புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் அண்ணா பல்கலை || CCCE
தேசிய கல்விக் கொள்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும்
பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்பு குழு,
மேக்கேத்தாட்டு அணை : கர்நாடகம் நோக்கி மக்கள் அதிகாரம் பேரணி !
மேக்கேத்தாட்டு அணை தமிழகத்தின் மீதான தாக்குதலை முறியடிப்போம்!
கார்ப்பரேட் – காவி பாசிசத்தை வீழ்த்துவோம்!
காவிரி உரிமையை மீட்க தமிழகத்தில் பேரழுச்சியை உருவாக்குவோம்!
மேற்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் கர்நாடகா மேக்கேதாட்டு நோக்கி 30.8.2021 – அன்று காலை 11 மணிக்கு அஞ்செட்டி பேருந்து நிலையம் அருகில் பேரணி – ஆர்ப்பாட்டம் தொடங்கியது.
ஆர்ப்பாட்டத்தில் அஞ்செட்டி வட்டார ஒருங்கிணைப்பாளர் தோழர் சரவணன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாக தோழர் சத்தியநாதன் மாவட்ட அமைப்பாளர் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தர்மபுரி மற்றும் தோழர் சங்கர், மாநில ஒருங்கிணைப்பு குழு, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, ஓசூர் ஆகியோர் உரையாற்றினர். இறுதியாக, மக்கள் அதிகாரம் தோழர் கோபிநாத் சிறப்புரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு பேருந்து நிலையத்திலிருந்து மேக்கேதாட்டு நோக்கி பறையிசை முழங்க நடைபயணம் தொடங்கியது. இதனைக் காண கடைவீதியில் நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம் நடக்குமிடத்திற்கு அருகில் குழுமினர். மேக்கேத்தாட்டு நோக்கி நடைபயணத்திற்கு போலீசார் ஏற்கனவே அனுமதி மறுத்திருந்த நிலையிலும் தடையை மீறி பேரணி செல்ல பெண்கள் குழந்தைகளோடு சென்றனர்.
படிக்க :
♦ மேக்கே தாட்டு நோக்கி நடைபயணம் || மக்கள் அதிகாரம் பிரச்சாரம்
♦ மேக்கேதாட்டு அணை கட்டுவதை தடுத்து நிறுத்து || மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !
போலீசுத்துறை தடுப்புகளை அமைத்து தோழர்களைக் கைது செய்து மண்டபத்தில் வைத்தது. இதில் 60-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கைதாகினர். குழந்தைகளை கைது செய்து வண்டியில் ஏற்ற மறுத்தது போலீசு. குழந்தைகளை எங்களோடு அழைத்து செல்ல அனுமதிக்கவில்லை என்றால் போராட்டத்தின் தன்மை மாறும் என்று முழுக்கமிட்ட பிறகு, திருமண மண்டபம் வரை அழைத்து வந்தனர். பிறகு மண்டபத்தில் குழந்தைகளை விட மறுத்தனர். அங்கும் போலீசை எதிர்த்து போராட்டம் நடத்தப்பட்டது. ஒரு கட்டத்தில் மண்டபத்தில் வெளியே இருந்தவாரே கையொப்பம் பெற்று விடுதலை செய்தனர்.
இப்போராட்டம் மூலம் எடுக்கப்பட்ட பிரச்சாரங்களால் பகுதி மக்களிடையே மேக்கேதாட்டு அணை குறித்த விரிவான புரிதலை ஏற்படுத்த முடிந்தது. குறிப்பாக நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாரை குவித்து காலை முதலே அஞ்செட்டி கடைவீதி பகுதிகளில் பரபரப்பை ஏற்பதுத்தியது போலீசு. இதனையடுத்து மக்கள் அதிகாரம் தோழர்கள் பறையடித்து முழக்கமிட்டுக் கொண்டு பேரணியாக வந்தது பகுதி மக்களிடையே பெருத்த வரவேற்பை ஏற்படுத்தியது.
மேக்கேதாட்டு விவகாரத்தில் பாஜக – காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அனைத்தும் கர்நாடக மக்களிடம் இனவெறியைத் தூண்டி அரசியல் ஆதாயத்திற்காக மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சித்து வருகிறது. மற்றொருபுறம் கார்ப்பரேட் முதலாளிகளிடம் தண்ணீர் வினியோகத்தை ஒப்படைப்பதற்கான ஒரு பகுதியாக மேக்கேதாட்டு அணை திட்டம் உள்ளது என்பதை அம்பலப்படுத்தி, ஓட்டுக் கட்சிகளின் பின்னால் சென்று பிரச்சினையை தீர்க்க முடியாது. தமிழகத்தில் ஓர் மக்கள் எழுச்சியை ஏற்படுத்த வேண்டும் என்கிற அடிப்படையில் மக்களுக்கு அறைகூவல் விடுத்து நடத்திய இந்த நடைபயண போராட்டம் பல்வேறு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேக்கேதாட்டு-வில் எக்காரணத்தைக் கொண்டும் அணை கட்ட அனுமதிக்க மாட்டோம். என்கிற வகையில் தமிழகத்தில் போராட்டம் நடத்துவதற்கு தடை இருக்கக் கூடாது. இதன்மூலம் தமிழக மக்களிடம் ஒரு பேரெழுச்சியைக் கொண்டு வரவேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த பேரணி நடைபெற்றது.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தருமபுரி மண்டலம்.
9790138614
கார்ப்பரேட் நலத் திட்டங்கள் : மக்கள் மீதான மோடி அரசின் பொருளாதார யுத்தம் !
நாட்டு மக்கள் மீது இந்திய ஆட்சியாளர்கள் நடத்தும் பொருளாதார யுத்தம் !
நேஷனல் மானிடேசன் பைப் லைன் (National monetization pipe) என்ற திட்டத்தின் பெயரில் தேசத்தின் சொத்துக்களை இந்திய பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரைவார்க்க முழு வேகத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அரசு.
1950-ல் கலப்பு பொருளாதாரம் என்ற பெயரில் பொருளாதாரத் திட்டங்களை வகுத்து அரசுக்கு வழிகாட்ட திட்ட கமிஷன் நிறுவப்பட்டது. பாரதிய ஜனதா கட்சி இந்திய ஒன்றியத்தின் ஆட்சியைப் பிடித்தவுடன் 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் திட்டக்கமிஷன் கலைக்கப்பட்டு அரசின் பொருளாதாரக் கொள்கைகளை வகுத்தளிக்க நிதி ஆயோக் என்ற புதிய அமைப்பு பாஜக-வால் உருவாக்கப்பட்டது.
நிதி ஆயோக் பரிந்துரையின்பேரில் தற்போது இந்திய நாட்டின் கேந்திரமான செல்வ வளங்களை தனியாருக்கு தாரை வார்க்க முனைப்புடன் களமிறங்கியுள்ளது மோடி அரசு. நிதி ஆயோக் அமைப்பு உருவாக்கப்பட்டதன் நோக்கமும் இதுதான்.
இந்திய துணை கண்டத்தின் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் கடுமையான உழைப்பால் உதிரத்தால்; தேசபக்த அறிவுத் துறையின் மிகப்பெரிய பங்களிப்பால்; இந்திய மக்களின் வரிப்பணத்தை கொண்டு உருவாக்கப்பட்ட கேந்திரமான கட்டமைப்புகளை கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபவெறிக்கு ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர் ஒன்றிய ஆட்சியாளர்கள்.
படிக்க :
♦ “பணமாக்கல் திட்டம்” : கார்ப்பரேட்டுகளுக்கு இந்தியாவை தாரைவார்க்கும் திட்டம் !
♦ பழைய வாகன அழிப்புக் கொள்கை : மோடியின் புதிய கார்ப்பரேட் சேவை !
167 ஆண்டுகள் பாரம்பரியமிக்க இந்திய ரயில்வே துறையை கார்ப்பரேட் வசம் ஒப்படைக்க உள்ளனர். ரயில்வே இருப்புப் பாதைகள் 1,15,000 கிலோமீட்டர் தனியார் கரங்களுக்கு செல்ல இருக்கிறது. காடுகளை சீர்செய்து மலைகளை குடைந்து இந்திய ரயில்வே துறைக்கான இருப்புப் பாதைகளை இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் குறுக்கும் நெடுக்குமாக உருவாக்கிட இரத்தமும் வியர்வையும் சிந்தியிருக்கிறது இந்திய தொழிலாளி வர்க்கம். ரயில்வேக்கு சொந்தமான 4.75 ஹக்டேர் நிலங்களும் கார்ப்பரேட் கம்பெனிகளின் அடங்காத அகோரப் பசிக்கு இரையாகப்போகிறது.
இந்திய ரயில்வே துறையை தனியாருக்கு தாரைவார்த்து ரூ.1.5 லட்சம் கோடி பணம் திரட்ட முடிவு செய்துள்ளனர். ரயில்வே பயணக் கட்டணம் பல மடங்கு உயர இருக்கிறது. ஏழை எளிய மக்களுக்கு பயன்பட்டு வந்த ரயில் பயணம் இனி எட்டாக்கனியாகி விடப்போகிறது. மும்பையிலிருந்து அகமதாபாத் ஏசி கட்டணம் ரூ.1,289-யை ரயில்வே துறை வாங்குகிறது, அதே தூரத்திற்கு தனியார் தேஜஸ் ரயில் கட்டணம் ரூ.2,389 வசூலிக்கப்படுகிறது. தனியார் மயத்தினால் ஏற்படப் போகும் விளைவுகளுக்கான ஒரு உதாரணம் இது.
நூற்றுக்கணக்கான ரயில்வே நிலையங்களை முற்றிலும் தனியார் வசம் ஒப்படைக்க உள்ளார்கள். 50 ரயில்வே நிலையங்களை மறுசீரமைப்பு என்ற பெயரில் வரும் மார்ச் மாத இறுதிக்குள் தனியாரிடம் ஒப்படைக்க கால இலக்கு நிர்ணயித்துள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலைகள் கார்ப்பரேட் வசம் செல்லவிருக்கின்றன. அதன் மூலம் ரூ.1,60,000 கோடி நிதி திரட்ட திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களின் கரங்களில் ஒப்படைக்க உள்ளனர். ரூ.1.6 லட்சம் கோடி மதிப்புள்ள 26,700 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட கேந்திரமான தரைவழிப் போக்குவரத்தை தாரை வார்க்க உள்ளனர். நெடுஞ்சாலைத் துறையில் சுங்கக் கட்டணம் 200 விழுக்காடு உயர்ந்துள்ளது. டோல் கட்டணம் என்ற பெயரில் மிகப்பெரிய வழிப்பறி கொள்ளை நடந்து வருகிறது. இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் மாபெரும் தரைவழி வழித்தடங்களை உருவாக்கி அளப்பரிய சாதனை படைத்தது தொழிலாளர் வர்க்கம்.
“நீரோடை நிலம் கிழிக்க,
நெடு மரங்கள் நிறைந்து பெரும் காடாக,
பெரு விலங்கு நேரோடி வாழ்ந்திருக்க,
பருக்கைக் கல்லின் நெடும் குன்றில் பிலஞ்சேர,
பாம்பு கூட்டம் போராடும் பாழ் நிலத்தை,
அந்நாளில் புதுக்கியவர் யார்”
என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.
இந்திய உழைக்கும் மக்கள் பச்சை இரத்தம் சிந்தி உருவாக்கிய இந்த மாபெரும் வழித்தடங்களை கார்ப்பரேட் கொள்ளையர்களிடம் ஒப்படைக்க உள்ளனர். நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பு, பரிமாற்றம், சுங்கத் செயல்பாட்டு பரிமாற்றம், பராமரிப்பு மற்றும் மேம்பாடு போன்ற அனைத்து வருவாய் உரிமைகளையும் தனியாருக்கு கொடுக்க உள்ளனர்.
மின்சாரமும் தனியார்வசம் ஒப்படைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. 42,300 கிலோமீட்டர் மின் வழித்தடங்களை தனியாருக்கு தாரைவார்க்க முடிவு செய்துள்ளனர். நீர்மின் உற்பத்தி, ஆறு ஜிகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி, காற்றாலை என அனைத்து மின் உற்பத்திகளையும், மின் வினியோகக் கட்டமைப்பையும் விற்று பணமாக்க முடிவு செய்துள்ளனர்.
இந்திய தொலைத்தொடர்பு சந்தை முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனத்தின் ஏகபோகமாக மாற்றப்பட்டு வருகிறது. ஜியோ நிறுவனத்தின் வர்த்தக கழுத்தறுப்புப் போட்டியை எதிர்கொள்ள இயலாமல் ஐடியா – வோடபோன் உள்ளிட்ட பல்வேறு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வெளியேறி வருகின்றனர். அரசு பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் புத்தாக்கம் செய்வதற்காக அமைச்சரவை கூடி எடுத்த முடிவை கூட மோடி அரசு நடைமுறைப்படுத்த மறுத்து வருகிறது. 4G அலைக்கற்றை மூலம் பி.எஸ்.என்.எல் நிறுவனம் சேவை வழங்க தேவையான கருவிகளை கொள்முதல் செய்வதற்கு முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர்.
பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு சொந்தமான 67,000 செல்போன் டவர்கள் இந்திய துணைக்கண்டம் முழுவதும் உள்ளது. தேசிய பணமாக்கும் திட்டத்தின் மூலம் இந்த செல்போன் கோபுரங்களை, ஏகபோகமாக கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் ஜியோ நிறுவனத்திற்கு தாரைவார்க்க முயற்சித்து வருகின்றனர். நாடெங்கும் 7 லட்சம் கிலோமீட்டர் ஆப்டிகல் பைபர் கேபிள்கள் கொண்ட வலைப்பின்னல் பி.எஸ்.என்.எல் நிறுவனத்திடம் உள்ளது. இந்த ஆப்டிகல் பைபர் வலைப்பின்னலை தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்க முடிவு செய்துள்ளனர்.
அரசு பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை ஒழித்துக் கட்டி அதன் சொத்துக்களை ஜியோ நிறுவனம் கைப்பற்றிவிட்டால், இந்திய தொலைத்தொடர்புச் சந்தை முகேஷ் அம்பானியின் ஏகபோகமாக மாறிவிடும். பிற நிறுவனங்களை முடக்குவது முதல் அனைத்துவிதமான தகிடுதத்தங்களிலும் ஈடுபட்டு ஏகபோகமாக ஜியோ உருவானால், கட்டணங்களை பன்மடங்கு உயர்த்தி பெரும்பான்மை மக்களை சுரண்டி கொழுக்கும். தனிநபர் சுதந்திரம் – தேசத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறிவிடும். ரயில்வே துறைக்கு இணையாக பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு நாடு முழுவதும் கேந்திரமான இடங்களில் உள்ள நிலங்கள், கட்டிடங்களை அடிமாட்டு விலைக்கு தனியார்வசம் ஒப்படைக்க உள்ளனர்.
விளையாட்டு மைதானங்களை கூட விட்டு வைக்கவில்லை மோடி அரசு. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறையை தனியார் வசம் கொடுப்பதன் மூலம் ரூ.20,000 கோடி நிதி திரட்ட திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய புகழ்பெற்ற விளையாட்டு மைதானங்கள் அரங்கங்கள் என அனைத்தும் தனியாருக்கு தாரை வார்க்கப்பட உள்ளன. புகழ்பெற்ற ஜவகர்லால் நேரு ஸ்டேடியம் தனியார் கரங்களுக்கு மாற இருக்கிறது.
அடுத்ததாக, கடல்வழி போக்குவரத்தையும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரைவார்க்க திட்டமிட்டு உள்ளனர். நாடெங்கிலும் உள்ள முப்பத்தியோரு துறைமுகங்களும் கார்ப்பரேட் வசம் செல்ல இருக்கிறது. நிலக்கரி சுரங்கங்களை தாரைவார்த்து ரூ.30,000 கோடி திரட்டும் திட்டம் நடைமுறைக்கு வரவிருக்கிறது. 25 விமான நிலையங்கள் 160 நிலக்கரி சுரங்கங்கள் உள்ளிட்டவற்றை தனியார் வசம் ஒப்படைக்க உள்ளனர்.
மக்களுக்கு வழங்கிக் கொண்டிருந்த அனைத்து சேவைகளையும் வணிக மயமாக்குவது, கேந்திரமான அனைத்து தொழில் வளங்களையும் கார்ப்பரேட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பது என்ற ஒன்றிய மோடி அரசின் இந்த முடிவால் இந்திய நாட்டில் வாழ்கின்ற கோடான கோடி ஏழை எளிய மக்கள் மீது மிகப்பெரிய பொருளாதார தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது.
இந்திய நாட்டு தொழிலாளி வர்க்கத்தின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாக்கும் நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது. மின் கட்டணம், ரயில் கட்டணம், போக்குவரத்து கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட உள்ளது. கேந்திரமான கட்டமைப்புகள் சிதைக்கப்படுவதன் விளைவாய் நாடு மிகப்பெரிய நெருக்கடியை சந்திக்க உள்ளது.
