக்கணக்கான பரிசோதனைகளைச் செய்தார்; இவை அந்தக் காலத்துக்கு அதிகமான நுணுக்கமும் திறமையும் கொண்டிருந்தன. அவர் தன்னுடைய பரிசோதனைகள் மூலம் நிலைமின் இயலுக்கு அடிப்படை அமைத்தார். அவர் மின்சாரத்தின் ஒருமைத் தத்துவத்தை உருவாக்கினார்; நேர், எதிர் மின்பொறி ஆகிய கருத்துக்களை நுழைத்தார் (அவருக்கு முன்பு இரண்டு விதமான மின்சாரம் இருக்கிறது என்றுதான் எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள்), பிராங்க்ளின் மின் உராய்வினால் தான் மின்னல் ஏற்படுகிறது என்பதை நிரூபித்தார்; வானவெளி மின்சார நிகழ்வை விளக்கினார்; இடிதாங்கியைக் கண்டுபிடித்தார்.

1757-ம் வருடத்தில் பிராங்க்ளின் பென்சில்வேனியாவின் (பிறகு மற்ற மாநிலங்களின்) பிரதிநிதியாக இங்கிலாந்தின் அரசாங்கத்தோடு பேசுவதற்காக இங்கிலாந்துக்குப் போனார். அடுத்த முப்பது வருடங்களின் பெரும் பகுதியை அவர் ஐரோப்பாவில் கழித்தார். முதலில் இங்கிலாந்திலும் பிறகு பிரான்சிலும் இருந்தார்; இரண்டு தடவைகள் மட்டுமே தாய் நாட்டுக்குத் திரும்பினார். இந்தக் காலகட்டத்தில் அவர் ராஜியவாதியாக, மூத்த அரசியல் தலைவராக, அரசியல் எழுத்தாளராகப் பெரும் புகழ் பெற்றார். ”தாய் நாட்டுக்கும்” அமெரிக்கக் குடியேற்றங்களுக்கும் யுத்தம் ஏற்படுவதைத் தடுக்க வேண்டுமென்று அவர் பல வருடங்களாகப் பாடுபட்டார், பிரிட்டிஷ் பேரரசுக்குள் சுயாட்சி அந்தஸ்துக் கிடைப்பதற்கு வழிகளைத் தேடினார். ஆனால் இங்கிலாந்து எத்தகைய சலுகைகளையும் கொடுக்க மறுத்தது. இனி கலகத்தைத் தவிர வேறு வழியில்லை. 1775-ம் வருடத்தில் யுத்தம் வெடித்தது.

அமெரிக்க சுதந்திரப் பிரகடனம் பிரதானமாக டி. ஜெபர்சனால் எழுதப்பட்டது என்பது நமக்குத் தெரியும்; ஆனால் அதில் பிராங்க்ளினுடைய கைவண்ணமும் உண்டு. அந்த வருடத்தின் இலையுதிர் காலத்தில் புரட்சி செய்திருக்கும் குடியேற்றங்களின் பிரதிநிதியாகக் காங்கிரஸ் அவரை பிரான்சுக்கு அனுப்பியது; அப்பொழுது தான் பிறந்திருந்த குடியரசுக்கு பிரான்சின் இராணுவ, பொருளாதார உதவி மிகவும் அவசியமாக இருந்தது. அவர் பல நெருக்கடிகளையும் சமாளித்து பிரான்சுடன் இராணுவக் கூட்டணியை ஏற்படுத்தினார். யுத்தம் இங்கிலாந்துக்கு பாதகமான வகையில் திரும்பியது. 1783-ம் வருடத்தில் ஏற்பட்ட சமாதான ஒப்பந்தத்தில் இங்கிலாந்து அமெரிக்க நாடுகளின் சுதந்திரத்தை அங்கீகரித்தது.

பிராங்க்ளின் 1790-ம் வருடத்தில் மரணமடைந்தார். அவர் கடைசியாக எழுதி வெளிவந்தது அடிமை வர்த்தகத்தைக் கண்டித்து ஒரு செய்தித்தாளின் ஆசிரியருக்கு எழுதிய கடிதம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கடிதம் அவர் மரணமடைவதற்கு இருபத்து நான்கு நாட்களுக்கு முன்பு வெளிவந்தது. அவர் தன்னுடைய பிற்கால வாழ்க்கை முழுவதும்-பென்சில்வேனியா மாநிலத்தின் தலைவர் என்ற முறையிலும் 1787-ம் வருடத்தில் நடைபெற்ற அரசியலமைப்பு மாநாட்டின் பிரதிநிதி என்ற முறையிலும் அடிமை முறையை எதிர்த்துப் போராடினார். கடைசிக் காலத்தில் அவர் எழுதிய இலக்கிய வடிவம் அதிகமான தனிச்சிறப்பைக் கொண்டிருக்கிறது. அவர் எழுதிய காரசாரமான, சிறு அங்கதக் கட்டுரைகள் ஊசி போலக் குத்தின.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

(1) K. Marx, A Contribution to the Critique of Political Economy, Moscow, 1970, p. 55.

(2)  B. Franklin, The Autobiography and Other Writings, N.-Y., 1961, | p. 33.

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

சிந்து சமவெளி நாகரிகத்தின் தொடர்ச்சிதான் கீழடி நாகரிகம் !

