Friday, June 19, 2026
முகப்பு பதிவு பக்கம் 832

திருப்பூர் காதல் !

88

vote-012ஏழு ஆண்டுகளாக திருப்பூரில் வசிப்பவன் காதலைப் பற்றி எழுதாமலிருப்பதுதான் என் பாவக்கணக்கில் பிரதானமாயிருக்குமென்று நினைக்கிறேன்.

வெளியூரில் காதலித்து விட்டு இங்கு ஓடிவரும் சிலராலும் இங்கு வந்த பின்பு காதலிக்கும் பலராலும் நிறைந்திருக்கிறது எங்கள் நகரம். வேலை தேடி வரும் பலரும் இளையோர்கள், பெரும்பாலான பணியிடங்கள் நெருக்கடியானவை, நீண்ட பணி நேரங்கள் (குறைந்தபட்சம் 12 மணி நேரம் ), சினிமாவைத் தவிர வேறு பொழுது போக்கு கிடையாது. இவையெல்லாம் இளையோர்கள் ஒரு துணையைத் தேடிக் கொள்வதற்கான காரணத்தையும் வாய்ப்பையும் தருகின்றன. நான் தஞ்சாவூரிலோ அல்லது புதுக்கோட்டையிலோ மட்டும் இருந்திருந்தால் இந்த பதிவெழுதும் யோசனை கூட வந்திருக்காது என்பதுதான் நிஜம்.

என் அண்ணன் கல்லூரியில் படித்த போது அவனுடன் படித்த மாணவனின் பதிவுத் திருமணத்தை தஞ்சாவூரில் நடத்தி வைக்கும் வேலையை செய்தான் (ஒரு குழுவாக). சுமாராக ஒரு வாரம் ஜோடியை தலைமறைவாக வைத்து, தேடி வந்த மணமகனின் தந்தையை எதுவுமே தெரியாது என்று அப்பாவி போல சொல்லி நம்பவைத்து.., அவன் செய்த இந்த ஒரு செயற்கரிய செயலைத் தவிர வேறு சொல்லிக் கொள்ளும்படியான சம்பவம் அங்கு நடந்ததில்லை. அவனது அந்த காரியம் “எவ்வளவு பெரிய கிரிமினல் வேலை” என்று என் அம்மாவால் வருணிக்கப்பட்டது.

வேலை தேடி இங்கு வந்த போது நான் தங்கியது ஒரு அடித்தட்டு மக்கள் வசிக்கும் காலனி வீட்டில் (அது என் அப்பாவின் நண்பரின் அலுவலகம் அல்லது அது போன்றதொரு இடம், அவர் சாயத் தொழிலுக்கான வேதிப் பொருட்களை விற்பனை செய்பவர்.. ஆகவே மற்ற வட்டார வீடுகளில் அவர் மூலப் பொருட்களை இருப்பு வைக்க அனுமதிக்க மாட்டார்கள்). இதை நான் குறிப்பிடக் காரணம் எனது திருப்பூர் நண்பர்கள் பலர் இது போன்ற  வீடுகளை பார்த்தேயிராதவர்கள். அந்த தெருவில் வசிக்கும் யாவரும் வாரக் கூலி வாங்குபவர்கள். சரிபாதி பேர் பிரம்மச்சாரிகள். அங்குதான் காதல் திருமணங்கள் எத்தனை சுலபமானது என்பதை தெரிந்து கொண்டேன்.

எங்கள் காலனியின் முதல் வரிசை வீட்டிலிருந்த ஒரு தமிழ் இளைஞனும் இரண்டாம் வரிசை வீடு ஒன்றில் வசித்த கேரளப் பெண்ணும் காணாமல் போனார்கள். பதினைந்து நாட்கள் கழித்து அதே காலனியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடியேறினார்கள். கொடுமையிலும் கொடுமையாக அது குறித்து தெருவில் யாரும் அலட்டிக் கொள்ளவில்லை. எனது குழப்பத்தைப் பார்த்து பரிதாபப்பட்ட காலனிவாசி திருமணத்திற்கான எளிமையான வழியை சொன்னார்.

நண்பர்கள் சிலருடன் காதலர்கள் சிவன்மலைக்கு செல்வது, அங்கு திருமணம் செய்து கொண்டு பிறகு ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்துக் குடியேறுவது.. சுலபம். யாருக்கும் தெரியாமல் இருக்க வேண்டுமா? ஏரியாவை மாற்றினால் போதும். நகரைச் சுற்றி புறாக் கூண்டு வீடுகள் சிதறிக் கிடக்கின்றன.

குடியிருப்புக்கு நேர் எதிரான நிலையில் இருந்தது அப்போது நான் வேலை செய்த அலுவலகம். அங்கு பணியாற்றிய எல்லோரும் முப்பது வயதுக்குக் குறைவான ஆண்கள் (ஓரிருவர் தவிர).

பிறகு அங்கு  ஒரு பெண் வரவேற்பாளராக நியமிக்கப் பட்டார். அதுவரை தூங்கி வழிந்த அந்த அலுவலகம் அதன் பிறகு வழிந்த படியேதான் விழித்தது. ஓயாது ஒலித்த தொலைபேசிகள், நிற்க இடமில்லாமல் நிறைந்திருந்த வரவேற்பறை, என எங்கள் தகுதிக்கு மீறிய கூட்டத்துடன் காணப்பட்டது அலுவலகம். ஸ்ரீராமனின் தோளை பார்த்தவர்கள் தோளையே பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்று கம்பர் சொன்னதைப் போல இங்கு அலுவலகம் வந்தோர் “ரேஷ்மா கண்டார் ரேஷ்மாவே கண்டார்” என்று சொல்லும் படியானது நிலைமை ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ).

தலைப்புக்கு அனாவசியமான சம்பவம் என்றாலும் இதில் ஒரு செய்தி இருக்கிறது, அதாவது சைட் அடிக்கவும் நம் ஆட்கள் தகுதி பார்க்கிறோம் என்பதுதான் அது. இதே தகுதி பார்க்கும் பழக்கம் காதலிலும் தொடர்கிறது. நான் பார்த்தவரை அலுவலகப் பணியில் உள்ளவர்கள் தங்கள் தகுதிக்கு நிகரான பணியில் உள்ளவர்களையே காதலியாகத் தெரிவு செய்கிறார்கள் (இதே தகவலை மூன்றாமாண்டு உளவியல் பாடமும் உறுதி செய்கிறது). நடுத்தர வர்க்கத்தவர்கள்தான் காதலிப்பதில் மிகவும் திட்டமிடலோடு இருப்பதாக நான் கருதுகிறேன்.

காதலிப்பவரின் பொருளாதார நிலை, அவரது சாதி ஆகியவை காதலை திருமணத்தை நோக்கி நகர்த்துவதற்கு மிக முக்கியமான காரணியாக உள்ளது. என் உடன் படித்த மாணவி, அவளது காதலன் விரும்புவதாக தெரிவித்த போது அவனது சாதியை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகே தான் சம்மதித்ததாக தெரிவித்தாள். அதாவது துணைவர் தனது சாதிக்காரராக இருக்க வேண்டும் என்பதல்ல, ஆனால் தனக்கு நிகரான சாதிக்காரராக இருக்கவேண்டும் என்பதுதான் (பிற்பட்டவர் =பிற்பட்டவர்). மிடில் கிளாஸ் காதல் பெரும்பாலும் பெற்றோருக்கு பதிலாக மணமக்களே செய்து கொள்ளும் திருமண ஏற்பாடு எனும் கருத்து ஓரளவு சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். (நான் பார்த்தவற்றை வைத்து சொல்கிறேன் உண்மை இதற்கு மாறானதாவும் இருக்கக் கூடும்).

இதுவரை திருப்பூர் மேல்தட்டு வட்டாரங்களில் காதல் திருமணத்தை நான் கண்டதில்லை. இங்கு அவர்களது திருமணமும்  ஒரு வியாபார ஒப்பந்தத்தைப் போலவே உள்ளது. ஆகவே நிதி மிகுந்தோரது காதல் பற்றிய தகவல் ஏதும் எழுதுவதற்கில்லை. எல்லா இடங்களிலும் போலிகள் வந்த பிறகு காதலிலும் இல்லாதிருக்குமா என்ன? அதற்கும் ஏராளமான உதாரணங்கள் இருக்கின்றன.

என் சென்னை நண்பன் ஒருவன் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை ‘சின்சியராக’ காதலிப்பதாக சொல்லியிருக்கிறான். கொங்கு வட்டாரத்தில் உள்ள எனது கல்லூரி கால நண்பன் ஒருவன் கடைசிகட்ட நிலவரப்படி ஏழு பெண்களுடன் நட்புக்கும் காதலுக்கும் இடையேயான ஒரு விஷயத்தை தொடர்கிறான்.  ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு தனி செல்போன் எண் வைத்துக் கொண்டு அவன் அதை கையாளும் லாவகம் நம்மால் கற்பனைகூட செய்ய முடியாதது.

தொழில்முறை (ப்ரொபஷனல்) காதலனான அவனும் இதைப் படிக்கக் கூடுமென்பதால் அவன் ஓய்வு நேரத்தில் ஒரு நூற்பாலையில் பணி செய்வதையும் நான் குறிப்பிட்டாக வேண்டியிருக்கிறது ( நீங்க அவனை வெறுமனே காதல் மட்டும் செய்பவனாக நினைக்கக் கூடாதில்லையா?? ). ஆயினும் ஆறுதலான செய்தி யாதெனில் திருமணத்தில் முடியும் காதல்கள் திருப்பூரில் மிக அதிகம்.

காதல் என்பது காதலர்களுக்கு மட்டும் ஆச்சரியமளிப்பதல்ல, பார்வையாளர்களுக்கும் அவ்வாறானதே. நான் கடைசியாக வேலை பார்த்த அலுவகம் உள்ள அடுக்ககத்தில் ஒரு சேட்டு வீடு இருந்தது. அவரது வீட்டு பதினேழு வயது வேலைக்கார (உ.பி மாநில)  இளைஞன் ஒரு நாள் தனது முதலாளியம்மாவுடன் சண்டை போட்டுவிட்டு வெளியேறினான். அவன் வெளியேறிய அன்றே அருகிலிருக்கும் அங்காடியில் வேலை செய்த ஒரு இளம் பெண் அவனை தேடி எங்கள் வளாகத்துக்கு வந்தாள்.

நடந்தது என்னவென்றால் இளைஞன் கடைக்கு சென்று வந்த வகையில் இருவருக்கும் காதலாகியிருக்கிறது. கடையை மூடிவிட்ட கவலையில் இளைஞன் முதலாளியுடன் சண்டையிட்டு வெளியேற காதலியோ கடையில்லாவிட்டாலும் காதல் இருக்கும் நம்பிக்கையில் வந்துவிட்டாள். இதில் ஆச்சர்யப்படும் சங்கதி என்னவெனில் இவர்கள் சந்தித்து மூன்று மாதங்களே ஆகியிருக்கிறது, பையனுக்கு தமிழ் தெரியாது. பெண்ணுக்கு ஹிந்தி தெரியாது. இருவருக்கும் ஆங்கிலம் தெரியாது. ஆண் பெண் என்ற காரணத்தைத் தவிர வேறு எதுவும் இவர்களுக்கு சாதகமானதாக இல்லை ஆயினும் காதல் வந்து விட்டது!!.

கிட்டத்தட்ட ஆயுளின் பாதியை தொட்டுவிட்ட என் முப்பது வருட வாழ்கையிலும் இதைவிட பேரதிசயம் ஒன்றை நான் கண்டதில்லை. ( விடுபட்ட தகவல்கள் இருக்கின்றன பதிவை தொடரும் எண்ணமும் இருக்கிறது… பார்க்கலாம் ).

______________________________________________________________

–          வில்லவன்

________________________________________________________

vote-012

தொடர்புடைய பதிவுகள்

மானம் கெட்டவர்கள் குடிப்பது பெப்சி – கோக் !!

198


vote-012இந்திய இயற்கை வளத்தின் சராசரி நிறம் எதுவாகவிருக்கும்? செம்மண், கரிசல், வண்டல், பசுமை என நீங்கள் கருதினால் அது தவறு. கடந்த 10 ஆண்டுகளில் பெப்சியும் – கோக்கும் இணைந்து நீலத்தையும் – சிவப்பையும் இந்தியாவின் தேசிய நிறமென மாற்றிவிட்டன. பெட்டிக் கடைப் பெயர்ப் பலகைகள், பிரம்மாண்டமான விளம்பரப் பலகைகள், தொலைக்காட்சி விளம்பரங்கள் எங்கும் எதிலும் போப்சி – கோக் மயம். மாநகரத் தெருக்களில் கோலாக்களின் லாரிகள் அட்டையாய் ஊர்கின்றன. பெப்சியின் மூடிகளை சேகரித்து பரிசுப் பொருள் வாங்க அலையும் மேட்டுக்குடி சிறுவர்களுக்கு அது ஓய்வு நேரத் தொழிலாகிவிட்டது.

தற்போதைய இந்திய வாழ்க்கையின் ஆழ்மனதில் பதிந்துவிட்ட பெப்சி – கோக்கின் படிமத்திற்கு இணையாக வேறு எதையும் ஒப்பிட இயலாது. கேவலம் இரு குளிர்பான நிறுவனங்களுக்கு அப்படி ஒரு மகிமையா, அது சாத்தியமா என்று நீங்கள் கருதலாம்.

எனில் அவை வெறும் தாகம் தீர்க்கும் குளிர்பானம் மட்டுமல்ல. எதைக் குடிப்பது – உண்பது – உடுத்துவது – பார்ப்பது – படிப்பது – கருதுவது – ரசிப்பது – நேசிப்பது என்ற அமெரிக்க வாழ்க்கை முறையின் – பண்பாட்டின் சின்னம். அத்தகைய அமெரிக்க தாகத்தை, ஏக்கத்தை ஏற்படுத்தி அடிமைப்படுத்துவதே அதன்முதன்மைப் பணி.

கொக்கோ – கோலாவைப் போல அமெரிக்கப் பண்பாட்டினைப் பிரதிநிதித்துவம் செய்யும் பன்னாட்டு நிறுவனம் வேறு எதுவுமில்லை. ஹாலிவுட், வால்ட்-டிஸ்னி, மெக்டோனால்டு, ஃபோர்டு கார், பாப் – ராக்கிசை என பல அமெரிக்க வகை மாதிரிகளில் கோக் மட்டுமே நெடுங்காலமாய் அமெரிக்காவின் தூதுவனாய் உலகெங்கும் செல்வாக்குடன் இடைவிடாமல் சுற்றி வருகிறது. இத்தகைய அங்கீகாரத்தைப் பெற்றிருக்கும் கோக் அதற்கான சாதனையை முதலில் தான் அவதரித்த திருத்தலத்திலேயே செய்து காட்டியிருக்கிறது.

ஓராண்டில் ஒரு அமெரிக்கன் குடிக்கும் குளிர்பான பாட்டில்களின் சராசரி எண்ணிக்கை 700. இப்போது அமெரிக்க மக்கள் தண்ணீர் அருந்துவதில்லை. தாகம் வந்தால் அவர்கள் நினைவுக்கு வருவது பெப்சி – கோக்கின் கோலாக்கள்தான். இப்படி நீர் குடிக்கும் பழக்கத்தை ஒழித்து, அமெரிக்க மக்களின் இரத்தத்தில் கலந்து விட்ட  கோக் வெறும் குளர்பானம் மட்டுமல்ல. பெப்சி – கோக்கில் அப்படி எனன்தான் இருக்கிறது? அதைவிட அவற்றை மேற்கத்திய வாழ்வின் அங்கமாக ஒரு போதையாக எப்படி மாற்றினார்கள் என்பதே முக்கியமானது. அதில்தான் இரு சோடாக் கம்பெனிகள் பல்லாயிரம் கோடி சொத்துக்களுடன் ஒரு உலக சாம்ராஜ்ஜியம் நடத்தி வரும் சூட்சுமம் அடங்கியிருக்கிறது.

_____________________________________________

இரண்டு அமெரிக்க சோடாக் கம்பெனிகள் உலகை ஆக்ரமித்த வரலாறு!

1886- ஆம் ஆண்டு, அமெரிக்காவின் அட்லாண்டா மாநிலத்தில் ஜான் ஸ்டித் எனும் மருந்தாளுநர் கோக்கின் சோடா இனிப்பு கரைசலை உருவாக்கினார். அன்று நாளொன்றுக்கு 9 பாட்டில்கள் தலா 2 ரூபாய்க்கு விற்கப்பட்ட கோக், 2000ஆம் ஆண்டின் முதல் 4 மாத இலாபமாக மட்டும் 5000 கோடி ரூபாயை அள்ளியிருக்கிறது. மேலும் இன்று தனது சோடாக் கரைசலையும் கோக், கிளாசிக் கோக், காஃபின் இல்லாத கோக், டயட் கோக், செர்ரி கோக், ஃபேண்டா, ஸ்பிரிட், மிஸ்டர் பிப், மெல்லோ யெல்லோ என 25 வகைகளாய் பெருக்கியிருக்கிறது. இன்று அதன் சொத்து மதிப்பு சுமார் 85 ஆயிரம் கோடி ரூபாய்.

1898ஆம் ஆண்டு பெப்சியின் சோடாக் கரைசலை கால்ப் ப்ராதம் என்ற மருந்தாளுநர் உருவாக்கினார். குளிர்பானம், நொறுக்குத் தீனி, உணவகங்கள் என்று பெப்சியின் பேரரசு 150 நாடுகளில் 4,80,000 ஊழியர்களுடன் நடந்து வருகிறது. சொத்துமதிப்பு சுமார் ஒரு இலட்சம் கோடி ரூபாய்.

உலக குளிர்பான சந்தையில் 46 சதம் வருவாய் கோக்கிற்கும், 21 சதம் பெப்சிக்கும் போய்ச் சேருகிறது. இப்படி இரண்டு நிறுவனங்ளும் உலகின் தாகம் தீர்க்கும் தேவன்களாக, பல்லாயிரம் கோடி ரூபாயை ஆண்டுதோறும் சுருட்டி வருவது எப்படி சாத்தியமானது? நம்மூரில் தயாரிக்கப்படும் கலர் கோலி சோடாவின் கரைசலை விட பெப்சி – கோக்கின் கரைசல் அப்படி ஒன்றும் உயர்ந்ததல்ல. கார்பன் வாயு, இனிப்பு, வண்ணம், நீர் கொண்டு கலக்கப்படும் இக்கரைசல் தயாரிப்பதற்கு எளிதானதே. அதி உயர் தொழில்நுட்பமோ, ரகசியமோ எதுவும் கிடையாது. அதே சமயம் இந்தக் கோலாக்களில் இருக்கும் மற்ற வேதிப்பொருட்கள், போதை போல அடிமைப்படுத்தும் பொருட்கள் எதுவும் மற்றவர்களுக்குத் தெரியாது. இவற்றை கண்டுபிடிப்பு இரகசியம் என்ற பெயரில் அந்த நிறுவனங்கள் வெளியிட மறுக்கின்றன.

ஆனாலும் உலகெங்கும் சாதாரணத் தொழிலாக நடத்தி வந்த இத்தகைய சிறு குளிர்பான உற்பத்தியாளர்களை இரண்டு அமெரிக்க நிறுவனங்கள் ஒரு நூற்றாண்டாய் ஒழித்து விட்டன. இந்த இரண்டு கோலாக்களும் ஏதோ சொர்க்கத்தில் தயாரித்து அளிக்கப்படும் அழகான, தரமான அமுது என்ற சித்திரத்தையும் தமது வஞ்சகமான பிரச்சாரத்தால் ஏற்படுத்தி விடட்ன.

________________________________________________

கோக் – பெப்சி இந்தியாவைச் சூறையாடிய வரலாறு!

இதற்கு நமது இந்திய எடுத்துக்காட்டையே பார்க்கலாம். 77இல் ஜனதா அரசால் கோக் வெளியேற்றப்பட்ட பிறகு குளிர்பானச் சந்தையில் பார்லே நிறுவனம் ஆதிக்கம் செலுத்தியது. பார்லேயின் தம்ஸ் அப், லிம்கா, கோல்டு ஸ்பாட் போன்ற பானங்கள் அப்போது பிரபலமாக இருந்தன. 90களின் ஆரம்பத்தில் 60 சதவீத சந்தையைக் கைப்பற்றிய பார்வே நிறுவனம் கேம்பா கோலா, த்ரில், டபுள் கோலா போன்ற போட்டி பானங்களை எளிதில் வென்றது. இவை இந்திய அளவில் விற்கப்பட்ட பானங்கள். இது போக மாநில, வட்டார, உள்ளூர் அளவில் ஏராளமான பானங்கள் இருந்தன.

தமிழகத்தில் காளிமார்க், வின்சென்ட், மாப்பிள்ளை விநாயகர் இன்னபிற நிறுவனங்கள் பிரபலமாயிருந்தன. விருதுநகரில் 1916இல் பழனியப்ப நாடாரால் துவங்கப்பட்ட காளிமார்க் 80கள் வரை 30 சதவீத தமிழக சந்தையை வைத்திருந்தது. மேலும் இந்திய அளவில் பழரச பானத்திற்கு கிராக்கி இருந்தது. பார்லேயின் ப்ரூட்டி, பயோமா இன்டஸ்ட்ரியின் ரசனா போன்றவை பழரச சந்தையில் ஆதிக்கம் செலுத்தின.

பெப்சி – கோக் வருகைக்குபிறகு இந்நிலைமை அடியோடு மாறியது. 1980களில் இருந்தே பெப்சி நிறுவனம் சில இந்திய தரகு முதலாளிகளின் உதவியுடன் இந்தியாவில் நுழைய முயன்று, இறுதியில் 1990ஆம் ஆண்டு வென்றது. 100 சதவீத பங்குகள் வைத்திருக்கவும், உள்நாட்டு பாட்டில் தொழிற்சாலைகளை வாங்கவும், காய்கனி, டப்பா உணவு ஏற்றுமதி செய்யவும்… என ஏராளமான சலுகைகள் இந்திய அரசால் பெப்சிக்கு வழங்கப்பட்டன. பெப்சியும் வந்த வேகத்தில் 20 சதவீத குளிர்பான சந்தையைக் கைப்பற்றியது.

இங்கிருந்து வெளியேற்றப்பட்ட கோக் 16 ஆண்டுகளுக்குப் பிறகு 1993ஆம் ஆண்டு மீண்டும் குதித்தது. கோத்ரெஜ், பிரிட்டானியா போன்ற நிறுவனங்கள் கோக்குடன் கூட்டு சேர்ந்தன. சந்திரசாமியின் அரசியல் பினாமியான சந்திரசேகர் தலைமையிலான மைய அரசு கோக்கிற்கு அனுமதி வழங்கியது. இப்படியாக அமெரிக்காவின் இரண்டு சோடாக் கம்பெனிகள் வறண்டு போன இந்தியாவைக் குளிப்பாட்டி கொள்ளையடிக்கும் வேலையை ஆரம்பித்தன.

அன்றைய இந்தியாவின் குளிர்பான சந்தை 1200 கோடி ரூபாய் மதிப்பைக் கொண்டிருந்தது. ஒரு இந்தியன் ஒராண்டுக்கு குடிக்கும் பாட்டில்கள் 3 மட்டுமே தனிநபர் சராசரியாய் இருந்தது. மொத்தத்தில் வளர்ச்சி விகிதம் 2.5 சதவீதம்தான். இன்றோ வளர்ச்சி விகிதம் 20 சதவீதமாக மாறிவிட்டது. அன்று விற்பனையான குளிர்பான பாட்டில்கள் 276 கோடி, இன்று 350 கோடி பாட்டில்களாக உயர்ந்து விட்டது. இன்னும் 5 ஆண்டுகளில் இதை 1200 கோடிப் பாட்டில்களாக உயர்த்தப் போவதாக கோக்கும் – பெப்சியும் மார்தட்டி வருகின்றன.

இன்று குளிர்பானச் சந்தையில் ஏக போகம் வகிக்கும் நிலையை கோக்கும் – பெப்சியும் அடைந்துவிட்டன. புதிய பொருளாதாரக் கொள்கையின் ஆதாயங்களை நேரடியாகவும், சதி, ஏமாற்று, மிரட்டல், கைப்பற்றுதல், பிரம்மாண்டமான விளம்பர இயக்கம் என மறைமுகமாகவும் பயன்படுத்தி இந்த ஏகபோகம் எட்டப்பட்டது.

கோக் வருகைக்கு முன்பு இங்கே கோலா வகை பானங்களுக்கு வரி அதிகமாகவும், பழரச வகைகளுக்கு குறைவாகவும் இருந்தது. இந்தியாவில் பழவகை விளைச்சல் அதிகம் என்பதால் விவசாயத்துக்கு ஆதரவாக அரசால் இக்கொள்கை பின்பற்றப்பட்டது. பின்னர் காட் ஒப்பந்தப் படி கோலாவுக்கான வரி குறைக்கப்பட்டது. அதன் பின்பே கோலாக்களின் விற்பனை பழரசத்தை விட உயர்ந்தது. இப்படி அரசால் பெற்ற சலுகைகள் ஏராளம்.

அடுத்து 50% குளிர்பான சந்தையை வைத்திருந்த பார்லே நிறுவனத்தை இந்தியா வந்த ஆறே மாதங்களில் கோக் 123 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இதன் மூலம் 60 பாட்டில் தொழிலதிபர்களும், 2 இலட்சம் சில்லறை விற்பனையாளர்களும், நாடு தழுவிய வலுவான விற்பனை வலைப்பின்னலும் கோக்கிடம் சரணடைந்தன. தம்ஸ் அப்பும், லிம்காவும், கோக்கின் தயாரிப்பு என விற்கப்பட்டன. பார்லே நிறுவனத்தில் அதிபர் ரமேஷ் சவுகானும், கோக்கின் யானை பலத்துடன் போட்டியிட முடியாது எனத் தெரிந்து கொண்டு தனது நிறுவனத்தை அடிமாட்டு விலைக்கு விற்று விட்டார்.

மிகப்பெரும் தரகு முதலாளியான பார்லேவுக்கே கதி இதுதான் எனும்போது காளிமார்க் போன்ற சிறுமுதலாளிகள் என்ன செய்வார்கள்? தினத்தந்தியின் உள்ளூர் பதிப்பில் விளம்பரம், காடாத் துணி பேனர் விளம்பரம் என்றிருந்த காளிமார்க், அமெரிக்க சோடாக் கம்பெனிகளின் அதிரடியான வானொளி விளம்பரத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இப்படியாக கோக் – பெப்சி எனும் அமெரிக்க கழுகுகள் ஆளின்றி நாட்டைக் கவ்வ ஆரம்பித்தன.

இவ்விரு பன்னாட்டு நிறுவனங்களும் பிரம்மாண்டமான முதலீடு, மிக விரிவான உற்பத்தி – வலைப் பின்னல், குண்டு வெடிப்பைப் போன்ற விளம்பரங்கள் ஆகிய முப்பெரும் அஸ்திரங்கள் கொண்டு இந்தியாவில் வேரூன்றி விட்டன. இன்று குளிர்பான சந்தையில் 53 சதவீதம் கோக்கிடமும், 40 சதவீதம் பெப்சியிடமும் உள்ளன. சந்தையின் மதிப்பு 5 ஆயிரம் கோடி ரூபாய்.

______________________________________________________________

விற்பனை ஜனநாயகமல்ல, விற்பனை சர்வாதிகாரம்!

தங்களது ஆதிக்கத்தை திணிக்க இவர்கள் சாம, தான, பேத, தண்டம் என சகல வழிகளிலும் போர் நடத்தினர். ஐஸ்வர்யாராய், ஷாருக்கான், தெண்டுல்கர் ஆகியோர் பல்லிளிக்கும் விளம்பரங்களைப் பார்த்து வாய் பிளக்கும் நெஞ்சங்களுக்கு இந்நிறுவனங்ளின் கோர முகம் தெரியாது.

பிடித்த பொருள் கிடைக்க வில்லையென்றால் கிடைக்கும் பொருளை வாங்குவது நுகர்வோர் வழக்கம். அதன்படி தமது பானங்களை மட்டுமே கடைக்காரர் விற்க வேண்டும் என்பதை இந்நிறுவனங்கள் தமது வர்த்தகக் கொள்கையாக வைத்திருக்கின்றன. கடைக்காரருக்கு குளிர்பதன பெட்டியை மலிவு விலையில் அல்லது இலவசமாய் வழங்குவார்கள். முதல் மிச்சம் என கடைக்காரர் நினைப்பார். ஆனால் கோக் அல்லது பெப்சி பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும், அதை விற்றே கடன் அடைக்க வேண்டும், அதனால் அதிகமாக அந்த பானங்களை இருப்பு வைக்க வேண்டும் என்ற சுழலில் தாம் சிக்குவோம் என்பதை அவர் அறியமாட்டார். மேலும் பெயர்ப் பலகைகள், சுவர்க்கடிகாரம், பனியன், தொப்பி என்ற பரிசுப் பொருட்கள், முதல் கொள்முதல் இலவசம் போன்ற சலுகைகளாலும் கடைக்காரர்களை அவர்களை அறியாமலே விலை போக வைத்துவிட்டனர்.

தமது பானங்கள் போகாத புதிய பகுதிகளுக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் குறிப்பிட்ட இலக்கை அடைவதற்கு தாதா ஏஜெண்டுகளை வைத்திருக்கின்றனர். தாதாக்கள் அப்பகுதியைப் பழக்கிய பிறகு நிறுவனங்களின் ஏஜெண்டுகள் சந்தையைத் தொடருவர்.  உணவகங்கள், பெரும் அங்காடிகள், திரையரங்குகள் போன்ற பெரிய விற்பனையாளர்களுக்கு பெரும் தொகையைக் கொடுத்து தமது குளிர்பானங்களை மட்டும் விற்க வைக்கின்றனர்.

புது தில்லியில் பி.வி.ஆர் மல்டி பிளக்ஸ் திரையரங்கிற்கு 60 இலட்சமும், பம்பாயின் ஸ்டெர்லிங் திரையரங்கிற்கு 30 இலட்சமும் கொடுத்த பெப்சி சமீபத்தில் மதுரை மாப்பிள்ளை விநாயகர் திரையரங்கிற்கும் ஒருபெரும் தொகை கொடுத்து  தனது பாட்டில்களை மட்டும் விற்க வைத்திருக்கிறது. கோக், பெப்சி இரண்டும் இதற்காக மட்டும் வருடந்தோறும் 10 கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கின்றன.

குளிர்பான விற்பனையில் பாட்டில்கள் சுழற்சி அதாவது பாட்டில் தொழிற்சாலை – கடை – மீண்டும் தொழிற்சாலை என இடையறாமல் பயணம் செய்வது முக்கியம். ஒரு வருடத்தில் ஒருபாட்டில் 10 முறையாவது விற்கப்பட்டால்தான் லாபம். இதில் 30 சதவீதம் பாட்டில்கள் உடைபடும். மீதி சுற்றிவரும். அப்படி சுற்றி வரும் தனது எதிர் நிறுவன பாட்டில்களை முடக்குவதற்கு இந்நிறுவனங்கள் ஏராளமான சதி வேலைகள் செய்கின்றன.

அடுத்து குளிர்பானத் தயாரிப்பு – விற்பனைக்கான அடிப்படை கட்டுமான வசதிகளுக்காக இந்நிறுவனங்கள் பாதியை மட்டும் முதலீடு செய்கின்றன. மீதியை ஒப்பந்ததாரர்கள் மூலம் முதலீடு செய்ய வைக்கின்றன. பெப்சி – கோக்கின் ரசாயன கரைசல் கூழ் (எசன்ஸ்) மட்டும் அமெரிக்காவிலிருந்து வரும். கூழை நீரில் கலந்து பாட்டிலில் விற்பதற்கென்றே உலகம் முழுவதும் பிராந்திய அளவில் ஏராளமான பாட்டில் தொழிற்சாலைகளை வைத்திருக்கின்றனர். இந்தியாவில் கோக்கிற்கு 60, பெப்சிக்கு 26 தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் கோக் மட்டும் பாதியை சொந்தமாகவும் மீதியை ஒப்பந்ததாரர்கள் மூலமாகவும் வைத்திருக்கின்றது.

இத்தகைய பாட்டில் தொழிற்சாலைகளின் அதிபர்கள் கோக் கோருகின்ற அளவு முதலீடு செய்ய வேண்டும். கோக் பானங்களை மட்டும் தயாரிக்க வேண்டும். தேவைப்பட்டால் தொழிற்சாலையை விரிவுபடுத்த வேண்டும். இவையெல்லாம் ஒப்பந்த விதிகள். தற்போது இத்தொழிற்சாலைகளை அடிமாட்டு விலைக்கு மிரட்டி வாங்கி வருகிறது கோக். சிலரை பாதி பங்குகளை தருமாறு கட்டளையிடுகிறது. கோக்கின் மிரட்டலை எதிர்த்து 23 அதிபர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கின்றனர். “எங்களை அதிக முதலீடு செய்ய வைத்துவிட்டு, இப்போது ஒப்பந்தத்தை ரத்துசெய், அல்லது விற்றுவிடு” என்று கோக் மிரட்டுவதாக பூனா பாட்டிலிங் தொழிற்சாலை அதிபர் தனது வழக்கில் கூறியிருக்கிறார்.

அதே போன்று மொத்த வியாபாரிகளும் கோக்கினால் அச்சுறுத்தப்பபடுகின்றனர். தமிழக நுகர்பொருள் மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவர் கணேஷ், “கோக்கின் அநீதியான வர்த்தகப்படி எங்களுக்கு மாதம் 2000 ரூபாய் நட்டம் ஏற்படுகிறது. எதிர்த்துக் கேட்டால் வேறு வணிகர்களை நியமனம் செய்வோம் என்று மிரட்டுகிறார்கள்” என்கிறார்.

இது போக பெப்சியும், கோக்கும் தங்களுக்குள் அடித்துக் கொள்வார்கள். தனது நிர்வாகிகளை கோக் விலைக்கு வாங்குவதாக பெப்சி வழக்குத் தொடுத்திருக்கிறது. இதில் பெப்சிக்கு ஆதரவாக வாதிட்ட வழக்கறிஞர் தேசபக்த ஆர்.எஸ்.எஸ் இன் அருண் ஜெட்லி, “2000 கோடி முதலீடு செய்திருக்கும் பெப்சிக்கு இழைக்கப்படும் அநீதி” என்று நீதிமன்றத்தில் உருகினார். “இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்பபடி ஒரு ஊழியர் எங்கு வேண்டுமானாலும் வேலை செய்யும் உரிமையை தடை செய்ய முடியாது” என்று கோக் திருப்பியடித்தது. பெப்சியும், கோக்கின் பானங்களைத் தயாரித்து வந்த குஜராத், கோவா பாட்டில் தொழிற்சாலைகளை விலைக்கு வாங்கியிருக்கிறது. இப்படி இருவரும் தங்களது வியாபார மோசடிகளுக்காக இந்தியாவில் மட்டும் 300 கோடி ரூபாய் ஒதுக்குகிறார்கள்.

இப்போது குடிநீர் என்றாலே ‘மினரல் வாட்டர்’ என்றாக்கி விட்டார்கள். இந்தியாவின் மினரல் குடிநீர் சந்தை மதிப்பு 1250 கோடி ரூபாயாகும். வருடந்தோறும் 100 சதவீத வளர்ச்சியைக் கொண்டிருக்கும் இத்துறையையும் அமெரிக்க சோடாக் கம்பெனிகள் விட்டு வைக்கவில்லை. கோக் – கின்லே, பெப்சி – அக்வாபினா எனும் குடிநீர் பாட்டில்களை அறிமுகப்படுத்தி அதை மட்டுமே விற்குமாறு தமது விற்பனையாளர்களை மாற்றி வருகின்றனர். தற்போது குடிசைத் தொழில்போல நடந்துவரும் இத்தண்ணீர் வியாபாரமும் அவர்களால் வெகு விரைவில் ஒழிக்கப்படும்.

இதற்கு மேல் பல மாநிலங்களில் பல ஏக்கர் நிலங்களை வாங்கியிருக்கின்றனர். ஆய்வகம், சரக்கு லாரி கட்டும் பனிமணை, பழரச உற்பத்தி, காய் – கனி பண்ணை, நொறுக்குத்தீனி, டப்பா உணவு ஏற்றுமதி என ஏராளமான திட்டங்களையும் வைத்திருக்கின்றன. இந்தியாவின் 15 கோடி நடுத்தவர வர்க்க மக்களைக் கொண்ட வலுவான சந்தையைக் கைப்பற்றுவதை தமது நோக்கமாகக் கொண்டுள்ளன. மாத சம்பளம் வாங்கும் நடுத்தரக் குடும்பம் ஒருமாதம் பல நூறு ரூபாய்களை தங்களுக்கு மொய் எழுதவேண்டும் என்பதே அவர்களது இலக்கு.

கனவில் வாழும் நடுத்தர வர்க்கத்தைக் கள் ஊற்றி மதி மயங்க வைக்கும் வித்தைக்காக பல விளம்பர படைப்பாளிகள் பெப்சி – கோக்குக்காக உழைக்கின்றனர். விளம்பர நிறுவனங்களுக்கு மட்டும் இரு நிறுவனங்களும் தலா 50 கோடியை கட்டணமாகக் கொடுக்கின்றன. இதுபோக வானொளி, ஏனைய விளம்பரங்களுக்காக பல கோடி ரூபாய் செலவழிக்கப்படுகின்றன. ஷாருக்கான், டெண்டுல்கர், ஐஸ்வர்யாராய் போன்ற நிழலுலக நட்சத்திரங்களுக்கு கோடிகளில் சம்பளம் கொடுக்கப்படுகிறது.

