Tuesday, June 23, 2026
முகப்பு பதிவு பக்கம் 451

NSA-தகர்ப்பு : மக்கள் அதிகாரம் தோழர்கள் விடுதலை – தோழர் இராஜு உரை !

NSA-வில் கைது  செய்யப்பட்ட மக்கள் அதிகாரம் தோழர்கள் விடுதலை ! கொலைகார போலீசை கைது செய் ! மக்கள் அதிகாரம் இராஜு உரை !

வன் குற்றவாளியோ அவனே அந்த வழக்கை விசாரித்தால் எப்படி இருக்கும்? அத்தகையதொரு சூழலின் நேரடி சாட்சியம்தான் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்குகளும், கைதுகளும். படுகொலை செய்த போலீசு, மக்களையும் மக்களுக்கு ஆதரவாக நின்ற புரட்சிகர, ஜனநாயக அமைப்பினரையும் எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் கைது செய்து சிறையிலடைத்தது.

குறிப்பாக மக்கள் அதிகாரம் தோழர்களை வீடு வீடாகச் சென்று கைது செய்து அச்சுறுத்தியது. மக்கள் அதிகாரம் அமைப்பு தடை செய்யப்பட வேண்டும் என்றும் அது பயங்கரவாத அமைப்பு என்று பரப்புரை செய்தது. தூத்துக்குடி போராட்ட பேரணியில் கலந்து கொண்ட 6 மக்கள் அதிகாரம் தோழர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தைப் பாய்ச்சியது.

இத்தனை ஒடுக்குமுறைகளையும் சட்டரீதியாகவும், மக்கள் மத்தியில் பிரச்சாரமாகக் கொண்டு போய் எதிர்கொண்டது மக்கள் அதிகாரம் அமைப்பு. குற்றம் செய்த போலீசு அதிகாரவர்க்கத்தின் பொய்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி, சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் மீது கொலைவழக்கு பதிவு செய்யப்படவேண்டும் என்று அறைகூவியது. இது தொடர்பாக போலீசு போட்ட தேசிய பாதுகாப்புச் சட்டத்தையும், பிற பொய்வழக்குகளையும் எதிர்த்தும், போலீசின் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் முன்வைத்து வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின் தீர்ப்பு கடந்த ஆகஸ்ட் 14, 2018 அன்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் நீதிபதிகள் சிடிசெல்வம், பஷீர் அகமது ஆகியோர் வழங்கினர். இத்தீர்ப்பில் மக்கள் அதிகாரம் தோழர்கள் 6 பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் போடப்பட்ட வழக்குகள் செல்லாது என்றும் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த வழக்கில், போலீசுத் துறையின் கீழ் செயல்படும் சிபிசிஐடி போலீசே குற்றத்தில் சம்பந்தப்பட்ட போலீசை விசாரிப்பதை ஏற்கமுடியாது என்றும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த விசாரணையை சிபிஐ எடுத்த நடத்தவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது மதுரை உயர்நீதிமன்றம்.

இந்த தீர்ப்பு வெகு சாதாரணமாகக் கிடைத்த தீர்ப்பல்ல. தூத்துக்குடி படுகொலையில் போலீசே குற்றவாளி என்பதை நிரூபிக்கவும், சட்டவிரோதமாகவே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கிறது என்பதை நிரூபிக்கவும், மக்கள் அதிகாரம் அமைப்பினர் மீது எவ்விதமான ஆதாரமும் இல்லாமல் போடப்பட்ட பொய் வழக்குகளைத் தகர்க்கவும் வழக்கறிஞர்கள் உள்ளிட்டு பல்வேறு தரப்பினரும் பெரும்பங்கு செலுத்தியுள்ளனர்.

இந்த வழக்குகள் கடந்து வந்த பாதையையும், போலீசின் பொய்கள் முறியடிக்கப்பட்ட பின்னணியையும் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் இராஜு.

பாருங்கள் ! பகிருங்கள் !

  • வினவு களச் செய்தியாளர்

நேபாளத்தில் திருடப்படும் புத்தர் சிலைகள் – படக்கட்டுரை

நேபாளம், முஸ்டாங்கைச் சேர்ந்த வறண்ட மற்றும் தனித்த மலைத்தொடர்கள் வெளி உலகின் பார்வையிலிருந்து தொலைதூரத்தில் உள்ளன.  இமயமலையின் மிக உயரமான இப்பகுதிக்கு செல்ல கடினமான வண்டிகள் மட்டுமே செல்லக்கூடிய கரடுமுரடான பாதை மட்டுமே உள்ளது.  ஆனால் யாரையும் எளிதில் வரவேற்காத கடுமையான இப்பகுதி அரிய கலைப்பொருட்களை கொள்ளையர்கள் திருடுவதிலிருந்து தடுக்கப் படுவதில்லை.

உலகளாவிய கலைப்பொருட்கள் சந்தையில் இமயமலையில் உள்ள தெய்வங்களின் சிலைகள் பல கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பு கொண்டவை. ஆனால் நேபாள மக்களைப் பொறுத்த வரையில் உயிருள்ளதாக கருதப்படும் அந்த தெய்வங்கள் அவர்களது சமூகத்திடமிருந்து களவாடப்படுகின்றன.

நேபாளத்தில், 1980–ம் ஆண்டிலிருந்து பல்லாயிரக்கணக்கான தொல்பொருட்கள் கொள்ளையர்களால் களவாடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கணக்கிடுகின்றனர். அவற்றில் சில கலைப்பொருட்கள் சட்டரீதியாக விற்கப்பட்டிருந்தாலும் பெரும்பாலானவை கொள்ளையடிக்கப்பட்டு ஆண்டுக்கு 56 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிழற்சந்தையில் விற்கப்படுகின்றன.

நேபாளிலுள்ள லோ மந்தாங்கில்(Lo Manthang) உள்ள பண்டைய மடாலயத்தில் புத்த பிக்குகள் வழிபாட்டு சடங்கை நடத்துகின்றனர். 14 -ஆம் நூற்றாண்டு முதல் இந்த இமயமலைப்பகுதியில் திபெத்திய புத்த மதச்சடங்குகள் மாறாமல் அப்படியே கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. எனினும், சமீபத்திய சிலைத் திருட்டுகள் அவர்களது பண்டைய வாழ்க்கை முறை மற்றும் சமயச் சடங்குகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளன.

முஸ்டாங்கில் உள்ள நாமைகல்(Namygal) மடாலயத்தைச் சேர்ந்த செப்பு தாது கோபுரம் (copper stupa) ஒன்றில் மறைக்கப்பட்டிருக்கும் நேர்த்தியாக வடிக்கப்பட்ட கடவுளர் சிலைகளை காட்டுகிறார் துறவி ஒருவர். இவ்வகையிலான அரிய சிலைகள் திருடர்களால் தீவிரமாகத் தேடப்பட்டு வருவதால் அவற்றை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான கட்டாயச்சூழல் மடாலயத்திற்கு ஏற்பட்டுள்ளது.

முஸ்டாங்கில் குன்றொன்றின் மீது கட்டப்பட்ட ஒரு மடாலயக்கூடத்தில் கைவிடப்பட்ட பண்டைய கவசமொன்றை டாஷி பிஸ்டா (Tashi Bista) ஆய்வு செய்கிறார். அரிய பழங்கால கலைப்பொருட்கள் அப்பகுதியிலிருந்து திருடப்படுவதைத் தடுக்க முஸ்டாங் உள்ளூர்வாசியான அவர் பல்லாண்டுகளாக போராடி வருகிறார். 14 -ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கேடயங்கள் மற்றும் உடற்கவசம் அருகே அந்த கவசம் இங்கே படத்தில் காணப்படுகிறது.

முஸ்டாங்கிலிள்ள பழங்கால மடாலயமொன்றில் மறைவான அறையில் வைக்கப்பட்டிருக்கும் இந்த ஆளுயர தர்மபாலர்களை (Dharmapalas) சூரிய ஒளி வெளிச்சப்படுத்திக் காட்டுகிறது. இப்பாதுகாப்பு தெய்வங்கள் மடாலயங்களையும், அவற்றைச் சுற்றி வசிப்பவர்களையும் தீங்குகளிடமிருந்து பாதுகாக்க உருவாக்கப்பட்டவை. இருப்பினும், வழிபாட்டுத்தலங்களிலுள்ள பல சிலைகளை கொள்ளையர்கள் திருடிச் செல்வதால் சிலைகள் தங்களை தாங்களே காத்துக் கொள்ள துறவிகள் வேண்டுகின்றனர்.

சாம்டாலிங்கை (Samdaling) சேர்ந்த பண்டைய தாது கோபுரங்களின் சுவர்களில் உள்ள ஓட்டைகளை பாறைகள் மூடியிருக்கின்றன. புத்த வழிபட்டாளர்களால் வைக்கப்பட்ட புத்த சிலைகளை திருடுவதற்காக இந்த சுவர்களை கொள்ளையர்கள் உடைத்திருக்கின்றனர். உலகலாவிய நிழற்சந்தையில் இச்சிலைகளை கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்க முடியும்.

சாம்டாலிங்கில்(Samdaling) திருடர்களால் உடைக்கப்பட்ட ஒரு தாது கோபுரத்தில் களிமண் வழிபாட்டு வார்ப்புகளும், 14 ஆம் நூற்றாண்டை சேர்ந்த தொன்மையான ஆடைகளும் இன்னும் மிச்சம் இருக்கின்றன. எந்த கலைப்பொருட்களும் அங்கு இருந்திருக்கவில்லை என்றாலும் உலகளாவிய நிழற்சந்தையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய புத்தரின் செம்பு மற்றும் வெண்கலச் சிலைகள் இந்த தாது கோபுரங்களில் இருப்பதாக நம்பப்படுகிறது.

முஸ்டாங், லு மந்தாங்கை (Lo Manthang) சேர்ந்த இளம் பிக்குகள் ஒரு வழிபாட்டு நடைமுறையை பின்பற்ற முயல்கின்றனர். தொடர்ந்து வழிப்பாட்டு இடங்களிலிருந்து ஏராளமான சிலைகள் களவாடப்படும் நிலையில், புத்தமும், இமயத்தின் தொலைதூர பகுதிகளின் பழங்கால வாழ்க்கை முறையும் பாதிக்கப்படுவதாக குறிப்பாக இளம் தலைமுறையினர் தங்கள் மூதாதையர்கள் வழிபட்ட பல சிலைகள் இல்லாமல் வளர்ந்து வருவதாக பலர் அச்சமடைகின்றனர்.

முஸ்டாங் மலைத்தொடரொன்றில் புத்த பிக்குகள் வழிபாடு செய்கின்றனர். இத்தொலைதூர பகுதிகளில் உள்ள மடாலயங்களில் சிலைத் திருட்டு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தங்கள் தெய்வங்களின் பாதுகாப்பிணை அதிகரிக்க துறவிகள் வழிபாடு செய்கின்றனர்.

காத்மண்டுவிலுள்ள மூன்று தொல்பொருள்கள் அங்காடிகளில் மே மாதத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் போது மீட்கப்பட்ட 100 சிலைகளை ஒரு செய்தியாளர் சந்திப்பில் அதிகாரிகள் காட்டுகின்றனர். ஆசிய மற்றும் பசிபிக் பகுதிகள் பற்றிய நடப்பு நிகழ்ச்சிகளுக்கான அல் ஜசீராவின் வார தொலைகாட்சி நிகழ்ச்சி “101  கிழக்கு” புலனாய்வு செய்து கொடுத்த தகவலின் பேரால் முறைகேடான அரிய பொருட்கள் விற்பனைகள் பற்றிய அந்த ஆய்வு செய்யப்பட்டது.

நேபாளத்தின் முஸ்டாங் பள்ளத்தாக்கிற்குள் செங்குத்தான பாறையொன்றின் மீது கட்டப்பட்ட பண்டைய மடாலயமொன்றிற்கு வருகை தரும் பார்வையாளர்களை பயங்கரமான இந்த சிலைகள் எதிர்கொள்கின்றன. ஆனால் திபெத்திய மக்களால் தெய்வங்கள் என நம்பப்படும் சிலைகளை கொள்ளையர்கள் உடைப்பதிலிருந்தோ திருடுவதிலிருந்தோ அச்சுறுத்தும் இந்த அடையாளங்கள் கிஞ்சித்தும் தடுப்பதில்லை.

திருடர்களைத் தடுப்பதற்காக கடவுளரின் முகங்கள் மீது வண்ணம் பூசும் முயற்சியில் ஈடுபடுகின்றனர் நேபாளத்தின் நம்கியால்(Namgyal) மடாலயத்தை சேர்ந்த பிக்குகள். உலக கலைப்பொருள் வணிகர்களால் செப்பு மற்றும் வெண்கல சிலைகள் மிகுந்த ஆவலுடன் தேடப்படுகின்றன. வழிப்பாட்டுத் தலங்களில் உள்ள சிலைகளைத் திருடுவதற்கு கொள்ளையர்களை பல நேரங்களில் அவர்கள் பயன்படுத்துகின்றனர்.

நேபாளத்தின் லோ மந்தாங்கில்(Lo Manthang) உள்ள புத்த மடாலயமொன்றில் தூய்மையான பொன்னால் பொறிக்கப்பட்ட பண்டைய கையெழுத்துப்படியான டாஷி பிஸ்டாவை(Tashi Bista) காட்டுகிறார் புத்த துறவியான சிமி குறுங்(Chime Gurung). ஒரு தாது கோபுரத்திலிருந்து அதன் சகோதரி புத்தகம் திருடப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த கையெழுத்துப்படி மட்டுமே பாதுகாக்கப்பட்டது.

  • வினவு செய்திப் பிரிவு

நன்றி : அல்ஜசீரா Nepal’s stolen gods புகைப்படக் கட்டுரையின் தமிழாக்கம்

ஆச்சாரமான அய்யராத்து உணவகங்கள் – அருவெறுப்பின் உச்சம் !

பெங்களூருவைச் சேர்ந்ததொரு உணவக நிறுவனம், ஒரு புதிய உணவுச் சேவையை சுதந்திர தினத்தன்று தொடங்கவிருப்பதாக விளம்பரம் செய்திருக்கிறது. அதன் பெயர் ”சுத்தமான பிராமண மதிய உணவுச் சேவை” (A Pure Brahmin Lunch Box Service)

கடந்த 07-08-2018 அன்று வழக்கறிஞரும் செயல்பாட்டாளருமான முனைவர் கார்த்திக் நவாயனா இந்த விளம்பரம் அடங்கிய பேனரின் புகைப்படத்தை டிவிட்டர் இணையதளத்தில் வெளியிட்டிருந்தார்.

சுத்தமான பிராமண உணவு வகைகளை, பெங்களூரு ஜே.பி. நகர், பி.டி.எம். லே-அவுட், புட்டெனஹள்ளி, பிலேகாஹள்ளி ஆகிய பகுதிகள் உள்ளிட்ட பெங்களூருவின் பல்வேறு பகுதிகளிலும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் உள்ள வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே வந்து விரைவாக ’டோர்-டெலிவரி’ செய்வதாக அந்த விளம்பர பேனரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுத்தமான சைவ உணவு ரூ.40, ரூ.45, ரூ.60 ஆகிய விலைகளில் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய பிராமண உணவு சேவை வழங்குவதற்கு இந்நிறுவனம் மட்டுமே வழங்கவில்லை. இதுவே முதல் நிறுவனமும் அல்ல. இதற்கு முன்னரும் இத்தகைய ’சேவை’ நிறுவனங்கள் நிறைய உண்டு.

சென்னையைச் சேர்ந்த “அக்‌ஷயா எஸ் வீட்டு உணவு வழங்கல் சேவைகள்” நிறுவனமும் பிராமண உணவுகளை வழங்குவதில் ஏற்கெனவே மிகப் பிரபலமானது. இது போன்ற’ பிராமண உணவு சேவைகளை வெளிநாடுகளிலும் வழங்கி வருகின்றனர் பலர். அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்கரைப் பகுதியில் ’மைலாப்பூர் எக்ஸ்பிரஸ்’ என்ற உணவு நிறுவனம் சுத்தமான தமிழ் பிராமண (Tam-Brahm) உணவுச் சேவையை வழங்கி வருகிறது.

இத்தகைய பிராமண உணவு சேவைகள் உணவு வழங்கல் செயலிகளான ஸ்விக்கி, சொமாட்டோ ஆகியவற்றிலும் இருக்கின்றன. பெங்களூரு இந்திராநகரில் உணவு வழங்கல் சேவையில் உள்ள ’பிராமண வீட்டு உணவு’ நிறுவனம் ஒரு உதாரணம்.

பெங்களூரில் மட்டுமே பல சிறு உணவகங்களும் உணவு வழங்கல் நிறுவனங்களும் வீட்டுத் தயாரிப்பு உணவு வழங்கல் சேவைகளை வழங்கி வருகின்றன. சுத்தமான ஜெயின் உணவு சேவைகள் ஏற்கனவே பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகின்றன.

சமூக வலைத்தளங்களில் இந்த விளம்பரத்திற்கு சிலர் ஆதரவும் தெரிவித்துள்ளனர். ஜெயின் உணவு, ஹலால் உணவு என இருக்கும்போது பிராமண உணவு இருப்பதில் என்ன தவறு இருக்கிறது எனக் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் பெரும்பான்மையானவர்கள், இந்த விளம்பரத்தை சாதிவெறியைக் கக்குவதாகவே கருத்து தெரிவித்துள்ளனர்.

சுத்தமான பிராமண சமையல் என்று இந்த விளம்பரத்தில் எதைக் குறிப்பிடுகிறார்கள்? வெறும் சைவ உணவையா அல்லது பிராமணர்களால் சமைக்கப்பட்ட சைவ உணவையா என்ற கேள்வியை எழுப்புகிறார்கள்.

’சாதியரீதியான உணவுக்கு’ எதிராக பல்வேறு தலித் செயற்பாட்டாளர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். இத்தகைய ’தனிச்சிறப்பான உணவு’ என்பதுதான் பொதுவான உணவுத் தெரிவிலிருந்து தலித் மக்களை விலக்கி வைப்பதற்கான பாரம்பரிய வழிமுறை என்று கூறுகின்றனர். ’தாழ்த்தப்பட்ட மக்கள்’ உணவு வகைகள் இந்திய சமையல் கலாச்சாரத்திலிருந்து திட்டமிட்டவகையில் விலக்கி வைக்கப்பட்டுள்ளன.

ஆனால் உணவைப் பொருத்தவரையில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதாகவே தெரிகிறது. சந்திரபான் பிரசாத் என்ற தொழில்முனைவர் ஒருவர், தலித் உணவுகளுக்காக தனியாக இணையதளம் (Dalitfoods.com) திறந்தார். தலித் உணவு வகைகளை விற்பனை செய்வதற்கான ஒரு இணையதளமாக அது செயல்பட்டு வருகிறது. (அந்த இணையதளம் செயல்படவில்லை) ”Stir Fry Simmer” ஆவணப்படத்தைப் போன்று  உணவு தொடர்பான சில ஆவணப்படங்கள் உணவுக்குப் பின்னர் மறைந்திருக்கும் அரசியலை வெளிக் கொண்டு வர முயற்சித்திருக்கின்றன.

– நன்றி: நியூஸ் 18 ஆங்கில இணையதளத்தில் வந்த  செய்தியின் தமிழாக்கம்.
Bengaluru Service Offering ‘Pure Brahmin Meals’ Home Delivered Sparks Outrage

உணவு மட்டுமல்ல, தங்கும் வீடு முதல், ஒய்வுக் காலத்தில் தங்குவதற்காக சிறப்பு வசதி செய்யப்பட்ட வீடுகள், முதியோர் இல்லங்கள் பிராமணர்களுக்காகவே என பிரத்யேகமாக தனிச் சந்தையைப் பிடித்திருக்கின்றன. தனி பங்களாக்களை கட்டி ’வில்லாக்களாக’ விற்பனை செய்யும் பெரும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், அக்ரஹாரங்களாக பல்வேறு சமுதாய  குடியிருப்புகளை (Community Homes) கட்டி விற்பனை செய்து வருகின்றனர்.

***

த்துணவு சமையலர் பாப்பாள் அம்மாளின்  சமையலில் பல்லி இருந்ததாக சதி செய்த சாதி வெறியர்கள், தற்போது மாணவர்கள், ஆசிரியர்கள், சாதிவெறி பிடித்த மக்களைத் திரட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலக்திலேயே போராட்டம் செய்திருக்கின்றனர். எப்படியும் பாப்பாள் அம்மாளின் சமையைலை அவர்கள் ஏற்கப் போவதில்லை! அவரை எப்படி பணிநீக்கமோ இல்லை இடமாற்றமோ செய்யப் போகிறோம் என்பதே அவர்கள் முன் உள்ள கேள்வி! ஒரு அருந்ததியப் பெண் சமையலை எப்படி ஆதிக்கசாதி கொங்கு வேளாளக் கவுண்டர்கள் சாப்பிடலாம் என்பதிலிருந்து தெரிவது என்ன? என்ன உணவு என்பதை விட யார் சமையல் செய்கிறார்கள் என்பதே அவர்களது ஆதிக்க சாதிப் புனிதத்தின் தூய்மையாம்.

