ராபியா சைஃபி பாலியல் வன்கொலை : பார்ப்பனிய ஆணாதிக்க அதிகார வர்க்கத்தின் வெறியாட்டம் !
இரண்டு மார்பகங்களும் துண்டிக்கப்பட்டுள்ளன! பிறப்புறுப்பு குத்திக் கீறப்பட்டுள்ளது..! கழுத்து கிட்டத்தட்ட துண்டிக்கப்பட்டு தொங்கும் நிலையில்..!
அவள் பெயர் ராபியா ஷைஃபி. வயது 21. கொல்லப்பட்டது – ஆகஸ்ட் 26. டெல்லி லஜ்பத் நகர் மாவட்ட மாஜிஸ்திரேட் அலுவலகத்தில் சிவில் பாதுகாப்பு அதிகாரி.
அந்த குடும்பங்களுக்காக மட்டும் கட்டமைக்கப்பட்ட சனாதன பொது புத்தியின்,
அதுவும் தலைநகரில்! நமது நாடு ஜனநாயகத்தில் இருந்து தடம் புரண்டுவிட்டது.
காஷ்மீர் சிறப்பு உரிமை ரத்து – இரண்டு ஆண்டு நிறைவு : துளிர்விடுகிறது விடுதலை முழக்கம் !
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில், அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று இரண்டாம் முறையாக ஆட்சி அமைத்த மோடி தலைமையிலான காவி பாசிச கும்பல், தனது இந்துராஷ்டிரக் கனவை நிறைவேற்றும் விதமாக மூர்க்கத்தனமான நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதில் முதலாவதும், முக்கியமானதும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370 மற்றும் காஷ்மீரிகளுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கும் பிரிவு 35A ஆகியவற்றை ரத்து செய்ததாகும்.
இந்தச் சிறப்புச் சட்டம் நீக்கம் என்பது குறைந்தபட்ச ஜனநாயக நடவடிக்கைகளைக் கூட மேற்கொள்ளாமல், நாடு முழுவதும் இராணுவத்தை நிறுத்தி, காஷ்மீரில் ஊரடங்கை அறிவித்து, இணையம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளை ரத்து செய்து, எதிர்ப்புகளை ஒடுக்கி ஒரு இராணுவ நடவடிக்கைபோல் அமல்படுத்தப்பட்ட பாசிச நடவடிக்கையாகும். காஷ்மீரின் சிறப்புச் சட்டத்தை நீக்கியதோடு அம்மாநிலத்தை ஜம்மு − காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகத் துண்டாடியது, பாசிச மோடி அரசு.
காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டுவது, முன்னேற்றுவது என்ற வகையில்தான் காஷ்மீரின் சிறப்புச் சட்டம் நீக்கப்பட்டதாகவும், இதன் மூலம் ஜம்மு − காஷ்மீர் மற்றும் லடாக்கில் புதிய வரலாறு தொடங்கப்பட்டுள்ளதாகவும், இப்பாசிச நடவடிக்கையை நியாயப்படுத்தினார், பிரதமர் மோடி. தற்போது, சிறப்புச் சட்டம் நீக்கப்பட்டு 2 ஆண்டுகள் கடந்த நிலையில், ‘‘ஜம்மு − காஷ்மீர் யூனியன் பிரதேச அரசு புதிய வரலாற்றுக் கட்டத்திற்குள் பீடுநடை போடுகிறது’’ என்ற தலைப்பில் 2 ஆண்டுகால சாதனைகளை விளக்கி 76 பக்க வெளியீட்டைக் கொண்டு வந்துள்ளது, மோடி அரசு.
படிக்க :
♦ காஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை
♦ காஷ்மீர் : பத்திரத்தில் கையெழுத்துப் போட்டால்தான் விடுதலை !
பொய்யையும் புரட்டையுமே வாழ்வாகக் கொண்ட ஆர்.எஸ்.எஸ். − பா.ஜ.க கும்பல், இந்த வெளியீட்டிலும் ஜம்மு − காஷ்மீரில், மருத்துவம், சுற்றுலா, கல்வி, விளையாட்டு மற்றும் சொத்து உரிமைகள் ஆகியவற்றில் சாதனை நிகழ்த்தியுள்ளதாக, பொய்களையே சாதனைகளாக சுயதம்பட்டம் அடித்துக் கொள்கிறது. ஆனால், ஜம்மு − காஷ்மீரின் உண்மை நிலையோ நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. ஜம்மு − காஷ்மீரின் உண்மை நிலையை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது, ஜம்மு − காஷ்மீர் மனித உரிமைகளுக்கான அரங்கம் (Forum for Human Rights in Jammu Kashmir).
000
காஷ்மீருக்கான சிறப்புச் சட்டம் நீக்கப்பட்ட பிறகு, இரண்டாண்டுகளாக தடுப்புக் காவல்களும், பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கான தடையும் (144) தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. வீட்டிலிருந்து வெளியில் செல்பவர்களுக்கு என்ன நடக்கும் எந்த உத்திரவாதமற்ற சூழல்தான் அங்கு நிலவுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு, காஷ்மீர் மாநிலமே திறந்தவெளிச் சிறைச்சாலையாக மாறியிருக்கிறது.
பொது ஊரடங்கை நீட்டிப்பதோடு, அரசு ஊழியர்கள் உட்பட, காஷ்மீர் மக்களின் மீதான கண்காணிப்பையும் அதிகரித்துள்ளது, மோடி அரசு. சமூக வலைத்தளங்களைக் கண்காணிக்க சிறப்பு பணிப்படை (Special Task Force) உருவாக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். − பா.ஜ.க கும்பல்களுக்கு, மோடி அரசை விமர்சிப்பதும் அம்பலப்பட்டுத்துவதுமே ‘தேச விரோத’ செயல்கள்தான். அதன்படி, காஷ்மீரில் தேச விரோதமாக சமூக வலைதளங்களில் பதிவிட்டார்கள் என்று 18 அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
காஷ்மீரின் உள்ளூர் ஊடகங்கள் மிகப்பெரும் அடக்குமுறைக்கும் போலீசின் மிரட்டலுக்கும் உள்ளாகியிருக்கின்றன. செய்திகள் யாவும் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு இயக்குனரகத்தின் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே வெளியிடப்படுகின்றன. காஷ்மீரின் உண்மைமை நிலையை வெளிக்கொண்டு வரும் பத்திரிக்கையாளர்கள் தாக்கப்படுவதும் துன்புறுத்தப்படுவதும் மற்றும் ஊபா போன்ற கருப்புச் சட்டங்களால் கைது செய்யப்படுவதும் தொடர்கதையாய் உள்ளன.
கடந்த 2019−இல், பெண் பத்திரிக்கையாளர்கள் உட்பட 2,300−க்கும் மேற்பட்டோர் ஊபா சட்டத்தால் கைது செய்யப்பட்டனர். இதில் 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோர் இன்னமும் சிறையில்தான் உள்ளனர். காஷ்மீரில், பத்திரிக்கையாளராக இருப்பது பெரும் சவாலானதாகவும், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவதாகவும் மாறியுள்ளது.
மேலும், 2019−இல் சிறப்புச் சட்டத்தை நீக்கும்போது கைது செய்யப்பட்டவர்களில், சிறுவர்கள் மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் என ஆயிரத்துக்கும் அதிகமானோர் இன்னமும் சிறையில் உள்ளனர். ஆட்கொணர்வு மனு, பிணை கோரும் மனு மற்றும் விரைவான வழக்கு விசாரணை போன்ற சட்ட உரிமைகளும் மறுக்கப்படுகிறது. காஷ்மீர் மக்களைத் தொடர்ந்து அச்சுறுத்தலில் வைப்பதற்கான வழிமுறையாக இவற்றைக் கையாண்டு வருகிறது, பாசிச மோடி அரசு.
இணையதள வசதி, அத்தியாவசியமாகியுள்ள இன்றைய சூழலில், ஜம்மு − காஷ்மீரில் இரண்டாண்டுகளாக இணையதள சேவையும் பகுதியளவிற்குதான் வழங்கப்படுகிறது. அதிலும் இராணுவச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டால் இணையதள வசதி முடக்கப்படுவது இயல்பான நடைமுறையாக உள்ளது. இதனால், காஷ்மீர் மக்களுக்கு வீடே சிறையறையாக மாறியுள்ளது என்றால் அது மிகையாகாது.
ஏனெனில், பொது ஊரடங்கால் வெளியில் செல்லவும் முடியாது; இணையதள சேவையும் முடக்கப்படுவதால் உலக நடப்பிலிருந்து துண்டிக்கப்பட்டு சிறையிலிருக்கும் நிலைதான் காஷ்மீரிகளுக்கு. வீடே சிறையாக உள்ள அம்மக்களின் நிலைமை நம் நெஞ்சை உலுக்குகிறது.
மேலும், காஷ்மீரிலும் கொரோனா பெருந்தொற்றால் ஆன்லைன் வகுப்புகள்தான் நடைபெறுகின்றன. இணையதள வசதி முடக்கப்படுவதாலும், 4ஜி தொலைத்தொடர்புச் சேவை கிடைக்காததாலும் வகுப்புகள் நடத்தவோ, பங்கேற்கவோ முடியாத நிலைமைதான் அங்குள்ளது.
நாடு முழுவதும் அரசியல்வாதிகள், மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்களை பெகசாஸ் உளவு செயலி மூலம் ஒன்றிய அரசு உளவு பார்த்தது போல், காஷ்மீரிலும், 2017 முதல் 2019−ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரை பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளார்கள என 25−க்கும் மேற்பட்டோரை இந்தச் செயலி மூலம் மோடி அரசு உளவு பார்த்துள்ள உண்மையானது, தடவியல் சோதனை மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
தற்போது தாலிபான்கள் ஆப்கானில் ஆட்சியைக் கைப்பற்றியிருப்பதால், இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற பீதியூட்டி, காஷ்மீர் மக்களின் மீதான அடக்குமுறையை இன்னும் அதிகரிக்கத் துடிக்கிறது மோடி அரசு.
காஷ்மீரின் சிறப்புச் சட்ட நீக்கமானது ஆர்.எஸ்.எஸ். − பா.ஜ.க காவி கும்பலின் இந்துராஷ்டிரக் கனவுக்கானது மட்டுமல்ல, அது கார்ப்பரேட் கும்பலின் நலனுக்கானதுமாகும். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய பிரிவு 370−ஐ மோடி அரசு நீக்கியதோடு, காஷ்மீரிகளுக்கு மட்டும் காஷ்மீரில் நிலங்கள், வேலைவாய்ப்பு மற்றும் சொத்துகள் வாங்குவதற்கான உரிமை மற்றும் சலுகைகளை வழங்கிய பிரிவு 35A−யையும் நீக்கியுள்ளது.
இச்சிறப்புச் சட்டம் நீக்கப்பட்டவுடன், ‘‘காஷ்மீரில் இனி இந்தியர்கள் சொத்துக்கள் வாங்கத் தடையில்லை’’ என கூப்பாடு போட்டன ஆர்.எஸ்.எஸ். − பா.ஜ.க காவி கும்பல்கள். சிறப்புச் சட்டம் நீக்கப்பட்ட இரண்டாண்டுகளில், காஷ்மீரில் நடைமுறையில் இருந்த 12 சட்டங்களை ரத்து செய்துள்ளது, யூனியன் பிரதேச அரசு.
அவற்றில் முக்கியமான ஒன்றுதான், 1950−இல் ஷேக் அப்துல்லா ஆட்சியில், கொண்டுவரப்பட்ட் பெரும் பண்ணைகள் ஒழிப்புச் சட்டமாகும் (Big Landed Estaes Abolition Act). இச்சட்டம் கொண்டு வருவதற்கு முன்பு வரை காஷ்மீரின் நிலங்கள் பெரும் பண்ணையார்களுக்கும் நிலப்பிரபுக்களுக்கும்தான் சொந்தமாக இருந்தது. ஆனால், இச்சட்டம் கொண்டுவரப்பட்டு, அமல்படுத்தப்பட்ட இரண்டாண்டுகளில், அதாவது 1952−க்குள் காஷ்மீரில் சுமார் 7 லட்சம் நிலமற்ற கூலி − ஏழை விவசாயிகளுக்கு நிலங்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டன. இதில், சுமார் 2,50,000 தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இந்து விவசாயிகளும் நிலவுரிமை பெற்றனர். முஸ்லீம்களின் ஆட்சி இந்துக்களுக்கு எதிரானது என்று வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வரலாற்றைத் திரித்துப் புரட்டும் ஆர்.எஸ்.எஸ். − பா.ஜ.க கும்பலின் யோக்கியதையை இதன்மூலம் புரிந்து கொள்ள முடியும்.
தற்போது இந்த பெரும் பண்ணை ஒழிப்புச் சட்டத்தை ரத்து செய்ததிலிருந்து, சட்ட விரோத நில ஆக்கிரமிப்புகள் நடைபெறுவதாகவும், வழக்குகள் பதிவாகி வருவதாகவும் செய்திகள் வருகின்றன. மேலும் நாடோடி பழங்குடிகள், தங்கள் வாழ்விடத்திலிருந்து வனத்துறையினரால் விரட்டப்படுவதும் அரேங்கேறி வருகிறது.
மோடி சொல்லும் வளர்ச்சி என்பது அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட்டுகளின் வளர்ச்சி என்பதற்கு பல்வேறு சான்றுகள் உள்ளன. மோடியின் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு, மீத்தேன், சாகர் மாலா, பாரத் மாலா, எட்டுவழிச்சாலை, மோட்டார் வாகன திருத்தச் சட்டம், கடல் வள மசோதா, நீட் மற்றும் புதிய கல்விக் கொள்கை என அனைத்தும் கார்ப்பரேட் நலனுக்காகனவைதான். அந்த வழியில்தான் இப்போது ஜம்மு − காஷ்மீரில் பெரும்பண்ணைகள் ஒழிப்புச் சட்ட நீக்கமும் அரங்கேற்றப்பட்டுள்ளது. காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு சட்டத்தையும், சலுகைகளையும் ரத்து செய்ததன் மூலம், காஷ்மீரில் இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இனி சொத்து வாங்க முடியும் என்ற காவி கும்பலின் கூப்பாட்டையும் பொருத்திப் பார்த்தால் இதன் பலன் யாருக்கானது என்று புரியும்.
காஷ்மீரின் வளங்களை பன்னாட்டு கார்ப்பரேட் முதலைகள் சூறையாடுவதற்காகவும். இஸ்லாமிய மக்களை சொந்த மண்ணில் இரண்டாம்தர குடிமக்களாக்கி தனது அகண்ட பாரத கனவை நிறைவேற்றிக் கொள்ளவும்தான் ஆர்.எஸ்.எஸ். − பா.ஜ.க காவி கும்பல்களால் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, துண்டாடப்பட்டது. கடந்த இரண்டாண்டுகளில் இப்பாசிச கும்பல் காஷ்மீரை தனது கார்ப்பரேட் − காவி பாசிசத்தின் முதலாவது காலனியாக − அடிமைப் பிரதேசமாக்கியுள்ளது.
000
2019−இல் பாசிச நடவடிக்கையின் மூலம் காஷ்மீரின் சிறப்புச் சட்டத்தை நீக்கியபோது, ஒருங்கிணைந்த காஷ்மீரின் லடாக் பகுதிகளிலும் ராணுவத்தைக் குவிப்பது, அரசியல் தலைவர்களை வீட்டுக் காவலில் வைப்பது என்ற வகையில் லடாக் பிராந்தியமும் அடக்குமுறைக்குள்ளானது.
2019−இல், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, கார்கில் மற்றும் லே ஆகிய இரு மாவட்டங்களை உள்ளடக்கி, லடாக் தனியொரு யூனியன் பிரதேசமாகப் பிரிக்கப்பட்டது. அப்பொழுது, சிறப்புச் சட்ட நீக்கம் மற்றும் யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டதை எதிர்த்து முஸ்லீம்கள் அதிகமுள்ள கார்கில் பிராந்தியம் போராட்டக் களமாகியது. புத்த மதத்தினர் பெரும்பான்மையாக உள்ள, லே பிராந்தியமோ யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டதை வரவேற்று மகிழ்ச்சிக் கோலம் பூண்டது. ஆனால், இந்த மகிழ்ச்சி, அடுத்த சில நாட்களிலேயே வற்றிப்போனது.
கடந்த இரண்டாண்டுகளில், ஜம்மு − காஷ்மீரைப் போலவே லடாக்கில் உள்ள நிலங்களின் மீதான உரிமை மற்றும் வேலை வாய்ப்பு ஆகிய சட்டபூர்வமான இரண்டு உரிமைகளும் அம்மக்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளன. லடாக் யூனியன் பிரதேசமாகப் பிரிக்கப்பட்டாலும், அரசு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. ஒருங்கிணைந்த காஷ்மீரின் ஒரு பகுதியாக இருக்கும்போது, இப்பகுதிவாழ் மக்கள் காஷ்மீரின் அரசு வேலைவாய்ப்புகளில் பங்குபெற முடிந்தது. இப்போது, தனி யூனியன் பிரதேசமாகப் பிரிக்கப்பட்டதால் வேலைவாய்ப்பும் பறிபோயுள்ளது.
லடாக்கில் 97 சதவிகிதத்துக்கு மேலானோர் பழங்குடியினராவர். 1990−லிருந்து கார்கில் மற்றும் லே−விற்கு தனித்தனியாக பழங்குடியினரது மலை மேம்பாட்டுக் கவுன்சில் (Hill Developement Council) என்ற சுயாட்சி அதிகார அமைப்பு இயங்கி வந்தது. இக்கவுன்சிலுக்கான தேர்தல் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்கள் இக்கவுன்சிலின் ஆலோசகர்களாக இருந்து வந்தனர். இந்த ஆலோசகர்கள், தங்கள் தொகுதிக்கான தேவைகளையும் அதற்கான செலவுகளையும் முன்வைத்து நிறைவைற்றும் அதிகாரம் கொண்டவர்களாக இருந்தனர்.