அம்பானிக்கு, அதானிக்கு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு எது நல்லதோ அதுதான் இந்த நாட்டுக்கு நல்லது என்கின்ற அடிப்படையில் பொருளாதாரத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. ஆகப் பெரும்பான்மையான மக்களுக்கு இத்தகைய வளர்ச்சியினால் எள் முனை அளவு கூட பயனில்லை; மாறாக வறுமையின் கோரப்பிடியில் மக்களை தள்ளி இருக்கிறது.
கார்ப்பரேட் – காவி பாசிச கும்பலின் பொருளாதார வளர்ச்சியானது வேலை வழங்காத வளர்ச்சி மட்டுமல்ல வேலையை பறித்துக் கொள்ளும் வளர்ச்சியாகவும் உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள், ரயில்வே மற்றும் மின்சாரம் ஆகிய துறைகள் தேசிய பணமாக்கும் திட்டத்தில் 66 விழுக்காடு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் கேந்திரமான பொதுத்துறை நிறுவனங்கள், அரசு சொத்துக்கள் அனைத்தும் இந்திய மக்களுக்கு சொந்தமானது. பாரதிய ஜனதா கட்சிக்கும், மோடிக்கும் சொந்தமில்லை என்று மோடி அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்திருக்கிறார், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி. நாட்டின் உள்கட்டமைப்பு சொத்துகளை விற்றும், தனியாருக்கு வருவாய் உரிமைகளை கொடுப்பதன் வாயிலாகவும் எதிர்வரும் 4 ஆண்டுகளில் ரூ 6 லட்சம் கோடி நிதி திரட்ட உள்ளதாக ஒன்றிய அரசின் நிதி அமைச்சர் கூறுகிறார்.
தேசிய பணமாக்கும் திட்டத்தின் நோக்கம் என்ன ?
நாட்டின் கேந்திரமான துறைகளை, உள்கட்டமைப்புகளை தனியாருக்கு ஒப்படைப்பதன் மூலமாக கிடைக்கப்போவதாக சொல்லப்படும் 6 லட்சம் கோடி நிதியை, நாடு முழுவதும் உள்ள உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கு பயன்படுத்த போகிறார்களாம்.
பொதுத்துறை அமைப்புகளை சிதைத்து; கட்டுமான துறைகளை சீரழித்து; தனியார்களிடம் விற்று; நீண்டகால குத்தகைக்கு விடுவதன் மூலமாக நிதி திரட்டபோவதாகவும்; அதைக்கொண்டு தனியாரிடம் கை மாறிய பிறகு அதே கட்டுமானத்தை சீர்செய்ய அந்த நிதியை பயன்படுத்தப்போவதாகவும் கூறியுள்ளார்கள்.
நாட்டு மக்களின் காதில் பூ சுற்றுகிறார் மோடி. அனைத்து உற்பத்தித் துறைகளையும் சீரழித்துவிட்டு எஞ்சியுள்ள சேவை துறைகளையும் தனியாருக்கு ஒப்படைக்க உள்ளனர். விட்டால் அரசு நிர்வாகம் முழுவதையும் 25 ஆண்டு கால குத்தகைக்கு கார்ப்பரேட் வசம் ஒப்படைத்தாலும் ஒப்படைப்பார் மோடி !
நாங்கள் மலைகளைத் தகர்தோம்;
பெரும் கற்களை உடைத்தோம்;
எங்கள் குருதியை சாந்தாக்கி;
பல திட்டங்களை கட்டினோம்;
இந்த உழைப்பு யாருடையது;
இதன் பலன்கள் யாருடையது;
என்று முதலாளித்துவ சுரண்டல் கொடுமையை அனல் கக்கும் தன் கவிதை வரிகளால் வினா எழுப்பினார் ஆந்திர புரட்சிக் கவிஞர் செரபண்ட ராஜ்.
படிக்க :
♦ இஸ்ரோ முதல் ஐ.சி.எஃப் வரை மிரட்டப்படும் விஞ்ஞானிகளும் அதிகாரிகளும் !
♦ கண்காணிப்பு முதலாளித்துவம் : நமது சுய சிந்தனையின் பெரும் எதிரி !
இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு பொதுத்துறை நிறுவனங்கள் மிகப்பெரிய பங்காற்றி வருகின்றன. பொதுத்துறை வங்கிகள், ஆயுள் காப்பீட்டுக் கழகங்கள், நாட்டு மக்களின் சேமிப்புக்கு பாதுகாப்பாக இருக்கின்றன. இவற்றை விற்பதன் மூலம், சொல்லிக் கொள்ளப்படும் நாட்டின் இறையாண்மையை செல்லாக்காசாக்கும் நடவடிக்கையில் ஆட்சியாளர்கள் இறங்கியுள்ளனர்.
இந்திய நாட்டை மறுகாலனியாக்கும் நடவடிக்கையில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். தனியார்மயம் – தாராளமயம் – உலகமயக் கொள்கைகளின் விளைவாய் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்த்த, சிலி, கிரீஸ் போன்ற பல்வேறு நாடுகள் திவாலாகி உள்ளன.
கோடான கோடி இளைஞர்களின் எதிர்காலம் இருள் சூழவுள்ளது. வேலையில்லா திண்டாட்டம் கூர்மையடையப் போகிறது. கார்ப்பரேட் பாசிச கும்பலின் சுரண்டல் தீவிரமடைய உள்ளன. கார்ப்பரேட் குழும முதலாளித்துவ கும்பல் இந்துத்துவ பாசிச கும்பலின் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி நாட்டு மக்கள் மீது ஒரு பொருளாதார யுத்தத்தை தொடுத்துள்ளது. கார்ப்பரேட் கும்பலின் வாளும் கேடயமுமாய் இந்துத்துவ பாசிச கும்பல் உள்ளது.
நாட்டை இந்துராஷ்டிரத்தின் கீழ், ஏகாதிபத்தியங்களுக்கு மறுகாலனியாக மாற்றும் பாசிசக் கும்பலின் திட்டத்தை தடுத்து நிறுத்த, மீண்டும் ஒரு விடுதலைப் போரை துவக்க வேண்டியுள்ளது. கொடுமைகள் தாமே அழிவதில்லை. சமூக மாற்றத்திற்கான திசைவழியில் செல்வதன் மூலமே நாட்டை நாசமாக்கும் இந்த திட்டத்தை முறியடிக்க முடியும்.
கார்ப்பரேட் காவி பாசிச கும்பலின் ஆதிக்கத்தை உடைக்க, சாதி, மத சங்கிலிகளை தகர்த்தெரிந்து வர்க்கரீதியாக ஒன்றுதிரண்டு போராடுவதில்தான் உண்மையான மக்கள் வெற்றி கருக்கொண்டுள்ளது. புதிய வரலாறு படைக்க வேண்டிய மகத்தான பணி நம்முன் உள்ளது !!

இரணியன்
தம்மிடம் பணியாற்றிய ஆப்கான் ஊழியர்களைக் கைவிட்ட மேற்குலகம் !
அமெரிக்கா தன் துருப்புக்களை ஆப்கானிலிருந்து திருப்பி அழைத்துக் கொள்வதாக அறிவித்ததிலிருந்து, பல்லாயிரக் கணக்கான ஆப்கான் மக்கள் காபூல் சர்வதேச விமான நிலையத்தை நோக்கி படையெடுத்தனர். அதன்பிறகு காபூல் விமான நிலையத்தின் மிகவும் கொடூரமான காட்சிகள் வெளியாகி உலகையே உளுக்கியது.
ஆப்கானிலிருந்து கிளம்பத் தயாரான விமானத்தின் வெளிப்புறத்தில் மக்கள் ஏறிக் கொள்ளும் காட்சியும், விமானம் உயரத்தில் பறக்கும்போது, சிலர் கீழேவிழுத்து இறக்கும் காட்சியும் காண்போர் நெஞ்சை உலுக்கியது.
பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட ஓர் அறிக்கையில், காபூல் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மக்களின் கூட்ட நெரிசலால் குறைந்தது ஏழு ஆப்கான் பொதுமக்கள் இறந்திருப்பார்கள் என்பதை உறுதி செய்துள்ளது.
தலிபான்கள் ஆப்கான் தலைநகரை கைப்பற்றிய பின்னர், ஒரே வாரத்தில் காபூல் விமான நிலையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் குறைந்தது 20 பேர் இறந்துள்ளனர் என்று கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி நேட்டோ அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த வாரத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆப்கான் விமான நிலையம் அருகே நிகழ்த்திய குண்டுவெடிப்பில் அப்பாவி பொதுமக்கள் பலியாகினர்.
படிக்க :
♦ ஆப்கானிலிருந்து அமெரிக்கப் படைகள் விலகல் – பின்னணி என்ன ?
♦ தாலிபான்களிடம் ஆப்கானை தாரைவார்த்த அமெரிக்கா !
அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “ஆப்கானிய மக்களுக்காக எங்களுடன் பணியாற்றிய தூதரக ஊழியர்களுக்கு அமெரிக்கா தனது தனிப்பட்ட கடமையை செய்யும். மேலும், விமானம் அனைவருக்கும் கிடைக்கும் ஏற்பாட்டை அமெரிக்கா அயராது செய்து வருகிறது” என்றார்.
அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் கூறுகையில், தலிபான்கள் கட்டுபாட்டில் ஆப்கான் முழுவதும் வந்த இரண்டே வாரத்தில், காபூலிலிருந்து 60 விமானங்களில் 8,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளார்கள் என்றும், நான்கு கண்டங்களில் உள்ள சுமார் 24 நாடுகளுடன் அமெரிக்கா ஆப்கான் மக்களுக்கு போக்குவரத்து ரீதியாக உதவ ஒப்பந்தமிட்டிருப்பதாகவும் கூறினார்.
மீதமுள்ள பெரும்பாலான அமெரிக்க துருப்புக்களை திரும்பப் பெறுவதற்கான ஆகஸ்ட் 31-ம் தேதிக்கான நேரம் நெருங்கிவிட்டது. இருப்பினும் அனைத்துப் படைகளையும் திரும்பிப் பெற முயற்சித்து வருகிறோம் என்றார்.
அமெரிக்க அதிகாரிகள் இப்படி கூறிவரும் நிலையில், ஆப்கானில் தூதரக ஊழியர்கள் மற்றும் அமெரிக்காவிற்கு உதவியர்களின் நிலையோ படுமோசமாக உள்ளது.
காபூலில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் வேலை செய்யும் உள்நாட்டு ஊழியர்களை அமெரிக்கா பாதுகாத்து ஆப்கானிலிருந்து வெளியே செல்ல உதவாததால், மிகவும் மனச்சோர்வு அடைந்துள்ளார்கள். மேலும், அமெரிக்க அரசின் துரோகத்தையும், அவநம்பிக்கையையும் வெளிபடுத்தியதாக தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
விமான நிலையத்திற்கு அருகிலுள்ள சோதனைச் சாவடிகளில் தூதரக ஊழியர்கள் தலிபான்களால் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். சிலர் தங்களின் குழந்தைகளிடமிருந்து முற்றிலும் பிரிந்துவிட்டனர். சிலர் கூட்ட நெரிசலில் விழுந்து காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் உள்ளனர். மேலும் பலர் வெயிலில் கொடுமையால் சோர்வடைந்து சாலையில் தஞ்சமடைந்துள்ளனர்.
மீண்டும் விமான நிலைய கூட்ட நெரிசலை எதிர்கொள்வதை விட “தலிபான்களின் தோட்டாவின் கீழ் இறப்பதே நல்லது” என்று ஒரு தூதரக ஊழியர் கூறினார். இங்கே “இறப்பதில் மகிழ்ச்சி ஆனால் கண்ணியத்துடனும் பெருமையுடனும் இறக்க வேண்டும்” என்று மற்றொரு தூதரக ஊழியர் கூறினார்.
ஆப்கானிஸ்தான் அமெரிக்க தூதரக ஊழியர் ஒருவர், “தலிபான்கள் எங்கள் வீட்டில் விசாரணை மேற்கொள்வதற்காக வீட்டு வாயிலில் குறியீடுகளை இட்டுச் சென்றுள்ளனர். நாங்கள் குடும்பத்துடன் வீட்டைவிட்டு தப்பி வந்துவிட்டோம். ஆனால், எங்களால் விமான நிலையத்திற்கு செல்ல முடியவில்லை” என்றார்.
அமெரிக்கா தன் துருப்புக்களை பின்வாங்கிய அதே நேரத்தில் தூதரகத்தில் பணிபுரிந்த ஆப்கானை சார்ந்த ஊழியர்களை வெளியேற்ற ஏற்பாடு செய்யவில்லை என்றும் அரசு உயர் அதிகாரிகளுக்கு மட்டும் முன் உரிமை வழங்கியதாகவும் ஒரு ஊழியர் குற்றம் சாட்டினார்.
000
காபூல் விமான நிலையத்தின் உள்ளே அமெரிக்க துருப்புகள் கட்டுப்பாட்டில் இருப்பதாலும், விமான நிலையத்தின் வெளியில் உள்ள அனைத்து பகுதிகளையும் தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் முயற்சிகள் முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை. தொடந்து இடையூறுகள் அதிகரிக்கிறது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு அதிகாரி ஜோசப் பொரெல் ஆகஸ்ட் 21 அன்று கூறியுள்ளார்.
மேலும், ஆகஸ்ட் இறுதிக்குள் ஆப்கானிலிருந்து கடைசி அமெரிக்க துருப்புகள் வெளியேறும் போது பல்லாயிரக்கணக்கான ஆப்கான் ஊழியர்கள் காபூலில் இருந்து வெளியேற்றுவது சாத்தியமற்றது, என்று பொரெல் கூறினார்.
ஆகஸ்டு மாத முதல் வாரத்தில் தலிபான்கள் முழு ஆப்கானையும் கைப்பற்றும் முன்பு, ஆப்கானில் இருந்த இங்கிலாந்து தூதரக அதிகாரிகள் வெளியேற உதவி செய்யப்பட்டது. மேலும், தூதரகத்தில் பணியாற்றிய அனைத்து ஊழியர்களின் வேலைகளும் உடனடியாக நிறுத்தப்பட்டது. ஆனால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தூதரகத்தில் பணிபுரிந்த சில ஊழியர்கள், தற்போது வேலை இழந்த நிலையில் தலிபான்களால் தாங்கள் கொல்லப்படுவோம் என்றும் அஞ்சுகிறார்கள்.
“நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோமா இல்லையா என்று யாரும் கேட்கவில்லை. எங்கள் உயிருக்கு ஆபத்து இருக்கிறதா இல்லையா என்று யாரும் அக்கறைப்படவில்லை” என்று இங்கிலாந்து தூதரகத்தில் பணியாற்றிய ஆப்கான் ஊழியர் ஒருவர் கூறினார்.
படிக்க :
♦ ஆப்கானிஸ்தான் குறித்து ஒரு சுருக்கமான பார்வை || சந்திரசேகரன்
♦ தாலிபான்களின் கையில் ஆப்கானின் எதிர்காலம் ?
ஆனால், ஒரு நேர்காணலில் ஜேம்ஸ் ஹெப்பி, காபூல் விமான நிலையத்திற்கு அனைத்து ஊழியர்களும் வந்துவிட்டதாகவும், அவர்கள் உண்மையில் ஆப்கானைவிட்டு வெளியேறிவிட்டதாகவும் கூறினார். ஆனால், இந்தக் கூற்றை தூதரக ஊழியர்கள் மறுக்கின்றனர்.
“அது உண்மை இல்லை. வெளியேற்றப்படுவதற்கான செய்தி எங்களுக்கு வரவில்லை. எங்களை விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்ல யாரும் அனுப்பப்படவில்லை” என்று ஒரு தூதரக ஊழியர் கூறினார்.
000
அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆப்கானில் தங்கள் தூரகங்களில் பணிபுரிந்த ஆப்கான் பெரும்பான்மையான ஆப்கானியர்களை கைவிட்டுவிட்டன என்பதையே இந்த சம்பவங்கள் நமக்கு காட்டுகின்றன.
போர் ஆக்கிரமிப்பு என்பது அந்த நாட்டின் இயற்கை வளங்கள் முதல் மனித வளம் வரை அனைத்தையும் ஒட்டச் சுரண்டும் நோக்கத்திற்காக நடத்தப்படுபவையே. குறிப்பாக ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற 20 ஆண்டு ஆக்கிரமிப்பின் பின்னே ஜனநாயகம் எனும் நோக்கம் துளியும் கிடையாது.
அந்த மக்களை மனிதர்களாக மதிக்காமல், தாம் சுகிப்பதற்கான பொருளாகத்தான் அமெரிக்காவும் பிற ஏகாதிபத்தியங்களும் நினைக்கின்றன. தூதரக கட்டிடங்களில் உள்ள நாற்காலி, மேஜையைப் போலவே அந்த ஊழியர்களையும் கைவிட்டுச் சென்றிருக்கின்றன இந்த மேற்கத்திய வல்லரசுகள். ஏகாதிபத்தியங்கள் தங்கள் நலனுக்கு உதவாத எந்த நாட்டு அரசையும், அதன் மக்களையும் கைவிட்டுவிடும் என்பதற்கு ஆப்கான் நாட்டில் இவர்களின் கீழ் பணியாற்றிய ஊழியர்களே துலக்கமான சான்று !!

