“கார்ப்பரேட் கொள்ளைக்கான சட்டதிருத்தங்களை கிழித்தெறிவோம் !” என்ற தலைப்பில் கடந்த 18.08.2019 அன்று புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில், சென்னை திருவெற்றியூரில் அரங்கக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு பு.ஜ.தொ.மு மாநில தலைவர் தோழர் முகுந்தன் அவர்கள் தலைமை தாங்கினார். இதில் பொருளாதார ஆய்வாளர் முனைவர் ஜெ.ஜெயரஞ்சன் அவர்கள் “பொருளாதார நெருக்கடியும், தொழிலாளர் வர்க்கம் எதிர் கொள்ளும் சவால்களும்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். பொருளாதார சிக்கல்களை விளக்கும் வகையில் தொழிலாளர்களுக்கு தெளிவான பார்வையை கொடுக்கும் வகையில் அவரது உரை அமைந்திருந்தது. அதன் பின்னர் கூட்டத்தில் பங்கேற்ற தோழர்கள் தங்கள் கேள்விகளை முன்வைத்தனர். அவர்களுக்கு முனைவர் ஜெ.ஜெயரஞ்சன் பதிலளித்தார்.
அவரைத் தொடர்ந்து பொது கல்விக்கான ஒருங்கிணைப்பு குழுவின், சென்னை துணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் க.ரமேஷ் அவர்கள் “புதிய கல்வி கொள்கை – 2019” குறித்து உரையாற்றினார். அவர்தம் உரையில் “இதனை புதிய கல்வி கொள்கை என குறிப்பிடக் கூடாது. தேசிய கல்விக் கொள்கை என்பதே சரி. அதுவும் பாஜக ஆட்சியில் உள்ள தருணத்தில் ‘தேசிய’ என்பதன் பொருள் இந்துத்துவத்துக்கும் – கார்ப்பரேட்களுக்குமானது” என்பது குறித்து விளக்கி பேசினார்.
இறுதியாக புஜதொமு SRF மணலி கிளை பொருளாளர் தோழர் P.R.சங்கர் நன்றியுரையாற்றினார்.
இந்த கூட்டத்தில் CITU திருவெற்றியூர் பகுதி தோழர்கள், மணலி தொழிற்சங்க கூட்டமைப்பு (FMTU), CPCL தொழிலாளர் சங்கம், TPL தொழிலாளர் சங்கம், பால்மர் லாறி தொழிலாளர் சங்கம், KPL தொழிலாளர் நலச்சங்கம், CETEX தொழிலாளர் சங்கம், SRF & SRF(P) தொழிலாளர் சங்கம், இந்துஜா பவுண்டரி தொழிலாளர் சங்கம், அசோக் லேலண்ட் தொழிலாளர் சங்கம், MRF தொழிலாளர் சங்கம், ராயல் என்பீல்டு தொழிலாளர் சங்கம் ஆகிய தொழிற்சங்களைச் சேர்ந்த பல தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
1 of 6
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, திருவள்ளூர் (கிழக்கு – மேற்கு) மாவட்டங்கள். தொடர்புக்கு : 94444 61480 / 94453 68009
அயோத்தி : இருண்ட இரவு | பாபர் மசூதிக்குள் இராமன் தோன்றிய இரகசிய வரலாறு
அடுத்த கட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்களை / சீரழிவுகள் நடைமுறைப்படுத்த, முதலாளிகளுக்கு இன்று மோடி ஒரு அவசரத்தேவை, ஒருவேளை அயோத்தி இராமன் மோடியால் நீண்ட உறக்கத்தில் ஆழ்த்தப்படலாம் அல்லது மீண்டும் எழுப்பப்படலாம். தட்டி எழுப்பப்படுவதற்கு முன், இருண்டு கிடக்கும் இரகசியங்களை கட்டுடைக்க இந்நூல் பயன்படும்.
‘புதிய கலாச்சாரம்’ இதழில் வெளிவந்த இந்நூலின் ஆங்கில பதிப்பிற்கான விமர்சனமே இந்நூலை விடியலில் தமிழில் கொண்டுவரத் தூண்டியது. (நூலின் பதிப்புரையிலிருந்து)
1949-ம் ஆண்டு டிசம்பர் திங்கள், 23-ம்நாள், காலை 9 மணி பாபர் மசூதியுள் இராமர் சிலை வைக்கப்பட்டுப் பல மணிநேரம் கடந்த பின்னர், உ.பி. மாநிலம் பைசாபாத் மாவட்டம் அயோத்தி நகர் காவல் நிலைய அதிகாரியான பண்டித் ராம்தேவ் துபே ஒரு முதல் தகவல் அறிக்கையைப் (FIR) பதிவு செய்தார். அதில் இந்தியக் குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 147 (வன்முறையாகக் கலகம் செய்தல்), 448 (அத்துமீறி நுழைதல்), 295 (இறைவழிபாட்டு இடத்தின் புனிதத்தைக் குலைத்தல்) ஆகியவற்றின் கீழ், அபிராம்தாஸ், ராம்சகல்தாஸ், சுதர்சன்தாஸ், மற்றும் பெயர் தெரியாத 50 – 60 பேர் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். அந்த முதல் தகவல் அறிக்கைப் பதிவு இவ்வாறிருந்தது.
”காலை 7 மணி அளவில் நான் (ராம்தேவ்துபே) ‘ஜன்மபூமி’ இடத்திற்குச் சென்றேன். அங்கு காவற்பணியிலிருந்த காவலர் மாதா பிரசாத் (எண் 7, அயோத்தி காவல் நிலையம்) வழியாக நான் தெரிந்து கொண்டதாவது: பாபர் மசூதியின் சுற்றுச்சுவர் வாயில் பூட்டை உடைத்தும், சுவரிலும் படிக்கட்டிலும் தொத்தித் தவழ்ந்து ஏறியும் உள்ளே நுழைந்த 50 – 60 நபர்கள் ஸ்ரீபகவானின் சிலையை அங்கு நட்டி வைத்ததோடு, உள் மற்றும் வெளிப்புறச் சுவர்களில் காவி மற்றும் மஞ்சள் வண்ணங்களில் சீதா, இராமர் படங்களைக் கோடுகளாக எழுதினர். அந்த 50-60 நபர்களும் அதைச் செய்தபோது அங்கு காவற்பணியிலிருந்த ஹன்ஸ்ராஜ் (காவலர் எண் – 70) அவர்களைத் தடுத்தார். ஆயினும் அவர்கள் காவலரைப் பொருட்படுத்தவில்லை. அங்கு பாதுகாப்புப் பணி செய்த மாநில ஆயுதப் படையினர் அழைக்கப்பட்டனர்.
அதற்குள்ளாகக் கும்பல் மசூதிக்குள் நுழைந்து விட்டிருந்தது. அவ்விடத்தை ஆய்வு செய்ய வந்த மாவட்ட மூத்த அதிகாரிகள் செயலில் இறங்கினர். சில மணி நேரம் கடந்த பின்னர் 5000 – 6000 பேர் அங்கு கூடினர். மசூதிக்குள் நுழைய முயற்சி செய்த அவர்கள் மத முழக்கங்களை எழுப்பியவாறும், பக்திப் பாடல்களைப் பாடியவாறும் இருந்தனர். வலுவான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டதனால் இசை கேடாக எதுவும் நிகழவில்லை. குற்றம் இழைத்தவர்களான (அபி) ராம்தாஸ், (ராம்) சகல்தாஸ், சுதர்சன்தாஸ் மற்றும் பெயர் தெரியா 50 – 60 நபர்கள் அத்துமீறி வன்முறையாக மசூதிக்குள் நுழைந்து சிலையை நட்டி வைத்ததோடு, மசூதியில் புனிதத்தையும் தீட்டுப்படுத்தியிருக்கிறார்கள். பணியில் இருந்த அலுவலர்களும், பொதுமக்கள் பலரும் அதைப் பார்த்திருக்கிறார்கள். எனவே நிகழ்வு நன்றாக ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது. நிகழ்வு மெய்யெனவும் கண்டறியப்பட்டிருக்கிறது.” (நூலிலிருந்து பக்.29-30)
அயோத்தியிலிருந்து வெளியிடப்பட்ட இந்தி வார இதழான ”விரக்தா” மட்டுமே நடந்த நிகழ்வுகளை பதிப்பித்து வெளியிட்டது. அதனுடைய ஆசிரியர் நன்கு அறியப்பட்டவரான இராம் கோபால் பாண்டே சரத் இந்து மகாசபை உறுப்பினர். ‘விரக்தா’ வெளியிட்ட செய்திகள் அனைத்தும் இந்து மதச் சார்புடையனவாகவே இருந்தன. மகாசபை உறுப்பினரை ஆசிரியராகக் கொண்ட விரக்தா உண்மை நிகழ்வுகளை வெளியிடும் என எதிர்பார்க்க முடியாது. ஆனாலும் இராமர் பாபர் மசூதிக்குள் தானே தோன்றினார் என்னும் ‘கடவுளின் செயலை’ முதன்முதலாக வெளியிட்டது இந்த இதழ்தான்.
பின்னாட்களில் இந்த இராம் கோபால் பாண்டே சரத் இந்தியில் ஒரு சிறு நூல் – ஸ்ரீ இராம ஜன்ம பூமி கா ரக்தா ரஞ்சித் இதிஹாஸ் – இராமர் பிறந்த இடத்தின் குருதி தோய்ந்த வரலாறு எழுதி வெளியிட்டார் … அந்நூலில் கூறப்பட்டதாவது:
23-12-1949-ம் நாள் இந்தியாவுக்குப் பெருமைமிக்க நாள். அன்றுதான் நானூறு ஆண்டு கால நீண்ட இடைவெளிக்குப் பின் இராமருடைய பிறப்பிடம் மீட்கப்பட்டது. முந்தைய நாள் இரவின் போது நடந்தவை பற்றிக் கூற வேண்டுமானால் அந்த இரவில் இராமர் தனது பிறப்பிடத்தைத் தானே மீட்டுக் கொண்டார் என்பதை மட்டுமே கூற முடியும்”
இவ்வாறு விளக்கம் தந்த மதவாதிகள் இரவின் இருளில் நடத்தப்பட்ட வஞ்சகச் செயலாக்கத்தைத் திரையிட்டு மூடினார்கள். ஆனால் அந்த இரவின் போது நடந்த உண்மை நிகழ்வுகளை ஆய்ந்தறிந்து வெளிக் கொண்டு வர அரசோ, நிறுவனங்களோ, தனி ஆய்வர்களோ முயற்சி செய்யவே இல்லை. ‘கடவுளின் செயல்’ என்பது பொய்க் கதை என வெளிப்படுத்துவதும் ஒருவகைப்பட்ட ஆய்வே. (நூலிலிருந்து பக்.12-13)
அயோத்தியில் நிகழ்த்தப்படவேண்டியவை, மற்றும் அதன் எதிர்விளைவுகள் ஆகியன குறித்து, அரசியல் கட்சி என்ற அளவில் மகாசபை நன்றாகவே அறிந்திருந்தது. நிகழ்த்தப்பட வேண்டிய செயல் ஆபத்துக்கள் நிறைந்தது. பாபர் மசூதிக்குள் அதிரடியாகப் புகுந்து ஆக்கிரமித்துக் கொள்வது என்பது காந்தி கொலைக்குப் பின் உருவாகிய எதிர்விளைவுகளைப் போலவும் ஆகிவிடக்கூடும். அதை விடுத்து வஞ்சக வழிமுறையைக் கையாண்டு, மசூதியைக் கைப்பற்றிக் கொள்வது எளிதாகவும் நல்ல பலன் தருவதாகவும் இருப்பதோடு, உணர்வுகளின் அடித்தளத்தில் இந்துக்களை ஒன்றுதிரட்டி, எதிர்விளைவுகள் ஏற்பட்டால் அவற்றைத் திசை திருப்பவும் இயலும். திட்டமிட்டவாறு அயோத்தியில் நிகழ்த்தப்பட்டால் அதன் தாக்கம் பல தொடர் நிகழ்வுகளைச் செயல்படுத்தவும், நாடு முழுவதும் இந்து தீவிரவாதிகளுக்கு ஊக்கம் பெருகவும் வழிவகை செய்ய, அதன் வழிபட்டுத் தேசிய அரசியலிலிருந்து காங்கிரசை வெளியேற்றவும் இயலும்.
வெளிப்படையாகப் பேசப்படாத வேறொரு காரணமும் இருந்தது. முந்தைய நாட்களில் மகாசபை நல்ல வலுவுடன் இருந்த மராட்டியத்தில் கூட, மக்கள் எதிர்ப்பு மற்றும் அரசின் அடக்குமுறை ஆகிய காரணங்களால் கட்சி புத்துயிர் பெறுவது இயலாததாக இருந்தது. எனவே, புத்துயிர் பெறுவதற்கான ஒன்றைச் செயல்படுத்துவதற்கான இடமாக உ.பி. மாநிலத்தை மகாசபை சிந்திக்கத் தொடங்கியது. மேலும் அங்கு கட்சித் தலைவர்கள் செயல் ஊக்கம் நிறைந்தவர்களாக இருந்தனர். அங்கு பற்ற வைத்தவுடன் வெடித்துச் சிதறக்கூடிய அளவிலான மதப்பூசல்கள் இருந்தன. அங்கிருந்த சமூக அமைப்பு மதங்களிடையே வெறுப்பை உருவாக்குதவற்கு ஏதுவானதாக இருந்தது. அனைத்திலும் மேலாக அங்கு காங்கிரஸ் கட்சியின் அதிகாரமிக்க தலைவர்களில் பெரும்பாலானவர்கள் இந்துத்துவ உணர்வுமிக்கவர்களாக இருந்தனர். எனவே அயோத்தியில் நிகழ்த்தப்படும் சூழ்ச்சிமிக்க திட்டம், இந்துமகா சபை வரலாற்றில் உ.பி. ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்துவிடக்கூடும். கட்சி அதைத் தெளிவாகக் கண்டுகொண்டது. மகந்த் திக்விஜய் நாத் மற்றும் அவரது தளபதிகளான கோபால் சிங் விஷாரத், இராமச்சந்திரதாஸ் பரமஹன்ஸ், அபிராம்தாஸ் ஆகியோரும் அதைக் கண்டுகொண்டனர். (நூலிலிருந்து பக்.68-69)
இசுலாமிய வழிபாட்டு இடத்தை வன்முறையாகக் கைப்பற்றிக் கொள்வதற்காகக் குற்றவியல் வழிமுறைகளை கடைப்பிடிக்கப்பட்டிருக்கின்றன. முதல் தகவல் அறிக்கையில் குற்றம் இழைத்தவர்கள் என அடையாளப் படுத்தப்பட்டவர்களுக்கு இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 147 (கலகம் செய்தது), பிரிவு 275 (வழிபாட்டு இடத்தைத் தீட்டுப் படுத்தியது), பிரிவு 448 (அத்துமீறி நுழைந்தது) ஆகியவற்றின் கீழ் தண்டனை வழங்கப்பட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
1.2.1950 அன்று பதிவு செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையில் குற்றவியல் வழக்கின் முக்கிய குற்றவாளி அபிராம்தாஸ் எனப் பெயர் கூறிப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் குற்றச் செயல் நிகழ்த்தப்பட்டதில் மகாசபைத் தலைவர்களின் பங்கு என்ன எனக் கண்டறிவதற்கான புலனாய்வு மேற்கொள்ளப்படவே இல்லை. சில ஆண்டுகள் வரையில் இழுத்தடிக்கப்பட்ட இந்த குற்றவியல் வழக்கு, இறுதியில் உள்ளூர் இந்து மகா சபைத் தலைவர்கள் தொடுத்த உரிமையியல் வழக்கில் மூழ்கடிக்கப்பட்டது. (நூலிலிருந்து பக்.162)
நூல் : அயோத்தி : இருண்ட இரவு (பாபர் மசூதிக்குள் இராமன் தோன்றிய இரகசிய வரலாறு) ஆசிரியர்கள் : கிருஷ்ணா ஜா மற்றும் திரேந்திர கே.ஜா ஆங்கிலம் வழி தமிழில் : கே. சுப்பிரமணியன்
வெளியீடு : விடியல் பதிப்பகம், 23/5, ஏ.கே.ஜி. நகர், 3-வது தெரு, உப்பிலிபாளையம் – அஞ்சல்,
கோயம்புத்தூர் – 641 015. தொலைபேசி எண் : 0422 – 2576 772 ; 94434 68758 மின்னஞ்சல் : vidiyal@vidiyalpathippagam.org
முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107. இடக்குறியீடு :
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி) அலைபேசி : 99623 90277
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
பெரும்பான்மை மக்களின் கல்வி உரிமையை மறுக்கும் மோடி அரசின் தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் !
அரங்கக்கூட்டம்
நாள் : ஆகஸ்ட் 21, 2019
நேரம்: காலை 11 மணி
இடம் : பெரியார் மன்றம், தருமபுரி
அன்பார்ந்த மாணவர்களே, ஆசிரியர்களே!
3,5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு… 3-வது முதல் தச்சு வேலை, தோட்ட வேலை, கட்டிட வேலை, பானை செய்தல் போன்ற தொழில்கள்…
ஆரம்பக்கல்வி முதலே மும்மொழி திட்டம்…
பள்ளிகளில் பஞ்சதந்திரக் கதைகள், ஜாதகக் கதைகள், கீத உபதேசம் என புராணக் கட்டுக்கதைகள்…
தேசிய அளவில் ஒரே பாடத்திட்டம், ஒரே தேர்வு…
யு.ஜி.சி, எம்.சி.ஐ போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் கலைப்பு. உயர்கல்வி ஆணையம், உயர்கல்விக்கான அறக்கட்டளை, உயர்கல்வி நிதிக்கான குழு ஆகியவை உருவாக்கப்படுமாம்!
கலை – அறிவியல் படிப்புகளுக்கும் இனி நீட் தேர்வு..
இதுதான் மோடி அரசின் புதிய கல்விக் கொள்கை – 2019.
தலைமை :
தோழர். சத்தியநாதன்
மாவட்ட அமைப்பு குழு உறுப்பினர், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி. தருமபுரி.
கருத்துரை :
ஜெயந்தி,
மாணவி, அரசு சட்டக்கல்லூரி, தருமபுரி.
திரு. ஜெ. கிருஷ்ணமூர்த்தி,
செயலாளர், பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்கம், தமிழ்நாடு- புதுவை.
முனைவர். க.ரமேஷ்
துணை ஒருங்கிணைப்பாளர்
பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்பு குழு (CCCE) சென்னை.
சிறப்புரை:
தோழர். த.கணேசன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, தமிழ்நாடு.
நன்றியுரை :
தோழர். பாலன்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, தருமபுரி.
1 of 2
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் : புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, தருமபுரி மாவட்டம். தொடர்புக்கு: 63845 69228.
குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 4 | பாகம் – 01
அத்தியாயம் நான்கு :
அரிச்சுவடி விழா (84-வது நாள்) படிப்பது – புதியவற்றை அறியும் வழி
எனது ஆசிரியர் தொழிலின் ஆரம்பத்தில் நான் குழந்தைகளுக்கு எப்படி எழுத்துகளைச் சொல்லிக் கொடுத்தேன், எப்படி விளக்கினேன், படிக்கவும் எழுதவும் எப்படிச் சொல்லித் தந்தேன் என்று யோசித்துப் பார்க்கையில் எப்படியாவது மந்திரக்கோல் மூலம் பழைய நாட்களுக்குத் திரும்பி எனது அன்றைய குறைகளை நிவர்த்தி செய்யவும், சலிப்பான பாடங்கள், களைப்பேற்படுத்தும், புத்தி சொல்லும் படிப்பு முறைகள், கடுமையான கையெழுத்துப் பயிற்சிகள், பொதுவாக அதிகாரத்தொனி ஆகியவற்றை மாற்றவும் முடிந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்று தோன்றுகிறது. நான் இன்று பயன்படுத்தும் முறையின்படி அன்று அவர்களுக்கு சொல்லித் தந்திருந்தால், அவர்களுடைய இன்றைய வாழ்வில் என்ன மாறியிருக்குமென எனக்குத் தெரியாது. அனேகமாக அவர்களுடைய வளர்ச்சியை நான் துரிதப்படுத்தியிருப்பேன், எழுத்துக் கட்டம் என்றழைக்கப்படும் கடினமான கால கட்டத்தை இரண்டு மடங்கு குறைத்திருப்பேன்.
