Sunday, November 9, 2025
முகப்பு பதிவு பக்கம் 343

குழந்தைப் பருவத்தை அவர்களிடமிருந்து ஏன் பிடுங்க வேண்டும் ?

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 2 | பாகம் – 14

முன்மொழிவுகள், கேள்விகள்

…பெற்றோர்கள் எந்த விதமான உதவிகளைச் செய்வதாக வாக்களிக்கின்றனர், ஆறு வயதுக் குழந்தைகளுக்குப் படிப்பு சொல்லித் தருவது சம்பந்தமாக எப்படிப்பட்ட கருத்துக்கள் அவர்களிடம் உதிக்கின்றன என்பது சுவாரசியமானது. மனிதாபிமான அடிப்படையில் குழந்தைகளை வளர்க்கும் திட்டத்தில் அவர்களை செயல்முனைப்போடு ஈடுபடுத்த விரும்புகிறேன். அவர்கள் நான் சொல்வதை ஏற்றுக் கொள்வார்களா? முந்திய ஆண்டுகளில் பல பெற்றோர்கள் இதில் பெரும் உற்சாகத்தோடு ஈடுபட்டார்கள், இந்த அனுபவம் இன்று எனக்கு ஊக்கமளித்தது, எனவே தான் நானே உருவாக்கிய “முது மொழிகளைத்” துணிவாகப் பெற்றோர்கள் முன் வைத்தேன்.

அவர்கள் என்ன செய்வதாக வாக்களிக்கின்றனர், அவர்களது கருத்துக்கள் யாவை?

முதலில் வாக்குறுதிகளைப் பார்ப்போம்,

“நான் தொல்பொருள் ஆராய்ச்சியாளர். தொல்பொருள் ஆராய்ச்சி பற்றிக் குழந்தைகளுக்கு சுவாரசியமாக எடுத்துச் சொல்ல என்னால் முடியும், ஜார்ஜியாவின் பண்டைய தலைநகரமாகிய மித் ஸ்ஹேத்தாவிற்கு அவர்களை அழைத்துச் சென்று தொல்பொருள் ஆராய்ச்சி இடங்களைக் காட்ட முடியும். இது அவர்களுக்கு நிச்சயமாகச் சுவாரசியமாக இருக்கும்.” கோத்தேயின் பாட்டி.

2-3 -ம் வகுப்புகளில் இப்படிச் செய்யலாமே!

“என்னால் ஆண்டிற்கு இருமுறை பேருந்திற்கு ஏற்பாடு செய்ய இயலும். நகரத்திற்கு வெளியே சுற்றுலா செல்லலாம். இரண்டு வாரத்திற்கு முன் சொன்னால் போதும்.” கியோர்கியின் தந்தை.

இது நல்லது! அக்டோபர் மாதம் நகரத் தாவரவியல் பூங்காவிற்கு முதல் சுற்றுலாச் செல்ல நான் திட்டமிட்டுள்ளேன். இலையுதிர் காலத்தில் இயற்கை எப்படி மாற்றமடைகிறது என்று கவனிக்கலாம்.

“குழந்தைகளுக்காக ஒரு மின்சார போர்டு செய்ய முடியும், பல்வேறு மின் உபகரணங்களையும் செய்ய இயலும். எப்படிப்பட்ட பாடச் சாதனங்கள் வகுப்பிற்குத் தேவை என்று மட்டும் சொல்லுங்கள்.” தேயாவின் தந்தை.

இந்த வாரமே தேயாவின் தந்தையோடு பேச வேண்டும்.

“நானும் என் மனைவியும் இசையமைப்பாளர்கள். ஒரு சிறு குழந்தைகள் ஒப்பேராவை எங்களால் தயாரிக்க முடியும். பாட நேரத்திற்குப் பின் நாங்களே ஒத்திகைகளை நடத்துவோம். எல்லாக் குழந்தைகளும் இதில் பங்கேற்பார்கள்.” கோச்சாவின் பெற்றோர்கள்.

பெரிதும் சுவாரசியமான முன்மொழிவு. “இரண்டு மூன்று பெற்றோர்கள் உதவினால் வகுப்பறையின் சுவர்களுக்கு வர்ணம் பூசி உற்சாகமாயும் சுவாரசியமாயும் இருக்கும்படிச் செய்ய இயலும்.” தாம்ரிக்கோவின் தந்தை .

இதைப் பற்றி யோசித்து முடிவு செய்ய வேண்டும். “நான் வேலையிலிருந்து ஓய்வு பெற்று விட்டேன். பெற்றோர்களின் முறை அலுவலுக்கு ஏற்பாடு செய்ய இயலும். என்னால் தாழ்வாரத்தில் ரோந்து வர முடியும், எல்லாவற்றிலும் உங்களுக்கு உதவுவோம்.” மாயாவின் பாட்டி. பெற்றோர்களின் முறை அலுவல் தேவையான ஒரு விஷயம். இந்த முன்மொழிவைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

“வகுப்பறைக்காக ஸ்டேன்டு, சிறு மேசைகள் போன்றவற்றைச் செய்ய முடியும்.” ஏக்காவின் தந்தை.

ஒரு சுவர் முழுவதும் வரும்படியாக ஸ்டேன்டு செய்தால் நன்றாயிருக்கும். எல்லாக் குழந்தைகளின் குழந்தைப்பருவப் படங்களையும் இதில் மாட்டலாம். பின் ஒவ்வொரு குழந்தையின் பிறந்த நாள் வரும் போதும் அக்குழந்தையின் புகைப்படத்தை மாட்டலாம்.

“குழந்தைகளை அச்சகத்திற்கு அழைத்துச் சென்று புத்தகங்கள் எப்படி அச்சிடப்படுகின்றன என்று காட்ட முடியும்.” எலேனாவின் அம்மா.
குழந்தைகள் 2-வது வகுப்பிற்கு வந்ததும் நிச்சயம் அங்கு அழைத்துச் செல்ல வேண்டும்…

“எங்கள் வீட்டில் சிறு தோட்டம் உள்ளது. அங்கு பல்வேறுவிதமான பூச்செடிகள் இருக்கின்றன. வகுப்பறைக்காக சில பூந்தொட்டிகளில் இச்செடிகளைக் கொண்டு வர முடியும். குழந்தைகள் இவற்றிற்கு நீர் ஊற்றி வளர்க்கலாம். அவ்வப்போது இவற்றை முறையாக மாற்றி வேறு பூச்செடிகளைக் கொண்டு வருவேன். குழந்தைகள் பல்வேறு விதமான மலர்களோடு அறிமுகமாகலாம்.” நீயாவின் தாய்.

சுவாரசியமான விஷயம். இதை உடனே செய்யும்படி அவரிடம் கூற வேண்டும்.
டேப்ரிக்கார்டர், கிராமபோன், மீன் தொட்டி போன்றவற்றை வகுப்பறைக்குப் பரிசளிப்பது; படம் வரைய சொல்லித் தருவது, பல்வேறு விளையாட்டுக்களைச் சொல்லித் தருவது, தாழ்வாரத்தில் திரைகளைத் தொங்க விட்டு அழகுபடுத்துவது, குழந்தைகளைப் படமெடுத்து மாட்டுவது போன்ற பல்வேறு மற்ற முன்மொழிவுகளும் வந்தன. இவற்றையெல்லாம் தேவையானபோது நான் பயன்படுத்திக் கொள்வேன்.
அடுத்து, பெற்றோர்களின் கேள்விகள், ஆலோசனைகளைப் பார்ப்போம்.

“ஆறு வயதுக் குழந்தைகளை ஏன் பள்ளியில் சேர்த்துக் கொள்கின்றனர் என்று விளக்குவீர்களா? நாம் ஏன் அவசரப்பட வேண்டும்? குழந்தைப்பருவத்தை ஏன் அவர்களிடமிருந்து பிடுங்க வேண்டும்?” நான் கண்டிப்பாக விளக்கம் தருவேன்.

“இளம் பெற்றோர்களுக்காக ஆசிரியர் பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள். இது எங்களுக்கு மிகவும் தேவைப்படுகிறது!” இந்த வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டும்.

“அடிக்கடி குழந்தைகளைக் காற்றாட அழைத்துச் செல்வீர்களா?” கண்டிப்பாக, ஒவ்வொரு நாளும் அழைத்துச் செல்வேன்.

“காலை வேளைகளில் முரண்டு பிடிக்காமல் நன்கு சாப்பிடும்படி குழந்தைகளுக்குச் சொல்லுங்கள். நீங்கள் சொன்னால் அவர்கள் நன்கு கேட்பார்கள்.” சரி… காலையில் வெறும் வயிற்றோடு பள்ளிக்கு வரக் கூடாதென குழந்தைகளிடம் சொல்ல வேண்டும்.

“உங்களது கல்வி முறையின் சாரம் என்ன என்று விளங்குமாறு தயவுசெய்து சொல்லுங்கள். திட்டவட்டமான உதாரணங்களோடு பாடங்களை எப்படி நடத்தப் போகின்றீர்கள் என்று சொல்லுங்கள்!” ஆம், இதற்கு பெற்றோர்களுக்கு முழு உரிமையுண்டு. முதல் வாய்ப்பு கிட்டியதுமே இதைச் செய்ய வேண்டும்.

“பெற்றோர்கள் பாடங்களுக்கு வரலாமா?” ஓ, வரலாமே. இப்படிப்பட்ட பொதுவான பாடங்கள், திட்டவட்டமான உதாரணங்களோடு நமது கல்வி முறையைப் பற்றிப் பெற்றோர்களுக்கு எடுத்துரைக்க உதவும். தாய், தந்தை, தாத்தா, பாட்டிகளுக்கான இப்படிப்பட்ட பொதுவான பாடவேளைகள்தான் எனக்கும் ஒவ்வொரு குழந்தையின் குடும்பத்திற்கும் இடையில் பரஸ்பர மன ஒற்றுமையை ஏற்படுத்த சிறந்த வழி.

படிக்க:
கோவிலுக்குள் நுழைய முயன்ற தலித் சிறுவனை கட்டிவைத்து அடித்த காவிக் கும்பல் !
அறிஞர் அண்ணாவின் “ ஆரிய மாயை ! “ – புதிய தொடர்

“மனிதாபிமான வளர்ப்பைப் பற்றி நீங்கள் கூறியதெல்லாம் மிக சுவாரசியமானவை. ஆனால் இவையெல்லாம் நடைமுறையில் சாத்தியமா?”

மனிதாபிமான வளர்ப்பைப் பற்றிய கருத்தின் மீது இவர்களுக்கு எப்படி நம்பிக்கையை ஊட்டுவது? இவர்களின் குழந்தைகள் வளர்ந்து, மாற்றமடையும்போது ஒருவேளை இதை நம்புவார்களோ?

குழந்தைகளே, கட்டாயம், நிர்ப்பந்தமின்றி உங்களை வளர்க்க இயலும் என்று நிரூபிக்க நீங்கள் எனக்கு உதவுவீர்களா? “சரி!” எதற்காக ஒப்புதல் தேவைப்படுகிறது என்பதைப் பற்றிச் சிந்திக்காமலேயே “சரி” என்று ஒரே குரலில் கூறுவதை மாற்ற வேண்டும்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

இந்த வார வாசகர் புகைப்படம் : பாதையோர உணவகங்கள் !

0

ன்பார்ந்த வாசகர்களே,

இந்த வார வாசகர் புகைப்படத் தலைப்பு – பாதையோர உணவகங்கள் !

சென்ற முறை கோடையும் தண்ணீரும் என்ற தலைப்பில் கேட்டிருந்தோம், அத்தலைப்பில் படங்கள் அனுப்பிய வாசகர்களுக்கு நன்றி. இந்த வாரம் பாதையோர உணவகங்கள் குறித்து புகைப்படங்கள் எடுத்து அனுப்புமாறு கோருகிறோம்.

நகரத்து நெரிசலிலும், நேரமின்மையிலும் சாப்பிட்டே ஆக வேண்டிய கடமையை உடன் நிறைவேற்றுவதற்கு பாதையோர உணவகங்கள் உதவுகின்றன. மலிவான விலையில், சட்டென நின்று உண்டு முடித்து விட்டு செல்வதற்கு இந்த உணவகங்கள் உதவுகின்றன. மறுபுறம், சென்னை போன்ற மாநகரங்களில் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாகவும் இந்தக் கடைகள் அவர்களுக்கு பிழைப்பை அளிக்கின்றன.

சுயதொழில் தொடங்குவதாக இருந்தால் மக்களுக்கு முதலில் கை கொடுக்கும் தொழிலாக இக்கடைகள் விளங்குகின்றன. காலை உணவுக்காக மட்டும் செயல்படும் கடைகள், மதிய உணவுக்கான கடைகள், மூன்று வேளையும் உணவளிக்கும் கடைகள், பிரியாணி கடைகள், சூப் கடைகள் என்று விதவிதமாக இக்கடைகள் செயல்படுகின்றன. மக்களுக்கு வேலையளிக்க வழியற்றுப் போன இந்த அரசமைப்பில் இத்தகைய கடைகளே பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கின்றன.

உங்கள் பகுதியில் செயல்படும் அத்தகைய கடைகளை நன்கு படெமடுத்து அனுப்புங்கள். கூடவே கடை, கடை உரிமையாளர், தொழிலாளிகள் பற்றிய சிறு குறிப்பையும், அவர்களின் சிறப்பம்சங்களையும் மறவாமல் குறிப்பிட்டு அனுப்புக. வெளி மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் பாதையோர கடைகள் பிரபலமாய் இருக்கின்றன.

ஒவ்வொரு நாட்டின் தேசிய அடையாளமாய் தனித்துவமாய் விளங்கக் கூடிய பாதையோர உணவகங்களுக்கென்றே உலக நாடுகளின் நகரங்களில் தனித்துவமான தெருக்களும், பகுதிகளும் உள்ளன. உங்கள் செல்பேசி அல்லது நவீன கேமராவுடன் வெளியே சென்றால் இத்தகைய கடைகளை ஆங்காங்கே காணலாம். அனுப்புங்கள். காத்திருக்கிறோம்.

படங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 20.06.2019
மின்னஞ்சல் முகவரி: vinavu@gmail.com
வாட்ஸ்அப் எண்:
(91) 97100 82506

புகைப்படம் எடுக்கப்பட்ட இடம், நாள், அது குறித்த விவரங்கள் கூடவே உங்களைப் பற்றிய விவரங்களையும் மறவாமல் அனுப்புங்கள்! தெரிவு செய்யப்படும் படங்கள் அனைத்தும் வெளியிடப்படும். காத்திருக்கிறோம். நன்றி!

நட்புடன்
வினவு


புகைப்படம் எடுப்பது தொடர்பான சில ஆலோசனைகள்:

♦ எந்த ஒரு இடம்/கருத்திற்காக புகைப்படம் எடுப்பதாக இருந்தாலும் அதன் முழுப் பரிமாணத்தை உணர்த்தும் வகையில் wild ஆக புகைப்படம் ஒன்று எடுக்க முயற்சிக்க வேண்டும். (உ-ம்) மார்க்கெட் கடைவீதியை மையப்படுத்தி கதை சொல்லப்போகிறோம் என்றால், அதன் தெரு அமைப்பு, வாடிக்கையாளர்களின் அடர்த்தி ஆகியவற்றை பதிவு செய்வது.

♦ தனிநபரை புகைப்படம் எடுக்கும் பொழுது, அந்த நபரை மையமாக வைத்து புகைப்படம் எடுப்பதை விட, அந்த நபர் வலது / இடது ஓரத்தில் இருப்பது போல எடுக்க வேண்டும். இதன் மூலம் அப்படத்தில் நிறைய Details கொண்டு வர முடியும். (உ-ம்) வியாபாரியை படம் எடுக்கும்பொழுது, அவரது முகம் இடது வலது ஓரத்தில் இருந்தால் மீதமுள்ள இடத்தில் அவரது கடை மற்றும் வாடிக்கையாளர்களின் நடமாட்டம் பதிவாகும்.

♦ எந்த ஒரு இடத்திற்கு சென்றதும் எடுத்தவுடன் புகைப்படம் எடுத்துத் தள்ளிவிடக்கூடாது. முதலில் அந்த இடத்தை அவதானிக்க வேண்டும். கண்ணால் முதலில் காட்சிகளை வகைப்படுத்திக்கொண்டு எந்த Frame இல் எடுக்கப் போகிறோம் என்பதை கூடுமான வரையில் முன்னரே தீர்மானித்து விட்டு அதன்பின்னர் புகைப்படங்களை எடுக்கப் பழக வேண்டும்.

♦ ஏற்கெனவே பல முறை ஒரு இடத்தைப் பலரும் பல விதமாக புகைப்படம் எடுத்திருந்தாலும் அவ்விடத்தில் நாம் புதுமையாக சில படங்களை எடுக்க முடியும். அல்லது அங்கேயே இதுவரை யாரும் செல்லாத புதிய இடம், அல்லது புதிய கோணம் நமக்கு தெரிய வரும். இதற்கு நாம் தேடி அலைய வேண்டும். மெனக்கெட வேண்டும். (உ-ம்) ரெங்கநாதன் தெருவைப் புகைப்படம் எடுக்க வேண்டுமெனில், குறுக்கு நெடுக்காக சிலமுறை சென்று வந்தால் புதிய கோணம் கட்டாயம் கிடைக்கும்.

♦ புகைப்படம் எடுப்பதில் நேரம் மிக முக்கியமானது. காலை 6 – 9 மற்றும் மாலை 4 முதல் இருட்டும் வரையிலான நேரம் பொருத்தமானது. கண்ணில் காண்பதை அப்படியே காமிராவில் கொண்டு வர முடியும். குறிப்பான சில இடங்களுக்கு இந்த நேரம் மாறுபடலாம். (உ-ம்) தி.நகர் கடை வீதியின் பிரம்மாண்டத்தை அதன் பளபளப்பை காட்ட வேண்டுமென்றால் இரவு 7 மணிக்கு மேல் எடுப்பதே பொருத்தமானது.

♦ ஒரு கதைக்கருவைத் தீர்மானித்துக்கொண்டு அதற்கேற்ற படங்களை எடுக்கும் பொழுது, அதன் ஒட்டுமொத்த கதையையும் ஒரே படத்தில் சொல்வதைப்போல First Photo அமைய வேண்டும். (உ-ம்) காசிமேடு மீன் சந்தையை படமாக்குவது நமது கதைக்கரு என்றால், கடலில் நிறுத்தப்பட்டிருக்கும் படகில் நின்று கொண்டு கடற்கரையில் காணும் மக்கள் அடர்த்தியைக் காட்சிப் படுத்துவது.

♦ எதையும் நேரடியாக சொல்ல வேண்டும் என்பதில்லை. இதே இடத்தை இதற்கு முன்னர் பலரும் பலவிதமாக எடுத்த புகைப்படங்களைப் போலவே நாமும் முயற்சிக்க வேண்டும் என்பதில்லை. புதிய கோணத்தில் முயற்சிக்க வேண்டும்.

♦ சில்லவுட் (உருவங்கள் மட்டுமே தெரிவது போன்று) படங்களை எடுக்க முயற்சிக்க வேண்டும். எல்லா படங்களும் கலராக இருக்க வேண்டுமென்பதில்லை. உள்ளடக்கத்தைப் பொருத்து கருப்பு வெள்ளைப் படங்களாக இருப்பது சிறப்பு.

♦ இணையத்தில் புகைப்படக்கலையில் நிபுணத்துவம் பெற்றவர்களின் புகைப்படங்களை பார்க்க வேண்டும். ஒவ்வொரு புகைப்படத்தையும் ரசித்து உள்வாங்க வேண்டும். இந்தப் பயிற்சிதான் புதிய இடத்தில் புதிய கோணத்தில் புகைப்படங்களை எடுக்க நமக்கு கை கொடுக்கும்.

♦ எங்கும் எப்பொழுதும் விதியை மீற வேண்டும் (Break The Rule) . கடை வீதி என்றால் சடங்குத்தனமாக இப்படித்தான் எடுக்க வேண்டும் என்பதில்லை. Frame களை மாற்றிப் போட்டு முயற்சித்துப் பார்க்க வேண்டும்.

♦ சில இடங்களில் staging set பண்ணி புகைப்படம் எடுக்கலாம். அங்கு இருக்கும் நபரை நாம் சொல்லும் விதமாக நிற்க வைத்தோ, நமது frame க்குள் வர வேண்டிய பொருட்களை மாற்றியமைத்தோ எடுக்கலாம். தவறில்லை.

♦ போராட்டக்களத்தில் புகைப்படம் எடுக்கும்பொழுது, இந்த விதியை எல்லாம் பயன்படுத்திப் பார்க்க போகிறேன் என்று குறுக்கும் நெடுக்குமாக அலையக் கூடாது. போலீசார் குறுக்கீடு செய்ய நிறைய வாய்ப்பிருக்கிறது என்பதை கருத்திற் கொள்ள வேண்டும். ஆத்திரத்தில் காமிராவைத் தட்டிவிட்டாலோ, அல்லது புகைப்படம் எடுக்கக்கூடாதென்று தடுத்துவிட்டாலோ நமது நோக்கம் நிறைவேறாமல் போய்விடும். எனவே, இதுபோன்ற நேரங்களில் தூரத்தில் நின்று கொண்டே ஆவணப்படுத்தும் நோக்கில் ஒன்றிரண்டு புகைப்படங்களை எடுத்துக் கொள்ளலாம். அதன் பின்னர், அங்குள்ள நிலைமையை கணித்து பின்னர் தேவையான கோணத்தில் எடுக்கலாம். ஆனால், மிக முக்கியமாக மொபைலில் புகைப்படம் எடுக்கிறோம் என்பதால் மிகவும் எச்சரிக்கையாக கையாள வேண்டும். நமது உடல்மொழி அவற்றை படம்பிடிக்கிறோம் என்று காட்டிக்கொள்ளாத வகையில் சாமர்த்தியமாக புகைப்படம் எடுக்கப் பழகிக்கொள்ள வேண்டும்.

