பெரியார் 143-வது பிறந்தநாள் : “பெண் ஏன் அடிமையானாள்? “ நூல் வினியோகம் !
மக்கள் அதிகாரம்
தகவல் :
தகவல் :
தகவல் :
தகவல் :
விரிவான விவரங்களில் இருந்து உண்மையைக் கண்டறிவீர் || தோழர் மாவோ
பாகம் 1 : புத்தக வழிபாட்டை எதிர்ப்போம் || தோழர் மாவோ
பாகம் 2 : பழமைவாத எண்ணங்களை மாற்றிக் கொள்வீர் || தோழர் மாவோ
பாகம் 3
7. பரிசீலனைக்கான உத்தி
1. உண்மை அறியும் கூட்டங்களை நடத்தி, விவாதங்கள் மூலம் பரிசீலனை மேற்கொள்ளுங்கள்.
உண்மைக்கு அருகில் செல்வதற்கும், முடிவுகளை தீர்மானிக்கவும் இதுதான் ஒரே வழி. உண்மை அறியும் கூட்டங்கள் நடத்தி, விவாதங்கள் மூலம் பரிசீலனை செய்யாமல், ஒரு தனி மனிதர் தனது அனுபவங்களில் கூறுவதை நம்பினால், எளிதாக தவறு இழைக்கப்படும். விவாதத்தில் முக்கிய கேள்விகளை எழுப்புவதற்குப் பதிலாக, அத்தகைய கூட்டங்களில் அலட்சியமான கேள்விகளைக் கேட்டால், நீங்கள் ஏறக்குறைய சரியான முடிவுகளை எடுப்பது சாத்தியமில்லை.
2. உண்மையறியும் கூட்டங்களில் எவ்வகையான மக்கள் பங்கேற்க வேண்டும்?
அவர்கள் சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளை நன்கு அறிந்தவர்களாக இருக்க வேண்டும். வயதை பொறுத்தவரை, அனுபவத்தில் முதிர்ந்தவர்களாகவும், என்ன நடக்கிறது என்று அறிந்தவர்களாகவும் உள்ள முதியோர்களே மிகவும் சிறந்தவர்கள். போராட்ட அனுபவமுள்ள இளைஞர்களையும் நாம் இதில் இணைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்களிடம் முற்போக்கு சிந்தனையும் கூர்மையான பார்வையும் உள்ளது. தொழிலைப் பொறுத்தவரை, தொழிலாளிகள், விவசாயிகள், வணிகர்கள், அறிவாளிகள் ஆகியோர் அவசியம் இருக்க வேண்டும், எப்போதாவது இராணுவத்தினர் இருக்கலாம். சில சமயங்களில் நாடோடிகளையும் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட விஷயம் பற்றி ஆய்வு செய்யும் போது, அதனோடு தொடர்பற்றவர்கள் இருக்கத் தேவையில்லை. உதாரணமாக, பரிசீலனைக்கான பொருள் வர்த்தகமாக இருக்கும்போது தொழிலாளிகளும், உழவர்களும், மாணவர்களும் கலந்து கொள்வது தேவையில்லை.
படிக்க :
♦ எங்கெல்ஸ் 200 : நாம் ஏன் எங்கெல்ஸை பயில வேண்டும் | தோழர் லெனின்
♦ கம்யூனிஸ்ட்கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா? | தோழர் மாவோ
3. மிகப்பெரிய உண்மையறியும் கூட்டமா? அல்லது சிறிய கூட்டமா? எது சிறந்தது?
அது பரிசீலனை செய்பவரின் கூட்டம் நடத்தும் திறனைச் சார்ந்தது. அவர் அதில் தேர்ந்தவராக இருப்பின், இருபதும், அதற்கு மேலும் உள்ளவர்களைக் கொண்ட கூட்டத்தைக்கூட கூட்டலாம். பெரிய கூட்டங்களுக்கென்று சில நன்மைகள் இருக்கின்றன. அளிக்கப்படும் பதில்களிலிருந்து கிட்டத்தட்ட துல்லியமான புள்ளி விவரங்களைப் பெறலாம். (உதாரணமாக: மொத்த விவசாயிகளில் ஏழை விவசாயிகளின் சதவீதத்தை கண்டுபிடித்தல்) கிட்டத்தட்ட சரியான முடிவுகளைப் பெறலாம் (உதாரணமாக: சமமான நில மறு விநியோகமா, வேறுபடுத்தப்பட்ட நிலப் பகிர்வா எது நல்லது என்று கண்டுபிடித்தல்). இயல்பாகவே, பெரிய கூட்டங்களால் தீமைகளும் உள்ளன. கூட்டங்களை நடத்துவதற்கான திறமையோடு இல்லாவிடில், ஒழுங்கை நிலைநிறுத்துவது சிரமமாய் இருக்கும். எனவே பரிசீலனை செய்பவரின் திறனைப் பொறுத்தே ஒரு கூட்டத்தில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கை சார்ந்திருக்கிறது. எனினும், குறைந்தபட்சம் மூன்று பேர் இருக்க வேண்டும். இல்லாவிடில், உண்மை நிலைக்கு ஒத்துவராத அளவிற்கு அக்கூட்டங்களில் பெறப்படும் தகவல்கள் குறைவாக இருக்கும்.
4. பரிசீலனைக்கு விரிவான திட்டவரையறைகளை தயாரிக்க வேண்டும்.
முன்பாகவே, விரிவான திட்டவரையறை தயாரிக்க வேண்டும். பரிசீலனை செய்பவர் திட்டவரையறைகளின்படி கேள்வி கேட்க வேண்டும். கூட்டத்தில் பங்கேற்போர் அவர்களது பதில்களைக் கூற வேண்டும். தெளிவற்ற அம்சங்களும் சந்தேகத்திற்குரிய அம்சங்களும் விவாதத்திற்கு விடப்பட வேண்டும். விரிவான திட்டவரையறைகளில் முக்கியமான பொருட்களும், துணைத் தலைப்புகளும், விரிவான விவரங்களும் இடம்பெற வேண்டும். உதாரணமாக, வர்த்தகத்தை முக்கியப் பொருளாக எடுத்துக் கொண்டால், துணி, தானியம், இதர அத்தியாவசியப் பொருட்கள், மூலிகைகள் போன்ற துணைத் தலைப்புகளை கொண்டிருக்க வேண்டும். மீண்டும், துணி என்ற துணைத் தலைப்பின்கீழ், காளிக்கோ, வீட்டில் நெய்யப்பட்டவை, பட்டு, பளபளப்பான பட்டு போன்ற விரிவான விவரங்கள் இருக்கலாம்.
படிக்க :
♦ நவம்பர் புரட்சி 100 ஆண்டு நிறைவு : கம்யூனிசம் வெல்லும் !
♦ எஃகுறுதி வாய்ந்த கட்சி வேண்டும் | லெனின்
5. நேரடி பங்கேற்பு:
நகர அரசாங்கத்தின் தலைவர் முதல் மத்திய அரசாங்கத்தின் தலைவர் வரை, படைப்பகுதித் தலைவர் முதல் முதன்மைத் தளபதி வரை, கட்சிக் கிளையின் செயலாளர் முதல் பொதுச் செயலாளர் வரை, தலைமைப் பொறுப்பு வகிக்கும் ஒவ்வொருவரும் – மற்றும் பொருளாதார நிலைமைகளைப் பற்றி நேரடியாக பரிசீலனை செய்ய வேண்டும். அறிக்கைகள் மட்டும் படித்து, அவற்றை மட்டும் சார்ந்திருக்கக் கூடாது. பரிசீலனை செய்வதும், அறிக்கைகள் படிப்பதும் முற்றிலும் வெவ்வேறான விஷயங்கள்.
6. ஆழமாக ஆராய்க:
ஒரு குறிப்பிட்ட இடத்தின் (ஒரு கிராமமோ, நகரமோ என்று கொள்க) ஒரு குறிப்பிட்ட பிரச்சனையை (தானியம் அல்லது நாணயம் பற்றிய பிரச்சனை என்று கொள்க) பற்றி முழுமையாக அறிந்து கொள்ளும் பொருட்டு, பரிசீலனைக்கு புதியவர் எவரும் ஒன்று அல்லது இரண்டு முழுமையான பரிசீலனைகளை மேற்கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட இடம் அல்லது பிரச்சனையைப் பற்றி ஆழமாய் ஆராய்ந்தால், வேறு இடங்களில் அல்லது வேறு பிரச்சனைகளில் எதிர்காலத்தில் செய்யப்படவுள்ள தீவிர ஆய்வுகளை அது எளிதாக்கும்.
7. நீங்களே உங்கள் சொந்தக் குறிப்புகளை தயாரியுங்கள்:
பரிசீலனை செய்பவர்கள் உண்மை அறியும் கூட்டங்களுக்கு தலைமை வகித்து, அங்கிருப்பவர்களுக்கு சரியான வழிகாட்டுதலை வழங்குவதோடு நின்றுவிடாது, சொந்தக் குறிப்புகளையும் தயாரித்து, முடிவுகளை தாமே பதிவு செய்ய வேண்டும். அவருக்காக மற்றவர்களை செய்ய விடுவது நல்லது அல்ல.
(முற்றும்)
தோழர் மாவோ
நூல் : மாவோ – தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் – தொகுதி 6
கிடைக்குமிடம் : அலைகள் வெளியீட்டகம்
தொடர்புக்கு : 98417 75112
தேசியக் கடல் மீன்வள மசோதா – 2021 : கடல் வள பேரழிப்பின் ஒரு அங்கம் !
நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கூச்சல் குழப்பங்களுக்கிடையே எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் தேசியக் கடல் மீன்வள மசோதா – 2021 மோடி அரசால் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் நமது நாட்டின் 7,517 கி.மீட்டர் நீளமுள்ள கடற்கரையும் 1,382 தீவுத் திட்டுகளும் சிறப்புப் பொருளாதார மண்டலம் (Exclucive Economic Zone – EEZ) என்ற பெயரில் 23 லட்சம் சதுர கி.மீட்டர் கொண்ட கடல் பரப்பும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது.
இம்மசோதாவின்படி, இந்தியக் கடற்பகுதி மூன்றாக பிரிக்கப்படும். கரையில் இருந்து 12 கடல்மைல் வரை (22.2 கி.மீ) அண்மைக் கடல் அல்லது பிராந்தியக் கடல் என்றும், 12 முதல் 200 கடல்மைல் வரை சிறப்புப் பொருளாதார மண்டலம் என்றும், 200 கடல்மைல் பரப்புக்கு அப்பால் பன்னாட்டுக் கடல் பகுதி என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது. இதில் 12 கடல்மைல் தூரத்திற்குள் மட்டுமே நமது மீனவர்கள் மீன் பிடிக்க முடியும். 12 மைலுக்கு மேல் செல்ல ஒவ்வொரு முறையும் ஒன்றிய அரசுக்கு கட்டணம் கட்டி அனுமதி பெற வெண்டும்.
மேலும், மோட்டாரைக் கொண்டு இயங்கும் அனைத்துக் கலங்களுமே கப்பல் என வரையறுக்கிறது, இம்மசோதா. ஆகவே, வெளிப்பொருந்து இயந்திரம் பயன்படுத்தப்படும் வள்ளம், விசைப்படகுகள், 10 ஹெச்.பி. பைபர் படகுகள், நாட்டுப் படகுகள் மற்றும் கட்டுமரங்களும் கூட கப்பல்களாகக் கணக்கில் கொள்ளப்பட்டு, பன்னாட்டு கப்பல்களுக்கு இணையாக வகைப்படுத்தப்படுகிறது.
படிக்க :
♦ மீன் வளத்தையும் மீனவர்களையும் அழிக்க வரும் கடல் மீன்வள மசோதா !
♦ சிறு துறைமுகங்கள் மற்றும் ஆழ்கடல் வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் மோடி அரசு !
தமிழ்நாட்டில் உள்ள 38,000 நாட்டுப் படகுகளும், 6,000 விசைப்படகுகளும், ‘‘வணிகக் கப்பல் சட்டம் 1958’’−ன்கீழ் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அனுமதி பெறவேண்டுமென்றால் ஒவ்வொரு படகிலும் உரிமம் பெற்ற ஓட்டுனர் ஒருவரும், தொழில்நுட்ப வல்லுநர் ஒருவரும் இருக்க வேண்டும்; குறிப்பிட்ட மீன்களைத்தான் பிடிக்க வேண்டும்; மற்ற மீன்களைப் பிடித்தால் கடலில் திருப்பி விட்டுவிட வேண்டும்; குறிப்பிட்ட அளவுக்கு மேல் பிடிக்கக் கூடாது; எந்த வலையைக் கொண்டு செல்கிறோமோ அந்த வலையில்தான் பிடிக்க வேண்டும்; வலையை மாற்றினாலும் அனுமதி பெற வேண்டும் − என்றெல்லாம் விதிமுறைகளை நிர்ணயித்துள்ளது மோடி அரசு.
இவற்றை மீறினால் முதலில் அபராதம் விதிக்கப்படும்; இரண்டாம் முறை மீறினால் அபராதத்துடன் சிறைத் தண்டனை விதிக்கப்படும்; மூன்றாவது முறை மீறினால் படகு பறிமுதல் செய்யப்படுவதுடன் தொழில் செய்யவும் தடைவிதிக்கப்படும். ரூ.5,000 முதல் ரூ.20,00,000 வரை அபராதம் விதிப்பார்கள். இதில் அதிகாரிகள் வைத்ததுதான் சட்டமாகும்.

இச்சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரத்தை கடலோர போலீசு படைக்கு அளித்துள்ளது மோடி அரசு. அதிகாரிகளுக்குக் கட்டுபாடற்ற அதிகாரத்தை அளித்து, மீனவர்களைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது. அவர்கள் எப்பொழுது வேண்டுமென்றாலும் மீனவர்களின் படகுகளைச் சோதனையிட முடியும் என்பதோடு, தவறிழைக்கும் அதிகாரிகளைத் தண்டனையிலிருந்து விலக்கியும் வைக்கிறது.
இந்திய அரசியல் அமைப்பின் 7−வது அட்டவணையின் மாநிலப் பட்டியலில் மீன்வளம் இடம் பெற்றுள்ளது. ஆகவே, ஒவ்வொரு மாநிலமும் மீன்வளம் தொடர்பான விசயங்களைத் தமது அதிகாரத்திற்கு உட்பட்டுக் கையாண்டு வருகின்றன. தமிழ்நாடும் அந்த வகையில் ‘‘தமிழ்நாடு கடல் மீன் ஒழுங்குமுறைச் சட்டம் – 1983’’ என்பதை இயற்றி அதனடிப்படையில் செயல்பட்டு வருகிறது. ஆனால், தற்போது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவின் மூலம் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் மீன்வளம் சென்று விடுகிறது. இவ்வகையில், இம்மசோதா அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானதாகவும் உள்ளது.
000
1991−ல் நரசிம்மராவ் ஆட்சியின்போது அமல்படுத்தப்பட்ட தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியக் கொள்கையின் தொடர்ச்சியே இந்த மசோதா. அப்பொழுது ‘தேசிய மீன்வளக் கொள்கை−1991’−இன் கீழ் (National Fisheries Policy−1991) ‘‘கூட்டு மீன்பிடித் திட்டம்’’ (Joint ventures) என்று பன்னாட்டு ஏகபோக மீன்பிடிக் கப்பல்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. பன்னாட்டு கப்பல்கள் நவீன கருவிகளைக் கொண்டு முட்டைகள், குஞ்சுகள் வேறுபாடின்றி அப்படியே மீன் ஆதாரங்கள் அனைத்தையும் உறிஞ்சி எடுத்து, மீன்களை ரகம் வாரியாகப் பிரித்தெடுத்து இன்னொரு கப்பலுக்குக் (தாய்க்கப்பல்) கைமாற்றி விடுகின்றன. எஞ்சிய மீன் குஞ்சுகளையும், முட்டைகளையும், சில சமயங்களில் துடுப்பு வெட்டப்பட்ட சுறாவின் உடல்களையும் கழிவாகக் கடலில் கொட்டி விடுகின்றன. இந்திய மீன் வளத்தின் மீதான அழிவின் தொடக்கம் என்று நாம் இதை குறிப்பிடலாம்.
1994−ல் ‘சுதர்சன் குழு’ சில முக்கிய பரிந்துரைகளை அளித்தது. அவை: குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆழ்கடல் மீன்பிடி கப்பல்கள் கண்காணிக்கப்பட வேண்டும்; கூட்டு மீன்பிடித் திட்டத்தின்கீழ் உள்ள அனைத்து கப்பல்களிலும் இருப்பிடம் காட்டும் (GPS) தொழில்நுட்பம் நிறுவப்பட வேண்டும்; முற்றுரிமை பொருளாதாரக் கடற்பகுதியில் இயங்கும் மீன்பிடி கலன்களுக்கு அறுவடை அறிக்கை கட்டாயமாக்க வேண்டும்; பாரம்பரிய − சிறுதொழில் மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் பயிற்சி அளிக்க வேண்டும் என்றது. இவற்றை அரசு ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
மறுபுறம், பன்னாட்டு ஏகபோகக் கப்பல்கள் இந்திய மீன் வளத்தைச் சூறையாடியதால், மீன்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டது. அதே ஆண்டில் இந்திய ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட முராரி குழு முன்வைத்த, பன்னாட்டுக் கப்பல்களின் மீன்பிடி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்கிற முக்கியமான பரிந்துரையையும் பொருட்படுத்தவில்லை என்று அம்பலப்படுத்துகிறார், பேராசிரியர் வறீதையா கான்ஸ்தந்தின்.

இந்திய கடல்களில் ‘‘எத்தனை மீன்பிடிக் கப்பல்கள் இயங்கின, எந்தக் கப்பல்கள் என்னென்ன முறையில், எவ்வளவு அறுவடை நிகழ்த்தின, எவ்வளவு அறுவடையை நடுக்கடலில் (தாய்க்கப்பல்களுக்கு) மடைமாற்றின என்கிற தரவுகள் இந்திய அரசிடம் இல்லை’’ என்று நீதிமன்றமே சுட்டிகாட்டிக் கண்டிக்கும் அளவுக்கு, இந்தச் சூறாடல் தொடர்ந்தது.
இந்திய அரசின் தனியார்மய – தாராளமய – உலகமயக் கொள்கையின் மூலம் ஏகாதிபத்தியங்களுக்கு இந்திய கடல் வளங்களை கொள்ளையடிக்க கொடுத்த அனுமதிதான், கடலின் மீன் வளம் குறையவும், மீனவர்களின் வாழ்வாதாரம் வீழ்ச்சியடையவும் முக்கிய காரணங்களாகும்.
கார்ப்பரேட்டுகளின் சூறையாடலை மேலும் விரைவுபடுத்த ‘‘கடல் மீன்பிடி தொழில் ஒழுங்காற்றல் மற்றும் மேலாண்மைச் சட்டம் – 2009’’ காங்கிரஸ் ஆட்சியின் போதும், ‘‘தேசிய கடல் மீன்வள ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை மசோதா – 2019’’ பா.ஜ.க ஆட்சியின் போதும் கொண்டுவரப்பட்ட மசோதாக்கள் நாடுதழுவிய அளவில் மீனவர்களின் பரவலான எதிர்ப்பால் கைவிடப்பட்டன. ஆனால், தற்போது அதே உள்ளடக்கத்தை வேறு பெயரில் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது, மோடி அரசு.
மேலும், கடந்த ஜுலை 15-ஆம் தேதியன்று பல்வேறு உலக நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் பங்குபெற்ற உலக வர்த்தகக் கழக மாநாட்டில், ஏழை நாடுகள் தங்களது மீனவர்களுக்குக் கொடுக்கும் மானியங்களை ரத்து செய்யக்கோரி ஆணை பிறப்பித்துள்ளது. இதற்கான இரண்டு காரணங்களை உலக வர்த்தகக் கழகம் (உ.வ.க. – WTO) முன்வைக்கிறது. ஒன்று, ‘‘சட்டவிரோத, அறிவிக்கப்படாத மற்றும் ஒழுங்குப்படுத்தப்படாத மீன்பிடித்தல்’’ என்று கூறி, பதிவு செய்யப்படாத மீன்பிடி வகையினங்களைப் பிடிப்பவர்களைச் சட்டவிரோத மீன்பிடித் தொழில் செய்பவர்களாக வகைப்படுத்துவது. இரண்டாவதாக, ஏழை நாடுகளிலுள்ள மீனவர்களுக்குச் சிறப்பு மானியங்கள் அதிகமாக வழங்கப்படுவதால்தான், அந்த நாடுகளை சார்ந்த மீனவர்கள் அதிகமான அளவில் (OverFishing) மீன்களைப் பிடித்து விடுகிறார்கள். அதனால் கடல் பரப்பில் மீன்வளம் குறைந்து வருகிறது என்று குற்றம் சாட்டுகிறது.

இது உண்மையா? பல்லாயிரம் ஆண்டுகளாக மீனவர்கள் இத்தொழில் ஈடுபட்டு வருகிறார்கள். இவ்வளவு ஆண்டுகளாக அழியாத மீன்வளம் எப்பொழுது அழியத் தொடங்கியது? எப்பொழுது மீன்பிடித் தொழிலில் கார்ப்பரேட்டுகள் நுழைந்தனரோ, எப்பொழுது பன்னாட்டு பகாசுர கப்பல்கள் இத்தொழிலில் அடியெடுத்து வைத்தனவோ, அப்பொழுதிலிருந்துதான் அழியத் தொடங்கியது. உலக வர்த்தகக் கழகம் இதையெல்லாம் மறைத்துவிட்டு சிறு/குறு மீனவர்களால்தான் மீன்வளம் அழிகிறது என்று பாரம்பரிய மீனவர்கள் மீது பழிசுமத்தி, அவர்களை மீன்பிடித் தொழிலில் இருந்து அப்புறப்படுத்த முயற்சிக்கிறது. இதற்கு ஏகாதிபத்தியங்களின் அடிமையான இந்திய அரசு அடிபணிகிறது.
000
2018−ல் மரக்காணம் முதல் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி வரை 24 இடங்களில் கடல்பரப்பில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி வழங்கியது, ஒன்றிய அரசு. அதில், புதுச்சேரி அருகே மரக்காணம் முதல் கடலூர் வரை 1,794 சதுர கி.மீட்டர் கடல் பகுதியில் 4 கிணறுகளும், கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை தொடங்கி நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த புஷ்பவனம் வரை 2,574 சதுர கி.மீட்டர் கடல் பகுதியில் 4 கிணறுகளும் − என 14 கிணறுகள் கடல்பரப்பில் அமைக்கப்படும் எனக் குறிப்பிட்டிருந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ‘‘இனையம் சர்வதேச சரக்குப் பெட்டக மாற்று முனையம்’’ கொண்டுவர முயற்சி செய்து, மீனவர்கள் நடத்திய போராட்டத்தினால் தற்காலிகமாக மோடி அரசு பின்வாங்கியதையும், ‘‘இந்திய துறைமுகச் சட்ட வரைவு மசோதா – 2021’’ என்பதை இயற்றி மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள சிறிய துறைமுகங்களை ஒன்றிய அரசு தனது கட்டுபாட்டிற்குள் கொண்டு செல்ல முயற்சிப்பதையும் இதனோடு இணைத்துப் பார்க்க வேண்டும். அந்த வகையில் இந்த மசோதாவை சாகர்மாலா திட்டத்தை அமல்படுத்திக் கொண்டிருக்கும் ஒன்றிய அரசின் ஒரு பகுதியாகவே பார்க்க வேண்டும்.
சான்றாக, கடந்த மார்ச் 2-ஆம் தேதியன்று நடந்த ‘‘கடல்சார் இந்தியா மெய்நகர் உச்சி மாநாடு – 2021’’-ல் பிரதமர் மோடி பேசிய சில விசயங்களைப் பார்த்தாலே நமக்கு புரியும். ‘‘78 கலங்கரை விளக்கங்கங்களுக்கு அருகில் உள்ள நிலப்பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தும் திட்டத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இந்த முயற்சியின் முக்கிய நோக்கம், தற்போதுள்ள கலங்கரை விளக்கங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை தனிச்சிறப்பான கடல்சார் சுற்றுலா அடையாளங்களாக மேம்படுத்துவதாகும்’’; ‘‘துறைமுகம் மூலமான வளர்ச்சிக்கு சாகர்மாலா திட்டத்தை கடந்த 2016−ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, 2015−ஆம் ஆண்டு முதல் 2035−ஆம் ஆண்டு வரை 574−க்கும் மேற்பட்ட திட்டங்கள் ரூ.6,00,000 கோடி மதிப்பில் மேற்கொள்ள அடையாளம் காணப்பட்டுள்ளன.