3
Keezhadi

ந்துத்துவ சக்திகளின் கைகளில் ஆட்சியதிகாரம் சிக்கியுள்ள இன்றைய நிலையில் இந்திய வரலாற்றையே உலுக்கி திருத்த வல்லமை கொண்ட இரண்டு ஆய்வுகள் மிக சமீபத்தில் நடந்தேறியுள்ளன. ஒன்று ராக்கிகர்கி மரபணு ஆய்வு மற்றொன்று கீழடி தொல்லியல் ஆய்வு. ஒன்று சிந்து சமவெளி நாகரிகத்திற்கு பின்னரே சமஸ்கிருதத்தை சுமந்துகொண்டு ஆரியர்கள் துணைக் கண்டத்திற்கு வந்தார்கள் என்பதை உறுதி செய்துள்ளது. மற்றொன்று சிந்து சமவெளி நாகரிகத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து கங்கை சமவெளியில் இரண்டாம் கட்ட நகர குடியேற்றம் நடந்த அதே காலகட்டத்தில் தமிழகத்திலும் அதே போன்றதான குடியேற்றம் நடந்தேறியுள்ளது என்றும் சிந்து சமவெளி குறியீட்டிற்கும் தமிழிக்கும் (தமிழ் பிராமி என்று தற்போது அழைக்கப்படுகிறது) உள்ள உறவை உறுதி செய்யும் பானை கீறல்களையும் கண்டறிந்துள்ளது.

கீழடி அகழாய்வு மையத்தில் கி.மு 580-ம் ஆண்டைச் சேர்ந்த பானை உள்ளிட்ட தொல்பொருள்கள் தமிழக தொல்பொருள் அகழ்வாராய்ச்சி குழுவினால் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. அப்பானைகளில் உள்ள “கிராஃபிட்டி” குறியீடுகள் அல்லது கீறல்கள் சிந்து சமவெளி நாகரிக எழுத்து வடிவங்களின் தொடர்ச்சியை சுட்டிக்காட்டுவதாக அகழாய்வு குழுவின் சமீபத்திய அறிக்கை கூறுகிறது.

mohenjo-daro-Indus-Valley-Civilization

சிந்து சமவெளி எழுத்துக்கள் கி.மு 5,000 முதல் கி.மு 1,500 வரை அம்மக்களால் பயன்படுத்தப்பட்டது. சிந்து சமவெளி நாகரிகம் வீழ்ச்சியடையத் தொடங்கிய காலத்தில்தான் ஸ்டெப்பி புல்வெளியில் இருந்து ஆரியர்கள் இந்திய துணைக்கண்டத்திற்கு வந்ததை மரபணு ஆராய்ச்சி உறுதி செய்துள்ளது.

கீழடி அகழாய்வு அறிக்கைக்கு ஒரு அரசியல் முக்கியத்துவம் உள்ளது. சிந்து சமவெளி நாகரிக மக்கள்தான் தமிழர்களின் மூதாதையர்கள் என்றும் சிந்து சமவெளி மக்கள் பேசியது ஒரு திராவிட மொழி என்றும் நீண்ட நாட்களாகவே திராவிட அரசியல்வாதிகள் கூறி வருகின்றனர். மொழியியல் நோக்கில் ஆய்வாளர்கள் இதை உறுதிப்படுத்தியுள்ளனர். 1964-ல் இரசியாவையும் ஃபின்லாந்தையும் சேர்ந்த ஆய்வாளர்கள் தனித்தனியாக ஆய்வு செய்து சிந்து சமவெளி எழுத்து வடிவம் திராவிட எழுத்துதான் என்பதை நிறுவினர். பின்னர் சிந்து சமவெளி எழுத்து வடிவத்தின் முன்னனி ஆய்வாளரான அஸ்கோ பர்போலா சிந்து சமவெளி எழுத்து வடிவத்தை திராவிட எழுத்து வடிவத்துடன் ஒப்பிட்டு பிரபலமான கருதுகோளை முன்வைத்தார்.

ஆனால் இதை உறுதிப்படுத்த இது மட்டுமே போதாது. ஏனெனில் சிந்து சமவெளி நாகரிகம் ஒரு நகர நாகரிகம். தமிழ் நாகரிகத்திற்கும் அதற்குமான தொடர்ச்சியை உறுதிப்படுத்துவதற்கான தொழில்நுட்ப வசதிகளும் போதுமான தொல்லியல் மற்றும் மரபணு சான்றுகள் அதுவரை கிடைக்காமலிருந்தன. முன்னதாக அரிக்கமேட்டில் 1947-லும், காவேரிப்பூம்பட்டினத்தில் 1965-லும், ஆதிச்சநல்லூரில் 2005-லும் நடந்த மூன்று அகழாய்வுகளில் ஒன்றுக்கூட நகர்புற குடியேற்றத்திற்கான உறுதியான சான்றுகள் எதையும் வழங்கவில்லை.

படிக்க:
கேள்வி பதில் : கீழடி ஆய்வுகள் காட்டுவது என்ன ?
♦ சிந்துச் சமவெளி நாகரிகம் வேத நாகரிகம் அல்ல – மரபணு ஆய்வு முடிவுகள் !

ஆனால் 2015-ம் ஆண்டில் கீழடியில் தொடங்கப்பட்ட அகழ்வாராய்ச்சி சிந்து சமவெளி மற்றும் கங்கை பகுதி நகர்ப்புற குடியேற்றம் போலவே தமிழகத்திலும் நடந்ததற்கான ஏராளமான சான்றுகளை தன்னுள்ளே புதைத்திருக்கிறது.

“மறைந்து போன சிந்து சமவெளி குறியீடுகளுக்கும் பிராமி எழுத்து வடிவங்களுக்கும் இடைப்பட்ட எழுத்து வடிவத்தை கீறல்கள் (கிராஃபிட்டி) என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த கீறல்கள் சிந்து சமவெளி எழுத்து வடிவத்திலிருந்து தோன்றிய பிராமி எழுத்து வடிவங்களுக்கு இணைப்பு சங்கிலியாக இருந்துள்ளது. எனவே இதை வெறும் குறியீடாக கருத முடியாது. சிந்து சமவெளி குறியீடுகளைப் போலவே இவற்றை இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை” என்று அந்த அறிக்கை கூறுகிறது.