♦ சில இடங்களில், சிலரை புகைப்படம் எடுக்கும் பொழுது அவர்களது முன் அனுமதி பெற்று புகைப்படம் எடுக்க வேண்டும். நேர்காணலுக்காக செல்லும் பொழுது, எடுத்தவுடன் அவர்களை புகைப்படம் எடுத்துவிடக்கூடாது. முதலில் அவர்களுடன் நட்புமுறையில் பழகி, அவர்களின் நம்பிக்கையைப் பெற்ற பின்னர் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாமா என்று கேட்டால் மறுப்பின்றி ஒப்புதல் தருவார்கள். நாம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக அமையும்.

♦ பாதிக்கப்பட்ட மக்களிடமோ, ஒரு குறிப்பிட்ட பிரச்சினையையொட்டி செல்லுமிடங்களிலும் மக்களிடம் மிகவும் அனுசரணையோடும் அமைதியாகவும் அணுக வேண்டும். நான் உங்களது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகத்தானே வந்திருக்கிறேன் என்ற ரீதியில் மிதப்பாக அணுகக் கூடாது. (உ-ம்: வெள்ளம் புயல் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களை அணுகுவது).


புகைப்படங்களை எடுக்கப் போகும் மக்கள் பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்துக்கள்! உங்கள் படங்களைக் காண ஆவலுடன் காத்திருக்கிறோம்.

குடிக்கும் தண்ணீரில் மண்ணெண்ணையை ஊற்றிய சாதி வெறி !

திருமணம் முடிந்து வீட்டுக்கு வரும் தன் மகளையும், மருமகனையும் ‘பேண்ட் வாத்தியம்’ முழங்க வரவேற்க வேண்டும் என நினைத்தார் அந்த தந்தை. இது ஒரு குற்றமா? ஆனால், அந்த கிராமத்தில் பேண்ட்-வாத்தியம் வைப்பது ’பெரிய’ சாதிக்கு உரியது; தலித்களுக்கு இதற்கு அனுமதி இல்லை.

எதிர்ப்பை மீறி, போலீஸ் பாதுகாப்புடன் திருமணத்தை நடத்திய அந்த தந்தை மகளையும், மருமகனையும் பேண்ட்-வாத்தியம் முழங்க வீட்டுக்கு வரவேற்றார். அந்த சத்தம் பெரிய சாதியின் காதுகளை தீயாய் சுட்டது. விளைவு, தலித்கள் நீர் எடுக்கும் கிணற்றில் மண்ணெண்ணையை ஊற்றிவிட்டார்கள். இந்த கொடுங்கோடையின் தகிப்பில் ஒரு குடம் நீருக்கு வழியின்றி மக்கள் எங்கும் பரிதவித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில்தான் குடிக்கும் தண்ணீரில் மண்ணெண்ணை ஊற்றியிருக்கின்றன இந்த ‘பெரிய சாதி பருப்புகள்’.

ஆதிக்க சாதியினரால் நாசம் செய்யப்பட்ட கிணறு. (இடம் : மத்திய பிரதேச மாநிலம், அகர் மால்வா மாவட்டம், மனா கிராமம்) நன்றி : ஹிந்துஸ்தான் டைம்ஸ்.

மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுள்ள இந்த சாதிய வன்முறை அந்த ஒரு மாநிலத்துக்கு உரியதோ, அந்த ஒரு சாதிக்கு உரியதோ அல்ல. தனக்கும் கீழே ஒரு சாதி இருக்கிறது என கருதும் அனைத்து சாதிகளிடமும் இந்த மனநிலை இருக்கிறது.

பேண்ட் வாத்தியம் இசைக்கக்கூடாது என்று சொல்வது நமக்கு கேலிக்குரியதாக இருக்கலாம். ஆனால், இதே தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில், தலித்கள் ஆண் நாய் வளர்க்கக்கூடாது என்ற கட்டுப்பாடு இன்னும் நடைமுறையில் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். வளர்த்தால், அவர்கள் வீட்டு பெண் நாயை மேட்டர் செய்துவிடுமாம். நாய்களிடையே சாதிக் கலப்பு ஏற்பட்டுவிடுமாம்.

கடந்த வாரம் நீர்ப்பஞ்சம் நிறைந்த ஒரு தென் மாவட்டத்துக்கு சென்றபோது, ஊற்றுநீர் எடுப்பதில் வெளிப்படும் சாதிய அணுகுமுறையை கண்கூடாக பார்க்க நேர்ந்தது. இதனால் ‘பகலில் நீ; இரவில் நான்’ என்ற, சச்சரவை தவிர்க்கும் ஓர் உடன்பாட்டுக்கு அவர்கள் வந்திருக்கின்றனர். எல்லோருக்கும் குடிநீர் கொடுக்க வக்கற்ற அரசை நோக்கி கோபம் திரும்பாமல், சாதிய முரண்பாடுகளுக்குள் சிக்கி சீரழியுமாறு இந்து மதம் பணித்திருக்கிறது.

படிக்க :
♦ மோடியின் குஜராத்தில் தலித்துக்களுக்கு குடிநீரில்லை!
♦ குஜராத் : தலித் திருமணங்களை எதிர்க்கும் ஆதிக்க சாதி வெறி !

இத்தகைய ஆகக்கீழான உதாரணங்களை தேடிக் கண்டுபிடித்துதான் இந்த சாதி வெறியர்களை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் என்பதோ, இவ்வளவு கேவலமான நிலைக்கு சென்றால் மட்டுமே இச்சாதிவெறி பொருட்படுத்தத்தக்கது என்பதோ அல்ல… அன்றாடம் வெளிப்படும் சின்னஞ்சிறு சொல்லில்; ஆகச்சிறிய செயல்பாட்டில் இவர்களின் மரபுரிமை சாதித்திமிர் வெளிப்படுவதை உணரலாம். இப்போது அந்த வெறி ஒரு பாதுகாப்பான எல்லையை சென்று சேர்ந்திருக்கிறது.

படம் : ஓவியர் முகிலன்

துரத்தப்படும் ஓர் வெறிநாய் மூச்சிரைக்க ஓடி தன் உரிமையாளரின் ஏரியாவை அடைந்ததும், ‘இப்ப அடிடா பார்க்கலாம்’ என்பதுபோல் ஒரு லுக் விடும் இல்லையா… அப்படி பாஜக-வின் பக்கத்தில் ஓடிச்சென்று நிற்கிறது சாதிவெறி. தன் வளர்ப்பு மிருகத்தை தடவிக்கொடுக்கும் ஓனரின் வாஞ்சைடன் அதைத் தடவிக்கொடுக்கிறது பாஜக.

‘ஓனரா இருந்தா ஓரமா போ’ என தமிழ்நாடு சொல்கிறது என்றாலும், இந்த மேற்பரப்பு பரவசத்தில் நாம் லயித்துவிடக்கூடாது. அங்கே பேண்ட் வாத்தியம் என்றால், இங்கு அதைப்போன்று பல. இந்த சாதி வெறியை ஒருங்கிணைக்கவும், பயன்படுத்திக் கொள்ளவும்தான் அரசியல் கட்சிகள் முயல்கின்றனவேயன்றி, இதை நீர்த்துப்போகச் செய்யும் எந்த நிகழ்ச்சிநிரலும் இவர்களிடம் இல்லை.

மலையை வெடி வைத்து தகர்ப்பதைப்போல, சமூகத்தை பிளவுப்படுத்தி, ஒரு பகுதி மக்களின் பிரதிநிதியாய் தன்னை முன்னிலைப்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான சிலபஸ் பாஜகவிடம் இருக்கிறது. தமிழ்நாட்டில் அத்தகைய பிளவை உருவாக்க இப்போது சாத்தியமில்லை என்பதன் பொருள், எப்போதுமே சாத்தியம் இல்லை என்பதல்ல.

மேலும், அவர்களின் நோக்கம் வெறும் வாக்கரசியல் மட்டுமல்ல. சமூக நல்லிணத்தை காணாப்பொணமாக்குவதே அவர்களின் தேவை. ஒருவேளை, எதிர்காலத்திலும் தமிழ்நாட்டில் பாஜக நோட்டாவை கூட தாண்டாமல் போகலாம். ஆனால், மத அடிப்படையிலோ, சாதி அடிப்படையிலோ இங்கு ஒரு திட்டவட்டமான வெறுப்பரசியலை நிலைநிறுத்த அனைத்து வழிகளிலும் முயற்சிப்பார்கள். கேங்லீடர் வருவதற்கு முன்பு ஃபீல்டை க்ளீயர் செய்வதைப்போல. பிறகு பெரியண்ணன் வந்து மொத்த ஊரையும் கொத்துபுரோட்டா போடுவார்.

படிக்க :
♦ ஆனத்தூர் தலித் மக்கள் ஆதிக்க சாதிவெறியர்களால் தாக்கப்பட்டது ஏன் ? உண்மை அறியும் குழு அறிக்கை
♦ ஒரு வரிச் செய்திகள் : 10/06/2019

இந்து மதவாதிகளின் அடிப்படை நோக்கம், இந்தியாவெங்கும் இந்து மதத்தை பரப்புவது அல்லது அகண்ட பாரதத்தை அடைவது. இந்த லட்சியத்தை அடைய, அவர்கள் தேர்தல் அல்லாத வழிகளில் பல பத்தாண்டுகளாக முயற்சித்துப் பார்த்தனர். ஆனால், இந்தியாவின் தனித்துவமான நிலவியல் வேறுபாடு அதற்கு அனுமதிக்கவில்லை.

நூற்றுக்கணக்கான மொழிகள், ஆயிரக்கணக்கான பண்பாட்டு வாழ்முறைகள், மாநில எல்லைகள்… இவற்றினூடாக இந்து மக்களை ஒரே இழையில் இணைத்து, அதை அனைவருக்குமானதாக மாற்ற அவர்களால் முடியவில்லை. எனவே தேர்தல் மூலம் அதிகாரத்தை கைப்பற்றி, அதன் வழியே இந்துத்துவ நிகழ்ச்சிநிரலை அமல்படுத்துவது என்பது, அவர்களுக்கு தவிர்க்கவியலாத ஒரு வழிமுறையாக இருக்கிறது. தேர்தல் அரசியல் களத்தில் பா.ஜ.க.வை தோற்கடிக்கச் செய்வது ஏன் அவசியம் என்பதற்கு இப்படி கண்ணோட்டமும் இருக்கிறது.

ஆனால், ஜனசங் தோற்றுவித்தபோது இருந்த நோக்கங்கள் இன்றும் அதே நிலையில் இருக்கவியலாது. இன்று, சாதிய பாகுபாட்டின் தாயான இந்து மதம், பொருளாதார பாகுபாட்டின் தாயான நவீன தாராளவாத கொள்கைகளுடன் இணைந்து நிற்கிறது. இது மேல பார்த்தா காவி. உள்ளப் பார்த்தா கார்ப்பரேட். இரண்டும் இரட்டைக்குழல் துப்பாக்கி. நம்மை நோக்கி குறிபார்த்துக் கொண்டிருக்கிறது.

நன்றி : முகநூலில் பாரதி தம்பி

நெல்லுக்குப் பதிலாக சோளத்தை விதைக்கச் சொல்லும் அரியானா அரசு !

பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக் காலத்தின் போது ஆங்கிலேய சாகுபடியாளர்கள் இந்திய விவசாயிகளை கட்டாயப்படுத்தியும், கடனுக்கு அடிமையாக்கியும் ஐரோப்பிய சந்தையின் தேவைக்கேற்ப அவுரி சாகுபடி செய்ய வற்புறுத்தினார்கள்.

இன்று அரியானாவில் விவசாயிகளை நெல் பயிரிடுவதை நிறுத்தி விட்டு சோளத்தைப் பயிரிடச் சொல்கிறது அம்மாநில பா.ஜ.க அரசு.

அரியானாவின் மொத்த விவசாய விளைநிலமான 35 லட்சம் ஹெக்டரில் 13.5 லட்சம் ஹெக்டரில் நெல் பயிரிடப்படுகிறது.

அரியானா விவசாயிகள் கரீப் பருவத்திற்காக நெல் விதைப்பிற்கு தயாராகி வருகிறார்கள். அரியானா அரசு,  ஏழு மாவட்டங்களில் விவசாயிகளை நெல் பயிரிடுவதை நிறுத்தச் சொல்லி அறிவித்திருக்கிறது. இதற்கு அம்மாநில அரசு கூறும் காரணம் நிலத்தடி நீர் குறைந்து வருகிறதாம்.

நெல் சாகுபடியில் அதிக நீர் செலவாகிறதாம். சோளத்தையும், பருப்பு வகைகளையும் பயிரிடுவதனால் அதிக அளவு நீர் மற்றும் மின்சாரத்தை சேமிக்கலாம் என்றும் இது மண்வளப் பாதுகாப்புக்கு அவசியமானது என்றும் கூறி வரும் கரிஃப் பருவத்தில்  சோளத்தையும், பருப்பு வகைகளையும் பயிர்செய்ய, ஒரு சோதனைத் திட்டத்தை அறிவித்திருத்திருக்கிறார் அரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார்.

மேலும் இந்தத் திட்டத்தின் கீழ் பயிரிடும் விவசாயிகளுக்கு ஹெக்டருக்கு ரூ 4,500 மதிப்பிலான சோள – பருப்பு விதைகள் இலவசம், ஹெக்டருக்கு ரூ 766 பயிர்க் காப்பீட்டு திட்டம், விளைச்சலை அரசே குறைந்தப் பட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யும்  என்றும் கூறியிருக்கிறது.

படிக்க:
விவசாயிகளை ஒழிக்க மோடிக்கு யோசனை சொல்லும் ஃபோர்ப்ஸ் பத்திரிகை
♦ அரியானாவில் திருட்டுத்தனமாக பயிரிடப்படும் பி.டி. கத்திரிக்காய் !

விவசாயிகளுக்கு  உள்ளீடு விலைகள் நெல் சாகுபடிக்கு அதிகமாக இருந்தாலும், ஏக்கருக்கு ரூ 50,000 முதல் 55, 000 வரை வருவாய் கிடைக்கும். ஆனால் சோளத்தில் அதிகபட்சமாக ஏக்கருக்கு ரூ 25,000 முதல் ரூ 30,000 தான் கிடைக்கும் என்று முன்னாள் வேளாண்மை விரிவாக்க அதிகாரி ரஜ்ஜித் சிங் கூறுகிறார்.

தானேசர் பகுதியைச் சேர்ந்த விவசாயி பார்தப் சிங், அரசே கொள்முதல் செய்யும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இது ஒரு வாய்மொழி வாக்குமூலமாகவே இருக்கிறது என்கிறார்.

அரியானா முதலமைச்சர் தெளிவாகக் கூறுவது இதைத்தான் :

இத்திட்டத்தின் முக்கிய நோக்கமே 50,000 ஹெக்டரில் நெல் விவசாயத்தை இல்லாமல் செய்துவிட்டு சோளத்தையும் பயிர்வகைகளையும் பயிர் செய்வதுதான். இதுதான் இந்தியாவின் பயிர்கள் மாற்றி பயிரிடுவதற்கான முதல் சோதனைத்திட்டம்.

அரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார்.

நிலத்தடி நீர் உயர்வதற்கு எந்தவிதமான நடவடிக்கையும்  எடுக்க லாயக்கற்ற அரியானா அரசு, விவசாயிகளுக்கு நெல் சாகுபடிக்கு அதிக நீர் செலவாவதாக வகுப்பு எடுக்கிறது.  பயிரின் குறைந்தப் பட்ச ஆதரவு விலையே அரசு அறிவிக்கும் திட்டத்தில்தான் சாத்தியம் என்பதும் இத்திட்டத்தில் அம்பலமாகிறது. மேலும், விவசாயிகளை கட்டாயமாக பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் இணைப்பதும் இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.

விவசாயிகள் எதை சாகுபடி செய்ய வேண்டும் என்பதை முடிவெடுக்கும் அதிகாரத்தில் காலனிய பிரிட்டிஷ் அரசும், மறுகாலனியாக்கத்தை தீவிரமாக  அமுல்படுத்தும் பா.ஜ.க அரசும் வேறு வேறல்ல!

பரணிதரன்

செய்தி ஆதாரம் :
Haryana’s plan to wean farmers away from paddy comes a cropper
Haryana to discourage paddy crop
Haryana offers paddy farmers incentive to grow maize, pulses

பாசிசத்தை எடைபோடுவதில் நாம் எவ்விதத் தவறுகளைச் செய்திருக்கிறோம் ?

பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் | பாகம் – 8

டோக்ளியாட்டி

விரிவுரை 2

பூர்ஷுவாக்களின் “புது மாதிரியான கட்சி”

பாசிசம் என்றால் என்ன என்பதற்கு நமது பாடத்தின் முதல் பகுதியில் பொருள் வரையறை செய்தோம். சர்வதேச ஆவணங்களையும் இத்தாலிய அனுபவத்தையும் கொண்டு இந்த நிர்ணயிப்பைச் செய்தோம். பாசிச சர்வாதிகாரத்தின் அடிப்படை அம்சங்களை விளக்கிக் கூறினோம், அதன் வர்க்க இயல்பைச் சுட்டிக் காட்டினோம். இதுதான் பூர்ஷுவாக்களின் மிகப் பிற்போக்கான அம்சத்தின் பட்டவர்த்தனமான வெளிப்பாடாகும். குட்டி பூர்ஷுவா வெகுஜன இயக்கத்தை இந்தப் பாசிச சர்வாதிகாரத்தால் எவ்வாறு கவர்ந்து ஈர்க்க முடிகிறது என்பதையும் பார்த்தோம்.

பாசிசத்தை எடைபோடுவதில் நாம் பல தவறுகள் செய்திருக்கிறோம். பாசிசத்தின் வளர்ச்சிப் போக்கையும் அதன் பல்வேறு அம்சங்களையும், அவற்றிடையே உள்ள பரஸ்பரத் தொடர்பையும் நாம் காணத் தவறியிருக்கிறோம். இந்தத் தவறுகளை எல்லாம் எடுத்துக்காட்டி அவற்றைக் களைவதில் முழுக் கவனம் செலுத்தியிருக்கிறோம். இப்பாடம் முழுவதும் இப்பணிக்கே அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று பாடத்தின் இன்னொரு பகுதி பாசிச சித்தாந்தத்தின் செயல்பாட்டை எடுத்துரைக்கிறது. இந்தச் சித்தாந்தம் பாசிச இயக்கத்தைச் சேர்ந்த குட்டி பூர்ஷுவாப் பகுதிகளை ஒன்றிணைக்கும் நோக்கம் கொண்ட ஒரு குழப்பமான, கதம்ப சித்தாந்தம் என்பதைப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறோம்.

திட்டமிடுதல் சம்பந்தப்பட்ட தவறுகளைப் பற்றி எச்சரித்தோம். அவ்வாறே, திட்டமிடுதல் தொடர்பான தவறுகள் குறித்து மீண்டும் எச்சரித்து, இன்று என் விரிவுரையைத் தொடங்க விரும்புகிறேன்; இத்தாலியில் பாசிச வரலாற்றுப் பிரச்சினைகளில் ஒன்றுடன் சம்பந்தப்பட்டவையே இந்தத் தவறுகள்.

நிர்ப்பந்தம் காரணமாகத்தான் பாசிசம் இந்தப் பாதையை மேற்கொள்ள நேர்ந்தது, பாசிசம் வேறு எந்தப் பாதையையும் மேற்கொண்டிருக்க முடியாது. அது தேர்ந்தெடுத்துள்ள பாதை தவிர்க்க முடியாதது என்ற … கண்ணோட்டத்தை நாம் எதிர்த்துப் போராட வேண்டும்.

சர்வாதிகார ஆட்சியை நிறுவும் பொருட்டு முன்கூட்டியே திட்டமிட்ட முறையில் 1920-ம் ஆண்டிலோ அல்லது ரோம் படையெடுப்பு காலத்திலிருந்தோ பாசிசம் பிறந்தது என்று நினைப்பது மிகப் பெரிய தவறாகும்; ஏனென்றால் இத்தகைய ஆட்சியை அமைக்க கடந்த பத்தாண்டுகளாகத்தான் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்திருப்பதை இன்று நாம் காண்கிறோம். எனவே, இது ஒரு பெரும் தவறு என்பதில் ஐயமில்லை.

பாசிசத்தின் வளர்ச்சிப் போக்கு சம்பந்தப்பட்ட எல்லா வரலாற்று உண்மைகளும் இந்தக் கருத்தை மறுதலிக்கின்றன. தவிரவும் இந்தக் கருத்தை ஆதரிப்பவர்கள் பாசிச சித்தாந்தம் விரிக்கும் வலையில் தவிர்க்க முடியாதபடி விழுகிறார்கள், அதாவது அவர்கள் ஏதேனும் ஒரு வகையில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஏற்கெனவே பாசிசத்தின் செல்வாக்குக்கு உட்பட்டிருக்கிறார்கள் என்பதையே இது குறிக்கிறது. தாங்கள் இதுவரை செய்திருப்பவை எல்லாம் முன்கூட்டியே வகுக்கப்பட்ட திட்டங்களை அடிப்படையாகக் கொண்டவையே என்று காட்டுவதற்குப் பாசிஸ்டுகள் முயன்று வருவதைப் பார்க்கிறோம்.

