Saturday, August 16, 2025
முகப்பு பதிவு பக்கம் 190

நெதர்லாந்து நூலகத்தில் புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் இதழ்கள் !

மிழ் பேசும் புரட்சிகர, ஜனநாயக சக்திகளின் அரசியல் வெளியில், சுமார் 36 ஆண்டுகளாக மிகப்பெரும் பங்கை செலுத்திவரும் மார்க்சிய – லெனினிய அரசியல் ஏடாக புதிய ஜனநாயகம் திகழ்ந்து வருகிறது. பிற்போக்கு, சந்தர்ப்பவாத, பிழைப்புவாத அரசியல் சக்திகளை அரசியல் அரங்கில் அம்பலப்படுத்தி – முடமாக்கி மக்கள் மத்தியில் புரட்சிகர அரசியல் பாதையை பிரச்சாரம் செய்வது புதிய ஜனநாயகத்தின் முக்கியமான பங்களிப்பு.
விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் ஈழத் தமிழர் விடுதலை பற்றிய சரியான பார்வை; 90-களில் அமல்படுத்திய மறுகாலனியாக்கக் கொள்கையின் அரசியல் – பொருளாதார விளைவுகள்; பார்ப்பன பாசிச பேரபாயம் ஆகியவை தொடர்பாக புதிய ஜனநாயகம் எழுதிய கட்டுரைகள் அரசியல் அரங்கில் உள்ள அறிவுத்துறையினர் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவை. தற்போது, காவி – கார்ப்பரேட் பாசிசத்தின் பலமுனைத் தாக்குதல்களை அம்பலப்படுத்தியும், பாசிசத்தை முறியடிப்பது பற்றி சரியான மார்க்சிய – லெனினியக் கண்ணோட்டத்தைக் கொடுக்கும் வகையிலும் எழுதி வருகிறது.
படிக்க :
புதிய ஜனநாயகம் டிசம்பர் – 2021 அச்சு இதழ் !
புதிய ஜனநாயகம் டிசம்பர் 2021 மின்னிதழ் !
அரசியல் தளத்தில் புதிய ஜனநாயகம் மேற்கொண்ட பிரச்சாரப் பணியை, பண்பாட்டு தளத்தில் செய்தது புதிய கலாச்சாரம் இதழ். பேச்சு, காட்சி, கேள்வி, உணர்ச்சி, நுகர்ச்சி என அனைத்தின் வழியாகவும் ஆளும் வர்க்கப் பண்பாடு பரந்துபட்ட மக்கள் மீது திணிக்கப்பட்டுக் கொண்டிருக்கையில் அதை திரைகிழித்து உழைக்கும் வர்க்கம் தனது சொந்த (மார்க்சிய – லெனினிய) பார்வையைப்பற்றி நிற்பதற்கு துணை செய்தது புதிய கலாச்சாரம்.
புதிய ஜனநாயகம் மற்றும் புதிய கலாச்சாரத்தின் புரட்சிகர பிரச்சாரப் பணியை தமது பணியாக நினைத்து தோள்கொடுத்து உதவிய பல ஆதரவாளர் தோழர்கள் இல்லையேல் இவை எதுவும் சாத்தியமாகியிருக்காது. அந்தவகையில் புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் ஏடுகளை ஐரோப்பிய நாடுகளுள் ஒன்றான நெதர்லாந்து வரை கொண்டு சேர்த்திருக்கிறார் தோழர் கலையரசன்.
நெதர்லாந்தில் வசிக்கக்கூடிய ஈழத்தமிழரான கலையரசன் இடதுசாரி ஆதரவாளராவார். வினவு வாசகர்களுக்கு கலையரசனை பற்றி புதிதாக அறிமுகம் கொடுக்கத் தேவையில்லை. கலையகம் என்ற அவரது வலைப்பூவில் அவர் எழுதும் முக்கியத்துவமிக்க கட்டுரைகளை நமது தளத்திலும் மீள்பிரசுரம் செய்திருக்கிறோம்.
புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் இதழ்களை அஞ்சல் சந்தா மூலம் பெற்று வாசித்து வந்த அவர், தனது பிரதியை நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலுள்ள நூலகம் ஒன்றிற்கு அன்பளிப்பாக வழங்கிவந்திருக்கிறார். அந்நூலகம் அவற்றை ஆவணப்படுத்தி பாதுகாத்து வருகிறது. தோழரின் இந்த அரசியல் முன்முயற்சியையும் தோழமையுணர்வையும் எண்ணி நாம் பூரிப்படைகிறோம்.
இதுதொடர்பாக, தோழர் கலையரசன் தமது வலையொலியில் வெளியிட்ட காணொலி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய ஜனநாயகம்

பெண் தொழிலாளர்களின் போராட்டத்தை எதிர்ப்பவர்களும் அவதூறு செய்பவர்களும்  யார்?

திரு. அருள் எழிலன் அவர்களே நீங்கள் யார் பக்கம்?
பாக்ஸ்கான் மறியல் – நாம் தமிழர், இடதுசாரிகள், சில அரசு ஊழியர்கள் பரப்பிய வதந்தி!” என்ற தலைப்பில் பத்திரிகையாளர் திரு. அருள் எழிலன் அவர்கள் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
வட இந்தியாவில் மதக்கலவரங்கள் பரவுவதற்கு வதந்திகள் காரணமாக இருக்கின்றன. இங்கே தங்கள் அரசியல் மாறுபாடுகள் உள்ளவர்கள் வஞ்சம் தீர்த்துக் கொள்வதற்கு வதந்திகளை பரப்புகிறார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்.
மேலும், குறைந்த கூலிக்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் சிலருக்கு தரமற்ற உணவுகள் கொடுக்கப்பட்டதாகவும் அது அவர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தியதாகவும் அது ஆலைவாயில் போராட்டமாக இருந்ததாகவும் தெரிவிக்கிறார்.
போராடியவர்களில் 8 பேரை போலீசார் கொண்டு சென்று கொன்று விட்டதாக வதந்தி பரவியதால் பலமணிநேரம் சாலைகள் முடங்கியதையும் குறிப்பிடுகிறார்.
படிக்க :
இயந்திரமயமாக்கம் பெயரில் தொழிலாளிகளைக் கொல்லும் ஃபாக்ஸ்கான்!
ஃபாக்ஸ்கான் பயங்கரவாதம் – நேரடி ரிப்போர்ட்
இடதுசாரிகள் எனப்படுவோர் இப்போதும் இந்த வதந்தியை பரப்புவதாகவும் அவர்களில் சிலர் அரசு ஊழியர்களாக இருப்பதாகவும் தெரிவித்து போலீசுக்கு போட்டு கொடுக்கின்ற வேலையையும் சிறப்பாக செய்கிறார்.
வட இந்தியாவில் நடைபெறும் பார்ப்பன பாசிச சக்திகளின் திட்டமிட்ட கலவரத்தையும் பன்னாட்டு நிறுவனமான பாக்ஸ்கான்-க்கு எதிரான பெண் தொழிலாளர்களின் வீரம் செறிந்த போராட்டத்தையும் ஒன்றாகச் சமப்படுத்துவதன் மூலம் அவர் யார் பக்கம் நிற்கிறார் என்பது அவருக்கே வெளிச்சம்.
வதந்திகளை பரப்பியதாக கூறும் மேற்கண்ட அமைப்புகளை சேர்ந்தவர்களை கைது செய்ய வேண்டும்  என்பதுதான் அவர் வைக்கும் மறைமுகமான கோரிக்கை.
திரு அருள் எழிலன் முகநூல் பதிவு
அந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாகத்தான் சி.ஐ.டி.யூ. தோழர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். பொது நல மாணவர் எழுச்சி இயக்கத்தின் தலைவரான தோழர் வளர்மதியை டிசம்பர் 18 முதல் போலீசு நிலையத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டு இருக்கிறார்.
பெண் தொழிலாளர்களின் போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல் செழியன், இந்தப் போராட்டத்திற்கு அடிப்படை காரணம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் சுரண்டலும் திமுக அரசின் அடக்குமுறையும்தான் என்பதைத் தெளிவாக தெரிவித்திருக்கிறார்.
10 பேர் தங்கக் கூடிய அறையில் 20 பேர் வலுக்கட்டாயமாக தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். 20 பேருக்கு ஒரு கழிவறை என்றால் எப்படி அங்கே இருக்க முடியும்? இப்படி ஒரு சூழலில் நாம் இருந்திருந்தால் எப்படி ஒரு முறையான போராட்டத்தை நடத்த முடியும்? 8 மணி நேர வேலை 8 மணி நேர ஓய்வு 8 மணி நேர உறக்கம் என்ற எதுவும் முறையாக இல்லாத இந்தச் சூழலில் சமூகத்தில் முறையான பண்பாட்டையும் முறையான ஒரு போராட்டத்தையும் எதிர்பார்ப்பது தான் அறிவீனம்.
இன்று காலையில் சி.ஐ.டி.யூ.வின் தோழர்கள் பலர் போலீசார் கடுமையாக தாக்கப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டிருப்பதாக அதிகாரபூர்வமான தகவல்கள் வந்திருக்கின்றன. பெண் தொழிலாளர்களை பாலியல் ரீதியாக போலீஸ் தாக்கியதாகவும் இதற்கு காரணமான மாவட்ட எஸ்.பி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அச்சங்கம் வலியுறுத்தி இருக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு தொழிற்சாலையில் நூற்றுக்கு மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் தரம் கெட்ட உணவினால் உடல் நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். அவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் சிலர் இதுவரை விடுதிக்குத் திரும்பவில்லை. அவர்களை தொடர்பு கொள்ளவும் நிர்வாகம் அனுமதிக்கவில்லை.
இதுதான் தொடக்கப் பிரச்சனை. மையமான பிரச்சனை என்பது ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் சுரண்டலும் பெண் தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் இடத்தின் அவல நிலையும் தான்.
பெண் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதே இப்பிரச்சனை தொடர்பாக முறையாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் அடுத்த நடவடிக்கையை தொழிலாளர்கள் வேறு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருந்திருக்காது.
தரமற்ற உணவு வழங்கிய விடுதி மேலாளர் அப்பொழுதே கைது செய்யப்பட்டிருந்தால் இதற்கு காரணமான பாக்ஸ்கான் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் வதந்தியை பரப்பி இருந்தாலும் ஏன் இந்த பிரச்சனை எழுகிறது?
போராடும் பெண் தொழிலாளர்கள் அத்துமீறும் போலீசு
பெண் தொழிலாளர்களின் நீடித்த அந்தப் போராட்டம், தமிழக அரசிடமும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்திடமும் “மருத்துவமனையில் உள்ள பெண் தொழிலாளர்களுக்கு எவ்வித பிரச்சனை ஏற்பட்டாலும் அதற்கு தாங்களே பொறுப்பு” என்று எழுதி வாங்கி இருக்கிறது. இதுதான் தமிழக தொழிலாளி வர்க்கம் கற்றுக்கொள்ள வேண்டியது ஆகும்.
போராடுகின்ற தொழிலாளர்கள் ஆங்காங்கே போராடுகிறார்கள் என்பதும் ஒரு முறைக்குள் வரவில்லை என்பதும் பலரும் சொல்லுகின்ற குற்றச்சாட்டு.
தொழிலாளர்கள் பல இடங்களில் பிரித்து தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் கிராமத்திலிருந்து வந்தவர்கள், விவரம் ஏதும் பெரிய அளவில் அறியாதவர்கள்.
தொடர்ச்சியாக அடக்குமுறைகளுக்கு ஆளாக்கப்பட்டு எரிமலையாய் வெடித்தார்கள். அவர்கள் ஆங்காங்கே தங்களுக்கு தெரிந்த செய்தியை வைத்துக் கொண்டு போராட துவங்குகிறார்கள். அந்த பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டிய தமிழக அரசும் நிறுவனமும் அதை அடக்குமுறையாக கையாண்டதன் விளைவாகத்தான் சாலைகளையும் முடக்கினார்கள். முறையற்ற வகையில் அரசும் நிறுவனமும் நடந்து கொண்டதற்கு எதிர்மறையாகவே முறையற்ற போராட்டம் துவங்குகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அது ஒன்றும் மன்னிக்க முடியாத குற்றம் அல்ல, கற்றுக்கொள்ள வேண்டிய படிப்பினை அவ்வளவுதான்.
தொழிற்சங்க வரலாற்றையும் தொழிற்சங்க உரிமைகளையும் கற்றுத் தேர்ந்து அந்தத் தொழிலாளி வர்க்கம் பாட்டாளி வர்க்க விடுதலைக்கு முன்னணியில் நிற்க வேண்டிய அவசியத்தையும் தொழிலாளர்களுக்கு தொழிலாளி வர்க்க உணர்வை ஊட்டுவது தொழிற்சங்கத்தின் கடமை என்பதையும் இந்த போராட்டம் உணர்த்துகிறது.
முதல்வராக பொறுப்பேற்பதற்கு முன்பு பிரச்சனை என்றால் எல்லா இடங்களுக்கும் ஓடிச்சென்று ஆதரவளித்த  மு.க. ஸ்டாலின், இங்கே வந்திருக்க வேண்டியதுதானே.
அவ்வேளையில் அவரோ பங்காரு அடிகளாருக்கு சால்வை போர்த்திக்கொண்டிருந்தார். இதைப்பற்றி அருள் எழிலன் போன்றவர்கள் ஏன் எழுதுவதில்லை.
எரிமலை வெடிப்பதற்கு ஒருபோதும் வதந்திகள் பயன்படுவதில்லை. இதெல்லாம் தெரியாதவர்கள் அல்ல, பெண் தொழிலாளர்களின் போராட்டத்தை எதிர்ப்பவர்களும் அவதூறு செய்பவர்களும்  யார்? அவர்களின் நோக்கம் திமுக அரசின் மீது எவ்வித குறையும் யாரும் சொல்லிவிடக் கூடாது என்பது மட்டுமல்ல. இந்த அரசின்,  ஆளும்வர்க்கத்தின் தூண்களாகவேத்தான் இருக்கிறார்கள்.
பாசிசத்தை வீழ்த்த திமுக-வுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று பலரும் தங்கள் வேட்டி சட்டை எல்லாம் காற்றில் பறக்க விட்டுவிட்டு விழுந்து விழுந்து வாக்கு சேகரித்தார்கள். தேர்தல் புறக்கணிப்பு என்று கூறிவந்தவர்களில் சிலர் கூட தேர்தலில் பங்கேற்பதன் அவசியத்தை வலியுறுத்தி வலியுறுத்தி திமுக-வின் வாயாகவே மாறி போனார்கள்.
பாசிசம் என்றால் என்ன? அரசு என்றால் என்ன? அது யாருக்கு செயல்படும் என்பதைப் பற்றியெல்லாம் தெரியாதவர்கள். கடவுள் மீதான மூடநம்பிக்கை போல வேறுவழியில்லை என இந்த அரசின் மீது நம்பிக்கை வைத்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள்.
கடந்த ஏழு மாத கால ஆட்சியில் மக்களின் போராட்டங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. திமுக-வுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று பிரச்சாரம் செய்தவர்கள் எல்லாம் விழிபிதுங்கி நிற்கிறார்கள்.
அன்றாடம் மக்கள் பாதிக்கப்படும் பிரச்சனையைப் பற்றி பேசாமல் திமுக அரசை எப்படி காப்பாற்றுவது என்பதையே அனுதினமும் யோசித்துக் கொண்டிருக்கும் அவர்களுக்கு,  பெண் தொழிலாளர்களின் இந்த போராட்டம் கொடுத்த அச்சமே இப்படி எல்லாம் அவர்களை சிந்திக்க வைக்கிறது.
படிக்க :
ஸ்டான் சுவாமி மரணம் : மோடி அமித்ஷா நடத்திய படுகொலையே || தோழர் மருது நேர்காணல்
கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் ? || தோழர்கள் மருது – சுரேசு சக்தி முருகன் உரை || வீடியோ
எழும்பூர், கொளத்தூர், வள்ளுவர் கோட்டம் போன்ற இடங்களில் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அகற்றப்படும் மக்களின் போராட்டங்கள் அரசை நாறடிக்கச் செய்திருக்கும் இந்த சூழலில்தான், பாக்ஸ்கான் போராட்டம் எரிமலையாய் வெடித்து இருக்கிறது.
தாங்கள் தோற்றுப்போனதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள்.
அதற்கு ஆர்.எஸ்.எஸ்., பாஜக, கலவரங்கள், நாம் தமிழர் என்ற வரிசையில் இடதுசாரிகளையும் சேர்த்து தங்கள் ஆளும் வர்க்க வெறிக்காக வஞ்சம் தீர்த்துக் கொள்கிறார்கள்.
நெருக்கடியான காலகட்டங்களில் ஒவ்வொருவரும் யார் என்பதை வரலாறு அறிவிக்கிறது. தான் ஒரு சாதி வெறியன்தான் என்பதை கண்மணி குணசேகரன் தெரிவித்தார்.
அருள் எழிலன் அவர்களோ தான் ஆளும் வர்க்கத்துக்கானவர் என்பதை அறிவித்திருக்கிறார்.
“கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே” தோழர் மாவோ சொன்னது மீண்டும் நிரூபிக்கப்படுகிறது.
ஒவ்வொரு சொல்லுக்கு பின்னும் வர்க்கம் இருக்கிறது என்று சும்மாவா சொன்னார்கள்.

மருது
செய்தித் தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்.

காஷ்மீரில் தொடரும் ஒடுக்குமுறைகளும், அமித்ஷாவின் பொய்யுரைகளும் !