“கண்ணை மறைக்கும் காவிப் புழுதி” நூலின் அத்தியாத்திலிருந்து சில வரிகள்:

குடியிருப்பு, தொழிலில் மட்டுமல்ல; உண்பது, உடுத்துவது, கேளிக்கை, சுடுகாடு என மொத்த வாழ்க்கையிலும் பார்ப்பனியத்தின் தனித்தன்மை காப்பாற்றப்பட்டு வருகிறது. நீர் கலந்து தயாரிக்கப்படும் ‘கச்சா’ உணவு தீட்டு. நெய் அல்லது சுத்தமான எண்ணெயில் தயாரிக்கப்படும் ‘பக்கா’ உணவு சுத்தமானது. கச்சா உணவை தன் சாதியினரிடமும், பக்கா உணவை தனக்கு கீழ் உள்ள சாதியிலும் பெற்றுக் கொள்ளலாம். வட இந்திய ’உயர்’ சாதியினரிடம் இந்த ‘உணவுத் தீண்டாமை’ இன்றும் நிலவுகிறது.

பார்ப்பன ‘மேல்’சாதியினர் ‘பச்சரிசி’ உண்பதற்குக் காரணம், புழுங்கல் அரிசி சூத்திர – பஞ்சமர்களால் அவிக்கப்படுவதினால்தான். பூமிக்குக் கீழே விளையும் கிழங்கு பயிறு வகைகளை சமீபகாலம் வரை பார்ப்பனர்கள் உண்பதில்லை. இப்படித் தீட்டுப்பட்ட காய், பயிறு வகைகள் இன்றைக்கும் கோவில் கருவறைகளில் நுழைய முடியாது. சமீபகாலம் வரை உணவு விடுதிகளில் இருந்த ‘பிராமணாள் கபே, சைவாள் கபே’ போன்ற பெயர்கள் யாத்திரை வரும் பார்ப்பனர்களின் புனிதத்தைக் காப்பாற்றத்தான் ஏற்படுத்தப்பட்டன. பார்ப்பன இலக்கியங்கள் குறிப்பிடும் ‘அதிதி பூசை’ (விருந்தினர்களை உபசரித்தல்) பார்ப்பன ‘மேல்’சாதியினரை மட்டும் குறித்தது. சேவைச்சாதியினர் சமைத்து மிகுந்துபோன உணவை தானமாகப் பெறுவார்கள். பூசை – புனஸ்காரங்களுக்கு வரும் ஐயர் பச்சரிசியை மட்டும் தானமாகப் பெறுவார்.

வட இந்தியாவின் பார்ப்பன – ‘மேல்’சாதி அரசியல் தலைவர்கள் பலரும் எங்கு சென்றாலும் தன் சாதி சமையற்காரரையும் கூடவே அழைத்துச் செல்வார்கள். சில ஆண்டுகளுக்கு முன் இறந்துபோன கமலபதி திரிபாதி என்ற உத்திரப்பிரதேச காங்கிரஸ் தலைவர் அதற்கோர் உதாரணம். அமெரிக்காவில் கணிப்பொறி அடிக்கிற அம்பி கூட ‘வடமாள், கொண்டின்ய கோத்திரம், மிருகசீரிஷ நட்சத்திரம், எம்.சி.ஏ. புத்திரனுக்கு இதே உட்பிரிவில் வெல்  – எஜுகேட்டட் பெண் தேவை’ என்றுதான் மணவிளம்பரம் கொடுப்பான். ‘அனைத்து வசதிகளுடன் கூடிய பங்களா வாடகைக்கு உள்ளது. பிராமின்ஸ் மற்றும் சைவாள் தொடர்பு கொள்க’ – இவ்விளம்பரம் சென்னையில் அடிக்கடி வெளிவரும்.

ஆகவே இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் கூட “சாதிப்புனிதம் மற்றும் தூய்மை” எனும் இழிவான சாதிவெறியை  இங்கேயும்,கடல் கடந்தும் இவர்கள் எப்படி கடைபிடிக்கிறார்கள் என்பதற்கு இந்த செய்தியும் ஒரு சான்று! மாட்டுக்கறியின் பெயரில் முசுலீம்கள்,தலித்துகள் கொல்லப்படுவதும், சுத்தமான பிராமண உணவு கிடைக்கும் என்பதும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்!

பிராமணர்களுக்கான வீடுகள்:
Brahmins Villas in Coimbatore | Satkrut Homes Ltd

Shankara Agraharam Retirement Homes

  • வினவு செய்திப் பிரிவு

ஜே.என்.யு. மாணவர் உமருக்கு துப்பாக்கிக் குண்டு ! இதுதான் மோடியின் சுதந்திரதினச் செய்தி !

ஜே.என்.யு. மாணவர் தலைவர் உமர் காலித் துப்பாக்கிக் குண்டுக்கு இரையாகாமல் தப்பியிருக்கிறார். டில்லியின் மையப்பகுதியில், நாடாளுமன்றத்துக்கு வெகு அருகில் இருக்கிறது கான்ஸ்டிடியூசன் கிளப் அரங்கம். நாடாளுமன்ற உறுப்பினர்களும் பத்திரிகையாளர்களும் வந்து போகும் அந்த அரங்கின் வாயிலில் 13.08.2018 அன்று இந்தக் கொலை முயற்சி நடந்திருக்கிறது.

உமர் காலித்

“அச்சத்திலிருந்து சுதந்திரம்” என்ற தலைப்பில் அங்கு நடைபெறவிருந்த கூட்டத்தின் நோக்கமே  இத்தகைய கொலைகளுக்கு எதிராக குரலெழுப்புவதுதான்.

கூட்டத்தில் பேச வந்திருந்த உமர், கடையில் தேநீர் குடித்து விட்டு நகர்ந்திருக்கறார். அவரை பிடறியில் கைவைத்து கீழே தள்ளி, கைத்துப்பாக்கியால் வயிற்றில் சுட முனைந்திருக்கிறான் கொலையாளி. அவன் கையைப் பிடித்து தள்ளியிருக்கிறார் உமர். உமருடன் வந்திருந்த பனோஜ்யோத்ஸ்னா லாகிரி என்ற இளைஞரும் ஷாரிக் உசேன் என்பவரும் கொலையாளியைப் பிடித்து தள்ளியிருக்கின்றனர். இந்த தள்ளுமுள்ளுக்கு இடையில் ஒரு தோட்டா வெடித்திருக்கிறது. அவன் துப்பாக்கியை தெருவில் வீசி விட்டு ஓடியிருக்கிறான்.

“நமக்கும் கவுரி லங்கேஷின் தருணம் வந்து விட்டது என்றுதான் அந்தக் கணத்தில் நினைத்தேன். நண்பர்கள் மட்டும் அவனைப் பிடிக்கவில்லையென்றால் நான் உயிர் பிழைத்திருக்க மாட்டேன்” என்று கூறுகிறார் உமர் காலித்.

2016 பிப்ரவரியில் கண்ணையாகுமார், அனிர்பன் பட்டாசார்யா, உமர் காலித் ஆகியோர் மீது போடப்பட்ட தேசத்துரோக வழக்குகளும் தாக்குதல்களும் உலகத்தின் கவனத்தை ஈர்த்தன. மோடி அரசை உலக அரங்கில் அம்பலப்படுத்திய அந்த நிகழ்வுக்குப் பின்னரே, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தையும், அதன் முற்போக்கான மாணவர் சமூகத்தையும் பார்ப்பன பாசிஸ்டுகள் குறிவைக்கத் தொடங்கி விட்டனர்.

துப்பாக்கியை தெருவில் வீசி விட்டு ஓடியிருக்கிறான்.

குறிப்பாக உமர் காலித்துக்கு எதிரான அவதூறு பிரச்சாரத்தை ஒரு இயக்கமாகவே நடத்தி வருகிறது அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவி. சமூக ஊடகங்களின் வாயிலாக கடந்த இரண்டு ஆண்டுகளாக விதம் விதமான பொய்ப்பிரச்சாரங்கள் சங்கிகளால் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன. அதன் தொடர்ச்சிதான் இந்தக் கொலை முயற்சி. தபோல்கர் முதல் கவுரி லங்கேஷ் வரையிலான அனைவரின் விசயத்திலும் இப்படித்தான் நடந்திருக்கிறது.

உமர் சுடப்பட்ட செய்தி ஊடகங்களில் வரத்தொடங்கிய மறுகணமே, இந்த சம்பவத்தையே மறுக்கின்ற பொய்ப்பிரச்சாரமும் தொடங்கிவிட்டது. “சம்பவம் நடந்த போது நான் அங்கேதான் இருந்தேன். துப்பாக்கி சூடு நடந்தது உண்மை. ஆனால் உமர் காலித் அந்த இடத்தில் இல்லவே இல்லை” என்று தைனிக் பாஸ்கர் (இந்தியில் வெளிவரும் தினமலம்) நாளேட்டின் நிருபர் சந்தோஷ்குமார் ஒரு வீடியோவை சுற்றுக்கு விட்டிருக்கிறார். உடனே இதனை ஏ.பி.பி. நியூஸ் சானலின் நிருபர் விகாஸ் பதவுரியா டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். மோடியை அவதூறு செய்வதற்காக உமர் நடத்தும் நாடகம் என்றும், தாக்கியதே உமர்தான் என்றும் பலவிதமாக இந்தக் கதை சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டுவிட்டது. இதனைப்  பரப்பியவர்களில் பலர் டிவிட்டரில் மோடியால் பின் தொடரப்படுபவர்கள்.

ஒருபுறம், அடையாளம் தெரியாத அந்த கொலையாளிக்கு எதிராக கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்திருக்கிறது டெல்லி போலீஸ்.  இன்னொரு புறம், பா.ஜ.க. எம்.பி.யும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான மீனாட்சி லேகி “அப்படி ஒரு தாக்குதலே நடக்கவில்லை என்றும் இது உமர் நடத்தும் நாடகம்” என்றும் வாதாடிக் கொண்டிருக்கிறார். அக்லக் கொலை முதல் அனைத்தில் கடைப்பிடிக்கப்படும் உத்தி இதுதான்.

“சுட்டவன் யார் என்று எனக்கு தெரியாது. ஆனால் அதிகாரத்தில் அமர்ந்து கொண்டு வெறுப்பையும் அச்சத்தையும் இரத்த வெறியையும் பரப்புவோரும், தண்டிக்கப்படுவோம் என்ற அச்சமே இல்லாத தைரியத்தை கொலைகாரர்களுக்கு வழங்குபவர்களும்தான் உண்மையான குற்றவாளிகள்” என்று கூறியிருக்கிறார் உமர் காலித்.

***

டில்லி சம்பவத்துக்கு 3 தினங்களுக்கு முன், கடந்த 10 ஆம் தேதியன்று மகாராட்டிர பயங்கரவாத தடுப்பு போலீசார் காவி பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த மூன்று பேரைக் கைது செய்திருக்கின்றனர். அவர்களிடமிருந்து பத்து கைத்துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், ஜெலட்டின் குச்சிகள், டெடனேட்டர்கள் உள்ளிட்ட வெடி பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

“சுட்டவன் யார் என்று எனக்கு தெரியாது. ஆனால் அதிகாரத்தில் அமர்ந்து கொண்டு வெறுப்பையும் அச்சத்தையும் இரத்த வெறியையும் பரப்புவோரும், தண்டிக்கப்படுவோம் என்ற அச்சமே இல்லாத தைரியத்தை கொலைகாரர்களுக்கு வழங்குபவர்களும்தான் உண்மையான குற்றவாளிகள்” என்று கூறியிருக்கிறார் உமர் காலித்.

இரண்டு வார காலம் இவர்களது நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணித்து அதன் பின்னர்தான் கைது செய்திருப்பதாகவும்,  இவர்கள் அனைவரும் பயங்கரவாத நடவடிக்கைகளில் பயிற்சி பெற்றவர்கள் என்றும் மகாராட்டிர போலீஸ் கூறுகிறது. இவர்களைக் கைது செய்திருக்காவிட்டால், பக்ரீத் மற்றும் சுதந்திர தினத்தையொட்டி பல இடங்களில் இவர்கள் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியிருப்பார்கள் என்றும் அதற்குத் தயார் நிலையில்தான் எல்லா வெடிபொருட்களும் இருந்தன என்றும் கூறுகிறது போலீஸ்.

யார் இந்த மூவர்?

வைபவ் ராவத் (40) ஹிந்து கோவன்ஷ் ரக்ஷா சமிதியின் (பசு பாதுகாப்பு படை) உறுப்பினர். தபோல்கர், பன்சாரே, கல்புர்கி, கவுரி லங்கேஷ் ஆகியோரது கொலைகளில் தொடர்புள்ள “சனாதன் சன்ஸ்தா”வின் ஆதரவாளர்.

சுதன்வா காண்டலேகர் (39) “ஸ்ரீ சிவபிரதிஷ்டான் இந்துஸ்தான்” என்ற அமைப்பின் உறுப்பினர். அந்த அமைப்பின தலைவர்தான் பீமா கோரேகானில் தலித்துகளுக்கு எதிரான கலவரத்தை நடத்தியதில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் சம்பாஜி பிடே.

சரத் கசால்கர் (25) பசு பாதுகாப்பு குண்டர் படை வைத்துக் கொண்டு இறைச்சிக் கடைகளை சூறையாடுவது,  தாக்குவது போன்ற நடவடிக்கைகளை வழக்கமாக கொண்டவர்.  குண்டுகள் இவரது வீட்டிலிருந்து தான் கைப்பற்றப்பட்டன.

இருப்பினும், இவர்களை “காவி பயங்கரவாதிகள்” என்றோ “இந்துத்துவ பயங்கரவாதிகள்” என்றோ ஊடகங்கள் குறிப்பிடவில்லை. “சுதந்திர தினத்தை சீர்குலைக்க சதி” என்ற தலைப்பில் இது தலைப்புச் செய்தியாகவும் வெளியிடப்படவில்லை.

அன்று, மாலேகான் குண்டுவெடிப்புக்கு காரணமான பிரக்யா சிங் தாகூர்உள்ளிட்ட இந்துத்துவ பயங்கரவாதிகளைக் கைது செய்த  போலீசு அதிகாரி,  ஹேமந்த் கர்கரே மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இவர்களைக் கைது செய்த போலீசு அதிகாரிகளுக்கும் அந்த கதி நேரலாம்.

ஏனென்றால், “சிவபிரதிஷ்டான் இந்துஸ்தான்” அமைப்பின் தலைவர் சம்பாஜி பிடே,  மோடியின் குருநாதர். “என் குருநாதர் பிடே இங்கு வருமாறு உத்தரவிட்டார். இதோ நான் வந்திருக்கிறேன்” என்று 2014 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திலேயே பேசியிருக்கிறார் மோடி.

கைது செய்யப்பட்டிருக்கும் “பிரிஞ்ச் எலிமென்ட்” சுதன்வா காண்டலேகருக்கும் பிடே தான் குருநாதர்.  அதற்காக, பிரதமர் மோடியை பிரிஞ்ச் எலிமென்ட் என்று சொல்லிவிட முடியுமா என்ன?

செங்கோட்டையிலிருந்து கொடியேற்றுபவரை பிரிஞ்ச் எலிமென்ட் என்று கூறுவது உண்மைக்குப் புறம்பானது மட்டுமல்ல, அது அவதூறு அல்லவா?

***

மர் மீதான கொலை முயற்சி நடந்த பின்னரும் திட்டமிட்ட நேரத்தில் அந்தக் கூட்டம் நடைபெற்றிருக்கிறது.

பிரசாந்த் பூஷண், உமர் காலித் உள்ளிட்ட பேச்சாளர்களுடன்,

ஜார்கண்டில் பசுக்குண்டர்களால் கொல்லப்பட்ட அலிமுதீனின் மனைவி மரியம்,

  • சென்ற ஆண்டு டில்லிக்கு அருகில் ரயிலில் கொலை செய்யப்பட்ட 16 வயது இளைஞன் ஜுனைத் -இன் அம்மா மரியம்,
  • மர்மமான முறையில் காணாமல் போன ஜே..என்.யு மாணவர் நஜீப் அகமதுவின் தாயார் பாத்திமா நபீஸ்
  • சமீபத்தில் ராஜஸ்தான், ஆல்வாரில் பசுக்குண்டர்களால் அடித்துக் கொல்லப்பட்ட ரக்பர்கானின் சகோதரன் அக்பர்
  • கோரக்பூர் குழந்தைகள் மரணத்துக்காக பொய்க்குற்றம் சாட்டி தண்டிக்கப்பட்டிருக்கும் டாக்டர் கஃபில் கான்,
  • கடந்த ஜூன் 11 ஆம் தேதியன்று கோரக்பூரில் 3 துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்டு உயிர் தப்பிய டாக்டர் கஃபில் கானின் சகோதர் காஷிப் ஜமீல்

– ஆகியோர் கான்ஸ்டிடியூசன் கிளப்பின் அந்தச் சிறிய அரங்கில் “அச்சத்திலிருந்து சுதந்திரம்” குறித்துப் பேசியிருக்கின்றனர்.  கூட்டம் முடிந்து வீடு திரும்பிய டாக்டர் கஃபில் கானின் கைபேசிக்கு  “அடுத்த இலக்கு – நீ” என்றொரு குறுஞ்செய்தி வந்திருக்கிறது.

நமக்கும் அப்படியொரு குறுஞ்செய்தி வரும் – அதற்குள் விழித்துக் கொள்ளத் தவறினால்!

வினவு செய்திப் பிரிவு

ஊடகங்களை கொலை செய்வது எப்படி ? மோடி கையேடு

புன்ய பிரசூன் பாஜ்பாய்

ளும் பா.ஜ.க. அரசு ஊடகங்களை எப்படி கட்டுப்படுத்துகிறது? இதற்கான விடையை நாம் ஆய்வுகளில் தேட வேண்டாம். தனது அனுபவத்தில் இருந்து முன்வைக்கிறார் புன்ய பிரசூன் பாஜ்பாய். இந்தி சேனலான, ஏ.பி.பி. தொலைக்காட்சியின் புகழ்பெற்ற நெறியாளரான புன்ய பிரசூன் பாஜ்பாய், ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’ என்ற பிரைம் டைம் விவாத நிகழ்ச்சியை நடத்துபவர்.

பிரதமர் மோடியின் ‘மான் கி பாத்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சட்டீஸ்கரை சேர்ந்த ஒரு பெண் விவசாயி, சீத்தாப்பழ விவசாயம் மூலம் தனது லாபம் இரட்டிப்பானது என்று பேசினார். அவர் பொய்யாக அப்படி பேசியதையும், அரசு அதிகாரிகள் அந்தப் பெண்ணுக்கு பயிற்சி அளித்து பேச வைத்தனர் என்பதையும் தனது மாஸ்டர் ஸ்ட்ரோக் நிகழ்ச்சியில் அம்பலப்படுத்தினார் புன்ய பிரசூன்.  இதை தொடர்ந்து எழுந்த அழுத்தங்களால், மோடியின் பெயரை சொல்லக்கூடாது; மோடியின் வீடியோ மற்றும் புகைப்படங்களை பயன்படுத்தக்கூடாது; மோடி பற்றி விமர்சனம் செய்யக்கூடாது என்று கடுமையான அழுத்தங்களை எதிர்கொண்டார். இறுதியில் பணியில் இருந்து ராஜினாமாவும் செய்தார்.

தனக்கு என்ன நேர்ந்தது என்பதை விளக்கி புன்ய பிரசூன் எழுதியிருக்கும் கடிதம், அவருக்கு நேர்ந்ததை மட்டும் விவரிக்கவில்லை. இந்திய அளவில் ஊடகங்களின் குரலை ஒடுக்குவதற்கு மோடி நடத்தும் ’சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கை’ வெளிக்கொண்டு வருகிறது.

***

நான் பணியாற்றும் ஏ.பி.பி. தொலைக்காட்சியின் உரிமையாளர் மற்றும் தலைமை நிர்வாக ஆசிரியர் திடீரென ஒரு நாள் என்னை அழைத்தார். ”உங்கள் மாஸ்டர் ஸ்ட்ரோக் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெயரை குறிப்பிடுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள். தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் பெயரை சொல்லுங்கள். மோடி பெயர் எந்த இடத்திலும் வர வேண்டாம்’’ என்றார்.

மோடியின் புகைப்படமும், வீடியோவும் இடம்பெறக்கூடாது என்றார் உரிமையாளர் மற்றும் தலைமை நிர்வாக ஆசிரியர். “அரசு என்பது மோடி மட்டும்தானா? மோடியை தவிர்த்துவிட்டு உங்களால் ரிப்போர்ட் செய்ய முடியாதா?” என்று கேட்டார்.

“அது எப்படி சாத்தியம்? அரசின் அனைத்துத் திட்டங்களையும் பிரதமர் மோடிதான் அறிவிக்கிறார்; அவர்தான் தொடங்கி வைக்கிறார். துறையின் அமைச்சர்கள் கூட மோடிக்கே முழு பெருமையையும் சமர்ப்பிக்கின்றனர். அப்படி இருக்கும்போது மோடியின் பெயரை எப்படி தவிர்க்க முடியும்?” என்று கேட்டேன்.

‘’நீங்கள் செய்வதும், சொல்வதும் சரியாக இருக்கக்கூடும். ஆனால், நான் சொல்வதைக் கேளுங்கள். தற்காலிகமாகவேனும் மோடி பெயர் எங்கும் வேண்டாம்’’ என்றார்.

ஆனால் அவரது உத்தரவை செயல்படுத்துவது அத்தனை எளிமையானதாக இருக்கவில்லை. உதாரணமாக, இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை குறித்து நான் விவாதிப்பதாக இருந்தால் 2022-க்குள் 40 கோடி இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு அளிக்கப்படும் என்ற மோடியின் அறிவிப்பு குறித்தும், இதுவரை 2 கோடி இளைஞர்களுக்கு மட்டுமே திறன் மேம்பாடு அளிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் நான் பேச முடியாது. நாடு முழுவதும் திறக்கப்பட்ட திறன் மேம்பாட்டு பயிற்சி நிலையங்களில் 10-இல் 8 பூட்டிக்கிடக்கிறது என்பதையும் பேச முடியாது.