யாராவது ஒரு புத்தகத்தைப் படிக்கும் போது ஆறு வயதுக் குழந்தைக்கு பாடநூலில் அவ்வரிகளைப் பின்பற்றுவது கடினம் என்று எனக்குத் தெரிந்தால் இம்மாதிரி செய்யுமாறு ஏன் அவனைக் கட்டாயப்படுத்த வேண்டும்? அதுவும், “திடீரென நிறுத்தி, உன்னைப் படிக்கும்படி சொல்வேன்” என்று ஏன் கட்டாயப்படுத்த வேண்டும்? கோடு போட்ட நோட்டுப் புத்தகத்தில் பெரிய எழுத்துகளை எழுதிப் பழகிய பின் சிறிதாக எழுதுவது கடினம் என்று எனக்குத் தெரியும் போது நான் ஏன் இவனை முட்டுக்கட்டைக்குத் தள்ள வேண்டும்?
எனது பாட முறைகள் கல்வியைக் கடினமாக்கி, குழந்தையை ஞானத்திலிருந்து தள்ளி, அவனுடைய வாழ்க்கையையும் நெருங்கியவர்களுடனான உறவையும் சிக்கலாக்கினால் இவற்றின் மனிதாபிமானம் எங்கே?
எப்படியாவது மந்திரக்கோல் மூலம் பழைய நாட்களுக்குத் திரும்பி எனது அன்றைய குறைகளை நிவர்த்தி செய்யவும் பொதுவாக அதிகாரத்தொனி ஆகியவற்றை மாற்றவும் முடிந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்று தோன்றுகிறது.
கல்வி முறைகளை எப்படி நிர்ணயிப்பது, இவற்றை எப்படி வகைப்படுத்துவது, எப்படிப்பட்ட பாட வரையளவுகளை நிலை நாட்டுவது, பாடத்தில் மூன்று, ஐந்து, ஏழு, பத்து அம்சங்களைப் பாகுபடுத்திப் பார்க்க வேண்டுமா என்றெல்லாம் கல்வி நிபுணர்கள் அடிக்கடி விவாதிக்கின்றனர். ஒருவேளை இந்தப் பன்முக சிந்தனை தன் சாரத்தில் மதிப்புமிக்கதாக இருக்கலாம். மேற்கூறிய வகைபாடுகளும் வரையளவுகளும் கட்டமைப்புகளும் பாடவேளையின் போதும் பாடங்கள் முடிந்த பின்னரும் குழந்தையின் வாழ்க்கையை எப்படி இலகுவாக்கும், இவற்றைப் பயன்படுத்தி புதியவற்றை அறியும் மகிழ்ச்சியை, பள்ளி வாழ்க்கையின் சந்தோஷத்தைக் குழந்தைகளுக்கு எப்படியளிப்பது எனும் மிக முக்கிய அம்சத்திற்கு ஆசிரியரியல் விவாதங்களும் விஞ்ஞான ஆராய்ச்சிகளும் பதில்தராவிடில் இவற்றால் எப்போதுமே தத்துவத்தை முன்தள்ள முடியாது.
இன்று வகுப்பில் எழுத்து விழா: இன்று என் வகுப்புக் குழந்தைகள் எழுத்துகளைக் கற்றுக் கொள்வதை முடிக்கின்றனர். இன்று டிசம்பர் 28-ம் தேதி, 84-வது பள்ளி நாள், அரிச்சுவடியின் கடைசி எழுத்தைச் சொல்லித் தந்து விட்டு, எல்லா எழுத்துகளையும் படித்ததற்காகப் பாராட்டுவேன். நாங்கள் எப்படி எழுத்துகளைப் படித்தோம்?
ஒரு வார்த்தையில் புதிய ஒலியைத் தனியே சுட்டிக் காட்டி பின் இதன் வரி வடிவத்தைப் படிக்கும் அவசியமே ஏற்படவில்லை. பல வார்த்தைகளின் ஒலி உள்ளடக்கத்தைப் பகுப்பாய்வு செய்த என் வகுப்புக் குழந்தைகளுக்குக் கிட்டத்தட்ட “புதிய ஒலி” என்பதே இருக்கவில்லை . “முதல் அசை என்ன… இரண்டாவது அசை… முதல் ஒலி…” என்ற வகையில் நாங்கள் வார்த்தையை வழக்கமான முறையில் பகுப்பாய்வு செய்யவில்லை. ஏனெனில் இது அவர்களின் வளர்ச்சிக்குப் புதிதாக எதையுமே தரவில்லை (இது அவர்களிடம் ஏற்கெனவே வளர்ச்சியடைந்திருந்தது), அவர்கள் புதிதாக அறிந்து கொள்ளவும் உதவவில்லை (இந்த “தேட்டத்தில் எல்லாமே குழந்தைகளுக்குத் தெரிந்திருந்தது). எழுத்துகளைச் சொல்லித் தரும் போது நான் படங்களையும் பயன்படுத்தவில்லை; இவை ஏதோ வார்த்தையில் ஒலிப் பகுப்பாய்விற்கு உதவுவதாகக் கூறுகின்றனர்.
உதாரணமாக, சேவல் படத்தைக் காட்டினால் குழந்தைகள் இந்த வீட்டு மிருகத்தைப் பற்றித் தமக்கு தெரிந்தவற்றையெல்லாம் சொல்வார்கள், சேவல் என்று உச்சரிப்பார்கள் பின் இதை அசைகளாகவும் ஒலிகளாகவும் பிரிக்கத் தொடங்குவார்கள். இந்தப் பட முறையைக் கைவிட்ட நான் பொருளைப் பற்றிய பேச்சையும் கைவிட்டேன், ஏனெனில் இது உண்மையில் படிக்க வேண்டியதிலிருந்து குழந்தைகளின் கவனத்தைத் திசை திருப்பியது. வார்த்தையின் மிகச் சிறந்த வெளிப்பாடு இந்த வார்த்தையும் இதன் மாடலும்தான்.
இவ்வாறாக, நாங்கள் ‘புதிய’ எழுத்தை நோக்கி (ஒலியைத் தாண்டி) நேரடியாக “தாவிச்” சென்றோம். நான் இதை எப்படிச் செய்தேன்?
முதல் முறை :
“குழந்தைகளே, இதைப் பாருங்கள், இன்று எந்த எழுத்தைப் படிக்கப் போகின்றோம் என்று சொல்லுங்கள்.”
கரும்பலகையில் உலகம் எனும் சொல் எழுதப்பட்டுள்ளது. இதில் இரண்டாவது எழுத்தாகிய ‘ல’ என்பது புதிய எழுத்து. அருகே வட்டத்தினுள் அறிமுகமான, அறிமுகமற்ற எழுத்துகள் எழுதப்பட்டுள்ளன, ல எனும் எழுத்து மூன்று முறை எழுதப்பட்டுள்ளது.
“இவ்வட்டத்தில் உள்ள எழுத்துகளைப் பாருங்கள். இங்கே ‘ல’ என்ற எழுத்து உள்ளதா? எவ்வளவு ‘ல’ உள்ளன?
குழந்தைகளுக்கு அறிமுகமான எழுத்துகள் வார்த்தையைப் படிக்கவும், புதிய எழுத்து எது என்று கண்டு பிடிக்கவும், இதைச் சொல்லவும், வார்த்தையில் இதைச் சுட்டிக்காட்டவும் உதவும்.
இரண்டாவது முறை :
“இந்த வார்த்தைகளைப் பாருங்கள். நான் சொல்லித் தரப்போகும் எழுத்து இவற்றில் சிலவற்றினுள் ஒளிந்து கொண்டிருக்கிறது. இது என்ன எழுத்து? எந்தெந்த வார்த்தைகளில் இது உள்ளது?”
கரும்பலகையில் பதினொன்று வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளன. இவற்றில் எட்டு வார்த்தைகளில் புதிய எழுத்தாகிய ‘ப’ உள்ளது. படிக்கப் போகும் எழுத்து தனியாக வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ளது. எழுத்துகள் மற்றும் வட்டங்கள் சேர்ந்து வார்த்தையைப் படிக்கவும் அதில் ‘ப’ என்ற எழுத்தைக் கண்டுபிடிக்கவும் உதவும். எந்த வார்த்தையில், எந்த இடத்தில் “புதிய எழுத்து” உள்ளதென அவர்கள் சொல்கின்றனர், எனது செய்கைகளைக் கவனித்து திருத்துகின்றனர். ஒவ்வொரு வார்த்தையிலும் உள்ள ‘ப’ என்ற எழுத்தைக் கோடுபோட்டு இணைக்கும் நான் “கவனக் குறைவாக” “தவறு” செய்யக் கூடாது அல்லவா! கரும்பலகையில் பின்வரும் படம் இருக்கும், இதன் நடுவே ‘ப’ என்று நான் எழுதுகிறேன்.
மூன்றாவது முறை :
“இந்தப் படத்தைப் பாருங்கள், நாம் எந்த எழுத்தை இன்று படிக்கப் போகின்றோம் என்று கண்டுபிடியுங்கள்.”
இப்படத்தின் நடுவே ஒரு சிறு சதுரம் உள்ளது, அதில் கேள்விக்குறி இடப்பட்டுள்ளது; சதுரத்தைச் சுற்றிலும் வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளன. இவற்றில் இன்று படிக்க வேண்டிய எழுத்தைச் சுற்றி வட்டமிடப்பட்டு, இவை கோடுகளால் நடுவிலுள்ள சதுரத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த எழுத்து ‘ர’ என்று குழந்தைகள் கண்டுபிடித்ததும், சதுரத்தில் உள்ள கேள்விக்குறியை அழித்து விட்டு இந்த எழுத்தை எழுதுகிறேன். ஆனால் நான் “தப்பு செய்யக் கூடும்”, ‘ர’ என்பதற்குப் பதில் ‘கு’ என்றோ வேறு எழுத்தையோ எழுதினால், குழந்தைகள் என்னைத் திருத்துவார்கள்.”
நான்காவது முறை :
“இங்குள்ளவற்றில் ‘ந’ என்ற எழுத்து எது என்று உங்களில் யாரால் சொல்ல முடியும்?”
கரும்பலகையில் ஐந்து எழுத்துகள் எழுதப்பட்டுள்ளன: ஓ, க, ந, ம, ழ. இவற்றில் இரண்டு ஏற்கெனவே அவர்களுக்கு அறிமுகமானவை, மூன்று தெரியாதவை.
“ஒருவேளை இதுவோ?” என்று முதல் எழுத்தைக் காட்டி நான் கேட்கிறேன்.
“இல்லை, அது ஓ!” நான் அதைக் கரும்பலகையிலிருந்து அழிக்கிறேன்.
“ஒருவேளை இதுவோ!” என்று இரண்டாவது எழுத்தைக் காட்டிக் கேட்கிறேன்.
“இல்லை இது க.” அதையும் அழிக்கிறேன்.
“சரி, ந என்ற எழுத்து எங்கே இருக்கிறது?”
“நடுவில்!” என்று குழந்தைகள் பதிலளிக்கின்றனர்.
“இதுவா?”
“ஆமாம்!”
“இவை என்ன எழுத்துகள்?” என்று இன்னமும் நாங்கள் படிக்காத எழுத்துகளைக் காட்டி கேட்கிறேன். பலர் அவற்றைச் சொல்கின்றனர்.
“சரி, இவற்றைப் பின்னால் பார்ப்போம்.” என்று அந்த இரண்டு எழுத்துகளையும் அழிக்கிறேன்.
“இது என்ன எழுத்து?”
“ந!” ஒருமித்த குரலில் பதில் வருகிறது.
ஐந்தாவது முறை :
குழந்தைகள் வருமுன் வகுப்பிலுள்ள கரும்பலகைகளில் நாங்கள் படிக்கப் போகும் எழுத்தை இரண்டு, மூன்று முறை எழுதுகிறேன். வகுப்பறையினுள் நுழைந்ததுமே குழந்தைகள் இதைக் கவனித்து விடுவார்கள். இது என்ன எழுத்து என்று விவாதிக்கத் தொடங்குவார்கள். பாடம் துவங்கும் போது பெரும்பான்மையினருக்கு இது நன்கு தெரிந்திருக்கும்.
“இன்று எந்த எழுத்தைப் படிக்கப் போகின்றோம்?”
அவர்கள் எல்லோரும் ஒரே குரலில் பதில் சொல்வார்கள்.
எழுத்தைப் படித்த பின் நான் குழந்தைகளுக்குப் பல்வேறு விதமான வேலைகளைத் தருவேன். இவற்றிற்கு நான் பெரும் முக்கியத்துவம் தருகிறேன்.
எனது பாட முறைகள் கல்வியைக் கடினமாக்கி, குழந்தையை ஞானத்திலிருந்து தள்ளி, அவனுடைய வாழ்க்கையையும் நெருங்கியவர்களுடனான உறவையும் சிக்கலாக்கினால் இவற்றின் மனிதாபிமானம் எங்கே?
எழுத்துக் கட்டம் என்றழைக்கப்படும் இந்தக் கால கட்டத்தில் என் ஆறு வயதுச் சிறுவர் சிறுமியருக்குப் படிப்பதன் கஷ்டங்களைப் பற்றிச் சொல்லி அச்சுறுத்த நான் விரும்பவில்லை; எழுத்துகளில் சுவாரசியமானது எதுவுமே இல்லை என்றொரு கருத்து அவர்களிடம் ஏற்பட்டால் ருஸ்தவேலி, பாரதஷ்வீலி, சாவ்சவாத்ஸே, பூஷ்கின், டால்ஸ்டாய் போன்றவர்களைப் படிக்கும் மகிழ்ச்சியை நான் அவர்களிடமிருந்து பிடுங்கியவனாவேன். எனது முயற்சிகள் இப்படி முடியக்கூடாதென விரும்புகிறேன், எனவே, எழுத்துக் கட்டத்தை விரிவுபடுத்துவது, புதியவற்றைப் பரவலாகக் கற்றுக்கொள்ளும் அக்கறைகளை வளர்ப்பது (படிக்கும் பழக்கத்தின் மூலம் இவற்றைப் பூர்த்தி செய்யலாம்) ஆகியவற்றை லட்சியமாக முன்வைக்கிறேன்.
குழந்தைகளிடம் உள்ள படிக்கும் பழக்கத்தை அதிகப் பரவலான, உட்பொருள் மிக்க, உணர்ச்சிகரமான, சுவாரசியமான அறிதல் நடவடிக்கையாக மாற்ற வேண்டும், இப்படிக்கும் பழக்கமே இறுதி இலட்சியமாக இருக்கக் கூடாது, இது புதியவற்றை அறியும் சாதனமாகத் திகழுமாறு செய்ய வேண்டும்.
இந்த “முது மொழியின்” அடிப்படையில் எனது வகுப்புக் குழந்தைகளுக்கான பாட முறைகளை உருவாக்கினேன்.
முதல் பாடம் :
கரும்பலகையில் அசைகளும் சொற்களும் செங்குத்தாக ஒரே வரிசையில் எழுதப்பட்டுள்ளன. ஆசிரியர் கரும்பலகையிலிருந்து தள்ளி நின்று வேகமாகக் கேள்விகளைக் கேட்க வேண்டும்.
“மேலிருந்து மூன்றாவதாக நர்ச என்று எழுதப்பட்டுள்ளது. இல்லையா?”
குழந்தைகள் படித்துப் பார்த்து விட்டு நான் சொன்னது தவறு என்கின்றனர்.
“அது என்ன அசை?”
குழந்தைகள் (ஒரே குரலில்): “நசர்!”
குழந்தைகளிடம் உள்ள படிக்கும் பழக்கத்தை அதிகப் பரவலான, உட்பொருள் மிக்க, உணர்ச்சிகரமான, சுவாரசியமான அறிதல் நடவடிக்கையாக மாற்ற வேண்டும், இப்படிக்கும் பழக்கமே இறுதி இலட்சியமாக இருக்கக் கூடாது, இது புதியவற்றை அறியும் சாதனமாகத் திகழுமாறு செய்ய வேண்டும்.
“கீழிருந்து நான்காவதாக அகர் என்று எழுதப்பட்டுள்ளது. சரிதானே?”
“ஆமாம்!”
“எல்லோரும் சேர்ந்து இந்த அசையைப் படியுங்கள் பார்க்கலாம்.”
குழந்தைகள் (ஒரே குரலில்): “அகர்!”
“மேலிருந்து கீழாக எந்த இடத்தில் பாய்மரம் என்ற வார்த்தை உள்ளது?”
இந்த வார்த்தையே கரும்பலகையில் இல்லையே என்று குழந்தைகள் பார்க்கின்றனர்.
“மன்னியுங்கள்! பம்பரம் என்று சொல்ல விரும்பினேன்!”
“மூன்றாவது இடத்தில்!” என்று குழந்தைகள் கத்துகின்றனர்.
இரண்டாவது பாடம் :
“இந்த வாக்கியத்தில் நான் என்ன தப்பு செய்துள்ளேன் என்று கண்டுபிடியுங்கள்.”
குழந்தைகள் வாக்கியத்தைப் படித்து விட்டு தப்பைத் தேடுகின்றனர்; இதில் தப்பே இல்லாமலிருக்கலாம். உண்மையில் தப்பு உள்ளதா, இருந்தால் எந்த வார்த்தையில் உள்ளது, இதை எப்படித் திருத்துவது என்று இவர்கள் கண்டுபிடிக்க வேண்டும்.
மூன்றாவது பாடம் :
கரும்பலகையில் ஐந்து, ஆறு எழுத்துகள் எழுதப்பட்டுள்ளன.
“இவற்றைக் கொண்டு ஆறு வெவ்வேறு சொற்களை எழுதலாம், எங்கே முயற்சி செய்யுங்கள் பார்க்கலாம்!”
குழந்தைகள் வார்த்தைகளை உருவாக்கிச் சொல்ல, நான் அவற்றைக் கரும்பலகையில் எழுதுகிறேன். ஆனால் ஆறாவது வார்த்தையை அவர்களால் கண்டுபிடிக்க இயலவில்லை. இந்த எழுத்துகளை எப்படியெல்லாம் சேர்த்து எழுதலாம் என்று ஒன்றாகச் சேர்ந்து யோசித்து விட்டு, ஐந்து வார்த்தைகளுக்கு மேல் எழுத முடியாது என்ற முடிவிற்கு வருகிறோம்.
நான்காவது பாடம் :
கரும்பலகையில் வார்த்தைகளும் படங்களும் உள்ளன, இவை ஒவ்வொன்றும் கோடுகளால் இணைக்கப்பட்டுள்ளன.
“வார்த்தைகள் சரியான படங்களுடன் இணைக்கப் பட்டுள்ளதா என்று பார்த்துச் சொல்லுங்கள்!”
வார்த்தைகள் படங்களுடன் தவறாக இணைக்கப்பட்டிருந்தால் அவற்றைச் சரி செய்ய குழந்தைகள் எனக்கு உதவுகின்றனர். சில சமயங்களில் வேண்டுமென்றே நான் தவறாக இணைத்து தப்பு செய்தேன். குழந்தைகள் என்னைத் திருத்த ஆரம்பிக்க, நான் அங்குமிங்குமாகக் கோடு போட்டேன், சரியான வார்த்தையைக் “கண்டு பிடித்து”, வகுப்பு அமைதியாகும் வரை இப்படி செய்தேன். சுயமாக செய்து பார்ப்பதற்காக இப்படி படங்களும் எழுத்துகளும் உள்ள தாள்களை வீட்டிற்கு எடுத்துச் செல்ல அவர்கள் பெரிதும் விரும்பினர். அவர்கள் தமது விடைகளைக் கரும்பலகையில் எனது விடைகளுடன் ஒப்பிட்டு மீண்டும் என் “தவறுகளைக்” கண்டுபிடித்தனர்.
ஐந்தாவது பாடம் :
நான் கரும்பலகையில் எழுத்துகள், படங்களைக் கொண்டு எளிய ஓவிய ஒலியெழுத்துப் புதிர்களை வரைந்தேன்; வார்த்தைகளிலிருந்து குறிப்பிட்ட எழுத்துகளை எடுத்து விட்டு வார்த்தையின் எஞ்சிய பகுதியைப் படங்களின் பெயர்களுடன் இணைக்க வேண்டும். விடைகளைக் கரும்பலகையில் எழுதி இவற்றைக் குழந்தைகளுடன் சேர்ந்து சரிபார்த்தேன். தனியாகப் போட்டுப் பார்ப்பதற்காக இத்தகைய புதிர்கள் அடங்கிய தாள்களை நான் தயாரித்த போது குழந்தைகள் மகிழ்ச்சியடைந்தனர், இவற்றை வீட்டிற்கு எடுத்துச் செல்ல அனுமதிக்குமாறு கேட்டனர்.
ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு தகுதியை வழங்கிய 370 வது பிரிவை நீக்கியதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘பட்டேல் 2.0’ என புகழப்படுகிறார்.
அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு தடுத்ததன் காரணமாக, நாட்டின் முதல் உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேல் முடிக்காமல் விட்ட காஷ்மீரை முழுமையாக இந்தியாவுடன் ஒருங்கிணைக்கும் பணியை அமித் ஷா முடித்துவிட்டார் என்பதே இந்த கூற்றின் பின்னால் சொல்லப்படும் காரணம்.