ம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்புரிமை வழங்கும் பிரிவு 370 மற்றும் 35A சட்டங்களை கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இரத்து செய்ததுடன் அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக துண்டாடியது மோடி – அமித்ஷா கும்பல். அம்மாநிலத்தின் மற்றொரு பகுதியான லடாக்-ஐ ஒன்றிய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள யூனியன் பிரதேசமாகவும் அறிவித்தது.
ஜம்முவின் ஸ்ரீநகரில் அமித்ஷா நடத்திய பொதுக்கூட்டம்.
அதனைத் தொடர்ந்து அங்கு எழுந்த மக்கள் எதிர்ப்பை முடக்குவதற்காக இராணுவ ஒடுக்குமுறையை அதிகரிப்பது, இணைய முடக்கம், அரசியல் தலைவர்களை கைது செய்வது, வீட்டுக் காவலில் வைப்பது, பத்திரிகைகளை கடுமையான தணிக்கைக்கு உட்படுத்துவது, ஊபா, பொதுப்பாதுகாப்புச் சட்டம் போன்ற கொடூரச் சட்டங்களின்கீழ் அப்பாவிப் பொதுமக்களை கைது செய்வது என காஷ்மீரை நரகமாக்கிய மோடி, ‘புதியதொரு காஷ்மீர்’ பிறந்திருப்பதாக கொஞ்சமும் கூச்சமின்றி பேசினார்.
காஷ்மீர் முடக்கப்பட்டு, இரண்டாண்டுகள் கழித்து, முதன்முதலாக கடந்த அக்டோபர் மாதம் காஷ்மீருக்கு மூன்றுநாள் (23, 24, 25) பயணமாகச் சென்ற அமித்ஷா ‘‘ஜம்மு காஷ்மீர் ஓரங்கட்டப்பட்ட காலம் முடிந்துவிட்டது, இனி அது வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும்’’ என முழங்கியதோடு ‘‘பிரிவு 370 இரத்துக்குப்பின் ஒரு நோக்கம் இருந்தது, அது ஜம்மு – காஷ்மீர் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட லடாக் ஆகியவற்றை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வது பற்றியது. 2024-ம் ஆண்டிற்குள் எங்கள் முயற்சியின் பயனை நீங்கள் காண்பீர்கள்’’ என பேசியுள்ளார்.
படிக்க :
குற்றத் தலைநகரம் டெல்லி : அமித்ஷாவின் டெல்லி போலீசு இலட்சணம் !
விரைவில் சி.ஏ.ஏ. சட்டங்களை அமல்படுத்தப் போவதாக அமித்ஷா பேச்சு
காஷ்மீருக்கு விரைவில் சட்டமன்றத் தேர்தலை நடத்தவிருப்பதாகவும் மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்போவதாகவும் தெரிவித்த அமித்ஷா, சிறப்புச் சட்டம் இரத்து செய்யப்பட்ட பிறகு பயங்கரவாதம் எப்படி கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது, காஷ்மீரில் என்னென்ன ‘வளர்ச்சிப் பணிகள்’ நடந்துவருகிறது, இளைஞர்களுக்கு எவ்வளவு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கிறது என புள்ளிவிவரத்தோடு ஒப்பிக்க ஆரம்பித்தார்.
அவர் பேசியதை காஷ்மீரிகளல்லாதவர்கள் அல்லது களநிலவரம் தெரியாதவர்கள் யாராவது கேட்டிருந்தால் நிச்சயம் அதில் சொக்கிப்போகலாம். ஆனால் காஷ்மீரின் உண்மை நிலவரம் என்ன? அமித்ஷாவின் காஷ்மீர் பயணத்தின் நோக்கம் என்ன? அமித்ஷாவின் காஷ்மீர் பயணம் அச்சத்தின் வெளிப்பாடு என்பதையும் அவரது பேச்சுக்கள் அனைத்தும் புகழ்மிக்க பொய்யுரைகள் என்பதையும்தான் காஷ்மீரின் களநிலவரம் நமக்கு உணர்த்துகிறது.
காஷ்மீரை சிறைவைத்து ‘வெளிப்படையாக’ பேசிய அமித்ஷா
பயணத்தின் கடைசிநாளில், ஸ்ரீநகரில் தாம் பங்கேற்ற கூட்டமொன்றில், மேடையில் தமக்கு முன்பு பொருத்தப்பட்டிருந்த குண்டு துளைக்காத கவசத்தை நீக்கச் சொல்லிவிட்டு பேசிய அமித்ஷா, ‘‘நான் காஷ்மீர் மக்களுடன் மனம்திறந்து பேசவிரும்புகிறேன். என்னைக் கிண்டல் செய்தார்கள், கண்டனம் செய்தார்கள். இன்று நான் உங்களிடம் வெளிப்படையாகப் பேச விரும்புகிறேன். அதனால்தான் இங்கு குண்டு துளைக்காத கவசமும் இல்லை. பாதுகாப்பும் இல்லை. நான் உங்கள் முன் இப்படி நிற்கிறேன்’’ என்று தன் உரையைத் தொடங்கினார்.
குண்டு துளைக்காத கண்ணாடியை நீக்க உத்தரவிட்டதைச் சுட்டிக்காட்டி சங்க பரிவாரத்தினர் கொண்டாடினர். அவ்வளவு பெரிய தைரியசாலியா அமித்ஷா? உண்மை என்னவென்றால், அமித்ஷா காஷ்மீருக்கு வருவதற்கு முன்பே அங்கு வெகுவாக பாதுகாப்பு  பலப்படுத்தப்பட்டுவிட்டது. காஷ்மீர் முழுவதும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) உலாவத் தொடங்கின. நகரில் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டன. இருசக்கர வாகனங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. சந்தைக்கு சென்றவர்கள் கூட சந்தேகக் கண்ணோடு பார்க்கப்பட்டனர். கல்லெறிந்தவர்கள், ‘தீவிரவாதிகளின்’ உறவினர்கள் என்று காரணம் காட்டி கிட்டத்தட்ட 900 பேர் வரை போலீசால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பலரும் கைது செய்யப்பட்டனர். பலர் காஷ்மீருக்கு வெளியே உள்ள சிறைகளுக்கு மாற்றப்பட்டனர். இப்படி மொத்த காஷ்மீரையும் சிறை வைத்துவிட்டுதான் சிறிய கண்ணாடி கவசத்தை விட்டு வெளியேற துணிந்தார் ‘மாவீரர்’ அமித்ஷா. என்ன இருந்தாலும் ‘வீர’ சாவர்க்கர் பரம்பரை அல்லவா?
ஜம்மு பகுதியில், அம்பானி நூறு ரிலையன்ஸ் சில்லறை வணிகக் கடைகளை திறந்துள்ளதற்கு எதிராக போராடும் சிறு வணிகர்கள்.
மேலும் பேசிய அமித்ஷா, தாம் இளைஞர்களுடன் நட்பு நாடி வந்திருப்பதாகவும் காஷ்மீர் இளைஞர்கள் மோடி அரசுடன் ஒத்துழைத்தால் பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டலாம் என்று கூறினார். இந்திய இராணுவத்தின் துப்பாக்கி முனையில் காஷ்மீர் இளைஞர்களை நிறுத்தி வைத்து அவர்களிடம் நட்பு பாராட்டுவதாகத் தெரிவித்திருப்பதெல்லாம் வக்கிரத்தின் உச்சம்.
அமித்ஷாவின் காஷ்மீர் வருகை சமயத்தில்தான், T-20 கிரிக்கெட் போட்டியில், இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பெற்ற வெற்றியை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கொண்டாடியதாகக் குற்றம்சாட்டப்பட்டு மாணவர்கள் மீது, ஊபா கொடுஞ்சட்டம் பாய்ச்சப்பட்டது. இந்தியாவின் தோல்வியைக் கொண்டாடியதன் மூலம் அமித்ஷா கோரியபடி இந்திய (மோடி) அரசிடம் ‘ஒத்துழைத்துப் போவதற்கோ’, ‘நட்பு செய்வதற்கோ’ காஷ்மீர் இளைஞர்கள் தயாரில்லை என்பதை தங்களது செயலால் காரி உமிழ்ந்து சொல்லிவிட்டார்கள்.
காஷ்மீர் இளைஞர்கள் மீது ஊபா சட்டத்தைப் பாய்ச்சியதைதான் ‘மனம் திறந்து’ பேச விரும்புகிறார் போலும் என அமித்ஷாவை ஜம்மு – காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி கேலி செய்துள்ளார்.
போராடியவர்களுக்கும் எதிர் கருத்து தெரிவிப்பவர்களுக்கும் எதிராக மட்டுமல்ல, பத்திரிகையாளர்களுக்கும் எதிராக ஊபா சட்டம் பாய்ச்சப்பட்டுள்ளது. காஷ்மீர் மக்களின் இரண்டாண்டு வாழ்க்கையை முடக்கிய பாஜக – சங்க பரிவாரக் கும்பலின் மீது காஷ்மீர் இளைஞர்கள் கடும் கோபத்தில் இருக்கும் நிலையில் இளைஞர்களிடம் நட்பு நாடி வந்திருப்பதாக அமித்ஷா கூறுவதே கேலிக்கூத்து!
பயங்கரவாதம் ஒழியவில்லை…. புதிய வடிவில் பிறப்பெடுத்திருக்கிறது!
தாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு காஷ்மீரில் பயங்கரவாதம் கடுமையாக ஒடுக்கப்பட்டிருப்பதாகப் பேசிய அமித்ஷா, 2004 – 2014 வரையிலான பத்தாண்டுகளில் 2,081 பொதுமக்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதாகவும் பாஜக ஆட்சிக்கு வந்த 2014 முதல் செப்டம்பர் 2021 வரை அது 239-ஆகக் குறைந்துள்ளதாகவும் அதாவது ஆண்டுக்கு 208 பேர் என இருந்த உயிரிழப்பு தற்போது ஆண்டுக்கு 30 பேர் என குறைந்துள்ளதாகவும் புள்ளிவிவரம் கொடுக்கிறார். ஆனால், கடந்த அக்டோபர் மாதம் அமித்ஷாவின் காஷ்மீர் வருகையின்போது அங்கு நிலவிய சூழல் ‘பயங்கரவாதத்தை ஒடுக்கிவிட்டதாகக்’ கூறும் அவரின் அண்டப் புளுகுகளை அம்பலப்படுத்துகிறது.
காஷ்மீரில் பயங்கரவாதம் புதிய வடிவில் பிறப்பெடுத்திருக்கிறது. சிறுபான்மை இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் காஷ்மீரிகள் அல்லாத புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளிட்ட சாதாரண பொதுமக்கள், எதிர்ப்பு முன்னணி (The Resistance Front) என்ற பெயரில் புதிதாக உருவாகியுள்ள பயங்கரவாதக் குழுவினரால் குறிவைத்துக் கொல்லப்படுகிறார்கள். இந்த ஆண்டு (2021) மட்டும் சுமார் 31 பேரும் குறிப்பாக அமித்ஷா காஷ்மீருக்கு வந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 11 பொதுமக்களும் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
ஆதிக்கசாதி இந்துக்களான காஷ்மீரி பண்டிட்டுகள், பாஜக-வின் சமூக அடித்தளமாக இருப்பவர்கள். இதுபோன்ற சம்பவங்களால் அச்சமுற்ற பண்டிட்டுகளும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் கூட்டம் கூட்டமாக காஷ்மீரைவிட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை இராணுவத்தினர் மீது மட்டுமே நடத்தப்பட்டு வந்த பயங்கரவாதத் தாக்குதல், தற்போது சிறுபான்மையினரை (பொதுமக்களை) குறிவைத்துக் கொல்வது என நூதன வடிவெடுத்துள்ளது. இதுபோன்றதொரு எதிர்வினையை சமாளிக்க முடியாமல் திணறிவருகிறது இராணுவம்.
எதிர்ப்பு முன்னணியின் படுகொலைகளுக்குப் பிறகு, பயங்கரவாதிகளைப் பிடிக்கிறேன் என இராணுவம் நிகழ்த்தும் அட்டூழியங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. கண்ணில்படும் அப்பாவி காஷ்மீரிகளை சுட்டுக் கொன்றுவிட்டு, ‘பயங்கரவாதிகள் சுட்டுப் பிடிக்கப்பட்டனர்’ என போலி மோதல் படுகொலைகளை அரங்கேற்றி வருவதாக அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.
‘சிறுபான்மையினரை குறிவைத்துக் கொல்லுதல்’ என்ற பயங்கரவாத வடிவம் 1990-களை நினைவுபடுத்துகிறது என்கின்றன பத்திரிகைகள். 1990-களில், காஷ்மீரிலுள்ள மத அடிப்படையிலான பயங்கரவாதக் குழுக்கள் காஷ்மீர் பண்டிட்டுகளைக் குறிவைத்துக் கொன்றனர். காஷ்மீரை விட்டு அவர்கள் வெளியேற வேண்டும் என மிரட்டல் விடுத்தனர். 1990 – 1992-க்கு இடைப்பட்ட காலத்தில், சுமார் 70,000 பண்டிட்டுகள் காஷ்மீரை விட்டு வெளியேறினர். தற்போது அந்தச் சூழல் மீண்டும் உருவாகிவிடுமோ என்று அச்சம் நிலவுகிறது.
இந்த சூழலில்தான், காஷ்மீரை சாந்தப்படுத்துவதற்காக சில அறிவிப்புகளை வெளியிடவும் தனது அடித்தளமாக உள்ள பண்டிட்டுகளுக்கு ஆறுதலளிப்பதற்காகவும் மூன்றுநாள் பயணத்தை திட்டுமிட்டுக் கொண்டார் அமித்ஷா.
30 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது, மீண்டும் அப்படியொரு பயங்கரவாதக் குழு  தலையெடுத்திருக்கிறதென்றால் அதற்கு மோடி – அமித்ஷா தலைமையிலான பாஜக அரசுதான் காரணம். சிறப்புச் சட்டம் இரத்து செய்யப்பட்ட பிறகுதான் எதிர்ப்பு முன்னணி (TRF) என்ற பயங்கரவாதக் குழு உருவாகியிருக்கிறது. சிறுபான்மையினர் மீதான படுகொலைக்குப் பொறுப்பேற்றிருக்கும் எதிர்ப்பு முன்னணி, ‘‘நாங்கள் அப்பாவிப் பொதுமக்கள் யாரையும் கொல்லவில்லை, ஆர்.எஸ்.எஸ். கைக்கூலிகளைத்தான் கொல்கிறோம்’’ என்று நியாயம் சொல்கிறது. ஆனால், எதிர்ப்பு முன்னணி கொன்றவர்கள் எல்லோரும் ஆர்.எஸ்.எஸ். பிரதிநிதிகள் இல்லை. பிற மாநிலங்களில் இருந்து பணிக்காக அங்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்களை உள்ளடக்கிய சிறுபான்மையினர் கொல்லப்பட்டிருந்தார்கள். ‘‘காஷ்மீருக்கு வந்து குடியேறும் அனைவரையும் நாங்கள் ஆர்.எஸ்.எஸ். கைக்கூலிகளாகத்தான் கருதுவோம்’’ என்று காரணம் சொல்கிறது எதிர்ப்பு முன்னணி.
இத்தகைய பயங்கரவாதக் குழுக்கள் உருவாகுவதற்கான அடித்தளத்தை மோடி அரசு இந்த இரண்டாண்டுகளில் பல்வேறு சட்டங்கள் மூலம் அடித்தளமிட்டிருக்கிறது. காஷ்மீர் சிறப்புச் சட்டம் இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு சட்டங்கள் அங்கு திருத்தப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, 15 ஆண்டுகள் காஷ்மீரில் வசிக்கும் இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கலாம் என்ற சட்டத்திருத்தம், காஷ்மீரில் யார் வேண்டுமானால் நிலம் வாங்கலாம் என்ற சட்டத்திருத்தம், அரசு வேலைகளில் காஷ்மீரிகளுக்கு இருந்த 50 சதவிகிதம் பிரதிநிதித்துவத்தை 33 சதவிதமாக குறைத்தது போன்றவை இந்தச் சட்டத் திருத்தங்களில் அடங்கும்.
பாலஸ்தீனத்தைப்போல காஷ்மீரின் மக்கள் தொகை விகிதத்தையே மாற்றமுனையும் ஆர்.எஸ்.எஸ். கும்பலின் சதித்திட்டத்தின் அங்கம்தான் இந்தச் சட்டத் திருத்தங்கள் என்றும்,  இதன் காரணமாகவே காஷ்மீரிகள் அல்லாத எல்லோரையும் ஆர்.எஸ்.எஸ். கைக்கூலிகளாகத்தான் பார்ப்போம் என்றும் சொல்கிறது எதிர்ப்பு முன்னணி.
தெளிவாகப் பார்த்தோமென்றால், அமித்ஷா பீற்றிக் கொள்வதைப்போல பாஜக அரசு அங்கு பயங்கரவாதத்தை ஒடுக்கிவிடவில்லை. மாறாக, பழைய பயங்கரவாதக் கும்பல்களோடு ஒரு புதிய பயங்கரவாதக் குழுவின் பிரசவத்திற்கு வழிவகுத்திருக்கிறது. இதனால் பாதிக்கப்படுவதோ அப்பாவி பொதுமக்கள்தான்.
மாநில ‘ஜனநாயகத்திற்கு’.. பாஜகவின் உள்ளாட்சி ‘ஜனநாயகம்’ ஒரு சாட்சி!
ஜம்மு – காஷ்மீரில் எல்லைகள் மறுநிர்ணயம் செய்யப்பட்டு, தொகுதிகள் பிரிக்கப்பட்டபின் மீண்டும் ஜம்மு – காஷ்மீருக்கு மாநில தேர்தலை நடத்தப்போவதாக சொல்லும் அமித்ஷா, அதற்கு ஆதரமாக, காஷ்மீரில் தாங்கள் ஏற்கெனவே உள்ளாட்சித் தேர்தல் நடத்தியிருப்பதைக் குறிப்பிட்டு பெருமையடைகிறார்.
குறிப்பாக, ‘‘70 ஆண்டு காலமாக ஜம்மு – காஷ்மீரை ஆண்ட மூன்று குடும்பங்கள் 87 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 6 எம்.பி.க்களை வைத்துக்கொண்டு என்ன கொடுத்தன. திரு நரேந்திர மோடி 30,000 உள்ளாட்சி பிரதிநிதிகளை வழங்கியுள்ளார். இப்போது பஞ்ச்களும் சர்பஞ்ச்களும் (காஷ்மீர் உள்ளாட்சி பிரதிநிதிகளை இவ்வாறு அழைக்கின்றனர்) இந்திய அரசில் அமைச்சராகலாம், ஜம்மு – காஷ்மீரின் முதல்வராகலாம்’’ என்று பேசியிருக்கிறார் நமது  ‘ஜனநாயக மூர்த்தி’ அமித்ஷா.
இந்த உரையைக் கேட்கும் காஷ்மீர் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளின் கண்கள் நிச்சயம் கோபத்தால் சிவந்திருக்கும்.. ஏனெனில், காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தல் நடந்ததே தவிர தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு முறையான அதிகாரம் வழங்கப்படவில்லை.
‘‘ஜி.ஆர்.எஸ்., கிராம சேவகர்கள், பி.டி.ஓ., ஏ.சி.டி., ஏ.சி.ஆர். உள்ளிட்ட கிராம அளவிலான அதிகாரிகளிலிருந்து மாவட்ட அளவிலான நிர்வாகம் வரை யாரும் எங்கள் பிரச்சினைகளுக்கு செவிசாய்க்கவில்லை. நாங்கள் பலமுறை அவர்களை அணுகி பல்வேறு கடிதங்களை சமர்ப்பித்தோம், ஆனால் அவர்கள் எங்கள் பிரச்சினைகளுக்கு எந்தத் தீர்வும் சொல்லவில்லை’’ என்று பஞ்சாயத்து உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். ரம்பன் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 70 பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இக்காரணங்களால் கூண்டோடு பதவி விலகியுள்ளனர்.
ஜனநாயக அலங்காரத்திற்காக உள்ளாட்சித் தேர்தல்! பொம்மைகளாக பஞ்சாயத்து தலைவர்கள்! ‘வேர்மட்ட ஜனநாயகமே’ பல்லிளிக்கும் இலட்சணத்தில், மாநிலத் தேர்தலை நடத்தி கூடுதல் ‘ஜனநாயகம்’ வழங்கப்போவதாக அமித்ஷா கூறுவது, எப்படிப்பட்ட ஜனநாயகமாக இருக்குமென்பதை இதிலிருந்தே நாம் அவதானித்துக் கொள்ளலாம்.
கூடுதலாகச் சொல்ல வேண்டுமென்றால், காஷ்மீரில் ‘வேர்மட்ட ஜனநாயத்தை’ தேர்தலில் வெற்றிபெற்ற பாஜக உறுப்பினர்களும் கூட அனுபவிக்க முடியவில்லை. அதற்கும் மோடிதான் காரணம். 370 சிறப்புச் சட்டம் இரத்து செய்யப்பட்ட 2019 ஆகஸ்ட் மாதத்திலிருந்து இந்த ஆண்டு (2021) ஆகஸ்டு மாதம்வரை சுமார் 23 உள்ளூர் பாஜக தலைவர்களும் உறுப்பினர்களும் பயங்கரவாதிகளால் குறிவைத்துக் கொல்லப்பட்டனர். அதிலும், குறிவைக்கப்பட்ட பெரும்பாலானோர் பஞ்சாயத்துத் தலைவர்கள், உறுப்பினர்கள். இக்காரணங்களாலும் பலர் பதவி விலகினர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பல பிரதிநிதிகளை அரசு மற்றும் தனியார் விடுதிகளில் பாதுகாப்போடு தங்கவைக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. குடும்பத்தைப் பார்க்கக்கூட அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக கடந்த ஜூன் மாதம் காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின் மாவட்ட கவுன்சில் உறுப்பினரான அஷாக் ஹுசைன் ஹுர்ரா தனது ஹோட்டல் அறைக்குள் தற்கொலைக்கு முயன்ற கொடுமையும் அரங்கேறியுள்ளது.
‘வளர்ச்சி’த் திட்டங்களின் உண்மை முகம்
சிறப்புச் சட்டம் இரத்து செய்யப்பட்டது காஷ்மீரை வளர்ச்சிப் பாதையில் செலுத்துவதற்குத்தான் என்று கூறிய அமித்ஷா, ‘‘இங்கு 9 மருத்துவக் கல்லூரிகள், 15 நர்சிங் கல்லூரிகள், ஐ.ஐ.டி., என்.ஐ.டி., ஐ.ஐ.எம்., என்.ஐ.டி., ஐ.ஐ.எம்.சி., 2 கேன்சர் இன்ஸ்டிடியூட், பாலிடெக்னிக், நர்சிங் கல்லூரிகள் என பல கல்வி நிறுவனங்கள் கட்டப்பட்டு தொடங்கப்பட்டுள்ளன… இனி மருத்துவம் படிக்க காஷ்மீர் இளைஞர்கள் பாகிஸ்தான் போக வேண்டியதில்லை… இந்த பகுதிக்கும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கும் இடையிலான வளர்ச்சியை ஒப்பிட்டுப் பாருங்கள், அங்கு மின்சாரம், சாலைகள், கழிப்பிட வசதிகள் ஏதேனும் உள்ளனவா எதுவும் இல்லை. மறுபுறம் இங்கோ, மற்ற இந்தியர்களைப் போலவே உங்களுக்கும் (காஷ்மீரிகளுக்கும்) உரிமை உள்ளது’’ என்றார்.
மேலும், கடந்த ஆறு மாதத்தில் ஜம்மு – காஷ்மீரில் ரூ.12 ஆயிரம் கோடி முதலீடு வந்துள்ளதாகவும், அதனை 2022-க்குள் ரூ.51 ஆயிரம் கோடியாக்க இலக்கு வைத்துள்ளதாகவும் கூறுகிறார். இதன்மூலம் ஜம்மு – காஷ்மீரில் 5 இலட்சம் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் என்று கூறுகிறார் அமித்ஷா.
முதலாவதாக, மருத்துவக் கல்லூரிகள், ஐ.ஐ.டி.க்கள் கட்டப்பட்டுள்ளதாக சொல்வதைப் பற்றி பார்க்கலாம். காஷ்மீர் மண்ணின் மைந்தர்களுக்கு இருந்த சிறப்புரிமைகள், சலுகைகள் எல்லாவற்றையும் பறித்து, அம்மாநிலத்தை துண்டாக்கி இராணுமயப்படுத்தி ஒடுக்கி வருவது, குறிப்பாக மத அடிப்படையிலான பாகுபாடுகள் போன்றவற்றால் காஷ்மீர் இளம்தலைமுறையினர் பாகிஸ்தானை ஆதரிக்கும் எதிர் மனநிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். அதை எப்படியாவது சரிகட்டவிட வேண்டும் என்பதற்கான ஏற்பாடுகள்தான் இவை.
எதார்த்தத்தில், இதில் இன்னொரு அம்சமும் இருக்கிறது. அங்கிருக்கு மருத்துவக் கல்லூரிகளோ, ஐ.ஐ.டி.க்களோ காஷ்மீரிகளுக்கு மட்டுமா கல்வி வழங்கப்போகிறது? மருத்துவத் துறையைப் பொறுத்தவரை நீட் தேர்வு நுழைந்ததிலிருந்து பணம் கட்டி கோச்சிங் சென்றால்தான் வெற்றிபெற முடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. இந்தியா முழுவதுமுள்ள உயர் வர்க்கத்தாரும் அதன் விளைவாக பெருமளவில் உயர்சாதியினரும் ஆதாயமடைவார்களே தவிர இதனால் காஷ்மீரிகளுக்கு பெரிய நலன் இருக்க முடியாது. ஐ.ஐ.டி.களைப் பற்றி தனியாக எதுவும் சொல்லத் தேவையில்லை. அது ஏற்கனவே பார்ப்பன உயர்சாதியினரின் கூடாரங்களாத்தான் இருக்கிறது.
இரண்டாவதாக அமித்ஷா, ரூ.51 ஆயிரம் முதலீடு, 5 இலட்சம் பேருக்கு வேலை என்கிறாரே, உண்மையிலேயே காஷ்மீர் இளைஞர்களுக்கு மோடி அரசு வேலைவாய்ப்பை உருவாக்கியிருக்கிறதா? எதார்த்தத்தில் இது குறித்த புள்ளிவரங்கள் அனைத்தும் அமித்ஷாவின் பிதற்றல்களைப் பார்த்து பல்லிளிக்கின்றன. காஷ்மீரின் சிறப்புரிமை இரத்து செய்வதற்கு முன்பு 7.9 சதவீதமாக இருந்த வேலையின்மை விகிதம் 2021 ஆகஸ்டில் 13.6 சதவீதமாக உயர்ந்தது. பின்னர் ஒரே மாதத்தில் 21.6 சதவீதமாக வேலையின்மை விகிதம் அதிகரித்தது. இது தேசிய சராசரியான 6.9 சதவீதத்தைவிட பல மடங்கு அதிகமாகும். உண்மையைச் சொன்னால், இந்திய இளைஞர்களுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு கொடுத்த கதைதான், இந்த 5 இலட்சம் வேலைவாய்ப்பும்.
படிக்க :
புதிய ஜனநாயகம் டிசம்பர் – 2021 அச்சு இதழ் !
புதிய ஜனநாயகம் டிசம்பர் 2021 மின்னிதழ் !
அப்படியெனில், தற்போது வந்துள்ள ரூ.12 ஆயிரம் கோடி முதலீடும், அடுத்த ஆண்டிற்குள் வரவிருக்கும் ரூ.51 ஆயிரம் கோடி முதலீடும் யாருக்கான வளர்ச்சியை உருவாக்கப்போகின்றன, சிறப்புச் சட்டம் இரத்து செய்தபிறகு ஏன் இவ்வளவு மூலதனம் குவிந்துள்ளது, இவையெல்லாம் யாருடைய முதலீடுகள்…? சந்தேகமே வேண்டாம் அம்பானி, அதானி உள்ளிட்ட மோடியின் கார்ப்பரேட் நண்பர்கள் காஷ்மீரை சுரண்டிக் கொழுக்க செய்துள்ள முதலீடுகளே அவை. இந்த முதலீடுகளுக்குத் தோதாகத்தான் விவசாய காரணங்களுக்காக அல்லாமல் வேறு காரணங்களுக்காக நிலம் வாங்க முடியாது என்றிருந்த காஷ்மீரின் பெரும் பண்ணை ஒழிப்புச் சட்டத்தை நீக்கி கார்ப்பரேட்டுகள் அபகரித்துக் கொள்ள வழியேற்படுத்தியிருக்கிறது.
இந்த மையமான நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளத்தான் காஷ்மீர் மாநிலத்தின் சிறப்புரிமை இரத்து செய்யப்பட்டது. அப்போது மோடி ‘‘நயா காஷ்மீர்’’ (புதிய காஷ்மீர்) பிறந்துள்ளதாக அறிவித்தார்.
உழுபவனுக்கு நிலம், ஆண் – பெண் சமத்துவம், அனைவருக்கும் வாக்குரிமை என நிலப்பிரபுத்துவ மன்னராட்சியை எதிர்த்துப் போராடி வென்ற காஷ்மீர் மக்கள் 1940-களில் முழங்கிய முழக்கம்தான் ‘‘நயா காஷ்மீர்’’. அவர்கள் போராடிப் பெற்ற ஒவ்வொரு உரிமைகளையும் பறித்துவிட்டு, கார்ப்பரேட்டுகளின் மற்றுமொரு சுரண்டல் நிலமாக மாற்றப்பட்டிருக்கும் காஷ்மீரை, ‘‘நயா காஷ்மீர்’’ என்று சொல்வதற்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் தேவை இந்த காவிக் கும்பலுக்கு…

துலிபா

எல்லைப் பாதுகாப்புப் படை விரிவாக்கம் : இராணுவ சர்வாதிகாரம்!