மோடி பெயரைக் குறிப்பிடுவதற்குப் பதிலாக ‘தற்போதுள்ள அரசு’ என்ற சொல்லை பயன்படுத்தலாம் என்ற முடிவுக்கு வந்தோம். ஆனால் இது தொலைக்காட்சி ஊடகம். காட்சிகளைக் காட்டியாக வேண்டும். எங்கள் ‘வீடியோ லைப்ரரி’ முழுக்க மோடி காட்சிகள்தான் நிறைந்திருக்கின்றன. 2014-ஆம் ஆண்டு மே 26-ஆம் தேதிக்குப் பிறகு எங்கள் எடிட் இயந்திரங்கள் மோடியை மட்டுமே எடிட் செய்தன. 80 சதவிகிதம் புகைப்படங்களும், வீடியோவும் மோடியுடையது மட்டும்தான். ஆகவே மோடி என்ற பெயரை பயன்படுத்தாமல் ‘தற்போதைய அரசு’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினாலும், டி.வி. திரையில் மோடியின் புகைப்படங்களே இடம்பெற்றன. ஆனால் அடுத்த 100 மணி நேரத்துக்குள் அடுத்த உத்தரவு வந்தது.

மோடியின் புகைப்படமும், வீடியோவும் இடம்பெறக்கூடாது என்றார் உரிமையாளர் மற்றும் தலைமை நிர்வாக ஆசிரியர். “அரசு என்பது மோடி மட்டும்தானா? மோடியை தவிர்த்துவிட்டு உங்களால் ரிப்போர்ட் செய்ய முடியாதா?” என்று கேட்டார்.

கடந்த நான்கு ஆண்டுகளில் ‘தற்போதுள்ள அரசால்’ 106 திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அனைத்து திட்டங்களையும் அறிவித்தவர் மோடி. துறை சார்ந்த அமைச்சர்கள் செய்ய வேண்டிய வேலையை; தேடிக்கொள்ள வேண்டிய பெருமையை, அவரே தன் பெயரால் செய்தார். ஆகவே, மோடியின் பெயரை குறிப்பிடக்கூடாது; புகைப்படத்தைக் காட்டக்கூடாது என்றால், யார் குறித்தும், எது குறித்தும் முணுமுணுக்கக் கூடாது என்றுதான் அர்த்தம்.

ஜூன் கடைசி வாரத்தில் பா.ஜ.க.-வில் இருந்து வேறொரு அழுத்தம் வரத் தொடங்கியது. பா.ஜ.க. சார்பாக எங்கள் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க யாரும் வர முடியாது என்று மறுத்தார்கள். அதில் இருந்து சில நாட்கள் கழித்து பா.ஜ.க. பிரமுகர்கள் ஏ.பி.பி. தொலைக்காட்சிக்கு பேட்டி அளிக்க மறுத்தனர். எங்கள் நேரலை விவாதம் ஒன்றில் கலந்துகொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தவாதியான ஒரு பேராசிரியருக்கு திடீரென ஒரு செல்போன் அழைப்பு வந்தது. எடுத்துப் பேசியவர் அடுத்த விநாடி, ஸ்டுடியோவில் இருந்து எழுந்து, மைக் ஒயரை கழட்டிவிட்டு, அவர் போக்கில் வெளியேறிச் சென்றார். இவை அனைத்தும் நேரலையில் ஒளிபரப்பானது. அந்த செல்போன் அழைப்பு வந்தபோது, அவரது முகம் அச்சத்தால் வெளிறிப் போயிருந்ததைக் கண்டேன்.

இப்படி பா.ஜ.க. தனது எல்லா அழுத்தங்களையும் செலுத்தினாலும் விளைவு வேறாக இருந்தது. ஏ.பி.பி. சேனல் மிகக் கடுமையான அழுத்தங்களை எதிர்கொண்ட ஜூலை 5 முதல் ஜூலை 12 வரையிலான டி.ஆர்.பி. ரேட்டிங்கில் ஏ.பி.பி. தொலைக்காட்சி பலமடங்கு மேலே சென்று, இந்தி செய்திச் சேனல்களில் இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தைப் பெற்றது. விவாதங்களில் பா.ஜ.க.-வினர் பங்கேற்பதும், பங்கேற்காததும் ரேட்டிங்கில் ஒரு பொருட்டாக இருக்கவில்லை. மேற்கண்ட ஜூலை 5-12ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட நாள் ஒன்றில், ஜார்கண்ட் மாநிலம் கோட்டா என்ற இடத்தில் அமைக்கப்படவிருந்த அனல் மின் நிலையம் குறித்து ரிப்போர்ட் செய்தோம். அது அதானிக்கு சொந்தமான அனல் மின் நிலையம். இதற்கு நிலத்தை விற்கும்படி விவசாயிகள் மிரட்டப்பட்டனர். “நிலத்தை தரவில்லை என்றால் உயிரோடு எரித்துவிடுவதாக அதானி ஆட்கள் மிரட்டினார்கள்” என்று மக்கள் கதறினார்கள். இவை அனைத்தும் அந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பானது. அந்த வார ரேட்டிங்கில், அந்த குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கு மட்டும் வழக்கத்தை விட 5 புள்ளிகள் கூடுதலாக கிடைத்திருந்தது.

அரசின் பொய்களை அம்பலப்படுத்தும் ஒரு நிகழ்ச்சிக்கு; அரசை எதிர்த்து நிகழ்ச்சிகளை நடத்தும் ஒரு சேனலுக்கு டி.ஆர்.பி. ரேட்டிங் அதிகரித்தால், மற்ற தொலைக்காட்சிகள் மத்தியில் அது என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது யூகிக்க முடியாதது அல்ல. டி.ஆர்.பி. ரேட்டிங்கை அடிப்படையாக வைத்துதான் ஒரு சேனலுக்கான விளம்பர வருவாய் தீர்மானிக்கப்படுகிறது. மோடியை விமர்சித்தாலும் டி.ஆர்.பி. ரேட்டிங் வரும் என்றால், விளம்பரதாரர்கள் இந்தப் பக்கம் சாய்வார்கள்; மோடி புகழ்பாடும் சேனல்களுக்கு விளம்பர வருவாய் குறையும். ஒரே நேரத்தில் இரட்டை பாதிப்பு. இந்த தருணத்தில்தான், மோடி அரசு எங்கள் கழுத்தை நெறிக்க முடிவு செய்தது.

அது இரண்டு பகுதிகளாக நடந்தது. ஒன்று, விவாதம், நிகழ்ச்சிகள், பேட்டி என ஏ.பி.பி. சேனலின் அனைத்தையும் பா.ஜ.க. சார்பில் புறக்கணிப்பது. இரண்டாவது, ஏ.பி.பி. சேனலின் வருடாந்திர பொது நிகழ்ச்சியை புறக்கணிப்பது. பொதுமக்கள் முன்னிலையில் பெரும் அரசியல் கட்சியின் தலைவர்களை ஒன்றாக அமர வைத்து நடத்தப்படும் இந்த நிகழ்வு எங்கள் தொலைக்காட்சியால் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. கௌரவம் மிக்கதும், வருமானம் ஈட்டித் தரக்கூடியதுமான இந்நிகழ்வு சேனலுக்கு பல வகைகளில் முக்கியமானது. இதற்கு பா.ஜ.க. சார்பிலோ, மோடி அரசாங்கத்தின் சார்பிலோ யாரும் வரமாட்டோம் என மறுத்தார்கள். அதிகாரத்தில் இருக்கும் ஆளும் தரப்பினர் யாரும் இல்லாமல் எப்படி அந்நிகழ்வை நடத்த முடியும்?

இதன்பிறகுதான் ஜூலை 6-ஆம் தேதி சர்ச்சைக்குரிய ‘மான் கி பாத்’ நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இதைத் தொடர்ந்து தொலைக்காட்சிகளை கண்காணிப்பதற்காக பா.ஜ.க. அரசு நியமித்திருக்கும் 200 பேர் கொண்ட குழுவில் இருந்து ஒரு நண்பர் எனக்கு அழைத்தார். “எதுவும் நடக்கலாம். எச்சரிக்கையாக இருங்கள்” என்றார். இதன்பிறகு ’மாஸ்டர் ஸ்ட்ரோக்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்போது மட்டும் எங்களுடைய செயற்கைக்கோள் இணைப்பு தடைபடத் தொடங்கியது. அந்த ஒரு மணி நேரம் மட்டும் தொலைக்காட்சித் திரை கருப்பானது. ’மாஸ்டர் ஸ்ட்ரோக்’ முடிந்ததும், மிகச் சரியாக 10 மணிக்கு டி.வி. திரை பழையமாதிரி சரியாகிவிடும். எங்கள் தொழில்நுட்பக் குழுவால் இதை சரிசெய்யவே முடியவில்லை. உடனே தொலைக்காட்சியின் ஸ்க்ரோலிங் பகுதியில்,’’கடந்த சில நாட்களாக பிரைம் டைம் நிகழ்ச்சியின்போது எங்கள் ஒளிபரப்பில் சில தடங்கள் ஏற்படுகிறது. அதை சரிசெய்ய முயற்சித்துவருகிறோம். அதுவரை நேயர்கள் ஒத்துழைக்கவும்” என்ற செய்தியை ஒளிபரப்பினோம். ஆனால் இரண்டே மணி நேரத்தில் அந்த செய்தி அகற்றப்பட்டது. அதை ஒளிபரப்பக்கூடாது என்று நிர்வாகத்துக்கு அரசுத் தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதால் நிர்வாகம் அந்த முடிவை எடுத்தது.

‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் சமயத்தில் ஏ.பி.பி. நியூஸ் நெட்வொர்க்கின் ஒளிபரப்பு முடக்கப்பட்டது.

இதே நேரத்தில் ஏ.பி.பி. சேனலின் மிகப்பெரிய விளம்பரதாரரான ‘பதஞ்சலி புராடக்ட்ஸ்’ நிறுவனம், தன்னுடைய அனைத்து விளம்பரங்களையும் திடீரென நிறுத்திக்கொண்டது. மற்ற விளம்பர நிறுவனங்களுக்கும் இத்தகைய அழுத்தம் தரப்படுவதாக எங்களுக்குத் தொடர்ந்து தகவல் வந்து கொண்டிருந்தது. ஒருநாள், இந்த நீண்ட நெருக்கடி நிலை ஒரு முடிவை எட்டியது. ஏ.பி.பி. தொலைக்காட்சி குழுமத்தின் உரிமையாளர் மற்றும் தலைமை நிர்வாக ஆசிரியர் என் முன்னே கைகளை இறுக மடக்கிக்கொண்டு நின்றனர்.

“என்ன செய்வது? இந்த சூழ்நிலையில் நீங்களாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? அநேகமாக விடுமுறையில் செல்லலாம் அல்லது ராஜினாமா செய்யலாம்” என்றார்.

இந்த அதிர்ச்சிகளை விட ஓர் அதிசயம் நடந்தது. நான் என்னுடைய ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்த அடுத்த சில நிமிடங்களில், ஏ.பி.பி. சேனலில் பதஞ்சலி விளம்பரங்கள் மீண்டும் ஒளிபரப்பாகத் தொடங்கின. மாஸ்டர் ஸ்ட்ரோக் நிகழ்ச்சியில் வழக்கமாக 15 நிமிடங்கள் விளம்பரங்களுக்கு ஒதுக்கப்படும். பா.ஜ.க. அழுத்தம் காரணமாக இது வெறும் 3 நிமிடங்களாக சுருங்கியிருந்தது. நான் ராஜினாமா செய்தபிறகு இது திடீரென 20 நிமிடங்களாக அதிகரித்தது. நான் ராஜினாமா செய்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி இரவில் இருந்தே செயற்கைக்கோள் இணைப்பில் எந்த தொந்தரவும் இல்லை. டி.வி. திரைகள் கறுப்பாகாமல், வழக்கம்போல் ஒளிபரப்பாகின.

– தி வயர் இணையதளத்தில் வெளியான கட்டுரையின் சுருக்கம்.
தமிழாக்கம்: வழுதி

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு – மக்கள் அதிகாரம் 6 தோழர்கள் NSA-விலிருந்து விடுதலை !

  • மக்கள் அதிகாரம் தோழர்கள் 6 பேர் என்.எஸ்.ஏ-விலிருந்து விடுதலை!
  • துப்பாக்கிச்சூடுக்கும் சேர்த்து சிபிஐ விசாரணை !
  • தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு !

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டின் கூலிப்படையாக நின்று போலீஸ் நடத்திய அரச பயங்கரவாதப் படுகொலையை அம்பலப்படுத்தும் விதத்தில் இன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் திரு. சி.டி.செல்வம், திரு.பஷீர் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வு இரண்டு தீர்ப்புகளை அளித்திருக்கிறது.

முதலாவதாக, தூத்துக்குடி போராட்டத்தின் முக்கிய குற்றவாளியாக ஸ்டெர்லைட் நிர்வாகத்தாலும், போலீசாலும், பாரதிய ஜனதா கட்சியினராலும் சித்தரிக்கப்பட்ட மக்கள் அதிகாரம் அமைப்பின் உறுப்பினர்களுக்கு எதிரான வழக்கு.

தேசிய பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் பொய் வழக்கு போட்டு கைது செய்யப்பட்டு தற்போது உயர்நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட மக்கள் அதிகாரம் தோழர்கள் !

தூத்துக்குடி பேரணியில் கலந்து கொண்ட ஒரே குற்றத்துக்காக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கலியலூர் ரஹ்மான் அவருடைய மகன்களும் மாணவர்களுமான முஹம்மது அனஸ், முகமது இர்ஷத் ஆகியோரையும், கோட்டையன், சரவணன், வேல்முருகன் ஆகிய தோழர்களையும் சேர்த்து மொத்தம் ஆறு பேரையும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒரு ஆண்டு காலத்துக்கு சிறை வைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டது செல்லத்தக்கதல்ல என்று அவர்கள் 6 பேரையும் உயர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

இரண்டாவதாக, தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக மக்களுக்கு எதிராகப் போடப்பட்ட வழக்குகளையும், துப்பாக்கி சூடு தொடர்பான போலீசுக்கு எதிரான வழக்குகளையும் தமிழக காவல்துறையை சேர்ந்த சிபி சிஐடி விசாரிக்கக் கூடாது என்று கூறி அவற்றை சிபிஐக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த சுமார் பத்துக்கும் மேற்பட்ட பொதுநல வழக்குகள் மற்றும் ரிட் மனுக்கள் மீதுதான் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

மே 22 அன்று நடைபெற்ற சம்பவத்துக்காக, குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயரில் தாங்களே தயாரித்துக் கொண்ட  பொய்யான வாக்குமூலங்களை அடிப்படையாக வைத்து, சுமார் 175 வழக்குகளை தூத்துக்குடி போலீஸ் பதிவு செய்திருந்தது. கைது செய்யப்பட்ட ஒவ்வொருவர் மீதும் 20 முதல் 120 வழக்குகள் வரை போட்டு, அவர்களை பிணையில் வரவே முடியாமல் செய்வது என்பதுதான் போலீசின் நோக்கம். இது குறித்து விரிவாக ஏற்கனவே எழுதியிருக்கிறோம்.

வாக்குமூலங்களின் அடிப்படையில் ஒரு சம்பவத்திற்கு 175 முதல் தகவல் அறிக்கைகளைப் பதிவு செய்வதென்பது சட்டவிரோதமானது என மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில் வழக்கு தொடுத்து வெற்றி பெற்றிருந்தோம். குற்ற எண் 190, 191 ஆகிய இரண்டின் கீழ்தான் அனைத்து வழக்குகளும் விசாரிக்கப்பட  வேண்டும் என்ற அந்தத் தீர்ப்பு போலீஸ் அராஜகத்துக்கும் அத்துமீறல்களுக்கும் உதவிய அடித்தளத்தை தகர்த்து விட்டது.

இந்த இரண்டு வழக்குகளையும் தமிழக காவல்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள சிபிசிஐடி விசாரிப்பது பொருத்தமல்ல என்றும் இதனை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ள உயர் நீதிமன்றம் அதற்கான காரணங்களையும் கூறியுள்ளது.

முழுமையான தீர்ப்பின் நகல் இன்னும் கைக்கு வரவில்லை எனினும் அதன் சுருக்கத்தை கீழ்வருமாறு தொகுத்து தருகிறோம்.

144 தடை முதல் துப்பாக்கிச்சூடு கொலை வரை எந்தக் கேள்விக்கும் அரசு விளக்கமளிக்கவில்லை!

முதலாவதாக மே 21 ஆம் தேதி அன்று இரவு சுமார் பத்து முப்பது மணிக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதே ஒரு அசாதாரணமான நடவடிக்கை அந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் போது மாவட்ட ஆட்சியர் அங்கு இல்லை உத்தரவு குறித்து உரிய முறையில் மக்களுக்கு அறிவிக்கப்படவில்லை.

இரண்டாவதாக துப்பாக்கி சூட்டுக்கு ஒரு துணை தாசில்தார் உத்தரவிட்டிருக்கிறார் உத்தரவிட்ட துணை தாசில்தாரின் அதிகார எல்லை துப்பாக்கி சூடு நடந்த இடம் அல்ல. தான் சுமார் 12.5 கிலோமீட்டர் தூரம் பேரணியுடன் நடந்து வந்ததாகவும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நெருங்கிய பிறகு அங்கே துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவு பிறப்பித்ததாகவும் அவர் கூறுவது சந்தேகத்துக்குரியதாக உள்ளது

மேலிட உத்தரவுக்கு கட்டுப்பட்டோ அல்லது பெரும் பணம் கிடைக்குமென்பதற்காவோ உங்களால் ஒரு சிறுமியைக் கொல்ல முடியுமா?

துணை தாசில்தாரின் உத்தரவுப்படி நடைபெற்ற துப்பாக்கிச் சூடு மட்டுமின்றி, ஆங்காங்கே தனித்தனியே போலீஸ் அதிகாரிகள் துப்பாக்கி சூடு நடத்தி இருக்கின்றனர். இவற்றுக்கெல்லாம் உத்தரவிட்டது யார் என்பதை விசாரிக்க வேண்டியுள்ளது.

துப்பாக்கிச் சூட்டின் போது பின்பற்றப்பட வேண்டிய காவல்துறையின் நிலை ஆணைகள் பின்பற்றப்படவில்லை.

இத்தகைய துப்பாக்கிச்சூடு நடைபெறும் தருணங்களில் இ.பி.கோ 302 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்படவில்லை.

மேலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் பன்னிரண்டரை கிலோ மீட்டர் தூரம் பேரணியாக மக்கள் வந்திருக்கின்றனர்.  போலீசார் இதனை எப்படி தடையின்றி அனுமதித்தனர் என்ற கேள்விக்கு காவல்துறையிடமிருந்து பதில் இல்லை.

இந்த வழக்கின் போது மனுதாரர்கள் பல கேள்விகளை எழுப்பினர். அவை எதற்கும் அரசுத் தரப்பிலிருந்து உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை.

மேற்கூறிய காரணங்களினால் இந்த வழக்கை தமிழக காவல்துறை நிர்வாகத்தின் கீழ் இருக்கும் சிபிசிஐடி துறையினர் விசாரிப்பதை விட, சிபிஐ விசாரிப்பதே பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறோம்.

இந்தக் காலத்தில் சில நாட்களுக்கு அம்மாவட்டங்களில் இணையத் தொடர்புகள் அங்கே துண்டிக்கப்பட்டிருக்கின்றன. (இதை எதிர்த்து மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் சார்பில் பத்திரிகையாளர் கவின்மலரை மனுதாரராக கொண்டு ஒரு மனு தாக்கல் செய்து தடையை நீக்கியிருந்தோம்) இந்த இணைய முடக்கத்துக்கு தேவை இருந்ததா என்பது குறித்தும் மீளாய்வு செய்யப்பட வேண்டும்.

நான்கு மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் !

இந்த வழக்கை ஒரு சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து நான்கு மாதங்களுக்குள் விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். போலீஸ் துப்பாக்கிச் சூடு மற்றும் அத்துமீறல் குறித்து போலீசார் மீது தூத்துக்குடி மக்கள் புகார் கொடுத்தால் அவை குறித்தும் சிபிஐ விசாரிக்க வேண்டும்.

– என்று நீதிபதிகள் சி.டி. செல்வம், பஷீர் அஹ்மத் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் என்ற கார்ப்பரேட் நிறுவனமும் தமிழக அரசும் காவல் துறையும் இணைந்து நடத்திய அரச பயங்கரவாதக் கொலை வெறியாட்டத்திற்கு எதிராக பல்வேறு வழக்கறிஞர்களும் அமைப்புகளும் நடத்திய சட்டப் போராட்டத்திற்கு கிடைத்ததுள்ள குறிப்பிடத்தக்க வெற்றியாகும் இந்த தீர்ப்பு.

பொய்ப் பிரச்சாரம் செய்தவர்களை மறந்து விடாதீர்கள்!

இந்த தருணத்தில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போலீஸும் தமிழக அரசும் பாரதிய ஜனதா கட்சியும் ரஜினிகாந்த் போன்ற நபர்களும் சில ஊடகங்களும் பரப்பி வந்த பொய்ப்பிரச்சாரத்தை மக்கள் மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று கோருகிறோம்

மக்கள் அதிகாரம் அமைப்புதான் நடைபெற்ற வன்முறைகள் அனைத்திற்கும் காரணம் என்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் அரிராகவன், வாஞ்சிநாதன் ஆகியோர்தான் இந்தப் போராட்டத்தை வன்முறையாக மாற்றியவர்கள் என்றும் ஒரு பொய்ப் பிரச்சாரம் திட்டமிட்டே கட்டவிழ்த்து விடப்பட்டது. அவர்கள் இருவரையும் போலீஸ் கைது செய்தது. பலர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம், குண்டர் சட்டம் போன்றவை ஏவப்பட்டன.