கீழடி
சிந்து சமவெளி மற்றும் கீழடி எழுத்துக்கள் ஒரு ஒப்பீடு.

முன்னதாக அகழாய்வு செய்யப்பட்ட ஆதிச்சநல்லூர், கொற்கை, ஆலங்குளம், கொடுமணல், கரூர், தேரிருவேலி, உறையூர், மங்குளம், பேரூர் மற்றும் ஏனைய பகுதிகளிலும் இது போன்ற குறியீடுகள் பொறிக்கப்பட்ட பானைகள் கிடைத்துள்ளன. தமிழ்நாட்டைத் தவிர, இந்தியாவின் வேறு சிலப் பகுதிகளிலும், இலங்கையிலும் பனையோட்டு கீறல்கள் கிடைத்துள்ளன. இந்திய துணைக் கண்டத்தில் இதுவரை கிடைத்த பனையோட்டு கீறல்களில் 75 விழுக்காட்டிற்கும் மேல் தமிழ்நாட்டை சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் பிராமி (அசோக பிராமிக்கு 3 நூற்றாண்டுகள் முந்தையதால் இதை தமிழி என்றே அழைக்கலாம் என்று தமிழறிஞர்கள் முன் வைக்கின்றனர்) எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட 56 பானைகள் தமிழ்நாட்டு அகழாய்வு நிறுவனத்தால் கண்டறியப்பட்டதாக அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. இந்த ஆய்வுகளின் முடிவு தமிழ் எழுத்து வரலாற்றை கிமு ஆறாம் நூற்றாண்டு வரை முன் தள்ளியுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.

கீழடியில் வாழ்ந்த மக்களுக்கு உயர்ந்த எழுத்தறிவு இருந்ததை அது சுட்டுகிறது. “பானைகளின் மேல் பகுதிகளில் கீறல்கள் பொறிக்கப்பட்டுள்ளன. பொதுவாக பானை ஈரமாக இருக்கும் போதோ அல்லது உலர்ந்த பிறகோ அதில் எழுத்துக்கள் பொறிக்கப்படும். கீழடியில் கண்டறியப்பட்ட பானைகளில் காய்ந்த பிறகே எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. எனவே பானையை விலைக்கு வாங்கிய பிறகு உரிமையாளர்களால் அவை பொறிக்கப்பட்டுள்ளன. மேலும் பானைகளில் உள்ள வித விதவிதமான எழுத்து பாணிகள் கிமு ஆறாம் நூற்றாண்டு தமிழ் சமூகத்தின் பரவலான எழுத்தறிவை பறைசாற்றுகிறது” என்று அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.

படிக்க:
சிறப்புக் கட்டுரை : ஆரியர்கள் வந்தேறிகள்தான் – நிரூபிக்கிறது மரபணுவியல் ஆய்வு !
♦ காஷ்மீரிகளின் நம்பிக்கையும் இந்தியாவின் துரோகமும் !

2018-ல் ஆறு மாதங்கள் அகழாய்வு பணிகள் நடைபெற்றதாக தமிழ்நாட்டு தொல்பொருள் ஆய்வுகளின் மைய ஆணையர் டி. உதய்சந்திரன் கூறினார். 2015-ம் ஆண்டிலிருந்து மூன்று முறை அகழாய்வு செய்த பிறகு இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் ஆய்வுப்பணியை நிறுத்திவிட்டது.

இந்திய வரலாறு என்பதே வேத கால நாகரிகம் என்று நிறுவ மோடி அரசாங்கம் துடித்துக்கொண்டிருந்த நேரத்தில், அதற்கான எந்தச் சான்றும் கிடைக்காத தருணத்தில், வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியதை போல 2016-ல் கி.மு 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தொல்பொருள்களை இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் கண்டறிந்திருந்தது. விளைவு தொல்பொருள் ஆய்வாளர் கே. அமர்நாாத் ராமகிருஷ்ணனை இடமாற்றம் செய்தது. பின்னர் இப்பணியை தமிழக தொல்பொருள் ஆய்வு மையம் எடுத்துக்கொண்டு நான்காம் கட்ட ஆய்வினை முடித்து “கீழடி – தமிழ்ப் பண்பாட்டின் வேர்களைத் தேடி” என்ற தலைப்பில் ஆய்வு நூலையும் வெளியிட்டிருக்கிறது.

இது ஒருபுறமிருக்க கி.மு 2000-ம் ஆண்டில் சிந்து சமவெளி நாகரிகத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு சிந்து சமவெளி மக்கள் கிழக்கு மற்றும் தெற்கு நோக்கி நகர்ந்திருக்கக் கூடும் என்ற கருதுகோளை சமீபத்தில் செல் மற்றும் சயின்ஸ் அறிவியல் சஞ்சிகைகளில் வெளியிடப்பட்ட மரபணு ஆய்வுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன.

தொல்பொருள் ஆய்வில் புதிய வெளிச்சத்தை கொடுத்த அதே நேரத்தில் ஆதித்தமிழர்களின் மரபணு ஆய்வுகளுக்கான கருவினை எலும்புக்கூடாக இன்னமும் கீழடி தன்னுள்ளே புதைத்து வைத்திருக்கும் என்பதை வரலாறு பதிலாகச் சொல்லும்.