நாம் ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல் இது உண்மை அல்ல. இந்தத் தவறை எதிர்த்துப் போராடுவதன் மூலம் அரசியல் துறையில் நேரிடக்கூடிய பிறழ்வுகளை, பிழைபாடுகளை எதிர்த்துப் போராடுபவர்களாகிறோம். ஆதலால் இந்தத் தவறை எதிர்த்துப் போராடுவதற்குக் கற்றுக் கொள்ளும் பொருட்டு இப்பிரச்சினையை ஆழமாக ஆராய்வது அவசியம்.

இந்தத் தவறான கண்ணோட்டத்திற்கு எதிராகப் பாசிச சர்வாதிகாரம் குறித்த மெய்யான, சரியான கண்ணோட்டத்தை நாம் முன்வைக்க வேண்டும். பாசிச சர்வாதிகாரம் இன்றைய அதன் வடிவங்களை மேற்கொள்ள நேர்ந்ததற்குப் பல காரணங்கள் உண்டு. அகநிலை அம்சங்களையும், உள்ளார்ந்த அம்சங்களையும், பொருளாதார நிலைமையையும், அதனால் உண்டான வெகுஜன இயக்கங்களையும் இவ்வகையில் முக்கியமாகக் குறிப்பிடலாம். இதை வைத்து, ஸ்தாபன ரீதியான பணிக்கு இதில் எந்தப் பங்கும் இல்லை என்று நாம் கூறுவதாகப் பொருள் கொள்ளக் கூடாது. ஆனால் அதே சமயம் இந்த அம்சத்துடன் மட்டுமே நம்மைக் கட்டுப்படுத்திக் கொண்டு, எதார்த்த நிலைமையை புறக்கணித்தோமானால் நாம்தான் சிரமப்படுவோம். பூர்ஷுவா வர்க்கத்தைப் பொறுத்தவரையில் ஸ்தாபன ரீதியான அம்சம் என்ற முறையில் அது என்றுமே தலையிட்டு வந்திருக்கிறது.

நாம் இவ்வாறு செய்யவில்லை என்றால், அரசியல் சாத்தியக் கூறுகளை நாம் துல்லியமாகக் கணிக்க முடியாது. நாம் எத்தகைய செயற்பாட்டு வழியைப் பின்பற்ற விரும்புகிறோம் என்பதை வகுத்துக் கொள்ள இயலாது; மேலும் இந்த வழிதான் கட்சியின் செயற்பாட்டுக்கும் அடிப்படையாக இருக்கும். இதன் முக்கியத்துவத்தை நீங்கள் புரிந்து கொண்டிருக்கக் கூடும்: ஒரு குறிப்பிட்ட தருணத்தில் ஒரு வெகுஜன இயக்கம் எந்த முறையில் தலையிடுகிறது என்பதைப் பொருத்து சர்வாதிகாரம் வெவ்வேறு வடிவங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

ரோம் நகர் அணிவகுப்பில் படையினருடன் முசோலினி.

மாட்டியோட்டி நெருக்கடியின் போது 1 வெகுஜனங்கள் தாங்கள் உண்மையில் செய்ததற்கு மாறாக வேறுவிதமாகத் தலையிட்டிருந்தார்களேயானால் நிலைமை வேறுபட்டதொரு திருப்பத்தை அடைந்திருக்கும். இந்த உண்மையை இன்றுங்கூட நாம் பார்க்கலாம். நாம் மிகவும் செயலூக்கத்துடன் தலையிடும்போது, சில குறிப்பிட்ட பிரச்சினைகளைக் கடுமையாக எதிர்கொள்ளும் நிர்ப்பந்தத்தை அது பாசிசத்துக்கு ஏற்படுத்துகிறது. தொழிற்சங்கக் கட்டமைப்பில் மாறுதல் செய்தல், பொது மன்னிப்பு, இளம் பாசிஸ்டுகள் பிரச்சினை, தேசிய பாசிஸ்டுக் கட்சியை மறுசீரமைத்தல், சமூக ஜனநாயகத்துடன் சமரசம் செய்துகொள்ள முயற்சித்தல் போன்றவை இப்பிரச்சினைகளில் அடங்கும்.

வெகுஜன இயக்கங்கள் சம்பந்தமாகப் பாசிசம் கைக்கொள்ளும் போக்கைப் பொறுத்தே இந்தப் பிரச்சினைகளில் அது தனது அனைத்து நிலைப்பாடுகளையும் மேற்கொண்டுள்ளது. இந்த உண்மையைக் காணத் தவறுபவர்கள் தவிர்க்க முடியாதபடி பாசிசத்தின் செல்வாக்குப் பொறியில் இடறி விழுகிறார்கள். சோர்வுவாதத்துக்கு இரையாகிறார்கள். இத்தகைய சோர்வுவாதம் இத்தாலியில் குட்டி பூர்ஷுவாப் பகுதியினரிடையே மிகப் பரவலாகக் காணப்படுகிறது. நிர்ப்பந்தம் காரணமாகத்தான் பாசிசம் இந்தப் பாதையை மேற்கொள்ள நேர்ந்தது, பாசிசம் வேறு எந்தப் பாதையையும் மேற்கொண்டிருக்க முடியாது. அது தேர்ந்தெடுத்துள்ள பாதை தவிர்க்க முடியாதது என்ற கருத்தை இப்பகுதியினர் ஏற்று ஆதரிக்கின்றனர்.

இந்தக் கண்ணோட்டத்தை நாம் எதிர்த்துப் போராட வேண்டும். இதனை எதிர்த்துப் போராடுவதன் மூலம்தான் பாசிசத்தின் வளர்ச்சிக்கான வாய்ப்பு, வளங்கள், பொருளாதார நிலைமையுடனும் வர்க்கப் போராட்டத்துடனும் எவ்வாறு பின்னிப் பிணைந்துள்ளன என்பதை நாம் காண முடியும்.

(தொடரும்)

அடிக்குறிப்புகள் :

கியாசோமோ மாட்டியோட்டி (Giacomo Matteotti)

1. கியாசோமோ மாட்டியோட்டி (1885-1924) சீர்திருத்தவாத யூனிடரி சோஷலிஸ்டு கட்சியின் செயலாளர். அந்த ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலில் ஏற்பட்ட பலாத்காரத்தையும் தில்லுமுல்லுகளையும் கண்டித்து 1924 மே 30-ல் பிரிதிநிதிகள் சபையில் பேசியதற்காக ஜூன் 10-ம் தேதி ஒரு பாசிசக் கும்பலால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

மாட்டியோட்டியின் மறைவு – ஆகஸ்ட் மத்தியில் வரை அவரது உடல் கண்டுபிடிக்கப்படவில்லை – நாடெங்கும் பலமான ஆத்திர அலையையும் கலகத்தையும் ஏற்படுத்திற்று. எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்புச் செய்தன; எதிர்க்கட்சிகளின் குழு அவென்டைனில் கூடியது. போர்க்குணம் படைத்த இத்தாலிய கம்யூனிஸ்டுக் கட்சி அப்போது ஆட்டம் கண்டு கொண்டிருந்த முசோலினியின் ஆட்சியைக் கவிழ்க்க பொதுஜனப் போராட்டத்திற்கும் பொது வேலை நிறுத்தத்திற்கும் அறைகூவல் விடுத்தது.

ரோம் நகருக்கு வெளியே வீசப்பட்டிருந்த கியாசோமோ மாட்டியோட்டி உடலை சுமந்து வரும் போலீசார்.

எனினும், சீர்திருத்தவாதிகளால் தலைமை தாங்கப்பட்ட பொது தொழிலாளர் சம்மேளனத்தாலும், குழுவில் இருந்த சோஷலிஸ்டுகள் முதல் லிபரல் ஜனநாயகவாதிகள் வரை எல்லோராலும் இந்த அறைகூவல் எதிர்க்கப்பட்டது. இதன் விளைவு, குழுவிலிருந்து கம்யூனிஸ்டுக் கட்சி விலகியது. முசோலினி தகுந்த சமயத்திற்காகக் காத்திருந்தார். மாட்டியோட்டியின் கொலையில் நேரடியாகச் சம்பந்தப்படுத்தப்பட்ட பாசிஸ்டுகளை சர்க்காரில் நேரடியாகப் பங்கெடுப்பதை குறைத்தார். அதே சமயம் அவென்டின் கட்சிகளின் அடிப்படை பலவீனங்கள் தெளிவாகத் தெரிந்தன; வெகுஜனங்களைத் திரட்டுவதிலுள்ள அவர்கள் பயம், வறட்டுத்தனமான தார்மீகம் பற்றிப் பேசுதல், சட்டப் பூர்வமாக குற்றம் பாசிசம் குறித்த விரிவுரைகள் நிரூபிக்கப்படும் என்ற நம்பிக்கை அல்லது முசோலினி பதவியிலிருந்து தள்ளப்படுவார் என்ற நம்பிக்கை, ஆக்கபூர்வமான நேரடி நடவடிக்கை எடுப்பதில் உள்ள தயக்கம்: இவையெல்லாமும் – ஸ்குவாட்ரிஸ்மோவின் ஒரு புதிய தாக்குதலால் உந்தப்பட்டும் –  நெருக்கடி தீவிரமாதலையும் முசோலினி தன் நிலையை பலப்படுத்திக் கொள்ள பயன்படுத்தினார்.

படிக்க:
புதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 ! மின்னிதழ்
தமிழகத்தில் மட்டும்தானா வாரிசு அரசியல் ?

வாட்டிகனும், செல்வாக்குள்ள முதலாளித்துவ சக்திகளும் மன்னர் 3-வது விக்டர் எமானுவலும் அளித்த மறைமுகமான ஆதரவும் முசோலினிக்கு மிகவும் சாதகமானது. பிரதிநிதிகள் சபை 1925 ஜனவரி 3-ல் மீண்டும் கூடியபோது அவர் தாக்குதலைத் தொடுத்தார். பாசிசத்தின் எல்லா செயல்களுக்கும் முழுப் பொறுப்பேற்றார். லிபரல் அரசின் அமைப்புகளுக்கு பாசிஸ்டுகள் போலித்தனமான ஆதரவு தந்த இடைத்தட்டுக் காலத்தை அவரது உரை முடிவுக்குக் கொண்டுவந்தது; ஆட்சியை யதேச்சாதிகார அடிப்படையில் திருத்தி அமைப்பதற்கான தீவிர நடவடிக்கைகள் துவங்கின.

பால்மிரோ டோக்ளியாட்டி
ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள்
தமிழில் : ரா. ரங்கசாமி
பக்கங்கள் : 233
விலை : ரூ. 50.00
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

முந்தைய பகுதிகள் : பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் !

மீத்தேன் திட்டத்திற்கு எதிராக துண்டறிக்கை வினியோகித்த மக்கள் அதிகாரம் தோழர்கள் கைது !

கருத்துரிமையை காலில் மிதிக்கும் போலீசு !

  • ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக துண்டறிக்கை வினியோகித்த விழுப்புரம் மக்கள் அதிகாரம் தோழர்கள் மூவர் கைது – சிறை !
  • தமிழகத்தை கார்ப்பரேட்டுக்கு தாரைவார்க்கும் சதியை முறியடிப்போம் !

மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை,
தொடர்புக்கு : 99623 66321.

*****

மக்களை வாழவிடு! காவிரி டெல்டாவை அழிக்க வரும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்காதே!

அன்பார்ந்த தமிழக மக்களே!

ஹைட்ரோகார்பன் எடுக்க தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் கடலூர் வரை 1,794 சதுர கி.மீ. பரப்பளவு, பரங்கிப்பேட்டையில் இருந்து வேதாரண்யம் வரை 2,574 சதுர கி.மீ. பரப்பளவு என கடற்கரை ஓரம் இரண்டு மண்டலங்கள் ஸ்டெர்லைட் வேதாந்தத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளன.

குள்ளஞ்சாவடி முதல் தரங்கம்பாடி வரை 231 சதுர கி.மீ. ஒரு மண்டலம் ஓ.என்.ஜி.சி -க்கு கொடுக்கப்பட்டுள்ளது. மீத்தேன் எடுக்க, ஷேல்கேஸ் எடுக்க தனித்தனியாக உரிமம் பெற வேண்டும் என்பதை மாற்றி ஒரே வகையான திறந்தவெளி உரிமத்தைப் பெறுவதன் மூலம் பல ஆயிரம் சதுர கி.மீ பரப்பளவில் பூமிக்கடியில் உள்ள ஹைட்ரோகார்பனில் எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என பா.ஜ.க அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக துண்டறிக்கை வினியோகித்ததற்காக கைது செய்யப்பட்ட விழுப்புரம் மக்கள் அதிகாரம் தோழர்கள்.

பூமிக்கடியில் உள்ள மீத்தேன், ஈத்தேன், பியூட்டேன், ஷேல் கேஸ், கச்சா எண்ணெய் ஆகியவற்றின் பொதுப்பெயர் தான் ஹைட்ரோ கார்பன். மூவாயிரம் முதல் ஏழாயிரம் மீட்டர் ஆழம் வரை நிலத்தடி நீரை வெளியேற்றிவிட்டு, பல்வேறு ரசாயனங்களைக் கலந்து, கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீரை வெளியிலிருந்து பூமிக்கடியில் அழுத்தத்துடன் செலுத்தி நிலத்தின் அடிப்பகுதியில் முறிவை ஏற்படுத்தி, நிலக்கரிப் படிமங்களிலிருந்து மீத்தேனையும், படிமப் பாறைகளிலிருந்து ஷேல்கேஸையும், வெளியே பிரித்து எடுக்கப் போகிறார்கள்.

நீரியல் விரிசல் முறை என்று பெயர். ஒரு முறை ஒரு எண்ணெய்க் கிணற்றில் ஹைட்ரோகார்பன் எடுக்க, நீரியல் விரிசல் முறையில் 12 கோடி லிட்டர் தண்ணீர் தேவை. 400 டன் மணல் தேவை. 5 லட்சம் லிட்டர் ரசாயனக் கலவைகள் பயன்படுத்தப்படும். வெளியேறும் ரசாயனம் கலந்த கழிவு நீரால் விளைநிலங்கள் பாழாகும்.

ஜெர்மனி, பிரான்ஸ், கனடா, அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளில் நீரியல் விரிசல் முறை தடை செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் மக்கள் போராடுகிறார்கள். இங்கிலாந்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் ஹைட்ரோ கார்பன் திட்டம் கைவிடப்பட்டது. மேலும் குடியிருப்பு, விவசாய நிலங்களுக்கு அருகில் எடுக்க எந்த நாட்டிலும் அனுமதி இல்லை. ஆந்திராவில் கோதாவரிப் படுகையில் எரிவாயு, எண்ணெய் எடுத்ததால் நிலப்பரப்பு 5 அடி அளவிற்கு தாழ்ந்து கடல் நீர் உட்புகுந்து விட்டது.

இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் காவிரி டெல்டா விவசாயம் அழிவது மட்டுமல்ல, கடுமையான குடிநீர் பஞ்சமும் ஏற்படும். நிலத்தடி நீர் முற்றிலும் உறிஞ்சப்பட்டு நிலம் பாலைவனமாகும். கடல் நீர் உட்புகுந்துவிடும். பல லட்சம் மக்கள் அகதிகளாக்கப்படுவார்கள். மீன்வளம் அழிந்து மீனவர்கள் கடற்கரையிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டார்கள்.

படிக்க:
ஹைட்ரோ கார்பன் : தமிழகத்தைச் சுடுகாடாக்க மீண்டும் நுழைகிறது வேதாந்தா !
♦ நூல் அறிமுகம் : ஹைட்ரோகார்பன் – ஆழத்தில் புதைந்திருக்கும் பேரபாயம் !

காவிரி டெல்டா படுகை அடுத்த சில ஆண்டுகளுக்கு பிறகு கனரக லாரிகள், ரசாயன தொழிற்சாலைகள், நிலக்கரிச் சுரங்கம், எரிவாயு எண்ணெய் ஏற்றுமதி, பெரிய துறைமுகங்கள், விமானத்தளம், ராணுவ வாகனங்கள் என தமிழகமே கார்ப்பரேட்டுகளின் வேட்டைக்காடாக மாற்றப்படும். பல ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரிய காவிரி டெல்டா விவசாயம் என்பது நாளடைவில் அழிந்து உணவுக்காக வெளிநாடுகளில் தமிழகம் கையேந்தும் நிலை ஏற்படும்.

ஹைட்ரோ கார்பன், பெட்ரோலிய கெமிக்கல் முதலீட்டு மண்டலம் ஆகியவற்றோடு இந்தியா முழுமைக்கும் கொண்டுவரப்படும் சாகர்மாலா திட்டத்தையும் இணைத்து பார்க்க வேண்டும். மேற்கே குஜராத் முதல் கிழக்கே வங்காளம் வரை கடல் மாலைபோல் உருவாக்குவது சாகர்மாலா திட்டம். பல ஆயிரம் கி.மீ. கடற்கரையில் சாலை, கடல் வழித்தடம், ரயில் வழித்தடம், ஆற்று வழித்தடம், பல ஆயிரம் கி.மீ. எண்ணெய் எரிவாயுக் குழாய்கள், தமிழகத்தில் சீர்காழி, இணையம் உட்பட நாடு முழுவதும் 6 துறைமுகங்கள். இராணுவ போர் விமானங்கள் இறங்கி செல்லவும், இராணுவ டாங்கிகள் தாராளமாக செல்லவும் பல நூறு மீட்டர் அகலமான சாலைகள் என சாகர்மாலா ஆங்கில படத்தை மிஞ்சும் பிரம்மாண்டத்தோடு வரவுள்ளது.

இவற்றால் பெரும்பான்மை மக்களுக்கு ஒரு பயனும் இல்லை. சுற்றுச்சூழல் மாசடைந்து பேரழிவுதான் நடக்கும். பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படும். மீனவர்கள் கடற்கரையிலிருந்து அப்புறப்படுத்தப்படுவார்கள். காவிரிப் படுகையில் உள்ள நிலக்கரி, கச்சா எண்ணெய், எரிவாயுவைக் கொள்ளையடித்து வெளிநாடுகளுக்கு கப்பல் வழியாக ஏற்றுமதி செய்யப் போகிறார்கள்.

மேலும் கடலூர், சிதம்பரம், சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய வட்டாரங்களில் உள்ள சுமார் 49 கிராமங்களில் 57,000 ஏக்கர் பரப்பளவில் ரூ. 92,000 கோடி முதலீட்டில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ரசாயனத் தொழிற்சாலைகளையும் அமைக்க உள்ளார்கள். கடலூர் முதல் கிழக்குக் கடற்கரை முழுவதும் அனல்மின் நிலையங்கள், துறைமுகம், உரத்தொழிற்சாலை, ஹைட்ரோ கார்பன், சாயப் பட்டறைகள், பெட்ரோலிய கெமிக்கல் தொழிற்சாலைகள் என கார்ப்பரேட் கொள்ளைகளுக்கான திட்டங்கள்தான் அமல்படுத்தப்பட இருக்கின்றன. பாஜக அரசின் வளர்ச்சித் திட்டங்களால் வேலை இழந்தவர்கள்தான் அதிகம். இருக்கும் வாழ்வை இழந்தவர்கள் மிக அதிகம். சில ஆயிரம் பேர் வளர்ச்சியின் பயனை அனுபவிக்க பெரும்பான்மை மக்கள் சாக வேண்டுமா? தமிழகத்தின் சுற்றுச்சூழலை சீர்குலைக்க அனுமதிக்கக்கூடாது.

காவிரி டெல்டாவை நம் கண்முன்னே அழிக்க வருகிறார்கள். நாம் போராடாமல் அமைதி காக்க முடியுமா? தீர்ப்புகள், சட்டங்கள், விதிமுறைகள், சுற்றுச்சூழல், மக்களின் சுகாதாரம் என எதையும் மயிரளவும் மதிக்காதவர்கள்தான் கார்ப்பரேட் கம்பெனிகள். விவசாயம், வேலைவாய்ப்பு, இயற்கை வளங்கள் மீதான உரிமை, கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்ற அனைத்திலும் மத்திய – மாநில அரசுகளின் கொள்கை முடிவை தீர்மானிப்பதில் பெரும்பான்மை மக்களுக்கு உரிமை வேண்டும். நம்மை கேட்காமல் பாஜக பெட்ரோலிய அமைச்சர் டெல்லியில் ஸ்டெர்லைட் வேதாந்தா முதலாளியுடன் ஒப்பந்தம் செய்து, நமது விவசாயிகள், நமது மீனவர்களுக்கு எதிராக, நம்ம ஊரில் அமல்படுத்துவதை எப்படி ஏற்க முடியும்? உழைத்து வாழும் கோடிக்கணக்கான மக்கள் இவர்களுக்கு அடிமைகளும் அல்ல; பிழைக்க வந்த அகதிகளும் அல்ல.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தினால் விவசாயிகள், மீனவர்கள் மட்டுமல்ல அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுவார்கள். வாழத்தகுதியற்ற நிலைக்கு நிலம், நீர், காற்று மாறிவிட்டால் என்ன செய்ய முடியும்? மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு கால்நடைகளுடன் அகதிகளாக ஓடுவதைத் தவிர வேறு வழி இல்லை. உணவு உற்பத்தியில் – சுயசார்பு தன்னிறைவு என்பதை புறக்கணித்து, சுற்றுச்சூழலை சீர்குலைத்து, சில ஆயிரம் பேர் மட்டுமே பயனடையும் ஹைட்ரோ கார்பன் போன்ற எதையும் வளர்ச்சி என்ற பெயரில் கொண்டு வருவதை ஏற்க முடியாது.