2022−ம் ஆண்டுக்குள் இரு கடலோரப் பகுதிகளிலும், கப்பல் பழுதுபார்க்கும் மையங்கள் உருவாக்கப்படும். இரும்பு கழிவுகளில் இருந்து மீண்டும் பொருட்கள் தயாரிக்க, உள்நாட்டுக் கப்பல் மறுசுழற்சி தொழிற்சாலைகளும் ஊக்குவிக்கப்படும்’’ என்றும் மோடி பேசியுள்ளார். அந்த உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட அந்நிய முதலீட்டார்களிடம் ‘‘இந்தியாவின் நீண்ட கடற்கரையும் உங்களுக்காகக் காத்திருக்கிறது, இந்தியாவின் உழைப்பாளிகளும் உங்களுக்காகக் காத்திருக்கின்றனர், எங்கள் துறைமுகங்களில் முதலீடு செய்யுங்கள், எங்கள் மக்கள் மீது முதலீடு செய்யுங்கள், வர்த்தகத்துக்கு நீங்கள் தேர்வு செய்யும் இடமாக இந்தியா இருக்கட்டும். உங்களின் வர்த்தகத்துக்கு அழைப்பு விடுக்கும் துறைமுகமாக இந்திய துறைமுகங்கள் இருக்கட்டும்’’ என்று பிரதமர் மோடி பேசியதின் சாராம்சம், மீனவர்களை கடற்கரைப் பகுதிகளில் இருந்து விரட்டியடித்துவிட்டு, அவற்றைக் கார்ப்பரேட்டுகளிடம் தாரைவார்ப்பது என்பதல்லாமல் வேறு என்ன?
மேலும், அண்மைக்காலமாக மின்சார வாகன உற்பத்தி உலக அளவில் முன்னிலைப் பெற்று வருகிறது. இந்த மின்சார வாகன உற்பத்திக்கு அடிப்படையான கோபால்ட், நிக்கல், காப்பர், மாங்கனீசு போன்ற அரியவகை தனிமங்கள் நமது நாட்டின் கடலுக்கடியில் கிடைக்கின்றன. அந்தமான் தீவுப் பகுதிகளில் அளவிட முடியாத அளவிற்கு இயற்கை எரிவாயு, நிலக்கரி, ஹைட்ரோ கார்பன்கள், மீத்தேன் கிடைக்கின்றன. ‘‘220 டிரில்லியன் டன் அலுமினியம், 650 டிரில்லியன் டன் இரும்பு, 73 டிரில்லியன் டன் டைட்டானியம், 15 டிரில்லியன் டன் அளவுக்கு வெனடியம், காரியம், தாமிரம், கோபால்ட், நிக்கல் – என நிலத்தில் கிடைக்கும் வளங்களை விட பன்மடங்கு கடற்பகுதியில் இருக்கின்றன’’ என விகடன் இணையதளக் கட்டுரை ஒன்று கூறுகிறது. இவை மட்டுமின்றி ஆந்திரா, தமிழ்நாடு, ஒரிசா கடற்கரை பகுதி முழுவதும் ஆங்காங்கு தாது மணல்கள் பரந்துவிரிந்து கிடக்கிறது.
இத்தகைய அரியவகை கனிமங்களை வெட்டியெடுப்பதற்கான புதிய கருவிகள், கடலுக்குள் சென்று வருவதற்கான மோட்டார்கள், கடல் படுகையில் வாழும் உயிரினங்களைக் கையாளும் கருவிகள், இயந்திரங்கள் ஆகியவற்றை உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக நவீன ரோபோக்களை கொண்ட கருவிகள் உருவாக்கப்பட இருக்கின்றன. இவ்வாறான ஒரு பேரழிவை நோக்கி நம்மை அழைத்துச் செல்வதற்காக, தேசிய கடல் ஆராய்ச்சித் திட்டத்தைத் ரூ.4,077 கோடி நிதியை ஒதுக்கப்பட்டு தொடங்கி வைத்துள்ள மோடி அரசு.
இந்தத் திட்டங்களை எல்லாம் நடைமுறைப்படுத்துவதற்காக, சுற்றுச்சூழலை அழித்தாலும் பரவாயில்லை என்று மோடி அரசு வெறித்தனமாக செயல்பட்டு வருகிறது.
படிக்க :
♦ ஐ.பி.சி.சி அறிக்கை : பருவநிலை மாற்றம் குறித்த அபாய எச்சரிக்கை !
♦ குமரி மாவட்டம் : சரக்கு பெட்டகத் துறைமுகத்திற்கு எதிராகப் போராட்டம் !
புவி வெப்பமயமாதலையடுத்து உலகின் கடல் நீர்மட்டம் உயர்வது குறித்து அண்மையில் நாசா வெளியிட்ட அறிக்கையை அனைவரும் அறிவர். இதன்படி 2050−ஆம் ஆண்டுக்குள் சென்னையில் கடல் மட்டம் 1.87 அடியாகவும், தூத்துக்குடியில் 1.9 அடியாகவும் இருக்கும் எனவும், ஒட்டுமொத்தமாக இந்திய கடற்கரை சராசரியாக இரண்டு அடி உயரும் எனவும், இதனால் பல்வேறுச் சுற்றுச்சூழல் பேரழிவுகள் ஏற்படும் எனவும், இந்திய கடற்கரை ஒட்டியுள்ள சென்னை, மும்பை, தூத்துக்குடி, விசாகப்பட்டினம், கொச்சி போன்ற பெருநகரங்கள் அனைத்தும் கடலில் மூழ்கும் எனவும் ஐ.நா-வின் சுற்றுச்சூழல், பருவநிலை மாறுபாடு நிபுணர்கள் மற்றும் விஞ்ஞானிகள் இணைந்து ஐ.பி.சி.சி என்ற அறிக்கையின் மூலம் எச்சரித்துள்ளனர்.
இதற்காக சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைப்பதுதான் முக்கியமான பணி எனவும், இல்லையேல் இந்த நகரங்கள் கடலில் மூழ்குவதை யாரும் தடுக்க இயலாது எனவும் எச்சரித்துள்ளனர். ஆனால், கார்ப்பரேட் முதலாளிகளுக்குச் சேவை செய்யவே பிறந்துள்ள பாசிச மோடி அரசோ, எதைப் பற்றியும் கவலையின்றி மொத்த சமூகத்தையே அழிக்கத் துடிக்கின்றது.
அதன் ஒரு அங்கமாகவே ‘‘கடல் மீன்வள சட்டம் – 2021” கொண்டுவரப்பட்டுள்ளது. அடுத்தடுத்து காத்திருக்கும் கார்ப்பரேட் முதலாளிகளின் தாக்குதலுக்கு எதிரான மீனவர்களுடன் அனைத்து தரப்பு உழைக்கும் மக்களும் கைகோர்த்து நிற்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

உதிரன்
மாப்பிளா கிளர்ச்சியைக் கண்டு காவிக்கும்பல் அஞ்சுவது ஏன் ? || மு இக்பால் அகமது தொடர்
மாப்பிளா கிளர்ச்சி – வரலாறு – பாகம் 1
1836 தொடங்கி 1921 வரை 85 வருடங்களாக நீடித்த கிளர்ச்சி அது.
இறுதியாக, 1921 ஆகஸ்ட் மாதத்தில் 22 வட்டாரங்களில் சுமார் 10 லட்சம் மக்கள் பங்கேற்ற மாபெரும் கிளர்ச்சியில், சுமார் 10,000 பேர் மரணமுற்றனர். கொடிய அந்தமான் சிறையில் மட்டும் 3,000 பேர் கொல்லப்பட்டனர். 42 பேருக்கு பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசு ஆயுள்தண்டனை விதித்தது.
Conrod Wood என்னும் ஆங்கிலேயர் தன் ஆய்வுக்காக எழுதிய தொகுப்பை, பின்னர் the moplah rebellion and it’s Genesis என்று நூலாக வெளியிட்டார். மாப்பிளா கிளர்ச்சியும் அதன் தோற்றுவாயும் என்று தமிழில் நான் மொழிபெயர்த்தேன், அலைகள் வெளியீட்டக பதிப்பு, 2007.
100 ஆண்டுகள் கடந்த நிலையில், கிளர்ச்சியை மையமாகக் கொண்டு கேரளாவில் சில திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வருவதாக அறிகின்றோம். பிரிட்டிஷார் + ஜென்மிகள் எனப்படும் இந்து மத உயர்சாதி நிலப்பிரபுக்கள் என்ற அதிகார வர்க்க கெடுபிடிக் கூட்டணிக்கு எதிராக மாப்பிளா முஸ்லிம்கள் நடத்திய நீண்ட போராட்டம் அது. 1919-க்குப் பின் கிலாபத் இயக்கம், காங்கிரஸ் இயக்கம் ஆகியவற்றின் தலையீடு, இப்போராட்டத்தில் என்ன செய்தது என்பதும் கூடவே வாசிக்கப்பட வேண்டியது. ஒருபுறம் இக்கிளர்ச்சியை தேசபக்தப் போராடம் என்று ஒருசாராரும், இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான மதப்பிரச்சனையே இதன் மையம் என்று மறுசாராரும் வெவ்வேறு நிலைகளில் நின்று வாதிடுகின்றனர். 1980-களில் வெளியான 1921 என்ற மலையாள திரைப்படம், மாப்பிளா கிளர்ச்சியை மையமாக கொண்டதுதான்.
படிக்க :
♦ நாஜி படையை கலங்கடித்த சோவியத் வீரர் டேவிட் டஷ்மான் மறைவு || மு இக்பால் அகமது
♦ கொரோனா பெருந்தொற்று : முதலாம் அலையும் பாடமும் || இக்பால் அகமது
கான்ராட் உட் தன் நூலின் முடிவுரையில் இப்படித்தான் சொல்கின்றார்:
1921-22 மாப்பிளா கிளர்ச்சி, தெற்கு மலபார் மாப்பிளா சமூக மக்களின் வரலாற்றில் ஒரு மிகப்பெரும் திருப்புமுனை எனலாம். 1792-ல் கிழக்கிந்திய கம்பெனி வடிவில் முதல் முறையாக பிரிட்டிஷ் நிர்வாகம் நிறுவப்பட்ட நாள் தொடங்கி, பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகவும், அதன் ஆதரவோடு வளர்ந்த ஜென்மி ஆதிக்க சக்திகளுக்கு எதிராகவும் மாப்பிளா சமூக மக்கள் தொடர்ந்து நீண்ட பல ஆண்டுகளாகத் தமது எதிர்ப்பை கலகங்கள் மூலம் அறிவித்தபடியே இருந்துள்ளார்கள். தொடந்த போராட்டங்களின் இறுதி வடிவமாகவே, தீவிர மண்டலத்தை தம் ஆட்சியின் கீழ்க் கொண்டுவரும் முயற்சியாகவே 1921-22 மாப்பிளா ஆயுதம் தாங்கிய போராட்டம் வெடித்தது. ஒட்டுமொத்தமாகச் சொல்ல வேண்டுமெனில், தெற்கு உட்புற மலபாரின் பாதிக்கப்பட்ட இசுலாமிய சமூகத்தின் எழுச்சியாகத்தான் 1921-22ஆம் ஆண்டில் நடந்த மாப்பிளா கிளர்ச்சியை வரையறுக்க முடியும்.
000
இரயில் எண் 77, சரக்குப்பெட்டி எண் 1711
கோழிக்கோட்டிலிருந்து புறப்பட்ட இரயில் அது. கிளர்ச்சியின் மையமாகயிருந்த திரூருக்கு 1921 நவம்பர் 19-ஆம் தேதியன்று மாலை 6.45 மணிக்கு இரயில் வந்து சேர்கின்றது. மூடப்பட்ட சரக்கு இரயில் பெட்டி ஒன்றில் நூற்றுக்கும் மேற்பட்ட மாப்பிளா முஸ்லிம்களும் 3 இந்துக்களும் அடைக்கப்பட்டார்கள், வெளிப்புறம் தாழிடப்பட்டது. அந்த ரயிலுடன் இணைக்கப்பட்டது.
ஆடு, மாடுகளை கொண்டு செல்வதற்கான பெட்டி அது. தவிர புதிதாக பெயிண்ட் பூசப்பட்டிருந்ததால் சிறு துவாரங்களும் அடைக்கப்பட்டு காற்றுப் புகாத பெட்டி ஆனது. இவர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டவர்கள், வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்கள். ஹெட் கான்ஸ்டபிள் ஓ.கோபாலன் நாயரும் 5 கான்ஸ்டபிள்களும் அடுத்த பெட்டியில் பயணிக்க, சார்ஜெண்ட் A.H.ஆண்ட்ரூஸ் என்பவர் என்ஜினுக்கு அடுத்து இருந்த இரண்டாவது வகுப்பு பெட்டியில் பயணிக்கின்றார்.

வழி நெடுகிலும் உள்ளே இருந்தவர்கள் காற்றுக்கும் குடிநீருக்கும் கதறி கூச்சல் இட்டுள்ளார்கள். பெட்டியின் கதவை தட்டி திறக்க போராடியுள்ளார்கள். சோரனூரில் அரை மணி நேரமும் ஒலவகோட்டில் 15 நிமிடங்களும் இரயில் நின்றபோது அவர்களின் கதறல் இந்த போலீஸ்காரர்களுக்கு கேட்கவே செய்தது. தவிர பின்னர் நடத்தப்பட்ட விசாரணையின்போது சாட்சியம் அளித்த பொதுமக்கள் பலர், இரயில் சென்ற வழிநெடுக உள்ளே அடைக்கப்பட்டவர்களின் கூச்சலையும் கதறலையும் கேட்டதாக சொன்னார்கள்.
முக்கியமாக, இரவு 12.30 மணிக்கு போதனூருக்கு இரயில் வந்து சேர்ந்தபோது அதே ரயிலில் பயணித்த மஞ்சேரி ராம ஐயர் என்பவர், இறங்கி வந்து சத்தம்போட்டு பெட்டியின் கதவை திறக்கச் செய்தார். கதவு திறக்கப்பட்டது. உள்ளே அடைக்கப்பட்ட அனைவரும் மயக்கமுற்றுக் கிடந்தார்கள். 56 பேர் ஏற்கனவே இறந்துவிட்டார்கள். உடனடியாக இறந்தவர்கள் 6 பேர். 13 பேரை கோயம்புத்தூர் மருத்துவமனைக்கு எடுத்து சென்றார்கள். 25 பேரை மத்திய சிறை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். 13 பேரில் 8 பேர் பின்னர் இறந்தார்கள். ஆக மொத்தம் 70 பேர் இறந்தார்கள். கோயம்புத்தூர் மருத்துவமனையில் சிகிச்சை அளித்த மருத்துவரின் பெயர் T.ராமன்.
மெட்ராஸ் அரசு இதற்காக ஒரு விசாரணை கமிசனை அமைத்தது. விசாரணையின் முடிவில், 30.8.1922-ம் தேதியன்று அரசு பின்வரும் ஆணையை வெளியிட்டது:
“கைதிகளைக் கொண்டு செல்லும் அவசரத் தேவைக்காக ஒரு சரக்குப்பெட்டியை பயன்படுத்தியதை தவறு என்று சொல்ல முடியாது, மனிதாபிமானம் அற்ற செயல் என்றும் சொல்ல முடியாது. சார்ஜெண்ட் ஆண்ட்ரூஸ், 5 போலீஸ் ஆகியோர் மீது விசாரணை நடத்த வேண்டும்” என இந்திய அரசு, மெட்ராஸ் அரசுக்கு உத்தரவிட்டது. இறுதியில், அனைவரும் குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்பட்டார்கள்.
உயிரிழந்த 70 பேர்களின் குடும்பத்துக்கு, தலா ரூ.300 கருணைத்தொகை வழங்கப்பட்டது. (ஆணை எண் 290, 1.4.1922)
000
இரயில்பெட்டி கொடூரமரண நிகழ்வின் 93-வது நினைவு தினம் மலப்புரத்தில் திரூருக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் 2014 நவம்பர் 20-ஆம் தேதியன்று கடைப்பிடிக்கப்பட்டது. குறுவம்பலம் என்பது அக்கிராமம். இரயில்பெட்டியில் அடைக்கப்பட்டு இறந்தவர்களில் 41 பேர் இக்கிராமத்தை சேர்ந்தவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் திருமணம் ஆகாத இளைஞர்கள்.
“கிளர்ச்சியின்போது இக்கிராமத்தின் இளைஞர்கள் மிகப்பெரும் பங்காற்றியதாக முதியவர்கள் கூறுகின்றனர். மிக சமீப காலம் வரையிலும் கூட கிளர்ச்சியில் குறுவம்பலம் கிராமத்தின் பங்கு பற்றி கிராம மக்களுக்கும் வரலாற்று அறிஞர்களுக்கும் கூட தெரியாமலேதான் இருந்தது. இது குறித்து மேலும் பல ஆய்வுகளை செய்ய வேண்டியது அவசியம்” என்று சலீம் குறுவம்பலம் கூறுகிறார். இவர் 2014-ல் மலப்புரம் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர். குறுவம்பலம் கிராமத்தில் இரயில்பெட்டி தியாகிகளுக்கு நினைவுச் சின்னம் அமைப்பதில் முன்னின்றவர்.
வரலாற்றறிஞர் KKN குருப், “இரயில்பெட்டி கொடூர நிகழ்வு குறித்தும் மலபாரில் கிளர்ச்சியின்போது நிகழ்ந்த அனைத்தையும் அரசு முற்றாக ஆய்வு செய்ய வேண்டும்” என்றார். வரலாற்றறிஞர் எம்.கங்காதரன், “இரயில்பெட்டி கொடூர நிகழ்வுதான் மலபாரில் பிரிட்டிஷ் ஆட்சி நடத்திய மிகப்பெரிய கொடுமை என்று சொல்லிவிட முடியாது, சுமார் 200 மாப்பிளா இளைஞர்களை அவர்களின் வீடுகளுக்குள் இருந்து வெளியே இழுத்து வந்து அவர்களின் குடும்பத்தார் கண்ணெதிரிலேயே பிரிட்டிஷார் சுட்டுக்கொன்ற சம்பவம் 1921, அக்டோபர் மாதத்தில் நடந்தது” என்று சொல்கின்றார்.
000
1971-ல் சி.அச்சுதமேனன் முதல்வராக இருந்த இடதுசாரிகள் அரசு, மாப்பிளா கிளர்ச்சியை இந்திய விடுதலைப் போராட்ட இயக்கத்தின் ஒரு பகுதியாக அங்கீகாரம் செய்தது, கிளர்ச்சியில் பங்கு பெற்று வாழ்ந்து வந்தவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கியது. மாப்பிளா கிளர்ச்சி, பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டம் என்று பத்து வருடங்களுக்குப் பிறகு ஒன்றிய அரசும் அங்கீகாரம் அளித்து. கிளர்ச்சியில் பங்கு பெற்று வாழ்ந்து வந்தவர்களுக்கும், கிளர்ச்சியில் உயிர் இழந்தவர்களின் வாரிசுகளுக்கும் பல உதவிகளை அறிவித்தது.
திரூர் இரயில் நிலையத்தில் இரயில்பெட்டி மரணங்களை சித்தரிக்கும் சித்திரம் அழிக்கப்பட்ட வரலாறு:
திரூர் இரயில் நிலையத்தின் சுவரில் இரயில்பெட்டி கொடூரத்தில் மரணமுற்ற தியாகிகளை நினைவூட்டும் சித்திரம் இரயில்வே நிர்வாகத்தால் வரையப்பட்டது. குட்டிபுரம் என்ற ஊரை சேர்ந்த ஓவியர் பிரேமன் சித்திரத்தை வரைந்தார். 2018, நவம்பர் மாதத்தில் உள்ளூர் பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் கும்பல் இச்சித்திரத்தை அழிக்க வேண்டும் என இரயில்வே நிர்வாகத்தை வற்புறுத்தியதால் அச்சித்திரம் அழிக்கப்பட்டது.
வரலாற்றில் இருந்து நீக்கப்படும் மாப்பிளா கிளர்ச்சி தியாகிகள் வரலாறு :
கேரள அரசு 1960-களில், மாப்பிளா கிளர்ச்சியாளர்களை விடுதலைப் போராட்ட தியாகிகள் என அங்கீகரித்து தியாகிகள் பட்டியலில் சேர்த்தது. அப்போராட்டம் விவசாயிகள் புரட்சி என்றும் அடையாளப்படுத்தப்பட்டது.
இப்போது, இந்திய வரலாற்று ஆய்வுக்குழுமத்தின் மூன்று பேர் குழு ஒன்று, இரயில்பெட்டி கொடூரத்தில் மரணமுற்றோர், பிற கிளர்ச்சி தலைவர்கள் ஆகியோரை விடுதலைப் போராட்ட தியாகிகள் என அங்கீகரிக்க அவசியம் இல்லை என்று முடிவு செய்துள்ளது. Dictionary of Martyrs : India’s freedom struggle 1857-1947 என்ற நூலின் ஐந்தாவது பாகத்தில் இருந்து 387 மாப்பிளா தியாகிகளின் பெயர்களை நீக்குவது என்று முடிவு செய்துள்ளது. அதில், அலி முசலியார், வரியம்குன்னத் அஹமது ஹாஜி, அவரது இரண்டு சகோதரர்கள் ஆகியோர் பெயரும் அடக்கம்.
படிக்க :
♦ ஏகாதிபத்திய எதிர்ப்பு நினைவுச் சின்னங்களைக் கண்டு மோடி அரசு அஞ்சுவது ஏன் ?
♦ ஆனந்த் தெல்டும்டேவைக் கண்டு பாஜக ஏன் அஞ்சுகிறது ? || விஜய தாரணிஸ்
குழுமத்தின் ஒரு உறுப்பினரான C.I.ஐசக் என்பவர், “மாப்பிளாகளின் நடவடிக்கைகள் ஏறத்தாழ அனைத்துமே மத அடிப்படையிலானவை. அவர்கள் இந்து மதத்தினருக்கு எதிரானவர்கள், அவர்களின் செயற்பாடுகள் மத சகிப்பின்மையின் அடிப்படையிலானவை. இரயில்பெட்டி நிகழ்வில் இறந்தவர்களில் பலர், கிலாபத் கொடியேற்றியவர்கள், கிலாபத் நீதிமன்றம் அமைத்தவர்கள், கிலாபத் அரசை நிறுவியவர்கள். உயிரிழந்த பல மாப்பிளாக்கள், விசாரணை கைதிகளாக இருந்தபோது காலரா போன்ற நோய்களாலும், இயற்கையாகவும் இறந்தவர்கள் என்பதால் அவர்களை தியாகிகள் என்று அங்கீகரிக்க முடியாது” என்று சொல்கின்றார்.
2021, ஆகஸ்ட் 19-ஆம் தேதியன்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் ராம் மாதவ் என்பவர், 1921 மாப்பிளா கிளர்ச்சி ஆனது, இந்தியாவில் அறியப்பட்ட முதல் “தாலிபான் சிந்தனை” என்று பேசினார். கேரளாவின் இடதுசாரி அரசு, இதை மறைத்து அக்கிளர்ச்சியை கம்யூனிஸ்ட் புரட்சியாக சித்தரிக்க முயல்கின்றது என்றும் பேசினார்.
இதன் பின்னர்தான் ICHR அப்படி ஒரு முடிவை எடுத்துள்ளது.
(தொடரும்)
பாகம் 2 – மாப்பிளா கிளர்ச்சி : படுகொலைகளை அரங்கேற்றிய பிரிட்டிஷ் அரசு !