சுகுமார்

செய்தி ஆதாரம் :
Did the Indus Valley people settle in Tamil Nadu? Keezhadi excavation could provide crucial evidence
Tamil Nadu: Artefacts dated to 580 BCE hint at script continuity from Indus Valley Civilisation 

தமிழகத்தில் தொடரும் டெங்கு மரணங்கள் : இயற்கையின் சதியா ?

நாடு முழுவதும் டெங்குக் காய்ச்சலால் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் டெங்கு காய்ச்சலால் இரட்டை இலக்க எண்ணிக்கையில் மக்கள் மடிந்து வருகிறார்கள். இந்த ஆண்டு தமிழகத்தில் தீவிரமாகப் பரவிய டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 6 பேர் பலியாகி இருக்கிறார்கள். அரசின் புள்ளி விவரங்களே இதை மறுக்க முடியாமல் ஒத்துக்கொள்கின்றது. மேலும் வைரஸ் காய்ச்சலைத் தவிர மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியாத மர்மக்காய்ச்சல் என்று சொல்லி மரணமடைந்தவர்களின் பட்டியலில் பலரை அடைத்திருப்பதால் டெங்குவின் எண்ணிக்கை குறைத்துக் காண்பிக்கப்படுகிறது.

இது ஒவ்வொரு ஆண்டும் ஒரு சீசன் நோய் போல வந்து மக்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. எத்தனை உயிர்கள் மடிந்தாலும் சமாளிப்பதற்கு ஒரு காரணத்தை எப்போதும் கைவசம் வைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் காய்ச்சலால் மருத்துவமனையை நோக்கி ஓடி வரும் ஏழைகளின் உயிரைக் காக்க போதிய மருத்துகள்தான் இந்த அரசிடம் இல்லை.

நடப்பு ஆண்டில் கடந்த இரண்டு மாதமாக டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சலால் மக்கள் அவதிப்பட்டு வருகிறர்கள் என்ற செய்தி ஊடகங்களில் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு துரிதப்படுத்தவில்லை. கொசுக்களால் ஏற்படும் நோய்களைத் தடுக்க கொசு ஒழிப்பு மருந்துகள் தெளிக்கப்படவில்லை. அதுகுறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தவில்லை. தினந்தோறும் அரசு மருத்துவமனையை நோக்கி பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை படையெடுத்து வருகிறார்கள். ஆனால் இதுவரை தமிழக அரசு இதுகுறித்து எந்த பதிலும் சொல்லாமல் மவுனம் காக்கிறது.

படிக்க:
ஹவ்டி மோடியை களத்தில் எதிர்த்த அமெரிக்க – இந்திய செயல்பாட்டாளர்கள் | புகைப்படங்கள் !
♦ டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி ? | மரு. ஃபரூக் அப்துல்லா

சென்னை முகப்பேரை சேர்ந்த 6 வயது சிறுமி மகாலட்சுமி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் மர்ம காய்ச்சல் என்று அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்திருக்கிறார். அதற்கு முந்தைய தினம் 3 வயது குழந்தை ஒன்று இறந்திருக்கிறது. மதுரவாயிலைச் சேர்ந்த லோகித் என்ற 8 வயது சிறுவன் சிகிச்சை பலனளிக்காமல் இறந்திருக்கிறான். சென்னை மாங்காட்டைச் சேர்ந்த பிரித்திகா என்ற 12 வயது சிறுமியும் இறந்திருக்கிறார். மேலும் காஞ்சிபுரத்தை சேர்ந்த 26 வயதான ஜோதிலட்சுமி என்ற பெண்ணும் இறந்துள்ளார். தொடர்ந்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகள் இறப்பதாக தகவல்கள் வருகின்றன.

மருத்துவ வசதி முழுமை பெறாத காலத்தில் அம்மை நோய் தாக்கி கொத்துக் கொத்தாக இறந்ததைபோல் மருத்துவம் வளர்ந்திருக்கும் இந்த நூற்றாண்டிலும் குழந்தைகள் இறப்பது தற்செயலா? அல்லது சதியா?

டெங்குவிற்கான தடுப்பூசிகள் ஆராய்ச்சியில் உள்ளது என்பது உண்மை என்றாலும், கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து பல நூற்றுக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய பின்னரும் டெங்குவைப் பரப்பும் கொசுக்களை ஒழிப்பதற்கும், நோய்க்கான மருத்துவத்தை துரிதப்படுத்தி பரவலாக்குவதற்கும் அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன என்பதே கேள்வி?

கொள்ளை நோய்கள் தாக்கும் காலங்களில் அவற்றை தடுப்பதற்கான ஒருங்கிணைந்த செயல்பாட்டுக்கான திட்டமே இந்த அரசிடம் இல்லை. சென்னையை சுற்றியுள்ள எல்லா புறநகர் பகுதிகளிலும் ஒருநாள் மழைக்கே தாக்குப்பிடிக்க முடியாத அளவிற்கு குட்டையாக தண்ணீர் தேங்கி விடுகின்றது. மெட்ரோ ரயில் முதல் கேபிள் வயர்களை புதைப்பது வரை எங்கு காணினும் மரணக்குழிகள்… இதுவே அதிகப்படியான கொசுக்களை உற்பத்தி செய்வதற்கான முதல் வாய்ப்பாகிறது. மாநகராட்சியின் கொசு ஒழிப்புப் பணியும் வி.ஐ.பி-க்களின் ஏரியாவோடு சுருங்கி விடுகிறது.  இவர்களின் இந்த அலட்சியத்தால் பாதிக்கப்படுபவர்கள் ஏழ்மையில் உழலும் மக்கள்தான்.  அதிலும் குறிப்பாக 10 வயதுக்குட்பட்ட சிறுவர்கள்.

