தாழ்த்தப்பட்டவர் என்ற வார்த்தையிலிருந்து விடுதலை ! யாருக்கான கோரிக்கை இது?
தாழ்த்தப்பட்டவர் என்று குறிப்பிடுவது எதிர்ப்பை பதியச் செய்யவா ? தாழ்வு மனநிலையை உண்டாக்கவா ?
சேலம் : முடி திருத்தும் தொழிலாளியின் மகன் சாதி ஆணவப் படுகொலை | மக்கள் அதிகாரம் கண்டனம்
சேலம் வீரகனூரைச் சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளியின் மகன்
முத்துவேல் ஆதிக்க சாதிவெறியர்களால் படுகொலை !
ஆதிக்க சாதிவெறியர்களுக்கு துணைபோகும் மாவட்ட நிர்வாகம் !
“இது 21-ம் நூற்றாண்டின் விஞ்ஞான உலகம், இப்ப எல்லாம் யார் சார் சாதி பாக்குறாங்க?” என்று கூறி சாதிய அடக்குமுறைகளை சாதாரணமாகக் கடந்து செல்கிறோம். இன்றைக்கும் தீண்டாமை படுகொலை அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. சேலம் மாவட்டம் கிழக்கு ராஜபாளையம் ஊராட்சி, கிழக்கு வீதியில் சுமார் 80 குடும்பங்கள் முதலியார் சமூகத்தை சார்ந்தவர்களும், 4 குடும்பங்கள் முடி திருத்தும் சமூகத்தைச் சார்ந்தவர்களும் வசித்து வருகின்றனர்.
அந்த ஊரில் உள்ள ஆதிக்க சாதியான முதலியார் குடும்பங்களுக்கு முடி திருத்துவதும், அவர்கள் கொடுக்கும் தானியங்களையும், உணவுகளையும் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு சேவை செய்யவதும்தான் முடி திருத்தும் சமூகத்தை சார்ந்தவர்களின் வேலையாக அப்பகுதியில் நீடித்திருக்கும் பார்ப்பனிய கட்டமைப்பால் பணிக்கப்பட்டிருக்கிறது.
இதனால் முடி திருத்தும் சமூகத்தைச் சார்ந்தவர்கள் அப்பகுதியிலிருந்து உயர்படிப்புக்குச் செல்வதோ, வெளியூருக்கு வேலைக்குச் செல்வதோ, இல்லாமல் பொருளாதார ரீதியாக முன்னேற்றமடையாமல் வறுமையில்தான் வாழ்ந்து வருகின்றனர்.
படிக்க :
♦ மேகதாது அணை : தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் சதி || மக்கள் அதிகாரம் தருமபுரி
♦ நள்ளிரவில் எரிவாயு குழாய்களை குவித்த கெயில் நிறுவனம் : விவசாயிகள் போராட்டம் !
அதை மீறி அவர்கள் வெளியூருக்கு வேலைக்கு சென்றால் மிரட்டுவதும், சாதிய அடக்குமுறைக்கு எதிராக பேசினால் மர்மமான முறையில் கொலை செய்வதும் என அப்பகுதியில் பல படுகொலைகள் இதுவரை நடந்துள்ளதாக வேதனையோடு வெளிப்படுத்துகின்றனர் அப்பகுதி மக்கள்.
அப்படி ஆதிக்க சாதி கட்டுப்பாட்டை மீறி கோவைக்கு வேலைக்கு சென்றார், முத்துவேல் என்ற 22 வயது இளைஞர். கோவையில் வேலையை முடித்துவிட்டு வீடுதிரும்பிய முத்துவேலை படுகொலை செய்து அருகாமையில் உள்ள ஏரியில் வீசியுள்ளனர் ஆதிக்க சாதிக் கும்பல்.
“படுகொலைக்கு ஆதிக்க சாதியை சேர்ந்த மணி, பெரியசாமி, மாணிக்கராஜா தான் காரணம். அவர்கள்தான் கொலை நடந்த தேதியன்று மாலை முத்துவேலை அழைத்து சென்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறி சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள முத்துவேலின் உடலை வாங்க மறுத்து கடந்த 13 நாட்களாக போராடி வருகின்றனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசு, முத்துவேலின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல், மர்மமான மரணம் என்ற வகையிலேயே முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளதாக போராடும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட குடும்பமும், அக்குடும்பத்துக்கு ஆதரவாக முடித்திருத்தும் தொழிலாளர்கள் சங்கமும் இப்படுகொலையை கண்டித்து, உடனடியாக கொலைக் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு கொடுத்தும், முடித்திருத்தும் கடைகளை அடைத்தும், மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியும் வருகின்றனர்.
இப்போராட்டங்களுக்கு ஆதரவாக தருமபுரி மக்கள் அதிகாரம் தோழர்களும் களத்தில் நின்று போராடி வருகிறார்கள். இருப்பினும் அவர்களை அழைத்து இன்று வரை பேச்சுவார்த்தை கூட நடத்த மறுத்து வருகிறது சேலம் போலீசு.
மாறாக, உடலை வாங்க சொல்லி மிரட்டி வருவது, அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தாமல் காலம் தாழ்த்தி, போராடுபவர்களை அவமதித்தும் வருகிறது போலீசு.
உயிருடன் இருக்கும்போது ஆதிக்க சாதி வெறியர்களால் சாதிய வன்கொடுமை நிகழ்த்தப்படுகிறது. இறந்த பின்பும் சாதி வெறியர்களை பாதுகாக்கும் அரசு கட்டமைப்பால், வன்கொடுமை ஏவிவிடப்படுகிறது.
சாதிய படுகொலையை மூடிமறைக்க, போலீசும், அரசு நிர்வாகமும் உடலை தாங்களே அடக்கம் செய்ய முயற்சித்து வருவதை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.
தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக தலையிட்டு கொலையாளிகளான ஆதிக்க சாதி வெறியர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் கொலை வழக்கு ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
இப்படி, அரசும், போலீசும் ஆதிக்க சாதி வெறியர்களுக்கும், சாதிய கட்டமைப்பிற்கும் அரணாக இருப்பதற்கு இப்படுகொலையே சாட்சி ! இந்த சமூகக் கட்டமைப்பையும் அரசுக் கட்டமைப்பையும் மாற்றாமல் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை என்பது கானல் நீரே !

மக்கள் அதிகாரம்,
தருமபுரி மண்டலம்.
97901 38614
செப் 28 : ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி பகத்சிங்-கின் 114-வது பிறந்தநாள் விழா !
ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி பகத்சிங்-கின் 114-வது பிறந்தநாள் புமாஇமு மற்றும் மக்கள் அதிகாரம், பு.ஜ.தொ.மு தோழர்களால் சென்னை, வேலூர், தருமபுரி, உளுந்தூர்பேட்டை ஆகிய இடங்களில் கொண்டாடப்பட்டது. பகத்சிங் பற்றிய வெளியீடு, மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் வினியோகிக்கப்பட்டது.
***
சென்னை :
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் சிம்ம சொப்பனமாக விளங்கிய தோழர் பகத்சிங்-கின் 114-வது பிறந்த நாளை ஒட்டி சென்னை சேத்துப்பட்டு பகுதியில் பு.மா.இ.மு, மக்கள் அதிகாரம் தோழர்கள் மற்றும் பகுதி இளைஞர்களுடன் இணைந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில், மக்கள் அதிகாரத்தை சேர்ந்த தோழர் ஜெய காமராஜ் அவர்கள் “அந்த வீரன் இன்னும் சாகவில்லை” என்ற பகத்சிங்கின் உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடலை பாடினார்.
காவி – கார்ப்பரேட் பாசிசம் ஒவ்வொரு நாளும் மக்களை சுரண்டுகிறது, குறிப்பாக கார்ப்பரேட் கொள்ளைக்காக இந்த நாட்டு மக்களின் சொத்துக்கள் சூறையாடப்படுகிறது என்பதையும் அதற்கு எதிராக மக்களை போராடவிடாமல் தடுக்க மக்களை சாதி, மத ரீதியாக இந்து மதவெறி பார்ப்பன பாசிச கும்பல் மதவெறியை தூண்டிவிட்டு மக்களை பிளவுபடுத்துகிறது என்பதையும் பு.மா.இ.மு-வின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் துணைவேந்தன் விளக்கிப் பேசினார்.
தோழர்களின் இந்த உணர்வுபூர்வமான நிகழ்ச்சியை பகுதியில் இருந்த மக்களும், ஆட்டோ தொழிலாளர்களும் கடைக்காரர்களும் நின்று கவனித்தனர்.
மேலும், இந்த நிகழ்ச்சியை கவனித்த மாணவர்கள் இளைஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் பகத்சிங்கின் பிறந்த நாளை ஒட்டி இனிப்பு வழங்கப்பட்டது. அவர்களுக்கு பு.மா.இ.மு சார்பில் வெளியான பகத்சிங் வெளியீடு விநியோகிக்கப்பட்டது.
தகவல்:
பு.மா.இ.மு,
சென்னை.
***
தருமபுரி :
பகத்சிங்கின் 114-வது பிறந்தநாளை முன்னிட்டு தருமபுரி மாவட்டம் பென்னாகரம் புதிய பேருந்து நிலையப் பகுதியில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில் மாவட்ட அமைப்பாளர் தோழர் சத்தியநாதன் தலைமையில் பேனர் வைத்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது. புதிய கல்விக் கொள்கை, வேளாண் திருத்தச் சட்டம், மின்சார திருத்தச் சட்டம், பொதுத்துறைகளை தனியார்மயமாக்கல், தொழிலாளர் திருத்தச் சட்டம் உள்ளிட்ட மோடி அரசின் காவி – கார்ப்பரேட் பாசிசத் திட்டங்களையும் சட்டங்களையும் பகத்சிங் காட்டிய வழியில் முறியடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதனை சாதிக்க மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரண்டு போராடுவோம் என பு.மா.இ.மு சார்பாக அறைகூவல் விடுக்கப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்பும், பகத்சிங் வெளியீடும் விநியோகம் செய்யப்பட்டது. இதில் மக்கள் அதிகாரம் தோழர்களும் கலந்து கொண்டனர். பகுதியைச் சேர்ந்த மாணவர்களும், பொதுமக்களும் நிகழ்வை ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
தகவல்:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி.
தருமபுரி மாவட்டம்
செல்: 63845 69228.
***
உளுந்தூர்பேட்டை :
உளுந்தூர்பேட்டை பாலி கிராமத்தில் தோழர் பகத்சிங் பிறந்த நாளை முன்னிட்டு பகத்சிங் படத்திருப்பு மற்றும் பகத்சிங்கின் புத்தகம், பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள்? என்ற புத்தகம், துண்டு பிரசுரம், இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மக்கள் அதிகாரம் தோழர் வினாயகம் மற்றும் பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பகத்சிங் பற்றி பேசப்பட்டது.
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தவிர்க்க முடியாத போராளி பகத்சிங். இன்றும் இளைஞர்கள் நெஞ்சில் விடுதலை வேள்வியைப் பற்ற வைக்கும் தீப்பொறியாக இருக்கிறார் அவர்.
“புரட்சியாளர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கொள்கைகள் தியாகத்தின் மூலம்தான் வலுவடையும். நீதிமன்றத்தின் மேல் முறையீடுகள் மூலம் அல்ல. அநீதிக்கு எதிரான இந்தப் போர் எங்களோடு தொடங்கவும் இல்லை. எங்கள் வாழ்நாளோடு முடியப்போவதுமில்லை. புரட்சி என்பது ஒரு செயல். திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலம் மாற்றங்களை கொண்டு வருவதுதான் புரட்சி. திட்டமிடாத எதுவும் நடந்து விடாது. புரட்சி என்பது ரத்தவெறி கொண்ட மோதலாகதான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அது வெடிகுண்டுகள் துப்பாக்கிகள் மீதான வழிபாடல்ல. புரட்சியின் மூலம் அநீதியான சமூகம் மாற்றி அமைக்கப்பட வேண்டும். உலகப் புரட்சியின் நோக்கம் முதலாளித்துவத்தை தூக்கி எறிவது.
ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியாவை விடுதலை அடையச் செய்வது மட்டுமல்ல, இந்திய முதலாளிகளிடமிருந்தும் உழைக்கும் மக்களுக்கு விடுதலை பெற்றுத்தர வேண்டும்” என்பதில் தெளிவாக இருந்தார் பகத்சிங்.
இன்று அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களும், வேதாந்தா போன்ற வெளிநாட்டு நிறுவனங்களும்தான் வளர்ச்சி அடைந்து வருகின்றன. ஏற்கனவே அரசின் பாதி சொத்துகளை தனியாரிடம் தாரை வார்த்து அவர்களுக்கு சலுகைகளை அளித்து, அவர்கள் மக்களை சுரண்டுவதற்கு வழி செய்கிறது மோடி அரசு.
மீண்டும் பகத்சிங் வழியில் ஓர் விடுதலைப்போரை முன்னெடுப்போம் !
தகவல் :
வினாயகம்,
மக்கள் அதிகாரம்,
உளுந்தூர்பேட்டை.
7200112838.
***
வேலூர் :
செப் 28, தோழர் பகத்சிங்-கின் 114-வது பிறந்த நாளையொட்டி வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை பேருந்து நிறுத்தம் அருகில் “விடுதலைப் போரின் கலங்கரை விளக்கம் பகத்சிங்!” என்னும் பு.ஜ.தொ.மு வெளியீட்டை பொது மக்களிடம் வினியாகித்து, பகத்சிங்கின் தியாகத்தையும், தற்போது இந்தியாவின் நிலைமைகளுக்கு தோழர் பகத்சிங்-ன் தேவையையும் இளைஞர்கள் பகத்சிங்கை படிக்க வேண்டிய அவசியம் குறித்தும் தோழர் சுந்தர் உரை நிகழ்த்தினார்.
தகவல்:
பு.ஜ.தொ.மு,
வேலூர்.
தோழர் பகத் சிங் – 114 : பகத் சிங் புரட்சியாளரானது எப்படி ?
இந்தியா முழுவதும் இன்றுவரை பகத் சிங் எனும் பெயர் புரட்சியின் அடையாளமாகப் பார்க்கப்படுவதன் காரணம் என்ன ? பகத் சிங் நாடாளுமன்றத்தில் குண்டு வீசியது காரணமா ? அல்லது சாண்டர்ஸ்–ஐ கொலை செய்தது காரணமா ? இவைதான் பகத்சிங்–ஐயும் அவரது தோழர்களையும் கண்டு பிரிட்டிஷ் அரசு மிரண்டதற்கான காரணங்களா ? கண்டிப்பாக கிடையாது. இந்த இரண்டு சம்பவங்களால் மட்டுமே அவர் புரட்சியாளராக கொண்டாடப்படவில்லை.
தோழர் பகத் சிங்–கின் 114-வது பிறந்தநாளைக் கொண்டாடும் இந்த வேளை வரையில் எந்த ஒரு வெகுஜன ஊடகங்களோ, முதலாளித்துவ அரசியல் கட்சிகளோ அவர் ஒரு கம்யூனிஸ்ட் என்ற உண்மையை வாய்திறந்து சொன்னதில்லை. அவரை ஒரு தேசியவாதியாக, தீவிரவாதியாக மட்டுமே காட்டிக் கொண்டிருக்கின்றன. அதனால் தான் பகத் சிங்–கால் அதிகம் வெறுக்கப்பட்ட இந்து மகாசபை உள்ளிட்ட மதவாதக் கும்பல்களும் கூட இன்று தைரியமாக அவருக்கு உரிமை கொண்டாடுகின்றன.
விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்து சிறை சென்ற பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் பிறந்த பகத் சிங்–கிற்கு இயல்பாகவே அடிமைத்தனத்தை வெறுத்து எதிர்க்கும் போக்கு வளர்ந்து வந்தது.
பன்னிரண்டு வயது சிறுவனாக இருந்த பகத்சிங்கின் மனதில், ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து இந்த தேசத்தின் விடுதலையை சாதிக்க வேண்டும் என்ற உணர்வை தீவிரமாக வளர்த்துக் கொண்டார் பகத்சிங்.
பதினாறாம் வயதில் திருமணம் செய்யுமாறு குடும்பத்தினர் வலியுறுத்திய நிலையில், அதனை எதிர்த்தார். தொடர்ந்து குடும்பத்தில் இருந்து அழுத்தம் வந்தபோது வீட்டை விட்டு வெளியேறினார் பகத் சிங் !
படிக்க :
♦ தோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே !
♦ மாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்
தேசத்தின் விடுதலை தான் இலக்கு. என்ன செய்வது? எப்படி செய்வது ? எதுவும் தெரியாது. 1923-ம் ஆண்டு தனது 16-ம் வயதில் வீட்டை விட்டு வெளியேறிய பகத் சிங் 1924-ம் ஆண்டு கான்பூருக்குச் செல்கிறார். கான்பூரில் பி.கே. தத், சிவ வர்மா ஆகிய தோழர்களை சந்திக்கிறார். அதே ஆண்டில் இந்தியப் புரட்சியை இலட்சியமாகக் கொண்ட இந்துஸ்தான் ரிபப்ளிக்கன் அசோசியேசன் எனும் அமைப்பில் இணைந்தார்.
இந்திய சமூகத்தில் நிகழும் ஒவ்வொன்றையும் நுணுக்கமாக கவனித்தார், பகத்சிங். 1926-ம் ஆண்டில் லாகூருக்குச் சென்று இந்துஸ்தான் ரிபப்ளிகன் அசோசியேசனின் இளைஞர் அமைப்பான நவ ஜவான் பாரத் சபாவை உருவாக்கினார். அப்போது அவருக்கு வயது வெறும் 18 தான்.
வெள்ளையர்களின் ஒடுக்குமுறைக்கு எதிரான அமைதியான, ‘சுதந்திரப்’ போராட்டத்தை காங்கிரஸ் நடத்திவந்த காலகட்டம் அது. எதிலும் கேள்வி கேட்டு விடை தேடும் இளைஞரான பகத்சிங், காந்தியும் காங்கிரசும் அமைதி வழியில் பிரிட்டிஷாரிடம் கோரிக்கை விடுக்கும் சுதந்திரத்தின் மீது ஒரு கேள்வியை எழுப்பினார். “யாருக்கான சுதந்திரம் அது ? “ என்பதுதான் அக்கேள்வி.