இந்திய ஒன்றியத்தில் 552 சுதேச மாநிலங்களை இணைத்த பெருமைக்குரியவரான பட்டேல், காஷ்மீர் குறித்த நிலைப்பாட்டில் நேருவுடன் ஒத்துப்போகவில்லை என பாஜக நீண்ட காலமாகக் கூறிவருகிறது.
பிரிவு 370-ஐ நீக்குவது குறித்து கடந்த திங்கள் கிழமை நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தில், மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர குமார், “பட்டேல் ஜம்மு காஷ்மீரிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்தார். பட்டேலைவிட தனக்குத்தான் ஜம்மு காஷ்மீர் குறித்து நன்றாகத் தெரியும் என நேரு நினைத்தார்” என பேசினார்.
வல்லபாய் பட்டேல்
ஜம்முவைச் சேர்ந்த பாஜக உறுப்பினர் ஜுகல் கிஷோர் சர்மா, “ஷேக் அப்துல்லாவின் தூண்டுதலின் பேரில் ஜவஹர்லால் நேரு பிரிவு 370 மற்றும் பிரிவு 35 ஏ -ஐ திணித்தார். பிரிவு 370 அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டபோது, சர்தார் வல்லபாய் பட்டேல், பி. ஆர். அம்பேத்கர், ஷியாமா பிரசாத் மூகர்ஜி அதை எதிர்த்தார்கள்” என்றார்.
ஆனால், வரலாற்று ஆதாரங்கள் பட்டேல் பிரிவு 370-ஐ முழுமையாக ஆதரித்தார் என சொல்கின்றன என்கிறார் ஸ்ரீநாத் ராகவன். அரியானாவில் உள்ள அசோகா பல்கலைக்கழகத்தில் சர்வதேச தொடர்புகள் மற்றும் வரலாற்று துறை பேராசிரியராக உள்ளார் இவர்.
“பிரிவு 370 என்பது முழுக்க முழுக்க பட்டேலின் உருவாக்கம். மற்றவர்களைவிட பட்டேலின் கருத்துக்கே இந்த விசயத்தில் முக்கியத்துவம் தரப்பட்டது” என்கிறார் ராகவன்.
“நேரு அதை திணித்தார் எனக் கூறுவது அபத்தமாகும். ஏனெனில் இது அரசின் கொள்கை முடிவு அல்ல; அரசியலமைப்பு சபையால் நிறைவேற்றப்பட்ட ஒன்று” என்கிறார் அவர்.
இந்தப் பிரிவின் முதல் வரைவு குறித்த சந்திப்பு 1949-ம் ஆண்டு மே 15 மற்றும் 16 தேதிகளில் பட்டேலின் இல்லத்தில் நடந்தது. அப்போது நேருவும் இருந்தார் என்கிற தகவலையும் அவர் கூறுகிறார்.
ஜம்மு – காஷ்மீரின் முதலமைச்சர் ஷேக் அப்துல்லாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் என். ஜி. அய்யங்கார். நேரு, அப்துல்லாவிடமிருந்து ஒப்பந்தத்தின் சுருக்கமான வரையறைகளை வரைவுக் கடிதமாகத் தயாரித்து பட்டேலுக்கு ஒரு குறிப்புடன் அனுப்பினார் அவர்.
“நீங்கள் ஒப்புதல் அளித்ததை ஜவஹர்லால்ஜிக்கு நேரடியாக தெரியப்படுத்த முடியுமா? உங்கள் ஒப்புதலைப் பெற்ற பின்னரே அவர் ஷேக் அப்துல்லாவுக்கு கடிதம் அனுப்புவார்” எனக் கூறுகிறது அய்யங்கார் எழுதிய ஒரு குறிப்பு.
மேலும், நேரு வெளிநாட்டில் இருந்தபோது, இந்திய அரசியலமைப்பின் உரிமைகள் மற்றும் உத்தரவு கோட்பாடுகளை தகவமைத்து கொள்வதற்கான கேள்விகளை ஜம்மு காஷ்மீர் அரசியலமைப்பு சபைக்கு வழங்கப்பட வேண்டும் என்பதை அப்துல்லா வலியுறுத்தினார். இதன் பிறகு அப்துல்லாவுடன் பேச்சு வார்த்தையை தொடருமாறு அய்யங்காரிடம் படேல் கேட்டுக்கொண்டார்.
அப்துல்லாவின் நிலைப்பாட்டில் தனக்கு உடன்பாடு இல்லாதபோதும் பட்டேல் இதைச் செய்தார். நேரு திரும்பியபோது, இந்த நிலைப்பாட்டை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ள வைப்பதில் தான் வெற்றியடைந்துவிட்டதாகவும் அவரிடம் பட்டேல் தெரிவித்தார்.
பிரச்சினையை தீர்ப்பதற்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், காஷ்மீர் விவகாரம் ஐநா வரை செல்ல நேருவே காரணம் என பாஜக கூறுகிறது.
ஷியாமா பிரசாத் முகர்ஜி
பாஜகவின் பிறப்பிடமான ஜன சங்கத்தின் நிறுவனர் முகர்ஜி, காஷ்மீர் பிரச்சினையை ஐநா தீர்க்க வேண்டும் என ஒப்புக்கொண்டதாகத்தான் ஆவணங்கள் கூறுகின்றன. ஆனால், பாஜகவோ காஷ்மீரின் சிறப்பு தகுதியை நீக்குவதற்குத்தான் அவர் கனவு கண்டார் எனக் கூறிவருகிறது.
முகர்ஜி, 1952 ஆகஸ்ட் 7-ம் தேதி மக்களவையில் இப்படி பேசினார், “காஷ்மீர் பிரச்சினையை ஐநாவிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றவர்களில் நானும் ஒருவன் எனக் கூறப்படுகிறது. அது உண்மைதான். அந்த முடிவு எடுக்கப்பட்ட அசாதாரண சூழ்நிலைகளையும் அந்த சூழ்நிலையில் இந்திய அரசு கொண்டிருந்த பெரும் எதிர்பார்ப்புகளையும் வெளியிட எனக்கு எந்த உரிமையும் இல்லை. ஆனால், ஐநாவிடமிருந்து நாங்கள் எதிர்ப்பார்த்த ஆதரவு கிடைக்கவில்லை”.
காஷ்மீரில் குடியேற விரும்பும் காஷ்மீர் அல்லாதவர்களுக்கு எதிரான கட்டுப்பாடுகளை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்க முயன்ற முகர்ஜி, 1953-ம் ஆண்டு ஸ்ரீநகரில் தடுப்புக் காவலில் இறந்தார். மாரடைப்பு காரணமாக இறந்ததாக மருத்துவ அறிக்கை கூறினாலும், முன்னாள் பிரதமர் அட்டல் பிகாரி வாஜ்பாய், நேருவின் சதித்திட்டம்தான் காரணம் என பழிபோட்டார்.
வரலாற்றாசிரியர் இர்ஃபான் ஹபீப், காஷ்மீருக்கான சிறப்பு தகுதியை, வெளியாரை அனுமதிப்பது உள்ளிட்ட உண்மையான காரணங்களின் அடிப்படையில் பட்டேல் ஆதரித்தார். ஆனால், முகர்ஜி அதை எதிர்த்தார்.
“சங்க உறுப்பினர்கள் உள்ளூர் முசுலீம்களை துன்புறுத்துவதையும் அவர்களுடைய நிலங்களை பறிப்பதையும் செய்து வந்தனர். இதன் காரணமாகத்தான் சர்தார் பட்டேல், உள்ளூர் மக்களின் நிலங்கள் பறிக்கப்படுவதை தடுக்க, காஷ்மீரில் நுழைவதை தடை செய்தார்” என்கிறார் அவர்.
பட்டேல் ஒரு கட்டத்தில் ஹைதராபாத்துக்காக காஷ்மீரை பாகிஸ்தானுடன் பரிமாறிக்கொள்ளத் தயாராக இருந்தார் என்பதையும் வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்த ஜுனாகாத்தின் முசுலீம் தலைவர் பாகிஸ்தானுடன் இணைய விரும்பினார். அப்போது ஒரு உரையின்போது பட்டேல் இந்த கருத்தை முன்வைத்தார்.
1947 நவம்பர் 14 இந்துஸ்தான் டைம்ஸில் பட்டேல் சொன்னதாக, “ஜுனாகாத்துக்கு பதிலாக காஷ்மீரை அடைய பாகிஸ்தான் நினைத்தது. ஜனநாயக வழியில் தீர்வு பற்றிய கேள்வி எழுப்பியபோது, அவர்கள் ஒருமுறை இந்தக் கொள்கையை காஷ்மீரில் பயன்படுத்தினால் அவர்கள் அதைக் கருத்தில் கொள்வதாக சொன்னார்கள். எங்களுடைய பதில், அவர்கள் ஹைதராபாத்துக்கு ஒப்புக்கொண்டால் நாங்கள் காஷ்மீருக்கு ஒப்புக்கொள்வோம் என்பதாக இருந்தது” செய்தியாகியுள்ளது.
இருப்பினும், 370-வது பிரிவு குறித்து பட்டேல், நேருவுடன் உடன்பட்டிருந்தாலும் காஷ்மீர் விவகாரத்தின் மற்ற அம்சங்கள் மற்றும் புது டெல்லி அதைக் கையாண்ட விதம் குறித்தும் இருவருக்கும் வேறுபாடுகள் இருந்தன.
ஷேக் அப்துல்லா – ஜவஹர்லால் நேரு.
பட்டேல் குறித்த வாழ்க்கை வரலாற்று நூலில் ராஜ்மோகன் காந்தி இப்படிச் சொல்கிறார்: “காஷ்மீரின் மீதான இந்தியாவின் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து பட்டேல் மகிழ்ச்சியற்ற நிலையில் இருந்தார். பொது வாக்கெடுப்பு, ஐநாவிடம் சென்றது, போர் நிறுத்தம் காரணமாக மாநிலத்தில் ஒரு பெரும்பகுதி பாகிஸ்தானின் கைகளுக்குச் சென்றது, மகாராஜாவை அகற்றுவது உள்ளிட்டவையும் அதில் அடங்கும். ஆனாலும் எப்போதாவது கருத்து சொல்வது அல்லது ஒரு குறிப்பை சொல்வது என்றிருந்தாலும் அவர் ஒருபோதும் தனது சுய தீர்வை சொல்லவில்லை”.
நேஷனல் புக் டிரஸ்ட் 2010-ம் ஆண்டு வெளியிட்ட Nehru-Patel: Agreement Within Differences, Select Documents and Correspondences, 1933-1950, என்ற நூலில் இதுபோன்ற ஏராளமான கூற்றுக்கள் உள்ளன.
1948-ம் ஆண்டு ஜனவரி 3-ம் தேதி கல்கத்தாவில் பேசிய பட்டேல், “காஷ்மீரைப் பொறுத்தவரை, மறைமுகமான யுத்தத்தில் ஈடுபடுவதைக் காட்டிலும் நேரிடையாகப் போரிடுவதை விரும்புகிறோம். அதனால்தான் நாங்கள் ஐநாவிடம் சென்றோம். காஷ்மீர் வாளின் மூலம் காப்பாற்றப்படுமெனில், அங்கே பொது வாக்கெடுப்பு எடுப்பதன் தேவைதான் என்ன? காஷ்மீர் பிரதேசத்தின் ஒரு அங்குலத்தைக்கூட நாங்கள் ஒப்படைக்க மாட்டோம்”.
“காந்திக்குப் பிறகு இந்தியா: உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் வரலாறு” என்ற ராமச்சந்திர குஹாவின் நூலில், தொழிலதிபர் ஜி. டி. பிர்லாவிடம் 1949 மே மாதம் பட்டேல் சொன்னதாக ஒரு கூற்று சொல்லப்பட்டுள்ளது. “இப்போது நாம் ஒரு பழிவாங்கும் நேரத்தில் இருக்கிறோம். வானிலையும் காஷ்மீர் பிரச்சினையும் நமக்கு மோசமான தலைவலியை கொடுத்துக் கொண்டிருக்கின்றன”.
“Agreement Within Differences” நூலில் இந்தியாவின் முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத்திடம் 1949, ஜூன் 29-ம் தேதி டேராடூனில் பட்டேல் இப்படிச் சொல்கிறார்…“காஷ்மீர் பிரச்சினையும்கூட தீர்ந்திருக்கும். ஆனால் ஜவஹர்லால் பாராமுல்லாவிலிருந்து டொமெல்லுக்கு (1947-48 போரின்போது) படைகளை அனுப்பவில்லை. அவர் பூன்ச்-க்கு படைகளை அனுப்பினார்”
ஆனாலும், ராகவனின் “நவீன இந்தியாவில் போரும் அமைதியும்” என்ற நூலில் பட்டேல் இந்தியா, பாகிஸ்தான் இடையே காஷ்மீரை இரண்டாக பகிர்ந்துகொள்ள சமரசம் செய்துகொண்டார் என்றும் கூறுகிறது.
1948-ம் ஆண்டு ஆகஸ்டு 11-ம் தேதி இந்தியாவுக்கான இங்கிலாந்தின் தூதரிடம் பட்டேல், “ஜம்மு காஷ்மீர் பிரிவினை நிரந்தர, உடனடி மற்றும் யதார்த்தமான தீர்வை வழங்கும்” என சொல்லியிருக்கிறார்.
இந்தியாவின் இறுதி பிரிட்டீஷ் கவர்னர் ஜனரலாக இருந்த லூயிஸ் மவுண்பேட்டனுக்கு 1950 மார்ச் 16-ம் தேதி எழுதிய கடிதத்தில் பட்டேல், “1947 டிசம்பரில் நீங்கள் பரிந்துரைத்தது எத்தனை தீர்க்கதரிசனமானது என்பதை காஷ்மீரில் நடக்கும் விசயங்கள் எடுத்துரைக்கின்றன. ஆனால், நீங்கள் அறிந்த காரணத்துக்காக நாங்கள் அதை ஏற்கவில்லை” என குறிப்பிட்டிருக்கிறார்.
மவுண்ட்பேட்டன் அப்போது, காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்துக் கொள்ளலாம் என ஆலோசனை வழங்கியிருந்தார்.
சங்கிகளின் வாயில் பொய்யையும் புரட்டையும் தவிர வேறெதுவும் வராது என்பது நம்மனைவருக்கும் தெரியும் எனினும், இது போன்ற வரலாற்றாதாரங்களை அவ்வப் போது எடுத்துக்காட்டவும் வேண்டியிருக்கிறது. பொய்களைப் பலமுறை கூறி உண்மையாக்கும் சங்கிகளின் சதியை தகவல்கள்தான் முறியடிக்கவல்லவை.
கட்டுரை : பெரோஸ் எல். வின்செண்ட்
தமிழாக்கம் : அனிதா
நன்றி:டெலிகிராப் இந்தியா
காஷ்மீர் : உரிமைப் பறிப்புக்கு எதிராக மதுரை வழக்கறிஞர்கள் கூட்டறிக்கை !
வழக்கறிஞர்கள் கூட்டறிக்கை
370 & Art.35-A-ன் கீழான ஜம்மு-காஷ்மீர் மாநில சிறப்புரிமை பறிப்பு – அரசியல் சட்டத்திற்கு விரோதமானது – கூட்டாட்சி முறைக்கு எதிரானது ! உடனே ரத்து செய் !
கருத்துரிமை, அமைதியாகக் கூடுதல், இணைய – தகவல் தொடர்பு உரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை ஜம்மு – காஷ்மீர் மக்களுக்கு உடனே வழங்கு !
அனைத்துக் கட்சிகள், ஊடகங்கள், மனித உரிமை அமைப்புகளை ஜம்மு – காஷ்மீர் செல்ல அனுமதி !
இந்திய அரசியல் சட்டம் பிரிவு 370 & பிரிவு 35-A-ன் கீழான ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்புரிமை, குடியரசுத் தலைவரின் G.S.R.551 (E) (C.O.272) & G.S.R.562 (E) (C.O.273) உத்தரவுகள் & JAMMU AND KASHMIR (REORGANISATION) ACT-2019-ன் படி நீக்கப்பட்டிருக்கிறது. பாஜக அரசின் இந்த நடவடிக்கை ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு இழைக்கப்பட்ட உச்சபட்ச அநீதி. ஜம்மு-காஷ்மீர் அரசியல் சட்டம் & இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளில் ஒன்றான கூட்டாட்சி முறைக்கு எதிரானது.
ஜம்மு-காஷ்மீர் அரசியல் சட்ட வரலாறு :
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் 80% இசுலாமியர்கள், 20% இந்து-பண்டிட்கள், புத்த, சீக்கிய மதத்தினர் உள்ளிட்டோரைக் கொண்டது.16.03.1846-ல் பிரிட்டிஷ் அரசின் கிழக்கிந்தியக் கம்பெனி மற்றும் ஜம்மு காஷ்மீரின் டோக்ரா – இந்து வம்சாவளி மன்னர் குலாப் சிங் இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி காஷ்மீர் மீதான உரிமை மன்னர் மற்றும் மன்னரின் ஆண் வாரிசுகளுக்கு மட்டுமே. 1947 வரை டோக்ரா வம்ச ஆட்சியே நடக்கிறது.
1947-ம் ஆண்டு சமஸ்தானங்கள் யாருடனும் சேரலாம் என் மவுண்ட் பேட்டன் அறிவிக்கிறார்.காஷ்மீர் மன்னர் ஹரிசிங் “காஷ்மீர் தனி நாடாக இருக்க விரும்புகிறது” என்கிறார். 1947, அக்டோபர் 22-ல் பாகிஸ்தான் ஆதரவு பழங்குடி படைகள் காஷ்மீரை ஆக்கிரமிக்கவே, 1947, அக்டோபர். 26-ல் இந்தியா-காஷ்மீர் இணைப்பு ஒப்பந்தம்(INSTRUMENT OF ACCESSION) கையெழுத்தாகிறது.
ஒப்பந்தப்படி, இந்திய அரசு – காஷ்மீரின் “பாதுகாப்பு, வெளிவிவகாரம், தகவல் தொடர்பு குறித்து” சட்டம் இயற்றலாம் – மற்றவை தொடர்பாக காஷ்மீர் மன்னர் முடிவெடுப்பார். இதற்கிடையே மன்னராட்சிக்கு எதிராக சுதந்திர காஷ்மீருக்கான போராட்டமும் சேக் அப்துல்லா தலைமையில் நடந்து வருகிறது.
மே.15, 16 -1949 அன்று வல்லபாய் பட்டேல் வீட்டில் நேரு – சேக் அப்துல்லா இடையே காஷ்மீரின் “பாதுகாப்பு, வெளிவிவகாரம், தகவல் தொடர்பு தவிர மற்ற விவகாரங்கள் தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் மாநில அரசியல் நிர்ணய சபையே முடிவெடுக்கும்” என ஒப்பந்தம் போடப்படுகிறது. இந்திய அரசியல் நிர்ணய சபையின் வரைவுக் குழு உறுப்பினர், முன்னாள் ஜம்மு-காஷ்மீர் திவான், பிரிவு 370-ஐ எழுதிய தஞ்சாவூரைச் சேர்ந்த கோபால்சாமி அய்யங்கார் அக்டோபர் 17,1949 அன்று இந்திய அரசியல் நிர்ணய சபையில் பேசும்போது “காஷ்மீர் மக்கள் தங்கள் எதிர்காலத்தை தாங்களே தீர்மானிக்கலாம் – நேர்மையான, நடுநிலையான பொதுவாக்கெடுப்பு நடத்தப்படும் – வாக்கெடுப்பில் காஷ்மீர் மக்கள் தனித்துச் செல்வதென முடிவெடுத்தால் இந்திய அரசு காஷ்மீர் மக்கள் விருப்பத்திற்கு குறுக்கே நிற்காது” என அறிவிக்கிறார்.
இணைப்பு ஒப்பந்தத்தில் சொல்லப்படாத விசயங்கள், ஜம்மு – காஷ்மீர் மாநில அரசியல் நிர்ணய சபை ஒப்புதல் இன்றி-கொண்டு வரப்படாது எனவும் உறுதியளிக்கிறார். அதன்பின்னரே, 1949 அக்டோபர், 17 அன்று, பிரிவு 370 இந்திய அரசியல் சட்டத்தில் சேர்க்கப்படுகிறது. 1951, நவம்பர் 5-ல் ஜம்மு-காஷ்மீர் மாநில அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டு, ஜம்மு-காஷ்மீருக்கென 158 பிரிவுகள் கொண்ட புதிய அரசியல் சட்டம் உருவாக்கி நிறைவேற்றப்பட்டு நவம்பர் 17, 1956-ல் கலைக்கப்பட்டது.