கார்ப்பரேட் கம்பெனிகள் எதிர்த்து ஒன்றிணைந்த மக்கள் போராட்டங்கள் வெற்றி பெற்றுள்ளன. ஒடிசா பழங்குடியின மக்கள் வேதாந்தாவின் பாக்சைட் சுரங்கத்திற்கு எதிராகப் போராடி துரத்தி அடித்துள்ளனர். நெடுவாசல் மக்கள் மீத்தேன் திட்டத்தை விரட்டி உள்ளனர். கதிராமங்கலம் பகுதி மக்கள் போராடி பல இடங்களில் ஓ.என்.ஜி.சியின் அத்துமீறலை தடுத்துள்ளனர். தூத்துக்குடி மக்கள் பல ஆண்டுகள் போராடி தங்கள் உயிரைத் தியாகம் செய்து ஸ்டெர்லைட் ஆலையை மூடி உள்ளனர். சேலம் 8 வழிச்சாலைக்கு எதிராக, மக்கள் போலீசாரின் அடக்குமுறைகளை தன்னந்தனியாக எதிர்த்து நின்று கேள்வி கேட்டு போராடியதால் இத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு தடை வந்தபோது தமிழகமே டெல்லிக்கு எதிராக எழுந்து நின்று உரிமையை நிலைநாட்டியது.

எதிரியை வெற்றி கொள்ள முடியுமா என்ற முன்நிபந்தனையோடு உலகில் எந்த மக்கள் போராட்டங்களும் துவங்குவதில்லை. மக்களுக்கான நியாயமான கோரிக்கைதான் போராட்டத்திற்கு தேவை. காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை முறியடிப்போம். மண்ணையும் மக்களையும் காக்க எந்தவித தியாகத்திற்கும் தயங்காமல் போராடினால் எத்தகைய அரசுகளையும் பணிய வைக்க முடியும்.

  • விவசாயிகள், மீனவர்கள் வாழ்வை சூறையாட வரும் ஹைட்ரோகார்பன், பெட்ரோ கெமிக்கல் மண்டலம், சாகர்மாலா திட்டங்களை அனுமதிக்காதே!
  • காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க நடவடிக்கை எடு!
  • பாசன வாய்க்கால்கள், ஏரி குளங்களை தூர்வார மக்கள் பங்களிப்போடு, அவர்கள் கண்காணிப்பில் திட்டங்களை அமல்படுத்து!
  • காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் போதிய தடுப்பணைகளை கட்டுவதற்கு உடனே ஆவண செய்!
  • உணவு உற்பத்தியில் சுயசார்பு, தன்னிறைவு என்ற அடிப்படையில் பெரும்பான்மை மக்களுக்கு ஆதரவான புதிய விவசாய கொள்கையை உருவாக்கு!

மக்கள் அதிகாரம் அமைப்பின் உறுப்பினராக இணையுங்கள்!

மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை,
தொடர்புக்கு : 99623 66321.
ppchennaimu@gmail.com
fb.com/ppchennaimu


நாள் : 9-6-2019

பத்திரிகைச் செய்தி

மிழக டெல்டாவில் பேரழிவை ஏற்படுத்தும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜுன் 12 அன்று நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதுடன், அதில் மக்கள் அதிகாரம் அமைப்பும் பங்கேற்கும்.

தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் நாகை மாவட்டம் வேதாரண்யம் வரை சுமார் 5,000 சதுர கி.மீ. பரப்பளவில் ஹைட்ரோகார்பன் எடுக்க பன்னாட்டு நிறுவனமான வேதாந்தா (ஸ்டெர்லைட்டின் தாய் நிறுவனம்) மற்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு பா.ஜ.க. மோடி அரசும், அதிமுக எடப்பாடி அரசும் தமிழக மக்களின் எதிர்ப்புகளையும் மீறி அனுமதி அளித்துள்ளன. போராடுபவர்களை பல வகைகளில் அச்சுறுத்தி ஒடுக்க முயல்கின்றன.

ஏழாயிரம் அடிவரை நிலத்தடி நீரை வெளியேற்றி கோடிக்கணக்கான லிட்டர் நீரில் பல்வேறு ரசாயனங்களைக் கலந்து பூமிக்கடியில் அழுத்தத்துடன் செலுத்தி நிலத்தின் அடிப்பகுதியில் முறிவை ஏற்படுத்தி நிலக்கரி படிமங்களிலிருந்து மீத்தேனையும், படிமப்பாறைகளிலிருந்து ஷேல்கேசையும் நீரியில் விரிசல் முறையில் வெளியே பிரித்து எடுக்கப்போகிறார்கள்.

இதன் மூலம் தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டாவே பாலைவனமாகும். கடல் மீன்வளம் அழியும். பிச்சாவரம் அலையாத்திக் காடுகள் அழியும். நிலப்பகுதியில் கடல் நீர் உட்புகும். எதிர்காலத்தில் காவிரிப்படுகை மக்கள் வாழத் தகுதியற்ற பகுதியாக மாறும். இப்போது போராடி தடுத்து நிறுத்தாவிட்டால் நம் எதிர்காலத் தலைமுறையினர் மோசமான அழிவில் தள்ளப்படுவார்கள்.

இந்நிலையில் பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம் சார்பில் வருகிற 12.6.2019 புதன் கிழமை மாலை 5:30 மணி முதல் 6:00 மணி வரை விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வரை 596 கி.மீ. தூரம் மனித சங்கிலி போராட்டம் நடத்த அறிவித்துள்ளது.

கிழக்குக் கடற்கரை சாலையில் நடைபெற உள்ள மனிதச் சங்கிலி போராட்டத்தை மக்கள் அதிகாரம் அமைப்பு ஆதரிப்பதுடன் அதில் பங்கேற்கும். அனைவரும் பெரும் திரளாக பங்கேற்று தமிழகத்தின் எதிர்ப்பை வலிமையாகப் பதிவு செய்ய வேண்டும் என கோருகிறோம்.

தோழமையுடன்
வழக்குரைஞர் இராஜூ
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்
9962366321

திராவிடம் தீரரை வளர்ப்பது ! ஆரியம் அழிவைத் தருவது !

அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் | பகுதி – 02

ந்திரம், நயவஞ்சகம், இரட்டை நாக்கு, பல்லிளித்து நிற்பது முதலியன அவர்களிடம் இயற்கையாகவே இருக்கின்றன. எப்படியாவது அரசர்களை அண்டிப் பதவி பெறுவதே அவர்கள் நோக்கம் என்று ஆபி எழுதுகிறார். இதற்குச் சரிதம் அனேகச் சான்று தருகிறது. புராண இதிகாசகால மன்னர்கள் ரிஷிகளிடமும், முனிவர்களிடமும், பயபக்தி விசுவாசத்துடன் நடந்து கொண்டனர்; தமது மணிமுடியையும் காணிக்கையாகத் தந்தனர்; அவர்கள் எது கேட்டாலும் வழங்கினர்; அவர்கள் காலாலிட்ட வேலையைத் தலையால் செய்தனர் என்றெல்லாம் படிக்கிறோம்.

சரித்திரகால மன்னர்களிடம் சர்மாக்களும், ஐயர், ஐயங்கார்களும், திவான்களாகவும், மந்திரிகளாகவும் வாழ்ந்தனர். இதோ இன்றும் திருவிதாங்கூருக்கு யார்  திவான்? சர்.சி. பி. ஐயர்தானே, பரோடாவிலே சர். T.V.கிருஷ்ணமாச்சாரி, மேவாரிலே சர். விஜயராகவாச்சாரி என்றுதான் பட்டியல் காணமுடியும். நமது மாகாண சர்க்கார் சீப் செக்ரடிரியாக இருந்து, இன்று ஆலோசகராக இருப்பவர் ஒரு S.V.இராமமூர்த்தி ஐயர்தான்! நமது மாகாண முதல் மந்திரியாக இருந்தவர், ஓர் இராஜ கோபாலாச்சாரியார்தான்! நமது மாகாண சட்ட நிபுணராக, அட்வகேட் ஜெனரலாக இருப்பவர் ஒரு சர் அல்லாடி ஐயர்தான்! ஆபி டியூபா 1807-ல் கூறியது, இன்றும் பிரத்யட்ச உண்மையாக, உள்ளங்கை நெல்லிக்கனியாக – அதுவல்ல பொருத்தமான வாசகம் – கைப்புண்ணாக இருக்கிறது என்று கூறுவேன். இதுதான் பொருத்தமான உபமானம்!

அக்காலத்து மன்னர்களை அண்டிப் பதவி பெற்ற பிறகு அநீதி, மோசம், அயோக்கியத்தனம், கொடுமை முதலியன புரிய ஆரியர் துணிவர் என்று, ஆபி டியூபா எழுதுகிறார். சிண்டு முடிந்து விடுவதிலே, கலகமூட்டுவதிலே அவர்கள் கைதேர்ந்தவர்கள் என்றும் கூறுகிறார். இல்லாமலா கலகத்தையே காரியமாகக் கொண்ட ஒரு தேவன் உண்டு என்ற கதையை வைத்திருக்க ஆரிய மனம் இடம் தந்தது? நாரதரைத் தொழும் பக்த சிகாமணிகளல்லவா அவர்கள்! எங்கே போகும் அந்தப் பலன்! நமது இனத்தின் தலையிலே வந்து விடிகிறது!

திறமைசாலிகள் என்பதற்காகப் பார்ப்பனரைப் பார்த்திபர்கள் பதவியில் அமர்த்தினர் என்பது மட்டுமல்ல; மற்ற மக்களிடம் உயர் ஜாதி என்று பெருமை பேசி, அவர்களைக் கட்டுப்படுத்தும் ”சக்தி”யை ஆரியர் பெற்றிருப்பதால், அவர்களை வேலையிலே இருக்கச் செய்தால் சாதாரண மக்களின் சள்ளை இராது என்பதற்காகவே வேந்தர்கள் வேண்டினர் வேதியரை என்ற உண்மையையும் ஆபி டியூபா எழுதுகிறார். இன்றும் ஒரு பள்ளியிலே ஆசிரியராக இருப்பினும், கோயிலிலே பூசை புரிவோராக இருப்பினும், மோட்ச லோகத் தரகராக இருப்பினும், சிற்றுண்டி விற்பவனாக இருப்பினும் அவர்களிடமும் நமது இனத்தவர் எவ்வளவு அடங்கி ஒடுங்கி உள்ளனர் என்பதைப் பாருங்கள் !

பார்ப்பனரைப் பழிக்காதே! அது ‘மகாப் பாவம்’ என்று கூறும் மனப்பான்மை இன்றும் இருக்கிறது. இவ்வளவுக்கும் அவர்கள் அசகாய சூரரல்ல, வீரம் அவர்களுக்குக் கிடையாது, கோழை உள்ளம் படைத்தவர்கள் அவர்கள் என்று டியூபா கூறுகிறார். படை என்றால் தொடை நடுங்கும் கூட்டம், படை வீரரை அடக்கி வைத்திருப்பது எதனால்? ஆரிய மாயையிலே எம் இன மக்கள் வீழ்ந்து கிடப்பதனாலன்றோ? ஆபி  டியூபா போன்ற அறிஞர்கள் ஆரியரின் குணத்தினை எடுத்துக் கூறியிருப்பதை, நடுநிலையின் நின்று யோசிப்பவர் ஆரியரைப் போற்றி வாழ்வாரா? என்று கேட்கிறேன்.

அன்னாய் வாழி வேண்டன்னை நம்மூர்ப்
பார்ப்பனக் குறுமகப் போலத் தாமுங்
குடுமித் தலைய மன்ற
நெடுமலை நாடனூர்ந்த மாவே!”  –     (ஐங்குறுநூறு)

”அம்மா, அவர் குதிரை மீதேறி வருகிறார் கெம்பீரமாக!”

”யாரடி வருவது?”

”பெரிய மலைகள் சூழ்ந்த நாட்டுடைய தலைவர் பரி மீதேறி வருகிறார்.”

”சரி அதிலென்ன வியப்புக் காண்கின்றாய்?”

”அந்தக் குதிரை தலையை அசைத்துக் கொண்டு வருகிறதே, அது வேடிக்கையாக இருக்குதம்மா!’

“அதிலென்னடி வேடிக்கை! மகா வேடிக்கை.”

”குதிரை தலையை அசைக்கும் போது கொத்தாக, இருக்கும் குடுமியும் கூடவே கூத்தாடுகிறது. அதைப் பார்த்தால் சிரிப்புண்டாகிறது.”

“குதிரைக்குத் தலையிலே குடுமி ஆடினால், சிரிப்பு வரக் காரணம் என்னடி?”

“ஏனம்மா! நமது ஊரிலே உள்ள பார்ப்பனர் தலையின் உச்சிக்குடுமி, அவர்கள் நடக்கும்போது கூத்தாடுகிறதே, அதைப் போல இல்லையா அந்தக் காட்சி? அதனால்தான், எனக்குச் சிரிப்பு உண்டாயிற்று!”

“போடி குறும்புக்காரி!”

வீதி வழியே செல்லுகிறான் குதிரை வீரன் ! குதிரை தலையசைக்க அதன் குடுமி ஆடுகிறது. இதைக்கண்ணுற்ற தோழிக்குப் பார்ப்பனரின் குடுமி நினைவிற்கு வருகிறது. நகைக்கிறாள்! கண்டதையும் கொண்ட கருத்தையும் தலைவிக்கு கூறுகிறாள் பழந்தமிழகத்திலே. இக்கருத்துக் கொண்ட கவிதையே, மேலே குறித்திருப்பது, ஐங்குறு நூறு எனும் ஏட்டிலுள்ளது. எடுத்துக்கட்டியதுமல்ல! ஈரோட்டுச் சரக்குமல்ல!

ஒரு காலம் இருந்தது. தமிழர்கள் ஆரியரை நகைப்புக்குரிய நடமாடும் உருவங்களாகக் கருதிய காலம். ஆரிய இனம் வேறு என்ற எண்ணம் மங்காதிருந்த காலம். ஆரியத்தைக் கேலிக் கூத்தாகக் கருதிய காலம்! இன்றோ , ஆரியரைப் போன்ற புத்திக் கூர்மை, ஆசார அனுஷ்டானம், நேம நிஷ்டை, பூஜை புனஸ்காரம், நடையுடை பாவனை இருப்பதே தமிழருக்குச் சீலத்தையும் சிலாக்கியத்தையும் தரும் என்ற தவறான கருத்துத் தழைத்துக் கிடக்கிறது! காலம் முளைக்கச் செய்த இந்தக் கள்ளி படர்ந்திருப்பதாலேயே, நாச நச்சரவுகள் இங்கு நடமாடித் தமிழர் சமுதாயத்தைத் தீண்டித் தீய்த்து வருகின்றன!

ஆரியக் கலாச்சாரம் வேறு, திராவிடர் கலாச்சாரம் வேறு என்பது பற்றி ஆராய்ச்சியாளர்கள் தெளிவாகவே கூறியுள்ளனர். ஜெர்மன் ஆராய்ச்சியாளர்களே முதலில் ஆரிய நாகரிகம், மொழி, கலை ஆகியவற்றினை வானளாவப் புகழ்ந்தனர். மாக்ஸ் முல்லர் எனும் ஜெர்மானியர், இப்பணியிலே ஈடுபட்டபோது இங்கு அக்ரகாரம் ஆனந்தக் கூத்தாடிற்று! “வேதம் ஸ்மிருதி என்பவற்றுக்கு மேனாட்டார் எவ்வளவு மதிப்புத் தருகின்றனர் பாரீர்! எமது புகழ் எங்கும் பரவிடக் கேளீர்!” என்று பேசினர், பூரித்தனர். ஆபி  டியூபா போல், ஆரிய இனத்தின் இயல்பினைக் கடிந்து கூறாமல், புகழ்ந்து பேசிய ஜெர்மன் ஆராய்ச்சியாளர்களின் புல்லறிவினைப் பொசுக்கப் புதிய ஆராய்ச்சியாளர் தோன்றலாயினர். இந்தியாவிலேயே முதன் முதல் நாகரிகத்தைப் புகுத்தியவர்கள் ஆரியர்கள்தான் என்ற பொய்யுரை ஒழியக் காலம் பிடித்தது. ஆரியத்தின் துணையின்றி மிகப்பழங்காலந்தொட்டு இங்கே வளமான ஒரு நாகரிகம் ஓங்கியிருந்த உண்மையை, உலகு உணர நாட்களாயின. பண்டைத் தமிழரின் வாழ்வு பாழ்பட்டதும், வீரம் சரிந்ததும், கலை கறையானதும், நிலை குலைந்ததும், ஆரியத்தின் கூட்டுறவால் நேரிட்ட அவதிதான் எனும் உண்மையை உலகு முதலிலே தெரிந்து கொள்ளவில்லை.

படிக்க:
நீட் தற்கொலைகள் : தீர்வு என்ன? | மக்கள் அதிகாரம்
தமிழகத்தில் மட்டும்தானா வாரிசு அரசியல் ?

இந்தியாவை ஆரிய வர்த்தமென்று கூறியும், இந்திய நாகரிகத்தையே ஆரிய நாகரிகம் என்று மொழிந்தும் உலகு கிடந்தது. பேராசிரியர் சர். ஜான் மார்ஷல் திராவிடப் பண்புகளை ஆராய்ந்தறிந்து கூறிய போதுதான், மேனாட்டாரின் கண்களிலிருந்த கறையும், கருத்திலிருந்த மாசும் நீங்கிற்று. பிறகு ஆரியம், திராவிட நாகரிகத்தை எவ்வளவு பாழ்படுத்திற்று என்ற ஆராய்ச்சி வரலாயிற்று. இயற்கை இன்பத்தை நுகர்ந்து, வீரத்தை வணங்கி, அறத்தை ஓம்பி வாழ்ந்த திராவிடரிடையே, கட்டுக் கதைகளைப் புகுத்தி, கோழைத்தனத்தை வளர்த்தவர் ஆரியரே என்பதும், ஆரியக் கோட்பாடுகள் புகுமுன்னம் திராவிடர் அறிவுத்துறையிலேயே ஆர்வங் கொண்டிருந்தார்களேயல்லாமல், கண்ணுக்குப் புலனாகாததும், எட்டாததும், வாதத்திற்குக் கட்டுப்படாததும், பிரத்யட்சம் பிரமாணத்துக்கு ஒத்துவராததுமான கொள்கைகளிலே மூழ்கிக் கிடக்கவில்லை என்பதும், பிறகு ஆராய்ச்சியாளர்களால் விளக்கப்பட்டது.

ஆனால், இவையாவும் பிரேத விசாரணையாகக் கருதப்பட்டதேயல்லாமல், வீழ்ச்சியுற்ற இனத்திற்குத் திருப்பள்ளி எழுச்சியாக உபயோகிக்கப்படவில்லை . சாதாரணக் கல்வியும் பொது அறிவும் அதிகம் பரவாத திராவிட சமுதாயத்திடையே, புதிய ஆராய்ச்சி முடிவுகள் பரவ வழி இல்லாமற் போய்விட்டது. ஆகவேதான், ஆரியம் அழிவைத் தருவது, திராவிடம் தீரரை வளர்ப்பது என்ற நற்கருத்து இன்றும் நம் இனத்தவரிடையே புகவில்லை.

(தொடரும்)

அண்ணாவின் ஆரிய மாயை
பக்கங்கள் : 64
விலை : ரூ. 40.00
வெளியீடு : திராவிடர் கழகம்
நூல் கிடைக்குமிடம் : கீழைக்காற்று வெளியீட்டகம்.

ஆரிய மாயை என்னும் இந்நூல் கா.ந. அண்ணாதுரை (அண்ணா) எழுதிய சிறு நூலாகும். அண்ணாவின் படைப்புகளில் மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய சில நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலில் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை பற்றியும், பார்ப்பனர்களின் சிறுமதி குறித்தும் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து அம்பலப்படுத்தியிருக்கிறார். இக்காரணங்களுக்காக, அவருக்கு ரூபாய் 700 அபராதம் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் சென்னை மாநில அரசால் அண்ணாவுக்கு அளிக்கப்பட்டது.

முந்தைய பகுதிகள் : அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை

நாங்கள் எல்லோருமே இங்கே கொஞ்சகாலந்தான் இருப்போம் !

உண்மை மனிதனின் கதை | இரண்டாம் பாகம் | அத்தியாயம் – 3

ரு வாரமாக இரண்டாம் வார்டில் நான்கு பேர் இருந்தார்கள். ஆனால், ஒரு நாள் க்ளாவ்தியா மிஹாய்லவ்னா கவலையில் ஆழ்ந்தவளாக இரண்டு மருத்துவமனை ஊழியர்களுடன் வந்து இன்னொரு நோயாளிக்கு இடம் கொடுப்பதற்காக அவர்கள் கொஞ்சம் நகர்ந்து கொள்ள வேண்டும் என்று அறிவித்தாள். ஸ்தெபான் இவானவிச்சின் கட்டில் ஜன்னலின் அருகே நகர்த்தப்பட்டது. இதனால் அவர் பெருமகிழ்ச்சி அடைந்தார். குக்கூஷ்கின், ஸ்தெபான் இவானவிச்சின் பக்கத்தில் மூலைக்கு மாற்றப்பட்டான். இவ்வாறு காலியான இடத்தில் ஒரு கட்டில் போடப்பட்டது.

இந்தச் சமயத்தில் ஐந்தாவது நோயாளி கொண்டு வரப்பட்டான்.

அவன் மிகவும் கனமான ஆள் போலும். ஏனெனில் ஊழியர்களின் அடிவைப்புக்கு இசைய வெகுவாக வளைந்து தாழ்ந்தவாறு ஸ்டிரெச்சர் கிரீச்சிட்டது. தலையணை மீது தன் வசமற்ற நிலையில் புரண்டது மழுங்கச் சிரைக்கப்பட்ட உருண்டைத் தலை. மெழுகு பூசப்பட்டது போன்று மஞ்சள் பாரித்த உப்பிய முகம் உயிரற்றுக் காட்சி தந்தது. பருத்த வெளிறிய உதடுகளில் வேதனை உறைந்து நின்றது.