மீனவ பிரதிநிதிகளை மிரட்டி மக்கள அதிகாரத்திற்கு எதிராக புகார் மனு

மக்கள் அதிகாரம் அமைப்பை தடை செய்ய வேண்டும் என்ற பிரச்சாரத்தை பாரதிய ஜனதா கட்சி தீவிரமாக மேற்கொண்டது. தமிழ்நாட்டில் பயங்கரவாதிகள்தான் வளர்ச்சித்திட்டங்களை தடுப்பதாக தினத்தந்திக்கு அளித்த பேட்டியில் நேற்று மோடியும் கூறியிருக்கிறார். இது மத்திய உளவுத்துறையும் சங்கபரிவார அமைப்பினரும் இணைந்து பரப்பும் பொய்.

இந்த பொய்யின் அடிப்படையில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்துவதற்குத்தான் ரஜனி தூத்துக்குடிக்கு அனுப்பப்பட்டார். தூத்துக்குடி மட்டுமல்ல, எட்டு வழி சாலைக்கு எதிராகப் போராடும் விவசாயிகள், சமூக ஆர்வலர்களையும் ஒடுக்குவதையும், தமிழ்நாடு முழுவதும் கருத்துரிமையை பறிப்பதையும் இந்தப் பொய்யின் அடிப்படையில்தான் பாஜகவும் தமிழக அரசும் நியாயப்படுத்தி வருகின்றனர்

யார் பயங்கரவாதிகள் யார் சமூகவிரோதிகள் என்பதை இந்த தீர்ப்பு தெளிவாக இனம் காட்டுகிறது. மக்கள் அதிகாரம் வன்முறையைத் தூண்டியதற்கு வீடியோ ஆதாரம் இருக்கிறது என்றெல்லாம் பாஜகவினர் தொலைக்காட்சிகளில் சவடால் அடித்தார்கள். ஆனால் துப்பாக்கிச் சூடு தொடர்பாக மனுதாரர்கள் எழுப்பிய எந்தக் கேள்விக்கும் தமிழக அரசிடமிருந்து பதில் இல்லை என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது.

இது இறுதித் தீர்ப்பு அல்ல என்பது உண்மைதான். ஆனால் 13 பேரைப் படுகொலை செய்து, பலரை துப்பாக்கிக் குண்டுக் காயத்துக்குள்ளாக்கி,

நூற்றுக்கணக்கான மக்களை சிறைவைத்து அவர்கள் வாழ்க்கையைக் கெடுத்து, போலீசு ரெய்டுகள் மூலம் தூத்துக்குடி மக்களை பீதிக்குள்ளாக்கிய போலீசார், தங்களது நடவடிக்கைகள் எதற்கும் நீதிமன்றத்தில் விளக்கமளிக்க முடியவில்லை என்பதை நீதிமன்றத்தில் அம்பலமாக்கியிருக்கிறோம்.

144 தடை உத்தரவை மீறினார்கள் என்பது மட்டும்தான் மக்கள் செய்த குற்றம். ஆனால் எல்லா சட்ட நெறிமுறைகளையும் மீறியிருப்பவர்கள் போலீசும், தமிழக அரசும், அவர்களுடைய எசமானான ஸ்டெர்லைட் முதலாளியும்தான்.

இந்த அளவில் ஒரு தீர்ப்பைப் பெறுவதற்கு மிகக் கடுமையான விடாப்பிடியான சட்டப் போராட்டத்தை நடத்த வேண்டியிருந்தது. இந்தப் போராட்டத்தில் எமக்கு உறுதுணையாக இருந்து, அரசு தரப்பு எத்தனை வாய்தா வாங்கி இழுத்தாலும் அலுக்காமல் வந்து, கட்டணம் ஏதும் பெற்றுக் கொள்ளாமல் வாதாடிய மூத்த வழக்கறிஞர்கள் முதல் இந்தப் பணிகளில் இரவு பகலாக உழைத்த இளம் வழக்கறிஞர்கள் வரை அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தியாகம் வீண் போகக் கூடாது! ஸ்டெர்லைட்டை திறக்க விடக்கூடாது!

இந்த தருணத்தில்  ஸ்டெர்லைட் நிர்வாகம் மீண்டும் ஆலையை திறப்பதற்கான நடவடிக்கைகளிலும் வெற்றி பெற்று வருகிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. முதல் படியாக பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவான ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது. முன்னர் சென்னை உயர்நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டபோது, அபராதம் கட்டிவிட்டு ஆலையை நடத்துமாறு தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம். இதை நாம் மறந்து விடக்கூடாது.

தாமிர உருக்காலைகளுக்கு தமிழகத்தில் இடமில்லை என்று தனிச்சட்டம் இயற்றுவது ஒன்றுதான் தீர்வு என்று ஆலைக்கு சீல் வைப்பதாக தமிழக அரசு அறிவித்த அன்றே கூறினோம். மீண்டும் அதையே வலியுறுத்துகிறோம்.

மோடி அரசு என்பது அனில் அகர்வாலின் அரசு. ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு எல்லா விதத்திலும் அது உதவும். தமிழக அரசின் யோக்கியதை பற்றி சொல்லத் தேவையில்லை.

நிர்வாக கட்டிடத்திற்கு ஸ்டெர்லைட் நிர்வாகத்தினர் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எனவே எந்த நோக்கத்திற்காக 13 உயிர்களை பலி கொடுத்தோமோ, எந்த நோக்கத்திற்காக படுகாயம், பொய் வழக்கு, சித்திரவதை என்று பல துன்பங்களை அனுபவித்தோமோ அந்த நோக்கம் வெற்றி பெற வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு ஒருக்காலும் அனுமதிக்கக்கூடாது.  இது தூத்துக்குடி மக்களின் பிரச்சினை மட்டுமன்று. தமிழக மக்கள் அனைவரின் பிரச்சினை.

கார்ப்பரேட் அடியாள் அரசாக இருந்துகொண்டு குஜராத்தி பனியா மார்வாரி முதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் நாட்டை கூறு போட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கும் மோடி அரசு, தமிழகத்தில் என்ன செய்கிறதோ, அதைத்தான் நாடு முழுவதிலும் செய்கிறது.   எனவே இது நாட்டு மக்கள் அனைவரின் பிரச்சினை.

இந்தியாவிற்கு முன்னரே ஆப்பிரிக்க நாடுகளில் ஸ்டெர்லைட் நடத்திய படுகொலைகள் அம்பலமாகி இருக்கின்றன.  வேதாந்தா என்பது ஒரு சர்வதேச கார்ப்பரேட் கிரிமினல் நிறுவனம். இதனை எதிர்த்த போராட்டத்தை பல்வேறு நாட்டு மக்களும் ஆதரிப்பார்கள்.

இந்த போராட்டத்தில் நாம் பெறுகின்ற வெற்றி, வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் மக்கள் மீது கொடுக்கப்படும் தாக்குதல்களை எதிர்த்து தம் வாழ்வுரிமைக்குப் போராடும் மக்கள் அனைவருக்கும் ஒரு ஊக்கமாக அமையும்.

இந்த தீர்ப்புக்கு இடைக்காலத் தடை பெறுவதற்கு, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என்பதை அறிவோம். மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பில் உடனே உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யவிருக்கிறோம்.

மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்களாகிய நாங்கள் என்றும் எப்போதும் போராடுகின்ற தூத்துக்குடி மக்களோடும், போராடும் தமிழக மக்களோடும் இருக்கிறோம். அரச பயங்கரவாத குற்றவாளிகள் தண்டிக்கப்படும்வரை, கொலைகார ஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படும் வரை ஓயமாட்டோம்.

இவண்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு

சதீஷ் ஆச்சார்யா : அவர்கள் குனியச் சொன்னார்கள் – இவர்கள் படுத்தே விட்டார்கள் !

கார்ட்டூனிஸ்ட் சதிஷ் ஆச்சார்யா.

மோடி அரசின் இந்துத்துவ செயல்பாடுகளை விமர்சிக்கும் ஒருசில பத்திரிகையாளர்களில் கார்ட்டூனிஸ்ட் சதிஷ் ஆச்சார்யாவும் ஒருவர். பசுவை முன்வைத்து நடந்து வரும் கும்பல் படுகொலைகள் குறித்தும், மோடி அரசின் பண மதிப்பு நீக்கல் நடவடிக்கை குறித்தும், அன்றாடம் இந்துத்துவ கும்பல் அவிழ்த்துவிடும் வன்முறைகள் குறித்து இவர் வரைந்த கார்ட்டூன்கள் சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்படுபவை.  ஊடகங்களை கட்டுப்படுத்த முனைந்திருக்கும் மோடி – அமித் ஷா கும்பலின் ஆட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் சமீபத்தில் இணைந்திருக்கிறார் சதீஷ் ஆச்சார்யா. தன்னுடைய சுயாதீன குரல் எப்படி நசுக்கப்பட்டது என்பதை அவரே விவரிக்கிறார்…

‘கார்ட்டூனை நீக்கிவிட்டு, படத்தைப் போடுங்கள்’

சதிஷ் ஆச்சார்யாவின் முகநூல் பதிவு.

இப்படித்தான் ‘மெயில் டுடே’வுக்காக வரையப்பட்ட என்னுடைய கார்ட்டூன் பத்தி சனிக்கிழமை நிறுத்தப்பட்டது. அப்பத்திரிகையின் ஆசிரியர் இப்படித்தான் ஒரு கார்ட்டூனையும் கார்ட்டூனிஸ்டின் கருத்தையும் பார்த்தார். இப்படித்தான் ஒரு குரலை ஒடுக்கினார்.

அவர் வெளியிட மறுத்த கார்ட்டூன் சீனாவின் ஆக்டோபஸ் கரங்கள், மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளில் செல்வாக்கு செலுத்துவதைப் போல இந்தியா மீது நீள்கின்றன என்பதை சொன்னது. ஆசிரியர் இந்த கார்ட்டூன்  ‘அவநம்பிக்கையை வெளிப்படுத்துவதாகவும் சீன பிரச்சினையை மிதமிஞ்சியும் சொல்கிறது’ என்றார்.

இந்தியாவின் நலன்களை கருத்தில் கொண்டு வளர்ந்துவரும் சீனாவின் செல்வாக்கை இப்படித்தான் ஒரு கார்ட்டூனிஸ்ட் பார்ப்பார் என நினைத்தேன். ‘இது விவாதத்துக்குரியதுதான், ஆனால், ஒரு கார்ட்டூனின் கருத்துக்கும் மதிப்பளிக்க வேண்டும்’ என நான் அவரிடம் சொன்னேன். அதற்கு எதிர்வினையாக ஆசிரியர் குழுவிடம் கார்ட்டூனை நீக்கிவிட்டு, படத்தைப் போடுங்கள் என்றார் ஆசிரியர்.

‘மெயில் டுடே’ வெளியிட மறுத்த சதிஷ் ஆச்சார்யாவின் கார்ட்டூன்.

என்னுடைய சுதந்திரத்தை பாதுகாக்கவும் கார்ட்டூன் பத்தியின் புனிதத்தை பாதுகாக்கவும் பல நாட்களாக நான் போராடிக்கொண்டிருக்கிறேன். உண்மையில் ஓர் ஆசிரியருக்கு கார்ட்டூன் என்பது மூன்று கால இடத்தை நிரப்புவது, அவ்வளவே. ஆனால் ஒரு கார்ட்டூனிஸ்டுக்கு அதுதான் உலகமே. அந்த உலகத்தில் கார்ட்டூனிஸ்டால் தன்னுடைய கருத்தை முழுமையாக வெளிப்படுத்தும் சுதந்திரம் உண்டு.  அந்த உலகத்தில் தன்னுடைய சொந்த படைப்பின் எல்லைகளை சவாலாக எதிர்கொள்ள முடியும். அந்த உலகத்தில் போராட்டத்தை, விமர்சனத்தை, புலம்பலை, உற்சாகம் உள்ளிட்டவற்றுக்கு குரல் தர முடியும்.

இதுதான் என்னுடைய அனுபவம்:

‘நீங்கள் வரைந்த பசு கார்ட்டூன் ஆசிரியருக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை’ என பசுவை வரைந்ததற்காக என்னுடைய கார்ட்டூனை முதலில் நிராகரித்தார்கள்.

கும்பல் கொலைகள் பற்றிய என்னுடைய கார்ட்டூனுக்காக ‘இதில் ஒரு சிறு பிரச்சினை இருக்கிறது. இந்தியா டுடே குழுமம் மத அடையாளத்தோடு வருகிற கார்ட்டூன்களை வெளியிடக்கூடாது’ என்றார்கள்.

மோடி மீதான கார்ட்டூனுக்கு, ‘மோடிக்குப் பதிலாக, ஏதேனும் பா.ஜ.க.-காரரை பயன்படுத்தமுடியுமா?’ என்று என்னிடம் கேட்டார்கள்.

மேலும், ‘ஆசிரியர் இந்த கார்ட்டூனில் உள்ள இஸ்லாமிய கண்ணோட்டத்தை விரும்பவில்லை’

‘கார்ட்டூனை நீக்கிவிட்டு, படத்தைப் போடுங்கள்’ – கார்ட்டூனிஸ்ட் மஹமுத்தின் கார்ட்டூன்.

மேலும், ‘பண மதிப்பு நீக்கத்தையும் 100 சதவீத மின்வசதி ஏற்படுத்துவதையும் தொடர்புபடுத்துவது ஆசிரியருக்குப் பிடிக்கவில்லை’.

மேலும் பல, ‘இது சரியான பொருளில் இல்லை’, ‘இது ஏற்க முடியாதது’ என நிராகரிப்புக்கான காரணங்களாக சொல்லப்பட்டன.

இப்படி நிராகரிக்கப்பட்ட கார்ட்டூன் பிற ஊடகங்களால் பயன்படுத்தப்பட்டு, சிலவை சமூக ஊடகங்களில் வைரலாக பரவின. பல பத்திரிகையாளர்கள் அவற்றை ரீ ட்விட் செய்தார்கள்.

என்னைச் சுற்றிலும் இருக்கும் தடைகளைக் கடந்து, கார்ட்டூன்களை படைப்பது எனக்கு சவாலாக உள்ளது. விரக்தியிலிருந்து வெளியேறி, என் மூத்த பத்திரிகையாளர் நண்பர்களை அனுகினேன். அவர்களை என்னை ஆறுதல்படுத்தினார்கள். சிலர் காத்திருக்கச் சொன்னார்கள்; சிலர் உறுதியாக இருக்கச் சொன்னார்கள்.

ஃப்ரீலான்ஸ் கார்ட்டூனிஸ்டாக மற்ற ஊடகங்களுக்கும் பணியாற்றும் எனக்கு, இந்த மாதிரியான சூழலில் விட்டுக்கொடுத்துப் போவது எளிதானது. ஆனாலும் என்னுடைய உரிமைக்காக நான் போராட வேண்டும் என நினைக்கிறேன். என்னுடைய பெயரில் வெளிவரும் கார்ட்டூன் பத்திக்கு, அதற்குரிய நியாயத்தை செய்ய வேண்டும் என நினைக்கிறேன்.

முடிவில், எனக்கான இடம் ஆசிரியரால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என கடுமையுடன் நினைவு படுத்தப்பட்டுள்ளது. அதனால்தான் என்னுடைய கார்ட்டூனை நீக்கிவிட்டு, ஒரு படத்தை அவர்களால் போட முடிகிறது.

உண்மையில், இதில் ஒரு விடுவிப்பு கிடைத்திருக்கிறது. பசுவை பற்றிய கார்ட்டூன் பற்றியோ, கும்பல் கொலைகள்  பற்றியோ, மோடி கார்ட்டூன் பற்றியோ இந்து-முஸ்லிம் கார்ட்டூனில் இடம்பெறுவது குறித்தோ நான் இப்போது கவலைப்படவேண்டியதில்லை. ஒரு கார்ட்டூனை வரைய அமரும் முன், ஆசிரியர் என்ன சொல்வாரோ என நினைக்க வேண்டியதில்லை.

ஆனால், அவமானப்படுத்தும் அனுபவம் என்னை காயப்படுத்துகிறது.

ஒரு கார்ட்டூனிஸ்டாக, என்னுடைய ஆசிரியர் என்னுடைய கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டுமென்று நான் எதிர்ப்பார்க்கிறேன். கார்ட்டூனிஸ்டுகள் ஒரு ஆசிரியரின் குரலை பிரதிபலிக்க வேண்டியதில்லை. கார்ட்டூனிஸ்டுகள் சுதந்திரமான குரலை வெளிப்படுத்த வேண்டியவர்கள்.

உண்மையில், ஓர் ஆசிரியர் அவருக்குள்ள உரிமையில் ஒரு கார்ட்டூனிலிருந்து வேறுபடலாம், அதுபற்றி கார்ட்டூனிஸ்டிடம் பேசலாம். ஆனால், அதிகாரத் தோரணை இல்லாமல் அவர் திறந்த மனதுடன் அதைச் செய்ய வேண்டும்.

சதிஷ் ஆச்சார்யாவின் கருத்துரிமைப் பறிப்புக்கெதிராக சக கார்ட்டூனிஸ்டுகள் வரைந்த கார்ட்டூன்.

என்னுடைய கார்ட்டூன்கள் ‘மெயில் டுடே’ திறந்த தலையங்கப் பக்கத்தில் இடம்பெறக்கூடியது. அங்கே பத்தி எழுதும் சில பத்திரிகையாளர்களுக்கு என் கார்ட்டூன்களைக் காட்டிலும் சுதந்திரம் இருந்தது.

அதிர்ஷ்டவசமாக, எனக்கு வேறு சில பத்திரிகைகள் உள்ளன. அங்கே உள்ள ஆசிரியர்கள் என்னுடைய கருத்துக்கு மதிப்பளிக்கிறார்கள். என்னுடைய கருத்துடன் ஒத்துப்போகவில்லை எனினும் என்னுடைய கார்ட்டூனை நம்புகிறார்கள். இதுபோன்ற திறந்த மனுதுடைய ஆசிரியர்களை நாம் நிறைய பெறுவோம் என நம்பிக்கை உள்ளது. மேலும், என்னிடம் சமூக ஊடகம் உள்ளது, அங்கே சுயாதீனக் குரல்களை கேட்பவர்கள் இருக்கிறார்கள்.

முரண்பாடாக, பாரதிய ஜனதா கட்சியின் தலைவரான அமித் ஷாவின் இணையதளத்தில் நான் வரைந்த அவரை உள்ளடக்கிய கார்ட்டூன்களை சேமித்து வைத்திருக்கிறார்கள். பெரும்பாலான கார்ட்டூன்கள் அவரை மிகவும் கடுமையாக எதிர்க்கக்கூடியவை.

நிகழ்பவற்றை நோக்கும் போது, ‘அவர்கள் குனியச் சொன்னார்கள்; இவர்கள் படுத்தே விட்டார்கள்!’ என்கிற மிகப் பிரபலமான வரிகள் நினைவுக்கு வருகின்றன.

த வயர் இணையதளத்தில் வெளியான கார்ட்டூனிஸ்ட் சதீஸ் ஆச்சார்யாவின் முகநூல் பதிவின் தமிழாக்கம்.

தமிழாக்கம்: கலைமதி

மதுரை காமராசர் பல்கலை : செல்லாத துரை ஆனார் செல்லத்துரை !

துரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரையின்  நியமனம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் 13-08-2018 அன்று தீர்ப்பளித்து விட்டது.

“செல்லாத துரை” ஆன செல்லத்துரை, பத்திரிகையாளர் சந்திப்பில்…

செல்லத்துரையின் சார்பில் முன்னாள் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்கி, கிரி ஆகியோர் ஆஜராகினர். தமிழக அரசு தரப்பில் கே.கே.வேணுகோபால், வினோத் கன்னா ஆகியோரும், ஆளுநர் சார்பில் சேகர் நாப்தேயும் ஆஜராகி வாதாடினர்.

செல்லதுரையின் நியமனத்துக்கு எதிராக, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரை காமராசர் பல்கலைக்கழக பாதுகாப்பு கூட்டமைப்பு (Save MKU) ஆகியவற்றின் சார்பில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார், கோவிலன், வாஞ்சிநாதன் ஆகியோர் ஆஜராகினர்.

“துணைவேந்தர் பதவிகள் ஏலமெடுக்கப்பட்ட பதவிகளே” என்று உலகத்துக்கே தெரிந்த போதிலும் அவையெல்லாம் நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியாத உண்மைகள். எனவே “நிரூபிக்க முடிந்த” உண்மைகளின் அடிப்படையில்தான் வழக்கு நடத்தப்பட்டது.

முதலாவதாக செல்லத்துரையின் மீது ஒரு கொலைமுயற்சி வழக்கு இருக்கிறது. இதற்கு முந்தைய துணைவேந்தர் கல்யாணி மதிவாணனின் நியமனத்தை எதிர்த்துப் போராடிய பேராசிரியர் சீனிவாசன் மீது தாக்குதல் தொடுத்த வழக்கு 2014 முதல் நிலுவையில் இருக்கும்போதே இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பது முதல் முறைகேடு.

துணைவேந்தராக நியமிக்கப்படுபவர் குறைந்தபட்சம் பத்து ஆண்டுகளாவது பேராசிரியராகப் பணியாற்றியிருக்கவேண்டும். இது துணை வேந்தரைத் தெரிவு செய்வதற்கான தேடுதல் குழு (Search committee) ஏற்படுத்தியிருக்கும் வரையறை. ஆனால் அந்த தகுதி செல்லத்துரைக்கு இல்லை என்பது இரண்டாவது முறைகேடு.