படிக்க :
♦ ஜாலியன் வாலாபாக் நினைவிடம் : கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை ?
♦ ஜாலியன்வாலா பாக் படுகொலையின் நாட்குறிப்புகள் !
ஆனால், லடாக் பிராந்தியம் யூனியன் பிரதேசமாகப் பிரிக்கப்பட்ட பிறகு, மைய அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் ஒப்புதல் இல்லாமல், மலை மேம்பாட்டுக் கவுன்சிலின் ஆலோசகர்கள் தங்கள் தொகுதிக்கென சல்லிக் காசு கூட ஒதுக்க முடியாது. இவ்வாறாக, கடந்த இரண்டாண்டுகளில் நிலைமை தலைகீழாக மாறிப் போயுள்ளது. சுருக்கமாகச் சொன்னால், லடாக் பழங்குடியினப் பகுதிகளின் சுயாட்சி உரிமையும் பாதுகாப்பும் அதிகாரமும் மோடி அரசால் பறிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழல்தான், 2019−க்கு முன்பு வரை “லடாக்கை யூனியன் பிரதேசமாகப் பிரிக்க வேண்டும், லடாக்கை அரசியல் சட்டத்தின் அட்டவணை பட்டியல் 6−இல் இணைக்க வேண்டும்” என்று கோரிவந்த லே மாவட்ட மக்களை, கார்கில் மாவட்ட மக்களுடன் இணைந்து மாநில அந்தஸ்து வேண்டும் என்று குரலெழுப்ப வைத்துள்ளது. மத வேறுபாடுகளைக் கடந்து, கார்கில் ஜனநாயகக் கூட்டணியும் (KDA − Kargil democratic alliance), லே மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 6−வது பட்டியலுக்கான மக்கள் இயக்கத்தின் உயர்நிலைக் குழுவும் (ABPMSS) மாநில அந்தஸ்து வேண்டுமென்ற பொது கோரிக்கைக்காக இணைந்து போராடி வருகின்றன.
மோடி அரசின் துரோகத்தை எதிர்த்து, லே பிராந்தியத்தின் பா.ஜ.க. தலைவரான செர்ரிங் டோர்ஜீ, அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பா.ஜ.க.வின் முன்னாள் எம்.பி.யாகிய துப்ஸ்தன் ச்சீவாங், தேசிய மாநாட்டுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் திக்சே ரின்போச்சே, லடாக் பிராந்திய காங்கிரசுத் தலைவர் நவாங் ரிக்சின் ஜோரா, முன்னாள் பா.ஜ.க. தலைவரும் அமைச்சருமான செர்ரிங் டோர்ஜீ முதலான பிரமுகர்கள் இந்த இயக்கத்தைத் தலைமை தாங்கி நடத்தி வருகின்றனர். ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்குப் பின்னர் கார்கில் மற்றும் லே பிராந்திய மக்கள் தங்களது உரிமைக்காக ஐக்கியப்பட்டுள்ளனர். பா.ஜ.க. கட்சியானது இப்பிராந்தியத்தில் தனிமைப்பட்டுப் போயுள்ளது.
லடாக்கில் பற்றிய இச்சிறு பொறியானது, அடக்குமுறைகளாலும், இயற்கைவளச் சூறையாடலாலும் சின்னபின்னமாகியுள்ள பனிமலை சூழ்ந்த காஷ்மீர் மாநிலத்தை மீண்டும் எரிமலையாக வெடித்தெழச் செய்யும் என்பதற்கான அறிகுறியாகும். லடாக் மக்களின் நியாயவுரிமைக்காகவும், ஜம்மு − காஷ்மீரின் அடக்குமுறைக்கு எதிராகவும் குரல் கொடுக்க வேண்டியது, பாசிசத்தை எதிர்க்கின்ற, வீழ்த்தத் துடிக்கின்ற நம் அனைவரின் கடமையாகும்.
அப்பு
நொறுங்கும் நாடாளுமன்ற ஜனநாயகம் அரங்கேறும் பாசிச சர்வாதிகாரம் !
இத்தாலியில் 1924−இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் முசோலினியின் பாசிஸ்ட் கட்சி தலைமையில் உருவான தேசிய கூட்டணி அறுதிப் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சியைப் பிடித்த பின்னர், அரசியல் கொலைகள், கும்பல் வன்முறைகள் முதலான சட்டவிரோதமான செயல்பாடுகளைச் செய்துகொண்டே, சட்டங்களைத் திருத்தி ஒரு போலீசு ராஜ்ஜியத்தை உருவாக்குவது, அரசு நிறுவனங்களின் முக்கிய பொறுப்புகளில் பாசிஸ்டுகளை புகுத்துவது − என சட்டபூர்வ மற்றும் சட்டவிரோத வழிமுறைகளை இணைத்துக் கொண்டுதான் பாசிச சர்வாதிகாரம் நிறுவப்பட்டது. அவற்றுள் “நாடாளுமன்றத்திற்கு கட்டுப்படாத” பிரதமரை உருவாக்கியது குறிப்பிடத்தக்க அம்சம்.
இத்தாலியின் வரலாறு, தற்போது இந்தியாவில் நடந்து கொண்டிருக்கும் நிலைமைகளுக்கு ஒப்பானதாகவே இருக்கிறது. நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் நிகழ்வுகள் அனைத்தும் பாசிசம் வேகமாக அரங்கேறி வருவதை நமக்கு எச்சரிக்கவும் செய்கிறது.
000
மோடி அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து மக்கள் மீதான அடக்குமுறைகள் அதிகரிப்பதும், நாடாளுமன்றத்தில் அவற்றைப் பற்றி விவாதிப்பதற்கான நேரமும் சூழலும் குறைவதுமான இரண்டு போக்குகளும் அதிகரித்து வந்தன. கொரோனா தொற்று நோய் பரவத் தொடங்கிய பின்னர், இவ்விரு போக்குகளும் மேலும் தீவிரமடைந்தன.
படிக்க :
♦ இதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் ?
♦ கார்ப்பரேட் நலத் திட்டங்கள் : மக்கள் மீதான மோடி அரசின் பொருளாதார யுத்தம் !
குறிப்பாக, கொரோனா இரண்டாம் அலையின்போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட கொத்துக் கொத்தான மரணங்கள், கங்கைக் கரையை நிறைத்த பிணங்கள், சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா, பாரத் பயோடெக் − என்ற மோடிக்கு நெருக்கமான இரண்டு நிறுவனங்கள் கொள்ளை லாபமடிப்பதற்காகவே கொண்டுவரப்பட்ட தடுப்பூசிக் கொள்கை, அவர்களுக்கு மட்டுமே ஏகபோக அனுமதி, கொரோனா தொற்று அதிகரித்து வந்த சூழலில் உத்திரப்பிரதேசம், குஜராத், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் மோடி − அமித்ஷா கும்பல் ஆயிரக்கணக்கனோரைக் கொண்டு நடத்திய தேர்தல் பொதுக்கூட்டங்கள் − பிரச்சாரங்கள் ஆகியவையெல்லாம் நாட்டு மக்களிடையே கடும் கொந்தளிப்புகளை உருவாக்கின.
மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி வரி நிலுவைகளை வழங்காமல் ஏமாற்றி வருவது, இந்திய − சீன எல்லைப் பிரச்சனை, காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டுமென்ற கோரிக்கை, அம்பலப்பட்டு நாறிய ரஃபேல் ஊழல், விண்ணை முட்டும் பெட்ரோல் − டீசல் விலை உயர்வு, மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தொடரும் விவசாயிகள் போராட்டம் போன்ற எதையும் மோடி அரசு பொருட்படுத்தவில்லை. மேக்கேதாட்டில் அணை கட்டும் கர்நாடகாவின் அடாவடி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களிலும் எந்த பிரச்சனைக்கும் தீர்வு காணாத மோடி அரசின் அலட்சியப்போக்கானது, இனியும் இந்த ஆட்சியைச் சகித்துக் கொள்ள முடியாத நிலைமைக்கு நாட்டு மக்கள் அனைவரையும் தள்ளியது.
ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட மரணங்கள், வேலை இழப்புகள் போன்ற அனைத்திலும் மோடி அரசு பொய்யான விவரங்களை அள்ளி வீசியது. கார்ப்பரேட்டுகளுக்குச் சேவை செய்யும் வகையில் மக்கள் விரோத சட்டத் திருத்தங்களையும் மேற்கொண்டு வந்தது. இவற்றிற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை உழைக்கும் மக்கள் நடத்தி வந்தனர்.
நாட்டில் நடந்துவரும் இந்த அசாதாரணமான நிலைமைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எதிர்க்கட்சிகளால் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்தன. விவாதிக்கப்பட வேண்டிய பிரச்சனைகள் ஒருபுறம் குவிந்து கொண்டிருக்க, இன்னொருபுறம் நாடாளுமன்றக் கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்பதில்லை என்பதும், மற்றொருபுறம் நாடாளுமன்றக் கூட்டங்களில் விவாதங்கள் நடப்பது குறைந்து வருவதென்பதும் தொடர்ந்தது.
சென்ற 2020−ம் ஆண்டில் கொரோனா முதல் அலை உருவாகியதையடுத்து, பட்ஜெட் கூட்டத் தொடர் பாதியிலேயே முடித்துக் கொள்ளப்பட்டது. குளிர்கால கூட்டத் தொடர் ரத்து செய்யப்பட்டது. மழைக்காலக் கூட்டத் தொடரிலும் அவையின் நேரம் குறைக்கப்பட்டுவிட்டது. இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடரும் முன்கூட்டியே முடித்துக் கொள்ளப்பட்டது. மேலும், ஆளுங்கட்சியின் அராஜகமான செயல்பாடுகளாலும் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதாலும் நாட்டையும் மக்களையும் பாதிக்கும் பல்வேறு பிரச்சனைகள் விவாதிக்கப்படவில்லை. ஆகவே, இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலாவது விவாதம் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எதிர்பார்ப்பும் எதிர்கட்சிகள் மற்றும் முதலாளித்துவ ஊடகங்கள் மத்தியில் அதிகரித்து வந்தது.
இந்த சூழலில்தான் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் ஜூலை 19−ம் தேதி தொடங்கி ஆகஸ்டு 13−ம் தேதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டது.
000
நாடாளுமன்றத்தில் கேள்விகளை அனுமதித்து முறையாக விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் முறையிட்ட நிலையில், இரு அவை உறுப்பினர்களையும் ‘‘நாடாளுமன்றத்திற்கு வெளியே’’ கூட்டி பிரதமர் உரையாற்றுவார்; அதில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததையொட்டி அதைக் கைவிட்டது மோடி அரசு.
இந்நிலையில், முதல்நாள் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த பல்வேறு கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதால், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். அன்றைய நாள் மாலையில், இசுரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ என்ற நிறுவனத்தின் ‘‘பெகாசஸ் ஸ்பைவேர்’’ என்ற செயலி மூலம் மோடி அரசை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள், சமூக செயல்பாட்டாளர்கள் − என இந்தியாவைச் சேர்ந்த சுமார் ஆயிரம் பேரை உளவு பார்த்த விவகாரம் வெளிவரத் தொடங்கியது.
மோடி அரசை விமர்சிப்பவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை உடனுக்குடன் அறிந்துகொண்டு, மோடி அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதும் அம்பலமானது. எதிர்க்கட்சிகளின் ஃபோனை ஒட்டுக்கேட்கும் விவகாரம் என்பது புதிய விசயமல்ல. இதற்கு முன்னர் காங்கிரசு ஆட்சியிலும் நடந்தவைதான். நவீன தொழில்நுட்பம் வளர்ந்ததை அடுத்து செல்ஃபோன் வழியாக எதிர்க்கட்சிகளையும், தனது அரசை விமர்சிப்பவர்களையும் துல்லியமாக உளவு பார்த்துள்ளது பா.ஜ.க அரசு. புதிய விசயம் என்னவென்றால், இதுவரை சொந்த நாட்டு மக்களை அந்தந்த நாட்டு அரசுகளே உளவு பார்த்துதான் வரலாறு. ‘தேச பக்தி’யை மொத்தமாக குத்தகைக்கு எடுத்திருக்கும் பா.ஜ.க-வோ அந்நியக் கம்பெனி மூலம் சொந்த நாட்டு மக்களை உளவு பார்த்து, ‘தேச பக்தி’யில் புதிய உச்சத்தைத் தொட்டுவிட்டது.
விவாதங்கள் நடத்தாமல் நாடாளுமன்றத்தைச் செயலிழக்கச் செய்வதை தனது மரபாகவே கொண்டுள்ள பா.ஜ.க-வுக்கும் பிழைப்புவாத எதிர்க்கட்சிகளுக்கும் இந்த பெகாசஸ் பிரச்சனை நல்வாய்ப்பாக அமைந்துவிட்டது. ஜூலை 20−ம் தேதி முதல் பெகாசஸ் விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துவந்தபோதிலும், அனுமதி மறுக்கப்பட்டதால் எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடத் தொடங்கினர். இதைக்காட்டி, ‘‘பாருங்கள், எதிர்கட்சிகள் நாடாளுமன்ற ஜனநாயகத்தை இழிபடுத்துகிறார்கள்’’ என்று நரித்தனமாகப் பிரச்சாரம் செய்து தன்னை ஜனநாயகக் காவலனாகக் காட்டிக் கொண்டது, பா.ஜ.க.
அரசின் மீதான விமர்சனங்களை விவாதிக்க அனுமதி மறுப்பது, எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசுவதற்கு அனுமதி மறுப்பது, ‘‘கூச்சல் போடுகிறார்கள்’’ என்று சொல்லி எதிர்க்கட்சியினரை அவையிலிருந்து வெளியேற்றுவது, எதிர்க்கட்சிகளின் கருத்துகளை விவாதக் குறிப்பில் இருந்து நீக்குவது, தொடர்ந்து அவையை ஒத்திவைப்பது, பிரதமரும் உள்துறை அமைச்சரும் அவைக்கு வராமல் நாடாளுமன்றத்தை அவமதிப்பது − என பாசிஸ்டு கட்சிக்கே உரித்தான வகையில் நாடாளுமன்றத்தை நடத்தியது பா.ஜ.க.
திரிணாமுல் காங்கிரசு எம்.பி−க்கள் ஐந்து பேரை நாடாளுமன்றத்தில் இருந்து இடைநீக்கம் செய்தது, விவாதிக்கும் உரிமை மறுக்கப்படுவதை எதிர்த்து தொடர்ந்து கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சிகளை ‘‘நாடாளுமன்றத்தின் கண்ணியத்தை’’க் கெடுத்துவிட்டார்கள், ‘‘நாடாளுமன்றத்தின் மாண்பு’’ பறிபோய்விட்டது என்று குறை கூறியது, மாநிலங்களவையின் சபாநாகர் வெங்கையா நாயுடு நாடாளுமன்றத்திலேயே கண்ணீர் விட்டு அழுதது − என நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கியது மட்டுமல்ல; கேள்வி கேட்கும் அடிப்படை உரிமையையே கேலிக்கூத்தாக்கி எதிர்க்கட்சிகளை எள்ளி நகையாடியது மோடி − அமித்ஷா கும்பல்.
அத்தனை அயோக்கியத்தனங்களையும் அராஜகங்களையும் தானே செய்துவிட்டு, இறுதியில், நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற வேண்டிய இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே எவ்வித முன்னறிவிப்புமின்றி திடீரென நாடாளுமன்றக் கூட்டத் தொடரை முடித்துவிட்டதாக மோடி அரசு அறிவித்தது.
இந்திய ஜனநாயகத்தில் இன்னமும் நிலவுவதாகச் சொல்லப்படும் நாடாளுமன்ற ‘விவாதச் சுதந்திரமும்’ நிராகரிக்கப்பட்டுவிட்டதன் மூலம் ‘‘ஜனநாயகம் செத்துவிட்டது’’ என்று சொல்லி எதிர்க்கட்சிகள் புலம்புவதைத் தவிர வேறெதுவும் செய்ய இயலாமல் முடங்கிவிட்டன. இந்நிலையில், நாடாளுமன்றத்தைவிட்டு வெளியேற மறுத்து தர்ணா போராட்டத்தில் இறங்கிய எதிர்க்கட்சிகளை நாடாளுமன்ற அவைக் காவலர்களைக் கொண்டு வெளியேற்றாமல், வெளியாட்களைக் கொண்டு வெளியேற்றி, எதிர்க்கட்சிகளையும் நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் மேலும் கேலிக்குரியதாக்கியது, மோடி அரசு.
படிக்க :
♦ பெகாசஸ் : ‘ஜனநாயகக்’ கட்டமைப்பை உளவு பார்க்கும் இந்து ராஷ்டிரம் !!
♦ பெகாசஸ் : இந்தியாவில் யாரெல்லாம் உளவு பார்க்கப்பட்டார்கள் ?
இறுதிவரை, தாங்கள் எழுப்பிய எந்தப் பிரச்சனையையும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க இயலாத எதிர்க்கட்சியினர் அனைவரும் ஒன்றிணைந்து டெல்லியில் பேரணி சென்ற அவலக் காட்சி நடந்தேறியது. இந்த பேரணியில், ‘‘நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நிறைவடைந்துவிட்டது; ஆனால், நாட்டிலுள்ள 60 சதவிகித மக்களின் நலன்களுக்காக இந்தக் கூட்டத் தொடர் நடைபெறவில்லை; நாடாளுமன்றத்திற்குள் பேசுவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை; இதன் மூலமாக மிகப்பெரும் ஜனநாயகப் படுகொலையை மத்திய அரசு நடத்தியுள்ளது’’ என்று காங்கிரசு கட்சித் தலைவர் ராகுல்காந்தி ஒப்பாரி வைத்தார்.