படிக்க:
டெங்கு குறித்த உண்மைகளும் மூடநம்பிக்கைகளும் !
♦ மீண்டும் தலையெடுக்கும் டெங்கு ! அனந்த சயனத்தில் அடிமை அரசு !

கிராமப்புற பகுதிகளில், அங்குள்ள ஆரம்ப  சுகாதார மையத்திலோ போதிய மருந்துகள் இல்லையெனக் கூறி அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை மட்டும் அளித்து மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். ஆனால் அங்கும் நோய் தீர்ந்தபாடில்லை. கேட்டால் “மர்மக் காய்ச்சல்” என்று கூறப்படுகிறது.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 10 பேர், கீழ்பாக்கம் மருத்துவமனையில் 3 பேர், ராயப்பேட்டை மருத்துவமனையில் 7 பேர், ஸ்டான்லி மருத்துவமனையில் 4 குழந்தைகள் உட்பட 8 பேர், எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் 107 குழந்தைகள் என டெங்கு காய்ச்சலுக்கு மொத்தம் 135 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் நகராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு டெங்கு காய்ச்சல் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருவதாகத் தமிழக அரசு தெரிவிக்கிறது. இதன் லட்சணம் தினந்தோறும் அரசு மருத்துவமனைகளுக்கு மக்கள் வந்து குவிவதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.

தற்போதைய நிலவரப்படி மருத்துவமனைகளில் உள்ள மருந்து கையிருப்பு போதுமானதாக இல்லாததால், நோய் கட்டுப்படுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார்கள்.  சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் டெல்லிக்கு சென்று சுகாதாரத்துறை மத்திய அமைச்சர் ஹர்ஸ் வர்த்தனை சந்தித்து மருந்துகளை உடனே வழங்க வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இனி எப்போது மருந்து வந்து… எப்போது மக்களைக் காப்பாற்றுவது ?

பருவ மழைக்காலம் தொடங்கி மாதங்கள் பல கடந்தும் உயிர்க் கொல்லிகளாகிவிட்ட டெங்கு உள்ளிட்ட திடீர் வைரஸ் காய்ச்சலில் இருந்து மக்களை காப்பற்ற போதிய முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையை அரசு மேற்கொள்ளவில்லை. இதன் விளைவுதான் தமிழகத்தில் பல பச்சிளம் குழந்தைகளின் உயிரைப் பறித்துள்ளது.

– வினவு செய்தியாளர்

இளம்பெண்களுக்கு வரும் PCOD நோயும் சில மூடநம்பிக்கைகளும் ! | ஃபரூக் அப்துல்லா

அன்புள்ள மாமியார்களே வணக்கம் !

PCOD எனும் குணப்படுத்தக்கூடிய பிரச்சினையால் மன உளைச்சலுக்கு ஆளாகி அவதியுறும் மருமகள்கள் சார்பாக பேசுகிறேன்..

சிறிது செவிமடுங்கள் அன்னைகளே…

நன்றி!

***

இளம்பெண்களுக்கு வரும் PCOD நோயும் சில தகர்க்கப்பட வேண்டிய மூடநம்பிக்கைகளும் !

PCOD என்றால் என்ன?

ளம்பெண்களுக்கு ஏற்படும் சரிசெய்யக்கூடிய ஹார்மோன் குளறுபடி தான் இந்த PCOD. இதை “நோய்” (disease) என்ற கணக்கில் சேர்க்க முடியாது. “குறைபாடு”(deficiency) என்ற கணக்கிலும் சேர்க்க முடியாது. அதனால் தான் “குளறுபடி” ( Messing up of hormones) என்ற கணக்கில் சேர்த்துள்ளேன்.

முறையாக ஹார்மோன்கள் சுரக்காமல் தாறுமாறி சுரப்பதால் இதை “Disorder” என்கிறோம். ஒரு பூப்படைந்த பெண்ணுக்கு முறையாக நிகழ வேண்டிய நிகழ்வு பிரதிமாதம் வர வேண்டிய மாதவிடாய் (Menstruation).

மாதவிடாய் என்பதை சுருக்கமாக கூறவேண்டுமென்றால், ஒவ்வொரு மாதமும் இனப்பெருக்க வயதை அடைந்த பெண்ணிற்கு அவளது கருவில் (ovary) இருந்து ஒரு முட்டை (ovum) முதிர்ச்சி அடைந்து உடைந்து வெளியேறும்.

அந்த முட்டையை அவளது துணையின் ஒரு விந்தணு பல கோடி சக போட்டியாளர்களை முந்தி ஓடோடி வந்து நலம் விசாரித்து காதலாகி கூடல் (fertilisation) கொண்டால் அது கருவாக (zygote) உருவாகும்.

பின் அது தவழந்து சென்று கர்ப்பபையில் அட்டைப்பூச்சி போல ஒட்டிக்கொள்ளும்.
அங்கிருந்து தாயின் உதிரத்தை உறிஞ்சி வளரும். அதுவே அடுத்த பத்து மாதங்களில் சிசுவாகி வெளியே வரும். இது இணையுடன் கூடல் கொள்ளும் பெண்களுக்கு நிகழும் இயற்கை நிகழ்வு.

இப்போது மற்றொரு சினாரியோவுக்கு வருவோம்.

இன்னும் திருமண பந்தத்தில் இணையாத சிற்றிளம்பெண்களுக்கு இந்த கரு முட்டையானது மாத மாதம் வெளியேற்றப்படும். கருமுட்டையுடன் கூடவே கர்ப்பபையில் உள்புற சுவரும் (endometrium) சேர்ந்து வெளியேற்றப்படும் இயற்கையான நிகழ்வு தான் மாதவிடாய்.

மாதவிடாய் சிக்கல் ஏன் ஏற்படுகிறது?