வழக்கின் மனுதாரர், லயனல் அந்தோணிராஜ், மதுரை மாவட்ட செயலர், ம.உ.பா.மையம்.

துணைவேந்தரை நியமிப்பதற்கான தேடுதல் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்ட பேரா.மு.ராமசாமி செல்லத்துரையின் நியமனத்தை ஏற்க மறுத்த காரணத்தால் அவருக்கு நெருக்கடி தரப்பட்டு அதன் காரணமாக அவர் தேடுதல் குழுவிலிருந்தே ராஜினாமா செய்திருக்கிறார். இத்தகைய ராஜினாமா மதுரை பல்கலைக்கழகத்தில்தான் முதன்முறை நடந்திருக்கிறது. இது மூன்றாவது முறைகேடு.

மு.ராமசாமிக்குப் பின் தேடுதல் குழுவின் கன்வீனராக நியமிக்கப்பட்ட முருகதாஸ், “துணைவேந்தர் பதவிக்கு தெரிவு செய்யப்படுபவர் மீது கிரிமினல் வழக்குகள் இருக்கக்கூடாது” என்ற விதியை நீக்குகிறார். இது நான்காவது முறைகேடு.

தேடுதல் குழுவில் நியமிக்கப்பட்ட  மூவரில்  ராமகிருஷ்ணன், ஹரிஷ் மேத்தா ஆகிய இருவரும் “நாங்கள் நிர்ப்பந்தம் காரணமாகத்தான் செல்லத்துரையை சிபாரிசு செய்தோம்” என்று பிரமாண வாக்குமூலத்தில் ஒப்புக் கொண்டனர். இவ்வாறு தேடுதல் குழுவினரே நிர்ப்பந்தம் என்று ஒப்புக்கொள்வதும் இதுதான் முதன்முறை. இது ஐந்தாவது முறைகேடு.

இவை அனைத்தையும் பரிசீலித்த நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோரடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு, தார்மீக ரீதியில் செல்லத்துரையின் நியமனம் தவறு என்ற அடிப்படையில் அவரது மேல் முறையீட்டு மனுவை நிராகரித்துள்ளது.

நாடெங்கும் உயர் கல்வி நிறுவனங்கள் ஊழல்மயமாகியிருக்கின்றன. அவற்றை ஒழுங்குபடுத்துவது என்ற பெயரில் இந்துத்துவ சக்திகளையும் தனது கைப்பாவைகளையும் உயர்கல்வி நிறுவனங்களின் மீது திணித்து வருகிறது மோடி அரசு. இது நீதிமன்றத்தின் மூலம் தீர்த்து விடக் கூடிய பிரச்சினை அல்ல. ஆசிரியர்களும் மாணவர்களும் விடாப்படியாகப் போராடுவதும் எதிர்த்து நிற்பதும்தான் இதற்குத் தீர்வு.

இது செல்லதுரை என்ற ஒரு நபருக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டமல்ல. மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 2008- ‘11 காலகட்டத்தில், கற்பக குமாரவேல் துணைவேந்தராக நியமிக்கப்பட்ட காலத்திலிருந்தே போராடி வருகிறது. பின்னர் 2011-‘14 காலத்தில் ஜெ ஆட்சியின் கீழ் கல்யாணி மதிவாணனின் முறைகேடுகளையும், அவர் துணைவேந்தராக நியமிக்கப்பட்டதையும் எதிர்த்து ம.உ.பா.மையம் போராடியது.

இந்த போராட்டத்தின் ஊடாகத்தான் “சேவ் எம்.கே.யு” (Save MKU)  என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.   இதன் அமைப்பாளரான பேரா.சீனிவாசன் தாக்கப்பட்டார்.  இந்த தாக்குதல் தொடர்பாக கல்யாணி மதிவாணன் மற்றும் செல்லத்துரையின் மீது  கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வைப்பதற்கே நீண்டதொரு சட்டப் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது.

பின்னர் கல்யாணி மதிவாணனின் நியமனத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் வழக்கு தொடுத்து வெற்றி பெற்றோம். அதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்று ஜெ அரசின் ஆதரவோடு வெற்றி பெற்றார் கல்யாணி மதிவாணன். இருந்த போதிலும் எந்தவிதமான கொள்கை முடிவுகளையும் அவர் எடுக்க முடியாத வண்ணம் நீதிமன்றம் மூலம் தடை பெற்றோம்.

வழக்கறிஞர் பிரபு ராஜதுரை, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.

கல்யாணி மதிவாணனின் பதவிக்காலம் முடிந்தவுடன் செல்லத்துரை நியமிக்கப்பட்டார்.  அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மதுரை அமர்வில் வழக்கு தொடுத்தோம். உடனே வழக்கு விசாரணையை சென்னைக்கு மாற்றினார்கள்.  மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பிரபு ராஜதுரை கட்டணமில்லாமல் வழக்கு நடத்திக் கொடுத்தார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை அக்டோபர் 2017-இல் முடிந்து விட்டது.  இருப்பினும்  தீர்ப்பு  6 மாத காலத்திற்குப் பிறகு, ஏப்ரல் 2018-ல்தான் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியால் வழங்கப்பட்டது. செல்லத்துரையின் நியமனம் ரத்து செய்யப்பட்டது.

உடனே உச்ச நீதிமன்றத்தின் விடுமுறைக்கால அமர்வுக்கு மேல் முறையீடு செய்து, உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்காலத் தடை கோரினார் செல்லத்துரை. உச்ச நீதிமன்றம் சென்று அதனைத் தடுத்து நிறுத்தினோம்.  (இந்த வழக்கை நடத்திவிட்டு டெல்லியிலிருந்து திரும்பி வரும்போதுதான் ஸ்டெர்லைட் போராட்டத்துக்காக சென்னை விமானநிலையத்தில் வைத்து வாஞ்சிநாதன் கைது செய்யப்பட்டார்.)

வழக்கறிஞர் வாஞ்சிநாதன், மாநில ஒருங்கிணைப்பாளர், ம.உ.பா.மையம்.

துணைவேந்தர் செல்லத்துரையால் லட்சக்கணக்கில் கட்டணம் வாங்கும் உச்ச நீதிமன்றத்தின் சூப்பர் ஸ்டார் வழக்கறிஞர்களை அமர்த்திக் கொண்டு வழக்கு நடத்த முடிந்தது. எமக்கோ உச்ச நீதிமன்றத்தில் எதிர்வழக்காட  லட்சக்கணக்கில் பணம் தேவைப்பட்டது. இன்னொருபுறம் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் தொடர்பான வழக்குகள், போலீசு ரெய்டு, தேசிய பாதுகாப்பு சட்டம் என்ற அடக்குமுறைகளை ம.உ.பா மைய வழக்கறிஞர்கள் சந்திக்க வேண்டியிருந்தது.

பலமுறை இந்த வழக்குக்காக டெல்லிக்கு அலைவதற்கான செலவுக்குரிய நிதி, மதுரைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியப்பெருமக்கள் நன்கொடையாக வழங்கினார்கள். வீமன், சீனிவாசன், முரளி விஜயகுமார், புவனேசுவரன் ஆகியோர் மதுரைப் பல்கலைக் கழகத்தைக் காப்பாற்றும் இந்தப் போராட்டத்தில் பெரும்பங்காற்றினார்கள்.

நியமிக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழக துணைவேந்தரை வழக்கு தொடுத்து பதவி நீக்கம் செய்திருப்பது தமிழகத்தில் இது முதன் முறையாகும். ஒரு துணை வேந்தருக்கான தகுதி என்ன, அவரை தெரிவு செய்வதற்கு தேடுதல் குழு வகுத்திருக்கும் நெறிமுறை என்ன என்பது குறித்து எந்த வித வரையறையும் இதுவரை பின்பற்றப்படுவதில்லை என்பதால் தேர்வு முறையே மோசடியாக இருந்து வருகிறது.  துணைவேந்தர் நியமனம் தொடர்பாக சில நெறிமுறைகளை வகுத்து பின்பற்றியாக வேண்டும் என்ற கட்டாயத்தை இந்த வழக்கு அரசுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.

காமராசர் பல்கலைக்கழகம் மட்டுமல்ல, தமிழகத்தின் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இதுதான் நிலை. நாடெங்கும் உயர் கல்வி நிறுவனங்கள் ஊழல்மயமாகியிருக்கின்றன. அவற்றை ஒழுங்குபடுத்துவது என்ற பெயரில் இந்துத்துவ சக்திகளையும் தனது கைப்பாவைகளையும் உயர்கல்வி நிறுவனங்களின் மீது திணித்து வருகிறது மோடி அரசு. இது நீதிமன்றத்தின் மூலம் தீர்த்து விடக் கூடிய பிரச்சினை அல்ல. ஆசிரியர்களும் மாணவர்களும் விடாப்படியாகப் போராடுவதும் எதிர்த்து நிற்பதும்தான் இதற்குத் தீர்வு.

இவண்:
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
தமிழ்நாடு.

தொடர்புடைய பதிவுகள்:

நூல் அறிமுகம் : தேசப்பிரிவினைக்கு காரணம் யார் ?

ரலாறு கற்றுத்தரும் பாடங்களை உள்வாங்குவது மிக அவசியம் ஆகும். இந்து மதவாதம் மற்றும் முஸ்லிம் மதவாதம் காரணமாக இந்திய தேசம் பிரிவினைக் கொடுமைக்கு ஆளாகியது. பிரிவினை துயரங்களும் அந்த பிரிவினையை எதிர்த்துப் போராடிய அனுபவமும் சோகமான, ஆனால் முக்கியமான படிப்பினையை உணர்த்தியுள்ளன. அந்த படிப்பினை விழலுக்கு இறைத்த நீராக வீணாகிவிடக்கூடாது.

பிரிவினையின் துயரங்கள் கணக்கற்றவை. உலகில் எத்தனையோ தேசங்கள் பிரிந்துள்ளன. செக்கோஸ்லேவாகியா செக் எனவும் ஸ்லோவாகியா எனவும் பிரிந்தன. சோவியத் ஒன்றியத்திலிருந்து பல குடியரசுகள் பிரிந்தன. யூகோஸ்லேவியா பல குடியரசுகளாக சிதைந்தது. சூடான் இரண்டாக பிரிந்தது. இந்த பிரிவினைகளில் சில பின்விளைவுகளை உருவாக்கின. ஆனால், எந்த பிரிவினையும் இந்திய பிரிவினையை போல துயரங்களை விளைவித்தது இல்லை…

பிரிவினையின் சில அம்சங்கள் திரும்ப திரும்ப இந்த தேசத்தின் மீது தாக்கத்தை உருவாக்கிக் கொண்டே வந்துள்ளன. குறிப்பாக இந்து – முஸ்லிம் மக்களின் உறவில் இது ஆழமான தாக்கத்தை உருவாக்குகிறது. எப்பொழுதெல்லாம் மதவாதம் தீவிரம் காட்டுகிறதோ அப்பொழுதெல்லாம் பிரிவினை தொடர்பான விவாதங்களும் வேகம் எடுக்கின்றன. குறிப்பாக முஸ்லிம் மக்களின் தேசபக்தி கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது…….

பிரிவினை ஏன் நிகழ்ந்தது? பிரிவினைக்கு சில தனிநபர்கள் மட்டும் காரணமா? அல்லது அதற்கான  புறச்சூழல்கள் இருந்தனவா? பிரிவினையைத் தூண்டிய கருத்தாக்கங்கள் எத்தகையவை? பிரிவினையை எதிர்த்த குரல்கள் குறிப்பாக முஸ்லிம் குரல்கள் இருந்தனவா? அவை ஏன் வெற்றிபெறவில்லை? பிரிவினை நமக்கு கற்றுத் தரும் பாடம் என்ன?

இதற்கான பதில்கள் கண்டு பிடிக்கும் சிறிய முயற்சிதான் இந்த நூல்.

– முன்னுரையிலிருந்து,

இந்தியாவின் முதல் விடுதலைப் போர் என்று கார்ல் மார்க்ஸ் அவர்களால் சித்தரிக்கப்பட்ட 1857 ஆயுத எழுச்சியில் மத – மொழி வேறுபாடின்றி தங்களை எதிர்கொண்டதை நன்கு உணர்ந்த நிலையில், ஏகாதிபத்தியம் தனது பிரித்தாளும் சூழ்ச்சியைத் தீவிரமாக்கியது. ஒருபுறத்தில் இந்து, முஸ்லீம், சீக்கிய மத வேறுபாடுகள்; பல்வேறுபட்ட மொழி வேறுபாடுகள்; அடுத்து தாழ்த்தப்பட்ட, பழங்குடிகள் உள்ளிட்டு சாதி அடிப்படையிலான வேறுபாடுகள் என ஒருவருக்கு எதிராக மற்றொருவரை தூண்டிவிட்டு காலனி ஆதிக்க வாதிகள் தமது பிரிவினை நாடகத்தை தொடர்ந்து செயல்படுத்தி வந்தனர்.

1930-களில் வெளிப்படத் துவங்கிய தனிநாடு கோரிக்கையைத் தொடர்ந்து பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் காங்கிரஸ், முஸ்லீம் லீக் என இந்த இடைவெளியைப் பெருக்கிக் கொண்டே போனது. மறுபுறத்தில் இந்து மகாசபை, சமஸ்தான மன்னர்கள் என இந்து மத வெறியர்களும் இதற்குத் தூபம் போட்டுக் கொண்டேயிருந்தனர்.

முதலில் அது 1935-ஆம் ஆண்டில் பீகார் பகுதியிலிருந்து இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரிசா என்ற மாநிலத்தை மொழி அடிப்படையில் உருவாக்கியது. பின்பு 1936 ஆம் ஆண்டில் சிந்த் பகுதியை மும்பை ராஜதானியிலிருந்து பிரித்து மத அடிப்படையில் வடமேற்கு மாகாணத்தை உருவாக்கியது. அதைப் போன்று பலுச்சிஸ்தான் உள்ளிட்டு முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள ஐந்து பகுதிகளையும், இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள எட்டு பகுதிகளையும் இந்த நேரத்தில் பிரிட்டிஷ் ஆட்சி படிப்படியாக உருவாக்கியிருந்தது.

இதைத் தொடர்ந்து 1937 இல் இந்தியாவிலிருந்து பர்மாவை முற்றிலுமாகப் பிரித்தது. இனம், மதம் ஆகியவற்றின் அடிப்படையில் அதை தனியொரு பிரிட்டிஷ் காலனியாக பிரித்திருப்பதாகவும் அதற்குக் காரணம் கூறியது. இது பின்னாளில் மத அடிப்படையில் இந்தியாவைப் பிளவுபடுத்துவதற்கான அடித்தளத்தை உருவாக்கியது என்றே கூறலாம்.

– டி.கே.ரங்கராஜன், நாடாளுமன்ற உறுப்பினர்.

பிரிவினையின் பெரும் துயரங்கள்; பிரிவினையை இலட்சியமாக முன்வைத்த முஸ்லிம் லீக்; பிரிவினை கருத்துக்களை விதைத்த சங்பரிவாரம்; சவார்க்கரை அம்பலப்படுத்தும் அம்பேத்கர்; மத ஒற்றுமையைப் பறைசாற்றிய சில நிகழ்வுகள்; மத்திய காலம் – மத மோதலா? மத ஒற்றுமையா?; இஸ்லாமிய மன்னர்களின் ஆட்சி பற்றிய ஒரு சமூக மதிப்பீடு; பிரிட்டிஷாருக்கு எதிராக தென்னிந்திய போராட்டங்களும் மத ஒற்றுமையும்; இந்து – முஸ்லிம் மதவாத அரசியலின் தொடக்கம்; பாகிஸ்தான் பிரிவினையை எதிர்த்த இஸ்லாமிய அமைப்புகள்; பிரிவினை எதிர்ப்பு கருத்து ஏன் தோல்வி அடைந்தது? என்பது உள்ளிட்ட உட்தலைப்புகளில் அவசியமான புகைப்படங்களுடனும் விரிவான விளக்கங்களை அளிக்கிறார், நூலாசிரியர்.

  • வினவு செய்திப் பிரிவு

நூல்: தேசப்பிரிவினைக்கு காரணம் யார்?
முஸ்லீம மதவாதமா? இந்து மதவாதமா?
ஆசிரியர்: பாரத் கபீர்தாசன்

வெளியீடு: பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை,
தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
பேச: 044 – 2433 2424, 2433 2924.

பக்கங்கள்: 112
விலை: ரூ.100

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு:
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி: 99623 90277

பாரிசாலன் – ஹீலர் பாஸ்கர்களை நாம் எப்படி கையாள வேண்டும் ?

பாரி சாலன் இலுமினாட்டிகளை எப்படி கண்டு பிடிக்கிறார் ? பாகம் – 3

பாரிசாலன் தொடர்ந்து இலுமினாட்டிகளை கண்டுபிடித்து கொண்டேயிருப்பார். ஏனென்றால் இலுமினாட்டிகள் பரிசாலனுக்குள்தான் மாடு மேய்த்துக் கொண்டிருக்கிறார்கள், அங்கேயே வசிக்கிறார்கள்.

110010001111

ந்த எண்களில் உங்களால் ஒரு pattern இருப்பதை கவனிக்கமுடிகிறதா? உங்களால் இதில் ஒரு pattern இருப்பதாய் நம்பவோ, உணரவோ, காணவோ, சந்தேகிக்கவோ முடிகிறதா? உண்மையில் நான் என்போக்கில் கோர்த்த எண்கள் அவை.

ஆனால் நமது மனம் ஏற்கனவே சொன்னதுபோல காணும் எல்லாவற்றிலும் pattern (படிவம்) தேடும் இயல்புடையது. இந்த இயல்புதான் சதியாலோசனை கோட்பாடுகளுக்கான மைய புள்ளி.

அதாவது எதைச்சையாக நடக்கும்/நடந்த நிகழ்வுகளுக்கு/சம்பவங்களுக்கு தொடர்பு ஏற்படுத்தி ஒரு சித்திரத்தை, கோர்வையான ஒரு கதையை சதியாலோசனை கோட்பாடுகளை நம்புகிறவர்கள் ஏற்படுத்தி கொள்கிறார்கள். உண்மையில் பலநூறு பேர் சம்மந்தப்பட்ட ஒரு இரகசியத்தை வெளியில் கசியாமல் கட்டிக்காப்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. இன்னும் சொல்லப்போனால் சாத்தியமே இல்லை.

இரண்டுக்கு மேற்பட்டவர்களுக்கு தெரிந்த இரகசியங்கள் எப்படி என்றாலும் வெளியில் கசிந்தே தீரும் என்பதை நிறுவ algorithm (படிமுறை) எழுதியிருக்கிறார்கள். truth alone நிஜமாகவே triumphs. அதாவது சதியாலோசனை என்று ஒன்று இருக்குமானால் அது வெளிப்பட்டே தீரும். சுபாஷ் சந்திரபோஸ் தப்பி பிழைத்தது உண்மையானால் அது இந்நேரத்திற்கு முழு ஆதாரங்களோடு வெளிப்பட்டிருக்கும்.

அப்படியென்றால் சதியாலோசனை என்றே ஒன்று உலகத்தில் இல்லையா? அரசாங்கங்கள் சொல்லும் எல்லாவற்றையும் நாம் நம்பித்தான் ஆகவேண்டுமா? நிச்சயம் இல்லை. நாம் எல்லாவற்றையும் சந்தேகிப்பதும், அலசி பார்ப்பதும் தவறே அல்ல. இன்னும் சொன்னால் நாம் அப்படித்தான் இருக்க வேண்டும். ஏனென்றால் சில சதியாலோசனை கோட்பாடுகள் உண்மை என்று பின்னால் வெளிப்படலாம்.

மோடியை கொலை செய்ய வந்த தீவிரவாதிகள் என போலீசால் என்கவுண்டர் செய்யப்பட்ட இஸ்ரத் ஜஹான்.

உதாரணத்திற்கு, குஜராத்தில் நடந்தவை திட்டமிட்ட அரசியல் படுகொலை என்பது ஒரு சதியாலோசனை கோட்பாடாகத்தான் முதலில் வெளிப்பட்டது. பின்னர் நமக்கு கிடைத்த ஆதாரங்கள் அதை உறுதி செய்தன. அப்படியென்றால் சதியாலோசனை கோட்பாடுகளை நம்புவர்களுக்கும் நமக்கும் என்னதான் வித்தியாசம்? இருக்கிறது. மிக பெரிய வித்தியாசம் இருக்கிறது. அதுதான் emotional investment (உணர்ச்சிவயப்பட்ட முதலீடு).

” ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்” இந்த பாடலை இளையராஜாவின் பாடல் என்று நம்பி கொண்டுள்ளீர்கள். ஒரு நாள் உங்கள் நண்பர் மச்சி இந்த பாட்டு சங்கர் கணேஷ் போட்டது என்கிறார். அடுத்த நொடியிலிருந்து நீங்கள் உங்கள் எண்ணத்தை மாற்றி கொள்கிறீர்கள். ஏனென்றால் இது ஒரு தகவல் பிழை சம்பந்தப்பட்டது. அதை திருத்துவதில்/மாற்றிக்கொள்வதில் உங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் சதியாலோசனை கோட்பாடுகளை நம்புகிறவர்கள் அதில் உணர்ச்சிவயப்பட்ட முதலீடு (emotional investment) செய்திருக்கிறார்கள்.