“உலக அளவில் கொள்ளையடிக்க உள்ளுர்ககாரனாக வேடம் போடு” என்பது பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டும் செயல் திட்டம். அதற்கேற்ப தங்களது விளம்பரங்களுக்கு அந்தந்த மாநில நடிகர்களை ஒப்பந்தம் செய்ய ஆரம்பித்திருக்கின்றனர். கோக் ஆந்திராவில் சிரஞ்சீவியையும், தமிழ்நாட்டில் விஜயையும், பெப்சி தமிழகத்தில் மாதவனையும், தெலுங்கில் கல்யானையும் விளம்பரங்களில் இறக்கியிருக்கின்றன. இனி இன்பத் தமிழிலும் சுந்தரத்தெலுங்கிலும் “என்ஜாய் கொக்கோ கோலா, ஏ தில் மாங்கே மோர் – ஆஹா”வும் கவிதையாய் பொழியும்.

இதுவும் போக டி ஷர்ட், தொப்பி, கிரிக்கெட், சினிமா ஸ்பான்சர், மூடி சேகரிப்பு, ஹாலிவுட் – மல்யுத்த நட்சததிரங்களின் ஸ்டிக்கர்கள், அறிமுக விலை தள்ளுபடி, சென்னையில் இட்லிக்கு கோக் இலவசம், மும்பையில் சப்பாத்திக்கு இலவசம்,  பெங்களூருவில் பிஸ்ஸா வாங்கினால் பெப்சி கேன் இலவசம் என மேட்டுக்குடியைக் கவர ஏராளமான மினுக்குத் திட்டங்கள்.

____________________________________________________________

இது அமெரிக்காவின் குளிர்பானக் கம்பெனிகள் இந்தியாவில் தொடுத்திருக்கும் ஆக்கிரமிப்பு போர்!

3 ஷிப்ட்களில் 150 தொழிலாளிகள் வேலைபார்த்த காளிமார்க்கின் விருதுநகர் பாட்டில் தொழிற்சாலையில் இன்று இருபது பேர், ஒரு ஷிப்ட் மட்டும் வேலை செய்கின்றனர். தென் மாவட்டங்களில் இன்று காளிமார்க்கை பரிதாபமான ஒரிரு பெட்டிக் கடைகளில் மட்டும் காணலாம். திருச்சியில் வின்சென்ட் குளிர்பான அலுவலகப் பெயர் பலகை பாழடைந்து சவக்களையுடன் காணப்படுகிறது. மதுரை மாப்பிள்ளை விநாயகர் குளிர்பானம் தமது திரையரங்குகளில் கூட விற்க முடியாத அவல நிலையில் இறந்து வருகிறது. காஞ்சிபுரத்தின் புகழ்பெற்ற பன்னீர் சோடா நிறுவனங்களை இனி தொல்பொருள் ஆராய்ச்சியில்தான் தேட வேண்டும். மோரும், இளநீரும், போஞ்சியும், பானகமும் அருகி வருகின்றன. நீராகாரம் என்பது என்னவென்றே நகர்ப்புற இளைஞர்களுக்குத் தெரியாது.

10 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான இந்திய குளிர்பான நிறுவனங்களும், இலட்சக்கணக்கான தொழிலாளர்களும்  வேலையிழந்திருக்கின்னர். நமது விவசாய பொருளாதார, தட்ப வெப்ப நிலைக்கு பொருத்தமான மரபு வகை பானங்களை மறந்துவிட்டோம். அமெரிக்காவின் கார்பன் வாயு கலந்த ஆல கால விடத்தை குடிக்க பழக்கப்படுத்தப்படுகிறோம். பெப்சியும், கோக்கும் தமது எசன்ஸை மட்டும் அமெரிக்காவில் இருந்து அனுப்பி, உள்ளூர் பாட்டில் தொழிலதிபர்களை வைத்து நீர் கலந்து, ஏஜெண்டுகளை வைத்து விநியோகித்து, விளம்ரங்களுக்கு நுகர்வோரிடமே பிடுங்கிக் கொண்டு, ஏராளமான சொத்துக்களை வாங்கிக் கொண்டு, டப்பா உணவு ஏற்றுமதி – கோலா விற்பனை இரண்டிலும் சில ஆயிரம் கோடிகளை கொள்ளையடிக்கின்றனர்.

இந்தியா மட்டுமல்ல முழு உலகும் இந்தக் கொள்ளையிலிருந்து தப்பவில்லை. அமெரிக்காவுக்கு கீழே இருக்கும் மெக்சிகோ நம்மைப் போன்ற ஏழை நாடுதான். அங்கேயும் ஆண்டுக்கு ஒருவர் 500 பாட்டில்களை குடிக்கும் அளவுக்கு தனிநபர் நுகர்வை ஏற்றி விட்டார்கள். எங்கெல்லாம் அமெரிக்க இராணுவம் நுழைந்ததோ அங்கெல்லாம் பெப்சியும், கோக்கும் நுழைந்தன. பின்னர் இராணுவம் திரும்பினாலும் கோலாக்கள் திரும்பவில்லை.

ஜப்பான், கொரியா, ஹாங்காங், சிங்கப்பூர், தாய்லாந்து இங்கெல்லாம் கோலாக்கள் அம்மக்களின் ரத்தத்தில் கலந்துவிட்டன. சிங்கப்பூரில் ஒரு ஓட்டலுக்கு சென்றால் முதலில் குடிநீர் வைக்கமாட்டார்கள். கோக்தான் தருவார்கள். இப்படி தண்ணீர் குடிக்கும் பழக்கம் ஒழிக்கப்பட்டு வருகிறது.

தொன்மையான புகழ் பெற்ற நாகரிகங்களெல்லாம் நதிக்கரையில் தோன்றின. மனித குலநாகரிகத்தில் நீரின் பங்கு அத்தகையது. இன்றும் நல்லநீர் கிடைக்காமல், மழை பெய்யாமல், ஆப்ரிக்காவிலும், ஆசியாவிலும் ஏராளமான நாடுகள் உள்ளன. வருடா வருடம் ஒரிஸா, ராஜஸ்தான், குஜராத்தில் பிளந்து கிடக்கும் மண்ணுக்கும், மக்களுக்கும் அந்த நீரின் அருமை தெரியும். தண்ணீர் நமது உடலில் இரண்டறக் கலந்தது. நமது பண்பாடு. விவசாயத்தின் உயிர். அத்தகைய நீரை நமது சிந்தனையில் இருந்து அழிக்கிறார்கள் என்றால் எவ்வளவு கொடூரம்?

பெப்சி – கோக்கின் ரசாயனக் கலவையில் என்ன இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. வியாபார ரகசியம் என்ற உரிமையால் பாதுகாக்கப்படும் அந்தக் கலவையின் தீங்கை மேற்குலகிலேயே பலர் அம்பலப்படுத்தியிருக்கின்றனர். பெப்சி – கோக் சமீபத்தில் அறிமுகப்படுத்தியிருக்கும் ‘டயட்’ என்ற பானத்தில் (கலோரி இல்லாத இனிப்பு நீர்) உள்ள ‘ஆஸ்பார்ட்டாம்’ என்ற ரசாயனப்பொருள் உடலுக்கு நேரடித் தீங்கை விளைவிக்கக் கூடியது என அமெரிக்காவில் எதிர்ப்பு இயக்கம் கிளம்பியிருக்கிறது. ஆனால் அதிகார வர்க்கத்தைச் சரிகட்டி கோக் தொடர்ந்து அதை விற்கிறது.

பிரான்சில் மக்கள் அருந்தும் பானமும், ஏற்றுமதி செய்யப்படுவதும் ஒயின்தான். பிரெஞ்சு நாடு திராட்சை உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நாடு. அந்த விவசாய பொருளாதாரத்தை வைத்து இந்த பானம் அவர்களிடையே மரபு வகை பழக்கமாக உள்ளது. கோக், பெப்சியின் வருகையால் பிரெஞ்சு விவசாயிகள் பாதிக்கப்பட்டு எதிர்த்துப் போராடுகின்றனர்.

இப்படி உலகம் முழுவதும் அந்தந்த மக்களது வாழ்க்கை, பண்பாடு, பொருளாதாரம் மூன்றும் அமெரிக்காவின் ஆக்ரமிப்பு நுகர்வுப் பண்பாட்டால் அழிக்கப்படுகின்றது. பிஸ்ஸா, பர்கர், எம்.டி.வி, ஹாலிவுட், துரித உணவகம், பேரங்காடி, டபிள்யூ. டபிள்யூ. எஃப், நைக், மெக்டோனால்டு போன்றவையே நீங்கள் எப்படி வாழவேண்டும் என்பதைத் தீர்மானிக்கின்றன. கற்றுக்கொடுக்கின்ற தேவன்களாக மாறிவிட்டன.

உழைப்பாளிகளின் பானமான தேநீரை நடுத்தர – மேட்டுக்குடி இளைஞர்களிடம் கொண்டு செல்ல நெஸ்லேயும் – கோக்கும், பெப்சியும் – இந்துஸ்தான் லீவரும் இணைந்து ஐஸ் டீ, ரெடிமேடு டீ போன்றவைகளைத் தர இருக்கிறார்கள். கோக், பெப்சி இரண்டும் உலகம் முழுவதும், ஏன் கழிப்பறைகளில் கூட கிடைக்க வேண்டும் என்பது வரை போய்விட்டன. சமீபத்தில் போன் செய்தால் கோக் டின் கொட்டும் ‘டயல் எ கோக்’ என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இப்படி இந்தக் கொள்ளையடிக்கும் உத்திக்கு முடிவு கிடையாது.

இது வெறும் குளிர்பானமல்ல. உங்களை உங்கள் மண்ணிலிருந்து பிடுங்கி எறியும் ஒரு வெடிகுண்டு. பெப்சி – கோக் காசு கொடுத்த்து குடிப்பது தாயைக் கூட்டிக் கொடுப்பதை விடக் கேவலமானது. இந்த மண்ணையும், மக்களையும் உதறித்தள்ளி அமெரிக்க நாய்களுக்கு அடிமையாக இருப்போம் என்பவர்கள்தான் கோக் குடிக்க முடியும். ஆம். பெப்சி – கோக் மானங் கெட்டவர்களின் பானம்.

______________________________________________________

•  புதிய கலாச்சாரம், மே – 2001

_______________________________________________

vote-012

தொடர்புடைய பதிவுகள்

வாசகர்களே, நீங்களும் வலைப்பதிவு ஆரம்பிக்கலாம் !!

49

vote-012பதிவர் சங்கம் தொடர்பாக வினவு கருத்து தெரிவிக்க வேண்டுமென்று சில நண்பர்கள் அப்போது தொலைபேசியில் கோரியிருந்தார்கள். அலை ஓய்ந்த பிறகு பொறுமையாக சில கருத்துக்களை தெரிவிக்கலாமென்று காத்திருந்த நிலையில் அலை மட்டுமல்ல கடலையே காணோம்! கடலே காணாமல் போன பிறகு நாம் கடல் கொந்தளிப்பு பற்றி எழுதுவது தேவையில்லைதானே?

எனினும் அண்ணன் உண்மைத்தமிழன் அப்போது எழுதிய பதிவர் சங்க கனவு திட்டம் ஒன்று இப்போது நினைவுக்கு வருகிறது. அதன்படி சங்கம் ஆரம்பித்த பிறகு அலுவலகம் ஒன்று திறந்து, சில கணினிகளை வாங்கி நிறுவி, முதலில் தன்னார்வத் தொண்டு பதிவர்கள் மூலமும், பின்னர் சம்பளத்துக்கு ஆள் போட்டும், வலைப்பதிவுகள் எப்படி ஆரம்பிக்க வேண்டுமென்று புதியவர்களுக்கு சொல்லி கொடுப்பார்களாம். இதன்மூலம் தமிழுக்கும், பதிவுலகுக்கும் சீரிய பங்கை சங்கம் செய்யுமென்று உண்மையண்ணன் தூய தொண்டுள்ளத்தோடு சிந்தனையை பகிர்ந்திருந்தார். இதில் முதல் படம் பற்றி ஒரு உதவி இயக்குநர் கொண்டிருக்கும் கனவைப் போல அவர் சிலாகித்திருந்தார்.

இங்கே அவரது கனவை கேலி செய்வதாக யாரும் எண்ண வேண்டாம். ஆனால் தமிழுக்கும், பதிவுலகிற்கும் பல முன்னோடிகள் செய்த, செய்துவரும், அமைதியான, பணிவான, ஆர்ப்பாட்டமில்லாத பங்களிப்பையும், தொண்டையும் அண்ணன் உண்மைத்தமிழன்தான் கேலி செய்கிறார் என்பதை மட்டும் இங்கே சொல்லிக் கொள்கிறோம். ஏன்?

________________________________________________

ஆங்கிலம் கோலேச்சி வந்த இணையத்தில் தமிழை புகுத்தி, தரப்படுத்தி, ஒழுங்குபடுத்தி, இன்னும் அத்தனை மென்பொருள் பிரச்சினைகளையெல்லாம் தீர்த்து வைத்து அதற்கான சேவைகளை இலவசமாக வழங்குபவர்கள் யாரென்றே நமக்குத் தெரியாது. ஆனால் அவர்களின்றி தமிழ் பதிவுலகமும் இல்லை, எனவே வினவும் இல்லை.

தமிழை யூனிகோடில் கொண்டு வந்தது, தமிழ் தட்டச்சு முறையை உருவாக்கியது, அதை கற்றுக்கொடுப்பதற்கான வசதிகள், தேடுபொறிகளை தமிழ்ப்படுத்தியது, பிலாக்கர், வோர்ட்பிரஸில் இரண்டிலும் தமிழைக் கொண்டுவந்தது, விக்கி பீடியாவில் தமிழை வளர்ப்பது என்று இன்னும் நமக்குத் தெரியாத மென்பொருள், தொழில்நுட்ப விவகாரங்களையெல்லாம் எந்த விளம்பரமோ, பண ஆதாயமோ இன்றி பல ஆய்வாளர்கள் செய்திருக்கிறார்கள். தமிழார்வலர்கள் தவிர்த்த சில பெரும் நிறுவனங்கள் உள்ளூர் சந்தையைப் பிடிக்க வேண்டுமென்று கூட இதில் இறங்கியிருக்கலாம். அதே சமயம் தமிழார்வமுள்ள திறமையாளரின்றி இதுவும் கூட சாத்தியமில்லை.

இவர்களுக்கு கணினி அறிவும், தமிழார்வமும் சேர்ந்து இருந்தது நமக்கு கிடைத்திருக்கும் பேறு. இவர்கள் செய்யாதவற்றையா உண்மைத் தமிழனும், அவரது கனவும் செய்யப் போகிறது?

இணையம் என்பது மெய்நிகர் உலகம் அதாவது விர்ச்சுவல் உலகம். இங்கே எந்தப் பணியையும் பௌதீக ரீதியாக உடனிருந்து நேரிட்டுப் பார்த்துப் பேசி செய்ய வேண்டிய அவசியமில்லை. அப்படி இருப்பதாக நினைப்பவர்களுக்கு இந்த ஊடகம் பற்றி எந்த அறிவும் இருப்பதாகத் தெரியவில்லை.

இப்போது வலைப்பதிவர்களாக இருப்பவர்களெல்லாம் மெய்நிகர் உலகின் வசதிகளைத் தானே கற்றுக்கொண்டுதான் இன்று தனிராஜ்ஜியம் நடத்தி வருகிறார்கள். சில பதிவர்கள் புதியவர்கள் பதிவு ஆரம்பிப்பதற்கான தொழில் நுட்ப விவகாரங்களை எளிமையாக இன்றும் எழுதி வருகிறார்கள்.

இன்று தமிழ் பதிவுலகில் சுமார் ஏழாயிரம் வலைப்பதிவர்கள் இருப்பதாக தெரிகிறது. பதிவர்கள் கணக்கு இதுவென்றால் வாசகர்கள் கணக்கு சில இலட்சங்களில் இருக்கும். இவர்களில் எழுத்தார்வமும், துறை சார்ந்த அறிவும் கொண்டவர்கள் ஏராளமிருப்பார்கள். இவர்களெல்லாம் எழுத வந்தால்தான் தமிழ் பதிவுலகம் இன்னும் தரமானதாக வளரும். எனினும் வலைப்பதிவு ஆரம்பிப்பது குறித்து நிறைய தயக்கங்களும், சந்தேகங்களும் பலருக்கு இருக்கக்கூடும்.

அவை அத்தனைக்கும் பதிலளித்து, எளிமையாகவும், செய்முறை வரைபடங்கள் மூலமும் பதிவு ஆரம்பிப்பது எப்படி என்று தமிழ்மணம் ஒரு கையேடு தயாரித்திருக்கிறது. இதை முன்னர் தமிழ்மணம் காசி தயாரித்ததை இன்று தமிழ்சசி புதுப்புத்திருக்கிறார். இதை படிக்கும் வாசகர்கள் எவரும் கையோடு ஒரு வலைப்பதிவு ஆரம்பிக்கலாம். எனவே நண்பர்கள் தமிழ்மணத்தின் அந்த கையேட்டை முதலில் படித்துவிட்டு வாருங்கள்.

பலரும் வலைப்பதிவு என்றால் நிறைய செலவு பிடிக்கும் சமாச்சாரம் என்று நினைக்கலாம். இல்லை, ஒரு கணினியும், இணைய இணைப்பும் இருந்தால் போதும். அதைத்தாண்டி ஒரு நயா பைசா செலவில்லாமல் வலைப்பதிவு என்ற மின் பத்திரிகையை ஆரம்பிக்கலாம். அடுத்து இதற்கு நிறைய தொழில்நுட்ப அறிவு தேவை என்று சிலர் கருதலாம். அப்படி இல்லை. ஒரு செல்பேசியையோ, இல்லை தொலைக்காட்சி ரிமோட்டையோ இயக்கத் தெரிந்த எவரும் அடிப்படைக் கணினி அறிவை விரைவில் கற்கலாம். ஒரு மின்னஞ்சல் கணக்கை பராமரிக்கத் தெரிந்த எவரும் வலைப்பதிவை சுலபமாக நடத்தலாம்.

மற்றபடி போகப் போக இது தொடர்பான தொழில்நுட்ப பிஸ்தாவாக நாம் மாறலாம். வினவு ஆரம்பிக்கும் போது நாங்களும் அப்படித்தான் அறிவிலிகளாக இருந்தோம். பின்னர் மெல்ல மெல்ல கற்றுக் கொண்டு இயங்கி வருகிறோம். அடுத்த சந்தேகம் தமிழில் தட்டச்சு தெரியாமல் இருப்பது, அதற்கான மென்பொருட்கள் எங்கு கிடைக்கும் என்ற கேள்வியெல்லாம் கூட உங்களுக்கு இருக்கலாம். அதற்கும் தமிழ்மணம் விரிவாகப் பதிலளித்திருக்கிறது. பதிவர்கள் எவருக்கும் முறையான தட்டச்சு தெரியவேண்டுமென்ற அவசியமில்லை. ஒரு பதிவை எழுதுவது ஓரிரு மணி நேர விடயமென்பதால் ஒலியியல் மூலமாக கூட தமிழில் எழுதலாம். இன்று பின்னூட்டமிடும் வாசகர்கள் அப்படித்தான் எழுதுகிறார்கள்.

ஆனால் ஒரு நீண்ட காலநோக்கில் தமிழ் தட்டச்சு பயில்வது நல்லது. வினவு அனுபவத்தைப் பொறுத்த வரை நாங்கள் தமிழ் 99 தட்டச்சு முறையை கையாள்கிறோம். இதை நீங்களும் சுலபமாகக் கற்கலாம். எனது அனுபவத்தில்  ஐந்து நாட்களில் இதைக் கற்றுக்கொண்டு ஆறாவது நாளில் கட்டுரை எழுத ஆரம்பித்து விட்டேன். இதைக் கற்பதும், இதற்கான மென்பொருளும் இலவசமாகவே கிடைக்கின்றன. தமிழ்சசி இவற்றை விளக்கமாக விவரித்திருக்கிறார்.

புதிய வலைப்பதிவர்கள் என்ன மாதிரி எழுத வேண்டும் என்பதற்கு நடப்பிலுள்ள பதிவர்களின் வகைமாதிரிகளை பார்த்து முடிவு செய்யலாம். அரசியலா, சமூகமா, இலக்கியமா, சினிமாவா, செய்தியா, டயரிக்குறிப்பா, குழந்தை வளர்ப்பா, சமையலா, என்று ஏகப்பட்ட பதிவர்கள் தமிழில் இயங்கி வருகின்றனர். இவற்றுக்கான எடுத்துக்காட்டுகளை தமிழ்சசி தருகிறார். அதில் பல்சுவைப் பதிவுகள் என்ற வகையினத்திற்கு அண்ணன் உண்மைத்தமிழனை சான்றாக காட்டுகிறார். அந்த வகையில் நமது அண்ணனும் புதிய பதிவர்களுக்கு எப்படியோ ஒரு முன்னோடியாக மாறிவிட்டார்.

அடுத்த பிரச்சினை புதிய பதிவர்கள் எழுத ஆரம்பித்தாலும் அவற்றை யார் படிப்பார்கள் என்ற கேள்வி வருகிறது. அதற்குத்தான் திரட்டிகள் இருக்கின்றன. இந்திய மொழிகளில் மற்றவற்றில் இல்லாத தொழில்நுட்ப வசதிகளுடன் தமிழ்மணம் இயங்கி வருகிறது. தமிழ்மணத்தின் மூலம் உங்கள் எழுத்து உலகெங்கும் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஐந்து கண்டங்களில் உள்ள தமிழ் மக்கள் உங்கள் எழுத்தை படித்து கருத்து தெரிவிப்பதற்கு இதன்மூலம் வாய்ப்பு ஏற்படுகிறது. தமிலிஷ் போன்றவற்றில் நாம்தான் நமது இடுகைகளை அளிக்க வேண்டும். அதை படிப்பவர்கள் வாக்கு போட்டு முதல் பக்கத்திற்கு சிபாரிசு செய்வார்கள். இன்னும் பல திரட்டிகள் தமிழில் இருக்கின்றன. இவையெல்லாம் போகப்போக உங்களுக்கு தெரியவரும். ஆரம்பத்தில் நீங்கள் தமிழ்மணத்தின் மூலமாகக் கூட உங்களை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்திக் கொள்ளலாம்.

இதன்பிறகு நீங்களும் ஒரு பதிவராக ஆகிவிடுவீர்கள். உடனே உங்களுக்குத் தெரியாமலேயே உங்களிடம் ஒரு மாற்றம் தொடங்கும். பின்னூட்டமிடுவது, மற்ற பதிவர்களுடன் விவாதிப்பது, தனது பதிவில் வரும் வாதங்களுக்கு பதில் சொல்வது, குறிப்பிட்ட பிரச்சினையில் அரசியல் நிலைப்பாடு எடுப்பது எல்லாம் போகப்போக பழக்கமாகும்.

பதிவுலகில் இயங்குவது, எதை எழுதுவது, எதை படிப்பது, இவை பற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறோம். இப்போது நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது வாசகர் அனைவரும் பதிவு ஆரம்பிக்க முடியும் என்பதையே.

தமிழ்மணம் சார்பாக தமிழ்சசி விரிவாக தயாரித்திருக்கும் இந்த நடைமுறைக் கையேடை பிரபல பதிவர்கள் அறிமுகம் செய்யவேண்டும். அண்ணன் உண்மைத்தமிழன் இதையாவது செய்தாரென்றால் அவரது வாசகர்களில் பலர் பதிவராக சுலபமான வழியில் ஆக முடியும். தமிழ்மணத்தின் இந்த நடைமுறைக் கையேட்டில் இதுவரை நான்கு பேர்தான், அதிலும் மூன்றுபேர்தான் பின்னூட்டமிட்டு இந்த முயற்சியை வாழ்த்தியிருக்கிறார்கள். அதில் முதல் பின்னூட்டமிட்டது யார் என்பது பிரபல பதிவர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும். அது கற்றாரைக் கற்றாரே காமுறுவர் போல தொண்டரை தொண்டரே புரிந்து கொள்வர் என்றும் சொல்லலாம். உண்மைத்தமிழன் கூட இந்த பதிவை இன்று வரை படித்த மாதிரி தெரியவில்லையே. ஏனோ?

இப்படி சுலபமான முறையில் புதிய பதிவர்களை உருவாக்கும் வசதிகள் இருக்கும் போது உண்மையண்ணன் கானல் நீராக கனவு மடம் கட்ட வேண்டியதில்லை. பதிவுலகில் மட்டுமல்ல இந்த உலகிலேயே மிக வேகமாக தமிழ் தட்டச்சு செய்பவர் இந்த அண்ணன்தான் என்று ஒரு பதிவர் சொன்னார். இருக்கலாம். ஆனால் வேகமிருக்கும் இடத்தில் விவேகம் இருக்க வேண்டியதில்லையே!

புதிய பதிவர்களுக்கான  தமிழ்மணத்தின்  செய்முறைக் கையேடு

_______________________________________________

vote-012

தொடர்புடைய பதிவுகள்

மலேசிய சொர்க்கத்தின் தமிழ் அடிமைகள்! நேரடி ரிப்போர்ட்!!

60

vote-012இப்போது நான் மலேசியாவில் பணி புரியும் ஒரு அந்நிய நாட்டு தொழிலாளி. இங்கு யார் மீதும், அல்லது இந்நாட்டின் மீதோ அவதூறு கூறும் நோக்கம் எனக்கு இல்லை. அந்நிய நாட்டில் வேலை வாய்ப்பு தேடும் பொழுது ஏற்படும் வலிகளையும் ஏமாற்றங்களையும் முடிந்தவரை கூறுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

______________________________________________

அந்நிய நாட்டுக்கு வேலை தேடி செல்வதற்கு ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு காரணங்கள் இருக்கும். தமிழ்நாட்டு தமிழனாக இருந்தால், ஊரில் சம்பாதிப்பதை விட குறுகிய காலத்தில் இரண்டு மடங்கு சம்பாதித்து பின்னர் ஊர் திரும்பி வளமான வாழ்வு வாழலாம். வாட்டும் வறுமையில் இருந்து தப்பிக்கலாம். கூடப் பிறந்த சகோதர சகோதரிகளை கரையேற்றலாம்.  ஊரிலேயே சம்பாதித்து அடைக்க முடியாத கடனை வெளிநாட்டில் சென்று சம்பாதித்து அடைக்கலாம். இலங்கை தமிழனாக இருந்தால் காரணம் சொல்லாமலே புரியும். இப்படி காரணங்கள் வேறு வேறாக இருக்கலாம் இறுதியில் எல்லோரும் சந்திப்பது ஒரே நேர்கோட்டில் தான்.

அந்நிய நாட்டு வேலைக்காக முகவர் நிலையத்தில் பணத்தை கட்டுவதில் இருந்து அலைச்சல்களும் உளைச்சல்களும் ஆரம்பமாகி விடுகின்றன. அம்மாவின், சகோதரியின், மனைவியின் நகைகள், சேர்த்து வைத்த நிலங்கள் எல்லாவற்றையும் விற்று இல்லை கடன் வாங்கியோ, முகவருக்கு கொடுத்து பின்னர் அவர்களுக்கு பின்னாலேயே நாயாய் பேயாய் அலைந்து ஒருவாறாக விமானமேறி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் ஒரு நாள் காலையில் வந்து இறங்கும் ஒரு அந்நிய தொழிலாளியின் ஏமாற்றங்களும், துன்பங்களும் இங்கு புதிதாக ஆரம்பிப்பதில்லை. ஊரில் முகவர்களிடம் வெளிநாடு செல்வதற்காக பணத்தை கட்டுவதில் இருந்தே அவை தொடங்குகின்றது.

முகவர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு ஓடிவிடுவார்களா? அல்லது ஒழுங்காக வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பார்களா?, வெளிநாட்டு வேலையை பற்றி, சம்பளத்தை பற்றி அவர்கள் கூறியதெல்லாம் உண்மைதானா? எல்லாம் நிறைவேறும் போது மட்டுமே கண்டுகொள்ள முடியும். இங்கு என்னையே உதாரணத்திற்க்கு எடுத்துக் கொள்ளலாம். இலங்கை தலைநகரில் வெள்ளவத்தையில் உள்ள ஓர் பிரபலமான வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம். அவர்கள் என்னிடம் கூறிய வேலை, கணினி வன்பொருள் தயாரிக்கும் நிறுவனமொன்றில் பொதி செய்யும் வேலை. அவர்கள் கூறியதை நம்பினேன். அவர்கள் கூறியதை வேறு வழிகளில் உறுதிப்படுத்தும் வழிகள் இருந்த போதும் அத்தகைய மனநிலையில் நானும் அப்போது இருக்கவில்லை. ஏனெனில் கொழும்பில் அப்போதிருந்த நெருக்கடியில் அங்கிருந்து வெளியேறினால் போதும் எனும் மனநிலையே இருந்தது.

_________________________________________

அப்படிப்பட்ட நிலையில் அந்நிய நாட்டில் வந்திறங்கிய அடுத்தநாள் அதே நிறுவனம் ஒரு கணினி வன்பொருள் தயாரிப்பு தொழிற்சாலை அல்ல, ஒரு கட்டுமான குத்தகை நிறுவனம் என்பதும், அடுத்தநாள் காலையில் உங்களுக்கு ஓர் பாதுகாப்பு காலணியும், பாதுகாப்பு தலைக்கவசமும் தந்து கையில் மண்வெட்டியுடன் சுட்டெரிக்கும் வெய்யிலில் நெடுஞ்சாலையில் பிரிமிக்ஸ் அள்ளிப்போடும் வேலைக்கு அனுப்பினால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? எனக்கு அப்போதிருந்த மனநிலையில் என்னை இங்கு அனுப்பி வைத்த முகவர் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் யாராவது என் முன் வந்திருந்தால் விளைவுகள் விபரீதமாக இருந்திருக்குமென்றே தோன்றுகிறது. வெளிநாட்டு வேலைக்கு வந்த முதல் நாளே ஆத்திரத்துடன் கூடிய கடுமையான ஏமாற்றத்தை சந்தித்தேன்.

நான் நினைத்திருந்தால் அடுத்த ஆறாவது மாதத்தில் என்னுடைய சொந்த செலவிலேயே விமான பயண சீட்டு எடுத்து நாடு திரும்பியிருக்க முடியும். ஆனால் முகவர் நிலையத்துக்கு கட்டிய ஒரு லட்சத்து எழுபத்து ஐயாயிரம் ரூபாவும், நான்கு வருடத்திற்கு முந்திய இலங்கை நிலவரமும் என்னை சமாதானம் செய்ய வைத்தது. வேறுவழி? இதுகூட பரவாயில்லை. விமான நிலையத்தில் வந்திறங்கிய அன்று, எம்மை பொறுப்பேற்க எமது நிறுவனத்தை சார்ந்த யாரும் வராததால், குடிநுழைவுத் துறை அதிகாரிகள் எங்களை விமான நிலையம் அருகில் உள்ள ஒரு இடைத்தங்கல் தடுப்பு முகாமில் கொண்டு சென்று விட்டனர். அங்கு இந்தியா பங்களாதேஷ் மற்றும் நேபாளத்தை சேர்ந்த பலர் அங்கு இருந்தனர்.

ஒவ்வொருவருடைய கதையும் மிக மோசமான சோகக் கதைகள். தமிழ்நாடு வேதாரணியம் பகுதியை சேர்ந்த ஒருவர், அவர் இரண்டு மாதங்களாக இடைத்தங்கல் முகாமில் காத்திருப்பதாகவும், தனக்கு கூறப்பட்டிருந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் யாரும் வந்து தன்னை அழைத்து செல்லவில்லை என கூறி வேதனைப்பட்டார். இதே போல் இன்னொரு தமிழக தமிழர் இவருக்கு வேலை தரும் முகவர்களால் கூறப்பட்டிருந்த நிறுவனத்தின் பெயரில் எந்த ஒரு நிறுவனமுமே இங்கு செயல்படவில்லை என குடிநுழைவுத் துறை அதிகாரிகளால் இவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. சரி “எங்களை நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைத்து விடுங்கள்” என அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்ட போது, “அது இந்திய தூதரகம் முயற்சி எடுத்தால் நீங்கள் இந்தியா திரும்பலாம். நாங்கள் அவர்களுக்கு அறிவித்து விட்டோம்” என கூறியிருந்தார்கள்.

இது இவ்வாறிருக்க கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த இன்னொருவரின் நிலை மிக பரிதாபமாக இருந்தது. யாருடனும் அதிகம் பேசாமல் கிட்டத்தட்ட சித்தப்பிரமை பிடித்தவர் போல் வெறிக்க பார்த்தபடி அமர்ந்திருந்தார். மிகவும் வறிய நிலையில் உள்ள குடும்பம். இருந்த நிலத்தை அடமானம் வைத்தும், நகைகளை விற்றும் முதல் குழந்தை பிறந்து இரண்டு வாரங்களில் மலேசிய நாட்டுக்கு விமானம் ஏறியிருக்கிறார். வந்து நான்கு மாதங்கள் கடந்த நிலையில் கம்பனியை சேர்ந்த யாரும் வந்து அழைத்து செல்லாத நிலையில், வீட்டுக்கும் தகவல் சொல்லமுடியாத நிலையில் இருப்பதாக அருகில் இருந்தவர் கூறினார். இவர்களை போல் வாரக்கணக்கில், மாதக்கணக்கில் அங்கு தங்கி இருக்கும் இந்திய நாட்டவர்கள் இன்னும் பலர் இதே நிலையில் இருந்தனர்.

இவர்கள் எல்லோரும் கட்டிட நிர்மாண வேலைகளுக்காகத்தான் இங்கு அனுப்பப் பட்டிருக்கின்றனர். இங்கு இவர்கள் வெவ்வேறு இடங்களில் செய்யப் போகும் வேலை ஒன்று. ஆனால் அதற்கு இவர்கள் தங்கள் முகவர்களிடம் கொடுத்த தொகையோ ஆளாளுக்கு மாறுபடுகிறது. இவர்களை எல்லாம் பார்க்கும்போது எனக்கு உண்மையிலேயே பயம் பிடித்து விட்டது. எனக்கும் இவ்வாறு ஆகிவிட்டால்?  நான் அங்கு இருந்த நான்கு நாட்களில் அத்தடுப்பு முகாமிற்கு பலர் வந்து கொண்டிருந்தனர். வந்த அடுத்த நாளிலோ அல்லது அதற்கு பின்னரோ அவர்கள் வேலை செய்யப் போகும் நிறுவனத்தை சார்ந்தவர்கள் வந்து அவர்களை அழைத்து சென்று கொண்டிருந்தனர். இவர்களை அழைத்து செல்லத்தான் யாரும் வரவில்லை.

ஆனால் குடிநுழைவுத் துறை தடுப்பு முகாம்களில் இருந்து வெளியேறினால் மட்டும் இவர்களது துன்பங்களுக்கு முடிவு கிட்டுவதில்லை. கதையே இங்குதான் ஆரம்பம். முகவர்களின் ஏமாற்று எங்கே ஆரம்பிக்கிறது என பார்க்கலாம். கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்னர் ஜொகூர் மாநிலத்தில் உள்ள கப்பல் திருத்தும் துறைமுகம் ஒன்றில் பணிபுரிய தமிழ் நாட்டில் இருந்து சிலர் வருகின்றனர். கப்பல் திருத்தும் தொழிலகத்தில் பணி புரிவதற்கு முன்னர் பணி தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டு பரீட்சைகள் நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் அடிப்படையிலேயே பணிக்கு அனுப்பப்படுவர். வந்தவர்களில் ஒரு சிலர் படிப்பு வாசனையே அற்றவர்கள். இப்போது இவர்களின் நிலை என்ன? “ஊரில ஏஜெண்ட் கப்பல் வேலைன்னு சொன்னான், மாசம் பதினையாயிரம் சம்பாதிக்கலாம்னும் சொன்னான், ஆனால் பரீட்சை எழுதனும்னு சொல்லலையே படுபாவிங்க, தொண்ணூறாயிரம் ரூபாவை சுளையா வாங்கிட்டான்களே?, என்ன பண்ணுவேன்” என புலம்பினார்.

இப்பொழுது இப்படிப்பட்ட நிலைமையில் இவர் நாடு திரும்பவும் முடியாது. வந்த கடனை அடைத்தே தீர வேண்டுமானால் வேறு இடங்களில் வேலை செய்ய வேண்டி வரும். அப்படி செய்வதானால் அது சட்டவிரோதம். மலேசியாவில் அந்நிய தொழிலாளர் சட்டவிதிகளின் படி, எந்த நிறுவனத்தில் வேலை செய்ய வந்தார்களோ, அதில்தான் அவர்களின் ஒப்பந்த காலம் முடியும் வரைக்கும் வேலை செய்யலாம். சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் சம்பள தகராறுகள் அல்லது முதலாளி மீதான அதிருப்தி காரணமாக ஏதும் பிரச்சினைகள் ஏற்படின் நீங்கள் உங்கள் நாட்டுக்கு திரும்புவதை தவிர வேறு வழியில்லை. வேறு நிறுவனங்களில் வேலை செய்தால் அது சட்ட விரோதம். ஆனால் அதையும் மீறி சட்டவிரோத அந்நிய தொழிலாளர்கள் உருவாகும் இடம் இங்கே தான்.வந்த நிறுவனத்திலும் வேலை செய்ய முடியாது, வேறு நிறுவனத்திற்கும் போகமுடியாது, ஊரில் வேறு கடன் வாங்கி வந்திருக்கிறோம், ஆதலால் சட்டத்தை மீறுவதை தவிர வேறு வழி இல்லை. பிடிபட்டால் தண்டனை நிச்சயம்.