எல்லைப் பாதுகாப்புப் படை விரிவாக்கம் :
‘தேசப் பாதுகாப்பு’  என்ற பெயரில் அரங்கேறும் இராணுவ சர்வாதிகாரம் !
ந்தியாவை இந்து ராஷ்டிரமாக்க வேண்டும் என்ற தனது கனவை நனவாக்குவதற்கு மிக மூர்க்கத்தனமாக செயல்பட்டு வருகிறது, ஆர்.எஸ்.எஸ். காவி கும்பல். அதற்காக, மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து அதிகாரத்தை மத்தியில் குவிப்பது; ‘‘ஊழல் ஒழிப்பு’’, ‘‘தேச வளர்ச்சி’’ என்ற பொய்ப் பிரச்சாரங்களின் மூலமும் மதவெறி, தேசவெறியைத் தூண்டிவிட்டு கலவரங்கள் நடத்துவதன் மூலமும் மாநிலங்களில் நேரடியாக ஆட்சியைப் பிடிப்பது; ஆட்சிக்கு வந்தபின், தான் ஆளும் மாநிலங்களில் மிகத் தீவிரமாக காவி − கார்ப்பரேட் திட்டங்களை அமல்படுத்துவது எனத் துல்லியமாக திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.
தான் நேரடியாக ஆட்சி செய்யாத மாநிலங்களில், ஆளும் கட்சியினரை மிரட்டி அவர்களுடன் கூட்டணி சேர்ந்துகொண்டு அதிகாரத்தில் பங்குபெறுவது, குதிரை பேரம் மூலம் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவது என பார்ப்பனியத்திற்கே உரிய தந்திரத்துடன் செயல்பட்டு வருகிறது காவிக் கும்பல். தனக்கு சல்லிக்காசு கூட செல்வாக்கு இல்லாத மாநிலங்களிலும் ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களை ஆளுநர்களாக நியமிப்பதன் மூலம் அம்மாநிலங்களின் அதிகாரத்தைக் கைக்குள் வைத்துக் கொள்கிறது. இந்த நடவடிக்கைகளின் அடுத்தகட்டமாக இராணுவ ரீதியிலான திடீர் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது, மோடி – அமித்ஷா கும்பல்.
***
எந்தவித முன்னறிவிப்புமின்றி பஞ்சாப், மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் எல்லைப் பாதுகாப்புப் படையின் (BSF − border security force) அதிகார வரம்பை 15 கி.மீட்டரிலிருந்து 50 கி.மீட்டராக அதிகரித்து கடந்த அக்டோபர் 11 அன்று அரசாணை வெளியிட்டிருக்கிறது ஒன்றிய உள்துறை அமைச்சகம். எல்லைப் பாதுகாப்புப் படையின் (BSF) அதிகார வரம்பை அதிகரித்திருப்பதற்கான உரிய காரணங்கள் எதுவும் இந்த அரசாணையில் குறிப்பிடப்படவில்லை.
படிக்க :
AFSPA -ஐ இரத்து செய் : நாகாலாந்து கிராம மக்களை சுட்டுக் கொன்ற துணை இராணுவப்படை
நீக்கப்பட வேண்டியது ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டமே தவிர 370 அல்ல !
மோடி அரசின் இந்த பாசிச நடவடிக்கையை, ‘‘எல்லைப் பாதுகாப்புப் படையின் செயல்திறனை மேம்படுத்துவது மற்றும் நாடு முழுவதும் ஒரே சீரான தன்மையை உருவாக்குவது’’ என்று நியாயப்படுத்துகிறார் எல்லைப் பாதுகாப்புப் படை ஐ.ஜி. சாலமன் யாஷ் குமார் மின்ஸ்.
அசாமின் பா.ஜ.க. முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ள அதே நேரத்தில், பஞ்சாப், மேற்குவங்க மாநிலங்களோ இந்த இராணுவ நடவடிக்கையை ‘‘கூட்டாட்சியின் மீதான தாக்குதல்’’ என எதிர்க்கின்றன. எல்லைப் பாதுகாப்புப் படையின் அதிகார வரம்பை அதிகரிக்கும் அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும் என்று அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு பஞ்சாப் சட்டமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ‘‘சட்டம் ஒழுங்குப் பிரச்சினை மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்றும், மாநில போலீசுத் துறையின் மீதான நம்பிக்கையற்ற தன்மையின் வெளிப்பாடுதான் இந்த அரசாணை’’ என்றும் விமர்சித்துள்ளார் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி. மேற்குவங்க முதல்வர் மம்தாவோ, ‘‘இது கூட்டாட்சியின் மீதான தாக்குதல். இதனால் மக்கள்தான் தொல்லைக்குள்ளாவர்கள்’’ என்று எதிர்க்கிறார்.
பா.ஜ.க.வின் தமிழக செய்தித் தொடர்பாளர் நாராயணன், ‘‘தேசப் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ள முடியாது. இது நாட்டின் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு. முக்கியமாக அசாம், பஞ்சாப், மேற்குவங்க மாநிலங்களின் நலன் கருதியே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது’’ என்று தமிழகத்திலும் இதுபோன்ற நடவடிக்கையை மேற்கொள்வதற்கான அடித்தளத்தைப் போடுகிறார்.
விரிவுபடுத்தப்படும் பி.எஸ்.எஃப். படையின் அதிகாரம்
2014-ல் ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்கள் முழுவதும், குஜராத்தில் 80 கி.மீ, ராஜஸ்தானில் 50 கி.மீ, பஞ்சாப், அசாம் மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் 15 கி.மீ வரை சர்வதேச எல்லையிலிருந்து எல்லைப் பாதுகாப்புப் படையின் (பி.எஸ்.எப்) கட்டுப்பாட்டிற்குள்தான் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இதில் திருத்தம் செய்யப்பட்டு மேற்கூறியபடி எல்லைப் பாதுகாப்புப் படையின் அதிகார வரம்பு மேலும் விரிவாக்கப்பட்டுள்ளது.
எல்லைப் பாதுகாப்பு படை விரிவாக்கத்தை கைவிட வேண்டும் என மோடியிடம் கோரிக்கை வைக்கிறார் மேற்குவங்க முதல்வர் மம்தா.
குறிப்பாக நமது அண்டை நாடான பாகிஸ்தானுடன் 425 கி.மீ எல்லையைப் பகிர்ந்து கொள்கிற பஞ்சாப் மாநிலத்தில் அதிகார வரம்பு விரிவாக்கப்பட்டுள்ளதால் மாநிலத்தில் பாதி எல்லைப் பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. பங்களாதேஷூடன் 2216.7 கீ.மீ எல்லையைப் பகிர்ந்து கொள்கிற மேற்குவங்க மாநிலத்தில், மொத்தமுள்ள 23 மாவட்டங்களில், மால்டா, நொய்டா, முர்சிதாபாத், கூச் பெஹர், ஜல்பைகுரி, உத்தர் தினைஜ்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்கள் பங்களாதேஷ் எல்லையில் இருப்பதால், பி.எஸ்.எஃப்−ன் கட்டுப்பாட்டிற்குள் வருகின்றன. இதனால் மாநிலத்தின் வட பகுதி முழுவதும், அதாவது மூன்றில் ஒரு பங்கு மாநிலம் இராணுவத்தின் நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால்தான் இம்மாநிலங்கள் இதை எதிர்க்கின்றன.
தேசப் பாதுகாப்பு எனும் போலியான நியாயவாதம்
இந்திய இராணுவத்தின் 7 பிரிவுகளில் ஒரு படைப்பிரிவே எல்லைப் பாதுகாப்புப் படையாகும். இந்தியா – பாகிஸ்தான் போருக்குப் பிறகு, 1968-ல் எல்லைப் பாதுகாப்புப் படைச்சட்டம் உருவாக்கப்பட்டு, 1969-லிருந்து இப்படை நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. 1968 – சட்டத்தின்படி, அண்டை நாடுகளுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் மாநிலங்களின் எல்லையைப் பாதுகாப்பது இப்படையின் வேலையாகும்.
இப்படை தொடங்கப்பட்ட காலத்தில், எல்லையோர மாநிலங்களில் போதிய எண்ணிக்கையில் போலீசு நிலையங்கள், வாகன மற்றும் தொழில்நுட்ப வசதிகள் மாநில போலீசுத் துறையிடம் இல்லை. இதனைக் காரணமாகக் கொண்டு, ‘தேசப் பாதுகாப்பு’ என்ற பெயரில் அண்டை நாடுகளுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் மாநிலங்களில் சர்வதேச எல்லையிலிருந்து 15 கி.மீ வரை எல்லைப் பாதுகாப்புப் படையின் அதிகார வரம்பிற்குள் கொண்டுவரப்பட்டது.
இதன் மூலம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், விசா சட்டம் 1962 மற்றும் 1967, சுங்க வரி சட்டம், கஞ்சா ஒழிப்புச் சட்டம், ஆயுத தடுப்புச் சட்டம் மற்றும் அன்னியச் செலாவணி சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த 15 கி.மீட்டருக்குள் தேடுதல் வேட்டை நடத்த, கைது மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள எல்லைப் பாதுகாப்புப் படைக்கு சிறப்பு அதிகாரம் உள்ளது. சுருக்கமாகச் சொன்னால், இந்த 15 கி.மீட்டருக்குள் போலீசு வேலையை இராணுவம் செய்யும் என்பதுதான்.
ஆனால், 1969-களில் இருந்த போலீசுத் துறை இன்று இல்லை, போலீசு நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, வாகனம் மற்றும் தொழில்நுட்ப வசதிகளால் போலீசுத்துறை நவீனமயமாக்கப்பட்டுள்ளதால் எல்லைப் பாதுகாப்புப் படையின் அதிகார வரம்பை அதிகரிக்கத் தேவையில்லை என முதலாளித்துவ பத்திரிகைகளே விமர்சிக்கின்றன.
பஞ்சாப், மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் எல்லைப் பாதுகாப்புப் படையின் (BSF – Borser Security Force) அதிகார வரம்பை 15 மி.மீட்டரிலிருந்து 50 கி.மீட்டராக அதிகரித்திருக்கிறது.
போதைப் பொருள் கடத்தலைத் தடுக்கத்தான் எல்லைப் பாதுகாப்புப் படையின் அதிகார வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர் சங்கிகள். ஆனால், கடந்த செப்டம்பர் மாதம் அதானியின் முந்த்ரா துறைமுகத்தில் ரூ.21,000 கோடி மதிப்பிலான 3,000 கிலோ ஹெராயின் கண்டுபிடிக்கப்பட்ட போது குஜராத்தின் எல்லைப் பாதுகாப்பு படை என்ன செய்தது? அப்பாவி முஸ்லீம்களை சுட்டுக் கொல்லும் இராணுவம் ஏன் முந்த்ரா துறைமுகத்தைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவில்லை? போதைப் பொருள் கடத்தலைத் தடுப்பது என்பதெல்லாம் வெறும் சப்பைக்கட்டு என்று இதிலிருந்து புரிந்து கொள்ள முடியும்.
போதைப் பொருள் கடத்தல், ஆயுதக் கடத்தல், பயங்கரவாத ஊடுருவல் ஆகியவை அனைத்தும் அதிகாரவர்க்கத்தின் துணை இன்றி நடப்பது இல்லை. பிரச்சினை எல்லையிலேயே இருக்கும்போது அந்த எல்லைப் பாதுகாப்புப் படையின் அதிகாரத்தை விரிவுபடுத்தி என்ன பயன்? ஆகவே கடத்தல், எல்லை தாண்டிய ஊடுருவல் ஆகியவையெல்லாம் தங்களுடைய காவி பாசிச நோக்கத்தை மறைப்பதற்காக ஆர்.எஸ்.எஸ். காவிக் கும்பல் பயன்படுத்தும் சொற்சிலம்பங்களே அன்றி வேறல்ல.
காவி பாசிச கும்பலின் உண்மையான நோக்கம் என்ன?
கோவா, மணிப்பூர், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மேகாலயா வரிசையில் பஞ்சாப் மாநிலமும் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கவிருக்கிறது. எல்லா மாநிலங்களிலும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல் தனது தேர்தல் வியூகத்தை வகுத்து செயல்படத் தொடங்கிவிட்டது. மோடி அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் விவசாயிகள் நடத்திவரும் மக்கள் திரள் போராட்டம் பா.ஜ.க.வை அம்மாநிலத்திலிருந்தே துடைத்தெறிந்திருக்கும் நிலையில் அங்கு தாம் ஆட்சியைப் பிடிப்பது பற்றி காவிக்கும்பல் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது.
மேற்கு வங்கத்தில், பா.ஜ.க. மெல்ல மெல்ல வளர்ந்துவந்தாலும், மம்தாவின் கவர்ச்சிவாத பொறுக்கி அரசியலின் செல்வாக்கு, மாநில அரசு எந்திரத்தில் தனது விசுவாசிகளை வலுவாகப் பெற்றிருப்பது போன்றவை பாசிச பா.ஜ.க.விற்கு சவாலாக உள்ளன. இதனால் திரிணாமுல் காங்கிரசிலிருந்து விலைக்கு வாங்கி பா.ஜ.க.வில் சேர்க்கப்பட்ட பல்வேறு எம்.எல்.ஏ., எம்.பி.க்களும் மீண்டும் திரிணாமுல் காங்கிரசில் இணைந்து வருகிறார்கள்.
எனவே, இவ்விரு மாநிலங்களும் இந்திய – பாகிஸ்தான், இந்தியா – பங்களாதேஷ் எல்லையில் அமைந்துள்ளதை முகாந்திரமாக வைத்துக் கொண்டு, பயங்கரவாத பீதியூட்டி இம்மாநிலங்களில் இராணுவ சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கான முயற்சியாகவே எல்லைப் பாதுகாப்புப் படையின் அதிகார வரம்பு 50 கி.மீட்டராக அதிகரிக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பஞ்சாப், மேற்குவங்க முதல்வர்கள் சொல்வதைப் போல ‘‘மாநில உரிமை பறிப்பு’’ என்ற வரம்போடு இதனைச் சுருக்கிப் பார்க்கக் கூடாது.
மேலும், இந்தச் சட்டங்கள் பஞ்சாப், மேற்குவங்கம் என்ற வரம்போடு நின்றுவிடும் என்றும் கனவு காணக் கூடாது. இன்றைய சூழலில் சங்கிகளுக்கு எட்டாக்கனியாக இருக்கும் தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களிலும் வெவ்வேறு பெயர்களில் இந்தச் சட்டத்தைக் கொண்டு வரமுடியும். குறிப்பாக தமிழ்நாட்டில், இலங்கை வழியாக சீன அச்சுறுத்தல், விடுதலைப் புலிகள் ஊடுருவல் என பல்வேறு காரணங்களைக் காட்டி இங்கு தனது அதிகாரத்தை இராணுவத்தின் மூலமாகக் குவிக்க முடியும்.
இஸ்லாமிய நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியில் உள்ள பஞ்சாப், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் தீவிரவாதிகள் ஊடுருவல், முஸ்லீம் பயங்கரவாதம், முஸ்லீம் அகதிகள் ஊடுருவல், போதைப் பொருள் கடத்தல் என்ற பெயரில் விசாரணையின்றி யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம், தேடுதல் வேட்டை நடத்தலாம், துப்பாக்கி சூடு கூட நடத்தவும் முடியும். படுகொலைகள், பாலியல் வல்லுறவுகள், மனித உரிமை மீறல்கள், பொய் வழக்குகள் என அனைத்திலும் தேர்ச்சி பெற்றது எல்லைப் பாதுகாப்புப் படை என்பதை, வடகிழக்கு மாநிலங்களின் வரலாறு நமக்குச் சொல்லும்.
ஏற்கெனவே, அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு, சி.ஏ.ஏ. ஆகியவற்றின் மூலம் முஸ்லீம்களின் குடியுரிமையைப் பறித்து அகதிகளாக்கியுள்ளது காவிக் கும்பல். இந்த எல்லைப் பாதுகாப்புப் படையின் அதிகார வரம்பு அதிகரிப்பின் மூலம் அப்பாவி முஸ்லீம்களின் மீது இராணுவ நடவடிக்கையும் பாய இருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் தெற்கு திரிபுராவில் எல்லைத் தாண்டினார் என்று கூறி 23 வயது ஜாஸ்கிம் மியா என்ற இளைஞரை சுட்டுப் படுகொலை செய்துள்ள சம்பவம் இதற்கு நல்ல சான்று.
மேற்கு வங்கத்தில் மட்டும் இதுவரை 250 வழக்குகள் எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு எதிராகப் பதிவாகி உள்ளன. 33 வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என தேசிய மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்துள்ளது. ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்குவதற்கான போராட்டக் குரல்கள் காஷ்மீரிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் இன்னும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன என்பதிலிருந்து இராணுவத்தின் யோக்கியதையை நாம் புரிந்து கொள்ள முடியும். இனி இந்தப் படுகொலைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப் போகின்றது என்பதைத் தாண்டி அம்மாநில மக்களுக்கு ஒன்றிய அரசின் இந்த ‘‘வரம்பு விரிவாக்க’’ நடவடிக்கையால் எவ்விதப் பலனும் இல்லை. ஆனால் பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கோ தங்களது இந்துராஷ்டிரக் கனவை வெல்வதற்கான அடித்தளங்களில் இதுவும் ஒன்று.
படிக்க :
புதிய ஜனநாயகம் டிசம்பர் – 2021 அச்சு இதழ் !
புதிய ஜனநாயகம் டிசம்பர் 2021 மின்னிதழ் !
அசாம், மணிப்பூர், மேகாலயா, திரிபுரா, மிசோராம், நாகாலாந்து போன்ற வடகிழக்கு மாநிலங்களிலும், ஜம்மு – காஷ்மீர் – லடாக் ஒன்றிணைந்த மாநிலமாக இருந்த போதும், யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்ட பிறகும் கூட தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றங்கள் என்பவை பெயரளவிற்கானவையே. அவை முழுக்க முழுக்க இராணுவ சர்வாதிகாரத்தின் கீழ் அடக்கி ஒடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போது, தேசப் பாதுகாப்பு என்ற போலிக் காரணத்தைக் கூறி தமக்குச் சாதகமற்ற அரசியல் நிலைமைகள் உள்ள பஞ்சாபையும், மேற்குவங்கத்தையும் இன்னுமொரு காஷ்மீராகவும், வடகிழக்கு மாநிலங்களைப் போன்றும் மாற்றுவதற்கான முயற்சியே காவிக் கும்பலின் இந்த நடவடிக்கை. எனவே இது வெறும் அதிகார வரம்பு பற்றிய பிரச்சினையில்லை, காவி பாசிசத்தை நிலைநாட்ட இராணுவ சர்வாதிகாரத்தை உருவாக்குவதற்கான முன்னோட்டம்!

அப்பு

உத்தரப்பிரதேசம் : இந்து ராஷ்டிரத்திற்குள் ‘சாத்தியமான மாற்று’ இல்லை !

“காவி – கார்ப்பரேட் பாசிச அபாயத்தை முறியடிப்பதற்கான ஒரேவழி, பரந்துபட்ட உழைக்கும் மக்களையும் ஜனநாயக சக்திகளையும் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமையின் கீழ் அணிதிரட்டிப் போராடுவது ஒன்றுதான்” என்று நாம் சொல்கிறோம். ஆனால் பாசிச அபாயத்தை உணர்ந்தாலும் தற்போதைக்கு பா.ஜ.க.வை அதிகாரத்திலிருந்து கீழிறக்கி, அதற்கெதிராக தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் ஒரு கட்சியை ஆட்சியில் அமர்த்துவதுதான் உடனடியாக ஆகக்கூடிய ‘சாத்தியமான மாற்று’ என்று சிலர் சொல்லிவருகிறார்கள். ஒரு புரட்சிகர கட்சியின் அரசியல் தலைமையில் வெகுமக்களை அணிதிரட்டுவது ‘அசாத்தியம்’ என்பதுதான் அவர்களின் உளக் கருத்து என்றபோதும் மக்களை அணிதிரட்டுவதற்கான ஒரு ‘சுவாசிக்கும் அவகாசமாக’ அப்படியொரு ‘சாத்தியமான மாற்று’ தேவை என்று பிரச்சாரம் செய்துவருகிறார்கள்.

‘புரட்சியாளர்கள்’ என்று தங்களை கூறிக்கொள்ளும் இவர்கள், கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது “தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணிக்கு எதிராக தி.மு.க.வை ஆதரிக்க வேண்டும்.. வாக்களிக்க வேண்டும்” என்று நேரடியாகவும் மறைமுகமாகவும் பிரச்சாரம் செய்தார்கள். பா.ஜ.க.வை வெறுக்கும் தமிழக மக்களின் ஓட்டுக்களை அறுவடை செய்வதற்காக தி.மு.க.வும் பா.ஜ.க.விற்கு எதிரான கட்சியாக தன்னை முன்னிறுத்திக் கொண்டு சமூக நீதி, மாநில உரிமை, மொழி உரிமை என முழங்கியதானது அப்‘புரட்சியாளர்களின்’ பிரச்சாரத்திற்கு தோதாக அமைந்தது.

உண்மையில் தமிழகத்திற்கே உரிய களநிலைமைதான் தி.மு.க.வின் முற்போக்கு பிரச்சாரத்திற்கு அடித்தளமாக அமைந்தது என்பதை மறுக்க முடியாது. ஆனால் தமிழகத்திற்கு எதிர்நிலை உதாரணமாக, இந்துராஷ்டிரத்தின் சோதனைச் சாலையாக மாறியுள்ள உத்தரப் பிரதேசத்தின் தேர்தல் கூத்துகளோ ‘பாசிசத்திற்கு எதிராக போராட தற்போதைக்கு ஒரு சாத்தியமான மாற்று’ எனும் மாயையை கலைப்பதாகவும் புரட்சிகர கட்சியின் தலைமையே ஒரே மாற்று என்பதை உணர்த்தும் சாட்சியமாகவும் இருக்கிறது.

000

ரவுடி சாமியார் யோகி ஆதித்யநாத் ஆளும் உத்தரப்பிரதேசம் இன்னும் சில மாதங்களில் தேர்தலைச் சந்திக்க தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்துராஷ்டிரத்தின் அடையாளமாக அயோத்தியில் ராமர் கோயில், கோமாதாக்களுக்கென தனி ஆம்புலன்ஸ் சேவை, ஊர்களின் பெயர்கள் இந்துத்துவமயமாக்கம் என காவி மணம் கமழ்கிறது உத்தரப் பிரதேசத்தில்.

முஸ்லீம்களை குறிவைக்கும் மதமாற்றத் தடைச்சட்டம், தலித்துக்கள் மீதான சாதிவெறித் தாக்குதல்கள், கொரோனா கால சுகாதார நெருக்கடியால் கங்கைக் கரையில் மிதந்த பிணங்கள், போராடும் மக்கள் மீது சர்வசாதாரணமாக ஏவப்படும் ஊபா கொடுஞ்சட்டம், லக்கிம்பூர் – கேரியில் நிகழ்த்தப்பட்ட விவசாயிகள் படுகொலை என யோகி அரசு எத்தனை கொடூரங்களில் ஈடுபட்டபோதும் அடுத்த தேர்தலிலும் பா.ஜ.க.தான் வெல்லும் என தற்போதுவரை வெளிவந்துள்ள தேர்தல் கணிப்புகள் சொல்கின்றன. பல ஆண்டுகளாக காவிக் கும்பலால் இந்துத்துவ அரசியலில் பண்படுத்தப்பட்ட நிலமல்லவா உத்தரப் பிரதேசம்! எனவே இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லைதான்.

இதே காரணத்திற்காகத்தான் தமிழகத்தில் பா.ஜ.க.விற்கு எதிராக தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் கட்சிகளைப் போலல்லாமல் உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க.விற்கு எதிராக தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் காங்கிரஸ் உள்ளிட்ட ஓட்டுக் கட்சிகள் எதுவும் அதன் காவிக் கொள்கையை எதிர்த்து மூச்சுகூட விடுவதில்லை.

இவர்கள் காவி அரசியலை எதிர்ப்பவர்களில்லை என்பது பழையநிலை; பா.ஜ.க.வை எதிர்ப்பதாகச் சொல்லி களம் காண்பவர்களே, அதன் ‘இந்து அரசியலை’ தன்வயப்படுத்திக் கொள்கிறார்கள் என்பது தற்போது முதிர்ச்சிபெற்றுவரும் புதிய எதார்த்தம். ஆம், அடுத்த ஆண்டுக்கான தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்துக் கொண்டிருக்கின்றன. பா.ஜ.க.வை எதிர்த்து காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் போட்டியிடுகின்றன. பிரச்சாரங்களின் உள்ளடக்கமோ பா.ஜ.க.வின் ‘இந்து’ அரசியல் VS பா.ஜ.க. எதிர்ப்பு ‘இந்து’ அரசியல் என்பதாக உள்ளது. ‘சாத்தியமான மாற்று’ என்று எவையும் நம் கண்ணுக்கெட்டிய தொலைவு வரை புலப்படவில்லை.

பிரியங்காவின் அஸ்திரம் : கவர்ச்சிவாதம் + ‘இந்து’ அடையாளம்

தேர்தலில் பெண்களுக்கு 40 சதவிகித இடஒதுக்கீடு, மாணவிகளுக்கு ஸ்மார்ட்போன், ஸ்கூட்டர், பெண்களுக்கு பேருந்துகளில் இலவசப் பயணம் என பிரஷாந்த் கிஷோர் வகுத்துக் கொடுக்கும் கவர்ச்சிவாத வாக்குறுதிகளை முன்னிறுத்தி, பெண்களின் ஓட்டுக்களைக் குறிவைத்து களமிறங்கியிருக்கிறார் பிரியங்கா. எனினும் உ.பி.யில் வெற்றிபெற வேண்டுமானால் அதுமட்டும் போதாது எனத் தெரிந்துவைத்திருக்கும் பிரியங்கா, தனது போலி மதச்சார்பின்மையையும் கூட தூக்கி எறிந்துவிட்டு தன்னை தீவிரமாக ‘இந்து’ அடையாளத்துடன் இணைத்துக் கொண்டிருக்கிறார்.

கடந்த அக்டோபர் மாதம் மோடியின் வாரணாசி தொகுதியில் உள்ள காசி விஸ்வநாதரையும் துர்க்கையையும் வழிபட்ட பிரியங்கா, “விவசாயிகளுக்கான நீதி” (கிசான் நியாய்) என்ற பெயரில் தனது கட்சி ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டமொன்றில், நெற்றியில் குங்குமத் திலகமிட்டு கழுத்தில் ருத்ராக்ஷ மாலையுடன் ‘தெய்வகாடாக்‌ஷமாக’ காட்சியளித்தார். பிரியங்கா மட்டுமல்ல, அங்கு மேடையில் அமர்ந்திருந்த காங்கிரஸ் பெருந்தலைகளின் நெற்றி அனைத்தும் அன்று வண்ணமயமாகத்தானிருந்தது.

பொதுக்கூட்டம் தொடங்கியதும் மேடையிலிருந்த பிரியங்கா, சதீஷ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் “ஹர் ஹர் மஹாதேவ்” என ஓங்காரமாக முழங்கினார்கள். பிரியங்கா பேசத் தொடங்கும் முன், தாம் நவராத்திரி விரதமிருப்பதாகச் சொல்லி துர்கா சப்தசதியிலிருந்து “யாதேவி சர்வ பூதேஷூ” என்ற ஸ்லோகத்தை உச்சாடனம் செய்துவிட்டு ‘ஜெய் மாதா தி’ என ஓங்காரமாக முழங்குகிறார். கூட்டத்திலுள்ளவர்களையும் முழங்கச்சொல்கிறார். இது காங்கிரசின் கூட்டம்தானா, இல்லை சங்க பரிவாரத்தினரின் கூட்டமா என்று இனம் காண முடியாத அளவுக்கு அக்காட்சி அமைந்திருந்தது.

இராமர் கோயில் அறக்கட்டளை சார்பாக நிலம் வாங்கியதில் மோசடி நடந்த விவகாரத்தை மற்ற கட்சிகளைவிட காங்கிரஸ் பெரிய அளவில் விவாதப் பொருளாக்கியது. “கடவுள் இராமரின் பெயரைச் சொல்லி பா.ஜ.க.வால் எப்படி இவ்வளவு பெரிய ஊழலைச் செய்ய முடிகிறது” என காங்கிரஸ் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜிவாலா ஆதங்கப்பட்டார். கடந்த ஜூன் மாதம் உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் பிரமோத் திவாரி, “கொரோனா தொற்றுக் காலத்தில் மற்ற எல்லா நடவடிக்கைகளும் மேற்கொள்வதற்கு அனுமதிக்கும்போது, ஏன் அமர்நாத் யாத்திரைக்கு அனுமதிக்கக் கூடாது. நம்பிக்கைகள் ஏன் ஏமாற்றமடைய வேண்டும்” என்று ‘இந்துக்களுக்காக’ குரல் எழுப்பினார். ஊரடங்கு விதிகள் காரணமாக தி.மு.க. அரசு கோயிலைத் திறப்பதற்கு தடை விதித்திருந்தபோது, தமிழக பா.ஜ.க. இந்துக் கோயில்களைத் திறக்க வேண்டும் என ஆர்பாட்டங்கள் நடத்தியது, அதன் மூலம் தி.மு.க. எதிர்ப்பில் ‘இந்து’ அணிதிரட்டலை மேற்கொண்டது. அதைப் போல பா.ஜ.க. எதிர்ப்பு ‘இந்து’ அணிதிரட்டலுக்கான ஒரு வாய்வீச்சுதான் அது.

மாயாவதியின் ‘தலித் – பார்பனக் கூட்டணி 2.0’

“தலித் பிரச்சினையை தலித் மக்களால் மட்டுமே உணர முடியும். தலித்துக்களுக்குத் தலித்துகள்தான் தலைமை தாங்க வேண்டும். தலித்துகளே, பிற கட்சிகளில் சேராதீர்கள்; பிற ஆதிக்க சாதியினரை எமது கட்சியில் சேர்க்கவே மாட்டோம்” என்றெல்லாம் ஆரம்பக் காலத்தில் அடையாள அரசியல் சவடாலடித்துவந்த பகுஜன் சமாஜ் கட்சி, உ.பி.யின் ஓட்டுப் பொறுக்கி அரசியல் களத்தில் மூழ்கி ஞானம் பெற்றபோது பச்சையான பார்ப்பன பாதந்தாங்கி கட்சியாக இழிந்துபோனது.
தேர்தலில் வெல்ல வேண்டுமென்றால், தலித்துகளின் 23 சதவிகித ஓட்டுகள் மட்டுமே நமக்கு போதாது. உ.பி.-யின் மக்கள் தொகையில் 13 சதவிகிதம் வரையுள்ள பார்ப்பனர்களின் ஓட்டுகளைப் பெற்றால் சுலபமாக ஆட்சியைப் பிடிக்கலாம் என கணக்கு போட்ட மாயாவதி, அதற்குத் தகுந்தாற்போல் எடுத்த புது அவதாரம்தான் ‘தலித்-பார்ப்பனக் கூட்டணி’. எங்கள் கட்சி தலித்துகளுக்கான கட்சி மட்டுமில்லை, ஏழை பார்ப்பனர்களுக்கான கட்சியும்தான் என்று தாளம் மாறியது பகுஜன் சமாஜ் கட்சி. பார்ப்பனர்களுக்கும் ஆதிக்க சாதியினருக்கும் அக்கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் இடம்தந்தது.

இவ்வாறு தனது அடையாளத்தை மறுவார்ப்பு செய்துகொண்டு பார்ப்பனர்களே ‘தமக்கான கட்சி’ என்று போற்றுமளவிற்கு செயல்பட்டதால் 2007 ஆம் ஆண்டு மாயாவதி உ.பி.யின் முதல் ‘தலித்’ முதலமைச்சரானார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உ.பி. சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ‘தலித்-பார்ப்பனக் கூட்டணி’ பிரச்சாரத்தை கையிலெடுத்திருக்கிறார் மாயாவதி. இதற்காக தனது பிரச்சாரத்தை ஜூலை மாதமே தொடங்கிவிட்டது பகுஜன் சமாஜ் கட்சி.

முதல்கட்டமாக பார்ப்பனர்களை கவர்வதற்காக, ‘பிராமண சம்மேளனம்’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் பல்வேறு மாநாடுகளை நடத்துவதற்கு திட்டமிட்டார்கள். சாதி பெயரில் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்களை நடத்த அலகாபாத் உயர்நீதிமன்றம் தடைவிதித்திருப்பதால் அம்மாநாட்டின் பெயரை ‘ஞானம் பெற்ற வகுப்பினரை கவுரவிக்கும் கருத்தரங்கு’ (Seminar in honor of the enlightened class) என மாற்றி நடத்தியிருக்கிறார்கள். அயோத்தியில் நடந்த முதல் மாநாட்டின் சிறப்பு விருந்தினர் அக்கட்சியின் பொதுச் செயலாளர் சதீஷ் சந்திர மிஸ்ரா என்ற பார்ப்பனர். கூட்டத்திற்கு சில மணிநேரம் தாமதமாக வந்த சதீஷ் சந்திர மிஸ்ரா, தாம் ராம்லல்லாவுக்கும் ஹனுமான்கடிக்கும் சென்றுவந்ததாக கூறினார்.

பின்னர், இக்கூட்டத்தில் பேசிய மிஸ்ரா, பார்ப்பனர்களின் ‘முக்கிய பிரச்சினைகள்’ குறித்து விவாதித்தார். “ராமர் கோயிலுக்காக கடந்த 30 ஆண்டுகளாக வசூலிக்கப்பட்ட பணத்திற்கு என்ன கணக்கு? ஓராண்டாகிவிட்டது இன்னும் அஸ்திவாரம்கூடப் போடப்படவில்லை, கோயிலைக் கட்டுவார்களா இல்லையா என்பதே கேள்வியாக இருக்கிறது” என்று ஆத்திரப்பட்ட அவர், உ.பி.யின் மிகப்பெரிய தாதாவாக வலம்வந்த விகாஸ்துபே (இவன் பார்ப்பன சாதியைச் சேர்ந்தவன்) என்கவுண்டரைச் சுட்டிக்காட்டி, கடந்த நான்காண்டு காலத்தில் பல பிராமணர்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் உ.பி. அரசின் கீழ் ‘பிராமணர்கள் மீதான கொடுமைகள்’ அதிகரித்து வருவதாகவும் குற்றஞ்சாட்டினார். எனவே பா.ஜ.க.விற்கு மாற்றாக பகுஜன் சமாஜ் கட்சியை ஆதரிக்கும்படியும் “மாநிலத்தில் 13 சதவிகிதமுள்ள பிராமணர்கள் 23 சதவிகிதமுள்ள தலித்துகளுடன் இணைந்தால் வெற்றி நிச்சயம்” என்றும் பிளந்துகட்டினார்.

இந்தியாவிலேயே உத்திரப்பிரதேசத்தில்தான் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது, சாதிவெறித் தாக்குதல்கள்; படுகொலைகள்; பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட குற்றங்கள் அதிகம் நடப்பதாக சமீபத்தில் தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் அறிக்கை விவரம் காட்டியது. அப்படிப்பட்ட ஒரு மாநிலத்தில் இருந்துகொண்டு தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நிகழ்த்தப்படும் கொடூரங்களுக்கு எதிராக போராடாத பகுஜன் சமாஜ் கட்சி, பார்ப்பனர் ஓட்டைப் பொறுக்குவதற்காக ரவுடி விகாஸ்துபேவுக்கு நீதிகேட்கிறது. மாட்டுக்கறி சாப்பிடுகிறார்கள் என தலித்துகள் கொல்லப்படும்போது பசுப் பாதுகாப்பு கொட்டகையில் பசுக்கள் ஒழுங்காக பராமரிக்கப்படவில்லை என்று வருத்தப்படுகிறது.

‘நாங்களும் இந்துதான்’ என்று வண்டியில் ஏறும் அகிலேஷ் யாதவ்

உத்தரப் பிரதேசத்தில் எதிர்க்கட்சியாக உள்ள சமாஜ்வாதி கட்சியின் வாங்குவங்கி அடித்தளமாக இருப்பது யாதவ்கள் மற்றும் முஸ்லீம்கள்தான். அதனாலேயே பா.ஜ.க. தொடர்ந்து சமாஜ்வாதி கட்சியையும் அகிலேஷ் யாதவையும் கடுமையாக தாக்கி வருகிறது. “முஸ்லீம்களின் ஓட்டுக்களை வாங்குவதற்காக அகிலேஷ் மதம் மாறினாலும் மாறுவார்” என்று சாடினார் யோகி ஆதித்யநாத். இப்படியே தாம் தாக்கப்பட்டால் இந்து யாதவ்களின் ஓட்டுக்களையும் இழந்துவிடுவோமோ (அஹிர்கள் என்றழைக்கப்படும் யாதவ் சாதியினரின் ஒரு உட்பிரிவை ஆர்.எஸ்.எஸ். தன் செல்வாக்கிற்கு கொண்டுவந்துவிட்டது) என்று அஞ்சிய அகிலேஷ் ‘நாங்களும் இந்துதான்’ என்று வலிந்து காட்டிவருகிறார்.

“கடவுள் இராமர் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்தவர். நாங்கள் இராமர் மற்றும் கிருஷ்ணரின் பக்தர்கள்” என்று கூறிய அகிலேஷ் யாதவ், பிப்ரவரி மாதம் முதலே அயோத்தி, சித்திரகூடம், ஃபருகாபாத் என கோயில் கோயிலாக சுற்ற ஆரம்பித்துவிட்டார். அவ்வாறு தாம் சென்று வழிபடும் இடங்கள், சாதுக்களிடம் ஆசீர்வாதம் பெறுவது போன்றவற்றை புகைப்படங்களெடுத்து டிவிட்டரில் பதிவிட்டார். “உண்மையான இராமராஜ்ஜியத்தை உருவாக்குவதற்காக நாங்கள் வெற்றிபெற்றால், கோயில்களிலிடமிருந்து வசூலிக்கப்படும் நகராட்சி வரிகளை தள்ளுபடி செய்வோம்” என வாக்குறுதியளித்திருக்கிறார்.

‘இந்து’ அடையாளத்தோடு சாதி அரசியலையும் சேர்த்து கையாளுகிறது சமாஜ்வாதி கட்சி. தாங்கள் ஆட்சி செய்தபோது, விஸ்வகர்மா ஜெயந்தியை விடுமுறை நாளாக அறிவித்திருந்த நிலையில், தற்போதைய யோகி அரசு அதை வாபஸ் பெற்றதன் மூலம் ஒட்டுமொத்த விஸ்வகர்மா சமூகத்தையும் அவமதித்துவிட்டதாக சாடிய அகிலேஷ் யாதவ் தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விஷ்வகர்மா ஜெயந்தி நாளை மீண்டும் விடுமுறையாக அறிவிப்போம் என்றும் கோமதி நதிக்கரையில் விஸ்வகர்மாவுக்கு பிரம்மாண்டமான கோயில் கட்டப்படும் என்றும் கூறியுள்ளார். இந்த ஆண்டு ஏப்ரல் 14 ஆம் நாளன்று அம்பேத்கர் பிறந்தநாள் சமாஜ்வாதி கட்சியின் சார்பில் ‘தலித் தீபாவளி’ என்ற பெயரில் கொண்டாடப்பட்டிருக்கிறது.

ஆம் ஆத்மி: ஆளும் வர்க்கங்களுக்கு வாய்த்த ஸ்டெப்னி, ஆர்.எஸ்.எஸ்.க்கு வாய்த்த மற்றொரு அரசியல் கருவி!

மற்ற கட்சிகளெல்லாம் உத்தரப்பிரதேச தேர்தலில் வெற்றிபெறுவதற்கான ஒரு உத்தி என்ற முறையில் ‘இந்து’ அரசியலோடு சங்கமமாகத் தொடங்கின என்றால், “ஊழல் ஒழிப்பு, வேர்மட்ட ஜனநாயகம்” என்றெல்லாம் பேசி ஆட்சிக்கு வந்த கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, தன்னை உணர்வுப் பூர்வமாகவே இந்துத்துவ அரசியலோடு கரைத்துக் கொண்டு, இந்துத்துவத்தின் மற்றுமொரு அரசியல் பிரிவாகவே உருமாறிக் கொண்டு வருகிறது. பா.ஜ.க.வை எதிர்த்து உத்தரப் பிரதேசம், கோவா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் தனித்துப் போட்டியிடும் இக்கட்சி, அங்கு மட்டுமல்லாமல் தான் ஆட்சி புரியும் டெல்லியிலும் கூட பா.ஜ.க.வின் ‘மதவாதம்-தேசியவாதம்’ என்ற இருமுனை ஆயுதத்தை புதிய பாணியில் பயன்படுத்துகிறது.

அயோத்தியில் கட்டப்பட்டுவரும் இராமர் கோயிலுக்கு சென்றுவந்த கெஜ்ரிவால், இனி டெல்லிவாசிகள் அயோத்திக்கு வந்து வழிபடுவதற்கான செலவை அரசே ஏற்கும் என அறிவித்திருக்கிறார். கடந்த தீபாவளியின் போது இராமனை வழிபடுவதற்காக டெல்லியில் அயோத்தியில் கட்டப்படும் வடிவிலான தற்காலிக இராமர் கோயில் ஒன்றை நிறுவிய கெஜ்ரிவால், தம் மனைவி, அமைச்சர்கள் புடைசூழ கோலாகலமான ஆன்மீக வழிபாட்டில் ஈடுபட்டார். ஒரு கட்சியாகவும் அரசாங்கமாகவும் சட்டப்படி பெயரளவிற்காகவாவது மதச்சார்பின்மையை கடைபிடிக்க வேண்டும் என்பது பொதுவிதியாக இருக்கும் நிலையில், கெஜ்ரிவாலின் இந்த கூத்து ஆம் ஆத்மி கட்சியை இன்னொரு பா.ஜ.க.வாகவே காட்சிப்படுத்தியது.

அவரின் இந்த திடீர் இராம பக்தி, கோயில் கோயிலாக சுற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை ஒட்டி ஆம் ஆத்மி ‘மென்மையான’ இந்துத்துவத்தைக் கடைபிடிக்கிறது என்ற விமர்சனம் எழுந்தபோது, “நான் ஒரு ‘இந்து’. நான் இராமர் கோயிலுக்கும் போவேன் அனுமன் கோயிலுக்கும் போவேன், இதில் யாருக்கு என்ன பிரச்சினை” என்று பொங்கினார். மேலும் “மென்மையான இந்துத்துவம் என்றால் என்னவென்று எனக்குத் தெரியவில்லை, நான் இந்த நாட்டின் 130 கோடி மக்களை ஒன்றிணைக்க விரும்புகிறேன். ஒரு மனிதனை இன்னொரு மனிதனுடன் இணைக்க விரும்புகிறேன். இதுதான் இந்துத்துவா.. இந்துத்துவா ஒன்றுபடுத்துகிறது, இந்துத்துவா உடையாது” என்று ஆர்.எஸ்.எஸ்.இன் இலக்கணத்தை அச்சுபிசகாமல் ஒப்பித்தார்.
“நாங்கள்தான் உண்மையான இந்துத்துவா” என்று காவி நீரோட்டத்தோடு தான் கலந்துவிட்டதை பகிரங்கப்படுத்திய கெஜ்ரிவால், பா.ஜ.க.வின் “தேசபக்தி” ஃபார்முலாவையும் விட்டுவைக்கவில்லை. டெல்லியிலுள்ள மாணவர்களுக்கு ‘தேச உணர்வை’ வளர்க்கும் விதமாக, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தனிப் பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஆம் ஆத்மி அரசு. அடுத்த ஆண்டு தேர்தலை எதிர்நோக்கியிருக்கிற உத்தரகாண்டில் தங்களது முதல்வர் வேட்பாளராக, இராணுவத்தில் கர்னலாக பணியாற்றிய அஜய் கோத்தியாலை முன்னிருத்தியிருக்கிறார்கள். உத்தரகாண்டில் ஆட்சியைப் பிடித்தால், அம்மாநிலத்தை ‘இந்துக்களின் ஆன்மிகத் தலைநகராக்குவோம்’ என்று அறிவிப்பு விடுத்திருக்கிறார் கெஜ்ரிவால்.

உத்தரப்பிரதேசத்தில் தங்களது தேர்தல் பிரச்சாரத்தின் தொடக்கமாக, கடந்த செப்டம்பர் மாதம் அயோத்தியில் திரியங்கா (மூவர்ணக் கொடி) யாத்திரை என்ற பெயரில் தேசியக்கொடியோடு ஊர்வலம் போனது ஆம் ஆத்மி கட்சி. இந்நிகழ்ச்சியை தலைமையேற்று நடத்த ஒருநாள் முன்பே வந்த டெல்லி துணை முதலமைச்சர் மனிஷ் சிசோதியா மற்றும் ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் சஞ்ஜய் சிங் ஆகியோர் ராம ஜென்ம பூமியையும் ஹனுமன் கிராந்தியையும் தரிசித்துவிட்டு, சரயு நதியில் தலைமுழுகி பக்தியோடு ஹனுமன் சாலிசா பாடினார்கள்.

பகுஜன் சமாஜ் கட்சி எப்படி உ.பி.யில் 13 சதவிகிதமுள்ள பார்ப்பனர்களின் ஓட்டுக்களை பொறுக்குவதற்கு ‘ஞானம் பெற்ற வகுப்பினரை கவுரவிக்கும் மாநாட்டை’ நடத்தியதோ அதேபோல, ஆம் ஆத்மி கட்சியும் ‘சாணக்ய விசார் சம்மேளனம்’ என்ற பெயரில் நடத்தியுள்ளது.

தொகுப்பாக பார்க்கும்போது மற்ற கட்சிகளைவிட ஆம் ஆத்மி பேசும் இந்துத்துவ அரசியல் நேரடியாக காவி பாசிசத்துடன் நெருக்கமுடையது. 2019 ஆம் ஆண்டு டெல்லியில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது பயங்கரவாத பாசிசத் தாக்குதல்கள் அரங்கேறியபோது, அமைதியாக அதை ஆதரித்து வேடிக்கைப் பார்த்தவர்தான் கெஜ்ரிவால். சென்ற அக்டோபர் மாதம் பஞ்சாபில் விவசாயிகளுடனான கூட்டமொன்றில் கலந்துகொண்ட கெஜ்ரிவாலிடம், “காஷ்மீரின் 370-ஆவது சிறப்புச் சட்டத்தை இரத்து செய்திருக்கும் மோடியின் நடவடிக்கையைப் பற்றி உங்கள் கருத்து என்ன?” என்று ஒரு விவசாயி கேள்வி எழுப்பியபோது, “இது ‘அரசியல் கேள்வி’, வேறு எதாவது இருந்தால் கேளுங்கள்” என்று சொல்லிக் கூட்டத்தை முடித்துக் கொண்டு கிளம்பியிருக்கிறார்.

ஆம் ஆத்மியின் இந்தப் போக்கை விமர்சிக்கும் லிபரல்கள், அவரை ‘பா.ஜ.க.வின் பி டீம்’ என்கின்றனர். ஆம் ஆத்மி பா.ஜ.க.வின் பி டீம் என்று சொல்வதைவிட ஆளும் வர்க்கங்களின் பி டீம் என்று சொல்வதுதான் பொருத்தமானது. மோடி அரசின் பொருளாதாரத் தாக்குதல்களால் கிளர்ந்தெழும் உழைக்கும் மக்கள் நாளுக்குநாள் பா.ஜ.க.வின் மீது அதிருப்தியையும் ஆத்திரத்தையும் காட்டத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் அதன் சித்தாந்தமான இந்துத்துவத்தின் மீதோ, தேசவெறியின் மீதோ அல்ல.. இச்சூழலில் பா.ஜ.க.வின் செல்வாக்கு சரிந்தால் அதே ‘இந்துத்துவம்-தேசவெறியைப்’ பேசி வெகுமக்களைக் கவரக்கூடிய ஒரு கட்சியாக உருமாற வாய்ப்புள்ள ஆம் ஆத்மியை ஆளும் வர்க்கங்கள் தத்தெடுத்துக் கொள்ளும். சுருக்கமாகச் சொன்னால் பா.ஜ.க. என்ற டயர் பஞ்சரானால் வேறொன்றை மாற்றிக் கொள்வதற்கான ஸ்டெப்னியாக (Stepney) ஆளும் வர்க்கங்களுக்கு வாய்த்திருக்கிறது ஆம் ஆத்மி.

மேலும் ஆர்.எஸ்.எஸ். என்ற பாசிசப் படை, பா.ஜ.க. என்ற கட்சியை மட்டும் பயன்படுத்தித்தான் இந்துராஷ்டிரத்தை அடையவேண்டுமென்பதில்லை. ஆர்.எஸ்.எஸ்.க்கு பா.ஜ.க. ஒரு கருவி மட்டுமே. பா.ஜ.க. அல்லாத வேறொரு கட்சியையும் கூட ஆர்.எஸ்.எஸ். தங்கள் அரசியல் கருவியாக பயன்படுத்திக் கொள்ளமுடியும். அது, இந்திய நாட்டில் நூறாண்டுகால வேர்களைக் கொண்டிருக்கிறது. எந்தக் கட்சியையும் தனது கருத்துருவாக்கத்துக்கு பணிய வைக்கக் கூடியது என்கிறார் சி.பி.ஐ.(எம்.எல்) ரெட் ஸ்டாரைச் சேர்ந்த தோழர் பி.ஜே.ஜேம்ஸ். (நவ தாராளவாதம் மற்றும் நவ பாசிசம்: ஒரு இடதுசாரி பார்வை – என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஆற்றிய உரை)

படிக்க :

ரூ. 10,72,000 கோடி : மோடியின் ஆட்சியில் தள்ளுபடி செய்யப்பட்ட வாராக்கடன் !

மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் அணைப் பாதுகாப்பு மசோதா !

இந்துராஷ்டிர அபாயத்தை எதிர்கொள்வதெப்படி?

பார்ப்பன இந்துமதவெறி பாசிசம் எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் வேரூன்றி வளருகிறதோ, அந்த அளவிற்கு ‘சாத்தியமான மாற்று’களெல்லாம் மறைந்துகொண்டிருக்கின்றன. ஒன்று, பாசிச சர்வாதிகாரத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லை, பாட்டாளி வர்க்கக் கட்சியின் தலைமையில் உழைக்கும் மக்களைத் அணிதிரட்டி மோத வேண்டும். இவை இரண்டிற்கும் இடையிலான இடைக்கட்டம் – சுவாசிப்பதற்கான அவகாசம் – எதுவுமில்லை. இதுதான் எதிர்வரும் உத்தரப்பிரதேசத் தேர்தல் நமக்கு உணர்த்தும் உண்மை.

பா.ஜ.க.விற்கு எதிராக தமிழகத்தில் தி.மு.க.வை ஆதரிக்கச் சொன்னவர்கள், தற்போது உத்தரப்பிரதேசத்தில் எந்தக் கட்சியை ஆதரிக்கலாமென சொல்ல முடியுமா? தமிழக அளவில் தி.மு.க. ‘சாத்தியமான மாற்றென்றால்’, இந்திய அளவில் சாத்தியமான மாற்று எது? காங்கிரசு என்று சொல்வார்களானால், கேரளா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் சி.பி.எம்.ஐயும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியையும் எதிர்க்க வேண்டுமா? ஆனால் அங்கெல்லாம் மாநில அளவில் உள்ள நிலையை கவனித்தால் சி.பி.எம்.-உம் திரிணாமுல் காங்கிரசும் தானே மாற்றாகத் தெரிகிறது. எனவே இது மக்களைத் திரட்டுவதில் நம்பிக்கையில்லாத அவநம்பிக்கை வாதம் என்பதோடு படுகுழப்பமான வாதமுமாகும்.

காவி – கார்ப்பரேட் பாசிசத்தை எதிர்த்து முறியடிப்பதோ, இல்லை அதற்காகப் போராடும் சக்திகளுக்கு துணை செய்வதோ காங்கிரசு, தி.மு.க. உள்ளிட்ட எந்த ஓட்டுக் கட்சிக்கும் நோக்கமல்ல. ஓட்டுப் பொறுக்கி ஆட்சி அதிகாரத்தைப் பிடிப்பதும் அதனைப் பயன்படுத்திக் கொண்டு சுரண்டிக் கொழுப்பதும்தான் நோக்கம். அதற்கு மக்களுடைய ஆதரவைப் பெறும் ஓரே காரணத்திற்காக தங்கள் பிரச்சாரங்களையும் கொள்கைகளையும் வடிவமைத்துக் கொள்கிறார்கள். தமிழகத்தின் பா.ஜ.க. எதிர்ப்புணர்வு தி.மு.க.வுக்கு சமூக நீதியைக் கொடுத்தது. உத்திரப்பிரதேசத்தின் இந்துமதவெறி மேற்சொன்ன கட்சிகளை இந்துத்துவத்தோடு சங்கமிக்கச் செய்திருக்கிறது.

பாசிச எதிர்ப்பு போராட்டத்தில் தீர்மானகரமான அம்சம் எதுவெனில், யார் மக்களை அரசியல்படுத்துவது என்பதுதான். பாட்டாளி வர்க்க அரசியிலின் கீழ் பரந்துபட்ட உழைக்கும் மக்களை நாம் மக்களை அணிதிரட்டப்போகிறோமா, இல்லை இந்துத்துவ அரசியலின் கீழ் எதிரி அணிதிரட்டப்போகிறானா என்பதுதான் விவகாரமேயன்றி ‘சாத்தியமான மாற்று’ என்ற பெயரில் ஆளும்வர்க்க கட்சிகளுக்கு முட்டுக்கொடுத்துக் கொண்டிருப்பதல்ல.

 செவ்வந்தி

பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம் : யாருடைய நலனுக்கானது ?

ந்திய நகரங்களில் எழும்பி நிற்கும் வானுயர்ந்த கட்டிடங்கள் நமது நாட்டின் வளர்ச்சிப் பாதையை காண்பிக்கின்றன என்று மோடி அரசு மார்தட்டிக் கொள்கிறது. முன்னோர்கள் கூறியதுபோல் “ஒரு வீட்டின் அழகை அவன் வீட்டின் முன்புறம் பாக்காதே! கொள்ளைப்புறம் பார்” என்பது போல இந்தியாவின் வளர்ச்சியை முன்பக்கம் வானுயர்ந்து நிற்கும் கட்டிடங்களைக் கொண்டு பார்க்க முடியாது. பின்பக்கமுள்ள சேரிகளின் உண்மை நிலையை வைத்துத் தான் பார்க்கவேண்டும். அதன் பரிமாணம் வேறொன்றாக உள்ளது.
பெரும்பணக்காரர்கள் வானுயர்ந்த கட்டிடங்களில் கொண்டாட்ட நிலையில் இருக்கும்போது, ஏழை மக்களோ ‘ஒருவேளை சோத்துக்கும், குந்தி இருக்க ஒரு குடிசைக்க்கும்கூட வழி இல்லாத நிலையில் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.
அப்துல் கலாம் 2020-ல் இந்தியா வல்லரசாக இளைஞர்களை கனவு காணச் சொன்னார். இன்றைக்கோ கனவுகள் அனைத்தும் பொய்த்துப்போய் ஓட்டைவிழுந்த குடிசையில் சோறு கிடைக்காமல், கல்வி, வேலைவாய்ப்பு இல்லாமல் பல கோடி இளைஞர்களை நிர்க்கதியாக்கபட்டதே நடைமுறை எதார்த்த உண்மை. நம்மால் கனவு மட்டுமே காணமுடியும். முதலாளிகள் ஏற்கெனவே கூறுவதுபோல ‘ஏழை மக்கள் பூமிக்கு தேவை இல்லாதவர்கள்’ என்பதை உண்மையாக்க 2019-ல் ஸ்மார்ட் சிட்டி என்ற திட்டத்தை கொண்டுவந்து ஏழை மக்களின் குடியிருப்புகளை – சேரிகளை நகரத்தில் இருந்து அப்புறபடுத்திக்கொண்டிருக்கிறது, அரசு.
படிக்க :
PM-CARES : பிரதமரின் கொரோனா நிவாரண நிதி மர்மங்கள் – சில கேள்விகள்
பிரதம மந்திரி பயிர்க் காப்பீடு திட்டம் : கார்ப்பரேட்டுகளுக்கு நேரடி மானியம் !
ஏதோ மக்கள் நலனுக்காக அரசால் கொண்டுவரப்படும் திட்டங்கள் போலத் தோன்றும் பல திட்டங்கள் ஆளும்வர்க்க நலனுக்கான திட்டங்களாவே உள்ளன. அத்தகையதொரு கவர்ச்சிகரமான மாய சிலந்திவலைத் திட்டம்தான் ஏழைகளுக்கான வீடு கட்டிதரும், “பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டம்” (பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா).
பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம் :
காங்கிரஸ் ஆட்சி ஏழை மக்களுக்கு வீடுகட்டி தரப்போவதாக 1985-1986-ல் “இந்திரா ஆவாஷ் யோஜனா” என்ற திட்டதை கொண்டு வந்தது. 2015-ல் பாசிச பாஜக ஆட்சியில் இத்திட்டதில் சிறிது மாற்றத்தை கொண்டுவந்தது. அரசால் மானியமாக கொடுக்கப்பட்ட தொகை 1,20,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் 2019 வரை 83.63 லட்சம் வீடுகளுக்கு  ஒப்புதல் வழங்கபட்டு, 26.08 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கபட்டுள்ளன என்று அரசு அறிவித்துள்ளது. இதற்கான மொத்த தொகையான ரூ.4,95,838 கோடியில், தற்போது வரை 5144.5 கோடி மத்திய அரசால் விடுவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 2022க்குள் 2 கோடி வீடுகள் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கபட்டுள்ளது. இத்திட்டதுக்கான தொகையில் மத்திய, மாநில அரசுகள் பங்கீடு செய்கின்றன அவை.
2019-2020 வரை ரூ.1,20,000-ஐ மானியமாக வழங்கிய அரசு, 2021-2022 ஆண்டு 1,70,000 ரூபாயாக உயர்த்தியது. அரசு கொடுக்கும் இந்த தொகை நான்கு கட்டங்களாக வங்கிகணக்கில் போடப்படுகிறது. இதற்கான வீட்டின் அளவு 269 சதுர அடிக்கு மேல் இருக்கலாமென கூறியுள்ளது. கழிவறைக்கான தொகையாக 12,000 ரூபாயும் கொடுக்கப்படுகிறது. ஒரு சதுர அடிக்கு ரூ.1500 செலவாகும் என்று வைத்து கொண்டாலும் ஒரு வீட்டை கட்டி முடிக்க (269×1500= 4,03500) 4,035,000 ரூபாய் செலவாகும். இதிலிருந்து ஒரு கேள்வி எழலாம், இப்போழுது உள்ள சிமெண்ட், கம்பி, மணல், இதர பொருட்கள் விலை ஏற்றம் இருந்தாலும் ஏழை மக்கள் ஏன் இத்திட்டத்தின் ‘பயனாளி’ ஆகிறார்கள் என்று?
மக்கள் இத்திட்டத்தை விரும்ப காரணம்?
இத் திட்டம் முதலில் மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ள, வாழ்நாள் லட்சியங்களில் ஒன்றான, “சொந்த வீடு வேண்டும்” என்ற ஆசையை இலக்காக்கி தமது வலையில் ஆளும் வர்க்கம் விழ வைக்கிறது. இதை புரியாமல் அரசு கொடுக்கும் அற்ப தொகையை வைத்து வீடு கட்டிவிடலாம் என்று நினைத்து, “நாமும் இறப்பதற்குள் நல்ல வீட்டில் வாழ்ந்து விடலாம்” என்ற கனவில் வீட்டை கட்ட ஆரம்பிக்கும் போதுதான் உண்மை நிலை தெரிய வருகிறது. இத்திட்டம் நமக்கு ‘மயிரை கட்டி மலையை இழுப்பது போன்றது’ என்பதை புரிந்துக்கொள்கிறார்கள்.
அரசின் இச்செயல் சதுரங்க வேட்டை என்ற திரைப்படத்தில் “ஒருவரை ஏமாற்றுவதற்கு அவனிடம் கருணையை எதிர்பார்க்க கூடாது, அவரது ஆசையை தூண்ட வேண்டும்” வரும் வசனம்தான் நினைவுக்கு வருகிறது. வீடு கட்ட ஆரம்பித்த பிறகு ஏற்படும் பிரச்சினைகள் மக்களை கல்லை கட்டி கிணற்றில் தள்ளுவது போன்றதாகவே உள்ளது.
வழிபறி கொள்ளையர்கள்:
வீடு கட்டத் தொடங்கிய பிறகு அரசு அதிகாரியான கட்டிட பொறியாளர் அல்லது மேற்பார்வையாளர் (overseer) வந்து பார்வை இடுவார். அவருக்கு கப்பம் கட்டினால்தான் நமது வங்கிகணக்கில் தொகை போடப்படும். அப்படி ஒவ்வொருமுறை வங்கிக் கணக்கில் பணம் போடும்போதும் ‘மேற்படி’ செய்ய வேண்டியதை முறைப்படி செய்ய வேண்டும். அது மட்டுமல்லாமல் லோக்கல் அரசியல்வாதிகள், கணினி இயக்குபவர் என லஞ்சம் வாங்குபவர்களின் கணக்கு நீண்டுகொண்டே போகும். பஞ்சாயத்து தலைவர் போன்றோர் தன்னுடைய போலி கணக்கில் வீடு வாங்கி, தன்னுடைய வீட்டை விரிவுபடுத்துவதும் இன்னொரு பக்கம் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது.
கடனில் சிக்கவைக்கப்படும் மக்கள்:
வீடுகட்ட தொடங்கும் மக்கள் இதற்காக குடும்ப உறுப்பினர்கள் உட்பட முழு உழைப்பையும் கொட்டினாலும், தப்பித்தவறி வீட்டில் மீதமிருக்கும் நகைகளை விற்றாலும் வீட்டைக் கட்டி முடிக்க இயலவில்லை. அதற்காக கடன் வாங்குகின்றனர், வங்கிக் கடன், நுண் கடன், கந்து வட்டிக் கடன் என எல்லா கடன்களையும் வாங்கிவிட்டு, வீட்டையும் கட்டி முடிக்க முடியாமல், வாங்கிய கடனையும் கட்ட முடியாமல் மன உளைச்சலில் சிலபேர் தற்கொலை செய்கின்றனர். எத்தனை கொடூரம் இது? தற்போதுள்ள நிலையில்லாத வேலையும், குறைந்த அற்ப கூலியும், அவர்களின் அன்றாடம் தேவைகளுக்கே போதவில்லை. கடனை அடைக்க மீண்டும், மீண்டும் கடன் வாங்குவது என்று புதைச்சேற்றில் சிக்கவைக்கப்படுகிறார்கள். இதனால் குடும்பத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகள், மன உளைச்சல்கள் வேறு.
வீட்டை கட்டி முடித்தாலும் நிம்மதி இழந்த வாழ்க்கை :
தொடர்ந்து வீட்டுக்காக கடன் வாங்குவாதல் ஏழை மாணவர்கள் முதலில் விடுமுறை நாட்களிலும் பிறகு பள்ளி, கல்லூரிக்கு விடுப்பு எடுத்து, வேலைக்கு செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. வீட்டில் யாருக்கேனும் உடல்நிலை பிரச்சினை ஏற்பட்டால், அதுவும் கடுமையான நோய் ஏற்பட்டால், குடும்பமே ஸ்தம்பித்து விடுகிறது. பாதி கட்டி முடிக்கப்படாமல் காட்சியளிக்கும் வீடோ, நான்கு சுவர்களோ, ஒவ்வொரு கணமும் வேதனையில் ஆழ்த்துகிறது. வீடு கட்டி முடிக்க 3-லிருந்து 5 ஆண்டுகள் ஆகின்றன. இவற்றையும் மீறி கட்டி முடிக்கபட்டாலும் கடன் சுமைலிருந்து மீளமுடியாமல் நிம்மதியை இழக்க வைக்கிறது.
இத்திட்டம் கிராமங்களை வளர்ச்சி பாதையில் கொண்டு விட்டதா?
இத்திட்டதின் மூலம் கூரை வீடுகள் ஒழிக்கப்படும் என்று காவி – கார்ப்பரேட் பாசிச மோடி அரசு கூறுகிறது. உண்மைதான் உண்மையாகவே கூரைகள் அழிந்து வருகின்றன. ஆனால் கான்கிரீட் வீட்டுக்கு பதிலாக தார்பாய் வீடுகளாக மாறிவருகின்றன. விவசாயம் அழிவு, வேலையின்மை காரணமாக அன்றாடம் கூலியைக்கூட ஈட்ட முடியாமல், வாங்கும் சக்தி குறைந்து அன்றாடம் வாழ்க்கையை நகர்த்தவே முடியாத நிலைக்கு பலர் தள்ளப்பட்டுள்ளனர்.
வீட்டின் கூரை மாற்ற ரூ.10,000 வரை செலவு ஆகும் என்பதால் அவ்வளவு தொகை செலவிடமுடியாமல், அதற்கு மாற்றாக தார்பாயை தேர்ந்தெடுத்து உள்ளனர். இதன் விலையோ ரூ.2,000 ஆகும். இரண்டுமே குறைந்தது ஒரிரு ஆண்டுகள் உழைக்கும் என்பதால் தார்பாயி மூலம் கூரையை மறைக்க வேண்டியுள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.
கிராமங்களின் நிலை இது என்றால் நகரங்களில் ஏழை மக்களின் நிலை வெறும் தகரக் கொட்டகையாக மாறிவருகிறது. தார்பாய், தகரம் இரண்டிலேயும் வெயில் காலங்களில் வீட்டிற்குள் இருக்கவே முடியாது. அந்த அளவிற்கு  வெப்பம் அதிகமாக இருக்கும். தார்பாய் வீடுகளில் மழைக்காலங்களில் தரையில் ஓதம் (ஈரம்) ஏறும் என்று கூறுகின்றனர். இவ்வாறு நகர, கிராம ஏழை மக்கள் வாழவே முடியாத நிலையில் நிற்கின்றனர்.
இத்திட்டத்தின் பின்புலம்:
1970-ல் ஏற்பட்ட உலகப் பொருளாதார மந்தம் காரணமாக ஒவ்வொரு நாட்டிலும், வல்லரசு நாடுகளின் வலியுறுத்தலுக்கு இணங்க, அந்நாடுகளின் அரசால் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. அதில் ஒன்று தான் 1985-1986-ல் கொண்டுவரப்பட்ட இந்திரா ஆவாஸ் யோஜனா திட்டம்.
மீண்டும் 2008-ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் மீள முடியாத சிக்கலில் மாட்டிக்கொண்டது. இதனால் பல்வேறு துறைகள் திவால் நிலைக்கு சென்றன. இதில் கட்டுமான துறைகள் மட்டும் தப்புமா என்ன?  இந்நெருக்கடியில் இருந்து மீள முடியாமல் முதலாளித்துவம் அழுகி நாறிக்கொண்டு இருக்கிறது. இதன் விளைவாக 2010-ல் இருந்து கட்டுமானத் துறையை மீட்டெடுக்க பல்வேறு திட்டங்களை அரசு கொண்டுவந்தது. இதில் ஏழைகளுக்கான வீடு கட்டிக்கொடுக்கும் திட்டத்தின் நிதியை அதிகப்படுத்துதல் மூலம் அதிக வீடு கட்ட அனுமதி வழங்கியது.
காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் குறைவான எண்ணிக்கையில் அனுமதி கொடுக்கப்பட்டது, பிஜேபி மோடி அரசு 2016-ல் திட்டதின் பெயரை மாற்றி “பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா” என்று வீடுகளின் எண்ணிக்கையையும்  நிதியையும் அதிகரித்து செயல்படுத்தி வருகிறது.
கார்ப்பரேட் நிறுவனங்கள் அதிகமான உற்பத்தியாலும், மக்களின் உழைப்பை அதிகமாக சுரண்டியதாலும் மக்களின் வாங்கும் சக்தி குறைந்தது. இதனால் கட்டுமான பொருட்களை தயாரிக்கும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் தேக்கம் ஏற்பட்டது. இதனை மீட்டெடுக்க கொண்டுவரப்பட்டதே இத்திட்டம்.
மக்களின் வரி பணத்தில் அம்பானி, ஆதானி, டால்மியா, டாடா தரகு முதலாளிகளுக்கும் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் கொட்டிக் கொடுக்கிறது மோடி அரசு. அன்றாடம் உழைக்கும் மக்களின் உழைப்பையும், பணத்தையும் அவர்கள் சேமித்து வைத்து இருக்கும் அற்ப பணத்தையும், நகைகளையும் பிடுங்கி பெருமுதலாளிகளுக்குக் கொடுக்கின்றது.
பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களையும் அவற்றின் நலனுக்காக செயல்படும் காவிக் கும்பலையும் வீழ்த்த மக்கள் அமைப்பாய் திரள்வதே இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
படிக்க :
ஜன் தன் யோஜனா – திருட வாரான் வீட்டு கஜானா!
ஜார்கண்ட் : தொடரும் இந்திய அரசின் பட்டினிப் படுகொலைகள் !
மோடியின் வழியில் ஸ்டாலின் :
தமிழக அரசு 2031க்குள் தமிழகத்தை “குடிசையில்லாத மாநிலமாக” மாற்ற திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஏழை மக்களுக்கு 9.53 லட்சம் வீடுகள் கட்டித்தரப்போவதாக அறிவித்துள்ளது. வேளாண்மைக்குப் பிறகு அதிக வேலை வாய்ப்பை அளிப்பதும் மற்றும் அதிக வருவாய் ஈட்டிக்கொடுப்பதுமான கட்டுமானத்துறையை மேம்படுத்தப்போவதாகவும், முதல்கட்டமாக 6.2 லட்சம் மக்களுக்கு வீடுகள் கட்டித்தரப்போவதாக கூறியுள்ளது.
மோடியும் ஸ்டாலினும் கார்ப்பரேட் நலனுக்கான கொள்கையையே நடைமுறைப்படுத்தி வருகின்றனர் என்பது நாம் அறிந்ததே. எனினும் பாஜக கும்பல் ஆளும் வர்க்கத்தின் “ஆகப் பிற்போக்கான” பிரிவை பிரதிநிதித்துவப் படுத்துகிறது. திமுக போன்ற கட்சிகள் ஆளும் வர்க்கத்தின் இன்னொரு பிரிவை பிரதிநிதித்துவ படுத்துகின்றனவா, ஒருவேளை அவ்வாறு பிரதிநிதித்துவபடுத்தி வளர்ந்து வரும்போது ஆளும் வர்க்கத்தினரிடம் எந்தளவுக்கு முரண்பாடு வெடிக்கும், இவை பாசிசத்தை எதிர்ப்பதற்கான ஐக்கிய முன்னணியில் இணையும் ஆளும் வர்க்கத்தின் இன்னொரு பிரிவாக இருக்குமா என்பதற்கு வரும்காலம்தான் பதிலளிக்கும்.
எது எப்படி இருந்தாலும், பாசிசத்தின் அடிநாதமாக இருக்கும் கார்ப்பரேட்டுகளுக்கு ஒன்றிய மோடி அரசும், தமிழ்நாட்டின் ஸ்டாலின் அரசும் செய்துவரும் கார்ப்பரேட் சேவையை அம்பலப்படுத்துவதை நாம் தொடர்ந்து செய்ய வேண்டும்.
கந்தசாமி

தொழிலாளர்களின் உணவில் பாரபட்சம் காட்டும் அசோக் லேலண்ட் || புஜதொமு கண்டனம்

ஒசூர் – அசோக் லேலண்ட் யூனிட் 1,யூனிட் 2 நிர்வாகமே!
உணவில் பாரபட்சம் காட்டாதே!
காண்ட்ராக்ட், CL , செக்யூரிட்டி, லாஜிஸ்டிக், அப்ரண்டீஸ் தொழிலாளர்களுக்கு தரமான, சரிவிகித, ஒரே மாதிரியான, சமமான சாப்பாடு வழங்கு!

அசோக் லேலண்ட் -ல் பணிபுரியும் நிரந்தர, CL, காண்ட்ராக்ட், செக்யூரிட்டிகள், லாஜிஸ்டிக் தொழிலாளர்களே!

70 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட அசோக் லேலண்ட் நிறுவனத்தில் நாம் அனைவரும் இரவு, பகல் பாராமல் கடுமையாக உழைத்து வருகிறோம். நமது உழைப்பில் பல ஆயிரம் கோடி இலாபம் ஈட்டும் நிறுவனமாக வளர்ந்துள்ளது. ஆனால், நமது ஆலை நிர்வாகமோ தொழிலாளர்களுக்கு கேண்டீனில் வழங்கப்படும் மதிய உணவில் பெரும் அநீதி இழைத்து வருகின்றது. நாம் எல்லோரும் ஒரே ஆலையில் பணிபுரிந்து வந்தாலும் இங்கு நிரந்தரத் தொழிலாளர்களுக்கு ஒரு மாதிரியும் காண்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கு ஒரு மாதிரியும் பாரபட்சமான வகையில் உணவு வழங்கப்படுகிறது. நிரந்தரத் தொழிலாளர்களுக்கு சப்பாத்தி, முட்டை, தயிர், வெரைட்டி ரைஸ் எனவும் காண்ட்ராக்ட், செக்யூரிட்டி மற்றும் லாஜிஸ்டிக் தொழிலாளர்களுக்கு வெறும் சாதமும் சாம்பாரும் பெயரளவிற்கு ஒரு கூட்டு மட்டும் வழங்கப்படுகிறது. அதுவும் அளவு சாப்பாடு தான். நிரந்தரத் தொழிலாளர்களுக்கு சாம்பார் கெட்டியாகவும் காண்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சாம்பார் தண்ணீரை போலவும் இருக்கிறது.

இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் நிரந்தரத் தொழிலாளர்களுக்கு வழங்குவதாக காரணம் சொல்லி சாம்பாரில் போடப்படும் மொத்த காய்களையும் வடித்தெடுத்து விடுகிறார்கள். அதனால் CL, காண்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவது சாம்பாரா? ரசமா? என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு புது மாதிரியாக இருக்கிறது.

CL, காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் என்ன வேற்றுகிரகவாசிகளா? அவர்கள் தொழிலாளர் வர்க்கத்தின் அங்கமில்லையா? அவர்களும் நம் சொந்தபந்தங்கள்தான். நம் உறவினர் அல்லது நம் நண்பர்களின் பிள்ளைகள்தானே? அவர்களின் வியர்வையிலும் ரத்தத்திலும்தான் அசோக் லேலண்ட் நிறுவனம் இத்தனை வளர்ச்சி பெற்றிருக்கிறது என்பதை எவரும் மறுக்க முடியாது.

படிக்க :

ஓசூர் அசோக் லேலாண்டில் சட்டவிரோத லே – ஆஃப் !

ரெனால்ட் நிசான் முதல் அசோக் லேலண்ட் வரை : ஊதிய உயர்வு உரிமைக்கான ஆர்ப்பாட்டம் !

இதுநாள் வரை தொழிலாளர்களுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு வந்தவர்களை திடீரென்று டேபிளில் அமரவிடாமல் சிறிதும் மரியாதையின்றி விரட்டியடிக்கிறது நிர்வாகம். நிரந்தரத் தொழிலாளர்கள் தங்களது சாப்பாட்டை காண்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிப்பதைக்கூட பொறுத்துக்கொள்ள முடியாமல் டேபிளில் இருந்து குற்றவாளிகளைப் போல் துரத்தி, அவர்களை அவமானப்படுத்துகிறது.

ஒப்பீட்டளவில் அதிகாரிகளை விட மிக, மிகக் குறைவான கூலிக்கு வேலை செய்யும் CL, காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் சிறிது நேரம் ஓய்வெடுக்கவோ, உட்காரவோ விடாமல் வேலை வாங்கும் அதிகாரிகள், என்றாவது இந்த தொழிலாளர்கள் காலை டிபன் சாப்பிட்டர்களா? மதிய உணவு கிடைத்ததா? வயிறார சாப்பிட்டார்களா? ஆரோக்கியமான உணவுச் சூழல் உள்ளதா என்று விசாரித்திருக்கிறார்களா? தேவைப்படும் அளவிற்கு கேட்டு வாங்கி சாப்பிடும் உரிமை அவர்களுக்கு ஏன் இல்லை? இலட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் சம்பளம் பெறும் இந்த கார்ப்பரேட் அதிகாரிகளுக்கு உண்மையில் மனிதத்தன்மை என்ற ஒன்று இருக்கிறதா?

மெட்டீரியல் முவ்மெண்ட், லோடிங் – அன்லோடிங், மெசின் கிளீனிங், ஷாப்களை சுத்தம் செய்வது, கழிவறை கிளினிங் செய்வது உள்ளிட்ட பாதுகாப்பு பணிகள் என எண்ணற்ற, கடுமையான வேலைகளை காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் செய்கிறார்கள். இங்கு அவர்களின்றி உற்பத்தியில் ஒரு அணுவும் அசையாது. ஆனால், அவர்களுக்கு நல்ல தரமான உணவு வழங்காமல் தாழ்த்தப்பட்ட மக்களாகவே நடத்துகிறது,நிர்வாகம்.

கடந்த ஓராண்டாக டிவிஎஸ் லாஜிஸ்டிக்கில் பெண்களும் பணிபுரிந்து வருகிறார்கள். பெண்களை சமைப்பதற்காகவே பிறவி எடுத்தவர்கள் போல நாம் நடத்துகிறோம். வீட்டில் நமக்கு வகை, வகையாக சமைத்துப் போடுவதிலேயே தங்களது பாதி வாழ்நாளை அவர்கள் செலவழிக்கின்றனர். அப்படிப்பட்ட பெண்களுக்கு நமது ஆலையில் வெறும் சாதமும் சாம்பாரும் மட்டும்தான் வழங்கப்படுகிறது. அந்த உப்பு சப்பில்லாத சாப்பாட்டை அவர்கள் ஐந்து அல்லது பத்து நிமிடத்தில் ‘சாப்பிட்டுவிட்டு’ வெறுப்புடன் வெளியேறி விடுகிறார்கள். இந்த லட்சணத்தில் நிர்வாகம் லாஜிஸ்டிக் பெண்களை அழைத்து மார்ச் 8 தேதி மகளிர் தினத்தை நடத்துகின்றது. பெண்களுக்கு நல்ல தரமான சாப்பாடு கூட கொடுக்க வக்கில்லாத நிர்வாகத்திற்கு, அவர்களை அழைத்து மகளிர் தினத்தைக் கொண்டாட வைப்பதற்கு என்ன யோக்கிதை இருக்கிறது?

தொழிலாளர்களை கொடும் உழைப்புச் சுரண்டலுக்கும் அடக்குமுறைக்கும் உள்ளாக்குகின்ற TVS நிர்வாகம் கூட அனைவரையும் வரிசையில் அமர்த்தி, சமமான உணவு வழங்குகிறது. யுனிட்-2வில் உச்சபட்டமாக ஜாதிக்கு ஒரு பந்தி என்பது போல காண்ட்ராட் தொழிலாளர்களுக்கு தனி கேண்டீன் கட்டி ஒதுக்கிவிட்டது. அற்பக்கூலி பெறுவதால் படித்த CL, அப்ரண்டீஸ் தொழிலாளர்கள் நைட் சிப்ட்டில் வேலை பார்த்துவிட்டு தூங்கி எழுந்து காலை டிபன் கூட சாப்பிடாமல் நேரடியாக மதிய உணவு சாப்பிட்டு 4.30pm சிப்ட்டிற்கு வருகின்றனர். பசியுடன் 8.30pm வரை வேலையில் ஈடுபடுகின்றனர். இது மிகப்பெரிய துயரமாகும். இதயமுள்ள மனிதர்கள் எதிர்த்து நிற்பார்கள். இதில் நமது நிர்வாகமோ துளியும் மனசாட்சியின்றி நடந்து கொள்கிறது.

ஆலையில் செக்யூரிட்டிகள் 12 மணி நேரம் இரவு பகலாக கண்விழித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் பிரதான உணவு சப்பாத்திதான். ஆனால் அவர்களுக்கும் சப்பாத்தி வழங்கப்படுவதில்லை.

நிரந்தரத் தொழிலாளர்கள், காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் : கூலி மட்டும்தான் வித்தியாசம். அடக்குமுறையும் அடிமைத்தனமும் ஒன்றுதான் !

சுமார் பத்தாண்டுகளுக்கு முன் அசோக் லேலண்ட் தொழிலாளர்கள் சங்கம், “காண்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கும் கேண்டீனில் உணவு வழங்க நிர்வாகத்திடம் பேசி முடித்துவிட்டதாக” அறிவித்தது. சில மாதங்கள் CLகள் மட்டும் சமத்துவமாக நடத்தப்பட்டார்கள். ஆனால், இன்று அனைத்து தொழிலாளர்களுக்கும் நல்ல தரமான, சரிவிகித, ஒரே மாதிரியான, சமமான உணவு வழங்காமல் நிர்வாகம் வஞ்சகம் செய்கிறது. சர்வதேச அளவில் தரம், மைக்ரோசெண்டில் உற்பத்திக்கொள்கை வகுத்துள்ள நிர்வாகம் உழைப்போரின் உணவுக் கொள்கையில் ஆய்வுகளின்றி, நேர்மையின்றி நடந்துகொள்கிறது. சரிவிகித சத்தான உணவு வழங்கப்படாததால் நிரந்தத் தொழிலாளர்கள் 45 வயதுக்கு மேல் ஆரோக்கிய வாழ்வு பறிக்கப்பட்டு நடைபிணமாக்கப்படுகிறார்கள்.

இது வெறும் சாப்பாடு பிரச்சனை மட்டுல்ல. வேலையில், சம்பளத்தில், உடையில், என தொழிலாளர்களிடையே பிரிவினைகளை ஏற்படுத்திய நிர்வாகம், உணவில் கூட வித்தியாசத்தை புகுத்தி நவீன அடிமைத்தனத்தைக் கட்டமைக்கிறது!

நிரந்தரத் தொழிலாளி, CL, காண்ட்ராக்ட், செக்யூரிட்டிகள், அப்ரண்டீஸ் என ஒவ்வொரு வேலைப் பிரிவினரையும் தனித்தனி சாதியாகவே நிர்வாகம் பராமரித்து வருகிறது என்பதை தொழிலாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். நிரந்தர வேலை உரிமைக்காக போராட வேண்டிய இன்றைய காலச் சூழ்நிலையில் சாப்பாட்டிற்காக போராட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இது தொழிலாளர் வர்க்கத்திற்கே அவமானம். அதேநேரத்தில் தொழிலாளர்களுக்கு சமமான உணவைக் கூட வழங்காத கார்ப்பரேட் நிறுவனமான நமது அசோக் லேலண்ட் நிர்வாகம் இதற்காக மிகுந்த வெட்கப்படவேண்டும்!

அசோக் லேலண்ட் சங்கங்களே!

ஒரே ஆலைக்குள் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உணவும் கேன்டீனும் வேறு, வேறு என்ற பாகுபாட்டை நீக்கு!

காண்ட்ராக்ட், CL, அப்ரண்டீஸ், செக்யூரிட்டிகள், லாஜிஸ்டிக் தொழிலாளர்களுக்கு சரிவிகித சத்தான, தரமான, சமமான உணவை வழங்க நிர்வாகத்திடம் பேசி முடி!

அசோக் லேலாண்ட் நிர்வாகங்களே!

அனைவருக்கும் சமமான, சரிவிகித சத்தான உணவை வழங்கு!
உணவில் பாரபட்சம் காட்டாதே!
மனிதர்களை மனிதர்களாக நடத்து!

தொழிலாளர்களே!

நிர்வாகம் நம்மீது திணிக்கும் அடக்குமுறைகளை எதிர்த்து, பேசத் தயங்கினால், உரிமைகளுக்காகப் போராட மறுத்தால், நாளை தினம் நாம் சிந்திப்பதையே மறந்துவிடுவோம்!

பிறகு, அடிமைத்தனத்தையே நமது வாழ்க்கையாக மாற்றிவிடுவார்கள்! நமக்காகப் போராட எந்த அவதாரங்களும் மண்ணில் உதிக்கப் போவதில்லை.

புராண, இதிகாச அவதாரங்கள் கூட உயர்சாதி ஆதிக்கத்தையும் மக்களிடையே அடிமைத்தனத்தையும்தான் போதிக்கின்றன.

எனவே, நமது உரிமைகளுக்காக டில்லி விவசாயிகளை போல நாம்தான் ஒன்றிணைந்து போராட வேண்டும்!

பு.ஜ.தொ.மு – பிரச்சாரக் குழு, ஒசூர்
தொடர்புக்கு: 97880 11784

பாத பூஜை எனும் சமூக இழிவை வெறுத்து ஒதுக்குவோம் | கருத்துப்படம்

மீன் விற்கும் பெண்மணி ஒருவரை பேருந்தில் ஏற்ற மறுத்த ஓட்டுனர், நடத்துனர் மீது தமிழ்நாடு முதல் அமைச்சர் நடவடிக்கை எடுத்தது குறித்து கடந்த வாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

கடந்த மாதத்தில் குறவர் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், கோவில் அன்னதானத்தில் அவர்களுக்கு அனுமதி மறுத்தது, அவர்களுக்கு பேருந்தை நிறுத்தாமல் சென்றது குறித்து சமூக ஊடகம் ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் அவரை நேரில் சந்தித்து அவருடன் அமர்ந்து கோவில் அன்னதானத்தில் உணவருந்தினார்.

சாதிய ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட குறவர், இருளர் இன மக்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவு உழைக்கும் மக்கள், பொதுச் சமூகத்தின் மனதில் ஊற வைக்கப்பட்ட பார்ப்பனிய சிந்தனையால் அன்றாடம் இழிவுபடுத்தப்பட்டு வருகின்றனர். இதில் உழைக்கும் வர்க்கமான பேருந்து ஓட்டுனர், நடத்துனர்களும் விதிவிலக்கல்ல.

இப்படி ஆட்சியிலிருப்பவர்களும், தவறிழைத்தவர்களும் பாதிக்கப்பட்டவர்களின் காலைக் கழுவுவதாலோ, உடனமர்ந்து உணவருந்துவதாலோ இந்த இழிநிலையை சரி செய்ய முடியாது. சாதியத்தைக் காப்பாற்றும் சனாதனப் படிநிலையையும், சுரண்டல் அரசமைப்பையும் தகர்த்தெறிய வேண்டும். அதற்கு பெருவாரியான உழைக்கும் மக்களை சாதிய மனப்பான்மையிலிருந்து விடுவிக்கும் ஜனநாயகத்துக்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

கருத்துப்படம் : வேலன்

மும்பை : தண்ணீரின்றி தவிக்கும் நகர உழைக்கும் மக்கள் | படக்கட்டுரை

0
மிகவும் சிக்கலான குழாய்களின் மூலம், கிரேட்டர் மும்பையின் முனிசிபல் கார்ப்பரேஷன் சுமார் 15 மில்லியன் குடிமக்கள் பயன்படுத்தும் வகையில் தினசரி 4 பில்லியன் லிட்டர் குடிநீரை மும்பை நகரத்திற்கு வழங்குகிறது.
தொழில்நுட்ப ரீதியாக அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்வதற்காக நகரத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் போதுமான தண்ணீர் (வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம், இந்திய அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட) சேவை நிலை அளவுகோலின்படி தினசரி 135 லிட்டர் பூர்த்தி செய்யும் நிலை உள்ளது.
உயர்தட்டு குடிமக்களுக்கு கார்ப்பரேசன் அதிக மானிய கொடுத்து 1000 லிட்டருக்கு ரூ.5 என்ற  விலையில் விற்கிறது. ஒரு உயர்ந்த சமுதாயத்தில் வாழும் ஒரு குடிமகன் தினசரி தன் நுகர்வுக்கு 240 லிட்டர் வரை தண்ணீரை பெறுகிறார். மறுபுறம் முறைசாரா குடியேற்றங்களில் உள்ள குடிமக்கள் (சேரிகளில் அங்கீகரிக்கப்படாத மக்கள்) தண்ணீருக்காக ரூ.40 முதல் ரூ.120 வரை அதிகமாக பணம் செலுத்துகிறார்கள்; அவர்களுக்கு ஒரு நாளைக்கு 20 லிட்டர் மட்டுமே  கிடைக்கிறது.
வரலாற்று ரீதியாக ‘மேல்சாதி இந்துக்கள்’, சாதி ஏணியின் அடித்தட்டு மக்களுக்கு தண்ணீர் மறுப்பது இந்தியாவில் ஒரு தொடர் கதையாக இருந்து வருகிறது. ஹைட்ராலிக் சிட்டி என்ற நூலில் ஆசிரியரான நிகில் ஆனந்த், குடிமக்களாக இருக்க தகுதியானவர்கள் மற்றும் பெருநகரத்தில் முறைசாரா முறையில் குடியேறியவர்கள் இடையே இன்று வரை நீர் பகிர்ந்தளிப்பதில் நிலவும் பாகுபாட்டைப் விளக்குகிறார்.
1995-ல் பம்பாய் ‘மும்பை’ஆனது, மேலும் மக்கள் நகரத்திற்கு இடம்பெயர்வதைத் தடுக்க, 1995-க்குப் பிறகு அங்கீகரிக்கப்படாத கட்டிடங்களில் வசிப்பவர்களுக்கு தண்ணீர் வழங்கக் கூடாது என்று அரசு சுற்றறிக்கை வெளியிட்டது. இந்த மனிதாபிமானமற்ற கொள்கையை பானி ஹக் சமிதி உள்ளிட்ட சிவில் அமைப்புகள் மற்றும் குடிமக்கள் உயர்நீதிமன்றத்தில் எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர்.
படிக்க :
பாலஸ்தீனயர்களுக்கு எதிராக தொடரும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப் போர் || படக்கட்டுரை
மும்பை ’வளர்ச்சிக்கு’ பலி கொடுக்கப்படும் இயற்கை !
டிசம்பர் 15, 2014-ல் பம்பாய் உயர்நீதிமன்றம் மும்பை முனிசிபல் கார்ப்பரேஷனுக்கு எதிராக தீர்ப்பளித்தது. “தண்ணீர் பெறும் உரிமை இந்திய அரசியலமைப்பின் 21-வது பிரிவின் கீழ் வாழும் உரிமையின் ஒருங்கிணைந்த பகுதியாகும்” என்று கூறியது. மேலும், பல குடும்பங்கள் குடிநீர் இணைப்புக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்களாகவும், ‘அறிவிக்கப்பட்ட’ சேரிகளின் கட்-ஆஃப் தேதியை ஜனவரி 1995 முதல் ஜனவரி 2000 வரை நீட்டிக்கவும் இந்த தீர்ப்பு கூறியது.
ஆனால், தீர்ப்பு இருந்தபோதிலும் எந்த மாற்றங்களும் இதுவரை செய்யபடவில்லை.
கொரோனா காலங்கள் அடித்தட்டு மக்கள் சுகாதாரமற்ற தண்ணீரை பயன்படுத்துவதினால் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டனர். உயர்தட்டு குடிமக்களுக்கு குறைந்த விலையில் அதிக தண்ணீரும், அடித்தட்டும் மக்களுக்கு அதிக விலையில் குறைந்த தண்ணீரும் வழங்குவதென்பது சாதிய ஒடுக்குமுறையாகும். உயிர்வாழும் அடிப்படை உரிமைக்கு கேடு விளைவிக்கும் வகையில் செயல்படும் மும்பை முனிசிபாலிட்டி கார்ப்பரேசனுக்கு எதிராக மும்பை நகர உழைக்கும் மக்கள் போராட வேண்டும்.
பல முறைசாரா குடியிருப்புகளில் இது போன்ற பிளாஸ்டிக் பைகளில் உள்ள தண்ணீர் ரூ.2-3க்கு விற்கப்படுகிறது.
தெற்கு மும்பையில் உள்ள கீதா நகரின் முறைசாரா குடியேற்றத்தில் இந்து கடவுளான சிவனின் வரைபடம் தண்ணீர் இல்லாத காலி கேன்கள் இருக்கும் இடத்தில் வரையப்பட்டுள்ளது.
கீதா நகர் (தெற்கு மும்பை) குடியிருப்பாளர்கள் தங்கள் துணிகளை துவைக்க தண்ணீர் மிகவும் குறைவான நீரோடையை நம்பியுள்ளார்கள்.
தெற்கு மும்பையில் உள்ள குறைந்த வருமானம் கொண்ட குடியிருப்பில் உள்ளூர் பிளமர்களின் கூட்டு முயற்சியில் அமைக்கப்பட்ட மிதக்கும் குழாய்கள் இங்கே காணப்படுகிறது.
கொரோனா காலத்தின் போது சமூக விலகல் விதிமுறைகளின் காரணாமாக காத்திருக்கும் நேரம் அதிகரித்ததால், முறைசாரா குடியேற்றங்களில் தண்ணீர் ஒதுக்கீட்டின் அளவு மற்றும் வரிசையில் அவர்களிடையே அடிக்கடி சண்டைகள் நிகழ்ந்தன.
சித்தார்த் நகரில் (மும்பையின் மேற்கு புறநகர்ப் பகுதி) வசிப்பவர் ஒருவர் 20 லிட்டர் தண்ணீரை எடுத்து செல்கிறார். இது மும்பை முனிசிபல் கார்ப்பரேசன் வழங்கிய வாரத்திற்கான குடும்ப தேவைக்கான தண்ணீரில் பாதி அளவே, கூடுதல் தண்ணீருக்கு பகுதியில் உள்ள சொசைட்டியால் தண்ணீர் வழங்கப்படவில்லை. அதிக விலைக்கு தனியார் சப்ளையர்களை நம்பியிருக்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
அந்தேரி மேற்கில் உள்ள சித்தார்த் நகரைச் சேர்ந்த தையல்காரரான ஜெய் மதி, சட்டப்பூர்வ வழிமுறைகள் மூலம் தனது மக்களுக்கு தண்ணீர் இணைப்பைப் பெற்றுத் தர தொடந்து முயன்று வருகிறார். அவரது விண்ணப்பத்தின் ஒரு பகுதியாக முனிசிபாலிட்டியிடம் தண்ணீர் கோரிய 3 ஆண்டுகளா போராட்டத்தின் ஆவணங்களை காட்டுகிறார். இன்னும் சித்தார்த் நகருக்கு சட்டப்பூர்வ குடிநீர் இணைப்பு கிடைக்கவில்லை.
கௌலா புந்தர் (முறைசாரா தொழில்துறை பகுதி) என்ற தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதியில், அங்கீகரிக்கப்பட்ட விலையை விட 40 மடங்குக்கு மேல் தண்ணீர் விற்கப்படுகிறது. இங்கே படத்தில் பகுதி மக்கள் தஙக்ள் காலை வழக்கத்தை செய்கிறார்கள்.
பல முறைசாரா குடியேற்றங்களில் (அவற்றில் பாதிபகுதிகள் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்படாதவை), பெரும்பாலான குடும்பங்கள் தங்கள் அனைத்துத் தேவைகளுகும் தினசரி 50 லிட்டருக்கும் குறைவாகவே (உலக சுகாதார அமைப்பால் கட்டளையிட குறைந்தபட்சத் தொகைக்குக் கீழே) பெறுகிறார்கள்.
முனிசிபல் கார்ப்பரேசன் விண்ணப்பப்படி தண்ணீர் இணைப்புக்கு 5 குடும்பங்கள் கூட்டாக விண்ணப்பிக்க வேண்டும். படத்தில், GTB நகரில் (மத்திய மும்பை) வசிப்பவர்கள் உள்ளூர் வார்டு அலுவலகத்திற்கு வெளியே புதிய தண்ணீர் இணைப்புக்காக 7 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து விண்ணப்பித்து வருகின்றனர்.
ஆனந்த், (14 வயது) என்ற வீடற்ற சிறுவனால், இலவசப் பள்ளிப்படைப்பைத் தொடர முடியவில்லை. போரிவலியில் (நகரின் வடக்கே) உள்ள எக்ஸார் நுல்லாவில் பாயும் ஓர் ஓடையில் மிகவும் குறைவான கசிவுத்தண்ணீரில் இருந்து ஒரு டம்பாவில் தண்ணீர் நிரப்புவதற்கு ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக செலவிடுகிறான்.
பொதுவாக பெண்கள்தான் தண்ணீர் சேகரிப்பு மற்றும் வீட்டு உபயோகத்திற்கான சுமையை சுமக்க வேண்டும். மும்பையின் லோயர் பரேல் பகுதியில் எடுக்கப்பட்ட படம்.
ரயில்வேக்கு சொந்தமான நிலங்களில் வசிக்கும் அடித்தட்டு மக்கள் தேசிய தொழில் வகைப்பாடு (National Occupational Classification – NOC) பெற முடியாததால் சட்டப்பூர்வ குடிநீர் இணைப்புகளுக்கு தகுதியாற்றவர்களாக உள்ளார்கள். படம் : மேற்கு ரயில் பாதையில் தினமும் 7 தண்டவாளங்களைக் கடந்து, தண்ணீர் கசிவில் இருந்து தண்ணீரை நிரப்பும் ஒரு பெண்.
இந்த பிரம்மாண்ட கட்டிடங்களின் ஒவ்வொரு அறையிலும் அதிக மானிய விலையில் (1000 லிட்டருக்கு ரூ.5.40) வரம்பற்ற நீர் விநியோகம் செய்யப்படுவதால், தண்ணீர் கிடைக்காத அடித்தட்டு மக்கள் அதிகவிலை கொடுத்து குறைவான தண்ணீரை பெறுகிறார்கள் என்பதை வசதியுள்ள குடிமக்கள் ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது.

சந்துரு
செய்தி ஆதாரம் : த வயர்
புகைப்படங்கள் : சூரஜ் கத்ரா புகைப்படக் கலைஞர் மும்பை

விஸ்வநாத் பிரதாப் சிங் என்றொரு மீட்பர் | முரளிதரன் காசி விஸ்வநாதன்

வி.பி. சிங் குறித்து புதிய புத்தகம்
ந்தியாவின் பிரதமராக மிகக் குறுகிய காலமே இருந்தாலும், நாட்டின் பிற்படுத்தப்பட்டோர் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டவர் இந்தியாவின் ஏழாவது பிரதமரான விஸ்வநாத் பிரதாப் சிங்.
அலகாபாதில் தையா சமஸ்தானத்தில் பிறந்து அதைவிட பெரிய சமஸ்தானமான மண்டா சமஸ்தானத்திற்கு தத்துக்கொடுக்கப்பட்டவர்.
மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தியதே வி.பி. சிங்கின் பரவலான சாதனையாக அறியப்பட்டாலும், இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தங்களை மன்மோகன் சிங்கிற்கு முன்பே துவக்கியவர். ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் 1984 முதல் 1987வரை நிதியமைச்சராக இருந்தபோது ‘லைசன்ஸ் ராஜ்’ஐ உடைத்து, பொருளாதார சீர்திருத்தங்களைத் துவங்கியவர் வி.பி. சிங்தான்.
இந்தியாவின் ஏழாவது பிரதமர், மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தி கோடிக்கணக்கான பிற்படுத்தப்பட்டோரின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியவர், பொருளாதார சீர்திருத்தங்களை அமல்படுத்தத் துவங்கியவர், இந்திய அரசியலில் நேர்மையின் சின்னமாக விளங்கியவர் என வி.பி. சிங் பல வகைகளில் போற்றப்பட்டாலும் அவரைப் பற்றிய முழுமையான ஆங்கில நூல்கள் ஏதும் கிடையாது.
படிக்க :
உ.பி : பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் பா.ஜ.க வென்றது எப்படி? || முரளிதரன் காசி விஸ்வநாதன்
டெக்ஸாமெத்தாசோன் : கொரோனா சிகிச்சையில் ஒரு முன்னேற்றம் !
G.S. Bhargava தொகுத்த Perestroika in India: V.P. Singh’s Prime Ministership என்ற ஒரே ஒரு புத்தகம் மட்டுமே பகுதியளவில் அவரது பங்களிப்பைப் பற்றிப் பேசுகிறது. இந்த நிலையில்தான் தேபாஷிஷ் முகர்ஜி எழுதிய The Disruptor: How Vishwanath Pratap Singh Shook India புத்தகம் வெளிவந்திருக்கிறது.
டிசம்பர் 5-ம் தேதிதான் புத்தகம் அதிகாரபூர்வமாக வெளியாகிறது என்றாலும் அமேசானில் இப்போதே விற்பனைக்குக் கிடைக்கிறது.
இந்தப் புத்தகத்தில், இந்திய அரசியலில் வி.பி. சிங்கின் பாத்திரத்தை துல்லியமாக மதிப்பிட முயல்கிறார் தேபாஷிஷ். சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் வி.பி. சிங்கின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருந்தாலும், இந்தியாவில் அவரது உருவம் பொறித்த தபால்தலைகூட கிடையாது. அவரது பெயரில் நகரங்களோ, பெரிய சாலைகளோ கிடையாது, குறிப்பிடத்தக்க வகையில் புத்தகங்களோ கிடையாது என வருந்துகிறார் அவர். புத்தகம் கிடையாது என்ற குறையைத் தீர்க்கவே இந்தப் புத்தகத்தை தான் எழுதியதாகக் குறிப்பிடுகிறார் அவர்.
வி.பி.சிங்கின் அரசியலால் பயனடைந்த லாலு பிரசாத் யாதவோ, முலாயம் சிங் யாதவை அவரது நினைவைப் போற்ற ஏதும் செய்யவில்லை என்றும் குறிப்பிடுகிறார். ஆனால், தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் வி.பி. சிங் பெயரில் தெருக்கள், சாலைகள் உண்டு! சமீபத்தில் அவரது பிறந்த நாள் வந்தபோது, வி.பி. சிங்கிற்கு தமிழ்நாட்டில் சிலை வைக்க வேண்டுமென்ற கோரிக்கையை சூர்யா சேவியர் எழுப்பியிருந்தார் என்ன நடக்கிறதென பார்க்கலாம்.
ஆனால், அதற்கு முன்பாக இந்தப் புத்தகத்தைப் படியுங்கள். பல அரிய புகைப்படங்களும் இந்தப் புத்தகத்தில் இருக்கின்றன.
000
விஸ்வநாத் பிரதாப் சிங் என்றொரு மீட்பர்
குறுகிய காலமே இந்தியாவின் பிரதமராக இருந்த வி.பி. சிங், இந்தியாவின் முக்கியமான பிரதமர்களில் ஒருவர். அவர் அமல்படுத்திய இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்டதாகக் கருதும் யாரும் அவரை நினைவுகூர மாட்டார்கள். ஆனால், அதுவரை வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் அவரது பிறந்த நாளிலும் நினைவு நாளிலும் அவரை நினைவுகூர்வது அவசியம்.
போர் நடக்கும்போதோ, வேறு இக்கட்டான சூழல்களிலோ வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை விமானம் மூலம் தாய்நாடு அழைத்துவர அரசு பெருந்தொகையான பணத்தை வசூலித்து வருகிறது. ஆனால், 1990ல் வளைகுடா யுத்தம் நடந்தபோது குவைத்திலிருந்து ஒரு லட்சத்து 11 ஆயிரம் பேர் இந்தியாவுக்கு மீட்டுவரப்பட்டனர். அப்போது யாரிடமும் பணமும் வாங்கப்படவில்லை.
அந்தத் தருணத்தில் என்ன நடந்தது என்பது குறித்து அப்போதைய பிரதமர் வி.பி. சிங்கின் மீடியா ஆலோசகராக இருந்த பிரேம் ஷங்கர் ஜா விரிவாக எழுதியிருக்கிறார்.
வளைகுடா யுத்தம் நடந்தபோது குவைத்தில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் இந்தியர்கள் பணியாற்றிவந்தார்கள். அந்தத் தருணத்தில் இந்தியாவின் பொருளாதார நிலை மிக மோசமாக இருந்தது.
இந்தியர்களுக்கு எந்தப் பிரச்சினையும் வராது என சதாம் ஹுசைன் வாக்குறுதி அளித்தாலும் பெரும்பாலான இந்தியர்கள் நாடு திரும்பவே விரும்பினார்கள். ஆனால், அந்தத் தருணத்தில் குவைத்திலிருந்தே இந்தியாவுக்கு அவர்களை அழைத்துவர வழியில்லை. ஆகவே இந்தியர்களை பஸ்ராவிலிருந்து 1120 கி.மீ தூரம் தரைவழியே அம்மான் வரை அழைத்துவந்து, அங்கிருந்து இந்தியாவுக்குக் கொண்டுவர சதாமிடம் ஒப்புதல் பெறப்பட்டது.
அப்போது ஏர் இந்தியாவிடம் சில 747 ரக விமானங்களே இருந்தன. அவை அனைத்தையும் வர்த்தக சேவையிலிருந்து விலக்கி, இந்தப் பணியில் ஈடுபடுத்த பிரதமர் வி.பி. சிங் நினைக்கவில்லை. ஆகவே இந்தியன் ஏர்லைன்ஸ் அப்போதுதான் வாங்கியிருந்த ஏர்பஸ் ஏ 320-களை பயன்படுத்த முடிவுசெய்தார்.
இந்தியன் ஏர்லைன்ஸ் வாங்கியிருந்த இரண்டு ஏர்பஸ்களில் ஒன்று விபத்துக்குள்ளாகியிருந்தது. மீதமிருந்த ஒரு விமானம் வர்த்தக சேவையிலிருந்து விலக்கப்பட்டிருந்தது. அந்த விமானத்தை இந்த சேவையில் இறக்கினார் வி.பி. சிங்.
அந்த விமானம் அடுத்த இரண்டு மாதங்களுக்கு தினமும் 16-18 மணி நேரம் என்ற ரீதியில் தொடர்ந்து பறந்தது. மொத்தம் 488 தடவைகள். 1,11,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இந்தியாவுக்கு அழைத்துவரப்பட்டனர். இப்போதுவரை, உலகில் எந்த ஒரு நாடும் இவ்வளவு பெரிய அளவில் மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டதில்லை.
இந்த நடவடிக்கையில் பில்லியன் டாலர்கள் வரை செலவானது. அப்போது அன்னியச் செலாவணியே இல்லாத காரணத்தால், 55 டன் தங்கத்தை அடகுவைக்க முடிவெடுக்கப்பட்டிருந்தது.
மற்றொரு நெருக்கடியும் ஏற்பட்டிருந்தது.
குவைத்தை ஈராக் ஆக்கிரமித்தது 1990 ஆகஸ்ட் 2-ம் தேதி. அப்போது வி.பி. சிங் அரசு ஒரு மைனாரிட்டி அரசு. அவருக்குக் கிடைத்த உளவுத் தகவல்களின்படி, அத்வானி நடத்திவந்த ரத யாத்திரை அக்டோபர் 30-ம் தேதி முடிந்த பிறகு, அரசுக்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக்கொள்ள பா.ஜ.க. முடிவெடுத்திருந்தது.
என்ன நல்லது செய்தாலும் இதில் எதுவும் மாறப்போவதில்லை என்பது அவருக்குத் தெரியும். இருந்தபோதும் இந்தியர்களை மீட்பது இந்தியாவின் கடமை என அவர் நம்பினார். அந்த மீட்பு நடவடிக்கைக்கு மாட்டிக் கொண்டிருப்பவர்களிடம் பணம் கேட்பது என்ற கேள்வியே எழவில்லை.
கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்றால் ஊரடங்கு திடீரென அமல்படுத்தப்பட்டபோது, நாடு முழுவதும் கோடிக் கணக்கானவர்கள் நடந்தது குறித்து அரசு பேசாமல் இருந்ததோடு ஒப்பிட்டுப் பார்த்தால், வி.பி. சிங் செய்ததன் பிரம்மாண்டம் புரியும்.
ஆனால், இப்படி வெளிநாடுகளில் சிக்கியிருவர்களை மட்டுமல்ல, ஜாதி, சமூக அமைப்பின் காரணமாக வாய்ப்புகள் வழங்கப்படாமல், மறுக்கப்பட்டிருந்த பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி, கோடிக்கணக்கானவர்களின் வாழ்க்கையையும் மீட்டார் வி.பி. சிங்.
இந்திய அரசியலில் காணாமல் போயிருந்த தார்மீகம் சார்ந்த, அறம் சார்ந்த அரசியலை மீண்டும் உயிர்ப்பித்தவர் வி.பி. சிங். போஃபர்ஸ் பீரங்கி வாங்கியதில் ரூ. 60 கோடி லஞ்சமாகப் பெற்றதாக ராஜீவை உலுக்கியெடுத்தார். இந்த விவகாரமே வி.பி. சிங்கிற்கு பிரதமர் பதவியைப் பிடித்துத் தந்தது. மண்டல் கமிஷன் பரிந்துரையை ஏற்றுக்கொண்டது அவரது மற்றொரு சாதனை.
அவரது இந்த நடவடிக்கை வட இந்திய அரசியலின் முகத்தையே மாற்றியமைத்து. வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டியதுதான் என்று நமக்கு சர்வ சாதாரணமாகத்தான் தோன்றுகிறது.
ஆனால், வட இந்தியாவில் வாழ்பவர்களுக்கு அப்படித் தோன்றுவதில்லை. தமிழராக இருந்து வட இந்தியாவில் வாழ்ந்தாலும் இதே எண்ணம்தான் இருக்கும். அப்படியிருக்கையில் 80-களின் இறுதியில் கடும் எதிர்ப்புக்கு இடையில் இந்த அறிக்கையை ஏற்றார் வி.பி. சிங்.
பிற்படுத்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த கோடிக்கணக்கானவர்கள் அரசுப் பணிகளில் சேர்ந்தார்கள்.
படிக்க :
குஜராத் மாடல் : குவியும் கொரோனா மரணங்கள் !
கொரோனா நோயாளிகளை தற்போது குணப்படுத்தும் மருத்துவர்கள் நீட் தேர்வு எழுதியவர்களா ?
நாட்டைத் துண்டுபோடும் நோக்கத்தோடு அத்வானி ரத யாத்திரையைத் நடத்தியபோது, அவரைக் கைது செய்து தடுத்து நிறுத்தினார் வி.பி. சிங். அதற்குப் பிறகு தன் ஆட்சி நிலைக்காது என்று தெரிந்தும் இதைச் செய்தார்.
நிதி அமைச்சராக இருந்தபோது தீருபாய் அம்பானியையும் அமிதாப் பச்சனையும் ஆட்டி வைத்தது, சம்பல் பகுதியில் நடந்த கொள்ளைகளுக்குப் பொறுப்பேற்று உத்தரப் பிரதேச முதல்வர் பதவியை ராஜினாமா செய்தது, பொற்கோவிலில் ராணுவம் நுழைந்த நடவடிக்கைக்காக இந்தியாவின் பிரதமர் என்ற முறையில் மன்னிப்புக் கேட்டது, இந்திய அமைதி காக்கும் படையை இலங்கையிலிருந்து திரும்ப அழைத்தது போன்றவை அவருடைய பிற குறிப்பிடத்தக்க செயல்கள்.
பொதுத் தேர்தலை தி.மு.கவுடன் கூட்டணி அமைத்து சந்தித்தார் வி.பி. சிங். இதில் தி.மு.க.வுக்கு ஒரு இடமும் கிடைக்கவில்லையென்றாலும் அமைச்சரவையில் சேர வேண்டுமென வற்புறுத்தி, சேர்த்துக்கொண்டார் வி.பி. சிங்.
1996-ல் பிரதமர் பதவி தேடி வந்தபோது, அதை மறுத்தது மற்றொரு புத்திசாலித்தனமான, சரியான நடவடிக்கை. படுக்கையில் விழும்வரை பாதிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்த வி.பி. சிங், அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். இருந்தாலும் மக்கள் போராட்டங்களிலிருந்து கிளைத்தெழுந்த ஒரு தலைவனாகவே தன் கடைசி நாட்கள் வரை இருந்தார் வி.பி. சிங்.
முகநூலில் : K Muralidharan
disclaimer

நூல் விமர்சனம் : நான் நிகழ்த்திய மோதல் கொலை | ராமச்சந்திரன் நாயர் | எஸ்.காமராஜ்

மத்துவ சமூக அமைப்பை இந்த மண்ணில் மலர்விக்க, எண்ணற்ற புரட்சிப் போராளிகள் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். அரச பயங்கரவாதத்தின் கொடும் கரங்களால் என்கவுண்டர் என்ற பெயரில் துப்பாக்கி ரவைகளை நெஞ்சில் ஏந்தி, சிறைக் கொட்டடியில் சித்திரவதைக்கு ஆளாகி வீர மரணத்தை தழுவியுள்ளனர்.
ஈடு இணையற்ற அந்த மாவீரர்களின் கடந்தகால தியாக வரலாற்றை நிகழ்காலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டியுள்ளது. சொந்த வாழ்க்கையின் சுக போகங்களை உதறித் தள்ளிவிட்டு ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக உரிமை முழக்கமிட்டு, குரலற்ற மக்களின் குரலாய் களமாடிய மாவீரன், ஆதிக்க சக்திகளை குலைநடுங்க வைத்த போராளி, அடிமை விலங்கு ஒடிக்க ஆர்த்தெழுந்து போராடிய அடலேறு, தமது வாழ்க்கையை மக்களுக்காக அர்ப்பணித்த உண்மையான பொதுவுடமை புரட்சியாளர் தோழர் வர்கீஸ்.
போலீசுத்துறை உயர் அதிகாரிகளின் நிர்ப்பந்தத்தால், உத்தரவால் புரட்சியாளர் வர்கீஸ் அவர்களை சுட்டுக் கொன்ற போலீஸ் ராமச்சந்திரன் நாயர் அவர்களின் ஒப்புதல் வாக்குமூலம் “நான் நிகழ்த்திய மோதல் கொலை” என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.
படிக்க :
நூல் அறிமுகம் : சாதி எனும் பெரும் தொற்று – தொடரும் விவாதங்கள் | மு.சங்கையா | எஸ்.காமராஜ்
நூல் அறிமுகம் : செல்லாத பணம் || இமையம் || எஸ். காமராஜ்
மக்களுக்காக போராடிய ஒரு மாவீரனை சுட்டுக்கொல்ல நேர்ந்தது குறித்து ராமச்சந்திரன் நாயரின் மனசாட்சி அவரை உலுக்குகிறது. வேலை பறிபோய் விடுமோ என்ற அச்சத்தால், சொந்த வாழ்க்கையின் மீதுள்ள நாட்டத்தால் இத்தனை ஆண்டுகாலம் மூடிமறைத்த உண்மைகளை ராமச்சந்திரன் நாயரால் வெகு காலம் மறைத்து வைக்க முடியவில்லை.
1970 பிப்ரவரி 18-ம் தேதி மாலையில் நடந்த இந்த அக்கிரம கொடுங்கோன்மை பற்றிய ஒப்புதல் வாக்குமூலம் ராமச்சந்திரன் நாயர் அளித்த பிறகுதான் 30 ஆண்டுகளுக்கு முன்பு வயநாட்டில் நிகழ்ந்த உண்மைகளை உலகம் அறிந்து கொண்டது. என்னை கொலை செய்ய வைத்தார்கள். நான் அதை செய்ய நேர்ந்தது. இந்த பாரத்தை 30 ஆண்டுகளாக நான் சுமந்து திரிந்தேன். இந்த உண்மையை வெளி உலகிற்கு சொல்லியாக வேண்டும் என்று ராமச்சந்திரன் நாயரின் ஆற்றாமையும் குற்ற உணர்வும் இந்த வாக்குமூலத்தை அளிக்க வைத்துள்ளது.
வசந்தத்தின் இடிமுழக்கம் நக்சல்பாரி எழுச்சியின் விளைவாக மேற்கு வங்கத்தில் உருக்கொண்ட புரட்சிப்புயல் இந்திய துணைக் கண்டம் முழுவதும் சூறாவளி போல் சுழன்று அடித்தது. கேரளத்தில் புரட்சிகர இயக்கம் உருப்பெற்று வளர்ந்த வரலாற்றை இந்த நூலின் மூலம் நாம் புரிந்து கொள்ள முடியும்.
போலீசால் படுகொலை செய்யப்பட்ட தோழர் வர்கீஸ்
வயநாடு என்பது ஆதிவாசி மக்களுக்கு சொந்தமான நிலப்பகுதி. கேரள வரலாற்றில் பழசி ராஜாவின் படைப்பிரிவுகளில் அங்கம் வகித்தவர்கள் குரும்பர் போன்ற ஆதிவாசிகள் தான்; ஆனால் அந்த உழைக்கும் மக்களுக்கு ஒரு சென்ட் நிலம் கூட சொந்தமாக இல்லை. அனைத்து நிலங்களும், வளங்களும் ஜமீன்தார்களுக்கும், குத்தகை கம்பெனிகளுக்கும் வந்தேறிய நிலப்பிரபுக்களுக்கும் தனி உரிமையாக இருந்தது.
ஆதிவாசி மக்களை கால்நடைகளைக் போல் அறுவடைக் காலம் முடிந்ததும் அவர்களை சந்தைக்கு கொண்டு போய் விற்பனை செய்வார்கள். ஆதிவாசிகளை விற்பனை செய்யும் ஒரு அடிமை சந்தை இருந்தது. உயிரும் உணர்வும் உள்ள அந்த எளிய மக்களை பண்ட  மாற்று முறையில் ஆதிவாசி அடிமைகளை விற்பனை செய்யும்முறை சுதந்திர இந்தியாவிலும் தொடர்ந்தது.
அடிமை வர்க்கத்தினர் தங்களது விடியலுக்கு நக்சல்பாரி புரட்சி பாதையை அவர்கள் தேர்வு செய்தது பற்றி யார் எப்படி குறை சொல்ல முடியும்? ஆதிவாசி மக்களுக்கு தோழர் வர்கீஸ் மகானாக தென்பட்டார், தங்களை அடிமைத்தளையில் இருந்து மீட்க வந்த பெருமகனாக ஆராதனை செய்தனர். புரட்சியின் நோக்கங்களை உயிரை விட மேலாகவும்  சொந்த விருப்பு வெறுப்புகளை விட மக்களின் விருப்பங்களை உயர்வாகவும் மதித்து செயல்பட்ட ஒரு மாபெரும் புரட்சியாளர் வர்கீஸ் அவர்களை தனது கையால் சுட்டுக்கொன்ற வேதனை போலீஸ் ராமச்சந்திரன் நாயர்-ஐ வாட்டுகிறது.
1971-ம் ஆண்டு நக்சல்பாரி புரட்சியாளர்களின் அனல் தெறிக்கும் செயல்பாட்டு களமாக மேற்கு வங்கம் விளங்கியது. கொல்கத்தா நகர் முழுக்க ஆயுதம் தாங்கிய போலீசுப்படை நிறைந்திருந்தது. ஏராளமானோர் போலீசுத்துறையின் துப்பாக்கி சூட்டுக்கு பலியாகினர். காங்கிரஸ் கருங்காலி கும்பல் கொடுத்த பட்டியலின் அடிப்படையில் துடிப்பான இளைஞர்கள் அடுக்கடுக்காக கைது செய்யப்பட்டனர். எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் பெற்றோர்களின் எதிரிலேயே சுட்டுக்கொல்லப்பட்டனர். குரூரமான விசாரணைகளுக்கு பிறகு ஏராளமான இளைஞர்களை கொன்றுவிட்டனர்.
1972-ம் ஆண்டின் மத்திய காலகட்டத்தில் சாரு மஜூம்தார் போலீசுத்துறையின் பிடியில் அகப்பட்டார். அந்த மெலிந்த உடலும் அந்த கம்பீரமும் என் மனதில் பதிந்து போனது. ஒருநாள் அந்த வீர மகனை கொன்றதாக எங்களுக்குத் தெரியவந்தது. அந்தப் பூதவுடலை பார்க்கவும் எங்களை அனுமதிக்கவில்லை. விஷம் செலுத்தி அந்த வீர மகனை கொன்றதாக பிறகு தெரியவந்தது. மார்க்சிஸ்ட் கட்சியும் மேற்கு வங்கத்தை ஆண்டுகொண்டிருந்த முதலாளித்துவ கட்சியும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்தான் என்று தனது அனுபவங்களை இந்த நூலில் ராமச்சந்திரன் நாயர் பதிவு செய்துள்ளார்.
சிவராமன் என்கின்ற கருங்காலி தோழர் வர்கீஸ் அவர்களை நம்பவைத்து காட்டிக்கொடுத்துவிடுகிறான். “மேற்கு வங்கத்துக்கு போய் அங்கு நடக்கிற போராட்டங்களில் கலந்துவிட்டு திரும்பி வந்தபிறகு இயக்கத்தை சீர்படுத்தி போராட்டத்தை தொடரலாம் என்று திட்டம் போட்டு இருந்தேன். இன்று இரவு வண்டி ஏறனும் என்று முடிவு செய்து இருந்தேன். சிவராமன் எங்களுக்கு பணம் தர வேண்டி இருக்கு அவனிடம் பணம் கேட்டு இருந்தேன். வேலைக்குப் போய்விட்டு வந்து தரேன் அதுவரைக்கும் வேணும்னா படுத்துக்கங்கன்னு சொல்லி கதவை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு போனான். இப்படி சதி வேலை செய்வான் நான் எதிர்பார்க்கவில்லை” என்று தோழர் வர்க்கீஸ் சொன்னதை இந்நூலில் ராமச்சந்திரன் நாயர் குறிப்பிடுகிறார்.
“உங்களில் ஒருத்தர் தான் என்னைக் கொல்ல போறீங்க. நான் சொன்னதை மறந்துடாதீங்க. எனக்கு முழக்கம் போடுவதற்கான வாய்ப்பை தர வேண்டும். தேவையே இல்லாம எதுக்கு சார் பொழுதை போகிறீர்கள், நான் எதுவும் சொல்ல மாட்டேன் என்கிற விஷயம் உங்களுக்கும் தெரியும், நீங்கள் என்னை கொலை செய்து விடுவீர்கள் என்ற உண்மை எனக்கும் தெரியும். இந்த ஒருவருக்கு பதிலாக ஆயிரம் ஆயிரம் வர்கீஸ் உருவாகுவார்கள். இந்தக் காலக் கட்டத்தில் தவிர்க்க முடியாத தேவை இதுதான்.” என்று போலீசிடம் கூறுகிறார் வர்க்கீஸ்
டி.ஐ.ஜி. விஜயன் அவன்கிட்ட எதையும் கேட்க வேண்டாம், விட்டுவிடலாம் என சொல்வது கேட்டது. இவனைக் கொன்று விடுவதாக முடிவு பண்ணியிருக்கோம் உங்களில் யார் இவனை சுட்டுக் கொள்ளப் போகிறீர்கள்? யாரும் எதுவும் பேசவில்லை தயாராக இருப்பவர்கள் கை தூக்குங்க மற்ற 3 பேர்களும் தயங்கிக் கொண்டே கைகளை தூக்கினார்கள். நான் கண்டு கொள்ளாமல் இருந்தேன். உன்னால் முடியாதா என்று என்னைப் பார்த்து கேள்வி கேட்டார்.
இவனை நாங்க உயிரோட அல்லவா பிடிச்சோம்; இவன் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை; இவனை நீதிமன்றத்தில் அல்லவா ஆஜர்படுத்த வேண்டும் என்றேன் நான். “அதை முடிவு பண்றது? நீயா?” டி.எஸ்.பி. லட்சுமணா சொன்னார். “இதை நீதான் செய்யணும் இல்லேன்னா நக்சலைட்டுகள் நடந்த மோதலில் ஒரு கான்ஸ்டபிள் கொல்லப்படலாம்.” கடுமையான சொற்களைக் கேட்டதும் நான் நடுங்கிப்போனேன் அந்த ஒரு நிமிடம் நான் கோழை ஆனேன்; நானே கொன்னுடுறேன் குரல் உயர்த்தி சொன்னேன்.
அந்த மாவீரனுக்கு மனதால் விடைகொடுத்து நாவால் சூ என ஓசை எழுப்பினேன். துப்பாக்கியின் விசையை சுண்டினேன் குண்டு சீறிப் பாய்ந்தது மிகச்சரியாக இடதுபுற நெஞ்சில் குண்டு பாய்ந்த ஓசையைக் கடந்து வர்கீஸ் இடமிருந்து சத்தம் முழங்கியது மாவோ ஐக்கியம் ஜிந்தாபாத்! புரட்சி வெல்லட்டும்!
அந்த இடியோசை போன்ற முழக்கத்தை கேட்ட போலீசுத்துறையினர் இந்த இடத்திலிருந்து சற்று பின்வாங்கினார்கள். எனது 34 வருட போலீசுத்துறை வாழ்க்கையில் இதுபோல் அஞ்சாநெஞ்சம் கொண்ட வீரனை நான் சந்தித்ததே இல்ல. அந்த மாவீரனின் இறுதி நிமிடங்கள் பற்றி எழுதுவதற்கு, ஆறாம் வகுப்பு படித்த எனக்கு வார்த்தைகள் இல்லை.” இவ்வாறுதான் மரணத்தை வென்ற அந்த மாவீரனை பற்றி போலீஸ் ராமச்சந்திரன் நாயர் குறிப்பிடுகிறார். ஈடு இணையற்ற அந்த வீரத் தியாகியின், அந்த இளம் புரட்சியாளரின் வீரமரணத்தை எண்ணிப் பார்க்கும்போது நம் நெஞ்சம் விம்முகிறது.
எனது வாழ்க்கையில் முதன் முதலாக நான் செய்த ஒரே ஒரு நல்ல விஷயம் தோழர் வர்கீஸ் அவர்களைக் கொலை செய்த பாதகச் செயல் குறித்த உண்மையை வெளி உலகிற்கு தெரிவித்தது தான். 33 வருடங்கள் காக்கி சீருடையில் வாழ்ந்த ராமச்சந்திரன் நாயர் போலீசுத்துறையின் அட்டூழியங்கள் – அநியாயங்கள் – காக்கி உடையின் அரசியல் என்னவென்பதை வெளிப்படையாக சொல்கிறார்.
படிக்க :
தோழர் வர்கீஸ் படுகொலை தீர்ப்பு: தாமதமான நீதி…
புதிய ஜனநாயகம் டிசம்பர் 2010 மின்னிதழ் (PDF) டவுண்லோட் !
பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்து இன்றுவரை போலீசுத்துறை ஆளும் வர்க்கத்தின் ஏவல் துறையாக, ஈவு இரக்கமற்ற கூலிப்படையாக, கொடுங்கோலர்களாக அதன் தன்மை மாறாமல் இன்றுவரை செயல்பட்டு வருகிறது. நிகழ்காலத்தில் நடைபெற்று வரும் மோதல் கொலைகளும் சாத்தான்குளம் பெனிக்ஸ் ஜெயராஜ் லாக்கப் மரணங்களும், நாகாலாந்தில் அப்பாவி பொதுமக்கள் 14 பேரை சுட்டுக்கொன்ற நிகழ்கால கொடூரமும் இரத்த சாட்சிகளாக நம் கண்முன் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த நூலில்தான் போலீசுத்துறையில் பணியாற்றியபோது கிடைத்த பல்வேறு அனுபவங்களை உள்ளதை உள்ளபடியே ராமச்சந்திரன் நாயர் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறார். குளச்சல் யூசுப் சிறப்பான முறையில் தமிழ் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.
மக்களுக்காக உழைத்தவர்களின் மரணம் மலையை விட கனமானது என்றார் மாவோ. ஈடு இணையற்ற இளம் புரட்சியாளர் வர்கீஸ் அவர்களின் நினைவு யுகம் யுகமாக நிலைத்திருக்கும். அடக்குமுறைக்கும், சுரண்டலுக்கும் எதிரான போராட்டக்களத்தில் தங்கள் இன்னுயிரை ஈந்த பொதுவுடமைப் போராளிகளின் தியாகமும் வீரமும் சமத்துவ சமூக அமைப்புக்கு போராடும் அனைவருக்கும் உரமூட்டும் உத்வேகம் அளிக்கும். கடந்த காலத்தில் நடந்த நிகழ்வை சொல்லும் இந்த நூல் நிகழ்கால போராட்டத்திற்கும் அவசியமானதாகும். சமூக மாற்றத்தை நேசிக்கும் இளம் தலைமுறையினர்  அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய நூல்.
நூல் ஆசிரியர் : ராமச்சந்திரன் நாயர்
தமிழாக்கம் : குளச்சல் யூசுப்
வெளியீடு : களம் வெளியீடு
8, மருத்துவமனை சாலை, சின்ன போரூர்
சென்னை – 600116
விலை : 160
நூல் அறிமுகம் : எஸ்.காமராஜ்

புதிய ஜனநாயகம் டிசம்பர் 2021 மின்னிதழ் !

அன்பார்ந்த வாசகத் தோழர்களே,

டிசம்பர் மாத மின் இதழ் கோரும் நண்பர்கள், வாசர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜி−பே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம். அஞ்சல் மூலம் இதழ் கோருகின்ற வாசகர்கள், எமது அலுவலக எண்ணிற்கு ஜி−பே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்−ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்−அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ஜி−பே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561

தொடர்பு விவரங்கள் :

தொலைபேசி : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

மின்னிதழ் விலை : ரூ.20

G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561

வங்கி கணக்கு விவரம் :
Bank : SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444.

டிசம்பர் மாத இதழில் வெளியான கட்டுரைகள் குறித்த விவரம் அறிய : இங்கே அழுத்தவும்

– நிர்வாகி.

வேளாண் சட்டங்கள் வாபஸ் : மோடியை பணியவைத்த விவசாயிகள் போராட்டம்!