“மோதி” ஜி-க்கு முட்டுக்கொடுப்பதில் கில்லாடி கிழக்கு பதிப்பகம் பத்ரி. பொன். ராதாகிருஷ்ணனுடன்

பத்ரி, பானு கோம்ஸ் போன்றவர்கள் பி.ஜே.பி.க்கும்,மோடிக்கும் பணமதிப்பு நீக்கம் போன்ற நடவடிக்கையின் போது கூட யோசிக்காமல் மணியாட்டுவதற்கு காரணம் அவர்கள் பி.ஜே.பி.ன் மீதும் மோடியின் மீதும் emotional investment செய்திருக்கிறார்கள். மோடியை கோமாளி ஆக்குவது என்பது அவர்களையே அவர்கள் கோமாளி ஆக்கிக்கொள்வதை போன்றது அவர்களுக்கு.

சாதிவெறியர்களுக்கும்/மதவெறியர்களுக்கும் இதுவே பொருந்தும். அவர்கள் அதில் emotional investment செய்திருக்கிறார்கள். அவர்களிடம் எத்தனை ஆதாரம் கொடுத்தாலும். எத்தனை விளக்கம் கொடுத்தாலும், எத்தனை உதாரணங்கள் காட்டினாலும் அவர்களால் அவர்களுடைய நம்பிக்கைகளை மாற்றி கொள்ளமுடியாது.

உங்கள் சந்தேகங்கள்
உண்மையாக இருக்க வேண்டும்/உண்மையாகத்தான் இருக்கும் என்று நீங்கள் நம்பத் தொடங்கும் புள்ளியில் சதியாலோசனை கோட்பாடுகளை நம்புகிறவர்களுக்கும் உங்களுக்கமிருக்கும் வேறுபாடு மறைந்து விடுகிறது.

அதுபோலத்தான் பாரிசாலன் அவருடைய சதியாலோசனை கோட்பாட்டு நம்பிக்கையின் மீது பெரும் emotional முதலீடு செய்துள்ளார். அவரை கட்டிவைத்து அடித்தாலும் மூளையில் கரண்ட் shock குடுத்தாலும் அவர் மாறப் போவதில்லை. அவருடைய emotional investmentயை தற்காத்துக்கொள்ள அவர் எந்த எல்லைக்கும் போவார்.

நாம் ஒரு விஷயத்தை சந்தேகிக்கும் பொழுது அந்த குறிப்பிட்ட விஷயத்தின் மீது emotional investment செய்யக் கூடாது. உண்மை எப்படி வெளிப்படுகிறதோ அதை அப்படியே ஏற்று கொள்ளும் மனத்தோடிருக்க வேண்டும். உங்கள் சந்தேகம் உண்மையென்றும் ஆகலாம் பொய்யென்றும் ஆகலாம்.

அதை அப்படியே ஏற்று கொள்ள வேண்டும். உங்கள் சந்தேகங்கள் உண்மையாக இருக்க வேண்டும்/உண்மையாகத்தான் இருக்கும் என்று நீங்கள் நம்பத் தொடங்கும் புள்ளியில் சதியாலோசனை கோட்பாடுகளை நம்புகிறவர்களுக்கும் உங்களுக்கமிருக்கும் வேறுபாடு மறைந்து விடுகிறது.

ஹீலர் பாஸ்கர், பாரிசாலன் போன்றவர்களுடைய பேட்டிகளை பார்த்தவர்களுக்கு அவர்கள் ரொம்பவும் ஆதாரப்பூர்வமாக பேசுவதை போன்ற எண்ணம் ஏற்படும்.

இதற்கு ஒரு காரணம் நம் ஊரில் இருக்கும் பெரும்பான்மையான ஊடவியலாளர்களுக்கு ஒருவரை பேட்டி எடுப்பது என்றால் என்னவென்றெ தெரியாத நிலையில் இருப்பதாலும், பேட்டி எடுப்பது என்றால் கோமாளித்தனமான நாலு template  கேள்விகளை கேட்பது என்கின்ற புரிதலில் இருப்பதாலும் ஏற்படுவது. அதை தாண்டி ஒரு முக்கியமான காரணமிருக்கிறது.

நிலவில் மனிதன் கால்பதித்தான் என்கின்ற தகவல் நமக்கு தெரியும். எந்த நாட்டை சேர்ந்தவர்கள், அவர்களின் பெயர், கால்பதித்த நாள் போன்ற அடிப்படை தகவல் தாண்டி நமக்கு அதைப்பற்றி எதுவும் தெரியாது. அது நிகழ்வதற்கு முன் ஏற்பட்ட சவால்கள், சோதனைகள், பயிற்சிகள், அதற்கு பின் உள்ள அறிவியல், விஞ்ஞானம் எதுவும் நமக்கு தெரியாது. அதை ஒரு தகவலாக பெற்றோம். விஞ்ஞானத்தையும், விஞ்ஞானிகளையும், ஊடகங்களையும் நம்பினோம். அந்த தகவலை நம்பி ஏற்றுக்கொண்டோம்.

ஆனால் நிலாவில் மனிதன் கால்பதிக்கவில்லை என்பதை நம்பும் சதியாலோசனை கோட்பாடுகளை நம்புகிறவர்கள் அதற்கு சம்மந்தமான ஆதாரங்களை, தகவல்களை திரட்டி தெரிந்து வைத்திருப்பார்கள். நாம் அவர்களிடம் உரையாடும்பொழுது நிலவில் எப்படி நிழல் தெரிந்தது, நிலவில் எப்படி அமெரிக்க கொடி அசைந்தது போன்ற கேள்விகளை எழுப்புவார்கள். அதற்கு நமக்கு பதில்தெரியாத பட்சத்தில் (விஞ்ஞானிகள் இயற்பியல் விதிகளை வைத்து எல்லா கேள்விகளுக்கும் விடை அளித்துவிட்டார்கள்) நமக்கு சதியாலோசனை கோட்பாடுகளை நம்புகிறவர் சொல்வதில் உண்மையிருப்பதாய் தோன்றும்.

சுருக்கமாக சொன்னால் ஒரு குருட்டுத்தனமான உணர்வு சார்ந்த நம்பிக்கையை நம்மால் ஒருபோதும் அறிவியலை கொண்டும், உண்மைகளை கொண்டும், தர்க்கங்களை கொண்டும் உடைக்கமுடியாது. உண்மைகளை கொண்டு உணர்வுகளை வெல்ல முடியாது.

அதாவது சதியாலோசனை கோட்பாடுகளை நம்புகிறவர்கள் தங்களுடைய emotional investmentயை பாதுகாத்துக் கொள்ள தங்களுக்கு சாதகமான தகவல்களை மட்டும் சேகரித்து வைத்துக்கொண்டு தங்களுடைய நம்பிக்கையை இறுக பற்றிக்கொள்வார்கள். அவர்களுக்கு தங்களுடைய நம்பிக்கைக்கு எதிரான தகவல்களை பற்றி எந்த அக்கறையோ முனைப்போ இல்லை. இதனால்தான் பாரி பேசுவதை கேட்கும் ஒரு அப்பாவிக்கு, ‘தம்பி நல்லா கருத்தா பேசறாப்ல’ என்று தோன்றும்.

கிட்டத்தட்ட 70 ஆண்டுக்கு மேலான அரசியல் வாழ்வை கொண்ட, பல்வேறு அரசியல் மாற்றங்களை/நிலைப்பாடுகளை முன்னெடுத்த பெரியாரை ஒருவர் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்வதற்கே பல ஆண்டுகள் பிடிக்கும்.

ஒரு 24 வயது சிறுவன் அவருடைய 4,5 வரிகளை மேற்கோளிட்டு மாமா பிசுக்கோத்து வாங்கி குடு என்கின்ற தோரணையில் பெரியாரை இலுமினாட்டி என்கிறான். பாரிசாலன் பெரியாரை பற்றி சொல்லும் கருத்துக்கள் எல்லாம் யாழினிது குழலினிது என்பர் பாரியின் மழலை சொல் கேளாதவர் என்கின்ற வகைமைக்குள்ளேயே வரும்.

உதாரணத்திற்கு எல்லா கற்பிதங்களையும், எல்லா புனிதங்களையும், எல்லா சமூக நிறுவனங்களையும் கேள்விக்குட்படுத்திய/சோதனைக்கு உட்படுத்திய ஒருவரை பாரி தம்பி நிர்வாணமாக இருக்கும் ஒரு secret society இரகசிய சங்கத்தை பெரியார் அவருடைய ஐரோப்பா பயணத்தில் சந்தித்தார் அப்பனா அவரு இலுமினாட்டிதான என்கிறார்.

அதாவது to begin with he got no clue what periyar stood for in the first place. பெரியாரை பற்றிய, அவருடைய வாழ்வியல் முறைமை பற்றிய அடிப்படையான புரிதலே இல்லாத காரணத்தால்தான் பாரிசாலன் வகையறாக்களுக்கு பெரியார் இலுமினாட்டியாக தெரிகிறார். ஹீலர் பாஸ்கரை பொறுத்தவரை அவர் சொல்வதை அவரே நம்புகிறாரா என்பதில் எனக்கு தீவிரமான சந்தேகமிருக்கிறது.

அவருடைய பேச்சு என்பது சினிமா நடிகர்களின் புகைப்படங்களை வைத்து கிளி ஜோசியம் சொல்லுகிறவரை ஒத்துள்ளது. பத்து ரூபாய் குடுத்து விட்டு நகர்ந்து விடலாம், ஆனால் சிறுவன் பாரிக்கு அவர் சொல்வதில் அவருக்கு தீவிரமான நம்பிக்கையிருப்பதை உணரமுடிகிறது.

அவருடைய ஓவ்வொரு பேச்சிற்கும், பேட்டிக்கும் கிடைக்கும் கவனிப்பும், ஆதரவும் மிகுந்த அதிர்ச்சியாகவும், கவலையாகவும் உள்ளது. ஏற்கனவே சொன்னதைப்போல அடிப்படையான அறிவியலுக்கு, தர்க்கத்துக்கு (reasoning) ஒரு தலைமுறையே பயிற்றுவிக்கப் படவில்லை என்பதைத்தான் பாரிசாலன் அடிப்பொடிகள் நமக்கு உணர்த்துகிறார்கள்.

கோமாளி ரஜினியின் பாபா முத்திரையை மாபெரும் இலுமினாட்டி சதியாக கப்சா விடும் நாம் தமிழர் சீமான்!

ஒரு அரசியல் கட்சியை வழிநடத்தும் சீமான் ஒரு செய்தி தொலைக்காட்சியில் வந்து ரஜினிகாந்தை இலுமினாட்டி என்று சொல்லும் கோமாளித்தனத்தை நிகழ்த்தும் அளவிற்கு இந்த இலுமினாட்டியை நம்பும் பொடியன்கள் தாக்கம் வளர்ந்திருக்கிறது. இது மிகுந்த கவலைக்கும், அச்சத்திற்கும் உரியது.

இது போன்ற சதியாலோசனை கோட்பாடுகளை நம்புவர்களும், cult group (வெறி ஈடுபாட்டு குழுக்கள்) போல செயல்படுபவர்களும் இதுவரை மானுட சமூகத்திற்கு பேரழிவையே விளைவித்திருக்கிறார்கள். இவர்களிடம் நாம் மிகுந்த கவனத்தோடும், விழிப்போடும், எச்சரிக்கையோடும் இருக்க வேண்டும்.

பாரிசாலன், பாஸ்கர் போன்ற ஆட்களை நாம் எப்படித்தான் கையாளுவது?

மனவியல் நிபுணர்கள் இவர்களிடம் விவாதத்தில் ஈடுபடுவது வீண் என்கிறார்கள். நீங்கள் எவ்வளவு தீவிரமாக அவர்களை மறுக்கிறீர்களோ அவர்கள் அதே தீவிரத்தோடு தங்களின் நம்பிக்கைகளை பற்றிக்கொள்வார்கள். அவர்களோடு நீங்கள் ஒருபோதும் விவாதித்து வெல்ல முடியாது. ஒரு போதும் அவர்களிடம் விவாதித்து அவர்களை மீட்க முடியாது. அவர்களிடம் நீங்கள் உரையாடும் நிலை வரும் பொழுது வெறும் அப்பட்டமான உண்மைகள்/தரவுகளை மட்டும் சொல்லிவிட்டு நகர்ந்துவிடுங்கள்.

உதாரணத்திற்கு தடுப்பூசி போட தொடங்கியபின் இத்தனை சதவிகிதமாக இருந்த போலியோ நோயாளிகளின் எண்ணிக்கை இத்தனை சதவீகிதமாக குறைந்துள்ளது என்கின்ற plain fact-டை மட்டும் சொல்லிவிட்டு நகர்ந்து விடுங்கள். இது தொடர்ந்து நடக்கும் பொழுது ஒருவேளை சதியாலோசனை கோட்பாடுகளை நம்புகிறவர்களுக்கு மனதில் ஒரு மாற்றம் நிகழலாம் என்று மனவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள்.

சுருக்கமாக சொன்னால் ஒரு கண்மூடித்தனமான உணர்ச்சி சார்ந்த நம்பிக்கையை நம்மால் ஒருபோதும் அறிவியலை கொண்டும், உண்மைகளை கொண்டும், தர்க்கங்களை கொண்டும் உடைக்க முடியாது. உண்மைகளை கொண்டு உணர்வுகளை வெல்ல முடியாது.

பாரிசாலன் தொடர்ந்து இலுமினாட்டிகளை கண்டுபிடித்து கொண்டேயிருப்பார். ஏனென்றால் இலுமினாட்டிகள் பரிசாலனுக்குள்தான் மாடு மேய்த்துக்கொண்டிருக்கிறார்கள், அங்கேயே வசிக்கிறார்கள்.

(முற்றும்)

பின் குறிப்பு : வெவ்வேறு சமயங்களில் நான் சதியாலோசனை கோட்பாடுகளை பற்றி பார்த்தவை,கேட்டவை,படித்தவை கொண்டும், why do people believe in conspiracy theories என்ற கேள்விக்கு google சுட்டிய முதல் 10 கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டும் இந்த கட்டுரை எழுதப்பட்டது.

ப. ஜெயசீலன், சமூக-அரசியல் விமர்சகர்.
நன்றி : தி டைம்ஸ் தமிழ்

முந்தைய பாகங்கள் :

  1. பாரிசாலன் – ஹீலர் பாஸ்கர்கள் இலுமினாட்டிகளை எப்படி சமைக்கிறார்கள் ?
  2. பாரி சாலன் – ஹீலர் பாஸ்கர் : பெரியார் ஒரு இலுமினாட்டி என்று ஏன் நம்புகிறார்கள் ?

கருத்துக் கணிப்பு : கேரள மழை வெள்ளமும் – மத்திய அரசின் நிவாரணப் பணியும் !

ந்த ஆண்டு தென்மேற்கு பருவக்காற்று மழைக்காலம் கேரளாவிற்கு தாங்கவொண்ணா துன்பத்தை அளித்திருக்கிறது. ஒரே நாளில் 26 பேர் மரணம். ஒரே நேரத்தில் 27 அணைகள் திறப்பு! இடுக்கி அணையின் ஐந்து மதகுகளும் ஒரே நேரத்தில் திறக்கப்பட்டிருப்பது வரலாற்றில் முதன்முறை!

வயநாடில் பெய்த கனமழை அங்கிருக்கும் சாலைகளை அடித்துச் சென்றிருக்கிறது. ஆகஸ்டு 12 வரை மழை வெள்ள மரணம் 37 ஆக உயர்ந்திருக்கிறது. இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. 14 மாவட்டங்களில் உயர்நிலை எச்சரிச்சை விடுவிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் கோழிக்கோடு, இடுக்கி, மலப்புரம், கண்ணனூர், வயநாடு மாவட்டங்களில் அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

அறுபதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் 1,750 தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். 1,500 வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன. நிவாரண முகாம்களுக்கு மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். வெள்ளப் பகுதிகளில் மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காத நிலை. மண் சரிவு, மழையால் பல நூறு வாகனங்கள் சேதம்! 10,000 கி.மீட்டர் சாலைகளும் சேதம்!

இந்தியாவிலேயே நெருக்கமான மக்கள் குடியிருப்பைக் கொண்ட மாநிலம் கேரளம். அதனாலும் சேதம் அதிகரித்து வருகிறது. அதே போன்று ஆண்டு தோறும் அங்கு பெய்யும் மழைப்பொழிவும் அதிகம். இப்போதோ பெருமழை, பெருத்த சேதம்.

வெள்ளப் பாதிப்புகளால் சுமார் 8,000 கோடி ரூபாய் சேதம் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கும் முதலமைச்சர் பினரயி விஜயன், 1,200 கோடி ரூபாய் பேரிடர் நிவாரண நிதியாக வழங்க வேண்டுமெனவும், உடனடியாக 400 கோடி ரூபாய் வழங்க வேண்டுமென்றும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இத்தகைய வெள்ளம் சூழ்ந்த இடத்திற்கு மக்கள் போகவேண்டாம் என அமெரிக்க அரசு தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறது. ஒரு வல்லரசு நாட்டின் மனிதாபிமானத்தை பாருங்கள்! அவர்கள் நாட்டு மக்களைப் பற்றி மட்டும் கவலைப் பட்டுவிட்டு, கேரள மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்று கடந்து போகிறார்கள்.

நீரில் கால் படாமல் விமானத்திலேயே சுற்றி வந்த ராஜ்நாத் சிங்.

இந்திய அரசோ தற்போதுதான் மனமிறங்கி உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அனுப்பியிருக்கிறது. அவரும் நீரில் கால் படாமல் விமானத்திலேயே சுற்றி வந்து விட்டார். முதலில் ஒரு 85 கோடி ரூபாய், பிறகு ஒரு 100 கோடி ரூபாய் நிவாரணத்தை ‘மனமிறங்கி’ வழங்கியிருக்கிறார்கள்.

இனி மத்திய அரசின் அதிகாரிகள் குழு மெதுவாக சில பலநாட்கள் கழித்து கேரளா வரும்! வந்து நட்சத்திர விடுதிகளில் டீ, சம்சா சாப்பிட்டு விட்டு சில பல இடங்களை பார்த்ததாக செய்தி வரும். பிறகு கேரளாவிற்கு தேவையான இறுதி நிவாரணம் எப்போது வரும், எவ்வளவு வரும் என்பது யாருக்கும் தெரியாது. இதை வர்தா புயலின் போதே நாம் பார்த்திருக்கிறோம். ஒக்கி புயலின் போதும் இவர்கள் என்ன செய்தார்கள் என்பது சமீபத்திய வரலாறு.

“ஐக்கியத்தின் சிலை” என்ற பெயரில் குஜராத்தில் வல்லபாய் பட்டேலுக்கு சிலை வைக்கப் போகிறார்கள். உலகின் உயர்ந்த சிலை என்ற சாதனையை நிகழ்த்தப் போகும் இதற்கு செலவு எவ்வளவு தெரியுமா? குறைந்த பட்சம் ரூ. 2000 கோடி. இதை மத்திய – குஜராத் மாநில அரசுகள் வழங்குகின்றன. வரும் அக்டோபர் 2018-இல் மோடி திறந்து வைக்கப் போகிறார்.

இப்போது சொல்லுங்கள்!

கேரள மழை வெள்ள சேதங்களுக்கான மத்திய அரசின் நிவாரணப் பணியை எப்படி மதிப்பீடுவீர்கள்?

  • மிக மோசம்
  • மிக நன்று
  • பரவாயில்லை
  • தெரியவில்லை

ட்விட்டரில் வாக்களிக்க:

யூடியூபில் வாக்களிக்க:

https://www.youtube.com/user/vinavu/community

ஃபேஸ்புக்கில் வாக்களிக்க:

  • வினவு செய்திப் பிரிவு

விஸ்வரூபம் 2 தோல்வி : சாருஹாசன் தம்பி கடும் அதிர்ச்சி !

5

மெரினாவில் கருணாதியை புதைச்சுண்டாளாமே, இனி எப்படி அங்கே காத்தாடறது என்று மயிலாப்பூர் ஆத்துல ‘மகா ஜனங்கள்’ சீதபேதியில் அலைந்து கொண்டிருக்கின்றனர். இந்நேரம் பார்த்து ஆழ்வார்பேட்டை ‘ஆண்டவனுக்கு’ சோதனை மேல் சோதனை!

சோதனை மேல் சோதனை!

விஸ்வரூபம் 2 படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்று இந்திய வெண் திரை வர்த்தக நிபுணர்களிடம் கேட்ட போது பலரும் உதட்டை பிதுக்குகிறார்களாம். கலைஞரின் மரணத்தை ஒட்டி தென்னிந்தியாவில் வசூல் எப்படியிருக்கும்? கணிக்க முடியாது என்கிறார்கள். இந்தி மொழியில் ஏதோ முதல் நாள் ஓரிரண்டு கோடி ரூபாய் வந்தால் அதிகம் என்கிறார்கள்.

கடைசியில் கருணாநிதியின் மரணம் இந்திய அரசு உளவுத் துறையான “ரா”-வில் பணிபுரியும் ஒரு தேசபக்தனான புலனாய்வு ஏஜெண்டை இப்படி சோதிக்க வேண்டுமா? ஒருவேளை இதுவும் திராவிட – பாகிஸ்தான் சதியாக இருக்குமோ?

மும்பை – இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை உண்மையிலேயே எக்ஸ்பிரஸ் வேகத்தில் “விஸ்வரூபம் – 2” விமர்சனத்தை இன்று மங்களகரமான வெள்ளிக்கிழமை ஆகஸ்டு 10 காலை 9:55:32-க்கு வெளியிட்டு விட்டது. என்னவென்று பார்த்தால் அது வெளியே – உள்ளே மற்றும் உள்ளுள்ளே எங்கு சொன்னாலும் கிசுகிசுத்தாலும் வெட்கக் கேடு!