சமூகத்தின் அசைவுகள் ஒவ்வொன்றையும் நுணுக்கமாக கவனிப்பதும், சமூகத்தின் அனைத்து அசைவுகளையும் ஆய்வதும், ஒவ்வொரு கணத்தின் மீதும் கேள்வி எழுப்பி அதற்கு விடை தேடுவதும்தான் பகத் சிங் என்ற தேச பற்றாளனை புரட்சியாளனாக மாற்றியது.
பிரிட்டிஷுக்கு எதிரான விடுதலைப் போராட்டங்களை இந்துத்துவ மற்றும் முசுலீம் மதவாத கிரிமினல் கும்பல்கள் பிளவுபடுத்துவதை கவனித்து அவற்றைக் கடுமையாகச் சாடுகிறார். இந்தக் காலகட்டங்களில் பகத் சிங்கிற்கு மார்க்சியம் அறிமுகம் ஆகிறது. புரட்சி தனது இளமைக்கால கம்பீரத்தோடு ரசியாவில் ஆட்சி அரியணையில் இருந்த காலகட்டம் அது. தமது அமைப்பின் பெயரை இந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிகன் ஆர்மி என்று மாற்றியமைக்கிறார். உழைக்கும் மக்களின் அதிகாரமே தீர்வு என்பதை முன் வைக்கிறார்.
இந்தியாவில் மதவாத பிரச்சினைகளின் அடிப்படை எங்கிருந்து வருகிறது என்பதையும், சாதிய தீண்டாமை எவ்வளவு இழிவானது என்பதையும் இளைஞர்கள் மத்தியில் விரிவாக விளக்கினார் பகத் சிங். எச். எஸ். ஆர்.ஏ அமைப்பின் சார்பாக கீர்த்தி எனும் பத்திரிகையில் தொடர்ந்து இளைஞர்களுக்கு அறைகூவல் விடுத்து கட்டுரைகள் எழுதினார் பகத்சிங்.
மார்க்சியம் அவருக்கு வர்க்கப் பார்வையை ஊட்டியது. மதவாத பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஒரே வழி வர்க்கப் போராட்டங்களே என தனது 20-வது வயதில் பிரகடனப்படுத்தினார் பகத்.
பகத்சிங் நாடாளுமன்றத்தில் வெடிகுண்டு வீசிவிட்டு, அங்கு வீசிய பிரசுரம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அது அவரது அரசியலை பறைசாற்றியது.
இன்று மோடி கும்பல் கொண்டுவந்திருக்கும் தொழிலாளர் விரோத ஒடுக்குமுறைச் சட்டங்களைப் போல அன்று பிரிட்டிஷ் அரசாங்கம் தமது முதலாளிகளுக்குச் சாதகமான வகையில் தொழிலாளர் விரோத சட்டங்களைக் கொண்டுவந்தது. வீதியில் இறங்கிப் போராடிய தொழிலாளர்களின் மீது போலீசு வெறிநாய்களைக் கொண்டு தாக்குதல் தொடுத்தது வெள்ளை ஏகாதிபத்திய அரசு.
தொழிலாளர்களின் பிரச்சினை நாடாளுமன்றத்தில் ஒலிக்கவில்லை. அது அவர்களுக்கு தேவையானதும் இல்லை. அதனால் தான், ”கேளாத செவிகளைக் கேட்கச் செய்வதற்காக இது உரத்த குரலைத் தேர்ந்தெடுக்கின்றது” என தனது பிரசுரத்தை துவங்குகிறார் பகத்சிங்.
வெள்ளை கொள்ளைக்காரனிடமிருந்து ஆட்சியைப் பறித்து இங்கிருக்கும் முதலாளிகள் மற்றும் பண்ணையார்களின் கைகளில் ஆட்சியை கொடுப்பது தமது நோக்கமல்ல என்பதை தமது ஒவ்வொரு கட்டுரைகளிலும் கடிதங்களிலும் தெளிவாக கோடிட்டுக் காட்டுகிறார் பகத் சிங். உழைக்கும் மக்களின் விடுதலைதான் தமது தேவை என்பதையும் அதைப் புரட்சியின் மூலம் மட்டுமே சாதிக்க முடியும் என்பதையும் அறுதியிட்டுப் பறைசாற்றுகிறார் பகத் சிங்.
அதை நோக்கியே கேள்வி எழுப்பினார். அதற்காக இந்தச் சமூகத்தின் நிகழ்வுகளை உற்று நோக்கினார். அதற்காகவே தேடித் தேடி படித்தார். அதற்காக திட்டமிட்டு செயல்பட்டார். இந்தப் பண்புதான் ஒரு தியாகி என்பதிலிருந்து புரட்சியாளன் என்ற தகுதிக்கு பகத் சிங்கை உயர்த்தியது.
தன்னை தூக்கிலிருந்து விடுவிக்க தனது தந்தை எடுத்த அத்தனை முயற்சிகளையும் கடுமையாகச் சாடி மறுக்கிறார். ஈவிரக்கமற்று தனது தந்தையை விமர்சிக்கிறார். தனது விடுதலைக்காக வெளியில் நடக்கும் போராட்டங்கள் அனைத்தையும் அறிந்திருந்தார் அவர். தனது மரணம் அந்த மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும். அது பல நூறு பகத்சிங்–களை உருவாக்கும் என்று நம்பினார். தூக்குமேடையை புரட்சியின் விளைநிலமாக மாற்றினார் பகத் சிங்.
படிக்க :
♦ செளரி செளரா நூறாம் ஆண்டு : ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆண்டாக நினைவுகூர்வோம் !
♦ இந்து மதம் : ஏகாதிபத்திய சந்தையை உறுதிப்படுத்த உருவாக்கப்பட்ட ஓர் கட்டமைப்பு !
தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பிறகு, பஞ்சாப் மாகாண கவர்னருக்கு பகத்சிங், ராஜ்குரு, சுகதேவ் ஆகிய மூவரும் தங்களை அரசுக்கு எதிராக போர் தொடுத்தவர்கள் என்ற வகையில், தூக்கிலிடாமல் இராணுவத்தால் சுட்டுக் கொல்ல வேண்டும் எனக் கூறி கடிதம் எழுதினர். அதில்,
“விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய சில ஒட்டுண்ணிகளால் இந்திய உழைக்கும் மக்களும் அவர்தம் இயற்கை வளங்களும் சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கும் வரை இந்தப் போர் தொடரும்; தொடர வேண்டும். அவ்வொட்டுண்ணிகள் கலப்பற்ற பிரிட்டிஷ் முதலாளியாக இருக்கலாம். அல்லது பிரிட்டிஷ் முதலாளிகள், இந்திய முதலாளிகளின் கலப்பாக இருக்கலாம், அல்லது கலப்பற்ற இந்திய முதலாளிகளாகக் கூட இருக்கலாம்.” என்று குறிப்பிட்டிருந்தனர்
இன்றும் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒட்டுண்ணிகளாலும், இந்துராஷ்டிரக் கனவுடைய விசப் பாம்புகளாலும் இந்திய உழைக்கும் வர்க்கத்தின் இரத்தம் உறிஞ்சப்படுகிறது. நமது போரும் தொடர்கிறது !
நாம் தேசப் பற்றாளர்களாக இருக்கலாம். சமூகத்தை ஒடுக்குமுறையிலிருந்து விடுவிக்கும் புரட்சியாளனாக மாற வேண்டுமெனில், பகத்சிங் புரட்சியாளனாக மாறிய வழிமுறையைப் பின்பற்றுவதுதான் ஒரே வழி !

சரண்
பழந் தமிழரிடையே சூழலியல் விழிப்புணர்வு | வி.இ. குகநாதன்
இன்று உலகு எதிர்நோக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தல் எது எனக் கேட்டால் பலரும் `கொரோனா` எனக் கூறலாம். ஆனால், அதனைக் காட்டிலும் மிகப் பெரிய கேடாக அமைவது சூழல் மாசடைதலால் ஏற்படும் பருவ நிலை மாற்றமேயாகும். கோவிட்-19 நோயால் ஏற்பட்ட உலகளாவிய இறப்புகளைக் காட்டிலும் (4 மில்லியன்), மாசடைந்த காற்றினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் (ஒவ்வொரு ஆண்டும் 7 மில்லியன்) அதிகம்.
மேலும், கோவிட்-19 இறப்புகளுக்குக் கூட மாசடைந்த காற்றினால் ஏற்பட்ட விளைவுகள் பங்களித்துள்ளன. தாங்கள் முன்பு கருதியதை விட காற்று மாசுபாடானது இடர்ப்பாடு மிக்கதாக இருக்கிறது என உலக நலத்துறை அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது. மேலும், அது வரும் நவம்பர் மாதம் `COP26` உச்சி மாநாட்டுக்கு முன்னராக, அதன் 194 உறுப்பு நாடுகளையும் தங்களின் நச்சுக் காற்று உமிழ்வைக் குறைக்க வலியுறுத்தியுள்ளது. அதேபோன்று சில கிழமைகளுக்கு முன்னர் பருவநிலை மாற்றத்தினால் ஏற்படப்போகும் இன்னல்களையும், உலக அறிவியலாளர்கள் சேர்ந்து ஒரு அறிக்கை (IPCC report) மூலம் எச்சரித்துமிருந்தார்கள்.
தொழில் முயற்சிகளின் விரிவாக்கத்தினையும், நகர்ப்புற வளர்ச்சியினையும் உரிய முறையில் மேலாண்மை செய்யத் தவறியமையே, இத்தகைய சூழல் கேடுகளுக்கான காரணங்களாகவுள்ளன. அதே வேளையில் அண்மைக்காலத்தில் தமிழர் நிலங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் பழந் தமிழரின் தொழிற்துறை வளர்ச்சி பற்றியும் தெரிய வருகின்றது. இந்த நிலையில் பழந் தமிழரிடையே சூழல் விழிப்புணர்வு எவ்வாறு இருந்தது என இக்கட்டுரை ஆய்வு செய்யவுள்ளது.
படிக்க :
♦ தமிழக ஊர்ப் பெயர் மாற்றம் தொடர்பான அரசாணையும் அதன் பின்வாங்கலும் ஏன் ? | வி.இ.குகநாதன்
♦ தமிழர் திருநாள் : விழுங்கக் காத்திருக்கும் காவிகள் ! | வி.இ.குகநாதன்
இயற்கையினைப் பேணிய சங்க காலத் தமிழர் :
இயற்கையால் அமைந்ததே உலகு, எனவே இயற்கையினைப் பேண வேண்டும் என்பதனைச் சங்ககாலத் தமிழர்கள் நன்றாக அறிந்தேயிருந்தார்கள். முரஞ்சியூர் முடிநாகராயர் எனும் சங்ககாலப் புலவர் பாடிய பின்வரும் புறநானூற்றுப் பாடல் இதனை எமக்கு நன்கு தெளிவுபடுத்தும்.
“மண் திணிந்த நிலனும்
நிலம் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளி தலைஇய தீயும்
தீ முரணிய நீரும் என்று ஆங்கு
ஐம் பெரும் பூதத்து இயற்கை போல”
: புறநானூறு 2 : 1-6
– முரஞ்சியூர் முடிநாகராயர்
{பொருள் – மண் செறிவாய் அமைந்துள்ள நிலமும், அந்த நிலம் ஏந்திநிற்கும் வானும், அந்த வானத்தைத் தடவிவரும் காற்றும், அந்தக் காற்றினால் எழுந்த தீயும், அந்தத் தீயுடன் மாறுபட்ட நீரும் என்று ஐந்துவகையான பெரிய பூதத்தினது தன்மை போல}
அதே போன்று சங்க இலக்கியங்களில் கூறப்படும் `தமிழ் ஏழு வள்ளல்கள்` எனப்படும் குறுநில மன்னர்களும் இயற்கையினைப் பேணி வந்த செய்திகளைக் காணலாம் (`கடையேழு வள்ளல்கள்` என்பதைத் தவிர்ப்போம், ஏனெனில் கடையேழு வள்ளல்கள் எனில் முதல் ஏழு வள்ளல்கள் என்ற புராணப் புனைவுகளை ஏற்க வேண்டியிருக்கும்).
`மயிலுக்குப் போர்வை கொடுத்த பேகன்`, `முல்லைக்குத் தேர் தந்த பாரி` போன்றவை சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்; இங்கு முல்லைக்குத் தேர் கொடுத்தமையோ அல்லது மயிலுக்குப் போர்வை கொடுத்தமையையோ அவர்கள் முறையே மரம் – செடிகளையும், உயிரிகளையும் பேணியமைக்கான உவமைகளாகவே கொள்ளப்பட வேண்டும்.
பழந் தமிழர் மரங்களைத் தெய்வமாகக் கருதி மதித்தமையினைப் பல சங்ககாலப் பாடல்கள் எடுத்து இயம்புகின்றன. அவற்றுள் சில வருமாறு:
“தொன்று உறை கடவுள் சேர்ந்த பராரை
மன்ற பெண்ணை வாங்கு மடல் குடம்பை”
: நற்றிணை 303: 3-4
{தொன்றுதொட்டு உறையும் கடவுள் சேர்ந்த பருத்த அரையைக் கொண்ட மன்றத்தில் நிற்கும் பனைமரத்தின் வளைந்த மடலே இருப்பிடமாய்க்கொண்டு}
“கல் எறிந்து எழுதிய நல் அரை மராஅத்த
கடவுள் ஓங்கிய காடு ஏசு கவலை”
: மலைபடுகடாம். 395-396
{நல்ல அடிப்பகுதியையுடைய மரா மரத்தடிகளில்
கடவுள் (படிமங்கள்) ஓங்கிநிற்கும் காடுகள் நிறைந்த கிளைவழிகளில்}
“மன்ற மராஅத்த பேஎம் முதிர் கடவுள்”
: அகநானூறு 87 :1
{ஊர்ப்பொதுவிடத்தில் உள்ள மரா மரத்தில் இருக்கும் கடவுள்}
இவ்வாறு பல சங்க காலப் பாடல்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அதே போன்று மரத்தினை ஒரு உடன் பிறந்தவளாகக் கருதும் பாடல் கூட உண்டு.
“நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும் என்று
அன்னை கூறினள் புன்னையது நலனே”
: நற்றிணை 172 :4-5
{உம்மைக்காட்டிலும் சிறந்தது இந்த உமது தங்கையானவள் என்று அன்னை கூறினாள் இந்தப் புன்னையது சிறப்பைப்பற்றி}
மரம் வளர்த்தலின் முகன்மை பற்றிப் பல பாடல்களில் பேசப்படுகின்றன. ஒரு சிறு செடி கூட வளர்ந்து, யானையினையே கட்டும் கட்டுத்தறியாக மாறும், எனவே சிறு செடிகளைக் கூடத் தேவையில்லாமல் அழிக்க வேண்டாம் என நாலடியார் பாடலொன்று கூறுகின்றது.
“ஆடு கோடாகி அதரிடை நின்றதூஉம்
காழ்கொண்ட கண்ணே களிறணைக்குங் கந்தாகும்”
: நாலடியார்: 192
பதினெண் கீழ்க் கணக்கு நூலான நாலடியார் சொன்னது போன்றே , அத் தொகுப்பினுள் வரும் சிறுபஞ்ச மூலம் எனும் நூலும் பின்வருமாறு கூறுகின்றது (பதினெண் கீழ்க் கணக்கு நூல்கள் சங்ககாலத்தினை அடுத்து வந்த காலப் பகுதிகளில் பாடப்பட்டவை)
“நீர்அறம் நன்று, நிழல்நன்று, தன்இல்லுள்
பார்அறம் நன்று,பாத்து உண்பானேல் – பேரறம்
நன்று, தளிசாலை நாட்டல் பெரும்போகம்
ஒன்றுமாம் சால உடன். “
: சிறுபஞ்சமூலம்.
பொருள் : நீர் நிலைகளை (குளம்,கிணறு..) அமைத்தல், மரம் நடுதல், உறைவிடம் அமைத்தல், பகிர்ந்து உண்ணல், பாதையோரங்களில் மரம் நடுதல் ஆகிய செயல்களே பேரின்பத்துக்கான வழிகளாகும் என சிறுபஞ்ச மூலம் சொல்லுகின்றது.
மண் அரிப்பினைத் தடுப்பதற்காகவும், கடற் பேரலைகளால் ஏற்படும் அழிவுகளிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காகவும் , கரையோரங்களில் மரங்கள் வளர்க்கப்பட்ட செய்தியினையும் பல பாடல்களில் காணலாம்.
“புது மணல் கானல் புன்னை நுண் தாது
கொண்டல் அசை வளி தூக்கு-தொறும் குருகின்
வெண் புறம் மொசிய வார்க்கும் தெண் கடல்
கண்டல் வேலிய ஊர் அவன்”
: நற்றிணை 74:6-10
மேலுள்ள பாடலில் கடற்கரையிலுள்ள ஊர் ஒன்றின் வேலியாக கண்டல் மரங்கள் காணப்பட்ட செய்தியினைக் காணலாம்.
“புன்னை அரும்பிய புலவு நீர் சேர்ப்பன்”
: நற்றிணை 94:6
{கடற் பெருக்கினைத் தடுக்கும் புன்னை மரங்கள் உவமையாகக் கூறப்படுகின்றன.}
“அகரு வழை ஞெமை ஆரம் இனைய
தகரமும் ஞாழலும் தாரமும் தாங்கி
நளி கடல் முன்னியது போலும் தீம் நீர்
வளி வரல் வையை வரவு
வந்து மதுரை மதில் பொரூஉம் வான் மலர் தாஅய்”
: பரிபாடல் 12:5-9
இப்பாடலில் வைகை ஆறு வந்து மோதும் கரைகளில் நட்டு வைக்கப்பட்டுள்ள மரங்கள் (நாகமரம், தகர மரம், ஞாழல் மரம், தேவதாரு மரம்) பற்றிய குறிப்பினைக் காணலாம். இது ஒரு வகையில் மண் அரிப்பினைத் தடுத்துச் சூழலைப் பேணும் ஒரு செயற்பாடாகக் கொள்ளலாம்.