புதியவன் உணர்விழந்து இருந்ததுபோலத் தோன்றியது. ஆனால், ஸ்டிரெச்சர் தரையில் வைக்கப்பட்டதுமே நோயாளி கண்களைத் திறந்தான். முழங்கைகளை ஊன்றி நிமிர்ந்து வார்டை ஆவலுடன் நோட்டமிட்டான். ஸ்தெபான் இவானவிச்சை நோக்கி எதற்காகவோ கண்சிமிட்டினான் – ‘வாழ்க்கை எப்படி, மோசமில்லையே’ என்று கேட்பது போல. பின்பு கட்டைக் குரலில் இறுமினான். அவனது கனத்த உடலில் பலத்த அடிபட்டிருந்தது, அதனால் அவனுக்குக் கொடிய வலி உண்டாயிற்று என்பது தெரிந்தது. ஊதிப்போயிருந்த இந்தப் பருத்த மனிதனை முதல் பார்வையிலிருந்தே மெரேஸ்யெவுக்கு எதனாலோ பிடிக்கவில்லை. இரண்டு ஊழியர்களும் மருத்துவத்தாதிகளும் சேர்ந்து முயன்று மிகுந்து சிரமத்துடன் அவனைத் தூக்கிக் கட்டிலில் கிடத்தியதை மெரேஸ்யேவ் பகைமையுடன் கவனித்தான். புதியவனின் அடிமரம் போன்ற காலை ஊழியர்கள் எக்கச்சக்கமாகப் புரட்டியபோது அவனது முகம் திடீரென்று வெளிறியதையும் குப்பென்று வியர்த்துவிட்டதையும் வெளிறிய உதடுகள் வேதனையுடன் சுளித்ததையும் அலெக்ஸேய் கண்டான். ஆயினும் புதியவன் பற்களை நெருநெருக்க மட்டுமே செய்தான்.

கட்டிலில் கிடத்தப்பட்டதும் அவன் கம்பளி அடித் துணியின் ஓரத்தைக் கம்பளி விளிம்புக்கு வெளியே ஒழுங்காக இழுத்துவிட்டான், தன்னுடன் எடுத்துவரப்பட்ட புத்தகங்களையும் குறிப்பு நோட்டுக்களையும் சிறு மேஜை மேல் அடுக்கி வைத்தான், மேஜையின் அடித்தட்டில் பற்பசை, ஒடிகொலொன், சவர சாதனங்கள், சோப்புப் பெட்டி முதலியவற்றைக் கச்சிதமாக வைத்தான். பின்பு தன்னுடைய இந்த வேலைகளை நிர்வாக நோக்குடன் பார்வையிட்டான். அக்கணமே தான் வசதியாக ஏற்பாடு செய்துகொண்டதாக உணர்ந்தவன்போல, அதிர்ந்து ஒலிக்கும் கட்டைக்குரலில் முழங்கினான்:

“எங்கே, அறிமுகம் செய்து கொள்வோம். ரெஜிமெண்டுக் கமிஸார் ஸெம்யோன் வரபியோவ் நான். அமைதியான ஆள், புகை குடிக்காதவன். உங்கள் குழுவில் என்னைச் சேர்த்துக் கொள்ள வேண்டுகிறேன்.”

வார்டில் இருந்த மற்றவர்களை நிதானமாக, ஆர்வத்துடன் பார்வையிட்டான். அவனுடைய குறுகிய, பொன்னிறமான, மிகவும் உன்னிப்புள்ள விழிகள் தன்னைக் கூர்ந்து ஆராய்வதை மெரேஸ்யேவ் கண்டு கொண்டான்.

“நான் உங்களுடன் கொஞ்ச காலமே இருப்பேன். யாருக்கு எப்படியோ தெரியாது, ஆனால், எனக்கு இங்கே படுத்துக்கிடக்க நேரம் இல்லை. என் குதிரைப்படையினர் என்னை எதிர்பார்த்திருக்கிறார்கள். இதோ பனிக்கட்டி அகன்று விடும், பாதைகள் வளரும் – அவ்வளவுதான், நான் புறப்பட்டுவிடுவேன்.”

படிக்க:
மீண்டும் கும்பல் வன்முறைகளைத் தொடங்கிய இந்துத்துவ கும்பல் !
பாசிச எதிர்ப்புக் கூட்டணியின் அவசியம் என்ன ?

“நாங்கள் எல்லோருமே இங்கே கொஞ்சகாலந்தான் இருப்போம். பருவநிலை சீர்பட்டதுமே நாங்களும் புறப்பட்டு விடுவோம்… ஐம்பதாவது வார்டுக்கு, கால்களை முன்னே நீட்டியவாறு” என்று சுவர்புறம் ஒரேடியாகத் திரும்பிக்கொண்டு பதில் சொன்னான் குக்கூஷ்கின்.

மருத்துவமனையில் ஐம்பதாவது வார்டு இருக்கவில்லை. நோயாளிகள் சவ அறையைத் தங்களுக்குள் அப்படி அழைத்தார்கள். கமிஸாருக்கு இதைப் பற்றித் தெரிந்திருக்க முடியாது எனினும் இந்தக் கிண்டலின் ஏக்கம் நிறைந்த அர்த்தத்தை அவர் சட்டெனப் புரிந்துகொண்டார். இதற்காக அவர் வருத்தப்பட்டுக் கொள்ளவில்லை. குக்கூஷ்கினை வியப்புடன் நோக்கி, “உங்களுக்கு என்ன வயது, அருமை நண்பரே? அட தாடியே, தாடியே! வேளைக்கு முன்பே ஏனோ முதுமை அடைந்துவிட்டீர்கள் நீங்கள்” என்று மட்டுமே கூறினார்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

சினிமா ஒருவரிச் செய்திகள் – 08/06/2019

மசாலா : மோடி அரசு கொண்டு வந்த டீமானிடேஷன் மோசடிகளை மையமாக வைத்து, மோசடி என்ற பெயரில் ஒரு படம் தயாராகி உள்ளது. ஜே.சி.எஸ் மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் விஜூ, பல்லவி டோரா, என்.சி.பி விஜயன், அஜய்குமார் உள்பட பல புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள். கே.ஜெகதீசன் இயக்குகிறார்.

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி இரவு 8 மணியளவில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியானது. அதை தொடர்ந்து பெரும்புள்ளிகள் அவர்களின் அதிகாரத்தை பயன்படுத்தி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை எப்படி இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளாக மாற்றினார்கள், அதனால் மக்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டார்கள், இந்த அறிவிப்பைப் பயன்படுத்தி எப்படி குறுக்கு வழியில் மோசடி செய்தார்கள், இந்த அறிவிப்பு சரியா? தவறா? என்பதை கிரைம் மற்றும் திரில்லருடன் கமர்ஷியல் கலந்து உருவாக்கி உள்ளேன், என்கிறார் இயக்குனர் ஜெகதீசன்.

மருந்து: உடனடியாக எச்ச ராஜா, தமிழிசையின் கவனத்திற்கு இந்த செய்தியை கொண்டு சென்றால் மெர்சலே மெர்சலாகும் அளவுக்கு இந்த படத்திற்கு விளம்பரம் கிடைப்பது நிச்சயம்.

♠ ♦ ♣

மசாலா ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கிய எந்திரன் படம், கடந்த 2010-ம் ஆண்டு வெளிவந்தது. ஜூகிபா என்ற கதையைத் தழுவி இந்தப் படத்தை எடுத்துள்ளனர் என்று பிரபல எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி இயக்குனர் ஷங்கரும், படத்தின் தயாரிப்பாளரும் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் நேற்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், வழக்கு தொடுத்துள்ள தமிழ் நாடனின் ஜூகிபா கதைக்கும், எந்திரன் படத்தின் கதைக்கும் தொடர்பு இருக்கிறது. இதனால் காப்புரிமைச் சட்டப்படி இயக்குனர் ஷங்கர் மீது வழக்குத் தொடுக்க போதிய முகாந்திரம் உள்ளது. எனவே அவர் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

மருந்து : இயக்குநர் ஷங்கர் தம்மாத்துண்டு கதையை சுட்டுத்தான் பிரம்மாண்டமாக எடுக்கிறார் என்பது நீதிமன்றத்தின் மூலம் தெரிய வருகிறது. இனி தமிழ் சினிமாவிற்கு என்று கதைத் திருட்டை கண்டுபிடிக்கும் போலீசு பிரிவை உருவாக்க வேண்டும் போல. நைசா சுடுகிறவர்தான் மாஸ் டைரக்டராக பவுசு காட்ட முடியும் என்பதற்கு ஷங்கரே சாட்சி!

♠ ♦ ♣

மசாலா : நீட் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் மூன்று மாணவிகள் தன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். நீட் தேர்வோ, பள்ளி இறுதத் தேர்வோ, எந்தத் தோல்வியும் தற்காலிகம் என்பதை பிள்ளைகள் உணர வேண்டும். அவர்களை சுற்றி உள்ளோரும் இதை புரிந்துகொள்ள வேண்டும்.

தேர்வில் ஒருமுறை தோற்றுவிட்டால் மனம் தளராமல் அதை சவாலாக ஏற்று, மீண்டும் முயலவும், வெல்லவும் பிள்ளைகளுக்கு போதிய ஊக்கத்தை, ஆதரவை பெற்றோர்களும் ஆசிரியர்களும் நல்க வேண்டும். பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில், பல பெற்றோர்களே முதிர்ச்சியில்லாமல் நடந்து கொள்கிறார்கள்.

இது போதாது என்று, அரசியல் வேறு. நம் அரசியல்வாதிகள், உண்மையாகவே கொள்கைரீதியாக நீட்டை எதிர்ப்பவர்கள் சிலர் என்றால், தங்களுக்கு மெடிக்கல் சீட்டுக்கு வசூல் ஆகிக் கொண்டிருந்த டொனேஷன் கமிஷன் வகையறா நின்ற வயிற்றெரிச்சலில் பலர். அரசியல் தீர்வு வரும்போது வரட்டும்; அதுவரை மாணவர்கள் மனதை அலைபாய விடவேண்டாம். தற்கொலை செய்துகொள்வோர் எல்லாம் அனிதா அல்ல. அவரைப் போல தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தை தூண்டுபவர்கள் மனிதர்களே அல்ல.

  • சினிமா நடிகை கஸ்தூரி

மருந்து : நீட் தற்கொலைகளுக்காக பெற்றோர்களையும், நீட்டை எதிர்க்கும் அரசியல்வாதிகளையும் நொட்டை சொல்கிறார் ‘ஸ்ட்ரெயிட் ஃபார்வர்டு’ கஸ்தூரி. எய்தவனை விடுத்து அம்புகளை குற்றவாளியாக்கும் வம்பு மாமி கஸ்தூரி காற்றடித்தாலும் காவிக் கறைத் துண்டை விட்டுக் கொடுக்க மாட்டார்.

♠ ♦ ♣

மசாலா: பிரேமம் படத்தில் புகழ்பெற்றவர் சாய் பல்லவி. அதன்பிறகு தனுசுடன் நடித்த மாரி-2 படத்தில் அவரது நடனம் பெரிதாக பேசப்பட்டது. சூர்யாவுடன் என்ஜிகே படத்திலும் நடித்தார் சாய்பல்லவி.

இந்த நிலையில், தற்போது தெலுங்கில் ராணாவுடன் ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார். நக்சலைட்டுகள் பற்றிய கதையில் உருவாகும் அப்படத்தில் இளம் நக்சலைட்டாக சாய்பல்லவி நடிக்கிறாராம்.

மருந்து : ரவுடி பேபிகள் நக்சலைட்டாக நடிக்கப் போவதையும் ராணாக்கள் தமது ஹீரோயிசத்தை வெளிக்காட்ட நக்சலைட் களத்தையும் எடுத்திருப்பதைப் பார்த்தால் ஒன்று சொல்லத் தோன்றுகிறது, பாவம் நக்சலைட்டுகள்!

♠ ♦ ♣

மசாலா: பிரபல மலையாள எழுத்தாளர் பாலச்சந்திரன் கள்ளிக்காடு தனது சிதம்பர நினைவுகள் என்ற புத்தகத்தில் சிவாஜியை சந்தித்த அனுபவத்தை எழுதியுள்ளார். சிவாஜியின் நடிப்பாற்றல், பேச்சாற்றல், நினைவாற்றல் என பலவற்றை குறிப்பிட்டுள்ளார். தமிழாக்கம் செய்யப்பட்ட இவரது நூலிலிருந்து சிவாஜி பற்றிய தகவல்களை தொகுத்து பிளஸ் 2 மாணவர்களுக்கு ஒரு பாடமாக வைத்துள்ளனர்.

கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், உள்ளிட்ட சிவாஜி நடித்த முக்கிய படங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. “என்னைப்போல் சிவாஜியால் நடிக்க முடியும். என்னால் சிவாஜி போல் நடிக்க முடியாது” என்று உலகப் புகழ்பெற்ற நடிகர் மார்லன் பிராண்டோ சொன்னதும் பாடப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

மருந்து : இருக்கட்டும். தமிழக முன்னேற்ற முன்னணி என்றொரு கட்சி ஆரம்பித்து மண்ணைக் கவ்வியவர் சிவாஜி கணேசன். அந்த வீர வரலாற்றையும் பாடத்தில் சேர்த்தால் சிம்பு முதல் விஷால் வரை அடுத்த முதலமைச்சர் ஆகலாம் எனும் சினிமாக்காரர்களின் அட்ராசிட்டியை மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லி எச்சரிக்கலாமே?

♠ ♦ ♣

மசாலா: தமிழ் சினிமாவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்கப் போவதாக ஒரே சமயத்தில் இரண்டு அறிவிப்புகள் வெளியாகின. ‘தலைவி’ என ஒரு படமும், ‘தி அயர்ன் லேடி’ என்ற பெயரில் மற்றொரு படமும் அறிவிக்கப்பட்டன.

‘தலைவி’ படத்தில் ஹிந்தி நடிகை கங்கனா ரணவத் நடிக்க உள்ளார். இப்படத்தை இயக்குனர் விஜய் இயக்க உள்ளார். இப்படத்தில் நடிப்பதற்காக தமிழ் கற்று வரும் கங்கனா கொஞ்சம் குண்டான தோற்றத்தைப் பெறுவதற்காக உடற்பயிற்சிகளையும் மேற்கொண்டுள்ளாராம். படத்தின் பட்ஜெட்டாக 100 கோடி ரூபாயை தயாரிப்பு நிறுவனமான விபிரி ஒதுக்கியுள்ளது என்றும் சொல்கிறார்கள்.

மருந்து : சொத்துக் குவிப்பு வழக்கில் ஏ 1 அக்கியூஸ்டான ஜெயாவிடம் நீதிமன்றம் கட்டச் சொன்ன அபராதமும் நூறு கோடிதான். பட்ஜெட்டும் நூறு கோடிதான். பட்ஜெட் விவகாரம் இருக்கட்டும், படைப்பில் அந்த அபராதம் வருமா? நிச்சயம் வராது. கொள்ளைக்காரி என்று படமெடுக்க வேண்டியவரை தலைவி என்று எடுக்கிறார்கள் கோடம்பாக்கத்து கோமாளிகள்!

♠ ♦ ♣

மசாலா:  ‘பாரத்’ படத்தின் பிரிமியர் காட்சி மும்பையில் நடைபெற்ற போது சல்மான் காரில் ஏறுவதற்கு வசதியாக அவருடைய செக்யூரிட்டிகள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தினர்.

அப்போது சல்மான், திடீரென அவருடைய ஒரு செக்யூரிட்டியை அறைந்தார். அது குறித்து சமூக வலைத்தளங்களில் கடும் வாக்குவாதம் நடைபெற்று வருகிறது.

மருந்து : 1998-ம் ஆண்டில் ராஜஸ்தான் மாநிலத்தில் அபூர்வ கருப்பு இன மானை வேட்டையாடினார். 2002-ம் ஆண்டில் முழு போதையில் காரோட்டி ஒருவரைக் கொன்று நால்வரை படுகாயப்படுத்தினார். இரண்டு வழக்குகளிலும் விடுதலையான குற்றவாளி சல்மான் கான் தனது செக்யூரிட்டியை கொல்லாமல் அறைய மட்டும் செய்தார் என்பது அவரது பெருந்தன்மையைக் காட்டுகிறது.

♠ ♦ ♣

மசாலா: இந்தி நடிகை  ப்ரியங்கா சோப்ரா அமெரிக்கப் பாப் பாடகர் நிக் ஜோனசை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். சில நாட்களுக்கு முன், அவர் லண்டன் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அதில் தனக்கும் தன்னுடைய கணவர் நிக் ஜோனசுக்கும் அரசியல் ஆர்வம் இருப்பதை வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்.

நேர்காணலில், எதிர்காலத்தில் அரசியலில் பெரிய மாற்றங்கள் நிகழவிருக்கிறது. நானும் என்னுடைய கணவரும் அரசியல் ஆர்வம் மிக்கவர்கள். மாற்றத்தையும் எதிர்பார்த்து நம்பிக்கையுடன் காத்திருப்பவர்கள். என்னுடைய கணிப்புப் படி, நானும், அவரும் விரைவில் தீவிர அரசியலில் இறங்குவோம். நான் எதிர்காலத்தில் இந்தியாவின் பிரதமர் ஆவேன். அவர், அமெரிக்க அதிபர் ஆவார். இது உறுதி. அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எங்கள் இருவருக்கும் பெரிய ஆர்வம் உண்டு. என்றாலும், அதில் நேரடியாக தலையிட யோசித்துக் கொண்டிருந்தோம். இனிமேலும் அப்படிப் பொறுமையாக இருக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.

மருந்து : மோடியை நேருக்கு நேர் சந்தித்து பேசியிருப்பதால் பிரதமர் வேலை எவ்வளவு சுலபம் என்ற இரகசியம் பிரியங்காவிற்கு தெரிந்திருக்கும். மேலும் மோடி, ட்ரம்பின் அறிவு, தகுதி, தராதரத்தை வைத்துப் பார்க்கும் போது ஆச்சியும் ஐயரும் முறையே இந்தியாவையும் அமெரிக்காவையும் ஆள விரும்புவதில் தவறே இல்லை.

♠ ♦ ♣

மசாலா: ஆந்திர முன்னாள் முதல்வரும் இன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் தந்தையுமான ஒய்.எஸ்.ஆர்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை யாத்ரா என்ற பெயரில் தயாரானது. அதில் ராஜசேகர ரெட்டியாக மம்முட்டி நடித்திருந்தார். தற்போது இதன் இரண்டாம் பாகம் தயாராக போவதாகவும், அதில் ஜெகன்மோகன் ரெட்டி கேரக்டரில் சூர்யா நடிக்கப் போவதாகவும் செய்திகள் வெளியானது.

இதுகுறித்து ஆந்திர பத்திரிகையாளர்கள் சூர்யாவிடம் கேட்டபோது நானும் அந்த செய்திகளை படித்தேன். ஆனால் அதில் உண்மை இல்லை. அப்படி நடிக்க கேட்டு யாரும் என்னை இதுவரை அணுகவில்லை. ஜெகன் அண்ணாவுடன் எனக்கு நல்ல நட்பு உண்டு. அவர் வெற்றி பெற்று முதல்வராகி இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. ஜெகன் அண்ணா வாழ்க்கையை சொல்லும் படம் நல்ல திரைக்கதையுடன் வந்தால் அவர் கேரக்டரில் நடிக்க விரும்பம்தான் என்று கூறியிருக்கிறார் சூர்யா.

மருந்து : அப்போ எடப்பாடி வாழ்க்கை வரலாற்று படத்தில் எடப்பாடியாக சிவக்குமார் நடிப்பாரா? ஓ.பி.எஸ் மகனும் தேனி நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற ரவீந்திரநாத் வாழ்க்கை வரலாற்று படத்தில் கார்த்தி நடிப்பாரா?

♠ ♦ ♣

மசாலா: சூர்யா நடித்து வெளிவந்த ‘என்ஜிகே’ படத்திற்காக திருத்தணியைச் சேர்ந்த சூர்யா ரசிகர்கள் சுமார் 6 லட்ச ரூபாய் செலவு செய்து, 215 அடி உயர கட்அவுட் ஒன்றை வைத்தனர். அது பற்றி செய்திகள் வெளிவந்த ஒரு நாளிலேயே நகராட்சி அதிகாரிகளால் அந்த கட்அவுட் அகற்றப்பட்டது.

மருந்து: எப்போதும் பிசி என்று பேச வாய்ப்பில்லாத தொலைபேசி எண்ணைக் கொண்டுள்ள அகரம் பவுண்டேசன் மூலம் ஏழைபாழைகளுக்கு கல்வி உதவி செய்யும் வள்ளலுக்கு ஆறு லட்ச ரூபாயில் கட்அவுட் வைப்பது ஒரு குற்றமா?

புதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 ! புதிய கலாச்சாரம் நூல் !

குலக்கல்வித் திட்டம்

ஜூன் மாதம் தொடங்கிவிட்டது. கொளுத்தும் வெயில் ஒருபுறம் என்றால், பள்ளிகளும், கல்லூரிகளும் பிடுங்கும் பணம் மறுபுறம் மயக்கமுறச் செய்கிறது. நம் வீட்டுப் பிள்ளைகளுக்குத்தானே என பெற்றோர் கடன் வாங்கியாவது கேட்ட பணத்தை கொடுக்கின்றனர். எவ்வளவு செலவழித்தாலும் தரமான கல்வி நம் மாணவர்களுக்குக் கிடைக்கிறதா ?