அதற்கு மாதவிடாயின் மருத்துவ அறிவியல் குறித்த சிறிய ரீகேப் அவசியம். PCOD என்பது ஹார்மோன்களின் சதிராட்டம் என்று கூறியதற்கு காரணம் அறிவோம் வாருங்கள்.

ஈஸ்ட்ரோஜென் எனும் பெண்மைக்கான ஹார்மோனின் தூண்டுதலால் நமது சினைப்பையில் (ovary) பல முட்டைகள் (ova) ஒரே நேரத்தில் வளர்ச்சி காண ஆரம்பிக்கும். அந்த முட்டை அடங்கிய தொகுப்பை Graafian follicle என்போம்.

படிக்க:
பொதுத்துறை வங்கிகள் இணைப்பு – யாருக்கு ஆதாயம் ?
கிறங்கடிக்கும் கீழடி : வி.இ.குகநாதன்

இந்த முட்டை வளர்ச்சிக்கு தொடர்ந்து அவளது மூளையின் பிட்சூடரி எனும் சுரப்பியில் இருந்து சுரக்கும் follicular stimulating hormone எனும் ஹார்மோனின் தூண்டுதல் தேவை.

நன்கு முட்டை வளர்ந்ததும் மூளையில் இருந்து லூடினைசிங் ஹார்மோன்(lutenising hormone) சுரக்கும். அந்த ஹார்மோன் ரத்தத்தில் கலந்து உச்ச நிலையில் இருக்கும் 24 இல் இருந்து 36 மணி நேரத்தில், ஒரு முட்டை சினைப்பையில் இருந்து வெளியேறும்.

முட்டையை வெளியேற்றியவுடன் சினைப்பையில் இருக்கும் க்ராஃபியன் ஃபாலிகிள் – கார்பஸ் லூடியம் (corpus luteum) எனும் பகுதியாக மாறும். வெளியேறிய முட்டை சினைக்குழாயில் (Fallopian tube) வந்து 24 முதல் 36 மணி நேரம் காத்திருக்கும்.

யாருக்காக இந்த காத்திருப்பு ?

தன்னை சந்தித்து முழுமை படுத்த விந்தணுவில் ஏதேனும் ஒன்றாவது வந்து விடாதா என்று வழி மேல் விழி வைத்து காத்திருக்கும் நமது கதாநாயகியான கருமுட்டை.

க்ளைமேக்ஸ் ஒன்று :

தன்னை சந்திக்க கோடிக்கணக்கான விந்தணுக்களில் ஒன்று வந்தவுடன் அதனுடன் இரண்டறக்கலந்து கருமுட்டையாக மாறிவிடும். இது சுபமான முடிவு.

முட்டையை வெளியேற்றியவுடன் மீதம் இருந்த கார்பஸ் லூடியம் “ப்ரொஜஸ்டிரான்” progesterone எனும் ஹார்மோனை சுரக்கும். இந்த ஹார்மோன் தான் அவளது கருப்பையை கர்ப்பத்திற்கு ஏற்றாற் போல் தயார் செய்யும். கருப்பைக்கு தேவையான ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி கர்ப்ப பையை மெத்தை போல ஆக்கும். அந்த மெத்தையில் நமது கருமுட்டை சென்று ஒட்டிக்கொண்டு கருவாக வளர்ந்து குழந்தையாக உருமாறுகிறது.

க்ளைமேக்ஸ் இரண்டு :

தன்னை வந்து சேர கதாநாயகனான விந்தணு கண்ணுக்கெட்டிய தூரம் வராததை அறிந்த முட்டை… பசலை நோய் கொண்டு உண்ணாமல் உறங்காமல்
24 முதல் 36 மணிநேரத்தில் மரணித்து விடும்.

அந்த முட்டை இறந்த செய்தி கேட்டதும் சினைப்பையில் இருந்த கார்பஸ் லூடியம் – ப்ரோஜெஸ்டிரான் சுரப்பதை நிறுத்தி விட்டு, தானும் அழிந்து விடும். ப்ரோஜெஸ்டிரான் இல்லாத கர்ப்ப பை மழையில்லாத கழனி போல பசுமை இழந்து வறண்டு விடும்.

சிறிது நாட்களில் இந்த கர்ப்ப பை கழிவுகள் அனைத்தும் வெளியேறி கர்ப்பப் பை மற்றொரு மாதவிடாய் சுழற்சிக்கு தயாராகி விடும். இந்த கழிவு வெளியேற்றத்தை
பீரியட்ஸ் / மென்சஸ் என்று அழைக்கிறோம். மாதவிடாய் சுழற்சியை உன்னிப்பாக கவனித்தால் இந்த தொடர் நிகழ முக்கியமான தேவை ஹார்மோன்கள் தான்.

ஈஸ்ட்ரோஜென் , FSH , LH போன்ற ஹார்மோன்கள் சரிவிகிதத்தில் டைம் செட் செய்து வைத்தார் போல் ஏறி இறங்க வேண்டும். இதில் நடக்கும் பிரச்சனைகள் தான் மாதவிடாய் சுழற்சி கோளாறுகளை ஏற்படுத்துகிறது.

வைரமுத்து அவர்கள் ஆய்த எழுத்து படத்தில் ஒரு பாடலில் “எந்தன் ஹார்மோன் நதியில் வெள்ளப்பெருக்கு” என்று கற்பனை செய்திருப்பார்.

பெண்ணிற்கு மாதவிடாய் நிகழ சில நேரங்களில் வெள்ளப்பெருக்கும் சில நேரங்களில் வறட்சியும் அவசியம்.