ஜம்மு-காஷ்மீருக்கு மட்டும் சிறப்புரிமையா? :
இந்திய அரசியல் சட்டம் பிரிவு 371 நாகலாந்து, அசாம், மிசோரம், மேகாலயா, அருணாச்சல பிரதேசம், கோவா – ஹைதராபாத் – கர்நாடகா – மகாராஷ்டிரா – குஜராத்தின் சில பகுதிகளுக்கு சிறப்புரிமை வழங்குகிறது. நாகலாந்து மாநில சட்டமன்ற அனுமதியின்றி, இந்தியப் பாராளுமன்றம் நாகலாந்தின் மதம், பழக்க வழக்கங்கள், சட்ட நிர்வாகம் தொடர்பாகச் சட்டம் இயற்ற முடியாது. இந்திய அரசியல் சட்டம் SCHEDULES – V & VI -ன் படி பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில் நிலப் பயன்பாடு தொடர்பாக பழங்குடி மக்களின் தன்னாட்சி குழுக்களே தீர்மானிக்கும் சிறப்புரிமை உள்ளது.
எனவே சிறப்புரிமை என்பது வரலாறு, நிலவியல், மக்கள் வாழ்நிலை, பண்பாடு, இந்தியாவுடன் சமஸ்தானங்கள் இணையும்போது போடப்பட்ட ஒப்பந்தங்கள் அடிப்படையிலேயே பார்க்கப்பட வேண்டும். இந்த சிறப்புரிமைகள் இல்லாவிட்டால் பல மாநிலங்கள் இந்திய ஒன்றியத்துடன் இணைந்திருக்காது.
1 of 3
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
ஜம்மு-காஷ்மீர் தொடர்பான குடியரசுத் தலைவரின் G.S.R.551(E)(C.O.272) & G.S.R.562(E)(C.O.273) உத்தரவுகள் AND JAMMU AND KASHMIR (REORGANISATION) ACT-2019 – அரசியல் சட்ட விரோதமானது
1. பிரிவு 370 தொடர்பான குடியரசுத்தலைவர் மற்றும் இந்தியப் பாராளுமன்றத்தின் அதிகாரம் வரம்புடையது. இணைப்பு ஒப்பந்தத்தில் உள்ள பாதுகாப்பு, வெளிவிவகாரம், தகவல் தொடர்பு தவிர மற்ற விவகாரங்கள் தொடர்பாக இந்தியப் பாராளுமன்றம் சட்டம் இயற்ற காஷ்மீர் மாநில சட்டப்பேரவையின் ஒப்புதல் அவசியம். பிரிவு 370-ஜ நீக்க ஜம்மு – காஷ்மீர் அரசியல் நிர்ணய சபையின் பரிந்துரை அவசியம்.
இதனை மீறி “ஜம்மு – காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை” என்பதற்கு “ஜம்மு – காஷ்மீர் மாநில சட்டப்பேரவை” எனவும், ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை என்பதற்கு – “மாநில கவர்னர்” எனவும் பொருள் கொள்ள வேண்டும் என பிரிவு-367-ல் திருத்தம் செய்திருப்பது முழு அரசியல் சட்ட மோசடி- அதிகார வரம்பு மீறல். அரசியல் சட்ட நெறிமுறைகளின்(CONSTITUTIONAL MORALITY)படி “நேரடியாக நிறைவேற்ற முடியாத சட்டங்களை, மறைமுகமாக நிறைவேற்ற முடியாது”.( You cannot do indirectly – what you cannot do directly)
2.ஜம்மு-காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை & சட்டப் பேரவை இல்லாத சூழலில் “கவர்னரும் – இந்தியப் பாராளுமன்றமும்” ஜம்மு-காஷ்மீர் மக்களின் பிரதிநிதியாகக் கொள்ளப்படுவர் என்று சொல்லி பிரிவு 370-யை நீக்கி-மாநிலத்தை இரண்டாகப் பிரித்துள்ளனர். மத்திய அரசு-தனது பிரதிநிதியான கவர்னரின் ஒப்புதலை பெற்றிருப்பதாகக் கூறுவது – இந்திய அரசியல் சட்டத்தின் மாற்ற முடியாத அடிப்படைக் கூறான மக்களாட்சி-கூட்டாட்சி முறைக்கு எதிரானது. உச்சநீதிமன்றத்தின் 13 நீதிபதிகள் வழங்கிய “கேசவானந்த பாரதி” மற்றும் “எஸ்.ஆர்.பொம்மை” வழக்குகளின் தீர்ப்புகளுக்கு நேர் எதிரானது.
3. மத்திய பாஜக அரசின் செயல் ஜம்மு-காஷ்மீர் மாநில அரசியல் சட்டத்தை ரத்து செய்து விட்டது. பிரிவு.370-ன் கீழ் குடியரசுத் தலைவர் பிறப்பிக்கும் உத்தரவு மூலம் ஜம்மு-காஷ்மீர் மாநில அரசியல் சட்டத்தை ரத்து செய்ய முடியாது.
4. ஜனநாயக நாட்டில் மக்களின் கருத்தே இறுதியானது. ஜனநாயகத்தின் அடிப்படைக் கூறு என்பது “தங்கள் அரசியல் சட்ட நிலையை மக்களே நேரடியாகத் தீர்மானிப்பது – தங்கள் பிரதிநிதிகள் மூலம் தீர்மானிப்பதுமாகும்”. ஆனால், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்புரிமையை நீக்க, ஜம்மு-காஷ்மீரை இரண்டாகப் பிரித்து அதிகாரம் குறைக்கப்பட்ட “யூனியன் பிரதேசமாக” மாற்ற – பா.ஜ.க அரசு காஷ்மீர் மக்களிடமோ? – காஷ்மீர் மக்களின் பிரதிநிதிகளிடமோ – கருத்துக் கூடக் கேட்கவில்லை. பாஜக அரசின் இந்த நடவடிக்கை சரியென்றால் – நாளை பாஜக வெல்ல முடியாத தமிழகம், கேரளா, ஆந்திராவை – சட்டப் பேரவை அற்ற யூனியன் பிரதேசமாக மாற்றலாம். நேரடி மத்திய அரசு ஆட்சியின் கீழ் கொண்டு வரலாம். எனவே நடந்திருப்பது அரசியல் சட்ட கேலிக்கூத்து மட்டுமல்லாது மக்களின் இறையாண்மையை மதிக்காத பாசிசம்.
5. இந்திய அரசியல் சட்டம் – பிரிவு 1 & 3 – சட்டப் பேரவை உள்ள மாநிலத்தை – யூனியன் பிரதேசமாக மாற்ற அனுமதி அளிக்கவில்லை. எனவே குடியரசுத் தலைவரின் உத்தரவுகள் அரசியல் சட்டப்படி செல்லாது.
6. பாஜக அரசின் நடவடிக்கை இந்திய அரசியல் சட்டத்தின் – CONSTITUTIONAL MORALITY மற்றும் காஷ்மீர் மக்களின் அரசியல் சமத்துவம் மற்றும் கண்ணியமாய் வாழும் உரிமைக்கு எதிரானது.
♦ ஜம்மு-காஷ்மீரின் சிறப்புரிமையை ரத்து செய்வோம் எனத் தேர்தல் அறிக்கையில் பாஜக கூறியிருந்தது. உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ விக்ரம் சய்னி, “பாஜகவைச் சேர்ந்த மணமாகாத ஆண்கள் இனி காஷ்மீருக்குச் சென்று நிலத்தை வாங்கவும், அழகான பெண்களைத் திருமணம் செய்து கொள்ளவும் வரவேற்கப்படுகிறார்கள்” எனப் பேசியிருக்கிறார். பா.ஜ.க-வின் இந்த நடவடிக்கை குறித்துப் பேசிய முன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் “இசுலாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரே மாநிலம் காஷ்மீர்- அங்கு இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்தால்-பாஜக இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்காது” என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே பாஜக-வின் இந்த நடவடிக்கை அதனது- மதவாத, வெறுப்பரசியலே.
♦ பாஜக-வின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் மட்டுமே தேசிய இன அடிப்படையிலான மொழிவாரி மாநிலங்களை எதிர்த்த ஒரே அமைப்பு. மாநிலங்கள் என்ற நிர்வாக அலகு தேவையில்லை – மாவட்டங்கள் என்ற வகையிலான நிர்வாக அலகு – அனைத்து அதிகாரங்களும் கொண்ட ஒரே மத்திய அரசு என்பதே ஆர்.எஸ்.எஸ் கொள்கை. இந்திய அரசமைப்பின் கூட்டாட்சி முறைக்கு நேர் எதிரான திசையில் சர்வாதிகாரப் பாதையில் பயணிக்கிறது பாஜக.
♦ ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பண்டிட்,டோக்ரா,சீக்கிய,புத்த மதத்தினர் பாஜக-வின் காஷ்மீர் சிறப்புரிமை பறிப்பை எதிர்த்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். எனவே காஷ்மீரில் உள்ள இசுலாமியர்கள் மட்டும் எதிர்க்கிறார்கள் என்ற பாஜக-வின் பிரச்சாரம் தவறு.
♦ பாஜகவின் நடவடிக்கை ஜம்மு-காஷ்மீர் மக்களை இந்திய நாட்டிலிருந்து அந்நியப்படுத்துமே தவிர, இந்தியாவோடு இணைக்காது. துப்பாக்கி முனையில் உலகின் எந்த நாட்டு மக்களின் மனதை வெல்லவோ, இணைக்கவோ முடியாது.
♦ சற்று அடங்கி இருந்த காஷ்மீர் பிரச்சனையை பாஜக அரசு தனது தவறான நடவடிக்கை மூலம் சர்வதேசப் பிரச்சனை ஆக்கியுள்ள முட்டாள்தனத்தைச் செய்துள்ளது. இந்திய வெளியுறவுத்துறை செயலர் உலக நாடுகளுக்குச் சென்று இந்தியாவின் நிலையை விளக்கிக் கொண்டிருக்கிறார். ஐ.நா. சபையிலும் விவாதம் வருகிறது. பாஜக அரசின் இம் மாபெரும் அரசியல் தவறை உலகின் பணக்கார நாடுகள் தங்கள் பொருளாதார நெருக்கடியை தீர்க்கப் பயன்படுத்திக் கொள்ளும். இந்தியாவின் இராணுவச் செலவுகள் அதிகரித்து, பொருளாதாரம் வீழ்ச்சியடையும். மொத்த பாதிப்புகளும் இந்திய மக்கள் தலையில் விடியும்.
மேற்கண்ட காரணங்களால் காஷ்மீர் மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதியைத் தொடர்ந்து மீறி, அம்மக்களுக்கு அரசியல் சட்ட அநீதி இழைத்து வரலாற்றுத் தவறு செய்துள்ளது பாஜக அரசு.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு எனச் சொல்லிக் கொண்டு “கொடுத்த வாக்குறுதியை மீறியிருப்பது – அதைக் கொண்டாடுவது – காஷ்மீர் பெண்களை மணக்க வேண்டும் – ஒரு சென்ட் இடம் வாங்க வேண்டும் என வக்கிரமாய் பேசுவது – அறம் கொன்ற – அரசியல் சட்ட விரோத செயல் எனக் கண்டிக்கிறோம்.
அறம் கொன்ற அரசின் கீழ் வாழ்வதை அவமானமாகக் கருதுகிறோம். ஜம்மு- காஷ்மீர் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள – மனசாட்சி உள்ள அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். இன்று நாம் பேசாவிட்டால், நாளை நாம் பாதிக்கப்படும்போது நமக்காகப் பேச யாரும் இருக்க மாட்டார்கள்!
உண்மை மனிதனின் கதை | இரண்டாம் பாகம் | அத்தியாயம் – 14
போர்முனையில் புயலுக்கு முந்திய அமைதி மேலும் நீடித்தது. செய்தி அறிக்கைகளில் வட்டார முக்கியத்துவம் உள்ள சண்டைகளையும் வேவுக்காரர்களின் தேட்டங்களையும் பற்றிய குறிப்புகள் காணப்பட்டன. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. மருத்துவமனை நிர்வாகிகள் நாற்பத்து இரண்டாம் வார்டில் நோயாளிகளின் நெருக்கத்தைக் குறைத்து விட்டார்கள். இரண்டு கட்டில்கள் மட்டுமே அதில் எஞ்சியிருந்தன. வலப்புறம் மெரேஸ்யெவின் கட்டில். இடப்புறம், ஆற்றங்கரையை நோக்கிய ஜன்னல் அருகே, மேஜர் ஸ்த்ருச்கோவின் கட்டில்.
வேவுக்காரர்களின் தேட்டங்கள்! மெரேஸ்யெவும் ஸ்த்ருச்கோவும் அனுபவம் வாய்ந்த படைவீரர்கள். எனவே, இந்த இடைநிறுத்தம் எவ்வளவு பெரிதாயிருக்குமோ, இறுக்கம் நிறைந்த இந்த அமைதி எவ்வளவு நீடிக்குமோ, புயல் அவ்வளவு கடுமையாகவும் உக்கிரமாகவும் சீறும் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.
குறிதவறாது சுடும் ஸ்னைப்பர், “சோவியத் யூனியனின் வீரர்” ஸ்தெபான் இவானவிச், இவுஷ்கின் போர்முனையின் தென் பகுதியில் ஓரிடத்தில் இருபத்தைந்து பாசிஸ்டுகளைச் சுட்டு வீழ்த்தியதாகவும், இத்துடன் அவரால் கொல்லப்பட்ட பகைவர்களின் மொத்த எண்ணிக்கை இருநூற்றை எட்டிவிட்டது என்றும் ஒரு தகவல் செய்தி அறிக்கையில் ஒரு முறை கூறப்பட்டது. க்யோஸ்தியேவிடமிருந்து கடிதம் வந்தது. அவன் எங்கிருக்கிறான், அவனது நிலைமை என்ன என்பது பற்றி எதையும் அவன் தெரிவிக்கவில்லை. தனது முந்தைய கமாண்டர் ரோத்மிஸ்த்ரோவின் படையணியை மீண்டும் சேர்ந்து விட்டதாகவும் வாழ்க்கை மனநிறைவு அளிப்பதாகவும் எழுதியிருந்தான். இந்தக் கடிதம் கிடைத்தால் அன்யூத்தாவுக்கு இரண்டு வரி எழுதிப் போடும்படி அலெக்ஸேயைக் கேட்டுக் கொண்டிருந்தான். தானும் அவளுக்கு எழுதுவதாகவும் ஆனால் தான் ஒயாமல் இடம் பெயர்ந்து கொண்டிருப்பதாகவும் எனவே தன் கடிதம் அவளுக்குப் போய்ச் சேருமோ சேராதோ தெரியவில்லை என்றும் குறித்திருந்தான்.
நண்பர்களைப் பற்றிய இந்த இரண்டு தகவல்களைக் கொண்டே புயல் தெற்கே எங்கோ வீசப் போகிறது என்பதைத் தெரிந்து கொள்வது படைவீரனான அலெக்ஸேய்க்கு முடிந்தது. அவன் அன்யூத்தாவுக்கும் எழுதினான், தாடி வளர்ப்பது பற்றித் தலைமை மருத்துவர் சொன்ன யோசனையை க்யோஸ்தியோவுக்கும் எழுதினான். எனினும் க்யோஸ்தியேவ் இப்போது போருக்கு முந்தைய இராணுவக் கெடுபிடி மனநிலையில், மிகக் கடினமும் அதே சமயம் ஒவ்வொரு படைவீரனுக்கும் மிக உவப்புள்ளதுமான கெடுபிடி மன நிலையில் இருப்பதனால் தாடியைப் பற்றியோ அன்யூத்தாவைப் பற்றியோ கூட நினைப்பதற்கு ஓடாது என்பதை அலெக்ஸேய் அறிந்திருந்தான்.
நாற்பத்து இரண்டாம் வார்டில் இன்னும் ஒரு களிப்பூட்டும் நிகழ்ச்சி நடந்தது. மேஜர் பாவெல் இவானவிச் ஸ்த்ருச்கொவுக்கு “சோவியத் யூனியனின் வீரர்” என்ற பட்டம் அளிக்கப்பட்டிருப்பதாக அரசாங்க அறிக்கை வெளியிடப்பட்டது. ஆனால் இந்தப் பெருமகிழ்ச்சி கூட ஸ்த்ருச்கொவுக்கு நெடுநேரம் உற்சாகமூட்டவில்லை. அவர் தொடர்ந்து முகத்தைச் சுளித்துக் கொண்டிருந்தார். இந்தப் “பாழாய்ப் போகிற முழங்காற் சில்லுகள்” காரணமாகத் தாம் இவ்வளவு கெடுபிடி நிறைந்த வேளையில் படுத்துக்கிடக்க வேண்டியிருப்பது அவருக்குச் சள்ளையாக இருந்தது.
ஒரு நாள் மாலை அலுவலகப் பணிபுரிந்த மெலிந்த முதிய நர்ஸ் வார்டுக்கு வந்தாள்.
“’அலெக்ஸேய் மெரேஸ்யெவ் – நடமாடுபவரா?” என்று வினவினாள்.
“ஓடுபவர்” என்று வெடுக்கெனச் சொன்னார் ஸ்த்ருச்கொவ்.
“நான் இங்கே வேடிக்கை பேச வரவில்லை!” என்று கோபத்துடன் கூறினாள் நர்ஸ். “சீனியர் லெப்டினன்ட் அலெக்ஸேய் மெரேஸ்யெவை போனில் கூப்பிடுகிறார்கள்” என்றாள்.
“யார் கன்னிப் பெண்ணா?” என்று நர்ஸின் பக்கம் கண்சிமிட்டியவாறு உற்சாகமாகக் கோட்டார் ஸ்த்ருச்கொவ்.
“நான் அவளுடைய பாஸ்போர்ட்டைப் பார்க்கவில்லை” என்று மிடுக்காக வார்டிலிருந்து வெளியே சென்றவாறு குத்தலாக மொழிந்தாள் நர்ஸ்.
மெரேஸ்யெவ் கட்டிலிலிருந்து துள்ளிக் குதித்தான். கைத்தடியை உற்சாகமாக டொக் டொக் கென்று ஊன்றி ஒலித்துக் கொண்டே நர்ஸை முந்தி ஆளோடியில் உண்மையாகவே ஓடினான். சுமார் ஒரு மாதமாகவே அவன் ஓல்காவின் பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். “ஒரு வேளை இது அவள் தானோ?” என்ற அசட்டு எண்ணம் அவனுக்கு உண்டாயிற்று. உண்மையிலே, இவ்வாறு நடப்பது சாத்தியமே இல்லை. இம்மாதிரி வேளையில் ஸ்தாலின்கிராத் நகரிலிருந்து மாஸ்கோவுக்கு வருவது நடக்கக் கூடியதா! தவிர, தான் பின்புல நிறுவனம் ஒன்றில், மாஸ்கோவில் அல்ல, நகர்புறத்தில் வேலை செய்வதாக அவள் எழுதியிருக்கையில் இங்கே, மருத்துவமனையில் அவள் அவனை எப்படிக் கண்டுபிடித்திருக்க முடியும்?
ஆனால் அந்தக் கணத்தில் மெரேஸ்யெவ் அற்புதம் நிகழும் என நம்பினான். அவன் ஓடினான், எப்போதாவது கைத்தடியை ஆதாரமாக ஊன்றியவாறு, இடமும் வலமுமாகச் சாய்ந்தாடியபடி, பொய்க்கால்களால் முதல் முறை மெய்யாகவே ஓடினான். பொய்க்கால்கள் சரக்சரக்கென்று கறுமுறுத்தன…
ஆழ்ந்த, காதுக்கு இனிய குரல் டெலிபோன் குழாயில் ஒலித்தது. அது அலெக்ஸேய்க்கு முற்றிலும் புதியது. நாற்பத்து இரண்டாம் வார்டைச் சேர்ந்த சீனியர் லெப்டினன்ட் அலெக்ஸேய் மெரேஸ்யெவ் அவன் தானா என்று கேட்டது அந்தக் குரல்.
இந்தக் கேள்விகளில் தனது மனத்தைப் புண்படுத்தும் ஏதோ விஷயம் இருப்பது போலக் கோபத்துடன் குழாயில் “ஆமாம்!” என்று வெடுக்கெனக் கத்தினான் மெரேஸ்யெவ்.
குழாயில் வந்த குரல் கணப்பொழுது அடங்கிவிட்டது. பிறகு தொல்லை கொடுப்பதற்கு மன்னிக்க வேண்டும் என்று உணர்ச்சியற்ற இறுக்கத்துடன் கூறியது.
“நான்தான் அன்யூத்தா க்ரிபொவா பேசுகிறேன். உங்கள் நண்பர் லெப்டினன்ட் க்யோஸ்தியேவுக்கு என்னைத் தெரியும். உங்களுக்கு என்னைத் தெரியாது” என்று சற்று சிரமத்துடன் சொன்னாள் ஒரு பெண். அன்பற்ற பதிலால் அவள் மனத்தாங்கல் கொண்டிருப்பது வெளிப்படையாகப் புலப்பட்டது.