புதிய கல்விக் கொள்கைகல்வியில் தனியார்மயம் – தாராளமயக் கொள்கைகள் அமல்படுத்தப்படத் தொடங்கிய 1990-களில் இருந்து கல்வி என்பது மக்களின் அடிப்படை உரிமை என்பதற்கு பதில் பணம் கொடுத்து வாங்கும் சரக்காக மாற்றப்பட்டுவிட்டது. படிப்படியாக ஏழைகளை உயர்கல்வியிலிருந்தும், பள்ளிக் கல்வியிலிருந்தும் அப்புறப்படுத்தி வருகின்றன மத்திய மாநில அரசுகள்.

வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசால் கடந்த 2000-ம் ஆண்டு அமைக்கப்பட்ட பிர்லா – அம்பானி குழு, ”உயர்கல்வித் துறைக்கு பல்கலைக்கழக மானியக் குழு மூலமாக வழங்கப்படும் நிதியை படிப்படியாக நிறுத்த வேண்டும்” என பரிந்துரைத்தது. கடந்த 2015-ம் ஆண்டில் பல்கலைக்கழக மானியக் குழுவைக் கலைக்க வேண்டும் என மோடி அரசு பகிரங்கமாகவே அறிவித்தது.

யூஜிசி-க்குப் பதிலாக கொண்டுவரப்படும் இந்திய உயர்கல்வி ஆணையத்தின் கீழ் அனைத்து கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும், தமது வருமானத்தை உயர்த்தி தமது செலவினங்களைப் பார்த்துக் கொள்ளவேண்டும். அதாவது, இனி அரசுத் தரப்பில் இருந்து உயர்கல்விக்கான மானியம் எதுவும் கிடையாது. பணம் இருந்தால் மட்டும் கல்லூரியை நினைத்துப் பார் என்கிறது மோடி அரசு.

மருத்துவக் கல்விக்கு நீட் நுழைவுத் தேர்வை திணித்தது போல் இனி அனைத்துக் கல்லூரிப் படிப்புகளுக்கும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுக்கு அடித்தளம் இட்டிருக்கிறது புதிய கல்விக் கொள்கை. அதோடு நிற்கவில்லை, பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்துவதாகக் கூறி 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு வைத்து மாணவர்களின் கல்வி நிலை மற்றும் உடற்தகுதியைப் பொறுத்து அவர்களுக்கு தொழிற்கல்வி வழங்குவது என மீண்டும் பழைய குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வருகிறது மோடி அரசு.

உயர்கல்வி ஆணையம் முதல் பள்ளிக் கல்வித்துறை வரை அனைத்தையும் காவி மயமாக்கி வருகிறது ஆர். எஸ். எஸ் – சங்க பரிவாரக் கும்பல். சூத்திரனுக்கு கல்வி இல்லை என்பது அன்றைய மனுநீதி ! காசில்லாதவனுக்குக் கல்வி இல்லை என்பதுதான் புதிய கல்விக் கொள்கை ! அதனை அம்பலப்படுத்துகிறது இத்தொகுப்பு.

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்.

***

புதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 ! – புதிய கலாச்சாரம் ஜூன் 2019 நூலை வாங்குவதற்கு ‘Add to cart’ பட்டனை அழுத்தவும் ! உள்ளூரில் அச்சு நூல் மற்றும் மின்னூல் வாங்குவதற்கான பட்டன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் உள்ளவர்கள் அச்சுநூல் வாங்குவதற்கான வசதி விரைவில் ஏற்படுத்தப்படும் .

மனுநீதி 2.0
அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

அச்சுநூல் அல்லது மின்னூல் வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

மின்னிதழுக்கான பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

அச்சுநூலுக்கான பணம் அனுப்பிய பிறகு தாங்கள் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக இதழ் அனுப்பி வைக்கப்படும்.

” புதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 !” நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
  • செல்வி பாஸ் ஆகிட்டா … – ஒரு ஆசிரியரின் மகிழ்ச்சி !
  • மிகக் கடினமான பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வு: தற்செயலா? சூழ்ச்சியா?
  • வருகிறது வேதக் கல்வி முறை: பாபா ராம்தேவ் அதன் தலைவராகிறார்!
  • கல்விசார்ந்த தேர்தல் வாக்குறுதிகள் தனியார்மயத்தை ஆதரிப்பவையே!
  • ஜியோ பல்கலைக்கழகம்: என்னாது கெணத்தக் காணோமா?
  • புதிய கல்விக் கொள்கையல்ல கல்வி மறுப்புக் கொள்கை!
  • ஆங்கிலம் வேண்டும், ஆங்கில வழிக் கல்விதான் வேண்டாம்!
  • கல்வி உரிமையைப் பறிக்க வரும் இந்திய உயர்கல்வி ஆணையம்!
  • பார்ப்பனக் கொழுப்பு வழிந்தோடும் சென்னை ஐ.ஐ.டி!
  • வேதக் கல்வி வாரியம்: பிணத்துக்கு சிங்காரம்!
  • பெண் கல்வி: பாகிஸ்தான் மாதாவிடம் தோற்ற பாரத மாதா!
  • நாம் படித்து வாங்கும் பட்டத்திற்கு புனிதம் இருக்கிறதா?
  • ஒரு தேசியக் கல்வி நிறுவனம் சங்கிகளால் சீரழிக்கப்பட்ட கதை!
  • கல்விக் கொள்ளையர்களின் அம்மா!
  • பொறியியல் கல்வியின் சீரழிவும் கையாலாகாத உயர்கல்வி கட்டமைப்பும்!
  • பாலிடெக்னிக் – ஐ.டி.ஐ. தரம் பற்றி ஒரு அமெரிக்கக் கவலை!
  • வாழ்க்கையைப் புரிய வைப்பதே கல்வி!

பக்கங்கள் : 80
விலை ரூ. 30.00

ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400
ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)

இணையம் மூலமாக ஆண்டுச் சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு) $27


Payumoney மூலம்(உள்நாடு) ரூ.400

 

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டுச் சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். நேரடியாக சந்தா அனுப்புவோர் கண்ணையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நெட் பேங்கிங் மூலமாகவும் அனுப்பலாம்.

வங்கி விவரங்கள் :
KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

தொலைபேசி:
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்:
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

1,500.006,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

____________

புதிய கலாச்சாரத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

பொள்ளாச்சி
அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

 

“தற்கொலை செய்து கொண்டவர்களை விமர்சிக்கும் அருகதை உங்களுக்கு இல்லை !”

5

ருத்துவ கனவோடு இருந்த அனிதாவை நரபலி வாங்கி, அமலுக்கு வந்த ‘நீட்’, இந்த ஆண்டு மூவரை பலி வாங்கியுள்ளது; எண்ணற்ற மாணவர்களின் கனவுகளை காவு வாங்கியிருக்கிறது. தேர்தல் முடிவுகளின் மூலமாகவாவது ‘நீட்’ துயரங்கள் முடிவுக்கு வரும் என காத்திருந்த நிலையில், மீண்டும் ஆரவாரத்துடன் மனுநீதி அரசு அரியணை ஏறியுள்ளது.

மனுநீதியின்படி, யார் கொல்லப்படுவார்களோ அவர்களே தங்களை மாய்த்துக் கொண்டுள்ளனர். ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த ரிதுஸ்ரீ (வயது 18) பொதுத்தேர்வில் 490 மதிப்பெண்களைப் பெற்றவர். அவருடைய பெற்றோர்  திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலைப் பார்ப்பவர்கள். நீட் தேர்வில் தேர்ச்சியடையாததால் தூக்குமாட்டி ரிதுஸ்ரீ தற்கொலை செய்துகொண்டார்.

இந்த வருட நீட் பலி : மாணவிகள் ரிதுஸ்ரீ (இடது) மற்றும் மாணவி வைஷ்யா.

பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வைஷ்யா (17) பொதுத்தேர்வில் 455 மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார். நீட் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் வராததைப் பார்த்து மண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டு மாய்ந்திருக்கிறார். இவருடைய அப்பா, பேருந்து நிலையத்தில் வாகனங்களை பாதுகாக்கும் நிலையம் நடத்திவருகிறார்.

மரக்காணம் அருகே கூனிமேடு பகுதியைச் சேர்ந்த மீனவ குடும்பத்தில் பிறந்தவர் மோனிஷா (18). “நீட் தேர்வில் நான் மார்க் கம்மி, இனி நான் இருக்கக்கூடாது” என எழுதி வைத்துவிட்டு, தூக்கு மாட்டி இறந்து போனார் மோனிஷா.

இரண்டாண்டுகளுக்கு முன் மத்திய அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரின் ‘தமிழகத்துக்கு நீட் விலக்கு நிச்சயம் உண்டு’ என்கிற வாக்குறுதியை நம்பி காத்திருந்த அனிதா, நீட்டின் திடீர் அமலாக்கத்தால் நம்பிக்கை உடைந்து தன்னை மாய்த்துக்கொண்டார்.

அதற்கு பொறுப்பான மாநிலத்தை ஆளும் அதிமுக அரசோ, பொய் வாக்குறுதிகளை அள்ளிவீசிய நிர்மலா சீதாராமன் உள்ளிட்டவர்களோ குற்றவுணர்ச்சி கொள்ளவில்லை. மாறாக, அனிதா நீட்’ஐ எதிர்கொள்ள முடியாமல் இறந்தார் என காரணத்தை கண்டுபிடித்தார்கள்.

படிக்க:
♦ நீட் தற்கொலைகள் : தீர்வு என்ன? | மக்கள் அதிகாரம்
♦ நீட் தேர்வின் வெற்றியும் தோற்கடிக்கப்பட்ட சமூக நீதியும் !

“அனிதா மரணத்தை நீட் புதிதாக கொண்டு வந்ததால் அதனை பற்றிக் கொள்ளும் தயாரிப்பு, பக்குவம், முனைப்பு ஆகியவற்றில் ஏற்பட்ட தோல்வியின் பலன்” என்றார்கள். ரிதுஸ்ரீ எல்லா தேர்வு தயாரிப்புகளையும், பயிற்சிகளையும் முறையாக கையாண்டு முயன்று, முட்டி, மோதி உயிரை விட்டிருக்கிறார்.

அனிதாவும், ரிதுஸ்ரீயும் முன்னேறத் துடிக்கும் ஒரு இனத்தின் சமூகக் கூட்டு விழைவின் முகங்கள். தேர்வு தோல்வி மனப்பான்மையில் தற்கொலை செய்து கொள்ளும் சராசரிகள் அல்லர் அவர்கள்.” என்கிறார் ராஜ் தேவ்.

நீட் கொலைகளுக்கு எதிராக சமூக ஊடகங்களில் கடுமையான கண்டனங்கள் எழுதப்படுகின்றன. ஆனால், அவை யாவும் ஆள்வோரின் செவிட்டுக் காதுகளுக்கு கேட்பதாக இல்லை.

இந்த நிலை தொடர்ந்தால்,  தமிழினம் அதன் உயரவாவையும், உயர் குறிக்கோளையும் ஒட்டுமொத்தமாக கைவிட்டு எழுத்தர், பணியாளர், கணக்கர், அலுவலர், பியூன் போன்ற வேலைகளுக்கு அதனை தகுதியிறக்கம் செய்து விடுமோ என்கிற கவலையை முகநூலில் பகிர்ந்திருக்கிறார் ராஜ் தேவ்.

நன்றாக படிக்கும், நிறைய மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்கள் ஏன் தற்கொலை செய்துகொள்கிறார்கள்? தற்கொலைகள் தனிப்பட்டவர்களின் விழைவா, அல்லது ஆளும் அமைப்புகளின் திணிப்பா?

“முன்பெல்லாம் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள்தான் அதிக அளவு தற்கொலை செய்து கொள்வார்கள். இப்போதெல்லாம் தேர்வில் அதிக மதிப்பெண் வாங்கும் மாணவர்களே அதிகமாக இந்த முடிவை எடுக்கிறார்கள். கல்வியின் நிமித்தம் நமது குழந்தைகளுக்கு மிகப்பெரிய அநீதி நடந்து கொண்டிருக்கிறது…

தேர்வில் தோல்வியடைவதோ அல்லது தேர்வில் அதிக மதிப்பெண்கள் வாங்குவதோ எதுவும் அவர்களுக்கு பொருட்டல்ல. நம்முடைய குழந்தைகள் படிக்கக் கூடாது என்பது மட்டுமே அவர்களின் பிரதான நோக்கம். அதற்காக மிக நுட்பமாக காய்கள் நகர்த்தப்படுகின்றன” என நீட் தற்கொலைகளின் பின்னணியைப் பேசுகிறார் மனநல மருத்துவர் சிவபாலன்.

இந்தக் காய்களை நகர்த்துகிறவர்கள் யார்? தமிழக மக்களின் கல்வி உரிமையை அதிமுக அரசு டெல்லிக்கு அடகு வைத்துவிட்டதை சுட்டிக்காட்டுகிறார் பத்திரிகையாளர் அருள் எழிலன்.

“இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத அளவுக்கு 22 மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்தில். ஆனால், அது தமிழக மாணவர்களுக்கு பயன்படவில்லை. நமது கல்வி உரிமையை பொது சொத்தை டெல்லிக்கு அடகு வைத்து விட்டது அதிமுக!” என்கிறார் அவர்.

“தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வைஷியா தீக்குளித்து உயிர் துறந்திருக்கிறார். 12-ம் வகுப்பில் 490 மதிப்பெண்கள் பெற்றும், நீட் தேர்வில் ஜெயிக்க முடியாத ஆதங்கத்தில் திருப்பூர் மாணவி ரிதுஸ்ரீ பலியாகி விட்டார்.

வாழ வேண்டிய இரு பெண் குழந்தைகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். பட்டியல் இனம் சார்ந்தவர்களில் 20,009 பேரும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 63,749 பேரும், முன்னேறிய வகுப்பைச் சேர்ந்தவர்களில் 7,04,335 பேரும் வெல்ல முடிகிறதென்றால், நியாயமான முறையில்தான் நீட் தேர்வுகள் நடத்தப்படுகின்றது என்பதை எப்படி நம்புவது?” என கேள்வி எழுப்புகிற எழுத்தாளர் பா. ஜீவசுந்தரி,  சமூக நீதி நம் கண்ணெதிரில் குழி தோண்டிப் புதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என ஆதங்கப்படுகிறார்.

படிக்க:
♦ நீட் கொடுமைகள் 2019 : இன்னும் எவற்றையெல்லாம் சகித்துக் கொள்ளப் போகிறோம் ?
♦ நீட் தேர்வின் இரத்தப் பசிக்கு பலி கொடுக்கப்பட்ட இளங்குருத்துகள் !

நீட் தற்கொலைகள் மூன்றாக உயர்ந்துள்ள இந்நேரத்தில், மருத்துவ நுழைவுத் தேர்வில் தோல்வியடைவதெல்லாம் ஒரு விஷயமா? தற்கொலை செய்துக்கொள்வது கோழைத்தனம். இதை பெரிய தியாகமாக சித்தரிக்காதீர்கள் என்று எழுதுவோருக்காக வழக்கறிஞர் கிருபா முனுசாமி நீண்ட பதிலை சொல்ல விரும்புகிறார்..

“பொதுவாக, மருத்துவக் கல்வியை பயில முடியாது தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் பின்புலத்தை பார்த்தோமேயானால், இந்திய ஜாதிய சமூகத்தில் சிறப்புரிமை வாய்க்கப்பெறாத, ஜாதி அடிப்படையிலான பாகுபாடுகளுக்கும், மனிதத் தன்மையற்ற நடத்தைக்கும் உட்படுத்தப்படும் ஒடுக்கப்பட்ட – பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

நால்வர்ண முறை

இந்த ஜாதிய கொடுமைகளிலிருந்து வெளியேறி, கண்ணியமான வாழ்க்கையை வாழ வேண்டுமென்றால், அவர்களுக்கு இருக்கக்கூடிய, இயலக்கூடிய ஒரே வழி ‘கல்வி’ மட்டுமே! ஏனெனில், கல்வி கிடைத்துவிட்டால், அதன் விளைப்பயனாக கிட்டும் உறுதியான வேலைவாய்ப்பும், கௌரவமான ஊதியமும் தன்னியல்பாகவே சுயமரியாதையுடனான கண்ணியமான வாழ்க்கையை சாத்தியப்படுத்தும் என நம்புகிறார்கள். அது உண்மையும் கூட.

இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் அப்படி அவர்கள் பயிலும் கல்வி ஏன் மருத்துவமாக இருக்க வேண்டும் என்ற கேள்வியும் மேலெழுகிறது. அதற்கு முக்கிய காரணம், மனித உயிர்களை காப்பதாலோ என்னவோ மற்ற எந்த தொழில்களை விடவும் மருத்துவத் தொழில் முதன்மையானதாக கருதப்படுகிறது. மருத்துவர் என்றாலே டாக்டர் அம்மா அல்லது டாக்டர் ஐயா என்ற பின்னொட்டும் தானாக சேர்ந்துக்கொள்கிறது.

அதன்காரணமாகவே, நெடுங்காலம் வரையிலும் மருத்துவப் படிப்பையும், அத்தொழிலையும் சமஸ்கிருதம் தெரிந்தால் மட்டுமே பயிலமுடியும் என்ற அடிப்படையற்ற தகுதியை விதித்து பார்ப்பனர்கள் தங்களுக்குள்ளேயே வைத்துக்கொண்டனர். ஒருவர் தன் வாழ்நாளில் மருத்துவரை அணுகும் அளவிற்கு, தொழில்நுட்ப நிறுவனத்தையோ அல்லது நீதித்துறையையோ அணுகுவாரா என்றால், கண்டிப்பாக இல்லை. ஆகவே தான், ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மருத்துவர் என்ற கனவு நிரந்தரமாக குடியேறி விட்டது!

மருத்துவம், பொறியியல், சட்டம் கடந்து வேறு படிப்புகள் அல்லது தொழில்கள் என்று எடுத்துக்கொள்வோம். இந்நாட்டில் ஒருவரின் மீதான மதிப்பென்பது அவரின் வேலையை சார்ந்ததா இல்லையா? இங்கே தொழில் என்பது ஜாதியைப் பொறுத்ததா இல்லையா? ஜாதிய அடுக்கில் மேலிருப்பவர்களுக்கு சேவை செய்யவே மற்ற ஜாதிகள், அந்தந்த ஜாதிகளுக்கு ஒதுக்கப்பட்ட வேலையை செய்வதே கடமை என்ற வரலாறு இன்றும் தொடர்கிறதா இல்லையா?

வெளிநாடுகளில் பார்க்கும் பொழுது, ஒரு பெரும் நிறுவனத்தில் இயக்குனராக இருக்கும் ஒருவரின் மகள் முடி திருத்தும் வேலை செய்கிறார், சொந்தமாக உணவகம் வைத்திருப்பவரின் மகன் நடனம் ஆடுகிறான். அங்கிருக்கும் எவரும் குழந்தையை பார்த்துக் கொள்வதிலிருந்து எல்லாவித பகுதிநேர வேலையை செய்கின்றனர், சுயமரியாதையான வாழ்க்கையை வாழ்கின்றனர். ஏனெனில், அங்கே எந்த தொழிலும் இழிவில்லை. தொழிலைக்கொண்டு மனிதரை இழிவாகப் பார்க்கும் மனநிலையும் இல்லை. அது நம் நாட்டில் சாத்தியமா?

துணி துவைக்க ஒரு ஜாதி, மலம் அல்ல ஒரு ஜாதி, சுடுகாட்டிற்கு ஒரு ஜாதி, பறை அடிக்க, வியாபாரம் செய்ய, மேளம் அடிக்க, ஏன் கோயிலில் மணி அடிக்க கூட என்று ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு ஜாதியை இச்சமூகம் உருவாக்கி வைத்திருக்கிறது. இங்கிருந்து உதவித்தொகையில் வெளிநாட்டிற்கு சென்று படிக்கும் மாணவர்கள் பணம் பற்றாத நிலையில் பகுதிநேர வேலை செய்து பணம் ஈட்டுவது வழக்கம்.

அதிலும் கூட, பார்ப்பனரல்லாத மாணவர்கள் உணவகங்களில் தட்டு கழுவும் வேலை செய்ய, பார்ப்பன மாணவர்களோ அங்கே குடிபெயர்ந்த இந்தியர்களின் வீடுகளில் சடங்குகள் நடத்தியும், அவர்கள் கட்டியிருக்கும் கோயில்களில் நோகாமல் பூஜை செய்தும் சம்பாதிப்பதை காண முடிகிறது. கண்டம் விட்டு கண்டம் சென்றாலும் அவரவர் ஜாதி விதித்திருக்கும் தொழிலை கடமைத் தவறாது செய்ய முடிகிறது என்றால், ஜாதியும், அது வகுத்திருக்கும் தொழிலும் நம் மனங்களில் அந்த அளவிற்கு வேரூன்றி இருக்கிறது.

ஜாதியைப் பொறுத்து தொழிலை திணிக்கும், தொழிலைக் கொண்டு மனிதரை அளவிடும் உங்கள் யாருக்கும்  மருத்துவ நுழைவு தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்துக்கொண்டவர்களை விமர்சிக்க அருகதை இல்லை. ஏனெனில் அவர்களை சாவுக்கு தள்ளிக் கொன்றதே நீங்கள்தான்!

கௌரவம், கௌரவம் என்று எல்லாப் பளுவையும் எங்கள் தலைகளில் சுமத்திவிட்டு, திரைத்துறை, ஊடகம், நாட்டியம், வசதியான உடை, நினைத்தால் திருமணம், இல்லையேல் மறுமணம் என்று விரும்பிய வாழ்க்கையை சுதந்திரமாக வாழும் சிறப்புரிமை பெற்ற நீங்கள்தான், அடுத்தவர் வாழ்க்கையை அளக்கிறீர்கள். முதலில்  ஜாதியத் தொழில்களை ஒழியுங்கள், பிறகு பாடம் எடுக்கலாம்!”.