“கமலஹாசனது படம் சம்பந்தமே இல்லாமல் ஒரு குழப்பம்” என்று சுப்ரா குப்தா நன்னா சுப்ரபாதம் போல தலைப்பு போட்டு எழுதியிருக்கிறார். குழப்பம் என்பதே பொருளற்றது என்றால் சம்பந்தமே இல்லாத ஒரு குழப்பம் என்றால் அது எப்பேற்பட்ட உலகமகாக் குழப்பமாக இருக்கும்?

இந்தியா, அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் என்று உலகளவில் பயணிக்கும் இப்படத்தில் கமலஹாசன், பூஜா குமார், ஆன்ட்ரியா, சேகர் கபூர், ராகுல் போஸ், அனந்த் மகாதேவன், வகீதா ரஹ்மான், ஜெய்தீப் அகல்வாத் ஆகியோர் நடித்திருக்க, சாருஹாசனது தம்பிதான் இயக்கியிருக்கிறார். இந்த மரணமொக்கைக்கு இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏதோ பாவம் பார்த்து அளித்திருக்கும் ரேட்டிங் ஒன்றரை நட்சத்திரம்!

“விஸ்வரூபம்” பாகம் ஒன்றிலாவது ரா எஜெண்டான மேஜர் விஸம் அகமத் காஷ்மீரி, விஸ்வநாதன் என்ற பெயரில் கதக் நடனம் போட்டு ஏதோ கொஞ்சம் பொழுதை போக்க வைத்தாராம். இதை ஃபர்ஸ்ட் போஸ்ட் இணையதளத்தின் விமர்சகர் முன்தேதியிட்ட போனசாக ஆற்றுப்படுத்துகிறார். இந்தியன் எக்ஸ்பிரஸ் விமர்சகரோ முதல் பாகத்தை ஏதோ ஒரு பொழுது போக்கு காமிக்ஸ் புத்தகம் போலவாவது எடுத்துக் கொள்ளலாம் என்கிறார்.

ஏன் இந்த ஃபிளாஷ்பேக் சீராட்டுக்கள்? கமலஹாசன் போன்ற ஞானிகளை, வணிக பொழுதுபோக்கு வி.ஐ.பி-களை முற்றிலும் வறுக்க முடியாதில்லையா? இருப்பினும் இரண்டாம் பாகத்தை அப்படி வணிகத்தின் பொருட்டும் இப்பத்திரிகைகள் சுமக்க முடியவில்லை! இது யதார்த்தம்! பிறகு இப்பத்திரிகை படிப்பவர்கள் அடுத்த இந்திப் பட விமர்சனங்களுக்கு இங்கு வராவிட்டால் சினிமா எக்ஸ்பிரஸ் சினிமா நகரப் பேருந்தாகி விடுமல்லவா?

ஆகவே, பாகம் இரண்டு ஒரு சோகமான சம்பந்தமே இல்லாத குழப்பம் என்கிறார் சுப்ரா குப்தா, இந்தியன் எக்ஸ்பிரஸ் விமர்சகர்.

ஓபனிங் சீனீல் ஒட்டு போட்ட தியாக விழுப்புண்களுடன் கமல் விமானத்தில் ஏற்றப்படுகிறார். கூடவே மனைவியான நிருபமாவும், அழகான உதவியாளரான அஷ்மிதாவும். முன்னவர் தன்னை அணுசக்தி விஞ்ஞானியாக கூறிக் கொண்டாலும், பெண் என்ற முறையில் ஆண்களை வீழ்த்தி உளவு பார்க்கவே விரும்புகிறாராம்.

பின்னவர் புத்திசாலித்தனமாக உளவாளியாக டமாரம் அடித்தாலும் அதை ஐந்து நட்சத்திர விடுதிகளில் ஒரு மாடலிங் நடிகர் போல தேடுகிறாராம். இந்த அவியல் கூட்டணியில் பாத்திர வார்ப்பு எனும் சமையல் பொருத்தம் சகிக்கவே முடியவில்லையாம்.

ஆக இந்தக குழப்பக் கூட்டணி கதைக்களமான நம்பிக்கையற்று இருக்கும் நாடுகளான இந்தியா, அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் பயணிக்கிறது. படத்தின் பாத்திரங்கள், உளவாளிகள், சதிகாரர்கள், மறந்து போகக் கூடிய அம்மாக்கள், சென்டிமெண்ட் மகன்கள், உள்ரூமில் உத்தரவு போடும் திறமையான உளவுத்துறை மேலதிகாரிகளுக்காக உருவாக்கப்பட்ட அழகான பெண்கள் – இவர்கள் ஒருவருக்கொருவர் கொல்லாமல், கைச் சண்டை, கத்திச் சண்டை போடுகிறார்கள். கத்திகள், துப்பாக்கிகளை கொண்டு செல்வதிலும், லோடிங் அன்லோடிங் செய்வதிலும் பிசியாக இருக்கிறார்கள்.

ஹெலிகாப்டர்கள் விண்ணில் பாய்கின்றன, ஏவுகணைகள் மண்ணில் சீறுகின்றன, கையெறி குண்டுகள் தூக்கி எறியப்படுகின்றன. (என்ன ஒரு உலகமகா கண்டுபிடிப்பு!) கடைசியில் கமல்ஹாசன் தரித்திருக்கும் பேராயுதங்களோடு அபாயகரமான முறையில் கிராபிக்ஸ் உதவியுடனும், சிறப்பு ஒலி மிக்சிங் தயவிலும் சண்டையிட்டு இந்திய தலைநகராம் புது தில்லி குண்டு போட்டு அழிக்கப்படும் அபாயத்திலிருந்ந்து காக்கிறார்.

சிறந்த வகை உளவுத்துறை புலனாய்வு படங்களில் இருக்கும் எனர்ஜி நிறைந்த அதிரடிக் காட்சிகள், வண்ணமயமான பாத்திரங்கள் – அதாவது நாயகன் – வில்லனுக்கு இடையே மங்கிய கோடுதான் இருக்கும், தடகள வீரனைப் போன்ற ஆண்கள், அவர்களுக்கு சமமாக இருக்கும் பெண்கள்…… இவை எவையும் எதுவும் விஸ்வரூபத்தில் லேது என புலம்புகிறார் எக்ஸ்பிரஸ் விமர்சகர்.

கமலின் வயதான தாயாக நடித்திருக்கும் வகீதா ரஹ்மான் படத்தில் அல்சைமர் எனப்படும் மறதி நோய் கொண்டவராக வருகிறார். இவரது பாத்திரத்தை தவிர ரா-வின் உயர் அதிகாரிகளாக அறைக்குள் டெக்னிக்கல் உத்தரவு போடும் சேகர் கபூர், ஆனந்த் மகாதேவன், அல்கைதா ராகுல் போஸ், துப்பாக்கியை விட்டுப் பிரியாத கைகளைக் கொண்ட ஜெய்தீப் அஹல்வாத் அனைவரும் தெண்டமாக வந்து போகிறார்களாம். ஆக மறதியாக நடிக்கும் ஒரு பாத்திரத்தை தவிர மற்றவை அனைத்தும் மறந்தும் கூட குறிப்பிடும்படியானவர்கள் அல்லவாம்.

charuhasanஇதற்காக கமல்ஹாசன் யாரைக் குற்றம் சாட்ட முடியும்? சாருஹாசனின் தம்பியைத் தவிர! ஏனெனில் இந்தக் குப்பையை எழுதி, இயக்கி, தயாரித்து, நடித்தவர் அந்தத் தம்பியேதான். நேரமும், பவுடரும் இருப்பதால் தசாவாதாரம் போட்டு விட்டு “தஸ்” பைசா கூட வசூலாகவில்லையே என்று எந்த அவதாரத்திடம் கேட்பது?

இவ்வளவிற்கும் இந்தப்படம் “இஸ்லாம் ஃபோபியா” எனப்படும் முசுலீம்களை அவதூறுடன் கருதும் உலகப் பொதுக் கருத்தில் எடுக்கப்பட்ட படம் என்பதை ஆங்கில விமர்சகர்கள் போகிற போக்கில் சொல்கிறார்கள். அதை முதல் பாகத்திலேயே பார்த்து விட்டோம்.

முதல் பாகம் எடுக்கும் போது கமலுக்கு தோன்றியிருக்கும் – மூன்று நாடுகளில் எடுக்கிறோம், தெரிவு செய்யப்பட்ட ஷாட் போக கனதியான அடிகள் மீதியிருக்கின்றன, அதை வைத்து ஒட்டுப் போட்டு இன்னொரு பாகம் போட்டால் என்ன என்று……….!

முதல் விஸ்வரூபம் வரும் போது அம்மா காப்பாற்றினார். இரண்டாவதில் அய்யா கெடுத்து விட்டார்! இருப்பினும் இரண்டாவதில்தான் உலக நாயகன் அது ஏதோ மய்யமாமே, கட்சி ஆரம்பித்திருக்கிறார். பிக்பாஸ், பிக்பாஸ் சீசன் 2, விஸ்வரூபம் 2 ஆகியவற்றில் கமல்ஹாசனுக்கு கிடைக்கும் பெரும் பணத்திற்கான இலவசமான விளம்பரமே அவரது அரசியல் பில்டப்புகள்!

இந்தி விஸ்வரூப பிரமோஷனோடு என்.டி.டிவி.யில் பேட்டியளித்தவர், நீங்கள் மோடி ஆதரவா, எதிர்ப்பா? எனும் மாபெரும் கேள்விக்கு பதிலளித்திருக்கிறார். அதை பதில் என்று சொன்னால் பல்லியே நம்மிடம் பிராது பறையும்!

அதாவது அவர் மோடி ஆதரவோ அல்லது மோடி எதிர்ப்போ இல்லையாம். தனிநபர்களை எப்போதும் ஆதரித்தோ, எதிர்த்தோ பேசமாட்டாராம். சித்தாந்தத்தோடுதான் அவர் எப்போதும் உறவு கொள்வாராம்? இந்த உளறல்களை சகித்துக் கொள்கிறார்களே அந்த நெறியாளர்கள், அவர்களின் பொறுமை உண்மையிலேயே வேர்க்க் வைக்கிறது. சரிங்க கமல் ஆபிசர், அது என்ன சித்தாந்தம்? வறுமைக்குதான் அவர் எதிரே அன்றி, கட்சிகள் அல்லவாம். இந்தியா வளரவேண்டும் என்பதைத் தாண்டி அவருக்கு வேறு கொள்கையே இல்லையாம்? இதைத்தானய்யா மோடி முதல் நமது மக்கள் கட்சி கார்த்திக் வரை சொல்கிறார்கள்?

சரி இந்த எழவையெல்லாம் விட்டுத் தொலைப்போம். சகித்துக் கொள்வோம். ஆனா பாருங்க, இவரது அண்ணன் சாருஹாசன் அப்பைக்கப்ப ஒன்று சொல்வாரே, அதை மட்டும் எப்போது நினைத்தாலும் கிட்னி பதறுகிறது!

ரஜினிக்குத்தான் தமிழகத்தில் செல்வாக்கு, அவருக்குத்தான் மக்கள் வாக்கு அளிப்பார்கள், கமலுக்கு வாக்கு போட மாட்டார்கள் என்று எல்லா தொலைக்காட்சியிலும் சாருஹாசன் பேசித் தீர்த்து விட்டார். சரி இப்படி வெளிப்படையாக தம்பியை தரைமட்டமாக்குகிறாரே என்று பார்த்தால் அடுத்து ஒரு பன்ஞ் நைசாக வரும்.

அதாவது புத்திசாலிகளை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள், அதனால்தான் கமலை மறுத்து, ரஜினியை ஏற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு ஒரு தினுசாக பார்ப்பார் இந்த பெரியவர்! பிக்பாசில் கூட தம்பியும் ஏதாவது பன்ஞ் மாதிரி சொல்லிவிட்டு ஆடியன்சை பார்ப்பார். பல நேரம் கை தட்டல்களில் டைமிங் தாமதமாகும். என்ன இருந்தாலும் செட்டப் செய்த கைகளிடம் செட்டப் செல்லப்பாவே இருந்தாலும் டக்கு டக்குனு கை தட்டல் வருமா என்ன?

காரியவாதம், பிழைப்புவாதம், சந்தர்ப்பவாதம் இன்ன பிற வாதங்களுக்காக கட்சியும், காட்சியும் நடத்தி வரும் கமல்ஹாசனை ஏதோ மாபெரும் புத்திசாலி, நல்லவர் வல்லவர் என்று போடுகிறாரே, சாருஹாசன்… இப்படி நாலு பேர் இருக்கும் போது ஏன் விஸ்வரூபம் 2 வெளிவராது?

– வேல்ராசன்

மேலும் :

தி இந்துவுக்கு ஒரு கேள்வி : எது ஊடக நெறி ? மு.வி.நந்தினி

1

தி இந்துவுக்கு கேள்வி : ஊடக நெறி என்பது மக்கள் நலனை முன்னிறுத்துவதா?அல்லது ரகசிய சந்திப்புகளை மூடி மறைப்பதா?

பாராமுகம் பார்ப்போம் – மு.வி.நந்தினி

மிழக முன்னணி ஊடகங்களின் முதலாளிகளும் தலைமை பத்திரிகையாளர்களும் பிரதமர் நரேந்திர மோடியை ‘இரகசியமாக’ சந்தித்த படங்கள் சமூக ஊடகங்களில் பரவி சர்ச்சையானது. சமூக ஊடகங்களின் கேள்விகளை எதிர்கொண்டு எந்தவொரு தமிழ் ஊடகமும் பதிலளிக்கவில்லை. தி ஹிந்து பத்திரிகையின் ரீடர்ஸ் எடிட்டர் ஏ. எஸ். பன்னீர்செல்வன் இதுகுறித்து அந்தப் பத்திரிகையில் எழுதியிருந்தார். (இணைப்பு கீழே)

அதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பத்திரிகையாளர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்ததும் பிரதமர் மோடி தமிழக பத்திரிகையாளர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்ததும் செய்தியாக்கப்படாததற்கு என்ன காரணம் என ஏ. எஸ். பன்னீர்செல்வம் விளக்கியிருந்தார். விளக்கத்தின் சாரம், (ஆஃப் த ரெக்கார்ட்) சந்திப்புகளை வெளியே சொல்வது சம்பந்தப்பட்டவர்களின் நம்பிக்கையை மீறுவதாகும் என்பதே.

ஏ. எஸ். பன்னீர்செல்வன்

லிபரலாகவும் ஜனநாயக தன்மையுடன் எழுதுவதாகக் காட்டிக்கொள்வது ஊடகங்களில் ஒருவகை. தி இந்து அப்படியாகத்தான் தன்னை முன்னிறுத்தி வருகிறது. இந்த முகத்திரையை பலரும் கிழித்தெறிந்துவிட்டார்கள். ரீடர்ஸ் எடிட்டரின் வழியாக மோடி சந்திப்பின் பின்னணி குறித்து ‘விளக்கம்’ அளித்து தனது நடுநிலையை தக்கவைக்க முயற்சிக்கிறது தி இந்து. ஆனால், உண்மை என்பது ஒருபோதும் நடுநிலையாக இருப்பதில்லை.

100 பெண் பத்திரிகையாளர்களை ராகுல் காந்தி சந்தித்த படங்கள், அவருடைய சமூக வலைத்தளத்திலேயே வெளியிடப்பட்டன. காங்கிரஸ் தலைவராக மக்களவை தேர்தலை எதிர்கொள்ளும் ராகுல் காந்தி, ஊடகங்களுடனான பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ள சந்திக்கிறார் என்கிற விளக்கம் காங்கிரஸ் தரப்பில் சொல்லப்பட்டது. தேர்தலுக்கு முன் அனைத்து கட்சிகளும் இப்படியான ‘சந்திப்பு’களை நடத்துவதுண்டு. பொதுவாக ஆதரவான, எதிரான ஊடகங்களும் இந்த சந்திப்புகளுக்கு அழைக்கப்படுவார்கள்.

இது ஒருவகையில் ஊடகங்களை ‘வளைக்கும்’ செயல்பாடு என்றாலும் ராகுல் காந்தி சந்திப்பின் வெளிப்படைத்தன்மை, மோடி சந்திப்பில் இல்லை என்பதே சர்ச்சைகளையும் சந்தேகங்களை எழுப்பிக் கொண்டிருக்கிறது. ஊடகங்களின் தனிப்பட்ட சந்திப்பு செய்தியாக்குவதில்லை அல்லது சில நேரங்களில் படங்களை மட்டும் வெளியிடுவார்கள். ராகுலின் சந்திப்பு இணைய ஊடகங்களில் செய்தியாக பதிவானது. ராகுலுடன் என்ன பேசினார்கள் என்கிற விவரமும்கூட வெளியாகியிருக்கிறது. பிரபல பத்திரிகையாளர் சேகர் குப்தா ஆசிரியராக இருக்கும் தி பிரிண்ட் இணையதளம் இதை பதிவாக்கியிருக்கிறது.

தி இந்துவின் ரீடர்ஸ் எடிட்டர் ஏ.எஸ். பன்னீர்செல்வம், இணையதளங்களில் ராகுல் பத்திரிகையாளர் சந்திப்பு வெளியானதை குறிப்பிடுகிறார். ஆனால், மோடியுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக ஊடகவியலாளர்களின் சந்திப்பு இரகசியமாக ஏன் வைக்கப்பட்டது என்கிற கேள்விக்கு அவரிடம் பதில் இல்லை. மோடி – ஊடகவியலாளர்கள் சந்திப்பு குறித்து பா.ஜ.க. தரப்பிலிருந்தும்கூட ஏன் விளக்கப்படவில்லை? நான்காண்டுகளில் பத்திரிகையாளர்களையே சந்திக்காத பிரதமர் என பெயர் பெற்ற மோடியை சந்திக்கும் வாய்ப்புப் பெற்ற தமிழக ஊடகவியலாளர்கள் ’பெருமை’யுடன் அதை பகிர்ந்திருக்கலாமே, அதை ஏன் செய்யவில்லை?  உள்நோக்கத்துடனான சந்திப்பு என சொல்ல அத்தனை வாய்ப்புகளையும் அள்ளிக் கொடுத்துவிட்டு, விளக்கமும் ஏன்? படங்களை வெளியிட்டு பிரதமரை சந்தித்தோம் என ஒற்றை வரி விளக்கத்தில் என்ன ’நம்பிக்கை இழப்பு’ ஏற்பட்டுவிடப்போகிறது?

மோடி – தமிழ் ஊடக பிரமுகர்களின் சந்திப்பு தனிப்பட்ட சந்திப்பு எனில், இது தொடர்பான புகைப்படங்கள் எப்படி வெளிவந்தன? மோடியின் அலுவலகத்தில் PMO (பிரதம அமைச்சரின் அலுவலகம்) புகைப்படக்காரர் மட்டும் எடுத்த படங்கள் தமிழக பா.ஜ.க பிரமுகர்கள் மூலம் கசிய விடவைத்தது ஏன்? ஆக அவர்கள் இவர்களை சந்திததார்கள். அதை அவர்களே ‘பெருந்தன்மையாக’ வெளியிடுகிறார்கள். பன்னீர் செல்வமோ இது தனிப்பட்ட சந்திப்பு என நமக்கு கிளாஸ் எடுக்கிறார்.

மோடி ஆட்சிக்கு வந்தபின், தங்கள் சித்தாந்தத்துக்கு ஒத்துப் போகாத பத்திரிகையாளர்களை நிறுவனங்களிலிருந்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ அழுத்தம் கொடுத்து பணிநீக்கம் செய்வது தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு வருகிறது. சமீபத்திய உதாரணம் ஏ.பீ.பி. ஊடகவியலாளர்கள் இருவரின் நீக்கம். தன்னுடைய மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி எப்படிப்பட்ட புரட்டுகளை சொல்கிறார் என தோலூரித்த செயலுக்காக அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டார்கள். இந்த விஷயம் இணைய ஊடகங்களில் பரபரப்பானபோது மோடியுடனான தமிழக ஊடகவியலாளர்களின் சந்திப்பு நிகழ்ந்தேறியது.

மோடியை சந்தித்த பெரும்பாலான ஊடகங்களின் சார்புதன்மை வெளிப்படையானது. சில ஊடகவியலாளர்கள் நடுநிலைமை பேண முயற்சிக்கலாம். அதை நடுநிலைமை என்பதைவிட சந்தர்ப்பவாதம் என சொல்வது பொருத்தமாக இருக்கும். இந்த நடுநிலையாளர்களின் ஊடக அறம் என்பது வலதுசாரித்தனத்துடன்  சமரசம் செய்துகொள்ள எப்போதும் தயாராகவே உள்ளது.

பி.ஜே.பி. கும்பலின் மிரட்டலுக்கு பயந்து ஏ.பி.பி. ஊடக முதலாளிகளால் பழிவாங்கப்பட்ட பத்திரிகையாளர்கள்: (இடமிருந்து) மிலிந்த் கொண்டேகர், புன்ய பிரசுன் பாஜ்பாய் மற்றும் அபிசார் சர்மா.