ஆனால் மெரேஸ்யெவ் குழாயை இரு கைகளாலும் இறுகப் பிடித்துக் கொண்டு குரல் கொண்ட மட்டும் உரக்கக் கத்தினான்: “நீங்கள் தாம் அன்யூத்தாவா? அதே பெண்தானா? இல்லை, நான் உங்களை மிக நன்றாக அறிவேன், மிக நன்றாக! க்யோஸ்தியேவ் என்னிடம்…”
“எங்கே அவர்? என்ன நேர்ந்தது அவருக்கு? அப்படித் திடீரென அவர் போய்விட்டாரே! அபாய அறிவிப்பைக் கேட்டதும் நான் அறைக்கு வெளியே போனேன், ஏனெனில் நான் மருத்துவப் பணியினள். திரும்பி வந்தபோது அவரைக் காணோம். கடிதமோ, முகவரியோ, எதுவுமே இல்லை. எங்கே அவர்? ஏன் அப்படி மறைந்துவிட்டார்? அவருக்கு என்ன நேர்ந்தது? ஒன்றுமே எனக்குப் புரியவில்லை….. அருமை அலெக்ஸேய், நான் உங்களை இப்படி அழைப்பதற்கு மன்னியுங்கள். எனக்கும் உங்களைத் தெரியும். அவர் எங்கே, ஏன் இப்படித் திடீரென மறைந்து விட்டார் என்று விளங்காமல் மிகவும் சஞ்சலப்படுகிறேன்…”
அலெக்ஸேயின் உள்ளத்துக்கு இது இதமாயிருந்தது. நண்பனுக்காக அவன் மகிழ்ந்தான். நல்ல பெண்கள் போரில் ஏற்படும் அங்கவீனங்களைக் கண்டு அஞ்சுவதில்லை என்றும் இதனால் அர்த்தமாகிறது. ஆகவே தானும், ஆம், அலெக்ஸேயும் நம்பலாம் தன்னையும் ஓல்கா இவ்வாறே கலவரத்துடன் தேடுவாள் என்று! இந்த எண்ணங்கள் எல்லாம் மின்வெட்டுப் போல அவன் மனத்தில் பளிச்சிட்டன.
“அன்யூத்தா! எல்லாம் நல்லபடியாகவே இருக்கிறது, அன்யூத்தா! நீங்கள் அவனைப் பற்றி கவலைப்பட வேண்டாம். அவன் செளக்கியமாக இருக்கிறான், போரிடுகிறான். அடே, சொல்ல மறந்து விட்டேனே! அவன் முகவரி போர்க்களத் தபால் நிலையம் 42531-B. அவன் தாடி வளர்க்கிறான், அன்யூத்தா, மெய்யாகவே செழித்து அடர்ந்த தாடி. ஊம்… ம்ம்.. ம்ம்… கொரில்லா வீரனது போன்ற தாடி. அவனுக்கு அது ரொம்பப் பொருத்தமாக இருக்கிறது” என்று மூச்சு திணறக் கத்தினான்.
தாடி வளர்ப்பதை அன்யூத்தா அங்கீகரிக்கவில்லை. அது அனாவசியம் என அவள் கருதினாள். இதனால் இன்னும் களிப்படைந்த அலெக்ஸேய், அவள் கருத்து அதுவானால் க்யோஸ்தியேவ் ஒரே வீச்சில் அதைச் சிரைத்துத் தள்ளிவிடுவான் என்றும், ஆயினும் தாடி அவனுக்குத் தனிச் சோபை அளிப்பதாக எல்லோரும் எண்ணுவதாகவும் கூறினான்.
மொத்தத்தில், பேச்சு முடிவதற்குள் அவர்கள் நண்பர்கள் ஆகிவிட்டார்கள். சமயம் கிடைத்தபோது அலெக்ஸேய் அவளுக்குக் கட்டாயம் போன் செய்வது என்று தீர்மானமாயிற்று.
வார்டுக்குத் திரும்பும்போது டெலிபோனுக்குத் தான் ஓடியதை அலெக்ஸேய் நினைவுப்படுத்திக் கொண்டான். மறுபடி ஓட முயன்றான், பலிக்கவில்லை. பொய்க்கால்கள் தரை மீது திடும் திடுமென மோதியதால் அவன் உடல் முழுவதிலும் கொடிய வலி உண்டாயிற்று. கிடக்கிறது, பரவாயில்லை. இன்றில்லாவிட்டால் நாளை, நாளையில்லாவிட்டால் நாளை மறுநாள், அவன் வெற்றி பெற்றே தீருவான், பார்க்கலாம் ஒரு கை! எல்லாம் நலமே முடியும்! மறுபடி ஓடவும் விமானம் ஓட்டவும் போரிடவும் தொடங்குவோம் என்பதில் அவனுக்குச் சந்தேகமே ஏற்படவில்லை. சபதம் ஏற்பதை விரும்புவன் ஆதலால், முதலாவது விமானச் சண்டைக்குப் பின், முதலாவது ஜெர்மன் விமானத்தை அடித்து வீழ்த்திய பிறகு ஒல்காவுக்கு எல்லாவற்றையும் எழுதி விடுவது என்று சபதம் செய்து கொண்டான். அப்புறம் என்ன ஆகிறதோ, ஆகட்டும்!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை இழுத்துமூட தூத்துக்குடி மக்கள் நடத்திய எழுச்சி மிகு போராட்டத்தை ஸ்டெர்லைட் நிறுவனமும் தமிழக அரசும் இணைந்து துப்பாக்கிச் சூடு நடத்தி ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தன. எங்கும் எழுந்த மக்கள் கண்டனத்தை அடுத்து மேம்போக்கான அரசாணை மூலமாக மூடியது தமிழக அரசு.
தமிழக அரசின் இந்த அரசாணைக்கு எதிராக வழக்கு விசாரணை தேசியபசுமைத் தீர்ப்பாயத்தில் நடந்து வந்தது. தே.ப.தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என உத்தரவிட்டது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கில், இந்த தே.ப.தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்தது. அதனைத் தொடந்து இந்த வழக்கு விசாரணை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
கடந்த 18 நாட்களாக நடந்து வரும் விசாரணை குறித்தும், ஸ்டெர்லைட் ஆலையின் மோசடிகள் குறித்தும் இரண்டு பாகமாக வெளியிடப்படும் இந்தக் காணொளிகளில் விவரிக்கிறார், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு.
“ஈயம் பூசலையோ ஈயம், அம்மா… ஈயம் பூசலையோ ஈயம்…” இப்புடி ஒரு குரல கேக்காதவங்க இருந்துருக்க முடியாது. பெரும்பாலும் புருசன் பொஞ்சாதியா சேந்துதான் இந்த தொழிலுக்கு வருவாங்க. பல்லிளிச்ச பழய வெங்கல, பித்தள பாத்தரத்த ஊர் பொம்பளைங்க ஈயம் பூசித்தர சொல்லி அவங்ககிட்ட குடுப்பாங்க. பத்து பாத்திரத்துக்கு குறையாம சேந்ததும் அந்த தெருவுக்கு மத்தியிலேயே பட்டறைய போடுவாரு தொழிலாளி.
ஒரு சின்ன கை கடப்பாறையால ரெண்டுமூனடி தூரத்துல ரெண்டு குழிய தோண்டுவாரு. எலி பொந்துவளைப் போல செஞ்சு ரெண்டு குழியையும் இணைப்பாரு. ஒரு குழியில நெருப்பும் இன்னொரு குழியில ஆட்டுத்தோலால செஞ்ச காத்தடிக்கும் பையயும் பொருத்துவாரு. பக்கத்துல கொஞ்சம் தண்ணிய ஊத்தி சேறு கொழச்சு காத்து வெளிய போகம நெருப்புக்கு மட்டும் போறப்போல மண்ணு பூசுவாரு. பக்கத்து வீட்டுல கொஞ்சம் நெருப்பு வாங்கி குழியில போடுவாரு. பட்டறை ரெடியாயிரும்.
அக்கம்பக்கத்து வீட்டுக்காரம்மா குடுத்த அத்தன பழய பாத்தரமும் புத்தம் புதுசா பளபளக்கும். அதுக்காக அவரு பயன்படுத்துன ஈயம் சேதாரமாகி சின்னசின்ன நட்சத்திரமா மண்ணுல மின்னும். நீயா நானான்னு அடிச்சுகிட்டு விளையாட்டு பிள்ளையா அத பொறுக்குனத இன்னைக்கி நெனச்சாலும் அத்தன சந்தோசம். மன்னிச்சுக்குங்க, மறந்து போன ஒரு தொழில மறுபடியும் கண்ணுல பாத்ததும் சிறுபிள்ள விளையாட்டு பருவமும் சேந்தே ஞாபகத்துக்கு வந்துருச்சு.
தண்ணி பானைக்கி ஈயம் பூச சென்னை புறநகரத்துல உள்ள அஹமதுல்லா அண்ணன் கடைக்கி போயிருந்தேன். ஒரு பொட்டிக்கட சைசுல தம்மாத்துண்டு எடத்துல அகழ்வாராய்ச்சியில கண்டுபிடிச்சது போல தேஞ்சு, கருத்துப்போன நாலஞ்சு பண்டபாத்தரம் இருந்துச்சு. நடுவே இருக்கும் எடத்துல சாணை பிடிக்கும் எந்திரம் தரையோட சேத்து புதைக்கப்பட்டிருந்துச்சு. பாத்தரத்தோட துருவு அழுக்கச் சுரண்டும் துடுப்பு கத்திக்கி சாணை ஏத்திட்டுருந்தாரு அஹமதுல்லா.
அஹமதுல்லா
கடைக்கி வெளிய ஒரு பெரியவரு ஈயம் பூசும் நெருப்பு கணக்குற அடுப்புல பாத்தரத்த சூடேத்திட்டுருந்தாரு. சின்ன காத்தாடிய வச்சு கரண்டு மூலமா காத்த உள்ள அனுப்புற டெக்னாலஜியோட அந்த வேல நடந்துட்டு இருந்துச்சு. ஈயம் பூசுன மூணு பித்தளப் பாத்தரம் வெய்யில்ல காஞ்சுட்டுருந்தது.
இருசக்கர வண்டியில கணவன் மனைவி ரெண்டுபேரு ஒரு உருளி குண்டானுக்கு ஈயம் பூச வந்தாங்க.
இருதரப்புக்கும் கூலி படியல. பேரம் பேசுனத பாத்ததும் அவங்க பேசி ஒரு முடிவுக்கு வரட்டும் நம்ம பானைக்கி எம்புட்டு தரலாங்கற முடிவுக்கு வர தோதா இருக்குமேன்னு ஒதுங்கி நின்னுட்டேன்.
இது எதையுமே காதுல வாங்காமெ நெருப்போட போராடிட்டிருந்தாரு அந்த மனுசன். தகதகன்னு எரிஞ்ச அடுப்புல அந்த குண்டான எடுத்து குப்பற கவுத்தாரு பிறகு இடுக்கியால திருப்பி ஈயத்த ஒடச்சு குண்டாங்குள்ள போட்டு சுண்ணாம்பு போல ஒரு பொடிய எடுத்து போட்டதும் இதுவரைக்கும் உணராத ஒரு கெட்ட நாத்தம். ஈயம் உருகி திரவமாச்சு. ஒரு கையால பாத்தரத்த நெருப்புல சுத்திகிட்டே மறு கையால அடுப்புக்கு காத்தடிச்சாரு. அடுப்புல கொதிக்கிற ஈயத்த கந்த துணியால பாத்திரம் முழுக்க பூசினாரு. அந்த சூடு தாங்காமெ அந்த பெரியவரு மணல்ல கெடந்த புழுவா நெளியறத பாக்கும்போது கண்ணு கலங்கிருச்சு.
“பாவம் வயசானவரு. யாராச்சும் சின்ன வயசுக்காரங்களா வேலைக்கி வச்சுக்கலாமேண்ணே.”
“யாருக்கு இந்த வேல தெரியும். ஆந்திராவுல இருந்து அழைச்சுட்டு வந்து வச்சுருக்கேன். இந்த தொழிலையே ஊத்தி மூடிட்டாங்க. பாத்தரத்துக்குன்னு பெரிய பெரிய கடைங்க வந்துட்டு அவங்களே பாத்தரம் தயாரிக்கிற பட்டற வச்சுருக்காங்க. ஈயம் பூசுறதுக்கு ஆளும் வச்சுருக்காங்க. எங்களப்போல ஆளுங்களுக்கு வேலையே இல்லாம போச்சு. எங்க அப்பாவுக்கு பிறகு நான்.. இந்த வேலைய செய்றேன், எம்பிள்ள இந்த வேலை பாக்கல.
இங்க சுத்த வட்டாரத்துல விசாரிச்சு பாருங்க. ஈயம் பூசவோ; மெருகு போடவோ; ஓட்ட ஒடச அடைக்கவோ தனியா கடையே கெடையாது. வெளி வேல போக பக்கத்துல உள்ள பாத்தர கடைக்கி வேல செஞ்சு குடுக்கறதால ஏதோ என் தொழில் ஓடுது. கும்பகோணம், தஞ்சாவூரு பக்கம் பித்தள பாத்தரம் செய்றதால அவங்கள நம்பி கொஞ்ச பேரு இந்த தொழில செஞ்சுட்டு இருக்காங்க. அதுவும் இன்னும் கொஞ்ச காலம்தான். இனிமே தனியா கடபோட்டு தொழில் செய்யிற வாய்ப்பு இல்ல. பெரிய நிறுவனமா இருக்கவங்க கிட்ட கூலியா வேல செய்ய வேண்டியதுதான்.
பாத்தரம் ஓட்ட ஒடசலாயிட்டா சனங்க போட்டுட்டுதானே வாங்க நெனைக்கிறாங்க. பழக்க வழக்கம் மாறிப்போச்சுண்ணே.
“வாங்குறதுக்கு தக்கன எல்லா மனுசங்க வாழ்கையிலயும் மாறிடலையே. இன்னமும் எத்தன பெத்தவங்க; பெத்த பொண்ணுக்கு சீர் செய்ய முடியாமெ பழய பாத்தரத்த மெருகு போட வர்ராங்கன்னு தெரியுமா?. நாங்க இல்லாட்டி இவங்க எல்லாம் பெரிய பெரிய பாத்தர கடைங்கள்ள கேட்டதுக்கு பாதியா பாத்தரத்த போட்டுட்டு புதுசு வாங்கி தானே ஆகனும். நாங்க மட்டும் இல்ல… எல்லா சிறு தொழிலுக்கும் இந்த நெலமதான்.”
“செம்பு, பித்தள, வெங்கல பாத்தரத்த அப்புடியே சமயலுக்கோ சாப்புடுறதுக்கோ பயன்படுத்தினா சாப்பாடு கெட்டு போயிடும் அப்புடி பயன்படுத்த கூடாதுண்ணுதான் ஈயம் பூசுனாங்க. இப்ப பள்ளிக்கூடத்துக்கு தண்ணி கொண்டு போக செம்புல தண்ணி பாட்டுல வாங்குறாங்க. கைய உள்ள விட்டு நல்லா புளி போட்டு சுத்தமா தொலக்குற அண்டாவுலயே களிம்பு வாசன வரும். தண்ணி பாட்டிலெல்லாம் யோசிச்சு பாருங்க.
பொழங்குறதுக்கு ஈசியாருக்குன்னு எல்லாரும் கலர்கலரா பிளாஸ்டிக்குக்கு மாறுனீங்க. இப்ப பிளாஸ்டிக்கு கெடுதல்.. நோயி வருதுன்னு சொன்னதும் பழசுக்கு திரும்புரிங்க. பிளாஸ்டிக் நல்லது, செம்பு – பித்தள நல்லதுன்னு விக்கிறவங்க மார்கெட் பன்றாங்க. எது நமக்கு தோதுவாருக்கும்னு நீங்க முடிவு பண்ணுங்க.”
“சரிங்கண்ணே ஏதேதோ பேசிகிட்டு வந்த வேலையே மறந்து போச்சு. இதுக்கு ஈயம் மட்டும் பூசனும் பாத்தரம் சின்னதுதான், கொஞ்சம் பாத்து விலைய சொல்லுங்கண்ணே”
“ஒரு கிலோ ஈயம் மூணாயிரம், அடுப்பு கரி கிலோ அறுவது ரூவா, அப்புறம் நவச்சாரப்பொடி, கந்ததுணி, அதுபோக கடைவாடக, கரண்டு பில்லு பிறகு ஒரு கூலி ஆளு இம்புட்டு மொதலீடு போட்டு இந்த வேலைய செய்றேன். இப்ப நீயே பாத்து ஒரு விலைய சொல்லும்மா.”
“கோவிச்சுக்காதண்ணே.”
“நா.. என்னாத்துக்கும்மா கோவிச்சுக்க போறேன். ஒரு நாளைக்கி ஆளு சம்பளம், வாடக, பொருள் வாங்கன்னு எல்லாம் போக எனக்கு வருமானம்னு நாநூறு ஐநூறு வந்தாலே பெருசு. காலையில ஒம்பது மணிக்கு கடைய தொறந்து ராத்திரி ஏழு எட்டு மணிக்கி சாத்துறேன். நாப்பது வருசமா இந்த தொழில செய்றேன். ஒரு பொண்ண கட்டிக் குடுத்து; ரெண்டு பசங்கள படிக்க வச்சுருக்கேன். சொந்தமா சின்னதா ஒரு வீடு கட்டிருக்கேன்.
இந்த வேல பாத்து நான் ஒன்னும் காரு பங்களான்னு ஆயிடல. ஆனா எங்கிட்ட நூறுவா குடுக்க நூறு கேள்வி கேக்குறீங்க. ஆனா பெரிய கடைங்களுக்கு போயி, பாத்தரத்துல ஒட்டின ஸ்டிக்கர்ல உள்ள விலைய நயா பைசா கொறைக்காம அப்புடியே குடுத்துட்டு வாய பொத்திகிட்டு போறீங்க. அத நெனச்சாதான் வேதனையா இருக்கு.”
“தமிழகத்தில் உள்ள பல பள்ளிகளில் சாதிப்பிரிவுகளை குறிக்கும் வகையில் வண்ணக் கயிறுகளை மாணவர்கள் கட்டி வருவதை கண்காணிக்க வேண்டும்; அவ்வாறு கண்டறியும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்; பாகுபாடுகள் காட்டி பிரிவினைகளை தூண்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதிய அடையாளத்தைக் குறிக்கும் வகையிலான குறிப்பிட்ட வண்ணக் கயிறுகளையோ, வளையங்களையோ, மாணவர்கள் அணிந்துவரக் கூடாது; குறிப்பாக, சாதிய அடையாளத்தோடு நெற்றியில் திலகமிட்டுக் கொண்டு வருவதை அனுமதிக்கக்கூடாது” என கடந்த ஜூலை 31-ம் தேதியன்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார், பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன்.
இதற்கு முன்னதாக, 2018 பேட்ச் பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சமீபத்தில் தமிழகப் பள்ளிகளை ஆய்வு மேற்கொண்ட போது, பள்ளி மாணவர்கள் சாதிய அடையாளத்தை குறிக்கும் வகையில் பச்சை, மஞ்சள், சிவப்பு, காவி நிறங்களில் கயிறு கட்டிக்கொண்டு பள்ளிக்கு வருவதையும் வகுப்பறைகளில், மதிய உணவு இடைவேளையில், விளையாட்டில் இந்த பாகுபாடு கடைபிடிக்கப்படுவதையும் கண்டறிந்த இவர்கள் இதனை தவிர்க்க வழிவகை செய்யுமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர். இதனைத் தொடர்ந்தே மேற்கண்ட சுற்றறிக்கையை பள்ளிக்கல்வி இயக்குநரகம் அனுப்பியிருக்கிறது.
இந்நிலையில், ”கையில் கயிறு கட்டுவது, நெற்றியில் திலகமிடுவது இந்து மதநம்பிக்கை தொடர்பானது. இவைகளை பள்ளிகளில் தடை செய்வது அப்பட்டமான இந்து விரோத செயலாகும். மாற்றுமத சின்னங்களை தடை செய்யும் தைரியம் பள்ளி கல்வித்துறை ஆணையருக்கு வருமா? இந்த ஆணை உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டும்.” என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் எச்.ராஜா. செய்தியாளர்கள் சந்திப்பிலும் பொங்கினார் அவர்.
எச்.ராஜாவின் டிவிட்டர் பதிவுக்கே அடிபணிந்த அடிமை எடப்பாடி அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ”இந்த சுற்றறிக்கை எனது கவனத்துக்கு வராமலேயே அனுப்பபட்டிருக்கிறது. பள்ளிகளில் பழைய நிலையே தொடரும்” என சுற்றறிக்கை அனுப்பி பதினைந்து நாள் கழிந்த நிலையில் ஆக-15 அன்று ஊடகங்களுக்கு பேட்டியளித்திருக்கிறார்.
