Friday, June 26, 2026
முகப்பு பதிவு பக்கம் 159

மதுரை: காயாம்பட்டி ஆதிக்க சாதி வெறியர்களால் தலித் இளைஞர் தாக்கப்பட்டதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!

27.01.2023

காயாம்பட்டி ஆதிக்க சாதி வெறியர்களால் தலித் இளைஞர்
தாக்கப்பட்டதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!

பத்திரிகை செய்தி

னவரி 15, 2023 தேதியும், தை 1-ஆம் நாளான தமிழ் நாட்டு மக்களின் திருவிழாவான பொங்கல் தினத்தன்று, மதுரை மாவட்டம் ஒத்தக்கடை வட்டம் விவசாய கல்லூரி அருகில் உள்ள சிறு கிராமமான காயாம்பட்டியில், பட்டியல் (பறையர்) இனத்தைச் சார்ந்த கண்ணன் என்பவர், தனது தாய், தந்தையரை பார்க்க தனது மனைவி சரண்யா மற்றும் தன் குழந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்துள்ளார். பின்பு அருகில் பூலாம்பட்டியில் உள்ள தனது உறவினர்களை பார்க்க இருசக்கர வாகனத்தில் கொட்டாங்குளம் கண்மாய் அருகே சென்று கொண்டிருந்த பொழுது ஆதிக்க சாதியை சார்ந்த ராமர் ,லட்சுமணன், சுதாகர்,மாரீஸ்வரன், பாக்யராஜ், தினேஷ், பிரதீஷா மற்றும் சில நபர்கள் ஏன் வேகமாகப் போகிறாய் என்றும் வேண்டுமென்றே வம்பிழுக்கும் நோக்கத்தில் இடை மறித்துள்ளார்கள். அதற்கு அவர் “நான் குடும்பத்துடன் பைக்கில் வந்து கொண்டு இருக்கிறேன்; நான் எவ்வாறு வேகமாக வர முடியும்” என்று கேட்டும் மேற்சொன்ன ஆதிக்க சாதி வெறியர்கள் அவரை சாதியைச் சொல்லி இழிவாக திட்டியும் கைலி அவிழ்த்து விட்டு நிர்வாணப்படுத்தியும் தரையில் போட்டு அடித்து, இழுத்து சட்டையை கிழித்தும், தடுக்கச் சென்ற மேற்படி நபரின் மனைவியை சேலையை அணிந்திருந்த தங்கச் செயினுடன் பிடித்து இழுத்து அடித்துள்ளனர்.

இவ்வாறு ஆதிக்க சாதி வெறி வன்மத்துடன் நடந்து கொண்ட மேற்படி நபர்கள் மீது ஒத்தக்கடை காவல் நிலையத்தில் அன்றே (15/01/2023) மாலை 5.00 மணியளவில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின கண்ணன் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் இரவு 10.30 மணிக்கு குற்ற வழக்கு எண்:17/2023 ஒத்தக்கடை காவல் சார்பு ஆய்வாளர் ஜெ.சூர்யா என்பவர் மேற்சொன்ன ஏழு நபர்களையும் SC/ST வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இன்னும் சிலர் கைது செய்யப்படவில்லை.


படிக்க: மதுரை காயாம்பட்டி சாதிய வன்முறை | களவீடியோ


இந்நிலையில் கைதுக்கு எதிராகவும் தாழ்த்தப்பட்ட மக்களை அச்சுறுத்தி பணிய வைக்கவும் புகாரை நீர்த்துப் போகச் செய்வதற்கு 16.01.2023 அன்று மதியம்1.00 மணி அளவில் மேற்படி ஆதிக்க சாதியைச் சேர்ந்த பெண் பிரதீபா க/பெ. ராஜீ என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஒத்தக்கடை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஜெ. சூர்யா சாதிய வன்கொடுமைக்கு உள்ளான கண்ணன் மற்றும் 25 நபர்கள் மீது பொய் வழக்கு எண்:18/2023 பதிவு செய்து, கைது செய்யும் நோக்குடன் ஒத்தக்கடை காவல்துறை அவர்களைத் தேடி வருகிறது.

மேற்படி கிராமத்தில் அங்குள்ள அனைத்து பிரிவு மக்களும் தாய் – பிள்ளையாக ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொண்டு நீண்ட ஆண்டு காலமாக விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறார்கள். சமீபத்தில் வருடம-ஆம் ஆண்டில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி அன்று சில ஆதிக்க சாதி நபர்கள், பிரவீன் த/பெ.முருகன், ஆர்.எஸ்.எஸ் – பஜக கருத்து உடையவர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஒடுக்குமுறை செலுத்த வேண்டும் என்ற கெட்ட எண்ணத்துடன் 2022-ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி அன்றும் இதேபோன்று இருசக்கர வாகனத்தில் கடைக்கு வந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளவர் ஒருவரை ஏன் வேகமாக வந்தாய் என்று கேட்டு தாக்கியுள்ளார்கள். அதனால் அதை கேட்க சென்ற தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் அங்குள்ள ஆதிக்க சாதியினருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டு அடிதடி ஆகி அன்றும் SC/ST வன்கொடுமை வழக்கு பதிவு செய்தும்,ஆதிக்க சாதியினரை கைது ஏதும் செய்யாமல், தாழ்த்தப்பட்ட மக்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்தும், பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களை கைது செய்து சிறையில் அடைத்தது ஒத்தக்கடை காவல் துறை.

அதன் தொடர்ச்சியாகவே மேற்படி பிரச்சினையும் அதேபோன்று நடந்துள்ளது. இதற்கு முழுக்க முழுக்க இந்த அரசு நிர்வாகமும், காவல்துறையும் சாதி வெறியர்களால் நிரப்பப்பட்டுள்ளது தான் காரணம். அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் ஏதுமின்றி அவர்களை மேலும் ஒடுக்கும் வண்ணமத்துடன் பொய் வழக்கு பதிவு செய்து மிரட்டுவது என்ற அராஜக வேலைகளில் இந்த அரசும் அரசு எந்திரமும் ஈடுபட்டு வருகிறது. இதற்கு எதிராக அனைத்து உழைக்கும் மக்களும், ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரண்டு இந்த அடக்குமுறைக்கு எதிராக போராட வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமல்ல உழைக்கும் மக்களும் ஏற்றத்தாழ்வு பாகுபாடு இன்றி கண்ணியத்துடன் வாழ வழி செய்வதற்கும், ஆதிக்க சாதி வெறி பிடித்த நபர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.


படிக்க: குறிஞ்சாங்குளம் படுகொலை : சூத்திர – ஆதிக்க சாதிவெறியை பாதுகாக்கும் அரசமைப்பு !


மேற்படி பாதிக்கப்பட்ட, வன்கொடுமைக்குள்ளான தாழ்த்தப்பட்ட மக்கள் மீது பதியப்பட்டுள்ள பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்கும் சாதி மத வெறியர்களை சமூக புறக்கணிப்பு செய்வோம்! என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம், மக்கள் கலை இலக்கிய கழகம் மற்றும் தோழமை அமைப்புகள், ஜனநாயக சக்திகள் பங்கேற்று தங்கள் கண்டன உரையை பதிவு செய்ய உள்ளனர்.

இப்படிக்கு,
தி.வி.க, ம.க.இ.க, தோழமை அமைப்புகள் மற்றும் ஜனநாயக சக்திகள்
தொடர்புக்கு
97916 53200, 73055 38966

சாத்துக் கூடல் கிராம தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர்களின் மீது ஆலிச்சிகுடி வன்னிய சாதி வெறியர்களின் கொலை வெறித் தாக்குதல்! | வீடியோ

டலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே உள்ள சாத்துக் கூடல் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் ஆர்வமாகவும் உற்சாகத்துடனும் பொங்கள் விழாவினைக் கொண்டாடினர்! கடந்த 17ம் தேதி பொங்கள் விழா நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்த போது, விழாவிற்குத் தேவையான சில பொருட்களை வாங்குவதற்காக 4 இளைஞர்கள் இரவு சுமார் 7 மணி அளவில் இரு சக்கர வாகனங்களில் அருகிலுள்ள விருதாச்சலம் நகருக்கு சென்றுள்ளனர்.

சாத்துக் கூடல் இளைஞர்கள் வரும் போது, திட்டமிட்டே வழிமறித்துள்ளது கஞ்சா, சாராய கும்பல்! வேறு வழியின்றி இளைஞர்கள் வண்டியை நிறுத்தவே, எந்த ஊருடா என எந்த மட்டு மறியாதையுமின்றி கேட்டுள்ளது சாதி வெறியிலும் போதையிலுமிருந்த கும்பல்! சாத்துக் கூடல் என்றதும் காலனியா ஊரா எனக் கேட்டுள்ளனர்! இளைஞர்கள் காலனி எனக் கூறி முடிப்பதற்குள், சரமாரியாக போதை கும்பல் தாக்கத் தொடங்கியுள்ளது! தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் என்ன நடக்கிறது என புரிந்து கொள்வதற்கு முன்னே, ஒரு போதை ஆசாமி கனமான கட்டை ஒன்றால் ஒரு இளைஞனின் தலையிலும் உடலிலும் தாக்க, ரத்தம் கொட்டத் தொடங்கியுள்ளது. அப்போதும் தாக்குதலை நிறுத்தவில்லை அந்த போதை, சாதி வெறி கும்பல். அடிபட்டவருக்கு பத்திற்கும் மேற்பட்ட தையல் போடப்பட்டுள்ளது. மற்றொரு போதை, சாதி வெறி இளைஞன், இரும்புத் தடி கொண்டு இன்னொரு தலித் இளைஞரைத் தாக்க அவருக்கு கால் எலும்பு இரண்டாக முறிந்து போனது!

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

சாத்துக் கூடல் கிராம தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர்களின் மீது ஆலிச்சிகுடி வன்னிய சாதி வெறியர்களின் கொலை வெறித் தாக்குதல்!

26.01.2023

சாத்துக் கூடல் கிராம தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர்களின் மீது ஆலிச்சிகுடி வன்னிய சாதி வெறியர்களின் கொலை வெறித் தாக்குதல்!

ஆதிக்க சாதி வெறியர்களுக்கு துணை போகும் கருவேப்பிலங் குறிச்சி காவல் நிலையத்தின் ஆதிக்க சாதி வெறியை வன்மையாகக் கண்டிக்கிறோம்!
கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளான தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் மீதான பொய் வழக்குகளை இரத்து செய்!
உண்மைக் குற்றவாளிகளான ஆதிக்க சாதி வெறியர்களைக் கைது செய்!

பத்திரிகை செய்தி!

டலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே உள்ள சாத்துக் கூடல் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் ஆர்வமாகவும் உற்சாகத்துடனும் பொங்கள் விழாவினைக் கொண்டாடினர்! கடந்த 17ம் தேதி பொங்கள் விழா நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்த போது, விழாவிற்குத் தேவையான சில பொருட்களை வாங்குவதற்காக 4 இளைஞர்கள் இரவு சுமார் 7 மணி அளவில் இரு சக்கர வாகனங்களில் அருகிலுள்ள விருதாச்சலம் நகருக்கு சென்றுள்ளனர்.

சாத்துக் கூடல் கிராமத்திலிருந்து விருதாச்சலம் செல்வதாக இருந்தால் ஆலிச்சிகுடி கிராமம் வழியாகத்தான் செல்ல வேண்டும்! அது நகரப் பேருந்து செல்கின்ற சாலை. ஆனால் அன்று மதியத்திலிருந்தே ஆலிச்சிகுடி கிராமத்தைச் சேர்ந்த ஆதிக்க சாதி வெறி வன்னிய இளைஞர்கள் பத்துப் பன்னிரண்டு பேர் கஞ்சா, சாராய போதையில் சாலையில் நின்று கொண்டு போவோர் வருவோரையெல்லாம் கத்திக் கூச்சலிட்டு வம்புக்கு இழுத்துக் கொண்டிருந்தனர்! இவர்களின் அத்து மீறலைக் கண்டித்தவர்களையெல்லாம் அடிக்க ஓடினார்கள்! பலரும் நமக்கெதற்கு வம்பு என நிற்காமல் சென்று கொண்டிருந்தனர்! இது ஆலிச்சிகுடி கிராமத்தினர் அனைவருக்கும் நன்றாகத் தெரியும்!