______________________________________________________

இங்கு பெரும்பாலான இடங்களில் எட்டு மணி நேரத்திற்கான அடிப்படை சம்பளம் மலேசிய வெள்ளி பதினெட்டில் இருந்து இருபத்தி ஐந்து வரைக்கும் இருக்கிறது. குறிப்பாக உணவகங்கள், கார் கழுவும் இடங்கள் போன்றவை. ஒப்பந்தத்தில் என்னவோ எட்டு மணி நேர வேலையின் பின்னர் கிடைக்கும் மேலதிக ஒவ்வொரு மணிக்கும் மேலதிக வேலை நேரக் கூலி இருந்தாலும், அன்றாடம் பன்னிரண்டு மணி நேரம் வேலை பார்க்கவேண்டிய கட்டாயமும் ஏற்படுவதுண்டு. அயலில் உள்ள இந்திய முஸ்லீம் உணவகம் ஒன்றில் ஒன்றில் வேலை செய்யும் ஒரு வெளிநாட்டு பணியாளர் காலை ஏழு மணிக்கு இறங்கினால் மாலை ஏழுமணிக்கு தான் பணி முடிவு பெறும். பொதுவாக இங்குள்ள இந்திய முஸ்லீம் உணவகங்களில் பணி செய்யும் வெளிநாட்டு பணியாளர்களுக்கு வார விடுமுறைகளோ, மாத விடுமுறைகளோ கிடையாது (வருடத்தில் ஒரு நாள் வரும் ரமலான் பெருநாள் பண்டிகைக்காக வழங்கப்படும் விடுமுறையை தவிர).

உடம்புக்கு முடியவில்லை என்று அவர்களாக விடுப்பு எடுத்துக் கொண்டால் மட்டுமே உண்டு. இங்கு யாரும் யாருடனும் நியாய அநியாயங்கள் குறித்து பேசமுடியாது. பேசினால் முரண்பாடுகள் உருவாகும். முரண்பாடுகள் உருவாகினால் வேலை பறிபோகலாம். கட்டுமானத்துறை சார்ந்த வேலைகளை குத்தகை எடுத்து செய்யும் நிறுவனங்களில் வேலை செய்யும் அந்நிய தொழிலாளர்கள் நிலை இன்னும் சிக்கலானது. கட்டிட நிர்மாண துறையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பளம் சற்றே அதிகம். எட்டு மணி நேர வேலைக்கு வெள்ளி முப்பத்து ஐந்திலிருந்து நாற்பத்தைந்து வரைக்கும் வழங்கப்படுவதுண்டு. காரணம் இது கடினமான வேலை என்பது மட்டும் காரணமில்லை.

இதையும் எனது நிலையில் இருந்தே விளக்கலாம். நான் பணிபுரியும் நிறுவனம் ஓர் குத்தகை நிறுவனம். குறிப்பிட்ட பிரதேசத்தை குத்தகைக்கு எடுத்து அதில் பிரதான புதிய நீர்க்குழாய்களை பதித்து, பின்னர் அதில் இருந்து வீடுகளிற்கு புதிய இணைப்பு வழங்குவது எங்கள் பணி. எமது நிறுவனத்தால் எடுக்கப்படும் குத்தகை ஒன்றை முழுவதும் முடிக்க எடுக்கப்படும் காலம் மூன்றிலிருந்து நான்கு மாதங்கள். எமது நிறுவனத்தால் எடுக்கப்படும் குத்தகை அதன் காலம் முடிவடைவதற்குள், டெண்டர் போடப்பட்டு புதிய குத்தகை நிறுவனத்திற்கு கிடைத்தால் எமக்கு வேலைக்கு பிரச்சனை இல்லை. சம்பளம் மாதம் தவறாமல் கிடைத்து விடும். இல்லை எனில் நிலைமை சிக்கல். கிடைக்கப்போகும் புதிய குத்தகைக்காக ஓரிரு மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படலாம். அவ்வாறு வேலை இல்லாமல் காத்திருக்கும் காலப் பகுதியில் சம்பளம் கிடைக்காது.

ஆக வேலை இல்லாமல் குந்திக்கொண்டிருக்கும் காலங்களுக்கும் சேர்த்தே இந்த அதிக சம்பளம். வருடத்தில் குறைந்தது நான்கு மாதங்கள் இவ்வாறு புதிய வேலைக்காக காத்திருக்க வேண்டி வீணே உட்கார்ந்திருக்க வேண்டியுள்ளது. பெரிய வீடமைப்பு திட்டங்கள், பால கட்டுமான திட்டங்களில் பணிபுரிபவர்கள் நிலைமை ஓரளவு பரவாயில்லை என கூறலாம். அந்நிய தொழிலாளர்களின் வேலையிட நலன்கள் இப்படி இருக்கின்றனவெனில் சமூகப் பாதுகாப்பு மிக மோசமானது.

என்னுடன் சிறிது காலம் பணியாற்றிய தமிழகத்தவர் ஒருவரின் காதில் ஒரு வெட்டுக்காயம் ஒன்று இருக்கும். அவரிடம் கேட்டேன்,”எதனால் இவ்வாறு ஏற்பட்டது”? அவர் எமது நிறுவனத்தில் பணி புரிவதற்கு முன்னர் தமிழர் ஒருவருக்கு சொந்தமான கட்டுமானத் திட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த காலத்தில், நிலுவையில் இருந்த தனது இரண்டு மாத சம்பளத்தை தரும்படி கேட்டிருக்கிறார். அப்போது ஏற்பட்ட வாக்கு வாதத்தில் முதலாளி அருகில் இருந்த கத்தியை தூக்கி தமிழக தொழிலாளி மீது வீசி காதில் வெட்டுக்காயத்தை ஏற்படுத்தியதாக கூறினார். அன்றிலிருந்து அவர் சட்ட விரோத தொழிலாளியாகவே வேலை செய்தார். சிறிது காலத்தின் பின்னர் குடிநுழைவுத்துறை அதிகாரிகளின் திடீர் சோதனை நடவடிக்கை ஒன்றில் பிடிபட்டு, தண்டனை காலம் முடிந்த பின்னர் தமிழ் நாட்டுக்கு சென்று விட்டார்.

கோலாலம்பூர் பிரதான புகையிரத நிலையத்தின் வாசலில் நின்று கொண்டிருக்கிறேன். தலையும் ஆடையும் கலைந்திருந்தது.வயது இருபத்தியிரண்டு இருக்கலாம். கையில் ஒரு பழைய துணியால் கட்டுப் போட்டிருந்தார். தயங்கியபடியே என்னை நோக்கி வந்தார். “அண்ணை தமிழோ” என கம்மிய குரலில் வினவினார். “ஆமா, என்ன பிரச்சனை” என்று கேட்க “தான் ஒரு தமிழரின் கார் கழுவும் நிலையம் ஒன்றில் வேலை பார்த்ததாகவும், நேற்றிரவு கூடுதலான நேரம் வேலை பார்த்ததால் காலையில் வழமையான நேரத்திற்கு எழுந்திருக்க முடியவில்லை, அதனால் முதலாளிக்கும் எனக்கும் பிரச்சனையாகி விட்டது, அங்கு வேலை செய்பவர்களுடன் சேர்ந்து அவர் என்னை இரும்புக் கம்பியால் தாக்க முற்பட்டபோது, தடுத்ததில் உள்ளங்கையில் கிழிந்து விட்டது,” எனகூறி காயத்தை காட்டிய போது எனக்கு கண்கள் இருண்டு விட்டது. “சரி ஏன் காயத்துக்கு மருந்து கட்டவில்லை” என கேட்க, “கையில் காசில்லை, பாஸ்போர்ட் முதலாளியிடம் இருக்கு” எனக் கூறினார்.

அப்போது என்னால், அவரை ஒரு கிளினிக்கிற்கு அழைத்து சென்று காயத்திற்கு மருந்து கட்டிவிட்டு, அன்றைய நாளிற்கான உணவு செலவிற்கு பணம் கொடுக்க மட்டும்தான் முடிந்தது. அவரிடம் இருந்து விடை பெறும் போது “அண்ணை எனக்கு எங்கேயும் ஒரு வேலை வாங்கி தரமுடியுமா?” என வினவினார். அவருக்கு எனது நிலையை தெரிவித்து விட்டு “அவரின் பாஸ்போர்ட்டை பெற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள், அதற்கு ஏதேனும் மக்கள் நல அமைப்பின் உதவியை நாடுங்கள், அல்லது மலேசிய இந்தியர் அரசியல் அமைப்புக்களிடம் உதவி கேளுங்கள் என கூறிவிட்டு விடை பெற்றேன்.

நாட்டுக்குள் சட்ட விரோதமாக நுழைந்து வேலை செய்பவர்கள் ஒருபுறமிருக்க, நிறுவனங்களில் இடம்பெறும் இது போன்ற காரியங்களும் சட்ட பூர்வமாக இருக்கும் ஒரு தொழிலாளியை சட்டவிரோத தொழிலாளராக மாற்றி விடுகின்றன. இதை விடவும் வீட்டு வேலைக்காக அழைத்து வரப்பட்ட தொழிலாளி, தனது நிலுவை சம்பளத்தை கேட்ட காரணத்திற்காக, தமிழர்களான வீட்டு உரிமையாளர்களினாலேயே அறைக்குள்ளேயே சங்கிலியால் கட்டிவைக்கப்பட்டு, உடம்பில் கொதிநீர் ஊற்றி சித்திரவதை செய்து செம்பனை தோட்டத்தில் வீசப்பட்ட செய்திகள் பலர் அறிந்திருக்க கூடும். தமிழ் நாட்டு தொழிலாளர்கள் சிலரை, அவர்கள் தமது கூலியை கேட்ட ஒரே காரணத்திற்காக தனது நண்பர்களை கொண்டு அடித்து துவைத்த முதலாளி, சிறிது காலத்தின் முன்னர் கோழிப்பண்ணையில் வேலை செய்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த இரு தொழிலாளர்கள் அடைத்து வைத்து சித்திரை என சம்பவங்கள் பல. இதை விட ஏனைய இந்தோனேசியர்களின் கொள்ளை முயற்சிகளில்  சிக்கி தமது அவயங்களில் வெட்டுக் காயத்துடன் நாடு திரும்பிய தமிழக தொழிலாளர்களும் உள்ளனர்.

வேலையிடம் ஒன்றில் அங்கிருந்த இயந்திர உபகரணங்களை கொள்ளையிடும் நோக்கில் நுழைந்த பாராங்கத்தி ஏந்திய இந்தோனேசியர்கள் நால்வர், அங்கிருந்த தமிழக தொழிலாளியை தாக்கியதில் வலது கையில் நான்கு விரல்களிலும் மோசமான வெட்டுக்காயம் ஏற்பட்டதுடன் கழுத்திலும் காயமடைந்தார். நஷ்டஈடு? அதைப்பற்றி யாரும் பேசவுமில்லை, அந்த தொழிலாளியும் அதை கேட்கவும் இல்லை. மலேசியாவும் வேண்டாம், வேலையும் வேண்டாம் உயிரோடு ஊர் போய் சேர்ந்தால் போதும் என வந்து ஆறு மாதத்திற்குள்ளாகவே நாடு திரும்பிவிட்டார்.

மலேசியாவில் பாதிப்புக்குள்ளான தமிழக தொழிலாளர்களில் பெரும்பாலோர் மலேசிய தமிழ் முதலாளிகளினாலேயே பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர் என்பது கொஞ்சம் வேதனையான உண்மை. பிற இன முதலாளிகளினால் தமிழக தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளான சம்பவங்கள் இருப்பினும் அவற்றுக்கு நிர்வாகத்திற்குள்ளேயே தீர்வு காணப்பட்டு இருக்கின்றன. சித்திரவதை செய்யும் அளவிற்கு மோசமான சம்பவங்கள் இடம்பெறவில்லை.

தமிழ் நாட்டில் பணம் பிடுங்கும் முகவர்களிடம் பணத்தை இழந்ததும் அல்லாமல், அவர்கள் வழங்கிய திருட்டு விசாவில் வந்து சிக்கிக் கொண்டு வாழ்வை தொலைத்துவிட்டு தவித்து நிற்கும் அப்பாவிகளும் சரி, சட்டபூர்வமாக நுழைந்து சுரண்டும் முதலாளி வர்க்கத்தின் நடவடிக்கைகளால் சட்டவிரோதமான தொழிலாளர்களாக மாறியவர்களும் சரி, இறுதியில் தடுப்பு முகாம்களிலேயே மாதக்கணக்கில் தவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றனர். இவர்களுக்கு நண்பர்களோ, உறவினர்களோ, வேறு யாராவது நலன்விரும்பிகளோ அவர்களது செலவில் பயணசீட்டு வாங்கித் தரும் பட்சத்தில் அவர்கள் விரைவில் நாடு திரும்பலாம். இல்லையெனில் மலேசிய அரசாங்கமோ, இந்திய தூதரகமோ ஏற்பாடு செய்யும் வரைக்கும் மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டியது.

பொதுவாக இவ்வாறான சம்பவங்களில் பாதிக்கப்படும் தொழிலாளர்கள் இந்திய தூதரகத்தில் இறுதியாக தஞ்சம் புகும் தருணத்திலும், அங்கும் இவர்கள் பாரபட்சமாக நடத்தப்பட்டு புறக்கணிக்கப்படுகின்றனர். பாதிக்கப்படுவது வடஇந்திய தொழிலாளர்களாக இருந்தால், அவர்களிற்கான தூதரகத்தின் அணுகுமுறை ஒரு மாதிரியாகவும், தென்னிந்திய தொழிலாளர்களுக்கான அணுகுமுறை ஒரு மாதிரியாகவும் இருப்பதாக புகார்கள் பத்திரிகையில் செய்திகளாக வந்துள்ளன. அந்நிய தொழிலாளர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்களாக இருப்பினும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பொதுவானது. இங்கே தமிழக தொழிலாளர்களை முதன்மைப்படுத்தியதன் காரணம் இந்த நாட்டில் வேலை பார்க்கும் பதினேழு இலட்சம் இந்திய தொழிலாளர்களில் பெரும்பான்மையோர் தமிழர்கள் என செய்திக் குறிப்பொன்று கூறுகின்றது.

தேவைக்கு அதிகமாகவே சட்டரீதியான, சட்டவிரோதமான அந்நிய தொழிலாளர்கள் பணியாற்றும் ஒரு நாட்டில் அந்நிய தொழிலாளர்கள் நலன் பேணும் விதிமுறைகள் கடுமையாக்கப்படவில்லை. இஷ்டம் இருந்தால் வேலை செய்யலாம், அல்லது நாடு திரும்பலாம் என இருக்கும் பட்சத்தில் கடுமையாக்கப்பட வேண்டிய அவசியம் இருக்காது. ஏனெனில் உணவகத்துறை உட்பட்ட சேவைத் துறைகளில் அந்நிய தொழிலாளர்களை ஆட்குறைப்பது பற்றியும் அந்த இடங்களுக்கு உள்நாட்டவர்களை நியமிப்பது பற்றியும் அரசதரப்பில் இருந்து செய்திகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.

___________________________________________________

கனவுகளைச் சுமந்து வரும் தொழிலாளிகளின் கண்ணீர்க் கதைகள் இங்கே ஏராளம். அடிபட்டு, காயம்பட்டு, சிறைபட்டு, இறுதியில் எப்படியாவது தாய்நாடு திரும்புவோமா என்று எண்ணுபவர்களும் அதிகம். அப்படி ஊர் திரும்பினாலும் அங்கே அவர்கள் வாங்கிய கடன் மிச்சமிருக்கும் வாழ்வை சித்திரவதை செய்யப் போதுமானது. அதனாலேயே இங்கே சட்டவிரோதமாக தங்கிக் கொண்டு கடுமுழைப்பு செய்து குறைந்த கூலியிலும் காலத்தை ஓட்டுபவர்கள் ஏராளம்.

மற்ற முதலாளிகளை விட தமிழ் முதலாளிகள்தான் தமிழனென்ற முறையில் இந்த சுரண்டல் மோசடியை அதிகம் செய்கின்றனர். தேசிய இனப்பெருமிதம் இங்கே வறியோனை வலுத்துவன் சுரண்டுவதற்கே உதவுகிறது. மலேசியாவிலிருந்து ஒரு பார்வதி அம்மாள் இந்தியா வருவதற்கு இவ்வளவு பிரச்சினை என்றால் அவரைப் போன்ற பிரபல பின்னணி இல்லாமல் மலேசியாவில் நாளைத் தள்ளும் சாமானியர்களின் கதி?

தமிழ்நாட்டு முகவர்கள், மலேசிய முதலாளிகள், மலிவான கூலியில் தொழிலாளர்களை ஏற்பாடு செய்து கட்டுமான திட்டங்களை நிறைவேற்றும் மலேசிய அரசின் கண்டு கொள்ளாமை, இந்தியத் தொழிலாளிகளின் நலனை கவலைப்படாத இந்தியத் தூதரகம் என்ற இந்த அதிகார வலைப்பின்னலில் விட்டில் பூச்சிகளாய் சிக்கி வதைபடும் தொழிலாளிகளை யார் காப்பாற்றுவார்கள்? விடை தெரியாத கேள்விகளோடு நானும் வாழ்வை ஓட்டுகிறேன். வேறு வழி?

_______________________________________________

–          பிரகாஷ், மலேசியா.

பின்குறிப்பு: வாசகர்களும் படைப்பாளிகளாக வினவில் பங்கேற்க வேண்டும், பங்கேற்பார்கள் என்ற எமது அவாவின் மற்றுமொரு அறிமுகமாக நண்பர் பிரகாஷை இங்கே பெருமையுடன் அறிமுகம் செய்கிறோம். – வினவு

_______________________________________________

vote-012

தொடர்புடைய பதிவுகள்

ப. சிதம்பரத்தின் “காவி” உறவு !!

ப.சிதம்பரம் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தோழமை என்பது பன்னாட்டு நிறுவனங்களின் நலனை பாதுகாக்கவென்றே தோன்றுகிறது.

ப.சிதம்பரத்தின் முந்தைய கால நடவடிக்கைகைள கவனித்து வருபவர்களுக்கு நாடாளுமன்ற மேலவையில் ஏப்ரல் 15ம் நாளைய விவாதத்தின் போது பா.ஜ.க.வின் பொதுச்செயலாளர் அருண் ஜேட்லி உள்து றை அமைச்சர் ப.சிதம்பரத்தின் நடவடிக்கைகளை ஆதரித்து பேசியதை பார்த்தால், வியப்பாக எதுவும் தோன்றாது. தண்டேவாடாவில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய கொரில்லா தாக்குதல் குறித்த விவாதத்தின் போது சிதம்பரம் மற்றும் பா.ஜ.க. பெரும்புள்ளிகளுக்குமிடையே உள்ள ஆர்வம் என்பது லண்டனின் வேதாந்தா வள நிறுவனத்தின் பணப்பலன் பெருக்கும் நடவடிக்கைகளின் மீது உள்ளார்ந்த ஈடுபாட்டினைச் சார்ந்தே உள்ளது.

ஜனநாயக முற்போக்கு அரசின் முதல் நிதி அமைச்சராவதற்கு முன் தினம் வரை சிதம்பரம் மேற்படி வேதாந்தா பன்னாட்டு நிறுவனத்தின் அலுவல் சாரா இயக்குனர்களில் ஒருவர் என்பதுடன் அத்தகைய கூட்டு முறையிலான நிறுவனங்களுக்கு வழக்கறிஞருமாவார். தேசிய முற்போக்கு கூட்டணி அரசின் தலைமையில் இயங்கும் போது பா.ஜ.க.தலைமை பால்கோ, ஸ்டெரிலைட் பொதுத்துறை நிறுவனங்களின் ரூ.551/50 கோடி அளவிலான பங்குகளை வேதாந்தா கப்பல் நிறுவனத்திற்கு விற்க முனைந்ததையும், அதே சமயம் பாரத ஸ்டேட் வங்கி முதலீட்டு சந்தை 49 சதவீதத்திற்கான 842.52 கோடி தொகைகளை மட்டும் கையாள அனுமதிக்கப்பட்டிருந்தது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். உலகத்தின் முதல் பொதுத்துறை பங்கு விற்பனைக்காக அமைச்சராக்கப்பட்ட பா.ஜ.க.வின் முக்கியஸ்தர் அருண்ஷோரிக்கும் இதில் பங்கு உண்டு.

ஆனால் சிதம்பரத்திற்கும், சங் பரிவார் என்றழைக்கப்படும் மதவாதிகளுக்கும் இடையே உள்ள கொள்கை ரீதியான ஒன்றுபடுதலின் வேரை பார்க்க வேண்டுமெனில் மிகுந்த ஆழத்தில் நோக்க வேண்டும். அமெரிக்காவின் மாஸ்சூசெட்ஸ்-ல் உள்ள ஹார்வர்டு பிஸினஸ் பள்ளியின் இரண்டாவது ஹரிஷ் சி.மகிந்த்ரா நினைவு சொற்பொழிவில் முன்னாளைய நிதி அமைச்சர் சில குறிப்பிடத்தகுந்த, கூர்ந்து கவனித்தால் எச்சரிக்கை கொள்ளத்தக்க கருத்துக்களை வெளியிட்டார்.

நேரு காலத்தை வெளிப்படையாக தாக்கிய பின் இவ்வாறு கூறுகிறார் “இந்திய சுதந்திரத்திற்கு பிறகு 3 பத்தாண்டுகளாக பொருளாதார முன்னேற்றத்திற்காக அரசு சார் பொருளாதார மாதிரி பின்பற்றப்படுகிறது” அரசே பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லும் நிலையில் உலக பொருளாதார சூழலில் இருந்து விலகியே இருந்தது. அந்த 30 ஆண்டுகளில் இந்தியாவின் உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி சதவீதம் சராசரியாக 3.5 சதவீதமாகத்தான் இருந்தது. நான் அந்த வருடங்களை “இழப்பு” பத்தாண்டுகள் என்றே சொல்வேன் என்றார்.

சங்பரிவார் கொள்கை நோக்கமாக பொதுத்துறை கூடாது என்பதை பிரதிபலிக்கும் விதமாகவே இருந்தது. சிதம்பரம் உலக வங்கி மற்றும் சர்வதேச கண்காணிப்பு நிதியகத்தின் நடவடிக்கைகளை உணர்ச்சியுடன் ஆதரி்க்கும் நபர் என்பதால் 1956ம் ஆண்டின் இரண்டாவது தொழிற் கொள்கை தீர்மானத்தையும், இரண்டாவது ஐந்தாண்டு (1956-61) திட்டத்தையும் கிள்ளியெறியும் மறைமுக திட்டம் வைத்திருந்தார்.

ஆனால் சிதம்பரம் மட்டுமல்ல, பிரதமர் மன்மோகன்சிங் கூட 1938ம் ஆண்டு நேரு தலைமையேற்ற திட்டக்குழுவின் தீர்மானத்திற்கு பதிலாக, 1944ம் ஆண்டு சுபாஷ் சந்திர போஸ் தலைமையிலான காங்கிரஸ் நிறைவேற்றிய பொருளாதார தீர்மானத்தையே முன்வைக்கிறார். 2005ம் ஆண்டு நடைபெற்ற ஜே.ஆர்.டி.டாடாவின் பிறந்தநாள் நூற்றாண்டு கொண்டாட்டத்தின் துவக்கவுரையில் கூட பிரதமர் ஜேஆர்டி முக்கிய பங்களிப்பு உள்ள பாம்பே திட்டத்தின் மீதான தனது கவர்ச்சியை வெளிப்படுத்தினார்.

காங்கிரஸின் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங், சிதம்பரத்தின் “மாவோயிஸ்ட் பிரச்சனையை பழங்குடி மக்களைப் பற்றி கருத்தில் கொள்ளாது வெறும் சட்டம், ஒழுங்குசார் பிரச்சினையாக அணுகியவிதம்” தவறென ஒரு செய்தி ஊடகம் மூலம் கடுமையாக சாடிய போது, அருண்ஜேட்லி சினத்துடன் மறுமொழியாக “நக்சலிசத்தை ஒழித்துக்கட்ட நமக்கு வலுவான தலைமை, உறுதியான நெஞ்சம் மற்றும் நிலைநிறுத்தும் அதிகாரம் தேவை என்பதோடு நாங்கள் மாண்புமிகு உள்துறை அமைச்சரின் நடவடிக்கையை முற்றாக ஆதரிக்கிறோம்” என்கிறார்.

அவர் தன் வாதத்தை இவ்வாறு முன்வைக்கிறார், “தனது உள்துறை அமைச்சரை கீழேதள்ளி வீழ்த்த முனையும் அரசை நாம் விரும்பவில்லை, அரசு பிளவுபடுவதையும் நாம் விரும்பவில்லை, மாவோயிஸத்திற்கு எதிரான போர் தளர்த்தப்படவேண்டுமென இந்த மாண்புமிகு அவையின் பாதியை நிரப்பிக் கொண்டிருக்கும் உறுப்பினர்களின் கருத்துக்களையும் நாம் விரும்பவில்லை”

இருப்பினும் சிதம்பரம் சங் பரிவாரால் நகர்த்தப்படும் சிறிய காய் அல்ல. அவருடைய உள்ளார்ந்த ஈடுபாடு என்பது வேதாந்தா மற்றும் அது போன்ற பெரிய சுரங்க தொழிலின் மீதுதான். அவர் முக்கியத்துவமாக தெரிவிப்பது “இந்தியாவின் கனிம வளங்கள் என்பது நிலக்கரி – உலகின் நான்காவது இருப்பு உள்ள தேசம், இரும்புதாது, மாங்கனீசு, மைக்கா, பாக்சைட், டைட்டானியம் தாது, குரோமைட், வைரம், இயற்கை வாயு, எண்ணைவளம் மற்றும் அரிய கற்கள். பொதுக் கருத்து நமக்கு சொல்வதெல்லாம் இவற்றையெல்லாம் திறனுடன் விரைவாகவும், தோண்டி எடுக்க வேண்டுமேன்பதே”

இப்பொழுது காங்கிரஸ் அல்லது அதன் தலைவர் சோனியா காந்தி சிதம்பரம் பற்றி திக் விஜய் சிங் கூறிய கருத்துக்களின் அடிப்படையில் உள்துறை அமைச்சரைப் பற்றி கணிப்பாய்வு மேற்கொள்ள வேண்டும். சிதம்பரத்தின் முன் வரலாறுகள் சோனியாவிற்கு தெரியும். தற்செயலாக ஆர்.பொத்தாக் என்பவர் எழுதிய “வேதாந்தாவின் கோடிகள்” புலனாய்வு பதிவில் ஸ்டெ ரிலைட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1000 சதமாக உயர்த்தி மதிப்பிட்டபோது 2003ம் ஆண்டில் வேதாந்தா நிறுவனத்திடமிருந்து சிதம்பரம் 20000 டாலர்கள் பெற்றார் என குறிப்பிடுகிறார்.

2006ல் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இது மிகுந்த சூடான விவாதப் பொருளாக இருந்தது. சமாஜ் வாதி, தெலுங்குதேசம், மற்றும் அ.தி.மு.க பாராளுமன்ற உறுப்பினர்கள் வேதாந்தா நிறுவனத்தால் சந்தையில் விடப்பட்ட நிதியின் நம்பகத்தன்மை குறித்தும், பா.ஜ.க. மற்றும் காங்கிரசுக்கும், அந்த நிறுவனம் நிதியளித்திருப்பது பற்றி காரசார விவாதங்கள் நடைபெற்ற போதிலும் சிதம்பரம் தனது நிலையிலிருந்து எந்தவித பாதிப்பின்றிருந்தார்.

கனிம வளங்கள் தோண்டப்பட்டு அங்கு பூகோள சூழல் தவிர்க்க முடியாத நிலை அடையும் முன், இன்றோ, நாளையோ சோனியா இதற்கு பதில் சொல்லியாக வேண்டும். ஆனால் உள்துறை அமைச்சர் புலம் பெயர்ந்து அவதியுறப்போகும் பழங்குடியினரைப்பற்றி சிறிதும் கவலையுறாமல், அவர்கள் நிலத்திலிருந்து கனிம வளங்கள் எடுத்து மிகப்பெரிய உலோக சாம்ராஜ்யம் உருவாக்கத் துடிக்கும் பெரும் நிறுவனங்களைப் பற்றித்தான் அதிக கவலை கொண்டுள்ளார் என்றே தெரிகிறது.

__________________________________________________________

நன்றி: திரு சங்கர்ராய், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 01/05/2010

தமிழில் சித்திரகுப்தன்.

__________________________________________________________

தி.மு.கவில் குஷ்புவா, குஷ்புவுக்கான தி.மு.கவா?

77


vote-012எதோ ஒரு பெந்தகோஸ்தே சுவரொட்டி! உற்றுப் பார்த்தால் சுவிஷேகராக நம்ம குமரி முத்து. அதாங்க ஒன்றறைப் பார்வையுடன் WinAmp தீம் மீயுசிக் போல சிரிப்பாரே, மறந்துவிட்டீர்களா? தி.மு.கவின் பிரச்சார பேச்சாளராகவும் குமுரி முத்துவை அறிந்திருக்கிறேன். தகவல் பிழை என்றால் லக்கிலுக் திருத்துவார். அவர் வேறு எதையும் தி.மு.கவில் திருத்த முடியாது என்பது வேறு விசயம்.

சினிமாவில் பிரபலமாகி சுவிஷேகர்களாக ஏவி.எம்.ராஜன், தீபா, நக்மா இன்னும் நமக்கு தெரியாமல் பலர் இருக்கலாம். சினிமா உலகிலிருந்து கர்த்தரின் ராஜ்ஜியத்திற்கு அவர்கள் இடம்பெயர்வது ஒரு சுவாரசியமான ஆய்வுக்குரியது. அதை விடுத்தால் சினிமா பிரபலங்கள் சந்தை ஓய்ந்ததும் இப்போது தொலைக்காட்சிக்கு ஒதுங்குகிறார்கள். முன்பு அரசியலுக்கும் ஒதுங்கினார்கள்.

சென்ற தேர்தலில் சிம்ரன், கோவை சரளா, முரளி, செந்தில் என்று அ.தி.மு.க களை கட்டியபோது தியேட்டரில் சினிமா, பத்திரிகையில் சினிமா, தொலைக்காட்சியில் சினிமா, இப்போது அரசியல் கூட்டத்திலுமா என்று சிலர் அதிர்ந்திருக்கலாம். பலரும் இரசித்திருப்பார்கள் – அதிலும் சிம்ரன் ஸ்டைலாக தமிலில் இரட்டை லீஃப்புக்கு ஓட்டு கேட்டது நாகப்பட்டினம் சுனாமி காட்சிகளை விட தமிழ் மக்களிடம் பசுமையாய் பதிந்திருக்கும்!

இருந்தாலும் தி.மு.கவில் இருக்கும் சினிமா பிரபலங்களை, நெப்போலியன், சந்திரசேகர் போன்றவர்களை அ.தி.மு.க போலவே மதிப்பிட முடியாது. அவர்களிடம் கொஞ்சமாவது திராவிட பூண்டு வாசனை அடிக்கும். குமரி முத்துவும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். தீப்பொறி அ.தி.மு.கவுக்கு கட்சி மாறியது ஒரு ரகமென்றாலும் குமரி முத்து இப்படி ‘பகுத்தறிவு’ இயக்கத்திலிருந்து சம்மர்சால்ட் அடித்து அய்யோ பாவம் பெந்தகோஸ்தே அழுகைக்கு எப்படி போனார்?

யோசித்துப் பார்க்கையில் குஷ்பு இருக்குமிடத்தில் குமரிமுத்துவுக்கு என்ன வேலையிருந்திருக்கும்? சாமானியர் குமரி முத்துவின் கட்சியாய் இருந்த தி.மு.க இப்போது சீமான்கள்-சீமாட்டிகளின் கட்சியாக நிலைபெற்றுவிட்டதுதான் காரணமோ?
___________________________________________________________

குஷ்பு தி.மு.கவில் சேர்வது உறுதியானதும் அறிவாலயம் அல்லோகலப்பட்டது. தி.மு.கவின் உயர்மட்டக்குழு சந்திக்கும் முக்கியமான இடம் காமராக்களின் மின்னும் புனித ஒளி பட்டுத்தெறிப்பதற்கு ஏற்ப பயபக்தியுடன் தயார் செய்யப்பட்டது. எல்லா அமைச்சர்களும், பகுதித் தளபதிகளும் வெள்ளை வெளேர் உடைகளுடன் கடமையுணர்வோடு ஆஜர்.

நெற்றிப் பொட்டு, மனைவிமார்களின் சுமங்கலிப் பொட்டு, தாலி, பட்டுச்சேலை சகிதம் அம்மா அக்மார்க் தமிழ்பெண்ணாக வருகிறார். அய்யாவுக்கும், தளபதிக்கும் சால்வை போர்த்துகிறார். தளபதி தி.மு.க உறுப்பினர் படிவத்தை நிரப்பி அம்மையாரின் கையெழுத்தை கோருகிறார். அம்மா எழுத்து கோலுக்காக நிமிர்ந்த போது தளபதி தனது எழுத்தாணியையே தருகிறார். உறுப்பினர் கட்டணத்திற்கான தொகையையும் தளபதியே சட்டைப் பையிலிருந்து எடுத்து தருகிறார். அன்பழகன், துரை.முருகன், ஸ்டாலின், கருணாநிதிக்கு அருகே அம்மாவும் உயர்மட்டக்குழு ஆலோசகர் போல அமர்ந்திருக்க ஒளிப்படக் கருவியின் மின்னல்கள் வெட்ட, ஊடகங்களில் செய்திகள் இடியாய் ஒலிக்கின்றன.

தி.மு.கவில் குஷ்புவா, குஷ்புவுக்கான தி.மு.கவா?
____________________________________________

குஷ்புவின் திருமணத்திற்கு முந்தைய பாதுகாப்பான உறவு, தமிழச்சிகளின் கற்பு, பா.ம.க, வி.சிக்களின் எதிர்ப்பு, 23 வழக்குகள், உச்சநீதிமன்ற தீர்ப்பு எல்லாம் எல்லாரும் அறிந்திருப்பீர்கள். அந்தியூர் விஜயாவை விட குஷ்புவின் ‘தியாகம்’ ததும்பும் போராட்டம் தமிழ் மனங்களுக்கு முக்கியமானதில்லையா? இத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணத்தை குஷ்புவும் இழக்கத் தயாரில்லை.

அரசியலென்றால் சாக்கடை என்ற ஆனந்த விகடனது நடுத்தர வர்க்க சலம்பல்கள் மேல்தட்டுக்கு பொருந்தாது. தங்களது தொழிலுக்கு பாதுகாப்பாகவோ, தொழிலை விரிவுபடுத்தவோ, அம்பானி, மல்லையா, இராமசாமி, அமிதப், வினோத் கன்னா, சஞ்சய் தத், ஹேமமாலினி போன்ற முதலாளிகள், நட்சத்திரங்களெல்லாம் எம்.பிக்களாகவோ இல்லை அரசியல் கட்சிகளின் லாபி பிரச்சார்களாகவோ பவனி வரும்போது, கோவில் கட்டப்பட்ட நாட்டில் இலட்சகணக்கான இரசிகர்களைக் கொண்ட குஷ்பு, சொந்தப்படம் எடுக்கும் வண்ணம் ஆளாகிவிட்டவர், இல்லத்தரசிகளை ஜாக்பாக்ட் அடிக்க வைத்தவர் இந்த பொன்னாண தருணத்தை இழப்பாரா என்ன?

இந்தியா டுடே பத்திரிகை திருமணத்துக்கு முந்தைய பாதுகாப்பான உறவு குறித்து, குஷ்புவை விருந்தினர் பக்கமாக எழுதச் சொன்னதற்கு என்ன காரணம்? இந்தியா டுடே கடந்த இருபதாண்டுகளில் வளர்ந்துவிட்ட மேல்தட்டு நடுத்தர வர்க்கத்தின் அபிலாஷைகளை அப்பட்டமான பிரச்சாரமாக, வாய்ப்புகளாக, அறிமுகங்களாக வாரம் தோறும் பளபளப்பு தாளில் வடிக்கின்ற பத்திரிகை. உலகமயமாக்கத்தால் ஆதாயம் அடைந்த பிரிவினருக்கு இந்தியாவின் சமூக அமைப்பு எண்ணிறந்த வாய்ப்புளை உருவாக்கி கொடுத்திருப்பதை பறைசாற்றுவதே அதன் நோக்கம். அப்படியே அதைவைத்து நுகர்வு கலாச்சாரத்தை விற்பனை செய்யும் முதலாளிகளின் விளம்பரங்களை வைத்து கல்லாவும் கட்டும்.

இந்த திட்டத்திற்கு உட்பட்டே செக்ஸ் சர்வேக்களும் விதவிதமான ஆணுறை விளம்பரங்களுக்கிடையே கொட்டப்படுகின்றன. எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வின் பின்னே ஆணுறைகளில் விற்பனையும் இருக்கிறது, அதை சற்றே பயத்துடன் அணுகும் பெண் மனங்களும் இருக்கிறது. விற்பனைக்காக வாடிக்கையாளரின் மனங்களைத் தயார் செய்யும் பணிதான் இந்தியா டுடேயின் ஊடக தந்திரம். அப்படித்தான் அங்கே குஷ்பு வருகிறார்.

குஷ்புவே திருமணத்திற்கு முந்தைய உறவை பாதுகாப்பாக பின்பற்ற சொல்லிவிட்டார் என்றால் அது ஆணுறைகளின் விற்பனையை தமிழ் சென்டிமெண்ட்டை தாண்டி அதிகரித்து விடதா என்ன? இந்தப் பிரச்சினையில் சீமாட்டிகளுக்கே உரிய முறுக்கு குஷ்புவிடம் வெளிப்பட்டாலும் அதை வைத்து தான் ஒரு முன்னுதாரணமான ஆளுமையாக முன்னிறுத்தப்படுவோம் என்பதும் அவருக்கு சற்று தாமதமாக கூட தெரியாமலா போயிருக்கும்? சில தற்செயலான விசயங்களுக்கு பின்னே திட்டமிட்ட உத்தி அவசியமாக தோன்றலாம் என்பது அரசியலில் சகஜம்.

தமிழ் கற்புக்கரசர்களின் கூச்சலைத் தவிர்த்து தமிழகம் ஒன்றும் அதனால் அதிர்ந்துவிடவில்லை. குஷ்புவின் தொலைக்காட்சித் தொடர்கள் எல்லாம் இந்த விளம்பரத்தை வைத்து சூடு பிடித்தன. ராதிகா போல குஷ்புவும் தமிழ் இல்லத்தரசிகளின் நேசத்திற்குரிய நட்சத்திரமாக நிலைபெற்றார். தொழிலிலும் ராதிகா அளவுக்கு இல்லையென்றாலும் ஒரு தொழில் முனைவராக ஆளானார். பொருத்தமாக அவரது இயக்குநர் கணவரும் இப்போது நடிகராக நிலைபெற்றுவிட்டார்.

மேல்தட்டினரது தொழிலும், அதற்கேற்ற பண்பாடு குறித்த சிந்தனைகளும் கட்டுப்பாடாய் சேர்ந்தே இயங்குகின்றன. ஒன்றின் தேவையை பிறிதொன்று நிறைவு செய்கின்றது. குஷ்புவின் கற்பு விவகாரத்தில் இந்த உள் கூட்டணியை பலரும் காணாமல் அதை வெறும் பாலியல் சுதந்திரமாகவோ, இல்லை கற்பாகவோ மட்டும் பார்க்கிறார்கள். ஆனால் குஷ்பு அதைத் தாண்டி அந்த உள்கூட்டணியின் நோக்கில் பார்த்திருக்கிறார் என்பது இப்போது தெரிகிறது.
________________________________________________

ஒரு சீமாட்டி கவிதை எழுதினாலும், கற்பு குறித்து பயமுறுத்தினாலும் அவர்களை மாதர் குல மாணிக்கங்களாய் சம்பளம் வாங்காமால் இலவசமாய் பாராட்ட தமிழகத்தில் சில பின்நவீன பண்டிதர்கள் உண்டு. தங்கள் வாழ்க்கையில் கலகத்தை சொற்களாய் மட்டும் பருகியிருப்பவர்களுக்கு இத்தகைய ஜோடனைகள் ஆசுவாசப்படுத்துகின்றன. ஆனால் இவையெல்லாம் இந்திய முதலாளிகளின் அஜெண்டாவில் விற்பனைத் தந்திரங்களாக மிகச் சாதாரணமாக இருக்கின்றன என்பதோ, அதன் விற்பனையாளர்களாக உச்சநீதிமன்றம், காங்கிரசு, இந்தியாடுடே, தி.மு.க இருக்கின்றன என்பதோ இந்தக் கலக கடுகுமணிகளுக்கு புரிவதில்லை.

உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்ததுமே தனியாளாய் தான் நடத்திய நெடும் சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் பரிசு என்பதாய் குஷ்பு வீரவசனம் பேசிய போது “இனி அரசியல்தான், காங்கிரசில் சேருவேன்” என்பதை பக்காவான டைமிங்கில் நெத்தியடியாய் அடித்தார். கட்சி, அரசியல், பிரபலம், சர்ச்சை எல்லாம் சேர்ந்து டெல்லி, பாராளுமன்ற உறுப்பினர், முடிந்தால் மந்திரி என்பதெல்லாம் அவருக்கு அவ்வ்வளவு கஷ்டமான விசயங்களில்லையே?

ஆனால் திடீரென்று தி.மு.கவை எப்படி தேர்ந்தெடுத்தார்? அல்லது தி.மு.கதான் காங்கிரசாய் மாறியது எப்படி?
__________________________________________________

எப்படிப் பார்த்தாலும் இது சரியான பொருத்தமான முடிவுதான். இதன் சாமர்த்தியம் தி.மு.கவிற்கா, இல்லை குஷ்புவுக்கா இல்லை இருவருக்குமே கூட இருக்கலாம்.

“உலக அளவில் சிந்தித்து உள்ளூர் மணத்துடன் விற்கவேண்டும்” என்று சொல்வார்களே அதற்கு பொருத்தமான அரசியல் எடுத்துக்காட்டாய் குஷ்பு தி.மு.கவில் இணைந்ததை சொல்லலாம்.

காங்கிரசில் இணைவேன் என்று அவர் சொன்னது தமிழகத்திற்கு அவ்வளவு எடுப்பாக பொருந்தாது. ஒருவேளை அவர் இந்தி நட்சத்திரமாகி, டெல்லியில் வாழ்ந்து, கற்பு மேட்டருக்காக அவரை லல்லு, மாயாவதி எதிர்த்திருந்தால் காங்கிரசில் சேருவது பொருத்தமாக இருந்திருக்கும். தமிழகத்தில் காங்கிரசு ஒரு கட்சியென்றே கூற முடியாது. பல ரோட்டரி, லயன் கிளப் கனவான்கள் ஆளுக்கொரு தொழிலையும், ஒரு கோஷ்டியையும் வைத்து கருணாநிதியின் டெல்லி வருமானங்களுக்காக காட்டும் கருணையில், இங்கே ஒரு கட்சியை சத்தியமூர்த்தி பவனை தலைமையிடமாகக் கொண்டு நடத்தி வருகிறார்கள்.

ஆக தமிழக காங்கிரசின் தலைமைகள், கோஷ்டிகள், வாரிசுகள் எல்லாம் ஹவுஸ்ஃபுல்லான நிலையில் குஷ்பு காங்கிரசை தெரிவு செய்திருந்தால் அவரது எதிர்காலக் கனவுகளுக்கு வாய்ப்பிருந்திருக்காது. இந்த இடத்தில்தான் தி.மு.கவை அவர் தெரிவு செய்தது ஒரு நிர்ப்பந்தம் என்று சிலர் நினைக்கலாம். இல்லை அது சாமர்த்தியமான தெரிவு என்கிறோம்.

காங்கிரசு ஒரு தரகு முதலாளித்துவக் கட்சி அல்லது இந்திய முதலாளிகளின் பிரதிநிதியாய் செயல்படும் கட்சி. பா.ஜ.கவும் அப்படித்தான். என்ன இங்கு தீவிர இந்துத்துவம் என்றால் அங்கே கொஞ்சம் மிதவாக இந்துத்வம். மற்றபடி இருவருமே முதலாளிகளின் விருப்பத்திற்குரிய பிரதிநிதிகள்தான்.

தி.மு.க, அ.தி.மு.க போன்ற பிராந்திய கட்சிகள் இப்படி அகில இந்திய அளவில் செயல்படும் முதலாளிகளின் பிரதிநிதிகளாக செயல்படுமா என்ற கேள்வி இப்போது இல்லை. வள்ளலார், ஆர்.எஸ்.எஸ், ஜெயமோகன் வாசகர் என்று முகம் காட்டும் தரகு முதலாளியான பொள்ளாச்சி மகாலிங்கம் அமெரிக்க கோக்கின் முகவராக இருக்கும் போது, இந்த கட்சிகள்தான் தமிழகத்தில் தமது அடியாட்களாக அரசியல் செய்வார்கள் என்பதை முதலாளிகள் உணர்ந்தே இருக்கிறார்கள். சரத்குமார் அ.தி.மு.கவில் சேர்வதற்கு விஜய் மல்லையா தனி விமானம் அனுப்புவதும், தொலைத்தொடர்பு அமைச்சர் ராஜா தனியார் தொலைத்தொடர்பு முதலாளிகளின் ஏவலாளாக பணிபுரிவதும் எதைக்காட்டுகிறது?

மேலதிகமாக இந்த இருகட்சிகளின் தலைமையுமே தரகு முதலாளிகளாக உயர்ந்து விட்டனர். தொலைக்காட்சிகள், மதுபான ஆலைகள், தெற்காசிய பணக்காரர்களின் பட்டியல் என்று ஆளாகிவிட்ட நிலையில் இனியும் தி.மு.கவை பாமரர்களின் கட்சி என்று அழைப்பதை அக்மார்க் தி.மு.க தொண்டன் கூட ஒத்துக் கொள்ளமாட்டான். அ.தி.மு.க தொண்டனும் அப்படித்தான். காங்கிரசின் பொருளாதாரக் கொள்கைகளில் கடுகளவு கூட தி.மு.கவிற்கு மாறுபாடில்லை. கனிமொழி தனது கன்னி பாராளுமன்ற பேச்சைக் கூட இந்திய அமெரிக்க அணுசக்தி அடிமை ஒப்பந்தத்தை பாராட்டுவதற்குத்தான் அர்ப்பணித்தார். மதுரை ரவுடி அழகிரி இன்று இந்திய அரசின் அமைச்சராக ஆஸ்திரேலியா, அமெரிக்காவிற்கு பறக்கிறார். சென்னை வரும் பன்னாட்டு முதலாளிகளை முதல் ஆளாய் ஸ்டாலின் வரவேற்கிறார். ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டு நிறைவேறுகின்றன.

விலைவாசி உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு போன்ற பிரச்சினைகளுக்காக போலிக் கம்யூனிஸ்டுகள் காட்டும் வறண்டு போன அழுகை எதிர்ப்புகள் கூட கருணாநிதியிடமிருந்து வருவதில்லை. தமிழ், தமிழினம், செம்மொழி மாநாடு, புதிய சட்டப்பேரவை வளாகம் என்று லோக்கல் ஃப்ளேவரில் தி.மு.க முதலாளிகளின் பாதந்தாங்கியாக மாறிவிட்டது. ஆனானப்பட்ட மவுண்ரோடு மகாவிஷ்ணு கூட இன்று கருணாநிதியன் புகழ்பாடவேண்டுமென்றால் அது வர்க்க நலனின்றி சாத்தியமில்லை.

பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடையற்ற மின்சாரம், மக்களுக்கு தடையற்ற மின்தடை என்று இருந்தாலும் ஊடகங்களில் இலவச தொலைக்காட்சிதான் சாதனையாக வலம் வருகிறது. கிட்டத்தட்ட எல்லா பத்திரிகைகளுமே இன்று தி.மு.கவின் கொ.ப.செயலாளர்களாக இருப்பதும் தி.மு.க முதலாளிகளின் கட்சியாக மாறிவிட்டதும் வேறு வேறல்ல.

இன்று தி.மு.கவின் கூட்டங்கள் ஒட்டுமொத்தமாக கான்ட்ராக்ட்டுக்கு விடப்பட்டு நடத்தப்படுகின்றன. தோரணம் கட்டுவதோ, சுவரொட்டி ஒட்டுவதோ, பிளக்ஸ் பேனரை நிறுத்துவதோ இன்று தி.மு.க தொண்டன் செய்யும் வேலையில்லை. மேல்மட்டம் தரகு முதலாளிகளாக உருவெடுத்த மாதிரி அடுத்த தலைமை லோக்கல் முதலாளிகளாக மாறிவிட்டனர். சுயநிதிக் கல்லூரி இல்லாத தி.மு.க தலைவரைப் பார்ப்பது கடினம்.

தி.மு.கவின் கவுன்சிலர் கூட இன்று ஸ்கார்ப்பியோவிற்கு கம்மியாக பவனி வருவதில்லை. வட்டத்தலைவர் பதவி கூட பெரும் செலவழிப்புகளுடன் அடையும் ஒன்றாக மாறிவிட்டது. சலூனில் முரசொலி படித்து விவாதிக்கும் தொண்டனை இன்று வலைவீசித் தேடினாலும் காணமுடியாது. ரியல் எஸ்டேட் தரகனாக வேலை பார்த்துவிட்டு சன் டி.வியோ, கலைஞர் டி.வியோ பார்ப்பவன்தான் இன்று உண்மையான தி.மு.க தொண்டன்.

இப்படி காங்கிரசு போல தி.மு.கவும் மாறிவிட்ட நிலையில் தமிழகத்தில் முதலாளிகளுக்கான தீர்மனகரமான கட்சியாய் ஆதிக்கம் செய்யும் நிலையில் குஷ்பு எடுத்திருக்கும் முடிவை ஒரு நிர்ப்பந்தம் என்று பரிதாபப்படுபவர்கள் அறிவிலிகளே.

அடுத்து இந்தியாடுடேயின் நாயகியான குஷ்புவை தி.மு.கவும் பயன்படுத்தவேண்டியிருக்கிறது என்பது அதன் வர்க்க சாய்வுக்கு அடுத்த எடுத்துக்காட்டாகும். என்ஜியனரிங், மருத்துவம், அமெரிக்கா, பங்குச்சந்தை என்று மாறிவிட்ட மேல்தட்டு நடுத்தரவர்க்கமும், இந்த வாழ்வை எட்ட முடியாவிட்டாலும் இதையே முன்னுதாரணமாக கொண்டு வாழும் நடுத்தர வர்க்கமும் இன்று தமிழகத்தின் முக்கிய பகுதி மக்களாகி விட்டனர். இவர்களது உலகத்தை ஊதிப்பெருக்கும் இந்தியாடுடே போல, தி.மு.கவும் அதைச் செய்யவேண்டியிருக்கிறது.

இந்த வர்க்கத்திற்கு இனியும் தமிழ், தமிழன் என்ற உணர்ச்சிகரமான ஆனால் என்றோ உணர்ச்சியை இழந்துவிட்ட மனோகரா டைப் வசனங்களெல்லாம் பலனில்லை. சொந்த வாழ்க்கை முன்னேற்றத்தை மட்டுமே தாரக மந்திரமாக வைத்து வாழும் மக்களிடையே அப்துல் கலாம் மட்டுமல்ல, குஷ்புவும் தேவைப்படுகிறார். அதனால்தால் குஷ்பு துணிந்து விடுதலை சிறுத்தைகளையும், பா.ம.கவையும் தி.மு.கவில் சேர்ந்த பிறகு கேலிசெய்கிறார்.

தான் ஒரு தமிழ்ப் பெண்ணாகவே வாழ்கிறேன் என்று அவர் சொல்வதெல்லாம் பிரச்சினையல்ல. அவையெல்லாம் தி.மு.க என்ற உள்ளூர் மணத்தின் பொருட்டு ஏதாவது சொல்ல வேண்டியிருக்கிறது என்பதே. ஆனால் அவர் கூறிய “பாதுகாப்பான உறவு குறித்து தனது கருத்தை மாற்றவில்லை” என்பதும், “தி.மு.கதான் தனக்கு கருத்துச்சுதந்திரம் கொடுக்கக்கூடிய ஒரு கட்சி” என்பதும்தான் முக்கியமான விடயங்கள். கருணாநிதியும், கனிமொழியும் கூட சங்க கால கள்ள காதல் குறித்த தமிழர்களது மரபை குஷ்புவுக்காக மீள் நினைவு செய்கிறார்கள். குஷ்புவின் கருத்துரிமையும், தி.மு.கவின் புதிய வர்க்க சேர்க்கைகளும் இப்படி பரஸ்பரம் கச்சிதமாகப் பொருந்துகின்றன. காங்கிரசுக் கட்சியின் முதலாளித்துவ தாராளவாத ஜனநாயகம் என்ற பண்பாடு திராவிடக் கட்சியான தி.மு.கவிற்கும் உண்டு என்றால் அது ஒரு பெரிய மாற்றம் இல்லையா?

இப்போது சொல்லுங்கள்!

தி.மு.கவில் குஷ்புவா, தி.மு.கவுக்காக குஷ்புவா?

____________________________

மெல் கிப்சனின் அபோகலிப்டோ பொய்யும், மாயா-இன்கா நாகரிகத்தின் உண்மை வரலாறும்!

29

 

இரத்தத்தால் வரையப்பட்ட லத்தீன் அமெரிக்கா பகுதி 2

vote-012பிரபல ஹாலிவூட் நடிகர்-இயக்குனர் மெல்கிப்சனின் “அபோகலிப்டோ”(Apocalypto) திரைப்படம், சில வருடங்களுக்கு முன்னர் உலகத் திரையரங்குகளில் சக்கை போடு போட்டது. மத்திய அமெரிக்காவில் ஸ்பானியர்கள் வருவதற்கு முன்னர் நடந்த சம்பவங்களைக் காட்டுவதாக அந்தப் படம் அமைந்திருந்தது. பண்டைய அமெரிக்க நாகரீகம் குறித்த மக்களின் அறியாமையை மூலதனமாகக் கொண்டு, திரைப்படம் தயாரிக்கப் பட்டிருந்தது. “அழிவின் விளிம்பில் இருந்த மாயா சாம்ராஜ்யத்தை ஆண்டவர்கள் கொடூரமான மனம் கொண்டவர்கள். பிற இன மக்களின் கிராமங்களை சூறையாடி, அப்பாவிகளை அடிமைகளாக பிடித்துச் சென்று தமது தெய்வங்களுக்கு நரபலி கொடுத்தார்கள். திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் (ஸ்பானிய) கிறிஸ்தவர்கள் வந்திறங்குகின்றனர். அப்போதிருந்து மாயா காட்டுமிராண்டிகளின் சாம்ராஜ்யம் அஸ்தமித்தது.” இது தான் மெல்கிப்சன் என்ற கத்தோலிக்க மத அடிப்படைவாதி சொல்லும் சேதி.

இன்றைய குவாத்தமாலாவிலும், மெக்சிகோவிலும் வாழ்ந்த மாயாக்கள் உயர்ந்த நாகரீகத்தைக் கொண்டிருந்தனர். அவர்கள் மொழிக்கென எழுத்து வடிவம் இருந்தது. கற்றறிந்தோர் குழாமான மதகுருக்கள் பருவநிலை மாற்றங்களை துல்லியமாக கணித்து வைத்தனர். அந்தக் கணிப்புகள் விவசாயிகளுக்கு பெரிதும் உதவியது. நாம் இன்று பயன்படுத்தும் நாட்காட்டி தோன்றுவதற்கு பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே, மாயாக்கள் 365 நாட்களைக் கொண்ட வருடத்தை கணித்திருந்தனர். அது மட்டுமல்ல, கணிதத்தில் பூஜ்ஜியத்தின் பாவனையும் அறிந்து வைத்திருந்தனர். அத்தகைய அரிய பொக்கிஷங்கள் யாவும், பின்னர் வந்த கிறிஸ்தவ மதவெறியர்களால் அழிக்கப்பட்டன. அவர்களைப் பொறுத்தவரை, “பைபிளுக்கு அப்பால் உலகில் எந்த நாகரீகமும் இருக்கவில்லை. நாளைய தலைமுறை அதைப்பற்றி எல்லாம் அறிந்து வைத்திருக்கக் கூடாது.” அதைத்தான் மெல்கிப்சனின் அப்போகலிப்டோவும் எதிர்பார்க்கிறது.

உலகின் பிற சாம்ராஜ்யவாதிகளைப் போல, மாயா இனத்தவர்களும் அயலில் இருந்த பிரதேசங்களை ஆக்கிரமித்து அடக்கி ஆண்டதை மறுப்பதற்கில்லை. மாயாக்களின் கோயில்களில் நரபலி கொடுக்கப்பட்டதுமுண்டு. இருப்பினும் மெல்கிப்சன் சித்தரித்ததைப்   போல நரபலி கொடுப்பது ஒரு “தேசிய விளையாட்டுப் போட்டியாக” இருக்கவில்லை. அதே நேரம் சினிமாவில் வருவதைப் போல, “ஆயிரக்கணக்கான உடல்களைப் புதைத்த புதைகுழி” இருந்ததற்கான ஆதாரம் இல்லை. காலனிய காலத்தில் இருந்து தொடரும் பூர்வீக மக்களின் இனவழிப்பை மறைப்பதற்கு மெல்கிப்சனின் அப்போகலிப்டோ என்ற அரசியல் பிரச்சாரப் படம் பாடுபடுகின்றது. வரலாற்றைத் திரிபுபடுத்தி, பொழுதுபோக்கு என்ற பெயரில் ஏகாதிபத்திய அரசியலைத் திணிக்கும் ஆபத்தான காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அமெரிக்காவில் ஸ்பானிய வெள்ளையர்கள் காலடி வைத்த பொழுது, பூர்வீக மக்கள் அவர்களை கடவுளின் தூதர்களாக கருதியதாக சரித்திரத்தில் எழுதப்பட்டுள்ளது. ஓரிறைக் கோட்பாட்டைக் கொண்ட கிறிஸ்தவ மதத்தின் கோணத்தில் இருந்து இதைப் பார்ப்பது தவறு. இன்றைய மெக்சிகோவில் அமைந்திருந்த அஸ்டெக் அரசவையில் நடந்த சம்பவம் ஒன்றை அடிப்படையாக வைத்தே அது எழுதப்பட்டது. அஸ்டெக் ராஜ்யத்தின் தலைநகரம் டேனோச்டிட்லான் (Tenochtitlan ) அன்றைய உலகின் பெரிய நகரங்களில் ஒன்றாக இருந்தது. ஒரு லட்சம் மக்கட்தொகையைக் கொண்ட நகரத்தில் அரண்மனை ஜோதிடர்களின் ஜோசியம் அமைதியைக் குலைத்தது. “பெரிய மிருகத்தின் மீதேறி வரும் வெளிறிய நிறம் கொண்ட மனிதர்கள் அஸ்டெக் ராஜ்யத்தை அபகரிப்பார்கள்.” அன்றைய அமெரிக்க கண்டத்தில் குதிரை இருக்கவில்லை. முதன்முதலாக குதிரை மீதேறி வந்த ஸ்பானிய வீரர்களை கண்ட மக்களும், மன்னனும், “கெட்சகோடல்” தெய்வத்தின் தூதுவர்களாகக் கருதினர். (பண்டைய மெக்சிக்கர்கள் பல தெய்வ வழிபாட்டைக் கொண்டவர்கள். அவர்கள் சில நேரம் ஸ்பானியர்களை எமதர்மனின் தூதுவர்களாக கருதியிருக்கலாம்.) விரைவிலேயே ஸ்பானியக் காலனியாதிக்கவாதிகளின் தங்கத்தின் மீதான பேராசை அவர்களின் சுயரூபத்தை தோலுரித்துக் காட்டியது.

தென் அமெரிக்கக் கண்டத்தின் அனைத்து பூர்வகுடிகளும் ஐரோப்பியரை கடவுளின் தூதுவர்களாக கருதி வணங்கி வழிவிடவில்லை. கண்டத்தின் தெற்குப் பகுதியில், (சிலி, ஆர்ஜெந்தீனா)  ஐரோப்பியரால் நிரந்தரமான காலனியை அமைக்க முடியவில்லை. பூர்வீக மக்களின் தொடர்ச்சியான தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் காலனியாதிக்கவாதிகள் பின்வாங்கினார்கள். அந்தப் பகுதிகளை காலனிப்படுத்த இன்னும் பல நூறாண்டுகள் காத்திருக்க வேண்டியேற்பட்டது. போர்த்துக்கல் ஆக்கிரமித்த பிரேசிலில் வனாந்தரங்களும், விஷ ஜந்துக்களும் காலனியாதிக்கவாதிகளின் மிகப்பெரிய எதிரிகளாக இருந்தன. போர்த்துக்கல்லில் இருந்து கிரிமினல் குற்றவாளிகளுக்கு மன்னிப்பு அளித்து குடியேற ஊக்குவித்தார்கள். அப்படி இருந்தும் பலர் அங்கு செல்லத் தயங்கினார்கள்.

ஐரோப்பிய காலனியவாதிகளின் வருகையின் போது, தென் அமெரிக்காவில் மாபெரும் சாம்ராஜ்யம் இருந்தது. அடர்ந்த காடுகளையும், மலைத் தொடர்களையும், பாலைவனத்தையும் இயற்கை அரண்களாக கொண்டிருந்தது. இன்றைய எக்குவடோர் முதல் சிலி வரை 4000 கி.மீ. நீளமான ஒரே தேசம், “இன்கா ராஜ்ஜியம்” என அழைக்கப்பட்டது. வடக்கே இருந்த மாயாக்களைப் போல, இன்காக்கள் அயலில் இருந்த இனங்களை அடக்கி ஆளவில்லை. அவர்களின் ஆட்சி அதிகாரம் குடிமக்களின் அச்சத்தின் மீது கட்டப்பட்டிருக்கவில்லை. மாறாக சிறப்பான அரச நிர்வாகம் அனைவரையும் சமமான பிரஜைகளாக உள்வாங்கியது. இன்கா ராஜ்யத்திற்கு இன்னொரு சிறப்பும் உண்டு. அதன் பொருளாதார திட்டங்கள் பொதுவுடைமை சமூக அமைப்பை ஒத்துள்ளது.

“தவாந்தின்சுஜூ” (நான்கு திசைகளின் நாடு) ஐரோப்பியர் வருகைக்கு முன்னர் பலம் வாய்ந்த சாம்ராஜ்யமாக திகழ்ந்தது. தென் அமெரிக்க கண்டத்தில், சுமார் ஒரு மில்லியன் சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டிருந்த தேசத்தில், குறிஞ்சி, பாலை என நான்கு வகை நிலங்களைக் கொண்டிருந்ததால் அந்தப் பெயர். இன்கா மக்களின் உயரிய நாகரீகம் என போற்றப்படும் சாம்ராஜ்யம், பொதுவுடைமை சமூக- பொருளாதார  அமைப்பை அடிப்படையாக கொண்டிருந்தது. இன்கா இனத்தவரின் சாம்ராஜ்யம், பிற இனத்தவர்கள் மீதான அடக்குமுறையின் மீது கட்டப்படவில்லை. மாறாக சிறப்பாக செயல்படும் அரசியல் அமைப்பு முறை, அனைத்து மக்களையும் ஒரே தேசமாக இணைத்தது. சில வரலாற்று ஆசிரியர்கள் அதனை உலகின் முதலாவது கம்யூனிச ராஜ்ஜியம் என்றும் குறிப்பிடுகின்றனர்.

தவாந்தின்சுஜூ மக்கள் அனைவரும், “ஐய்லு” எனப்படும் நிர்வாகப் பிரிவுக்குள் அடக்கப்பட்டனர். ஒவ்வொரு பிரஜையும், (முன்பு சோஷலிச நாடுகளில் இருந்ததைப் போல) கூட்டுடமையாக்கப்பட்ட “கம்யூன்” சமூகத்தின் அங்கத்தவர் ஆவார். சக்கரவர்த்தியும், அரச குடும்பத்தினரும், அமைச்சர்களும் (தலைமை) ஐய்லுவை சேர்ந்தவர்கள். மாகாணங்களை சேர்ந்த ஆளுநர்களும் தலைமை ஐய்ளுவுக்குள் அடங்குவர். (அதாவது நமது காலத்து செனட் சபை போல.) போரில் புதிதாக வெற்றி கொள்ளப்பட்ட வேற்றினத்தவரின் பிரதேசமாகவிருப்பினும், அந்த இனத்தை சேர்ந்த ஒரு ஆளுநர் தலைநகர ஐய்ளுவுக்கு தெரிவு செய்யப்படுவார்.

நிலம் முழுவதும் அரசுடமையாக இருந்தது. எந்தவொரு தனியாரும் நிலத்திற்கு உரிமை கோர முடியாது. ஒவ்வொரு கிராமத்திலும், விளை நிலங்கள் மூன்றாக பிரிக்கப் பட்டிருந்தன. ஒரு பகுதி அரச குடும்பத்திற்குரியது. இரண்டாவது பகுதி ஆலயத்திற்கு அல்லது மதகுருக்களுக்கு. மூன்றாவது பகுதி விவசாயம் செய்யும் குடும்பங்களுக்கானது. பிறப்பு, இறப்பு, புதிய குடும்பங்கள் உருவாதல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு வருடமும் நிலம் புதிதாக பிரிக்கப்பட்டது. எல்லா நிலங்களிலும் அனைவரும் ஒன்று சேர்ந்து வேலை செய்ய வேண்டும். முதலில் அரச நிலத்திலும், இரண்டாவதாக கோயில் நிலத்திலும், மூன்றாவதாக குடிமக்கள் நிலத்திலும் வேலை செய்ய வேண்டும்.

அரச நிலத்தில் பெறப்படும் விளைச்சலால், அரச குடும்பம் மட்டும் பலனடையவில்லை. களஞ்சியத்தில் சேமிக்கப்படும் தானியம், நோயாளிகள், வயோதிபர், போன்ற சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கு வழங்கப்பட்டது. மேலும் வெள்ளம், பஞ்சம் தோன்றும் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவளிக்க பயன்பட்டது. இன்கா மக்கள் தமது மொழிக்கு எழுத்து வடிவம் கொண்டிருக்கவில்லை. இருப்பினும் களஞ்சியப்படுத்தல், நிலப் பிரிப்பு போன்ற நிர்வாக நடைமுறைகளுக்கு சிக்கலான கணக்கெடுப்பு முறை ஒன்றை வைத்திருந்தனர். ஒவ்வொரு கிராமத்திற்கும் செல்லும் அரச கணக்காளர் கயிறொன்றில் முடிச்சுகளைப் போட்டு கணக்கிட்டுக் கொள்வார்.

இன்கா நாகரீகத்தில் (வாகன) சில்லின் பாவனை பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை. (ஒட்டகம் போன்ற) லாமா என்ற மிருகம் பொதி சுமந்து செல்ல பயன்பட்டது. இருப்பினும் கற்களைக் கொண்டு செப்பனிடப்பட்ட வீதிகள் சாம்ராஜ்யத்தின் எந்தப் பகுதியையும் தலைநகரோடு இணைத்தது. இன்கா ராஜாக்கள், தமக்கு எதிராக கிளர்ந்தெழுந்த இனங்களை தண்டிக்கத் தவறவில்லை. அவர்களை ஒட்டுமொத்தமாக வாழிடங்களில் இருந்து வெளியேற்றி எல்லைப்புறங்களில் குடியேற்றினார்கள். மேலும் புதிதாக வெல்லப்பட்ட பிரதேச மக்களின் தெய்வங்களை இன்கா மதத்திற்குள் உள்வாங்கினார்கள். இதனால் இந்து மதம் போன்ற புதிய மத அமைப்பு உருவாகி, ராஜ்ஜியத்தை இலகுவாக பரிபாலனம் செய்ய முடிந்தது. பிற்காலத்தில் செவ்விந்தியர்கள் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பொழுது, தமது பாரம்பரிய மத அனுஷ்டானங்களையும் தொடர்ந்து பேணி வந்தார்கள்.

ஸ்பானிய படையெடுப்பாளர்கள் இன்காக்களின் ராஜ்ஜியத்தை கைப்பற்றிய பின்னர், விவசாய நிலங்கள் கைவிடப்பட்டன. உருளைக்கிழங்கும், சோளமும் பயிரிடப்பட்ட நிலங்கள் புதர் மண்டிய காடுகளாகின. இன்கா மக்களின் பிரதான உணவாக இருந்த உருளைக்கிழங்கு, ஸ்பானிய காலனியாதிக்கவாதிகளால் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப் பட்டது. பின்னர் அது உலகம் முழுவதும் பரவியது. புதிதாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் தங்கம், வெள்ளி தோண்டுவது தான் ஸ்பானிய காலனிய எஜமானர்களின் ஒரேயொரு நோக்கமாக இருந்தது. இன்றைய பொலிவியாவில், பழைய இன்கா சாம்ராஜ்யத்திற்கு அருகில், “பொட்டோசி” என்ற நகரம் உருவானது. ஒரு காலத்தில் ஒரு லட்சம் பேர் வாழ்ந்த நகரம், அருகில் இருந்த வெள்ளிச் சுரங்கங்களுக்காகவே உருவானது. அங்கு அகழப்பட்ட வெள்ளிப்பாளங்கள் கப்பல் கப்பலாக ஸ்பெயினுக்கு அனுப்பப்பட்டன.

தென் அமெரிக்காவில் ஸ்பானியர்கள் தங்கம், வெள்ளி அள்ளிச் செல்வதைப் பற்றி கேள்விபட்ட ஒல்லாந்தர்களும், ஆங்கிலேயர்களும் அவற்றை வழிப்பறி செய்தனர். ஒல்லாந்து, ஆங்கில கடற்கொள்ளையர்கள் ஸ்பானிய கப்பல்களை வழிப்பறி செய்து தமது தாயகத்திற்கு கொண்டு சென்றனர். 1628 ம் ஆண்டு, Piet Hein என்ற ஒல்லாந்து கடற் கொள்ளைக்காரன் அபகரித்த செல்வம் வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. கியூப கடலோரம் வழிப்பறி செய்யப்பட்டு ஒல்லாந்து கொண்டுவரப்பட்ட கப்பலில், 177000 கிலோ வெள்ளி, 66 கிலோ  தங்கம், 1000 முத்துக்கள் இருந்தன. கொள்ளையடிக்கப்பட்ட சரக்கின் மொத்த பெறுமதி எட்டு மில்லியன் யூரோக்கள்.

ஸ்பானியர்களால் உணவுப்பயிர் உற்பத்தியான விளைநிலங்கள் அழிக்கப்பட்டன. இன்று தென் அமெரிக்காவின் வறுமைக்கு அதுவும் முக்கிய காரணம். ஸ்பானியர்களால் இன்காக்களின் அரச வம்சம் அழிக்கப்பட்டது. குடி மக்களை சுரங்கங்களில் கட்டாய உழைப்பில் ஈடுபடுத்தினார்கள். இன்காக்களின் காலத்திலும் கட்டாய உழைப்பு நிலவியது. இருப்பினும் அதற்கு பிரதியுபகாரமாக இன்கா அரசு பாதுகாப்பையும், உணவையும் வழங்க கடமைப் பட்டிருந்தது. ஸ்பானியர்களிடம் அப்படிப்பட்ட கடமையுணர்வு இருக்கவில்லை. செலவின்றி பலனடைய நினைத்தார்கள். அன்றைக்கு செவ்வியந்தியர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை ஸ்பெயினில் இருந்து வந்த மதப்போதகரான Bartolome de La Casas எழுதி வைத்துள்ளார்.

“தங்கம், வெள்ளி சுரங்கங்கங்களில் இந்தியர்கள் கடுமையாக வேலை வாங்கப்பட்டனர். பெண்களும் வயல்களில் வேலை செய்தனர். ஸ்பானிய எஜமானர்கள் அவர்களுக்கு மிகக் குறைந்த அளவு உணவு வழங்கினார்கள். உறங்கும் பொது கூட, சங்கிலியால் பிணைக்கப்பட்டு கட்டாந்தரையில் படுத்து உறங்கினார்கள். என்பது அல்லது நூறு றாத்தல் எடையுள்ள பொதிகளை சுமந்து கொண்டு 200 மைல் தூரத்தை நடந்து செல்ல வேண்டியிருந்தது. அதே நேரம் ஸ்பானியர்கள் பல்லக்கில் தூக்கி வரப் பட்டார்கள். செவ்விந்தியர்கள் அவர்களின் சக்திக்கு மீறிய அளவு வேலை செய்ய பணிக்கப்பட்டனர். கடும் உழைப்பு காரணமாக சோர்ந்து விழுந்தால் சவுக்கடி கிடைக்கும். களைப்பால் வேலை செய்ய மறுத்தால் சித்திரவதை செய்யப்பட்டனர். அசாதாரணமான உழைப்புச் சுரண்டல் காரணமாக நூற்றுக்கணக்கான இந்தியர்கள் மரணமடைந்தார்கள்.”

கரீபியன் கடல் தீவுகளில் இன்று ஒரு செவ்விந்தியரைக் கூட காண முடியாது. தீவுகளில் வாழ்ந்த அனைத்து பழங்குடி இனங்களும் ஐரோப்பியரால் பூரணமாக அழித்தொழிக்கப் பட்டனர். ஸ்பானிய காலனியாதிக்கவாதிகளின் தங்கம் தேடும் பேராசையால் இனவழிப்புக்கு ஆளானார்கள். தங்கச் சுரங்கங்களில் அடிமைகளாக உழைத்த பூர்வீக குடிகள், ஸ்பானிய எஜமானர்களின் இம்சை தாங்க முடியாது, தமது பிள்ளைகளை கொன்று விட்டு, தாமும் கூட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.