அரசாங்கத்திலோ, இந்த அரசு இயந்திரத்திலோ எந்த ஒரு அதிகாரத்திலும் இல்லாத ஒரு நபர் மிரட்டுவதற்கு ஒரு அரசாங்கமே பணிந்து தாம் வெளியிட்ட சுற்றறிக்கையை திரும்பப் பெறுகிறது என்றால் இங்கு நடப்பது என்ன சட்டத்தின் ஆட்சியா ? இல்லை சங்கிகளின் ஆட்சியா?
பள்ளி மாணவர்களிடையே சாதிய பாகுபாடு கடைபிடிக்கப்படுவதும்; குறிப்பாக மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வண்ணக் கயிறுகள் அணிந்து வருவதும் இதுவரை தமிழகம் அறிந்திராத அதிர்ச்சியூட்டும் செய்தி ஒன்றுமில்லை.
காப்புக் கயிறுகளோ, மந்திரித்துக் கட்டப்படும் கயிறுகளோ மஞ்சள், கருப்பு, சிகப்பு, பச்சை என்று தனித்தனி கயிறுகளாகத்தான் கட்டியிருப்பார்கள். எடப்பாடி, ஓ.பி.எஸ். தொடங்கி, பாண்டே போன்ற பத்திரிகையாளர்கள், சினிமா பிரபலங்கள் சிலரின் கைகளிலும் இத்தகையக் கயிறுகளைக் காண முடியும். ஆனால், பள்ளி மாணவர்கள் அப்பட்டமாக சாதிய அடையாளத்தைக் குறிக்கும் வகையில் இரண்டு வண்ணக் கயிறுகளைச் சேர்த்துக் கட்டியிருக்கிறார்கள் என்பதுதான் இங்கே கவனிக்கத்தக்கது.
தேவர் சாதியைச் சேர்ந்த மாணவர்கள் சிவப்பும் மஞ்சளும்; நாடார் சாதியைச் சேர்ந்த மாணவர்கள் சிவப்பும் நீலமும்; தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மாணவர்கள் பச்சையும் சிவப்பும் மற்றும் நீலம்; வன்னியர் என்றால் மஞ்சள் கயிறு என்று ஒவ்வொரு வண்ணத்திற்கும் ஒவ்வொரு சாதிய அடையாளம் உண்டு.
இந்த சாதியக் கயிறுகளைத்தான், மத நம்பிக்கை தொடர்பான விசயம் என்றும் இதில் அரசு தலையிட உரிமையில்லை என்றும் கயிறு திரிக்கிறார் எச்.ராஜா.
”மாணவர்கள் கயிறு கட்டிவருவதால் என்ன பிரச்சினை வந்துவிட்டது? சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதா? கலவரம் நடந்துவிட்டதா?” என நியூஸ்18 தொலைக்காட்சி விவாதமொன்றில் பங்கேற்றுப்பேசிய அ.தி.மு.க.வைச் சேர்ந்த சசிரேகா என்பவர் கேள்வியெழுப்புகிறார். ஏதோ, தேவையில்லாமல் இவ்விசயத்தை பெரிதுபடுத்துகிறார்கள் என்பதுதான் இத்தரப்பின் வாதமாக இருக்கிறது.
இவர்களின் வாதப்படி, விதிவிலக்காகவும் இங்கொன்றும் அங்கொன்றுமாக நிலவும் நடைமுறை என ஒதுக்கித்தள்ளிவிட முடியுமா?
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
”மாணவர்களிடையே சாதிய பாகுபாடு கடைபிடிக்கும் போக்கு அங்கன்வாடி அளவிலேயே ஆரம்பித்துவிடுகிறது” என்கிறார் எவிடன்ஸ் கதிர். மதுரை மாவட்டங்களில் அங்கன்வாடிகளில் மாணவர்கள் தனித்தனியாக அமர வைக்கப்படுவதாகவும்; அங்கன்வாடியில் வழங்கப்படும் தட்டுக்களை பயன்படுத்த மறுத்து ஆதிக்கசாதியினர் வீட்டு பிள்ளைகளுக்கு கிண்ணம் கொடுத்து அனுப்புவதையும்; திருநெல்வேலியில் அங்கன்வாடி ஒன்றில் இரட்டைக்குடம் வைக்கப்பட்டிருந்ததும், ஆதிக்கச்சாதியினருக்கான குடத்தில் தாழ்த்தப்பட்டசாதியைச் சேர்ந்த சிறுவன் தண்ணீர் எடுத்துக் குடித்ததற்காக அங்கன்வாடி ஊழியர்களால் தாக்கப்பட்டதையும் இவ்விவகாரம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டிருப்பதையும் ஆதாரங்களோடு குறிப்பிடுகிறார். மேலும், தென்மாவட்டங்களில் சாதிரீதியாக மாணவர்கள் மோதிக்கொள்ளும் சம்பவம் தொடர்பாக ஆண்டுக்கு சராசரியாக 60 வழக்குகள் பதிவாகிறது என்கிறார், அவர்.
இதுபோன்று தென் மாவட்ட பள்ளிகளில் மாணவர்கள் சாதிரீதியாக மோதிக்கொள்ளும் போக்கு தொடர்பாக, கடந்த 2017-ம் ஆண்டில் தேசிய மனித உரிமை ஆணையம் இப்பிரச்சினையை தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்ததோடு, இது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸும் அனுப்பியிருந்தது.
அப்போதைய, நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களையும் அழைத்து, ”சாதியை வெளிப்படுத்தும் வகையில் கயிறுகளை கட்டி வரும் மாணவர்களுக்கு முதலில் எச்சரிக்கை செய்ய வேண்டும். அதன் பின்னரும் கயிறு கட்டிவந்தாலோ, சாதிவெறியை தூண்டும் வகையில் செயல்பட்டாலோ பள்ளியிலிருந்து சம்பந்தப்பட்ட மாணவரை நீக்கவும்” அறிவுரை வழங்கியிருந்தார்.
தாக்கப்பட்ட மாணவன் மாரிமுத்து
சமீபத்தில் கோவில்பட்டி வ.உ.சி. அரசு மேநிலைப்பள்ளியில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுடன் நட்புரீதியில் பேசியதற்காக 11-ம் வகுப்பு மாணவன் மாரிமுத்துவை அவரது செவித்திறன் பாதிக்கும் அளவிற்குத் தாக்கியிருக்கிறார்கள் அவருடன் பயிலும் சக ‘உயர்’சாதி மாணவர்கள்.
விழுப்புரம் சேந்தநாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் பா.ம.க. கொடி நிறத்தில் வளையம், விடுதலை சிறுத்தைகள் கட்சி வண்ணத்தில் வளையம் அணிந்து வந்த மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு 10 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவையெல்லாம் ஊடகங்களில் வெளியான செய்திகள். ஊடக வெளிச்சத்துக்கு வராமல், போலீசு நிலையங்களில் வழக்காகக்கூடப் பதிவாகாமல் புதைக்கப்பட்ட சம்பவங்கள் பல உண்டு.
இரத்து செய்யப்பட்ட அரசாணையின் நகல்
மாணவர்களிடையே நிலவும் இத்தகைய சாதிய பாகுபாட்டை களையும் முயற்சிக்கு பதிலாக சாதிவெறிபிடித்த ஆசிரியர்கள் சிலரும் சாதிய பாகுபாட்டோடுதான் மாணவர்களை நடத்துகின்றனர் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது. பொதுவில் பள்ளிச் சூழலே சாதியின்பால் பாழ்பட்டிருக்கிறது என்பதாகத்தான் இதனை பார்க்க முடியும்.
பொள்ளாச்சி அருகேயுள்ள பள்ளியொன்றில் சாதிவெறிபிடித்த ஆசிரியர் ஒருவர், உயர்சாதி மாணவர்களை பிளஸ் என்றும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மாணவர்களை மைனஸ் என்றும் அழைத்தது பிரச்சினையாகியிருக்கிறது.
தருமபுரி பள்ளியொன்றில், ”பறபசங்களுக்கெல்லாம் படிப்பு வராது. டி.சி.-ய வாங்கிட்டு கிளம்பு”ன்னு சொல்லி தாழ்த்தப்பட்ட மாணவர் ஒருவரை சக மாணவர்கள் முன்பு அடித்து அவமானப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர் ஒருவர். இதனால் மனமுடைந்த அம்மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
https://youtu.be/z8Vd2d8z_ZQ
கரூரில் தனியார் பள்ளியொன்றில் 12-ம் வகுப்பு மாணவரை சாதிரீதியாக ஆசிரியரே இழிவுபடுத்தியதால்; மாணவர் சரவணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடந்த பிப்-12, 2019 அன்று கடலூர் மாவட்டம் காரைக்காடு அரசுப்பள்ளி மாணவர்கள் சாதிய பாகுபாட்டோடு ஆசிரியர்கள் தங்களை இழிவாக நடத்துவதாகக் கூறி போலீசிடமும் முதன்மை கல்வி அலுவலரிடமும் முறையிட்டிருக்கின்றனர்.
https://youtu.be/LEYE3D3Yi_4
உயர்கல்வி நிறுவனங்களில் நிலவும் சாதிவன்மத்திற்கு பலியான ரோஹித் வெமூலாவும், மருத்துவ மாணவி பாயலும் சந்திக்க நேர்ந்த கொடுமைகளை இந்த சம்பவங்கள் நினைவுபடுத்தவில்லையா?
கடந்த நவம்பர்-20, 2018 அன்று திருநெல்வேலியைச் சேர்ந்த இசக்கி சங்கர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டதை மறந்திருக்க மாட்டீர்கள். கோனார் சாதியைச் சேர்ந்த இசக்கி சங்கரும், அகமுடையர் சாதியைச் சேர்ந்த சத்தியபாமாவும் காதலர்கள். இசக்கி சங்கர் வங்கி ஊழியர் என்பதாலும் இருவரும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதாலும் இரு குடும்பத்தினரும் கலந்துபேசி சம்பந்தம் வரை பேசியிருக்கின்றனர்.
சாதி பெருசுகளே சமாதானம் ஆனபின்னரும், ”அக்காவை கீழ்சாதிகாரனுக்கு கட்டிவைக்கிறியே” என ஊரார் இழிவாகப் பேசியதாகவும் சாதியின் கௌரவத்தை காக்கவே கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்திருக்கிறான் பத்தாம் வகுப்பு மாணவனான அய்யப்பன். சக பள்ளி மாணவர்கள் 5 பேரோடு சேர்ந்து இந்தக் கொலையை செய்திருக்கிறான். இப்பொழுது சொல்லுங்கள்… இதுவேறு அதுவேறு என்று ஒதுங்கி சென்றுவிட முடியுமா?
இதே தென்மாவட்டங்களில்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு, சாதியப் பிரச்சினைகளின் போது தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் பகுதியில் உள்ள கிணற்றில் விசத்தைக் கலந்தனர் ஆதிக்க சாதிக் கிரிமினல்கள்.
அடுத்தடுத்து ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆணவக்கொலைகள் விழுந்த போதும், முகத்தில் தெரிக்கும் இரத்தத்தை துடைத்தெறிந்துவிட்டு கடந்து செல்வதைத்தான் “சமூகத்தின் இயல்பு” என்கிறார்கள். ”கயிறுகளால் என்ன பிரச்சினை? கலவரமா வந்துவிட்டது, சட்டம் ஒழுங்கா சீர்கெட்டது?” எனத் திரும்பத் திரும்பக் கேட்கிறார்களே அதுபோல, தீண்டாமையினால் என்ன பிரச்சினை, அறுவா எடுத்து வெட்டிகொள்ளட்டும் என்று அதுவரையில் காத்திருப்பார்களா?
பள்ளிக்கல்வி இயக்குநரகம் அனுப்பியிருந்த சரியான உத்தரவு அறிக்கையை சாதிவெறிக்கு துணை போகும் எடப்பாடி அரசு ரத்து செய்திருக்கிறது, அதுவும் இந்துமதவெறியை வாயில் கக்கும் எச்.ராஜாவின் வேண்டுகோளின் பெயரில்.
தமிழகத்தை ஆளும் அடிமைக் கும்பல், தமிழகத்தின் நிலையை 70 ஆண்டுகள் பின்னோக்கி இட்டுச் சென்றுள்ளது. இச்சூழலை அப்படியே கடந்து செல்ல முடியுமா ? தமிழகத்தில் தலைவிரித்தாடும் சாதிவெறிதான் இந்துமதவெறியின் அடித்தளம் என்பதால் நாம் இரண்டு வெறியர்களையும் வேரறுக்கும் வகையில் செயல்பட வேண்டும்.
பருவநிலை மாற்றம் குறித்து யூடியூப்பில் தேடுங்கள். அதை மறுக்கும் காணொளி ஒன்றை உடனடியாக நீங்கள் காணலாம். உண்மையில், பருவநிலை மாற்றம் குறித்து இணையத்தில் நடக்கும் விவாதங்களில் அறிவியலில் நம்பிக்கை கொண்டவர்களை விட மறுப்பாளர்கள் மற்றும் சதிக்கோட்பாட்டாளர்களின் கையே ஓங்கியிருக்கிறது என்று புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது. பருவநிலை மாற்றத்திற்கு மனித நடவடிக்கைகள்தான் முதன்மையான காரணம் எனும் அறிவியலின் ஒருமித்த கருத்தை பெரும்பாலான யூடியூப் காணொளிகள் எதிர்க்கின்றன.
விஞ்ஞானத்தைப் பற்றிய தவறான தகவல்கள் பரவுவதன் பின்னனியில் சமூக ஊடகங்களின் முதன்மையான பங்கை அந்த ஆய்வு எடுத்துரைக்கிறது. மேலும் விஞ்ஞானிகளும் அவர்களை ஆதரிப்பவர்களும் தங்களது கண்டுபிடிப்புகளை மக்களிடம் கொண்டு செல்வதற்கான ஆக்கபூர்வமான மற்றும் ஈர்க்கும் வழிகளை வளர்ப்பதில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்று அது அறிவுறுத்துகிறது. ஆனால் அதைவிட இன்றியமையாததாக, அறிவியல் தகவல்களை தனி மனிதர்கள் மற்றும் சமூகத்தின் நடத்தையை பாதிக்கும் வகையில் கையாள்வது குறித்து நாம் கவலைப்பட வேண்டியிருக்கிறது.
பருவநிலை மாற்றம் குறித்து யூடியூபிலுள்ள தொடர்பின்றி எடுக்கப்பட்ட 200 காணொளிகளின் அடிப்படையில் இந்த ஆய்வினை ஜெர்மனியின் ஆர்.டபிள்யூ.டி.எச் ஆச்சென் பல்கலைக்கழகத்தை (RWTH Aachen University) சேர்ந்த ஜோகிம் ஆல்காயர் நடத்தியுள்ளார். அவற்றில் பெரும்பான்மையாக 107 காணொளிகள் பருவநிலை மாற்றம் மனிதர்களால் ஏற்பட்டது என்பதை மறுத்தோ அல்லது பருவநிலை மாற்றம் என்பதே ஒரு சதி என்றோ கூறுவதாக அவர் கண்டறிந்துள்ளார்.
சதிக்கோட்பாடுகளை தூண்டும் காணொளிகள் அதிக பார்வையை பெற்றிருக்கின்றன. மேலும் சதிக்கோட்பாடுகளை பரப்பும் காணொளிகள் அதற்கு அறிவியல் சாயமடிக்க பருவநிலை பொறியியல் (geo engineering) போன்ற குறிச்சொற்களையும் பயன்படுத்துகின்றன.
அறிவியல் உண்மைகளை பரப்புவதில் வெற்றி பெற முடியாமலிருப்பது பருவநிலை மாற்றம் குறித்த துறை ஒன்று மட்டுமல்ல. சான்றாக தொற்றுநோய்களை குறிப்பாக நமக்கு மிகவும் தெரிந்த ரூபெல்லா (measles-mumps-rubella or MMR) தடுப்பு மருந்தினை எடுத்துக்கொள்வோம். இந்த மருந்தின் பாதுகாப்பு குறித்து ஏராளமான தகவல்கள் இருந்த போதும் அது ஆபத்தானது என்ற தவறான தகவல் உலகின் பல்வேறு நாடுகளில் பரவலாக பரப்பப்பட்டது. விளைவு பல நாடுகளில் தடுப்பூசியின் அளவு குறைந்தது.
நன்கு அறியப்பட்ட சதிக்கோட்பாடுகள் தான் சிக்கல்களை ஏற்படுத்தும் என்றில்லை. தென்னிந்திய மாநிலமான கேரளாவில் 17 நபர்களின் உயிரை பறித்து நிபா (Nipah) வைரஸ் தாக்குதல் உச்சத்திலிருந்த போது ஒரு நபர் சொந்தமாக ஒரு சதிக்கோட்பாட்டை பரப்பினார். மாவட்ட மருத்துவ அதிகாரியின் அதிகார்பூர்வ கடிதம் போல போலியாக ஒன்றை உருவாக்கி கோழிக்கறி மூலமாக தான் நிபா வைரஸ் பரவுகிறது என்ற வதந்தியை பரப்பினார்.
நிபா வைரஸ் தாக்குதலால் மரணித்த ஒருவரது உடலை அடக்கம் செய்யும் மருத்துவ ஊழியர்கள். (கோப்புப் படம்)
உண்மையில் பழந்தின்னி வவ்வால்கள் தான் நிபா வைரஸின் மூலம் என்ற கருத்தினை அறிவியல் நிறுவியுள்ளது. வாட்ஸப்பில் பரவிய அந்த வதந்தி கேரளா மற்றும் தமிழ்நாட்டில் கோழிக்கறி உண்பவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. கோழிக்கறி வியாபாரிகளுக்கு நட்டத்தையும் ஏற்படுத்தியது.
நம்முடைய நினைவுகள் இணக்கமானவை என்பதால் ரூபெல்லா தடுப்பு மருந்து மற்றும் நிபா வைரஸ் குறித்த வதந்திகள் மனித மனங்களிடையே ஏற்படும் பாதிப்புகள் குறித்து வியப்படைய ஒன்றுமில்லை. நம்முடைய அசலான நினைவுகளை புதிய மற்றும் தவறான நினைவுகளால் மாற்ற முடியும். தங்களது கைமீறிய நிகழ்வுகள் அல்லது சிக்கல்களை பற்றி தெரிந்து கொள்ள மக்களுக்கு வலிமையான கருவியாக சதிக்கோட்பாடுகள் காட்சியளிக்கின்றன.
சமுக ஊடகங்களின் தனிநபர் விருப்பங்கள் அடிப்படையிலான படிமுறைத்தீர்வுகள் (personalisation algorithms) இதனை மேலும் சிக்கலாக்குகின்றன. நமக்கு மன நிறைவு தருகின்ற, நம்பிக்கை சார்ந்த மற்றும் தேடி கிளிக் செய்யும் வடிவங்கள் அடிப்படையில் தகவல்களை நமக்கு சீராக படிமுறைத்தீர்வுகள் தருகின்றன. மனிதர்களால் பருவநிலை மாற்றம் நடப்பதில்லை என்று கூறும் காணொளிகள் தொடர்ந்து கிடைக்கும் போது பருவநிலை மாற்றம் குறித்த சந்தேகம் கொண்ட ஒருவருக்கு சொந்தமாக முடிவெடுக்கும் வாய்ப்பு குறைகிறது.
வதந்திகள், எதிர்பாராத வடிவங்கள் மற்றும் மாறுபட்ட அளவிலான நுணுக்கங்களுடன் வருவதை டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் விரைவான வளர்ச்சி மேலும் உறுதி செய்கிறது. ஒரு அதிகாரியின் கடிதத்தை நகலெடுப்பது அல்லது இணைய தேடுபொறிகளைக் கையாள திறன்சார்ந்த சொற்களைப் பயன்படுத்துவது என்பது அமிழ்ந்திருக்கும் பனிப்பாறையின் முனை மட்டுமே. டீப்ஃபேக்ஸ் (DeepFakes) போன்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் மூலம் வதந்திகளையே மிகவும் யதார்த்தமான அறிவியல் காணொளிகளாக காட்டும் போக்கு வளர்வது, வதந்திகளை கண்டறிவதை மேலும் கடினமாக்குகிறது.
சரியான அறிவியல் தகவல்களை கொடுப்பது மூடநம்பிக்கைகள் பற்றிய மக்களின் விழிப்புணர்வை வலுப்படுத்தும். மேலும் மக்களது கருத்தியல்கள் மற்றும் சார்புநிலைகளையும் நாம் எதிர்கொண்டாக வேண்டும்.