தொகுப்பு : கலைமதி

அரிசி : பொது அறிவு வினாடி வினா 19

அரிசி : பொது அறிவு வினாடி வினா

உலகில் பரவலாக உட்கொள்ளப்படும் உணவாக அரிசி உள்ளது. அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவில் இது அதிக அளவில் நுகரப்படுகிறது. நம் முக்கிய உணவாக உள்ள அரிசி பற்றி, நாம் எவ்வளவு விசயங்கள் அறிந்து வைத்துள்ளோம் என்பதை சோதித்துப் பார்ப்போம் வாருங்கள்.

(வினாடி வினா பகுதி, கேள்விகளுக்குக் கீழே உள்ளது. தவறாமல் பங்கெடுக்கவும்)

கேள்விகள்:

  1. உலகின் எந்தப் பகுதி அரிசியை அதிகம் உட்கொள்கிறது?
  2. உலக அளவில் அதிகம் உற்பத்தி செய்யப்படும், மக்காச் சோளம், கரும்பு, அரிசி போன்றவற்றில் அரிசியின் இடம் என்ன?
  3. 2014-ம் ஆண்டு கணக்கீட்டின் படி அரிசியின் உலக உற்பத்தி எவ்வளவு?
  4. உலக அளவில் மனித குலத்திற்கு தேவைப்படும் கலோரி உணவுப் பொருளில் அரிசியின் இடம் என்ன?
  5. அரிசியை உற்பத்தி செய்யும் நாடுகளுக்கு தேவைப்படும் சாதக அம்சங்கள் என்ன?
  6. உலக அளவில் மனித குலத்திற்கு தேவைப்படும் உணவு எரிபொருளில் அரிசி, கோதுமை, சோளத்தின் பங்கு என்ன?
  7. தொல்லியல் மற்றும் மொழியியல் ஆதாரத்தின்படி அறிவியல் முன்வைக்கும் அரிசி சாகுபடி செய்யப்பட்ட முதல் இடம் உலகில் எங்கு இருக்கிறது?
  8. இந்தியா-பாகிஸ்தானுக்கு அரிசி அறிமுகமான ஆண்டு எது?
  9. சீனா, இந்தியா, இந்தோனேசியா, வங்கதேசம், வியட்நாம், தாய்லாந்து, மியன்மார், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், கொரியா, ஜப்பான் போன்ற ஆசிய நாடுகள் உலக அளவில் அரிசி உற்பத்தியில் கொண்டிருக்கும் விகிதம் என்ன?
  10. 2016-ம் ஆண்டு கணக்கின் படி ஆண்டுக்கு 209.5 மில்லியன் டன்கள் அரசியை உற்பத்தி செய்யும் இந்த நாடுதான் உலக அரிசி உற்பத்தியில் முதல் இடம் வகிக்கிறது. (உலகின் மொத்த உற்பத்தி 741 மில்லியன் டன்கள்)
  11. 2016-ம் ஆண்டின் கணக்குப்படி இந்தியாவின் அரிசி உற்பத்தி எவ்வளவு?
  12. 2012-ம் ஆண்டு கணக்கின் படி உலகில் அதிக அரிசியை ஏற்றுமதி செய்யும் நாடு எது? ( 9.75 மில்லியன் டன்கள்)
  13. 2010-ம் ஆண்டு கணக்கின் படி உலக அளவில் சராசரியாக ஒரு ஹெக்டேருக்கு எத்தனை டன் அரசி உற்பத்தி செய்யப்படுகிறது?
  14. உலக அளவில் சராசரியாக ஒரு ஹெக்டேருக்கு 10.8 டன் அரிசியை உற்பத்தி செய்யும் நம்பர் ஒன் நாடு எது?
  15. ஒரு இலட்சம் அரிசி வகைகளைக் கொண்ட சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிலையம் எந்த நாட்டில் உள்ளது?
  16. 2009-ம் ஆண்டு கணக்கின் படி இந்திய விவசாயிகள் ஒரு ஹெக்டேருக்கு சராசரியாக உற்பத்தி செய்த அரிசியின் அளவு என்ன?
  17. 2009-ம் ஆண்டு கணக்கின் படி உலக அளவில் அரிசி உற்பத்தியில் இந்தியாவின் இடம் எது?
  18. உரம் – பூச்சிகொல்லி மருந்து போன்ற ரசாயனங்கள் இன்றி ஆர்கானிக் முறையில் இந்தியாவில் விவசாயம் செய்யப்படும் ஹெக்டேர் நிலம் எவ்வளவு?
  19. உரம், பூச்சிகொல்லி மருந்து போன்ற ரசாயனங்களைப் பயன்படுத்தியும் இந்தியாவின் சராசரி அரிசி உற்பத்தி சீனாவின் சராசரி உற்பத்தியில் பாதியை மட்டுமே கொண்டிருப்பதன் காரணம் என்ன?
  20. 2012- ஆண்டு கணக்கின் படி இந்திய மக்களின் மொத்த தற்கொலையில் விவசாயிகளின் தற்கொலை விகிதம் எவ்வளவு?
  21. இந்தியாவில் 2016-ம் ஆண்டு கணக்கின் படி 15.75 மில்லியன் டன் அரசியை உற்பத்தி செய்து முதலிடத்தை பிடித்த மாநிலம் எது?
  22. 2015-16ம் ஆண்டு கணக்கின் படி தமிழகத்தின் அரிசி உற்பத்தி எவ்வளவு?

நீங்கள் பங்கெடுப்பதோடு மட்டுமல்லாமல் உங்கள் நண்பர்களையும் இந்த வினாடி வினாவில் பங்கேற்கச் செய்யுங்கள் !

உலக சுற்றுச்சூழல் நாள் : படக் கட்டுரை

0

புதன்கிழமை ( ஜூன் 5) அனுசரிக்கப்பட்ட உலக சுற்றுச்சூழல் நாளின் இந்த ஆண்டுக்கான கரு ‘காற்று மாசுபாடு’. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் சுற்றுச்சூழல் நாளில் மரம் நடுவது ஒரு சடங்காகவே பாவிக்கப்படுகிறது.

காற்று மாசுபாடு குறித்தோ, குறைந்து வரும் மழையளவு, அதிகரிக்கும் வெப்பம், கடுமையான வறட்சி குறித்த நீண்ட காலத்துக்கான திட்டமிடலை உலகின் எந்த நாடுகளும் முன்னுரிமை கொடுத்து செய்வதில்லை.

இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகள், பெருமுதலாளிகளுக்கு இயற்கை வளங்களை கூறுபோட்டு விற்பதையே அதிவேகமாகச் செய்ய விரும்புகின்றன. குறிப்பாக, அதானி – அம்பானிகளுக்கு வனங்களை அழிக்கும் முழு பொறுப்பையும் அளித்துள்ள மோடி அரசு, சுற்றுச்சூழலை காக்க என்ன திட்டங்களைத் தீட்டும்? உலக சுற்றுச்சூழல் தினத்தில் இந்தியாவின் சூழலை விளக்கும் சில படங்கள் இங்கே…

தானே-யில் உள்ள ‘ஏரி’யை ‘உலக சுற்றுச்சூழல் நாளை’ ஒட்டி தூய்மையாக்கும் பணியில் செயல்பாட்டாளர்கள்…

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், கிரிக்கெட் வீரர் கபில் தேவ், நடிகர் ஜாக்கி ஷெராப், நாட்டுப்புற பாடகர் மாலினி அஸ்வதி உள்ளிட்டோர், ‘உலக சுற்றுச்சூழல் தின’த்தை முன்னிட்டு டெல்லியில் மரக்கன்று நட்டனர். இத்துடன் மத்திய அமைச்சரின் சுற்றுச்சூழல் நாள் கடமை முடிந்தது ! மீத நேரங்களில் அதானி அம்பானிகளுக்கு வனங்களையும், மலைகளையும் அள்ளிக் கொடுப்பதுதான் பிரதான வேலை ..

வழக்கமாக நடக்கும் சில சுற்றுச்சூழல் நாள் நிகழ்ச்சிகளில் ‘சைக்கிள் பேரணி’யும் உண்டு. டெல்லியில் நடந்த அப்படிப்பட்ட சைக்கிள் பேரணிகளில் ஒன்று…

அனைத்து நடப்புகளுக்கும் மணலால் சிற்பம் வடிக்கும் சிற்பக்கலைஞர் சுதர்சன் பட்னாயக், உலக சுற்றுச்சூழல் நாளுக்கு ஒடிசாவின் பூரி கடற்கரையில் வடித்த மணல் சிற்பம்.. ‘காற்று மாசுபாட்டை வெல்லுங்கள்’ என்கிறது.

உலக சுற்றுச்சூழல் நாளில் குவாஹாத்தி மாநகராட்சி குப்பைகளை கொட்டும் பொரகான் என்ற இடத்தில் மறுசுழற்சிக்குரிய பொருட்கள் ஏதேனும் கிடைக்குமா எனத் தேடும் குப்பை சேகரிப்பாளர்கள்.

மும்பையில் உள்ள சிவாஜி பார்க்கில் உலக சுற்றுச்சூழல் நாளில் குப்பைகளுக்கு நடுவே நடந்து செல்லும் மக்கள்…

பொரகான் குப்பை மேட்டில் பறவைகள், விலங்குகளுக்கிடையே ஏதேனும் பயன்படுத்தத்தக்க குப்பை கிடைக்குமா எனத் தேடும் சிறுவன்…

குவாஹாத்தியின் பொரகான் குப்பை மேட்டில் ‘வாழும்’ செங்கால் நாரைகள்… இதுவும் உலக சுற்றுச்சூழல் நாளில் பதிவான காட்சியே…

மும்மையில் உள்ள அலையாத்தி மரங்கள் சூழ்ந்த மிதி ஆற்றின் அருகே எரிக்கப்படும் குப்பைகளின் ஊடாகக் கடந்து செல்லும் மக்கள்…

பசுமை சூழ்ந்த வனத்தின் பின்னணியில் குவிந்து கிடக்கும் பொரகான் குப்பை மேட்டியில், பிழைப்புக்காக பயன்படுத்தத்தக்க பொருட்கள் கிடைக்குமா என தேடி அலையும் இரு பெண்கள்…

பொரகான் குப்பை மேட்டில் குப்பைகளை மேயும் மாடுகளுக்கிடையே, பயன்படுத்தத்தக்கப் பொருளைத் தேடும் பெண்…

அமிர்தசரசில் குப்பை மேட்டில் பயன்படுத்தத்தக்க பொருட்களைத் தேடிம் குப்பை சேகரிப்பாளர்கள்…

அமிர்தசரஸ் நகரின் புறநகரில் உள்ள குப்பை மேட்டை தன்னுடைய பிழைப்புக்கான நம்பிக்கைக்குரிய இடமாகப் பார்க்கும் ஒரு இளைஞர்…


கலைமதி
நன்றி : அவுட்லுக் இந்தியா

குட்டி முதலாளித்துவ வர்க்கமும் பாசிசமும் !

பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் | பாகம் – 7

டோக்ளியாட்டி

குட்டி பூர்ஷுவாக்களிடையே இந்த இயக்கம் எப்பொழுது ஓர் ஒருமித்த இயக்கமாக மாற்றம் கண்டது? ஆரம்பத்தில் அல்லாமல், 1920-ம் ஆண்டின் இறுதியில்தான் அந்த மாற்றம் ஏற்பட்டது. அதிலும் ஒரு புதிய அம்சம் குறுக்கிட்டபொழுதுதான் அது மாற்றமடைந்தது. பூர்ஷுவா வர்க்கத்தின் மிகவும் பிற்போக்கான சக்திகள் ஓர் ஒருங்கிணைந்த அணியாக குறுக்கிட்டபொழுதுதான் அந்த மாற்றம் ஏற்பட்டது. இதற்கு முன்னரும் பாசிசம் வளர்ந்து கொண்டுதான் இருந்தது. ஆனால், அடிப்படை சக்தியாக அது ஆகியிருக்கவில்லை.

பாசிச இயக்கம் யுத்தத்தின் பொழுது தோன்றுகிறது, பின்னர் அது பாஸ்ஸி டி கம்பாட்டிமென்டோ 8 (இத்தாலிய போராடும் லீக்) ஆகத் தொடர்கிறது. எனினும், சில தனி நபர்கள் அதை இறுதிவரை ஆதரிக்கவில்லை. உதாரணத்திற்குச் சொல்வதென்றால் அரசியல் வாதப்பிரதிவாதங்களில் ஈடுபடும்போது நென்னியை நாம் பாசிசவாதி என்கிறோம். ஆனால் ஒரு குறிப்பிட்ட சமயத்தில் அவர் அந்த இயக்கத்திலிருந்து வெளியேறிவிட்டார் 9. துவக்கத்தில் பாசிசமானது வெவ்வேறு தன்மை கொண்ட பல்வேறு குழுக்களைக் கொண்டிருந்தது. அவை, இறுதிவரை ஒன்றாகச் சேர்ந்து சென்றதாக வரலாறு இல்லை. நகரங்களில் பாசிச இயக்கத்தின் அத்தியாயங்களைப் படித்துப் பாருங்கள். 1919 – 20-ல் குட்டி பூர்ஷுவா நபர்களும் பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்களும் பொதுவான அரசியல் பிரச்சினைகளை விவாதித்ததையும் ஏராளமான கேள்விகளை எழுப்பியதையும் கோரிக்கைகளை முன்வைத்ததையும் நீங்கள் கண்டிருக்கக் கூடும். இந்தச் சந்தர்ப்பத்தில்தான் பாசிசத்தின் முதல் வேலைத் திட்டம் தோன்றியது.

ஸ்குவாட்ரிஸ் மோ (Squadrismo)

பியஸ் ஸா சான் செபோல் குரோ10 வேலைத் திட்டமானது பிரதானமாகக் குட்டி பூர்ஷுவா திட்டமாகும்; அது நகர்ப்புற பாசிச சக்திகளைப் பிரதிபலித்தது. இதற்குப் பதிலாக பாசிசத்தை எமிலியா போன்ற கிராமப்புறப் பகுதிகளில் கவனியுங்கள். அது வித்தியாசமானது. பின்னாட்களில், 1920-ல் தொழிலாளி வர்க்கத்தை எதிர்த்துப் போராடுவதற்காக ஆயுதம் தாங்கிய குழுக்கள் வடிவத்தில் அது தோன்றியது. அது ஸ்குவாட்ரிஸ் மோக்களாக11 அதாவது சிறு குழுக்களாக ஆரம்பத்தில் உருவெடுத்தது. தறுதலைகள், குட்டி பூர்ஷுவா மற்றும் நடுத்தர சமூகப் படிமானத்தைச் சேர்ந்தவர்கள் அதைப் பின்பற்றினார்கள். ஆனால் அது உடனேயே தொழிலாளி வர்க்கத்திற்கெதிரான ஒரு போராட்டக் கருவியாயிற்று. அதனுடைய தலைமையகத்தில் எவ்வித விவாதமும் நடத்தப்படுவதில்லை. ஏன் இந்த வித்தியாசம்? ஏனென்றால் இங்கே கிராமப்புற பூர்ஷுவா வர்க்கத்தினர் ஒரு அணி திரட்டும் சக்தியாகக் குறுக்கிட்டனர்.

1921 நடுப்பகுதியிலிருந்து நகரங்களில் சிறுசிறு குழுக்கள் (ஸ்குவாடு) அமைக்கப்பட்டன. முதலில் தேசியப் பிரச்சினை கூர்மையாகவிருந்த டிரிஸ்டியிலும் பின்னர் இந்தச் சக்திகள் மிகவும் பதட்டநிலையிலிருந்த இதர நகரங்களிலும் இந்தச் சிறு குழுக்கள் உருவாக்கப்பட்டன. இந்தச் சிறு குழுக்கள் கிராமப்புற குழுக்கள் போன்று உருவாக்கப்பட்டன. டூரின் நகரின் தொழிற்சாலைகள் கைப்பற்றப்பட்ட பிறகு12 இந்தக் குழுக்கள் அங்கே தோற்றுவிக்கப்பட்டன; எமிலியாவில் இந்த நேரத்திற்குள் பாசிசம் ஏற்கெனவேயே ஒரு வலுவான அமைப்பைப் பெற்றுவிட்டது.

1920-ம் ஆண்டின் இறுதிப் பகுதியில் பூர்ஷுவா வர்க்கத்தினரும் அமைப்பு ரீதியாக நகரங்களில் தலையிட்டனர். இதன் விளைவாக நகரங்களில் பாசிசக் குழுக்கள் தோன்றின. பாசிச இயக்கத்திற்குள் பல நெருக்கடிகள் தோன்றின. முதல் இரண்டு வருட நெருக்கடிகளை இவ்வகையில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டும்.

முசோலினி.

அச்சமயம் பாசிஸ்டுகளிடையே பின்வருமாறு விவாதிக்கப்பட்டது: நாம் ஒரு கட்சியா? இதுதான் ரோம் காங்கிரசில் அகஸ்டியோவில் நடந்த காங்கிரசில் எழுந்த பிரச்சினை13. அந்த காங்கிரஸ் கூறுகிறது: நாம் ஒரு கட்சியாக வேண்டும். முசோலினி இதற்குப் பின்வருமாறு பதிலளிக்கிறார்; “நாம் இன்னமும் ஒரு இயக்கமாகவே இருந்து வருவோம்.” முசோலினி சாத்தியமான அளவுக்கு பரந்துபட்ட மக்கட் பகுதிகளை தனது செல்வாக்கில் வைத்திருக்க முயற்சித்தார். அதன் காரணமாக அவருக்கு எப்பொழுதும் அதிக ஆதரவும் இருந்தது. அதே சமயம் தொழிலாளிவர்க்க அமைப்புகளை நொறுக்க வேண்டுமென்பது பகிரங்கமாகவே விரும்பியவர்களுக்கும் பழைய தத்துவங்களின் மிச்ச சொச்சங்களை இன்னும் ஆதரித்து வந்தவர்களுக்குமிடையே மோதல் நடைபெற்றது.

முசோலினி டி அன்னுன்ஸியோ இயக்கத்திற்குத் துரோகம் இழைத்தார்14; அது ஆபத்தானது என்று அவர் கருதியதே இதற்குக் காரணம். 1920-ம் ஆண்டில் தொழிற்சாலைகள் கைப்பற்றப்பட்ட நடிவடிக்கை விசயத்தில் அவர் முதலில் அனுசரணையான அணுகுமுறை கொண்டிருந்தார். ஆனால் பிறகு முற்றிலும் மாறிவிட்டார். பாசிச இயக்கத்திற்கும் தொழிலதிபர்களின் அமைப்புகளுக்குமிடையே முதலாவது பகிரங்க தொடர்புகள் ஏற்பட்டன. தாக்குதல் ஆரம்பமாகிவிட்டது. ரோம் மீது படையெடுப்பு துவங்கும் வரை இரண்டு வருட காலம் அந்தத் தாக்குதல் நீடித்தது.

அமைப்பு ரீதியான அம்சம் இப்போது குறுக்கிட்டது. கிராமப்புற பூர்ஷுவா வர்க்கத்தினர் சிறு குழுக்கள் வடிவத்திலான அமைப்பை அளித்தனர். தொழிலதிபர்கள் அதை நகரங்களுக்குப் பயன்படுத்தினர்.

படிக்க :
♦ கார்ப்பரேட் – காவி பாசிசம் ! மோடி ஆட்சியின் ஐந்தாண்டு தொகுப்பு ! அச்சுநூலை ஆன்லைனில் வாங்கலாம்
♦ பாஜக வெற்றி : பாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்கு வழி ஏதும் இல்லை !

குட்டி பூர்ஷுவா சக்திகள் மற்றும் பெரும் பூர்ஷுவா வர்க்கத்தினரின் ஸ்தாபன அம்சம் ஆகிய இரண்டு அம்சங்கள் குறித்த நமது நிர்ணயிப்பு எவ்வளவு சரியானது என்பதை இந்த ஆய்விலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

இத்தகைய அம்சங்கள் பரஸ்பரம் ஒன்று மற்றொன்றின் மீது எவ்வாறு தாக்கம் செலுத்தின என்பதை இனிப் பார்ப்போம்.

(தொடரும்)

அடிக்குறிப்புகள் :

8. பால்சி இதாலியனி டி கம்பாட்டிமென்டோ (இத்தாலிய போராடும் லீக்) முசோலினியின் இயக்கத்திற்கு மிலானில் 1919 மார்ச்சில் நடந்த அதன் அமைப்பு கூட்டத்திற்குபின் அதற்கு கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வப் பெயர்.

9. முசோலினிக்கும் சோஷலிஸ்டுத் தலைவர் பியட்ரோ நென்னிக்கும் (பிறப்பு 1891) இடையே அரசியல் ஒத்துழைப்பும் போட்டி போடுதலும் மாறி மாறி ஏற்பட்டதன் வரலாறு 1908-ல் துவங்கியது; அப்பொழுது குடியரசுவாதியாக இருந்த நென்னி, போர்லிப் பண்ணைத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக இருந்தார். சோஷலிஸ்டுக் கட்சியின் போர்லி தொகுதிச் செயலாளராக இருந்தார் முசோலினி.