உழைப்புச் சுரண்டலை சகிக்க முடியாது தற்கொலை செய்த பரிதாபத்துக்குரிய ஜீவன்களை ஸ்பானிய அதிகாரிகள் ஏளனத்துடன் பார்த்தனர். “வேலை செய்து பழக்கமற்ற சோம்பேறிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்…” என்று பரிகசித்தனர். நிச்சயமாக தென் அமெரிக்க பூர்வகுடிகள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதற்கும் தாங்க முடியாத உழைப்புச் சுரண்டலே காரணம். கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால், தாம் சமமான மனிதர்களாக நடத்தப் படுவோம் என எதிர்பார்த்தார்கள். ஆனால் ஸ்பானிய எஜமானர்களைப் பொறுத்த வரை, “கிறிஸ்தவர்களோ இல்லையோ, செவ்விந்தியர்கள் அனைவருமே அடிமைகள் தான்.”

ஸ்பானியர்களின் கொடுமைகளுக்கு அஞ்சி எல்லா அமெரிக்க பூர்வீக குடிகளும் தற்கொலை செய்து கொள்ளவில்லை. மெக்சிகோவில் ஹிடால்கோ என்ற பாதிரியார் தலைமையிலும், பெரு நாட்டில் துபாக் அமாரு என்ற இன்கா அரச குடும்ப வாரிசு தலைமையிலும் விடுதலைப் போராட்டங்கள் நடைபெற்றன. செவ்விந்தியர்களிடம் இருந்து அனைத்தையும் பறித்துக் கொண்ட ஸ்பானியர்கள் செல்வச் செழிப்புடன் வாழ்வதும், மண்ணின் மைந்தர்கள் வறுமையில் வாடுவதும், காலனிய காலம் முதல் இன்று வரை நிதர்சனமான காட்சிகள். “எனதருமை மக்களே! ஸ்பானியர்கள் எம்மிடம் இருந்து அபகரித்த மண்ணையும், செல்வத்தையும் மீட்டெடுப்போம்.” என்று அறைகூவல் விடுத்த துபாக் அமாருவின் பின்னால் ஆயிரமாயிரம் மக்கள் திரண்டனர். 1781 ல், துபாக் அமாருவின் விடுதலைப் படை தலைநகர் Cuzco வை  முற்றுகையிடும் அளவுக்கு பெரிதாக இருந்தது. இறுதியில் சொந்த படையை சேர்ந்த தளபதி ஒருவனால் காட்டிக் கொடுக்கப்பட்டு, துபாக் அமாரு கைது செய்யப்பட்டான். காலனியாதிக்கவாதிகளுக்கு எதிரான பூர்வீக மக்களின் புரட்சி முறியடிக்கப்பட்டது.

சிறையில் இருந்த துபாக் அமாருவை பார்க்க வந்த ஸ்பானிய அதிகாரி, கிளர்ச்சியில் பங்கு கொண்டவர்களை காட்டிக் கொடுத்து விட்டு விடுதலையடையும் படி ஆசை காட்டினான். ஆனால் பணிய மறுத்த துபாக் அமாரு, “இங்கே இரண்டு பொறுப்பாளிகள் மட்டுமே உள்ளனர். ஒன்று, விடுதலைப் போராளியான நான். மற்றது, ஆக்கிரமிப்பாளனான நீ. இருவருமே மரணத்திற்கு தகுதியானவர்கள்.” என்றான். தலைநகரின் மத்திய பகுதிக்கு கொண்டு வரப்பட்ட துபாக் அமாருவும், அவன் மனைவியும், பிள்ளைகளும், பலர் பார்த்திருக்கும் வண்ணம் சித்திரவதை செய்யப்பட்டார்கள். துபாக் அமாருவின் கைகளையும், கால்களையும் கையிற்றால் பிணைத்து, நான்கு குதிரைகளில் கட்டி, நான்கு திசைகளில் இழுத்தார்கள். அப்போதும் அவனது கை கால்கள் கிழியவில்லை. பின்னர் தலையையும், கை,கால்களையும் தனியாக வெட்டியெடுத்து, ஒவ்வொரு உடல் பாகத்தையும் ஒவ்வொரு நகரத்திற்கு ஞாபகார்த்தமாக அனுப்பினார்கள். துபாக் அமாருவின் நான்காவது சந்ததி வரையில் அழிக்கப்படுவார்கள் என சூளுரைத்தார்கள்.

காலனியாதிக்கவாதிகளால் பூர்வகுடிகளின் விடுதலை வேட்கையை நான்காவது தலைமுறையிலும் அழிக்க முடியவில்லை. 22 ஏப்ரல் 1997 அன்று, “துபாக் அமாரு புரட்சி அமைப்பு”, பெரு நாட்டின் தலைநகர் லீமாவில் உள்ள ஜப்பானிய தூதுவராலயத்தை கைப்பற்றியது. 126 நாட்கள், 72 சர்வதேச தலைவர்களையும், உயர்மட்ட அதிகாரிகளையும் பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர். தூதுவராலயத்தை சூழ்ந்த ஊடகங்களின் உதவியுடன், (அமெரிக்க) ஏகாதிபத்தியத்திற்கும், முதலாளித்துவத்திற்கும் எதிராக போர்ப்பிரகடனம் செய்தனர். இறுதியில் துபாக் அமாரு போராளிகள் அனைவரும் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டு விட்டனர். இருப்பினும் துபாக் அமாருக்கள் அந்த மண்ணில் மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டிருப்பார்கள் என்பதை, அந்த சம்பவம் உலகுக்கு எடுத்துக் காட்டியது.

(தொடரும்)

___________________________________________________

– கலையரசன்

vote-012

தொடர்புடைய பதிவுகள்:

ஈழம்: வதை முகாம்களும், பெண் வாழ்வும்

19

நாற்பது வயதுக்குள்தான் இருக்கும் அந்தப் பெண்மணிக்கு. இப்போது அவரைப் பார்க்க அறுபது வயது முதிய பெண் போல தோற்றமளிக்கிறார். ஈழத்தின் வடபகுதி அரசுப் பள்ளியொன்றில் ஆசிரியையாக பணியாற்றிக் கொண்டிருந்தவரின் வாழ்வை வன்னி மீதான பேரினவாத யுத்தம் குலைத்துப் போட்டு விட்டது. ஒரு வழியாக அவர்கள் இங்கே கரைசேர்ந்திருக்கிறார்கள்.

நான் அவர்களைச் சந்திக்கச் சென்றது ஒரு பண்டிகை நாளில் எங்கும் ஒரே வாண வேடிக்கைச் சத்தம். அவர்கள் இல்லத்தில் இன்னொரு அறையில் அவரின் கணவோரோடு பேசிக் கொண்டிருந்த போது எங்கேயோ கேட்ட வெடிச் சத்தம் அப்பெண்ணின் அமைதியைக் குலைக்கிறது. ”வெடிச்சத்தம் கேக்குது. பிள்ளையைக் கூட்டிக்கொண்டு இங்கை வாங்கோ..” என்று அலறுகிறார். கணவர் சென்று தனது மனைவியான அப்பெண்ணை தேற்றுகிறார். சிறிது நேரம் கழித்து விசும்பலாக அப்பெண் குழந்தைகளை நினைத்து அழுகிறார். இவைகளை வேடிக்கை மட்டுமே பார்க்கும் ஒரு பாக்கியத்தை நான் பெற்றிருந்தேன்.

அப்பெண்ணுக்கு நரம்புத் தளர்ச்சி என்னும் குறைபாடு இந்த யுத்தக் காலத்தில் ஏற்பட்டிருக்கிறது. அது மனதளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது இரண்டு குழந்தைகளையும் காணவில்லை. ஆமாம் அவர்களது இரண்டு பெண் குழந்தைகளும் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. யாரிடம் போய் கேட்பது? எங்கெ தேடுவது? என்றும் தெரியவில்லை. அவர் தன் குழந்தைகளை மறந்தாக வேண்டும். ஆனால் மீண்டும் மீண்டும் குழந்தைகள் பற்றிய நினைவுகள் மட்டுமே அவரது நினைவுக்கு வந்து தொல்லைப்படுத்திக் கொண்டிருக்கிறது.

இன்றைய தேதியில் உலகின் வேறேந்த யுத்தப் பிராந்தியத்திலும், இவ்வளவு தொகையான குழந்தைகள், இளம் பெண்கள் காணாமல் போயிருப்பார்களா? என்று தெரியவில்லை. பாலஸ்தீனத்தில் காணாமல் போகும், காஷ்மீரில் காணாமல் போகும் மனிதர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் இராணுவ வேலிகளுக்குள் காணாமல் போன ஈழ மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. ஒவ்வொரு இல்லத்திலும் எவரோ ஒருவரை யுத்தத்தில் இழந்திருக்கிறார்கள். அல்லது காணாமல் போயிருக்கிறார்கள். சிதைக்கபப்ட்டுள்ள இந்த வாழ்வின் மொத்த துன்பங்களையும் அனுபவிக்கப் போவது பெண்கள்தான். ஆமாம் பெண்கள் மட்டுமே. ஏனென்றால் எதிர்காலம் என்ற ஒன்று பெரும் பாரமாக அவர்கள் மிது இறங்கியிருக்கிறது. இராணுவம், பேரினவாதம், கலாசாரவாதம், மறுகாலனியாதிக்கம் என்று அதிகார வர்க்கங்களுக்கிடையில் நிராதரவான பெண்கள் தங்களின் சுயமரியாதைக்காகவே ஏராளமாக போராட வேண்டியிருக்கிறது.

காணாமல் போதல் என்பது சிறுபான்மை மக்களினங்களுக்கு விடுக்கப்பட்ட நீண்ட கால அச்சுறுத்தல். அவர்கள் காணாமல் போன தங்களின் ரத்த உறவுகளை காலம் முழுக்க தேடிக் கொண்டே இருக்கும் படியான ஒரு மன உளைச்சலை, நிம்மதியின்மையை பேரினவாதம் அவர்களுக்கு பரிசளிக்கிறது. காணாமல் போதல் என்னும் நீண்ட கால அச்சுறுத்தல் வழியே அதிக மக்களை இழந்திருப்பது தமிழ் மக்கள்தான். நூற்றில் ஐந்து பேர் ஊனமடைந்திருக்கிறார்கள். நூற்றில் இரண்டு பேர் காணாமல் போயிருக்கிறார்கள். நூற்றில் இரண்டு பேர் மடிந்திருக்கிறார்கள், என்றால் இந்தக் காயங்களை யார் எப்போது ஆற்றுவார்கள்?

கொழும்பிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் 2005 – ஆம் ஆண்டு பிற்பகுதியிலிருந்து காணாமல் போனவர்களாகத் தெரிவிக்கப்பட்டவர்களில் 261 பேருக்கு என்ன நடந்தது என்பது பற்றி இதுவரை எந்தத் தகவலும் இல்லையென மக்கள் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. இவர்களில் 42 பேர் மாத்திரமே பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் அல்லது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. உண்மையில் கடத்தப்பட்ட யுத்த சூனியப் பகுதிகளுக்குள் சிக்கி காணாமல் போன குழந்தைகள், இளம் பெண்களுக்கு பொறுப்பாளிகள் யார்?

எப்போதெல்லாம் இராணுவக் கண்காணிப்பும். சோதனைகளும் அதிகரிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் பெண் வாழ்வும், குழந்தைகளின் வாழும் சாகடிக்கப்படுகிறது. சந்திக்குச் சந்தி கட்டி எழுப்பப்பட்டிருக்கும் கண்காணிப்புகளும், சீருடை அணிந்த இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள கட்டற்ற சுதந்திரமுமே பெண்களை அதுவும் சிறுபான்மை தமிழ் பெண்களை அபகரித்துக் கொள்ளத் தூண்டுகிறது. இலங்கைத் தீவில் கட்டி எழுப்பட்டிருக்கும் பெரும்பான்மை வாதம் என்பது மிக மோசமான பாசிச பயங்கரவாத ஆபத்து நிறைந்தது. இங்கே ஒரு தமிழரை துன்புறுத்துவதன் மூலம் பெரும்பான்மை வாதம் பௌத்த சிங்கள பேரினவாதத்திடம் தன் நம்பிக்கையை ஒரு மடங்கு அதிகரித்துக் கொள்கிறது. உளவியல் ரீதியானதும், பெரும்பான்மை தேசிய வெறி சார்ந்ததுமான இந்தக் களிப்பு தென்னிலங்கையில் பற்றிப் படர்ந்திருக்கிறது.

மிகச்சரியாகச் சொன்னால் பம்பலப்பிட்டி பாலகிருஷ்ணன் சிவக்குமாரைச் சொல்லலாம். மன நலம் பாதிக்கப்பட்ட அந்த 26 வயது தமிழ் இளைஞர் பேருந்துகளின் மீதும் இரயில் மீதும் கற்களைக் கொண்டு எறிய அந்த தமிழ் மன நோயாளியை கடற்கரையில் நூற்றுக்கணக்கானோர் வேடிக்கை பார்க்க அடித்தே கொன்றார்கள் சிங்கள போலீசார். ஒருவன உயிர் போகிற அளவுக்கு அடிப்பதும் அதை பல நூறு பேர் வேடிக்கை பார்ப்பதையும் நினைக்கும் போது சிங்களர்களே ஒரு கூட்டுவெறி மனச்சிதைவுக்கு ஆளாகியிருப்பர்களோ என்றுதான் தோன்றுகிறது.

புலிகள் இருந்தவரை தமிழ் மக்களுக்கு நிச்சயமான ஒரு பாதுகாப்பு நிலை இருந்தது என்பது இப்போது நிரூபணமாகியிருக்கிறது. புலிகளையும் மக்களையும் வேறு படுத்திப் பார்க்க வேண்டும் என்கிற வாக்கியத்தை அடிக்கடி உதிர்த்தது இந்தியா. ஆனால் இலங்கை எப்போதும் புலிகளையும் மக்களையும் வேறுபடுத்திப் பார்க்கவில்லை. அதனால்தான் ஆயிரமாயிரம் போராளிகளுக்கு என்ன நடந்ததோ அதுதான் ஈழத் தமிழ் மக்களுக்கும் நடந்தது. கூட்டுக்கொலையில் எவர் ஒருவரும் தப்பிக்க முடியாத அளவுக்கு குறுகிய நிலப்பகுதிக்குள் மக்களைத் துரத்திக் கொலை செய்தார்கள்.

தேசிய இனப்பிரச்சனையின் நிமித்தம் ஆயுதம் ஏந்திப் போராடும் போராடும் மக்கள் வேறு, போராளிகள் வேறு என்று எப்போதாவது இவர்கள் பார்த்தார்களா? அப்படிப் பார்த்திருந்தால் ஐமப்தாயிரத்திற்கும் மேலதிகமான மக்களை இப்படி கொடூரமாக கொன்றொழித்திருப்பார்களா? என்ற கேள்வியை இந்தியாவை நோக்கி நாம் கேட்டாக வேண்டும். வன்னிப் போர் முள்ளிவாய்க்காலில் கொடூரமான முறையில் முடிவுற்றதைத் தொடர்ந்து இராணுவத்திடம் பிடிபட்ட மக்கள் நந்திக்கடல் என்னும் நீரேரியைக் கடந்து முகாம்களுக்கு அழைத்து வரப்பட்டார்கள். சுற்றி வளைக்கப்பட்டுள்ள நிலையில் எங்குமே அவர்கள் தப்பிச் செல்ல இயலாத நிலை. அதுவும் பெண்களுக்கோ குழந்தைகளுக்கோ அது சாத்தியமே இல்லை. பல ஆண்கள் இறுதிப் போரின் போது தப்பியிருக்க, ஆதரவில்லாத பெண்கள் மிக மிக ஆபத்தான முறையில் இராணுவத்தினரிடம் சிக்கியிருக்கிறார்கள். செஞ்சோலை சிறுவர் இல்லக் குழந்தைகளும் அதில் அடக்கம். ஆனால் இன்று வரை அந்தக் குழந்தைகள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை.

செஞ்சோலை படுகொலைகளைத் தொடர்ந்து செஞ்சோலை சிறுவர் இல்லங்களில் இருக்கும் குழந்தைகள் குழந்தைப் போராளிகளே என்று இலங்கை அரசு சொல்லி வந்த நிலையில் சுமார் 150 பேர் வரையான ஆதரவற்ற குழந்தைகள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. அந்தக் குழந்தைகளுக்கு பொறுப்பேற்கவும் யாரும் இல்லை என்கிற நிலையில் இந்தக் கேள்வி இன்றைய புலி ஆதரவாளர்களாலேயோ, மனித உரிமை ஆர்வலர்களாலேயோ, தமிழார்வலர்களாலேயே இன்று வரை முன் வைக்கப்படவில்லை.

மே மாதம் போர் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் கருணா ஒரு அறிக்கை விட்டார். அந்த அறிக்கையில் முள்ளிவாய்க்காலில் எஞ்சியிருக்கும் எவரும் பொது மக்கள் அல்ல எல்லோருமே போராளிகளாகவும், மாவீரர் குடும்பங்களை சார்ந்தவர்களாகவுமே இருக்கிறார்கள் என்றார். போரின் இறுதி அழிவை வழி  மொழிந்த முதல் குரல் அதுதான். அடுத்த சில நாட்களில் முப்பதாயிரத்திலிருந்து ஐம்பதாயிரம் பேர் வரையிலான போராளிகளும் பொதுமக்களும் அவர்களின் குடும்பங்களோடு கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.

பொது மக்களோ, போராளிகளோ, அவர்களின் குடும்பங்களோ, ஒரு குறுகிய நிலப்பகுதிக்குள் குவித்து வைத்து இப்படியான கூட்டுக் கொலைகளை நிகழ்த்துவதும், அக்கொலைகளுக்கு போராளிகள் அல்லது பயங்கரவாதிகள் என்று நியாயம் கற்ப்பிப்பதும் கூட போர்க்குற்றம்தான். ஆனால் அத்தோடு முடிந்து போன ஒன்றாக இக்கொலைகள் இல்லையே?  மே மாதம் 13,14,15, 16,17,18,19 ஆகிய தேதிகளில் வரை நடந்த கொலைகளின் எண்ணிக்கை மட்டும் ஐம்பதாயிரத்திற்கும் மேல். அதன் பின்னர் நடந்தவைகளை உலகமும் சரி ஏனையவர்களும் சரி கொலைகளாக எண்ணும் நிலை இல்லை.

வதை முகாம்களும்… பெண் வாழ்வும்…

போர் முடிவடைந்த உடன் வவுனியா முழுக்க அமைக்கப்பட்டிருந்த 30க்கும் மேற்பட்ட முகாம்ககளுக்கு கொண்டு வரப்பட்ட மக்கள் குறித்து எண்ணிக்கை இன்று வரை வெளியிடப்படவில்லை. வன்னி மககள் தொகை என்பதே அறியப்படாத நிலையில் அதையே இலங்கை ஆட்சியாளர்கள் ஒரு வாய்ப்பாகக் கருதினர். முகாம்களுக்குள் படையினருக்கும், பயங்கரவாதத் தடுப்புப் போலீசுக்கும் வழங்கப்பட்டிருந்த கட்டற்ற சுதந்திரம் அவர்களை பெரும் வேட்டையில் ஈடுபட வைத்தது. போர் முடிந்து சில மாதங்கள் கழித்து ஒட்டு மொத்தமாக இந்த முகாமகளுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் மக்களில் 57,293 சிறுவர்களும், 7,894 விதவைப் பெண்களும், 3,100 கர்ப்பிணிப் பெண்களும், 11,877 காயமடைந்தோரும் இருப்பதாக பொத்தாம் பொதுவாக ஒரு கணக்கைச் சொன்னது இலங்கை அரசு.

ஆனால் மக்களின் எண்ணிக்கை குறித்து முதலில் ஒரு கணக்கை சர்வதேச தொண்டு நிறுவனங்கள் எடுத்ததாகவும் பின்னர் இரண்டு வாரங்கள் கழித்து மீண்டும் ஒரு கணக்கெடுப்பை முகாம்களுக்குள் நடத்திய போது கிட்டத்தட்ட பதின்மூன்றாயிரம் மக்களைக் காணவில்லை. அவர்கள் எங்கே போனார்கள் என்றோ, அவர்கள் என்ன ஆனார்கள் என்றோ இலங்கை அரசு எந்த பதிலையும் சொல்லவில்லை என்று சர்வதேச தன்னார்வக் குழுக்கள் சொன்னதாக தகவல்கள் வெளியாகின. பொதுவாக 13 வயதிலிருந்து நாற்பது வயது வரையிலான எந்தத தமிழரும் முகாமுக்குள் நிம்மதியாக உறங்கவோ உறவினர்களோடு சேர்ந்து வாழவோ சாத்தியமில்லாத சூழுல் அங்கே நிலவுவது மட்டும் உறுதிப்படுத்தப்படுகிறது.

ஆண்கள் என்றாலோ, ஆண் பிள்ளைகள் என்றாலோ அவர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள். பின்னர் அவர்கள் திரும்ப வருவதே இல்லை. அவர்களும் காணாமல் போனோரின் பட்டியலில் சேர்ந்து விடுவார்கள். ஆனால் காணாமல் போனோர் பற்றி முகாம்களுக்கு வெளியில் இருக்கும் மக்களே முறையிட எந்த ஒரு நேர்மையான சட்ட ஆணையமும் இல்லாத போது முகாம்களுக்குள் இருக்கும் மக்கள் யாரிடம் சென்று முறையிடுவார்கள்? எங்கே போய் தொலைந்து போன தன் மகனைத் தேடுவார்கள்?

போர் முடிவடையும் தருவாயில் மே – 15 ஆம் தியதி இலங்கைப் படையினரிடம் பிடிபட்ட சூசையின் மனைவி, குழந்தைகள் எங்கே இருக்கிறார்கள், அவர்களின் நிலை என்ன? அவர்களின் 17 வயது இளம் பருவ பெண்ணான மதியின் நிலை என்ன? புலிகளின் முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த சு.ப. தமிழ்ச் செல்வனின் மனைவியும் படையினரிடம் சரணடைந்தார். அவரையும் அவரது குழந்தையையும் கருணா அம்மான் சென்று சந்தித்ததாக செய்தியும் வெளியானது. ஆனால் அதன் பின்னர் அவர்கள் என்ன ஆனார்கள் என்று இன்று வரை எந்தத் தகவலும் இல்லை.

அது போல மகளிர் அரசியல் பிரிவுக்கு பொறுப்பாளராக இருந்த தமிழினி மெனிக்பாம் முகாமில் வைத்து குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். தொடர்ந்து அவரை குற்றப் புலனாய்வுத் துறையினரின் கட்டுப்பாட்டில் வைத்தே விசாரிக்கலாம் என்று நீதிமன்றமும் அனுமதி அளித்துள்ள நிலையில் அவரும் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்பதை யாராலும் அறிந்து கொள்ள இயலவில்லை. அறியப்பட்ட இம்மாதிரியான பிரமுகர்கள் மட்டுமல்ல, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து தாயக விடுதலைக்காக தங்கள் பிள்ளைகளை அனுப்பி இன்று பத்தாயிரத்திற்கும் அதிகமாக பிடித்துச் செல்லப்பட்டு வதை முகாம்களுக்குள்ளும், ரகசிய தடுப்பு முகாம்களுக்குள்ளும் அடைத்து வைக்கப்பட்டுள்ள இளம் பெண்கள், சிறுவர்கள், போராளிகள் இவர்களுக்காக குரல் கொடுக்க ஏன் இன்று எவரும் முன்வரவில்லை.

அரசோடு பேரம் பேசுவதில் மட்டுமே குறியாக இருக்கும் புலம் பெயர் சக்திகள் கூட இந்த அரசியல் கைதிகளுக்காக பேச மறுக்கின்றனர். புத்தி உள்ள பிள்ளை பிழைத்து கொள்ளும் என்பதைப் போல இலங்கைக்கு வெளியே முன்னாள் புலிகளின் ஆதரவாளர்களாக இருந்து அவர்களுக்காக பல்வேறு தொழில்களையும் நடத்தி தங்களை வளப்படுத்திக் கொண்டவர்கள் இன்று இலங்கை அரசோடு சேர்ந்து கொண்டு வடக்குப் பகுதியில் முதலீட்டிற்கான வாய்ப்புகளை எதிர்நோக்குவதாகத் தெரிகிறது. ஆக பணம் இருக்கிறவன் பேரினவாதிகளுடன் சமரசமாகப் போகிறான். அல்லது பணத்தால் உறவை புதுப்பித்துக் கொள்கிறான். ஆனால் இப்பெண்கள், இந்தக் குழந்தைகள், இவர்கள் புலிகளிடம் இருந்து கடந்த காலங்களில் எவ்வித ஆதாயங்களையும் பெறாத ஏழைகள். இவர்கள்தான் தாயக விடுதலைப் போருக்காக தங்களின் பிள்ளைகளை அனுப்பி வைத்தவர்கள்.

இவர்களைத் தவிர புலிகளின் இரண்டாம் மட்டத் தலைவர்களான பேபி சுப்ரமணியம், புதுவை இரத்தினதுறை, யோகி என்னும் யோகரத்தினம், பாலகுமார் போன்றோரைக் கூட போர் முடிந்த அன்றே ( 18,19, ) இராணுவம் பிடித்துச் சென்றதாக செய்திகள் வந்தன. இவர்கள் எல்லோரும் உயிரோடு இருக்கிறார்களா? இருக்கிறார்கள் என்றால் இந்த அரசியல் கைதிகளை ஏன் நீதிமன்றத்தில் நிறுத்தவில்லை, என்பதெல்லாம் கூட கேள்விகளாக மட்டுமே நம்மிடம் இருக்கின்றன. கிடையில் சிக்கிக் கொண்ட ஆடுகளுக்கு அதைக் காவல் காக்கும் நரிகளால் என்ன நேருமோ அதுதான் இந்த அரசியல் கைதிகளுக்கு நேர்கிறது.

படையினர் முகாம்களில் உள்ள பெண்களை பாலியல் வன்முறை செய்து விட்டு அவர்களுக்கு உணவோ, உடுதுணியோ கொடுக்கிறார்கள் என்று லண்டன் மருத்துவர் வாணி குமார் குற்றம் சுமத்தினார். வாணி குமார் மட்டுமல்ல சர்வதேச தொண்டு நிறுவனங்களும் இவ்விதமான குற்றச்சாட்டை முகாம்களில் உள்ள இராணுவத்தினர் மீது கூறியிருந்தது. ஆனால் வாணியின் குற்றச்சாட்டு குறித்து பதிலளித்த பேரழிவு மேலாண்மை, மனித உரிமைகள் துறையின் முதன்மைச் செயலாளர் ராஜீவ விஜயசிங்கே ” வவுனியா முகாம்களில் உள்ள கூடாரம் ஒன்றிற்குள் இரவு 11:00 மணிக்கு நுழைந்த எமது படைவீரர் ஒருவர் அதிகாலை 3:00 மணிக்குப் பின்னரே வெளியில் வந்ததாக எமக்கு ஒரு அறிக்கை கிடைத்தது. மகிழ்வடைவதற்காக அவர் பாலியல் உறவில் ஈடுபட்டிருக்கலாம். சலுகைகளுக்காகவும் அவர் பாலியல் உறவில் ஈடுபட்டிருக்கலாம். அல்லது அங்கு கிரேக்க தத்துவம் தொடர்பாக மட்டும் பேசப்பட்டிருக்கலாம் ” என்று திமிராக பதில் சொல்லியிருக்கிறான்.

புலிகள் இருந்திருந்தால் இவன் கொல்லப்பட்டிருக்கக் கூடுமோ? புலிகள் தேவையில்லாத எத்தனையோ கொலைகளைச் செய்தார்கள், செய்ய வேண்டிய பல விஷயங்களைச் செய்யாமல் விட்டார்கள். அப்படி விடப்பட்டவர்களில் பலரும் இன்று பிரபாகரன் இல்லாதது குறித்து மகிழ்ச்சி தெரிவிக்கிறார்களாம். ஒரு தமிழ் பெண்ணின் துன்பத்தை ஏளனம் செய்வதோடு அதிகாரம் கொடுக்கும் திமிரும் இங்கே சேர்ந்து விடுவதால் இந்த எள்ளல் வருகிறது. முகாம்கள் பெண்களுக்கு பாதுகாப்பற்றவையாக மாறியிருக்கிறது. முகாம்களுக்கு வெளியிலும் பெண்களின் பாலியல் சுதந்திரத்தை பேணுவதற்கான வாய்ப்புகள் இல்லை.

இலங்கையில் எப்போதெல்லாம் இராணுவம் பாரம்பரிய வசிப்பிடங்களை சுற்றி வளைக்காத பகுதிக்குள் மக்கள் வாழ்கிறார்களோ அதுவே மக்களுக்கு பாதுகாப்பான வாழ்வுக்காலமாக இருந்திருக்கிறது. இதை இலங்கையில் மட்டுமல்ல இந்தியாவின் காஷ்மீரிலும், மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் மத்திய இந்தியாவில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள போரிலும் (உலகக் கோடீஸ்வரனான அனில் அகர்வாலுக்குச் சொந்தமான வேதாந்தா என்னும் சுரங்க நிறுவனத்திற்கு பாக்ஸைட் வளங்களை தாரை வார்த்திருக்கும் இந்திய அரசு, அந்த வர்த்தகத்திற்கு தடையாக இருக்கும் பழங்குடிகளையும், மாவோயிஸ்டுகளையும் வேட்டையாடி அழிக்க ஆபரேஷன் க்ரீன் கன்ட் என்னும் போரை மத்திய இந்தியாவில் நடத்தி வருகிறது.) இதே நிலைதான்.

இராணுவ சுற்றி வளைப்பில் ஆண்கள் அழிக்கப்பட்டு பெண்கள் சிக்கிக் கொள்கிற போது பெண்ணுடல் இங்கே பேரினவாதத்திற்கு பலியாகிறது. போர்க்காலங்களில் பெண்ணுடல் இராணுவ வெறிக்கு இறையாவது ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் யுத்தமும், சமூகமும் ஆண்களை இழந்த பெண்களை நிராதரவான முறையில் கைகழுவி விடுகிறது. சமீபத்தில் லண்டன் மருத்துவர் வாணிகுமார் சொன்னக் குற்றச்சாட்டுகளை நமது பழமைவாத தமிழார்வலர்கள் எப்படிப் புரிந்து கொண்டார்கள்?

“தமிழ் பெண்கள் ஒரு வேளை உணவுக்காக கற்பை விற்கிறார்களா? வாணிகுமார் தமிழ் பெண்களை இழிவு செய்கிறார். புலியையே முறத்தால் விரட்டிய எமது பரம்பரைப் பெண்களா, சிங்களவனுக்கு தங்களை இறையாக்கிக் கொள்கிறார்கள்” என்று பண்பாட்டுப் பழமை மேலோங்க தமிழ் கற்பின் பெருமை பேசியிருந்தார்கள். வாணிகுமார் எங்குமே தமிழ் பெண்கள் தங்களை விற்றுக் கொள்வதாக சொல்ல வில்லை. பெண்களை அவர்கள் அபகரித்துக் கொள்கிறார்கள், வன்முறையான முறையில் புணர்கிறார்கள் என்றுதான் சொல்லிருந்தார். இப்படி பெண்கள் மீதான வன்கொடுமைக்காக பேசுபவரைக் கூட சகித்துக் கொள்ள முடியாத தமிழ் பண்பாட்டுவாதிகள், கிழக்கிலும் வடக்கிலும் மிகப் பெரிய தனிச் சமூகமாக உருவாகி நிற்கும் விதவைப் பெண்களை எப்படி கையாள்வார்கள் அல்லது எதிர்கொள்வார்கள் என்பதற்கு இதுவே சாட்சி….

வடக்கு – கிழக்கு விதவைகள்

இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் இலங்கையின் சிறுபான்மை தமிழ் சமூகம் இரு பெரும் பாரிய மனித அழிவுகளைச் சந்தித்துள்ளது. ஒன்று 2004 –  டிசம்பரில் வந்த சுனாமி அனர்த்தனம். இன்னொன்று 2007 – இல் துவங்கி 2009 முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற இன அழிப்பு யுத்தம். ஒரே நாளில் ஆயிரக்கணக்கான உயிர்களை சுனாமி பலி எடுத்தது என்றாலும் அது இயற்கை நிகழ்வு. இயற்கைப் பேரழிவுகளின் போது மனிதர்கள் தங்களுக்குள் உள்ள உறவுகளை பலப்படுத்திக் கொள்கிறார்கள். இயற்கை அனர்த்தனத்தை கூட்டு சேர்ந்தே எதிர் கொள்கிறார்கள். இடம் பெயர்கிறார்கள். உணவைப் பங்கிட்டுக் கொள்கிறார்கள். பல நேரங்களில் இயர்க்கை அனர்த்தனம் ஏற்படும் போது வீடு, குடும்பம், சொத்து இவைகளுக்கு அப்பாற்பட்ட மனித அன்பு பாதிக்கப்பட்ட சமூகங்களில் நிலவுவதைப் பார்க்கலாம்.

ஆனால் வன்னி மீதான யுத்தம் என்பது இந்தியாவும், இலங்கையும் சேர்ந்து உருவாக்கிய செயற்கையான யுத்தம். நீண்ட கால அரசியல் பிரச்சனைக்கு நேர்மையான தீர்வு ஒன்றை முன் வைப்பதற்குப் பதில் ஒடுக்கப்படும் இன மக்களை அழித்தொழிக்கும் கொடூரமான போரை முன்னெடுத்தன இந்திய, இலங்கை அரசுகள். எண்பதுகளில் வேர் விட்ட அரசியல் மேலாண்மையற்ற ஆயுதப் போராட்டச் சூழலும் கடந்த முப்பதாண்டு காலமாக மக்களை காவு வாங்கியிருக்கிறது. கடத்தல், காணாமல் போதல், கொலைகள், பாலியல் வன்முறை, கூட்டுக் கொலை என லட்சக்கணக்கில் மக்களை இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகள் இழந்திருக்கிறது. இதில் பெண்களின் நிலை மிகவும் பரிதாபகரமான முறையில் உள்ளது.

”வடக்கிலும் கிழக்கிலுமாக 85 ஆயிரம் விதவைகள் உள்ளதாகவும் இதில் 45 ஆயிரம் பேர் யுத்த விதவைகள்” என்றும் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் ஒரு முறை பாராளுமன்றத்தில் சொன்னார். உண்மையில் வடக்கில் படுகொலை செய்யப்பட்ட மக்கள் தொடர்பான எண்ணிக்கையை இலங்கை அரசு மறைப்பது போல விதவைகளின் எண்ணிக்கையையும் இலங்கை இன்று வரை சரி வர வெளிப்படுத்தவில்லை. முறையான மக்கள் தொகை கணக்கெடுப்புகள் எடுக்கப்பட்டு விதவைகளின் எண்ணிக்கை கணக்கிடப்படும் என்றால் அவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தைத் தாண்டும்.

இலங்கையின் கிழக்கு மாகாணமே விதவைகளின் எண்ணிக்கை அதிகமான மாகாணம் என்று சொல்லப்பட்டாலும் போருக்கு தங்களை ஈடுபடுத்தி கொண்ட சிங்களச் சிப்பாய்களின் மனைவிகளும் போரில் விதவைகளாகியிருக்கிறார்கள். சுமார் 15 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் பேர் வரை தென்னிலங்கையில் இவ்விதம் விதவைகளாகியிருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் சிங்கள விதவைகளுக்கு அரசு பல்வேறு புனர்வாழ்வுத் திட்டங்களை அறிவித்திருப்பதோடு, அவர்கள் இன்று தேசிய நாயகர்களாக உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். அதே வேளை வடக்கில் விதவையானவர்களுக்கு மாதா மாதம் அரசு தரும் தொகை வெறும் 100 ரூபாய்தான். விலைவாசி ஏற்றம், படுகுழிக்குப் போய்விட்ட பொருளாதாரம், வறுமை, வேலையிழப்பு உள்ள வடபகுதியில் இந்த நூறு ரூபாயை வைத்து ஒரு பெண் என்ன செய்ய முடியும்?

இம்மாதிரி ஆதரவற்ற பெண்கள் குறித்த புள்ளிவிவரங்களில் எல்லோரும் குறிப்பிடுகிற ஒன்று இவர்களில் பெரும்பாலானோர் நாற்பது வயதுக்குட்பட்ட இளம் விதவைகள் என்பதைத்தான். இந்த வயதும் அது நமக்கு இந்த விதவைபெண்கள் குறித்து எழுப்பும் தோற்றப்பாடும் பாலியல் ரீதியான கலாசார கண்காணிப்பை இப்பெண்கள் மீது சுமத்தும் ஒரு பார்வையாகவும் தெரிகிறது. கடுமையான இந்து சாதி ஒழுக்கங்களைப் பேணும் தமிழ் சமூகத்தில் மாங்கல்ய பாக்கியம் வாய்த்த பெண்களே கௌரவமான சமையல்காரிகளாக நடத்தப்படும் போது, ஆதரவற்ற பெண்களை கடும் ஒழுக்கத்தை பின்பற்றும் சமூகம் எப்படி கையாளும் என்பதை தமிழ் பெண்களின் கற்பு நெறி தொடர்பான தமிழ் கதையாடலில் நாம் காண முடியும்.

ஆனால இந்த எல்லைகள் எல்லாம் ஒரு நாள் உடைபடும். பாலியல் உரிமைகளையும், சுயமரியாதையும் பேண முடியாத பெண்கள், தங்களின் வாழ்க்கையை தாங்களே தீர்மானித்துக் கொள்ளும் எண்ணம் வரும் போது சாதி, மத பிற்போக்குக் கோட்பாடுகள் உடைவதை யார்தான் தடுக்க முடியும்? அல்லது தடுப்பதற்கு நமக்கு என்னதான் உரிமை இருக்கிறது?