நிறுவன கட்டமைப்புகளை உருவாக்கி வதந்திகளை கட்டுப்படுத்த சமூக ஊடக நிறுவனங்கள் முயல்கின்றன. “இந்த ஆய்வு நடத்தப்பட்டதிலிருந்து நூற்றுக்கணக்கான மாற்றங்களை எங்களது கட்டமைப்பில் செய்திருக்கிறோம். இன்று யூடியூப் எப்படி வேலை செய்கிறது என்பதை ஆய்வின் முடிவுகள் துல்லியமாக காட்டவில்லை…. அமெரிக்காவில் இந்த மாற்றங்கள் இது போன்ற காணொளி பரிந்துரைகளை 50 விழுக்காடு வரை ஏற்கனவே குறைந்துள்ளன” என்று யூடியூப் செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறினார்.
மற்ற நிறுவனங்கள் தரவு சரிபார்ப்பவர்களை அதிகளவில் வேலைக்கு எடுக்கின்றன. வதந்திகளை பற்றி ஆய்வு செய்ய என்னை போன்ற கல்வியாளர்களுக்கு நிதியொதுக்கீடும் செய்கின்றன. உடல்நலத்திற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய தலைப்புகளுக்கான தேடல் குறியீட்டு சொற்கள் தடுக்கப்பட்டுள்ளன.
ஆனால் தொடர்ந்து பரப்பப்படும் அறிவியல் வதந்திகளை பார்க்கும் போது இவ்வழிமுறைகள் போதாமையாக இருக்கின்றன. விளைவாக, உலகம் முழுதும் பல்வேறு நாடுகள் சட்டங்கள் உருவாக்கியும், இணையத்தை முடக்கும் நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன.
அறிவியலாளர்கள் பங்களிக்க வேண்டும்:
உண்மையான அறிவியல் தகவல்களுக்கும் சதி கோட்பாடுகளுக்கும் இடையிலான வேறுபாட்டை தர்க்கபூர்வமாக புரிந்து கொள்ளும் திறனை மக்களிடம் வளர்ப்பது மற்றொரு சாத்தியமான தீர்வாகும். சான்றாக, உண்மையான தகவல் மற்றும் வதந்திகளை வேறுபடுத்திப் பார்ப்பதற்கான குழந்தைகளின் திறன்களை மேம்படுத்த தகவல் கல்வியறிவு முயற்சி ஒன்றை கேரளாவில் உள்ள ஒரு மாவட்டம் கிட்டத்தட்ட 150 அரசுப்பள்ளிகளில் தொடங்கியுள்ளது. இது தொடக்கமாக இருக்கலாம். ஆனால் ஒரு மாற்றத்தை இது ஏற்படுத்தும் என்பதற்கு ஏராளமான சான்றுகள் ஏற்கனவே உள்ளன.
யூடியூப் பருவநிலை மறுப்பாளர்கள் புவி பொறியமைப்பியல் போன்ற தேடு பொறிச்சொற்களை தவறாக பயன்படுத்தியதை போல தங்களது உழைப்பு நிராகரிக்கப்படவோ அல்லது தவறாக பயன்படுத்தப்படவோ இல்லை என்பதை உறுதி செய்யும் போராட்டத்தில் அறிவியாலர்களும் தங்களை அதிகளவில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். சதிக்கோட்பாடுகள், வதந்தியாயினும் உறுதியான நம்பிக்கையின் அடிப்படையில் சவாரி செய்கின்றன. அதேசமயம் [எதையும்] சந்தேகிப்பது தான் அறிவியல் நடைமுறைக்கு இயல்பானது. ஆனால் பருவநிலை மாற்றத்தில் மனிதர்களின் பங்கை பொருத்தவரையில் 99 விழுக்காடு அறிவியலாளார்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை.
விஞ்ஞானிகள் இதனை அதிகளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் புதுமையான மற்றும் வசப்படுத்தும் உத்திகளைப் பயன்படுத்தி பொதுமக்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும். இதில் மக்களது [அறிவியலற்ற] நம்பிக்கைகளை மாற்றுவதோடு நடத்தைகளையும் பாதிக்கும் வண்ணம் சொந்தமாக சமூக ஊடக உள்ளடக்கத்தை உருவாக்குவதும் அடங்கும். இல்லையெனில், அவர்களது குரல்கள் எவ்வளவு நம்பகமானவையாக இருந்தாலும், அறைகுறையான தரவுகளால் தயாரிக்கப்படும் அடுக்கடுக்கான தகவல்கள் மற்றும் அவற்றின் மூர்க்கத்தனத்தால் தொடர்ந்து அவை மூழ்கடிக்கப்படும்.
தமிழாக்கம் : சுகுமார் கட்டுரையாசிரியர் :சந்தோஷ் விஜய்குமார், நியூகேஸிலின் நார்தம்ப்ரியா பல்கலைக்கழகத்தில் டிஜிட்டல் சுகாதாரத்தில் மூத்த ஆராய்ச்சியாளராக உள்ளார். நன்றி :scroll
தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்ற பழமொழிக்கு வாழும் உதாரணமாய்த் திகழ்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. ஜெயா இறந்துபோன 2016-ம் ஆண்டில் 26,995 கோடி ரூபாயாக இருந்த தமிழக அரசின் டாஸ்மாக் (வரி) வருமானம், கடந்த இரண்டாண்டு கால எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் ரூ. 31,157 கோடியாக அதிகரித்திருக்கிறது. வருமானம் மட்டுமின்றி, டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையும் கடந்த ஒரு ஆண்டில் 3,866-லிருந்து 5,152 ஆகவும்; பார்களின் எண்ணிக்கை 1,456-லிருந்து 1,872 ஆகவும் அதிகரித்துள்ளன.
தமிழக மக்கள் நடத்திவந்த டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டங்களின் வீரியம் குறைந்து போய்விட்டதைப் பயன்படுத்திக்கொண்டு டாஸ்மாக் கடைகள், பார்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, சாராய வருமானத்தையும் பெருக்கிக் கொண்டுவிட்டது, எடப்பாடி அரசு.
தமிழக மக்களில் 10-ல் நான்கு பேர் சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதைகளுக்கு அடிமையாகியிருக்கும் புள்ளிவிவரங்கள் சமீபத்தில் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு போதை நாடு ஆகிவருவதை எச்சரிக்கும் செய்தி இது. இந்த அபாயத்திலிருந்து தமிழ்நாட்டை மீட்க வேண்டுமென்றால், முதல் நடவடிக்கையாக டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும். ஆனால், எடப்பாடி அரசு அதற்கு நேர்எதிராக, இந்தக் கோரிக்கை வாயளவில் எழுப்பப்படுவதைக்கூடச் சகித்துக் கொள்ள மறுத்து, டாஸ்மாக்கை எதிர்ப்பவர்களை நர வேட்டையாடி வருகிறது.
♣ திருவாரூர் அருகேயுள்ள தேவர்கண்டநல்லூரில் டாஸ்மாக் கடைகளிலேயே கள்ளச் சீமைச் சாராயம் விற்பதை அம்பலப்படுத்தித் தட்டிகளை வைத்ததற்காக செல்லப்பாண்டி என்ற இளைஞரை மூன்று வழக்குகளின் கீழ் கைது செய்து சிறையிலும் அடைத்தது, தமிழக போலீசு.
♣ டாஸ்மாக் கடைகளை மூடக் கோரித் தொடர்ச்சியாகப் போராடிவரும் மதுரையைச் சேர்ந்த நந்தினியையும் அவரது தந்தை ஆனந்தனையும், அவர்கள் மீது ஐந்தாண்டுகளுக்கு முன்பு பதியப்பட்ட வழக்கைக் காரணமாக வைத்துக் கடந்த ஜூன் மாத இறுதியில் அடாவடித்தனமாகக் கைது செய்தது, போலீசு. அவ்வழக்கு விசாரணையின்போது, “போதைப்பொருள் விற்பது ஐ.பி.சி. 328-ன்படி குற்றம். அந்தக் குற்றத்தை அரசே செய்யலாமா?” என நீதிபதியிடம் கேள்வி எழுப்பியதற்காக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் அவர்கள் மீது பதியப்பட்டது.
அவ்விருவருக்கும் பிணை கொடுப்பதற்கு, “மது விற்பது குற்றமா என்பது போன்ற கேள்விகளை நீதிமன்றத்தில் இனி கேட்கக் கூடாது என எழுதிக் கையெழுத்திட வேண்டும்” என்றொரு நிபந்தனையையும் விதித்தது, நீதிமன்றம். இந்நிபந்தனைக்கு நந்தினியும் ஆனந்தனும் மறுக்கவே, அவர்களைச் சிறையில் அடைத்துவிட்டது நீதிமன்றம் – போலீசு கூட்டணி.
மனைவியின் இறந்த உடலுடன் சாலை மறியலில் ஈடுபட்ட மருத்துவர் ரமேஷ் (கோப்புப் படம்)
♣ கோவை மாவட்டம்-ஆனைக்கட்டி பகுதியில் மருத்துவராகப் பணியாற்றி வரும் ரமேஷின் மனைவி ஷோபனா சாலை விபத்தொன்றில் அகால மரணமடைந்ததற்கு டாஸ்மாக் சாராயம்தான் காரணம் என்பது மறுக்கவியலாத உண்மை. எனினும், ஷோபனாவின் மரணம் குறித்த முதல் தகவல் அறிக்கையில் குற்றவாளிகள் மதுபோதையில் இருந்த விவரம் பதிவு செய்யப்படவில்லை. அதற்கான சோதனையே நடத்தப்படவில்லை எனக் குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது.
டாஸ்மாக் சாராயத்தால் நேர்ந்துவரும் இத்தகைய அவலங்கள் குறித்துத் தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் விவாதிக்கப்படவில்லை. அதற்கு மாறாக, “டாஸ்மாக் கடைகள் கள்ளச் சாராயச் சாவுகளை ஒழித்துவிட்டதாக” வெட்கமின்றி பெருமை பாராட்டிக் கொண்டது அ.தி.மு.க. அரசு. மேலும், எடப்பாடி ஆதரவு எம்.எல்.ஏ. தனியரசு, “நடமாடும் டாஸ்மாக் கடைகளைத் திறக்க வேண்டும்” எனக் கோரியதை அமைச்சர் பெருமக்கள் அனைவரும் ரசித்துச் சிரித்திருக்கிறார்கள்.
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876 Email –vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தென் மண்டலத் துணைத்தலைவராக பதவிவகித்த இ.எம்.ஜோசப் அவர்கள், ”சங்க முரசு” இதழுக்காக எழுதிய பொருளாதாரம் தொடர்பான தொடர் கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் வெளியிடப்பட்டிருக்கிறது.
பணவீக்கம், விலைவாசி மற்றும் அதன் தொடர்பான அந்நிய மூலதனப் போக்குவரத்து, உள்நாட்டுப் பணப்புழக்கம், எரிபொருள் விலை உயர்வு, விவசாயம், முன்பேர வர்த்தகம், உணவு உரிமை, பொது விநியோகம் போன்ற சில அம்சங்களை புரிந்துகொள்ளும் வகையில் எளிமையான குறிப்புகளோடு அறிமுகப்படுத்தியிருக்கிறார், இந்நூலாசிரியர்.
பணவீக்கம் (Inflation) என்பது வேறு; பணவீக்க விகிதம் (Rate of Inflation) என்பது வேறு. முதலில் பணவீக்க விகிதம் குறித்துப் பார்ப்போம். ஏனெனில், இதுதான் ஊடகங்கள் அவ்வப்போது நமக்குத் தரும் தகவல். பண்டங்கள் மற்றும் சேவைகளின் (Goods and Services) விலை குறித்த விலைவாசிப் புள்ளி பற்றி நமக்குத் தெரியும். பணவீக்க விகிதம் என்பது அப்புள்ளிகளின் ஏற்ற இறக்கங்கள் குறித்த சதவீதமேயாகும். அதாவது, ஒரு குறிப்பிட்ட ஆண்டின் குறிப்பிட்ட காலத்தின் பணவீக்க விகிதம் என்பது, அதற்கு முந்தைய ஆண்டின் அதே காலத்தில் இருந்த விலைவாசிகளுடனான ஒப்பீட்டுச் சதவீதமேயாகும்.
பணவீக்க விகிதம் குறைகிறது என்றால், கண்டிப்பாக குறைகிறது என அடித்துக் கூற முடியாது. விலைகள் ஏறும் வேகம் குறைகிறது என்பதே நேரடி அர்த்தம். ஒரு சிறிய எடுத்துக்காட்டு. ஊரிலிருந்து பாத யாத்திரையாகச் செல்லும் ஒருவர் முதல் நாளில் 10 கிலோமீட்டர் வேகத்தில் நடக்கிறார். அதற்கு அடுத்த நாள் நடை வேகம் 7 கிலோ மீட்டர் எனக் குறைகிறது. அதற்கு அடுத்த நாள் 3 கிலோ மீட்டர் என மேலும் குறைகிறது. வேகம் இவ்வாறு தொடர்ந்து குறைந்தாலும், அவர் மூன்று நாட்களின் முடிவில் 20 கிலோ மீட்டர் கடந்து விட்டார். பணவீக்க விகிதமும் அது போன்றது தான். விலை ஏறும் வேகம் குறைந்தாலும், மொத்தத்தில் விலை ஏற்றம் அதிகமாகி விடுகிறது.
ஒரு சில வேளைகளில் சில பண்டங்களின் விலைகள் உண்மையில் குறையவும் கூடும். ஒட்டு மொத்தத்தில் அனைத்துப் பண்டங்களின் விலைகளும் குறையும் அரிய சந்தர்ப்பங்களில் அது எதிர்மறைப் பணவீக்கம் (Negative inflation) என்று அழைக்கப்படுகிறது. முந்தைய ஆண்டின் (Base year) விலைவாசிகளோடு ஒப்பீடு என்பதால், குறிப்பிட்ட ஆண்டின் பணவீக்க விகிதத்தின் ஏற்ற இறக்கங்கள், முந்தைய ஆண்டின் விலை நிலவரங்களைப் பொறுத்தே அமையும். இது அடிப்படை ஆண்டின் விளைவு (Base year effect) என அழைக்கப்படுகிறது.
நமது நாட்டில் பணவீக்க விகிதம் மொத்த விலைப்புள்ளிகளின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இது சரியல்ல. வளர்ச்சியடைந்த நாடுகள் பலவற்றில் இது சில்லறை விலைப் புள்ளிகளின் அடிப்படையிலேயே கணக்கிடப்படுகிறது. சில்லறை விலையே நுகர்வோர் கொடுக்கும் விலை என்பதால், அதுவே பணவீக்கத்தினை பிரதிபலிக்கும் சரியான அடிப்படையாக இருக்க முடியும்.
சரி, பணவீக்கம் எவ்வாறு ஏற்படுகிறது? மக்கள் மத்தியிலிருக்கும் பணப்புழக்கம் (Broad money) அதிகரிப்பதன் காரணமாக, சந்தையில் கிராக்கி (Demand) அதிகரிக்கிறது. அதன் காரணமாக விலைகள் உயருகின்றன. இது கிராக்கியினால் ஈர்க்கப்படும் பணவீக்கம் (Demand pull Inflation) எனப்படுகிறது. அதே வேளையில், இடுபொருள் விலை உயர்வு, வரி அதிகரிப்பு போன்ற காரணங்களால் பண்ட உற்பத்திச் செலவு (Cost) அதிகரித்து அதனாலும் விலைகள் உயரக்கூடும். இது செலவினால் உந்தப்படும் பணவீக்கம் (Cost-push Inflation) எனப்படுகிறது. இது தவிர, சில பண்டங்களின் / சேவையில் அளிப்பில் ஏற்படும் தட்டுப்பாடுகள் (Supply Constraints) காரணமாகவும், ஆங்காங்கு விலை உயர்வு ஏற்படக்கூடும். பொதுவாக இவைதான் பணவீக்கத்தின் அடிப்படை நாம் இப்போது விவாதித்த அனைத்துமே விலை வீக்கம் (Price Inflation) குறித்தவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். (நூலிலிருந்து பக்.7-8)
…. பணவீக்கம் என்றாலே அனைத்துப் பண்டங்களின் விலை உயர்வு என்பதுபோல, இன்றைய பணவாதப் (Monetarists) பொருளியல் வல்லுனர்கள் பேசி வருகின்றனர். அதே போன்று, பணவீக்க விகிதம் குறைந்து விட்டாலே, பணவீக்கத்திற்கு முந்தைய வாங்கும் சக்தியினை மக்கள் மீண்டும் பெற்று விடுவது போன்ற ஒரு பிரமையினையும் அவர்கள் தோற்றுவிக்கின்றனர். ஆனால், எதார்த்தத்தில் என்ன நடக்கிறது?
எல்லாப் பண்டங்கள் மற்றும் சேவைகளின் விலைகள் உயர்ந்தாலும், உழைப்புச் சக்தியின் விலை, அதாவது ஊதியம் மட்டும் அப்படியே தானாக உயர்ந்து விடுவதில்லை என்பது இங்கே மறைக்கப்படுகிறது. பணவீக்கக் காலத்தில், விலைப் புள்ளிகளுடன் இணைந்த ஊதியம் மட்டுமே உயர்வதற்கான சாத்தியம் கொண்டது. நம் நாட்டில், 93% வரை முறைசாராத் துறை எனும் போது, ஊதியம் எப்படி தானாகவே உயரும்?
எல்லாப் பண்டங்களின் விலையும் 10% உயர்கின்றன. அதே போன்று 10% உயர்கிறது என்றால், அதில் பிரச்சினை என்ன இருக்க முடியும்? மாறாக, அனைத்துப் பண்டங்களின் விலைகளும் 5% உயர்கின்றன. ஆனால், கூலி மட்டும் உயரவில்லை எனில், இந்த 5 சதவீதப் பணவீக்கம், 10 சதவீதப் பணவீக்கத்தினை விட மோசமானது. இதுதானே உண்மையில் பிரச்சினையாக இருக்க முடியும்?
உழைப்புச் சக்தியின் விலை (ஊதியம்) தவிர மற்ற அனைத்து பண்டங்கள் மற்றும் சேவைகளின் பண மதிப்பிலான விலைகள் உயரும் சூழ்நிலையே பணவீக்கம் என்பதன் உண்மையான விளக்கம். பணவீக்க விகிதம் குறைந்தாலும், அதாவது, விலையேற்றத்தின் வேகம் குறைந்தாலும், பணவீக்கத்திற்கு முன்பிருந்த பொதுவான விலைகளின் அளவிற்கும், கூலியின் அளவிற்கும் ஏற்கனவே இருந்த இடைவெளி குறைவதில்லை; மாறாக மேலும் அதிகரிக்கவே செய்கிறது. அதாவது, உழைப்பாளிகளின் கூலியாக இருந்த ஒரு பகுதிச் செல்வம், முதலாளிகளின் இலாபமாக கைமாற்றிக் கொடுக்கப்படுகிறது. எனவேதான், ஜான் மேனார்ட் கீன்ஸ், பணவீக்கத்தினை, இலாப வீக்கம் (Profit inflation) என்றே குறிப்பிட்டார், என்ன செய்ய வேண்டும்?
பணவீக்கத்தில் மிக முக்கிய அம்சம் உணவுப் பண்டங்கள் குறித்ததே அப்படியானால், என்ன செய்ய வேண்டும்? இதுதான் கேள்வி என்றால், உருவாகி இருக்கும் கிராக்கியின் அளவிற்கு உற்பத்தியினைப் பெருக்க வேண்டும் என்பதே நமது எளிமையான பதிலாக இருக்க முடியும். ஆனால், முதலாளித்துவம் அதைச் செய்யாது. விவசாய உற்பத்திக்குத் தேவையான நிலம் முதலாளிகளின் கைகளில் இல்லை. பூர்வ குடியினரை (செவ்விந்தியர்களை) விரட்டி அடித்து முதலாளிகள் ஆக்கிரமித்துக் கொண்ட அமெரிக்கா போன்ற நாடுகளில் நிலம் ஒன்றும் பிரச்சினை இல்லை. எனவே, அங்கு விவசாய விரிவாக்கத்தின் மூலம் பணவீக்கத்தினைச் சரிசெய்து விட முடியும்.