படிக்க:
அன்புள்ள கர்ப்பிணி தாய்மார்களே – பாகம் 2 | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா
♦ மோடியின் 100 நாள் ஆட்சி : புதிய ஜனநாயகம் தலையங்கம்

ஏன் இந்த ஹார்மோன்கள் குளறுபடி நிகழ்கிறது ?

இன்சுலின் எனும் ஹார்மோன் கணையத்தில் சுரப்பதை அறிவோம் அதன் வேலை உடலை கட்டமைப்பது; தசைகளை ஏற்றுவது; மனிதனை திடமாக்குவது. கூடவே உண்ணப்படும் மாவுச்சத்தில் இருந்து கிடைக்கும் க்ளூகோசை உடலில் உள்ள அனைத்து செல்களுக்கு ஏற்ற எரிபொருளாக அல்லது உணவாக உண்ணத்தருவது.

இந்த இன்சுலினின் இன்னொரு வேலை… மாதமாதம் கருமுட்டை சினைப்பையில் இருந்து வெளியேற உதவுவது.(ovulation)

  • ஒருவர் தான் இருக்க வேண்டிய எடையில் இருந்து அதிகமாவது (obesity)
  • அதிகமாக மாவுச்சத்து உணவுகளை உண்பது (Very high carb diet)
  • உடல் பயிற்சி இல்லாத வாழ்க்கை முறை ( sedentary life style)

இவற்றால் இன்சுலின் தனது வேலையை சரியாக செய்யாமல் தர்ணாவில் ஈடுபடுகிறது. இதை “இன்சுலின் ரெசிஸ்டெண்ஸ்” என்கிறோம். இன்சுலின் தனது வேலையை சரியாக செய்யாமல் இருப்பது தான் இது.

இதனால் PCOD-ஐ பொருத்தவரை கருமுட்டை சரியாக வெளியேறாது. இதற்காகத்தான் PCOD -க்கு மெட்ஃபார்மின் மாத்திரை பரிந்துரை செய்யப்படுகிறது. பல புதிதாக திருமணம் ஆன வீட்டில் புதுப்பெண் Metformin மாத்திரை விழுங்கினால் அவருக்கு சுகர் இருப்பதாக மாமியார்கள் நினைக்கிறார்கள்.

அது தவறு மாமியார்களே..

உங்களை நம்பி மருமகளாக வந்த அந்த இளம்பெண்ணுக்கு PCOD எனும் முற்றிலும் குணப்படுத்தக்கூடிய ஒரு சிறிய பிரச்சினை தான் இருக்கிறது. சுகர் குறைபாட்டிலும் இன்சுலின் சரியாக வேலை செய்யாமல் போவது தான் காரணமாக இருப்பதால், இன்சுலினை நன்றாக வேலை செய்யக் கட்டளையிடும் Metformin மாத்திரை தரப்படுகிறது.

எனவே உங்கள் மருமகளை அரவணைத்து செல்லுங்கள். அவளுக்கு இருக்கும் உடல் சார்ந்த பிரச்சனைகள் களைய உதவுங்கள். அவள் உடல் எடை அதிகமாக இருந்தால் பேலியோ உணவு முறையை பரிந்துரை செய்யுங்கள். தினமும் உடற்பயிற்சி இருவரும் சேர்ந்து செல்லுங்கள். அதிகம் பேசுங்கள்.

PCOD என்பது எளிதில் குணமாகக்கூடிய ஒரு பிரச்சனை. மாவுச்சத்து குறைத்து நல்ல கொழுப்புணவை அதிகம் உண்ணும் பேலியோ உணவு முறையில் பயன் பெற்ற பல பெண்கள் உள்ளனர்.

பேலியோ + மகப்பேறு மருத்துவரின் சிகிச்சை மூலம் கர்ப்பம் தரிக்க இயலும்.

ஒரு பெண் கர்ப்பம் தரித்து தாயாவது முக்கியம்தான். ஆனால் அதை விட முக்கியம் அவளது மாண்பு, ரகசியங்கள், சுயமரியாதை பேணிப் பாதுகாக்கப்படுவது..

அன்புள்ள மாமியார்களே…

உங்களை நம்பித்தான் ஒரு பெண் தன் வீட்டை விட்டு உங்களுடன் சேர்ந்து வாழ வருகிறாள். அவளையும் சக மனுசியாய் மதியுங்கள். அவளுக்கு நேரும் உடல் சார்ந்த பிரச்சினைகளை சரிசெய்ய உதவுங்கள்.

“மலடி”
“என் மகன இப்டி ஒரு தரிசு நிலத்துக்கு கொடுத்துட்டேனே”

என்று கரித்துக்கொட்டாதீர்கள். உங்கள் மகனுக்கு விந்தணுக்கள் சோதனை செய்து பார்த்தால் 100 -க்கு ஐம்பது சதவிகித வாய்ப்பு , விந்தணு குறைபாடு இருக்க வாய்ப்புண்டு. இன்னும் சிலருக்கு அதிக ரத்த அழுத்தம் இருப்பதும் கண்டறியப்படுகிறது.

ஒரு ஆண் ஒரு பெண்ணை; ஒரு பெண் ஒரு ஆணை திருமணம் செய்வது தனக்கு இருக்கும் உடல் சார்ந்த பிரச்சனைகளை ஏமாற்றிப் பிழைக்க அல்ல.

உடலியல் சார்ந்த சரிசெய்யக்கூடிய பிரச்சனைகளைக்கூட சமூகம் ஏற்கும் நிலை இன்னும் வரவில்லை. ஆனால் அந்த நிலையை நோக்கி முன்னேறவே இது போன்ற பதிவுகள்.