இரவு நேரம் ஆக ஆக இந்த கஞ்சா, சாராய கும்பலின் வன்னிய ஆதிக்க சாதி வெறி உச்சத்திற்குச் சென்று கொண்டிருந்தது! அந்த சமயத்தில்தான் சாத்துக் கூடல் கிராம இளைஞர்களும் அந்த வழியாக விருதாச்சலம் நகருக்கு சென்றனர். இவர்கள் கூச்சலிடவே, நமக்கெதற்கு வம்பு என நிற்காமல் அந்த இளைஞர்கள் சென்று விட்டனர். சாத்துக் கூடல் இளைஞர்கள் திரும்பி வரும் போது, திட்டமிட்டே வழிமறித்துள்ளது கஞ்சா, சாராய கும்பல்! வேறு வழியின்றி இளைஞர்கள் வண்டியை நிறுத்தவே, எந்த ஊருடா என எந்த மட்டு மறியாதையுமின்றி கேட்டுள்ளது சாதி வெறியிலும் போதையிலுமிருந்த கும்பல்! சாத்துக் கூடல் என்றதும் காலனியா ஊரா எனக் கேட்டுள்ளனர்! இளைஞர்கள் காலனி எனக் கூறி முடிப்பதற்குள், சரமாரியாக போதை கும்பல் தாக்கத் தொடங்கியுள்ளது! தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் என்ன நடக்கிறது என புரிந்து கொள்வதற்கு முன்னே, ஒரு போதை ஆசாமி கனமான கட்டை ஒன்றால் ஒரு இளைஞனின் தலையிலும் உடலிலும் தாக்க, ரத்தம் கொட்டத் தொடங்கியுள்ளது. அப்போதும் தாக்குதலை நிறுத்தவில்லை அந்த போதை, சாதி வெறி கும்பல். அடிபட்டவருக்கு பத்திற்கும் மேற்பட்ட தையல் போடப்பட்டுள்ளது. மற்றொரு போதை, சாதி வெறி இளைஞன், இரும்புத் தடி கொண்டு இன்னொரு தலித் இளைஞரைத் தாக்க அவருக்கு கால் எலும்பு இரண்டாக முறிந்து போனது! அவரை பரிசோதித்த விருதை அரசு மருத்துவர், மேற்கொண்டு சிகிச்சைக்காக சென்னை இராமச்சந்திரா மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளார். அந்தளவுக்கு பாதிப்பு ஏற்பட்டது!

மற்ற இரு தலித் இளைஞர்கள் கீழே விழுந்து விடவே மற்ற எல்லோரும் சேர்ந்து காலாலேயே கண்மூடித்தனமாக மிதித்துள்ளனர். அதில் ஒரு இளைஞருக்கு நெஞ்சில் பலமாக அடி பட்டுள்ளது. ஸ்கேன் செய்துள்ளனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது! மற்றொரு இளைஞருக்கும் உடல் முழுவதும் வலி. சிக்கிச்சை முடிந்து அவர் மட்டும் வீடு திரும்பியுள்ளார்!


படிக்க: இறையூர் தண்ணீர்த் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்: விசாரணை என்ற பெயரில் தாழ்த்தப்பட்ட மக்களை துன்புறுத்தாதே! | மக்கள் அதிகாரம்


இந்த செய்தி கேள்விப்பட்டதுமே, தாக்குதல் நடந்த இடத்திற்கு வந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசு, பாதிப்புக்குள்ளான தலித் இளைஞர்களை மருத்துவ மனைக்கு அனுப்பியதோடு, மேலும் காவலர்களை வரவழைத்து ஆலிச்சிகுடி போதை, சாதி வெறி கும்பலுக்கு பாதுகாப்பு வழங்கத் தொடங்கியுள்ளது. இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியது, இந்த சாதி வெறி கும்பல் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதே.

செய்தி கேள்விப்பட்ட சாத்துக் கூடல் தாழ்த்தப்பட்ட மக்கள் கோபாவேசமாகி, கும்பலாகத் திரண்டு, நியாயம் கேட்க வந்தனர். அவர்களுக்கு வேறு என்ன வழி இருக்கிறது? அவர்களை நிறுத்தி, என்ன எனக் கேட்டு, வழக்குப் பதிய வேண்டிய போலீசோ, லத்தி சார்ஜ் செய்வோம் என மிரட்டியுள்ளது. சாத்துக் கூடல் ஊர் பெரியவர்கள், காவல் நிலையம் சென்று, புகார் தரவே நடவடிக்கை எடுப்பதாகக் கூறி இரண்டு நபர்களை கைது செய்து உள்ளோம் மீதி நபர்களை விசாரித்து கைது செய்வோம் உரிய குற்றவாளியை கண்டுபிடிப்போம் என்று சொல்லி அனுப்பி விட்டது கருவேப்பிலங் குறிச்சி போலீசு.

ஆனால் மறுநாள் காலை ஊர் பொதுமக்கள், ஊர் முக்கியஸ்தர்கள்; விடுதலை சிறுத்தை கட்சி, மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்பினர் முக்கிய குற்றவாளிகள் 12 பேரின் பெயர்களை குறித்துக் கொடுத்தும் காவல்துறை ஏழு பேர் மீது மட்டுமே வழக்குபதிவு செய்தது. முக்கிய குற்றவாளியை இன்று வரை கைது செய்யவில்லை; உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விசிக, மக்கள் அதிகாரம் உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகளும், கட்சிகளும் இணைந்து அருகாமை கிராம மக்கள் உட்பட 500 பேருக்கும் மேலானவர்களைத் திரட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டும் பேரணியாக சென்றும் ஆர்.டி.ஓ அலுவலகம் முன்பு அமர்ந்தனர். மக்கள் முன்னிலையில் ஆர்.டி.ஓ அவர்கள் பேச வேண்டும் என்றனர். ஆர்.டி.ஓ அவர்கள் மக்களை சந்தித்து மனுவை பெற்றுக் கொண்டார். அன்று இரவு மூன்று நபர்களை கைது செய்தது போலீசு.


படிக்க: தமிழ்நாட்டு வரிப்பணத்தில் உல்லாச வாழ்க்கை! வெட்கங்கெட்ட ரவியே வெளியேறு ! | மக்கள் அதிகாரம்


முதல் நாள் கைது செய்யப்பட்ட நபர் சாராய போதையில் பைக் ஓட்டிச் சென்று கீழே விழுந்து அடிபட்டவர். அப்படித்தான் அவரது முதல் வாக்குமூலம் இருந்தது. ஆனால் பாமக கட்சி நிர்வாகி தலையிட்டு, அது சாத்துக் கூடல் தலித் இளைஞர்கள் தாக்கி ஏற்பட்ட காயம் என பொய் புகார் அளித்தனர். அதை ஏற்றுக் கொண்ட கருவேப்பிலங் குறிச்சி போலீசு, 14 தலித் இளைஞர்கள் மீது பொய் வழக்கு பதிந்து தேடி வருகிறது. இது காவல் துறையா? அல்லது காவி வெறி, சாதி வெறி போலீசா? எனத் தெரியவில்லை. ஒரு அநீதியை தட்டிக் கேட்கப் போன மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டலச் செயலாளர் முருகானந்தம், ஆலிச்சிகுடி ஊராட்சி துணைத் தலைவர் கண்ணன் (முருகானந்தம் தாக்குதல் நடந்த போது ஊரிலேயே இல்லை. கண்ணனுக்கு காலையில்தான் செய்தியே தெரியும்) உட்பட 14 பேர் மீதான பொய் வழக்கை திரும்பப் பெற வேண்டும். கொலை வெறித் தாக்குதல் நடத்திய போதை ஆசாமிகளான வன்னிய ஆதிக்க சாதி வெறியர்கள் அனைவரும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என மக்கள் அதிகாரம் கோருகிறது!

எந்த ஊர் என கேட்டு, சொன்ன மாத்திரத்திலேயே கொலை வெறித் தாக்குதல் நடத்தும் சாதி வெறியர்களுக்கு கைது, சிறை மட்டும் போதாது; அவர்களின் சிவில் உரிமைகள் பறித்தெடுக்கப்பட வேண்டும்! அவர்களுக்கு துணை போகும் காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுத்து பணி நீக்கம் செய்ய வேண்டும்! டாஸ்மாக்கை மூடு என போலியாக கோசம் போட்டு, போதை ஆசாமிகளின் ஆதிக்க சாதி வெறியைத் தூண்டி மக்களின் ரத்தம் குடிக்கும் பாமக கட்சியை தடை செய்ய வேண்டும்!

தோழமையுடன்,
முருகானந்தம்,
மண்டல செயலாளர்
மக்கள் அதிகாரம்,
கடலூர் மண்டலம்.

இந்தி மொழி திணிப்பிற்கு எதிராக மீண்டும் கிளர்ந்தெழுவோம்!

1947 அதிகார மாற்றத்திற்கு பிறகு வந்த எல்லா இந்திய ஒன்றிய ஆட்சியாளர்களும் இந்தியை திணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் பா.ஜ.க.வினரின் இந்தியை திணிக்கும் முயற்சி “இந்து-இந்தி-இந்து ராஷ்டிரியம்” என்னும் பெரும் நோக்கத்தோடு செய்யப்படுவதாகும். 80 ஆண்டுகளாக தமிழ்நாடு இந்தி திணிப்பை சந்தித்து வந்திருக்கிறது. அதை போர்க்குணத்தோடு எதிர்த்து போராட்டியிருக்கிறது. ஆனால் இன்றைய அரசியல் சூழலில் இந்தி திணிப்பு என்பது என்ன பரிணாமத்தில் இருக்கிறது. அதை தமிழ்நாடு எப்படி எதிர்கொள்கிறது என்பதை நாம் பரிசீலனை செய்யவேண்டிய தேவையிருக்கிறது.

1965 ஜனவரி 26 ஆம் தேதி இந்த குடியரசின் 15 ஆண்டுகள் நிறைவு செய்யும் அதே தினத்தில் அரசியல் அமைப்புச் சட்டப்படி அலுவல் மொழியாக ஆங்கிலத்தின் காலம் முடிவடைதாகவும் அதற்கு பதிலாக இந்தியை கொண்டுவர வேண்டும் என்ற நிலை இருந்தது. இதனால் இந்தி பேசாத மாநிலங்களில் எதிர்ப்புகள் கிளம்பியது.

ஆனால் தமிழ்நாடு (அன்றைய மெட்ராஸ் மாகாணம்) போன்ற பெரிய அளவிலான தீவிரமான கிளர்ச்சிகள் மூலமாக இந்திய அரசாங்கத்தின் மொழிக் கொள்கை மீது ஆழ்ந்த அதிருப்தியை வேறு எந்த மாநிலமும் வெளிப்படுத்தவில்லை. அன்றைய மாணவர்களின் போராட்டத்தை கண்டு ஒன்றிய அரசு தொடை நடுங்கியது.

படிக்க : ஜனவரி 25: இந்தி திணிப்புக்கெதிரான மொழிப்போர் தியாகிகளது தீரத்தையும், தியாகத்தையும் நெஞ்சிலேந்துவோம்!

இந்தியை திணிக்கும் மொழிக் கொள்கையை எதிர்த்து குடியரசு தினத்தை “துக்க தினமாக” கடைபிடிக்கப்போவதாக தி.மு.க அறிவித்தது. ஆனால் அரசு அதற்கு தடை விதித்தது.

இதையடுத்து, ஜனவரி 24, 1965 அன்று, குடியரசு தினத்தன்று நடந்தப்பட இருந்த ஆர்ப்பாட்டங்களுக்கு அரசு விதித்துள்ள தடையை மீறப்போவதாக தி.மு.க அறிவித்தது. இதனால், ஜனவரி 26 அதிகாலையில், சி.என்.அண்ணாதுரை மற்றும் சுமார் நூற்றைம்பது தி.மு.க தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இதன் விளைவாக, கட்சி திட்டமிட்டிருந்த கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடைபெறவில்லை.

ஆனால் போராட்டத்தின் உண்மையான நாயகர்களான மாணவர்களின் பங்கு இப்போது இன்னும் தீவிரமாக இருந்தது. மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தி.மு.க.வினர் கைது செய்யப்பட்ட அடுத்த நாள் தொடங்கியது. மதுரையில் உள்ள காங்கிரஸ் அலுவலகங்கள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது, போலீசார் தடியடி நடத்தினர். இதனால் காங்கிரஸ் கட்சியினருடன் ஏற்பட்ட மோதலில் மாணவர்கள் சிலர் காயமடைந்தனர்.

சென்னை கடற்கரையில் இந்தி புத்தகங்களை எரித்து மாணவர்கள் தங்களை எதிர்ப்பை பதிவு செய்தனர். மேலும் ஆங்கிலத்தின் நிலையைப் பாதுகாக்கும் அரசியலமைப்புத் திருத்தத்தை கொண்டு வரவேண்டும் என்பதை கோரிக்கையாக வைத்து பெரிய அளவிலான மாணவர்கள் தலைமைச் செயலகத்திற்கு பேரணியாகச் சென்றனர்.

மேலும் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி அட்டூழியம் செய்தனர். ஜனவரி 27 அன்று, அதிகாலையில், சென்னையிலுள்ள பல கல்லூரிகளில் உள்ள விடுதிகளில் போலீசார் சோதனை நடத்தி மாணவர் தலைவர்களைக் கைது செய்தனர். மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்கினர். இது மாணவர்களின் மத்தியில் நிலைமையை கொதிப்படையச் செய்தது.