ஆனால், எந்த நாடுகளில் எல்லாம், விவசாயம் நீடித்து நிலை பெற்றுவிட்ட விவசாயிகளின் தளமாக (Peasant Agriculture) இருக்கிறதோ , அங்கு முதலாளித்துவம் விவசாயிகளுடன் கொண்டிருப்பது ஒரு வகையான வர்த்தக உறவுதான். இந்தியாவிலும் அதுவே நிலைமை எனவே, விவசாய விரிவாக்க வேலையினை முதலாளித்துவம் கையில் எடுப்பதில்லை, ”விவசாயத்தினை மேம்படுத்தும் வேலையினை முதலாளித்துவம் செய்யுமானால், அது முதலாளித்துவமே அல்ல” என மாமேதை லெனின் கூறியதை இங்கு நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும். விவசாயிகளை அவர்களது நிலத்திலிருந்தும், அவர்களது உற்பத்தி உடைமைகளிலுமிருந்தும், பிரித்தெடுத்து வெளியேற்றுவது முதலாளித்துவத்தின் நிகழ்ச்சி நிரலில் முக்கியமான ஒன்று என்பதை மறந்துவிடக் கூடாது. (நூலிலிருந்து பக்.60-62)
நூல் : பணவீக்கம் என்றால் என்ன ? ஆசிரியர் : இ.எம். ஜோசப்
வெளியீடு : காப்பீட்டு கழக ஊழியர் சங்கம், சேலம் – உடன் இணைந்து பாரதி புத்தகாலயம், 421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018. தொலைபேசி எண் : 044 – 2433 2424 , 2433 9024. மின்னஞ்சல் : thamizhbooks@gmail.com
முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107. இடக்குறியீடு :
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி) அலைபேசி : 99623 90277
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 3 | பாகம் – 18
சூரியன் பிரகாசிக்கும் பகல் பொழுதையோ தனியான மரத்தையோ வரையும்படி குழந்தையிடம் சொல்லும்போது நான் அவனுக்கு என்ன சொல்லித் தருகிறேன்? “சூரியன் எப்போதும் ஒளிரட்டும்” என்ற பாடலைப் பாடும்படி சொல்லும் போது, அல்லது இதே தலைப்பில் வரையும் படியும் நடனமாடும்படியும் சொல்லும் போது குழந்தையின் கற்பனை உணர்ச்சியை எத்திசையில் செலுத்துகிறேன்? யதார்த்தம் என்பது எப்போதுமே ஒன்றுதான், ஆனால் இந்த யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் மொழிதான் வெவ்வேறானது என்று குழந்தை புரிந்து கொள்ளுமாறு செய்யவே நான் எல்லா சந்தர்ப்பங்களிலும் பாடுபடுகிறேன். இந்த மொழி வேறுபாடுதான் வெவ்வேறு கலைப் பிரிவுகளைத் தோற்றுவிக்கிறது.
குழந்தைகள் இன்றில்லாவிட்டாலும் நாளை இந்த யதார்த்தத்தைக் கண்டுபிடித்து, இதை வெவ்வேறு விதமாகப் பிரதிபலிக்கும் மொழிகளை கிரகிக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். அப்போது அவர்கள் தம்மை நன்கு புரிந்து கொள்வார்கள், இசையில், படங்களில், நடனத்தில் தம்மை வெளிப்படுத்துவது அவர்களுக்கு அழகியல் இன்பத்தைத் தரும், அவர்கள் உலகை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வார்கள். எனவே, என் வகுப்புக் குழந்தைகளுடன் கூடுதல் பள்ளி நேரத்தில் கலந்து பழக இருப்பவர்கள் கலையின் இந்த முழுமையையும் ஒவ்வொரு குழந்தையின் மனநிலையின் முழுமையையும் மறந்துவிட வேண்டாமென வேண்டிக் கேட்டுக் கொள்வேன். மகிழ்ச்சி (துக்கம்) வெவ்வேறு ஒலிகளாலும் மலர்களாலும் இயக்கங்களாலும் அழுத்தந்திருத்தமான பேச்சுகளாலும் வெளிப்படுத்தப்பட்டாலும் இது ஒன்றேதான் என்பது குழந்தைகளுக்குப் புரியட்டும்.
எனது வகுப்புக் குழந்தைகள் எதிர்காலத்தில் எப்படியிருப்பார்கள் என்று எனக்குத் தெரியாது … விஷயம் அதுவல்ல. கலையினால் மகிழ்ச்சி உண்டாக, கலையினால் வளர்க்கப்பட மனித இதயத்தின், மனதின் எல்லாக் கதவுகளும் இதை ஏற்பதற்காக அகலத் திறக்கப்பட வேண்டும்.
நீங்கள் யாரை வளர்க்க விரும்புகின்றீர்கள், பாடகர்களையா, ஓவியர்களையா, பாலே கலைஞர்களையா, நாடக, பொம்மலாட்டக் கலைஞர்களையா என்று என்னிடம் கேட்கக் கூடும். எனது வகுப்புக் குழந்தைகள் எதிர்காலத்தில் எப்படியிருப்பார்கள் என்று எனக்குத் தெரியாது; இசையமைப்பாளர்களாவார்களா, பாடகர்களாக மாறுவார்களா, ஓவியர்களாகத் திகழுவார்களா, நடிகர்களாவார்களா என்று தெரியாது. விஷயம் அதுவல்ல. கலையினால் மகிழ்ச்சி உண்டாக, கலையினால் வளர்க்கப்பட மனித இதயத்தின், மனதின் எல்லாக் கதவுகளும் இதை ஏற்பதற்காக அகலத் திறக்கப்பட வேண்டும். மானுட உணர்வு, உணர்வுகளின் மனிதாபிமானம் அந்தந்த சூழ்நிலையில் தான், மானுடமயமாக்கப்பட்ட இயற்கையின் பயனாய் தோன்றும் என்று கார்ல் மார்க்ஸ் எழுதினார். இந்த ஆழ்ந்த சிந்தனையில் எனது குழந்தைகளின் கலைக் கல்வியையும் அழகியல் வளர்ப்பையும் எப்படி அணுக வேண்டுமென்பது தெரிகிறது.
பாலே வகுப்புகளும் நாடக வகுப்புகளும் எதற்கு என்று என்னைக் கேட்கக் கூடும். ஆனால் இக்கேள்வியைப் புரிந்து கொள்வது எனக்குக் கடினம். பெரும்பாலும் ஏன் குழந்தைகள் பாடலையும் சித்திரக் கலையையும் மட்டும் பயிலுகின்றனர், கலையின் மற்ற வகைகள் நிராகரிக்கப்படுகின்றன என்று நான் ஆச்சரியப்படுகிறேன். நடனம், நாடகத்தைக் கற்றுக்கொள்வதை விட பாடல், ஓவியத்தைக் கற்றுக்கொள்வது எளிதா என்ன? நாட்டியக் கலையும் நாடகமும் குழந்தையின் அழகியல் வளர்ச்சிக்கு அவ்வளவு முக்கியமானவையில்லையா என்ன? வெவ்வேறு கலை வகைகளை எடை போடும் சாதனம் ஒன்றிருந்தால் எல்லாம் சமமானவையாக இருப்பது தெரியுமென நான் உறுதியாக நம்புகிறேன்.
இவையெல்லாம் ஒரே மரத்தின் கிளைகள். குழந்தைகளுக்கு முழுமையான கலைக் கல்வியை அளித்து, இவர்களிடம் அழகியல் உணர்வுகளை வளர்க்க நான் விரும்பினால் இந்த மரத்தை இவர்கள் அடி முதல் உச்சி வரை பார்க்கவும் இதில் இவர்கள் ஏறவும் ஒரு கிளையிலிருந்து வேறு கிளைக்குச் செல்லும் மகிழ்ச்சியை இவர்கள் பெறவும் நான் உதவ வேண்டும். எனவே தான் கூடுதல் பள்ளி நேரத்தின்போது குழந்தைகள் இசை, பாலே நடனம், வரைதல், நாடகம் ஆகிய எல்லாவற்றிலும் ஈடுபாடு கொள்ள வேண்டுமெனக் கனவு காண்கிறேன். கலையின் வெவ்வேறு மொழிகளில் தம்மைத் தாமே வெளிப் படுத்திக் கொள்ள வேண்டுமென விரும்புகிறேன். இதனால் குழந்தை வளர்ப்பில் கலையின் முழுமைக்கு வழிகோலப்படும்.
பாடங்கள் முடிந்தபின் என் வகுப்புக் குழந்தைகளின் பள்ளி வாழ்க்கை நான் மேலே கூறியவற்றுடன் முடிந்து விடுவதில்லை. வேறு காட்சிகளும் என் மனக் கண்ணில் தோன்றுகின்றன.
“யார் ’பிரதான படைத்தளபதியாக’ இருந்து துருப்புகளை வழிநடத்த விரும்புகின்றனர்?” சிறுவர்களும் சிறுமியரும் இரு சாராருமே “பிரதான படைத்தளபதியாக” இருக்க விரும்புகின்றனர்.
சதுரங்கம் விளையாடக் கற்றுக் கொள்வது இப்படித்தான் ஆரம்பமாகிறது. இந்த சுவாரசியமான விளையாட்டு எப்படி ஆரம்பமானது என்பது பற்றிய கதையை குழந்தைகளுக்குச் சொல்வேன். ஒவ்வொரு காயையும் எப்படி நகர்த்த வேண்டும், எளிய முறையில் எப்படி விளையாடுவது என்று விளையாடிக் காட்டுவேன். பின்னர் குழுக்களில் தீவிர சதுரங்க விளையாட்டுப் போட்டிகள் நடக்கும்.
என்ன இது? தோற்றுவிட்டதற்காக தாத்தோ வருந்துகின்றானா? அழுகின்றானா? அவனை சமாதானப்படுத்த வேண்டும், நன்றாக விளையாட விரைவிலேயே அவன் கற்றுக்கொள்வான், கவனமாயும், பொறுமையாயும் விளையாடுவான் என்று சொல்ல வேண்டும். தனது எதிரியிடம் கை நீட்டி, வெற்றி பெற்றதற்காகப் பாராட்ட மறக்கவில்லையே என்று கேட்க வேண்டும். பாராட்டினாயா? மிக நல்லது!
ஏக்கா ஏன் இப்படி சந்தோஷப்படுகிறாள்? ஜெயித்து விட்டாளா? தோற்றுப்போன லாலி எப்படி மனம் சோர்ந்திருக்கிறாள் என்பதை கவனித்தாளா? அவளை நெருங்கி ஏதாவது அன்பாகப் பேசட்டும்.
“சதுரங்கத்திற்கு யாரைப் பிடிக்கும், குழந்தைகளே?” என்று ஒவ்வொரு முறை விளையாடத் துவங்கும் முன்னரும் இக்கேள்வியைக் குழந்தைகளிடம் கேட்க வேண்டும். அவர்கள் பின்வருமாறு பதில் சொல்வார்கள்:
“மனவுறுதி உள்ளவர்களை, பொறுமையானவர்களை!”
“வீரம் மிக்கவர்களை, துணிவானவர்களை!”
“முன்கூட்டியே கண்டு பிடிக்க வல்லவர்களை, கற்பனை செய்யக் கூடியவர்களை!”
“நேர்மையானவர்களை, நாசூக்கானவர்களை!”
“அழகை உணரக் கூடியவர்களை!”
“சதுரங்கம் உங்களை நேசிக்க வேண்டுமென விரும்புகின்றீர்களா?”
ஆம், எல்லோருக்கும் விருப்பம் தான்.
“அப்போது வாருங்கள், விளையாடுவோம்!” தனது மகன் அல்லது மகளோடு சதுரங்கம் விளையாட சில தந்தையரும் தாய்மார்களும் நேரம் கண்டுபிடித்தாக வேண்டும். சில பெற்றோர்கள் தாமே சதுரங்கம் விளையாடக் கற்றுக் கொள்ள வேண்டும் (ஒருவேளை தம் குழந்தைகளிடமே கூட கற்றுக் கொள்ள நேரலாம்). அப்போது தான் தன் ஆறு வயதுக் குழந்தையுடன் சதுரங்கப் பலகையின் முன் அமர்ந்து ஒரு மணி நேரம் கடுமையாகப் போராட முடியும்.
இவையெல்லாம் வெறும் கற்பனையல்ல. ஒரு சில ஆண்டுகளுக்கு முன் ஆறு வயதுக் குழந்தைகளுக்கு முதன் முதலாக சதுரங்கம் சொல்லித் தந்த போதே இவற்றை நான் நடைமுறையில் சந்தித்தேன். அப்போது நான் ஒரு சில சதுரங்கப் பலகைகளையும் காய்களையும் மேசைகளில் வைத்தேன். குழந்தைகள் இந்த சதுரங்கக் காய்களைத் திருப்பித் திருப்பிப் பார்த்தனர், இவற்றின் பெயர்களைப் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டனர். சில சமயங்களில் யானை எப்படி நகரும், ராணிக்கும் சிப்பாய்க்கும் என்ன வித்தியாசம் என்று விவாதித்தனர், அடிக்கடி கேள்விகளோடு என்னிடம் ஓடி வந்தனர்.
மூன்று மாதங்களுக்குப் பின் கிட்டத்தட்ட எல்லா குழந்தைகளும் சதுரங்கம் விளையாடக் கற்றுக் கொண்டதைத் தெரிந்து கொண்டேன். ஒத்திவைத்த ஆட்டங்களை இடைவேளைகளில் தொடர்ந்தனர், என்னோடும் விளையாடினார்கள், கடுமையான போராட்டத்தில் என்னைத் தோற்கடித்து விட்டாலோ ஆனந்தக் கூத்தாடினார்கள். சதுரங்கம் ஒரு சுவாரசியமான விளையாட்டு, குழந்தைகளுக்கு ஏற்றது என்பதை நான் அப்போதே புரிந்து கொண்டேன். இந்த விவேகமான, அழகான, வீரமான விளையாட்டை விளையாட அவர்கள் கற்றுக் கொண்டால் எப்படிப்பட்ட முக்கிய தனிக்குண நலன்கள் அவர்களிடம் உருவாகும் என்று நிரூபிக்க வேண்டிய அவசியமேயில்லை.
….சமுதாய ரீதியாகச் சுறுசுறுப்பானவனாக எப்படி மாறுவது? வகுப்புகளில் குழந்தைகள் இதையும் கற்றுக் கொள்வார்கள். நர்சரிப்பள்ளியில் உள்ள சிறுவயதுக் குழந்தைகளுக்கு எடுத்துச் சென்று பரிசளிப்பதற்காக என் வகுப்புச் சிறுவர் சிறுமியர் விளையாட்டு சாமான்களைத் தயார்படுத்துவார்கள். சுவர் பத்திரிகைகளைத் தயாரிக்கக் கற்றுக்கொள்வார்கள், பின்னர் இவற்றை மற்ற வகுப்பு மாணவர்களுக்கு அனுப்புவார்கள். பத்திரிகையின் நோக்கமே மற்றவர்கள் படிக்க வேண்டும் என்பது தானே. பட அட்டைகளைத் தயார்படுத்துவார்கள். வகுப்பிற்கு விருந்தினர்கள் வரும் போது அவர்களுக்கு நினைவாகப் பரிசளிக்க வேண்டுமல்லவா! பல்வேறு உலக நாடுகளில் குழந்தைகளின் வாழ்க்கையைப் பற்றி வந்துள்ள படங்களைச் சேகரித்து ஆல்பம் தயாரிக்கலாம். தமது விழாக்களுக்கு அழைப்பிதழ்களையும் அறிவிப்புகளையும் தயார் செய்யலாம்.
ஒவ்வொரு குழந்தையும் தனது சொந்த படைப்புகளின் தொகுதியைத் தயாரிக்கலாம். இதில் முதல் வார்த்தைகள், வாக்கியங்களடங்கிய தாள்கள், முதல் கட்டுரை, கணக்குகள், வரைகணிதப் படங்கள், சித்திரங்கள், களிமண் வடிவங்கள், குறுக்கெழுத்துப் புதிர்கள் முதலியன இருக்கும்.
சித்திரக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்வது, புத்தாண்டு விழாக் கொண்டாடுவது, சுற்றுலாச் செல்வது, பள்ளிக்கருகே ஒவ்வொருவரும் ஒரு மரம் நடுவது போன்ற கருத்துகள் இந்தக் கூடுதல் பள்ளி நேரத்தின் போது பிறக்கும். அன்பை எப்படி வெளிப்படுத்துவது, எப்படி நட்புக்கொள்வது, இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்வது, பெற்றோர்கள் மீது மரியாதை செலுத்துவது என்பதைப் பற்றியெல்லாம் இங்கு விவாதங்கள் நடைபெறும். நான் அவர்களுக்கு சுவாரசியமான கதைகளைச் சொல்வேன், ஸ்லைடுகளையும் கார்ட்டூன் படங்களையும் காட்டுவேன்.
தம்மைப் பற்றி, தம் குழந்தைப்பருவம், வேலை பற்றிச் சொல்லவும் குழந்தைகளுடன் விளையாடவும் உலாவவும் பெற்றோர்களை அழைப்பேன். அடிக்கடி வருமாறு அழைக்கும் அழகிய அழைப்பிதழ்களைக் குழந்தைகள் அவர்களுக்கு வழங்குவார்கள். இவர்களைக் கௌரவிக்கும் முகமாக பத்திரிகையை வெளியிடுவார்கள், பரிசுகளை (படங்களுடன் கூடிய ஆல்பத்தை) தயார்படுத்துவார்கள்….
…இவையெல்லாம் நம்மை மிக முக்கியமானதற்கு, அதாவது ஒவ்வொரு குழந்தையின் மனநிலையையும் பன்முக ரீதியாக வளர்க்கும் நோக்கத்தோடு குடும்பத்திலும் பள்ளியிலும் குழந்தை வளர்ப்பின் முழுமைக்கு இட்டு வரும்.
கூடுதல் பள்ளி நேரம் எப்படியிருக்கும் என்று எனக்குத் தோன்றுவதை பெற்றோர்களுக்கு விளக்குவேன், என் அனுபவத்தை அவர்களுடன் பகிர்ந்து கொள்வேன், விவாதத்தின் போது நமது கூட்டு குழந்தை வளர்ப்புத் திட்ட நிறைவேற்றத்திற்குப் பொறுப்பானவர்களைப் பற்றி முடிவு செய்வோம். இரண்டு நாட்களுக்குப் பின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் இது சம்பந்தமான டைப் செய்யப்பட்ட பிரதி அளிக்கப்படும்.
கூட்டத்தின் இறுதியில் நான் அவர்களுக்குப் பின்வருமாறு கூறுவேன்:
“அன்புசால் பெற்றோர்களே! நமது குழந்தை வளர்ப்புத் திட்டங்களின் நிறைவேற்றத்தில் பங்கேற்றதற்கும் உதவியதற்கும் நன்றி! ‘வளர்ப்பு வண்டியை’ எப்படி, எத்திசையில் இழுப்பதென நாம் முடிவு செய்துள்ளோம். இறுதிவரை இந்த விஷயத்தில் கருத்தொருமித்துச் செயல்படுவோம்!”
குழந்தைகள் எப்படி நடந்து கொள்வார்கள்? இப்படிப்பட்ட பள்ளி நாட்கள் அவர்களுடைய வாழ்வின் உட்பொருளாகுமா? ஒவ்வொரு குழந்தைக்கும் எல்லா வகுப்புகளுக்கும் வர வேண்டும், எல்லா விஷயங்களிலும் பங்கேற்க வேண்டுமென விருப்பமிருக்குமென நான் உறுதியாக நம்புகிறேன். ஏதாவது காரணங்களால் பள்ளிக்குச் செல்லாமலிருக்க நேரிட்டால் குழந்தைக்கு ஏமாற்றமாயிருக்கும். “அப்படித் தானே, குழந்தைகளே? தாத்தோ, நீ என்ன சொன்னாய்? பெரியவர்கள் தம் வார்த்தைகளைக் காப்பாற்ற வேண்டும் என்கிறாயா? ஆம், நீ சொல்வது சரி! மாயா, நீ இன்னமும் ஏதாவது சொல்ல விரும்புகிறாயா? அப்படியெனில், உன் கருத்துப்படி எல்லாமே, பெரியவர்கள் உங்களுடன் எப்படிக் கலந்து பழகுவார்கள் என்பதைப் பொறுத்துள்ளதா? அதுதான் மிக முக்கியம்!”
பண்டிதரின் நூறாண்டு நினைவு நாளில், இசைத்தமிழை சிறப்பாக ஆராய்ந்த நூல்களின் PDF ஐ நண்பர்களுக்குக் கொடுத்துள்ளேன்.
இதில் ஆப்ரஹாம் பண்டிதருடைய புகழ்பெற்ற “கருணாமிருத சாகரம்” முதல் பகுதி (1359 பக்கங்கள்), இரண்டாம் பகுதியும் (369 பக்கங்கள்) அவருடைய வாழ்க்கை வரலாற்றையும் (98 பக்கங்கள்) தமிழறிஞர் மு.அருணாச்சலம் எழுதிய தமிழ் இசை இலக்கிய வரலாறு (766 பக்கங்கள்), தமிழ் இசை இலக்கண வரலாறு (666 பக்கங்கள்) கருநாடக சங்கீதம் தமிழிசை : ஆதி மும்மூர்த்திகள் (135 பக்கங்கள்) என்ற மூன்று நூல்களையும் சேர்த்து ஆக மொத்தம் 6 நூல்களின் PDF இணைப்பைக் கொடுத்துள்ளேன்.
நண்பர் ஒருவர் யாழ் நூல் கிடைக்குமா ? என்று கேட்டிருந்தார். அந்த நூலின் இணைப்பையும் கொடுத்துள்ளேன்.
பொ.வேல்சாமி : தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.
எழுதிய நூல்கள்: