தேவர்களும் அசுரர்களும் பாற்கடலில் கடைந்தெடுத்த அமுதத்தை, அசுரர்கள் பருகிவிடாமல் தடுக்க மோகினி அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு அதை 12 நாட்கள் கட்டி காத்தாராம். இங்கும் அங்குமாக ஓடியபோது சிந்திய அமுதத்துளிகள் புனித கங்கையின் ஹரித்துவார், பிரயாக்ராஜ், உஜ்ஜைனி, நாசிக் போன்ற இடங்களில் விழுந்தனவாம்.
எனவே, அந்த இடத்தில் புனித நீராடினால் ஏழெழு பிறவிகளில் செய்த பாவமும் கழுவப்படும் என்ற கட்டுக்கதையை 19 நூற்றாண்டுக்குப் பிறகே இந்துத்துவர்கள் பரப்பி வருகின்றனர்.
அதாவது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்துக்களின் புனித நீராடுதல் நிகழ்வு என சொல்லப்படும் கும்பமேளா குறித்த வரலாறு 19-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகே உருவாக்கப்பட்டிருக்கிறது. கும்பமேளா குறித்த எந்த விவரமும் புராண இதிகாச நூல்களில் இல்லை எனவும் ஆய்வறிஞர்கள் கூறுகின்றனர்.
புனித கங்கையில் அமுதத் துளிகள் கலந்திருப்பதற்கும் அதில் நீராடினால் இந்துக்களின் பாவங்கள் கழுவப்படும் என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை. ஆனால், புனித கங்கையில் நீராடும் நிகழ்வான கும்பமேளா மூலம் காலரா போன்ற பெருந்தொற்று நோய்கள் பரவி உலக மக்களை பலியாகியிருக்கின்றனர் என்பதற்கு ஆதாரம் உள்ளது.
1855-ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பமேளா உருவாக்கிய காலரா, எப்படி உலகம் முழுவதும் பரவியது என்பது குறித்து இஸ்தான்புல்லில் 1866-ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச சுகாதார மாநாட்டில் அறிக்கை சமர்பிக்கப் பட்டிருக்கிறது.
கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள புனித யாத்திரைத் தளங்களில் காலரா வளர்ந்து பிறகு மெக்கா, எகிப்து, மத்திய தரைக்கடல் துறைமுகங்கள் மூலம் ஐரோப்பிய நகரங்களுக்கு பரவியதாகவும் 1866 அறிக்கை கூறுகிறது.
புனித கங்கை தொற்று நோய்களின் கூடாரமாக மாறியுள்ளதை சமீபத்திய ஆய்வுகளும் எடுத்துரைக்கின்றன. ஆனாலும் கூட பாவங்களை கழுவச் சொல்லும் மூட கட்டளையை நிறைவேற்ற லட்சக்கணக்கில் மக்கள் அங்கே கூடிக் கொண்டிருக்கின்றார்கள். குறிப்பாக, உலகமே பெருந்தொற்று காலத்தில் பீடித்திருக்கும் போது, கும்பமேளா நடத்துவதும், அதில் பங்கேற்பதும் எத்தகைய பேரழிவுகளை உருவாக்கும் என்பதற்கு மோடி கால இந்தியா உதாரணமாகியிருக்கிறது.
2010-ஆம் ஆண்டு நடைபெற்ற மகா கும்பமேளா, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்ற கணக்கில் 2022-ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டும். ஆனால், சோதிடர்களின் அறிவுரைப்படி ஓராண்டு முன் கூட்டியே நடத்தியிருக்கிறது உத்திராகண்டை ஆளும் பாஜக அரசு. கோவிட்-19 இரண்டாம் அலையின் தீவிர பரப்பியாக செயல்பட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் ஜனவரி-14 முதல் ஏப்ரல் இரண்டாம் வாரம் வரை நிகழ்ந்தது கும்பமேளா. கிட்டத்தட்ட 35 லட்சம் பேர் கலந்துகொண்ட கும்பமேளாவுக்கு வர மத்திய அரசு சிறப்பு ரயில்களை விட்டது. மாநில அரசு கோவிட் பரிசோதனை எதுவும் தேவையில்லை, வந்து நோய்ப் பரப்பலில் ஈடுபடுங்கள் என சலுகையோடு அழைத்தது.
கும்பமேளாவில் இருந்து திரும்பியவர்கள் தொற்றோடு திரும்பி, வட மாநிலங்களின் மூலை முடுக்கெல்லாம் பரப்பி விட்டனர். விளைவு இன்று புனித கங்கையில் பிணங்கள் மிதக்கின்றன. நதிக்கரைகள் பிணங்கள் புதைக்கும் இடுகாடுகளாக மாறியுள்ளன. மழையில் புதைத்த பிணங்கள் வெளியே வந்து நாய்களுக்கு இரையாகின்றன. கார்டினியன் நாளிதழ் தலையங்கள் எழுதியது போல, வட இந்தியா வாழும் நரகமாக மாறிவிட்டது.
கங்கை நதிக்கரையில் உத்தரப் பிரதேச மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ள பீகார் மாநிலத்தில் பாக்ஸரில் கடந்த வாரம் 71 பிணங்கள் கரை ஒதுங்கியுள்ளன. அந்தப் பகுதியில் மீன்பிடி தொழில் செய்யும் சீதாராம் சவுத்ரி, ‘கங்கையில் அவ்வப்போது பிணங்கள் மிதந்து வருவது இயல்பானதே. ஆனால், இத்தனை பிணங்கள் ஒரே நேரத்தில் மிதந்தது, நரகத்தில் உடைப்பு ஏற்பட்டுவிட்டதுபோல இருந்தது’ என்கிறார். இந்தப் பிணங்கள் ஆதித்யநாத் ஆளும் உத்தரப் பிரதேசத்திலிருந்து வந்தவை என்கிறார் பீகார் அமைச்சர்.
இந்தி நாளிதழான டைனிக் பாஸ்கர் அதன் 30 நிருபர்களைக் கொண்டு கள ஆய்வு ஒன்றைச் செய்திருக்கிறது. அதில் உத்தரப் பிரதேசத்தில் கங்கை ஆற்றின் கரையை ஒட்டி சுமார் 1,140 கிலோமீட்டர் பரப்பளவில் 2,000-க்கும் மேற்பட்ட சடலங்கள் புதைக்கப்பட்டிருப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர். கோவிட் காரணமாக தினசரி சுமார் 300 பேர் மட்டுமே இறப்பதாக உத்தரப் பிரதேசத்தை ஆளும் சாமியார் அரசு கணக்குக் காட்டி வருகிறது.
டைனிக் பாஸ்கரின் விவரிப்பு கற்பனை கதைகளில் சொல்லப்பட்ட நரகம், கங்கை நதிக்கரையில் சமகாலத்தில் உண்மையாகியிருப்பதைக் கூறுகிறது. உ.பி.யின் கன்னாஜ் நதிக்கரையோரம் 350-க்கும் மேற்பட்ட உடல்களை பாறைத் துண்டுகளை வைத்து, மேலோட்டமாக புதைத்துள்ளனர்; கான்பூரில் உள்ள ஒரு சுடுகாட்டிலிருந்து சிறிது தூரத்தில் 400 பிணங்களை நாய்கள் கடித்து குதறிக் கொண்டிருக்கின்றன. காசிப்பூர் காங்கை ஆற்றில் 52 பிணங்கள் மிதக்கினறன. பெரும்பாலும் அவை மிதந்து மாநில எல்லையைக் கடக்கக் கூடும்’ என்கிறது கள ஆய்வுக் கட்டுரை.
இறந்தவர்களை எரியூட்ட சுடுகாட்டில் இடம் கிடைக்காததாலும் எரியூட்டும் செலவு ரூ.2 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் ஆனது உள்ளிட்ட காரணங்களாலும் நதிக்கரை மணலில் குழி தோண்டி புதைத்து வருகின்றனர். இப்படி புதைக்கப்பட்ட பிணங்கள் சமீபத்தில் பெய்த மழையால் மேலே வந்து, அவற்றை நாய்கள் இழுத்துச் செல்லும் அவலமும் நிகழ்ந்திருக்கிறது.
கும்பமேளாவில் இருந்து குஜராத் மாநிலத்துக்கு திரும்பிய 10-ல் ஒருவருக்கு கோவிட் தொற்று கண்டுபிடிக்கப்பட்டதாக ஆரம்பக்கட்ட தகவல்கள் கூறின. கோவிட் தொற்றின் இரண்டாம் அலையில் மிக மோசமாக பாதிக்கப்பட்டு மோடியின் முன்மாதிரி ‘வளர்ச்சி’ மாநிலமான குஜராத் கடும் உயிரிழப்புகளை சந்தித்தது.
குஜராத்தின் திவ்யா பாஸ்கர் நாளிதழ் மார்ச் 1 முதல் மே 10 வரை 1,23,000 இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்துள்ளது – இது கடந்த ஆண்டின் இதே காலத்தை விட 65,000 அதிகம் எனக் கூறுகிறது. மற்றொரு நாளிதழான குஜராத் சமாச்சார், வடோதரா சுடுகாட்டில் தினமும் 200 பிணங்கள் எரிக்கப்படுவதாகக் கூறுகிறது.
மோடி ஆட்சிக்கு வந்து இந்து ராஷ்டிரம் அமைந்து விட்டால் பாலாறும் தேனாறும் பாயும் என கற்பனையில் வாக்களித்து அரியணை ஏற்றிய மக்கள், ஆறுகளெல்லாம் பிணங்கள் ஆகிவிட்டதைக் காண்கிறார்கள். பிணங்கள் எரியும் நாற்றமும் காற்றை நிரப்பும் பிணங்களில் அழுகலும் மக்களின் நாசிகளை துளைக்கின்றன. மதமும் மூடத்தனமும் எத்தகைய அழிவைத் தரும் என்பதை இந்துத்துவ புனித மயக்கத்தில் ஆழ்ந்துள்ளவர்கள் இப்போதும் அறிய வாய்ப்பில்லை. நாம் நினைவுப் படுத்திக் கொண்டே இருப்போம்.
பா.ஜ.க-வின் ஆதரவாளராக இருந்து, தற்போது நாடே சுடுகாடாக மாறியிருப்பதால் மனம் வெதும்பிய குஜராத்தி கவிஞர் பரூல் கக்காரின் இந்த வரிகள் இந்துத்துவ குண்டர்களை எரிச்சலூட்டிக் கொண்டிருக்கின்றன…
“நிர்வாண அரசரின் ராமராஜ்ஜியத்தில் கங்கை நதியில் பிணங்கள் மிதக்கின்றன”
உண்மை – கிலோ என்ன விலை? இதுவே தினகரன் நாளிதழ் நிலை !
“அரை உண்மை முழுப்பொய்யை விட ஆபத்தானது” என்பார்கள். அதற்கு உதாரணமாக இருக்கிறது தினகரன் நாளிதழ் வெளியிட்டிருக்கும் செய்தி ஒன்று. இந்தப் பெருந்தொற்று நெருக்கடி காலத்தில் அரசு – அதிகார வர்க்கத்தின் ஊதுகுழலாக, மக்கள் விரோதமாகப் பொய்யும் புனைசுருட்டுமாக செய்தி வெளியிட்டு, வாங்கும் காசுக்கு மேல் கூவுவதை சிறப்பாகச் செய்து வருகிறது தினகரன்.
கடந்த ஆண்டு, கொரோனா ஊரடங்கு போடப்பட்டது முதலே, மக்கள் யாரும் சரியில்லை – வெளியே வந்தால் போலீஸ் அடிக்கத்தான் செய்யும் என்கிற அளவுக்கு ‘செய்தி’ வெளியிட்ட தினகரன் இப்போது அதையெல்லாம் மிஞ்சிவிட்டது. ஒரே செய்தியில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதோடு, மக்களையும், மாவோயிசப் போராளிகளையும் அவதூறு செய்து நஞ்சை விதைக்கும் வேலையைச் செய்திருக்கிறது. 15.05.2021 தேதியிட்ட தினகரன் நாளிதழின் கடைசிப் பக்கத்தில் வெளியாகியிருக்கும், “மருத்துவ வசதி, விழிப்புணர்வு இல்லாமல் கொத்து கொத்தாக மடியும் மக்கள் – கிராமங்களை சூறையாடும் கொரோனா” என்ற தலைப்பில் வெளியாகியுள்ள செய்தியில் தான் இந்த நஞ்சைக் கக்கியிருக்கிறது.
“பெருநகரங்கள், சிறுநகரங்களைத் தொடர்ந்து கிராமங்களையும் சூறையாடத் தொடங்கி விட்டது கொரோனா வைரஸ். முறையான மருத்துவ வசதி, விழிப்புணர்வு இல்லாததால் பாதிப்பையே அறியாமல் மக்கள் கொத்து கொத்தாக இறக்கின்றனர். அங்கு நிலைமையைச் சமாளிக்க முடியாமல் வடமாநில அரசுகள் திணறுகின்றன” என்று தொடங்குகிறது இந்த செய்திப்பதிவு.
மருத்துவ வசதிகளும், விழிப்புணர்வும் ஏன் இல்லாமல் போயின என்ற கேள்விக்குள் சென்று அதற்கான காரணங்களை அறிவதற்கான எந்த முயற்சியிலும் ஈடுபடாத செய்தியாளர், “குறிப்பாக, பீகார், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், அரியானா, ஆந்திரா, ஒடிசா போன்ற மாநிலங்களில் கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று மாநிலங்களின் பெயர்களைப் பட்டியலிட்டு, அடுத்தடுத்த பத்திகளில் பல்வேறு மாநிலங்களில் நிலவும் அவலமான நிலையைச் சொல்லிச் செல்கிறார்.
பீகாரின் தலைநகர் பாட்னாவில் இருந்து 195 கி.மீ தொலைவில் உள்ள கைமர் மாவட்டத்தின் பம்ஹார் காஸ் கிராமத்தில், கடந்த 25 நாட்களில் 34 பேர் இறந்துள்ளதையும், அவர்கள் அனைவரும் கொரோனா அறிகுறிகள் இருந்தும் யாரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளவில்லை என்பதையும் செய்திக் கட்டுரை பதிவு செய்கிறது. மேலும், “இந்த கிராமத்து மக்கள் கூறுகையில், “இங்கு சுமார் 70 சதவீதம் பேருக்கு கொரோனா அறிகுறி உள்ளது. பலரும் காய்ச்சலுடன் வீட்டு மருத்துவம் பார்த்துக் கொள்கின்றனர். மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்கின்றனர்” என்றும் கூறுகிறது.
அடுத்ததாக, “உத்தரப் பிரதேச மாநிலத்தின் மாய்மா கிராமத்தில் கடந்த ஒரு மாதத்தில் 25 பேர் இறந்துள்ளனர். அதில் 4 பேர் மட்டுமே கொரோனாவில் இறந்ததாக கூறப்பட்டுள்ளது. ஆனால், அந்தக் கிராமத்தினர் கூறுகையில், “அரசு கூறும் கொரோனா இறப்பைவிட 4 மடங்கு அதிக இறப்புகள் பதிவாகின்றன. இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா அறிகுறி உள்ளது. உள்ளூரில் முறையான பரிசோதனை மையங்கள் இல்லாததால் ஒன்றும் செய்ய முடியவில்லை” என்கின்றனர்” என உ.பி மாநில கிராமத்தின் மோசமான நிலைமை பதிவு செய்யப்படுகிறது.
இதேபோல ராஜஸ்தான் மாநிலத்திலும் பரிசோதனைக்காக 10 கிலோமீட்டர் தாண்டி பக்கத்து ஊருக்கு போக வேண்டும் என்பதால், கொரோனா அறிகுறிகள் இருந்தாலும் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடப்பதாகவும் கட்டுரை சொல்கிறது.
மேற்சொன்ன தகவல்கள் எல்லாம் உண்மையாக இருக்குமா என நாம் தனியே சோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லாத நிலையைத்தான் கடந்த சில நாட்களாக கங்கையில் மிதந்து கொண்டிருக்கும் 2000-க்கும் மேற்பட்ட சடலங்கள் காட்டுகின்றன.
உ.பி.யில் ஆக்சிஜன் பற்றாக்குறையும், மருத்துவ வசதிகள் இன்மையும் கடுமையாக இருப்பதை அம்மாநில ஆளுங்கட்சியான பா.ஜ.க.வின் எம்.பி, எம்.எல்.ஏக்களே சமூக ஊடகங்களில் பகிரங்கப்படுத்தி வருகின்றனர். பீகாரின் ‘வளர்ச்சி’ நாயகன் நிதீஷ்குமார் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது பற்றிய தகவலே செய்தித் தாள்களில் காணவில்லை. உ.பி.யை விட பீகார் முன்னேறிய மருத்துவக் கட்டமைப்பு கொண்ட மாநிலம் என்பதற்கும் எந்த உதாரணமும் நமக்கு கிடைக்கப் பெறவில்லை.
தினகரனின் இந்தச் செய்திக் கட்டுரையில் உள்ள ஒரு பெட்டிச் செய்தியானது, எந்த அடிப்படை வசதியும் இல்லாத நிலையில் கொரோனா தனிமை வார்டு இருப்பதையும், மருத்துவமனைக்கு சென்றால் செத்துவிடுவோம் என்ற அச்சத்தால் மக்கள் மருத்துவமனைகளுக்கு செல்ல மறுப்பதாக சொல்கிறது. இன்னொரு பெட்டிச் செய்தியோ, “மருத்துவக் கட்டமைப்புகள் பெரிய அளவில் இல்லாவிட்டாலும் உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலம் பரிசோதனை, சிகிச்சைகள் வழங்க அரசுகள் முயன்ற அளவு முயற்சிக்கின்றன. ஆனால், கிராமங்களில் மக்களிடமிருந்து முறையான ஒத்துழைப்பு இல்லாமலேயே இருக்கிறது” என்கிறது.
இப்போது மட்டுமல்ல, எப்போதுமே இந்தக் கிராமங்களில் இருக்கும் மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இருப்பதில்லை. அங்கு சென்று தங்களைக் குணப்படுத்திக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை அரசுகள் ஒருபோதும் மக்களிடம் உருவாக்கியதில்லை என்பதால்தானே இந்த நெருக்கடியான நிலைமையிலும் மக்கள் போக அஞ்சுகிறார்கள். இதுதான் ‘வளர்ச்சி நாயகன்’ மோடி ஆளும் காலத்திலும் நிலவும் உண்மை நிலைமை.
மேற்சொன்ன தகவல்களில் இருந்து உ.பி., பீகார், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களின் கிராமங்களில் அடிப்படை வசதிகள் உள்ள மருத்துவமனைகளை அரசுகள் உருவாக்கவில்லை; இதன் காரணமாக, அரசு மருத்துவமனைகள், கொரோனா வார்டுகள் மீது மக்கள் நம்பிக்கை வைத்து செல்வதில்லை; கடந்த ஓராண்டுக்கும் மேலாக வாய்வீச்சில் ஈடுபட்டு வந்த மோடி, இந்த நிலைமைகளை மாற்ற எதையும் செய்யவில்லை என்பதை நம்மால் சந்தேகத்திற்கிடமின்றி உணர முடிகிறது.
ஆனால், தினகரனோ முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவது மட்டுமல்ல, இந்த அச்சத்தை உருவாக்கியதில் அரசின் பங்கை அடியோடு மறைக்கிறது; பேச மறுக்கிறது. ஏதோ உ.பி, பீகார் போல் இல்லாமல், சட்டீஸ்கரில் மருத்துவ வசதிகள் கிடைக்காமல் இருப்பதற்கு மாவோயிஸ்டுகளே காரணம் என்றும் ஒரு கேடான பொய்ப் பிரச்சாரத்தையும் இந்த செய்திக் கட்டுரையில் எழுதியிருக்கிறது தினகரன்.
மேற்சொன்ன வடமாநிலங்களின் நிலைமைகளில் இருந்து பெரிதாக எந்த வகையிலும் வேறுபடாத நிலைதான் சட்டீஸ்கரிலும் நிலவுகிறது. இங்கு நிலவும் மோசமான மருத்துவக் கட்டமைப்பு குறித்து 24.04.2021 தேதியிட்ட – Beds, oxygen, medicines: How Chhattisgarh dropped Covid ball- என்னும் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளக் கட்டுரை விளக்குகிறது. ஒவ்வொரு நாளும் பல்லாயிரம் பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்படும் சூழலிலும் கூட சிலநூறு ஐ.சி.யூ படுக்கைகளே மாநிலம் முழுவதும் இருப்பதையும், வெண்டிலேட்டர்கள் சொற்பமாகவே உள்ளன என்பதையும், அரசு ஆவணத்தில் இருப்பதில் பாதியளவுக்குத்தான் ஐ.சி.யூ படுக்கைகள் உண்மையில் இருப்பதையும் இக்கட்டுரை அம்பலப்படுத்துகிறது.
உண்மை நிலவரம் இவ்வாறிருக்கும் போது, தினகரன் பின்வருமாறு தனது அவதூறு பிரச்சாரத்தை மாவோயிஸ்டுகள் மீது நிகழ்த்தியிருக்கிறது. “சட்டீஸ்கரில் பெரும்பாலும் மலைக் கிராமங்கள் அமைந்துள்ளன. இங்கு நக்சல் பாதிப்பும் அதிகளவில் உள்ளது. இதனால் மருத்துவக் கட்டமைப்புகள் பெரிய அளவில் இல்லை. அதோடு கொரோனா சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நக்சலைட்டுகள் மக்களை மிரட்டி வெளிநபர்கள் யாரும் கிராமத்திற்குள் வரக் கூடாது என பிரச்சனையும் செய்கின்றனர். இதன் காரணமாக மருத்துவக் குழு அங்கு செல்ல முடியாமல் மக்கள் பலர் இறக்கின்றனர்” என்கிறது தினகரன் செய்திக் கட்டுரை.
மிகவும் பச்சையான அயோக்கியத்தனம் இல்லையா இது? மாநிலத்தின் தலைநகரமே கோவிட் தொற்றுக்கு பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவமனைகள், மருத்துவர்கள், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் ஏதுமில்லாமல் திணறிக் கொண்டிருக்கிறது. மாநில சுகாதார அமைச்சரோ, கடந்த ஓராண்டுக்கு முன்பே ஐ.சி.யூ படுக்கைகளை அதிகரிக்க நிதி ஒதுக்க வேண்டுமென முதல்வருக்குக் கோரிக்கை வைத்து விட்டேன், ஆனால் பலனில்லை எனப் புலம்புகிறார். ஆனால், தினகரன் என்ன சொல்கிறது? மாவோயிஸ்டுகள் அதிகம் இருப்பதால், மலைக் கிராமங்கள் மருத்துவ வசதிகள் இல்லாமல் இருக்கின்றனவாம். ஒட்டுமொத்தமாக அரசுக் கட்டுப்பாட்டில் இருக்கும் தலைநகரில் மருத்துவ வசதிகளை செய்ய விடாமல் தடுப்பது யார்? உ.பி., பீகாரில், ராஜஸ்தானில் மருத்துவ வசதிகள் இல்லாமல் மக்கள் கொத்துக் கொத்தாக செத்துப்போக யார் காரணம் என்பதையும் இந்த பாணியில் விளக்கி இருக்கலாம் அல்லவா?
“கொரோனா தொற்று காரணமாக 7-8 மாவோயிஸ்டுகள் இறந்துவிட்டனர்; முக்கிய தலைவர்கள் உட்பட சுமார் 100 பேர் தொற்றால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்; போலீசுக் கட்டுப்பாடுகள் காரணமாக போதுமான மருத்துவ வசதிகள் இல்லாமல் காலாவதியான மருந்துகளை சாப்பிட்டு மேலும் சிக்கலுக்கு உள்ளாகின்றனர்; இவர்களால் மலைவாழ் மக்களுக்கு தொற்று பரவும் அபாயம் உள்ளது; வீடியோ கால் மூலம் மருத்துவர்களைத் தொடர்பு கொண்டு சிகிச்சை குறித்து கேட்கின்றனர்; நூற்றுக்கு மேற்பட்ட பி.பி.இ கிட்டுகள், இருநூறு தடுப்பூசி குப்பிகளை வாங்கியுள்ளனர்; இவர்கள் சரணடையத் தயார் என்றால் அரசு மருத்துவம் பார்க்க தயாராக உள்ளது” என்ற போலீசின் கதைகளை எல்லாம் தினகரன் மட்டுமல்ல பல ஆங்கில நாளிதழ்கள் கூட தினசரி வெளியிட்டு வருகின்றன.
கடந்த முப்பதாண்டுகளாக மத்திய – மாநில அரசுகள் பின்பற்றி வரும் தனியார்மய – தாராளமய – உலகமயக் கொள்கைகளால் நாடு வெகுவேகமாக முன்னேறிக் கொண்டிருப்பதாக எல்லா அரசுகளுமே பொய்ப் பிரச்சாரத்தை அவிழ்த்து விட்டன. அந்தப் பொய்களை எல்லாம் நொறுக்கி, உலகமயமும் தனியார்மயமும் மோசடியானவை, மக்களுக்கு எதிரானவை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது கொரோனா பெருந்தொற்று. நாடு முழுவதுமே மருத்துவக் கட்டமைப்புகள் மிக மோசமாக இருப்பதை இந்தப் பெருந்தொற்று முற்றாக அம்பலப்படுத்தி விட்டது.
மக்களுக்கு மருத்துவ வசதிகள் இல்லை, விழிப்புணர்வு இல்லை என்றால் அதற்குக் காரணம் இத்தனைக் காலமும் ஆட்சி செய்த அத்தனை பேரும் அயோக்கியர்கள், மக்கள் விரோதிகள் என்பதை மறைப்பதற்காக மிகவும் கேவலமான பொய்யை அரசும் ஆளும் வர்க்கமும் அவிழ்த்துவிட்டு வருகின்றனர். அவற்றில் ஒன்றுதான் மாவோயிசப் போராளிகள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள், மக்களுக்கு மருத்துவம் கிடைக்கத் தடையாக இருக்கிறார்கள் என்ற வடிகட்டிய பொய்.
இத்தனை ஆண்டுகளாக இவர்கள் உருவாக்கிய வளர்ச்சி எதுவும் மக்களுக்கானதில்லை என்பதை இப்போதும் கூட, அப்பட்டமாக அம்பலமாகி நிற்கும் போதும் கூட முதலாளித்துவப் பத்திரிக்கைகள் சொல்லத் தயாராக இல்லை. மாறாக, அரசு அதிகாரிகள் வாந்தியெடுக்கும் பொய்களை, தமது சொந்தச் சரக்காகவே எழுதி வருகின்றனர்.
கொரோனா ஊரடங்கின் பெயரால் அரசு தனது தோல்வியை மறைக்க போலீசின் குண்டாந்தடியை வைத்து மக்களை அடக்குகிறது. தினகரன் போன்ற முதலாளித்துவப் பத்திரிக்கைகளோ, தமது பொய்ப் பிரச்சாரம் மூலம் மக்களின் சிந்தனையை முடக்கி கருத்து அடியாள் வேலையைச் செய்து கொண்டிருக்கின்றன.
ட்ரிங் ட்ரிங்
“ஹலோ! மாடு உதவி மையம்”
“மா!”
“மா. என்ன உதவி வேண்டும்?”
“மா”
“உங்களுக்கு இரும்பல் உள்ளதா?”
“மா”
“காய்ச்சலா”
“மா”
“ஆக்சிஜன் அளவு குறைவாக உள்ளதா?”
இரண்டு மாடுகள் பேசிக் கொள்வது போன்ற இந்த உரையாடல், உத்திரப் பிரதேச ஆதித்யநாத் அரசாங்கம் மாடுகளுக்கான கொரோனா உதவி மையத்தை தொடங்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை பகடி செய்து சமூக வலைத்தளங்களில் வந்த குறுஞ்செய்தியாகும். உ.பி-யில் கொரோனாவினால் இறந்தவர்களின் உடலை எரிக்க வழியில்லாமல் கங்கை ஆற்றில் வீசப்பட்டும் ஆற்றின் கரைகளில் புதைக்கப்பட்டும் இருப்பதாக பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
கொரோனா இரண்டாவது அலையினால் மிகவும் மோசமாக பாதித்துள்ள அம்மாநிலத்தில் கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை குறைத்துக் காட்டப்படுவதாகவே விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால், அம்மாநில பி.ஜே.பி அரசோ (ஆதித்யநாத்), நோயைக் கட்டுப்படுத்துவதிலும் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தாமல் ஆக்சிஜன் பற்றாகுறை என்று யாராவது செய்தி பகிர்ந்தால் அவர்களுடைய சொத்துக்கள் பறிக்கப்படும் என மிரட்டுவதிலும் பசு மாடுகளுக்கு கொரோனா பரிசோதனை செய்வதிலுமே அதிக அக்கறைக் காட்டி வருகிறது.
உ.பி-க்கு ஆதித்தியநாத் என்றால் இந்தியாவிற்கு நரேந்திர மோடி-அமித்ஷா கூட்டணி. ஆக்சிஜன் பற்றாக்குறையினால் உயிரழப்புகள் அதிகரித்த போது சமூக வலைதளங்களில் வந்த விமர்சனங்களை கட்டுப்படுத்த மோடியை விமர்சிக்கின்ற செய்திகளை நீக்க வேண்டும் என சமூக வலைதள நிறுவனங்களிடம் முறையிட்டுள்ளது மத்திய அரசாங்கம்.
நிலைமை கைமீறி போகவே RSS-ன் தேசிய செயலாளர் தத்தாத்ரேய ஹோசபலே ‘அழிவு சக்திகள் அல்லது பாரத விரோத சக்திகள் மக்களிடையே எதிர்மறைக் கருத்துக்களை பரப்புவதாகவும் செய்தி ஊடகங்கள் மக்களிடையே நம்பிக்கையை உருவாக்க வேண்டும்’ என்றும் பேசியிருந்தார்.
கொரோனா இரண்டாவது அலையினால் இந்தியா மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதிற்கு மோடி அரசே காரணம் என பல வெளிநாட்டு செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. சமீபத்தில் கூட பிரபல மருத்துவ ஆய்வு இதழான லேன்செட் ஆகஸ்ட் மாதத்திற்குள் கொரோனாவால் ஏறத்தாழ 10 லட்சம் பேர் உயிரிழக்க வாய்ப்புள்ளதாகவும் அதற்கு மோடி அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.
இந்த விமர்சனங்கள் எதுவும் அவர்களின் காதிற்குள் செல்லவில்லை. வழக்கம் போல வெளிநாட்டுச்சதி, பாரதத்தை வீழ்த்த திட்டமிடுகிறார்கள், மாநில அரசுகள் தான் இதற்கு பொறுப்பு என்று தங்களது ட்ரோல் ஆர்மி மூலமும் ஜால்ரா ஊடகங்கள் மூலமும் பிஜேபி/RSS தலைகள் தங்களுடைய ‘ஹிந்து ஹிருதய சாம்ராட்’க்கு முட்டுக்கொடுத்து வருகின்றன. தற்போது மோடி அரசாங்கத்தை பற்றிய நேர்மறை கருத்துக்களை மக்களிடையே பரப்புவதற்காக ரவிசங்கர், ஜக்கிவாசுதேவ், அசீம் பிரேம்ஜி-யைக் கொண்டு தேசிய அளவிலான பிரச்சார (Positivity Unilimited) இயக்கத்தை பிஜேபி/RSS நடத்தியுள்ளது.
வெளிநாட்டு ஊடகங்களை விட்டுவிடுவோம் இந்திய ஆய்வாளர்களும் மருத்துவர்களுமே மோடி அரசின் பொறுப்பற்றத் தன்மையை ஆதாரங்களோடு அம்பலப்படுத்தியுள்ளனர். கொரோனா வைரஸ் மரபணு மாற்றத்தைப் பற்றி ஆய்வு செய்வதற்காக மத்திய அரசால் உருவாக்கப்பட்ட INSACOG[1] என்ற அமைப்பின் ஆய்வாளர்கள் மே மாதம் முதல் வாரத்தில் ராய்ட்டர்ஸ் பத்திரிக்கைக்குப் பேட்டியளித்திருந்தனர். அதில் ‘தற்போது மரபணு மாறிய கொரோனா வைரஸ் (Double mutant corona virus-B.1.167-) இந்தியாவில் பரவி வருவதாகவும் இது அதிகம் பரவும் தன்மை கொண்டதாக இருப்பதாகவும்’ மார்ச் முதல் வாரத்திலே மத்திய சுகாதரத்துறை செயலரிடம் தெரிவித்தாக கூறியுள்ளனர்.
மேலும் மத்திய சுகாதரத்துறைக்கான பத்திரிக்கை செய்தியை தயாரித்து அனுப்பிய INSACOG உருமாறிய கொரோனா வைரஸ் (B.1.167) ‘அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது (High concern)’ என்று அச்செய்தி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. கூடவே கொரோனா பரவை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் இல்லையேல் அதிக பாதிப்புகள் ஏற்படும் என்றும் INSACOG மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் மார்ச் 24 அன்று வெளியிட்ட பத்திரிக்கை செய்தியில் high corcern என்ற வார்த்தையை சுகாதாரத்துறை அமைச்சகம் நீக்கியிருந்தது.
INSACOG ஆய்வானது மார்ச் மாதத்தில் மகராஷ்ட்ரா மாநிலத்தில் பதிவாயிருந்த கொரோனா தொற்றில் 15-20 சதவீத பாதிப்புகள் B.1.167 கொரோனா வைரஸினால் ஏற்பட்டதாக கூறியுள்ளது. தற்போது அதன் அளவு 60 சதவீதத்திற்க்கும் மேலாக அதிகரித்தோடு மட்டுமில்லாமல் மற்ற மாநிலங்களுக்கும் பரவியுள்ளதாகவும் கண்டறிந்துள்ளனர். இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கு B.1.167 வைரஸ் முக்கிய காரணம் என மற்ற ஆய்வுகளும் கூறுகின்றன.
மரபணு ஆய்வு முடிகளின் அடிப்படையில் கொரோனா இரண்டாம் அலை குறித்து மார்ச் முதல் வாரத்திலேயே INSACOG ஆய்வாளர்கள் எச்சரித்தும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமோ அல்லது பிரதமர் அலுவலகமோ அதனைக் கண்டுகொள்ள இல்லை. நோய் தடுப்பிற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளும் செய்யவில்லை. ஆனால் தேர்தல் பிரச்சாரத்திற்கும் கும்பமேளாவிற்கும் அனுமதி அளித்திருந்தனர். கொரோனா தொற்று உச்சத்திலிருந்த நேரத்தில் (ஏப்ரல் 13, 2021) சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பசுமாடு பற்றிய ஆய்வில் அக்கறைக் கொண்டிருந்தார். 98 கோடி மதிப்பிலான SUTRA-PIC என்ற இந்த திட்டம் இந்திய பசுக்கள் பற்றியும் அதன் பஞ்சகவ்யத்தைப் பற்றியும் ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்டதாகும். இந்துத்துவ அரசியலின் முக்கிய குறியீடாக உள்ள பசு அரசியலுக்காக அறிவியல் பூர்வமான ஆதாரங்களை தேடுவதே இத்திட்டத்தின் நோக்கம். ஆனால் கடந்த 14 மாதங்களாக பெருந்தொற்றில் நாம் பாதிப்படைந்திருக்கின்ற போதும் கொரோனா வைரஸைப் பற்றி ஆய்வு செய்யவதற்கான ஒரு ஒருங்கிணைந்த திட்டத்தை மோடி அரசு இன்னும் அறிவிக்கவில்லை. மரபணு ஆய்விற்காக டிசம்பரில் ஆரம்பிக்கபட்ட INSCOG-க்கு தேவையான நிதியைக் கூட ஏப்ரல் முதல் வாரத்தில் தான் கொடுத்தனர்.
கொரோனா பரவ ஆரம்பித்த கடந்த மூன்று மாத காலத்தில் பி.ஜே.பி தலைவர்கள் (பிரதமர், மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள் உட்பட) பேசியவை அறிவியலுக்கு புறம்பானதாகவும் அரசியல் ஆதாயத்திற்கானதாகவும் இந்துத்துவ பரப்புரைகளுக்கானதாகவுமே இருந்தது. இதற்கான சில உதாரணங்களை மட்டும் கீழே தருகிறோம்.
பிப்ரவரி மாத இரண்டாம் வாரத்தில் ஒரு இணையவழி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி ‘கொரோனாவிற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகள் உலக நாடுகளுக்கு உத்வேகத்தை அளித்துள்ளது’ என்றார். ஆனால், மோடி பேசிய இரண்டு மாதத்திலே உலகளவிலான தொற்று இந்தியாவில் தான் அதிகம்.
பிப்ரவரி மாத இறுதியில் மத்திய அமைச்சர்கள் ஹர்ச வர்தனும் நிதின் கட்காரியும் பாபா ராம்தேவினுடைய பதஞ்சலி நிறுவனத்தின் ‘கொரோனாநில்’ மருந்து கொரோனாவைக் குணப்படுத்துகிறது என்று அறிவித்து அதற்கான ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டனர். ஆனால் இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டிருந்த ஆதாரங்கள் அறிவியல் முறைபடி இல்லை என்று ஆய்வாளர்கள் விமர்சித்திருந்தனர்.
மார்ச் 7, 2021 டெல்லி மருத்துவக் கழகத்தில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ‘கொரோனா பெருந்தொற்று அபாயத்தின் இறுதி ஆட்டத்தில் இந்தியா உள்ளது’ என்று மருத்துவர்கள் மத்தியில் அறித்தார். ஆனால், மற்ற நாடுகளின் அனுபவத்திலிருந்து பார்க்கும் போது இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையை தவிர்க்க முடியாதது என்று பல ஆய்வாளர்களும் மத்திய அரசை எச்சரித்திருந்தனர்.
ஏப்ரல் முதல் வாரத்தில் அஸ்ஸாம் மாநிலத்தினுடைய சுகாதாரத் துறை அமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, ‘அஸ்ஸாமில் கொரோனா இல்லை ஆகையால் முகக்கவசம் அணியத் தேவையில்லை, தேவையென்றால் மக்களுக்கு தெரியப் படுத்துகிறோம்’ என்றார். இச்சமயத்தில் அஸ்ஸாமின் சட்டசபைக்கான மூன்று கட்டத் தேர்தல் நிறைவடைந்திருந்தது. ஆனால், அரசு தரவுகளின் படி ஜனவரி 1-ல் இருந்து ஏப்ரல் 6 வரை 2,624 பேர் கொரோனா தொற்றினால் பாதிப்படைந்திருந்தனர். 66 இறந்திருந்தனர்.
ஏப்ரல் 14, 2021, உத்திராகண்ட் முதல்வர் திரத் சிங் ராவத், ‘கும்ப் கங்கை நதியின் கரையில் அமைந்துள்ளது. நதி ஓட்டத்தில் கங்கா மாதாவின் அருள் உள்ளது. ஆகையால் கொரோனா இருக்க வாய்ப்பில்லை’ என்றார். கும்பமேளாவில் ‘புனித நீராடிய’ ஏப்ரல் 13 மற்றும் 14 இருதினங்களில் மட்டும் 1000 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக உத்திராகண்ட் அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக கொரோனா அதிதீவிர பரவலுக்கான (Super spreader event) முக்கிய காரணிகளில் ஒன்றாக கும்பமேளா-புனித நீராடல் நிகழ்வை மத்திய அரசின் நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 17, 2021 அன்று மேற்கு வங்கத் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி ‘பேரணியில் இவ்வளவு மக்கள் கூட்டத்தினைப் பார்த்ததில்லை. எங்கு பார்த்தாலும் மக்களாகத் தான் தெரிகிறார்கள்’ என்றார். மோடி உட்பட அக்கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பானமையோர் கெரோனா வழிக்காட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றவில்லை. குறிப்பாக அன்றைய தேதியில் 2.35 லட்சம் கொரோனா பதிப்புகளும் 1,341 இறப்பும் இந்தியாவில் பதிவாகியிருந்தது.
ஏப்ரல் 18, 2021 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்குப் போட்டியளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ‘கொரோனா தொற்று அதிகரிப்பிற்கும் தேர்தல் பிரச்சாரத்திற்கும் தொடர்பில்லை’ என்று கூறினார். ஆனால் ஏப்ரல் 1 லிருந்து (738 கொரோனா தொற்று) ஏப்ரல் 18 (8417 கொரோனா தொற்று) தேதிக்குள் மேற்குவங்கத்தில் கொரோனா தொற்றின் விகிதம் 1,040 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக அரசாங்கப் புள்ளிவிவரம் கூறுகிறது.
மே 12 2021, மத்தியப் பிரதேச கலாச்சாரத்துறை அமைச்சர் உஷா தக்கூர் ‘கொரோனா மூன்றாவது அலையிலிருந்து தப்பிக்க சிகிட்த யாகத்தை நடத்த வேண்டும். இது சுற்றுச்சூழலை தூய்மையாக்கும். இந்த யாகத்தின் மூலமே நமது முன்னோர்கள் பெரும் தொற்றை தடுத்திருக்கின்றனர்’ என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
கோரோனாவிற்கு மருந்தாக மாட்டு சிறுநீரைக் குடிப்பது, மாட்டுச் சானத்தை உடலில் பூசிக் கொள்வதுப் போன்றவற்றையும் பி.ஜே.பி எம்.எல்.எ.க்களும் கட்சி ஆதரவாளர்களும் செய்து வருகின்றனர்.
அறிவியலை புறக்கணிப்பது, உண்மைத் தரவுகளை மறைப்பது/திரித்துக் கூறுவது, மக்களை நம்பவைக்க மத நம்பிக்கைகளையும் பழங்காலக் கதைகளையும் கட்டவிழ்த்து விடுவது. இவைகள் தான் BJP/RSS கும்பலின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முதன்மையாக இருந்ததாகக் கூறலாம். கொரோனா நெருக்கடி காலத்திலும் கூட தங்களிடைய இந்து ராஷ்ட்ரா கனவிற்காக அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டுமென்பதே BJP/RSS கும்பல் முதன்மையான பணியாக கொண்டிருந்தனர்.
மக்களைத் தொற்றிலிருந்து காப்பாற்றுவது என்பதெல்லாம் அவர்களுக்கு இரண்டாம் பட்சம்தான். இதனை மோடி-அமித்ஷா பிரச்சனையாகவே பொது ஊடகங்கள் கட்டமைக்கின்றன. ஆனால், BJP/RSS யின் பிற்போக்கு சித்தாந்தமுமே இதற்கு முதன்மைக் காரணம் எனலாம்.
தங்களுடைய பிற்போக்கு சித்தாந்தத்தை மக்களிடம் பரப்புவதன் வாயிலாக அதற்கு மக்களுடைய ஆதரவையும் பெற்றுள்ளனர். இது ஏறத்தாழ பாசிஸ்ட்களின் உத்தியாகும். இந்துத்துவ சித்தாந்தம் அறிவியலுக்கு எதிரானது. அறிவியல் அணுகுமுறையும் அறிவியல் கன்ணோட்டமுமே மக்களை பெருந்துயரிலிருந்தும் பெருந்தொற்றுகளிலிருந்தும் காப்பாற்றும்.
கொரோனா பேரிடர் : பொது சுகாதாரக் கட்டமைப்புக்காகப் போராடுவோம் ! மோடி அரசின் கார்ப்பரேட் – காவி பாசிச திட்டங்களை முறியடிப்போம் !
கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை கோர தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது. மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன; ஆம்புலன்சுகள் தட்டுப்பாடு, போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லை; ஆக்சிஜன் இல்லை, தடுப்பூசி தட்டுப்பாடு, சுடுகாட்டில் பிணங்களை எரிப்பதற்கு இடமில்லை என்று அனைத்தும் தட்டுப்பாடுகளாக உள்ளன.
அரசுகளோ மரணிப்பவர்களைக் கூட கணக்கில் எடுக்க தயாராக இல்லை. நாள் தோறும் இறப்பு எண்ணிக்கை என்று அரசு சொல்வதைவிட பல மடங்கு இறப்புகள் உள்ளன. மே 10-ம் தேதி வரை 3 இலட்சங்களைத் தொடும் இறப்பு எண்ணிக்கை உண்மையில் பல இலட்சங்களைத் தாண்டியிருக்கிறது.
மக்கள் முற்றிலுமாக கைவிடப்பட்டுவிட்டனர். எங்கும் மரண ஓலங்கள், எங்கும் துன்ப துயரங்கள், வேலையில்லை, உணவு இல்லை, மக்கள் படும் துன்பங்களுக்கு அளவே இல்லை.
மக்கள் மரணிப்பதைத் தடுக்க துப்பற்ற அரசுகளின் கடைசி ஆயுதம் பொதுமுடக்கம். முற்றிலும் நிர்கதியில் இருக்கும் மக்களையே குற்றவாளிகளாக்கி, தண்டனை மக்களுக்கு வழங்கும் எளிய வழி தான் அரசுகள் கண்டுப்பிடித்துள்ள இந்த பொதுமுடக்கம்.
மோடி அரசே முதன்மைக் குற்றவாளி !
கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை கடந்த மார்ச்-ஏப்ரல் மாதங்களில் இந்தியாவில் வரப்போகிறது என மருத்துவ அறிஞர்களும் சர்வதேச சுகாதார மையமும் தெரிவித்திருந்தும் ஒதுக்கித் தள்ளியது மோடி அரசு.
பார்ப்பன மூடநம்பிக்கையைப் பரப்பும் கும்பமேளா நிகழ்ச்சிக்குத் தடைவிதிக்காமல் அதனை ஊக்குவித்தது; உத்திரப் பிரதேசத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் நடத்தியது; கொரோனாவால் மக்கள் கொத்துக் கொத்தாக செத்துக் கொண்டிருக்கும் போது, கிரிக்கெட் போட்டிக்கு தடைவிதிக்காமல், மக்களைத் திசைத் திருப்பியது; முக்கியமாக, மேற்கு வங்கத் தேர்தலில் மோடி-பாஜக வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை மோடி-அமித்ஷா கும்பலே முன்னின்று நடத்தியது – மொத்தத்தில் இந்த மோடி அமித்ஷா கும்பல்தான் கொரோனாவைப் பரப்பிய முதன்மைக் குற்றவாளிகள் (சூப்பர் ஸ்பிரட்டர்ஸ்).
இதுமட்டுமல்ல, ஆக்சிஜனுக்கு வழியின்றி மக்கள் செத்துக் கொண்டிருக்கும் போது புதிய பாராளுமன்றம் மற்றும் பிரதமர் இல்லத்தை – சென்ட்ரல் விஸ்டா – பல்லாயிரம் கோடிகளில் கட்டப்பட்டுக் கொண்டு இருக்கின்றது.
அடிப்படை கட்டமைப்பு இல்லை
சென்னையில் ராஜீவ் காந்தி மருத்துவமனை முன்பாக ஆம்புலன்ஸுகளில் நோயாளிகள் காத்துக் கிடக்கின்றனர். நோயாளிகளை மருத்துவமனைக்குள் அழைத்துச் செல்ல போதிய இடமில்லை. மருத்துவமனைகள் நிரம்பி வலிகின்றன. கோவை மருத்துவமனையில் தினந்தோறும் 50-க்கும் மேற்பட்டவர்கள் இறப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். வீடுகளில் இறப்பவர்கள் குறித்து எந்த விவரமும் இல்லை.
மருத்துவமனைகள் நிரம்பி வலிவதைத் தடுப்பதற்காகவும் மக்களுக்கு உரிய சிகிச்சையும் தனிமைப் படுத்திக் கொள்வதற்கான மாற்று ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. தனியார் திருமண மண்டபங்கள், கல்லூரிகள், பள்ளிகளைக் கையகப்படுத்தி மருத்துவம் அளிக்க முடியும். ஆனால், அப்படி ஒரு முயற்சியில் இறங்க எந்த மாநில அரசும் தயாராக இல்லை.
இதனால், உரிய சிகிச்சை இல்லாமல் இருப்பது ஒருபுறம் இருந்தாலும் மருத்துவமனைகளில் மக்கள் குவிவதால் அனைவரும் கொரோனா நோயைத் தொற்றிக் கொண்டு சென்று வருகின்றனர். மெல்ல நகரங்களில் இருந்து கிராமங்களை நோக்கி கொரோனா பரவிக் கொண்டிருக்கிறது.
இப்போது இருக்கும் நிலை இப்படியே தொடர்ந்தால் அடுத்த இரண்டு மாதங்களில் தெருத் தெருவாக வீடு வீடாக மரண ஓலங்களைச் சந்திக்க நேரிடும் ஒரு பேரழிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறோம்.
தடுப்பூசியில் கார்ப்பரேட் ஆதிக்கம்
கொரோனா நோய்த்தொற்று வருவதைத் தடுக்கும் வகையிலான தடுப்பூசி தயாரிக்கும் பணியில் இந்தியாவின் உள்ள நிறுவனங்கள் தயாரிக்கும் மருந்துகளை அரசே கொள்முதல் செய்து விற்பனை செய்தால் அனைவருக்கும் மருந்து கிடைக்கும். ஆனால், மோடி அரசோ அதற்கு நேரெதிரான திசையில் செயல்படுகிறது.
கோவிஷீல்ட் (சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தயாரிப்பு) கோவாக்சின் (பாரத் பயோடெக் தயாரிப்பு). இந்த தடுப்பூசிகளை அரசே வாங்கினால் ஒரு முறைக்கான (டோஸ்) விலை கோவிஷீல்ட் ரூ.400/- கோவாக்சின் ரூ.600/. இந்த தடுப்பூசியை தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் மக்கள் அவர்களது சொந்த செலவில் போட்டுக் கொண்டால் இரட்டிப்பு விலை தர வேண்டும்.
45 வயது மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசு தடுப்பூசிப் போடுவதாகவும், அடற்கு அடுத்த நிலையில் உள்ளவர்களுக்கு தடுப்பூசிப் போடுவதற்கான செலவை மாநில அரசுகள் ஏற்க வேண்டுமென திடீரெனக் கொள்கை முடிவுகளில் பாரிய மாற்றம் செய்துள்ளது.
இதன்படி, 45 வயதுக்குட்பட்டவர்களது (சுமார் 101 கோடி பேர்) தடுப்பூசிக்கான செலவை அந்தந்த மாநில அரசுகள்தான் ஏற்க வேண்டும். அதாவது 202 டோஸ் தடுப்பூசிக்கான செலவை மாநில அரசே ஏற்க வேண்டும். மாநில அரசே தடுப்பூசி முழுவதையும் கொள்முதல் செய்தால் முறையே ரூ.400/ மற்றும் ரூ.600/ விலைக்கு விற்கப்படும். தனிநபரே, தனியார் மருத்துவமனைகளில் போட்டுக் கொண்டால் முறையே ரூ.800/ மற்றும் ரூ.1200/ செலவு செய்தாக வேண்டும்.
ஒரு டோஸ் தடுப்பூசியை கோவிஷீல்டும், இன்னொரு டோஸ் ஊசியை கோவாக்சினும் போடக் கூடாது என்பது இன்னொரு நிர்ப்பந்தம்.
இவை மட்டுமின்றி ஏகாதிபத்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் தடுப்பூசில் செய்து வரும் ஆதிக்கத்திற்கு மோடி அரசு அடிபணிந்தது. இந்தியாவின் தேவையைக் கணக்கில் கொள்ளாமல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த அனுமதித்தது. இதன் விளைவாக, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் மக்கள் தொகையைவிட இரண்டு மூன்று மடங்குகள் அதிகமாக தடுப்பூசி சேமித்து வைக்கப்பட்டுள்ளன. நாமோ தடுப்பூசி இறக்குமதிக்காக ஏகாதிபத்திய நாடுகளை எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறோம்.
இந்த பின்னணியில் தான் தடுப்பூசி தட்டுப்பாடே ஏற்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி இல்லை. முதல் டோஸ் கோவாக்சின் போட்டவருக்கு அது கிடைக்கவில்லை. கோவிஷீல்ட் போட்டவருக்கு அது கிடைக்கவில்லை. மக்கள் கையறு நிலையில் நிற்கின்றனர். பாதி கிணற்றை தாண்டிவிட்டு அடுத்தப் பாதிக்கு நகர முடியாமல் நிற்கின்றனர். உயிர் பயம் துரத்துகிறது. தடுப்பூசி தட்டுப்பாடு தனியார் மருத்துவமனைகளுக்கு வலுக்கட்டாயமாகத் தள்ளுகிறது.
ஒரு பொருளின் விலையை தீர்மானிப்பதில் தேவைக்கும் (demand) அளிப்புக்கும் (supply) இடையிலானப் பற்றாக்குறையே தீர்மானிக்கிறது என்பது முதலாளித்துவப் பொருளாதாரத்தின் அரிச்சுவடி. தடுப்பூசியின் தேவை அதிகரிக்கிறது. ஆனால், சந்தையில் தட்டுப்பாடு தீவிரமடைகிறது. அரசின் கைகளில் இருப்பு இல்லை. கார்ப்பரேட் மருத்துவமனைகளில் தடுப்பூசி இருப்பு குவிகிறது. இப்படியாக, இரட்டிப்பு விலை நம்மீது திணிக்கப்படுகிறது.
ஒரு கணக்குக்காக, 50 சதவீதம் பேர் அரசு மருத்துவமனையிலும், எஞ்சிய 50 சதவீதம் பேர் தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போட்டுக் கொள்வதாகவும்; 50 சதவீதம் பேர் கோவிஷீல்ட், எஞ்சிய 50 சதவீதம் பேர் கோவாக்சின் போட்டுக் கொள்வதாகவும் வைத்துக் கொண்டால் கோவிஷீல்ட் தயாரிப்பு நிறுவனத்துக்கு ரூ.35,350/ கோடிகளும், கோவாக்சின் தயாரிப்பு நிறுவனத்துக்கு ரூ.75,750/ கோடிகளும் இலாபமாக கிடைக்கும்.
இந்த இலாப விகிதம் மேலும், மேலும் அதிகரிக்குமே அன்றி குறையப் போவதில்லை. ஏனென்றால், கொரோனா தடுப்பூசிகள் தயாரிப்பதற்கானக் காப்புரிமை (patent right) அரசு நிறுவனங்களுக்குக் கூட இல்லை. மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகளானது ஒட்டுமொத்த பொதுத்துறைகளையே மூடிவிடுவது என்பதாக இருப்பதால், அரசுக்குச் சொந்தமான டஜன் கணக்கான மருந்து/தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களும், ஆராய்ச்சி மையங்களும் செயலற்று நிற்கின்றன.
மே 1-ஆம் தேதி முதல் 18 வயது மேற்பட்டவர்களுக்கு அறிவிக்கப்பட்ட தடுப்பூசித் திருவிழா ஊத்தி மூடிக் கொண்டது. இன்று வரை (08.05.2021) 18 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் இல்லாததால் தமிழகத்தில் திருவிழா’ தொடங்கப்படவே இல்லை. சில வாரங்களுக்கு முன்பு தடுப்பூசித் தயாரிப்பதற்காக மத்திய அரசு ரூ.4500 கோடியை ஒதுக்கியது. அதை வாங்கிக் கொண்டு சென்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் இதுவரை தேவையான உற்பத்தியை அளிக்கவில்லை.
அமெரிக்கா, சீனா, ரசியா போன்ற நாடுகளில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதிலும் உயிரிழப்பை தடுத்து நிறுத்துவதிலும் தடுப்பூசிகள் முக்கியப் பங்காற்றுவதாக சொல்லப் படுகின்றது. இச்சூழலில் இந்தியா என்ற மிகப் பெரிய சந்தையில் தடுப்பூசி தட்டுப்பாடு என்பது உலக மருத்துவக் கார்ப்பரேட்டுகளுக்கு ஒரே கொண்டாட்டமாக உள்ளது.
ரசியாவின் ஸ்புட்னிக் 91 சதவீதம் பாதுகாப்பானது என்று கூறப்படுகிறது. அந்த நிறுவனம் டாக்டர் ரெட்டி நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபடுகிறது. அமெரிக்காவின் மாடர்னா, பைசர் ஆகிய நிறுவனங்களும் உற்பத்தியில் ஈடுபடுவதற்கு வரிசையில் நிற்கின்றன. இரு நாட்களுக்கு முன்னர் ஸ்புட்னிக் லைட் – தற்போது இரு டோஸ்கள் குறிப்பிட்ட இடைவெளியில் போடவேண்டும். ஸ்புட்னி லைட் ஒரே டோஸ்மட்டும் போதும் – அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.
தடுப்பூசிக்கானக் காப்புரிமையை கொடுக்க முடியாது என்று ஆபத்பாண்டவராகவும் கொடைவள்ளலாகவும் அறிமுகப்படுத்தப்பட்ட பில்கேட்ஸ் முகத்திலடித்தாற்போல கூறிவிட்டார். உலகமே அழிந்தாலும் கார்ப்பரேட்டுகள் தங்களின் லபத்தைக் கிஞ்சித்தும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.
மற்றொருபுறம் செங்கல்பட்டில் இருக்கும் ஒருங்கிணைந்த தடுப்பூசித் திட்டத்தின் அடிப்படையிலான தடுப்பூசிகள் தயாரிக்கும் எச்.பி.எல். (Hindustan Biotech Limited) அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசியைத் தயாரிக்க முடியும். ஆனால், இந்த பொதுத்துறை நிறுவனத்தில் மருந்து உற்பத்தி செய்வதற்கு எந்த முயற்சியையும் மோடி அரசு மேற்கொள்ளவில்லை.
தமிழகத்தின் ஆக்சிஜன் தேவை 400 மெட்ரிக்டன் தான். அது கையிருப்பில் இருக்கிறது என்று கூறியது எடப்பாடி அரசு. ஆனால், சில நாட்களுக்கு முன் தமிழக முதல்வராக பதவி ஏற்ற மு.க.ஸ்டாலினோ 840 டன் ஆக்சிஜன் தேவை என்றும் அதை உடனே மத்திய அரசு நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் கோருகிறார்.
மே 4-ம் தேதி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 13 பேர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்துப் போனார்கள். அவர்கள் இறப்புக்கு ஆக்சிஜன் பற்றாக்குறைதான் காரணம் என்று போராடிய மருத்துவர்கள் மீது நவடிக்கை எடுப்போம் என்று அரசு மிரட்டுகிறது. மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை – அதனால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன என்று பல முறை தெரிவித்தும் காதில் போட்டுக் கொள்ளாத மாவட்ட கலெக்டரும் மருத்துவ இயக்குனரும் படுகொலைகளை மூடி மறைத்து விட்டனர்.
முதல்வராக பொறுப்பேற்பதற்கு முன்னரே அரசு அதிகாரிகளை அழைத்து பேசத்தெரிந்த ஸ்டாலின், இந்த செங்கல்பட்டு படுகொலைகளைப் பற்றி வாய்திறக்கவே இல்லை. இதுவரை வட நாட்டைப் பார்த்து “ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் சாகிறார்கள் தமிழ்நாட்டைப் பார் சீரும் சிறப்புமாக இருக்கிறது” என்று பெருமைப் பேசியவர்கள் எல்லாம் இச்சம்பவத்தை மூடி மறைத்தார்கள்.
முதல் நாள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்தவர்கள் என்று கூறிய ஊடகங்கள் அடுத்த நாள் முதல் இப்பிரச்சனையைப் பேசாமல் பார்த்துக் கொண்டன. ஏற்கனவே, வேலூரில் 8 பேர், தற்போது செங்கல்பட்டில் 13 பேர் என நடந்துள்ள இந்த கொரோனா படுகொலைகளுக்கு பொறுப்பேற்க யாரும் தயாராக இல்லை. செத்துப்போனவர்களுக்கு நிவாரணம் கூட இல்லை. ஏன் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப் பெறுவதை மட்டுமே இலக்காகக் கொண்டு செயல்பட்டது எடப்பாடி அரசு என்றால், பதவியெற்றப் பின்னர்தான் வாயே திறப்பேன் என்று ஸ்டாலின் அரசு இருக்கிறது.
ஆக்சிஜன் பற்றாக்குறையை ஈடுகட்ட மத்திய – மாநில அரசுகள் ஆக்சிஜனை உற்பத்தி செய்வதற்கு உண்மையாக எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதே உண்மை.
ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்கும் போதே 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தமிழக அரசுக்குத் (எடப்பாடி தலைமையிலான மாநில அரசுக்கு) தெரிவிக்கமாலேயே வெளிமாநிலங்களுக்கு எடுத்து வினியோகம் செய்தது மோடி அரசு. மற்றொருபுறம் ஸ்டெர்லைட் பற்றாக்குறையைக் காரணம் காட்டி, ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டு இருக்கிறது.
அரசு அதிகாரிகள், ஓட்டுக் கட்சிகள் எல்லாம் சேர்ந்து இந்த ஆலையைத் திறந்து தூத்துக்குடி மக்களுக்கு துரோகமிழைத்துள்ளனர். தமிழக அரசு இந்த ஆலையைக் கையகப்படுத்த வேண்டும் என்று சில முன்வைத்த கோரிக்கையைக் கூட அனைத்து கட்சிகளும் புறக்கணித்தன.
நாடு முழுவதும் உள்ள இரும்பு உருக்காலை, பெட்ரோலிய சுத்திகரிப்பு நிறுவனங்கள், பெல் போன்ற கனரக ஆலைகள் எப்போதும் இடைவிடாமல் ஆக்சிஜன் உற்பத்தியை செய்து வருகின்றன. இந்த ஆலைகளது ஆக்சிஜன் உற்பத்தி இலக்கை போர்க்கால அடிப்படையில் உயர்த்தினால், ஓரிரு நாட்களிலேயே ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க முடியும்.
“ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா” என்கிற மத்திய பொதுத்துறை அமைப்பின் கீழாக இயங்கக் கூடிய சேலம் உருக்காலை, பொகாரோ, பிலாய், ரூர்கேலா, துர்காபூர் பர்ன்பூர் உள்ளிட்ட டஜன் உருக்காலைகள், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட பெட்ரோலிய சுத்திகரிப்பு மையங்கள் நாடு முழுவதும் இருக்கின்றன. இவை எல்லாம் ஆக்சிஜன் தயாரிப்பை எப்போதும் செய்து வருகின்றன. இந்த ஆலைகள் உற்பத்தி செய்யும் ஆக்சிஜன் 99.7 சதவீதம் தரமாகவும் இருக்கின்றன.