`புவி வெப்பமடைதல்` பற்றி இன்று பெரிதாகப் பேசுகின்றோம். அது பற்றிய அறிவும் பழந் தமிழருக்கு இருந்துள்ளதோ என்ற ஐயத்தினை எமக்கு ஏற்படுத்தும் வகையில் மணிமேகலையில் ஒரு பாடல் அமைந்துள்ளது. எழுத்தாளர் மருது கிருஷ்ணன் அண்மையில் இப் பாடலினைச் சுட்டிக் காட்டியிருந்தார்.
“ புல் மரம் புகையப் புகை அழல் பொங்கி
மன் உயிர் மடிய மழைவளம் கரத்தலின்
அரசு தலைநீங்கிய அரு மறை அந்தணன்
இரு நில மருங்கின் யாங்கணும் திரிவோன்
அரும் பசி களைய ஆற்றுவது காணான்
திருந்தா நாய் ஊன் தின்னுதல் உறுவோன்”
: மணிமேகலை
இப் பாடலில் புல்லும் மரமும் புகையுமளவுக்கு வெப்பம் மிகுந்தமையால் உயிர்கள் அழியுமாறு செல்வம் அழிந்து போனமையால், நாய்க் கறியினையே உண்ணும் நிலை ஏற்பட்டது எனச் சொல்லப்படுகின்றது. இதனை விடப் `புவி வெப்பமடைதல்` பற்றிய எச்சரிக்கையுணர்வினை எவ்வாறு வெளிப்படுத்துவது?
இன்று எல்லாம் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் மாசுகளினால் சூழல் கெடுவதனைத் தடுக்க, தொழிற்சாலைகளைச் சுற்றி மரம் வளர்க்க நிறுவனங்கள் வலியுறுத்தப்படுவதனைக் காண்கின்றோம். இந்த ஏற்பாட்டினால் சூழல் மாசுபடுவது கட்டுப்படுத்தப்படும் என்பதாலேயே, இம் முறை பின்பற்றப்படுகின்றது. இச் சூழல் மாசுபடல் தொடர்பான அறிவு சங்க காலத்திலேயே உண்டு. பின்வரும் பட்டினப்பாலை பாடலினைப் பாருங்கள்.
“கார் கரும்பின் கமழ் ஆலை
தீ தெறுவின் கவின் வாடி
நீர் செறுவின் நீள் நெய்தல்
பூ சாம்பும் புலத்து ஆங்கண்
காய் செந்நெல் கதிர் அருந்து
மோட்டு எருமை முழு குழவி
கூட்டு நிழல் துயில் வதியும்
கோள் தெங்கின் குலை வாழை
காய் கமுகின் கமழ் மஞ்சள்
இன மாவின் இணர் பெண்ணை
முதல் சேம்பின் முளை இஞ்சி
அகல் நகர் வியல் முற்றத்து”
: பட்டினப்பாலை 9–20
கரும்பு ஆலையிலிருந்து வெளிவரும் மாசினால் நெய்தல் மலர் வாடுவதும், மரங்கள் ஆலையினைச் சூழ அமைந்திருப்பதும் சொல்லப்படுகின்றது. பாடலினை நுணுக்கமாக ஆய்ந்தால் மர இலைகள்-பூக்கள் மாசினைப் பிடித்து வைக்கும் செய்தியினையும் உய்த்துணரலாம்.
இலக்கியச் சான்றுகளின் படி சூழல் விழிப்புணர்வு எல்லாமிருந்தது சரிதான், இதனை மெய்ப்பிக்கும் தொல்லியல் சான்றுகள் ஏதாவது உள்ளதா? எனப் பார்ப்போம். கொடுமணல் அகழ்வாய்வு முடிவுகளை உள்ளடக்கிய ஒரு பெரும் நூலினை `தொன்மைத் தமிழ் எழுத்தியல்` என்ற பெயரில் எழுதியிருந்தார். அந்த நூலில் இரும்பு உருக்கும் உலைக் கலன்கள் கொடுமணல் ஊரின் எல்லையோரங்களிலேயே அமைக்கப்பட்டிருப்பதனை அகழ்வாய்வுகளின் வழி காட்டியிருப்பார்.
படிக்க :
♦ தமிழ் கண்டதோர் வையை, பொருநை || வி. இ. குகநாதன்
♦ பொருள் புரியாமலேயே பயன்படுத்தப்படும் கேடான வடமொழிச் சொற்கள் || வி.இ.குகநாதன்
அதற்கான காரணத்தினையும் பின்வருமாறு கூறியிருப்பார் : “இரும்பு உருக்கும் தொழில் இடம் பெற்ற இடங்களில் குடியிருப்புக்கான (வீட்டுத் தரை, சுவர், ஓடுகள்) சான்றுகள் காணப்படாமையாலும், இங்கு கிடைத்த மட்பாண்டங்களில் எழுத்துகள் பொறிக்கப்படைமையாலும்; ஊரின் புறப் பகுதியிலேயே இத் தொழில் மேற்கொள்ளப்பட்டமையினைக் காட்டுகின்றது. இந்த ஏற்பாடு புகை, ஒலி போன்ற தேவையற்ற மாசுக்களைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு விழிப்புணர்வாகவிருக்கலாம்” (அவரது கருத்துகளின் சுருக்கமான வடிவம்).
இவ்வாறு ஊரின் புறப் பகுதிகளில் தொழிற்சாலைகளை அமைப்பதும் அதனையொட்டி மரங்களை வளர்த்திருப்பதும் ஒரு வகையான சூழலியல் விழிப்புணர்வாகவே கொள்ளப்பட வேண்டும்.
இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எமது முன்னோர் எத்தகைய சூழலியல் விழிப்புணர்வுடன் இருந்துள்ளார்கள் எனப் பார்த்தோம். இனியாவது நாமும் விழித்துக் கொள்வோம். பருவநிலை மாற்றத்தினால் ஏற்படப்போகும் மீளச் சரி செய்ய முடியாத நிலையினை எட்டி விடும் இறுதி விளிம்பில் நாம் இன்று இருக்கின்றோம், இதில் தவறுவோமாயின் எமது எதிர்காலத் தலைமுறை எம்மைப் பற்றிப் பெருமைப்பட மாட்டாது. அவ்வாறு நினைப்பதற்கு முதலில் எதிர்காலத் தலைமுறைக்கு வாழ்வதற்கான வாய்ப்பு இருக்குமா! என்பதே கேள்விக்குறியாகவேயுள்ளது.
வி.இ.குகநாதன்
செப் 27 : தமிழகமெங்கும் விவசாயிகள் போராட்டம் – மக்கள் அதிகாரம் பங்கேற்பு !
மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் இன்று (செப்டம்பர் 27) நடைபெற்றது. தமிழகம் முழுவதும் சாலை மறியல், ரயில் மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டன. பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இந்தப் போராட்டங்களில் மக்கள் அதிகாரம், பு.ஜ.தொ.மு, பு.மா.இ.மு தோழர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் பங்கேற்றவர்களை போலீசு கைது செய்தது.
சென்னை :
ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் சார்பாக மூன்று வேளாண் விரோத சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி நாடு முழுவதும் நடக்கும் கடையடைப்பினை ஆதரித்து சென்னை கிண்டி பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில், சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யூ.சி, சுதேசி இந்தியா, suci, விவசாய சங்கங்கள், தொழிற் சங்கங்கள் மற்றும் மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்புகள் கலந்து கொண்டன.
தகவல் :
மக்கள் அதிகாரம்
சென்னை மண்டலம்.
***
காஞ்சிபுரம் :
இன்று 27/09/2021 விவசாயிகள் – தொழிலாளர்கள் ஒன்றுபட்டு நடத்துகின்ற நாடு தழுவிய அளவிலான முழு அடைப்பு ( பந்த் ) போராட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை, திருவள்ளூர், காஞ்சி மாவட்டக் குழுவுக்குட்பட்ட சங்கமான டி.ஐ மெட்டல் ஃபாரமிங் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக ஆலை வாயில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் தோழர் மு.சரவணன் அவர்கள் தலைமை தாங்கினார். தலைமை உரையில் விவசாயிகள் 10 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். எந்தத் தீர்வும் இதுவரை எட்டப்படவில்லை. மோடி அரசு விவசாயிகளையும் தொழிலாளர்களையும் பற்றி சிறிதும் கவலைப்படவில்லை.
மாறாக, கார்ப்பரேட் நலனுக்காக எல்லா சட்டங்களையும் ஒழித்துக் கட்டுகின்ற ஒரு பாசிச அரசாக மாறி வருகிறது. அதை பகத்சிங் வழியில் முறியடிப்போம் என அறைகூவல் விடுத்தார்.
அதனைத் தொடர்ந்து சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் ப.சக்திவேல் அவர்கள் சிறப்புரையாற்றினார் . சிறப்புரையில் மூன்று வேளாண் சட்டங்களின் ஆபத்துக்களை விளக்கிப் பேசினார். தொழிலாளர் விரோத சட்டங்களையும் விளக்கிப் பேசினார்.
மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு சட்ட விரோத நடவடிக்கைகள் அனைத்தையும் சட்டபூர்வமாக மாற்றுகின்ற கார்ப்பரேட் – காவி பாசிசத்தை அரங்கேற்றும் அரசாக செயல்படுகிறது.
அனைத்து உழைக்கும் மக்களையும் ஒன்றிணைத்து இதை முறியடிக்க வேண்டிய கடமை தொழிலாளர்களுக்கு உள்ளது. விவசாயிகள் – தொழிலாளர்கள் ஒருங்கிணைந்த போராட்டம் வெல்லட்டும் வெல்லட்டும் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
அதனை தொடர்ந்து சங்கத்தின் துணைத் தலைவர் தோழர் தனசேகரன் அவர்கள் நன்றியுரை கூறினார். இந்த கண்டனக் கூட்டத்தில் தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டு காவி – கார்ப்பரேட் பாசிச மோடி அரசுக்கு எதிராக விண்ணதிர முழக்கமிட்டனர்.
இவண்,
டி.ஐ மெட்டல் ஃபாரமிங் தொழிலாளர் சங்கம்,
(இணைப்பு : பு. ஜ. தொ. மு., மாநில ஒருங்கிணைப்புக் குழு)
***
வேலூர் :

பு.ஜ.தொ.மு,
வேலூர்.
தருமபுரி :
மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் வாங்கு, அகில இந்திய விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து, செப்-27 அகில இந்திய விவசாயிகள் பந்தை ஆதரித்து தருமபுரியில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பின் கீழ் இரயில் மறியல் போராட்டம் நடைப்பெற்றது.
இரயில் மறியலுக்கு முன்னர், இரயில் நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு AIKSCC ஒருங்கிணைப்பாளர் தோழர் அர்ஜூனன் தலைமை தாங்கினார். தோழர் முத்துக்குமார் – மக்கள் அதிகாரம், மண்டல ஒருங்கிணைப்பாளர், தோழர் கோவிந்தராஜ் – CPI (ML) விடுதலை, தோழர் கிரைசாமேரி – மாதர் சங்கம், தோழர் ரங்கநாயகி – தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தோழர் பெரியண்ணன் – மக்கள் ஜனநாயக இளைஞர் முன்னணி, தோழர் சத்தியநாதன் – புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி ஆகியோர் கலந்துகொண்டு உறையாற்றினர்.
அதனைத் தொடர்ந்து நடந்த இரயில் மறியல் போராட்டத்தில், 40 பேர் கைது செய்யப்பட்டு, இரயில்வே மண்டபத்தில் வைத்துள்ளனர்.
தகவல் :
மக்கள் அதிகாரம்
தருமபுரி மண்டலம்
9790138614.
***
பென்னாகரம் :
27.9.2021 தேதி அன்று மோடி அரசின் மூன்று வேளாண் சட்டதிருத்தங்களை வாபஸ் வாங்கு, அனைத்து பொதுத் துறைகளையும் தனியாருக்கு தாரைவார்க்கும் மோடி அரசைக் கண்டித்து அகில இந்திய விவசாயிகள் சங்கம் அறைகூவல் விடுத்த பந்த்-ஐ ஆதரித்து பெண்ணாகரம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு அனைத்து கட்சி தோழர்களும் அணிதிரண்டு முழக்கமிட்டவாறு ஊர்வலமாகச் சென்றனர்.
பின்னர், புதிய பேருந்து நிலையத்தில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு CPM மாவட்ட செயற்குழு உறுப்பினர் V.மாதன் தலைமை தாங்கினார். மக்கள் அதிகாரம், பெண்ணாகரம் பகுதி ஒருங்கிணைப்புக் குழுவின் தோழர் அருண் கண்டன உரையாற்றினார். திமுக ஒன்றிய செயலாளர். காளியப்பன் கண்டன உரையாற்றினர்.
பொதுமக்கள் திரளாக போராட்டத்தை நின்று கவனித்தனர். பிறகு 65 தோழர்களை போலீசு கைது செய்து பென்னாகரம் கார்ல் மார்க்ஸ் மண்டபத்தில் அவர்களை அடைத்து வைத்துள்ளனர்.
தகவல்:
மக்கள் அதிகாரம், பென்னாகரம்.
தருமபுரி மண்டலம்.
97901 38614
***
நல்லம்பள்ளி, தருமபுரி :
இன்று 27.9. 2021 தேதி மோடி அரசின் மூன்று வேளாண் சட்ட திருத்தங்களை வாபஸ் வாங்கு, நல்லம்பள்ளியில் விவசாய சங்கம் சார்பாக நடைப்பெற்ற மறியல் போராட்டத்தில் மக்கள் அதிகாரம் சார்பாக தோழர் செல்வராஜ் மற்றும் இதர மக்கள் அதிகாரம் தோழர்கள் கலந்து கொண்டனர்.
தகவல் :
மக்கள் அதிகாரம்
நல்லம்பள்ளி
தருமபுரி மண்டலம்.
***
சேலம் :
இன்று 27.9. 2021 தேதி மோடி அரசின் 3 வேளாண் சட்ட திருத்தங்களை வாபஸ் வாங்கு, சேலத்தில் விவசாய சங்கள் சார்பாக நடைப்பெற்ற மறியல் போராட்டத்தில் மக்கள் அதிகாரம் சார்பாக தோழர் கந்தம்மாள் மற்றும் பிற மக்கள் அதிகாரம் தோழர்கள் கலந்து கொண்டனர்.
தகவல் :
மக்கள் அதிகாரம்,
தருமபுரி மண்டலம்.
***
திருநெல்வேலி :
மோடி அரசின் வேளாண் திருத்த மசோதாவை தகர்த்தெறிவோம்
நாடு முழுவதும் விவசாயிகள் நடத்தும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் மக்கள் அதிகாரம் சார்பாக நெல்லை மாவட்டம் வண்ணார்பேட்டையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலக முற்றுகைப் போராட்டத்தில் தோழர்கள் கலந்து கொண்டனர்.
தகவல் :
மக்கள் அதிகாரம்
நெல்லை மண்டலம்
9385353605
***
திருமங்கலம் :
டெல்லியில் 10 மாதங்களாக போராடும் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து,
♦ 3 வேளாண் சட்டங்களை, மின்சார ஒழுங்குமுறை மசோதாவை திரும்பப் பெறு !
♦ நாட்டின் பொதுச் சொத்துக்களை விற்காதே! பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை திரும்பப் பெறு !
♦ 44 தொழிலாளர் சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றியதை ரத்து செய் !
ஆகிய முழக்கங்களை முன்வைத்து, அகில இந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு தலைமையில் மதுரை திருமங்கலத்தில் இரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதில் மக்கள் அதிகாரம், மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மற்றும் பல்வேறு இடதுசாரி அமைப்புகள், ஜனநாயக சக்திகள் கலந்து கொண்டனர். இரயிலை மறிக்க சென்றபோது காவல்துறை தடுப்பணை வைத்து தடுத்து நிறுத்தினர். ஆனால், போராட்டக் குழு அதையும் மீறி இரயிலை மறிக்க முன்னேறியதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு இறுதியில் போராட்டக் குழு அனைவரையும் போலீசு கைது செய்தது.
தகவல் :
மக்கள் அதிகாரம்,
மதுரை மண்டலம்.
***
உசிலம்பட்டி :
மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து இன்று நடைபெற்ற (27.9.2021) பஸ் மறியல் போராட்டத்தில் உசிலை, செல்லம் பட்டியில் மக்கள் அதிகாரம் தோழர்கள் குருசாமி தலைமையில் கலந்து கொண்டு கைதானார்கள்.
தகவல் :
மக்கள் அதிகாரம்,
மதுரை மண்டலம்.
***
போடி :
மக்கள் அதிகாரம் மதுரை மண்டலம் சார்பாக போடி பகுதியில் தோழர்.கணேசன் தலைமையில் மூன்று வேளாண் சட்டங்களையும், மின்சார சட்டத்தையும் ரத்து செய்யக்கோரி விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
தகவல்:
மக்கள் அதிகாரம்
போடி.
***
புதுச்சேரி :
மூன்று வேளாண் சட்டத்துக்கு எதிராக நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக புதுச்சேரியில் நடைபெற்ற மறியல் போரட்டத்தில் மக்கள் அதிகாரம் தோழர்கள் கலந்து கொண்டனர்.
தகவல் :
மக்கள் அதிகாரம்,
புதுவை.
***
கடலூர் :
கடலூரில் அகில இந்திய விவசாயிகள் போராட்டம் ஒருங்கிணைப்புக் குழு நடத்திய நாடு தழுவிய கடையடைப்பு, சாலை மறியலில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக தோழர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் முழக்கமிட்டு கலந்து கொண்டு கைதாகினர்.
தகவல் :
மக்கள் அதிகாரம்,
கடலூர் மண்டலம்.
***
சீர்காழி :
ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பாக 3 தேசவிரோத வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று 27.09.2021, 11.00 மணி அளவில் நடக்கும் கடையடைப்பு மற்றும் சாலை மறியல் போராட்டத்தை ஆதரித்து இன்று சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் போராடும் விவசாய சங்கங்கள், இடதுசாரி, முற்போக்கு, ஜனநாயக அமைப்புகளின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
தகவல் :
மக்கள் அதிகாரம்,
கடலூர் மண்டலம்.
***
விருதாச்சலம் :
கடலூர் மண்டலம் அகில இந்திய விவசாயிகள் போராட்டம் ஒருங்கிணைப்புக் குழு நடத்திய நாடு தழுவிய கடையடைப்பு, சாலை மறியலில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக தோழர் முருகானந்தம் தலைமையில் விருதாச்சலம் பாலக்கரையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் முழக்கமிட்டு கலந்து கொண்டு கைதாகினர்.
தகவல் :
மக்கள் அதிகாரம்,
கடலூர் மண்டலம்.
***
திருவாரூர் :
கார்ப்பரேட் நலன் காக்கும் மோடி அரசின் வேளாண் விரோத சட்டங்களை எதிர்த்து இன்று திருவாரூரில் நடைபெற்ற இரயில் மறியல் போராட்டம்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருவாரூர்.
***
தூத்துக்குடி :
மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று நாடுதழுவி போராட்டத்தின் ஒரு பகுதியாக, தூத்துக்குடி BSNL அலுவலகத்தில் முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் மக்கள் அதிகாரம் தோழர்கள் கலந்து கொண்டனர்.
தகவல் :
மக்கள் அதிகாரம்,
தூத்துக்குடி.
சேலம் வி.சி.க கொடிக்கு தடை : கொடி மட்டும்தான் பிரச்சினையா?
சேலம் மாவட்டம், மோரூர் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு அருகில் பல கட்சிக் கொடிகளும் இருக்க, விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி ஏற்ற முயன்ற தலித் மக்கள் மீதும் வி.சி.க நிர்வாகிகள் மீதும் ஆதிக்க சாதிவெறியர்களுடன் கரம் கோர்த்துக்கொண்டு போலீசு கடும் தாக்குதலை நடத்தியுள்ளது. அதில், பலர் படுகாயமுற்றுள்ளனர்.
தாழ்த்தப்பட்ட மக்கள் தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க, ஆர்.எஸ்.எஸ் கொடிக் கம்பம் நடுவதற்காக வந்திருந்தால் ஆதிக்க சாதி வெறியர்கள் தடுக்கப்போவதில்லை. மாறாக, அவர்கள் தங்களது அரசியல் அதிகாரத்திற்காக ஒரு அமைப்பை தெரிவு செய்து – அதன் பின்னால் அணி திரள்வதுதான் ஆதிக்க சாதியினருக்கு பிரச்சனை.
அந்த அமைப்பு ஆதிக்க சாதியினரின் கொடுமைகளுக்கு எதிராகப் போராடும் என்று தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமல்லாமல், ஆதிக்க சாதி வெறியர்களும் நம்புவதால்தான் அந்த அமைப்பில் சேரக்கூடாதென்றும் கொடி ஏற்றக்கூடாதென்றும் பிரச்சனை உருவாக்கப்படுகிறது.
படிக்க :
♦ ‘சமூகநீதி’ ஆட்சியில் தாழ்த்தப்பட்ட மக்கள் கொடியேற்றத் தடை !
♦ ‘சமூக நீதி ஆட்சி’யிலும் ”சாதி மதம் அற்றவர்” சான்றிதழுக்கு இழுத்தடிப்பு !
இது வி.சி.க-வுக்கு மட்டும் வந்த பிரச்சனை அல்ல; புரட்சிகர அமைப்புகள் பல ஆண்டுகள், பல வழக்குகள், பல போராட்டங்களைத் தாண்டியே கொடியை ஏற்றவும் அமைப்புக்களை உருவாக்கவும் முடிகின்றது. தாழ்த்தப்பட்ட மக்கள் ஆதிக்க சாதி அமைப்பிலோ ஆளும் வர்க்க அமைப்பிலோ இருப்பதில் எவ்வித பிரச்சனையும் ஏற்படப்போவதில்லை. சாதி ஆதிக்கத்துக்கு எதிரான அமைப்பில் செயல்படுவதுதான் பிரச்சனையின் மையப்புள்ளி.
சில ஆண்டுகளுக்கு முன்னர், சேலம் மாவட்டம், மேச்சேரி அருகில் கொங்கு வேளாளக் கவுண்டர் சாதியைச் சேர்ந்த ஒருவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்தார். அன்றிரவே ஆதிக்க சாதியினரால் அவரின் வீடும் வாகனங்களும் தாக்கப்பட்டன.
கிராம மக்களுக்கு பிடிக்காத ஒன்றை மற்றவர்கள் செய்ய முற்படும்போதுதானே இப்பிரச்சனை வெடிக்கிறது என்ற ஒரு வாதம் முன்வைக்கப்படுகின்றது. யார் அந்த கிராம மக்கள் என்பதுதான் பிரச்சனையின் அடிப்படையான கேள்வி. தாழ்த்தப்பட்ட மக்கள் கோயிலுக்குள் நுழையக் கூடாதென்றும், தண்ணீர் அருந்தக் கூடாதென்றும் கூறி தீண்டாமையை கடைபிடிக்கும் ஆதிக்கச் சாதியினரைத் தான் கிராம மக்கள் என்று இவர்கள் குறிப்பிடுகின்றனர். மனிதகுல விரோத தீண்டாமையை கடைபிடிப்பவர்களுக்கு தீண்டாமைக்கு எதிரான அரசியல் ஆதிக்க அடையாளம் நிறுவப்படுவது ஒவ்வாது என்றால், நாம் அதைத்தான் கண்டிப்பாகச் செய்ய வேண்டும்.
ஏதோ, இப்பிரச்சனை வி.சி.க கொடி ஏற்றுவது தொடர்பான பிரச்சனையாக பலரும் சுருக்கிப் பார்க்கின்றனர். தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் போதெல்லாம் இப்படிப்பட்ட தாக்குதல்களை எதிர்கொண்டே வந்திருக்கின்றனர். கோயில் நுழைவுப் போராட்டங்களின் போதும் தண்ணீர் உரிமைப் போராட்டங்களின் போதும் தெருவில் நடப்பதற்கான உரிமைப் போராட்டங்களின் போதும் ரத்தம் சிந்திக் கொண்டே இருக்கின்றனர். அதன் தொடர்ச்சிதான் இது.
தி.மு.க-வைச் சேர்ந்த முருகேசன் மேலவளவில் ஆதிக்க சாதிகளின் கடும் எதிர்ப்பை மீறி ஊராட்சி மன்றத் தலைவரானார். அதனால், அவர்களால் வெட்டிக்கொல்லப்பட்டார். அங்கே அவருக்கு தி.மு.க துணை நிற்கவில்லை. அரியலூரில் கடந்த தேர்தலின்போது தாழ்த்தப்பட்ட மக்களில் வீடுகள் சூறையாடப்பட்டன. அரக்கோணத்தில் வி.சி.க-விற்கு ஓட்டுக்கேட்ட இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
சமூக நீதிக்கான கட்சியாக கூறிக் கொள்ளும் திமுக-வின் போலீசும் ஆதிக்கச் சாதியினருக்கு ஆதரவாகத்தான் செயல்பட்டது. உழைக்கும் மக்களுக்கிடையே சாதிய அரசியல் பிளவுகள் தொடர்ந்து நீடிப்பதுதான் கார்ப்பரேட் சேவை ஓட்டுப் பொறுக்கி அரசியலுக்கு அவசியமாக இருக்கிறது. ஆகவே சாதிய பிளவுகளை நீடிக்கச் செய்வதையும், அதனை ஆழப்படுத்துவதையும் திமுக உள்ளிட்ட பெரும்பாலான ஓட்டுக் கட்சிகள் செய்து வருகின்றன.
சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் மேலானதாக கூறப்படும் இச்சூழலில் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடினால் அங்கே அரசு ஆதிக்க சாதியினரோடு இணைந்து தாழ்த்தப்பட்ட மக்களைத் தாக்குகிறது. இந்த அரசுக் கட்டமைப்பே பார்ப்பன – இந்து மதவெறி – ஆதிக்க சாதி வெறிக் கூடாரமாக இருப்பதைத்தான் கொடியன்குளமும், பரமக்குடியும் என பல உதாரணங்கள் மூலம் நமக்கு தெளிவாகக் காட்டுகிறது.
தீண்டாமைக்கு எதிராகப் போராட வேண்டியது தலித் மக்கள் மட்டுமல்ல, பிற சாதியில் உள்ள உழைக்கும் மக்களும்தான். தீண்டாமை குற்றம் புரிந்த ஆதிக்க சாதிவெறியர்களுக்கு அரசின் சலுகைகள் அனைத்தும் மறுக்கப்பட வேண்டும். அவர்கள் சமூகப் புறக்கணிப்பு செய்யப்பட வேண்டும்.
அன்றாடம் உழைத்து உண்ணும் ஆதிக்கச்சாதியைச் சேர்ந்த நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் ஏழைகளை, வரிகள் மூலமும் விலைவாசி உயர்வு மூலமும் கார்ப்பரேட்டுகள் சுரண்டுவதற்கு ஏற்பாடு செய்துதரும் பாமக, அதிமுக, பாஜக உள்ளிட்ட பார்ப்பனிய அடிமைக் கட்சிகள், ஆதிக்கசாதி மக்களை திசை திருப்புவதற்கு தலித் மக்களையும், முசுலீம்களையும் எதிரிகளாகக் காட்டுகின்றன. திமுக உள்ளிட்ட பிற ‘சமூக நீதி’க் கட்சிகள் மறைமுகமாக அதனை அனுமதித்து குளிர் காய்கின்றன. அந்தப் பிளவை ஆழப்படுத்துகின்றன.
இதனை ஆதிக்கச்சாதி உழைக்கும் மக்களுக்கு மத்தியில் அம்பலப்படுத்தி ஆதிக்கச் சாதிவெறி கட்சிகளையும், அவற்றைக் கொண்டு குளிர்காயும் கட்சிகளையும் தனிமைப்படுத்துவதும், அம்மக்களை வர்க்கமாய் உணரச் செய்வதும் தான் சாதியை ஒழிப்பதற்கு நம் முன் உள்ள வழியும், முக்கியக் கடமையுமாகும்.

மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
99623 66321
காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம் || SOC, CPI(ML) செயல்தந்திரம்
பத்திரிகைச் செய்தி
காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம் !
அன்பார்ந்த உழைக்கும் மக்களே, தோழர்களே, ஜனநாயக சக்திகளே !
தமிழகத்தில் மார்க்சிய – லெனினியப் புரட்சிகர அரசியலை முன்னெடுத்துச் செல்வதில் மாநில அமைப்புக் கமிட்டி, இந்திய பொதுவுடமைக் கட்சி (மா-லெ), தமிழ்நாடு, முன்னோடியாகத் திகழ்ந்து வருவதை நீங்கள் அறிவீர்கள்.
எமது அமைப்பானது, மார்க்சிய – லெனினிய சித்தாந்தத்தின் அடிப்படையிலான நக்சல்பாரி பாரம்பரியத்தை உயர்த்திப் பிடிக்கும் புரட்சிகர இயக்கமாகும். இந்தியாவில் சோசலிசத்தை நோக்கமாகக் கொண்டு ஏகாதிபத்தியங்களையும் காலனியாதிக்கத்தையும் நிலப்பிரபுத்துவத்தையும் வீழ்த்தி உழைக்கும் மக்களின் அதிகாரத்தை நிலைநாட்டும் புதிய ஜனநாயகப் புரட்சியைச் சாதிப்பதை நோக்கமாகக் கொண்டு மக்களை அணிதிரட்டிப் போராடி வரும் இயக்கமாகும்.
இப்புரட்சியைச் சாதிக்க குறிப்பிட்ட தருணத்தில் நிலவும் அரசியல் சூழலையும், வர்க்கப் போராட்ட நிலைமையையும் கருத்தில் கொண்டு செயல்தந்திர உத்திகளை வகுத்துச் செயல்பட்டு வருகிறோம். கடந்த 2015-ல் கட்டமைப்பு நெருக்கடி என்ற அரசியல் செயல்தந்திரத்தின் அடிப்படையில் செயல்பட்டு தமிழக மக்களிடம் குறிப்பிடும்படியான அரசியல் செல்வாக்கையும், மதிப்பையும் பெற்றிருக்கிறோம்.
இந்துமதவெறி பார்ப்பன பாசிசமும், கார்ப்பரேட் முதலாளிகளின் பாசிசமும் கலந்த வீரிய ஒட்டுரக பாசிசம் முன்னேறித் தாக்கி வரும் தற்போதைய சூழலில், அதனை வீழ்த்துவதற்கான நோக்கத்துடன் களப் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கான புதிய செயல்தந்திரத் திட்டத்தை எமது அமைப்பு முன்வைத்து, அதனை 2021 செப்டம்பர் 11, 12 தேதிகளில் சிறப்புக் கூட்டம் நடத்தி வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே நிலவிய கொரோனா பொதுமுடக்கம் காரணமாகவும் கலைப்புவாத, பிளவுவாத, சீர்குலைவு சக்திகளின் சதிவேலைகளால் எமது அமைப்பு பாதிப்புக்கு உள்ளாகிய சூழலில், அச்சீர்குலைவு சக்திகளை முறியடித்து அமைப்பை மீண்டும் நிலைநாட்டும் பணிகளின் காரணமாகவும் இந்தச் செயல்தந்திர வரைவறிக்கையை நிறைவேற்றுவதில் தவிர்க்கவியலாமல் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. மற்றும் அதன் பல்வேறு இந்துமதவெறி பரிவாரங்கள் பாசிச காட்டாட்சியைக் கட்டவிழ்த்துவிடும் நோக்கத்தோடு கடந்த பல ஆண்டுகளாகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. ஏகாதிபத்திய நிதி மூலதன ஆதிக்க கார்ப்பரேட் பாசிச கும்பல்கள் இந்தியாவின் இந்துமதவெறி பாசிச அரசியல் சக்திகளுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன. காவிகளுடன் கார்ப்பரேட் கும்பல்கள் இணைந்துள்ள வீரிய ஒட்டுரகமாக காவி – கார்ப்பரேட் பாசிசம் முன் எப்போதும் இல்லாத அளவில் வளர்ந்து வருகிறது. இது, ஐரோப்பிய நாடுகளில் உள்ள பாசிசம் போல் அல்லாமல், இந்திய நிலைமைகளுக்கே உரிய சாதி, மதம், இனம், மொழி போன்ற தனி சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது.
பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள், பண்பாடு, கலாச்சாரம், மதம் ஆகியவற்றை ஒழித்து ஒற்றை மொழி, ஒற்றைக் கலாச்சாரம், ஒற்றை மதம் ஆகியவற்றை நிலைநாட்டி இந்தியாவை இந்துத்துவ நாடாக மாற்றும் திட்டமிட்ட வேலையில் இறங்கியுள்ளது, காவி கார்ப்பரேட் பாசிசம். நிலவுகின்ற முதலாளித்துவ நாடாளுமன்ற சர்வாதிகார ஆட்சிமுறையைக் கொண்டே அதன் சட்டங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றின் மூலமே, படிப்படியாக ஒன்றன்பின் ஒன்றாக பாசிச நடவடிக்கைகளைச் செயல்படுத்தி வருகின்றது.
ஏகாதிபத்திய கார்ப்பரேட்டுகள் மற்றும் அவர்களின் அடிவருடிகளான இந்திய தரகு அதிகார வர்க்க கார்ப்பரேட்டுகள், நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் நலன்களுக்குச் சேவை செய்வதே காவி – கார்ப்பரேட் பாசிசம் ஆகும். கார்ப்பரேட்களின் பாசிசமும், ஆரிய – பார்ப்பன சாம்ராஜ்ஜிய கனவுடைய இந்து வெறி பாசிசமும் ஒன்றிணைந்திருக்கும் பாசிசமே காவி – கார்ப்பரேட் பாசிசம் என இச்சிறப்புக் கூட்டம் பிரகடனப்படுத்துகிறது.
பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணியினை அமைப்பதற்கான அடிகற்களாக கீழிருந்து கட்டியமைக்கப்படும் பாட்டாளி வர்க்கத்தின் ஐக்கிய முன்னணியும், பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியும் எவ்வாறு அமைய வேண்டும் எனும் வழிமுறைகளை கொண்ட திட்டமிட்ட பாசிச எதிர்ப்பு வேலைத் திட்டத்தினை இக்கூட்டம் முன்வைக்கிறது. இவற்றின் வளர்ச்சிப் போக்கிலேயே ஆளும் வர்க்கத்தின் பாசிச எதிர்ப்பு பிரிவினருடனான ஐக்கிய முன்னணியாக அவை உருவெடுக்கும் எனும் தொலைநோக்கு பார்வை கொண்ட திட்டம், அவற்றின் உள்ளடக்கம், உருவங்கள் குறித்த கண்ணோட்டத்தினை வழங்குகிறது.
நாட்டையும் மக்களையும் கவ்வியுள்ள மிகப் பெரிய அபாயத்தை உணர்ந்து, உடனடியாக காவி கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிக்க அனைத்து ஜனநாயக சக்திளும் ஓரணியில் திரள வேண்டும் என இச்சிறப்புக் கூட்டம் அறைகூவல் விடுத்து, காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்துவதற்கான உடனடிக் கடமைகளையும் வரையறுத்துக் கொடுத்துள்ளது.
புரட்சிகர வாழ்த்துகள்!
★ ★ ★
‘சமூகநீதி’ ஆட்சியில் தாழ்த்தப்பட்ட மக்கள் கொடியேற்றத் தடை !
‘சமூகநீதி’ ஆட்சியில் தாழ்த்தப்பட்ட மக்கள் கொடியேற்றத் தடை ! தாக்குதல் நடத்திய போலீசை கைது செய்து சிறையில் அடை !
மக்கள் அதிகாரம் கண்டனம்
23.09.2021
சேலம் மாவட்டம், மோருர் பகுதியில் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு பல கட்சிகளின் கொடிகளும் இருக்கின்ற நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடியை அமைப்பதற்காக முயன்ற வி.சி.கவினர் மற்றும் கிராம மக்கள் மீது போலீசு தடியடி நடத்தி முன்னணியாளர்களைக் கைது செய்துள்ளதை மக்கள் அதிகாரம் கண்டிக்கிறது.
வி.சி.க கொடி கம்பம் அமைக்கக்கூடாது என்று உள்ளூரில் உள்ள ஆதிக்க சாதியினர் எதிர்க்கிறார்கள் என்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து கொடி ஏற்றுவதற்கு பாதுகாப்பளித்து இருக்கவேண்டிய போலீசு, கொடியேற்ற வந்தவர்கள் மீது கடுமையான தாக்குதலை நடத்தியிருக்கிறது. இதில் பலரும் படுகாயம் அடைந்துள்ளனர்.
சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாக ஆகிவிட்டது என்றும் சமூக நீதி மண் என்று பெருமை பீற்றிக் கொண்டாலும் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களுக்கான ஒரு கொடியை கூட தெரிவு செய்ய முடியாத ஒரு சூழல் உள்ளது என்பது மிகவும் வெட்கக் கேடானதாகும்.
ஆதிக்கசாதி வெறியர்களுக்கு துணைபோன போலீஸ் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன் அவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
தோழமையுடன்
தோழர் மருது,
செய்தித்தொடர்பாளர் – மக்கள் அதிகாரம் ,
தமிழ்நாடு – புதுவை
99623 66321
தொடர்ந்து வஞ்சிக்கப்படும் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்கள் !
தமிழகமே சமூக நீதிப் போராளி பெரியாருக்கு விழாவைக் கொண்டாடிய மறுநாள் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில செய்தித்தாளில் சமூக நீதியை கேள்விக்குள்ளாக்கும் இரண்டு செய்திகள் பல்லிளிக்கின்றன.
18-09-2021 தேதி வெளியான இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் ஒரு செய்தி அச்செய்தியின் படி, நீலகிரியில் உள்ள ஆதிவாசிகள் ஆய்வு மையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் நன்கு ஆய்வு செய்து, சான்றுகள் அடிப்படையில் காட்டு நாயக்கன் சாதியைச் சேர்ந்த 21 மாணவர்களுக்கு S.T சாதிச் சான்றிதழ் தரலாம் என பரிந்துரைத்துள்ளனர். ஆகஸ்ட் மாதமே அவர்கள் பரிந்துரையைத் தந்துவிட்டார்கள் என்று அவர்களின் பரிந்துரைக் கடிதம் மூலம் தெரிய வருகிறது. காசு, பணம் தர இயலாததால் இன்றைய தேதி வரை அவர்களுக்கான சாதிச் சான்றிதழ் வழங்கப்படவில்லை.
படிக்க :
♦ பாலியல் குற்றவாளி பேரா.சௌந்திரராஜனை காப்பாற்றும் உ.அ.குழு அறிக்கை || APSC Unom கண்டனம்
♦ SRM பல்கலை : உதவித்தொகை திருட்டும், உழைப்புச் சுரண்டலும் !
விழுப்புரம் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர் ஏ.மகேந்திரன், 2019-ம் ஆண்டிலிருந்தே சாதிச் சான்றிதழ் பெற கடும் முயற்சி எடுத்தும் இதுவரை சான்றிதழ் பெற முடியாமல் தவித்து வருகிறார். கல்லூரியோ சாதிச் சான்றிதழ் இல்லாமல் பட்டம் வழங்க முடியாது என மிரட்டிக் கொண்டுள்ளது. S.T பிரிவு மாணவர்கள் படிப்பதே குதிரைக் கொம்பாக உள்ள நிலையில், அப்படிப் படிப்பவர்களை ஊக்குவிக்காமல் சாதிச் சான்றிதழ் இல்லையென்றால் பட்டம் தரமாட்டோம் என கல்லூரிகள் கூறமுடியுமா ?
இதே கல்லூரியில் இந்த ஆண்டு பி.காம் படிக்க விண்ணப்பித்த 17 வயது ஆர்.சீனுவாசனின் கல்லூரி சேர்க்கை, சாதிச் சான்றிதழ் இல்லாததால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சி.நந்தினி, கே.எழிலரசன் என்ற 17 வயது +2 முடித்த மாணவர்களுக்கு அந்தக் கொடுப்பினை கூட இல்லை. அரசுக் கல்லூரிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போதே சாதிச் சான்றிதழை இணைக்காததால் இன்னும் விண்ணப்பத்தையே பதிவேற்ற முடியாமல் தவிக்கிறார்கள். அவர்களும் என்னென்ன முடியுமோ அத்தனையையும் செய்து பார்த்துவிட்டு பரிதவித்து நிற்கிறார்கள்.
இதேபோல 10,12-ம் வகுப்பு மாணவர்கள் 20 பேர் சாதிச் சான்றிதழுக்கு விண்ணப்பித்து காத்துக் கிடக்கிறார்கள். சான்றிதழ் தரவில்லை என்றால் இந்த ஆண்டு பொதுத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டும் கிடைக்காது, பொதுத் தேர்வையும் எழுத அனுமதிக்க மாட்டார்கள் என்ற பரிதவிப்பில் செய்வதறியாமல் உள்ளனர். தங்களின் படிப்பை பாதுகாக்கக் கோரி மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பித்துள்ளனர்.
ஆனால் அவர்களுக்கு சான்றிதழ் தராமல் இழுத்தடித்திருக்கிறது அரசு நிர்வாகம். காட்டுநாயக்கன் சாதி என்பது மலைசாதி மக்களில் ஒரு பிரிவினரைக் குறிக்கிறது. அப்பிரிவு மக்கள் S.T பிரிவைச் சேர்ந்தது. இந்த S.T பிரிவு மாணவர்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்க அதிகார வர்க்க கும்பல் ஆயிரத்தெட்டு இழுத்தடிப்புகளைச் செய்து, கடைசியில் சாதிச் சான்றிதழே தர மாட்டார்கள்.
காட்டுக்குள் இல்லாமல் ஊருக்குள் வசிப்பதால் எதை நம்பி சான்றிதழ் தர முடியும்? என நியாயஸ்தன் போல பேசும் இந்த யோக்கிய சிகாமணிகள்தான் காசு வாங்கிக் கொண்டு ஆதிக்க சாதியினருக்கே S.T சான்றிதழும் தருபவர்கள். இவர்களின் இந்த யோக்கியதையின் காரணமாகத்தான், S.T சான்றிதழ் தருவதற்கு பல கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன.
அப்படிப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு ஆய்வு செய்து, சாதிச் சான்றிதழ் தரலாம் என அதிகாரிகள் அனுமதி கொடுத்தும் கூட இன்று வரை சான்றிதழ் வழங்காத காரணத்தால்தான் இந்த மாணவர்களுக்கு எதிர் காலமே இன்று கேள்விக்குறியாகி நிற்கிறது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் டி.மோகன், எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் பேசியபோது பள்ளி மாணவர்களின் படிப்புக்கு எந்தத் தடையும் போடக்கூடாது என சம்பந்தப்பட்ட கல்வித் துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறியவர், கல்லூரி மாணவர்களின் கல்லூரி சேர்க்கையை தடையின்றி செய்ய உறுதியளித்துள்ளதோடு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே சாதிச் சான்றிதழை வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளதாகக் கூறினார்.
ஆனால், எதற்காக இது வரை சான்றிதழ் வழங்கவில்லை என தனக்குக் கீழ் பணிபுரியும் இடைநிலை அதிகாரியைக் கேள்வி கூடக் கேட்கவில்லை ! விசயம் செய்தித் தாள்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வந்ததால்தான் இந்த நடவடிக்கை கூட குறைந்தபட்சமாக எடுக்கப்பட்டிருக்கிறது. இல்லையெனில் இவையெல்லாம் அதிகாரவர்க்கத்தின் கடைக்கண் பார்வைக்குக் கூட எட்டியிருக்காது. இப்படிப்பட்ட கேடுகெட்ட கழிசடைக் கும்பலை அரசு இயந்திரத்தில் வைத்துக் கொண்டு சமூக நீதியை நட்டமாக தூக்கி நிறுத்தப் போவதாக சொல்கிறார்கள் ஆட்சியாளர்கள். அது சாத்தியமா ? இல்லை கண் துடைப்பா ?
0o0o0
இதே எக்ஸ்பிரஸ் நாளிதழில் இன்னொரு செய்தி. ஐ.ஐ.டி.-கள் எனப்படும் உயர்கல்வி தொழில்நுட்ப ஆய்வு நிறுவனங்களில் இட ஒதுக்கீடு அடிப்படையில் பேராசிரியர்கள் நியமிக்கப்படவில்லை எனவும், உடனடியாக சிறப்பு நடவடிக்கை எடுத்து பேராசிரியர்களை நியமிக்க வேண்டும் எனவும் ஒன்றிய அரசு வலியுறுத்தியுள்ளதாம் ! சரி, அப்படி இப்படி என ஏதோ ஒருசில நியமனங்கள் நடக்காமல் போயுள்ளதோ எனப் பார்த்தால், மலைக்கும் மடுவுக்கும் போல வித்தியாசம் நீடித்திருக்கிறது.
23 ஐ.ஐ.டி.-களில் மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை 6,043 பேர். இதில், பிற்படுத்தபட்டோர் 27% எண்ணிக்கையிலும், S.C பிரிவினர் 15% (906 பேர்) எண்ணிக்கையிலும், S.T பிரிவினர் 7.5% (453 பேர்) எண்ணிக்கையிலும் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மொத்தத்தில் S.C பிரிவில் 149 பேரும், S.T பிரிவில் வெறும் 21 பேர் மட்டுமே ஆசிரியர் பணியில் உள்ளனர். சில ஐ.ஐ.டி.-களில் S.T பிரிவில் ஒரு ஆசிரியர் கூட இல்லை. பிற்படுத்தப்பட்டோர் பற்றிய விவரங்களே இல்லை. S.C, S.T பிரிவு மொத்தம் 22.5% எண்ணிக்கை இருக்க வேண்டிய இடத்தில் வெறும் 2.8% எண்ணிக்கையில் மட்டுமே ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தக் கொடுமையை என்னென்பது?
சட்டம் மயிருக்குச் சமம் என பார்ப்பன, ஆதிக்க சாதி வெறிக் கும்பல் செய்துள்ள இந்த கொடூரத்தை யார் கேட்பது? சென்னையில் உள்ள ஐ.ஐ.டி.-யில் நடக்கும் கொடூரங்களை நாம் காலங்காலமாக பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம். S.C, S.T மாணவர்களை தற்கொலைகளுக்குத் தள்ளுவதும், பார்ப்பனக் கொடுங்கோன்மைக்கு ஈடுகொடுக்க முடியாமல் பல எஸ்.சி. எஸ்.டி பேராசிரியர்களே தங்களின் பதவியை ராஜினாமா செய்துவிட்டுச் செல்வதும் நடந்து கொண்டுதானே உள்ளது!
தகுதியானவர்கள் வரவில்லை எனக் கூறி பார்ப்பனக் கும்பலின் கோட்டையாக ஐ.ஐ.டி-க்கள் இன்றும் திகழ்வதற்கான காரணம் இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் முதல் செய்தியில் இருக்கிறது. பல்வேறு மோசமான வாழ்நிலையில் இருந்து மேலெழுந்து படிக்க வரும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களை படிக்கக் கூட விடாமல் தடுப்பதற்கு ஏற்ற பார்ப்பனிய வெறி ஊறிய அதிகார வர்க்கம் நிறைந்திருக்கும் இந்த அரசுக் கட்டமைப்பு தான் அடிப்படைக் காரணமாக இருக்கிறது.
கல்லூரிக் கல்விக்கே முட்டுக்கட்டை போடும் இந்த பார்ப்பனியக் கட்டமைப்பு, S.C, S.T மாணவர்களை உயர் ஆய்வு தொழிற்கல்வி பயில அனுமதித்துவிடுமா என்ன ? அல்லது அங்குதான் பணியாற்ற அனுமதித்துவிடுமா ?
படிக்க :
♦ சத்தீஸ்கர் : துணை இராணுவப் படையின் அத்துமீறலை எதிர்த்துப் போராடும் பழங்குடியின மக்கள் !
♦ அசாம் : 70 ஆண்டுகளாக வீடு, சாலை, மின்சாரம் இல்லாமல் வாழும் பழங்குடிகள் !
ஒரு புறம் அவர்களைப் படிக்க விடாமல் விரட்டியடிக்கும் வேலையைச் செய்து கொண்டே, தப்பித்தவறி அப்படி படித்து முன்னேறியவர்களை தகுதி, திறமை என மோசடி செய்து ஒழித்துக் கட்டும் கைங்கரியத்தை செவ்வனே செய்து கொண்டுள்ளது ஆதிக்க சாதி வெறி பார்ப்பனியக் கும்பல்.
ஒன்றிய அரசு பெயரளவிற்குத்தான் வலியுறுத்துகிறது என்பதைப் புரிந்து கொண்டுதான் வெறும் நான்கு ஐ.ஐ.டி-கள் தவிர வேறு எந்த ஐ.ஐ.டி-யும் இந்த ஆசிரியர் நியமனத்திற்கு விளம்பரம் செய்யவில்லை. இந்த பார்ப்பன, ஆதிக்க சாதி வெறிக் கொழுப்பும், நெஞ்சழுத்தமும் தான் சமூக நீதியைப் பற்றிப் பேசினாலே இந்த பார்ப்பன பாசிசக் கும்பலை வயிறெரியச் செய்கிறது !!

நாகராசு
செய்தி ஆதாரம் : இந்தியன் எக்ஸ்பிரஸ் 18.9.21 ஆங்கில நாளிதழ்
மாப்பிளா கிளர்ச்சி : படுகொலைகளை அரங்கேற்றிய பிரிட்டிஷ் அரசு !
பாகம் 1 : மாப்பிளா கிளர்ச்சியைக் கண்டு காவிக்கும்பல் அஞ்சுவது ஏன் ? || மு இக்பால் அகமது தொடர்
பாகம் 2 : மாப்பிளா கிளர்ச்சி : 1921 அக்டோபரில் நிகழ்த்தப்பட்ட இராணுவ வெறியாட்டம்
1921 கிளர்ச்சி, திருரங்காடியில்தான் பிறந்தது. ஆகஸ்ட் 1921-ல் மலப்புரம் மாவட்டம் திரூர்தான் கிளர்ச்சியின் கனல் பிரதேசமாக விளங்கியது. பிரிட்டிஷ் மலபாரின் நான்கு தாலுகாக்களில் இராணுவச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது – கோழிக்கோடு, எரநாடு, வள்ளுவநாடு, பொன்னாணி; பின்னர் குரும்பரநாடு, வயநாடு தாலுகாக்களிலும் பிறப்பிக்கப்பட்டது. கிளர்ச்சியை வழி நடத்திய அலி முசலியார் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் ஆகஸ்ட் இறுதியில் சரணடைந்தார்கள். எனினும் பிரிட்டிஷ் இராணுவம் தன் அடக்குமுறை, கைதுகளை தொடர்ந்து செய்தது.
பிரிட்டிஷ் இராணுவத்தின் ஒரு பிரிவான Dorset Regiment என்னும் படைப்பிரிவு, எரநாடு, வள்ளுவநாடு, மஞ்சேரி ஆகிய தாலுகாக்களில் முஸ்லிம் சமூக மக்களுக்கு எதிராக நடத்திய தொடர் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் காரணமாக முஸ்லிம் மக்கள் எதிர்வினை ஆற்றவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள். 1921 அக்டோபர் 25 அன்று, மலப்புரத்தில் மேல்முறி என்ற ஊரில் வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியே இழுத்துவரப்பட்ட பெண்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தோர், நோயாளிகள் என 246 பேர் வரிசையாக நிற்க வைக்கப்பட்டு டார்செட் ரெஜிமெண்ட் படையால் சுட்டுக் கொல்லப்பட்டனர். டிசம்பர் இறுதியில் சுமார் 27,000 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு இருந்தார்கள்.
படிக்க :
♦ ஜாலியன்வாலா பாக் நூற்றாண்டு : தொடருகிறது விடுதலைப் போராட்டம் !
♦ கெதார் இயக்கம் : விடுதலைப் போரின் வீரஞ்செறிந்த மரபு !
வரலாற்றறிஞர் எம் கங்காதரன், கிளர்ச்சி உச்சக்கட்டத்தில் இருந்த கடைசி ஆறு மாதங்களில் முஸ்லிம்கள், இந்துக்கள் இரண்டு தரப்பினருமே பெரும் நெருக்கடியில் இருந்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். குறைந்தபட்சம் 10000 மாப்பிளாக்கள் கொல்லப்பட்டிருக்கலாம், அதே அளவு மாப்பிளாக்கள் கைது செய்யப்பட்டு மலபாரில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள், அந்தமானின் கொடிய தனிமைச் சிறைக்கும் பல நூறு பேர் கடத்தப்பட்டனர்.
கங்காதரனின் கூற்றுப்படி, அன்று அங்கே போலீஸ் படைக்கு தலைமை ஏற்றிருந்த போலீஸ் சூப்பிரண்டு Richard Harvard Hitchcock க்கின் அதீத நடவடிக்கைகள்தான் கிளர்ச்சிக்கு காரணமாக இருந்தன. ஹிட்ச்காக்கின் பதிவுகளே இதற்கு ஆதாரம். மலபாரில் அப்போது கிலாபத் இயக்கம் செல்வாக்கு மிக்கதாக இருந்தது. குறிப்பாக முஸ்லிம்கள் அடர்த்தியாக இருந்த பகுதிகளில் கிலாபத் இயக்கம் தீவிரமாக இயங்கியது.
கிலாபத் செயற்பாடுகளை, அவற்றின் செயற்பாட்டு எல்லைகளையும் தாண்டி அதிகமான கற்பனைகளுடன் பார்த்த பிரிட்டிஷ் போலீஸ், எல்லை மீறிய அடக்குமுறைகளில் இறங்கி இயக்கத்தை நசுக்க முனைந்தது. இதனால் கோபமுற்ற மாப்பிளா முஸ்லிம்கள் வேறு வழியின்றி எதிர் நடவடிக்கைகளில் இறங்கினார்கள். கோழிக்கோட்டில் காங்கிரஸ் கூட்டம் நடந்தபோது, மிகப்பெரிய அளவில் முஸ்லிம்கள் கலந்துகொண்டார்கள். காந்தியும் மவுலானா சவுக்கத் அலியும் கலந்துகொண்ட மாநாடு அது. இக்கூட்டம் ஒரு ஆயுதம் தாங்கிய போராட்டத்துக்கு அறைகூவல் விடுப்பதாக அதீத கற்பனையில் இறங்கியது பிரிட்டிஷ் காலனிய அரசு.
0o0o0
சமீல் இல்லிகல் (Sameel Illikal) கேரள இதழியலாளர். வரலாற்று ஆய்வாளர், திரைப்பட விமர்சகர், திரைப்பட இயக்குநர். மத்யமம் என்ற வார இதழின் துணை ஆசிரியர். மாப்பிளா மக்களின் வரலாறு, பண்பாடு குறித்து ஆழ்ந்து ஆய்வு செய்பவர். Graves of 1921 Martyrs என்ற ஆய்வுத்திட்டத்தை செய்து வந்தார். நாடக நடிகர், வில்லடிச்சாம்பாட்டு என்ற கேரள கிராமியக்கலையில் தேர்ந்தவர்.
2018 அக்டோபர் மாத மத்யமம் இதழில் வெளியான கட்டுரை இது. சமீல் மலையாளத்தில் எழுதியதை O Najiya ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து Twocircles. Net இணைய இதழில் வெளியிட்டார். இரண்டு பாகங்களாக வெளியான கட்டுரையின் சில பகுதிகளை நான் தமிழில் இங்கு தருகின்றேன்.
இந்திய விடுதலைப் போர் வரலாற்றில் ஜாலியன் வாலாபாக் படுகொலை 19.4.1919 (379 பேர் மரணம்), சவ்ரி சவ்ராவில் 5.2.1922 அன்று , கொதிப்புற்ற விவசாயிகள் 23 போலீசாரை உயிருடன் கொளுத்திய நிகழ்வு ஆகியவை என்றென்றும் பேசப்படுவை.
அரசு பதிவேடுகளின் படி மாப்பிளா கிளர்ச்சி அல்லது மலபார் கிளர்ச்சியில் 2337 பேர் கொல்லப்பட்டார்கள், 1652 பேர் காயமுற்றனர், 45,404 பேர் சிறையில் அடைப்பு. 10,000 பேர் வரை மரணம், 50,000 பேர் சிறையிலடைப்பு, 20,000 பேர் நாடுகடத்தல், 10,000 பேரைக் காணவில்லை – இது பொதுமக்கள் கணக்கு.
மலபார் புரட்சியுடன் ஒப்பிடும்போது பிற நிகழ்ச்சிகள் அவற்றின் பரப்பளவிலும் வீச்சிலும் சிறியவை. மலபார் கிளர்ச்சியை தேசிய வரலாறு புறக்கணிக்கின்றது, மலபார் கிளர்ச்சியின் போக்கில் நிகழ்ந்தவற்றையும் வரலாறு கண்டுகொள்ளாமல் கடந்து செல்கின்றது. உதாரணமாக மலப்புரத்தில் மேல்முறி-அதிகாரித்தோடியில் நடத்தப்பட்ட கூட்டுப்படுகொலைகள். மலபாரில் நிகழ்த்தப்பட்ட பல்வேறு கூட்டுப்படுகொலை நிகழ்வுகளில் பூக்கோட்டூர் கலவரத்துக்கு அடுத்ததாக சொல்லப்படுவது மேல்முறி படுகொலைகள்.

பூககோட்டூர் படுகொலையில் 350-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டார்கள். 1921 அக்டோபர் 29 அன்று, பெண்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தோர், நோயாளிகள் உட்பட அனைவரும் வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து வரப்பட்டு வரிசையாக நிற்கவைத்து சுடப்பட்டார்கள். Dorset Regiment என்னும் பிரிட்டிஷ் துப்பாக்கி படையினர்தான் இப்படுகொலையை நிகழ்த்தினர்.
The Mappila Rebellion 1921, GRF Tottenham, Madras Govt Press, 1922: மலப்புரத்துக்கு வடமேற்கே 4 மைல் தொலைவில் பெரும்கும்பல் கூடியது. டோர்செட் ரெஜிமெண்ட், துப்பாக்கி படை, கவச வாகனங்கள் அக்கும்பலை எதிர்கொண்டன. மேல்முறிக்கு மேற்கே உள்ள காட்டிலும் வீடுகளிலும் இருந்த எதிரிகள் வெளியே வந்து சரணடைய மறுத்ததுடன் நமது படைகளுக்கு எதிராக தொடர்ந்தும் உறுதியுடனும் சண்டையிட்டனர். இறுதியில் 246 கிளர்ச்சியாளர்கள் இறந்தனர் என்று படைப்பிரிவின் தலைமை கமாண்டர் மெட்ராஸ் அரசுக்கு 25.10.1921 அன்று அனுப்பிய தந்தியில் குறிப்பிட்டார்.
ஒன்றரை கிலோமீட்டர் சுற்றளவுக்குள் இருந்த கோணோம்பாற, அதிகாரிகொடி, மேல்முறி முட்டிப்படி, வலியாட்டப்பட்டி ஆகிய கிராமங்களில் டோர்செட் ரெஜிமெண்ட் நடத்திய படுகொலை இது. மலப்புரம் நகரில் இருந்து 3 கிமீ தொலைவில் கோழிக்கோடு பாலக்காடு தேசிய நெடுஞ்சாலை யில் அமைந்துள்ள ஊர்கள் இவை.
டோர்செட் ரெஜிமெண்ட்டின் இரண்டாவது பட்டாளத்தில் A, D கம்பெனிகள், கோணோம்பாறயை நோக்கி பீரங்கி குண்டுகள் தாங்கிய கவச வாகனங்களில் வந்து சேர்ந்தனர். Lt.Hevic, Lt.Goff ஆகியோர் தலைமையில்தான் 246 மாப்பிளா மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.
நிகழ்வுக்கு 10 வருடங்கள் பின் பிறந்த நம்பன் குண்ணனின் (மேல்முறி வலியட்டப்படி) வாக்குமூலம் இது: பீரங்கிக்குண்டுகள் பெருத்த சத்தத்துடன் பொழிந்தன. அதன் பின் ராணுவம் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் புகுந்து அனைவரையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றியது. வெளியே வர மறுத்தவர்களை துப்பாக்கியின் கத்தி முனையாலும் பின் கட்டையாலும் குத்தினார்கள், அடித்தார்கள். மஞ்சா, பத்தாயம் போன்ற மரப்பெட்டிகளை உடைத்து பொருட்களை கொள்ளை அடித்தார்கள்.
குர் ஆன், சபீனாப்பாட்டு (முகமதுநபியை புகழ்ந்து அரபு மொழியில் எழுதப்பட்ட பாடல்கள்), அரபு மொழிப் பாடல்கள், படைப்பாட்டு (போர்ப் பரணிகள்) போன்றவற்றை முற்றத்தில் குவித்து தீயிட்டனர். ஓலைகள், புற்களால் வேயப்பட்ட வீடுகளுக்கு தீயிட்டனர். அதன் பின் ஆண்களை வரிசையாக நிறுத்தி ஒவ்வொருவராக சுட்டுக் கொன்றனர். கட்டுப்பட மறுத்தவர்கள், காப்பாற்ற முனைந்தவர்கள், அவர்கள் பெண்கள், குழந்தைகள் ஆயினும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
காலையில் தொடங்கிய படுகொலை நண்பகலில் படைத்தளபதி எழுப்பிய நீண்ட விசில் ஒலிக்கும் வரை நீண்டது. அவ்வாறு விசில் ஒலித்தபோது துப்பாக்கியின் முனை சாலத்தில் கல்லடித்தோடி மொய்தீன் குட்டி ஹாஜியை குறிவைத்து இருந்தது. துப்பாக்கியின் விசை இழுபடும் முன் அவர் தப்பித்தார். இந்த நிகழ்வை குறிப்பிட்டவர் P T முகம்மது மாஸ்டர், அப்போது அவர் வயது 4 (Nisar Kaderi – Pookottur Yuddhavum Melmuri Operationum, 1921 Churul Nivaranam – Pookkottur Yudha Smaraka Samithi Souvenir, 2007).
படிக்க :
♦ சிறப்புக் கட்டுரை : இந்து அறநிலையத்துறையை ஒழிக்கும் பார்ப்பனிய சதி !
♦ சிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய காவித் திருவிளையாடல் !
246 பேர் சுடப்பட்டனர், சுமார் நூறு வீடுகளுக்கு தீயிட்டனர். சுடப்பட்ட சிலரோ மிக மோசமான காயம்பட்டு இருந்தனர், உயிர் மட்டுமே இருந்தது. இன்னும் பலரோ கவனிக்க ஆளின்றி நான்கு நாட்கள் அங்கேயே கிடந்து செத்து மடிந்தனர். இறந்தவர்கள் எங்கே விழுந்து கிடந்தார்களோ அங்கேயே புதைக்கப்பட்டனர்.
விடுதலைப்போராட்டம் ஆகட்டும், மலபார் கிளர்ச்சி ஆகட்டும், வரலாறுகள் இந்தப் படுகொலைகள் பற்றிப் பேசியதில்லை. ஆனால் கல்லறைகள் இருக்கின்றனவே, அவை நடந்த படுகொலைகளை உயிர்ப்புடன் வைத்துள்ளன – இப்பகுதி மக்களின், பின் வந்த தலைமுறைகளின் நினைவில். வீட்டின் முன்பக்க திடலில் கொல்லப்பட்டவர்கள் அங்கேயே புதைக்கப்பட்டனர். மலப்புரம் கிலாபத் தலைவர் குஞ்சி தங்கள் (மலப்புரத்தின் வலியங்காடியை சேர்ந்தவர்), கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அருகில் உள்ள ஊர்களில், கிராமங்களில் இருந்து வந்தவர்கள்தான் இறந்தவர்களை அடக்கம் செய்தார்கள்.
ஒரே குழியில் பலரையும் அடக்கம் செய்ததும் நடந்தது. ராணுவத்துக்கு பயந்து இரவு நேரங்களில் அடக்கம் செய்தார்கள். ஆண்கள் இல்லாத நிலையில் பெண்களே குழிகள் வெட்டினார்கள். ஒரு புதைகுழி இரண்டு அடி ஆழம் மட்டுமே இருந்தது கண்டுபிடிக்க பட்டுள்ளது. 246 பேர் கொல்லப்பட்டதில் ஒன்பது குழிகளில் அடக்கம் செய்யப்பட்ட 40 பேர்களின் விவரங்கள் நம்மிடம் உள்ளன.
(தொடரும்)

மு இக்பால் அகமது
வினவு குறிப்பு :
முகநூலில் தோழர் மு. இக்பால் அகமது எழுதிய 8 பாகத் தொடரை, நான்கு பாகங்களாக மாற்றி இங்கு தொடராக வெளியிடுகிறோம். நன்றி !!
SRM பல்கலை : உதவித்தொகை திருட்டும், உழைப்புச் சுரண்டலும் !
தனியார் கல்வி நிறுவனத்தின் உழைப்புச் சுரண்டல்
– ஒரு ஆய்வு மாணவரின் அனுபவம் !
கடந்த வாரம் நண்பரை சந்திப்பதற்காக கிண்டி இரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள டீ கடையில் காத்திருந்தேன். எனக்கு அருகில் நின்றிருந்த ஒரு இளைஞர் ஆய்வு உதவித்தொகை வரவில்லை, சர்டிபிகேட் தரமாட்டேங்கிறான் என்று கோபமாக தொலைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தார். அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு ஆராய்ச்சிப் படிப்பில் ஏதாவது பிரச்சனையா என்று பேச ஆரம்பித்தேன்.
“என் பெயர் ஜெகதீஷ் சார், எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் ராமாபுரம் வளாகத்தில் (SRM-IST, Ramapuram Campus), இயற்பியல் துறையில் முழுநேர ஆராய்ச்சி படிப்பு படிக்கிறேன். இந்த வருடம் ஜனவரியில் அங்கு சேர்ந்தேன். என்னோடு சேர்த்து 48 ஆய்வு மாணவர்கள் சேர்ந்தோம். மாணவர்கள் சேர்க்கைக்கான விளம்பரத்தில் மாத உதவித் தொகை ரூ. 25,000 என குறிப்பிட்டிருந்தனர்.
படிக்க :
♦ SRM பல்கலையில் மாணவிக்கு பாலியல் தொல்லை : நிர்வாகத்தைப் பணிய வைத்த மாணவர்கள்
♦ எஸ்.ஆர்.எம் பச்சமுத்துவுக்கு மோடியின் தபால்துறை சீர்வரிசை
மாணவர் சேர்க்கை சமயத்தில் மாதம் ரூ.25,000 உதவித்தொகை வழங்கப்படும் என்றும் ஆராய்ச்சிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் நிர்வாகம் வழங்கும் என்றும் கல்லூரி நிர்வாகம் உறுதியளித்தது. எங்களுக்கு கொடுக்கப்பட்ட கடிதத்திலும் ரூ.25,000 ஆய்வு உதவித்தொகை எனக் குறிப்பிட்டிருந்தனர். ஆனால், கல்லூரியில் சேர்ந்து ஏழு மாதங்கள் ஆகியும் எங்களுக்கு மாத உதவித் தொகையை தராமல் இழுத்தடித்தனர். இது பற்றி கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டபோதெல்லாம் அடுத்த மாதம் வரும் என்று தள்ளிக் கொண்டே சென்றனர்.
ஆய்வு மாணவர்கள் வாரத்திற்கு 9 மணி நேரம் இளங்கலை மாணவர்களுக்கான ஆய்வக வகுப்புகளை எடுக்கவேண்டும் என்று ஆரம்பத்தில் கல்லூரி நிர்வாகம் கூறியது. சில மாதங்களுக்கு பிறகு கூடுதலாக, பி.டெக் பாடத்திட்டத்தின் ஒரு முழு பாடத்தை மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க வேண்டும் என்று கூறினர். இது ஒரு உதவி பேராசிரியருக்கான வேலையாகும். இதை ஆய்வு மாணவர்களைக் கொண்டே முடிக்க கல்லூரி நிர்வாகம் திட்டமிட்டிருந்தது.

இந்த பணிச்சுமைக்கிடையே எவ்வாறு ஆராய்ச்சி செய்வது என்று நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பினோம். இதனை நாங்கள் மறுத்தபோது ஆய்வு மாணவர்கள் கட்டாயம் பாடம் எடுக்க வேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் வற்புறுத்தியது. கல்லூரியில் சேர்ந்து ஆறு மாதமாகியும் ஆராய்ச்சி உதவித்தொகையும் தரவில்லை, மேலும் கூடுதல் வகுப்புகள் போன்ற தேவையற்ற பணிச் சுமைகளால் நாங்கள் அனைவரும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானோம்.
இதற்கிடையில், இரண்டாவது செமஸ்டர் கல்விக் கட்டணம் மற்றும் முதல் செமஸ்டர் தேர்வு கட்டணத்தை 10 ஜூலை 2021-க்கு முன் செலுத்துமாறு கல்லூரி நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியது. ஆனால், உதவித்தொகை பிரச்சனை மற்றும் கடுமையான பணிச்சுமை ஆகியற்றுக்கு தீர்வு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கல்விக் கட்டணத்தை செலுத்த மறுத்தோம். இதைத் தொடர்ந்து, எந்தவொரு முறையான காரணத்தையும் குறிப்பிடாமல் உதவித்தொகை தொகை ரூ.25,000 லிருந்து ரூ. 16,000 ஆக குறைக்கப்படும் என்று நிர்வாகம் வாய்மொழியாக அறிவித்தது. கூடவே ஆண்டுக்கொரு ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டிருக்க வேண்டும் இல்லையெனில் உதவித் தொகை 16,000-மும் நிறுத்தப்படும் என்று நிர்வாகம் கூறியது.
மாத உதவித்தொகை (ரூ. 25,000-/மாதம்) மற்றும் ஆய்வக வசதிகள் போன்ற காரணங்களுக்காகத்தான் நாங்கள் இக்கல்லூரியில் சேர்ந்திருந்தோம். ஆனால், கல்லூரி நிர்வாகத்தின் இந்த அறிவிப்புகள் எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. இது குறித்து எஸ்.ஆர்.எம் கல்லூரியின் ராமாபுரம் வளாக(SRM-IST, Ramapuram Campus) நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்தவொரு பலனும் இல்லாததால், முதன்மை வளாகமான எஸ்.ஆர்.எம். – காட்டாங்குளத்தூர் வளாக (SRM-IST, Kaatankulathur Campus) நிர்வாகத்திடம் நாங்கள் முறையிட்டோம். அவர்களிடமிருந்தும் எங்களுக்கு பதில் கிடைக்கவில்லை. நான், என்னுடைய சக ஆராய்ச்சி மாணவர்களோடு சேர்ந்து எங்களுடைய பிரச்சனைகளை தொகுத்து (ஆதாரங்களோடு) எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் வேந்தர், துணைவேந்தர், பதிவாளர் மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் ஆகியோருக்கு மின்னஞ்சல் அனுப்பினோம். அவர்களிடமிருந்தும் பதில் வரவில்லை.
நான் மிகக் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தேன். இனி அங்கு படிப்பினைத் தொடர முடியாது என முடிவு செய்தேன். எங்களுடன் சேர்ந்த 48 பேரில் 7 மாணவர்கள் ஏற்கனவே ஆய்வு படிப்பிலிருந்து வெளியேறிவிட்டனர். சக மாணவர்களிடம் இது குறித்து பேசியபோது, இதற்குமேல் என்ன செய்வது? பொறுமையாக காத்திருக்க வேண்டியதுதானே என்றனர். இறுதியாக, நானும் மற்றொரு ஆய்வு மாணவரான சுரேஷும் ஆய்வுப் படிப்பிலிருந்து வெளியேறுவதாக முடிவு செய்து 26 ஜூலை 2021 அன்று எங்களுடைய விடுப்புக் கடிதத்தைக் கல்லூரி நிர்வாகத்திடம் கொடுத்தோம்.

அதில், மேற்கூறிய பிரச்சனைகளின் காரணமாக ஆய்வு படிப்பிலிருந்து வெளியேறுவதாக குறிப்பிட்டிருந்தோம். கூடவே எங்களுடைய கல்விச் சான்றிதழ்களையும் (original certificates) திருப்பி தருமாறு கேட்டிருந்தோம். ஆனால், நிர்வாகமோ சொந்தக் காரணங்களினால் படிப்பிலிருந்து வெளியேறுவதாகக் குறிப்பிட்டால் மட்டுமே கல்விச் சான்றிதழ்களை திருப்பித் தருவோம் என்றது.
பொதுவாக, பேராசிரியர்கள் மற்றும் ஆய்வு மாணவர்களின் கல்விச் சான்றிதழ்களை சரிபார்ப்பதற்காக வாங்குகிறோம் என்று காரணம் கூறும் தனியார் கல்லூரிகள் அவற்றைத் திருப்பி தராமல் தங்களிடமே வைத்துக்கொள்கின்றன. இது பல்கலைக்கழக மானியக் குழு (UGC) மற்றும் அகில இந்திய தொழில்நட்பக் கல்விக்குழு (AICTE) விதிகளின்படி, தடைசெய்யப்பட்ட ஒன்றாகும். ஆனால், தனியார் கல்லூரிகள் தாங்கள் செய்யும் முறைகேடுகளை மறைப்பதற்காக பேராசிரியர்கள் மற்றும் ஆய்வு மாணவர்களை மிரட்டுவதற்கான கருவியாகவே இதனைப் பயன்படுத்துகின்றனர். இது குறித்து அண்ணா பல்கலைக்கழகத்திடமோ UGC அல்லது AICTE இடமோ புகார் அளித்தாலும் பெரிதாக நடவடிக்கை எடுப்பதில்லை.
இறுதியாக, எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் மேற்குறிப்பிட்ட முறைகேடுகள் குறித்த கடிதத்தை (ஆதாரங்களையும் இணைத்து) பல்கலைக்கழக மானியக் குழு (UGC), உயர்கல்வி அமைச்சகம் (MoE), அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு (AICTE) ஆகியவற்றுக்கு பதிவு அஞ்சலில் (Registered Post) அனுப்பினோம். கூடவே மின்னஞ்சலும் செய்திருந்தோம். அக்கடிதத்தில் எங்களது ஏழு மாத உதவித்தொகை மற்றும் கல்விச் சான்றிதழ்களையும் பெற்றுத் தரும்படி கோரிக்கை வைத்திருந்தோம்.
மேலும், பொய்யான வாக்குறுதிகளை கூறி மாணவர் சேர்க்கை நடத்தி 40-க்கும் மேற்பட்ட ஆய்வு மாணவர்களின் வாழ்க்கையை சிக்கலுக்கு உள்ளாக்கியுள்ள பல்கலைக்கழகத்தின் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் கோரியிருந்தோம். ஆனால் UGC-யோ, SRM பல்கலைக்கழகத்தின் மீது எந்தவொரு குறிப்பான நடவடிக்கையும் எடுக்காமல் ஒப்புக்காக பல்கலைக்கழக நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு பிரச்சினையை முடித்துவிட்டனர்” என்றார் அந்த ஆய்வு மாணவர்.
* * *
ஒரு ஆய்வு மாணவருக்கு ஒன்பது மணிநேரம் ஆய்வக வகுப்பு, ஒரு பாட வகுப்பு, வருடத்திற்கு ஒரு ஆய்வுக் கட்டுரை என்பது சாத்தியமற்ற இலக்கு. இதில் உதவிப் பேராசிரியர்களோ இதைவிட கூடுதலான பணிச்சுமையோடு பணியாற்றுகின்றனர்.
படிக்க :
♦ தனியார் கல்வி நிறுவனங்களின் ஊழியர்களுக்கு உரிமைகள் வழங்கு !
♦ உயர்சிறப்பு கல்வி நிறுவனம் : உலகத்தரம் என்ற கனவும் தீவிர தனியார்மயமாக்கலுக்கான திட்டமும் !
உயர்கல்வியில் ஆராய்ச்சிக்கு முன்னுரிமை தரவேண்டும் என்று NEP-2020 சொல்லுகிறது. இதன் விளைவாக NIRF, NAAC மதிப்பீடுகளில் ஆராய்ச்சிக்கு என கணிசமான மதிப்பெண்கள் ஒதுக்கியுள்ளனர். NIRF, NAAC-ல் உயர் இடத்தை பிடிப்பதின் மூலம் ‘கல்விக் கொள்ளையை’ சுகந்திரமாகவும் விரிவாகவும் செய்ய முடியும் என்பதால் தனியார் பல்கலைக்கழகங்கள் ஆராய்ச்சிக்கு தற்போது முக்கியத்துவம் தருகின்றனர்.
பொய்யான வாக்குறுதிகளை அளித்தும் சாத்தியமற்ற இலக்குகளை நிர்ணயித்தும் ஆய்வு மாணவர்களையும் பேராசிரியர்களையும் கசக்கி பிழிவதன் மூலமே இப்பல்கலைக்கழகங்கள் தங்களை முன்னணி உயர்கல்வி நிறுவனங்களாக காட்டிக் கொள்கின்றன. இந்த கட்டற்ற சுரண்டலானது உயர்கல்வித் துறை அதிகாரிகள், அமைச்சர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆகியோரின் கூட்டு நடவடிக்கையாலேயே சாத்தியப்படுகிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும். இதனை அம்பலப்படுத்தாமல் இத்தகைய சுரண்டலுக்கு தீர்வு கிடையாது !
ஸ்டீபன்
CCCE-TN
குறிப்பு : இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் மாணவரின் பாதுகாப்பு கருதி முதலில் புனைப்பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது அந்த மாணவரின் ஒப்புதலின் பெயரில், அவரது உண்மையான பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
‘சமூக நீதி ஆட்சி’யிலும் ”சாதி மதம் அற்றவர்” சான்றிதழுக்கு இழுத்தடிப்பு !
சமூகநீதி ஆட்சியில் “சாதி மதம் அற்றவர்” சான்றிதழ் வாங்குவதற்கே பெரும் போராட்டம் !
தற்போது பன்னிரண்டாம் வகுப்பு முடித்து கல்லூரியில் முதலாமாண்டு சேர்வதற்கு காத்திருக்கும் எனது மகனுக்கு கல்லூரி சேர்க்கைக்கு சாதிச் சான்றிதழ் கேட்கிறார்கள். ஆனால், அவனுக்கு முதல் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை எப்போதும் சாதி மத அடையாளத்தை குறிப்பிட்டதில்லை. சாதிச் சான்றிதழும் பெற்றதில்லை. நானும் எனது இணையரும் சாதி மறுப்பு – புரட்சிகர திருமணம் செய்து கொண்டவர்கள். நாங்களும் எந்தத் தருணத்திலும் சாதி மதத்தை அடையாளப்படுத்தியதில்லை.
எனவே, எனது மகனுக்கு சாதி மதமற்றவர் என சான்றிதழ் வழங்குமாறு வட்டாட்சியரிடம் விண்ணப்பம் அளித்தேன். விண்ணப்பத்துடன் ஏற்கெனவே பெற்றோர்களை சாதி மதத்தை அடையாளப்படுத்துமாறு கட்டயப்படுத்தக் கூடாது என்ற அரசாணை மற்றும் இருப்பிட சான்றிதழ், 10, 12-ம் வகுப்பு சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை என அனைத்தையும் இணைத்திருந்தேன்.
படிக்க :
♦ தனியார் கல்லூரியிலிருந்து ஒரு உதவிப் பேராசிரியர் தன் சான்றிதழ்களை மீட்ட கதை !
♦ ‘‘திராவிட மாடல்’’ ஆட்சி : கார்ப்பரேட் சேவை ! காவியுடன் சமரசம் !!
இதைப் பெற்றுக்கொண்ட வட்டாசியர் “நல்லது மேடம், இது போன்ற வேறு யாரும் வாங்கியிருந்தால் அந்த நகலை கொடுங்கள். உடனே போட்டுக் கொடுக்கிறேன், எங்களுக்கு எந்த மாறுபாடும் கிடையாது” என்றார்.
நான் “நமது வட்டாரத்தில் வாங்கியது பற்றி தெரியவில்லை. எனவே நீங்களே சான்றிதழ் கொடுங்கள்” என்றேன். அவர், உதவி வட்டாட்சியரை அழைத்து உடனே சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யுமாறு கூறினார்.
அவரும் அந்த G.O-வை எடுத்துவிட்டு உங்களுக்கு அழைக்கிறேன் என்றார். ஆனால், இரு வாரங்கள் ஆகியும் ஏதோ ஒரு காரணம் சொல்லி தள்ளிப்போட்டார். அதன்பிறகு நேரில் சென்று விசாரிக்கும்போது, “உங்களுடைய ஃபைல் எங்கு வைத்தேன் என தெரியவில்லை எடுத்துவிட்டு சொல்கிறேன்” என்றார். அதன்பிறகு, மறுநாள் கேட்கும்போது “மேடம் ஃபைல் கிடைத்துவிட்டது அதை உங்களது கிராம நிர்வாக அலுவலருக்கு அனுப்பியுள்ளேன். அவரைப் பாருங்கள்” என்றார்.
அதேசமயம் எங்களது பஞ்சாயத்துக்குட்பட்ட கிராம நிர்வாக அலுவலரும் அழைத்து உங்களது சான்றிதழ் அனைத்தும் எடுத்து வாருங்கள் என்றார். உடனே அவற்றை எடுத்துச் சென்றபோது, “என்ன, உங்கள் இருவரின் கல்வி சான்றிதழில் சாதி குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் உங்களது மகனுக்கு சாதி வேண்டாம் என கூறுகிறீர்கள்?” என்று கேட்டார். “ஆமாம், எங்களது சிறு வயதில் குறிப்பிடப்பட்டது, ஆனால் நாங்கள் சுயமாக இயங்க ஆரம்பித்தத்தில் இருந்து எந்த இடத்திலும் சாதி மதத்தை அடையாளப்படுத்தியதில்லை. எங்களது திருமணமே சாதி மறுப்புதான்” என்று சொன்னவுடன், சரி என்று விசாரித்து விட்டு அனுப்பினார்.
நான் RI-யிடம் பேசிவிட்டு அழைக்கிறேன் என்றார். பின்னர் மறுநாள் அழைத்து நானும் RI-யும் உங்களது வீட்டுக்கு வருகிறோம் என்றனர். அதேபோல் வீட்டுக்கு வந்து பார்த்துவிட்டு பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் விசாரித்துவிட்டு பொதுமக்கள் 10 பேரிடம் நீங்கள் சொல்வது உண்மைதான் என கையெழுத்து வாங்கி வாருங்கள் என்றனர். அதேபோல் கையெழுத்து வாங்கிச் சென்றேன். பிறகு VAO எங்களை அழைத்து அடுத்த வாரம் வட்டாட்சியர் அலுவலகம் சென்று சான்றிதழ் பெற்று கொள்ளலாம் என்றார்.
ஒரு வாரம் கழித்து உதவி வட்டாசியாரிடம் கேட்கும்போது, “மேடம் நீங்கள் Zonal தாசில்தார் அவர்களைப் பாருங்கள்” என்றார். பிறகு அவருக்கு போனில் அழைத்து கேட்கும்போது, “உங்க ஃபைல் பற்றி VAO-விடம் கேட்கிறேன், நாளைக்கு சொல்கிறேன்” என்றார்.
அதன்பிறகு அடுத்தநாள் கேட்கும்போது, “உதவியாளர் விடுமுறையில் இருக்கிறார், உங்களது ஃபைல் பார்த்துவிட்டேன், நாளைக்கு கட்டாயம் கொடுத்து விடலாம்” என்றார்.
அடுத்தநாள் பேசும்போது “மீட்டிங் நடக்கிறது” என்றார். நான் அலுவலகத்திற்கு அருகில்தான் இருக்கிறேன் எனக் கூறியபோது “சரி வாருங்கள்” என்றார். அங்கு சென்றபோது எங்கள் பகுதியின் RI, Zonal Deputy Tahsildar, வட்டாட்சியர் அனைவரும் இருந்தனர்.
“என்ன சார் பிரச்சினை? இவ்வளவு நாள் இழுத்தடிக்கிறீர்கள்” என கேட்கும்போது “மேடம், இதற்கான format இல்லை. அதுதான் பிரச்சினை, வேறு ஒன்றுமில்லை, என அங்கிருந்த RI, Zonal Deputy Tahsildar, அனைவரையும் கடிந்து கொண்டு ஏன் இவ்வளவு நாள் எனது கவனத்திற்கு கொண்டு வரவில்லை” என்றார்.
அவர்களும் “எங்களது வேலையை முடித்துவிட்டோம் என்றனர், Zonal Deputy Tahsildar எனக்கு வந்து 3 நாள் தான் ஆகிறது” என்றார்.
“சமத்துவம் சகோதரத்துவம் பேண வேண்டும் என பெரியார் பிறந்தநாள் கொண்டாடுகிறீர்கள், உறுதி மொழி எடுப்பதாக சொல்லுகிறீர்கள். சாதி மதம் இல்லை என இப்படி ஒரு சான்றிதழ் வாங்குவதற்கு இவ்வளவு இழுத்தடிக்கிறீரகள். ஆனால் நாங்கள் உண்மையில் உறுதி மொழி எடுப்பதோடு அல்லாமல், நடைமுறையில் சமூக நீதியை நிலைநாட்டி நிரூபித்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாங்கள் மட்டும் அல்ல எங்களது மக்கள் அதிகாரம் அமைப்பில் உள்ள தோழர்கள் அனைவரும் இதுபோல எந்த இடத்திலும் சாதி மதத்தை குறிப்பிடுவதில்லை. சமூக நீதி ஆட்சி நடக்கிறது என்கிறீர்கள். சாதி, மதமில்லை என சான்றிதழ் வாங்குவதற்கு ஒரு மாதம் இழுத்தடிக்கிறீர்களே?” என்று கேள்வி எழுப்பினோம்.
அப்போது அங்கிருந்த ஊழியர் ஒருவர் திருப்பத்தூரில் ஒரு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது, என அதன் படிவத்தை காட்டினர். அதன்பிறகு அரை மணி நேரம் காத்திருங்கள் உடனடியாக பெற்றுக்கொள்ளலாம், எனக் கூறி அதன் பிறகு சான்றிதழ் கொடுத்தனர்.
படிக்க :
♦ சாதியத்தை அரவணைக்கும் தி.மு.க-வால் காவியை ஒழிக்க முடியுமா ?
♦ ஐஐடி-யில் நடக்கும் சாதிய-மதக் கொடுங்கோன்மைகளுக்கு தீர்வு என்ன?
அதிகாரத்தில் உள்ளவர்கள் பொது மக்களை அலைக்கழிப்பது என்பது நமது நாட்டில் இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. அதுவும், இதுபோன்று சாதியில்லை மதமில்லை என சான்றிதழ் வாங்குவது என்றால் அதிகாரத்தில் இருப்பவர்களின் மனநிலை இன்னமும் இழுத்தடிப்பதற்கான வாய்ப்புகளையே நாடுகிறது. இது போன்ற முற்போக்கு நடவடிக்கைகளை அவர்கள் அங்கிகரிப்பதில்லை. மாறாக சாதி மதத்தை ஊக்குவிப்பது என்றால் உடனடியாக செயல்படுகிறார்கள்.
இந்த சாதி கட்டமைப்பை காப்பாற்றுவதை தனது கடமையாக செய்கிறார்கள். சனாதனத்தை எதிர்க்கிறோம் சமத்துவம், சகோதரத்துவம், பெரியாரின் வழியில் நடப்போம் என உறுதிமொழி எடுக்கும் இந்த அரசுதான் கல்லூரி சேர்க்கை விண்ணப்பத்தில் சாதி மதமற்றவர் என்பதை பதிவு செய்ய முடியாதபடி தயாரித்துள்ளது. சாதி மதமற்றவர் என சான்றிதழ் வாங்கி வரும்படி நிர்பந்திக்கிறது. அப்படி ஒரு சான்றிதழை வழங்கவும் இழுத்தடிக்கிறது.
சாதி மதத்தைத் துறந்து வாழ்பவர்களை OC பிரிவின் கீழ் தான் வகைப்படுத்துகிறார்களே அன்றி, அவர்களை அங்கீகரிப்பதோ, இப்படி வாழ்வதற்கு ஊக்கப்படுத்துவதோ இல்லை. சமூகநீதி பேச்சு, வெறுமனே ஏட்டிலும் பேச்சிலும் தான் இருக்கிறதே அன்றி நடைமுறையில் அல்ல என்பதை சாதி மதமற்றவர் எனும் சான்றிதழ் வாங்க, நடத்தப்பட்ட இந்த ஒரு மாதத்திற்கும் மேலான தொடர் போராட்டம், தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டியிருக்கிறது.
சூர்யா
மக்கள் அதிகாரம்,
உடுமலை.
ஹிஜாப், பர்தாவின் பூர்வீகமும் வரலாறும் !
உலகம் முழுக்க ஓர் ஆடை பெரும் விவாதத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்றால் அது மதங்களின் அடிப்படையில் பெண்கள் அணியும் பர்தா, ஹிஜாப், நிகாப், சடோர் போன்ற ஆடைகள்தான். அதனால்தான் அந்த ஆடையை பற்றி பல கேள்விகளும் விளக்கங்களும் பலராலும் முன் வைக்கப்படுகின்றது. இது மதங்களின் மரபுகளாக கத்தோலிக்கம் மற்றும் யூதத்தில் இன்று வரை பின்பற்றப்படுகிறது.
இஸ்லாம் அரேபிய தீபகற்பத்தில் ஒரு சிறிய நம்பிக்கை கொண்ட சமூகமாகத் தொடங்கியது. இந்த சமூகமானது கடவுளின் தூதுவராக இசுலாமியர்கள் போற்றும் முகமதுவால் (பொது ஆண்டு 570 – 632 ) நிறுவப்பட்டது. பின்னர், அங்கிருந்து அது மத்திய கிழக்கு வழியாக சஹாரா மற்றும் துணை-சஹாரா ஆப்பிரிக்கா, மத்திய ஆசியா மற்றும் அரபிக் கடலைச் சுற்றியுள்ள பல சமூகங்களுக்குப் பரவியது.
படிக்க :
♦ பெண்களின் சட்டைகளில் பொத்தான்கள் இடதுபுறத்தில் இருப்பது ஏன் ?
♦ புடவை கடந்து வந்த பாதையும் அது சார்ந்த போராட்டங்களும் ! || சிந்துஜா
மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் இஸ்லாம் நிறுவப்பட்ட பிறகு, அது ஐரோப்பாவிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியினால் ஊடுருவியது.
ஏழாம் நூற்றாண்டில் அரேபிய தீபகற்பத்தில் (இன்றைய சவுதி அரேபியா உட்பட) இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பே எண்ணற்ற கலாச்சாரங்களில் பல்வேறு வண்ணங்களில், வடிவங்களில் ஒரு சிறிய ஆடை வழக்கத்தில் இருந்திருக்கிறது. பெண்களுக்கான தலைமறைப்பு ஆடை (துணி) தான் அது. ஆனால் அதற்கான காரணங்களும் பயன்களும் வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறாக இருந்திருக்கின்றன. அதன்பின் வாழ்ந்த மக்களால் தலைமறைப்பு ஆடை மரபுவழியாக கடத்தப்பட்டு யூத மற்றும் கத்தோலிக்க மதம் உள்ளிட்ட பல மதங்களில் பெண்களுக்கான ஆடைகளில் அது குறிப்பிடத்தக்க இடம் பெற்றிருக்கிறது.
இன்று உலக மதங்களில் ஒன்றாக இஸ்லாம் வளர்ந்து இருக்கிறது. இது மத்திய கிழக்கு வழியாக சஹாரா மற்றும் துணை-சஹாரா ஆப்பிரிக்கா, மத்திய ஆசியா மற்றும் அரபிக் கடலைச் சுற்றியுள்ள பல்வேறு சமூகங்களுக்கு பரவியது. பல உள்ளூர் பழக்கங்களை இணைத்து அவற்றை மத வழக்கங்களாக மாற்றியது.
முஸ்லீம்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்களில் பிரதானமானது, பெண்கள் புர்கா அணிவதை அவர்கள் விருப்பம் சார்ந்ததாக இல்லாமல் கட்டாயத்தின் பெயரில் வற்புறத்துகிறார்கள் என்பதே. ஒரு பக்கம் அப்படியென்றால், மற்றொரு பக்கம் முஸ்லீம்கள் அதிகமாக குடிபெயரும் மேற்கத்திய நாடுகளில் இதை அவர்கள் விரும்பி அணிந்தாலும் அதனை தேசப் பாதுகாப்பு எனும் பெயரில் தடை செய்வதும் நடக்கிறது.
ஆடையின் வகைகள் :
ஹிஜாப் என்பது தலைக்கவசங்களுக்குள் ஒரு வகை. இது மேற்கத்திய நாடுகளில் அணியும் மிகவும் பிரபலமான முக்காடு. இந்த முக்காடு தலை மற்றும் கழுத்தை மறைக்கும் ஒன்று அல்லது இரண்டு தாவணிகளைக் கொண்டுள்ளது. மேற்கிலிருந்த இந்த பாரம்பரிய முக்காடு வழக்கம், பிறகு அரபு நாடுகளிலும் அதற்கு அப்பாலும் உள்ள பெரும்பான்மை முஸ்லீம் பெண்களால் பின்பற்றப்பட்டது.
நிகாப், உடல் முழுவதும் மறைக்கப்பட்டு, முகத்தில் கண்கள் மட்டும் தெரியும் உடை. நிகாப்பின் இரண்டு முக்கிய பாணிகள் அரை-நிகாப் இது தலையை முழுமையாக மூடி முகத்திரை கண்கள் மற்றும் நெற்றியின் ஒரு பகுதி தெரியும். இந்த ஆடையை வளைகுடா நாடுகளில் பயண்படுத்துகின்றனர். ஆனால், இது ஐரோப்பாவிற்குள் நிறைய விவாதங்களை உருவாக்கியது. சமீபத்தில் பிரான்ஸ், இலங்கை போன்ற நாடுகள் இதற்கு தடை விதித்தது. இது மக்களிடம் எளிதாக பேச இயலாத சூழ்நிலையை ஏற்படுத்துவதோடு, பாதுகாப்பையும் கேள்விக்குட்படுத்துகிறது.
சடோர், என்பது உடல் முழுவதும் போர்த்தும் நீளமான சால்வை. கழுத்து மற்றும் கைகள் தைக்கப்பட்டியிருக்கும். இது தலை மற்றும் உடலை மறைக்கிறது. ஆனால், முகம் முழுமையாக தெரியும். சடோர் பெரும்பாலும் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும். மத்திய கிழக்கில், குறிப்பாக ஈரானில் இதை பிரபலமாக பயன்படுத்துகின்றனர்.
பர்தா உடல் முழுவதும் போடப்படும் முக்காடு. அணிந்தவரின் முகமும் உடல் முழுவதும் மூடப்பட்டு கண்களுக்கு மட்டும் ஓரு மெல்லிய திரை மூலம் பார்க்க முடியும். இது பெரும்பாலும் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் அணியப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியில் (1996-2001), அதன் பயன்பாடு கட்டாய சட்டமாக்கப்பட்டது. தற்போது ஆப்கானிஸ்தானில் தாலிபான் இதை மீண்டும் கையில் எடுத்துள்ளனர்.
இந்த முக்காடு அணியும் வழக்கம் எங்கிருந்து எதற்காக உருவாகியது? இதை அனைத்து முஸ்லீம் பெண்களும் அணிவது கட்டாயமா? இதை பல்வேறு இடங்களில் பல்வேறு நிறங்கள் மற்றும் வடிவங்களில் பயன்படுத்துகிறார்ளே? அப்படியானால் அதன் தன்மைதான் என்ன? இதில், மேற்கத்திய நாடுகள் இதற்கு தடை கோரியிருப்பதை எப்படி பார்க்க வேண்டும்.
சமூகவியலாளர் கெய்ட்லின் கிலியன் விளக்குகிறார், “கடந்த காலத்தைப்போலவே, முக்காடு பாரம்பரியம் தற்போதும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
முஸ்லீம் மத கோட்டுபாடுகள் பெண்கள் முக்காடு பற்றிய கேள்விக்கு முற்றிலும் தெளிவான பதில் இல்லை. தீர்க்கதரிசி முகமதுவின் எழுத்துகளில் அதற்கான தெளிவான சான்று ஏதுமில்லை. ஆனால் அவரின் கூற்றில், அவரின் மனைவி முக்காடு போன்று ஓரு ஆடையை பயண்படுத்திருக்கலாம் என்பதாக குறிப்பிடுகின்றன. ஆனால், இந்த கோட்டுபாடுகள் நபியின் மனைவிகளுக்கு மட்டுமா அல்லது அனைத்து முஸ்லீம் பெண்களுக்கும் பொருந்துமா, இல்லை அனைத்து தரப்பினருக்குமானதா என்பது இன்றும் விவாதத்திற்குரியதே.
பெண்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டியதன் அவசியம் குறிப்பிடப்பட்டியிருத்தாலும் பெண்கள் மறைக்க வேண்டிய பகுதி என உடல் முழுவதும் மறைத்து முகம் மற்றும் கைகளைத் தவிர” முடப்பட்டியிருக்க வேண்டும் என்பதாக குறிப்பிடவில்லை. முக்காடு பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையில் வேறுபடுவதற்கான ஒரு ஆடையாக பார்க்கப்படுகிறது. மேலும் ஆண், பெண் பாலியல் இச்சையை கட்டுப்படுத்தும் ஒரு வழிமுறையாகவும் இந்த ஆடை கையாளப்படுகிறது. பெண்களை போன்றே அரபு நாடுகளில் ஆண்களும் இடுப்புக்கு கீழே ஒரு பெரிய ஆடையை அணிக்கின்றனர்.
முக்காடு அணியும் வழக்கம் இஸ்லாத்திற்கு முந்தியது என்று பார்த்தோம். இது இன்ன பிற மதங்களை சேர்ந்த பெண்களால் நடைமுறையில் இருந்தது. இது பெரும்பாலும் வர்க்க நிலையுடன் இணைக்கப்பட்டது: பணக்கார பெண்கள் தங்கள் உடலை முழுமையாக மறைப்பது, ஒரு வழக்கமாக இருந்திருக்கிறது. அதேசமயம் வேலை செய்யக்கூடிய ஏழைப் பெண்கள் இந்த முக்காட்டை அணியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்று உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய ஆடைகளின் பாணிகளில் உள்ளூர் மரபுகள் மற்றும் இஸ்லாமிய தேவைகளை சார்ந்த வெவ்வேறு விளக்கங்களை பிரதிபலிக்கின்றன.
உதாரணத்திற்கு, பிரான்சில் உள்ள முஸ்லீம் பெண்கள், வெவ்வேறு விதமான தலை கவசங்கள் மற்றும் ஆடைகளை அணிகின்றனர். பலர் முஸ்லீம்கள் என வேறுபடுத்திக் காட்டும் வகையில் எதையும் அணிவதில்லை. பல புலம்பெயர்ந்த முஸ்லீம் பெண்கள் தங்கள் அடையாளத்தை வெளிக்காட்டிக் கொள்ளவதுமில்லை. இன்னும் சிலர் பல வண்ணங்களிலான முக்காடுகளை பயன்படுத்தி முகத்தை மட்டும் மறைத்து கொள்கின்றனர். இன்ன பிற பெண்கள் அவர்களின் பாரம்பரிய உடையை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், மேற்கத்திய நாடுகளில் பெண்கள் முகத்தை மட்டும் மறைக்கும் முக்காடுகளுக்கு எதிரான கருத்துகளும் அந்நாடுகளில் நிலவுகிறது.
1970-களில் பிரான்சுக்கு குடியேறுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே முஸ்லீம் பெண்களின் உடை தொடர்பான போராட்டம் தொடங்கியது. பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் காலனித்துவவாதிகள் முஸ்லீம் பெண்களின் முக்காடிற்கு தடைவிதித்து, ஐரோப்பிய பெண்களைப் பர்தாவிலிருத்து விலக்கியது.
இதற்கு எதிராக, அல்ஜீரியா, வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில், முக்காடு தேசிய சின்னமாகவும், அது அவர்களின் அடையாளமாகவும் இடம் பிடித்தது. இதன்மூலம் இசுலாமிய நாடுகள் மேற்கத்திய நாடுகளுக்கு தனது எதிர்பை தெரிவித்து வருகின்றனர்.
திரைக்கு பின்னாலிருக்கும் உண்மை
“பர்தா இஸ்லாத்தின் ஒரு பகுதி அல்ல, ஆனால் முஸ்லீம் கலாச்சாரத்தின் ஒரு அங்கம்; இதில் உள்ள வேறுபாடு மிக முக்கியம்” என டில்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா கல்லூரியின் போராசியர் ஃபரிதா கானம் கூறுகிறார்.
“பொதுவாக பர்தா, புர்கா போன்ற ஆடைகள் இஸ்லாத்துடன் இணைத்து பார்க்கப்படுகிறது. ஆனால் உண்மையில் பர்தா, புர்கா போன்ற முஸ்லீம்களின் ஆடை, எந்தவிதத்திலும் இஸ்லாத்திலிருந்து எடுக்கப்பட்டவை அல்ல. இஸ்லாத்திற்கும் முஸ்லீம்களுக்கும் ஒரு மிகப் பெரிய வேறுபாடு இருக்கின்றது. புர்கா, பர்தா முஸ்லீம் நடைமுறை என்றால் ஒத்துக் கொள்ளலாம்; ஆனால், அது இஸ்லாத்தின் வழக்கம் என்றால், அது தவறு” என்கிறார் ஃபர்தா கானம். இஸ்லாம் குரானிலிருந்து வந்தது. மாறாக, முஸ்லீம் ஓரு குறிப்பட்ட கலச்சாரம் மற்றும் சமூக நிகழ்வால் முன்னெடுக்கப்பட்டது.
மொழியியல் வரலாற்றின்படி, பர்தா என்ற சொல் அரபில் இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பே இருந்திருக்கிறது. அதாவது, ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் புழக்கத்தில் இருந்திருக்கிறது. அப்போது புர்கா என்ற சொல்லுக்கு சிறிய துணி என்று அர்த்தம். அது குளிர்காலத்தில் குளிரிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் ஓர் ஆடை. இதையே அரேபிய அகராதில் லிசான்-அல்-அரபில் இந்த இருவேறு சொல்லாடலுடன் விவரிக்கிறது.
ஒன்று பர்தா குளிர்காலத்தில் விலங்குகளை காப்பாற்றவதற்கும், மற்றொன்று சடோர் என்ற சால்வையை கிராமத்து பெண்களும் பயன்படுத்தி உள்ளனர். ஆனால், இந்த சொற்கள் குரானில் இடம் பெறவில்லை.
வரலாற்றை சற்று பின் நகர்த்தினால் இஸ்லாம் பெர்சியாவில் கால் ஊன்றியதும் புர்கா என்ற சொல் வந்திருக்கலாம். அதன்பின் நிறைய மத சடங்களும் சொல்லாடல்களும் பெர்சியாவிலிருந்து வந்தது. எ-டு: “காட்டாக குதா” என்று சொல்லுக்கு அல்லா என்றும், நமாஸ்க்கு சாலத் என்ற வார்த்தையாக உருமாறியது. அதைப்போன்றே ஈரானின் கலாச்சார அழுத்தத்தின் காரணமாக புர்காவும் முஸ்லீம்களால் முன்னெடுக்கப்பட்டது.
தற்போது ஹிஜாப்க்கு இணையாக புர்காவை முஸ்லீம்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால், குரானில் ஹிஜாப் என்றால் திரைச்சீலை என்றுதான் அர்த்தம். ஆனால், முஸ்லீம்கள் அச்சொல்லை பயன்படுத்தும் விதத்தில் குரானில் இல்லை.” என்கிறார் கானம்.
படிக்க :
♦ பாவாடை பெண்களுக்கே உரிய உடையா ? || சிந்துஜா
♦ மாதவிடாயும் சானிட்டரி நாப்கினின் வரலாறும் || சிந்துஜா
இதைப்போன்றே புர்காவிற்கு இருவேறு பெயர்கள் உண்டு : ஜிலாப் மற்றும் கிமர். இதற்கு பெண்கள் உடல் முழுதும் அணியும் துப்பட்டா என்று அர்த்தம். ஆனால், முகத்தை மறைக்கும் ஆடையல்ல. இஸ்லாம் கோட்பாடுகளில் ஆண், பெண் இருவரும் இணைந்து சமூக மேம்படுத்தலை எடுத்து செல்ல வேண்டும் என்பதே. குறிப்பாக நபிகளின் காலத்தில் பெண்கள் விவாசாயம், தோட்டக்கலை மற்றும் சமூக பணியில் பணியாற்றி இருக்கின்றனர். அதே தருணத்தில் அவர்கள் பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்களாக கருதப்பட்டியிருக்கின்றனர்.
இஸ்லாம் ஆண், பெண் இருவரையும் சமமாக நடத்துங்கள் என்கிறது. குரானில் “You are members one of another” (3:195). இதன் அர்த்தம் இயற்கை படைப்பு ஆண், பெண் என இரு வேறு பாலின பாகுபாடு இருக்கலாம். ஆனால், ஒருவருக்கொருவர் உதவுவதே நியதி என்கிறது. இப்படி பல்வேறு ஆய்வுகளும் இஸ்லாமில் ஆண் பெண் உரிமை குறித்தும் ஆடைகள் குறித்தும் நடந்து கொண்டு இருக்கின்றன.
எது எப்படியிருப்பினும் நாகரிக வளர்ச்சி நமது கையில் ஆடைகளைத் தந்துள்ளது. சமூக வளர்ச்சி ஒவ்வொரு கட்டத்திலும் பல கோட்பாடுகளை பிரசவிக்கிறது. கோட்பாடுகள் மதத்தையும், அவற்றின் பெயரில் பல்வேறு ஒடுக்குமுறைகளையும் பிரசவிக்கின்றன. மத, இனம் என பல்வேறு அடையாளங்களையும் கட்டுப்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டு ஆடை மற்றொரு தளத்திற்குச் சென்றது.
அது மதம், இனம், சாதி, பாலினம் சார்ந்த ஒடுக்குமுறைகளுக்கு இட்டுச் செல்கிறது. சக மனித இனத்தை ஒடுக்க நினைக்கும் எதுவும் முன்னோக்கிய சமூகத்தை உருவாக்காது என்பது மட்டும் உறுதியானது. அந்த வகையில், மனித சமூகத்தை பாகுபடுத்தும் கருத்தியல்களை முறியடிப்பது நம் முன் உள்ள முக்கியக் கடமையாகும்.
சிந்துஜா
சமூக ஆர்வலர்
செய்தி ஆதாரம் : டைம்ஸ் ஆஃப் இந்தியா