***

ந்த சமூகத்தில் திருமணம் முடிந்து சென்று மாமியார்களுக்கும் கணவர்களுக்கும் தெரியாமல் மறைத்து, மறைத்து வைத்து தைராய்டு மாத்திரைகளை; PCOD மாத்திரைகளை உண்ணும் மருமகள்கள் இருக்கிறார்கள் அந்த மருமகள்களுக்காக இந்தப் பதிவு.

முடிவுரை :

1. PCOD குணப்படுத்தக்கூடியது.

2. குறை மாவு நிறை கொழுப்பு உணவு முறை PCOD ஐ குணப்படுத்தும்.

3. PCOD உள்ள பெண்கள் கர்ப்பம் தரிக்க இயலும்.

4. மாமியார்கள் தங்களின் மருமகள்களின் உடல் சார்ந்த பிரச்சனைகளை ஏற்று அவற்றை களைய வேண்டும்.

5. மருமகள்கள் தங்கள் பிரச்சனைகளை மூடி மறைக்க வேண்டியதில்லை .
பகிரங்கமாக அதே சமயம் சாமர்த்தியமாக தங்களது உடல் சார்ந்த பிரச்சனைகளை தெரிவிக்கலாம். எத்தனை காலம் மறைக்க முடியும்.? மறைத்து செய்வதற்கு இது ஒன்றும் குற்றம் அல்ல.

6. மாமியார்களும் ஒரு காலத்தில் மருமகள்களே. அவர்களும் பெண்களே என்பதால் நிச்சயம் மற்றொரு பெண்ணின் பிரச்சனைகளை கரிசனத்துடன் அணுகுவார்கள்.

7. உங்கள் கணவரிடம் உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை தெரிவியுங்கள். அவர் உங்களது அத்தனை நன்மை தீமைக்கும் பொறுப்பாகிறார். அவரது ஆதரவு நிச்சயம் உங்களுக்கு தேவை.

8. PCOD குறித்த கருத்து வேறுபாடுகள் தோன்றுமாயின் உடனே மகப்பேறு மருத்துவர் / குடும்ப மருத்துவரை சந்தியுங்கள். அவர்கள் தரும் கவுன்சிலிங்கில் பிரச்சனை சரியாகிவிடும்.

பிரச்சனையை மறைப்பது தீர்வாகாது. அதை சாமர்த்தியமாக பகிரங்கப்படுத்தி
அதை தீர்ப்பதே தீர்வு

PCOD குறித்த சந்தேகங்களையும் தீர்க்க நானும் என் மருத்துவ நண்பர்களும் தயாராக இருக்கிறோம்.

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

திருச்சி : டாஸ்மாக் கடையை புதிதாகத் திறக்காதே | மக்கள் போராட்டம்

இரட்டை வாய்க்கால் : ஊர் தாலியறுக்கும் டாஸ்மாக் சாராயக் கடையை புதிதாகத் திறக்காதே !

  • பூரண மதுவிலக்கு, படிப்படியாக கடை நேரம் குறைப்பு…
    என்பதெல்லாம் ஏமாற்று !
  • சாராயம், கஞ்சா போதையில் ஆழ்த்தி மக்களை நாசமாக்காதே !
  • அதிகாரத்தை கையிலெடுப்போம் ! டாஸ்மாக்கை விரட்டியடிப்போம் !

திருச்சி மேற்கு தாலுக்கா ரெட்டைவாய்க்கால் பகுதியில் புதிதாக டாஸ்மாக் சாராயக் கடை திறப்பதை கண்டித்து, மேலத்தெரு ஊர் பொதுமக்கள் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் இணைந்து திறக்கப்பட உள்ள கடை வாசலில் நேற்று (30.09.2019) மாலை 6.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், சிறுவர் – சிறுமியர், இளைஞர்கள், தோழர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். “பெண்களின் தாலியறுக்கும், இளைஞர்களை சீரழிக்கும் சாராயக் கடையை மூட வேண்டும்!” என முழக்கமிட்டனர். போலீசார் வந்து “கடை இங்கு திறக்கப்படாது…” என உறுதியளித்த பிறகு போராட்டத்தை மக்கள் கைவிட்டனர்.

கடை திறந்தால் வந்து மூடுவோம். என ஆவேசத்துடன் சென்றனர். இதில் மக்கள் அதிகாரத்தின் மண்டல ஒருங்கிணைப்பாளர் செழியன் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இந்நிலையில் இன்றும் (01.10.2019) போலீசாரின் வாய்வழி உத்திரவாதங்களை நம்ப முடியாது என்பதை தங்கள் அனுபவத்தில் உணர்ந்துள்ள பொதுமக்கள், மீண்டும் போராட்டத்தை துவங்கியுள்ளனர். இதில் விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த அய்யா சின்னத்துரை, மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் என போராடும் அமைப்புகள், மக்களுடன் இணைந்துள்ளனர்.

இங்கு புதிதாக டாஸ்மாக் திறக்கப்படாது என்பதை எழுத்து பூர்வ உத்திரவாக வட்டாட்சியர் தரவேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது போராட்டம் நடக்கும் பகுதிக்கு வட்டாட்சியர் நேரில் வந்துள்ளதால், அவரிடம் மக்கள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிகாரத்தை கையிலெடுப்போம் என்ற மக்கள் அதிகாரம் அமைப்பின் முழக்கமானது, மக்களைப் பற்றிக் கொண்டுள்ளது. வாருங்கள் இனி உங்கள் ஊரில், உங்கள் தெருவில் உள்ள சாராயக்கடைகளையும் அகற்றுவோம்… !

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மேலத்தெரு ஊர் பொதுமக்கள் (மற்றும்) 
மக்கள் அதிகாரம்
திருச்சி, தொடர்புக்கு : 94454 75157.