முகநூலில் : மு இக்பால் அகமது
வினவு குறிப்பு :
முகநூலில் தோழர் மு. இக்பால் அகமது எழுதிய 8 பாகத் தொடரை, நான்கு பாகங்களாக மாற்றி இங்கு தொடராக வெளியிடுகிறோம். நன்றி !!
‘‘திராவிட மாடல்’’ ஆட்சி : கார்ப்பரேட் சேவை ! காவியுடன் சமரசம் !!
தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு பரவலாக ஒரு பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்படுகிறது. மற்ற கட்சிகளைப்போல இல்லாமல், தி.மு.க-வானது கொள்கை வழிப்பட்ட அரசியலை முன்வைப்பதாகவும், திராவிடம் − சமூக நீதிதான் தி.மு.க-வின் கொள்கை என்பதாகவும் பேசப்படுகிறது. தனியார்மயம் − தாராளமயம் என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளுக்கு அனைத்தையும் வாரிக் கொடுக்கும் மோடியின் ‘‘குஜராத் மாடலுக்கு’’ எதிராக ஒடுக்கப்பட்ட மக்கள், பெண்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் − என அனைத்து தரப்பு மக்களையும் முன்னேற்றத்தை நோக்கி அழைத்துச் செல்லும் பாதையாக ‘‘திராவிட மாடல்’’ இருப்பதாக பிரச்சாரம் செய்யப்படுகிறது.
‘‘தமிழகத்தில் அனைத்துச் சமூகங்களையும், அனைத்து மாவட்டங்களையும், அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளர்ச்சிதான் தி.மு.க−வின் ‘திராவிட மாடல்’… ‘‘தொழில் வளர்ச்சி, சமூக மாற்றம், கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும். வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமல்ல; சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும். பொருளாதாரம், கல்வி, சமூகம், சிந்தனை, செயல்பாடு − ஆகிய ஐந்தும் ஒருசேர வளர வேண்டும். அதுதான் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், கருணாநிதியும் காண விரும்பிய வளர்ச்சி. அதுதான் திராவிட மாடல் வளர்ச்சி’’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பொருளாதார வளர்ச்சிக் குழு கூட்டத்தில் பேசியுள்ளார்.
படிக்க :
♦ தூய்மைப் பணியாளர்கள் : எடப்பாடியின் துரோகத்தைத் தொடரும் ஸ்டாலின் !
♦ நாசகர கிடெக்ஸ் நிறுவனத்துக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் திமுக அரசு !
ஆட்சிக்கு வந்தவுடன் ஆவின் பால் விலைக் குறைப்பு, பெண்களுக்கு நகரப் பேருந்துகளில் (சாதாரணப் பேருந்துகளில்) இலவச பயணம், ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2,000 கொரோனா நிவாரண நிதி, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம், தனியார் மருத்துவமனைகளிலும் மருத்துவக் காப்பீட்டு அட்டை மூலம் இலவசமாக கொரோனா சிகிச்சையைப் பெற்றுக் கொள்ளலாம் − என ஐந்து திட்டங்களை முதல் கோப்பிலேயே கையெழுத்திட்டுச் செயல்படுத்தியுள்ளது, தி.மு.க. அரசு.
இத்துடன் மு.க.ஸ்டாலினைத் தலைவராகக் கொண்டு மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழு ஒன்றையும் தி.மு.க அரசு உருவாக்கியுள்ளது. இதன் துணைத் தலைவராக, பா.ஜ.க விமர்சகராகவும் பொதுவில் திராவிட இயக்க ஆதரவாளரகவும் அறியப்பட்ட பேராசிரியர் ஜெரஞ்சன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

முக்கியமாக இந்தக் குழுவில், சித்த மருத்துவர் கு.சிவராமன், முனைவர் நர்த்தகி நடராஜ், பேராசிரியர்கள் ராம.சீனுவாசன், ம.விஜயபாஸ்கர், சுல்தான் அஹ்மத் இஸ்மாயில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி மு.தீனபந்து, எம்.எல்.ஏ.வாகிய டி.ஆர்.பி. ராஜா, தொழிலதிபர் மல்லிகா சீனிவாசன், மருத்துவர் ஜோ.அமலோற்பவநாதன் போன்ற சமூக அக்கறை கொண்ட அறிவாளிப் பிரிவினர் இடம் பெற்றிருப்பதால், தி.மு.க அரசு முற்போக்கு பாதையில் நடைபோடுவதாக நகர்ப்புற படிப்பாளிகள் பாராட்டி வருகின்றனர்.
இதுமட்டுமின்றி, முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக் குழுவில் பொருளாதார நிபுணர்களான ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், மோடி அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், முன்னாள் நிதித்துறை செயலாளர் எஸ்.நாரயணன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளாதார நிபுணர் எஸ்தர் டப்ளோ, ராஞ்சி பல்கலைக் கழக பேராசிரியான ஜீன் ட்ரெஸ் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
தி.மு.க அரசின் இந்த நடவடிக்கையை, ‘‘தி எக்கானமிஸ்ட்’’ என்ற பிரபலமான ஆங்கிலப் பத்திரிக்கையானது, ‘‘உலகப் புகழ் பெற்ற ஐந்து சூப்பர் ஸ்டார் பொருளாதார அறிஞர்களைத் தமது ஆலோசகர்களாக நியமித்ததன் மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளார்’’ என்றும், ‘‘திராவிடன் ஸ்டாலின்’’ என்றும் பாராட்டியுள்ளது.
முக்கியமாக, மோடி அரசின் சில நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் பழிவாங்கப்பட்ட ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்ரமணியன் போன்றவர்கள், கார்ப்பரேட்டுகள் நலனைவிட மக்கள் நலனை முன்னிறுத்தும் பொருளாதார அறிஞர்கள் என்று ஊடகங்கள் பாராட்டுகின்றன. இதன் தொடர்ச்சியாக தி.மு.க அரசு முன்வைத்த இடைக்கால நிதிநிலை அறிக்கையை (ஆறு மாதங்களுக்கானவை) ‘‘திராவிட மாடல் வளர்ச்சி’’, ‘‘பொற்கால ஆட்சி’’ என்று திராவிட இயக்கப் பத்திரிகைகள் புகழ்ந்து கொண்டிருக்கின்றன.
இவ்வாறெல்லாம் போற்றிப் புகழப்படும் தி.மு.க அரசின் கொள்கைகளும் திட்டங்களும் உண்மையில் பொற்கால ஆட்சிக்குள் நம்மை கொண்டு செல்லுமா என்பதே நாம் கவனிக்க வேண்டிய விசயம்.
ஸ்டாலினின் பொருளாதார ஆலோசகர்களான ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்ரமணியன் போன்றவர்கள், உண்மையில் புதிய தாராளவாதத்தின் தேர்ந்த அறிஞர்களாவர். இவர்கள் ஏகாதிபத்திய நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவமும் கொண்டவர்கள். ஏகாதிபத்தியச் சேவையில் சிறந்து விளங்கியதால்தான் இவர்கள் முதலாளித்துவப் பொருளாதார அறிஞர்களால் மெச்சிப் புகழப்படுகிறார்கள்.

2014−ல் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தபோது, நிர்மலா சீதாராமன் முன்னிறுத்தப்பட்டு நிதியமைச்சராக்கப்பட்ட அதேபாணியில்தான், இன்று பி.டி.ஆர்.பழனிவேல் ராஜனும் தேர்தல் நேரத்தில் முன்னிறுத்தப்பட்டு திடீரென நிதி அமைச்சராக்கப்பட்டுள்ளார். இவர், லேமன் பிரதர்ஸ், ஆஃப்ஷோர் கேபிடல் மார்க்கெட்ஸ், சிங்கப்பூரில் ஸ்டாண்டர்ட் − சார்ட்டட் வங்கி ஆகியவற்றில் முக்கியமான பொறுப்புகளை வகித்துள்ளார் என்று கூறி ஊடகங்கள் பெருமைப்பட்டுக் கொள்கின்றன. ஆம்! இந்த நிறுவனங்கள் அனைத்தும் உலக அளவில் ஆதிக்கத்தில் இருக்கின்ற ஏகாதிபத்திய நிறுவனங்கள். இந்த ஏகாதிபத்திய நிறுவனங்களுக்குச் சேவை செய்து நற்சான்றிதழ் வாங்கிய இவர்தான், மக்களுக்கு சேவை செய்வதற்கு திட்டமிட்டுக் கொடுப்பார் என்று நம்மை நம்பச் சொல்கிறார்கள்.
இன்று தி.மு.க-வில் முன்னணியில் இருக்கும் தயாநிதிமாறன், கலாநிதிமாறன், ஜெகத்ரட்சகன், டி.ஆர்.பாலு, துரைமுருகன் போன்ற பல தலைவர்கள் பல்லாயிரம் கோடிகளுக்கு சொந்தக்காரர்களான கார்ப்பரேட் முதலாளிகளாக இருக்கின்றனர். இவர்களது வாரிசுகள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான கல்வியைப் பயின்று வளர்ந்தவர்கள். இந்த இரண்டாம் தலைமுறையினர் இன்று தி.மு.க-வில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இதனால்தான் தி.மு.க-வின் அணுகுமுறை அனைத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களின் உத்தியைப் போலவே அமைந்துள்ளதை யாவரும் உணர முடியும்.
தி.மு.க அரசின் கார்ப்பரேட் பாணியில் மேற்கொள்ளப்படும் ஆட்சியானது, நிர்வாகத்தில் செய்துள்ள ஒரு விசயத்தை மட்டும் இங்கே கவனத்திற்கு கொண்டு வருகிறோம். தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் அனைத்து துறைகளின் உயரதிகாரிகள், துறைத் தலைவர்கள் மாற்றப்பட்டிருப்பது அனைவரும் அறிந்ததே. இறையன்பு, உதயசந்திரன் போன்ற நேர்மையான அதிகாரிகளுக்கு முக்கிய பொறுப்புகள் கொடுத்ததை மட்டும்தான் பலரும் கவனித்துள்ளனர். அதேவேளையில், கீழ்நிலையில் இருந்து பதவி உயர்வு பெற்று உயர் பதவிகளுக்கு வரும் முறையை தி.மு.க அரசு முற்றிலுமாகக் கைவிட்டு, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே அதிகாரிகளாகவும் துறைத் தலைவர்களாகவும் நியமித்துள்ளது.
தி.மு.க அரசின் இந்த அணுகுமுறைக்கு அரசு ஊழியர் சங்கங்கள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. மக்களுடன் தொடர்புடைய அதிகாரிகள் உயர் பதவிகளுக்கு செல்வதன் அவசியத்தை அவை வலியுறுத்தியுள்ளன. தி.மு.க அரசின் இந்த அணுகுமுறையால் அரசு ஊழியர்கள் மீது அடக்குமுறை மேலும் அதிகரிக்கும் என்றும், மக்கள் பிரச்சினைகள், நடைமுறை அறிவு போன்றவை புறக்கணிக்கப்படுவதால் குழப்பங்கள் விளையும் என்றும் தெரிவித்துள்ளன.
000
பா.ஜ.க தலைமையிலான பாசிச மோடி அரசின் பகிரங்கமான கார்ப்பரேட் சேவைகளுக்கும், ‘‘மனித முகம் கொண்ட புதிய தாராளவாதம்’’ என்று பேசும் காங்கிரசு, அனைவரையும் உள்ளடக்கிய ‘‘திராவிட மாடல்’’ வளர்ச்சி என்று பேசும் தி.மு.க போன்ற கட்சிகளுக்குக்கும் இடையில் உள்ள வேறுபாடு ஒன்று மட்டும்தான். மக்கள் நலத் திட்டங்கள் என்பதை முற்றாகவே உதறிவிட்டு அப்பட்டமான கார்ப்பரேட் கொள்ளையை அமல்படுத்துவதுதான்
மோடி அரசின் கொள்கை என்றால், சோளப்பொரிகளைப் போல பெயரளவிலான சில மக்கள் நலத்திட்டங்களை அறிவித்துவிட்டு, அதன்மூலம் தோற்றுவிக்கப்படும் கவர்ச்சிக்குப்பின் முடிந்த அளவு கார்ப்பரேட் கொள்ளையை மக்களின் எதிர்ப்பில்லாமல் நடைமுறைப்படுத்த முயலுவதுதான் காங்கிரசு − தி.மு.க உள்ளிட்ட எதிர்த்தரப்பு அரசுகளின் கொள்கையாகும்.
1990−களில் தனியார் − தாராளமயம் − உலகமயம் எனும் மறுகாலனியக் கொள்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறைக்கு வந்தது முதல் எல்லா ஓட்டுக் கட்சிகளும் கொள்கை − கோட்பாடு என்பதையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டன. தங்களது பிழைப்புக்கு எந்த இடையூறும் வராமல் கமிஷனடிப்பதும் கல்லா கட்டுவதும்தான் எல்லா ஓட்டுக் கட்சிகளுடைய ஒரே கொள்கையாக மாறிப்போயுள்ளது.
கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, உணவு, குடிநீர் உள்ளிட்ட மக்களின் அடிப்படை உரிமைகளை நிறைவேற்றிக் கொடுப்பதையெல்லாம் அரசு தன் பணியாக மேற்கொள்ளக் கூடாது; அனைத்தையும் சந்தைக்கு திறந்துவிட்டுவிட்டு, பொதுத்துறைகளைத் தனியாருக்கு தாரைவார்த்துவிட்டு, வெறும் நிர்வாக வேலைகளை மட்டும் பார்க்க வேண்டும்; போலீசு − இராணுவம் − அதிகார வர்க்கத்தை வைத்துக்கொண்டு சட்டம் − ஒழுங்கைப் பராமரிப்பது மட்டுமே அரசினுடைய வேலையாக இருக்க வேண்டும் − என்று ஆணையிடுகின்றன, உலக வங்கியும் உலக வர்த்தகக் கழகமும். இதைத்தான் ‘‘குறைந்த அரசு – நிறைந்த நிர்வாகம்’’ என்று புதிய தாராளவாதிகள் சிலாகித்துப் பேசுகின்றனர்.
காங்கிரசோ, பா.ஜ.க.வோ – அ.தி.மு.க.வோ, தி.மு.க.வோ எந்தக் கட்சியாக இருந்தாலும் இந்த பாதையில்தான் அவர்கள் செல்கிறார்கள்; இந்தப் பாதையில் மட்டுமே அவர்களால் செல்ல முடியும் என்பதுதான் விதி. ஆகவே இதிலிருந்து தி.மு.க-வை விலக்கிவைத்துவிட்டுச் சிந்திப்பதே வேடிக்கையான ஒன்றாகும்.
ஆவின் பாலை விலைக் குறைப்பு, பெட்ரோல் − டீசல் விலை குறைப்பு, பெண்களுக்கு இலவச பயணம் போன்ற அறிவிப்புகள் மக்கள் நலத் திட்டங்களைப் போலத் தோன்றலாம். ஆனால், கொள்கை − கோட்பாடு அற்றுப்போன ஓட்டுக் கட்சிகளுக்கு மக்களின் ஓட்டுக்களை கவர்ந்து ஆட்சியதிகாரத்தை பிடிக்க இதுபோன்ற கவர்ச்சி − இலவசத் திட்டங்களை அறிவிக்க வேண்டியிருப்பது ஒரு அவசியத் தேவையாக இருக்கிறது.
ஜெயலலிதா ஆட்சியில் ’புரட்சி’த் தலைவி அம்மா விலையில்லா ஆடு−மாடு வழங்கும் திட்டம், விலையில்லா மிக்சி − கிரைண்டர் வழங்கும் திட்டம், விலையில்லாத நூறு யூனிட் மின்சாரத் திட்டம் போன்ற திட்டங்கள் கொண்டுவரப்படவில்லையா? ஏன், 2014−ல் ஆட்சியில் அமர்ந்த மோடி அரசு கூட கழிவறை கட்ட மானியம், முத்ரா கடன் திட்டம், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 போன்ற திட்டங்களைக் கொண்டுவரவில்லையா? – இவையெல்லாம் எந்தளவுக்கு நடைமுறையில் மக்களுக்கு பலனளித்தன என்பது வேறு விவகாரம்.
இவைகளெல்லாம் ஓட்டு அறுவடைக்காக கொடுக்கப்படும் ‘‘கவர்ச்சிவாத’’ அறிவிப்புகளே. அனைவருக்கும் தரமான கல்வி, அனைவருக்கும் தகுதிக்கேற்ற வேலை, வேலைக்கேற்ற ஊதியம், தரமான மருத்துவம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை இக்கவர்ச்சித் திட்டங்கள் எந்த வகையிலும் ஈடேற்றவில்லை என்பதுதான் வரலாறு.
கல்வியிலும் மருத்துவத்திலும் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களைப் புகுத்திவிட்டு, தனியார் பள்ளியில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவிகித இட ஒதுக்கீடு, தனியார் மருத்துவமனைகளில் மருத்துவம் பார்த்துக் கொள்ள இலவச மருத்துவக் காப்பீடு திட்டம் போன்றவற்றையும் அமல்படுத்துகின்றன, இந்த ஓட்டுக் கட்சிகள். இவையெல்லாம், உழைக்கும் மக்களைக் கல்வியிலும் மருத்துவத்திலும் தனியார்மயத்தை ஏற்றுக்கொள்ள வைக்கும் வஞ்சகத் திட்டங்கள் என்றுதானே சொல்ல வேண்டும்?
இவ்வாறு, தமிழகத்தில் சில கவர்ச்சிவாத சமூக நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதைக் காட்டியும், பா.ஜ.க-வும் காங்கிரசும் ஆட்சி செய்த பின்தங்கிய வட மாநிலங்களுடன் ஒப்பீடு செய்தும், இது திராவிட இயக்கங்களின் சாதனை என்று சிலர் மெச்சிப் புகழ்கின்றனர். குஜராத்தைப் பாருங்கள், உ.பி-யைப் பாருங்கள், தமிழகமும் கேரளமும் எந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறது என்று உங்களுக்குப் புரியும் என்று சிலர் கூறுகின்றனர்.

இவ்வாறு ஒப்பீடு செய்து தங்களை நியாயப்படுத்திக் கொள்வது என்பது ஒருவகை தாழ்வு மனப்பான்மையே. இவர்கள் யாரும் 30 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழக மக்களின் வாழ்க்கைத் தரத்துடன் இன்றைய வாழ்க்கைத் தரத்தை ஒப்பிட்டுப் பேசுவதற்குத் தயாராக இல்லை.
தனியார் பள்ளிகளில் நடக்கும் படுகொலைகளும், ஆரம்ப சுகாதார நிலையம் முதல் தலைமை மருத்துவமனை வரை அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பதும், டெங்கு நோய் மரணங்களைத் திட்டமிட்டு அரசே மறைத்ததும், தருமபுரி அரசு மருத்துவமனையில் பச்சிளங் குழந்தைகள் கொத்துக் கொத்தாக இறந்துபோனதும் போன்ற பல அவலங்கள், ஆட்சியில் இருக்கும் கட்சிகளின் கவனக்குறைவால் ஏற்பட்ட தவறுகள் என்று கருத முடியுமா? வாழ வழியற்றுப்போய், பிழைப்புக்காக நாடோடியாக அலைந்து, தமிழக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைமை ஏற்பட்டு குடும்ப அட்டைதாரருக்கு விலையில்லா அரிசி வழங்க வேண்டியிருப்பதும், அம்மா உணவகங்களும் தமிழக அவலநிலையின் சாட்சியங்கள். இவையெல்லாம் கழகங்களின் ‘பொற்கால’ ஆட்சிகளது விளைவுகள்.
‘‘நீங்கள் தி.மு.க-விடம் சோசலிசத்தை எதிர்ப்பார்க்காதீர்கள்’’ என்று சிலர் அறிவுரை கூறுகின்றனர். எனில், அனைத்து மக்களுக்குமான அரசு, பொற்கால ஆட்சி, திராவிட ஆட்சி என்று தி.மு.க-வும் அதனை ஆதரிப்பவர்களும் பேசுவது எதற்காக?
‘‘இன்று நமது நாட்டில் ஆர்.எஸ்.எஸ் − பா.ஜ.க தலைமையிலான காவி – கார்ப்பரேட் பாசிசம்தான் மக்களின் முதல் எதிரி; இந்த எதிரியை வீழ்த்த சாத்தியமான அனைத்து சக்திகள், கட்சிகளுடன் ஒன்றிணைந்து போராட வேண்டும்; தமிழகத்தில் தி.மு.க-தான் பெரிய கட்சி; இது ஓரளவிற்கு பா.ஜ.க-வை எதிர்க்கிறது; ஆகையால், தி.மு.க ஆட்சிக்கு வரவேண்டும்” − என்று பேசியவர்கள் பலரும், இன்று தி.மு.க-வின் யோக்கியதையைக் குறித்து பேச முன்வருவதில்லை.
எல்லா ஓட்டுக் கட்சிகளைப்போல தி.மு.க-வும் இலஞ்ச − ஊழல் முறைகேடுகளுக்கு உட்பட்டதுதான்; குடும்ப அரசியல், சாதி அரசியல், காசு கொடுத்து ஓட்டு வாங்குவது, கவர்ச்சி அரசியல், பிழைப்புவாதம், கார்ப்பரேட் சேவை − என அனைத்தும் தி.மு.க-விடம் மலிந்து கிடக்கின்றன. டாஸ்மாக் விவகாரம் முதல் ஸ்டெர்லைட் வரை அனைத்திலும் தி.மு.க சந்தர்ப்பவாதமாகவும் தேர்தல் வாக்குறுதிகளுக்கு எதிராகவும்தான் செயல்படுகிறது.
கார்ப்பரேட் பாணியிலான நேர்த்தியான சமூக உணர்திறன், புதிய முலாம் பூசப்படும் அதே பழைய கவர்ச்சிவாதம் (சமூக நீதி, நலத்திட்டங்கள்), ஊடக செல்வாக்கு ஆகியவற்றின் மூலம் சமூகத்தின் முன்னால் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வது, பொதுச்சொத்தைக் கார்ப்பரேட்டுகளுக்கு வாரிக்கொடுப்பது, வளர்ச்சி என்ற பெயரில் கார்ப்பரேட் சுரண்டலையும் கொள்ளையையும் நியாயப்படுத்துவது, தனது கட்சிக்காரர்களுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் முறையான சலுகைகளையும் வாய்ப்புகளையும் வழங்குவற்கான ஏற்பாடு செய்வது என்பதுதான் தி.மு.க-வின் ‘பொற்கால’ ஆட்சி 2.0.
பாசிசத்தை எதிர்க்கும் விசயத்தில், தி.மு.க-வுடன் ஐக்கிய முன்னணி அமைப்பதும் கூட்டணி அமைப்பதும் ஒருபக்கம் இருக்கட்டும். பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணியிலோ, கூட்டணியிலோ அங்கம் வகிக்கும் கட்சியை விமர்சிக்கவே கூடாது என்பது என்ன வகையான அணுகுமுறை என்பதை தி.மு.க ஆட்சியை வலிந்து ஆதரிப்பவர்கள்தான் விளக்க வேண்டும்.
படிக்க :
♦ திமுக-வின் எதிரி ஆர்.எஸ்.எஸ் அல்ல – பாஜக மட்டுமே || ர.முகமது இல்யாஸ்
♦ ‘சிங்காரச் சென்னை’ : ஆர்.கே நகர் வீடுகளை இடித்த திமுக அரசு !
காவி – கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் சாத்தியமான அனைத்து கட்சிகளுடன் ஐக்கியத்தை உருவாக்கிக் கொள்வதென்பது அவசியத் தேவையாகும். அதேவேளையில், பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் சமரசமாகச் செல்லும் கட்சிகளின் சந்தர்ப்பவாதத்தையும் மக்கள் விரோதச் செயல்பாடுகளையும் அம்பலப்படுத்த வேண்டும். இதுதான் ஜனநாயக பூர்வமான ஐக்கிய முன்னணியை அமைப்பதற்கான முன்தேவையாகும்.
பாசிசத்தை எதிர்ப்பதாகக் கூறிக்கொள்கின்ற கட்சிகளின் சந்தர்ப்பவாதங்கள், ஊழல்கள், முறைகேடுகள், அராஜக செயல்பாடுகளைத் தனது அடித்தளமாக அமைத்துக் கொண்டுதான் பாசிசம் அரங்கேறுகிறது என்பது அரிச்சுவடியாகும். இந்த உண்மையை மறந்துவிட்டு, தி.மு.க-விற்கு விமர்சனமற்ற, நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்பதென்பது தி.மு.க-விற்கும் கார்ப்பரேட் கொள்ளைக்கும் காவி பாசிசத்துக்கும் உழைக்கும் மக்களை அடிமைப்படுத்துவதாகும்; புரட்சிகர ஜனநாயக சக்திகள் தங்களது முன்முயற்சியைக் கைவிடுவதாகும்.