பியட்ரோ நென்னி (Pietro nenni)

முதலாவது உலகப் போரில் ஒப்பந்த நாடுகள் பக்கம் இத்தாலி தலையிட வேண்டுமென இருவரும் வலியுறுத்தினர். இந்த நிலை மேற்கொண்டமைக்காக முசோலினி சோஷலிஸ்டுக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். போருக்குபின் பொலோக்னாவின் ஜனநாயகக் கட்சியின் அமைப்புக் கூட்டத்தில் நென்னி பங்கு கொண்டார். முன்னாள் படைவீரர்களின், குட்டி பூர்ஷுவாக்களின் பிரச்சினைக்கு தீவிரமான ஜனநாயகத் தீர்வை பொலோக்னாவின் ஸ்தாபனம் முன் வைத்தது – முசோலினி முன்பு பயன்படுத்திய தெளிவற்றதன்மையுடைய வெகுஜன இயக்கத்தை ஒத்தது இது. நென்னி பின்னால் அதிகம் திட்டவட்டமான வர்க்க நிலைக்கு ஈர்க்கப்பட்டு 1921-ல் சோஷலிஸ்டுக் கட்சியில் சேர்ந்தார்.

10. மிலானின் பியஸ்ஸா : சான் செபோல்கிரோவின் ஒரு மண்டபத்தில் 1919 மார்ச் 23-ம் தேதி நடந்த கூட்டத்தில் பாசிஸ்டு இயக்கம் அதிகாரப்பூர்வமாக தோன்றியது. முசோலினியின் ஏடான ‘இல் போப்பலோ டி’ இத்தாலியாவின்’ ஆதரவாளர்கள் படையிலிருந்து விடுவிக்கப்பட்ட வீரர்கள், அராஜக சிண்டிக்கலிச சிறுபான்மையினர் இவர்களெல்லாம் ஒரே வேலைத் திட்டத்தின் கீழ் அணி திரண்டனர். இதன் விளைவாக ஏற்பட்ட வேலைத் திட்டம் வாய்வீச்சும், தெளிவற்ற தேசியவாதமும், அரைகுறையான சமூக சீர்திருத்தமும் கொண்டதாக இருந்தது.

இந்த இயக்கம் தன்னை ஏகாதிபத்திய எதிர்ப்புத் தன்மை கொண்டது என்று அறிவித்தது; உண்மையில் பகிரங்கமாக உலகப் போரை ஆதரித்தது. பியூம் (ரிஜிகா), டால்மாட்டா மீது இத்தாலி உரிமை கொண்டாடியபோது அதற்கு ஆதரவளித்தது. தொழிலாளர் நலன்களை பாதுகாப்பது தங்கள் லட்சியம் என அறிவித்தது. ஆனால் சோஷலிசத்துக்கும், ஜனநாயகத்திற்கும் எதிராகத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டது. மூலதனத்தின் மேலாதிக்கமும் தொழிலாளர்கள் அமுக்கப்படுதலும் தனிச் சொத்துரிமைக்கும் லாபத்திற்கும் தேவைப்படுகின்றன என்ற திட்டத்தை அந்த இயக்கம் ஏற்றது. இந்தத் திட்டத்தின் தெளிவின்மை ஒருபுறம் சோஷலிஸ்டுக் கட்சியின் வெகுஜனக் கொள்கையை எதிர்க்க முடியாது போயிற்று.

மறுபுறம் முதலாளிகளை நம்ப வைத்து இந்த புதிய இயக்கத்திற்கு ஆதரவு கோருவதும் சாத்தியமில்லாது போயிற்று. இந்த உள்ளார்ந்த பலவீனம் 1919 பொதுத் தேர்தலில் பெரும் தோல்வியில் முடிந்தது. மிலானில் போட்டியிட்ட ஒரே பாசிஸ்டு வேட்பாளர் 4795 வாக்குகள் பெற்றார்.

11. ஸ்குவாட்ரிஸ்மோ : திட்டமிட்டு வன்முறையை கையாளுவதற்காக பாசிஸ்டுகளால் வேலைக்கு அமர்த்தப்பட்ட “செயல் குழுக்களை”க் குறிப்பதற்காக உண்டாக்கப்பட்டது இந்தப் பதம்.

12. தொழிற்சாலைகளில் கதவடைப்பு செய்யப்பட்டதற்கு பதில் நடவடிக்கையாக, இத்தாலிய உலோகத் தொழிலாளர்கள் சம்மேளனம் உத்திரவிட்டதற்கிணக்க டூரின், மிலான், ஜினோவாவிலும் அதைவிட குறைந்த தொழில் கேந்திரங்கள் பலவற்றிலும் எந்திரங்களையும் உலோகத் தொழிற்சாலைகளையும் 1920 செப்டம்பர் துவக்கத்திலிருந்து தொழிலாளர்கள் கைப்பற்றிக் கொண்டனர். இத்தாலியின் யுத்த பிற்கால புரட்சிகர அலையின் உச்சகட்டத்தை இது குறிக்கிறது என்று பொதுவாக சித்தரிக்கப்படுகிறது. இவ்வாறு தொழிற்சாலைகளைக் கைப்பற்றிக் கொள்ளும் இயக்கம் புரட்சிக்கு பக்குவமான சந்தர்ப்பத்தைக் குறிக்கிறதா இல்லையா என்பது இன்னமும் விவாதிக்கப்படுகிறது. (இந்த இயக்கம் மற்ற தொழிற்சாலைகளுக்கும் பரவியது; ரயில்வே தொழிலாளர்கள் ஆதரவளித்தனர்).

தொழிற்சாலைகளைக் கைப்பற்றிக் கொள்ளும் இயக்கம். (கோப்புப் படம்)

தொழிற்சாலைகளை இவ்வாறு எடுத்துக் கொண்டது உலோகத் தொழிலாளர்களுக்கு ஒரு தற்காலிகத் தொழிற்சங்க வெற்றியில் முடிந்தது. ஆனால் தொழிலாளர் இயக்கம் மொத்தத்திற்கும் அதனுடைய அரசியல் விளைவுகள் பெரிதும் நாசகரமாக இருந்தன. சோஷலிஸ்டுக் கட்சி தயாராக இல்லாதிருந்ததும், “புரட்சியை நடத்த” அதற்கு அடிப்படை விருப்பமின்மையும் அம்பலப்படுத்தப்பட்டன. இத்தாலியத் தொழிலாளர்களின் பலம் கடுமையாகச் சோதிக்கப்பட்டது. தங்களுடைய வர்க்க நலன்களை காப்பாற்றிக் கொள்ள தொழிலதிபர்கள் ஒட்டுமொத்தமாக பாசிசத்தின் பக்கம் திரும்பினர்.

13. பாஸ்சி இத்தாலியன் டி கம்பாட்டிமென்டோ : 1921 நவம்பர் 7 முதல் 10 வரை ரோம் நகரின் தியேட்ரோ அகஸ்டோவில் நடந்த காங்கிரஸின் இறுதியில் இவர்கள் தங்களை தேசிய பாசிஸ்டுக் கட்சியாக மாற்றிக் கொண்டனர். இயக்கத்தின் சமரசத்தை விரும்பாத பகுதியால் முசோலினியின் மீது கிட்டத்தட்ட திணிக்கப்பட்ட நடவடிக்கையாகும் இது.

14. முதலாவது உலகப் போருக்குப்பின் இத்தாலியத் தொழிலும் வாணிகமும் இத்தாலிய ராணுவ அமைப்பும் டால்மாடியன் கடற்கரையோரத்தில் உள்ள பியூமி (ரிஜிகா) நகர் மீது பார்வையைச் செலுத்தின. அட்ரியாட்டிக் கடலை “இத்தாலிய ஏரி”யாக மாற்றவும் முந்திய ஆஸ்ட்ரிய-ஹங்கேரி சாம்ராஜ்யத்தின் பிரதேசங்களில் பொருளாதார ஊடுருவலுக்கு கதவு திறந்து விடவும் இது கேந்திரமானது. அந்த நகரின் உரிமை பற்றி (1863-1938) யுகோஸ்லேவியாவுடன் இருந்த தாவா இன்னமும் தீர்க்கப்படாமல் இருக்கும்போதே அதைத் திரும்ப பெறக்கோரும் கவிஞர் கேப்ரியல் டி அன்னுன்ஸியோ தலைமையிலான சக்திகள் இர்ரெண்டிஸ்டுகள் (இத்தாலி முதலிய கீழ் ஐரோப்பிய நாடுகளில் அவ்வந்நாட்டு மொழி பேசும் மாவட்டங்கள் அவ்வந்நாட்டைச் சேர வேண்டுமென்ற கோட்பாட்டாளர்கள், முன்பு இத்தாலிக்கு சொந்தமாக இருந்த பிரதேசங்களை மீண்டும் அந்த நாட்டுடன் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று விரும்புகிறவர்கள்) 1919 செப்டம்பரில் அந்நகரை ஆக்கிரமித்துக் கொண்டனர்.

கவிஞர் கேப்ரியல் டி அன்னுன்ஸியோ (Gabriele D’Annunzio)

டி அன்னுன்சியோபிவின் கட்டுப்பாட்டில் பியூமி, ரோம் அரசாங்கத்திற்கு எதிராக சதி செய்யும் களமாக ஆயிற்று. முசோலினி, கவிஞரின் செயலை ஆதரித்தார். “ரோம் மீது படையெடுப்பு” என்ற அவரது திட்டம் இத்தாலியக் கிழக்கு கடற்கரையில் படைகள் இறங்குவதுடன் துவங்கும் என்பதையும் தெரிவித்தார். இத்தாலிக்கும் – யூகோஸ்லேவியாவுக்கும் இடையே உள்ள எல்லைப் பிரச்சினைகள் 1920 நவம்பரில் செய்து கொண்ட ரப்பல்லோ ஒப்பந்தம் மூலம் தீர்க்கப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக பியூமி நகர் ஒரு சுதந்திரமான நகர அரசாக ஆயிற்று. இதனைக் கண்ணுற்ற முசோலினி, டி’அன்னுன்சியோவுக்கு அளித்த ஆதரவை மாற்றிக் கொண்டார். திடீர் அரசியல் புரட்சி பற்றிய திட்டத்தை தனது பத்திரிகையில் பிரசுரித்தன் மூலம் கவிஞருக்கு துரோகம் இழைத்தார்.

டி’அன்னுசியோவின் நேரடி நடவடிக்கை கட்சியைக் கவிழ்க்கும் நோக்கம் கொண்ட வலதுசாரி இயக்கத்தில் கவிஞரை முதலிடத்திற்கு கொண்டு சென்றது: முசோலினியின் திடீர் மாற்றத்தை இது பெருமளவுக்கு விளக்குகிறது. பிரதம மந்திரி கியோவான்னி கியோலிட்டியின் உத்தரவுபடி இத்தாலிய ராணுவப்படை டி’அன்னுன்யோவின் படைகளை பியூமி நகரை விட்டு விரட்டியடித்ததும் 1920 டிசம்பர் 26-ல் அந்த நகரின் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தது.

பால்மிரோ டோக்ளியாட்டி
ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள்
தமிழில் : ரா. ரங்கசாமி
பக்கங்கள் : 233
விலை : ரூ. 50.00
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

முந்தைய பகுதிகள் : பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் !

நூல் அறிமுகம் : தென்னிந்திய குலங்களும் குடிகளும்

க்களினம் சம்பந்தமான ஆராய்ச்சிக்குப் பயன்படும் இந்நூல் அரை நூற்றாண்டுக்கு முன் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள நூல்களைத் தழுவிச் சுருக்கி எழுதப்பட்டதாகும். தென்னிந்திய மக்கள் எல்லோருக்கும் பொதுவான சில பழக்க வழக்கங்கள் உள்ளன. அவ்வகை வழக்கங்களை விரித்துக்கூறாது ஒவ்வொரு கூட்டத்தினரிடையும் சிறப்பாகக் காணப்படுகின்றவற்றை விரித்துக் கூறியுள்ளோம். மேல்நாட்டுக்கல்வி, நாகரிகம் என்பவற்றின் நுழைவால் விரைந்து மறைந்து கொண்டுவரும் தென்னாட்டு மக்களின் பழைய பழக்க வழக்கங்களை அறிந்து கொள்வதற்கு இந்நூல் வாய்ப்பளிக்கும். அரை நூற்றாண்டுக்குள் இந்நூலிற் கூறப்பட்டுள்ள பழக்கவழக்கங்கள் பல மறைந்துவிட்டன; சில மறைந்துகொண்டு வருகின்றன. (நூலாசிரியரின் குறிப்பிலிருந்து)

ஹெக்கல் படைப்பின் வரலாறு என்னும் நூலில் இப்பூமியின் தரை, நீர்ப்பரப்புக்கள் தொடர்ந்து மாற்றமடைந்து வந்த தன்மைகளை ஆராய்ந்து கூறியுள்ளார். அவர் கூற்று வருமாறு; ”இந்துமாக்கடல் முன் ஒரு பூகண்டமாகவிருந்தது. அது சந்தாத்தீவுகள் முதல் (ஆசியாவின் தென்கரை வழியாக) ஆப்பிரிக்காவின் கிழக்குக்கரை வரையில் பரந்திருந்தது. முற்காலத்தில் மக்களின் பிறப்பிடமாக விளங்கிய இத்தரைக்கு இஸ்கிளாத்தர் இலெமூரியா எனப் பெயரிட்டுள்ளார். இப்பெயர் அங்கு வாழ்ந்து கொண்டிருந்த குரங்கு போன்ற மக்கள் காரணமாக இடப்பட்டது. இலெமூர் என்பதற்கு தேவாங்கு என்பது பொருள். இலெமூரியா, மக்களுக்குப் பிறப்பிடமாகவுள்ளது என்னும் பெருமையுடையது. மலாய்த் தீவுக்கூட்டங்கள் முற்காலத்தில் இரு பிரிவுகளாகவிருந்தனவென்று வலேசு என்னும் இயற்கை வரலாற்றியலார் ஆராய்ந்து கூறியுள்ளார்.”

மலாய்த் தீவிலும் தென்னிந்தியாவிலும் வாழும் மக்கள் சிலரின் பழக்க வழக்கங்கள் ஒரே வகையாகவுள்ளன. போர்ணியோத் தீவில் வாழும் (இ)டைக்கர் மரமேறும் வகையும் தென்னிந்தியாவில் ஆனைமலையில் வாழும் காடர் மரமேறும் வகையும் ஒரேவகையாகவுள்ளன. காடரும் திருவிதாங்கூர் மலை வேடரும் தமது முன்பற்களை உடைத்து அல்லது அராவிக் கூராக்கிக்கொள்வர். ஆண்கள் பதினெட்டு வயதடையும் போதும் பெண்கள் பத்து வயதடையும்போது இவ்வாறு செய்து கொள்கிறார்கள். மலாயாவில் யக்குன் என்னும் மக்கள் இவ்வாறு செய்து கொள்கின்றார்கள்.

… இந்தியாவில் மிகப் பழங்காலத்தில் மூன்று இன மக்கள் வாழ்ந்தார்கள். (1) மத்தியதரை மக்கள். இவர்களே திராவிட இனத்தவர் எனப்படுவோர். (2) நிகரிட்டோ மக்கள் (3) ஆதி ஆஸ்திரேலோயிட்டு மக்கள் நிகிரிட்டோ வகை. தென்னிந்திய மலைச் சாதியினராகிய இருளர், காடர்களிடையே காணப்படுகின்றது. ஆதி ஆஸ்திரேலோயிட்டு வகை முண்டா, சாந்தால், கொல் முதலிய மொழியகளைப் பேசும் மக்களிடையே காணப்படுகின்றது. இம்மக்கள் ஆரியரின் வருகைக்குமுன் வடமேற்குத் திசையினின்று வந்தவர்களாகலாமென்று ஆராய்ச்சியாளர் கூறுவர். இவ்வினத்தினரையே மேல்நாட்டு ஆராய்ச்சியாளர் கொல்லாரியர் எனக் கூறியுள்ளார்கள். ஆதி ஆஸ்திரேலோயிட்டு இனத்தவர்களே மலாய்த் தீவுகள், பர்மா, சயாம் முதலிய நாடுகளின் ஆதி மக்களாவர். இவர்கள் எப்படி இந்தியாவை அடைந்தார்கள் என்று கூற முடியவில்லை. ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் நில இணைப்பு இருந்த காலத்தில் இவர்கள் இந்தியாவை அடைந்திருக்கலாமெனச் சிலர் கூறுவர். இந்திய மக்கள் (People of India) என்னும் நூல் எழுதிய ஹெர்பெட் இரிஸ்லி இந்தியாவில் தொடக்கத்தில் திராவிட மக்கள் வாழ்ந்தார்கள் என்றும், பின்பு பல்வேறு இனத்தவர்கள் இம்மக்களோடு வந்து கலந்தார்கள் என்றும் கொண்டு இந்திய இனத்தவர்களை, சித்திய திராவிடர், ஆரிய திராவிடர், மல்கோலிய திராவிடர், திராவிடர் முதலிய பிரிவுகளாகப் பிரித்தார்.

… ”தென்னிந்திய குலங்களும் குடிகளும்” என்னும் இந்நூல் இந்திய மக்கட் கூட்டத்தினரின் பழக்க வழக்கங்களை பிற மக்கட் கூட்டத்தினரின் பழக்க வழக்கங்களோடு ஒப்பிட்டு நோக்கி இன ஒற்றுமை வேற்றுமை காண்பதற்கு உதவியளிக்கும். (நூலிலிருந்து பக்.9-11)

படிக்க:
தமிழ்நாட்டுல இந்தி கஷ்டம்தான் | மக்கள் கருத்து | காணொளி
கோவிலுக்குள் நுழைய முயன்ற தலித் சிறுவனை கட்டிவைத்து அடித்த காவிக் கும்பல் !

தென்னிந்தியக் குலங்களும் குடிகளும்; வட இந்தியக் குலங்களும் குடிகளும்; இலங்கைத் தமிழர் பழக்கவழக்கங்கள், திருமணம், மரணம், புத்தளம் கரையார், அணிவகை, ஆடவர் அணிபவை, பெண்களணிகள், இலங்கைத் தமிழரிடையே காணப்படும் சாதிகள், மாட்டுக்குறிசுடும் அடையாளங்கள், சாதிகளின் பட்டப்பெயர்… ஆகிய உட்தலைப்புகளில் விவரிக்கிறார்.

அம்பட்டன்: தமிழ்நாட்டில் அம்பட்டப் பெண்கள் மருத்துவச்சி வேலை பார்ப்பர். செகந்நாத ஆலயத்தில் அம்பட்டர் சமைக்கும் உணவுக்குத் தீட்டு இல்லை. அக்கோயிலில் பூசை செய்யும் பூசாரி அம்பட்டன். அவன் சமைத்துக் கடவுளுக்குப் படைத்த உணவைப் பிராமணரும் அமுது கொள்வர்… அம்பட்டரின் சாதித்தலைவன் பெரியதனக்காரன் எனப்படுவான். மயிர்வினை செய்தல், வைத்தியம் பார்த்தல், வாத்தியமொலித்தல் என்னும் மூன்று தொழில்கள் அம்பட்டருக்குரியன. பண்டிதன், பரியாரி, குடிமகன், நாசுவன், மயிர்வினைஞன் என்பன அம்பட்டனைக் குறிக்க வழங்கும் பெயர்கள்.

நன்றி: பிபிசி

ஆண்டி : ஆண்டிகள் தமிழ் வகுப்பைச் சேர்ந்த பிச்சைக்காரர். இவர்கள் பண்டாரங்களிலும் தாழ்ந்தோர். கோயில்களிலும் மடங்களிலும் வேலை செய்வோர் முறையே கோவிலாண்டிகள் மட ஆண்டிகள் எனப்படுவர்… ஆண்டிகளுள் கோமண ஆண்டி, இலிங்கதாரி, முடவாண்டி, பஞ்சத்துக்காண்டி எனப் பல பிரிவுகளுண்டு. இப்பிரிவுகள் பஞ்சத்துக்காண்டி, பரம்பரை ஆண்டி என்னும் இரு பிரிவுகளிலடங்கும்…

ஈழவர் : ஈழவர், தீயர் என்போர் மலையாளர் கொச்சி என்னும் இடங்களிற் காணப்படுகின்றனர். மத்திய தீருவிதாங்கூரின் தென்புறங்களில் இவர்கள் ஈழவர் என்றும், வட, விதாங்கூர்ச் சனத்தொகையில் 17 சதத்தினர் இவர்களாவர். யாழ்ப்பாணம், ஈழம் என்னும் பெயர் பெற்றிருந்ததெனத் தெரிகிறது. ஈழவர் அங்கிருந்து வந்தார்கள் எனக் கருதப்படுகின்றனர். சேரவர் என்பது சேவுகர் என்பதன் திரிபு. மலையாளத்தில் வழங்கும் கப்பற் பாட்டுகளில் சேவுகர் என்னும் பெயர் காணப்படுகின்றது. தென் திருவிதாங்கூரில் வாழும் ஈழவர் முதலியார் எனப்படுவர். புலையர் அவர்களை மூத்த தம்பிரான் என அழைப்பர்…

குறும்பர் : ஆட்டைக் குறிக்கும் குறு என்னும் கன்னடச் சொல்லிலிருந்து இப்பெயர் உண்டானதென்று கருத இடமுண்டு. குறு என்பது கொறி (ஆடு) என்னுஞ்சொல்லின் திரிபு. இவர்களின் தலைமைக்காரன் கொடு எனப்படுவான்… (நூலிலிருந்து)

நூல் : தென்னிந்திய குலங்களும் குடிகளும்
ஆசிரியர் : ந.சி. கந்தையா பிள்ளை

வெளியீடு : சந்தியா பதிப்பகம்,
புதிய எண் : 77, 53-வது தெரு, 9-வது அவென்யூ,
அசோக் நகர், சென்னை – 600 083.
தொலைபேசி எண்: 044 – 2489 6979.
மின்னஞ்சல் : sandhyapathippagam@gmail.com

பக்கங்கள்: 136
விலை: ரூ 100.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

இணையத்தில் வாங்க : sandhya publications | noolulagam | commonfolks

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.