‘‘இந்த நாடு தங்களைக் கைவிட்டுவிட்டது என்ற உண்மையை எதிர்க்கட்சிகளால் இன்னமும் ஜீரணிக்க முடியவில்லை. இக்கூட்டத் தொடரில், தெருக்களிலிருந்து நாடாளுமன்றத்துக்கு அராஜகத்தைக் கொண்டுவருவதே எதிர்க்கட்சிகளின் ஒரே செயல்திட்டமாக இருந்தது’’, ‘‘மழைக்காலக் கூட்டத் தொடரில் நடந்த சம்பவங்களுக்காக நாட்டு மக்களிடம் எதிர்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்றார் பா.ஜ.க-வைச் சேர்ந்த பியூஸ் கோயல். மத்திய அமைச்சர்கள் அடங்கிய ஒரு குழு குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவைச் சந்தித்து, எதிர்க்கட்சிகள் மீது புகார் கொடுத்த நாடகமும் அரங்கேறியது.
தற்போது நாடாளுமன்றத்தில் நடந்து முடிந்த இந்த ‘ஜனநாயகப் படுகொலை’யை ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தமிழக சட்டமன்றக் கூட்டங்களை, 110 விதியின் கீழ் அறிக்கை வாசிக்கும் கூட்டமாகவும் ஜெயலலிதாவின் புகழ்பாடும் கூட்டமாகவும் மாற்றப்பட்டிருந்த வரலாறை நமக்கு நினைவுபடுத்துகிறது.
000
அரசாங்கத்தின் செயல்பாடுகள் மீதான விவாதம் மற்றும் சட்டமியற்றுதல் ஆகிய இரண்டு கடமைகள் நாடாளுமன்றத்திற்குரிய சில முக்கிய கடமைகளாகும். இவற்றில் முதல் கடமையாகிய அரசாங்கத்தின் செயல்பாடுகளை விவாதிக்க அனுமதிக்கப்படவில்லை; அதேசமயம், நாடாளுமன்றக் குழுக்களின் கருத்துகளோ, விமர்சனங்களோ, சோதனையோ இல்லாமலேயே நடப்புக் கூட்டத்தொடரில் 19 மசோதாக்கள் அவசரமாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
சாராசரியாக ஒவ்வொரு சட்ட மசோதாவும் 34 நிமிடங்களில் விவாதங்களே இல்லாமல் நிறைவேற்றப்பட்டுள்ளன. முக்கியமாக, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிலகங்களைப் பற்றிய புதிய திவால் சட்டத் திருத்த மசோதா 2021 (Insolvency and Bankruptcy Code (Amendment) Bill, 2021) ஐந்தே நிமிடங்களில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த மோசடி ஜனநாயகத்தை, ‘‘இந்தியா − செயல்படாத நாடாளுமன்றத்தைக் கொண்டுள்ள நாடாளுமன்ற ஜனநாயகம்’’ என்று முதலாளித்துவ ஊடகங்களே எள்ளி நகையாடுகின்றன. உச்சநீதிமன்ற நீதிபதியோ, ‘‘விவாதங்கள் இல்லாமல் சட்டங்கள் இயற்றப்படுவது நாட்டிற்கு நல்லதல்ல’’ என்று புலம்பியிருக்கிறார். ‘‘மோடி − அமித்ஷா−வின் கொடூர அரசாங்கம்’’, ‘‘பாசிசம்’’ என்று குற்றஞ்சாட்டுகிறார் திரிணாமுல் காங்கிரசின் எம்.பி ஒருவர்.
நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் சட்டங்கள், திட்டங்களை விவாதத்தின் மூலம் பெரும்பான்மை வாக்கெடுப்பு நடத்தியே நிறைவேற்ற வேண்டும் என்ற அரசியல் சாசனத்தின் அடிப்படையில்தான் இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் இயங்கி வருகிறது. ஆனால், அப்படிப்பட்டதொரு நிகழ்வே இல்லையென்றால், இது ஜனநாயகமா என்று கேள்வி எழுப்புகின்றனர், சில அறிவுத்துறையினர்.
இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு இன்று நேர்ந்துள்ள இந்தப் பரிதாபகரமான நிலைமையைக் கண்டு வேதனையடையும் சிலர், சரியான கட்சி ஆட்சிக்கு வந்தால் இதனை மீட்டுவிடலாம் என்று கனவும் காண்கிறார்கள். ‘‘அரசியல் சாசனத்தைக் காப்போம், ஜனநாயகத்தைக் காப்போம்” என்றும் முழங்குகிறார்கள். ஆனால், இது செத்தவன் கையில் வெற்றிலையைக் கொடுத்த கதைதான்.
000
முதலாளித்துவ நாடாளுமன்றத்தை ‘‘அரட்டை மடம்’’ என்று கேலி செய்வார் லெனின். ஆனால், எதிர்க்கட்சிகளுக்கு விமர்சிக்கவும் விவாதிக்கவும் கூட வாய்ப்புத் தராமல், தான் வகுத்துக் கொண்ட விதியின்படியே கூட இயங்க முடியாமல், அனைத்தையும் அவிழ்த்துவிட்ட அம்மண நிலைக்குச் சென்றுவிட்டது, இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம். 1992−ல் தனியார்மயம் − தாராளமயம் − உலகமயம் எனும் மறுகாலனியாதிக்கம் நடைமுறைக்கு வரும் முன்னர் நாடாளுமன்றத்தில் அடிதடிகளும் வேட்டிகளை கிழித்த கதைகளும் ஏராளமாக நடந்துள்ளன. முந்தைய காலங்களில், தங்களது பிழைப்புவாத நோக்கங்களுக்காகவும் ஆளுங்கட்சியினரின் சர்வாதிகாரப் போக்கினாலும் நாடாளுமன்ற அராஜகங்கள் அரங்கேறி வந்தன. ஆனால், தனியார்மய − தாராளமயமாக்கலுக்குப் பின்னர் நடந்துவரும் நாடாளுமன்ற அராஜகங்களுக்கு ஒரு தனி இயல்பு உள்ளது.
தனியார்மய − தாராளமயம் என்பது வெறும் பொருளாதார ஆதிக்க கொள்கை மட்டுமல்ல; அரசியல், சமுதாயம், பண்பாடு − என அனைத்துத் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்துவதற்கான கொள்கையுமாகும். இந்த மறுகாலனியாதிக்கக் கொள்கை தன்னளவிலேயே ஆகப் பிற்போக்கான, ஆக மிகக் கொடுங்கோன்மையான பாசிசத் தன்மை கொண்டது. இந்த கொள்கை நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டதே ‘‘மக்கள் நல அரசு’’ என்ற பெயரில் திரைமறைவில் நடந்துவந்த ஆளும் வர்க்கச் சேவைக்கு பதிலாக, நேரடியான கார்ப்பரேட் பாசிச சர்வாதிகாரத்தை நிறுவுவதற்காகத்தான்; அதற்குத் தடையாக உள்ள அனைத்து பழைய பெயரளவிலான ஜனநாயக நடைமுறைகளையும் ஒழித்துக் கட்டுவதுதான். இந்தப்போக்கு 1990−களிலேயே தொடங்கிவிட்டது.
கல்வி, மருத்துவம், சுகாதாரம், குடிநீர், சாலை, இருப்பிடம் போன்ற எந்த அடிப்படை உரிமைகளையும் உழைக்கும் மக்களுக்கு ஏற்படுத்தித் தருவது அரசின் பொறுப்பல்ல; மக்கள் நலத் திட்டங்களுக்கு வழங்கப்படும் மானியங்கள் படிப்படியாக வெட்டப்பட வேண்டும்; முதலாளிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கின்ற லைசன்ஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்ஜியத்தை ஒழித்துக்கட்டி, உள்நாட்டு − பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளையடிக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுக்கும் புரோக்கர்களாக மட்டுமே அரசாங்கம் செயல்பட வேண்டும் என்பதுதான் மறுகாலனியாதிக்கத்தின் கொள்கை.
இதனடிப்படையில், புதிய கல்விக் கொள்கை, ஜி.எஸ்.டி., தேசிய நீர்க்கொள்கை, தேசிய சுற்றுச்சூழல் சட்டத் திருத்தம், தொழிலாளர் சட்டத் திருத்தம், மூன்று வேளாண் சட்டங்கள், நீட் தேர்வு, புதிய மருத்துவக் கொள்கை, டி.ஏன்.ஏ சட்டத் திருத்தம், ஊ.பா போன்ற கருப்புச் சட்டங்கள், ஆதார், பண மதிப்பிழப்பு நடவடிக்கை − என பா.ஜ.க அரசும், அதற்கு முந்தைய காங்கிரசு அரசும் கொண்டுவந்த சட்டங்கள் கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்தை அனைத்து துறைகளிலும் நிறுவுவதாகவும், அரசியல் சாசனம் மக்களுக்கும் மாநில அரசுகளுக்கும் வழங்கி வந்த உரிமைகள் அனைத்தையும் பறிக்கும் நடவடிக்கைகளாகவுமே அமைந்துள்ளன.
மத்திய அரசு நினைத்தால் மாநில அரசுகளின் உரிமைகளை ஒழித்துக் கட்டமுடியும் என்பதையும், சொல்லிக்கொள்ளப்படும் ‘‘கூட்டாட்சி தத்துவம்’’ என்பது ஒரு வெங்காயமும் இல்லை என்பதையும் இந்த நிகழ்வுகள் நமக்கு உணர்த்தின.
முப்படை தளபதிகளும் கூட்டுச்சேர முடியாது, இது இந்திய ஜனநாயகத்தின் சிறப்பு என்றெல்லாம் தாராளவாதிகள் பெருமை பீற்றிக் கொண்டனர். ஆனால், முப்படைகளையும் இணைத்து இராணுவ ஜெனரல் என்ற ஒரு புதிய அதிகாரத்தை மோடி அரசு உருவாக்கியபோது இவர்கள் வாயடைத்து போனார்கள்.
இதுமட்டுமல்ல, நாட்டின் பொருளாதாரத்தைத் திட்டமிடும் தேசிய திட்டக் கமிஷன் கலைக்கப்பட்டு தனியார்மய − தாரளமய − உலகமயக் கொள்கைகளை நேரடியாகவே நடைமுறைப்படுத்துவதற்கான நிதி ஆயோக் நிறுவப்பட்டது. நாட்டின் பொருளாதார நிலைமையைத் துல்லியமாக அறிந்து கொள்ளும் புள்ளியல் துறை செயலிழக்கப்பட்டு ஒழிக்கப்பட்டு வருகிறது.
நாடாளுமன்றத்திற்கு இருந்த பல அதிகாரங்கள் கார்ப்பரேட் அதிபர்களையும் அதிகாரிகளையும் கொண்ட ஆணையங்களுக்கும், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் பங்கிடப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பெட்ரோல் − டீசல் விலையைத் தீர்மானிப்பது முதல் அத்தியாவசியப் பொருட்களின் விலையை நிர்ணயிப்பது வரை அனைத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களால் அன்றாடம் மேற்கொள்ளப்படுகின்றன. எந்தத் தொழிலுக்கான விதிமுறைகளையும் இனி கார்ப்பரேட்டுகளே வகுத்துக் கொள்ளும் வகையில் நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் எல்லாம் பறிக்கப்பட்டு, ஆணையங்களிடம் வழங்கப்பட்டுவிட்டன.
இந்த ஆணையங்களை அதிகாரிகள், கார்ப்பரேட் நிறுவன அதிபர்கள் கொண்ட ஒரு கும்பல் கட்டுப்படுத்துகின்றன. இந்த ஆணையங்களின் தலைவர்களைப் பிரதமரின் அலுவலகம் கட்டுப்படுத்துகின்றது. இவற்றின் அதிகாரத்தில் நாடாளுமன்றமோ, இந்த நாட்டின் நீதிமன்றமோ தலையிடமுடியாத வகையில் கிட்டத்தட்ட வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் ஒரு பாசிச அரசு உருவாகி வருகிறது.
தன்னாட்சி கொண்ட நிறுவனங்கள் என்று சொல்லப்பட்ட தேர்தல் கமிசன், ரிசர்வ் வங்கி, சி.பி.ஐ, உயர் கல்வி நிறுவனங்கள் போன்றவற்றின் முக்கியமான அதிகாரங்கள் பறிக்கப்பட்டுவிட்டன. ஒன்றிய அரசு நினைத்தால் எந்த நேரத்திலும் ரிசர்வ் வங்கியின் நிதியை எடுத்துக் கொள்ளலாம் என்ற அளவிற்கு இன்று நிலைமை மாறியுள்ளது. தேர்தல் கமிசனோ, மோடி அரசுக்கு ஐந்தாம் படையாகவே வேலை செய்கிறது. இவை மட்டுமின்றி, உயர்கல்வி நிறுவனங்கள், அரசின் கலாச்சார நிறுவனங்கள், தணிக்கை நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்திலும் ஆர்.எஸ்.எஸ் விசுவாசிகள் திட்டமிட்டே நுழைக்கப்பட்டுள்ளனர்.
படிக்க :
♦ விரைவில் சி.ஏ.ஏ. சட்டங்களை அமல்படுத்தப் போவதாக அமித்ஷா பேச்சு
♦ பொது சுகாதாரக் கட்டமைப்பை ஒழிக்கும் மோடி அரசின் கார்ப்பரேட் கொள்கை !
மொத்தத்தில், பீற்றிக்கொள்ளப்பட்ட இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அனைத்து அங்கங்களும் வெட்டிச் சிதைக்கப்பட்டுவிட்டன. அதன் உச்சமாக நாடாளுமன்ற ‘‘விமர்சன சுதந்திரம்’’ அடைந்திருக்கும் பரிதாப நிலையைத்தான் மேலே விளக்கியுள்ளோம்.
இறுதியாக, உளுத்துப்போன குட்டிச்சுவராக காட்சியளிக்கும் இந்த நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடையாளமாக உள்ள கட்டிடத்தையும் மோடி − அமித்ஷா கும்பல் விட்டுவைப்பதாக இல்லை. இந்தப் பழைய கட்டிடத்திற்கு பதிலாக, ரூ.20,000 கோடி செலவில் சென்ட்ரல் விஸ்தா என்ற புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தைக் கட்டியமைத்து வருகிறது.
1925−ம் ஆண்டில் உருவான ஆர்.எஸ்.எஸ்−ன் நூற்றாண்டு நெருங்கி வருகிறது. அயோத்தியில் கட்டப்படும் இராமர் கோவிலுக்கான பணிகளும் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்து ராஷ்டிரத்தின் அங்கமாக புதிய நாடாளுமன்றக் கட்டிடமும் அமையும் என்று நாம் எதிர்பார்க்கலாம். அதுவே, இந்துராஷ்டிரம் தொடங்குவதை அறிவிப்பதாகவும் அமையலாம் !

புதிய ஜனநாயகம்
திமுக அரசு பட்ஜெட்டும் அரசுப் பள்ளிகளின் நிலைமையும் || சிறப்புக் கட்டுரை
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. “அரசுப் பள்ளிகளை நவீனப்படுத்தவும், அவற்றின் தரத்தை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளிகள் வறுமையின் அடையாளமல்ல, அவற்றைப் பெருமையின் அடையாளமாக மாற்றுவோம்”என நடப்புச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் அவர் அறிவித்திருக்கிறார்.
கடந்த பத்தாண்டுகளில் அரசுப் பள்ளிகள், குறிப்பாக ஆரம்பப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து, தனியார் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் பல அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன. தேசிய கல்விக் கொள்கையின்படி அரசுப் பள்ளிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மாணவர்கள் இல்லை என்றால், அத்தகைய பள்ளிகளை மூடிவிட்டுப் பல கிராமங்களுக்கு மையத்தில் பள்ளி வளாகத்தை உருவாக்க வேண்டும் என ஒன்றிய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. அதிமுக அரசும் அக்கொள்கையை ஏற்றுக் கொண்டது.
குறிப்பாக ஜூலை 04, 2019 அன்று தமிழகத்தில் 1,848 பள்ளிகளில் 10-க்கும் குறைவான மாணவர்கள் பயில்வதாகவும், அவற்றை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது.
படிக்க :
♦ தமிழகத்தில் அதிகரித்து வரும் தனியார் பள்ளி கட்டணக் கொள்ளை !
♦ தமிழகத்தின் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழ்மொழி புறக்கணிப்பு!
ஜூலை 18, 2019 அன்று தமிழகத்தில் 1248 அரசு பள்ளிகள் மூடப்பட்டு, நூலகங்களாக மாற்றப்படும். நூலகங்களில் பணியாற்ற ஆசிரியர்களுக்கு பயிற்சி தேவையில்லை. அங்குள்ள ஆயாக்களே பணியாற்றுவார்கள் என கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாக செய்தி வெளியானது.
ஆனால் அதனை மறுத்து, “பள்ளிகளை மூடும் நோக்கம் அரசிற்கு இல்லை. மூடப்போவதும் இல்லை. மாணவர்களே இல்லாத பள்ளிகள் நூலகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும். அங்கே ஒரு ஆசிரியர் இருப்பார். அங்கிருக்கும் மாணவர்களுக்கேற்ப அந்த ஆசிரியர் தொடர்ந்து பணிகளை ஆற்றுவார்” என ட்விட்டரில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து இருந்தார்.
மேற்கூறிய சம்பவங்கள் அதிமுக அரசு தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த எடுத்த முயற்சிக்கான துலக்கமான எடுத்துக்காட்டுகள்.
கொரோனா வந்தபிறகு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. கொரோனா காலத்தில் வேலையிழந்து, வருமானத்தையும் வாழ்வாதாரத்தையும் இழந்த ஏழை, எளிய விளிம்பு நிலைக் குடும்பங்களைச் சார்ந்தவர்கள் தனியார் பள்ளிகளில் படித்து வரும் தங்கள் குழந்தைகளைக் கட்டணம் செலுத்திப் படிக்க வைக்க இயலாததால், அரசுப் பள்ளிகளில் சேர்க்கத் துவங்கினர். இதுவரையில் 2 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளிலிருந்து அரசுப் பள்ளிகளுக்கு வந்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
இதற்கு அரசுப் பள்ளிகளின் தரம் உயர்ந்ததுதான் காரணம் என்று சொல்லி விட முடியாது. ஏழை, எளிய குடும்பங்களின் வாழ்க்கைத் தரம் சரிந்ததால் ஏற்பட்ட மாற்றம் இது.
கொரோனா தொற்றுக் காலத்தில் அதிக பாதிப்புக்குள்ளானது கல்வி. தேசிய அளவில் ஆரம்பக் கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை பயிலும் 24.7 கோடி மாணவர்களுடைய கல்வி பாதிக்கப்பட்டு, மனஉளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். இந்தச் சவாலை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு, அரசுப் பள்ளிகளில் நிலவும் சில பிரச்சினைகளைப் புரிந்து கொண்டாக வேண்டும்.
தமிழக அரசுப் பள்ளிகளின் நிலைமை:
தமிழ்நாட்டில் உள்ள மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை 58,897. இதில் 35,621 பள்ளிகள் தொடக்கப் பள்ளிகளாகவும், 9,392 பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 5,788 பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 8,096 பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் உள்ளன.
அரசுப் பள்ளிகளை பொருத்த வரை 24,310 தொடக்கப் பள்ளிகள்; 7,024 நடுநிலைப் பள்ளிகள்; 3,135 உயர்நிலைப் பள்ளிகள்; 3,110 மேல்நிலைப் பள்ளிகள் உட்பட மொத்தம் 37,579 பள்ளிகள் உள்ளன.
தனியார்ப் பள்ளிகளைப் பொருத்த வரை தொடக்கப் பள்ளிகள் 5089, நடுநிலைப் பள்ளிகள் 763, உயர்நிலைப் பள்ளிகள் 2046, மேல்நிலைப் பள்ளிகள் 3764 உட்பட மொத்தம் 12,382 பள்ளிகள் உள்ளன.
அரசு உதவிப் பெறும் பள்ளிகளைப் பொருத்த வரை தொடக்கப் பள்ளிகள் 5021, நடுநிலைப் பள்ளிகள் 1508, உயர்நிலைப் பள்ளிகள் 589, மேல்நிலைப் பள்ளிகள் 1210 உட்பட மொத்தம் 8328 பள்ளிகள் உள்ளன.
தமிழ்நாட்டுப் பள்ளிகளில் உள்ள 5.6 லட்சம் ஆசிரியர்களில், 2.27 லட்சம் பேர் அரசுப் பள்ளிகளிலும், 77 ஆயிரம் பேர் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும், 2.53 லட்சம் பேர் தனியார்ப் பள்ளிகளிலும் பணிபுரிகின்றனர். மற்ற பிரிவுகளில் 4,552 ஆசிரியர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.
மொத்தம் 37,579 பள்ளிகள் உள்ள அரசுப் பள்ளிகளில் 2.27 லட்சம் ஆசிரியர்கள் தான் பணிபுரிகின்றனர். ஆனால், 12,382 பள்ளிகள் உள்ள தனியார் பள்ளிகளில் 2.53 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 45,93,422 பேரும், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 22,25,308 பேரும், தனியார்ப் பள்ளிகளில் 64,15,398 பேரும், மற்ற பள்ளிகளில் 83,755 மாணவ, மாணவிகளும் உள்ளனர்.
மொத்தம் 37,579 பள்ளிகள் உள்ள அரசுப் பள்ளிகளில் 45,93,422 மாணவ, மாணவிகள் தான் படிக்கின்றனர். ஆனால், 12,382 பள்ளிகள் உள்ள தனியார் பள்ளிகளில் 64,15,398 மாணவ, மாணவிகள் தான் படிக்கின்றனர்.
அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை தனியார் பள்ளிகளின் எண்ணிக்கையை விட 3 மடங்கு அதிகமாக உள்ளது. ஆனால், மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையிலும், ஆசிரியர்களின் எண்ணிக்கையிலும் தனியார் பள்ளிகள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
மேற்கூறியவற்றில் இருந்து பார்க்கும்போது தமிழக மாணவ மாணவிகள் அரசுப் பள்ளிகளை விட தனியார் பள்ளிகளை நோக்கிதான் செல்கின்றனர். இதை இப்படிக்கூட கூறலாம், இலவசக் கல்வி படிப்படியாக ஒழிக்கப்பட்டு காசு இருந்தால்தான் படிக்க முடியும் என்ற நிலை படிப்படியாக உருவாக்கப்படுகிறது.
2019-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், தமிழகத்தில் 2,391 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்ற தகவலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், பள்ளிக் கல்வித் துறையிடம் சமர்ப்பித்துள்ளனர்.
அரசின் கணக்கின்படியே பள்ளிகளின் நிலைமை இவ்வளவு மோசம் என்றால், உண்மை நிலவரம் இதைவிட மோசமாக இருக்கும். பள்ளிக் கல்வித் துறை அரசாணை நிலை எண் படி, 20 மாணவர்களுக்கு 1 சிறுநீர் கழிவறையும், 50 மாணவர்களுக்கு 1 மலக்கழிவறையும் இருக்க வேண்டும். இந்த அரசாணைகள் எல்லாம் காகிதத்தில்தான் உள்ளது. நடைமுறையில் எந்த பள்ளிக் கூடத்திலும் அமலாக்கத்திற்கு செல்லவில்லை.
உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் தங்களின் மேல்நிலைப் படிப்புக்கு செல்வது குறைவதன் மூலம், தமிழ்நாட்டின் இடைநிற்றல் விகிதமும் அதிகரிக்கிறது என்பதை நம்மால் உணர முடிகிறது. அதாவது, 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் அதிகரித்துள்ளது. இவர்கள் 9,10-ம் வகுப்போடு தங்களின் பள்ளிக் கனவையே இழக்கின்றனர். 2019-20-ல் தமிழ்நாட்டின் மொத்த உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் 9.6 % ஆக உள்ளது.
தமிழ்நாட்டில் ஆரம்பப் பள்ளிகளில், மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் 16% ஆக உள்ளது. இப்படி பல மாணவ, மாணவியர் இடைநிற்றலுக்கு உள்ளாவதால், குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிகை அதிகரித்து வருகிறது
இந்தளவுக்கு இடைநிற்றல் மாணவ மாணவியர் அதிகரிப்பதன் பின்னணியில் வேலைவாய்ப்பின்மையால் குடும்பத்தில் நிலவும் வறுமை உட்பட வெவ்வேறு குடும்ப சூழ்நிலை போன்றவை உள்ளது. 10-ம் வகுப்பு முடித்தவுடன் பலர் குழந்தைகள், குழந்தைத் தொழிலாளராக சென்று விடுகின்றனர்.
இப்படி இடைநிற்றல் அதிகமாவதால், குழந்தைத் தொழிலாளர்கள் அதிகமாவதை போல குழந்தைத் திருமணங்களும் அதிகளவில் நடைபெறுகின்றன. இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் 15 லட்சம் குழந்தை திருமணங்கள் நடைபெறுவதாக யுனிசெஃப் கூறுகிறது. தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் திருமணம் செய்துகொள்ளும் 4 பேரில் ஒருவருக்கு குழந்தை திருமணம் நடைபெறுவதாக தெரியவந்துள்ளது.
படிக்க :
♦ இழிவாகப் பார்க்கப்படும் தாய்மொழி வழிக் கல்வி : ஒரு பெற்றோரின் அனுபவம் !
♦ இந்துத்துவத்தை கற்பிக்க தனி கல்வி வாரியம் அமைக்கும் மோடி அரசு !
இப்படிப்பட்ட மோசமான நிலைமையில்தான் தமிழக அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு உள்ளது. அரசுப் பள்ளிகளை நாடி வருகிற, தனியார் சுயநிதிப் பள்ளிகளிலிருந்து விலகி வருகிற மாணவர்களைத் தக்கவைக்கவும், மேலும் மேலும் அதிகமானோரை ஈர்க்கவும் அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்துவதோடு கல்வித் தரத்தையும் உயர்த்த வேண்டும். தமிழகத்தில் பல மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையைத் தக்கவைப்பதோடு அதிகரிக்கவும் சமூகப் பார்வையோடு பல ஆசிரியர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.
‘குடி’மகன்களை வெளியேற்றிய முகப்பேர் பள்ளி
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ‘அம்பத்தூர் நகராட்சி தொடக்கப் பள்ளி’ 1935-ல் தொடங்கப்பட்டது. 2009-ல் இப்பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை 45. அவ்வாண்டு தலைமை ஆசிரியராக எஸ்.கிருஷ்ணவேணி பொறுப்பேற்றபோது, பள்ளி நிறைவடைந்து ஆசிரியர்களும் மாணவர்களும் வெளியேறும் முன்பாகவே சிலர் மதுபாட்டில்களுடன் பள்ளிக்குள் ‘குடி’யேறிவந்தார்கள். ஆசிரியர்கள் அச்சத்தோடு வெளியேறினார்கள். அப்பகுதி சமூக ஆர்வலர்களைச் சந்தித்துத் தலைமையாசிரியர் நிலைமையை எடுத்துக் கூறினார். அவர்களது தலையீட்டைத் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ‘குடி’மகன்கள் தடுக்கப்பட்டார்கள், பள்ளிக்குச் சுற்றுச் சுவரும் கட்டப்பட்டது.
ஆசிரியர்கள் செலவில் காலைச் சிற்றுண்டியும் சீருடையும் கொடுத்தனர். சில புரவலர்கள் மூலம் 100 நாற்காலிகளும் 12 மேஜைகளும் பெறப்பட்டன. பள்ளியின் தோற்றம் மாற்றப்பட்டது. குழந்தைகளுக்கு ஆங்கில மொழிப் பயிற்சி தனியாக அளிக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் உள்ள ஆர்வலர்கள் மூலம் 6 மடிக்கணினிகள், 6 மேசைக் கணினிகளுடன் கணினிப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. மாவட்ட ஆட்சியரை அழைத்து பள்ளி ஆண்டு விழா நடத்தப்பட்டது.
புளியமரப் பள்ளி என்று ஏளனமாகப் பார்க்கப்பட்ட காலம் போய், தலைநிமிர்ந்த புளியமரம் என முகப்பேரின் அடையாளமாக, அனைவரும் தேடி வரும் பள்ளியாக இது உள்ளது. இப்பள்ளி மாணவர் எண்ணிக்கை கொரோனாவுக்கு முன்பு 110 ஆக உயர்ந்திருந்தது. கரோனாவுக்குப் பிறகு மேலும் 90 மாணவர்கள் சேர்ந்திருக்கிறார்கள். இப்பள்ளியின் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டியுள்ளது. 2017-ல் இப்பள்ளியின் கட்டமைப்பை மேம்படுத்த மாநகராட்சி ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்தது. ஆனால், அந்தத் தொகை இன்னும் பள்ளிக்கு வந்துசேரவில்லை.
பெற்றோர் தேடி வரும் திருவெற்றியூர் பள்ளி
ராமநாதபுரம் மாவட்டம் திருவெற்றியூரில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளி 1975-ல் தொடங்கப்பட்டது. 2013-ல் இப்பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை 203. அவ்வாண்டு தலைமையாசிரியராக ஆ.முத்துச்செல்வி பொறுப்பேற்றார். தினமும் பள்ளி நேரம் முடிந்த பிறகு, மாணவர்களுக்குத் தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளையும் கற்பிக்க ஒன்றரை மணி நேரம் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன. மாணவர்களுக்கு நாடகம், சிலம்பு, பறை போன்ற கலைகளிலும் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பள்ளியைச் சார்ந்த 7 மாணவர்கள் தேசியத் தகுதி – உதவித்தொகைத் தேர்வில் கடந்த ஆண்டு வெற்றிபெற்றார்கள்.
பள்ளி ஆசிரியர்கள் மேற்கொண்ட முயற்சியால், 2020-ல் மாணவர்கள் எண்ணிக்கை 392ஆக உயர்ந்தது. தற்போது அப்பள்ளியில் மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 662. இப்பள்ளியில் குழந்தைகளைச் சேர்ப்பதற்குப் பெற்றோர் தினமும் வருகிறார்கள். இடநெருக்கடி, ஆசிரியர் பற்றாக்குறை இருந்தாலும் மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப் படுகிறார்கள்.
தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினர் 3 புதிய வகுப்பறைகளை 2019-2020-ல் கட்டிக் கொடுத்திருக்கிறார். ஊராட்சி நிர்வாகமும் நிதியுதவி செய்தது. அதேநேரம், தேவையான ஆசிரியர்களை நியமனம் செய்வதோடு, பள்ளியின் கட்டமைப்பை மேம்படுத்திடவும் அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
முன்மாதிரியான மதரசா பள்ளி
சென்னை அண்ணா சாலையில் காயிதே மில்லத் பெண்கள் கல்லூரி வளாகத்தின் ஒரு பகுதியில், அரசு மதரசா மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. 1849-ல் தொடங்கப்பட்ட பள்ளி இது. ஏழை, எளிய குழந்தைகளின் கல்விக்காக ஆற்காடு நவாப் 23 ஏக்கர் பரப்பளவு இடத்தை இப்பள்ளிக்கு அளித்தார். 2017-ல் இப்பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை 140. அதேநேரம், தலைமை ஆசிரியர் கே.சுந்தரவடிவேல் தலைமையில், ஆசிரியர்கள் வீடுவீடாகச் சென்று பிரச்சாரம் செய்த பின்னணியில், மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்பள்ளியில் மிகப்பெரிய மைதானம் உள்ளது. மாணவர்களுக்குக் கால்பந்து, ஹாக்கி, தடகளச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆங்கிலமொழி சிறப்புப் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவுக்கு முன்பு இப்பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை 302. தற்போது மாணவர்கள் எண்ணிக்கை 369ஆக உயர்ந்துள்ளது. அனைத்து சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளும் இந்தப் பள்ளியில் படித்து வருகிறார்கள்.
இப்பள்ளியின் கட்டமைப்பை மேம்படுத்தி, ஆசிரியர்களை நியமித்து, கல்வித் தரத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்தால், மாணவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. சென்னை மாநகரத்தின் மையமான பகுதியில் பெரும் பரப்பளவில் இயங்கி வரும் இப்பள்ளியை முன்மாதிரிப் பள்ளியாக மேம்படுத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மூன்று பள்ளிகளைப் பற்றி தி இந்துவில் செய்தி வெளியாகி உள்ளது.
மேற்கூறிய மூன்று பள்ளிகளும் ஆசிரியர்களின் முன்முயற்சியால் சிறப்பாக இயங்கி வருகிறது. ஆனால் அங்கேயும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாதது, ஆசிரியர் பற்றாக்குறை போன்ற பிரச்சனைகள் உள்ளன. இப்பிரச்சனைகளை களைய தற்போது உள்ள தி.மு.க அரசின் செயல்பாடுகளைப் பற்றி பார்ப்போம்.
தற்போது தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பள்ளிக்கல்வி சம்மந்தமான சில விவரங்கள் பின்வருமாறு :
பள்ளிக் கல்விக்கு மொத்தமாக ரூ.32,599.54 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அனைத்து ஆசிரியர்களுக்கும் தொழில்நுட்ப வசதியுடன் கண்காணிக்கக் கூடிய மற்றும் ஆதாரங்கள் அடிப்படையிலான பயிற்சி வழங்க ஏதுவாக 413 கல்வி ஒன்றியங்களுக்கும் தலா 40 தொடுதிரை கையடக்க கணினிகள் 13.22 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட உள்ளது.
2025-ம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டில் உள்ள 8 வயதிற்குட்பட்ட அனைத்து மாணவர்களும் எண்ணும் எழுத்தும் இயக்கம் ரூ.66.70 கோடி மதீப்பீட்டில் தீவிரமாக செயல்படுத்தப்படும்.
அரசுப்பள்ளி மாணவர்கள் கணினித் திறன்களை இளம் வயதிலேயே பெறுவதை உறுதிசெய்ய 1,784 அரசு நடுநிலைப் பள்ளிகளில் ரூ.114.18 கோடி மதிப்பீட்டில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படும். மேலும், 865 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.20.76 கோடி செலவில் ஸ்மார்ட் வகுப்பறைகள் துவங்கப்படும்.
மேலே கூறியவைகளில் இருந்து பார்க்கும் போது, பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளான கழிவறை, குடிநீர், காற்றோட்டமான அறைகளை ஏற்படுத்துவது மற்றும் தேவையான ஆசிரியர்களை நியமிப்பதுதான் தற்போது உள்ள அவசியமான மற்றும் அத்தியவசியமான தேவை. அதைப் பற்றி எல்லாம் இந்த பட்ஜெட் கவலைப்படவில்லை. இடைக்காலப் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.34,161 கோடி தற்போது இந்த பட்ஜெட்டில் ரூ.32,599 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 37,579 பள்ளிகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வருடந்தோறும் ஒரு பள்ளிக்கு ரூ.10 இலட்சம் வீதம் ரூ.3,758 கோடி ஒதுக்கினாலே போதும், 5 வருடத்தில் தமிழகத்தில் உள்ள எல்லா அரசுப் பள்ளிகளிலும் தேவையான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த முடியும். அப்படிப்பட்ட சிந்தனை முறையும் இந்த அரசுக்கு கிடையாது.
ஆனால், இந்த பட்ஜெட்டில் சென்னையில் மெட்ரோ இரயில் இரண்டாம் கட்டத் திட்டப் பணிகள் தொடங்கப்படும் என்றும், கோவை மற்றும் மதுரை மாவட்டங்களிலும் மெட்ரோ திட்டப் பணிகள் தொடங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மெட்ரோ இரயிலில் சாதாரண ஏழை மக்கள் யார் பயணிக்கிறார்கள்? கட்டண உயர்வு காரணமாக காலியாகதான் சென்று கொண்டிருக்கிறது. சாதாரண மக்கள் பயன்பெறும் வகையில் பேருந்து மற்றும் இரயில்வே போக்குவரத்தை அமைப்பதே மக்களுக்கு உதவிகரமான திட்டமாக இருக்கும்.
கோடிக்கணக்கான ரூபாய்களை கொட்டி கட்டப்படும் மெட்ரோ இரயில் சேவைகள் மேட்டுக்குடிகளுக்கு மட்டுமே பயன்படுகிறது. அப்படிப்பட்ட திட்டத்திற்கு கோடிக்கணக்கான ரூபாய்களை கடன் வாங்கி கொட்டும் மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு இலவசமான கல்வி கொடுப்பதற்கு தேவையான அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை அதிக நிதி ஒதுக்கி பலப்படுத்த தயங்குகின்றன.
ஏனென்றால், யார் ஆட்சிக்கு வந்தாலும் அரசை இயக்குவது தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற கொள்கைகளே. அரசுப் பள்ளிகளுக்கு அதிக நிதி ஒதுக்கி, அதன் கட்டமைப்பை பலப்படுத்திவிட்டால் மக்கள் எல்லாரும் தன் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில்தான் சேர்ப்பார்கள். அதன் விளைவாக கல்வியை விற்பனை சரக்காக்குவது என்ற திட்டம் நிறைவேறாது அல்லவா?
படிக்க :
♦ புதிய கல்விக் கொள்கையை கமுக்கமாக அனுமதிக்கும் தி.மு.க !
♦ புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் அண்ணா பல்கலை || CCCE
அதனால்தான், அரசுப் பள்ளிகளுக்கு ஒதுக்கும் நிதி படிப்படியாக குறைக்கப்படுகிறது. அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு ஒன்னும் இல்லாமல் ஆக்கப்படுகிறது. மக்களிடமும் தனியார் பள்ளிகள்தான் தரமான பள்ளிகள் என்ற சிந்தனை ஏற்படுத்தப்படுகிறது. அதனால், அவர்களும் தன் பிள்ளைகளை கடன் வாங்கியாவது தனியார் பள்ளிகளில் படிக்க வைக்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
அரசுப் பள்ளிகள் வறுமையின் அடையாளமல்ல, அவற்றைப் பெருமையின் அடையாளமாக மாற்றுவோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுவது எல்லாம் வெற்று வாய்ச்சவடால்தான்.
இப்படிப்பட்ட நிலைமைகளில் அரசுப் பள்ளிகளில் கல்வி சொல்லிக் கொடுப்பதை சேவையாக கருதும் சமூக அக்கறை உள்ள ஆசிரியர்களால்தான், சில பள்ளிகள் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து அரசின் உதவி இல்லாமல் சிறப்பாக செயல்படுகின்றன.
ஆனால், அனைவருக்கும் தரமான, இலவசமான, விஞ்ஞானப்பூர்வமான கல்வி கொடுக்க வேண்டிய அரசானது அக்கடமையிலிருந்து விலகி நிற்கிறது.

அமீர்
செய்தி ஆதாரம் : தி இந்து, UDISE + ஆய்வறிக்கை.
அரங்கேறும் பாசிச சர்வாதிகாரம் || புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2021 மின்னிதழ் !
அன்பார்ந்த வாசகர்களே !
”நொறுங்கும் நாடாளுமன்ற ஜனநாயகம்! அரங்கேறும் பாசிச சர்வாதிகாரம்” என்ற தலைப்பில் தற்போது விற்பனையில் உள்ள புதிய ஜனநாயகம் 2021 செப்டம்பர் இதழ் தற்போது மின்னிதழ் வடிவில் வினவு இணைய தளத்தில் கிடைக்கப் பெறுகிறது.
மின்னிதழுக்கான பணம் ரூ.20-ஐ புதிய ஜனநாயகம் அலுவலகத்தின் G-Pay எண் 94446 32561-ல் செலுத்திவிட்டு, பணம் செலுத்தியதற்கான பரிவர்த்தணை விவரத்தை vinavu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் பெயர், தொடர்பு எண், மாவட்டத்தை குறிப்பிட்டு மின்னஞ்சல் அனுப்பவும். உங்களது மின்னஞ்சலுக்கு புதிய ஜனநாயகம் மின்னூல் அனுப்பி வைக்கப்படும்.
நன்றி !
– புதிய ஜனநாயகம்
செப்டம்பர் மாத இதழ் குறித்த விவரம் அறிய : இங்கே அழுத்தவும்.

மோசடியாளர்களிடமிருந்து மீட்கப்பட்ட எல்.ஐ.சி மீண்டும் மோசடியாளர்கள் கையில் ?
ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திற்கு (LIC) வயது 66. இந்நிறுவனத்தின் பிறப்புக்கு காரணம், 1956-க்கு முன்னால் உள்நாட்டு – வெளிநாட்டு தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் செய்த மோசடிகளும் ஊழல்களுமே ஆகும். மோசடி, ஊழல்கள் மூலம் மக்களின் சேமிப்பைச் சூறையாடிய தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், இவைகளை தேசியமயமாக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியும் அகில இந்திய காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் நடத்திய தொடர் போராட்டங்களின் விளைவே எல்.ஐ.சி. நிறுவனத்தின் பிறப்பு.
மோசடி தனியார் காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து அரசுடைமையாக்கப்பட்டு இந்தியா முழுவதும் ஒருங்கிணைந்த முறையில் உருவாக்கப்பட்ட நிறுவனம் தான் எல்.ஐ.சி
அன்றைய நேரு தலைமையிலான அரசால் துவங்கப்பட்ட இந்நிறுவனத்தின் இன்றைய மதிப்பு ரூ.38,04,640 கோடி. இதன் வளர்ச்சி சுமார் ரூ.1 லட்சத்திற்கு மேற்பட்ட நிறுவன ஊழியர்களின் உழைப்பாலும் சிற்றூர்கள், கிராமங்கள் மற்றும் சாதாரண அடித்தட்டு மக்கள் வரை ரத்த நாளங்களாக செயல்பட்டதன் விளைவாக LIC நிறுவனமானது இன்று அசுர வேகத்தை எட்டியுள்ளது என்றால் அது மிகையாகாது.
படிக்க :
♦ LIC தனியார்மயம் : சூறையாடப்படவிருக்கும் மக்களின் காப்பீட்டு நிதி!
♦ LIC தனியார்மயம் : பொன் முட்டையிடும் வாத்தை அறுக்கும் மத்திய அரசு
தேசியமயமாக்கத்திற்கு முன்பு காப்பீட்டுத் துறையிலிருந்த 245 தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் சாதிக்காத சாதனையை ஒரு அரசு நிறுவனம் நிகழ்த்தி உள்ளது. குறைவான முதலீட்டில் இந்த அளவு அபரிமிதமான வருவாயை ஈட்டியதற்கு, பாலிசிதாரர்களுக்கு உரிய முறையில் வாக்குறுதி அளிக்கப்பட்ட வகையில் கடமை தவறாமல் மோசடி செய்யாமல் ஊழல் இல்லாமல் நேர்மையுடன் இறப்பு உரிமங்களை முதிர்ச்சி தொகைகளைக் கொண்டுபோய் சேர்த்தன் மூலம் அவர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக இன்று வரை திகழ்ந்து வருகிறது LIC நிறுவனம். இதுவே, பாலிசிதாரர்களை LIC-யுடன் தொடர்ந்தும் இடைவிடாமலும் பயணிக்க வைக்கிறது.
மேலும் இதன் வருவாய் மற்றும் உபரி, அதன் சொந்த வளர்ச்சிக்கும் அரசு நிறுவனங்களில் முதலீட்டிற்கும், அரசின் நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்கும், மக்கள் நலத் திட்டங்களுக்கும் உதவுகிறது. இந்நிறுவனம் அரசுடமையாக்கப்படாமல் இருந்திருந்தால், இதன் வருவாயும் உபரியும் தனியாரின் பணப்பெட்டியை நிரப்பும். மக்கள் நலத் திட்டங்களுக்கு பயன்படாமல் போகும்.
கொரோனா மரணங்கள் நிறைந்த 2020-21-ம் ஆண்டு காலத்தில் கூட இறப்பு உரிமம் 98.62% முதிர்வுத் தொகையில் 89.78% கொண்டு போய் சேர்த்துள்ளது, LIC நிறுவனம். இந்த நேர்மையை, ஏமாற்று பேர்வழிகளான தனியார் காப்பீட்டு நிறுவனங்களிடம் எதிர்பார்க்க முடியுமா?
முடியாது என்பதைத் தெரிந்தேதான் பாசிசக் கும்பல், LIC காப்பீட்டு நிறுவனத்தின் பங்குகளை நிதி தேவைக்காக விற்கப்போவதாக கூவுகிறது. இது எவ்வளவு பெரிய அயோக்கியதனம்? மேலும், வாக்களித்த மக்களின் [பாலிசிதாரர்களின்] சேமிப்பை சூறையாடி தனியாருக்கு தாரை வார்ப்பது எவ்வளவு பெரிய துரோகம் ?
இவர்களின் நோக்கம் அரசின் நிதி தேவையை நிறைவு செய்வது அல்ல. கார்ப்பரேட்களின் நிதித் தேவையை நிறைவு செய்வதே. ஒன்றிய மாநில அரசுகளின் நிதி தேவையை பூர்த்தி செய்து, பல்வேறு மக்கள் திட்டங்களில் முதலீடுகள் செய்து, பங்கு சந்தை சரியும் போதெல்லாம் அதில் முதலீடு செய்து, நட்டமில்லாமல் இயங்கிவரும் LIC-யின் வருவாய் மற்றும் உபரி அதன் சந்தாதாரர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் செல்வதிலிருந்து மடைமாற்றி கார்ப்பரேட்டுக்களுக்கு அள்ளிக் கொடுப்பதே, எல்.ஐ.சி தனியார்மயத்தின் நோக்கம்.
LIC நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யப்படுவதை தடுத்து நிறுத்தத்தவறினால், அதன் வருவாயும், உபரியும், சொத்தும் தனியாருக்கு போய் சேரும். இதனால், மக்களின் நலத் திட்டங்களோ, நாட்டின் பொருளாதார தேவைகளோ நிறைவேறாது. மேலும் அதில் போடப்பட்ட மூலதனத்தின் எதிர்காலம் கேள்விக்குறி தான்.
மேலும், பாலிசிதாரர்களின் இறப்பு உரிமத் தொகை, முதிர்ச்சித் தொகை உரிய முறையில் உரிய நேரத்தில் போய் சேராது அல்லது முற்றிலும் சேராமலும் போகலாம். இதற்கு தனியார் நிறுவனங்களின் கடந்த கால ஊழல் மிக்க, மோசடி மிக்க செயல்பாடுகளே சிறந்த உதாரணம்.எல்.ஐ.சி உருவாக்கப்பட்டதே இந்த மோசடிகளுக்கு முடிவு கட்டத்தானே !
LIC நிறுவனம் என்பது தேசத்தின் சுயப் பொருளாதாரத்தையும் மக்கள் நலத் திட்டங்களையும் நிறைவேற்றும் அட்சயப்பாத்திரம். இதை காவிக் கும்பல் களவாடி கார்ப்பரேட்களின் கஜானாவில் சேர்ப்பதை ஒரு போதும் அனுமதிக்கலாகாது.
ஏனெனில், ஒவ்வொரு வருடமும் LIC-க்கு வரும் உபரித் தொகையிலிருந்து ஒன்றிய அரசுக்கு வரும் 5% ஈவுத் தொகையும் மீதமுள்ள 95% பாலிசிதாரர்களுக்கு கிடைக்கும் போனசும் இனி கிடைக்காது.
மேலும், பொதுத்துறை – அரசுத்துறை நிறுவனங்கள் வங்கிகளின் பங்குகள் வீழ்ச்சி அடையும்போது அவைகளை ஓடிப்போய் தாங்கிப் பிடிக்கும் ஆபத்பாண்டவனாக LIC இருக்கிறது. இனி அப்படி ஒரு பொருளாதார பெரும் சக்தி அரசின் கைகளில் இருக்காது.
நாட்டின் பொருளாதாரத்தை ஒரு குறிப்பிட்ட வகையில் ஈடுசெய்யும் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார மந்தம் உற்பத்தி சரிவு பொது முடக்கம் வேலையிழப்பு, வேலையின்மை போன்ற சூழலிலும் LIC பாதிப்பு இல்லாமல் இயங்குகிறது என்றால் பாலிசிதாரர்களின் தொடர்ச்சியான இடைவிடாத பங்களிப்பும் ஊழியர்களின் அயராத உழைப்புமே ஆகும். மேலும், இதுவரை அரசுக்கு கடனாக, முதலீடாக ரூ.26,86,527 கோடியை வழங்கியிருக்கிறது. அரசின் பல்வேறு திட்டங்களுக்கு ரூ.4 லட்சம் கோடி வரை முதலீடு செய்திருக்கிறது எல்.ஐ.சி நிறுவனம். இவை அனைத்தையும் மக்களிடம் இருந்து மறைந்து விட்டது பாசிச மோடி அரசு.
படிக்க :
♦ ’ஹேர்கட்’ பெயரில் பொதுத்துறை வங்கிகளில் கார்ப்பரேட் கொள்ளை !
♦ பொதுத்துறை வங்கி தனியார்மயம் : லாபம் தனியாருக்கு ! இழப்பு மக்களுக்கு !
LIC போன்ற நிறுவனங்களுக்கு மூலதனத் திரட்டல் தேவை இல்லை என்பதையும் இது ஒரு தொழில் நிறுவனம் இல்லை என்பதையும், இந்நிறுவனம் பல்வேறு தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறது என்பதையும், ஒன்றிய அரசு மூடி மறைத்து வரும் பித்தலாட்டத்தையும் நாம் அனைவரும் உணர்ந்து போராட தவறினால் மக்களின் வரிப்பணத்தில் உருவான ஜீவ ஊற்றான LIC-யை தங்கள் அப்பன் வீட்டு சொத்துக்களைப்போல விற்பதைத் தடுக்க முடியாது.
எனவே, இந்த கார்ப்பரேட் – காவி பாசிசக் கும்பலுக்கு குலைநடுக்கம் ஏற்படும் வகையில் மக்களின் தீவிர போராட்டங்களை வீதிக்கு வீதி கட்டியமைப்பது மூலமே மக்களின் நிறுவனங்களின் பறி போகாமல் பாதுகாக்கவும் தொடர்ந்து மக்கள் நிறுவனமாக நீடிக்கவும் முடியும் !!

கதிரவன்
புதிய ஜனநாயகம் செப்டம்பர் – 2021 அச்சு இதழ் !
அன்பார்ந்த வாசகத் தோழர்களே,
ஜனவரி 2021 இதழ் வெளிவந்த பிறகு, கொரோனா ஊரடங்கினாலும் இதர காரணங்களாலும் கடந்த ஆறு மாதங்களாக புதிய ஜனநாயகம் இதழ் வெளிவராமல் இருந்தது. வாசகத் தோழர்களின் தொடர்ச்சியான வலியுறுத்தலால், கார்ப்பரேட் − காவி பாசிசம் அரங்கேறிவரும் இன்றைய காலகட்டத்தின் அரசியல் தேவையை உணர்ந்து பெரும் முயற்சியில் ஆகஸ்டு 2021 இதழைத் தயாரித்து வெளியிட்டோம்.
தமிழகத்தில், 35 ஆண்டுகளுக்கு மேலாக மார்க்சிய − லெனினிய அரசியல் ஏடாக புதிய ஜனநாயகம் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. ஜனநாயக அரசியல் சக்திகள், திராவிட, தலித்திய, பெண்ணிய, தமிழின அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள், விவசாய சங்க, தொழிற்சங்க தோழர்கள் − என பல்வேறு தரப்பினரின் ஆதரவோடு புதிய ஜனநாயகம் இதழ் இயங்கி வந்தது.
பல நூறு தோழர்களின் கடுமையான, அயராத உழைப்பு புதிய ஜனநாயகத்தில் பொதிந்துள்ளது. தமிழகத்தில் தனக்கென ஒரு பெரும் அரசியல் வாசகர் வட்டத்தைக் கொண்டுள்ளது எனில், அது புதிய ஜனநாயகம் இதழ் மட்டுமே. அந்த வகையில், புதிய ஜனநாயகத்திற்கு ஆறு மாதகால ‘இடைவெளி’ என்பது அதன் வாசகத் தோழர்களுக்குப் பேரிழப்பாகும்.
புதிய ஜனநாயகம் இதழ் மீண்டும் வெளிவரவுள்ள செய்தியைக் கேட்ட பலரும் எமக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். சில நண்பர்கள் ரூ.1,000, ரூ.5,000 − என நன்கொடைகளை வழங்கியுள்ளனர். பல வாசகர்கள் ‘‘புதிய ஜனநாயகம் இனி வெளிவராது எனக் கருதியிருந்தோம்; இதழைப் பார்த்த பின்னர் மகிழ்ச்சியாக இருக்கிறது’’; ‘‘அரசியல் பேசுவதற்கு ஆளே இல்லாமல் இருந்த சூழலில், புதிய ஜனநாயகத்தைப் பார்க்கும்போது உற்சாகமாக இருக்கிறது’’ − என கருத்துத் தெரிவித்துள்ளனர்.
சில வாசகர்கள் 5 படிகள், 10 படிகள் என கேட்டு வாங்கி தமது நண்பர்களிடம் கொடுத்துள்ளனர். சில வாசகர்கள், புதிய ஜனநாயகம் ஆகஸ்டு 2021 இதழ் குறித்த வாசகர் கடிதங்களையும் அனுப்பியுள்ளனர். இத்தோழர்கள் அனைவருக்கும் எமது நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகத் தோழர்களின் இத்தகைய நல்லாதரவு எமக்கு பெரும் உற்சாகத்தையும் உந்துதலையும் அளித்துள்ளது. இனி, புதிய ஜனநாயகம் இதழ் முறையாக மாதந்தோறும் முதல் தேதியில் வெளிவரும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
திருச்சி உள்ளிட்ட சில பகுதிகளில் நேரடி சந்தாக்களுக்கு இதழை விநியோகம் செய்துவந்த சிலர் கலைப்புவாத − சீர்குலைவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதோடு, பொறுப்பிலிருந்தும் விலகிவிட்டதால், அந்த நேரடிச் சந்தாதாரர்களுக்கு இதழைக் கொடுக்க இயலவில்லை என்று முகவர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே நேரடியாக சந்தா செலுத்திய வாசகர்கள், தங்களுக்கு இன்னமும் இதழ் கிடைக்கவில்லை எனும் பட்சத்தில், எமது அலுவலக எண்ணுக்குத் தொடர்பு கொண்டு தெரிவித்தால், இதழ் முறையாகக் கிடைக்க ஆவன செய்கிறோம்.
கடும் நிதி நெருக்கடியில்தான் தற்போதையை புதிய ஜனநாயகம் இதழைக் கொண்டுவந்துள்ளோம். நிதி நெருக்கடியை ஈடு செய்ய நன்கொடை மற்றும் சந்தா சேகரிக்கும் பணியை முகவர்கள் மூலம் மேற்கொண்டு வருகிறோம். புதிதாக பெற்றுக் கொள்ளப்படும் சந்தாக்கள் ஜனவரி 2022 முதல் நடைமுறைக்கு வரும். வாசகத் தோழர்கள் நன்கொடை மற்றும் சந்தா செலுத்தி ஆதரித்து, இதழ் வளர்ச்சிக்குத் தொடர்ந்து உதவுமாறு கோருகிறோம்.
– நிர்வாகி
000
புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2021 இதழ் அச்சுப் பிரதியாக வெளிவந்திருக்கிறது. இதழை வாங்குவதற்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் !!
தொடர்பு விவரங்கள் :
தொலைபேசி : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com
விலை : ரூ.20 + தபால் செலவு ரூ. 5 = ரூ.25
G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561
வங்கி கணக்கு விவரம்,
Bank: SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444.
நொறுங்கும் நாடாளுமன்ற ஜனநாயகம் அரங்கேறும் பாசிச சர்வாதிகாரம்
இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
-
நொறுங்கும் நாடாளுமன்ற ஜனநாயகம் அரங்கேறும் பாசிச சர்வாதிகாரம்!
-
பாசிச மோடி அரசுக்கு எதிராக வளர்ந்துவரும் போராட்டங்கள்!
-
பத்திரிகை செய்தி : பார்ப்பனரல்லாத அர்ச்சகர் பயிற்சிபெற்ற மாணவர்களில் 24 பேர் அர்ச்சகராக நியமனம்! சரியான அரசியல் தலைமை, தொடர்ச்சியான போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி!
-
“திராவிட மாடல்” ஆட்சி : கார்ப்பரேட் சேவை! காவியுடன் சமரசம்!!
-
கார்ப்பரேட் சேவையில் கழக ஆட்சி!
-
காவி பாசிசத்துடன் சமரசம் செய்துகொள்ளும் தி.மு.க. அரசு!
-
வெள்ளை அறிக்கையா? கட்டண உயர்வுகளுக்கான முன்னறிவிப்பா?
-
தேசியக் கடல் மீன்வள மசோதா – 2021 : கடல்வள பேரழிப்பின் ஒரு அங்கம்!
-
காஷ்மீர் சிறப்பு உரிமை ரத்து செய்யப்பட்டதன் இரண்டாம் ஆண்டு : துளிர்விடுகிறது விடுதலை முழக்கம்!
-
பெரு நாட்டில் ‘சோஷலிஸ்டு’க் கட்சியின் வெற்றி : இது, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான வெற்றியா?
பணமாக்கல் திட்டத்திற்கு முட்டுக் கொடுக்கும் இந்து தமிழ் தலையங்கம் !
மோடி அரசின் தேசிய பணமாக்கல் திட்டம் “தவிர்க்கவியலாத” தீங்காம், முட்டுக்கொடுப்பதில் முன்னிலை வகிக்கும் இந்துதமிழ் திசை !
‘நடுநிலை’ பத்திரிக்கை என்று வாய் கூசாமல் தம்பட்டமடித்து திரியும் இந்துதமிழ் திசை, தினமலர், தினமணி வரிசையில் தானும் பா.ஜ.க சார்பு நாளிதழ்தான் என்று அடிக்கடி அம்பலப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த வாரம் ஒன்றிய அரசு அறிவித்த தேசிய பணமாக்கல் திட்டத்தைப் பற்றி, “மத்திய அரசின் பொருளாதாரச் சீரமைப்பு : தவிர்க்கவியலாத தீங்கு” என்று ஆகஸ்ட் 31 அன்று தலையங்கம் ஒன்றைத் தீட்டியிருக்கிறது.
மக்களின் பொதுச் சொத்துக்களான இரயில்வே, நெடுஞ்சாலைத்துறை, மின்சாரத்துறை, தொலைத்தொடர்பு, விமான நிலையங்கள் மற்றும் விளையாட்டுத் திடல்கள் போன்றவற்றை கார்ப்பரேட்டுகளுக்குக் குத்தகைக்கு விடும் மோடி அரசின் இந்நடவடிக்கை பலரையும் அதிர்ச்சிக்கும் கோபத்திற்கும் ஆளாக்கியுள்ள நிலையில் இதை நேரடியாக நியாயப்படுத்தி எழுத முடியாத இந்துதமிழ் திசை “தவிர்க்கவியலாத தீங்கு” என தனது தலையங்கத்தில் மிக நூதனமாக முட்டுக் கொடுக்க முயற்சித்திருக்கிறது.
படிக்க :
♦ “பணமாக்கல் திட்டம்” : கார்ப்பரேட்டுகளுக்கு இந்தியாவை தாரைவார்க்கும் திட்டம் !
♦ நாட்டை விற்பனை செய்யும் தேசிய பணமாக்கல் திட்டம் || கண்டன ஆர்ப்பாட்டம்
கட்டுரையில், “மத்திய அரசின் பொருளாதாரச் சீரமைப்புத் திட்டத்துக்கு எதிர்க் கட்சிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பு எழுந்திருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. பெருநிறுவனங்களுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது என்ற தொடர் குற்றச்சாட்டுகளுக்கு வலுசேர்க்கும் சான்றாகவே இத்திட்டத்தை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்” என்று எதிர்க்கட்சிகளின் வாதங்களில் உள்ள நியாயத்தையும் எடுத்துக் காட்டுவதுபோல் “நடுநிலையோடு” தொடங்குகிறது. ஆனால், அதற்கு அடுத்த பத்தியிலேயே தனது நரித்தனத்தைக் காட்ட ஆரம்பித்துவிடுகிறது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மோடி அரசின் இத்திட்டம் குறித்து “70 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட சொத்துக்களை ஏழே ஆண்டுகளில் அழிக்கிறது பா.ஜ.க” “மூன்று நான்கு தொழிலதிபர்களுக்கு மட்டுமே பரிசாக அளிக்கப்படுகிறது இந்தக் குத்தகை” என்று விமர்சிப்பதை அப்படியே எடுத்துக் காட்டும் தலையங்கம்; தொடர்ந்து, “காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும் பொதுத்துறை முதலீடுகள் விற்கப்பட்டுள்ளன. இப்போதும் கூட, தனியார்மயத்துக்குத் தாங்கள் எதிரியல்ல என்றே ராகுல் காந்தி விளக்கம் அளித்திருக்கிறார்” என்று ராகுல் காந்தி பேசியதை சுட்டிக்காட்டியும் “காங்கிரஸ், பா.ஜ.க இரண்டுமே தனியார்மயத்துக்கு ஆதரவாளர்கள்தான் என்பதையும் சேர்த்தே இந்தப் பிரச்சனையை அணுக வேண்டியிருக்கிறது” என்று எழுதியிருப்பதன் மூலமும் இத்திட்டத்திற்கெதிரான வாதங்கள் எல்லாவற்றையும் நீர்த்துப்போகச் செய்யக் கூடிய வகையில் மிகவும் தந்திரமாக தலையங்கத்தை அமைத்திருக்கிறது.
மோடி கொண்டு வந்த பணமாக்கல் என்ற தேசத்துரோக திட்டத்திற்கு காங்கிரஸ் மட்டுமா எதிர்ப்பு தெரிவித்தது. ஒட்டுமொத்த இந்திய மக்களையுமே அது அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அனைவரது கண்டனங்களையும் பெற்றுள்ளது. அனைத்து தொழிற்சங்கங்களும் இத்திட்டத்திற்கு எதிராக தங்களது போராட்டங்களைத் தொடங்கியிருக்கிறார்கள். மொத்தத்தில் “பா.ஜ.க vs இந்திய மக்கள்” என்ற பிரச்சனையை வெறுமனே “மோடி vs காங்கிரஸ்” என்று திருப்பிவிட்டு இறுதியாக காங்கிரசைக் கொண்டே அவர்களது வாதங்களை மொக்கையாக்கும் வகையில் திட்டமிட்டு எழுதியுள்ளது இந்துதமிழ் திசை.
இன்று நேற்றல்ல, இந்த உத்திக்கு ஒரு வரலாறே உண்டு. நீட், ஜி.எஸ்.டி, புதிய கல்விக் கொள்கை என்று பா.ஜ.க ஒவ்வொரு நாசகாரத் திட்டங்களைக் கொண்டுவரும் போதும் இத்திட்டங்களுக்கு எதிராக வெளிப்படும் மக்களின் எதிர்ப்புகளை வெறும் பா.ஜ.க-வைப் பிடிக்காத எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பாகச் சித்தரிப்பதும் “இதெல்லாம் காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே கொண்டுவரப்பட்ட திட்டங்கள்தான். பா.ஜ.க அதை நடைமுறைப்படுத்துகிறது. ஆனால், காங்கிரஸ் தேர்தல் அரசியலுக்காக சந்தர்பவாதமாக அதை எதிர்க்கிறது” என்று பேசுவதும் சங்க பரிவாரங்கள் நீண்டகாலமாக மேற்கொண்டுவரும் உத்திகள். தற்போது பணமாக்கலுக்கு முட்டுக்கொடுக்கும் இந்துதமிழ் திசை தனது தலையங்கத்திற்கு பயன்படுத்தும் உத்தியும் அதேதான்.
இந்த அரசுக் கட்டமைப்பிலுள்ள காங்கிரஸ் உள்ளிட்ட ஓட்டுக் கட்சிகள் அனைத்தும் தனியார்மயத்துக்கு (கார்ப்பரேட்மயத்துக்கு) எதிரானவைகள் அல்ல, மாறாக அதனை அமல்படுத்துவதில் அவர்களிடம் அணுகுமுறையில்தான் வேறுபாடு என்பதை நாம் நீண்ட காலமாகச் சொல்லி வருகிறோம். கொள்கை அளவில் இக்கட்சிகளெல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். தன்னை எதிர்ப்பதற்கு எதிர்க் கட்சிகளிடம் எந்த மாற்றுக் கொள்கையும் இல்லாத (இருக்கமுடியாத) இந்த நிலைதான் உண்மையில் பா.ஜ.க-வை எதிரியே இல்லாத கட்சியாக நிலைநிறுத்தியிருக்கிறது.
ஆனால், நீண்ட காலம் இப்படியே பா.ஜ.க-வால் சாமாளிக்க முடியாது. அதன் மூர்க்கமான மறுகாலனியாக்கத் திட்டங்களின் அமலாக்கம் நாடெங்கும் உழைக்கும் மக்களின் கடுமையான எதிர்ப்புக்கு ஆளாகி வருகிறது. டெல்லி சலோ விவசாயிகளின் வீரம் செறிந்த போராட்டம் அதற்கு ஒரு முன்மாதிரி. அத்தோடு இக்கார்ப்பரேட்மயமாக்கல் திட்டங்களுக்கு எதிராகப் படைக்கலத் தொழிலாளர்கள், வங்கி-காப்பீடு நிறுவன ஊழியர்கள், மின்சாரத்துறை ஊழியர்கள் உள்ளிட்டு பல்வேறு பொதுத்துறை தொழிலாளார்களின் போராட்டங்களும் வெடித்துக் கிளம்பிக் கொண்டிருக்கின்றன.
இதை இந்துதமிழ் திசையாலும் கூட மறுப்பதற்கு முடியவில்லை. ஆகையினால் வேறுவழியில்லாத நிலையில்தான் பா.ஜ.க இதுபோன்ற திட்டங்களைக் கொண்டு வருவதாகவும் மற்றபடி ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க சார்பு அமைப்புகளுக்கே இதில் உடன்பாடு இல்லை என்றும் புளுகித் தள்ளுகிறது.
அதற்குச் சான்றாக “ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் தொடர்புடைய பாரதீய மஸ்தூர் சங்கத்திடமிருந்தும் கூட இம்முடிவுக்கு எதிர்ப்பு வந்துள்ளது” என்று எழுதுகிறது. ஆர்.எஸ்.எஸ்-ன் தொழிற்சங்கமான பி.எம்.எஸ் கூட போலியாகவாவது தனது எதிர்ப்பைக் காட்டித்தான் ஆகவேண்டும் என்ற அளவிற்கு தொழிலாளர் பெருந்திரளது எதிர்ப்பு இருக்கிறது என்பதுதான் உண்மை நிலை.
மேலும் “மத்திய அரசின் இந்த முடிவு இன்றைய பொருளாதார நெருக்கடி மிகுந்த சூழலில் தவிர்க்க முடியாதது என்பதை எல்லோருமே ஏற்றுக் கொள்கிறார்கள்” என்று வேறு எழுதுகிறது. எல்லோருமே ஏற்றுக் கொண்டால் ஏன் ஆர்.எஸ்.எஸ்-ன் தொழிற்சங்க அமைப்பு கூட எதிர்ப்பு தெரிவிக்கிறது என்பதை இந்துதமிழ் திசைதான் விளக்க வேண்டும். இரண்டாவதாக பொதுத்துறைகளை விற்பதற்கு காரணம் பொருளாதார நெருக்கடிதான் என்பது பா.ஜ.க-வே சொல்லாத கருத்தாகும்.
நாடு வளர்ச்சியடைய வேண்டுமென்றால் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது அவசியம், ஆனால் அதற்கான நிதி அரசிடம் இல்லை. ஆகவே பொதுத்துறைகளை குத்தகைக்கு விட்டு ரூ.6 லட்சம் கோடி நிதி திரட்டும் முயற்சியாகவே பணமாக்கல் திட்டம் கொண்டுவரப்படுகிறது என்பதுதான் பா.ஜ.க-வின் வாதம். கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வரிச்சலுகைகள் கொடுக்கவும் வாராக்கடன் தள்ளுபடி செய்யவும் நிதி இருக்கிறது; ஆனால் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு நிதி இல்லையா? என்பது நமது வாதம்.
மேலும், இந்த துறைகள் அனைத்தும் நட்டத்தில் இயங்குவதால் அரசால் இதனை நடத்த முடியவில்லை என்றும் ஒரு வாதம் வைக்கிறார்கள். எல்லா தனியார் கார்ப்பரேட் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் 5ஜி-க்கு விண்ணப்பித்துக் கொண்டிருக்கும்போது பி.எஸ்.என்.எல்-க்கு 4ஜி தொழில் நுட்பத்திற்குக் கூட அனுமதி தரப்படவில்லையே இது தானே அதன் நட்டத்திற்கு காரணம். ஆகவே இது திட்டமிட்டு அரசால் ஏற்படுத்தப்பட்ட நட்டம் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.
தனியார் கார்ப்பரேட் மின் உற்பத்தி நிறுவனங்களை ஊக்குவித்தும் அரசு மின் உற்பத்தியை திட்டமிட்டே நாசமாக்கியும்; பின்னர் அரசே தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கி மானிய விலைக்கோ அல்லது இலவசமாகவோ கூட கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சலுகை வழங்கியது போன்றவைதானே மின்சாரத்துறை நட்டத்திற்கு காரணம். இவையெல்லாம், பொதுத்துறை நிறுவன ஊழியர்களே அரசின் மீது வைக்கும் குற்றச்சாட்டு.
1991-ல் தனியார்மய – தாராளமயம் – உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகள் அமலுக்கு வந்தபின் அரசே திட்டமிட்டு பொதுத்துறை நிறுவனங்களை சீரழிக்க ஆரம்பித்தது. வாஜ்பாய் தலைமையிலான இதே பா.ஜ.க ஆட்சிக் காலத்தில்தான் பொதுச் சொத்துக்களை இலக்கு வைத்து விற்பதற்கென்றே பங்கு விலக்கல் துறை (ministry of dis-invesment) என்று தனி அமைச்சகமே உருவாக்கப்பட்டது. தற்போது முதலீடுகள் மற்றும் பொதுச்சொத்துக்களை நிர்வகிக்கும் துறை DIPAM (department of investment and public asset management) என்ற பெயரில் நிதியமைச்சகத்தின் கீழ் இத்துறை இயங்கி வருகிறது.
இப்படி திட்டமிட்டு உள்கட்டமைப்புகளை சிதைத்துவிட்டு அதையே காரணமாக வைத்து பொதுச் சொத்துக்களைக் கார்ப்பரேட்டுகளுக்கு விற்பதும் குத்தகைக்கு விடுவதும் நடக்கிறது. இதில், கேலிக்கூத்து என்னவென்றால் இதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து இதே உள்கட்டமைப்புகளை மேம்படுத்தப்போவதாக சொல்வதுதான்.
இதற்குள் எல்லாம் போகாமல் வசதியாக “பொருளாதார நெருக்கடி” என்று பா.ஜ.க-வே சொல்லாத தகவலை எடுத்துக் கொண்டு முட்டுக்கொடுக்கிறது இந்துதமிழ் திசை.
கடைசியாக “மாற்று வாய்ப்புகள் என்னென்ன இருக்கின்றன என்பது குறித்து எதிர்ப்பாளர்களிடமிருந்து குறிப்பிடத்தக்க வகையில் எந்த ஆலோசனைகளும் முன்வைக்கப்படவில்லை” என்று எழுதுகிறது. இங்கே கூட எதிர்ப்பாளர்கள் என்று எதிர்க் கட்சிகளை மட்டுமே சித்தரிக்கிறது இந்துதமிழ் திசை. நாம் முன்பே கூறியதைப் போல காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளிடம் தனியார்மயமாக்கத்துக்கு மாற்றுக் கொள்கை இல்லை என்ற தைரியத்தில்தான் இவ்வாறு எழுதுகிறது.
மேலும் “நெருக்கடியான நேரத்தில் மாற்றுத்தீர்வுகளை முன்வைக்காமல் அரசின் முடிவைக் கேள்விக்குள்ளாக்குவது; மேலும் புதிய நெருக்கடிகளை நோக்கித் தள்ளிவிடும் அபாயம் நிறைந்தது” என்று வேறு நம்மை எச்சரிக்கிறது இந்துதமிழ் திசை.
படிக்க :
♦ விவசாயிகளின் போராட்டத்தை இழிவுபடுத்தும் இந்து தமிழ் திசை !
♦ ரஜினியின் கருத்துச் சுதந்திரத்திற்காக களமிறங்கும் இந்து தமிழ் திசை
வளர்ச்சி, முதலீடுகளை ஈர்த்தல் என்ற பெயரில், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மானிய விலையில் கொடுக்கப்படும் நிலம், மின்சாரம், நீர் உள்ளிட்ட கொள்ளைக்கார சலுகைகளை நிறுத்து ; பொதுத்துறை வங்கிகளிலிருந்து இலட்சக்கணக்கான கோடி ரூபாய்களைக் கடனாய் கொடுப்பதை நிறுத்து ; வாங்கிய கடனைக் கட்டாமல் ஏமாற்றும் கார்ப்பரேட் முதலைகளின் சொத்துக்களை பறிமுதல் செய் ; அதில் கிடைக்கும் நிதியை வைத்துப் பொதுத்துறைகளை பலப்படுத்து என்று நாம் சொல்கிறோம். நடுநிலை ஏடான இந்துதமிழ் பா.ஜ.க-வுக்கு இதனை சிபாரிசு செய்யுமா?
பா.ஜ.க கொண்டுவரும் திட்டங்களுக்கெல்லாம் நைச்சியமாக முட்டுக்கொடுத்துக் கொண்டே தமக்கு தாமே ‘நடுநிலை’ என்று வேறு நாமகரணம் சூட்டிக் கொள்கின்றன இந்துதமிழ் திசை போன்ற நாளேடுகள். எதிரியைக் கூட நம்பிவிடலாம். நடுநிலை என்று கழுத்தில் தோளில் போட்டுக் கொண்டே கழுத்தருக்கும் இந்து தமிழ் திசை போன்ற கிரிமினல் கும்பலிடம் என்றும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் !!

பால்ராஜ்
செய்தி ஆதாரம் : இந்து தமிழ்
நாகரிக வளர்ச்சியும் ஆடைகளின் வரலாறும் !!
மனித பரிணாம வளர்ச்சியின் முக்கியக் குறியீடு இன்று நாம் பயன்படுத்தும் ஆடை. ஏட்டில் உள்ள வரலாற்றின் படி, சமூகத்தில் நிலவும் வர்க்கம், சாதி, மதம், நாகரிகம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை உள்ளடக்கியே ஆடை நாகரீகம் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏட்டில் வரலாறு பதியப்படாத காலத்திலும் மனிதன் வாழ்ந்தானே. இன்னும் கொஞ்சம் பின்னோக்கிச் சென்றால் மனிதன் தோன்றியபோது மேற்கூறிய பேதங்கள் எதுவும் இல்லையே.
முதன் முதலில் தென் ஆப்பரிக்காவில் மனித இனம் தோன்றியது. அந்த ஆரம்ப காலகட்டங்களில் ஆடை பற்றிய சிந்தனையெல்லாம் யாருக்கும் எழவில்லை. அதற்கு அங்குள்ள தட்பவெட்ப நிலையும் கூட ஓரு காரணம். அதன் பின் அங்கிருந்து இடம்பெயரந்த மக்கள் ஐரோப்பா, சைபீரியா போன்ற குளிர் பிரதேசத்தில் குடியேறினர்.
கடும் வெப்பத்தை பார்த்தவர்களுக்கு – குளிரை எதிர்கொள்ள – உடலைத் தயார் படுத்த வேண்டிய தேவையிருந்தது. மனித உடலை இயற்கையின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கவே ஆடைகள் தோன்றின. விலங்கை வேட்டையாடி மாமிசத்தை உட்கொண்டவர்கள், அதன் தோலை கடும் குளிரில் இருந்து உடலைப் பாதுகாத்துக் கொள்ள தோலை உடுத்திக் கொண்டனர். இப்படி தான் உலகின் முதல் ஆடை உருவானது.
படிக்க :
♦ ஜீன்ஸ் : ஆடையின் வரலாறும் – பொதிந்துள்ள உழைப்பின் வரலாறும் !
♦ பெண்களுக்கான ஜீன்ஸ் பாக்கெட்டில் செல்போன் நுழைவதில்லை ஏன் ?
இதனை மனிதன் எவ்வாறு கண்டுபிடித்தான். குளிர் பிரதேசங்களில் வாழும் விலங்குகள் எப்படி அந்த குளிரை தாக்கிக் கொள்கின்றன என்பது பற்றி சிந்திக்கையில், அவற்றின் தோலும் அதன் மேல் இருந்த அடர்த்தியான ரோமங்களும் குளிரிலிருந்து பாதுகாக்கும் தன்மை உள்ளவை என்பதை அனுபவப் பூர்வமாக உணர்கிறான். கூர்மையான கற்கள், மரங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி அவற்றில் துளையிட்டு தனது உடல்பாகங்களுக்கு ஏற்றவாறு நார்கள், கொடிகள் மூலம் இறுக்கிக் கட்டி ஆடையாக்கிக் கொண்டான்.
ஆடை பற்றிய வரலாறு என்ன சொல்கிறது? ஆடையை வடிவமைக்க மனிதர்கள் எந்த பொருளை பயன்படுத்தினர் என்ற கேள்விக்கு நாம் துருக்கியிலுள்ள கட்ல்ஹோக் செல்ல வேண்டும். கட்ல்ஹோக் உலகின் மிகப் பழமையான மனித நாகரிகங்களில் ஒன்று. கிமு 7100 முதல் கிமு 5700 வரை மக்கள் வாழ்ந்த நாகரிகம் அது. கட்ல்ஹோக் மக்கள் ஆளி(Flax) செடிகளை விளைவித்து அதிலிருந்து ஆடைக்கான மூலப்பொருளை எடுத்துப் பயன்படுத்தினர் என்று ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்துள்ளனர். அது தான் நாம் இன்று பயன்படுத்தும் கைத்தறி ஆடையான லினன்(Linen).
ஜார்ஜியாவின் காகசஸ் மலைகளில் உள்ள ஒரு பழங்கால குகையில் தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள் 34,000 வருடங்களுக்கு மேல் பழமையானதாகக் கருதப்படும் ஆளி இழைகளைக் கண்டுபிடித்தனர். இந்த கண்டுபிடிப்பு தான் மனிதர்களால் பயன்படுத்தப்பட்டதாக அறியப்பட்ட துணி மற்றும் நூலின் பழமையான மாதிரிகளைக் குறிக்கிறது என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

உலகில் முதன் முதலில் மனிதன் பயன்படுத்திய ஆடை ஆர்மீனயாவில் அரேனி குகையில் கண்டு எடுக்கப்பட்ட ஓரு பெண்ணின் பாவாடை. இது சுமார் 5900 ஆண்டுகளுக்கு முன்னர் வைக்கோலால் (Straw) பின்னப்பட்ட இந்தப் பாவாடைதான் இதுவரை நடந்த அகழாய்வில் கிடைத்த தொன்மையான ஆடை. இதைப் போன்றே உலகின் பழமையான கால்சட்டை சீனாவிலுள்ள யாங்காய் கல்லறைகளில் கண்டெடுக்கப்பட்டது. சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னால் குதிரை சவாரி செய்ய பயன்படுத்தப்பட்ட கால்சட்டை என ஆராய்ச்சி முடிவு சொல்கிறது.
அப்படியே வரலாற்றை இன்னும் புரட்டினால் அது நம்மை எகிப்து நோக்கி பயணிக்க வைக்கிறது. எகிப்தியர்கள் ஆடை வடிவமைப்பில் முன்னோடிகளாக திகழ்ந்து உள்ளனர். எகிப்தியர்கள் நாணல், பாப்பிரஸ், பனை போன்ற செடிகளிலிருந்து ஆடைக்கான மூலப்பொருளை கண்டுபிடித்தனர். எகிப்தியர்கள் கோடைக்காலத்தில் குளிர்ச்சிக்கான ஆடைகளைப் பயன்படுத்தினர். உலகில் முதன் முதலில் நெசவு செய்யப்பட்ட ஆடை எகிப்தில் உள்ள தார்கன் என்று இடத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டது.
சுமார் 5000 ஆண்டுகள் பழமை வாயந்த இந்த ஆடைக்கு “தார்கன் ஆடை”என்று பெயர். கடந்த 2015ம் ஆண்டு கார்பன் டேட்டிங் செய்ததில் இதன் வயது கிமு 3482-3102 வரை இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.
ஆடைகளின் வரலாற்றில் நாம் ஆசியா நோக்கி நமது பயணத்தை தொடரலாம். ஆசியா என்றதும் சீனா தான் முதலில் கண்ணிற்கு தெரிவது. சீன வரலாற்றின் படி , கிமு 27-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பேரரசி ஹிஸ் லி ஷி தான் பட்டு நூலை (silk) நெசவு நாராக கண்டுபிடித்த முதல் நபர்.அந்தக் கதை கொஞ்சம் சுவாரசியமானது.
பேரரசி ஒரு நாள் மல்பெரி மரத்தின் கீழ் தேநீர் குடிக்கும் போது, ஒரு பட்டுப்பூச்சிக் கூடு (cocoon) அவரது கோப்பையில் விழுந்து. அது மெல்ல பிரிந்து நூல் அவிழத் தொடங்கியது. அதைப் பார்த்த ராணி அரண்மனையில் உள்ளவர்களை அது குறித்து ஆராய உத்தரவிட்டார்.
இப்படி கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் தான், பட்டாடைகள் ஆசியா முழுவதும் உள்ள பிற பகுதிகளை சென்ற அடையத் தொடங்கின. பட்டு நூல்கள் மிக வலுவாகவும், பளப்பாகவும், விலையுயர்ந்தாகவும் இருந்தது. இதை அறிந்த சீனர்கள் பட்டுடன் செடி ,கொடிகளிலிருந்து இயற்கை சாயத்தை கண்டுபிடித்து பல வண்ணங்களான பட்டு ஆடைகளை உலகிற்கு அறிமுகப்படுத்தினர். இதன் மூலம் பட்டும், சாயமும் உலகம் முழுதும் அறியப்பட்டது.
இந்திய துணைக் கண்டத்தில் ஆடைகளின் வரலாறு சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் முந்தையது. இந்தியர்கள் உள்ளூரில் வளர்க்கப்பட்ட பருத்தியால் ஆன ஆடைகளை அணிந்துள்ளனர். ஹரப்பா காலத்தில் கிமு 2500-ல் கூட பருத்தி பயிரிடப்பட்டு பயன்படுத்தப்பட்ட முதன்மையான இடங்களில் இந்தியாவும் ஒன்றாகும்.
சிந்து சமவெளி நாகரிகத்திற்கு அருகிலுள்ள தளங்களில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட சிலைகள், பாறை வெட்டு சிற்பங்கள், குகை ஓவியங்கள் மற்றும் கோவில்கள் மற்றும் நினைவுச்சின்னங்களில் காணப்படும் மனித கலை வடிவங்களில் பண்டைய இந்திய ஆடைகளின் தடங்களைக் காணலாம். ஆனால் அவர்கள் பயன்படுத்திய ஆடைகள் எதுவும் நமக்கு கிடைக்கவில்லை.
இந்திய வேதாகமங்களில் (Scripture) உடைகளை மனித உடலைச் சுற்றி போர்த்தக்கூடிய உருவங்களே காணப்படுகிறது. பாரம்பரிய இந்திய உடைகள் பெரும்பாலும் உடலைச் சுற்றி பல்வேறு வழிகளில் கட்டப்பட்டன.
படிக்க :
♦ சிந்துச் சமவெளி நாகரிகம் வேத நாகரிகம் அல்ல – மரபணு ஆய்வு முடிவுகள் !
♦ கீழடி : ‘‘ஆரிய மேன்மைக்கு ’’ விழுந்த செருப்படி !
தென் இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்தில் நெசவு செய்ததும் சாயம் ஏற்றுவதும் நம் முன்னோருக்கு தெரிந்து இருக்கிறது என்பதற்கான ஆதாரம் ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு, கொடுமணல் போன்ற இடங்களில் பயன்படுத்தியத்தன் சான்று கிடைத்துள்ளது. ஆதிச்சநல்லூரில் கிடைத்த இரும்பாலான நூற்புக்கதிர்கள்,அரிக்கமேட்டில் கிடைத்த சுடுமண்ணால் செய்யப்பட்ட நூற்புக்கதிர்கள், கொடுமணலில் கிடைத்த நூற்பு உருளைகள் போன்றவை தமிழகத்தில் பண்டைக்காலத்தில் நெசவு செய்யப்பட்டதற்கான ஒரு மிகப் பெரிய சான்று.
இப்படி ஒவ்வொரு மனிதச் சமூகங்களிலும் ஒவ்வொரு நாகரிங்களிலும் அந்தச் சமூக நிலைமைகளுக்கு ஏற்ப ஆடைகள் மற்றும் நாகரிகங்களின் வளர்ச்சி நடைபெற்றது. நாகரிக வளர்ச்சியையும் சமூக மாற்றங்களையும் இன்றும், நமக்கு ஆடைகள் அடையாளம் காட்டுகின்றன அல்லவா ?
சிந்துஜா சுந்தர்ராஜ்
சமூக ஆர்வலர்
புதிய கல்விக் கொள்கையை கமுக்கமாக அனுமதிக்கும் தி.மு.க !
கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள தனியார் தொண்டு நிறுவனத்துக்கு அனுமதி !
பின்வாசல் வழியாக புதிய கல்விக் கொள்கையை அனுமதிக்கும் தி.மு.க அரசு !
ஆயிரக்கணக்கான ஏழை மக்களின் கல்வியுரிமையைப் பறித்து, அவர்களைத் தற்குறிகளாக்கி, இந்தியாவின் மொத்தக் கல்விச் சந்தையையும் கார்ப்பரேட்டுகளிடம் தூக்கிக் கொடுப்பதையும் இருக்கும் கொஞ்சநஞ்ச அறிவியல் பூர்வமான கல்வியையும் ஒழித்து காவிமயத்தை கல்வியில் புகுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட “புதிய கல்விக் கொள்கை 2020”-ஐ கடந்த ஜீலை மாதம் மோடி அரசு நிறைவேற்றியது.
தற்போது நாட்டிலேயே முதல் முறையாக கர்நாடக மாநிலத்தில் அக்கல்விக் கொள்கை அமல்படுத்தப்படவுள்ளது. இதுகுறித்துப் பேசிய கர்நாடக முதல்வர் பசுவராஜ் பொம்மை “மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு மாணவர்களுக்கும் புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு சேர்ப்பதே அதன் வெற்றி” என்று கூறியுள்ளார். கர்நாடக அரசின் இந்த அறிவிப்புக்குப் பின், அதன் கூட்டணி ஆட்சியுள்ள புதுச்சேரியிலும் கூட புதிய கல்விக் கொள்கை 2020-ஐ அமல்படுத்துவதைப் பற்றிய ஆலோசனை நடந்து வருகின்றது.
படிக்க :
♦ ‘சிங்காரச் சென்னை’ : ஆர்.கே நகர் வீடுகளை இடித்த திமுக அரசு !
♦ நாசகர கிடெக்ஸ் நிறுவனத்துக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் திமுக அரசு !
அதேபோல, “சமூக நீதியின் மண்” என்று திராவிட இயக்கத்தினர் பெருமைப்பட்டுக் கொள்ளும் தமிழ்நாட்டிலும் இது படிப்படியாக அமுலுக்கு வரவிருப்பதற்கான சமிக்ஞைகள் தென்படுகின்றன. தேர்தலுக்கு முன்பிருந்தே தி.மு.க., சமூக நீதி பறிபோகிறது, மாநில உரிமை பறிபோகிறது, இந்தி, சமஸ்கிருதம் திணிக்கப்படுகிறது, குலக்கல்வி முறை அமுலுக்கு வருகிறது போன்ற அளவில் மட்டுமே புதிய கல்விக் கொள்கையை எதிர்த்துப் பேசியது.
அக்கொள்கையிலிருக்கும் கார்ப்பரேட் நலன்களையும், அது எப்படி இந்து ராஷ்டிரத்துக்கான கல்விக் கொள்கையாக இருக்கிறது என்பதையும் முழுமையாக மக்களிடம் அம்பலப்படுத்தவோ, பேசவோ இல்லை. தி.மு.க கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்யும் கட்சி தான் என்பது ஏற்கெனவே வெளிப்படையாகத் தெரிந்தாலும், காவிகளுடன் சமரசம் செய்து கொள்ளும் போக்கு இப்போது அதிகரித்து வருகிறது, என்பதை இடைக்குறிப்பாக இங்கே சொல்லலாம்.
அகஸ்தியா நிறுவனத்துக்கு அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கை
கடந்த மே மாதம் தி.மு.க ஆட்சி அமைந்ததிலிருந்து புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதில் அது உறுதியாக இருப்பதாக எல்லா ஊடகங்களிலும் செய்திகள் பரவின. ஆனால், அது முழு உண்மையல்ல. அதற்குச் சில உதாரணங்களைப் பார்ப்போம்.
மே 17-ம் தேதி, அப்போதைய ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு ‘கலந்து கொள்ளாததைப்’ பற்றிப் பேட்டியளித்த தமிழ்நாட்டின் கல்வியமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “இது புறக்கணிப்பல்ல” “கலந்துகொள்ளாமைதான்” “இதை (புதிய கல்விக் கொள்கை) வைத்து நாங்கள் அரசியல் செய்ய விரும்பவில்லை, அவர்களுடன் (ஒன்றிய அரசுடன்) நாங்கள் சண்டையிட விரும்பவில்லை” என்று கூறியுள்ளார். மேலும் அதே பேட்டியில், புதிய கல்விக் கொள்கையில் “திருத்தம் வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.
ஏராளமான மக்கள் விரோதச் சட்டங்களை மூர்க்கமாக அமலாக்கி வரும் ஒன்றிய அரசுடன் சண்டையிடாமல் புதிய கல்விக் கொள்கையை மட்டும் எப்படி முறியடிக்க முடியும்? புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று ஒருபுறம் முழங்கும் தி.மு.க., “திருத்த”த்தைப் பற்றிப் ஏன் பேச வேண்டும்? ஒருபுறம் மோடி அரசைக் கடுமையாக எதிர்ப்பதுபோலக் காட்டிக் கொண்டு அதனுடன் இணக்கமாக நடந்து கொள்ளும் தி.மு.க-வின் இந்தச் சமரசப் போக்குதான் தமிழக மக்கள் மனதில் இருக்கும் பா.ஜ.க எதிர்ப்புணர்வை மழுங்கடிக்கிறது என்பதை இங்கே நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.

கல்வியில் அரசின் பாத்திரத்தை ஒழித்துக்கட்டும் நோக்கில், “கற்றல், கற்பித்தல் பணிகளில் தொண்டு நிறுவனங்களை ஈடுபடுத்த வேண்டும்” என்று புதிய கல்விக் கொள்கை கூறுகிறது. அந்த அடிப்படையில் கடந்த ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில், அகஸ்தியா என்ற பன்னாட்டுத் தொண்டு நிறுவனம் (Agastya International Foundation)12 மாவட்டங்களில் கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டது. இதற்கு அப்போது கடும் எதிர்ப்புகள் கிளம்பின. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க-வும் இதை எதிர்த்தது.
தற்போது தி.மு.க அரசோ, அதே அகஸ்தியா நிறுவனத்திற்கு 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு கணிதம், அறிவியல் பாடங்களை இணையவழியில் பாடம் நடத்த அனுமதி வழங்கியுள்ளதோடு, அந்நிறுனத்திற்கு “ஒத்துழைப்பை வழங்க வேண்டும்” என்று மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு உத்திரவிட்டு சுற்றறிக்கையும் அனுப்பியுள்ளது. மேலும், 18 மாவட்டங்களில் அறிவியல் ஆய்வு மையங்களை அமைக்கவும் அந்நிறுவனத்திற்கு அனுமதியளித்துள்ளது.
இன்னொருபுறம், இந்த அகஸ்தியா தொண்டு நிறுவனத்தின் தலைவர் ராம்ஜி ராகவன் என்பவர் ஒன்றிய மோடி அரசின் கல்விக்குழு உறுப்பினராகவும், பிரதமரின் அறிவியல் ஆணையத்தின் உறுப்பினராகவும் இருந்தவர். இப்படிப்பட்ட, ஆர்.எஸ்.எஸ் பின்புலம் கொண்ட இந்த அமைப்புக்கு ‘திராவிட’ தி.மு.க அனுமதியளித்துவிட்டு, இதை எதிர்த்து சட்டப்பேரவையில் கடந்த வியாழன் அன்று (26.08.2021) கேள்வியெழுந்தபோது, “மாணவர்களிடத்தில் அவர்கள் கொள்கையை திணிப்பதை அனுமதிக்க மாட்டோம்” என்று பதிலளித்துள்ளார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. ஆர்.எஸ்.எஸ் சார்பு கல்வி நிறுவனத்துக்கு அனுமதியளிப்பார்களாம், ஆனால் அவர்கள் கொள்கையைத் திணிப்பதைத் தடுப்பார்களாம். இந்த வெட்கக் கேட்டை என்னவென்று சொல்வது?
படிக்க :
♦ திமுக-வின் எதிரி ஆர்.எஸ்.எஸ் அல்ல – பாஜக மட்டுமே || ர.முகமது இல்யாஸ்
♦ ஆர்.எஸ்.எஸ் – பாஜகவின் நிகழ்ச்சிநிரலுக்கு பின் செல்லும் திமுக || மக்கள் அதிகாரம்
ஏழை மக்களின் கல்வியுரிமை மீதான கொடிய தாக்குதலான புதிய கல்விக் கொள்கையை அமலாக்கும் நோக்கில், கல்வியை அரசு கைகழுவுவதற்கான முதல்படிதான் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைக் கொண்டு கற்பித்தல் பணிகளை மேற்கொள்வது. இதற்காகத்தான் கற்றல், கற்பித்தல் பணிகளில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை 20-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் கடந்த ஆண்டிலிருந்து ஈடுபடுத்தி வருகின்றன. எனவே, திமுக அரசின் இந்த நடவடிக்கை என்பது புதிய கல்வி கொள்கை 2020-ஐ பின்வாசல் வழியாக அனுமதிப்பதன் தொடக்கமே அன்றி வேறொன்றுமில்லை.
தேர்தலின்போது நீட் எதிர்ப்பு, புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, தமிழ்நாட்டுக்குத் தனிக் கல்விக் கொள்கை உருவாக்கப்படும் – என்று தி.மு.க வாய் கிழியப் பேசியதெல்லாம் வெறும் ஓட்டுப் பொறுக்கத்தான் என்பது அடுத்தடுத்து நிரூபணமாகி வருகிறது.
பாசிச எதிர்ப்பு என்பது வெறும் பாஜக எதிர்ப்பு அல்ல; மாறாக, கல்வி, மருத்துவம், ஆட்சி அதிகாரம், கலாச்சாரம் ஆகிய துறைகளில் சங்க பரிவார பாசிச கும்பலின் மறைமுகமான ஆதிக்கத்தை முறியடித்தும் தான். இந்தப் பணிதான் முக்கியமானதும் கூட !!

துலிபா
செய்தி ஆதாரம் : இந்து தமிழ்
நாட்டை விற்பனை செய்யும் தேசிய பணமாக்கல் திட்டம் || கண்டன ஆர்ப்பாட்டம்
தருமபுரி :
தேசிய பணமாக்கல் திட்டம் : பொதுத்துறை நிறுவனங்கள் அழிப்பு !
நெடுஞ்சாலை, மின்சாரம், ரயில்வே, விமான நிலையம், நிலக்கரி, துறைமுகம், கனிமவளம் அனைத்தும் கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்ப்பு !
கார்ப்பரேட் காவி பாசிசத்தை ஒழிக்காமல் வாழ்வே இல்லை !!
என்ற முழக்கத்தின் கீழ் மக்கள் அதிகாரம் சார்பாக தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நேற்று (செப்டம்பர் 1, 2021) நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மக்கள் அதிகாரம் அமைப்பின் வட்டார ஒருங்கிணைப்பாளர் தோழர் சிவா தலைமை தாங்கினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி நகரச் செயலாளர் தோழர் லட்சுமணன், மக்கள் ஜனநாயக இளைஞர் முன்னணியின் தோழர் பெரியண்ணன், மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் முத்துக்குமார், பென்னாகரம் பகுதி மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர் கோபிநாத் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இறுதியாக மக்கள் அதிகாரம் மண்டலக் குழு உறுப்பினர் தோழர் அருண், நன்றி உரையாற்றினார்.
தகவல்
மக்கள் அதிகாரம்
தருமபுரி மண்டலம்
9790138614
000
மதுரை :
ஒன்றிய அரசின் தேசிய பணமாக்கல் திட்டத்தை கண்டித்து செப்டம்பர் 1, 2021 அன்று காலை 10.30 மணி அளவில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மக்கள் அதிகாரம், மதுரை மண்டலம் சார்பாக ஒன்றிணைக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு ஜனநாயக முற்போக்கு இயக்கங்களின் பிரதிநிதிகளும் தோழர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் தோழர் குருசாமி தலைமை தாங்கி நடத்தினார். கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவதற்கு தனித்தனியாக போராடினால் தீர்வு இல்லை ஒன்றிணைந்து போராடுவோம் என பேசி முடித்தார்.
அடுத்ததாக, CPI (M) கட்சியின் மதுரை மாநகர செயலாளர், தோழர் விஜயராஜன் கண்டன உரையாற்றும் போது, “இன்று எல்.ஐ.சி.-யை தனியார்மயமாக்க துடிக்கிறார்கள். வெறும் 5 கோடி ரூபாய் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட எல்.ஐ.சி. நிறுவனம் இன்று 50 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வளர்ந்துள்ளது. அதற்கு காரணம் முக்கியமாக அது உழைக்கும் மக்களின் பணம், அதில் வேலை செய்த தொழிலாளர்களின் உழைப்பு. இது இரண்டையும் கார்ப்பரேட்டுகளுக்கு தூக்கிக் கொடுக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு துறைகளையும் தனியார்மயமாக்க விரைவாக செயல்படுகிறார்கள். இதற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்” என பேசி முடித்தார்.
திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த தோழர் திலீபன் செந்தில் பேசும்போது
அம்பானி அதானி போன்ற முதலாளிகளுக்கும், கார்ப்பரேட் கும்பலுக்கும் சேவை செய்வதே காவி பரிவாரத்தின் ஒரே வேலை என்பதை அழுத்தமாகப் பேசினார்.
தமிழ்ப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பேரறிவாளன் ஆற்றிய கண்டன உரையில், எல்லா துறைகளையும் தனியார்மயம் ஆக்கும் காவிக் கும்பலை அதை விரிவாக மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டியுள்ளது என்பதை வலியுறுத்தும் விதமாக பேசினார்.
புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பைச் சேர்ந்த தோழர் குமரன், அவர்கள் பேசும்போது அம்பானி அதானிகளுக்கு இந்து மதவெறிக் கும்பலின் சேவையே இந்த பணமாக்கும் திட்டம். இத்திட்டத்தால் ஏற்படவிருக்கும் கட்டண உயர்வுகள் நேரடியாக மக்களை பாதிக்கும் என்பதை அம்பலப்படுத்தி பேசினார்.
அடுத்ததாக மக்கள் அதிகாரத்தின் போடி பகுதி பொறுப்பாளர் தோழர் கணேசன் அவர்கள் பேசுகையில், “வீடுதோறும் இந்த பிரச்சனையை எடுத்துச் சொல்லி அம்பலப்படுத்துவோம். கார்ப்பரேட் காவி பாசிசத்தை விரட்டியடிப்போம்” என்பதை வலியுறுத்தி பேசினார்.
படிக்க :
♦ “பணமாக்கல் திட்டம்” : கார்ப்பரேட்டுகளுக்கு இந்தியாவை தாரைவார்க்கும் திட்டம் !
♦ கார்ப்பரேட் நலத் திட்டங்கள் : மக்கள் மீதான மோடி அரசின் பொருளாதார யுத்தம் !
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர், தோழர் ராமலிங்கம் உரையாற்றுகையில், இந்த ஒட்டுமொத்த கட்டமைப்பும் தனியார்மயம் தாராளமயம் உலகமயத்தை பாதுகாக்கிறது. இதை வீழ்த்தாமல் நமக்கு வாழ்வில்லை என்பதை ஆழமாக விளக்கிப் பேசினார்.
தமிழ்தேச மக்கள் முன்னணி சார்பாக தோழர் மேரி அவர்கள் இந்த ஆர்ப்பாட்ட நிகழ்வில் கலந்து கொண்டார்.
மதுரை பகுதி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பைச் சேர்ந்த தோழர் ரவி அவர்களின் நன்றியுரையுடன் கூட்டம் முடிந்தது.
மக்கள் அதிகாரம்,
மதுரை மண்டலம்,
78268 47268.
அரியலூரைப் பாலைவனமாக்கும் நாசகர சிமெண்ட் ஆலைகள் !
தென்கரையில் கொள்ளிடத்தின் வடஎல்லையில் வெள்ளாறு என்ற டெல்டா பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் – தமிழ்நாட்டின் சிறிய மாவட்டங்களில் ஒன்றான – அரியலூர் அமைந்துள்ளது. தொண்ணூறுகளின் கடைசி வரை விவசாயத்தில் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.
அரியலூர் மாவட்டத்தின் மேற்குப்பகுதியில் சிறுதானியப் பயிர்களான கம்பு, கேழ்வரகு, எள்ளு, சோளம், நிலக்கடலை, கொண்டக்கடலை, முந்தரி ஆகிவையும் டெல்டா பகுதிகளை ஒட்டியுள்ள நிலப்பரப்பில் நெல்லும் கரும்பும் அதிக அளவில் பயிரிடப்பட்டு வந்தன. மேலும், கொத்தமல்லி மற்றும் மிளகாய் என இரண்டுக்கும் பிரசித்தி பெற்ற மாவட்டமாகவும் அது அறியப்படுகிறது.
இப்படி அனைத்து வகையான பயிர்களும் விளைய முக்கியமான காரணம் அங்குள்ள நில அமைப்பு மற்றும் அங்குள்ள மண்ணின் தன்மையாகும். கரிசல் மண், மணல் மண், வண்டல் மண், செம்மண், சுண்ணாம்பு மண் என அனைத்து வகையான மண்ணும் பரவலாக அங்கு காணப்படுகிறது. இப்படி இயற்கையாகவே செழிப்போடு அமைந்த காரணத்தாலேயே அரியலூரானது கார்ப்பரேட்டுகளின் கோரப்பிடியிலும் சிக்கியது.
இம்மாவட்டத்தைச் சுற்றியுள்ள சுமார் 70 கி.மீ சுற்றளவு கொண்ட பகுதிகளில் பவளப் பாறைகள் மற்றும் சுண்ணாம்புப் பாறைகள் பூமிக்கு அடியில் உள்ளன. இந்தச் சுண்ணாம்புப் பாறைகள் அதிக செலவில்லாமல் சிமெண்ட் தாயரிப்பதற்குப் பயன்படுகிறது என்பதை அறிந்து கொண்ட பல்வேறு தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் இவ்விடத்தை பாலைவனமாக மாற்றி வருகின்றன.
படிக்க :
♦ கார்ப்பரேட்டுகளின் பலிபீடத்தில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு !
♦ சுற்றுச் சூழலை அழிக்க வரும் “சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா – 2020” !
1979-ம் ஆண்டில் தமிழ்நாடு அரசு டான்செம் (TANCEM – Tamilnadu Cement Corporation Limited) என்ற சிமெண்ட் ஆலை ஒன்றை முதன்முதலில் அரியலூரில் நிறுவியது. அதன்பிறகு 90-களில் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயயம் என்ற மறுகாலனியக் கொள்கைகள் அமுலாக்கப்பட்ட பின், வேறுசில தனியார் நிறுவனங்களும் சிமெண்ட் கம்பெனிகளை நிறுவத் தொடங்கின.
முதலில் ராம்கோ என்ற தனியார் நிறுவனம் நிலங்களை கையகப்படுத்தி சுண்ணாம்புக்கல் எடுப்பதற்கான சுரங்கங்களையும் அதை சிமெண்டாக மாற்றுவதற்கான தொழிற்சாலையையும் நிறுவியது. அதன்பிறகு ஒன்றன் பின் ஒன்றாக இந்தியா சிமெண்ட், டால்மியா சிமெண்ட், செட்டிநாடு சிமெண்ட், அல்ட்ராடெக் சிமெண்ட் போன்ற நிறுவனங்கள் சுமார் எட்டு இடங்களில் அரியலூரைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆக்கிரமித்தன. பூமியில் சுரங்கத்தை அமைத்து கிட்டத்தட்ட 100 அடிக்கு மேல் தோண்டி சுண்ணாம்புக்கல்லை வெளியில் எடுத்து தொழிற்சாலைகளில் சிமெண்ட் தாயரித்து வருகின்றன.
தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களின் தொழிற்சாலைகள் நிறுவப்பட்ட ஆரம்ப காலங்களிலிருந்து இன்று வரை அங்குள்ள மக்கள் அதை எதிர்த்துப் போரடி வருகிறார்கள். காற்று மாசுபாடு, நீர் மாசுபாடு, மண் மாசுபாடு என அனைத்து வகையான கொடூரங்களையும் இம்மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் அனுபவித்து வருகிறார்கள். ஆனால், இதையெல்லாம் சிறிதும் பொருட்படுத்தாமல் இலாபவெறி பிடித்த கார்ப்பரேட் நிறுவனங்கள் தொடர்ந்து தங்கள் சுரண்டலைத் தீவிரப்படுத்தி வருகின்றன. அதைப்போலவே பல்வேறு விதிமீறல்களும் கொடூரங்களும் நிகழ்ந்து கொண்டு வருவதைக் கண்டுகொள்ளாமல் அரசும் அவர்களின் காவலாளியாகச் செயல்படுகிறது.
அரியலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்படும் சிமெண்ட் ஆலைகள் :
செந்துறை ஒன்றியத்தில் ராம்கோ சிமெண்ட் ஆலையின் யூனிட் 1 மற்றும் யூனிட் 2 ஆகியவை அமைந்துள்ளன. மேலும் அரியலூர் ஒன்றியத்திலும் ராம்கோ சிமிண்ட் ஆலையின் யூனிட் 1 மற்றும் யூனிட் 2 ஆகியவை அமைந்துள்ளன.
டால்மியா சிமெண்ட் ஆலைகள் கல்லக்குடியிலும் (டால்மியாபுரம்) தாமரைக்குளத்திலும் அமைந்துள்ளன. தளவாயில் இந்தியா சிமெண்ட் ஆலை அமைந்துள்ளது. கீழபழுவூரில் செட்டிநாடு சிமெண்ட் ஆலையின் யூனிட் 1, யூனிட் 2 செயல்படுகிறது. அரியலூரில் ரெட்டிப்பாளையத்தில் அல்ட்ராடெக் சிமெண்ட் ஆலைகள் உள்ளன. அரியலூரில் தமிழக அரசின் டான்செம் ஆலையும் செயல்படுகிறது.