சந்திரசேகர்
பழமைவாத எண்ணங்களை மாற்றிக் கொள்வீர் || தோழர் மாவோ
பாகம் 1 : புத்தக வழிபாட்டை எதிர்ப்போம் || தோழர் மாவோ
பாகம் 2
5. வர்க்க சக்திகள் பற்றி சரியான மதிப்பீட்டிற்கு வருவதும், மேலும் போராட்டத்திற்கான சரியான உத்திகளை வகுப்பதுமே சமூக மற்றும் பொருளாதார பரிசீலனையின் நோக்கம்
சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளை ஏன் பரிசீலனை செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு கீழ்க்கண்டதுதான். நமது பதில், அனைத்து சமூக வர்க்கங்களே, நமது பரிசீலனையின் நோக்கங்கள் – பிளவுபட்ட சமூகம் பற்றி அல்ல.
அண்மைக் காலமாக, செம்படையின் நான்காவது படையில் இருக்கும் தோழர்கள் தீவிர ஆய்வுப் பணிக்கு3 பொதுவான கவனம் செலுத்தி வருகின்றனர்; ஆனால் அவர்களில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் வழிமுறைகள் தவறானவை. ஒரு மளிகைக் கடைக்காரரின் கணக்கு வழக்கு போன்று அவர்களது விசாரணையின் விளைவு அற்பமாக அமைகிறது, அல்லது மலை உச்சியிலிருந்து மக்கள் தொகை மிகுந்த ஒரு மாநகரத்தைக் காணும் தொலைவுப் பார்வை போல் இருக்கிறது, அல்லது நகரத்திற்கு வரும் நாட்டுப்புறத்தான் கேட்கும் விநோதக் கதைகள் போல் இருக்கின்றன. இது போன்ற பரிசீலனைகளால் சிறிதும் பயனில்லை; அவை நமது முக்கிய நோக்கத்தை நிறைவேற்றா. பல்வேறு சமூக வர்க்கங்களின் பொருளாதார மற்றும் அரசியல் சூழ்நிலைகளைப் பற்றி அறிவதுதான் நமது முக்கிய நோக்கம்.
நமது பரிசீலனையின் முடிவு ஒவ்வொரு வர்க்கத்தின் தற்போதைய சூழ்நிலையை படம் பிடிப்பதாகவும் அவற்றின் வளர்ச்சியின் ஏற்ற இறக்கங்களை சித்தரிப்பதாகவும் இருக்க வேண்டும். உதாரணமாக, விவசாயத் துறையின் உள்ளடக்கம் பற்றி நாம் பரிசீலனை செய்யும்போது, குத்தகை உறவை ஒட்டி வகைப்படுத்தப்பட்டுள்ள உடைமைக்கார விவசாயிகள், அரை உடைமைக்கார விவசாயிகள் மற்றும் குத்தகை விவசாயிகள் ஆகியோரின் எண்ணிக்கையை மட்டும் அறிந்தால் போதாது; வர்க்கத்தின் அடிப்படையிலும், பொருளாதார படிநிலையின் அடிப்படையிலும் வகைப்படுத்தப்பட்ட பணக்கார விவசாயிகள், நடுத்தர விவசாயிகள் மற்றும் ஏழை விவசாயிகளின் எண்ணிக்கையையும் அறிய வேண்டும்.
படிக்க :
♦ ஒரு தலைப்பட்சமான பார்வை தீர்வு தராது | தோழர் மாவோ
♦ கம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீர்செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் | தோழர் மாவோ !
வணிகர்களின் உள்ளடக்கம் பற்றி பரிசீலனை செய்யும்போது, தானியம், துணி, மூலிகைகள் என்று ஒவ்வொரு வணிகத்திலும் ஈடுபடுவோர் பற்றி மற்றும் அறிந்தால் போதாது; குறிப்பாக சிறு வணிகர்கள், நடுத்தர வணிகர்கள் மற்றும் பெரும் வணிகர்களின் எண்ணிக்கையை அறிய வேண்டும். ஒவ்வொரு வணிகத்தின் நிலையை மட்டும் பரிசீலனை செய்தால் போதாது; குறிப்பாக அவற்றுக்குள் நிலவும் வர்க்க உறவு முறையையும் பரிசீலனை செய்ய வேண்டும். வெவ்வேறு வர்த்தகங்களுக்கிடையே உள்ள உறவுமுறையை மட்டும் ஆய்வு செய்தால் போதாது; குறிப்பாக வெவ்வேறு வர்க்கங்களிடையே நிலவும் உறவு நிலையையும் பரிசீலனை செய்ய வேண்டும்.
வேறுபட்ட சமூக வர்க்கங்களைப் பகுத்தாய்வு செய்வதே நமது தீவிர ஆய்வின் முதன்மையான வழிமுறையாக இருக்க வேண்டும். வர்க்க சக்திகளின் சரியான மதிப்பீட்டிற்கு வரும் பொருட்டு, வர்க்கங்களுக்கிடையேயான உறவு நிலையைப் புரிந்து கொள்வதே நமது பரிசீலனையின் இறுதி நோக்கமாக இருக்க வேண்டும். பிறகு, புரட்சிகர போராட்டத்தில் முக்கிய சக்தி எது, நமது கூட்டாளிகளாக வென்றெடுக்கப்பட வேண்டிய வர்க்கம் எது, தூக்கியெறியப்பட வேண்டிய வர்க்கம் எது என்று விவரித்து சரியான வியூகம் வகுக்க வேண்டும். இதுதான் நமது ஒரே முக்கிய நோக்கமாகும்.
பரிசீலனை தேவைப்படும் சமூக வர்க்கங்கள் எவை? அவையாவன :
தொழிற்துறை பாட்டாளிகள், கைவினைத் தொழிலாளர்கள், பண்ணைத் தொழிலாளிகள், ஏழை விவசாயிகள், நகரத்து ஏழைகள், உதிரிப் பாட்டாளிகள், தேர்ந்த கைவினைஞர்கள், சிறு வணிகர்கள், நடுத்தர விவசாயிகள், பணக்கார விவசாயிகள், நிலச்சுவான்தார்கள் வணிக முதலாளிகள், தொழிற்துறை முதலாளிகள்.
நமது பரிசீலனையில் இந்த வர்க்கங்கள் அல்லது சமூக படி நிலைகள் பற்றி கவனம் செலுத்த வேண்டும். நாம் பணியாற்றும் தளங்களில் தொழிற் துறை பாட்டாளிகள், தொழிற்துறை முதலாளிகள் மட்டுமே இடம்பெறவில்லை; மற்ற வர்க்கத்தினரையும் தொடர்ந்து நமது பணிகளுக்கிடையே சந்தித்து வருகறோம். இந்த அனைத்து வர்க்கங்கள் மற்றும் அதன் சக படிநிலைகள் தொடர்பானவைதான் நமது போராட்ட உத்திகள்.
நகரங்களைப் புறக்கணித்து கிராமப்புறப் பணிகளுக்குத் தேவைக்கு அதிகமான அழுத்தம் அளித்தது நமது கடந்த கால பாரிசீலனையின் கடுமையான குறைபாடாகும். அதனால் பல தோழர்கள் நகர ஏழைகள் மற்றும் வணிக முதலாளிகள் பற்றி நமது உத்திகள் பற்றி மேலெழுந்தவாரியாகவும், தெளிவின்றியும் அறிந்துள்ளனர். மலைகளை விட்டு இறங்கி சமவெளிக்கு நாம் வருவதற்குப் போராட்டத்தின் வளர்ச்சி உதவியுள்ளது.4 உடல் ரீதியாக நாம் மலையிலிருந்து இறங்கியிருப்பினும், மனதளவில் நாம் இன்னும் மலையின் மீதே இருக்கிறோம். நாம் நகர்ப்புறம் மற்றும் கிராமப் புறம் இரண்டையுமே புரிந்துகொள்ள வேண்டும். இல்லாவிடில், புரட்சிகர போராட்டத்திற்குத் தேவையானவற்றை தருவதற்கு நம்மால் இயலாமல் போகும்.
0-0-0
6. சீனத் தோழர்கள் சீனாவின் நிலைமைகளைப் புரிந்து கொள்வதிலிருந்தே சீன புரட்சிகர போராட்டத்தின் வெற்றி சார்ந்துள்ளது.
ஜனநாயக கட்டம் மூலம் பொதுவுடைமையை அடைவதே நமது போராட்டத்தின் நோக்கமாகும். நிலஉடைமை வர்க்கம், ஏகாதிபத்தியம் மற்றும் கோமின்டாங் ஆட்சியாளர்களை தூக்கி யெறியும் பொருட்டு உழைக்கும் வர்க்கத்தினரை வென்றெடுத்து, உழவர் பெருந்திரளையும், நகர்ப்புற ஏழைகளையும் எழுச்சியுறச் செய்யும் ஜனநாயகப் புரட்சியை முழுமையடையச் செய்வதே இந்தக் கடமையின் முதல் அடியாகும். இந்தப் போராட்டத்தின் வளர்ச்சிப் போக்கில் அடுத்த அடியாக சோசலிசப் புரட்சி தொடர்ந்து நடத்தப்படும். இந்த மகத்தான புரட்சிகர கடமையை நிறைவேற்றுவது எளிதானதோ, எளிமையானதோ இல்லை. பாட்டாளி வர்க்க கட்சியின் சரியான மற்றும் உறுதியான உத்திகளை சார்ந்தே இப்புரட்சிகர கடமை வெற்றிபெறும்.
போராட்டத்தின் உத்திகள் தவறானதாகவோ, உறுதியற்றதாகவோ, தடுமாற்றம் உடையதாகவோ இருந்தால், புரட்சி நிச்சயம் தற்காலிகத் தோல்வியை சந்திக்கும். முதலாளித்துவக் கட்சிகளும் தங்களது போராட்ட உத்திகளை அடிக் கடி தொடர்ந்து விவாதித்து வருகிறார்கள் என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். உழைக்கும் வர்க்கத்தை தவறாக வழி நடத்தி கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிடமிருந்து விலக வைக்க சீர்திருத்த திட்டங்களை எப்படிப் பரப்புவது என்றும், ஏழை உழவர்களின் எழுச்சிகளை நசுக்கி பணக்கார விவசாயிகளை எப்படிப் பிடிப்பது என்றும், புரட்சிகர போராட்டங்களை அடக்க ஆயுகம் தரித்த குற்றவாளிக் கும்பல்களை எப்படி திரட்டுவது என்றும் பரிசீலித்துக் கொண்டு வருகிறார்கள்.
வர்க்கப் போராட்டம் தீவிரமாக அதிகரித்து, நெருக்கமான வட்டாரங்களில் நடக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், அவற்றின் வெற்றிக்குத் தங்களது சொந்தக் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் சரியான, உறுதியான உத்திகளையே முழுவதுமாக பாட் டாளி வர்க்கம் சார்ந்திருக்க வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியின் சரியான, பின்வாங்காத போராட்ட உத்திகளை அலுவலகத்தில் அமர்ந்திருக்கும் சிலரால் எந்தச் சூழ்நிலையிலும் உருவாக்க முடியாது. அவை மக்கள் பெருந்திரள் போராட்டங்களிடையே – அதாவது உண்மையான அனுபவத்தின் மூலம் – உருவாகின்றன. எனவே, நாம் எப்போதும் சமூக நிலைமைகளை ஆய்வு செய்து, எதார்த்தமான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.
வளைந்து கொடுக்காத, பழமைவாத, சடங்குப் பூர்வமான, ஆதாரமின்றி நம்பிக்கைவாதிகளாக இருக்கும் தோழர்கள், தற்போதைய போராட்ட உத்தி சரியானது என்றும், கட்சியின் ஆறாவது தேசிய காங்கிரசின் “ஆவணங்களின் புத்தகம்” 5 நிலைத்த வெற்றியை உத்தரவாதப்படுத்தும் என்றும், நிரூபித்து நிறுவப்பட்ட வழிமுறைகளை கடைபிடிப்பதன் மூலமே நாம் வெற்றி பெற்றுவிடலாம் என்றும் எண்ணுகின்றனர். இந்த எண்ணங்கள் முற்றிலும் தவறானவை.
படிக்க :
♦ விஞ்ஞான சோசலிசத்தை வளர்த்தெடுத்த உயிர் நண்பர்கள் || தோழர் லெனின்
♦ எங்கெல்ஸ் 200 : நாம் ஏன் எங்கெல்ஸை பயில வேண்டும் | தோழர் லெனின்
கம்யூனிஸ்ட்டுகள் போராட்டங்கள் மூலம் சாதகமான புதிய சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும் என்ற கருத்தோடு எந்த விதத்திலும் ஒத்துப் போகாததாக இருக்கிறது; அவை முழுவதும் பழமைவாத வழிமுறையை பிரதிநிதித்துவப் படுத்துகின்றன. அவற்றை முழுமையாக கைவிடாவிடில், இந்த வழிமுறை புரட்சிக்கு மாபெரும் இழப்பை ஏற்படுத்தும்; இது தோழர்களுக்கே பெருங்கேடு விளைவிக்கும். நிலைமைகள் தற்போது இருப்பது போலவே இருப்பதில் திருப்தி கொண்டுள்ள, எதனையும் முழுமையாகப் புரிந்துகொள்ள முயலாத, ஆதாரமின்றி நம்பிக்கை கொண்டுள்ளவர்களாக, சில தோழர்கள் செம்படையில் இருக்கிறார்கள் என்பது வெளிப்படை.
”இதுதான் பாட்டாளி வர்க்கத் தன்மை” என்ற பொய்யை அவர்கள் பரப்புகிறார்கள். அவர்கள் ஒரு அடிகூட நகராது, பரிசீலனை செய்ய மக்களிடம் செல்லாது, முழுமையாக உண்டு, தங்கள் அலுவலகத்திலேயே சிறுதுயில் கொண்டு, நாள் முழுவதும் அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் எப்போது வாயைத் திறந்தாலும், அவர்களது வெற்றுரைகள் மக்களை சோர்வடையச் செய்கின்றன. இந்தத் தோழர்களைத் தட்டியெழுப்ப, நமது குரல்களை உயர்த்தி, அவர்களிடம் கூச்சலிட வேண்டும்:
* தாமதமின்றி உங்களுடைய பழமைவாத எண்ணங்களை மாற்றிக் கொள்வீர்!
* முற்போக்கான போர் குணம் வாய்ந்த கம்யூனிச கருத்துக்களின் மூலம் அவற்றை மாற்றுவீர்!
* போராட்டத்தில் ஈடுபடுவீர்!
* மக்களிடையே சென்று, உண்மைகளை பரிசீலனை செய்வீர் !
(தொடரும்)
குறிப்புகள் :
3. பரிசீலனையை மாசே – துங் எப்போதும் அதிக அழுத்தத்துடன் வலியுறுத்தினார். சமூகப் பரிசீலனையை மிக முக்கியமான கடமைப் பணியாகவும் தலைமைப் பணிக்கான கொள்கைகளை விவரிப்பதற்கான அடிப்படையாகவும் கருதினார். தோழர் மாசே-துங்கின் முன்முயற்சியால் செம்படையின் நான்காவது படையில் பரிசீலனைப் பணி படிப்படியாக வளர்க்கப்பட்டது. பணியின் வழக்கமான பகுதியாக சமூகப் பரிசீலனை இருக்க வேண்டும் என்று வரையறுத்திருந்தார். பெருந்திரள் போராட்டங்களின் நிலைமை, பிற்போக்கானவர்களின் நிலைமை, மக்களின் பொருளாதார வாழ்வு மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் ஒவ்வொரு வர்க்கத்தினருக்கும் சொந்தமாக இருந்த நிலங்களின் அளவு ஆகிய இனங்கள் அடங்கிய விரிவான படிவங்களை செம்படையின் அரசியல் துறை தயாரித்திருந்தது. செம்படை சென்ற இடத்திலெல்லாம், அந்தப் பகுதியின் வர்க்கச் சூழ்நிலைகளைப் பற்றி முதலில் நன்கு தெரிந்து கொண்டது. பிறகு பெருந்திரள் மக்களின் தேவைக்கு ஏற்ற முழக்கங்களை உருவாக்கியது.
4. இங்கே “மலைகள்” என்பது கியாங்சி மற்றும் ஹூனான் மாகாணங்களின் எல்லைப் பகுதியில் இருந்த சிங்காங் மலைப் பகுதியாகும்; ”சமவெளி” என்பது தெற்கு கியாங்சி மற்றும் மேற்கு ஃபியுகியன் பகுதிகளில் இருப்பதை குறிப்பதாகும். இரு மிகப்பெரிய புரட்சித் தளங்களை அமைக்கும் பொருட்டு, ஜனவரி 1929-ல் சிங்காங் மலையிலிருந்து தெற்கு கியாங்சி மேற்கு ஃபியுகியன் பகுதிகளுக்கு தோழர் மா சே – துங் செம்படையின் நான்காவது அணியின் பிரதானப் படையை அழைத்துச் சென்றார்.
5. ஜூலை 1928-ல் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆறாவது காங்கிரசில்,
அரசியல் தீர்மானங்கள், உழவர்களின் பிரச்சனை குறித்த தீர்மானங்கள், நிலப் பிரச்சனைகள், அரசியல் அதிகாரத்தை நிறுவுதல், மற்றும் ஏனைய பொருட்கள் பற்றிய தீர்மானங்களை உள்ளடக்கியது “ஆவணங்களின் புத்தகம்” ஆகும். செம்படையில் இருந்த கட்சி அமைப்புகளுக்கும், கட்சியின் தள அமைப்புகளுக்கும் விநியோகிக்கும் பொருட்டு இந்தத் தீர்மானங்களை புத்தக வடிவில் செம்படையின் நான்காவது அணியின் முன்னணிக் குழு 1929-ம் ஆண்டு துவக்கத்தில் வெளியிட்டது.
நூல் : மாவோ – தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் – தொகுதி 6
கிடைக்குமிடம் : அலைகள் வெளியீட்டகம்
தொடர்புக்கு : 98417 75112
பாசிச மோடி அரசுக்கு எதிராக வளர்ந்துவரும் போராட்டங்கள் !
தங்கள் மீது நடத்தப்படும் சுரண்டலையும் உரிமைப் பறிப்புகளையும் எப்போதும் இந்திய உழைக்கும் மக்கள் சகித்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்பதை தற்போது நம் கண்முன்னே காண்கிறோம்.
விவசாயிகள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், மீனவர்கள், அறிவுத்துறையினர், பெண்கள் − என அனைத்து தரப்பினரும் காவி – கார்ப்பரேட் பாசிச மோடி அரசின் மக்கள் விரோதத் திட்டங்களுக்கு எதிராகப் போராடி வருகின்றனர். இந்தப் போராட்டங்கள் காவி – கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிரான போராட்டங்களாக ஒன்றிணைத்து வளர்த்தெடுக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
பஞ்சாப் − அரியானாவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கிய மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டமானது, ஆர்ப்பாட்டம், சாலைமறியல், ஜியோ சிம் எரிப்பு, பா.ஜ.க. அலுவலகங்கள் முற்றுகை − என நாளுக்கு நாள் வளர்ந்து நவம்பர் 26−ம் தேதியன்று தொடங்கிய ‘‘டெல்லி முற்றுகை’’ப் போராட்டம் 11 மாதங்களைக் கடந்தும் உறுதியாக நடந்து வருகிறது. இன்றுவரை 500−க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டக் களத்திலேயே இறந்துள்ளனர்; பல ஆயிரம் பேர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
படிக்க
♦ ஊதிய நிலுவையையும் ஊதிய உயர்வையும் வழங்கு : ஆஷா தொழிலாளர்கள் போராட்டம் !
♦ திமுக அரசே வேலை கொடு : சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் !
மோடி அரசைப் பணிய வைக்காமல் சொந்த மாநிலத்திற்கு திரும்புவதில்லை என்ற உறுதியோடு போராடிவரும் விவசாயிகள், ‘‘போராட்டங்களை வாழ்க்கையின் ஒரு அங்கமாக்கிக் கொள்வோம்’’ என்று முழங்கி வருகின்றனர். இந்நிலையில், சென்ற ஆகஸ்டு மாதத்தில் தாழ்த்தப்பட்ட கூலி விவாயிகள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு நிலம் உள்ளிட்ட தங்களது அடிப்படை கோரிக்கைகளுக்காகவும் டெல்லி முற்றுகைப் போராட்டத்திற்கு ஆதரவாகவும் பஞ்சாபில் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
மின்சாரச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து மின் உற்பத்தி, மின் வினியோகம் − என ஒட்டுமொத்த மின் துறையையும் கார்ப்பரேட்டுக்கு நேர்ந்துவிடத் துடிக்கும் மோடி அரசை எதிர்த்து கடந்த ஆகஸ்ட் 3 முதல் 5−ம் தேதி வரை இந்தியா முழுவதிலும் 15 லட்சம் மின் ஊழியர்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்தனர். அதனையடுத்து ஆகஸ்ட் 10−ம் தேதி இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மின் ஊழியர்களின் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டமாக இந்தப் போராட்டம் வளர்ந்துள்ளது.
மின்துறை தனியார்மயமாக்கம் என்பது விவசாயிகளுக்கு வழங்கப்படும் விலையில்லா மின்சாரம், மக்களுக்கு வழங்கப்படும் மானிய விலையிலான மின்சாரம் அனைத்தையும் ஒழித்துக் கட்டிவிடும். மின்துறை தனியாருக்குத் தாரைவார்க்கப்பட்டால் பெட்ரோல்−டீசல் விலை உயர்வு போல, கார்ப்பரேட்டுகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கட்டணத்தை அதிகரித்து மக்கள் தலையை மொட்டையடிப்பார்கள். இதை முன்னுணர்ந்து போராடி வருகிறார்கள் மின்துறை ஊழியர்கள்.
மேடைதோறும் தேசப் பாதுகாப்பு குறித்து கூச்சலிடும் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு, நாட்டின் ஒட்டுமொத்த இராணுவப் பாதுகாப்புத் தளவாடத் தொழிற்சாலைகள் அனைத்தையும் தனியாருக்குத் தாரைவார்க்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே பல தொழிற்சாலைகளின் முக்கிய ஆயுத உற்பத்தியை நிறுத்தியுள்ளது. தற்போது பல்வேறு நிறுவனங்களை ஒரே பொதுத்துறை நிறுவனமாகக் கொண்டுவந்து, பின்னர் அதனை தனியார்மயமாக்கும் திட்டத்தோடு செயல்பட்டு வருகிறது. இதனை எதிர்த்து நாடு முழுவதுமுள்ள 41 இராணுவத் தளவாடத் தொழிற்சாலைகளைச் சேர்ந்த சுமார் 90,000 தொழிலாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இத்தொழிலாளர்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்காகவே, அத்தியாவசியப் பாதுகாப்புச் சேவை அவசரச் சட்டத்தை மோடி அரசு கொண்டுவந்துள்ளது. இதன்படி, தொழிலாளர்கள் போராட்டம் நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறிப் போராடினால், பிணையில் வெளிவர முடியாத வகையில் ஓராண்டு சிறைத் தண்டனை, பத்தாயிரம் ரூபாய் அபராதம், போராட்டத்தைத் தூண்டினால் இரண்டாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். இக்கொடுஞ்சட்டத்திற்கு எதிராக ஜூலை 23−ம் தேதி நாடுதழுவிய தொழிற்சங்க வேலை நிறுத்தம் நடத்தப்பட்டது. இக்கொடூரச் சட்டமானது, தொழிலாளி வர்க்கத்தின் போராட்டங்களைக் கண்டு மோடி அரசு அஞ்சி நடுங்குவதையே நிரூபித்துக் காட்டுகிறது.
சாகர்மாலா திட்டம் என்ற பெயரில் நாடு முழுவதும் உள்ள கடற்கரைகளையெல்லாம் கார்ப்பரேட்டுகளுக்கு பட்டாபோட்டு கொடுக்க தயாராகிவரும் மோடி அரசு, தற்போது மீனவர்களை கடலிலிருந்தே விரட்டியடிக்கும் வகையிலும், மீன்பிடித் தொழில் தொடங்கி கடல் வளங்கள் அனைத்தையும் கார்ப்பரேட் சூறையாடலுக்குத் திறந்துவிடவும் கடல் மீன்வள மசோதாவைக் கொண்டுவந்துள்ளது. 12 நாட்டிகல் கடல்மைலுக்கு மேல் ஆழ்கடல் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க முடியாது என்று சொல்லும் இச்சட்டம், சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைத்து ஆழ்கடலை கார்ப்பரேட்டுகளின் வேட்டைக்களமாக மாற்றிக் கொடுக்கிறது.
மோடி அரசின் இச்சட்டத்தை எதிர்த்து தமிழக, புதுச்சேரி கடலோரக் கிராமங்களில் திரளான மீனவர்கள் தமது குடும்பத்துடன் போராடியதோடு, தங்கள் படகுகளில் கருப்புக் கொடியைக் கட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். முத்தாய்ப்பாக, இராமேஸ்வரத்தில் 50,000−க்கும் மேற்பட்ட மீனவர்கள் திரெண்டெழுந்து போராடி, மோடி அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மக்களின் வங்கிச் சேமிப்புகளான பல லட்சம் கோடி ரூபாய்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தொழிற்கடன்களாக அள்ளிக் கொடுத்துவரும் மோடி அரசு, கடனைத் திருப்பிக் கட்டாத முதலாளிகளுக்கு ‘‘வாராக்கடன்’’, ‘‘ஹேர்கட்’’ என்ற பெயரில் அக்கடனை தள்ளுபடியும் செய்து வருகிறது. கார்ப்பரேட்டுகளுக்கு கொட்டிக்கொடுத்தே கஜானவை திவாலாக்கிவிட்டு தற்போது, அரசிடம் பணம் இல்லையென பொதுத்துறை நிறுவனங்களை தவணை முறையில் தனியாருக்கு விற்றுக் கொண்டிருக்கிறது.
இம்முறை இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கப் போவதாக அறிவித்துள்ளது. 15 இலட்சம் வங்கி ஊழியர்கள் இதற்கெதிரான போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். மேலும், அரசின் மிகப்பெரிய காப்பீடு நிறுவனமான எல்.ஐ.சி.யை கொஞ்சம் கொஞ்சமாகத் தனியாருக்கு தாரைவார்க்கும் மோடி அரசுக்கு எதிராக அத்துறையில் பணிபுரியும் லட்சக்கணக்கான ஊழியர்கள் போராடி வருகின்றனர்.
படிக்க :
♦ ஏழைகளுக்கும் நடுத்தரவர்க்கத்திற்கும் இனி மின்சாரமும் எட்டாக்கனிதான் !
♦ மீன் வளத்தையும் மீனவர்களையும் அழிக்க வரும் கடல் மீன்வள மசோதா !
காலங்காலமாக வரதட்சணைக் கொடுமைகளால் தற்கொலைக்குத் தள்ளப்பட்ட இந்தியப் பெண்களின் துயரக் கதைகள் எண்ணிலடங்காதது. பணத்தையும் கொடுத்து பெண்ணையும் அடிமையாக அனுப்புவதை திருமண மற்றும் குடும்ப அமைப்பு முறையாகவே வைத்துள்ளது, ஆணாதிக்க − பார்ப்பனிய சமுதாயக் கட்டமைப்பு.
கேராளாவில் சுசித்ரா, அர்ச்சனா, விஸ்மயா ஆகிய இளம் பெண்கள் தொடர்ச்சியாக வரதட்சணைக் கொடுமைகளால் தற்’கொலை’ செய்துகொண்டுள்ளதைத் தொடர்ந்து, ‘‘பெண்கள் விற்பனைக்கு அல்ல’’, என்றும் ‘‘வரதட்சனை தரமுடியாது’’ என்றும் சமூக வலைதளங்களில் கேரளப் பெண்கள் முழங்கினர். கேரளாவெங்கும் இந்தப் போராட்டம் உழைக்கும் மக்களின் பெருத்த ஆதரவைப் பெற்றுள்ளது.
இவை மட்டுமல்லாது, பழங்குடி மக்களின் உரிமைப் போராளியான பாதிரியார் ஸ்டான் சுவாமி, ‘‘ஊபா” சட்டத்தின் கீழ் மோடி அரசால் கைது செய்யப்பட்டு, சிறையில் மாண்டு போனதைத் தொடர்ந்து, ‘‘ஊபா” சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டங்கள், பெட்ரோல் − டீசல் விலை உயர்வுக்கெதிரான போராட்டங்கள், காண்ட்ராக்ட் மயப்படுத்தலை எதிர்த்து சென்னை தூய்மைப் பணியாளர்கள் நடத்திய போராட்டங்கள் − என நாடு முழுவதும் உழைக்கும் மக்களின் போராட்டங்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன.
சிறுபொறி பெருங்காட்டுத் தீயாகப் பற்றிப் படர்வதைப் போல, சுரண்டலுக்கும் அடக்குமுறைக்கும் உள்ளாகும் உழைக்கும் மக்களின் இந்த தன்னெழுச்சியான போராட்டங்கள், நாளை காவி – கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிரான ஒன்றிணைந்த பெருந்திரள் எழுச்சியாக மாறும்; அந்நாள் வெகுதூரம் இல்லை.

மதி
காவி பாசிசத்துடன் சமரசம் செய்துகொள்ளும் தி.மு.க அரசு !
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் − பா.ஜ.க-வின் பாசிச போக்கை எதிர்த்து கருத்திலும் களத்திலும் போராடிவந்த பெரியாரிய அமைப்புகள், தாழ்த்தப்பட்டோர் − சிறுபான்மையினர் அமைப்புகள், சி.பி.ஐ − சி.பி.எம் உள்ளிட்ட தேர்தல் கம்யூனிஸ்டுகள், மே 17 இயக்கம் மற்றும் சில மா−லெ குழுக்கள் உட்பட அரசியல் அமைப்புகள், தி.மு.க-வின் தேர்தல் வெற்றிக்காக பெரிய அளவில் பிரச்சாரம் செய்தனர். தி.மு.க வெற்றி பெற்றதும், திராவிட ஆட்சி மலர்ந்து விட்டது என்று பிரச்சாரமும் செய்தனர். ஆனால், தி.மு.க-வோ பார்ப்பன எதிர்ப்பைக் கொண்ட தமிழகத்தின் மரபுக்கு மாறாக, காவியுடன் சமரசப் போக்கையே கடைபிடித்து வருகிறது.
ஆட்சிக்கு வந்தால் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே ‘‘நீட்’’ தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவோம்; நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றது, தி.மு.க. ஆனால், ஆட்சியைப் பிடித்த பிறகு, ஏ.கே.ராஜன் தலைமையில் ‘‘நீட்’’ தேர்வால் தமிழக மாணவர்களின் மருத்துவக் கல்வி எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதனை ஆராய ஆய்வுக் குழு அமைத்து உத்தரவிட்டது தி.மு.க அரசு. அதுமட்டுமின்றி, நீட் தேர்வை ரத்து செய்ய ‘‘முடிந்த வரை முயற்சிப்போம்’’ என்றுதான் சொன்னோம் என்று அந்தர்பல்டி அடித்தார் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்.
படிக்க :
♦ திமுக அரசு பட்ஜெட்டும் அரசுப் பள்ளிகளின் நிலைமையும் || சிறப்புக் கட்டுரை
♦ திமுக அரசே வேலை கொடு : சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் !
ஏழு தமிழர் விடுதலை விவகாரத்தில், இந்த விசயம் எனது வரம்புக்கு அப்பாற்பட்டது என்று கைகழுவினார் தமிழக ஆளுநர். ஆனால் தி.மு.க அரசோ, பேரறிவாளனுக்கு ஒரு மாத பரோல் வழங்குவதைத் தொடர்ந்து நீட்டித்து வருகிறதே தவிர, ஏழுவரை விடுதலை செய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
ஏழு பேர் விடுதலை செய்வது தொடர்பான தமிழக சட்டமன்றத் தீர்மானத்தின் மீது குடியரசுத் தலைவர்தான் முடிவெடுக்க வேண்டும் எனச் சொல்கிறார், தமிழக ஆளுநர். அந்த ‘குடியரசு’த் தலைவருக்கு நிர்பந்தம் கொடுத்து ஏழு பேரை விடுதலை செய்வதற்கு பதிலாக, தமிழக சட்டமன்றத்தின் 100−ம் ஆண்டு விழாவிற்கு அந்தக் ‘குடியரசு’த் தலைவரை வரவழைத்துக் கௌரவித்தது, தி.மு.க அரசு.
தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசானது எந்த அணையையும் கட்டக்கூடாது என காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில் தெளிவுபடுத்திய பின்னும், எந்த எதிர்ப்பு வந்தாலும் அணையைக் கட்டியே தீருவோம் என்று கொக்கரிக்கிறது, கர்நாடக பா.ஜ.க அரசு. அணை கட்டுவதற்கான விரிவான அறிக்கை தர கர்நாடகாவிற்கு உத்தரவிட்ட ஒன்றிய அரசு, தமிழகத்திடம் ‘‘சட்டப்படி எல்லாம் நடக்கும்’’ என்கிறது.

கொரோனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்துவதை மாநிலங்களின் தலையில் கட்டிவிட்டு ஒதுங்கிக் கொண்ட பாசிச மோடி அரசு, மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகை, வரி வருவாய் உள்ளிட்டவற்றை பிரித்துக் கொடுக்காமல் ஏமாற்றியது. குறிப்பாக, தமிழகத்துக்கு ஜி.எஸ்.டி வரி வருவாயாக வழங்கப்பட வேண்டிய தொகை மட்டும் ரூ.20,033 கோடி. இந்தத் தொகையை ஒன்றிய அரசிடமிருந்து பெறுவதற்காக, அ.தி.மு.க எடப்பாடி பாணியில், ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதுவது, நேரில் சென்று ‘வலியுறுத்துவது’ ஆகிய சடங்குத்தனமான நடவடிக்கைகளை மேற்கொண்டார், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.
000
மோடி அரசின் மாநில உரிமைப் பறிப்புகளுக்கு எதிரான போராட்டத்தில் மட்டுமல்ல; ஆர்.எஸ்.எஸ் − பா.ஜ.க-வின் இந்துத்துவ சித்தாந்தத்தோடு சமரசம் செய்து கொண்டுள்ளதோடு, தமிழகத்தில் அதன் வளர்ச்சிக்கு ஒத்திசைவாக நடந்து கொள்வதாகவும் தி.மு.க ஆட்சி அமைந்துள்ளது.
கொரோனா இரண்டாம் அலைப் பரவலின்போது, ‘‘கொரோனா தடுப்புப் பணியை மக்கள் இயக்கமாக மாற்றுவோம்’’ என்று அறிவித்த தி.மு.க அரசு, கொரோனா தடுப்புப் பணிகளை பல்வேறு தன்னார்வக் குழுக்களை இணைத்துக் கொண்டு மேற்கொள்வதன் மூலம் தொற்றுப் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவருவது என்ற திட்டத்தை முன்வைத்தது. அதற்காக சில குறிப்பிடத்தக்க தன்னார்வக் குழுக்களுக்கு மட்டுமே அனுமதியளித்தது. அதில் ஆர்.எஸ்.எஸ்-ன் சேவா பாரதி என்ற அமைப்பையும் அழைத்திருந்தது.
தமிழகத்தில் சாத்தான்குளம் வியாபாரிகளான தந்தை−மகன் இருவரையும் கொடூரமாகப் படுகொலை செய்த ஃபிரண்ட்ஸ் ஆப் போலீஸில் இருந்தவர்கள் சேவா பாரதியை சேர்ந்தவர்களே. இந்த சேவா பாரதி அமைப்பின் சார்பில் திருப்பூரில் தொடங்கப்பட்ட கொரோனா சிகிச்சை மையத்தைத்தான் தி.மு.க செய்தித் தொடர்புத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் திறந்து வைத்து, அங்கு வைத்திருந்த “பாரதமாதா” படத்திற்கு மலர்தூவி வணங்கியுள்ளார்கள். தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்-ன் இந்துத்துவ நிகழ்ச்சி நிரலுக்கு பாதையமைத்துக் கொடுக்கும் வேலையை தி.மு.க-வே தலைமையேற்று செய்து கொடுத்துள்ளது என்பதனைத்தான் இச்சம்பவங்கள் நமக்கு காட்டுகின்றன.
மண்டைக்காடு கலவரத்தை முன்னின்று நடத்திய எம்.ஆர். காந்தி என்ற எம்.எல்.ஏ. கிறித்துவ சிறுபான்மை மக்களுக்கு எதிராகத் திட்டமிட்டு கலவரத்தைத் தூண்டிவிடுவதையே நோக்கமாக கொண்டு செயல்படும் ஆர்.எஸ்.எஸ். வெறியர். கன்னியாகுமரியில் ஒரு தேவாலயத்தைப் புதுப்பிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்த இந்து மதவெறியனின் புகாரின் பேரில், கன்னியாகுமரியைச் சேர்ந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை போலீசு கைது செய்து சிறையில் அடைத்தது.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கலைஞர் ஆய்வு மையம் சார்பில் ‘‘வேதஷக்தி வர்மக் கலையும் பண்பாட்டுப் பின்புலமும்’’ என்ற தலைப்பில் கடந்த 16−ஆம் தேதி கருத்தரங்கம் ஒன்று நடந்துள்ளது. வேதம் − தற்காப்புக்கலை என்று இந்துத்துவ சித்தாந்தத்தினை மறைமுகமாக புகுத்துகிற நடவடிக்கை இது என்று பலரும் விமர்ச்சித்தனர். தற்போது இதுபோல இந்துத்துவ கருத்துக்களை மறைமுகமாகத் திணிக்கக் கூடிய கருத்தரங்கங்கள் நடக்கத் தொடங்கியுள்ளன. இப்பல்கலைக்கழகத்தின் மீது தி.மு.க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் மதுரைக்கு வருவதையொட்டி அவர் செல்லும் வழியில் சாலைகளைச் செப்பனிடுவது, தெரு விளக்குகளை சீர்படுத்துவது, குப்பைகளை அகற்றுவற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தனக்கு கீழுள்ள அதிகாரிகளுக்கு மதுரை மாநாகராட்சி ஆணையர் சுற்றறிக்கை அனுப்பிய விசயத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை கூட, சமூக வலைதளங்களில் தமிழ் மக்கள் தெரிவித்த எதிர்வினையின் விளைவே.
000
பா.ஜ.க எதிர்ப்புணர்வை முதலீடாகக் கொண்டு ஆட்சிக்கு வந்த தி.மு.க, தான் எந்தச் சூழலில் ஆட்சிக்கு வந்துள்ளோம் என்பதனை உணர்ந்தே இருக்கிறது. ஆகவேதான் பெரியார் வழி, அண்ணா வழி என்றும், திராவிட மாடல், சமூக நீதி அரசியல் என்றும் கூறிக்கொள்வதன் மூலம் தன்னுடைய ஆதரவு தளத்தை அப்படியே தக்கவைத்துக் கொள்ளவும், அதை விரிவுபடுத்தவும் விரும்புகிறது. அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்க ஆணை பிறப்பித்தது, அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டம் போன்ற திட்டங்களை இப்படித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது.
படிக்க :
♦ ஆர்.எஸ்.எஸ் – பாஜகவின் நிகழ்ச்சிநிரலுக்கு பின் செல்லும் திமுக || மக்கள் அதிகாரம்
♦ திமுக-வின் எதிரி ஆர்.எஸ்.எஸ் அல்ல – பாஜக மட்டுமே || ர.முகமது இல்யாஸ்
இன்னொரு பக்கம் தி.மு.க-வினை ஒழித்துக் கட்டும் நோக்கத்தில், ‘‘தி.மு.க இந்துக்களின் எதிரி’’ என்று பா.ஜ.க பிரச்சாரம் செய்துவருவதை எண்ணி தி.மு.க அச்சம் கொள்கிறது. தங்களை இந்துக்களின் நண்பர்களாகக் காட்டிக்கொள்ள காவி பயங்கரவாதிகளுடன் சமரசமாக நடந்து கொள்வதன் மூலம் அவர்களிடம் நன்மதிப்பைப் பெற்றுவிடலாம் என்று கருதுகிறது.
தி.மு.க-வின் இந்த சமரசவாத அணுகுமுறைகளை அம்பலப்படுத்தி முறியடிக்காமல், காவி – கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற முடியாது.
பால்ராஜ்
பின்னி ஆலைத் தொழிலாளர் போராட்டம் : வரலாறு கற்பிக்கும் பாடம் !
B&C – பின்னி – பங்கிங்காம் மற்றும் கர்னாட்டிக் என்ற நூற்பாலை 1876-ல் சென்னை பெரம்பூரில் ஆங்கிலேய முதலாளியால் துவங்கப்பட்டது. 1968 வரை தனியார் முதலாளியால் நடத்தப்பட்டு வந்த இவாலை 1969-ல் ஒன்றிய அரசுக்கும் பின்பு தனியாருக்கும் மாறியது. தொடர்ந்து நடத்த முடியாது என்று 1996-ல் மூடப்பட்டது.
துவங்கப்பட்ட நாள் முதல் குறிப்பாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் அன்றாட 10, 12 மணி நேர உழைப்பால், அவர்கள் சிந்திய ரத்தத்தால் உருவான இவ்வாலையின் பலகோடி சொத்துக்கள் அனைத்தும் தனியார் உடமையாக மாறிவிட்டன. இவ்வாலை தனியாருக்கு தாரைவார்க்கப்படாமல் இருந்திருந்தால் இச்சொத்துகள் அனைத்தும் இன்று அரசு சொத்தாக நீடித்திருக்கும்.
ஆலை இயங்கியதற்கான சுவடே இல்லாமல் அடுக்கு மாடி குடியிருப்புகளாக இன்று மாறி வருவதோடு இதன்மூலம் ரியல் எஸ்டேட் முதலாளிகளும் கொழுத்து வருகின்றனர். இவ்வாலையின் இவ்வளவு மதிப்புள்ள சொத்துக்களை உருவாக்கிய உழைப்பாளிகளின் வாழ்க்கை உருகுலைந்ததோடு, அவர்கள் பட்ட கஷ்டங்களும், துன்பங்களும், இறப்புகளும் சொல்லிமாளாது. இன்னும் இதற்காக உழைப்பை சிந்திய தொழிலாளர்களும் அவர்களுடைய வாரிசுகளும் குடிசைகளில்தான் வாழ்கின்றார்கள். ஆலை மூடப்பட்டபோது வாழ்வாதாரம் பறிக்கப்பட்ட கொடுமையை சென்னையின் ஜாலியன் வாலாபாக் என்றே சொல்லலாம்.
படிக்க :
♦ அம்பானியின் ஜியோவுக்கு பின்னிருக்கும் ரகசியம் : நான்காம் தொழிற்புரட்சி !
♦ பின்னி தொழிலாளிக்கு நட்ட ஈடு முப்பதாயிரம் ரூபாய்
இதை ஏன் இன்று பேச வேண்டும்?
இதை இன்று பேசுவதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. இவ்வாலை 19-ம் நூற்றாண்டு இறுதியில் நாடோடியாக சென்னை கடற்கரையில் காலடி வைத்த ஜான் பின்னி என்ற வணிகனால் 1876-ல் B&C என்ற பின்னி கம்பெனி 254 ஏக்கரில் உருவாக்கப்பட்டது.
பக்கிங்காம் மற்றும் கர்னாட்டிக் என்ற பெயரில் இயங்கி வந்த இவ்வாலையானது, இருவகை உற்பத்தியைச் செய்தது. ஒன்று நூற்பு மற்றொன்று நெசவு.
இதில், இராணுவம் – இதர அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் தேவையான சீருடைகளை தரமான வகையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களால் உற்பத்தி செய்யப்பட்டதோடு, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது. இதற்கான மின்சாரத் தேவையை இவ்வாலையே உற்பத்தி செய்து கொண்டதோடு, மீதமுள்ளதை தனியாருக்கும், அரசுக்கும் விற்றது.
நீராவி இயந்திரங்களோடு துவங்கப்பட்ட இந்த ஆலை, மின்சார இயந்திரங்களையும் மின்சார ஒளி வசதிகளையும் பயன்படுத்தி உற்பத்தியை அதிகப்படுத்தியது. இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டாலும், தொழிலாளர்களின் வேலை நேரம் குறையவில்லை. தொழிலாளர்களின் உழைப்பு கடுமையாகச் சுரண்டப்பட்டது. ஆலை நிர்வாகத்தின் இலாபம் பெறுகியது. இதை கார்ல் மார்க்சின் வார்த்தையில் சொல்வதென்றால் இந்த இலாபம் அனைத்தும் தொழிலாளர்களிடமிருந்து திருடப்பட்ட உழைப்பு.
தொழிலாளர்களின் கூலியும் உயரவில்லை. வேலையும் கடுமையானது. தினமும் 11 மணி நேரம் ஓய்வில்லாமல் உழைத்ததன் விளைவு, அவர்களது வாழ்வும் கவலைக்கிடமானது. பணிச்சுமை மற்றும் கொடுங்கோன்மை தாங்காமல் இக்கொடுமைதாளாமல் அன்று இருந்த வெள்ளை மேலாளர்களை தொழிலாளர்கள் தாக்கிய வரலாறும் உண்டு.
ஆலையைச் சுற்றி தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த குடியிருப்புகள் வாழ்வதற்கே தகுதியற்றவைகளாக இருந்தன.
இவ்வாலைத் தொழிலாளர்கள் வர்க்கமாக அணிதிரளாமல் சாதிகளாகப் பிரிந்து வாழ்ந்தனர். இதையே இவர்களை பின்பு பிரித்தாளுவதற்கு ஆலை நிர்வாகம் பயன்படுத்திக் கொண்டது.
சில வருடங்களுக்கு பிறகு அதிக நேரம் உழைப்பு சுரண்டுவதற்கு ஏதுவாகவும், எந்த நேரத்திலும் வெளியேற்றப்படலாம் என்ற நிபந்தனையோடும் குறைந்த வசதிகளுடனான வீடுகளை தொழிலாளர்களுக்கு கட்டிக் கொடுத்தது பின்னி ஆலை நிர்வாகம்.
தொழிலாளர்கள், எந்த நேரத்திலும் வெளியேற்றப்படலாம் என்ற சரத்து அன்றைய வெள்ளையன் ஆட்சியிலும் தொடர்ந்தது. இன்றைய கொள்ளையன் ஆட்சியிலும் தொடர்கிறது. இந்தியாவில் நடந்த பல்வேறு அகில இந்திய ரயில்வே தொழிலாளர்களின் போராட்டத்தின்போதும், இரயில்வே தொழிலாளர்கள் அவர்கள் தங்கியிருந்த குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்டதே இதற்கான சான்று. தொழிலாளர்கள் போராட்டங்களில் ஈடுபடாமல் தடுப்பதற்கான துருப்புச் சீட்டாக குடியிருப்புகளைப் பயன்படுத்தியது ஆலை நிர்வாகம்.
1918-ம் ஆண்டு ஏப்ரலில் இவ்வாலையில் மெட்ராஸ் லேபர் யூனியன் என்ற பெயரில் தொழிற்சங்கம் துவங்கப்பட்டது. சொந்தம் செய்யாததை சங்கம் செய்யும் என்பதற்கான சான்றாக தொழிலாளர்களின் அவல நிலையைப்போக்க கூலி உயர்வுக்கானப் போராட்டத்தை அவ்வப்போது நடத்தி வந்தது.
இதை தொடர்ந்து 1920-ல் மற்ற நூற்பாலைகளில் மாதம் ஒன்றுக்கு ஒவ்வொரு தொழிலாளிக்கும் ரூ.26 கூலியாக தரப்படுகிறது. பின்னி ஆலையில் ரூ.20 மட்டுமே தரப்படுகிறது. மேலும், பயிற்சி இல்லாத தொழிலாளர்களுக்கு தினம் 14 அனா (1அனா – 6 பைசா என்ற வகையில்) தினக் கூலியாகத் தரப்படுகிறது. மற்ற ஆலைகளுக்கு தரப்படும் கூலியின் அளவிற்கு கூலியை உயர்த்தித் தரும்படியும், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப கூலியை உயர்த்தி தரும்படியும் நிர்வாகத்திடம் தொழிற்சங்க தலைவர்கள் வாதாடினர்.
முதலாளித்துவ வர்க்கத்திற்கே உரிய வக்கிர புத்தியானது, மற்ற ஆலைகளைவிட தங்கள்தான் அதிக கூலி தருவதாக அபாண்டமாகப் பொய் பேசியதோடு, கூலி அதிகம் கொடுத்தால், கையில் இருக்கும் காசு கரையும் வரை அவர்கள் வேலைக்கு வரமாட்டார்கள் எனக் கூறி தொழிலாளர்களின் உழைப்பை – அவர்களின் வாழ்வை – இழிவுப்படுத்தியது. இன்று வரை முதலாளித்துவமும் அதன் அடிவருடிகளும் இதைத்தானே சம்பள / கூலி உயர்வு போராட்டங்களில் தொழிலாளர்கள் ஈடுபடும்போது கூறிவருகின்றனர்.
இவ்வேலை நிறுத்தத்தின்போது நிர்வாகத்தின் அடியாளான போலீசு துப்பாக்கியால் சுட்டதில் இருவர் பலியாகினர். அதையும் தாண்டி பின்வாங்காமல் இறுதிவரை போராட்டத்தை உறுதியுடன் நடத்தியதன் விளைவு, கருணை அடிப்படையில் கல்வி, மருத்துவம் போன்றவைகளுக்கு உதவித் தொகையும், ஒழுங்காக வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு உதவித் தொகையும் தருவதாக கூறியது நிர்வாகம். அதே நேரத்தில் இப்போராட்டத்தை ஒடுக்கிய போலீசுக்கு பரிசு வழங்கப்போவதாகவும் அறிவித்தது. இதன்மூலம் நிர்வாகம் அரசு என்பது எங்களின் அடியாள் படை என்பதை நிரூபித்துவிட்டது.
1920 வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு பிறகும் கூலி உயர்வு என்பது கானல் நீரானது. ஆனால், வேலை நிறுத்ததின்போது பெரும்பங்காற்றிய நடேசன் என்ற தொழிலாளி பழிவாங்கப்பட்டார். இதை எதிர்த்து தொழிலாளர்கள் அனைவரும் இயந்திரங்களை இயக்குவதை நிறுத்திவிட்டு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் தங்களுக்குள் கலந்துபேசி ஆலை மேலாளரை கூட்டமாக சென்று சந்திதனர். இதை கண்டு அரண்டுபோன மேலாளர் சுடுவதற்கு துப்பாக்கியை உயர்த்தினான். இதை உடனே ஒரு தொழிலாளி பறித்துவிட்டார். இந்தப் பிரச்சினை பெரியதாகி கதவடைப்பு வரை சென்றது.
இதை பயன்படுத்தி உள்ளிருப்பு வேலை நிறுத்ததை முறியடிக்கவும், தொழிற்சங்கத்தை ஒழிக்கவும், இதற்கு காரணமாக இருந்த தொழிற்சங்க தலைவரான திரு.வி.க-வும் தொழிலாளியான நடேசன் உட்பட 13 பேர்கள்தான் என்று குற்றச்சாட்டை வைத்து இவ்வேலைநிறுத்தம் தனக்கு நட்டம் ஏற்பட்டுவிட்டது.
எனவே ரூ.80 ஆயிரம் இழப்பீடு தர வேண்டும் என்று வழக்கு தொடுத்தது. அன்று தொழிசங்க சட்டம் எதுவும் இல்லாததால் வழக்கு நீதிமன்ற விசாரணைக்குச் சென்றது.
வேலை நிறுத்தம் முடியும் வரை இவர்கள் அனைவரும் தொழிலாளர்கள் கூட்டத்தில் பேசக் கூடாது எனத் தடையும் விதித்தது. ஆனால், தொழிலாளர்கள் தங்களாகவே முன்முயற்சியுடன் கூட்டங்களை தொடர்ந்து நடத்தினர். போராட்டம் தொய்வு அடையாமல் தொடர்ந்து நடைபெற தொழிலாளர்கள் அனைவரும் தொழிற்சங்க நிதியால் பராமரிக்கப்பட்டனர்.
இதற்கிடையில் தொழிற்சங்க தலைவர்களின் ஒருவனான வாடியா என்பவர் அன்னி பெசண்ட் அம்மையாருடன் பின்னி நிர்வாகத்தை கமுக்கமாக சந்தித்து இழப்பீட்டு வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்ற நிபந்தனையோடு வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர். தொழிலாளர் மத்தியில் இதை தொழிலாளர் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகக் கூறி விளக்கி விட்டு வெளிநாடுக்கு தப்பிச் சென்றுவிட்டான். வாடியாவும் பின்னி நிர்வாகமும் ஒப்புக் கொண்ட ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சரத்துகளும் நிபந்தனைகளும் நியு இந்தியா என்ற நாளேட்டில் வெளியிடப்பட்டன. தொழிலாளர் கூட்டத்தில் வாடியா விளக்கியதற்கும் இதற்கு பாரிய வேறுபாடுகள் இருந்தன. இதை உணர்ந்த தொழிலாளர்கள், வாடியா தங்களுக்கு துரோகம் செய்துவிட்டதை உணர்ந்தனர்.
வாடியாவின் துரோகத்தால் 1921 ஜனவரியில் முடிவுக்கு வந்தது வேலை நிறுத்தம். துரோகத்தால் வீழ்த்தப்பட்டதை உணர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் 1921 பிப் முதல் மே வரை சிறு சிறு வேலை நிறுத்தத்தை மேற்கொண்டனர். சிறு துளி பெருவெள்ளம் என்பதைப் போல இந்த சிறு சிறு துளிப்போராட்டங்கள் பெரும் போராட்டமாக வெடிப்பதற்குக் காரணமாக அமைந்தன.
1921 மே மாதத்தில் கர்னாட்டிக் ஆலையின் நாற்பாலை தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு வேலை நிறுத்தத்தை அறிவித்தனர். இவர்களுக்கு ஆதரவாக பங்கிங்காம் ஆலைத் தொழிலாளர்களும் இறங்க, அது பெரும் போராட்டமாக தீவிரமடைந்தது. அன்றைய ஆங்கிலேயே அரசு அப்போராட்டத்தை கொடூரமாக ஒடுக்கத் தொடங்கியது.
இதை துணிகரமாக தொழிலாளர்கள் எதிர்கொண்ட சூழலில் நிர்வாகம் பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்டு ஆதிதிராவிடர் பிரிவைச் சார்ந்த தொழிலாளர்களை வேலை நிறுத்தத்தில் இருந்து பின்வாங்க வைத்தது. இதற்கு கோடரிக் கொம்பாக குடியரசு கட்சியைச் சார்ந்த M.C. ராஜா என்பவர் செயல்பட்டார்.
இதனூடே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்தது பின்னி நிர்வாகம். இதைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்களும் 1921 ஜூன் 18 அன்று, ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது கூடியது போல கடற்கரையில் கூடி பின்னி தொழிலாளர்கள் போராட்டத்தை ஆதரித்தனர். மேலும் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக அரசுக்கு கடிதங்கள் எழுதும் போராட்டத்தையும் நடத்தினர்.
இதற்கிடையில், ஆகஸ்ட் 26 அன்று நிர்வாகத்தின் பிரித்தாலும் சூழ்ச்சிக்கு பலியாகி வேலைக்கு சென்ற ஆதிதிராவிட தொழிலாளர்கள் மீது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட இதர சாதிய தொழிலாளர்கள் தாக்குதல் நடத்தினர். அவர்களின் குடியிருப்புகளை தாக்கியதோடு, குடிசைகளுக்கும் தீவைத்தனர்.
நிர்வாக சூழ்ச்சிக்கும் அரசின் அடக்குமுறைக்கும் எதிராக வர்க்கமாக ஒன்று திரண்டு போராட வேண்டிய தொழிலாளர்கள் சாதி ரீதியாக பிளவுபடுத்தி அவர்களுக்குள்ளாகவே மோதலை ஏற்படுத்தியது ஆலை நிர்வாகம். தொழிலாளர்களிடையேயான சாதிய ரீதியிலான இந்த மோதல், போலீசுக்குச் சாதகமாக அமைந்துவிட்டது. தொழிலாளர்கள் மீது கடுமையான தாக்குதலைக் கட்டவிழ்த்துவிட்டு வழக்குகள் போட்டு போராட்டத்தை முடக்கியது.
இவை அனைத்தும் தொழிலாளர் போராட்டங்களின் அனுபவங்களில் உள்ள நேர்மறை மற்றும் எதிர்மறை அம்சங்களை படிப்பினையாகத் தருகின்றன. இன்றும் தொழிலாளி வர்க்கத்திற்கான சங்கங்களிலும் சாதியரீதியிலான, கட்சி ரீதியிலான பிரிவினைகள் மூலம் இதே வகையான நரித்தனத்தை அமல்படுத்திக் கொண்டிருக்கின்றது முதலாளித்துவ வர்க்கம்.
பின்னி ஆலை வேலை நிறுத்தம் போல, 1908-ல் தொழிற்சங்கம் இல்லாத நிலையில் தூத்துக்குடியில் ஆங்கிலேயர் நடத்திய கோரல் மில்லிலும் போராட்டம் நடந்தது. இதற்குத் தலைமை தாங்கி வழி நடத்திய ஏகாதிப்பத்திய எதிர்ப்பு போராளி வ.உ.சி அவர்கள், சிவாவின் துணையுடன் ஊதிய உயர்வு, வார விடுமுறை இதர கோரிக்கைகளை உள்ளடக்கி வேலை நிறுத்தத்தை முன்னெடுத்தனர்.
படிக்க :
♦ மாருதி தொழிலாளிகள் 13 பேருக்கு வாழ்நாள் சிறை – அவசரச் செய்தி
♦ இதயத்தை உலுக்கும் ஐ.டி. கதைகள் !
இப்போராட்டத்தை ஆலைத் தொழிலாளர்களோடு மட்டும் நிறுத்தாமல் மக்கள் போராட்டமாக மாற்றியமைத்தார்கள். இதன் விளைவாக ஆங்கிலேயே மேலாளர்களையும் நிர்வாகிகளையும் வீதிகளில் நடமாட முடியாமல் மக்கள் தாக்கினர். சமூக புறக்கணிப்பையும் செய்தனர். இவர்களுக்கு கைக் கூலியாக இருந்த உள்ளூர் பேர்வழிகளுக்கு பொருட்களை எதுவும் வாங்க முடியாத, ஏன் முடிவெட்டி, சவரம் செய்து கொள்ள முடியாத அளவிற்கு சமூகப் புறக்கணிப்பை செய்தனர். இதனால் அரண்டுப்போன நிர்வாகம் 50% ஊதிய உயர்வையும், வேலை நேரத்தில் உணவருந்தும் நேரத்தை சேர்த்தும், விடுமுறைகளையும் அறிவித்தது. தொழிலாளர்களின் போராட்டத்தை வர்க்கரீதியாக ஒருங்கிணைத்ததுடன், மக்களுடன் இணைந்த மக்கள் திரள் போராட்டமாக வளர்த்தெடுத்தன் விளைவாக அங்கு வெற்றியை சாதிக்க முடிந்தது.
அன்று ஆங்கிலேயே கும்பல் – இன்று அதானி அம்பானி கார்ப்பரேட் கும்பல். அன்றும் இன்றும் இவர்களுக்கு அடியாள் படையாக இருந்து சேவை செய்கிறது அரசு. இன்று அதானி அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட் கும்பலுக்கு காவி பாசிசக் கும்பலும் சேவகம் புரிந்து வருகிறது.
இந்தச் சுரண்டலுக்கு எதிராக தொழிலாளர்கள் வர்க்கரீதியாக அணிதிரண்டு அதை தொடர்ச்சியான இடைவிடாத மக்கள் போராட்டங்களாக வழிநடத்திச் செல்வதன் வாயிலாக மட்டுமே தீர்வைக் காண முடியும்.

கதிரவன்
தமிழ் கண்டதோர் வையை, பொருநை || வி. இ. குகநாதன்
அண்மைக் காலமாகத் தமிழர் நாகரிகங்கள் தொடர்பாகப் பல்வேறு தொல்லியல் முடிவுகள் வெளிவந்து இன்ப அதிர்வுகளை ஏற்படுத்திய வண்ணமுள்ளன. அந்த வகையில் மிக அண்மையில் `பொருநை` அகழ்வாய்வு பற்றிய முடிவுகளும் வந்துள்ளன. இன்னமும் சொல்லப்போனால் தமிழ்நாட்டிலுள்ள ஆற்றங்கரைகள் எதனை அகழ்ந்தாலும் அங்கு நாகரிக எச்சங்கள் காணப்படும் என்றளவான ஒரு நிலை காணப்படுகின்றது. இந்த வகையில் முதலில் தமிழர் நிலத்திலுள்ள ஆறுகளைப் பார்ப்போம்.
பாரதியார் பாடிய பாடலொன்று தமிழர் ஆறுகளை எமக்குப் படம் பிடித்துக் காட்டும். இப்போது அப் பாடலினைப் பார்ப்போம்.
‘காவிரி, தென்பெண்ணை, பாலாறு தமிழ்
கண்டதோர் வையை, பொருநை நதி – என
மேவிய ஆறுகள் பலவோட – திரு
மேனி செழித்த தமிழ்நாடு’
என்று பாரதியார் பாடியுள்ளார்.
படிக்க :
♦ கிறங்கடிக்கும் கீழடி : வி.இ.குகநாதன்
♦ தமிழர் திருநாள் : விழுங்கக் காத்திருக்கும் காவிகள் ! | வி.இ.குகநாதன்
இங்குள்ள ஆறுகளின் தமிழ்ப் பெயர்களே ஒரு அறிவுசார்ந்த பெயரிடல் மரபாகவே காணப்படுகின்றது. `காவிரி` (காவேரி அல்ல) என்ற சொல்லில், `கா` என்றால் சோலை, இந்த ஆறு செல்லுமிடங்களிலெல்லாம் (மரச்)சோலையினை விரித்துச் செல்வதால், அப் பெயர் பெறும். இந்தக் காவிரி ஆறு நொய்யல் ஆற்றுடன் கலக்கும் இடத்தில்தான் கொடுமணல் உள்ளது. இந்தக் கொடுமணலே சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் `கொடுமணம்` எனும் ஊராகும்.
இத்தகைய கொடுமணல் அகழ்வாய்வு பல நாகரிக எச்சங்களை ஏற்கனவே வெளிக்கொண்டு வந்திருந்தன. `தென்பெண்ணை` , `பாலாறு` ஆகிய ஆறுகள் இன்றும் அதே பெயரிலேயேயுள்ளன. `வையை` எனப்படுவதே இன்றைய வைகை ஆறாகும். `வையை` என்பது மனதிலிடுதல் என்ற பொருளில் வரும் {வை=இடு, வைய்+அ=வைய =மனிதிலிடு (வைதல்)} . இந்த `வையை ` எனும் சொல்லும் சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளது.
“வையை சூழ்ந்த வளங்கெழு வைப்பின்
பொய்யா யாணர் மையற் கோமான்” – புறநானாறு 71: 10-11.
மேற்குறித்த வையை ஆறு இன்று வைகை என அழைக்கப்படுகின்றது. இந்த வைகைக்கரையிலேயே கீழடி, அகரம், கொந்தகை ஆகிய இடங்கள் அமைந்துள்ளன. இந்தக் கீழடி 4-ம் கட்ட அகழ்வாய்வு முடிவுகள் பற்றி ஏற்கெனவே `கிறங்கடிக்கும் கீழடி` என்ற தலைப்பில் வினவில் ஒரு கட்டுரையாகப் பார்த்துள்ளோம்.
இப்போது ஏழாம் கட்ட ஆய்வும் முடிவுறும் நிலையிலுள்ளது. மேலுள்ள பாரதியார் பாடலில் `பொருநை` எனக் குறிப்பிடப்படுவது இன்று தாமிரபரணி என அழைக்கப்படும் ஆறாகும். பொருநை என்பதே இதன் தமிழ்ப் பெயராகும். `பொருநை` என்பது ஒப்பில்லாப் பெருமை என்ற பொருள் பெறும் என முனைவர் இரவி சங்கர் விளக்குகின்றார் {பொரு= பொருந்துதல்/ ஒப்புமை . பொருநை = ஒப்பில்லாப் பெருமை}. இன்னமும் சொன்னால், தண்பொருநை என்பதே இன்றைய தாமிரபரணியாகும் (தண்மை = குளிர்மை) .
அதே போன்று `ஆன்பொருநை` என்ற பெயரில் மற்றொரு ஆறுமுண்டு, அதுவே இன்று அமராவதி எனப்படுகின்றது. இந்த `ஆன்பொருநை` ஆற்றின் கரையிலேயே `பொருந்தல்` என்ற சங்ககால ஊரின் எச்சங்கள் அகழ்வாய்வில் வெளிவந்திருந்தன. இந்தப் பொருந்தல் அகழ்வாய்வில் கிடைத்த நெல்மணிகளையுடைய கலன் ஒன்றில் `வய்ர` என்ற தமிழி எழுத்துகள் பொறித்த சான்று கிடைத்தமையும்; அந்த நெல்மணிகள் கதிரலை கரிமக் காலக் கணிப்பில் பொ.ஆ.மு 490 எனத் தெரிய வந்தது (BCE490, AMS dating by Beta analytic, USA); கீழடி ஆய்வுகள் வெளிவருவதற்கு முன்னரே தமிழி எழுத்தானது அசோகர் பிராமியினை விடப் பழமையானது என்பதற்கான சான்றாக அமைந்தது. இப்போது பொருநை எனப் பொதுவாக அழைக்கப்படும் தண்பொருநை ஆற்றங்கரை நாகரிகத்தினை விரிவாகப் பார்ப்போம்.
பொருநை நாகரிகம்
சிவகளை, கொற்கை, ஆதிச்சநல்லூர் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வு முடிவுகளை, தமிழ்நாடு அரசானது `பொருநை` நாகரிகம் என்ற பெயரில் வெளியிட்டிருந்தது. அதில் பொருநை ஆற்றங்கரையோர ஆதிச்சநல்லூருக்கருகில் சிவகளை பறம்புப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி ஒன்றிலிருந்து நெல்மணிகள் கண்டெடுக்கப்பட்டன.
இந்த முதுமக்கள் தாழியிலிருந்த `உமி நீக்கப்பட்ட நெல்லினை` கரிமம் நீக்கிப் பார்த்த போது, அதன் வயது ஏறக்குறைய 3176 ஆண்டுகள் (2021+1155=3176) , அதாவது பொருநை ஆற்றங்கரை நாகரிகம் ஆகக் குறைந்தது பொ.ஆ.மு 1155 (BCE 1155 ) இனைச் சேர்ந்தது எனத் தெரிய வந்துள்ளது. இந்தக் காலக்கணிப்பு அனைத்துலக நடைமுறைகளுக்கேற்ப கரிமச் சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது (AMS dating by Beta analytic, USA). இதனையடுத்தே தொல்லியல் அறிஞர் கா.ராஜனும், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினும் `இந்திய வரலாறு இனித் தமிழ்நாட்டிலிருந்தே எழுதப்பட வேண்டும்` எனக் கூறியிருந்தார்கள்.
இத்தகைய தண்பொருநை ஆற்றினை புறநானூறு 11-வது பாடல் குறிப்பிடுகின்றது.
“அரி மயிர்த் திரள் முன்கை
வால் இழை, மட மங்கையர்
வரி மணற் புனை பாவைக்குக்
குலவுச் சினைப் பூக் கொய்து
தண் பொருநைப் புனல் பாயும்
விண் பொருபுகழ், விறல்வஞ்சிப்
பாடல் சான்ற விறல்வேந் தனும்மே
வெப் புடைய அரண் கடந்து,
துப்புறுவர் புறம்பெற் றிசினே:
புறம் பொற்ற வய வேந்தன்
மறம் பாடிய பாடினி யும்மே,
ஏர் உடைய விழுக் கழஞ்சின்,
சீர் உடைய இழை பெற்றிசினே!
இழை பெற்ற பாடி னிக்குக்
குரல் புணர்சீர்க் கொளைவல்பாண் மகனும்மே.
என ஆங்கு,
ஒள்அழல் புரிந்த தாமரை
வெள்ளி நாரால் பூப்பெற் றிசினே.”
– புறநானூறு
பொருள் : தண்பொருநை ஆறு பாயும் வஞ்சி எனும் நகரானது வானளாவிய புகழும் வெற்றியுமுடைய நகராகும். பொருநை ஆற்று மணலில் பெண்கள் பாவை (பொம்மை) செய்தும், பூப்பந்து எறிந்தும் விளையாடுவர். பாலை பாடிய பெருங்கோ பெரும் வீரன். இவன் புறங்கண்ட வீரச் செருக்கினைப் பாடினாள் ஒரு பாடினி. இதற்காகப் பாடினிக்கு அவன் அணிகலன்களைப் பரிசளித்தான்.
இப் பாடலில் கூறப்பட்டது போன்ற பெண் உருவப் பொம்மைகளும், தங்கத்திலான பொருட்களும் அகழ்வாய்வில் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.
கம்பரும் தண்பொருநை பற்றிப் பின்னரான காலப்பகுதியில் பாடுகின்றார்.
“பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை எனும்
திரு நதி பின்பு ஒழிய, நாகக்
கன்று வளர் தடஞ் சாரல் மயேந்திர மா
நெடு வரையும், கடலும், காண்டிர்”.
பொருள் : பொருநை என்னும் அழகிய ஆறும் பிற்பட்டுப் போக, யானைக் கன்றுகள் வாழ்ந்து நிற்கும், பெரிய தாழ்வரைகளையுடைய மகேந்திரம் என்னும் பெரிய மலையையும் தென் கடலையும் காண்பீர்கள்.
அசோகரின் கல்வெட்டுகளில் ஒன்றான `கிர்நார் கல்வெட்டு`(Girnar or Revatak Pravata ) என்ற பிராகிரத மொழிக் கல்வெட்டில் இதே `பொருநை` எனும் தூய தமிழ்ப் பெயரானது ` தாம்பபண்ணி` எனக் குறிபிடப்பட்டுள்ளது (கல்வெட்டுக் காலம் BCE 273-BCE 232 ). இந்தத் தாம்பபண்ணி இலங்கையினைக் குறிப்பதாகத் தவறாக முன்னர் கருதியமையுமுண்டு. தாமிரபரணி என்ற பெயர் எவ்வாறு ஏற்பட்டது என வேறுபட்ட கருத்துகளுண்டு (தாமிரம்- செப்பு கலந்த தண்ணீர், இலங்கையிலிருந்து வந்த தம்பபண்ணி -Thambapanni என்பதன் திரிபு, தண்பொருநை என்பதன் பிராகிரத மொழிப் பலுக்கல்). எது எவ்வாறாயினும் `தாமிரபரணி` என்ற சொல்லினை விடத் `தண்பொருநை` / `பொருநை` என்ற பழந் தமிழ்ப் பெயரினையே நாம் பயன்படுத்துவோம்; அதுவே எமக்கு ஒப்பில்லாப் பெருமையாக அமையும்.
இந்த ஆற்றங்கரையிலுள்ள ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வில் மூடியுடன் கூடிய முதுமக்கள் தாழியும் கிடைத்திருந்தது. அதே போன்று எலும்புகளுடனான முதுமக்கள் தாழிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை பற்றிய குறிப்புகள் பல பழந் தமிழ் இலக்கியங்களில் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் முதுமக்கள் தாழியில் நெல்லையும் வைத்துப் புதைக்கும் பழக்கத்தினையும் அகழ்வாய்வுகள் வெளிக் கொண்டு வந்திருந்தன.
வாய்க்கு அரிசி போடுதல் / அரிசியிடுதல் என இன்றும் சா வீடுகளில் கடைப்பிடிக்கப்படும் சடங்கு இந்த மரபின் தொடர்ச்சியாகவிருக்கலாம். நகரத்தார் நடுவே இன்றும் காணப்படும் `பச்சை குத்திப் பாய் சுருட்டல்` எனும் சடங்கும் இதன் எச்சமேயாகும். இதன்போது குத்தாணியில் பச்சை நெல்லினைப் போட்டுக் குத்தி, உமி நீக்கி அதனை வெள்ளைத் துணியில் உடலத்துடன் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்வர் (இங்கு முதுமக்கள் தாழியில் கிடைத்ததும் இத்தகைய உமி நீக்கிய நெல்லே). இதே போன்று இன்று மங்கல விழாக்களில் மட்டும் பயன்படுத்தப்படும் `நிறைநாழி` (நெல் நிரம்பிய கலன்) என்ற சடங்கு இறப்பு வீடுகளிலும் சில இடங்களில் பயன்படுத்தப்படுவதாக உரையொன்றில் பேரா.க.நெடுஞ்செழியன் குறிப்பிட்டிருந்தார் {`தமிழ் அருங்காட்சியகம் இலண்டன் ` ஏற்பாடு செய்திருந்த `தமிழர்களிடையே ஆசீவகம்` என்ற தலைப்பிலான உரையில் குறிப்பிடப்பட்ட செய்தி, சரி பார்க்கப்பட வேண்டியது}.
படிக்க :
♦ சிந்துச் சமவெளி நாகரிகம் வேத நாகரிகம் அல்ல – மரபணு ஆய்வு முடிவுகள் !
♦ சிந்து சமவெளி மக்களின் பிரதான உணவு மாட்டுக் கறியாம் || ஆய்வில் உறுதி
இச் செய்தி உண்மையாயின் அதுவும் ஒரு மரபுத் தொடர்ச்சியாகவே கருதப்படும்.
இந்தப் பொருநை நாகரிகம் வெளிக்கொண்டு வந்த கண்டுபிடிப்புகளையும், அதன் விளக்கங்களையும் விரிவாகத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள `பொருநை ஆற்றங்கரை நாகரிகம்` என்ற கையேட்டில் காணலாம். (இக் கட்டுரையின் இறுதிப் பகுதியில் இணைப்புள்ளது).
இப்போது வைகைக்கரை நாகரிகத்துடன் (கீழடி…) பொருநை ஆற்றங்கரை நாகரிகமும் தமிழர் கண்ட இரு பெரு நாகரிகங்களாகவுள்ளன. மீண்டும் கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாரதியாரின் பாடல் வரிகளைப் பார்ப்போம். இங்கு பாரதியார் தமிழ் ஆறுகளைச் சொல்லி வருகின்றார். அப்போது காவிரி, தென்பெண்ணை, பாலாறு என வரிசையாகச் சொல்லி வந்தவர் அவ்விடத்தில் நிறுத்தி, ” தமிழ் கண்டதோர் வையை, பொருநை” என்பார். ஆம் தமிழர் கண்ட நாகரிகங்கள் அவைதான் (வைகை, பொருநை). என்ன பொருத்தமான வரிகள் !
குறிப்பு : ’பொருநை ஆற்றங்கரை நாகரிகம்’ தமிழ்நாடு அரசின் கையேட்டினைக் காணக் கீழுள்ள இணைப்பினைச் சொடுக்குக.
வி. இ. குகநாதன்
காலனியாதிக்க எதிர்ப்புப் போராளி வ.உ.சி 150-வது பிறந்தநாள் || ம.க.இ.க பிரச்சாரம்
♦ “காலனியாதிக்க எதிர்ப்பு போராளி, மக்கள் தலைவர், தொழிலாளர்களின் தோழர், சுதேசி முன்னோடி, செக்கிழுத்த செம்மல் வ.உ.சி யின் 150-வது பிறந்த நாளை உயர்த்தி பிடிப்போம்” ♦ “கார்ப்பரேட்- காவி பாசிசத்தை முறியடிப்போம்” ♦ என்கிற முழக்கத்தின்கீழ் கடந்த செப்டம்பர் 5-ம் தேதி மதுரை மாநகரத்தில் தெருமுனைப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
மதுரை, அனுப்பானடி பஸ் நிலையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகள் 5 இடங்களில் காலை முதல் துண்டு பிரசுரம் விநியோகித்து தெருப்பிரச்சாரம் செய்யப்பட்டது.
அப்பகுதி மக்களிடம் துண்டுபிரசுரம் விநியோகம் செய்யும் போது இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.
படிக்க :
♦ வ.உ.சி : ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியின் 150-வது பிறந்தநாள் || விலையில்லா மின்னிதழ்
♦ ஜாலியன்வாலா பாக் நூற்றாண்டு : தொடருகிறது விடுதலைப் போராட்டம் !
குறிப்பாக, வ.உ.சி, மருது சகோதரர்கள் போன்றவர்களை சாதிய தலைவர்களாக சம்பந்தப்பட்ட சமூகத்தினர் ஒருசிலர் பார்ப்பதும் இக்கலாச்சாரத்தை அரசே திட்டமிட்டு உட்புகுத்துவதையும் விமர்சித்தனர். மேலும் உங்களைப் போன்ற அமைப்பினர்தான் அத்தலைவர்களின் வரலாற்றை சரியாக பிரச்சாரம் செய்கிறீர்கள் என்றனர்.
நமது தோழர்கள் தெருப்பிரச்சாரத்தில் உரையாற்றும் போது, வ.உ.சி.யை மக்களின் தலைவராகவும், ஏகாதிபத்தியத்தின் எதிர்ப்பு போராளியாகவும் அவர் வாழ்ந்ததை விளக்கியும் பிரச்சாரம் செய்தனர். அதே நேரத்தில் அப்பகுதியில் சாதியின் அடிப்படையில் ஒரு குழுவினர் வாகனத்தில் ஊர்வலமாக சென்றனர். இந்த இரண்டு நிகழ்வையும் மக்கள் ஒப்பிட்டு பார்க்கும் விதமாக பிரச்சாரம் அமைந்தது. மேலும் பெரியாரிய சிந்தனையாளர் ஒருவர் இப்பிரச்சாரத்தை சரியான காலகட்டத்தில் நடத்துகிறீர்கள் என வரவேற்று நமது தோழர்களை உற்சாகப்படுத்தினார்.
மதுரை அவனியாபுரம் மந்தை பகுதியிலும் மூன்று இடங்களில் செப்டம்பர் 5 அன்று மாலை 5மணி முதல் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதியைச் சேர்ந்த ஓட்டுனர்கள், தொழிலாளர்கள், பிற உழைக்கும் மக்கள், மாற்றுக் கட்சியினர் ஆர்வமுடன் வாங்கி கவனமாகப் பார்த்தார்கள்.
அதில் நாம் மக்களுக்காகப் போராடிய தலைவர்கள் மக்கள் தலைவராக பார்க்கவேண்டும், சாதித் தலைவராக பார்க்க கூடாது என்பதை வலியுறுத்தி பிரச்சாரம் செய்ததை மக்களும் ஆமோதித்தனர். அதில் ஒரு ஆட்டோ தொழிலாளி நீங்கள் சொல்லும் அத்தனை பிரச்சனையும் உள்ளது அதை தீர்ப்பதற்கு தீர்வு என்ன என்று வினவினார்.
வ.உ.சி வழியில் நின்று அன்னிய மறுகாலனியாக்க கொள்கையை முறியடிக்கப் போராடுவதோடு, அதனை தீவிரமாக அமல்படுத்தும் கார்ப்பரேட் காவி பாசிசக் கும்பலை விரட்டியடிப்பதும் தான் தீர்வு என்றும் தொடர்ந்து விவாதிப்போம் என்றும் கூறி தோழர்கள் விடைபெற்றனர்.
தகவல்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
மாநில ஒருங்கிணைப்பு குழு,
தமிழ்நாடு,
+91 97916 53200.
புத்தக வழிபாட்டை எதிர்ப்போம் || தோழர் மாவோ
தோழர் மாவோ உலக பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்காக சிந்திப்பதை நிறுத்தி இன்றுடன் 45-ம் ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. முதலாளித்துவ சுரண்டல் உலகின் அனைத்து மூலைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது. உலகம் முழுவதும் பொதுவுடைமை இயக்கங்கள் சிதறுண்டு கிடக்கின்றன.
புரட்சியை முன்னெடுத்துச் சென்று முதலாளித்துவ சுரண்டலை ஒழித்துக் கட்டி கம்யூனிசத்தை நோக்கி சமூகத்தைக் கொண்டு செல்ல, ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் தங்களைத் தாங்களே பரிசீலித்து, தவறுகளை சீர்படுத்திக் கொண்டு முன்னேற வேண்டும் என்பது பொதுவாக சொல்லப்படும் வாசகமாகிவிட்ட நிலையில், பரிசீலனையை எப்படிச் செய்ய வேண்டும், எப்படி செய்யக் கூடாது என்பதை மிகவும் எளிமையாக விளக்கியிருக்கிறார் தோழர் மாவோ.
1930-ம் ஆண்டு எழுதப்பட்ட “புத்தக வழிபாட்டை எதிர்ப்போம்” எனும் அவரது படைப்பு ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டும் படித்து கிரகித்து தனது வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்க வேண்டிய விஞ்ஞான வழிமுறையாகும். அந்தக் கட்டுரையை இரண்டு பகுதிகளாக இங்கே தருகிறோம்
– வினவு
0O0
புத்தக வழிபாட்டை எதிர்ப்போம்
1. பரிசீலனை இல்லையெனில், பேசுவதற்கான உரிமை இல்லை
ஒரு பிரச்சனையை நீங்கள் பரிசீலனை செய்யாவிடில், அதன் மீது பேசுவதற்கான உரிமையை இழக்கிறீர்கள். இது மிகவும் கடுமையானதாக இல்லையா? சிறிதும் கிடையாது. ஒரு பிரச்சனையையும், அதன் இன்றைய அனுபவங்களையும், அதன் கடந்த கால வரலாற்றையும் நீங்கள் ஆராய்ந்து பார்க்காவிட்டால், அதன் அத்தியாவசிய அம்சங்களைப் பற்றி நீங்கள் அறியாவிட்டால் அது சந்தேகக்திற்கு இடமின்றி அபத்தமானது.
அபத்தமாகப் பேசுவது எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது என்பது அனைவரும் அறிந்ததே. அதைப் பற்றி பேசுவதற்கான உரிமையை உங்களுக்கு மறுப்பது எப்படி அநியாயமானதாகும்? சில தோழர்கள் தங்களது கண்களை மூடிக் கொண்டு, அபத்தமாகப் பேசுகிறார்கள். ஒரு பொதுவுடைமைவாதிக்கு அது அவமானம். ஒரு பொதுவுடைமைவாதி எவ்வாறு தன் கண்களை மூடிக்கொண்டு, அபத்தமாய் பேசமுடியும்?
அது சரிப்படாது! அது சரிப்படாது! நீங்கள் பரிசீலனை செய்ய வேண்டும்! நீங்கள் அபத்தமாய் பேசக்கூடாது!
படிக்க :
♦ கம்யூனிஸ்ட்கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா? | தோழர் மாவோ
♦ கம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீர்செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் | தோழர் மாவோ !
2. ஒரு பிரச்சனையை பரிசீலனை செய்வது அதனைத் தீர்த்து வைப்பதற்கே !
உங்களால் ஒரு பிரச்சனையைத் தீர்க்க முடியவில்லையா? நல்லது, உடனடியாக அதன் இன்றைய அனுபவங்களையும் அதன் கடந்த கால வரலாற்றையும் பரிசீலனை செய்யுங்கள்! பிரச்சனையை முழுமையாக பரிசீலனை செய்து விட்டால், அதனை எவ்வாறு தீர்ப்பது என்று அறிவீர்கள். முடிவுகள் எப்போதும் பரிசீலனைக்கு பின்பே வரும் – பரிசீலனைக்கு முன்பு வராது.
ஒரு முட்டாள்தான் தனியாகவோ மற்றவர்களுடன் இணைந்தோ பரிசீலனை செய்யாமல், தீர்வு காணவும்” ”ஒரு கருத்தை உருவாக்கவும்’ மூளையைக் கசக்கிக் கொள்வான். பயனுள்ள தீர்வுக்கோ, ஒரு நல்ல கருத்துக்கோ இது இட்டுச் செல்லாது என்று வலியுறுத்திக் கூற வேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், அவன் தவறான முடிவிற்கும், தவறான கருத்திற்கும் வருவான் என்பது நிச்சயம்.
ஆய்வுப் பணிகளைச் செய்யும் தோழர்கள் கொஞ்சம் இல்லை, கொரில்லா தலைவர்களும், புதிதாக வந்திருக்கும் ஊழியர்களும் கூட ஒன்றை மேலோட்டமாகப் பார்த்து விட்டு, அதனைப் பற்றி குறைந்த விவரங்களையே தெரிந்து கொண்டு, ஒரு இடத்திற்கு வந்த உடனேயே அதனைக் கண்டித்து, அதனைக் குறைகூறி அரசியல் பிரகடனங்களை வெளியிடுகின்றனர்.
அத்தகைய அபத்தமான உணர்ச்சிகரமான பேச்சுகள் உண்மையில் வெறுக்கத்தக்கன. இவர்கள் விசயங்களை குழப்புவது நிச்சயம். அவர்கள் மக்களின் நம்பிக்கையை இழந்து, எந்தப் பிரச்சனையையும் தீர்ப்பதற்கான திறனற்றவர்கள் என்று நிரூபித்து விடுவார்கள்.
கடினமான பிரச்சனைகளை சந்திக்கும்போது, தலைமைப் பொறுப்பில் இருக்கும் பலர் பிரச்சனைகளைத் தீர்க்க இயலாது பெருமூச்சுவிடுகின்றனர். அவர்கள் பொறுமை இழக்கின்றனர். ”தங்களுக்குத் திறமை இல்லை; இந்த வேலையை செய்ய முடியாது” என்று காரணம் காட்டி, இடமாற்றம் கோருவார்கள். இது கோழைகளின் வார்த்தைகள்.
உங்களது இரு கால்களாலும் இயங்கிக் கொண்டே இருங்கள். தங்கள் பொறுப்பில் இருக்கும் பிரிவினை சுற்றி வாருங்கள். மேலும், கன்ஃபூசியஸ் செய்தது போல ”எல்லாவற்றை பற்றியும் தீர விசாரியுங்கள்”1 அப்போது உங்களது திறமைகள் எவ்வளவுதான் குறைவாக இருந்தாலும், உங்களால் பிரச்சனைகளை தீர்க்க முடியும். ஆய்வுக்காக நீங்கள் வாயிலைக் கடந்து வெளியேறும்போது உங்கள் தலை காலியாக இருக்கலாம். நீங்கள் திரும்பும்போது ஒருபோதும் தலை காலியாக இல்லாமல், பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குத் தேவையான அனைத்து விவரங்களும் அதில் இருக்கும். இவ்வாறுதான் பிரச்சனைகள் தீர்க்கப்படுகின்றன.
நீங்கள் வெளியில் சென்றுதான் ஆக வேண்டுமா? அவசியமில்லை. கடினமான பிரச்சனை என்று தாங்கள் கருதுவது பற்றி தல நிலைமைகளை அறியும் பொருட்டும், தற்போது அது என்ன நிலையில் இருக்கிறது என்று அறியும் பொருட்டும், நிலைமைகளை நன்கறிந்த மனிதர்களோடு உண்மையறியும் கூட்டம் கூட்டலாம். பிறகு, உங்களது கடினமான பிரச்சனையை எளிதாகத் தீர்க்கலாம்.
நீண்ட பேறு காலத்தை பரிசீலனையோடும், பிறப்பு நாளை பிரச்சனையைத் தீர்க்கும் நாளோடும் ஒப்பிடலாம். ஒரு பிரச்சனையை பரிசீலனை செய்வது என்பது உண்மையில் அதனைத் தீர்ப்பதற்குத் தான்.
படிக்க :
♦ லெனினை நினைவுகூர்வதென்பது அவரைக் கற்றறிவது தான் !
♦ லெனின் முன் வைத்த புதுப்பாணியிலான கட்சி !
3. புத்தக வழிபாட்டை எதிர்ப்போம்
கலாச்சார ரீதியாகப் பின்தங்கியுள்ள சீன உழவர்களின் மனப்போக்கின்படி, ஒரு புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள அனைத்துமே சரியானவை. விநோதமாக, விவாதங்களின்போது அது புத்தகத்தில் எங்கு எழுதப்பட்டுள்ளது என்று காட்டுங்கள்” என்று எப்போதும் கேட்பவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் கூட பலர் இருக்கின்றனர்.
உயர்மட்ட தலைமையின் கட்டளை சரியாக இருப்பதாகக் கூறுவது, ‘அது உயர்மட்ட தலைமையிடமிருந்து வருகிறது’ என்பதற்காக, அல்ல; ஆனால், போராட்டத்தின் அக மற்றும் புறச் சூழலுக்கு அதன் உள்ளடக்கம் ஒத்துப் போவதாக இருப்பதாலேயே அவற்றை ஏற்கிறோம்.
கட்டளைகள் மேலிடத்திலிருந்து வருகின்றன என்பதற்காக அவற்றைப் பற்றி விவாதிக்காமலும், உண்மை நிலையின் பின்னணியில் அவற்றை ஆராயாமலும் சடங்குப்பூர்வமான போக்கில் அவற்றை ஏற்பது மிகவும் தவறு. கட்சியின் நிலைபாடுகளும், உத்திகளும் மக்களிடம் ஆழமாய் ஏன் வேர்விடவில்லை என்பதற்கு, இந்த சடங்குத்தனம் செய்யும் கெடுதலே காரணம்.
மேலிடத்தின் கட்டளையை கண்களை மூடிக் கொண்டு, எந்தக் கருத்து மாறுபாடுமின்றி செயல்படுத்துவது, உண்மையில் அதனை நிறைவேற்றுவதாய் இருக்காது. அது அந்தக் கட்டளையை சாதுர்யமாக எதிர்ப்பதும், கவிழ்ப்பதுமாகும்.
புத்தகத்திலிருந்து மட்டும் சமூக விஞ்ஞானத்தை கற்கும் வழிமுறை அவ்வாறே மிகவும் அபாயகரமானது; அது எதிர்ப்புரட்சியின் பாதைக்கு இட்டுச் செல்லும். சமூக விஞ்ஞானத்தை கற்பதில் புத்தகங்களோடு தங்களைக் கட்டுப்படுத்திக் கொண்ட சீன பொதுவுடைமைவாதிகளின் முழுக் குழுவும் எதிர்ப் புரட்சியாளர்களாக மாறிய உண்மையே இதற்குத் தெளிவான நிரூபணமாக இருக்கிறது.
மார்க்சியம் சரியானது என்று நாம் கூறுவது, மார்க்ஸ் ஒரு “தீர்க்கதரிசி” என்பதனால் அல்ல; நமது போராட்டத்திலும், நடைமுறையிலும் அவரது கோட்பாடுகள் உண்மையென நிரூபிக்கப்பட்டதால் மட்டுமே அவ்வாறு கூறுகிறோம். நமது போராட்டங்களில் நமக்கு மார்க்சியம் தேவைப்படுகிறது. நாம் அவரது கோட்பாடுகளை ஏற்கும்போது, “”தீர்க்க தரிசனம்” என்ற புதிரான கருத்தோட்டமான சடங்குத்தனம் நமது மனத்தில் ஒருபோதும் நுழைவதில்லை.
மார்க்சிய நூல்களைப் படித்த பலர் ஓடுகாலிகளாக மாறிவிட்ட நிலையில், படிப்பறிவற்ற தொழிலாளிகள் மார்க்சியத்தை நன்கு கிரகித்துக் கொள்வதை நாம் அடிக்கடி காண்கிறோம். நாம் மார்க்சிய நூல்களை நிச்சயம் படிக்க வேண்டும்; ஆனால் இந்தப் படிப்பு நமது தேசத்தின் உண்மையான எதார்த்த நிலைமையோடு ஒருங்கிணைக்கப்பட வேண்டும். நமக்கு புத்தகங்கள் தேவை. ஆனால் உண்மை சூழ்நிலையிலிருந்து விலகி நிற்கும் புத்தக வழிபாட்டை நாம் வெற்றிகொள்ள வேண்டும்.
புத்தக வழிபாட்டை நாம் எப்படி வெற்றி கொள்ள முடியும்? – எதார்த்த நிலையை பரிசீலனை செய்வதுதான் ஒரே வழி.
படிக்க :
♦ கட்சித் தலைமை பற்றிய பிரச்சினைகள் || தோழர் ஸ்டாலின்
♦ நமது பலம், மக்களோடு கலந்திருப்பதே! | தோழர் ஸ்டாலின்
4. எதார்த்த நிலைமையை சரியாக ஆய்வு செய்யாவிடில், வர்க்க சக்திகளை அகநிலையாக மதிப்பீடு செய்வதும் வேலைக்கான அகநிலைவாத வழிகாட்டலும் தோன்றி வலது சந்தர்ப்பவாதமாகவோ இடது சாகசவாதமாகவோ சீரழியும்
இந்த முடிவை நீங்கள் சந்தேகிக்கிறீர்களா? இதனை ஏற்றுக் கொள்ள உண்மைகள் உங்களை நிர்ப்பந்திக்கும். எந்த பரிசீலனையும் செய்யாமல், அரசியல் சூழ்நிலையை மதிப்பீடு செய்யவோ, ஒரு போராட்டத்தை வழிநடத்தவோ முயன்று பாருங்கள், அத்தகைய மதிப்பீடும் வழிகாட்டுதலும் அடிப்படையற்றதாகவும், அகநிலை வாதமாகவும் இருக்கிறதா? இல்லையா? என்பதை காண்பீர்கள். அது சந்தர்ப்பவாதத்திற்கோ, சாகசவாதத்திற்கோ இட்டுச் செல்கிறதா, இல்லையா என்று அறிவீர்கள். நிச்சயமாய் அது அப்படித்தான் இருக்கும். நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு கவனமாக திட்டமிடத் தவறியது இதற்குக் காரணம் அல்ல; செம்படை கொரில்லாக் குழுவில் அடிக்கடி நிகழ்வது போல, குறிப்பான சமூகச் சூழ்நிலைகளை கவனமாக ஆய்வு செய்யாமல், திட்டங்களை தீட்டுவதே காரணம்.
லி கியுயி2 வகையான அலுவலர்கள் மனிதர்களை அவர்களது தவறுகளுக்காக தண்டிக்கும்போது பாரபட்சம் காட்டுவதில்லை. விளைவாக, அவர்கள் அநியாயமாக நடத்தப்பட்டு விட்டதாக தவறிழைத்தவர்கள் கருதுகின்றனர்; பல சச்சரவுகள் ஏற்படுகின்றன; தலைவர்கள் அனைத்து கவுரவங்களையும் இழக்கின்றனர். செம்படையில் இது அடிக்கடி நிகழ்வதில்லையா?
நாம் அகநிலைவாதத்தை துடைத்தெறிய வேண்டும். நாம் மக்களை வென்றெடுப்பதிலும், எதிரிகளை வீழ்த்துவதிலும் வெற்றி அடைவதற்கு முன்பாக அனைத்து சந்தர்ப்பவாத, சாகசவாத தவறுகளுக்கு எதிராக கவனமாக இருக்க வேண்டும். இலட்சியமயத்தை துடைத்தெறிய உள்ள ஒரே வழி, முயற்சிகளை மேற்கொண்டு, உண்மைச் சூழ்நிலையை பரிசீலனை செய்வதே ஆகும்.
(தொடரும்)
பாகம் 2 : பழமைவாத எண்ணங்களை மாற்றிக் கொள்வீர் || தோழர் மாவோ
குறிப்புகள் :
1. கன்ஃபூசியஸ்ஸின் இலக்கியத் துணுக்குகள் நூல் III ஐ காண்க. “பாயி : “மூதாதையர்களின் ஆலயத்தில், கன்ஃபூஷியஸ் நுழைந்தபோது, அவர் எல்லாவற்றையும் விசாரித்தார்.
2. வடக்கு ஷங் வம்சத்தின் இறுதி ஆண்டுகளில் (960-1127) நடைபெற்ற விவசாயிகளின் போராட்டம் பற்றி விவரித்த “சுயி ஹூ சுவான்” (மார்ஸ் பெஸ்ளின் கதாநாயகர்கள்) என்ற பிரபல சீன நாவலின் நாயகன் லி-கியூ ஆவார். அவர் எளிமையானவர்ர்; வெளிப்படையானவர்; விவசாயிகளின் புரட்சி நோக்கத்திற்கு முகவும் விசுவாசமானவர். ஆனால் முரட்டுத்தனமானவர்; சாதுர்யமானவர் அல்ல.
நூல் : மாவோ – தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் – தொகுதி 6
கிடைக்குமிடம் : அலைகள் வெளியீட்டகம்
தொடர்புக்கு : 98417 75112
பெரு : ‘சோஷலிஸ்டு’ கட்சியின் வெற்றி ஏகாதிபத்தியத்திற்கு எதிரானது அல்ல !
பெரு நாட்டில் ‘சோஷலிஸ்டு’க் கட்சியின் வெற்றி : இது, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான வெற்றியா?
இலத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெரு−வில் ஒரு நீண்ட இழுபறிக்கு பிறகு ‘‘சுதந்திர பெரு’’ என்ற இடதுசாரிக் கட்சியைச் சேர்ந்த பெட்ரோ காஸ்டிலோ, நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அந்நாட்டின் அதிபராகியுள்ளார்.
இது, ‘‘தேர்தல் மோசடி’’ மூலம் அடைந்த வெற்றி என்றும், ‘‘சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து ஜனநாயகத்தை நிலைநாட்டப்போவதாக’’வும் அமெரிக்க வல்லரசு கூப்பாடு போடுகிறது. இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புகள், படுகொலைகள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் தங்களது பொம்மை அரசை நிறுவிக் கொள்வதன் மூலம், கனிம வளங்கள் நிறைந்த லத்தீன் அமெரிக்க கண்டத்து நாடுகளைத் தனது ஆதிக்கத்தின்கீழ் வைத்துக் கொண்டிருந்த அமெரிக்காவுக்கு, இந்த தேர்தல் வெற்றி ஒரு சரிவாகவே அமைந்துள்ளது.
படிக்க :
♦ தென் அமெரிக்காவில் தோன்றிய அடிமைகளின் சுதந்திர தேசம் !!
♦ நூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட் ஜின்
அதேசமயம், கடந்த 30 ஆண்டுகளாக புதிய தாராளவாதக் கொள்கைகளைத் தீவிரமாக அமல்படுத்திய வலதுசாரிக் கட்சிகளின் ஆட்சிக்கு பிறகு, தற்போது முதன்முறையாக புதிய தாராளவாதக் கொள்கைகளைக் கடுமையாக எதிர்த்துப் பேசுகின்ற சுதந்திர பெரு கட்சி வெற்றி பெற்றிருப்பது, அனைவராலும் முக்கியமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
கனிம வளங்கள் நிறைந்த நாடாக பெரு இருந்தபோதிலும், அந்நாட்டின் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறது. கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் கூட இல்லாமல் உழைக்கும் மக்கள் அவலத்தில் உழல்கின்றனர். மேலும், கொரோனா பெருந்தொற்றால் அதிக உயிரிழப்புகளைச் சந்தித்த நாடுகளில் ஒன்றுதான் பெரு. ஏறத்தாழ 3.5 கோடி மக்கள் தொகையைக் கொண்ட அந்நாட்டில், இரண்டு லட்சம் பேர் மாண்டு போயுள்ளனர்.
சுரங்கங்கள் உள்ளிட்ட நாட்டின் வளங்கள் அனைத்தும் உள்நாட்டு − பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள காரணத்தால், அந்நாட்டில் ஒரு சதவிகிதம் பேர் குபேரர்களாகவும், நாட்டின் ஆகப் பெரும்பான்மையான மக்கள் வறுமையிலும் உள்ளனர். ஊழல் மலிந்த அரசியல்வாதிகளைக் கொண்டுள்ள பெரு−வில், கடந்த ஐந்தாண்டுகளில் நான்கு அதிபர்கள் ஊழல் குற்றம் சாட்டப்பட்டு தங்களது பதவிகளை இழந்துள்ளனர். கடைசி ஏழு அதிபர்களில், ஐந்து பேர் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளனர். ஆலன் கார்சியா என்ற முன்னாள் அதிபர் சிறையிடப்படுவதற்கு முன்னர் பயந்துபோய் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில், அதிபர் பிரான்சிஸ்கோ சகஸ்தியின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில், எட்டு வேட்பாளர்கள் அதிபர் பதவிக்காகப் போட்டியிட்டனர். இருந்தபோதிலும், பாப்புலர் ஃபோர்ஸ் கட்சியின் இளம் பெண் வேட்பாளர் கெய்கோ புஜிமோரி என்பவருக்கும், சுதந்திர பெரு கட்சியின் பெட்ரோ காஸ்டிலோ என்பவருக்கும் இடையில்தான் தீவிரமான போட்டி நிலவியது.
பாப்புலர் ஃபோர்ஸ் என்பது, அமெரிக்க விசுவாச வலதுசாரிக் கட்சியாகும். இதன் தலைவரும் முன்னாள் அதிபருமான ஆல்பெர்டோ புஜிமோரி, அமெரிக்காவின் கைப்பாவையாகச் செயல்பட்டு புதிய தாராளவாதக் கொள்கைகளைத் தீவிரமாக அமலாக்கியவர். இவர் காலத்தில்தான் பெரு−வின் அரசியல் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. தற்போது, இவர் ஊழல் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறையில் உள்ளார். இவரது மகள்தான் கெய்கோ புஜிமோரி.
2008−ஆம் ஆண்டில் மார்க்சியவாதி என்று அறியப்படும் விளாதிமிர் செரோன் ரொஜாஸ் என்பவரால் சுதந்திர பெரு கட்சி தொடங்கப்பட்டது. தற்போது இவர், இக்கட்சியின் செயலாளராக உள்ளார். இக்கட்சியானது, பெரு−வின் மீது ஏகாதிபத்தியங்களால் திணிக்கப்பட்ட புதிய தாராளவாதக் கொள்கைகளைக் கடுமையாக எதிர்கின்ற கட்சியாகவும், ஏகாதிபத்திய எதிர்ப்பு − சோசலிசக் கொள்கைகளை முன்வைக்கின்ற கட்சியாகவும் பொதுவில் அறியப்படுகிறது. உண்மையில், ஏகாதிபத்திய ஆதிக்கத்துக்கும் கார்ப்பரேட் கொள்ளைக்கும் சேவை செய்கின்ற பெரு−வின் அரசுக் கட்டமைப்பைத் தூக்கி எறிவதை தனது இலட்சியமாகக் கொள்ளாமல், அக்கட்டமைப்புக்குள்ளேயே தீர்வைத்தேடும் போலி சோசலிசக் கட்சியாகவே சுதந்திர பெரு கட்சி உள்ளது.
இக்கட்சியால் முன்னிறுத்தப்பட்ட வேட்பாளரான கேஸ்டிலோ, ஒரு சோசலிஸ்ட் அல்ல. ஆசிரியர் சங்கத் தலைவரான இவர், நீண்டகாலம் ‘‘சாத்திய பெரு’’ என்ற தாராளவாதக் கட்சியில் இருந்தவர். இத்தேர்தலில் சுதந்திர பெரு கட்சியின் வேட்பாளராக நிற்கும் வரை, இவர் பெரு அரசியல் களத்தில் அதிகம் அறியப்படாத நபராகவே இருந்தார்.

இத்தேர்தலில் தன்னை ஒரு விவசாயியாகவும் கிராமப்புற ஆசிரியராகவுமே முன்னிறுத்திக் கொண்டு இவர் பிரச்சாரம் செய்தார். பெரு விவசாயிகளின் பாரம்பரிய நீளமான தொப்பியையும் செருப்பையும் அணிந்துகொண்டு தன்னை தனித்துவமாக அடையாளப்படுத்திக் கொண்டார். இதன் காரணமாகவே, கிராமப்புற விவசாயிகளின் ஓட்டுக்களைப் பெருமளவில் இவரால் கவர முடிந்தது.
‘‘கடந்த கால் நூற்றாண்டுகால ஆட்சிகளின் ஊழல் பாரம்பரியத்திற்கு முடிவு கட்டுவேன்’’, ‘‘வறுமைமையையும் கல்வியறிவின்மையையும் ஒழிப்பேன்’’, ‘‘பெருவின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிற சுரங்களைத் தேசிய உடைமையாக்குவேன்’’ − என்றெல்லாம் அவர் தேர்தல் வாக்குறுதிகளை அளித்தார்.
இவரது தேர்தல் வாக்குறுதிகளில் மிக முக்கியமானதாக கருதப்படுவது, புதிய அரசியல் சாசனம் பற்றியதாகும். 1993−ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியல் சட்டமானது புதிய தாரளவாதக் கொள்கைகளுக்கு இசைவானதாக இருப்பதாகவும், தான் ஆட்சிக்கு வந்தால் புதிய அரசியல் நிர்ணயசபைக்கான தேர்தல் நடத்தி, அதன்மூலம் புதிய அரசியல் சட்டத்தை வகுக்கப்போவதாகவும் கூறிய காஸ்டிலோவின் பிரச்சாரம் பெரு நாட்டின் உழைக்கும் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. ‘‘புதிய அரசியல் சாசனம் அல்லது மரணம்’’ என முழங்கினார்கள், ‘‘சுதந்திர பெரு’’ கட்சியினர்.
எதிர்த்தரப்பு பாப்புலர் ஃபோர்ஸ் கட்சியின் வேட்பாளர் கெய்கோ புஜிமோரி, ‘‘கம்யூனிஸ்டு அபாயத்திலிருந்து அரசியல் சட்டத்தைப் பாதுகாப்போம்’’, ‘‘பெரு−வை வெனிசுலாவாக மாற்ற அனுமதிக்க மாட்டோம்’’ முதலான முழங்கங்களை பெட்ரோ காஸ்டிலோவுக்கு எதிராக முன்வைத்தார். மேலும், 1980−களில் பெரு−வில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஆயுதக் கிளர்ச்சியை நடத்திய ‘‘ஒளிரும் பாதை’’ என்ற சாகசவாத மார்க்சிய − லெனினியக் குழுவினரோடு தொடர்புடையவர்தான் காஸ்டிலோ என்று பொய்ப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டார்.

இவற்றைத் தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது சாடிய கேஸ்டிலோ, தான் ஒரு கம்யூனிஸ்டு அல்ல என்று வெளிப்படையாகவே சொல்லிக் கொண்டார். தன்னைத் தூய கத்தோலிக்க கிறித்தவராகக் காட்டிக் கொண்டார்.
காஸ்டிலோ ஆட்சிக்கு வந்தால் பணக்காரர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்துவிடுவார்கள் என்று எதிர்க்கட்சிகள் பிரச்சாரங்களை மேற்கொண்டபோது, ‘‘அது சுத்தப்பொய், நான் சொல்வதெல்லாம் பொருளாதாரத்தை ஒழுங்கமைப்பதைப் பற்றித்தான்; அந்நிய தொழில் நிறுவனங்களின் இலாபத்தில் 70 சதவிகிதத்தை உள்நாட்டிலேயே முதலீடு செய்ய வைப்பேன்; ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 20 சதவிகிதத்தைக் கல்வியையும் மருத்துவத்தையும் மேம்படுத்துவதற்குப் பயன்படுத்துவேன்’’ என்று தெளிவாகவே கூறினார், காஸ்டிலோ. ‘‘பணக்கார நாட்டில் ஏழை இருக்கக் கூடாது’’ என்பதே அவரது பிரபலமான முழக்கமான இருந்தது.
கிராமப்புறப் பகுதியான அண்டேயனில் அதிகபட்சமாக 2 இலட்சம் வாக்குகளைப் பெற்ற காஸ்டிலோ, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட கெய்கோ புஜிமோரியை 44,000 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து தேர்தலில் வென்றார். இதனைத் தொடர்ந்து, அமெரிக்க பாசிஸ்டு டிரம்ப்பைப் போலவே, காஸ்டிலோவின் தேர்தல் வெற்றி செல்லாது என்று அறிவிக்கக் கோரி தேர்தல் குழுவினரிடம் முறையிட்டார் புஜிமோரி. வாக்குகளைத் திருடி வெற்றி பெற்றதாக அவர் மீது குற்றஞ்சாட்டினார்.
தோல்வியை ஒப்புக்கொள்ளாத புஜிமோரி, தேர்தல் முடிவுகள் தொடர்பாக சர்வதேச விசாரணை வேண்டும் என்றார். லத்தீன் அமெரிக்கக் கண்டத்து தேர்தல் குழுவினரும் தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்திய நிலையில், ‘‘சர்வதேச விசாரணை’’ என்ற பெயரில் புஜிமோரி கோரியது தனது எஜமானான அமெரிக்காவைக் கட்டப் பஞ்சாயத்திற்கு அழைக்கத்தான் என்பது அப்பட்டமாகத் தெரிந்தது. அமெரிக்க நாடுகளின் அமைப்பு (ஓ.ஏ.எஸ். − Organisation of American States) – என்ற கட்டப் பஞ்சாயத்து அமைப்பிற்கு அவர் வெளிப்படையாக அழைப்பு விடுத்தார். அமெரிக்கா என்ன விரும்புகிறதோ, அதை குறிப்பறிந்து செய்வதுதான் இவ்வமைப்பின் வேலை.
கடந்த 2019 பொலிவிய தேர்தலில் இவா மொரேலஸ் என்ற சோசலிஸ்டுக் கட்சி வேட்பாளர் அதிபராக வெற்றிபெற்றபோது, அங்கு தலையிட்ட ஒ.ஏ.எஸ், அவ்வெற்றி செல்லாது என எவ்வித ஆதாரமும் இன்றித் தீர்ப்பளித்து. இதன்மூலம் அந்நாட்டில் ஒரு இராணுவ சர்வாதிகார ஆட்சிக்கு அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
தன் கட்சியினரை வைத்து பெரு நாடு முழுக்க காஸ்டிலோவுக்கு எதிரான போராட்டங்களை நடத்தினார் புஜிமோரி. இதனால் ஒரு மாதத்திற்கும் மேலாக தேர்தல் முடிவுகள் இழுத்தடிக்கப்பட்டன. புஜிமோரியின் குற்றச்சாட்டில் எவ்வித முகாந்திரமும் இல்லாத காரணத்தால், இவற்றை பெரு தேர்தல் குழு ஏற்றுக்கொள்ளவில்லை. ஜூலை 19−ஆம் தேதி தேர்தல் முடிவுகளை உறுதிப்படுத்தியது, தேர்தல் குழு. கடைசியாக, ஜூலை 28−ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார், பெட்ரோ காஸ்டிலோ.
மொத்தம் 130 இருக்கைகள் உள்ள பெரு காங்கிரசில், எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மையைப் பெறவில்லை. 37 இருக்கைகளை மட்டுமே கேஸ்டிலோவின் சுந்திர பெரு கட்சி வென்றுள்ள நிலையில், 5 இருக்கைகளில் வென்ற பெரு ஒற்றுமைக்கான கட்சியின் (together for peru) கூட்டணியுடன் 42 இடங்களை தக்கவைத்து சிறுபான்மை அரசாங்கமாக பொறுப்பேற்றுள்ளது. எதிர்கட்சியான பாப்புலர் ஃபோர்ஸ் கட்சி 24 இடங்களைப் பெற்று வலுவான எதிர்க்கட்சியாக உள்ளது. இதர இடங்களைப் பெற்ற கட்சிகளும் வலதுசாரிக் கட்சிகளாகவே உள்ளன.
பெரு−வைப் பொறுத்தவரை முன்னர் வெற்றிபெற்ற வலதுசாரிக் கட்சி வேட்பாளர்கள் அனைவருமே அங்கிருக்கும் முன்னாள் இராணுவத் தலைவர்கள் மற்றும் கார்ப்பரேட் மேட்டுக்குடியினரின் ஆதரவோடுதான் பெரு காங்கிரசை அலங்கரித்துள்ளனர். அதாவது, ஆளும் வர்க்கங்கள், அதிகார வர்க்கங்களின் ஆதரவில்லாமல் அவர்களால் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள முடிந்ததில்லை. தற்போது பொறுப்பேற்றுள்ள காஸ்டிலோ மட்டும்தான் இதற்கு விதிவிலக்கானவராக இருக்கிறார்.

எதிர்கட்சியிலிருக்கும் பிரதிநிதிகளில் முன்னாள் இராணுவத் தலைவர்களும் இருக்கின்றனர். அவர்கள் எவரும் காஸ்டிலோவின் தேர்தல் வெற்றியை ஏற்க மறுக்கின்றனர். காங்கிரசில் 79 இருக்கைகளைக் கொண்டு பலம் வாய்ந்த எதிர்க் கட்சிகளாக வலதுசாரிகள் இருப்பதால், காஸ்டிலோவின் அரசாங்கம் எந்தச் சட்டத் திருத்தங்களைக் கொண்டுவந்தாலும், அவற்றை நிறைவேற்றுவது கடினமாகவே இருக்கும்.
மேலும், பெருவின் அரசியலமைப்பிலேயே ‘‘தார்மீக ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ திறனற்ற ஒரு அதிபரை காங்கிரஸ் பதவி நீக்கலாம்’’ என்ற 19−ஆம் நூற்றாண்டின் பழைய விதியொன்று உள்ளது. இதை காஸ்டிலோவிற்கு எதிராக வலதுசாரிகள் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய வாய்ப்பும் உள்ளது.
இது ஒருபுறமிருக்க, பதவியேற்ற பின்னர் சுரங்கங்களைத் தேசியமயமாக்குவது உள்ளிட்டு, தான் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளைப் பற்றி காஸ்டிலோ இப்போது வாயே திறப்பதில்லை. இதனை முதலாளித்துவ ஊடகங்களே அம்பலப்படுத்துகின்றன. சுதந்திர பெரு கட்சியின் செயலாளரான செரோன் ரொஜாஸ், ‘‘தேர்தல் வாக்குறுதிகளை காஸ்டிலோ மதித்து நடக்க வேண்டும்’’ என்று தனது கட்சியின் சார்பில் அதிபராகியுள்ள காஸ்டிலோவுக்கு உபதேசித்துக் கொண்டிருக்கிறார்.
பெரு நாட்டை முதலாளித்துவ − ஏகாதிபத்தியச் சூறையாடலிலிருந்து விடுவிக்க விரும்புகிற ஒரு சோசலிசக் கட்சி, சொல்லிலும் செயலிலும் புரட்சிகரமானதாக இருக்க வேண்டும். அமெரிக்க மேலாதிக்கத்தையும் பெரு நாட்டின் கார்ப்பரேட் மேட்டுக்குடி வர்க்கங்களையும் ராணுவக் கும்பலையும் வீழ்த்தி, உழைக்கும் மக்களின் அதிகாரத்தை நிலைநாட்டுவதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். அமெரிக்காவின் மறுகாலனியாதிக்கத்தைக் கட்டிக்காக்கும் அரசு எந்திரத்தைத் தகர்த்தெறியும் வகையில், அமெரிக்காவின் பொய்கள், ஆட்சிக் கவிழ்ப்புச் சதிகள், படுகொலைகளை முறியடிக்கும் வகையில், சொந்தமாக மக்கள் படையைக் கொண்டிருக்கவும் வேண்டும். அதன்மூலம் மட்டுமே உழைக்கும் மக்களுக்கான புதியதொரு அரசு எந்திரத்தை நிறுவி, ஏகாதிபத்தியச் சூறையாடலையும் கார்ப்பரேட் கும்பலின் ஆதிக்கத்தையும் வீழ்த்த முடியும்.
படிக்க :
♦ பொலிவியா ஆட்சிக் கவிழ்ப்பு : அமெரிக்காவின் நாட்டாமை !
♦ சிலி நாட்டை அதிரவைத்த மக்கள் போராட்டம் !
ஆனால், பெரு நாட்டின் சோசலிஸ்டுகள் அமெரிக்காவின் மேலாதிக்கத்தையும் கார்ப்பரேட் சூறையாடலையும் கட்டிக் காக்கும் வகையில் அமைந்துள்ள தற்போதைய பெரு நாட்டின் அரசுக் கட்டமைப்பிற்குள்ளேயே தீர்வைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் வெற்றியின் மூலம் இதைச் சாதித்து விட முடியும் என்று இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், தேர்தல் வெற்றியின் மூலம் அமெரிக்க ஆதிக்கத்தையும் கார்ப்பரேட் கொள்ளையையும் ஒருக்காலும் வீழ்த்த முடியாது என்பதை பெரு−வின் அண்டை நாடான சிலி நாட்டின் ரத்தம் தோய்ந்த வரலாறு நிரூபித்துக் காட்டியுள்ளது. இதிலிருந்து படிப்பினைகளைப் பெறாமல், இன்னமும் கானலை நீரென நம்பியோடும் பெரு நாட்டின் சோசலிஸ்டுகளின் நடவடிக்கைகளானது, அந்நாட்டின் உழைக்கும் மக்களுக்கு வேதனைமிக்க இன்னுமொரு துயரக் கதையைத்தான் சொல்லப்போகிறது.
டேவிட்