காவி – கார்ப்பரேட் பாசிச அபாயத்தை முறியடிப்பது என்ற கடமை இந்திய உழைக்கும் மக்களின் தோளில் சுமத்தப்பட்டுள்ள சூழலில், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய மாபெரும் போராட்டத்தின் விளைவாக, மோடி அரசு அச்சட்டங்களை பின்வாங்கியிருப்பதானது உறுதியான மக்கள் திரள் போராட்டங்களின் மூலமே பாசிஸ்டுகளை மண்டியிடச் செய்ய முடியும் என்பதற்கு சாட்சியாகவும் நம்பிக்கையளிக்கக் கூடியதாகவும் அமைந்துள்ளது.
சீக்கியர்களின் முதல் குருவான குருநானக் பிறந்தநாள் கொண்டாடப்பட்ட கடந்த நவம்பர் 19 அன்று திடீரென்று தொலைக்காட்சியில் தோன்றிய மோடி, “வேளாண் சட்டங்களின் நலனை ஒருதரப்பு விவசாயிகளுக்கு எங்களால் புரியவைக்க முடியவில்லை. எனவே வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறுகிறோம்” என்று அறிவித்தார். ஒட்டுமொத்த விவசாயிகளின் ஆதரவு இருந்தும் ‘ஒருதரப்பு’ விவசாயிகளின் போராட்டத்தை மதித்து ஜனநாயகப் பண்போடு இறங்கி வந்துள்ளாராம் மோடி. ‘குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்று நடிக்கிறார் மோடி.
வேளாண் சட்டங்களின் புனித நோக்கத்தை எங்களால் ‘புரியவைக்க முடியவில்லை’ என்று சொல்கிறார் மோடி. விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்கி அம்பானி, அதானிக்கு விவசாயிகளை அடிமையாக்குவதுதான் வேளாண் சட்டங்களின் நோக்கம் என்பதை நன்கு புரிந்துகொண்டதோடு, இந்நோக்கத்தை அமல்படுத்த முனைந்தால் தங்களது எதிர்வினை எப்படி இருக்கும் என்பதை மோடிக்கும் அவரது எஜமானர்களான அம்பானி, அதானிக்கும் விவசாயிகள் புரியவைத்துவிட்டனர். இந்த உண்மையை மோடியால்தான் ‘ஒப்புக்கொள்ள’ முடியவில்லை.
படிக்க :
மோடி விவசாயிகளுக்கு புரியவைக்க முயற்சித்த போது… || கருத்துப்படம்
விவசாயிகள் போராட்டம் வெற்றி : சாதனையும் கற்றுக்கொள்ள வேண்டியவையும்!
விவசாயிகள் போராட்டத்தின் மகத்துவம்
“காங்கிரஸ் தூண்டிவிடும் போராட்டம்”, “காலிஸ்தானிகள் போராடுகிறார்கள்”, “மாவோயிஸ்டு பின்னணி” – போன்ற நச்சுப் பிரச்சாரங்களில் ஈடுபடுவதன் மூலம் இப்போராட்டத்தை ஆரம்பத்திலேயே தனிமைப்படுத்தி ஒடுக்கிவிடலாம் என நினைத்த காவிகளின் கனவை வெடிவைத்து தகர்ப்பதைப் போல அனைத்துப் பிரிவு உழைக்கும் மக்களின் பேராதரவைப் பெற்று முன்னேறியதிலும் காவி – கார்ப்பரேட்டுகளை கதிகலங்கச் செய்யும் போர்குணமிக்க போராட்ட வழிமுறைகளைக் கையாண்டதிலும்தான் விவசாயிகள் போராட்டத்தின் மகத்துவம் உள்ளது.
டெல்லி முற்றுகைப் போராட்டத்திற்கு முன்பு பஞ்சாப், அரியானா போன்ற மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் தொடங்கிய போதே, இது ஆதிக்க சாதி ஜாட்களின் போராட்டம், பணக்கார விவசாயிகளின் போராட்டம் என பிரச்சாரம் செய்தது ஆர்.எஸ்.எஸ். காவி கும்பல். இதன் மூலம் தாழ்த்தப்பட்ட நிலமற்ற கூலி விவசாயிகளையும் சிறு – குறு விவசாயிகளையும் போராடுபவர்களுக்கு எதிர்நிலைப்படுத்த காவிக்கும்பல் முயன்றபோதும் அப்பொய்ப் பிரச்சாரங்களைப் புறக்கணித்துவிட்டு தலித் கூலி விவசாயிகளும், சிறு – குறு விவசாயிகளும் போராட்ட முன்னணியில் தங்களை உறுதியாகப் பிணைத்துக் கொண்டார்கள்.
“டெல்லிச் சலோ” போராட்டம் தொடங்கியபோது அகில இந்திய அளவில் புதிய தொழிலாளர் சட்டங்களை எதிர்த்து தொழிலாளி வர்க்கமும் போராடியது. விவசாயிகளும் தொழிலாளர்களும் ஒருவருக்கொருவர், தங்கள் போராட்டக் கோரிக்கைகளுடன் மற்றவர்களுடையதையும் இணைத்துக் கொண்டார்கள். தொழிலாளர் – விவசாயி வர்க்கங்களின் ஒற்றுமையாக அது அமைந்து.
அமெரிக்க பாடகி ரெஹானா, ஸ்வீடன் சூழலியல் செயல்பாட்டாளர் கிரேட்டா தன்பர்க், நோம் சோம்ஸ்கி உள்ளிட்டு உலகம் முழுக்க உள்ள முக்கிய பிரபலங்கள், செயல்பாட்டாளர்கள், லிபரல் – முற்போக்கு அறிவுஜீவிகள் என குட்டி முதலாளித்துவப் பிரிவினரின் ஆதரவையும் பெற்றது.
000
அனைத்து மாநிலங்களிலுமுள்ள விவசாயிகள் சங்கத்தை “அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு” (AIKSCC) என்ற ஒரு பொதுஅமைப்பின் மூலம் இணைத்து நாடெங்கும் விவசாயிகள் ஒற்றுமையைக் கட்டியமைக்க முயற்சித்த அதே வேளையில், மோடி அரசை எதிர்த்த அவர்களின் போராட்ட வடிவங்களும் மிகவும் கூர்மையாகவும் நாம் கற்றுக் கொள்ளும் வகையிலும் இருந்தது.
விவசாயிகள் முன்னெடுத்த, ரிலையன்ஸ் ஜியோ சிம் எரிப்புப் போராட்டம், ஜியோ செல்போன் கோபுரங்களைத் தாக்கியது, ரிலையன்ஸ் கடைகளின் முன்பு நடத்திய ஆர்ப்பாட்டங்கள், அதானி பொருட்கள் புறக்கணிப்பு ஆகிய போராட்ட நடவடிக்கைகள், யாருடைய நலனுக்காக இந்த விவசாயச் சட்டங்கள் மோடி அரசால் கொண்டுவரப்பட்டதோ, அவர்களுக்கே (அம்பானி – அதானி உள்ளிட்ட முதலாளிகளுக்கு) நேரடியாக எச்சரிக்கைவிடும் வகையில் அமைந்தது.
மேலும், பா.ஜ.க. அலுவலங்களை முற்றுகையிட்டு போராடுதல், பொதுநிகழ்ச்சிக்கு வரும் பா.ஜ.க. தலைவர்களை விரட்டியடித்தல், அக்கட்சியில் உறுப்பினர்களாக இருப்பவர்களை ஊர் விலக்கம் செய்தல் என விவசாயிகள் மேற்கொண்ட போராட்ட வடிவங்கள், பஞ்சாப், அரியானா போன்ற மாநிலங்களில் பா.ஜ.க.விற்கு ஜாட் விவசாயிகள் மத்தியிலிருந்த செல்வாக்கை வேரோடும் வேரடி மண்ணோடும் பிடிங்கி எறிந்தன.
அடுத்ததாக, போராடும் விவசாயிகளை ஒருங்கிணைக்கும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு (AIKSCC), விவசாயிகள் போராட்டம் வேளாண் சட்டங்களை எதிர்ப்பதாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தது; மோடி அரசுக்கெதிராக போராடுகின்ற பிற உழைக்கும் மக்களின் போராட்டங்களுடன் விவசாயிகள் போராட்டத்தை இணைக்கவில்லை; ஆரம்பத்தில் அவ்வாறு பிற மக்கள் போராட்டங்களோடு இணைத்தாலும் வளர்ச்சிப்போக்கில் அவற்றைக் கைவிடத்தொடங்கியது இந்த முக்கிய பலவீனமான அம்சம் இருந்தபோதிலும் விவசாயிகள் மேற்கொண்ட போராட்ட வடிவங்கள், அவர்களுக்கு கிடைத்த மக்கள் ஆதரவு போன்றவற்றால் மோடி அரசுக்கு ஏற்பட்ட புறநிலை நெருக்கடியே இச்சட்டங்கள் பின்வாங்கப்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக இருக்கிறது.
‘செயல்திறனற்றவர்’: மோடியை கோபித்துக் கொள்ளும் கார்ப்பரேட்டுகள்
ஓராண்டு காலம் தனது கார்ப்பரேட் எஜமானர்களுக்காக விவசாயிகளை கடுமையாக அடக்கி ஒடுக்கி பணியவைக்க முயற்சித்த மோடி, திடீரென்று இப்படி பின்வாங்கியிருப்பது கார்ப்பரேட்டுகளுக்கு அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்திற்கு சொந்தமான ஃப்ர்ஸ்ட் போஸ்ட் செய்தி இணையதளத்தில் “பிரதமர் மோடி வேளாண் சட்டங்களை திரும்பப்பெற்றது ஏன் அரசியல் ரீதியாக தீங்கு விளைவிக்கக்கூடியது மற்றும் தர்க்கரீதியாக அநியாயமானது – என்பதற்கான ஐந்து காரணங்கள்” என்ற தலைப்பில் வெளிவந்துள்ள கட்டுரை கார்ப்பரேட்டுகளுக்கு மோடி மீது ஏற்பட்டிருக்கும் மனக்குமுறலை வெளிப்படுத்தியிருக்கிறது.
“இது பிரதமரின் மிக மோசமான முடிவு. அவர் செயல்திறன் குறைந்தவராகவும், பலவீனமானவராகவும், பயனற்றவராகவும் காணப்படுகிறார். மேலும் இந்தியாவின் விவசாயத் துறையை சக்திவாய்ந்த நிலப்பிரபுத்துவ குலாக்குகளின் பிடியில் இருந்து விடுவிக்கும் ஆற்றலைக் கொண்ட ஒரு முக்கிய பொருளாதார மறுசீரமைப்பைச் செய்வதற்கான பொன்னான வாய்ப்பை இழந்துவிட்டார்.”
“அவர் (மோடி) உறுதியை வெளிப்படுத்தி, தனது நிலைப்பாட்டை அமல்படுத்திருந்தால், இந்தியாவின் சீர்திருத்தவாதி என்ற அவரது பிம்பத்தை மேலும் மெருகூட்டியிருப்பதோடு விவசாயப் பொருளாதாரத்தை விடுவித்து, 1991-களின் பொருளாதார சீர்திருத்தங்களைப் போன்ற நடவடிக்கைகளை விவசாயத் துறையில் செயல்படுத்தியிருப்பார்” – என்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்ற மோடியை கடிந்துகொள்ளும் கட்டுரையாளர், தேர்தல் நோக்கத்திற்காகத்தான் இச்சட்டங்கள் பின்வாங்கப்பட்டிருக்கிறது என்றால், அது எப்படி பார்க்கப்பட வேண்டும் என்று அடுத்து சொல்கிறார்.
“நாடாளுமன்றத்தின் கீழவையில் 300 இடங்களுக்கு மேல் உள்ள ஒரு கட்சி, ஆட்சி பறிபோய்விடும் என்ற ஒருசிலரின் அச்சத்தால் நாட்டிற்கு சந்தேகத்திற்கு இடமின்றி நன்மை பயக்கும் நோக்கங்களை அடைய முடியவில்லை என்றால், ஜனநாயக அரசியல் அமைப்பு அபகரிக்கப்பட்டிருப்பது என்பது தெளிவாகிறது.”
‘ஜனநாயகம்’ அபகரிக்கப்பட்டிருக்கிறதாம். ‘நாட்டிற்கு’ எனும் சொல்லை ‘முதலாளிகளாகிய எங்களுக்கு’ என்றும் ‘ஜனநாயகம்’ என்பதை ‘முதலாளிகளின் விருப்பம்’ என்றும் மாற்றி வாசித்தால் இன்னும் இதைக் கூர்மையாகப் புரிந்துகொள்ளலாம்.
எல்லாவற்றிற்கும் உச்சமாக, விவசாயிகளின் போராட்டத்திற்கு அஞ்சி, இப்படி பின்வாங்குவதால் ஏற்படும் ‘ஆபத்து’ குறித்து சொல்லும் கட்டுரையாளர் “எதிர்ப்பாளர்களுக்கு இது ஒரு சாத்தியமான கருவியை அளிக்கிறது. எல்லாவற்றையும் தெருக்களில் தீர்த்து வைக்க வேண்டும் என்றால், தேர்தல் வெற்றிகளால் என்ன பயன்?” என்று அச்சமுறுகிறார்.
“எல்லா பிரச்சினைகளுக்கும் களத்தில் இறங்கிப் போராடுவதுதான் தீர்வு என்று சொல்பவர்கள் எதார்த்தம் புரியாதவர்கள். தேர்தலையும் ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டும்” – என்று சொல்பவர்களின் கூற்றை எதிர்நிலையில் கேலிசெய்கிறது அம்பானியின் ஃப்ர்ஸ்ட் போஸ்ட்.
பின்வாங்கலுக்குத் தேர்தல் மட்டும்தான் காரணமா?
எங்கள் அரசு விவசாயிகளின் கோரிக்கைக்கு மதிப்பளித்துதான் இச்சட்டங்களை திரும்பப் பெற்றிருக்கிறது. ஐந்து மாநிலத் தேர்தலுக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று பா.ஜ.க.வினர் கூறிவருகின்றனர். ஆனால், மோடி ஒரு தேர்ந்த அரசியல்வாதியைப் போல (statesman-like) முடிவெடுத்திருப்பதாக இம்முடிவை வரவேற்றிருக்கிறார் அமித்ஷா.
பஞ்சாப், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களின் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நெருங்க உள்ள நிலையில், அதை மனதில் வைத்துதான் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றிருப்பதாக பா.ஜ.க. எதிர்பாளர்கள் அனைவரும் கூறுகிறார்கள். பாசிச அபாயத்தை முறியடிப்பதற்கு ‘தேர்தலும் ஒரு கருவி’ என்று பேசுபவர்கள், “பா.ஜ.க. தனது இந்துராஷ்டிர நிகழ்ச்சிநிரலை அமல்படுத்துவதற்கு, மத்தியில் ஆட்சி இருந்தால் மட்டும் போதாது. மாநிலத்திலும் ஆட்சியைப் பிடிப்பதன் மூலமாக அனைத்து மாநிலங்களிலும் தனது திட்டத்தை எதிர்ப்பே இல்லாமல் செயல்படுத்த முடியும்” என்று கூறுகிறார்கள்.
ஆம், அது உண்மைதான். அந்த வகையில், பஞ்சாப் தேர்தலில் வெற்றி பெற முடியாவிட்டாலும் தனது இந்துராஷ்டிரத் திட்டத்தின் சோதனைக் களமாக உள்ள உத்தரப்பிரதேசத்தில் தனது தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்தியாக வேண்டிய நிலையில் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல் உள்ளது. ஆனால் தேர்தல் நோக்கத்திலிருந்து மட்டுமே பின்வாங்கியிருக்கிறார்கள் என்பது ஒரு அம்ச காரணம் மட்டுமே. மேலும் அது அவர்களின் இரண்டாம்பட்சக் கவலையும் கூட.
எனில் முதன்மையானது எது? பாசிசக் கட்சியான ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. தனது மக்கள் அடித்தளத்தை இழந்துகொண்டுவருகிறது என்பதுதான் அது. இதுகுறித்துதான் அவர்கள் அதிகம் கவலையடைகிறார்கள்.
வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் தீவிரமாக நடைபெற்ற பஞ்சாப், அரியானா, இராஜஸ்தான், உத்தரப்பிரதேசத்தின் மேற்குப் பகுதி ஆகியவற்றில் இதுநாள் வரை ஆர்.எஸ்.எஸ். உருவாக்கி வைத்திருந்த இந்துத்துவ முனைவாக்கம் (hindutva polarization) சிதைந்துகொண்டு வருகிறது. இப்பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ்.க்கு அடித்தளமாக இருந்த பெரும்பான்மை ஜாட் விவசாயிகளை வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் ஜனநாயகப்படுத்தியிருக்கிறது. தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த விவசாயக் கூலிகளும் இதுநாள்வரை அவர்களை சாதிரீதியாக ஒடுக்கிவந்த ஜாட்களும் ஒன்றுசேர்ந்து போராடியிருக்கிறார்கள்.
முசாபர்நகர் கலவரத்தால் மூர்க்கமாக இந்துத்துவ அரசியல்படுத்தப்பட்டிருந்த மேற்கு உத்தரப்பிரதேச ஜாட்கள் தற்போது முஸ்லீம்களுடன் சுமூகமான உறவைக் கொண்டிருக்கிறார்கள். வேளாண் சட்டத்திற்கெதிராக விவசாயிகள் நடத்திய மகா பஞ்சாயத்தில் முஸ்லீம் தலைவர்கள் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர். தாங்கள் இதுநாள் வரை பா.ஜ.க.வை ஆதரித்து தவறு செய்துவிட்டதாக அங்கு பேசிய முஸ்லீம் தலைவரிடம் கூட்டத்திலேயே பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டார் ஒரு ஜாட் விவசாயத்தலைவர்.
ஜாட் vs தலித்துகள்; இந்து vs முஸ்லிம் என்பது தகர்த்தெறியப்பட்டு உழைக்கும் வர்க்கமாக ஒன்றுதிரண்டிருக்கிறார்கள் இம்மாநில மக்கள். இதுதான் பாசிஸ்டுகளை அச்சுறுத்தியிருக்கிறது.
காவி – கார்ப்பரேட் பாசிசம் தேர்தலின் மூலமாக ஆட்சியைக் கைப்பற்றுவது மட்டுமே அது தனது எல்லா நிகழ்ச்சிநிரலையும் அமல்படுத்துவதற்கு போதுமானதல்ல. உழைக்கும் வர்க்க விரோத, ஜனநாயக விரோத பாசிச திட்டங்களை மேலிருந்து அமல்படுத்தும்போது கீழிருந்து தேசவெறி, மதவெறியால் மக்களை துருவப்படுத்தும்போதுதான் அத்திட்டங்களை நியாயப்படுத்தி செயல்படுத்த முடியும். தன்னையும் தனது திட்டங்களையும் எதிர்ப்பவர்களை ‘தேசத் துரோகி’, ‘இந்து விரோதி’ என்று வசைபாடுவதன் பின்னால் ஒளிந்துகொண்டு தன்னைப் பாதுகாத்துக் கொள்ளமுடியும். அது தகர்ந்து போவதுதான் ஆர்.எஸ்.எஸ்.-க்கு தற்போது முக்கியப் பிரச்சினை.
வேளாண் சட்டங்கள் விசயத்தில் “அரசுக்கு எதிரான நீண்டகாலப் போராட்டம் இந்துக்கள் மற்றும் சீக்கியர்களிடையேயான பிளைவை அதிகரித்துவிடுமோ என்று நாங்கள் அஞ்சுகிறோம்” என்று ஆர்.எஸ்.எஸ். வட்டாரங்கள் தெரிவிப்பதாக மோடி வேளாண் சட்டங்களைப் பின்வாங்கியதற்கான அடுத்த நாள் (20.11.2021) வெளிவந்த இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையொன்று கூறுகிறது.
எனவே, இந்த பின்வாங்கல் என்பது சங்கபரிவாரக் கும்பல் மீண்டும் அம்மாநிலங்களில் புகுந்து தனக்கான மக்கள் அடித்தளத்தை உருவாக்கிக் கொள்வதற்காக, அவர்களுக்கு அவர்களே கொடுத்துக் கொண்ட ‘சுவாசிப்பதற்கான அவகாசம்’… நமக்கல்ல!
படிக்க :
விவசாயிகள் மீதான மோடியின் ஒடுக்குமுறையை உலகம் மறக்காது || கருத்துப்படங்கள் !
சிங்கு படுகொலை : விவசாயிகள் போராட்டத்தை சீர்குலைக்கும் முயற்சி !
விவசாய சங்கத் தலைவர்களின் மீது ஏவப்பட்ட தேசப் பாதுகாப்புச் சட்டம், சாலையில் முட்கம்பிகளை புதைத்தது, அரியானாவில் விவசாயிகளின் மண்டையைப் பிளந்தது, உ.பி. லக்கிம்பூர் – கேரி படுகொலைகள் என ஓராண்டு காலம் கடும் பாசிச ஒடுக்குமுறைகளைக் கையாண்டு இச்சட்டங்களை எப்படியாவது அமல்படுத்தியே தீர வேண்டும் என உறுதியாக இருந்த பா.ஜ.க. அரசு, மறுகாலனியாக்க கொள்கையின் முக்கிய அங்கமான வேளாண்துறையை கார்ப்பரேட்மயமாக்கும் திட்டத்தை எளிதில் கைவிட்டுவிடாது.
மண்டி முறை, குறைந்தபட்ச ஆதாரவிலை போன்றவற்றை ஒழித்துக்கட்டும் வேலையை மோடி அரசு சட்டத்திற்கு அப்பாற்பட்டும் செய்யும். எனவேதான் குறைந்தபட்ச ஆதாரவிலைக்கு சட்ட உத்தரவாதம் கொண்டுவரவேண்டும் என்று போராடுகிறார்கள் விவசாயிகள். மேலும் வேளாண் வர்த்தக உள்கட்டமைப்பு திட்டம், வேளாண் உற்பத்தியாளர் சங்கம் (FPO), மின்னணு உழவர் சந்தை (eNAM) என விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்கும் மோடி அரசின் திட்டங்கள் பலவழிகளில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. எனவே தற்போது மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றிருப்பதென்பது ஒரு ‘தொடக்கநிலை வெற்றி’ மட்டுமே.
எனினும், பாசிச மோடி அரசை பணியவைத்த ஒரு மக்கள்திரள் போராட்டத்தின் முன்னேற்றம் என்ற வகையில் காவி – கார்ப்பரேட் பாசிசத்தை களத்தில் மோதி வீழ்த்துவதற்கு முன்நிற்கும் புரட்சிகர – ஜனநாயக சக்திகளுக்கு இது ஊக்கமளிப்பதாகும். இந்த ஊக்கத்தோடு இறுதி வெற்றிவரை போரிடுவோம்!
(குறிப்பு : புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2021 இதழ் அச்சுப் பிரதியாக வெளிவந்திருக்கிறது. இதழை வாங்குவதற்கு 94446 32561 தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் !)

பாகிஸ்தானின் பஜ்ரங்தள் : ‘தெஹ்ரிக்-இ-லப்பைக் பாகிஸ்தான்’ கட்சி | கருத்துப்படம்

ஸ்லாமிய மதவெறியர்களால் கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்ட இலங்கையைச் சேர்ந்த பிரியந்தா குமாரா தியவதனா (40).
கடந்த சில தினங்களுக்கு முன் இலங்கையைப் சேர்ந்த பிரியாந்தா குமாரா பாகிஸ்தானில், தான் வேலைப்பார்க்கும் தொழிற்சாலையின் சுவற்றின் மீது ஒட்டப்பட்ட சுவரொட்டியை கிழித்ததாக வதந்தி பரப்பப்பட்டுள்ளது. இந்த வதந்தியை காரணமாக வைத்து பாகிஸ்தானில் உள்ள மத தீவிரவாத கட்சியான ‘தெஹ்ரிக்-இ-லப்பைக் பாகிஸ்தான்’ Tehreek-e-Labbaik Pakistan (TLP) என்ற கட்சியை சேர்ந்தவர்கள், குமாரா-வை கொடூரமாக தாக்கி எலும்புகளை முறித்து, எரித்துக் கொன்றுள்ளனர். அவரது உடல் 99 சதவிதம் தீக்கிரையாகிவிட்டது. பிரேத பரிசோதனை முடிவுகள் இன்னும் கொடூரத்தை வெளிபடுத்துகிறது. அவரின் எஞ்சிய உடல் பாகங்கள் இலங்கை தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த கொலை தொடர்பாக இதுவரை 113 பேர் கைது மற்றும் 800 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
இந்த கொலைபாதக செயல் நமக்கு உ.பி – குஜராத்தில் நடக்கும் கும்பல் படுகொலைகளை நினைவூட்டவில்லையா? எந்த நாடாக இருந்தாலும் மத தீவிரவத கும்பல்களிடம் மனிதநேயம் இருப்பது சாத்தியமில்லை.
கருத்துப்படம் : வேலன்

புதிய ஜனநாயகம் டிசம்பர் – 2021 அச்சு இதழ் !

அன்பார்ந்த வாசகத் தோழர்களே!
ன்றைய காவி – கார்ப்பரேட் பாசிச சூழலை அம்பலப்படுத்தியும், பாசிச கும்பலின் நடவடிக்கைகளை நடைமுறையில் முறியடிக்க வேண்டிய முக்கியத்துவம் குறித்தும் தொடர்ச்சியாக எமது இதழில் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறோம்.
இப்பாசிச சூழலில், உழைக்கும் மக்கள் மத்தியிலும், ஜனநாயக சக்திகளின் மத்தியிலும் புரட்சிகர அரசியலை பரவலாகவும், வேகமாகவும் கொண்டு செல்ல வேண்டிய தேவை உள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இப்பணியை நிறைவேற்ற, கடும் நிதி நெருக்கடிக்கு இடையில்தான் இதழைக் கொண்டு வருகிறோம் என்பதை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறோம்.
நிதி நெருக்கடியை ஈடு செய்ய எமது தோழர்கள் சந்தா சேகரிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உழைக்கும் மக்களின் விடுதலையை நேசிக்கக் கூடிய ஒவ்வொருவரும், சந்தா மற்றும் நன்கொடை கொடுத்து புதிய ஜனநாயகம் இதழுக்கு தோள் கொடுக்குமாறு தோழமையுடன் வேண்டுகிறோம்.
ஜனவரி மாதம் முதல் புதுப்பிக்கப்பட்ட மற்றும் புதிய சந்தாரர்களுக்கு மட்டும் புத்தகம் அனுப்பி வைக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். எனவே, ஏற்கெனவே சந்தா செலுத்தி ஆதரித்துவரும் தோழர்கள், வாசகர்கள் தமது சந்தாவைப் புதுப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
சந்தா பற்றிய விவரம் :
  • ஓராண்டு சந்தா- ரூ.240
  • இரண்டாண்டு சந்தா- ரூ.480
  • ஐந்தாண்டு சந்தா- ரூ.1,200
000
வாசகத் தோழர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். ‘புதிய ஜனநாயகம்’ இதழில் இடம்பெறும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த கட்டுரைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொண்டுவருவது என தீர்மானித்துள்ளோம். அவை மின்னூல் வடிவத்திலும், அச்சு இதழாகவும் இம்மாதமே உங்கள் கைகளில் தவழக் காத்திருக்கிறது. இதன் விலை அதிகபட்சம் ரூ.50 வரை இருக்கலாம். வாசகத் தோழர்கள் தங்களுக்குத் தேவையான இதழை முகவர்கள் மூலமாகவோ அல்லது நேரடியாக புதிய ஜனநாயகம் அலுவலக முகவரி அல்லது தொடர்பு எண்ணிற்குத் தொடர்பு கொண்டோ பெற்றுக் கொள்ளலாம்.
தோழமையுடன்,
நிர்வாகி,
புதிய ஜனநாயகம்.
***
புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2021 இதழ் அச்சுப் பிரதியாக வெளிவந்திருக்கிறது. இதழை வாங்குவதற்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் !
தொடர்பு விவரங்கள் :
தொலைபேசி : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com
அச்சு இதழ் விலை : ரூ.20 + தபால் செலவு ரூ. 5 = மொத்தம் ரூ.25
G-Pay மூலம் பணம் செலுத்த : 94446 32561
வங்கி மூலம் செலுத்த :
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444.
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் :
  • தலையங்கம்: வேளாண் சட்டங்கள் வாபஸ் : மோடியை பணியவைத்த விவசாயிகள் போராட்டம்!
  • உத்தரப் பிரதேசம் : இந்துராஷ்டிரத்திற்குள் ‘சாத்தியமான மாற்று’ இல்லை!
  • எல்லைப் பாதுகாப்புப் படை விரிவாக்கம் : தேசப் பாதுகாப்பு என்ற பெயரில் அரங்கேறும் இராணுவ சர்வாதிகாரம் !
  • காஷ்மீரில் தொடரும் ஒடுக்குமுறைகளும், அமித்ஷாவின் பொய்யுரைகளும்!
  • நாடெங்கும் உரத் தட்டுப்பாடு : விவசாயிகளை வஞ்சிக்கும் மோடி அரசு!
  • சென்னையின் துயரம் : யார் காரணம்?
  • கிளாஸ்கோ பருவநிலை மாநாடு (COP26) : முதலாளித்துவ அரசுகளின் மற்றுமொரு அரட்டை மடம்!
  • தைவான் : அமெரிக்க, சீன உலக மேலாதிக்கப் போட்டியின் தெற்காசிய மையம்!