ஒருவேளை பொதுத்துறை நிறுவனங்களால் ஆக்சிஜன் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாவிட்டால், ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே இயங்கக் கூடிய நிறுவனங்கள் இருக்கின்றன. பிரிட்டன் ஆக்சிஜன் கம்பெனி என்ற பெயருடன் 1935-ல் இந்தியாவில் துவங்கப்பட்ட பன்னாட்டு நிறுவனம், தற்போது லிண்டே இந்தியா லிமிடெட் என்கிறப் பெயரில் நாடு முழுவதும் ஆக்சிஜன் சப்ளை செய்கிறது.
டாட்டா , ஜிண்டால், வேதாந்தா ஸ்டீல் நிறுவனங்கள் மக்கள் ‘நலனுக்காக’ ஆக்சிஜன் சிலிண்டர்கள் அனுப்புவதாக பீற்றிக் கொள்கிறார்களே, அவர்களுக்கே ஆக்சிஜன் சப்ளை செய்வது லிண்டே நிறுவனம்தான். சென்னை அம்பத்தூரில் ரூபாய் ஒரு கோடி செலவில் மணி ஒன்றுக்கு 600 மீட்டர் கியூப் அளவுள்ள (வாயுக்களது அளவை மீட்டர் கியூப் என்பர்) ஆக்சிஜன் உற்பத்திக் கூடங்கள் அமைத்திருக்கிறது.
பெரிய மருத்துவமனைகள் சுமார் 1-2 கோடி அளவுக்கு செலவிட்டால் தங்கள் மருத்துவமனைக்குத் தேவையான ஆக்சிஜனை தடை இன்றி உற்பத்தி செய்துவிட முடியும். முதல் லாக்டவுன் கட்டத்தில் மத்திய அரசு அறிவித்த ரூ.35,000 கோடிகள் இதற்கெல்லாம் செலவிடப்பட்டிருந்தால் ஆக்சிஜன் தட்டுப்பாடு என்கிற பேச்சுக்கே இடமில்லாமல் போய் இருக்கும்.
இந்த வாய்ப்பை எல்லாம் நீதிமன்றங்களும் பரிசீலிக்கவில்லை. மத்திய-மாநில அரசுகளும் பரிசீலிக்கவில்லை. அரசுகளது நோக்கம் எல்லாம் ஒன்றே ஒன்றுதான். ஆக்சிஜன் பற்றாக்குறையைக் காட்டி கார்ப்பரேட்டுகளது கல்லாப் பெட்டியை நிரப்புவது எப்படி; ஸ்டெர்லைட் போன்ற கொலைகார கம்பெனிகளுக்கு புத்துயிர் கொடுப்பது எப்படி என்பதுதான்.
பல லட்சம் கோடி கடனில் இருந்த ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு கொரோனாவை பயன்படுத்தி கடனையும் அடைத்து, மேலும் பல லட்சம் கோடி சம்பாதித்து விட்டது. இந்த கொரோனா காலக்கட்டத்தில் ஆக்சிஜன் வினியோகத்திலும் முன்னணி நிறுவனமாகி விட்டது. எப்படிப்பட்ட பேரிடரிலும் கார்ப்பரேட்டுகளை வாழ வைக்க வேண்டும் என்பதுதான் அரசின் கொள்கையாக இருக்கிறது.
ஊரடங்கு
கடந்த வருட ஊரடங்கில் லட்சக்கணக்கான வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கள் ஊர்களுக்கு ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் நடந்தே சென்றார்கள். செல்லும்போதே செத்துப்போனவர்கள் எத்தனை பேர்? ஜி.எ.ஸ்டி உள்ளிட்ட மக்கள் விரோத பொருளாதாரத் திட்டங்களால் குற்றுயிரும் குலை உயிருமாக இருந்த சிறு, குறு தொழில் நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டன. கடந்த அக்டோபருக்கு பின்னர்தான் கொஞ்சம் கொஞ்சமாக உயிர்த்தெழ ஆரம்பித்த நிறுவனங்கள் மீண்டும் மூடுவிழாவை நோக்கிச் செல்கின்றன.
கடந்த ஆண்டு அனுபவத்தின் படி மருத்துவர்கள் சொல்வதிலிருந்தே பார்த்தால் கொரோனாவை ஊரங்கால் ஒழிக்க முடியாது என்பதுதான். ஊரடங்கு என்பது பெருந்தொற்றை சமாளிப்பதற்கான முன்னேற்பாடுகளை செய்வதுதான். அதை மத்திய மாநில அரசுகளால் ஒருபோதும் செய்ய முடியாது. கடந்த 30 ஆண்டுகளாக திட்டமிட்டு சீரழிக்கப்பட்ட பொது சுகாதரக் கட்டுமானத்தை மீட்டெடுக்காமல் இப்படிப்பட்ட பெருந்தொற்றை ஒரு போதும் எதிர்கொள்ள முடியாது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்ற ஆண்டு கொடுக்க வேண்டிய உதவித் தொகையில் ஒரு பகுதியாக ரூ.2000-ஐ கொடுப்பதாக அறிவித்துவிட்டு 14 நாட்கள் ஊரடங்கை அறிவித்துள்ளார். இந்த 14 நாட்கள் ஒவ்வொரு குடும்பமும் எப்படி தங்களின் பசியாற்றும். சிறுகடைகள், சிறு – குறு நிறுவனங்கள் வைத்திருக்கும் முதலாளிகள் எப்படி தங்கள் கடனை கட்டுவார்கள்?
நான்கு மணி நேரம் கடையைத் திறந்து வைத்திருப்பதன் மூலம் உணவகங்கள், தேநீர்க் கடைகள், பெட்டிக் கடைகள், மளிகைக் கடைகள் வைத்திருப்போர் எப்படி வாழ்வார்கள்? அவர்களின் அன்றாட தண்டல் பணம் என்னாவது?
சிறுகடைகளில் வேலை செய்வோர் எலக்ட்ரீசியன்கள், பெயிண்டர்கள், கால்டாக்சி – ஆட்டோ ஓட்டுனர்கள் எப்படி தங்கள் வாழ்க்கையை ஓட்டுவார்கள்? இதைப் பற்றியெல்லாம் எந்த அக்கறையும் இல்லாமல் பிச்சைப் போடுவது போல ரூ.2,000-ஐ தூக்கிப் போட்டுவிட்டு ஊரடங்கிற்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பதெல்லாம் கொடூர அடக்குமுறை அல்லவா?
கடந்த கொரோனாவில் பாதிக்கப்பட்ட சிறு-குறு நிறுவனங்களுக்கான ஜி.எஸ்.டி ரத்து செய்யப்படவில்லை. ஏனைய மற்ற வரிகளும் – செலவீனங்களும் ரத்து செய்யப்படவில்லை. அந்த நிறுவனங்களில் வேலை செய்த கோடிக்கணக்கானோர் வேலை இழந்தனர். அவர்களுக்கான ஊதியத்தை அரசு வழங்கவில்லை.
பல ஆலைகள் – நிறுவனங்கள் கொரோனாவை சாக்காக வைத்துக் கொண்டு தொழிலாளர்களை வேலையை விட்டு நிறுத்தினார்கள், ஊதியம் அளிக்கவில்லை. இதை இந்த அரசு எதுவும் தட்டிக் கேட்கவில்லை. மொத்தத்தில் ஊரடங்கில் பாதிக்கப்பட்டதும், பாதிக்கப்படப் போவதும் சிறு முதலாளிகளும் உழைக்கும் மக்களும் தான்.
அரசு முற்றிலும் ஆள்வதற்கு தகுதி இழந்து எதிர்நிலை சக்தியாக மாறிப்போய் இருப்பதை, கொரோனாவும் அதன் தடுப்பு நடவடிக்கைகளுமே காட்டுகின்றன. தனியாரமயம்-தாராளமயம், உலகமயக் கொள்கைகள் நடமுறைப் படுத்தப்பட்ட பின்னால், திட்டமிட்டு அனைத்து அரசு நிறுவனங்களும் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டும், பொது சுகாதாரக் கட்டமைப்பு சீரழிக்கப்பட்டதால் ஒரு பெருந்தொற்றை எதிர்கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறது இந்தியா.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனை
பிரச்சனை இவ்வாறு இருக்க, தமிழ்நாடு மாடல் என்றொரு கருத்தாக்கத்தை பரப்பிக் கொண்டு திரிகிறார்கள் திராவிட ‘வல்லுனர்கள்’. ஏனைய மற்ற மாநிலங்களைவிட தமிழகம் முன்னேறியதுதான். ஆனால், அது மக்களின் தேவைக்குப் போதியதாக இருக்கிறதா என்பதை அர்கள் பார்க்கத் தவறுகிறார்கள். செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 10 செவிலியர்கள் செய்ய வேண்டிய வேலைகளை 1 செவிலியர் செய்ய வேண்டிய நிலை இருக்கிறது என்பதுதான் தமிழக மருத்துவக் கட்டமைப்பின் நிலைமை.
கடந்த ஆண்டு தொடர்ச்சியான மக்களதுப் போராட்டங்களுக்குப் பின்னர், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கு சில முயற்சிகளில் அரசு தீவிரம் காட்டியது. சில பகுதிகளில் வீடு வீடாக சென்று சோதிப்பதை ஓரளவிற்கு மேற்க்கொண்டது. அதனை முழுவீச்சாகச் செய்யவில்லை. சென்னையைப் பொறுத்தவரை ஏறத்தாழ 10 லட்சம் டெஸ்டுகள் எடுக்கப்பட்டதாக அரசு தெரிவித்தது. சளி, இருமல், காய்ச்சல் என்ற அறிகுறி இருந்தாலே டெஸ்ட் எடுக்கப்பட்டது. பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்தோரை 14 நாட்கள் கட்டாயமாக தனிமைப் படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
இவ்வருடமோ நிலைமை அதனைவிட மோசமாக உள்ளது. வீடுகளில் வந்து சோதிப்பதும் இல்லை. டெஸ்ட் எடுக்க சென்றால் 3 நாட்களுக்கு மாத்திரை கொடுத்து நான்காவது நாள் காய்ச்சல் இருந்தால் வாருங்கள் டெஸ்ட் எடுக்கலாம் என்கிறார்கள். மையங்களில் கூட்டத்தின் காரணமாக டெஸ்ட் எடுக்க முடியாமல் போவது, வீட்டில் தனிமைப் படுத்தப் படுவோருக்கு எவ்வித மருந்துகளும் கொடுக்காமல் இருப்பது, கிருமி நாசினி தெளிக்காமல் இருப்பதுப் போன்றவைகளும் தற்போது தமிழகத்தில் நடைபெற்று வருபவைதான்.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனை ஆக்சிஜன் இல்லாமையால் 11 பேர் பலி
கொரோனா பரவல் தீவிரமாக இருந்தாலும், சி.ஏ.ஏ., தொழிலாளர் சட்டத்திருத்தங்கள், சுற்றுச்சூழல் சட்டங்கள், புதிய கல்விக் கொள்கை, மூன்று வேளாண் சட்டங்கள் போன்ற கார்ப்பரேட்-காவி பாசிச நடவடிக்கைகளை மோடி அரசு தொடர்ந்து மேற்கொள்ளவே செய்கிறது. இப்போது நடக்கும் கொரோனாப் படுகொலையின் பின்னணியில், மக்களின் போராடும் உரிமைகளை நசுக்கிவிட்டு, மேலும் இந்தத் திட்டங்களைத் தீவிரமாக மேற்கொள்ளவே செய்யும். அதற்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளையும் தமிழக தி.மு.க அரசு மேற்கொள்ளப் போவதில்லை என்பதை ஸ்டெர்லைட் விசயத்தில் நமக்கு உணர்த்தி விட்டனர்.
மோடி கொரோனாவிலிருந்துப் பாதுகாத்துக் கொள்வது மாநில அரசுகளின் பொறுப்பு என்கிறார். ஸ்டாலின் பொது மக்களின் பொறுப்பாக்கி ஊரடங்கை அறிவிக்கிறார். அனைத்து தனியார் மருத்துவமனைகளையும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து கொரோனோ தொற்றை கட்டுப்படுத்து வழி இருக்கும்போது, தனியார் மருத்துவமனைகளுக்கு பேமெண்ட் பாக்கி இல்லாமல் செல்ல காப்பீட்டு திட்டத்தை அறிவிக்கிறார் ஸ்டாலின். ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் எதற்கு என்று போராடிய ஸ்டாலின், சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்புக்கள் வந்த பின்னர்தான் ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக்கை மூடுவதாக அறிவித்தார்.
ஸ்டாலின் ஆட்சி பொற்கால ஆட்சி என்று பிரச்சாரம் செய்தவர்கள் யாரும் செங்கல்பட்டு மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாமல் இறந்தவர்களுக்காகக் குரல் கொடுக்கவில்லை. ஸ்டாலின் மீது எவ்வித களங்கமும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகக் கேடயமாக இருந்து தி.மு.க அரசைப் பாதுகாத்து வருகின்றனர்.
மத்திய அரசு கார்ப்பரேட்-காவி அரசு என்றால், அதற்கு மறைமுகமாக சேவை செய்யும் கார்ப்பரேட் நலன் சாரந்த அரசுதான் தமிழக திமுக கூட்டணி அரசு.
தனியாரமயம்-தாராளமயம்-உலகமயத்தின் அடிப்படையிலான அனைத்துக் கொள்கைகளும் பின்வாங்கப்பட வேண்டும். கல்வி, சுகாதாரம், மருத்துவம் போன்ற அடிப்படை விசயங்களைத் தீர்மானிக்கும் அதிகாரம் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். அப்படி ஒரு நிலைமையை நோக்கி முன்னேறுவதுதான் நிரந்தர தீர்வாக அமையும்.
கொரோனா பேரிடர் காலத்தில் ஆவி பிடிப்பது சரியா??? அறிவியல் பூர்வமான பகிர்வு
ஆவி பிடிப்பது எப்போது பலன் தரும் ? இதுவரை எதற்கு நாம் ஆவி பிடித்தலை பயன்படுத்தி வந்திருக்கிறோம்? நம்மில் பலரும் நமக்கு மூக்கடைப்பு ஏற்பட்டு மேல் சுவாசப்பாதை சளியால் அடைபட்டு இருக்கும் போது மூக்கின் மூலம் மூச்சு விட கஷ்டப்படுவோம்.
அப்போது மூக்கில் உள்ள சளியை ஓரளவுக்கு மேல் நீக்கி மூச்சு விட இயலாது. அப்போது மேல் சுவாசப்பாதை தொற்று நிலையில் (UPPER RESPIRATORY TRACT INFECTION) வீட்டில் தாய்மார்கள் நன்றாக தண்ணீரை கொதிக்க வைத்து அதில் மூலிகை தைலங்கள்/ ஈக்வலிப்டஸ் தைலம் போன்றவற்றை போட்டு வேது பிடிக்கக்கூறுவார்கள். மூக்கடைப்பு சரியாகும்.
இன்னும் காது-மூக்கு-தொண்டை நிபுணர்கள் கூட சைனஸ் எனும் முகத்தில் உள்ள காற்றறைகளின் வாயில்களில் அடைப்பு ஏற்பட்டால் அவற்றில் சளி சேர்ந்து அடைத்துக் கொள்ளும். அந்த நிலையை சைனசைடிஸ் (sinusitis) என்போம். இந்த நிலையிலும் நீராவியை மூக்கின் வழிப் பிடிப்பது, அந்த அடைப்புகளை ஓரளவு சரி செய்து தலைவலியில் இருந்து நிவாரணம் வழங்கவல்லது.
எனவே, வேது பிடித்தல் / ஆவி பிடித்தல் போன்றவற்றை சைனசைடிஸ் மற்றும் மேல் சுவாசப்பாதை தொற்றுகளில் மட்டுமே அறிகுறிகள் சரியாவதற்காகப் பயன்படுத்தி வருகிறோம்.
ஆனால், கொரோனா பெருந்தொற்று காலத்தில் கோவிட்-19 தொற்றுக் கண்ட நபர்களுக்கு மூக்கடைப்பு போன்ற அறிகுறிகள் ஒரு சில நாட்களுக்கு மட்டுமே தென்படுகின்றன. இந்த நாட்களில் அவரவர் விருப்பப்படி வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள், மூக்கடைப்பு சரி செய்யும் நோக்கத்தில் அந்த அறிகுறியை சரி செய்வதற்காக வேதுப் பிடிக்கின்றனர்.
ஆனால், அதையே கொரோனா வைரஸை இந்த வேது பிடிப்பதால் கொன்று விட முடியும் என்று நம்பி வீட்டிலேயே வேது மட்டும் பிடித்துக் கொண்டு அறிகுறிகளை துச்சம் செய்து காலத்தை தாழ்த்தினால் அது தவறாகும்.
ஏனென்றால், ஆவி பிடிப்பதால் தொண்டையிலோ மேல் நாசியிலோ பாரா நாசல் சைனஸ்களிலோ உள்ள வைரஸ்களை கொல்ல இயலாது என்பதை உணர வேண்டும். மேலும் நோய் தொற்று நிலை அடுத்த நிலைக்கு முற்றவதையும் வேதுப் பிடிப்பதால் நிறுத்த முடியாது.
இன்னும் சொல்லப்போனால், சாதாரண கொரோனா (MILD) நிலையில் இருந்து மிதமான கொரோனா நிலைக்கு (MODERATE) செல்லுமானால் நோயாளியின் நுரையீரலில் “நியுமோனியா” ஏற்பட ஆரம்பிக்கிறது.
இந்த நிலையில் மென்மேலும் சூடு அதிகமான நீரையோ எண்ணெய்கள் கலந்த நீரையோ வைத்து வேதுப் பிடிப்பது என்பது, ஏற்கனவே கொரோனா நியூமோனியாவால் வெந்த நுரையீரலில் வேலைப் பாய்ச்சுவது போல அமைந்து விடக் கூடும்.
கொரோனாவில் நடப்பது என்ன?
நுரையீரலில் அதீத உள்காயங்கள் ஏற்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக நுரையீரல் காற்றை உள்வாங்கி ரத்தத்தில் ஆக்சிஜனேற்றம் செய்யும் நிலையை இழக்கும்.
இதில் உள்காயங்கள் மிகுந்து இருக்கும் நிலையில் சூடான காற்று அந்த காயங்களில் படுவது என்பது ஆபத்தானப் பக்கவிளைவுகளை மிதமான மற்றும் தீவிர கொரோனா நோயாளர்களுக்கு உருவாக்கி விடக்கூடும்.
எனவே மக்களே தயவு செய்து, ஆவி பிடித்தல் – வேதுப் பிடித்தலை கொரோனா பெருந்தொற்று காலத்தில் நம்பிக் கொண்டு முக்கியமான நேரத்தை வீட்டிலேயே கடத்தி, ஆபத்தான நிலையை அடைந்தபின் மருத்துவமனைக்கு சென்று அட்மிட் ஆகாதீர்கள்.
வீட்டில் வேது பிடிப்பது மற்றும் ஆவி பிடிப்பதே அறிவியல் பூர்வமாக நோய் தொற்று முற்றுவதை தடுப்பதில் பலனளிக்காது எனும் போது, இந்த ஆவி பிடித்தலை வெளி இடங்களில் வைத்து நிறைய பேர் ஒரே இடத்தில் ஒரே ஆவி பிடிக்கும் இயந்திரம் மூலம் ஆவி பிடிப்பது என்பது கொரோனா தொற்று மிகவும் வீறு கொண்டு பரவும் நிலையை உருவாக்கும் அபாயம் உண்டு.
அந்த இயந்திரத்தை ஒரு கொரோனா நோயாளி பயன்படுத்தினால் அதற்கடுத்தப் படியாக பயன்படுத்தும் பலருக்கும் தொற்று பரவும் நிலை உருவாகும். மேலும் வேது பிடித்ததும் தும்மல் இருமல் வரும். உடனே தொற்றடைந்த ஒருவர் அருகில் தும்முவது மூலம் நோயைப்பரப்புவார். எனவே, இது போன்ற அறிவியல் பூர்வமற்ற விசயங்களை பொதுவெளியில் செய்வது மிகவும் தவறு.
முடிவுரை :
கொரோனா பெருந்தொற்று காலத்தில் கொரோனா நோய் முற்றுவதையோ ஆவி பிடிப்பதால் தவிர்க்க இயலாது. இன்னும், அதீத வெப்பமான காற்றினால் சுவாசப் பாதையில் காயம் ஏற்படலாம். கொதிக்கும் தண்ணீர் ஊற்றி தீக்காயங்கள் அதிகம் ஏற்படலாம்.
மூக்கடைப்பை சரிசெய்வது தவிர வேறு எந்த பெரிய நன்மையையும் கொரோனாவில் ஆவி பிடித்தல் செய்யும் என்று ஒரு போதும் நம்பாதீர்கள். நியூமோனியா தொற்று அடைந்த நிலையில் ஒருவர் ஆவி பிடிப்பது அவருக்கு ஊறு விளைவிக்கும் செயலாக அமையலாம்.
இப்படி வேது பிடித்துக் கொண்டு, அது நம்மை காக்கும் என்று நம்பி முக்கியமான நேரத்தை வீட்டில் கழித்து விட்டு அதித்தீவிர மூச்சுத்திணறல் நிலையை அடைந்தபின் மருத்துவமனைக்குச் சென்றால் மரணம் ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம்.
இத்தகைய அறிவியல் பூர்வ ஆதாரமற்ற செய்திகளை நம்பி பொது இடங்களில் தொற்றுப் பரவலை அதிகரிக்கும் ஆவிப் பிடித்தலை தயவு செய்து தவிர்த்து விடுங்கள்.
இத்தகைய ஆவி பிடிக்கும் இயந்திரங்களை நிறுவி மனதால் மக்களுக்கு நன்மை செய்யும் எண்ணத்துடன் தன்னார்வலர்கள் பலர் களம் இறங்கியிருந்தாலும் இதனால் நோய் அதிகமாக பரவும் வாய்ப்பே அதிகமாக இருப்பதால் தயவு கூர்ந்து இதை உடனே நிறுத்தி விட்டு வேறு வகையான பெருந்தொற்று கால உதவிகளை மக்களுக்கு செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்.
Dr.A.B.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர் சிவகங்கை
அறிவியல் ஆதாரங்கள் : 1. https://www.bmj.com/content/347/bmj.f6041 2. https://www.lung.org/…/pneumonia/treatment-and-recovery 3. https://pubmed.ncbi.nlm.nih.gov/2286438/ 4. https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3381273/
கொரோனா நோய் தொற்றின் இரண்டாம் அலை பரவத் தொடங்கி, இன்று நாளொன்றுக்கு பல லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். பல்லாயிரக்கணக்கான பேர் அன்றாடம் செத்துக் கொண்டிருக்கின்றனர். புதிய கட்டமைப்புகள் எதுவும் உருவாக்கப்படாததால், கடந்த 30 ஆண்டுகளாக மருத்துவமும், சுகாதாரமும் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் கொரோனாவை எதிர்கொள்ள முடியாமல் செத்து மடிகின்றனர்.
உலக நாடுகள் எல்லாம் இந்தியா கொரோனா நோய் தொற்றில் முதலிடத்தில் இருப்பதைப் பார்த்தும், ‘வளர்ச்சி நாயகன்’ மோடியின் தேசத்தில் மக்கள் கொத்துக் கொத்தாக மரணிப்பதைப் பார்த்தும் உதவிகளைச் செய்தும் பலவிதமான ஆலோசனைகளை வழங்கியும் வருகின்றன.
இன்னொருபுறம், இந்தப் பிரச்சனைக்கு மக்கள்தான் காரணம் என ஆளும் வர்க்கங்களும், அதன் ஊதுகுழல் பத்திரிகைகளும் தொடர்ந்து பிரச்சாரம் செய்கின்றன. மோடி அரசோ கொரோனாவை எதிர்கொள்ளும் பொறுப்பை மாநில அரசுகள் தலைமீது சுமத்திவிட்டு, மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டிருக்கிறது.
லான்செண்ட் என்ற அறிவியல் ஆய்வுப் பத்திரிகையோ, மோடிதான் குற்றவாளி என்று சில விமர்சனங்களை முன்வைத்துள்ளது. அது வெளிநாட்டில் இருந்து ஒரு பத்திரிகை முன்வைத்துள்ள விமர்சனங்கள் மட்டுமே. ஆனால், மோடியின் தவறுகளோ அந்தப் பத்திரிகை தெரிவித்திருக்கும் விமர்சனங்களைவிடக் கொடிய குற்றங்கள்.
அவற்றில் முக்கியமான குற்றங்கள் மட்டும் இங்கே குறிப்பிடுகிறோம்.
• கொரோனா இரண்டாவது அலை தொடங்கும்போதே, உலக சுகாதார மையம், மருத்துவ அறிஞர்கள் விடுத்த எச்சரிக்கையை மோடி அரசு புறக்கணித்தது.
• கொரோனா தொற்றுப் பரவுவதைத் தெரிந்தும் உத்தரப் பிரதேசத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தியது, மக்கள் கொரோனாவால் கொல்லப்படுவதற்கான காரணங்களில் ஒன்று. இந்த தேர்தலை நடத்திய யோகி ஆதித்யநாத் அரசும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் நடத்த அனுமதித்த மோடி அரசும் குற்றவாளிகளே!
• கொரோனா நோய் பரவல் இருப்பதை நன்கு அறிந்தும், பல்வேறு அறிஞர்கள் சமூக செயல்பாட்டாளர்களின் எதிர்ப்பை மீறியும் வாரானாசியில் கும்பமேளா நடத்துவதற்கு தடைவிதிக்க மறுத்தது மோடி அரசு. கும்பமேளா நடத்தியதால், வடமாநிலங்கள் முழுவதும் கொரோனா பரவியது. மக்களின் மதநம்பிக்கையைப் பயன்படுத்தி மூடநம்பிக்கையை வளர்ப்பதற்கும் அரசியல் ஆதாயம் தேடுவதற்கு மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைக் கொடியக் குற்றமாகும்.
• மேற்குவங்கம், அஸ்ஸாம் மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் வெற்றியை மட்டுமே மனதில் நிறுத்திக் கொண்டு கொரோனா எச்சரிக்கையையும் மீறி மோடி, அமித்ஷா, பா.ஜ.க-வின் முக்கிய தலைவர்கள் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தியது.
• கொரோனா நோய் வேகமாகப் பரவி வரும் நிலையில், அதனைப் பரப்புவதற்கானக் காரணங்களில் ஒன்றாகவும் மக்களை கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்புகள் குறித்து சிந்திக்கவிடாமல் திசைத் திருப்பும் வகையிலும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை நடத்தியது.
• கொரோனா முதல் அலையின்போதே ஆக்சிஜனின் அவசியத்தை அனைவரும் நன்கு உணர்ந்துவிட்டனர். ஆக்சிஜன் தட்டுப்பாடு வரும் என்று தெரிந்திருந்தும், அவசரகாலத் தேவைக்குப் போதுமான அளவுக்கு ஆக்சிஜன் இருப்பு வைத்துக் கொள்ளாமல் இருந்தது; புதிய ஆக்சிஜன் உற்பத்தியைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளாமல் இருந்தது.
• தடுப்பூசி உற்பத்தியிலும் ஆக்சிஜன் உற்பத்தியிலும் பொதுத்துறை நிறுவனங்களை ஈடுபடுத்தாமல் தனியார் கார்ப்பரேட் கொள்ளைக்கு வழிவகுத்தது.
• கார்ப்பரேட் முதலாளிகள் மக்களின் உயிரை விலைபேசிக் கொள்ளையடிப்பதற்கு வசதியாக தடுப்பூசி வினியோகத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களை அனுமதித்தது மட்டுமின்றி, தனியார் மருத்துவமனைகளைக் கையகப்படுத்தி, இலவசமாக வினியோகிக்காமல் தடுப்பூசிக்கு விலை நிர்ணயம் செய்து கொடுத்தது மோடி அரசு.
• கொரோனா முதல் அலை தாக்கத்தின்போது கிடைத்த அனுபவத்தில் இருந்து உ.பி., குஜராத், தமிழகம் போன்ற மாநிலங்களில் முன்னெச்சரிக்கையாக மருத்துவக் கட்டமைப்பை விரிவுபடுத்தத் தவறியதற்கு மாநிலங்களின் ஜி.எஸ்.டி.யைக் கொள்ளையடித்து வைத்திருக்கும் முதன்மைக் குற்றவாளிகள் மோடி அரசு. மோடி அரசுக்குப் போதுமான நிர்பந்தம் கொடுத்து மாநில அளவில் மருத்துவக் கட்டமைப்பை விரிவுப்படுத்தத் தவறிய மாநில அரசுகள் இரண்டாம் நிலைக் குற்றவாளிகள்.
• அமெரிக்க மேல்நிலை வல்லரசின் தலைமையிலான மறுகாலனியாக்கக் கொள்கைகளின் அடிப்படையில், தடுப்பூசி உற்பத்தி செய்து ஏகாதிபத்திய நாடுகளுக்கு அனுப்பி வருகிறது மோடி அரசு.
• மத்திய பட்ஜெட்டில் ரூ.35,000 கோடி கொரோனா நோய் பரவலைத் தடுப்பதற்கு ஒதுக்கீடு செய்துவிட்டு, மாநில அரசுகளுக்கு தடுப்பூசிப் போடுவதற்கான செலவுகளை செய்யச் சொல்லி நிர்பந்திக்கும் வகையில், தடுப்பூசிப் போடுவதற்கானக் கொள்கையில் திடீர் மாற்றம் செய்து, தனதுப் பொறுப்பை முற்றிலுமாகக் கைகழுவி விட்டது மோடி அரசு.
• பேரிடர் மேலாண்மை நிதியைக் குறைந்த அளவிற்கு, அதுவும் அடுத்த ஆண்டுக்கான தொகையை முன்பணம் என்ற வகையில் மட்டுமே ஒதுக்கிக் கொடுத்து மாநில அரசுகளை நிர்கதிக்குத் தள்ளியிருக்கிறது மோடி அரசு.
• ஜி.எஸ்.டி. வரிவசூலில் இருந்து மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டியத் தொகையை வழங்காமல் நிறுத்தி வைத்திருத்ததன் மூலம் மாநில அரசுகளை நெருக்கடிக்கு தள்ளியிருப்பது மட்டுமின்றி, கடன் வாங்கி மாநில அரசுகளின் பொருளாதாரம் திவால் ஆவதற்கு காரணமாகியிருக்கிறது மோடி அரசு.
• ஆக்சிஜன் உற்பத்திக்காக தனியார் ஆலைகளைக் கையகப்படுத்தி உற்பத்தி செய்ய முயற்சிக்காமல் கார்ப்பரேட் நலன் காக்கும் வகையில் செயல்படுவது.
• கொரோனா தொற்றுப் பரவலில் இறந்தவர்களின் எண்ணிக்கையைத் திட்டமிட்டே குறைத்துக் காட்டுவது, மோடி அரசின் வழிகாட்டுதலின் கீழ் மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
• ஆக்சிஜன் இல்லை, மருத்துவ வசதி இல்லை என்ற அரசின் அலட்சியப்போக்கை அம்பலப்படுத்துவதை குற்றம் என வரையறுத்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வரும் யோகி ஆதித்யநாத் கண்டிக்காமல் அவரது செயலை ஊக்குவிப்பது கொடிய குற்றம்.
• கொரோனா இரண்டாவது அலை உயர்ந்து வீசிக் கொண்டிருக்கிறது; மாநில அரசுகள் செயலிழந்துப் போய் ஊரடங்கை அறிவித்துள்ளன. ஆனால், மத்தியில் இருந்து இன்றுவரை எந்த நிவாரணத்தையும் அறிவிக்காமல், கல்லூளிமங்கன் போல, பாசிச மனநிலையில் அமைதி காப்பது.
• கொரோனா முதல் அலை ஓய்ந்து விட்டது என சென்ற ஆண்டின் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் பொய்ப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டு மக்களை ஏமாற்றியது.
• போதுமான தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்யவோ, மக்களுக்கு வழங்கவோ செய்யாமல் கோ.மூத்திரம், கோ.சாணம் ஆகியவற்றை உண்ணச் சொல்லி வடமாநிலங்களில் விற்பனை செய்து வரும் பா.ஜ.க. ஆதரவு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் பசுப் பிரச்சாரம் செய்து வரும் ஆர்.எஸ்.எஸ். இந்து மதவெறி பாசிச குண்டர்களைத் தடை செய்யாமல் அவர்களைப் பிரச்சாரம் செய்ய அனுமதித்து மக்களைக் கொள்ளையடிப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது;
இவற்றின் மூலம் கொரானாவைத் தடுப்பதற்கான அறிவியல் பூர்வமான வழிமுறைகளில் இருந்து மக்களைத் திசைத்திருப்பி, தனக்கு வரும் எதிர்ப்புகளை முடக்குவது; மக்களை மூடநம்பிக்கையில் ஆழ்த்துவது ஆகியவை மோடி-பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். கும்பலின் திட்டமிட்ட செயல்பாடுகளாகும்.
ஆகையால், நமது நாட்டில் நிகழ்ந்து வரும் இந்த கொரோனா மரணங்கள், இயற்கையின் விளைவல்ல, மோடி அரசின் திட்டமிட்ட புறக்கணிப்பால் நிகழ்ந்த கொலைகள்; பச்சை படுகொலைகள்!
குஜராத்தில் ஆர்.எஸ்.எஸ். குண்டர்களால் நிகழ்த்தப்பட்ட இசுலாமியர்களுக்கு எதிரானப் படுகொலைகள் ஒரு வகை எனில், அரசு நடத்தி வரும் இந்த கொரோனா கொலைகள் இன்னொரு வகை.
மோடி அரசின் குற்ற நடவடிக்கைகளுக்கெல்லாம், தற்போது நடக்கும் கொரோனாப் படுகொலைகளுக்கு இந்த நாட்டின் பிரதமர் என்ற வகையிலும் அதிகாரங்கள் அனைத்தையும் தனது அலுவலகத்தில் குவித்து வைத்திருப்பவருமான மோடி முதன்மை காரணம். மோடி அரசுதான் முதன்மைக் குற்றவாளி. அதாவது கொத்துக் கொத்தாக மரணம் நிகழும் என்று நன்கு தெரிந்து விளைவிக்கப்பட்ட மரணத்தை விளைவிக்கும் படுகொலைக் (culpable genocide) குற்றமுமாகும். மோடி அரசுக்கு ஆலோசனைகளை வழங்கி வரும் சாணக்கியரும் பா.ஜ.க.வின் தேசிய தலைவருமான அமித்ஷா இரண்டாவது குற்றவாளி. யோகி ஆத்யநாத், குஜ்ராத் முதல்வர், மேற்குவங்க பா.ஜக. தலைவர்கள், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் குஜராத், உ.பி., டெல்லி மாநில அதிகாரிகள் அடுத்த நிலையில் உள்ள குற்றவாளிகள்.
“விதி வந்தால் சாகவேண்டும், அதிருஷ்டம் இருந்தால் வாழ்ந்து கொள்ள வேண்டும்” என்ற தனது பார்ப்பன சனாதான நம்பிக்கையை மக்களின் மனதில் விதைப்பதுதான் உண்மையில் இந்த ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. மோடி கும்பலின் அடிப்படை சித்தாந்தம் ஆகும். இந்தச் சித்தாந்தத்தின் அடிப்படையில்தான் மோடி அரசு ஆட்சி செய்து வருகிறது. இதுதான் தற்போது நடந்து வரும் கொரோனாப் படுகொலைகளுக்கு அடிப்படையாகும்.
தடுப்பூசி இரண்டு டோஸ் போடப்பட்டவர்களிலும் ஒரு சில மரணங்களைக் கேள்விப் படுகிறோம். இது மனதில் விரக்தியை ஏற்படுத்துகின்றதே என்று பல நண்பர்கள் கூறுகிறார்கள்.
இதற்கான எனது விடை
முதலில் ஒன்றைப் புரிந்துக் கொள்ள வேண்டும். தற்போதைய கோவிட் தடுப்பூசிகள் வைத்து செய்யப்பட்ட மூன்றாம் கட்ட ஆய்வுகளில், தடுப்பூசிகள் ஆய்வு செய்யப்பட்ட மக்களிடையே மருத்துவமனைகளில் அட்மிட் ஆகி சிகிச்சைப் பெறும் எண்ணிக்கையையும் கோவிட் நோயால் ஏற்படும் மரணங்களும் ஏற்படவில்லை.
ஆயினும் பல கோடி மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் போது தடுப்பூசிகள் போடப்பட்ட மக்களுள் அறிகுறிகளற்றக் கொரோனா ஏற்படலாம். சாதாரண (mild) தொற்று ஏற்படலாம் மிக மிகக் குறைவான மக்களுக்கு மிதமான சிகிச்சை தேவைப்படும் தொற்று நோய் ஏற்படலாம் அரிதினும் அரிதாக மரணங்களும் நேரலாம்.
ஆயினும் தடுப்பூசிப் போடப்படாத மக்களுள் ஏற்படும் கொரோனா மரணங்களை விட மிக மிகக் குறைவான அளவிலேயே தடுப்பூசிப் பெற்றவர்களிடையே மரணங்கள் நிகழ்கின்றன. நான் கொரோனா முன்கள மருத்துவராக கடந்த ஒரு வாரம் பணிபுரிந்திருக்கிறேன். கிட்டத்தட்ட 100 நோயாளிகளின் வரலாறுகளை நேரடியாகப் படித்திருக்கிறேன்.
அதிலிருந்து நான் கற்றவை. தடுப்பூசி ஒரு டோஸ் பெற்றிருந்தால் கூட அவருக்கு நோய் சாதாரண நிலையில் இருந்து மிதமான நிலைக்கு முன்னேறும் வாய்ப்பு குறைவாக இருக்கிறது. மிதமான மற்றும் தீவிர நோய் தன்மைக்குள்ளானவர்கள் யாரும் தடுப்பூசி பெற்றிருக்கவில்லை. இது என்னளவில் நான் கண்டவை.
இன்னும் கொரோனா தீவிர சிகிச்சைப் பிரிவில் பணி புரியும் எனது நண்பர்களின் கூற்று யாதெனில், அரிதினும் அரிதாகவே தடுப்பூசிப் பெற்றவர்கள் ஐ.சி.யூ நிலையை அடைகிறார்கள் என்பதே.
நடப்பது போர்ச்சூழல் இதில் ராணுவ வீரர்கள் தங்களை காத்துக் கொள்ளக் குண்டு துளைக்காத கவச உடை வழங்கப் படுகின்றது. ஆனால், அந்த உடை இருப்பதாலேயே அவர் மரணமடைய மாட்டார் என்று கூற முடியாது.
ஆயினும், அவர் மரணமடையும் வாய்ப்பை அந்த உடை வெகுவாகக் குறைக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அவர் அந்த கவச உடையுடன் கூடவே கையில் எதிரியை வீழ்த்த துப்பாக்கி எப்போதும் எதிரி கண்ணில் சிக்காமல் இருக்கும் யுக்தி போன்றவற்றை கடைபிடித்தால் தான் பிழைப்பார்.
அதுபோலவே, தடுப்பூசிப் போடப்பட்டிருந்தாலும் சமூக இடைவெளி, தனி மனித இடைவெளி, முகக்கவசம், கைகளைக் கழுவுதல் போன்றவற்றை முறையாகப் பேணுவதன் மூலம் நாம் மித/தீவிரத் தொற்று நிலையை அடைந்து மரணமடையும் வாய்ப்பையும் குறைக்கலாம். எந்த ஒரு யுக்தியும் 100 சதவீதம் பாதுகாப்பு தரும் என்று நம்ப இயலாது; நம்பவும் கூடாது.
இரு சக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் அணிய வேண்டும்; கூடவே, சாலை விதிகளை மதித்து அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடப்பக்க ஓரத்தில் வண்டியை செலுத்த வேண்டும். அதிலும் செல்போன் பேசாமல் ஓட்ட வேண்டும். வேகம் குறைவாக ஓட்ட வேண்டும். இத்தனையும் கூட்டாக செய்யும் போது அவர் விபத்துக்குள்ளாகாமல் பயணிக்கலாம். அதேபோன்றுதான் கொரோனா நோய்க்கு எதிராக நமது யுக்திகள் செயல்படுகின்றன.
எனவே, இந்த யுக்திகளால் போர்க்களத்தில் காக்கப்படும் உயிர்கள் தான் நமக்கு முக்கியம் இரு பக்கமும் இழப்புகள் இருக்கும். ஆனால், எந்தப் பக்கம் இழப்புகள் ஜாஸ்தி என்பதை கணக்கிட்டால் தடுப்பூசிப் போடப்படாத மக்கள் தொகையில் மிக அதிக அளவில் மரணங்கள் நிகழ்வதைக் கண்கூடாகக் காண முடிகின்றது. நீங்கள் நோய்த் தொற்றிலிருந்து காத்துக் கொள்ள விரும்பினால் உங்களுக்கான தடுப்பூசியை உடனே பெறுங்கள். இன்னபிற கொரோனா தடுப்பு நடவடிக்கைளையும் சேர்த்து கடைபிடியுங்கள்.
விண்ணை முட்டும் அளவிற்கு அறிவியல் வளர்ந்திருந்தாலும் உடைந்த துடைப்பம், கிழிந்த கையுறைகள், அறுந்த காலனிகள் அங்கும் இங்கும் ஒட்டுப் போட்ட நீல ஆரஞ்சு நிற ஆடைகளுடன், தினம்தோரும் குப்பைத் தொட்டி அருகேயும், சாலைகளிலும் தெருக்களிலும் நாம் கையுறை அணிந்து அள்ள முடியாத, கண்களால் கூடப் பார்க்க விரும்பாத குப்பைக் கழிவுகளை அவர்கள் வெறும் கைகளால் அள்ளிக் கொண்டிருப்பார்கள்.
இவர்களை நாம் சாலையில் நடக்கும் போதும் அல்லது பேருந்தில் பயணம் செய்யும் போதும் நம் அருகே வருவதற்கோ அல்லது அமருவதற்கோ அனுமதிப்பது இல்லை. சிலர் அவர்களின் மீது ‘அய்யோ பாவம்’ என அனுதாபமாகப் பார்ப்பதும், சிலர் அவர்கள் படும் துன்பத்தைப் பார்த்து மனதளவில் கோபம் கொள்வதும் உண்டு.
இருந்தாலும் இவர்களை நாம் கடந்து செல்லும்போது மூக்கை மூடிக் கொள்வது வழக்கம். மாறாக நாம் விரும்பும் அல்லது எதிர்பார்க்கும் சுத்தத்திற்குப் பின் இருக்கும் இந்த மக்களின் துயரமான வாழ்வை கொஞ்சம் கண் திறந்துப் பார்க்கவும் காதுக் கொடுத்து கேட்கவும் இவர்களின் நியாமானக் கோரிக்கைகளை அழுத்தமாகப் பதிவு செய்யவும் முனைகிறது இந்த கட்டுரை.
பெரும்பாலும் இவர்கள் யாரும் அடுக்கு மாடி குடியிருப்புகளிலோ அல்லது நகரத்தின் சுத்தமானப் பகுதியிலோ வாழ்பவர்கள் அல்ல. இவர்கள் அனைவரும் கால்வாய்க்கு அருகே இருக்கும் குடிசைப் பகுதிகளில் வாழும் உழைக்கும் மக்கள்.
10 ஆண்டுகளாக மீன்பிடித்தொழில் செய்து வந்த சிலரும் கூட இப்போது குப்பை அள்ளுகிறார்கள். சிலபேர் தங்களுக்குத் தகுந்த வேலை கிடைக்காததால் இந்த வேலையைச் செய்கிறார்கள். இதைவிட்டால் வீட்டு வேலை, ஹோட்டலில் பாத்திரம் கழுவுவது போன்ற வேலைகளுக்கு இங்கு வாழும் மக்கள் செல்வார்கள்.
தூய்மைப் பணியாளர்களாக வேலை செய்பவர்கள் தினந்தோறும 3 பகுதியாக வேலையை பிரிந்து செய்கிறார்கள். காலை 6 முதல் 2 மணிவரை ஒரு பகுதி, 2 முதல் 10 மணிவரை இரண்டாம் பகுதி, 10 முதல் 6 மணிவரை மூன்றாம் பகுதி என இடைவெளி விடாமல் வேலை செய்கிறார்கள்.
இவர்களுக்கு இந்த வேலை நிரந்தரம் கிடையாது. ஒப்பந்தம் முறையில்தான் ஆட்களை தேர்வு செய்கிறார்கள். இவர்களின் அதிகபட்ச ஒப்பந்த காலம் 8 ஆண்டுகள்தான். இடையில் தன் நிர்வாகத்தை எதிர்த்து கேள்வி கேட்டாலோ அல்லது தன் உரிமையை பற்றிப் பேசினாலோ அறிவிப்பு ஏதும் இல்லாமல் வேலையை விட்டு தூக்கி எறியப் படுவார்கள்.
எந்த அடிப்படை மருத்துவ வசதியும் இவர்களுக்கு கிடையாது. குப்பைகளை அள்ளும் போதும், குப்பைத் தொட்டிகளில் குப்பைகளை கால்களால் மிதிக்கும் போதும் கண்ணாடி இருந்து கை, கால்களை கிழித்தாலும் முதல் உதவி பெட்டிக் கூடக் கொடுக்கப் படுவதில்லை.
இவர்களை நேரில் சந்தித்து பேசும் போது, தங்களின் துயரங்களைச் சொல்கிறார்கள்.
“எங்களுக்கு வண்டி கொடுக்கப்பட்ட போது, வேலை சுமை குறையும் என்று நினைத்தோம் ஆனால், இபொழுது வேலை இரண்டு மடங்காக அதிகரித்து விட்டது. முன்பு குப்பை இருந்தால்தான் சுத்தம் செய்யப் போவோம். ஆனால், இப்போது குப்பைகளை தேடிச் செல்ல வேண்டும். தினமும் சராசரியக இவ்வளவு குப்பைகளை ஒப்படைக்க வேண்டும் என்பது கட்டாயம். (காய்கறி குப்பை என்றால் 65 கி, Plastic குப்பைகள் என்றால் 30 கி, உணவு பண்டங்கள் என்றால் 10 கிலோ)”
“அதைச் சரியாக ஒப்படைக்க வில்லையென்றால் நாங்கள் முழுநாள் வேலை செய்தாலும் அரைநாள் என்றுதான் பதிவு செய்வார்கள். கொரோனா ஊரடங்கு என்றால் அன்று கட்டாயம் வேலைக்கு வரவேண்டும் உடம்பு வலி என்று விடுப்பு கேட்டால் கூட தரமாட்டார்கள்.”
“காய்கறி குப்பைகளை சில உரம் தயாரிக்க கம்பெனிக்கு விற்று காசுப் பெறுகிறார்கள். ஆனால், எங்களுக்கு ஒருரூபாய் சம்பளம் கூட்டி தருவதில்லை.”
“எங்களுடைய மாதச் சம்பளம் ரூ.11,500. அதில், ESI மற்றும் PF பிடித்தம்போக ரூ.10,500 தான் எங்கள் கைக்கு வருகிறது அதிலும் பஸ் செலவு சாப்பாடு செலவு என பாதி பணம் செலவாகி விடும்.”
“கொரோனா காலங்களில் பஸ் வசதிக் கூட செய்து தரவில்லை. சில நாட்கள் 4 கிலோ மீட்டர் வரை நடந்தே வேலைக்கு வந்திருக்கிறோம். காலை 6 மணிக்கு வேலையில் இருக்க வேண்டும். அந்த நேரத்தில் எப்படி சாப்பாடு செய்துக் கொண்டு வரமுடியும். இவர்கள் தண்ணீர் கேட்டாலே தருவதில்லை சாப்பாடு எப்படி தருவார்கள் வேறு வழி இல்லாமல் அம்மா உணவகத்தில்தான் சாப்பிட வேண்டும். அங்கும் சில நேரங்களில் சிலருக்குதான் உணவு இருக்கும் மீதி இருப்பவர்கள் இரவு வீட்டிற்கு போய்தான் சாப்பிட வேண்டும்.”
“2 மாதத்திற்கு ஒரு முறைதான் முகக்கவசம் அல்லது கையுறை தருகிறார்கள் அதுவரை கிழிந்ததை தான் பயன்படுத்த வேண்டும். கிழிந்ததைக் கொடுத்தால்தான் புதிய முகக்கவசமும் கையுறையும் தருவார்கள். கொரோனா நேரத்தில் பயன்படுத்திய மருத்துவ கழிவுகளை வெறும் கைகளால்தான் நாங்கள் அள்ளி குப்பைத் தொட்டியில் போடுகிறோம்.”
“நாங்கள் இப்படி குப்பைகளை அள்ளுவதால் நோய் வரும் என்பதற்காக எங்களுக்கு 6 மாதம் ஒருமுறை தடுப்பூசி போட வேண்டும். ஆனால், அதைக்கூட இவர்கள் போடுவதில்லை.”
“கடைகளுக்குக் குப்பைகள் எடுக்கச் சென்றால் கடை அருகேக் கூட விடுவதில்லை கொஞ்சம் தொலைவில் குப்பைகளைக் கொட்டி எடுத்துச் செல்லச் சொல்கிறார்கள். வீடுகளில் குப்பை எடுக்கச் சென்றால் குப்பைத் தொட்டியில் கூட குப்பைகளைப் போட மாட்டார்கள். மேலும், குப்பைகளை யாரும் பிரித்து வைக்க மாட்டார்கள் நாங்கள் அந்த குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை எனப் பிரிக்க வேண்டும். நீண்ட நாட்களான குப்பைகளில் புழு வரத் தொடங்கி விடும். அதையும் வெறும் கைகளில்தான் அள்ளுகிறோம். எங்களுக்கு கை கழுவக் கூட தண்ணீர் தர மாட்டார்கள். குடிப்பதற்கு தண்ணீர் கேட்டாலே ஏதே கீழ் தரமான மனிதரைப் போல அருவருப்பாக பார்ப்பார்கள்” என்றெல்லாம் தங்களின் வாழ்க்கைத் துயரை விவரிக்கிறார்கள் தூய்மைப் பணியாளர்கள்.
“குப்பை எடுக்க போகும் இடங்களில் வயது முதிர்ந்தவராக இருந்தாலும் “ஏய் குப்பை” “குப்ப காரரே” என்றுதான் அழைப்பார்கள். அதிலும் ஒருவர் “நேற்று குப்பை எடுக்க சென்ற வீட்டில் ஒரு அம்மா மூன்றாவது மாடியில் இருந்து கீழே தூக்கி எறிகிறார்” என்றார்.
இப்படி இவர்களை ஒதுக்குவது, தீண்டத்தகாதவர்களாக நடத்துவது பெரும்பாலும் அப்பார்ட்மெண்ட் பகுதிகளில்தான் தீவிரமாக நடக்கிறதாம்.
இதில் தூய்மைப் பணி செய்யும் பெண்கள் ஆண்களை காட்டிலும் கடுமையான பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர் என்பதை பெண்களை சந்தித்தபோது அறிய முடிகிறது.
பெண் தூய்மைப் பணியாளர்களைச் சந்திக்கையில்…
“ஆடைகள் மாற்றுவதற்குக் கூட இடமில்லை. பொது வெளியில் தான் ஆடைகள் மாற்றி கொள்கிறோம். கழிப்பறை வசதி கூட செய்து தரவில்லை கடற்கரை அருகே வேலை செய்யும் போது கடற்கரை சுடு மணல் மீதுதான் சிறுநீர் மற்றும் மலம் கழிக்கிறோம். தெருக்கள் சுத்தம் செய்ய போகும் போது சில வீடுகளில் கழிப்பறைப் பயன்படுத்திக் கொள்ள சொல்வார்கள் சில வீடுகளில் அதுக்குக் கூட அனுமதிப்பதில்லை.”
“மாதவிடாய் காலங்களில் கூட விடுமுறை அளிப்பதில்லை அந்த வலியோடு வேலைக்குக் கட்டாயமாக வர வேண்டும். மாதவிடாய் நேரங்களில் பேண்ட் அணிந்து வேலை செய்வது மிகக் கஸ்டமாக இருக்கிறது புடவை அணிந்துக் கொள்கிறோம் என்று சென்னால் கூட கண்டுக் கொள்வதே இல்லை. எங்களின் அடிப்படை தேவையான நாப்கின் கூட தருவதில்லை.”
“துடைப்பம் கூட எங்கள் கை காசு போட்டுதான் வாங்கி வேலை செய்கிறோம். இரண்டு அல்லது மூன்று கிலோ மீட்டர் நடந்தே குப்பைகளை சுத்தம் செய்கிறோம். சோர்வில் சிறிது நேரம் உட்கார்ந்தால் கூட கேள்வி கேட்பார்கள், துளியும் மதிப்பது இல்லை.” என்கிறார்கள்.
அதில் ஒரு பெண் “வெயிலில் நீண்ட தூரம் நடந்தே குப்பைகளை எடுப்பதால் கால்கள் அதிகமாக வலிக்கிறது இரவில் வலி தாங்காமல் பல நாட்கள் அழுது இருக்கிறேன்” என்றார்.
ஆண்களை காட்டிலும் பெண்கள் இப்படி உடல் சார்ந்த பல்வேறுப் பிரச்சனைகளை தினந்தோறும் சந்திக்கிறார்கள். ஆனாலும், ஆண்களை விட பெண்களுக்கு சம்பளம் ரூ.1,000 குறைவு.
இவர்களின் இத்தகையப் பிரச்சனைகளுக்காவும் கோரிக்கைக்காகவும் (வேலை நிரந்தரம், பாதுகாப்பு உபகரணங்கள், பெண்களுக்கான அடிப்படை வசதி, முறையாக ஊதியம் தருவது, மருத்துவ வசதி (முதலுதவி உபகரணங்கள்) போன்றவையே…) நீண்ட காலமாகப் போராடி வருகின்றனர். ஆனால், எந்த பலனும் இல்லை.
இந்த சமூகத்தால் குறிப்பாக மேட்டுக்குடியினரால் புறக்கணிக்கபடுவது தீண்டப்படாதோராக சமூகத்தால் ஒதுக்கப்படுவது ஒரு பக்கம் என்றால் இந்தக் கார்ப்பரேட் நல அரசோ “துப்புரவுப் பணியாளர்கள்” என்ற பெயரை “தூய்மைப் பணியாளர்கள்” என மாற்றியதைத் தவிர இவர்களின் வாழ்வாதாரத்திற்காக ஒரு துரும்பையும் கிள்ளிப் போட்டதில்லை. மாறாக அடிப்படை மருத்துவ வசதிக் கூட செய்துதராமல் இவர்களை சாகடிக்கிறது.
ஓரளவிற்கு முன்னேறிய தமிழகத்திலே இந்த நிலை என்றால், வடமாநிலங்களில் யோசித்து பாருங்கள். மேடைக்கு மேடை தூய்மை இந்தியா என்று கத்தும் இந்த மோடி அரசோ, மாடுகளுக்கு செய்து தரும் வசதிகள் கூட மனிதனுக்கு செய்து தர மறுக்கிறது. ஆம்! ’வல்லரசு’ இந்தியாவில் தீண்டாமை சுவர் எழுப்பிய காவி கூட்டம்தானே இவர்கள்.
‘கொடுமை மட்டுமே தினசரி நிதர்சனம் என்ற சமூகத்தில் தொடர்ந்து வாழும் நிலை வந்தால் ஒன்று போராடுவது அல்லது அந்தக் கொடுமைக்கு வீழ்வது, இந்த இரண்டு தவிர மக்களுக்கு வேறு என்ன சாத்தியங்கள் இருக்கின்றன?’ என்று கேட்டார் ஏங்கெல்ஸ்.
இந்தியா இப்போது ஒரு பேரழிவில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. சிகிச்சை கிடைக்காமல் தன் உறவினர் இறந்து விட்டார் என்று ஒரு குடிமகன் மருத்துவமனை ஊழியரைத் தாக்குகிறான். இன்னொரு குடிமகன் ஆக்சிஜன் சிலிண்டரை கட்டிக் கொண்டு பிளாட்பாரத்தில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறான். பல்வேறு நிலைகளில் நம்மைத் தாக்கும் அழிவு காலம் இது.
இப்படி சிஸ்டம் மற்றும் அரசாங்கம் தோல்வி அடைந்து இருப்பதை விட, நம்மைப் பெரிதும் கவலையுற செய்வது ‘இது எதற்கும் மத்திய அரசு பொறுப்பில்லை’ என அரசின் ஆதரவாளர்கள் சொல்வதுதான்: அதுவும் இந்தியாவின் மாபெரும் இருண்ட காலங்களில் ஒன்றில் வாழ்ந்து கொண்டு அப்படி சொல்வது பெரும் அதிர்ச்சியைக் கொடுக்கிறது. அப்படி அரசுக்குத் தரும் ஆதரவு நமது ஜனநாயகத்தின் எதிர்காலத்தைப் பெரிதும் பாதிக்கப் போகிறது.
பத்தொன்பதாம் நூற்றாண்டு இங்கிலாந்து தொழிற்சாலைகளில் பணியிடங்கள் கொடுமையானக் கதியில் இருந்தன. சாமானிய வாழ்வாதாரத்துக்குக் கூட லாயக்கற்ற சூழ்நிலையில் அவை இயங்கிக் கொண்டிருந்தன. அப்படிப்பட்ட சூழலை உருவாக்கியது ஆங்கிலேய மேட்டுக்குடிகளும் அரசும்தான் என்று ஏங்கெல்ஸ் குற்றம் சாட்டுகிறார். அப்படிப்பட்ட சூழலில் பணிபுரியும், வாழும் ஊழியர்கள் நோயுற்று விரைவிலேயே அகால மரணத்தைத் தொடர்ந்து சந்தித்துக் கொண்டு இருப்பதை ஏங்கெல்ஸ் சுட்டிக் காட்டி ‘அது ஒரு சமூகப் படுகொலை’ என்று வர்ணிக்கிறார். என்ன, அங்கே அது கொலையாகத் தெரியவில்லை. காரணம், அங்கே கொலைகாரன் என்று யாரும் இருப்பதில்லை. அந்த சாவு இயற்கையான சாவாகவே தோற்றம் அளிக்கிறது.
இப்போது இந்தியாவில் நாம் காண்பது அதே போன்றதொரு சமூகப் படுகொலைதான். அதனால்தான் அரசை இதில் பொறுப்பாக்கத் தயங்குகிறோம். ஒரே வித்தியாசம், 1840-ல் ஏங்கெல்ஸ் வாழ்ந்த இங்கிலாந்தில் உழைக்கும் வர்க்கம் மட்டுமே கொள்ளை நோய்களால் பாதிப்புற்றது. இன்றைய இந்தியாவில் கொள்ளை நோய் எல்லாரையுமே தாக்குகிறது.
முதல் அலையின் பொழுது லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கான மைல்கள் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் படும் கொடுமைகள் நமக்குத் தெரியவில்லை. அதுவும் சமூகப் படுகொலைதான். அப்போதும் நாம் அரசைக் குறை சொல்லத் தயங்கினோம். அந்தத் தொழிலாளர்கள் ‘தாமாகத்தானே’ போய்க் கொண்டு இருக்கிறார்கள். யாராவது அவர்களைத் துரத்தினார்களா என்ன? அதேபோல, இப்போதும் இந்த இரண்டாம் அலைக்கு மக்களைத்தான் குறை சொல்லிக் கொண்டு இருக்கிறோம். ஆனால், நகைமுரண் என்னவெனில் ஃபிப்ரவரி மாதம் கோவிட்டை முறியடித்ததை பா.ஜ.க கொண்டாடிய பொழுது, அந்த வெற்றிக்கானப் பெருமையை பிரதமர் நரேந்திர மோடிக்குத்தான் கொடுத்தார்கள், மக்களுக்கு அல்ல.
சாமானிய மக்களிடம் நிபுணர் கமிட்டி கிடையாது. கொள்ளை நோய் ஆரூட வடிவங்கள் கிடையாது. ஆனாலும் தவறுக்கு அவர்களைப் பொறுப்பேற்க சொல்கிறோம். ஆனால், தேர்தல் கமிஷன் போன்ற அதிகாரம் மிகுந்த ஒரு அமைப்பு எட்டுக் கட்டத் தேர்தலை அறிவிக்கிறது. உத்தராகண்ட் முதல்வர் கும்பமேளாவை ஆதரித்துப் பேசுகிறார். நாட்டின் பிரதமர் தனக்கு மாபெரும் கூட்டம் குழுமி நிற்பதைக் கண்டுப் பெருமிதமுற்று வியக்கிறார். அவர் அப்படி வியந்த அதே தினம் இரண்டு லட்சம் இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இவை எல்லாம் அரசுகளின் செயல்தானே? இவற்றை எல்லாம் எப்படி மக்களின் தவறாகப் பார்க்க முடியும்?
இந்த அலைக்கானப் பொறுப்பில் இருந்து அரசை விடுவிப்பதன் மூலம் நாமும் இந்த சமூகப் படுகொலையில் பங்கு கொள்கிறோம் என்றுதான் அர்த்தம். சுடுகாடுகளில் உடல்கள் எரிபடுபவதை ஊடகங்களில் காட்டக் கூடாது. அவை இந்துக்களுக்குப் புனிதமான விஷயங்கள் என்று வாதிடுவதும் இதன் பகுதிதான். இதற்கு முன்பு நிறைய இந்துக்களின் தகனங்கள் வீடியோவில் பதிவு செய்யப் பட்டிருக்கின்றன, நேரடி ஒளிபரப்பும் நடந்திருக்கிறது. ஆனால், அதையெல்லாம் விட்டு விடுவோம். நாம் கேட்க வேண்டிய கேள்விகள் இவைதான்: ஆக்சிஜன் தட்டுப்பாடு வராமல் பார்த்துக் கொண்டிருந்திருப்பதன் மூலம் எத்தனை சாவுகளை இந்தியா தடுத்திருந்திருக்க முடியும்? மக்கள் ஏன் தங்கள் உற்றார் உறவினர்களை பிளாட்பாரங்களில், பார்க்கிங் இடங்களில் வைத்து தகனம் செய்யும் நிலை வந்திருக்கிறது? இவையெல்லாம் நமக்கு அவமானமாக இல்லை, ஆனால் இவற்றை ஊடகங்கள் பதிவு செய்வது மட்டும்தான் அவமானமா?
கொள்ளை நோயின் பிரச்சினைகளை மறைப்பது அந்த நோயை அடுத்த கட்டப் பேரழிவுக்குத்தான் இட்டுச் செல்லும் – இது எல்லாக் கொள்ளை நோய் நிபுணர்களும் ஒருமித்து எச்சரிக்கும் விஷயம். 2019-ல் கொரோனா தொற்றுத் துவங்கியப் பொழுது, ஆரம்பத்திலேயே சீனா அதனை மறைக்க முயற்சிக்காமல் இருந்திருந்தால் உலகம் இன்று இந்த நிலைக்கு வந்திருக்காது. அதனால்தான் நோய்த் தாக்கம் மிகுந்து சாவு எண்ணிக்கைகள் அதிகரித்த இதர நாடுகளில் ஊடகங்கள் முழு உத்வேகத்துடன் செயல்பட்டு முடிந்த வரை வெளிப்படையாக இயங்கின: இத்தாலி, ஈரான், அமெரிக்கா, பிரிட்டன், பிரேசில், பெரு, போன்றவை உதாரணங்கள். ஆனால், இந்தியா மட்டும் இதில் கலாச்சார ரீதியாக தனித்துவம் கொண்டதாக இயங்க முயல்வது பெரும் சோகம்.
மாபெரும் தந்தை பிம்பம் கொண்ட ஒருவர் கலாச்சார ரீதியாக புனிதப் பூச்சு பெற்று எந்தக் கேள்வியும் இல்லாமல் ஆட்சி செய்வதை ‘தந்தையாட்சி’ என்று சொல்வார்கள். (Patrimonialism) சமூகவியல் அறிஞர் மேக்ஸ் வெபர் உருவாக்கிய இந்தப் பதம் ஜனநாயகத்துக்கு எதிர்ப்பதமாக சில நேரங்களில் பயன்படுகிறது. கடந்த ஏழு வருடங்களாக இந்தியா அப்படிப்பட்ட ஒரு தந்தையாட்சியாகத்தான் செயல்பட்டு வருகிறது. என்ன, வழக்கமாக இந்த ஆட்சி முறை ஒரு குடும்பம், வாரிசு என்று செயல்படும். மாறாக இங்கே மதப்பெரும்பான்மைவாதக் கொள்கையை அடிப்படையாக வைத்து செயல்படுகிறது. போலவே, தேர்தல் வெற்றிகள் மட்டுமே கட்டற்ற அதிகாரத்துக்கு ஆதாரமாக முன்வைக்கப் படுகிறது. குடிமக்களின் கடமைகள் மற்றும் தேசபக்தி போன்றவை முக்கிய வாதங்களாக முன்னெடுக்கப் படுகின்றன. இதே போன்ற வாதங்கள் பணநீக்க நேரத்திலும் எழுந்தன.
இதில் நகைமுரண் என்னவெனில் அப்படிப்பட்ட அரசில் புனிதம் பெற்ற தந்தைக்கு எல்லாமே தெரியும், அவர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார், சரி செய்து விடுவார் என்று ஒரு புறம் பேசுகிறார்கள். ஆனால், குடிமக்களுக்கு ஆக்சிஜன் கிடைக்கவில்லை, ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை, பெட் கிடைக்கவில்லை. தந்தையோ சும்மா இருக்கிறார். கிடைக்காத எல்லாவற்றையும் அவர்களேதான் தேடித் தேடி பிடித்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. சக்தியும் வசதியும் இருப்பவர்கள் தேடிப் பிடித்துக் கொள்கிறார்கள். இல்லாதவர்கள் நிலை? இங்கே சமூக டார்வினிய தியரியான ‘வல்லவன் மட்டுமே பிழைப்பான்’ என்பது நிதர்சனமாகி விட்டது.
மத்திய சுகாதார அமைச்சர் ‘ஆக்சிஜன் பற்றாக்குறையே இல்லை’ என்று சொல்கிறார். ஆக்சிஜன் கேட்டுப் பதிவு இடுபவர்கள் மேல் உ.பி அரசு வழக்குப் பதிகிறது. ‘இறந்தவர்கள் திரும்பியா வரப் போகிறார்கள், எதற்கு அனாவசியமாக இறப்பு எண்ணிக்கை பற்றிப் பேச வேண்டும்’ என்று ஹரியானா முதல்வர் பேசுகிறார்.
கொரோனா எனும் கொள்ளை நோய் இந்த அரசாங்கத்திடம் இருந்த ‘புனிதத் தந்தை’ எனும் மேற்பூச்சை அரித்து உண்மை நிலையைக் காட்டி விட்டது.
(குறிப்பு : நிஸ்ஸிம் மன்னத்துக்கரன் கனடாவில் உள்ள டல்ஹவுசி பல்கலைக் கழகத்தில் பன்னாட்டு வளர்ச்சி ஆய்வுத் துறையில் உதவிப் பேராசிரியராக பணி புரிகிறார். இந்தியாவில் தற்போது பற்றி எரிந்து கொண்டிருக்கும் கொரோனா இரண்டாம் அலையை மத்திய அரசு அணுகும் விதம் குறித்து நேற்றைய ஹிண்டுவில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். அதனை அவரது உரிய அனுமதி பெற்று இங்கே மொழி பெயர்த்து இருக்கிறேன். )
கட்டுரையாளர் : நிஸ்ஸிம் மன்னதுக்காரன் தமிழாக்கம் : ஸ்ரீதர் சுப்பிரமணியம் செய்தி ஆதாரம் : The Hindu முகநூலில் : Sridhar Subramaniam
கடந்த ஒரு மாத காலமாக இஸ்ரேலின் அடக்குமுறைக்கு எதிரான பாலஸ்தீன மக்கள் போராட்டத்தின் தொடர்ச்சியாக காசாப் பகுதியில் இஸ்ரேலின் வான்வெளித் தாக்குதலால் குழந்தைகள் உட்பட 50-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் பலியாகியுள்ளனர். நூற்றுக்கணக்கில் படுகாயமடைந்துள்ளனர். இருத்தரப்பினருக்குமான வன்முறை என்று செய்திகள் பெரும்பாலும் கடந்துப் போகின்றன.
இஸ்ரேல் ஆக்கிரமிப்பு கிழக்கு ஜெருசலேத்திலுள்ள டமாஸ்கஸ் கேட் பிளாசா (Damascus Gate Plaza) புனித ரமலான் மாதத்தில் பத்தாயிரக்கணக்கான பாலஸ்தீன் முஸ்லிம்கள் ஒன்று கூடும் வழிபாட்டுத் தலமாகத் தொன்றுத்தொட்டு இருந்து வருகிறது.
ஏப்ரல் 16-ஆம் தேதி பல பத்தாயிரக்கணக்கான பாலஸ்தீனயர்கள் வழிபாட்டிற்காக வந்த நிலையில், பத்தாயிரம் பேர்களை தவிர மற்றவர்களை இஸ்ரேல் பாதுகாப்புப்படை வலுக்கட்டாயமாகத் திருப்பி அனுப்பியது. ஒட்டுமொத்த சிக்கலும் நீருப்பூத்த நெருப்பாக ஏற்கனவே இருக்க, சமீபத்திய சிக்கலின் தோற்றுவாயாக இது இருக்கிறது.
ஆழ்ந்திருக்கும் பனிப்பாறையின் நுனி மட்டுமே சமீபத்திய சிக்கல். இஸ்லாமியர்களுக்கு அல்-அக்ஸா(Al-Aqsa) பள்ளிவாசல் மூன்றாவது புனிதத் தளம். அது வீற்றிருக்கும் கோவில் மலை (Temple Mount) யூதர்களுக்கு புனிதத் தளமாகக் கருதப் படுகிறது. பாலஸ்தீனியர்களை அல்-அக்ஸாவிலும், கோவில் மலையிலும் கூடுவதைத் தடுக்கும் இஸ்ரேலின் நோக்கத்திற்குப் பின்னே பாலஸ்தீன ஆக்கிரமிப்பும், யூதக் குடியேற்ற வரலாறும் இருக்கிறது.
வெறுமனே ஆபிராகிமிய சமயங்களுக்குள் நடக்கும் சமய சிக்கலாக இதைப் பார்க்க முடியாது. இஸ்ரேலுடனான சவுதிக் கூட்டணியின் சமரசமும், அதன் டாலர் பொருளாதாரமும் இதை மறுக்கின்றன. இதற்குப் பின்னே, 100 ஆண்டுகால வரலாறு இருக்கிறது.
1920-1940 ஆண்டுகளில் ஐரோப்பிய நாடுகளில் இருந்தே யூதர்களின் வெளியேற்றமும், குறிப்பாக, இரண்டாம் உலகப்போர் காலக் கட்டத்தில் ஹிட்லரின் நாசி படைகள் நிழ்த்திய ஹோலோகாஸ்ட்டிலிருந்து தப்பிப் பிழைத்த யூதர்களுக்கான ஒரு நாடு தேவைக் கோரிக்கையும், தொடர்ச்சியாக 1948-க்கு பின்பு இஸ்ரேல் என்ற ஒரு நாட்டை பிரிட்டன் உருவாக்கியதும், மத்தியக் கிழக்கில் மேற்கத்திய வல்லரசுகளின் ஆதிக்கமும் பின்னனியில் இருக்கின்றன.
1967-ம் ஆண்டு அரபுப் போரில் பெற்ற வெற்றியின் தொடர்ச்சியாக ஜோர்டான் ஆற்றின் மேற்கு கரைப்பகுதியில் வீற்றிருக்கும் புனித தளமானப் பழைய ஜெருசலேத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்து அங்கு சட்டவிரோதமாக யூதக் குடியேற்றங்களை செய்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக இஸ்ரேலின் கோரப் பிடியில் சிக்கி பாலஸ்தீனம் பாலைவனமாகிவிட்டது. பொருளாதார ரீதியில் பாலஸ்தீனயர்கள் வீழ்ந்து விட்டனர்.
நவீனத் தகவல் தொழில்நுட்பமும், கொலைகாரப் போர்க்கருவிகளும் புடை சூழ்ந்திருக்கும் இஸ்ரேலுக்கு முன்னே ஏதுமற்ற ஒடுக்கப்பட்ட மக்களின் ஒரே நம்பிக்கையாக அவர்களது போராட்டங்களை பாலஸ்தீனிய போராட்டக்குழு ஹமாஸ் முன்னெடுத்து வருகிறது. இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஹமாஸின் இராக்கெட்டுகள் ஒரு சிறிய எதிர்வினை மட்டுமே.
பாலஸ்தீனியர்களின் வீரம் இராக்கெட்டுகளின் எண்ணிக்கையில் அல்ல. ஒட்டுமொத்த உலகமும் புறக்கணித்து விட்ட நிலையில், ஒவ்வொரு வீழ்ச்சிக்கு பின்னரும் மீண்டெழுந்துப் போராட்டங்களை முன்னெடுத்து வரும் அவர்களது எதிர்கால நம்பிக்கையில் மட்டுமே.
புகைப்படங்கள்
ஹமாஸின் இராக்கெட்டுகளுக்கு பதிலடிதான் இந்த தாக்குதல்கள் என்று இஸ்ரேல் கூறுகிறது. இதற்கு முன்பு, ஜெருசலேமின் அல்-அக்ஸா பள்ளிவாசலில் பாலஸ்தீனிய வழிபாட்டாளர்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு ஹமாஸ் அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது.
பாலஸ்தீனிய பகுதிகளான கான் யூனிஸ் (Khan Younis), அல்-புரேஜ் (al-Bureij) அகதிகள் முகாம் மற்றும் அல்-ஜைடவுன் (al-Zaitoun) சுற்றுப்புறங்களில் உள்ள இடங்களை இலக்காகக் கொண்டு இஸ்ரேலிய படைகள் செவ்வாய்க்கிழமை காலை வரை தொடர்ந்துக் குண்டுவீச்சு நடத்தின.
அல்-ஷாட்டி(al-Shat) அகதிகள் முகாமில் உள்ள ஒரு வீட்டை விடியற்காலையில் இஸ்ரேலிய போர் விமானம் தாக்கியதில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
காசா நகரத்தின் மீது இஸ்ரேலிய விமானம் வான்வழித் தாக்குதல்களை நடத்திய பின்னர் அழிக்கப்பட்ட கட்டிடத்தின் இடிபாடுகளை மக்கள் பார்க்கின்றனர்.
இஸ்ரேலிய தாக்குதல்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பது குழந்தைகள் உட்பட 24 ஆக உயர்ந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறைந்தது 106 பேர் காயமடைந்தனர். (சமீபத்திய தகவலின் படி 50 க்கும் மேற்பட்டவர்கள் பலி).
காசா, அல்-ஷதி(al-Shati) அகதிகள் முகாமில் இஸ்ரேலிய ஏவுகணையால் தாக்கப்பட்ட ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் கூரை இடிபாடுகளின் கீழ் தப்பியவர்களை பாலஸ்தீனியர் ஒருவர் தேடுகிறார்.
இஸ்ரேலியப் படைகளால தாக்கப்பட்ட பின்னர் பகுதியளவு உடைந்துபோன குடியிருப்பு கட்டிடத்தின் இடிபாடுகளை ஒரு பாலஸ்தீனியர் ஆய்வு செய்கிறார்.
தெற்கு காசா பகுதியில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களால் ஏற்பட்ட தீப்பிழம்புகள் மற்றும் புகையின் ஒரு காட்சி.
வடக்கு காசாவிலுள்ள பெயிட் லஹியா(Beit Lahiya) நகரில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து காயமடைந்த சிறுவனுக்கு மருத்துவப்பணியாளர் ஒருவர் மருத்துவம் பார்க்கிறார்.
காசாவில் இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல்கள் தொடுத்தப்பிறகு தனது குழந்தையை எடுத்துக்கொண்டு ஒருவர் தப்பி ஓடுகிறார்.
கோவிட்-19. பதிலளிக்கப்படாத கேள்விகள். ஆனால் இந்திய மக்கள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய பதில்கள்.
இந்தியாவில் கோவிட் : கே.விஜயராகவனுக்கு 35 கேள்விகள், வி.கே பால் மற்றும் பால்ராம் பார்கவா
ஊடகங்களில் பேட்டிகள் தந்துக் கொண்டிருக்கும் மத்திய அரசின் உயர்மட்ட விஞ்ஞானிகள் அதில், மிகக் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்பானவற்றை மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்திய மக்கள் எதைத் தெரிந்துக் கொள்ள விரும்புகிறார்களோ, அதை வெளிப்படுத்தத் தயங்குகிறார்கள்.
கோவிட்-19 நோய்த்தொற்றுப் பரவல் சென்ற ஆண்டு ஆரம்பித்தது முதல் ஊடகங்களில் மற்றும் பொது வெளிகளில் அவ்வப்போதைய நிலைமைகளை விளக்குவதற்காக மோடி அரசு மூன்று விஞ்ஞானிகளை நியமித்தது. அவர்கள்
வி.கே.பால் : நிதி ஆயோக் உறுப்பினர் மற்றும் தடுப்பூசிகளில் தேசிய நிபுணத்துவக் குழுவின் தலைவர்
பல்ராம் பார்கவா : இந்திய மருத்தவ ஆராய்ச்சிக் கழகத்தின் இயக்குநர் ஜெனரல்.
கே.விஜயராகவன் , வி.கே.பால் , பல்ராம் பார்கவா
தனியாகவோ அல்லது கூட்டாகவோ, அவர்கள் பல்வேறு அதிகாரத்துவத்தினர் மற்றும் அமைச்சர்களோடு சேர்ந்து, பொது மக்களுக்கு அறிவிக்கவும் வழிகாட்டவும் அதிகாரம் பெற்றவர்கள். கோவிட்-19லிருந்த மீண்ட, பிற ஜனநாயக நாடுகளில் உள்ள இவர்களின் சகாக்களை விட குறிப்பாக இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா, கேள்விகளைக் கையாள்வதில் இவர்களுக்கு அக்கறையும் பொறுப்பும் மிகக் குறைவாகவே உள்ளது.
நோய்த்தொற்று பரவல் மற்றும் அதன் விளைவுகள் குறித்து, நான் இந்தியா மற்றும் சர்வதேச அளவில் நிபுணர்கள் பலரிடம் தொடர்ச்சியாகப் பேட்டிகளை எடுத்து மக்களின் பார்வைக்குக் கொண்டு வருவதன் ஒரு பகுதியாக, இந்திய அரசு தரப்பு நிபுணர்களிடம் சென்ற ஆண்டுக் கடுமையாக முயற்சி செய்தேன். எனது வேண்டுகோள்கள் அவ்வளவும் பலனற்றுப் போயின. எங்களுக்கு அவர்கள் பேட்டி எதுவும் தரமாட்டார்கள் என்று நிச்சயமாகத் தெரிந்த நிலையில், எனது மனதில் இருக்கும் கேள்விகளை பொது வெளியில் வைக்க வேண்டும் என விரும்புகிறேன். அவர்களிடம் யாராவதுப் பேசும்போது இது பற்றிக் கேட்பார்கள் என்ற நம்பிக்கையில்.
கோவிட்-19 எவர் ஒருவரும் இப்படி திடீரெனப் பரவுமென்றோ இவ்வளவு தீவிரமாக இருக்குமென்றோ எதிர்பார்த்திருக்கமாட்டார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ‘இது கிட்டத்தட்ட இல்லை என்றாலும் தவிர்க்க முடியாதது எதிர்பார்த்ததை விட அதிகமாக இல்லை’ அப்படியெல்லாம் ஒன்று இருக்கக் கூடுமா? ஐரோப்பாவும் அமெரிக்காவும் இரண்டு மற்றும் மூன்று அலைகளை அனுபவித்து விட்டார்கள் என்பது நம் கண்முன்னே நடந்தப் போதும் இந்தியாவில் பரவுவதின் தாக்கம் ஒரு அலையுடன் ஓய்ந்து விடும் என்று நம்பியதுப் பலன் தந்ததா?
அவர்கள் பிரதமர் மோடியிடம் மற்றும் மத்திய அரசாங்கத்திடம் இரண்டாவது அலையை தவிர்க்க முடியாது எதிர்கொண்டுதான் ஆகவேண்டும் என்று ஆலோசனை தெரிவித்தார்களா?
ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் முதல் அலையை விட இரண்டாவது அலையின் தாக்கம் மிக மோசமாக இருந்ததைக் கணக்கிலெடுத்து பிரதமர் மோடி மற்றும் அரசாங்கத்திற்கு இந்தியாவிலும் அதே போன்றுதான் நிலைமை மோசமாக இருக்கும் என எச்சரித்தார்களா?
ஜனவரியில் முதல் அலையை எதிர்கொள்ள தலைநகர் டில்லியில் உருவாக்கப்பட்ட ‘DRDO சாத்சங் மையங்கள் மற்றும் மும்மையில் உருவாக்கப்பட்ட ஜம்போ மையங்கள்’ ஆகியவை அகற்றப்பட்ட போது ‘இது தவறானது என்றும் இரண்டாவது அலை வரும் போதுக் குறிப்பாக முதல் அலையை விட மோசமானதாக இருந்தால் மும்பையும் டில்லியும் தயாரிப்பு நிலையை கைவிட்டதாக ஆகிவிடும்’ என்றும் (மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களிடம்) அரசுக்கு இந்த நிபுணர்கள் ஆலோசனை தெரிவித்தார்களா?
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் குறிப்பிட்டிருந்தப் படி ஏப்ரல் 2020-ல் அதிகாரப் பீடத்திலிருந்தக் குழுவின் தலைவர் வி.கே.பால் ஆக்சிஜன் பற்றாக்குறையை மற்றும் அதன் உற்பத்தியை விரிவுப் படுத்துவதன் தேவையை முன்னறிந்துக் கொண்டு இது பற்றி என்ன நடந்துக் கொண்டிருந்தது என்பதைக் கண்காணித்தார்களா? அதன் தொடர்ச்சியான நடவடிக்கைகள் மிக தாமதமாவது அல்லது இல்லாமலே இருப்பது ஆகியவற்றை பற்றி அரசுக்குத் தெரிவித்தார்களா?
மிகப் பெரிய தேர்தல் பேரணிகள், கும்பமேளாவில் கூடும் லட்சக்கணக்கான மக்கள் கூட்டங்கள், 60,000 பார்வையாளர்களோடு நடைப்பெறும் கிரிக்கெட் போட்டிகள் ஆகியவை கோவிட் காலக் கட்டுபாடுகள் எதையும் கடைப்பிடிக்காத நிலையில் அவை ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என்பதோடு எளிதாகத் தொற்றை மிக வேகமாகப் பரவச் செய்யும் நிகழ்வுகளாக மாறிவிடும் என்று அந்த நிபுணர்கள் மத்திய அரசுக்கு எச்சரிக்கை ஆலோசனை சொன்னார்களா?
கடந்த ஆண்டு மே, ஜீன் மாதங்களில் பிஃபிசர் மொடெர்னா மற்றும் அஸ்ட்ராஜெனிகா ஆகியவை இரணடு டோஸ் கொண்ட மருந்துகளை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள் என்பது தெளிவாகத் தெரிந்த நிலையில் இந்தியாவின் 75 சதவீத மக்களுக்கு முழுமையாக தடுப்பூசிகள் போடப்பட வேண்டுமானால் இந்தியாவிற்கு இரண்டு பில்லியன் (அ) இருநூறு கோடி ஜப்கள் தேவைப்படும் என்பதை அந்த நிபுணர்கள் கணக்கிட்டார்களா? இந்த குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இந்தளவு டோஸ் மருந்துகளைத் தயாரிக்குமளவு இந்தியாவின் மொத்த உற்பத்தி திறன் போதுமானதாக இல்லை எனும் நிலையில் அதை மிக விரைவாக உயர்த்த வேண்டும் என்பதை உணர்ந்தார்களா? அப்படி ஒரு முடிவுக்கு அவர்கள் வந்திருந்தால் அதை – இது சாதாரண கணக்குதான்! விண்கோள் விஞ்ஞானமல்ல! – முறையாக அரசாங்கத்திற்கு ஆலோசனை சொன்னார்களா?
இப்படிப்பட்ட ஆலோசனைகளைப் பிரதமருக்கும் மத்திய அரசாங்கத்துக்கும் தெரிவிக்கவில்லையென்றால் ஏன் தெரிவிக்கப்படவில்லை?
இங்கிலாந்து அமெரிக்கா ஐரோப்பிய யுனியன் ஆகிய நாடுகள் தடுப்பூசிகளின் ஆய்வு உற்பத்தி ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்துக் கொண்டிருந்தனர் மற்றும் தடுப்பூசிகள் தடையில்லாமல் விநியோகிக்க ஏற்றவாறு கொள்முதலுக்கான முன் ஆர்டர்களை செய்துக் கொண்டிருந்தப் போது இந்த நிபுணர்கள் நமது அரசாங்கத்திடம் அதை சுட்டிக்காட்டி செயல்படத் தூண்டினார்களா? அவர்கள் செய்திருந்தால் அதற்கான அரசின் பதில் செயல்பாடு என்ன? அவர்கள் செய்திருக்காவிட்டால் ஏன் செய்யவில்லை? எது தடுத்தது?
முன்னதாக ஜீலை 2020-ல் டாக்டர் பல்ராம் பார்கவா அந்த ஆண்டு சுதந்திரத் தினத்திற்கு முன்னதாக கோவாக்சின் அதனுடைய மூன்றாவது கட்ட மருத்துவ சோதனைகளை முடித்து விட வேண்டுமென, அதாவது ‘இரண்டு மாதங்களுக்குள்’ எனக் கூறியுள்ளார். தன்னளவில் ஒரு மருத்துவ ஆய்வாளரான அவர் ஒரு ஆரோக்கியமான மருத்துவ சோதனைகளை இந்த குறுகிய காலக்கட்டத்திற்குள் முடித்து விட முடியும் என்று எப்படி நம்பினார்? அவரது குறிப்புகள் மருத்துவனைகளுக்கான ஒரு வித மிரட்டலுடன் இணைந்து வந்ததாகக் கருதப்படுகிறது. அரசாங்கத்தின் வேறு எந்த மட்டத்திலிருந்தாவது இந்த வழிகாட்டல் வந்ததா? (ஏனெனில் இம்மாதிரியான நிறுவனங்களுக்கு அனுமதியோ வழிகாட்டலோ கொடுக்கும் அதிகாரம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்திற்கு ICMR கிடையாது).
கோவாக்சினின் கட்டம் 3 சோதனை செயல் திறன் முடிவுகள் கிடைக்காத போது, விரைவான “மருத்துவ சோதனை முறை” ஒப்புதல் என்று அவர்கள் அரசாங்கத்திற்கு அறிவுறுத்தியிருந்தால் விஞ்ஞான நெறிமுறைகள் மற்றும் நடைமுறையின் மீறல் மட்டுமல்ல, தடுப்பூசிகள் பற்றிய தயக்கத்தையும் தீவிரமாக அதிகரிக்கும்?
ஜனவரியில் கோவாக்சினை வெளிக் கொண்டு வந்ததில் வைக்கப்பட்ட வாதங்களை விளங்கிக் கொள்வதற்கு இந்த வேளையில் எழுப்புவதற்குரிய உபக்கேள்விகள் சில இருக்கின்றன.
அ. கோவாக்சினின் சக்தியை விலங்குகளின் மீதான சோதனைகள் மற்றும் அதன் முதல் கட்டம் மற்றும் இரண்டாம் கட்ட சோதனை முடிவுகளிலிருந்து பெற்றுக் கொள்ளலாம் என்று டாக்டர் பார்கவா ஒரு செய்தியாளர் சந்திப்பில் விளக்கினார். அப்புறம் எப்படி டாக்டர் காகன்தீப்கங், டாக்டர் சாகித் ஜமீல் மற்றும் பிறருடைய கேள்விகளுக்கு பதிலளிக்கிறார். முதலில் மருத்துகளுக்கு அனுமதி கொடுப்பதில் விலங்குகள் மீதான சோதனைகள் பயன்படுத்தப் படுகின்றன என்பது உண்மைதான். ஆனால், விலங்குகள் மனிதனின் நோய்களை முறையாகப் பிரதிபலிக்கும் போது மட்டுமே அது சாத்தியமாகும். இதுவரை கோவிட்-19ல் அப்படி இல்லை. கோவாக்சினில் விலங்கு சோதனைகள் எவ்வாறு அதன் செயல்திறனைக் காட்ட முடியும்.
ஆ. இரண்டாவது முதல் கட்ட சோதனைகள் என்பது பாதுகாப்பை உறுதிபடுத்திக் கொள்ளத்தான் அதுவும் நீண்டகாலப் பாதுகாப்புக்கல்ல மற்றும் பக்கவிளைவுகளிலிருந்து பாதுகாப்பு அவ்வளவுதான் செயல்திறனுக்கானது அல்ல.
இ. மூன்றாவது முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட மருத்துவசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 800 மட்டுமே. ஒரு தடுப்பூசியின் செயல்திறனை நிறுவுவதற்கு இந்த எண்ணிக்கை போதுமானதல்ல.
மே ஒன்றாம் தேதியிலிருந்துப் பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட எல்லோரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற அரசின் முடிவையொட்டி விஜயராகவன் வி.கே.பால் மற்றும் பல்ராம் பார்கவா மூவரும் கீழ்கண்ட கேள்விகளை எழுப்பனீர்களா?
அ. இந்தியாவின் தற்போதைய தடுப்பூசிகள் உற்பத்தி திறன் ஒரு நாளைக்கு மொத்தமாக 2.5 மில்லியனுக்கும் (25 லட்சம்) கீழ்தான் எனும் போது, பதினெட்டிலிருந்து நாற்பத்தி நான்கு வயதுகுட்பட்ட 595 மில்லியன் (59 கோடியே 50லட்சம்) மக்களுக்கு அறிவிக்கப்பட்டப்படி மே ஒன்றாம் தேதி முதல் தடுப்பூசிப் போடுவது சாத்தியமா?
ஆ. 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக தடுப்பூசிகளும் அதற்குட்பட்ட வயதுள்ளவர்கள் தடுப்பூசிகளைக் கட்டணம் கொடுத்துப் போட்டுக் கொள்ள வேண்டும் என்பதும் சரியா? இது நீதிநெறிமுறைகேள்வி சார்ந்த அல்ல. ஆனால், அனுபவரீதியான ஒன்று. 44 வயதுக்குட்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் ஏழைகள். இரண்டு தடுப்பூசிகளுக்குக் கட்டணம் கொடுக்க முடியாமல் தள்ளிப் போக்கூடிய அபாயம் இருக்கிறது.
இ. மத்திய அரசு இலவசமாகத் தடுப்பூசிகளை மக்களுக்குக் கொடுக்கும் போது மாநில அரசுகள் மட்டும் ஏன் கட்டணம் வாங்க வேண்டும்? எல்லோரும் இந்த நாட்டு மக்கள்தானே? இதில் என்ன வேறுபாடு இருக்கிறது?
ஈ. மாநில அரசுகளை தனியார் நிறுவனங்களுடன் போட்டியிட வைப்பது சரியா? ஏற்கனவே சீரம் இன்ஸ்டிடியுட், பாரத் பயோடெக் நிறுவனங்கள் மாநிலங்களுக்காக ஒதுக்கியுள்ள 50 சதவீதத் தடுப்பூசிகளுக்காகப் போட்டிப்போட்டுக் கொண்டிருக்கும் போது தனியார் நிறுவனங்களையும் அதே 50 சதவீத ஒதுக்கீட்டில் போட்டிப்போட வைப்பது எப்படி சரியாகும்?
கோவாக்சின் என்பது உள்நாட்டில் வளர்த்தெடுக்கப்பட்ட தடுப்பூசி. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் ஆதரவு மற்றும் கூட்டு ஒத்துழைப்புடன் உருவாக்கப் பட்டிருக்கும் போது அவர்கள் பாரத் பயோடெக்கின் அறிவுசார் சொத்துரிமையை வாங்கிக் கொண்டு இந்த தடுப்பூசிகளின் உற்பத்தியை சாத்தியமான அதிகளவில் செய்ய உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஏற்பாடுகள் செய்வதற்கான ஆலோசனை தெரிவித்தார்களா? இது மற்ற கோவிட்-19 தடுப்பூசிகளின் ஐ.பி உரிமைகளை நீக்க தொடர்ந்து உலக சுகாதார நிறுவனத்திடம் வேண்டுகோள் விடுத்துக் கொண்டிருக்கும் இந்தியாவின் முயற்சிகளுக்கு வலு சேர்ப்பதாக இருக்குமே?
இந்தியாவில் கோவிட்-19ல் ஏற்பட்டிருக்கும் உயிர் பலிகளின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக 2,00,000 என்று அறிவிக்கப் பட்டுள்ளது. நடைமுறையில் இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரும் இதுதான் மொத்தம் என்று நம்புகிறார்கள். நம்ப முடியாவிட்டாலும் இது குறைவான எண்ணிக்கை என்பதுதான் உண்மை. அவர்கள் எப்படி இதுதான் சரியான எண்ணிக்கை என்று இந்தியாவை ஏற்றுக் கொள்ள வைக்கப் போகிறார்கள்?
தடுப்பூசிகள் போடப்பட்ட பிறகான எதிர்விளைவுகள் பற்றிய தகவல்கள் கொடுப்பதை பிப்ரவரி 26, 2021-லிருந்து அரசாங்கம் ஏன் நிறுத்திவிட்டது? சுகாதார அமைச்சகத்தின் சார்பாக ஒரு இணையான ஆராய்ச்சி நடத்தப்பட்டதில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் அனுபவம் போல கோவிஷீல்டு போட்டுக் கொள்வதால்தான் ரத்தம் கெட்டியாகிறது என்பதற்கான எந்த சம்பந்தமும் கண்டுபிடிக்கவில்லை. பல மாநிலங்களில் ஏற்கனவே இதைப் போன்றவற்றை அனுபவித்துக் கொண்டும், அதனால் நேர்ந்த மரணங்களை மறைக்கின்ற ஒரு செயல்பாட்டிலும் இருக்கும் போது, இந்த முடிவு எந்தளவு நம்பகத் தன்மையானது?
ஜாமி முல்லிக் இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையில் ஏப்ரல் 27-ல் கடந்த நான்கு வாரங்களாக ஒவ்வொரு வாரமும் சராசரி உயிர்பலிகளின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்து வருகிறது. உண்மையில் கடந்த வாரம் இது 84 சதவீதமாக உயர்ந்தது. அதன் காரணமாக இந்தியாவின் மரணங்களின் அளவு பிப்ரவரியில் 7 சதவீதத்திலிருந்து கடந்த வாரத்தில் 1.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது நமக்கு உணர்த்துவது நாம் அதிகக் காலத்திற்குக் குறைந்த அளவு மரண விகிதம்தான் என்று பேசிக் கொண்டு வசதியாக இருக்க முடியாது என்பதைத் தானே?
அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் அளவு ஒரு நாளைக்கு சற்றேறக்குறைய 4,00,000-ஆக அதிகரித்தள்ளது. அதனால் விளையும் உயிர்பலிகளின் அளவு 1.7 சதவீதத்திற்கு குறையாமல் இருந்தால் நாம் ஒரு நாளைக்கு 6,800 அளவுக்கு பலிகளை எதிர்பார்க்கலாமா?
இந்த இடத்தில் யாராவது ஒருவர் பெரியக் கேள்வியாகக் கேட்கக்கூடும். எப்போதும் இந்திய நோயாளிகள் மற்றும் அதனால் பலியானவர்களின் எண்ணிக்கையை ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்கா ஆகியவற்றுடன் மட்டும் ஒப்பிட்டுப் பேசுகிறார்களே! பக்கத்து நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நேபாள், குறைந்தபட்சம் மலேசியா, தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகியவற்றுடன் ஒப்பிட மாட்டேன் என்கிறார்களே ஏன்? ஏனெனில் உயிர்பலிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனுக்கு என கணக்கிடும் பொழுது அந்த நாடுகளில் குறைவாக இருப்பதால் இந்தியா நிலைமை மோசமாக இருக்கும். அதே ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் நமது நிலைமை பரவாயில்லையாகத் தோன்றும் என்பதாலா?
அவர்கள் நம்பிக்கொண்டிருப்பது ஒவ்வொரு நாளும் கண்டுப் பிடிக்கப்படாத அதிகரிப்புகள் தான் என்பதை ஏன் நம்மிடம் நேர்மையாக ஒத்துக்கொள்ளக் கூடாது? அதிகாரப்பூர்வமான அதிகரிப்பு என்பது ஒரு நாளைக்கு சற்றேறக்குறைய 4,00,000 என்பது நமக்கு தெரியும். இதே கண்டுபிடிக்கப்படாத அதிகரிப்புகளைப் பல்வேறு நிறுவனங்கள் வெவ்வேறு கணக்கீடுகள் தருகின்றன. புரபசர்.கெளதம்மேன்ன் இதைவிட 20-25 மடங்கு அதிகம் என்கிறார். ஸீரோலாஜிக்கல் சர்வே கடந்த முறை பிப்ரவரியில் 27.5 மடங்கு என அரசாங்கமே வெளியிட்டது. சியாட்டில் உள்ள ஐ.எச்.எம்.ஐ., இது 29 மடங்குக்கு அதிகம் என்கிறது. ஆனால் நம்மிடம் சொல்லக் கூடிய நிலையிலிருக்கும் இந்த மூன்று கனவான்களும் நமது அரசாங்கத்தின் பார்வை என்ன என்று சொல்வார்களா? அவர்களுக்கு நமக்கு அறிவிக்க வேண்டியக் கடமையும் இருக்கிறது தானே?
மே மாத ஆரம்பக் காலங்களில் தினமும் 5,00,000 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவார்கள் என பேராசிரியர் ப்ராமார்முகர்ஜி தனது கணக்கீடாக தெரிவித்திருக்கிறாரே மே இறுதியில் இந்த அலையின் உச்சக்கட்டமாக இது அதிகரித்து அதிகபட்சமாக 10 லட்சம் தினசரி பாதிக்கப்படுவார்கள் என்பது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
கோவிட்-19 நோயாளிகளுக்குப் பல்வேறு மருந்துகளை எந்தவித தேவைப்படும் சான்றுகள் இல்லாமலேயே கேள்விக்குரிய மருந்துகளைக் கட்டுப்பாட்டு ஜெனரல் (Drug Controller General) அனுமதித்துள்ளார்கள். அந்த மருந்துகள் டோஸிலிசுமாப் இடோலிசுமாப் ஃபவிபிராவிர் தற்போது வைராஃபின்.சுகாதார அமைச்சகமும் தனது பங்குக்கு ஹைட்ரோக்சிக்ளரோக்யூன் என்ற மருந்தை உபயோகிக்க அனுமதித்துள்ளது. அதன் செயல்திறன் பற்றி எந்த சான்றுகளும் இல்லாமல். அதோடு, அதன் பக்கவிளைவுகளும் அற்பானவை அல்ல. நீங்களே அறிவியல் அறிஞர்களாகவும் இருப்பதால் விஜயராகவன் பால் பார்கவா DCGI முடிவு பற்றி அதனிடம் விவாதித்தீர்களா? அவற்றின் பயன்பாட்டை அரசாங்கம் தொடர்ந்து அங்கீகரிப்பதற்கு எதிராக இந்த மருந்துகள் பற்றிய நிபுணர்களின் நியாயமான சந்தேகத்தின் பலனைப் பொதுக் களத்தில் அவர்கள் எப்படி கட்டம் கட்டுகிறார்கள்?
நாம் வைரல் ஸ்ட்ரயின்ஸ் (viral strains) பற்றி பேசுவோம். பஞ்சாபில் பரவுவதற்கு முக்கியக் காரணம் பி.1.1.7 ஸ்ட்ரயின் (முதலில் இங்கிலாந்திலிருந்து தகவல் தரப்பட்டது) அல்ல. ஆனாலும், சமூகப்பரவல் நிலைமையை அடைந்தது என்பதை அவர்கள் ஒத்துக்கொள்கிறார்களா?
பி.1.617 ஸ்ட்ரயின் பற்றிய விவரங்களை ஏன் பகிர்ந்துக் கொள்ளவில்லை? இரண்டுமே மிக சுலபமாகப் பரவக் கூடியது மற்றும் பத்திரிக்கைகளில் பரவலாக வந்துள்ள தகவல் படி அநேகமாக தடுப்பூசிகளுக்கு அதிக எதிர்ப்பை தரக்கூடியது என்பதாலா? “மாற்றுருவின் தீவிரம் மற்றும் பரவக் கூடிய தன்மை பற்றி சிறியளவு சான்றுகளே இருப்பதாக” சமீபத்தில் இங்கிலாந்தின் சிறந்த விஞ்ஞானிகள் ‘பைனான்சியல் டைம்ஸ்’-ல் சுட்டிக்காட்டியிருப்பதுடன் ஒத்துப்போகிறார்களா? அவர்கள் ஏன் தங்களுக்குத் தெரிந்ததை நமக்கு சொல்ல மறுக்கிறார்கள்? ஜாக்கிரதையாகவும் நிதானமாகவும் செய்திகளை நம்மிடமிருந்து மறைக்கிறார்கள்? இதன் மூலம் இந்திய மக்களை ஊகவணிகத்திற்கும் தவறானச் செய்திகளுக்குப் பலியாகவும் அதன்பலனாக மிகையான எண்ணங்களுக்கும் ஏன் பீதியடையவும் விட்டுவிடுகிறீர்கள்?
பிரதமர் திரும்ப திரும்ப அரசியல் பேரணிகளை நாட்டின் நீள அகலங்களில் நடத்தி (அஸாமிலிருந்து கேரளா மே.வங்கம் தமிழ்நாடு) அவரால் ஈர்க்கப்பட்ட கூட்டத்தின் அளவில் தன்னையே மெச்சிக் கொண்டு அதன்மூலம் அரசாங்கத்தின் கோவிட் கால கட்டுப்பாடுகளான சமூகஇடைவெளிப் பாதுகாத்தல், மாஸ்க் அணிதல் ஆகியவற்றை அலட்சியபடுத்தி தன்னளவில் ஒரு முன்னுதாரணத்தை வைத்துவிட்டதாக அவர்கள் பிரதமரிடம் எடுத்துச் சொன்னார்களா?
உண்மையில் ஒரு மிக ‘சிறந்த பேச்சாளர்’ என்று நாடெங்கும் விரிவாக அறியப்பட்டிருக்கும் நமது பிரதமரிடம் மக்களிடம் மாஸ்க் அணிவது சமூகஇடைவெளிக் கடைபிடிப்பது ஆகியவற்றுக்கான அவசியத்தை விளக்கி கட்டாயம் அணிய வேண்டும் கடைபிடிக்க வேண்டும் என்பதை- சுயமுயற்சியாக திரும்ப திரும்ப செய்ய வேண்டும் என்று எடுத்துச் சொல்ல வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்களா? ஒவ்வொரு வீடுகளுக்கும் இந்த செய்தியை அறிவுறுத்தி செய்ய தூண்டுவது தொலைக்காட்சிகளில் வீடியோ மற்றும் வணிக விளம்பரமாக வரும்படி செய்து மக்களுக்கு ஞாபகப் படுத்திக் கொண்டே இருக்கும் வண்ணம் வாராவாரமோ அல்லது அவசியத்திற்கேற்ப தினசரியோ செய்தியாளர் சந்திப்புகளை நடத்தச் சொல்லி கேட்டுக் கொண்டார்களா?
சென்ற ஆண்டு தி வயர் அறிவியல் செய்தப் புலனாய்வில் சந்தையில் காலம் கடந்த மாஸ்க்குகளும் போலி N95 மாஸ்க்குகளும் இருப்பதை கண்டறிந்தோம். இப்போதும் பாதுகாப்பாக இருப்பதற்கு ஏற்ற மாஸ்க் பற்றி மக்களிடையே குழப்பமே நீடிக்கிறது. இது பற்றி ஒழுங்குமுறைகள் இருக்கின்றன. ஆனால், அவை எல்லாமே தொழில்நுட்பரீதியாக மற்றும் அமுலாக்கம் சுத்தமாக இல்லை. சரியான மாஸ்க்குகள் வாங்கவும் உபயோகிக்கவும் மக்களுக்காக அரசாங்கம் இதுவரை என்ன செய்திருக்கிறது?
மக்களின் முறையான நடவடிக்கைகளுக்கு எதிரான அறிவியலுக்கு எதிரான அறிக்கைகளை அமைச்சர்கள் கொடுக்கும் போது அவர்கள் அரசாங்கத்திடம் என்ன சொல்வார்கள்? உதாரணத்திற்கு, அஸாம் சுகாதார அமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா “என் மாநிலத்தில் மாஸ்க் அணிய தேவையில்லை” என்கிறார் அல்லது உத்திரக்காண்ட் மாநில முதலமைச்சர் திரத்சிங் ராவட் “கடவுளின் மகிமை ஒன்றேப் போதும் கங்கா நதி மாதாவின் சக்தி மக்களை கோவிட்-19லிருந்து காப்பாற்றும்” என்கிறார்.
ஆயுஷ் அமைச்சகத் துறை கோவிட்-19ஐ எதிர்த்துப் போராட ‘மாற்று மருந்துகளை’ முன்வைத்து உபயோகிக்க சொல்கிறது. மும்பை நகரத்திலும் மற்றும் தெலுங்கானா மாநிலமும் ஹோமியோபதி மாத்திரைகளை தங்களது மக்களுக்கு விநியோகிக்கிறது. பாபா ராம்தேவ் மற்றும் அவரின் நிறுவனம் பதஞ்சலியும் ‘கோரோனில்’ என்ற மருந்தை கோவிட்-19க்காக சந்தைப் படுத்தியது. அதன் அறிமுகவிழாவில் மத்திய சுகாதார அமைச்சர் தலைமை விருந்தினராக கலந்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மிக சமீபமாக இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்திற்கு முன்னதாக ‘பசு அறிவியலில்’ குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காட்டவில்லை என்பதற்காக இதே அமைச்சர் ஹர்ஷவர்தன் பல அமைச்சகங்களை திட்டித்தீர்த்துக் கொண்டிருந்தார். நீங்கள் தான் சான்று அடிப்படை மருந்துகளுக்காக வாதாடுபவர்கள். இதில் எந்த தீர்வுகளும் நோயாளிகளுக்கு உதவி செய்யும் அல்லது காப்பாற்றும் என்பதை நிரூபிக்க எந்தவித ஆதாரங்களும் இல்லாதபோது அவற்றின் தொடர்ந்த உபயோகத்தை எப்படி நீங்கள் அனுமதித்திருக்கறீர்கள்.
“கொரோனாவை அடக்கி ஒடுக்குவதில் வலிமையுடன் வெற்றிப் பெற்றிருப்பதாக” கடந்த ஜனவரியில் டாவோஸில் World Economic Forum கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியிருக்கிறாரே? அல்லது பாஜக பிப்ரவரி 21 அன்று “இந்திய மோடி அரசு கோவிடை வென்றுவிட்டதாக” ஒரு தீர்மானத்தை வெளியிட்டிருக்கிறார்களே? மார்ச் 7 அன்று மருத்துவர்கள் கூட்டத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் “இந்தியாவில் கோவிட்-19 தொற்று அபாயத்தின் இறுதி ஆட்டத்தில் இருக்கிறோம்” என்கிறாரே? இதைப் பற்றியெல்லாம் அவர்கள் என்ன சொல்கிறார்கள்? இவையெல்லாம் நடப்புக்கு எதிரானது மற்றும் நியாயமற்றக் கருத்துகள் என்று அவர்கள் அரசாங்கத்திடம் சொல்லி எச்சரித்திருக்கிறார்களா? அல்லது தற்போதைக்கு மௌனமாக இருப்பதே நமக்கு மிகுந்த நல்லது என்று இருந்துவிட்டார்களா?
“அரசாங்கத்திடம் கல்யாண நிகழ்ச்சிகள் கட்டாயம் அனுமதிக்கக் கூடாது ஏனென்றால் அவை கோவிட் தொற்றுகளைப் பரப்பும் மையங்களாக செயல்படும்” என்று அவர்கள் ஆலோசனை சொல்லியிருக்கிறார்களா? சில மாநிலங்களில் 50 விருந்தினர்கள் வரை அனுமதிக்கப் படுகிறார்கள். வேறு சில மாநிலங்களில் 100 பேர் வரை அனுமதிக்கிறார்கள்.
வேகமான சுயமாக இயங்கக் கூடியப் பரிசோதனைக் கருவிகளை கடந்த ஆண்டு இந்தியாவின் விஞ்ஞானிகள் உருவாக்கி வளர்த்து வைத்திருக்கிறார்களே அவற்றை மக்களுக்கு விநியோகிப்பதன் மூலம் ‘இரத்தப் பரிசோதனை நிலையங்களில் கூட்டம் சேர்வதையும் அதனால் தங்களுக்கு ‘போதுமான நேரம் மற்றும் தேவையான சாதனங்கள் இல்லை’ என்றும் மக்களை விரட்டாமல் தடுக்கலாமே? ஏன் அவர்கள் அரசாங்கத்திற்கு ஆலோசனைக் கொடுக்கவில்லை?.
ஏப்ரல் 23-படி அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை நிலையங்கள் 15,133 மாதிரிகளை வரிசைப் படுத்தியிருக்கின்றன. இது இந்தியாவின் மொத்த மாதிரிகளில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானது. ஐரோப்பாவில் இது 8 சதவீதம் அமெரிக்காவில் 4 சதவீதம். இவற்றை ஒப்பிடும் போது, போதுமான அளவு மரபியல் வரிசைகள் செய்யப் பட்டிருக்கின்றன என்று நாட்டை எப்படி சமாதானப் படுத்தப் போகிறார்கள்?
‘இந்தியாவில் மக்களுக்கு தடுப்பூசிகள் போடக் கூடிய செயல்முறை மாற்றப்பட வேண்டும் என்று நம்புவதாக’ நாட்டின் பல நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்களே அவர்களது வாதத்தை விஜயராகவன் பால் மற்றும் பார்கவா எப்படி எதிர்கொள்கிறார்கள்? உதாரணத்திற்கு “ஒவ்வொரு கோவிட் நோயாளியை சுற்றி இருப்பவர்களுக்கும் தொடர்பில் இருப்பவர்களுக்கும் தடுப்பூசிகள் போட்டு ‘ring vaccination’ கவனமாகப் பார்த்துக் கொள்வது மற்றும் நோய்த்தொற்று மூர்க்கத்தனமாகப் பரவிக் கொண்டிருக்கும் பகுதிகள் மாவட்டங்கள் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துவது” ஆகியவற்றைப் பேராசிரியர் ப்ராமர் முகர்ஜி தீவிரமாகப் பரிந்துரைக்கிறார். பேராசிரியர் கிரிதரா பாபு “சுகாதாரத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார செயற்பாட்டாளர்களை ASHA workers கொண்டு போலியோ தடுப்பூசிகள் போடப்படும் அதே முறைகள் மற்றும் செயல்திட்டங்களைப் பயன்படுத்தி செய்யலாம்” என பரிந்துரைக்கிறார்.
மூன்றாவது அலை வருவதாக சாத்தியக் கூறுகள் தெரிகையில் மக்களுக்கு அவர்களால் என்ன சொல்ல முடியும்? குறிப்பாக இரண்டாவது அலையின் மூலம் எந்தளவு பாடம் கற்றுக் கொண்டார்கள் அது எந்த அளவு மக்களுக்கு பயன்படப் போகிறது.
இந்த கட்டுரையின் ஆசிரியர் பற்றி ஒரு சிறு குறிப்பு :
அன்று குஜராத் முதலமைச்சராக இருந்த, இன்றைய இந்தியாவின் பிரதமரான நரேந்திரமோடி அவர்களை, ஒருதொலைக்காட்சி நேரலையில் (19-Oct-2007 )அன்று இவர் பேட்டி எடுக்க ஆரம்பித்த மூன்று நிமிடங்களில் தண்ணீர் குடித்தார்.பிறகு தனது மைக்கை கழட்டி வைத்துவிட்டு, இந்த ஆட்டத்திற்கு நான் வரவில்லை என்று பேட்டியை முடித்துக் கொண்டு, மோடி கிளம்பிவிட்டார்.அதற்கு பிறகு மோடி பிரதமரான பின் இவர் எந்த தொலைக்காட்சி சேனலிலும் வேலை பார்க்க முடியவில்லை.
அவர்தான் கரண்தாபர். இந்த கட்டுரையின் ஆசிரியர் (இது மட்டும் எனது)
கட்டுரையாளர் : கரண் தாபர் மொழியாக்கம் : மணிவேல் செய்தி ஆதாரம் : The Wire
அந்தப் புகைப்படங்களைப் பகிர விரும்பவில்லை. கங்கை ஆற்றின் கரைகளில், பீகாரின் பக்சர் அருகே, நூற்றுக்கணக்கான பிணங்கள் ஒதுங்கியிருக்கின்றன எனச் செய்திகள் வருகின்றன. ஒரு டஜன் சடலங்கள் ஒதுங்கி அலையும் காட்சிகள் அதிர்ச்சியாக உள்ளன.
இந்தப் பிணங்கள் அருகேயுள்ள கிழக்கு உத்தரப் பிரதேசப் பகுதியிலிருந்து வருகின்றன என பீகாரும், அவை பீகாரின் பிணங்கள்தான் என உத்தரப் பிரதேசமும் அடித்துக் கொள்ளத் தொடங்கியுள்ளன. கோவிட் தொற்று ஏற்பட்டு இறந்தவர்கள் நூற்றுக்கணக்கில் கங்கையில் எறியப்படுகிறார்கள் என்கிற அச்சம் இப்போது இந்தியாவை உறையச் செய்திருக்கிறது.
ஆனால், டேமேஜ் கன்ட்ரோலில் இறங்கியுள்ள மோடி மீடியா, “இல்லை இல்லை, இது வழக்கமாக நடைபெறுவதுதானே, கேட்பாரற்றச் சடலங்களை நாங்கள் இப்படித்தானே வீசுவது வழக்கம்” என்று சமாளிக்கத் தொடங்கியுள்ளன. மனிதத் தன்மையற்று நடந்துக் கொள்வதுதானே நமது வழக்கம் என்கிறப் பதிலைக் கொண்டே சங்கிகள் நம் வாயை அடைக்கக் கூடும். இல்லையா பின்னே!
பரிதாபத்துக்குரிய வடஇந்திய பாமர மக்களுக்கு இப்படித்தான் ராம ராஜ்ஜியம் வந்து சேர்ந்திருக்கிறது. ஜீவன் கங்கையில் கரைந்த பிறகு சடலங்கள் எக்கேடு கெட்டுப்போனால் என்ன என்றொரு தத்துவமும் முன்வைக்கப்படலாம்.
நோய் பரவலைத் தடுக்க முடியவில்லை, உயிரிழப்பை தடுக்க முடியவில்லை என்பதை நாம் “புரிந்துக் கொள்ள முடிகிறது”. தில்லியின் சுடுகாடுகள் நிரம்பி வழிந்ததற்கு பின்னாலுள்ள வரம்புகளையும் “புரிந்துக் கொள்ள” முடிகிறது.
ஆனால், உத்தரப் பிரதேசத்திலும் பீகாரிலும் இப்படி கோவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் ஆற்றில் வீசப்படுகின்றன என்பதை எப்படிப் புரிந்துக் கொள்வது? வாழ்வதற்கு வழியில்லாத அந்த மக்கள், மரியாதையோடு சாகவும் வழியில்லையா? சடலங்களை ஆற்றில் விடுவது மதம் சார்ந்த நம்பிக்கை என்கிற ஒற்றை சால்ஜாப்பில் இதை கடந்து விட முடியாது. கடக்கிறோம் என்றால், அந்த எண்ணத்தைத்தான் முதலில் கேள்வி கேட்க வேண்டும்.
பிரச்சனை, அந்த மாநிலங்களில் யார் ஆட்சி செய்தாலும் நிலைமை மாறாமலிருப்பதுதான். இந்தி வட்டார மாநிலங்களில் மனிதர்களுக்கு மரியாதை என்பது இல்லவே இல்லை.
இதில் பாஜக ஆட்சிகள் நரகம் என்றால், முந்தைய ஆட்சிகள் சொர்க்கம் அல்ல. உ.பி, ம.பி, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் பொதுச் சமூகம், சிவில் சமூகம், நவீனம், நிர்வாகம், ஆட்சி என்று எதுவுமே இருப்பதாகத் தெரியவில்லை. ஆட்சியாளர்கள் மக்களை காட்டுமிராண்டிகளாகவே (இந்த சொற்பயன்பாட்டுக்கு மன்னிக்கவும்) வைத்திருக்கிறார்கள். இதைப் பற்றி நாம் நிறைய எழுதிவிட்டோம்.
மோடி 2014-இல் இந்த மாநிலங்களில் வெற்றிப் பெற்றதற்கு முதன்மையான காரணம் அவர் தன்னை விகாஷ் புருஷ் (வளர்ச்சியின் நாயகன்) என்று சொல்லி மக்களை நம்பவைத்ததுதான். அதற்காகத்தான் குஜராத் மாடல் பெரிதும் ஊதிப் பெருக்கப்பட்டது. தமிழ்நாட்டுக்கு குஜராத் மாடல் என்பது தமாஷானதுதான் என்றாலும், உ.பி, பீகாருக்கு அது முன்னுதாரணான மாடல்தான். அதை நம்பித்தான் மக்கள் வாக்களித்தார்கள். ஆனால், வந்தது விகாசம் அல்ல, விநாசம்.
உ.பி, பீகாரில் பாஜக/பாஜகஆதரவு ஆட்சிகள் அடிப்படையில் எந்த வளர்ச்சியையும் செய்யவில்லை என்பதைத் தான் இந்தக் கொடூரமான சம்பவங்கள் காட்டுகின்றன.
ஆறு ஆண்டுகளில் மிகப்பெரிய உள்கட்டமைப்பை உருவாக்கி விட முடியாதுதான். ஆனால், வளர்ச்சியின் திசை வழியை உருவாக்கியிருக்க வேண்டும். (முன்பு) மகாராஷ்டிராவிலும் குஜராத்திலும் கர்நாடகத்திலும் இமாச்சலிலும் ஆளும் பாஜகவினரால் அதை செய்ய முடிகிறது தானே? ஏன் உ.பியில் முடியவில்லை? பீகாரின் ஒரிஜினல் விகாஷ் புருஷனான நிதீஷ் குமார் ஏன் செயலற்று இருக்கிறார்?
ஏனென்றால், கங்கைச் சமவெளியின் சமூக அடித்தளமே வர்ணாசிரம தர்மத்தால் ஆளப் படுகிறது. பாமர மக்களுக்கு உழைப்பதைத் தவிர வேறு எந்த உரிமையும் கிடையாது. எனவே, அவர்களுக்காக எந்த சமூக நலத் திட்டங்களும் வாழ்வாதார வளர்ச்சித் திட்டங்களும் தேவையில்லை. அவை, அனாவசியம் என்பது மட்டுமல்ல, அந்த சிந்தனை வருவதற்கான வாய்ப்பே அங்கே இருப்பதாகத் தெரியவில்லை. கோவிட் வந்திருக்கிறதா, வெளியே சொல்லாதே என்பதுதான் யோகி அரசாங்கத்தின் கட்டளை.
அங்கேயுள்ள மேல்வர்ண மற்றும் மேட்டுக்குடி மக்களுக்கு பல வசதிகள் உள்ளன. ஆனால், சூத்திர, பஞ்சம மக்களுக்கு ஒரு துளி வசதிக் கூட இருக்காது.
இந்தியாவில் வேறு எங்கும் ஏழைகள் இல்லையா, பஞ்சம-சூத்திரர்கள் இல்லையா? இருக்கிறார்கள். அங்கே, அந்தப் பிரிவுகளையும் தாண்டி, அவர்கள் வளரக் கூடிய அரசியல் சூழல் பல மாநிலங்களில் நிலவுகிறது. அதனால்தான் பஞ்சாபும் தமிழ்நாடும் ஆந்திரமும் குஜராத்தும் கேரளமும் இமாச்சலப் பிரதேசமும் கர்நாடகமும் ஒரிசாவும் சமூக வளர்ச்சியில் போட்டிப் போட்டு வளர்கின்றன.
அப்படியென்றால், இந்த லாலூ, மாயவதி, முலாயம் போன்றவர்கள் எல்லாம் இருபதாண்டுகள் ஆண்டார்களே, அவர்கள் என்னதான் செய்தார்கள் என்கிற கேள்வி எழலாம். ஆனால், உண்மையில் யாரிடமும் பதில் இல்லை. சாதிப் பிரதிநிதித்துவ அரசியல், சமூகநீதி அரசியலாகப் பரிணமிப்பதற்கு முன்பே வெறும் சாதி அடையாள அரசியலாக குன்றிப் போய்விட்டதா என்று யோசிக்க வேண்டியிருக்கிறது.
சுயமரியாதை அரசியலும் சமூக-ஜனநாயகப் பொருளாதார அரசியலும் உருவானதாகத் தெரியவில்லை. சாதி அடையாள அரசியல்தான் வியூகம் என்றால் அதில் இவர்களை விட அமித்ஷாதான் ஜித்தன். சோஷல் ஜஸ்டிஸா சோஷல் இஞ்சினீயரிங்கா என்றால் பாஜகதான் கில்லாடி.
அதனால்தான் எஸ்.பி, பி.எஸ்.பி, ஆர்.ஜெ.டி, ஜே.டி.யு போன்ற ஜனதா பரிவாரிய பகுஜன் கட்சிகள் கூட தங்கள் மாநிலங்களை வளர்ப்பதில் போதுமான அளவுக்கு கவனம் செலுத்தவில்லை. அதற்கு வேறு ஒரு காரணமும் உண்டு.
தமிழ்நாடு, கர்நாடகம், பஞ்சாப் போல அங்கே தேசிய இனம் சார்ந்த ஓர்மை இல்லை என்பது மற்றுமொரு காரணம். பீகாரிக்காவது கொஞ்சமாவது உண்டு, உ.பி-யில் அதுக்கூட கிடையாது. ஏனென்றால் உ.பி, ம.பி எல்லாம் செயற்கைப் பிரதேசங்கள்.
நாம் மாநிலங்கள், ஆனால் இயல்பில் தேசங்கள். அவையோ வெறும் பிரதேசங்கள். நாம் நமது மாநிலத்தை அரசியல் அலகாக நினைக்கிறோம். அவர்கள் அவற்றை வெறும் நிர்வாக அலகுகளாக நினைக்கிறார்கள்.
இந்தியாவே தங்களுக்குத்தான் சொந்தம் என நினைக்கக் கூடிய ஒரு உத்திரப் பிரதேசக்காரனுக்கு தனக்கென ஒரு தேசிய இன அடையாளம் இல்லை என்பது இதுவரை உறைக்கவில்லை.
திராவிட இயக்கத்தின் மிகப்பெரிய சாதனை என்பது சமூகநீதி, தேசிய இன அரசியல், சமூக-ஜனநாயகப் பொருளாதாரம் சார்ந்த மக்கள்நல ஆட்சிமுறை ஆகியவற்றை பிணைத்ததுதான். (கேரளமும் பஞ்சாபும் இதை வேறுவிதங்களில் செய்தன).
ஒரு கப்பற்படையின் வேகம் அந்த கப்பல்படைத் தொகுப்பில் செல்லும் கப்பல்களிலேயே மிகவும் மெதுவாகச் செல்லும் கப்பலின் வேகத்தைப் பொறுத்ததுதான் என்று சொல்வார்கள். இந்தியாவின் வேகம் உத்தரப் பிரதேசத்தைப் பொறுத்தது!
பேரிடரால் ஏற்படும் துயரங்களால் வரக்கூடிய சவால்களை விட இந்தச் மனிதத் தன்மையற்ற சமூக-அரசியல் சூழலால் ஏற்படும் துயரங்கள்தான் மிகவும் வலிதருபவை. கோவிட்டால் வரக்கூடிய சமூக இடைவெளியை விட வருணாசிரமத்தால் வரக் கூடிய சமூக இடைவெளிதான் மிகவும் ஆழமானது.
இந்த மாநிலங்கள் எதை நோக்கித்தான் செல்கின்றன என்பதை யோசிக்கும் போது திகைப்பாக இருக்கிறது. பாசிச கலாச்சாரும் மதவெறியும், இறுகிப்போன சாதி அடையாளமும் ஆணாதிக்கப் பிற்போக்கு கலாச்சாரமும் பின்தங்கிய உற்பத்தி முறையும் ஒரு பக்கம். ஆனால், பெரும்பான்மைவாத (இந்தி) அரசியலின் எழுச்சி என்பது மறுபக்கம். நினைத்தாலே தலைச் சுற்றுகிறது. நமது தலையெழுத்தோ இவர்களிடம் சிக்கிக் கொண்டிருக்கிறது!
நாம் நம்மைக் காப்பாற்றிக் கொள்ளவாவது இந்த மாநிலங்களின் அரசியலில் தலையிட்டாக வேண்டும் என்று நினைக்கிறேன். அங்கே உள்ள முற்போக்கு, ஜனநாயக அரசியல் சக்திகளிடம் பேச வேண்டியிருக்கிறது.
கொரோனா பெறும் தொற்றில் இந்தியாவில் மக்கள் அனைவரும் கொத்துக் கொத்தாக இறந்து கொண்டிருக்கும் சூழலிலும் கொரோனா தடுப்பு மருந்துகளை கார்ப்பரேட்டுக்கள் விற்று இலாபமீட்ட வழிவகை செய்கிறது மோடி அரசு.
ஆக்சிஜன் தயாரிப்பது தனியார் நிறுவனங்கள். தடுப்பூசி தயாரிப்பது தனியார் நிறுவனங்கள். கோரோனா நோயாளிகளிடமிருந்து கொள்ளையடிக்கிறது தனியார் மருத்துவமனைகள். கொரோனாவில் பிழைக்க முடியாத ஏழை மக்கள் தினம் தினம் தினம் மருத்துவ வசதிகள் இன்றி இறக்கிறார்கள். கொரோனாவில் அம்பலமாகும் மோடி அரசின் கார்ப்பரேட் சேவை.
கொரோனா அச்சத்தை பயன்படுத்திக்கொண்டு, தடுப்பு மருந்துகளை தனியார் மற்றும் கார்ப்பரேட்டுகளுக்கு திற்ந்துவிட்டு கொள்ளையடிக்க வழி ஏற்படுத்தியிருக்கிறது மத்திய அரசு.
பாலியல் குற்றவாளியைப் பாதுகாக்க அவதூறுகளையே அறிக்கையாக்கிய உண்மை கண்டறியும் குழு – அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தின் கண்டன மறுப்புரை !
கடந்த மார்ச் மாதம் சென்னை பல்கலைக் கழகத்தில் தொல்லியல் துறைத் தலைவராக இருக்கும் பேரா.சௌந்திரராஜன், தன்னிடம் மதிப்பெண் அறிந்துக்கொள்ள சென்ற மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் சகமாணவர்களைத் தாக்கியதகவும் மாணவர்கள் பல்கலைக் கழக நிர்வாகத்திடம் புகார் அளித்திருந்தனர்.
மேலும் பேரா. சௌந்திரராஜன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆறு நாட்கள் தொடர் உள்ளிருப்புப் போராட்டமும் நடத்தினர். பேரா.சௌந்திரராஜனும் மாணவர்கள் தன்னைத் தாக்கியதாக நிர்வாகத்திடம் புகார் அளித்திருந்தார்.
பேரா.சௌந்திரராஜன் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அவரை துறைத் தலைவர்(பொறுப்பு) பதவியிலிருந்து நீக்கிவதற்காகவே பாலியல் குற்றச்சாட்டு நாடகம் நடப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரப்பப்பட்டு வந்தது. இது குறித்து விசாரிப்பதற்காக பேரா.லட்சுமணன் தலைமையில் 5 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழு பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பேரா.சௌந்திரராஜனை சந்தித்தனர்.
உண்மை அறியும் குழு(உ.அ.கு) தனது அறிக்கையை கடந்த ஏப்ரல் 15, 2021 அன்று சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் வெளியிட்டது. அவ்வறிக்கையில் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்துப் போராடிய மாணவர்கள் மீது ஆதாரங்களே இல்லாமல் பல பொய் குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தனர். அதேவேளையில் பேரா.சௌந்திரராஜனின் செயல்பாடுகளை நியாப்படுத்தியும் அவரை காப்பாற்றுவதையுமே நோக்கமாகக் கொண்டிருந்தது உ.அ.கு அறிக்கை.
அறிக்கையை வெளியிட்டுப் பேசிய பேரா.லட்சுமணன் மற்றும் இருவர், பேரா.சௌந்திரராஜன் குற்றமற்றவர் என்ற சித்திரத்தை உருவாக்கவே முயற்சித்தனர். அறிக்கையில் உள்ள விசயங்களை ஒட்டி பத்திரிக்கையாளர்கள் பல கேள்விகளைக் கேட்டனர். மாணவர்கள் மீதான குற்றச்சாட்டிற்கான ஆதாரங்களையும் கேட்டனர்(அறிக்கையில் இல்லை). உ.அ.கு-வின் நடுநிலையற்ற அணுகுமுறையையும் பத்திரிக்கையாளர்கள் அம்பலப்படுத்தினர். ஆனால், மேடையிலிருந்த பேரா.லட்சுமணன் மற்றும் இருவரும் எந்த கேள்விக்கும் நேரடியானப் பதிலை சொல்லவில்லை. (சில செய்தி ஊடகங்கள் தங்களின் இணையதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்).
பாதிக்கப்பட்ட மாணவர்கள் பல்கலைக் கழகத்தின் அனுமதி இல்லாமல் பொதுவெளியில் பேசக் கூடாது என்று பல்கலைக் கழக நிர்வாகம் நிபந்தனை விதித்துள்ளதால் தங்கள் மீது உ.அ.கு சுமத்தியுள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மறுத்து பேச முடியாத நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஆகையால், மாணவர்கள் சார்பாக சென்னை பல்கலைக் கழகத்தில் செயல்படும் மாணவர் அமைப்பாகிய அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தை சார்ந்த நாங்கள் உ.அ.கு-ன் அறிக்கை மீதான இந்த மறுப்புரையை வெளியிடுகிறோம்.
***
உ.அ.கு-வின் அறிக்கையையும் அதன் உள்நோக்கத்தையும் புரிந்துக்கொள்ள, இப்பிரச்சனையைத் தொடக்கத்திலிருந்து தெரிந்துக் கொள்வது உதவியாக இருக்குமென்பதால் அதனை சுருக்கமாகத் தருகிறோம்.
கொரோனா ஊரடங்கினால் சென்னைப் பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதிகள் மூடப்பட்டன. பல்கலைக் கழகத்தின் மெரினா விடுதியில் தங்கியிருந்த ஆய்வு மாணவர்களும் முதுநிலை மாணவர்களும் தங்களுடைய ஊருக்குச் சென்று விட்டனர். மாணவர்களிடம் இருந்து ஊரடங்கு காலத்திற்கான(மார்ச்-நவம்பர் 2020) விடுதி கட்டணம், விடுதி ஊழியர்கள் மற்றும் மெஸ் ஊழியர்களுக்கான சம்பளம்(மெஸ் இயங்கவில்லை) சேர்த்து எட்டு மாதத்திற்கானக் கட்டணத்தைப் பல்கலைக் கழக நிர்வாகம் கட்டச் சொல்லியது.
முதல் கட்டமாக மார்ச் 2020 முதல் ஜூன் 2020 வரைக்குமான கட்டண விவரங்கள் விடுதி தகவல் பலகையில் ஜனவரி 2021-ல் ஒட்டப்பட்டது. இது குறித்து பல்கலைக் கழகப் பதிவாளரிடம் பேசுவதற்காக மாணவர்கள் பலமுறை முயன்றும் அவரை சந்திக்க முடியாமல் போனதால் கட்டணக் குறைப்புத் தொடர்பாக பதிவாளரின் பி.ஏ-விடம் எட்டு முறை கடிதம் அளித்தனர். நிர்வாகத்திடமிருந்து எவ்வித பதிலும் வராததால் விடுதிக் கட்டணக் கொள்ளைக்கு எதிராக மாணவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் பல்கலைக் கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் விளைவாக நிர்வாகம் விடுதிக் கட்டணத்தை குறைப்பதாக ஒப்புக் கொள்கிறது.
இதற்கிடையில் இப்போரட்டத்தில் ஈடுபட்ட தொல்லியல் துறை மாணவர்களின் பெற்றோர்களைத் தொடர்பு கொண்டுப் பேசிய அத்துறைத் தலைவர்(பொறுப்பு) பேரா.சௌந்திரராஜன், மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்துக் கொள்கிறார்கள், போராட்டத்தை முடிக்க சொல்லுங்கள், இல்லையெனில் டிஸ்மிஸ் செய்து விடுவோம் என மாணவர்களின் பெற்றோர்களிடம் கூறியுள்ளார்.
இதன் பிறகு, அகழாய்வு பணிக்காக மாணவர்கள் வேலூரில் ஒருமாதம் முகாமிட்டிருந்தனர். தொல்லியல் துறை மாணவர்களின் மூன்றாம் பருவத் தேர்வுக்கான முடிவுகள் அப்போது (12-02-2021) வெளியானது. இத்தேர்வு முடிவுகளை தொலைபேசி வாயிலாக அலுவலகப் பணியாளரை தொடர்புக் கொண்டு தெரிந்துக் கொள்ளும் படி மாணவர்களிடம் கூறியுள்ளனர். அலுவலகப் பணியாளரோ மதிப்பெண்களைக் கூறாமல் Grade-டை மட்டும் தெரிவித்துள்ளார். இத்தேர்வில் விடுதி கட்டணக் கொள்ளைக்கு எதிராகப் போராடிய மற்றும் ஆதரித்த மாணவர்கள் 7 பேர் பெயிலாகி இருந்தனர். (கூடுதலாக ஒருவர் பெயிலாகி இருந்தார்; அவர் எந்த ஆதரவையும் தெரிவிக்கவில்லை.)
மற்ற மாணவர்களும் தங்களுடைய மதிப்பெண் குறைவாக இருப்பதாகக் கருதியதினால் விடைத் தாள்களை மறுதிருத்தம் (revaluation) செய்ய வேண்டுமென்று கோரி பெயிலான 7 மாணவர்கள் மற்றும் உடன் பயிலும் 17 பேரும் சேர்ந்து மொத்தம் 24 மாணவர்களுடைய கையொப்பமிட்ட கடிதத்தை 14-03-2021 அன்று பல்கலைகழக துணைவேந்தர், பதிவாளர், தொல்லியல் துறைத் தலைவர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஆகியோருக்கு கடிதம் மூலமாகவும் e-mail வழியாகவும் அனுப்பினர்.
அகழாய்வு பணியில் இருந்து பாதியிலேயே கிளம்பி பல்கலைக் கழகம் வந்ததும் மாணவர்கள் மதிப்பெண்களை அறிந்துக் கொள்ளத் தொல்லியல் துறைக்குச் சென்று விசாரித்தனர். மாணவர்கள் தபாலில் அனுப்பியிருந்த விடைத் தாள்கள் துறையில் இல்லை. Scan செய்து email-ல் அனுப்பியிருந்த விடைத் தாள் நகலை பென்சில்களால் திருத்தியிருக்கிறார்கள். இது பற்றி துறைத் தலைவரிடம் மாணவர்கள் விசாரித்துள்ளனர்.
பெயிலான ஒரு மாணவரிடம் (போராட்டத்தில் முன்நின்றவர்) “நீ தபாலில் அனுப்பிய விடைத் தாளும் email-ல் அனுப்பிய விடைத்தாளும் வேறாக உள்ளது. நீ டீ பார் செய்யப்பட்டுள்ளாய். அதனால்தான் உனக்கு அரியர் போடப்பட்டுள்ளது” என்று பேரா.சௌந்திரராஜன் கூறியுள்ளார். இரண்டு தேர்வுத் தாளையும் காட்டுங்கள் என்று மாணவர் கேட்டதற்குத் துறைத் தலைவர் முடியாது என்று மறுத்து விடுகிறார். விடைத் தாளை திருத்திய ஆசிரியரின் கையொப்பம் விடைத் தாளில் இல்லை, விடைத் தாள் பென்சிலால் திருத்தப்பட்டுள்ளது.
பதில்களுக்கான மதிப்பெண்கள் திருத்தப் பட்டுள்ளது. இது பற்றி அம்மாணவர் கேட்டதற்கு “அதெல்லாம் நீ பேசக் கூடாது” என்று மாணவரை மிரட்டியுள்ளார் பொறுப்புத் துறை தலைவர் பேரா.சௌந்திரராஜன்.
பேரா.சௌந்திரராஜன் திட்டமிட்டு ஃபெயில் செய்திருக்கிறார் என்பதை மாணவர்கள் உணரவே வேறு பேராசிரியரை வைத்து விடைத் தாள்களை மறுதிருத்தம் செய்ய வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதன் விளைவாக முன்னாள் துறைத் தலைவரை கொண்டு விடைத் தாள்களை மறுதிருத்தம் செய்ய பல்கலைக் கழக நிர்வாகம் ஏற்பாடு செய்கிறது. விடைத்தாள் மறுதிருத்தலில் மாணவர்கள் அனைவருமே அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைகின்றனர். (உ.தா. 20 எடுத்த மாணவன் மறுதிருத்தலுக்குப் பிறகு 48 மதிப்பெண் எடுக்கிறார்.)
இதன் பிறகு அகழாய்வு பணியை முழுவதும் முடித்து வந்த மாணவர்கள் தங்களுடைய Internal/external மதிப்பெண்களை துறைத் தலைவர் பேரா.சௌந்திரராஜனிடம் கேட்டுள்ளனர். அதனை பல்கலைக் கழக விதிமுறைப்படி துறை தகவல் பலகையில் போட வேண்டும் எனவும் கோரியுள்ளனர். அதற்கு போரா.சௌந்திரராஜன் மாணவர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டியிருக்கிறார். உடனிருந்த மாணவியையும் தகாத வார்த்தைகளால் திட்டி அத்துமீறி மார்பகத்தில் கைவைத்து தள்ளியிருக்கிறார்.
பாதிக்கப்பட்ட மாணவி 17-03-2021 அன்று பொறுப்புத் துறைத் தலைவர் பேரா.சௌந்திரராஜன் மீது பாலியல் புகாரை பல்கலைக் கழகத்திடம் கொடுக்கிறார். இப்புகாரின் மீது பல்கலைக் கழக நிர்வாகம் எந்த நடவடிக்கையையும் எடுக்காததால் மாணவர்கள் தொடர் உள்ளிருப்புப் போராட்டத்தை ஆரம்பிக்கின்றனர். உடனே பல்கலைக் கழகம் sexual harassment committee-ஐ அமைத்து இப்புகாரை விசாரிக்கிறது.
இக்கமிட்டியோ பாலியல் புகாரை நடுநிலையோடு விசாரிப்பதற்குப் பதிலாக பாதிக்கப்பட்ட மாணவியை harss செய்வது போல நடந்துக் கொள்கிறது. இவ்விசயங்கள் பத்திரிக்கைகளில் கசிய ஆரம்பிக்கின்றன. உடனே பல்கலைக் கழக நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை என்ற போர்வையில் போராடிய மாணவர்களை இடைநீக்கம் செய்கிறது.
இதற்கிடையில் SFI, மாதர் சங்கம் மற்றும் பல ஜனநாயக அமைப்புகளிடமிருந்து மாணவர்களுக்கான ஆதரவு பெருகவே பல்கலைக் கழக வளாகத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களை மார்ச் 22 அன்று காலை காலை 9 மணியளவில் போலீஸ் கைது செய்கிறது. மாணவர்களுக்கு ஆதரவாக போராடிய SFI, மாதர் சங்கம் மற்றும் பல ஜனநாயக அமைப்பின் பிரதிநிகளையும் போலீஸ் கைது செய்கிறது.
மார்ச் 30 அன்று வளாகத்திற்குள் போராடக் கூடாது, பிரசுரம் அளிக்க கூடாது, நிர்வாக அனுமதி இல்லாமல் ஊடகங்களிடம் பேசக் கூடாது என்ற நிபந்தனைகளின் பெயரில் மாணவர்கள் மீதான இடைநீக்கத்தை பல்கலைக் கழக நிர்வாகம் ரத்து செய்கிறது.
ஆக இப்பிரச்சனை ஜனவரி மாதத்திலிருந்தே துவங்குகிறது. தங்களுடைய கோரிக்கைகளுக்காகப் போராடுகின்ற மாணவர்களை பழி வாங்குவதும் அவர்களிடம் நாகரீகமற்ற முறையில் நடந்துக் கொள்வதையே பேரா.சௌந்திரராஜன் தொடர்ச்சியாக செய்து வந்துள்ளார். இவையனைத்தும் உ.அ.கு-விடம் மாணவர்கள் தெரிவித்து உள்ளனர். ஆனால், உ.அ.கு-வோ இவையனைத்தையும் மறைத்து விட்டு தங்களுக்கு தேவையானவற்றை மட்டுமே எடுத்துக் கொண்டு அறிக்கையைத் தயாரித்துள்ளனர்.
***
இந்த அறிக்கையில் பல்வேறு சந்தேகங்களும் கேள்விகளும் எங்களுக்கு உள்ளது. இருப்பினும் சில பிரச்சனைகளை மட்டுமே விவாதத்திற்கு எடுத்துக் கொள்கிறோம்.
1. உ.அ.கு-வின் அறிக்கை, பெயிலான மாணவர்களுடைய விடைத் தாள்களின் கையெழுத்துப் பிரதியும், மெயில் காப்பியும் வேறாக உள்ளது எனத் துறைத் தலைவர் தெரிவித்ததாகக் கூறுகிறது. ஆனால், மாணவர் தரப்பிலிருந்தோ ஒரு மாணவரின் விடைத் தாள் மட்டுமே மாறியுள்ளதாக துறைத் தலைவர் கூறியதாக அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரு தரப்பும் இருவேறு கூற்றைத் தெரிவிக்கிறது.
தபாலில் அனுப்பிய விடைத் தாள்களை மாணவர்கள் கேட்ட போது பொறுப்புத் துறைத் தலைவர் காட்டவில்லை. ஒரிஜினல் விடைத் தாளை பல்கலைக் கழகப் பதிவாளர் மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்கள் கேட்ட போதும் காட்டவில்லை. தபாலில் அனுப்பிய விடைத் தாள் தொலைந்து விட்டதாக துறைத் தலைவர் கூறியிருக்கிறார்.
மேலும், email-ல் அனுப்பப்பட்ட விடைத் தாளைக் கொண்டு மறுதிருத்தல் செய்ததில் அதிகமான மதிப்பெண் வித்தியாசத்தில் மாணவர்கள் தேர்ச்சி அடைந்திருக்கிறார்கள். உ.அ.குழுவோ பேரா.சௌந்திரராஜனுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை, இப்பாடங்களை கௌரவ ஆசிரியர்கள் தான் எடுத்தார்கள் என்கிறது உ.அ.கு.
எந்த அரசு உயர்கல்வி நிறுவனங்களிலாவது நிரந்திர பேராசிரியர்கள் அல்லது துறைத் தலைர் உள்ளிட்ட உயர் பதவியில் இருப்பவர்களின் வழிகாட்டுதலை மீறி ஒரு கௌரவ ஆசிரியர்கள் சுகந்திரமாகச் செயல்பட முடியுமா? அதிகாரப் படிநிலைகள் கெட்டித்தட்டி போயுள்ள நமது உயர்கல்வி நிறுவனங்கள் என்ன அவ்வளவு ஜனநாயகமாகவா செயல்படுகிறது? கல்லூரிகளில் முதலாமாண்டு படிக்கும் மாணவர்களை கேட்டாலே கூட இதற்கு பதில் சொல்லிவிடுவார்கள். உ.அ.குழுவோ எதார்த்தத்தை மீறி இதனை தலைகீழாகப் பார்க்கிறது.
பெயில் செய்யப்பட்ட மாணவர்களின் விடைத் தாள்கள் மட்டும் காணாமல் போனதன் மர்மம் என்ன? மதிப்பெண்கள் குறைக்கப்பட்டதின் காரணம் என்ன? இதற்கெல்லாம் யார் காரணம்? இவைப் பற்றியெல்லாம் உ.அ.கு-க்கு சந்தேகமே வரவில்லை.
மெஸ் போராட்டத்தில் தொடர்புடைய மாணவர்களை பொறுப்புத் துறைத் தலைவர் பேரா.சௌந்திரராஜன் திட்டமிட்டு பழிவாங்கியுள்ளார். இது பல்கலைக் கழக நிர்வாகத்திற்கு தெரியும். ஆனால், நிர்வாகம் துறைத் தலைவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாணவர்கள் மறுதிருத்தல் வேண்டி பல்கலைக் கழக துணைவேந்தர், பதிவாளர், தொல்லியல் துறைத் தலைவர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஆகியோருக்கு கடிதம் கொடுத்துள்ளனர்.
நிர்வாகம் மாணவர்களின் கோரிக்கையை கண்டுக் கொள்ளவில்லை என்பதால் தான் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் பிறகே பல்கலைக் கழக நிர்வாகம் மறுதிருத்தலுக்கு சம்மதித்தது. ஆனால் உ.அ.கு-வோ மாணவர்கள் கடிதம் கொடுக்கவில்லை மறுதிருத்தலுக்கான முறையான வழிமுறைகளைப் பின்பற்றவில்லை என்று சட்ட நுணுக்கங்களுக்குள் செல்கிறது.
திட்டமிட்டு பழிவாங்கப்பட்டது ஆதாரத்துடன் தெரிந்தப் பின்பு மாணவர்கள் போராடாமல் மறுதிருத்தலுக்கான காசோலைப் படிவத்தையா நிரப்பிக் கொண்டிருக்க முடியும்? பேரா.சௌந்திரராஜனின் திட்டமிட்ட பழிவாங்குதலை ஆதாரத்துடன் அம்பலப் படுத்தியுள்ளனர். கடிதத்திற்குப் பதில் சொல்லாமல் காலம் தாழ்த்தி வந்த நிர்வாகத்தினை தங்களுடைய போராட்டத்தின் மூலம் மறுதிருத்தலுக்கான ஒப்புதலைப் பெற்று அப்பாடங்களில் தேர்ச்சியும் அடைந்துள்ளனர்.
இந்த உண்மையெல்லாம் மறைத்து விட்டு பல்கலைக் கழக நிர்வாகம் மாணவர்களுக்கு ஆதரவாகவும் பேரா.சௌந்திரராஜனுக்கு எதிராகவும் நடந்துக் கொண்டது போன்ற பிம்பத்தினை உ.அ.குழுக் கட்டியமைக்க முயற்சிக்கிறது.
2. மதிப்பெண்களை (Internal&External) தகவல் பலகையில் வெளியிட வேண்டுமென துறைத் தலைவரிடம் மாணவர்கள் கேட்டுள்ளனர். அவர் அதை மறுத்ததோடு மாணவர்களை திட்டியுள்ளார். உ.அ.குழு அறிக்கையில் தங்களை தாக்கியதோடு உடன் வந்த மாணவியிடம் தகாத முறையில்(பாலியல் குற்றச்சாட்டு) பேரா.சௌந்திரராஜன் நடந்து கொண்டதாக மாணவர்கள் கூறியுள்ளனர். பேரா.சௌந்திரராஜனோ மாணவர்கள் தன்னை தாக்கியதாக குற்றம் சாட்டியுள்ளார். இருதரப்பினரும் தங்களுடைய வாதங்களுக்கு ஆதரவாக பல செய்திகளை உ.அ.குழுவிடம் தெரிவித்துள்ளனர். ஆனால், உ.அ.குழுவோ இருதரப்பின் வாதங்களை ஆராயாமல் தொல்லியியல் துறை மற்றும் பல்கலைக் கழக ஊழியர்கள் சொன்ன செய்திகளை மட்டும் எடுத்துக் கொண்டு பேரா.சௌந்திரராஜன் தாக்கப்பட்டார் என்று முடிவு செய்து விட்டது.
ஒரு அரசு நிர்வாகத்தில் குறிப்பாக பல்கலைக் கழகங்களில் உயர் பதவியில் இருப்பவர்கள் மீது மாணவர்கள் புகார் அளித்தால் ஒன்று மாணவர்களை தண்டிப்பார்கள் அல்லது நிலைமை கைமீறிவிட்டால் மொத்த நிர்வாகமே ஓரணியில் நின்று அந்த போராசிரியரை காப்பாற்ற முயற்சி செய்வார்கள். மாணவர்கள் பேராசிரியரை பழிவங்குவதெல்லாம் எதார்த்தத்தை மீறிய கற்பனை.
மாணவி மீது பாலியல் ரீதியான தாக்குதல் நடைபெறவில்லை பேரா.சௌந்திரராஜனை பழிவாங்குவதற்காகவே புனையப்பட்ட பொய்க்குற்றச்சாட்டு என்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் உ.அ.குழு தெரிவித்தது. அதற்கான ஆதாரங்கள் என்ன என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு பதிலில்லை. அறிக்கையிலும் குறிப்பிடவில்லை. பாலியல் குற்றச்சாட்டை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டக் குழுவின் மீது நம்பிக்கையில்லை என்று மாணவி ஏன் கூறுகிறார் என்று பத்திரிக்கையாளர்களிடம் எதிர்கேள்வி கேட்கிறது உ.அ.குழு. இதனால் மாணவர்களுக்கு உள்நோக்கம் இருப்பதாக உ.அ.குழு முடிவுக்கு வருகிறது.
பாலியல் குற்றச்சாட்டை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டக் குழு பாதிக்கப்பட்ட மாணவியிடம் செய்த விசாரணையின் ஒலிப்பதிவை யாரோருவர் கேட்டாலும் மாணவியின் முடிவுக்குத்தான் வரமுடியும். மிகவும் பிற்போக்கான ஆணாதிக்க மனநிலையிலிருந்தே பாலியல் குற்றச்சாட்டு விசாரனைக்குழு மாணவியிடம் விசாரணை செய்துள்ளது. இக்குழுவைப் பொருத்தவரை மாணவி மீதான தாக்குதல் திட்டமிட்டு நடந்தது கிடையாது.
அச்சூழலில் எதிர்பாராமல் நடந்த ஒன்று. எனவே, இதனை குற்றமாக கருத முடியாது. உ.அ.கு-வும் இவ்வாறேக் கருதுகிறது. உ.அ.கு-வின் உறுப்பினர்கள் மாணவர்களின் தரப்பிலிருந்தோ அல்லது பாதிக்கப்பட்ட மாணவியின் நிலையிலிருந்தோ இப்பிரச்சனையை அணுகவில்லை. ஒரே சமூகத்தை சேர்ந்த சகப் பேராசிரியரை காப்பாற்ற வேண்டும் என்னும் மனநிலையிலேயே இப்பிரச்சனையை அணுகியுள்ளனர்.
உ.அ.கு-வின் உறுப்பினரான தோழர் மஞ்சுளா “உ.அ.குழுவின் அறிக்கையானது பாலியல் துன்புறுத்தல் நிகழ்வின் உண்மைகளை மறுக்கிறது மற்றும் குற்றவாளியைக் காப்பாற்றுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது (on the final conclusion of this fact finding report which rebuffs the actual facts and is aimed at protecting the perpetrator)” என்று கூறி அறிக்கையை நிராகரிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், அதே குழுவில் அங்கம் வகிக்கும் நாசர் என்பவரும் இக்குழுவின் அறிக்கையில் மாற்றுக் கருத்து உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், மாணவர்களின் இன்டர்னல்/எக்ஸ்டர்னல் மதிப்பெண்களைப் பல்கலைக் கழக விதிப்படி துறையின் தகவல் பலகையில் போடாத செயலுக்கு இக்குழு ஒரு விளக்கம் தருகிறது. தகவல் பலகையில் மதிப்பெண்களைப் போடுவது அத்துறையில் நடைமுறையில் இல்லை. HOD சௌந்திரராஜன் ஏற்கனவே நடைமுறையில் இருந்த மரபைத்தான் தொடர்கிறார். புதிதாக அவர் எதையும் செய்யவில்லை என்கிறது.
மிக எளிமையான கேள்வி “ஒரு துறைத் தலைவர் பல்கலைக் கழக விதிப்படி நடக்க வேண்டுமா? அல்லது மரபு, வழக்கம் என்று செயல்பட வேண்டுமா?” உ.க.குழு மரபு, வழக்கம் அடிப்படையில் செயல்பட்டதை சரியென்று ஏற்றுக் கொள்கிறது. பல்கலைக் கழக சட்ட விதிகளைக் குழி தோண்டிப் புதைக்கிறது.
3. உ.அ.குழு கண்டுபிடிப்புகள் என்ற தலைப்பில் பொறுப்புத் துறைத் தலைவர் பதவியில் உள்ள பேரா.சௌந்திரராஜனை முழுத்துறைத் தலைவர் பதவிக்கு வரவிடாமல் தடுப்பதற்கு சதி நடப்பதாகவும் அவர் மீது சாதிய ரீதியான ஒடுக்குமுறை இருப்பதற்கான சாத்தியங்களை புறந்தள்ளிவிட முடியாது என்றும் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய Dr.லட்சுமணன், மாணவர்களின் போராட்டங்களுக்குப் பின்னால் பல்கலைக் கழக பேராசிரியர்கள் இருப்பதாகவும் பேரா.சௌந்திரராஜனை முழுமையான துறைத் தலைவர் பதவிக்கு வரவிடாமல் தடுப்பதற்காகவே அவர் மீதுப் பொய்யான குற்றச்சாட்டுகளை மாணவர்கள் தொடர்ந்து வைப்பதாகவும் அத்துறையில் பணியாற்றுகின்ற பேரா.சௌந்திரராஜன், Dr.கருணாகரன் மற்றும் பேரா.ராமசாமி(ஓய்வு) மூவரும் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதாலே மாணவர்கள் இது போன்று நடந்து கொள்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் மீதான இந்த ஆதாரமற்றக் குற்றச்சாட்டை நாங்கள் முழுமையாக மறுக்கிறோம். இது போன்ற அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை எங்கள் மீது வைத்ததற்கு உ.அ.குழுவை வன்மையாக கண்டிக்கிறோம்.
இதில் இரண்டு விசயங்கள் சொல்லப்பட்டுள்ளது. ஒன்று மாணவர்களின் போராட்டங்களுக்கு பின்னால் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் இருக்கிறார்கள் என்பது மற்றொன்று பேரா.சௌந்திரராஜன் உள்ளிட்ட மூவரும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் மாணவர்கள் திட்டமிட்டே பொய்யானக் குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்கள் என்பது.
மாணவர்களின் போராட்டங்களுக்குப் பின்னால் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் இருக்கிறார்கள் என்றால் அதற்கான ஆதாரங்களோடு பேராசிரியர்களின் பெயர்களைச் சுட்டிக்காட்ட வேண்டும். அறிக்கையில் இதைப் பற்றி ஒரு வரிக் கூட இல்லை. பத்திரிக்கையாளர் சந்திப்பில் இக்குற்றச்சாட்டை ஒட்டி பத்திரிக்கையாளர்கள் எழுப்பியக் கேள்விகளுக்கு உ.அ.குழுவின் உறுப்பினர்கள் நேரடியானப் பதில்களை சொல்லாமல் மழுப்பவே செய்தனர்.