இந்த காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறையால் போராட்டத்தை நசுக்கிவிட்டதாக நினைத்து பிப்ரவரி 8 ஆம் தேதி கல்லூரிகளை மீண்டும் திறக்க அரசு ஏற்பாடு செய்தது. ஆனால், பெரும்பாலான மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டங்களில் ஈடுபட்டனர். இனியும் இது மாணவர்களாலும் தீவிர தி.மு.க ஆதரவாளர்களாலும் நடத்தப்படும் போராட்டமாக மட்டும் அல்ல; இது மக்கள் மத்தியில் பிரபலமான இயக்கமாக மாறியது.

கோயம்புத்தூரில் முழு அடைப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டன. ரயில்கள் நிறுத்தப்பட்டன. பிப்ரவரி 10 அன்று போலீஸ் ஏழு இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தியது, அதில் இருபத்தி நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் இருபத்தைந்து பேர் காயமடைந்தனர். பிப்ரவரி 11 ஆம் தேதி, மீண்டும் பல இடங்களில் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது.

இந்தி திணிப்பு இருக்காது என்பதை மீண்டும் ஒருமுறை உறுதி செய்து பிரதமர் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். மத்திய நிதியமைச்சரும், தமிழருமான டி.டி.கிருஷ்ணமாச்சாரி, தன்னைப் போன்ற தமிழக அமைச்சர்கள், C.சுப்பிரமணியம் (உணவுத் துறை அமைச்சர்) தென்னகத்தின் நலன்களைக் கவனித்துக்கொள்வதால்,  இந்தப் போராட்டம் தேவையற்றது என்றார். ஆனால் அவர் சொன்னதற்கு முரண்பாடாக, டில்லியில் சுப்பிரமணியம் மற்றும் சென்னையைச் சேர்ந்த அழகேசன் ஆகிய அமைச்சர்கள் ஆட்சியாளர்களின் மொழிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதமரிடம் ராஜினாமா கடிதங்களை அளித்தனர்.

பிப்ரவரி I2 அன்று சென்னை மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. பதினொரு இடங்களில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டனர். நிலைமை இப்போது வெளிப்படையாகக் கட்டுப்பாட்டை மீறியதால், மற்ற மாநிலங்களில் இருந்து போலீசுத்துறை மற்றும் துருப்புக்கள் அதிக அளவில் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டனர். பிப்ரவரி I3 அன்று பதினைந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர், இந்த போராட்டத்தின் போது கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக மொத்தம் 66 பேர் என சொல்லப்பட்டது. ஆனால் போலீஸார் கொல்லப்பட்டும், இந்த போராட்டத்திற்காக தீக்குளித்தும், விஷம் குடித்தும் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்டவர்களையும் சேர்த்து 200 பேர் இறந்திருப்பார்கள்.

இந்த போராட்டம் தி.மு.க.வால் தூண்டப்பட்டது என்று சென்னை மாகாண அரசு நினைத்தது தவறு என்பதை மாணவர்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் நிரூபித்தது. மாணவர்களின்‌ போராட்டம் பொது மக்களையும் போராட்டத்திற்கும் இழுத்து வந்தது.

ஜனவரியில் திருச்சியில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாடு மற்றும் தி.மு.க.வினரால் அறிவிக்கப்பட்ட “குடியரசு தினத்தை துக்க நாளாக கடைபிடிப்பது” ஆகிய போராட்டத்திற்கான ஆயத்த எதிரொலியை மாணவர்களிடையே எழுப்பியது. ஆனால் ஜனவரி 27 அன்றுதான் போராட்டத்தை வழிநடத்த ஒரு மாணவர் அமைப்பாக  “தமிழ்நாடு மாணவர்களின் இந்தி எதிர்ப்பு போராட்டக்குழு” (Tamilnad Students’ Anti-Hindi Agitation Council) அமைக்கப்பட்டது. அப்போது திமுகவின் முக்கிய தலைவர்கள் ஏற்கனவே சிறையில் இருந்தனர்.

இந்த மாணவர்கள் அமைப்பு மெட்ராஸ் நகரத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், மாநிலத்தின் பெரும்பாலான கல்லூரிகளுடன் மிக விரைவாக தொடர்புகளை ஏற்படுத்தியது. பெரும்பாலான கல்லூரிகளில் நடவடிக்கைகளை எடுத்துச் செல்வதற்கான குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த அமைப்புக் குழுக்களில் கணிசமான மாணவர் தலைவர்கள் தி.மு.க.வுடன் எந்தத் தொடர்பும் கொண்டிருக்கவில்லை, மேலும் தி.மு.க.வால் இந்த மாணவர்கள் அமைப்பில் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை என்பதே உண்மை.

தி.மு.க.வின் உயர்மட்டத் தலைவர்கள் கேட்டுக் கொண்டபோதும் மாணவர்கள் வகுப்புகளுக்குத் திரும்ப மறுத்தனர். போராட்டத்தைக் கைவிடவும் மறுத்தனர் என்பதிலிருந்து தி.மு.க தலைமை இந்த மாணவர்களின் போராட்டத்தை வழி நடத்தவில்லை என்பது நிரூபணமாகிறது.

இந்தப் போராட்டத்திற்கான ஆரம்ப கால உத்வேகம் தி.மு.க தரப்பில் இருந்து வந்தது என்பதில் சந்தேகமில்லை. இதன் மூலமாக ஏற்கனவே மக்கள் மத்தியில் இருக்கும் மொழி சார்ந்த உணர்ச்சிகளைக் கைப்பற்றிக்கொள்வதற்கும், காங்கிரஸ் எதிர்ப்பு சக்திகளின் பரந்த கூட்டணியை உருவாக்குவதற்கும் தி.மு.க முயற்சித்தது. ஆனால் போராட்டம் விரைவில் தி.மு.க.வின் கட்டுப்பாட்டை மீறிச்சென்றது. இறுதியில் மாணவர்களின் தன்னெழுச்சியான போர்ட்டங்களைக் கண்டு தி.மு.க தலைவர்கள் திகைத்து நின்றனர் என்பதே உண்மை.

மாணவர்களின் போராட்டங்கள் “காங்கிரஸ் எதிர்ப்பு பெரும் பணக்காரர்களால் நிதியுதவி செய்யப்பட்டது” என்ற பொய் பிரச்சாரம் பரப்பப்பட்டது. மாணவர்களின் இந்த போராட்ட அமைப்பிற்குப் பின்னால் கணிசமான அளவு நிதி இல்லை. அதனால் ஒவ்வொரு போராட்ட யூனிட்டும் அதற்குத் தேவையான நிதியைத் தாங்களாகவே திரட்டிக்கொள்ள வேண்டிருந்திருந்தது.

தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் நோக்கம் நாடாளுமன்றத்திலும் இந்திய அரசாங்கத்திலும் செல்வாக்கு செலுத்துவதாக இருந்த இந்தி ஆதரவாளர்களையும் அவர்களின் இதுநாள் வரை அனுபவித்து வந்த சலுகைகளையும் பறிக்கும் வகையில் அமைந்தது.

படிக்க : வேலையில்லாத் திண்டாட்டம் – யார் காரணம்: வட மாநிலத் தொழிலாளியா? முதலாளித்துவ இலாபவெறியா?

இப்படி மத்திய மாநில அரசுகளையும் பணிய வைக்கும் வகையில் போர்க்குணமாக மாணவர்கள் போராட்டங்களை நடத்தினர். இந்த மொழிப்போரில் தங்களது தியாகங்களால் உரிமைகளை பெற்றத் தந்தது மட்டுமல்ல மாணவர்கள் அமைப்பாக போராடுவதன் அவசியத்தையும் எதிர்கால தலைமுறையினருக்கு கற்றுத் தந்தனர்.

ஆனால், இன்று தமிழ்நாட்டின் நிலை என்ன? மத்தியில் பா.ஜ.க பாசிச ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது. மாநிலங்களான ஒவ்வொரு உரிமைகளையும் பறித்துக் கொண்டிருக்கிறது. அதை எதிர்க்க வக்கற்று நிற்கின்றனர் தி.மு.க ஆட்சியாளர்கள்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இந்தி மொழியைப் பயிற்றுவிப்பதற்கான ஊடகமாக பயன்படுத்த வேண்டும் என்று பரிந்துரை செய்யும் அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் அறிக்கை சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இது இந்தி பேசாத மக்கள் மீது இந்தியை திணிக்கும் முயற்சி என்று சம்பிர்தாயமாக எதிர்ப்பு தெரிவித்தது தி.மு.க. அதற்கு மேல் ஒன்றுமில்லை. இவர்களின் பாசாங்கான எதிர்ப்புகளால் பா.ஜ.க தனது நோக்கத்தை கைவிடப்போவதில்லை. உண்மையில் 1965 ஆம் ஆண்டு போராட்டத்தை போல் மாணவர்களும் மக்களும் அமைப்பாக திரண்டு போராடுவதன் மூலம்தான் நமது உரிமைகள் காப்பாற்றிக்கொள்ள முடியும்.

ராஜன்

வேலையில்லாத் திண்டாட்டம் – யார் காரணம்: வட மாநிலத் தொழிலாளியா? முதலாளித்துவ இலாபவெறியா?

வரலாறு காணாத வேலையில்லாத் திண்டாட்டம்! காரணம் என்ன?
வட மாநிலத் தொழிலாளியா? முதலாளித்துவ இலாபவெறியா?

ட மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாடும் இதற்கு விதிவிலக்கில்லை. ஒன்றிய, மாநில அரசுத் துறைகளோ தனியார் துறையோ எங்கும் நிரந்தர வேலைக்கு ஆட்கள் எடுப்பது கிடையாது. கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகள் ஒப்பந்தம் (காண்ட்ராக்ட்) மூலம் நிறைவேற்றப்படுகிறது. குறிப்பிட்ட மாதங்கள், ஆண்டுகள் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டி விட்டு தூக்கி எறிவது என்பதைத்தான் பெரு நிறுவனங்கள் செய்து வருகின்றன.

அதாவது பயிற்சித் தொழிலாளி, ஒப்பந்தத் தொழிலாளி, தற்காலிகத் தொழிலாளி, NEEM, NAPS, FTE என்று பல்வேறு பெயர்களில் தொழிலாளர்களை சுரண்டிக் கொழுக்கிறார்கள் கார்ப்பரேட் முதலாளிகள். குறிப்பிட்ட ஆண்டுகள் (அதிகபட்சம் 3 ஆண்டுகள்) வரை அவர்களை உறிஞ்சிவிட்டு தூக்கியெறிந்து விடுவதுதான் இந்த வேலைவாய்ப்பின் லட்சணம்.

கல்வியில் முன்னேறிய தமிழ்நாட்டில் படித்து முடித்துவிட்டு வேலை தேடும் படித்த இளைஞர்களின் எண்ணிக்கை வட மாநிலங்களைக் காட்டிலும் அதிகம். தமிழ்நாட்டு இளைஞர்கள் வேலைவாய்ப்பின்மையால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அரசுத் தேர்வின்போது சில ஆயிரம் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் சில லட்சக்கணக்காக விண்ணப்பங்களே இதற்கான சான்று.

எனவே, இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு தங்களது படிப்பிற்கு தொடர்பில்லாத கிடைக்கின்ற வேலையை செய்வது என்ற சூழ்நிலைதான் பெரும்பாலும் உள்ளது. வாழ்க்கை நிர்ப்பந்தங்களின் காரணமாக வேறுவழியின்றி எந்தவித வேலை பாதுகாப்பும், உத்தரவாதமும் இல்லாத வேலைகளுக்காக வளைகுடா நாடுகளுக்கு செல்வதும், மும்பை, பெங்களூரு, கல்கத்தா உள்ளிட்ட பெரு நகரங்களை நோக்கி ஓடுவதும் இயல்பாக நடந்து வருகிறது. இதனால் இயல்பான வாழ்க்கை, சமூக சிந்தனை, புரிதல்கள் முற்றிலும் பாதிக்கப்படுகிறது.

படிக்க : வடமாநில தொழிலாளியோ, தமிழக தொழிலாளியோ, போலீசு முதலாளிகளின் பக்கம்தான் !

இந்த சூழலில்தான் தமிழ்நாட்டின் இளைஞர்கள் மத்தியில் வேறொரு நஞ்சு வேகமாக விதைக்கப்பட்டு வருகிறது. வட மாநிலத் தொழிலாளர்கள் வருவதால்தான் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. எனவே வடமாநிலத் தொழிலாளர்களை விரட்ட வேண்டும் என்ற மனநிலை சீமான், பெ.மணியரசன் போன்றவர்களால் தமிழினவெறியை கிளப்புகிறார்கள். மேலோட்டமாக இதைப் புரிந்து கொண்டு இளைஞர்கள் பலரும் இனவெறிக்கு பலியாகிறார்கள்.

ஒன்றிய அரசுப் பணிகளில் வட மாநிலத்தவரை சதித்தனமாக திணிப்பதையும், அன்றாட வாழ்க்கை வாழ்வதற்காக தமிழ்நாட்டுக்கு வந்து குறைவான கூலிக்கு உழைப்பவர்களையும் வேறுபடுத்திப் புரிந்து கொள்வது முக்கியமானதாகும்.

ஒன்றிய அரசுப் பணிகளில் சதித்தனமாக வட மாநிலத்தவரை திணிப்பது நமது உரிமையைப் பறிப்பதாகும். வாழ்க்கை வாழ்வதற்காக வருவது என்பது நாம் ஒன்றிணைவதற்கான வர்க்கம் அவர்கள் என்பதாகும். நமது பிரச்சினையும், அவர்களது பிரச்சினையும் ஒன்று என்பதாகும்.

தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூர், வளைகுடா நாடுகள் உள்ளிட்ட வெளி நாடுகளுக்கு நாம் செல்வதற்கான காரணங்களுக்கு எந்த அளவுக்கு நியாயம் உள்ளதோ, அதே நியாயம் அன்றாட வாழ்க்கைக்காக இங்கு பிழைப்பு தேடிவரும் வட மாநிலத் தொழிலாளிக்கும் பொருந்தும்தானே. இதை நாம் சிந்திக்க வேண்டும்.

வடக்கு, வட கிழக்கு மாநிலங்களில் இருந்துதான் பெருமளவிலான தொழிலாளர்கள் இங்கு வருகிறார்கள் என்பது நமக்குத் தெரியும். அம்மாநிலங்களில் 75 ஆண்டுகளில் கல்வி, மருத்துவம், உற்பத்தி ஆகிய அடிப்படையான பிரச்சினைகள் கூட மிகவும் பாதிக்கப்பட்டுகிடக்கின்றன. இன்னொரு பக்கம் பார்ப்பன, பனியா, சிந்தி, மார்வாடி முதலாளிகளின் கேள்விக்கிடமற்ற சுரண்டலுக்கான எல்லா வாய்ப்புகளும்(கனிமவள-இயற்கைவள கொள்ளை, தனியார்மயக் கொள்கை) ஆட்சியாளர்களால் ஏற்படுத்தித் தரப்படுகின்றன.

தங்களது அரசியல், பொருளாதார உரிமைகளைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாத நிலைமையில்தான் வடமாநில உழைக்கும் மக்கள் வைக்கப்பட்டிருக்கின்றனர். தாங்கள் யாரால் சுரண்டப்படுகிறோம் என்பதை உணராமல் இருப்பதற்காகத்தான் பார்ப்பன மதவெறி நஞ்சை ஊட்டிக் கொண்டே இருக்கின்றனர்.

சாதிய ஒடுக்குமுறையும், மதவெறியும், பிற்போக்குத்தனமும் கோலோச்சுகின்ற நிலையானது ஆட்சியாளர்களுக்கும், சுரண்டும் வர்க்கங்களுக்கும் இனிக்கத்தானே செய்யும்?

வறுமையின் பிடி தாளாமல் பிழைப்பு தேடிவரும் உழைக்கும் வர்க்கமாகிய அந்தத் வட மாநிலத் தொழிலாளர்கள் நமது உழைக்கும் வர்க்கத்தினர் என்பதை நாம் உணர வேண்டும். பெரும்பாலான வட மாநிலத் தொழிலாளர்கள் அங்கே இருந்து இங்கு வந்து சொர்க்க வாழ்க்கை வாழவில்லை. கடும் சுரண்டலிலும், உரிமைகளற்ற நிலையிலும்தான் வாழ்ந்து வருகின்றனர்.

தமிழ்நாட்டிலும் இருப்புவேலை (வெல்டிங்), ஃபவுண்டரி, ரசாயண வேலை(கெமிக்கல்), பனியன், சாலைப்பணி, கட்டுமானம், உணவகம் போன்ற ஆபத்தான, பாதுகாப்பற்ற, சுகாதாரமற்ற வேலை நிலைமைகளில் பெரும்பாலும் வட மாநிலத் தொழிலாளர்களே வேலை செய்கின்றனர். இந்த இடங்களில் எவ்வளவு சுரண்டினாலும், ஒடுக்கினாலும் எதிர்த்து கேள்வி கேட்க முடியாது. இப்படிப்பட்ட நிலைமைகளில் வாழும் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதுதானே மனிதாபிமானமுள்ள, ஜனநாயகமுள்ள (வர்க்கக்கோபம்) ஒருவரின் கடமையாக இருக்க முடியும்?

வடக்கன்ஸ் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் ரிசர்வ் பெட்டியில் ஏறுகிறான் என கோபி-சுதாகர் என்பவர்கள் பரிதாபங்கள் வீடியோ பதிவுகளை போடுகின்றனர். இதை கிரிமினல் குற்றமாக சித்தரிக்கும் இவர்களை போன்றோர் மக்கள் வரிப்பணத்தில் கட்டியெழுப்பட்ட இரயில்வே துறையை தனியார்மயம், வளர்ச்சி என கார்ப்பரேட் கொள்ளையர்களுக்கு தாரைவார்ப்பது குறித்து சிந்திப்பது கூட கிடையாது.

சொந்த மாநிலத்தில் வாழ முடியாமல் பசியோடு, நாடோடியாக, உள்நாட்டு அகதிகளாக 13 கோடி பேர் அலைவது குறித்தும் இதற்கு பின்னணியில் உள்ள ஐ.ஏ.எஸ் (IAS) போன்ற அதிகார வர்க்கத்தையும் நாட்டை விற்கும் நாடாளுமன்றத்தையும் அரசியல் கட்சிகளையும் தனியார்மயக் கொள்கையையும் இரட்டையாட்சி அரசமைப்பையும் கேள்விக்குள்ளாக்குவதில்லை.

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி மூலம் வேலைவாய்ப்புள்ளது என்றும் அதில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு 80 சதவீதம் வேலை தர வேண்டும் என்றும் பட்டியலிடுபவர்கள். அவை எத்தகைய வேலைவாய்ப்புகள் என்பதை பட்டியலிடத் தயாரா? பல லட்சக்கணக்கான படித்த இளைஞர்கள் கூலியற்ற உழைப்பு(அப்ரண்டீஸ்), ஒப்பந்தமுறை(காண்ட்ராக்ட்), நீம் (NEEM), தற்காலிகம் என சட்டவிரோத சுரண்டப்படுகின்றனர்.

படிக்க : கிருஷ்ணகிரி மாவட்டம் KATERRA  நிறுவனம் – தொழிலாளிகள் மீதான  கொடூரச் சுரண்டல் – தொழிலாளிகள் உள்ளிருப்புப் போராட்டம்!

முதலாளித்துவ நிறுவனங்களின் இந்த கிரிமினல் நடவடிக்கையை கேள்வி கேட்காமல் புலம்பெயரும் தொழிலாளர்களை காட்டி வேலைவாய்ப்புகளை பறிப்பதாக கூச்சலிட்டு கார்ப்பரேட் கொள்ளையர்களை திட்டமிட்டு மறைக்கவும் மடைமாற்றி தமிழினவெறியை பற்றவைக்கவும் சீமான் போன்ற இனவெறியர்கள் போலிச் சமர் புரிய ஆளும்வர்க்கத்தால் களத்தில் இறக்கப்பட்டுள்ளார்கள்.

தமிழ்நாட்டின் இளந்தொழிலாளர்களே! சிந்தியுங்கள்! இனவெறி அரசியலுக்கு பலியாகி விடாதீர்கள்! அவ்வகையான அரசியல் மறைமுகமாக கார்ப்பரேட்டுகளை காப்பாற்றுவதற்கானது என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்!

நமது(தமிழ்நாட்டு தொழிலாளர்கள்) பிரச்சினையும், அவர்களது(வட மாநிலத்தொழிலாளர்கள்) பிரச்சினையும் வேறுவேறல்ல. கார்ப்பரேட் முதலாளிகளின் கொடூரமான சுரண்டலுக்கான தனியார்மயக் கொள்கைகளும், அதை தீவிரமாக அமல்படுத்தும் காவி-கார்ப்பரேட் பாசிசமும்தான் உழைக்கும் வர்க்கத்துக்கு எதிரி.

பொது எதிரிக்கெதிரான போராட்டத்தில் இனம், மதம், மொழி கடந்து ஒன்றிணைவது மட்டும்தான் நமக்கு முன் இருக்கும் ஒரே வழியாகும்!


தோழர். பரசுராமன்,
மாவட்ட செயலாளர்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டங்கள்,
தொடர்புக்கு : 97880 11784.

இந்தி மொழி எதிர்ப்பு போராட்ட வரலாறு | பாகம் 8 – இறுதி பாகம் | வீடியோ

மாபெரும் இந்தி மொழி எதிர்ப்பு போராட்ட வரலாறு பற்றி புத்தகங்கள் ஏதுமில்லை… ஆனால் அந்த மொழிப்பேரின் உணர்ச்சி மிகுந்த வரலாற்றை நாம் கற்க வேண்டியது அவசியம்.

அதனடிப்படையில், இந்தி மொழி எதிர்ப்பு போரின் வீரம் செறிந்த வரலாற்றை பல்வேறு பாகங்களாக வெளியிடவிருக்கிறோம்.

எட்டாம் பாகம் : இந்த தொடரின் இறுதி பாகம்

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!

மீண்டும் இந்தி: வெறும் மொழித் திணிப்பல்ல!

மோடி-அமித்ஷா கும்பல் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், இந்திய உழைக்கும் மக்கள் மீது தொடுத்துவரும் பல்வேறு தாக்குதலில் ஒன்று, இன-மொழி அடிப்படையிலான தாக்குதலாகும். இவற்றில் முதன்மையானது இந்தி மொழித்திணிப்பாகும்.

பிரதான் மந்திரி கிஷான் பென்சன் யோஜனா, ஜன் தன் யோஜனா, ஸ்வச் பாரத், பேட்டி பச்சோ பேட்டி பதோ, உஜாலா யோஜனா என அரசாங்கத்தின் திட்டங்களையும் சட்டங்களையும் இந்தியில் குறிப்பிடுவது; ஒன்றிய அரசு அலுவலகங்களில் இந்தியை அலுவல் மொழியாக நடைமுறைப்படுத்துவது; இரயில்வே, வங்கிகள் போன்ற ஒன்றிய அரசின் நிறுவனங்களில் இந்தியில் அறிவிப்புப் பலகைகளை அமைப்பது; இரயில் நிலையங்களில் ‘தினம் ஒரு இந்தி வார்த்தை’ என இந்திப் பிரச்சாரம் செய்வது போன்ற பல்வேறு வடிவங்களில் இந்தியைத் திணித்து வருகிறது, மோடி-அமித்ஷா கும்பல்.

இவற்றின் தொடர்ச்சியாக, அண்மையில் ஒன்றிய அரசு வேலைவாய்ப்புகளில் இந்தி தெரிந்தவர்களுக்கு மட்டுமே இடமளிக்க வேண்டும், கலை-அறிவியல் கல்லூரி, தொழிற்கல்வி ஆகியற்றில் இந்தியை பயிற்றுமொழியாக்க வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகளை அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற அலுவல் மொழிக்குழு குடியரசுத் தலைவரிடம் அறிக்கையாக அளித்திருக்கிறது. இது நாடு தழுவிய வகையில் ஒரே நேரத்தில் இந்தித் திணிப்பை மேற்கொள்ளும் பெரிய சதித்திட்டமாகும்.

படிக்க : இந்தி எதிர்ப்பு மொழிப்போர் தியாகிகள் தினம் – ஆளுநர் ரவியே வெளியேறு சென்னையில் ஆர்ப்பாட்டம்!

இத்துடன், ஏற்கெனவே அரசு அலுவலங்களில் இந்தித் திணிப்பு நடைமுறையில் அரங்கேறி வருகிறது. ஒன்றிய ஆயுதப்படைக்கு அண்மையில் இந்தி மொழியில் மட்டுமே தேர்வு நடத்தப்பட்டிருப்பது இதற்குத் தக்கச் சான்றாகும். மேலும் நீதிமன்றத் தீர்ப்புகளையும் இனி இந்தி மொழியில்தான் வழங்க வேண்டும் என்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது காவி பாசிசக் கும்பல்.

இந்து-இந்தி-இந்தியா: பல்தேசிய இன ஒடுக்குமுறை!

இந்தித் திணிப்பின் அடிப்படை, அகண்ட பாரதம், பார்ப்பன வர்ணாசிரம ஆதிக்கம், சமஸ்கிருத மேலாதிக்கம் என்கிற அடிப்படையிலான ‘இந்து-இந்தி-இந்தியா’ என்ற கோட்பாடாகும்.

இந்த இந்தித் திணிப்பு என்பது தமிழகத்தின் மீது திணிக்கப்படுவதாகவும் அதனை எதிர்த்து முறியடிக்கப்பட வேண்டும் என்றும் நம்மவர்கள் பேசி வருகின்றனர்; இது முழு உண்மையல்ல. இந்தித் திணிப்பு என்பது இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மேற்கொள்ளப்படுகிறது. மேற்கு வங்கம், கேரளா, தமிழகம், பஞ்சாப், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் இந்தித் திணிப்பை எதிர்த்தாலும், அதனை வீரத்துடன் எதிர்த்துப் போரிட்ட வரலாறு தமிழகத்திற்கு மட்டுமே உள்ளது.

1935-லும் 1965-லும் தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் இந்தித் திணிப்பு முதன்மையாக மேற்கொள்ளப்பட்ட காலங்களாகும். அந்த முதன்மையான காலங்கள் மட்டுமின்றி, பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்தித் திணிப்புக்கான முயற்சிகள் நடந்துள்ளன.

தமிழ் மொழியின் மேன்மை, தமிழ்நாட்டின் பார்ப்பன-வேத ஆதிக்க எதிர்ப்பு மரபு காரணமாகத்தான் தமிழகத்தை இந்தியால் அவ்வளவு வேகமாக ஆதிக்கம் செய்ய முடியவில்லை. குறிப்பாக, சமஸ்கிருதத்திற்கு முன்பே தோன்றிய மூத்த மொழி என்பதால் மட்டுமல்ல, உயர்தனிச் செம்மொழியாக தமிழ் தனித்து விளங்குவது அதன் சிறப்பாகும்; எனவேதான் 3,000 ஆண்டுகளாகியும் ஆரிய-பார்ப்பன கும்பலால் தமிழை வெற்றிகொள்ள முடியவில்லை.

இந்த பார்ப்பன-வேத-ஆகம எதிர்ப்பு மரபை நசுக்குவதற்கு மேலிருந்து இந்தி மொழித் திணிப்பு என்ற ஒரு வடிவத்தில் மட்டுமல்ல, தமிழை சமஸ்கிருதத்தின் கிளை மொழி என்று நிறுவுவதற்கான முயற்சிகள் கீழிருந்தும் மேற்கொள்ளப்படுகின்றன. திருவள்ளுவர் உள்ளிட்ட தமிழ் புலவர்களை இந்துத் துறவிகளாகக் காட்டி வரலாற்றைத் திரிப்பது, ‘காவித் தமிழ்ச் சங்கமத்தை’ நடத்தி, ஆன்மிகம்தான் தமிழின் ஆன்மா என்று சித்தரித்தது என பல்வேறு சதி வேலைகளில் மோடி-அமித்ஷா கும்பல் ஈடுபட்டுள்ளது.

இந்தித் திணிப்புக்கு நிகராகவும் இணையாகவும் சமஸ்கிருத வாரம், பல்கலைக் கழகங்களில் சமஸ்கிருதத்தைக் கட்டாயப் பாடமாக்குவது, தமிழுக்கு நிகராக சமஸ்கிருதத்தை முன்னிறுத்துவது போன்ற பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது மோடி-அமித்ஷா கும்பல். கடந்த எட்டு ஆண்டுகளில், செத்தமொழியான சமஸ்கிருதத்தின் வளர்ச்சிக்கு ஒதுக்கிய தொகை மட்டும் 1,488 கோடிகளாகும்; அதேநேரம் செம்மொழியான தமிழுக்கு 7,4 கோடி அற்பத்தொகையை ஒதுக்கியுள்ளது; ஒரு செம்மொழிக்கே இந்நிலையென்றால், பிற தேசிய இன மொழிகளின் நிலை இதைவிட மோசமாக உள்ளது.

இவ்வாறு காவி பாசிசக் கும்பல் மேற்கொள்ளும் நடவடிக்கைகளைத் தொகுத்துப் பார்க்கும் தமிழின அமைப்புகள், இந்தித் திணிப்பை எதிர்ப்பவர்கள் கூட, தமிழ் மொழியின் மீதான தாக்குதலாக மட்டுமே இன-மொழி கண்ணோட்டத்தில் இருந்து இதனை சுருக்கிப் பார்க்கின்றனர். ஆனால், அவ்வாறு இதனை சுருக்கிப் பார்க்க முடியாது.

ஆதிக்கமும், எதிர்ப்பும்: மொழி என்பது மொழி மட்டுமல்ல!

ஒரே நாடு, ஒரே சந்தை என்ற அடிப்படையில்தான் ஒரே மொழி என இந்தியைத் திணிப்பதும் நடைபெற்று வருகிறது. இந்தித் திணிப்பு நடத்தப்படுவது இது புதிதல்ல. இதற்கு முன்னர், பலமுறை இந்தித் திணிப்புக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மோடி – அமித்ஷா கும்பலின் தாக்குதல் என்பது பரந்துவிரிந்தது. இந்தி-இந்து-இந்தியா என்ற இந்துராஷ்டிர, அகண்ட பாரத, பார்ப்பன-வர்ணாசிரம ஆதிக்கத்தின் பல்வேறு தாக்குதல்களில் ஒன்றுதான் மொழிகளின் மீதான இத்தாக்குதலாகும். இந்த வர்ணாசிரம கோட்பாட்டின் அடிப்படையில்தான், வெள்ளை ஏகாதிபத்தியத்தின் தயவில் இந்திய அரசியல் அமைப்பும் கட்டியமைக்கப்பட்டது. இது இந்தியாவில் இருக்கும் பல்தேசிய, இன, மொழி உரிமைகளை நசுக்கும் வகையிலேயே கட்டியமைக்கப் பட்டுள்ளது.

மக்கள் நல அரசு என்ற போர்வையில் செயல்பட்டு வந்த இந்த இந்திய அரசியல் அமைப்பானது, மறுகாலனியாக்கக் கொள்கைகளில் விளைவாக பாசிசமயமாகி வருகிறது. 2014-இல் மோடி-அமித்ஷா தலைமையிலான ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க., அம்பானி-அதானி பாசிசக் கும்பல் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதில் இருந்து, ஒரே நாடு, ஒரே வரி, ஒரே ரேஷன்கார்டு, ஒரே சந்தை, ஒரே மொழி, ஒரே மதம் என தனது இந்துராஷ்டிரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது.

இந்த நோக்கத்தில் இருந்துதான், இந்தியத் தொழில்துறையில் மார்வாடி, குஜராத்தி, சிந்தி, பார்ப்பன, பனியா சாதிப் பின்னணி கொண்ட அம்பானி, அதானி, வேதாந்தா போன்ற கார்ப்பரேட் முதலாளிகளின் ஆதிக்கம் நிலைநாட்டப்பட்டு வருகிறது. அனைத்து துறைகளிலும் இந்த கும்பலின் ஆதிக்கம் நிலைநாட்டப்படுகிறது. அதானி துறைமுகங்கள் இதற்கு தக்கச் சான்றாகும்.

திராவிடம் பேசப்படும் தமிழகத்திலும் சரி, இடதுசாரி வேடம் பூண்டுள்ள கேரளத்திலும் சரி, அதானிக்கு மட்டும் தடை இல்லை. சேலம் இரும்பாலை முதல், சூரிய மின் தகடு அமைத்தல் என தமிழகத்திலும் கார்ப்பரேட் ஆதிக்கம் இல்லாத இடம் இல்லை. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் மூலமாகவும் தஞ்சையில் மீத்தேன் எடுக்கும் திட்டங்களின் மூலமாகவும் வேதாந்தாவின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது. இந்த கார்ப்பரேட் கொள்ளையர்களுக்காக சொந்த மாநில மக்களைச் சுட்டுத்தள்ளவும் மாநில அரசுகள் தயங்குவதில்லை.

இந்த கார்ப்பரேட் முதலாளிகளின் மறைமுக ஆதிக்கத்திற்கு துணைபோவதுதான் இந்தித் திணிப்பு! தன் வாழ்நாளில் ஜல்லிக்கட்டையே பார்த்திராதவர்கள் ஜல்லிக்கட்டு வேண்டியும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடிக்கு வெளியிலும், டெல்டாவில் மீத்தேன் எடுப்பதற்கு எதிராக தலைநகரத்திலும் போராட்டங்கள் நடைபெறுகின்றனவே, அதற்குரிய காரணங்களில் ஒன்று தமிழ் மக்களிடையே உள்ள தேசிய இன உணர்ச்சியாகும்.

இந்தி ஆதிக்கத்தை நிலைநாட்டுவதன் மூலம், பல்தேசிய இனங்களை அழித்து ‘ஒற்றை இந்துராஷ்டிரத்தை’ அமைப்பதற்கு பின்னே உள்ளது பார்ப்பன-பனியா கார்ப்பரேட்டுகளின் லாபவெறியே ஆகும்!

ஆரிய பார்ப்பனியத்தின் பாசிச அவதாரம்!

கார்ப்பரேட் முதலாளிகள் பட்டவர்த்தனமான பயங்கரவாதத்தை தொழிற்சாலைகளில் நிலைநாட்டிக் கொள்வதற்கேற்ப, 44 தொழிலாளர் நலச் சட்டங்களை ஒழித்து, 4 தொழிலாளர் சட்டங்களாகச் சுருக்குவதைப் போலவே, மொழிகள் மீதான உரிமைகளும் நசுக்கப்படுகின்றன.

புதிய கல்விக் கொள்கை என்பது இந்தவகையிலான தாக்குதலின் ஒரு அங்கமாகும். பார்ப்பனப் புரட்டுகளை வரலாறாக மாற்றுவது, இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிப்பது மட்டுமல்ல, ஏழை எளிய மாணவர்களின் கல்வி உரிமையைப் பறிப்பது, அவர்களை ‘நவீன சூத்திரர்களாக’ மாற்றி ஒடுக்குவதும் இந்த இந்துராஷ்டிர சதித் திட்டத்தில் அடங்கும்.

பொதுத்துறை நிறுவனங்களைக் கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்ப்பது ஒருபுறம் நடக்கும் போதே, பொதுத்துறை நிறுவனங்களில் இந்திப் பேசுபவர்களைத் திணிப்பதும் நடக்கிறது. இது இந்தி மொழித் திணிப்பைப் போன்ற மறைமுகத் தாக்குதலாகும். ஒன்றிய அரசின் வேலைவாய்ப்புகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பிராந்திய மொழி பேசுபவர்கள் புறக்கணிக்கப்பட்டு இந்திப் பேசுபவர்களே ஆதிக்கம் புரிகின்றனர். இந்த இந்தி ஆதிக்கமானது பா.ஜ.க. செல்வாக்காக உள்ள குஜராத், மகாராஷ்டிர மாநிலங்களிலேயே கடும் எதிர்ப்பைச் சந்தித்தது. இன்னும் சொல்லப்போனால், குஜராத்திலும் மகாராஷ்டிரத்திலும் இனவெறியைத் தூண்டித்தான் பா.ஜ.க. செல்வாக்கைப் பெற்றுக்கொண்டது.

தேசிய இன, மொழி அடையாளங்களுக்கு அடிப்படையாக இருக்கும் விவசாயிகள், சிறுதொழில் முனைவோர், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்களின் உரிமைகள் எல்லாம் நசுக்கப்படுவதுடன் இணைந்ததுதான் இந்தித் திணிப்பாகும். குறிப்பாக, ஒரு நாடு, ஒரு சந்தை, ஒரு வரி என்ற அடிப்படையில்தான் ஜி.எஸ்.டி., செஸ் வரி விதிக்கப்படுகிறது. முன்னேறிய தமிழகத்தில் இருந்து அதிக வரி வருவாய் பெற்றுக்கொள்ளும் ஒன்றிய அரசு, தமிழகத்திற்கு உரிய பங்கை வழங்காமல் இழுத்தடிக்கிறது.

படிக்க : ஜனவரி 25: இந்தி எதிர்ப்பு மொழிப்போர் தியாகிகளை உயர்த்திப்பிடிப்போம் ! | மக்கள் அதிகாரம் துண்டறிக்கை!

புதிய கல்விக் கொள்கை, ஜி.எஸ்.டி. போன்ற அனைத்துத் திட்டங்களும் மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் தன்மை கொண்டவையாக அமைந்துள்ளன. மொழியின் மீதான ஆதிக்கத்தை எதிர்ப்பவர்கள் இவை குறித்தும் பேச வேண்டும்!

வருகின்ற 2023 ஜனவரி 25, 1965-ஆம் ஆண்டு தமிழகம் நடத்திய வீரம்செறிந்த இந்தி திணிப்பு எதிர்ப்பு போரின் 58-ஆம் ஆண்டு ஆகும்; தம் இன்னுயிரை கொடுத்தேனும் ஆரிய-பார்ப்பனியத்தின் ஆதிக்க வடிவமான இந்தி, நாட்டின் தேசிய மொழியாவதைத் தடுக்க வேண்டும் என்று போராடிய மொழிப்போர் தியாகிகளை நினைவுகூறும் நாளாகும்; ஒன்றியத்தின் ராணுவத்திற்கும் அஞ்சாமல் தமிழகத்தின் லட்சக்கணக்கான இளம்குருத்துக்கள் வீதியிலிறங்கி இந்தியை விரட்டியடித்த நாளாகும், 500க்கும் மேற்பட்டோர் இப்போரில் தியாகிகளானர்கள்!

ஆரிய-பார்ப்பனியம், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க, அம்பானி-அதானி பாசிசமாக அவதாரம் எடுத்துள்ள இன்றைய அரசியல் சூழலில், பாசிச எதிர்ப்பு போராட்டத்திற்கு வரலாற்று உணர்வும் இன்றியமையாத் தேவை என்ற வகையில், ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு (மாநில ஒருங்கிணைப்புக் குழு), மக்கள் அதிகாரம் ஆகிய எமது தோழமை அமைப்புகள் அரசியல் பிரச்சார இயக்கத்தைத் தொடங்கியுள்ளன; உழைக்கும் மக்களும் ஜனநாயக சக்திகளும் ஆதரியுங்கள், தங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்!

♦ மொழிப்போர் தியாகிகளின் நினைவை நெஞ்சிலேந்துவோம்!

♦ ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க., அம்பானி-அதானி பாசிசத்தை முறியடிப்போம்!


ஆசிரியர் குழு,
புதிய ஜனநாயகம்.

இந்தி மொழி எதிர்ப்பு போராட்ட வரலாறு | பாகம் 7 | வீடியோ

மாபெரும் இந்தி மொழி எதிர்ப்பு போராட்ட வரலாறு பற்றி புத்தகங்கள் ஏதுமில்லை… ஆனால் அந்த மொழிப்பேரின் உணர்ச்சி மிகுந்த வரலாற்றை நாம் கற்க வேண்டியது அவசியம்.

அதனடிப்படையில், இந்தி மொழி எதிர்ப்பு போரின் வீரம் செறிந்த வரலாற்றை பல்வேறு பாகங்களாக வெளியிடவிருக்கிறோம்.

ஏழாம் பாகம் :

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

இந்தி மொழி எதிர்ப்பு போராட்ட வரலாறு | பாகம் 6 | வீடியோ

மாபெரும் இந்தி மொழி எதிர்ப்பு போராட்ட வரலாறு பற்றி புத்தகங்கள் ஏதுமில்லை… ஆனால் அந்த மொழிப்பேரின் உணர்ச்சி மிகுந்த வரலாற்றை நாம் கற்க வேண்டியது அவசியம்.

அதனடிப்படையில், இந்தி மொழி எதிர்ப்பு போரின் வீரம் செறிந்த வரலாற்றை பல்வேறு பாகங்களாக வெளியிடவிருக்கிறோம்.

ஆறாம் பாகம் :

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

கால்பந்து : முதலாளித்துவ ஆண்டைகளுக்கான சர்வதேச களம்!

டந்து முடிந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்ஸை வீழ்த்தி அர்ஜென்டினா வெற்றி பெற்றது. அர்ஜென்டினாவின் வெற்றியும், அந்நாட்டின் முன்னணி வீரர் மெஸ்ஸியும், அந்நாட்டில் நடக்கும் கொண்டாட்டங்களும் சமூக ஊடகங்களில் பிரதான செல்வாக்கு செலுத்தின. தலைநகரான பியூனஸ் அயர்ஸில் பல லட்சக்கணக்கான மக்கள் கூடி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

அர்ஜென்டினாவின் வெற்றியும், மெஸ்ஸியும் உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் கொண்டாடப்பட்டதை நாம் பார்த்திருப்போம்.  இந்தியாவில் குறிப்பாக கேரளத்தில் கூட கொண்டாட்டங்கள் களைகட்டின. இலவச பிரியாணி கொடுத்து இவ்வெற்றியை கொண்டாடின சில உணவகங்கள். கால்பந்துப் போட்டிக்கு தொடங்குவதற்கு முன்பே மெஸ்ஸிக்கு மிகப்பெரிய கட்அவுட், கடலுக்கடியில் கட்அவுட் என ’வெறித்தனமாக’ கால்பந்து ரசிகர்கள் கொண்டாடியதையும் பார்த்தோம்.

உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியைப் பற்றி ஏகபோக முதலாளித்துவ நிறுவனமான கூகுளின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை குறிப்பிடும்போது இப்படியொரு நெருக்கடியை கடந்த 25 ஆண்டுகளில் கூகுள் சந்தித்ததில்லை என்று கூறினார். அந்தளவுக்கு உலக மக்களின் கவனம் கால்பந்தின் மீது திட்டமிட்டு குவிக்கப்பட்டிருந்தது.

படிக்க : புலம்பெயர் தொழிலாளர்களின் பிணத்தின்மேல் நடக்கும் பிப்ஃபா 2022!

சரி ஏன் கால்பந்தாட்டம் இந்தளவுக்கு கொண்டாடப்படுகிறது? கால்பந்து வீரர்கள் கொண்டாடப்படுகின்றனர்? விளையாட்டு என்ற காரணத்திற்காக மட்டுமா? இயல்பாக இந்தக் கொண்டாட்டங்கள் நடக்கின்றனவா? அதெல்லாம் ஒன்றுமில்லை. கால்பந்து என்பது ஒரு உலகளாவிய அரசியல் விளையாட்டு. பல ஆயிரம் கோடிகளை அள்ளித்தரும் விளையாட்டு என்பதுதான்.

இந்த உலகக் கோப்பையை நடத்தியது கத்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக புதிய கால்பந்து மைதானங்கள் மற்றும் புதிய மெட்ரோ, விமான நிலையம், சாலைகள் ஆகியவற்றிற்கான பிரம்மாண்ட கட்டுமானப் பணிகள் அங்கு நடந்து வருகின்றன. இந்த வேலைகளில் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

இவ்வாறு ஈடுபடுத்தப்பட்டவர்களில் 6000 க்கும் மேற்பட்டோர் எந்த உரிமையுமற்ற, கடுமையான வேலைநிலைமைகளின் காரணமாக இறந்துள்ளனர். பல லட்சம் கோடிகள் மதிப்பிலான இந்தக் கட்டுமானப் பணிகளில் தொழிலாளர்களின் இரத்தம் வரைமுறையின்றி உறிஞ்சப்பட்டிருக்கிறது.

கத்தாரின் அமீர் குடும்பத்தின் செழிப்பான வாழ்க்கைக்காக புலம்பெயர் தொழிலாளர்களின் பிணங்களின் மீது இந்த கட்டுமானங்கள் எழுப்பப்பட்டன.

இது ஒருபக்கம் என்றால், உலகக் கோப்பைகளை நடத்தும் ’பாரம்பரியமிக்க’ பன்னாட்டு கால்பந்து சங்கங்களது கூட்டமைப்பான பிப்ஃபா (FIFA) எனும் ஏகபோக நிறுவனத்தின் ஊழல் வரலாறு கற்பனைக்கு அப்பாற்பட்டதாக விரிகிறது.  2015 லேயே பிப்ஃபா (FIFA) சந்தி சிரித்தது. அப்போதைய பிப்ஃபா (FIFA)-வின் தலைவரான செப் பிளட்டர்,  2010 உலகக் கோப்பையை நடத்துவதற்கு தென்னாப்பிரிக்காவிடம் 1 கோடி டாலர் லஞ்சம் பெற்றதாகவும், 2018 ல் ரஷ்யாவிலும், 2022 ல் கத்தாரிலும் உலகக் கோப்பையை நடத்த வாய்ப்பளிக்க அந்தந்த நாடுகளிடம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மோசடி செய்தல், லஞ்சம், நிதித்துறை மோசடி மற்றும் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குதல் என பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் பிப்ஃபா (FIFA)-வின் தலைமை அதிகாரிகள் மீது அப்போதே குற்றம் சாட்டப்பட்டது. 1000 கோடி ரூபாய்க்கு மேலாக லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் பிப்ஃபா (FIFA)-வின் அதிகாரிகள் ஸ்விட்சர்லாந்து போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இவையெல்லாம் நடந்துள்ள ஊழல் முறைகேடுகளில் ஒரு சதவீதம் கூட இல்லை. பிரிட்டிஷ் பத்திரிக்கையாளர் ஆண்ட்ரூ ஜென்னிங்ஸ் பிஃபாவின் ஊழல் முறைகேடுகள், லஞ்ச வாவண்யம் குறித்து நூற்றுக்கணக்கான பக்கங்களில் புத்தகமாக எழுதும் அளவுக்கு நாறுகிறது பிப்ஃபா (FIFA)-வின் வரலாறு.

2015 லேயே இந்த நிலைமை என்றால் தற்போது அதைவிட பலநூறு மடங்கு ஊழல் சாம்ராஜ்யம் விரிந்திருக்கும் என்றுதானே பொருள்.

இன்னொரு பக்கம் பார்த்தால், தற்போது நடந்து முடிந்த உலகக் கோப்பையில் அர்ஜென்டினாவின் வெற்றி உலகம் முழுக்க முற்போக்கு பேசும் பலராலும் கொண்டாடப்பட்டது. ஏறக்குறைய மெஸ்ஸி கால்பந்தின் கடவுளாக வழிபடப்பட்டார். ஒரு ஏகாதிபத்திய நாட்டுக்கெதிராக அர்ஜெண்டினா பெற்ற வெற்றியைக் கொண்டாட வேண்டும், வரவேற்க வேண்டும் என்றெல்லாம் அதற்கு பொழிப்புரைகள் எழுதப்பட்டு அதில்  முற்போக்கு அம்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வியந்தோதிக் கொண்டிருந்தனர்.

உண்மையில் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு என்பதெல்லாம் ஒரு இழவும் இல்லை. நுகர்வுக்  கலாச்சார வெறியுணர்வுதான் இதன் மூலம் ஆழமாக திணிக்கப்படுகிறது. அதற்கு பலியாவதால்தான் இத்தகைய வாதங்களை வெளிப்படுத்துகின்றனர்.

அடிடாஸ், பூமா, நைக் போன்ற பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள்தான் அர்ஜென்டினா உள்ளிட்ட பல நாடுகளின் வீரர்களுக்கு உடைகளையும், உபகரணங்களையும் ஸ்பான்சர் செய்கின்றன. இதன் மூலம் தங்களது அபரிமிதமான லாபத்தை உத்திரவாதப்படுத்திக் கொள்கின்றன. அதற்காகத்தான் மெஸ்ஸி, ரொனால்டோ போன்றோரை குத்தகைக்கு எடுத்துக் கொள்கின்றனர்.

கால்பந்துக் கடவுள் என கொண்டாடப்படும் மெஸ்ஸி ஒரு ஆண்டிற்கு பல ஆயிரம் கோடி கால்பந்து விளையாட்டின் மூலமும், விளம்பரங்களின் மூலமும் வருமானம் பெறுகிறார். விளையாட்டின் மூலம் சம்பாதித்த 4 மில்லியன் யூரோக்களுக்கு வரி கட்டாமல் ஏமாற்றியதற்காக 2016-ல் அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.

ஏகாதிபத்தியங்களால் உருவாக்கப்பட்ட யுனெஸ்கோ  அறக்கட்டளையின் வருவாயில் 48 சதவீதம் மெஸ்ஸியின் நன்கொடையில் இருந்து வருகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை அர்ஜெண்டினா எதிர்கொண்டிருக்கும் இன்றைய சூழலில்,  பெரும்பாலானோர் ஏழ்மையை நோக்கித் தள்ளப்பட்டிருக்கும் ஒரு நாட்டில் இவ்வெற்றியும், மெஸ்ஸியும் வானளாவ கொண்டாடப்படுவது அந்நாட்டின் ஆளும் வர்க்கங்களின் நலனுக்கானதே ஒழிய வேறொன்றுமில்லை.

இன்று மெஸ்ஸி அர்ஜெண்டினாவின் ஆளும் வர்க்கங்களுக்கு மட்டுமல்ல, உலக ஆளும் வர்க்கங்களின், பன்னாட்டு நிறுவனங்களின் செல்லப்பிள்ளை. ஒரு விளையாட்டு வீரனை வெறும் வீரனாக மட்டும் பாருங்கள் என்று சொல்ல முடியுமா? அவன் யாருக்காக பயன்படுகிறான், யாருக்காக செயல்படுகிறான் என்பதைப் பார்க்க வேண்டுமல்லவா.

2014-ல் கால்பந்தை அதிகம் கொண்டாடும் மற்றொரு தென்னமெரிக்க நாடான பிரேசிலில் நடந்த உலகக் கோப்பை போட்டியை எதிர்த்து, இதனால் பயனடையும் ஊழல் மிகுந்த ஆட்சியாளர்களை அம்பலப்படுத்தி பரந்த அளவில் அந்நாட்டின் உழைக்கும் மக்கள் வீதியில் இறங்கி போராடியதை நாம் அறிவோம்.

நான்காம் தொழில்நுட்ப புரட்சி மற்றும் உலகமயம் என்ற ஏகபோக சுரண்டலின் காலகட்டத்தில் ஒரு விளையாட்டு என்பது விளையாட்டிற்குரிய நற்பண்புகளை இழந்து பெரும் வியாபாரமாக தலையெடுத்து நிற்கிறது.

இத்தகைய ஏகபோக முதலாளித்துவ காலகட்டத்தில் விளையாட்டு, விளையாட்டு வீரர்கள் மீதான இரசிகர்களின் வெறித்தனம் என்பது ஆளும் வர்க்கங்களால் திட்டமிட்டு வளர்க்கப்படுகிறது.

பண்டைய ரோமாபுரியில் மக்களை கேளிக்கையில் மூழ்கடிக்க கிளாடியேட்டர் எனும் அடிமைகளை சாகும் வரையில் சண்டையிட வைப்பார்கள். வருடம் முழுவதும் இந்தப் போட்டிகள் நடக்கும். இதற்காக பிரம்மாண்டமான மைதானங்களை பெரும் பொருட்செலவில் எழுப்பினார்கள். இன்றோ, முதலாளித்துவ ஆண்டைகளின் லாபத்திற்காக கால்பந்து போட்டிகள் நடத்தப்படுகின்றன.

படிக்க : உலகக்கோப்பை கால்பந்து: “அர்ஜென்டினா வென்றால் நாட்டின் அவலம் மறைக்கப்படும்!” – மெஸ்ஸி-ன் மருத்துவர்!

ஏகாதிபத்திய ஏகபோக நிறுவனங்கள், ஆளும் வர்க்கங்களின் அரசியல், பொருளாதார, சமூக ரீதியான ஆதிக்கத்திற்காகத்தான் இன்று கால்பந்து எனும் விளையாட்டு விளையாடப்படுகிறது. இதற்காகத்தான் நுகர்வு வெறி அளவு கடந்து ஊட்டப்படுகிறது. அதில் நாம் திளைத்திருக்கும் வேளையில் நமது எதிர்காலத்தை அழிப்பதுதான் அவர்களது நோக்கம்.

உலகளாவிய அளவில் மக்களின் வாழ்நிலையில் ஏற்றத்தாழ்வு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஒரு பக்கம் செல்வம் குவிவதும், மறுபக்கம் ஏழ்மையும் எவ்வளவு வேகத்தில் அதிகரிக்கிறதோ அதற்கேற்ப கால்பந்து எனும் விளையாட்டை ஏகாதிபத்திய ஆளும் வர்க்கங்கள் தமது ஆதிக்க நோக்கத்திற்கேற்ப விளையாடும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இதைப் புரிந்து கொண்டு உழைக்கும் மக்களின் மீது திணிக்கப்பட்டிருக்கும் கொடூரமான ஏகாதிபத்திய சுரண்டலுக்கெதிரான போராட்டத்தை களத்தில் நடத்த வேண்டும். அதுவே முதன்மையானது. அப்படிப்பட்ட உன்னதமான போராட்டத்தின் மூலமாகத்தான் கால்பந்து விளையாட்டையும் மீட்க முடியும். உழைக்கும் மக்கள் தங்களுக்கான எதிர்காலத்தையும் அடையமுடியும். குறுக்கு வழி ஏதுமில்லை

இனியன்

இந்தி மொழி எதிர்ப்பு போராட்ட வரலாறு | பாகம் 5 | வீடியோ

மாபெரும் இந்தி மொழி எதிர்ப்பு போராட்ட வரலாறு பற்றி புத்தகங்கள் ஏதுமில்லை… ஆனால் அந்த மொழிப்பேரின் உணர்ச்சி மிகுந்த வரலாற்றை நாம் கற்க வேண்டியது அவசியம்.

அதனடிப்படையில், இந்தி மொழி எதிர்ப்பு போரின் வீரம் செறிந்த வரலாற்றை பல்வேறு பாகங்களாக வெளியிடவிருக்கிறோம்.

ஐந்தாம் பாகம் :

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

புதிய தொழில்நுட்ப வரைவு விதிகள்: அறிவிக்கப்படாத எமர்ஜென்சி!

0

னவரி 17, 2023 அன்று மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் தகவல் தொழில்நுட்ப வரைவு விதிகளில் (IT Rules, 2021) புதிதாக திருத்தங்கள் செய்து வெளியிட்டுள்ளது. புதிய திருத்தங்களின்படி, மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் (Press Information Bureau – PIB) உண்மை கண்டறியும் குழு போலியானவை என்று சுட்டிக்காட்டும் செய்திகளை சமூக வலைதள நிறுவனங்கள் தங்கள் பக்கங்களில் இருந்து நீக்க வேண்டும்.

திருத்திற்கான இந்த முன்மொழிவுகள் அமலுக்கு வந்தால் சமூக ஊடகங்கள் உட்பட எல்லா ஆன்லைன் தளங்களிலும் வரும் கருத்துகள்/செய்திகள் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின்கீழ் வரும். பி.ஐ.பி-க்கு அளிக்கப்படும் அதிகாரம், 2000-வது ஆண்டின் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 69A-இன் கீழ் வருகிறது. இந்த வரைவில் எது ‘போலி’ என்பது பற்றிய ஒரு தெளிவான வரையறை இல்லை. இந்துத்துவத்தை எதிர்க்கும் அனைத்து கருத்துகளும் போலி என்று கூறப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்டுள்ள இத்திருத்தங்களுக்கு எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா (Editors Guild of India), இணைய சுதந்திர அறக்கட்டளை (Internet freedom foundation) உள்ளிட்ட அமைப்புக்களும், காங்கிரஸ், சி.பி.ஐ, சி.பி.எம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

பி.ஐ.பி அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற முகமை ஏதேனும் செய்தியின் உள்ளடக்கத்தைப் போலி என்று சுட்டிக்காட்டினால், அச்செய்தி இணையத்தில் இருந்து நீக்கப்படும் என்று வரைவு கூறுகிறது. இதற்கு முன்னர் செய்திகளை ‘போலி’ என்று மட்டுமே பி.ஐ.பி-ஆல் சுட்டிக்காட்ட முடியும். ஆனால் தற்போது செய்திகளை நீக்கும் அதிகாரமும் அதற்கு வழங்கப்பட்டுள்ளது.

இத்திருத்தம் பி.ஐ.பி-க்கு மட்டும் செய்திகளை நீக்கும் அதிகாரத்தை வழங்கவில்லை; அங்கீகாரம் பெற்ற முகமைகளுக்கும் நீக்கும் அதிகாரத்தை வழங்குகிறது. “அங்கீகாரம் பெற்ற முகமை” என்ற பெயரில் எந்தெந்த நிறுவனங்களுக்கு / தனிநபர்களுக்கு அதிகாரம் வழங்கப் போகிறார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. ஆர்.எஸ்.எஸ் — பாஜக பாசிசத்தின் பரப்புரையாளர்களான அர்னாப் கோஸ்வாமி, ரங்கராஜ் பாண்டே போன்றவர்களே மத்திய அரசால் அங்கீகரிக்கப்படுவர்.


படிக்க: பொய்களை பரப்பும் முகநூல் மார்க்கை தொடர்ந்து ட்விட்டர் மஸ்க் | ஆர்.எம்.பாபு


பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) பொய்யான செய்திகளை மட்டும்தானா ‘போலி’ என்று முத்திரை குத்திவருகிறது? அரசை அம்பலப்படுத்தும் பல செய்திகளை போலியானவை என்று பி.ஐ.பி முத்திரை குத்தியிருக்கிறது. இத்திருத்தம் அமல்படுத்தப்பட்டால் அரசை கேள்வி கேட்கும் அனைத்து கருத்துகளும் போலியானவை என்று கூறப்பட்டு முடக்கப்படும்.

பி.ஐ.பி-யின் யோக்கியதையை அதன் உண்மை சரிபார்ப்புக் குழுவின் நடவடிக்கைகளில் இருந்து புரிந்துகொள்ளலாம். செய்தியாளர் தபஸ்யா “ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அங்கன்வாடியில் சத்துணவு வழங்கும் திட்டத்திற்கு ஆதார் அட்டை அவசியம்” என்ற மத்திய அரசின் முடிவு குறித்து ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவில் (Reporters’ Collective) எழுதியிருந்தார். அரசை விமர்சனம் செய்திருந்த காரணத்தால் பி.ஐ.பி உண்மை சரிபார்ப்புக் குழு இந்தச் செய்தி போலியானது என்றும் குழந்தைகளுக்கு ஆதார் அட்டை தேவையில்லை என்றும் கூறியது. போலி என்பதற்கான ஆவணங்கள் எதையும் வழங்கவில்லை.

தபஸ்யா இது குறித்து ஆர்டிஐ தாக்கல் செய்தபோது, ​​குழந்தைகளுக்கு ஆதார் அட்டை தேவையில்லை என்று 2022 ஆகஸ்ட்டில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தபஸ்யாவின் செய்தி ஜூன் 2022இல் வெளியிடப்பட்டது; அப்போது அமலில் இருந்தது மார்ச் 2022 வழிகாட்டு நெறிமுறைகள். பழைய மார்ச் வழிகாட்டு நெறிமுறைகளின் படி ஆதார் அட்டை கட்டாயமாகத்தான் இருந்திருக்கிறது என்பது தெரியவருகிறது. இதன் மூலம் பி.ஐ.பி-யின் பித்தலாட்டம் அம்பலமாகிறது.

அதேபோல், மே 2020-இல் கொரோனா பெருந்தொற்றின் போது, ஜோதி சி.என்.சி (Jyoti CNC) என்ற குஜராத் நிறுவனம் வெண்டிலேட்டர்களை இலவசமாக வழங்கியது. அந்நிறுவனத்துக்கு சில பாஜக தலைவர்களுடன் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இலவசமாக வழங்கப்பட்ட வெண்டிலேட்டர்கள் தரமற்றவையாக இருப்பதாக குஜராத் மற்றும் புதுச்சேரியில் இருந்த மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நிறுவனத்திடமிருந்து வெண்டிலேட்டர்களை அரசு விலைக்கு வாங்குவதாக இருந்தது. இது குறித்து தி வயர்-இல் செய்தி வெளியானது. இது முற்றிலும் சரியான தகவல். ஆனால், பி.ஐ.பி இதையும் ‘போலிசெய்தி’ என்று முத்திரை குத்தியது.


படிக்க: பா.ஜ.க தலைவர் அமித் மால்வியா : பொய் செய்திகளின் ஊற்றுக்கண் !


மத்திய அரசு முன்மொழிந்துள்ள இந்த புதிய தொழில்நுட்ப வரைவு விதிகள் சாதாரணமாக கடந்து செல்லக் கூடியது அல்ல. கருத்துச் சுதந்திரத்தை நசுக்கக்கூடிய நடவடிக்கை இது. அவசரநிலை காலகட்டத்தில் செய்திகள் அனைத்தும் அரசால் தணிக்கை செய்யப்பட்ட பின்னரே வெளியிட அனுமதிக்கப்பட்டன. தற்போதைய பாசிச மோடி அரசும் அதையே செய்ய எத்தனிக்கிறது, அவசர நிலையை பிரகடனம் செய்யாமல்.

பொம்மி

இளைஞர்களே! எது கெத்து?

0

பிழைப்புவாத நடிகர்களும், வரலாற்றை மறந்த இளைஞர்கள் கூட்டமும்!

ந்தியா சுதந்திரப் போராட்டத்திலும், தமிழகத்தின் மொழிப் போராட்டத்திலும் நெஞ்சை நிமிர்த்தி களத்தில் முன் நின்று போராடிய இளைஞர்களை கொண்ட இந்த மண்ணில்தான், பிழைப்புவாத நடிகர்களுக்காக தன் உயிரையும் மாய்த்துக் கொண்டிருகிறார்கள் இன்றைய இளைஞர்கள்.

கடந்த 11-1-2023 அன்று அஜித் நடித்துள்ள துணிவு படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க சென்ற பரத் என்ற இளைஞர், துணிவு பட கொண்டாட்டத்தின் போது ஓடும் லாரியின் மீது ஏறி நடனம் ஆடியுள்ளார். அப்போது லாரி சற்று நகர்கையில் பரத் நிலைத் தடுமாறி லாரியில் இருந்து கீழே விழுந்து லாரி சக்கரத்தில் மாட்டி உயிரிழந்துள்ளார். அதேபோன்று இன்னொரு இடத்தில் கிரேனில் மூலம் உடலில் அளவு குத்தி கொண்டு அஜித் போஸ்டருக்கு மாலையிடும் காட்சியும் நெஞ்சை பதற வைக்கிறது.

அஜித் அல்லது விஜய் படம் வருகின்றது என்றவுடன் பல்லாயிரம் செலவு செய்து போஸ்டர் வைப்பது, பால் ஊத்துவது, வெடி வைப்பது இரவு முழுவதும் காத்திருப்பது என அந்த படத்தை திருவிழா போல் கொண்டாட ஒரு இலக்கற்ற இளைஞர்கள் கூட்டமே உருவாகியுள்ளது. இவர்களுக்கு வாழ்க்கை பற்றிய கவலையோ தன்னை சுற்றி உள்ளவர்களை பற்றிய அக்கறையோ துளியும் கிடையாது. நடிகர்களே தன் வாழ்க்கை என போதையில் முழுகி கிடைக்கிறார்கள்.

அஜித் படம் வந்தால் விஜய் படத்தை கேலிச் செய்து, போஸ்டர் ஒட்டுவது, மீம்ஸ் போடுவது, விஜய் படம் வந்தால் அஜித் படத்தை கேலிச் செய்து, போஸ்டர் ஒட்டுவது, மீம்ஸ் போடுவது என யார் கெத்து என காட்டி கொள்ள முயற்சிக்கிறார்கள் ரசிகர்கள்.