சந்துரு
செய்தி ஆதாரம் : RT.COM
இலங்கை : மலையேறிச் சென்று பெண்கள் மேற்கொள்ளும் மருத்துவம் !!
இலங்கையில் கொரோனாவின் மூன்றாவது அலை தற்போது பயங்கரமாகத் தாக்கிக் கொண்டிருக்கிறது. தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் நோய்ப் பரவலின் காரணமாக மரித்துக் கொண்டிருக்கிறார்கள். பொதுமக்கள் வறுமையில் வாடிக் கொண்டிருக்கையில் அவர்களுக்கு மேலும் நெருக்கடி கொடுக்கும் வகையில் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருந்துகள் மீதான விலைவாசி அதிகரிப்பு, இறக்குமதி தடைகள் போன்ற பல சுமைகளை மக்களின் மீது சுமத்திக் கொண்டிருக்கிறது அரசாங்கம்.
இலங்கை ஒரு தனித்த தீவு. பிற நாட்டவர்களின் வருகையைத் தடுப்பது மிகவும் எளிதாக உள்ள ஒரு சிறிய நாடு. கொரோனா பரவலின் ஆரம்ப கட்டத்திலேயே வான்வழி, கடல்வழி உட்பிரவேசங்களுக்குத் தடை விதித்திருந்தால் நாட்டுக்குள் வைரஸ் வராமலேயே தடுத்திருக்கலாம். ஆனால் ஜனாதிபதியோ, அரச பரிவாரங்களோ அதைச் செய்யவில்லை. இப்போதும் கூட, டெல்டா சரமாரியாகப் பரவிக் கொண்டிருக்கும் இந்த நாட்களிலும் கூட நாட்டுக்குள் உச்சபட்ச கட்டுப்பாடுகளை விதிக்காமல் மரணங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது அரசாங்கம். ஒருவிதத்தில் இதுவும் சர்வாதிகார ஆட்சிதான்.
படிக்க :
♦ இலங்கை : போலீஸ் கைதுகளின் பின்னரான படுகொலைகள் || எம். ரிஷான் ஷெரீப்
♦ இலங்கை : மன்னார் நகர் பெண்களின் சொல்லப்படாத கதைகள் || எம். ரிஷான் ஷெரீப்
நாட்டில் இவ்வாறான அபாய நிலைமை காணப்படும் வேளையிலும் வைத்தியர்களும், தாதிகளும், சுகாதார சேவை அதிகாரிகளும், குடும்ப நல உத்தியோகத்தர்களும் தமது உயிரைப் பணயம் வைத்து தொடர்ந்தும் சேவைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். கொரோனா தாக்கிய நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த வைத்தியர்கள், தாதிகள், குடும்ப நல உத்தியோகத்தர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் சாரதிகள் (ஓட்டுனர்கள்) எனப் பலரும் கடந்த வாரங்களில் மரணித்திருக்கிறார்கள்.
அபிவிருத்தியடையாத கஷ்டப் பிரதேச கிராமங்களில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கவும், அவர்களது குடும்பத்தினருக்கு ஊசி மருந்தேற்றவும் நடந்து சென்று வரும் குடும்ப சுகாதார சேவை மற்றும் குடும்ப நல உத்தியோகத்தர்களான பெண் அதிகாரிகளில் ஒரு சிலரையே இந்தப் புகைப்படங்களில் நீங்கள் காண்கிறீர்கள். கிராமங்களிலுள்ள இவ்வாறான கடினமான பாதைகளில் இவர்கள் இதற்கு முன்பும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சிகிச்சையளிக்க பல தடவைகள் நடந்தே போயிருக்கிறார்கள்..
இலங்கையின் சுகாதார சேவையை அபிவிருத்தி செய்ய பெருமளவில் பங்களிக்கும் இவ்வாறான சிறந்த பெண் அதிகாரிகளின் சேவைகளும், அர்ப்பணிப்புகளும் பெரும்பாலும் பலராலும் கண்டுகொள்ளப்படுவதேயில்லை. இவர்களுக்குத் தேவையான பாராட்டுகளும் கிடைப்பது குறைவு. இலங்கையிலும், உலகம் முழுவதிலும் இவ்வாறான அரிய சேவைகளை அர்ப்பணிப்புடன் செய்பவர்கள் பலர் உள்ளார்கள். இந்தப் புகைப்படங்கள் அவர்கள் அனைவரதும் சேவைகளையும், அர்ப்பணிப்புகளையும் வரலாற்றில் நிலை நிறுத்துகின்றன
எம்.ரிஷான் ஷெரீப்
“பணமாக்கல் திட்டம்” : கார்ப்பரேட்டுகளுக்கு இந்தியாவை தாரைவார்க்கும் திட்டம் !
நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காண்ட் பரிந்துரையின் படி 6 லட்சம் கோடி அரசுச் சொத்துக்களை குத்தகைக்கு விடுவது என்ற “தேசிய பணமாக்கல் திட்டத்தை” அறிமுகப்படுத்தியுள்ளார் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன். செயல்படுத்துவது, பராமரிப்பது, ஒப்படைப்பது என்ற முறையில் குத்தகைக்கு விடப்படுவதாக (25 வருடத்திற்கு தனியாருக்கு தாரைவார்க்கப்படுவது குறித்து) நமக்கு விளக்கமளித்துள்ளார்.
இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு பொருளாதார தேக்கம் ஏற்பட்ட இன்றைய சூழலில் 7.7% பொருளாதார சரிவுடன் 2020-21-க்கான நிதி அறிக்கையை நிறைவு செய்து, 2021-22 ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய போகிறது, உலகிலேயே பொருளாதாரத்தில் 6-வது பெரிய நாடாக உள்ள இந்தியாவை ஆளும் கார்ப்பரேட் – காவி பாசிசக் கும்பல்.
படிக்க :
♦ குப்தா சகோதரர்களை ஓடவிட்ட தென் ஆப்பிரிக்க மக்கள் !
♦ அதானி நிறுவனத்தை இழுத்து மூடிய பஞ்சாப் விவசாயிகள் !!
கொரோனாவில் ஒரு கோடி பேருக்கு மேல் நோயால் பாதிக்கப்பட்டு, 1.50 லட்சம் பேர் காவு வாங்கப்பட்ட சூழலில், 7.7% பொருளாதார சரிவு ஏற்பட்டிருக்கு இந்நிலைமையை சரி செய்யவும், நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்காகவும் அரசின் சொத்துக்களை குத்தகைக்கு விட்டு 6 லட்சம் கோடி பணத்தைத் திரட்டவுமே இத்திட்டத்தை அறிவித்துள்ளதாக நிதி அமைச்சர் திருவாய் மலர்ந்துள்ளார்.
தேசிய நெடுஞ்சாலைகள், ரயில்வே, மின்சாரம், தொலைதொடர்பு, விமான நிலையங்கள், துறைமுகங்கள், சுரங்கங்கள், விளையாட்டு அரங்குகள் இவற்றின் அசையா – அசையும் சொத்துக்கள் அனைத்தையும் தனியாருக்கு ஏலம் விடப்பட்டும். குறிப்பாக அதானி, அம்பானி கும்பலுக்கு ஏலம் விடப்படும் என்பதில் ஐயமில்லை. ஏனெனில், தமது கார்ப்பரேட் காவி பாசிச நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக நின்று தேர்தல் செலவிற்கும், ஆட்சிக் கவிழ்ப்பிற்கும் கோடிக்கணக்கில் அள்ளித் தரும் தனது எஜமானர்களை எப்படி மறக்க முடியும்?
இங்கு இது இட்டுக்கட்டி சொல்லப்படவில்லை. ஏற்கெனவே நடந்த நிகழ்வுகளிலிருந்து பார்த்தாலே இதன் பின் உள்ள உண்மையைப் புரிந்து கொள்ள முடியும். ஆஸ்திரேலியாவில் நிலக்கரிச் சுரங்கம் ஏலம் எடுக்க தனியார் வங்கிகள் கடன் தர நிராகரித்த நிலையில், பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து ரூ.6000 கோடியை அதானிக்கு வழங்க வழிகாட்டுதல் கொடுத்தது ம்ோடி ஆட்சிதான். மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வரை அதானியின் வசம் ஒரு விமான நிலையம் கூட இல்லை. தற்போது 51 விமான நிலையங்களிலும் மற்றும் பல துறைமுகங்களும் அதானி நிறுவனங்களால் பராமரிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் மீதமுள்ள விமான நிலையங்களும் துறைமுகங்களும் தாரை வார்ப்பதில் எந்த சிக்கலும் இல்லை.
அதேபோல் அம்பானிக்கும் தொலைத்தொடர்பு, மின்சார உற்பத்தி, பகிர்மானம், இயற்கை எரிவாயு, பைப்லைன் உற்பத்தி, பராமரிப்பு, கிடங்கு ஆகியவைகளும் இத்திட்டத்தின் கீழ் தாரை வார்ப்பதில் எந்த வில்லங்கமும் வரப்போது இல்லை. ஏறக்குறைய ஏலம் விடப்போகும் துறைகள் அனைத்தும் இவர்களின் சுரண்டலுக்கு ஏற்கனவே உட்பட்டதே.
எனவே இத்திட்டத்தின் கீழ் கூடுதலாக இத்துறைகளை வாரிக் கொடுப்பதில் எந்த குறுக்கீடும் இடையூறும் இருக்க போவது இல்லை. ஒருவேளை அரசின் ஏலத்தொகை கட்டுபடியாகவில்லை எனில் அடிமாட்டுத் தொகைக்கு குறைக்கவும் தயங்காது ஒன்றிய அரசு. மேலும் பல புதிய சலுகைகளையும் அறிவிக்கலாம்.
இதற்கான தொகையைக் கூட அரசு வங்கிகள் மூலம் கடன் தருவதற்கும் தகுந்த ஏற்பாடு செய்யலாம். அதனால்தான் என்னவோ, வங்கிகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்று துடிக்கிறார் ஒன்றிய நிதியமைச்சர். ஏனெனில் பொதுத்துறை வங்கிகள், கார்ப்பரேட்டுகளின் வாராக்கடன் காரணமாக, அவற்றின் கடன் வழங்கும் அளவு குறைந்துள்ளது. அதனை அதிகரிக்க, வங்கிகளை ஒருங்கிணைத்து அவற்றின் நிதியளவையும் கடன் வழங்கும் அளவையும் அதிகரிக்க முடியும். மேலும் இவர்களின் நெருக்கடியைப் பொறுத்து கடனை தள்ளுபடி செய்யவும் முடியும்.
தற்போது விற்கப்படவிருக்கும் இவற்றை அரசே எடுத்து நடத்த முடியாதா? அதன் மூலம் பொருளீட்ட முடியாதா ? முடியும். கார்ப்பரேட் வருமான வரியை பழையபடி 40 %-ஆக உயர்த்துவதன் மூலமும், கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளித்தரப்படும் சலுகைகளை குறைப்பது மூலமும், வருவாயை உருவாக்கி பொருளாதார இழப்பை ஈடு செய்ய முடியும்.
பல அத்தியாவசிய சேவை நிறுவனங்களை அரசாங்கமே ஏற்று நடத்தி அவற்றின் மூலம் இலாபம் எடுக்கலாம். மேலும் நிதி தேவைப்பட்டால் அதானி, அம்பானிக்கு தரப்போகும் வங்கிக் கடனை அரசே பெற்றுக் கொள்ள முடியும். அரசு கடன் பத்திரங்களை மக்களுக்கு விநியோகிக்கலாம். அரசு சொத்துக்களையும் முறையாக திட்டமிட்ட வகையில் வருவாய் நோக்கில் பொதுத்துறைகளை போல அதன் சொத்துக்களையும் ஆக்கப்பூர்வமாக பராமரிக்கலாம். தற்போதுள்ள 7.7% சரிவை ஈடு செய்வதோடு, கடன் இல்லாத பற்றாக்குறை இல்லாத பொருளாதாரத்தை உருவாக்க முடியும் என்று பல்வேறு பொருளாதார வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
உலகளவிலான பெரும் பணக்காரர்களில் (பில்லினியர்கள்) இந்தியாவில் உள்ளவர்களின் எண்ணிக்கை 140. இவர்களின் சொத்து மதிப்பு 44.27 லட்சம் கோடி என்கிறார்கள். இதற்கு 4% வரியைப் போட்டு வருவாயைப் பெருக்கலாமே ? இந்தக் கேள்வியை நாம் எழுப்புவோ. இந்தப் பணத்தை நம்மிடமிருந்துதானே இலாபமாக பெரு நிறுவனங்கள் எடுத்துக் கொண்டன ? அப்படி வரி செலுத்த முடியாது என்று சொல்வார்களானால் அவர்களது 50% சொத்துக்களைப் பறிமுதல் செய்யச் சொல்வோம். இதன்மூலம் பொருளாதார இழப்பை ஈடு செய்யலாம்.
அரசு சொத்துக்களை விற்பதன் மூலம் அரசு எதிர்பார்க்கும் வருவாய் வருகிறதோ இல்லையோ, அரசு சொத்தை ஏலம் எடுப்பதன் மூலம் அதானி, அம்பானி போன்ற கும்பலின் தற்போதைய சொத்தின் மதிப்பு 12 லட்சம் கோடியைவிட மேலும் ஒரு மடங்கோ, இரு மடங்கோ உயரலாம்.
ஆனால், இத்துறைகளைப் பயன்படுத்தும், இங்கு பணிபுரியும் பெருவாரியான மக்கள் அனைவரும் பெருநிறுவனங்களின் சுரண்டலுக்கேற்ப மேலும் பெருவாரியான உழைப்பு சக்தியை, உழைப்பாகவும் பணமாகவும் இழக்க வேண்டும். 1990-களில் கொண்டு வரப்பட்ட தாராளமய – தனியார்மய – உலகமய கொள்கையால் ஏற்பட்டுள்ள 99% – 1% என்ற ஏற்றதாழ்வு, இந்த தேசிய பணமாக்கல் திட்டம் நடைமுறைக்கு வரும்பட்சத்தில் மேலும் அதிகரிக்கலாம்.
படிக்க :
♦ கேஸ் சிலிண்டர் விலை உயர்வும் மானியக் குறைப்பும் !
♦ பெட்ரோல் – டீசல் விலை உயர்வுக்குப் பின்னிருக்கும் கார்ப்பரேட் கொள்ளை !
இந்த பணமாக்கல் திட்டமே, தேச நலனுக்காக, வளர்ச்சி திட்டங்களுக்காக, வேலை வாய்ப்பை பெருக்குவதற்கான, தேசத்தின் ஒட்டு மொத்த உழைக்கும் மக்களின் நலனுக்காக கொண்டு வரப்படவில்லை என்பது நிதர்சனம். அதானி, அம்பானி கும்பலுக்கு ஒட்டு மொத்த தேசத்தையும், அதன் செல்வத்தையும் பணமாக்கல் என்ற திட்டத்தின் கீழ் அவர்களின் மூலதனத்தை மேலும் மேலும் பெருக்கவுமே திட்டமிட்டு கொண்டு வரப்பட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.
ஒட்டு மொத்த தேசத்தையும், அதன் நலனையும் உழைக்கும் மக்களால் உருவான மொத்த சொத்தையும், அதன் உபரிகளையும் அதானி, அம்பானி கும்பலுக்கு சமர்பணம் செய்வது எவ்வளவு பெரிய துரோகம்? இதைவிட தேசதுரோகம் வேறு எதுவும் இருக்க முடியுமா? இம்மாதிரியான தேச துரோகிகளையும், இவர்களின் எசமானர்களையும் தொடர்ந்து அம்பலப்படுத்துவது நமது கடமை. இவர்களை என்ன செய்ய வேண்டுமென்பதை மக்களே முடிவு செய்வார்கள் !

கதிரவன்
இசுலாமிய மூட நம்பிக்கையை எதிர்த்த நரேந்திர தபோல்கர் குழு !
கமர் அலி தர்வேஷ்-க்கு வெற்றி !!
பாகம் 1 : நரேந்திர தபோல்கரும் – மூட நம்பிக்கை ஒழிப்பு இயக்கமும்
புனே-சதாரா சாலையில், புனேயிலிருந்து சுமார் முப்பது மைல் தொலைவில், கெத் சிவபூர் கிராமத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும் சாலையின் திருப்பத்திற்கு அருகில், கமர் அலி பாபாவின் ஆலயம் அமைந்துள்ளது. அனைத்து மதத்தைச் சேர்ந்த மக்களும் கமர் அலி தர்வேஷ் தர்காவிற்கு வருகை தருகிறார்கள்.
அரசாங்கத்தின் பிலிம்ஸ் டிவிஷன் அல்லது ஒரு தொலைக்காட்சி சேனலில் இது பற்றிய ஒரு சிறப்புப் படம் ஒலி – ஒளி பரப்பப் படுவதால் இந்த அம்சம் அடிக்கடி வெளிச்சத்திற்கு வருகிறது. சைஇ
இந்த தர்க்காவின் முன்புறம் 90 கிலோ எடையில் ஒரு பெரிய கல்லும் 60 கிலோ எடையில் மற்றொரு சிறிய கல்லும் என இரண்டு பெரிய கற்கள் உள்ளன. பதினோரு ஆண்கள் தலா ஒரு விரல் என 11 விரல்களைச் சேர்த்து பெரிய கல்லையும், ஒன்பது ஆண்கள் தலா ஒரு விரல் என 9 விரல்களைச் சேர்த்து சிறிய கல்லையும் தூக்க வேண்டும். பெண்களுக்கு அனுமதி கிடையாது.
படிக்க :
♦ போலி அறிவியல் – மாற்று மருத்துவம் – மூட நம்பிக்கை : ஒரு விஞ்ஞான உரையாடல்
♦ மந்திரமா? தந்திரமா? மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சி
கல்லின் மீது விரல்களை வைத்து, ’கமர் அலி தர்வேஷ்-க்கு வெற்றி’ என ஒரே நேரத்தில் சப்தமாக முழக்கமிட்டால் கற்கள் இறகு போல எடையற்றதாகி எளிதாக தூக்கப்படும். 90 கிலோ எடை கல் மற்றும் 60 கிலோ எடை கல்லைத் தூக்க முறையே 11 மற்றும் 9 விரல்களால் மட்டுமே தொட வேண்டும். இதற்குக் கூடவோ குறையவோ இருக்கக் கூடாது. அதே போல, ’கமர் அலி தர்வேஷ்-க்கு வெற்றி’ என்ற முழக்கம் தவிர வேறு முழக்கம் போடக் கூடாது என்பது நீண்ட காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஐதீகம் !
இதன் பின்னால் ஒரு பழைய கட்டுக்கதை உள்ளது. கமர் அலி தர்வேஷ் கடவுளின் வெளிப்பாட்டைக் கண்ட ஒரு முசுலீம் பக்கிரி. அவர் இந்த இடத்தை எப்படி, எப்போது அடைந்தார் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், அவ்வாறு செய்த பிறகு, அவர் கிராமத்திலிருந்து துர்தேவதைகள், ஆவிகள், பிசாசுகள் அனைத்தையும் வெளியேற்றினார். எழுபது வயதில் தன்னை உயிருடன் புதைத்து சமாதி அடைந்தார். இந்த இடத்தில் வாழ்ந்த இரண்டு பேய்களை பக்கிர் சபித்து, அவற்றை கற்களாக மாற்றினார். இந்த கற்களைத் தான் மக்கள் தூக்கி தரையில் வீசுகின்றனர்.
இந்தக் கதை நீண்ட காலமாக மக்களின் பெரும் விருப்பத்தையும் ஆர்வத்தையும் தூண்டியது. மும்பை தூர்தர்ஷன் இந்த ‘அதிசயம்’ பற்றிய ஒரு நிகழ்ச்சியை ஜூன் 1987-ல் எந்த அறிவியல் விளக்கமும் தராமல் ஒளிபரப்பியது. பின்னர் அனிஸ் தலையிட்டு அம்பலப்படுத்தும் செயலைச் செய்ய முயற்சிக்க வேண்டியிருந்தது. அனிஸ் அமைப்புக்கு ஏராளமான கடிதங்கள் வந்தன. சில கடிதங்கள் ஏளனம் செய்து, “இங்கே ஒரு உண்மையான அதிசயம் நடக்கிறது; நீங்கள் இதை எப்படி விளக்க முடியும்?” என்றன. மற்றவர்கள் உண்மையாக இது போன்ற ஒரு அதிசயம் சாத்தியமா என்று தெரிந்து கொள்ள விரும்பினார்கள்.
தபோல்கர் தலைமையில் 7 பேர் குழு இந்த அதிசயத்தை அம்பலப்படுத்த செல்கிறது. இவர்கள் 7 பேர் என்பதால் உள்ளூர் ஆட்கள் 4 பேரை இணைத்துக் கொண்டு தர்காவின் வழிகாட்டுதல்படி 11 விரல்களை 90 கிலோ கல்லின் மீது வைத்து ’கமர் அலி தர்வேஷ்-க்கு வெற்றி’ என்று ஒரே நேரத்தில் முழக்கமிட்டனர். அரை அடி உயர்ந்த கல் பிறகு கவிழ்ந்து விட்டது. சுற்றி நின்ற மக்களோ நீங்கள் காலணிகளை அணிந்து கொண்டுள்ளதால் தான் அதிசயம் நடக்கவில்லை என்று கூறியதால் காலணிகளைக் கழற்றி வைத்து விட்டு முயற்சி செய்கின்றனர். அப்போதும் கல் அரை அடிக்கு மேல் உயரவில்லை. இவர்களுடன் இணைந்த உள்ளூர் மக்கள் சற்று பயந்து போய் இவர்களை விட்டு விலகி விட்டனர்.

பிறகு சுற்றுலாவாக வந்த 4 பேரிடம் பேசி அவர்களை இணைத்துக் கொண்டு முழக்கமிட்ட போது கல் படிப்படியாக ஒரு மீட்டர் அளவிற்கு உயர்ந்தது. இதனால் உற்சாகமடைந்த அனிஸ் அமைப்பினர் அடுத்த முயற்சியில் தோளுக்கு மேலாகத் தூக்கி கீழே வீசினர்.
பிறகு உற்சாகமடைந்து வழக்கமான முழக்கத்தைக் கைவிட்டு, ’மகாத்மா பூலேக்கு வெற்றி’ என ஒரே நேரத்தில் கூட்டாக முழக்கமிட்ட போதும் கல்லை எளிதாக தூக்கி வீச முடிந்தது. இது நடந்ததும் மக்கள் இவர்களைச் சுற்றி குழுமினர்.
உற்சாகமடைந்த அனிஸ் அமைப்பினரும் சுற்றுலா வந்தவர்களும் ஏன் 11 விரல்கள்? அதுவே 10 ஆகவும் அல்லது 12 ஆகவும் இருந்தால் என்ன என்று கூட்டியும் குறைத்தும் முயற்சித்த போதும் எளிதாக கல்லைத் தூக்கி வீச முடிந்தது.
பின்னர் 60 கிலோ கல்லிலும் இதே போல முயற்சித்து, அந்தக் கல்லையும் எளிதாக தூக்கி வீசினார்கள். அதன் பின் பெண்களையும் இணைத்துக் கொண்டு இதே போல முயற்சிக்க அப்போதும் கல்லை எளிதாக தூக்கி வீச முடிந்துள்ளது. பெண்களுக்கு அளவற்ற மகிழ்ச்சி! புறப்படும் போது காலணிகளை அணிந்தனர். அப்போது பளிச்சென ஓர் எண்ணம் தோன்றி, காலணிகளை அணிந்தபடி கல்லைத் தூக்கி வீசியுள்ளனர்.
அதன் பின் இதற்கு என்ன விளக்கம் என பரிசீலித்து அந்த அறிவியல் உண்மையையும் கண்டறிந்து கூறினார்கள். உண்மை இதுதான். முதலில் விரலை மட்டும் கல்லின் மீது வைத்தவர்கள் அதை அழுத்தவில்லை. எனவே கல்லைத் தூக்க முடியாமல் போயுள்ளது. கமர் அலியும் உதவவில்லை. அதன் பின் முழக்கமிடும் போது விரலில் அழுத்தம் கொடுத்துள்ளனர்.
படிக்க :
♦ அதானி நிறுவனத்தை இழுத்து மூடிய பஞ்சாப் விவசாயிகள் !!
♦ கேஸ் சிலிண்டர் விலை உயர்வும் மானியக் குறைப்பும் !
ஒரே நேரத்தில் அனைவரும் அழுத்திய போது, எல்லா பக்கமும் அழுத்தம் அதிகரித்து கல் மேலே எழும்பத் தொடங்கியுள்ளது. கவிழவும் இல்லை. துவக்கத்தில் விரல் அழுத்துகிறது. பிறகு மணிக்கட்டும் முழங்கையும் அழுத்தத்தை கல்லின் மீது செலுத்தத் தொடங்குகின்றன. படகு வலிக்கும் மீனவர்கள் ஐலேசா என சேர்ந்து பாடி துடுப்பு வலித்து படகை ஓட்டுவது போல, கனமான பெரிய பாரத்தை வண்டி மீது தூக்கும் போது, அந்த உழைப்பாளிகள் தூக்கு தூக்கு என ஒரே நேரத்தில் ஓசை எழுப்பி பாரத்தை தூக்குவது போன்றதுதான் இந்தச் செயலும் என்பதுதான் இதன் பின் உள்ள அறிவியல் உண்மை என விளக்கி இந்த மூட நம்பிக்கையைத் தகர்த்துள்ளனர்.
“கற்களில் இருந்த ’பேய்கள்’ என்னவாயின எனத் தெரியவில்லை. ஆனால் பிசாசுகள் போல மூட நம்பிக்கைகள் மக்களின் கழுத்தில் அமர்ந்து அழுத்திக் கொண்டுள்ளன. அவற்றைத் தூக்கி வீசாமல் மக்களின் சிந்தனைக்கு விடுதலை இல்லை” என தபோல்கர் கூறுகிறார்.
மக்களின் விடுதலைக்காக, அவர்களை அறியாமையிலிருந்து விடுவிக்க தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் தபோல்கர். மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி தமது பார்ப்பனிய பார்ப்பன சித்தாந்தத்தை நிலைநாட்டிக் கொண்டிருந்த பாசிசக் கும்பலோ தபோல்கரின் பணியைக் கண்டு அஞ்சியது.
கருத்தை கருத்தால் எதிர்கொள்ள வக்கற்ற சங்க பரிவாரக் கும்பல், தபோல்கரை சுட்டுப் படுகொலை செய்து விட்டது. தபோல்கர் படுகொலையிலும், முற்போக்கு எழுத்தாளர் கவுரி லங்கேஷ் படுகொலையிலும் ஈடுபட்டது, சனாதன் சன்ஸ்தா எனும் சங்கபரிவாரத்தின் கொலைகாரக் கும்பல்தான். காவிக் கிரிமினல்களின் பாசிச ஆட்சியில், இந்த அமைப்பு இன்னும் தடை செய்யப்படாமல் பகிரங்கமாக செயல்பட்டு வருகிறது என்பது முற்போக்காளர்களுக்கு பாசிச கும்பலால் விடப்பட்டிருக்கும் சவால்தான்.
(முற்றும்)
நாகராசு
செய்தி ஆதாரம் : தி வயர்
மேக்கே தாட்டு நோக்கி நடைபயணம் || மக்கள் அதிகாரம் பிரச்சாரம்
மேக்கேதாட்டு அணை தமிழகத்தின் மீதான தாக்குதலை தகர்த்தெறிவோம் ! கார்ப்பரேட் – காவி பாசிசத்தை முறியடிப்போம் !!
காவிரி உரிமையை மீட்க தமிழகத்தில் பேரெழுச்சியை உருவாக்குவோம் !!!
மேற்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் வருகின்ற 30.8.2021 அன்று அஞ்செட்டி தமிழக எல்லையில் இருந்து மேக்கேதாட்டு நோக்கி மக்கள் அதிகாரம் சார்பாக நடைபயணம் நடைபெற உள்ளது. தருமபுரி மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வீச்சான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது, மக்கள் அதிகாரம்.
படிக்க :
♦ மேக்கேதாட்டு அணைக்கு அனுமதி : அரசியல் சட்ட விரோதமானது !
♦ மேக்கேதாட்டு அணைக்கு அனுமதி : டெல்டாவை ஒழிக்க மோடியின் சதி !
குறிப்பாக தமிழக எல்லை பகுதிகளான அஞ்செட்டி சுற்றுவட்டார கிராமப் பகுதியில் கிராமப்புற மக்களை சந்திப்பது, தெருமுனை கூட்டங்கள் நடத்துவது, வட்டார நகரங்களில் கடைவீதி பிரச்சாரம் என்ற வகையில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. காவிரி உரிமையை மீட்க வேண்டுமெனில் ஓட்டுக் கட்சிகளை நம்பி எதுவும் நடக்கப் போவதில்லை. தமிழகத்தில் பேரெழுச்சியை ஏற்படுத்த வேண்டும். அதுவே உடனடி தேவை என்பதை உணர்த்தும் வகையில் மக்களுக்கு அறை கூவல் விடுத்து வருகிறது மக்கள் அதிகாரம்.
அதன்படி நாட்றாம்பாளையம் கேரட்டியில் 26.8.2021 அன்று மாலை 3 மணிக்கு தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் சரவணன் இப்போராட்டம் குறித்து விளக்கிப் பேசினார். இதே போல் நாட்றாம்பாளையம் கடைவீதியில் தோழர் துரை தலைமையில் பிரச்சாரம், பென்னாகரம் கடைவீதியில் தோழர் சிவா தலைமையில் பிரச்சாரம், கேரட்டியில் தோழர் கனகராஜ் தலைமையில் பிரச்சாரங்கள் நடைப்பெற்றன.

தகவல்
மக்கள் அதிகாரம்
தருமபுரி மண்டலம்
9790138614
நரேந்திர தபோல்கரும் – மூட நம்பிக்கை ஒழிப்பு இயக்கமும்
நரேந்திர தபோல்கர் என்ற பகுத்தறிவாளர் வாழ்நாள் முழுவதும் மூட நம்பிக்கைக்கு எதிராக போராடி வந்தவர். அதனாலேயே ஆர்.எஸ்.எஸ்.-சிவசேனா கொலைகார கும்பலால் படுகொலை செய்யப்பட்டவர். 2013 ஆகஸ்ட் 20ம் தேதி காலை நடைபயிற்சியில் இருந்த 67 வயதான அந்த தோழர் கொல்லப்பட்ட நிகழ்வு ஒரு கொடூரம் என்றால், அந்த கொலைக்கான முக்கிய குற்றவாளிகள் இன்றுவரை கைது செய்யப்படாதது அதை விடக் கொடூரமானது.
தனது தந்தையைக் கொன்ற முக்கிய குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை என அவரது மகன் டாக்டர் ஹமீது தபோல்கர் குற்றம் சுமத்துகிறார். இதனால் முற்போக்கு, பகுத்தறிவு சிந்தனை கொண்டவர்கள் கொல்லப்படும் ஆபத்து இன்னும் நீடிக்கிறது என்று விளக்கமாகக் கூறுகிறார்.
நரேந்திர தபோல்கர் எழுதிய ஒரு நூலைப் பற்றிய ஒரு அறிமுகம்தான் இந்த கட்டுரை. மூட நம்பிக்கைக்கு எதிராகவும், பகுத்தறிவுப் பிரச்சாரத்திலும் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு தோழர்களும் எதிர் கொள்கின்ற விசயங்களைப் பற்றி கட்டுரை பேசுகிறது. குறிப்பாக பார்ப்பன பாசிசக் கொடூரம் இன்று ஆட்சியில் இருக்கின்ற இந்த தருணத்தில் இது இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது !
படிக்க :
♦ கௌரி லங்கேஷ் – தபோல்கர் கொலை வழக்கு : வழக்கறிஞர் உட்பட இருவர் கைது !
♦ பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் படுகொலை !
’காரணம் பற்றிய விவகாரம் : மூடநம்பிக்கை ஒழிப்பு இயக்கத்தைப் புரிந்து கொள்வோம்’ என்ற இந்த நூல் தோழர் தபோல்கர் அவர்களால் மராட்டிய மொழியில் எழுதப்பட்டு, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது மூடநம்பிக்கை ஒழிப்பின் தேவையை வலியுறுத்தும் அதே வேளையில் இவரது அமைப்பான ‘அந்தாஷ்ரத்தா நிர்மூலன் சமிதி’ அமைப்பின் போராட்ட வரலாற்றையும் பதிவு செய்துள்ளது. அது பற்றி இந்த ஆங்கில நூல் வெளிவந்த காலத்தில் 2018ல் ஓர் அறிமுகமாக எழுதப்பட்டதுதான் இந்தக் கட்டுரை. அதன் சுருக்கத்தை கீழே காணலாம்.
000
அந்தஷ்ரத்தா நிர்மூலன் சமிதி (ANiS – ‘அனிஸ்’) இந்து மதத்தை மட்டும்தான் எதிர்க்கிறதா?
’அனிஸ்’ – இந்து மதத்தை மட்டுமே எதிர்க்கிறது என்ற ஒரு கருத்தைப் பரப்பி ‘அனிஸ்’ செயல் வீரர்களது நடைமுறை மீது ஒரு அவநம்பிக்கையை உருவாக்குவதே இந்தக் கேள்வியின் நோக்கம். மூட நம்பிக்கையை எதிர்க்கின்ற, இந்தியாவில் உள்ள எல்லா பகுத்தறிவு இயக்கங்களும் இதே கேள்வியை எதிர்கொள்கின்றன. நேரடியாகவோ மறைமுகமாகவோ தங்களின் மதச் செயல்பாடுகள் மீது கேள்வி எழுப்பும் விமர்சனக் கண்ணோட்டத்தை இப்படிப்பட்ட இயகங்கள் ஏற்படுத்துகின்றன.
பழமையான மதச் சடங்குகளை கவனமாக கடைப்பிடிப்பவர்கள், தாங்கள் கடைப்பிடிப்பதுதான் உண்மையான மதம் என நம்புகின்றனர். இது பற்றிய விமர்சனப் பார்வையை உருவாக்கும் ‘அனிஸ்’-சின் செயல்பாட்டால் தமக்கு ஆபத்து என உணர்கின்றனர். இந்த சிந்தனையை முறையை உள்வாங்கும் மக்கள் மதச் சடங்குகளை கேள்வி கேட்பதில் தொடங்கி மதத்தையே கேள்விக்குள்ளாக்கத் தொடங்குகிறார்கள். பழமை மத நம்பிக்கையாளர்கள் இதைத் தவிர்ப்பதற்காக மக்களை அனிஸ்-சிடமிருந்து தள்ளிவைக்க விரும்புகின்றனர். இதனாலேயே நாம் இந்து மதத்தை மட்டுமே எதிர்ப்பதாக வலிந்து அவதூறு பரப்புரையை செய்யத் தொடங்குகிறார்கள். இதில் ஏதும் உண்மை உள்ளதா? கீழுள்ளதைப் பாருங்கள்:
மத நம்பிக்கை ஒரு வியாபாரம் என்றால் அந்த வியாபாரத்தில், மூட நம்பிக்கை என்பது ஒரு கள்ளச் சந்தை. இந்த கள்ளச் சந்தை வியாபாரிகள் (மூட நம்பிக்கையைப் பரப்புபவர்கள்) எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து யாருக்கும் கவலை இல்லை. குறிப்பாக ‘அனிஸ்’ அமைப்பினர் கவலைப்படவில்லை.
மதத்தை வைத்து சுரண்டுவதை, ‘அனிஸ்’ அமைப்பு எப்போதும் எதிர்க்கிறது. மத பிரச்சாரகரை கடவுள் நிலைக்கு உயர்த்தி, தம்மை அவருக்கு அடிமையாக்குவதையும் மதச் சடங்குகள் என்ற பெயரில் மூட நம்பிக்கையை பரப்புவதையும் கடுமையாக எதிர்க்கிறது. இந்த சுரண்டல் வியாபாரத்தை எதிர்க்க அனிஸ் அமைப்பு தமக்கே உரிய பல வழிமுறைகளைக் கடைப்பிடிக்கிறது.
அது பல இசுலாமிய பாபாக்கள் மற்றும் புவாக்களை எதிர்த்துப் போராடியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக, ‘அனிஸ்’ அமைப்பு தமது இதழ்களில் இவை பற்றி விரிவான செய்திகள் வந்துள்ளதை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம்.
தமது பிரச்சாரத்தால் குருடர்கள் பார்க்கிறார்கள், முடவர்கள் நடக்கிறார்கள், வாய் பேசாதவர்கள் பேசுகிறார்கள் என பிரச்சாரம் செய்யும் கிறித்தவ பாதிரியார்களை எதிர்த்து போராடியுள்ளது.
இந்த அமைப்பு ஜைன மதத்தவர்களின் பொருளற்ற பெரும் செலவினம் பிடிக்கும் ஆடம்பர சடங்குகளை எதிர்த்துப் போராடி வருகிறது. பல்டன் வட்டாரத்தில் உள்ள ஒரு கிராம கோயிலில் தமது தலைகளை சுவற்றில் மோதுகின்ற சடங்கைச் செய்யும் – தம்மை புத்த மதத்தினர் என கூறிக் கொள்ளும் – நபர்களுக்கு எதிராகவும் போராடியுள்ளது. மீண்டும் சொல்கிறேன், எமது அனிஸ் அமைப்பின் பல்வேறு மத மூட நம்பிக்கைக்கு எதிரான போராட்டங்களை அனிஸ் வெளியிட்டுள்ள பல இதழ்களில் படித்துத் தெரிந்து கொள்ள முடியும் என தபோல்கர் கூறுகிறார்.
பெரும்பாலான மூடநம்பிக்கைகளுக்கு எதிரான போராட்டம் இந்து மதம் சார்ந்ததுதான். ஆனால் இந்திய மக்கள் தொகையில் 80% பேர் இந்து மதத்தில் இருப்பதால் இதை தவிர்க்க இயலாது. இதன் விளைவாக அனிஸ் அமைப்பு நடத்திய 80% போராட்டம் இந்து மதத்தில் உள்ள மூட நம்பிக்கையை எதிர்த்தே நடந்துள்ளது. இது பெரும்பான்மையானதுதான்!
வெளியாட்கள் தமது மத மூட நம்பிக்கையை கேள்வி கேட்டால் மக்கள் ஆத்திரமடைகின்றனர். ஒரு சாதியினரின் மூட நம்பிக்கையை வேறு சாதியினர் விமர்சித்தால் கூட ஆத்திரமடைவதும், பகை உணர்வு கொள்வதும் நடக்கிறது. பார்ப்பனர்களின் பூணூல் சடங்கு, மராத்தாக்களிடம் உள்ள விதவைத் திருமண எதிர்ப்பு, தாங்கர் சாதியினரிடம் விழாக்களின் போது விலங்குகளைப் பலியிடுவது போன்ற மூட நம்பிக்கைகளை பிற சாதியினர் விமர்சித்தால் கூட சகித்துக் கொள்ளாதது மட்டுமின்றி அது அமைதியின்மையை உருவாக்குகிறது. மக்கள் தொகையில் 80% இருப்பதால் அனிஸ் அமைப்பின் செயல்பாட்டாளர்களிலும் பெரும்பான்மையினர் இந்துக்களே. இயல்பாகவே இந்து செயல்பாட்டாளர் இசுலாமிய மூட நம்பிக்கையை கேள்வி கேட்டால் இசுலாமியர் மனதளவில் பாதிப்படைவார்.
படிக்க :
♦ NEP -2020 : ஒளிந்திருக்கும் சாதியமும் ஆணாதிக்கமும் | பேரா. அனில் சத்கோபால்
♦ நூல் அறிமுகம் : சாதி வர்க்கம் மரபணு
இந்து சமூகத்திலும் மதத்திலும் மட்டுமே சாதி அடுக்குமுறை உள்ளது. இந்துக்களிடையே சுமார் 6000 முதல் 6500 சாதிகள் உள்ளன. சொல்லப் போனால் மதத்தைவிட சாதிக்குதான் அதிக முக்கியத்துவம் உள்ளது. ஒவ்வொரு சாதியும் தமக்கே உரிய தனிச் ‘சிறப்பான’ சடங்கு – சம்பிரதாயங்களையும், பழக்க – வழக்கங்களையும், பாரம்பரியங்களையும், இது போல பலவற்றையும் கொண்டுள்ளன. இவை கடந்த காலங்களில் சில நேரம் பயனுள்ளதாகவும் தேவையானதாகவும் கூட இருந்திருக்கலாம். ஆனால் இன்றைக்கு இவையெல்லாம் பயனற்ற வெற்று சடங்கு, பழக்கம், பாரம்பரியமாக மட்டுமின்றி வெறும் மூட நம்பிக்கைகளாக மட்டுமே உள்ளன.
மற்ற மதங்களைப் போல் இல்லாமல் இந்து மதத்தில் வகை தொகையில்லாமல் கடவுளர்களும் புராண-இதிகாச-வேத நூல்களும் மலிந்துள்ளன. 2000 ஆண்டு பழமையான கிறித்துவ மதத்தில் ஒரு கடவுள், ஒரு புனித நூல் மட்டுமே உண்டு. பிதா, சுதன், பரிசுத்த ஆவி என மூன்றாகச் சொல்லிக் கொண்டாலும் இந்த மூன்றும் குறிப்பிடுவது ஒன்றை மட்டுமே. சுமார் 1400 ஆண்டுகால இசுலாமிய மதம் ஒரே ஒரு கடவுளையும், ஒரு இறை தூதரையும், ஒரு புனித நூலையும் மட்டுமே கொண்டு உள்ளன.
மிக பழைமையானது, அனாதியானது என சொல்லிக் கொள்ளப்படும் இந்து மதத்தில் வகைதொகையில்லாத ஆண், பெண் கடவுள்களும், எண்ணற்ற மத நூல்களும், கணக்கிலடங்கா பழக்கங்களும், பாரம்பரியங்களும் இருப்பதால் இந்து மதமானது மூட நம்பிக்கைகளை உருவாக்குவதற்கான வளமான இடமாக உள்ளது.
இங்கே ஒரு முக்கியமான உண்மையை கருத்தில் கொள்ள வேண்டும். இந்து மதம் உருவெடுத்து வரும் போக்கில் மூட நம்பிக்கைகளை இரக்கமற்று விமர்சித்த பல முக்கிய சமூக சீர்திருத்தவாதிகளும் இருந்துள்ளனர். 3500 ஆண்டுகளுக்கு முன்பே இருந்த சார்வாக மற்றும் லோகாயதவாத தத்துவங்கள் ஆகியவை தெளிவாகத் தெரிகின்ற உதாரணங்களாகும்.
மஹாராட்டிர மாநிலத்தில் மட்டுமே மகாத்மா பூலே, சாஹு மகராஜ், லோகிதவாடி அகர்கர், டாக்டர் அம்பேத்கர், வி.டி.சாவர்கர், பிரபோதங்கர் தாக்ரே மற்றும் காட்கே பாபா என சமீபகால இந்து சீர்திருத்தவாதிகளைப் பட்டியலிடலாம். இந்த சீர்திருத்தவாதிகளின் கற்பித்தவை ஒரு மதத்திற்கு மட்டும் என்றில்லாமல் மனித குலம் முழுமைக்குமே மனித தன்மையுடன் விழிப்போடிருக்க கூறினாலும் ஆகப் பெரும்பான்மையாக, இந்துக்களைப் பார்த்துக் கூறியவைதான்.
வி.டி.சாவர்க்கர் மேற்கொண்ட மத நூல்களை இரக்கமற்ற முறையில் ஆராய்ச்சி செய்ததைப் பற்றி இங்கு தபோல்கர் குறிப்பிடுகிறார். மிக முக்கியமாக, அவரது ஆதரவாளர்களால் ‘இந்து இதயங்களை ஆள்பவர்’ என்று புகழப்படுவதால் இங்கு சிறப்பாக குறிப்பிட வேண்டும் என்று தபோல்கர் குறிப்பிடுகிறார். மத நூல்களை அவர் இரக்கமின்றி ஆராய்ந்தது, மூடநம்பிக்கைகளை ஒழிக்க முயற்சித்த இந்து சமூக சீர்திருத்தவாதிகளின் நீண்ட பாரம்பரியத்தை விளக்குகிறது. பிரார்த்தன சமாஜம் போன்ற முற்போக்கு இந்து சமயப் பிரிவுகள், ஒரே ஒரு கடவுள் தான் என்றும், அவரிடம் பிரார்த்தனை செய்ய ஒரு சடங்கு அல்லது அனுமதி தேவையில்லை என்றும் கூறின.
எல்லா மதங்களைச் சேர்ந்த மத நூல்களைப் பற்றி சாவர்க்கர் கூறியிருப்பது பற்றி :
“வேதங்கள், அவெஸ்தாக்கள், பைபிள், குரான் என ’புனித’ நூல்களில் இருக்கும் வார்த்தைகளை அப்படியே நம்புவதற்கு பதில் தனது அறிவுத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்த நூல்கள் மனிதர்கள் உருவாக்கியவை. அவற்றை அதற்குறிய தன்மையுடன் படிக்காமல் அப்படியே நம்புவது மதம் கூறியவற்றை அப்படியே குருட்டு மனப்பாடமாக ஒப்புவிப்பதுஆகும்.
நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு இப்படித்தான் கேள்விக்கு இடமற்ற மதத்தின் பிடியில் ஐரோப்பா அடிமைப்பட்டுக் கிடந்தது. அதற்குப் பின் பைபிளில் இருந்து தன்னை தூரமாக விலக்கிக் கொண்டு அறிவியலைப் பற்றிக் கொண்டு நடக்கத் தொடங்கியது. ஸ்ருதி – ஸ்மிருதி – புராணங்களின் பிடியிலிருந்து விடுதலை பெற்ற ஐரோப்பா இன்றைய தேதி வரை நவீனமாக உள்ளது. நம்மை விட நாலாயிரம் ஆண்டுகள் முன்னேறி உள்ளது. அது மூன்று கண்டங்களை கைப்பற்றியுள்ளது! இந்திய தேசம் ஐரோப்பாவைப் போல் இருக்க வேண்டும் என்று நோக்கமாகக் கொண்டிருந்தால், அது பண்டைய சகாப்தத்தின் ‘புத்தகத்தை’ மூட வேண்டும், ஸ்ருதி, ஸ்மிருதி மற்றும் புராணங்களின் மேலாதிக்கத்தை மறந்து, அவற்றை நூலகங்களில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் மற்றும் அறிவியல் யுகத்தில் நுழைய வேண்டும்.
அந்த பழைய, கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதைச் சொல்வதற்கு மட்டுமே இவை பொருத்தமானவை. புறநிலை உண்மையையும் அதை சோதித்து அறிகின்ற ஆற்றலையும் கொண்ட அறிவியல் மட்டுமே இன்றைக்கு எது தேவையானது, பொருத்தமானது என்பதை தீர்மானிக்கும் அடிப்படையாக உள்ளது. இந்த அறிவியல் நவீனம் கடந்த கால அனுபவங்களில் பயனுள்ளதாக இருந்த அனைத்தின் சாராம்சத்தையும் கொண்டுள்ளது; ஆனால் ஸ்ருதி – ஸ்மிருதி – புராணத்தில் நவீன அறிவு ஒரு துளி கூட இருக்க முடியாது. எனவே, நாம் இன்றைய தேதிக்கு நவீனமாக இருக்க வேண்டும். ஒரு விஷயம் நல்லதா கெட்டதா, சீர்திருத்தம் நன்மை பயக்குமா இல்லையா என்பதற்கு, இனிமேல், ஒரு சோதனையின் அடிப்படையில் மட்டுமே, அதாவது இன்று அது பயனுள்ளதாக இருக்கிறதா அல்லது பயனற்றதாக இருக்கிறதா என்பதிலிருந்து பதிலளிக்கப்பட வேண்டும். வேத வாக்கியங்களால் இது அனுமதிக்கப்படுகிறதா என்ற கேள்வியை ஒருபோதும் கேட்கக்கூடாது.” இவ்வாறு கூறுகிறார் சாவர்க்கர்.
மதத்தை தமது சொந்த அரசியல் சுயநலத்திற்கு பயன்படுத்துகின்ற சக்திகள் இன்று மஹாராஷ்ட்ராவிலும் இந்தியாவிலும் உள்ளன. இந்து மதத்திற்கு மொத்த குத்தகைதாரர்கள் தாங்கள்தான் என கருதிக் கொள்கின்றனர். இந்து மதத்தில் எந்த சீர்திருத்தங்கள் அவசியம், எவை தேவையில்லை என்பதை முடிவு செய்யும் அதிகாரம் தங்களுக்கு மட்டுமே உண்டு என்று அவர்கள் கூறுகின்றனர். ‘அனிஸ்’ ஒரு முற்போக்கான அமைப்பு, மற்றும் அதன் ஆர்வலர்கள், அவர்கள் எந்த மதம் மற்றும் சாதியில் பிறந்தார்களோ அந்த சாதி, மதங்களுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதில்லை. அவர்கள் மதத்தைப் பற்றி பேசுவதில்லை, ஒரு அர்த்தத்தில் அதைப் பற்றி அலட்சியமாக இருக்கிறார்கள்.
இந்து மதத்தின் பாதுகாவலர்கள் என்று தன்னைத்தானே அழைத்துக் கொள்ளும் சில இந்து அமைப்புகள், முற்போக்கு அமைப்புகள் மதத்தின் மீது காட்டும் அலட்சியத்தைப் பயன்படுத்திக் கொண்டு, அவை எந்த மதப் பிரச்சினைகளை பற்றிப் பேச வேண்டும், எதைப் பற்றி பேசுவது தடை செய்யப்பட வேண்டும் என்பது பற்றிய கட்டளைகளை அவை வெளியிடுகின்றன. அவர்கள் தங்கள் ஆணைகளைப் பின்பற்ற மக்களை அச்சுறுத்துகிறார்கள். இந்து மதத்தின் பாதுகாவலர்கள் தாங்கள்தான் என அவர்கள் தங்களின் ஏகபோகத்தை அறிவித்துக் கொள்கின்ற வழியாகும். ஏ.என்.ஐ.எஸ் (அனிஸ்) இந்த ஏகபோகத்தை அங்கீகரிக்கவில்லை, அங்கீகரிக்கத் தேவையுமில்லை.
ஏனென்றால் அத்தகைய குறுகிய சுய – பிரகடனப்படுத்தப்பட்ட பாதுகாவலர்கள் மற்றும் எதேச்சதிகாரவாதிகள் தாராளவாத, சகிப்புத் தன்மை மற்றும் நெறிமுறைகொண்ட இந்து மதத்தின் பேச்சாளர்களாக ஒருபோதும் இருந்ததில்லை என்று அது உணர்கிறது. அவர்கள் அனைத்து இந்துக்களினதும் செய்தித் தொடர்பாளர்களாக இருக்க மாட்டார்கள், ஒருபோதும் இருக்க மாட்டார்கள்.
இரண்டாவதாக, அனிஸ்-இன் பெரும்பாலான செயல் வீரர்கள் இந்து பெற்றோருக்குப் பிறந்தவர்கள், அவர்கள் வேறு எந்த மதத்திற்கும் மாறவில்லை என்ற அர்த்தத்தில் இந்துக்கள். எனவே இந்து மதத்தில் உள்ள மூடநம்பிக்கைகளைப் பற்றி பேச அவர்களுக்கு உரிமை உண்டு. அவர்கள் இந்த உரிமையை இந்துத்துவவாதிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதற்கு எந்த காரணமும் இல்லை.
படிக்க :
♦ நூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி
♦ ஆர்.எஸ்.எஸ். உருவாக்கிய இந்து நம்பிக்கை !
‘அனிஸ்’ (ஏ.என்.ஐ.எஸ்) அமைப்பு, அதன் வேலை பொருத்தமானது, விரும்பத்தக்கது மற்றும் அத்தியாவசியமானது என்று நம்புகிறது. சில இந்துக்கள் கூட இந்த வேலை செய்யப்பட வேண்டும் என்று ஒப்புக்கொள்கிறார்கள். ஆயினும் கூட, இந்து மூடநம்பிக்கைகளை மட்டும் நாம் ஏன் ஒழிக்க முயல்கிறோம் என்று அவர்கள் கேட்கிறார்கள். அவர்கள் இந்தக் கேள்வியைக் கேட்கும்போது அவர்களின் மனதில் உள்ள குழப்பம் தெளிவாக உள்ளது.
மூடநம்பிக்கை என்பது ஒரு வீட்டில் உள்ள குப்பைகளைப் போன்றது. நமது தேசம் பத்து அறைகள் கொண்ட வீடு என்று ஒரு கணம் வைத்துக் கொள்வோம். எனவே, 80% மக்கள் தொகை கொண்ட மதம் எட்டு அறைகளைக் கொண்டிருக்கும். மக்கள் தொகையில் 12 முதல் 13% கொண்ட இஸ்லாமிய மதம் ஒரு அறையைப் பெறும். மீதமுள்ள ஒரு அறை இந்து அல்லாத, முஸ்லீம் அல்லாத மக்களுக்கு செல்லும். இப்போது, அனிஸ், அதன் சொந்த செலவில், வீட்டின் இந்த பத்து அறைகளில் எட்டை சுத்தம் செய்தால், வீட்டின் முக்கிய பகுதி, வெளிப்படையாக, குப்பை இல்லாமல் இருக்கும். ‘ஒன்பதாவது’ அறையை முதலில் சுத்தம் செய்யாவிட்டால், மற்ற எட்டு அறைகளைத் தொட யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டை எடுப்பது நியாயமற்றதல்லவா?
மூடநம்பிக்கைகளை ஒழிப்பது சந்தேகத்திற்கு இடமின்றி இந்துக்களின் நலனுக்கு உகந்தது. அதை எதிர்ப்பது மக்களுக்கு தீங்கு விளைவிக்கும். அனிஸ்-ஐ எதிர்ப்பவர்கள், இந்து மதத்தை மூட நம்பிக்கைகளில் இருந்து அகற்றுவது இந்து பெருமிதத்தை பலவீனப்படுத்தும் எனவும் அதே நேரம் இசுலாமியர்கள் மூடநம்பிக்கையில் மூழ்கி கடுங்கோட்பாட்டு மத வெறியர்களாக இருப்பார்கள் என்ற அபத்தமான கருத்தையும் வளர்த்துக் கொண்டுள்ளனர்.
கடுங்கோட்பாளர்களாகவும் மதவெறியர்களுமாகவும் உள்ள இசுலாமியர்கள் பின்னர் மத மோதல்களின் போதெல்லாம் மெலிந்த இந்துக்களை எளிதாக தோற்கடித்து விடுவார்கள் என்ற கருத்தையும் கொண்டுள்ளனர். இத்தகைய அற்பமான மற்றும் ஏமாற்றும் வாதங்களை முன்வைப்பவர்களைப் பற்றி ஒருவர் பரிதாபப்பட மட்டுமே முடியும்.
’அனிஸ்’ வெறுமனே இந்து மூடநம்பிக்கைகளை மட்டுமே அம்பலப்படுத்தவில்லை. இசுலாமிய மூடநம்பிக்கைகளையும் அம்பலப்படுத்தியிருக்கிறது. புனே அருகில் கமர் அலி தர்வேஷ் தர்கா-வில் நீண்டகாலமாக நீடித்து வந்த ஒரு மூட நம்பிக்கையை ஒழிக்க ‘அனிஸ்’ களமிறங்கிய அனுபவத்தை அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.
(தொடரும்)
நகராசு
நன்றி : தி வயர்
1953 மக்கள் எழுச்சி – இலங்கையில் வர்க்கப் போராட்டம் || கலையரசன்
இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்த ஏகாதிபத்திய – முதலாளிய ஐக்கிய தேசியக் கட்சி (UNP), மார்க்சியவாதிகளையும், கம்யூனிஸ்டுகளையும் தனது பிரதானமான எதிரிகளாகக் கருதியது. இலங்கையில் அன்று நடந்து கொண்டிருந்தது ஒரு வர்க்கப் போராட்டமே அன்றி, இனப் போராட்டம் அல்ல.
சிங்கள- தமிழ் பூர்ஷுவா வர்க்க புத்திஜீவிகள், இன்றைக்கும் இந்த உண்மையை மறைத்து, வரலாற்றை திரித்து எழுதி வருகின்றனர்.
பிரிட்டிஷ் காலனியாகவிருந்த இலங்கை 1948-ல் சுதந்திரமடைந்த பின்னரும், பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு விசுவாசமாக இருந்தது. அத்துடன் வளர்ந்து கொண்டிருந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனும் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்தது. இலங்கை அரசின் அமெரிக்க சார்புத்தன்மை காரணமாக, அது ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்புரிமை பெற முடியவில்லை. சோவியத் யூனியன் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்து வந்தது.
1953-ம் ஆண்டு வரையில் இலங்கை அரசு தீவிர கம்யூனிச எதிர்ப்புக் கொள்கையை பின்பற்றி வந்தது. அந்த வருடத்தில் இருந்து தனது கடும்போக்கு நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு கம்யூனிச நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொண்டது. அதற்குப் பிறகே ஐ.நா.வில் அனுமதிக்கப் பட்டது.
படிக்க :
♦ இலங்கை தொழிற்சங்க போராட்டம் – ஒரு மறைக்கப்படும் வரலாறு || கலையரசன்
♦ இலங்கை : போலீஸ் கைதுகளின் பின்னரான படுகொலைகள் || எம். ரிஷான் ஷெரீப்
1950 – 1953 வரை அமெரிக்க ஏகாதிபத்தியம் முன்னெடுத்த கொரிய யுத்தம் நடந்து கொண்டிருந்தது. அந்தக் காலகட்டத்தில் இலங்கையின் பிரதானமான ஏற்றுமதிப் பொருட்களான தேயிலை, ரப்பருக்கு அதிக கேள்வி உருவானது. ஏற்றுமதி அதிகரிப்பு காரணமாக ஈட்டிய வருமானத்தினால் இலங்கையின் பொருளாதாரம் வளர்ந்ததுடன், அரச கஜானாவிலும் பெருந்தொகைப் பணம் சேர்ந்திருந்தது. ஆனால், யுத்தம் முடிந்தவுடன் சந்தை வாய்ப்புகளும் குறைந்து விட்டன. இதனால் வரவை விட செலவு அதிகரித்தது. கஜானா காலியாகிக் கொண்டிருந்தது. பல நிறுவனங்கள் நட்டத்தில் ஓடிக் கொண்டிருந்தன.
இந்த தருணத்தில் தான் ஒரு கம்யூனிச நாடான சீனா இலங்கைக்கு உதவ முன்வந்தது. சீனாவின் அரிசிக்கு பதிலாக இலங்கையின் ரப்பரை பண்டமாற்று செய்து கொள்ளும் ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டது. இதனால் இலங்கை தேசம் திவாலாவதில் இருந்து காப்பாற்றப் பட்டது எனலாம். இருப்பினும் பொருளாதார பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டிருந்தன.
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இலங்கை அரசுக்கு முன் இரண்டு தெரிவுகள் இருந்தன. ஒன்று, பணக்கார வர்க்கத்திடம் அதிக வரி அறவிடுவது. இரண்டாவது ஏழை வர்க்கத்திற்கு கொடுத்து வந்த அரச மானியங்களை குறைப்பது. முதலாளிய ஆதரவு UNP அரசு இரண்டாவதை தேர்ந்தெடுத்தது. அதன் மூலம் இலங்கையை ஆள்வது ஒரு முதலாளித்துவ அரசு தானென்பதை நிரூபித்தது.
அரசு மக்களுக்கு வழங்கி வந்த அனைத்து சலுகைகளும் ஒன்றில் குறைக்கப் பட்டன, அல்லது நிறுத்தப் பட்டன. அரிசிக்கு வழங்கி வந்த மானியத்தை நிறுத்தி விட்டது. இதனால் இலங்கை மக்களின் அன்றாட உணவுப் பொருளான அரிசியின் விலை மூன்று மடங்கு அதிகரித்தது. சீனியின் விலையும் கூடியது. பாடசாலை மாணவர்களுக்கு வழங்கிய மதிய உணவு நிறுத்தப்பட்டது. கல்வி, மருத்துவ துறைகளுக்கான அரசு செலவினங்கள் குறைக்கப்பட்டன. தபால், தந்தி, பஸ்/ரயில் போக்குவரத்து கட்டணங்கள் கூட்டப்பட்டன.
மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கான அரச செலவினைக் குறைப்புகளால் பெருமளவில் பாதிக்கப் பட்டவர்கள் உழைக்கும் வர்க்க மக்கள் ஆவர். இழப்பதற்கு எதுவுமற்ற பாட்டாளிவர்க்க மக்கள் வாழவே முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட பொழுது, “ஏழைகள் தமக்கான உணவை தாமே தேடிக் கொள்ள வேண்டும்” என்று அன்றைய நிதி அமைச்சர் ஜே.ஆர். ஜெயவர்த்தனே ஆணவத்துடன் அறிவித்தார்.
சர்வதேச சந்தையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு சம்பந்தமில்லாத, ஏழை உழைப்பாளிகளை தண்டித்த இலங்கை அரசு, அதற்குக் காரணமான பெரும் மூலதன தொழிலதிபர்களுக்கு பரிவு காட்டியது. பணக்காரர்களுக்கு வரிச் சலுகைகள் வழங்கப் பட்டன. வணிகத்தில் நட்டமடைந்த நிறுவனங்களுக்கு மீட்பு நிதி வழங்கப் பட்டது.
அரசுக்கு எதிரான மக்களின் கோபாவேசம், 23 ஜூலை 1953 அன்று ஒரு கொதிநிலைக்கு வந்திருந்தது. கொழும்பு காலிமுகத்திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் இரண்டு இலட்சம் மக்கள் ஒன்று திரண்டார்கள். நவீன கால இலங்கை வரலாற்றில், பெருந்தொகையான மக்கள் ஒன்று கூடியமை அதுவே முதல் தடவை ஆகும்.
அந்தக் கூட்டத்தை வழிநடத்திய ட்ராட்ஸ்கிச லங்கா சமசமாஜக் கட்சியும், சோவியத் சார்பு கம்யூனிஸ்ட் கட்சியும் ஒரு பொது வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தன. 12 ஆகஸ்ட், நாடளாவிய பொது வேலைநிறுத்தம் நடத்த தீர்மானிக்கப் பட்டது. தமிழ் முதலாளிய வர்க்கத்தை பிரதிநிதித்துவப் படுத்திய தமிழரசுக் கட்சி சம்பிரதாயபூர்வமான ஆதரவு தெரிவித்திருந்தாலும், போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. வடக்கு கிழக்கில் நடந்த வேலைநிறுத்தப் போராட்டத்தையும், இடதுசாரி தொழிற்சங்கங்கள் தான் முன்னெடுத்திருந்தன.
12 ஆகஸ்ட் 1953, இலங்கை வரலாற்றில் முன்னொருபோதும் நடந்திராத மக்கள் எழுச்சி ஏற்பட்டது. நாடு முழுவதும் தொழிலாளர்கள் மட்டுமல்லாது, அரசு ஊழியர்களும் வேலைக்கு செல்லவில்லை. சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் எல்லோரும் இன, மத பேதமின்றி ஒரே வர்க்கமாக ஒன்றிணைந்து போராடினார்கள். குறிப்பாக தொழிலாளர் வர்க்கம் பெருந்தொகையாக வாழும் கொழும்பு முதல் காலி வரையிலான மேற்குக் கரையோரப் பிரதேசம் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்தது.
படிக்க :
♦ தொழிலாளி வர்க்கத்தை பிளவுபடுத்தும் பண்பாட்டுச் சீரழிவுகள் || புஜதொமு
♦ தோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே !
இடதுசாரிக் கட்சிகளால் வழிநடத்தப்பட்ட இளைஞர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் கொழும்பு நகரத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். வீதிகளில் ஒன்று கூடிய பெருந்தொகையான மக்கள், போலீஸ்காரர்களை எதிர்த்து போரிட்டனர். எண்ணிக்கையில் குறைந்த அளவில் இருந்த போலிஸ் படை, மக்களின் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் பின்வாங்கியது.
பல இடங்களில் தந்திக் கம்பிகள் அறுக்கப் பட்டன. அதனால் கொழும்புக்கும் பிற பகுதிகளுக்கும் இடையிலான தொடர்புகள் துண்டிக்கப் பட்டன. ரயில் சேவைகள் நிறுத்தப் பட்டன. ரயில் வண்டிகள் தொழிலாளர்கள் வசமாகின. சில இடங்களில் சிறிய பாலங்கள் டைனமைட் வைத்து தகர்க்கப் பட்டன. அரச அலுவலகங்கள் எரிக்கப் பட்டன.
மக்கள் எழுச்சியின் தீவிரத்தன்மை கண்டு ஆளும்கட்சியான UNP பயந்து ஒளிந்து கொண்டது. இடதுசாரி தொழிலாளர் எழுச்சி அரசைக் கவிழ்த்து விடும், விரைவில் இலங்கை ஒரு கம்யூனிச நாடாகி விடும் என்று அஞ்சினார்கள். மூவின மக்களினதும் ஆதரவை முற்றாக இழந்து விட்ட இலங்கை அரசாங்கம், கொழும்புத் துறைமுகத்தில் நக்கூரமிட்டிருந்த பிரிட்டிஷ் கடற்படைக் கப்பலுக்குள் தஞ்சம் அடைந்தது.
HMS Newfoundland என்ற பெயருடைய அந்தக் கப்பலில், பிரிட்டிஷ் கடற்படை வீரர்களின் பாதுகாப்புடன் மந்திரி சபை கூட்டப்பட்டது. நாடு முழுவதும் அவசரகால நிலை பிரகடனப் படுத்தப் பட்டது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்போரை கண்ட இடத்தில் சுட்டுக் கொல்லுமாறு அரச படையினருக்கு அதிகாரம் வழங்கப் பட்டது. அதைத் தொடர்ந்து நடந்த போலிஸ் துப்பாக்கிச்சூட்டில் இருபது பேரளவில் கொல்லப் பட்டனர்.
ஹர்த்தால் ஒரு நாள் மட்டுமே நடந்திருந்தாலும், இடதுசாரிகளுக்கு எதிரான அரச ஒடுக்குமுறை வருடக்கணக்காக தொடர்ந்தது. இடதுசாரி கட்சிகளின் அலுவலகங்கள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டன. மார்க்சியவாதிகள் மட்டுமல்லாது, அவர்களுக்கு ஆதரவானவர்களின் தொலைபேசிகளும் ஒட்டுக் கேட்கப் பட்டன.
கம்யூனிச நாடுகளில் இருந்து அனுப்பப்பட்ட சஞ்சிகைகள், நூல்கள், சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு கொளுத்தப் பட்டன. அவை நூலகங்கள், மியூசியங்களுக்கு அனுப்பப் பட்டிருந்தாலும், அரசியலே இல்லாத அறிவியல் துறை சார்ந்த நூல்களாக இருந்தாலும் தடுக்கப் பட்டன.
பாதுகாப்புத் துறை பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. இன்ஸ்பெக்டர் ஜெனரல் பாராளுமன்றத்திற்கு பதில் கூற வேண்டிய அவசியம் இருக்கவில்லை. அவர் நேரடியாக பிரதமரிடம் பொறுப்புக் கூறினால் போதும். இனி வருங்காலத்தில், ஹர்த்தால் கலவரங்களை அடக்குவதற்காக ஒரு ரிசேர்வ் படையணி உருவாக்கப் பட்டு, ஆயுதப் பயிற்சி வழங்கப் பட்டது.
1948 – 1956 வரையில், இலங்கையில் ஒரு குடும்ப ஆட்சி நடந்து கொண்டிருந்தது. அவர்கள் சிங்கள ஆட்சியாளர்களாக இருந்தாலும், பெரும்பான்மை சிங்கள உழைக்கும் வர்க்க மக்களிடம் இருந்து அந்நியப்பட்ட மேட்டுக்குடி வர்க்கத்தை சேர்ந்தவர்கள். சாதியப் படிநிலையில் உயர்ந்த ஸ்தானத்தில் உள்ள கொவிகம சாதியை சேர்ந்தவர்கள்.
படிக்க :
♦ அதானி நிறுவனத்தை இழுத்து மூடிய பஞ்சாப் விவசாயிகள் !!
♦ கேஸ் சிலிண்டர் விலை உயர்வும் மானியக் குறைப்பும் !
இலங்கையில் முதலாவது பிரதமர் டி.எஸ். சேன நாயக்கவை தொடர்ந்து, அவரது மகன் டட்லி சேனநாயக்க பிரதமர் ஆனார். 1953 வேலைநிறுத்தப் போராட்டத்தின் விளைவாக அவர் பதவி விலகினார். அந்த இடத்திற்கு, டட்லியின் மைத்துனர் ஜோன் கொத்தலாவல பிரதமராக வந்தார். முன்பொரு தடவை, கொத்தலாவல தானே முதலாவது பிரதமராக வர விரும்பி இருந்தார்.
ஒரு பணக்கார நிலவுடைமைக் குடும்பத்தில் பிறந்த ஜோன் கொத்தலாவல ஒரு தீவிர கம்யூனிச எதிர்ப்பாளர். அவர் பதவியேற்ற பின்னர், வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய நேரம் “தனது பிரதானமான எதிரி கம்யூனிசம்” என்றே அறிவித்திருந்தார். “இந்த நாட்டில் இருந்து கம்யூனிசத்தை முற்றாக அழித்தொழிப்பதே தனது தலையாய கடமை!” என்றும் கூறினார்.
இந்த வானொலி உரைக்கு பின்னர், பிரதமர் கொத்தலாவல ஒரு தடவை, “சிவப்பு சட்டைகளுக்கு எதிராக பச்சை சட்டை அணிந்த இளைஞர் பட்டாளத்தை உருவாக்கப் போவதாகவும்” அறிவித்திருந்தார். ஊடகத்துறையில் கொத்தலாவல விசுவாசிகள் நியமிக்கப்பட்டனர். சுதந்திர இலங்கையில் முதல்தடவையாக, அவரது ஆட்சிக் காலத்தில் தான் மக்களின் சிவில் உரிமைகள் பறிக்கப்பட்டன.
இலங்கையின் மூன்றாவது பிரதமர் ஜோன் கொத்தலாவல ஒரு கம்யூனிச எதிர்ப்பாளராக மட்டுமல்லாது ஏகாதிபத்திய விசுவாசியாகவும் இருந்தார். முழுக்க முழுக்க ஐரோப்பிய மயப்பட்டிருந்தார். சிங்கள உழைக்கும் வர்க்க மக்களின் கலாச்சார பாரம்பரியங்களுக்கு மதிப்புக் கொடுக்க மறுத்தார். இதனால் சிங்கள பௌத்தர்களினதும், மத அடிப்படைவாத பிக்குகளினதும் கடும் எதிர்ப்பை சம்பாதித்திருந்தார். அதுவே அவரது வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்திருந்தது.
முதலாளிய சார்புக் கட்சியான UNP, இடதுசாரிக் கட்சிகளை மட்டுமே கணக்குத் தீர்க்கப் பட வேண்டிய எதிரிகளாக கருதி வந்தது. ஆனால், அந்தக் கட்சியின் வீழ்ச்சிக்கு காரணமான எதிர்ப்புச் சக்தி அதற்குள்ளே உருவாகிக் கொண்டிருப்பதை கண்டுகொள்ளவில்லை. UNP தன்னை ஒரு லிபரல் கட்சியாக காட்டிக் கொண்டாலும், பெரும்பான்மை சிங்கள மக்கள் அதனை கொவிகம உயர்சாதியினரின் மேட்டுக்குடிக் கட்சியாக பார்த்தார்கள்.
1951 ல் பண்டாரநாயக்க UNP இல் இருந்து பிரிந்து சென்று சுதந்திரக் கட்சியை உருவாக்கி இருந்தார். அந்தக் காலத்தில் அது தன்னை ஒரு சமூக ஜனநாயகவாத இடதுசாரிக் கட்சியாக காட்டிக் கொண்டது. அதனால், அடுத்து வந்த தேர்தல்களில் கொவிகம அல்லாத பிற சாதியினரும், குட்டி முதலாளிய, உழைக்கும் வர்க்க சிங்களவர்களும் பெருமளவில் வாக்களித்தனர். இலங்கையின் போர்க்குணாம்சம் மிக்க தொழிலாளர் வர்க்கத்தை, வெகுஜனவாத (Populist) அரசியலுக்குள் இழுத்து, வர்க்கப் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்ததில் பண்டாரநாயக்கவுக்கும் பங்குள்ளது.
பொதுத்தேர்தலில் பண்டாரநாயக்கவின் வெற்றியை தொடர்ந்து ட்ராட்ஸ்கிச சமசமாஜக் கட்சியும் சேர்ந்து கூட்டரசாங்கம் அமைத்தது. பிற்காலத்தில் குருஷேவிச கம்யூனிச கட்சியும் கூட்டுச் சேர்ந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, இலங்கையின் உள்ளூர் தரகு முதலாளிகள், சிங்களத் தேசியத்திற்குள் வர்க்கப் போராட்டத்தை சிறுமைப்படுத்தி சிதைத்து விட்டார்கள். இடதுசாரிக் கட்சிகள் இந்த துரோகத்தனத்திற்கு விலைபோனதும், பிற்காலத்தில் அவர்களது வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது.
கலையரசன்
செங்கல் சூளையில் வேகும் தொழிலாளர்களின் வாழ்க்கை !
சேவல் கூட உறங்கும் அதிகாலை நேரம். அந்த சின்னஞ்சிறிய கிராமத்திலிருந்து தொழிலாளிகளை ஏற்றிக் கொண்டு காற்றைக் கிழித்துக் கொண்டு புறப்படுகின்றன வாகனங்கள். சிவந்த விழிகள் இன்னும் கொஞ்சம் உறக்கத்திற்கு கெஞ்ச, காது வழி நுழையும் காற்று அவர்களின் உறக்கத்தை கலைத்துப்போடுகிறது. அருகருகே இருக்கும் கிராமத்திலும் தொழிலாளிகளை ஏற்றிக்கொண்டு விடியும்முன் செங்கல் சூளைக்குள் நுழைகின்றன வாகனங்கள்.
காலைக் கடனும், காலை உணவும் விடிவதற்குள் அவசர அவசரமாக முடிக்கப்படுன்றன. செங்கல் உற்பத்தி செய்யும் இயந்திரம் இயக்கப்பட, இயந்திரத்தோடு இயந்திரமாக ஓடி ஓடி வேலை செய்கிறார்கள் தொழிலாளிகள். இடையில் ஒரு பதினைந்து நிமிடம் மட்டுமே ஓய்வு, பின்னர் மீண்டும் வேலை.
ஈர மண்ணை இயந்திரத்தில் கொட்டி குறுக்கெலும்பு ஒடிய வேலை செய்து, ஈரமான செங்கல்லை தயாரித்துக் கொடுக்கிறார்கள் அவர்கள். சூரியன் உச்சிக்கு வரும்போது மொத்த உடலும் தளர்ந்து இயந்திரத்தைவிட்டு பிய்த்துக் கொண்டு வெளியேறுகிறார்கள். பின்னர் அதை காயவைத்து சீவி, சூளையில் சுட்டு முழுமையான செங்கல் தயாரிக்கிறார்கள்.
படிக்க :
♦ அஸ்திவாரம் இழந்த செங்கல் தொழிலாளர்கள் ! – படக்கட்டுரை
♦ அதிகரிக்கும் பெண் தொழிலாளர்கள் வேலையிழப்பு விகிதம் !
உலகம் முழுக்க வானுயுர்ந்து நிற்கின்றன கட்டிடங்கள். நாள்தோறும் பல கட்டிடங்கள் முளைத்த வண்ணமுள்ளன. இத்தகைய கட்டுமான தொழிலில் மிகமுக்கியமானது செங்கல். ஆனால், அதை தயாரிக்கும் தொழிலாளிகளோ குடியிருப்பதற்கு லாயிக்கற்ற வகையிலான வீடு என்ற 4 சுவர்களுக்கு மத்தியில் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். இந்த செங்கலை தயாரிப்பு தொழிலில் அவர்கள் படும் வேதனைகளோ வார்த்தைகளுள் அடங்காதவை.
விவசாயம் பொய்த்துப்போனதால் (அழிக்கப்பட்டதால்) இந்த வேலைக்கு வருகிறார்கள் இத்தொழிலாளிகள். கிட்டத்தட்ட ஒரு இயந்திரத்தில் 10 தொழிலாளிகள் வரை வேலை செய்து ஒரு நாளைக்கு 10,000 கற்கள் உற்பத்தி செய்தால்தான் ஒருவருக்கு ரூ.630 கூலி கிடைக்கும். ஒரு கல்லுக்கு அதை உற்பத்தி செய்யும் தொழிலாளிக்கு 6.3 பைசாதான் கிடைக்கிறது என்பதுதான் முகத்தில் அறையும் உண்மை.
ஆனால், ஒரு கல் ரூ.8-க்கும் குறையாமல் விற்கப்படுகிறது. பெரிய அளவிலான நட்டம் எதனையும் சூளை முதலாளிகள் சந்திப்பதில்லை. உற்பத்தி செய்த கல் சரியில்லை என்றாலோ, மழையில் நனைந்துவிட்டாலோ மறுபடியும் அந்த மண்ணை குழைத்து மீண்டும் செங்கல் தயாரித்து விடுகிறார்கள்.
மழைக்காலத்தில் செங்கல் உற்பத்தி செய்வது நிறுத்தப்படுவதால் தட்டுப்பாடு ஏற்படுவதுபோல் ஒரு தோற்றம் ஏற்படுகிறது. அவ்வேலையில் சேம்பரில் (Chamber) சேமித்து வைக்கப்பட்ட, ரூ.8-க்கு விற்ற செங்கல் அதிகப்படியான விலைக்கு விற்கப்பட்டு முதலாளிகளுக்கு மேலும் லாபத்தை தருகிறது. மழைக்காலத்தில் செங்கல் கட்டி தங்கக் கட்டியாகிவிடுகிறது முதலாளிகளுக்கு.
ஆனால், தொழிலாளிகள் மழைக்காலங்களில் வேலை இழக்கிறார்கள். கிடைத்தால் கொத்தனார் – சித்தாள் வேலைகளுக்கு செல்கிறார்கள், இல்லையேல் பசியோடு, கடன்பட்டு குடும்பம் நடத்துகிறார்கள்.
சூளை வேலையில் கூலி என்பது முதலாளிகளாக பார்த்துக் கொடுப்பதுதான். அதுவும் பரம ரகசியமாகத்தான் தீர்மானிக்கப்படுகிறது. ரூ.570 கூலி தங்கள் வாழ்க்கை நடத்தபோதாது என்று தொழிலாளிகள் வேலைக்கு வராமல் போனதால்தான் இந்த ரூ.630 கூலியும் முதலாளிகளால் தரப்பட்டிருக்கிறது. அதுவும் சேம்பர்கள் அனைத்திலும் ஒரே மாதிரியான சம்பளமும் கிடையாது. முதலாளிகள் மனம் வந்து கொடுப்பதுதான். நாங்கள்தான் போனஸ் தருகிறோமே என்ற முதலாளிகளின் வெற்று வார்த்தைகளை செங்கல் சூளையில் தயாரிக்கப்படும் செங்கலே உடைக்கிறது.
தினமும் தொழிலாளிகள் தங்களது கூலியைத் தாண்டி 100 செங்கல்களையாவது முதலாளிகளுக்கு உற்பத்தி செய்து கொடுத்துவிட்டுத்தான் வீட்டிற்குப் போகிறார்கள். அது அன்றைய கூலி கணக்கில் வருவதில்லை. அந்த செங்கல்லின் ஒரு பகுதியைத்தான் ஆண்டிறுதியில் போனஸாக கொடுக்கிறார்கள். முதலாளிகள் ஏதோ தங்கள் சொத்தில் ஒரு பகுதியை கொடுப்பதுபோல் பாவனை செய்து கொடுத்து தொழிலாளிகளை நேரடியாக ஏமாற்றுகிறார்கள்.
இயந்திரத்தில் சகதொழிலாளி உயிரிழந்ததை பார்த்த தொழிலாளிகள் உண்டு. இயந்திரத்தில் தலை சிக்கி உள்ளிழுக்கப்பட்டு இடுப்பு வரை நசுங்கி உயிரிழந்தவர்கள் உண்டு. இன்சூரன்ஸ் விசயத்திலும் தொழிலாளிகளை ஏமாற்றுகிறார்கள் முதலாளிகள்.
அடிபட்ட, உயிரிழந்த தொழிலாளிகளின் பெயரில் எந்தவொரு முதலாளியும் இன்சூரன்ஸ் எடுப்பதில்லை. தனது சேம்பரின் பெயரில் இன்சூரன்ஸ் எடுத்து தொழிலாளிக்கு ஐந்தோ, பத்தோ கொடுத்து ஏமாற்றிவிட்டு தொழிலாளிகளின் சாவிலும் லாபம் தேடுகின்றனர் சூளை முதலாளிகள்.
இயந்திரத்தை சுற்றி எப்போதும் தண்ணீர் இருக்கும். ஆதலால் மின்சாரம்(ஷாக்) அடிப்பதுவும் உண்டு. அதை சரி செய்வது சற்று செலவு பிடிக்கும் விசயம் எனபதால் பெரும்பாலான முதலாளிகள் அதை சரி செய்வதில்லை. எப்போதும் மண்ணுக்குள் நிற்கும் வேலை என்பதால் வாழும்போதே இந்த தொழிலாளர்களின் உடலை மண் தின்கிறது. எச்சிலை காறித் துப்பும்போது மண்ணும் சேர்ந்து வெளி வருவது இதற்கு ஓர் சான்று. வாழைப்பழம்தான் இதற்கு மருந்து என்று, வேறுவழியின்றி சொல்கிறார்கள் தொழிலாளிகள்.
வாரத்தில் ஆறு நாளும் வேலை செய்ய முடியாதபடிக்கான மிகவும் கடினமான பணிதான். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் நாங்கள் அத்தொழிலாளர்களிடம் விவரங்களை திரட்டியபோதே அச்சத்துடன் தயங்கி தயங்கியே பேசுகின்றனர். “பேரு, போட்டோவெல்லாம் வேணாம் சார்” என்று சொல்கின்றனர். தொழிலாளர்கள் எந்தளவுக்கு கொத்தடிமையான வாழ்க்கையில் இருக்கிறார்கள் என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி. ஆனாலும் அனைத்தையும் பொறுத்துக் கொண்டு தங்களது குடும்பத்திற்காக தொடர்ந்து வேலைக்குப் போகிறார்கள்.
பெண்களின் பணி இன்னும் கடினமானது. சமையல் செய்வதற்காக அதிகாலை 2 மணிக்கே எழுந்துவிடுகிறார்கள். உலகத்தின் அடுப்பங்கரைகளில் அதிகாலை 2 மணிக்கே அடுப்பு எரிவது செங்கல் சூளை தொழிலாளிகளின் வீடுகளில்தான் இருக்க முடியும். சமையல் முடித்து ஆண்களோடு வேலைக்கு புறப்படுகிறார்கள். இடுப்பு ஒடிய வேலை செய்து வந்து வீட்டில் எதுவும் செய்ய முடியாது, அப்படியே படுத்து விடுகிறார்கள். ஆண் தொழிலாளிகள் தங்களது உடல் வலியை கரைத்துக் கொள்ள குடியை நாடுகிறார்கள், பெண் தொழிலாளிகளோ வலியை சுமந்து கொண்டு வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
லாக்டவுன் காலத்தில் மிகவும் வேதனையான நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் இத்தொழிலாளிகள். இவ்வளவு நாள் வேலை பார்த்த செங்கல் சூளை முதலாளிகளிடமிருந்து எந்தவொரு உதவியும் இவர்களுக்கு கிடைக்கவில்லை.

தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் குறிப்பாக ஆள்வார் திருநகரி, சீவலப்பேரி, முத்தலாங்குறிச்சி, வல்லனாடு, தென் திருப்பாறை, ஏரல், குரங்கனி, முக்காணி, புதுமலை, களக்காடு, கல்லிடைக்குறிச்சி, அம்பை, கத்தாலம்பாறை ஆகிய பகுதிகளில் அதிகமாக இத்தொழில் நடக்கின்றன. தஞ்சாவூர், கும்பகோணம், சென்னை, ஈரோடு, திண்டுக்கல், பழனி, மதுரை, கோவை என தமிழகத்தில் பல ஊர்களில் சூளைகள் பரவலாக இயங்குவதாகவும் அறிய முடிகிறது.
கைகளால் மட்டுமே வேலை செய்து அறுத்து வைக்கப்படும் செங்கல் சூளைகள் கைம்மால் என்றும், இயந்திரத்தில் உற்பத்தி செய்யப்படும் செங்கல் வேலைகள் செங்கம்மால் எனவும் இருவகை உண்டு. நிறம் மற்றும் தரத்தைப்பொருத்து செங்கல்லின் விலை தீர்மானிக்கப்படுகிறது. செங்கம்மால் கல் சாதாரணமாக எட்டு ரூபாயிலிருந்து பத்து ரூபாய் வரை விலைபோகிறது. கைம்மால் கல் நாலு ரூபாயிலிருந்து ஆறு ரூபாய் வரை விலைபோகிறது. தட்டுபாடு சமயத்தில் கல்லின் விலை இன்னும் கூடுகிறது.
கை அறுவையில் ஒரு வாரத்திற்கு 50,000 கற்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இயந்திரத்தில் ஒரு வாரத்திற்கு ஒரு ரவுண்டுக்கு சாதாரணமாக 2,00,000 கற்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஒரு நாளைக்கு ஒரு இயந்திரத்தில் 10,000 கற்கள் வரை உற்பத்தியாகின்றன. இயந்திரத்தில் உற்பத்தி செய்யப்படும் கல் பெரிய அளவு சேதாரமின்றி வெளி வருகிறது.
கல் சீவும் தொழிலாளிகளின் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் சூளையில் தங்கியிருந்து வேலை செய்கிறார்கள். கிட்டத்தட்ட கொத்தடிமை வாழ்வுக்கு சமமானதாக இருக்கின்றது. 1 லட்சம், 2 லட்சம் அட்வான்ஸ் வாங்கிக் கொண்டும், அக்ரிமெண்ட் போட்டுக்கொண்டும் வேலை செய்கிறார்கள். எதாவது கேட்டால், “என் பணத்தைக் கொடுத்துவிட்டு வெளியே போ!” என முதலாளிகளால் மிரட்டப்படுகிறார்கள். இவ்வழியாக தொழிலாளி அடிமையாக்கப்படுகிறார்கள்.
படிக்க :
♦ அரியானா : உச்சநீதிமன்ற ஆசியோடு விரட்டியடிக்கப்படும் தொழிலாளர்கள் !
♦ கொரோனா : கடனில் மூழ்கும் கூலித் தொழிலாளர்கள் !
இந்தியாவில் கொத்தடிமைமுறை 1976-ம் ஆண்டு சட்டப்படி ஒழிக்கப்பட்டது என்று சொல்கிறார்கள். ஆனால், நவீன முறையில் அது தொடரத்தான் செய்கிறது. வடமாநில தொழிலாளர்கள் பலர் குடும்பத்தோடு தங்க வைக்கப்பட்டு குறைந்த கூலிக்கு கொத்தடிமை முறையில்தான் வேலை வாங்கப்படுகிறார்கள்.
செங்கல் சூளை தொழிலாளிகளைப் பொருத்தவரை குறைந்த கூலிக்கு தங்களது அதிகப்படியான உழைப்பை கொடுக்கின்றனர். உரிமைகளை கேட்கவும் வழியற்றுக் கிடக்கின்றனர். சூளை முதலாளிகள் சேர்ந்து சங்கம் வைத்து தொழிலாளிகளை சுரண்டுகின்றனர். சுரண்டப்படும் தொழிலாளிகள் சங்கமாக இல்லை. அப்படிப்பட்ட விழிப்புணர்வு ஏற்பட்டுவிடாதபடி அவர்கள் அச்சுறுத்தப்பட்டு ஒடுக்கப்பட்டு கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருக்கின்றன.
அவர்கள் சங்கமாக ஒருங்கிணயாத வரையில், இந்த சுரண்டலை எதிரத்து கேள்வி கேட்கவோ, போராடவோ முடியாது என்பது மட்டும் நிதர்சனமான உண்மை. சங்கமாக அவர்களை ஒன்றுதிரட்டுவது தொழிற்சங்கங்களின் தலையாய பணி !!

ராஜன்
மணலி SRF தொழிலாளர்களது போராட்டம் வெல்லட்டும் | பு.ஜ.தொ.மு
நிர்வாகத்தின் அடாவடித்தனம் – தொழிற்சங்கத்தின் துரோகம் :
இரட்டை நுகத்தடிக்கு எதிரான மணலி SRF தொழிலாளர்களது போராட்டம் வெல்லட்டும் !
சென்னை மணலியில் இருக்கும் SRF நிறுவனத்தின் தொழிலாளர்கள் 09.8.2021 அன்று ஆலைவாயில் முற்றுகைப் போராட்டம் ஒன்றை நடத்தினர். சுமார் 6 மணிநேரம் நீடித்த இந்த போராட்டத்தை போலீசு, நிர்வாகம், தொழிற்சங்கம் ஆகிய 3 தரப்பும் சேர்ந்து தற்காலிகமாக முடிவுக்கு கொண்டு வந்திருந்தாலும், எப்போதும் வெடிக்கத் தயாராக இருக்கும் எரிமலையாக தொழிலாளர்கள் குமுறிக் கொண்டிருக்கின்றனர்.
2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில் (ஏப்ரல்-2020) மீன்வலை தயாரிக்கும் பிரிவை (IYB) எவ்வித முன்னறிவிப்புமின்றி மூடுவதாகவும், குவாலியர் போன்ற தொலைதூர ஆலைகளுக்கு இடமாற்றம் செய்வதாகவும் நிர்வாகம் சுமார் 140 தொழிலாளர்களுக்கு கடிதம் அனுப்பியது. கடுமையான ஊரடங்கு நிலவிய காலகட்டத்திலும் அன்றைய பொதுச்சங்க தலைமை (பு.ஜ.தொ.மு-வின் முன்னாள் பொருளாளர் தோழர் பா.விஜயகுமார் தலைமையிலான நி.கு) தொழிலாளர் துறையை அணுகி தொழிற்தாவா எழுப்பியது.
படிக்க :
♦ டி.வி.எஸ் நிர்வாகத்தின் குள்ளநரித்தனம் || சங்கம் கடந்து தொழிலாளர்களைத் திரட்டும் புஜதொமு
♦ கொரோனா மரணங்கள் : தொழிலாளர்களின் போராட்டத்திற்கு அடிபணிந்த ஆலைகள் || புஜதொமு
அடுத்தடுத்த மாதங்களில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கட்டாய இடமாற்றத்துக்கு தடையாணை வாங்கியது. செப்டம்பர் 2020 வரை மாதாந்திர ஊதியமும், அக்-நவம்பரில் இடைக்கால பராமரிப்பு தொகையும் வாங்கிக் கொடுத்தது. தொழிற்தகராறு மற்றும் உயர்நீதிமன்ற வழக்கு ஆகிய இரு முனைகளிலும் தடுப்பரண் செய்யப்பட்டது.
ஜனவரி 2021-ல் நடந்த பொதுத்தொழிலாளர் சங்கத்துக்கான தேர்தலில் தி.மு.க-வின் தொழிற்சங்க பிரமுகர் திரு.ராஜகாந்தம், ம.தி.மு.க-வின் தொழிற்சங்க அமைப்பின் (எம்.எல்.எப்) பொதுச்செயலாளர் திரு.அந்திரிதாஸ் தலைமையிலான அணி, மேற்படி IYB தொழிலாளர்களது பிரச்சினையை எவ்வித போராட்டமும், வழக்குமின்றி தீர்க்கப்போவதாக வாக்குறுதி அளித்து தேர்தல் களம் கண்டது. தோழர் விஜயகுமார் தலைமையில் அந்த தேர்தலை பு.ஜ.தொ.மு எதிர்கொண்டது. தலைவர் பதவிக்கு தோழர் விஜயகுமார், திரு.ராஜகாந்தம் ஆகிய இருவரும் சம ஓட்டுகள் வாங்கிய நிலையில் குலுக்கல் முறையில் ராஜகாந்தம் தலைவராக தேர்வானார். செயலாளர் பதவிக்கு பு.ஜ.தொ.மு அணியிலிருந்து திரு.பி.ஆர்.சங்கர் இரண்டாவது முறையாக தேர்வானார். (பு.ஜ.தொ.மு பிளவின் போது இவர் சீர்குலைவுவாதிகளின் கட்டுப்பாட்டுக்கு போய்விட்டார்)
புதிய தலைமை தேர்வு செய்யப்பட்டவுடன் நிர்வாகத்துடன் நடந்த அறிமுகக் கூட்டத்தில், எல்லா பிரச்சினைகளையும் எவ்வித போராட்டங்களுமின்றி பேச்சுவார்த்தையில் தீர்க்கப்போவதாக திரு.ராஜகாந்தம் சவடால் அடித்தார். இரண்டாவது முறையாக தேர்வான செயலாளர் திரு.சங்கர் ஒருபடி மேலே போய், கடந்த முறை தலைமையில் இருந்தவர்கள் (தோழர் விஜயகுமார்) சொல்படிதான் நடந்தேன் என்று ஆள்காட்டி வேலை செய்து நிர்வாகத்துக்கு சமாதானச் செய்தியனுப்பினார்.
நாட்கள் ஓடின. பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருந்த தொழிற்தாவா மற்றும் உயர்நீதிமன்ற வழக்குகளை வாபஸ் பெறுவதாக நிர்வாகத்துடன், புதிய தொழிற்சங்கத் தலைமை புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது. சங்கத்தின் செயலாளர் கையெழுத்திடாமல், தலைவர் ராஜகாந்தம் கையெழுத்து போட்ட ஜனநாயகவிரோத செயலை வெளிப்படையாக கண்டித்து போராட இந்த ஆலையை தமது கோட்டை என்று சொல்லிக் கொண்ட சீர்குலைவுவாதிகள் பதுங்கிக் கொண்டனர். இன்னொரு கேலிக்கூத்தாக, தொழிற்தகராறு எழுப்பினாலோ, வாபஸ் பெற்றாலோ பொதுக்குழுவில் முடிவெடுக்க வேண்டும் என்கிற அடிப்படை விதியைக்கூட திரு.ராஜகாந்தம், திரு.அந்திரிதாஸ், திரு.பி.ஆர்.சங்கர் அடங்கிய நிர்வாகக்குழு காற்றில் பறக்கவிட்டது.
இதற்கிடையில் தி.மு.க ஆட்சியிலும் அமர்ந்தது. இனி பாலாறும், தேனாறும் ஓடும் என சவடால் அடித்து நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தினார், திரு.ராஜகாந்தம். நிர்வாகமோ, 10 முதல் 30 வருடங்கள் வரை வேலை செய்த தொழிலாளர்களுக்கு அற்பத்தொகையை இழப்பீடாகத் தருவதாக சொன்னது. வேலை தர மறுத்துவிட்டது. அதே நேரத்தில் நூற்றுக்கணக்கான நீம், அப்ரண்டீஸ் தொழிலாளர்களை பணியில் அமர்த்தியது.
இதை எல்லாம் கேள்வி கேட்டு கலகம் செய்ய வேண்டிய சங்கமோ, தொழிலாளர்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் இழப்பீடு வாங்கினால் அதை தடுக்க மாட்டோம் என்று அறிக்கை விட்டு, தொழிலாளர்களை கைகழுவி விட்டது. இந்நிலையில் சுமார் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேறுவழியின்றி இழப்பீடு வாங்கிக் கொண்டனர். அப்படி இழப்பீடு வாங்கும்போது கூட சொந்த விருப்பத்தின்பேரில் ராஜினாமா செய்வதாக எழுதி வாங்கிக் கொண்டது. நிர்வாகத்தின் இந்த நயவஞ்சகத்தைக்கூட தொழிற்சங்கம் எதிர்க்க திராணியற்று கிடந்தது. நிர்வாகமோ, ஒருபடி மேலே ஏறித்தாக்கத் தொடங்கியது. சங்க நிர்வாகிகள் பம்மத் தொடங்கினர்.
நிர்வாகத்துடனான முதல் பேச்சுவார்த்தையில், போராட்டத்தைவிட பேச்சுவார்த்தையில் அதிக நம்பிக்கை வைத்திருப்பதாக சவடால் அடித்த திரு.ராஜகாந்தம் பல்டியடித்தார். தொழிலாளர்கள் போராடத் தயாராக இல்லை என தொழிலாளர்கள் மீது பழியைப் போட்டார். செயலாளர் பி.ஆர்.சங்கரோ தலைவர் ராஜகாந்தத்தின் ராஜதந்திர ஆலோசனைப்படி தொழிலாளர் அமைச்சர், உள்ளூர் தி.முக. எம்.எல்.ஏ என ஓடிக் கொண்டிருந்தார், (கடந்த தேர்தலில் தி.மு.க-வுக்கு ஓட்டுகேட்ட சீர்குலைவுவாதிகளது பாடம் நல்ல பலனைத் தந்தது) இறுதியில் தொழிலாளர் அமைச்சர் உள்ளிட்ட அனைவரது பரிந்துரைகளும் மீண்டும் தொழிலாளர் துறைக்கே வந்து சேர்ந்தன.
எந்த அலுவலகத்தில் அவசர, அவசரமாக தொழிற்தாவாக்களை வாபஸ் வாங்கினார்களோ அதே அலுவலகத்துக்கு நடையாய் நடக்கின்றனர். சட்டப் போராட்டத்தின் மூலம் விஜயகுமார் தங்களை தவறாக வழிநடத்திவிட்டார் என்று நிர்வாகத்திடம் மண்டியிட்டவர்கள், இப்போது சட்டத்தைப் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறனர். இந்த சூழலில், நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கம் ஆகிய இரு தரப்பின் மீதும் நம்பிக்கை இழந்த பல தொழிலாளர்கள், இழப்பீடு வாங்கினாலும், போராட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் கணிசமான தொழிலாளர்கள் போராட்டக்களத்தில் குதித்துள்ளனர். கடந்த ஆண்டு எம்மை வழிநடத்திய தோழர் விஜயகுமார் தலைமை மீண்டும் வேண்டும் என்று குரலெழுப்புகின்றனர். ஆலையில் வேலை செய்து கொண்டிருக்கும் எஞ்சிய தொழிலாளர்களும் அந்த குரலையே எதிரொலிக்கின்றனர்.
நிர்வாகத்தின் அடாவடித்தனமும், அடக்குமுறையும் கண்ணுக்குத் தெரிந்த தாக்குதல்கள். ஆனால், தொழிற்சங்கத்தின் துரோகம் முதுகில் குத்தும் கயமைத்தனம். இதை எதிர்த்து IYB தொழிலாளர்கள் 09.8.2021 அன்று நடத்திய போராட்டம், எதிர்வரும் காலங்களில் நடத்தப்போகும் போராட்டங்கள் ஆகியவற்றுக்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மாநில ஒருங்கிணைப்புக்குழு சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்,
பு.ஜ.தொ.மு.,
சென்னை-திருவள்ளூர், காஞ்சி மாவட்டங்கள் .
தொடர்புக்கு ; 9444831578
பாஜக தலைமை : கஞ்சா விற்பனைக்கு மாவட்டம் || பாலியல் குற்றத்துக்கு மாநிலம் || நாட்டை விற்றால் தேசியம்
கஞ்சா விற்றால், லாரி கடத்தினால் பாஜக-வின் மாவட்டத் தலைவராகலாம் ;
பணமோசடி, பாலியல் குற்ற புரிந்தால் பாஜக-வின் மாநிலத் தலைவராகலாம் ;
நாட்டையே கூறுபோட்டு விற்றால் பாஜக-வின்தேசியத் தலைவராகலாம் !
செய்தி 1 : சேலம் மேற்கு மாவட்ட பாஜக துணைத் தலைவர் அன்புச்செல்வன் என்பவர் லாரி திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், ரவுடியான இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதால் தற்போது குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
செய்தி 2 : சேலம் மாவட்டம் கெங்கவல்லி மேற்கு ஒன்றிய பாஜக வர்த்தக அணி பொருளாளராக உள்ளவர் பிரகாஷ். 1.5 டன் கிலோ பான்பராக்கை பதுக்கி வைத்தற்காக கைது செய்யப்பட்டு, குண்டர் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
செய்தி 3 : பாஜக-வின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.டி.ராகவன் தனது வீட்டின் பூஜை அறையில் ‘ஆகம’ விதிப்படி அமர்ந்து ஒரு பெண்ணிடம் அலைபேசி மூலம் ஆபாசமாக நடந்து கொண்ட விவகாரம் பாஜக-வின் உள்ளடி வேலைகளின் காரணமாக வெளியே வந்திருக்கிறது. அன்னார் பாஜகவில் இருந்து வெளியேறியிருக்கிறார்.
மு. துரை