பிறகு எதனடிப்படையில் மாணவர்கள் மீது உ.அ.குழு குற்றம் சுமத்துகிறது?
பல்கலைக் கழகங்கள் / உயர்கல்வி நிறுவனங்களில் துறைத் தலைவர், கல்லூரி மேலாளர், பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி, சிண்டிகேட் உறுப்பினர், துணைவேந்தர் போன்ற பதவிகளுக்காகப் பேராசிரியர்களுக்கு இடையே நடக்கும் திரைமறைவு குழாயடி சண்டைகள் யாவரும் அறிந்ததே. இதில் சாதி, பெரும் பணம், அரசியல் கட்சிகளின் தலையீடுப் போன்றவை மிகவும் வெளிப்படையாகவே நடக்கிறது.
தனியார் கல்லுரிகளின் வளர்ச்சிக்கு இவை இன்னும் வலுப்பெற்று பல்கலைக் கழகங்களை கட்டுப்படுத்துகின்றப் பிரதான சக்தியாகவே மாறியுள்ளன. ஆளும்வர்க்கத்துடன் நெருக்கமாக இருப்பதன் மூலம் உயர்ப்பதவிகளை அடைவது, மாணவர்களை ஒடுக்குவது, அதிகாரத்தில் தொய்ப்பது, அதிக வருவாய் பார்ப்பது இதுவே உயர்கல்வித் துறையின் பொதுத்தன்மையாக மாறியிருக்கிறது(இது குறித்து வாரத்திற்கு இரண்டு செய்திகளாவது பத்திரிக்கைகளில் வந்து விடுகின்றன).
உ.அ.குழு பதறுவதைப் போலவே பேரா.சௌந்திரராஜனின் பொறுப்புத் துறைத் தலைவர் பதவியை பறிக்க சதி நடப்பதாக வைத்துக் கொண்டாலும் இது பேராசிரியர் தரப்புகளுக்கிடையே நடக்கும் பதவிக்கான போட்டியே தவிர மாணவர்களுக்கும் இதற்கும் எந்த விதத் தொடர்பும் கிடையாது. மாணவர்கள் போராட்டங்களுக்குப் பின்னால் எந்த பேராசிரியரும் இல்லை என்பதை நாங்கள் உறுதியாகக் கூறுகிறோம்.
பேரா.சௌந்திரராஜன், Dr.கருணாகரன் மற்றும் பேரா.ராமசாமி(ஓய்வு) ஆகியோர் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் மீது மாணவர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டுகிறார்கள் என்று பேரா.லட்சுமணன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியுள்ளார். ஆனால், இதற்கான ஆதாரங்களை எங்கேயும் குறிப்பிடவில்லை. மாணவர்கள் மீதான இந்த ஆதரமற்ற பொய் குற்றச்சாட்டை மறுப்பதோடு இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
மெஸ் பிரச்சனையிலிருந்தே மாணவர்களிடம் பழிவாங்கும் நோக்கத்துடனும் அதிகாரத்துவத்துடனும் பேரா.சௌந்திரராஜன் நடந்து வந்துள்ளார். இதனால், மாணவர்கள் பேரா.சௌந்திரராஜன் மீது புகார் கொடுத்துள்ளனர். பேரா.ராமசாமி(ஓய்வு) மீது மாணவர்கள் எங்கேயும் புகார் அளிக்கவில்லை. உ.அ.குழுவினர் மாணவர்களைச் சந்தித்து பேசிய பொழுது தொல்லியல் துறைப் பேராசிரியர்கள் பாடம் நடத்துவதைக் குறித்து கேள்விகள் கேட்டுள்ளனர்.
அதற்கு சரியாக பாடம் நடத்துவதில்லை என்று தங்களது அதிருப்தியை மாணவர்கள் தெரிவித்துள்ளனர். பாடம் எடுத்தவர்களில் மூவர் தலித் சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் உடனே சாதிய ஒடுக்குமுறை என்ற பிம்பத்தை உ.அ.குழு உருவாக்குகிறது.
ஆசிரியர் பாடம் நடத்துவது சரியில்லை என்று மாணவர்கள் கருதுவதே சாதிய ஒடுக்குமுறையா? ஆசிரியர் இடைநிலைச் சாதியாக இருந்து அதிருப்தி தெரிவிக்கும் மாணவர்கள் தலித் சமூகத்தினராக இருந்தால் இதை உ.அ.குழு என்னவென்று சொல்லும்? சொல்லித் தரும் பேராசிரியாருக்குப் பாடத்தில் ஆழ்ந்த அறிவு உள்ளதா, மாணவர்களிடம் ஜனநாயகமாகவும் நேர்மையாகவும் நடந்துக் கொள்கிறாரா? நன்றாக பாடம் நடத்துகிறார? போன்றவையெல்லாம் மற்றவர்களை விட மாணவர்களுக்கே நன்றாகத் தெரியும்.
மேலும், இக்குழுப் பாதிக்கப்பட்ட மாணவர்களில் ஒருவர் தலித் என்பதை அப்பட்டமாக மறைத்து விட்டது. காரணம் அது ஒன்று மட்டுமே சௌந்திரராஜனை காப்பாற்றும் கடைசி ஆயுதம். இதற்கு குழுவில் உள்ள தலித் இன்டெலெக்சுவல் கலெக்ட்டிவின் Mr.லக்ஷ்மணன் கூறுவது. அம்மாணவரின் சான்றிதழ் படி அவர் தலித் இல்லை.
இதன்படி ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தை சார்ந்தவர் கிறுத்தவராக மதம் மாறினால் அவருக்கு இந்த சமூகத்தில் சாதிய ரீதியான ஒடுக்குமுறை இல்லை என்று சமூக எதார்த்தத்தை மறைக்கிறார். இது அயோக்கியத்தனம் இல்லையா? அதிகாரத்தில் இருக்கும் தலித் மற்றொரு தலித்தை ஒடுக்கும் போது அதிகாரத்தில் இருக்கும் தலித்தைக் காப்பாற்ற முனைகிறது. அவ்வளவுதான் இதன் யோக்கியதை.
இப்பிரச்சனையில், ஒன்று மாணவர்கள் பொறுப்புத் துறைத் தலைவரிடம் சாதி ரீதியாக நடந்துக் கொண்டதற்கான ஆதாரங்களைக் காட்ட வேண்டும் அல்லது வேறு ஏதாவது தருணங்களில் சாதிய ரீதியாக பேரா.சௌந்திரராஜனிடம் மாணவர்கள் நடந்து கொண்டார்களா என்பதைக் கண்டறிந்து அறிக்கையில் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.
தகுந்த ஆதாரங்களும் இல்லாமல் நேர்மையானப் பகுப்பாய்வும் செய்யாமல் பேரா.சௌந்திரராஜனை காப்பாற்றுவதற்காக மாணவர்கள் மீது தலித் விரோதி என்ற பொய்க்குற்றத்தை சுமத்தியதோடுப் பொதுவெளியிலும் அறிவித்து விட்டது உ.அ.குழு. இது நடுநிலைத் தவறிய அறிவு நேர்மையற்ற அணுகுமுறை என்று கருதுகிறோம்.
எங்கள் மீதான குற்றச்சாட்டிற்குத் தகுந்த ஆதாரங்களைக் காண்பித்தால் எங்களை சுயபரிசீலனை செய்துக் கொள்ளவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். இல்லையேல் உ.அ.குழு மாணவர்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என்று கோருகிறோம்.
மெஸ் கட்டணக் கொள்ளைக்கு எதிராகவும் ஜனநாயகமற்ற முறையில் நடந்துக் கொண்ட பல்கலைகழக நிர்வாகத்தைக் கண்டித்தும் பழிவாங்கும் நோக்கத்தோடு மாணவர்களை பெயில் செய்ததோடு மாணவியிடம் நாகரீகமற்ற முறையில் நடந்துக் கொண்ட பொறுப்புத் துறைத் தலைவர் பேரா.சௌந்திரராஜனை கண்டித்தும் இரண்டரை மாத காலமாக வெவ்வேறு கட்டங்களில் சமரசமின்றி மாணவர்கள் நடத்தியப் போராட்டத்தினை ஆதாரமற்றப் பொய்க்குற்றச்சாட்டுகளின் மூலம் களங்கப் படுத்தியுள்ளது உ.அ.குழு.
தங்காத விடுதிக்கும், இயங்காத மெஸ்-க்கும் எதற்காகக் கட்டணம் செலுத்த வேண்டும்? பல்கலைக் கழகம் தன்னுடைய நிதி சுமையைச் சமாளிப்பதற்கு மாணவர்கள் மீதுத் திணிப்பதை எதிர்த்து மாணவர்கள் போராடக் கூடாதா? மாணவர்களை பழிவாங்குவதற்காகப் பெயில் செய்ததையும் அவர்களின் விடைத் தாள்களை தொலைத்ததையும் எதிர்த்து மாணவர்கள் கேள்வி கேட்கக் கூடாதா? தன்னுடன் படிக்கும் நண்பர்கள் பாதிக்கப்படும் போது சகமாணவர்களும் அவர்களுக்கு ஆதரவாகப் போராட மாட்டார்களா? பாலியல் குற்றச்சாட்டை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டக் குழு நடுநிலையாக நடந்துக் கொள்ளவில்லை என பாதிக்கப்பட்ட மாணவி கருத்து சொல்லக் கூடாதா? மாணவர்களின் இயல்பான எதிர்வினைகளை உள்நோக்கத்தோடு திரித்து அறிக்கையாக்கியுள்ளது உ.அ.குழு.
மாணவர் போராட்டங்களுக்கு ஆதாரமற்ற வகையில் களங்கம் கற்பிப்பது என்பது ஒரு ஆளும்வர்க்க உத்தியாகும். விடுதிக் கட்டணக் குறைப்புக்கானப் போராட்டத்திலிருந்தே இப்பிரச்சனைத் தொடங்குகிறது என மேலே விவரித்திருந்தோம். இந்தக் கோரிக்கை ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த மாணவர்களுக்கோ அல்லது குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கானதோ அல்ல அனைத்து மாணவர்களுக்கானதாகும்.
குறிப்பாக கொரோனா ஊரடங்கை ஒட்டி பலக் கல்லூரிகளில் விடுதிக் கட்டணக் குறைப்புக்கான கோரிக்கைகள் பரவலான பேசு பொருளாகவே இருந்தது. உரிமை என்று பேசினாலே தண்டிக்கப்படும் நமது பல்கலைக் கழக / கல்லூரிகளின் ஒடுக்குமுறைகளுக்கிடையே தங்களுடைய உரிமைக்காக வெகு சில மாணவர்களேப் போராட முன்வருகின்றனர்.
இச்சூழலில் மாணவர்களின் பொதுப் பிரச்சனைக்கானப் போராட்டத்தை தங்களுடைய குறுகியப் பார்வையினால் ஆதாரமே இல்லாமல் சாதிய சாயத்தை பூசுவதன் மூலம் மாணவர்களுடையப் போராட்டத்தைப் பின்னோக்கி இழுக்கின்ற வேலையை உ.அ.குழு செய்துள்ளதாகக் கருதுகிறோம். குறிப்பாக மாணவர்களிடம் சாதிய உள்நோக்கம் இருந்தாகத் தெரியவில்லை. மாறாக மொத்தப் பிரச்சனையையும் உ.அ.குழுவே சாதிய கண்ணோட்டத்துடன் அணுகி இருப்பதாகக் கருதுகிறோம்.
இந்த அணுகுமுறை மாணவர்களிடையே ஒற்றுமையை உருவாக்குவதற்குப் பதிலாக அவர்களைப் பிரிப்பதற்கே துணை புரியும். மேலும், இப்போக்குப் பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் ஜனநாயக உரிமைகளைப் பறிப்பதற்கும் அதனை எதிர்த்துப் போராடும் மாணவர்களைத் தீவிரமாக ஒடுக்குவதற்கும் எவ்வித எதிர்ப்பும் இன்றி கல்வி நிறுவனங்களை பாசிச பிடியின் கீழ் கொண்டு செல்வதற்கும் வழியமைத்துக் கொடுக்கும் என்றே கருதுகிறோம்.
சரியான நேரத்தில் குற்றவாளி பேரா.சௌந்திரராஜனை பாதுகாக்கும் உ.அ.குழுவின் நோக்கத்திற்கு உடன்படாமல் அதை அம்பலப்படுத்தி அறிக்கையை நிராகரித்த Ms.G.மஞ்சுளா அவர்களுக்கும், இவ்வறிக்கையில் மாற்றுக் கருத்து உள்ளதாக உடன்பட மறுத்த Mr.உசைன் நாசர் அவர்களுக்கும் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்றோம்.
நன்றி!
இவண், அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம், சென்னை பல்கலைக் கழகம்.
எந்தக் குற்றமும் செய்யாத ஹனிபாபு 9 மாதங்களாக சிறையில் இருக்கிறார்;
விடுதலை கோரும் அவரது குடும்பம்
தேசிய புலனாய்வு முகமை எந்த குற்றமும் செய்யாத ஹனி பாபுவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. அவரை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என ஹனி பாபுவின் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
எல்கர் பரிஷத் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக ஆதாரங்கள் ஜோடிக்கப்பட்டவை என தடயவியல் பரிசோதனைகளில் தெரிய வந்த போதும், நீதிமன்றங்களும் விசாரணை நிறுவனங்களும் இன்னமும் சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை ஹனி பாபு குடும்பத்தினர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளனர்.
“அப்பாவியான ஹனி பாபு மும்பையில் ஒரு நெரிசலான சிறையில் அவரைப் போன்ற விசாரணை கைதிகளுடன் அடைக்கப்பட்டு ஒன்பது மாதங்கள் கழித்திருக்கிறார். கைதுக்கு முந்தைய ஐந்து நாள் நீண்ட விசாரணையின் போது, அவரை ஒரு சாட்சியாக இருக்கும் படி என்.ஐ.ஏ அதிகாரிகள் கட்டாயப் படுத்துவதாகவும், ஏற்கனவே கைது செய்யப்பட்ட சிலருக்கு எதிராக சாட்சியங்களை வழங்க வேண்டும் என வற்புறுத்துவதாகவும் அவர் எங்களிடம் தெரிவித்திருந்தார்.
மற்றவர்களுக்கு எதிராக பொய் சாட்சியம் அளிக்க மறுத்ததால் என்.ஐ.ஏ அதிகாரிகள் மகிழ்ச்சியடையவில்லை என கைதாவதற்கு முன் அவருடைய போனிலிருந்து வந்த இறுதி அழைப்பின் போது குறிப்பிட்டார்” எனவும் ஹனிபாபுவின் குடும்பத்தினர் தங்களுடைய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
கோவிட் 19 பெருந்தொற்று காலத்தில் சிறைச்சாலை நிலைமைகள் குறித்து ஹனிபாபுவின் குடும்பம் கவலை தெரிவித்துள்ளது. “இது அடிப்படை மனித உரிமைகளை முற்றிலும் மீறுவதாகும். உண்மையில், பெருந்தொற்று என்ற காரணத்தைக் காட்டி, ஆரம்பத்தில் இருந்தே ஹானி பாபுவை நேரில் சென்று பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது. புத்தகங்களைக் கொண்ட பார்சல்கள் கூட அவருக்கு தர மறுக்கப்படுகிறது.
மேலும் கடிதங்களை அனுப்புவது / பெறுவது மற்றும் தொலைபேசி அழைப்புகள் செய்வது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் விருப்பத்தைப் பொறுத்தே நிர்வகிக்கப் படுவதாகத் தெரிகிறது” என தெரிவித்துள்ளனர்.
ஹனிபாபு குடும்பத்தினர் எழுதியுள்ள கடிதம் :
“மிக மோசமான தவறு, தவறைத் தொடர்ந்து நிலைநிறுத்துவதேயாகும், பீமா கொரேகான் வழக்கில் அப்படித்தான் தெரிகிறது. கொரேகான்-எல்கர் பரிஷத் வழக்கில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது ஒரு படுகொலை சதித்திட்டத்துடன் தொடங்கியது. ஆனால், விரைவில் கையொப்பமிடப்படாத மற்றும் சரிபார்க்கப்படாத சில கடிதங்கள் தொலைதூரத்தில் இருந்து தனிப்பட்ட கணினிகளில் ஜோடிக்கப்பட்டன. ஆயினும் கூட, நீதியைக் குழப்புவதையும் தடுப்பதையும் அரசு தொடர்கிறது.
டெல்லி பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியரான ஹனி பாபு, பீமா கொரேகான் வழக்கில் கைதான 16 பேரில் 12-வது நபராக கைதானவர். ஹனி பாபு மொழியியல் அறிஞர் (EFLU, ஹைதராபாத் மற்றும் கொன்ஸ்டான்ஸ் பல்கலைக்கழகம், ஜெர்மனிய பி.எச்.டி.). அவர் ஒரு நேர்மையான கல்வியாளர் மற்றும் ஒரு சமூக ஆர்வலர், தன்னை ஒரு அம்பேத்கரிஸ்ட் என்று அடையாளப் படுத்திக் கொண்டு, சமூக நீதிக்கான சாதி எதிர்ப்புப் போராட்டங்களுக்காக தனது வாழ்க்கையையும் பணியையும் அர்ப்பணித்துள்ளார்.
மற்றவர்களின் கவலைகளைச் சந்திக்க எப்போதும் வழியிலிருந்து விலகிச் செல்லும், மிகவும் ஜனநாயகமான, அறிவொளியுடன் கூடிய, நட்புமிக்க அறிவுஜீவிகளில் ஒருவரான அவரை, மாணவர்கள் மற்றும் அறிஞர்கள் பரவலாக நேசிக்கிறார்கள் என்பதில் ஆச்சரியமில்லை.
2018 பீமா கொரேகான் – எல்கர் பரிஷத் வழக்கு முழுமையும் அநீதியாக உள்ள நிலையில் ஹனி பாபுவை சந்தேக நபராக பார்ப்பது மிகுந்த கவலையை அளிக்கக் கூடியதாகும். பீமா கோரேகான் – எல்கர் பரிஷத் வழக்கில் 2020 ஜூலை 28 அன்று ஹனி பாபு அநீதியாக கைது செய்யப்பட்டார். ஐந்து நாட்கள் அர்த்தமற்ற விசாரணைக்காக என்.ஐ.ஏ மும்பைக்கு அவரை வரவழைத்தது.
கைதுக்கு முன்னதாக 2019 செப்டம்பரில் அவரது வீட்டில் நடந்த முதல் போலீசு சோதனை (இரண்டாவது ஆகஸ்ட் 2020)யில் எந்தவித சோதனை வாரண்ட்டும் உரிய நடைமுறை பின்பற்றுதலும் இல்லாமல் புத்தகங்கள், ஆவணங்கள் மற்றும் மின்னணு சாதனங்களை பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட மின்னணு பொருட்களின் சரியான கணக்கையோ அவற்றின் மதிப்பு குறித்த தகவலையோ அவருக்கு உடனடியாக வழங்கவில்லை.
அவற்றை தங்களுடைய நோக்கத்துக்குப் பயன்படுத்தும் விதமாகப் பறிமுதல் விவரங்களை அவர்கள் தெரிவிக்கவில்லை. உண்மையில், இந்த மொத்த சோதனையும் பறிமுதல் செயல்முறையும் சட்டத்தின் ஆட்சியின் மூலம் பிரச்சினகளை தீர்க்கலாம் என எப்போதும் பேசி வந்த ஹனி பாபு போன்றவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும்.
இப்போது குற்றமற்றவரான ஹனி பாபு மும்பையில் ஒரு நெரிசலான சிறையில் அவரைப் போன்ற விசாரணை கைதிகளுடன் அடைக்கப்பட்டு ஒன்பது மாதங்கள் கழித்திருக்கிறார். கைதுக்கு முந்தைய ஐந்து நாள் நீண்ட விசாரணையின் போது, அவரை ஒரு சாட்சியாக இருக்கும் படி என்.ஐ.ஏ அதிகாரிகள் கட்டாயப் படுத்துவதாகவும், ஏற்கனவே கைது செய்யப்பட்ட சிலருக்கு எதிராக சாட்சியங்களை வழங்க வேண்டும் என வற்புறுத்துவதாகவும் அவர் எங்களிடம் தெரிவித்திருந்தார்.
மற்றவர்களுக்கு எதிராக பொய் சாட்சியம் அளிக்க மறுத்ததால் என்.ஐ.ஏ அதிகாரிகள் மகிழ்ச்சியடையவில்லை என கைதாவதற்கு முன் அவருடையப் போனிலிருந்து வந்த இறுதி அழைப்பின்போது குறிப்பிட்டார். என்.ஐ.ஏ அவருக்கு ஒரு பாடம் கற்பிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது, குற்றச்சாட்டு மட்டும் அவரை ஒரு ‘மாவோயிஸ்ட்’ என முத்திரை குத்துவதற்கும் காலவரையின்றி சிறையில் அடைப்பதற்கும் போதுமான ‘சான்றுளாக’ நினைக்கிறது. கைதான 16 பேர் மீதும் குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்வதை தாமதப்படுத்தத் திட்டமிடுவது தெரிகிறது.
புதிதாகக் கைது செய்யப்பட்டவர்கள் விசாரிக்கப்பட வேண்டும், புதிய ஆதாரங்கள் ஆராயப்பட வேண்டும் என காரணமும் சொல்கிறார்கள். நாடு முழுவதிலிருந்தும் பீமா கொரேகான் வழக்கில் கைதான் 16 பேரும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் இல்லாதவர்களாகவும் அனைவரும் குற்றமற்றவர்களாக, மற்றவர் மீது குற்றம் சொல்லாதவர்களாக இருந்த போதும் இந்த முழு வழக்கு தவறானது அல்ல என நிரூபிக்க என்.ஐ.ஏ முனைந்துக் கொண்டுள்ளது.
எனவே, ஹனி பாபுவின் குடும்ப உறுப்பினர்களான நாங்கள், எங்கள் வேதனையையும் வலியையும் பகிர்ந்து கொள்ள இந்த வேண்டுகோளை விடுக்கின்றோம். மேலும், மராட்டிய சிறைகளில் கோவிட்-19 தொற்று அதிகரித்து வருவது குறித்து மும்பை உயர்நீதிமன்றம் கூட தானாக முன்வந்து வழக்காக விசாரித்த நிலையில், இந்த கொடூரமான காலங்கள் எங்களைப் பதற்றத்துக்கு உள்ளாக்குவதையும் நாங்கள் வெளிப்படுத்துகிறோம்.
ஹனி பாபு செய்த ஒரே ‘குற்றம்’ சாதி எதிர்ப்புப் போராட்டம் மற்றும் சமூக நீதிக்கான அம்பேத்கரிய உறுதியான அர்ப்பணிப்பு என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஏனென்றால், டெல்லி பல்கலைக் கழகத்தில் ஓ.பி.சி இடஒதுக்கீடுகளை நடைமுறைப்படுத்தவும் பட்டியலின் / பழங்குடியினருக்கு எதிரானப் பாகுப்பாட்டை முடிவுக்கு கொண்டு வரவும் இடைவிடாமல் ஆரம்பக்கட்டத்தில் போராடிய சிலரில் அவர் ஒருவராக இருந்தார்.
90 சதவீத மாற்றுத் திறனாளியான ஜி.என்.சாய்பாபா-வின் சகமாணவராகவும் பின்னாளில் சகஊழியராகவும் இருந்த காரணத்தால் அவர் சிறை வைக்கப்பட்ட போது அவரின் விடுதலை கோரும் குழுவில் தீவிரமாக செயல்பட்டார்.
உண்மையில், இடஒதுக்கீடுகளை அமல்படுத்துவதற்கானப் போராடுபவரோ அல்லது ஒரு குடிமகனின் உரிமையைப் பாதுகாப்பு, நியாயமான விசாரணையை கோருவது குற்றவியல் மற்றும் மாவோயிச தொடர்புகளுக்கு சான்றாக இருப்பது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது.
என்.ஐ.ஏ இதுவரை கணிசமான ஆதாரங்களைப் பகிர்ந்து கொள்ளாததால், ஹனி பாபுவின் சிவில் மற்றும் சட்ட உரிமை மீறல்கள் தொடர்கின்றன. மிக முக்கியமாக, பறிமுதல் செய்யப்பட்ட மின்னணு சாதனங்களின் குளோன் நகல்களுக்கான ஹனி பாபுவின் கோரிக்கை காலவரையின்றி தாமதமாகி வருகிறது.
மாசசூசெட்ஸை தளமாகக் கொண்ட டிஜிட்டல் தடயவியல் நிறுவனமான ஆர்சனல் கன்சல்டிங், பீமா கொரேகான வழக்கில் கைதான ரோனா வில்சன் கணினியில் ஒரு ஹேக்கரால் தீங்கிழைக்கும் மென்பொருள் மூலம் கோப்புகள் சொருகப்பட்டதும் அது, அவருடைய நண்பரின் மடி கணினிக்கு பரவியதை கண்டறிந்தது. இதம் மூலம் என்.ஐ.ஏ-வின் ஒரே ஆதாரமான மாவோயிஸ்ட் கடிதங்கள் என அழைக்கப்படும் ஆதாரங்கள் கேள்விக்குள்ளாக்கப்பட்டன.
இவை கண்டுபிடிக்கப்பட்டு ஓராண்டு ஆனபிறகும் கூட இந்த வழக்கில் ‘ஆதாரங்களாக’ சமர்பிக்கப்பட்டுள்ள அனைத்து தரவுகளையும் உடனடியாக தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்த நீதிமன்றங்கள் தானாக முன்வந்து அறிந்துக் கொள்ளவில்லை என்பதில் நாங்கள் ஆச்சரியப்படுகிறோம். எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் உடனடியாக கிடைக்கக் கூடிய அத்தகைய செயல்முறை, தாமத தந்திரோபாயங்களால் மாற்றப்பட்டுள்ளது.
அவை நீதிக்கு இடையூறு விளைவிக்கும். மேலும், தொற்று பேரழிவு காரணமாக பல நாடுகள் தங்கள் அரசியல் கைதிகளை விடுவிக்கும் ஒரு நேரத்தில், பீமா கொரேகான் 16 பேரின் பிணை விண்ணப்பங்கள் வயது மற்றும் உடல்நலக் குறைவு இருந்த போதிலும் மீண்டும் மீண்டும் நிராகரிக்கப் படுகின்றன. எனவே, கோவிட் தொற்றும் மரணங்களும் சிறைச்சாலைகளில் அதிகரிப்பது குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொள்கிறோம். இது அடிப்படை மனித உரிமைகளை முற்றிலும் மீறுவதாகும்.
தற்போது நடந்து வரும் தொற்று நோயால் பாதிக்கப்படாத ஒரு நபர் அல்லது வீடு அல்லது நிறுவனம் (நீதிமன்றம் உட்பட) இருக்க முடியாது. குறிப்பாக ஹனி பாபுவைப் போல விசாரணை கைதிகளின் குடும்பத்தினரின் வேதனை வார்த்தையால் விவரிக்க முடியாததாகும். தகவல் தொடர்பும் மறுக்கப்பட்டு விசாரணைக்கு முடிவில்லாமல் காத்திருப்பவர்களின் வேதனைப் பன்மடங்கானது.
ஹானி பாபு தனது அரிதான கடிதம் ஒன்றில், சிறைக்குள் தபால் முத்திரைகள், காகிதம் மற்றும் பேனா ஆகியவையும் கூட விலை உயர்ந்தவை என்பதால் அவர் விரும்பும் போதெல்லாம் கடிதங்களை எழுத முடியாது என தெரிவித்திருந்தார். சிறைச்சாலையிலிருந்து அவர் எழுதிய கடிதங்கள், அவரின் வாழ்க்கையை அவருக்குத் திருப்பித் தரும் விதமாக, நம்முடைய நீதித்துறை முறைமையில் உள்ள உளப்பூர்வமான நம்பிக்கையைப் பதிவு செய்கின்றன.
விசாரணையைத் தொடங்குவதில் ஏற்படும் தாமதம் அவரது தனிப்பட்ட, கல்வி மற்றும் அறிவுசார் வாழ்க்கையை ஹனி பாபு-விடமிருந்து மேலும் விலக்கிவிடும். சமீபத்திய உச்சநீதிமன்ற அவதானிப்பு திட்டவட்டமாகக் கூறுவது போல், விரைவான விசாரணை என்பது UAPA-இன் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்குக் கூட ஒரு அடிப்படை உரிமை. செயல்முறையே இனி தண்டனையாக இருக்கக் கூடாது!
எனவே, நாங்கள் ஹனி பாபு-வின் குடும்ப உறுப்பினர்கள், முறையிடுகிறோம் :
குளோன் பிரதிகள் உட்பட அனைத்து ஆதாரங்களும் உடனடியாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கிடைக்கும் படி செய்யப்பட வேண்டும். இதனால், குற்றம்சாட்டப்பட்ட தரப்பினர் தங்களுடைய சுயாதீன விசாரணையை முடித்து விரைவாக வழக்கு விசாரணையை தொடங்க முடியும்.
நடைமுறையில் உள்ள விதிகள் மற்றும் விதிமுறைகளின் படி விசாரணை தொடங்கும் வரை குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் உடனடியாகப் பிணை வழங்கப்பட வேண்டும். இல்லையெனில் இந்த நீதி அமைப்பு தீய நோக்கங்களை மறைமுகமாக வளர்ப்பதற்கு தன்னளவில் திறந்திருக்கிறது என்றே கொள்ளலாம்.
இதுபோல, கேரளத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள், செயல்பாட்டாளர்கள், எம்.பி, எம்.எல்.ஏ உள்ளிட்டோர் பெருந்தொற்று காலத்தில் விசாரணை கைதிகளாக உள்ள ஹனி பாபு போன்றோரை சிறையில் விடுவிக்க வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளனர்.
ஹனி பாபு-வின் சமூக நீதிக்கான சாதி எதிர்ப்புப் போராட்டங்களே சனாதன அரசுக்கு எதிராக நிறுத்தியுள்ளதாகவும் கொடூரப் பெருந்தொற்றுக் காலத்தில் விசாரணை கைதிகளை சிறையில் இருப்பது அப்பட்டமான மனித உரிமை மீறல் எனவும் கடிதத்தில் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
“ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நேர்ந்து கொண்ட ஹனி பாபு போன்ற அறிவுஜீவிகளை வேட்டையாடுவதன் மூலம், சங்க பரிவாரங்கள் இந்துத்துவக் கருத்தியலுக்கு எதிரானக் குரல்களை அழுத்தப் பார்க்கிறது. அரச வேட்டையின் பலியாக சிறைகளில் தவிக்கும் ஹனி பாபு மற்றும் பல குற்றமற்றவர்களுக்காக நாம் குரல் எழுப்பத் தொடங்க வேண்டிய நேரம் இது.
இந்த நாட்டின் ஜனநாயக விழுமியங்களும் மனித உரிமைகளும் நாம் பேசுவது போல் இறுக்கமடைந்துள்ளன. நமது மௌனத்தின் ஒவ்வொரு கணமும் அதற்கு மேலும் வலுசேர்க்கிறது. நம்முடைய வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு, நீதிக்கான குரல்களை நாம் ஒன்றாக உயர்த்த வேண்டும்” என தங்களுடைய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.