இவைகளை எல்லாம் எழுதி முடித்த பின்பு இக்கட்டுரையில் பேசப்பட்டுள்ள இப்பெண்கள் குறித்தும் அவர்களின் சமூக, வர்க்கப் பிரச்சனைகள் குறித்தும் நான் என்ன தீர்ப்பிடுவது என்பதை யோசித்தேன். தன்னார்வக் குழுக்கள் இவர்களை தத்தெடுக்க வேண்டும் என்றோ, உலகின் உயரிய பெண்கள் ஆணையம் இப்பெண்களை கவனிக்க வேண்டும் என்றோ, அரசு உதவித் தொகையை உயர்த்துவதோடு, அவர்களின் புனர்வாழ்வுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றோ நான் எழுதலாம், அல்லது அவர்களின் உழைப்பிற்கான, பாலியல், சுயமரியாதை கௌரவம் உத்திரவாதப்பட வேண்டும் என்றோ, உற்பத்தியில் அவர்கள் நேரடியாக பங்கு பெறும் வழி வகை காணப்பட வேண்டும் என்றோ கூடச் சொல்லலாம். ஆனால் இதை எல்லாம் செய்ய யார் இருக்கிறார்கள்?

வடக்கு கிழக்கின் ஏழைத் தமிழக் குடும்பங்களில் உள்ள ஆண்கள் கொல்லப்பட்ட பிறகு அனாதைகளாக்கப்பட்டுள்ள இந்த பெண்களை காப்பாற்றுவது என்பது என்ன? அவர்களது வாழும் உரிமை நசுக்கப்பட்டுள்ள நிலையில் நம்முடைய மனிதாபிமான மூச்சின் அருகதை என்ன? சிங்கள பௌத்த பேரினவாதத்தின் வெற்றி, அதை எதிர்கொள்ள முடியாத அரசியல் தோல்விகள்…. இவற்றின் தொடர்ச்சியை மட்டும் நாம் துண்டித்து பார்க்க முடியுமா? இருந்தாலும் அந்த விதவைப் பெண்களின் நிர்க்கதியற்ற முகங்கள் நம்மை அமைதியாக பார்க்கின்றன, இல்லை கேட்கின்றன.

மறுகாலனியாதிக்கச் சுரண்டலில் இந்த ஜீவன்கள் பாலியல் அடிமைகளாகவோ, சுரண்டல் அடிமைகளாகவோ இருப்பதுதானே வர்த்தக வெறிக்கு உகந்தது… என்றெல்லாம் நினைவுகள் ஆக்கிரமிக்க நான் அந்தி சாய்வதற்குள் என் வீட்டிற்குத் திரும்புகிறேன். எனது வண்டிச் சத்தம் கேட்ட உடன் வாசலுக்கு ஓடி வருகிறாள், என் செல்ல மகள். ”அப்பா எனக்கு பாப்கார்ன் வாங்கித் தர்றீயா?” என்று கைகளைத் தூக்குகிறாள். நான் அவளை எடுத்துக் கொண்டு பாப்கார்ன் வாங்கச் செல்கிறேன். சந்தோசமாகக் கழிகிறது சென்னை வாழ்க்கை.

படிக்க

யார் விபச்சாரி? ‘சோவியத் சுந்தரிகளா’, இந்தியா டுடேவா?

38

vote-012இரண்டு வாரம் கடுமையான வேலைபளு காரணமாக கணினியின் பக்கம் தலை வைத்துப் படுக்கக்கூட முடியவில்லை. இதற்குள் அழகிரி அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற அதிசயம் நடந்து விட்டது. இருந்தும் அழகிரியைப் பற்றி எழுதுவதற்கு பதில் போய் முடிதிருத்திவிட்டாவது வரலாம் என்று போனால் அங்கு ஒரு பழசான இந்தியா டுடே கிடந்தது. அதில் சோவியத் சுந்தரிகள் எனும் தலைப்பில் ஒரு அட்டைப்படச் சிறப்புக் கட்டுரை வந்திருந்தது.

இந்தியாடுடே பாலியல் கட்டுரை வெளியிடுவது ஒன்றும் புதிய செய்தியல்ல. அதன் விளம்பரக் காகிதங்களை மட்டும் பார்ப்பவன் என்ற வகையில் அவர்கள் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பாலியல் சர்வே செய்பவர்கள் என்று புரிந்து கொள்ளமுடிகிறது ( போதுமான அளவு வீட்டில் தண்ணீர் வசதி இருப்பதால் நான் காசு கொடுத்து இ.டு வாங்குவதில்லை ). ஆயினும் சோவியத் சுந்தரிகள் எனும் தலைப்பு இந்தியாடுடேவின் பாலியல் அரிப்பை மட்டும் கொண்டு வெளியிடப்பட்ட செய்தியல்ல என்பது தெளிவு. அதனால்தான் அக்கட்டுரையில் சோவியத் பற்றிய விளக்கமும் பிறகு அதன் வீழ்ச்சி குறித்தும் பேசி விட்டுப் பிற்கு தனது வழக்கமான செய்திக்கு வருகிறது.

இந்தியாடுடேவின் அக்கட்டுரை முன்னாள் சோவியத் நாடுகளை சேர்ந்த இளம் பெண்கள் இந்தியாவின் பெருநகரங்களுக்கு பாலியல் தொழில் செய்ய வருவது பற்றியது. சுமார் ஐந்தாயிரம் முன்னாள் சோவியத் நாட்டுப் பெண்கள் இங்கு வந்திருப்பதாகவும், இவர்களில் பலர் துபாயின் வீழ்ச்சிக்குப் பிறகு இங்கு தங்கள் ஜாகையை மாற்றியிருப்பதாகவும் சொல்லியிருக்கிறது அப்பத்திரிக்கை.

இப்பெணகளை ஏற்பாடு செய்து தரும் ஆண்டிகள், அவர்களது சராசரி கட்டணங்கள், மற்ற விபச்சாரிகளை விட இவர்கள் எவ்வகையில் மேம்பட்டவர்கள் என்ற தகவல்கள்,  ஆங்கில தினசரிகளில் இந்த குழுக்கள் தரும் விளம்பரங்களை எப்படி அடையாளம் காண்பது எனும் கைடுலைன் மற்றும் அவர்களது வாடிக்கையாளர் சிலரது கருத்துக்கள் என ஏராளமான தகவல்களை அள்ளி இறைத்திருக்கிறது டுடே. நல்லவேளையாக யாருடைய தொலைபேசி எண்ணையும் தரவில்லை. இத்தனைக்கு மேல் தொலைபேசி எண் தேவையில்லை என்பது வேறு விசயம்.

ஒரு உயர்மட்ட விபச்சாரத் தரகனுக்குரிய வார்த்தை ஜாலங்கள், அழகிகள் குறித்து ஆர்வத்தைத் தூண்டும் வர்ணனைகள், அதிலும் கொஞ்சம் ரகசியத்தை மறைக்கும் லாவகம் என இ.டுடேவின் திறமை திருப்பிய பக்கமெல்லாம் பளிச்சிடுகிறது. பத்திரிக்கை துறையில் நொடித்துப் போனால் இவர்கள் மாற்றுத் தொழில் பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை.

அக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளபடி இந்தியாவில் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை முப்பது லட்சத்திற்கும் அதிகம். பாலியல் தொழிலுக்கு தள்ளும் சமூகச் சூழல் பற்றியோ அல்லது பாலியல் தொழில் நடத்தும் சமூக விரோதிகள் பற்றியோ கொஞ்சமும் கவலைப்பட்டிராத இந்தியாடுடே சோவியத் நாட்டு பெண்கள் சிலரது பாலியல் தொழில் பற்றி செய்தி போடுவதன் காரணம் என்ன?

கம்யூனிசத்தை வெறுக்கிற சமத்துவம் என்ற வார்த்தையைக் கேட்டாலே அலறும் மேல்தட்டு சிந்தனையின் விளைவுதான், தான் நிபுணத்துவம் பெற்ற  விபச்சார செய்திகளை சோவியத் சுந்தரிகள் எனும் தலைப்பில் வெளியிடுகிறது இந்தியாடுடே. கம்யூனிசம் எனும் கருத்தின் மீதான பயம் சோவியத் நாடுகள் சிதறிய பல ஆண்டுகளுக்குப் பிறகும் இவர்களுக்கு இருப்பதன் விளைவுதான் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கம்யூனிசத்தை சீண்டிப் பார்க்க வைக்கிறது. கூடுதலாக மேல்தட்டு மக்களின் வெள்ளைத் தோல் மோகம் பற்றி செய்தி போட வேண்டிய கடமையும் அவர்களுக்கு இருக்கிறது. அதன் பலன், கம்யூனிசத்தின் மீதான காழ்ப்புணர்ச்சியும் இந்தியாடுடேவின் அடையாளமான பாலியல் இச்சையும் சம அளவில் கலந்த இந்த காக்டெய்ல்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்தியாடுடே சிறப்பிதழில் சோ ராமசாமியின் கட்டுரை ஒன்று ஈ.வே.ராமசாமி நாயக்கர் என்ற தலைப்பில் வெளியானது. அதில் சோவும் தனது பெரியார் விரோத சிந்தனைகளை அள்ளித் தெளித்திருந்தான். “பெரியார் கடவுள் இல்லை என்று பிரச்சாரம் செய்தார், இப்போதோ பக்தி மாநிலமெங்கும் பரவிவிட்டது, ஜாதிகள் ஒழிக்கப்படவேண்டும் என்றார், ஆனால் இப்போது ஜாதி சங்கங்கள் பல்கிப் பெருகிவிட்டன ஆகவே பெரியார் கொள்கைகள் தோற்றுவிட்டன” என்று எழுதி  தனக்கு தரப்பட்ட வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தினான் சோ.

பக்தி பெருகி விட்டதாம், பக்தி மட்டுமா பெருகியது கொலை, கற்பழிப்பு, ஊழல் தொடங்கி பஸ் ஸ்டாண்டில் செயின் அறுப்பதுவரை எல்லாம்தான் பெருகிவிட்டது. ஜாதி சங்கங்கள் பெருகிவிட்டது யாருக்குத் தோல்வி ? இந்த கொழுப்பெடுத்த கிழவன் உட்பட நம் எல்லோருக்குமான தோல்வி இது, நிச்சயம் பெரியாரின் தோல்வியல்ல. இது சோவுக்கு பதில் சொல்லும் பதிவு அல்ல என்பதால் இதற்குமேல் நீட்ட வேண்டாம். ஆயினும் நாம் கவனிக்கவேண்டியது, ஏன் இந்தியாடுடே பெரியார் பற்றி எழுத சோவை தெரிவு செய்தது, அதன் தலைப்பை ஏன் நாயக்கர் என்று வைத்தது என்பதைத்தான்.

வி.பி. சிங் இறந்தபோதும் இந்த பத்திரிகை செய்தி வெளியிட்டது. இந்தியாடுடேயின் தரம் அதில் முழுமையாக வெளிப்பட்டது. மண்டல் கமிஷனுக்கு எதிராக தீக்குளித்த இளைஞனின் உடலைப்பற்றிய தீ இறுதியில் வி.பி. சிங்கின் உடலை எரித்து விட்டு ஓய்ந்ததாக எழுதியது இப்பத்திரிக்கை. மனதில் வன்மத்தைத் தவிர வேறு எதுவும் இல்லாத ஒருவனால் மட்டுமே சொல்ல முடிகிற வார்த்தைகள் அல்லவா இவை? இடஒதுக்கீடு என்ற வாதத்தை இந்தியாவெங்கும் துவக்கியதைத் தவிர வேறு எதுவும் செய்ய இயலாத வி.பி. சிங்குக்கே இந்த கதி என்றால் பெரியாரும் சோவியத்தும் தப்பிக்க முடியுமா என்ன ?

சோவியத்தின் வீழ்ச்சி இந்தியாடுடேவுக்கு வேண்டுமானால் கொண்டாடத்தக்க செய்தியாக இருக்கலாம் நிச்சயம் அது நமக்கான நற்செய்தியல்ல. இரண்டாம் உலகப் போரில் பெரும் தியாகங்களை செய்தவர்கள் சோவியத் மக்கள். இந்தியாவின் விடுதலைக்குப் பிறகு உருவான பல பெரும் தொழிற்சாலைகளுக்கு தொழில் நுட்ப உதவிகளை செய்தது சோவியத் உள்ளிட்ட கம்யூனிச நாடுகள். இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் பெரும் எண்ணிக்கையிலான ஏழை மக்களுக்காக எல்லா தலைப்புக்களிலும் புத்தகங்களை மிக மிக மலிவான விலையில் ( ஏறத்தாழ இனாமாக ) வழங்கியது சோவியத். இன்றைக்கு அமெரிக்காவின் சர்வதேச ரவுடித்தனத்தை குறித்து கோபப்படுபவர்கள் சோவியத்தின் வீழ்ச்சி குறித்து கவலைப்படாமல் இருக்க முடியாது.

வெள்ளையனை எதிர்த்து போராடியதால் இருபத்து மூன்று வயதில் தூக்கிலிடப்பட்டார் பகத்சிங், வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்டக்காரர்களை காட்டிக்கொடுத்த வாஜ்பாய் பிற்பாடு இந்தியாவின் பிரதமரானார். இதில் யாரை வெற்றிகரமானவர் என்பீர்கள்? திப்பு சுல்தான் வெள்ளையருடனான போரில் தோற்றார், அவரது வாரிசுகள் இன்று தினக்கூலிகள். ஆற்காடு நவாப் தோல்வியே அடையவில்லை. அவர் வாரிசுகள் இன்றும் இளவரசர்களாக வாழ்கிறார்கள். இதில் யாரை நேசிக்கிறீர்கள் தோற்றவனையா அல்லது வென்றவனையா?

லெனின், ஸ்டாலின் காலத்து சோவியத் குறித்து நினைவு கூறவும்  கற்றுக் கொள்ளவும் நமக்கு ஏராளமான செய்திகள் இருக்கின்றன.  நாம் அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோம். நாம் தெரிந்து கொள்வதற்கேற்ப ‘சோவியத் சுந்தரிகள்’ இங்கே வருவதற்கான தேவையும், அதை விலாவாரியாக இந்திய டுடே என்ற பத்திரிகை மாமா எழுதுவதற்கான கடமையும் இல்லாமல் போகலாம்.

• வில்லவன்
_____________________________________________

vote-012

தொடர்புடைய பதிவுகள்

ஸ்ரீராம் சேனாவின் இந்துத்வா ரேட் அம்பலம்!

124


“கலியுகத்துல நாடு கெட்டுப் போச்சே”ன்னு அவாள்கள் அவ்வப்போது சபிப்பது வழக்கம். இந்த கலியுகப் புலம்பலில் மற்ற பிரச்சினைகளை விட இந்துத்தவத்திற்கு மட்டும் டன் கணக்கில் வில்லங்கம் வந்து சேர்கிறது. நித்தியானந்தா பள்ளியறை பலாபலன்களால் நாடே சிரிப்பாய் சிரித்த அதே பெங்களூருவில் இப்போது சீசன் 2வாக சிறிராம் சேனாவின் விவகாரம் நாடு முழுவதும் தொலைக்காட்சிகளில் பல்லிளித்துக் கொண்டிருக்கிறது.

ஜனவரி, 2009 இல் மங்களூரு பஃப்பில் குடித்துக் கொண்டிருந்த பெண்களைத் தாக்கி விரட்டியதில் இந்திய அளவில் ஒரே நாளில் பிரபலமானது சிரிராம் சேனா. அதற்கு முன் சிறுபான்மையினரை எதிர்த்து பல கலவரங்கள் செய்திருந்தாலும் மேட்டுக்குடி சீமாட்டிகளுக்கு ஏற்பட்ட அவமானமே பல தேசிய ஊடகங்களுக்கு கவலையாக இருந்தது. அந்தக் கவலையை சேனாவும் இலவசமான பிரபலமாக நன்கு அறுவடை செய்துகொண்டது. இப்போது இதன் தலைவர் பிரமோத் முத்தாலிக் காசு வாங்கிக் கொண்டு கலவரம் செய்வதாக ஒரு கேமராவில் ஒப்புக் கொண்டிருக்கிறார். தெகல்கா – ஹெட்லைன்ஸ் டுடே இணைந்து நடத்திய ஸ்டிங் ஆப்பரேஷனில் இந்த வானரங்கள் வகையாய் சிக்கியிருக்கின்றன.

இந்த நடவடிக்கையின் படி ஒரு நிருபர் டம்மி ஆர்ட்டிஸ்ட்டாக அதாவது ஓவியனாக நடித்து முத்தாலிக்கை அணுகியிருக்கிறார். அதன்படி அவரது ஓவியக் கண்காட்சியை முத்தாலிக்கின் ராமசேனா வானரங்கள் அடித்து கலவரம் செய்தால் பிரபலமாகிவிடலாமென்றும், அதற்கு எவ்வளவு பணம் தரவேண்டுமென்பதே டீல். இதற்காக முத்தாலிக்கை மட்டுமல்ல அவரது இயக்கத்தின் மற்ற தலைவர்களையும் அந்த நிருபர் பார்த்திருக்கிறார். அவர்களும் அந்த கண்காட்சி முசுலீம்கள் இருக்கம் பகுதியில் இருந்தால் பிரச்சினையை பெரிதாக கொண்டு செல்லலாமென்று வழிகாட்டியிருக்கிறார்கள்.

உரையாடலிலிருந்து சில பகுதிகள்:

நிருபர்: நான் பிரபலமானால் எனது வியாபாரம் வளர்வதற்கு உதவியாக இருக்கும். இதைச் செய்வதற்கு உங்களுக்கு எவ்வளவு ஆட்கள் தேவைப்படுவார்கள், எனக்கு எவ்வளவு செலவாகும் என்று சொல்லுங்கள். இந்த கலவரத்திற்காக நான் போலீசில் புகார் கொடுக்கமாட்டேன், இது நமக்குள்ளே மட்டும் நடக்கும் விசயம். முன்பணமாக எவ்வளவு தரவேண்டுமென்று சொல்லுங்கள், கொடுத்துவிடலாம்.

(இந்த வேலையைச் செய்வதற்கு தயாரான முத்தாலிக் அதற்கான ஏற்பாடுகளை பெங்களூருவிலேயே செய்துவிடலாமென்று சம்மதிக்கிறார்.)

நிருபர்: ஐயா, இதை நான் உறுதி செய்து கொள்ளவேண்டும். உடனடியாக இல்லையென்றாலும் சில நாட்கள் கழித்துக் கூட நான் வருகிறேன். இதற்கு மொத்தமாக எவ்வளவு செலவு பிடிக்குமென்று தெரிந்தால் நான் அதற்கு ஏற்பாடு செய்து விடுவேன்.

முத்தாலிக்: நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் எங்களது கிளைத் தலைவர்…..

நிருபர்: பெங்களூருவில்…?

முத்தாலிக்: ஆமாம், பெங்களூருவில்தான். அவர், வசந்த் குமார் பவானி, பலமான கை. அவரோடு அறிமுகமாகியிருக்கிறீர்களா?

(இறுதியில் முத்தாலிக் கலவரத்தை நடத்துவதற்கு ஒப்புதல் தந்த உடன் மிச்சிமிருந்த ஒரே வேலை தொகையை நிர்ணயம் செய்வதுதான். அதற்கு முத்தாலிக் தனது தளபதிகளான பிரசாத் அட்டாவர் (சேனாவின் தேசிய துணைத் தலைவர்), மற்றும் வசந்த்  குமார் பவானி (சேனாவின் பெங்களூரு தலைவர்) இருவரையும் சந்திக்க சொல்கிறார். இதில் அட்டாவர் என்பவனை சிறையில் சந்திக்கிறார் நிருபர்.)

நிருபர்: நாங்கள் பதினைந்து இலட்சமாக கொடுத்து விடுகிறோம்.

அட்டாவர்: ஆமாம் ஆமாம்? இருந்தாலும் நான் அதை கணக்கட்டு சொல்கிறேன்.

(நிருபர்கள் அட்டாவரை மங்களூர் சிறையில் இருமுறையும், பெல்லாரி சிறையில் ஒரு முறையும் சந்தித்து பேசுகிறார்கள். அட்டாவரும் மங்களூர் பஃப்பில் நடத்தப்பட்ட தாக்குதலைப் போல செய்துவிடலாமென்று உறுதி கூறுகிறார்.)

அட்டாவர்: எவ்வளவு பணம் வேண்டுமென்று சொல்வேன்.

நிருபர்: கலவரத்திற்கு எத்தனை நபர்களை கொண்டுவருவீர்கள்?

அட்டாவர்: ஐம்பது.

நிருபர்: ஆக கலவரம் செய்ய ஐம்பது பேர் வருவார்கள்?

அட்டாவர்: நிச்சயமாக. மங்களூர் பஃப்பில் நடந்த மாதிரிதான்.

(ஆனால் கலவரத்தை எப்படி பக்காவாக நடத்த வேண்டுமென்று சொன்னவர் சேனாவின் பெங்களூரு தலைவர் பவானிதான். அவரது உரையாடலைப் பாருங்கள்.)

பவானி: கண்காட்சியைத் திறப்பதற்கு மும்தாஸ் அலியைக் கூப்பிட முடியுமா?

நிருபர்: யார் அது?

பவானி: அவர்தான் கர்நாட வக்ப் போர்டு உறுப்பினர்.

(விசயம் இப்படி நல்லபடியாக போய்க் கொண்டிருந்தாலும் முத்தாலிக் தனது இமேஜூக்கு பிரச்சினை வரக்கூடாது என்பதில் குறியாய் இருந்தார்.)

முத்தாலிக்: இதில் நான் நேரடியாக சம்பந்தப்பட முடியாது. இந்துத்துவ விழுமியங்களின் ஆதரவாளனென்று சமூகத்தில் எனக்கு ஒரு இமேஜ் இருக்கிறது.

நிருபர்: ஆனால் ஐயா, இது யாருக்கும் தெரியாது.

முத்தாலிக்: எல்லாம் சரிதான். ஆனால் எனது மனசாட்சி நான் ஏதோ தவறு செய்கிறேனோ என்று எச்சரிக்கிறது.

நிருபர்: எம்.எப். ஹூசைன் மற்றும் மற்றவர்களது கண்காட்சியில் என்ன செய்தீர்களோ அது போல.

முத்தாலிக்: ஆமா ஆமாம்.

நிருபர்: அதே மாதிரி என் கண்காட்சியிலும் நடக்க வேண்டும். அது பெங்களூருவின் சிவாஜி நகரிலோ, மங்களூருவிலோ இல்லை முசுலீம்கள் இருக்கும் எப்பகுதியிலும் இருக்கலாம்.

முத்தாலிக்: என்ன மாதிரியான உதவியை எதிர்பார்க்கிறார்கள்? அது மங்களூர், பெங்களூரு இரண்டிலும் செய்ய முடியும்.

நிருபர்: அறுபது இலட்சம் போதுமா?

முத்தாலிக்: இதை யார் உங்களுக்கு சொன்னார்கள்?

நிருபர்: வசந்த்ஜியுடன் பேசியிருக்கிறோம்.

முத்தாலிக்: பணத்தை நான் உறுதி செய்ய முடியாது. அது அவர்களின் (சேனாவின் மற்ற தலைவர்கள்) வேலை, அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

மேற்கண்ட உரையாடலிலிருந்து ராம சேனாவின் தலைவர் முத்தாலிக்கும் அவரது சகபாடிகளும் கூலிக்கு கலவரம் செய்பவர்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. இனி பிரமோத் முத்தாலிக்கின் ஜாதகத்தைப் பார்க்கலாம்.

______________________________________________

கர்நாடக மாநிலம், பெலகாம் மாவட்டம், ஹுக்கேரியில் பிறந்த முத்தாலிக்கின் தற்போதைய வயது 47. பதிமூன்று வயதாக இருக்கும்போது 1975இல் ஆர்.எஸ்.எஸ்இல் சேர்கிறார். 2004இல் பஜ்ரங்க தள்ளின் தென்னிந்திய அமைப்பாளராக நியமிக்கப்படுகிறார். தேர்தல் அரசியலில் நுழைந்து ஒரு ஆளாக விரும்பினாலும் இவருக்கு பா.ஜ.க சீட்டு கொடுக்கவில்லை. இதனால் மனம் வெறுத்த முத்தாலிக் 2005இல் பஜ்ரங்தளத்தை விட்டு விலகுகிறார். அதே ஆண்டு சிவசேனாவின் கர்நாடக மாநில தலைவராக உருவெடுக்கிறார். பிறகு அதிலிருந்து விலகி 2006இல் ராஷ்ட்ரிய இந்து சேனாவை ஆரம்பிக்கிறார். மாநிலம் முழுக்க சுற்றுப் பிரயாணம் செய்து இந்துவெறிப் பேச்சாளராக பிரபலமாகிறார். இதில் மட்டும் இவர் மீது பதினொரு மாவட்டங்களில் வழக்கு இருக்கிறது. 2008இல் சிரிராம் சேனா ஆரம்பித்ததும்தான் முத்தாலிக் நாடு அறிந்த தலைவராக பிரபலம் ஆகிறார்.

முத்தாலிக்கின் சிறிராம சேனாவின் கைங்கரியங்கள் சில:

  • 2009 ஜனவரியில் இந்து கலாச்சாரத்திற்கு விரோதமென்று கூறி மங்களூர் பஃப்பில் பெண்களை அடித்து கலவரம் செய்தார்கள். இதில் முத்தாலிக்கும் 27 பேர்களும் கைது செய்யப்பட்டார்கள்.
  • ஆகஸ்ட்டு 2008 இல் சேனாவின் குண்டர்கள் எம்.எப்.ஹூசைனது கண்காட்சியை டெல்லியில் வைத்து தாக்கி கலவரம் செய்தார்கள்.
  • 2008 இல் மதமாற்றம் என்று குற்றம் சாட்டி கர்நாடகாவின் பல கிறித்தவ தேவாலயங்களை தாக்குகிறார்கள். 2009இல் ஆறு தேவாலயங்களை அடித்து நொறுக்குகிறார்கள்.
  • 2009 பிப்ரவரியில் காதலர் தினத்தை கொண்டாடுபவர்களை பிடித்து திருமணம் செய்து வைக்கப் போவதாக முத்தாலிக் அறிவித்தார். இதை எதிர்த்து சில பெண்கள் அமைப்புகள் முத்தாலிக்கு பிங்க் நிற ஜட்டியை அனுப்பி எதிர்ப்பு தெரிவித்தன. இது நாடெங்கும் ஆதரவை ஏற்படுத்தியது.

________________________________________

நுகர்வுக் கலாச்சாரத்தின் அங்கமாகிப் போன காதலர்தினம், பஃப் இரண்டையும் பாரதக் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று முத்தாலிக் செய்த பிரச்சாரம் நடுத்தர வர்க்க பெற்றோர்களான இந்துக்களின் ஆதரவைப் பெறாமலில்லை. இளையவர்கள் இதை ஆதரிக்கவில்லை என்றாலும் பொதுவில் இந்துக்களின் சாம்பியனாக காட்டிக் கொள்ள இந்தப் போராட்டங்கள் கைகொடுத்திருக்கின்றது. மேலும் மேட்டுக்குடியின் நிகழ்ச்சி நிரலில் இத்தகைய தாக்குதல்கள் வந்த உடன்தான் தேசிய ஊடகங்கள் இதை கவனம் கொடுத்து முக்கியத்துவம் கொடுத்தன. மங்களூரு பஃப்பில் சுமார் 25 குண்டர்களை வைத்தே நடத்திய தாக்குதல் முத்தாலிக் பிரபலம் ஆவதற்கு போதுமானதாக இருந்தது.

இத்தகைய சிறு கும்பலை வைத்து ரகளை செய்யும் இந்தக் கூட்டத்தை இருக்கும் சட்டப்பிரிவுகளின் படியே கூட எளிதாக முடக்க முடியும். ஆனால் அதைச்செய்ய எந்த அரசும் துணியவில்லை என்பதை எந்த ஊடகங்களும் எழுதவில்லை. மேலும் கர்நாடகாவில் இருக்கும் பா.ஜ.க அரசு இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அரவணைக்கும் வேலையை செய்து வந்தது. இந்துத்தவா கும்பலில் இருக்கும் தீவிர இளைஞர்களை அணிதிரட்டும் வேலையை இவர்கள் செய்துவருகிறார்கள் என்பது பா.ஜ.க கும்பலுக்கு ஒரு போட்டியாக இருக்கிறது.

காதலர் தினத்திற்கு, இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி, சிவசேனா என நாடு முழுக்க இவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதும், இந்த சிறு கும்பல்களை அடக்காமல் அரசு விட்டுவைப்பதும், ஊடகங்கள் இவர்களை பிரம்மாண்டமான சக்தி உடையவர்களாக விளம்பரம் கொடுப்பதும் தான் இவர்கள் வளர்வதற்கு காரணமாக இருக்கின்றது.

காசுவாங்கிக் கொண்டு இவர்கள் எதுவும் செய்வார்கள்  என்பது கூட புதிதில்லைதான். ஏனென்றால் விசுவ இந்து பரிஷத்தின் வேதாந்தி கூட ஹவாலா ஊழலில் கேமராவின் முன்னர் சிக்கியவர்தான். விசுவ இந்து பரிஷத் இயக்கம்தான் நாட்டிலேயே மிக அதிகமான வெளிநாட்டுப் பணத்தைப் பெறும் தன்னார்வ அமைப்பாகும். இந்தப் பணத்திற்கு முறையான கணக்குகள் எதுவுமில்லை என்பதுகூட ஊடகங்களில் பலமுறை நிரூபிக்கப்பட்டிருக்கின்றது.

ஆர்.எஸ்.எஸ் இன் இந்துத்துவ வேகம் போதுமானதல்ல என்ற போட்டியின் விளைவாகத்தான் சிரிராம் சேனா, இந்துமக்கள் கட்சி போன்றோர் தோன்றி பிரபலமாகிறார்கள் என்பது உண்மைதான். ஆர்.எஸ்.எஸ் கூட்டம் நேரடியாக மறுகாலனியாதிக்கத்தின் மூலம் பெரும் ஆதாயத்தை அடையும் போது இந்தப் போட்டிக் கூட்டம் இந்துத்தவக் கற்பை முன்வைத்து இப்படி சில்லறை ஆதாயங்களை அடைகிறது. ஐ.பி.எல் ஊழலைக் காப்பதற்கு பா.ஜ.கவின் அருண் ஜெட்லி துணிவதும், பாரதா மாதாவின் கற்பைக் காப்பதற்கு காதலர் தினத்தை சிரிராம் சேன எதிர்ப்பதும் வேறு வேறல்ல.

இந்து மக்கள் கட்சி கூட தமிழ்நாட்டின் சிரிராம் சேனாதான். இந்த காவி லும்பன் கும்பல் சீரிரங்கத்தில் பெரியார் சிலையை இடித்த போதும், சிதம்பரத்தில் தீட்சிதர்களோடு சேர்ந்து கொண்டு தமிழுக்கு எதிராக களம் இறங்கிய போதும் இந்தக் காலிகளை நாங்கள் களத்தில் எதிர்கொண்டு பாடம் புகட்டினோம். ஆனால் இவர்களுக்கு தினமணி நடுப்பக்கத்தில் இட ஒதுக்கீடு செய்து ஆராதிக்கிறது. மற்ற பத்திரிகைகளும் இந்து மக்கள் கட்சி எது செய்தாலும் அதற்கு விளம்பரம் அமைத்துக் கொடுக்கின்றன.

பிரபலமே ஆகாத கவிஞர்களும், ஓவியர்களும் தமிழகத்தில் பிரபலமாக வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? இந்து மக்கள் கட்சிக்கு ஒரு போன் போட்டு டீல் பேசினால் போதும். மிச்சத்தை அவர்களும், ஊடகங்களும் பார்த்துக் கொள்வார்கள். இந்திய அளவில் பிரபலமாக வேண்டுமென்று சொன்னால் அது சீரிராம் சேனாவிடம் போக வேண்டும். அது எப்படி என்பதைத்தான் இப்போது காமராவில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

புதிய ஜனநாயகம் – மே, 2010 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!


புதிய ஜனநாயகம் மே 2010 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள்:

  1. பத்திரிகை செய்தி “மறுகாலனியாதிக்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டங்களைத் தீவிரப்படுத்துவோம்!” -மாநில அமைப்புக் கமிட்டி, இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்)-இன் எட்டாவது பிளீனச் சூளுரை.
  2. சிதம்பரத்தின் காட்டுவேட்டைக்கு மாவோயிஸ்டுகளின் பதிலடி
  3. பசியைப் போக்குமா? பட்டினியில் தள்ளுமா?
  4. ரவுடி போலீசாருக்கு அரணாக நிற்கும் கருணாநிதிக்குக் கருப்புக் கொடி! வழக்குரைஞர்களின் கலகம்!
  5. கோக் எதிர்ப்பு: பிளாச்சிமடா மக்களுக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி!
  6. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகமா? ஏகாதிபத்தியக் கைக்கூலி நிறுவனமா?
  7. நக்சல்பாரி புரட்சி நாயகன் தோழர் கனு சன்யாலுக்கு வீரவணக்கம்!
  8. இராணுவச் செலவு அதிகரிப்பு: நாட்டு மக்களைப் பாதுகாக்கவா?
  9. முதலாளித்துவப் பயங்கரவாதத்திற்கு எதிராகக் குலுங்கியது புதுச்சேரி!
  10. “கழுதைக்குத் தெரியுமா? கற்பூர வாசனை?” -தியாகிகள் நினைவிட இடிப்புக்கு எதிராகக் கண்டன ஆர்ப்பாட்டம்.
  11. நிதிச் சூதாட்டத்தால் திவாலானது கிரீஸ்!
  12. “டி.ஆர்.பாலுவின் சாராய ஆலைக்கு எதிரான வடசேரி மக்களின் போராட்டம் ஓங்கட்டும்!” -அடக்குமுறைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்.
  13. முதலாளித்துவப் பயங்கரவாதத்துக்கு விழுந்த முதல் அடி! ஓசூர் கமாஸ் வெக்ட்ரா தொழிலாளர் போராட்டம் வெற்றி!
  14. பாசிச மோடிக்குப் புரியுமா, ஒரு தாயின் பரிதவிப்பு!
  15. காவிக் கறை படிந்த தீர்ப்புகள்
  16. இருதலைக் கொள்ளி எறும்பாய் ஐதராபாத் நகரம்
  17. காமுகர்களின் கூடாரமாகக் கத்தோலிக்கத் திருச்சபை!
  18. பன்னாட்டு மருந்து கம்பெனிகளின் வேட்டைக் காடாகிறது இந்தியா!
  19. “மின்கட்டண உயர்வைத் திணிக்க கருத்துக் கேட்பு நாடகமாடாதே!” -புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டம்

புதிய ஜனநாயகம் மே 2010 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 6 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS).

பட்டினிச் சாவின் விளிம்பில் இந்தியக் குழந்தைகள்: நாட்டிற்கே அவமானம்!

  • உலகெங்கிலும் உள்ள ஏழை நாடுகளில் வயதுக்கு ஏற்ற வளர்ச்சியின்றி வாழும் ஐந்து வயதுக்குக் கீழான குழந்தைகளின் எண்ணிக்கை 19.5 கோடி.
    இதில் இந்தியாவில் மட்டும் ஏறத்தாழ 6.1 கோடி குழந்தைகள் வயதுக்கு ஏற்ற வளர்ச்சியின்றி உள்ளனர்.
  • உலகெங்கிலும் உள்ள ஏழை நாடுகளில் உயரத்துக்கு ஏற்ற எடையின்றி வாழும் ஐந்து வயதுக்குக் கீழான குழந்தைகளின் எண்ணிக்கை 7.1 கோடி.
    இதில் இந்தியாவில் மட்டும் ஏறத்தாழ 2.5 கோடி குழந்தைகள் உயரத்துக்கு ஏற்ற எடையின்றி உள்ளனர்.
  • உலகெங்கிலும் உள்ள ஏழை நாடுகளில் வயதுக்கு ஏற்ற எடையின்றி வாழும் ஐந்து வயதுக்குக் கீழான குழந்தைகளின் எண்ணிக்கை 12.9 கோடி.
    இதில் இந்தியாவில் மட்டும் ஏறத்தாழ 5.4 கோடி குழந்தைகள் வயதுக்கு ஏற்ற எடையின்றி உள்ளனர்.

ஆப்பிரிக்கா கண்டத்தைச் சேர்ந்த பல ஏழை நாடுகளை விட, “வல்லரசு” இந்தியா பட்டினி இந்தியாவாக இருக்கிறது என்பதைத்தான் இந்தப் புள்ளிவிவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
ஒருபுறம்,  நிரம்பி வழியும் இந்திய உணவுக் கழகத்தின் கிடங்குகள்; இன்னொருபுறமோ, பல கோடி இந்தியக் குழந்தைகள் பட்டினிச் சாவை எதிர்கொண்டுள்ள அவலக் காட்சி.  ஏழைக் குழந்தைகளின் பட்டினியைப் போக்கப் பயன்படாத இந்த உணவு தானியக் கையிருப்பு யாருக்குப் பயன்படப் போகிறது?  அதோ, உணவு தானியங்களை ஏற்றுமதி செய்து அமெரிக்க டாலரைச் சம்பாதிக்கும் “பசியோடு” காத்துக் கிடக்கிறார்கள் முதலாளிகள்; மன்மோகன் சிங்கின் கண்ணசைவிற்காக!

புதிய ஜனநாயகம் – மே 2010

vote-012

தொடர்புடைய பதிவுகள்

கொளத்தூர்: வன்னிய சாதி வெறி ! நேரடி ரிப்போர்ட் !!

213

அறியப்படாத மேற்கு தமிழகத்தின் ஆதிக்க சாதிவெறி!

vote-012சாதிக்கலவரம், சாதிப் பிரச்சினை என்றாலே நம் எல்லோரின் நினைவுக்கு வருவது தென் மாவட்டங்கள்தான். சாதிவெறியர்கள் என்றாலே அது தேவர் சாதிவெறி என்றுதான் நினைவுக்கு வருகிறதே தவிர ஏனைய ஆதிக்க சாதிகள் குறித்த பார்வை பெரும்பாலும் மக்களிடத்தில் எடுத்துச் செல்லப்படவில்லை என்றே தோன்றுகிறது.

முக்கியமாக தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் இருக்கும் ஆதிக்க சாதிவெறியர்களின் கொடுமைகள் அதிகம் பேசப்படுவதில்லை. அப்படித்தான்  கொங்கு பகுதிககளில் நடக்கும் சாதிக்கொடுமை சந்திக்கு வருவதே இல்லை. கொங்குப் பகுதிகளில் அதிகம் வசிக்கும் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் வன்னியர்களை கவுண்டர் என்று இன்றளவும் அழைப்பதில்லை.

ஆனால் வன்னியர்கள் அதிகம் வாழும் கொங்கு மண்டலத்தின் வடபகுதியில் கவுண்டர் என்றால் அது வன்னியரையும் குறிக்கிறது. “கவுண்டர்ன்னா வெள்ளாளக்கவுண்டரா?” என்று கேள்வி கேட்டால் அவர்கள் முகம் கோணலாகி இல்லை படையாச்சி என்று செருமுவதை பல இடங்களில் கேட்க முடியும். என்னதான்  பணக்காரனாயிருந்தாலும் வன்னியர்கள்,  கொங்கு வேளாளக் கவுண்டருக்கு முன் ‘கீழ்சாதி’தான். வேளாளக் கவுண்டர்கள் “பள்ளி பசங்க” என்று வன்னியர்களை திட்டுவது சாதரணமான ஒன்று.

ஒரு தலித் “என்னா கவுண்டரு” என்று கேள்வி கேட்க முடியாது. ஆனால் ஒரு வேளாளக் கவுண்டர் “ஓ படையாச்சியா? பள்ளியா?” என்று கேள்வி கேட்க முடியும்.  தலித் அல்லாத சாதிக்காரர்கள் என்ன கவுண்டரே என்றால் வன்னிய சாதிக்காரர்களுக்கு ஒரே பெருமைதான். பார்ப்பன இந்து மதம் என்பதே வலம்புரி ஜான் சொன்னதைப்போல தனக்கு மேல் கால்களையும் தனக்கு கீழ் தோள்களையும் எப்போதையும் தேடும்.

ஆதிக்க சாதி என்பதே அடித்து வீழ்த்தப்பட வேண்டியதுதான் அதில் முற்போக்கு இருக்க முடியுமா? இதோ நாங்கள் இருக்கிறோம் என்கிறது வன்னியர் சங்கம். ராமதாஸ் ஒரு முறை சொன்னார் “வன்னிய சங்கம் மட்டும் சாதி வெறியற்றது. நாங்கள் எங்களுக்காக மட்டுமா போராடினோம்? மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வண்ணார், நாவிதர், மருத்துவர் எல்லா சாதிகளையும் நாங்கள்தானே கொண்டு வந்தோம்”.

வன்னியர் சாதி ஆதிக்க சாதியா என்பது குறித்து பலருக்கும் தெரிவதில்லை.  ஒரு முறை என்னுடைய தென் மாவட்டத்து நண்பர் சொன்னார் “வன்னியர் சாதியெல்லாம் ஒடுக்கப்படுற சாதிதான” அவருடன் 3 மணி நேரத்துக்கு மேல் வன்னிய சாதிவெறியினை விளக்க வேண்டியிருந்தது. சாதி ஆதிக்கத்துக்கு தேவர் என்றோ,  நாடார் என்றோ, வன்னியர் என்றோ எதுவும் தெரியாது. தன் கோரப்பற்களால் உழைக்கும் மக்களை கடிப்பது மட்டும்தான் தெரியும். வன்னியர் சாதி ஆதிக்கத்தை பற்றி தெரிந்து கொள்ள நாமும் இப்போது அந்தக் கிராமத்துக்குள் நுழைவோம்.

கொளத்தூர் வட்டாரத்தில் கோலேச்சும் வன்னிய சாதிவெறி!

கொங்கு மண்டலத்தின் வடபகுதியில் உள்ள சேலம் மாவட்ட எல்லையையும் ஈரோடு மாவட்ட எல்லையையும் கொணடதுதான் கொளத்தூர். கொங்கு வெள்ளாள கவுண்டர்களும், வன்னியர்களும் பெரும்பான்மையாக வாழும் பகுதி.

கொளத்தூர் இந்தப் பெயரைக் கேள்விப்பட்டவுடனே பலருக்கும் தோன்றும் நினைவு “அட நம்ம வீரப்பன் ஊரு தான”. அது உங்கள் நினைவாயிருக்கலாம். ஆனால் “நம்ம” என்ற வார்த்தை இங்கு வன்னியர்கள் மட்டும்தான் உபயோகிப்பார்கள். கொளத்தூர் பேருந்து நிலையத்தில் பெரிய டிஜிட்டல் போர்டு இருக்கிறது பாருங்கள். அதில் வீரப்பன் படத்தைப் போட்டு “10 லட்சம் மானமுள்ள வீர வன்னியர்களே சித்திரை திருவிழாவுக்கு வாருங்கள்” என்ற வாசகம் உங்கள் கண்ணுக்கு புலப்படுகின்றதா?

இங்கு மட்டுமல்ல  சேலம் மாவட்டம் முழுக்க வீர வன்னியன் வீரப்பகவுண்டரு படத்தோடுதான், அய்யாவின் படமும் சின்ன அய்யாவின் படமும் இருக்கின்றது. வீரப்பனை தமிழனென்றும், தமிழக விடுதலையை சாதிக்க வந்த போராளி என்றும் கற்பனையில் இன்பம் தேடும் தமிழ்தேசக் குஞ்சுகள் ஒரு எட்டு கொளத்தூர் சென்று பார்க்கவும்.

கொளத்தூரைச் சுற்றி நூற்றுக்கணக்கான கிராமங்கள் இருக்கின்றன. தனிக்குவளை முறை அவ்வப்போது ஒழிக்கப்பட்டதாக சொல்வார்கள். வெளியூர்க்காரன் யார் வந்தாலும் அங்கு டிஸ்போசபிள் டம்ளர் தான். எந்த ஊரில் இறங்கினாலும் புதிய நபர்  எந்தப்பக்கம் செல்கிறாரோ அது அவரின் ஜாதியாக இருக்கலாம். நீங்கள் தவறாக தலித் குடியிருப்புக்குள் சென்று விட்டு பேருந்து நிறுத்தத்தில் வந்து முகவரி விசாரித்தால் கிடைக்கும் மரியாதை அமோகமாக இருக்கும்.

இக்கிராமத்தில் ஒரு தாழ்த்தப்ப்ட்ட மருத்துவர் ஒருவர் அரசு மருத்துவராக பணி புரிந்தார். அவர் ஊசி போடும் போது வன்னியர்களின் மீது கை படுவதால் பறையன் கை படையாச்சி மீது படுவதா என்று” அங்கு வேலை செய்த பெண்ணை வைத்து மருத்துவர் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறி அவரை விரட்டியடித்தார்கள் வன்னிய வெறியர்கள். இதைப்போல பல நிகழ்ச்சிக்கு பேர் வாய்ந்ததுதான் கொளத்தூர் கிராமங்கள்.

நான் ஒருமுறை  கொளத்தூரை ஒட்டிய கிராமங்களில் ஒன்றிற்கு சென்ற போது என் நண்பர் என்னை பேருந்து நிறுத்தத்தில் இறங்கியவுடன்  மேற்கு பக்கம் வரச் சொன்னார். நான் இதை மறந்துபோக நிறுத்தத்தில் இறங்கி அவரின் பேரைச் சொல்லி “இந்த வேலை செய்கிறார் எந்தப்பக்கம் போக வேண்டும்” என்றேன். வந்த பதிலே “தெரியாது இடத்தைக் காலி பண்ணு” என்றதுதான்.

கருங்கலூர் துப்பாக்கி சூடின் பின்னணி!

இதோ இது தான் கருங்கலூர். இங்குதான் கடந்த 16-ம் தேதி  துப்பாக்கி சூடு நடைபெற்றது. பா.ம.கவின் கோ.க.மணி இது குறித்து சட்டசபையில் கூட பேசினார்.  பத்திரிக்கைகளில் கூட துப்பாக்கி சூடு ஏன் நடந்தது என்பது பற்றி விரிவாக போடவில்லை. கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கி சூடு, இரு சமூகத்துக்குள்ளே மோதல் இவை தான் செய்தியாக வந்தன.

ஆனால் உண்மை என்ன என்பதை அறிய காலம் அதிகம் பிடித்து விட்டது. காரணம் கடந்த 15.04.10 முதல் 24.04.10 வரை மேட்டூர் – கோவிந்தப்பாடி-க்கு பேருந்து மாலை 5 மணிக்கு மேல் இயக்கப்படவில்லை. நேற்று(25.04.10) அன்று இயக்கப்பட்டதாக சொன்னாலும் பாதுகாப்புடனே சென்றது. 24-ம் தேதி வரை கொளத்தூர் – கோவிந்தப்பாடி வரையிலான கிராமங்களில் போலீசுப்படைகள் குவிக்கப்படிருந்தன. 25ம் தேதிதான் கருங்கலூர் தவிர மற்ற கிராமங்களில் போலீசுப் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன. தாக்குதல் நடந்த கருங்கலூரில் தற்போது போலீசு குறைக்கப்பட்டிருக்கின்றது.

வன்னிய சாதி வெறியர்களைப் பொறுத்தவரை”பறையனுங்க வேணாமுன்னு தான நாங்க இருக்கோம், எதுக்கும் அவுனுங்கள கூப்புடறதுல்ல, தள்ளி வச்சிருக்கோம் , சும்மா மரியாத கொடு , மரியாத கொடுன்னு தேவையில்லாம பிரச்சினை பண்றாங்க. பெரியவங்க முன்னாடி கால் மேல கால் போட்டுகிட்டு இருக்கானுங்க, பெரியவங்க முன்னாடி சிகரெட்டு குடிக்கறாங்க புகைய வுடுறானுங்க” இது தான் அவர்கள் குற்றச்சாட்டு.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இக்கிராமங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் ஊருக்குள் செருப்பு அணிந்து போகக்கூடாது, குடைபிடித்து போகக்கூடாது, வன்னியர் வந்தால் மரியாதை தரவேண்டும், சைக்கிளில் செல்லக்கூடாது என எல்லா கொடுமைகளும் நடந்தது. தாழ்த்தப்பட்டவர்கள் வீட்டில் ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் வன்னிய நாட்டமைகள்தான் வருவார்கள். தீர்ப்பு சொல்வார்கள். பின்னர் இப்பகுதி இளைஞர்கள் தங்களை அப்போது உருவாகிக்கொண்டிருந்த விடுதலை சிறுத்தைகளில் இணைத்து சாதி ஆதிக்கத்தை எதிர்த்து வந்தனர்.

அடிவாங்கிக்கொண்டே இருந்த அவ்விளைஞர்கள் அடித்தால் திருப்பி அடிக்க வேண்டும் என்று பேசவும் ஆரம்பித்தார்கள். முன்பெல்லாம் சாதாரணமாக 19 வயது வன்னிய பெரியவருக்கு மரியாதை தராத 60 வயது பறைய சின்னக்குழந்தைக்கு அடி விழும். இப்போதெல்லாம் அப்படி நடப்பதில்லை. நாம் அடித்தால் அவர்களும் அடிப்பார்கள் என்ற எண்ணம் வன்னிய வெறியர்களின் மத்தியில் வேர்விட்டவுடனே, இவர்களை எப்படியாவது ஒழித்துக்கட்டவேண்டுமென்று ஒவ்வொரு வருடம் திருவிழாவின் போதும் முயற்சி நடக்கும். சில முறை அப்படிப்பட்ட நிகழ்வுகள்  அரங்கேறி இருக்கின்றன. இந்த ஆண்டு அந்த ஆதிக்க சாதிவெறி அப்பட்டமாக வெடித்துவிட்டது.

இந்தப்பறையர்கள் தான் நாம் என்ன சொன்னலும் கேட்பதில்லையே அவர்களுக்கு ஏன் நாம் வேலை தர வேண்டும் என கொஞ்சம் கொஞ்சமாக சமூகப்புறக்கணிப்பு  விரிக்கப்பட்டது. எப்போதும் கோயிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் நுழைவதற்கு அனுமதியில்லை, அவர்களுக்கு முடி வெட்டுவதற்கு இங்கு எந்த சலூனும் திறக்கப்படவில்லை. தலித்துக்கள் முடி வெட்ட வேண்டுமானால் கொளத்தூருக்குத்தான் வரவேண்டும். அதுவும் இல்லை எனில் சேரிகளிலேயே முடி வெட்ட தாழ்த்தப்பட்டவரிலேயே ஒருவர் இருக்கிறார். இது அனைத்து கொளத்தூர் கிராமங்களிலும் தொடர்ந்தாலும் கருங்கலூருக்கு சீக்கிரம் திருவிழா வந்து விட்டதால் சீக்கிரமே தாக்குதலும் நடந்து விட்டது.

கருங்கலூர் வன்னிய நாட்டமைகள்  தீர்ப்பு சொன்னார்கள் ” நமக்கு அடங்காத பறையனுங்க இனிமே கோயில் விழாவுக்கு மேளம் அடிக்க கூடாது ,சக்கிலிங்கள வச்சு மேளம் அடிச்சுக்கலாம் “.  திருவிழாவின் முதல் நாள் முடிவில் ஆதி திராவிடர்கள் சிலர் மேளம் அடித்த அருந்ததியர்களிடம் “ஏன் நீங்கள் மேளம் அடித்தீர்கள்?” என்று தகராறு செய்ய, அது வாய்ச்சண்டையில் முடிந்திருக்கிறது.

சில அருந்ததியர்கள் வன்னியர்களிடம் ” நீங்க அடிக்க சொன்னீங்க, அவங்க சண்டைக்கு வராங்க ” என்று சொன்னவுடன் தாக்குவதற்காகவே காத்திருந்த வன்னிய வெறியர்கள் 15ம் தேதி காலை 8 மணியளவில் பா.ம.க கவுன்சிலர் மாரப்பன் தலைமையிலான 200 பேர் கொண்ட கும்பல்  கருங்கலூர் ஆதி திராவிட குடியிருப்புக்குள் நுழைந்து வீடுகளை அடித்து நொறுக்குகிறது. 7 பேருக்கு பலத்தக்காயம். அடித்து முடித்த கும்பல் ஆதிதிராவிட குடியிருப்பிற்குள் யாரும் நுழையாதவாறு முற்றுகையிடுகிறது. ஆளும் கட்சி போன் பண்ணுனா உடனே வரும் 108 ஆம்புலன்ஸ் ஊருக்கு வெளியே நான்கு மணி நேரமாக காத்துக் கொண்டிருந்தது.

வன்னியர்களின் தயவில்லாததால் மருத்துவம் பறையர்களுக்கு கிடைக்கவில்லை. தகவல்  கொளத்தூர் விடுதலை சிறுத்தை கட்சியினருக்கு தெரிய வர வேறு வழியின்றி அவர்கள் டயர்களை கொளுத்தியும், பேருந்துகளை உடைத்தும் தாக்குதல் சம்பவத்தை வெளியே கொண்டு வந்தனர். பின்னர் கொளத்தூர் போலீசு தனது ஜீப்பில் போய் காயமடைந்தவர்களை மீட்டுக்கொண்டு வந்தது. உள்ளூர் வி.சி.யினர் பிரச்சினையை அதிகப்படுத்துவார்கள் என்றெண்ணிய காவல் துறை 16ம் தேதி காலை  கருங்கலூருக்கு வந்தது கவுன்சிலர் மாரப்பன் உட்பட மூவரை கைது செய்ய வந்தது. வஜ்ரா வாகனக்கள் அணிவகுத்து வரிசையாய் நின்றன.

வெறியூட்டப்பட்ட வன்னிய மக்கள் மாதேஸ்வரன் மலைப்பாதையை மறித்து மறியலில் இட்டுபட்டு சாலையில் இருந்த ஒரு லோடு ஜல்லி கற்களையும் போலீசுப் படை மீது வீசித் தாக்குதல் நடத்தியது. ஓடிய காவலர்கள்  துரத்தி துரத்தி மண்டையுடைக்கப்பட்டனர்.

பின்னர் துப்பாக்கிசூடு 9 ரவுண்ட் என்று சொல்லப்படுகின்றது. அதில் காயமடைந்த சின்ன துரை மட்டும் அரசு மருத்துவ மனையில் இருக்க, இன்னும் சிலர் வெளியூரில் ரகசியமாய் வைத்தியம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பா.ம.க தலைவர் ஜீ.கே.மணி “சின்ன சின்ன பிரச்சினைக்கெல்லாம்  துப்பாக்கி சூடென்று” அரசை குற்றம் சாட்டினார்.

எது சின்ன பிரச்சினை? தாழ்த்தப்பட்ட மக்களின் வீடு புகுந்து அடிப்பது சின்ன பிரச்சினையா? அவர்களுக்கு (கொளத்துர் தவிர) கொளத்தூர் கிராமங்களில் கோயிலிலே நுழைய அனுமதி இல்லை, தீ மிதிக்கவோ, கரகம் எடுக்கவோ அனுமதி இல்லை, கருங்கலூர் – கோவிந்தப்பாடி வரை தாழ்த்தப்பட்டவர்களுக்கு முடி வெட்ட சலூன் கடைகள் மறுப்புத் தெரிவிக்கின்றன. இதெல்லாம் சிறிய பிரச்சினைதானே ‘சத்திரியர்களுக்கு’?

ஆதிதிராவிடர்கள் மீது தாக்குதலும் தொடுத்துவிட்டு புது புரளியை கிளப்பி விட்டு இருக்கிறார்கள் பா.ம.கவினர். “சக்கிலிங்கள பறையனுங்க வூடு பூந்து அடிச்சுட்டனுங்க, பாவம் சக்கிலி பொம்பளங்க  சிலமண்டையெல்லாம் உடஞ்சு போச்சு, நாங்க ஏண்டா இப்படி பண்ணுறீங்கன்னு சும்மா அவங்க ஊட்டுல போய் ரெண்டு அறை விட்டோம் அவ்வளவுதான், இதை என்னவே பெரிய பிரச்சினையாக்கிட்டாங்க இந்தப்பசங்க ”

ஆதி திராவிடர்களுக்கும் அருந்ததியர்களுக்கும் இடையில் மோதல் ஏதும் நடக்கவில்லை,  அப்படி நடந்தாலும் உன்னை யார் நாட்டாமையாக்கியது? சில ஆண்டுகளாக நடக்காத தாக்குதல் ஏன் இம்முறை நடந்தது?

கருங்கலூர் வன்னிய சாதிவெறியை எதிர்க்கும் தலித் இளைஞர்கள்!

இப்பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஆதி திராவிட இளைஞர்கள் அதிகமாவும் அருந்ததியர்கள் சிலரும் இருக்கின்றனர். அருந்ததியர்களைப் பொறுத்தவரை போதிய அளவுக்கு விழிப்புணர்வு இல்லாதிருப்பதாக கூறப்படுகின்றது. பறையர்கள் வன்னியர்களின் மேலாதிக்கத்தை தொடர்ந்து எதிர்த்து வருவது  அவர்களின் கோபத்தை கிளறிக்கொண்டிருந்தாலும் அருந்ததியர்களும்  ஆதிதிராவிடர்களோடு சேர்ந்து எதிர்க்க ஆரம்பித்ததுதான் இத்தாக்குதலுக்கு காரணம்.

சுமார் 2 மாதங்களுக்கு முன்பு அருந்ததிய இளைஞன் ஒருவர் அந்தியூரை சேர்ந்த வன்னிய பென்ணை காதலித்து கூட்டிக்கொண்டு வர, அந்தியூர் பா.ம.க மூலமாக கவுன்சிலர் மாரப்பனுக்கு தகவல் வர,அதற்குள் பயந்து போன இளைஞனின் தந்தை மாரியப்பன் “பையன் தெரியாம கூட்டிட்டு வந்துட்டான் பொன்ணை கூட்டிட்டு போயிடுங்க” என்றிருக்கிறார். அதற்குள் இளைஞனும் அப்பெண்ணும் காவேரிபுரம் விடுதலை சிறுத்தைகளிடம் தஞ்சம் புகுந்து விட்டனர்.

காவேரிபுரம், வி.சிக்களின் செல்வாக்கான பகுதி என்பதால் பா.ம.க  வன்னிய வெறியர்கள்  மாரியப்பனின் வீட்டை அடித்து நொறுக்கி அவரின் மனைவி மற்று இரு உறவினர்களை பலமாக தாக்கியிருக்கின்றனர். பின்னர் அவரின் ஆடு, மாடு, டி.வி.எஸ் வண்டியை திருடிக்கொண்டு போயிருக்கின்றனர். இதை ஒளிந்திருந்து பார்த்த மாரியப்பன் வி.சிக்களிடம் சொன்னவுடன், அவர்கள் அடுத்த நாள் ஈரோடு சாலையில் 3 மணி நேரம் மறியல் செய்கிறார்கள். வேறு வழியின்றி மாரப்பன் உள்ளிட்ட சிலர் மீதி பி.சி.ஆர் வழக்கு போடப்படுகின்றது. ஆனால் மாரப்பனோ கைது செய்யப்படாமல் சட்டத்தில் ஓட்டைகளை வைத்து போலீசின் உதவியால் எப்படியோ முன்ஜாமீன் பெற்று விட்டு தப்பிக்கிறார்.

“வன்னிய பொண்ணை சக்கிலி தொட்டுட்டான் என்பதுதான்  பிரச்சினை, அதுவும் பொண்ணை மீட்க முடியாதிருப்பது வன்னியர்களுக்கு மாபெரும் அவமானம், இன்னும் அவர்கள் ஏதோ ஒரு ஊரில் வாழ்ந்து கொண்டிருப்பது மிகக் கேவலம்”. அதற்கு சின்ன பரிகாரம் பறையர்களின் மீதான தாக்குதல். நாங்க சொல்றதக் கேட்டுக் கொண்டு இருந்தால் ஏன் இந்தப்பிரச்சினை? என்கிறார்கள் வன்னிய சாதி வெறியர்கள்.

இதில் கவனிக்கத்தக்க இன்னொரு விசயம் இருக்கிறது. இது கூட எதேச்சையாக பேருந்தில் ஒருவர் பேசியதைக் கேட்டதுதான் “டி.எஸ்.பி தாழ்த்தப்பட்ட சாதிதான , அவரு போன முறை அந்தப் பையன் வன்னிய பொண்ணை கூட்டிக்கிட்டு வந்தப்போ பாதுகாப்பு கொடுத்தார், டி.எஸ்.பி நம்மாளுங்க கையை பிடிச்சு ஜீப்புல ஏத்துறத பார்த்தவுடனே நம்மாளுங்க செம டென்சன் ஆயிட்டாங்க, போலீசுக்கு செம அடி”.

இப்போது வன்னியர் சங்கத்தினர் கொளத்தூர் கிராமங்களில் தாழ்த்தப்பட்டவர்களூக்கு மீண்டும் பாடம் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.  பிரச்சினை எனில் வழக்குக்கான நிதியை நாம் பகிர்ந்து கொள்ளவேண்டுமென்றும் அது  வன்னியசாதிக்கு கடைமை என்றும் சாதிவெறி பரப்பி வருகின்றனர்.

உழைக்கும் மக்களின் பிரச்சினையைத் திசைதிருப்பும் வன்னிய சாதிவெறி!

வீரப்பன் தேடுதல் வேட்டையில் அப்பாவி மக்கள் சித்திரவதை செய்யப்பட்டார்கள். சோளகர் தொட்டி என்ற நூல்  சித்திரவதைகளின் சில பக்கங்கள்தான். வீரப்பனின் கூட்டாளி என்று சந்தேகித்து தினமும் பலரை இழுத்து வரும் அதிரடிப்படை அவர்களை தினமும் உதைத்துக் கொண்டே  இருக்கும். அப்படி அடிபட்டவனில் ஒருத்தன் கூட வன்னியன் இல்லையா, அந்த சித்திரவதை முகாம்கள்  அருகில் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்குமா வன்னியர் சங்கம்?

கொளத்தூர் கிராமங்களில் விவசாயம் அறவே இல்லை, விவசாயம் செத்துப்போய் விட்டதே, நம் வாழ்வினை பறித்து விட்டார்களே என்ற கோபம் அரசாங்கத்துக்கெதிராக எப்போதும் வருவதில்லை. பி.டிபருத்தியை பயிரிட்டு நாசாமாய்ப்போன வன்னியனை எப்போதும் வன்னியர் சங்கம் முகர்ந்து பார்ப்பதில்லை. ஆனால் பறையன் கால்மேல் கால் போட்டால் கோபம் வரும். மக்களைத் தின்னும் ஆளும் வர்க்கத்துக்கெதிராக எப்போதும் தூக்கப்படாத அரிவாள், தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் உரிமையைக் கேட்கும் போது சீறிப்பாய்ந்து வருகிறது.

“வடமாவட்டம் முழுவதும் வன்னியர்கள் ஏமாற்றப்படுகிறார்கள், இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்து, எங்களுக்கு உள் ஒதுக்கீடு கொடு” என்ற போர்வையில் வன்னிய வெறி பரப்பும் பா.ம.கவினர், இந்த தனியார்மய தாராளமய உலகமய சூழலில் இட ஒதுக்கீடு செல்லாக்காசுதான் என்பதைப் பற்றி பேச மறுக்கின்றனர். கல்லூரிகளில் படிக்க லட்சக்கணக்கில்  செலவு, தனியார்மயத்தின் விளைவால் மூடப்பட்ட ஆலைகளால் துரத்தப் படும் தொழிலாளர்கள்  இது எதைப்பற்றியும் பா.ம.க மற்றும் எந்த சாதிச்சங்கமும் பேசுவதில்லை. ஏன் பேசுவதில்லை என்பதல்ல, அவர்கள் பேச மாட்டார்கள் என்பதுதான் உண்மை.

மேட்டூரில் CPM பொரட்சி கட்சியின் சி.ஐ.டி.யூ தான் மிகப்பெரிய தொழிற் சங்கம். ஏற்கனவே தோலர் சீரங்கன்  சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். மாவட்டச்செயலாளரும் இந்த மேட்டூர் தான். இந்தப் பிரச்சினையைப்பற்றி அவர்களுக்கு பேசவே நேரம் இல்லை. மேடை போட்டு எவ்வளவு அழகாக செயாவுக்கு சேலை துவைக்கிறோம் என்று சொல்லவே அவர்களுக்கு  நேரம் சரியாக இருக்கிறது. தனிக்குவளை முறைக்கெதிராக போராடப்போன அந்த சி.பி.எம் தோலர்களையும் காணவில்லை. ஏற்கனவே கொளத்தூர் கிராமங்களில் தீண்டாமை இருப்பதாக  சவடால் விட்ட தோலர்கள் தற்போது தங்களின் வாய்களை இருக்க மூடிக்கொண்டார்கள்.

வன்னிய சாதி வெறியர்கள் மீதான வழக்கை வாபஸ் வாங்க ஜீ.கே. மணி தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார். முதல் கட்டமாக அமைதிகமிட்டி அமைக்கப்பட்டு 21-ம்தேதி திருவிழா தொடங்கப்பட்டு முடிந்தும் விட்டது. வருகின்ற வாரத்தில் அரசு மூலமாக வழக்குகள் பைசல் செய்யப்படும் என்று தெரிகிறது. இது பற்றி திருமாவளவன் ஏதும் அறிக்கைகூடவிடவில்லை.

ஆளும் வர்க்கங்களிடம் சரணடைந்த விடுதலைச் சிறுத்தைகள்!

இந்த ஆதிக்கத்துக்கெதிராக போராடும் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் விடுதலை சிறுத்தைகள் என்ற ஆளும் வர்க்கங்களிடம் சரண்டைந்த கட்சியில் இருப்பது அவர்களுக்கு மிகப்பெரிய பின்னடைவாகும். சுமார் 4 அண்டுகளுக்கு முன்  வன்னியர் தலித் பிரச்சினை தீவிரமாக இருந்த போது தேர்தலும் வந்தது. ஜி.கே மணி மேட்டூர் தொகுதியில் வேட்பாளராக நின்றார். அவருக்கு வி.சிக்கள் ஓட்டு சேகரித்தனர். பெரும்பான்மை தலித் மக்கள்  பா.ம.கவிற்குத்தான் வாக்களித்தனர். “சாதிவெறி எல்லை மீறிபோன இங்கு பா.ம.கவோடு எங்களால் எப்படி இணைந்து வேலை செய்ய முடியும்? இதோ இப்போது கைகுலுக்கிக்கொண்டால் சாதி பிரச்சினை ஒழிந்து விடுமா?” என்று யாரும் கேட்கவில்லை.

சட்டசபையில் சின்ன பிரச்சினை என்று ஜி.கே மணி பேசும் போது  வி.சியின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் என்ன செய்து கொண்டிருந்தார்?  வன்னியர்கள் மீதான துப்பாக்கிச்சூடு என்று இதை மாநில பிரச்சினையாக்கினார் ஜி.கே.மணி. அப்போது திருமா என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று அவரது கட்சியினருக்கு தெரிகிறதா என்பதும் புரியவில்லை.

சாதி ஆதிக்க எதிர்ப்பு போராட்டங்கள் வி.சிக்களால் தொடர்ச்சியாக நடத்தப்படுவதில்லை. அவர்களுக்கு திருமாவளவன் புகழ் பாடவே நேரம் சரியாக இருக்கும். வி.சி கட்சிக்கு இப்போதைய  வேலையே கட்டப்பஞ்சாயத்துதான். உழைக்கும் மக்களிடமிருந்து அவர்கள் வெகுதூரம் விலகிப்போய்விட்டார்கள். ஆதிக்கத்துக்கு எதிராக தொடர்ச்சியாக போராடும் தருணங்களிலே ஒரு தேர்தல் வரும். தேர்தலில் எதை எதிர்த்துப் போராடுகிறார்களோ அதற்காக ஓட்டு கேட்கும் அவலமும் நடைபெறும். இந்த இலட்சணத்தில் விடுதலை எப்படி?

இப்படி பாதிக்கப்படும் இளைஞர்கள் போராடினால் அவை கட்சியின் துரோகத்தால் முற்று பெறாமலே போய்விடுகிறது. சாதிவெறியை ஒழிப்பதோ, சாதியை ஒழிப்பதோ அவ்வப்போது எடுக்கப்படும் தாக்குதலுக்கான எதிர் போராட்டத்தால் மட்டும் முடியாது. அது தொடர்ச்சியாக முனைப்புடன் அரசியல், பண்பாட்டு, கலாச்சார வடிவங்களில் ஊன்றி இருக்க வேண்டும். அதன்படி வி.சி இயக்கம் மூலம் சாதி ஒழியும் என்பது பகற்கனவே.

ஆனால் தாழ்த்தப்பட்ட இந்த இளைஞ்ர்கள் திருமாவைபோல கருணாநிதி வீட்டிற்கும், ஜெயா தோட்டத்திற்கும் சென்று  பொறுக்கித் தின்னவில்லை. பாதிப்பு இருக்கும் வரை எதிர்தாக்குதலும் இருக்கும் என்பதுதான் நியதி . அவ்வகையில் அவர்களின் ஆதிக்கத்துக்கெதிரான போரில் பிற உழைக்கும் மக்களும், புரட்சிகர – ஜனநாயக சக்திகளும் அவர்களோடு களமிறங்க வேண்டியது அவசியம்.

______________________________________________________

– சேலம் மாவட்டத்திலிருந்து வினவு நிருபர்.

vote-012

தொடர்புடைய பதிவுகள்

ஐரோப்பாவை மிரட்டும் கிரேக்கப் புரட்சி !!

15

vote-012அமெரிக்காவில் மையம் கொண்ட பொருளாதார சுனாமி ஐரோப்பிய கரைகளை வந்தடைந்துள்ளது.  அட்லாண்டிக் சமுத்திரக் கரையை அண்டிய அயர்லாந்து,  மத்திய தரைக் கடல் நாடுகளான போர்த்துக்கல், ஸ்பெயின், இத்தாலி, கிறீஸ்   ஆகிய   நாடுகளும்  சுனாமியின்  அகோரமான  தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன. இவற்றில் கிரீசில் ஏற்பட்ட பாதிப்புகள் மட்டும் வெளித் தெரிய ஆரம்பித்துள்ளது. முதன் முதலாக செல்வந்த மேற்கு ஐரோப்பிய வட்டத்தை சேர்ந்த ஒரு தேசம் திவாலாகின்றது. மக்கள் வங்கிகளையும், வங்கிகள் அரசாங்கத்தையும், அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்தையும் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கின்றனர்.  யார் குற்றவாளி?

துருக்கி, ஜெர்மனி என்று அந்நிய நாடுகளின் ஆக்கிரமிப்புக்குள் உள்ளாகி சின்னாபின்னமான கிறீஸ், செல்வந்த நாடுகளின் வரிசையில் சேர்ந்த பொருளாதார அதிசயம் எதிர்பாராதது தான்.  பலமான  பொருளாதாரத்தைக்  கொண்ட ஜெர்மனியிடம் இருந்து கடன் பெறக் காத்திருக்கும் கிறீஸ், இரண்டாம் உலகப் போரில் நாஜிகள் திருடிய தங்கத்தை மீட்க முடியாமல் உள்ளது. கேந்திர முக்கியத்துவம் காரணமாக, கிறீஸ் சோஷலிச முகாமில் சேர விடாமல் தடுத்த பிரிட்டன், புராதன கலைப்பொருட்களை இன்னும் திருப்பிக் கொடுக்கவில்லை.

கிரேக்கம் ஐரோப்பிய நாகரீகத்தின்  தொட்டில் என புகழப்படுவதெல்லாம், பாட நூலில் மட்டும்தான். நாகரீகம் கற்றுக் கொண்ட நாடுகள், தற்போது கிரீசை  அடிமையாக்க  திட்டம்  போடுகின்றன. அந்நிய நாட்டு கடனை வாங்கி ஒலிம்பிக் போட்டி போன்ற ஆடம்பரங்களில் செலவிட்டதால், பொதுநல சேவைக்கு அள்ளிக் கொடுத்ததால், வந்தது இந்த நெருக்கடி என்று திட்டுகின்றன. கொடுத்த கடனை அடைப்பதற்கு 110 பில்லியன் டாலர் கடன் வழங்கப்படுகின்றது. இந்தக் கடனில் ஜெர்மனியின் பங்கு அதிகம்.  ஜெர்மனி நெருக்கடியில் சிக்கிய தனது வங்கிகளின் மீட்சிக்காக ட்ரில்லியன்  யூரோக்களை அள்ளிக் கொடுத்த்து. அதனோடு ஒப்பிடும் போது சகோதர ஐரோப்பிய நாடான கிரீசுக்கு வழங்கியது சொற்பத் தொகை.

ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்தவராக இணையும் நாடுகளுக்கு என்று சில விதிமுறைகள் இருந்தன. வருடாந்த பட்ஜெட்டில் துண்டு விழும் தொகை மூன்று வீதத்திற்கு கூடக் கூடாது. அரசின்  மொத்த  அந்நிய/உள்நாட்டு  கடன்கள் 60 வீதத்திற்கு மேலே அதிகரிக்க கூடாது.மீறினால் அபராதம் விதிக்கப்பட்டது. கிறீஸ் அரசால் ஒரு போதும் அந்த இலக்கை அடைய முடியவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பொய்க் கணக்கு காட்டிக் கொண்டிருந்தது.

மோசடியான கணக்குகளை எழுதுவதற்கு, பொருளாதாரத்தில் சூரப் புலிகளான அமெரிக்க கணக்காளர்களை அமர்த்தியது. அமெரிக்க முதலீட்டு வங்கியான Goldman Sachs அரசாங்கத்தின் கடன் தொகையை குறைத்துக் காட்டி கணக்கை முடித்தார்கள். எப்படி? கிரேக்க அரசின் கடன் பத்திரங்கள் யென், டாலர் நாணயப் பெறுமதிக்கு மாற்றப் பட்டன. அரசாங்கம் கொடுக்க வேண்டிய கடன் நிலுவைகளை எதிர்காலத்தில் கொடுப்பதாக வேறொரு கணக்கில் குறித்தார்கள். மேலதிகமாக Goldman Sachs வங்கியே ஒரு பில்லியன் யூரோ கடனாக கொடுத்து சரிக்கட்டியது.