படிக்க : இறையூர் தண்ணீர்த் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்: விசாரணை என்ற பெயரில் தாழ்த்தப்பட்ட மக்களை துன்புறுத்தாதே! | மக்கள் அதிகாரம்

அஜித் படம் வந்தாலோ அல்லது விஜய் படம் வந்தாலோ அதை தனித்தனியாக கொண்டாடும் ரசிகர் கூட்டத்தின் மத்தியில் படத்தின் விளம்பரத்திற்காக இரண்டு படத்தையும் ஒரே நேரத்தில் விட்டு ரசிகர்கள் மத்தியில் சண்டையும் போட்டியை உருவாக்கி டிக்கெட்டை அதிக விலைக்கு விற்று லாபம் பார்த்து கொண்டிருக்கிறார்கள் திரைப்படங்களை வெளியிடும் முதலாளிகள். ஆனால் இதை புரிந்து கொள்ள முடியாமல் அப்பாவி இளைஞர்கள் இதில் மாட்டிக் கொள்கிறார்கள். முதல் காட்சியின் டிக்கெட் விலை ரூ.1000 முதல் ரூ.2000 வரை இருந்தாலும் அதை ரசிகர்கள் வாங்கி கொள்கிறார்கள். அதற்காக பல நாட்கள் வரிசையில் காத்து கிடக்கிறார்கள்.

திரைப்படம் என்றால் அது வணிகம் (commerical) அல்லது காதல் (romantic) அல்லது பேய் படங்கள் (Adventure) என வகைவகையான திரைப்படங்களை தினம்தோறும் எடுத்துக் குப்பைகளை போல் அள்ளிக் கொட்டி கொண்டு இருக்கின்றனர். இந்த திரைப்படங்களில் கதைகளை விட கதாநாயகர்களுக்கு தான் அதிகம் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. திரைக்கதைகளில் விஜய், அஜித் நடித்த காலம் போய் கதையே ’விஜய்’ ‘அஜித்’ தான் என்று மாறி நிற்கிறது. விஜய், அஜித்-காக மட்டுமே திரைப்படம் எடுக்கப்படுகிறது. இதில் திரைக்கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது கிடையாது விஜய்-அஜித் நடை, உடை அவர்கள் செய்வதை எல்லாம் கெத்தென காட்டப்படுகிறது.

இதனால் தன் திரைப்படத்தை பார்ப்பதை விட அவர்களை பார்த்து விட்டு வந்தால் போதுமென ரசிகர்கள் இரவு முழுவதும் காத்துக் கிடக்கிறார்கள். பணம் இல்லையென்றால் கூட கடன் வாங்கி கொண்டு படத்திற்கு செல்ல துடிக்கிறார்கள். அப்படி பார்க்கும் படத்தை முதல் பார்வை (status) வைப்பதும் அல்லது பிற நண்பர்கள் சொல்லி பெருமை படுவதே கெத்து என நினைக்கிறார்கள் இவர்கள். இப்படி பைத்தியம் பிடித்து இறந்து போனவர்களில் ஒருவர்தான் பரத்.

இன்று கல்வி தனியார்மயமக்கம் தீவிரமடைந்து வருகிறது. 2 கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலை தேடி தெருக்களில் அலைந்துக் கொண்டிருக்கிறார்கள். உலகளவில் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள 82.8 கோடி மக்களில் இந்தியாவில் மட்டும் 22.43 கோடி மக்கள் உள்ளனர். பட்டினி குறியீட்டில் இந்தியா 107 இடத்தில் உள்ளது. வரி மேல் வரி போட்டு உழைக்கும் மக்களின் ரத்தத்தை உறிஞ்சி கொண்டிருக்கிறது மத்திய-மாநில அரசு. உழைக்கும் மக்களோ அடிப்படை உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு நடு தெருவில் வீசியெறிப்பட்டுள்ளனர். ஆனால் இந்த அவலங்களுக்காக போராடுவதோ, எதிர்ப்பு குரல் கூட எழுப்பாத இந்த கதாநாயகர்களுக்காகத்தான் இரவு பகலாக இளைஞர்கள் திரையரங்கு வாயில்களில் பைத்தியம் போல் திரிந்துகொண்டிருக்கிறார்கள். அவரக்ளையே தெய்வமென வழிபடுகிறார்கள்.

ஆனால் நாம் வரலாற்றை சற்று திரும்பி பார்க்க வேண்டி இருக்கிறது.

மெரினா கடற்கரையில் காற்றை கிழித்து வரும் ஈட்டியை போல திரண்ட இளைஞர்கள்-மக்கள் 7 நாட்கள் தொடர் போராட்டத்தின் மூலம் ஜல்லிக்கட்டுக்கு தடை என்ற மோடி அரசின் பாசிச நடவடிக்கையை முறியடித்தார்கள். நீட் எதிர்ப்பு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் என எல்லா போராட்டத்திலும் களத்தில் முன் நின்றவர்கள் மாணவர்களும் இளைஞர்களும் தான்.

1937 ஆண்டு தமிழ்நாட்டின் வீதிகளில் தமிழ் மொழிக்காக்க இளைஞர்கள் திரண்டு போராடினார்கள். பல லட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்கள் தங்களையும் அந்த போராட்டத்தின் இணைத்து கொண்டனர்.

இப்படி வீரம் விதைக்கப்பட்ட இந்த மண்ணில், தற்போதைய இளைஞர்கள், நடிகர்களுக்காக அடித்து கொள்வதும் நடிகர்களுக்காக தன்னுயிரை மாய்த்துக் கொள்வதென மூடர்களாக அலைந்துகொண்டிருக்கிறார்கள்.

படிக்க : புர்கா அணிய தடை: பறிக்கப்படும் இஸ்லாமியர்களின் கல்வி உரிமை!

இன்றைய தலைமுறை இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடம் அதிகம் பயன்படுத்தப்படும் சொல் யார் கெத்து என்பதும் கெத்தாக வாழ வேண்டும் என்பதுதான். வண்ண வண்ண ஆடை உடுத்தி செல்வதும், விலையுயர்ந்த வாகனங்களை சாலைகளில் ஓட்டி சாகசம் செய்வதும், பிறரை அடிப்பதும்-துன்புருத்துவதும் தான் கெத்து என நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் கெத்து எது?

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடுவதும், கல்வி மறுக்கப்பட்ட ஏழை-எளிய மாணவர்களுக்காக போராடுவதே உண்மையான கெத்தாகும். அப்படி கெத்தாக நம் நாட்டில் உயிர்நீத்தவர்கள் பலர். பகத்சிங்கும் அவரது தோழர்களும் வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக வீரம் செறிந்த போரை தொடுத்தார்கள். தமிழ்நாட்டு மாணவர்கள் இந்தி மொழி திணிப்புக்கு எதிராக வீரம் செறிந்த போரை தொடுத்தார்கள்.

நாம் தொலைத்த வீரத்தையும், மறைந்து போன தியாகத்தையும் மீண்டும் இப்போது பட்டைதீட்டவேண்டிய தேவை எழுந்திருக்கிறது. திரைபடங்களும், நடிகர்களும் வாழ்க்கையென அடிமைப்பட்டு கிடக்கும் இளைஞர்களிடம் உரிமைக்காக களத்தில் முன் நின்று போராடுவதே கெத்து என்பதை தெளிவுபடுத்த வேண்டி இருக்கிறது.

பாரி

இந்தி மொழி எதிர்ப்பு போராட்ட வரலாறு | பாகம் 4 | வீடியோ

மாபெரும் இந்தி மொழி எதிர்ப்பு போராட்ட வரலாறு பற்றி புத்தகங்கள் ஏதுமில்லை… ஆனால் அந்த மொழிப்பேரின் உணர்ச்சி மிகுந்த வரலாற்றை நாம் கற்க வேண்டியது அவசியம்.

அதனடிப்படையில், இந்தி மொழி எதிர்ப்பு போரின் வீரம் செறிந்த வரலாற்றை பல்வேறு பாகங்களாக வெளியிடவிருக்கிறோம்.

நான்காம் பாகம் :

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

இறையூர் தண்ணீர்த் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்: விசாரணை என்ற பெயரில் தாழ்த்தப்பட்ட மக்களை துன்புறுத்தாதே! | மக்கள் அதிகாரம்

22.01.2023

இறையூர் தண்ணீர்த் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்!

தமிழ்நாடு அரசே!
விசாரணை என்ற பெயரில் தாழ்த்தப்பட்ட மக்களை துன்புறுத்தாதே!

தீண்டாமை குற்றங்களில் ஈடுபட்ட ஆதிக்க சாதி வெறியர்களின்
அடிப்படை உரிமைகளை ரத்து செய்!

பத்திரிகை செய்தி

புதுக்கோட்டை மாவட்டம் முட்டுக்காடு ஊராட்சி, இறையூரில் தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்தும் தண்ணீர்த் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்டு, அவ்விவகாரம் மிகப்பெரிய அளவில் வெடித்தது. மனித சமூகமே வெட்கித் தலை குனியக் கூடிய இந்த சம்பவம் நடைபெற்று ஏறத்தாழ ஒரு மாதம் ஆகியும் கூட இதுவரை குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை.

போலீஸ் விசாரணையில் தொடர்ச்சியாக தாழ்த்தப்பட்ட மக்கள் துன்புறுத்தப்படுவது வெளியாகி அம்பலப்பட்ட பின்னர் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. ஆனாலும் இதுவரை குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை. இதனை மக்கள் அதிகாரம் கண்டிக்கிறது.

படிக்க : புதுக்கோட்டை தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த சாதிவெறி! | தோழர் யுவராஜ்

கோவையில் கார் சிலிண்டர் வெடித்தவுடன், தமிழ்நாடு போலீசும் தேசிய புலனாய்வு முகமையும் மேற்கொண்ட அவசர அவசர கைதுகளும் விசாரணைகளும் நடைபெற்றன. இந்த விசாரணையை ஒப்பிட்டு பார்க்கும்பொழுது போலீசும் அரசும் ஆதிக்க சாதி வெறியர்களுக்கு ஆதரவாக எவ்வாறு செயல்படுகிறது என்பதை நாம் உணர முடியும்.

தமிழ்நாட்டில், ஆதிக்க சாதி வெறியர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆணவ படுகொலைகள், தாக்குதல்கள் என மேற்கொண்டு வரும் வன்முறை என்பது பல ஆண்டுகளாக நீடித்து வருகின்ற ஒன்றாகும். இந்த நிலையில்தான் அதிக்க சாதி சங்கங்கள் பலவும் ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் சென்று இருக்கின்றன. ஆதிக்க சாதி வெறியர்களுக்கு ஆதரவாக ஏற்கனவே அரசும் போலீசும் இருந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ்-ம் பி.ஜே.பி.யும் ஆதிக்க சாதி வெறியர்களை வெளிப்படையாகவே ஆதரித்து செயல்படுகின்றன.

தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்தப்பட்ட எந்த ஒரு வன்முறை குற்றத்திலும் ஆதிக்க சாதி வெறியர்கள் முழுமையாகவும் நியாயமாகவும் தண்டிக்கப்படவில்லை. இப்படிப்பட்ட அரசின் செயல்பாடுகளும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்முறைகள் குறையாமலிருப்பதற்கு முக்கிய காரணமாகும். ஆதிக்க சாதி வெறியர்கள், தாங்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்தும் தீண்டாமை குற்றங்களிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே பி.சி.ஆர் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் போராடி வருகிறார்கள்.

படிக்க : குடிநீர் தேக்க தொட்டியில் மலம் – ஆதிக்கசாதி திமிர்! | மருது வீடியோ

தீண்டாமைக் குற்றங்களில் ஈடுபடக்கூடிய ஆதிக்க சாதி வெறியர்களுக்கு அனைத்து அடிப்படை உரிமைகளும் பறிக்கப்பட வேண்டும். அவர்களை ஒட்டுமொத்த சமூகமே புறக்கணிப்பு செய்ய வேண்டும். அவர்கள் மீதான குற்றங்கள் உடனுக்குடன் விசாரித்து தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். இரட்டைக் குவளை முறை உள்ளிட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான அனைத்து குற்றங்களும் இந்த சமூகத்துக்கே எதிரான குற்றங்களாக வரையறுக்கப்பட வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களுக்கென்று தனியாக பள்ளிக்கூடம் கட்டுவது, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என்று தனியாக தண்ணீர்த்தொட்டி அமைப்பது போன்றவை அடியோடு நிறுத்தப்பட வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கின்றது.

அதே வேளையில், மேற்கண்ட கோரிக்கைகள் சமூக ரீதியாக மக்களிடத்திலே சிந்தனை மாற்றம் வரும் வகையில் புரட்சிகர, ஜனநாயக அமைப்புகள் போராட வேண்டிய அவசியத்தையும் தெளிவுபடுத்துகிறது.

தோழமையுடன்,
தோழர் சி.வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321