வலதுசாரி ட்ரால்களால் பாதிக்கப்படும் ஒரு செய்தியாளருக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான நீதியைக்கூட இவர்களால் பெற்றுத்தர முடிவதில்லை. நடுங்கிக் கொண்டு பாதிக்கப்பட்ட செய்தியாளரை ”வீட்டிலேயே இருந்துகொள், பிரச்சினை முடிந்ததும் வெளியே வா” என்பார்கள். ”தாலி தேவையா” என்கிற விவாத சர்ச்சை முதல் சமீபத்திய எஸ்.வி.சேகர் வீட்டில் கல்லெறிந்த ஊடகவியலாளர்கள் விவகாரம், மிகச் சமீபத்திய பெண் கடவுள் கவிதை பகிர்வு சர்ச்சை வரை பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்களை தொடர்புடைய ஊடக நிறுவனங்கள் திரையில் வரவேண்டாம் என தற்காலிக தடை விதித்தன. ட்ரால்கள் மட்டுமே இதற்கு காரணமென்றால், எந்தவொரு ஊடகவியலாளரும் பணியாற்ற முடியாது. முழுக்க முழுக்க இதன் பின்னால் இருப்பது ஊடகங்களை வெளிப்படையாக மிரட்டும் பா.ஜ.க.வினர் மீதான பயம். சார்புதன்மையுடனோ, சந்தர்ப்பவாத நடுநிலைமையுடனோ இயங்கும் ஊடகங்களால் எப்படி மக்கள் நலனை முன்னிறுத்த முடியும்?

மோடியுடனான தமிழக ஊடகவியலாளர் சந்திப்புக்கு சப்பையான விளக்கங்களை சொல்லும் ரீடர்ஸ் எடிட்டருக்கு கீழ்வரும் பத்தி எதிர் விளக்கம் தருமென நம்பலாம். “எட்வர்ட் ஸ்னோடனும் விக்கிலீக்ஸும் பரம இரகசியமாக வைக்கப்பட்டிருந்த அமெரிக்க ஆவணங்களை இணையத்தின் வழியாக மக்கள் பார்வைக்கு வைத்தார்கள். இந்த ஆவணங்களை வெளியிடக்கூடாதவை எனக் கருதி சர்வதேச ஊடகங்கள் ஒதுங்கிக் கொள்ளவில்லை. மாறாக, அந்த ஆவணங்களின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து வெளியிட்டன. ஒரு அரசாங்கத்தால் இரகசியமாக பாதுகாக்கப்பட்ட ஆவணங்களை ஏன் ஊடகங்கள் செய்தியாக்கின? ஏனெனில் அதில், மக்களின் நலன் அடங்கியிருந்தது” சமகால ஊடகங்கள் குறித்த கட்டுரை ஒன்றில் பத்திரிகையாளர் சித்தார்த் வரதராஜன் எழுதியது இது. மக்கள் நலனை முன்னிறுத்துவதா? அல்லது இரகசிய சந்திப்புகளை மூடி மறைப்பதா? எது ஊடக நெறி?

  • மு. வி. நந்தினி.

மு.வி.நந்தினி கடந்த 14 ஆண்டுகளாக தமிழின் பல இதழ்களில் பத்திரிகையாளராக பணியாற்றியிருக்கிறார். தற்போது டைம்ஸ் தமிழ் டாட் காம் இணையதளத்தின் ஆசிரியராக இருக்கிறார். சுற்றுச்சூழல், சமூகம், இந்துத்துவ அரசியல், பெண்ணியம் சார்ந்து எழுதிவருகிறார். வினவு கருத்தாடல் பகுதியில் பாரமுகம் பார்ப்போம் எனும் தலைப்பில் எழுதுகிறார்.

நூல் அறிமுகம் : ஐ.டி ஊழியர்களின் வாழ்க்கை ஜாலியா – பிரச்சினையா?

“ஐ.டி ஊழியர்களின் வாழ்க்கை ஜாலியா, பிரச்சினையா?” என்ற தலைப்பில் ஐ.டி துறையில் வேலை செய்யும் மென்பொருள், பி.பி.ஓ, கே.பி.ஓ, கால் சென்டர் ஊழியர்கள் எதிர்கொள்ளும் வேலை இழப்பு பிரச்சனை தொடர்பான சிறு நூலை பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது.

புத்தகத்தின் பெயர் : ஐ.டி ஊழியர்களின் வாழ்க்கை : ஜாலியா, பிரச்சினையா?

இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :

  • ஐ.டி துறையில் ஆட்குறைப்பு
  • நிறுவனம் நினைத்தவுடன் வேலையை விட்டு அனுப்ப முடியுமா?
  • தொழிலாளர் நலனும் நாட்டின் நலனும்
  • முதலாளி பெருசா, தொழிலாளி பெருசா?
  • எச்.ஆர் அதிகாரிகளே, திருந்துங்கள்!
  • ஆன்சைட்டும், அதிக சம்பளமும் பாதுகாப்பா?
  • அப்ரைசலை எப்படி கவனமாக கையாள வேண்டும்?
  • ஐ.டி ஊழியர்களுக்கு தொழிற்சங்கம் ஏன் தேவை?
  • நிர்வாகங்களே, ஊழியர்களே யூனியனை ஆதரியுங்கள்!
  •  ஐ.டி ஆட்குறைப்பு – நாம் அறிவாளிகளா? அப்பாவிகளா?
  • இணைப்பு : சங்கம் வைக்கும் உரிமை ஐ.டி துறைக்கும் பொருந்தும் – தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை கடிதம்

பக்கங்கள் : 64
விலை : ரூ 60

இந்த நூல் ஆங்கிலத்திலும் வெளியாகி உள்ளது.
ஐ.டி ஊழியர்களின் வாழ்க்கை , ஐ. டி. ஊழியர்கள் பிரச்சினை , ஐ.டி. ஊழியர்கள் சிறு வெளியீடு , IT Employees problem , ஐ.டி ஆட்குறைப்பு
ஐ.டி ஊழியர்களும், மாணவர்களும் புத்தகத்தின் பிரதிகளை பெற்று நண்பர்களிடையேயும், சக ஊழியர்களிடையேயும் வினியோகிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ் தெரியாத பிற மாநில ஊழியர்களுக்கு ஆங்கில நூலை வினியோகிக்கலாம்.
உங்களுக்கு தேவையான பிரதிகளுக்கு தமிழ், ஆங்கிலம் எண்ணிக்கை குறிப்பிட்டு combatlayoff@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும் அல்லது 9003009641 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

பிரதிகளுக்கான விலையை புத்தகத்தை பெற்றுக் கொண்டு ரொக்கமாகவோ, எமது சங்கத்தின் வங்கிக் கணக்கிலோ செலுத்தலாம்.

தகவல் : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (ஐ.டி. ஊழியர் சங்கம்)
தொடர்புக்கு : +91 90030 09641

பாரி சாலன் – ஹீலர் பாஸ்கர் : பெரியார் ஒரு இலுமினாட்டி என்று ஏன் நம்புகிறார்கள் ?

பாரி சாலன் இலுமினாட்டிகளை எப்படி கண்டு பிடிக்கிறார் ? பாகம் 2

ஒருவர் வதந்திகளை பரப்புவராக/நம்புவராக, கிசுகிசுக்களை நம்புவராக/பரப்புபவராக, புரணி பேசுபவராக/கேட்பவராக இருக்கும் பட்சத்தில் மற்றவரும் தங்களை போன்றே இயல்புள்ளர்கள் என்று நம்ப/கருதத் தோன்றும்.

ம்மில் சிலர் கூட சில சதியாலோசனை கோட்பாடுகளை நம்பக் கூடியவர்களாக இருப்போம். அல்லது ஒரு வேளை அது உண்மையாக இருக்குமோ என்கின்ற அளவிலாவது சிலவற்றை நம்புவோம். சதியாலோசனை கோட்பாடுகளை நாம் நம்ப விரும்புவதற்கு/நம்ப தொடங்குவதற்கு நமக்கென்று சில தர்க்கங்கள் இருக்கும்.

கடற்புலிகள், வான் புலிகள், கரும்புலிகள் என்று ஒரு ராணுவத்தை கட்டி 20 ஆண்டு காலத்துக்குமேல் சிம்ம சொப்பனமாக இருந்த புலிகளின் தலைமை மிக சாதாரணமாக ஒரு நேரடி சண்டையில் சுட்டு கொல்லப்பட்டார் என்ற தகவல் புலிகளின் ஆதரவாளர்களால் ஜீரணிக்க முடியாத தகவல். அப்பொழுது நக்கீரனில் வந்த ஒரு சிறுபிள்ளைத்தனமான கட்டுரையை நானும்கூட நம்பினேன் அல்லது நம்ப விரும்பினேன்.

Prabhakaranஏன் என்றால் தர்க்கரீதியாக அவ்வளவு சாதுர்யமான, புத்திசாலித்தனமான, வலிமையான, அனுபவமிக்க ஒரு போராளி இயக்கத்தின் தலைவர் 2 ஆண்டுகளுக்கு மேல் நடந்த சண்டையின் முடிவில் தப்பி செல்லவோ அல்லது குறைந்த பட்சம் தனது சடலம் கிடைக்காத வகையிலோ கூட செயல்படமுடியாமல் போனார் என்னும் நிகழ்வை என்னால் அப்பொழுது தர்க்கரீதியாக ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

இது போல நாம் சதியாலோசனைக் கோட்பாடுகளை நம்பத் தொடங்குவதற்கு பின்னணியில் சில தர்க்கங்கள் இயங்குகின்றன. அந்த தர்க்கங்கள் எல்லா நேரங்களிலும் உண்மைகளை அடிப்படையாகக் கொண்டவை அல்ல. சில நேரங்களில் நமது தர்க்கங்கள் நமது உணர்வுகளால் உந்தப்படுபவை. மனவியல் நிபுணர்கள் அதை மூன்று முக்கிய வகைமைகளாக பிரிக்கிறார்கள்.

  • 1) விகிதசமன் சாய்வு (proportionality bias)
  • 2) உறுதியூட்டு சாய்வு (confirmation bias)
  • 3) முன்னிறுத்து சாய்வு (projection bias)

ஒரு கிளாசிக் example…(ஒரு செவ்வியல் சான்று)

உலகத்தின் சக்தி வாய்ந்த நாடு அமெரிக்கா. உலகத்தின் சக்தி வாய்ந்த மனிதர் அமெரிக்க ஜனாதிபதி. உலகத்தின் சக்தி வாய்ந்த இராணுவம் அமெரிக்க இராணுவம். உலகத்தின் சக்தி வாய்ந்த உளவு அமைப்பு அமெரிக்க உளவு நிறுவனம். அமெரிக்க இராணுவமும் உளவு அமைப்பும் தங்களது ஜனாதிபதிக்கென்று பிரத்யேக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளன.

மிக மிக பாதுகாக்கப்பட்ட அமெரிக்க ஜனதிபதியை சுட்டு கொன்றவன் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவன். ஆனால் சதியாலோசனை கோட்பாடுகளை நம்புவர்களால் இதைத்தான் ஏற்றுக்கொள்ள முடிவதேயில்லை.

உலகிலேயே மிகவும் பாதுகாக்கப்பட்ட மனிதர் அமெரிக்க ஜனாதிபதிதான். இப்படி பட்ட அமெரிக்க ஐனாதிபதி தனது மனைவியோடு தெருவில் காரில் சென்று கொண்டிருக்கும் போது மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் 6-வது மாடியிலிருந்து 100 மீட்டர் தொலைவில் நகரும் காரில் சென்று கொண்டிருந்த கென்னடியை சரியாக இரண்டே தோட்டாக்களில் சுட்டு வீழ்த்தினார் என்பது proportionate ஆக இல்லை இல்லையா? அதாவது ஒரு நம்பமுடியாத ஆச்சர்யமான அதிர்ச்சியான சம்பவத்திற்கு காரணம் மிக மிக எளிமையான ஒன்றாக இருக்க முடியாது என்பது நமது மனதின் சாய்வு(bias).

இந்நிலையில் இந்த சதி செயலின் பின்னணியில் KGP, CIA (்சோவியத் ரசிய, அமெரிக்க உளவு நிறுவனங்கள்) எல்லாம் சம்மந்தப்பட்டிருக்கிறது என்னும் ரீதியில் உலவும் சதியாலோசனை கோட்பாடுகளில் ஒரு தர்க்கம் இருப்பதாய் நாம் உணரத் தொடங்குகிறோம். இதுதான் proportionate bias (விகிதப்படியான சாய்வு).

இரண்டாவது நமக்கு பரிச்சயமான ஒன்று. நாம் தினம் தினம் கடைபிடிக்கும் ஒன்று. திருமாவளவன் பாட்டாளி மக்கள் கட்சியை விமர்சித்து ஒரு மேடையில் பேசுகிறார். அவருடைய ஆதரவாளர்கள் அண்ணன் weight (கெத்து) காமிச்சுட்டாரு என்னும் ரீதியில் மகிழ்ச்சி அடைவார்கள்.

பெரியாரின் கொள்கைகளால் மண்டை காய்ந்து போய் உள்ளவர்கள் பெரியார் இலுமினாட்டி என்னும் சதியாலோசனை கோட்பாடுகளை இயல்பாக நம்புவார்கள். ஏனென்றால் அவர்களுக்கு ஏற்கனவே பெரியாருக்கு எதிரான சாய்வு இருக்கிறது.

அதற்கு பதில் சொல்லும் விதமாக ராமதாஸ் ஒரு மேடையில் பேசுகிறார். உடனே அவருடைய ஆதரவாளர்கள் பார்த்தில்ல…ஐயா ஐயாதான் என்பார்கள். அதவாது இரண்டு தரப்பு ஆதரவாளர்களுமே அவர்களுக்கு ஏற்கனவே இருக்கும் நம்பிக்கையை/ஆசையை/ சார்பை மேலும் பற்றிக்கொள்கிறார்கள். இதுதான் confirmation bias (உறுதியடைந்த சாய்வு).

தலைவர் பிரபாகரன் மரணச்செய்தியை தினமலர் மனமகிழ்வோடு சந்தேகத்துக்கு இடமின்றி நம்பி முதல் பக்க செய்தியாக்கிய போது அதன் ஆதரவாளர்கள் அதை முழுவதுமாக நம்பி ஏற்றுக் கொண்டார்கள். ஏனென்றால் அவர்கள் அது நிகழ வேண்டும் என்று பல வருடங்களாக காத்திருந்தவர்கள்.

ஆனால் நாம் அவர் தப்பி முக்கிய தளபதிகளோடு வேறு நாட்டில் நலமாக இருக்கிறார் என்பதையொத்த conspiracy theory-(சதிக் கோட்பாடு)களை நம்ப தொடங்கும் நிலையிலிருந்தோம். ஏனென்றால் அவர் தப்பித்திருக்க வேண்டும் என்று விரும்பினோம்.

பெரியாரின் கொள்கைகளால் மண்டை காய்ந்து போய் உள்ளவர்கள் பெரியார் இலுமினாட்டி என்னும் சதியாலோசனை கோட்பாடுகளை இயல்பாக நம்புவார்கள். ஏனென்றால் அவர்களுக்கு ஏற்கனவே பெரியாருக்கு எதிரான சாய்வு இருக்கிறது.

அறிவியல் முறைகளை அறிந்திருக்காதவர்கள், அறிந்துகொள்ளும் திறனோ/வாய்ப்போ இல்லாதவர்கள் தடுப்பூசி தேவையில்லை என்பதை நம்புவார்கள். ஏனென்றால் அவர்களுக்கு ஏற்கனவே அறிவியலுக்கு எதிரான ஒரு சாய்வு இருக்கிறது. அந்த சாய்வை ஊக்கப்படுத்தும் / உறுதிப்படுத்தும் எல்லா தகவல்களும் அவர்களுக்கு உண்மையாக தெரியும். பெரியார் தமிழர் விரோதி என்னும் உண்மையை சீமான் உற்று பார்த்து கண்டுபிடிப்பது இந்த பின்னணியில்தான்.

இறுதியாக projection bias (முன்துருத்தும் சாய்வு). நாம் நினைப்பதைத்தான் எல்லோரும் நினைத்து கொண்டிருக்கிறார்கள் அல்லது நான் நம்புவதைத்தான் எல்லோரும் நம்புகிறார்கள் அல்லது நான் செய்வதைத்தான் எல்லாரும் செய்கிறார்கள் என்று இருக்கும் ஒரு சாய்வு நிலை.

ஒருவர் வதந்திகளை பரப்புபவராக/நம்புபவராக, கிசுகிசுக்களை நம்புவராக/பரப்புபவராக, புரணி பேசுபவராக/கேட்பவராக இருக்கும் பட்சத்தில் மற்றவரும் தங்களைப் போன்றே இயல்புள்ளவர்கள் என்று நம்ப/கருதத் தோன்றும்.

இதன் காரணமாக அவர்களுக்கு தாங்கள் நம்பும் சதியாலோசனை கோட்பாடுகளை மொத்த உலகமும் நம்புவதாக, மொத்த உலகமும் அதன் மேல் ஆர்வம் கொண்டுள்ளதாக, மொத்த உலகமும் அதனை பற்றி விவாதித்து கொண்டுள்ளதாக நினைத்துக் கொள்வார்கள். இதன் விளைவாக அவர்கள் நம்பும் சதியாலோசனை கோட்பாடுகளை அவர்கள் தீர்க்கமாக நம்புவார்கள்.

why-people-believe-in-conspiracy-theories jpg
ஒருவர் வதந்திகளை பரப்புவராக/நம்புவராக, கிசுகிசுக்களை நம்புவராக/பரப்புபவராக, புரணி பேசுபவராக/கேட்பவராக இருக்கும் பட்சத்தில் மற்றவரும் தங்களை போன்றே இயல்புள்ளர்கள் என்று நம்ப/கருத தோன்றும்.

எளிமையாக சொன்னால் conspiracy theories are for losers (தோல்வியடைந்தவர்களுக்குத்தான் சதிக் கோட்பாடுகள்) என்று மனவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். தேர்தலில் தோற்கும் எல்லா கட்சியினரும் எல்லா நேரத்திலும் ஒரு சதியாலோசனை கோட்பாட்டை முன்வைக்கிறார்கள். வென்றவர்கள் ஜனநாயகம் வென்றது என்கிறார்கள்.

விளையாட்டில் எந்த நாடு தோற்கிறதோ அந்த நாட்டின் ரசிகர்கள் மேட்ச் பிக்சிங் என்று சந்தேகிக்கிறார்கள். வென்ற நாட்டின் ரசிகர்கள் சூப்பரப்பு என்கிறார்கள். நாம் எப்பொழுது பலவீனமாக, தனிமையாக, குழப்பமாக, விரக்தியாக, தோல்வியுற்று நிற்கிறோமே அப்பொழுது தான் நாம் ஒரு சதியாலோசனை கோட்பாடை பற்றி கொள்கிறோம்.

14-ம் நூற்றாண்டை சேர்ந்த தத்துவ அறிஞர் வில்லியம் முன்வைத்த கோட்பாட்டின் பெயர் Occam’s razor principle. இந்த கோட்பாட்டின் படி எல்லா சிக்கலான கேள்விகளுக்கும் பெரும்பாலான சமயங்களில் மிக மிக எளிமையான பதிலே சரியான விடையாகியிருக்கும் என்பதே.

உதாரணத்திற்கு மிக மிக பாதுகாக்கப்பட்ட அமெரிக்க ஜனாதிபதியை சுட்டுக் கொன்றவன் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவன் என்ற மிக சாதாரணமான சுவாரஸ்யமற்ற பதிலே சரியாக இருக்க வாய்ப்புகள் மிக அதிகம். ஆனால் சதியாலோசனைக் கோட்பாடுகளை நம்புபவர்களால் இதைத்தான் ஏற்றுக்கொள்ள முடிவதேயில்லை.

எளிமையாக சொன்னால் conspiracy theories are for losers (தோல்வியடைந்தவர்களுக்குத்தான் சதிக் கோட்பாடுகள்) என்று மனவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள்.

பொதுவாக பல்வேறு சோதனைகளின் மூலம் அடிப்படையான கணிதம், தர்க்கம், அறிவியல் கோட்பாடுகள் போன்றவற்றில் இளம்பிராயத்திலேயே பயிற்றுவிக்கப்பட்டர்வர்கள் சதியாலோசனை கோட்பாடுகளை பெரும்பாலும் நம்புவதில்லை என்று மனவியல் ஆய்வுகள் நிறுவுகின்றன.

அதே நேரத்தில் மெத்த படித்த மேதாவிகள் பலரும் சதியாலோசனைக் கோட்பாடுகளை நம்புகிறவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனாலும் கல்வியறிவு பெற்றவர்கள் சதவிகித அடிப்படையில் சதியாலோசனைக் கோட்பாடுகளை குறைவாகவே நம்புகிறார்கள்.

குழந்தை பருவத்தில் ஏற்படும் மனரீதியான பாதிப்புக்குள்ளானவர்கள், புறக்கணிப்புக்குள்ளானவர்கள், தனித்து விடப்பட்டவர்கள் மத்தியிலும் சதியாலோசனை கோட்பாடுகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. மேல் சொன்னவைகள் எல்லாம் ஏன் சிலருக்கு அல்லது நமக்கு சில நேரங்களில் நாம் ஏன் சில சதியாலோசனை கோட்பாடுகளில் ஒரு தர்க்கம் இருப்பதாய் உணர்கிறோம் என்பதை புரிந்து கொள்ள உதவியிருக்கும்.

எல்லா சதியாலோசனைக் கோட்பாடுகளும் பொய் என்று ஒதுக்குவது சரியா?
பாரிசாலனுக்கு ஏன் எளிமையான உண்மைகள் கூட புரிவதில்லை?

எப்பொழுதும் எல்லா பேட்டிகளிலும் பாரிசாலன் சொல்வதே சரி என்பது போன்ற தோற்றம் ஏன் ஏற்படுகின்றது?

ப. ஜெயசீலன், சமூக-அரசியல் விமர்சகர்.
நன்றி : தி டைம்ஸ் தமிழ்

முந்தைய பாகம் :
பாரிசாலன் – ஹீலர் பாஸ்கர்கள் இலுமினாட்டிகளை எப்படி சமைக்கிறார்கள் ?