கிரேக்க மக்கள் கடன் அட்டைகளில் வாழ்ந்து கொண்டிருக்கையில், அரசாங்கம் அந்நியக் கடன்களால் இயங்கிக் கொண்டிருந்தது. நிதி நெருக்கடி தோன்றிய காலத்தில் இருந்தே, வாழ்க்கைச் செலவை சமாளிக்க முடியாத மக்கள் கடன் அட்டைகளில் பணம் எடுத்து செலவழிக்கின்றனர். இந்தக் கடனை எல்லாம் எப்போது திருப்பிக் கட்டுவோம் என்பது அவர்களுக்கே தெரியாது. இது நெருக்கடியை இரட்டிப்பாக்குகின்றது. தற்கால கிரேக்க பொருளாதாரம் ஒரு மாயையின் மேலே தான் கட்டப்பட்டிருந்தது.

பாரம்பரிய விவசாய நாடான கிரீஸ், எழுபதுகளுக்குப் பின்னர் விவசாயத்தைக் கைவிட்டது. அதிக வருமானம் ஈட்டித் தரும் உல்லாசப் பிரயாணத் துறையில் நம்பியிருந்தது. இருப்பினும் உள்நாட்டு விவசாயிகளை ஊக்குவிக்க அரசு வழங்கிய மானியத்தைக் கொண்டு, விவசாயத் துறையும் மறுமலர்ச்சி கண்டது. அகதிகளாக அல்லது சட்டவிரோதமாக குடியேறிய அல்பேனிய, இந்திய, பாகிஸ்தானிய கூலியாட்கள் வயல்களில் குறைந்த கூலிக்கு வேலை செய்தார்கள். இதனால் கிரேக்க விவசாயிகள் வளமாக வாழ முடிந்தது. தனது நாட்டு விவசாயிகளுக்கு மானியம் கொடுக்கும் ஜெர்மனி போன்ற பணக்கார ஐரோப்பிய நாடுகள், கிரேக்க விவசாயிகளுக்கு கொடுத்த மானியத்தை பொருளாதாரத் தவறாக சுட்டிக் காட்டுகின்றன. ஆமாம், கடன் வாங்கியவன் கடன் கொடுத்தவனைப் போல வாழ நினைக்கலாமா?

இரண்டாம் உலகப்போர் காலத்தில் நாஜிகளின் ஆக்கிரமிப்பில் இருந்த கிரீசை விடுவிக்க கம்யூனிச கட்சியின் விடுதலைப் படை போராடியது.  எந்த வல்லரசின் உதவியுமின்றி, பெரும்பாலான பகுதிகளை விடுதலை செய்து தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்கள்.  பெரும்பான்மை  கிரேக்க மக்கள் விவசாய சமூகமாக இருந்தமையும், கம்யூனிஸ்ட்களின் வெற்றிக்கு மூல காரணம். பிரிட்டனின் உதவியுடன்  கம்யூனிசக்  கிளர்ச்சி  முறியடிக்கப்பட்டது.

அதன் பிறகு கிரீஸ் மேற்குலக பொருளாதார ஆதிக்கத்தின் கீழ் வந்தது. விவசாய பொருளாதாரம் புறக்கணிக்கப்பட்டு, அந்த இடத்தில் சுற்றுலாப் பொருளாதாரம் புகுத்தப்பட்டது. ஒரு காலத்தில் மீனவ சமூகத்தினர் மட்டுமே வாழ்ந்து கொண்டிருந்த  தீவுகள்  மெருகூட்டப்பட்டன.  பிரிட்டன், ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற பணக்கார ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்த உல்லாசப் பயணிகள் கிரேக்க தீவுகளை தமது கோடைகால காலனிகளாக மாற்றினார்கள். அவர்கள் கொண்டு வந்து கொட்டிய பணம் கிரேக்க மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக் காரணமாக இருந்தது.

கை நிறையச் சம்பாதித்து வாய் நிறையச் சாப்பிடும் மக்கள், கம்யூனிஸ்ட்கள் சொல்வதைக் கேட்க மாட்டார்கள் என்பது உண்மை தான். சிறிது காலம் தடை செய்யப் பட்டிருந்து, பின்னர் புத்துயிர் பெற்ற கிரேக்க கம்யூனிசக் கட்சியும்  பாராளுமன்ற அரசியல் சாக்கடையில் கலந்து விட்டது. இருப்பினும்  கம்யூனிச அபாயம் கனவில் வந்து மிரட்டினாலும், கிரேக்க அரசு கலங்கிய அப்படியான சந்தர்ப்பங்களில்,” யாமிருக்கப் பயமேன்” என்று ஆட்சியைப் பிடித்தது இராணுவம்.

பாசிசவாதிகளும், தேசியவாதிகளும் நிறைந்திருந்த கிரேக்க இராணுவம், அயல் நாடான துருக்கியைக் காட்டி மக்களைப் பயமுறுத்தி கொண்டிருந்த்து. கிரீசுக்கும் துருக்கிக்கும் ஜென்மப் பகை.  பிற்கால  இஸ்லாமியப் படையெடுப்புகளுக்கு  தலைமை  தாங்கிய  ஓட்டோமான் துருக்கியர்கள், முழு கிரீசையும் தமது சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக வைத்திருந்தார்கள். கிரேக்க கிறிஸ்தவ மதகுருக்கள் தலைமையில் துருக்கியருக்கு எதிரான விடுதலைப் போராட்டம் நடந்தது.

முதலாம் உலகப் போரின் பின்னர்தான் நவீன கிரேக்க தேசம் உருவானது. அன்றிலிருந்து இன்று வரை தன்னை துருக்கியின் முதன்மை எதிரியாகக் காட்டிக் கொள்வதில், கிரீசுக்கு அலாதிப் பிரியம். நிலப்பரப்பில், மக்கட்தொகையில் பல மடங்கு பெரிதான துருக்கியுடன் இராணுவரீதியாக மோதுவது சாத்தியமில்லை. இருப்பினும் அதைச் சொல்லிச் சொல்லியே ஆயுதங்களை வாங்கிக் குவித்தது. அன்று கிரீசுக்கு  ஆயுதங்களை ஆயுதங்களை விற்றுக் கொண்டிருந்த மேற்குலக நாடுகள், இன்று பொருளாதார பிரச்சினைக்கு அதையே காரணமாகக் காட்டுகின்றன.

கிரேக்கர்களையும், துருக்கியரையும் மதம், மொழி போன்ற அம்சங்கள் பிரித்து வைத்திருந்தாலும், நெருங்கிய கலாச்சார ஒற்றுமைகளை கொண்டுள்ளனர். சராசரி கிரேக்கர்களின் மனோபாவத்தை, மேற்கு ஐரோப்பியருடன் ஒப்பிட முடியாது.  கிறிஸ்தவ மதம் ஒன்றைத் தவிர வேறு எதுவும் அவர்களை பிற ஐரோப்பியருடன் பிணைப்பதில்லை. மத்திய கிழக்கு நாடுகளின் ஒன்றியம் உருவானால், கிரீஸ் அதில் மிகக் கச்சிதமாக பொருந்தும்.  “லஞ்சம், ஊழல் கிரேக்க சமூகத்தை விட்டு இன்னும் அகலவில்லை, அது தான் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம்…” என்று ஐரோப்பிய பொருளாதார நிபுணர்கள் ஒப்பாரி வைக்கின்றனர். ஐரோப்பிய மத்திய வங்கியும் ஏதோ இப்போது தான் கண்டுபிடித்ததைப் போல பதறுகின்றது.

கிரீசில் சிறிது காலம் வாழ்ந்த அகதிகளுக்கு கூட இதெல்லாம் எப்போதோ தெரியும். அகதித் தஞ்சம் கேட்ட குற்றத்திற்காக சிறை சென்றதும், பணம் கொடுத்து விடுதலையானதும் பல அகதிகளுக்கு அவர்களது தாயகத்தை நினைவுபடுத்தின. சாதாரண கிரேக்க மக்கள் முன்னர் லஞ்ச, ஊழல் பிரச்சினை குறித்து முறையிடவில்லை என்பது உண்மைதான். நமது நாடுகளில் லஞ்சம் கொடுத்து காரியத்தை சாதித்துக் கொள்ளும் மத்திய தர வர்க்கத்தைப் போலத்தான் சராசரி கிரேக்கர்களும் வாழ்ந்தார்கள். லஞ்சப் பேய் ஒரு காலத்தில் தமது இருப்பிற்கே ஆப்பு வைக்கும் என்பதை காலம் தாழ்த்தித்தான் புரிந்து கொண்டார்கள்.

நல்லது. தற்போது எழுந்துள்ள பொருளாதார பிரச்சினைக்கு என்ன தீர்வு? ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை சீர்குலைக்கும் கிரீசை வெளியேற்றி விடலாம். மேற்குலக முதலீட்டு வங்கிகள், அரசாங்கத்தின் கடன்பத்திரங்களில் முதலீடு செய்த பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.  அரை வாசித் தொகை திருப்பித் தரப் படும் என்று ஒப்பந்தம் போடப் பட்டுள்ளது. மிகுதி அரைவாசி யார் தருவார்கள்? சந்தேகமில்லாமல் கிரேக்க பிரஜைகள் தான். தமது சம்பளத்தை, ஓய்வூதியத்தை குறைத்து, காப்புறுதிகளுக்கு அதிக கட்டுப்பணம் கட்டி, வங்கிச் சேவைக்கு அதிக கட்டணம் செலுத்தி, கடனை அடைப்பார்கள்.

இந்த நிபந்தனைகளுக்கு கிரேக்க பாராளுமன்றத்தில் ஆளும் சோஷலிசக் கட்சியும், தீவிர வலதுசாரிக் கட்சியும் ஒப்புதல் அளித்துள்ளன. இவையெல்லாம் கிரேக்க மக்களை ஆத்திரமுற வைத்ததில் வியப்பில்லை. இன்றைக்கும் தமது லாபத்தை குறைத்துக் கொள்ளாத முதலாளிகளும், ஆடம்பரங்களைக் குறைத்துக் கொள்ளாத பணக்காரர்களும் கடன் சுமையை பொறுப்பேற்க வேண்டும். தேசத்தின் தவறான முகாமைத்துவத்திற்கு இவர்கள் காரணமில்லையா? அதிகம் படித்த கணக்கியல் நிபுணர்கள் தானே கணக்கில் மோசடி செய்தார்கள்? சிக்கலான பொருளாதார சூத்திரமெல்லாம் சாதாரண பொதுமகனுக்கு புரியாத சிதம்பர ரகசியம். ஆயினும் அப்பாவி பொது மக்கள் தான் பொருளாதார பிரச்சினைக்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.

கிரீசின் பொருளாதாரப் பிரச்சினை யூரோ நாணயத்தை பாதிக்கின்றது. இது ஒரு வகையில் நன்மையை தந்தாலும், நீண்ட கால நோக்கில் தீங்கு விளைவிக்கலாம். யூரோ நாணயத்தின் பெறுமதி குறைந்துள்ளதால் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இது பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளுவதற்கு வழிவகுத்துள்ளது. ஆயினும் பணக்கார ஐரோப்பிய நாடுகள் மட்டுமே இதனால் லாபமடைந்துள்ளன. தற்போது முன்பு இருந்ததைப் போல முன்னேறிய வட ஐரோப்பிய நாடுகள், பின் தங்கிய தென் ஐரோப்பிய நாடுகள் என்ற பிரிவினை மீண்டும் தோன்றியுள்ளது. கிரீஸ், தென் இத்தாலி, தென் ஸ்பெயின், தென் போர்த்துக்கல் என்பன, ஒரு காலத்தில் வறுமையில் வாடிய அபிவிருத்தியடையாத பகுதிகளாக இருந்தன. அந்தப் பகுதி மக்கள் வேலை தேடி செல்வந்த வட- ஐரோப்பிய நாடுகளுக்கு இடம்பெயர்ந்தனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தாராளமான நிதி வழங்கல், தென் ஐரோப்பாவின் அபிவிருத்திக்கு உதவியது. குறிப்பாக உல்லாசப் பிரயாணத் துறை, ரியல் எஸ்டேட் போன்ற பொருளாதார அபிவிருத்திகளே இடம் பெற்றன. அங்கேயெல்லாம் உல்லாசப் பயணிகளாக சென்றதும், வீட்டுமனை வாங்கியதும் வட- ஐரோப்பியர்கள் தான். பொருளாதார நெருக்கடியால் அவர்கள் தமது நாடுகளிலேயே தங்கி விட்டார்கள். அவர்களது அரசுகளும் கடும் பிரயத்தனப் பட்டு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டன. இதனால் என்ன நடந்தது என்றால், தென்னக ஐரோப்பிய பகுதிகளில் வேலைகள் பறி போயின. அந்த இடத்தில் வட ஐரோப்பிய மக்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.

யூரோ நாணய கூட்டமைப்பில் இருந்து கிரீசை வெளியேற்றுவதால், பிற ஐரோப்பிய நாடுகள் தமது பொருளாதாரத்தை பாதுகாக்க நினைக்கின்றன. கிரீசை தொடர்ந்தும் வைத்துக் கொள்வதற்காக ஆகும் செலவு, தற்போது வழங்கிய கடனை விட மூன்று மடங்கு அதிகம். அதனால் கிரீசை கழற்றி விடுவதே உத்தமம். கிரீசும் வேறு வழியின்றி தனது பழைய தேசிய நாணயமான டிராக்மாவை மீண்டும் கொண்டு வர வேண்டும். ஆனால் புதிய டிராக்மாவை யூரோவுக்கு பரிமாற்றம் செய்யும் போது, ஐரோப்பிய ஒன்றியம் குறைந்த விலையை நிர்ணயிக்கும். இதனால் கிரேக்கர்கள் வாங்கிய கடன், திருப்பிச் செலுத்தப் படும் காலம் வரும் போது இரண்டு மடங்காகி இருக்கும். அதனோடு வருடாந்தம் கட்ட வேண்டிய வட்டியையும் சேர்த்துப் பாருங்கள். கிரீஸ் திவாலானதால் பணக்கார ஐரோப்பிய நாடுகளும், ஐ.எம்.எப்.பும் புதிய வருமானத்தை தேடிக் கொண்டுள்ளன.  அதை விட பெறுமதி குறைந்த டிராக்மாவை சுவீகரித்துக் கொண்ட கிரீசுக்கு வட- ஐரோப்பிய உல்லாசப் பிரயாணிகள் அதிகளவில் படையெடுப்பார்கள். சுருக்கமாக சொன்னால், மேற்கு ஐரோப்பிய நாடுகள் கீழே விழுந்த கிரீசை தமது காலனிய சுரண்டலுக்கு உட்படுத்தப் போகின்றன. “கிரேக்க அரசாங்கம் தீவுகளை வெளிநாடுகளுக்கு விற்கப் போகின்றது,” என்ற வதந்தியும் மக்கள் மத்தியில் உலவுகின்றது.

சாதாரண கிரேக்க மக்களின் தார்மீக கோபாவேசம், வேலை நிறுத்த போராட்டங்கள், ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் மூலம் வெளிப்படுகின்றது. ஏதென்ஸ் சர்வதேச விமான நிலையத்தை மூடும் அளவிற்கு தொழிற்சங்கங்கள் வலுவாக உள்ளன. கிரீசில் போர்க்குணமிக்க தொழிற்சங்கம், கம்யூனிஸ்ட் கட்சி (KKE )  யினுடையது.   ஆயினும் இன்றைய கம்யூனிஸ்ட் கட்சி புரட்சிக்கு தயாராக உள்ளதா என்பது கேள்விக்குறி. ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளராக இருப்பதே தண்டனைக்குரிய குற்றமாக இருந்தது. பாசிச இராணுவ ஆட்சியின் கீழ் கடுமையாக பாதிக்கப்பட்ட கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சி, தற்போது ஆயுதமேந்திய வன்முறைப் போராட்டத்திற்கு தயாராக இல்லை. அந்த இடத்தை வேறு சில இடதுசாரி இயக்கங்கள் பிடித்துள்ளன.

எழுபதுகளில் இராணுவ ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்ததில் ஏதென்ஸ் தொழில்நுட்பக் கல்லூரி  மாணவர்களின்  போராட்டம் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளது. மார்க்சிச-லெனினிசத்தையும், கூடவே அனார்கிசத்தையும் கொள்கையாக கொண்ட தீவிரவாத அமைப்புகள் உருவாகின. நீண்ட காலமாக பிடிபடாமல் இருந்த அதன் தலைவர்கள், மேற்குலகின் நிர்ப்பந்தத்தின் பின்னர் கைது செய்யப்பட்டனர். இத்துடன் கிரீசின் இடதுசாரி தீவிரவாதம் முடிவுக்கு வந்துவிட்டதாக, ஏகாதிபத்தியம் நிம்மதிப் பெருமூச்சு விட்டது. எல்லாம் சிறிது காலம்  மட்டும் தான். அமெரிக்காவின் நிதி நெருக்கடி அவர்களின் உறக்கத்தை கெடுத்தது.

கிரீசில் முதலாளித்துவம் தனது சவக்குழியை தானே தோண்டிக் கொண்ருந்தது. பொய், சூதுவாது, மோசடி மூலம் மக்கள் மத்தியில் அம்பலப்பட்ட கும்பல் ஒன்று, காவல்துறையை ஏவி மக்கள் எழுச்சியை அடக்க முடியாது தத்தளிக்கின்றது. நிதி நெருக்கடியின் விளைவாக தன்னிச்சையாக தோன்றிய மக்கள் போராட்டம் அதிகார வர்க்கத்தை ஆட்டம் காண வைத்துள்ளது. இவையெல்லாம் ஒரு சில தினங்களில் ஓய்ந்து போகும் சலசலப்புகள் என்று தான் பலரும் நினைத்தார்கள். இரண்டு வருடங்கள் போராட்டம் தொடரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

மே 5  அன்று, ஏதென்ஸ் மாநகரில் மூன்று லட்சம் மக்கள் அணிதிரண்ட ஊர்வலம் சாதாரண நிகழ்வல்ல.  அனைத்தையும் இழந்தவர்களின் கலகம், வங்கிகளை கலக்கமடைய வைத்தது. பன்னாட்டு நிறுவனங்கள், வங்கிகள், ஆடம்பர அங்காடிகள், என்று எவையெல்லாம் முதலாளித்துவத்தின் குறியீடாக உள்ளதோ, அவையெல்லாம் இலக்குகளாகின. அமைதிவழிப் போராட்டம் எதையும் சாதிக்காததைக் கண்ட இளைஞர்கள் பலர் தீவிரவாத வழியை நாடுகின்றனர். பெற்றோர்களால் தமது பிள்ளைகளை தடுக்க முடியவில்லை. அல்லது விரும்பவில்லை. அவர்களைப் பொறுத்த வரை இழப்பதற்கு எதுவுமற்றவர்கள். போராட்டத்திற்கு தள்ளப்பட்டவர்கள். அவர்களுக்கு நேற்று வரை அரசியல் வேப்பம்காயாக கசத்தது. இன்று அரசியல் அவர்களை பற்றிக் கொண்டுள்ளது.

கிரேக்க அரசுக்கும், முதலாளித்துவத்திற்கும் எதிரான போராட்டத்தை தீவிரமாக முன்னெடுப்பவர்கள் அனார்கிஸ்ட்கள் என்ற இடதுசாரி அமைப்பை சேர்ந்தவர்கள். அவர்களை ஒரு அமைப்பு என்று கூற முடியாது. அப்படி சொல்வதையே வெறுக்கிறார்கள். அவர்களுக்கென்று கட்சி, தலைவர், செயலாளர் என்று எதுவும் கிடையாது. ஒவ்வொருவரும் சுதந்திரமான தனிநபர்கள். ரகசிய வலைப்பின்னல் மூலம் சந்தித்துக் கொள்கிறார்கள். பொதுவான போராட்டத்தில் இணைந்து கொள்கின்றனர். செல்லிடத் தொலைபேசி, இன்டர்நெட் போன்ற நவீன தொழில்நுட்ப கருவிகளை போராட்டங்களை ஒழுங்குபடுத்த பயன்படுத்துகின்றனர்.

இதுவரை காலமும், இந்த சாதனங்களை எல்லாம், முதலாளித்துவம் தனது எதிரிகளை கண்காணிக்கவும், எதிரி நாட்டு அரசுகளை கவிழ்க்கவும் பயன்படுத்தி வந்தது. “ஆஹா, எழுந்தது பார் டிவிட்டர் புரட்சி.” என்று தமது சாதனைகளை தாமே பாராட்டிக் கொண்டிருந்தனர்.  ஆனால் என்றோ ஒரு நாள், மேற்குலக நாடுகளிலும் “டிவிட்டர் புரட்சி” வெடிக்கும் என்று கனவு கண்டிருக்க மாட்டார்கள்.  கிரீஸ், இத்தாலி, ஸ்பெயின், போர்த்துக்கல், என்று எங்கெல்லாம் நெருக்கடி தோன்றுகிறதோ, அங்கெல்லாம் மக்கள் போராடக் காத்திருக்கிறார்கள். ஏனென்றால் நூறாண்டு கால போராட்டத்தின் ஊடாக பெற்றுக் கொண்ட உரிமைகளை, அவர்கள் ஒரே நாளில் இழக்கத் தயாராக இல்லை.

_______________________________________

•கலையரசன்

vote-012

தொடர்புடைய பதிவுகள்

இந்தியாவை எதிர்நோக்கும் அபாயம் ?

இந்தியாவின் மோசமான அச்சுறுத்தல்!

-ஜி எஸ்.வாசு (ஆசிரியர் தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ்-ஆந்திரா)

________________________________________________________

vote-012“தென் அமெரிக்காவை புரட்டிப் போட்ட சந்தை பொருளாதார அடிப்படை வாதத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ளாவிட்டால் தற்போதைய பொருளாதார கொள்கையே நமது சீரழிவிற்கும் காரணமாக இருக்கும்”

கடந்த மாத மத்தியில் சட்டீஸ்கர் மாநிலத்தின் தண்டேவாடாவில் மத்திய ரிசர்வ் காவல் படையினர் மாவோயிஸ்டுகளால் தாக்கப்பட்டதை தொடர்ந்து நடத்தப்படும் விவாதங்கள் வேடிக்கையாக இருக்கிறது.  மத்திய ரிசர்வ் காவல் படையினர் மாவோயிஸ்ட்டுகள் விரித்த வலையில் வீழ்ந்தனரா? நாம் இராணுவத்தை பயன்படுத்துவதா? ஆளில்லா விமானத்தை பயன்படுத்தலாமா? இத்தகைய ஒரே மாதிரியான கேள்விகள்தான் கேட்கப்படுகிறதேயொழிய, ஏன் இது நிகழ்ந்தது என்பதை விவாதிக்க ஆளில்லை.

இதை நான் மட்டும் வேடிக்கையாக பார்க்கவில்லை.சத்தீஸ்கர் நிகழ்வையொட்டி நான் நக்சல் இயக்கத்தினரை எதிர்கொள்வதில் அனுபவம் உள்ள ஒரு மூத்த காவல்துறை அதிகாரியை சந்தித்தேன்.  அவரும் என் போல் இந்த விவாதங்களை ஒரு வேடிக்கையாகத்தான் பார்க்கிறார்.  மேலும், அவர் என்னிடம் இன்னொரு கேள்வியை முன்வைத்தார். “ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை சர்வதேச நிறுவனங்களுக்கு விட்டுக் கொடுக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் கட்டாய இடப்பெயர்ச்சிக்கு ஆளாக்கப்படும் போது என்ன நடக்கும் என்று எதிர்பார்க்கின்றீர்கள்?  அவர்கள் எதிர்தாக்குதலில் ஈடுபடுவது இயல்புதானே?”.  அறியாதது போல், அவரிடம் நான் ஒரு வினாவை முன் வைத்தேன். “நக்ஸலிசத்தை வேரறுக்க புதுடில்லியில் திட்டமிடும் கூட்டங்களில் இது குறித்து விவாதிக்கப்பட்டதா?” – “இல்லை” என்றார் அவர்.  அத்தகைய விவாதங்களில் எப்போதுமே எத்தனை படைப்பிரிவை அனுப்புவது, எங்கே, எத்தகைய நவீன ஆயுதங்களை பயன்படுத்துவது, என்பது மட்டுமே விவாதிக்கப்படும்.

உண்மை நிலை நன்கு தெரிந்திருந்தும், இது தான் இன்றைய போக்கு. “வசந்த கால இடி” (ஸ்பிரிங் தண்டர்) என்ற நக்சலுக்கு எதிரான அதிரடி தாக்குதல் தொடங்கி தற்போது நாற்பது ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த காலத்தில் “மோதல்” (என்கவுன்டர்) என்ற பெயரில் “மாவோயிஸ்ட்டுகள்” என்று சந்தேகப்படுபவர்கள் 10 ஆயிரத்திற்கு மேல் கொல்லப்பட்டதும், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் செலவில் அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு, அவர்களுக்கு அதி நவீன ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளதை தவிர்த்து, அந்த இயக்கம் ஒரு மாநிலத்தின் ஒரு மாவட்டத்திலிருந்து 15 மாநிலங்களின் 200 மாவட்டங்களுக்கு பரவுவதற்குத்தான் உதவியுள்ளது. இந்த வளர்ச்சிக்கு மாவோயிஸ்ட்டுகள்தான் காரணம் என்று நான் கூற முடியாது. இன்று விவாதிக்கப்படும் மாவோயிஸ்ட்டுகள் உருவாவதற்கு இந்திய அரசும், அதனது பொருளாதார கொள்கையும்தான் முழுக்காரணம்.

சமீபத்திய எனது ஆந்திர பிரதேச சுற்றுப்பயணத்தில், ஒரு ஆயிரம் பேரை வலுக்கட்டாயமாக இடப்பெயர்ச்சி செய்து உருவாக்கப்பட்ட “சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு” சென்றிருந்தேன்.  தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் இருந்த அவர்களது நிலங்களை ஏக்கருக்கு 18 ஆயிரம் முதல் ரு 60 ஆயிரம் வரை கொடுத்து வாங்கப்பட்டிருக்கிறது.  அந்த பொருளாதார மண்டல கட்டுமான பணிகள் துவங்கப்பட்ட போது எந்த நிலத்தை உழுது பயிரிட்டு வாழ்ந்து வந்த அந்த மக்களே, அந்த நிலத்தில் நாளொன்றுக்கு ரூ 100 க்கு தினக்கூலியாக செங்கல் சுமப்பவர்களாகவும், கூலி வேலை பார்ப்பவர்களாகவும் மாறிப்போயிருந்ததை பார்க்க முடிந்தது.  அந்த மண்டலத்தின் ஒரு பிரிவை திறந்து வைக்க அந்த மாநிலத்தின் முதலமைச்சர் வந்த போது அந்த பகுதிக்குள் அந்த மக்களால் இடையூறு வரும் என, அவர்கள் வராமலிருக்க காவல் துறையினர் தடுப்பு சுவரே எழுப்பியிருந்தனர்.  இது எனக்கு இந்திய-பாகிஸ்தான் எல்லையைத்தான் நினைவூட்டியது.

மற்றொரு மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு உள்ள நிலத்தை வேறு ஒரு நிறுவனத்தின் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது. அந்த நிலங்களின் உரிமையாளர்களுக்கு ஏக்கருக்கு அதிகபட்சம் ரூ 50 லட்சம் வரை விலைபேசி ஒதுக்கியுள்ளது என்பதுதான் கொடுமை.  இத்தகைய தரகர்கள் பகுதியில் உள்ள பாக்சைட் போன்ற இயற்கை கனிமங்களை தனியார் நிறுவனம் தோண்டி எடுக்க அனுமதியில்லாததால், அரசு நிறுவனமே அந்த மூலப் போருட்களை தோண்டி எடுத்து அந்த வெளிநாட்டு தனியார் நிறுவனத்திற்கு வழங்கி வருகிறது. இது இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவுகைள “மாக்கிவில்லியன்” (தனியாருக்கு முக்கியத்துவம் அளிக்கும் கொள்கை) பாணியில் மீறுவதும், அந்த சாசனம் மக்கள் சுரண்டப்படுவதிலிருந்து காக்க அளித்திருக்கும் பாதுகாப்பையும் மீறுவதாகும்.

இத்தகைய சிறப்பு பொருளாதார மண்டலங்களை சார்ந்து கோடிக் கணக்கில் முதலீடு செய்துள்ள நிறுவனங்களின் நலனில் அதிகார வர்க்கத்தினர் அதிக அக்கரை காட்டி வருகின்றனர்.  பதவி ஏற்கும் காலத்தில் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு உண்மையாகவும், அச்சமின்றி, விருப்பு வெறுப்பின்றி, சாதக பாதகமின்றி செயலாற்றுவேன் என்று உறுதிமொழியேற்று பதவிக்கு வந்தவர்களுக்கு அந்த உறுதிமொழிகைள தற்போது யார் நினைவூட்டுவது?  நாளை இத்தகைய திட்டங்களால் (சிறப்பு பொருளாதார மண்டலங்கள்) பாதிக்கப்பட்டு மாவோயிஸடுகளாக மாறிப் போவதற்கு யாரை குற்றம் சொல்வது?

இது இத்தோடு நின்றுவிடவில்லை. இன்று கிராமப்புற சுகாதார மையங்கள் முற்றாக செயல்படவில்லை.  நகர்புறங்களிலுள்ள அரசு மருத்துவ மனைகள் மூடப்படும் நிலையில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆந்திராவில் இத்தகைய பொருளாதார மண்டலங்கள் உள்ள பகுதிகளில், ஆதிவாசிகள் தீராத வியாதிகளால், வயிற்றுப்போக்கு போன்ற வியாதிகளால் நூற்றுக்கணக்கில் மடிந்து வருகின்றனர். இவர்களுக்காக யார் கவலைப்படுகிறார்கள்?  நமது “மக்கள் சுகாதாரத் திட்டம்” முற்றாக பெரிய தனியார் மருத்துவமனைகளிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது.

சத்தீஸ்கர்- ஆந்திராவில் சிறப்பு மண்டல பகுதிகளில் ஆதிவாசிப் பெண்கள் பாதுகாப்பு படையினரால் பாலியல் பலாத்காரம், கற்பழிப்புக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதை பற்றி சிறிதும் கவலைப்படாத நாம், டெல்லியிலோ, மும்பையிலோ, ஒரு நடுத்தர வர்க்கப் பெண்மணி பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுவதை நமது பத்திரிக்கைகளில் முதல் பக்க செய்தியாக வெளியிடுகிறோம்.  நான் பின்னர் நடந்ததை கண்டிக்கவில்லை என்று அர்த்தம் அல்ல, ஆதிவாசிகள் மத்தியில் நடப்பதை வெளியிடாதது நமது வர்க்க பாகுபாட்டை காட்டுகிறது என்கிறேன்.  அப்படியென்றால் ஆதிவாசிப்பெண்கள் கற்பழிக்கப்படுவதை நாம் ஏற்றுக் கொள்கிறோமா அல்லது பொறுத்துக்கொள்கிறோமா என்பதே கேள்வி.

இதே நிலைதான் கல்வித்துறையிலும். அரசு நடத்தி வந்த தங்கிப் பயிலும் கல்வி நிறுவனங்களிலிருந்து பல சிறந்த கல்விமான்கள் உருவாகி வந்தது பழங்கதையாகி விட்டது. சுகாதாரத்திட்டம் போல், கல்வியும் லாப நோக்கமுள்ள பெரும் தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்துவிட்டது. அந்த கல்வி சாலைகளில் சேர முடியாதவர்கள் கல்வி கற்கவே தகுதியற்றவர்கள் என்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது. உலகமயமாதல் கொள்கையால் பலதுறைகள் அழிந்துவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது.

கடன் தொல்லையிலிருந்து மீள முடியாத விவசாயிகள், நெசவாளர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.  நகர்ப்புறங்களில் தங்கம் உள்ளிட்ட, பெட்ரோல், உணவுப்பொருள், பால், காய்கறி, காலணி போன்ற பொருள்கைள விற்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள பெரும் நிறுவனங்களால் உள்நாட்டு தொழில்கள் நசிந்து விட்டது.  இன்று, அத்தகைய பெரும் முதலாளிகள் தாங்கள் இவ்வாறு ஈட்டும் பெரும் பணத்தை கோடி கோடியாக “இந்தியன் பிரிமியர் லீக்” ( ஐ பி எல்) (கிரிக்கெட் போட்டிகள்) போன்ற ஆடம்பர நிகழ்ச்சிகளில் முதலீடு செய்துவிடுகின்றனர். ஒரு காலத்தில் அரசியல்வாதி-வியாபாரிகள் கூட்டை ஏற்காமல் இருந்தோம்.  ஆனால் தற்போது பெருமுதலாளிகளான வியாபாரிகள் சட்ட சபைக்கும், மக்கள் சபைக்கும் தேர்தலில் நின்று வெற்றி பெற்று வந்து கொள்கை முடிவுகளை தீர்மானிக்கின்றனர்.

“லால்கர், ஒரிஸ்ஸா அல்லது சத்தீஸ்கர் ஆகிய இடங்களெல்லாம் மாவோயிஸ்ட்டுகள் இயக்கம் வலுவடைவதற்கு, பன்னாட்டு பெரு முதலாளிகளுக்காக ஆதிவாசிகைள இடம் பெயர்ந்து செல்ல வைக்கும் – அரசின் இத்தகைய கொள்கையே காரணம்” என்கிறார் புரட்சிகர எழுத்தாளர் தோழர் வரவரராவ். தென் அமெரிக்க நாடுகளை புரட்டிப் போட்ட உலகமய, சந்தைப் பொருளாதார அடிப்படைவாதத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ளாவிடில், தற்போதைய பொருளாதாரக் கொள்கையே நமது சீரழிவிற்கு காரணமாக இருக்கும்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி மாவோயிஸ்ட்டுகளுடன் நடத்திய பேச்சு வார்த்தையின் போது, அவர்கள் வலியுறுத்தியதெல்லாம் இரண்டே இரண்டு முக்கிய பிரச்சனைகள்தான்.

அ) நிலச்சீர்திருத்தத்தை உடன் அமுல்படுத்துங்கள்
ஆ) ஆதிவாசிகளையும், அவர்களது நிலங்கள் மீது அவர்களுக்கு உள்ள உரிமையை பாதுகாக்கும் சட்டத்தை அமுல்படுத்துங்கள் என்பதுதான்.

இதில் விநோதம் என்னவென்றால், இந்திய அரசியல் சாசனத்தில் நம்பிக்கை வைக்காத ஒருபிரிவினர் (மாவோயிஸ்ட்) அரசியல் சாசனத்தின்படி ஆட்சி நடத்திவரும் மற்றொரு பிரிவினருக்கு (ஆட்சியாளர்கள்) என்ன செய்ய வேண்டும் என்பதை கற்றுக் கொடுப்பதே.

உண்மை என்னவென்றால், நகர்ப்புறங்களில் பிரகாசிக்கும் வெளிச்சமே உண்மையான இந்தியா இல்லை என்பதுதான்.  அது கனிந்து கொண்டிருக்கும் ஒரு எரிமலையின் வெளிச்சமே. நமது உள்துறை அமைச்சர் நக்சல் பகுதிகளில் சட்டம், ஒழுங்கு நிலைநாட்டப்படுவது பற்றி பேசிவருகிறாரேயொழிய அதற்கான மூலகாரணத்தை உணர மறுக்கிறார்.

“லஞ்சம் நமது நாட்டிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்” என நமது துணை ஜனாதிபதி நம்ப, மாவோயிஸ்ட்டுகள்தான் பெரும் அச்சுறுத்தல் என நமது பிரதமர் நம்பிவரும் நிலையில், ஒரு கட்டத்தில் பண வீக்கம், ஏற்றத் தாழ்வான வருமான பங்கீடுமுறை, லஞ்சம் நாட்டின் ஸ்திரத்தன்மையை உலுக்குவதோடு, அரசின் அதிகாரத்திலும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக போகிறது. நான் சந்தித்த அந்த உயர் காவல்துறை அதிகாரி மிகவும் நாசுக்காக ஒன்றை கூறினார்.  “எவ்வளவு பாதுகாப்பு படையினரை குவித்து, எவ்வளவு நக்சல்பாரி போராளிகைள கொன்று குறித்தாலும் “மன்மோகனமிசம்” (உலகமய, தாராளமய கொள்கைகள்) இருக்கும் வரை மாவோயிசமும் இருக்கும்”.

தற்போது இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு அச்சுறுத்தல் “மன்மோகனமிசமா” “மாவோயிசமா” என்பதைப்பற்றி நாட்டின் அறிவுசார் சான்றோர்கள் ஆழமாக விவாதிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது என்றே நினைக்கிறேன்.

___________________________________________________

நன்றி : தி இந்தியன் எக்ஸ்பிரஸ் – 21 ஏப்ரல் 2010

தமிழில்:  சித்திரகுப்தன்

வாசகர்களுக்கு:

நாம் வாழும் இந்தியாவில்

— ஒரு கிலோ அரிசி ரூ 40

— சிம் கார்டு இலவசம்

— பிட்ஸா, ஆம்புலன்ஸ்-காவல்துறையைக்காட்டிலும் விரைவாக வீட்டிற்கு வருகிறது.

— கார் லோன் வட்டி 5 சதம், கல்விக்கடன் வட்டி 12 சதம்

— சட்டசபை கட்டிடம் ஒரு ஆண்டில் கட்டி முடிக்கப்படுகிறது.  ஆனால் மக்கள் பயன்பாட்டிற்கான பாலங்கள் கட்ட பல ஆண்டுகள் ஆகிறது. – – – இது இன்றைய இந்தியா!

_______________________________________

vote-012

தொடர்புடைய பதிவுகள்